நாட்டுக்கு நல்லவை முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : நாட்டுக்கு நல்லவை ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+200= 216 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 135/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம் எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந்துள்ளோம். எதிர் காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்கு வோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சி யடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமை யாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்த வர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கை களும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கி யிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத் திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற் களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத் தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத் தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர் கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத் தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப் படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கிய தோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப் பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியு மென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும் படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந் தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளி களிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதி யமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டு மென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடைய வருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் முகவுரை சுயநலம் என்னும் தீயபண்பு குடும்ப ஒற்றுமையையும் இன ஒற்றுமையையும் சமுதாய ஒற்றுமையையும் கெடுக்கவல்லது. இத்தீய பண்பினால் இன்று நாட்டில் பிச்சைக்காரர் பெருத்து விட்டனர்; எளியவர் தொகை பெருத்துவிட்டது. ஒவ்வொரு வருக்கும் ‘நாம் வாழ்ந்தால் போதும்; பிறரைப் பற்றி நமக்கு என்ன கவலை?’ என்ற மனநிலை ஏற்பட்டுவிட்டது. இத்தீய பண்பினால், செல்வராலும் நடுத்தர மக்களாலும் ஏழை மக்கள் புறக் கணிக்கப்படுகின்றனர். இங்ஙனம் புறக்கணிக்கப்பட்ட மக்கள் அறியாது – உயிர் வாழ வேண்டுமே என்ற கவலையால் – திருட முயல்கின்றனர். அவ்வேழை மக்களுள் வலியவர் திருட்டு, கொலை, கொள்ளை முதலிய தீய செயல்களில் இறங்குகின்றனர். இங்ஙனம் பிழைக்க வழியின்றிச் சமுதாயப் புறக்கணிப்பால் தீயன செய்வோர்க்கு அரசாங்கம், அவர்தம் செயல்களுக்குரிய அடிப்படைக் காரணத்தை உணர்ந்து ஆவன செய்யாமல், சிறைக் கூடங்களைப் பெருக்கிக்கொண்டே போகின்றது. சமுதாயத்தில் உள்ள இச் சீர்கேட்டைச் செல்வர்கள் மனம் வைத்தால் மிகுந்த அளவு நீக்கிவிடலாம் என்பதை அறிவுறுத்தவே இப்பெருங் கதை (நாவல் – புதினம்) எழுந்தது. இக் கதைத் தலைவியான மங்கையர்க்கரசி பெரிய அறநிலையத்தைத் தோற்று வித்துப் பிச்சைக்காரரைப் பலதுறைத் தொழிலாளராக மாற்றுகிறாள்; அநாதைப் பிள்ளைகளையும், ஏழை பிள்ளைகளையும் கல்வியாலும் கைத் தொழில்களாலும் வாழ்விக்கிறாள்; அநாதைப் பெண்களையும் கைம்பெண்களையும் மானத்தோடு உழைத்து வாழ வழி காட்டு கிறாள்; நாடே வியந்து பாராட்டத்தக்க முறையில் பண்ணையார் - பண்ணையாள் திட்டம் ஒன்றைக் கொணர்ந்து தன் பண்ணை யிலேயே செயற்படுத்துகிறாள்; இறுதியில், மக்களது வேண்டுகோள் மீது சட்டமன்ற உறுப்பினள் ஆகிறாள்; முதலமைச்சரது வேண்டு கோள்மீது பயிர்த்தொழில் அமைச்சர் பதவி ஏற்றுத் தன் புதிய திட்டத்தை அறவழியிலேயே நாடெங்கும் விளக்கிக் காட்டுகிறாள்; நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தாமே மனம் இசைந்து அத்திட்டத்தைச் செயற்படுத்த முனைந்த பிறகே அதனைச் சட்டமாக்குகிறாள். நாட்டுக்கு நலம் செய்த காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டது போலப் பொதுநலத் தொண்டு செய்த மங்கையர்க்கரசியும் சட்டமன்றத்திலேயே சுட்டுக் கொல்லப் படுகிறாள். ஆனால், அவள் நினைத்தது நிறைவேறிவிட்டது. பிச்சைக்காரர், பண்ணையாட்கள் முதலிய ஏழை மக்கள் அவளது அரிய தொண்டினால் நல்வாழ்வு பெற்றுவிட்டனர். நம் தமிழகம் நலம்பெற வேண்டுமாயின், முத்தப்பரது மன நிலை படைத்த ஆடவர் பலரும், மங்கையர்க்கரசியின் மனநிலை படைத்த பெண்மணிகள் பலரும் தேவை, தேவை, தேவை. பொதுநலத் தொண்டே தெய்வத் தொண்டு! மா. இராசமாணிக்கனார் உள்ளுறை 1. கடற்கரைப் பேச்சு 1 2. வெள்ளி ஊஞ்சல் 5 3. தந்தையும் மகளும் 10 4. ஆசிரியப் பயிற்சி 14 5. நக்கீரன் யார்? 18 6. பரந்த நோக்கம் 23 7. பெண் தெய்வம் வாழ்க! 27 8. கரும்பாக்கம் பண்ணையார் 32 9. பண்ணையார் மகன் 39 10. அழகாபுரி அடிகள் 41 11. பண்ணையார் கொடுமை 45 12. மரகதவல்லி அறநிலையம் 50 13. அறநிலைய வேலை தொடக்கம் 54 14. பாத்திமா 58 15. அறநிலைய வளர்ச்சி 64 16. விதியின் விளையாட்டா? 67 17. காதல் திருமணம் 71 18. தவறும் திருத்தமும் 80 19. முனியாண்டி 91 20. மேஸ்திரி தேனப்பன் 97 21. குளத்தூர்ப் பண்ணையார் 103 22. குளத்தூரில் காதலர் 108 23. தாதி சொக்கம்மாள் 113 24. சொக்கம்மாள் திருமணம் 118 25. பாண்டியன்-செந்தாமரை 123 26. குளத்தூரில் தொண்டு 130 27. செயற்கரிய செயல் 136 28. கைம்பெண் மறுமணம் 142 29. சைவத் திருவாளர் 148 30. எது இறைப்பற்று? 155 31. பொய்க் காதல் 163 32. நல்ல முடிவு 169 33. மங்கையும் மணிவண்ணனும் 176 34. அமைச்சர் பதவி 183 35. மங்கையர்க்குத் தனி அரசி 190 1. கடற்கரைப் பேச்சு மார்ச்சுத் திங்கள் முப்பத்தோராம் நாள் மாலை சென்னைக் கடற் கரையில் பொலிவு மிகுதியாகக் காணப்பட்டது. அன்றோடு மேரி அரசி கல்லூரியில் பி. ஏ. வகுப்புத் தேர்வு முடிந்துவிட்டது. மாணவிகள் எல்லோரும் கடற்கரையில் நிறைந்துவிட்டனர். ‘தேர்வுச் சனியன் ஒழிந்தது’ என்ற மகிழ்ச்சியால் அவர்தம் முகங்கள், அப்பொழுது மலர்ந்த தாமரை மலர்களை ஒத்திருந்தன; அவருள் சிலர் கைகோத்து நடக்கலாயினர்; சிலர் மணலில் கும்பல் கும்பலாக இருந்து பேசலாயினர்; ஒரு சிலர் காதலர் பாதையில் களிப்புடன் பேசிக்கொண்டு நடக்கலாயினர். மாணவிகள் இருவர் மட்டும் கடல் ஓரமாகச் சென்று தனியே அமர்ந்தனர். அவருள் ஒருத்தியின் பெயர் மங்கையர்க்கரசி; மற்றொருத்தியின் பெயர் தாமரைக்கண்ணி. தாமரைக்கண்ணி முன்னவளைப் பார்த்து, “மங்கை, உனது எதிர்காலத்திட்டம் என்ன?” என்று கண்களைச் சிமிட்டிக் கொண்டு கேட்டாள். மங்கையர்க்கரசி, “தாமரை, நான் மேல்படிப்புப் படிக்க விரும்பவில்லை” என்று கூறினாள். “உன் தந்தையார் உனக்கு இப்பொழுதே திருமணம் செய்விக்க விரும்புகிறாரா?” “என் தந்தையாருக்கு நான் ஒரே பெண் என்பது உனக்குத் தெரியுமல்லவா? எனக்கு மணம் செய்வித்து மணமகனை வீட்டோடு வைத்துக்கொள்ள என் தந்தையார் விரும்புகிறார்.” “அது நல்ல யோசனைதானே! சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போல உனக்கும் இனிப்பாகத்தானே இருக்கும்?” “தாமரை, எனக்கு இப்பொழுது திருமணம் தேவையில்லை; அதுபற்றிய நினைவே எனக்கு எழவில்லை. என் மனம் தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்வதையே நாடுகிறது.” “என்னடி, வேதாந்தம் பேசுகின்றாய்! என் தகப்பனார் ஏழைக் குடியானவர்; அவருக்கு ஐந்து காணி நிலம்தான் உண்டு. அவற்றில் இரண்டு காணிகளை விற்று என்னைப் படிக்கவைத்திருக்கிறார். நானும் உன்னைப்போல் வீட்டிற்கு ஒரே பெண்தான். நான் எல். டி. படித்து ஆசிரியையாக வர விரும்புகிறேன். என் தந்தையார் எனக்காக விற்ற நிலத்தை வாங்கித் தரும்வரை நான் திருமணம் செய்துகொள்வதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். உனக்கு அப்படிப்பட்ட துன்பம் இல்லை. அப்பாவின் விருப்பம்போலத் திருமணம் செய்துகொண்டு இன்பமாகக் காலங்கழிக்கலாமே! நீ தொண்டு செய்துதான் நாடு உருப்படப்போகிறதா?” “தாமரை, இப்படியே ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு வாளா இருந்தால், இச்சமுதாயம் என்றுதான் உருப்படும்? இவ்வளவு சுயநல வாழ்வு நமக்கு எதற்கு? சிறப்புத்தமிழ் எடுத்துக் கல்லூரியில் படித்த இந்த நான்கு ஆண்டுக்காலம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. தமிழ்ப் பாடங்கள் என் வாழ்க்கைப் பாதையை மாற்றி விட்டன. சங்ககால இன்ப வாழ்க்கை இந்த நாட்டில் மீண்டும் மலராதா என்று நான் அடிக்கடி எண்ணி எண்ணி ஏங்குவதுண்டு. அந்தப் பாதையில் என்னால் இயன்ற சிறு தொண்டினைச் செய்ய விரும்புகின்றேன்.” “மங்கை, மறைந்துபோன சங்ககாலத் தமிழர் வாழ்வு மீண்டும் வருமென்று கனவு காண்கிறாயா? போடி, அசடே!” “தாமரை, ஏன் மலராது? நாம் சிற்றூரில் தொடக்க நிலை வகுப்பில் வாசித்தபோது, நமக்குத் தமிழ் உணர்ச்சி இல்லை அல்லவா? இப்பொழுது நல்ல தமிழில் பேச வேண்டும்-நல்ல தமிழில் எழுத வேண்டும் என்ற உணர்ச்சி எவ்வாறு பரவி யிருக்கிறது? எனக்கு எழுத்துப் பயிற்சி தொடங்கிய நாளில் ஓர் இசையரங்கு நடைபெற்றது. அப்போது பாடிய ஒருத்தி எனக்குப் புரியாத தெலுங்குப் பாடல்களையே பாடினாள். ஆனால் இன்றோ, எங்கும் தமிழிசை முழக்கம் காது குளிரக் கேட்கிறோ மல்லவா? `ஸ்திரி’, `காலக்ஷேபம்’, `அக்கிராசனர்’, `பிரசங்கம்’ என்ற சொற்களுக்குப் பதிலாக இன்று `பெண் மணி’, `பொழுது போக்கு’, `தலைவர்’, `சொற்பொழிவு’ என்னும் தூய தமிழ்ச் சொற்கள் எவ்வாறு வழக்கிற்கு வந்தன? இவற்றை யெல்லாம் எண்ணிப்பார்.” “என்னமோ, மங்கை, இம்மலர்ச்சி நிலைத்து நிற்குமா என்பது எனக்கு ஐயமாகத்தான் இருக்கிறது.” “தாமரை, நீ ஒரு தமிழ்ப்பெண். நீ இப்படி ஐயப்படுவது அழகாகுமா? முன்பு தமிழர் திருமணத்தில் பிறமொழி மந்திரங்கள் முழங்கிக்கொண்டிருந்தன. இன்று அவை குறைந்துவிட்டன. தமிழர் தங்கள் மொழியிலேயே திருமணம் செய்துகொள்கின்றனர். அங்ஙனம் செய்வோர் தொகை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கோவிலிலோ தமிழில் அர்ச்சனை வேண்டும் என்னும் கிளர்ச்சி வலுத்து வருகிறது. சில கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்கிறார்கள். இவை யெல்லாம் தமிழர் வாழ்வின் மறுமலர்ச்சியைக் காட்டவில்லையh? நம்மைப் போன்ற படித்த பெண்கள் தமிழில்தான் திருமணம் செய்து கொள்வோம் என்று உறுதிகொள்ள வேண்டாவா? நம் பிள்ளை களுக்குத் தமிழ்ப் பெயர்களையே இடுவோம் என்று ஒவ்வொரு பெண்ணும் முடிவு செய்தால், எது நடவாது? ஒவ்வொருவருக்கும் தமிழ் உணர்ச்சி இருந்தால், செயல்களில் வளர்ச்சி தானே ஏற்படும். அதன் பயனாய்ச் சங்ககால வாழ்வு தானே மலரும்.” “மங்கை, நீ சொல்வது முற்றிலும் உண்மை, தமிழ்நாட்டில் ஏழை மக்கள் பெருத்துவிட்டனர். பிச்சைக்காரர் தொகை மிகுதியாய்விட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் பரவி வருகிறது. ஒவ்வொரு செல்வரும் தம்மால் இயலும் அளவு ஏழைகளைக் காக்க முற்படுவா ராயின், நாளடைவில் நமது தமிழ்ச் சமுதாயம் முன்னுக்கு வரும் என்பதில் ஐயமில்லை. நீ உன் யோசனைப்படி செய். உனக்கு உற்ற தோழியாக யானும் வந்து தொண்டு செய்வேன்.” மங்கை பெருமூச்சு விட்டு, “திருவருள் துணை செய்யட்டும்” என்று கூறினாள். 2. வெள்ளி ஊஞ்சல் திருப்போரூர், முருகன் கோவில் கொண்டுள்ள இடமாகும். ஒவ்வொரு திங்களும் கார்த்திகை நாளன்று அங்குப் பெருங் கூட்டம் கூடும். நூற்றுக்கணக்கான எளிய மக்கள் கோவிலைச் சுற்றிலும் இருந்து பிச்சை எடுப்பார்கள். திருப்போரூரில் பெருநிலக் கிழாராக வாழ்ந்தவர் முத்தப்பர் என்பவர். அவர் முன்னோர் பச்சையப்பர் காலம்முதல் செல்வவளம் நிறைந்தவர். நன்செய், புன்செய், தோட்டம் முதலியன பல லட்ச ரூபாய் பெறும்; சென்னையில் ஏறக் குறைய நூறு வீடுகள் அவருக்கு மாதம் பதினாயிரம் ரூபாய் வருமானத்தைக் கொடுத்துவந்தன. முத்தப்பர் பி. ஏ. படித்தவர்; அருள் உள்ளம் கொண்டவர்; இறைப் பற்று மிக்கவர்; கார்த்திகைதோறும் திருப்போரூர் வரும் பிச்சைக்காரருக்குக் கஞ்சி வார்ப்பதைக் கடமை யாகக் கொண்டிருந்தார். அவருடைய செல்வமகள்தான் மங்கையர்க் கரசி. அவளது பத்தாம் ஆண்டில் அவள் தாயார் மரகதவல்லி இவ்வுலக வாழ்வை நீத்தார். முத்தப்பர் மறுமணம் செய்துகொள்ள வில்லை; தம் மகளைச் செல்வமாக வளர்த்தார். பலர் வேண்டுகோள்மீது முத்தப்பர் முருகப்பெருமானுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவு செய்து வெள்ளி ஊஞ்சல் ஒன்று செய்தார். சித்திரை மாதக் கார்த்திகை அன்று இரவு அந்த வெள்ளி ஊஞ்சல் கோவிலுக்கு அளிக்கப்பட இருந்தது. அன்று கார்த்திகை நாள். வழக்கம்போல் தந்தையும் மகளும் காலையில் நீராடித் தங்கள் வழிபடு கடவுளான சிவபெருமானை வழிபட்டனர். முத்தப்பர் மிகவும் எளிமையான தோற்றம் உடையவர். அவர் வழக்கம்போல ஏழைகளுக்குக் கஞ்சி வார்க்கலானார். ஏறத்தாழ ஆயிரம் பிச்சைக்காரர்கள் அன்று அவர் வீட்டிற்குமுன் கூடிவிட்டனர். வேலைக்காரர்கள் பெண்களை ஒரு வரிசையாகவும் ஆண்களை ஒரு வரிசையாகவும் நிற்கவைத்தனர். முத்தப்பர் ஒவ்வொருவராக வரச்சொல்லிக் கஞ்சி வார்க்கத் தொடங்கினார். மங்கையர்க்கரசி திண்ணையின் ஒரு புறத்தில் அமர்ந்து ஒவ்வொரு பிச்சைக்காரனையும் உற்று நோக்கினாள்; ஆடவருள் பலர் நல்ல உடற்கட்டோடு இருந்ததைக் கவனித்தாள். அவ்வாறே பெண்களிலும் பலர் இருந்ததைப் பார்த்தாள். மற்றவர்களும் வேலை செய்து பிழைக்கக்கூடிய நிலையிலேயே உடல் அமையப் பெற்றிருந்தனர். அவள் அவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள்; அவருள் பலர்-ஆடவர், பெண்டிர்-வறுமையால் பொலிவிழந்து காணப்பட்டனர் என்பதை நன்கு உணர்ந்தாள். மாலைவiரயில் கஞ்சி வார்ப்பு நடந்து கொண்டேயிருந்தது. மங்கையர்க்கரசி சில இளைஞர்களையும் இளமை வாய்ந்த சில பெண்கiளயும் தன் வளமனையின் பின்பக்கம் வரச்சொன்னhள். அவர்கள் அங்கே வந்தார்கள். அவள் அவர்களைச் சேய்மையில் உட்காரவைத்தாள்; பிறகு ஒவ்வொருவராகத் தன் அருகில் வரவழைத்து விசாரிக்கலானாள். அவள் ஒருத்தியை அழைத்து, “நீ ஏன் இந்த நிலைக்கு வந்தாய்?” என்று அன்போடு கேட்டாள். அப் பெண்ணுக்குப் பதினெட்டு வயது. அவள் மங்கையின் கேள்வியைக் கேட்டவுடன் பொலபொலவென்று கண்ணீர் விட்டாள். “என் தாய் இரண்டாண்டுகளுக்கு முன் இறந்து விட்டாள். என் தந்தை மறுமணம் செய்துகொண்டார். அவளது கொடுமை பொறாமல் நான் ஓடிவந்து விட்டேன். எனக்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாது; தனியே இருக்கவும் அஞ்சுகிறேன். ஆதலால் இப்பெண்கள் கூட்டத்தோடு நான் ஊர் சுற்றிக் கொண்டு பிச்சை எடுக்கிறேன்.” என்று அழுது கொண்டே சொன்னாள். அவள் பதிலைக் கேட்ட மங்கை கண்ணீர் விட்டாள். மங்கை ஓர் இளைஞனை அருகில் அழைத்து விசாரித்தாள். அவன் முகத்தைச் சுளித்துக்கொண்டே, “என் தந்தை பெரிய குடிகாரர். அவர் கூலிவேலை செய்பவர்; கிடைத்த கூலிக்குக் கள்ளைக் குடித்து விட்டு வீட்டிற்கு வருவார். என் தாயும் நானும் பசியால் வாடி யிருப்போம். போதை வெறியில் வரும் தந்தை, என் தாயை வம்புக்கு இழுத்துக் கையில் கிடைத்ததைக் கொண்டு அடிப்பார். பத்தாண்டு களுக்கு முன் என் தhய் பசியாலும் நோயாலும் மனவேதனையாலும் மாண்டாள். எனக்கு அப்போது வயது எட்டு. என்னைக் கவனிக்க ஒருவரும் இல்லை. அப்போது எங்கள் ஊருக்கு வந்த பிச்சைக்காரர் சிலரோடு நான் கிளம்பிவிட்டேன். இப்பத்தாண்டுகளாக நான் பிச்சை எடுத்துப் பிழைத்து வருகிறேன்.” என்றான். பொறுப்பற்ற தந்தையால் ஒரு குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மங்கை நன்கு உணர்ந்து பெருமூச்சுவிட்டாள். மற்றொரு பெண்-பதினாலு வயது இருக்கும். அவள் மங்கையை நோக்கி, “என் தந்தை ஒழுக்கம் கெட்டவர். அவர் வீட்டிற்கே வருவ தில்லை; எனக்கும் என் தாய்க்கும் உதவி செய்வதேயில்லை. இரண்டாண்டுகள் பொறுத்துப் பார்த்த பிறகு என் தாய் தூக்கிட்டுக் கொண்டு இறந்தாள். ஊரார் என் தந்தையை இகழ்ந்து பேசினர். அதனால் ஆத்திரங்கொண்ட அவர் என்னை நையப்புடைத்து, நீயும் எங்கேனும் தொலைந்து போ’ என்று துரத்திவிட்டார். நான் பல ஊர்களில் அலைந்து திரிந்து இப்பெண்பாற் பிச்சைக்காரரோடு சேர்ந்து கொண்டேன்.” என்று கூறிக் கண்ணீர் விட்டாள். இத்தகைய துன்ப வரலாறுகளைக் கேட்டு மங்கை மனக்கவலை கொண்டாள். அவள் உள்ளத்தில் பலவகை எண்ண அலைகள் மோதத் தொடங்கின. ‘இவர்களைப்பற்றி அரசாங்கம் போதிய கவலை எடுத்துக் கொள்ளவில்லையே! இவர்களை நல்வழிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையல்லவா? வறுமையின் கொடுமையால் அல்லவா இவ்விளம் பெண்கள் இவ்வாறு பிச்சை எடுக்கிறார்கள்! இவர்தம் பெண்மையைக் காப்பவர் யார்! நாட்டில் இவ்வளவு பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்கு அவமானம் அல்லவா? இவர்களுக்குப் பல வேலைகள் தந்து இவர்களை நல்ல குடிமக்களாக மாற்ற வேண்டுவது பொறுப்புள்ள அரசாங்கத்தின் சிறப்புக் கடமையல்லவா?’ என்று எண்ணி எண்ணி வருந்தினாள். இரவு எட்டு மணிக்கு முத்தப்பர் வழங்கிய வெள்ளி ஊஞ்சலில் முருகப்பெருமான் திருமேனியும் வள்ளி, தெய்வயானை திருமேனிகளும் அலங்காரத்தோடு வைக்கப்பட்டன. மேள வாத்தியம் முழங்கியது. ஊஞ்சல் பாட்டுப் பாடப்பட்டது. பொதுமக்கள் எள்போட இடமின்றிக் கூடி இருந்தனர். எல்லோரும் முத்தப்பர் செய்த அறச்செயல்களைப் பாராட்டினர். ஆனால் ஒருத்தி மட்டும் பாராட்டவில்லை. அவள் முகம் மலரவுமில்லை. அந்த ஒருத்தி வேறு யாருமில்லை; நமது மங்கையர்க்கரசிதான். இரவு உணவு உண்ட பிறகு தந்தையார் தம் திருப்பணியைப் பற்றிப் பேசினார்; மகளது முகம் வாடியிருப்பதைக் கண்டு திடுக்கிட்டடார். “என்ன அம்மா, ஏன் உன் முகம் வாடியிருக்கிறது?” என்று பதற்றத்தோடு கேட்டார். “அப்பா, என்னை மன்னிக்கவேண்டும். கோவிலுக்கு ஊஞ்சலை வழங்கியதை—அதற்காக ஐயாயிரம் ரூபாய் செலவு செய்ததை—நான் வரவேற்கவில்லை.” தந்தையார் திடுக்கிட்டு, “என்ன! என்ன! இந்தத் திருப்பணியையா நீ வரவேற்கவில்லை?” மங்கை, “ஆம் அப்பா, இந்தத் திருப்பணியை நான் வரவேற்க வில்லை” என்று அமைதியாகக் கூறினாள். முத்தப்பர் தன் மகளை உற்று நோக்கினார். அவர் உதடுகள் துடித்தன; கண்கள் சிவந்தன. “அம்மா, நீ சொல்வது விளங்க வில்லையே?” என்று துடிதுடிப்போடு கேட்டார். “அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்குத் தெரியாத ஒன்றா யான் கூறப்போகிறேன்! எல்லாம் வல்ல முருகப்பெருமான் நம்மிடம் வெள்ளி ஊஞ்சலையா எதிர்பார்க்கிறார்? அவரால் படைக்கப் பெற்ற மக்களுள் பலர் சமுதாயக் கொடுமையால்,—பிற மக்களின் புறக்கணிப்பால்—சோற்றுக்கு வழியின்றிப் பிச்சை எடுக்கிறார்கள்.—பொய், களவு, கொலை முதலிய குற்றங்களைச் செய்கின்ற அவர்களை நல்வழிப்படுத்த இப்பணம் செலவு செய்யப்படுமானால், முருகப் பெருமானது மனம் உண்மையாகவே மகிழ்ச்சியடையும். நடமாடும் கோவில்களாகிய மக்களை நல்வழிப்படுத்துவதே சிவத்தொண்டு-உண்மையான கடவுள் தொண்டு-அதுவே ஆத்திகம் என்று நான் கூறுகின்றேன். உங்களுக்கு நான் அறிவுரை கூற வரவில்லை. எண்ணிப் பார்க்கும்படி பணிவோடு வேண்டுகிறேன்.” இவ்வாறு அவள் சொல்லும்போது அவள் விழிகளிலிருந்து நீர் முத்துக்கள் உதிர்ந்தன. நிமிர்ந்து உட்கார்ந்திருந்த தந்தையார் சாய்வு நாற்காலியின்மீது சாய்ந்து விட்டார். 3. தந்தையும் மகளும் மறுநாள் காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு முத்தப்பர் தம் மகளை அழைத்தார்; “மங்கை, நேற்று இரவு நீ பேசியதைப் பற்றி எண்ணிப் பார்த்தேன். நீ கூறுவதும் ஓரளவு உண்மையாகத்தான் இருக்கிறது. ஆயினும் கோவில் திருப்பணிகள் செய்த பெரியோர் களை எல்லாம் தவறு செய்தவர்கள் என்றா கருதுகிறாய்?” என்று வியப்போடு கேட்டார். மங்கை மலர்ந்த முகத்துடன், “அப்பா, காலத்துக்கும் சூழ்நிiலக்கும் ஏற்றவாறு திருப்பணிகள் செய்யத்தான் வேண்டும். கோவில் கட்டு வதையோ, இறைவன் திருவுருவை அதனில் வைத்து வழிபடுவதையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நாம் விரும்புவனவற்றை யெல்லாம் அவர் விரும்புவதாகக் கருதி, வெள்ளி ஊஞ்சல், வெள்ளித்தேர் செய்து பணத்தை முடக்கு வதைத்தான் என்னால் பொறுக்க முடியவில்லை. இந்த நாட்டில் இலட்சக்கணக்கான ஏழைகள் வேலையில்லாமல் பிச்சை எடுத்தும் கல்வி வசதி இல்லாமலும் துன்புறுகிறார்கள். அவர்கள் நம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றிக் கடுகளவும் எண்ணாமல் செல்வர்கள் இத்தகைய விளையாட்டுக்களைச் செய்வது மிகவும் கொடுமையானது என்பது எனது தாழ்ந்த கருத்து. மக்களுக்குச் செய்யும் தொண்டே இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும் என்பது அசைக்க முடியாத எனது நம்பிக்கை,” என்று அழுத்தம் திருத்தமாக அறைந்தாள். முத்தப்பர் ஆழ்ந்த யோசனையுடையவராய், “அம்மா, முன்வினைப் பயனால் சிலர் செல்வராகவும் பலர் எளியவராகவும் இருக்கிறார்கள் என்று நூல்கள் கூறுகின்றனவே! அது உண்மையானால் நாம் ஏழைகளுக்கு இரங்குவது தவறல்லவா? அவர் தம் வினைப்பயனை அனுபவிக்க விடுவதுதானே முறை?” என்று அன்போடு கேட்டார். “அப்பா, மனிதவாழ்வின் தொடக்கத்தில் வலியவன் ஒருவன் ஓர் ஊரிலுள்ள பெரும்பாலான நிலங்களைக் கவர்ந்துகொள்கிறான்; எளியவரைக் கொண்டு அந்நிலங்களை உழச் செய்கிறான். நாளடைவில் அவன் உயர்ந்தோனாகவும் மற்றவர் தாழ்ந்தோராகவும் ஆகிவிடுகின்றனர். பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இத்துன்ப நிலை தொடர்ந்து வருகிறது. மனிதவாழ்க்கையே வலியவரிடம் அகப்பட்டுள்ளது. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’. அந்த ஏழை மக்கள் என்றும் புரட்சி செய்யாமல் இருப்பதற்காகவே, `அவர்கள் புண்ணியம் செய்தனர்-இவர்கள் பாவம் செய்தனர்’ என்று சுயநலக் காரர்கள் நூல்கள் எழுதி வைத்தனர் என்பது அறிஞர் கருத்து. அப்பா, நமது ஊரிலுள்ள நிலங்களைக் கூட்டுப் பண்ணை யாக்கி இவ்வூர் மக்களை உழச்செய்து, மொத்த வருவாயில் அவர்களுக்குப் பங்களிப்பதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது அவர் தம் வறுமை தொலையும் அல்லவா? பாங்கியில் முடங்கிக் கிடக்கும் உங்களது பெருஞ் செல்வத்தைக் கொண்டு ஒரு நூற்பு ஆலை அமைத்தால், பல ஊர் மக்களுக்கும் தொழில் கிடைக்கும் அல்லவா? இவ்வாறு ஒவ்வோர் ஊரிலும் உள்ள செல்வர்கள் தாங்கள் சேர்த்து வைத்துள்ள செல்வத்தைத் தொழில் துறைகளில் போடுவாராகில், வேலையில்லாத் திண்டாட்டம் ஒழியும் அல்லவா? அப்பொழுது ‘இவர்கள் பாவம் செய்தவர்கள்’ என்னும் கூற்றே பொய்யாகிவிடும் அல்லவா? அப்பா, இவையெல்லாம் நீங்கள் அறியாதவை அல்ல, என்று தேன் ஒழுகப் பேசினாள். முத்தப்பர் தம் செல்வமகளின் அறிவை எண்ணி எண்ணி வியந்தார்; ஏழைகளை வாழ்விக்கவே பிறந்துள்ள தெய்வமகளாக அவளைக் கருதினார். அவரும் பி. ஏ. பட்டம் பெற்றவர் அல்லவா? ஏழைகள்பால் இரக்க உள்ளமும் உதவி செய்யும் பண்பும் உடைய அவர், தம் மகள் கூறியவை அனைத்தும் முறையானவையே என்பதை எண்ணி எண்ணி மகிழ்ந்தார். அவர் அன்போடு தம் மகளை நோக்கி, “மங்கை, நீ கூறியன வற்றை யெல்லாம் நான் ஒப்புக்கொள்கிறேன். இன்னும் சில நாட்களில் உன் தேர்வு முடிவு வெளிவரும். அதன் பின்பு நீ என்ன செய்ய விரும்புகிறாய்?” என்று கேட்டார். “அப்பா, என் விருப்பம்போல் என்னை வாழவிடுவீர்களா?” என்று கேட்டு, மங்கை அவர் முகத்தை உற்று நோக்கினாள். அதுவரையில் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டிருந்த முத்தப்பர், நிமிர்ந்து உட்கார்ந்தார்; தம் மகளது முகத்தை உற்று நோக்கினார். அவள் முகம் வாடியிருந்தது. அவளைத் தம் உயிராகக் கருதிவந்த முத்தப்பர் உள்ளம் துடித்தார். “அம்மா, என்ன கேள்வி கேட்கிறாய்? உன் விருப்பம்போல உன்னை வாழவிடுவதுதான் எனது முதற் கடமை. நான் உன்னால்தானே உயிர் வைத்திருக்கிறேன். பல லட்சம் பெறுமானம் உள்ள என் சொத்து முழுமைக்கும் உரியவள் நீதானே. உன் விருப்பம்போல் நீ எதையும் செய்ய நான் மகிழ்ச்சியோடு இசைவேன்.” என்று அன்பொழுகப் பேசினார். மங்கையின் முகம் மலர்ச்சியுற்றது. அவள் கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீரைப் பெருக்கின; அவள் உதடுகள் துடித்தன. “அப்பா, என்னிடம் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறதா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள். “ஆம். மகளே, உன்னிடம் எனக்கு நம்பிக்கை உண்டு; அசையாத நம்பிக்கை உண்டு. உன் தாய் மரகதவல்லியின் உயர்ந்த கருத்துக்கள் எல்லாம் உன் உள்ளத்தில் பதிந்திருக்கின்றன. நல்ல ஒழுக்கமும் அறநினைவும் உன்னிடம் நிறைந்திருக்கின்றன. தன்னலமற்ற தொண்டைச் செய்வதே உனது நோக்கம் என்பதைப் புரிந்து கொண்டேன்.” என்று முத்தப்பர் பெருமகிழ்ச்சியோடு பேசினார். மங்கை நாணத்தால் தலைகவிழ்ந்தாள். சிறிது நேரம் இருவரும் பேசவில்லை. பின்பு முத்தப்பர், “அம்மா, உன் எதிர்கால வாழ்வைப் பற்றி நீ என்ன திட்டம் தீட்டியிருக்கிறாய் என்பதை எனக்கு விளக்க மாகச் சொல். உனக்குத் தேவையான யோசனையையும் உதவியையும் யான் விருப்பத்தோடு செய்வேன்,” என்று மலர்ச்சியோடு கூறினார். மங்கையர்க்கரசி மட்டமற்ற மகிழ்ச்சி அடைந்தாள்; “அப்பா, முருகன் கோவில் கொண்டுள்ள இத் திருப்போரூரில் மக்களுக்குக் கல்வியறிவு இல்லை; போதுமான வேலையில்லை. சுற்றுப்புறக் கிராமங்களில் உள்ள மக்களின் நிலையும் இதுதான். எனவே, ஏழைப் பிள்ளைகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வைப்பது, அநாதைப்பிள்ளை களை-பிச்சை எடுக்கும் பிள்ளைகளை-ஒன்று கூட்டி அவர்களுக்கு உண்டி, உடை, உறையுள் இவற்றை வழங்கிப் படிப்பிப்பது, வேலை யில்லாதவர்களுக்கு நூல் நூற்றல், ஆடை நெய்தல் ஆகிய தொழில்களைக் கொடுத்துக் காப்பது, அநாதைப் பெண்களுக்குக் கல்வி, கைத்தொழில் முதலியவற்றை அளித்தல், இலவச மருத்துவமனை ஒன்று நடத்துவது-ஆகிய இப்பொதுநலப் பணிகளை முதலில் தொடங்கவேண்டும் என்பது என் அவா. இவற்றுக்கு உங்கள் ஆசியும் உதவியும் தேவை. என் திருமணத்தைப் பற்றித் தாங்கள் கவலைப் படவேண்டா. தேவைப்படும்பொழுது செய்துகொள்வேன்,” என்று கூறி முடித்தாள். முத்தப்பர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்; “மங்கை, உன் விருப்பப்படியே செய்வோம். இப்பணிகளுக்கு உரிய கட்டடங்கள் தேவை. அவை கட்டி முடிக்க ஓராண்டு ஆகலாம். இதற்கிடையில் நீ ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து அப்பயிற்சியை முடித்துவிடு.” என்று நல்ல முடிவைக் கூறினார். மங்கையர்க்கரசியின் மலர் விழிகள் அகன்றன. “அப்பா, என் வாழ்வு மலர்ந்தது. ஒவ்வொரு தந்தையும் உங்களைப்போல இருந்தால், பொது மக்கள் வாழ்வு செம்மைப்படுமே!” என்று மலர்ச்சியோடு கூறினாள். 4. ஆசிரியப் பயிற்சி சென்னை லேடி வெல்லிங்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் மங்கையர்க்கரசியும் அவள் தோழியான தாமரைக்கண்ணியும் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தனர். மங்கையர்க்கரசி தனது திட்டத்தையும், தன் தந்தையார் அத்திட்டத்திற்கு வாக்கு அளித்ததையும் எடுத்து விளக்கினாள். மங்கையர்க்கரசியின் கூட்டுறவால் தாமரைக் கண்ணியும் மங்கையின் மனநிலையைப் படிப்படியாகப் பெற்று வந்தாள். விடுமுறை நாட்களில் அவ்விருவரும் எல்லாக் கட்சிக் கூட்டங் களுக்கும் சென்று வந்தனர்; சிறந்த சொற்பொழி வாளரின் சொற் பொழிவுகளைக் கேட்டனர்; எக்கட்சிச் சார்புமின்றி, நாட்டு நலத்திற்கு உரியவற்றை ஆராய்ந்தனர்; இறுதியில் தாம் கொண்ட முடிவே சிறந்த முடிவு என்ற முடிவுக்கு வந்தனர். ஆசிரியப் பயிற்சியின்போது சில உயர்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்க அவர்களுக்கு வசதி இருந்தது. அப்பொழுது அவர்கள் ஏழை மாணவியர் பலரை நேரில் சந்தித்தனர்; அவர்கள் குடும்ப நிலையைப்பற்றி விசாரித்தனர். தாங்க முடியாத துன்பத்திற்கும் வறுமைக்கும் இடையே பெண்கள் பலர் கல்வி கற்பதை அறிந்து வருந்தினர்; பெண்கள் சிலர் பகல் உணவு இல்லாமல் பட்டினியோடு கல்வி பயிலுவதை அறிந்து துன்புற்றனர்; மாற்றுடை இல்லாத அவர் தம் ஏழ்மை நிலைமைக்கு வருந்தினர். ஒருநாள் மாலை மாநிலக் கல்லூரிக்கு எதிரே பெருங் கூட்டம் கூடியிருந்தது. நக்கீரன் எம். ஏ. என்னும் இளைஞன் ஒருவன், “சமுதாய இழிவு” என்னும் பொருள்பற்றிப் பேசுவதாகத் துண்டு அறிக்கை வழங்கப்பட்டது. அதனைப் படித்த மங்கையும் தாமரைக் கண்ணியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்; அன்று கூட்டத்திற்குச் சென்று நக்கீரன் பேசுவiதக் கேட்கவேண்டும் என்று விரும்பினர்; குறித்த நேரத்தில் மேடைக்கு அருகிலேயே சென்று அமர்ந்தனர். அங்கு ஏறத்தாழப் பத்தாயிரம் மக்கள் கூடி இருந்தனர். குறித்த நேரத்தில் தலைவராக அமர்ந்திருந்த முதியவர் ஒருவர் எழுந்து, “தமிழர் நல்வாழ்க்கைக் கழகத்தின் சார்பில் திருவாளர் நக்கீரன் எம். ஏ. அவர்களைச் `சமுதாய இழிவு’ என்னும் பொருள்பற்றிப் பேச அழைக்கின்றேன்.” என்று கூறி அமர்ந்தார். ஊடனே ஒலிபெருக்கிக்கு முன் ஓர் இளைஞன் எழுந்து நின்றான். அவன் இடுப்பில் நான்கு முழக் கதராடை காட்சி அளித்தது. தூய்மையான கதர்ச்சட்டை அவனது உடலை அழகு செய்தது. அவன் நல்ல உடற்கட்டுடன் விளங்கினான். அவனது முகம் அவன் பெரிய சிந்தனையாளன், கருதியதை முடிப்பவன், பொறுமையுடையவன் என்ற பண்புகளை உணர்த்தி நின்றது. அவனுக்கு வயது ஏறத்தாழ இருபத்தைந்து இருக்கலாம். அவன் பல கூட்டங்களில் பேசிப் பழக்கப்பட்டவன். சென்னை மாநிலக் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது பேச்சுப் போட்டிகளில் முதற் பரிசுகள் பெற்றவன். ஆயினும் மங்கை போன்ற பெண் களுக்கும் பொதுமக்களுக்கும் அவன் புதியவன். நக்கீரன் ஏறத்தாழ ஒருமணி நேரம் பேசினான். அவனது பேச்சு மிகவும் எளிய நடையில் அமைந்து இருந்தது. அவன் கூறிய விவரங்களை எல்லோரும் எளிதில் புரிந்து கொண்டனர். அவன் பேச்சின் சுருக்கம் பின்வருமாறு அமைந்திருந்தது: “நாட்டில் நலமுற வாழ்ந்திருந்த தமிழ் மக்கள் இன்று வாழ்க்கைத்தரத்தில் தாழ்ந்து கிடக்கின்றனர். இவர்களது வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமாயின், அரசாங்கமும் செல்வரும் தியாக உணர்ச்சியோடு முன்வரவேண்டும். எழுத்தறிவித்தல், பிழைப்புக்குரிய கைத்தொழிற் பயிற்சி அளித்தல் முதலிய நிறுவனங்களை அமைத்து, ஏழைகட்கும் அநாதைகட்கும் உதவி அளிக்கவேண்டும். நாட்டின் வறுமையே பிச்சைக்காரரைப் பெருக்கி வருகின்றது. சமுதாய மூடப் பழக்க வழக்கங்கள் கைம்பெண்களைப் பெருக்கி ஒழுக்கத்தைக் கெடுத்து வருகின்றன. வாழும் மக்களது பொறுப்பற்ற தன்மையும் ஆளவந்தாரின் பொறுப்பற்ற தன்மையும் எளியவரையும் அநாதைகளையும் திருடராகவும் கொலைகாரராகவும் பிச்சை எடுப்பவராகவும் மாற்றிவருகின்றன. இந்தச் சூழ்நிலை மாற வேண்டும். சீர்திருத்தம் பேசும் இளைஞர்கள் தத்தம் திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் பொருள் வேட்டை யாடுதலை விடுவதில்லை. பெண்களைப் பெற்ற எளியவரோ பொருள் கொடுக்க இயலாமல் துன்புறுகின்றனர். மணம் செய்யப் பெறாத பெண்கள் நாளடைவில் தவறான பாதையில் செல்கின்றனர். ஏழைப் பெண்களான அவர்களைப் பிறர் விரும்பி மணப்பதும் இல்லை; இளமை முறுக்கில் அவர்கள் நெறி தவறினால் இழித்துப் பேசவும் தவறுவதில்லை. இம்மக்களது அறிவு திருந்தவேண்டும்; திருத்தப்பட வேண்டும். எல்லோரும் சீர்திருத்தம் பேசுகின்றனர்; ஆனால் தம் அளவில் வரும்பொழுது நழுவுகின்றனர். சொல்லும் செயலும் ஒத்திருக்குமாயின், தமிழகத்தில் பஞ்சம் ஏது? பட்டினி ஏது? உள்ள உறுதியும் செயலாற்றும் திறனும் உடைய ஆண்களும் பெண்களும் ஒவ்வோர் ஊரிலும் இச் சமுதாய நலப் பணியைத் தொடங்கவேண்டும்.” நக்கீரனது பேச்சு தெளிவாகவும் உறுதியாகவும் மக்கள் உள்ளங் களில் பதிந்தது. அனைவரும் நெடுநேரம் கை தட்டி ஆரவாரம் செய்தனர். கூட்டம் கலைந்தபிறகு மங்கையர்க் கரசியும் தாமரைக் கண்ணியும் நக்கீரனைச் சந்தித்தனர்; “நாங்கள் இருவரும் எல். டி. வகுப்பில் படிக்கிறோம். நாங்கள் நீங்கள் பேசிய வற்றைப் பற்றியே பல மாதங்களாக நினைத்து வருகின்றோம். எங்கள் கருத்துக்களும் உங்கள் கருத்துக்களும் ஒத்திருக்கின்றன. உங்களை ஒருநாள் சந்தித்து ஓய்வாகப் பேச விரும்புகின்றோம். அடுத்த ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறுமணி அளவில் எங்கள் கல்லூரிக்கு எதிரில் உள்ள கடற்கரையில் உங்களைச் சந்திக்கிறோம்.” என்று மங்கை மலர்ந்த முகத்துடன் பேசினாள். நக்கீரனும் அவர்களைச் சந்திக்க மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டான். 5. நக்கீரன் யார்? ஞாயிற்றுக்கிழமை மாலை நக்கீரன் மங்கையையும் தாமரைக் ண்ணியையும் கடற்கரையில் சந்தித்தான். இருவரும் அவனை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். “நக்கீரரே, அன்று நீங்கள் பேசிய பேச்சு மிகவும் நன்றாய் இருந்தது. செய்திகளை மக்கள் உள்ளங்களில் பதிய வைக்கும் திறமை உங்களிடம் நன்கு அமைந்திருக்கிறது. எனது திட்டம் வெற்றிபெற உங்கள் உதவி தேவைப்படுகிறது.” என்று மங்கையர்க்கரசி மலர்ந்த முகத்துடன் கூறினாள். நக்கீரன் புன்முறுவலோடு, “உங்கள் வரலாற்றையும் திட்டத்தையும் கொடுங்கள். நான் உங்களுக்கு உதவி செய்ய முடியுமா என்பதை யோசித்துக் கூறுவேன்,” என்றான். மங்கை, “நான் திருப்போரூர்ப் பண்ணையார் முத்தப்பர் மகள். என் தாயார் பத்தாண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். என் தந்தையார் பல இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துடையவர். அப்பெரும் பொருளுக்கு உரியவள் நான் ஒருத்தியே. என் தந்தையார் என் விருப்பப்படி நடப்பவர். பிச்சைக்காரர்கள், அநாதைகள், மிக்க ஏழைகள் இவர்களை வாழ்விக்கவேண்டும்-இவர்கள் வாழ வழிசெய்ய வேண்டும் என்பது எனது அவா. இலவச உணவு, உடை, உறையுள் வழங்கி இப்பிள்ளைகளைப் படிப்பிக்க வேண்டும்; பிழைப்புக்குரிய கைத்தொழில்களைக் கற்பிக்கவேண்டும். ஏழைக் கைம் பெண்களையும் கணவரால் துறக்கப்பட்ட பெண்களையும் கல்வி, கைத்தொழில்களில் பயிற்சி பெறச் செய்யவேண்டும். சுற்றுப்புறச் சிற்றூர்களில் உள்ள மக்களுக்கு இந்த முற்போக்கு எண்ணங்கள் பரவும்படி பிரச்சாரம் செய்யவேண்டும். இலவச மருத்துவ மனையொன்றையும் அமைக்க வேண்டும். தொடக்க நிலையில் இதுதான் என் திட்டம்.” என்று அமைதியாகக் கூறினாள். “இத்திட்டம் நடைபெறப் பல கட்டடங்கள் வேண்டுமே! பெரும் பொருள் வங்கியில் வைத்திருக்க வேண்டுமே!” என்று கேட்டான் நக்கீரன். “ஆம், ஆம். அப்பா கட்டடங்களைக் கட்டி வருகிறார். என் தாயார் பெயரில் ஒரு கோடி ரூபாய் வங்கியில் இருக்கிறது. அதுவே இத்திட்டத்திற்கு உதவிப் பொருளாகும்.” என்று மங்கை கூறினாள். “ஒரு கோடி ரூபாயா! அதை வைத்துக் கொண்டு இத்திட்டத்தை யும் மேலும் பல திட்டங்களையும் மிகச் சிறந்த முறையில் நடத்தலாமே! பண உதவியும் உண்மைத் தொண்டரின் ஒத்துழைப்பும் இருந்தால், நாட்டில் நடவாத செயல் இல்லை.” என்றான் நக்கீரன். “நக்கீரரே, எனக்குப் பணத்தைப் பற்றிக் கவலையில்லை. இத் திட்டம் என் தாயார் பெயரில்-`மரகதவல்லி அறநிலையம்’ என்பதன் சார்பில் தொடங்கப்பெறும். என் தந்தையார் இவ்வறநிலையத்தில் தலைவராகவும் பொருளாளராகவும் இருப்பார். நானும் என் தோழியான தாமரைக்கண்ணியும் பெண்கள் பள்ளியையும் தொழிற் கூடங்களையும் கவனித்துக் கொள்வோம். பொறுப்புள்ள உங்களைப் போன்ற ஒருவர் ஆண்கள் பள்ளியையும் ஆண்கள் தொழிற் கூடங் களையும் கவனித்துக்கொள்ள வேண்டும். சுற்றுப்புற ஊர்களில் நல்வாழ்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். நீங்கள் விரும்பும் போதெல்லாம் வெளியூர்களுக்குச் சென்று, அன்று கடற்கரையில் பேசியதுபோல் சொற்பொழிவாற்றலாம். நாங்கள் தடை விதிக்க மாட்டோம். உங்கள் விருப்பம்போல் மாத ஊதியம் பெற்றுக் கொள்ளலாம்.” என்று கூறிக்கொண்டே அவன் முகத்தை உற்று நோக்கினாள். அவள் கூறியதைக் கேட்ட நக்கீரன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்; “மங்கை, உங்கள் திட்டம் மிகவும் அருமையானது. இத்திட்டம் வெற்றிபெற வேண்டுமாயின் தந்நலமற்ற தொண்டர்களே பணிபுரிய வேண்டும். நானும் உங்களோடு இருந்து பணிபுரிய மகிழ்ச்சியோடு இசைகின்றேன். ஆனால் என் வரலாற்றை நீங்கள் அறிந்துகொண்ட பின் என் தொண்டை நாடுவது நல்லது.” என்றான். அவன் குரல் தழுதழுத்தது. மங்கை வியப்போடு அவனைப் பார்த்து, “உங்கள் வரலாற்றில் என்ன அதிசயம் இருக்கிறது? கூறுங்கள். கேட்போம்,” என்றாள். நக்கீரன் தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக் கொண்டான்; “தஞ்சை மாவட்டத்தில் மருதூர் என்பது வளம் மிகுந்த சிற்றூர். அதில் பெருநிலக்கிழார் ஒருவர் இருந்தார். அவர் பெயர் இராமநாதம் பிள்ளை. அவருடைய பண்ணையில் ஐம்பது தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வேலை செய்கின்றன. அவற்றுள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் என் தாயார். அவரது கட்டழகைக் கண்டு பிள்ளை மதி மயங்கினார்; அவரை தம் காமக் கிழத்தியாக வைத்துக் கொண்டார். அந்த இருவருக்கும் பிறந்தவன் நான். நான் பிறந்தவுடன் என்னையும் என் தாயாரையும் சென்னையில் குடியேற்றி, அந்நிலக்கிழார் பாதுகாத்து வந்தார். அவருடைய பொருள் உதவியாற்றான் நான் எம்.ஏ. வரையில் கல்வி கற்றேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் காலமானார். என் தந்தையார் தாம் இறப்பதற்குமுன் வங்கியில் என் பெயரில் இருபதாயிரம் ரூபாய் போட்டுவைத்தார். நான் அத்தொகையைக் கொண்டே பிழைத்து வருகிறேன். அவர் எனக்கென்று வாங்கிக் கொடுத்த சிறுவீடு திருவல்லிக்கேணியில் இருக்கிறது. நான் அங்குத்தான் இருக்கிறேன்.” என்று கூறினான். அவன் வரலாறு கேட்ட மங்கையும் தாமரையும் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர். மங்கை, “நக்கீரரே, உங்கள் வரலாற்றில் எவ்விதக் குற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. நிலக்கிழார் உங்கள் தாயாரை உண்மையாகக் காதலித்தார். உண்மைக்காதல் இயற்கை வயப்பட்டது; சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. மனிதன் இயற்றியுள்ள கட்டுகளுக்கு அப்பாற்பட்டது. நிலக்கிழார் உங்கள் தாயாரை இறுதிவரையில் காப்பாற்றினார்-உங்களையும் படிப்பித்தார்-ஓரளவு செல்வத்தையும் உங்களுக்கு அளித்துள்ளார் என்பவைப் பாராட்டத்தக்கவை. உண்மையான காதல் வாழ்வில் பிறந்த நீங்கள் பேறு பெற்றவரே ஆவீர்கள். நாங்கள் இருவரும் உங்களை மனமார வாழ்த்துகிறோம்.” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினான். அவள் பேசப் பேச, நக்கீரன் விழிகளிலிருந்து மகிழ்ச்சி நீர் பொங்கியது. தன் வரலாற்றைக் கேட்டு அவள் அருவருப் படைவாளோ என்று முதலில் அவன் அஞ்சினான். ஆனால் அவள் மகிழ்ச்சி பொங்கப் பேசியதைக் கேட்டவுடன் அவன் மகிழ்ச்சியால் கண்ணீர் பெருக்கினான்; அளவிட முடியாத பெருந்தன்மை வாய்ந்த பெண் தெய்வம் என்று அவளை மதித்தான்; அத்தகைய பெருங்குணச் செல்வியோடு இருந்து பொதுநலத் தொண்டு செய்வது கிடைத்தற்கரிய பேறு என்று எண்ணி மகிழ்ந்தான். அப்போது தாமரைக்கண்ணி அங்கு நிலவியிருந்த அமைதியைக் கலைக்கத் தொடங்கி, “நக்கீரரே, எங்கள் திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதனால் நீங்கள் உங்கள் தாய்வழியினரை முன்னுக்குக் கொண்டுவரலாம்; வேளாளர்க்கும் பொதுநலப் பணியில் ஆர்வத்தை உண்டாக்கலாம். அவர்களை நல்வழிப் படுத்தி அவர்கள் உதவியைச் சமூகத்திற்குப் பயன்படுத்தலாம். உங்கள் தந்தை வழியினருக்கும் நீங்கள் இம்முறையில் தொண்டு செய்யலாம். எனவே, நீங்கள் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் - எங்கள் எல் டி. தேர்வுக்குப் பிறகு- எங்களோடு சேர்ந்து பணியாற்றலாம்” என்றாள். “நான் உங்களுடன் இருந்து தொண்டு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் மெய்யாகவே விரும்பினால், நான் வரத் தடையில்லை. ஆனால் நான் வருவதற்கு முன், மங்கை, உங்கள் தந்தையாரிடம் என் வரலாற்றைச் சொல்லி வையுங்கள். அவர் விருப்பம் அறிந்த பிறகே நான் அங்கு வருதல் நல்லது அல்லவா?” என்று நக்கீரன் கேட்டான். மங்கை, “நக்கீரரே, இந்த அரையாண்டு விடுமுறையில் – இன்னும் ஒரு வாரத்தில் – நான் ஊருக்குப் போகிறேன். அப்பொழுது உங்களைப் பற்றிய விவரத்தை என் அப்பாவிடம் கூறுவேன். தாங்கள் சனவரித் திங்கள் முதல் அப்பாவுக்கு உதவியாக இருந்து அறநிலைய வேலைகளைக் கவனிக்கலாம்.” என்று மகிழ்ச்சியோடு கூறினாள். நக்கீரன், “மங்கை, என் வரலாற்றைக் கேட்டதும் நீங்கள் என்னை வெறுத்து ஒதுக்குவீர்கள் என்று எண்ணினேன். என் எண்ணத்திற்கு மாறாக, உங்கள் பெருந்தன்மை காட்சி யளிக்கிறது. உங்களைப் போன்ற பரந்த சிந்தையும் விரிந்த நோக்கமும் உடையவர்களோடு தொண்டு செய்தல் கிடைத்தற் கரிய பேறாகும். உங்களைச் சந்தித்தது பெரும் பேறு என்றே நம்புகிறேன். என் முகவரிக்குக் கடிதம் எழுதினால், நீங்கள் விரும்பும்போது வந்து சந்திப்பேன்.” என்று கூறித் தன் முகவரியைக் குறித்துக் கொடுத்து, விடைபெற்று அகன்றான். “தாமரை, நக்கீரர் தம் வரலாற்றை மறைக்காது கூறியதே அவரது சிறந்த பண்பை விளக்குகிறதல்லவா?” என்று மங்கை கேட்டாள். “ஆம், நாம் பின்பு அவரைக் குறை கூறக்கூடாது என்பதற்காகவே அவர் தமது உண்மை வரலாற்றை ஒளியாது கூறிவிட்டார். அவ்வரலாற்றைக் கேட்ட பிறகு நான் அவரை மிகுதியாக மதிக்கிறேன். நமது நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரியவராக இருந்து அவர் நல்ல முறையில் பணியாற்றுவார் என்பது எனது நம்பிக்கை” என்று தாமரை பதிலளித்தாள். 6. பரந்த நோக்கம் மங்கை எல். டி. படிக்கச் சென்றது முதலே முத்தப்பர் அறப்பணி களுக்கு உரிய வேலைகளைச் செய்யத் தொடங்கினார்; தமக்குச் சொந்தமான ஐம்பது ஏக்கர் பரப்புள்ள நிலத்தில் உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் ஒன்றைக் கட்டி முடித்தார்; பிள்ளைக்பேறு மருத்துவமனை, சாதாரண மருத்துவமனை ஆகிய இரு கட்டங்களையும் கட்டு வித்தார். அநாதைப் பிள்ளை களுக்கு உரிய விடுதியும், கைம் பெண்கள்-நாதியற்ற பெண்கள் ஆகியோருக்கு உரிய விடுதியும், நூல் நூற்றல்-நெசவு நெய்தல் இவற்றிற்கு உரிய தொழிற் கூடங்களும் கட்டப்பட்டுவந்தன. மங்கை அரையாண்டு விடுமுறையில் ஊர் சென்றவள்-தன் தந்தையார் கட்டுவித்த கட்டடங்களையெல்லாம் பார்வையிட்டார்; “அப்பா, கட்டட வேலை விரைந்து நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் இவை முடிவு பெற்றுவிட்டால், அடுத்த ஆண்டு முதலே எல்லா அறநிலையங்களையும் தொடங்கி விடலாம்,” என்று மகிழ்ச்சியோடு கூறினாள். “அம்மா, ஆட்கள் இரவு பகலாக வேலை செய்கின்றனர். இதுவரையில் உண்டு உறங்கிக்கொண்டிருந்த எனக்கு இப்பொழுது பொழுதுபோவதே தெரியவில்லை. நாம் என்ன நோக்கம் கொண்டு இவற்றைக் கட்டி வருகிறோம் என்பது இந்த வட்டத்தில் பரவிவிட்டது. பலர் என்னைப் பார்த்துப் பாராட்டிச் சென்றனர். அயலூர்ச் செல்வர் சிலர் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று கூறிப் பரிகசித்தனராம். சிலர் என்னிடமே அவ்வாறு கேட்டனர்” என்று சிரித்துக்கொண்டே முத்தப்பர் கூறினார். “சுயநலக்காரர்களுக்கு நாம் செய்வது பைத்தியக்காரர் செயலாகத் தானே காணப்படும்! தன் தேவைக்கு மேற்பட்ட செல்வத்தைப் பிறருக்கு உதவும் வழிகளில் செலவிடாமல், தானே வைத்திருத்தல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என்பதை உணராத செல்வன், ஊர் நடுவில் பழுத்த நச்சுமரம் போன்றவன். அத்தகையவர் நம்மைப் பைத்தியக்காரர் என்றே கூறுவர். அப்பா, ஏழைமக்கள் என்ன கூறுகிறார்கள் என்பதையே நாம் கவனிக்க வேண்டும். ஏழைமக்களே நம் உற்றார் உறவினர்” என்று மங்கை கூறினாள். முத்தப்பர் முகம் மலர்ந்தது. அவர், “ஆம், ஏழைமக்களே நம் உற்றார் உறவினர். அவர்கள் வாழ்வே நம் வாழ்வு. அவர்கள் தாழ்வே நமது சமுதாயத்தின் தாழ்வு. இந்த உண்மையை ஒவ்வொரு செல்வரும் உணர்ந்து ஏழைகட்கு உதவப் புறப்படும் நாளே நமது சமுதாய வரலாற்றில் நன்னாள்.” என்றார். அவர் உதடுகள் உணர்ச்சி யால் துடித்தன. தந்தையாரின் சொற்களைக் கேட்ட மங்கை முகம் மலர்ந்தாள். அன்று மாலை தந்தையும் மகளும் கட்டட வேலைகளைப் பார்த்துக் கொண்டு ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர். அப்பொழுது மங்கை முத்தப்பரைப் பார்த்து, நக்கீரன் வரலாற்றை உருக்கமாக எடுத்துக் கூறினாள்; அவனது பேச்சாற்றைலையும் தொண்டு மனப்பான்மையையும் நன்கு விளக்கினாள்; கடற்கரையில் அவன் பேசிய பேச்சின் சுருக்கத்தைக் கூறினாள். அவனைத் தன்னோடு அறப்பணிக்கு வைத்துக் கொள்ளலாமா என்பதை மட்டும் கேட்கவில்லை. அவள் இவ்வளவும் கூறித் தந்தையை உற்றுப் பார்த்தாள். முத்தப்பர், “அம்மா, அவனே தன் வரலாற்றை உன்னிடம் கூறினானா?” என்று கேட்டார். “ஆம் அப்பா, நானும் தாமரைக்கண்ணியும் அவரைச் சந்தித்த போது அவரே தம் வரலாற்றைக் கூறினார். அவர் தொண்டு செய்வதில் மிக்க ஆர்வமுடையவர். சிறந்த ஒழுக்கமுடையவர்” என்று மங்கை கூறினாள். “அவனே தன் வரலாற்றைக் கூறினான் என்பது, அவன் உண்மை யுள்ளவன் என்பதை உணர்த்துகிறது. அவன் பிறப்பைத் தெரிந்த பழமை விரும்பிகள் அவனை ஒருவேளை இழித்துக் கூறலாம். ஆனால் அவன் பிறப்புக்கு அவன் குற்றவாளி ஆகான். எம்.ஏ. பட்டம் பெற்ற அவன்-நல்லொழுக்கமுள்ள அவன்-சிறந்த பேச்சாளனானன் அவன்-நமது தொண்டிற்கு மிகவும் பொருத்த மானவன். நம்மிடம் வந்து வேலை பார்க்கும்படி அவனை நீ அழைப்பதுதானே?” “அப்பா, உங்கள் பேச்சைக் கேட்டதும் என்மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது. மனித உருவில் வந்துள்ள தெய்வம் என்று உங்களைச் சொல்லலாம். அவர் வரலாற்றைக் கேட்டதும் நீங்கள் வெறுப்படைவீர்களோ என்று அஞ்சினேன். உங்கள் பரந்த நோக்கம் இன்றுதான் நான் காண முடிந்தது. நான் உங்கள் சார்பில் அவரை அழைப்பேன். அவர் இங்கு வந்தால் ஆண்கள் பகுதியைக் கவனித்துக்கொள்வார்; நமது திட்டத்தை வெற்றிபெற நடத்தப் பேருதவியாக இருப்பார்.” என்று மங்கை கூறினாள். முத்தப்பர் ஏதோ நினைத்துக் கொண்டவராய் மங்கையைப் பார்த்து, “அம்மா, உன் அத்தை மகன் கண்ணன்-குளத்தூர்ப் பண்ணையார் போனவாரம் இங்கு வந்திருந்தான்; தன் தாயாரின் கடிதம் ஒன்றைக் கொண்டு வந்தான். அவனுக்கு உன்னை மணம் செய்விக்க வேண்டும் என்று உன் அத்தை அக்கடிதத்தில் எழுதியிருந்தாள்” என்றார். மங்கையின் முகம் கறுத்தது. அவள் தந்தையாரைப் பார்த்து, “அத்தானின் தீய ஒழுக்கங்கள் சென்னை வரையில் பேசப்படுகின்றன. அவர் எனக்கு உறவு என்று சொல்ல நான் வெட்கப்படுவதுண்டு. அக்கொடியவரிடம் என்ன கூறினீர்கள்?” என்று துடிப்போடு கேட்டாள். முத்தப்பர் நகைத்துக்கொண்டே, “நான் என்ன சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறாய்? சென்ற கோடை விடுமுறையில் நீ என்னிடம் சொன்னதைத்தான் திருப்பிச் சொன்னேன் - நீ இப்போது மணம் செய்து கொள்ள விரும்பவில்லை; தேவை ஏற்படும்போது செய்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறாய் என்பதைத்தான் நான் அவனிடம் உறுதியாகக் கூறினேன். அவன் முணுமுணுத்துக் கொண்டே சென்றுவிட்டான்,” என்றார். “அவர் இந்தக் கட்டடங்களைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையா?” “ஆம், அதைக் கூற மறந்துவிட்டேன். நான் நம் திட்டத்தைக் கூறியவுடன், அவன் கலகலவென்று நகைத்தான்; `மாமா, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? இருக்கின்ற வரையில் உலக இன்பங்களை அநுபவித்துப் பெரு வாழ்வு வாழ்வதை விடுத்துத் துன்பச் சேற்றில் காலை வைக்கப் போகிறீர்கள். உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் பைத்தியம்தான் பிடித்திருக்கிறது’ என்று கூறினான். பிறகு முகவாட்டத்துடன் சென்றான்” என்றார் முத்தப்பர். “அப்பா, அவர் என்னை மணந்துகொண்டு உங்கள் சொத்து முழுவதையும் சூறையாடவேண்டும் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டிருந்தார். ஒழுக்கங்கெட்ட அவருக்கு எவள் மனைவியாக வாய்க்கப் போகிறாளோ! அப்பா, அவர்கள் உறவே நமக்கு வேண்டா! தீயாரைக் காண்பதுவும் தீது” என்று மங்கை உணர்ச்சியோடு கூறினாள். 7. பெண் தெய்வம் வாழ்க! மங்கை தன் தந்தையாருடன் நக்கீரனைப் பற்றிப் பேசிய மறுநாளே அவனைத் திருப்போரூருக்கு வரும்படி கடிதம் எழுதினாள்; அவ்வாறே தாமரைக்கண்ணியையும் வரும்படி கடிதம் வரைந்தாள். இருவரும் இரண்டு நாட்களில் வந்து சேர்ந்தனர். முத்தப்பர் நக்கீரனை நேரில் கண்டும் அவனோடு பேசியும் அகமகிழ்ந்தார். அவனது சிவந்த மேனியும் நல்ல உடற்கட்டும் எடுப்பான தோற்றமும் தெளிவான பேச்சும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன. திருப்போரூரில் ஒரு பொதுக் கூட்டத்தைக் கூட்டி அவனைப் பேசச் செய்தார். முத்தப்பரின் தொண்டு நோக்கத்தை அறிந்த சுற்றுப்புறக் கிராம மக்களும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் மக்கள் கூடியிருந்தனர். கூட்டத்திற்கு முத்தப்பர் தலைமை தாங்கினார். முற்போக்குக் கருத்துள்ள இளைஞர் பலர் முன்வரிசையில் உட்கார்ந்திருந்தனர். நக்கீரன் ஒரு மணி நேரம் மிக எளிய நடையில் தெளிவாகவும் அழகாகவும் உருக்கமாகவும் பேசினான். அவன் பேச்சுச் சுருக்கத்தைக் கீழே காண்க: “பெருமக்களே! நம் முன்னோர் வளமாக வாழ்ந்தனர்; கல்வி - கேள்வி - ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர்; உள்நாட்டு வாணிகத்திலும் வெளிநாட்டு வாணிகத்திலும் பொருளீட்டினர்; இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகப் புகழ் பெற்று வாழ்ந்தனர். இவ்வாறு வாழ்ந்த தமிழ் மக்களின் பரம்பரையில் வந்த நாம், இன்று கல்வியிலும் தொழில் துறையிலும் மிகவும் தாழ்ந்து இருக்கிறோம். இதற்கு உரிய காரணங்கள் யாவை? அவற்றை ஆராய்ந்தால்தான் நம்மை நாம் முன்னேற்றிக்கொள்ள முடியும். நம் முன்னோர் வளமாக வாழ்ந்த சங்க காலத்தில் தமிழகத்தைத் தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள். அவர்கள் குடிமக்களுக்கு வேண்டிய எல்லா நலன்களையும் செய்தார்கள். அக்காலத்தில் இன்றுள்ள சாதிப்பிரிவுகள் இல்லை. எல்லோரும் ஓர் இனமாக வாழ்ந்தனர். காதல் மணம் வழக்கில் இருந்தது. ஆண்களும் பெண்களும் கல்வி கற்றிருந்தனர். பெண்கள் அரசியலிலும் சமுதாயத் தொண்டிலும் ஈடுபட்டிருந்தனர். அக்காலத் தமிழர் கடவுள் நம்பிக்கை உடையவர். ஆனால் பிற்கால மக்களைப்போலச் சமய வெறியில் பணத்தைப் பாழாக்கவில்லை. பிற்காலத்தில் அயலார் இந்த நாட்டை ஆண்டனர். தொழில்பற்றி இருந்த பிரிவுகள் பிறவிபற்றிய சாதிகளாக மாறிவிட்டன. வடக்கே இருந்து வந்த வடமொழியும் அதனைப் போற்றி வந்த மக்களும் இந்நாட்டில் செல்வாக்குப் பெற்றனர். சமயவெறி தலைதூக்கியது. சமயப் பூசல்கள் மிகுந்தன. பலர் கழுவேற்றப்பட்டனர். கோவில் கட்டுவதும், கோவிலுக்கு நிலங்கள் எழுதிவைப்பதும் பிற அறப்பணிகள் செய்வதுமே சிறப்பாகக் கருதப்பட்டன. இவற்றைச் செய்பவர் மோட்சத்தை அடைவர் என்ற நம்பிக்கை பரப்பப்பட்டது. இதனால் செல்வர் ஏழைகளுக்கு உதவி செய்ய மறந்தனர். ஏழைகள் பெருத்துவிட்டனர். இன உணர்வு அற்றுவிட்டது. எங்கும் பசியும் வறுமையும் தாண்டவமாடின. இவற்றின் பயனாகக் கொலை, கொள்ளை, திருடு முதலியன பரவலாயின. சமுதாயத்தில் இரண்டொரு சாதியினரே கல்வி கற்றனர். மற்றவர் கற்க வசதியில்லை. நிலக்கிழார்களும் சமயவாதிகளும் வைத்தது சட்டமாயிருந்தது. ஏழை மக்களை என்றும் அடக்கி வைக்கத் தலையெழுத்து, புண்ணியம், பாபம் என்ற சொற்கள் பயன் படுத்தப்பட்டன. சமுதாயம் நாளடைவில் ஒற்றுமையிழந்து சின்னாபின்னப்பட்டது. இந்த இழி நிலையில் இன்னவர் கோவிலுள் நுழையலாகாது என்ற கட்டுப்பாடு ஏற்பட்டது. இன்னவர் இன்ன இன்ன தெருக்கள் வழியாக நடக்கக்கூடாது என்ற விதியும் உண்டானது. அம்மம்மா! வெள்ளையர் வருவதற்கு முன் நமது சமுதாயம் இருந்த நிலை மிகவும் இழிவானது. பல சாதி மக்கள் ஏறத்தாழ விலங்குகள் போலவே நடத்தப்பட்டனர் என்று கூறுதல் தவறாகாது. வெள்ளையர் ஆட்சி ஏற்பட்ட பின்னரே - ஆங்கிலக் கல்வி கற்கத் தொடங்கிய பின்னரே –- நம்மவர் பல உண்மைகளை உணரலாயினர். இந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பிறவி பற்றிய சாதிகள் இல்லை – கோவிலுள் எல்லோரும் சென்று வழிபடலாம் - மனிதனுக்கு மனிதன் பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை. இந்த உண்மைகள் நம்மவர் அகக் கண்களைத் திறந்தன. அதனால் அவர்கள் அதுவரையில் தம்மை அழித்து வந்த உயர்சாதியாரை எதிர்க்கத் தொடங்கினர். தாழ்த்தப்பட்ட மக்களிலும் சிலர் கல்வி கற்று உயர் நிலைக்கு வந்தனர். இவர் அனைவரின் உழைப்பால் இன்று சாதி வேறுபாடுகள் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன. ‘நாம் தமிழர்’ என்ற இன உணர்ச்சி பரவி வருகின்றது. `நாம்’ என்ற உணர்ச்சியை ஊட்டி வளர்க்க வேண்டும். தமிழருள் சாதி வேறுபாடு இருத்தல் ஆகாது; இருந்தால் நமது சமுதாயம் அழிந்துவிடும். இதை உறுதியாகக் கொண்டு ஒவ்வொருவரும் தம்மால் ஆன உதவியைப் பிறர்க்குச் செய்யவேண்டும். படித்த தமிழர் தம் ஓய்வு நேரங்களில் படியாத தமிழர்க்குக் கல்வி கற்பிக்க வேண்டும். பணம் படைத்த தமிழர் பலவகைத் தொழிற் கூடங்களை அமைத்து ஏழைத் தமிழர் பிழைப்புக்கு வழி செய்ய வேண்டும். தமிழர் வாழ்வில் உண்மை நாட்டம் கொண்ட மக்களைத்தாம் தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்து ஊராட்சி மன்றம், நகராட்சி மன்றம், நாட்டாட்சி மன்றம் ஆகியவற்றுக்கு அனுப்ப வேண்டும். பணம் பெற்றுக்கொண்டோ—சிபாரிசு கேட்டோ நமது அரிய வாக்கைப் பொறுப்பற்ற மக்களுக்கு வழங்கக் கூடாது. அங்ஙனம் வழங்குவதால் ஆட்சி முறை கெடுகின்றது. ஆட்சி முறை கெடுவதால் நாட்டில் ஒரு சிலர்தாம் வாழ முடியும்; பலர் வாழ முடியாது. என் அருமைத் தமிழ்ப் பெரியோர்களே! நீங்கள் இந்த உண்மைகளை மனத்தில் வைத்துக்கொண்டு, நேற்றுவரையில் இருந்த சாதி வேறுபாடுகளை மறந்துவிடுங்கள்; நம்மைப் போல் பிறரையும் எண்ணுங்கள்; அப்போதுதான் மன ஒற்றுமை ஏற்படும். கிராமத்தார் ஒன்று பட்டால் தம்முள் பல நன்மை களைச் சாதித்துக்கொள்ளலாம். ஒன்று பட்டால் உண்டு வாழ்வு “பெரியோர்களே, செல்வர் எப்படிச் சமுதாயத்தொண்டு செய்யலாம் என்பதை இக் கட்டடங்கள் எடுத்துக் காட்டுகின்றன. நமது மதிப்பிற்குரிய முத்தப்பர் இக் கட்டடங்களைக் கட்டுகிறார். ஏழைப் பிள்ளைகளும் அநாதைப் பிள்ளைகளும் இங்கு படிக்க வருவார்கள். அவர்களுக்கு இலவசமாக உண்டி, உடை, உறையுள் ஆகிய மூன்றும் தரப்படும். உங்கள் நலத்துக்காக இலவச மருத்துவமனை இங்கு ஏற்படப் போகிறது. பிள்ளைப் பேற்று மருத்துவமனையும் இங்கு திறக்கப்படும். பிச்சை எடுக்கும் பெண்கள், அநாதைப் பெண்கள், பிழைக்க வழி தெரியாத கைம்பெண்கள் ஆகியோருக்குக் கைத்தொழில் பயிற்சியும் கல்வியும் அளிக்கப்படும். இந்த அமைப்புக்களை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நாட்டுச் செல்வர் ஒவ்வொருவரும் முத்தப்பரைப் போலச் சமூகத் தொண்டும் செய்ய முன்வருவாராயின், நமது நாட்டில் சில ஆண்டுகளுள் வறுமையும் பசியும் மறைந்துவிடும் அல்லவா?” நக்கீரனது பேச்சு கிராம மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. பலர் உள்ளம் உருகி மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டனர்; மக்கள் அவன் பேச்சு முடிந்ததும் நெடு நேரம் கைதட்டித் தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தனர். இறுதியில் முத்தப்பர் பேச எழுந்தார், “முத்தப்பர் வாழ்க!” என்று பொது மக்கள் முழக்கமிட்டனர். மெய்யாகவே நக்கீரனது உருக்கமான பேச்சு முத்தப்பர் உள்ளத்தை உருக்கிவிட்டது. பொதுமக்கள் தம்மை வாழ்த்துவதைக் கண்டு அவர் மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டார். “பெரியோர்களே! ஊரின் நடுவில் நன்னீர்க்குளம் இருந்தால் அது ஊர் மக்களுக்குப் பயன்படும். அது போலவே தன் போன்ற மக்கள்பால் அன்புள்ளம் கொண்ட செல்வர்களின் பணம், ஊர் மக்களுக்குத்தான் பயன்படும். இது நம் திருவள்ளுவர் கருத்து. எனது திரண்ட சொத்துப் பொது மக்களுக்குப் பயன்பட வேண்டும். எல்லோரும் வாழப் பிறந்த மக்கள். ஆதலால் ஏழைகளை வாழ்விக்க வேண்டுவது செல்வர் கடமையாகும். இந்த உண்மையை எனக்கு எடுத்து விளக்கி என்னை இந்தப் பாதையில் திருப்பியவள், இந்த மேடையில் அமர்ந்துள்ள என் செல்வ மகள் மங்கையர்கரசிதான். என் சொத்து முழுமைக்கும் அவளே உரியவள். அவள் விருப்பப்படி செய்வதே எனது கடமை. நம் திருப்போரூர் முருகப் பெருமானுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவில் வெள்ளி ஊஞ்சலைச் செய்து கொடுத்தேன். `நம்மைப் படைத்த கடவுள் நம்மிடம் வெள்ளி ஊஞ்சலையா கேட்கிறார்? அவரால் படைக்கப்பட்ட – நடமாடும் கோவில்களாக உள்ள மக்களுக்குச் செய்யும் தொண்டே அவருக்குச் செய்யும் தொண்டாகும்’ என்னும் உண்மையை எடுத்து விளக்கி என் அகக்கண்ணைத் திறக்கச் செய்தவள் என் மகள் மங்கையர் கரசிதான். அவள் இத்தொண்டிற்கே தன் வாழ்நாளைச் செலவிட முடிவு செய்துவிட்டாள். உங்கள் ஒத்துழைப்பினால் இந்த அறநிலையங்கள் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.” இவ்வாறு முத்தப்பர் பேசி முடித்ததும், பொது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்; “மங்கையர்க்கரசி வாழ்க!”, “பெண்ணரசி வாழ்க!”, “ஏழைகளை வாழ்விக்க வந்த பெண் தெய்வம் வாழ்க!” என்று முழக்கமிட்டனர். மங்கையர்கரசி எழுந்து எல்லோரையும் கைகுவித்து வணங்கினாள். 8. கரும்பாக்கம் பண்ணையார் திருப்போரூருக்கு ஆறு கல் தொலைவில் கரும்பாக்கம் என்னும் சிற்றூர் உண்டு. அங்குக் கரும்பாயிரம் என்ற பண்ணையார் வாழ்ந்து வந்தார். அவர் வயது ஏறத்தாழ ஐம்பது இருக்கும்; கரிய நிறம்-சிவந்த கண்கள்— முறுக்கிய மீசை -— கிருதா விட்ட கிராப்பு -– ஆறடி உயரம். அவரை முதலிற் காண்பவர் அவரது தோற்றத்தைக் கண்டு அச்சம் கொள்வர். அவர் குரலில் கடுமை காணப்படும். அவர் கள்ளச் சாராயம் தயாரிப்பதில் நிபுணர். தொடக்கநிலைப் பள்ளியோடு கலைமகளுக்கு விடை யளித்து விட்ட அவர், மது -– மங்கை ஆகிய இரண்டையும் தம் வழிபடு தெய்வங்களாகக் கொண்டிருந்தார். பண்ணையாருக்கு 400 ஏக்கர் நன்செய்யும், பல தென்னந் தோப்புகளும், மாஞ்சோலைகளும் சொந்தமாக இருந்தன. அச்சிற்றூ ™ர் மக்களுள் பலர் அவர் வயல்களிலும் தோட்டங் களிலும் வேலை செய்து வந்தனர். அவ்வூரில் பண்ணையார் முடிசூடா மன்னராய் விளங்கினார்; இளமை முதலே தட்டிக் கேட்க ஆள் இல்லாததால் ஊரில் அவர் வைத்தது சட்டமாக இருந்தது. ஒழுக்கத்தால் உயர்ந்த உத்தமர்கள் சாதி வேறுபாடு களைக் கருத மாட்டார்கள். அவ்வாறே பண்ணையாரும் ஒழுக்கக் கேட்டில் சாதி வேறுபாடுகளைக் கவனிப்பதில்லை. அவர் தாம் விரும்பும் இளநங்கையரைத் தம்மிடமே வேலை பார்க்கும் இளைஞர்க்குத் தம் செலவில் மணம் முடிப்பார்; தாம் விரும்பும் பொழுது அந்நங்கையரைக் காமக் கிழத்தியராகப் பயன்படுத்திக் கொள்வார். அவர்தம் கணவன்மார் பண்ணையாரின் கொடுமைக்கு அஞ்சி மனம் புழுங்கி வாளா இருந்தனர். குப்பன் என்ற பழந்தமிழன் தென்னந் தோப்புகளுக்குக் காவலாளியாக இருந்தான். அவன் மகள் செந்தாமரை. அவள் மாந்தளிர் மேனியள்; அழகி. அவளது தோற்றத்தில் இளமை பூத்துக் குலுங்கியது. அவளுக்கு வயது ஏறத்தாழப் பதினாறு இருக்கலாம். அவள் தாயற்றவள். குப்பன் அவளைச் செல்வமாக வளர்த்து வந்தான். நான்கு பெரிய தென்னந்தோப்புக்களைக் காவல் காத்து வந்த அவனுக்கு மாதச் சம்பளம் இருபது ரூபாய் தான். அதைக்கொண்டு அவன் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தி வந்தான். கரும்பாக்கம் சேரியில் ஒரு தொடக்க நிலைப் பள்ளி இருந்தது. அதில் ஒரு பெண் ஆசிரியையும் ஆண் ஆசிரியரும் ஆக இருவர் இருந்தனர். அவர்கள் பழந்தமிழர்கள். ஆசிரியை மணம் ஆகாதவள்; தன் தாயுடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தாள். ஆசிரியர் மனைவியை இழந்தவர். அவர் தாமே சமைத்து உண்டு வந்தார். அந்த ஆசிரியர் இருவரும் முன்னேற்றக் கருத்துக்களை உடையவர்கள்; அதனால் தம் இனம் வாழ அரும்பாடு பட்டு வந்தனர்; சேரிப் பிள்ளைகளுக்கு மிக்க விருப்பத்துடன் கல்வி கற்பித்து வந்தனர். இரவு வேளைகளில் முதியோருக்கு உலக அறிவு புகட்டி வந்தனர். சேரி மக்களின் தாழ்ந்த நிலையைப் போக்கக் கல்வி இன்றியமையாதது -சுகாதாரம் தேவையானது ஒழுக்கம் முதன்மையானது -என்பவற்றை அவர்கள் வற்புறுத்தினர். செந்தாமரை ஓய்வு நேரத்தில் பெண் ஆசிரியையிடம் கல்வி கற்று வந்தாள். அவள் தன் விடா முயற்சியால் ஐந்தாம் வகுப்பு வரையில் பாடமாக வைக்கப்பட்டிருந்த நூல்களை எல்லம் படித்து முடித்தாள்; ஓரளவு ஆங்கிலமும் கற்றாள். தான் மேல் வகுப்புக்களில் படித்து ஓர் ஆசிரியை ஆகித் தன் இனத்துக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணத் தொடங்கினாள். உலக அறிவைச் சிறிது சிறிதாகப் பெற்றுவந்த பண்ணையாட்களும் ஆசிரியர்கள் இருவரும் பண்ணையாரின் கொடுமைகளை எவ்வாறு ஒடுக்குவது என்பதை ஆராய்ந்து வந்தனர். ஒரு நாள் மாலை பண்ணையார் தென்னந்தோப்புக்களைக் காண வந்தார். செந்தாமரை தன் குடிசைக்கு எதிரில் போடப் பட்டிருந்த கட்டிலில் அமர்ந்து, “கிராம முன்னேற்றம்” என்ற நூலைப் படித்துக்கொண்டிருந்தாள். அவளது தந்தை வேறொரு தோட்டத்தில் கீற்றுமுடையப் போயிருந்தான். பண்ணையார் ஓசைப்படாமல் தோப்புக்குள் வந்தார். கட்டிலின் மீது அமர்ந்து கருத்தூன்றிப் படித்துக்கொண்டிருந்த நங்கையைக் கண்ட பண்ணையார், அவள் யாரென்பது தெரியாமல் விழித்தார்; தம் வருகையை உணர்த்த ஒரு கனைப்புக் கனைத்தார். தன்னை மறந்து படித்துக்கொண்டிருந்த செந்தாமரை திடுக்கிட்டுத் திரும்பினாள்; எழுந்து கைகுவித்து வணங்கினாள்; “வாருங்கள் ஐயா” என்று கூறினாள். பண்ணையார் தம் பற்களைக் காட்டி நகைத்தபடியே, “நீ யார் பிள்ளே? குப்பன் மகளா?” என்று கேட்டார். “ஆமாம் , ஐயா” என்று அவள் அடக்கமாகப் பதில் கூறினாள். “உனக்குப் படிக்கக்கூடத் தெரியுமா?” “தெரியும் ஐயா. ஐந்து ஆண்டுகளாக நமது சேரி ஆசிரியையிடம் ஓய்வு நேரத்தில் படித்து வருகிறேன். அந்த அம்மாள் முதல் ஐந்து வகுப்புகளுக்குரிய பாட நூல்களை வாங்கிக் கொடுத்தார். பலகை, நோட்டுப் புத்தகம் முதலிய வற்றையும் அவரே வாங்கிக் கொடுத்தார். அந்த அம்மாள் உதவியால்தான் நான் படித்து வருகிறேன்.” “நல்லது! நீ இப்பொழுது படிக்கும் புத்தகத்தில் ஒரு பத்தியைப்படி, பார்க்கலாம்.” செந்தாமரை ஒரு பத்தியைப் படித்தாள். அவளது குரல் மிகத் தெளிவாக இருந்தது. சொற்களின் உச்சரிப்பு மிகத் தெளிவாக இருந்தது. பண்ணையார் விழித்த கண் விழித்தபடியே நின்று விட்டார். அவள் படித்து முடித்ததும், அவரது முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பண்ணையாரும் அவளைத் தலை முதல் அடிவரையில் பல முறை உற்று நோக்கினார். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல் அவர் முகம் தெளிவு காட்டியது. அவர், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “செந்தாமரை” “நான் உன்னை மேலே படிக்கவைக்கிறேன். நீ கவலைப்படாதே. உன் அப்பனை நாளை நமது வளமனைக்கு வரச்சொல். உனக்கு வேண்டும் உடைகளும் புத்தகங்களும் அனுப்புகிறேன்.” “ஐயா, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி”. அவ்வமயம் குப்பன் தான் முடைந்த கீற்றுகளைத் தலையில் வைத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். பண்ணையார் தன் மகளுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான்; “ஐயா, வணக்கம்” என்று கூறிக்கொண்டே பண்ணையாருக்கு முன் நிலத்தில் விழுந்து வணங்கினான். பண்ணையார் முகமலர்ச்சியுடன் அவனைப் பார்த்து, “என்ன குப்பா, இதற்கு முன் `கும்பிடுகிறேன் சாமி’ என்று சொல்லி வந்த நீ, இப்பொழுது `வணக்கம்’ என்று சொல்கிறாnய! நீயும் படிக்கக் கற்றுக்கொண்டாயோ?” என்று கேட்டார். குப்பன் சிரித்துக்கொண்டே, ஐயா, செந்தாமரைதான் ‘வணக்கம்’ என்று சொல்லவேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்தாள். பண்ணையாட்கள் எல்லோருமே இப்பொழுது ‘வணக்கம்’ என்றுதான் சொல்கிறார்கள்”என்றான். பண்ணையார், “குப்பா, உன் மகள் மேலே படிக்க ஆசைப்படுகிறாள். அவளுக்கு நல்ல உடைகள் வேண்டும்; படிக்க நூல்கள் வேண்டும். நாளை மாலையில் நமது மாளிகைக்கு வா. நான் அவற்றைத் தருவேன். உன் மகளது படிப்புக்கு நானே உதவி செய்வேன்.” என்றார். குப்பன் ஒன்றும் புரியாமல் விழித்தான்; ஒழுக்கம் கெட்ட பண்ணையார் தன் மகள்மீது இவ்வளவு பரிவு காட்டுவது ஏன் என்று யோசித்தான்; ‘இவரது உதவியைப் பெறுவோம். இவர் நோக்கம் தவறுடையதாயின், இவருக்குத் தகுந்த பாடம் கற்பிப்போம்’ என்று தன்னுள் முடிவு செய்துகொண்டான். அவன் பதில் கூறாததைக் கண்ட பண்ணையார், “குப்பா, என்ன யோசிக்கிறாய்?” என்று கேட்டார். “ஐயா உங்கள் பரந்த மனப்பான்மையைப் பற்றி எண்ணினேன்; வேறொன்றுமில்லை. தாங்கள் மனம் வைத்தால் எங்கள் வாழ்வு சிறப்படையும்” என்று கூறிக் கும்பிட்டான். “சரி, நாளை வா” என்று கூறிவிட்டுப் பண்ணையார் சென்றுவிட்டார். செந்தாமரை தன் தந்தையைப் பார்த்து, “அப்பா, இவர் மிகவும் மோசமானவர் என்று சொல்கிறார்களே! இவர் நமக்கு உதவி செய்ய முன் வந்ததன் நோக்கம் என்ன?” என்று ஆவலுடன் கேட்டாள். “மகளே, இவர் மிகக் கேடானவர்; ஒழுக்கம் கெட்டவர். பெண்களைக் கெடுப்பதே இவர் வேலை. ஒருவேளை அந்த நோக்கத்தைக் கொண்டு உனக்கு உதவி செய்யலாம்.” “அப்படியா! இவரிடம் உதவி பெறுவோம். இவர் நோக்கம் தீயதாயின், சரியான பாடம் கற்பிப்போம். இவர் வந்துபோன செய்தியை ஆசிரியர் இருவரிடமும் நம் சேரியாரிடமும் இப்பொழுதே சொல்லிவிடுவோம்.” என்று மகள் கூறினாள். உடனே இருவரும் சேரியை நோக்கிச் சென்றனர். 9. பண்ணையார் மகன் தீய பண்புகளையுடைய கரும்பாக்கம் பண்ணையாருக்குப் பாண்டியன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்துத் தேறியவன். அவனுக்கு வயது இருபதிருக்கும். அவன் தன் தந்தை பண்ணை ஆட்களை இரத்தம் கசிய அடிப்பதைக் கண்டு கண்டு வருந்தியவன்; பல கொடுமைகளைப் பார்த்துப் பார்த்து அருவருப்புக் கொண்டவன். தன் தந்தையின் ஒழுக்கக்கேட்டையும் அவன் அறிந்து வருந்தினான். பாண்டியன் மங்கையை நன்கறிவான். அவன் அவளோடு தான் பி.ஏ. படித்துத் தேறினான். அவன் அண்மையில் திருப்போரூரில் நடைபெற்ற நக்கீரனது சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்தான்; தன் பண்ணையில் வேலை செய்பவர்க்குத் தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்யவேண்டும் என்று எண்ணினான். தன் தந்தைக்குப் பிறகே தான் விரும்பியதைச் செய்ய முடியும் ஆதலால், அதுவரையில் பொறுத்துக்கொண்டு பண்ணை வேலையைக் கவனித்து வருதல் நலம் என்ற முடிவுக்கு வந்தான். அவன் சில இரவுகளில் உடம்பில் சட்டை இல்லாமல் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு கிராமத்தான்போல அவ்வூரிலும் சேரியிலும் சுற்றுவான்; அவ்வூர் மக்கள் ஊரிலும் சேரியிலும் பண்ணையாரைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதைக் கவனிப்பான். அவர்களின் துன்ப நிலையை உணர்வான்; தன் பண்ணையை நம்பி வாழும் மக்களை எவ்வாறு உயர்த்துவது என்பதுபற்றி அடிக்கடி எண்ணுவான். பண்ணையார் செந்தாமரையை முதன்முதலில் சந்தித்த அன்று இரவு பாண்டியன் சேரிப்பக்கமாகச் சென்றான். அங்கு ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. சேரிப்பள்ளி ஆசிரியர் கோவிந்தன் கூட்டத்தில் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தார். “திருப்போரூரில் உள்ள பண்ணையாரும் அவர் மகளும் தம் சொத்தைப் பொதுமக்கள் நன்மைக்காகச் செலவிடப் போகிறார்கள். இங்கு நம் பண்ணையாரோ நம் குடிகளைக் கெடுத்து வருகிறார். அவர் கொடுக்கும் கூலி வயிற்றுக்கே போதவில்லை; இத்துன்ப நிலையில் பெண்களையும் கெடுத்து வருகிறார்; இன்று குப்பன் மகள் செந்தாமரையைக் கண்டு தேனொழுகப் பேசியிருக்கிறார்; அவளைத் தம் செலவில் படிக்க வைப்பதாக உறுதி கூறியிருக்கிறார். அவர் கருத்தில் ஏதோ சூது இருப்பதாகத் தெரிகிறது. அவர் இனியும் பெண்களைக் கெடுக்கும்படி விடக்கூடாது;– விட முடியாது. நாளை மாலை அவளுக்கு உடைகளையும் நூல்களையும் அனுப்புவதாகப் பண்ணையார் சொல்லியிருக்கிறார். அனுப்பட்டும். நல்ல மனத்துடன் செய்யும் உதவியை ஏற்றுக்கொள்ளுவோம். அவர் அவளைக் கெடுக்க முயல்வாராயின், ஒன்று அவர் அழிய வேண்டும்; அல்லது நாம் அழியவேண்டும். இதுதான் நமக்கு இறுதிச் சோதனை..” ஆசிரியர் பேச்சு எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்தது. எல்லோரும் “இதுதான் முடிவு”, “இதுதான் முடிவு” என்று கூறினர். ஆசிரியை அன்னக்கிளி, “பண்ணையார் மகன் பாண்டியன் மிகவும் நல்லவர். அவர் தந்தைக்குத் தெரியாமலேயே நம்மிடம் அன்பும் ஆதரவும் காட்டி வருகிறார். அவரது ஆட்சியில் நமக்கு நன்மை உண்டாகும்,” என்று கூறினாள். பாண்டியன் இருவர் பேச்சையும் கேட்டான். அவன் உடனே அவ்விடத்தைவிட்டு அகன்றான். மறுநாள் காலையில் குப்பன் மகளைக் காண விரும்பினான். சேரி மக்கள் தன்னைப் பற்றிக் கொண்டிருந்த நல்ல எண்ணத்தை எண்ணி மகிழ்ந்தான். அவர்தம் எண்ணத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தான். மறுநாள் காலை பண்ணையார் செங்கற்பட்டிற்குச் சென்றிருந்தார். அதுதான் தக்க சமயம் என்று எண்ணி பாண்டியன் தென்னந்தோப்புப் பக்கமாகச் சென்றான். அப்பொழுது செந்தாமரை ஆசிரியை அன்னக் கிளியிடம் பாடம் படிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் காலையில் நீராடி அழுக்கற்ற ஆடை உடுத்தியிருந்தாள். சீவப்பெற்ற தலையில் முல்லை மலர்கள் அணி செய்தன. அவள் புத்தகம் எடுத்துக்கொண்டு குடிசையைவிட்டு வெளியேறினாள். பண்ணையார் மகன் அங்கு நிற்பதைக் கண்டாள்; “வணக்கம், ஐயா” என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள். பாண்டியன் அவளை உற்று நோக்கினான். அவளது உடற்கட்டும் கள்ளங்கபடமற்ற மலர்ந்த முகமும் அவன் உள்ளத்தைக் கவர்ந்தன. அவன் முகம் மலர்ந்தது. அவன் அவளை அன்போடு நோக்கி, “செந்தாமரை, நேற்று என் தந்தையார் இங்கு வந்தாரா?” என்று கேட்டான். “ஆமாம்.” “என்ன சொன்னார்?” “நான் ஐந்தாம் வகுப்பு வரையில் உள்ள நூல்களைப் படித்துவிட்டதாகச் சொன்னேன். அவர் எனது மேல் படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறினார்; எனக்கு நல்ல ஆடைகளையும் நூல்களையும் இன்று மாலை தருவதாகச் சொன்னார். என் அப்பாவை உங்கள் வளமனைக்கு இன்று மாலை வரும்படி சொல்லியிருக்கிறார்.” “நல்லது. அவர் கொடுப்பவற்றை அவ்வப்போது வாங்கிக் கொள். அவர் உன்னிடம் எப்பொழுதுதேனும் தகாத முறையில் பேசினாலும் நடந்து கொண்டாலும் உடனே எனக்குச் சொல்லி அனுப்பு. உனக்கு எவ்வித உதவி வேண்டும்போதும் எனக்குத் தெரிவி.” செந்தாமரை அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். அவன் உள்ளத்தில் உண்மை உள்ளவன், பேச்சில் தூய்மையுள்ளவன் என்பதை உணர்ந்தாள். அவள் முகம் மலர்ந்தது; “ஐயா, உங்கள் அன்புக்கு நன்றி” என்று கூறிப் பள்ளியை நோக்கி நடக்கலானாள். அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டே பாண்டியன் தென்னந்தோப்பிற்கு வெளியே வந்தான்; வழியில் குப்பனைக் கண்டான். குப்பன் தரையில் விழுந்து வணங்கினான். பாண்டியன், “குப்பா, தரையில் விழுந்து வணங்குவதை அப்பாவிடம் மாத்திரம் வைத்துக்கொள்” என்று கூறி, அவனை அருகில் அழைத்து, செந்தாமரையிடம் சொன்னதையே அவனிடம் சொன்னான். குப்பன் மிக்க நன்றியறிதலோடு கைகுவித்து வணங்கினான். 10. அழகாபுரி அடிகள் செங்கற்பட்டுக்கும் திருப்போரூருக்கும் இடையில் ஒரு மலையடிவாரத்தில் அழகாபுரி என்னும் சிற்றூர் ஒன்று உண்டு. அவ்வூரை அடுத்த பெரிய மாஞ்சோலையின் நடுவே இளங்கோ அடிகள் என்ற துறவியார் ஒருவர் இருந்தார். அவர் ஏறத்தாழ ஐம்பது வயதுடையவர். பரங்கிப்பழம் போன்ற நிறமுடையவர். காவியாடையும் வெண்ணீறு அணிந்த நெற்றியும் மழித்த தலையும் புன்முறுவல் கொண்ட முகமும் கண்டோரை அவர்பால் இழுத்தன. அவர் ஒழுக்கம் என்னும் குன்றேறி நின்றவர். அவர் சோழவள நாட்டைச் சேர்ந்தவர்; பத்தாம் வகுப்பு வரையில் படித்தவர்; மனைவி மக்களோடு வாழ்ந்தவர்; அவர் இல்வாழ்க்கை யில் வெறுப்புற்றுத் துறவு பூண்டவர். அவர் தம் கையில் தமக்கென வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயுடன் அழகாபுரிக்குச் சென்று தம் செலவிலேயே நிலத்தை வாங்கினார்; தம் விருப்பம்போல ஒரு மடத்தை அமைத்துக்கொண்டு வாழலானார். அவர் சித்த மருத்துவம் அறிந்தவர்; மலைப் பகுதிகளில் மூலிகைகள் நிரம்பக் கிடைக்கும் ஆதலால் அழகாபுரி மலையடிவாரத்தைத் தமக்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்தார். தம் எஞ்சிய நாட்களைப் பொதுமக்களுக்குத் தொண்டு செய்வதில் கழிக்க விரும்பிய அவர், அநாதைப்பிள்ளைகளைத் தம் மடத்தில் வைத்து வளர்த்து வந்தார்; அவர்களுக்குக் கல்வி கற்பித்தார். பெரிய பிள்ளைகளுக்கு மருத்துவமுறை கற்பித்தார்; ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ உதவி செய்தார்; செல்வரிடம் பணம் பெற்று மருந்து அளித்தார். அவரது மருத்துவத் திறமையும் நற்பண்புகளும் சுற்றுப்புறச் சிற்றூர்களில் பரவின. நோயாளிகள் பலர் அவரால் நலம் பெற்றனர். அவர் மருந்துகளால் நலம் பெற்ற செல்வர் சிலர், அவர் விரும்பியபடி ஒரு பள்ளிக்கூடக் கட்டடத்தைக் கட்டிக் கொடுத்தனர்; வேறு சிலர் ஐந்து காணி நன்செய் நிலத்தை எழுதிக் கொடுத்தனர். அடிகள் அப் பள்ளிக் கட்டடத்தில் அநாதைப் பிள்ளைகளையும் ஏழைப் பிள்கைளையும் சேர்த்துக் கல்வி கற்பிக்கலானார்; நிலத்தின் வருவாய் கொண்டு அப்பிள்ளைகளுக்கு உணவு அளிக்கலானார்; தம் மருத்துவ வருமானம் கொண்டு அவர்களுக்கு வேண்டும் உடைகள் முதலியவற்றை உதவி வந்தார். மங்கை அறநிலையப் பணி தொடங்குவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் அடிகள் அழகாபுரிக்கு வந்தார். ஐந்து ஆண்டுகளுள் அவரது தொண்டு விரிவடையத் தொடங்கியது. தாம் சேர்த்த அநாதைப் பிள்ளைகளுள் பெரியவர் நால்வரை எப்பொழுதும் தம் உடன் வைத்துக் கொண்டு, அவர்களுக்குச் சமுதாய அறிவை ஊட்டினார்; பொது மக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், உண்மைத் தொண்டு எது என்பவற்றைப் பற்றி நன்கு விளக்கினார். அவர்களுக்குக் கல்வித்துறையிலும் மருத்துவத் துறையிலும் பயிற்சி அளித்தார். அவரது மடத்தில் வழிபாட்டுக்கூடம் பார்க்கத்தக்கது. அது அறுபது அடி நீளமும் முப்பது அடி அகலமும் கொண்டது, அதன் சுவர்களில் மக்கள் தொண்டையே சிறப்பாகக் கருதி வாழ்ந்த சாக்ரடீஸ், புத்தர், ஏசுநாதர், காந்தியடிகள் போன்ற பெருமக்களின் படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றுக்கு நடுநாயகமாகத் தில்லைக் கூத்தப்பிரான் படம் வைக்கப் பட்டிருந்தது. சைவசமய குரவர் நால்வர் படங்களும் ஆழ்வார் பன்னிருவர் படங்களும் திருவள்ளுவர் படமும் அக்கூடத்தை அழகு செய்தன. காலையிலும் மாலையிலும் அங்கு வழிபாடு நடைபெற்றது. அடிகள் கூறும் பிரார்த்தனையைப் பிள்ளைகள் பின்பற்றிக் கூறுவர். ஒவ்வொரு நாள் மாலையிலும் அடிகள் திருக்குறள் அதிகாரம் ஒன்றைப்பற்றி விரிவுரை செய்வார். அழகாபுரியில் இருந்த பெரியவர்கள் அவ்விரிவுரையை வந்து கேட்பது வழக்கம். சுற்றுப்புற ஊர்களில் இருந்த பெரியவர்களும் வந்து சொற்பொழிவைக் கேட்டு மகிழ்வர். மக்களுக்குச் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் தொண்டு என்னும் கருத்தை அடிகள் மக்கள் உள்ளங்களில் நன்கு பதிய வைத்தார். கிராம மக்கள் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக வாழவேண்டும்; சாதி வேறுபாடுகளை மறந்து பழக வேண்டும்; கிராம நலனுக்காக எல்லோரும் பாடுபடவேண்டும்; ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டு முன்வர வேண்டும் என்பவை அவர் மணிமொழிகளாகும். ‘எறும்பு ஊரக் கல்லும் தேயும்’ அல்லவா? அடிகளின் பொன்மொழிகள் படிப்படியாக – சிறுகச் சிறுக மக்கள் உள்ளங்களில் பதித்தன. அதுவரையில் அந்த ஊரில் இருந்து வந்த சாதிச் சண்டைகள், கட்சிப் பூசல்கள், உயர்ந்தவன் -— தாழ்ந்தவன் என்ற மனப்பான்மை, ஏழை -– பணக்காரன் என்ற வேறுபாடு முதலியன ஓரளவு குறையலாயின. அந்த ஊரில் வரும் பிச்சைக்காரர் உடனே அடிகளிடம் ஒப்படைக்கப் பெறுவர். அடிகள் அவர்தம் வரலாற்றை விசாரிப்பர். சிறு பிள்ளைகளாயின் தம் அநாதை விடுதியில் சேர்த்துக்கொள்வர்; பெரியவர்களாயின், அவர்களுக்கு உணவிட்டு மருத்துவ வேலையைக் கற்பிப்பர்; தோட்ட வேலையைச் செய்யத் தூண்டுவர். அவர்கள் உழைப்பால் மடத்தைச் சுற்றிலும் அழகிய பூந்தோட்டம் உருவானது. தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுதல், வயலில் வேலை செய்தல், ஏர் உழுதல் முதலிய வேலைகள் அவர்களுக்குத் தரப்பட்டன. வேலையின்றிப் பிச்சையெடுத்து வந்த நடுத்தர வயதுடைய மக்கள், இவ்வாறு உழவராகவும் தொழிலாள ராகவும் மாறிவந்தனர். அடிகளது வியக்கத்தக்க இத்தொண்டினைக் கண்ட ஊரார், அவரைப் பெரிதும் மதிக்கலாயினர்; அவர் சொற்படி தாங்களும் சிலரை வேலையில் வைத்துக் கொண்டனர். அடிகளது இடைவிடாத் தொண்டினால் பெயரளவில் அழகாபுரியாக இருந்த சிற்றூர், அறிவு, அழகு நிறைந்த புரியாகவும் மாறிக்கொண்டு வந்தது. திருப்போரூர்ப் பண்ணையாருடைய திருப்பணிகள் பற்றிய விவரத்தைக் கேள்வியுற்ற அழகாபுரி அடிகள், எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்; தம்மிடம் ஐந்தாம் வகுப்புப் படித்து முடித்த பிள்ளை களையும் தம்மிடம் புதிதாக வந்து சேரும் அநாதைகளையும் அங்கு வாழ்விக்கலாம் என்று அகம் மிக மகிழ்ந்தார்; அறநிலையங்களின் தொடக்க விழாவினை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 11. பண்ணையார் கொடுமை கரும்பாக்கம் பண்ணையார் செந்தாமரைக்குப் பல வகை ஆடைகளையும், ஆறாம் படிவத்துக்குரிய நூல்களையும், நோட்டுப் புத்தகங்களையும், பென்சில் பேனாக்களையும் இவை அனைத்தையும் வைத்துக்கொள்ளத் தக்க பெட்டியையும் வாங்கிக் கொடுத்தார். குப்பன் மிக்க நன்றியறிதலோடு அவற்iறப் பெற்றுக்கொண்டான். பண்ணையார் வாரத்திற்கொருமுறை தென்னந்தோப்புப் பக்கமாக வருவார்; செந்தாமரையிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டுத் திரும்பு வார். சேரியாரும் பாண்டியனும் அவர் போக்கைக் கவனித்துக் கொண்டே வந்தனர். கரும்பாக்கத்தில் கண்ணாயிரம் என்ற பண்ணையாள் இருந்தான். அவன் பண்ணையாரிடம் வயல் வேலை பார்த்து வந்தான். அவன் மகள் தன் கணவன் ஊரிலிருந்து பிள்ளைப் பேற்றுக்குத் தாய்வீடு வந்தாள். ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி இரவு அவள் பிள்ளைப் பேற்றால் துன்புற்றாள். நான்கு கல் தொலைவிலுள்ள மடையத்தூரி லிருந்த மருத்துவச்சியைக் கொணர்ந்து பிள்ளைப்பேற்றைக் கவனிக்க வேண்டும் என்று கண்ணாயிரம் கருதினான். ஆனால் அவனிடம் பணம் இல்லை. அக்கம்பக்கத்தில் இருந்தவரிடமும் பணம் இல்லை. அதனால் அவன் பண்ணையார் மாளிகையை நோக்கி ஓடினான். அப்பொழுது மணி பத்து இருக்கும். அவன் போனபொழுது பண்ணையார் இரவு உணவில் ஈடுபட்டிருந் தார்; அரைமணி நேரம் கழிந்து வெளியே வந்தார்; வெற்றிலை பாக்கை மென்று கொண்டே சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தார். கண்ணாயிரம் கவலை தோய்ந்த முகத்துடன் தரையில் வீழ்ந்து பணிந்தான்; எழுந்து கைகட்டி நின்றான்; “எசமான், என் மகள் காட்டூரிலிருந்து பிள்ளை பெற வந்திருக்கிறாள். இப்போது இடுப்பு வலியால் துன்பப்படுகிறாள். மடையத்தூரில் இருந்து மருத்துவச்சியை அழைத்துவந்து பார்க்கப் பணம் இல்லை; தாங்கள் தாம் இந்த ஆபத்தில் உதவவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே கீழே விழுந்து வணங்கினான். பண்ணையார் கண்களை உருட்டி அவனைப் பார்த்தார்; “மடையனே, நீ செய்யும் வேலைக்கு நாள்தோறும் கூலி கொடுத்து வருகிறேன். உன் வீட்டு விவகாரத்தை என்னிடம் சொல்லாதே! உனக்கு ஆயிரந் துன்பங்கள் வரும். அவற்றை நான் தாங்க முடியுமா? போ வெளியே” என்று அதட்டினார். கண்ணாயிரம் கண் கலங்கினான்; “எசமான், நான் உங்களை நம்பித்தானே வாழ்கிறேன்; உங்களிடம் வேலைசெய்து தானே பிழைக்கிறேன். உங்களை விட்டால் எனக்குக் கதி ஏது? நீங்கள் தாம் மனம் இரங்கி இந்த ஆபத்து வேளையில் உதவ வேண்டும்” என்று கைகளைக் கூப்பி வணங்கினான். பண்ணையாருக்குக் கோபம் பொங்கி எழுந்தது; “இருளா, இவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு, இவன் வீட்டு இழவுக்கெல்லாம் நானா அழுவது?” என்று உரக்கக் கத்தினார். இருளன் பண்ணையார் வீட்டில் மாடுகளைக் கவனித்துக் கொள்ளும் வேலையாள். அவன் கண்ணாயிரத்துக்கு உறவினன். ஆயினும் அவன் என்ன செய்வான்! பண்ணையாரின் பேச்சை மறைவில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அவன் உள்ளம் கொதித்தது; ‘ஈவு இரக்கமில்லாத பாவி’ என்று தன்னுள் பண்ணை யாரைச் சபித்தான். மெதுவாக வந்து கண்ணா யிரத்தின் கையைப் பற்றி வெளியே இழுத்துக் கொண்டு போனான்; “மாமா, இருந்திருந்தும் இந்தப் பாவியிடமா உதவி கேட்க வந்தாய்? வேறு எங்காவது போய் உதவியைப் பெறு” என்று அவன் காதில் மெதுவாகச் சொல்லி அனுப்பிவிட்டான். கண்ணாயிரம் அழுதுகொண்டே மடையத்தூருக்கு ஓடினான்; அந்த இருட்டில் வயல்களையும் வாய்க்கால்களையும் தாண்டித் தாண்டி ஓடினான். நான்கு கல் தொலைவில் இருந்த மடையத்தூரை அடைந்தான்; மருத்துவச்சியை உடனே தன்னுடன் வரும்படி வேண்டினான். அவள் பணம் பெற்றுக்கொள்ளாமல் வரமுடியாது என்று கண்டிப்பாக மறுத்துவிட்டாள். பாவம், கண்ணாயிரம் தன்னால் ஆனமட்டும் அவளைக் கெஞ்சினான்; கைகூப்பி வணங்கினான்; அவள் கால்களில் விழுந்து கதறினான். மருத்துவச்சியின் பிடிவாதம் சிறிதும் தளரவில்லை. கண்ணாயிரம் மனம் நொந்தான். அவன், “ஐயோ! என் மகள் இந்நேரம் என்ன பாடுபடுகிறாளோ!” என்று சொல்லிக்கொண்டே தன் குடிசையை நோக்கி ஓடினான்; தன்னை மறந்து ஓடினான்; காற்றாய்ப் பறந்தான்; தன் குடிசையை அடைந்தான். அவனது குடிசைக்கு முன் சேரிமக்கள் குழுமியிருந்தனர். அவன் மனைவி ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தாள். கண்ணாயிரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை; குடிசையை நெருங்கியதும் உண்மையை உணர்ந்தான். தன் மகள் வலி பொறுக்க முடியாமல் கதறினாள் - அக்கம் பக்கத்திலிருந்த கிழவிகள் மருத்துவம் பார்த்தனர் - குழந்தை பிறப்பதற்குள் அதன் தாய் இறந்துவிட்டாள். இச்செய்தியை அறிந்த கண்ணாயிரம் தலையிலடித்துக்கொண்டு அழுதான்; “பாழாய்ப் போன பண்ணையார் பணம் உதவியிருந்தால் என் மகள் பிழைத் திருப்பாளே!” என்று கதறினான்; பண்ணையார் தன்னிடம் சொன்ன வற்றைச் சொல்லி சொல்லி அழுதான். அவற்றைக் கேட்ட சேரி மக்கள் பண்ணையார்மீது கடுங்கோபம் கொண்டனர்; “பண்ணையாருக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும். அதற்குக் காலம் நெருங்கிவிட்டது” என்று முணுமுணுத்தனர்.  தாம் பண உதவி செய்யாததால் மருத்துவ வசதி பெற முடியாமல் தன் பண்ணையாளின் மகள் இறந்துவிட்டாள் என்பதைப் பண்ணையார் கேள்விப்பட்டார். ஆனால் அவர் கல் மனம் கரையவில்லை. அவர் அன்று மாலை செந்தாமரையைப் பார்க்க வந்தார். அவள் மிகுந்த வருத்தத்தோடு அவரை வரவேற்றாள். பண்ணையார் அவள் முகத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். “செந்தாமரை, ஏன் உன் முகம் வாடியிருக்கிறது?” “நீங்கள் கொலையாளி ஆகிவிட்டீர்கள் ஐயா! உங்கள் முகத்தைப் பார்க்கவே வெட்கப்படுகிறேன். “ “என்ன பெண்ணே உளறுகிறாய்? நான் யாரைக் கொலை செய்தேன்?” “உங்கள் பண்ணையாள் கண்ணாயிரத்தின் மகளை” “நானா கொலை செய்தேன்?” “ஆம். அவர் பணம் வேண்டியபோது நீங்கள் கொடுத்து உதவி இருந்தால், அவள் மருத்துவ உதவி பெற்றுப் பிழைத்திருப்பாள்.” “இவர்களுக்கெல்லாம் கொடுக்கப் பணம் என்னிடம் கொட்டியா கிடக்கிறது?” “ஐயா, ஒரு கிராமத்தில் மருத்துவ உதவிக்கு ஐந்து அல்லது பத்து ரூபாய்க்கு மேல் தேவைப்படாது. அதைக் கொடுக்கவா உங்களால் முடியவில்லை? உங்களை நம்பி வாழும் ஏழைகளான எங்கள் கதி என்ன என்பது உங்கள் செய்கையால் புரிந்துவிட்டது. கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்கள் மனம் இரும்பா? அல்லது கல்லா?” “என்ன செந்தாமரை, வாயில் வந்ததையெல்லாம் உளறுகிறாய்!” “உளறவில்லை ஐயா, உண்மையைச் சொல்லுகிறேன். எங்கள் உழைப்பால் உங்கள் செல்வ நிலை உயர்ந்தது. நாங்கள் வயிற்றுக்குப் போதிய சோறின்றி வாடுகிறோம்; தாழ்ந்த குடிசையில் புழுப்போல் நெளிகிறோம்; நோய்களுக்கும் வறுமைக்கும் பலியாகிறோம். நீங்கள் எங்கள் உழைப்பால் உண்டு கொழுக்கிறீர்கள்; எங்களையே வாட்டி வதைக்கிறீர்கள்; மனிதப் பண்பே உங்களிடம் மலரவில்லையே! உங்களைப் பார்க்க நான் வெட்கப்படுகிறேன்.” “உனக்கு நான் செய்துவருகிற உதவியைக்கூட நீ மறந்து விட்டாயே?” “நான் மறக்கவில்லை. உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். எனக்கு உதவி செய்தது இரக்கம் பற்றியதாக இருப்பின், அதே இரக்கம் கண்ணாயிரத்தின் மகளைக் காப்பாற்றி இருக்கும். அவளுக்கு நீங்கள் உதவி செய்யாததால், எனக்கு மட்டும் செய்துவரும் உதவி இரக்கம்பற்றிச் செய்யப்பட்டதன்று என்று நினைக்கிறேன்.” பண்ணையார் கண்கள் கோபக்கனலைக் கக்கின, அவர் மீசை துடித்தது. ஆயினும் செந்தாமரை அஞ்சவில்லை; “ஐயா, உங்களிடம் வேலை செய்யும் எங்களை மனிதத்தன்மையோடு நடத்துவதுதான் முறை. நாங்களும் உங்களைப்போல் வாழப் பிறந்தவர்கள் என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறிக் கைகுவித்து வணங்கினாள். அவள் கண்களிலிருந்து நீர் வழிந்தது. பண்ணையார் வாய்திறவாமல் விரைந்து நடந்தார். 12. மரகதவல்லி அறநிலையம் தமிழ் வருடப்பிறப்பன்று —-– ஏப்பிரல் மாதம் 14-ஆம் தேதியன்று ‘மரகதவல்லி அறநிலையம்’ திருப்போரூரில் திறப்பதாகத் திட்டமிடப் பட்டிருந்தது. ஓராண்டிற்குள் வானளாவிய கட்டடங்கள் எழுப்பப் பெற்றன. உயர் நிலைப் பள்ளிக் கட்டடம், சாதாரண மருத்துவமனை, பிள்ளைப்பேற்று மருத்துவமனை, அநாதைப் பெண்கள் - கைம்பெண்கள் விடுதி. தொழிற்கூடம் முதலியவற்றிற்குரிய பெரிய கட்டடங்கள் பேரெழில் கொண்டு விளங்கின. ஆங்காங்கு நல்ல நடைபாதை களும் வண்டி செல்லும் பாதைகளும் அமைக்கப்பட்டன. வேப்பங்கன்றுகள் குறிப்பிட்ட இடங்களில் நடப்பெற்றன. கண்ணுக்கு இனிமை தரும் மலர்ச் செடிகளும் ஆங்காங்கு நடப்பெற்றன. மங்கையர்க்கரசியின் விருப்பப்படி நக்கீரன் சனவரித் திங்களி லிருந்தே முத்தப்பருடன் அறநிலையப் பொறுப்பை ஏற்று நடத்தி வந்தான். செங்கற்பட்டு மாவட்டம் முழுமையும் சுற்றித் திரிந்து மரகதவல்லி அறநிலையத்தின் நோக்கத்தைப் பொது மக்கள் அறியச் செய்தான்; பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் தொழிற்கூடத்திற்கும் தேவையான எல்லாப் பொருள்களையும் சென்னை சென்று வாங்கி வந்தான்; கட்டடங்கள் கட்டத் தொடங்கிய நாள் முதல் அதுகாறும் நடைபெற்ற செலவுகளை யெல்லாம் முத்தப்பர் உதவியால் குறித்து வைத்தான். இவ்வாறு பலவகையாலும் அவன் முத்தப்பர் தொண்டிற்குப் பேருதவியாக இருந்தான். ஏப்பிரல் மாதம் 10-ஆம் தேதி மங்கைக்கும் தாமரைக் கண்ணிக்கும் எல்.டி. தேர்வு முடிவுற்றது. அவர்கள் இருவரும் நேரே திருப்போரூருக்கு வந்து விட்டனர். ஆயிரக்கணக்கான துண்டுத் தாள்கள் அற நிலையத் திறப்புப் பற்றிப் பொது மக்களுக்கு அறிவித்தன. குறித்த நாளன்று மாலை நான்கு மணி அளவில் திறப்பு விழh தொடங்கப் பெற்றது. இறைவணக்கத்திற்குப் பின் முத்தப்பர் எழுந்து அறநிலையத்தின் நோக்கத்தை மிகத் தெளிவாக விளக்கிப் பேசினார்; வந்திருந்த செல்வரையும் அரசாங்க உயர் அலுவலரையும் பொது மக்களையும் அகம் குழைய வரவேற்றார். பின்பு நக்கீரன் எழுந்து கட்டடங்களுக்கு ஆன செலவையும் வேலைமுறைக்கு ஒதுக்கப்பட்ட தொகையையும் குறிப்பிட்டு, முத்தப்பர் — மங்கையர்க்கரசி ஆகிய இருவரின் தொண்டு மனப்பான்மையை வியந்து பாராட்டினான். பின்பு சென்னை மாநில முதலமைச்சர் வணங்காமுடி என்பவர் பலத்த கைத்தட்டலுக்கு இடையே எழுந்து பேசினார்: “பெரியோர்களே, ஒவ்வொன்றிற்கும் அரசாங்கத்தையே நம்பிவாழும் சமுதாயம் விரைவில் முன்னேறாது. நாட்டிற் பிறந்த செல்வர் முத்தப்பரைப் போலத் தொண்டு மனப்பான்மையை மேற்கொண்டு ஆக்க வேலையில் இறங்கினால்தான் நமது சமுதாயம் விரைவில் முன்னேற முடியும். தமிழக வரலாற்றில் - முன்னேற்றம் என்ற பகுதியில்-முத்தப்பரும் மங்கையர்க்கரசியும் நிலையான இடத்தைப் பெற்றுவிட்டனர். ஒவ்வோர் ஊரிலும் உள்ள செல்வர்கள் இவர்களைப் பின்பற்றி ஆக்க வேலையில் இறங்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். உங்கள் நல்வாழ்த்துக்கிடையே இந்த அற நிலையத்தைத் திறந்து வைக்கிறேன்.” (பலத்த கைத்தட்டல்) இவ்வாறு பேசி முடிந்தவுடன் முதலமைச்சர் வணங்காமுடி ஒவ்வொரு கட்டடத்தையும் திறந்து வைத்தார். அப்பொழுது இன்னிசை முழங்கியது, பொதுமக்கள் கைதட்டி ஆரவாரஞ் செய்தனர். பின்பு சமுதாய முன்னேற்றம் பற்றிப் பாரதியாரும் பாரதிதாசனும் முடியரசனும் பாடியுள்ள பாக்களை இளங்கோதை என்ற இசையரசி இனிமையாகப் பாடினாள், பொதுமக்கள் அப்பாடல்களைச் சுவைத்துக் கேட்டனர். “பெருமக்களே, நாளை முதல் ஒவ்வொரு பிரிவிலும் பிள்ளைகள் சேர்க்கப்படுவார்கள். அநாதைப் பெண்களும் விடுதிகளில் சேர்க்கப்படு வார்கள். காலை எட்டு முதல் பதினொரு மணிவரையிலும், மாலை மூன்று மணி முதல் ஐந்து மணிவரையிலும் இவர்கள் சேர்க்கப்படு வார்கள். உண்மையில் உதவி பெறத்தக்க ஏழைகளே சேர்க்கப்படு வார்கள். பள்ளிகளில் உதவிச் சம்பளம் பெறுவதற்காக வசதியுள்ள பெற்றோரும் பொய் கூறி அரசாங்க உதவி பெறுவது போன்ற செயல்கள் இங்கு இடம்பெறல் முடியாது. நாங்கள் எவருடைய சான்றையும் பார்த்துச் சேர்க்கப் போவதில்லை; உண்மையான ஏழைகளைப் பார்த்தே சேர்ப்போம். அந்த முயற்சியில் உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் தேவை. எங்களது இந்த நல்ல முயற்சியை வாழ்த்தும்படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.” இவ்வாறு பேசி மங்கையர்கரசி கைகூப்பி வணங்கினாள். பொதுமக்கள் கரைபுரண்ட வெள்ளம் போல் பெரு மகிழ்ச்சி பொங்க நீண்ட நேரம் கைதட்டினர். “முத்தப்பர் வாழ்க”, “மங்கையர்க்கரசி வாழ்க”, “அறநிலையம் வாழ்க” என்று வாயார வாழ்த்தினர். அறநிலையத் திறப்பு விழாவிற்குக் கரும்பாக்கம் பண்ணையார் மகன் பாண்டியன் போயிருந்தான்; அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி களைக் கவனித்தான். முத்தப்பர் சொத்தில் முக்கால்பங்கு சொத்திருந்தும், தன் தந்தையார் நடுவூருள் பழுத்த நச்சுமரமாய் இருப்பதை எண்ணி எண்ணி வருந்தினான். தன் ஊர் மக்களுக்கும் சேரி மக்களுக்கும் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று கவலைப்பட்டான்; படிப்பில் ஆர்வம்கொண்ட செந்தாமரை போன்ற ஏழைப்பெண்களைப் போரூர்ப் பள்ளியில் சேர்த்துவிட விரும்பினான். அவனைப் போலவே அழகாபுரி அடிகளும் திறப்பு விழாவிற்குச் சென்றிருந்தார். அவருடன் அழகாபுரிச் செல்வர் சிலரும் சென்றிருந்தனர். விழா முடிந்து திரும்பி வரும்போது அடிகள் முத்தப்பரின் முற்போக்கு அறிவை வியந்து பாராட்டினார்; அவருடன் வந்த செல்வரும் உள்ளம் நெகிழ்ந்தனர்; “நாமும் இவ்வாறு ஏழை மக்களுக்கு நலன் செய்ய வேண்டும்” என்று பேசிக்கொண்டனர். “நம்மிடமுள்ள அநாதைப் பிள்ளைகளையும் அநாதைப் பெண்களையும் நாளையே போரூர்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும்” என்று அடிகள் கூறினார். இவ்வாறே விழாவிற்கு வந்திருந்த ஒவ்வொரு கிராமத் தாரும் முத்தப்பர் அறநிலையத்தைப் பாராட்டிப் பேசிக்கொண்டே சென்றனர். 13. அறநிலைய வேலைத் தொடக்கம் தொடக்க விழா நடைபெற்ற மறுநாள் பல சிற்றூர்களிலிருந்து அநாதைப் பிள்ளைகளும் சேரிப் பிள்ளைகளும் அறநிலைய அலுவலகத்தின்முன் கூடியிருந்தனர். அப்பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்த பெற்றோரும் மற்றோரும் குழுமியிருந்தனர். அழகாபுரி அடிகளும் சில பிள்ளைகளோடு அங்கு வந்து சேர்ந்தார். கரும்பாக்கம் சேரிப்பள்ளி ஆசிரியை அன்னக்கிளியும் சில பெண்களோடு அங்கு வந்திருந்தாள். தாமரைக்கண்ணி அவர்கள் எல்லோரையும் பள்ளி மண்டபத்தில் அமரச் செய்தாள்; ஒவ்வொருவராகச் சீட்டுக் கொடுத்து அனுப்பினாள். அலுவலகத்தில் முத்தப்பர், நக்கீரன், மங்கையர்க்கரசி ஆகிய மூவரும் இருந்தனர்; பிள்ளைகளைத் தேர்ந்தெடுக்கும் வேலையில் ஈடுபட்டனர். முதலில் அழகாபுரி அடிகள் வரவேற்கப்பட்டார். அவரது தொண்டினை ஐந்து ஆண்டுகளாக அறிந்திருந்த முத்தப்பர் அவரை மிக்க மரியாதையோடு வரவேற்றார். அடிகளார் தம்மிடம் ஐந்தாம் வகுப்பு முடியப் படித்திருந்த அநாதைப் பெண்கள் ஐவரையும் ஆண்கள் ஐவரையும் அவர்களுக்குக் காட்டினார். அவர் பதின்மரும் ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அடிகள் முத்தப் பரையும் மங்கையையும் உளமாரப் பாராட்டினார். முத்தப்பர் அடிகளுக்கு நக்கீரனை அறிமுகப்படுத்தினார்; நக்கீரனுக்கு அடிகளார் செய்து வந்த தொண்டினை விளக்கினார். நக்கீரன், “அடிகளே, பெற்றோர் இல்லாது பிச்சையெடுக்கும் பிள்ளைகளையும் வறுமைக் கொடுமையால் பிச்சையெடுக்கும் பிள்ளைகளையும்— இவ்வாறே நாதியற்ற பெண்களையும் பிழைக்க வழியில்லாத பெண்களையும் வசதியற்ற கைம்பெண்களையும் இங்கு வரச்செய்யுங்கள். இவர்களுக்காவே இந்த அறநிலையம் தொடங்கப் பெற்றுள்ளது. இது வெற்றிபெற உங்கள் ஒத்துழைப்புத் தேவை.” என்று கூறி வணங்கினான். அடிகளார் அவனை ஆசிர்வதித்து விடை பெற்றுச் சென்றார். அன்னக்கிளி, செந்தாமரை போன்ற தன் மாணவிகள் ஐவரை அழைத்துக்கொண்டு வந்தாள். செந்தாமரையின் முகமும் பேச்சும் அனைவரையும் கவர்ந்தன. மங்கை மிக்க மகிழ்ச்சியோடு அவளைத் தட்டிக்கொடுத்தாள்; “நீ நன்றாகப் படி. இங்குள்ள பெண்கள் பிரிவில் நீயே முதல் மாணவியாக இருந்து கவனித்துக்கொள்” என்று கூறினாள். செந்தாமரையின் முகம் உண்மைச் செந்தாமரையாகவே மலர்ச்சி கொண்டது. மங்கை அன்னக்கிளியைப் பார்த்து, “உங்களுக்கு எங்கள் தொண்டில் நம்பிக்கை இருக்குமாயின், நீங்கள் இங்கு வந்து ஆசிரியையாகப் பணியாற்றலாம். இன்னும் உங்களைப் போன்ற பலர் எங்களுக்குத் தேவை. தக்கவர் இருந்தால் அவர்களையும் அழைத்து வாருங்கள்” என்று மலர்ச்சியோடு பேசினாள். அன்னக்கிளியின் எண்ணமும் அதுதான். அடுத்து, ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வந்த அநாதைப் பெண்கள் பல வகுப்புக்களில் சேர்க்கப்பட்டனர். அநாதைப் பிள்ளைகள், சேரிப்பிள்ளைகள், பிற்பட்ட பல வகுப்புகளைச் சேர்ந்தவர்கள்-இவ்வாறு இருநூறு பிள்ளைகள் பல வகுப்புக்களில் சேர்க்கப்பட்டனர். தாமரைக்கண்ணியும் மங்கையும் தங்களோடு எல்.டி. படித்த, தங்களைப் போலவே முற்போக்கு எண்ணங்கொண்ட பெண்கள் நால்வரை மேல் வகுப்புக்களுக்கு ஆசிரியைகளாக அமர்த்தினர்; அன்னக்கிளி அழைத்து வந்த ஆசிரியைகள் நால்வரையும் கீழ் வகுப்புக்களுக்கு ஆசிரியைகளாக அமர்த்தினர். கோவிந்தன் ஆசிரியராகவும் பிள்ளைகளின் விடுதிக் காவலராக வும் நியமனம் பெற்றார். திருப்போரூரிலும் சுற்றுப்புறச் சிற்றூர்களிலும் பிச்சையெடுத்து வந்த இருபது வயதுக்கு மேற்பட்டு நாற்பது வயதுக்கு உட்பட்ட பெண்களும் அநாதைப் பெண்களும் விடுதியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நூல் நூற்றல், கீற்று முடைதல், பாய் பின்னுதல், அப்பளம் தயாரித்தல், ஊறுகாய் போடுதல், துணி தைத்தல் முதலிய சிறிய தொழில்களைக் கற்பிக்க வசதி செய்யப்பட்டது. சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து இவ்வேலைகளைத் திறம்படச் செய்துவந்த ஏழை மக்கள் ஆசிரியர்களாக அமர்த்தப்பட்டனர். திறப்புவிழா நடந்த ஒரு மாதத்திற்குள் மருத்துவமனையும் பிள்ளைபேற்றுமருத்து மனையும் பணிபுரியத் தொடங்கின. தொண்டு புரிவதையே சிறப்பாக மதித்த ஆண் மருத்துவரும் பெண் மருத்துவரும் தாதிமாரும் நியமனம் பெற்றனர். முத்தப்பர் முன் ஏற்பாட்டுடன் கட்டி முடித்த மனைகளில் அவரவர் குடி புகுந்தனர். சென்னை மாநில மருத்துவ உயர் அலுவலர் பரஞ்சோதி என்பவர் அந்த இரண்டு மருத்துவமனைகளையும் திறந்து வைத்தார். அவர் முத்தப்பரின் மிக நெருங்கிய நண்பர். அவரால் தேர்ந்தெடுக்கப் பெற்ற மருத்துவரும் தாதிமாருமே முத்தப்பரால் அமர்த்தப்பட்டனர். அம்மனைகள் திறக்கப்பெற்ற அன்று திருப்போரூர் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பல கிராமப் பெண்களும் ஆண்களும் திரளாகக் கூடி விழாவைச் சிறப்பித்தனர். மணம் செய்துகொண்ட பெண்கள் பிள்ளைப் பேற்று மருத்துவமனையைக் கண்டு பெரு மகிழ்ச்சி கொண்டனர். அங்கு கூடியிருந்த ஆண்களும் பெண்களும் முத்தப்பரின் உண்மைத் தொண்டினை உளமாரப் பாராட்டினர். கரும்பாக்கம் பண்ணையார் மகன் பாண்டியன் வந்து முத்தப்பரைப் பார்த்தான். முத்தப்பர் அவனை நக்கீரனுக்கும் மங்கைக்கும் அறிமுகம் செய்வித்தார். அவன் தன் தந்தையின் இழிந்த மனப்போக்கையும் தான் செய்ய விரும்பும் பொதுநலப் பணியையும் விளக்கினான்; அவர்கள் செய்து வரும் தொண்டை வானளாவப் புகழ்ந்தான். முத்தப்பரும் மற்றவரும் தங்களோடு சேர்ந்து ஒத்துழைக்கும்படி அவனை வேண்டிக்கொண்டனர்; அவனை அழைத்துச் சென்று ஒவ்வோர் இடத்தையும் காட்டினர். பெண்கள் விடுதியில் இருந்த செந்தாமரை அவனைப் பார்த்ததும் முகம் மலர்ந்தாள். பாண்டியன், முத்தப்பர் முதலிய மூவருக்கும் அவளைச் சுட்டிக்காட்டி, “இவள் எங்கள் பண்ணையாளின் மகள்; மிகச் சிறந்த அறிவு படைத்தவள். இவள் மிக விரைவில் முன்னேறுபவள். உங்கள் முயற்சிக்கு இவள் பெரிதும் உதவி புரிவாள்” என்று மகிழ்ச்சியோடு கூறினான். மூவரும் அவனது சோதிடத்தை ஆமோதித்தனர். 14. பாத்திமா அப்துல்லா என்பவன் கரும்பாக்கத்தில் நெசவு வேலை செய்து வந்தான். அவன் மனைவி பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் குழந்தையைப் பெற்று இறந்துவிட்டாள். அவன் பத்து ஆண்டுகளாக வறுமையோடு போரிட்டுக்கொண்டு அப் பெண்ணை வளர்த்து வந்தான். அவள் பெயர் பாத்திமா என்பது. அவள் அச் சிறு வயதில் வீட்டு வேலைகளையும் சமையல் வேலையையும் செய்துவந்தாள். அவன் ஓராண்டிற்கு முன் கடுங் காய்ச்சலால் ஒரு மாத காலம் துன்புற்றான். தொழில் செய்ய இயலாமையால் பணமுடை ஏற்பட்டது, அதனால் அவன் பண்ணையாரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கினான். ஒரு மாதம் கழிந்த பிறகு அவன் உடல் குணமடைந்தது. ஆயினும் அடுத்த மாதம் முழுதும் அவனால் வேலை செய்ய முடியவில்லை. அதற்கு அடுத்த மாதம் முதல் அவன் வேலை செய்யத் தொடங்கினான். ஆயினும் அவனது வருவாய் உணவுக்கே போதவில்லை. இந்த நிலையில் பாத்திமா தன் பக்கத்து வீட்டுப் பெண்களின் உதவியால் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டாள்; செந்தாமரையைப் போலவே படித்து முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆவல் அவளுக்கு இருந்தது. அவளது ஆவலைக் கண்ட அடுத்த வீட்டுப் பெண்கள் அவளுக்கு அன்போடு பாடம் கற்பித்தனர்; தங்கள் புத்தகங்களைத் தந்து அவள் அறிவை வளர்த்தனர். பாத்திமாவின் கையெழுத்து முத்துப்போல் இருந்தது. கரும்பாக்கம் பண்ணையார் பத்து ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்தார். அவரது தமக்கையாரே வளமனையைப் பார்த்துவந்தார். அந்த அம்மையார் பாண்டியனைத் தாய்போல் பேணி வளர்த்துவந்தார். பண்ணையார் மனைவி இல்லாத குறையாலும் தீய பண்புகளாலும் செங்கற்பட்டில் ஒரு பாட்டுக்காரியை வைப்பாக வைத்திருந்தார். அவள் அவரைப் பலவகையிலும் மயக்கிப் பெரும்பொருள் கவர்ந்துவந்தாள். அவ்விருவரும் உயர்ந்த மதுவகைகள் குடிப்பதில் கைதேர்ந்தவர்கள். பண்ணையார் பணம் இவ்வாறு பாழாகிக் கொண்டிருந்தது. ஒருநாள் பண்ணையார் தம் கணக்கப்பிள்ளையைப் பார்த்து, உள்ளூரில் கடனைத் திருப்பிக் கொடாதவர் யார் என்பதை விசாரித்தார். கணக்கப்பிள்ளை ஏடுகளைப் புரட்டிப் பார்த்தான்; “எல்லோரும் வட்டி கட்டிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் நெசவாளி அப்துல்லா மட்டும் வட்டியும் கட்டவில்iல” என்றான். உடனே பண்ணையாரின் முகம் சிவந்தது; “அந்தப் பிச்சைக்கார நாயை இங்கு உடனே வரச்சொல்” என்ற சொல்லி, எட்ட நின்ற இருளனைப் பார்த்தார். இருளன் காற்றாய்ப் பறந்தான். சிறிது நேரத்தில் அப்துல்லா வந்து பண்ணையார் முன் நின்று வணங்கினான். “அடே அப்துல்லா, ஓராண்டுக்கு முன் வாங்கிய கடனை ஏன் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை?” “எசமான், எனக்குக் குறைந்த வருமானமே கிடைத்து வருகிறது. அதனால் வட்டியும் கட்ட முடியவில்லை. என் உடல் நலமும் செம்மைப்படவில்லை. இன்னும் ஓராண்டிற்குள் எப்படியும் உங்கள் கடனைத் தீர்த்துவிடுவேன். பசமான், பெரிய மனம் வைத்து இந்த ஏழையைக் காப்பாற்ற வேண்டும்,” என்று கூறி அப்துல்லா பணிந்தான். “டேய், பிச்சைக்கார நாயே, ஏதோ காய்ச்சலால் துன்பப் பட்டாய் என்று கடன் கொடுத்தோம். அதை நாணயமாகக் கட்ட வேண்டாமா? உன் வறுமை என்றுந்தான் இருக்கும். அது தொலைவது எப்போது? என் கடன் அடைவது எப்பொழுது?” “கோபிக்காதீர்கள் எசமான், நான் எப்படியும் உங்கள் கடனை ஓராண்டிற்குள் தீர்த்துவிடுவேன்.” “அது முடியாது உன் குடிசை 25 ரூபாய் பெறாது. உன் பசுவை விற்றாவது நாளையே என் கடனைக் கட்டிவிடு. விற்க முடிய வில்லையானால் அதை என்னிடம் சேர்த்துவிடு. நாளை மாலைக்குள் இது செய்யத் தவறினால், உன் குடிசை கொளுத்தப்படும்; நீ ஊரிலிருந்து விரட்டப்படுவாய். போ. என் முன் நில்லாதே,” என்று மிக்க கோபத்துடன் பேசினார். அவருடன் மேலும் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த அப்துல்லா கண்ணீர் வடித்துக்கொண்டே தள்ளாடித் தள்ளாடி நடந்தான். அவன் மகள் பாத்திமா பசுவுக்கு வைக்கோல் போட்டுக் கொண்டிருந்தாள். “பாத்திமா, நாம் தொலைந்தோம்” என்று சொல்லிக் கொண்டே அப்துல்லா `கோ’வென்று அழுதான். சிறுமி பாத்திமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன அப்பா சொல்லுகிறீர்கள்? ஏன் இப்படி அழுகிறீர்கள்?” என்று துடிப்புடன் கேட்டாள். “மகளே, நான் என்னவென்று சொல்வது! சென்ற ஆண்டு பண்ணையாரிடம்நூறு ரூபாய் கடன் வாங்கினேன் அல்லவா? நமது பசுவை விற்றாவது நாளை மாலைக்குள் அக்கடனைத் தீர்க்க வேண்டுமாம், அல்லது பசுவை அவர் பண்ணையில் சேர்த்துவிட வேண்டுமாம்; தவறினால் நமது குடிசை நாளை இரவு கொளுத்தப்படும் என்று பண்ணையார் கூறிவிட்டார். பாத்திமா, நாம் எங்கே போய்ப் பிழைப்பது!” தந்தை சொன்னதைக் கேட்டுப் பாத்திமா கண்ணீர் விட்டாள்: “அப்பா, அல்லா(ஹ்) நம்மைக் காப்பாற்றுவார். நீங்கள் நமது பசுவைப் பண்ணையாருக்கே கொடுத்துவிடுங்கள். இந்தக் குடிசையும் நமக்கு வேண்டா. இக் கொடியவர் ஊரில் வாழ்வதை விட அயலூர் சென்று பிழைப்பது நல்லது” என்று அவ்வறிவுடைச் சிறுமி தந்தைக்கு ஆறுதல் கூறினாள். அன்று இரவு அப்துல்லா உறக்கமில்லாமல் திண்ணையில் புரண்டுகொண்டிருந்தான். சிறுமி பாத்திமாவுக்கும் உறக்கம் வரவில்லை. எங்கே போவது-எப்படிப் பிழைப்பது என்று அவள் எண்ணத் தொடங்கினாள். திடீரென்று ‘மரகதவல்லி அறநிலையம்’ நினைவு அவளுக்கு வந்தது. தான் அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படிக்கலாம், தன் தந்தை அங்குள்ள தொழிற்கூடத்தில் ஒரு நெசவாளியாக இருந்து பிழைக்கலாம் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. அவள் உடனே குதித்தெழுந்தாள்; “அப்பா, அப்பா” என்று அழைத்துக் கொண்டே தன் தந்தையிடம் ஓடினாள். “என்ன அம்மா?” என்று கேட்டுக்கொண்டே அப்துல்லா எழுந்து உட்கார்ந்தான். “அப்பா, நாம் பிழைக்க வழி கண்டுபிடித்துவிட்டேன். திருப்போரூரிலுள்ள அறநிலையப் பள்ளியில் நான் சேர்ந்து படிப்பேன். அங்குள்ள தொழிற்கூடத்தில் நீங்கள் வேலை செய்து பிழைக்கலாம். நமது ஆசிரியை அன்னக்கிளி அம்மாள் அங்குத்தான் இருக்கிறார்கள். அவர்கள் நம்மை அங்குச் சேர்த்துவிடுவார்கள். குப்பன் மகள் செந்தாமரை அங்குத்தான் படிக்கிறாள்” என்று பாத்திமா மகிழ்ச்சியோடு கூறினாள். அப்துல்லா அதுகேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். மறுநாள் அப்துல்லா நீண்ட நேரம் யோசித்தான். அவன் பசுவின் பாலை விற்று ஓரளவு பிழைத்துவந்தான். தனக்கு உதவி செய்துவந்த அப் பசுவை விட்டுப் பிரிய அவன் மனம் இடந்தரவில்லை. அவன் அதனைப் பார்த்துக் கண்ணீர் விட்டான். அன்று மாலை பண்ணையார் இருளனுடன் அப்துல்லாவின் குடிசை முன் வந்து நின்றார். எமனைக் கண்ட உயிர் நடுங்குவதுபோலப் பண்ணையாரைக் கண்ட அப்துல்லா நடுநடுங்கினான். பண்ணையார் கையில் சவுக்கு இருந்தது. “என்ன முடிவு செய்தாய்?” என்று பண்ணையார் அதட்டிக் கேட்டார். “எசமான், என்மீது இரக்கம் கொண்டு ஓராண்டு பொறுத்திருக்க வேண்டுகிறேன்” என்று பணிவுடன் கூறிக் கும்பிட்டான். “பொறுக்க முடியாது. ஒன்று பணத்தைக் கொடு; அல்லது பசுவைக் கொடு” என்று அதட்டினார். அப்துல்லா விழி நீர்வாரப் பசுவினிடம் சென்றான்; அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். பாத்திமாவும் தேம்பித் தேம்பி அழுதாள். பண்ணையார் கடுங்கோபம் கொண்டார்; “டேய் இருளா, பசுவை அவிழ்த்துக் கொண்டுபோ” என்று கூறினார். இருளனுக்குத் தாங்கமுடியாத கோபம் வந்தது. ஆயினும் அவன் என்ன செய்வான்! தனி ஏழைக்குக் கோபம் வந்து பயன் என்ன? அவன் தன்னுள் பண்ணையாரைச் சபித்துக் கொண்டே பசுவின் கட்டை அவிழ்த்தான். பசு `அம்மா’ என அலறியது. அப்துல்லாவும் பாத்திமாவும் அதனைப் பிரிய முடியாமல் கண்ணீர்விட்டுக் கதறினர். அப்பரிதாபக் காட்சிiயக் கண்ட இருளன் கண்களிலும் நீர் துளிர்த்தது. அவன் பசுவை ஓட்டிக்கொண்டு போனான். அப்துல்லா தன்னை மறந்தான்; அவனுக்கு அடக்க முடியாத கோபம் வந்தது. பண்ணையாரை வெறிக்கப் பார்த்து, “எசமான், ஏழைகளை இப்படி வாட்டி வதைக்கும் நீங்கள் வாழவா போகிறீர்கள்? `ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்’ என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் பணச் செருக்கால் நீங்கள் செய்துவரும் அக்கிரமங்களுக்கு முடிவு வந்தே தீரும்” ,என்றான். “போடா பிச்சைக்கார நாயே, வாங்கிய கடனைக் கொடுக்க வழி யில்லை; பேச்சுப் பேசுகிறான்” என்று கூறிக்கொண்டே சவுக்கை ஓங்கினார். அதைக் கண்ட பாத்திமா ஓவென அலறினாள். பண்ணையார் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கடுங்கோபத்துடன் அவ் விடத்தைவிட்டு அகன்றார். இந்த நிகழ்ச்சியை இருளன் வாயிலாகப் பாண்டியன் அறிந்தான். அவன் உள்ளம் மிகவும் வருந்தியது. மறுநாட் காலை அவர்களைத் திருப்போரூர்க்கு வரும்படி இருளன் வாயிலாகச் சொல்லி யனுப்பினான்; தன் தந்தை அக் குடும்பத்திற்கு இழைத்த தீமையை மங்கையிடம் எடுத்துக் கூறினான். அதனைக் கேட்ட மங்கை மிக்க வருத்தம் கொண்டாள்; தந்தைக்கும் மகளுக்கும் ஆறுதல் கூறினாள். பாத்திமாவைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டாள்; அப்துல்லாவைத் தொழிற்கூடத்தில் பணியாற்றும்படி ஏற்பாடு செய்தாள். பாண்டியன் அவளை உளமாரப் பாராட்டி விடைபெற்றான். 15. அறநிலைய வளர்ச்சி திருப்போரூரில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நாளன்று பெருங் கூட்டம் கூடும். பிச்சைக்காரர் பலரும் அங்குக் கூடுவர். நக்கீரனும் மங்கையர்கரசியும் பிச்சைக்கார இளைஞர் பலரைச் சந்திப்பர்; அவர்தம் வரலாறுகளைக் கேட்பர்; தாம் மானமார வாழவேண்டும் என்று உண்மையாகவே விரும்பும் பிச்சைக்கார இளைஞர்களைத் தனி விடுதியில் சேர்த்துக்கொண்டனர். அந்த இளைஞர்கள் இருபது வயதிற்கும் முப்பது வயதிற்கும் இடைப்பட்டவர்கள். வயல்வேலை, தோட்ட வேலை, காவல் வேலை முதலிய பலதுறை வேலை களிலும் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இரவு ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை அந்த இளைஞர் களுக்கு ஆசிரியர் கோவிந்தன் எழுத்தறிவிக்கலானார். இவ்வாறே ஆசிரியை அன்னக்கிளி பெண்களுக்குக் கல்வி புகட்டி வந்தாள். ஒருநாள் முத்தப்பர் முதலியோர் முன்னிலையில் பிள்ளைகள் போட்டிப் பேச்சு நடைபெற்றது. ஆண்பிள்ளை களில் இரண்டொருவர் நன்றாகப் பேசினர். பெண்பிள்ளை களில் செந்தாமரையும் திலகவதி என்ற பெண்ணும் திறம்படப் பேசினர். வாரந்தோறும் இவ்வாறு பிள்ளைகளுள் பேச்சுப் போட்டி நடைபெறத் தொடங்கியது. ஒவ்வொரு வகுப்பிலும் இப்போட்டிப் பேச்சு பழக்கப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அறநிலைய உந்து வண்டியில் நக்கீரன், மங்கை, ஆசிரியர் கோவிந்தன், அன்னக்கிளி முதலிய சிலர் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றனர்; பயிர்த் தொழில், கைத் தொழில், கிராம சுகாதாரம், ஊரார் ஒற்றுமை, கல்வியின் சிறப்பு, நல்ல ஒழுக்கம், சிக்கன வாழ்க்கை இவற்றைப் பற்றிப் பேசினர். ஒவ்வோர் ஊர் மணியக்காரரும் தத்தம் ஊரில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அவர்களோடு ஒத்துழைத்தனர். ஒவ்வொர் ஊரிலும் மங்கையைப் பார்ப்பதற்காகவே பெண்களும் ஆண்களும் கூடினார்; அவளைக் கண் கண்ட தெய்வமெனப் பாராட்டினர். வறுமையில் வாடிய சிறந்த கைத்தொழிலாளிகள் ஆசிரியராக இருந்து நூல் நூற்றல், நெசவு நெய்தல், பாய் பின்னுதல், கூடை முடைதல், அப்பளம் தயாரித்தல், ஊறுகாய் தயாரித்தல், துணி தைத்தல் முதலிய கைத் தொழில்களைச் செய்தமையாலும், வயது வந்த –பொறுப்புணர்ந்த பெண்களே அவற்றைக் கற்றுக்கொண்டமை யாலும், அத்தொழில்கள் விரைவில் வளர்ச்சிபெற்றன. கைத்தொழில் பொருள்களை விலைப்படுத்துவதில் வல்லவரான கோபாலன் என்பவர் அவ்வேலைக்கென்றே அமர்த்தப்பட்டார். அவர் இத்துறையில் பல ஆண்டுகள் அநுபவம் பெற்றவர். அவர் வடநாட்டுப் பல நகரங் களுக்கும் சென்று வணிகரோடு பேசி அப்பொருள்களை விலைப்படுத்த முயன்றார். இங்ஙனம் அனைவர் ஒத்துழைப்பாலும் தொழிற்கூடத்தில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் “மரகதவல்லி அறநிலையம், திருப்போரூர், செங்கற்பட்டு மாவட்டம், சென்னை மாநிலம்” என்னும் முகவரியுடன் பல நகரங்களுக்கும் அனுப்பப்பட்டன. அங்கு அவை சிறிது சிறிதாக விலையாகத் தொடங்கின. குறைந்த செலவில் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட அப்பொருள்கள் மிகக் குறைந்த லாபத்தோடு விற்கப்பட்டன. ஆதலால் ஓராண்டிற்குள் அவை பொதுமக்கள் பாராட்டிற்கு உரியவை ஆயின.. வட இந்தியாவில் பல இடங்களிலிருந்தும் “ஊறுகாய் தேவை”,, “பாய்கள் தேவை” என்று கடிதங்கள் குவியலாயின. அதனால் தொழிற்கூடத்திலும் ஏழைகள் பலர் தொழிற் பயிற்சி பெற்றனர். இங்ஙனம் அறநிலையத்தில் தொடங்கப்பெற்ற தொழில்கள் வளர்பிறைபோல வளரலாயின. திருப்போரூரின் சுற்றுப்புற ஊர்களில் இருந்த மக்கள், தொடக்கத்தில் ‘பிச்சைக்காரிகள் தயாரிக்கும் பொருள்கள்’ என்று எண்ணி அப்பளம், ஊறுகாய் முதலியனவற்றை வாங்காமலிருந்தனர்; அவற்றின் மணத்தையும் குணத்தையும் அவை மிகுதியாக விலையாவதையும் கேள்வியுற்ற பிறகு அவற்றை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினர். அவற்றின் ஏற்றத்தை உணர்ந்து, அவற்றையே தொடர்ந்து வாங்கலாயினர். அறநிலையத்தில் சேர்க்கப்பெற்ற பிச்சைக்கார இளைஞர் ஐம்பதுபேர் முத்தப்பருக்கு உரிமையாக இருந்த ஐம்பது ஏக்கர் தரிசு நிலத்தைப் பண்படுத்தத் தொடங்கினர்; சிறந்த எருக்கள் இடப்பட்டன. முத்தப்பரின் மேற்பார்வையில் ஒரு பகுதியில் வாழை, மா, தென்னை, பலா வைத்துப் பயிராக்கப்பட்டன; மற்றொரு பகுதியில் பலவகைக் காய்கறிகள் பயிர் செய்ய நிலம் பண்படுத்தப்பட்டது. நான்கு பெரிய கிணறுகள் எடுக்கப் பட்டன. மோட்டார் வைத்துத் தண்ணீர் நிலத்திற்குப் பாய்ச்சப்பட்டது. வயிற்றுக்குச் சோறின்றி வாடிய பிச்சைக்கார இளைஞர்கள் அறநிலையத்தாரது அறச்செயலை எண்ணி உள்ளம் குழைந்து உண்மையாகப் பாடுபட்டனர். அதனால் அவர்கள் உழைப்பு நிறைந்த பலனைக் கொடுக்கத் தொடங்கியது. மாதத்திற்கு ஒருமுறை——கார்த்திகை நாளில் மட்டும் திருப்போரூரில் பல ஊர் மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் அறநிலையம் ஏற்பட்ட பிறகு—— அதன் சிறப்பைச் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்த பிறகு——நாட்டின் பல பகுதிகளி லிருந்தும் பலதுறை அறிஞர்களும், பொது மக்களும், அரசாங்க அலுவலரும் நாள்தோறும் வந்து பார்த்தபடி இருந்தனர். அறநிலைய வேலைகள் அனைவர் உள்ளங்களையும் கவர்ந்தன. 16. விதியின் விளையாட்டா? அறநிலைய வேலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கழிந்து விட்டன. கரும்பாக்கம் பண்ணையார் போக்கு பழைய படியே இருந்து வந்தது. அண்மையில் நடைபெறும் அறச்செயல் களைக் கவனித்தும் ஊரார் அவற்றைப் புகழக்கேட்டும் அவர் அறிவு திருந்தவில்லை. இப்படியே விட்டுக்கொண்டே போனால் பண்ணையின் சொத்துப் பாழாகி விடும் என்பதைப் பாண்டியன் உணர்ந்தான்; தந்தையைக் கூடுமான வரையில் திருத்த முயலவேண்டும் என்று எண்ணினான். ஒருநாள் அவன் தந்தையாருடன் பயிரிடுதல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். அவ்வமயம் பாண்டியன் தந்தையைப் பார்த்து, “அப்பா, திருப்போரூர்ப் பண்ணையார் இரண்டு ஆண்டுகளாக அறநிலையத்தைத் தோற்றுவித்து நாடு புகழ நல்ல தொண்டுகளைச் செய்து வருகிறார். நாமோ எச்சில் கையாற் கூட.க் காக்கையை விரட்டாமல் இருக்கிறோமே! பொதுமக்கள் நம்மைப் பற்றி ஏளனமாகப் பேசுகின்றனர். நம் ஊர் மக்களுக்குச் சில நன்மைகளை யாவது செய்ய வேண்டாவா?” பண்ணையாரின் முகம் சிவந்தது. அவர் தம் மகனை முறைத்துப் பார்த்தார்; “என்னடா உளறுகிறாய்! இந்தப் பண்ணையை நம் முன்னோர் அரும்பாடுபட்டு வளர்த்தனர். ஊர் நாய்களுக்கு உதவி செய்வதற்காகவா அவர்கள் இதனைக் காத்துப் பெருக்கிவந்தனர்? முத்தப்பன் ஒரு பைத்தியக்காரன். அவன் மகள் அவனைவிடச் சிறந்த பைத்தியக்காரி. முன்னோர் தேடிவைத்த பணத்தை இப்படி வீணாக்கலாமா?” என்று கடுகடுத்தார். அவர் பேச்சைக் கேட்ட பாண்டியன் நகைத்தான்: “அப்பா, நமது ஊரில் நம்மைத் தவிர மற்ற எல்லோரும் ஏழைத் தொழிலாளிகள், உழவர்கள். நமது பண்ணையில் வேலை செய்யும் சேரி மக்கள் போதிய உணவுகூட இல்லாமல் வாடுகின்றனர். அவர்கள் பிள்ளை களுக்குப் படிக்க வசதியில்iல; அவர்கள் நல்ல வீடுகளில் வாழ முடியவில்லை; உடைவசதியும் கிடையாது; அறிவு விளக்கத்திற்கும் வழியில்லை. அவர்களை முன்னுக்குக் கொண்டு வராமல் அவர்களின் உழைப்பைப் பெறுவது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா?” பண்ணையார் கைகொட்டிக் கலகலவென்று சிரித்தார்; “என் முட்டாள் மகனே, சென்ற பிறவியில் நல்லது செய்தவன் இந்தப் பிறவியில் வாழ்கிறான். சென்ற பிறவியில் தீயன செய்தவர் இப்பிறவியில் ஏழ்மையிலும் கொடுமையிலும் துன்புறுகின்றனர். இது ஆண்டவன் கட்டளை. இது விதியின் விளையாட்டு. இதனை எதிர்த்து நீ அவர்களுக்கு உதவி செய்வது ஆண்டவன் கட்டளையை எதிர்ப்பதாகும். அதனால் நீ அடுத்த பிறவியில் துன்பத்தை அடைய நேரிடும்” என்று உருக்கமாக எடுத்துரைத்தார். பண்ணையார் போதிய படிப்பு இல்லாதவர். அவர் நம்பியதையே கூறினார். பாண்டியன் அவரைப் பரிதாப உணர்ச்சிnயாடு பார்த்தான்; அவரது அறியாமைக்கு இரங்கினான்; “அப்பா, தாங்கள் பண்ணை யாராயிருக்க முற்பிறவியில் ஏதோ நல்லது செய்திருக்க வேண்டும் அல்லவா?” “ஆமாம்.” “என்ன நன்மை செய்துவிட்டீர்கள்?” “எனக்குத் தெரியாது” “என்ன அப்பா, நீங்கள் செய்த நல்லது உங்களுக்கே தெரியாதா?” “ஆமாம். தெரியாது.” “ஏழைகளும் வறியவரும் என்ன தீங்கு செய்தார்கள்?” “தெரியாது.” “இச் செய்திகளை உங்களுக்குக் கூறியவர் யார்?” “நூல்களில் எழுதியிருப்பதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.” “அப்பா, இதை நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?” “ஆம். நம்புகிறேன்” அதற்கு மேல் அவரிடம் பேசப் பாண்டியன் விரும்பவில்லை. மூன்று மாதங்கள் கடந்தன. பண்ணையாரிடம் வேலை செய்துகொண்டிருந்த இருளன் ஓர் ஏக்கர் நிலத்தை விலை கொடுத்து வாங்கினான்: பிறகு வேலையிலிருந்து விலகிக் கொண்டான். அவன் ஓர் ஏக்கர் நிலம் வாங்கியதை அறிந்த பண்ணையார் சொல்ல முடியாத வியப்பை அடைந்தார்; தம் மகனை அழைத்தார்; “கேட்டாயா செய்தியை? நம் இருளனுக்குக் குதிரைப் பந்தயத்தில் யோகம் அடித்ததாம்; இரண்டாயிரம் ரூபாய் கிடைத்ததாம். அதைக் கொண்டு ஓர் ஏக்கர் நிலத்தை வாங்கிவிட்டானாம். அவன் இனி நம்மிடம் வேலை பார்க்க மாட்டானாம். அவன் போன பிறப்பில் செய்த நல்வினையால் இந்த உயர்வு கிடைத்திருக்கிறது” என்று மகிழ்ச்சியோடு கூறினார். பாண்டியன் கலகலவென்று நகைத்தான். பண்ணை யாருக்கு ஒன்றும் புரியவில்லை. “பாண்டியா, ஏன் நகைக்கிறாய்?” “அப்பா, உங்கள் அறியாமையை நினைந்து நகைக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள்.” “என்ன எனது அறியாமை?” “இருளன் முற்பிறப்பில் பாவம் செய்ததால் துன்பப்படுவ தாகச் சொன்னீர்கள். அவனுக்கு நான்தான் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தேன். ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்தேன் அவன் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் அதைப் பெற்றான் என்று நீங்கள் கூறுகிறீர்கள். அப்பா, ஒவ்வொர் ஏழைக்கும் இவ்வாறு உதவி செய்தால், அவர்களது பாவம் பறந்துவிடும் அல்லவா? இந்த உண்மையை உணராமல், யாரோ எழுதிவைத்த குருட்டுக் கதையை நீங்களும் நம்பிக்கொண்டிருப்பதும் அதன்படி பேசுவதும் அறியாமை அல்லவா?” பண்ணையார் மிரள மிரள விழித்தார்; “நம்முடைய முன்னோர் எழுதியிருப்பது தவறா?” என்று கோபத்தோடு கேட்டார். பாண்டியன் புன்சிரிப்போடு, “அப்பா, நம்முடைய முன்னோர் அப்படி எழுதி வைக்கவில்லை. ஏழைகளை வாட்டித் தம்மளவில் சுகபோகங்களை அநுபவித்து வந்த முற்காலச் சுயநலவாதிகள், ஏழைகள் என்றென்றும் அடிமையாய் இருக்கவும், தங்கள் உரிமைக்குக் கிளர்ச்சி செய்யாமல் இருக்கவும் இவ்வாறு `புண்ணியம்-பாவம்’ என்று எழுதிவைத்து விட்டனர். இந்தத் தீய அறிவுரை இந்த நாட்டு ஏழைகளுக்குப் பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வந்தது. எல்லோரும் சம உரிமை கொண்டாடவருவர் என்ற அச்சத்தால்தான் தாழ்ந்த சாதிகள் கற்பிக்கப்பட்டன: புண்ணிய - பாவங்களும் கற்பிக்கப் பட்டன. இவையெல்லாம் இன்றைய சமுதாயத்தில் கல்வி கற்றோரால் தவிடு பொடியாக்கப்படுகின்றன. எது எப்படி யிருந்தாலும், இருளனது பாவம் பறந்துவிட்டதல்லவா?” என்று கூறி நகைத்தான். பண்ணையார் வாய்மூடி மௌனியானார். 17. காதல் திருமணம் அறநிலையத் தொழிற்கூடத்தில் அப்பளம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த இளம்பெண்கள் இருபது பேரில் மணிமேகலை என்பவள் ஒருத்தி. அவள் தன் பதினாறாம் வயதில் அறநிலையத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவள். அநாதைப் பெண்ணான அவள் தன் திறமை யாலும் அடக்க ஒடுக்கத்தாலும் அனைவர் கவனத்தையும் கவர்ந்தாள். திருப்போரூரில் முருகன் என்ற வேளாள இளைஞன் அறநிலையத்தில் தயாரிக்கப்பட்ட பொருள்களைத் தன் கடையில் வைத்து விற்பனை செய்துவந்தான். அவற்றால் அவனுக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. கடைவைத்த நான்கு ஆண்டுகளுள் அவன் ஒரு வீட்டை வாங்கினான்; கடையை விரிவாக்கினான்; சிறிது பசுமையாக வாழத் தொடங்கினான். தொழில் முறையாலும் நட்பு முறையாலும் அவன் அறநிலையத் திற்கு அடிக்கடி சென்று வந்தான்; நக்கீரன், மங்கை இவர்தம் சொற்பொழிவுகளைக் கேட்டு அறிவு விளக்கம் பெற்றுவந்தான்; ‘காதல் வாழ்க்கையே சிறந்தது-சாதி வேறுபாடுகள் ஒழியவேண்டும்’ என்ற அழுத்தமான எண்ணம் கொண்டான்; அவன் இந்த இரண்டு கருத்துக்களையும் தன் போன்ற இளைஞரிடம் பரப்பி வந்தான். அவன் வாரத்திற்கு ஒருமுறை அப்பளம் முதலியவற்றை வாங்கத் தொழிற்கூடத்திற்குச் செல்லுவது வழக்கம். அப்பளம் தயாரித்துவந்த பெண்களுள் ஏறத்தாழ இருபதுவயது உள்ள மணிமேகலை மீது அவனது நாட்டம் சென்றது. உள்ளூர் வணிகன் ஆதலால் மணிமேகலை அவனது தொழில் வளர்ச்சியை நன்கு அறிந்திருந்தாள். அவன் அவளிடம் கனிவோடு சில நேரங்களில் பேசுவதுண்டு. அவன் திருமணம் ஆகாதவன் என்பதை மணிமேகலை அறிவாள். இவ்வாறே முருகனும் அவளது தொழிற் திறமையை நன்கு அறிவான். மணிமேகலை கோவிலுக்குச் செல்லும்போது முருகனது கடையைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்து பேசுவான். அவளும் முகமலர்ச்சியோடு ஏதோ பேசுவாள். அவன் அவளுடன் கோவிலுக்குச் சென்று, அவளுடன் அறநிலைய வாயில் வரையில் துணையாக வருவான். இங்ஙனம் இருந்த பழக்கம் நாளடைவில் காதல் உணர்ச்சிக்கு வித்திட்டது.. ஒருநாள் மணிமேகலை கோவிலுக்குச் சென்றாள். அப்போது இரவு மணி ஏழு இருக்கும். கடையிலிருந்த முருகன் அவளுக்குத் துணையாகச் சென்றான். இருவரும் முருகப் பெருமானை உளமுருக வழிபட்டனர்; பின்பு கோவிலை வலம் வந்தனர். அப்பொழுது முருகன் மணிமேகலையின் கைகளைப் பற்றிக்கொண்டு, அவளை அன்புடன் நோக்கி, “மணி, நான் உன்னை உளமாரக் காதலிக்கிறேன். நாம் இருவரும் உறுதியாக மணம் செய்துகொண்டு வாழ்வோம் என்று முருகப்பெருமான் திருமுன் உறுதி செய்துகொள்வோம். என்ன சொல்லுகிறாய்?” என்று கேட்டான். மணிமேகலை அவனை உற்று நோக்கினாள்; அவன் உண்மையாகவே உளமாரத் தன்னை விரும்புகிறான் என்பதை உணர்ந்தாள். பாடுபட்டு உழைத்து வாழ்க்கையில் உயர்ந்துவரும் அவனை மணந்துகொள்வதால் தனது வாழ்வு சிறப்படையும் என்று எண்ணினாள்; ஆயினும் அவனைச் சில கேள்விகள் கேட்டுத் தெளிய விரும்பினாள். “அன்பரே, நீங்கள் வேளாளர்; நான் என்ன சாதி என்றே எனக்குத் தெரியாது. இளமையிலேயே தாய் தந்தையரை இழந்தேன்; அழகாபுரி அடிகளால் வளர்க்கப்பட்டேன்; பின்பு அறநிலையத் தொழிற் கூடத்திற்கு வந்து சேர்ந்தேன். இன்ன சாதியாள் என்று தெரியாத என்னை மணந்துகொள்ள உங்கள் பெற்றோர் இசைவரா? உற்றார் - உறவினர் உடன்படுவரா? நன்றாய் எண்ணிப் பார்த்து இந்த முயற்சியில் ஈடுபடுங்கள்.” “மணி, உன் வரலாற்றை நான் அறிவேன். நீ அது பற்றிக் கவலைப்பட வேண்டா. நான் என் பெற்றோரிடம் இதனைக் கூறுவேன். அவர்கள் இசையாவிட்டால், முத்தப்பரைக் கொண்டு பேசச் செய்வேன். நீ அதுபற்றிக் கவலைப்படாதே” என்று கூறி, “நீ மெய்யாகவே என்னைக் காதலிக்கிறாயா?” என்று ஆவலோடு கேட்டான். மணிமேகலையின் கன்னங்கள் சிவந்தன. அவள் முகம் மலர்ந்தது. அவள் முருகனின் கைகளைப் பற்றிக்கொண்டு நாணத் தால் தலைகுனிந்தாள். அவ்விருவரும் முருகக் கடவுள் திருமுன்பு வந்து நின்றனர்; முருகப்பெருமானை வழிபட்டனர்; வீடு திரும்பினர். முருகன் அவளை முன்போல அறநிலைய வாயில்வரை வழிவிட்டுச் சென்றான். மணிமேகலை மட்டற்ற மகிழ்ச்சியோடு புள்ளிமான் போல் துள்ளிக் கொண்டு ஓடினாள். முருகன் வழக்கம்போல் தன் கடையை மூடிவிட்டு வீட்டை அடைந்தான். முருகனது தந்தையார் வேலப்பர் விறகுக்கடை வைத்திருந்தார்; பிறந்தது முதல் ஏழ்மையிலே வளர்ந்தவர்; முருகனிடம் மெய்யன்பு உடையவர்; ஆனால் சிறுவயது முதல் சாதிப்பற்று மிகுந்தவர். முருகனது தாயாரும் தந்தையைப் போன்றவரே. பழமையில் தோய்ந்திருந்த தம் பெற்றோர் உள்ளங்களைத் திருப்பவேண்டுமே என்ற எண்ணத்தோடு முருகன் வீட்டை அடைந்தான். அப்போது அவன் தந்தையார் வீட்டில் இல்லை. அவர் கோவிலுக்குச் சென்றிருந்தார். அவன் முதலில் தன் தாயாரைச் சரிப்படுத்த நினைத்தான்; அவரிடம் தன் காதற்செய்தியை விரிவாக விளக்கினான்; மணிமேகலையைத் தவிர வேறு எவளையும் மணக்கமுடியாது என்று உறுதியாகச் சொன்னான். தன் தந்தை யாரிடம் கூறித் தன் விருப்பத்திற்கு இசையும்படி வேண்டச் சொன்னான். முருகனது தாயார் மகன் பேச்சைக் கேட்டதும் திடுக்கிட்டார்; “சாதி அறியாத பெண்ணை மணம் செய்து கொள்வதா? உறவினர் ஏளனத்திற்கு ஆளாவதா?” என்று கேட்டு அழத் தொடங்கினார். அவ்வமயம் வேலப்பர் அங்கு வந்துவிட்டார். முருகன் அவர் அடிகளில் வீழ்ந்து வணங்கினான்; “அப்பா, நீங்கள் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்” என்று கூறிக்கொண்டே அவர் கால்களைப் பற்றிக் கொண்டான். வேலப்பர் ஒன்றும் புரியாதவராய் மகனைத் தூக்கி நிறுத்தினார்; “நான் என்ன வரம் தரும் கடவுளா? உன் மனத்தில் இருப்பதைச் சொல். நல்லதா யிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்” என்றார். “அப்பா, எனக்குத் திருமணம் செய்யவேண்டும் என்று நீங்கள் அடிக்கடி சொல்லிவருகிறீர்கள் அல்லவா?” “ஆம், ஆம்.” “நான் திருமணம் செய்துகொள்ளத் துணிந்து விட்டேன்”. “மிக்க மகிழ்ச்சி. விரைவில் பெண் பார்த்து முடிவு செய்வேன்.” “அப்பா, நானே பெண்ணைப் பார்த்து முடிவு செய்து விட்டேன். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்” என்றான். தந்தையார் திடுக்கிட்டார்; “யார் அந்தப் பெண்?” என்று கேட்டார். “அப்பா, இவ்வூர் அறநிலையத் தொழிற்கூடத்தில் அப்பளம், ஊறுகாய் இவற்றைத் தயாரிப்பதில் சிறந்த பெண்ணொருத்தி இருக்கிறாள். அவளுக்கு ஏறத்தாழ இருபது வயதிருக்கும்; சிறந்த அறிவுடையவள்; நல்ல ஒழுக்கமுடையவள்; அவள் பெயர் மணிமேகலை.” “என்ன! அறநிலையத் தொழிற்கூடத்தில் உள்ளவருள் பெரும் பாலோர் முன்னாள் பிச்சைக்காரப் பெண்கள் அல்லவா? அவர்களுள் ஒருத்தியையா நீ தேர்ந்தெடுத்தாய்?” என்று தந்தையார் ஆத்திரத்துடன் கேட்டார். முருகன் நகைத்தான்; “அப்பா பிழைக்க வழி இல்லை என்றால் நீங்களும் நானும் பிச்சை எடுக்கத்தானே வேண்டும்? ஆதலால் நாம் பிறப்பில் இழிந்தவர் ஆகிவிடமாட்டோம் அல்லவா?” “என்ன உளறுகிறாய்? அவள் இன்ன சாதியென்றாவது தெரிய வேண்டாவா?” “அப்பா, சைவ வேளாளர் வகுப்பிற் பிறந்த பண்ணையார் முத்தப்பரும் அவர் மகள் மங்கையர்க்கரசி அம்மாளும் `சாதி வேறுபாடுகளைக் காண்பது தவறு, தவறு’ என்று பல கூட்டங்களில் பேசியிருப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஓயாமல் அருட்பாவைப் படிக்கும் நீங்களா சாதிகளைப் பற்றிக் கேட்பது? அப்பா, உங்கள் செயல் எனக்கு வியப்பைத் தருகிறது!” வேலப்பர் வாய்மூடி மௌனியானார். அவர் நாள்தோறும், “சாதியிலே மதங்களிலே” என்று தொடங்குகின்ற திரு அருட்பாவைப் பாடுவார்; தம் நண்பரிடமும் “சாதிகள் ஒழிய வேண்டும்” என்பதை வற்புறுத்துவார்; “சாதிகள் ஒழிந்தால்தான் ஊரில் ஒற்றுமை ஏற்படும்” என்று வாதிப்பார். மேலும் “திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆண், பெண்களின் கருத்துப்படியே திருமணம் செய்விப்பதுதான் பெற்றோர் கடமை” என்று வற்புறுத்துவார்; “பிள்ளைகளின் விருப்பத் திற்கு மாறாகப் பெற்றோர் நடந்தால் பெற்றோர் தம் பிள்ளைகளை இழத்தல் நேரிடும்” என்றும் பேசுவார். இவ்வாறு பேசிக்கொண்டிருந்த அவர் முருகன் பேச்சைக் கேட்டதும் திக்குமுக்காடினார். ‘முருகன் கூறுவது முறையே. அவன் விருப்பப்படியே திருமணம் செய்விப்பதுதான் அவனது நல்வாழ்வுக்கு ஏற்றது’ என்று அவரது உள்ளுணர்ச்சி உறுத்தியது. அவர், “முருகா, நன்றாய் நினைத்துப் பார்த்து நாளை இரவு இது பற்றி முடிவு சொல்வேன்” என்று அமைதியாகக் கூறினார். முருகன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அன்றிரவு முருகன் திண்ணையில் படுத்தான். அவனுக்கு உறக்கம் வரவில்லை. மறு திண்ணையில் தந்தையார் படுத்துக்கொண்டார். முருகன் தாயார் அவரருகில் அமர்ந்து, அவனது திருமணம் பற்றிப் பேசத் தொடங்கினார். “முருகன் விருப்பப்படி நீங்கள் திருமணம் செய்யப் போகிறீர்களா?” “அதைப்பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.” “எண்ணிப் பார்க்க என்ன இருக்கிறது? பிச்சைக்காரப் பெண்ணையா மருமகளாகக் கொள்வது?” பெரியவர் வாய்விட்டுச் சிரித்தார்; “பணக்காரி உன்னைப் பிச்சைக்காரி என்கிறாள். நீ அவளைப் பிச்சைக்காரி என்கிறாய்” கிழவர் மீண்டும் கலகலவென்று சிரித்தார். “அவள் என்ன சாதியாள் என்பதே தெரியவில்லையே!” “அதற்கு முருகன் சொன்ன பதிலைக் கேட்டாய் அல்லவா? `கடவுள் படைப்பில் ஆண்சாதி பெண்சாதி என்ற இரண்டு சாதிகள் தாம் உண்டு. மற்றவை எல்லாம் வீண்சாதிகள்’ என்று குதம்பைச் சித்தர் கூறியுள்ளார். அதனால் சாதியைப் பற்றிப் பேசாதே.” “நம் உறவினரும் ஊராரும் என்ன சொல்வார்கள்?” “அவர்கள் என்ன சொன்னால் நமக்கென்ன? அவர்களா நம்மைக் காப்பாற்றுகிறார்கள்? நாம் உழைத்துப் பணம் சேர்த்தால் நம்மிடம் உறவு கொண்டாட வருவார்கள். அவர்களால் ஒரு காசுக்கேனும் பயனுண்டா? எதிர் வீட்டு ஏகாம்பரம், செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவன். அவன் மனைவி பண்ணைக்காரனுக்கு ஆண் பிள்ளையைப் பெற்றாள். அந்தப் பிள்ளை இப்பொழுது செட்டியார் என்று அழைக்கப்படுகின்றான். அந்தப் பிள்ளை என்ன சாதி?” “ஆமாம், நீங்கள் கூறுவது உண்மைதான்”. “பெண்ணே, நமக்கு இருப்பது ஒரே பிள்ளை. அவன் ஒழுக்கம் உள்ளவன். அவன் நல்ல முறையில் வாணிகம் செய்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறான். அவனால் நாமும் ஓரளவு சுகமாக வாழ்கிறோம். அவன் விருப்பப்படி நாம் நடந்தால்தான் அவன் வாழ்வு நலம்பெறும்.” “நீங்கள் கூறுவது உண்மைதான். எதற்கும் அந்தப் பெண்ணைப் பற்றி நன்கு விசாரியுங்கள். அவள் நல்ல பண்புடையவளாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.” முருகன் உறங்குபவன் போலப் பாசாங்கு செய்து கொண்டே பெற்றோர் உரையாடலைக் கேட்டு உள்ளம் பூரித்தான். மறுநாள் காலை திருநீற்றுப் பொலிவுடன் வேலப்பர் முத்தப்பரைச் சென்று கண்டார்; தம் மகனது விருப்பத்தைத் தெரிவித்தார். அதைக்கேட்டு முத்தப்பரும் மங்கையும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். “வேலப்பரே, மணிமேகலை எங்கள் கண்போல் இங்கு வளர்ந்து வருகிறாள். அவள் குணங்களால் உயர்ந்தவள். அவளை மருமகளாகப் பெற நீங்கள் உண்மையில் பேறு பெற்றிருக்க வேண்டும். அவள் உங்கள் இல்லத்திற்கு விளக்கமாக விளங்குவாள். வாருங்கள், அவளைப் பார்க்கலாம்” என்று மங்கை மகிழ்ச்சியோடு கூறினாள். உடனே மூவரும் தொழிற்கூடத்தை அடைந்தனர். அப்போது தொழிற்கூடப் பெண்கள் எல்லோரும் அமைதியாக அமர்ந்து இறைவணக்கம் செய்து கொண்டிருந்தனர். “இது நாள்தோறும் இங்கு நடைபெற்று வருகிறது” என்று முத்தப்பர் வேலப்பர் காதில் மொழிந்தார். பெண்கள் எல்லோரும் அமைதியாக அமர்ந்து கைகளைக் குவித்துக் கண்களை மூடிக்கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த காட்சி வேலப்பர் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர் விழிகளில் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிர்த்தது. சிறிது நேரத்தில் வழிபாடு முடிந்தது. எல்லோரும் எழுந்து தத்தம் வேலைகளைக் கவனிக்கச் சென்றனர். மங்கையர்க்கரசி மணிமேகலையைத் தனியே அழைத்து வந்தாள்; “இவள்தான் மணிமேகலை” என்று வேலப்பரிடம் கூறினாள்; உடனே, “மணிமேகலை, இவர்தாம் நமது ஊரில் கடை வைத்திருக்கும்-நம்முடன் வாணிக உறவு கொண்டிருக்கும் முருகனின் தந்தையார். முருகன் உன்னையே மணந்து கொள்வதாக இவரிடம் கூறினாராம். அதனால் இவர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார். அவரை மணந்துகொள்ள விரும்பு கிறாயா?” என்று மணிமேகலையின் முதுகைத் தடவிக்கொண்டே கேட்டாள். “மணி, திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர். ஆதலால் அழுத்தமாக எண்ணிப் பார்த்து முடிவைத் தெரிவி” என்று அன்போடு கூறினார் முத்தப்பர். மணிமேகலையின் முகம் நாணத்தால் கவிழ்ந்தது. அவள் உதடுகள் துடித்தன; “அம்மா, நேற்று முருகப் பெருமான் திரு முன் நானும் அவரும் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கொண்டுவிட்டோம்” என்று விட்டு விட்டுப் பேசினாள். மங்கை, “மணி, உங்கள் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். உன் மாமனார் திருவடிகளை வணங்கி அவரது ஆசியைப் பெறு” என்று மகிழ்ச்சிப் பெருக்குடன் கூறினாள். மணிமேகலை மிகுந்த நாணத்துடன் முழங்காற்படியிட்டு வேலப்பரின் திருவடிகளைத் தொட்டு வணங்கினாள். வேலப்பர் மகிழ்ச்சிக் கண்ணீர் பொங்க அவளைத் தூக்கி ஆசிர்வதித்தார்; “அம்மா மணிமேகலை, எங்கள் பண்ணையாரும் அவர் மகளாரும் சொல்லுகிறபடி நாங்கள் செய்பவர்கள். அவர்கள் நல்லதைத் தவிர வேறு எதையும் சொல்லமாட்டார்கள். விரைவில் திருமணம் செய்து கொண்டு முருகனுக்கு வாழ்க்கைத் துணைவியாக இருந்து எங்களை வாழ்விப்பாயாக!” என்று கூறி, விடை பெற்றார். மணிமேகலைக்கும் முருகனுக்கும் திருமணம் என்ற செய்தி காட்டுத் தீப்போலத் தொழிற்கூடத்தில் பரவியது. எல்லோரும் அவளை வேடிக்கை செய்யத் தொடங்கினர். அவள் நாணத்தால் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். குறித்த நாளில் குறித்த நேரத்தில் முத்தப்பர் தலைமையில் அழகாபுரி அடிகளால் முருகனுக்கும் மணிமேகலைக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது நக்கீரனும் மங்கையும் சாதி வேறுபாடுகளைக் கவனியாமல் செய்யப்படும் திருமணங்களைப் பற்றித் தக்க மேற்கோள்களுடன் பேசினர். “பெரியோர்களே, நமது மாபெரும் தலைவர் மணி முடியார் பிராமணர். இராமசாமி அடிகள் வணிகர். இவ்விருவர் பிள்ளைகளுக்கும் காதல் திருமணம் நடந்ததை நாம் அறிவோம். மற்றொரு தலைவரான டாக்டர் வேலப்பர் ஒரு கவுண்டர். அவர் ஒரு பிராமணப் பெண்மணியை மணந்துகொண்டு வாழ்வதை நாம் அறிவோம். நமது கல்வி அமைச்சர் கனம். மாணிக்கம் ஒரு வேளாளர். அவர் ஒரு நாயுடு பெண்மணியை மணந்துகொண்டு வாழ்வதைப் பார்க்கிறோம். இவர்கள் உண்மைக் காதலுக்கு மதிப்பைக் கொடுத்த உத்தமர்கள். நாட்டைப் பாழ்படுத்தும் சாதி வேறுபாடுகளைக் களைந்து காதல் திருமணங்களைச் செய்து கொண்டு சாதிகளை ஒழிப்பதே உண்மையான நாட்டுப் பற்றுடைய மக்களது கடமையாகும்.” திருமணத்திற்கு வந்திருந்த அனைவர் உள்ளங்களையும் இப்பேச்சு கவர்ந்தது. எல்லோரும் மணமக்களை வாழ்த்தினர்; மிகச் சுருங்கிய செலவில் திருமணத்தை முடித்த முத்தப்பரையும் மங்கையையும் வாழ்த்திக் கொண்டு சென்றனர். இத் திருமணம் பற்றிய செய்தி சுற்றுப்புறக் கிராம மக்களின் கவனத்தை இழுத்தது. 18. தவறும் திருத்தமும் கரும்பாக்கத்திற்கு இரண்டுகல் தொலைவில் செம்பாக்கம் என்றொரு சிற்றூர் இருக்கிறது. அவ்வூரில் செந்தில்நாதன் என்னும் நிலக்கிழார் இருந்தார். அவருக்குப் பழநியப்பன் என்றொரு மகன் இருந்தான். அவனுக்கு ஏறத்தாழ இருபத்தைந்து வயதிருக்கும். அவன் கோவில் காளையாக வளர்ந்து வந்தான். அவன் வீட்டில் குப்பம்மாளும் அவள் மகள் முத்தம்மாளும் வேலை செய்துவந்தனர். முத்தம்மாள் வயதுவந்த பெண்; ஏழையாயினும் கட்டழகு வாய்ந்தவள். கோவில் காளையாகத் திரிந்துவந்த பழநியப்பனுக்கும் முத்தம்மாளுக்கும் காதல் உண்டாகி வளர்ந்தது. தன் தந்தையிடம் கூறி அவளை எப்படியும் மணந்துகொள்வதாகப் பழநியப்பன் வாக்குறுதி அளித்தான். குப்பம்மாள் “பணக்காரப் பையனை நம்பாதே; நட்டாற்றில் விட்டுவிடுவான்” என்று பலமுறை தன் மகளை எச்சரித்தாள். `இளங்கன்று பயமறியாது’ என்ற பழமொழி உண்மையாயிற்று. பருவக் கோளாறினாலோ பழநியப்பனுடைய நயமான பேச்சுக் களாலோ முத்தம்மாள் தாயின் அறிவுரையைக் கேட்கவில்லை; அவனை அரிச்சந்திரன் என்று நம்பினாள். அவனை உண்மையாகவே காதலித்தாள்; அவனையே உயிரென்று மதித்தாள். பழநியப்பனும் ஆறுமாதகாலம் குப்பம்மாளின் குடிசைக்கு இரவு நேரங்களில் வந்துகொண்டிருந்தான். முத்தம்மாள் கருக்கொண்டாள். அவள் கருக்கொண்ட பின்னும் பழநியப்பன் அவளது வீட்டிற்கு வந்துகொண்டிருந்தான்; தன் பெற்றோரிடம் கூறி விரைவில் மணம் செய்துகொள்வதாகச் சொல்லிவந்தான். ஆனால் உண்மையில் திருமணம் நடைபெறவில்லை. பத்துத்திங்கள் பாங்குறக் கழிந்தன. முத்தம்மாள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். செம்பாக்கம் சிறிய ஊர் ஆதலால் பழநியப்பனுக்கும் முத்தம்மாளுக்கும் இருந்த உறவும் ஆண் குழந்தை பிறந்த செய்தியும் ஊரார் அனைவருக்கும் தெரிந்துவிட்டன. தெரிந்து பயன் என்ன? நிலக்கிழாருக்கு எதிராகக் குடிமக்கள் என்ன செய்யமுடியும்? பொதுமக்கள் “இப்படியும் தவறு நடக்குமா!” என்று தம்முள் பேசிக் கொண்டனரே தவிர, நிலக்கிழாரிடம் சென்று நியாயத்தை எடுத்துக் கூறவில்லை. குப்பம்மாள் குழந்தை பிறந்ததும் பழநியப்பனைக் கடிந்து கொண்டாள்; அவன் பெற்றோரிடம் கூறி உடனே திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி வற்புறுத்தினாள். அன்று முதல் பழநியப்பன் அவர்கள் வீட்டுக்குச் செல்வதை விட்டுவிட்டான். குப்பம்மாள் தன் மகளைக் கண்டவாறு ஏசினாள்; “செல்வனை நம்பி நம் குடிக்குப் பழி தேடி விட்டாயே!” என்று எரிந்து விழுந்தாள். அவள் மிகுந்த சீற்றத்தோடு நிலக்கிழார் வீட்டிற்கு முன் சென்று நின்றாள். அப்போது நிலக்கிழார் வீட்டு உள்கூடத்தில் தம் மனைவியோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தார். குப்பம்மாள் அவர்கள் முன் சென்று நின்றாள்; அழுதுகொண்டே அதுகாறும் நடந்தவற்றைத் தெளிவாக எடுத்துக் கூறினாள். அவருக்குக் குப்பம்மாள் கூறிய செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அவர் உடனே தன் மகனை அழைத்தார். தந்தையார் எதற்கு அழைக்கிறார் என்பது தெரியாமலே அவன் ஓடி வந்தான்; அப்படி வந்தவன் குப்பம்மாளைக் கண்டதும் திடுக்கிட்டான். அவன் முகத்தின் கோணலையும் உடல் நடுக்கத்தையும் நிலக்கிழார் கண்டார்; “பழநியப்பா, குப்பம்மாள் மகளுக்கும் உனக்கும் இருந்த உறவு காரணமாக அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாமே? உண்மைதானா? வேலைக் காரியிடமா உறவு கொள்வது? கீழ்மகனே, உண்மையைச் சொல்” என்று மிகுந்த கோபத்துடன் கேட்டார். அப்போது அவர் கண்கள் சிவந்தன. மீசை துடிதுடித்தது. புருவங்கள் நெற்றி முற்றச் சென்றன. அவர் பற்களை நறநறவென்று கடித்தார். அவரது கடுஞ்சீற்றத்தைக் கண்ட பழநியப்பன் நடுங்கிவிட்டான்; தனக்குச் சொத்து இல்லை என்று கூறித் தன்னை விரட்டிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. “ஏன் பேசாமல் இருக்கிறாய்?” என்று தந்தையார் அதட்டினார். ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போலப் பழநியப்பன், “அப்பா, நீங்கள் கேட்பது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்தக் குப்பம்மாளும் இவள் மகளும் நம் வீட்டு வேலைக்காரிகள் அல்லவா? நான் வேலைக்காரியிடமா உறவு கொள்வேன்? ஊரில் உங்களுக்கு ஆகாதவர் எவரோ நம்மை அவமானப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தால் இப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டனர் என்றே நினைக்கிறேன். இவள் கூறுவது முற்றிலும் பொய், பொய்” என்று கத்தினான். “நான் கூறுவது பொய்யல்ல. உங்கள் பிள்ளை கூறுவதுதான் பொய்” என்று குப்பம்மாள் கத்தினாள். “சீ! பிச்சைக்கார நாயே! வாயை மூடு. பொய்க் கதையைக் கட்டி, எவனுக்கோ பிறந்த குழந்தையைக் காட்டி, என் சொத்தைக் கவரவா திட்டமிட்டிருக்கிறீர்கள்? நீயும் உன்மகளும் இன்றுமுதல் என் வீட்டுவாசலில் கால்வைக்கக்கூடாது. போ வெளியே” என்று கத்திக்கொண்டே நிலக்கிழார் அவளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள நெருங்கினார். குப்பம்மாள் அழுதுகொண்டே தன் வீடு நோக்கிச் சென்றாள். அழுதுகொண்டு சென்ற குப்பம்மாள், தன் ஆத்திரம் அடங்காததால், முத்தம்மாளைக் கண்டவாறு திட்டினாள்; “வாடீ வா, குலத்தைக்கெடுத்த கோடரிக்காம்பே! பாழும் குழந்தையை ஒரு கிணற்றில் போட்டுவிட்டு வேற்றூரில் சென்று பிழைக்கலாம். வேற்றூரில் உனக்குத் திருமணம் செய்து வைப்பேன்” என்று கூறி மகளை இழுத்தாள். செம்பாக்கத்திற்கு இரண்டுகல் தொலைவிலுள்ள மடையத்தூர் என்னும் சிற்றூரில் சொற்பொழிவு செய்துவிட்டு நக்கீரனும் மங்கையும் செந்தாமரையும் செங்கற்பட்டு—திருப்போரூர் பெருவழியை நோக்கிப் பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்தனர். வழியே ஒரு தோப்பைக் கடந்து வந்து கொண்டிருந்தபோது, பக்கத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே மூவரும் சுற்றிலும் சென்று பார்த்தனர். தலைவிரி கோலமாக ஒரு பெண் விழுந்து கிடந்தாள். வயதான மற்றொருத்தியின் கையில் குழந்தை காணப்பட்டது. அக்குழந்தை தான் வீறிட்டு அழுதுகொண்டிருந்தது. அவளுக்குப் பக்கத்தில் ஒரு பெருங்கிணறு காணப்பட்டது. மங்கை முதலியோரைக் கண்டதும் குழந்தையை ஏந்தி நின்ற முதியவள் ஓடப்பார்த்தாள். உடனே நக்கீரன் பாய்ந்து அவளை நிறுத்தினான். “யார் நீ? ஏன் ஓடப் பார்க்கிறாய்? இந்தப் பெண் ஏன் விழுந்து கிடக்கிறாள்?” என்று மங்கை கேள்விகளை அடுக்கினாள். “ஐயா, இவள் என் மகள். இவள் மயக்கமாக விழுந்து கிடக்கிறாள். இவளை முதலில் காப்பாற்றுங்கள்; பிறகு இவள் கதையைச் சொல்லுவேன்” என்று அப்பெரியவள் அலறினாள். உடனே செந்தாமரை தன் கையிலிருந்த கூசாவைத் திறந்தாள்; தண்ணீரை எடுத்து அப்பெண்ணின் முகத்தில் அடித்தாள். மயக்கமுற்ற பெண் கண் விழித்தாள்; சிறிது தண்ணீர் பருகினாள். எழுந்து உட்கார்ந்தாள். மற்றவர் அவள் அருகில் உட்கார்ந்தனர். மங்கை பெரியவளைப் பார்த்து, “உங்கள் வரலாற்றைச் சொல்லுங்கள்” என்று விரைவுப்படுத்தினாள். அந்தப் பெரியவள்தான் வேலைக்காரி குப்பம்மாள். அவள் ‘கோ’ வென்று அழுதுகொண்டே, பழநியப்பன் மோசம் செய்த வரலாற்றையும் நிலக்கிழார் கோபித்துக்கொண்டு விரட்டி யதையும் விவரமாக எடுத்துரைத்தாள்; தான் குழந்தையைக் கிணற்றில் போட்டுவிட்டுத் தன் மகளுடன் வேற்றூர் செல்ல விரும்பி வந்ததையும் தெரிவித்தாள். அவளது பரிதாபமான வரலாற்றைக் கேட்ட மூவரும் கண்ணீர் விட்டனர். மங்கை, “குப்பம்மா, கலைப்படாதே. உன் மகளையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு எங்களுடன் வா; எங்கள் விடுதியில் நீங்கள் மூவரும் இருக்கலாம். விரைவில் உன் மகளை நிழக்கிழாரின் மருமகளாகச் செய்து விடுகிறோம். கவலைப்படாதே.” என்று ஆறுதல் கூறினாள். குப்பம்மாள், “அம்மா, அது நடக்கக் கூடிய செயலா?” “ஏன் நடவாது?” “அவர்கள் பணக்காரர் ஆயிற்றே!” “ஆனால் என்ன? உண்மை மறைக்கப்படுமா? ஊர் அறியத் திருணம் செய்து வைப்போம்.” அது கேட்ட முத்தம்மாள் மங்கையின் கால்களில் விழுந்து வணங்கினாள். குப்பம்மாள் மங்கையின் கைகளைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டாள். “அயோக்கியப் பயல். ஓரு பெண்ணைக் கெடுத்துவிட்டு, அவளுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று சாதிப்பது கோழைத்தனம் அல்லவா?” என்று நக்கீரன் கூறிக் கோபித்தான். “நக்கீரரே, நாம் ஆத்திரப்படக்கூடாது. நாளை அப்பாவையும் அழகாபுரி அடிகளையும் பாண்டியனையும் வேறு சில பெருமக்களையும் செம்பாக்கத்திற்கு அழைத்து வருவோம். நயமாகப் பேசி இவர்களைக் கூட்டி வைப்போம்” என்று மங்கை அமைதியாகக் கூறினாள். அறநிலைய உந்து வண்டி பெருவழியில் வந்து நின்றது. எல்லோரும் அதில் ஏறிக்கொண்டு அறநிலையத்தை அடைந்தனர். மறுநாள் காலை ஒன்பது மணியளவில் அற நிலைய உந்து வண்டி செந்தில்நாதன் வீட்டு வாசலில் நின்றது அதிலிருந்து முத்தப்பர், அழகாபுரி அடிகள் முதலிய அனைவரும் இறங்கினர். அவர்கள் வந்ததன் கருத்தை அறியாத செந்தில்நாதனும் பழநியப்பனும் அவர்களை மிக்க அன்போடு வரவேற்றனர். எல்லோரும் ஒரே சமயம் பெரிய கூடத்தில் அமர்ந்தனர். அவர்கள் ஏறி வந்த உந்து வண்டி உடனே சென்றுவிட்டது. “பெரு மக்களாகிய நீங்கள் என் வீட்டிற்கு வந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்” என்று செந்தில் நாதன் கூறினார். பழநியப்பன் மகிழ்ச்சிப் பெருக்கால் எல்லோருக்கும் இளநீர் கொண்டுவந்து கொடுத்தான். முத்தப்பர் அவனை அன்போடு அழைத்துத் தமக்கும் அடிகளுக்கும் பக்கத்தில் அமரச் செய்தார். பின்பு அவர் செந்தில்நாதனைப் பார்த்து, “செந்தில் நாதரே, நாங்கள் ஒரு முக்கியமான செய்தி பற்றித் தங்களிடம் பேச வந்திருக்கிறோம். உங்கள் பரம்பரைக்கும் உங்களுக்கும் இருந்துவரும் புகழ் கெடக்கூடாது என்பதுவே எங்கள் ஆவல்” என்று கூறித் தாம் சொல்லப் போகும் செய்திக்கு அடிப்படை இட்டார். அப்போது செந்தில் நாதனும் பழநியப்பனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அறநிலைய உந்து வண்டி வந்ததையும் முத்தப்பர் முதலியோர் இறங்கியதையும் பார்த்த சிலர் பலரிடம் சொல்ல, ஊர் மக்கள் செந்தில்நாதன் வீட்டின்முன் பெருங் கூட்டமாகக் கூடிவிட்டனர். கூட்டத்தினருட் சிலர் முத்தப்பரையும் அவர் மகளையும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர். வேறு சிலர் பழநியப்பன் செய்தவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். முத்தப்பர் அமைதி கலந்த முகத்தோடு பழநியப்பனைப் பார்த்து, “தம்பி, நீ உரிய காலத்தில் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். பருவ உணர்ச்சி பொல்லாதது, அதனை அடக்கும் திறமை இருப்பது நல்லது. அத்திறமை இல்லாமல் ஒரு பெண்ணிடம் உறவு கொண்டு விட்டால், அவளையே மணந்து வாழ வேண்டும். அவள் ஒரு குழந்தைக்குத் தாயானவுடன் அவளைக் கைவிட்டு விடுதல் அறமாகாது. உங்கள் குடும்பம் ஒழுக்கத்தில் சிறந்த குடும்பம். அதற்கு மாசு வரும்படி நடந்துகொள்ளலாகாது. உன்னால் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்ட பெண் வயிறு எரிந்தால் நீ வாழ முடியாது.” இவ்வாறு முத்தப்பர் கூறிக்கொண்டிருக்கையில், வெளியிலிருந்த வருள் பெரு மக்கள் நால்வர் உள்ளே வந்து முத்தப்பருக்கு வணக்கம் கூறி அமர்ந்தனர். செந்தில்நாதனின் முகம் கறுத்தது; மீசை துடித்தது; “பண்ணையாரே, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் என்று புரிய வில்லையே! சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றார். “நான் சொன்னது உங்கள் மகனுக்குப் புரிந்துவிட்டது. அவரையே கேளுங்கள்.” “நீங்கள் சொன்னது எனக்குப் புரியவில்லையே!” என்றான் பழநியப்பன். முத்தப்பர் நகைத்தார். அழகாபுரி அடிகள் அவனை அன்போடு பார்த்து, “தம்பி, உண்மையை மறைப்பதில் பயனில்லை. உனக்கும் வேலைக்காரி முத்தம்மாளுக்கும் உள்ள உறவை இந்த ஊரார் நன்கு அறிவர். நேற்று நான் இந்த ஊருக்கு வந்தேன். அப்போது ஊரார் பலர் இதனை எனக்குக் கூறினர். அவளோடு உனக்கு உறவு இல்லை என்று நீ சாதிப்பதையும் அவளும் அவள் தாயும் இவ்வூரை விட்டுப் போய்விட்டதையும் கூறி வருத்தப்பட்டனர். நல்ல பரம்பரையில் வந்த நீ உன் செயலை ஒப்புக்கொள்வதுதானே ஆண்மை! இப்பொழுதாவது எல்லோர் முன்னிலையிலும் இந்த உண்மையை ஒப்புக் கொள்ளுதல் நல்லது” என்று நயமாகக் கூறினார். அவ்வமயம் முன்பு சென்ற உந்து வண்டி திரும்பி வந்து நின்றது. அதிலிருந்து குப்பம்மாள் முதலில் இறங்கினாள். அடுத்து, முத்தம்மாள் கைக் குழந்தையுடன் இறங்கினாள். கூட்டத்திலிருந்த முற்போக்கு இளைஞர்கள் “முத்தம்மாள் வாழ்க!”, “அவள் குழந்தை வாழ்க!” என்று முழக்கமிட்டனர். அந்த முழக்கம் உள்ளே இருந்த செந்தில் நாதனையும் பழநியப்பனையும் திடுக்கிடச் செய்தது. முத்தப்பர் செய்த முன்னேற்பாட்டின்படியே அவ்விருவரும் உள்ளே நுழைந்து மங்கைக்குப் பக்கத்தில் அமர்ந்தனர். அவர்களைக் கண்டதும் பழநியப்பன் உடல் ஆட்டம் கண்டது. முத்தப்பர், “பழநியப்பா, முத்தம்மாள் வந்துவிட்டாள். அவள் குழந்தையும் வந்திருக்கிறது. உன் ஊர்ப் பெருமக்களும் வந்திருக் கின்றனர். நம் அனைவர் செயல்களையும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இவற்றை மனத்தில் வைத்து உண்மையை ஒத்துக் கொள்” என்று நயமாக நவின்றார். “பண்ணையாரே, இந்த வேலைக்காரிகள் பேச்சை நம்பி நீங்கள் இங்கு வந்தது பற்றி வருந்துகின்றேன். அவர்கள் கூறுவது பொய்; முழுப் பொய்” என்று கண்கள் சிவக்கக் கத்தினார் செந்தில்நாதன். “அப் பெண்கள் கூறுவது உண்மை; கடுகளவும் பொய்யல்ல” என்று முன்பு உள்ளே வந்து உட்கார்ந்த செம்பாக்கத்தார் நால்வரும் உரக்கக் கூறினர். “வெளியில் ஊர் மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களையும் கேட்போமா?” என்று அடிகள் செந்தில்நாதனை நோக்கிக் கேட்டார். முத்தப்பர், “பழநியப்பா, உன் செய்கையை மேலும் ஊர் சிரிக்கும்படி வைத்துக் கொள்ளாதே; உண்மையைச் சொல்லி விடு. நாளை நீதிமன்றத்தில் நிற்கும்படி நேரும். உன் தந்தையின் பெயரைக் கெடுத்து விடாதே” என்று அன்போடு கூறினார். ‘நீதிமன்றம்’ என்ற பெயரைக் கேட்டவுடன் பழநியப்பன் உடல் நடுங்கியது. அவன் தலை கவிழ்ந்தபடியே. “அக்குழந்தை எனக்குப் பிறந்ததுதான். நான் முத்தம்மாளைக் காதலித்து வாழ்க்கை நடத்தியது உண்மைதான்” என்று விட்டு விட்டுச் சொன்னான். அவன் குரலில் நடுக்கம் காணப்பட்டது. செந்தில் நாதன் தலை கவிழ்ந்தார். முத்தப்பர் செந்தில்நாதன் கைகளைப் பற்றிக்கொண்டு, “நண்பரே, நீங்கள் தலை கவிழும்படி ஒரு தவறும் நடந்து விடவில்லையே! உமது மகன் இளைஞன். அவன் தனக்கு உரிய ஒருத்திiயக் காதலித்தான்; அவளோடு உறவு கொண்டாடினான். அவ்வுறவால் ஒரு குழந்தை பிறந்தது. இவற்றில் ஒரு தவறும் இல்லையே. முத்தம்மாள் ஏழையாக இருப்பதாலும் நீங்கள் கோபிப்பீர்கள் என்ற அச்சத்தாலுமே அவன் பொய் கூறியிருக்கிறான். போனது போகட்டும். நமது அறநிலையச் சார்பில் இவர்களுக்குத் திருமணம் செய்து வைப்போம். நீங்கள் கவலைப்பட வேண்டா. இதில் எவ்விதத் தவறும் இல்லை” என்று உள்ளம் உருகப் பேசினார். “இதுவே நல்ல முடிவு” என்றார் அழகாபுரி அடிகள். “ஐயோ! நிலக்கிழார் மகன் ஒரு வேலைக்காரியையா மணந்து கொள்வது? இந்த அவமானத்தை என்னால் தாங்க முடிய வில்லையே!” என்று செந்தில்நாதன் தலையில் அடித்துக் கொண்டார். முத்தப்பர் நகைத்தார்; “நண்பரே, இந்த யோசனை முதலில் பழநியப்பனுக்கல்லவா இருந்திருக்க வேண்டும்? நமது சொத்து நாளை மறைந்துவிடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நாம் ஏழைகள் தாமே? நாம் வேலை செய்துதானே பிழைக்க வேண்டும்? `வேலைக்காரர்’ என்று ஒரு சாதியில்லையே! வேலைக்காரன் பணக்காரன் ஆவதும், பணக்காரன் வேலைக்காரன் ஆவதும் உலகில் சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லவா? அறிவுடைய நீங்கள் இப்படிப் பேசலாமா?” என்று அன்போடு பேசினார். “செந்தில்நாதரே, திருமணம் முடிந்த பின்னர் உங்கள் மருமகளும் பேரனும் உங்கள் வீட்டை அலங்கரிப்பார்கள். குப்பம்மாள் எங்கள் விடுதியில் இருக்கட்டும்” என்று மங்கை கூறினாள். “இது நல்ல முடிவு” என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் அறநிலையத்தில் பழனியப்பனுக்கும் முத்தம்மாளுக்கும் திருமணம் நடைபெறும் என்று முத்தப்பர் அறிவித்தார். செந்தில்நாதன் அந்த முடிவை ஏற்றுக் கொண்டார். அழகாபுரி அடிகள் செந்தில்நாதரின் கைகளைப் பற்றிக் குலுக்கினார்; “ஐயா, உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினார். இந்த நல்ல முடிவைக் கேட்டு வெளியிலிருந்த ஊர் மக்கள், “முத்தப்பர் வாழ்க! அடிகள் வாழ்க! செந்தில்நாதர் வாழ்க! மணமக்கள் வாழ்க!” என்று கூவித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர். மங்கையின் சொற்படி முத்தம்மாள் செந்தில்நாதரையும் அவர் மனைவியையும் வணங்கினாள். அவ்விருவரும் அவளை மனமார ஆசீர்வதித்தனர். பழநியப்பன் முத்தம்மாளைக் கடைக்கண்ணால் பார்த்து மகிழ்ச்சிப் பெருக்கால் கண் சிமிட்டினான்; அவள் நாணத்தால் தலை கவிழ்ந்தாள். அடுத்த ஞாயிறு மாலை பழநியப்பனுக்கும் முத்தம்மாளுக்கும் அறநிலைய வழிபாட்டு மண்டபத்தில் மிக்க சிறப்புடன் திருமணம் நடைபெற்றது. சுற்றுபுறச் சிற்றூர்களிலிருந்து திரளான மக்கள் கூடி யிருந்தனர். வழக்கம்போல் முத்தப்பரும் அடிகளும் மணமக்களை வாழ்த்தினர். “பெருமக்களே, உண்மைக் காதல் கொண்ட இருவரையும் இணைப்பதுதான் பெற்றோர் கடமை. உண்மைக் காதல் சாதி வேறுபாடுகளைக் கடந்தது; சமய வேறுபாடுகளையும் கடந்தது. செல்வர் - வறியவர் என்ற வேறுபாட்டையும் கடந்தது. உண்மைக் காதலே `தெய்வீகக் காதல்’ என்று சான்றோர் கூறுவர். நம் முன்னோர் அதற்கு மதிப்பைக் கொடுத்தனர். இக்காலத்தார் அதன் சிறப்பை அறியாமல் அதனைக் கெடுக்கின்றனர். அதனால் வாழப்பிறந்த மக்கள் தற்கொலை செய்துகொண்டு தங்கள் குடும்பங்களுக்கு நீங்காத பழியைத் தேடி விடுகின்றனர். உண்மைக் காதலின் மதிப்பை உணர்ந்து இத்திருமணத்திற்கு இணங்கிய நிலக்கிழார் செந்தில்நாதரையும் அவர் மனைவியாரையும் நான் உளமார வாழ்த்துகின்றேன்; செந்தில்நாதரின் ஆண்மையைப் பாராட்டுகின்றேன். நம் அனைவர் வாழ்த்தும் மணமக்களுக்கு உரியதாகுக!” இவ்வாறு அழகாபுரி அடிகள் பேசிமுடித்தார். கூட்டத்தினர் அனைவரும் நீண்ட நேரம் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர். 19. முனியாண்டி மரகதவல்லி அறநிலையம் தொடங்கப்பெற்று ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. செந்தாமரை ஆறாம் படிவம் தேறிவிட்டாள். அவளுக்கு இப்போது வயது 22. சிறந்த முறையில் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றல் பெற்றிருந்தாள். ஒருநாள் அவளும் மங்கையும் விழுப்புரம் சென்று புகை வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஏறியிருந்த வண்டியில் அவர்களுக்கு எதிர் வரிசையில் ஆடவர் நால்வர் அமர்ந்திருந்தனர். அவர்கள் படித்தவர்கள் என்பதற்கு அடையாளமாகச் செய்தித்தாள்களையும் நூல்களையும் வைத்துக் கொண்டிருந்தனர். அவளுக்குப் பக்கத்தில் ஒரு பணக்காரப் பெண்மணியும் விந்தமலை போன்ற உருவமுடைய அவள் கணவரும் அமர்ந்திருந்தனர். அவர் பெயர் செல்லப்பர். வண்டி திண்டிவனம் நிலையத்தில் நின்றது. அங்குப் பலர் அந்த வண்டியில் ஏறினர். மங்கை இருந்த வண்டியில் முனியாண்டி ஏறினான். அவன் கண்கள் குழி விழுந்து காணப்பட்டன. கன்னத்தில் பெரும் பள்ளம் காணப்பட்டது. அவனது கிறுதாவும் நீண்ட முறுக்கு மீசையும் மதுரைவீரனை நினைவூட்டின. அவன் உடலையும் இடையையும் அழுக்காடைகள் அணி செய்தன. அவன் ஆடவர் நால்வர் இருந்த பலகையின் ஓரத்தில் உட்கார முயன்றான். அதைப் பார்த்த நான்காம் மனிதர், “டேய், உனக்கு என்ன தைரியம் இங்கே உட்கார? அப்படியே நில்லடா” என்று அதட்டினார். “தீண்டத் தகாதவனைப்போல இருக்கிறான். அந்தப் பயல் நம்மோடு சரிசமமாக உட்காரப் பார்க்கிறான்” என்றார் மூன்றாம் மனிதர். “காலமே கெட்டுப்போச்சு” என்று முணுமுணுத்தார் இரண்டாம் மனிதர். “பெரிய சில்க் உடைகளை உடுத்தியிருக்கிறான் அல்லவா உட்காருவதற்கு!” என்றார் முதல் மனிதர். அதுவரையில் கையிலிருந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த செந்தாமரையும் மங்கையும் முனியாண்டியையும் மற்ற நால்வரையும் நிமிர்ந்து பார்த்தனர். மங்கை தன் இருக்கையை விட்டு எழுந்து முனியாண்டியைப் பார்த்து, “அப்பா, நீ இந்த இடத்தில் இரு” என்று அன்போடு கூறினாள். உடனே செந்தாமரை முனியாண்டி யிடம் இருந்த குழந்தையை முகமலர்ச்சியோடு வாங்கிக் கொண்டாள். “நீங்கள் உட்காருங்கள் தாயே, நான் நின்று கொண்டிருக்கிறேன்” என்றான் முனியாண்டி. “நீங்கள் ஏன் எழுந்துவிட்டீர்கள்? அவன் கெட்ட கேட்டிற்கு மரியாதை வேறா?” என்றார் செல்லப்பர். மங்கை அவரை அன்போடு பார்த்து, “ஐயா, அவர் எந்த முறையில் கெட்டுவிட்டார் என்கிறீர்கள்?” என்று கேட்டாள். மங்கை கேள்வியைக் கேட்டதும் எதிர் வரிசையிலிருந்த நால்வரும் அவளை வியப்போடு நோக்கினர்; அவளைப் பைத்தியக்காரியோ என்று ஐயுற்றனர். செல்வர் நகைத்தார்; “அம்மா, அவன் உடைகளையும் உருவத்தையும் பாருங்கள், நான் சொன்னது விளங்கும்” என்றார். மங்கையின் முகம் வாட்டமுற்றது; “ஐயா உங்களைப் போன்ற அறிவாளிகள் இப்படிப் பேசலாமா? பணவசதி இல்லாவிட்டால் எந்த உயர் சாதியாரும் இப்படித்தான் இருப்பர். சமுதாயத்தில் ஒரு சிலரிடம் பணம் குவிந்து விடுவதாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் வேலை செய்தாலும் போதிய வருவாய் கிடைக்காததாலும் பெரும் பாலோர் இந்த நிலையில் இருக்கின்றனர். அரசாங்கத்தின் கவனிப்பின்மையும் செல்வரின் இரக்கமற்ற தன்மையுமே இவர்கள் ஏழ்மைக்குக் காரணம். இவர்களை இந்த நிலையில் இருக்கும்படி விட்டு விட்டு இவர்களைப் பழித்துக் கூறுவதில் பயனில்லை!” என்று தெளிவாக எடுத்துப் பேசினாள். செல்வர் பதில் பேசவில்லை; ஏதோ முணுமுணுத்தார். அவர் மனைவி ஏதோ ஒரு புதிய பிராணியைப் பார்ப்பது போல மங்கையை விழித்த கண் விழித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தாமரை தன் இடத்தைவிட்டு எழுந்து முனியாண்டியை வற்புறுத்தி உட்காரும்படி செய்தாள். முனியாண்டி மிகுந்த கூச்சத்துடன் மங்கையின் பக்கத்தில் பலகையின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டான். எதிரிலிருந்த நான்கு பேரும் மின்சாரத்தால் தாக்குண்டவர் போலத் துடிதுடித்தனர். முதல் மனிதர், “இந்த இரண்டு பெண்களும் பைத்தியம் பிடித்தவர்கள்” என்று ஆங்கிலத்தில் கூறினார். அது கேட்ட மங்கையும் செந்தாமரையும் நகைத்தனர். மங்கை, “எங்களுக்குப் பைத்தியமில்லை. மனிதப் பண்புதான் இப்படிப் பேசவும் நடக்கவும் செய்கிறது” என்று ஆங்கிலத்திலேயே விடை கூறினாள். மிகவும் எளிய உடையில் இருந்த மங்கையையும் செந்தாமரையையும் சாதாரண பெண்கள் என்று அந்நால்வரும் கருதிவிட்டனர்; ஆங்கிலம் தெரியாதென்று எண்ணினர். மங்கை ஆங்கிலத்தில் பதில் சொன்னவுடன் அந்நால்வரும் விழித்தனர். நான்காம் மனிதர் முனியாண்டியைப் பார்த்து, “ஏனப்பா, உன் பெயரென்ன?” என்று கேட்டார். “என் பெயர் முனியாண்டி.” “உனக்கு என்ன வேலை?” “தோட்ட வேலை-தோட்டத்தைக் காவல் காப்பது - தண்ணீர் பாய்ச்சுவது-ஓலை முடைவது.” “இந்தக் குழந்தை யாருடையது?” “என்னுடையது.” “தன் தாய் எங்கே?” “முனியாண்டி கண் கலங்கினான். அவன் முகத்தைக் கண்ட மங்கை, “ஏன் அப்பா கண் கலங்குகிறாய்? தாய் இறந்து விட்டாளா?” என்று இரக்கத்தோடு கேட்டாள். “அவள் இறந்திருந்தால் நன்றாக இருக்கும். அவள் அழகாய் இருப்பாள்; நல்ல உடற்கட்டு உடையவள். எங்கள் முதலாளி அவளைத் தம் வைப்பாக வைத்துக் கொண்டார்; தம் ஆட்களை ஏவி, என்னை அடித்துத் துரத்திவிட்டார். நான் இந்தக் குழந்தையுடன் வந்துவிட்டேன்.” “உங்கள் எசமான் இவ்வளவு அயோக்கியரா?” என்று மங்கை மிகுந்த மனக் கவலையோடு கேட்டாள். “அவருடைய வயல்களிலும் தோட்டங்களிலும் வேலை செய்யும் ஏழைப்பெண்களைக் கெடுப்பதுதான் அவர் வேலை.” “அவர் பெயரென்ன?” “காட்டுப்பாக்கம் மிட்டாதார் காளியப்பர்”. “அவர் சட்டசபை உறுப்பினர் அல்லவா?” என்று இரண்டாம் மனிதர் கேட்டார். “ஆம், அவரேதான்; அந்தப் புண்ணியவான்தான்” என்றான் முனியாண்டி. “இந்த ஒழுக்கக்கேடர் பொதுமக்களின் சார்பாளர் (பிரதிநிதி); சட்டமன்ற உறுப்பினர்” என்று வருத்தத்தோடு மொழிந்தாள் மங்கை. “இந்தக் கேவல நிலை இந்த நாட்டைவிட்டு என்று ஒழியுமோ தெரியவில்லையே!” என்றாள் செந்தாமரை. “முனியாண்டியைப் போன்ற பொதுமக்கள் எல்லோரும் கல்வி பெற வேண்டும். நாட்டைப் பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் சமுதாய ஒழுங்கைப் பற்றியும் எண்ணிப் பார்த்துச் செயலாற்றும் அறிவு பெறவேண்டும்; இத்தகைய தீயோரைத் திருத்தும் மன வலிமை பெற வேண்டும். தீமை செய்பவர் அந்த இடத்திலே பொதுமக்களால் நல்ல முறையில் திருத்தப்படுதல் வேண்டும்” என்று மங்கை வேகமாகப் பேசினாள் அவளது பேச்சைக் கேட்ட நான்கு மனிதரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். முதல் மனிதர் முனியாண்டியைப் பார்த்து, “நீ இப்பொழுது வேலை தேடி எந்த ஊருக்குப் போகிறாய்?” என்று கேட்டார். “செங்கற்பட்டில் இறங்கித் திருப்போரூருக்குப் போகிறேன். அவ்வூர்ப் பண்ணையார் பிச்சைக்காரர்களுக்கும் ஏழை மக்களுக்கும் அடைக்கலம் தருகிறாராம். அந்த வள்ளலிடம் ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம். இந்த குழந்தையை அவர்கள் வைத்து நடத்தும் அநாதைப் பிள்ளைகள் விடுதியில் சேர்த்துவிடலாம் என்று எண்ணிப் போகிறேன்” என்று முனியாண்டி பதில் கூறினான். அது கேட்ட செல்லப்பர் கலகலவென்று சிரித்தார்; “நல்ல யோசனை! தம் பணத்தைச் செலவழிக்க வழி தெரியாமல் அந்தப் பைத்தியக்காரப் பண்ணையார் அறநிலையம் திறந்திருக்கிறார். உங்கள் பாடு கொண்டாட்டம்தான்!” என்று கூறினார். அதுகேட்ட முதல் மனிதர், “என்ன ஐயா, அப்படிச் சொல்லி விட்டீர்கள்? ஏழைகளைக் காப்பது நல்லதுதானே! தெருவிலும் பஸ் நிலையத்திலும் இரயில் நிலையத்திலும்-ஏன்? நாம் பிரயாணம் செய்யும் இந்தப் புகைவண்டியிலும் பிச்சைக்காரர்கள் சூழ்ந்துகொள்ளு கிறார்களே! அவர்களைப் பல வேலைகளில் திருப்பி விடுவது நல்லதுதானே!” என்று சொன்னார். இரண்டாம் மனிதர், “முத்தப்பரை நாம் வாழ்த்த வேண்டும்” என்றார். மூன்றாம் மனிதர். “அவரை இந்த அற வழியில் திருப்பியவர் அவருடைய மகள் என்று கேள்விப்பட்டேன். நாம் அந்த அம்மையைப் பாராட்ட வேண்டும்.” என்றார். நான்காம் மனிதர் செல்லப்பரைப் பார்த்து, “உங்களைப் போன்ற செல்வர்கள் முத்தப்பரைப் போலப் பொதுநலத் தொண்டில் இறங்கினால் தான் நாட்டில் பிச்சைக்காரர்கள் தொல்லையும் ஏழ்மையும் ஒழியும்” என்று கூறினார். மற்ற மூவரும் “ஆம், ஆம்” என்றனர். “ஐயாக்கள் நான்கு பேரும் அந்தப் பெரிய ஐயாவுக்கு நல்ல யோசனை கூறினீர்கள். நீங்கள் கூறியபடி நடந்தால் என்போன்ற ஏழைகள் உழைத்துப் பிழைக்கலாம்,” என்றான் முனியாண்டி. “நான் அவ்வளவு பெரிய பணக்காரன் இல்லையே!” என்றார் செல்லப்பர். “நீங்கள் பெரிய பணக்காரர் இல்லை யென்று யார் சொன்னது? நீங்கள் புத்தூரில் பெரிய நிலக்கிழார் அல்லவா? உங்களுக்கு உரிமையான 12 உந்துவண்டிகள் (பஸ்கள்) சென்னைக்கும் திண்டிவனத்துக்கும் ஓடுகின்றனவே! உங்கள் செல்வ நிலைக்கு ஏற்றவாறு நூறு பேரைக் கொண்ட அநாதை விடுதியையும் உயர் தொடக்க நிலைப் பள்ளி ஒன்றையும் நடத்தலாமே! செல்லப்பரே, இவற்றைச் செய்யும்படி ஏழைகள் சார்பில் உங்களை வேண்டிக் கொள்ளுகிறேன்” என்றார் முதல் மனிதர். “நாங்களும் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்” என்றனர் மங்கையும் செந்தாமரையும். மற்ற ஆடவர் மூவரும் அவ்வாறே அவரை வேண்டிக்கொண்டனர். செல்லப்பர் மனைவி ஏதோ முணுமுணுத்தாள். செல்லப்பர், “செய்ய வேண்டுவதுதான். நான் ஒருமுறை திருப்போரூர் சென்று முத்தப்பரைச் சந்திப்பேன்; அவர் யோசனையைக் கேட்டு அதன்படி நடப்பேன். எனக்குப் பிள்ளையில்லை. நல்ல வழியிலேனும் பொருளைச் செலவிடலாம்” என்றார். அவர் மனைவி அவரை வெறிக்கப் பார்த்தாள். 20. மேஸ்திரி தேனப்பன் “ஏண்டி வீராயி, நீ இன்றுதான் முதன் முதலில் வேலைக்கு வந்திருக்கிறாய் அல்லவா?” என்று அறநிலையத்தில் கட்டட வேலை செய்யும் வேலாயி கேட்டாள். “ஆமாம், அக்கா” என்றாள் வீராயி. “அந்தப் பாழாய்ப்போன மேஸ்திரி தேனப்பன் உன்னிடம் காசு கேட்டிருப்பானே?” “ரூபாய்க்கு இரண்டனா ஒவ்வொரு நாள் மாலையிலும் கூலி பெற்றவுடன் கொடுக்க வேண்டும் என்று காலையில் சொன்னான்; அவ்வாறு கொடுத்தால்தான் ஒவ்வொரு நாளும் வேலைக்கு வைத்துக்கொள்ளுவதாகச் சொன்னான்.” “என்ன அக்கிரமம்! வயிற்றுக்கு வழியில்லை என்று நாம் சிற்றாள் வேலை செய்ய வருகிறோம். இவன் ஒரு நாளைக்கு நான்கு ரூபாய் சம்பளம் வாங்குகிறான்; அது போதாதென்று, பரம ஏழைகளாகிய நம்மிடமும் ஒவ்வொரு நாளும் இரண்டணா வீதம் வாங்கிக் கொள்கிறான். ஒருநாள் முழுதும் வேலை செய்தால் நமக்குக் கிடைப்பது ஒரு ரூபாய். அதில் இந்தப் பாவிக்கு இரண்டனா அழவேண்டியிருக்கிறது.” “ஏனக்கா, இவன் நீண்ட நாட்களாக இங்கு இருக்கிறானா?” “இல்லை, இல்லை. இவன் ஒருமாத காலமாக இங்கு இருக்கிறான். இன்னும் மூன்று மாதங்களுக்கு இங்கு வேலை நடைபெறும். நாம் அதுவரையில் இவனுக்குப் பணம் அழுது தொலைக்க வேண்டும்.” “இவனுக்கு முன் இருந்த மேஸ்திரி பணம் வாங்கவில்லையா?” “அந்த மேஸ்திரி மிகவும் நல்லவர். அவர் எல்லோரிடமும் மிகவும் அன்பாய் நடந்து கொண்டார். நம்போன்ற ஏழைகளிடம் மிகவும் இரக்கமுள்ளவர்.” “அந்தப் புண்ணியவான் ஏன் போய்விட்டார்?” “அவர் வேலையை விட்டுப் போகவில்லை; இந்த உலகத்தை விட்டே போய்விட்டார். நல்லவர்கள் அதிக நாள் உலகத்தில் இருக்க முடியவில்லையே!” “இந்த மேஸ்திரி இப்படி நம்மிடம் கொள்ளை அடிக்கிறான் என்பதை நாம் பண்ணையார் மகளிடம் சொன்னால் என்ன?” “சொல்லலாம். ஆனால் நாம் சொன்னது அவனுக்குத் தெரிந்தால், அவன் நம்மைத் தொலைத்துவிடுவான். அவன் போய் இன்னொருவன் வந்தாலும், நமக்கு இதே கதிதான் ஏற்படும்.” இவ்வாறு அந்த ஏழைப் பெண்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்குப் பக்கத்தில்தான் செந்தாமரையின் அறை இருந்தது. அவள் தன் அறையுள் இருந்துகொண்டே அவர்கள் பேச்சைக் கேட்டாள். அவள் மனம் மிகவும் வருந்தியது; “சிறிய மீன்களைப் பெரிய மீன் தின்கிறதா? ஏழையை ஏழையே கொள்ளை யடிப்பதா?” என்று எண்ணினாள். “இதை அம்மாவிடம் கூறி மேஸ்திரியை நல்வழிப்படுத்த வேண்டும் அல்லது அவனை ஒழிக்க வேண்டும்.” என்று தன்னுள் கூறிக்கொண்டாள். அன்று மாலை விடுதிப் பூங்காவில் மங்கையும் செந்தாமiரயும் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது செந்தாமரை வீராயியும் வேலாயியும் பேசிக்கொண்டதை விவரமாகக் கூறினாள். அதுகேட்ட மங்கை மிக்க வருத்தம் அடைந்தாள்; உடனே செந்தாமரையை அனுப்பி மேஸ்திரியை அழைத்து வரச் சொன்னாள். செந்தாமரை சென்ற சமயம் மேஸ்திரி தன் சிற்றாள்களிடம் பணம் வசூலித்துக்கொண்டிருந்தான். அவன் செந்தாமரையைப் பார்க்கவில்லை. தன் எதிரில் இருந்த புதியவனைப் பார்த்து, “ நீ நாளை முதல் கொத்தன் வேலைக்கு வரலாம். ஒருநாள் வேலைக்கு மூன்று ரூபாய் கூலி. ரூபாய்க்கு இரண்டணா வீதம் எனக்குக் கொடுத்துவிட வேண்டும், தெரிகிறதா?” என்று கேட்டான். அப்புதிய ஆள் சரி என்று தலையை ஆட்டிவிட்டுச் சென்றான். சிற்றாள்கள் எல்லோரும் சென்றுவிட்டனர். மேஸ்திரி பணத்தை வேட்டியில் முடிந்துகொண்டே திரும்பிப் பார்த்தான். செந்தாமரை புன் முறுவலோடு அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவளைப் பார்த்ததும் அவன் முகத்தில் பிணக்களை தட்டியது. அவனால் பேச முடியவில்லை. “தேனப்பா, உன்னை மங்கை அம்மாள் கூப்பிடுகிறார்கள்; உனக்காகப் பூங்காவில் காத்திருக்கிறார்கள்” என்றாள் செந்தாமரை “அம்மா, நான் இவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டதை நீங்கள் அம்மாளிடம் சொல்லாதீர்கள்”. “அம்மாளுக்கு இது தெரியும்; தெரிந்துதான் உன்னைப் பார்க்க விரும்புகிறார்கள்.” தேனப்பன் நடுங்கிக்கொண்டே சென்றான்; மங்கையைக் கண்டு கைகூப்பி வணங்கினான். மங்கை மலர்ந்த முகத்தோடு அவனைப் பார்த்தாள்; “தேனப்பா, இன்றைய வேலை முடிந்துவிட்டதா?” என்று அன்போடு கேட்டாள். “ஆம் அம்மா, இன்றைய வேலை முடிந்துவிட்டது.” “தேனப்பா, நான் சொல்லப் போவதை நன்றாய்க் கேள். நீ ஒரு நாளைக்கு நான்கு ரூபாய் சம்பளம் பெறுகிறாய். ஒரு கொத்தனார் மூன்று ரூபாய் சம்பளம் பெறுகிறார். ஒரு சிற்றாள் ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிறாள். ஆகவே, உன்னை விட மற்றவர்கள் வருவாயில் குறைந்தவர்கள். அவர்களும் இந்த நாட்டில் உயிர்வாழவே வேலை செய்கிறார்கள். உண்மை யாகவே ஒரு சிற்றாளுக்கு ஒரு ரூபாய் போதாது. அவள் தனியாளாக இருந்தால் போதும்; பிள்ளைக்காரியாக இருந்தால் போதாது. அவர்களது துன்ப வாழ்க்கையை நீ எண்ணிப்பார்க்க வேண்டும். நான் சொல்வது புரிகிறதா?” “புரிகிறது, அம்மா.” “அந்த ஏழைகளிடம் நீ நாள்தோறும் இரண்டணா வீதம் வாங்குகிறாய் என்பதை நான் அறிவேன். நான்கு ரூபாய் கூலி பெறும் உன்னிடம் நாள்தோறும் நான் எட்டணா வீதம் பெற்றுக் கொண்டால் உன் வயிறு எரியுமா? எரியாதா? என்ன சொல்கிறாய்?” தேனப்பன் நடுக்கங்கொண்டான். அவன் கண்கள் கலங்கின. “தேனப்பா, உன்னைப்போல் பிறரை நினைக்கவேண்டும். அவர்களும் வாழப் பிறந்தவர்கள். அந்த ஏழைகளைக் கொள்ளை அடிப்பது நல்லதன்று. அவர்கள் வயிறு எரிய எரிய நீ வாழ முடியாது. ஆதலால் நாளை முதல் நீ அவர்களிடம் பணம் வாங்கக் கூடாது. நீ இது வரையில் செய்த தவறுக்காக உன்னை வேலையிலிருந்து நீக்கிவிடலாம்; அது பெரியதன்று. உன்னைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இவ்வளவும் சொன்னேன்.” மங்கையின் சொல் ஒவ்வொன்றும் தேனப்பன் உள்ளத்தைத் தைத்தது. அவன் கண்ணீர் விட்டான்; “அம்மா, என்னை மன்னித்து விடுங்கள். எல்லா மேஸ்திரிகளும் இவ்வாறுதாம் செய்கிறார்கள். அதனால் நானும் அவ்வாறு செய்தேன். உங்கள் நல்லுரை என் உள்ளத்தை மாற்றிவிட்டது. நாளை முதல் நான் இந்தத் தவறு செய்யேன். இதனை நீங்கள் உறுதியாக நம்பலாம்” என்று கூறிக் கும்பிட்டாள். மங்கையின் முகம் மலர்ச்சியுற்றது; “தேனப்பா, உன் குடும்பத்தைப் போலவே பிறர் குடும்பத்தையும் நினை. உனக்கு இருக்கும் இன்ப - துன்பங்களைப் போலவே பிறருக்கும் இன்ப - துன்பங்கள் உண்டு என்பதை எண்ணிப்பார். உன் மனசாட்சிக்கு மாறாக நடக்கலாகாது. என்றும் நேர்மைக்காகப் பாடுபடுபவன் வாழ்க்கையில் துன்பப்படமாட்டான். அவன் பொருள் இல்லாத ஏழையாக இருக்கலாம். ஆனால் குற்றமற்ற-பிறரால் பழித்துக் கூறமுடியாத - தூயவனாக இருப்பான். அத்தகைய மதிப்பைப் பெறுவதே நமது நோக்கமாக இருக்கவேண்டும். போய் வா தேனப்பா, கடவுள் உன்னைக் காப்பாராக” என்று மங்கை மொழிந்தாள். தேனப்பன் தன் கைகளைக் குவித்து மங்கைக்கு வணக்கம் தெரிவித்தான்; தலை குனிந்தபடியே சென்று விட்டான். “அம்மா, நீங்கள் தேனப்பனை விலக்கி விடுவீர்கள் என்று நினைத்தேன்” என்றாள் செந்தாமரை. “செந்தாமரை, மக்கள் தவறு செய்வது இயல்பு. தவற்றைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்த முயல்வதே நாம் செய்யவேண்டுவது. `இனி இவர்களைத் திருத்த முடியாது’ என்பதை நன்றாக அறிந்த பின்னரே அவர்களை வேலையிலிருந்து நீக்கவேண்டும். தேனப்பனும் ஏழைதானே. அவனைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டுவது தான் நமது கடமை” என்று மங்கை அமைதியாக எடுத்துரைத்தாள். செந்தாமரை மங்கையின் அருட் பண்பை எண்ணி எண்ணி மகிழ்ந்தாள். மறுநாள் மாலை வழக்கம் போல் கொத்தர்களும் சிற்றாள் களும் மேஸ்திரிக்குப் பணம் கொடுக்கக் கூடியிருந்தனர். மேஸ்திரி தேனப்பன் அங்கு வந்தான். எல்லோரையும் பார்த்து மகிழ்ச்சி யோடு, “நான் இதுவரையில் உங்களிடம் பணம் வாங்கியது தவறு. நீங்களும் என்னைப் போன்ற தொழிலாளிகள். உங்கள் வயிறு எரியும்படி இதுவரையில் நான் நடந்துகொண்டேன்; இனி அப்படி நடவேன். நேற்று மங்கை அம்மாள் அவர்கள் என்னை அழைத்து அறிவுரை கூறினார்கள். நான் இனி அவர்கள் சொற்படி நடப்பதாக வாக்களித்திருக்கிறேன். நீங்கள் போகலாம்” என்று கூறினான். எல்லோரும் மங்கையை மனமார வாழ்த்திக்கொண்டு சென்றனர். 21. குளத்தூர் பண்ணையார் மங்கையின் அத்தை மகனும் குளத்தூர் பண்ணையாரு மாகிய கண்ணன் மங்கையை மணந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலை இன்னும் விட்டுவிடவில்லை. அவன் அடிக்கடி அறநிலையத்திற்கு வந்து முத்தப்பரையும் மங்கையையும் கண்டு சென்றான். அவன் வரும்போது சில சமயங்களில் மங்கை அறநிலையத்தில் இருப்பதில்லை. அவள் செந்தாமரையோடும் நக்கீரனோடும் சிற்றூர்களில் சொற்பொழிவு செய்யச் சென்றிருப்பாள். கண்ணன் நக்கீரன் மீது பொறாமை கொண்டான்; மங்கை நக்கீரனை விரும்புகிறாள் என்று தவறாக நினைத்தான்; “மாமா, மணமாகாத பெண்ணை மணமாகாத நக்கீரனுடன் இவ்வாறு வெளியூர்களுக்குச் செல்ல அனுப்புவது முறையன்று. எல்லாம் தெரிந்த நீங்களே இப்படிச் செய்யலாமா?” என்று சிறிது கோபத்துடன் கேட்டான். முத்தப்பர் கலகலவென்று நகைத்தார். அவனை அன்புடன் பார்த்து, “தம்பி, அவர்கள் இருவரும் மணமாகாதவர்களே; ஆனால் மன அடக்கம் உடையவர்கள். அவர்கள் இயல்புகளை நான் நன்றாக அறிவேன். அவர்தம் உள்ளங்களில் ஏழைகளைப் பற்றிய கவலை ஒன்றுதான் இடம் பெற்றிருக்கிறது. வேறு ஒன்றும் இடம் பெற்றிருக்கவில்லை. அவர்கள் மனநிலை உனக்கு இல்லாததால், நீ தவறாகக் கருதுகிறாய்” என்றார். “போகட்டும். மங்கையின் திருமணம் பற்றி யோசித்தீர்களா?” “அதைப் பற்றி எண்ணும் உரிமை மங்கைக்குத்தான் உண்டு.” இவ்வாறு அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே மங்கையும் நக்கீரனும் அங்கு வந்தனர். செந்தாமரையும் தாமரைக்கண்ணியும் அவர்களுக்குப் பின் வந்தனர். எல்லோரும் அமர்ந்தபிறகு முத்தப்பர் மங்கையைப் பார்த்து, “அம்மா, உன் திருமணச் செய்தி பற்றி உன் அத்தான் இப்பொழுதுதான் என்னைக் கேட்டான்” என்று சிரித்துக் கொண்டே கூறினார். “அதற்கு நீங்கள் சொன்ன பதில் என்ன?” “நீ என்னிடம் கூறியிருந்த பதிலையே நான் கூறினேன்.” “என்ன மங்கை! உன் பிச்சைக்காரத் தொண்டு-ஏழைகள் தொண்டு எப்படியிருக்கிறது? உனக்கு ஓய்வே இல்லையாமே?” என்று ஏளனச் சிரிப்புடன் கண்ணன் கேட்டான். “என்ன செய்வது! உங்களைப் போன்ற பண்ணையார் பலர் இத்துறையில் இறங்கி வேலை செய்தால் அல்லவா எனக்குச் சிறிது ஓய்வு கிடைக்கும். சமுதாய நலனில் சிறிதளவும் கருத்துச் செலுத்தாது, ஈவு இரக்கமற்ற சுயநல வாழ்வில் உங்களைப் போன்ற செல்வர்கள் இருப்பதால்தான் என் போன்றவர்களுக்கு ஓய்வு இல்லை” என்று மங்கை கடுமையாகச் சொன்னாள். “மங்கை கூறுவது முற்றிலும் உண்மை” என்றார் முத்தப்பர். “கண்ணா, நீ உன் சொத்தைச் சிறிது சிறிதாகக் கரைத்து வருவதாகக் கேள்விப்பட்டேன். செல்வம் எடுக்க எடுக்கக் குறையும்; வளராது. அதை வளர்க்கவும் நீ கற்றுக் கொள்ளவில்லை,” என்றார் முத்தப்பர். அவ்வமயம் நக்கீரன் முதலியோர் அவ்விடத்தை விட்டு அகன்றனர். மங்கை, முத்தப்பர், கண்ணன் ஆகிய மூவருமே அங்கிருந்தனர். மங்கை கண்ணனை நோக்கி, “அத்தான், குளத்தூரிலிருந்து சிலர் இங்கு வந்தனர்; நீங்கள் செய்யும் பல தவறான செயல்களைக் கூறி வருத்தப்பட்டனர். முன்னோர் தேடி வைத்த செல்வத்தை வளர்க்க முடியாவிட்டாலும் பாதுகாக்க வேண்டும்; உங்கள் பண்ணையில் வேலை செய்யும் ஏழை மக்களுக்கு வாழ்வு அளிக்க வேண்டும். அவர்களுக்கு எந்த நலனையும் செய்யாமல், அவர்கள் வெறுக்கும் அளவுக்குத் தீமைகள் செய்வது அறமாகாது. மேலும், கூத்திகள் பலரை வைத்துக்கொண்டு நீங்கள் செல்வத்தைப் பாழாக்குகிறீர்கள் என்று அவர்கள் கூறினார்கள். இச்செயல்களால் உங்கள் பெயருக்கு மாசு உண்டாகி விட்டது. அப்பாவும் நானும் உங்களை நினைந்து உண்மையில் வருந்துகிறோம்.” “மங்கை, நான் உன்னால்தான் கெட்டு வருகிறேன். நான் உனக்காகவே திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறேன்.” மங்கை கலகலவென்று நகைத்தாள்; “உங்களை நான் மணந்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் உண்டா? நீங்கள் மட்டும் விரும் பினால் போதுமா? நான் உங்களை மணந்துகொள்ளாததால் நீங்கள் கெட்டு வருவது நல்லதா? அத்தான், உண்மையாகச் சொல்லுகிறேன்; உறுதியாகச் சொல்லுகிறேன். நான் உங்களை மணந்துகொள்ளுதல் இயலாது. உங்கள் தகாத செயல்களைக் கேட்டுக் கேட்டு என் உள்ளம் புண்ணாகிவிட்டது.” என்று வருத்தத்தோடு கூறினாள். அவள் முகம் வாட்டமுற்றது. கண்ணன் இடி விழுந்தவன்போல் ஆனான். அவன் மிகவும் பரிதாபமாக மங்கையைப் பார்த்தான். அவனது நல்ல காலமோ என்னவோ, அப்போது அவன் மனம் ஓரளவு இளகியது; “மங்கை, எனக்கு வாழ்வே இல்லையா? நான் குளத்தூரில் தனியாக இருந்து துன்பப்படுகிறேன். என் தனிமையைப் போக்கச் சில பெண்களுடன் நான் கூடியிருந்தது உண்மையே. வேறு சில கொடுமைகளும் செய்தது உண்மைதான். அவற்றுக்காக வருந்துகிறேன்.” என்று கண்கலங்கக் கூறினான். அவன் கண் கலங்குவதைக் கண்ட மங்கையும் கண் கலங்கினாள்; “அத்தான், உங்கள் கொடிய மனம் மாறுவதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் யோசனைப்படி குளத்தூரில் நல்ல தொண்டுகளைச் செய்யுங்கள்; அடிக்கடி இங்கு வந்து செல்லுங்கள். உங்கள் உள்ளத்தில் அறநினைவு ஒன்றுக்கே இடம் கொடுங்கள்; ஏழைகள் பாராட்ட வாழுங்கள். உங்கள் பெயருக்கு ஏற்பட்ட மாசு மறையும்,” என்று மனமுருகக் கூறினாள். கண்ணன் உள்ளமும் உருகியது. அவன், “மங்கை, மாமா, உங்கள் இருவர் விருப்பப்படியும் இனி நடப்பேன். நீங்கள் நாளையே குளத்தூருக்கு வாருங்கள். நான் செய்ய வேண்டுவனவற்றைக் கூறுங்கள். கூறுவதென்ன? நீங்களே முன்னின்று செய்யுங்கள்.” “நாளை நாங்கள் வருவோம்; உங்களுக்குச் சில திட்டங்களைக் கூறுவோம்; உங்களுக்கு உதவியாக நக்கீரர், தாமரைக்கண்ணி, தேன்மொழி ஆகிய மூவரையும் அங்கு விட்டு வைப்போம். தாமரைக்கண்ணியும் தேன்மொழியும் பி.ஏ., எல்.டி. பட்டங்களைப் பெற்ற ஆசிரியர்கள். அவர்கள் இருவரும் உங்கள் ஊர்ப் பெண்களையும் சேரிப் பெண்களையும் பார்த்துப் பேசி அவர்கள் நிலைமைகளை அறிந்து கூறுவார்கள்; நக்கீரர் பள்ளிக்கூடத்தையும் அநாதை விடுதியையும் தொழிற் கூடத்தையும் நிறுவ உதவியாக இருப்பார். இம் மூவரையும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என்று மங்கை கூறினாள். மறுநாள் முத்தப்பர், மங்கை, நக்கீரன், தாமரைக்கண்ணி, தேன்மொழி ஆகிய ஐவரும் குளத்தூர் சென்றனர். கண்ணன் முன்னாளிரவே அவர்தம் வருகையின் நோக்கத்தை ஊரார்க்குப் பறை அறைந்து அறிவித்திருந்தான். ‘குளத்தூருக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது’ என்று ஊரார் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் அந்த இரவிலேயே தெருக்களை அலங்கரித்தனர். ஒவ்வொரு தெருவிலும் வரவேற்பு வளைவு காணப்பட்டது. திருப்போரூர்க் குழுவினர் மேள வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்; ஊரிலிருந்த பத்துத் தெருக்களையும் சேரித் தெருக்கள் இரண்டையும் நடந்து சென்றே பார்வையிட்டனர். பண்ணையார் வளமனைக்கு எதிரில்-ஊரின் குளத்திற்குப் பக்கத்தில்-பண்ணையாருக்குச் சொந்தமான இருபது ஏக்கர் நிலத்தில் பள்ளிக்கூடமும் அநாதை விடுதியும் தொழிற்கூடமும் கட்ட முடிவு செய்யப்பட்டன. அப்போது கோடை விடுமுறைத் தொடக்கம் ஆதலால் மங்கையின் விருப்பப்படி தாமரைக் கண்ணியும் தேன்மொழியும் குளத்தூரிலிருந்து பணிபுரிய ஒப்புக்கொண்டனர். நக்கீரன் கண்ணனுக்கு அமைச்சனாக இருந்து பணிபுரிய ஒப்புக் கொண்டான். அன்று மாலை தன் ஊர் திரும்பும்போது மங்கை கண்ணனைப் பார்த்து, “நேற்று நீங்கள் அடைந்த மனமாற்றத்தைக் கண்டு இரண்டு கன்னிப் பெண்களையும் உங்கள் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறேன்” என்று சிரித்துக்கொண்டே கூறினாள்; பின்பு அவள் நக்கீரனைத் தனியே அழைத்து, “நம் தோழிகள் இருவரையும் பார்த்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் அத்தானுக்கு அறிவுரை கூறி அவரை அறநெறியில் திருப்பி விடுங்கள்,’ என்று கூறினாள். பின்பு முத்தப்பரும் மங்கையும் எல்லோரிடமும் விடைபெற்றுத் திருப்போரூர் சென்றனர். 22. குளத்தூரில் காதலர் தாமரைக்கண்ணி மங்கையின் உற்ற தோழியாகவும் மிக்க பொறுப்புடனும் நடந்துவந்தாள். பலதிறப்பட்ட அறநிலைய வேலைகளை அவளும் நக்கீரனுமே பொறுப்பேற்று நடத்திவந்தனர். முத்தப்பர் அவளது தொண்டினைப் பாராட்டினார்; அவளது படிப்புக்காக அவள் தந்தை விற்ற நிலங்களை மீட்டுத் தந்தார். இதனால் தாமரைக்கண்ணி மிகவும் நன்றியறிதலோடு நடந்துகொண்டாள். அறநிலையக் கணக்குகளையெல்லாம் தாமரைக் கண்ணியும் நக்கீரனுமே கவனித்து வந்தனர். அறநிலைய நடைமுறை வேலை களையும் அவர்களே இயக்கிவந்தனர். இவ்வாறு இருவரும் இணைந்து வேலை செய்துவந்ததால், ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பல சிற்றூர்களுக்குச் சென்று சொற்பொழிவு செய்தார்கள். அவர்கள் இவ்வாறு மிக நெருங்கிப் பழகியதால் ஒருவர் திறமையை மற்றொருவர் நன்கு புரிந்து கொண்டனர். ஒருவர்மீது ஒருவர் அன்புகொள்ளத் தொடங்கினர். அந்த அன்பு நாளடைவில் காதலாக மலரத் தொடங்கியது. ஆயினும் அவ்விருவரும் அதுபற்றி வாய்விட்டுப் பேசிக்கொள்ளவில்லை. குளத்தூருக்கு நக்கீரன் முதலியோர் வந்து பதினைந்து நாட்களாயின. அடிக்கடி முத்தப்பரும் மங்கையும் வந்து, அங்கு நடைபெறும் வேலையை மேற்பார்த்துச் சென்றனர். ஊர் மக்களும் சேரி மக்களும் ஒன்று சேர்ந்து கட்டடங்களை நிறுவினர். தச்சர் முதலிய தொழிலாளர் தத்தம் பணிகளை ஊக்கத்தோடு செய்தனர். உயர்ந்த கூலி-அன்புடைய சொற்கள் இவ்விரண்டும் சேர்ந்து வேலையை நல்ல முறையில் முடித்துக் கொண்டு வந்தன. நாள்தோறும் தாமரைக்கண்ணியும் தேன்மொழியும் குளத்தூரிலுள்ள வீடுகளுக்குச் சென்றனர்; அந்த ஊரிலுள்ள படிக்கத்தக்க வயதுடைய பிள்ளைகளின் பெயர்ப்பட்டியலைத் தயாரித்தனர்; இவ்வாறே சேரியிலும் கணக்கெடுத்தனர். குடும்பத்தில் பெண்களின் கடமைகளை வற்புறுத்தினர்; ஆண் பிள்ளையையும் பெண் பிள்ளையையும் சமமாகவே கருதிக் கல்வி புகட்ட வேண்டும் என்று வற்புறுத்தினர்; வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் தேவையை உணர்த்தினர்; காலையில் குளிப்பதன் நலத்தை விரித்துரைத்தனர். மூடப்பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் இவை இவை என்று சுட்டிக்காட்டி, அவற்றை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். பண்ணையாள் மகளாகிய செந்தாமரையைச் சில நாட்கள் அழைத்துச் சென்று கல்வியால் அவள் அடைந்திருக்கும் முன்னேற்றத்தை உணரும்படி செய்தனர். வாரத்திற்கு ஒருமுறை ஞாயிறுதோறும் இரவு எட்டு மணியிலிருந்து பத்துமணிவரை ஊர் மக்களைக் கூட்டிக் கூட்டத்திற்குக் கண்ணன் தலைமை தாங்கினான். அக் கூட்டத்தில் நக்கீரன், தாமரைக்கண்ணி, தேன்மொழி ஆகிய மூவரும் பேசினர். இரண்டு கூட்டங்களில் செந்தாமரையும் வந்து பேசினாள். சாதி வேறுபாடுகளை ஒழித்தல், பெண்கள் முன்னேற்றம், கல்வியின் தேவை, கைத்தொழில் சிறப்பு, கிராம சுகாதாரம், இல்வாழ்க்கை, காதல் திருமணம், கைம்பெண் மறுமணம், நல்ல ஒழுக்கம் என்னும் பல பொருள்பற்றி அவர்கள் பேசினர் இப்பேச்சுக்கள் ஊர் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. அதுவரை ஊராரிடம் இருந்துவந்த சாதி வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. தேன்மொழியின் பேச்சு கண்ணன் உள்ளத்தைக் கவர்ந்தது. தேன்மொழி நாயுடு வகுப்பைச் சேர்ந்தவள். அவள் தந்தையார் சிறிதளவு சொத்தை வைத்துவிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அச்சொத்தைக் கொண்டு தேன்மொழியின் தாயார் தன் மகளைப் பட்டினத்தில் படிக்க வைத்தார். தேன்மொழி மங்கையோடும் தாமரைக் கண்ணியோடும் படித்தவள். அவளது வரலாற்றை அறிந்ததும் மங்கை அவளிடம் இரக்கம்கொண்டு தன் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்த்துக்கொண்டாள். தேன்மொழி இளமை முதலே சீர்சிருத்த நோக்கம் கொண்டவள்; சாதி, மத வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிப்பவள்; பொது மக்களுக்குத் தொண்டு செய்வதை விரும்பியவள்; எனவே, அறநிலையத்திலும் சேர்ந்து மனமாரத் தொண்டு செய்துவந்தாள். கண்ணன் அவளிடம் மிக்க அன்புடனும் மரியாதை யுடனும் நடந்துகொண்டான். அவள், மங்கை வாயிலாக அவனது முன் வரலாற்றை அறிந்தவள்; அவன் மனம் மாறுதல் பெற்றுப் பொதுநலத் தொண்டு செய்ய முனைந்திருப்பதைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி கொண்டாள். ஒருநாள் மாலை நக்கீரனும் தாமரைக்கண்ணியும் பக்கத்துச் சிற்றூர்களைக் காணச் சென்றனர். அவ்வமயம் சேரிக்குச் சென்றிருந்த தேன்மொழி கண்ணனது மாளிகைக்குத் திரும்பி வந்தாள். சிற்றுண்டிக்குப் பிறகு இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். பின்பு அவ்விருவரும் வளமனைத் தோட்டத்தில் உலவிக்கொண்டே உரையாடிக் கொண்டிருந்தனர். “பண்ணையாரே, நீங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லதன்று.” “நான் மங்கையை மணக்கவேண்டுமென்று காத்திருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் அவள் என்னை மணக்க முடியாது என்று கூறிவிட்டாள். இனிமேல்தான் தக்க ஒருத்தியை யான் தேடவேண்டும்.” “அந்த ஒருத்தியிடம் என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள்?” “என்னிடம் இப்பொழுது உள்ள மனநிலையை-பொதுநலத் தொண்டு செய்வதன் ஆர்வத்தையே எதிர் பார்க்கிறேன்.” “அத்தகுதி உடையவள் உங்கள் சாதியில் இருக்கிறாளா?” “அடாடா! சாதியைப் பற்றி பேசாதீர்கள். இறைவனது அருட்படைப்பில் எல்லோரும் ஒரே சாதியினரே. எந்தச் சாதியைச் சார்ந்த பெண்ணாக இருப்பினும், இந்த மனநிலையை உடையவளைத்தான் நான் மணக்க விரும்புகிறேன். தேன்மொழி, சுருங்கக்கூறின், உங்களைப் போன்ற தொண்டு உள்ளம் படைத்த பெண்மணியை நான் விரும்புகின்றேன். உங்கள் வரலாற்றை அறிய விரும்புகிறேன். கூறக்கூடுமாயின், கூறுங்கள்.” “பண்ணையாரே, நான் மதுராந்தகத்தைச் சேர்ந்தவள்; நாயுடு வகுப்பினள். எனக்குத் தந்தையார் இல்லை. அவர் விட்டுச்சென்ற சிறிதளவு சொத்தைக் கொண்டு என் தாயார் என்னைப் படிக்க வைத்தார். இரண்டாண்டுகளுக்கு முன் அவரும் காலமானார். எனக்கு உற்றார், உறவினர் எல்லோருமாக இருப்பவள் மங்கை ஒருத்திதான். அவளே என் தெய்வம்.” அச்சமயத்தில் கட்டவிழ்த்துக்கொண்ட முரட்டு எருது ஒன்று தேன்மொழியை முட்ட வந்தது. நல்லகாலம்! கண்ணன் திடீரென்று அவளைக் கையால் பற்றி அப்புறப்படுத்தினான்; தன் வேலையாட்களைக் கூவியழைத்து, மாட்டைப் பிடித்துக் கட்டச் சொன்னான். “பண்ணையாரே, நல்ல சமயத்தில் என்னைக் காப்பாற்றி னீர்கள். நீங்கள் இல்லையாயின் மாடு என்னை முட்டிக் கீழே தள்ளியிருக்கும்.; அல்லது என் வயிற்றைக் கிழித்திருக்கும். உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று முகமலர்ந்து கூறினாள். கண்ணன் முகம் மலர்ந்தது: “தேன்மொழி, உங்களைப் போன்ற பொதுநலத் தொண்டரைக் காக்க நான் பேறு செய்திருக்க வேண்டும். இச்சமயத்தில் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். தவறாகக் கருதமாட்டீர்களே?” “என்னை விபத்திலிருந்து காத்த உங்களைத் தவறாகக் கருத மாட்டேன். தாராளமாய்க் கேளுங்கள்.” “தேன்மொழி, நான் சிறிது காலம் இழிந்தவரோடு சேர்ந்து இருந்தேன்; ஆனால் இப்போது திருந்திவிட்டேன். உங்கள் மங்கையைத்தான் உங்களைப்போல் நானும் தெய்வமாகக் கருதுகிறேன்; அவள் சொற்படி பொதுநலத் தொண்டு செய்வதில் என் வருவாயைச் செலவழிக்க உறுதி கொண்டுவிட்டேன். இந்த நிலையில் எனக்கு வாழ்க்கைத் துணைவி தேவை. நீங்கள் என் வாழ்க்கைத் துணைவியாக இருந்து என்னை வாழ்விக்க வேண்டும் என்பது என் ஆவல். உங்கள் மலர்வாயிலிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன். நான் கூறியது தவறாக இருப்பின் மன்னித்துவிடுங்கள்.” இவ்வாறு அவன் கூறி அவளது மதிமுகத்தை ஆவலோடு பார்த்தான். அவள் கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. அவள் பார்வை மண்மீது பதிந்தது. பின்பு அவள் அவனை முக மலர்ச்சியோடு பார்த்து, “என்னை `நீங்கள்’ என்று அழைப்பதை நிறுத்தி `நீ’ என்று அழைத்துப் பேசினால்தான், உங்கள் கேள்விக்குப் பதில் அளிப்பேன்,” என்று கூறிச் சிரித்தாள். கண்ணன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான். “தேன்மொழி, நான் உன்னை உண்மையாகக் காதலிக்கிறேன். உன்னைப்போன்ற உத்தமியால்தான் எனது வாழ்க்கை வளமடையவேண்டும். என்ன சொல்லுகிறாய்?” “பண்ணையாரே, உங்களுடைய நல்ல பண்புகளைப் பார்த்து உங்களை நானும் உளமாரக் காதலிக்கிறேன். நம் இருவர் காதலையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக” என்று அகம் குழையக் கூறினாள். கண்ணன் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தான். அவன் உடல் பூரித்தது. அவன் தேன்மொழியின் இரண்டு கைகளையும் பிடித்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். தேன்மொழியின் முகம் அன்றலர்ந்த ரோசாவின் நிறத்தை அடைந்தது. 23. தாதி சொக்கம்மாள் மரகதவல்லி மருத்துவமனையில் வீரமணி என்ற தாதி இருந்தாள். அவள் குணங்களால் உயர்ந்தவள். நோயாளிகளிடம் பணம் வாங்காதவள். அவர்களை மிக்க அன்போடும் ஆதரவோடும் கவனித்து வந்தாள். ஊரார் அவளிடம் மிக்க மரியாதை கொண்டனர். அதே மருத்துவமனையில் மாணிக்கம் என்பவர் மருத்துவராக இருந்தார். அவர் தம் மனைவி - மக்களோடு அங்கு இருந்தார்; மிகச் சிறந்த ஒழுக்கமுடையவர். கையூட்டு வாங்காதவர்; யார் எந்த நேரத்தில் வந்தாலும் முகம் கோணாமல் நோயைக் கண்டறிந்து மருந்து கொடுப்பவர். இத்தகைய உயர்ந்த பண்புகளால் அம்மருத்துவமனையின் பெயர் சுற்றுபுறப் பகுதிகளில் பரவியது. முத்தப்பரும் மங்கையும் அடிக்கடி அவர்தம் வேலை முறைகளைப் பார்வையிட்டு வந்தனர். மாணிக்கத்தின் தந்தையார் திருநெல்வேலியில் காலமானார். அதனாலும் வேறு சில குடும்பக் காரணங்களாலும் மாணிக்கம் ஒரு திங்கள் விடுமுறை பெற்றுத் திருநெல்வேலிக்குச் சென்றுவிட்டார். வீரமணி தன் தமக்கை மகளுக்குத் திருமணம் என்று கூறி விடுமுறை பெற்றுப் பங்களூர் சென்றுவிட்டாள். இந்த இருவர் வேலைகளையும் கவனிக்கக் கந்தசாமி என்ற மருத்துவரும், சொக்கம்மாள் என்ற பெயர் கொண்ட தாதி ஒருத்தியும் அமர்த்தப்பட்டனர். கந்தசாமி மதுராந்தகத்தில் சொந்தத்தில் மருத்துவம் நடத்திவந்தவர். சொக்கம்மாள் மாவட்ட மன்றத்தார் நடத்திவந்த மருத்துவ மனைகளில் இருந்து அநுபவம் பெற்றவள்; தன் ஒழுக்கக் கேட்டால் நிலையான இடம் பெறத் தவறியவள். மருத்துவர் கந்தசாமியும் ஒழுக்கக்கேடர்; ஆனால் வேலையில் சமர்த்தர்; தம்மிடம் வரும் நோயாளிகளைக் கவனித்துப் பார்ப்பதில்லை; அவர்களைக் கேட்டே நோய் என்னதென்று அறிந்து மருந்து எழுதிக் கொடுத்தார்; நோயாளிகளைச் சோதிக்கவில்லை. தாதி சொக்கம்மாளும் தன்னிடம் வரும் நோயாளிகளைச் சரிவரக் கவனியாமலே ஏதோ மருந்து கொடுப்பதும் கட்டுக் கட்டுவதுமாக இருந்தாள். வரும் நோயாளிகளை விரைவில் ஏதோ மருந்து எழுதிக் கொடுத்தும் கட்டுக்கட்டியும் அந்த இருவரும் அனுப்பி விடுவர். அவர்கள் போனவுடன் மருத்துவர் சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு புகைவிடுவார். தாதி அவர் எதிரில் மேசையருகில் நின்றுகொண்டு ஏதேதோ பேசிச் சிரிப்பாள். அவரும் சிரிப்பார். ஒருவரையொருவர் விரட்டிப் பிடிப்பார்கள். மாலையில் இருவரும் ஆறு மணிக்கு மேல் நெடுந்தூரம் உலவச் செல்வர். மருத்துவர் கந்தசாமி மனைவியை இழந்தவர்; சொக்கம்மாள் திருமணம் ஆகாதவள். கந்தசாமி பல தாதிமாருடன் விளை யாடுவதிலே காலம் கழித்தவர். சொக்கம்மாளும் மருத்துவர் பலரிடம் விளையாடி இன்பம் கண்டவள்; பெண்களுக்குரிய மனப்பண்பு இல்லாதவள். நாள்தோறும் இந்த இருவரும் பெருவழியில் நடந்து செல்வதைப் பலரும் பார்த்தனர். பிறர் என்ன நினைப்பர் என்ற கவலையே இன்றி, அவர்கள் உரக்கச் சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் சென்றதைப் பலரும் பார்த்தனர். இவ்வாறு நடந்து சென்றவர்கள் பெரும்பாலும் இரவு ஒன்பது மணி அளவில்தான் அறநிலையத்திற்குத் திரும்பி வருவது வழக்கம். வயிரநாதன் என்பவன் மருத்துவமனையில் மருந்து கலக்கிக் கொடுப்பவன். அவனுக்கு வயது முப்பதிருக்கும். அவன் சிறந்த ஒழுக்க முடையவன். புதிய மருத்துவரின் ஒழுங்கீனத்தை வெறுத்தான்; அவ்வாறே சொக்கம்மாளின் நடையையும் பேச்சையும் வெறுத்தான். ‘இவர்களால் மருத்துவமனையின் நல்ல பெயர் கெட்டுவிடுமே!’ என்று அஞ்சினான். அவன் ஒருநாள் செந்தாமரையைத் தனியே அழைத்துத் தான் அறிந்த விவரங்களைக் கூறினான்; கந்தசாமியும் சொக்கம்மாளும் நாள்தோறும் சென்று நேரத்தை இன்பமாகக் கழித்துவரும் இடத்தையும் குறிப்பிட்டான். செந்தாமரை மங்கையிடம் சென்று வயிரநாதன் கூறியவற்றை விளக்கமாகக் கூறினாள். மங்கை கேட்டு அதிர்ச்சியடைந்தாள்; உடனே தன் தந்தையிடமும் நக்கீரனிடமும் இதுபற்றிப் பேசினாள். முத்தப்பர், “இது பற்றி வருந்திப் பயனில்லை. மருத்துவர் மாணிக்கம் இன்னும் ஐந்து நாட்களில் வருவதாக எழுதி இருக்கிறார். தாதி வீரமணியும் இரண்டு நாட்களில் வந்து விடுவாள். ஆயினும் வயிரநாதன் கூறியது உண்மைதானா என்பதை நேரில் கண்டறிய வேண்டும். ஆதலால் செந்தாமரையும் நக்கீரரும் இன்று மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணியுள் உண்மையைக் கண்டறிய வேண்டும்,” என்றார். அன்று மாலை ஆறுமணியளவில் அறநிலையத்திலிருந்து உந்து வண்டி புறப்பட்டது; திருப்போரூர்-செங்கற்பட்டுப் பெருவழியில் வயிரநாதன் குறிப்பிட்ட இடத்தில் நின்றது. இரவு ஏழுமணியளவில் வண்டி அங்கு வரவேண்டும் என்று ஓட்டியிடம் கூறிவிட்டு நக்கீரரும் செந்தாமரையும் இறங்கி விட்டனர். இறங்கி, கந்தசாமியும் சொக்கம்மாளும் அமர்ந்து விளையாடும் இடத்திற்கு அருகில் இருந்த சிறிய பாறைக்குப் பின் மறைந்திருந்தனர். அங்கிருந்து பார்த்தால் அவர்கள் விளையாட்டைக் காணலாம்; அவர்கள் பேசுவதைத் தெளிவாகக் கேட்கலாம். அவர்கள் அங்கு அமர்ந்து அரைமணி நேரமாயிற்று: இருவர் பேசும் குரல்கேட்டு மெதுவாக எட்டிப் பார்த்தனர். கந்தசாமியும் சொக்கம்மாளும் அப்போதுதான் குறிப்பிட்ட இடத்தில் வந்து உட்கார்ந்தனர். சொக்கம்மாள், “நாம் இருவரும் இவ்வாறு வருவதை ஊரார் கவனித்துவிட்டனர்” என்று கூறினாள். “கவனிக்கட்டுமே! நாம் இருவரும் படித்தவர்கள்; ஒரே இடத்தில் வேலை செய்கின்றவர்கள்; நாம் பேசிக் கொண்டு வருவதில் தவறில்லையே?” “பேசிக்கொண்டு வருவதில் தவறில்லை; இனி இங்கு நாம் நடத்தும் விளையாட்டுகளில்தாம் தவறு இருக்கிறது” என்று கூறி நகைத்துகொண்டே சொக்கம்மாள் கந்தசாமியின் முதுகைத் தட்டினாள். “இங்கு நடைபெறும் விளையாட்டுக்களை யார் பார்க்கப் போகிறார்கள்?” என்று கூறிக்கொண்டே கந்தசாமி பக்கத்திலிருந்த சொக்கம்மாளை இரண்டு கைகளால் அணைத்துக் கொண்டார். இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர். இந்தக் காட்சியை நக்கீரரும் செந்தாமரையும் நன்றாய்ப் பார்த்தனர். “டாக்டர், மருத்துவமனையிலேயே நாம் ஒருவரோ டொருவர் விளையாடிக்கொள்வது வயிரநாதனுக்குப் பிடிக்க வில்லை போலிருக்கிறது. அவர் என்னை வெறுப்போடு பார்க்கிறார்.” “அவன் கிடக்கிறான் மடையன். இந்த இன்பத்தை அவன் அறிவானா?” மீண்டும் அந்த இருவரும் உரக்கச் சிரித்தனர். “நாம் என்ன இங்கு நிலையாகவா இருக்கப் போகிறோம்? இன்னும் இரண்டு நாட்களில் உன்வேலை போய்விடும்; ஐந்து நாட்களில் என்வேலை போய்விடும்; இந்த நிலையில் வயிரநாதன் என்ன, முத்தப்பரோ மங்கையர்க்கரசியோ நம்மைப்பற்றித் தவறாக நினைத்தாலும் கவலையில்லை,” என்றார் கந்தசாமி. அப்போது அவர் பிடியிலிருந்து விலகிக்கொண்ட சொக்கம்மாள், “டாக்டர், இனி நான் எங்கு வேலை தேடி அலைவது?” என்று ஏக்கத்தோடு கேட்டாள். “கண்ணே, நீ ஏன் வேலைக்காக அலையவேண்டும்? என்னுடன் மதுராந்தகத்திற்கு வந்துவிடு. நாம் இருவரும் அங்கு தொழில் நடத்தலாம். இங்கு இருப்பதுபோலவே அங்கும் இன்பமாக இருக்கலாம்” என்று கந்தசாமி மகிழ்ச்சியோடு பேசினார். “அங்கு ஊரார் நம்மைப்பற்றிப் பலவாறு பேசினால்?” “பேசினால் என்ன? யார் நம்மை என்ன செய்ய முடியும்? ஒவ்வொருவனும் ஒவ்வொரு துறையில் நெறிதவறியே நடக்கின்றான். அந்தப் பயல்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஊர்வதந்தி பலவாகும்போது வேறு ஊருக்குச் சென்றுவிடுவோம்; அங்குத் தொழிலைத் தொடங்கி நடத்துவோம்.” “நாம் பதிவுத் திருமணம் செய்து கொண்டால் கவலையின்றி வாழலாமே!” “சொக்கம்மா, என்னளவில் அது செய்ய விருப்பமே. என் தந்தையார் இருக்கிறார். அவர் சம்பாதித்த பணம் ஒரு லட்சம் ரூபாய் இருக்கின்றது. அவருக்கு நான் ஒரே பிள்ளை. அவர் என் இனத்திலேயே மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார். எங்கள் பிள்ளைமார் வகுப்பில் படித்த பெண் எவளும் நான் விரும்பும் வகையில் இல்லை. ஆதலால் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறேன். நீ பிராமண வகுப்பைச் சேர்ந்தவள். ஆதலால் நான் உன்னை மணந்துகொள்ள அவர் இசையமாட்டார். நான் உன்னை மணந்தால் சொத்தை இழக்க வேண்டியவனாவேன். அவர் இறக்கும் வரையில் இப்படியே இருப்போம்.” “தாங்கள் கூறுவது நல்ல யோசனைதான். அப்படியே செய்வோம்.” இந்த உரையாடலுக்குப் பிறகு அவர்கள் பேச்சு நின்று விட்டது. எங்கும் இருள் சூழ்ந்துகொண்டது. நக்கீரனும் செந்தாமரையும் எழுந்து இருளில் மறைந்தனர். 24. சொக்கம்மாள் திருமணம் நக்கீரனும் செந்தாமரையும் தாம் கண்டதையும் கேட்டதையும் முத்தப்பரிடமும் மங்கையிடமும் தெளிவாக எடுத்துரைத்தனர். முத்தப்பர் கடுங்கோபங் கொண்டார். மங்கை, “அப்பா, உலகத்தை நன்கறிந்த நீங்கள் இவ்வாறு கோபம் கொள்ளலாமா? கந்தசாமியின் தந்தையைக் கண்டு பேசி, அவரது இசைவு பெற்று, அவர் முன்னிலையிலேயே இவர்களது திருமணத்தை நடத்திவைப்பதுதான் நல்லது. முன்னரே கெட்டுப் போயுள்ள இவ்விருவரும் மேலும் கெட்டுப் போகாமலிருக்க, இத் திருமணமே எல்லைக்கல்லாக அமைந்துவிடும். திருமணத்திற்குப் பின்பு இவர்களது ஒழுக்கமும் செம்மைப்படும்” என்று நல்லமுறையில் எடுத்துக் கூறினாள். மகளது யோசனையைக் கேட்ட தந்தையார் துள்ளிக் குதித்தார். “இந்த விவரங்களைக் கேட்டதும் அவ்விருவரையும் வேலையி லிருந்து நீக்கிவிடுவீர்கள் என்று நாங்கள் இருவரும் பேசிக்கொண்டு வந்தோம். ஆனால் உங்கள் பெருந்தன்மை எங்களை வியப்படையச் செய்துவிட்டது” என்று மகிழ்ச்சியோடு பேசினான் நக்கீரன். மங்கை முகமலர்ச்சியோடு, “நக்கீரரே, இவ்வாறு குற்றம் செய்பவர்களை நீக்கிக் கொண்டே போனால், வேலையில் மிகச் சிலரே எஞ்சி இருப்பர். தவறுதல் மனித இயல்பு. அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதே சமுதாய நலனில் நாட்டங் கொண்டவர் கடமையாகும். இத்திருமணத்திற்குப் பிறகு அவர்களது வாழ்க்கை செம்மைப்படும் என்பது உறுதி” என்றாள். “நக்கீரரே, மங்கையின் யோசனைதான் நல்லது. கந்தசாமி வந்தவுடன் அவரை இங்கு அழைத்து வாருங்கள். அவர் தந்தையார் முகவரியைக் கேட்டு அறிந்துகொள்வோம். நாளை காலை நாம் நால்வரும் அவர் தந்தையாரைக் கண்டு வருவோம்” என்று முத்தப்பர் கூறினார். இரவு சுமார் 9-30 மணியளவில் நக்கீரனுடன் மருத்துவர் கந்தசாமி வந்து முத்தப்பரை வணங்கினார். இருவரும் பொதுவாக நோயாளிகளைப் பற்றியும் மருத்துவமனைபற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். பின்பு முத்தப்பர் அவர் வரலாற்றைக் கேட்டறிந்தார்; அவர் தந்தையார் திண்டிவனத்தில் தம் தம்பியின் இல்லத்தில் இருப்பதை அறிந்தார்; அத் தம்பியின் முகவரியையும் தெரிந்துகொண்டார். கந்தசாமி கலப்புத் திருமணம் செய்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதையும் அவரே சொல்ல அறிந்து கொண்டார். மறுநாள் காலை பத்துமணி அளவில் முத்தப்பர் முதலிய நால்வரும் திண்டிவனத்தில் கந்தசாமியின் தந்தையாரைக் கண்டனர். அவர்கள் இன்னவர் என்பதை அறிந்தவுடன் பெரியவர் மிக்க மரியாதையோடு வரவேற்றார். சிறந்த அறநிலையத்தைத் தோற்றுவித்து நடத்திவரும் தந்தையும் மகளும் தம்மைக் காண வந்துள்ளனர் என்பதை அறிந்ததும், அப்பெரியவர் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கினார். முத்தப்பர் தம் அறநிலைய நோக்கத்தையும் அங்கு நடைபெறும் செயல்களையும் விளக்கினார். பெரியவரின் தம்பி சீர்திருத்த உள்ளம் படைத்தவர். அவர் அறநிலையச் சார்பில் நடைபெற்ற கலப்புத் திருமணங்களை உளமார வரவேற்றார்; “நம் நாட்டுப் பெருந்தலைவர்கள் இக் கலப்பு மணங்களையே ஆதரிக்கின்றனர். இவற்றால்தான் சாதி வேறுபாடுகள் ஒழியும்; சமுதாய ஒற்றுமை ஏற்படும். நீங்கள் செய்துவரும் இத்தொண்டிற்கு நமது சமுதாயம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.” என்று வாயாரப் பாராட்டினார். அதுவே தக்க சமயம் என்று முத்தப்பர், “ஐயா, நீங்கள் பரந்த மனம் படைத்தவர்கள். உங்களைப் போலவே உங்கள் தமையனாரும் இருப்பார் என்று நம்புகிறோம். உங்கள் தமையனார் மகன் மருத்துவர் கந்தசாமியும் இத்தகைய திருமணங்களை வரவேற்றார். ஆனால் உங்கள் குடும்பத்தில் இதுவரையில் கலப்பு மணம் செய்ய வாய்ப்பு ஏற்படவில்லை போலும்!” என்றார். பெரியவரின் தம்பி, “அத்தகைய வாய்ப்பு இதுவரையில் ஏற்பட வில்லை. வாய்ப்பு வந்தால் நழுவவிட மாட்டோம்” என்று கூறினார். அவர் குரலில் உறுதி இருந்தது. “உண்மையாகவா?” “ஆம். உண்மைதான். உண்மையாகவே கூறுகிறேன்.” “உங்கள் தமையனார் இதனை ஆதரிக்கிறாரா?” தம்பி இதற்குப் பதில் சொல்வதற்குள் பெரியவர் ‘இல்லை’ என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தார். உடனே தம்பியின் முகம் சுருங்கியது. அவர் தம் அண்ணனைப் பார்த்து, “என்ன அண்ணா, தலை அசைக்கிறீர்கள்? பாழும் சாதி சாதி என்று சொல்லிச் சொல்லி நாம் கண்ட பலன் என்ன? திருமணத்தில் சாதி-சண்டையில் சாதி-தேர்தலில் சாதி-ஒரே மதத்தில் பல சாதிகள்-ஐயோ! இச் சாதிகளால் இந்நாடு கெட்டது போதாதா? `சாதியிலே மதங்களிலே’என்று தொடங்கும் அருட்பாவை நீங்கள் அடிக்கடி பாடுவீர்களே! அதன் பொருள் என்ன? அருட்பிரகாச வள்ளலார் சாதிகளை வெறுத்தார் என்றால், நாம் வெறுப்பதில் தடை உண்டா? சித்தர்கள், இராமலிங்க அடிகள், விவேகானந்தர் போன்ற பெரியார்களை விடவா நாம் பெரியவர்கள்? `சாதிகள் ஒழிந்தால்தான் இச்சமுதாயம் உருப்படும்’ என்று அப்பெரியோர்கள் கூறியதை நீங்கள் அறிந்திருப்பீர்களே1” என்று நீண்டதோர் சொற்பொழி வாற்றினார். பெரியவர், “தம்பி, நீ கூறுவது உண்மை. ஒத்த கல்வி, ஒத்த பண்பு, ஒத்த உள்ளம் உடையவராயின் சாதி பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. உண்மையான காதல் அடிப்படையில் இருவர் மணம் செய்ய விரும்பினால், அவர்தம் சுகவாழ்வு கருதி, அதனை ஆதரிப்பது நல்லது,” என்று அமைதியாகக் கூறினார். “நீங்கள் கூறுவது உண்மைதானா?” என்று முத்தப்பர் ஆவலோடு கேட்டார். “ஆம்-ஆம். உண்மைதான்” என்றார் பெரியவர். அதுகேட்ட மங்கையின் முகம் மலர்ந்தது. எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தனர். முத்தப்பர் முகமலர்ச்சியோடு பெரியவரைப் பார்த்து, “ஐயா, உங்கள் மகன் கந்தசாமி தம்முடன் தாதிவேலை பார்க்கும் ஒரு பிராமணப் பெண்மீது காதல் கொண்டிருக்கிறார். அவளும் அவரையே மணந்துகொள்ள விரும்புகிறாள். உங்கள் முன்னிலையில் உங்கள் இசைவோடு அவர்களது திருமணத்தை நடத்த நாங்கள் விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஆசி தேவை.” தம்பி துள்ளிக் குதித்தார்; “மிகவும் நல்ல ஏற்பாடு. அவன் விரும்பினால் எங்களுக்குத் தடையில்லை. என்ன அண்ணா?” என்று பெரியவரைப் பார்த்தார். பெரியவர் சிறிது நேரம் பேசவில்லை. அவர் கண்கள் மூடியிருந்தன. எல்லோரும் அவரை ஆவலோடு பார்த்தனர். பெரியவர் கண்களைத் திறந்தார். அவர் விழிகளில் ஒருவித ஒளி காணப்பட்டது. “நீங்கள் பெரியவர்கள்; நல்ல பணியைச் செய்கிறீர்கள். உங்கள் விருப்பமே என் விருப்பம். ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாளில் திருமணத்தை முடித்து விடுங்கள்” என்று மகிழ்ச்சியோடு கூறினார். “அடுத்த ஞாயிறு காலை பத்துமணி அளவில் திருமணம் நடை பெறும். நாங்கள் உந்துவண்டியை அனுப்புவோம். நீங்கள் சனியன்றே வந்துவிடுங்கள். உங்கள் முன்னிலையிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்பது எங்கள் அவா,” என்றார் முத்தப்பர். முத்தப்பர் முதலியோர் அவர்களிடம் விடைபெற்றுத் திருப்போரூர் மீண்டனர்.  கல்லில் நார் உரிப்பதுபோலத் தம் தந்தையாரிடமிருந்து முத்தப்பர் திருமண இசைவு பெற்று வந்ததை அறிந்து கந்தசாமி எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்; ஓடிச்சென்று சொக்கம் மாளிடம் நடந்ததைக் கூறி, அவளையும் அழைத்துக்கொண்டு வந்தார். அவ்விருவரும் முத்தப்பரையும் மங்கையையும் பலபடப் பாராட்டி மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டனர். அடுத்த ஞாயிறு காலை வழக்கம்போல் முத்தப்பர் தலைமையில் அழகாபுரி அடிகள் கந்தசாமிக்கும் சொக்கம் மாளுக்கும் திருமணத்தை நடத்தி முடித்தார். அடிகள் கலப்புத் திருமணத்தின் தேவையை வற்புறுத்திப் பேசினார். அப்போது, “நம்மிருவர் திருமணமும் இம்மாதிரிதான் நடக்கப் போகிறது” என்று கண்ணன் தேன்மொழியின் காதில் குசுகுசுவென்று கூறினான். மணம் செய்துகொண்ட இருவரும் கந்தசாமியின் தந்தை யாரையும் அவர் தம்பியையும் வணங்கினர். பெரியவர் முகமலர்ச்சியோடு அவர்களை ஆசீர்வதித்தார், பின்னர் அவ்விருவரும் அழகாபுரி அடிகள், முத்தப்பர் இருவர் பாதங்களிலும் விழுந்து வணங்கினர். அன்று அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தவள் மங்கையர்கரசி ஒருத்திதான். “ஒழுக்கம் கெட்டவரை ஒழுக்கத்தில் நிலைநிறுத்த மங்கை சொன்ன யோசனைதான் சரியானது. மங்கையின் அறிவே அறிவு! மங்கை நம் சமுதாயத்தை வாழ்விக்க வந்த தெய்வம்” என்று நக்கீரன் தாமரைக்கண்ணியிடமும் செந்தாமரையிடமும் கூறி மகிழ்ந்தான். 25. பாண்டியன்-செந்தாமரை செந்தாமரை அறநிலையத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கியது முதல் பாண்டியன் அடிக்கடி அறநிலையத்திற்குச் சென்று வந்தான்; அவளைத் தன் கிராமத்தில் கண்டது முதல் அவளது கல்வி முன்னேற்றத்தில் கருத்துக் கொண்டான். அவள் தன் அறிவு நுட்பத்தாலும் சிறந்த ஒழுக்கத்தாலும் செயலாற்றும் திறமையாலும் மங்கையின் உள்ளத்தைப் படிப்படியாகக் கவர்ந்து வந்ததை அறிந்து, அவள் திறமையை வியந்தான்; அவள் மங்கையுடன் சென்று ஆற்றிய சொற்பொழிவுகளைக் கேட்டான்; அவளது பேச்சாற்றலைக் கண்டு வியந்தான்; அடிக்கடி அறநிலையத்தில் அவளைத் தனியே சந்தித்துப் பேசி மகிழ்ந்தான். செந்தாமரை பாண்டியனுடைய நல்ல பண்புகளைக் கண்டு தன்னுள் பாராட்டினாள்; அவன் தனது முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை அறிந்து மகிழ்ந்தாள்; அவன் அறநிலையத்திற்கு வந்த நேரங்களிலெல்லாம் அவனுடன் முகமலர்ச்சியோடு பேசிவந்தாள். பாண்டியன் வரவரத் தன்மீது மிகுந்த காதல் கொண்டிருப்பதை நன்கு அறிந்து கொண்டாள்; கூடுமாயின் அவனை மணந்து, மங்கையைப் போல் பொதுநலத் தொண்டு செய்யவேண்டும் என்று தன்னுள் எண்ணினாள். கரும்பாக்கம் பண்ணையார் அளவு கடந்த குடியாலும் கூடா ஒழுக்கத்தாலும் நோய்க்காளானார்; சிறந்த மருத்துவர்கள் வந்து பார்த்தும் விரைவில் குணம் பெறாமல் வருந்தினார். அவர் ஒருநாள் தம் செல்வமகனைப் பார்த்து, “பாண்டியா, என் இறுதி நெருங்குகிறது. இன்னும் சில நாட்களில் நான் இறக்கலாம். அதற்குள் உனக்குத் திருமணம் செய்விக்க விரும்புகிறேன். கமலாபுரம் பண்ணையார் மகள் கண்ணகியை உனக்கு மணம் செய்விக்கலாம் என்று நினைக்கிறேன். அவள் ஒரே மகள்; ஆண் பிள்ளைகள் இல்லை. அந்தப் பண்ணையும் உன்னையே சாரும். என்ன சொல்லுகிறாய்?” என்று ஆவலோடு கேட்டார். பாண்டியன் நகைத்தான்; “திருமணம் என்பது இருவரும் உடன்பட்டுச் செய்துகொள்ளும் வாழ்க்கை ஒப்பந்தம். இருவரும் உள்ளத்தாலும் உணர்ச்சியாலும் செயலாலும் ஒன்றுபட்ட வராய் இருத்தல் வேண்டும். இதுவே நம் முன்னோர் கையாண்ட முறை. இதற்கு மாறாகப் பெண்ணைப் பாராமலே அவள் பண்புகளையும் உள்ளத்தையும் அறியாமலே-கேவலம் பணத் தாசையால் ஒருத்தியை மணந்துகொள்ளுதல் பொருத்த மாகாது. அத்தகைய இணைப்பு இல்வாழ்க்கையில் இன்பத்தைத் தராது. உடன்பட இயலாமைக்கு வருந்துகிறேன்; பொறுத்தருள வேண்டுகிறேன்” என்று அமைதி யாகவும் பணிவாகவும் கூறினான். “அப்படியென்றால், நீயாக எவளையேனும் தேர்ந்தெடுத்திருக் கிறாயா?” “ஆம்.” “யாரவள்?” “கேட்டவுடன் பயப்படாதீர்கள்; அதற்காக என்னை வெறுக்காதீர்கள். என் வாழ்க்கையில் நீங்கள் கவலை உடையவர்கள் அல்லவா?” “யார் என்று சொல்லித் தொலை; அடிப்படையைப் பலமாகப் போடாதே.” “நமது பண்ணையாள் குப்பன் மகள் செந்தாமரை.” கோலால் அடிபட்ட நாகம் படம் விரித்துச் சீறுவது போலப் பண்ணையார் கடுங்கோபம் கொண்டார். அவர் விழிகள் சிவந்தன; மீசை துடித்தது; “என்ன சொன்னாய்? அந்த மடப்பயல் முத்தப்பனும் அவன் மகள் மங்கையும் இந்த நாட்டைப் பாழாக்குகிறார்கள். அவர்களோடு சேர்ந்திருக்கிற வரையில் உன் அறிவு இப்படித்தான் போகும்.” என்று சீறினார். “அப்பா, ஆத்திரப்படாதீர்கள். நான் சிறு பிள்ளையல்ல. எனக்கு 26 வயதாகிறது. நான் இதுவரையில் விரும்பியிருந்தால் எத்தனையோ தீய செயல்களைச் செய்திருக்கலாம். எனது ஒழுக்கத்திற்கு நம் ஊர் மக்களே சான்று பகர்வர். நம் இருவருக்கும் அடிப்படையில் கருத்து வேறுபாடு உண்டு. நாமும் வாழ்ந்து சமுதாயத்தையும் வாழ்விக்க வேண்டும் என்பது என் கருத்து. இராமலிங்க அடிகள் போன்ற பெரியோர்கள் அறிவுரைப்படி சாதிகள் ஒழியவேண்டும்-அதனால் சமுதாயம் ஒன்றுபடவேண்டும் என்பது என் கருத்து” பண்ணையார் இடைமறித்து, “அதற்காகப் பறைக் குட்டியை மனைவியாகக் கொள்ள விரும்புகிறாயா?” என்று சீற்றத்தோடு கேட்டார். “ அப்பா, உங்களுக்குப் `பறையன்’ என்ற சொல்லுக்குப் பொருள் தெரியவில்லை என்று நினைக்கிறேன். பறை-அறிவி, தெரிவி; பறையன்-அறிவிப்பவன், தெரிவிப்பவன். அரசாங்க ஆணையை மாநகரத்தாருக்குப் பறையறைந்து அறிவிப்பவன் என்பதே `பறையன்’ என்ற சொல்லுக்குப் பொருளாகும். எனவே, இது தொழில் பற்றிய பெயரே தவிரப் பிறவி பற்றிய பெயர் அன்று. இப்படியே நமது நாட்டில் பண்பு பற்றியும் இடம் பற்றியும் பிற பற்றியும் உண்டான பெயர்கள் நாளடைவில் பிறவி பற்றிய பெயர்களாகக் கருதப்பட்டன; மக்கள் பிரிக்கப்பட்டனர். தன்னலக்காரர்களால் உண்டாக்கப்பட்ட இச்சாதிப் பிரிவுகள் நம் சமுதாய ஒற்றுமையைக் குலைத்துவிட்டன. இராமலிங்க அடிகள், காந்தியடிகள் போன்ற பெரியோர் பலர் இந்த உண்மையை எடுத்துக் கூறியுள்ளனர்.” “சாதி தொலையட்டும். தகுதியாவது ஏறத்தாழ ஒத்திருக்க வேண்டாவா?” “அப்பா, தகுதி என்பது பணத்தைப் பொறுத்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது மனத்தைப் பொறுத்தது என்பது என் எண்ணம். ஒத்த கருத்துடைய இருவர் ஒரே தகுதியுடையவர் என்பது என் கருத்து. கல்வி ஒன்றே மக்கள் தகுதியை உயர்த்துவது. அத்துடன் நல்லவர் பழக்கமும் சேருமாயின், ஒருவர் தகுதி உயர்ந்துவிடுகிறது. செந்தாமரை குப்பையில் தோன்றிய மாணிக்கம். அவள் கல்வியறி வுடையவள்; நாடே பாராட்டும் நல்லவர்களோடு பொதுநலத் தொண்டு செய்துவருகிறாள். அந்த நல்லவர்களின் நம்பிக்கைக்கும் பெருமதிப்புக்கும் உரியவளாக இருக்கிறாள். கோடீசுவரர் முத்தப்பரின் இரண்டாம் மகள் என்னும் தகுதியில் இன்று இருந்துவருகிறாள். அவள் குணங்களால் உயர்ந்தவள்.” “என்னடா, எல்லையில்லாமல் வருணித்துக்கொண்டே போகிறாய்?” “இந்த வருணனை போதாது அப்பா! அவள் பத்தரைமாற்றுத் தங்கம். அவளை மணப்பவன் உண்மையில் பெரும்பேறு பெற்றவன். நான் அவளைத்தான் மணக்க விரும்புகிறேன். நீங்கள் உடன்படவில்லையாயின், எனக்கும் திருமணமே வேண்டுவதில்லை.” பண்ணையார் பதைபதைத்தார். அவர் உள்ளம் கொதித்தது; படுக்கையில் சாய்ந்துவிட்டார். நாட்கள் நகர்ந்துகொண்டே இருந்தன. நோயும் மனக்கவலையும் பண்ணையாரை வாட்டலாயின. மேற்கூறியவாறு தந்தைக்கும் மகனுக்கும் உரையாடல் நடந்த அன்று மாலையில் பாண்டியன் செந்தாமரையைச் சந்தித்தான்; தனக்கும் தன் தந்தைக்கும் நடந்த உரையாடலைக் கூறினான். அது கேட்ட செந்தாமரை நாணத்தோடு ஓரக்கண்ணால் அவன் முகத்தைப் பார்த்தாள். பின்பு பாண்டியனை நோக்கி, “பாண்டியரே, உமது விரிந்த மனப்பான்மையையும் நல்லியல்புகளையும் நான் மதிக்கிறேன்; பாராட்டுகிறேன். உங்கள் தந்தையின் கருத்தைச் சிறிது சிறிதாக மாற்ற முயலுங்கள். பிறகு நாம் மணம் செய்துகொள்ளலாம். பழைமையில் தோய்ந்து கிடக்கும் அவர் எண்ணத்தைப் பையப் பைய மாற்ற வேண்டும்.” “பெண்ணே, நாய் வாலை நிமிர்த்த முடியாது.” “அப்படியாயின், அவர் மறைவு வரையில் பொறுத்திருங்கள்.” “செந்தாமரை, உன்னை என் உயிரினும் மேலாகக் காதலிக்கிறேன். நீ இல்லாமல் என் வாழ்வு இல்லை. இதை நினைவில் வைத்துக்கொள்.” “பாண்டியரே, நான் உங்களையே உயிராகக் கருதியிருக்கிறேன். சுடுகதிரும் தண்கதிரும் அறிய நாம் இருவரும் கருத்தொருமித்த காதலர்கள்.” என்றாள் செந்தாமரை. இருவர் முகங்களும் இன்பத்தால் மலர்ந்தன.  கரும்பாக்கம் பண்ணையார் பாயும் படுக்கையுமானார். மகனது திருமண முடிவே அவரது நோயை மிகுதிப்படுத்திற்று. பாண்டியன் அறநிலையத்திற்குச் சென்றிருந்தபோது, ஒருநாள் மாலை அவர் காலமானார். மூன்று மாதங்கள் கடந்தன. ஒரு ஞாயிற்றுக்கிழமை திருமண நாளாகக் குறிக்கப்பட்டது. பண்ணையார் மகன் பண்ணையாள் மகளை மணக்கப்போகிறான் என்ற செய்தி காட்டுத்தீப் போலச் செங்கற்பட்டு மாவட்டம் முழுமையும் பரவியது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் திருமண நாளன்று திருப்போரூரில் கூடிவிட்டனர். அதனால் திறந்த வெளியில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கம்போல் திருமண விழாவிற்கு முத்தப்பர் தலைமை தாங்கினார். மிக எளிய உடைகளில் மணமக்கள் காட்சி யளித்தனர். அழகாபுரி அடிகள் திருமணம் செய்வித்தார். எல்லோரும் மணமக்களை வாழ்த்தினர். “ஒரு பெரிய பண்ணையார் தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண்ணை மணப்பது அரிதிலும் அரிதல்லவா!” என்று கூறித் தாழ்த்தப்பட்ட மக்கள் பாண்டியனைப் பாராட்டிப் பேசினர். பாண்டியன் எழுந்து, “தலைவர் அவர்களே! அடிகளார் அவர்களே! பெரியோர்களே! இறைவன் படைப்பில் எல்லோரும் சமம். இந்த உண்மையை உணர்த்தவே இத்திருமணம் நடைபெற்றது. பணக்காரன்-ஏழை, பண்ணையார்-பண்ணையாள், முதலாளி-தொழிலாளி என்னும் வேறுபாடு இச் சமுதாயத்தில் இருக்கும்வரையில் நாடு முன்னேற்றம் பெறாது. உண்மைக் காதல் அழிவில்லாதது; தெய்வத்தன்மை வாய்ந்தது; தெய்வத்தன்மை வாய்ந்ததால் மனிதக் கட்டுப்பாடுகளைக் கடந்ததாகும். இவ்வுண்மையையும் உணர்த்தவே இத் திருமணம் நடைபெற்றது. செந்தாமரை எங்கள் பண்ணையாள் மகள். இவளை ஏழு ஆண்டுகளாக நான் கவனித்துவருகிறேன். இவள் கல்வியில் கருத்துடையவள்; சிறந்த அறிவுடையவள்; உயர்ந்த பண்புடையவள்; தொண்டு மனப்பான்மை உடையவள்; `எல்லோரும் வாழ வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் கொண்டவள். ஆதலால்தான் நான் இவளை மணந்துகொண்டே.ன். இத் திருமணத்தால் என் மனம் மகிழ்ச்சி அடைகிறது. மிகச் சிறந்த பெரியார்களான முத்தப்பரும் அழகாபுரி அடிகளும் இத் திருமணத்தை ஆசிர்வதித்தனர். நடமாடும் கோவில்களாக விளங்கும் நீங்களும் பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்து எங்களை ஆசீர்வதித்தீர்கள். உங்கள் எல்லோருக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்” என்று பேசி அமர்ந்தான். (பலத்த கைத்தட்டல்) செந்தாமரையும் பேச எழுந்தாள். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அவள் அவையோரைப் பணிந்து, “பெரியோர்களே, என் கணவர் பாண்டியர் தெரிவித்ததுபோல எங்கள் திருமணம் உண்மைக் காதலை அடிப்படையாகக் கொண்டது. என்னைப் பெற்ற தந்தை பண்ணையாளாக இருப்பினும், என்னைப் படிப்பித்து வாழ்வளித்த தந்தை பண்ணையார் முத்தப்பரே ஆவர். நான் அவரது இரண்டாம் மகள் என்று எல்லோரும் கூறுவது வழக்கம். என் தமக்கை கோடீசுவரி மங்கையர்கரசிதான். நான் இவர்களால்தான் இந்த வாழ்வைப் பெற்றேன். இனி எங்கள் கரும்பாக்கம் பண்ணை முன்போல இராது. அது பண்ணையாட்களின் இன்ப மாளிகையாக விளங்கும். அவர்களுக்கு வாழ்வளிப்பதே எங்கள் நோக்கம். எங்கள் திருமணத்தை ஆசிர்வதித்த உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி அமர்ந்தாள். முத்தப்பர் எழுந்து, “அவையோர்களே, சாதிகள் மனிதன் படைத்தவை. நல்ல பண்புகள் உடையவரே மேலோர். அவை இல்லாதவர் கீழோர். இதுவே அறிஞர் முடிவு. செந்தாமரை குணங்களால் உயர்ந்தவள். ஆதலால் அவள் எல்லோர் அன்புக்கும் உரியவள் ஆகிவிட்டாள். அவளைப் போலவே எல்லாப் பெண்களும் குணங்களால் உயரவேண்டும்; கல்வியால் உயரவேண்டும்.” என்று பேசி அமர்ந்தார். மக்கள் முத்தப்பரையும் மணமக்களையும் மங்கையையும் மனமார வாழ்த்தினர். 26. குளத்தூரில் தொண்டு தேன்மொழி, குளத்தூருக்கு வந்த மங்கையைத் தனியே சந்தித்து, கண்ணன் தன்னைக் காதலிப்பதாகவும் தான் அவனைக் காதலிப்பதாகவும் நாணிக்கோணித் தெரிவித்தாள். அதைக் கேட்ட மங்கை அளவற்ற மகிழ்ச்சியடைந்து அவளை மார்புறத் தழுவிக் கொண்டாள். “தேன்மொழி, என் கவலைவிட்டது. குணங்களால் உயர்ந்த உன்னை மனைவியாகப்பெற அவர் பேறு செய்தவராகவே இருக்கவேண்டும். உங்கள் காதலை வாழ்த்துகிறேன். விழிப்போடு இருந்து அவரை நல்வழிப்படுத்திச் செல்வது உனது கடமை” என்றாள். சிறிது நேரம் கழித்துக் கண்ணன் மங்கையைத் தனியே கண்டான். தானும் தேன்மொழியும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதைத் தெரிவித்தான்; ஒரு நல்ல நாளில் திருமணம் செய்துவைக்கும்படி வேண்டினான். “அத்தான், இப்பொழுது என் மனம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது. நீங்கள் நல்ல வாழ்வுப் பாதையில் செல்லத் தொடங்கிவிட்டீர்கள். தேன்மொழி என் உயிர்த்தோழி; சிறந்த பண்பாடு உடையவள். அவளை மனைவியாகப் பெற நீங்கள் பேறு செய்திருத்தல் வேண்டும். இல்லற ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வின் இறுதிவரை நீங்கள் இணைபிரியாது இருக்கவேண்டும். அதுவே நான் விரும்புவது. அப்பாவிடம் இந் நற்செய்தியைக் கூறுவேன்; குளத்தூரில் பள்ளி, அநாதை விடுதி, தொழிற்கூடம் இவற்றைத் திறக்கும் அந்த நல்ல நாளிலேயே-அனைவர் முன்னிலையிலும் உங்கள் திருமணம் நடைபெறுவது நல்லது” என்றாள். கண்ணன் உவகையோடு ஒப்புக்கொண்டான். மாலை ஆறு மணியளவில் மங்கை அங்குக் கட்டப்பெற்று வரும் கட்டடங்களைப் பார்க்கச் சென்றாள். அவை முடிவுறும் நிலையில் இருந்தன. அவற்றை மகிழ்ச்சியோடு பார்த்துத் திரும்பும்போது, நக்கீரனும் தாமரைக்கண்ணியும் குளத்தூர்ச் சேரியிலிருந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நகை முகத்தோடு பேசிக்கொண்டு வந்தனர். ‘இவர்களுக்கும் விரைவில் திருமணம் முடிக்க வேண்டும்’ என்று மங்கை தன்னுள் கூறிக்கொண்டாள். தங்களை மறந்து பேசிக்கொண்டு வந்த அவ்விருவரும் வழியில் மங்கை நிற்பதைக் கண்டனர்; முகமலர்ச்சி கொண்டனர். “இன்னும் ஒரு வாரத்தில் கட்டடவேலை முடிந்துவிடும். இருபது அநாதைப் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளும்படி அழகாபுரி அடிகள் கடிதம் எழுதியுள்ளார். இந்த ஊரிலும் சேரியிலும் மிகவும் எளிய நிலையிலுள்ள கைம்பெண்கள் பதின்மர் கைத்தொழில் கற்க விரும்புகின்றனர். அழகாபுரி அடிகள், பிச்சையெடுத்து வந்த ஆறு இளம் பெண்களைத் தமது விடுதியில் வைத்திருப்பதாகவும் நம்மிடம் அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.” என்று தாமரைக்கண்ணி மங்கையிடம் கூறினாள். “நமது அறநிலையம் ஏழைகளைக் காத்து வருதல் போலவே பல திருமணங்களையும் நடத்திவருகிறது என்று ஊரார் பேசக் கேட்டேன். உங்கள் திருமணத்தையும் தேன்மொழி - கண்ணன் திருமணத்தையும் விரைவில் சிறப்பாக நடத்தவேண்டும்” என்று மங்கை முக மலர்ச்சியோடு கூறினாள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்சிரிப்புக் கொண்டனர். ஒருவாரம் கடந்தது. கட்டடங்கள் எல்லாம் நல்லமுறையில் கட்டி முடிக்கப் பெற்றன. செங்கற்பட்டு மாவட்டத் தலைவர் (கலெக்டர்) மருதவாணர் அக்கட்டடங்களைத் திறக்க ஒப்புக்கொண்டார். குறித்த நாளில் குளத்தூர் கண்கவரத்தக்க முறையில் அலங்கரிக்கப்பட்டது. இந்த அலங்கார வேலையில் ஊர்மக்களும் சேரிமக்களும் ஒற்றுமையோடு வேலை செய்தனர். சுற்றுபுறச் சிற்றூர்களிலிருந்தும் வேறு ஊர்களிலிருந்தும் திறப்புவிழாவைக் காண நூற்றுக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். குறித்த நேரத்தில் மருதவாணர் வந்து சேர்ந்தார். அவரையும் முத்தப்பரையும் குளத்தூர் மக்கள் மேளவாத்தியத் துடன் வரவேற்று விழாப் பந்தலுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மக்களது கூட்டத்தைக் கண்டு மருதவாணர் மலைத்துப்போனார். மேடைமீது மருதவாணர், முத்தப்பர், மங்கை, அழகாபுரி அடிகள், கண்ணன், தேன்மொழி, நக்கீரன், தாமரைக்கண்ணி, செந்தாமரை ஆகியோர் அமர்ந்திருந்தனர். முதலில் கடவுள் வாழ்த்து நடைபெற்றது. பிறகு கண்ணன் எழுந்து அனைவரையும் வரவேற்றுப் பேசினான். தலைவராக அமர்ந்த அழகாபுரி அடிகள் பொது நலத்தொண்டின் சிறப்பைப் பற்றி விரிவாகப் பேசினார்.. அடுத்தபடி மருதவாணர் எழுந்து பேசினார். “பெரியோர்களே, நாட்டில் சிலர் செல்வராகவும் பலர் ஏழைகளாகவும் இருந்து வருகின்றனர். செல்வர்கள் தங்கள் தேவைக்கு மேற்பட்ட பணத்தையோ நிலத்தையோ எளியவர்க்கு உதவி, அவர்களையும் வாழ்வித்தல் நல்லது. அப்பொழுதுதான் நாட்டில் சமுதாய ஒற்றுமையும் மனிதப் பண்பும் வளரும். பண்டைக் காலத்தில் இக்கருத்தைக் கொண்டுதான் பாரி முதலிய வள்ளல்கள் வாழ்ந்தனர். செல்வர்கள் தங்கள் அளவில் சுகமாக வாழ்வதும் பக்கத்து ஏழைகளைக் கவனியாதிருத்தலும் பொறுக்க முடியாத குற்றமாகும். இதனாற்றான் ஊரில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை முதலிய நெறி தவறிய செயல்கள் நடைபெறுகின்றன. ‘எல்லோரும் இறைவன் மக்கள்; நம் உடன் பிறந்தவர். ஒருவரையொருவர் கைதூக்கி விடவேண்டும்’ என்ற உணர்ச்சி நம்மிடம் ஏற்படவேண்டும். அவரவர் தம்மால் இயன்ற உதவிகளைப் பிறர்க்குச் செய்யவேண்டும். அப்போதுதான் நம்மிடையே ஒற்றுமையும் கட்டுப்பாடும் வளரும். ஒற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள சமுதாயம் தான் உலகத்தில் நிலைத்து வாழமுடியும். இந்த நன்னோக்கங்களை உள்ளத்திற் கொண்டே பண்ணையார் கண்ணன் அவர்கள் ஏழைப் பிள்ளைகட்கும் அநாதைப் பிள்ளை கட்கும் பள்ளி ஒன்றைத் தொடங்கியுள்ளார்; அவர்களுக்கு இலவசமாக உண்டி, உடை, உறையுள் ஆகிய மூன்றையும் வழங்க முன்வந்துள்ளார்; கைம் பெண்களுக்கும் அநாதைப் பெண்களுக்கும் பிழைப்புக்கு வழிகாட்டத் தொழிற்கூடத்தை அமைத்துள்ளார். இதுதான் இக்காலத்திற்கு ஏற்ற தொண்டு; மிகச் சிறந்த தொண்டு. கண்ணனுக்கு இத்துறையில் கருத்தூட்டியவர் யார்? திருப்போரூர்ப் பண்ணையார் முத்தப்பரும் அவர் மகளான மங்கையர்கரசியுமே ஆவர். ஏழாண்டுகளாக அவர்கள் செய்துவரும் தொண்டு இந்திய நாடு முழுதும் பரவிவிட்டது. பிச்சைக்காரர்களை வாழ்விக்கும் திட்டத்தை முதன் முதலில் செயற்படுத்தி வெற்றிகண்ட பெருமை முத்தப்பருக்கே உரியதாகும். நமது அரசாங்கமும் அவரது தொண்டின் வெற்றியைக் கண்டு வியந்து பாராட்டுகிறது. ஒவ்வோர் ஊரிலும் உள்ள செல்வர் அவர்களைப் போல உண்மையாகப் பாடுபடுவராயின், இந்நாட்டில் பிச்சைக்காரர் இருக்க முடியாது; பட்டினியால் வாடும் மக்களும் இருக்க முடியாது. வேலை செய்து பிழைக்க வழியில்லாமல் இருக்கும் கைம் பெண்களையும் அநாதைப் பெண்களையும் சிறுதொழில்கள் மூலம் வாழ்விக்கக் கூடும் என்பதையும் முத்தப்பர் மெய்ப்பித்து விட்டார். அவர்தம் தொழிற்கூடத்தில் பயிற்சி பெற்ற அல்லி என்ற இளம்பெண் செங்கற்பட்டில் பெண்களுக்காகத் தையற்கடை வைத்துப் பிழைத்து வருகிறாள். அவளிடம் நான்கு பெண்கள் வேலை செய்கிறார்கள். சென்ற வாரம் என்மனைவி அக்கடைக்குச் சென்றாள்; தனக்கு வேண்டிய உடைகளைத் தைக்கக் கொடுத்தாள்; மிகவும் நல்ல முறையில் அவை தைக்கப்பெற்றன என்று பாராட்டினாள். அப்பொழுது நான் முத்தப்பரை உளமார வாழ்த்தினேன். பெரு மக்களே, இத்தகைய தொண்டுதான் எல்லா மக்களுக்கும் உணவை அளிக்கும்; எல்லோரையும் வாழ்விக்கும். முத்தப்பரது அறிவுரையைப் பின்பற்றிக் கண்ணன் இந்த அறநிலையத்தை வளர்பிறை போல வளர்ப்பார். கடவுளுக்கும் உகந்த இத்திருப்பணி, எல்லா ஊர்களிலும் தோன்றி வளர்வதாக! என்று வாழ்த்தி இக் கட்டடங்களைத் திறந்து வைக்கிறேன்.” அங்குக் கூடியிருந்த மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்து நீண்ட நேரம் கைதட்டினர். கட்டடங்கள் திறக்கப்பெற்றன. இன்னிசை முழங்கியது.  அதே மேடையில் அழகாபுரி அடிகள், மருதவாணர் தலைமையில், கண்ணனுக்கும் தேன்மொழிக்கும் திருமணம் செய்வித்தார். பண்ணையார் வேளாளர், மணப்பெண் நாயுடு வகுப்பினள் என்பதை அறிந்த எல்லோரும் பண்ணையார் செயலைப் பாராட்டினர். “பெரியோர்களே, மணமக்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து மணந்துகொள்வது அவர்களது வாழ்க்கைக்கு நல்லது. கேவலம் பணத்தாசை கொண்டு ஒருவரை ஒருவர் மணந்துகொள்ளுதல் மீளாத துன்பத்தை உண்டாக்குகிறது. இந்த முறையில் பெற்றோர்மீது பழிசுமத்த இடமில்லை. இவ்வாறு காதல் வயப்பட்டுக் கலப்பு மணம் செய்பவர்க்கு அரசாங்கம் வேலையில் சலுகையும் பரிசும் வழங்க வேண்டும். அரசு ஆதரித்தால்தான் கலப்புத் திருமணங்கள் பெருகும். இத்திருமணப் பெருக்கத்தால் நாளடைவில் சாதிகள் மறைந்துவிடும். சாதிகள் மறைந்தால், சமுதாய ஒற்றுமை ஏற்படும். எனவே, இத்திருமணங்களை நான் உளமார வரவேற்கிறேன்” என்று தலைவர் மருதவாணர் தெளிவாகப் பேசி முடித்தார். எல்லோரும் மணமக்களை வாழ்த்தினர். “இத்திருமணத்தில் செலவே இல்லை போல் இருக்கிறதே! திருமணச் செலவால் எத்துணைக் குடும்பங்கள் வறுமை அடைந்திருக்கின்றன! நாமும் இனிமேல் இந்த முறையில் நம் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்விப்பதுதான் நல்லது” என்று பொதுமக்கள் பேசிக்கொண்டே சென்றனர். அன்று தொழிற்கூடத்தில் பதினாறு பெண்கள் சேர்க்கப்பட்டனர். நூல் நூற்றல், நெசவு செய்தல், தையல் வேலை இம்மூன்றும் அன்று தொடங்கப் பெற்றன. மரகதவல்லி அறநிலையத்தில் ஏழு ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றவரே இங்கு ஆசிரியராய் வந்து அமர்ந்தனர். அநாதை விடுதியில் அன்று முப்பது பிள்ளைகள் (ஆண்களும் பெண்களும்) சேர்க்கப்பட்டனர். பள்ளியில் படிப்பதற்காகச் சுற்றுப்புற ஊர்களிலிருந்து நூறு பிள்ளைகள் சேர்க்கப்பெற்றனர். இவ்வாறு அந்தத் தொடக்க நாளில் தொடக்க வேலை நடைபெற்றது. இம்மூன்றையும் மேற் பார்க்கும் பொறுப்பைத் தேன்மொழி பி.ஏ., எல். டி- பண்ணையார் மனைவி ஏற்றுக் கொண்டாள். 27. செயற்கரிய செயல் திருப்போரூர்ப் பண்ணையில் முப்பது குடும்பங்கள் வயல் வேலை செய்துவந்தன. அவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்யலாம்-எப்படிச் செய்யலாம் என்று முத்தப்பர் ஆறு ஆண்டுகளாக எண்ணி எண்ணிப் பார்த்தார்; அக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உடை, கல்வி முதலியவற்றை இலவசமாக அளித்து வந்தார். ஆண்டுக்கு மும்முறை எல்லோருக்கும் உடைகளை வழங்கினார்; முப்பது ஓட்டு வீடுகளைக் கட்டி அவற்றில் அவர்களைக் குடியேற்றினார். அவை தொழிலாளர் இல்லங்களைப் போல அழகுடனும் வசதியுடனும் அமைந்திருந்தன. இந்த நலன்களால் அவர் மனம் அமைதியுறவில்லை; பலவாறு எண்ணமிட்டார்; இறுதியில் அழகாபுரி அடிகளோடு கலந்து ஆலோசித்தார். இருவரும் ஒரு புதிய திட்டத்தை வகுத்தனர். ஒவ்வொரு பண்ணையாள் குடும்பத்தினரும் வயிறார உண்ணத்தக்க அளவு நெல் முதலிய தானியங்களை அறுவடை ஆனதும் வழங்கிவிடுவது நல்லது என்ற முடிவுக்கு வந்தனர்; அக் குடும்பத்தினருக்கு வேண்டிய குறைந்த அளவு தேவைகளைக் குறிப்பிட்டு அவற்றிற்குரிய பணத்தை ஆறு மாதத்திற்கு ஒரு முறை கொடுப்பதெனவும் முடிவு செய்தனர். மங்கையும் நக்கீரனும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டனர். கண்ணன்-தேன்மொழி, பாண்டியன்-செந்தாமரை ஆகியோரும் இத்திட்டத்தைப் பாராட்டினர். இத்திட்டம் செய்தித்தாள்களில் அறிவிக்கப்பட்டது. பொதுநலத் தொண்டரும் ஏழைப் பங்காளரும் இத்திட்டத்தை வியந்து பாராட்டிச் செய்தித்தாள்களில் எழுதினர். செல்வர் சிலர் இதனை வன்மையாகக் கண்டித்து எழுதினர். இத்திட்டத்தை நன்கு ஆராய்ந்து முடிவு செய்ய ஒரு நாள் முத்தப்பர் முதலியோர் கூடினர். அப்பொழுது மங்கையர்க்கரசி பின்வருமாறு பேசினாள்: “நாம் பிறக்கும்பொழுது செல்வத்தைக் கொண்டு வரவில்லை; இறக்கும்பொழுதும் கொண்டு செல்வதில்லை. இடைநடுவில் வந்த செல்வத்தை எல்லோருக்கும் வழங்கி எல்லோரையும் வாழ்விப்பதே நமது கடமையாக இருத்தல் வேண்டும். ஆதலால் இத்திட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர விரும்புகிறேன். நமது பண்ணையின் வேலைகளைக் கவனிக்க எழுவர் குழு ஒன்று அமைப்போம். அதனில் பண்ணையாட்கள் ஐவர் இருக்கவேண்டும். அப்பாவும் நானும் அக்குழுவில் இடம்பெறுவோம்; இந்த எழுவரும் சேர்ந்து பண்ணையின் வருவாயைக் கணக்கிடுவோம்; பண்ணையாட்களின் முப்பது குடும்பங்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தேவையான செலவுக்குரிய தானியங்களை வைத்துக்கொண்டு, எஞ்சியவற்றை மூன்று பகுதிகளாகப் பிரிப்போம்; அவற்றில் ஒரு பகுதியைப் பண்ணையாட்களின் நலத்துக்காக ஆண்டுதோறும் ஒதுக்கி வைப்போம்; மற்றொரு பகுதியை வரி, எரு முதலியவற்றிற்காகச் செலவிடுவோம்; எஞ்சிய பகுதியை அறநிலையத்திற்கு உதவி வருவோம்” என்று கூறினாள். “அம்மா, இது மிகவும் அருமையான திட்டம். இதனைச் செயற்படுத்திப் பார்க்கலாம். இத்திட்டத்தில் பண்ணையாரும் பண்ணையாட்களும் சமமாக்கப்பட்டுவிட்டனர். எல்லோருக்கும் பண்ணை வேலையில் சமமான கவலையும் உரிமையும் உழைப்பும் ஏற்பட்டுவிடும். உனது நுண்ணறிவைப் பாராட்டுகின்றேன்” என்று அழகாபுரி அடிகள் மங்கையை உளமாரப் பாராட்டினார். இப்புதிய திட்டம் செய்தித்தாள்களில் வெளிவந்தது. இது மங்கையர்க்கரசியின் புதிய திட்டம் என்றும் எழுதப்பட்டிருந்தது. அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் இத்திட்டத்தைக் கண்டு மிகவும் வியப்படைந்தனர்; தன்னலம் சிறிதளவும் இல்லாத மங்கையர்க் கரசியை மனமார வாழ்த்தினர். “பண்ணையாரும் பண்ணையாட்களும் சரிசமமாக இருந்து பண்ணை வேலைகளைக் கவனிப்பதா? என்ன அக்கிரமம்!” என்று சில பண்ணையார்கள் செய்தித்தாள்களில் மங்கையின் திட்டத்தை வன்மையாகக் கண்டித்தனர். அறிவுடைச் செல்வரும் பொதுமக்களும் மங்கையின் திட்டத்தை உளம் கனிந்து வரவேற்றனர்; “நாடெங்கும் இத்திட்டம் வரின், ஏழை மக்கள் வாழ்வு பெறுவர்” என்று பேசிக்கொண்டனர். திட்டம் வெளிப்படுத்தப்பட்ட நாள் முதல் அரசியல் அறிஞர்களும் அரசாங்க அலுவலரும் நல்ல உள்ளம் படைத்த பொதுமக்களும் மங்கைக்கு வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பலாயினர். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் இத்திட்டம் தொடங்கப்பெற்றது. அத்தொடக்க விழாவிற்கு பயிர்த்தொழில் அமைச்சர் பரந்தாமனார் வந்திருந்தார். நாடு கண்டிராத இத் திட்டத்தைக் கேள்வியுற்ற ஆயிரக்கணக்கான மக்கள் திருப்போரூரில் கூடியிருந்தனர்: “நாம் காண்பது கனவா? நனவா? இப்படியும் செல்வர் மனம் மாறுமா?” என்று பொது மக்கள் பேசிக்கொண்டனர். குறித்த நேரத்தில் அழகாபுரி அடிகள் இறைவணக்கம் பாடினார். பலத்த கைதட்டலுக்கிடையே மங்கை எழுந்து நின்றாள். கோடீசுவரியாக இருந்த அவள் எளிய உடையில் திகழ்ந்ததைக் கண்டு அவையோர் அதிசயித்தனர்; அவளது துறவு உள்ளத்தையும் ‘எல்லோரும் வாழவேண்டும்’ என்ற பரந்த நோக்கத்தையும் எண்ணி வியந்தனர்; அவளது பேச்சை ஆவலோடு கேட்கலாயினர். “தலைவர் அவர்களே! பெருமக்களே! இந்த நாட்டிலுள்ள நிலம் இந்த நாட்டு மக்களைச் சேர்ந்தது. எப்படியோ ஒரு சிலர் தம் தேவைக்கு மேற்பட்ட நிலப்பகுதியைக் கைக்கொண்டு நெடுங்காலமாக உரிமை கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சட்டங்களும் பிறவும் அமைந்துவிட்டன. ஆயினும், சட்டங்கள் நிலைபெற்றவை அல்ல. சூழ்நிலைக்கு ஏற்பச் சட்டங்களை அமைத்துக்கொள்ளலாம். பலர் வாழ்வதற்குச் சட்டம் தேவையே தவிரச் சிலரது சுகவாழ்வுக்காக மட்டும் சட்டங்கள் பயன்படலாகாது. மனம் மாறினால் சட்டம் மாறும். சட்டங்கள் பாதுகாத்துவரும் எங்கள் நிலங்களை, மனம் மாறியுள்ள நாங்கள், எங்களுக்கும் எங்கள் பண்ணை யாட்களுக்கும் பொதுவாக ஆக்கிவிடுகிறோம். நிலத்தின் நன்மை-தீமை, பயன்-பயன் இன்மை எங்கள் எல்லோரையும் சார்ந்துவிடுகின்றன. பண்ணையாட் களின் பிரதிநிதியாக ஐவரும் நானும் என் தந்தையாரும் ஆக எழுவர் செயற்குழுவினராக இருந்து இப்பண்ணையை நடத்தி வருவோம். அப்போதுதான் எங்கள் எல்லோருக்கும் பண்ணை வேலையில் உண்மையான கவலை பிறக்கும்; அதனை வளர்க்க எல்லோரும் பாடுபடுவோம். அது வளர்ந்தால் நாங்கள் வளர்வோம். `எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பாரதியின் கனவு அப்போதுதான் நனவாகும். எங்களது இந்த முயற்சியை ஆசிர்வதிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். நமது அமைச்சர் பெருமான் இத்திட்டத்தைத் தொடங்கி வைப்பார்.” “மங்கையர்க்கரசி வாழ்க! முத்தப்பர் வாழ்க” என்று அவையோர் வாழ்த்தொலி எழுப்பினர். அமைச்சர் பரந்தாமனார் எழுந்து நின்றார். அவர் விழிகளிலிருந்து மகிழ்ச்சிக் கண்ணீர் வெளிப்பட்டது. அவரால் பேச முடியவில்லை. “பெருமக்களே!” என்றார். அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை; உணர்ச்சிவயப்பட்டு நின்றார். அவர் விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவையோர் அனைவரும் அவரது உணர்ச்சியில் ஈடுபட்டு மெய்மறந்து இருந்தனர். அமைச்சர் சிறிது கனைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார்; “சமுதாயத்தை வாழ்விக்க வந்த பெண் தெய்வமே!” என்று அவர் மங்கையைப் பார்த்துச் சொன்னவுடன், அவையோர் பலமாகக் கைதட்டிப் “பெண் தெய்வம் வாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். அவை அமைதி பெற நெடுநேரமாயிற்று. பின்பு அமைச்சர் தம் உணர்ச்சியை ஓரளவு அடக்கிக்கொண்டு பேசலானார்: “பெரியோர்களே! மங்கையர்க்கரசியின் திட்டம் இந்த மாநிலம் காணாத திட்டம்; மனிதன் இங்கு செயற்படுத்தாத திட்டம். இவ்வாறு ஒவ்வொரு பண்ணையிலும் நடைபெறுமாயின், பல ஆயிரம் ஆண்டுகளாகச் செல்வர்க்கே உழைத்து உழைத்து வறுமைக் கோலத்தில் வாடிவரும் பண்ணை மக்கள் விரைவில் வாழ்வு பெறுவார்கள்; கல்வி முதலிய எல்லாத் துறைகளிலும் விரைவில் முன்னேறுவார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மறைந்து ஒழியும். மங்கையின் இத்திட்டம் பண்ணையார்களுக்கும் அரசாங்கத் திற்கும் விழிப்புணர்ச்சியை உண்டாக்கி விட்டது. பிச்சைக்காரர்-வறியவர்-எளியவர் என்பவர் இல்லாத நாடே நாடு என்று சொல்லப்படும். அத்தகைய நாட்டை உருவாக்கு வதற்கு உரிய அடிப்படைகளை எல்லாம் - நாட்டுக்கு நல்லவற்றை எல்லாம் முத்தப்பரும் மங்கையும் ஏழு ஆண்டுகளாகச் செய்து வருகின்றனர். இவர்களது தந்நலமற்ற பணிக்கு அரசாங்கத் தினரும் பொதுமக்களும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர். இந்த நல்ல நேரத்தில் உங்கள் அனைவர் இசைவோடும் `இவ்வரிய திட்டம் இன்று முதல் செயல்படுவதாக!’ என்று வாழ்த்தித் தொடங்கி வைக்கிறேன்.” அமைச்சர் பேச்சைக் கேட்டுப் பொதுமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். முத்தப்பர் எழுந்தார். அவையோர் “முத்தப்பர் வாழ்க” என்று பேரொலி எழுப்பினர். அவர் வணக்கம் தெரிவித்துவிட்டு, “அமைச்சர் அவர்களே, பெரியோர்களே, எங்கள் பண்ணையில் 30 குடும்பத்தார் வேலை செய்கின்றனர். அவர்களுள் வயதிலும் அநுபவத்திலும் முதிர்ந்த ஐவரைப் பண்ணையாட்களே தேர்ந்தெடுத் துள்ளனர். அந்த ஐவரோடு நானும் என்னை இந்த அறவழியில் திருப்பி ஆட்கொண்ட என் அருமை மகள் மங்கையர்க்கரசியும் ஆக எழுவர் ஒரு குழுவாக இருந்து, இன்று முதல் பண்ணையில் பணியாற்றுவோம். இச்சீரிய முறையைப் பிற பண்ணையார்களும் பின்பற்றும்படி வேண்டுகிறேன்” என்று அமைதியாகப் பேசி முடித்தார். மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கரும்பாக்கம் பண்ணையார் பாண்டியன் மனைவி செந்தாமரை எழுந்தாள்; “பெரியோர்களே, நாங்கள் வழிபடு தெய்வமாக உள்ள மங்கை அம்மாளின் இப்புதிய திட்டத்தை நாளை முதல் எங்கள் கரும்பாக்கம் பண்ணையிலும் செயல்படுத்தப் போகிறோம் என்பதை என் கணவர் பாண்டியரது இசைவைப் பெற்று உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று அழகாகப் பேசி அமர்ந்தாள். அவையோர் மகிழ்ச்சி கரை கடந்தது. வாழ்த்தொலிகளும் கைதட்டல்களும் நெடுநேரம் நிலவியிருந்தன. அடுத்தபடியாகக் குளத்தூர்ப் பண்ணையார் கண்ணன் மனைவி தேன்மொழி எழுந்தாள்; “அமைச்சர் அவர்களே, பெருமக்களே, எனது தோழி மங்கையர்க்கரசியின் திட்டத்தை- செயற்கரிய செயலை-குளத்தூர்ப் பண்ணையில் நாளை முதல் செயல்படுத்துவோம் என்பதை என் கணவர் கண்ணன் அவர்களது இசைவைப் பெற்று உங்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறி, அவையோரைக் கைகுவித்து வணங்கி அமர்ந்தாள். அழகாபுரி அடிகள் எழுந்து, “இச் செயற்கரிய செயலைச் செய்ய முன் வந்துள்ள இப்பெருமக்களுக்கு நமது வாழ்த்து உரியதாகும்” என்று கூறி, மூன்று பண்ணையார்களுக்கும் மகிழ்ச்சியோடு மலர் மாலைகளைச் சூட்டினார். பொதுமக்கள் மகிழ்ச்சிக் கண்ணீர் விட்டனர்; “இது செயற்கரிய செயல்!” என்று வியந்து கூறினர். 28. கைம்பெண் மறுமணம் முன் பகுதியில் சொன்ன புதிய திட்டம் தொடங்கப் பெற்று ஒரு திங்கள் ஆகியது. அடுத்த திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் வழக்கம்போல் முத்தப்பர் தலைமையில் நக்கீரனுக்கும் தாமரைக்கண்ணிக்கும் அழகாபுரி அடிகளால் திருமணம் நிகழ்த்தப் பெற்றது. கரும்பாக்கம், குளத்தூர் குடும்பத்தினரும் வந்திருந்து திருமணத்தைச் சிறப்பித்தனர்.  மாதவி என்ற பெயர்கொண்ட இளமங்கை அறநிலையத் தொழிற் கூடத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வந்தாள். அவளுக்கு வயது இருபத்தைந்திருக்கும். அவள் தையல் வேலை, ஊறுகாய் போடுதல், அப்பளம் தயாரித்தல் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கினாள். அவள் ஒரு ஏழைக் குடியாணவன் மகள்; ஏழாம் வகுப்பு வரையில் படித்தவள்; ஐந்தாண்டுகளுக்கு முன் கைம்பெண் ஆனவள். தான் தன் ஏழைப் பெற்றோர்க்குச் சுமையாக இருக்க விரும்பாமல், அறநிலையத்தில் வந்து சேர்ந்தாள்; தன் திறமையால் மேலே சொன்னவாறு தொழிலில் சிறப்பு அடைந்தாள். தொழிற்கூடத்தை மேற்பார்த்து வந்த ஆசிரியை அன்னக்கிளி அவளது தொழில் திறமையையும் பிற நல்லியல்புகளையும் கண்டு பாராட்டினாள். தொழிற்கூடத்தில் இரவு நேரங்களில் மாதவிதான் பாடுவது வழக்கம். தேவாரம், திருவாசகம், தாயுமானவர் பாடல்கள், அருட்பா இவற்றில் பல பாடல்களை மாதவி மனப்பாடம் செய்திருந்தாள்; அவற்றை உள்ளம் உருகும் வகையில் பொருள் உணர்ச்சியோடு பாடி வந்தாள். ஆசிரியர் கோவிந்தனுக்கு வயது முப்பத்தைந்து இருக்கும். அவர் ஒருநாள் இரவு நேரத்தில் தொழிற்கூடத்திற்கு அவசர வேலையாகச் சென்றார். அப்பொழுது மாதவி தோத்திரப் பாடல்களை இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தாள். பாடல் இனிமை ஆசிரியரை இன்பத்துள் ஆழ்த்தியது. அவர் பாடியவள் யார் என்று அன்னக்கிளியைக் கேட்டார். அன்னக்கிளி, மாதவியை அவருக்கு அறிமுகப்படுத்தினாள். “உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருந்தது; என் உள்ளத்தைக் கவர்ந்து விட்டது” என்று கோவிந்தன் அவளைப் பாராட்டினார்; பிறகு அவளது வரலாற்றைக் கேட்டறிந்தார். சிலநாட்களுக்குப் பிறகு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குப் பாட்டுக்கள் சொல்லித்தர யாரை அமர்த்துவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது அன்னக்கிளியும் கோவிந்தனும் மாதவியை அமர்த்தலாம் என்றனர். மங்கை முன்னரே மாதவியைப் பற்றி அறிவாள் ஆதலால் அவள் அதற்கு இசைந்தாள். அன்று முதல் இரவு நேரங்களில் பிள்ளைகளுக்கு இசைப்பாடல்கள் கற்பிக்கப்பட்டன. ஆசிரியர் கோவிந்தன் பொறுப்பாளராக இருந்தமையால், அவர் மாதவி பாடல் கற்பிக்கும்பொழுது உடன் இருக்க வேண்டியவர் ஆனார். அவர் ஒவ்வொரு நாளும் மாதவியின் இசைத் திறமையை உளமாரப் பாராட்டினார். கோவிந்தன் மனைவியை இழந்தவர்-சிறந்த ஒழுக்கமுள்ளவர்-அறநிலையத்தின் உண்மைத்தொண்டர் என்னும் உண்மையை மாதவி நன்கறிந்திருந்தாள். ஆதலால் அவள் அவரை நன்கு மதித்தாள்; அவர் தன்னிடம் அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டிருக்கிறார் என்பதையும் நன்கறிந்தாள். அவர் விரும்பினால் அவரை மணந்து கொள்ளலாம் என்று தன்னுள் எண்ணினாள். ஒவ்வொர் இரவிலும் பாட்டு வகுப்பு முடிந்தவுடன் கோவிந்தன் மாதவிக்குத் துணையாகத் தொழிற்கூடம் வரையில் செல்லுவது வழக்கம். ஓர் இரவு அவ்வாறு செல்லும்போது கோவிந்தன் மாதவியைப் பார்த்து, “மாதவி, நான் கூறுவதைத் தவறாக நினைக்க வேண்டா; நினைப்பின், என்னை மன்னித்து விடுங்கள். நானும் மனைவியை இழந்தவன்; அவளை இழந்து ஏழு ஆண்டுகளாகின்றன. இதுவரை என் உள்ளத்தில் வேறு ஒரு பெண்ணின் நினைவும் எழுந்ததில்லை. உங்கள் இசைப் பாடலைக் கேட்டபின் என் உள்ளம் உங்களை நாடிவிட்டது. நீங்களும் உண்மையாகவே என்னை விரும்புவதாயின், நாம் திருமணம் செய்து கொள்ளலாம்” என்று குழைவாகப் பேசினார். அவரது கனிந்த பேச்சைக் கேட்ட மாதவியின் முகம் மலர்ந்தது; அவள் நாணமுற்றாள். பின்பு மெதுவாக, “ஆசிரியரே, எனக்கு இருபதாம் வயதில் திருமணம் நடந்தது. நான் இரண்டாண்டுகள் கணவருடன் வாழ்ந்தேன்; ஆயினும் இங்கு வந்தது முதல் என் உள்ளம் அமைதியில் ஆழ்ந்திருந்தது. உங்களுடன் பழகத் தொடங்கியது முதல் உங்கள் அன்புக்கு அடிமைப்பட்டேன். உங்கள் திருவுள்ளம் இதுவாயின், எனக்குத் தடையில்லை” என்று கூறினாள். “நான் தாழ்த்தப்பட்டவன்; நீங்கள் வேளாளப் பெண்மணி. அற நிலையத்தில் உள்ள எல்லோரும் ஒரே இனத்தவர் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்; நம்மளவில் வேறுபாடு இல்லையாயினும், உங்கள் பெற்றோர் உள்ளம் வேறாக இருக்குமல்லவா?” “ஆசிரியரே, நீங்கள் சொல்வது உண்மைதான். நமது விருப்பத்தை மங்கை அம்மாளிடம் தெரிவித்தால், அவர்கள்-கல்லையும் கரையவைக்கும் அவர்கள்-என் பெற்றோரை இசையும்படி செய்வர்.” “நல்லது. நாளை நாம் இருவரும் காலையிற் சென்று மங்கை அம்மாவிடம் இதனைக் கூறுவோம்.”  மறுநாள் காலையில் மங்கை பூங்காவில் தனியே உலவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஆசிரியர் கோவிந்தனும் மாதவியும் அங்கு வந்து அவளைப் பணிந்து நின்றனர். மங்கை நகைத்துக் கொண்டே, “என்ன செய்தி?” என்று கேட்டாள். அந்த இருவரும் தங்கள் முடிவை அவளிடம் கூறினர். “என் பெற்றோரை இசைவித்தல் உங்கள் கடமை.” என்று மாதவி பணிவாகக் கூறினாள். மங்கை நகைத்து, “அதற்காகத் தானே இங்கு இருக்கிறேன். நானும் அப்பாவும் இன்றே சென்று அவர்களை இசைவிப்போம். அடுத்த ஞாயிறுகாலை உங்கள் திருமணம் நடைபெறும்” என்றாள்.  மாதவியின் பெற்றோர் திரு திடைச்சுரம் என்னும் சிற்றூரில் இருந்தனர். அது திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். முத்தப்பரும் மங்கையும் அங்குச் சென்று அவர்களைக் கண்டனர். அவர்களைக் கண்ட ஊர்ப்பெரு மக்களும் அங்குக் கூடினர். செய்தியை அறிந்த மாதவியின் தாயார், “ஐயோ! கைம்பெண்ணுக்கு மறுமணமா? வேளாளர் வகுப்பில் இது ஏற்காது, ஏற்காது ” என்று முகஞ் சுளித்தாள். உடனே மங்கை அவரைத் தனியே அழைத்துச் சென்றாள். “அம்மா, உங்கள் பெண் கிழவியல்ல; 25 வயதுடையவள். இரண்டு ஆண்டுகளே கணவனோடு வாழ்ந்தவள். அவளுக்கு இல்லற வாழ்வில் விருப்பம் இருப்பது இயல்பு தானே! அவள் ஒருவரை மணந்து அவரோடு வாழ்வது நல்லதா? அல்லது பருவ உணர்ச்சிக்கு ஆட்பட்டு ஒழுக்கத்தைக் கைவிட்டுக் கெட்டொழிவது நல்லதா? அவள் கெட்டொழிவது வேளாளர் மரபுக்கு ஏற்றதா? நன்கு யோசித்துச் சொல்லுங்கள்” என்று மங்கை அன்புடன் கேட்டாள். தாயார் யோசிக்கத் தொடங்கினார். மீண்டும் மங்கை, “நீங்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகளைப் பாதுகாப்பது யார்? அவள் இப்பொழுது உங்கள் முன்னிலையில் ஒருவருக்கு மனைவியாகிப் பாதுகாப்பைத் தேடிக்கொள்வது நல்லதல்லவா? மூக்கனாங் கயிறு இல்லாத மாடு போலத் திரிவது நல்லதா?” என்று அழுத்தந் திருத்தமாகக் கேட்டாள். அவள் சொன்னவை அனைத்தும் உண்மையே என்று உள் உணர்வு உணர்த்தியது. அவர் மங்கையின் கைகளைப் பற்றிக் கொண்டு கண்ணீர் விட்டார்; “அம்மா, நீங்கள் சொல்வது உண்மை தான். அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டுவது தேவைதான். ஆனால் அவளை மணக்க விரும்பும் ஆசிரியர் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லுகின்றீர்களே, அதுதான் எனக்குப் பிடிக்கவில்லை” என்று வருத்தத்தோடு கூறினார். “அம்மா, ஆசிரியர் தாழ்த்தப்பட்ட இனத்தவர்தாம். ஆனால் ஆசிரியர் வேலை பார்ப்பவர்; சிறந்த அறிவாளி; நல்ல ஒழுக்க முடையவர்; எங்கள் நம்பிக்கைக்கு உரியவர். அவரும் மனைவியை இழந்தவர். அவ்விருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். மக்கள் எல்லோரும் கடவுளின் பிள்ளை களல்லவா? எவரோ கற்பித்த சாதிகளைப் பற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும்? நீங்கள் மனம்தேறி, அவர்களைச் சேர்ந்து வாழும்படி ஆசி கூறுங்கள்” என்று குழைவாகப் பேசினாள். தாயார் அரைகுறையாகத் தலையை ஆட்டினார். முத்தப்பர் இவ்வாறே கிழவருக்குப் பல சான்றுகளைக் காட்டி அவரது இசைவைப் பெற்றார். அங்குக் கூடியிருந்த ஊர்ப் பெருமக்களும் அத்திருமணத்தை ஆதரித்தனர்; “மனம் ஒன்றுபட்டால் சாதி ஏது?” என்று முடிவு கூறினர். அத்திருமணம் பற்றித் துண்டு விளம்பரம் திருப்போரூரிலும் சுற்றுப்புற ஊர்களிலும் இருந்தவர்க்குத் தரப்பட்டது. சீர்திருத்த மனப்போக்கு உடையவர், “அறநிலையத் தொண்டு பலதுறையிலும் விரிவடைகிறது” என்று மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டனர். பழமையில் ஊறிக் கிடந்தவர் தம் மனம் போனவாறு பேசிக் கொண்டனர். ஆயினும் அவர் அனைவரும் திருமணத்திற்குச் சென்றிருந்தனர். ஞாயிறு காலை 9 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பெரிய பந்தலில் திருமண நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அழகாபுரி அடிகள் கைம்பெண் மறுமணம் தேவை என்பதைப் பல சான்றுகள் காட்டி விளக்கிப் பேசினார். நக்கீரன் கைம்பெண் மறுமணம் செய்துகொண்ட பெருமக்களின் பட்டியலை வாசித்தhன். பிறகு மங்கை எழுந்து, சமுதாயத்தில் கைம்பெண்கள் கவனிக்கப்படாமல் இருப்பதையும், விலங்குகளையும் விட இழிவாகக் குடும்பங்களில் நடத்தப்படு வதையும், அவர்களும் பெண்களே-அவர்களுக்கும் வாழ்க்கையில் விருப்பம் உண்டு-பருவ உணர்ச்சிகள் உண்டு என்பவற்றையும் மிகத் தெளிவாகவும் அமைதியாகவும் எடுத்து விளக்கி, விருப்பமுள்ள ஒவ்வொரு கைம்பெண்ணுக்கும் மறுமணம் செய்விப்பது பெற்றோர் கடமையாகும் என்று பேசி முடித்தாள். பின்பு அவையோர் முன்னிலையில் ஆசிரியர் கோவிந்தன் மாதவிக்குத் திருப்பூட்டினார். அவையோர் அவர்களை வாழ்த்தினர். மணமக்கள் இருவரும் முத்தப்பரையும் அடிகளையும் மாதவியின் பெற்றோரையும் பணிந்து எழுந்தனர். தம் தவமகள் மஞ்சள் குங்குமத்துடனும் மலர் மாலையுடனும் பொலிவுறுவதைக் கண்ட பெற்றோர் கண்ணில் மகிழ்ச்சிக் கண்ணீர் பெருக்கெடுத்தது. தாயார் மாதவியைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார். 29. சைவத் திருவாளர் திருப்போரூர்க்கு நான்கு கல் தொலைவில் உள்ள ஊர் கோவளம் என்பது. அவ்வூரில் கோவலன் என்ற பெயர் கொண்ட செட்டியார் ஒருவர் இருந்தார். சங்ககாலக் கோவலனும் ஒரு செட்டியார்தானே! செட்டியாருக்கு ஏறத்தாழ ஐம்பது வயது இருக்கும். அவர் முதலில் சாதாரண எளிய நிலையில் இருந்தவர். கோவளத்தில் மீன் பிடிக்கும் தொழில் மிகுதி. செட்டியார் மீன்களை மொத்தமாக வாங்கிச் சென்னைக்கு அனுப்பி விடுவார். இந்த முயற்சியில் அவருக்கு மாதம் ஏறத்தாழ ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. செட்டியார் சிறிது முதலைச் சேர்த்துக்கொண்டு, தானியங்களை மொத்தமாக வாங்கிப் பல வணிகர்க்கும் சில்லறையில் விற்கும் தொழிலை மேற்கொண்டார். ஐந்து ஆண்டுகளுள் இந்த இரண்டு தொழில்களாலும் அவர் செல்வரானார். செட்டியார் மூன்றாம் தொழிலாக அரிசி மண்டியை நடத்தினார். அவர் தொட்டதெல்லாம் பொன்னாயிற்று. அவர் நாற்பது வயதிற்குள் சில லட்ச ரூபாய்க்கு உரியவரானார். கோவளத்தைச் சுற்றியுள்ள பல ஊர்களில் நிலங்களை வாங்கினார்; சென்னையில் பத்து வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டார். அவர் இந்த மூன்று தொழில்களையும் தொடர்ந்து திறம்பட நடத்தி வந்தார். அவர் தொடக்கத்தில் நல்லொழுக்கம் உடையவராய் இருந்தார்; காலையில் எழுந்து நீராடுதல், திருநீற்றை அணிதல், திருவாசகமும் திருக்குறளும் படித்தல், பிறகு மீன் வாணிகம் செய்தல் ஆகியவற்றை மேற்கொண்டிருந் தார். பணம் சேரச் சேர, வாணிகத்தின் பொருட்டுப் பல ஊர்களுக்கும் செல்லச் செல்ல, நல்லொழுக்கத்திலிருந்து வழுவலானார்; அவர் மலையாள நாட்டு மிளகுப் பொதிகளை மிகுதியாக வாங்கித் தமிழ்நாட்டில் பல ஊர்களுக்கு அனுப்பினார். அவர் தமது நாற்பத்தைந்தாவது வயதில் வாணிகத்தைத் தொடங்கி இவ்வொன்றினால் மட்டும் பெரும் பொருள் சேர்த்தார். செட்டியார் ஏறத்தாழ 50 வயதினராய் இருந்தபொழுது பெரும் செல்வத்திற்கு உரியவரானார். அவர் அடிக்கடி மலையாளம் சென்று வந்தார். அங்கு முதன்முறை சென்று திரும்பிய பிறகு பாரதி பாடல்களுள் ஒன்றை அடிக்கடி தம் நண்பர்களுக்குப் பாடிக் காட்டுவார். அப்பாடல் இதுதான்: “சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன் னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்தே தோணிகள் ஓட்டிவிளை யாடிவருவோம்.” “ஆ!ஆ! நண்பர்களே, பாரதி ஒரு பிறவிக் கவிஞன். அவன் சேர நாட்டு நங்கையரைப் பார்த்துக் களித்தவன் போலும்! அநுபவித்துப் பாடியிருக்கிறான். புலவர்கள் பெண்களைப் பற்றி வருணித்திருப்பவை எல்லாம் முற்றிலும் உண்மை என்பதைச் சேர நாட்டு நங்கையரிடம் கண்டேன். அப்பொழுதுதான் புலவர்களின் அறிவுக் கூர்மையை எண்ணி வியந்தேன்” என்று கூறுவார். செட்டியாருக்கு முதல் மனைவி தவறிவிட்டாள். அவருக்கு அவள் வாயிலாக ஆண்மக்கள் இருவரும் பெண்மக்கள் இருவரும் பிறந்து வளர்ந்தனர். ஆண்மக்கள் இருவரும் சென்னையில் கல்வி கற்றனர்; பின்பு தந்தையின் வாணிகத்தைக் கவனிக்கலாயினர். செட்டியார் பெண்களிருவரையும் செல்வர் குடும்பங்களில் மணம் செய்வித்தார்; தம் ஆண்மக்களுக்கும் சென்னையில் பணக்காரக் குடும்பங்களில் மணம் செய்வித்தார். செட்டியார் தம் இரண்டு பிள்ளைகளையும் தனித்தனி மாளிகையில் குடியேற்றினார். மனைவியை இழந்த அவர் மட்டும் ஒரு பெரிய மாளிகையில் தனியே வாழலானார். செல்வ வளமும் உடல் வளமும் ஒன்று சேர்ந்து அவரை நல்லொழுக்கத் துறையிலிருந்து கீழே இறக்கத் தொடங்கின. ஊரார் வேண்டுகோள்மீது செட்டியார் உயர்நிலைப் பள்ளி ஒன்றைக் கோவளத்தில் ஏற்படுத்தினார். ஊரில் இருந்த ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் அப்பள்ளியில் சேர்ந்து படித்தனர். சுற்றுப்புறச் சிற்றூர்களினின்றும் பிள்ளைகள் வந்து அப்பள்ளியில் சேரலாயினர். பள்ளி வளர்பிறைபோல் வளரலாயிற்று. பள்ளியில் படிக்கும் பெண்களுக்கு இசை கற்பிப்பதற்காகப் பத்மாவதி என்ற இசை ஆசிரியை அமர்த்தப்பட்டாள்; அவளுக்கு வயது ஏறத்தாழ இருபத்தைந்து இருக்கலாம். அவள் கைம்பெண்; ஆயினும் கண்ணைக் கவரும் கட்டழகு வாய்ந்தவள். அவள் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் செட்டியார் வாயில் நீர் ஏறி வந்தது; தம் ஒவ்வொரு மருமகளுக்கும் கற்பிக்கும்படி அவளை அமர்த்தினார். அதற்காகத் திங்கள்தோறும் ஐம்பது ரூபாய் கொடுக்கத் தொடங்கினார். தம் வீடுகளுள் காலியாக இருந்த ஒன்றை அவளுக்கு இலவசமாக விட்டார். அவ்வீடு அவரது வளமனைக்குப் பின்பக்கத்தில் இருந்தது. பத்மாவதி உலகம் தெரிந்தவள்; பிழைக்க வழி தெரிந்தவள்; தன் அழகும் இளமையும் இருக்கும்போதே தன் பிற்கால வாழ்க்கைக்குத் தேவைப்படும் அளவு பொருள் சேர்த்துவிட வேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் உடையவள். அதனால் அவள் சென்னையிலிருந்தபோதே செட்டியார் போன்ற செல்வர்களோடு விளையாடிப் பொருள் ஈட்டினாள்; அப்பொருளைக் கொண்டு சென்னையில் ஒரு வீட்டை வாங்கினாள். அதனை மாதம் நூறு ரூபாய் வாடகைக்கு விட்டுவிட்டாள். அவள் செட்டியாருடைய பழக்க வழக்கங்களையும் செல்வ நிலையையும் சென்னையிலேயே கேட்டறிந்த பிறகுதான் கோவளத்திற்கு வந்து வேலையை ஏற்றுக்கொண்டாள்; வந்த ஒரு மாதத்திற்குள் செட்டியாரின் காமக்கிழத்தியானாள். அவள் சென்னையில் உயர்ந்த குடிவகைகளில் பழக்கமுடையவள். அவளது அடியாரான செட்டியாரும் அப்பழக்கத்தில் ஈடுபட்டார். செட்டியார் பகலில் திருநீற்றுப் பொலிவுடன் காணப் படுவார்; எப்பொழுதும் ‘சிவா-சிவா’ என்று சொல்லுவார்; காலையில் எழுந்ததும் திருவாசகத்தையும் திருக்குறளையும் படிப்பார்; “அவனுக்கு இறைப்பற்று இல்லை” “இவனுக்கு இறைப்பற்று இல்லை”, இவர்கள் “நாத்திகர்கள்” என்று பிறரைக் குறை கூறுவார். ஆனால் அவரோ, பணம் சேரத் தொடங்கியது முதல் “ஒழுக்கம் விழுப்பம் தரும்” என்ற குறள் வாக்கியத்தை மறந்துவிட்டார்; தம் கையாட்களைக் கொண்டு அழகிய பெண்களை வலைவீசிப் பிடித்து வந்தார். ஏறத்தாழ முப்பது வயதுடையவளும் ‘ஒழுக்கம் விழுப்பம் தரும்’ என்பதை முற்றிலும் மறந்தவளும் ஆகிய மங்கம்மாள் என்பவளைச் சமையலுக்கு வைத்துக்கொண்டார். நாளடைவில் அவள் அவரது காதற் பரத்தையானாள். அவர் அவள் உதவியால் பல பெண்களோடு விளையாடலானார். அவர் சிவவேடம் பூண்டவர் ஆதலால் ஊரார் அவரைச் ‘சைவத் திருவாளர் கோவலன் செட்டியார்’ என்று அழைப்பது வழக்கம். அவருடைய கீழ்த்தரமான-ஒழுக்கக்கேடான செயல்களை நன்கு அறிந்தும் ஊரார் அவரைக் கண்டிக்க முற்படாமல், அவரோடு நல்ல முறையிலேயே பழகி வந்தனர். இதற்குக் காரணம், ஒழுக்கக் கேட்டைக் கண்டிக்கும் ஆற்றல் பொதுமக்களிடம் நன்கு வளர வில்லை என்பது ஒன்று; செட்டியார் ஊரிலிருந்த காலிகளை யெல்லாம் விலைக்கு வாங்கியிருந்தார் என்பது மற்றொன்று. செட்டியார் மிளகு வாணிகம் செய்யத் தொடங்கிய மூன்றாம் திங்கள் மலையாள நாட்டிற்குச் சென்றார்; அவர் திரும்பி வந்தபொழுது அம்முக்குட்டி என்ற மலையாள மங்கையைத் தம்முடன் அழைத்து வந்தார்; அவள் பி.ஏ. படித்தவள். ஆதலால் அவளைத் தம் செயலாளராக அமர்த்தியிருப்பதாக வெளியில் கூறினார். மூன்று மாதங்கள் கடந்தன. பின்பு செட்டியார் அவளைப் பலர் அறிய மணந்துகொண்டார். வயது வந்த அவருடைய ஆண்மக்கள் இருவரும் அத்திருமணத்தை எதிர்த்தனர். சொத்து தம்மை விட்டுப்போய் விடுமோ என்ற எண்ணமே அந்த எதிர்ப்புக்கு அடிப்படை. “பயல்களே! இச்சொத்து முழுவதும் நான் சம்பாதித்தது. ஆதலால் என் விருப்பம்போல் இதனைச் செலவழிக்க எனக்கு உரிமை உண்டு. நீங்கள் என் செயல்களில் குறுக்கிடுவீர்களாயின், என் சொத்தில் ஒரு சல்லியும் உங்களுக்குக் கிடையாது” என்று செட்டியார் தம் மீசையை முறுக்கிக்கொண்டு பலருக்கும் எதிரில் அழுத்தம் திருத்தமாக அறைந்தார். அன்று முதல் பிள்ளைகள் பெட்டிம்பாம்புகள் போல் அடங்கி விட்டனர். அவர்களுக்கு ஒருசமயம் தந்தையைக் கண்டிக்கவேண்டும் என்ற உணர்ச்சி தோன்றும். மறுசமயம் ‘சொத்துப் போய்விடுமே’ என்ற கவலை தோன்றும். ‘நாம் இப்பொழுது அநுபவித்துவரும் இந்தச் சுகவாழ்க்கை போய்விட்டால் என்ன செய்வோம்!’ என்று கண்மூடிக் குருடராயும் வாய்மூடி மௌனிகளாயும் ஆகிவிட்டனர். அவர்கள் தந்தைக்கு எதிரில் உட்காருவதில்லை; அவர் அழைத்தால் ஒழியப் போய்ப் பார்ப்பதில்லை. அவர் திங்கள் தோறும் கொடுத்துவந்த முந்நூறு ரூபாயைக் கொண்டு ஒவ்வொரு மகனும் தன் குடும்பத்தை நடத்தி வந்தான். முதன் மகன் சொக்கப்பன் மானவுணர்ச்சி உடையவன். ஆயினும் அவன் ‘மானம்’ தந்தை முன் ‘அவமானம்’ அடைந்தது. அவன் தன் உற்ற நண்பர்களிடம் தன் தந்தையின் சிவவேடத்தையும் ஒழுக்கக் கேட்டையும் ஒப்பிட்டுக் காட்டி வருந்தினான். இளையவன் இருளப்பன் எதையும் எண்ணிப் பார்க்கும் திறமை இல்லாதவன்; அறிவுத் துறையில் இருள் அப்பனே. ஆயினும் தனக்கு எல்லாம் தெரிந்ததைப் போலப் பிதற்றுவான்; தந்தையைப் போலவே, ‘அவனுக்கு இறைப் பற்றில்லை’, ‘இவனுக்கு இறைப்பற்றில்லை’ என்றெல்லாம் பேசுவான். அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் இருந்தனர். அவன் அடிமுட்டாள் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். ஆயினும் அவன் சொல்லுவதற்கெல்லாம் தலைகளை ஆட்டி அவனை மகிழ்வித்து, அவனிடம் உதவி பெற்றுக் காலம் கழித்தனர். இருளப்பன் அறிவுத் தெளிவு இல்லாதவன். ஆயினும் வஞ்சகக் கலையில் வல்லவன்; “நம் தந்தையார் ஒழுக்கக்கேடர் என்பதில் ஐயமில்லை. அவரது சிவ வேடத்திற்கும் அவர் படிக்கும் திருவாசகத் திற்குத் திருக்குறளுக்கும் அவரது ஒழுக்கக் கேட்டிற்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பது உண்மை. ஆயினும் நாம் என்ன செய்வது! அவரைப் பகைத்துக் கொண்டால், நமக்குச் சொத்துக் கிடைக்காதே. ஆதலால் நாம் அவரிடமும் அவர் உள்ளத்தைக் கவர்ந்த அம்முக் குட்டியிடமும் பணிவும் மரியாதையும் காட்டி நடந்துகொண்டால், மிக்க நன்மையை அடையலாம். இதுதான் பிழைக்கும் வழி” என்ற முடிவுக்கு வந்தான். அந்த முடிவைத் தன் மனைவியிடமும் கூறினான். அவளும் பிழைக்கத் தெரிந்தவள் ஆதலால் கணவனை மார்புறத் தழுவி, “உங்கள் மூளையே மூளை! உங்களுக்கு முளை இருக்கிறது என்பதை இன்று மெய்ப்பித்து விட்டீர்கள்” என்று பாராட்டினாள். இருளப்பன் அசடு வழிய நகைத்தான். செட்டியார் உறவினர் அனைவரும் அவரது இரண்டாம் திருமணத்தை அறவே வெறுத்தனர். அவர்கள் வெறுத்து என்ன பயன்? செட்டியார் அவர்களைப் பொருட்படுத்தினாரா? இல்லவே இல்லை. செட்டியாருடைய பெண்களை மணந்து கொண்ட மருமகப் பிள்ளைமார் இருவரும் தொடக்கத்தில், “உங்கள் தந்தையார் இந்த வயதிலா திருமணம் செய்து கொள்ளுவது? அப்படியே செய்து கொண்டாலும் நம் இனத்தில் பெண்ணில்லையா? அவரது செயல் மிகக் கேவலம்! நாங்கள் வெளியே தலைநீட்ட முடியவில்லை” என்று தம் மனைவியரிடம் கூறி மனம் புண்ணாயினர். செட்டியார் உலகியல் அறிந்தவர் ஆதலால் ஒவ்வொரு பெண்ணுக்கும் சென்னையில் ஒரு பெரிய வளமனையை வாங்கிக் கொடுத்தார். அவ்வளவுதான்: மருமக்கள் இருவரும், “அவள் யாரா யிருந்தால் என்ன? பி.ஏ. படித்தவள்: கட்டழகி. மாமா விரும்பித்தான் அவளை மணந்துகொண்டார். அவருக்கு வயது ஐம்பதுதானே ஆகிறது. இவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்ய உற்ற துணைவி ஒருத்தி வேண்டுமல்லவா? அந்த மாமியும் நல்லவர்தான்” என்று பேசத் தலைப்பட்டனர். அவர் தம் மனைவிமாரும் அடிக்கடி செட்டியார் வீடு செல்லத் தலைப்பட்டனர்; “சின்னம்மா! சின்னம்மா!” என்று அம்முக்குட்டியை அன்போடு அழைத்து, அவளோடு நெருங்கிப் பழகலாயினர். நாள் ஆக ஆக, அம்முக்குட்டி செட்டியாருடன் அவருடைய உறவினர் வீடுகளுக்கெல்லாம் சென்றாள்; தன் செல்வத் தகுதியாலும் இயல்பான நற்குணங்களாலும் அனைவர் உள்ளத்தையும் கவர்ந்தாள். அம்முக்குட்டி மெய்யாகவே நல்லவள். 30. எது இறைப்பற்று? கோவலன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் மணிவண்ணன் தமிழாசிரியனாய் இருந்தான். அவன் படையாட்சி வகுப்பினன். அவனுக்கு ஏறத்தாழ முப்பது வயதிருக்கும். இராமனது பேரழகை வருணித்த கம்பன் மணிவண்ணனைக் கண்டுதான் வருணித்தானோ என்று எண்ணும்படி அவன் உடலமைப்பும் கட்டழகும் அமைந்திருந்தன. அவன் அழகிற்கு ஏற்ப, நற்குணங்களும் நன்கு அமையப் பெற்றிருந்தான். அவன் இளமையில் பெற்றோரை இழந்தவன்; நற்குணங்கள் படைத்த செல்வர் ஒருவரால் வளர்க்கப்பட்டவன்; அவர் பொருளுதவி யால் எம்.ஏ. வரைக்கும் படித்துத் தேறியவன். அவன் இளமை முதலே பலரோடும் பழகி உலகியலை அறிந்தவன்; சமய நூல்களை யும் வரலாற்று நூல்களையும் தமிழ் நூல்களையும் ஆராய்ச்சி முறையில் படித்துப் பல உண்மைகளை அறிந்தவன்; அவ்வுண்மை களுக்கும் உலக நடைமுறைக்கும் வேறுபாடு இருப்பதைக் கண்டு உள்ளம் வருந்தியவன். தன்னை வளர்த்த செல்வர்க்கு உற்ற துணையாக அவன் எம்.ஏ. படித்த பின் தமிழ்த் தொண்டு செய்வதில் ஆர்வங் கொண்டான்; சென்னையில் ஓர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பதவி ஏற்றான். அப்பொழுது செல்வர்க்கு வயது ஐம்பத்தைந்து. அந்த வயதில் அவருக்கு மனைவி தேவை என்று பட்டது. அதனால் அவர் தம் இனத்தைச் சேர்ந்த இருபத்திரண்டு வயதுடைய ஏழைப்பெண் ஒருத்தியை இரண்டாந்தாரமாக ஏற்றுக்கொண்டார். அப்பெண் இளமைத் துடிப்பு உடையவள்; செல்வரோ முதுமைத் துடிப்புடையவர். ஆகவே அவள் இளைஞனான மணிவண்ணன் மீது தன் பார்வையைச் செலுத்தினாள். மணிவண்ணன் ஒழுக்கத்தை உயிர் எனக் கொண்டவன்; சான்றோர் அறிவுரைகளைப் படித்து மனத்தைக் கட்டுப்படுத்தும் ஆண்மை பெற்றவன்; ஆதலால் சென்னையை விட்டே நீங்க முடிவு செய்தான். அதனால்தான் கோவலன் செட்டியார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பதவியை ஏற்றுக் கொண்டான். மணிவண்ணன் இளமை முதலே சீர்திருத்த நோக்கம் உடையவன்; புராணங்களைப் படித்துப் படித்து அவற்றிலுள்ள பொருத்தமற்ற கதைகளை ஆராய்ந்தவன்; அவற்றிலுள்ள ஆபாசங்களை நன்கு அறிந்தவன்; கோவில்களில் இப்புராணக் கதைகளுக்கு மதிப்பைக் கொடுத்து விழாக்களை நடத்திப் பொருள் வீணாக்குவது கண்டு கண்டு வெறுத்தவன். சித்தாந்த சைவமே சாத்திரிய முறையில் அமைந்தது;—அதுவே உண்மைச் சமயம்;—அதன்படி நடப்பவரே உண்மைச் சைவர் என்ற முடிவுக்கு வந்தவன். அவன் கோவிலுக்குப் போவது வழக்கம்; ஆனால் அங்குள்ள பல கடவுளர் திருவுருங்களையும் வணங்கான். அம்மையப்பர் திருவுருவங்களை மாத்திரம் வணங்குவான். சைவ சமயத்தின் பழமையையும் அதன் தனித்தன்மையையும் வரலாற்று முறையிலும் ஆராய்ச்சி முறையிலும் நன்கு அறிந்து தெளிந்தவன் ஆதலால், அவன் சைவசித்தாந்த மாநாடுகளிலும் கூட்டங்களிலும் சிந்தாந்த சைவத்தை வற்புறுத்திப் பேசினான்; பௌராணிக சைவத்தை வன்மையாகக் கண்டித்தான். அறிவுக்குப் பொருத்த மற்றவையும் நம்பத்தகாதவையுமான புராணக் கதைகள் பொருளற்றவை,—அவற்றின் அடியாக எழுந்த விழாக்கள் பயனற்றவை,—நல்ல துறைகளில் பயன் படத்தகும் பணத்தைப் பாழாக்குபவை—என்னும் உண்மையைப் பல சான்றுகளோடு விளக்கிப் பேசினான். மணிவண்ணனுடைய ஆராய்ச்சி கலந்த சமயச் சொற்பொழிவுகள் படித்தவர் மூளைக்கு வேலையைக் கொடுத்தன. அவர்கள் எண்ணிப் பார்க்கத் தொடங்கினர். பௌராணிகரும் தமக்கென்று அறிவில்லாத போலிச் சைவரும் மணிவண்ணனை வெறுத்தனர். பௌராணிகர் கூட்டங்களில் பேசும்போது, “மணிவண்ணன் சிறந்த படிப்பாளி; ஆராய்ச்சி யாளர். ஆயினும் தெய்வநிந்தனை செய்கிறார்; அழுத்தமான இறைப்பற்று இல்லாதவர்” என்று கூறினர். அவர்தம் அடிகளைக் கழுவி அந்நீரை வாயில் ஊற்றிக்கொள்ளும் போலிச் சைவர்கள், “ஆம், ஆம்” என்று தலையசைத்தனர்; மணிவண்ணன் இறைப்பற்று இல்லாதவன் என்று எங்கும் கூறலாயினர். இந்த நிலையில் மணிவண்ணன் கோவளத்திற்கு வந்து சேர்ந்தான். ஒழுக்கத்தை விழுக்கலனாகக் கொண்ட அவனுக்குக் கோவலன் செட்டியாருடைய திருவிளையாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தெரியலாயின. அவன் வேலையில் சேர்ந்த தொடக்கத்தில், அவரோடு ஓய்வு நேரங்களில் அளவளாவுதல் வழக்கம். அவர் தமக்குத் தெரிந்த திருவாசகப் பாடல்களையும் திருக்குறள் பாடல்களையும் பாடுவார்: முதுபெரும் புலவர் போல் சிறந்த ஆராய்ச்சி நூல்களையும் படிப்பார். தாம் மட்டும் சிவபெருமான் அக்கை மகன் என்று எண்ணிக்கொண்டு, பிறரைப்பற்றிப் பேசும்போது, “பயிர்த்தொழில் அமைச்சர் பரந்தாமனார் அரை நாத்திகர்: முதல் அமைச்சர் வணங்காமுடி முழு நாத்திகர்; நமது பள்ளித் தலையாசிரியர் தங்கசாமி இறைப்பற்று இல்லாதவர் என்று கேள்விப்படுகிறேன்” என்று கண்டவாறு பேசுவது வழக்கம். தலைக் கிறுக்குப் பிடித்த இருளப்பன் தமிழில் சில கட்டுரைகளை எழுதுவான். அவன் ஒன்பதாம் வகுப்போடு நின்று விட்டவன். ஆயினும் தமிழில் தான் தொல்காப்பியன் என்பது அவனது எண்ணம். அவன் ஒவ்வொரு புராணக் கதைக்கும் அதுகாரும் எவரும் கூறியிராத விபரீதமான கருத்தைத் தெரிவிப்பான்; “எப்படி என் ஆராய்ச்சி?” என்று ஆவலோடு கேட்பான். அவன் அடி வருடும் பதர்கள் “ஆ! ஆ! உங்கள் ஆராய்ச்சியே ஆராய்ச்சி! இதுகாறும் எவரும் உங்கள் கருத்தை வெளியிட்டதில்லை! அற்புதம்! அற்புதம்!” என்று நேரில் பல் எல்லாம் தெரியக் காட்டிப் பேசுவர்; அவன் சென்ற பிறகு அவனது பேதைமையைக் கூறி எள்ளி நகையாடுவர். மணிவண்ணன் இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்துப் பார்த்து மனம் வருந்தினான். ஒருநாள் இருளப்பன் மணிவண்ணனிடம் வந்தான்; “திருப்பாற் கடல் கடைந்த கதை கூறப்பட்டிருக்கிறதல்லவா? அதன் தத்துவம் இதுதான்” என்று ஏதோ உளறினான்; “நீங்கள் புத்தகப் பூச்சிகள். சுயமாக ஆராய்ந்தால்தான் இத்தகைய அற்புத உண்மைகள் வெளிப்படும்” என்று கூறினான்; “என் ஆராய்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டு ஆவலோடு அவன் முகத்தைப் பார்த்தான். மணிவண்ணன் நகைத்தான். “இருளப்பரே, நான் கூறுவதை அன்பு கூர்ந்து கேட்க வேண்டும்; ஒவ்வொரு துறையிலும் பயிற்சி பெற்றவரே அத்துறையைப் பற்றிக் கூறத் தகுதி உடையவராவர். பொறியர் (Engineer) வழக்கறிஞர் வேலை பார்க்க முடியாது. வழக்கறிஞர் பொறியர் வேலைக்குத் தகுதியற்றவர். அவர்களைப் போலவே நான் உங்கள் வணிகத் தொழிலுக்குத் தகுதியற்றவன். அதுபோலவே நீங்கள் தமிழ்த் துறையில் பயிற்சி இல்லாதவர். பல ஆண்டுகள் படித்து அநுபவம் முதிர்ந்த அறிஞர் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளை யெல்லாம், தமிழ் இலக்கண - இலக்கிய அறிவு சிறிதும் இல்லாத நீங்கள் செய்ய முற்படுவது பெருந்தவறு. அப்பெருந்தவற்றுடன் நில்லாது, கற்றவரைப் பழித்துரைத்தல் மன்னிக்க முடியாத குற்றமாகும். நான் சொல்வதற்காக வருந்தாதீர்கள், ஆழ்ந்து பார்த்தால் நான் கூறுவது உண்மை என்று புலப்படும்” என்று அமைதியாகக் கூறினான். செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் இராமன் என்று ஒரு வித்துவான் இருந்தான். அவன் மணிவண்ணனுக்குக் கீழ் தமிழாசிரியனாக வேலை பார்த்தான். அவன் ஒரு கோழை; அநுபவம் குறைந்தவன்; தன்னம்பிக்கை இல்லாதவன். ஆதலால் அவன் இருளப்பனைக் கண்டபோதெல்லாம் அவன் கட்டுரைகளை வானளாவப் புகழ்ந்து வந்தான். இப்புகழ்ச்சியும் பிறர் நயவஞ்சகப் புகழ்ச்சியும் இருளப்பனைத் தலைக்கிறுக்குக் கொள்ளச் செய்தன. அவன் ஒருநாள் மணிவண்ணனிடம் பேசிக் கொண்டிருந் தான். மணிவண்ணன் மரகதவல்லி அறநிலையத்தைப் பற்றிப் பாராட்டிப் பேசினான். அதுகேட்ட இருளப்பன் முகம் சுளித்தான்: “முத்தப்பரும் மங்கையும் வழிபாட்டு மண்டபத்தில் நடராசர், சாக்ரடீஸ், புத்தர், ஏசுநாதர், இராமலிங்கர், விவேகானந்தர், காந்தியடிகள் படங்களை வைத்துள்ளனர். ஒரு கிறிஸ்தவர் தமது இல்லத்திலோ தொழுகை இடத்திலோ நடராசர் படத்தை வைப்பாரா? இவர்களுக்குத் தங்கள் சமயத்தில் உண்மைப்பற்று இருக்குமானால் ஏசுவின் படத்தை வைத்திருக்கலாமா?” என்று கேட்டான். மணிவண்ணன் அவனது அறியாமைக்கு வருந்தினான். “இருளப்பரே, கிறிஸ்தவர் தங்கள் சமயத்தை மட்டும் போற்றுகின்றனர். ஆதலால் அவர்கள் பிறசமயப் பெரியார் படங்களை வைத்துத் தொழுவதில்லை. மேலும் அவர்கள் சமயம் ஒருவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் நமது சமயம் காலம் கடந்தது; பழைமையிலும் பழைமை வாய்ந்தது. சைவம் என்று தோன்றியது என்று ஆராய்ச்சியாளராலும் சொல்ல முடியவில்லை. மேலும் `அன்பே சிவம்’ என்பதே நம் சைவத்தின் உயிர்நாடி. இவ்வுண்மையை உலகத்திற்கு எடுத்து ஓதிய எல்லாப் பெரியார்களையும்-அவர்தம் சமயத்தைப் பாராமல்-நாம் விரிந்த மனப்பான்மையோடு பாராட்டுகிறோம்-பரவுகிறோம். இதில் கடுகளவும் குற்றமில்லை. இது சைவத்திற்கு மாறுபட்டதும் ஆகாது” என்று தெளிவாகக் கூறினான். “முத்தப்பர் எட்டு ஆண்டுகளுக்கு முன் சிறந்த சிவபக்தராக இருந்தார்; அறநிலையத்தை ஏற்படுத்திய பிறகு அவரது இறைப்பற்று மறைந்துகொண்டே வருகிறது,” என்றான் இருளப்பன். “எந்த அளவுகோல் கொண்டு நீங்கள் இந்த உண்மையை அறிந்தீர்கள்?” என்று, தன் உள்ளத்தில் எழுந்த கொதிப்பை அடக்கிக்கொண்டு கேட்டான் மணிவண்ணன். “அவர் முன்பெல்லாம் முருகன் கோவிலில் பெரும்பொழுதைப் போக்கினார்; வெள்ளி ஊஞ்சல், வெள்ளிக்குடம் முதலியவற்றைச் செய்து கொடுத்தார். இப்பொழுது அவ்வாறு செய்வதில்லை என்றும் கோவிலுக்கு அடிக்கடி வருவதில்லை என்றும் கோவில் அர்ச்சகர் கூறக்கேட்டேன். அவரது இறைப்பற்றுக் குறைந்துவிட்டது என்று அந்த அர்ச்சகர்களே கூறினார்கள்.” மணிவண்ணன் கலகலகவென்று கை கொட்டி நகைத்தான். அவன் ஏன் நகைத்தான் என்பது இருளப்பனுக்குப் புரியாது விழிக்கத் தொடங்கினான். மணிவண்ணன் அவனை நோக்கி, “இருளப்பரே, கோவிலுக்கு அடிக்கடி செல்வதும், ஊஞ்சல், குடம் முதலியன செய்துகொடுப்பதும் இறைப்பற்றுக்கு அளவுகோல்கள் அல்ல. எங்கள் ஊரில் கருப்பு மார்க்கெட் வணிகர் ஒருவர் இவற்றைச் செய்கிறார்; பக்கத்து ஊரில் ஒரு கள்ளுக்கடை முதலாளி இவ்வாறே செய்கிறார்; தம்மையே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மனைவியை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் பரத்தையர் பலரோடு கூடி வாழும் செல்வர் ஒருவர், ஒரு கோவிலில் திருக்கல்யாணச் செலவுக்குப் பணம் தருகிறார்; தம்மிடம் வேலை பார்க்கும் ஆலைத் தொழிலாளர்க்குத் தக்க சம்பளம் கொடுக்க மனம் வராத ஒருவர், கோவிலுக்கு வெள்ளித் தேர் ஒன்று செய்து கொடுக்கிறார். தம் ஆலையில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர் வேலை செய்வ தற்குச் சிறிது முன்பாக வந்து, தங்க இடமின்றி, தெருவோரத்தில் தம் துணிகளை விரித்துப் படுத்துக்கொள்கின்றனர். அவர்களுக்குத் தனியிடம் அமைக்காமல், ‘நானும் உங்களில் ஒருவன்’ என்று அவர்களை ஏய்த்துக்கொண்டு, திருவாசகப் பாடல்களைப் பாடும் முதலாளி ஒருவர். இவர்கள் இறைப்பற்று உள்ளவர் என்று கருதப்படுகிறார்கள். இந்த நிலையில், `இறைப்பற்று’ என்பது என்ன? என்பதை நாம் முதற்கண் அறியவேண்டும். அறிந்த பின்புதான் மேலே கூறப்பெற்ற பெரியார்கள் அந்த இலக்கணத்திற்குப் பொருந்தி வருகின்றனரா என்பதைப் பார்க்க வேண்டும். ‘இறை’ என்ற சொல்லுக்கு எங்கும் தங்குதல்-தங்கியிருப்பது என்பது பொருளாகும். எனவே, இறை என்பது ‘எங்கும் ஊடுருவி நிற்கும் பேராற்றல்’ என்று அறிஞரால் கருதப்படுகிறது. அது தனிப்பட்ட ஆணும் அல்ல; பெண்ணும் அல்ல. இரண்டு ஆற்றல்களும் சேர்ந்த ஒன்றாகும். அது உருவம் அற்றது என்று பேரறிஞர் கூறுகின்றனர். தாகூர் ‘உழைப்பே கடவுள்’ என்கிறார். காந்தியடிகள் ‘உண்மையே கடவுள்’ என்கிறார். ‘அன்பே சிவம்’ என்று சைவம் சாற்றுகிறது. ‘அன்பே கடவுள்’ என்று கிறித்தவம் போன்ற சமயங்கள் கூறுகின்றன. இதன் பொருள் யாது? ஒவ்வொருவரும் அன்பை அடிப்படை யாகக் கொண்டு வாழவேண்டும், எல்லோரிடமும் அன்பாகப் பேசவேண்டும், பழக வேண்டும் என்பது பெரியோர் கருத்து. அன்பு ஒன்றுதான் தனிப்பட்ட மனிதன் வாழ்க்கையையும் கூட்டுவாழ்க்கை ஆகிய சமுதாய வாழ்க்கையையும் பிணைக்க வல்லது. இதுதான் மக்கள் இன்பத்திற்கு உரியது என்னலாம். அன்பு அகத்தில் இருந்ததால்தான் புத்தர் பெருமான் நொண்டி ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தார்; அவ்வாறே ஏசுநாதரும் காந்தியடிகளும் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு சென்றனர். பயன் கருதாது எல்லா உயிர்களுக்கும் இவ்வாறு அன்பு காட்டும் பண்பு உடையவரே `பெரியோர்’ என்றும் `மகான்கள்’ என்றும் போற்றப்படுகின்றனர். இந்த அன்புதான் சமயம். இதனை உண்மையாக உடையவனே ஆஸ்திகன்; மற்றவர் எல்லோரும் நாஸ்திகர்.” இருளப்பன் தலை கிறுகிறுத்தது. அவன் மூளை குழம்பியது; “கோவில் தேவையில்லை என்பது உங்கள் கருத்தா?” என்று பேச முடியாமல் பேசினான். மணிவண்ணன் நகைத்தான்: “இருளப்பரே, மக்கள் அனைவரும் ஒரே அளவு அறிவுடையவர் அல்லர். ஆதலால் வழிபாட்டு முறை களும் வேறுபட்டுள்ளன. அவற்றில் முதற்படி கோவில் வழிபாடு. கோவிலுக்கு மட்டும் செல்வதால் ஒருவனிடம் அன்பு தோன்றாது. அவன் மனம் அன்பை பண்ணி எண்ணிச் செயலில் பக்குவப்பட வேண்டும். எங்கும் நிறைந்த இறைவனைக் கோவிலிலும் தொழலாம்; பிற இடங்களிலும் தொழலாம். வழிபாட்டிற்கு அமைதி தேவை. அந்த அமைதி கோவிலில் இல்லை. அங்கு அர்ச்சகர் சமயவாணிகம் நடத்துகின்றனர். அதனால்தான் சமய ஆராய்ச்சி அறிஞர்களும் சிந்தனையாளர்களும் கோவிலுக்கு நாள்தோறும் போவதில்லை. அங்ஙனம் போகாமல் இருப்பதால், அவர்களை இறைப்பற்று இல்லாதவர்கள் என்று கூறுதல் அறமாகாது. முத்தப்பர், இறைவனால் படைக்கப்பெற்ற மக்களுக்கு உண்மைத் தொண்டு செய்கிறார்; அத்தொண்டிலே கடவுளைக் காண்கிறார். அவர் மகள் மங்கையர்க்கரசி மாசற்ற மாணிக்கம்; இந்நாட்டு ஏழைமக்கள் அவளைத் தம் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். பிறரிடம் அன்பாய் நடப்பதே இறைப்பற்று. இவ்வுண்மையை உணராது, அவர்கள் செய்துவரும் தொண்டில் ஆயிரத்தில் ஒருபங்கும் செய்யாத நாம், `அவர்கள் இறைப்பற்று இல்லாதவர்கள்’ என்று எள்ளி நகையாடுதல் மாபெரும் தவறு. இருளப்பரே, நான் இதுவரையில் கூறியவற்றை அமைதியாக எண்ணிப் பார்க்கும்படி வேண்டுகிறேன்” என்று நயமாகவும் அழுத்தந் திருத்தமாகவும் அறைந்தான். 31. பொய்க் காதல் விழுப்புரத்தில் வீரப்பர் என்பவர் பெருஞ்செல்வர். அவருக்கு ஒரே மகள் இருந்தாள். அவள் பெயர் கோதைநாயகி. அவள் சென்னையில் பெண்கள் கல்லூரி ஒன்றில் பி.ஏ. வகுப்புப் படித்து வந்தாள்; அக்கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கியிருந்தாள். அவள் இசையிலும் நடனத்திலும் கல்லூரியில் முதல் பரிசு பெற்றவள். கோவலன் செட்டியார் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் உள்ள பெரிய கடைத்தெருவில் ஒரு பெரிய கடையைத் திறந்தார். அதில் பெண்களுக்குத் தேவையான முகத்தூள், சோப்பு, சீப்பு முதலிய எல்லாப் பொருள்களும் இடம் பெற்றிருந்தன. சுருங்கக் கூறின், அது ஒரு பல்பொருள் கடை என்று சொல்லலாம். செட்டியார் அக்கடையை அடிக்கடி சென்று மேற்பார்க்கும்படி இருளப்பனுக்குக் கட்டளையிட்டார். இருளப்பன் வாரத்திற்கு ஒரு முறை சென்னை சென்று அக்கடையைக் கவனித்து வந்தான். அம்முக்குட்டியின் தம்பியின் பொறுப்பில் அக்கடை விடப்பட்டிருந்தது. அப்புதிய கடையில் பிற கடைகளில் இல்லாத அளவிற்குப் பெண்களுக்குரிய பொருள்கள் விதவிதமாக வைக்கப்பட்டிருந்தன. அதனால் கல்லூரிப் பெண்களுள் பெரும்பாலர் அந்தக் கடைக்குச் சென்று, தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கலாயினர். அங்ஙனம் சென்ற பெண்களுள் கோதைநாயகி குறிப்பிடத்தக்கவள். ஒருநாள் மாலை இருளப்பன் கடையில் இருந்தபோது அவள் அங்குச் சென்றாள். இருளப்பன் அவளது அழகிய தோற்றத்தைக்கண்டு மெய்மறந்தான்; அவளை அன்போடு வரவேற்றான். அவள் முகவரியைக் கேட்டுக் கொண்டான்; அவள் பெற்றோர் நிலை, பிறந்த ஊர், சாதி இவற்றையும் கேட்டு அறிந்து கொண்டான். அன்று அவள் வாங்கிய பொருள்களுக்குப் பணம் வாங்கவில்லை; அவளைத் தன் காரிலேயே அழைத்துச் சென்று கல்லூரி விடுதியில் விட்டான். இங்ஙனம் தொடங்கிய அவர்கள் நட்பு ஒவ்வொரு வாரத்திலும் படிப்படியாக வளரலாயிற்று. ஒவ்வொரு சனிக்கிழமை மாலையிலும் இருளப்பன் அவளைத் தன் காரில் ஏற்றிக்கொண்டு திருவல்லிக்கேணி கடற்கரை-அடையாற்றுக் கடற்கரை முதலிய இடங்களுக்குச் சென்றான்; சில சமயங்களில் அவளைத் திருவொற்றியூர், எண்ணூர், செங்குன்றம் (Red Hills) முதலிய இடங்களுக்கும் அழைத்துச் சென்றான். அவளுக்கு விதவிதமான கண்ணைக் கவரும் பகட்டு உடைகளை வாங்கித் தந்தான். அவன் முன்னரே மணம் ஆனவன்; இரண்டு பிள்ளை களுக்குத் தந்தை. அப்படியிருந்தும், தனக்கு மணமாகவில்லை என்று கோதை நாயகியிடம் பொய் கூறினான். பேதை அவன் சொல்லை உண்மை என்று நம்பினாள்; அவனை உண்மையாகக் காதலிக்கத் தொடங் கினாள். அவள் மட்பாண்டத் தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவள். அவன் செட்டி வகுப்பைச் சேர்ந்தவன். ஆயினும் ‘காதலுக்குச் சாதி ஏது?’ என்று கோதைநாயகி தன்னுள் கூறிக்கொண்டாள். கோதைநாயகி மார்ச்சு மாத இறுதியில் பல்கலைக் கழகத் தேர்வை எழுதி முடித்தாள்; கல்லூரி மாணவிகளுடன் தான் வடஇந்திய யாத்திரை செல்வதாகப் பெற்றோருக்கு எழுதிவிட்டு, இருளப்பனுடன் சென்னையிலேயே ஓர் உணவு விடுதியில் தங்கிவிட்டாள். இரண்டு மாதங்கள் கடந்தன. அப்பொழுதுதான் அவள் தான் கருவுற்றிருப்பதை உணர்ந்தாள்; நெஞ்சு திடுக்கிட்டது. இருளப்பனிடம் அதனைக்கூறி, விரைவில் தன்னை மணந்து கொள்ளும்படி வற்புறுத்தத் தொடங்கினாள். அவள் கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டவுடனே இருளப்பன் திடுக்கிட்டான்; வானமே இடிந்து தன் தலையில் விழுவது போன்ற உணர்ச்சியைப் பெற்றான். மறுநாள் முதல் அவனுக்கு அவளது காதல் கசக்கத் தொடங்கியது. அவன் இரண்டு நாளைக்கு ஒரு முறை நான்கு நாட்களுக்கு ஒரு முறை அவளைப் பார்க்க வந்தான்; ஒருநாள் மாலை அவளிடம் வந்து, தான் அவசரமாகப் பம்பாய் சென்று ஒருவாரத்தில் வந்து விடுவதாகக் கூறி, அவளிடம் ஐந்நூறு ரூபாய் செலவுக்கு வைத்துக்கொள்ளும்படி கொடுத்துவிட்டு அகன்றான். ஒருவாரம் ஆயிற்று-இரண்டு வாரமும் ஆயிற்று—போனவன் திரும்பவில்லை. அவனிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. கோதைநாயகி சொல்ல முடியாத துயரத்தை அடைந்தாள்; அப்பாதகனை நம்பித் தான் மோசம் போனதை—-தன் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டதை எண்ணி எண்ணி ஏங்கினாள். அவ்வமயம் அவளுக்குத் திடீரென்று ஓர் நினைவு தோன்றியது. அதாவது, அவனது ஊருக்குச் சென்று அவனை நேரில் சந்தித்துப் பேசுவது என்பதாகும். உடனே கோதை நேரே அவன் கடைக்குச் சென்றாள்; அவன் கோவளத்தில் இருப்பதை அறிந்தாள். உடனே உந்து வண்டியில் ஏறிக் கோவளம் சென்றாள். அப்பொழுது மாலை ஐந்து மணி. அவள் எதிர்ப்பட்டோரைக் கேட்டுக்கொண்டே இருளப்பன் இல்லத்தை அடைந்தாள். அப்பொழுது இல்லத்தின் முன்புறத்தில் போடப் பட்டிருந்த நாற்காலிகள் இரண்டில் இருளப்பனும் மணிவண்ணனும் பேசிக்கொண்டிருந்தனர். இளமங்கை ஒருத்தி நாகரிகத் தோற்றத்துடன் தெருவாசலில் வந்து நின்றதைக் கண்ட மணிவண்ணன், தன் பேச்சை நிறுத்தினான்; இருளப்பனைப் பார்த்தான். இருளப்பன் முகம் பேயறைந்தாற்போலக் காணப் பட்டது. அவன் மிரள மிரள விழித்தான். அவனைக் கண்டதும் கோதைக்குக் கோபமும் அழுகையும் எல்லை கடந்து வரும்போல் தோன்றின. “ அம்மா, நீங்கள் யாரைப் பார்க்க வேண்டும்?” என்று மணிவண்ணன் கேட்டான். “என் காதலர் இருளப்பரைக் காண வந்தேன்” என்று கோதை வாய்குழற மொழிந்தாள். இருளப்பன் உடனே எழுந்து பதற்றத்தோடு, “யார் நீ? என்ன உளறுகிறாய்? உன்னை நான் பார்த்ததேயில்லையே!” என்று கூச்சலிட்டான். இச்சொற்களைக் கேட்டவுடன் கோதை அம்புபட்ட மயில் போலப் பதை பதைத்தாள். அவள் விழிகளிலிருந்து அருவிபோல நீர் வழியத் தொடங்கியது: “இருளப்பரே, என்ன பேசுகிறீர்கள்! என்னை மணந்து கொள்வதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டினீர்கள்; என்னை ஒரு குழந்தைக்கும் தாயாக்கி விட்டீர்கள். பம்பாய் சென்று வருவதாகப் பொய் கூறி இங்கு ஓடி வந்துவிட்டீர்கள்; இது அறமாகுமா?” “அம்மா, இவருக்கு மனைவியும் மக்களும் இருக்கின்றனர். இவர் மிகவும் நல்லவர்; இறைப்பற்று உள்ளவர். இவர் நீங்கள் சொன்ன தவற்றைச் செய்திருக்கமாட்டார். உங்களை ஏமாற்றிய கீழ்மகன் வேறொரு இருளப்பனாக இருக்க வேண்டும். நன்றாய் யோசித்துப் பாருங்கள்” என்று கோதையையும் இருளப்பனை யும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டே கூறினான் மணிவண்ணன். “இறைப்பற்று உள்ளவர் இத்தவறு செய்யார்” என்று மணிவண்ணன் கூறியது, இருளப்பன் உள்ளத்தை ஆழமாகச் சென்று தைத்தது; கழுநீர்ப் பானையில் ஊறப்போட்ட செருப்பை எடுத்துத் தன் தலையில் யாரோ ஓங்கி அடிப்பது போல் இருந்தது. அவன் முகம் கவிழ்த்தான். கோதை மணிவண்ணனிடம் தன் வரலாற்றை விரிவாகக் கூறினாள்; “இவர் தமக்கு மணமாகவில்லை என்று கூறினார். இவரது பேச்சை நான் நம்பினேன். செல்வமும் செல்வாக்கும் உள்ள இவர் ஒரு கன்னிப் பெண்ணைக் கற்பழித்துவிட்டு இவ்வாறு மோசம் செய்யலாமா? என் கதி என்ன ஆவது? என் பெற்றோர் கேட்டால் என்னைப்பற்றி என்ன நினைப்பர்!” என்று சொல்லிக் கோவென்று அழுதாள். இதற்கிடையில் இருளப்பன் மனைவி அங்கு வந்து விட்டாள். பொதுமக்கள் தெருவில் நின்று வேடிக்கை பார்த்தனர். இருளப்பன் இருபது தேள்கள் கொட்டியவன்போல் ஆனான். அவன் துடிதுடிப்போடு எழுந்து, “ஏ பெண்ணே! உனக்குப் பைத்தியமா? ஏதேதோ உளறுகிறாய். உடனே இங்கிருந்து போய்விடு. இல்லையென்றால் உன்னைப் போலீசில் ஒப்படைப்பேன்; உன்மீது மான நஷ்ட வழக்கைத் தொடர்வேன்” என்று இரைந்தான். மணிவண்ணன் அவனைக் கையமர்த்தினான்; அவளை அழைத்து உள் வீட்டில் அமரச் செய்தான். பின்பு இருளப்பனை உள்ளறைக்கு அழைத்துச் சென்றான்; உண்மையைக் கூறும்படி வற்புறுத்தினான். இருளப்பன் கடைசிவரையில் அவளைத் தெரியாது என்றே சாதித்துவிட்டான். அவன் பொய் பேசுகிறான் என்பதை நன்கு தெரிந்த மணிவண்ணன், “நான் அவளை அழைத்துச்சென்று சமாதானம் கூறி அனுப்பிவிட்டு வருகிறேன். ஆ! நல்ல யோசனை! அவளைத் திருப்போரூர் அறநிலையத்தில் சேர்த்து விட்டு வருவேன்” என்றான். “ஆம், அதுதான் நல்ல யோசனை” என்றான் இறைப்பற்றைப் பற்றிப் பிதற்றும் இருளப்பன். “அம்மா, நீங்கள் என்னுடன் வாருங்கள்” என்று மணிவண்ணன் அழைத்தான். கோதை எழுந்து நின்றாள். அவளது கூந்தல் அவிழ்ந்து தொங்கியது; கைகால்கள் நடுங்கின; கண்ணீர் அருவி போல வழிந்தது. அவள் இருளப்பனை நிமிர்ந்து நோக்கினாள். அப்பார்வை, கோவலனை இழந்த கண்ணகி, தவறு செய்த பாண்டியனைப் பார்த்த பார்வையை ஒத்திருந்தது. அவள் உதடுகள் துடித்தன; “இருளப்பரே, நான் உங்களைவிட்டுப் போகத்தான் வேண்டுமா? என் வயிறு எரிய எரிய, நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அழிந்துவிடுவீர்கள். என் கற்பைச் சூறையாடினீர்கள்; நம்பிக்கைத் துரோகம் செய்தீர்கள்; அழிந்துவிடுவீர்கள்” என்று கூறிக்கொண்டே விடுவிடுவென்று மணிவண்ணன் பின்னே நடந்தாள். மணிவண்ணன் வழியில் அவளைப் பார்த்து, “அம்மா, நாம் திருப்போரூர் அறநிலையத்திற்குப் போகிறோம். அங்குப் போனபிறகு பேசுவோம். நாம் உந்து வண்டியில் செல்ல வேண்டும். ஆதலால் கூந்தலை முடிந்துக்கொள்ளுங்கள்; கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள்” என்று அன்போடு கூறினான். 32. நல்ல முடிவு அவ்விருவரும் அறநிலையத்திற்குச் சென்றபோது, அறநிலையத் தார் வழிபாட்டு மண்டபத்தில் குழுமியிருந்தனர். அங்கு வழிபாடு நடந்துகொண்டிருந்தது. மணிவண்ணனும் கோதையும் அங்கு சென்றனர். உயர்ந்த மேடை மீது அமர்ந்து மங்கை வழிபாட்டுக்குரிய வாக்கியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தாள். மற்றவர்கள் தரையில் அமர்ந்து அமைதியாகத் தொழுது கொண்டிருந்தனர். கோதை உள்ளே சென்றபோது, “இறையரே, நான் அறிந்தோ அறியாமலோ செய்த குற்றங்கள் எவையேனும் இருந்தால், அவற்றைப் பொறுத்து என்னை ஆட்கொள்ள வேண்டும்” என்று மங்கை சொன்ன வாக்கியம் அவள் காதில் பட்டது. அவ்வாக்கியம் அவள் மனப்புண்ணிற்கு வேது கொடுப்பதுபோல் இருந்தது. அவள் முகம் மலர்ந்தது. அவளும் மணிவண்ணனும் வழிபாட்டில் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும், மங்கையும் முத்தப்பரும் தம் அறைக்குச் சென்றனர். மணிவண்ணன் நக்கீரனைச் சந்தித்தான்; தான் ஒரு பெண்ணைப் பற்றிய செய்தியை முத்தப்பருக்கும் மங்கைக்கும் உடனே தெரிவிக்க வேண்டும் என்பதை அறிவித்தான். நக்கீரன் உடனே அவ்விருவரையும் முத்தப்பரிடம் அழைத்துச் சென்றான். அப்பொழுது தந்தையாரை உணவு அறைக்கு அழைத்துச் செல்வதற்காக மங்கை முத்தப்பர் அறைக்கு வந்திருந்தாள். மணிவண்ணன் தந்தைக்கும் மகளுக்கும் முகமலர்ச்சியோடு வணக்கம் தெரிவித்தான்; தன்னைத்தானே அறிமுகம் செய்து கொண்டான். முத்தப்பர், “முதலில் எல்லோரும் உணவு கொள்வோம்; பிறகு ஓய்வாகப் பேசுவோம். வாருங்கள்” என்று அழைத்தார். எல்லோரும் உணவு கொண்டபிறகு முத்தப்பரும் மங்கையும் மணிவண்ணனும் கோதையும் முத்தப்பரின் மாளிகையின் கூடத்தில் அமர்ந்தனர். மணிவண்ணன் முதலில், அவர்தம் அறநிலையத்தை தான் ஒருமுறை வந்து பார்வையிட்ட தாகவும், பல கூட்டங்களில் அதன் சிறப்பை எடுத்துப் பேசி வருவதாகவும் கூறி, அவ்விருவர் தொண்டையும் பாராட்டினhன்; பின்பு கோதையின் வரலாற்றைத் தான் அறிந்தவரை எடுத்துரைத்தான். கோதை அழுது கொண்டே தன் துயரச் செய்தியை எடுத்துரைத்தாள். மங்கை அப்பேதையின் துயர வரலாற்றைக் கேட்டுக் கண் கலங்கினாள். முத்தப்பர் மங்கையைப் பார்த்து, “அம்மா, இப்பொழுது நாம் என்ன செய்வது நல்லது?” என்று ஆவலுடன் கேட்டார். மங்கை, “என் கருத்தைப் பிறகு சொல்லுகிறேன்; முதலில் புலவர் மணிவண்ணன் யோசனை சொல்லட்டும்” என்று சொல்லி மணிவண்ணன் கண்களை ஊடுருவினாள். மணிவண்ணன் ஆண் அழகன்; நடுத்தர உயரமும் நல்ல உடற்கட்டும் வாய்ந்தவன்; கண்கவர் வனப்பினன். அவனுடைய பணிவு நிறைந்த தெளிவான பேச்சும் இனிய குரலும் பிறவும் முத்தப்பரையும் மங்கையையும் கவர்ந்தன. அவன் தன்னை இன்னான் என்று அறிவித்துக்கொண்டபிறகு, தான் மணம் ஆகாதவன் என்று கூறியது மங்கையின் உள்ளத்தைத் தொட்டது. அதுவரையில் எந்த இளைஞனிடத்தும் கொள்ளாத-இனம்புரியாத பற்று-மங்கைக்கு மணிவண்ணன் மீது ஏற்பட்டது. அவள் அவனுடைய முகத்தையும் பேச்சையும் கைகளின் அசைவுகளையும் கூர்ந்து கவனித்து வந்தாள்; அவனது நுண்ணறிவைச் சோதிக்க விரும்பியே அவனது யோசனையைக் கேட்டாள். மணிவண்ணன் மங்கையை மகிழ்ச்சிப் பெருக்குடன் நோக்கினான்; “உங்கள் குணநலன்களையும் நுண்ணறிவையும் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் இப்போது என்னைச் சோதிக்கிறீர்கள். அடியேன் உள்ளத்தில் பட்டதைத் தெரிவிக்கிறேன்; கோதை இங்கேயே இருக்கட்டும். அவளுடைய பெற்றோரை உடனே வரவழையுங்கள். அவரிடம் நிகழ்ந்தவற்றைக் கூறுங்கள்; பின்பு கோவலன் செட்டியாரிடம் இவற்றை எடுத்துக் கூறுங்கள்; தக்க பெரியோர்களை உடன் வைத்துக்கொண்டு, இருளப்பனைக் கேட்டு உண்மையை அறியுங்கள். அவன் உண்மையை ஒப்புக்கொண்ட பின்பு இருளப்பனுக்கே கோதையை இரண்டாந்தாரமாக மணம் முடித்து வையுங்கள்” என்று பகர்ந்தான். மங்கையின் முகம் மலர்ந்தது; “மணிவண்ணரே, உங்கள் நுண்ணறிவைப் பாராட்டுகிறேன். நான் சொல்ல நினைத்த யோசனையும் இதுதான். இவளை இங்கு கவலையோடு அழைத்துவந்த நீங்கள், `இப்படிச் செய்வோம்’ என்று சொல்லாமல், ‘இப்படிச் செய்யுங்கள்’ என்று கூறியது ஏன்?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். “அம்மையே, நான் செட்டியார் பள்ளியில் வேலை பார்த்து வருபவன். ஆதலால் அறிவிலோ படிப்பிலோ ஒழுக்கத்திலோ நான் அவர்களைவிடச் சிறந்தவன் என்று கொண்டாலும், அவர்களைப்பற்றிய வழக்கில் நான் தலையிடுவது அல்லது கலந்து கொள்வது முறையல்லவே! ஆதலால்தான் அவ்வாறு சொன்னேன். இப்பொழுதும் இருளப்பனது இசைவு பெற்றுத்தான் கோதையை இங்கு அழைத்து வந்தேன். நம் எசமானர்கள் தகாதன செய்யினும், நான் சட்டப்படி செல்லவேண்டுவதுதான் முறை?” என்று பேசினான். அவனது பணிவான-முறையான பேச்சு முத்தப்பர் உள்ளத்தையும் மங்கையின் உள்ளத்தையும் ஒருங்கே கவர்ந்தது. “மணிவண்ணரே, நீங்கள் இருளப்பனிடம் சென்று, கோதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டதாகச் சொல்லிவிடுங்கள். இனி நடப்பவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு ஒன்றும் தெரியாதது போலவே இருக்கட்டும்” என்றார் முத்தப்பர். மணிவண்ணன் முத்தப்பரையும் மங்கையையும் கைகூப்பி வணங்கினான்; கோதைக்கு ஆறுதல் கூறினான்; மூவரிடமும் விடைபெற்றுச் சென்றான். கோதை அறநிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாள் என்று இருளப்பனிடம் கூறினான். இருளப்பன், “சனியன் விட்டது” என்று பெருமூச்சுவிட்டான்.  இருளப்பன் மனைவி வள்ளியம்மை பணக்காரர் வீட்டுப் பெண்; சென்னையில் பிறந்து வளர்ந்தவள்; அஞ்சாமை மிகுந்தவள்; ஆனால் அறவழி நடப்பவள். தன் கணவன் மிகவும் ஒழுங்குடையவன் என்று அதுகாறும் நம்பியிருந்தவள். அவள் கோதையின் வரலாற்றைக் கேட்டும் கோதையின் துன்பநிலையை நேரிற் கண்டும் மனம் புழுங்கினாள். அவள், கோதை சென்றவுடன் தன் கணவனை நோக்கி, “நீங்கள் அவளைக் கெடுத்தது உண்மையென்று நம்புகிறேன். கன்னிப் பெண்களுக்கு ஆசைவார்த்தை கூறி மோசம் செய்யும் கீழ்மக்கள் பலர் உண்டு. வெளியில் இறைப்பற்று-நேர்மை-சமுதாய முன்னேற்றம்-மாதர் முன்னேற்றம் என்றெல்லாம் பேசுவார்கள்; செயலில் கீழ்த்தரமாக நடப்பார்கள். அத்தகைய கீழ்மக்களுள் நீங்களும் ஒருவர் என்பது புரிந்துவிட்டது. அப்பெண் பாவம் உங்களை விடாது; உங்களை மணந்த என்னையும் விடாது; நம் குழந்தைகளையும் விடாது. நீங்கள் அவளைப் பலர் அறிய மணம் செய்துகொள்ளுங்கள். நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்போம். நீங்கள் இதற்கு உடன்படவில்லை என்றால், நான் நாளையே என் தாய்வீடு சென்றுவிடுவேன் அல்லது என் பெற்றோரை வரவழைத்து உங்கள் இறைப்பற்றின் மேன்மையை அம்பலப்படுத்தி விடுவேன்,” என்று கடுமையாகக் கூறினாள். வெளிப்புறம் கோதையின் தாக்குதலுக்கும் உட்புறம் தன் மனைவியின் தாக்குதலுக்கும் ஆளான இருளப்பன் வேல் பாய்ந்த காளையைப் போல் கதறினான். இரவு முழுதும் தூங்காமல் துன்புற்றான். அவன் மறுநாள் காலையில் மணிவண்ணனை அழைத்து, அவனது யோசனையைக் கேட்டான். அவன் இருளப்பன் மனைவி சொன்ன யோசனையையே கூறினான். இருவர் யோசனையும் ஒன்றாய் இருப்பதைக் கண்ட இருளப்பன் அவ்வாறே செய்ய எண்ணமிட்டான். “உங்கள் தந்தையார் இதைக்கேட்டால் கோபிப்பார் அல்லவா? அவரிடம் இதனை யார் கூறுவது?” என்று மணிவண்ணன் கேட்டான். இருளப்பன் நகைத்து, “அவர் என்ன, ஒழுக்கத்தில் சிறந்த உத்தமரோ, கோபிப்பதற்கு? நீங்களே சென்று அவரிடம் இதனைப் பக்குவமாகத் தெரிவியுங்கள்” என்று வேண்டினான். மணிவண்ணன் கோவலன் செட்டியாரைப் பணிந்து, முதலில் பள்ளிச் செய்திகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்; பின்பு மெதுவாக இருளப்பனது துரோகச் செயலை வேறோர் இளைஞன் செய்ததாகக் கூறினான். அதுகேட்ட செட்டியார் கடுங்கோபம் கொண்டார்; “அது முறையற்ற செயல், மணமாகாத பெண்ணைப் பொய் கூறிக் கெடுத்த காரணத்தால், அவனே அவளை மணந்துகொள்ள வேண்டும் அதுதான் அவனுக்குத் தக்க தண்டனை. அவன் என் மகனாயிருந்தாலும் நான் அப்படித்தான் செய்வேன்” என்று உறுமினார். மணிவண்ணன் முகம் மலர்ச்சியுற்றது. அவன் அவரை மகிழ்ச்சியோடு பார்த்துக் கைகுவித்தான். “செட்டியார் அவர்களே, நான் கூறியபடி ஒரு கல்லூரி மாணவியைக் கெடுத்தவர் உங்கள் இரண்டாம் மகன் இருளப்பரே” என்று கூறி, கோதை அங்கு வந்தது முதலிய எல்லா நிகழ்ச்சிகளையும் எடுத்து மொழிந்தான். அவன் பேச்சைக் கேட்ட செட்டியார் இடியோசை கேட்ட நாகம்போல் மிரண்டார். அவர் தலையில் சம்மட்டி கொண்டு யாரோ ஓங்கி அடிப்பதுபோல் இருந்தது. அவர் சிறிது நேரம் மணிவண்ணனை வெறிக்கப் பார்த்தார். அவர் கண்கள் சிவந்தன; “எங்கே அந்த பயல்?” என்று கத்தினார். மணிவண்ணன் அவரை அமைதிப்படுத்தி நயமாகப் பேசிக்கொண்டிருந்தான்.  அன்று மாலை முத்தப்பர், மங்கை, கோதை, அவளுடைய பெற்றோர், நக்கீரன், அழகாபுரி அடிகள் ஆகியோர் இரண்டு உந்து வண்டிகளில் வந்து செட்டியார் வீட்டில் இறங்கினர். மணிவண்ணன் அவர்களை அன்போடு வரவேற்றான். செட்டியார் தம் வருத்தத்தை உள்ளடக்கிக்கொண்டு, வெளியில் நன்மொழி கூறி, அவர்களை வரவேற்றார். யாவரும் கூடத்தில் அமர்ந்தனர். இருளப்பன் வரவழைக்கப்பட்டான். அவன் மனைவியும் தன் இரு மக்களோடும் கலந்து கொண்டாள். முத்தப்பர் நடந்தவற்றையெல்லாம் விளக்கமாகச் செட்டியாரிடம் கூறினார்; “செட்டியாரே, இது அம்பலப்படுமுன், காதும் காதும் வைத்தாற்போல நமது அறநிலையத்தில் இவ்விருவருக்கும் மணம் செய்வித்தலே நல்லது. இதுவே அறம். ஒரு மனைவி இருக்கத் தனக்கு மணமாகவில்லை என்று பொய் கூறி ஒரு கன்னிப் பெண்ணைக் கெடுத்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனையாகவும் இது அமையும். இருதார மணத்தை நாம் ஆதரிப்பதில்லை. வேறு வழியில்லாததால் இதற்கு உடன் படுகிறோம். என்ன சொல்லுகிறீர்கள்?” என்று அமைதியாகக் கேட்டார். உடனே மங்கை, “சிறந்த இறைப்பற்றும் பழங்குடிப் பெருவணிகருமான செட்டியார் அறநெறியினின்றும் தவறமாட்டார்” என்று சொன்னாள். “செட்டியார் சொல்ல வேண்டுவதில்லை; நானே சொல்லுகிறேன். அவர் இத்திருமணத்தை முடிக்க முழு விருப்பம் உடையவர். நாங்கள் சற்று முன்புதான் இதுபற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்” என்று மகிழ்ச்சியோடு கூறினான் மணிவண்ணன். “என் விருப்பமும் அதுதான்” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்டது. எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்; அவ்வாறு சொன்னவள் இருளப்பனின் மனைவிதான் என்பதை அறிந்ததும் வியப்படைந்தனர். மங்கை மகிழ்ச்சியடைந்தாள்; அவளை மார்புறத் தழுவிக்கொண்டு மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தாள். கோதையும் எழுந்து சென்று “அக்கா” என்று அழைத்து, அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள். “கோதை என் தங்கை. நாங்கள் இருவரும் ஒரே குடும்பமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வோம்” என்று இருளப்பன் மனைவி மகிழ்ச்சிப் பெருக்குடன் கூறினாள். எல்லோர் விழிகளிலும் மகிழ்ச்சிக் கண்ணீர் துளிர்த்தது. கோதையின் பெற்றோர் அவளை மனமார ஆசீர்வதித்தனர்.  அடுத்த நாள் காலை பத்துமணியளவில் முத்தப்பர் தலைமையில் அழகாபுரி அடிகள் இருளப்பனுக்கும் கோதைக்கும் திருமணம் செய்வித்தார். இருளப்பன் முதல் மனைவியே, கோதைக்குத் தோழியாக இருந்து எல்லோரையும் வரவேற்றாள். கோவலன் செட்டியாரும் மணிவண்ணனும் கோதையின் பெற்றோரும் முத்தப்பரையும் மங்கையையும் வாயார வாழ்த்தினர். செய்தியறிந்த ஊர்மக்களும் அவர்களை மனமாரப் பாராட்டினர். 33. மங்கையும் மணிவண்ணனும் மேலே கூறப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பின்பு மணிவண்ணன் மங்கையின் வேண்டுகோள் மீது அடிக்கடி அறநிலையத்திற்குச் சென்று வந்தான். அவன் சுற்றுப்புற ஊர்களுக்குச் சென்று சமுதாய ஒற்றுமை, கைத்தொழில் வளர்ச்சி, கிராமத்தார் கடமைகள், இறைப்பற்றும் மனித வாழ்க்கையும் என்னும் பல பொருள்கள் பற்றிப் பேசினான். அவனுடைய எடுப்பான தோற்றம், வெண்கலக் குரல், பேச்சின் தெளிவு என்பவை மக்கள் உள்ளங்களைத் தொட்டன. அவருள் பலர் அவனைப் பாராட்டிக் கோவலன் செட்டியாரிடம் பேசினர்; அத்தகைய திறமைசாலியைத் தம் பள்ளியில் வைத்து இருப்பதைப்பற்றிப் பாராட்டினர். செட்டியார் அதுகேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவர் அவனை அழைத்து, “சுற்றுப்புற ஊர்களிலுள்ள மக்கள் உங்கள் பேச்சை மிகவும் விரும்புகின்றனர். பலர் பள்ளி அளவோடு நின்று தம் பணியைச் செய்கின்றனர். ஆனால் நீங்கள் பள்ளிப்பணியோடு பொதுநலப் பணியையும் செய்கிறீர்கள். உங்களால் எனக்கும் இந்தப் பள்ளிக்கும் சிறப்பு மிகுகிறது. ஆதலால் நீங்கள் பள்ளி நேரம் தவிரப் பிறநேரங்களில் எங்கு வேண்டுமாயினும் செல்லலாம்; சென்று, பொதுநலத் தொண்டு செய்யலாம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று முகமலர்ச்சியோடு கூறினார். மணிவண்ணன் “மிக்க மகிழ்ச்சி” என்று கைகூப்பி வணங்கினான். மணிவண்ணன் சிறந்த பேச்சாளன் என்று பலரும் பாராட்டுவதைக் கேட்ட மங்கை, அறநிலைய வெளி அரங்கில் ஞாயிறு மாலை வந்து பேசும்படி அவனை வேண்டினாள். அறிவிப்புத் தாள்கள் ஆயிரக்கணக்கில் வழங்கப்பெற்றன. உள்ளூர் - வெளியூர் மக்கள் பலரும் திரளாகக் கூடிவிட்டனர். கூட்டத்திற்கு அழகாபுரி அடிகள் தலைமை தாங்கினார்’ “நாட்டிற்கு நல்லவை” என்னும் தலைப்பில் மணிவண்ணன் பேசத் தொடங்கினான்: “தலைவர்களே, பெருமக்களே, உங்கள் அனைவர்க்கும் எனது பணிவார்ந்த வணக்கம் உரியது. ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் நமது நாடு கல்வி, பயிர்த்தொழில், வாணிகம், கைத்தொழில் இவற்றில் சிறந்திருந்தது. இவையே நாகரிகத்தையும் பண்பாட்டையும் வளர்ப்பவை. இவற்றுள்ளும் மிகச் சிறந்தது கல்வி. கல்வி உலக அறிவையூட்டும்; நன்மை தீமைகளைப் பகுத்துணரச் செய்யும்; நம்மைப் பிறர் ஏய்ப்பிலிருந்து காக்கும்: சுருங்கக் கூறின் நம்மை அறிவுடைய மக்களாக வாழச் செய்யும். எனவே, ஒவ்வொருவரும் எப்பாடுபட்டாவது கல்வியைக் கற்கவேண்டும். `கல்வி சிற்றுயிர்க்கு உற்ற துணை’ என்றார் குமரகுருபர அடிகள். மக்களிடம், கல்வி இருந்தால்தான் பயிர்த்தொழில் வளம்பெறும். மேல்நாடுகளில் பயிர்த்தொழில் எவ்வாறு நடைபெறுகின்றது-அந்நாட்டு முறைக்கும் நம்நாட்டு முறைக்கும் உள்ள வேறுபாடு என்ன- இங்குள்ள குறைகளை நீக்குவது எங்ஙனம் என்பன போன்ற செய்திகளை அறியவும், அறிந்து செயலாற்றவும் உழவர்க்கும் கல்வி தேவைப்படுகிறது. ஆற்றில் அணைகளைக் கட்டவும் பிற வசதிகளைச் செய்துகொள்ளவும் கல்விதான் தேவைப்படுகிறது. இவ்வாறே உள்நாட்டு வாணிகத்தையும் வெளிநாட்டு வாணிகத்தையும் பற்றிய உண்மைகளை அறியவும் கல்வி தேவைப்படுகிறது. கல்வி கற்ற வணிகர் வாணிகத்துறையில் ஏமாற்றம் அடையார். நம்நாட்டில் எக் கைத்தொழில்களை வளர்க்கலாம். கைத்தொழில் பொருள்களை எந்தெந்த நாடுகளுக்கு அனுப்பலாம் என்று தெரிந்துகொள்ளவும் கல்வி தேவைப்படுகிறது. புதிய தொழிற்சாலை அமைக்கவும், ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அதில் வேலை தரவும் கல்விதான் உதவி செய்கிறது. இறைவன் மக்களைப் படைத்தான்; ஆனால் மக்கள் கொண்டாடும் சாதிகளைப் படைக்கவில்லை. இந்த உண்மையை உலக அறிவினால்தான் நாம் அறியமுடியும். சாதிகள் கடவுளது படைப்பாக இருந்தால், எல்லா நாடுகளிலும் இருக்க வேண்டுமல்லவா? நமது நாட்டில் மட்டுமே ஆயிரக்கணக்கான சாதிகள் இருக்கின்றன. வேறு நாடுகளில் சாதிகள் இல்லை. இங்கு இச்சாதிகளால் மக்கள் பல்லாயிரம் பிரிவுகளாகப் பிரிந்துவிட்டனர். மேல்சாதிகள்- கீழ்ச்சாதிகள்- நடுச்சாதிகள் என்ற பெரும் பிரிவுகளும் ஏற்பட்டுவிட்டன. இவை நமது சமுதாயத்தின் ஒற்றுமையையும் வலிமையையும் அடியோடு குலைத்துவிட்டன. இவை திருமணங்களால்தான் ஒழியும். இந்த உண்மையைப் பொதுமக்கள் நன்கு உணரவேண்டும். பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகட்கும் பெண் பிள்ளை கட்கும் கல்வியறிவை ஊட்ட வேண்டும்; பின்பு விரும்பியவரை மணந்து கொள்ளும் உரிமையை அவர்களுக்கே வழங்குதல் வேண்டும். இம்முறை பின்பற்றப்படுமானால், நமது சமுதாயத்தில் உள்ள வேறுபாடுகள் சூரியனைக் கண்ட பனி போல விரைவில் மறையும்; ஒற்றுமை நிலவத் தொடங்கும். ஒவ்வொருவரும் தம்மைப்போல் பிறரை மதிக்க வேண்டும். அடுத்தவன் பட்டினி கிடக்க, பிறருடைய இன்ப துன்பங்களில் பங்கு கொண்டு நாம் உண்ணலாகாது; நம்மால் இயன்ற உதவியைப் பிறர்க்கு உவப்போடு செய்யவேண்டும். செல்வர் எளிய மக்களுக்குப் பலவகையிலும் உதவி செய்யலாம். இதற்கு இந்த அறநிலையமே ஏற்ற சான்றாகும். சில செல்வர் இல்லங்களிலும் நடுத்தர மக்கள் இல்லங்களிலும் குழந்தைகள் பிறப்பதரிது. அவர்கள், குழந்தைகளை மிகுதியாகப் பெற்று வளர்க்க முடியாமல் தவிக்கும் ஏழைப் பெற்றோரிடம் ஒரு பிள்ளையையோ பல பிள்ளைகளையோ பெற்று வளர்க்க முற்படல் வேண்டும். இது அவர்கள் கடமையாகும்- சமுதாயத் திற்குச் செய்யவேண்டும் பெருங்கடமையாகும். இங்ஙனம் செய்தல், எளிய பெற்றோர்க்கு நல்லது; வளர்ப்பவரின் பிள்ளை இல்லாக் குறையும் நீங்கும். பெரியோர்களே, மனிதன் வாழப் பிறந்தவன். அவன் வாழத்தான் வேண்டும். பிறரை மோசம் செய்தா? அரசாங்கத்தை ஏமாற்றியா? அன்று, அன்று. உடல் வருந்த உழைத்துப் பொருளீட்டி வாழவேண்டும். ஒவ்வொருவரும் தம் குடும்பத்தில் குறைந்த அளவு தேவைக்குத் தக்கதைத் தம் உழைப்பால் பெறத்தக்க முறையில் தொழில் முறையும் கூலி முறையும் அமையவேண்டும். எல்லா மக்களும் பட்டினியின்றி உண்பாராயின், நாட்டில் கொலை, திருடு, கொள்ளை முதலியன பேரளவு குறைந்து விடும். மக்கள் வாழ்வதற்கு வழி செய்யாமல் அவர்களைத் தீச்செயலில் புகும்படி செய்துவிட்டு, அரசாங்கம் சிறைச்சாலைகளை மட்டும் கட்டுவதில் பொருளுமில்லை; பயனுமில்லை. `நாடெல்லாம் வாழக் கேடொன்றுமில்லை’ என்ற பழமொழியின் பொருளை நாம் உணரவேண்டும். கோவிலுக்குச் செல்வதும், தேங்காய் பழம் உடைப்பதும், சமயக்குறிகளை நெற்றியில் இடுவதும்தான் இறைப்பற்று என்று சிலர் எண்ணுகின்றனர். இது தவறு. இறைவனால் படைக்கப் பட்ட எல்லா உயிர்களையும் தன்னைப்போல் எண்ணச் செய்வது இறைப்பற்று; எல்லோரிடத்திலும் அன்போடும் அருளோடும் நடக்கச்செய்வது இறைப்பற்று; தன்னிடம் வாங்குபவரை ஏமாற்றாத வணிகன் இறைப்பற்று உடையவன்; தன் ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்க்கு வாழ்வளிக்கும் முதலாளி இறைப்பற்று உடையவன்; இவ்வாறு தன் கடமையைச் செய்யும் காவலன், அலுவலாளன் முதலிய அனைவருமே இறைப்பற்று உடையவர். சமுதாய நலனுக்கு உழைக்கும் ஒவ்வோர் உண்மைத் தொண்டனும் இறைப்பற்று உடையவனாவான். நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு படியின் அளவைக் குறைத்துப் பொது மக்களுக்கு விற்பவனும், ஐந்து கெசத் துணியை நாலரைக் கெசமாக அளப்பவனும், பட்டை நாமத்தைப் போட்டுக்கொண்டு மிளகாய்த்தூளில் செம்மண் பொடியைக் கலந்து விற்பவனும், மக்களுக்குப் புரியாதவற்றைச் சொல்லிச் சமயத்தின் பெயராலும் தெய்வங்களின் பெயர்களாலும் அவர்களை ஏமாற்றிப் பிழைப்பவரும் இறைப்பற்று உடையவர் அல்லர். சமயச் சொற்பொழிவுகள் செய்துகொண்டே கைம்பெண்களை வேட்டையாடும் காமுகரும், கட்டிய மனைவி இருக்கக் கண்டோரை நாடும் கயவரும் நாள்தோறும் கோவிலுக்குச் சென்றாலும், கோவிலில் நிவந்தங்கள் ஏற்படுத்தினாலும், தான தருமங்கள் செய்தாலும், இறைப்பற்று உடையவர் ஆகார். இவரை இறைப்பற்று உடையவர் என்று இவர்தம் கூலிகளும், வெளிவேடத்தைக் கண்டு மயங்கும் பேதையரும் கூறலாம்; ஆனால் அறிவுடையவர் கூறார். பெருமக்களே, தன் மனச்சாட்சிக்கு மதிப்புக்கொடுத்து அறவழியில் நடப்பவனே இறைப்பற்று உடையவன். அவன் திருவடிகள் என் முடிமேல் தங்குக. அப் பெருமகனுக்கென்று ஒரு சமயம் இல்லை. ஒரு சாதி இல்லை; அவன் ஒவ்வொரு சமயத்திலுமுள்ள நல்லவற்றை எடுத்துக்கொள்வான்; அவற்றைப் பாராட்டுவான்; தன் வாழ்க்கையில் கடைப்பிடிப்பான். அவனிடம் சமய வெறியைக் காண முடியாது. அவன் இன்பத்திலும் துன்பத்திலும் முக மலர்ச்சியோடு இருப்பான். பெரியோர்களே, என் பேச்சை முடிக்குமுன் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் ஆண் பிள்ளைகளைப் போலவே பெண் பிள்ளைகளையும் படிக்க வையுங்கள். ஒவ்வொரு பெண்ணும் தன்னளவில் சம்பாதிக்கும் தகுதி பெறவேண்டும். பெண்தான் சமுதாயத்தின் உயிர் நாடி. அவள் அறிவும், தன்னைக் காத்துக்கொள்ளும் தகுதியும் பெற்றிருந்தால் தான் அவளை மணந்துகொள்பவன் அவளுக்கு மதிப்பைத் தருவான். அவளும் அவ்வப்போது தன் கணவன் குறைகளைச் சுட்டிக்காட்டித் திருத்த முடியும். நம் பிள்ளைகளுக்குச் செல்வம் தேவையில்லை; கல்வியும் அறிவும் மனத்திண்மையுமே தேவை யானiவ. அவர்கள் அவற்றைப் பெறும்படி செய்வதே பெற்றோர் கடமையாகும். அத்தகைய பிள்ளைகளால்தான் நமது சமுதாயம் எதிர்காலத்தில் சீரும் சிறப்பும் பெறும்.” மணிவண்ணனது இச்சொற்பொழிவு பொதுமக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்தது. அவர்கள் கைகளை நெடுநேரம் தட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். மங்கை மணிவண்ணனது மணி போன்ற சொற்களைச் செவியாரப் பருகினாள். கடைந்தெடுத்த உண்மைகளை அவன் கூறக் கூற, அவள் முகமலர்ச்சி கொண்டு தலை அசைத்தாள். முன்பே அவனது கட்டழகிலும் பணிவான பேச்சிலும் ஈடுபாடுகொண்ட அவள் இப்பொழுது தன் உள்ளத்தையே அவனிடம் பறிகொடுத்தாள். அழகாபுரி அடிகள் அளவற்ற மகிழ்ச்சியோடு மணிவண்ணனைப் பலபடப் பாராட்டிக் கூட்டத்தை முடித்தார். முத்தப்பர் முகமலர்ச்சியோடு மணிவண்ணன் கைகளைப் பற்றிக் குலுக்கினார். நக்கீரன் மகிழ்ச்சிப் பெருக்கில் மணிவண்ணனைத் தழுவிக்கொண்டான். அன்று இரவு எல்லோரும் அங்கு உணவு உண்டனர். மங்கை தன் தந்தையைத் தனியே அழைத்து, “அப்பா, நான் விரும்பும்போது திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியது உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். மணிவண்ணனைக் கண்டநாள் முதல் மங்கையிடம் காணப்பட்ட மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருந்த முத்தப்பர் மெல்ல நகைத்து, “ஆம் அம்மா, நன்கு நினைவிருக்கிறது” என்றார். “அப்பா, நான் மணிவண்ணனைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரும் என் கருத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பார் என்று நம்புகிறேன். அவரைப் பக்குவமாகக் கேட்டுப் பாருங்கள்” என்று மங்கை சிறிது நாணத்துடன் கூறினாள். முத்தப்பர் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். அவர் மணிவண்ணனைத் தனியே அழைத்து அதுபற்றிப் பேசும்படி அழகாபுரி அடிகளிடம் கூறினார். அடிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவர் கூறியதைக் கேட்ட மணிவண்ணன், “அடிகளே, என் மனம் எந்தப் பெண்ணைக் கண்டும் கலக்கம் கொண்டதில்லை; என் வசம் இழந்ததில்லை. ஆனால் மங்கையைக் கண்ட நாள் முதல் என் மனத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. நான் அந்த அம்மையை உளமார விரும்புகிறேன். அவரோடு இருந்து, அறநெறியில் நடந்து, தொண்டு செய்யக் காத்திருக்கிறேன்” என்று ஆர்வத்தோடு கூறினான்.  திருப்போரூர்ப் பண்ணையார் மகள்- மங்கையர் மாணிக்கம்-மங்கையர்கரசிக்கும் புலவர் மணிவண்ணன் எம்.ஏ.க்கும் அழகாபுரி அடிகள் தலைமையில் திருமணம் என்ற செய்தி நாடு முழுதும் பரவியது. அழைப்பைப் பெற்றுக்கொண்ட அமைச்சர்களும், உயர் அலுவலரும், பல ஊர்ச் செல்வரும், பொது மக்களும் திரளாகக் குழுமியிருந்தனர். கோடீசுவரியான மங்கையர்ககரசி என்றும் அணியும் இன்றியமையாத அணிகளோடு எளிய உடையில் மணப்பெண்ணாகக் காட்சியளித்தாள். அவளது மனப் பண்பைக் கண்டு அவையோர் பாராட்டினர். தேவார முழக்கத்திற்கிடையே- பல் இயங்கள் ஒலிக்க- பெரியோர் வாழ்த்துக் கூறத் திருமணம் இனிது நடைபெற்றது. மங்கையர்க்கரசி தன் இருபத்தெட்டாம் வயதில் மணிவண்ணனுக்கு உரியவள் ஆனாள். 34. அமைச்சர் பதவி ஏழாண்டுகளுக்கு முன் தொடங்கப்பெற்ற மரகதவல்லி அறநிலையத்தின் உயர்நிலைப் பள்ளி ஏழாம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கல்லூரியாக வளர்ச்சி அடைந்தது; அநாதை விடுதி முந்நூறு பேர்களைக் கொண்டதாக விளங்கியது; தொழிற்கூடம் பல்வேறு குடிசைக் கைத்தொழில் களுக்கு இடம் அளித்து விரிவடைந்தது; அங்கு தச்சுத் தொழில், தோலைக் கொண்டு பொருள்களைச் செய்யும் தொழில் முதலியன வளர்ச்சியடைந்தன. கரும்பாக்கத்தில் தொடங்கப்பெற்ற வள்ளியம்மை அறநிலையம் (பாண்டியன் தாயார் பெயர்) பள்ளி, அநாதை விடுதி, தொழிற்கூடம் ஆகிய மூன்றையும் பெற்று வளரத் தொடங்கியது. செங்கற்பட்டுக்கு அண்மையிலுள்ள குளத்தூர் பண்ணையில் தோற்றுவிக்கப் பெற்ற கோமளவல்லி அறநிலையமும் (கண்ணன் தாயார் பெயர்) வளர்பிறை போல வளரலாயிற்று. அழகாபுரி அடிகள் தாம் இருந்த சிற்றூரில் இருந்த செல்வர்களின் உதவியால் மணிமேகலை அறநிலையத்தைத் தொடங்கிவைத்தார்; அங்கு அநாதை விடுதியும், நடுநிலைப் பள்ளியும், தொழிற் கூடமும் சிறந்த முறையில் வேலை செய்து வரலாயின. முத்தப்பர், மணிவண்ணன், மங்கை, அடிகள் ஆகிய நால்வரும் மங்கையின் திருமணத்திற்குப் பின்பு செங்கற்பட்டு மாவட்டம் முழுமையும் பிரயாணம் செய்தனர். ஒவ்வொரு பெரிய ஊரிலும் இருந்த செல்வர்களின் உதவியால் அநாதை விடுதி, பள்ளி, தொழிற்கூடம் ஆகிய மூன்றையும் ஏற்படுத்தும் படி வற்புறுத்தினர்; கிராமந்தோறும் சென்று, அம்மக்களுக்குத் தேவையான நல்லுரைகளை வழங்கினர். இங்ஙனம் அவர்களது இடைவிடா உழைப்பினால் ஓராண்டிற்குள் அம் மாவட்டத்தில் சில பெரிய ஊர்களில் அற நிலையங்கள் ஏற்பட்டன. அவர்களது செயற்கரிய செயலை அடிக்கடி செய்தித்தாள்களின் வாயிலாக அறிந்த பிற ஊர்களில் இருந்த பெருமக்கள் தத்தம் ஊர்களுக்கு வரும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தனர். அவர்கள் அவ்வழைப்பின்படி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றனர்; ஆங்காங்கு தம் திட்டத்தை விளக்கிப் பேசினர். மணிவண்ணன், மங்கை ஆகிய இருவருடைய சொற்பொழிவுகள் பொதுமக்களின் உள்ளங்களைக் கவர்ந்தன. கும்பகோணத்தில் குஞ்சிதபாதம் செட்டியார் பெரும் செல்வர். அவர் ஓர் அறநிலையத்தைத் தோற்றுவித்தார். இவ்வாறே ஒவ்வொரு பெரிய நகரத்திலும் அறநிலையங்கள் ஏற்படுத்த அவ்வவ்வூர் நன்மக்கள் முயற்சி எடுத்துக் கொண்டனர். ஆயினும், தம் சுகபோகங் களைக் குறைத்துக் கொண்டு ஏழைகள் வாழப் பொருளுதவி செய்யச் செல்வர் பலர் இன்னும் முன்வரவில்லை. எனவே, சில ஊர்களில் மட்டுமே சிறந்த முறையில் அறநிலையங்கள் தோன்றலாயின.  இந்த நிலையில் சட்ட மன்றத் தேர்தல் நெருங்கியது. “நமது திட்டம் நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், நம்மவர் சட்ட மன்றத்தில் இடம் பெறுதல் வேண்டும். எனவே, மாமா தேர்தலில் நிற்பது நல்லது” என்று மணிவண்ணன் கூறினான். “எனக்குப் பதில் மங்கை நிற்பதுதான் நல்லது” என்றார் முத்தப்பர். இவ்வாறு இவர்கள் பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில் அழகாபுரி அடிகளின் உள்ளத்திலும் இதே எண்ணம் தோன்றியது. அவர் அவ்வூர்ப் பெருமக்கள் நால்வரோடு வந்து மங்கையைக் கண்டார்; தாம் கருதியதைத் தெரிவித்தார். அப்போது மங்கை அவரை அன்போடு நோக்கி, “அடிகளே, இப்பொழுது நமது நாட்டில் ஒருவர் தாமே நின்று, `நான் தேர்தலுக்கு நிற்கிறேன். எனக்கு வாக்களியுங்கள். நான்போய் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்’ என்று கூறும் முறையை நான் அறவே வெறுக்கிறேன். மெக்காலே சொன்னதுபோல, ஒரு தொகுதி மக்கள் தம்முள் தாமே கூடித் தங்கள் நம்பிக்கைக்கு உரிய ஒருவரைத் தேர்தலில் நிறுத்த வேண்டும். அங்ஙனம் ஒவ்வொரு தொகுதியிலும் முன்கூட்டிப் பொதுமக்களே ஒருவரைத் தேர்ந்தெடுத்து விட்டால், வேறு பலரும் தேர்தலில் நின்று பொருளை இழக்கமாட்டார். பலர் பொருளும் வீணாகாது. அரசாங்கத்திற்கும் தேர்தல் செலவு மிகக் குறையும். இந்த முறை என்று வருமோ, அன்றுதான் இந்த நாடு உருப்பெறும். எந்தக் கட்சியைச் சேர்ந்திருந்தாலும், மக்களுக்குப் பணத்தைக் கொடுத்துத்தான் தேர்தலுக்கு நிற்பவர் வாக்குப் பெறுகிறார். மிகச் சில இடங்களில்தான் வாக்காளர், தேர்தலுக்கு நிற்பவரின் சொல்லாற் றலையும் செயலாற்றலையும் கண்டு வாக்களிக்கின்றனர். அடிகளே, திருப்போரூரிலிருந்து செங்கற்பட்டு வரையிலும் உள்ள நிலப்பரப்பு ஒரு தொகுதி யாகும். இத் தொகுதியில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இத்தொகுதி மக்கள் தங்கள் சார்பில் நான் உறுப்பினராகச் செல்லவேண்டும் என்று விரும்புவராயின், நான் செல்லத் தடையில்லை. தாங்கள் யோசித்து முடிவு கூறுங்கள்” என்றாள். நாட்டில் எவ்வாறு தேர்தல் நடைபெற வேண்டும் என்பதை அவள் வாயிலாகக் கேட்ட அடிகள் வியப்புற்று நின்றார்; அவளது ஆழ்ந்த அகன்ற அரசியல் அறிவைப் பாராட்டினார். “அம்மா, என் அறிவில் இதுவரையிலும் இந்த முறை தட்டுப்படவில்லை. உண்மையில் இதுமாதிரிதான் தேர்தல் நடைபெற வேண்டும். இதனை இப்போதே செயலில் செய்வோம். நானே இதற்குரிய ஏற்பாட்டைச் செய்வேன். ஏழை மக்கள் துயர் நீங்க வேண்டுமாயின் நீங்கள் சட்டமன்றம் செல்லத்தான் வேண்டும்” என்று கூறி விடைபெற்றார். அவர் நேரே பாண்டியனிடம் சென்றார்; மங்கையின் கருத்தை அறிவித்தார். அவனையும் செந்தாமரையையும் அழைத்துக்கொண்டு குளத்தூர் சென்றனர்; கண்ணனையும் தேன்மொழியையும் அழைத்துக் கொண்டு, அத் தொகுதி யிலுள்ள ஒவ்வோர் ஊருக்கும் சென்றனர். ஒவ்வோர் ஊரிலும் பொதுக்கூட்டம் கூட்டினர்; மங்கையைத் தேர்ந்தெடுப்பதால் வரும் நலன்களை எடுத்து விளக்கினர். பின்பு ஒவ்வோர் ஊராரும் ஊர்க்கூட்டம் கூட்டினர்; நன்கு யோசித் தனர்; பிறர்க்குத் தொண்டு செய்வதையே பிறவி எடுத்ததன் நோக்க மாகக் கொண்ட மங்கையர்க்கரசியையே சட்டமன்ற உறுப்பினராக நிற்குமாறு வேண்டிக்கொண்டனர். இவ்வாறு அத்தொகுதி மக்கள் அனைவரும் முடிவு செய்து வேண்டுகோள் கடிதங்களை மங்கைக்கு அனுப்பினர். அடிகள் முதலிய பொதுநலத் தொண்டர்களும் பலவூர்ப் பெருமக்களும் ஒருநாள் அறநிலையத்திற்கு வந்தனர்; மங்கையை வற்புறுத்திச் சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நிற்குமாறு செய்தனர். தேர்தல் நாள் வந்தது. ஒவ்வொரு தொகுதியிலும் பலர் போட்டி யிட்டனர்; பணத்தை வாரி இறைத்தனர். ஆனால் திருப்போரூர்த் தொகுதியில் இத்தகைய பணச் செலவு இல்லை; எவரும் தேர்தலில் போட்டியிடவும் இல்லை. இச்செய்தி செய்தித்தாள்களில் வெளியா யிற்று. நாட்டு நன்மக்கள் இப்புதிய முறையை வியந்து பாராட்டினர்.  மக்கள் நலக் கட்சியினரே பெரும்பாலராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். அக்கட்சியின் தலைவரான வணங்காமுடி அமைச்சர் அவையை அமைக்கத் தொடங்கினார். அவரும் முன்னாள் பயிர்த்தொழில் அமைச்சர் பரந்தாமனாரும் அறநிலையத்திற்கு வந்தனர். மங்கை எந்தக் கட்சியையும் சேராதவளாக இருந்தாலும், அவள் செய்து வந்த தொண்டினைப் பாராட்டிப் பயிர்த் தொழில் துறைக்கு அவளை அமைச்சராக அமர்த்த விரும்புவதாகவும், அவள் தன் பண்ணையில் செய்த சீர்திருத்தத்தையே சட்ட வாயிலாக நாடு முழுதும் செய்யலாமென்றும், மக்கள் நலம் ஒன்றையே கருதுபவள் ஆதலால் அவளது செயல்களில் தாம் தலையிடுவதில்லை என்றும் வணங்காமுடி கூறி, அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். முத்தப்பரும் அழகாபுரி அடிகளும் மணிவண்ணன் முதலியோரும் அவளை வேண்டிக்கொண்டனர். அனைவர் வேண்டுகோள்மீது அவள் பதவி ஏற்க ஒப்புக்கொண்டாள். முதள்நாள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் மங்கை எழுந்து நின்றாள். சட்டமன்ற உறுப்பினர் அனைவரும்- எதிர்க்கட்சியினர் உள்பட- கைதட்டி ஆரவாரம் செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம் எழுந்து மங்கையின் பொதுநலத் தொண்டைப் பாராட்டிப் பேசி அவளோடு தம் கட்சியினர் ஒத்துழைக்கத் தயார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்தார். வணங்காமுடி முதலிய மக்கள் நலக்கட்சித் தலைவர்களும் அவள் வரவைப் பாராட்டிப் பேசினர்; அவள் தேர்ந்தெடுக்கப் பெற்ற புது முறையை மிக வியந்து பாராட்டினர். “அமைச்சர் பெருமக்களே, சட்ட மன்ற உறுப்பினர்களே, என்னைப் பாராட்டி வாழ்த்துக் கூறிய உங்கள் அனைவர்க்கும் எனது பணிவார்ந்த வணக்கம் உரியதாகும். என் தொகுதி மக்கள் விருப்பத்தின்படி நான் உறுப்பினள் ஆனேன்; முதல் அமைச்சர் போன்ற பெருமக்கள் வற்புறுத்தலாலும், பொது மக்களுக்கு நலம் புரியலாம் என்ற நம்பிக்கையாலுமே அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டே.ன். எங்கள் பண்ணையில் நிலக்கிழார்- பண்ணையாட்கள் ஒப்பந்தம் செய்துகொண்டு இருதிறத்தாரும் ஒன்றுபட்ட உளத்தராய்ப் பயிர்த் தொழிலை நடத்தும் முறையை நீங்கள் நன்கு அறிவீர்கள். எங்கள் முறையைப் பின்பற்றி வேறு சில பண்ணைகளும் இயங்கிவருகின்றன. இந்த முறையைப் பெருமக்களாகிய நீங்கள் ஆராயுங்கள்; வேண்டும் திருத்தங்களைச் செய்யுங்கள். இதற்கிiடயில் யான் ஊர்தோறும் சுற்றி, இத்திட்டத்திற்குப் பண்ணையார்களின் ஆதரவையும் பண்ணையாட்களின் ஆதரவையும் திரட்டுவேன். இவ்விரு திறத்தாரின் ஆதரவையும் பெற்றபிறகே இத்திட்டம் பற்றிய சட்டம் இம் மன்றத்தில் செய்யப்பெறும். வாழப் பிறந்த மக்களுடைய மனத்தைப் பக்குவப்படுத்திய பிறகே- அவர்கள் இது நாட்டுக்கு நல்லது என்பதை உணர்ந்து இசைவு தெரிவித்த பிறகே இத்திட்டம் சட்டமாதல் வேண்டும் என்பது எனது பணிவான கருத்து. தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்துக் கனியவைக்க நான் விரும்பவில்லை.” மங்கையின் பொருள் நிறைந்த இப்பேச்சைக் கேட்ட அவையோர் அகம் மிக மகிழ்ந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து, “உங்கள் கருத்தை முழுமனத்துடன் எதிர்க்கட்சியினர் ஆதரிக்கின்றனர். உங்கள் திட்டத்திற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.” என்று மகிழ்ச்சியோடு கூறி அமர்ந்தனர். முதலமைச்சர் வணங்காமுடி எழுந்து, “தன்னலமற்ற அமைச்சர் மங்கையர்க்கரசியின் கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. பாராட்டத்தகும் இவ்வரிய திட்டத்தை நிலக்கிழார்கள் அனைவரும் பரந்த மனப்பான்மையோடும் இரக்க உணர்ச்சியோடும் நாட்டின் நலத்தில் கருத்துடனும் ஆராய்ந்து ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். இவ்வரிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ள அமைச்சர்க்கு அரசாங்கம் தன் முழு ஆதரவையும் கொடுக்கின்றது என்பதை மீண்டும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அகமகிழ்ச்சி யுடன் பேசி முடித்தார். மங்கையர்க்கரசியைப் பார்க்கவேண்டும்- அவளது பேச்சைக் கேட்கவேண்டும் என்று விரும்பிப் பல ஊர்களிலிருந்து பெருமக்கள் பலர் சட்டமன்றப் பார்வையாளராக வந்து இருந்தனர். அவர்கள் அனைவரும் மங்கையின் எளிய தூய உடைகளையும் அன்பு தவழும் முகத்தையும் அமைதியான இனிய பேச்சையும் கண்டும் கேட்டும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்; தனக்கென வாழாத அம்மாதரசியின் விரிந்த சிந்தையையும் பரந்த நோக்கத்தையும் எண்ணி எண்ணி வியந்தனர். அமைச்சர் மங்கையர்க்கரசியின் புதிய திட்டம் அவளது சட்டமன்றப் பேச்சோடும் படத்தோடும் எல்லாச் செய்தித் தாள்களிலும் வெளிவந்தன. எல்லாக் கட்சிச் செய்தித் தாள்களும் அவளது திட்டத்தைப் பலபடப் பாராட்டின; “நாட்டுக்கு ஒரு நங்கை”, “மாதருள் மாணிக்கம்”, “தன்னலமற்ற தூயவள்” என்று அவளுக்குப் பட்டங்கொடுத்து மகிழ்ந்தன. ஒவ்வோர் ஊரிலும் பொதுமக்களுள் நாட்டு நலத்திலே கருத்துடையவர்- கற்றறிந்த பெரியோர் எனப் பலதிறப்பட்டவர் பொதுக்கூட்டங்களைக் கூட்டினர்; மங்கையின் திட்டத்தை விளக்கிப் பேசினர்; பொதுமக்களின் ஆதரவைத் தேடினர்; பண்ணையார்களின் ஒத்துழைப்பையும் வேண்டினர். நாடெங்கும் ‘பண்ணையார்- பண்ணையாள்’ திட்டம் பற்றியே பேச்சு நடந்தது. காந்தியடிகளின் பெயர் அவரது தன்னலமற்ற தொண்டினால் எவ்வாறு மூலைமுடுக்குகளில் எல்லாம் மக்களால் உச்சரிக்கப்பட்டதோ, அவ்வாறே மங்கையர்க் கரசியின் பெயரும் இத்திட்டத்தால் தமிழகம் முழுதும் பரவியது. 35. ‘மங்கையர்க்குத் தனி அரசி’ மங்கையர்க்கரசி அமைச்சர் பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் கழிந்தன. கழிந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் அவள் தமிழகப் பேரூர்களையும் சிற்றூர்களையும் பார்வை யிட்டாள்; ஆங்காங்கு இருந்த பெருநிலக்கிழார்களைச் சந்தித்துப் பேசினாள். நிலத் தொடர்பான அரசாங்க அலுவலர்களை அங்கங்கே சந்தித்துத் தன் திட்டத்தை மக்களிடமும் பண்ணையார்களிடமும் எடுத்து விளக்கும்படி வேண்டிக்கொண்டாள். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலக்கிழார் கூட்டம் கூட்டப்பட்டது. மங்கை ஒவ்வொரு கூட்டத்திலும் தன் திட்டத்தை எடுத்து விளக்கினாள். பாண்டியனும் நக்கீரனும் அவள் சார்பில் பல கூட்டங்களில் பேசினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சுயநலம் ஒன்றிலேயே ஊறி ஊறி வளர்ந்து வந்த நிலக்கிழார்கள் எளிதில் இசைவரா? அவருள் ஓரளவு நடுவுநிலை நோக்கும் பரந்த மனப்பான்மையும் கொண்டவர் சிலரே. அவர்கள் மனமுவந்து அவளது திட்டத்தை ஏற்றுக் கொண்டனர்; சட்டம் வருவதற்கு முன்னரே அத்திட்டத்தைச் செயற்படுத்தவும் முயன்றனர். இவ்வாறு ஒவ்வோர் மாவட்டத்திலும் நூற்றுக்கு இருபத்தைந்து நிலக்கிழார் வீதம் மங்கையின் திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கினர். எஞ்சிய எழுபத்தைந்து பேரும் பண்ணையாட்களை ஓரளவு அன்பாக நடத்தத் தொடங்கினர்; சிறிதளவு கூலியும் கூட்டிக்கொடுத்தனர். அவர்கள் மனம் இந்த அளவுக்குத்தான் இடம் கொடுத்தது. ஆயினும், அமைச்சர் மங்கையர்க்கரசி மனம் தளரவில்லை. அவள் முகமலர்ச்சியோடு அப் பண்ணையார்களை அடிக்கடி பார்த்து, நல்ல முறையில் அவர்தம் உள்ளங்களை மாற்ற முயன்றாள். முதல் அமைச்சர் உள்ளிட்ட பிற அமைச்சர்களும் எதிர்க்கட்சியினரும் தத்தம் பகுதியில் இத் திட்டத்திற்கு ஆதரவு தேடினர். இவ்வாறு அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினரும் எடுத்துக்கொண்ட இடைவிடா முயற்சியால் நூற்றுக்கு முப்பதுபேர் ஓராண்டிற்குள் மங்கையின் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். இங்ஙனம் படிப்படியாக மங்கையின் திட்டம் நாட்டில் செயற் படுத்தப்பட்டது. நான்காம் ஆண்டில் மங்கை மின்னல் வேகத்தில் தமிழகம் முழுதும் சுற்றினாள். முத்தப்பர், அழகாபுரி அடிகள், மணி வண்ணன், நக்கீரன், பாண்டியன், கண்ணன் முதலிய ஆடவரும், செந்தாமரை, தேன்மொழி, தாமரைக் கண்ணி முதலிய பெண்மணிகளும் பல ஊர்களுக்கும் சென்று மங்கையின் திட்டத்திற்கு ஆதரவு தேடினர். அவர்கள் சென்ற இடந்தோறும் பொதுமக்கள் ஆதரவு மிகுதியாகக் கிடைத்தது. “இத் திட்டத்திற்கு ஆதரவு தரவில்லையாயின், பண்ணையில் வேலை செய்யமாட்டோம்” என்று பல ஊர்களில் பண்ணையாட்கள் கிளர்ச்சி செய்யலாயினர். மங்கை அவ்விடங்களுக்கு விரைந்தாள்; “பண்ணைச் சகோதரர்களே, நீங்கள் இதுவரையில் பண்ணையில் வேலை செய்து வந்தததைப்போலவே இனியும் வேலை செய்து வரவேண்டும். நீங்கள் வேலை செய்ய மறுத்தால், நாட்டு விளைச்சல் குறையும். அதனால் பண்ணையார் துன்பப்படமாட்டார்; உணவு கிடைக்காமல் பொது மக்கள்தாம் துன்பப்படுவர்; நீங்களும் துன்பப்பட நேரிடும். உங்கள் கடமையை நீங்கள் செய்து கொண்டு இருங்கள். இத்திட்டத்திற்கு இணங்கும்படி பண்ணையாரை வேண்டிக்கொள்ளுவது எங்கள் கடமை. என் சொல்லை மீறி நீங்கள் வேலை நிறுத்தம் செய்தால், நான் அமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவேன். நான் உங்களுக்காகவே இப்பதவியில் இருக்கிறேன் என்பதை மறந்துவிடாதீர்கள்.” பண்ணையாட்கள் அவளது அறிவுரையை ஏற்றுக் கொண்டனர்; வழக்கம்போல் பண்ணை வேலைகளைச் செய்யலாயினர். கிளர்ச்சி செய்து வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கிய பண்ணையாட்கள் மங்கையர்க்கரசியின் அறிவுரையைக் கேட்டுப் பெட்டிப்பாம்புகள் போல் அடங்கி ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியதைக் கண்ட பண்ணையார் சிலர் மனம் மகிழ்ந்தனர்; நல்லறிவு பெற்றனர்; புதிய திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். இங்ஙனம் மங்கையின் இடைவிடா உழைப்பால் அவள் பதவி ஏற்ற நான்காம் ஆண்டின் இறுதிக்குள் நூற்றுக்கு எழுபத்தைந்து பண்ணையார் புதிய திட்டத்தைச் செயல் படுத்தலாயினர். எஞ்சிய இருபத்தைந்து பேர் விடாக்கண்டராக இருந்தனர். ஆயினும், கருமத்திலேயே கண்ணாயிருந்த மங்கையர்க்கரசி வாளா இருக்கவில்லை; முத்தப்பர், அடிகள், மணிவண்ணன், நக்கீரன் ஆகிய நால்வரையும் அப்பண்ணை யார்களின் மனப்போக்கை மாற்ற அனுப்பினாள். அரசாங்க நிலவரி அதிகாரிகளுள் பெரும்பாலோர் நிலக்கிழார் அல்லர். எனவே, அவர் அனைவரும் மங்கையின் திட்டத்தை மனமார ஆதரித்தனர்; தங்கள் தங்கள் வட்டங்களிலும் மாவட்டங் களிலும் இருந்த பண்ணையார் களுடன் பேசி, அவர்தம் உள்ளங் களை மாற்ற முயன்றனர்; ஏழைகளின் பாராட்டுதலுக்கு உரிய வராகும்படி அறிவுருத்தினர். இத்தகைய பலமான முயற்சியினால் மேலும் சிலர் அத்திட்டத்தைச் செயற்படுத்த முனைந்தனர். நாடு முழுவதிலும் கணக்கிட்டுப் பார்த்ததில், நூற்றுக்குத் தொண்ணூறு நிலக்கிழார் வீதம் புதிய திட்டத்தைச் செயற்படுத்தத் தொடங்கினர் என்ற உண்மை தெரிந்தது. இதற்குள் மங்கை பதவியேற்று நான்கு ஆண்டுகளும் ஒன்பது மாதங்களும் முடிந்துவிட்டன. நூற்றுக்குப் பத்துப்பேரே நாடு வெறுக்கும் பண்பற்றவராக இருந்தனர். அப்பத்துப்பேரையும் இசைவித்த பிறகே திட்டம் பற்றிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று மங்கை எண்ணினாள். “அலை ஓய்ந்த பிறகு கடலில் நீராடவேண்டும்’ என்று நினைத்தால்- அலை ஓயப்போவதும் இல்லை; நாம் நீராடப்போவதும் இல்லை. எஞ்சிய பத்துப்பேரும் ஒப்புக் கொண்ட பிறகே சட்டம் செய்யவேண்டும் என்று நினைத்தால் அவர்கள் இசைய மேலும் பல வருடங்களாகலாம். இன்னும் மூன்று மாதங்களில் புதிய தேர்தல் வருகின்றது. ஆதலால், அதற்குள் இதனைச் சட்டமாக்குவது நல்லது. இப்புதிய திட்டம் சட்டமாக்கப்படின், அடுத்த முறையும் நாமே அரசாங்கத்தை இயக்க நேரும். அப்பொழுது மேலும் பல நல்ல திட்டங்களை உருவாக்கலாம்” என்று முதலமைச்சர் மொழிந்தார். மங்கை அவரது யோசனையை ஏற்றுக்கொண்டாள்; எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்து அவர் யோசனையைக் கேட்டாள். முதலமைச்சர் கூறியதையே அவரும் கூறினார். புதிய திட்டம் சட்டசபையில் படிக்கப்பட்டுச் சட்டமாக்கப்படும் என்ற செய்தி அரசாங்க அறிக்கையிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். சட்டசபையில் புதிய திட்டம் மங்கையர்க்கரசியால் படித்து விளக்கப்பட்டது. பல கட்சி உறுப்பினரும் பல ஐயங்களைக் கேட்டு தெளிந்தனர். பின்னர் எல்லா உறுப்பினர் ஒப்புதல் மீது அத்திட்டம் சட்டமாக்கப்பட்டது. முதல் அமைச்சரும் எதிர்கட்சித் தலைவரும் அமைச்சர் மங்கையர்க் கரசியையும் அவள் கொண்டுவந்த திட்டத்தையும் மிகவும் பாராட்டிப் பேசினர். “அமைச்சர் பெருமக்களே, எதிர்கட்சித் தலைவரே, மன்ற உறுப்பினர்களே, நான் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தேன். ஆனால் அதற்குச் சட்டமன்றத்திலும் வெளி உலகிலும் முழு ஆதரவையும் கொடுத்த பெருமக்கள் நீங்களே. உங்கள் ஒத்துழைப்பு இல்லை யாயினும் நிலக்கிழார்களின் ஒத்துழைப்பு இல்லையாயினும் இச் சட்டம் நிறைவேறாது. ஆகவே, பண்ணையாள்களின் நலத்தை விரும்பும் இத் திட்டத்தைச் சட்டமாக்கிய பெருமையும் நடை முறையில் கொணர்ந்த பெருமையும் நிலக்கிழார்களையும் உங்களையுமே சாரும். உங்கள் அனைவருக்கும் .இறைவன் திருவருள் புரிவானாக! என் மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்” என்று கூறிக் கைக்கூப்பி வணங்கினாள். அவள் பேச்சு முடிந்ததும் சட்ட மன்ற உறுப்பினரும் பார்வையாளரும் நெடுநேரம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மங்கையர்க்கரசி எழுந்து மீண்டும் கைகூப்பி வணங்கினாள். அப்பொழுது ‘டூமீல்’ என்று துப்பாக்கி வெடியோசை கேட்டது. துப்பாகியினின்றும் வெளிப்பட்ட குண்டு மங்கையர்க்கரசியின் மார்பைத் துளைத்தது. அவள் கூப்பிய கைகளுடன் நாற்காலியின் மீது சாய்ந்தாள். சட்டமன்றம் பரபரப்படைந்தது. சட்ட மன்றக் கதவுகள் உடனே தாளிடப்பட்டன. ஒவ்வொரு வாயிலிலும் போலீசார் காவல் வைக்கப்பட்டனர். பார்வையாளருள் ஒருவனாக இருந்து சுட்டவன் பிடிபட்டான். போலீசார் உடனே அவனைத் தனிச்சிறையில் அடைத்து வைத்தனர். அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினரும் அடைந்த துயரத்திற்கு அளவில்லை. மங்கையின் உடல் அவள் வளமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு எல்லோரும் கூடிவிட்டனர். நாட்டுக்கு நலம் விளைத்த நங்கை ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டாள். என்ற செய்தி காட்டுத்தீப்போல் நகரம் முழுதும் பரவியது. வெளியூர்களுக்குத் தந்திகள் பறந்தன. ‘அவள் உடலை மறுநாள் அடக்கம் செய்யுங்கள். நாங்கள் வந்துவிடுவோம்’ என்று பல தந்திகள் முதல் அமைச்சருக்கு வந்தன. மங்கையின் கழுத்தில் மாலை இடம்பெற்றது. அவளது ஆவியற்ற உடல் வளமனையின் பெரிய கூடத்தில், வருபவர் எளிதில் பார்க்கும்படி வைக்கப்பட்டிருந்தது. இலட்சக்கணக் கான சென்னை நகரமக்கள் வந்து பார்த்து, அவள் திருவடிகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு சென்றனர். மறுநாட் காலை அவ்வளமனையின் பரந்த வெளி யிடத்தில் மேடை இடம்பெற்றது. அம்மேடையில் அவளது உடல் கிடத்தப் பெற்றது. வெளியூர்களிலிருந்து வந்த பெருமக்கள் ஒவ்வொருவராகச் சென்று அவளுக்குத் தங்கள் இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. முதல் அமைச்சர் வணங்காமுடி கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அவர் எழுந்து நின்றார்; கண்ணீர் விட்டுக் கதறினார். அவரால் பேசவே முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அழுதுகொண்டே அவளது பெருந்தொண்டை நன்கு விளக்கியும் பாராட்டியும் பேசினார். பின்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம்- அவள் தொண்டு களையும் பண்புகளையும் பாராட்டிப் பேசினர். அவளது உடல் திருப்போரூர் அறநிலையத்தில் அடக்கம் செய்யப்படும் என்பது அறிவிக்கப்பட்டது. அன்று மாலை திருப்போரூரில் எள் இட இடமில்லை. பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட்டனர். வழிபாட்டு மண்டபத்திற்கு எதிரில் இருந்த சிறிய பூங்காவின் நடுவில் மங்கையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவ்வமயம், ஈன்ற தாயை இழந்த குழந்தைகள் போல அமைச்சர் முதல் ஆண்டி ஈறாக இருந்த அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறினர். அப்பொழுது முத்தப்பர் எல்லோரையும் கைகூப்பி வணங்கினார்; “பெருமக்களே, என்னைப் பொது மக்கள் நலத்திற்காக உழைக்கும்படி தூண்டினவள் மங்கையர்க்கரசிதான். உலகத்தார் பார்வையில் அவள் எனக்கு மகளே தவிர, உண்மையில் என்னையும் ஏழைகளையும் வாழ்விக்க வந்த தெய்வம் என்றே நான் அவளை மதிக்கின்றேன். அவள் கொல்லப்பட்டது பற்றி நான் வருந்தவில்லை. அவள் விரும்பிய திட்டத்தை நிறைவேற்றிய பிறகு கொல்லப்பட்டாள் என்பது எனக்கு ஆறுதலைத் தருகின்றது. அமெரிக்காவில் ஆப்ரகாம் லிங்கன் அடிமை நீக்கச் சட்டம் நிறைவேற்றிய பிறகுதான் ஒரு நாடக மன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் மங்கையர்க்கரசியோ, சட்டம் நிறைவேறியவுடன்- பெருமக்கள் பாராட்டுதலுக்கிடையே- சட்ட மன்றத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டாள். அவளைச் சுட்டுக் கொன்றவர், அவளது திட்டத்தை இதுகாறும் நிறைவேற்ற மறுத்த ஒரு பண்ணையார் என்று போலீஸ் கூறுகிறது. அவள் தன் திட்டத்திற்காகத் தன் உயிரைப் பலி கொடுத்தாள். இனியாவது எஞ்சிய பண்ணையார்கள் சட்டமான திட்டத்தைச் செயற்படுத்தும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். மங்கையர்க்கரசியின் உயர்ந்த கருத்துக்கள் நாட்டில் பரவவேண்டும்- சமுதாயத்திற்கு நலம் விளைவிக்க வேண்டும்- நாட்டில் வறுமை நீங்க வேண்டும் என்பதுவே என் ஆவல். நாம் அனைவரும் இத்துறையில் முயன்று இடைவிடாது பாடுபடுதல் ஒன்றே, அவளது ஆன்மாவுக்கு அமைதியைத் தரும்” என்று அமைதியாகப் பேசினார். முதல் அமைச்சர் வணங்காமுடி, “மங்கையர்க்கரசி வாழ்க! அவரது அறச்செயல் வாழ்க!” என்று கூறினார். எல்லோரும் அவர் சொன்னபடியே உரத்துக் கூறி வாழ்த்தினர். அழகாபுரி அடிகள், “பெரியோர்களே, ஏறத்தாழ ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மதுரையில் பாண்டியன் மனைவியாக ஒரு மங்கையர்க்கரசி தோன்றினாள். அவள் முயற்சியால் பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தது. நமது மங்கையர்க்கரசியால் பிச்சைக்காரர் குடிமக்களாக மாறினர்; பண்ணையாட்கள் வாழ்க்கையில் நலம் பெற்றனர்; அநாதைப் பிள்ளைகள் குடிமக்களாயினர்; அநாதைப் பெண்களும் கைம்பெண்களும் மானத்தோடு பிழைக்கும் வழி கற்றுக் கொண்டனர். அந்த மங்கையர்க்கரசியைப் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பெருமான், `மங்கையர்க்குத் தனியரசி- எங்கள் தெய்வம்’ என்று வாயார வாழ்த்தினார். செயற்கரிய செய்த நமது பெருமாட்டியையும் நாம் `மங்கையர்க்குத் தனியரசி- –எங்கள் தெய்வம்’ என்று வாயார வாழ்த்துவோமாக! அப்பெண்ணரசி விட்டுச் சென்ற அறப்பணிகளை நாம் முழு மனத்துடன் செய்து வெற்றி காண்போமாக!” என்று பேசிக் கைகுவித்து வணங்கினார். உடனே கூட்டத்தினர், “மங்கையர்க்குத் தனியரசி வாழ்க”, “எங்கள் தெய்வம் வாழ்க!” என்று வாழ்த்தொலியை எழுப்பினர்.  மூன்று மாதங்கள் கடந்தன. சட்டமன்றத்தில் உள்ள உயர்ந்த மேடையில் மங்கையர்க்கரசியின் உருவச்சிலை இடம் பெற்றது. அதுபோன்ற அழகிய உருவச்சிலை அவளது உடலைப் புதைத்த இடத்திலும் நிறுத்தப்பெற்றது: வழிபாட்டு மண்டபத்திலும் ஒன்று இடம் பெற்றது; பெரும்பாலான பண்ணையார் மாளிகைகளிலும் அவள் உருவப்படங்கள் இடம்பெற்றன. இவை அனைத்திற்கும் மேலாக, ஏழைமக்கள் உள்ளங்களில் அவள் நினைவு இடம்பெற்றது. அடுத்த தேர்தலில் மணிவண்ணன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டான். வணங்காமுடி மீண்டும் முதல் அமைச்சர் ஆனார். மங்கை தாங்கிய அமைச்சர் பதவி மணிவண்ணனுக்கு வழங்கப்பெற்றது.  மங்கை சுட்டுக்கொல்லப்பட்டது கொடியவர் மனத்தையும் குலுங்கச் செய்தது. அவளைச் சுட்டுக் கொன்ற பண்ணையார் ஒரு குடிகாரன்- கூத்திக்கள்ளன்- கொடியவன் என்று ஊர் மக்களால் வெறுக்கப்பட்டவன்; புதிய திட்டம் செயற்படுமாயின் தான் அதுகாறும் நுகர்ந்து வந்த சுகபோகங்கள் கெட்டுவிடுமே என்ற கவலையால் அவளைச் சுட்டுக்கொல்லத் துணிந்தான். சட்.டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே சட்டமன்றத்தில் அவளைக் கொல்ல நினைந்து அவன் பார்வையார் இடத்தில் அமர்ந்திருந்தான். நாட்டின் நல்லகாலம் அவன் சுடுவதற்கு முன் சட்டம் நிறைவேறிவிட்டது. அவன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அவனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதுவரையில் மங்கையின் திட்டத்தை ஏற்காதிருந்த பிறர் அவள் இறப்புக்குப் பின் மனமாற்றம் பெற்றனர்; தாங்கள் அத்திட்டத்தை ஏற்றுக்கொண்டதாக முதல் அமைச்சருக்கு அறிவித்தனர்.  மணிவண்ணன் அமைச்சனாகிப் பேச எழுந்த முதல் சட்ட மன்றக் கூட்டத்திலேயே இதனை அறிவித்தான்: “பெரியோர்களே, என் ஆருயிர் மனைவி மங்கையர்க்கரசியின் திட்டம் சட்டமானது மட்டுமன்று, இன்று எல்லோராலும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ளுகிறேன். இதே திட்டத்தைப் பின்பற்றி இனி முதலாளி- தொழிலாளியின் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். அத்திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரோடு கலந்து உருவாக்கி ஆறு மாதங்களுள் உங்கள் முன்பு வைப்பேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை” என்று கூறிக் கைக்குவித்து வணங்கினான். அவனது புதிய திட்டத்தைப் பாராட்டுவதற்கு அறிகுறியாக உறுப்பினர் அனைவரும் சட்டமன்றமே அதிரும்படி கைதட்டி ஆரவாரித்தனர். மனிதப் பண்பு வளர்க!