ஹர்ஷவர்த்தனன் முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : ஹர்ஷவர்த்தனன் ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+72 = 88 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 55/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை – 17/ 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப் பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந் துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவழகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர் களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) நூன்முகம் ‘ஹர்ஷ வர்த்தனன்’ என்னும் இச் சிறு நூல், ‘பாணன்’ எழுதிய ஹர்ஷ சரித்திரைத்தையும், வி. ஏ. ஸ்மித் (V. A. Smith) ரா. சி. டட் (R. C. Dutt) கே. ம. பானிக்கர் (K. M. Panikkar) முதலிய சரித்திர ஆசிரியர்களின் ஆய்வுரைகளையும் துணையாகக் கொண்டு ஆராய்ந்து எழுதப்பட்டதாகும். இது, இடங்களுக்கு ஏற்ப, தமிழ் இலக்கிய அடிகளை ஆங்காங்கே கொண்டுள்ளது. இதில், ஹர்ஷனுடைய நற்குண நற்செயல்களும், சகோதர சகோதரி யன்பும், புத்தமத விவரமும், ஹர்ஷனின் தொண்டும், அரசியலும் நன்கு விளக்கப்பட்டுள்ளன. இடையிடைய உயிர்க்கு உறுதியைப்பயக்கும் நீதிக் கட்டுரைகளை இதனிற் காணலாம். மாணவ வுலகம் இதனைப் படிப்பதால் பண்டைக்கால அரசரது வரலாற்றையும் குணாதிசயங்களையும் அறிவதோடு, ஆங்காங்கு மருவிக்கிடக்கும் படிப்பினைகளையும் கற்றுப் பயன் பெறுவர் என்பது திண்ணம். மா. இராஜமாணிக்கம் பொருளடக்கம் 1. பிரபாகர வர்த்தனன் 1 2. மக்கட்பேறு 3 3. இராஜேஸ்வரி திருமணம் 8 4. யசோவதி தீக்குளித்தல் 14 5. எதிர்பாரா விபத்து 21 6. இரு சகோதரர் 28 7, கெட்ட குடியே கெடும். 35 8. ஹர்ஷன் துயரமும் சபதமும் 39 9. வதைப்பிய மான் 43 10. தங்கையைத் தேடப் புறப்படுதல் 47 11. சகோகரி அன்பு 51 12. போர்ச் செய்திகள். 56 13. ஹர்ஷனும் புத்தமதமும் 60 14. அரசியலும் குணாதிசயங்களும் 67 ஹர்ஷவர்த்தனன் 1. பிரபாகர வர்த்தனன் இந்தியா மிகப் பழையகாலந் தொட்டே நாகரிகத்திற் சிறந்ததென்பது யாவரும் அறிந்த உண்மையாகும். சிறப்பு வாய்ந்த சிவாலயங்களும், விஷ்ணு வாலயங்களும், மதப்பள்ளிகளும், அறவோர் ஆச்சிரமங்களும் மலிந்துள்ள நாடு இந்தியா. இந்நாட்டின் வடக்கெல்லை இமயமலை. அம் மலையடிவாரத்திலும் அதன் தெற்கே கங்காநதிதீரம் வரையிலும் அழகிலும் பழமையிலும் சிறந்த பட்டணங்கள் பல உள. அவை பெரும்பாலும் சரித்திர சம்பந்தமான பட்டணங்களாகவே இருக்கின்றன. அவற்றுள் தனேசுவரம் என்னும் பதியும் ஒன்றாம். அது மிகப் பழமையான தென்பது, அதனையடுத்துள்ள குருக்ஷேத்திரம் (பானிபட்) என்னும் வெளியைப் பற்றிய வரலாற்றால் அறியலாகும். குருக்ஷேத்திரபூமியை இன்றைக்கும் இந்துக்கள் சென்று காண்கிறார்கள். ஏனெனில், நம் நாட்டில் சீரும் சிறப்பும்பெற்று ஆண்ட பல முடியுடை வேந்தர்கள் தங்களுக்குள் மாறுபட்டுப் போர் நடாத்திய இடம் அதுவே யாகும். அதன் அருகில் பல முனிவர்களுடைய ஆச்சிரமங்கள் இருந்தன. சந்திரகுல மன்னர்களான துரியோதனாதியரும் பாண்டவரும் பொருதவிடமும் அதுவே. பாண்டவர் மாற்றாரைவென்று வெற்றிமாலை சூடியதும் அவ்விடத்தேதான். தேவாதி தேவனாகிய கண்ணன், அருச்சுனனுக்கு தேர்ச்சாரத்தியம் செய்து, அடியார்க்கு எளியனாந் தன்மையை விளக்கிக்காட்டிய விடமும் அதுவேயாம். அங்குத் தென்னாட்டு முடியிடை மூவேந்தரில் ஒருவனான சேரமான் உதியஞ் சேரலாதன் தனது வன்மை தோன்ற, பாண்டவர்க்கும் துரியோதனாதியர்க்கும் அவர்தம் சேனைகட்கும் போர்முடியும் வரையில் சோறு கொடுத்துச் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்ற பெயர் பெற்றான். ‘‘அலங்குகளைப் புரவி யைவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்மை யீரைம் பதின்மரும் பொருதுகளைத் தொழியப் பெருஞ்சோற்றுமிகுபதம் வரையாது கொடுத்தோய்? -புறநானூறு இவ்வாறு தேச சரித்திரத்தில் பெரிதும் சம்பந்தமுடைய மகத்தான அப் பூமியை யருகிலேகொண்ட தனேசுவரம் என்ற நகரைத் தலை நகராக்கொண்டு, சட்லெஜ், யமுனா என்ற இரு நதிகட்கும் இடைப்பட்ட நாட்டைப் பிரபாகரவர்த்தனன் என்னும் அரசன் கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆண்டுவந்தான். அம் மன்னவன் சிறந்த அழுகையும், தைரியம், பொறுமை, பிழைபொறுத்தல், நீதிதவறாமை முதலிய உத்தம குணங்களையும் பெற்றிருந்தான். அவன் முன்னோர்கள் தனேசுவரத்தைத் சுற்றியுள்ள நாடுகளை யாண்டு வந்த சிற்றரசர்கள். அவர்கள் சூரியனை வழிபட்டு வந்தனர். அஞ்சா நெஞ்சம்படைத்த பிரபாகரவர்த்தனன் பெரும் படையோடு சென்று, நாட்டைத் துன்புறுத்தி வந்த ஹூணர் கூட்டத்தாரை இமயமலை வரையில் விரட்டியடித்தான். அதனுடன் நில்லாது அவன் மாளவம், கூர்ஜ்ஜரம் முதலிய நாடுகளை வென்று, அந்நாடுகளை யாண்டுவந்த மன்னர்களைத் தனக்குட்படுத்திக் கொண்டான். இவ்வாறு, படைவலியாலும், தோள்வலியாலும் வெற்றிமாலை சூடிய மன்னன் மஹா ராஜாதி ராஜ பிரபாகரவர்த்தனன் என்ற பட்டத்தை வகித்து, தனது அகன்ற நாட்டை முறைபிறழாது ஆண்டு வந்தான். 2. மக்கட்பேறு பண்ணிலாப் பாடல் போலும் பரிவிலா நட்புப் போலும் உண்ணிலா நெய்இ லாமல் உண்டிடும் அடிசில் போலும் பெண்ணிலா இல்லம் போலும் பெயரிலா வாழ்க்கை போலும் கண்ணிலா வதனம் போலும் கான்முளை யில்லா இல்லம். -மாயூரத்தல புராணம் குடும்பம் என்னும் நாடகசாலைக்குக் குழந்தையே நடிக்கும் பாத்திரம். எத்துணைத் துன்பங்கள் நேரினும் குழந்தையை கண்ட மாத்திரத்தில் அவை கதிரவனைக் கண்ட காரிருள்போல அகலும். அக்குழந்தை, துர்க்குணங்களால் பந்திக்கப்படாமல் அன்று மலர்ந்த செந்தாமரை மலர்போன்ற முகத்தையும், புன்முறுவலையும், களங்கமற்ற மனத்தையும் கொண்டுள்ளது; தவழ்நடை நடந்தும் மழலைச் சொற்களைப் பேசியும், மனம் கரையச் சிரித்துப் பெற்றோர்க்கு மகிழ்ச்சியை யுண்டாக்கு கின்றது. ஆதலால், இல்வாழ் வானுக்குச் சிறந்த செல்லம் புத்திரப் பேறேயாகும். இச் செல்வத்தைப் பெறாது அவன் கல்விச் செல்வம் பொருட்செல்வம் முதலானவற்றைப் பெற்றிருப் பினும் பயன் இல்லை. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவந்த மக்கட்பே றல்ல பிற. -திருக்குறள் புத்திரப்பேற்றை யடைந்தவன் இம்மை மறுமை இரண்டிலும் இன்பந்துய்க்கின்றான். அரசன் முதல் ஆண்டி யீறாகவுள்ள அனைவரும் மக்களை விரும்புவர். புத்திரப்பேற்றால் அடையும் இன்பம் யாவர்க்கும் ஒரே தன்மைத்து. ஏழைக்கு ஓர் இன்பம் என்றும் செல்வானுக்கு ஒருவித இன்பம் என்றும் வேறுபாடு கிடையாது. செல்வவான், இடம் பொருள் ஏவல் முதலியவற்றைப் பெற்றிருப்பினும் இந்திரபோகத்தை யனுபவிப்பினும், புத்திரப் பேறு இன்மையால், அவன் மக்களில் ஒருவனாகக் கொள்ளப்பட்டான். அவன் வாணாட்கள் வீணாட்களேயாம். படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வராயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைதாம்வாழும் நாளே. -புறநானூறூ மக்களைப்பெற்று அவர்களால் சுகமனுபவிப்பவரே சிறந்தோர். பெற்றோர் மக்களது உடம்மைத் தீண்டுதலால் தம்முடல் புளகாங்கித மெய்தப் பெறுகின்றனர்; அவர்களது குதலைச் சொற்களைக் கேட்டலால் செவிக்கு இன்பத்தைத் தந்தவராவார்கள். மக்களின் இனிய குரலோசையைக் கேளாதார் குழல் இனிது. யாழ் இனிது என்பர். எல்லா இசைக்கருவிகளும் ஒன்று பயக்கும் இன்பத்தைவிட, குழந்தையது பதப்படாத குரலோசை பெரிதும் இன்பத்தைத் தரும். மன்னன் பிரபாகரவர்த்தனன் நெடுங்காலம் புத்ரப் பேறின்றி வருத்தினான். தனக்குப்பின்னர் அரசாட்சியை யேற்றுகொள்ளக் கூடிய மைந்தன் இல்லையே என்ற ஏக்கம் அரசனுக்குத் தூக்கம் இன்றி வாட்டத் தொடங்கியது. வேந்தன் பகலிலும் இரவிலும் நனவிலும் கனவிலும் இறைவனைத் தொழுது வந்தான்; பல தான தருமங்களைச் செய்தான். ஒருநாள் மன்னன், மனைவியான யசோவதியை நோக்கி, நங்காய்! புத்திரப் பேற்றை யடையாதார் முத்தியடையார் என்பது வேதப்பிரமாணம். பிள்ளைகள் இல்லாது வாழும் வாழ்வு பயனற்றதே. ‘கல்லா மழலைக் கனியூறல் கலந்து கொஞ்சும் சொல்லா லுருக்கி யழுதோடித் தொடர்ந்து பற்றி மல்லார் புயத்தில் விளையாடு மகிழ்ச்சி மைந்தர் இல்லா தவர்க்கு மனைவாழ்வி னினிமை என்னாம்? -வில்லிபாரதம் பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற் றென்னுடைய ரேனு முடையரோ? இன்னடிசில் புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யலாய் மக்களையீங் கில்லாதவர். -நளவெண்பா இதற்கென் செய்வது? என்று கூறி வருந்தினன். கணவன் வருந்துவதைக் கண்ட காரிகை, அரச! கவல்வதாற் பயன் ஏன்? எம்பெருமான் நமது கவலையை மாற்றுவர் என்று கூறி, அரசனது வருத்தத்தைத் தணித்தனள். நாட்கள் பல சென்றன. இறைவன் இன்னருளால் யசோவதி கருவுற்றாள். பத்துத்திங்களும் அந்தமாய்க் கழிந்தன. நன்னாளில் பாற்கடலிற் பள்ளி கொண்ட பரந்தாமனைப்போன்று ஆண் குழந்தையொன்று பிறந்தது. அரண்மனைப் பெண்கள் அச்சுபச்செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். மைந்தன் பிறந்த செய்தி கேட்ட அம் மாநகர்வாழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி யடைந்தனர்; எம்மரசன் நீடுழி வாழ்க; அவன் மதலையும் மனைவியும் நோயற்றுவாழ்க என்று மனமார வாழ்த்தினர். அரசன் அடங்கா மகிழ்வெய்தி, அமைச்சரை நோக்கி, நமது நாட்டில் அடைப்பட்டிருக்கும் வேற்றரசரையும் குற்றவாளிகளையும் விடுமின்; இன்று முதல் ஏழாண்டு குடிகள் நமக்கு வரிகொடாதொழிக; சிற்றரசர் திறை கட்டாதொழிக; ஆலயங்களையும் அறப்பள்ளிகளையும் சீர்படுத்துமின்; அந்தணர்க்கும் அறவோர்க்கும் வரிசைகள் பல நல்குமின் என்றான். அமைச்சரும் அவ்வாறே செய்தனர். தனேசுரம் அன்று வெகு அழகோடு விளங்கியது. ஒவ்வொரு மாளிகையிலும் பெண்கள் மங்கள கீதங்களைப் பாடினர். அந் நகரமாந்தர் ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிள்ளை பிறந்தாற்போல எண்ணிப் பெருமகிழ்வு எய்தினர். பெரியோர் குழந்தைக்கு இராஜீய வர்த்தனன் என்று பெயரிட்டார்கள். ஐந்து ஆண்டுகட்குப் பின்னர், யசோவதி ஓர் ஆண்மகவைப் பெற்றாள். அது சமயம் கதிரவன் தண் கதிர் பரப்பி இன்புற்றிருந்தான். அக் குழந்தை உலகம் போற்றும் வண்ணம் பேரரசனாக விளங்கும் என்பதை யாவர்க்கும் அறிவிப்பதுபோல இளங்காற்று இன்பமாய் வீசிக்கொண்டிருந்தது. சோதிட நூல் வல்லார் குழந்தைக்குச் சாதகத்தை கணித்தனர். குழந்தை பிறந்த நேரம் சுப லக்கினத்தோடு கூடியதாயிருந்தது. நல்லோரையில் அரசகுமாரன் பிறந்ததை முன்னிட்டு அரசியும்அரசனும் பெரிதும் மகிழ்ந்தார்கள்; அக் குழந்தைக்கு ஹர்ஷவர்த்தனன் என்று பெயரிட்டார்கள். நகர மாந்தரும் அகமகிழ்ந்தனர். நாற்படையும் ஆரவாரித்தன. குழந்தை பிறந்த களிப்பால் முதியவரும் இளையவரும் தத்தம் மகிழ்ச்சி தோன்ற தெருக்களில் ஆடினர்; பாடினர்; ஓடினர்; உருகினர். சிறார்கள் அரசகுமாரனைத் தங்களோடு சேர்ந்து விளையாடுமாறு பாடல் களைப்பாடி வேண்டினர். அரசன் தனக்குக் குழந்தை பிறந்ததை முன்னிட்டு நகரமாந்தர் அடையும் அளவற்ற ஆனந்தத்தைக் கவனித்துக் களிப்படைந்தான். சில ஆண்டுகட் கப்பால் யசோவதி ஒரு பெண் மகவைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தைக்கு இராஜேவரி என்று நாவல்லோர் நற்பெயர் இட்டனர். நாட்கள் கடந்தன; மாதங்கள் மறைந்தன; ஆண்டுகள் கழிந்தன. இராஜீயவர்த்தனன் கல்வி கற்கத் தொடங்கினான். இளையவனான ஹர்ஷவர்த்தனன் நான்கு வயதிலேயே தன் முன்னோனுடன் சேர்ந்து கல்விகற்றான். சிறுமி இராஜேவரி தக்க ஆசிரியரிடத்துப் பயின்று வந்தாள். இரு சகோதரரும் ஒருவரை விட்டொருவர் எக்காரணத்தைகொண்டும் பிரிவது கிடையாது. இருவர் உள்ளத்தும் சகோதர அன்பு வேரூன்றி வளரத் தலைப்பட்டது. இரு சகோதரரும் தங்கையான இராஜேவரியை நேசித்தா ரெனினும், ஹர்ஷவர்த்தனனுக்கும் இராஜேவரிக்கும் அதிக அன்பு பெருகியது. சிறுமி சகல கருவிகளையும் மீட்டிப் பாடவல்ல ஆற்றல் பெற்றாள்; அக்காலத்து விளங்கிய சகல நூல்களையும் ஐயந்திரிபறக் கற்றாள்; அழகிலும் சிறந்து விளங்கினாள். சகோதரர் இருவரும் அரசர்க்குரிய படைக்கலப் பயிற்சியும், யானை யேற்றம், குதிரையேற்றம், முதலியனவுங்கற்று வீரதீரர்களாய் விளங்கினர். அவர்களது நுண்ணறிவையும் ஆற்றலையுங்கண்டு யாவரும் ஆச்சரியம் அடைந்தனர். நாள்தோறும் ஊக்கத்தோடு சிறுவர் நல்வழியில் முன்னேற்ற மடைந்து வருவதைக் கண்ட தாய் தந்தையர் அடைந்த ஆனந்தத்திற் களவில்லை. மார்பினு மகன்ற கல்வி, வனுப்பினு நிறைந்த சீர்த்தி போர்வரு தெரியன் மாலைப் புயத்தினு முயர்ந்த கொற்றம் சீர்தரு வாய்மை மிக்க கண்ணினுஞ் செங்கை வண்மை பார்வளஞ் சுரக்குஞ் செல்வப் பரப்பினும் பரந்த வன்றே. -வில்லிபாரதம் இவ்வாறு இரு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண்ணும் சகல கலா வல்லவர்களாகி விளங்கினர். 3. இராஜேவரி திருமணம் இராஜேவரி மணப் பருவத்தை யடைந்தாள்; அரசகுமாரியாதலால் உத்தமலட்சணங்களைப் பெற்றிருந்தாள்; உயரமாயும் கம்பீர ரூபத்துடனும் விளங்கினாள். தாமரைமலரை யொத்த கண்களும், கோவைப் பழத்தைப்பழித்த அதரமும், உவா மதியை யொத்த முகமும் காண்போர் மனத்தைக் கவர்ந்தன. வீணை வாசிப்பதில் அவளை வெல்லக்கூடியவர் அக்காலத்தில் ஒருவரும் இருந்ததில்லை என்றே சொல்லலாம். அவள் வடமொழியில் பயிற்சி பெற்றவள். இராஜேவரியின் ஒப்பற்ற அழகினையும் கல்வி யறிவினையும் சங்கதீ ஞானத்தையும் கேள்வியுற்ற பல அரசர் அவளை எவ்வாற்றானும் மணந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினர். அக்காலத்தில், கன்னோசி நாட்டை யாண்டுவந்தவன் அவந்திவர்மன். அவனுக்குத் தவப்புத்திரனாக இருந்தவன் கிருகவர்மன் என்பவன். அவன் அரசர்க்குரிய பயிற்சிகள் அனைத்தையும் கற்றுத்தேறியவன்; சிறந்த அழகுள்ளவன். அவந்திவர்மன் தன் மைந்தனுக்கு இளவரசுபட்டங் கட்டினான். அவனுக்கேற்றதோர் பெண்ணை நாடி மண முடிக்க வேண்டு மென்று அரசன் ஆலோசித்தான்; பல அரச குமாரிகளைப் பார்த்தான்; தன் மகனுக்கேற்ற மங்கைகிடைக்காமல் வருந்தினான்; முடிவில், பிரபாகரவர்த்தனனது தவப்புதல்வியான இராஜேவரியின் அருங்குணங்களைக் கேள்வியுற்றான்; அவளே கிருகவர்மனுக்குத் தகுந்த நங்கையென்று தீர்மானித்தான். அவன், தான் நேரே தனேசுரவத்திற்குச் செல்லாமல், தனது அமைச்சனைப் பெண் பேசுவதற்கனுப்பினான். அமைச்சன் தனேசுவரத்தை யடைந்தான்; மன்னர் மன்னான பிரபாகரவர்த் தனனைக் கண்டான்; அவனடிகளில் தன் முடிபட வணங்கினான். வணங்கி, அரசப்பிரபுவே! எம்மரசர் அவந்திவர்மன் தங்கள் தவப்புதல்வியைத் தம் மைந்தன் கிருகவர்மனுக்கு மணமுடிக்க விரும்பிகின்றார். கிருகவர்மனைப் பற்றித் தாங்கள் கேள்வி யுற்றிருப்பீர்கள். தங்கள் சித்தம் எப்படியோ? என்று வணக்கத்துடன் கூறினான். அமைச்சனது கூற்றைக்கேட்ட அரசர் பெருமான், ஐய ! நும் அரசன்விரும்பிய விதமே செய்யலாம். எனக்குத் தடையொன்று மில்லை. கிருகவர்மனுடைய வீரப்பிரதாபங்களை யான் பலமுறையுங் கேள்விப்பட்டுள்ளேன். அவனுக்கு என் அருந்தவச் செல்வியை மணஞ்செய்துகொடுக்க எனக்கு விருப்பமே. மணத்திற்குரிய உரியநாளைக் குறியும் என்று களிப்புடன் கூறினான். அமைச்சன் மனக்களிப்படைந்து, பிரபாகரவர்த்தனனை வணங்கி, ஒரு நல்ல, நாளைத் தேர்ந்து அந்நாளில் தனேசுவரத்தில் மணம் நடப்பதாக நிச்சயப்படுத்திக்கொண்டு சென்றான். தமது தங்கையை கிருகவர்மனுக்கு மணம் செய்துகொடுக்கும் செய்தியைக்கேட்ட இராஜீய வர்த்தானும் ஹர்ஷவர்த்தனனும் உவகை கடலுள் ஆழ்ந்தனர்; மணத்திற்கு வேண்டிய பொருள் களைச் சேகரித்தனர். அரசனது அரண்மனைச் சுவர்களிலும் நகரமாந்தர் இல்லச் சுவர்களிலும் வெள்ளை யடித்து, நன்னிமிதத்தங்களைக் குறிக்கும் பல அழகிய சித்திரங்கள் தீட்டப்பட்டன. நகரமாந்தர் வீதிகளில் அசுத்தமில்லாது, பரிசுத்த வாசனை கலந்த நீரைத் தெளித்தார்கள். மாளிகைகளில் வாழைகளும் கமுகுகளும் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டன. நகரத்தார் ஈந்து, பனை, இளநீர் முதலிய குலைகளை எழில்பெறக் கட்டினார்கள்; தெருக்களில் தூண்களை நாட்டி, மாவிலை, அசோகிலை முதலிய தழைகளாலாகிய தோரணங் களை வரிசை வரிசையாகக் கட்டினார்கள்; தெருக்கள்தோறும் பச்சைப் பூம்பந்தல்களை அமைத்தார்கள்; பந்தற்கால்கள் தோறும் குலைக்கமுகும், குலைவாழையும், கரும்பும், வஞ்சிக் கொடியும், பூங்கொடியும் ஆகிய இவற்றைக் கட்டினார்கள்; தூண்களில் முத்துமாலைகளை நாற்றினார்கள்; வீதிகளிலும் மன்றங்களிலும் பழமணலை மாற்றிப் புதுமணலைப் பரப்பினார்கள்; துகிற்கொடி வகைகளை மாடங்களிலும் வாயில்களிலும் கட்டினார்கள்; தேவாலயங்களில் செய்ய வேண்டிய விழாக்களைச் செய்தனர். தெருக்கள்தோறும் சந்திகள்தோறும் மங்களவாத்தியங்கள் ஒலித்தன. பந்தல்களிலும் அம்பலங்களிலும் பெரியோர் வேதங்களையோதினர். தனேசுவரநாட்டுமகளிர் ஒவ்வொருவரும் தத்தமக்கு நடக்கும் திருமணம்போல எண்ணித் தங்களை அலங்கரித்துக் கொண்டனர். பல அரசகுமாரிகளிடமிருந்து இராஜேவரிக்குப் பல வெகுமதிகள் வந்தன. பட்டுப் புடவைகளும் கிடைத்தற்கரிய ஆபரணங்களும், அழகிய வேலைப்பா டமைந்த படங்களும், பொம்மைகளும், உயர்ந்த இசைக்கருவிகளும், சிறந்த புத்தகங்களும் அவளுக்குப் பரிசாக வந்தன. இராஜேவரி அவற்றை அகக்களிப்போடு முகக்களிப்பையுங் காட்டிப் பெற்றுக்கொண்டனள். திருமணம் குறிக்கப்பெற்ற நாள் வந்தது. கிருகவர்மன் தனேசுரவத்திற்கு வெளிப்புறத்தே தங்கியிருந்தான். பிரபாகர வர்த்தனன் மணநாளன்று காலையில், மணமகனை நகரிற்குள் வருமாறு கூறியனுப்பினான். மணமகன் பெரிய யானை மீதமர்ந்து, தனது படை வீரர்களோடு நல்லோரையில் நகர்க்குள் நுழைந்தான். உடனே மங்கள வாத்தியங்கள் ஆர்த்தன. நகருள்ளே நுழைந்த மணமகனைக் கண்ட நகரமாந்தர், அவனது ஒப்பற்ற உருவ அமைப்பையும், உடல் அழகையும், படையழகையும் கண்டானந்தித்து, நமது மன்னர் மன்னனது அருந்தவப் புதல்விக்கு ஏற்ற நாயகன் இவன்தான். இவனை மணமகனாகப்பெற இராஜேவரி முற்பிறப்பில் எத்தவத்தைச் செய்தனளோ? ஓப்பற்ற சவுந்தரியவதியான இராஜேவரியை நாயகியாகப் பெற இந் நம்பியும் பெருந்தவம் செய்திருக்க வேண்டும். இருவரும் ஒருவர்க்கொருவர் ஏற்றவறே. மணமகனும் மணமகளும் சுகமாக நீடுழி வாழ்க என்று கூறி வாழ்த்தினர். தனேசுவர நகரின் இயற்கையழகையும் செயற்கைச் சிங்காரத் தினையும் கிருகவர்மன் தன் இரு கண்களாலும் பருகுவான் போல விழித்தகண்கள் இமையாது பார்த்துச் சென்றான்; முடிவில் பிரபாகரவர்த்தனனது அரண்மனை வாயிலையடைந்தான். கிருகவர்மன் யானையினின்றும் கீழிறங்கி, கால்நடையாக நடந்து அரண்மனைக்குள் சென்றான்; சென்று, பிரபாகர வர்த்தனன் அடிகளில் தனது முடிபட வீழ்ந்து வணங்கினன். அரசன், பணிந்த மருமானை இருகரங்களாலும் வாரியெடுத்து மார்புறத் தழுவி, உபசார வார்த்தைகளைக் கூறினான். பின்னர், கிருகவர்மன் தன் மைத்துனரான இராஜீயவர்த்தனனையும் ஹர்ஷவர்த்த னனையும் தழுவிக்கொண்டு மகிழ்ந்தான். அரசன் மருமகனை அழைத்துச் சென்று, தனது ஆசனத்தை யொத்த பேராசன மொன்றில் அமரச்செய்தான். பெரியோர்கள் நல்ல வேளையில் மணமகனை நீராடச் சொன்னார்கள். மணமகன் நீராடும் கட்டத்திற்குச் சென்றான். அப்போது அரண்மனை முரசு அதிர்ந்து முழங்கியது. கிருகவர்மன், பிரபாகரவர்த்தனன் பணியாளர் மூலமாகக் கொடுத்தனுப்பிய உயர்ந்த ஆடைகளையுடுத்திக்கொண்டான்; இரத்தினபரணங்களை அழகுற அணிந்து கொண்டான்; பூமாலைகளைப் புனைந்தான்; கலவைச்சாந்தைத் தன் உடலிற் பூசினான். இவ்வாறு மணமகன் சிங்காரித்துக் கொண்டிருக்கையில், அரசகுமாரிகள் இராஜேவரியை எவ்வாறு அலங்கரித்தனர் என்பதைப் பார்ப்போம். இராஜேவரிக்கு அலங்காரஞ்செய்ய வேண்டாதபடி இயற்கையழகு நிறைந்திருக்க. வந்த மகளிர், தமக்கு இயற்கையான மடமைக்குணத்தினால் அவளுக்குச் செயற்கையாகக் கோலம்புனையக் கருதினார்கள். அவ்வாறு கருதிய மகளிர் மணமகள் பின்னிய மயிர் முடியைச் சிக்குப்படாமல் மெல்ல அவிழ்த்தனர்; அவளது கூந்தற்குப் புழுகெண்ணெய், சந்தனத் தைலம் முதலிய நறுமணத் தைலங்களைத் தடவிப் பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைப் பண்டங்களைப் பூசிப் பனிநீர் கொண்டு நீராட்டினர்; துடைக்கும் பொருட்டுக் கருநிறமுள்ள கூந்தலைச் செந்நிறப் பட்டுத்துண்டுகொண்டு கட்டினார்கள். அவ்வாறு கட்டியது, கரும்பாம்பைச் செம்பாம்பு சினத்தோடு வாயினாற் கவ்வியது போன்று இருந்தது. பின்னர், அவ்வரசகுமாரிகள், மாந்தளிர் இது என்று சொல்லும்படி அழகும் மென்மையும் ஒளியும் பொருந்திய செம் பட்டாடை யொன்றினை மணமகளது இடையில் உடுத்தினார்கள்; துவட்டிய கூந்தலுக்கு அகிற்புகை யூட்டி யுலர்த்தினார்கள். பின்னர் அம் மகளிர் சீதேவி, மஞ்ஞை, வலம்புரி, மகரம் என்னுந் தலையில் அணிய வேண்டிய அணிகளை அணிவித்தனர்; இராஜேவரியின் நெற்றியில் கருநிறச் சாந்துப் பொட்டிட்டனர்; அவளது காதுமுதலிய உறுப்புக்களில் அணிவதற்கு உரிய அணிகலங்களை அணிவித்தனர். இவ்வாறாக, மணமகளை யலங்கரித்த பின்னர், முகூர்த்தவேளையில் அரசகுமாரிகள் இராஜேவரியை மணப்பந்தற்கு அழைத்துவந்தனர். மணமகனும் மணவறையை யடைந்தான். மணமகனும் மணமகளும் மணவறையில் அமர்ந்தனர். நான்மறையாளர்கள் மந்திரங்களை யோதிப் பாசிலை, நாணல் இவற்றைச் சூரியன் முன்வைத்து ஓமாக்கினியை வளர்க்க, கிருகவர்மன் இராஜேவரிக்கு மணமாலை சூட்டி மாங்கல்லியம் தரித்தான்; அவளுடைய செந்தாமரை போன்ற மெல்லிய கைகளைப்பற்றினான். உடம்பு உயிரைத் தொடர்ந்து செல்வதுபோல, மணமகள் நாயகன்பின் சென்று, தீவலம் செய்தாள். பின்னர் மணமகன், செம்மையுடைய தனது திருக்கையால் மணமகளது தாளைப்பற்றி அம்மியை மிதிப்பித்தான். இராஜேவரியின் சகோதரரான இராஜீய வர்த்தனனும் ஹர்ஷவர்த்தனலும் எரிமுகம் பாரித்து, மணமகளை முன்னே நிறுத்தி, கிருகவர்மனுடைய கைகளின்மேல் தம் தங்கையின்கைகளை வைத்துப் பொரிமுகந்து அவ்வக்கினியில் சொரிந்தார்கள். விவாக சமயத்தில் பிரபாகரவர்த்தனன் கிருகவர்மனுக்கு வைரமிழைத்த வாளாயுத மொன்றினையும் பலவகை இரத்தினா பரணங்களையும், பலவகை வரிசைகளையும் பரிசாகக் கொடுத்தான். மேலும் மன்னர் பிரான், தன் தவப்புதல்விக்குப் பலவகைப் பொருள்களையும், பொன் அணிகளையும், பல்வேறு பரிசுகளையும் வரிசையாகக் கொடுத்தான். மணவினையைக் கண்டுகளிக்கவந்த மகளிர் ஆனந்த மேலீட்டால் இழைசரிவதும் ஓர்ந்திலர்; குழல் அவிழ்வதும் குழை விழுவதும் கவனித்தாரில்லை; மணமகளை அன்போடு உபசரித்து முத்தங்களிட்டர்கள். அரசன் பெருஞ் சிறப்போடு நடத்திய மணத்தைக்கண்ட குடிகள் ஆனந்தமெய்தினர். அவர்களில் பாடினர் சிலவன்பர்; பரவினர் சிலவன்பர்; ஆடினர் சிலவன்பர்; ஆநந்தத்தால் அழுதனர் சிலவன்பர்; ஓடினர் சிலவன்பர்; மணத்திற்கு வந்த மக்கள் கணக்கிட்டுச் சொல்ல முடியாதவாறு அதிகரித்திருந்தனர். கூட்டம் அதிகமாயிருந்ததால் ஒருவர்முன் அணிசா தம் ஒருவர்தம் முதுகில் அப்பிக்கொண்டது. மார்பில் தரித்த மணியாரம் ஒருவர் முதுகிற்பட்டு வடுவை யுண்டாக்கியது. குடையொடு குடைதாக்கியது; கொடியொடு கொடி தாக்கியது; படையொடு படைதாக்கியது. இவ்வாறு, சிறப்பாக ஏழுநாட்கள் திருமணம் செவ்வனே நடந்தது. வந்திருந்த சிற்றரசர்கள் பிரபாகர மன்னனிடத்து விடைபெற்றுத் தத்தம் படைகளோடு ஊர்போய்ச்சேர்ந்தனர். மணமகன் மாமனாரது அரண்மனையில் தன் ஆருயிர் நங்கையாம் இராஜேவரியோடு சில காலம் இன்புற்றிருந்தான்; பின்னர், மனைவியை யழைத்துக்கொண்டு தன் நாட்டிற்குச் செல்ல விருப்பங் கொண்டான். அரசனும் அதற்கு உடன்பட்டான். நல்லநாளில், இராஜேவரி தன் காதலனோடு செல்ல ஆயத்தமானாள். அவளைப் பிரிந்திருக்கச் சக்தியற்ற வரான பெற்றோர்களும் சகோதரரும் மனம் வருத்தினார்களென்றாலும், பெண் கணவனிடத்திலிருந்து வாழவேண்டியவளாதலால், மனந்தேறி விடை தந்தனர். இராஜேவரியைத் தன் உயிர்க் குயிராக நேசித்து வந்தவன் ஹர்ஷவர்த்தனன். இராஜேவரியும் தன் இரண்டாவது தமையனைப் பெரிதும் நேசித்து வந்தாள். இருவரும் ஒருவரை விட்டொருவர் பிரிய நேர்ந்ததற்குப் பெரிதும் வருந்தினார்கள். இவ்வாறு, இராஜேவரி யாவரிடத்தும் பிரியாவிடை பெற்றாள். கிருகவர்மனும் யாவரிடத்தும் விடைபெற்றுத் தன் மனையாளுடன் யானை மீதேறினான்; வாரண நிறைசூழ, வாம்பரி நிரைசூழ, தேரணி நிரைசூழ, வீரர்கள் புடைசூழ, தன் உயிரனைய மங்கை நல்லாளுடன் களிப்புற வார்த்தையாடிக்கொண்டு வழியைக் கடந்து, கன்னோசியை யடைந்தான். 4. யசோவதி தீக்குளித்தல் காதலன் இறப்பின், கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயி ரீவர்; ஈயா ராயின், நன்னீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்; நளியெரி புகாஅ ராயின், அன்பொடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர் பத்தினிப் பெண்டிர். -மணிமேகலை இராஜேவரியின் திருமணம் திருவுடன் நடந்தேறிச் சில வருடங்க ளாயின. முன்பு பிரபாகரவர்த்தனன் துரத்தியோட்டிய ஹூணர் வகுப்பார் மீண்டும் அவனது ராச்சியத்தின் எல்லைப் புறமிருந்து துன்புறுத்தலாயினர்; குடிகளைக் கொலைசெய்தும் வீடுகளைத் தீக்கிரையாக்கியும் பிரபுக்களின் பொருள்களைக் கொள்ளையடித்தும் ராச்சியத்தைப் பாழ்ப்படுத்தினர். குடிகளில் சிலர் தப்பியோடி அரசன் முன் நின்று, இடிகின் றனமதி லெரிகின் றனபதி யெழுகின் றனபுகை பொழிலெல்லா மடிகின் றனகுடி கெடுகின் றனமினி வளைகின் றனபடை பகை -கலிங்கத்துப்பரணி என்று முறையிட்டனர். அரசன் அடங்காச் சீற்றங் கொண்டான். அவன் வெந்தறுகண் வெகுளியினால் வெய்துயிர்த்துக் கைபுடைத்து வியர்த்து நோக்கி, இராஜீயவர்த்தன! என்னுடைய தோள்வலியும் என்னுடைய வாள்வலியும் அறியாத பிறர்போல இந்த ஹூணர் வகுப்பார் மீண்டும் நம் நாட்டைத் துன்புறுத்துவதாகத் தெரிகிறது. நன்று! நன்று!! நீ உடனே ஒரு பெரும் படையொடு சென்று அப் பகைவரைத் தொலைத்து வருவாய் என்றான். தந்தை சொல்லி வாய்மூடுமுன் தனயன் இலங்கோடைக் களிற்றின் மேல் ஏறினன். அவ்வளவில் நாற்படையும் அவனைச் சூழ்ந்தன. மைந்தன், இரைவேட்ட பெரும்புலி போல இகல்மேற் சென்றான். இளவலான ஹர்ஷவர்த்தனனும் முன்னோனைப் பின்பற்றித் தன் பரிவாரத்துடன் சென்றான்; இமயவெற்பின் சாரலை யடைந்தான்; களிப்புற வேட்டையாடினான். இராஜீயவர்த்தனன் தம்பியை எதிர்பார்க்காது முன்னே சென்றான். ஹர்ஷன் பல நாட்களை இமயமலைச் சாரலில் கழித்தான். ஓர் இரவு அவன் உறங்குகையில் பயங்கரமான கனவைக் கண்டான்; ஒருகாடு நெருப்புப் பற்றி எரிவதாகவும், அதன் மத்தியில் வலிய ஆண்சிங்கமொன்று அகப்பட்டு வருந்தவதாகவும், அதனோடு தன்குட்டிகளைத் தத்தளிக்க விட்டுத் தாய்ச்சிங்கம் தன் கணவனோடு எரியில் வீழ்வதாகவும் கனவுக்கண்டான்; கண்டு திடுக்கிட்டு எழுந்தான். அவனுடைய இடக் கண்ணும் இடத் தோளும் துடித்தன. ஹர்ஷனுடைய கண்களில் ஊற்றுப் பெருக்கைப் போலத் துக்க நீர் வெளிவரத் தலைப்பட்டது. அபசகுனங்களால் என்ன துன்பம் நேருமோ வென்று ஹர்ஷன் அச்சங்கொண்டான். கனவுகண்ட மறுநாள் பகற்பொழுது ஹர்ஷன் மிகுந்த கவலையோடு வீற்றிருந்தான். அப்போது அதிக விரைவாக ஒருவன் ஹர்ஷன் முன் ஓடிவந்தான். அவன் கண்களில் இருந்து நீர் வழிந்து கொண்டே இருந்தது; நெஞ்சம் துடித்தது. அவனது மேலாடை காற்றில் பறந்தது. அவன் ஹர்ஷனைப்பணிந்து, ஓர் ஓலையைக் கொடுத்தான். ஹர்ஷனுடைய விரல்கள் நடுக்கங் கொண்டன. அவன் ஆவலோடும் அவசரத்தோடும் ஓலையைப் படித்தான். தனது தந்தை மரணத்தறுவாயில் இருப்பதாகவும் தன்னை அவர் உடனே காண விரும்புவதாகவும் அதில் வரையப்பட்டிருந்தது. அக்கணமே ஹர்ஷன் உணவுகூட உட்கொள்ளாமல், தன் குதிரைமேற் பாய்ந்தேறினான்; வாயுவேக மனோவேகமாக ஓடினான்; வழியில் பலதுர்ச் சகுனங்களைக் கண்டான். மான் வலப்பக்கமிருந்து இடப்பக்கம் சென்றது. காக்கைகள் கடுமையாகக் கரைந்தன. இவ்வாறு அவ சகுனங்கள் தென்பட்டும், ஹர்ஷன் மனத்தளர்ச்சி யடையாமலும், அன்றிரவு ஓரிடத்தும் தங்காமலும் கடுக விரைந்து மறுநாள் மாலை தனேசுவரத்தை யடைந்தான். நகர் முழுவதும் நிசப்தமாயிருந்தது. கடைகள்யாவும் மூடப்பட்டிருந்தன. எல்லா வீடுகளும் துக்கக் குறியோடு காணப்பட்டன. பறவைகளின் ஓசையைத் தவிர வேறு எவ்வித ஓசையும் அந்நகரில் கேட்கப்படவில்லை. இலக்குமி நீங்கிய பாற்கடல்போல நகரம் பொலிவிழந்து காணப்பட்டது. அந்தபுரத்திற்குள் அரசன் உயிர்பெற்று வாழ்வதற்குப் பல சடங்குகள் நடைப்பெற்று கொண்டிருந்தன. கூட்டங் கூட்டமாக அந்தணர்கள் அக்கினியை வளர்த்து நெய்யைச்சொரிந்து கொண்டே மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். அந்தப்புரத்தில் இருந்த அரசியும் ஏனையோரும் கடவுளை வழிபட்டு அழுத கண்ணுஞ் சிந்தையுமாக விருந்தனர். இராஜ பக்தி நிறைந்த வேலையாட்கள், தங்கள் அரசன் மடியாதிருக்க வேண்டும் என்று முழங்காற்படியிட்டு இறைவனைத் தொழுத வண்ணம் இருந்தனர். நகரமாக்கள் தத்தம் இல்லங்களில் கண்ணீரும் கம்பலையுமாக நின்று, எம் அரசனைக்காக்க, இறைவ ! என்று கூறியபடி துக்கத்தில் ஆழ்ந்தனர். அந்தபுரத்தில் மரணப்படுக்கையில் பிரபாகர வர்த்தனன் படுத்துக்கிடந்தான். அவன் பக்கலில் ஆறாத்துயர முற்றவளாய் யசோவதி வீற்றிருந்து, அவனுக்கு வேண்டும் உபசாரங்களைச் செய்துகொண்டிருந்தாள். சுற்றிலும் பல பணிப்பெண்கள் சூழ்ந்திருந்தனர். அரசன், அயர்வுற்றவனாய்க் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தான். அவனது மூளை கொதிபுற்றிருந்ததால், கனத்த பட்டொன்று தலையில் கட்டப்பட்டிருந்தது. அரசன் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ஹர்ஷன் உள்ளே நுழைந்தான். மைந்தனைக் கண்ட அரசன், பிரிந்தகன்றைக் கண்டு மகிழும் தாய்ப் பசுவைப்போல அகம் மலர முகம் மலர்ந்தான். அவன் தன் இருகரங்களையும் நீட்டி ஆவலோடு, மைந்த! என்னருகில் வா, என் மகனே! வருவாய் என்று கூவினான். ஹர்ஷன் அருகிற் சென்று முறைப்படி வணங்கினான். அரசன் மைந்தனது தலையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான். பின்னர்க் கன்னத்தோடு கன்னம் சேர்ந்தது. கண்களோடு கண்கள் ஒன்றுபட்டன. இருவர் விழிகளினின்றும் நீர் ஆறாய்ப் பெருகியது. அரசன் அதிக நேரம் மைந்தனைத் தழுவிக்கொண்டிருந்தான். சிறிது நேரங்கழிந்தபின், ஹர்ஷன் தன் அந்தப்புரத்திற்குச் சென்று, தன் உடைகளைக் கழற்றிவிட்டுச் சாதாரண உடையை யுடுத்திக்கொண்டான்; அரண்மனைக் குதிரை வீரர்களை ஏவி, தன் முன்னோனை விரைவாக அழைத்து வரச்சொன்னான். பின்னர் ஹர்ஷன் அரண்மனை வைத்தியனை யழைத்தான்; அழைத்து ஐய! என் தந்தையார் குணப்படுவாரா? உண்மையைக் கூறும் என்றான். வைத்தியன், அரசே! நாளை விடியற்காலையில் உமது தந்தையாரைப் பற்றிக் கூறுவேன்; இன்று ஒன்றும் கூற இயலாதவனா யிருக்கின்றேன் என்றான். வைத்தியன் தன் வீட்டை யடைந்தான். அரசன் உண்மையில் இறந்து விடுவான் என்பது அவனுக்குத் தெரியுமென்றாலும், அதை ஹர்ஷனிடம் கூற அவன் மனம் எவ்வாறு இசையும்? அதனால் மறு நாட்காலை அரசன் இறப்பதற்குள் தான் இறந்துவிடுவது மேல் என்று அவன் கருதினான்; தீயை வளர்த்தான். அத் தீயில் அவன் விழுந்து மாண்டான். வைத்தியன் மாண்டதை ஹர்ஷன் உணர்ந்தான். அவன் உடனே உண்மையை யுணர்ந்து கொண்டான். யசோவதியும் அரசன் இறந்து விடுவான் என்றே நிச்சயித்துக்கொண்டாள். மறுநாட்காலை, தனது ஆடையாபரணங்களை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, யசோவதி பரிசுத்த நீரில் நீராடி, உடன்கட்டையேறும் மனைவி யுடுத்திக்கொள்ளும் உடைகளை யணிந்து கொண்டாள். அவள் உடம்பு முழுவதும் மலர்களைச் சாத்திக்கொண்டாள். தாம்பூலத்தால் அவள் உதடுகள் சிவந்திருந்தன. அரசி, தனது செந்தாமரை மலர்போன்ற மென்மையான கைகளில், தன் கணவனது படத்தைப் பிடித்திருந்தாள். அவள், அந்தப்புரத்தில் தீயுண்டாக்கினாள்; தன் அறையினின்றும் வெளிப்போந்தாள். அவ்வமயம். அரசியினது பிரதான தோழியானவள் ஹர்ஷன் இருந்த அறைக்குள் ஓடிவந்தாள். அவள் நடுக்கங்கொண்டவளாகக் காணப்பட்டாள். அவள், ஏதோ சொல்ல வாயெடுத்தாள்; வார்த்தைகள் வாயினின்றும் வெளிவரவில்லை; மிரள விழித்தாள். அவளது போர்வை காற்றில் பறந்தது. கண்கள் நீரைச் சொரிந்தன. அவள் கைகளால் மார்பில் கடுமையாக அடித்துக்கொண்டாள். அவளது அலங்கோலத்தைக் கண்ட ஹர்ஷன் திகைத்து விட்டான். என்ன நடந்தது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அத்தோழி அவனை வணங்கி, உதவி, உதவி, இளவரசே! அரசியார் . . . . .. . . . . . . . . . . என்று அலறினாள். அவள் கூறுவதை முற்றும் கேட்க ஹர்ஷன் தாமதிக்க வில்லை. அவன் அரசியது குணத்தை முற்றும் அறிந்த வனாதலால், அவளை நோக்கி ஓடினான்; தாயைக் கண்டான்; அவள் பாதங்களிற் பணிந்தான்; அரற்றினான்; அழுதான்; தொழுதான்; விழுந்தான்; விம்மினான்; அம்மையே! நீரும் என்னைத் தனியே தத்தளிக்கவிட விரும்புவீரோ? என்னை ஈன்றளித்த அன்னையே! அறியாச் சிறுவன் என் செய்வேன். அம்மணீ! ஆழ்ந்து யோசனை செய்யும், என்னைத் தவிக்க விட்டுப் போகவேண்டாம் என்று இரு கைகளையும் கூப்பித்தொழுது அழுதான். தன் ஆருயிர்ச் செல்வன் புலம்புவதைக் கண்ட தாய், பெரிதும் வருந்தினாள். அவள் மனம் அழலில் இட்ட வெண்ணெய் போல உருகியது. அவளது தொண்டை யடைத்துக் கொண்டது. அவள், தன் முகத்தைப் போர்வை யால் மூடிக்கொண்டு, நெடு நேரம் அழுதாள்; பின்னர், தன் மைந்தனை மார்புறத் தழுவி, அவனது கண்ணீரைத் துடைத்து, அன்போடு அவனை நோக்கினாள்; தன் மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டு மைந்தனை நோக்கி, என் அருமை மதலாய்! ஹர்ஷ! உன்பேரில் யான்கொண்ட புத்திர வாஞ்சையால் அன்று, என்மகனே, யான் உயிர்விடத்துணிந்தது. நான் முற்பிறப்பிற் செய்த நல்வினையே நான் சுமங்கலியாக விருக்கும்போதே இறப்பது மேல் என்று என்னைத் தூண்டியது. விதவை, உணர்விழந்து காய்ந்த வைக்கோலுக்குச் சமானமாவாள். அவ்வாறு கணவன் இறந்தபின் யான் உயிர் வாழ விரும்ப வில்லை. இக் கேவலமான உடலை எத்தனை நாள் தான் சுமந்திருப்பது? இந்த யாக்கை. வினையின் வந்தது, வினைக்குவிளை யாவது, புனைவன நீங்கிற் புலால்புறத் திடுவது, மூத்துவிளி வுடையது, தீப்பிணி யிருக்கை, பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம், புற்றடங் கரவிற் செற்றச் சேக்கை, அவலக் கவலை கையா றழுங்கல் தவலா வுள்ளந் தன்பா லுடையது. -மணிமேகலை மேலும், என் அருஞ்செல்வ ! இக் கர்ம பூமியில், பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும்பே ரின்பம். -மணிமேகலை துன்பத்தைக்கொண்ட இவ்வுடலொடு கணவரைப் பிரிந்த யான் இருத்தல் அடாது. பதியின் மரணத்தோடு தன் மரணத்தையும் ஒன்றுபடுத்துவதே மனைவியின் கடமையாகும். ஆதலால், ஹர்ஷ! என் மைந்த, என் கணவனான உன் தந்தையின் பிறகு என்னை உயிர் வாழச்செய்து, அரச குடும்பத்திற்கு அவமதிப்பைத் தேடாதே. நான் எரியில் வீழ்வதே முடிவு. என் கணவன் வருகையை யான் ஆவலோடு விண்ணுலகில் எதிர்பார்ப்பேன். குமர ! மறுபிறப்பில், யாம் ஒற்றுமையோடு வாழ்வோமாக.. நீ வருந்தாதே, கண்மணீ! என்று யசோவதி விழிகளில் நீர் சோர, தன் மைந்தனுக்கு ஆறுதல் அளித்தாள். அஞ்சனந்தோய் கண்ணி லருவிநீ ராங்கவற்கு மஞ்சனநீ ராக வழிந்தோட - நெஞ்சுருகி வல்லிவிடா மெல்லியடையான் மைந்தனைத்தன் மார்(பாடும் புல்லிவிடா நின்றாள் புலர்ந்து. -நளவெண்பா அதிகம் கூறுவானேன்? யசோவதி எரியில் மூழ்கினாள்; பூதவுடம்பை நீத்துப் புகழுடம் பெய்தினாள். இராணி தீக்குளித்த செய்தி நகரத்தார்க்குத் தெரிந்தது. நகரத்தார் பட்டதுன்பம் சொல்லற்கியலாது. ஹர்ஷவர்த்தனன் தன் துயரை அடக்கிக் கொண்டு குதிரைவீரன் ஒருவனை வரவழைத்து, வீர! நீ கன்னோசி நாட்டிற்கு விரைந்து செல்; சென்று, அரசி தீக்குளித்ததையும் அரசன் மரணத் தறுவாயில் இருப்பதையும் கூறு; உடனே என் தங்கையையும் மைத்துனனையும் அழைத்து வா என்றான். சிறுவனான ஹர்ஷன் இராப்பகல் விழித்தகண் விழித்தபடி, தந்தைக் கருகில் இருந்துகொண்டு, அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து வந்தான். 5. எதிர்பாரா விபத்து ‘சூழ்வினை நான்முகத் தொருவர்ச் சூழினும் ஊழ்வினை யொருவரா லொழிக்கற் பாலதோ? -கம்பராமாயணம் கிருகவர்மன் கன்னோசி நாட்டை யாண்டு வந்தான். அவன், தன் குடிகளுக்குத் தன்னாலும் தன் பரிசனத்தாலும் வேற்றரசர்களாலும் விலங்குகளாலும் கள்வராலும் நேரக்கூடிய ஐவகைத் துன்பந் துடைத்து, அவர்கள் மனம் மகிழுமாறு அரசாண்டான். இராஜேவரியை அன்போடு நேசித்து வந்தான். அவளும் அவனையே தெய்வமாகக் கொண்டாடினாள். ஒரு நாள், வழக்கம்போலக் கிருகவர்மன் தன் இன்னுயிர்காதலி இராஜேவரியோடு இன்னடிசில் உண்டான். பின்னர் அவன் தன் மனைவியோடு சிறிது நேரம் பேச விருப்பங்கொண்டான். அந்தப்புரத்தில் அழகான பளிங்குமண்டபம் ஒன்றிருந்தது. அதில் அரசனும் அரசியும் சென்றமர்ந்தனர். தோழிகள் சமரம் வீசிக்கொண்டு நின்றனர். கிருகவர்மன் தன் இல்லாளை நோக்கி, பாவாய்! உத்தம குணங்கள் ஒருங்கே யமையப்பெற்ற உன்னை மனையாளாகப் பெற்ற யான் உண்மையில் ஆடவரிற் சிறந்தவன் என்றே நினைக்கின்றேன்; உன்னைப்பெற்று எனக்களித்த நின் தாய் தந்தையர் நீடுழி வாழ இறைவன் இன்னருள் பாலிக்க வேண்டுமென்று வேண்டுகின்றேன். யான் எது கூறினும் நீ அதனைப்பின்பற்றுகின்றாய். யான் மெத்தவும் மகிழ்ந்தேன். நினது சமயோசித புத்தியாலும் அமைச்சர் அறிவு மொழியாலும் யான் அரசாள்கின்றேன். இன்றேல் எனக்குத் தனியாகப் பெருமையொன்றுமில்லை என்று அகமலர்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் புகன்றான். இராஜேவரி பணிவுடன் அவனை நோக்கி, என் உயிர்த்தலைவ! எல்லாம் இறைவன் செயல் என்பதை அறியீரோ? கேவலம் பெண்பால் நான்; எனது சமயோசிதபுத்தி, உமது கூரிய மதிவன்மைக்கு எம் மாத்திரம்? பெண்பால், தான் வாழ்க்கைப்படும் கணவனுக்கே உரித்தானவள். கற்புடை மடந்தையர்க்குக் கணவனே கடவுள். பெண்கள், மணம் நிகழ்வதற்கு முன் தம்மைப்பெற்ற இருமுதுகுரவர் ஆணையின்படி நிற்பர்; மணம் நிகழ்ந்த பின்னர், கணவன் சொற்படி நிற்பர்; நல்ல மங்கையர் கணவன் இறப்பின் அச்செய்தி கேட்டமாத்திரத்தே உயிர் விடுவர்; அவ்வாறு விடாரெனினும், நளியெறி புக்கேனும் மாள்வர்; உயிர்விட முடியவில்லையாயின் கடுமையான விரதங்களை நோற்று ஆடையாபரணங்களை நீத்து, மணமுள்ள பொருள்களை மறந்து, உண்டியையும், நித்திரையையும் சுருக்கி, மனமொழி மெய்களால் தூய வாழ்க்கையை நடத்தித் தம் வாழ்நாட்களைக் கழிப்பர். பெருந்தன்மை பராக்கிரமம் முதலானவை ஆண்களுக்கு அணியாவது போல, அடக்கம் அன்பு முதலியவை அரிவையர்க்கு அணியாகின்றன. பெண்டிர் தம்மை மணந்துகொண்ட ஆடவரால் தமது ஒழுக்கத்திற் கேற்ப பெருமையும் புகழும் பெறுவர். உண்மை காதலிக்குக் கணவனைக் காட்டிலும் சிறந்த பொருள் யாதுளது? அவளுக்கு உயர்ந்த சுற்றமும் உண்மை நட்பும் தன்நாயகனே யாவன். அவனுக்குச் செய்யும் பணிவிடை இறைவனுக்குச் செய்யும் பணிவிடையைவிடப் பன்மடங்கு சிறந்தது. ஒரு பெண் தன் கணவனையே கடவுளாகப் பாவித்தும், அவனுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைக் குறைவறச் செய்தும், கணவன் மகிழும் படி நடந்து வருவாளாயின், அவள் செய்ய வேண்டிய தவம் வேறு யாதுளது? கணவன் உயிர் பெற்றிருக்குமளவும் மனைவியிருக்க வேண்டும். அவன் இறந்துவிட்டால் தானும் அவனுடன் உடன்கட்டை யேறல் வேண்டும். பாண்டுராசனது இளைய மனைவியான மாத்திரை என்பாள் கணவன் அருகிலேயே எப்பொழுதும் இருந்துகொண்டு பணிவிடை களைச் செய்துகொண்டிருந்தாள். கணவன் இறந்தான். குந்தியும் பாண்டவர் ஐவரும் அழுது புலம்பினர். அழுகுரல் விலக்கியபி னைம்மகவை யுங்கொண் டெழுகட னிலத்தரசை யீமவிதி செய்யப் புழுகுகமழ் மைக்குழலி பொற்புடை முகத்தாள் முழுகின ளனற்புனலின் மொய்ம்பனை விடாதாள். -வில்லிபாரதம் அம் மாத்திரை யல்லவா உண்மை மனைவியாவாள். இதுவரை யான் கூறிவந்தவை, உண்மையாகவே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நால்வகைக் குணங்களையும் கொண்டுள்ள பெண்மணிகளுக்குரிய செய்கைகள். நாத! யான் தங்களுக்கு அபூர்வமாக எதைச் செய்துவிட்டேன். தாங்கள் பெரிதும் என்னைப் புகழ்வதற்கேற்றமுடையவள் அல்லள் யான் என்று கூறிப் பணிந்து நின்றாள். மனைவியுரைத்த வெல்லாம் செவிசாய்த்துக் கேட்ட மன்னவன் மனமகிழ்ந்தான். அவன் அவளை அன்பொடு நோக்கி, பெண்மணி! உனது கல்வியறிவிற்கு யான் பெரிதும் மகிழ்கின்றேன். மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே! தேனே! அரும்பெற்ற பாவாய்! ஆருயிர் மருந்தே! மலையிடைப் பிறவா மணியே! என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே! என்கோ? யாழிடைப் பிறவா இசையே! என்கோ? தாழிருங் கூந்தல் தையால்! நின்னை -சிலப்பதிகாரம் என்று புகழ்ந்தான். அவ்வமயம், அரசன் கொலுமண்டபத்தை யடையும் நேரமாகிவிட்டதால், அவன் இராஜேவரியிடம் விடைப்பெற்றுக் கொலுமண்டபத்தை யடைந்தான்; அடைந்து, இராச்சிய காரியங்களைக் கவனித்துக்கொண்டிருந்தான். சிறிது நேரமானபின், கணிகை மாதர் ஆடல்பாடல்களை நடத்தினர். அவ்வமயம் அரண்மனைக் காவலாளன் உள்ளே நுழைந்து, அரசனைப் பணிந்து, மன்ன! தனேசுவரத்தினின்றும் வீரன் ஒருவன் அதிவேகமாக வாயிலண்டை வந்துள்ளான். தங்களிடம் அவசரச் செய்தி சொல்ல வேண்டுமாம், உத்தரவிட்டால் அவனை உள்ளே விடுகிறேன் என்றான். அரசன், என்ன, வீரனா! என்ன அவ்வளவு அவசரச் செய்தி? சரி, அவனை வரச்சொல் என்றான். காவலாளன் ஓடோடியும் சென்று வீரனை உள்ளேவிட்டான். வந்த வீரன் அரசனை வணங்கி, வேந்தே! தங்கள் மாமனாரும் தனேசுவர நாட்டரசருமான பிரபாகரவர்த்தனர் பிணிவாய்ப்பட்டு மரணத்தருவாயில் இருக்கின்றனர். அவரது பத்தினியும் தங்கள் மாமியுமான யசோவதியம்மை, கணவருக்குமுன் சுமங்கிலியாக இறக்க வேண்டு மென்று விரும்பி, தீக்குளித்தனர். இதுவே யான் கொணர்ந்த செய்தி என்றான். கிருகவர்மன் அரியாசனத்தைவிட்டுக் கீழிறங்கி, கால்கள் தடுமாற, மனம் தத்தளிக்க, மனையாள் இருக்கும் அந்தப்புரத்தை நாடிச் சென்றான். அவ்வெல்வை, இராஜேவரி தனது சிங்காரமான கட்டிலில் உட்கார்ந்து ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தாள். அரசன் அவள்முன் சென்று நின்றான். அந்தோ! தாய் தீக்குளித்ததையும் தந்தை இறக்குந் தறுவாயில் இருப்பதையும் கேட்டால், இவள் மதிபோன்ற முகம் வாடுமே. யான் என்செய்வேன்? இது, எதிர்பாரா விபத்தாகவிருக்கிறதே. இன்னும் என்னென்ன துன்பங்கள் நேருமோ? என்று தனக்குள் எண்ணியவனாய் நின்றான். கணவன் வந்ததைக் கண்ட காரிகை, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி, அவன் முகத்தை நோக்கினாள். அவன் முகம் பொலிவற்று வாடியிருப்பதைக் கண்டு மனம் பதைத்து, பெரும! ck¡F v‹D‰wJ ? என்று கூவினாள், அரசன் கண்களில் நீர்த்துளிகள் தோன்றின. அவன் மெல்ல வாய்திறந்து, பெண்ணே ! யான் கூறுவதை மனத் தளர்ச்சியின்றிக் கவனமாகக் கேட்பாய்; நின்தந்தை மரணப்படுக்கையில் இருக்கிறாராம். அவர் இறந்துவிடுவது நிச்சயம் என்பதை யுணர்ந்த உனது தாயார் சுமங்கலியாகவேமரிப்பது மேலென்றெண்ணி எரியில் மூழ்கினாராம் என்றான். அவன் அவ்வாறு சொல்லி வாய்மூடு முன்னர், . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வேடர் பல்லமுயிர் நிலைவாயிற் பட்ட மான் போல் பதைபதைத்துப் பைந்தொடியாள் பதறி விழுந்தாள். -அரிச்சந்திரபுராணம் அரண்மனையில் எங்கும் குழப்பம் உண்டானது. இத் துக்கச்செய்தி விரைவில் கன்னோசி நாடெங்கும் பரவியது. குடிகள் மெத்தவும் மனம் வருந்ததினர். அந்தோ ! சூரியவெளிச்சம் சிறிதுகாலத்திற்குள் இருளால் விழுங்கப் பட்டதே! என்ன உலகம்? நமது அரசன் மணஞ்செய்துகொண்டு சில வருடங்கள் ஆகின்றன. அரசனும் அரசியும் மனமொத்து இன்ப வாழ்க்கையை இனிது நடத்திவந்தார்கள். தெய்வத்திற்கு. அது பொறுக்கமுடியவில்லை போலும்! சிறுமங்கையான இராணி எவ்வாறு இத் துயரைச் சகிப்பாள் ? இவர்களுக்கு இத் துயரம் சம்பவிக்கலாமோ? என்ன காலம்! உலகில் இன்பமும், துன்பமும் மாறித் தோன்றுகின்றது. ஒன்றேனும் நிலைத்திருப்ப தில்லை. மக்கள் வாழ்க்கை மிகக் கேவலமானது என்று சிலர் கூறி வருந்தினர். சிலர், என் செய்வது? நம் செயலில் எது வுள்ளது? எல்லாம் இறைவன் செயல். அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது. எது எது எவ்வெக்காலத்தில் நடக்கவேண்டுமோ, அது அது அவ்வக்காலத்தில் நடந்தேதீரும். அதற்காக வருந்துவதாற்பயன் என்? ஆவது விதியெனின் அனைத்தும் ஆய்விடும்; போவது விதியெனின் எவையும் போகுமால்; தேவருக் காயினும் தீர்க்கத் தக்கதோ? எவரும் அறியொணா வீசற் கல்லதே. -கந்தபுராணம் வினை யாரை விட்டது? அரசனுக்காயினும் ஆண்டிக் காயினும் இன்பதுன்பங்கள் சமமானவையே. உலகசுகங்களில் வேற்றுமையிருப்பினும் இன்ப துன்பங்களில் வேற்றுமை யில்லை. வினை, யாரை நாடினதோ அவரைப்பிடித்துத் தன் ஆட்சியைச் செலுத்திப் பயனைத் தரவல்லது. சீராமனுக்கு என்ன குறை? பூமகளும் அலைமகளும் களிக்க அரியாசனமேறி அணிமகுடஞ் சூட எண்ணினான். அவன் எண்ணம் எவ்வாறாயது? thœÉid EjÈa k§fy¤J ehŸ jhœÉid aJtu¢ Óiu rh¤âdh‹; NœÉid eh‹Kf¤ bjhUt®¢ NÊD«, CœÉid bahUtuh byhÊ¡f‰ ghynjh ? -கம்பராமாயணம் முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையை வெல்ல ஒருவராலும் இயலாது. நளனைப் பாருங்கள். அவன் நல்வினையால் பெறுதற்கரிய மனையாளான தமயந்தியைப் பெற்றான்; சிறிதுகாலம் அவளோடு இன்புற்றான். இன்பத்தின் காலம் முடிந்தபின் துன்பத்தின் தொடக்கம் அல்லவோ வரவேண்டும்? அரசனாக விருந்தும், சகல கலைஞானங்களையும் கற்றுப் பேரறிவாளியாக விளங்கிய அம்மன்னர் பெருமான் புட்கரனோடு கேவலம் சூதாட ஏன் இசைந்தான்? தன் நாடு நகரங்களையும், சுகபோகச் செல்வங்களையும் ஏன் துறந்தான்? அவனா துறந்தான் ? அவனது தீவினை அவனுக்குத் தீய புத்தியை யுண்டாக்கியது. சூழ்வினைப் புணர்ப்பினால் சொன்ன வாறியைந் தாழ்கடற் புவிதொழு மரச னடவெங் காழ்மனக் கொடுங்கலி கவற்றின் வண்ணமாய் வீழ்தலும் புட்கரன் வென்றிட்டானரோ. -நைடதம் உலகத்தில், இவ்வாறு எதிர்பாராத பல துக்க சம்பவங்கள் நிகழ்வது இயற்கையே. இதனால் நாம் வருந்தி என்ன பயன்? நடப்பது நடந்துதான் தீரும். இவற்றைப் பருவரலும் இன்பமும் ஒக்க நோக்கும் யோகியரே தாங்கவல்லார். அஞ்ஞானக் கடலில் ஆழ்ந்தமக்கள் பொறுத்தல் அரிதே என்றாலும் என் செய்வது ? நமது அரசனுக்கும் அரசிக்கும் இவ்வாறு துக்கம் ஏற்பட லாகாது என்றனர். இவ்வாறு மக்கள் தத்தமக்குத் தோன்றியவாறு கூட்டங் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவரும் எதிர்பாராவண்ணம் ஒரு பேர் இரைச்சல் கேட்டது. நகரிற்குள் பல குதிரை வீரர்கள் ஆயுதங்களோடு பாய்ந்தனர். அவ்வீரர் மாளவ தேயத்தார். மாளவதேயத்தரசனான தேவகுப்தன் என்பவன் பிரபாகரவர்த்தனனது ஜன்மப்பகையாளி; பிரபாகர வர்த்தனன் இறந்தவுடனே அவனது நாட்டைக் கவர்ந்து கொள்ளக் காத்திருந்தான்; பிரபாகரவர்த்தனன் இறக்குந் தறுவாயில் இருந்தாலும், இராஜியவர்த்தனன் போர்மேற் சென்றிருந்ததாலும், சிறுவனாகிய ஹர்ஷன் தனேசுவரத்தை விட்டு வரமுடியாத நிலையில் இருந்ததாலும் கிருகவர்மன் துக்கங் கொண்டாடிக் கொண்டிருக்கும் சந்தர்பத்தில் அன்று, அவன் தன் பெரும்படையுடன் திடீரென்று வந்து எதிர்த்தான். கடலை யொத்த பெரிய சேனை நகரிற் புகுந்ததும், கன்னோசி நாட்டார் ஒன்றும் புரியாமல் தயங்கி விழித்தனர். வந்த பகைவர் தெருக்களைக் கொளுத்தினர்; எதிர்பட்டாரைக் கொன்றனர்; ஊரைக்கொள்ளையடித்தார்கள். நகரமாந்தர் எதிர்பாரா விபத்தின்மேல் விபத்தை எண்ணி வருந்தினர்; இச்சேனை கடல் போல் வந்துள்ளதே, கடல் வந்தால் எங்கே புகலிடம் ? எங்கேயினி யரண்? என்ன நாசகாலமோ அறியோம். எல்லாம் விதி, விதி என்று அவர்கள் கூறினர்; அரசனை யண்மினர். உரையிற் குழறியும் உடலிற் பதறியும் ஒருவர்க் கொருவர்முன் முறையிட்டே யரையிற் றுகில்விழ வடையச் சனபதி யடியிற் புகவிழு பொழுதத்தே -கலிங்கத்துப்பரணி கிருகவர்மன், தனக்குற்ற துயரையும், தன் ஆருயிர் மனையாள் மூர்ச்சையுற்றிருப்பதையும் மறந்து, கடுங்கோபங்கொண்டு, போருக் கெழுந்தான். அவன் சேனைவீரனை நோக்கி, சேனைத்தலைவ! நமது நாற்படையையும் திரட்டி, வந்திருக்கும் அற்பரைப் போரில் வெல்க என்றுகூறித் தன் வாளையுருவி, யானை மீதமர்ந்து போர்முனைக்குச் சென்றான். தேவகுப்தனுக்கும் கிருகவர்மனுக்கும் கடும்போர் நிகழ்ந்தது. ஒருவரை யொருவர் தாக்கினர்; தேக்கினர்; குத்தினர்; முட்டினர்; மோதினர். அதிகம் அறைவானேன்? காலன் என்னும் கண்ணிலி கிருகவர்மனது ஆருயிரைக் கவர்ந்து செல்லவிரும்பினான். தேவகுப்தனது வாளால் கிருகவர்மன் வெட்டி வீழ்த்தப்பட்டான். நகர் அலங்கோலமாகியது. தேவகுப்தன் கன்னோசியைப் பிடித்துக்கொண்டான்; அதனுடன் சுவர்னவிக்கிரகம் போன்ற இராஜேவரியினுடைய ஆடையாபரணங்க ளனைத்தையுங் கைப்பற்றிக்கொண்டான்; அவளுடைய கால்களில் விலங்கிட்டுச் சிறைச்சாலை யொன்றில் அடைத்தான். இராஜேவரி கிருகவர்மனை மணந்து சுகித்து நீடுவாழ்வாள் என்று சொன்ன சோதிடம் எவ்வாறு பொய்த்ததோ அறியோம். 6. இரு சகோதரர் ஹர்ஷவர்த்தனன், தன் தாய் தீக்குளித்த பின்னர், மனமுடைந்தவனாய், தந்தையின் பக்கலில் அடைந்தான். அரசகுலத்திற் பிறந்தவன் துக்கத்தை வெளிக்குக் காட்டமாட்டான். ஹர்ஷன் உத்தம ராஜபுத்திர வீரனாயிருந்தாலும், சிறுவனாதலால் அவன் வாய்விட்டு ஓ வென்று அலறினான். அப்போது உயிர்விடும் நிலையில் இருந்த பிரபாகரவர்த்தனன் மெல்லிய குரலில், மைந்த! அரசகுமாரர்கள் தங்கள் தைரியத்தைத் தளரவிடலாகாது. அவர்கள் தைரியத்தால் தான் குடிகள் அமைதியுற்றிருப்பார்கள். நீ வருந்தாதே, என் கண்மணி! என்று கூறி, ஹர்ஷனை ஆர்வத்தோடு, தன் இரு கண்களாலும் நோக்கிக் கண்களை மூடிக்கொண்டான். அரசன் என்றும் எழாத தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். அரண்மனையில் துக்கக் குழப்பம் உண்டாயிற்று. அத் துன்பத்தைக் காணச் சகியாது கதிரவனும் மேற்கடலுள் ஆழ்ந்தான். மறுநாட் காலை, பல சிற்றரசர்களும் தலைவர்களும் தனேசுவரத்தை யடைந்தார்கள். அரசனைத் தூக்கிச் செல்ல, பெரிய பல்லக்கொன்று கொணரப்பட்டுச் சிங்காரிக்கப்பட்டது. இறந்த அரசனை அலங்கரித்துப் பல்லக்கில் வைத்து, சிற்றரசர்களில் நால்வர் தம் தோள்மேற் சுமந்து, சரவதி யாற்றங்கரையில் இருந்த சுடுகாட்டை யடைந்தனர். ஹர்ஷன் கொள்ளி வைத்தான். நடக்கவேண்டிய சடங்குகள் நடந்தன. யாவரும் திரும்பி அரண்மனைக்கு வந்துசேர்ந்தனர். பிரபாகரவர்த்தனன் வீரத்திற் சிறந்த இருகுமாரர்களையும், அழகு, ஞானம் முதலியவற்றிற் சிறந்த ஒரு மகளையும் பெற்றிருந்தும், அவன் இறக்குந் தறுவாயில், ஹர்ஷனைத்தவிர ஏனையோர் இல்லாதிருந்தது பெரிதும் வருந்தத்தக்கதே. இது, யாவர்க்கும் நிகழக் கூடியதே. சிலர்க்கு அநேக பிள்ளைகள் இருந்தும் சமயத்தில் கொள்ளிவைக்கப் பிள்ளையில்லாதிறப்பர். அது அவரவர் செய்த துர்ப்பாக்கியமேயாகும். பிரபாகரவர்த்தனன் உண்மையில் மிகுந்த பாக்கியவான் என்றே சொல்லவேண்டும். ஹர்ஷவர்த்தனனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. உலக அனுபவம் சிறிதுமற்ற இளைஞனாயிருந்ததால், அவன் செய்வதறியாது தத்தளித்தான்; தாயோ தீக்குளித்தாள்; தந்தையோ சாம்பரானார். தமையனோ வரக்காணோம்; தங்கையும் வரவில்லை. நாம் எவ்வாறு இவ்வரண்மனையில் தனியே இருப்பது? பரமே! எல்லாம் உன் சோதனையே; இன்னும் எம் குடும்பத்திற்கு என்ன செய்யத் திருவுளம் கொண்டுள்ளனையோ! சிறுவனாகிய என்மீது இத்துணைத் துயரைப்போடுவது உனது பெருந் தகைமைக்கழகோ? ஈசா என்று எண்ணி வருந்தினான். அரண்மனை முழுவதும் நிசப்தமாயிருந்தது. அரசனுக்கு உண்மை ஊழியர்களாக விருந்த சிலர், துக்கமேலீட்டால், மனைவி மக்களைத் துறந்து, புத்தமதத் தவசிகளானார்கள். சிலர் மலைமீதிருந்து கீழேவிழுந்து மாண்டனர். சிலர் இல்லந்துறந்து, பிச்சையேற் றுண்பாராயினர். சிலர் மவுனதீட்சைப் பெற்றனர். சிலர் எரியில் மூழ்கினர். நகரத்தில் இருந்த அரசாங்க உத்தியோகதர்களுள் சிலர் ஹர்ஷவர்த்தனனைச் சூழ்ந்த கொண்டு அவனது துயரை மெல்ல மெல்ல அகற்றினர். அவர்கள் ஹர்ஷனை நோக்கி, அரசே ! உமது தமையனார் சிறக்கக் கல்வி கற்றவர்; சிறந்த யோகவீரர். அவர், தம் பெற்றோர் இறந்ததைக் கேட்ட மாத்திரத்தே தவக்கோலங்கொள்வார். ஆதலால், அவர் வரும்போது நீர் உமது துக்கத்தை மாற்றி, உற்சாகத்தோடு இருப்பீரானால், அவரது துயரம் மெல்லமெல்ல அகலும். இன்றேல், அவர் பௌத்த சந்நியாசியாக மாறிவிடுவார்; உமது துயரையகல ஒட்டும் என்று கூறி, ஹர்ஷனை உற்சாகப் படுத்தினர். இறந்த வேந்தனுக்குச் செய்யவேண்டிய ஈமக்கிரியைகள் யாவும் செய்யப்பட்டன. பிரபாகரவர்த்தனனுடைய கட்டில்கள், படுக்கைகள், ஆடையாபரணங்கள், பிறபொருள்கள் யாவும் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டன. அரசனுடைய எலும்புகள் கங்கையாற்றில் விடப்பட்டன. அரசனை எரித்தவிடத்தில் சலவைக்கற்களால் சமாதியொன்று கட்டப் பட்டது. அரசனும் அரசியும் இறந்த துயரை ஹர்ஷனும் நகரத்தாரும் மெல்ல மெல்ல மறந்தன ரென்றாலும், சந்தோஷக்குறி ஓர் உயிர்பிராணியினுடைய முகத்திலாவது காணப்படவில்லை ஏன்? தானேசுவரம் அரசனற்றிருந்ததே காரணம். இராஜீயவர்த்தனன் வந்த பிறகே ஒரு முடிவு செய்யப் படுமாதலால், நகரமாந்தர் இராஜீயவர்த்தனனை ஆவலோடு எதிர்பார்த்தனர். தமையன் நகரை நோக்கி வருவதாக ஹர்ஷன் கேள்வியுற்றான். தனக்குண்டான துயரை ஒருபுறம் அடக்கிக்கொண்டு தமயனைச் சந்திக்க ஆவலோடு ஓடினான். இராஜீயவர்த்தனன், தந்தையின் செய்தியைக் கேட்டவுடனே புறப்பட்டவனாதலால், ஊண் உறக்கம் இன்றி அதிவேகமாக வந்துகொண்டிருந்தான், அவன் கண்கள் குழிந்திருந்தன. அவன் அரசனுக்குரிய சின்னங்கள் இல்லாமல் வந்தான். ஹூணர் வகுப்பாரோடு போர்செய்து மீண்டவனாதலால் அவன் உடம்பில் பல காயங்கள் பட்டிருந்தன. அவன் முடியில் அரசமுடி காணப்படவில்லை. தலைமயிர் காற்றில் பறந்தது. ஆடைகள் மாசோடு விளங்கின. அவன் மதிமுகம் தாமரையில்லாத் தடம்போல் பொலிவிழந்து இருந்தது. அவன் கண்கள் கோவைப்பழம்போல் சிவந்திருந்தன. அவன் ஹர்ஷனைக் கண்டவுடனே கண்களில் நீர் ஆறாய்ப் பெருக, ஆவலோடு தனது தாழ் தடக்கைகளை நீட்டித் தன் தம்பியை அன்போடு மார்புறத் தழுவிக்கொண்டான் இரு சகோதரரும் அந்தப்புரத்தை அடைந்தார்கள். ஒரு வேலையாள் பாத்திர மொன்றில் நீரைக் கொணர்ந்தான். இராஜீயவர்த்தனன் தன் கமலக் கண்களை நீராற் கழுவினான். பின்னர், அவன் நீராடும் கட்டத்திற்குச் சென்று நீராடினான்; வழி நடந்த களைப்பு மேலீட்டால் தரையில் படுத்தான். நகரத்தார் ஒருவரும் அன்று நீராடவில்லை; உண்ணவும் இல்லை; உறங்கவுமில்லை. நகரம் முழுவதும் துயரில் ஆழ்ந்திருந்தது. அன்று சாயுங்காலம் சில சிற்றரசர்கள் சென்று இரு சகோதரரையும் உணவு உட்கொள்ளும் படி வற்புறுத்தினர். மறுநாள் இரு சகோதரரும் தனித்ததோர் அறையில் நின்றனர். அப்போது இராஜீயவர்த்தனன் ஹர்ஷனை நோக்கி தம்பி, என் உயிர் அனையாய்! உனது முன்னேனாகிய யான் கூறுவதைக் கவனமாகக்கேள்; என் விருப்பத்தை மறுக்காதே; துயரத்திற்கு இடங்கொடுப்போன் பயந்த சுபாவமுடையான்; தைரியசாலி இவ்விஷயத்தில் தயங்கமாட்டான். துக்கமாயினும் சுகமாயினும் சமமாகப் பாவிக்கவேண்டும். அதுவே சுத்த வீரனுக்கு அழகு. பெண்பிள்ளை கள் மடமைப்புத்தி யுடையவர்கள். அவர்கள் துயரம் என்னும் நமனுக்கு இரையாகுவார்கள். இவ்வளவு யான் கூறியபோதிலும், நமது தாய் தந்தையர் நம்மை இவ்வாறு தவிக்கவிட்டுச் சென்றதை யெண்ணி யான் வருந்தாமலிருக்க முடியவில்லை யென்றாலும், இனி வருந்துவதால் பயன் என்? ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், மாண்டோர் வருவரோ? விடத்தால் மயக்குற்ற மான் வீழ்வது போல, நம் பெற்றோர் துயரால் என்மனம் அரசுரிமையை யேற்கத் தயங்குகின்றது. தந்தை இறந்த துக்கத்தால் உண்டான என் மனப்புண்ணை என் கண்ணீர் குணமாக்காது; இவ்வரண்மனை நரகம்போல எனக்குத் தோன்றுகிறது. உலக இச்சைகளைத் துறந்து, இரு வாதனையும் அற்று, இருக்கும் புத்தசந்நியாசி யாயிருக்க யான் விரும்புகின்றேன். என் அருமைத் தம்பி! பின்னும் கேள். புத்தமதக் கொள்கைகள் என்னும் மருந்தே என் மனப்புண்ணை மாற்றத்தக்கது. அரச உரிமை என்பது அற்பசுகம் யான் அதனைப் பெரிதாக எண்ணிலேன். அரிதாகப் பெற்ற மானுட யாக்கையில் பெறற்பாலதாகிய பேறு, என்றும்வற்றாத சுகமேயாம். இப்பிறப்பில் அதனைத் தேடாது கைவிடுவேனாயின் யான் எப் பிறவியில் பெறற்கரிய அப்பேற்றைப் பெறுவேன்? நீ சிறுவனாதலால், அரசுரிமையை யேற்று, அவனியை ஆண்டிரு. நான் சிறுவயது முதற்கொண்டே அரசாட்சியில் வெறுப்புற்றவன் என்பதை நீ யறிவாயன்றோ? என் காலத்தை யெல்லாம் ஆழ்ந்த யோசனைகளிலும், நூற்களை வாசித்தலிலும் கழித்துவந்தேன் என்பதை நீ யறிவாய். நான் மேலும் உனக்குச் சொல்லுவதை விரும்பிக் கேள். என் இளவலே! தாய் தந்தையர் இறந்ததைக் குறித்து இனி வருந்தாதே. தாயரொடு தந்தையர்க டாரமொடு தனையோர் தூயதுணை வோர்களொடு சுற்றமென நின்றோர் மாயையெனும் வல்லபம யக்குறும யக்கால் ஆயவுற வல்லதவ ரார்முடிவில் யாமார்? வந்துவிற வாதமனை யில்லைதன மாறித் தந்துபறி யாமலொழி தாயர்களு மில்லை; புந்தியுணர் வற்றவர்பு லம்புறுவ தல்லால் இந்தவுல கத்தறிஞர் யாதினும யங்கார். -வில்லி பாரதம் ஆதலால் பெற்றோரை மறந்து, அரசனாக அரியாசனத்துச் சரியாக வீற்றிருந்து, நமது தந்தையார் பெயரை நிலைநாட்டி நற்புகழைப் பெறுவாய். என் செல்வ! யான் கூறுவதை மறவாதே; தடுக்காதே; தயங்காதே. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம், என்றெண்ணி, உனது முன்னவனான என் வார்த்தையைத் தட்டி நடவாதே. அரச உரிமையைக் கைக்கொள். யான் உன்னை மணித்தவிசிலேற்றி மணிமுடிபுனைந்து, என்னிரு கண்களாலும் கண்டுகளித்துக் காட்டிற்குச் செல்வேன், என்ன சொல்லுகிறாய்? என்றான். இராஜீயவர்த்தனன் நகரையடைந்ததும் அரசனாவான் என்று ஹர்ஷன் எண்ணியிருந்தான். தமையனும் அரசுரிமையை யேற்றித் தன்னைவிட்டகல்வன் என்று அவன் கனவிலும் கருதவில்லை. தமையன் வார்த்தைகளைக் கேட்டலும் ஹர்ஷன் பயந்து விட்டான். அவன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர்த்துளிகள் வெளிக்கிளம்பின; தன் தமையன் கூறியது உண்மைதானோ, அல்லது தான் காண்பது கனவோ என்று அயிர்த்தான். அவன் மனம் குழம்பியது; பேச முயன்றான்; துக்கமேலீட்டால் பேச முடியவில்லை. விழி நீர் வர, தன் தமையனை நோக்கினான். கோவென்று கதறினான். அண்ணா! உலக அனுபவம் பெறாத மிகச் சிறியவனாகிய யான், கண் திறவாத நாய்க் குட்டிக்குச் சமானமானவன். உலக அனுபவமும் அரசாட்சி செய்யும் முறையும் நன்றாக அறிந்துள்ள தாங்கள் ஒரு சிங்கக் குருளைக்கு ஒப்பானவர்கள். சிங்கக் குருளைக்கிடும் தீஞ்சுவை யூனை, கண்திறவாத நாய்க்குட்டிக்கு ஊட்ட விரும்புதல் சரியோ? என் ஆருயிர் அண்ணா! தந்தையை இழந்தேன் ஈன்ற தாயையும் இழந்தேன்; தாங்களாவது எனக்குற்ற துணையாக இருப்பீர்கள் என்று கருதிச் சிறிது மகிழ்ந்தேன். தாங்கவியலா அரசாட்சியை என் புன் தலையில் யேற்றி காட்டுக்குச் செல்லவா நீங்கள் விருப்பங்கொண்டீர்கள். உடன் பிறப்போடு தோள் வலி போம் என்றபடி தாங்கள் இல்லாது, யான் யாருடைய உதவிகொண்டு உயிர்வாழ்வது? மூத்தவன் உயிருடனிருக்க, இளையவன் பட்டமேற்றல் முறையல்லவே! எனக்கு நற்றதையும் தாங்களே; தனி நாயகனும் தாங்களே; வயிற்றிற்பெற்ற தாயும் தாங்கள்தான்; பிறரில்லை. என் அண்ணலே! சிறியனேன் கூறுவதைச் செவிசாய்த்துக் கேட்க வேண்டுகிறேன். தாங்கள், தந்தையார் வீற்றிருந்து அரசாண்ட அரியாசனத்தமர்ந்து அரசாளுங்கள். அடியேன் தங்கள் பொற்பாத கமலங்களண்டை இருந்து அடிவருடிக் கொண்டிருப்பேன். தம்பி யான் ஏவல்செய்ய, வம்பவிழ் அலங்களோடு மாமணி மகுடஞ் சூடி, அம்புவி முழுவதும் தாங்களே யாளலாம். ஆனதிக்கிரு நாலும் வந்து தங்கள் அடிதொழச் செய்வேன். நான் சேனைத்தலைவனாக இருப்பேன். இராச்சியத்தைப் பற்றிய கவலை தங்கட்கு வேண்டாம். தாங்கள் அரசர் என்ற பெயர்மட்டிலும் வகித்து வாழ்ந்து வந்தால், ஏனைய காரியங்களைத் தங்கள் ஆணைப்படி யான்பார்த்து வருகிறேன். அவ்வாறு செய்யாது, என்னை முற்றிலும் துறந்து அகல்வது முறையோ? தாங்கள் ஆழ்ந்து யோசித்துப் பார்க்க வேண்டுகின்றேன் என்று பணிவுடன் பகர்ந்து நின்றான். ஹர்ஷவர்த்தனன் பேசியவனைத்தையும் கேட்டான் இராஜீயவர்த்தனன். அன்பும் அருளும் மிகவுடைய அவன் தன் தம்பியை மார்போடு தழுவி, அவன் கண்களைத் துடைத்து, எம்பி! நீ கூறியவை சரியே என்றாலும், என்னால் அரசாள முடியாது. அரசனுக்கு வேண்டிய அருங்குணங்களும் படைக்கலப் பயிற்சியும் யான் அதிகமாகவுடையவன் அல்லன். நீயோ, உத்தம லட்சணங்கள் ஒருங்கே அமையப் பெற்றவன்; அரசாள ஏற்றவன். ஹர்ஷ! பட்டத்திற்கேற்றவன் நீயே என்பதாகத் தந்தையாரும் பலமுறை என்னிடம் கூறியுள்ளார். யான் அதை உண்மை யென்றே நம்புகின்றேன்; தமையன் சொல்லையும் தந்தையார் மொழியையும் நீ தட்டி நடக்கத் தலைப்படாய் என்றெண்னுகிறேன். மதியுடைய மைந்த! தந்தை சொல்லைக் கடவாது யான் இதுவரை நடந்ததில்லையே? தந்தையிறந்தபின் தமையனான யானே உனக்குத் தந்தை போன்றவன். தந்தையானவனும் தமையனானவனுமான என் விருப்பத்தை நிறைவேற்றுவது நினது கடமையாகும். தடை சொல்லாதே, யான் இன்று முதல் இவ்வாளினைத் தொடேன். நீயே இதனை ஏந்திக் கொள் என்று அன்போடுகூறி வாளைத்தரக் கையை நீட்டினான். அவ்வமயம், அந்தபுரத்தில் பெண்கள் அலறும் கூக்குரல் கேட்டது. இரு சகோதரரும் தூண்களைப் போல அசைவற்று நின்றனர். அப்போது கன்னோசி நாட்டு வீரன் ஒருவன் தலைவிரி கோலமாக அங்குத் தோன்றினான். அவன் சகோதரரை! அரசர்களே ! உங்கள் தாயார் மரணமுற்றதையும், தந்தையார் மரணத்தறுவாயில் இருந்ததையும் கேள்வியுற்ற எம் அரசர் இங்குப் புறப்பட்டுவர ஆய்த்தமாயிருக்கையில், எதிர்பாராத விதமாகத் திடீரென்று, மாளவ தேயத்து மன்னனான தேவகுப்தன் படையொடுவந்து எம் அரசனைக் கொன்றான்; இராணி இராஜேவரியைச் சிறையில் அடைத்துள்ளான்; ஊரைக் கொளுத்தி விட்டான்; குடிகளைக் கொலைசெய்தான் என்று கூறி அழுதான். எதிர்பாரா விஷயத்தைக் கேட்டவுடனே இராஜீயவர்த்த னுடைய மனம் எரியத் தலைப்பட்டது சிங்கம் தன்குகையில் கோபத்தால் உறுமுவதைப்போல அவன் உறுமினான். அவன் கண்களில் நெருப்புப் பொறிகள் பரந்தன. அவன் தன் இடக்கையால் தன் வலப் புயத்தைத் தடவி, தம்பிக்குக் கொடுக்கச் சித்தமாயிருந்த உடைவாளைக் கையில் இறுகப் பிடித்தான். அவன் தன் இளவலை நோக்கி, ஐய! மாளவ அரசனை அதம் செய்யச் செல்கிறேன். இதுவே எனது கடைசி யுத்தமாகட்டும். இதுவே எனது தர்மமாகவு மிருக்கட்டும். பாண்டி பெருஞ்சேனையோடு என்னைப் பின் பற்றி வரட்டும் நீ அரச பதவியை அட்டியின்றி யேற்று அரசாள்வாய். யான் போர்மேற் சென்று வருவேன் என்று கூறித் தனது யானை மீது பாய்ந்தேறினான். 7. கெட்ட குடியே கெடும் இராஜீயவர்த்தனன் தன் சேனைகளோடு நேரே கன்னோசியை நோக்கிப் புறப்பட்டான். வழியில் அவன் அனுப்பியிருந்த ஒற்றர்கள் வந்தனர். வந்து இராஜீயவர்த்தனன் படையெடுத்து வருவதைக்கேள்வியுற்றுப் பயந்த தேவகுப்தன், கன்னோசியை விட்டோடி, கௌட அரசர்களிடம் சரண்புகுந் திருப்பதாக கூறினர். அதன்பேரில், இராஜீயவர்த்தனன் தன் சேனையைக் கௌட மன்னர் நாட்டை நோக்கி நடத்திச் சென்றான். கௌடர்கள் இராஜீய வர்த்தனனை யெதிர்க்கவும் பயந்தனர். இராஜீயவர்த்தனன் தேவகுப்தனைக்கண்டு, அவனோடு கடும்போர் செய்தான்; அவனை முற்றிலும் தோற்கடித்துக் கொன்றான்: பகைவனுடைய சேனைகளைச் சின்னாபின்னமாக்கி, அவர்களிடமிருந்த பற்பல பொருள்களையும் ஆயுதங்களையும் பெற்றான், நூற்றுக்கணக்கான யானைகளும், அநேக புரவிகளும், நூற்றுக்கணக்கான தேர்களும், நவரத்தினங்களிழைத்த பிடியமைந்த வாளாயுதங்களும், பல ஆடையாபரணங்களும், சிங்காதனங்களும், தந்தக் கட்டில்களும், மற்றும் பல பொருள்களும் இராஜீயவர்த்தனனுக்குச் சொந்தமாயின. தேவகுப்தனுடைய வேலையாட்களும் வீரர்களும் சிறை செய்யப்பட்டனர். தனேசுவரப் படைவீரர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. யானைப்பாகரும் குதிரைப் பாகரும், தேர்ப்பாகரும், வேலையாட்களும் தத்தம் வயிறுபுடைக்க உண்டு, ஆனந்த மேலீட்டால், பேரிரைச்சல் இட்டுக்கொண்டு, கால்களை மாறிமாறித் தூக்கி நடனம் செய்தனர். வீரர்கள் ஒருவரை யொருவர் கட்டிக் கொண்டு ஆடினர். சிறந்த போர் வீரர்கள் மதுபானங்களை உட்கொண்டிருந்தனர். இராஜீயவர்த்தனன் தன் கூடாரத்தில் இருந்த கட்டிலில் அமர்ந்து, வருவோரிடம் களிப்போடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அவன், சிறப்புற்ற இராஜபுத்திர வீரன் யுத்தத்தைத் துறந்து, பௌத்த சந்தியாசியாதல் அத்துணைச் சிறப்பானதன்று என்று எண்ணினான். இராஜீயவர்த்தனன் உண்டு, களித்து இருக்கையில், வங்காளத்தரசனான நரேந்திரகுப்தன் என்போனால் அனுப்பப்பட்ட தூதன் ஒருவன் கூடாரத்தில் நுழைந்தான். நுழைந்து, இராஜீயவர்த்தனனைப் பன்முறைப் பணிந்து, அரசரேறே! எம்மரசர் அடியேன் மூலமாய்த் தங்கள் பொற்பாத கமலங்களைத் தொழுகின்றார். அவரது சிறு குடிலுக்குத் தாங்கள் எழுந்தருளி, ஓர் இரவு தங்கவேண்டுமென்று விரும்பு கிறார். தேவரீர் சித்தம் எப்படியோ என்று கூறி, கைகட்டி நின்றான். நரேந்திரகுப்தன், உண்மையாகவே இராஜீயவர்த்தனனை நல்லெண்ணத் தோடு விருந்திற்கு அழைக்கவில்லை, அவன் துர்ச்சனன், பொறாமை கொண்டவன். அவன் முன்னொரு முறை பிரபாகரவர்த்தனனால் தோற்கடிக்கப்பட்டவன். தந்தையைவிட இராஜீயவர்த்தனன் சிறந்த போர்வீரன் என்பது நரேந்திரன் அறிந்த உண்மை. ஆதலால் அவனை வஞ்சனையாகக் கொலை செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் அவன் மனத்தில்வேரூன்றியது. அதனற்றான், அக்கயவன் பணிவாகத் தூதன் மூலம் செய்தி சொல்லி யனுப்பினான். உண்மையறியாத களங்கமற்ற இராஜீயவர்த்தனன், நரேந்திரனது அடக்கமான மொழிகட்கு மகிழ்ந்தான்; அடுத்த நாள் விருந்திற்கு வருவதாகவும் வாக்களித்தான். இராஜீயவர்த்தனன் முன்பின் யோசியாது விருந்திற்குச் செல்வதாகக் கூறியதைக்கேட்ட பண்டி என்போன் மனம் வருந்தினான். நரேந்திரன் ஏதோ துன்பமிழைக்கவே பணிவொடு விருந்திற்கழைத்தான் என்று பண்டி சந்தேகித்தான். அவன் இராஜீயவர்த்தனனை நோக்கி ஐய! நரேந்திரன் பசுதோலைப் போர்த்த புலி, அவனுடைய இனிய வார்த்தைகள் எனக்குப் பிடிக்கவில்லை. ஏதோ சூது நடக்கப்போகிறது. நீ ஆத்திரப்பட்டு, முன்பின் யோசியாது வெளி வேடத்திற்கு மயங்கி, விருந்துண்ணச் செல்வதாக வாக்களித்து விட்டாய். நீ செல்லாது தங்கிவிடுவதே சாலச் சிறந்ததென்று என் புத்திக்குத் தோன்றுகிறது என்று கூறினான். அவன் கூற்றைச்கேட்ட இராஜீயவர்த்தனன், பண்டி! உண்மையான அரசகுலத்திற் பிறந்த எவனாகிலும், இறப்ப தற்குப் பயந்தான் என்று இதுவரை நீ கேள்விப்பட்டதுண்டா? சொன்ன சொல்லை எவனேனும் மாற்றினான் என்றாவது உன்னாற்சொல்ல முடியுமா? நண்ப! பிரபாகரவர்த்தனனுடைய மகன் இறத்தற்கு அஞ்சுவானோ? அற்ப எண்ணங்களும் சந்தேகங்களும் அவனது களங்கமற்ற மனதில் தோன்றுமோ? சாதாரண அரசனுக்கு இராஜீயவர்த்தனன் அஞ்சுபவனோ? என்னைப்பற்றி நீ கவலைப்பட வேண்டா என்று தன் அரசப் பிரதாபமும் தந்தையினது பெருமையும் விளங்கப் பேசினான். அதன்பேரில் பண்டி இராஜீயவர்த்தனனை நோக்கி, ஐயா! நீ வாக்குறுதி செய்தமையால் போகத்தான் வேண்டும். ஆனால், யானும் உன்னோடு வருகின்றேன். என்னைத் தடை செய்யாதே. உனக்கு யேதேனும் ஆபத்து நேருமானால் யான் பார்த்துக்கோள்வேன். நீ தனியே செல்லுதல் என் மனதுக்குச் சமாதானமாகவில்லை என்றான். அதுகேட்ட இராஜீய வர்த்தனன் சினங்கொண்டான். அவன் சினத்தோடு பண்டியைப் பார்த்து, ஐய! யான்மட்டும் சென்று மீள்வேன். நீ என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்; எனது சேனைகளைப் பாதுகாத்துக்கொண்டிரு. உனது ஐயத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிடு; ஏனென்றால், நரேந்திரகுப்தன் வெகு நல்லவன் என்பது அவனுடைய பணிவான வார்த்தைகளால் வெளியாகிறது. ஒருகால், நீ கொண்ட ஐயம் உண்மையானாலும், நரேந்திரனது அரண்மனையில் யான் இறந்துபட வேண்டு மென்று கர்மவினை விதித்திருந்தாலும், விதியை எவ்வாறு தடுக்கமுடியும்? நடப்பது நடக்கத்தான் வேண்டும். என்றைக் கிருப்பினும் இறப்பது நிச்சயமே யன்றோ? இறப்பதும் பிறப்பதுமே நமது தொழில் அல்லவா? உறங்கு வதுபோலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு -திருக்குறள் ஆதலின், என்னைமட்டும் தனியே போகவிடு என்னை அவன் கொன்னு விட்டானாயின், அவனைப் பழிக்குப் பழிவாங்க வேண்டுவது நின் கடமை. யான் உனது சொல்லை மீறிச் சென்று, துரோகத்தால் கொல்லப்பட்டாலும், நீ என்மீது வெறுப்புக் கொள்ளலாகாது; நரேந்திரனைக் கொன்று, அவனது நாட்டையும் நமது நாட்டோடு சேர்த்துவிடு. தம்பி ஹர்ஷ வர்த்தனனோடிருந்து, இராச்சிய போகங்களை யநுபவித்துக் கொண்டிரு என்று கூறினான். விருந்திற்குக் குறிப்பிட்ட நேரத்தில் இராஜீயவர்த்தனன் தன் யானைமீதமர்ந்து. சில வீரர்களோடு நரேந்திரனது அரண்மனையை யடைந்தான். அரண்மனை வாயிலில் நரேந்திரன் இருகைகளையும் தலைமேற் கூப்பி வரவேணும், வரவேணும் வரவேணும். ஐயனே! எமது தலைவனே வருக; இராஜீயவர்த்தனப் பிரபுவே, வருக என்று கூறிக்கொண்டே நிலத்தில் வீழ்ந்து வணங்கினான். அமைச்சர்களும் தளகர்த்தர் களும் அங்குமிங்கும் ஓடினார்கள். அரண்மைனயில் வரவேற்பு நடந்தது. வாத்தியங்கள் முழங்கின. அழகிய தேவமங்கையரை யொத்த இளநங்கைகள் பலர் இராஜீயவர்த்தனனைப் பணிந்து, கைலாகு கொடுத்து அந்தப்புரத்திற் கழைந்துச் சென்றனர். இராஜீயவர்த்தனன் தனக்கு நடந்த ஆடம்பரங்களைக் கண்டு, பெரிதும் மகிழ்ந்தான். மங்கையர் அவனை நீராடும் கட்டத்திற் சென்றனர்; வாசனை கலந்த பண்டங்களை அவன் உடம்பிற் பூசினர்; பனி நீர் கொண்டு நீராட்டினர்; சிறந்த ஆடையாபரணங் களைப் பூட்டினர். பின்னர், நரேந்திரகுப்தன் இராஜீயவர்த்தன னோடமர்ந்து, அறுசுவை உண்டியை அகமகிழ வுண்டான். இசைக்கருவிகள் மீட்டப்பட்டன. தேவலோக போகங்களை அனுபவித்தான் இராஜீயவர்த்தனன்; அயர்வு ஏற்பட்டுத் தான் வீற்றிருந்த தந்தக் கட்டிலிற் சாய்ந்தான்; நன்றாக உறக்கங் கொண்டான். நடு நிசியானதும் கபட நெஞ்சினான நரேந்திரன் உருவிய வாளோடு இராஜீயவத்தனனை நெருங்கினான்; அவன் நன்றாக அயர்ந்து தூங்குவதை யறிந்தான்; உடனே தன் உடைவாளால் அவனை இருகூறாக வெட்டிச் சாய்த்தான். என்ன நயவஞ்சகம்! உறக்கங்கொண்ட இராஜீயவர்த்தனன் துறக்கம் எய்தினான். 8. ஹர்ஷன் துயரமும் சபதமும் இராஜீயவர்த்தனன் கொலையுண்ட செய்தியைக் கேட்ட பண்டி மெத்தவும் மனம் வருந்தினான்; தான் கூறியதையும் கேட்காது சென்று, அநியாயமாகக் கொலையுண்டதை எண்ண எண்ண, அவன் மனம் துடித்தது; இத்துன்பச் செய்தியை ஓர் ஆள்வசம் ஹர்ஷவர்த்தனனுக்குச் சொல்லி யனுப்பினான். எதிர்பாரா விபத்தை கேட்ட ஹர்ஷன் பட்டபாடு நாம் கூறற்கியலாது. நரேந்திரகுப்தன் செய்த நயவஞ்சகச் செயலைக் கேட்டவுடனே, அவன் கண்களில் நெருப்புப் பொறிகள் பறந்தன; துக்கமேலீட்டால் அழுது புலம்பினன். அந்தோ! தாயை யிழந்தேன். தந்தையைப் பறிகொடுத்தேன்! மைத்துனன் கொல்லப்பட்டான்; தங்கை நரக வேதனையனுபவிக்கின்றாள். அவள் உயிரோடு இருக்கின்றாளோ, இல்லையோ அறியேன், அண்ணா! பகைவனைக் கொல்லச்சென்ற நீ உன் காரியம் முற்றுப்பெற்றதும் வந்து விடலாகாதா? பண்டியின் புத்திமதியை யாவது கேட்டிருக்கக் கூடாதா? ஐயோ, அண்ணா! நீ பகைவன் நயவஞ்சகத்திற்கு மயங்கி, அவன் அரண்மனைக்குச்சென்று, அநியாயமாகக் கொல்லப்பட்டாயே உன்னையன்றி யான் யாரைத் துணைகொண்டு அரசாள்வேன். என் ஆருயிர் அண்ணலே! போரினில் தேவகுப்தனைவென்று, பார் எனக்களிப்பாய் என்று உளம் பரிவு கூர்ந்தேன். நேர் உனக்கு ஒருவரில்லாய்! நீ அனியாயமாய்க் கொல்லப்பட்டனையே. நீ பகைவனுடன் போர்செய்த விதத்தையும் சேனையைச் சின்னாபின்னமாக்கிய விதத்தையும் போர் வீரர்களுடைய உறுப்புக்களைத் துணித்து, போர் நடாத்திய வரலாற்றையும் உக்கிரமுடன் என் முன்னே ஓடி வந்துரைசெய்யாயோ? நான் யாவரையும் தோற்றேன்! அஞ்சா நெஞ்சம் படைத்த நின்னையும் இன்று தோற்றேன். உன்னுடன் பொருந்தி வராது இன்னமும் இருக்கின்றேன் யான்; என் உயிர்க் கிறுதியுண்டோ? ஹூணர் கூட்டத்தாரைப் போரில் வென்று வெற்றி முரசம் ஆர்ப்பவந்து, என்னை மார்புறத்தழுவிய மன்னவா! இன்று, நீ முன்போல் எதிர் வரக் காண்கிலேனே! தந்திரம் யாவுமின்றித் தனித்து நீ தானாகவே போர்செய்து, நமக்கு அந்தரம் அமையும் என்பதாக எண்ணி, இவ்வகலிடம் துறந்தனையோ? ஐயா! மைந்துடன் நம்மைக்காண மைந்தன் வருகின்றான் என்று, விண்ணுலகத்தில் உள்ள நம் தந்தையார் ஏவ, உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ? ஒருவருடைய உதவியும் இன்றி ஒழிந்துயர் அழிந்த அண்ணா! நடு நிசியில் வஞ்சனையால் கொல்லப்பட்ட சுத்த வீரனாகிய நீ பொன்னகர் அடைந்தகாலை, உனது பேரமர் ஆண்மை கேட்டுத் தந்தையார் என் சொன்னாரோ? நீ தேவலோகத்தை யடைந்தபோது, அற்புதபடைகள் வல்லாய்! தேவர்கள் நினக்கு அமரர் ஊரும் கற்பகக்காவும், வானிற் கங்கையும் காட்டினாரோ? திளைத்த வெம் சமரில் நொந்து நமது மைந்தனது மேனி இளைத்தது என்று வருந்தி, நம் தாய் நினக்கு இன்னமுது ஊட்டினாளோ? அரசச் சின்னங்களை யடியோடு வெறுத்துத் தவசியாகவிருக்க நினைந்தனையே. உன் எண்ணம் நிறைவேறிற்று. இக்கர்ம பூமியில் நீ தவசியாக விருப்பதைக் காட்டிலும், பொன்னகரில் தவசியாக விருத்தல் சிறப்புடைத்து. உனது நற்குண நல்லொழுக்கங்களால் அச்சிறப்பினைப் பெற்றாய். அண்ணா! கொற்றவேந்தே! நீவிண்ணவந் நாட்டைந்தற்கு யான் மகிழ்ந்தாலும், என் நிலையை நினைக்கும்போது, நீ இறந்ததற்கு யான் வருந்தாமலிருக்க முடியவில்லையே! என் செய்வேன்? தந்தையிருந்த பதிதேடிக் குடியிருக்க நடந்தனையோ? இங்கு, வீற்றிருந்து அடியேன் அடி யருடப் புவியாள விதியிலா தாய்! என்று, பற்பலவிதம் தன் வருத்தம் தோன்றப் புலம்பிய யழுதான். பின்னர் அவன், செய்தி கொணர்ந்த வீரனை நோக்கி, வீரா! எனது தமையனார் பரிசுத்தமான யசோவதி தேவியின் திருவயிற்றிற் பிறந்தவர்; தன் தந்தையின் உபயபாதங்களை எப்போதும் இடைவிடாது துதிப்பவர்; மனம், வாக்கு, காயம் என்னும் முக்கரணங்களாலும் தூயதன்மையர்; வேண்டியவர்க்கு வேண்டுவதை ஈத்துவக்கும் செல்வர்; பகைவரை வெற்றி கொள்ளும் பான்மையுடையார்; பரம்பொருளை வழிபட்டு யாவர்க்கும் நன்மை செய்வதிலேயே நாட்டமுடையவர். எந்தச் சுத்த வீரனும் அவரைப்போரில் வெல்லமாட்டுவனோ? வஞ்சகத்தால் கொல்லப்பட்டார் என் தமையனார். இருக்கட்டும்; அந்த நரேந்திரகுப்தனைக் கொன்று, அவனது வம்சத்தைப் பழிக்குப்பழி வாங்குகின்றேன் என்று ஆவேசங் கொண்ட வனாய்க் கூறினான். மறுநாள் ஹர்ஷன் கொலுவீற்றிருந்தான். அப்போது அவனிடம் ஒருவன் வந்து பணிந்து, மன்னரே! இராணி ராஜேவரி, தன்னைச் சிறை மீட்க உங்களில் ஒருவரும் செல்லாததால் மனம் வெறுத்துச் சிறையினின்றும் தப்பியோடி, விந்திய மலைக் காட்டிற்குள் சென்றனராம் என்றான். அச்செய்தியைக் கேட்டதும் ஹர்ஷனுடைய கண்கள் இரத்தக் கண்ணீரைச் சொரிந்தன. அவன் அயர்ந்து அரியாசனத்திற் சாய்ந்தான். அப்போது, பிரபாகரவர்த்தனனின் சேனைத் தலைவன் எழுந்து, இளவரசே! உம்முடைய முதற் கடமையாவது, உமது தமையனை விரகாற் கொன்ற படுபாவியை நாசமாக்குவதேயாம். இராஜேவரிக்கு ஒரு கெடுதியும் நேரிடாது. அவள் புத்தமதக் கன்னியரோடு அறவுரை கேட்டுக்கொண்டிருப்பாள். அவளைப் பின்புத் தேடலாம். நயவஞ்சகமாக இராஜீயவர்த்தனரை யழைத்து, விருந்து செய்வித்து அவர் களங்கமற்றுத் தூங்குகையில், கொலைசெய்த கயவனையும் அவனது குடும்பத்தையும் இம்மண்ணுலகினின்றும் நீக்குவதே தற்போது நீர் செய்யவேண்டிய காரியமாகும். நீர் அவ்வாறு செய்யாவிடின் இறந்த உமது தமையனார் உம்மீது சினங்கொள்வார். நரேந்திரகுப்தன் கொல்லப்படவேண்டும். அத்துட்டனை என்ன செய்தாலும் என் மனக்கொதிப்பு அடங்காது. சுத்த வீரனாயின் எதிரில் நின்றல்லவோ போர் செய்வான். உண்மையில் அரச யோக்கியதை அற்ற அப் பதரைச் சும்மா விடலாகாது. ஆரசே! உமது ஆசனத்திலிருந்து உடனே எழும்; யானைமீதமர்ந்து செல்லும்; பகைவரை வேரோடு களையும் என்று கண்களில் நெருப்புப் பொரிபறக்கப் பேசினான். இரண்டாம் அமைச்சனும் அவனைப் பெரிதும் தழுவிப் பேசினன். ஹர்ஷவர்த்தனன் அம்முதியோனை நோக்கி, ஐய ! உமது ஆலோசனை மெத்தவும் நன்று. அதன்படி செய்யவேண்டுவதுதான். யான் அவ்வங்கநாட்டு மன்னவனை ஒரே வெட்டில் நடனுலகனுப்புவேன். எனது மனத்தில் குடிகொண்டிருந்த துயரம் எல்லாம், கோபமாக மாறிப் பொங்கி வழிகின்றது. சீற்றம் என்னைப் பிடர் பிடித்து உந்துகிறது. அவனது வம்சத்தையே அடியோடு ஒழிக்கவேண்டும். இன்றேல் எனக்கு அயர்ந்த உறக்கம் வாராது. பெரியீர் ! யான் பகர்வதைக் கேளும். எனது ஆருயிர் தந்தையார்மீது ஆணையிட்டுச் சொல்கின்றேன். சிறிது காலத்திற்குள் யான் பகை மன்னனையும் அவனது வம்சத்தாரையும் நசுக்காவிடின், எரியிடை மூழ்கி எனதாவியைத் துறப்பேன் என்றான். 9. வலைதப்பிய மான் அந்தோ! ஈசா! என்னை ஏன் பெண்ணாகப் பிறப்பித்தாய்? உலகத்தில் பெண்ணாகப் பிறந்து யான் பெற்ற பேறுதான் என்னே? பிரபாகரவர்த்தனரது ஆருயிர்ச் செல்வியாகப் பிறந்து வளர்ந்தேன். மங்கையரும் விரும்பும் பேரழகுடன் விளங்கினேன்; கிருகவர்மனை மணந்தேன்; பூமண்டலாதி பதியின் புதல்வியாகப் பிறந்து, புரந்தரனுக்கு மனைவியாகச் சிறிது காலம் வாழ்ந்தேன். என் கணவரும் காலன் என்னும் கண்ணிலியின்பாற் சென்றார். இனி யான் யாருக்காக உயிர் வாழ்வது? தாயோ, தந்தை யிறப்பார் என்பதை யுணர்ந்த அக்கணமே உயிர் நீத்தாள். அவள் அன்றோ கற்புக்கரசி! அவள் வயிற்றிற் பிறந்த பாவியேன், கணவன் இறந்து இத்தனை நாட்களாயும் உயிர் விட வகையறியாது வாழ்கின்றேனே! பாவி தேவகுப்தன் என் கணவரைக் கொன்றான். அவன் அவரைக் கொல்லுமுன் என்னைக் கொன்றிருக்க லாகாதா? நான் சுமங்கிலியாகச் சென்று என் கணவரை வானுலகில் வரவேற்றிருப்பேனே! புருடனை யிழந்த பூவையர் பூமியில் இருந்து பயன் என்ன? என் தமையன் மாரும் என்னை மீட்க வந்தாரில்லையே; அவர்களைப்பற்றிய செய்தி எனக்குக் கூறுவார் ஒருவரும் இல்லை. சென்ற ஏழு நாட்களாக இச்சிறையில் வாசம் செய்கின்றேனே! ஏ கருணாநிதி! இனி, இத்தகையத்துயரம் என்னால் தாங்க வியலாது, யான் பட்டதெல்லாம் போதும்; இவ்விதமான பயம்தீர்த்து அருள்வாய்; என் உடல் உயிர் ஆதியவெலாம் நீ யெடுத்துக் கொண்டு, உன் உடல் உயிர் ஆதியவெலாம் உவந்தெனக்கே யளிப்பாய், என் கண்மணியே! நடராச மணியே! எம் குலதெய்வமே! சிறுமியாகிய என்னைச் சோதனைக்குட்படுத்தல் உனது தடங்கருணைக் கழகல்ல; ஐயனே! அப்பனே! யான் மடமையேன்; என்னையேன் இவ்வாறு துன்பக்கடலுழ் ஆழ்த்துகின்றாய்? யான் கணவரை யிழந்து, தாய் தந்தையரை யிழந்து, உயிர்க் குயிரான சகோதரரையும் விட்டுத் தனியே பகைவனால் சிறையாக்கப்பட்டு நரகவேதனையை யனுபவிக் கின்றேன். என் செய்வது? இனி, யான் துயரப்பட்டு பயன் என்? இச் சிறையினின்றும் யான் எவ்விதத்திலாவது தப்பிச் செல்லவேண்டும். தப்பிய பின்னர், ஒன்று, தீக் குளிக்க வேண்டும்; இன்றேல், துறவியாக விடவேண்டும். இக் கொடிய தேவகுப்தனிடம் சிறையிருப்பதால் என்னென்ன தீங்குகள் விளையுமோ? என்று பலவாறு இராஜேவரி சிந்திக்கலானாள். ஒருநாள், இராஜேவரி ஒருவருமறியா வண்ணம் சாளரக் கம்பிகளை யறுத்து வெளிப்பட்டாள்; வெளிப்பட்டுச் செல்கையில் அவளுடைய தோழியர் சிலரைச் சந்தித்தாள்; அவர்களுடனே அதிவேகமாக கன்னோசிநகரைக் கடந்து சென்றாள்; பகற்பொழுதில் எங்கேனும் மறைந்தும், இராப் பொழுதில் வழி நடந்தும், சிலநாட்களில் விந்தியமலைச் சாரலையடைந்தாள். அதன் பின்னர்த் தன்னைப் பின்தொடந்து வருவோர் இன்மையால் அவள் மெல்ல நடந்தாள். விந்த மலைக் காட்டிற்குள் நுழைந்து, தன் சேடியருடன் இராஜேவரி நடந்துசென்று, காட்டுமனிதர்களான சாபிரா என்றவர்களைச் சுடும் காட்டுவழியாகப் போய்க்கொண்டிருந்தாள். சிறிதுதூரம் சென்றபின் அவள் சாபிரா வசிக்கும் கிராமமொன்றை யடைந்தாள்; ஒரு மேட்டின்மீது ஒரு சில குடிசைகள் ஒழுங்கின்றிக் கட்டப்பட்டிருந்தன. ஒரு குடிசையிலாயிலும் சாளரங்கள் காணப்படவில்லை. அப் பயங்கரமான காட்டில், துட்டர்களான வேடர்கள் வாசம்செய்யும் இடத்தைக் கண்டவுடனே இராஜேவரியின் உடல் நடுங்கியது. அஞ்சா நெஞ்சம் படைத்த வேடர்களின் வலையிற் சிக்குவதைக் காட்டிலும், வேறு எங்கேனும் தப்பிப்பிழைக்கலாம் என்று அரசமங்கை அவ்விடத்தினின்றும் தன் தோழியரோடு பின்னும் காட்டிற்குள் சென்றாள். ஓர் இடத்தில் ஆகாயமளாவும்படி புகை யுண்டாயது. அவ்விடத்தை நாடி இராஜேவரி நடந்தாள். புகையுண்டான தற்குக் காரணமாக விருந்தவர்கள் சில முனிவர்களே யாவர். அவர்கள் ஓமகுண்டத்தில் அக்கினியை வளர்த்து, மந்திரங்களை யுச்சரித்துக் கொண்டிருந்தனர். பின்னர் அம்முனிவர்கள் ஓர் ஆச்சிரமத்திற்குச் சென்றார்கள். இராஜேவரியும் தோழிய ரோடு அவர்களைப் பின்றொடர்ந்தாள். ஆச்சிரமும் வெகு, அழகாகக் காணப்பட்டது. அனேக சிறு குட்டைகள் காணப் பட்டன. ஆச்சிரமமத்தியில் சடாமுடியோடு விளங்கிய மகான் ஒருவர் யோக நிட்டையில் இருந்தார். முனிவர்கள் சென்று அம்மகானை வலம்வந்து வணங்கினர். இராஜேவரியும் தன்னை மறந்து ஆனந்தமேலிட்டால், இருகைகளையும் கூப்பி, விழிநீர் வர, மாரனை வெல்லும் வீர ! நின்னடி தீநெறிக் கடும்பகை கடிந்தோய் ! நின்னடி பிறர்க்கற முயலும் பெரியோய் ! நின்னடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் ! நின்னடி பெண்பிறக் கொழிய விறந்தோய் ! நின்னடி கண்பிறர்க் களிக்குங் கண்ணோய் ! நின்னடி தீமொழிக் கடைத்த செவியோய் ! நின்னடி வாய்மொழி சிறந்த நாவோய் ! நின்னடி நரகர் துயர்பட நடப்போய் ! நின்னடி யுரகர் துயர மொழிப்போய் ! நின்னடி வணங்குத வல்லது வாழ்த்தலென் னாவிற் கடங்காது. -மணிமேகலை என்று துதித்து மகானை வணங்கினாள். அவர், தம் அருட் கண்களால் அவளை நோக்கி அம்மா! நீயாவள்? நீ இங்குற்றதென்ன? உன் வரலாற்றைச் கூறுவாய் என, இராஜேவரி தன்வரலாற்றைக் கூறினாள். அதன் பின், பெரியார் அவளுக்கு உணவு அளித்து. குழந்தாய்! இங்கிருந்துச் சிறிது தூரம் சென்றாயாயின், புத்தமதக் கன்னிகைமார் வசிக்கும் சூழலைக்காண்பாய்; அவர்களோடு அளவளாவி உன் வாழ்நாட்களைக் கழித்து, மறுபிறப்பில் நின் கொழுநனைப் பெறுவாய். கவலையை ஒழிக என்று ஆசிர்வதித்தனுப்பினர். இராஜேவரியும் தோழிமாரும் அப்பெரியார் அடிகளைத் தொழுது விடைபெற்று, அவண் நீங்கிச் சென்றனர். அவர்கள் சில நாட்கள் வழி நடந்த பின்னர் ஓர் இடத்தில் சில வேடர்களைக் கண்டார்கள். அவ்வேடர்களின் தலைவன் இராஜேவரியையும் தோழிப்பெண்களையும் கண்டவுடன், அவர்களிடம் ஓடி வந்தான். அவன் உயரமுள்ளவனாகவும் கருத்துப் பருத்த மேனியோடும் இருந்தான். அவன் அதிக தூரத்தில் மரியாதை யாக நின்று கொண்டு இராஜேவரியை நோக்கி, அம்மணி! உங்களைக் கண்டதும் எனது ஆட்களைப்பின்னே விட்டு விட்டு உங்களிடம் ஓடிவந்தேன். நீங்கள் ஏதோ பெருந் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறது. உதவி எது வேண்டுமாயினும் யான் செய்யக் காத்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் அரசகுமாரியாகக் காணப்படுகிறீர்கள். வேடர்களான எங்கட்கே தகுதியான இக் கொடிய காட்டில் நீங்கள் வர நேர்ந்ததென்ன ? நீங்கள் யார் ? உங்கள் பின்னே நிற்கும் பெண்மணிகள் யார் ? என்று வெகுவினயத்தோடு வினவினான். இராஜேவரி தன் வரலாற்றைத் தெளிவாக வேடர் தலைவனுக்குக் கூறினாள். வேடர் தலைவன் வருந்தி, அம்மணி! இன்று யான் ஒரு சந்நியாசியைக் கண்டேன். அவரோடு யான் பேசிக்கொண்டிருக்கையில் அவர், இராஜீயவர்த்தனர் உங்கள் பகைவனான தேவகுப்தன்மீது படையெடுத்துச் சென்று அவனைத் தோற்கடித்து வென்றதாகவும், பின்னர் நரேந்திர குப்தன் விருந்துண்ணச் சென்றதாகவும், அங்கு நரேந்திரனால் இராஜீயவர்த்தனர் கொலையுண்டதாகவும் கூறினார். உங்கள் பகையாளி உங்களைக் கண்டுபிடியா வண்ணம் நீங்கள் நடுகாட்டிற்குச் செல்வதே நல்லது. அம்மணி! இவ்வழியே செல்லுங்கள். காட்டின் நடுவிடத்தை யடையலாம். அங்கு ஒரு மனிதனாலும் உங்களைக் கண்டுபிடிக்க வியலாது என்றான். இராஜேவரி வேடர் தலைவனிடம் விடைபெற்றுத் துயரம் அதிகரித்தவளாய்ப் பின்னும் நடக்கலானாள். 10. தங்கையைத் தேடப் புறப்படுதல் நரேந்திரகுப்த சசாங்காவால் கொல்லப்பட்ட இராஜீயவர்த்தனனுக்குப் பின்னர், அரசியலை ஏற்போர் யாவர் என்பது சிறிதுகாலம் தெரியாதிருந்தது. அச் சிறிதுகாலத்திற்குள் இராச்சியம் சீர்குலையும் போல இருந்தது. அவ்வமயம் அமைச்சர்கள் ஒன்று கூடிப் பண்டியின் ஆலோசனையைக் கேட்டனர். பண்டி, ஐயன்மீர்! இராஜீயவர்த்தனன் இறந்து பட்டதால், அவன் இளவலான ஹர்ஷவர்த்தனனை அரசனாக் குங்கள். அவனே மணிமுடி புனைந்து கொள்ளுதற்கருகன் என்றான். உடனே, அமைச்சரும் குறுநில மன்னரும் ஹர்ஷனை யணுகித்தங்கள் விருப்பத்தைக் கூறினர். ஹர்ஷவர்த்தனன் எக் காரணத்தாலோ அரச உரிமையை ஏற்க முன்வரவில்லை. எல்லா நாடுகளையும் வென்று அதன் பின்னர், மணிமுடி புனைந்துகொள்ளலாம் என்பது அவன் எண்ணம்போலும்! அவன் பிரியப்படா திருந்தும், நகரத்தார் வேண்டுகோளின்படி மணிமுடி புனைந்துகொள்ள இசைந்தான். அவன், தன் வழிபடு கடவுளின் ஆலோசனையைக் கேட்டதாகத் தெரிகிறது. அக் கடவுளும் அவனை அரசனாக விருக்கும்படி கூறி யாசீர்வதித்தது. அதன் பின்னர், கி. பி. 606-ல் ஹர்ஷன் இராச்சிய பாரத்தை வகிக்க இசைந்தான். பரசுராமன் அரசவர்க்கத்தினரை அடியோடு அழிக்க விரதம் பூண்டாற்போல ஹர்ஷன் கௌட மன்னர்களை அடியோடு ஓழிக்க விரதம் கொண்டான். அவன் தன் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர்களை வரவழைத்தான். அவர்களும் ஒருவர்பின் ஒருவராக வந்து ஹர்ஷனது அடிகளில் முடிபட வணங்கினர். வணங்கி, அரசிளங் சிங்கமே ! யாமும் எமது போர் வீரரும் தங்கள் அடியால் இட்ட கட்டளையை முடியால் செய்யக் காத்துக்கொண் டிருக்கிறோம் என்றனர். இவ்வாறு, சிற்றரசர் யாவரும் வாக்குரிமை செய்தபின்னர் ஹர்ஷவர்த்தனன் தன் பட்டத்துயானை மீதேறினான். சுபமுகூர்த்ததில் தன் நாற்படையும் சூழச் சிற்றரசர்கள் பின்தொடர ஹர்ஷன் தான் வழிபடு கடவுளர்களான சிவபிரான், சூரியன், புத்தன் முதலியோரைத் த்யானித்தவண்ணம் சென்றான். யானைகள் கூக்குரலிட்டு ஓடின. புரவிகள் கனைத்துக் கொண்டு ஓட்ட மெடுத்தன. காலாட்கள் புதியபோரை விரும்பி ஒருவரோடு ஒருவர் களிப்புறப் பேசிக்கொண்டு நடந்தனர். வழி நடந்த களைப்பால் ஹர்ஷன் தன் படையோடு கங்கைக்கரையில் தங்கினான். அப்போது, காமரூபதேச பாகர வர்மன் விட்ட அம்சவேகன் என்போன் ஹர்ஷனைக்காண விரும்பினான். காவலாளிகள் அதனை ஹர்ஷனுக்கறிவித்தார்கள். ஹர்ஷன் அம்சவேகனை உள்ளேவரக் கட்டளையிட்டான். அம்சவேகன் ஹர்ஷன் முன்வந்து அவனுடைய உபய அடிகளை வணங்கி நின்றான். ஹர்ஷன் அவன் முதுகின்மேல் தன் கையை வைக்க, அம்சவேகன் மறுமுறை ஹர்ஷனை வனங்கினான். அப்போது ஹர்ஷன் அவனை நோக்கி அன்பனே! குமாரராஜர் சௌக்கியமா என்றான். அம்சவேகன் வணக்கமாக, அரசே! தாங்கள் அன்போடு விசாரிக்கையில், எம்மரசற்கு யாது குறையுளது? அவர் தங்கள் ஆசீர்வாதத்தால் சௌக்கியமாகவே யிருக்கியார். தங்கள் வருகைக்கு அவரால் அளிக்கத்தக்கது அவருடைய அன்புமயமான வணக்கமேயன்றி, வேறுயாதுளது? அவ்வாறிருந்தபோதினும், அவரது மூதாதைகளால் நெடுங்கால மாகப் பாதுகாக்கப்பட்டுவரும் வருணக்குடையைத் தங்கள் பொற்பாத கமலங்க ளண்டையில் காணிக்கையாக வைக்கச் சொன்னார். யான் தங்களிடம் கூற வேண்டுவது ஒன்றுண்டு. அதனைத் தனியே தங்களிடம் கூறவேண்டும் என்று எம்மரசர் கட்டளையிட்டுள்ளார், என்று வணக்கத்தோடு கூறினான். அவன் பரிசாகக் கொடுத்த குடையானது வெகுவாய்ச் சித்தரிக்கப்பட்டிருந்தது. குடையே யன்றிப் பின்னும் பலவிதமான உயர்ந்த பரிசுகள் வந்திருந்தன. ஹர்ஷன் யாவற்றையும் அன்போடு பெற்றுக் கொண்டான். அன்று மாலை ஹர்ஷவர்த்தனன் தனித்திருக்கையில் அம்சவேகன் அவனை யணுகி அரசரேறே! எம்மரசர் பாகரவர்மன் தங்களோடு நட்புக்கொள்ள விரும்புகின்றார். அந் நட்பு நீடித்தகாலம் இருக்க வேண்டுமாம். அதாவது, தனஞ்சயன் கண்ணனோடு சிநேகங்கொண்டு அவன் உயிர் நீங்கும்வரையிலும் பிரியாதிருந்ததுபோல, தங்களோடு நட்புரிமைகொள்ள ஆசிக்கின்றார் என்றான். ஹர்ஷன் அது கேட்டு உள்ளங்களித்தான். ஐயா! பாகரவர்மன் அன்பின் மயமாகக் காணப்படுகிறார். அத்தகைய உத்தமரோடு சிநேகங் கொள்ள யாருக்குத்தான் மனம்வாராது? அவரது நட்பை வெறுக்க யாரால் ஆகும்? அவரையும் அவரது நட்பையும் எப்போதும் யான் விரும்புகிறேன்; அவரைவிட்டுப் பிரியேன். அவரை முழுமனத்துடனும் சகோதர அன்போடும் தழுவிக் கொள்ள விரும்புவதாகக் கூறும் என்றான். பிறகு ஹர்ஷன் பாகரவர்மனுக்குப் பல வெகுமதிகளைக் கொடுத்தனுப்பினான். மறுநாள் பண்டியிடத்திலிருந்து ஹர்ஷனுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பண்டி விரைவில் வந்து தன்னைக் காண்பதாக எழுதப்பட்டிருந்தது. பண்டியும் பெரும்படையுடன் மாளவ தேயத்தினின்றும் வந்தான். அவன் இராஜீயவர்த்தனனோடு, தேவகுப்தனைத் தாக்கச் சென்றவன் அல்லவா? அவன் இராஜீயவர்த்தனன் இறந்த பின்னர் தனேசுவரத்தை நோக்கித் திரும்பினான்; திரும்பி வருகையில், ஹர்ஷன் கங்கைக்கரையில் இருப்பதாகக் கேள்வியுற்றான்; அதனால், ஹர்ஷனைச் சென்று கண்டான், பண்டி ஹர்ஷனைக் கண்டதும், தன் குதிரை யினின்றும் கீழிரங்கி, நிலத்தில் வீழ்ந்து ஹர்ஷனைப் பணிந்தான். பின்னர், இருவரும் ஒருவரையொருவர் மார்புறத் தழுவிக் கோ வென்றலறிப் புலம்பினர். அவர்களின் துயரம் சற்றுத்தணிந்த பின்னர் பண்டி, தான் போன செய்தியையும், இராஜீயவர்த்தனன் கொலையுண்ட வரலாற்றையும் ஹர்ஷனுக்கு விவரமாக எடுத்துக் கூறினான். முடிவில், ஹர்ஷன் இராஜேவரியைப் பற்றி வினவ. பண்டி, அவள் சிறையினின்றும் தப்பி விந்தமலையைச் சார்ந்த காட்டிற்குள் ஒளித்துக்கொண்டதாகக் கேள்வியுற்றேன். சில ஆட்களையனுப்பித் தேடச் செய்தேன். அவள் அகப்பட வில்லை என்றான். உடனே ஹர்ஷன் சகோதரியினிடத்தன்பு மேலிட்டவனாய், அந்தோ! எங்குச் சென்றாள் என் ஆருயிர்தங்கை? அவளைக் கண்டு பிடிப்பதே எனது முதல் வேலையாக விருக்கட்டும். நீ என் படையை அழைத்துச் சென்று கௌடதேயத்தரசனைப் பழிக்குப்பழி வாங்குவாய் என்று கூறினான். மறுநாள் ஹர்ஷவர்த்தனன் தன் குதிரை மீதேறிக் சகோதரியைத் தேடப் புறப்பட்டான். 11. சகோகரி அன்பு விந்தமலைக் காட்டின் நடுவிடம் வெகு அழகாக விருந்து. அந் நடுவிடத்தில், பெருங்கட்டைகள் எரிந்துக்கொண்டிருந்தன. நெருப்புச்சுவாலை வானத்தையளாவி உயர்ந்தது. அருகேயிருந்த மரங்களும் நெருப்புப்பற்றி யெரிந்தன. அங்கு உண்டான புகை அக்காடு முழுவதையும் சூழ்ந்து கொண்டது. காட்டில் வாழ்ந்த விலங்குகள் புகையைக் கண்டு நாலாபக்கங்களிலும் ஓடத்தலைப் பட்டன. நெருப்பிற்குப் பின்புறம் சில பெண்மணிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் யார்? அவர்கள் தாம் இராஜேவரியும் அவளுடைய தோழிகளும். தான் பட்ட துன்பங்களை யெண்ணி யெண்ணி மெய் சோர்ந்தாள் இராஜேவரி. தான், இனி உயிர் பெற்றிருப்பதைவிட தீக்குளித்திறப்பதேமேல் என்று நிச்சயம் கொண்டவளாய், அவள் தீயை வளர்த்தனள். அவள் தோழிமார் எத்துணை எடுத்துக் கூறியும், அவள் கேட்கவில்லை. இங்கு இவ்விதம் இருக்க, ஹர்ஷவர்த்தனன் தங்கையைத் தேடிப் புறப்பட்டான் என்று, சென்ற அத்தியாயத்திற் கூறினோம் அல்லவா? அவன் நேராக விந்தமலைக் காட்டையடைந்தான்; காட்டில் ஒரு வேடனைச் சந்தித்தான்; அவனைத் தன் தங்கையைப் பற்றி விசாரித்தான். வேடன் தனக்கு இராஜேவரியைப்பற்றி ஒன்றும் தெரியாதென்றும், காட்டினுள் சென்றால் அந்த புத்த முனிவர்களிடமிருந்து ஏதேனும் அறியலா மென்றும் கூறினன். ஹர்ஷவர்த்தனன் உடனே தன் குதிரை மீதேறி, காட்டிற்குட் சென்றான்; நெடுந்தூரம் சென்றதும் பல புத்தமுனிவர்கள் வசிக்கும் ஆச்சிரமத்தைக் கண்டான். ஹர்ஷன், தன் குதிரை யினின்றும் இறங்கி, அவர்களை பணிந்தான். தன் வரலாற்றைக் கூறித் தன் தங்கையை யவர்கள் பார்த்ததுண்டோ வென்று கேட்டான். அப்போது, ஒரு பௌத்த சந்நியாசி அங்கு ஓடோடியும் வந்தார். வந்து, தனது குருவை வணங்கி, சுவாமி! ஒரு பெண்மணி யேதோ காரணத்தால் தீயில் விழ ஆயத்தமா யிருக்கின்றாள். அவளைச் சுற்றிலும் சில பெண்கள் கூடியிருக் கிறார்கள். அவள் ஓர் அரச குமாரியாகக் காணப்படுகிறாள் என்றார். அதுகேட்ட ஹர்ஷன், ஆ! அவள்தான் என் தங்கை; ஐய! என்னை அங்கு விரைவாக அழைத்துச் செல்லும், செல்லும் என்று கூறித்துடித்தான். அக்கணமே இருவரும் புறப்பட்டனர். அம்மா! இராஜேவரி! உனது இளைய தமையனார் வருவார் என்று எங்களுக்குத் தோன்றுகிறது. நீ சற்றுத்தாமதம் செய்தாயானால் நல்லது என்று தோழியர் அழுதுகொண்டே கூறினர். அப்போது இராஜேவரி, தோழிகள்! இந்த நடுவிடத்திற்கு ஒருவரும் வாரார். என் சகோதரர் என்னை எங்குக் கண்டு தேடுவார். அவர் நாட்டை விட்டு வருவாரோ? ஒருகாலும் வரமாட்டார். என்னை ஏன் தடைசெய்கிறீர்கள்? புருடனைப் பிரிந்த பூவை இவ்வுலகில் இருந்து பயன் என்ன? என்னை வற்புறுத்தாதீர்கள் என்று கூறிக்கொண்டே, இரண்டுமுறை தீயை வலம் வந்தாள்; மூன்றாம் முறை சுற்றி வந்து அக்கினியில் விழப் போனாள். அவ்வமயம், இராஜேவரி என்று அழைத்துக்கொண்டே ஹர்ஷவர்த்தனன் ஓடி வந்தான். கூவிக்கொண்டு வருவது யார் என்று எண்ணி, தீக்குளிக்க ஆயத்தமாயிருந்த இராஜேவரி சத்தம் வந்த திக்கை நோக்கினாள். தன் சகோதரன் ஆருயிர்ச் சகோதரன் நாட்டையும் சுகத்தையும் ஒழித்துத் தன்னைத் தேடிவந்த சகோதரன் ஹர்ஷவர்த்தனனைக் கண்டாள். வரமாட்டான் என்று எண்ணிய சகோதரன் வந்ததைக் கண்டதும் அவள், இழந்தமணி புற்றரவெ திர்ந்ததென் லானாள் பழந்தனமி ழந்தனப டைத்தவரை யொத்தாள் குழந்தையை யுயிர்த்தமல டிக்குவமை கொண்டாள் உழந்துவிழி பெற்றதொ ருயிப்பொறையு மொத்தாள். -கம்பராமாயணம் அவள், அண்ணா! அப்பா! நாதா! என்று அலறிக் கொண்டே ஹர்ஷனைத் தழுவிக்கொண்டு மூர்ச்சையானாள்; பின்னர், மூர்ச்சைதெளிந்து எழுந்தாள். ஹர்ஷன் அவளைமெல்ல அழைத்துச்சென்று புத்தமுனிவரது ஆச்சிரமத்தை யடைந்தான். புத்தமுனிவர் சகோதரனையும் சகோதரியையும் முகமன் கூறி வரவேற்றார். இருவரும் நீராடி, ஆச்சிரமத்தையடைந்து முனிவரால் அளிக்கப் பட்ட உணவை யுண்டு பசியாறினர். பின்னர், ஹர்ஷன் தவசியாருடன் உரையாடிக் கொண்டிருந்தான். அவ்வமயம் இராஜேவரியின் அந்தரங்க தோழி ஹர்ஷனை யணுகி, ஐய! நும் தங்கை பிக்ஷுணியாக விரும்புகின்றாள் என்றாள். இச் சொற்களைச் செவியுற்ற ஹர்ஷன் பெரிதும் கலக்கமெய்தி, தன் தங்கையைத் தவசியின் முன்னர் வரச் செய்தான். அவன் தங்கையை நோக்கி, சகோதரியே! இது என்னவேடம்? இதன் அர்த்தமென்ன? என்றான். அவள் அண்ணா! நான் என் கணவனோடு சேர விரும்பி எரியில் விழச்சென்றேன். அதனை நீர் தடுத்து அழைத்துக்கொண்டு வந்தீர். எனக்கு என்ன சுகம் இவ்வுலகில் இருக்கிறது? யான் தவவிரதம்பூண்டு பிக்ஷுணியாக என் வாணாட்களைக் கழிக்க விரும்புகிறேன் என்று விடை பகர்ந்தாள். ஹர்ஷன் தங்கையை யன்போடு நோக்கி, அம்மா! தங்காய்! நமது அண்ணா இராஜீயவர்த்தனர் உலகபோகங்களைத் துறந்து தவசியாக விரும்பினார். அவர் விரும்பிய அக்கணமே போர்மேற் செல்ல நேர்ந்தது; சென்ற விடத்தில் கொலையுண்டார்; வீரர்கள் அனுபவிக்கும் வீர சுவர்க்கத்தை யடைந்தார். நீயோ சிறுமி; உலக அனுபவம் அற்றவள். நீ என்னுடன் சிறிது காலம் துணையாக இருக்கவேண்டும். நான் இவ்வுலக முழுவதையும் வென்று ஒரு குடைக்கீழ் ஆள்வதாகச் சபதம் செய்துள்ளேன். பெற்றோரையும், தமயனாரையும் இழந்து வருந்தும் என்னை நீயும் விட்டகன்றால் எனக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவார் யாருளர்? என்று கூறினான். ஆனால், இராஜேவரியோ கணவனை யிழந்த என் கண்களுக்கு இவ்வுலகிற் சுகமேது ? என்று முடிவாகக்கூறித் தனது எண்ணத்திற்கு மாறு கூறாதிருக்கும்படி தனது தமையனை வேண்டினாள். இவர்களின் சம்பாஷணையைக் கவனித்து வந்த முனிவர், இருவரையும் நோக்கி மெதுவாக இனிய குரலில், துயரம் என்பது உயிரை வருத்தும் பேய் என்னலாம். அது ஒரு காலத்திலும் இறந்துபடாத நெருப்புச் சுவாலை. முற்றும் உணர்ந்து முற்றும் துறந்த மூதறிஞராலும், அதனைப் போக்க முடியாது. இவ்வுலகில் இறப்பு பிறப்பு என்ற இரு உருளைகளும் மாறி மாறி வருகின்றன. அவை நிற்கப்போவதில்லை, சீதோஷ்ணத்தையும் சுகதுக்கங்களையும் அளிக்கிற பிரகிருதியின் சந்திப்புக்கள் தோன்றி மறைகின்றன. அவை சாசுவத மற்றவை. அவைகளை நாம் தைரியமாகச் சகித்துக்கொள்ளவேண்டும். இளமையு நில்லா ; யாக்கையு நில்லா ; வளவிய வான்பெருஞ் செல்வமு நில்லா ; புத்தே ளுலகம் புதல்வருந் தாரார் ; மிக்க வறமே விழுந்துணை யாவது. -மணிமேகலை தேகி எவ்விதம் இவ்வுடலில் குழந்தைப் பருவம், வாலப்பருவம், வார்த்திகப்பருவம் இவைகளை யனுபவிக்கின்றனோ, அவ்விதமே மற்றொரு உடலிலும் புகுகின்றான். தைரியசாலிகள் இவ்விஷயத்தில் துக்கப்படுவதில்லை. ஆன்மா என்றும் அழியாதது. அது இறப்பதுமில்லை; பிறப்பதுமில்லை; ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லாமற் போவதும் பிறப்பற்றதும் நாசமற்றதும் சாசுவதமானதுமான ஆன்மா, உடல் அழிந்தாலும் தான் அழிவதில்லை. மனிதன் ஜீரணமாய்ப்போன உடைகளை எறிந்து விட்டுப் புது உடைகளை எடுத்துக்கொள்வது போலத் தேகியும் ஜீரணமாய்ப்போன சரீரங்களை எறிந்துவிட்டுப் புதிதான வேறு உடல்களிற் புகுகின்றான். அம்மா! இராஜேவரி! உனது மென்மையான மனத்தை வீணாகத் துன்புறுத்திக் கொள்ள வேண்டா. உனது தமையனார் ஹர்ஷவர்த்தனர் இப்போது உனக்கும் தந்தையைப் போலும், குருவைப் போலும் உள்ளார். அவர் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடத்தல் உனது முதற் கடமையாகும். இறந்தவரைக் குறித்து வருந்துவதாற் பயன் ஏன்? ஆனால் அறத்தைக் கைப்பிடித்து உனது காலத்தை நன்னெறியிற் கழிக்க நீ கொண்டிருக்கும் உன் மன உறுதியை மெச்சுகின்றேன் என்று பரிவுடன் கூறினார். இம்மொழிகளைக் கேட்ட இராஜேவரி பெரியாரைப் பணிந்து, சுவாமி! தங்களுடைய அறமொழி களே மானிட வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை நன்கு விளக்கு கின்றன. தயை கூர்ந்து தாங்கள் அடியாளுக்குப் பௌத்த தருமத்தைப் போதித்து யான் நற்கதி பெறும்படி யருளல்வேண்டும். என்று வேண்டினள். தன் சகோதரியின் மனப்பான்மையை யறிந்த ஹர்ஷனும் யாது செய்வதெனத் தோன்றாது, புத்த முனிவரை நோக்கி, பெரியீர்! யான் படையெடுத்துச் சென்று, அரச நீதியைக் கடந்து நடக்கும் அரசர்களைமூர்த்தியைப்போல அவர்களையழித்துவரச் சபதம் செய்துள்ளேன். யான் சென்ற சில மாதங்களாகத் தர்மத்தைப் பற்றிய விஷயங்களை யடியோடு மறந்துவிட்டேன். தேவரீர் சில நாட்கள் என்னுடைய இராஜ்யத்தில் வந்திருந்து எங்களுக்கு அறத்தைப்பற்றி உபதேசிக்க வேண்டுகின்றேன் என்றான். அதற்கு முனிவர் முகமலர்ச்சியோடு உடன் பட்டார். பின்னர், ஹர்ஷன் சகோதரியோடும் தோழியரோடும் முனிவர் இருக்கையை விட்டுப் புறப்பட்டு நாட்டை நோக்கிச் சென்றான் ஹர்ஷவர்த்தனனும் இராஜேவரியும் நகரை நோக்கி வருவதைக் கேள்வியுற்ற தனேசுவர மக்கள், நகரை யலங்கரித்தனர். மக்கள் யாவரும் மகிழ்ச்சியடைந்தார்கள். முரசங்கள் அதிர்ந்தன. அந்தணர் வேதமோதினர். எங்கும் மங்கல வாழ்த்துக்கள் பாடப்பட்டன. மக்கள் பல்வகைத் தோரணங் களைத் தெருக்களில் கட்டினார்கள். அரசனும் அவனது தங்கையும் நகருள் நுழைந்தனர். அமைச்சர்கள் தொழுது போற்றி வரவேற்றனர். அரண்மனைப் புரோகிதன் திருநீற்றை மந்திரங்களோதி அரண்மனைச் சுவர்களில் தெளித்தான். குடிகள் ஹர்ஷவர்த்தனன் நீடூழி வாழ்க எம் வேந்தனது வெற்றியும் வாழ்வும் பெருகுக என்று வாழ்த்தி மகிழ்ந்தனர். 12. போர்ச் செய்திகள் ஹர்ஷன், தங்கையை மீட்ட பின்னர், வட இந்தியாவைத் தன் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டுமென்று விரும்பினான். அதற்காக, அவன் பல அரசர்களோடு போர்புரிய வேண்டி யிருந்தது. அதன் பொருட்டு அவன் ஒருபடையைத் தயாரித்தான். போருக்குப் புறப்படுமுன் அவனிடம் 5,000 யானை வீரர்களும் 20,000 குதிரை வீரர்களும், 50,000 காலாட்களும் அடங்கிய பெரும்படை இருந்தது. ஹர்ஷன் முதன்முதலில் பாஞ்சாலம், கன்னோசி, வங்காளம், மிதிலை, ஒரிஸா என்ற ஐந்து நாடுகளையும் வென்றான். அந்நாடுகளின் மன்னர்கள் ஹர்ஷனுக்குக் கீழ்ப்படிந்தனர். அவர்கள் தங்கள் சேனைகளையும் தளகர்த்தர் களையும் ஹர்ஷனுக்கு உதவியாக அனுப்பினார்கள். ஹர்ஷன் பெரும்பாலும் வட இந்தியா முழுவதையும் தன் ஆட்சிக்குட் படுத்தினான். அப்போது அவனிடம் 60,000 கரிவீரரும், 100,000 பரி வீரரும் அடங்கிய படை ஏற்பட்டது. ஹர்ஷன் படையெடுத்த காலத்தில் வாலபி என்ற நாட்டை துருவசேனன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் தன் அதிகாரத்திற்கு உட்படான் என்பதை யறிந்ததும் ஹர்ஷன் அவன்மீது போருக்குச் சென்றான். போர் கடுமையாக நடக்கும் என்பதை யுணர்ந்தான் துருவசேனன். மகா வீரனான ஹர்ஷவர்த்தனனுக்கு முன் நின்று வெல்வது தன்னாற் கூடிய காரியம் அல்லவென்று அவன் எண்ணினான். முடிவாக அவன், ஹர்ஷனிடம் போர்புரியாமல் ஓடி விடுவதே சிறந்தது என்று நிச்சயித்தான். தான் நிச்சயித்தபடியே துருவசேனன் பரோச் (Bhoroch) நாட்டை நோக்கி ஓடினான்; ஓடி பரோச் நாட்டரசனிடம் சரண்புகுந்தான். ஹர்ஷன், வாலபிநாட்டை யடைந்ததும், அரசன் நாட்டைவிட் டோடியதை உணர்ந்தான். பரோச் நாட்டரசன் சாளுக்கிய குல திலகனான இரண்டாம் புலிகேசி என்பானது நண்பன். அவனது உதவியைக்கொண்டு ஹர்ஷனை எதிர்க்கலாம் என்பது துருவசேனன் எண்ணம் போலும்! பின்னர், எவ்வாறோ துருவசேனன் ஹர்ஷனுடன் சமாதானம் செய்து கொண்டான். ஹர்ஷன் தன் மகளை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். ஆகவே, துருவசேனன் ஹர்ஷனது மருமகனாகி விட்டான். வடநாடு முழுவதையும் கைப்பற்றிய பின்னர் ஹர்ஷன் கி. பி. 612-ல் மணிமுடி புனைந்தான். ஹர்ஷன் ஆரியவர்த்தம் முழுவதையும் தனது ஆட்சிக் குட்படுத்தியதோடு திருப்தி யடையாமல் தென்னாட்டையும் கைப்பற்ற விருப்பங்கொண்டான் அதனால், ஹர்ஷன் மகத்தான பெரும்படை யொன்றுடன் புறப்பட்டு, கி. பி 620-ல் தக்கணத்தின் மேல் போருக் கெழுந்தான். அதுகாலை, தக்கணம் முழுவதையும் தனிக்குடையில் அரசாண்டு கொண்டிருந்தவன் இரண்டாம் புலி கேசி என்னும் சாளுக்கிய மன்னன். அவன், ஹர்ஷன் வடநாட்டில் பெரும் சக்கிரவர்த்தியாக விளங்கியதுபோலத் தக்கணத்தில் விளங்கினான். அத்தகைய மன்னவன் ஹர்ஷனுக்கு இடங்கொடுப்பனோ? ஹர்ஷன் தக்கணத்தை நோக்கிப் படையெடுத்த போது, புலிகேசி கிழக்கு நாடுகளைக் கைப்பற்றச் சென்றிருந்தான். ஹர்ஷன் தக்கணத்தை நோக்கிவரும் செய்தி யறிந்ததும், அவன் தன் பெரும்படையுடன் வடக்கே வந்து சேர்ந்தான். அவன் தபதி நதிக்கும் நர்மதைக்கும் இடையில் தன் சேனைகளை நிறுத்திக் பெரும்படையோடு வரும் வடநாட் டரசனைப் புறங்காட்டி யோடச் செய்யத் தயாராக விருந்தான். ஹர்ஷவர்த்தனன் புலிகேசியை நன்றாய் அறிந்திருந்தான். புலிகேசி தென் இந்தியாவில் அரசர்க்கரசனாக விளங்குவதை அவன் அறியாதவன் அல்லன். என்றாலும், தான் மிகுந்த படையைப் பெற்றிருந்தமையாலும், தென் நாட்டைப் பற்றிய முழு விவரமும் அறியாதிருந்தாலும் அவன் புலிகேசியின்மீது படையெடுக்கலானான். ஹர்ஷன் தன் பெரும் படையோடு வந்து நர்மதை நதிக்கரையை அண்மினான். அவன் வருவதையுணர்ந்த புலிகேசி, தன் படையை உற்சாகப்படுத்தி அணிவகுத்துப் போருக்குத் தயாராகவிருந்தான். தென்னாட்டு வீரர்கள் புலிகேசியிடம் உண்மையாக நடந்துகொண்டார்கள். அவர்களுக்குத் தங்கள் அரசன்மீது அதிக அன்பு இருந்தது. மேலும், புலிகேசி எதற்கும் அஞ்சா வீரனாதலால், அவன் முகத்தைக் கண்டமாத்திரத்தில் வீரர்களுக்கு ஒருவித களிப்பும் உற்சாகமும் ஏற்படுவது புலிகேசியின் ஆட்சிக்குட்பட்ட சிற்றரசர் பலர் அவனுக்கு உதவிபுரிய வந்திருந்தனர். எனவே, புலிகேசி ஹர்ஷனுக்கு அஞ்ச இடமில்லை. சுபாவத்திலேயே அஞ்சா நெஞ்சனனான புலிகேசி, படைவலியும் துணையரசர் வலியும் பெற்றவுடன் உள்ள மகிழ்வோடு போர்செய்யத் தயாராகி விருந்தான். சுத்த வீரன் மற்றோர் சுத்தவீரனோடு போர் செய்ய விரும்புவானன்றோ? சுத்தவீரனை வென்றால் அன்றோ சுத்த வீரனுக்குப் பெருமை யுண்டாகும்? அதனால், புலிகேசி அஞ்சாது ஹர்ஷனோடு போர்புரிய விரும்பியதில் வியப்பில்லை. ஹர்ஷவர்த்தனன் தன் படையை நடத்திக் கொண்டு நர்மதை நதிக்கரையை யடைந்து அதைக் கடக்க முயன்றான். தன்னைக் கண்டதும் புலிகேசி ஓடிப்போய் விடுவான்; அல்லது சமாதானஞ் செய்து கொள்வான் என்று அவன் கருதியிருந்தான். ஆனால், அவன் எண்ணியவற்றிற்கு மாறாக, புலிகேசியின் படை, படைகளோடு கலித்தெழுந்தது. புலிகேசி சாமான்ய வீரன் அல்லன் என்று ஹர்ஷன் புத்திக்குப் புலப்பட்டது. புலப்பட்டும் என் செய்வது? வட நாட்டதிபன் தென்னாட்டதிபனுடன் சமாதானமாகப் போவதா? அவ்வாறு செய்ய அவன் விரும்பவில்லை. வெற்றியோ அல்லது தோல்வியோ அடைய வேண்டும் என்று அவன் விரும்பினான். அவன், உடனே தன் சேனைக்குப் போர் செய்ய உத்தரவிட்டான். இருதிறத்தார்க்கும் போர் மூண்டது. கரியொடு கரிதாக்கியது. பரியொடு பரி தாக்கியது. காலாளுடன் காலாள் தாக்கினன். தலைவனோடு தலைவன் தாக்கினான் படை எடும் எடும் என்ற ஓசையும், படை விடும் விடும் என்ற ஓசையும், இருதிறத்தும் கடலோசையைப் போன்றன. விற்களின் நாண்களைத் தெறிக்கின்ற ஓசை, திசைமுகம் வெடித்தாற் போன்றிருந்தது. இரு சேனைகளும் ஒன்றையொன்று தாக்கின. கரியொடு கரி மலைவது மலையொடு மலை பொருதாற் போன்றிருந்தது. பரியொடு பரிபொருத்து அலையொடு அலை மோதியது போல இருந்தது. புலி புலியோடெதிர்த்ததுபோலப் படைவீரர் படைவீரரோடு எதிர்த்தனர். தலைவர்கள் தலைவர் களோடு எதிர்த்து அரியும் அரியும் அடர்த்தாற் போன்றிருந்தது. போர் கடுமையாக நடந்தது. குறுதியாறு பெருகியது. அவ்வாற்றில் சிற்றரசர்களுடையே சந்திரவட்டக் குடைகள் நுரைகள் போன்று மிதந்தன. அறுபட்ட கரிகளின் உடல்கள் இருபுறமும் அடுக்கியிருந்த காட்சி, இரத்த யாற்றின் இருகரை போல இருந்தது. வீரர்கள் ஈட்டிகளை ஒருவர்மீதொருவர் எறிந்துகொண்டனர். இங்ஙனமாக இருதிறப் படைகளும் இளைக்காமல் சமர் செய்யும்போது, கடுகெனவே களப்போரினை முடித்துக்கொள்ள விரும்பி, புலிகேசி தன் யானைமீதமர்ந்து சென்றனன். அவன் படையும் முந்தச் சென்றது. அவ்வளவில் ஹர்ஷனுடைய மதயானைகள் துணிக்கப்பட்டன; பரிகள் உடல் வேறு, தலைவேறாக வெட்டுண்டு வீழ்ந்தன. ஹர்ஷனது படை நிலை கலங்கியது. ஹர்ஷன் மனம் கலங்கினான். அவன் சிதறிய சேனைகளை ஒன்றுசேர்த்து மீண்டும் போர்புரிந்தான். அவ்வாறுசெய்தும் பயன் இல்லை. அவனது படை புலிகேசியினால் முற்றிலும் முறியடிக்கப்பட்டது. ஹர்ஷன் எஞ்சிய சேனையோடு வடநாட்டை நோக்கி ஓடினான். இப்போர் ஒன்றிலேயே வீர ஹர்ஷன் தோல்வியுற்றான். இந்தப் போருக்குப் பின்னர், ஹர்ஷன் அமைதியோடு தான் வென்ற நாட்டை ஒழுங்குபடுத்தி ஆண்டு வந்தான் ஆனால், கடைசியாக, கி. பி. 643-ல் கஞ்சம் ஜில்லாவை எதிர்த்து, அதனைத் தன் ஆட்சிக்குட்படுத்தியதாகத் தெரிகிறது. 13. ஹர்ஷனும் புத்தமதமும் ஹர்ஷன் நாடுகளைக் கைப்பற்றியானதும், அரியாசனத்தில் அமர்ந்து அமைதியாக அரசாளத் தொடங்கினான். கலிங்க தேயத்தின்மீது படையெடுத்து வெற்றி பெற்ற பின்னர் அசோக மன்னன் புத்தமதத்திற் சேர்ந்து, தவச் சிரேட்டனாய் விளங்கியவாறு ஹர்ஷனும் புத்தமதக் கொள்கைகளைப் பின்பற்றினான். அக் கொள்கைகள் யாவராலும் கையாளத் தக்கன என்பதை நன்றாக உணர்ந்த பின்னர் அவன் தன் குடிகளுக்கு அவற்றை போதித்தான். புத்தமதத்தில் ஈடுபட்ட தவசிரேட்டன் ஒருவன் இருக்கவேண்டிய முறைப்படி அரசன் இருந்துவந்தான்; மிருகவதையை யொழித்தான்; தன் குடிகள் மனத்தில் புத்தமதக் கொள்கைகள் என்ற மரத்தை வேரூன்றச் செய்தான். இரவும் பகலும் அதே வேலையாக மன்னன் இருந்தான்; மக்கள் உண்ணத்தக்க மாமிச உணவை ஒழிக்கப் பாடுபட்டான். ஒருவன் தன் மரணத்தறுவாயிலும் மாமிசத்தைப் புசிக்கக்கூடாதென்பது ஹர்ஷனின் உறுதியான கட்டளை; அதனைமீறி எவரேனும் உண்பாராயின்அவர் அக்கணமே கொலை செய்யப்படுவர் என்றும் விதித்தான், அசோக மன்னன் ஏற்படுத்தி யிருந்ததுபோல, நாடெங்கும் வழிப்போக்கர்களுக்கும் ஏழைகட்கும், நோயளிகட்கும் தங்கத்தக்க இடங்கள், உணவளிக்கும் முதலானவற்றை ஹர்ஷன் நிருமித்தான். பட்டணங்களிலும் கிராமங்களிலும் தர்ம சத்திரங்களும், அறச்சாலைகளும், வைத்திய சாலைகளும் ஏற்படுத்தப்பட்டன. இந்துமதக் கோயில்களும் புத்தமதக் கோயில்களும் புதுப்பிக்கப்பட்டன. மக்கள் தங்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றலாம், தங்கள் தங்கள் கடவுளைப் போற்றலாம் என்பன ஹர்ஷனது கொள்கைகள். அளவிறந்த புத்தமத மடங்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. புத்தமத குருக்கள் ஒவ்வொரு மடத்திலும் இருந்து அறத்தைப் போதித்து வந்தார்கள். ஆயிரக்கணக்கான தம்பங்கள் நாடு முழுவதும் நாட்டப்பெற்றன. அவற்றில் புத்தமதக் கொள்கைகள் செதுக்கப் பட்டன. ஒவ்வொரு தம்பமும் நூறு அடி உயரமுள்ளது. இத்தகைய தம்பங்கள் பல கங்காந்திக் கரையோரத்தில் நாட்டப்பட்டன. அவை இக்காலத்தில் காண முடியா. ஏனெனில், அவை பெரும்பாலும் மூங்கில் மரத்தாலும், பிற மரவகைகளாலுமே செய்யப்பட்டவை. அதனால் அவை அழிந்தொழிந்தன. அக்காலத்தில் வட இந்தியாவில் அரசு செலுத்திய மன்னர்கள் பின்பற்றிய கொள்கைகளும் மதங்களும் பலதிறப்பட்டன. ஹர்ஷ மன்னவனுக்கு முன்னிருந்தோர்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றியிருந்தான். அவர்களில் புஷ்யபூதி (Pushyabhuti) என்பவன் ஒருவன். அவன் சிவபக்தன். சைவ சமயத்தைச் சேர்ந்தவன். பிற தெய்வங்களையும் பிறமதங்களையும் அவன் வெறுத்தவன். ஹர்ஷவர்த்தனனின் தந்தையான பிரபாகரவர்த்தனன் சூரியனை வழிவட்டு வந்தான். அவன் ஒவ்வொருநாளும் சூரியநமகாரம் செய்தபின்னரே உண்பவன். இராஜீயவர்த்தனனும் இராஜேவரியும் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள். அம் மதத்திலே தான் அவர்களுக்கு நம்பிக்கையுண்டு. ஆனால் ஹர்ஷனோ சிவனையும், சூரியனையும் புத்ததேவனையும் வழிபட்டுவந்தான்; இம்மூன்று தெய்வங் கட்கும் பல ஆலயங்களைக் கட்டினான். என்றாலும், ஹர்ஷனது இறுதிக்காலம் அவனைப் புத்தமதக் கொள்கைகளிலேயே இழுத்துச் சென்றது. சிறந்த புத்த ஞானியாக அவன் விளங்கினான். புத்தமதம் அசோகன் காலத்தில் சிறப்புற்று விளங்கியது போல ஹர்ஷனுடைய ஆட்சியில் இராவிடினும், அதன் மகத்தான பெருமை குன்றாதிருந்தது. அத்துடன் ஹர்ஷன் தனது விடாமுயற்சியால் அம்மதத்தைப் பரவச்செய்தான். அதனால் அம்மதக்கொள்கைகள் மக்கள் மனத்தில் வேரூன்றிவிட்டன. பெரும்பாலான மக்கள் அம் மதத்திற் சேர்ந்தனர். புத்தமதத்தை யேனும் ஹிந்துமதத்தையேனும் அடிப்படையாகக் கொண்டிருந்த மக்களைத் தன்வசப்படுத்தும் வன்மை ஒருகாலத்தில் சிறப்புற்று விளங்கிய ஜைன மதத்திற்கு இல்லை. ஹர்ஷன்காலத்தில், ஆடவன் தான் விரும்பிய கடவுளை வழிபடலாம்; பெண் தான் விரும்பிய கடவுளைத் தொழுது வரலாம் என்ற நியதி இருந்தது. இவ்வாறு வட நாட்டில் ஹர்ஷன் ஆட்சியில் பலதிறப்பட்ட மதங்கள், கொள்கைகள் இருந்தாலும் மக்கள் அமைதியோடும் சுகத்தோடும் வாழ்ந்த வந்தார்கள். ஏறக்குறைய கி. பி. 600-ல் புத்தமதம் உயர்வுற்று எங்கும் பரவுவதைக் கண்டதும், நரேந்திர குப்த சசாங்கா என்னும் அரசன் அம்மதத்தை வேரறுக்க விரும்பினான். அவன் யார் என்று நீங்கள் அறிவீர்களா? அவனே இராஜீயவர்த்தனனை நயமாகத் தன் அரண்மனைக்கு அழைத்து, நடுநிசியில் கொலை புரிந்த பாதகன். அவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனா யிருந்தமையால் புத்த மதத்தைத் தொலைக்கத் தலைப்பட்டான்; கயாவில் இருந்த போதிமரத்தை வேறோடு களைந்து எரித்துவிட்டான்; பாடலிபுரத்தில் இருந்த புத்தகொள்கைகள் அடங்கிய கற்றூணைத் தகர்த்துவிட்டான்; புத்தமடங்களையும் அறப்பள்ளிகளையும் நாசப்படுத்தினான்; சந்நியாசிகளைத் துன்புறுத்தினான். அவன் செய்த கொடுஞ்செயல்கள் ஹுவான்சுவாங் என்ற சீனயாத்திரிகன் எழுதிய விஷயங்களில் இருந்து நன்கு விளங்குகின்றன. இத்தகைய கெடுதிகள் ஹர்ஷவர்த்தனன் காலத்தில் இல்லாததை முன்னிட்டு நாம் மகிழ வேண்டியவர்களா யிருக்கிறோம். ஹர்ஷன் கல்விகற்ற பெரியோர்கள் பலரைத்தன் அவையில் வைத்திருந்தான்; அவர்கள் பேசும் அரிய விஷயங்களைக் கேட்டு ஆனந்திப்பான். சந்நியாசிகள் பலர் தாம் தாம் கண்டறிந்த மத உண்மைகளைப் பேசுவார்கள். அவற்றை அன்போடும் உருக்கத்தோடும் ஹர்ஷன் கேட்பான். அவன் அருகில் அவனது விதவை சகோதரி இராஜேவரியும் வீற்றிருந்து அரிய சொற்பொழிவுகளைக் கேட்பது வழக்கம் சீனயாத்திரிகனான ஹுவான்சுவாங் அவையில் எழுதிய சொற்பொழிவைக்கேட்டு இராஜேவரி மகிழ்வாள். பெண்கள் சகல உரிமைகளும் பெற்று வாழ வேண்டும் என்பது ஹர்ஷனது தீவிரமான கொள்கையாகும். அவன், அரசகாரியங்களையும் அவளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே செய்வானென்றும் கூறப்படுகிறது. ஹுவான்சுவாங் ஹர்ஷவர்த்தனனுடன் வாழ்ந்து வருகையில், பிற மதத்தாரும் அவையில் மத விஷயங்களைப் பற்றித் தர்க்கிப்பது வழக்கம். அவ்வாறு, தர்க்கம் நிகழும் காலையில், தத்தம் மதம் சிறந்ததென்று ஒவ்வொருவரும் பேசுவது இயற்கையே. நாளடைவில் ஹுவான்சுவாங்கின் மீது பிறமதத் தலைவர் வெறுப்பைக் கொண்டனர்; அவனைக் கொல்லவும் தீர்மானித்தனர். இச்செய்தி ஹர்ஷனுக்கு எட்டியது. ஊடனே அவன், நாடெங்கும் விளம்பரம் ஒன்றைப் போக்கினான். அதாவது, யாவரேனும் ஹுவான்சுவாங் என்னும் பெரியாரைத் தொட்டாலும் துன்புறுத்தினாலும், அவர் உடனே கொல்லப் படுவார். அவருக்கு விரோதமாகவேனும், எதிர்த்தேனும் எவனாவது பேசுவானாயின், அவனது நா உடனே அறுக்கப்படும். ஆனால், அவரை விருப்புடன் வரவேற்போரும், அவரது செம்மொழிகளைக் கேட்போரும் எனது அன்பிற்குப் பாத்திரராவார்கள் என்பது. இவ்விளம்பரம் வெளி வந்த பின்னர், சீனயாத்திரிகனைத் தொடுவோரும் துன்புறுத்த நினைப்போரும் இல்லாதொழிந்தனர். அந்தப் பெரியோன் நாடெங்கும் சுயேச்சையாகக் சுற்றிப் பிரசாரம் செய்யலாயினன். ஹுவான்சுவாங்கைக் கண்டு, அவனது அரிய விஷயங்களைக் கேட்டது முதல், குடிகளும் சிற்றரசரும் அவனது அரிய சொற்பொழிவைக் கேட்கவேண்டும் என்று ஹர்ஷன் விரும்பினான். தான் விரும்பியபடியே ஹர்ஷன் தன் தலைநகரான கன்னோசியில் பெருங்கூட்டமொன்றைக் கூட்டுவித்தான். இருபது சிற்றரசர்களும், நாலாயிரம் புத்த குருக்களும், மூவாயிரம் சமணர்களும், வைதீக பார்ப்பனரும் அக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். கூட்டம் கூடியவிடம் பெரிய சமவெளி. அதன் நடுவில் நூறு அடி உயரமுள்ள தூண் ஒன்றன் மேல் தங்கத்தாற் செய்த புத்த விக்கிரகம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அவ்விக்கிரத்தைப் போன்ற சிறிய விக்கிரமும் ஒன்று அங்கு நடந்த விழாவில் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருந்தது. இருபது அரசர்களும் முந்நூறு யானைகளும் விக்கிரகத்தோடு சுற்றி வருவார்கள். விக்கிரத்தின் மேல் குடை யொன்று பிடிப்பது வழக்கம் அல்லவா? அதனை ஹர்ஷன் பிடித்துச் செல்வான். அவ்வாறு ஊர்வலம் செல்கையில், தங்கத்தாற் செய்த புட்பங்களை அரசன் இருபுறங்களிலும் தெளித்துக்கொண்டே செல்வான். ஊர்வலம் வந்த பின்னர், ஹர்ஷன் தானே விக்கிரத்தைக் கழுவி, தூய நல்லாடைகளைச் சாத்திப் பூசை செய்வான். இங்ஙனம் விழா பல நாட்கள் நடந்தது. ஒரு நாள் அழகாகக் கட்டப்பட்டிருந்த கூடாரம் ஒன்று தீப்பற்றி எரிந்தது. விழாவிற்கு வந்திருந்த யாவரும் மனங்கலங்கினர். ஹர்ஷவர்த்தனன் இவ் விஷயத்தை கேள்வியுற்று அக்கூடாரத்தின் அருகிற் சென்றான். உடனே நெருப்பு அவிந்துவிட்டது. யாவரும் அதிசயித்தனர்; ஹர்ஷனுடைய தூயநல் எண்ணம், வாழ்க்கை இவையே தீ அவிந்ததற்குக் காரணம் என்பதை உணர்ந்தனர். பின்னர், ஹர்ஷன் விழாக் காட்சியைக் காணவேண்டி அங்கு இருந்த தம்பம் ஒன்றின் மேல் ஏறினான். அவன் கீழிறங்கி வரும்போது ஆயுதபாணியாக இருந்த வீரன் ஒருவன் அரசனைக்கொல்ல ஈட்டியை உயர்த்தினான். ஆனால், அபாயம் ஒன்றும் நேரவில்லை. அவ் வீரன் உடனே பிடிக்கப்பட்டான். அவனை ஹர்ஷன் பல கேள்விகள் கேட்டான். பலவிதங்களில் துன்புறுத்தப்பட்ட வீரன், புத்தமதத்தைப் பெருமைப்படுத்தும் உம்மை, அம் மதத்தை அடியோடு வெறுக்கும் சிலர், கூடாரத்தைக் கொளுத்தி உம்மையும் கொல்ல ஏற்பாடு செய்தார்கள் என்று ஒப்புக்கொள்ளும்படி தூண்டப்பட்டான். இம்மொழிகள் உண்மையல்லவென்று கருதப்பட்டபோதிலும் ஐந்நூறு பிராம்மணர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப் பிராமணர்களில் மேற்கூறிய இருகுற்றங்களுக்கும் தலைவர்களா யிருந்தவர்கள் உடனே கொல்லப்பட்டார்கள். எஞ்சியவர்கள் அயல் நாட்டிற்குத் துரத்தப்பட்டனர். கன்னோசி, நகரில் விழாமுடிந்ததும் ஹர்ஷன் ஹுவான்சுவாங்கை, பிரயாகைக்கு அழைத்துச் செல்ல விரும்பினான். ஹுவான்சுவாங் தன் நாட்டிற்குச் செல்ல விருப்பங்கொண்டிருந்தவனா யிருந்தும், அரசனது வேண்டு கோளை மறுக்க மனமற்றவனாய், அவனோடு நகருக்குச் சென்றான் கங்கையும் யமுனையும் ஒன்று சேரக்கூடிய விடத்தில் பெருங் கூட்டம் கூடியது. ஹர்ஷனுடைய முன்னோர்களும் இவ்விழாவைக் கொண்டாடி வந்தார்கள். இவ்விழாவில் ஏழைகளுக்கும் வேண்டியோர்க்கும் பல மத வேலைகளுக்கும் கஜானா பணத்தைக் கொடுப்பது வழக்கம். அவ்வாறே ஹர்ஷனும் செய்ய வாரம்பித்தான். இவ்விவரங்களை எல்லாம் ஹுவான் சுவாங் எழுதிவைத்த வரலாற்றில் பரக்கக் காணலாம். இவ்விழா ஐந்தாண்டு கட்கு ஒரு முறை நடைபெற்று வந்தது. கி. பி 644-ல் ஆறாம் முறையாக விழாக்கொண்டாட்டம் நடந்தது. அக் கூட்டத்திற்கு எல்லா அரசர்களும், ஏழைகளும், அநாதைக் குழந்தைகளும், பல மதாசாரியர்களும், கஷ்டஜீவனம் செய்வோரும், வைதிகப் பிராமணர்களும் வந்திருந்தனர். இவ்விழா எழுபத்தைந்து நாட்கள் நடந்ததாகத் தெரிகிறது. அங்கு நடந்தசெய்திகளைப்பற்றி அதிகம் கூறாது, முக்கியமாக அக்காலத்தில் விழா வியற்றிய விதத்தை மட்டிலும் இங்குக் கூறுவோம். முதல்நாள் மணலிற் கட்டப்பட்ட கூடாரம் ஒன்றில் புத்தவிக்கிரகம் வைக்கப்பட்டது. அது உயர்ந்த ஆடை யணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் முன்னிலையில் அநேக ஆடைகளும் ஆபரணங்களும் ஏழைகட்கும், இரப்போர்க்கும் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளிலும் மூன்றாம் நாளிலும் சிவனையும் சூரியனையும் தொழுது, பொன்னும் ஆடைகளும் கொடுக்கப் பட்டன. நான்காம் நாள் பதினாயிரம் புத்தமதத்தார்க்குப் பரிசுகள் வழங்கப் பட்டன. ஒவ்வொருவனும் நூறு தங்கநாணயங்களும், ஒரு முத்தும், ஒரு பருத்தி ஆடையும் பெற்றான். அடுத்த இருபது நாட்களில் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் உண்டு, பரிசுகள் பெற்றனர். அடுத்த பத்து நாட்களில் சமணர்களும் அயல்நாட்டாரும் பரிசுகள் பெற்றேகினர். பின்னர், பத்து நாட்களில் தூரதேயங்களில் இருந்து வந்த சந்நியாசிகட்கு வரிசைகள் வழங்கப்பட்டன. பின்பு, ஏழைகட்கும், பரதேசிகட்கும், அயல்நாட்டு இரவலர்க்கும் பொன்னும் ஆடைகளும் ஒருமாதகாலம் வழங்கப் பட்டன. இந்த பெரு விழாவில் ஹர்ஷவர்த்தனன் தனக்கு உரிமையாக விருந்த ஆடையாபரணங்கள் அனைத்தையும் ஈந்துவிட்டான்; தான் அணிந்திருந்த வற்யையும் நல்கினான். பின்பு, அவன் தன் தங்கை இராஜேவரியிடமிருந்த பழய ஆடைகளை அணிந்துகொண்டான். இத்தகைய அறத்திற் சிறந்த மன்னனும் உளனோ? விழா முடிவடைந்த பத்துநாட்களுக்குப் பின்னர் ஹுவான்சுவாங் இந்தியாவை விட்டுத் தன் நாட்டை நோக்கிப் புறப்பட்டான். தன் வழிச்செலவிற்கு வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டு, சீனயாத்திரிகன் பிரயாணமானான். அவன் கி. பி 661-ல் சீனாவை யடைந்தான். இந்தியாவைப்பற்றிய முழு விவரத்தையும் அவன்எழுதிவைத்திருந்தான். அவன், உண்மையாகவே புத்தமதப் பற்றுதல் உடையவன். அவன் புத்தரின் அவதாரம் என்றே அக்காலத்தார் எண்ணினர். ஒழுக்கத்திற் சிறந்த அப் பெரியோன் கி பி. 664-ல் இவ்வுலக வாழ்வை நீத்தான். ஆனால், அவனுக்கு முன்னரே ஹர்ஷவர்த்தனன். கி. பி 647-ம் ஆண்டின் இறுதியில் அல்லது கி. பி. 648-ம் ஆண்டின் முதலில் மண்ணக வாழ்வை நீத்து விண்ணகவாழ்வை மருவினான். ஆக, ஹர்ஷன் முப்பத்தைந்து வருட காலம் வட இந்தியாவைப் பெருமையோடு ஆண்டு வந்தான். 14. அரசியலும் குணாதிசயங்களும் ஹர்ஷனது கீர்த்தி வட இந்தியா முழுவதும் பரந்தது. தென் இந்தியாவில் சாளுக்கிய வம்சத்திற்றோன்றி, புஜபலபராக் கிரமங்களில் மிக்கு விளங்கிய இரண்டாம் புலிகேசியைப் போன்று வடநாட்டில் ஹர்ஷவர்த்தனன் ஏகச் சக்கிராதிபதியாக விளங்கினன். அவனுக்குட்பட்ட சிற்றரசர்கள் கலகம் விளைக்காது, செவ்வனே அரசாண்டு வந்தனர். தன் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் ஒழுங்காக இருக்கிறதா என்பதைப் பார்க்க ஹர்ஷன் அடிக்கடிச் சென்று காண்பது வழக்கம். ஒரு மூலை முடுக்கும் அவனுடைய கண்பார்வையி னின்றும் அகன்றதில்லை யென்றே சொல்லலாம். அவன் அவ்வாறு பிரயாணப்பட்டுச் செல்கையில் துட்டர்களைத் தண்டித்தும் இட்டர்களைக் காப்பாற்றியும் சென்றான். அவன் தங்கும் இடங்களில் எல்லாம் ஒரு குடிசை யமைப்பது வழக்கம். அவ்விடத்தி விட்டு அரசன் அகன்றவுடன் அக் குடிசையை எரித்துவிடுவார்கள். நாட்டில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் நியாயமான முறையில் செய்யப்பட்டன என்று ஹுவான்சுவாங் கூறுவதிலிருந்து தெரிகிறது. நிலத்தில் இருந்துவரும் மொத்த வருமானத்தில் ஆறிலொரு பங்கு அரசாங்கத் தாருக்குச் சேர்க்கவேண்டியிருந்தது. அரசாங்க உத்தியோகதர்களுக்கும் நிலங்கள் விடப் பட்டன. தொழிலாளர்கள் நன்றாகப் பொருள் பெற்றார்கள். வரிகள் கொஞ்சமாகவே விதிக்கப்பட்டிருந்தன. தங்கள் தங்கள் நிலங்களுக்கு வேண்டிய பாதுகாப்பைக் குடிகள் செய்யலாம் என்று அரசன் கூறியிருந்தான். பல மதங்களுக்கு வேண்டிய பொருள் உதவி செய்யுமாறு அரசன் உத்தியோகதர் களுக்குக் கட்டளை யிட்டிருந்தான். ஹர்ஷன் காலத்தில் கொடூரமான குற்றம் நடைபெறவில்லை. சாலைகளிலும் ஆற்றங்கரைகளிலும் திருடர் பயம் சற்று இருந்தது. சாதாரணகுற்றம் செய்தவனைச் சிறையில் அடைப்பதென்பது அக்காலத்தில் சாதாரண தண்டனையாகவிருந்தது. பிறகுற்றங்களைச் செய்தவர்கள் மிகக் கடுமையாகத் தண்டிக்கப் பட்டார்கள். மூக்கு, காதுகள், கால்கள் முதலிய உறுப்புக்களைக் கழிப்பது கொடிய குற்றத்தின் தண்டனையாகக் கருதப் பட்டது. சில வேளைகளில் குற்றவாளிகளை வெளிநாடு களுக்கு அனுப்புவதும் உண்டு. சிறிய குற்றங்களுக்கு அபராதம் விதிப்பதும் வழக்கம். குற்றவாளி களிடமிருந்து உண்மையை யுணர, அவர்களை நீரிலாவது, நெருப்பிலாவது புகுத்தித் துன்புறுத்துவதும் உண்டு. ஒவ்வொரு ஊரின் ஜனனமரண கணக்கு உத்தியோகதரால் கவனிக்கப்பட்டு வந்தது. மேலும் ஒவ்வொரு ஊரில் நடக்கும் அபூர்வமான விஷயங்களையும் நல்ல செய்திகளையும் கெட்ட சம்பவங்களையும் அவர்கள் எழுதி வைத்திருந்தனர். கல்வி, ஹர்ஷன் காலத்தில் வட இந்தியாவில் உன்னத நிலையை யடைந்திருந்ததென்றே கூறவேண்டும். பிராமணர்களும் புத்தமத சந்நியாசிகளும் நன்றாகக் கல்வி கற்றிருந்தார்கள். கல்வி கற்பது அரசாங்கத்தாரால் வற்புறுத்தப்பட்டிருந்தது. கற்றோரை அவர்கள் பெருமைப்படுத்தி வந்தார்கள். இராஜாதிராஜனான ஸ்ரீ ஹர்ஷனே சிறந்த கல்விமான். அவன் கல்வி கற்றதோ டமையாது, சிறந்த புலவனாகவும் விளங்கினன். அவன் நாகநந்தா, ரத்னவளி, பிரிய தர்ஸிகா என்ற மூன்று அரிய நூல்களை வடமொழியில் இயற்றினான். அவை, இன்னும் நம் நாட்டில் அழியாப் புகழோடிருந்துவருகிறது. ஹர்ஷனது அவையில் சிறப்புற்று விளங்கிய புலவன் பாணன் என்பவன். அவன் வடமொழிப் புலவன். அப் பெரியான் ஹர்ஷனது வரலாற்றை வட மொழியில் எழுதி வைத்துள்ளான். அவன் உதவியைக் கொண்டே ஹர்ஷன் முன் கூறப்பட்ட மூன்று நூல்களையும் இயற்றி இருக்கவேண்டுமென்று கருதப்படுகிறது. இனி ஹர்ஷனது குணாதிசயங்களைக் கவனிப்போம். ஹர்ஷவர்த்தனன் இளமையிலிருந்தே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினவன் என்பது இந்நூலை ஒருமுறை வாசித்தால் நன்கு புலனாகும். அவன் தமையனிடத்து மிகப் பணிவோடும் அன்போடும் நடந்துகொண்டான்; தங்கையை அன்போடு நேசித்து வந்தான்; அவன் பொருட்டு, தன் நலன் களையும் பாராட்டாது காடுமலைகளைக்கடந்து. விந்தமலைக் காட்டிற்குள் நுழைந்து, பலவிடங்களிலும் தேடி, முடிவில் தங்கையைக் காணப்பெற்றான் என்ற செய்தியில் இருந்து அவன் தன் தங்கையிடம் கொண்டிருந்த அளவுகடந்த அன்பு வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. அவனை இராஜீய வர்த்தனன் அரசுரிமையை யேற்றுக்கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தியும், மூத்தவன் இருக்க இளையவன் பட்டமடைதல் முறையன்று’ என்ற அர்ஷன் கூறினான். இதிலிருந்து அவன் நியாயமற்றதும் மனச்சாட்சிக்கு விரோதமானதுமான எத்தகைய தீச்செயலையும் செய்யான் என்பது விளங்குகின்றது. அரசன், ஆலோசனை செய்யவேண்டிய காலத்தில் அரசாங்க உத்தியோகதர்களது ஆலோசனையைக் கேட்பது நன்று. அவ்வாறு, பிறரைக் கேட்காது தன் மனம்போனபடி காரியங்களைச் செய்து துன்பத்தை யனுபவித்த மன்னர்களைப் பற்றி நீங்கள் வாசித்திருப்பீர்கள். ஆனால் நமது அரசன் அமைச்சர் முதலாயினோரைக் கேட்டு, பின்னர், தன் அறிவுக் கெட்டியபடி எக்காரியமும் செய்து முடிப்பவன். ஹர்ஷன், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தனக்கு உரிமையான எல்லாப் பொருள்களையும் தானஞ் செய்வது வழக்கம். என்றால் அவனது விரிந்த சிந்தையையும் பரந்த நோக்கத்தையும் என்னென்பது? அவன், தன் நாட்டின்மீது, எத்துணைப் பேரன்பு கொண்டவனாயிருந்திருப்பின், தானே நேரிற்சென்று ஒவ்வொரு ஊரையும் பார்வையிட்டிருப்பான் என்பது .