சிறுவர் கதைக் கொத்து முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : சிறுவர் கதைக் கொத்து ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+160 = 176 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 110/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந்துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்த த் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப் பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தா ர். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்கு த் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கை களாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாக ப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் பதிப்புரை இயற்கையாகவே இளமாணவர்கள் கதை கேட்பதில் ஆர்வமுடையவர்கள்; அவர்களின் இவ்வியற்கை அறிந்தே, அறிஞர்கள் அவர்கட்குக் கல்வியில் விருப்பத்தை உண்டாக்குவதற்குச் சுவையான கதைப் புத்தகங்களே சிறந்த கருவிகள் என்று முடிவு செய்துள்ளார்கள். இம்முடிவினைப் பின்பற்றிக் கழக வழிப் பல கதை நூல்கள், இள மாணவர் விரும்பும் முறையில் வெளியிடப்பட்டுள்ளன. சிறு சிறு கதைகளாகப் பயிற்சிகளும், கேள்விகளும் அமைத்துச் `சிறுகதைக் களஞ்சியம்’ என்னும் வரிசையில் மூன்று நூல்கள் தனித்தனியாக முன்னரே வெளியிட்டுள்ளோம். அவற்றைத் தொகுத்து அழகிய கட்டடம் செய்து சிறுவர் கதைக்கொத்து என்னும் வரிசையில் மூன்றாம் புத்தகமாக இதனை வெளியிடுகின்றோம். இந்நூல் நூல்நிலையங்கட்கும், பரிசுகட்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது. நூல்நிலையக் காப்பாளரும், ஆசிரியப் பெருமக்களும் பிறரும் இத்தகு நூல்களை வாங்கியும், வாங்குவித்தும் இளமாணவர் ஏற்றம்பெறத் துணைபுரிய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார். உள்ளுறை (முதற் புத்தகம்) 1. இரக்கமுள்ள மாணவி 3 2. நல்ல மாணவன் 5 3. இயற்கைக் காட்சி 7 4. யானையும் தையற்காரனும் 9 5. சிறுவனைக்காத்த நாய் 11 6. தீப்பிடித்த பூனை 13 7. இயந்திரம் கண்ட இளைஞன் 15 8. வீட்டைக் காத்த பூனை 17 9. பிச்சைக்காரனது நாய் 19 10. பாதிப்பங்கு 21 11. காயம்பட்ட நாய் 23 12. முத்தம் 25 13. வேடனும் புறாக்களும் 27 14. கொம்பை ஊதிய வீரன் 29 15. இரக்கம் கொண்ட பெரியார் 31 16. காயம்பட்ட பறவை 33 17. தனக்கென வாழாத வீரன் 35 18. காகங்கள் 37 19. இருளில் துணை 39 20. அஞ்சாத போர்வீரன் 41 21. நாயும் பூனையும் 43 22. கொத்தர் கற்பித்த பாடம் 45 23. நாகப்பன் வீட்டு நாய் 47 24. சடையப்ப வள்ளல் 49 25. பிறர்பொருட்டு உயிர்விட்ட பெண்மணி 51 உள்ளுறை (இரண்டாம் புத்தகம்) 1. நன்றி மறவாத யானை 55 2. சவாரி செய்த குரங்கு 57 3. புகைவண்டிப் பயணம் 59 4. களைத்த பிள்ளைகள் 61 5. படையைக் காத்த பையன் 63 6. நாயும் பூனைக்குட்டியும் 65 7. சிறுவரும் எலிக்குஞ்சுகளும் 67 8. கிளியின் எச்சரிக்கை 69 9. நற்செய்தி 71 10. படியாத பழனியப்பன் 73 11. பைக்கு வெளியே பாதிப்பூனை 75 12. உதவிக்கு உதவி 77 13. பத்திரிகை விற்ற மாணவன் 79 14. கிளியும் கண்ணாடியும் 81 15. பூனையும் புறாக்களும் 83 16. கடைக்காரனை முத்தம் இடலாமா? 85 17. வீரர் வரலாற்றுப் புத்தகம் 87 18. குரங்கும் வெள்ளாடும் 89 19. எறும்புகளின் நுண்ணறிவு 91 20. தண்ணீர்ப் பந்தல் 93 21. நீராவி 95 22. நாய்க்குத் தன்னுரிமை 97 உள்ளுறை (மூன்றாம் புத்தகம்) 1. கடல் நீராடல் 101 2. உயிர்பொருட்டு ஓட்டம் 103 3. சிறுவனும் விண்மீன்களும் 105 4. ஏழைச் சிறுவன் 107 5. காலங்கருதிய அறிவுரை 109 6. கடலிலும் பூனைக்குட்டி 111 7. ஓடிப்போன பூனை 113 8. புகைவண்டி ஓட்டி 115 9. நண்பனுக்கு உதவி 117 10. குரங்கின் முயற்சி 119 11.படைத்தலைவரின் வீரம் 121 12. அச்சம் அறியாத சிறுவன் 123 13. திருட்டு அப்பம் 125 14. எழுவரைக் காத்த பூனை 127 15. சாரணச் சிறுவன் 128 16. புதிய நோயாளி 130 17. கிளியும் பூனைக்குட்டிகளும் 132 18. பொறுமையுள்ள விமானம் ஓட்டி 134 19. மிரண்ட குதிரைகள் 136 20. சுயநலம் அற்ற சிறுவன் 138 21. வான வீரன் 140 22. கிராமத்துத் தபால்காரன் 142 23. தந்தி அடித்த பெண்மணி 144 24. புண்பட்ட வீரன் 146 25. ஒரு கோப்பைச் சாராயம் 148 26. பிசாசு! பிசாசு! 150 27. வீரப் பெண்மணி 152 28. நாட்டுப் பற்றுடைய பெண் 154 29. நாய் விலை - அரை அணா 156 சிறுகதைக் களஞ்சியம் (முதற் புத்தகம்) சிறுகதைக் களஞ்சியம் (முதற் புத்தகம்) 1. இரக்கமுள்ள மாணவி மணிமேகலை மூன்றாம் வகுப்பு மாணவி. அவள் தன் பள்ளிக் கூட நேரம் போக, எஞ்சிய நேரத்தில் தன் தாயாருடன் வீட்டு வேலை களைப் பார்த்து வந்தாள்; ஏனங்களைக் கழுவுவாள்; காய்களை அரிந்து தருவாள்; குழந்தைகளின் துணிகளைத் துவைப்பாள்; வீட்டைத் தூய்மை செய்வாள்; தாயார் துணி தைப்பதைப் பார்த்து அவளும் தன் பொம்மைகளுக்குச் சட்டைகள் தைப்பாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை தாயார் சுறுசுறுப்பாக இருந்தார். அவர் பழைய துணிகளை வெட்டிச் சட்டைகள் தைத்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது மணிமேகலை, ``அம்மா, ஏன் பழைய துணிகளைத் தைக்கிறீர்கள்?’’ என்று கேட்டாள். தாயார், ``அம்மா! இப் பழைய துணியால் சட்டைகள் தைக்கிறேன். இவைகளை ஏழைகளுக்குக் கொடுக்கலாம் அல்லவா?” என்றார். மணிமேகலை, ``ஆம். என் தாயார் ஏழைகளுக்குச் சட்டைகள் தைத்துக் கொடுக்கிறார். அவர் போலவே நான் என் பழைய புத்தகங்களை ஏழைப் பிள்ளைகட்குக் கொடுப்பேன். `ஏழைகளுக்கு உதவி செய்யவேண்டும்’, என்று என் வகுப்பு ஆசிரியரும் கூறியுள்ளார்,” என்று தனக்குள் கூறிக்கொண்டாள். அவள் தன்னிடம் இருந்த பழைய புத்தகங்களை எடுத்தாள்; அவற்றை இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த ஏழைப் பெண் ஒருத்திக்குக் கொடுத்து உதவி மகிழ்ந்தாள். மணிமேகலையின் செயல் நல்லதா? கெட்டதா? பயிற்சி 1. இந்த நிகழ்ச்சியை 12 வரிகளில் எழுது. 2. இதனை மணிnகைலை எழுதுவதுபோல எழுது. 3. இதனை அவள் தாயார் எழுதுவதுபோல எழுது. 4. பழைய புத்தகம் பெற்ற ஏழைச் சிறுமி எழுதுவதுபோல எழுதுக. 5. மணிமேகலைப்பற்றிய உன் கருத்தை 6 வரிகளில் எழுது. 6. நீ இதனால் அறியும் படிப்பினை யாது? 7. சுறுசுறுப்பு, உதவி, பழைய - இவற்றை உன் சொந்தத் தொடர்களில் அமைத்துச் சொல். 8. பழைய X புதிய, நல்லது X கெட்டது - இவை எதிர் மொழிகள்; இவற்றை உன் சொந்தத் தொடர் மொழிகளில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. மணிமேகலை எப்படிப்பட்டவள்? 2. அவள் தாயார் ஏன் பழைய துணிகளைத் தைத்துக் கொண்டிருந்தார்? 3. மணிமேகலை ஏழைப்பிள்ளைகட்குச் செய்ய விரும்பிய உதவி யாது? 4. நீ அவளிடமிருந்து அறியும் படிப்பினை என்ன? 2. நல்ல மாணவன் முருகன் மூன்றாம் வகுப்பு மாணவன். அவன் மிகவும் நல்லவன். அவன் தன் பெற்றோர் சொற்படி நடப்பவன். அவன் அவர்களோடு காலையில் எழுந்து கடவுளை வழிபடுவான்; பிறகு காலைக் கடன்களை முடித்துக் கொண்டு நீராடுவான்; தன் ஆடைகளைத் தானே துவைப்பான்; தாயார் தருவதை மகிழ்வோடு உண்பான். முருகன் பிறகு தன் பாடங்களைப் படிப்பான்; ஆசிரியர் கொடுத்துள்ள வீட்டுக் கணக்குகளைப் போடுவான்: கையெழுத்துப் படிய ஆங்கிலப் பாடத்தையும், தமிழ்ப் பாடத்தையும் எழுதுவான்; பள்ளிக்கூட நேரம் வந்ததும், தன் பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வான். முருகன் வகுப்பில் `நல்ல பிள்ளை’ என்று பெயர் பெற்றான். ஆசிரியர் அவன்மீது அன்பைக் காட்டினார். முருகன் எல்லாப் பரிசுகளையும் பெற்றான். அவன் படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பான்; விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடுவான்; மாலை நேரங்களில் தன் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்வான். முருகன் இவ்வாறு குறித்த நேரத்தில் குறித்த வேலையை ஒழுங்காகச் செய்து வந்ததால், படிப்பிலும் பரிசு பெற்றான்; விளையாட்டிலும் பரிசு பெற்றான்; தோட்ட வேலையிலும் பரிசு பெற்றான். அவன் இப்படியே நடந்து வந்ததால், ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாக விளங்கி உயர்நிலையை அடைந்தான். குழந்தாய்! நீ முருகனைப்போல் விளங்குவாயா? பயிற்சி 1. முருகனைப்பற்றிப் பத்து வரிகள் எழுது. 2. உன் ஒரு நாள் வேலையை 15 வரிகளில் எழுது. 3. முருகனுக்கும் உனக்கும் உள்ள வேறுபாட்டைப் பத்து வரிகளில் எழுது. 4. நீ முருகனிடமிருந்து அறிந்து கொள்வன யாவை? 5. வழிபடு, நீராடு, மாலைநேரம், குறித்தநேரம், உயர்நிலை-இவற்றை உன் சொந்தத் தொடர்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. முருகன் காலை நேரத்தில் என்ன செய்வான்? 2. முருகன் பள்ளியில் எப்படி நடந்து கொள்வான்? 3. முருகன் மாலையில் என்ன செய்வான்? 4. அவன் ஏன் உயர்நிலையை அடைந்தான்? 5. நீ இக் கதையால் அறிவது யாது? 3. இயற்கைக் காட்சி இங்கிலாந்தில் உள்ள ஊர் ஒன்றில் பிரபு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் இளமைமுதல் வானம், விண்மீன்கள், நிலா, தோட்டங்கள், மலர்கள், ஆறுகள் முதலிய இயற்கைக் காட்சிகளைக் காண்பதில் விருப்பம் கொண்டிருந்தாள். அவன் பள்ளிக்கூடம் முடிந்ததும் மாலை நேரங்களில் தன்வீட்டுத் தோட்டத்தில் உலாவுவான். மாலைநேரத்தில் மெல்லிய தென்றற்காற்று தண்மையாக வீசும். அரும்புகள் போதுகள் ஆகி இதழ் விரித்து மலரும். அம்மலர்களில் உள்ள நல்ல மணத்தைத் தென்றற்காற்று அள்ளி வீசும். மலர்களில் உள்ள புதிய தேனைக் குடிக்க வண்டுகள் வரிசை வரிசையாக வரும். அவை ரீங்காரம் செய்யும். மெல்லிய காற்று வீசுவதும், மலர்கள் அசைவதும், வண்டுகள் பாடுவதும் மத்தள ஓசைக்கு ஏற்றபடி பாடகர்பாட, ஆடுமகளிர் ஆடுவதை ஒத்து இருந்தன. இவற்றை எல்லாம் சிறுவன் கண்டு கண்டு களிப்பு அடைந்தான். அவன் கண்கள் இமை கொட்டாமல் இவற்றை நோக்கின. இளைஞன் தன்னை மறந்து இவற்றைப் பற்றிப்பாடத் தொடங்கினான்; பல அருமையான பாடல்களைப் பாடினான். அவன் பெரியவன் ஆக ஆக அவன் பாடல்கள் அச்சிடப்பெற்றன; பலரால் படிக்கப்பட்டன; அப் பாக்கள் எல்லோராலும் பாராட்டப்பெற்றன. அப் புலவன் அப்பாடல்களைப் பாடியதால், பிரபு என்னும் பட்டமும் பெற்றான். அப்புலவனே ஆல்பிரட் லார்ட் டென்னிஸன் என்பவன். பயிற்சி 1. இவ்வரலாற்றைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இதனை டென்னிஸனே கூறுவதுபோலக் கூறு. 3. இதனை, இயற்கைக் காட்சி-டென்னிஸன்- புலவன்: என்னும் குறிப்புக்களைக் கொண்டு மூன்று பத்திகளில் எழுது. 4. வரிசை வரிசையாக, பாராட்ட, இமை கொட்டாமல், தென்றல், இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். 5. இயற்கை X செயற்கை, மாலை X காலை, மறதி X நினைவு - இவை உதிர்மொழிகள் இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. டென்னிஸன் - மாலையில் தோட்டத்தில் எவற்றைக் கண்டார்? 2. அவர் ஏன் பாட்டுப் பாடினார்? 3. பாக்களால் அவர் அடைந்த பெருமை யாது? 4. இக்கதையால் நீ அறிவது யாது? 4. யானையும் தையற்காரனும் தஞ்சாவூரில் இராசகோபால சுவாமி கோவில் புகழ் பெற்றது. அக்கோவில் தலைவர்கள் ஒரு யானையை வளர்த்து வந்தார்கள். அந்த யானை எல்லோரிடமும் அன்புடன் நடந்துகொள்ளும். அது சிறுவர்களைத் தன் தும்பிக்கையால் தடவிக் கொடுக்கும். தஞ்சாவூர் வடக்கு* அலங்கத்தில் பெரிய குட்டை ஒன்று உண்டு. கோவில் யானை நாள்தோறும் அந்தக் குட்டைக்குச் சென்று நீராடி வரும். அக்குட்டைக்கச் சிறிது முன்புறமாகத் தையற்காரன் ஒருவன் கடை வைத்திருந்தான். அவன் நாள்தோறும் யானைக்கு வாழைப் பழம் தருவது வழக்கம். ஒரு நாள் அத் தையற்காரன் கடையில் பண்டங்கள் களவாடப் பட்டன. அதனால் அவன் தலையில் கைவைத்துக்கொண்டு அழுதான்; விம்மினான்; புரண்டான்; வயிற்றில் அடித்துக் கொண்டான். அவன் இவ்வாறு துன்பப்பட்டுக்கொண்டு இருக்கையில், கோவில் யானை வழக்கம்போல அவன்முன் துதிக்கையை நீட்டியது. தையற்காரன் சினங்கொண்டான்; தன் ஊசியை எடுத்து அழுத்தமாகத் துதிக்கையில் குத்தினான். யானை நீராடச் சென்றது. யானை நீராடி மீளும்பொழுது தன் துதிக்கையில் சேறுகலந்த நீரை நிரப்பிக்கொண்டது; தையற்கடையண்டை வந்ததும், அந்நீரை அக் கடைக்காரன் மீதும், புதிய துணிகள் மீதும் கொட்டியது. தையற்காரன் தான் செய்த தவறை எண்ணி மனம் நொந்தான். பயிற்சி 1. இக்கதையை 12 வரிகளில் சுருக்கி எழுது. 2. இதனை யானை கூறுவதுபோலக் கூறுக. 3. இதனைத் தையற்காரன் கூறுவதுபோலக் கூறு. 4. இதனை மாவுத்தன் சொல்வதுபோலச் சொல். 5. யானை-தையற்காரன்-பழிவாங்கல்: இக்குறிப்புகளைக் கொண்டு இக்கதையை மூன்று பாராக்களில் எழுது. 6. அலங்கம், அழுத்தமாக, தவறை, நீராட, வழக்கம்போல-- இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. கோவில் யானை எந்தக் கோவிலைச் சேர்ந்தது? 2. தையற்காரன் அதனிடம் எப்படி நடந்து வந்தான்? 3. ஒரு நாள் அவன் என்ன செய்தான்? 4. அதனால் அவன் அடைந்த பயன் யாது? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 5. சிறுவனைக்காத்த நாய் சுந்தரம் ஐந்து வயதுடைய சிறுவன். அவன் எப்பொழுதும் தன் வீட்டுநாயுடன் விளையாடுவான். நாய் அவனைவிட்டுப் போகாது. அது சுந்தரத்தைக் கட்டிக்கொண்டு புரளும். அவனோடு ஆடும். இருவரும் தோட்டத்தைச் சுற்றிச்சுற்றி விளையாடுவார்கள் சுந்தரம் நாயைப் பள்ளத்தில் தள்ளிவிட்டுக் கலகலகவென்று சிரிப்பான். நாயும் அவனைப் பார்த்து மகிழ்ச்சியால் குரைத்து விளையாடும். ஒரு நாள் சுந்தரம் தன் நாயுடன் வீட்டுத் தோட்டத்தைத் தாண்டினான்; அதன் பக்கத்தில் இருந்த நீரோடையை அடைந்தான்; அதன் கரைமீது நின்றான். ஓர் இடம் உயர்ந்திருந்தது. சுந்தரம் அந்த இடத்தில் நின்று கொண்டு, தண்ணீர் முதலியவற்றைக் கவனிக்கலானான். ஓடையில் உள்ள கூழாங்கற்கள் மீது தண்ணீர் சலசலச என்று ஓடிக்கொண்டு இருந்தது. சூரிய வெளிச்சத்தில் மீன்கள் பளபள என்று மின்னின. கரைமீது இருந்த செடிகள் இளங்காற்றில் அசைந்து ஆடிக்கொண்டு இருந்தன.சுந்தரம் தன்னை மறந்தவனாய், இவற்றைக் கவனித்துக்கொண்டு இருந்தான். அப்பொழுது அவனது நாய் பின்புறம் நின்று அவன்மீது பாய்ந்தது. சுந்தரம் தன்னை மறந்து நின்றிருந்தான். ஆகவே, திடீரென்று பயந்து ஓடையில் விழுந்துவிட்டான். அவன் விழுந்த இடம் ஆழம் உடையது. ஆனால் உடனே நாய் தண்ணீரில் குதித்தது; சுந்தரத்தின் சட்டையைக் கவ்விக்கொண்டு அவனை இழுத்து வந்தது. நாய் இல்லாவிடில் சுந்தரம் நீரில் மூழ்கி இருப்பான் அல்லவா! பயிற்சி 1. இந்த நிகழ்ச்சியை 12 வரிகளில் எழுது. 2. இதனைச் சுந்தரம் கூறுவதுபோலக் கூறு. 3. இதனை நாய் சொல்வது போலச் சொல். 4. சுந்தரமும் நாயும்-சுந்தரமும் ஓடையும்-சுந்தரம் காப்பாற்றப்படல்: இவற்றைக் குறிப்புகளாக்க் கொண்டு இந்நிகழ்ச்சியை மூன்று பாராக்களில் எழுது. 5. சலசல, கலகலக, பளபள- இவை இரட்டைச் சொற்கள். இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். 6. இளங்காற்று, ஆழம், கவ்வி,குரைத்து - இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. சுந்தரம் நாயோடு எங்குச் சென்றான்? 2. அவன் எவற்றைக் கூர்ந்து நோக்கி நின்றான்? 3. அவன் ஏன் ஓடையில் வீழ்ந்தான்? 4. நாய் அவனை எவ்வாறு காப்பாற்றியது? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 6. தீப்பிடித்த பூனை பாலன் மூன்றாம் வகுப்பு மாணவன். அவன் காலை நேரத்தில் வீட்டுக்குச் சென்றதும், வீட்டு விளக்குகளில் மண் எண்ணெய் ஊற்றி நிரப்புவது வழக்கம். அப்பொழுது அவன் வளர்க்கும் பூனை அவன் வேலையைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும். ஒருநாள் பாலன் விளக்குகளில் எண்ணெய் ஊற்றியபோது, சிறிது எண்ணெய் தரையில்பட்டது. அந்த எண்ணெய்மீது பூனையின் வால்வட்டு நனைந்தது. இதனை அறியாத பூனை அடுப்பின் அருகில் சென்றது. பாலன் தாயால் அடுப்பண்டை அமர்ந்து சமையல் செய்து கொண்டு இருந்தார். பூனை அவர்அருகில் இருந்து அடுப்பு எரிவதை நோக்கிக்கொண்டு இருந்தது. பாலன் தாயார் வேறு வேலையாகத் தோட்டத்திற்குச் சென்றார். அவர் சென்றபின் பூனையும் வெளிச்செல்லத் திரும்பியது. அப்பொழுது அதன் பால் அடுப்பின் பக்கம் சென்றது. உடனே மண் எண்ணெய் பட்டிருந்த வாலில் தீப்பிடித்துக் கொண்டது. பூனை அதைக் கண்டதும் ஓசையிடாமல் தோட்டத்திற்கு ஓடியது. துணி துவைக்கும் தொட்டியை எட்டிப் பார்த்தது. அதில் சிறிதளவே தண்ணீர் இருந்தது. பூனை உடனே அத்தொட்டியில் குதித்தது. அப்பொழுது வாலில் எரிந்த தீ, தண்ணீர் பட்டு அணைந்தது. பாலன் தாயார் தீயைத் தண்ணீர் விட்டு அணைப்பதைப் பூனை பலமுறை பார்த்திருந்தது. ஆதலால், அறிவுள்ள அப்பூனை அந்த முறையைக் கையாண்டது. பயிற்சி 1. இந்நிகழ்ச்சியை அப்பூனையே கூறுவதுபோல எழுது. 2. இதனைப் பாலன்தாய் எழுதுவதுபோல எழுது. 3. இதனைப் பாலன் கூறுவதுபோலக் கூறு. 4. பாலனும் பூனையும்- பூனையும் அடுப்பும்-பூனையும் நெருப்பும்-இக்குறிப்புக்களைக் கொண்டு இந்நிகழ்ச்சியை மன்று பாராக்களில் எழுது. 5. அடுப்பண்டை, அணைந்தது, கையாண்டது, அறிவுள்ள -இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. பாலன் வளர்ந்த பூனைக்குட்டிமீது மண் எண்ணெய் படக் காரணம் என்ன? 2. அது தீப்பிடித்துக் கொண்டவுடன் என்ன செய்தது? 3. நீ அப் பூனையைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 7. இயந்திரம் கண்ட இளைஞன் ஜார்ஜ் ஸ்டிவென்ஸன் என்பவன் எட்டு வயது மாணவன். அவன் தகப்பனார் நிலக்கரிச் சுரங்கத்தில் இயந்திர ஓட்டியாக இருந்தார். ஜார்ஜ் அவருக்கு அடிக்கடி உணவு கொண்டுசொல்வது வழக்கம். அவன் அப்பொழுது அந்த இயந்திரத்தைப் பார்ப்பதும் உண்டு. ஜார்ஜ் மணம், இயந்திரம் செய்வதிலேயே ஊன்றி இருந்தது. அவன் களிமண் கொண்டு சிறிய இயந்திரங்களைச் செய்தான். அந்த மண் இயந்திரங்கள் உண்மை இயந்திரத்தைப் போலவே இருந்தன. அவன் மனம் படிப்பில் செல்லவில்லை. அவனுக்கு எட்டு வயது ஆனதும் தகப்பனார் அவனைப் பள்ளிக் கூடத்திலிருந்து நிறுத்தி விட்டார்;சிறிய வேலைகளில் அமர்த்தினார்; ஆடுமாடுகளை மேய்க்கும் வேலையில் விட்டார்.அப்பொழுதும் ஜார்ஜ் மண் இயந்திரங்களைச் செய்துகொண்டே இருந்தான். `நான் என் ஆயுட்காலத்திற்குள் ஓர் இயந்திரத்தையேனும் கண்டுபிடிக்கவேண்டும். என் பெயர், உலகம் எல்லாம் பரவவேண்டும்’ என்று அவ்விளைஞன் அடிக்கடி எண்ணுவது வழக்கம். அவன் எண்ணம் கைகூடும் சமயம் வந்தது. அவன் தந்தையார் திடீரென்று இறந்தார். அவரது வேலையில் ஜார்ஜ் அமர்த்தப்பட்டான். அவன் அப்பொழுதுதான் இயந்திரத்தில் பல பகுதிகளை ஆராய்ச்சி செய்து புதிய இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடித்தான். அதுதான் இரயில் என்பது. இங்கிலாந்தில் முதல் முதல் இரயிலை ஓட்டிக் காட்டிய பெருமகன் அவனே. அவன் பெயர் வாழ்க! பயிற்சி 1. இவ்வரலாற்றை ஜார்ஜ் சொல்வதுபோலச் சொல். 2. இதனை அவன் தாயார் கூறுவதுபோலக் கூறு. 3. இதைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 4. ஜார்ஜ் எண்ணம்-முயற்சி-முடிவு: இக்குறிப்புகளைக் கொண்டு இதனை மூன்று பாராக்களில் எழுது. 5. பார்வையிடுதல், திடீரென்று, ஆயுட்காலம், பெருமகன்- இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. ஜார்ஜ் ஸ்டிவென்ஸன் இளமையிற்கொண்ட எண்ணம் யாது? 2. அவன் எண்ணம் எப்பொழுது நிறைவேறியது? 3. அதற்குக் காரணம் யாது? 4. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 8. வீட்டைக் காத்த பூனை சிவப்பிரகாசம் நான்காம் வகுப்பு மாணவன். அவன் ஒரு வெள்ளைப் பூனையை அன்போடு வளர்த்து வந்தான். அது எப்பொழுது zம் அவனோடு சேர்ந்தே இருக்கும்; அவன் படிக்கும்பொழுது பூனை அவன் பக்கத்திலேயே உட்கார்ந்து அவன் படிப்பதைக் கூர்ந்து கேட்பது வழக்கம். சிவப்பிரகாசம் பள்ளிக்கூடத்திற்குப் போன பிறகு, அது எலிகளைப்பிடிக்கப் புறப்படும்; அப்படியே இரவிலும் அவன் தூங்கிய பிறகு வீட்டிற்குள் சுற்றிச்சுற்றி வரும்; எலிகளைப் பிடிக்கும்; புதிய ஓசை கேட்டாலும் புதிய வெளிச்சம் தெரிந்தாலும் சிவப்பிரகாசத்தை எழுப்பிவிடும். ஒரு நாள் சிவப்பிரகாசம் தன் அறையில் நெடுநேரம் படித்துக் கொண்டு இருந்தான்; தூக்கம் வந்ததும் விளக்கை அணைக்காமல் தூங்கிவிட்டான். நடுஇரவில் எலிகள் மேசை மீது விளையாடிக் கொண்டு இருந்தன. பூனை அவற்றைப் பிடிக்க மேசைமீது பாய்ந்தது. உடனே விளக்கு சிவப்பிரகாசத்தின் புத்தகங்கள் மீது சாய்ந்தது; புத்தகங்கள் தீப்பிடித்துக் கொண்டன. பூனை அக்காட்சியைக் கண்டதும் அஞ்சி சிவப்பிரகாசத்தை எழுப்பியது. அவன் எழுந்து பார்த்தான்; தன் புத்தகங்கள் எரிவதைக் கண்டான்; மேசைமீது ஓர் எலி செத்துக்கிடந்தது; உண்மையை உணர்ந்தான். அவன் பூனையை எடுத்து முத்தமிட்டான். தன் புத்தகங்கள் எரிந்ததைப்பற்றி வருத்தப்படவில்லை. ஆனால், அது தன்னைத் தக்க சமயத்தில் எழுப்பியதை எண்ணி எண்ணி மகிழ்ந்தான். பயிற்சி 1. சிவப்பிரகாசம் சொல்வதுபோல இதனை எழுது; 2. பூனை சொல்வதுபோல இந்நிகழ்ச்சியை எழுது. 3. சிவப்பிரகாசமும் பூனையும்-பூனையும் எலிகளும்-முடிவு: இக்குறிப்புகளைக்கொண்டு இந்நிகழ்ச்சியை 3 பாராக்களில் எழுது. 4. இதனை 12 வரிகளில் சுருக்கி எழுது. 5. எண்ணி எண்ணி, வருத்தப்பட, தக்க சமயம்-இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. சிவப்பிரகாசம் செய்த தவறு யாது? 2. அத் தவற்றால் உண்டான தீமை யாது? 3. அத்தீமையை அதிகப்படாமல் செய்தது எது? எப்படிச் செய்தது? 9. பிச்சைக்காரனது நாய் சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையத்திற்க எதிரில் ஒரு முடவன் இருந்தான். அவன் ஒரு நாயை அன்புடன் வளர்த்து வந்தான். அந்த நாயின் விலாப்புறம் ஒன்றில் உண்டிப்பெட்டி ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அப் பெட்டி மீது `முடவனுக்கு உதவி செய்யுங்கள்’ என்று எழுதப்பட்டு இருந்தது. புகைவண்டி வரும் நேரத்திலும், புறப்படும் நேரத்திலும் பிரயாணிகள் போக்குவரவு அதிகம் அல்லவா? அந்த நாய் அப்பொழுது புகைவண்டி நிலையத்தைச் சுற்றிச்சுற்றி வரும்; பிரயாணிகளிடம் வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். பிரயாணிகள் உண்டிப் பொட்டியின் மீது எழுதப்பட்டுள்ள வாக்கியத்தைப் படிப்பார்கள்; முடவன்மீது இரக்கமும், அவனுக்கு உதவி செய்யும் நாயின்மீது அன்பும் கொண்டு, தங்களால் இயன்ற பணத்தைப் பெட்டிக்குள் போடுவார்கள். அந்த நாய் பெரிய மனிதரைக் கண்டதும் அவருடைய பாதங்களுக்கு முன் படுத்துக் கொண்டு, அவர்களைப் பார்க்கும்; அவர்கள் காசு கொடாவிடில், அவர்களை விட்டு அப்பால் போகாது. அந்த நாயின் சேவையைக் கண்ட எளியவரும் தம்பிடியையோ, காலணாவையோ அதன் உண்டிப் பெட்டிக்குள் போட்ட பிறகே அப்பால் போவார். முடவன் அந்த நாயைத் தன் உயிரினும் மேலாக மதித்து வந்தான்; அதற்கு வேண்டிய அளவு உணவு கொடுத்து வந்தான். நாயும் அவனை அன்போடு காப்பாற்றி வந்தது. பயிற்சி 1. இவ்வரலாற்றை நாயே கூறுவதுபோலக் கூறு. 2. இதனை முடிவன் கூறுவதுபோலக் கூறு. 3. இதனை 12 வரிகளில் சுருக்கி எழுது. 4. நாயின் உதவி-பிரயாணிகள்-முடவனும் நாயும்: இக்குறிப்பு களைக் கொண்டு இதனை மன்று பாராக்களில் எழுது. 5. காப்பாற்றி, மதித்து, கொடாவிடில், எளியவர், புகைவண்டி நிலையம்-இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. நாய் முடவனை எவ்வாறு காப்பாற்றி வந்தது? 2. பிரயாணிகள் அந்நாயைக் கண்டு ஏன் இரக்கம் கொண்டனர்? 3. நாய் ஏன் முடிவனை நேசித்தது? 4. முடவன் ஏன் நாயை நேசித்தான்? 10. பாதிப்பங்கு சாரதாம்பாள் என்னும் பெயருடைய ஒன்றரை வயதுடைய குழந்தையும், அவள் வீட்டு நாயும் சிறந்த நண்பர்களாக இருந்தனர். அவர்கள் இருவரும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிவதே இல்லை. சாரதாம்பாள் அந்த நாயைச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நடத்திச் செல்வாள்; தான் உண்ணும் பொருள்களை அதற்கும் பங்கிட்டுக் கொடுப்பாள். அதனால் அந்நாய் அவள்மீது அளவுகடந்த அன்பு காட்டியது. ஒருநாள் நாய்க்கு ஒரு எலும்புகிடைத்தது. அஃது அதனைத் தானே சாப்பிடவேண்டும் என்று எண்ணாமல் அதனைக் கௌவிக்கொண்டு ஓடிவந்தது. அது அதனில் ஒரு பாதியைத் தன் தோழிக்குக் கொடுக்க விரும்பியது. அதனால், அது சாரதாம்பாள் படுத்திருந்த இடத்திற்கு ஓடிவந்தது. அந் நாய் எலும்பின் ஒரு முனையைச் சாரதாம்பாள் வாயில் வைத்தது. பிறகு அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு மற்றொரு முனையைத் தான் மெல்லக் கடிக்கத்தொடங்கியது. அது, தன்னைப்போலச் சாரதாம்பாளும் எலும்பைக் கடித்துத் தின்பாள் என்று எண்ணியது. மேலும், அவள் தனக்குப் பாதியைக் கொடுத்ததுபோலவே தானும் அவளுக்குப் பாதியைத் தந்ததாக எண்ணி மகிழ்ந்தது. சாரதாம்பாள் தன் வாயில் வைக்கப்பட்ட எலும்பின் முனையை வெளியே தள்ளிவிட்டாள். அது கண்ட நாய் வருத்தத்தோடு அவளைப் பார்த்தது. பயிற்சி 1. இக் கதையைச் சாரதாம்பாள் கூறுவதுபோலக் கூறு. 2. இந் நிகழ்ச்சியை நாய் சொல்வது போலச் சொல்லு. 3. இதனை 12 வரிகளில் சுருக்கி எழுது. 4. நாயும் சாரதாம்பாளும்-பாதிப்பங்கு-எலும்புத் துண்டு-நாயின் வருத்தம்: இக் குறிப்புகளைக் கொண்டு 3 பாராக்கள் எழுது. 5. நண்பர், ஓடிவந்தது, பாதிப்பங்கு, மெல்ல, வருத்தத்தோடு-இச் சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. சாரதாம்பாள் நாயினிடம் எவ்வாறு தன் அன்பைக் காட்டினாள்? 2. நாய் தன் அன்பை எவ்வாறு காட்டியது? 3. நீ இக்கதையால் அறிவது யாது? 11. காயம்பட்ட நாய் ஒரு நாய் மற்றொரு நாயைத் துரத்திக் கொண்டு ஓடிற்று. அது ஓடிய விரைவில் உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்று இதன் காலை அறுத்துப் பெரிய காயத்தை உண்டாக்கி விட்டது. அதனால், அந்த நாய், பாவம்! தத்தித் தத்தி நடந்தது. அது வழியில் தனக்கு அறிமுகம் உள்ள வேறொரு நாயைக் கண்டது. அந்தப் புதிய நாய் மருத்துவ நிலையத்தை அறிந்திருந்தது போலும்! அது முன்னே ஓடியது; காயம்பட்ட நாய் அதனைத் தொடர்ந்து சென்றது. முடிவில் இரண்டும் ஒரு மருத்துவ நிலையத்தை அடைந்தன. அப்பொழுது அங்கே கதவு மூடப்பட்டு இருந்தது. அதைக் கண்ட இரண்டு நாய்களும் குரைத்தன. கதவு திறக்கப்பட்டது. உடனே புதிய நாய் ஓடிவிட்டது. அது தன் கடமை தீர்ந்துவிட்டது என்று ஓடி விட்டது போலும்! ஆனால், காயம்பட்ட நாய் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. காவற்காரன் துரத்தியும் அது போகவில்லை, பிறகு மருத்துவர் அந்த இடத்துக்கு வந்தார்; நாயின் காயத்தைப் பார்த்தார்; அதை உள்ளே அழைத்துச் சென்றார்; அதன் காயத்தை மருந்திட்டுக் கட்டினார். அந்த நாய் அன்று முதல் நாள்தோறும் அந்த மருத்துவரிடம் சென்றது. இவ்வாறு அது தன் காயம் ஆறும்வரை அங்குப் போய் வந்தது. அந்நாய் மனிதரைப் போலவே மருத்துவரிடம் நன்றியறிதல் உடையதாக நடந்துவந்தது. நாய் நன்றியுள்ள விலங்கு அல்லவா? பயிற்சி 1. காயமடைந்த நாயின் வரலாற்றைச் சுருக்கி எழுது. 2. நாயே தன் வரலாற்றைக் கூறுவதுபோலக் கூறு. 3. மருத்துவர் இதனைக் கூறுவதுபோலக் கூறு. 4. நாய் காயம்பட்டமை-வேறு. நாய் செய்த உதவி-மருத்துவர்: இக்குறிப்புகளைக் கொண்டு இக்கதையை மூன்று பாராக்களில் எழுது. 5. தத்தித்தத்தி, அறுத்து, துரத்திக்கொண்டு, நாள்தோறும், நன்றி யறிதல் இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. நாய்கள் ஏன் மருத்துவ நிலையத்தை நாடின? 2. அழைத்துச் சென்ற நாய் ஓடிவிட்ட காரணம் யாது? 3. காயம்பட்ட நாய் எப்படி மருத்துவ உதவி பெற்றது? 4. நீ இக் கதையால் நாயைப்பற்றி என்ன அறிகிறாய்? 12. முத்தம் தாமஸ் எட்டாம் வகுப்பு மாணவன். அவன் கணக்குப்போடுவதில் வல்லவன். அவன் பல பெரிய கணக்குகளைத் தன் மனத்தால் போட்டுவிடுவான்; பெரிய பிள்ளைகள் போட முடியாத கணக்குகளை எல்லாம் தாமஸ் போட்டு விடுவதுண்டு. பிறர் காகிதத்தில் போடும் கணக்குகளை அவன் மனதிலேயே போட்டு விடை சொல்லுவான். ஒரு நாள் அவன் பின்பக்கமே கணக்கில் கழித்துவரும் முறையைக் கண்டு பிடித்தான்; முன்செல்லும் எண்களைக் கொண்டே பின்பக்கம் கழித்தான். அவனுடைய ஆசிரியர் இப் புதிய முறையைக் கண்டு வியப்படைந்தார்; அவனை மற்ற மாணவர்முன் புகழ்ந்து கொண்டாடினார். அதுகேட்ட அறிவுற்ற மாணவர்கள் அவனைப் பாராட்டினார்கள். தாமஸ், தன் தகப்பனாரிடம் தான் கண்டு பிடித்த புதிய முறை யை விளக்கிக் கூறினான். அவன் தந்தையார் அவனை அடிக்கடி புகழ்வதில்லை. ஆனால், இம்முறை அவர் தாமஸை வானளாவப் புகழ்ந்தார்; அவனைக் கட்டி அணைத்து முத்தம் இட்டார். பல ஆண்டுகள் கடந்தன. தாமஸ் கணக்குப் போடுவதை மறந்துவிட்டான். கணக்குப் போடுவதில் அவனுக்கு இருந்த உணர்ச்சி குறைந்துவிட்டது. அதனால் அவன் எளிய மக்கள் போடும் கணக்கையும் போடக் கூடவில்லை. ஆனால், கணக்குப் போடுவதை மறந்த தாமஸ், தகப்பனாரிடம் பெற்ற முத்தத்தை மட்டும் மறக்கவே இல்லை. அம் முத்தம் புத்தகத்தில் வைக்கப்பெற்ற மலர்போல அவன் மனத்தில் பதிந்திருந்தது. பயிற்சி 1. இக்கதையைத் தாமஸ் கூறுவதுபோலக் கூறு. 2. அவன் தந்தை கூறுவது போலக் கூறு. 3. தாமஸ் கணக்கில் வல்லவன்-புதியமுறை கண்டு பிடித்தல்- ஆசிரியர் புகழ்தல்- தந்தை அளித்த முத்தம்: இக்குறிப்புகளைக் கொண்டு மூன்று பத்திகளாக இக்கதையை எழுது. 4 வல்லவன், பாராட்டினார், வானளாவ, உணர்ச்சி: இச்சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. தாமஸ் எதைப் போடுவதில் கெட்டிக்காரன்? 2. அவன் கண்டு பிடித்த புது முறை யாது? 3. அதைக் கேட்ட ஆசிரியர் என்ன செய்தார்? 4. அதைக் கேட்ட தகப்பனார் என்ன செய்தார்? 5. பெரியவன் ஆனபிறகு தாமஸ் நிலை என்ன? 6. அவன் எதை மறந்தான்? எதை மறக்கவில்லை? 13. வேடனும் புறாக்களும் ஒரு காட்டில் வேடன் ஒருவன் வில்லும் அம்பும் கையிலேந்தி அலைந்துகொண்டு இருந்தான். அவன் முடிவில் அயர்ந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அங்ஙனம் உட்கார்ந்தவன் எதிரிலிருந்த மரக்கிளை ஒன்றன்மீது இரண்டு புறாக்கள் இருந்ததைப் பார்த்து விட்டான். வேடன், `ஆ! இரண்டு புறாக்கள் அகப்பட்டன’ என்று மகிழ்ந்த வனாய் எழுந்தான்; அப்புறாக்களைக் கொல்லக் குறிபார்த்தான். அப் புறாக்களுக்கு மேல் கிளையில் பருந்து ஒன்று உட்கார்ந்திருந்தது. அதனால், புறாக்கள் மேலே பறக்கவும் கூடவில்லை; கீழே பறந்து தப்பவும் முடியவில்லை. அவை இருதலைக்கொள்ளி எறும்புபோலத் திண்டாடின. வேடன் புறாக்களைக் குறி பார்த்தபடியே மெல்லமெல்ல நகர்ந்து மரத்தடிக்கு வந்தான். அம்மரத்தடியில் கருநாகப் புற்று ஒன்று இருந்தது. வேடன் அதை நோக்காமல், அதன் மீது காலை வைத்து விட்டான். அப்போது கருநாகம் வெளியில் தலை நீட்டிக்கொண்டு இருந்தது. அதனால் அது உடனே பட்டென்று வேடன் காலைத் தீண்டியது. பாவம்! வேடன், நஞ்சு தலைக்கேற நிலை தளர்ந்து நிலத்தில் சாய்ந்தான். அவன் அம்புக் குறி தவறிப் புறாக்களுக்கு மேலே இருந்த பருந்தின்மீது பட்டது. பருந்து உடனே கீழே வீழ்ந்து இறந்தது. புறாக்கள் மகிழ்வோடு பறந்து சென்றன. பயிற்சி 1. இக்கதையைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இதனை வேடன் கூறுவதுபோலக் கூறு. 3. இதனைப் பருந்து கூறுவதுபோலக் கூறு. 4. இதனைப் புறாக்கள் சொல்வதுபோலச் சொல். 5. வேடனும் புறாக்களும் - புறாக்கள் நிலமை- முடிவு: இக்குறிப்புக்களைக்கொண்டு இக்கதையை மூன்று பத்திகளில் எழுது. 6. நிலைதளர்ந்து, இன்புற்று, இருதலைக்கொள்ளி எறும்பு, குறி பார்த்து, மெல்லமெல்ல- இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. வேடன் புறாக்களை எங்குக் கண்டான்? 2. புறாக்கள் பறந்து போகாமைக்குக் காரணம் யாது? 3. வேடன் ஏன் இறந்தான்? 4. பருந்து ஏன் இறந்தது? 5. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 14. கொம்பை ஊதிய வீரன் ஓர் இடத்தில் நடந்த போரில் ஒருபடை பின்வாங்கும்படி கட்டளை இடப்பட்டது; அதனை உணர்த்தக் கொம்பை உடைய வீரன் ஒருவன், தன் கொம்பை எடுத்துப் பலமாக ஊதினான். ஆனால், அப் படை நீண்ட தொலை பரவி இருந்ததால், கொம்பின் ஓசையை எல்லா வீரரும் கேட்டனர் என்று திட்டமாகச் சொல்ல முடியாது. ஆதலால், அவ்வீர இளைஞன், பின் வாங்கிச் செல்லுவதை உணர்த்தும் முறையில் மீண்டும் பலமாகத் தன் கொம்பை எடுத்து ஊதினான். அவன் இவ்வாறு பல முறை ஊதினான். வீரர் பலர் அவனைக் கடந்து பின் வாங்கிச் சென்றனர். ஆயினும், அவன் தன் இடம் விட்டு அசையவில்லை. இன்னும் தன் கொம்போசை கேளாமல் எவரேனும் இருப்பரோ என்பதை அறிய அவன் ஆசைப்பட்டான். ஆ! அந்நேர்த்தில் ஒரு குண்டு அவனைத் தாக்கியது. ஆயினும், அவன் இடம்விட்டுப் போகவில்லை. மீண்டும் அவன்மேல் இரண்டு குண்டுகள் தாக்கின. அவன் அப்பொழுதும் தன் கொம்பை எடுத்து ஊதுவதை நிறுத்தவில்லை. ஐயோ! பாவம்! நான்காம் குண்டு அவன் இடது கையைத் துண்டித்துவிட்டது. அவ்வீர இளைஞன் இறக்கவில்லை. அவன் தன் படைவீரரைக் காக்க விரும்பி இடம்விட்டு அசையாமல் நின்று கொம்பூதிக்கொண்டு இருந்தான்; பிறர்பொருட்டுத் தன் ஒரு கையை இழந்தான். ஆயினும், அவன் அதனால் மிக்க மகிழ்ச்சியே அடைந்தான். பயிற்சி 1. இக்கதையைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இவ் வரலாற்றை இளைஞன் கூறுவதைப்போலக் கூறு. 3. எதிரிப்படை ஆள் கூறுவதைப்போல இதனைக் கூறு. 4. கொம்பை உடைய வீரன் - கட்டளை- பலமாக ஊதினான்-குண்டு தாக்கியது; இக்குறிப்புகளைக் கொண்டு மூன்று பாராக்களில் இக் கதையை எழுது. 5. கட்டளை, வீரன், திட்டமாக, பின்வாங்கினர், தாக்கியது: இச்சொற்களை உன் சொந்த வாக்கியதிலமைத்து எழுதுக. கேள்விகள் 1. இளைஞன் ஏன் கொம்பை ஊதினான்? 2. அவன் ஏன் பலமுறை ஊதினான்? 3. அவன் இடம்விட்டு நகராமல் இருந்ததால் என்ன துன்பத்தை அடைந்தான்? 4. அவனது செயல் சரியானதா? 15. இரக்கம் கொண்ட பெரியார் ஜான் ஹோவார்ட் என்பவர் இங்கிலாந்தில் பிறந்தவர். அவர் ஒரு முறை அயல் நாடுகளைக் காணக் கப்பல் பயணம் செய்தார். அப்போது ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் போர் செய்துகொண்டு இருந்தனர். அதனால், பிரஞ்சுக்காரர் ஹோவார்ட் சென்ற கப்பலைப் பிடித்துக்கொண்டனர்; அதில் இருந்தவர்களை ஒரு சிறையில் அடைத்தனர். ஹோவார்ட் பெரிய பணக்காரர். அவர் சிறை வாழ்க்கை அறியாதவர், அவர், சிறையில் மிகவும் துன்பப்பட்டார். சிறையில் போதுமான வெளிச்சம் இல்லை; காற்றோட்டம் இல்லை. சிறை, பூச்சி புழுக்களுக்கு ஏற்ற இடமாக இருந்தது. அங்கே நல்ல உணவும் கிடையாது. சில மாதங்கட்குப் பிறகு அவர் விடுதலை அடைந்து, இங்கிலாந்து சென்றார். அவர் தம் நாட்டுச் சிறைச்சாலைகளைக் காணச் சென்றார். இங்கிலாந்தில் இருந்த சிறைச்சாலைகளைப்பற்றி விரிவான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அந் நூல் வெளிவந்த பிறகே சிறைச்சாலையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஹோவார்ட் அயல் நாட்டுச் சிறைகளையும் ஒழுங்காக்க முயன்றார்; அயல் நாடுகட்குச் சென்று ஏழை மக்கட்குப் பல வழிகளில் உதவி செய்தார்; முடிவில் ஓர் ஏழைப் பெண்ணுக்கு உதவிசெய்துகொண்டு இருக்கையில், அவளைப் பற்றியிருந்த நோய் அவரையும் பிடித்துக் கொண்டது. பாவம்! ஏழைகட்கு உழைத்த அப்பெரியார் அந்த அந்நிய நாட்டில் அந்த நோயால் இறந்தார். அவரது திருப்யெர் வாழ்க! பயிற்சி 1. இவ்வரலாற்றைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இதனை ஹோவார்ட் கூறுவதுபோலக் கூறு. 3. இதனால் நீ அறிந்துகொள்ளும் படிப்பினை யாது? 4. சிறை வாழ்க்கை - சிறை நூல் - தொண்டு புரிதல் - முடிவு: இக்குறிப்புகளைக்கொண்டு இவ்வரலாற்றை நான்கு பாராக்களில் எழுதுக. 5. போதுமான, விடுதலை, பயணம் விரிவான, ஒழுங்காக்க, திருப்பெயர் - இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. ஹோவார்ட் ஏன் சிறைப்பட்டார்? 2. அவர் சிறையில் கண்டது என்ன? 3. அவர் என்ன செய்ய உறுதி கொண்டார்? 4. அவர் எழுதிய நூல் யாது? 5. அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? 6. அவர் இறுதியில் எங்கு இறந்தார்? எப்படி இறந்தார்? 7. நீ இக் கதையால் அறியும் படிப்பினை யாது? 16. காயம்பட்ட பறவை கண்ணன் தகப்பனார் சிறந்த கடல் மாலுமி, அவர் ஒருநாள் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கடற்கரை வழியே நடந்து சென்றார். அப்போது ஒரு கடற்பறவை அவர் கண்ணில்பட்டது. அதை நோக்கிச் சுட்டார். அது கடல் நீரில் விழுந்தது. கடல் அலைகள் அப்பறவையைக் கரைக்குக் கொண்டுவந்தன. அதைக் கண்ட கண்ணன் தகப்பனார், அதை எடுத்துக்கொள்ள எண்ணினார். ஆனால், வேறு இரண்டு கடற்பறவைகள் விழுந்த அப்பறவையை நோக்கிப் பறந்தன. அவை அதன் இரண்டு இறகுகளையும் தம் அலகுகளால் பற்றித் தூக்கிச் சென்றன. அவை நெடுந்தொலை பறந்து சென்றன. கண்ணன் தகப்பனாரும் அவற்றைப் பின் தொடர்ந்து ஓடினார். அப்பறவைகள் களைப்படைந்தன. உடனே வேறு இரண்டு பறவைகள் அவற்றின் வேலையை மேற்கொண்டன. இவ்வாறு அப்பறவைகள் விழுந்த பறவையைத் தூக்கிச்சென்று ஒரு பாறை மீது விட்டன. கண்ணன், தகப்பனார் அந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினார். ஆனால், அவர் பாறையை அமைவதற்குள் முன்போலபே இரண்டு பறவைகள் அதனைத் தூக்கிக்கொண்டு பறந்தன. வேறு சில பறவைகள் அவற்றிற்கு உதவிசெய்யப் பின்தொடர்ந்தன. கண்ணன் தந்தையார் அப்பறவைகளின் உணர்ச்சியைக் கண்டு மனம் இளகினார்;`இனிப் பறவைகளைச் சுடுவதில்லை’ என்று உறுதிகொண்டார். பயிற்சி 1. இக்கதையைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இதனைக் கண்ணன் தகப்பனார் எழுதுவதுபோல எழுது. 3. இதனைக் காயம்பட்ட பறவை சொல்வதுபோலச் சொல். 4. இதனை உதவி செய்த பறவைகள் உரைப்பது போல ஊரை. 5. காயம்பட்ட பறவை-பறவைகளின் உதவி-உறுதி: இக்குறிப்பு களைக் கொண்டு இதனை மூன்று பாராக்களில் எழுது. 6. துப்பாக்கி, மாலுமி, முன்போலவே, தூக்கிக் கொண்டு, உணர்ச்சி-இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. கண்ணன், தகப்பனார் சுட்ட கடற்பறவை என்ன ஆயிற்று? 2. அதைப் பறவைகள் எவ்வாறு காப்பாற்றின? 3. கண்ணன் தகப்பனார் செய்துகொண்ட முடிவு யாது? 4. நீ இக்கதையால் அறியும் நீதி யாது? 17. தனக்கென வாழாத வீரன் ஓர் ஆங்கில வீரன், ஒரு கப்பலில் சென்று கொண்டிருந்தான். அது கவிழ்ந்துவிட்டது. எனவே, அவன் கடல்நீரில் துன்பப்பட்டு நீந்திக்கொண்டு இருந்தான். அவ்வழிச் சென்ற படகு ஒன்று அவனைக் காப்பாற்றியது. ஆனால், அப்படகு சிறிது தொலை சென்றதும், வேறொரு வீரன் கடலில் துன்பப்படுவதை ஆங்கில வீரன் கண்டான். அவனைக் கைகொடுத்துத் தூக்கிப் படகில் ஏற்றிக்கொண்டான். `படகின் சுமை அதிகமாகிவிட்டது. ஓர் ஆள் சுமை மிகுதி. படகு விரைவில் கவிழ்ந்து விடும். எச்சரிக்கையாக இருங்கள்’ என்று படகோட்டி பகன்றான். எல்லோரும் ஆங்கில வீரர் இருவரையும் ஒருவாறு நோக்கினர். முதல் வீரன் இரண்டாம் வீரனைப் பார்த்து, `ஐயனே! உனக்கு மணம் ஆகிவிட்டதா? பிள்ளைகள் உண்டா?’ என்று அன்புடன் கேட்டான். காயட்பட்டிருந்த அவ்வீரன், `ஆம்; எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். என் மனைவியும் பிள்ளைகளும் என் வரவை எதிர்நோக்கி இருப்பார்கள்’ என்று கண்ணீர் வடியக் கூறினான். முதல் வீரன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. உடனே கடலிற் குதித்தான். படகு தீங்கின்றிக் கரைநோக்கிச் சென்றது. ஆனால், நீரிற்குதித்த வீரன் கரை சேரவில்லை. அப்பெருமகன் புண்பட்ட வீரனுடைய மனைவி மக்கள் பொருட்டுத் தன் உயிரை மாய்த்தான். அவன் தனக்கென வாழா வீரன் அல்லவா? கேள்விகள் 1. ஆங்கில வீரன் மனம் எப்படிப்பட்டது? 2. அவன் புண்பட்ட வீரனை யாது கேட்டான்? 3. அதற்கு அவன் அளித்த விடை யாது? 4. வீரன் முடிவில் என்ன செய்தான்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 18. காகங்கள் பலராமன் வீட்டுத் தோட்டம் மிகவும் சிறியது. ஆயினும், அவன் பெற்றோர் அதனை அழகாகவே வைத்திருந்தனர்; அதில் மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, சாமந்தி முதலிய பூச்செடிகள் வைத்துப் பயிராக்கி இருந்தனர்; முள்ளங்கி, கீரைத்தண்டு, வாழை, பலா முதலியவற்றை வைத்தும் பயிராக்கி இருந்தனர். அத்தோட்டத்தில் ஓர் அரசமரம் இருந்தது. அதன் கிளைகளில் பல காகங்கள் கூடுகட்டி வாழ்ந்தன. கோடைக் காலத்திலும் மழைக் காலத்திலும் அவை அம்மரத்தை விட்டுப் போவதே இல்லை. பலராமன் மாலை நேரங்களில் அக் காக்கைகளையே நோக்கிக் கொண்டு இருப்பான். அவை எல்லாம் ஒன்றுகூடிப் பேசிக்கொண் டிருக்கும். அவை ஒருநாள் மாலை அரசமரக் கிளைகள் மீது அணி அணியாக அமர்ந்திருந்தன. அவற்றின் ஓசையைக் கேட்ட பலராமன் தோட்டத்தின் நடுவில் இருந்த மேடைமீது உட்கார்ந்து, அவற்றை நோக்கினான். காகங்கள் ஏறக்குறைய நூறு இருக்கலாம். அவற்றுள் ஒன்று நடுவில் அகப்பட்டுத் தவித்தது.எல்லாக் காகங்களும் அதைப்பற்றியே பேசின. அக்காகங்கள் அத்தனிக் காகத்தைக் குறுக்குக் கேள்விகள் கேட்டன; அது செய்த தவற்றைப்பற்றிய பல பேச்சுக்கள் நிகழ்ந்தன. பிறகு பேச்சு நின்றது. அவை நூறும் அத் தனிக்காகத்தின்மீது பாய்ந்து அதனைக் கொத்தின. அது கீழே விழுந்தது. பலராமன் அதை எடுக்க ஓடினான். அது இறந்து கிடந்தது. `காகங்களுக்கும் வழக்குத்தீர்ப்பு உண்டோ!’ என்று பலராமன் வியப்படைந்தான். பயிற்சி 1. இக்கதையைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இதனைப் பலராமன் கூறுவதுபோலக் கூறு. 3. இதனைக் காகங்கள் சொல்வதுபோலச் சொல். 4. தோட்டம்-காகங்கள்-வழக்கு-முடிவு: இக் குறிப்புக்களைக் கொண்டு இக்கதையை நான்கு பாராக்களில் எழுது. 5. அழகாக, கூடுகட்டி, மேடைமீது, வழக்கு, குறுக்குக் கேள்வி-இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. பலராமன் வீட்டுத் தோட்டம் எப்படிப்பட்டது? 2. காக்கைகள் எங்குக் குடியிருந்தன? 3. அவை மாலைநேரங்களிலும் என்ன செய்தன? 4. ஒருநாள் அவை கூடி என்ன செய்தன? 5. ஒரு காகம் கொல்லப்பட்டது ஏன்? 6. பலராமன் யாது கூறி வியப்பு அடைந்தான்? 19. இருளில் துணை மாணிக்கம் மூன்றாம் வகுப்பு மாணவன். அவன் எலியின் ஓசை கேட்டாலும் அஞ்சும் இயல்புடையவன். அவனுக்கு இருளைக் கண்டால் அச்சம் அதிகம். அவன் தகப்பானர், `தம்பி! நீ இங்ஙனம் அஞ்சுதல் தவறு, இருளைக் கண்டு அஞ்சலாமா! என்று கடிந்தார். மாணிக்கம் விளக்கைக் கண்டால் ஆறுதல் அடைவான். ஆனால், தந்தையார் விளக்கை அணைத்துவிட்டுத்தான் படுத்துக்கொள்வார். அதனால், மாணிக்கம் இருளைக்கண்டு அஞ்சிக் கொண்டே தூங்காமல் இருப்பான். அவன் ஓர் இரவு தன் பெற்றோர் தூங்கிவிட்ட பிறகு மெதுவாக எழுந்து சன்னல் அருகிற் சென்றான்; சன்னல் வழியாக வானத்தைப் பார்த்தான்; வானம் நீல நிறக் கம்பளம்போலக் காட்சி அளித்தது; நீலக்கம்பளத்தில் முத்துக்கள் பதித்திருந்தால்போல விண்மீன்கள் தோற்றம் அளித்தன. மாணிக்கம், விண்மீன்களும் இருளில் தன்னைப் போலத் தனியே இருப்பதாக எண்ணினான். அவற்றின் தனிமையை நோக்க, ஒரே அறையில் பெற்றோருடன் இருந்த தான் தனியனாக இருக்கவில்லை என்பதை உணர்ந்தான். அப்பொழுதுதான் அவனுக்குச் சிறிது அச்சம் நீங்கியது. மாணிக்கம் அன்றுமுதல் சிறிது சிறிதாக அச்சம் நீங்கப்பெற்றான். அவனது மன நிலைமாறிவருவதைக்கண்ட பெற்றோர், காரணத்தை அறிந்து மகிழ்ந்தனர். பயிற்சி 1. இக்கதையை மாணிக்கம் எழுதுவதுபோல் எழுது. 2. இந்நிகழ்ச்சியை அவன் தகப்பானார் கூறுவது போலக் கூறு. 3. மாணிக்கம்-எலியின் ஓசை-அச்சம்-தந்தையின் புத்திமதி-வானமும் மாணிக்கமும்: இக் குறிப்புகளைக்கொண்டு இக்கதையை 3 பத்திகளில் எழுது. 4. அஞ்சுதல், ஆறுதல், நீலநிறம்,- மனநிலை: இச்சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைக்க. கேள்விகள் 1. மாணிக்கம் கொண்டிருந்த அச்சம் யாது? 2. அவன் தகப்பனார் என்ன சொன்னார்? 3. மாணிக்கம் சன்னல் அருகில் நின்று எவற்றைப் பார்த்தான்? 4. அவன் என்ன எண்ணினான்? 5. அவன் அச்சம் நீங்கியதற்குக் காரணம் யாது? 6. இக்கதையால் நீ அறிவது யாது? 20. அஞ்சாத போர்வீரன் ஸ்காட்லாந்து தேசத்துப் போர்வீரர் சிலர் ஜெர்மன் வீரர் பலரை எதிர்த்து, ஓர் ஆற்றின் எதிர்கரையில் நின்று போர்செய்தனர். ஜெர்மன் வீரர்கள் மடமட என்று குண்டுகளைப் பொழிந்துகொண்டு இருந்தனர். அவற்றுள் ஒன்று ஸ்காட்லாந்து வீரர் படைத்தலைவரின் காலில் பாய்ந்தது. அவர் அடியற்ற மரம்போலக் கீழேவிழுந்தார். உடனே ஒரு வீரன் பிறர்க்குத் தெரியாமல் தரைமீது ஊர்ந்து சென்று அத் தலைவரை அடைந்தான்; அவரைக் காக்க முயன்றான். அவ்வீரன் அவரைத் தூக்கிக்கொண்டு ஆற்றில் குதித்தான். அவர் அவனை இறுகப் பிடித்துக்கொண்டார். வீரன் அவரைச் சுமந்து கொண்டே மிகுந்த வருத்தத்தோடு ஆற்றில் நீந்தினான். அவன் ஆற்றில் நீந்திச்செல்லும்பொழுது பகைவர் அவ்விரு வரையும் நோக்கிச் சுட்டபடியே இருந்தனர். ஆயினும், நல்லகாலம்! அக்குண்டுகள் அவர்கள்மீது படவில்லை. அவர்கள் தீங்கின்றி அக்கரையை அடைந்தனர். இவ்வாறு அப்போர்வீரன் தன் தலைவரது உயிரைக் காத்தான். அவன் தனது முயற்சியில் பகைவரால் சுடப்பட்டு இருக்கலாம். அவன் அதை நன்கு அறிந்திருந்தும், தன் உயிரைப் பொருட் படுத்தாமல், இம் முயற்சியில் ஈடுபட்டான். அவனுடைய முயற்சி பெரிதும் பாராட்டத் தக்க செயல் ஆகும் அல்லவா? பயிற்சி 1. இக்கதையை வீரன் கூறுவதுபோலக் கூறு. 2. எதிர் படைவீரன் இதனைக் கூறுவதுபோலக் கூறு. 3. ஸ்காட்லாந்து போர்வீரர்-தலைவர் காயம்பட்டார்-வீரன் முயற்சி-ஆற்றைக் கடத்தல்: இக் குறிப்புக்களைக் கொண்டு இக்கதையை மூன்று பாராக்களில் எழுது. 4. மடமட, பொழிந்து, அடியற்ற மரம்போல, தீங்கின்றி: இச்சொற் களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுதுக. கேள்விகள் 1. படைத் தலைவருக்கு நேர்ந்த இடையூறு யாது? 2. வீரன் அவரை எப்படிக் காப்பாற்றினான்? 3.. அவன் ஏன் அவரைக் காப்பாற்றினான்? 4. நீ அவ்வீரனைப் பற்றி என்ன நினைக்கிறாய்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 21. நாயும் பூனையும் நாயும் பூனையும் பெரும்பாலும் ஒத்துவாழும் வழக்கம் இல்லை. அதனால்தான் ஆறுமுகம் தான் கொண்டுவந்த பூனைக்குட்டியைத் தன் நாயின் எதிரில் விட அஞ்சினான். நாய் பூனைக்குட்டியைக் கண்டதும் ஆறுமுகத்தின்மேல் தாவியது. அதன் தாவுதல் ஆறுமுகத்தின் ஐயத்தை உறுதிப்படுத்தியது. ஆனால், ஆறுமுகம் சாப்பிட்டபொழுது பூனைக்குட்டியை நாய் அன்போடு நக்குவதைக் கண்டு வியப்படைந்தான். அது மேலும் என்ன செய்கிறது என்பதை நோக்கினான். பூனைக்குட்டி நாயின் வாலைக் கடித்து இழுத்தது. நாய் அதை நோக்காதது போலவே இருந்தது. அதனைக் கண்ட ஆறுமுகத்தின் ஐயம் தீர்ந்துவிட்டது, அவன் அதுமுதல் பூனைக்குட்டியைவிட்டுப் பிரிவதே இல்லை; எவரேனும் பூனைக்குட்டியினிடம் வந்தால், நாய் அவரை நோக்கிக் குரைக்கும். அவை இரண்டும் பலவகை விளையாட்டுகள் விளையாடும். பூனைக்குட்டி நாயின் முதுகின் மீது ஏறிக்கொள்ளும்; நாய் மகிழ்ச்சி யோடு அதனைச் சுமந்துகொண்டு செல்லும். சில நேரங்களில் நாய் மெதுவாக நடந்து போகும்பொழுது பூனைக்குட்டி அதன் வாலை பிடித்து விளையாடிக்கொண்டே பின்செல்லும். அவைகள் ஒற்றுமை யோடு விளையாடுவதைக் கண்டு ஆறுமுகம் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். பயிற்சி 1. இக்கதையைப் பூனை சொல்வதுபோல எழுது. 2. நாய் இக்கதையைக் கூறுவதுபோலக் கூறு. 3. ஆறுமுகம் சொல்வதுபோலக் கதையை எழுது. 4. பூனைக்குட்டியும், நாய்க்குட்டியும்-ஆறுமுகத்தின் ஐயம்-ஒற்றுமை - ஆறுமுகத்தின் மகிழ்ச்சி: இக்குறிப்புகளைக் கொண்டு, மூன்று பாராக்களில் இக்கதையை எழுது. 5. தாவியது, ஐயம், பாதுகாப்பு, ஒற்றுமை: இச்சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் எழுதுக. கேள்விகள் 1. ஆறுமுகம் என்ன எண்ணி அஞ்சினான்? 2. அவன் அச்சம் எவ்வாறு தீர்ந்தது? 3. பூனைக்குட்டியும் நாயும் எப்படிக் காலம் கழித்தன? 4. அவற்றின் விளையாட்டுகள் என்ன? 5. நீ இக்கதையால் அறிவது என்ன? 22. கொத்தர் கற்பித்த பாடம் ஓர் அறிஞர் பல நூல்களை ஆராய்ச்சி செய்தார்; பலரைக் கேட்டு ஐயம் தெளிந்தார்; தம் நாட்டுப் பழைய வரலாறுபற்றி ஒரு நூல் எழுதினார்; அதனை மேலும் பல முறை திருத்தினார்; பலரிடம் காட்டித் திருத்தம் செய்துகொண்டார்; முடிவில் அதனை நன்றாக எழுதி முடித்தார். அவர் அதனைத் தம் நண்பர் ஒருவரிடம் தந்து படித்துப் பார்க்குமாறு வேண்டினார்.அந்த நண்பர் பெரும் பணக்காரர்; ஆனால், புத்தகத்தின் அருமை பெருமைகளை அறியாதவர். ஆதலின், அவர் அதனைக் கருத்தின்றித் தம் மேசை மீது போட்டுவிட்டார். சில நாட்களுக்குப் பின் அந்த ஏட்டுச்சுவடி சமையற்காரன் கையில் அகப்பட்டது. அவன் அதைப் பால் காய்ச்சப் பயன்படுத்தி விட்டான். இந்தச் செய்தி அறிந்து பணக்காரர் வருந்தினார்; நூல் ஆசிரியரிடம் உண்மையைக் கூறி, அப்புத்தகத்திற்கு விலையாக ஐந்நூறு ரூபாய் தருவதாகக் கூறினார். ஆனால் நூலாசிரியர் அதற்கு இணங்கவில்லை. நூலாசிரியர், `நான் அரும்பாடுபட்டு அந்த நூலை எழுதினேன். அது தொலைந்து விட்டது. இனி நான் அதுபோல எழுதுவது இயலாது’ என்று கூறிக்கொண்டே தம் வீடு நோக்கிச் சென்றார்; வழியில் கொத்தர்கள் இடிந்து விழுந்த சுவரைக் கட்டுவதைக் கண்டார்; புதிய சுவர் அடியோடு விழுந்துவிட்டது. கொத்தர்கள் முக மலர்ச்சியோடு மீண்டும் சுவரை எழுப்பினார்கள். புலவர் கொத்தர்களைப் போலத் தாமும் புதிதாகத் தம் நூலை எழுதி முடிக்கத் தீர்மானித்தார்; தமக்குப் பாடம் கற்பித்த கொத்தரை மனமார வாழ்த்தினார். பயிற்சி 1. நூலாசிரியரைப் பற்றிய நிகழ்ச்சியைச் சுருக்கி எழுது. 2. இந்நிகழ்ச்சியை அவர் கூறுவதுபோலக் கூறு. 3. இதனை அவர் நண்பர் கூறுவதுபோலக் கூறு. 4. வரலாற்று நூல் -பணக்காரர்- ஆசிரியர் வருத்தம்- கொத்தர்கள்: இக்குறிப்புக்களைக் கொண்டு இதனை நான்கு பாராக்களில் எழுது. 5. ஆராய்ச்சி, திருத்தம், ஆசிரியர், புதிதாக, மனமார:- இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. அறிஞர் என்ன நூலை எழுதினார்? 2. அவர் அதனை யாரிடம் கொடுத்தார்? ஏன்? 3. அந் நூல் என்ன ஆயிற்று? ஏன்? 4. அறிஞர் அதைப்பற்றி என்ன எண்ணி வருந்தினார்? 5. பிறகு அவர் எதனால் மன எழுச்சி கொண்டார்? 6. கொத்தர் கற்பித்த பாடம் யாது? 23. நாகப்பன் வீட்டு நாய் நாகப்பன் மூன்றாம் வகுப்பு மாணவன். அவன் ஓர் அழகிய நாயை வளர்த்து வந்தான். அதன் நிறம் வெள்ளை. அது பார்க்க அழகாக இருந்தது. அது நாகப்பனிடம் மிகவும் அன்புடையது; அவன் நகைக்கும்படி எப்பொழுதும் வேடிக்கை செய்துகொண்டு இருக்கும். வெளியார் தன் வீட்டுக்கு வந்தபோதிலும் அது தன் வேடிக்கையை விடாது. அந்நாய் தலை கீழாக நிற்கும்; பிறகு பின் கால்களை ஊன்றிக்கொண்டு நிற்கும்; தத்தித் தத்தி நடக்கும்; ஒரு காலைத் தூக்கிக்கொண்டு ஓடும்; தன் ஒரு பாதத்தை வாயில் கௌவிக் கொண்டு ஓடும். சுருங்கக் கூறின், அது செய்யாத வேடிக்கை இல்லை என்னலாம். ஆனால், அது பிறர் தன்னை எள்ளி நகையாட விடுவதில்லை. ஒரு நாள் நாகப்பன் கணக்குப் போட்டுக்கொண்டு இருந்தான், அப்போது நாய் சிறிது தொலைவில் படுத்திருந்தது. ஈக்கள் அதன் முகத்தைச் சுற்றி மொய்த்துக் கொண்டு இருந்தன. நாய் அவற்றைப் பிடிக்க வாயையும் கால்களையும் பயன்படுத்தியது. ஆனால், ஓர் ஈயையும் அது பிடிக்கவில்லை. அது தன் முயற்சியில் தோற்றதைக்கண்ட நாகப்பன் கலகல என்று நகைத்தான். அவன் சிரித்தது நாய்க்குப் பிடிக்கவே இல்லை. அது அவனை ஏமாற்ற நினைத்தது; தான் ஈயைப் பிடித்துத் தின்பதாகக் காட்டிக்கொண்டது. ஆனால், நாகப்பன் அதன் செயலைத் தெரிந்து கொண்டவனைப்போல ஓசையிட்டு நகைத்தான். நாய்க்கு வெட்கம் தோன்றியது. அது உடனே நாற்காலிக்கு அடியில் ஓடி ஒளிந்துகொண்டது. பயிற்சி 1. நாகப்பன் நாயைப்பற்றி 12 வரிகளில் எழுது. 2. நாகப்பன் தன் நாயைப்பற்றி எழுதுவதாக எழுது. 3. நாயே தன்னைப்பற்றிக் கூறுவதுபோலக் கூறு. 4. நாயின் இயல்பு-ஈக்களும் நாயும்-அதன் செய்தியை மூன்று பாராக்களில் எழுது. 5. பயன்படுத்து, ஓசையிட்டு, வெட்கம், வேடிக்கை, சுருங்கக் கூறின்:- இவற்றை உன் சொந்த வாக்கியங் களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. நாகப்பன் வீட்டு நாயைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? 2. அது ஈக்களைப் பிடிக்க முடியவில்லை; ஏன்? 3. நாகப்பன் ஏன் கைகொட்டி நகைத்தான்? 4. அதைக்கண்ட நாய் என்ன செய்தது? ஏன்? 24. சடையப்ப வள்ளல் சோழநாட்டில் சடையப்ப வள்ளல் என்னும் பெரியார் ஒருவர் இருந்தார். அவர் பெரும் பணக்காரர்; நன்றாகப் படித்தவர்; இரக்கமனம் உடையவர். அவர் சோழ அரசனிடம் அமைச்சராக இருந்தார். அவர் ஏழைமக்கட்கு பலவழிகளிலும் உதவி செய்தார்; அவர் ஏழைப் பிள்ளைகட்குக் கல்வி கற்பித்தார். பல ஏழைகளை அரசியல் அலுவலில் வைத்தார். அவரது நல்ல பெயர் சோழநாடு முழுவதும் பரவியது. அப்பெரியாரிடம் ஒருநாள் ஒரு சிறுவன் வந்தான். அவன் பெயர் கம்பன். அவனுக்குத் தாய் தந்தையர் இல்லை. படிக்கவேண்டும் என்னும் ஆவல் அவனுக்கு இருந்தது. அவனது எளிய நிலை கண்டு வள்ளல் மனம் இரங்கினார். அவனைப் படிக்கவைத்தார். அவனும் வளர்பிறையைப் போலக் கல்வியில் படிப்படியாகச் சிறந்து வந்தான்; நினைத்தவுடன் கவிபாடும் ஆற்றல் பெற்று விளங்கினான். வள்ளல் கம்பனைச்சோழ அரசனுக்கு அறிமுகப் படுத்தினார், அரசன் கம்பரின் பெரும் புலமையைக் கண்டு அவரைத் தன் அரண் மனைப் புலவர் ஆக்கினான். அரசன் அவரை இராமாயணத்தைத் தமிழில் பாடும்படி வேண்டிக்கொண்டான். கம்பர் அவ்வாறே பாடி முடித்தார். அந்நூல் கம்பராமாயாணம் எனப் பெயர் பெற்றது. அது பன்னிரண்டு ஆயிரம் பாடல்களை உடையது. கம்பர் அந்தப் பெரிய நூலில் பல இடங்களில் சடையப்ப வள்ளலைப் புகழ்ந்த பாடி இருக்கிறார். ஏன்? அவர் கம்பரை நல்ல முறைக்குக் கொண்டுவந்தவர் அல்லவா! பயிற்சி 1. சடையப்ப வள்ளலைப் பற்றிப் பத்துவரிகளில் எழுது. 2. கம்பரைப் பற்றிப் பத்துவரிகளில் எழுது. 3. இவ்வரலாற்றைக் கம்பர் கூறுவதுபோலக் கூறு. 4. இதனை வள்ளல் சொல்வதுபோலச் சொல். 5. இதனைச் சோழன் சொல்வதுபோலச் சொல். 6. வள்ளல்-கம்பர்-இராமாயணம்: இக்குறிப்புகளைக் கொண்டு இவ்வரலாற்றை மூன்று பாராக்களில் எழுது. 7. முழுவதும், புலமை, (அறிவு), படிப்படியாக, ஆற்றல்; அறிமுகம், வள்ளல்:- இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. சடையப்ப வள்ளல் யார்? 2. அவர் யாருக்கு என்ன உதவி செய்தார்? 3. அவர் கம்பருக்குச் செய்த உதவி யாது? 4. கம்பர் அதற்குக் கைம்மாறாக என்ன செய்தார்? 5. கம்பர் ஏன் இராமாயணத்தைப் பாடினார்? 25. பிறர்பொருட்டு உயிர்விட்ட பெண்மணி முன் ஒரு காலத்தில் பெல்ஜிய வீரர்க்கும் ஜெர்மன் வீரர்க்கும் போர் மூண்டது. காயம்பட்ட பெல்ஜிய வீரர்களைத் தாதிமார் பலர் மேற்பார்த்து வந்தனர். அவர்களுள் ஒருத்தி நாட்டுப்பற்று மிக்குடையவள். அவள் தன் நாட்டுப் போர்வீரர்களுடைய காயங்களைக் கவனித்ததோடு, அவர்கட்கு வேறு பல வகையிலும் உதவி புரிந்து வந்தாள். பெல்ஜிய வீரர் பலர் இங்கிலாந்துக்குப் போகத் துணிந்தனர். அவர்களை அத் தாதி மறைவாக அழைத்துச் சென்று கப்பலேற்றி வந்தாள். இத்துணிகரமான வேலையில் ஈடுபடுவதால், தான் ஜெர்மனியரால் கொல்லப்படலாம் என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள்; அறிந்திருந்தும், நாட்டுப்பற்றால் அவ்வேலையில் ஈடுபட்டிருந்தாள். இறுதியில் அவள் சிறையிலிடப்பட்டாள்; வழக்கு ஆராயப்பட்டது. அவள் சுடப்பட வேண்டும் என்று தீர்ப்பு ஆயிற்று. அவள் அத்தீர்ப்பைக்கேட்டு அஞ்சவில்லை. அவர் மனம் நிறைமதிபோலப் பேரொளியுடன் விளங்கியது. அவள், ` என் தாய்நாட்டு வீரர்க்கு என்னால் இயன்ற உதவிசெய்தேன். என்னைப் பகைவர் ஒறுத்தாலும் கடவுள் ஒறுக்கமாட்டார்’ என்று மகிழ்ச்சியோடு கூறினாள், அவள் சுடப்படும் குறித்த நாள் வந்தது. அவள், தான் காப்பாற்றிய வீரர்களை எண்ணிக் கொண்டே மலர்ந்த முகத்துடன் உயிர்விட்டாள். பயிற்சி 1. இந்நிகழ்ச்சியைப் பெண்மணி கூறுவதுபோலக் கூறு. 2. இக்கதையை ஒரு ஜெர்மனி வீரன் கூறுவது போலக் கூறு. 3. போர்-காயமடைந்த பெல்ஜிய வீரர்-பெண்மணியின் முயற்சி-சுடப்பட்டாள் - தாய் நாட்டுப்பணி: இக் குறிப்புகளைக் கொண்டு மூன்று பாராக்களில் இக்கதையை எழுது. 4. தாதியர், துணிந்தனர், மறைவாக, நாட்டுப்பற்று, தீர்ப்பு, இயன்ற, ஒறுத்தாலும், மலர்ந்த முகம்: இச்சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. தாதியின் தொழில் யாது? 2. இக்கதையில் கூறப்பட்ட தாதி என்னென்ன செய்தாள்? 3.. அவள் ஏன் ஒறுக்கப்பட்டாள்? 4. தீர்ப்பைக் கேட்ட அவள் என்ன சொன்னாள்? 5. அவள் யாரை எண்ணிக்கொண்டு உயிர்விட்டாள்? ஏன்? 6. நீ இப்பாடத்தில் அறியும் நீதி யாது? சிறுகதைக் களஞ்சியம் (இரண்டாம் புத்தகம்) 1. நன்றி மறவாத யானை ஒருமுறை இந்தியாவிலிருந்து யானை ஒன்று இங்கிலாந்தில் உள்ள கண்காட்சிச்சாலையில் வைப்பதற்குக் கொண்டுசெல்லப்பட்டது. அது கப்பலில் போகும்பொழுது நலம்குன்றி நோய்வாய்ப்பட்டது. அதன் பாகன் அதற்கு வேண்டியன செய்தும் நோய் நீங்கவில்லை. அது கப்பலிலே இறந்துவிடும் என்று பலரும் எண்ணினர். அந்தக் கப்பலில் மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் இங்கிலாந்தில் உறைபவர். அவர் அந்த யானையைக் குணப்படுத்து வதாகக் கூறினார். அவர் நாள்தோறும் அதற்கு ஏதோ ஒருவகை மருந்தைக் கொடுத்துவந்தார். யானை சிறிது சிறிதாகக் குணம் அடைந்து வந்தது. அது இலண்டன் மாநகரை அடைவதற்குள் முற்றிலும் குணமுற்றது. அந்த யானை இலண்டன் நகரக் கண்காட்சிச் சாலையில் நலம்பெற இருந்துவந்தது. ஆறு திங்களுக்குப் பிறகு ஒருநாள் அந்த யானை பல பிள்ளைகளைத் தன்மேல் ஏற்றிக்கொண்டு போய்க்கொண்டு இருந்தது. அதனைக் கப்பலில் குணப்படுத்தின மருத்துவர் அவ்வழியே வந்து கொண்டு இருந்தார். யானை அவரைக் கண்டது; உடனே அவரை நோக்கிச் சென்றது; அவரது கழுத்தைத் தன் துதிக்கதையால் வளைத்துப் பற்றிக் கொண்டு அவரை உற்றுப்பார்த்தது. பாகன், அது அவரைக் கொல்லப்போகிறதோ என்று அஞ்சி அதட்டினான். யானை அவரைக் கொல்வதற்குப் பதிலாக, அவரது முகத்தைத் தன் துதிக்கையால் தடவித் தன் நன்றியைக் கூறாமல் கூறியது. பயிற்சி 1. இந்நிகழ்ச்சியை மருத்துவர் கூறுவதுபோலக் கூறு. 2. யானை கூறுவதுபோல இந்நிகழ்ச்சியை எழுது. 3. யானை-கண்காட்சிச்சாலை-கப்பலில் நோய்-மருத்துவர் முயற்சி-யானையின் நன்றி; இக் குறிப்புகளைக் கொண்டு மூன்று பத்திகளுக்கு மேற்படாமல் இக்கதையை எழுது. 4. கண்காட்சிச்சாலை, நோய்வாய், குணமடைதல், நன்றி , காகன்-இச்சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. இந்திய யானை ஏன் இங்கிலாந்துக்குக் கொண்டு வரப்பட்டது? 2. அதனைக் கப்பலில் குணப்படுத்தியவர் யார் எப்படிக் குணப்படுத்தினார்? 3. யானை தன் நன்றியறிதலை எவ்வாறு தெரிவித்தது? 4. நீ இக்கதையால் அறிவது யாது? 2. சவாரி செய்த குரங்கு நீலமேகம் மூன்றாம் வகுப்பு மாணவன். அவன் தந்தையார் ஒரு குதிரை வணிகர். அவர் ஒருநாள் ஆறு புதிய குதிரைகளை வாங்கினார்; அவற்றைத் தம் வீட்டிற்கு அடுத்த கொட்டிலில் கட்டினார்; அந்தக் கொட்டிலில் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்தார்; தாம் அருமையாக வளர்த்துவந்த குரங்கை அப்புதிய குதிரைகள் இருந்த இடத்திலேயே விட்டுவைத்தார். நடுஇரவில் குதிரைகள் ஏதோ அச்சத்தால் உதைத்துக் கொண்டன; கனைத்தன. அவ்வோசையைக் கேட்டுக் குதிரை வணிகர் தடி எடுத்துக்கொண்டு ஓடிவந்தார்; குதிரைகள் கேடின்றிப் புல்லைக் கடித்துக்கொண்டு நின்றன. குரங்கு வைக்கோல்போர்மீது படுத்துக் தூங்கிக் கொண்டு ,இருந்தது. வணிகர் தோட்டம் முழுவதையும் சுற்றிப் பார்த்தார்; ஒன்றும் புதிதாகக் காணப்படவில்லை. அவர் மீண்டும் தம் அறையுள் படுத்துக்கொண்டார். இரவு ஏறக்குறைய ஒரு மணி இருக்கும்; குதிரைகள் முன்போலப் படபட என்று அடித்துக்கொண்டன. வணிகர் அவ்வோசை கேட்டு எழுந்தார்; ஆனால், முன்போலக் கொட்டிலண்டை வரவில்லை. அவர் தம் படுக்கை அறையின் சன்னல் வழியாகக் கொட்டிலை நோக்கினார். அவருக்குச் சிரிப்பு வந்தது. அவர் சிரிப்பதைக் கண்ட நீலமேகம் `அப்பா, ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று ஆவலோடு கேட்டான். தகப்பனார் அவனைத் தூக்கிச் சன்னல் வழியே கொட்டிலைக் காட்டினார். நீலமேகமும் கலகல என்று சிரித்தான். ஏன்? குரங்கு அந்தப்புதிய குதிரைகள் மீது மாறிமாறிச் சவாரி செய்துகொண்டு இருந்தது. அதனால், குதிரைகள் அஞ்சி உதைத்துக் கொண்டன. பயிற்சி 1. இந்நிகழ்ச்சியை நீலமேகம் கூறுவதுபோலக் கூறு. 2. இதனை வணிகர் கூறுவதுபோலக் கூறு. 3. புதிய குதிரைகள்-குரங்கின் குறும்பு-முடிவு: இவற்றைக் குறிப்பு களாகக் கொண்டு இதனை மூன்று பத்திகளில் எழுது. 4 படபட, கலகல, வணிகன், மாறிமாறி, கொட்டில், முன்போல, ஆவலோடு-இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. நீலமேகத்தின் தகப்பனார் எவற்றை வாங்கினார்? 2. குதிரைகள் இரவில் என்ன செய்தன? 3. குரங்கின் குறும்பு யாது? 4. அதைத் தகப்பனார் எவ்வாறு கண்டார்? 5. அவர் அதன் செயலை முதல்முறை கண்டுபிடிக்கக் கூட வில்லை-ஏன்? 3. புகைவண்டிப் பயணம் இளங்கோ இரண்டாம் வகுப்பு மாணவன். அவன் அதிகாலையில் எழுந்து தன் தகப்பனாருடன் நடப்பான்; வழியில் உள்ள மரங்களின் பெயர்களைக் கேட்டு அறிவான்; வழியிற் செல்லும் மக்களைப்பற்றிக் கேட்பான்; வண்டி களைப்பற்றிக் கேட்பான். இவ்வாறு அவன் நாள்தோறும் தகப்பனாரைக் கேட்டுப் பல பொருள்களைத் தெரிந்து கொள்வான். இளங்கோ புகைவண்டியில் பயணம் செய்தது இல்லை. ஒருநாள் அவன் தன் தகப்பனாருடன் தஞ்சாவூரில் .இருந்து சிதம்பரம்வரை பயணம் செய்தான். அவன் புகைவண்டியில் உட்கார்ந்தது முதல் இறங்கும்வரை தகப்பனாரைப் பல கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொண்டான். இளங்கோ, புகைவண்டி விரைவாகப் போகும் பொழுது, அதன் இரண்டு பக்கங்களிலும் உள்ள மரங்கள், மலைகள் முதலியன தனக்கு எதிர்ப்பக்கமாகப் போவதைக் கண்டான்; அதன் காரணத்தைக் கேட்டு அறிந்தான். வண்டி சில இடங்களில் ஆற்றுப்பாலங்கள் மீது சென்றது. இளங்கோ அந்த ஆறுகளின் பெயர்களையும் அவற்றால் உண்டாகும் பயனையும் கேட்டு மகிழ்ந்தான். வண்டிப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் பயிர்கள் பச்சைப்பசேர் என்று இருந்தன. சில இடங்களில் வானம் வெள்ளைவெளேர் என்று இருந்தது. சில இடங்களில் சிறிய நீர் ஊற்றுக்களில் தண்ணீர் சலசல என்று ஓடிக்கொண்டு இருந்தது. சில இடங்களில் கோவிலின் கோபுரங்கள் காணப்பட்டன. இளங்கோ இவற்றை எல்லாம் கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டான். பயிற்சி 1. இளங்கோவின் புகைவண்டிப் பயணத்தைப்பற்றி 12 வரிகளில் எழுது. 2. இளங்கோ தனது பயணத்தைக் கூறுவது போலக் கூறு. 3. அளவற்ற, எதிர்ப்பக்கம், பச்சைப்பசேர், வெள்ளை வெளேர், சலசல, நாள்தோறும் - இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. 4. நீ கண்ட ஆறு, கோவில், அல்லது ஊரைப்பற்றி 12 வரிகள் எழுது. கேள்விகள் 1. இளங்கோ எவற்றைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வான்? 2. அவன் புகைவண்டிப் பயணத்தின்போது என்ன கேள்விகள் கேட்டான்? 3. அவன் அப்போது கண்ட காட்சிகள் எவை? 4. நீ புகைவண்டிப் பயணம் செய்தது உண்டா? 4. களைத்த பிள்ளைகள் சுந்தரம்பிள்ளை மூன்றாம் வகுப்பு ஆசிரியர். அவர் ஒருநாள் தம் வகுப்பு மாணவரை அழைத்துக்கொண்டு அடுத்த ஊர்க்குச் சென்றார்; அங்கு நடந்த திருவிழாவை மாணவர்க்குக் காட்டி விளக்கினார்; கோவிலுக்குள் பிள்ளைகளை அழைத்துச் சென்றார்; கோவிலைப்பற்றிய பல செய்திகளை விளக்கினார். ஆசிரியரும் மாணவரும் தம் ஊரை நோக்கித் திரும்பினர். இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தொலைவு இரண்டுமைல். அதனால் பிள்ளைகள் திரும்பி வரும் பொழுது கால்வலியை உணர்ந்தனர். `ஐயா, எங்களால் நடக்க முடியவில்லையே!’ என்று வருந்திக் கூறினர். ஆசிரியர், `ஆம். அது தெரிந்தே நான் குதிரைகளைக் கொண்டுவரச் சொல்லியிருக்கிறேன். அவை எதிரே வந்துகொண்டிருக்கும்; வாருங்கள். விரைவாகச் சென்று அவற்றைச் சந்திப்போம்’ என்று கூறி விரைவாக நடந்தார். பிள்ளைகள் குதிரைகளை எதிர்நோக்கி ஆவலோடு விரைந்து நடந்தனர். வழியில் ஒரு மாணவன், `ஐயா, தேசிங்குராசன் கதையைச் சொல்லுங்கள்’ என்று வேண்டினான். ஆசிரியர் அக்கதையை அழகாகவும், அமைதியாகவும் சொல்லிக் கொண்டே விரைந்து நடந்தார். பிள்ளைகள் கதையைக் கேட்கும் இன்பத்தில் குதிரைகளைப்பற்றி மறந்து விட்டனர். அவர்கள் கதையைக் கேட்டுக் கொண்டே விரைந்து நடந்துவந்தனர். கதையும் முடிந்தது; எல்லோரும் பள்ளிக்கூடமும் வந்து சேர்ந்தனர். பயிற்சி 1. இந்நிகழ்ச்சியை 12 வரிகளில் எழுது. 2. இதனைத் திருவிழாப் பார்க்கச்சென்ற மாணவர் எழுதுவதை போல எழுது 3. இதனை ஆசிரியர் எழுதுவதுபோல எழுது. 4. நீ பார்த்த ஒரு திருவிழாவைப்பற்றி 16 வரிகளில் எழுது. 5. அடுத்த, எதிரே,கொண்டுவர, இன்பத்தில், விரைவாக-இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. ஆசிரியர் பிள்ளைகளை எங்கு அழைத்துச் சென்றார்? ஏன்? 2.. திரும்பி வருகையில் பிள்ளைகள் என்ன சொன்னார்கள்? 3.. திரும்பி வருகையில் ஆசிரியர் என்ன சொன்னார்? 4. பிள்ளைகள் எப்படி நடந்து வந்தார்கள்? 5. ஆசிரியர் சொன்ன கதை யாது? 5. படையைக் காத்த பையன் ரஷியா என்பது ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள ஒரு நாடு. அந்த நாட்டுக்கு மேற்கே போலந்து நாடு இருந்தது. ரஷியர் போலந்து நாட்டை அடிமையாக்கிக் கொண்டனர். சில வருடங்கட்குப் பிறகு போலந்து வீரர்கள் ரஷியரை எதிர்த்துப் போர் செய்தனர். ஓர் இரவு இருதிறத்துப் படைகளும் ஒன்றுக்கு ஒன்று அருகிலேயே தங்கி இருந்தன. போலந்து வீரர்கள் போரிட்ட களைப்பு நீங்க ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தனர். அவர்களோடு பள்ளிக்கூடத்துப் பையன்களும் இருந்தனர். அவர்கள் பகைவர் வருவகையைக் கொம்பு ஊதி அறிவிக்கும் வேலையிலும், வீரர்கட்குக் குற்றேவல் செய்வதிலும் முனைந்து இருந்தனர். அப் பிள்கைகளுள் ஒருவர் ஓர் புதரண்டை சென்று படுத்தான்; சிறிது நேரத்திற்குள் அயர்ந்து தூங்கிவிட்டான். ஆனால், அவன்மீது யாரோ கைவைப்பதுபோலத் தெரிந்தது. திடீரெனக் கண்விழித்தான்; தன் எதிரே பகைவீரர் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டான்; தன் நாட்டு வீரர்களுக்குப் பகைவர் வரவை உணர்த்தி எச்சரிக்கை செய்ய விரும்பினார். உடனே அச்சிறுவன் அவசரமாகத் தன் கொம்பை எடுத்து ஊதினான்; ஆனால் பாவம் கொம்பை எடுத்து ஊதினான்; மறுவிநாடி அவன் தலை வெட்டுண்டது. ஆயினும் அவன் முகத்தில் புன்னகை தோன்றியது. ஏன்? அவன் தன் உயிரைக் கொடுத்துத் தன்நாட்டு வீரரைக் காத்தான் அல்லவா? பயிற்சி 1. பையனது செயலை 12 வரிகளில் எழுது. 2. இதனைப் போலந்துவீரர் கூறுவதுபோலக் கூறு. 3. இதனை ரஷிய வீரர் சொல்வது போலச் சொல். 4. போர்-பையன்-செயல்-முடிவு; இக்குறிப்புகளைக் கொண்டு இதனை மூன்று பத்திகளில் எழுது. 5. புன்னகை போர்வீரர் குற்றேவல் முனைந்து ஒன்றுக்கு ஒன்று திடுக்கிட்டு-இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. போலந்து வீரர் ரஷியாவை எதிர்க்கக் காரணம் யாது? 2. போலந்து மாணவன் ஏன் புதரண்டை சென்று படுத்தான்? 3. அவன் ஏன் கொம்பை ஊதினான்? 4. அதனால் அவன் அடைந்த பயன் யாது? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 6. நாயும் பூனைக்குட்டியும் வரதன் மூன்றாம் வகுப்பு மாணவன். அவன் தகப்பனார் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அது மிகுந்த அறிவுடையது; வீட்டைப் பாதுகாத்து வந்தது. அது புதியவர் வந்தால் குரைக்கும்; பழகியவர் வந்தால் வாலை ஆட்டிக்கொண்டு வரவேற்கும். வரதன் வீட்டிற்கு வரும் எல்லோரும் அதனை விரும்பினார்கள். அவர்கள் வரும்பொழு தெல்லாம் அதற்குத் தின்பண்டம் வாங்கிவருவது வழக்கம். ஒருநாள் வரதன் தாயார் அழகிய பூனைக்குட்டி ஒன்றை வீட்டிற்குக் கொண்டுவந்தார்; அதற்குப் பால் ஊற்றினார்; அதனிடம் அன்பாக நடந்து கொண்டார்; அதை மடிமீது இருத்தி முத்தம் கொடுத்தார். இவற்றை நாய் நோக்கியது. பொறாமை கொண்டது. அதுவும் பூனைக்குட்டியிடம் அன்புடையதுபோல நடித்து அதனுடன் விளையாடிக் கொண்டு இருந்தது. மறுநாள் அந்த நாய் அப்பூனைக்குட்டியை வாயில் கௌவிக்கொண்டு தோட்டத்திற்குள் ஓடியது; ஒரு குழியைத் தன் கால்காளால் கிள்ளியது; பூனைக்குட்டியை அக் குழியில் போட்டது; குழியை மண்ணால் மூடத்தொடங்கியது. அதன் செயலை மறைந்து நின்று நோக்கிக்கொண்டிருந்த வரதன் தாயார் அங்கு ஓடிவந்தார்; பூனையை எடுத்துக்கொண்டு நாயை நன்றாக அடித்தார். பூனைக்குட்டி வீட்டில் இருப்பதால், தன்னை எவரும் மதியார் என்று நாய் தவறாக எண்ணிக் கொண்டது. அதனாற்றான் அது பூனையைக்கொன்றுவிட முயன்றது. தன் கெட்ட எண்ணம் வெளியான பிறகு, அது நல்லமுறையில் நடந்துகொள்ளத் தொடங்கியது. பயிற்சி 1. நாயின் செயலைப் பத்து வரிகளில் எழுது. 2. இந்நிகழ்ச்சியை நாய் கூறுவதுபோலக் கூறு. 3. இதனைப் பூனைக்குட்டி கூறுவதுபோலக் கூறு 4. நடந்துகொள்ள, எடுத்துக்கொண்டு, அன்பாக, தின்பண்டம், அறிவுடையது- இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. 5. உன் வீட்டுப் பூனை அல்லது நாயைப்பற்றி 10 வரிகளில் எழுது. கேள்விகள் 1. நாய் பூனையைக் கொல்ல முயன்றது ஏன்? 2. அதன் செயலை நோக்கியவர் யார்? 3. நாய் பூனையை ஒழிக்க என்னென்ன செய்தது? 4. பிறகு நாய் எப்படி நடந்து கொண்டது? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 7. சிறுவரும் எலிக்குஞ்சுகளும் கோபாலன் இரண்டாம்வகுப்பு மாணவன். கோவிந்தன் மூன்றாம் வகுப்பு மாணவன். இருவரும் உடன் பிறந்தவர்கள். அவர்கள் விளை யாட்டில் விருப்பம் உடையவர்கள். அவர்கள் தோட்டவேலையும் செய்வார்கள். ஒருநாள் மாலை அவர்கள் இருவரும் ஓர் இடத்தில் அமர்ந்து ஓசையிடாமல் ஒரே புத்தகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அப் புத்தகம் பெரியவர்கள் படிக்கத் தகுந்தது. இருவரும் அப்புத்தகத்தைத் திறந்து வைத்துக்கொண்டு, வேறுபக்கம் திரும்பாமல் இருந்தனர். அவர்களுடைய தகப்பனார் பிள்ளைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்; தம் பிள்ளைகள் படிப்பில் கவலை கொண்டதைப்பற்றி மகிழ்ந்தார். அவர் தம் மகிழ்ச்சியை அப்பிள்ளைகளிடம் கூற விரும்பினார். அதனால் அவர் அவர்களை நெருங்கினார். ஆனால், அவர் அருகில் சென்றதும், அவர்கள் படித்துக்கொண்டு இருக்கவில்லை என்பதை உணர்ந்தார். சிறுவர் இருவரும் இரண்டு எலிக்குஞ்சுகளின் விளையாட்டைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு இருந்தனர். பிள்ளைகள் தாங்கள் வைத்திருந்த பெரிய புத்தகத்தின் ஏட்டில் துளைசெய்து, அதற்கு அடியில் எலிக்குஞ்சுகளை வைத்து, அவற்றின் விளையாட்டுகளைக் கவனித்துக் கொண்டு இருந்தனர். நல்ல புத்தகம் பாழாக்கப்பட்டதை அறிந்த தகப்பனார் சினங்கொண்டார்; ஆயினும், தம் பிள்ளைகள் எலிக்குஞ்சு களின் விளையாட்டைக் கூர்ந்து நோக்கிக் கொண்டு அமைதியாக இருந்ததை எண்ணி மகிழ்ந்தார். பயிற்சி 1. இந்நிகழ்ச்சியை 12 வரிகளில் எழுது. 2. இதனைக் கோபாலனும் கோவிந்தனும் கூறுவது போல எழுது. 3. இதனை அவர்கள் தகப்பனார் கூறுவதுபோல எழுது 4.. நீ இதிலிருந்து அறிந்துகொள்வதென்ன? 5. அமர்ந்து, மகிழ்ச்சி, ஏட்டில், அமைதியாக, பாழாக்க - இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். 6. நல்ல X கெட்ட, பெரிய X சிறிய, அடி X மேல்-இவை எதிர்ப்பதங்கள். இவற்றை உன் சொந்த வாக்கியங் களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. தகப்பானர் மகிழ்ச்சியடைந்ததற்குக் காரணம் யாது? 2. அவர் ஏன் பிள்ளைகளிடம் சென்றார்? 3. சென்று, அவர் கண்டது என்ன? 4. பிள்ளைகள் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்? 5. தகப்பனார் மகிழ்ச்சி அடையக் காரணம் யாது? 8. கிளியின் எச்சரிக்கை பங்கஜம் நான்காம் வகுப்பு மாணவி. அவள் மிகுந்த அன்போடு ஒரு கிளியை வளர்த்து வந்தாள். அவள் நாள்தோறும் அதற்குப் பாலும் பழமும் ஊட்டுவாள்; அதற்குப் பல சொற்களைக் கற்பித்திருந்தாள். கிளி அவற்றை விடாமற் சொல்லிக்கொண்டே இருந்தது. ஓர் இரவு, அக்கிளி, `அம்மா ஓடிவா; அம்மா, ஓடிவா’ என்று பலமுறை கூவியது. பங்கஜத்தின் தாயார் கண்விழித்துப் பார்த்தார்; கிளிக்கூண்டு இருந்த அறைக்கு ஓடினார்; கதவைத் திறந்தார்; ஆ! அவ்வறையின் ஓர் மூலையில் தீப்பிடித்துக்கொண்டதைக் கண்டார். அப்பொழுதும் அக்கிளி, `அம்மா, ஓடிவா! அம்மா ஓடிவா! எனக் கூவியது; தன் இறகுகளைப் படபடப என்று அடித்துக்கொண்டது. அது தீயினால் தனக்கும் கேடுவரும் என்று அஞ்சியது போலும்! பங்கஜத்தின் தாயார் போட்ட இரைச்சல் தகப்பனாரை எழுப்பியது. அவர் எழுந்து ஓடிவந்தார்; தண்ணீரைக் குடம் குடமாக ஊற்றித் தீயை அணைத்தார். நல்ல காலம்! கேடொன்றும் ஏற்படவில்லை. தக்க சமயத்தில் அக்கிளி கூவாமல் இருந்திருந்தால், வீடும் அழிந்திருக்கும்; வீட்டில் இருந்தவரும் இறந்திருப்பர். அவர்கள் தங்களையும் தங்கள் வீட்டையும் காத்த அந் நற்கிளியை அன்றுமுதல் மிக்க அன்புடன் வளர்த்து வந்தனர். பயிற்சி 1. இக்கதையைப் பங்கஜம் கூறுவதுபோலக் கூறு. 2. கிளி இந்நிகழ்ச்சியைக் கூறுவதுபோலக் கூறு. 3. பங்கஜத்தின் கிளி-கத்தியது-தீயணைத்தனர்-நல்லகாலம்: இக் குறிப்புகளைக்கொண்டு மூன்று பாராக்களுக்கு மேற்படாமல் இக்கதையை எழுது. 4. கற்பித்தல், கண்விழித்து, படபட, இரைச்சல், அணைத்தல், நல்லகாலம், கேடுஇல்லை, அன்போடு: இச்சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. பங்கஜம் கிளியை எப்படி வளர்த்து வந்தாள்? 2. அக்கிளி என்ன சொல்லிக் கூவியது? ஏன் கூவியது? 3. அது கூவியதால் உண்டான நன்மை யாது? 4. அது கூவாமல் இருந்திருந்தால் என்ன கேடு உண்டாகி இருக்கும்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 9. நற்செய்தி போர் நடக்கும் காலம்; ஒரு படை ஒரு நகரத்தைப் பிடிக்கும்படி ஏவப்பட்டது. அப்படைத் தலைவன் அந்நகரத்திற்குச் சிறிது தொலைவில் இருந்த குன்றின்மீது நின்று எதிரே இருந்த நகரத்தைப் பார்த்தபடி இருந்தான். அவன் தன் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு கவலைகொண்ட முகத்துடன் நின்றான். `நகரத்தின் பக்கம்சென்ற வீரர்களைப்பற்றிய செய்தி ஒன்றும் தெரியவில்லை; புகை கிளம்பவும் இல்லை. நகரம் பிடிபட்டது என்பதற்கு உரிய அடையாளம் தெரியவில்லை. `நம் வீரர்கள் தோற்றுவிட்டனரோ! என்று படைத்தலைவன் ஐயம் கொண்டான். அவன் கண்கள் நகரத்தை நோக்கியபடியே இருந்தன. சிறிதுநேரம் கழிந்ததும் புகை தெரிந்தது. அப் புகைப்படலத்தில் இருந்து ஒரு வீரன் குதிரைமீது புறப்பட்டான். அவன் குன்றை நோக்கிவந்தான். அவன் குதிரை தாண்டித் தாண்டி விரைவாக ஓடிவந்தது. சிறிது நேரத்திற்குள் அவ்வீரன் குன்றின் உச்சியை அடைந்தான். அவன் மார்பில் குண்டு அடிபட்டு உயிர் விடும் நிலையில் இருந்தான். ஆயினும், அவன் நகரம் பிடிபட்ட நற்செய்தியைத் தன் தலைவனுக்குத் தெரிவிக்க அவாவினான்; `ஐயா, நகரம் பிடிபட்டது என்று கூறிக்கொண்டே கீழே விழுந்தான். படைத்தலைவனான நெப்போலியன் அவனைக் குனிந்து பார்த்தான். அவன் முகமலர்ச்சியோடு இறந்துகிடந்தான். பயிற்சி 1. இந்நிகழ்ச்சியைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இதனை வீரன் கூறுவதுபோலக் கூறு. 3. இதனை நெப்போலியன் சொல்வதுபோலச் சொல். 4. நெப்போலியன்-படையின் செயல்-நற்செய்தி: இக் குறிப்புகளைக் கொண்டு இதனை மூன்று பாராக்களில் எழுது. 5. நோக்கியபடி, நற்செய்தி, முகமலர்ச்சி, தாண்டித் தாண்டி :இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. படைத்தலைவன் எங்கு நின்றன்? ஏன்? 2. அவன் எப்படி நின்றான்? 3. அவன் கண்கள் நகரத்தை நோக்கியபடியே இருந்தன-ஏன்? 4. குதிரைவீரன் யாரை நோக்கி வந்தான்? ஏன்? 5. அவ்வீரன் முடிவு யாதாயிற்று? 6. படைத்தலைவன் பெயர் யாது? 10. படியாத பழனியப்பன் பழனியப்பன் நான்காம் வகுப்பு மாணவன். அவன் பள்ளிக்கூடம் தவறாமல் போய் வந்தான்; ஆனால், பாடங்களைச் செவ்வனே படிப்பதில்லை; எந்நேரமும் ஏதேனும் ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பான். அவனுக்கு வீட்டு வேலையில் இருந்த நாட்டம் படிப்பில் இல்லை. அவன் தகப்பனாருக்கு உதவியாகச் சிறிய வேலைகளைச் செய்வதில் விருப்பம் கொண்டான். அவர் சுவரில் ஆணி அடிக்கும்பொழுது, பழனியப்பன் அவர் ஏறியுள்ள நாற்காலியைப் பிடித்துக்கொண்டு நிற்பான்; அப்பொழுது தன் தகப்பனாரைத் தானே தாங்கி நிற்பதுபோல எண்ணுவான்; தன் கையில் ஆணிகளை வைத்துக்கொண்டு ஒவ்வொன்றாக அவரிடம் கொடுப்பான். அவன், தகப்பனார் இல்லாத வேளைகளில் தானே சுத்தி எடுத்து ஆணி அடிப்பதும் உண்டு. அப்பொழுது அவன் இடது கட்டை விரல் மீது சுத்தி அடி தவறிப்படுவதும் உண்டு. ஆயினும்,, அவன் அதுபற்றிக் கவலைப்படுவது இல்லை. முதன் முதலில் தொழிலாளர் எல்லோரும் இப்படித்தான் தவறுவார்கள் என்று தனக்குத்தானே தேறுதல் கூறிக்கொள்வான். இவ்வாறு வீட்டில் பல வேலைகளைச் செய்து வந்து பழனியப்பன், பெரியவன் ஆனால். அப்பொழுது அவன் தன் தகப்பனார் இருந்த இரும்புத் தொழிற்சாலையில் அமர்த்தப் பட்டான்; அங்கு நாளடைவில் `நல்ல வேலையாள்’ எனப் பெயர் பெற்றான். பயிற்சி 1. இக்கதையால் பழனியப்பன் கூறுவதுபோலக் கூறு. 2. பழனியப்பன் தகப்பனார் கூறுவதுபோல இதனைக் கூறு. 3. பழனியப்பன்-தகப்பனாருக்கு உதவி-தொழிற் சாலையில் சேர்தல்-நல்ல ஆள்: இக்குறிப்புகளைக் கொண்டு மூன்று பாராக்களுக்கு மேற்படாமல் இக்கதையை எழுது. 4. படிப்பதில்லை, நாட்டம், தேறுதல்உரை, தொழிற் சாலை, நல்ல ஆள்: இச்சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. பழனியப்பன் எந்த வேலைகளில் விருப்பம் கொண்டவன்? 2. அவன் தகப்பானருக்கு என்ன உதவியைச் செய்தான்? 3. அவன் விரலில் சுத்தி அடிபடும்பொழுது என்ன சொல்வது வழக்கம்? 4. அவன் இறுதியில் என்ன வேலையில் அமர்ந்தான்? ஏன்? 5. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 11. பைக்கு வெளியே பாதிப்பூனை ஓர் ஆங்கிலப் பெண்மணி தன் சிற்றூரிலிருந்து இலண்டனுக்குப் புகைவண்டியில் வந்துகொண்டிருந்தாள். அவள் தனது அருமைப் பூனைக்குட்டியைத் தன்னுடன் எடுத்து வந்தாள்.அவள் அதனை மீன் கொண்டுசெல்லும் கோணிப்பை ஒன்றில் போட்டாள்; அதன் வாய்ப்புறத்தை இறுகக் கட்டிவிட்டாள். எனவே, பூனை கோணிப் பையிலிருந்து தப்ப வழியில்லை. அப் பெண்மணி வழியில் ஒரு புகைவண்டி நிலையத்தில் இறங்கி, வண்டி மாறவேண்டியவள் ஆனால். அவள் தன் பையைத் தோள்மீது சாய்த்துக்கொண்டு நடந்தாள். அங்கு இருந்தவர்கள் அவளைப் பார்த்து நகைத்தார்கள். அவர்கள் ஏன் சிரித்தார்கள் என்பது அப்பெண்மணிக்கு விளங்க வில்லை. அவள் தன்னைச் சுற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் நடந்தாள். அப்பொழுது போர்ட்டர் ஒருவன் அவளை அழைத்து, அவள் எடுத்துச்சென்ற பையைச் சுட்டிக்காட்டினான். அப் பையின் அடியில் இருந்த துளைவழியே பூனைக்குட்டி தலையை நீட்டிக்கொண்டு இருந்தது. அது தன் முன்கால்கள் இரண்டையும் வெளியில் விட்டிருந்தது. அவள் நடந்து சென்றபொழுது பூனையும் தன் முன்கால்களைத் தரைமீது ஊன்றிச் சென்றது. இந்தக் காட்சியைக்கண்டே அங்கு இருந்தவர் நகைத்தனர் என்பதை அப் பெண்மணி உணர்ந்தாள். அவளுக்கும் சிரிப்பு வந்தது. பயிற்சி 1. இந்நிகழ்ச்சியைப் போர்ட்டர் ஒருவன் கூறுவது போலக் கூறு: 2. ஆங்கிலப் பெண்மணி இலண்டனில் உள்ள தன் தோழியிடம் சொல்வதுபோல் எழுது. 3. ஆங்கிலப் பெண்மணி -இறங்கி வண்டி மாறினாள்- சிரித்தனர் - பாதிப்பூனை - அவளும் சிரித்தாள்: இக்குறிப்புக்களைக் கொண்டு 4 பத்திகளில் இக்கதையை எழுது. 4. சிற்றூர், வண்டிமாற, சாய்த்துக்கொண்டு, போர்ட்டர், காட்சி : இச்சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. பெண்மணி தன்னுடன் எதனை எடுத்துச் சென்றாள்? எதனில்? 2. புகைவண்டி நிலையத்தில் இருந்தவர் நகைத்ததேன்? 3. அவள் ஏன் நகைத்தாள்? 4. நீ இதுபோலக் கண்ட வேடிக்கை ஏதேனும் உண்டா? 12. உதவிக்கு உதவி பெல்ஜியத்தில் நடந்த போரில் இருபது வீரர் காயமுற்று ஓர் மருத்துவ சாலையிற் கிடந்தனர். அவருள் மூவர் ஜெர்மானியர். அவர்கள் பெல்ஜிய வீரர்க்கும் ஆங்கில வீரர்க்கும் பகைவர். அங்ஙனம் இருந்தும், அவர்களும் அன்போடு அந்த மருத்துவசாலையில் பார்க்கப்பட்டனர். ஆங்கில மருத்துவர் ஜெர்மன் வீரர்க்கும் அன்புடன் மருத்துவம் செய்தார்; அவர்களுடைய புண்களைக் கழுவினார்; துடைத்தார்; மருந்திட்டுக் கட்டினார். தாதிமாரும் அந்த ஜெர்மன் வீரர்களைப் பேரன்புடன் நடத்தி வந்தனர். ஜெர்மன் வீரர் சுகம்பெற்று வந்தனர். ஒருநாள் திடீரென்று அந்த இடத்திற்குப் பல ஜெர்மன்வீரர் துப்பாக்கிகளுடன் வந்தனர். அவர்கள், அங்கு நோயுற்றுப் படுத்திருந்த ஆங்கில வீரரைப் பார்த்து, `உங்கள் வீரர்கள் இருக்கும் இடத்தைச் சொல்லுங்கள்,’ என்று கேட்டனர். அவர்கள் வாயைத் திறக்கவே இல்லை. உடனே ஜெர்மன் வீரர்கள் ஆங்கில வீரரைச் சுடுவதாக அச்சுறுத்தினர். அந்நிலையிலும் அவர்கள் உண்மையைக் கூற மறுத்தார்கள். உடனே ஜெர்மன் படைத்தலைவர் `சுடுங்கள்’ என்று தம் வீரர்க்குக் கட்டளை இட்டார். அப்போது அம்மருத்துவசாலையில் நோயாளிகளாக இருந்த ஜெர்மன் வீரருள் ஒருவன், `ஐயனே, இவர்களைச் சுடவேண்டா. இவர்களே எங்கள் மூவரையும் காத்து வருபவர்கள்,’ என்று தலைவரை வேண்டினான். உடனே ஜெர்மன் வீரர்கள் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். ஆங்கில வீரர் உயிர் பிழைத்தனர். பயிற்சி 1. இக்கதையை ஜெர்மன் வீரன் கூறுவதுபோலக் கூறு. 2. பெல்ஜிய வீரர் கூறுவதுபோல இதனைக் கூறு. 3. ஜெர்மானியர்-பகைவர்-ஆங்கிலவீரரின் உதவி குணமடைதல் - தலைவன் துணை -உயிர் பிழைத்தனர்: இக்குறிப்புகளைக்கொண்டு மூன்று பாராக்களில் இதனை எழுது. 4. மருத்துவசாலை, துப்பாக்கி, அச்சுறுத்தல், கட்டளை, அகலுதல், உயிர்பிழைத்தல்: இச் சொற்களை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுதுக. கேள்விகள் 1. ஆங்கில வீரருடன் மருத்துவ சாலையில் காயம்பட்டு இருந்தவர் யார்? 2. ஆங்கில மருத்துவர் அவர்கட்கு ஏன் மருத்துவம் செய்யவேண்டும்? 3. ஆங்கில வீரர் ஏன் அச்சுறுத்தப்பட்டனர்? 4. அவர்கள் எவ்வாறு உயிர் தப்பினர்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 13. பத்திரிகை விற்ற மாணவன் கண்ணன் மூன்றாம் வகுப்பு மாணவன். அவன் தந்தையார் போலீஸ்காரராக இருந்தார். அவர் சம்பளம் மிகக் குறைவு. ஆயினும், அவர் கண்ணனைச் செல்வமாக வளர்த்தார். கண்ணன் பெற்றோரிடம் அன்புடையவன்; அவர்கள் சொற்படி நடந்துவந்தான்; தன் பாடங்களை நன்றாகப் படித்துவந்தான். ஒருநாள் கண்ணன் தகப்பனார் திடீரென்று இறந்துவிட்டார். கண்ணன் தாயார் வீட்டுவேலை செய்து பிழைக்க வேண்டியர் ஆனார். அந்த வேலையால் கிடைத்த வருமானம் வீட்டிற்குப் போதவில்லை,கண்ணன், தாயார் பட்ட துன்பத்தைக் கண்டான்; பள்ளிக்கூடச் சம்பளத் திற்கும் தன் உடைகளுக்கும் வேண்டும் பணத்தைத் தானே தேடுதல் நல்லது என்று எண்ணினான். கண்ணன் ஆசிரியரிடம் தன் நிலையை விளக்கமாகக் கூறி அழுதான். ஆசிரியர் அவன் மீது இரக்கம் கொண்டார். அவர் செய்தித்தாள் விற்பவர் ஒருவரிடம் கண்ணனை ஒப்படைத்தார். கண்ணன் காலையிலும் மாலையிலும் ஐம்பது செய்தித்தாள்களை விற்கவேண்டும்; அதனால் அவனுக்கு ஒரு தாளுக்கு அரைத்தம்பிடி வீதம் கிடைக்கும். கண்ணன் அந்த வேலையை ஆசையுடன் செய்தான்; நாளும் நான்கணா இரண்டு பைசா கிடைத்தது; அஃதாவது மாதம் எட்டு ரூபாய் ஈட்டலானான். அவன் அவ்வேலையுடன் தன் பாடங்களையும் கருத்தூன்றிப் படித்துவந்தான். அதனால், அவன் தாயார் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சி 1. கண்ணன் வரலாற்றை 12 வரிகளில் எழுது 2. கண்ணன் வரலாற்றால் நீ அறிவது யாது? 3. கண்ணனே தன் வரலாற்றைக் கூறுவதுபோலக் கூறு. 4. கண்ணன் குணம்-வீட்டுத் துன்பம்- கண்ணன் முயற்சி-முடிவு: இக் குறிப்புகளைக் கொண்டு கண்ணன் வரலாற்று நான்கு பாராக்களில் எழுது. 5. மகிழ்ச்சி, செய்தித்தாள், இரக்கம், சொற்படி: இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. கண்ணன் எப்படிப்பட்ட பையன்? 2. அவன் ஏன் செய்தித்தாள் விற்கப் போனான்? 3. அவன் எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்? 4. நீ அவனைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 14. கிளியும் கண்ணாடியும் தமயந்தி ஒரு கிளி வளர்த்து வந்தாள். அவள் ஆறாம் வகுப்பு மாணவி. ஒருநாள் அவள் வெளியே போயிருந்தாள். அப்பொழுது அக்கிளி தன் கூண்டைவிட்டு வெளியே வந்தது. அது பழகிய பறவை ஆதலின், அதன் கூண்டின் கதவு மூடப்பட்டிலது. வெளியே வந்த கிளி தான் இருந்த அறைக்குள் பறந்தது; பிறகு சன்னல்மீது உட்கார்ந்தது; பின்னர்ப் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த அலமாரியின்மீது உட்கார்ந்தது; அதன்பிறகு அதைவிட உயரமாக இருந்த பீரோவின்மீது பறந்துசென்று உட்கார்ந்தது. தமயந்தி அதற்கு `முத்தம்கொடு’ என்னும் இரண்டு சொற்களைக் கற்பித்திருந்தாள், அக்கிளி அச்சொற்களை அடிக்கடி சொல்லும். அது பீரோமீது உட்கார்ந்துகொண்டு, பீரோவைத் திறக்க வந்த தமயந்தியைப் பார்த்து `முத்தம் கொடு’ என்றது. தமயந்தி அதற்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள். கிளி இருந்த பீரோவுக்கு எதிரில் பெரிய நிலைக்க ண்ணாடி இருந்தது. கிளி அதன் தன் நிழல் உருவத்தைப் பார்த்துவிட்டது; அது வேறொரு கிளி என்று எண்ணியது. அதனால், அது அக்கண்ணாடியைப் பார்த்தபடி இறக்கையைப் பரப்பிப் `படபட’ என்று அடித்துக் கொண்டது; மகிழ்ச்சியால் ஒரு பாட்டுப்பாடியது. கிளி முடிவில் பறந்துசென்று `முத்தம் கொடு’ என்று தன் நிழலைக் குத்தியது. பாவம்! அதன் அலகு கண்ணாடி யிற்பட்டதே தவிர, வேறு பயன் உண்டாகவில்லை. அது பின்னரே அங்கு வேறு கிளி ஒன்று இல்லை என்பதை உணர்ந்தது. பயிற்சி 1. கிளியின் கதையைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. கிளியே கூறுவதுபோல இக்கதையைக் கூறு. 3. கிளி-ஒருநாள் அதன் செயல்-அதன் ஏமாற்றம்: இக் குறிப்புக் களைக்கொண்டு இக்கதையை மூன்று பாராக்களில் எழுது. 4. முத்தம், தவிர, பின்னரே, உருவத்தை, படபட, பழகிய, அடிக்கடி: இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். 5. உள்ளே X வெளியே, இல்லை X உண்டு, உயரம் X குட்டை, மூடுவது X திறப்பது: இவை எதிர்ப்பதங்கள். இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. கிளி என்ன சொல்லக் கற்பிக்கப்பட்டது? 2. அதன் கூண்டின் கதவு ஏன் மூடப்படுவதில்லை? 3. அது எதனைக் கண்ணாடியிற் கண்டது? 4. அதனை எதுவாக எண்ணியது? எண்ணி யாது செய்தது? 15. பூனையும் புறாக்களும் குப்பன்வீட்டு வெள்ளைப்பூனை அறிவுள்ளது. அது அவன்மீது மிகுந்த அன்புடையது; அவனைச் சுற்றிக்கொண்டே இருக்கும்; அவன் பள்ளிக்கூடம் போனபிறகு அது நன்றாய்த் தூங்கும்; மாலை ஐந்து மணிக்குத் தெருவாயிற் படியில் உட்கார்ந்து அவன் வரவை எதிர்நோக்கி இருக்கும். குப்பன் மாலையில் வீடு திரும்பியதும் தின்பண்டம் உண்பான். பூனையும் அவனோடு சேர்ந்து தின்னும். பின்னர் இருவரும் தோட்டத்தில் விளையாடுவார்கள். குப்பன் பாடம் படிக்கையில் பூனை பக்கத்திலேயே இருக்கும்; இரவில் அவன் படுக்கையிலேயே படுத்து உறங்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை நடுப்பகலில் குப்பன் வீட்டு முற்றத்தில் கேழ்வரகு காயவைக்கப்பட்டு இருந்தது. குப்பன் அதைப் பார்த்துக்கொண்டே கணக்குப் போட்டுக்கொண்டு இருந்தான். கணக்குப் போட்டுக்கொண்டு இருந்தான். பூனை அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது. மூன்று புறாக்கள் பறந்துவந்து சுவர்மீது உட்கார்ந்தன. அவை கேழ்வரகைத் தின்னக் காத்திருந்தன; ஆனால், பூனையைக் கண்டு சுவர்மீதே உட்கார்ந்திருந்தன. அதை உணர்ந்த பூனை வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியின் அடியில் போய் மறைந்துகொண்டது. அது, புறாக்கள் இறங்கி வந்ததும் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து பிடித்துவிடலாம் என்று எண்ணியது. புறாக்கள் ஏமாறவில்லை. பூனை ஒளிந்து இருந்ததை அவை அறிந்துகொண்டன. பாவம்! பூனை அதிகநேரம் இருந்துபார்த்து ஏமாந்தது. இந்த வேடிக்கையைப் பார்த்துக் கொண்டு இருந்த குப்பன் பூனையைப் பார்த்து எள்ளி நகைத்தான். பூனை வெட்கமடைந்தது போலச் சமையல் அறைக்குள் ஓடிவிட்டது. பயிற்சி 1. குப்பனின் பூனையைப்பற்றி 12 வரிகளில் எழுது. 2. பூனையே தன்னைப்பற்றிக் கூறுவதுபோலக் கூறு. 3. பூனையும், குப்பனும் - புறாக்களும், பூனையும்- முடிவு: இவற்றைக் குறிப்புகளாகக்கொண்டு இக்கதையை மூன்று பாராக்களில் எழுது. 4. வேடிக்கை, வெட்கம், கேழ்வரகு, நடுப்பகல்: இவற்றைச் சொந்த வாக்கியங்களில் அமைக்க. கேள்விகள் 1. பூனை புறாக்களைப் பிடிக்க என்ன செய்தது? 2. புறாக்கள் பூனையை ஏமாற்றின-எப்படி? 16. கடைக்காரனை முத்தம் இடலாமா? கண்ணகி ஐந்து வயதுச் சிறுமி. அவள் தன் தகப்பனாருடன் கடைக்குப் போவாள்; கடைக்காரன் பண்டங்களை நிறுப்பதையும் அளப்பதையும் எண்ணு வதையும் கூர்ந்து நோக்குவாள். வீட்டிற்கு வந்ததும் தான் கடைவைத்துக் கடைக்காரனைப்போலவே செய்வாள். கண்ணகி தன்வீட்டு வேலைக்காரி பாத்திரம் கழுவுவதைப் பார்த்துத் தன் விளையாட்டுச் சாமான்களைக் கழுவுவாள்; தன் தாயார் சமையல் செய்வதைப் பார்த்துத் தானும் தன் மரச் சொப்புகளை வைத்துக்கொண்டு சமையல் செய்வாள்; தன் அண்ணன் படிப்பதைப் பார்த்துத் தானும் புத்தகம் வைத்துக்கொண்டு வாயில் வந்ததைச் சொல்வாள். தகப்பனார்க்குக் கண்ணகி மீது அன்பு மிகுதி. அவர் மாலை நேரங்களில்அவளை வெளியே அழைத்துச் செல்வார்; பல பொருள்களைக் காட்டி விளக்குவார். கண்ணகி அவரைப் பல கேள்விகள் கேட்டுப் பலவற்றைத் தெரிந்துகொள்வாள். ஒருநாள் கண்ணகி பழக்கடை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தாள்; `இந்த மாம்பழம் இரண்டு அணா; அந்த நாரத்தை ஒன்றரை அணா’ என்று கூவினாள்; பலர் விலை கேட்பது போலவும் தான் அவர்களோடு பதில் பேசுவது போலவும் விளையாடினாள். அவள் தாயார் அவள் விளையாட்டைக் கண்டு மகிழ்ந்து அவளை முத்தமிட்டு, `எனக்கு ஒரு பழம் கொடு’ என்று கையேந்தி நின்றார். கண்ணகி முகம் வேறுபட்டது. அவள், `கடைக்காரனை முத்தம் இடலாமா? அவன் முத்தம் பெற்றுச் சரக்கைத் தருவானா! அது முறைக்கு மாறுபட்டது அல்லவா?’ என்றாள். தாயார் வெட்கித் தலை குனிந்தார். பயிற்சி 1. இவ்வரலாற்றைக் கண்ணகி கூறுவதுபோலக் கூறு. 2. நீ கண்ணகியைப்பற்றி நினைப்பதை 10 வரிகளில் எழுது 3. பலவற்றை, வெட்கி, சரக்கு, நடிப்பாள், கை ஏந்தி: இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்து எழுது. கேள்விகள் 1. கண்ணகி எவ்வாறு விளையாடிக்கொண்டு இருந்தாள்? 2. அவள் எப்படி வீட்டு வேலைகளைக் கற்றுக் கொண்டாள்? 3. ஒருநாள் மாலை அவள் என்ன ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாள்? 4. தாயார் அவளை என்ன செய்தார்? 17. வீரர் வரலாற்றுப் புத்தகம் கண்ணன் ஏழு வயதுடைய சிறுவன். அவன் பள்ளிக்கூடத்தை அறியான். அவன் தகப்பனார் அவனுக்கு வீட்டிலேயே கல்வி கற்பித்து வந்தார். தகப்பனார் இல்லாத காலங்களில் கண்ணன் தாயாரிடம் கல்வி கற்று வந்தான். கண்ணன் கதைகள் கேட்பதில் விருப்பம் உடையவன். அவன் நாள்தோறும் இரண்டு கதைகள் கேட்பான்; அந்த இரண்டையும் பலமுறை சொல்வான்; ஒருமுறை எழுதிக் காட்டுவான். அவன் எப்பொழுதும் எழுதுவதும் படிப்பதுமே வேலையாக இருந்தான். அவன் மாலை நேரங்களில் தாயாருடன் வீட்டுத் தோட்டத்தில் வேலைசெய்வான்; அத்தோட்டத்தில் இருந்த மலர்ச் செடிகளின் பெயர்களைச் சொல்லவும் எழுதவும் அறிந்திருந்தான்; மலர்களைப் பறித்து மாலைகட்ட அறிந்திருந்தான்; தாயார் கற்றுக்கொடுத்த சில பாடல்களைப் பாடவும் பழகி இருந்தான். வீரர்களின் வரலாறுகளைப் படிக்க வேண்டும் என்னும் ஆவல் அவனுக்கு உண்டானது. நெப்போலியன், நெல்சன், அலெக்ஸாண்டர், இராமன், கிருஷ்ணன், அர்ச்சுனன் முதலிய வீரர்களைப் பற்றிய கதைகளைப் பெற்றோர் கூறக்கேட்டிருநதான். ஆதலால், அவர்களைப்பற்றிய பெரிய நூல்களைப் படிக்க அவன்மனம் நாடியது. ஒருநாள் மாலை கண்ணன் தகப்பனார்பெரிய புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தார்; `கண்ணா, நீ படிக்க விரும்பிய நூல் இதுதான். இதனைப்படித்து எனக்குக் கதைகளைச் சொல்’என்று கூறிக்கொடுத்தார். கண்ணன் முகமலர்ச்சியோடு அப்புத்தகத்தைத் தன் இருகைகளாலும் வாங்கி முத்தம் இட்டான். பயிற்சி 1. கண்ணன் வரலாற்றைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. கண்ணனே இதனைக் கூறுவதுபோலக் கூறு. 3. கண்ணன் முயற்சி-ஆவல்-வீரர் புத்தகம்: இக் குறிப்புகளைக் கொண்டு இதனை மூன்று பாராக்களில் எழுது. 4. வரலாறு, ஆவல், முகமலர்ச்சி, பலமுறை, கல்வி கற்று: இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. கண்ணன் எவ்வாறு கல்வி கற்றான்? 2. அவன் யாருடைய கதைகளைப் பெற்றோரிடம் கேட்டிருந்தான்? 3. அவன் எவ்வித நூலைப் படிக்க விரும்பினான்? 4. நீ கண்ணனைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 18. குரங்கும் வெள்ளாடும் கந்தன் குரங்கு ஒன்றைச் செல்வமாக வளர்த்து வந்தான். அவன் எங்குச் சென்றாலும் அதனுடன் செல்வான்; அதற்குப் பழம் முதலிய வற்றை வாங்கித் தருவான். அதுவும் அவனிடம் மிக்க அன்பு காட்டி வந்தது. ஒருநாள் கந்தன் ஆடு ஒன்றை விலைக்கு வாங்கினான்; அதனை அயல் ஊரில் இருந்த தன் தங்கை வீட்டிற்குக் கொண்டுசெல்ல விரும்பினான்; தன் பயணத்துக்கு வேண்டிய சோற்றை மூட்டை யாகக் கட்டிக் கொண்டான்.குரங்கைத் தோள்மீது ஏற்றிக்கொண்டான்; ஆட்டை ஓட்டிக்கொண்டு பையப்பைய வழிநடந்தான். பாதித்தொலைவில் பெரிய ஆலமரம் இருந்தது. அதன் எதிரில் பெரிய குளம் இருந்தது. கந்தன் ஆலமரத்தின் அடியில் தங்கினான்; ஆட்டை மரத்தில் கட்டினான்; சோற்று மூட்டையை ஆட்டின் எதிரில் வைத்தான்; குரங்கைக் கீழே இறக்கிவிட்டான்; குளத்தில் நீராடி வரச் சென்றான். கந்தன் சென்ற பிறகு, குரங்கு சோற்று மூட்டையை அவிழ்த்தது: எல்லாச் சோற்றையும் வயிறாரத் தின்றது; தன் கைகளை ஆட்டின் தாடியில் தடவித் தூய்மை செய்துகொண்டது; நல்ல பிள்ளைபோல விளையாடிக் கொண்டு இருந்தது. கந்தன் குளித்துவிட்டுப் பசியோடு வந்தான்; சோற்று மூட்டை அவிழ்ந்து கிடந்தது. அதிற் சோறு இல்லை. கந்தன் குரங்கின் கைகளைப் பார்த்தான். அவை தூய்மையாக இருந்தன. ஆனால் ஆட்டின் தாடியில் சோற்றுப் பருக்கைக ள் ஒட்டிக்கொண்டு இருந்தன. கந்தன் கடுஞ்சினம் கொண்டான்; ஆட்டை நையப் புடைத்தான். இது நியாயமா? பயிற்சி 1. கந்தன் பிரயாணச் செய்தியை 16 வரிகளில் எழுது. 2. இதனைக் குரங்கு கூறுவதுபோலக் கூறு. 3. இதனை ஆடு கூறுவதுபோலக் கூறு. 4. இதனைக் கந்தன் எழுதுவதுபோல எழுது. 5. கந்தன் பிரயாணம்-சோற்று மூட்டை-கந்தன் அறியாமை: இவற்றைக் குறிப்புகளாகக்கொண்டு இச்செய்தியை மூனறு பாராக்களில் எழுது. 6. மூட்டையாக, கொண்டுசெல்ல, சுத்தமாக, கடுங்கோபம், நைய, பைப்பைய இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. கந்தன் எங்குப் பயணமானான்? 2. அவன் நீராடச் சென்றபோது குரங்கு என்ன செய்தது? 3. கந்தன் ஆட்டை அடித்தது ஏன்? 4. நீ இக்கதையால் அறிவது யாது? 19. எறும்புகளின் நுண்ணறிவு கோமளம் ஐந்தாம் வகுப்பு மாணவி. அவள் எறும்புகளின் இயல்பைப்பற்றிப் படித்தவள்; அதனால் எறும்புகளின் செயலை ஆராய்ந்தறிய எண்ணினாள். அவள் ஒரு ஞாயிற்றுக்கிழமை தன் வகுப்புமாணவி ஒருத்தியைத் தன்வீட்டிற்கு அழைத்து வந்தாள். அவள் பெயர் சானகி. கோமளம் தன் வீட்டு உறியை எடுத்தாள்; அதில் நெய்ச்சாடியை வைத்தாள்; அதற்குள் ஓர் எறும்பை எடுத்து விட்டாள்; உறியை முன்போலக் கூரையில் மாட்டிவிட்டாள். பிறகு இரண்டு பெண்களும் அந்த எறும்பையே ஊன்றி நோக்கிக்கொண்டு இருந்தனர். சாடிக்குள் விடப்பட்ட எறும்பு சாடியில் உள்ளது நெய் என்பதை அறிந்து, உறிமீது ஏறி வெளிப்பட்டது; வழியில் ஓர் எறும்பைச் சந்தித்தது; மேலும் நடந்து சுவர்மீது போய்க் கொண்டு இருந்தது; வழியில் பல எறும்புகளைக் கண்டது. ஆனால், அஃது அவற்றினிடம் என்ன சொல்லியது என்பது தெரியவில்லை. சிறிது நேரத்திற்குள் எறும்புகள் பல உறிவழியாகச் சாடிக்குள் இறங்கின. பிறகு வேறு பல எறும்புகள் சாரை சாரையாய் வந்தன. இவ்வாறு மிகுந்த நேரம் எறும்புகள் சாடிக்குள் வருவதும் போவதுமாக இருந்தன. கோமளமும் சானகியும் பெருவியப்போடு இக்காட்சியைக் கூர்ந்து நோக்கிக்கொண்டு இருநதனர்; இரண்டு மணி நேரம் கழிந்தபின் சாடியைப் பார்த்தனர். அதனுள் இருந்த நெய்பாதி அளவு காணப்பட வில்லை . அதை எறும்புகள் தின்றுவிட்டன. இரண்டு பெண்களும் எறும்புகளின் செயலைக்கண்டு வியப்பெய்தினர். பயிற்சி 1. இந்நிகழ்ச்சியைக் கோமளம் கூறுவதுபோல எழுது. 2. இதனைச் சானகி எழுதுவதுபோல எழுது 3. இதனை முதல் எறும்பு கூறுவதுபோலக் கூறு. 4. பெண்கள் சோதனை - எறும்பின் செயல் - முடிவு : இவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு இந்நிகழ்ச்சியை மூன்று பாராக்களில் எழுது. 5. இயல்பு, நெய்ச்சாடி, கவனித்துக்கொண்டு, சாரை சாரையாய, பெருவியப்பு: இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். 6. எறும்புகளைப்பற்றி நீ அறிந்ததை எழுது. கேள்விகள் 1. கோமளம் எவற்றை ஆராய விரும்பினாள்? 2. அவள் முதலில் என்ன செய்தாள்? 3. முதல் எறும்பு சாடியிலிருந்து வெளிப்பட்டு என்ன செய்தது? 4. பல எறும்புகள் சாடிக்குள்வரக் காரணம் யாது? 5. கோமளம் இப் பரிசோதனையால் உணர்ந்தது யாது? 20. தண்ணீர்ப் பந்தல் ஒரு மலை அடிவாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் சந்தை கூடுவது வழக்கம். அவ்விடத்தைச் சுற்றியுள்ள மலைகளில் இருளர், தொம்பர், மலைவாணர் என்னும் வகுப்பினர் வாழ்கின்றனர். அவர்கள் மூங்கில், தேன், மான்தோல், மான்கொம்பு, மரச்சீப்பு, பொத்தான்கள், புலித்தோல், புலிப்பல், கடுக்காய், கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை முதலியவற்றைச் சந்தைக்குக் கொண்டு வருவர். மலைத்தொடருக்குப் பத்து மைல் தொலைவரை உள்ள ஊர்மக்கள் காய்கறிகளையும், நெல், புளி, உப்பு, பலவகைத் தின்பண்டங்கள், ஆடு, கோழி, மாடு முதலியவற்றையும் கொண்டு போவர். அவரவர் தத்தம் பொருள்களை விற்றுத் தமக்கு வேண்டிய புதிய பொருள்களை வாங்கிக் கொண்டு மீள்வர். மலைநாட்டு மக்களுக்கு அடிவாரத்தில் உள்ள தண்ணீர் ஒத்துக்கொள்ளும். ஆனால், கீழ்நாட்டு மக்களுக்கு அத்தண்ணீர் ஒத்துக் கொள்வதில்லை. அது மலேரியா என்னும் மலைநாட்டுக் காய்ச்சலை உண்டுபண்ணும். அதனால், கீழ்நாட்டு மக்கள் சந்தை கூடும் நாட்களில் குடிநீர் இல்லாமல் துன்பப்பட்டனர். சந்தைக்கு ஐந்து கல் தொலைவில் இருந்த ஊரில் நங்கை ஒருத்தி இருந்தாள். அவள் கீழ்நாட்டு மக்களின் துன்பத்தை உணர்ந்தாள்; சந்தை கூடும் இடத்தில் ஒரு சிறு வீட்டைக் கட்டினாள்; சந்தை கூடும் நாட்களில் தன் ஊரிலிருந்து நல்ல தண்ணீரை வண்டிகள் மூலம் கொண்டுசென்று, அந்த வீட்டில் வைத்து, கீழ்நாட்டு மக்களுக்குத் தண்ணீர் இல்லாக் குறையை நீக்கினாள். எல்லோரும் அவளை மனமார வாழ்த்தினர். பயிற்சி 1. இக்கதையை 10வரிகளில் சொல் 2. இதனைச் சீமாட்டி கூறுவதுபோலக் கூறு. 3. மலைநாடு- சந்தை-தண்ணீர்க்கஷ்டம்- தண்ணீர்ப் பந்தல்: இவற்றைக் குறிப்புகளாகக் கொண்டு 4 பாராக்கள் எழுது. 4. சுற்றியுள்ள, காய்கறி, குடிநீர், மனமார, தூரத்தில்: இவற்றை உன் சொந்த வாக்கியத்தில் அமைத்துச சொல். 5. உனக்குத் தெரிந்த மலை அல்லது சந்தையைப் பற்றி 10 வரிகள் எழுது. கேள்விகள் 1. மலைநாட்டார் சந்தையில் விற்கும் பொருள்கள் எவை? 2. கீழ்நாட்டார் விற்கும் பொருள்கள் எவை? 3. சந்தையில் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டதேன்? 4. தண்ணீர்ப்பந்தல் எப்படி ஏற்பட்டது? 5. நங்கை செய்த பேருதவி யாது? 6. நீ அவளைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 21. நீராவி ஒருநாள் மாலை ஒரு சிறுவன் தன் வீட்டு அடுப்பண்டை உட்கார்ந்து இருந்தான். அடுப்பின்மீது மூக்குச்சட்டி (கெட்டில்) ஒன்று இருந்தது. அதனுள் தண்ணீர் இருந்தது. அப்பொழுது தேயிலைப்பானம் அருந்தும் நேரம் ஆதலால், அவன் தாயார் அடுப்பின்மீது மூக்குச்சட்டியை வைத்திருந்தார். சிறுவன் பசியோடு சட்டியண்டை இருந்தபோது, சட்டிக்குள் `தளதள’ என்னும் ஓசை கேட்டது. சிறுவன் வியப்போடு சட்டியை நோக்கியபடி இருந்தான்; சட்டியின் மூடிவழியாக நீராவி குப்-குப் என்று வெளி வருவதைக் கண்டான்; பிறகு மூடியும் அசைவதைக் கண்டான்; வியப்புக்கொண்டான். `சிறிதளவு நீராவி சட்டியின் மூடியை அசைக்கும் சக்தி உடையதாயிருக்கிறது. அப்படியானால் பேரளவு நீராவி பல அரிய செயல்களைச் செய்யக்கூடுமே!’ என்று அச்சிறுவன் எண்ணினான். `இந்த நீராவியின் சக்தியைக்கொண்டு வேலையாட்கள் இல்லாமலே பல வேலைகளைச் செய்யலாம்’ என்றும் அவன் நினைத்தான். பல ஆண்டுகள் கழிந்தன. சிறுவன் பெரியவன் ஆனான். அவன் இளமையிற் கொண்ட எண்ணமும் வரவர அதிகமாக வளர்ந்தது. அவன் பலவாறு எண்ணி முடிவில் நீராவிப் பொறியைக் கண்டுபிடித்தான். அவனே உலகம் போற்றும் ஜேம்ஸ்வாட் என்னும் அறிவாளி. பயிற்சி 1. இக்கதையைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இதனை ஜேம்ஸ்வாட் கூறுவதுபோலக் கூறு. 3.. நீராவி-சிறுவன் எண்ணம் -முடிவு: இக்குறிப்புகளைக் கொண்டு இக்கதையை மூன்று பாராக்களில் எழுது. 4. இளமை, பொறி, அறிவாளி, தளதள இவற்றை உன் சொந்தத் தொடர்களில் அமைத்துச்சொல். கேள்விகள் 1. ஜேம்ஸ்வாட் கெட்டிலில் கண்ட புதுமை யாது? 2. அவன் நீராவியைப்பற்றி என்ன எண்ணினான்? 3.. அவன் கடைசியில் எதைச் செய்துமுடித்தான்? 4. நீ இக்கதையால் அறிவது யாது? 22. நாய்க்குத் தன்னுரிமை கந்தன் ஆடுகளை மேய்க்கும் சிறுவன். அவன்அழகிய நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் அவன் இல்லாதபோது ஆடுகளைக் காப்பாற்றி வந்தது. அதைக் கண்டதும் ஓநாய்கள் ஓடிவிடும். தனக்கு இவ்வாறு பேருதவியாக இருந்த நாயைக் கந்தன் மிகுந்த அன்போடு பாதுகாத்தான். அவன் ஒருநாள் தன் ஊரை அடுத்த நகரத்திற்குள் ஒரு வேலையை முன்னிட்டுச் சென்றான். அப்பொழுது அந்த நகரத்தில் ஒரு கட்டளை இருந்தவந்தது. அஃதாவது, `நாயைச் சங்கிலியாலோ கயிற்றாலோ பிணித்துத்தான் அழைத்துச் செல்லவேண்டும்’ என்பது. கந்தன் அந்த முறைப்படி நடக்கவேண்டும். ஆயினும், அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவன் ஒரு நீண்ட கயிற்றை எடுத்தான்; அதன் ஒரு முனையை நாயின் கழுத்தில் சுற்றிக் கட்டினான்; மற்ற முனையைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்தான். இவ்வாறு கந்தன் நீண்ட கயிற்றைவிட்டு நாயை அழைத்துச் செல்வதைப் பலர் பார்த்து நகைத்தனர். ஒரு பெரியவர் கந்தனைப் பார்த்துக் காரணம் கேட்டனர். அவன் `பெரியவரே! நான் இந்த நாயை என் உயிருக்கு உயிராக மதித்து வருகிறேன். நான் இதை ஒருபோதும் கட்டியதே இல்லை. நான் இப்பொழுது கட்டுவேன் ஆயின், இதன் மனம் வருந்தும். ஆயினும், இந் நகரத்துக் கட்டளைப் படி கட்டினேன்; கயிறு நீளமாக இருப்பதால், தான் கட்டப்பட்டு இருப்பதை இந்த நாய் அறியமுடியாது அல்லவா? என்றான். பெரியவர் அவன் அறிவைப் பாராட்டி மகிழ்ந்தார். பயிற்சி 1. கந்தன் செய்தியைச் சுருக்கி 12 வரிகளில் எழுது. 2. இதனைக் கந்தன் கூறுவதுபோலக் கூறு. 3. இதனைப் பெரியவர் சொல்வதுபோலச் சொல். 4. கந்தனும் நாயும்-நகரத்து விதியும் கந்தனும்-முடிவு: இக் குறிப்புக்களைக்கொண்டு இந்நிகழ்ச்சியை மூன்று பாராக்களில் எழுது. 5. பிணித்து, அழைத்துச்செல்ல, விதிப்படி, சங்கிலியால், உயிருக்கு உயிராக: இவற்றை உன் சொந்த வாக்கியங்களில் அமைத்துச் சொல். கேள்விகள் 1. கந்தன் நாயிடம் அன்புகொள்ளக் காரணம் யாது? 2. அஃது அவனை விரும்பக் காரணம் யாது? 3. நகரத்தில் நாயைப்பற்றி .இருந்த கட்டளை யாது? 4. கந்தன் செய்ததென்ன? 5. அவன் அப்படிச் செய்ததற்குக் கூறிய காரணம் யாது? 6. நீ கந்தனைப் பற்றி என்ன நினைக்கிறாய்? சிறுகதைக் களஞ்சியம் (மூன்றாம் புத்தகம்) 1. கடல் நீராடல் வியாழக்கிழமை மதி மறைவு நான் (சந்திரகிரகணம்). எனவே, சென்னைக் கடங்கரையில் மக்கள் கூட்டங்கூட்டமாகக் கூடியிருந்தனர். ஆடவரும் பெண்டிரும் கடலில் நீராடினர். அவர்களோடு பள்ளிக்கூட மாணவரும் ஒருபுறம் நீராடினர். அம்மாணவருள் ஒருவன் கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டான். உடனே எங்கும் கூக்குரல் கிளம்பியது. ஓர் ஆடவன் சரேலெனக் கடலிற் குதித்தான். ஆனால், அவன் மாணவனை அடையமுடியாதபடி அலைகள் தடுத்தன. அவன் திரும்பிவிட்டான். இதனைப் பார்த்துக்கொண்டு கரையில் இருந்த இளைஞன் ஒருவனும் திடீரெனக் கடலில் குதித்தான்; தன் வலிகொண்டமட்டும் அலைகளோடு போராடி, மூழ்கும் நிலையில் இருந்த மாணவனை அடைந்தான்; அவனது தலைமயிரைப் பற்றினான். அந்தோ! மயிர் கையினின்றும் நழுவியது. சிறுவன் மூழ்கினான். உடனே இளைஞனும் மூழ்கி அவன் தலைமயிரை உறுதியாகப் பற்றி இழுத்துக்கொண்டு நீர்மட்டத்திற்கு வந்தான். பின்னர் அம்மாணவனை இழுத்துக்கொண்டு கரைநோக்கி நீந்தினான். இளைஞன் களைப்படைந்தான். அவனால் கரைசேரக் கூடவில்லை. அந்நிலையை அறிந்த வேறு இருவர் கடலில் இறங்கினர். இருவரும் இளைஞனையும் மாணவனையும் தூக்கிக் கரை வந்து சேர்ந்தனர். அவ்விருவரும் உடல்நலம் அடைய மூன்று நாட்கள் ஆயின. கேள்விகள் 1. கடல் நீராடலைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? 2. பள்ளி மாணவனுக்கு உண்டான இடையூறு யாது? 3.. இளைஞன் அவனை எவ்வாறு காப்பாற்றினான். 2. உயிர்பொருட்டு ஓட்டம் கண்ணன் நான்காம் வகுப்பு மாணவன். கமலம் ஆறாம் வகுப்பு மாணவி. அவள் கண்ணன் அக்கை ஆவள். இருவரும் ஒரு நாள் மாலை பள்ளியில் இருந்து வீட்டை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். அவர்கள் ஒரு சந்துமுனையில் திரும்பும்பொழுது ஓர் எருது மிக்க விரைவாக ஓடி வந்தது. அதைக்கண்ட இருவரும் அஞ்சி நடுங்கினர்; செய்வதை தோன்றாது விழித்தனர். எருது மிகவும் சினத்தோடு வந்தது. அது கண்ணனைக் கொம்பால் தூக்கி எறிந்தது. கண்ணன் `அம்மாடி!’ என்று அலறிக் கொண்டு வீழ்ந்தான். எருது கண்ணனிடம் சென்று அவனைக் கொம்பினார் குத்திக் காயப்படுத்த முயன்றது. உடனே கமலம் ஓடிச்சென்று, அதன் கொம்புகளை இறுகப் பிடித்தாள்; எருது தலையை அசைத்துக் கமலத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. இதற்குள் கண்ணன் எழுந்து வீட்டை நோக்கி ஓடினான்; கமலமும் அவனைப் பின் தொடர்ந்தாள். ஆனால், எருது அவர்களை விடவில்லை. அதுமிகுந்த சினத்தோடு அவர்களைத் துரத்திச்சென்றது. பாவம்! கண்ணனும் கமலமும் தங்கள் உயிரின்பொருட்டு ஓட்டம் பிடித்தனர். எருது உரத்த ஓசையுடன் அவர்களை விரட்டிச் சென்றது. இருவரும் வீட்டை நெருங்கி விட்டனர். நல்ல காலம்! வீட்டின் வெளிக்கதவு திறந்திருந்தது. அதனால், கண்ணன் எளிதில் வீட்டிற்குள் ஓடினான்; பின்சென்ற கமலமும் உள் நுழைந்தாள். அப்பொழுது எருதும் உள்ளே நுழைந்திருக்கும். ஆனால், அதற்குக் கமலம் தெருக்கதவை மூடித் தாழிட்டுவிட்டாள். கேள்விகள் 1. எருது செய்த தீமை யாது? 2. கமலத்தின் வீரச்செயல் யாது? 3. இருவரும் எவ்வாறு தப்பினர்? 4. எருது அவர்களைத் துரத்தக் காரணம் யாது? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 3. சிறுவனும் விண்மீன்களும் பிரான்ஸ் தேசத்தில் பழைய காலத்தில் கோவில் மணியை ஒவ்வோர் இரவிலும் அடிப்பது வழக்கம். அவ்வாறு ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்று வந்தது. ஓர் ஊரில் மணி அடிப்பவன், சில இரவுகளில் தன் மகனை அவ்வேலைக்கு அனுப்புவது உண்டு. அம்மகன் மணியை அடித்துவிட்டு நெடுநேரம் கழித்தே வீட்டிற்கு வருவான். அதன் காரணம் இன்னது என்று மைந்தனும் சொல்லவில்லை. தந்தையும் அறியக்கூடவில்லை. ஆனால், தந்தை மகனைக் கண்டித்து வந்தான். ஓர் இரவு தந்தை மகனுக்குத் தெரியாமல் அவன்பின் சென்றான். மகன் மணி அடித்த பிறகு, ஓர் இடத்தில் அமர்ந்து விண்மீன்களை உற்றுநோக்கிப் படம் போட்டுக்கொண்டு இருந்தான். தந்தையோ கல்வி அறிவு இல்லாதவன். ஆதலின், அவன், தன் மகன் `வீணாக நேரத்தைக் கழிக்கின்றான்’ என்று எண்ணி, அவனை நையப் புடைத்தான். மறுநாள் அச்சிறுவன் தெருவில் நின்று அழுது கொண்டு இருந்தான். ஓர் அறிஞர் அவனைக் கண்டு, `தம்பீ, ஏன் அழுகிறாய்? என்று அன்புடன் கேட்டான். பையன், முதல் நாள் இரவு நடந்ததை நவின்றான். அந்த அறிஞர் வானநூற் பயிற்சியில் அவனுக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்தார்; அவனுக்கு அதை யுணர்த்தும் பல நூல்களை வாங்கிக் கொடுத்தார்; அவனது ஆராய்ச்சிக்கப் பொருள் உதவியும் செய்தார். அச்சிறுவன் பிற்காலத்தில் புகழ்பெற்ற பிரெஞ்சு நாட்டு வானநூற் புலவன் ஆனான். கேள்விகள் 1. பிரான்ஸில் இரவில் நடைபெற்றுவந்த வழக்கம் யாது? 2. சிறுவன் இரவில் நேரம் கழித்துவரக் காரணம் யாது? 3. தந்தை ஏன் மகனைப் பின்தொடர்ந்தான்? 4. பின்தொடர்ந்த தந்தை கண்டறிந்தது யாது? 5. அறிஞர் சிறுவனுக்கு என்ன உதவி செய்தார்? 6. சிறுவன் எந்நிலையை அடைந்தான்? 7. நீ இக்கதையால் அறிவது யாது? 4. ஏழைச் சிறுவன் கிருட்டிணன் மூன்றாம் வகுப்பு மாணவன். அவன் நவராத்திரி விடுமுறையில் தன் பெற்றோருடன் திருப்பதிக்குப் பயணம் ஆனான். புகைவண்டிப் பயணம் அவனுக்கு இன்பமாக இருந்தது. அவன் பல காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தான். அவன் கீழத் திருப்பதியையும் சுற்றிப் பார்த்தான். திருப்பதி ஏழு மலைகளை உடையது. அவற்றின்மேல் ஏற ஒழுங்காக வெட்டப்பட்ட படிகள் உண்டு. அங்கங்கே தங்குவதற்குச் சிறு சத்திரங்கள் உண்டு. வழிநெடுகப் பிச்சைக்காரர்கள் உட்கார்ந்துகொண்டு இருப்பார்கள். ஆங்காங்குக் குரங்குகள் விளையாடிக்கொண்டிருக்கும். அடியார்கள் `கோவிந்தா, கோவிந்தா’ என்று சொல்லிக்கொண்டே மலைமீது ஏறினார்கள்; ஏறமுடியாத வர்கள் ஏணையில் தூக்கிச் செல்லப்பட்டார்கள். கிருட்டிணன் தன் பெற்றோருடன் நடந்துசென்றான். அவன் வேடிக்கை பார்த்துக்கொண்டே போனான். அதனால் அவனுக்குக் கால்வலி தெரியவில்லை. பாதிஅளவு நடந்தபின் கிருட்டிணனன் பெற்றோர் ஓர் இடத்தில் தங்கினர். அங்கு ஓர் ஏழைப்பையன் தலைகீழாக நின்று வேடிக்கைகள் காட்டிக்கொண்டு இருந்தான். வழிப்போக்கர்கள் அவனுக்குக் காசு கொடுத்தனர். அவன் அவற்றை வாயில் அடக்கிக்கொண்டு பழையபடியே தலைகீழாக நின்றான். அவன் சட்டைப் பையில் காசுகளைப் போடாமல் வாயில் போட்டுக்கொண்டது கிருட்டிணனுக்கு வியப்பாக இருந்தது. அவன் அச்சிறுவனைக் காரணம் என்ன என்று கேட்டான். அதற்கு அவன், `சட்டைப்பையில் காசு போட்டால், தலைகீழாக நிற்கும்பொழுது விழுந்துவிடும். அதனாற்றான் நான் வாயில் அடக்கிக்கொள்கிறேன்’ என்றான். கிருட்டிணன் அவனது அறிவைப் பாராட்டினான். கேள்விகள் 1. திருப்பதி மலை என்பது யாது? 2. அங்கு இருக்கும் கடவுள் பெயர் யாது? 3. கிருட்டிணன் அங்குக் கண்ட காட்சிகள் எவை? 4. ஏழைச்சிறுவன் என்ன செய்துகொண்டு இருந்தான்? 5. கிருட்டிணன் அவனை யாது கேட்டான்? 6. அதற்கு அவன் அளித்த விடை யாது? 7. நீ ஏழைச் சிறுவனைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 5. காலங்கருதிய அறிவுரை இங்கிலாந்தில் சில காலங்களில் குளங்கட்டைகள் உறைந்து விடும். அப்பொழுது அவற்றின்மீது பனிக் கட்டிகளே காணப்படும். பிள்ளைகள் சறுக்கல் வண்டிகளை வைத்துக் கொண்டு அவற்றின்மீது விளையாடுவார்கள். .இவ் விளையாட்டு மேல்நாடுகளில் மிகவும் சிறந்தது. ஒருநாள் மாணவர் நால்வர் ஒரு குளத்தின் மீது இருந்த பனிக்கட்டிகள்மீது சறுக்கல் வண்டிகளை விட்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் விளையாட்டைப் பார்த்துக்கொண்டு பெரிய மாணவன் ஒருவன் கரைமீது நின்றுகொண்டிருந்தான். பிள்ளைகள் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது வெயில் தோன்றியது. பிள்ளைகள் தங்களை மறந்து இன்பமாக விளையாடினர். ஆதலால், வெயில் வெப்பத்தை அவர்கள் கருதவில்லை. வெப்பம் தாக்கத் தாக்கப் பனிக்கட்டிகள் கரையத் தொடங்கின. அப்பொழுதுதான் மாணவர்கள் தங்கள் இடர் மிகுந்த நிலையை உணர்ந்தார்கள். எப்பக்கம் கால் எடுத்துவைத்தாலும், கால் உள்ளேபோகத் தொடங்கியது. அம்மாணவர் நடுநடுங்கிக் கண்ணீர் விட்டனர். அப்பொழுது கரையில் இருந்த பெரிய மாணவனுக்குத் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. அவன் தன் மார்பால் பனிக்கட்டிகள் மீது ஊர்ந்துசென்று திரும்பினான்; தன்னைப்போல எல்லோரும் படுத்துக்கொண்டு, ஒருவர் கால்களை ஒருவர் பிடித்துக்கொண்டு ஊர்ந்து வருமாறு சொன்னான். அனைவரும் அப்படியே செய்தனர்; இடறின்றிக் கரை சேர்ந்தனர்; பெரிய மாணவனுக்குத் தம் நன்றியறிதலைத் தெரிவித்தனர். கேள்விகள் 1. குளத்துநீர் உறைந்துவிடக் காரணம் யாது? 2. அவர்கட்கு ஏற்பட்ட இடையூறு யாது? 3. அவர்கள் அதிலிருந்து எவ்வாறு தப்பினர்? 6. கடலிலும் பூனைக்குட்டி ஒரு கப்பல் பெருங்கடலில் போய்க்கொண்டு இருந்தது. ஓர் இரவு அக்கப்பலின் ஒரு மூலையில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது. கப்பல் தலைவனும் மாலுமிகளும் தீணை அணைக்க முயன்றனர்; ஆனால் முடியவில்லை. அதனால் அவர்கள் உயிர்காவற்படகுகளில் (டுகைந- bடியவள) ஏறிக்கொண்டனர். கப்பல் எரிந்து சாம்பல் ஆயிற்று. கப்பல் தலைவன் கடைசியாகத் தன் உயிர் காவற்படகில் ஏறிக்கொண்டான். அவன் தன்னுடன் பூனைக்குட்டி ஒன்றையும் ஏற்றிக்கொண்டான். அக்குட்டி கப்பலில் இருந்தவர் அனைவருடைய அன்பையும் பெற்றது. தலைவன் அதனை ஒரு காகிதப் பெட்டியில் வைத்துத் தன் சட்டைக்குள் அடக்கிக்கொண்டான். ஆயினும், அப் பூனைக்குட்டி தண்ணீரில் நனைந்தது; குளிரால் துன்பப்பட்டது; `மியா, மியா’ என்று கத்தியது. மாலுமிகள் ஒருவர் மாறி ஒருவர் அதனை வைத்துக்கொண்டனர்; உணவூட்டினர்; தங்கள் உணவையும் குறைத்துக்கொண்டு அதனைக் காப்பாற்றி வந்தனர். அவர்கள் இவ்வாறு ஐந்து நாட்கள் உயிர் காவற் படகுகளில் துன்பப்பட்டனர். ஆறாம் நாள் இரவு, தொலைவில் கப்பலின் வெளிச்சம் தெரிந்தது. உடனே தலைவன் தான் வைத்திருந்த கடைசித் தீக்குச்சியைக் கிழித்து வெளிச்சத்தைக் காட்டினான். நல்ல காலம்! அக்கப்பல் துன்பப்பட்டுக்கொண்டு இருந்த மாலுமிகளை நோக்கி வந்தது. தலைவனும் மாலுமிகளும் அப்புதிய கப்பலில் ஏறிக்கொண்டனர். பூனைக்குட்டியும் அக்கப்பலை அடைந்தது என்பதைக் கூறவும் வேண்டுமோ? கேள்விகள் 1. கப்பலில் தீப்பிடித்தவுடன் மாலுமிகள் என்ன செய்தனர்? 2. `உயிர் காவற்படகு’ என்பது யாது? 3. பூனைக்குட்டியைக் காப்பாற்றியவர் யார்? எப்படிக் காப்பாற்றினர்? 4. நீ இப்பாடத்தால் அறிவது யாது? 7. ஓடிப்போன பூனை வள்ளியம்மை நான்காம் வகுப்பு மாணவி. அவள் தாயார் ஒருநாள் புதிய பூனைக்குட்டி ஒன்றை வீட்டிற்குக் கொண்டுவந்தார். அது வெண்மை நிறமுடையது; குறும்பு செய்வதில் வல்லது. அது தன் தலைவியைச் சிரிக்கச் செய்வதில் விருப்பம் உடையது. அஃது ஒருநாள் பின்னல் நூற் பந்தை வைத்துக்கொண்டு விளையாடியது; அப் பந்து அவிழ்ந்து அதில் இருந்த நூல் முழுவதும் தன்னைச் சுற்றிக்கொள்ளும் வரை உருண்டு புரண்டது. அதன் விளையாட்டைக் கண்ட வள்ளியின் தாய் நகைத்தான். அது மற்றொருநாள் பரணையின்மேல் ஏறிக்கொண்டு புரண்டது. அதனால், அதன் வெள்ளை நிறம் மறைந்து, கருப்பு நிறம் காட்சி அளித்தது. அது, தான் கருமை நிறம் அடைந்ததைப்பற்றி மிக்க மகிழ்ச்சி அடைந்தது போலக் குதித்து விளையாடியது. அதன் குறும்பைக் கண்ட வள்ளியம்மையின் தாயார் சினம் கொண்டார்; அதனைத் தண்ணீர் ஊற்றிச் சோப்பிட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டினார்; அது வெண்மை நிறம் அடையும் வரை அவர் அதனைத் தேய்த்துக் குளிப்பாட்டினார். அன்று இரவே அப்பூனை வெளியில் ஓடி விட்டது. இரண்டு நாட்கள் ஆயின. பூனைக்குட்டி வரவே இல்லை. மூன்றாம் நாள் வள்ளியம்மையின் தாயார் கடைக்குச் சென்று திரும்பி வரும்பொழுது அப் பூனைக்குட்டி அவரது தெருக்கோடி வீட்டில் இருக்கக் கண்டார். உடனே அவ்வம்மையார் அதனைப் பெயரிட்டு அழைத்தார். அது அவரைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டது. ஏன்? அது குளிப்பாட்டலை விரும்பவில்லை. கேள்விகள் 1. பூனைக்குட்டி பின்னல்நூற் பந்தை என்ன செய்தது? 2. அது எவ்வாறு கறுப்பு நிறத்தை அடைந்தது? 3. வள்ளியின் தாயார் அதனை என்ன செய்தார்? 4. அது வள்ளியின் தாயைக் கண்டு ஏன் முகத்தைத் திருப்பிக் கொண்டது? 5. நீ இக்கதையால் அறிவது யாது. 8. புகைவண்டி ஓட்டி ஒரு `புகை’ வண்டி முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அதனை ஓட்டுபவன், தனக்குப் பின்னால் விரைந்த புகைவண்டி ஒன்று வந்துகொண்டு இருந்ததை நன்கு அறிந்திருந்தான்; அஃது அருகில் வருவதற்குள் தான் குறித்த இடத்தைப் போய்ச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணினான். அவன் தன் வண்டியை விரைவாக ஓட்டிச் சென்றான்; வழியில் கிளைப்பாதையைக் கண்டான்; பின்வந்த வண்டிக்கு வழிவிட எண்ணி, அக் கிளைப்பாதையில் தன் வண்டியை நிறுத்த விரும்பித் திருப்பினான். அவ்வளவே. உடனே வண்டி பொறியில் ஏதோ பழுது ஏற்பட்டு இருந்ததால், எதுவோ `படார்’ என்று வெடித்தது. புகைவண்டியின் முன்பகுதி பாதையை விட்டு இறங்கிக் கவிழ்ந்தது. உடனே மற்ற வண்டிகளில் இருந்தவர்கள் இறங்கி ஓடினர்; விழுந்த வண்டியின் கீழே அகப்பட்டுக்கிடந்த வண்டி ஓட்டியைக் கண்டனர் அவன் படுகாயப் பட்டிருந்தான்; அவனை வெளியே எடுத்து படுக்க வைத்தனர்; `நீர் சிறிது நேரம் பேசாமல் இரும். பேசினால் இறந்துவிடுவீர்’ என்றனர். ஆனால், அவ்வண்டி ஓட்டி தன் உயிரைப் பற்றிக் கவலைப்படவில்லை; தனக்குப் பின்வந்த `விரைந்த வண்டி’யைப் பற்றியே கவலை கொண்டான். அதனால், அவன் வாய்திறந்து, `விரைந்த வண்டியை நிறுத்த முயலுங்கள். இன்றேல், அதுவும் இக்கதியை அடையும்’ என்றான்; இங்ஙனம் சொல்லும்பொழுதே அவன் உயிர் பிரிந்தது. கேள்விகள் 1. வண்டி ஒட்டி ஏன் கிளைப்பாதையில் போக முயன்றான்? 2. எஞ்சின் கவிழக் காரணம் யாது? 3. அதனால் வண்டி ஓட்டியின் கதி யாதாயிற்று? 4. பேசக்கூடாத நிலையில் அவன் யாது பேசினான்? ஏன்? 5. அதனால் அவன் அடைந்த பலன் யாது? 6. நீ இக்கதையால் உணர்வது யாது? 9. நண்பனுக்கு உதவி ஓர் ஆங்கிலக் கப்பல் கடலிற் போய்க் கொண்டிருக்கையில் திடீரெனக் குண்டு அடிபட்டுக் கவிழ்ந்தது. அதிலிருந்து கடலில் குதித்த கப்பலோட்டி பற்றுக்கோடு இன்றிக் கடலில் துன்பத்துடன் நீந்திக்கொண்டு இருந்தான். அவன் கைகால்கள் மரத்தன; தான் சிறிது நேரத்தில் இறந்துவிடப் போவதாக எண்ணினான். அந்தச் சமயத்தில் ஒரு பலகை அவனை நோக்கி மிதந்து வந்தது. அவன் மழை கண்ட பயிர்போல மனம் மகிழ்ந்தான்; அதைப்பற்றி மிதந்து சென்றான். அவன் சிறிது தொலை சென்றதும், தன் நண்பன் ஒருவன் தண்ணீரில் துன்பப் படுவதைக் கண்டான். அவன், `நண்பனே, என் உயிர் போகிறது. அப்பலகையில் எனக்கு இடம் கிடைக்குமோ? என்று ஆவலோடு கேட்டான். முதல் மனிதன் அச் சிறு நண்பனைப் பார்த்து, `நீ இப்பலகையைப் பிடித்துக்கொள். நான் வேறு பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறி, அச்சிறுவனிடம் அப்பலகையை விட்டுத் தான் நீந்திச்சென்றான். `அச்சிறுவன் நன்கு நீந்தத் தெரியாதவன். அவன் பலகையைக் கொண்டேனும் பிழைக் கட்டும். என்னைக் கடவுள் காப்பார்’ என்று கப்பலோட்டி தனக்குள் எண்ணினான். அவன் எண்ணியவாறே, திடீரென்று ஒரு படகு அவனை நோக்கி வந்தது. அதில் இருந்தவர் அவனைத் தூக்கிப் படகில் ஏற்றிக்கொண்டனர். அவன் அப்பொழுதும் தன் நண்பனை மறக்கவில்லை. அதனால் படகு சிறுவனை நோக்கிச் சென்றது. சிறுவனும் காப்பாற்றப்பட்டான். கேள்விகள் 1. கப்பலோட்டி ஏன் சிறுவனுக்கு உதவி செய்தான்? 2. கப்பலோட்டி தனக்குள் என்ன எண்ணினான்? 3. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 10. குரங்கின் முயற்சி குப்பன் நான்காம் வகுப்பு மாணவன். அவன் வீட்டில் ஒரு குரங்கு இருந்தது. அது குப்பனிடம் அன்புடையது. அஃது அவன் படிக்கும்பொழுதும் எழுதும்பொழுதும் அவன் பக்கத்திலேயே இருக்கும்; இருந்து, அவன் செய்யும் வேலைகளை நோக்கும். ஒருநாள் குப்பன் தன் கத்தியைக் கூர்மையாக்கப் பலகைமீது வைத்துத் தேய்த்துக் கொண்டிருந்தான். குரங்கு அவன் செய்ததை நோக்கிற்று. அவன் இல்லாதபோது, குரங்கு அவன் பெட்டியைத் திறந்து கத்தியை எடுத்துக் குப்பன் தீட்டியதைப்போலத் தானும் தீட்டத் தொடங்கியது. ஆனால், அந்தோ! அது தடித்த பக்கத்தைத் தவறாகத் தீட்டத் தொடங்கியது. அதனால், கூரிய பக்கம் அதன் கையில் பட்டுக் காயத்தை உண்டாக்கிவிட்டது. அதன் காயத்தைக் கண்ட குப்பன் தாயார், அதனை மருந்திட்டுக் கட்டினார். மற்றொரு நாள், குப்பன் நாமம் போடுவதைக் குரங்கு நோக்கிற்று. அது, அவன் சென்ற பின்னர், நாமப் பெட்டியைத் திறந்து, வெண்மை நிறம் போடவேண்டிய இடங்களில் சிவப்பு நிறத்தையும், நடுவில் வெண்மை நிறத்தையும் போட்டுக்கொண்டது. மாலையில் குப்பன் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தான் அவன் குரங்கின் நாமத்தைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தான். அப்பொழுது தான் குரங்கு தான் செய்த தவற்றை உணர்ந்தது. அது வெட்கப்பட்டுத் தோட்டத்தை நோக்கி ஓடிவிட்டது. கேள்விகள் 1. ஒருநாள் குப்பன் என்ன செய்தான்? 2. அவனைப் பார்த்த குரங்கு என்ன செய்ய முயன்றது? 3. அது அம்முயற்சியில் அடைந்த பயன் யாது? 4. மற்றொரு நாள் குப்பன் என்ன செய்தான்? 5. அவனைக் கண்ட குரங்கு என்ன செய்தது? 6. குப்பன் ஏன் விழுந்து விழுந்து சிரித்தான்? 7. குரங்கு ஏன் தோட்டத்தை நோக்கி ஓடிவிட்டது? 11.படைத்தலைவரின் வீரம் ஆப்பிரிக்காவில் பல வருடங்களுக்கு முன் போயர் போர் நடந்தது. அப்போரில் ஓர் இடத்தில் ஆங்கிலேயப் படைக்கும் போயர் படைக்கும் கடுமையாகப் போர் நடந்தது. ஆங்கில வீரர் நீண்ட நேரம் சண்டையிட்டனர். அவர்களிடம் சில குண்டுகளே இருந்தன. அவை செலவழிந்தபின் அவர்கள் அடைக்கலம் புக வேண்டியவரா யிருந்தனர். அப்படி இருந்தும் அவர்கள் அடைக்கலம் புகவில்லை. போயர்கள் அடைக்கலம் புகும்படி இரண்டுமுறை சொல்லி அனுப்பினர். அதற்கு ஆங்கில வீரர் உடன்படவில்லை. ஆங்கிலப் படைத்தலைவர் தம் வீரர்களைப் பார்த்து, `உங்களிடம் குண்டுகள் இருக்கும்வரை சுடுங்கள்; பிறகு மறைவிடத்தில் மறைந்து இருங்கள்’ என்று கட்டளை இட்டார். ஒவ்வோர் ஆங்கில வீரனும் தன் தலைவர் கட்டளைப்படியே செய்தான். அதனால் போர் செய்யும்வீரர் எண்ணிக்கை வரவரக்குறைந்தது. இறுதியில் ஒரு வீரன் தன்னைத் தன் தலைவர் பக்கத்தில் உதவியாக இருக்கவிடுமாறு வேண்டினான். ஆனால் தலைவர் அதற்க உடன்படவில்லை. முடிவில் போர்க்களத்தில் ஆங்கிலப்படைத்தலைவர் ஒருவரே நின்றார். இது தெரியாமல் போயர்கள் மறைவில் இருந்து சரமாரியாயகக் குண்டுகளைப் பொழிந்து கொண்டு இருந்தனர். அவற்றுள் ஒன்று படைத்தலைவர் காலில் கடுங்காயத்தை உண்டாக்கியது. ஆனால், அவ்விடர் உற்ற நேரத்தில் புதிய ஆங்கிலப்படை உதவிக்கு வந்துவிட்டது. போயர்கள் புறங்காட்டி ஓடினர். கேள்விகள் 1. சேனைத்தலைவரது காலங்கருதிய அறிவுரை யாது? 2. அதனால் அடைந்த நன்மை யாது? 3. காலங்கருதிய அறிவு என்பது என்ன? 4. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 12. அச்சம் அறியாத சிறுவன் இங்கிலாந்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் ஒருநாள் மாலை பரபரப்பு ஏற்பட்டது. அவ்வூரில் இருந்த பெரிய மாளிகையில் இருந்து பர் வெளியே போவதும் வருவதுமாக இருந்தனர். பலர் உந்து வண்டிகள்மீது ஓடினர்; பலர் கால்நடையாக ஓடினர். அந்த வீட்டிற்கு உரிய சிறுவன் நடுப்பகலில் போனவன் மாலைவரை வீட்டிற்கு வரவில்லை. அவனோ ஆறுவயதுடைய சிறுவன். அவனைக் காணாமையால் வீட்டில் பரபரபப்பு ஏற்பட்டது. பலர் அவனைத்தேடிப் பல இடங்கட்குச் சென்றனர். அச்சிறுவனை அவன் பெற்றோர் தம் செல்வமாகக் கருதினர்; அவனை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்தனர். அவன் அவனது பாட்டியாரது உயிர் போன்றவன். ஆதலின், அவ்வம்மையார் அவனை எதிர்நோக்கி வாயிற்படியண்டை நின்றார். அவனைத் தேடிச் சென்றவருள் ஒருவர், அவ்வூரை அடுத்த நீரோடையின் கரைமீது சிறுவனைக் கண்டார். அதனைத் தாண்டி வர முடியாததால் சிறுவன் அக்கரைமீதே உட்கார்ந்து தண்ணீர் ஓடுவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். சிறுவன் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டான். அவன் பாட்டியார் அவனை ஆவலோடு தழுவி, `அப்பனே! உனக்கு அச்சம் என்பது தோன்றவில்லையோ?’ என்று கேட்டார் . சிறுவனாகிய நெல்சன், `பாட்டீ! அச்சம் என்பது யாது?’ என்று வியப்போடு கேட்டான் அச்சிறுவனே பிற்காலத்தில் உலகம் போற்றும் கடற்போர் வீரனான நெல்சன் ஆனான். கேள்விகள் 1. மாளிகையில் பரபரபப்பு ஏன் உண்டாக்கியது? 2. சிறுவன் எங்குச் சென்றிருந்தான்? 3. அவனைப் பாட்டியார் கேட்ட கேள்வி யாது? 4. அவன் அதற்கு அளித்த பதில் யாது? 5. அச்சிறுவன் யாவன்? 13. திருட்டு அப்பம் ஓர் ஏழைக் கிழவி அப்பம் தயாரிப்பது வழக்கம். அவள் அதை விற்று, வரும் ஊதியத்தைக்கொண்டு பிழைத்து வந்தாள். பொன்னன் ஐந்தாம் வகுப்பு மாணவன். அவன் நாடோறும் அக்கிழவியிடம் சிற்றுண்டி வாங்குவது வழக்கம். அவன் அன்று அப்பம் வைத்திருந்த தட்டுகள் பலவற்றைக் கண்டான்; கிழவிக்குத் தெரியாமல் ஒரு தட்டில் இருந்த ஆறு அப்பத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினான். பொன்னன் அவ்வப்பத்தைத் தன் படிப்பு அறையில் ஒளித்து வைத்தான். அவன் அடிக்கடி அந்த அறைக்குள் போவதும் வருவதுமாக இருந்தான். அதைக் கண்ட தாயார் ஐயங் கொண்டார். அவர் அவன் அறைக்குள் சென்று பார்த்தார்; அவரைக் கண்ட பொன்னன் அச்சத்தால் கூவினான். தாயார், `பொன்னா, இந்த அப்பத்தை எங்கிருந்து பெற்றாய்?’ என்று கேட்டார். சிறுவன் அழுதுகொண்டே உண்மையைக் கூறி விட்டான். தாயார் கடுங்கோபம் கொண்டார்; `உடனே போய் இவற்றை அக்கிழவியிடம் கொடுத்துவிடு; உன் செயலுக்காக அவளது மன்னிப்பைப் பெற்றுவா’ என்று அதட்டினார். அந்தோ! பொன்னன் ஒரு அப்பத்தை முன்பே தின்றுவிட்டான்; ஆதலால், எஞ்சிய அப்பத்துடன் கிழவியிடம் ஓடினான்; தன் செயலைக் கூறி அவ்வப்பங்களை அவளிடம் கொடுத்தான்; தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். கிழவி அவன் நற்குணத்தைக் கண்டு மகிழ்ந்து அவனை வாழ்த்தினாள். பொன்னன் அன்று முதல் திருட்டுத் தொழிலை அறவே விட்டுவிட்டான். கேள்விகள் 1. பொன்னன் எவற்றைத் திருடினான்? 2. அவன் அவற்றை எங்கு ஒளித்துவைத்தான்? 3. அவன் திருட்டு எப்படி வெளிப்பட்டது? 4. அவன் தாயார் அவனுக்கு இட்ட கட்டளை யாது? 5. அவன் அதன்படி என்ன செய்தான்? 6. நீ இக்கதையால் அறியும் நீதி யாது? 14. எழுவரைக் காத்த பூனை முருகன் நான்காம் வகுப்பு மாணவன். அவன் வீட்டில் அவன் தம்பியர் மூவரும் தாய் தந்தையரும் வேலைக் காரியுமாக எழுவர் இருந்தனர். முருகன் ஒரு வெள்ளைப் பூனையை அன்புடன் வளர்த்துவந்தான். அவர்கள் வீட்டின் வாயிலில் வெயிலைத் தடுப்பதற்காகச் சிறிய கீற்றுப் பந்தல் போடப்பட்டு இருந்தது. இரவில் முருகன் முதலிய அனைவரும் மாடியிற் சென்று படுத்துக்கொள்வது வழக்கம். கீழே பூனைமட்டுமே படுத்திருக்கும். ஓர் இரவு அப்பூனை திடீரென விழித்துக் கொண்டு மூச்சுவிடத் திணறியது. அது கண்ணைத் திறந்து பார்த்தபொழுது, தன் எதிரே இருந்த பந்தலில் தீப்பிடித்துக் கொண்டதைக் கண்டது. அவ்வறிவுள்ள அப்பூனை விரைவில் மாடியை அடைந்தது; அங்கு முதலில் படுத்திருந்து வேலைக்காரியை நோக்கி, `மியா, மியா’ என்று கத்தியது. வேலைக்காரி எழுந்திருக்கவில்லை. உடனே பூனை அவளது முகத்தை நக்கியது. அவள் அப்பொழுதும் எழுந்திருக்கவில்லை. பூனை அவளது கூந்தலைப் பற்றி இழுத்து, அவள் முகத்தைத் தன் நகங்களால் கீறியது. வேலைக்காரி ஒருவாறு விழித்து எழுந்தாள்; உடனே புகை நாற்றத்தை முகர்ந்தாள்; மாடியில் இருந்தபடியே முற்றத்தை நோக்கினான். நல்ல காலம் ! தீ மிகுதியதாகப் பரவ இல்லை. முருகன் தகப்பானர் தண்ணீரைக் கொட்டி அந்தத் தீயை அளைத்த விட்டார். வீட்டில் இருந்த எல்லோரும்,, தம் வீட்டையும், உயிரையும் காத்த வெள்ளைப் பூனையை எடும்த்து முத்தம் கொடுத்து மகிழ்ந்தனர். 15. சாரணச் சிறுவன் ரஷியருக்கும் ஜெர்மனியருக்கும் போர் நடந்தபொழுது ரஷியநாட்டுச் சாரணச் சிறுவர். தம் நாட்டுப் போரில் கலந்து கொண்டனர். அவருள் ஒரு சிறுவன் ஜெர்மன் வீரர்கள் இருந்த இடத்தைக் கண்டறிய அனுப்பப்பட்டான். அவன் இருளில் பமுங்கிப் பதுங்கிச் சென்றான். அவன் போர்க்களத்தில் விழுந்துகிடந்த வீரர்களைத் தாண்டிச் செல்ல நேர்ந்தது. வழியில் ஓர் ரஷிய வீரன் காயம்பட்டுக் கிடந்தான். சிறுவன் அவ்வீரனிடம் இருந்த ரஷியக் கொடியை எடுத்துக்கொண்டான். ஆனால், அவன் அப்பொழுது ஜெர்மன் வீரரால் பிடிக்கப்பட்டான். ஆயினும், அந்த ஜெர்மன் வீரர் அச்சிறுவன் மாட்டுச் சரியான காவலைப் புரியவில்லை. அதனால் அச்சிறுவன் இருளில் எப்படியோ தப்பித்துக்கொண்டான். அவன் அவ்வாறு தப்பி ஓடும்பொழுது ஜெர்மன் வீரன் ஒருவன் தூங்கிக் இருந்தான். அவனிடம் ஜெர்மன் கொடி இருந்தது அச்சிறுவன் அதை எடுத்துக்கொண்டு ஓடினான். அவன் ஓடுவதை ஜெர்மனியர் கண்டனர்; அவன்மீது வெளிச்சத்தைச் செலுத்தினர்; உடனே அவன்மீது குண்டுகள் பறந்தன. அந்தோ! அச்சாரணச் சிறுவன் விலாப்புறத்தில் அடியுண்டான். ஆயினும், அவள் தள்ளாடித் தள்ளாடி ரஷிய வீரர் இருந்த இடத்தை அடைந்தான். அவ்வீரர்கள் அவனது செயலைப் பாராட்டிச் சிறப்புச் செய்தனர். சிறுவன் ஜெர்மனியர் இருந்த இடத்தைக் கூறி,, மலர்ந்த முகத்துடன் உயிர்விட்டான். கேள்விகள் 1. சாரணச் சிறுவன் யாவன்? 2. அவன் வேலைகள் என்ன? 3. இக்கதையில் கூறப்பட்ட சாரணச் சிறுவன் என்ன வேலை செய்ய ஏவப்பட்டான்? 4 அவன் வழியில் அடைந்த துன்பம் யாது? எவ்வாறு தப்பினான்? 5. அவன் முடிவு யாது? 6. நீ இக்கதையால் அறிவது யாது? 16. புதிய நோயாளி முருகன் தாயார் ஒரு வாத்தை வளர்த்து வந்தார். ஒருமுறை அதன் காலில் காயம் உண்டாகி இருந்தது. முருகன் அதைக் கண்டு மனம் பதைத்தான்; உடனே அதை எடுத்துக் கொண்டு ஓடினான். அவன் ஒரு மருத்துவர் வீட்டை அடைந்து கதவைத் தட்டினான். உடனே உள்ளே இருந்த தாதி வந்து கதவைத் திறந்தாள்; `யாரைத் தேடுகிறாய்?’ என்றாள். `மருத்துவரைத் தேடுகிறேன்’ என்று முருகன் பதில் அளித்தான். அத்தாதி அவனை உள்ளே அழைத்துச்சென்று மருத்துவர்முன் விட்டாள். மருத்துவர், `தம்பீ! என்ன செய்தி? உன் உடம்பு நன்றாக இருக்கிறதே! நீ ஏன் இங்கு வந்தாய்?’ என்றார். உடனே முருகன் கண்களில் நீர் கலங்க, `ஐயா! எனக்கு ஒன்றும் இல்லை. என் அருமை வாத்தின் காலில் காயம் உண்டாகி விட்டது. அதற்காகவே உங்களிடம் வந்தேன்’ என்றான். மருத்துவருக்கு நகைப்பு வந்தது; ஆயினும், அவர் சிரிப்பை அடக்கிக்கொண்டு, வாத்தைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றார். அதன் காலில் மருந்திட்டுக் கட்டினார்; அதனை முருகன் கையில் கொடுத்து, `தம்பீ, கவலைப்படாதே. இக்காயம் குணமாகிவிடும்; என்று கூறினார். முருகன் அடக்கமுடியாத மகிழ்ச்சியால் ஆடிக் கொண்டு வீட்டை அடைந்தான்; தான் செய்த வேலையைத் தன் தாயாரிடம் கூறி மகிழ்ந்தான். இரண்டு நாட்களில் வாத்தின் கால் குணமாகிவிட்டது. முருகன் மருத்துவரிடம் சென்று, தன் நன்றியைத் தெரிவித்து மீண்டான். கேள்விகள் 1. முருகன் மனம் எப்படிப்பட்டது? 2. அவன் ஏன் வைத்தியர் வீட்டிற்கு ஓடினான்? 3. மருத்துவருக்கு ஏன் சிரிப்பு வந்தது? 4. ஆயினும் அவர் அதை ஏன் அடக்கிக் கொண்டார்? 5. நீ முருகனைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 6. இக்கதையின் `தலைப்பு’ பொருத்தமுடையதா? 17. கிளியும் பூனைக்குட்டிகளும் சாரதாம்பாள் நான்காம் வகுப்பு மாணவி. அவள் வளர்த்த பூனை இரண்டு அழகிய குட்டிகளை ஈன்றது. அவள் அக்காள் கோமளம் எட்டாம் வகுப்பு மாணவி. அவள் ஒரு கிளியை அன்போடு வளர்த்துவந்தாள். அக்களி அவ்வீட்டில் இருந்த எல்லாரிடமும் அன்புடன் பழகியது. அக்கிளி தன் அன்பைப் பூனைக்குட்டிகள் மீதும் செலுத்தியது. அது பூனைபோலக் கத்தவும், சீறவும் கற்றுக்கொண்டது. அக்கிளி ஒருமுறை தன் குட்டிகளிடம் வந்தபோது தாய்ப் பூனை சீறியது. அக்கிளி தன் குட்டிகளை மூக்கால் கொத்தும் என்று அஞ்சியே பூனை அவ்வாறு சீறியது. ஆனால், கிளி தன் குட்டிகளிடம் அன்புடையது என்பதை அறிந்தபிறகு, தாய்ப்பூனை கிளியினிடம் நேசங்கொண்டது. தாய்ப்பூனை இல்லாத காலங்களில் கிளி பூனை குட்டிகளைத் தன் அலகால் தடவிக் கொடுத்தது. அவற்றின் அருகில் வருபவரை விரட்டும்; அவற்றைத் தன் இறகுகளில் அடக்கி வைத்திருக்கும்; அவை தம் பெட்டியிலிருந்து தவறுதலாக கீழே வீழின், தன் அலகால் தூக்கி அவற்றைப் பெட்டிக்குள் வைக்கும். நாளடைவில் பூனைக்குட்டிகள் வளர்ச்சி பெற்றன. ஒருநாள் ஒரு பூனைக்குட்டி அடுப்பின் அருகில் சென்றுவிட்டது. அதைக்கண்ட கிளி உடனே அங்குச் சென்றது. ஆனால் அதனை முன்போலத் தூக்க அதனால் முடியவில்லை. அதனால் அக்கிளி அக்குட்டியின் வாலைத் தன் அலகால் இறுகப் பற்றி இழுத்து வந்தது. கிளியின் அறிவை என்னென்பது! கேள்விகள் 1. கிளி குட்டிகளிடம் எவ்வாறு நடந்துகொண்டது? 2. தாய்ப்பூனை கிளியைக்கண்டு சீறியது ஏன்? 3. தாய்ப்பூனை இல்லாத காலங்களில், கிளி பூனைக் குட்டிகளை எப்படிக் காத்துவந்தது? 4. கிளி பூனைக்குட்டியை எவ்வாறு தீயினின்றும் காப்பாற்றியது? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 18. பொறுமையுள்ள விமானம் ஓட்டி ஓர் ஆங்கில வானூர்தி செலுத்துவோன் ஜெர்மனியர் படை இருந்த இடத்தைப் பார்த்து வருமாறு அனுப்பப் பட்டான். அவன் தன் வானூர்தியைச் செலுத்திக்கொண்டு பகைவர் இருந்த இடத்தை அடைந்தான். அவனைக் கண்டதும் ஜெர்மன் பீரங்கிகள் மேல் நோக்கிச் சுட்டன; குண்டுகள் சரமாரியாகப் பறந்தன; வானூர்தியின் இறகுகளைத் துளைத்தன; சில குண்டுகள் வானூர்தியை உராய்ந்துகொண்டு சென்றன. ஆயினும், அவன் மிக்க பொறுமையுடன் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றலானான். அவன் ஜெர்மன் வீரர் இருந்த இடத்தைக் குறித்துக்கொண்டான்; பீரங்கிகள் வைக்கப்பட்டு இருந்த திசையைக் குறித்துக் கொண்டான்; போர்ச்சாமான்கள் ஒளித்து வைத்திருந்த இடத்தையும் தெரிந்துகொண்டான். அவன் பிறகு தன் இருப்பிடம் நோக்கிப் பறந்தான். அவனது வானூர்தி முற்றும் அழிவடைந்துவிட்டது. ஆயினும், அவன் ஒருவாறு அதனை மெதுவாக ஓட்டிக் கொண்டு ஓர் இடத்தை அடைந்தான்; தான் குறித்தவற்றைத் தலைவர்களிடம் அளித்தான். தலைவர்கள் அவனது திறமையையும் பொறுமையையிம் பாராட்டிப் பரிசளித்தனர். இத்தகைய இடர் மிகுந்த வேலைகளைச் செய்வது எளிய காரிய மன்று. நாட்டுப்பற்றும் அஞ்சாத நெஞ்சமும், நிறைந்த பொறுமையும், பண்பட்ட ஊர்திப் பயிற்சியும் உடையவரே செய்தல் கூடும். அத்தகைய வீரர்களைப் பெற்றுள்ள நாடே போரில் வெற்றிபெறும். கேள்விகள் 1. ஆங்கில வானூர்தி செலுத்துவோன் எங்குப் பறந்து சென்றான்? 2. அவன் எவற்றைக் குறித்துக்கொண்டான்? 3. அவன் பொறுமையுடையவன் என்பது எதனால் தெரிகிறது? 4. வீரனுக்கு இருக்கவேண்டுவன யாவை? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 19. மிரண்ட குதிரைகள் சென்னை நகரம் மிகப் பெரியது. அதில் பல பெரிய தெருக்கள் உண்டு. அவற்றின் நடுவில் மின்வண்டிகள் இடையறாது ஓடிக்கொண்டிருக்கும். மோட்டார்கள், குதிரை வண்டிகள் முதலியன ஓடிக்கொண்டிருக்கும். ஒருநாள் ஒரு பெரியவர் தன் குடும்பத்தினருடன் சென்னை எழும்பூர்ப் புகைவண்டி நிலையத்தில் இறங்கினார்; இரண்டு குதிரைகள் பூட்டக்கெற்ற கோச்சு வண்டியை வாடகைக்கு அமர்த்தினார்; எல்லோரும் வண்டியில் ஏறிக்கொண்டனர்; வண்டி புறப்பட்டது. வண்டி ஒரு பாலத்தைவிட்டு இறங்கிச் செல்கையில், குதிரைகள் எதையோ கண்டு மிரண்டனபோலக் குதித்தன; திடீரென்று உண்டான அதிர்ச்சியால் வண்டிஓட்டி கீழே வீழ்த்தப்பட்டான். குதிரைகள், தம் விருப்பம் போல மிரண்டு ஓடின. அத்தெருக் கோடியில் ஒரு மின்வண்டி வேகமாக வந்துகொண்டு இருந்தது. குதிரைகளோ, காற்றுவேகத்தில் அப் பக்கமாக ஓடின; வண்டிக்குள் இருந்தவர் மிரண்டு கூக்குரல் இட்டனர். சிறிது நேரம் தாமதிப்பின், கோச்சு வண்டி மின்வண்டியில் முட்டிக்கொண்டு கேடுறும்போல இருந்தது. மக்கள் ஓரங்களில் நின்று வேடிக்கை பார்த்தனர். அவ்வமயத்தில் திடீரென ஒருவன் விரைவாக ஓடினான்; ஒரு குதிரைமீது பாய்ந்து ஏறினான்; வார்க் கயிற்றை இறுகப் பிடித்தான்; அதனை இழுத்துக் குதிரைகள் இரண்டையும் அடக்கினான். குதிரைகள் மெதுவாக ஓடி ஓர் இடத்தில் நின்றன. வண்டிக்குள் இருந்தவர் ஆறுதல் அடைந்து, அவ்வீரனை வாயார வாழ்த்தினர். கேள்விகள் 1. பெரியவர் எங்கு இறங்கினார்? எதனை அமர்த்திக் கொண்டார்? 2. குதிரைகள் மிரண்டு என்ன செய்தன? 3. வீரன் அவற்றை எப்படி அடக்கினான்? 4. அவன் அடக்காவிடில் என்ன நேர்ந்திருக்கும்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 20. சுயநலம் அற்ற சிறுவன் ஒரு பெரிய கப்பல் நடுக்கடலில் போய்க்கொண்டு இருந்தது. அது திடீரெனப் பாறை மீது மோதிப் படார் எனப் பிளப்புண்டு கடலுள் மூழ்கத் தொடங்கியது. கப்பலில் இருந்தோருள் சிலர் சிறிய படகுகளில் ஏறிக்கொண்டனர்; சிலர் மரப்பலகைகளை மிதக்கவிட்டு அவற்றில் ஏறிக்கொண்டனர். ஆனால் பறை அடிக்கும் சிறுவன் மட்டும் கப்பலைவிட்டு இறங்கவில்லை. அவன் தன் பறையுடன் இருந்த இடத்திலேயே இருந்தான். அவன் கடைசியாகத் தன் பறையுடன் நீரில் குதித்தான்; அதன் மீது உட்கார்ந்து தத்தளித்துக்கொண்டு இருந்தான். அவனுடன் பலரும் அவனைப்போலவே கடல் அலைகளில் துன்பப்பட்டனர். அவர்களுள் ஒரு சிறுவன் ஓர் உதவியும் இல்லாமல் பெருந் துன்பப்பட்டான். அவன் சிறிது நேரத்தில் மூழ்கி விடுவான்போலக் காணப்பட்டான். அவனைக் கண்ட பறையடிக்கும் சிறுவன் இரக்கம் கொண்டான்; தனக்கு உற்ற துணையாகத் தன் உயிரைக்காக்க இருந்த பறையை அப்பையனுக்குக் கொடுத்தான். சிறுவன் பறையின் உதவியால் தண்ணீரில் மிதந்தான். ஆனால், அவனுக்குப் பறையைக் கொடுத்த இளைஞன் என்ன ஆயினான? அவன் தன்னால் முடிந்தவரை நீந்திச்சென்றான்; இறுதியில் அந்தோ! கடலுக்கு இரையானான். அவன் தன் வரலாற்றைக் கூறாவிடினும், உயிர் பிழைத்தவர் அவனை மறக்கவில்லை. இதைப் படிக்கும் நீங்களும் மறக்கமாட்டீர்கள் அல்லவா? அவன் புகழ் ஓங்குக! கேள்விகள் 1. ஒரு கப்பல் நீருள் மூழ்கினால், அதில் இருந்தவர் என்ன செய்வர்? 2. பறை அடிக்கும் சிறுவன் செய்த அரிய செயல் யாது? 3. நீ அவனைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 4. நீ இக்கதையால் அறியும் படிப்பினை யாது? 21. வான வீரன் போரில் தரைப்படை, கப்பற்படை, வானப்படை என மூன்று உண்டு. வானூர்திகளில் இருந்து குண்டுகளை வீசுதல் வானப்போர் எனப்படும். இது மிகவும் இடர்மிகுந்தது. வானூர்தி கீழே இருந்து மேல்நோக்கியும், மேலிருந்து கீழ்நோக்கியும், இறங்கியும், ஏறியும் பலவாறு சுற்றியும் எதிரி வானூர்திகளோடு போர்புரியவேண்டும். இப்போருக்குப் பயிற்சி பெற்ற வானூர்தி செலுத்துவோரே தக்கவர்கள். ஆங்கிலேயருக்கும் ஜெர்மனியருக்கும் சண்டை நடந்தபொழுது, ஜெர்மன் வானூர்திகள் இங்கிலாந்தை நோக்கி வருவதுண்டு. அவற்றைக் கூர்ந்து நோக்கி அறிவிக்கப் பலர் அமர்த்தப்பட்டனர். அவருள் ஒருவன் இளைஞன்; அஞ்சாநெஞ்சினன்; நல்ல வானூர்திப் பயிற்சி பெற்றவன். அவன் ஒருநாள் ஒரு ஜெர்மன் வானூர்தியைக் கண்டான்; உடனே தனது ஒற்றைச் சிறகு வானூர்தியில் ஏறிக்கொண்டு அதை நோக்கிப் பறந்தான். உடனே ஜெர்மன் விமானம் புறங்காட்டிப் பறந்தது. ஆயினும், இளைஞன் அதனைவிடாமல் துரத்திச்சென்றான். அவன் ஜெர்மன் விமானத்திற்கு மேலே பறந்தான்; கீழே பறந்துசென்ற அதனை நோக்கி நான்குமுறை சுட்டான். குறி தவறி விட்டது. பிறகு அவன் சிறிது இறக்கமாகப் பறந்து ஒரு குண்டைப் போட்டான். அதுபட்டதும் ஜெர்மன் விமானம் தீப்பற்றிக் கொண்டது. இவ்வரிய செயலைச் செய்த இளைஞன் `விக்டோரியா கிராஸ்’ என்னும் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றான். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அவனை வாழ்த்தினார். இளைஞன் பெருமகிழ்ச்சி அடைந்தான். கேள்விகள் 1. மூவகைப் படைகள் எவை? 2. இளைஞன் செய்த வீரச்செயல் யாது? 3. அதற்கு அவன் அடைந்த பரிசு யாது? 4. ஐந்தாம் ஜார்ஜ் யாவர்? 5. நீ இக்கதையால் உணர்வது யாது? 22. கிராமத்துத் தபால்காரன் இங்கிலாந்தில் சோமர் செட் என்னும் நகரத்தைச் சேர்ந்த சிற்றூர் ஒன்றில் தபால்காரன் ஒருவன் இருந்தான். அவன் நாள்தோறும் தபால் கடிதங்களை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச்சென்று கொடுத்துவந்தான். ஆயினும், அவன் தன் தொழிலை வெறுப்புடனே செய்துவந்தான். அப்பொழுது இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் பெரிய போர் நடந்துவந்தது. தபால்காரன், தான் படையில் சேர்ந்து போரிட விரும்பினான்; `நான் என் நாட்டின் பொருட்டுப் போரிடாவிடில், நான் பிறந்துபயன் என்ன? என்று அடிக்கடி நினைந்து வருந்தினான். அவன் ஒருநாள் திடீரென்று படையிற் சென்று சேர்ந்துவிட்டான்; புதிய போர்வீரன் உடையை அணிந்து மிடுக்குடன் நடந்தான்; விரைவில் போருக்கு உரிய பயிற்சியைப் பெற்றான்; பகைவரை எதிர்க்கச் சென்ற படைவீரருடன் சென்றனான். அவன் போர்க்களத்தில் அஞ்சாது நின்று போர் புரிந்தான்; எதிரிகள் பொழிந்த குண்டுகள் அவனை நோக்கிச் சரமாரியாக வந்தன. அவன் இடத்தைவிட்டு நகர்ந்திலன்; அவன் தனக்கு இடப்பட்ட வேலையைத் திறம்படச் செய்துவந்தான். ஒருநாள் ஒரு குண்டு அவன் கன்னத்திற்பட்டு, அவனது கன்னத்தைக் கிழித்துவிட்டது. அவன் நேராக மருத்துவ நிலையத் துக்குச் சென்றான். அங்கு இருந்தவர் தன்னைக் கேவலமாக நினைப்பரோ என்று அஞ்சினான்; அதனால், தன் வாயில் சுருட்டைப் பற்றவைத்துக் கொண்டு நின்றான்; பிறகு வேண்டிய மருத்துவ உதவியைப் பெற்றான். தபால்காரனது நாட்டுப்பற்றைப் பார்த்தீர்களா? கேள்விகள் 1. தபால்காரன் ஏன் படையில் சேர்ந்தான்? 2. அவன் போர்க்களத்தில் எப்படி நடந்து கொண்டான்? 3. அவன் ஏன் மருத்துவநிலையத்துக்குச் சென்றான்? 4. அவன் அங்கு எவ்வாறு நடந்துகொண்டான்? 5. நீ அவனைப்பற்றி என்ன நினைக்கிறாய்? 6. நீ இக்கதையால் உணர்வது யாது? 23. தந்தி அடித்த பெண்மணி சென்ற ஐரோப்பியப் போரில் பிரான்சு தேசம் மிகுந்த சேதம் அடைந்தது. அப்பொழுது ஒருமுறை பெரிய நகரம் ஒன்று ஜெர்மனியரால் கொடுமையாகத் தாக்கப்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்தன. பெரிய கட்டிடங்கள் தடதட என்று இடிந்தன; மக்கள் பரபரப்புடன் நகரத்தைக் காலிசெய்தார்கள். போலீசார் எல்லா மக்களையும் அப்புறப்படுத்தினர். அந்த நகரத்தில் இருந்த மக்கள் அனைவரும் நகரத்தை விட்டு வெளியேறினர். ஆனால், அழகிய மங்கை ஒருத்தி மட்டும் தபால் நிலையத்தில் இருநதான். அவள், தலைவர்கள் கட்டளைப்படி அங்கு இருந்துகொண்டு, அரை மணிக்கு ஒருமுறை போரைப்பற்றித் தலைநகரத்துக்குத் தந்தி அடித்துவந்தாள். அப்பொழுது போலீஸார் வந்து, அவளைப் போய் விடுமாறு தூண்டினர். ஆனால், அவள் போக விரும்ப வில்லை; தன் தலைவர்கள் கட்டளை இன்றித்தான் அந்த இடத்தைவிட்டுப் போக முடியாது என்று கூறினாள். இறுதியில் போலீஸாரும் அந்நகரத்தை விட்டு அகன்றனர். ஆனால், அந்தஅழகி மட்டும் அவ்விடர்மிகுந்த நகரத்தைவிட்டுப் போகவில்லை. அவள் தன் இடத்தைவிட்டு நகராமல் அமைதியாகத் தன் கடமையைச் செய்துவந்தாள். அவள் அரைமணிக்கு ஒருமுறை அனுப்பி வந்தசெய்தியைத் தலைநகரத்தில் இருந்து குறித்துவந்த மனிதன் முடிவில் `குண்டு’ என்னும் சொல்லைக் குறித்துக்கொண்டான். அதுவே அவ்வழகி அனுப்பிய கடைசிச்சொல். அதற்குப் பிறகு வேறு சொற்கள் வரவில்லை. காரணம் யாது? அவ் வீரமகள் தான் இருந்த தபால் நிலையத்திலேயே குண்டுக்கு இரையானால். கேள்விகள் 1. அழகி என்னவேலை செய்துகொண்டு இருந்தாள்? 2. அவள் ஏன் நகரத்தைவிட்டுப் போக மறுத்தாள்? 3. நகரம் எப்படி ஏன் அழிந்தது? 4. முடிவில் அவள் என்ன ஆனால்? 5. நீ இப்பாடத்தால் அறிவது யாது? 24. புண்பட்ட வீரன் ஜெர்மனியருக்கும் ஆங்கிலேயருக்கும் போர் நடந்தது. அப்பொழுது ஓர் இடத்தில் நடந்த சண்டையில், ஆங்கில வீரன் ஒருவன் ஜெர்மன் படைகள் இருந்த இடத்தில் காயப்பட்டு வீழ்ந்து கிடந்தான். அவன் இருந்ததைப் பகைவர் அறியார். அவர்கள், `இன்று இரவு ஆங்கிலப்படையைப் பலமாகத் தாக்க வேண்டும்’ என்று பேசிக்கொண்டனர். அதைக்கேட்ட ஆங்கில வீரன், அச்செய்தியைத் தன் படைவீரர்க்குத் தெரிவித்து முன் எச்சரிக்கை செய்ய விரும்பினான். ஆனால், அப்படை வீரர் ஐந்து கல் தொலைவில் இருந்தனர். அவன் அந்நெடுந்தூரம் போகக்கூடிய நிலையில் இல்லை; ஆயினும், தன் நாட்டவரைக் காக்க வேண்டும் என்னும் எண்ணம் அவனை உறுத்தியது. அவன் இருளில் தள்ளாடி நடந்தான்; நடக்க முடியாதபோது ஊர்ந்து சென்றான்; ஆவேசம் கொண்டவனைப் போலச் சிறிது தொலை ஓடி விழுந்தான்; பின் எழுந்து தள்ளாடி நடந்தான்; இவ்வாறு துன்பப்பட்டுப் போகையில் ஜெர்மன் வீரர் சிலரைக் கண்டான். அவன் உடனே இறந்தவனைப்போலத் தரை மீது கிடந்தான். அந்தோ! அவ்வாங்கில வீரன் இவ்வாறு பல துன்பங்களை அடைந்து, முடிவில் தான் சேரவேண்டிய இடத்தை அடைந்தான். அப்பொழுது அவன் இறக்குந் தறுவாயில் இருந்தான். அவன் தான்வந்த செய்தியைக் கூறிக் கீழே விழுந்தான்; உடனே பிணம் ஆனான். ஆனால், அவன் முகம் அன்று மலர்ந்த தாமரை மலர்போல ஒளியுடன் விளங்கிற்று. ஏன்? கேள்விகள் 1 .ஜெர்மானியர் எண்ணம் யாது? 2. அதை ஆங்கில வீரன் எப்படி உணர்ந்தான்? 3. அவன் அதனைத் தன் வீரர்க்கு எப்படி உணர்த்தினான்? ஏன் உணர்த்தினான? 4. அவனது முடிவு யாது? 5. நீ இப்பாடத்தால்அறிவது யாது? 25. ஒரு கோப்பைச் சாராயம் சென்ற ஐரோப்பியப் பெரும் போரில், ஓரிடத்தில் நடந்த சண்டையில்பலர் காயம்பட்டு வீழ்ந்துகிடந்தனர். அவர்களுள் ஓர் ஆங்கிலப்படைத்தலைவரும் பிரஞ்சுவீரன் ஒருவனும் ஒருவருக்கு ஒருவர் பக்கத்தில் வீழ்ந்து கிடந்தனர். பிரெஞ்சுவீரன் தன்னிடம் இருந்த சாராயத்தில் ஒரு பகுதியை அந்த ஆங்கிலப் படைத்தலைவருக்குக் கொடுத்தான்; அத்துடன் சிறிதளவு உணவையும் உதவினான். அவர்கள் உணவு, உண்ணும்பொழுது முப்பது அடிக்கு அப்பால் ஒரு ஜெர்மன்வீரன் `சாராயம், சாராயம்’ என்று அலறினான். ஆங்கிலப் படைத்தலைவர் தாம் குடிக்க வைத்திருந்த கோப்பைச் சாராயத்தை அவ்வீரனுக்குக் கொடுக்க விரும்பினார். ஆனால், பாவம்! அவரால் நகரவும் முடியவில்லை. ஆயினும், அப்பெரியவர் தரையில் புரண்டு புரண்டு சென்று, அந்த ஜெர்மன் வீரரை அடைந்தார்; ஆயினும், தாம் பிடித்திருந்த கோப்பையை அவன் வாயருகில் கொண்டுசெல்ல அவரால் முடியவில்லை. மனங் கவற்றும் இக்காட்சியைக் கண்டு கொண்டு இருந்த பிரெஞ்சுவீரன் தரையில் புரண்டுகொண்டே அவர்களை அடைந்தான். பின்னர் இருவரும் சேர்ந்து முயன்று, அக்கோப்பைச் சாராயத்தை ஜெர்மன் வீரன் வாயில் ஊற்றினர். அவ்வீரன் அவர்கட்குத் தன் நன்றியறிதலைத் தெரிவித்தான். உதவி செய்த இருவருக்கும் பகைவன் உதவிபெற்ற ஜெர்மன்வீரன், அவ்வாறு இருந்ததும் அவ்விருவரும் தங்கள் துன்பத்தோடு உதவி செய்தது பாராட்டத்தக்கது அல்லவா? கேள்விகள் 1. உதவி செய்தவர் இருவர் யாவர்? 2. அவர்கள் யாருக்கு உதவி செய்தனர்? ஏன்? 3. அவர்கள் எப்படி உதவி செய்தனர்? 4. நீ இக்கதையால் அறிவது யாது? 26. பிசாசு! பிசாசு! சுந்தரியும் மங்களமும் ஐந்து வயதும் நான்கு வயதும் உடைய சிறுமியர். அவர்கள் சமையல் அறைக்குள் நுழைந்து, வள்ளிக் கிழங்கை வேகவைக்க முயன்றனர். அவர்கள் முயற்சிக்குச் சமையற்காரி இடைஞ்சலாக இருந்தாள். அதனால் அந்தப் பெண்கள் ஓர் இரவில் நீண்ட நேரம் விழித்துஇருந்தனர். இரவு பதினொரு மணி இருக்கும். சமையற்காரி சமையல் அறையைவிட்டுப் போய்ப் படுத்துக் கொண்டாள். அவள் போன பிறகு, இரண்டு பெண்களும் மெதுவாக அடிமெல் அடிவைத்து அறைக்குள் நுழைந்தனர்; அடுப்பைக் கிளறி நெருப்பைச் சேர்த்தனர்; தாங்கள் வைத்திருந்த வள்ளிக்கிழங்கை நெருப்பில் இட்டு வேகவைத்துக்கொண்டு இருந்தனர். அவர்களுள் சுந்தரி சமையல் அறையில் உள்ள சன்னல் பக்கம் திரும்பினாள். சன்னலுக்கு வெளியே ஏதோ வெள்ளை உருவம் ஒன்று நிற்பதைக் கண்டாள்; உடனே அவள் கால்களும் கைகளும் வெலவெலத்தன. அவள் `பிசாசு! பிசாசு!’ என அலறினாள்; உடனே இரண்டு பெண்களும் அந்த அறையின் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டனர். உடனே அந்த உருவம் `கலகல’ என்று நகைத்தது. அது, `குழந்தைகளே, இந்த நடு இரவில் நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள்? அம்மா பார்த்தால் அடிப்பார்களே’ என்றது. உடனே அப்பெண்கள், `ஆ! சமையற்காரி பேசுகிறாள்; அவளைப் பிசாசு என்று எண்ணி அஞ்சினோமே! என்று சொல்லிக்கொண்டே வெளியில் வந்தனர். ஆயினும், அவர்கள் அன்றுமுதல் இரவில் காலங்கடந்து சமையல் அறைக்குள் போவதில்லை. கேள்விகள் 1. இரண்டு பெண்கள் என்ன செய்ய விரும்பினர்? 2. அவர்கள் சமையல் அறைக்குள் என்ன செய்தனர்? 3. அவர்கள் ஏன் அஞ்சினர்? 4. அவர்கள் கண்டு அஞ்சிய உருவம் யாது? 5. அது அவர்களை நோக்கி என்ன சொன்னது? 6. பெண்கள் எவ்வாறு அச்சம் தெளிந்தனர்? 7. நீ இக்கதையால் அறிவது யாது? 27. வீரப் பெண்மணி ஒருமுறை ரஷிய வீரர்க்கும் bஜர்மன் வீரர்க்கும் போர் நடந்தது. ரஷிய வீரர் தொகையில் குறைந்தவர். bஜர்மன் வீரர் எண்ணிக் கையில் மிகுதியாக இருந்தனர். அதனால் ரஷிய வீரர் பின்வாங்கி ஓடினர். அங்ஙனம் ஓடப்புறப்பட்ட ரஷியருள் ஒருவன், போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த ரஷிய வீரன் ஒருவனைக் கண்டான்; அவனை எப்படியேனும் காப்பாற்ற எண்ணினான். அப்பொழுது ஜெர்மன் வீரர்கள் சோனைமழை போலக் குண்டுகளைப் பொழிந்துகொண்டு இருந்தனர். ஆயினும், அவ்வீரன் தன் உயிரைத் துரும்பாக மதித்து, குண்டுகட்கு இடையில் பதுங்கி ஓடி, வீழ்ந்து கிடந்த வீரனைத் தூக்கினான்; அவனை ஒரு குதிரைமீது தூக்கி உட்காரவைத்தான்; குதிரை விரைவாக ஓடியது. அடிபட்ட வீரன் கடவுள் அருளால், பாதுகாப்பு மிகுந்த இடத்தை அடைந்தான். ஆனால், அம்முயற்சியில் உதவிசெய்த வீரன், bஜர்மன் வீரர் குண்டுக்கு இரையாகி வீழ்ந்தான். அந்தோ! உதவிபுரியச் சென்ற அவன், உதவி செய்பவர் இல்லமால் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்தான். முடிவில் அவன் ஒரு மருத்துவ நிலையத்துக்குத் தூக்கிச் செல்லப்பட்டான். ஆ! என்ன வியப்பு! அவ்வீரன் ஒரு பெண்மணி என்பதை மருத்துவ நிலையத்தினர் கண்டனர்; அவள் ஆண்வேடம் பூண்டு, தன் நாட்டு வீரர்க்குச் செய்த உதவிகளை எண்ணி எண்ணி மகிழ்ந்தனர். அப்பெண்மணியின் நாட்டுப்பற்றை என்னெனப் புகழ்வது!. கேள்விகள் 1. ரஷியவீரர் ஏன் புறங்காட்டினர்? 2. ரஷியவீரன் யாருக்கு எப்படி உதவி செய்தான்? 3. அதனால் அவன் அடைந்த பயன் யாது? 4. அவ்வீரன் யார்? 5. நீ இக்கதையால் அறிவது யாது? 28. நாட்டுப் பற்றுடைய பெண் சாரா என்பவள் நாட்டுப் பற்று மிகுந்தவள். அவள் நாட்டைப் பகைவர் எதிர்த்த பொழுது, அந்நாட்டு ஆடவர் போர்க்களம் சென்றனர். சாராவின் தந்தையும் காதலனும் அவளிடம் விடைபெற்றுச் சென்றனர். சாரா அன்று இரவு அழுதுகொண்டே விழித்திருந்தாள். அவள், `ஆடவர் தம் தாய்நாட்டைக் காக்கப் போர் புரியும்பொழுது, நான் வீட்டில் இருப்பது முறையா? நான் பெண்பால் ஆயினும், எனது கடமையைச் செய்யவேண்டும் அல்லவா? என்று தனக்குள் எண்ணினாள்; போர்க்களம் நோக்கிப் புறப்பட்டாள். அவள் நெடுந்தொலை நடந்தாள்; நடை தள்ளாடியது; பையப் பைய நடந்தாள்; முடிவில் போர்க்களத்தை அடைந்தாள்; குற்றுயிரோடு விழுந்துகிடந்த வீரர் `தண்ணீர், தண்ணீர்’ என்று அலறினர். போர் செய்துகொண்டிருந்த வீரர் `உணவு, உணவு’ என்று கூவினர். சாரா அவர்கட்குத் தண்ணீரும் உணவும் கொண்டு சென்றாள்; இவ்வேலையில் இரவும் பகலும் ஈடுபட்டாள்; ஓய்வு நேரங்களில் வீரர்களை ஊக்கப்படுத்தும் நாட்டுப் பாடல்களைப் பாடினாள்; அடிபட்ட வீரர்கட்கு அன்புரைகள் கூறினாள். அவளது முகம் எப்பொழுதும் குற்றமற்ற சந்திரனைப் போல ஒளிர்ந்தது. அதைக்கண்ட வீரர், மழை கண்ட பயிர்போல மனம் மகிழ்ந்தனர். சாரா இரவும் பகலும் இடையறாமல் தொண்டு செய்தாள். ஆனால், அந்தோ! அவள் காலில் குண்டு அடிபட்டு வீழ்ந்தாள். இறுதியில் அவள் கால் வெட்டப்பட்டது. ஆனால், அவள் இறக்கவில்லை. தனக்கு நேர்ந்த இடையூற்றைப் பற்றிச் சாரா கவலைப்படவில்லை. அவள், `என் தாய்நாட்டுக்கு என்னால் முடிந்த தொண்டைச் செய்ததைப்பற்றி நான் மகிழ்கின்றேன்’ என்று முகமலர்ச்சியுடன் கூறினாள். கேள்விகள் 1. சாரா ஏன் போர்க்களம் சென்றாள்? 2. அங்கு அவள் செய்த தொண்டு யாது? 3. முடிவில் அவள் நிலைமை யாதாயிற்று? 4. நீ இக்கதையால் அறிவது யாது? 29. நாய் விலை - அரை அணா சில சோம்பேறிப் பிள்ளைகள் ஒரு நாயை பிடித்தார்கள். அந்த நாய் அழகின்றி யிருந்தது. அப்பிள்ளைகள் அதனை ஒரு குட்டையை நோக்கி இழுத்துச் சென்றனர். அதன் கழுத்தில் நீண்ட கயிறு கட்டப்பட்டு இருந்தது. பிள்ளைகள் அதைக் குட்டையில் தள்ளிவிட எண்ணின போலும்! அவ்வழியே பள்ளிக்கூடச் சிறுவர் இருவர் போய்க் கொண்டு இருந்தனர். அவர்கள் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; உயிர்களிடம் அன்பு காட்டவேண்டும் என்பதைப் படித்தவர்கள். ஆதலின், அவர்கள் அந் நாய்மீது இரக்கம் கொண்டனர். அம்மாணவர், சோம்பேறிப் பிள்ளைகளுக்கு அரையணாவைக் கொடுத்து நாயைப் பெற்று கொண்டனர். சோம்பேறிப் பிள்ளைகள் அரையணாவைப் பெற்றுப் பங்கிட்டுக் கொள்ள முடியாமல் சண்டையிட்டனர்; அச்சண்டையில் ஒரு காலணா கீழே இருந்த சாக்கடையில் விழுந்து மறைந்தது. மாணவர் நாயை வீட்டிற்குக் கொண்டு வந்தனர். அந்நாய் அம் மாணவரிடம் தன் நன்றியறிதலைக் காட்டிப் பல வேடிக்கைகள் செய்தது. அம் மாணவர் தகப்பனார் எதற்கும் சிரிக்காதவர். ஆனால், அன்று நாய் செய்த வேடிக்கைகளைக் கண்டு அவரும் நகைத்தார். அந்த நாயின் வால் பார்க்கத்தக்கது. அது தடியைப் போன்ற உறுதி வாய்ந்தது. அது தன் வாலினால்தான் கதவைத் தட்டும். அது தட்டும் ஓசை உரக்கக்கேட்கும். மாணவர் அந்நாயை அன்புடன் வளர்த்துவந்தனர். கேள்விகள் 1. சோம்பேறிப் பிள்ளைகள் என்ன செய்தனர்? 2. மாணவர் இருவர் யாவர்? 3. அவர்கள் எதைக் கொடுத்து நாயை வாங்கினர்? 4. நாய் வீட்டிற்கு வந்ததும் என்ன செய்தது? 5. மாணவர் தந்தையாரைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? 6. நீ இக்கதையால் அறிவது யாது?