அருள் நெறி முனைவர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : அருள் நெறி ஆசிரியர் : முனைவர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : இ. தமிழமுது பதிப்பு : 2012 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+96 = 112 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 70/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்குமரன் நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், எண். 20/33, பி 3 பாண்டியன் அடுக்ககம், ஸ்ரீநிவாசன் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க் குலம் படிப்படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மைகளைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு தமிழ்மண் பதிப்பகத்iதத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங்கினேன். நீருக்கும் - நெருப்புக்கும், புதையுண்டும் - மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் - சிதைக்கப்பட்டவையும் போக எஞ்சிய நூல்களைத் தேடி எடுத்து வெளியிட்ட பழந்தமிழ் அறிஞர்களை வணங்கி எம் தமிழ்நூல் பதிப்புச் சுவடுகளைப் பதித்து வருகிறேன். 19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலமும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலமும் தமிழ்மொழி, தமிழின வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலமாகும். இந்த மறுமலர்ச்சி காலத்தில்தான் தமிழை உயிராகவும், மூச்சாகவும், வாழ்வாகவும் கொண்ட அரும்பெரும் தமிழரிஞர்கள் தோன்றி தமிழ் மீட்டெடுப்புப் பணியை மேற்கொண்டனர். எதிர்காலத் தமிழ் தலைமுறைக்கு அழியாச் செல்வங்களாக அருந்தமிழ் நூல்களை கொடையாக வழங்கிச் சென்றனர். இவ்வருந்தமிழ்க் கொடைகள் எல்லாம் தமிழர் இல்லந்தோறும் வைத்துப் பாதுகாக்கத் தக்க புதைபொருள் ஆகும். அந்த வகையில் அறிஞர்களின் செந்தமிழ் கருவூலங்களை எல்லாம் தேடி எடுத்து குலை குலையாய் வெளியிட்டு தமிழ்நூல் பதிப்பில் எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாக பதித்து வருவதை தமிழ் கூறும் நல்லுகம் நன்கு அறியும். எம் தமிழ்நூல் பதிப்புப் பணியின் தொடர் பணியாக தமிழ்ப்பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் நூல்களை வெளியிடும் நோக்கில் எம் கைக்குக் கிடைத்த சில நூல்களை முதல் கட்டமாக வெளிகொணர்ந்துள்ளோம். எதிர்காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அனைத்தையும் தேடி எடுத்து பொருள்வழிப் பிரித்து கால வரிசையில் ஆய்வாளர்களுக்கும் தமிழ் உணர்வாளர் களுக்கும் பயன்படும் நோக்கில் திட்டமிட்டுள்ளோம். அகப்பகையும், புறப்பகையும் தமிழர் வாழ்வில் குடிபுகுந்து தமிழினம் நிலைக்குலைந்த வரலாறு கடந்தகால வரலாறு. தொன்மையும், பெருமையும் வாய்ந்த தமிழ்ப் பேரினம் தம் குடிமை இழந்து தாழ்வுற்று மருளும், இருளும் நிறைந்த மூட பழக்க வழக்கங்களால் தன்மானம் இழந்து தாழ்ந்து கிடந்த வரலாற்றை நெஞ்சில் நிறுத்துவோம். தமிழினம் மறுமலர்ச்சி பெறுவதற்கு தம் வாழ்வின் முழுபொழுதையும் செலவிட்ட அறிஞர்களை வணங்குவோம். இந்நூல்களை உங்கள் கையில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். கோ. இளவாகன் நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி’ ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது?’ ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும்’ `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள்’ என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள்’ என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம்’. நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார்.’ பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தhர். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு’ இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான்’ படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’, `நக்கீரர் கழகம்’, `மாணவர் மன்றம்’ முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர்’ என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈராஸ் பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர்’ என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது’ என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு’ என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான்’ பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார்’ என்று `என் கணவர்’ என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வி’யில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும்’ என்பது அவர் கொள்கையாக இருந்தது. “அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும்”. உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்’ என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும்’ என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும்’ என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்கiள எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம்’, `தமிழ் இனம்’, `தமிழர் வாழ்வு’, `என்றுமுள தென்றமிழ்’, `புதிய தமிழகம்’ என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும்’ என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி’, `தமிழ்க் கலைகள்’, `தமிழர் நாகரிகமும் பண்பாடும்’, `தமிழக வரலாறு’ என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்கhக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும்’ அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர்’ என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு’ வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல்’, தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது’ `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும்’ என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம்’ என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும்’ என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா?’ எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர்’, `மனிதரில் தலையாய மனிதரே’ எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் iii iv முனைவர் மா. இராஜமாணிக்கனார் v vi முனைவர் மா. இராஜமாணிக்கனார் நுழையுமுன் vii viii முனைவர் மா. இராஜமாணிக்கனார் நுழையுமுன் ix x முனைவர் மா. இராஜமாணிக்கனார் நுழையுமுன் xi முன்னுரை எல்லா உயிர்களிடத்தும் காட்டும் இரக்க உணர்ச்சியே அருள் எனப்படும். இவ்வருள் உணர்ச்சியின் அடிப்படையில் மனிதர் செல்லும் நெறியே அருள் நெறி என்பது இந்நெறி சாதி சமயங்களைக் கடந்தது; இனவேறுபாடுகளைக் கடந்தது; “எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவேஅல்லாமல் வேறொன்(று) அறியேன் பராபரமே” என்பதை உயிர்நாடியாகக் கொண்டு விளங்குவது; என்பதை உயிர் நாடியாகக் கொண்டு விளங்குவது; இதுவே எல்லாச் சமயங்களுக்கும் உயிர்நாடி; நாட்டு அமைதிக்கும், சமுதாய அமைதிக்கும் உலக அமைதிக்கும் உயிர்நாடியாகும். இவ்வருள் நெறியைச் சான்றோர் பலர் வாயிலாக விளக்க எழுந்த கட்டுரைகளே இவை. இவற்றில் கூறப்பெறும் செய்திகள் உண்மையான சமய வாழ்க்கைக்கு உறுதுணையாகும். தியாகராசர் கல்லூரி, மா. இராசமாணிக்கனார் மதுரை. நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்) உள்ளுறை 1. அருள் நெறி 1 2. மனிதனும் சமயமும் 4 3. சமுதாய நிலைமை 7 4. புத்தஞாயிறு 11 5. கன்பூஷியஸ் 15 6. ஏசுப் பெருமான் 18 7. நபிகள் நாயகம் 22 8. இந்தியச் சமுதாயம் 26 9. அருள்மொழி 30 10. சமயம் பற்றிய உண்மைகள் 38 11. இல்லை-உண்டு 42 12. சமயவெறி 47 13. தேவை யாது? 51 14. இராமலிங்கர் மணிமொழிகள் 58 15. சமய வாழ்க்கை 61 16. வெற்றியின் இரகசியம் 65 17. நாத்திகர் யார்? 75 18. இன்ப வாழ்வு 80 19. கடவுள் எங்கே இருக்கிறார்? 93 1. அருள் நெறி மனிதன் ஒருவனை ஒருவன் மதித்து நடக்கவும், சமுதாயம் ஒன்றுபட்டு வாழவும், உறுதுணையாக இருப்பது அருள். கணவன் மனைவியை நேசிப்பதும் மனைவி கணவனை நேசிப்பதும் அன்பினாலேதான். இந்த அன்பே மக்களிடம் அமைதியையும் இன்பத்தையும் நிலைநாட்டி இன்ப வாழ்வு தரவல்லது; சமுதாய ஒற்றுமையை உண்டாக்கவல்லது; தன்னைப் போல் பிறரை எண்ணும்படி செய்வதும் இந்த அன்பேயாகும். அன்பு முதிர்ச்சி பெறும் பொழுது ‘அருள்’ எனப் பெயர்படும். ஏழை-பணக்காரர், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், மனிதன்-விலங்கு என்னும் எவ்வகை வேறுபாடும் இல்லாமல், பயனை எதிர்பாராது தோன்றும் உள்ளக் கனிவே ‘அருள்’ எனப்படும். இவன் பகைவன் என்றோ, இவன் நம் கொள்கைகளுக்குஅப்பாற்பட்டவன் என்றோ, இவனை ஒழிக்க வேண்டுமென்றோ அருள் உணர்ச்சி கொண்டவன் நினையான்; சாதி-மதம்-இனம்-நாடு-நிறம் முதலிய வேறுபாடுகளை நினையான். அவனுக்கு அரசனும் ஆண்டியும் ஒன்றே; நண்பனும் பகைவனும் ஒன்றே. இன்ப துன்பமும் ஒன்றே; எவ்வுயிரும் தன்னுயிர்போல் எண்ணும் தன்மை அவனிடம் வளர்ச்சி பெறுகிறது. “ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு” என்பது இயேசுநாதர் அருள்மொழி. “பகைவனையும் நண்பனாகக் கருது; பகைவனிடம் அன்பைச் செலுத்து,” என்பது அப்பெருமானது திருவாக்கு, “பகைவரை நேசிப்தே நல்லவன் இயல்பு” என்பது நபிபெருமான் நல்வாக்கு. இவையெல்லாம் அருளை அடிப்படையாகக் கொண்டெழுந்த அறிவுரைகள் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பலியிட ஆடுகளையும் பிற உயிர்களையும் இழுத்துச் செல்லும் போது மக்கள் ஏந்திச் சென்ற கொலைக்கருவிகளைக் கண்ட போதெல்லாம் உளம் நடுக்குற்றோன்” என்று இராமலிங்க அடிகள் உள்ளம் உடைந்து உரைத்தவை அனைத்தும் அருளை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். பிம்பிசாரனது யாகத்திற்கு ஆடுகள் பலியிடுவதற்காகக் கொண்டுசெல்லப்பட்டன. இதனை உணர்ந்த புத்தர் பெருமான் உள்ளம் கசிந்து அவற்றோடு நடந்தார்; வழியில் நடக்கமுடியாமல் தவித்த ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தார்; பிம்பிசாரனிடம் சென்று உயிர்க்கொலை கூடாது என்பதை விளக்கி. ஆடுகளை ஓட்டிச் செல்லுமாறு ஏற்பாடு செய்தார். அப்பெருமான் இங்ஙனம் ஆட்டுக்குட்டியைத் தூக்கிச் சென்றதும், கொலை வேள்வியைத் தவிர்த்ததும் அருள் உணர்ச்சியாற்றான். இவ்வாறே இயேசுநாதர் ஒருமுறை ஆட்டுக்குட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு வழி நடந்தார் என்று வரலாறு கூறுகிறது. காந்தியடிகள் வட்டமேசை மாநாட்டிற்குச் சென்றபொழுது இங்கிலாந்தில் ஆட்டுக்குட்டியைத் தூக்கிக் கொண்டார். இச்செயல்கள் எல்லாம் அருள் உணர்ச்சியின் பாற்பட்டவை. இவ்வுணர்ச்சியாற்றான் இப்பெருமக்கள் உலக வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். மக்கள் அன்பு நெறியிற் செல்ல வேண்டும், சில வேறுபாடுகளைப் பொருட்படுத்தலாகாது, எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும், சமுதாயம் ஒற்றுமையாக வாழ வேண்டும், நல்லொழுக்கம் நாளும் வளரவேண்டும் என்பனவே அருள் உள்ளம் கொண்ட பெருமக்களின் அவாவாகும். இந்த அவாவினால் புத்தர்பெருமான் அரசைத் துறந்தார்; இயேசுநாதர் சிலுவையில் அறையுண்டார்; நபிநாயகம் பகைவரால் துன்புறுத்தப்பட்டார்; காந்தியடிகள் சுடப்பட்டார். எதனையும் ஆழ்ந்து எண்ணி உண்மைகாணும் பெருமக்கள் அவ்வுண்மைகளைப் பிறருக்கு எடுத்துக்கூற அஞ்சார்; உலகம் பழிப்பினும் தம் கருத்துக்களைக் கைவிடார்; தமக்கே கேடு வரினும் கவலை கொள்ளார். இத்தகைய பெருமக்களைப் பெற்ற நாடே பெருமையுடையது. “அன்பே சிவம்” என்பது சைவத்தின் அடிப்படை. தேவரும் அசுரரும் உய்யும் பொருட்டுச் சிவபெருமான் நஞ் சுண்டார் என்பது வரலாறு. இங்ஙனம் பகைவரையும் வாழ்விக்கும் பெருமானை வழிபடு கடவுளாகக் கொண்ட சிவநெறியாளர், இவ்வுண்மையை மறந்து, அன்பு உணர்ச்சியோ அருள் உணர்ச்சியோ அற்றவராய்க் கருத்து வேறுபட்ட மக்களைக் கொடிய பகைவராக எண்ணுகின்றனர்; அவர்கள் சமயத்தின் உண்மையைத் தாமும் அறிந்துகொள்ளாமல், பிறர் கூறும் குறைகள் தம் சமயத்தில் உண்டா இல்லையா என்பதையும் ஆராயாமல், நம் சமுதாய மக்களையே பகைக்கின்றனர்; அவர்களை அழிக்கவும் ஒழிக்கவும் முயல்கின்றனர்; நாத்தழும் பேறப் பேசுகின்றனர்; சமுதாய அமைதியைக் குலைக்கின்றனர்; ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று கூறுபவரை நாத்திகர் என்று பறை சாற்றுகின்றனர்; நாத்திகர் இடத்திலும் அன்பு செலுத்துவதுதான் சைவசமயத்தின் சிறப்பு. அங்ஙனம் இருப்ப, நாத்திகர் என்று கூறி அவர்கள் மீது வசைபுரணம் பாடுவது சைவசமயத் தொண்டு என்று கருதுகின்றனர். இவர்கள் ஆழ்ந்து சிந்திப்பார்களானால், ‘அன்பே சிவம்’ என்ற அடிப்படையை உணர்ந்து எல்லோரிடத்திலும் அன்பைச் செலுத்தி அறநெறியை வளர்ப்பர்; கருத்து வேறுபட்ட மக்களோடு அன்புநெறியில் உரையாடி உண்மையை உணர்வர், அல்லது உணர்த்துவர். தன்னைப் போல் பிறரை நினைக்கும் பொழுதுதான் ஒருவனிடம் மனிதப் பண்பு தோன்றுகிறது; பிறர் துன்பத்தைத் தன் துன்பம் போல மதித்து நடக்கும் மன விரிவு தோன்றும்; ஒருவர் கருத்தை மற்றொருவர் புரிந்து கொள்ளவேண்டும் என்னும் கவலை தோன்றும்; எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்னும் உண்மை வெளிப்படும். இந்த உண்மைதெரிந்து நெறிப்படுபவனே அருள் நெறியாளன் என்று பெயர் பெறுவான். இப் பண்புகளுக்கு மாறாக இருப்பவன் அருள் நெறிக்கு மாறுபட்டவன். அருள் நெறியே ஒவ்வொருவரும் பெறத் தகுவது, அதுவே மக்களை ஒற்றுமைப்படுத்துவது; கட்சிப்பூசல்களை ஒழிக்கும்; மக்களை ஒன்றுபடுத்தும்; மன விரிவை உண்டாக்கும்’; சாத்ரீய சமயத்தை வளர்க்கும்; கருத்து வேறுபாடுகளை அகற்றும்; விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளரச்செய்யும்; எதனிலும் உண்மை காணத் தூண்டும்; சுருங்கக் கூறின், சமுதாயத்தை அன்புக் கயிற்றால் கட்டிவிடும். இத்தகைய அருள்நெறி தமிழ் மக்களிடையே தோன்றிவளருமாயின், தமிழகத்தில் சாதிப் பூசல்களுக்கு இடமில்லை; சமயப்பூசல்களுக்கு இடமில்லை; கட்சிப் போராட்டங்களுக்கும் வழியில்லை; ஒருவரை ஒருவர் வைது பிழைக்கவும், பாமர மக்களைச் சமயத்தின் பெயரால் ஏமாற்றிப் பிழைக்கவும் வழியில்லை; சமுதாயம்‘அன்பு’ என்னும் விளக்கு ஏற்றி, ‘அருள்’ என்னும் ஒளி பெற்று வாழும்; இத்தகைய வாழ்வைப் பெறுவதே ஆறறிவு படைத்த மக்களது கடமையாகும். 2. மனிதனும் சமயமும் முதல் நிலை “படைப்புக் காலத்தில் மனிதன் பேச அறியாதவனாக இருந்தான்; பின்பு விலங்குகளையும் பறவைகளையும் பார்த்து அவற்றைப்போல ஓசைஇட அறிந்துகொண்டான்; அவ்வோசை களால் தன் கருத்துக்களைப் புலப்படுத்தி வந்தான்; பின்பு படிப்படியாக பேசக் கற்றுக் கொண்டான். சொற்களும் சொற்களைக் கொண்ட வாக்கியங்களும் பிறகு வளர்ச்சி யடைந்தன,” என்று மொழி நூல் அறிஞர்கள் மொழிகின்றனர். இவ்வாறு மனிதன் பேசமுடியாத நிலையில் இருந்தபொழுது அவனுக்குக் கடவுள் உணர்ச்சியும் பக்தியும் உண்டாகவில்லை. அறிவு படிப்படியாக வளர்வதே தவிர ஒரே நாளில் உண்டாவதன்று. அதுபோலவே அறிவுவளரத் தொடங்கிய பிறகே உலகத்தையும் உலகப் பொருள்களையும் பார்த்துப்பார்த்து மனிதன் அறிவு பெறுகின்றார்; பின்பே உலகைப் படைத்த பேராற்றலைப்பற்றி எண்ணத் தொடங்கினான். பண்டை மனிதன் மலைக் குகைகளிலும் அடியிலும் வாழ்ந்தான். பாம்புகளும் அவனுடன் வாழ்ந்தன. பாம்பு கடித்து மனிதன் இறந்ததைக் கண்டதும் அஞ்சின பழைய மனிதன், பாம்பைக் கண்டு அஞ்சினான்; தன்னைத் தீண்டாதிருக்க அதற்கு மரியாதை செய்யத் தொடங்கினான். அம்மரியாதையே படிப்படியாக வளர்ந்து பாம்பு வணக்கமாக மாறியது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து; எந்த நாட்டிலும் பாம்பு வணக்கமே பழமை வாய்ந்ததாக இருப்பது இதற்கு ஏற்ற சான்றாகும் என்றும் கூறுகின்றனர். நீத்தார் வழிபாடு பண்டை மனிதன் தன்னுடன் இருந்த ஒருவர் இறந்ததைக் கண்டு அஞ்சினான்; அவரது ஆவி மீண்டும் அவரது உடம்பினுள் குடிபுகலாம் என்று நம்பினான். அதனால் அம்மனிதர் பயன் படுத்திய கருவிகளையும் அவருக்கு வேண்டிய உணவுப் பொருள் களையும் அவர் உடலுடனே ஒரு தாழியுள் வைத்து அடக்கம் செய்து நிலத்தில் புதைத்தான்; அந்த ஆவி மக்களை ஆக்கவோ அழிக்கவோ ஆற்றலுடையது என்பதை நம்பினான்; அந்நம்பிக்கையால் இறந்தவரை நம்பி வழிபடலானான். இவ்வழிபாடே ‘நீத்தார் வழிபாடு’ என்பது. மனிதன் தன் குடும்பத்தில் இறந்தவரை வழிபட்டாற் போலவே தன் சமுதாயத்தில் இருந்த இறந்த கொடிய ஆணையும் பெண்ணையும் அவர் இறந்த பிறகு வழிபடலானான்; அகால மரணம் அடைந்தவர் ஆவிகள் தன்னை வந்து துன்புறுத்தலாம் என்று எண்ணி அவற்றையும் வழிபடத் தொடங்கினான். நோயால் இறந்தவர், தூக்குப் போட்டுக்கொண்டவர், கொலை செய்யப்பட்டவர் முதலியோர் இப்பகுதியுள் அடங்குவர். சமுதாயத்தில் சிறந்த வீரர்களாக இருந்து இறந்த வரும் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாயினர். மதுரை வீரன், சங்கிலிகருப்பன், ஐயனார் முதலியோர் இவ்வரிசையில் அடங்குவர். ஊரில் எல்லோருக்கும் நல்லவராய் இருந்து இறந்த ஆடவரும் பெண்டிரும் வழிபடப் பெற்றனர். எண்ணிறந்த கிராம தேவதைகள் இந்நீத்தார் வழிப்பாட்டைச் சேர்ந்தவையாம். கோவில் வளர்ச்சி மனிதன் மரத்தை வழிபாட்டுக்குரிய இடமாகக் கொண்டான்; அதன் அடியில் இறந்தவர் உருவம் பொறிக்கப்பெற்ற கல்லை நட்டு வழிபடத் தொடங்கினான். இங்ஙனம் கல்நடுதல் மிகப் பழைய வழக்கம் என்பதைத் தொல்காப்பியத்தால் அறியலாம். இங்ஙனம் நடப்பட்டகல் வழிபாட்டுக்குரிய பொருளானது. பின்னர் நாளடைவில் அதனைச் சுற்றிலும் சுவர்கள் எழுப்பப் பெற்றன. பூசை ஏற்பட்டது; புன்பு படிப்படியாகப் பெரிய கோவில் ஆகியது. இவ்வாறு உண்டான கோவில்கள் இந்நாட்டில் மிகப்பல. “வீரர்கள் லிங்கங்கள் ஆனார்கள்” என்று ஒரு தெலுங்குப் பாடல் கூறுகின்றது. இது மனிதன் தெய்வமான வரலாறாகும். போகர் முதலிய சித்தர்கள் அடக்கமான இடமே புகழ்பெற்ற தமிழகத்துக் கோயில்களுள் சில என்று அறிஞர் கூறுவர். இவ்வாறே அரசரும் அரசமாதேவியரும் இறந்த இடத்தில் எடுக்கப்பெற்ற கோயில்கள் பலவாகும். சோழர்கள் காலத்தில் இத்தகைய கோவில்கள் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களால் அறிகின்றோம். ஆதித்த சோழன் இறந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது. இவ்வாறே அரசமாதேவியர் பலருக்கும் கோவில்கள் கட்டப்பட்டன. கடவுள் வழிபாடு இவ்வாறு பல கோயில்கள் கட்டப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆயின. பழைய மனிதன் பாம்பை வணங்கினான்; இறந்த உறவினரை வழிபட்டான்; பின்பு ஆண்களையும் பெண்களையும் வழிபட்டான்; நன்மக்களையும் வழிபட்டான்; அரசரையும் அரசமாதேவியரையும் வழிபட்டான்; சமய குருமார் இறந்த இடங்களில் எழுப்பப்பெற்ற கோவில்களிலும் வழிபாடுகள் நிகழ்த்தினான். இவ்வாறு பல கோவில்களைக் கட்டிக்கொண்டே அறிவு வளர்ச்சிபெற்ற மனிதன், உலகைப் படைத்து-காத்து-அழிக்கும் பேராற்றலையும் வழிபட்டு வந்தான். இவ்வழிபாடு கடவுள் வழிபாடு என்பது முன்பு கூறப்பெற்றது, ‘சிறு தெய்வ வழிபாடு’ என்பது பலவகைக் கோவில்கள் முதலில் குடிசைகள் கோவில்களாக மாறின; பின்பு மனிதன் ஓட்டு வீட்டில் வசிக்கத் தொடங்கியதும், கோவில்கள் ஓட்டு வீடுகளாக மாறியன. கருங்கல்லின் பயனை மனிதன் அறிந்தவுடன் கற்கோவில்கள் கட்டப்பட்டன; கல் உருவங்கள் கற்கோவில்கள் கட்டப்பட்டன; பொன் முதலிய உலோகங்களை மனிதன் கண்டதுமுதல் கடவுள் உருவங்களும் தெய்வங்களின் உருவங்களும் உலோகங்களால் செய்யப்பட்டன. மனிதன் ஒருத்தியுடன் வாழ்ந்தபோது கடவுளுக்கும் ஒரு மனைவி வழங்கப் பட்டாள். மனிதன் இரண்டு மனைவியரை மணந்தபோது கடவுளுக்கும் மனைவியர் இருவர் வழங்கப்படடனர். மனிதனது குடும்பம் பெருகியதுபோலவே கடவுளுக்கும் குடும்பப் பெருக்கம் கற்பிக்கப்பட்டது. சுருங்கக் கூறின், மனிதன் தன்னைப்போலவே கடவுளையும் நினைத்தான்; தான் விரும்பின எல்லாம் கடவுளும் விரும்பியதாகக் கருதினான். அவன் அறிவு வளர வளர, சமயத்துறையும் படிப்படியாக வளரத் தொடங்கியது. 3. சமுதாய நிலைமை எந்த நாட்டு வரலாற்றிலும், அந்நாட்டு மக்கட்குத் தேவைப்படும்பொழுது அருள் உள்ளங்கொண்ட உத்தமர்கள் தோற்றமளிக்கும் உண்மையை நாம் காண்கின்றோம். ஏறத்தாழ ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககாலத்தில் சமயப் பூசல்களும் சாதிப் பிணக்குகளும் பெரும்பாலும் இல்லையென்னலாம். பிற்காலத்தில் சமண பௌத்த சமயங்கள் சமுதாயத்தில் சாதி வேறுபாடற்ற நிலையை உண்டாக்கின. ‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும்’ என்பது அச்சமயங்களின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது. அதனால் சாதி வேறுபாடுகள் வேரூன்றத் தொடங்கிய பிற்காலத்தில் அவற்றை வெறுத்த தமிழ் மக்கள், அச்சமயங்களைத் தழுவித் தம்மைப் பற்ற இருந்த சாதி இழிவுகளைப் போக்கிக் கொண்டனர். ஆயினும், சைவ வைணவ சமயங்களால் அச்சமயங்கள் பலத்த சமயப் போராட்டத்தின் இறுதியில் தம் செல்வாக்கை இழந்தன. அவ்விரண்டு சமயங்களையும் ஒழிக்கும் வரையில் சைவத்திலும் வைணத்திலும் சாதி வேறுபாடுகள் மிகுதியாகக் கவனிக்கப்பட வில்லை. “ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடை க்க ரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவு ளாரே” என்று திருநாவுக்கரசர் பாடியது கருதத் தக்கது. சிலர் சைவ சமயத்தில் சாதி வேறுபாடு பாராட்ட முயன்ற போது இது பாடப்பட்டது என்பது உய்த்துணரப்படும். சைவ சமய ஆச்சாரியருள் இவ்வேறுபாடு தலைகாட்டவில்லை. சுமார்த்தப் பிராமணராகிய திருஞான சம்பந்தர் வேளாளப் பெரியாராகிய திருநாவுக்கரசரை அவரது முதுமையை நோக்கி ‘அப்பரே’ (குயவாநச) என்று அழைத்தமை காணத்தக்கது. பாணர் வகுப்பினராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவர் மனைவியாரையும் முருகநாயனார் என்ற வேதியர் வீட்டில் வேள்வி செய்யுமிடத்தில் ஓர் இரவு தங்க வைத்தார் என்பது கூர்ந்து கவனித்தற்குரியது. ஒர சமயத்தைச் சேர்ந்த அடியார் களுக்குள் சாதி வேறுபாடு காட்டலாகாது என்ற கருத்து அக்காலத்தில் அழுத்தமாக நிலவியிருந்ததே இதற்குக் காரணமாகும். இதே காரணத்தாற்றான் சுந்தரர் தாம் காதலித்த பரவையார் என்ற கணிகையர் திலகத்தையும், சங்கிலியார் என்ற வேளாளர் பெண்மணியையும் இறைவனே முன்னின்று முடிக்க மணந்து கொண்டார். இங்ஙனம் சாதியற்ற சமுதாயத்தைச் சமயத்தின் பெயரால் உருவாக்க முயன்றமையால்தான் சைவசமயம் அக்காலத்தில் விறுவிறுப்பாக வளரத் தொடங்கியது. ஆனால் சமண பௌத்த சமயங்கள் வீழ்ச்சியுற்ற பிறகு, பாழும் சாதி வேறுபாடுகள் மீண்டும் தலைகாட்டலாயின. பிற்காலச் சோழர் காலத்தில் குறிப்பிட்ட சில வகுப்பார், மற்றவர் வாழும் தெருக்களில் நடக்கக்கூடாது என்ற விதி ஏற்பட்டது. இன்னின்ன வகுப்பார் காலில் செருப் பணிந்து தெருக்களில் போகக் கூடாது என்னும் தடை உண்டானது. இன்னின்ன வகுப்பார் மாடி வீடு கட்டு தலாகாது, அங்ஙனம் கட்ட வேண்டுமானால் அரசனது இசைவு பெற வேண்டும் என்ற விதி ஏற்பட்டது. இன்னின்னார் கோயிலுக்குள் வரலாகாது என்ற வரையறையும் வற்புறுத்தப் பட்டது. அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த சோழப் பேரரசரது ஆட்சியில் இவை நீக்க முடியாத களங்கங்களாக நிலை பெற்றிருந்தன. சுருங்கக் கூறின், அக்காலச் சமுதாயம் மேலளவில் ஒற்றுமையாய் காணப்பட்டது; உண்மையில் பல்வேறு சாதிகளாகப் பிரிந்து மானவுணர்ச்சி இழந்த நிலையில் புண்பட்ட நெஞ்சோடு வாழ்ந்து வந்த மக்களைக் கொண்டதாக இருந்தது என்பது தவறாகாது. சில விளாம்பழங்களை உடைத்துப் பார்த்தால் உள்ளே பூசாடம் இருக்கும்; மேலாகப் பார்த்தால் தோற்றம் நன்றாக இருக்கும் அதுபோல அக்காலச் சமுதாயமும் பேரளவில் ஒன்றுபட்டதாவும், உள்ளளவில் பல நூறு பிரிவுகளைக் கொண்டு வேறுபட்டதாகவும் இருந்து வந்தது. இதனால்தான் அச்சமுதாயம் அயலார் படை யெடுப்புக்களை எதிர்த்து நிற்க ஆற்றலின்றி உடைந்து சிதறியது. வந்தவர் இந்நாட்டுப் பொருள்களைக் கொள்ளை கொண்டு சென்றனர். புண்பட்ட நெஞ்சோடு ஒடுக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் இருந்த மக்கள் பின்வந்த சமயங்களைத் தழுவிச் சைவ வைணவ சமயங்களில் தமக்கு இருந்த இழிநிலையைப் போக்கிக் கொண்டனர். நமது நாட்டில் இன்றுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களும் கிறித்தவரும் யார்? நம் நாட்டுத் தமிழரே அல்லவா? அவர்கள் ஏன் பிற சமயங்களைத் தழுவினர்? நம் சைவ வைணவ சமயங்களில் சாதியின் பெயரால் நடைபெற்ற கொடுமைகளையு ணம் இழிவுகளையும் பொறுக்க முடியாமல் தான் அச்சமயங்களைத் தழுவிக் கொண்டனர். அச்சமயங்களில் நம்மிடம் உள்ள சாதிகள் இல்லை. ‘இறைவனால் படைக்கப் பட்டவர் அனைவரும் அவன் பிள்ளைகளே’ என்ற பரந்த கொள்கையே அச்சமயங்களை மற்றவர் தழுவக் காரணமாக இருந்தது. இந்து சமயத்திலுள்ள அமாவாசை என்ற பறையன் இழிந்தவனாகக் கருதப்பட்டான். ஆனால் அவன் மகன் கிறித்தவ சமயத்தைத் தழுவித் தாவீது என்ற பெயர் தாங்கியவுடன் இந்துக்களாலேயே மதிக்கப்பட்டான். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த கோபாலன் என்பவனுக்குச் சைவ வைணவத்தில் மதிப்பில்லை. ஆனால் அவன் முஸ்லிம் ஆகி அப்துல்லாவாய் மாறியவுடன் சைவனும் வைணவனும் ‘வாருங்கள் பாய்’ என்று அவனை அழைத்து மரியாதை செய்யும் நிலைமை ஏற்பட்டது. இத்தகைய இழிநிலை சைவ வைணவரிடம் இருந்த காரணத்தால்தான் இந்நாட்டில் சைவ வைணவர் எண்ணிக்கை வரவரக் குறையலாயிற்று; முஸ்லிம், கிறித்தவர் ஆகியோர் எண்ணிக்கை வரவர வளரலாயிற்று. கிறித்தவப் பாதிரிமார் இந் நசுக்குண்ட மக்களை அன்போடு அணைத்து ஆதரவு நல்கிக் கல்வி வசதியும் மருத்துவ வசதியும் இலவசமாக அளித்து, அவர்தம் வாழ்க்கைத் தரத்தை உயத்தினர். இதனால் கிறித்தவ சமயம் வாழ்க்கையை உயர்த்தும் சமயமாகக் கருதப்பட்டது. எனவே, அச்சமயம் மேலும் வளரலாயிற்று. சமுதாயத்தில் உண்டான இச் சீர்கேடுகளெல்லாம் இராமலிங்க அடிகளின் அருள்விழிகளுக்கு முன் ஆபாச உருவங்களாகக் காட்சியளித்தன. கல்வி, கேள்வி, ஒழுக்கம் இம்மூன்றிலும் மெய்யாகவே மேம்பட்டு விளங்கியவர் சாதி என்னும் பெயரால் சமுதாயத்தில் சிறப்பப் பெற முடியாமைiயக் கண்டார்; அதே சமயத்தில் கேவலம் உயர்சாதி என்ற ஒரே காரணத்தால் கல்வி, கேள்வி, ஒழுக்கம் ஆகியவற்றில் ஒரு சிறிதும் முன்னேறாதவர், சமுதாயத்தில் மதிப்புப் பெற்றதையும் பார்த்தார்; நீதிக்கும் நேர்மைக்கும் சமுதாயத்தில் இடமில்லை என்பதை நன்கு உணர்ந்தார். ஒரு சில உயர் சாதிக்காரர் சதியால் கோடிக் கணக்கான மக்கள் எல்லா நலங்களும் பெற்றிருந்தும் பிறவியால் இழிந்தவர் என்று கருதும் மனப் பான்மையை எண்ணி எண்ணி மனம் புண்பட்டார். மனித சமுதாயத்தின் பலத்தையே ஒடுக்கிவிட்ட-மனித சமுதாயத்தின் மானத்தையே இழக்கச் செய்த இப்பாழான சாதி வேறுபாடுகளை நிலை நிறுத்த எழுதப்பட்டிருந்த போலி ‘நீதி நூல்களைப்’ படித்தார்; மனம் வெதும்பினார். அவர் வாழ்ந்த காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி யாகும். அப்பொழுது ஆங்கில ஆட்சி இந்தியாவில் பரவி வந்தது. சமயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் இச் சமுதாயச் சீர்குலைவே என்பதை அடிகளார் நன்கு உணர்ந்தார், ஒருவரை ஒருவர் கீழாக மதிக்கும் சாதி வேறுபாடுகள் உள்ள வரையில் சமயம் உருப்படாது என்பதை உளமார உணர்ந்தார். அக்காலத்தில் ஆண்டவன் எழுந்தருளியுள்ள திருக்கோவில்களில் இப்பாழும் வேறுபாடுகள் வழக்கிலிருந்தன. குறிப்பிட்ட வகுப்பார் மட்டும் நடு மண்டபத்தில் இருந்து வழிபட வேண்டும்; சில வகுப்பார் முன்மண்டபத்திலிருந்து வழிபட வேண்டும்; வேறு சில வகுப்பார் முன் மண்டபத்திற்கு அப்பாலிருந்து வழிபட வேண்டும்; மற்றும் சில வகுப்பினர் கோவிலுள் நுழைதல் கூடாது என்று இருந்த கடுமையான-மனிதப் பண்பற்ற கட்டுப் பாட்டினைக் கண்டு அடிகள் மனம் கலங்கினார். ‘அருள் வடிவான ஆண்டவனை ஒன்றுகூடி வழிபட அவன் மக்களுக்கு உரிமையில்iலயா? வழிபாட்டிலும் இத்துணை வேறுபாடுகளh?’ என்று எண்ணி உள்ளம் கசிந்தார். இவ்வுள்ளகக்கசிவே கீழ்வரும் விண்ணப்பத்தை வெளிவரச் செய்தது: “எல்லாமுடைய அருட்பெருஞ் சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.” 4. புத்தர் பெருமான் புத்தஞாயிறு எல்லா உயிர்களையும் தன்னைப் போலவே எண்ணி மக்களிடமும் பிற உயிர்களிடமும் அன்பாக நடந்துகொள்வதே மனித இனமும் மற்ற உயிர்களும் பேரின்பம் நுகர ஏற்ற வழியாகும் என்பதை முதன் முதலில் உலகிற்கு எடுத்துக்காட்டிய உத்தமர் கௌதம புத்தராவர். இப் பெரியார் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு வடஇந்தியாவில் அரசமரபில் பிறந்தவர். அவருடைய முன்னோர் சாக மரங்கள் அடர்ந்திருந்த இடத்தில் முதலில் இருந்த காரணம் பற்றிச் ‘சாக்கியர்’ என்றும், கோதமர் என்பவர் மரபில் உதித்த காரணம் பற்றிக் ‘கௌதமர்’ என்றும் வழங்கப்பட்டனர். அம்மரபில் வந்த சுத்தோதனன் என்ற மன்னனுக்கும் மாயாதேவி என்ற அவன் மனைவிக்கும் பிறந்தவரே புத்தர் பெருமான். உரிய பருவத்தில் யசோதரை என்னும் அரச குலப் பெண்மணி புத்தருக்கு மனைவியானாள். ஆயின், அதுகாறும் மக்களுக்குப் பிணியும் மூப்பும் சாக்காடும் உண்டு என்ற செய்தியும், உயிர்களுக்குத் துன்பம் உண்டு என்ற செய்தியும் அறிந்து கொள்ள அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லையாம். உலகை அறிதல் ஒருநாள் அவர் தம் அரண்மனையை விட்டு வெளிச் சென்ற பொழுது மிக்க பிணியாளன் ஒருவனைக் கண்டார்; எல்லோரும் இப்படியே நோய் வாய்ப்பட்டுத் துன்புறுவர் என்பதை உணர்ந்தார்; மற்றொரு நாள் தள்ளாடி நடந்து வந்த முதியவன் ஒருவனைக் கண்டார்; எல்லோரும் இவ்வாரே முதுமை யடைந்து வருந்துவர் என்பதை உணர்ந்தார். பிறிதொரு நாள் அழுகிக் கிடந்த பிணமென்றைக் கண்டார்; எல்லோரும் இறத்தற்கு உரியார் என்பதை உணர்ந்தார். அப்பொழுது அவருக்கு உலக வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டது; ‘பிணி, மூப்பு, சாக்காடு இவற்றுக்குக் காரணம் பிறப்பே. பிறப்பிற்கு இடங்கொடாத நல்வழி அறிந்து நாம் உய்ய வேண்டும்; உலகத்தையும் உய்வித்தல் வேண்டும்’ என்று தம்முள் உறுதி கொண்டார். பின்பு கௌதமர் உழவர் படும் துன்பத்தையும் மாடுகள் உடல் வருந்த ஏர் உழுதலையும் கண்டு மனம் வருந்தினார். உலகத் துன்பத்தை எவ்வாறு துடைப்பது என்னும் கவலையில் அழுந்தி ஒரு நாவல் மரத்தின் கீழே அமர்ந்தார்; கண்களை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தார். துவராடை அணிந்த துறவி ஒருவர் அந்நிலையில் அவருக்குத் துறவுநிலையை அறிவுறுத்தி மறைந்தார். புத்தர் தாம் துறவு கொள்ள விரும்புவதைத் தந்தையிடம் தெரிவித்தார். தந்தை ஆறுதல் கூறி மன்னன் மகனுக்குரிய கடமைகளை அறிவுறுத்தினார். யாக்கை நிலையாமை என்பதை உணர்ந்த புத்தர் அழகிகளைக் கண்டு அருவருத்தார்; குடும்பப் பொறுப்பிலிருந்து விலக விழைந்தார். அந்நிலையில் அவருக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. மகன் பிறந்த அன்றிரவு துறவு மேற்கொள்ளத் துணிந்த புத்தர் தம் மனைவியையும் மகனையும் அவர்களுக்குத் தெரியாமல் இறுதியாகப் பார்த்து உள்ளம் தெளிந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். அப்பொழுது அவருக்கு வயது இருபத் தொன்பது. அரண்மனையை விட்டு வெளியேறிய புத்தர் முனிவர் பலரைக் கண்டு துக்க நீக்கத்திற்கு வழி யாது என்று கேட்டார். அவர்கள் விடை அவர் உள்ளத்திற்கு ஏற்றதாயில்லை. இறுதியில் அவர் ஒரு முனிவரை அடைந்து யோக நிலையில் ஒழுகுவாராயினர். அன்பு நெறி ஒருநாள் புத்தர் பிம்பசாரன் ஆண்ட இராஜகிருஹம் என்ற நகரத்திற்குப் பிச்சை எடுக்கச் சென்றார். அம்மன்னன் பல ஆடுகளைக் கொன்று யாகம் செய்யப் போவதைக் கேள்வியுற்றார். மிகுந்த கவலையுடன் யாக சாலைக்குச் சென்றார். கொல்லாமை யாகிய நல்லறத்தின் சிறப்பினை விரித்துக் கூறிக் கொலை வேள்வியைத் தடுத்தார். ‘ பின்பு கௌதம் புத்தர் நைரஞ்சரை என்னும் ஆற்றின் கரையில் இருந்த அரசமரத்தடியில் இருபத்தெட்டு நாள் ஊணும் உறக்கமும் இன்றி ஆழ்ந்த சிந்தனையில இருந்தார். இருபத்தொன்பதாம் நாள் காலையில் சுஜாதை என்னும் இடைக்குல மங்கை பாலன்னத்தை அவருக்கு ஊட்டினள். அப்பொழுது கௌதமர் ஒளி பெற்று விளங்கினர்; துன்பம், துன்பத்தின் தோற்றம், துன்ப நீக்கம், துன்ப நீக்க வழி என்ற நான்கு உண்மைகளைக் கண்டறிந்தார். அவாவே பிறப்பிற்குக் காரணம்: அதுவே ஒழுக்கக் கேட்டுக்கும் காரணம். ஆதலால் அவா வெறுப்பவன் பிறவி எய்தான் என்று உபதேசிக்கலாயினர். பிள்ளைகள் பெற்றோர்களிடமும் பெரியோர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் அன்பும் மரியாதையும் உள்ளவர் களாக நடந்துகொள்ள வேண்டும்; மறந்தும் எவ்வுயிர்க்கும் கேடு செய்யலாகாது. ஒழுக்கம் உயிரைப் போல் பாதுகாக்கப் படவேண்டுவது; எல்லோரும் உண்மையே பேசுதல் வேண்டும்; மனிதருக்குள் உயர்வு தாழ்வில்லை என்பன போன்ற அறிவுரை களைப் புத்தர் நாடெங்கும் அறிவுறுத்தலானார். இந்த அறிவுரைகள் கொலை கேள்வி செய்யும் வைதிக நெறிக்கு மாறுபட்டவை; ஆயினும் வேத நெறிக்கு மாறுபட்ட இவ்வறிவுரைகளைப் பின்பற்றுவோர் அனைவரும் ஒரே சமூகத்தினராகக் கருதப்பட்டனர். பிறப்பாலும் தொழிலாலும் வேத நெறியில் ஏற்பட்ட உயர்வு தாழ்வுகள் பௌத்த சமயத்தில் கவனிக்கப்படவில்லை. அங்கு அரசனும் ஒனறே; ஆண்டியும் ஒன்றே. சாதி வேறுபாடுகளை ஒழித்து எல்லா மனிதரும் ஓர் இனத்தவரே என்று புத்தர் பெருமானது அன்பு நெறி நாடெங்கும் அறிவுறுத்தியது. உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்ற ஒன்றே பௌத்த நெறியின் உயிர் நாடியாக விளங்கியது. இதனால் சாதிகளால் துன்புறுத்தப்பட்ட மக்கள் அனைவரும் மனமகிழ்ச்சியோடு இப்புது நெறியைத் தழுவினர். புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட சங்கத்தில் ஆண் துறவிகளும் பெண் துறவிகளும் இருந்து நாடெங்கும் அன்பு நெறியைப் பரப்பலாயினர். இந்தியாவின் பெரும்பகுதியை ஒரு குடைக்கீழ் ஆண்ட அசோகன் காலத்தில் பௌத்த சமயம் இந்தியாவில் மட்டுமன்றிக் கடல்கடந்த நாடுகளிலும் சீனம் ஜப்பான் முதலிய வெளிநாடுகளிலும் பரவியது. நமது தமிழகத்திலும் இப்புது நெறி பரவித் தமிழகத்தைத் தூய்மை செய்தது. பௌத்த சமயத்தின் கொள்கைகளும் பௌத்த சங்கத்தினரின் ஒழுக்கமும் அறச் செயல்களும் புத்தர் அருளுரைகளும் தமிழ்க் காவியமாகிய மணிமேகலையில் பரக்கக் காணலாம். ஏறத்தாழ இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் புத்தர் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அருள் நெறி பல காரணங்களால் பழுதுபட்டது. மீண்டும் இந்த நாட்டில் சாதிகளை உண்டாக்கிய வைதிக நெறி அரசர்கள் ஆதிக்கத்தின் கீழ் கால் கொண்டது. ஆயிரக் கணக்கான சாதிகள் தோன்றின; வேத வேள்விகள் பெருகின; கணக்கற்ற கடவுளர் வழிபாடுகள் தோன்றின; சிந்தித்துச் செயலாற்றும் திறமையற்ற மன்னர்களாலும் அரசனது கோலுக்கு அஞ்சி வாழ்ந்த குடிமக்களது கோழைத் தன்மையாலும் அருள்நெறி இருள்நெறியாகி விட்டது. வேற்றார் ஆட்சி, கொள்கை, கொலை, சமயத்தின் பெயரால் சுரண்டல், ஒருவரையொருவர் கீழ்மைப்படுத்தி வாழ்தல் முதலியன முன்போலத் தலைவிரித்தாடின. இந்தச் சூழ்நிலையில் அருள் ஒளியோடு தோன்றியவர்தான் அருள் உள்ளம் கொண்ட இராமலிங்க அடிகள். அடிகள் அறிவுரை புத்தர் பெருமானுடைய அருள் உரைகளை உளம் கொண்டு, கீழ்வரும் இராமலிங்க அடிகளின் அருள் உரைகளைக் காண்க. ஒருமைப்பாடு எளிதில் விளங்கும். “பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும் புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும் ஒத்தாரு முயர்ந்தாருந் தாழ்ந்தாரு மெவரும் ஒருமையுள்ள ராகியுல கியல்நடத்தல் வேண்டும் இச்சாதி சமயவிகற் பங்களெலாந் தவிர்ந்தே எவ்வுலகுஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்.” “வன்புலா லுண்ணு மனிதரைக் கண்டு மயங்கியுள் நடுங்கியாற்றாமல் என்பெலாங் கருக இளைத்தன னந்த இளைப்பையு மையநீ யறிவாய் .............................................................................இரக்கம் என்னுயி ரென்னவே றிலையே நிலைபெறும் இரக்கம் நீங்கிலென் னுயிரும் நீங்குநின் திருவுள மறியும்” “குணம்புரி யெனது தந்தையே யுலகிற் கூடிய மக்கள்தந் தையரைப் பணம்புரி காணி பூமிகள் பிரிநற் பதிபுரி யேற்றபெண் பார்த்தே மணம்புரி யெனவே வருத்துகின் றார்…............................................................................” 5. கன்பூஷியஸ் ஏறத்தாழ 2400 ஆண்டுகட்குமுன் சீன நாட்டில் கன்பூஷியஸ் என்பவர் தோன்றினார். அவர் காலத்தில் சீனம் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சிறு நாட்டையும் தலைவன் ஒருவன் ஆண்டு வந்தான். அந் நாடுகளுள் ‘லூ’ என்பது ஒன்று; இட்ஸி என்பது மற்றொன்று. கன்பூஷியஸ் லூ நாட்டில் பிறந்தவர். அவர் எளிய குடும்பத்தில் சேர்ந்தவர். அவர் தமது பத்தொன்பதாவது வயதில் திருமணம் செய்து கொண்டார்; தம்நாட்டுப் பூங்காக்களையும் கால்நடைகளையும் மேற்பார்க்கும் அதிகாரியாக இருந்தார். கன்பூஷியஸ் ஒழுக்கத்தை உயிராகக் கருதினவர்; சொல் தவறாதவர்; குறித்த காலத்தில் குறித்தவேலையைச் செய்து முடிப்பவர்; அரசாங்க சட்ட திட்டங்களைச் சிறிதளவும் மீறாதவர். ஆனால், அவர் காலத்தில் செல்வரும் செல்வாக் கினரும் சட்டங்களை மதியாமல் தம் மனம் போனவாறு நடந்து வந்தனர். நேரிய முறையில் வாணிகம் நடைபெற வில்லை; மக்கள் அமைதி பெற்று வாழ முடியவில்லை. நாட்டில் உண்டான இக் கொடுமைகளைக் கன்பூஷியஸ் கருத்துடன் கவனித்தார்; மனம் வருந்தினார்; உயர்ந்த வழக்கங்களைப் புதுப்பிக்க விரும்பினார்; அதனால் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அவர் அப் பள்ளியில் தன்னடக்கம், தலைமை தாங்குவதற்கு வேண்டும் தகுதி ஆகிய இரண்டையும் பற்றி வற்புறுத்தினார்; பள்ளியில் சேர்ந்த செல்வர் வீட்டுப் பிள்ளைகளைக்கும் மிகுந்த சம்பளத்தை விதித்தார். ஏழைப் பிள்ளைகளுக்கு இலவசமாகக் கல்வி புகட்டினார். அவருடைய ஒழுக்கத்தையும் அரிய தொண்டினையும் அறிஞரும் ஏழை மக்களும் பாராட்டினர். சில ஆண்டுகட்குப் பின்பு ஒரு நாட்டில் கலகம் ஏற்பட்டது; பழைய அரசன் ஓடிவிட்டான்; கலகக்காரத் தலைவன் அரசனானான்; பதினைந்து ஆண்டுகள் கடந்தன; பள்ளியில் பயிற்சி பெற்று வெளிப் போந்த மாணவர்கள் நாடெங்கும் சென்று மக்களிடையே நல்லொழுக்கத்தைப் பரப்பினர். ‘லூ’ நாட்டின் புதிய அரசன், கன்பூஷியஸ் செய்து வந்த தொண்டின் சிறப்பினை நன்கு உணர்ந்தான்; அவருடைய சிறந்த பண்புகளைக் கவனித்தான்; அவரிடம் பெருமதிப்புக் கொண்டான்; அவரைத் தன் நாட்டுத் தலைமை அறத் தலைவராக அமர்த்தினான். 52 வயதுடைய கன்பூஷியஸ் துலைநாப் போல நடுவுநிலையிலிருந்து வழக்குகளை நன்கு விசாரித்து அறமுறைத்தார். அவரது நேர்மையைக் கண்டுவியந்த வேந்தன் அவரைத் தன் முதலைச்சராக வைத்துக்கொண்டான். நேர்மை மிகுந்த அவரது ஆட்சியால், அந்நாடு சில ஆண்டுகளில் மிகச் சிறந்த நாடாக பிற நாட்டவரால் பாராட்டப்படும் நிலையை அடைந்தது. கன்பூஷியஸ் ஒவ்வொரு பொருளின் விலையையும் கட்டுப்படுத்தினார். இதனால் வணிகரதுகொள்ளை லாபம் நிறுத்தப்பட்டது. அப்பெருமான் செல்வர்க்கும் வறியவர்க்கும் ஒரே வகையில் நியாயத்தை வழங்கினார்; தொழிலாளரின் உடல் வன்மைக்கும் திறமைக்கும் ஏற்றபடி வேலை கொடுத்தார். இந்த ஒழுங்கான ஏற்பாடுகளால் நாட்டு மக்கள் நன்மை அடைந்தனர். அவரை ‘ஏழை பங்காளர்’ எனக் குடிமக்கள் பாராட்டினர். ஆயினும் செல்வர் அவரது நேர்மையை வெறுத்தனர். அவர்கள் செய்த கிளர்ச்சியின் பயனாக அறிஞர் கன்பூஷியஸ் தமது நாட்டை விட்டே வெளியேறினார். அவரைப் பின்பற்றி அவர் மாணவரும் சென்றனர்; வடகிழக்குச் சீனத்தில் ஊர் ஊராகச் சுற்றினர்; குடிமக்களுக்கு ஒழுக்கத்தின் சிறப்பை வற்புறுத்தினர்; கன்பூஷியஸ் இறுதியில் தம் நாட்டை அடைந்து 74-ஆம் வயதில் காலமானார். இந்த மகான் மக்களுக்குச் செய்யும் தொண்டே இறைவனுக்குச் செய்யும் தொண்டு; நம்போன்ற மக்களை நல்வழிப்படுத்தலே நாம் செய்யும் தவம்; என் கடன் பணி செய்து கிடப்பதே; துன்பத்தைப் பொறுத்து அதனை வெற்றி காண்பதே சிறந்தது என்பன அவர் அறிவுரைகளாகும். அம்மகானுடைய அறிவுரைகள் பல நூல்களாக வெளிவந்தன. அவை இன்றளவும் சீனமக்களால் போற்றப்படுகின்றன. அவரது கல்லறை இன்றும் பூசிக்கப்படுகிறது. இந்தியாவில் புத்தரது சமயத்தொண்டு போற்றப்பட்டாற்போலச் சீனத்தில் கன்பூஷியரது நல்லொழுக்கம் இன்றளவும் போற்றப்படுகின்றது. இன்றுள்ள சீனரிடம் பொறுமை, தன்னடக்கம், மரியாதை முதலியன சிறந்த காணப்படுவதற்கு அம்மகானுடைய அறிவுரையே காரணம் என்று அறிஞர் கூறுகின்றனர். கன்பூஷியஸ் மகானுடைய அறிவுரைகளை உள்ளத்தில் கொண்டு, கீழ்வரும் இராமலிங்க அடிகளின் அறிவுரைகளை நோக்குக:- காலம் தாழ்க்காது எல்லா உயிர்களையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளல்வேண்டும். இதுவே சாதனம். மோசம் செய்பவர் நாசம் அடைவார்கள். பசித்தாரது பசி நீக்கவேண்டும். எல்லா உயிர்களிடத்து தயவும், உலகப்பற்றில் வெறுப்பும், இறைவனிடத்தில் அன்பும் மாறாது நம்மிடத்திருந்தால் சிவத்தின் திருவருள் நம்மை அடையும். சீல சிந்தையும் சீவகாருண்யமும் மாறாமல் கவனத்தோடு இருத்தல் வேண்டும். சட்டங்களை மீறிநடந்த மக்களைக் கண்டு கன்பூஷியஸ் மகான் மனம் வருந்தியதைப் போலவே இராமலிங்க அடிகளும் அன்னவரைப் பற்றி வருந்திக் கூறியிருத்தல் காண்க: “மலைவி லாத்திருச் சிற்றம்பலத் தமர்ந்த வள்ளலே யுலகினிற் பெற்றோர் குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் கொடியதீ நெறியிலே மக்கள் புலைகொலை களவே புரிகின்றார்....................................................................” தென்னிந்தியாவில் தோன்றிய இராமலிங்க அடிகளின் கருத்துக்களுக்கும் பல்லாயிர மைல்களுக்கப்பாற்பட்ட சீனநாட்டில் அடிகளுக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கன்பூஷியஸ் மகானுடைய கருத்துக்களுக்கும் உள்ள ஒற்றுமை நயம் கண்டு மகிழ்தற்குரியது. 6. ஏசுப் பெருமான் அரேபிய நாட்டில் இயேசு நாதர் தோன்றிய பொழுது இன்று நம்மிடையேயுள்ள சூழ்நிலைதான் இருந்தது. அரேபியாவின் மேலைக்கரை யோரத்தில் பல சிறு நாடுகள் அமைந்திருந்தன. பல இனத்தவர் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த இனத் தலைவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். இந்த இனத் தலைவர்கள் தம்முள் ஓயாது போரிட்டுக் கொண்டனர். ஒவ்வொரு இனத்தவரும் பல கடவுளர்களை வணங்கி வந்தனர். வென்ற இனத்தவர் தாம் வழிபட்டுவந்த கடவுளரைத் தோற்ற இனத்தவர்மீது சுமத்தினர். பாபிலோனிய நாகரிகம் வீழ்ச்சி அடைந்த காலத்திலும் இதே நிலைமை தான் இருந்தது. அதே நிலைமை இயேசுநாதர் காலம் வரை தொடர்ந்து வந்தது. கோவில்களை வைத்துக்காத்து வந்த குருக்கள்மார் பாமர மக்களின் அறியாமையை முதலாகக் கொண்டு சமய வாணிகம் செய்து வந்தனர். மக்களின் அறியாமையும் அவர்தம் மூடப்பழக்க வழக்கங்களும், குருக்கள்மாருடைய நெறியற்ற செயல்களும் கண்டு இயேசுநாதர் மனம் புண்பட்டார். எளிய தச்சன் மகனான அவர் சமுதாய நலத்தில் சிந்தனையைச் செலுத்தினார்; இச் சமுதாயத்தை எவ்வாறு சீர்திருத்தம் செய்யலாம் என்பதைப் பல ஆண்டுகளாகச் சிந்தித்தார்; தமக்குப் பட்ட உண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூறலானார். மனித சமுதாய நலத்தில் கருத்துக் கொண்ட பெரியவர்கள் தன்னலமற்றவர்களாகவே இருப்பார்கள். வேண்டுதல் வேண்டாமை என்பன அவர்கள்பால் காண்பது அரிது. உண்மையுடைமை, அன்புடைமை, எல்லா உயிர்களிடத்தும் அருளுடைமை, அடக்கமுடைமை, யாவரிடத்தும் அன்பும் பணிவும் காட்டிப் பேசுதல், இவை அனைத்தினும் மேலாக ஒழுக்கமுடைமை என்னும் உயரிய பண்புகளைப் பெற்றிருப்பார்கள். இவற்றைப் பெற்றவரே புத்தர் பெருமான். இவற்றின் உருவமாய் அமைந்தவரே உலகப்புகழ் பெற்ற ஏசுப் பெருமான். நடக்க முடியாமல் நொண்டிக் கொண்டு போன ஆட்டுக்குட்டியின்மீது கழிவிரக்கம் கொண்டு அதனைத் தம் திருக்கைகளால் தழுவியெடுத்து, அதன் தாய் ஆட்டுடன் நடந்துசென்ற அப்பெருமானது அருள் உள்ளத்தை என்னென்பது! இந்நிலையில், “வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்து கின்றோரென் னேருறக் கண்டுளந் துடித்தேன் ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே யிளைத்தேன்” என்னும் இராமலிங்க அடிகளின் அருளுரை ஆழ்ந்து படித்து இன்புறத்தக்கது. ஐயறிவுயிராகிய ஆட்டுக் குட்டியின் துன்பத்தைக் காணப்பொறாத இயேசுநாதர் ஆறறிவுயிர்களாகிய மக்களின் துன்பத்தைப் பார்த்து எவ்வாறு பொறுத்துக்கொண்டிருத்தல் இயலும்? “அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உ ரியர் பிறர்க்கு” என்னும் வள்ளுவர் வாக்கும் பொய்க்காதன்றோ! அன்பென்னும் மலரிலிருந்து வெளிப்படுவதே அருள் என்னும் மணம். அந்த மணத்தை இயல்பாகப் பெற்ற இயேசுநாதர் தம் உடல் பொருள் ஆவியாகிய மூன்றனையும் பொதுமக்கள் நலனுக்காகவே தியாகம் செய்தார். சமுதாய இழிவுகளைச் சீர்திருத்த விரும்பும் உத்தமர்களைப் பழமை விரும்பிகள் தூற்றவதும், கூடுமாயின் தண்டிப்பதும் எந்நாட்டிலும் வழக்கமாக இருந்து வந்தது; இப்பொழுது நம் நாட்டில் இருந்து வருகின்றது. உருவ வழிபாட்டை எதிர்த்து இயேசுநாதர் மக்களிடையே கடும் பிரசாரம் செய்தார்; கோயில் பூசாரிகளின் அடாத செயல்களை அம்பலப்படுத்தினர்; பொதுமக்கள் சமயத்தின் பெயரால் கொண்டிருந்த மூடப்பழக்க வழக்கங்களை வன்மையாகக் கண்டித்தார். ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தைக் காட்டு என்று அறிவுரை கூறினார்; ‘பிறனைக் குறை கூறுமுன் உன் குறையைத் தீர்த்துக்கொள்’ என்று அறிவுறுத்தினார். இவ்வாறு தனி மனிதன் செம்மைப் படவும் சமுதாயம் செம்மைப்படவும் அவர் அரும்பாடுபட்டார். பயன் என்ன? பழமை விரும்பிகளால் சிலுவையில் அறையப்பட்டார். அப்பொழுதும் அப்பெரியார் வானத்தை நோக்கி, ‘தந்தையே, இவர்கள் தாம் செய்வதை அறியாதவர்கள்; இவர்களை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று இறைவனை விண்ணப்பித்தார். இச்செயலிலிருந்து இவரது இணையற்ற பெருந்தன்மையை நன்குணரலாமன்றோ? இவர் உள்ளத்தில் எந்த அளவு அருள் ஒளி ஊடுருவிச் சென்றிருந்தால் இத்தகைய அருள் மொழிகளைக் கூறியிருத்தல் வேண்டும். இத்தகைய அருள் ஒளி தங்கப் பெற்ற உள்ள முடையவரே இராமலிங்க அடிகள் என்னும் உண்மையை அவர் பாக்கள் பறையறைந்து தெரிவிக்கின்றன. புத்தர் தோன்றி அருள் ஒளியைப் பரப்பிய இந்த நாட்டில் உள்ள கோயில்களில் இன்றளவும் ஆடு, கோழி, பலிகள் நின்றபாடில்லை. சிறு தெய்வங்களின் கோயில்களுக்கு முன் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான உயிர்கள் இன்றும் கொல்லப்பட்டு வருகின்றன. சமுதயத்தின் பெயரால் இந்நாட்டில் வளர்ந்துள்ள மூட நம்பிக்கைகளுக்கு எல்லையில்லை. கல்வியறிவும் எதனையும் எண்ணிப் பார்த்துச் செய்யும் ஆற்றலும் இல்லாத பாமரமக்கள் இக்கொலையில் ஈடுபட்டுள்ளனர். கல்வி வளர்ச்சியிலும், அறிவுத் தெளிவிலும் ஆர்வம்கொண்ட இராமலிங்க அடிகள் காலத்திலும் இக் கொலைகள் நிகழ்ந்த வண்ணமாக விருந்தன. அக் கொலைகாரப் பூசாரிகளைக் கண்டு அடிகள் நடுங்கினர். அவர்களால் பலிக் களத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆடு, பன்றி, கோழி முதலிய உயிர்களைக் கண்ணுற்று உள்ளம் பதைத்தார். வலையர்கள் வைத்திருந்த வலையையும் தூண்டிலை யும் பார்த்த பொழுதும், பறவைகளைப் பிடிக்க வேடர்கள் வைத்திருந்த கண்ணி முதலியவற்றைக் கண்டபொழுதும் அவர் உள்ளம் நடுநடுங்கியது. இதனை அப்பெருமாள் திருவாக்காnலயே உணரலாம்: “நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய வுயிரைப் பொலிவுறக் கொண்டே போகவுங் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன் கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.” “துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெல்லாம பயந்தேன் கண்ணினா லையோ பிறவுயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன் மண்ணினில் வலையுந் தூண்டிலுந் கண்ணி வகைகளுங் கண்டபோ தெல்லாம் எண்ணியென் னுள்ள நடுங்கிய நடுக்க மெந்தைநின் திருவுள மறியும்.” அரசினருக்கு வேண்டுகோள்: “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா வுயிரும் தொழும்” என்று வள்ளுவனார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் கூறினார். உயிர்க் கொலை, கடவுள் பெயரால் ஆகாதென்று இராமலிங்க அடிகள் உள்ளம் உருக உரைத்தார். உயிர்களிடம் கருணை காட்ட வேண்டுமென்று பல சங்கங்கள் பணியாற்று கின்றன. ஆயினும் இந்நாட்டில் பலியிடுதல் நிறுத்தப்படவில்லை. இதனை அடியோடு நிறுத்தல், மதுவிலக்கை மேற்கொண்ட அரசாங்கத்தின் முதற் கடமையாகும். இயேசுநாதர் வாழ்ந்த கால நிலையிலேயே இன்னும் நமது சமுதாயம் இருந்த வருதல் வெட்கப்படத் தக்கது. இதற்குரிய சட்டம் செய்து நடை முறைக்குக் கொணர்தல் நாடாளும் நன்மக்கள் கடனாகும். அவர்தம் அருள் ஒளி ஓங்குக!. 7. நபிகள் நாயகம் ஏசுநாதருக்குப் பிறகு பாலஸ்தீனம் ஒரு கடவுள் வணக்கத்தை ஒப்புச் கொண்டதே தவிர, அதனை அடுத்துள்ள அரபு நாடுகள் ஒப்புக் கொள்ளவில்லை. அரேபியருள் தனித்தனி இனங்கள் பல இருந்தன. ஒவ்வொரு பெருநகரமும் ஒரு தலைவன் ஆட்சியிலிருந்து. அத்தலைவர்கள் தம்முள் ஒற்றுமையின்றி ஒருவரோடொருவர் போரிட்டு வந்தனர். ஒவ்வோர் இனமும் தனித்தனியே தத்தம் பழக்க வழக்கங்களுடன் வாழ்ந்து வந்தது. அரேபியரிடம் நூற்றுக் கணக்கான கடவுளர் வணக்கம் இருந்து வந்தது. மண்ணால் செய்யப்பட்ட கடவுளர் உருவங்களையும், கல்லால் செய்யப்பட்ட கடவுளர் உருவங்களையும் அம் மக்கள் வழிபட்டு வந்தனர்; அக் கடவுளருக்கு மது, இறைச்சி முதலியவற்றை வைத்துப் படைத்தனர்; விலங்குகளையும் பறவைகளையும் அத்தெய்வங்களுக்குப் பலியிட்டதோடு, மக்களையும் பலியிட்டனர். முகம்மது நபியின் தந்தையாரையும், அவர் இளைஞராக இருந்தபொழுது பலியிட ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது தெய்வம் ஏறப்பெற்ற ஒருத்தி அவரைப் பலியிடலாகாது என்று தடுத்துவிட்டாள். அக்கால அரேபிய மக்களிடம் ஒழுக்கம் கடுகளவும் இல்லை. ஒருவன் அறுவர்க்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொண்டான். கற்பு என்பது அவர்களிடம் காண்பதரிது. சுருங்கக் கூறின், கருவாடும் கள்ளும் வைத்துப் படைக்கும் வழிபாடு முதல் மனத்தால் வழிபடும் உயர்ந்த வழிபாடு வரை, எத்துணை வழிபாட்டு முறைகள் நம் நாட்டில் இருக்கின்றனவோ, அத்துணை முறைகளும் அரேபியாவில் இருந்து வந்தன. அவ்வாறே எண்ணிறந்த இனப் பிரிவுகள் நம்மிடையே இருத்தல்போல அங்கும் இருந்து வந்தன. இந்த இனப் பிரிவாலும், வழிபாட்டு வேறுபாடுகளாலும் அரேபியர் ஒற்றுமையின்றியும் ஒழுக்க மின்றியும் மனித உருவத்தில் அமைந்த விலங்குகளாக இருந்து வந்தனர். இந்த நிலையை மாற்றி அரேபியரை ஒரே இனமாகச் செய்த பெருமையும், ஒரு கடவுள் வழிபாட்டினராகக் செய்த பெருமையும் கி. பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில்பிறந்த நபிநாயகத்திற்கே உரியவை ஆகும். நபிநாயகம் குறைஷி என்ற இனத்தில் பிறந்தவர்; பிறப்பதற்கு முன்பே தந்தையை இழந்தார்; பிறந்த சில ஆண்டுகளுள் தாயாரை இழந்தார்; தந்தையின் உடன் பிறந்தாரிடம் வளர்ந்து வரலானார். நத்தை வயிற்றில் முத்துப் பிறந்ததுபோல, மனிதத் தன்மையற்ற அரேபியர் குடியில் ‘மனிதருள் மாணிக்கம்’ போன்ற நபிநாயகம் பிறந்தார். அவர் கருவிலே திரு வாய்க்கப்பெற்றவர்; இளமை முதலே சிறு பிள்ளைகளிடமும் பிறரிடமும் அன்புடைமை, பொறை யுடைமை, எதனையும் எண்ணி ஆராய்தல் முதலிய நற்பண்புகள் அவரிடம் இளமை முதலே காணப்பட்டன. அவர் பொது மக்களுக்குப் பலவகைகளிலும் உதவுவதையே கருத்தாகக் கொண்டவர்; அதனால் “நம்பிக்கைக்கு உரியவர்” என்று மக்கள் அவரைப் பாராட்டி அழைத்தனர். அவரது சீரிய பண்புகளைக் கண்டு வியந்த கதீஜாப் பிராட்டியார் அவரைத் தம்மிடம் வேலையில் அமர்த்திக் கொண்டார். நபிநாயகம், அந்த அம்மையார் செய்து வந்த வாணிகத்தைத் திறம்பட நடத்தினார். வாணிகத்திற்காகச் சிரியா, பாலஸ்தீனம் முதலிய நாடுகளுக்குச் சென்னறார்; ஏசுநாதரின் அன்புச் சமயத்தைப் பற்றிய உண்மைகளை அறிந்தார்; வேறு சமயங்களின் உண்மைகளையும் உணர்ந்தார்; தம் நாட்டு மக்களுடைய அறிவற்ற செயல்களையும் ஆராய்ந்தார்; இந்த நிலையில் அவரை வேலையில் வைத்துக் கொண்டிருந்த கதீஜாப் பிராட்டியாரே நபிநாயகத்தை மணந்து கொண்டார். அந்த அம்மையாரே நபிநாயகத்தின் முதல் சீடரானார். மனைவியால் மதிக்கப்பட்ட புத்தமகானைப் போல, நபிநாயகமும் தமது மனைவியால் மதிக்கப்பட்டார். அப்பெருமான் பல கடவுளர் வணக்கத்தை ஒழித்து, ஒரே கடவுள் வணக்கத்தை அரேபியாபில் நிலை நிறுத்தினார். ‘ஆண்டவன் எங்கும் பரந்திருப்பவன்; ஆதலால் அவனை உருவத்தில் வழிபடுதல் தவறு,’ என்று அறிவுறுத்தினார். இராமலிங்கரும் அருட்பெருஞ் சோதி வடிவில் ஆண்டவனை வழிபட்டவர். நபிநாயகம் கடவுளை நம்பி வாழ்ந்தவர் நாளும் கடவுளை ஐந்து முறை தொழ வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். இராமலிங்க அடிகளும் கடவுளிடம் அழுத்தமான நம்பிக்கை உடையவர்; “பெருங்கருணைப் பெருக்கே, காமம், வெகுளி, மயக்கம் முதலிய தீமைகளை ஒழித்து, நாயிற் கடையேன் செய்த குற்றங்களை யெல்லாம் குணங்களாகக் கொண்டு என் உள்ளத்தே அமரவேண்டும்” என்று எப்பொழுதும் கடவுளை வேண்டிய வண்ணமாக இருந்தார். முஸ்லிம்களின் தொழுகைக் கருத்தும் இதுவே. மக்கள் சமுதாயம் பொய்மை முதலிய தீமைகளை ஒழித்து இறை அன்பு கலந்த சன்மார்க்க நெறியிலேயே வாழ வேண்டும் என்பதே நபிநாயகத்தின் குறுக்கோள். “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுள ராகியுல கியல்நடத்தல் வேண்டும்” என்பது அடிகளார் விருப்பம். அரேபியாவில் இருந்த பல இன்னல்கள் ஒழிந்து, அரேபியர் அனைவரும், சாதி சமய வேறுபாடில்லாமல், ஒரே சமய உணர்ச்சியும் ஒரே கடவுள் வணக்கமும் உடையவராக, நபிநாயகம் செய்து வெற்றி பெற்றார். ஆனால் இராமலிங்க அடிகள் இம்முறையில் வெற்றிபெறவில்லை. எனினும், இதுவே அவரது கருத்து என்பதனை, “இச்சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்ந்தே எவ்வுலகுஞ் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்” என்னும் அருட்பா அடிகளால் நன்குணரலாம். இச்சாதிகள் பக்தி நெறிக்குப் பெரும் தடை என்பதை அடிகள் உணர்ந்து கூறுதலைக் காண்க; “சமய ஏற்பாடு சாதி ஏற்பாடுகiள விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலொழியக், காருயண்யம் விருத்தியாகிக் கடவுள் அருளைப்பெற்று, அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியாது.” கடவுளிடம் ஒருவன் சரண் புகுதலே ‘இஸ்லாம்’ என்ற சொல்லின் பொருளாகும். இவ்வுயர்ந்த கருத்தினை அடியில் வரும் அடிகளது பாடலில் கண்டு மகிழ்க: “திருவெலாம் தருமோர் தெய்வமாம் ஓருவன் திருச்சிற்றம் பலந்திகழ் கின்றான் உருவெலாம் உணர்ச்சி உடல்பொருள் ஆவி உளவெலாம் ஆங்கவன் தனக்கே தெருவெலாம் அறியக் கொடுத்தனன்; வேறு செயலிலேன் எனநினைத் திருந்தேன்” இங்ஙனம் ஏசுப்பெருமானின் அருளுரைகளும், நபிநாயகத்தின் அருளுரைகளும், இராமலிங்க அடிகளின் அருளுரைகளும் ஒத்திருத்தல் காணலாம். இயேசுநாதரின் அருளுரைகள் உலகத்தில் அருள் நெறியைப் பரப்பின; ஏழாயிரம் மைல்களுக்கப்பாலிருந்தும் நம் நாடு வந்து, சமயத்திலும் நிறத்திலும் வேறுபட்டுள்ள நமக்குத் தொண்டு கெய்ய வெள்ளையரைத் தூண்டின. நபிநாயகத்தின் அருளுரைகள ஒரு கடவுள் வணக்கத்தை ஏற்படுத்தியது; அவ்வணக்ககத்தைப் பின்பற்றுவோர் அனைவரும் ஒரு தாய் ஈன்ற மக்களாகக் கருதச் செய்தது. ஆனால் அறுபத்து மூன்று நாயன்மார்களும், பன்னிரண்டு ஆழவார்களும். பல்வேறு முனிவர்களும், சித்தர்களும், இருடிகளும் தோன்றி அருளுரைகள் பொழிந்த இந்த நாட்டில் மட்டும் ஒரு கடவுள் வணக்கம் இல்லை; சாதியற்ற சமுதாயம் இன்றளவும் ஏற்படவில்லை. காரணம் என்ன? அறிவுடையார் சிந்திப்பாராக. 8. இந்தியச் சமுதாயம் மேனாட்டுச் சமுதாயம் இந்தியா நீங்கலாக உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பிறப்பினால் வேறுபாடு இல்லை; ‘இவன் முதலியார், அவர் செட்டியார், இவர் பிள்ளை, அவர் உடையார்,’ என்றாற் போலச் சாதிப் பிரிவிகள் இல்லை. அந்நாடுகளில் நாடாளும் அமைச்சனும் செருப்புத் தைக்கும் சக்கிலியும் தொழிலால் வேறுபட்டவர்களே தவிரப் பிறவியில் வேறுபட்டவர் அல்லர். மேனாட்டுச் சமுதாயத்தில் ஏழை-செல்வன் என்ற வேறுபாடு இருக்கின்றதே தவிரப் பிறப்பினால் வேறுபாடு இல்லை. சுருங்கக்கூறின், ஆங்கிலேயர் அனைவரும் ஓர் இனத்தவர். அமெரிக்கர் அனைவரும் ஓர் இனத்தவர். இத்தகைய உயர்ந்த அமைப்பில் ஒவ்வொரு நாட்டுச் சமுதாயமும் இயங்குவதால், அவ்வந் நாட்டு மக்கள் தத்தம் சமுதாயத்தில் ஒத்த இன உணர்ச்சியுடையவராய் ஒற்றுமைப்பட்டு வாழ்கின்றனர். இதனால் இளமையில் செருப்புத் தைத்தவன் நாடாளும் அமைச்சனாக வர அங்கு வாய்ப்பு இருக்கிறது. தூண்டில் முள் போட்டு மீன் பிடித்துவந்த ராம்சே மாக்டொனால்டு பிரிட்டிஷ் பேரரசின் முதலமைச்சராக வர வசதி இருந்தது; செருப்பு தைத்த ஸ்டாலின் ருஷிய நாட்டுத் தலைவராக விளங்குதல் முடிந்தது; ஓவியம் தீட்டித் பிழைத்த இட்லர், bஐர்மன் சர்வாதிகாரியாக வர வாய்ப்பு ஏற்பட்டது. இந்தயச் சமுதாயம் வேதங்களும், உப நிஷத்துகளும், பிற புண்ணிய நூல்களும் தோன்றிய நமது இந்தியாவில் சமுதாய நிலைமை எப்படிப்பட்டது? இங்குப் பிறப்பிலேயே சாதிகள் உண்டு என்ற வரையறை ஏற்பட்டுவிட்டது. ஒருவன் பிறக்கும்போதே, துணி வெளுப்பவன் சாதி, நாவிதன் சாதி, முதலியார் சாதி, பார்ப்பனச் சாதி என்று பெயரிடப்படுகிறான். இங்ஙனம் தோன்றியுள்ள சாதிகள் ஏறத்தாழ மூவாயிரம். ஒவ்வொரு சாதியிலும் மூன்று முதல் பன்னிரண்டுவரை உட்பிரிவுகள் உண்டு. எனவே, இவை அனைத்தையும் கணக்கிட்டால், ஏறத்தாழ நாற்பதாபயிரம் சாதிப்பிரிவுகள் இருக்கின்றன என்று அறிஞர் மதிப்பிடுகின்றனர். சான்றாக, ‘முதலியார்’ என்ற சாதியை எடுத்துக் கொள்வோம்: பொன்னேரி முதலியார், பூந்தமல்லி முதலியார், வேலூர் முதலியார், ஆற்காட்டு முதலியார், தொண்டைமண்டல முதலியார், கொண்டல்கட்டி முதலியார் எனப் பல பிரிவுகள் இருத்தலைக் காணலாம். இவருள் ஒருவருக்கொருவர் கொள்வினை, கொடுப்பனை இல்லை. இவ்வாறே பிள்ளைமாருள் சோழிய வேளாளர், பாண்டிய வேளாளர், நாஞ்சில் வேளாளர் தொண்டை நாட்டு வேளாளர் எனப் பலபிரிவுகள் உண்டு. இவருள் ஒருவருக் கொருவர் உறவு கொள்ளுவதில்லை. இங்ஙனமே ஒவ்வொரு பெரும் சாதியிலும் பல உட்பிரிவுகள் உண்டு. இத்தகைய வேறுபாடுகளால் ஒவ்வொரு சாதியினரும் இணைந்து வாழ முடியாமல், தனித் தனிச் சிறகூட்டமாக இருந்து வந்தனர்; வருகின்றனர். ‘இந்தியா நீங்கலாக உள்ள எல்லாநாடுகளிலும் இப்பாழான சாதிகள் ஒரு நாட்டுச் சமுதாயத்தை இங்ஙனம் சின்னபின்னப் படுத்தவில்லை. இப்புண்ணிய பூமியில் மட்டும் மக்கள் இனம் இத்துணை ஆயிரம் பிரிவுகளாகப் பிரிந்து, ஒற்றுமை இன்றி, உயர்வு தாழ்வுகளைக் கற்பித்துக் கொண்டு, அவல நிலையில் வாழக் காரணம் யாது? படையெடுத்து வந்தவர்க்கெல்லாம் மண்டியிடும் பரிதாப நிலையில் ஏன் இருந்திருத்தல் வேண்டும்? மேனாடுகளில் ஏன் இத்தகைய சாதிகள் இல்லை?’’ என்ற கேள்விகள் அறிவுடைய ஒவ்வொருவரும் கேட்பது இயல்பன்றோ? சாதி, குலம், வருணம் என்னும் சொற்கள் தமிழ்ச் சொற்களல்ல. இவை வடமொழிச் சொற்கள். வடமொழி நூல்களில்தான் இவை காணப்படுகின்றன. வடமொழியாளர் இந்நாட்டில் வேரூன்றிச் சமுதாயத்தில் சிறப்புற்றபோது தொழில்களால் உண்டான பெயர்கள் சாதிப் பெயர்களாக மாறிவிட்டன; இன்ன பிரிவுகள் உயர்ந்தவை என்றும், இன்னiவ தாழ்ந்தனவை என்றும் கற்பிக்கப்படுகின்றன. நல்வினை செய்பவர் உயர்வகுப்பினராகப் பிறப்பர் என்றும், தீவினை செய்பவர் இழிந்தசாதிகளில் பிறப்பர்என்றும், இவற்றைச் சிவபெருமான்சொன்னார்-திருமால் சொன்னார்-பிரமன் சொன்னார் என்றும் நூல்களில் எழுதப்பட்டன. போதாக் குறைக்கு மநுஸ்மிருதி என்ற வடமொழி நூல் சமுதாயப் பிரிவுகளுக்கும் சமுதாய இயக்கத்திற்கும் ஆட்சி நூலாகக் கற்பிக்கப்பட்டது. மன்னர் மடைமையாலும், குடி மக்களது உணர்ச்சியற்ற தன்மையாலும் இந்தியச் சமுதாயம் இவ்விழி நிலைக்கு ஆட்பட்டது. ஒரு வகுப்பான் மற்றொரு வகுப்பானிடம் பேசும்போது இத்துணை அடி தூரத்திலிருந்து பேசவேண்டும் என்ற வரையறை இச்சமுதாயத்தில் இருந்ததெனின், நமது சமுதாயத்தில் மனிதப் பண்பாகிய அன்போ-அறமோ இருந்திருக்க முடியுமா என்பதை எண்ணிப் பார்த்தல் வேண்டும். இன்னின்ன வகுப்பார் தெருக்களில் செருப்பிணிந்து செல்லலாகாது, இன்னின்ன வகுப்பார் மாடி வீடு கட்டலாகாது, இன்னின்ன வகுப்பார் தங்கள் வீட்டுச் சுவர்களை இன்னின்ன நிறங்களால் அழகுபடுத்தக்கூடாது என்ற வரையறை, சோழப் பேரரசர்கள் காலத்தில் இருந்தது என்று கல்வெட்டுக் கூறுகின்றது. பக்திநெறி பரப்பிய சோழப் பேரரசர் ஆட்சியிலேயே இத்தகைய இழிநிலை இருந்ததென்றால், அக்காலச் சமுதாய மக்கள் எத்தகைய இழிந்த நிலையில் புண்பட்ட நெஞ்சோடு வாழ்ந்திருத்தல் வேண்டும் என்பதை மனிதப் பண்புடையோர் எண்ணிப் பார்த்தல் வேண்டும். அடிகளது வருத்தம் சுருங்கக் கூறின், சென்ற நூற்றாண்டு வரையில் நமது சமுதாயம் யானை நோய் கண்ட விளங்கனிபோல் இருந்தது. அதாவது, மேற்பார்வையில் ஒற்றுமையுடைய சமுதாயம் போல் காணப்பட்டது; ஆனால், எண்ணிறந்த உயர்வு தாழ்வுகளால் சின்னா பின்னப்பட்ட சமுதாயமாக இருந்தது. இந்த அவல நிலையைச் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகளார் கண்டார்; இவ்வேறு பாடுகள் இறைவனால் உண்டாக்கப்பட்டவையா என்பதை ஆராய்ந்தார்; இவற்றைக்கூறும் சாத்திரங்களை ஆராய்ந்தார்; இவையனைத்தும் பொய்யானவை-சுய நலமிகளால் கற்பிக்கப் பட்டவை என்னும் உண்மையைத் தெள்ளத் தெளிய உணர்ந்தார்; மக்களது அறியாமையையும் மூட நம்பிக்கையையும் இவற்றால் உண்டாகிய மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் பூசல்களையும் நேரில் கண்டார்; இதனால் இச் சமுதாயம் அழிந்து கொண்டிருந்ததை உணர்ந்தார்; சாதிப் பெயரால் இழிவு படுத்தப்பட்ட மக்கள், சாதிகளே இல்லாத பிற சமயங்களைத் தழுவினதைக் கண்டார்; ‘இந்தியச் சமுதாயம் சின்னப் பின்னப் படுகிறதே-மனிதப் பண்பிலிருந்து மாறிவிட்டதே,’ என்று எண்ணியெண்ணி உள்ளம் நைந்தார். அப்பொழுது அப்பெருமான் அருள் உள்ளத்திலிருந்து எழுந்த பொன்மொழிகள் பல. அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க: “சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரத்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே யபிமானித் தலைகின்ற வுலகீர்! அலைத்தலைந்து வீணேநீர் அழிதலழ கலவே” “சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகளெல்லாம் பாத்திரமன் றெனவே ஆதியிலென் உளத்திருந்தே யறிவித்த படியே அன்பாலின் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்”. தம்மளவில் இறைவனைப்படி அருள் பெறாது. சமுதாயம் நன்முறையில் வாழவேண்டும் என்ற கருத்தால் கவலைகொண்ட இப்பெருமானது பேரருள் திறத்தினை என்னென்பது! அருட்பாவை அலசி அலசிப் பேசும் மெய்யன்பர்களும் ‘ஒன்றே குலம்’, ‘ஒருவனே தேவன்’ என்று முழக்க மிடும் சைவ அறிஞர்களும் இன்னும் சாதிவேறுபாடுகளை விடாமல் பேச்சளவில் மட்டும் சைவ வீரர்களாக விளங்குதல் வெறுக்கத் தக்கதன்றோ! 9. அருள்மொழி அன்பு, அருள் மனைவி கணவன்மீது செலுத்தும் பிரியமும், கணவன் மனைவிமீது செலுத்தும் பிரியமும், பெற்றோர் பிள்ளைகள்மீது செலுத்தும் பிரியமும், பிள்ளைகள் பெற்றோர்மீது வைக்கும் பிரியமும், இவ்வாறே உற்றார் உறவினர்மீது கொள்ளும் பாசமும் அன்பு என்று சொல்லப்படும். இது பெரும்பாலும் பயன் கருதி ஏற்படுவது. பகைவனிடமும் பரிவு காட்டலும், ஒரு பயனையும் எதிர்பாராது ஏழை எளியவரிடம் இரக்கம் காட்டலும், உதவலும், இவ்வாறே எல்லா உயிர்களிடத்தும் இரக்க உணர்ச்சி காட்டலும் அருள் என்று சொல்லப்படும். புத்தர் பெருமான் கொலை வேள்வி செய்யலாகாது என்று பிம்பிசாரனைத் தடுத்ததும், இயேசுநாதர் நடக்க முடியாது தவித்த நொண்டி ஆட்டுக்குட்டியை இரக்க உணர்ச்சியோடு தூக்கிக்கொண்டு வழி நடந்ததும், வட்டமேசை மாநாட்டுக்கு இங்கிலாந்து சென்றிருந்த காந்தியடிகள் நொண்டி ஆட்டுக்குட்டியைத் தூக்கி நடந்ததும் இவ்வருள் உணர்ச்சியின்பாற்பட்ட செயல்களாகும். அருள்மொழிகள் தந்நலம் துறந்து எல்லாவுயிரும் இன்புறல்வேண்டும் என்று உளமர நினைத்து எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டிய அருளாளரே புத்தர், இயேசுநாதர், முகம்மது நபி, தாயு மானவர், இராமலிங்கர், காந்தியடிகள் போன்ற பெருமக்களாவர். அப்பெருமக்களது அருள் உணர்ச்சியினின்றும் வெளிப்போந்த மொழிகளே அருள் மொழிகள் என்பன. “எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே ஆல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்பது அருள்மொழி நல்கும் தாயுமானவர் திருவாக்காகும். சமுதாய நிலை இவ்வhக்குப்படி எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமாயின், மனித சமுதாயத்தில் மக்களிடை மனிதப் பண்பு மலர்ந்திருத்தல் வேண்டும். எது மனிதப் பண்பு? “உன்னைப் போல் பிறரையும் நேசி” என்ற இயேசுநாதரின் பொன்னுரைப் படி மனிதன் தன்னைப் போலப்பிறரை மதித்து நடத்தலே மனிதப் பண்பு. இப்பண்புடை சமுதாயத்தில்தான் அன்பு மலரும்; அருள் அரும்பும். ஒருவன் தன்னைப்போலப் பிறரை மதிக்க வேண்டுமாயின், அவனது சமுதாயத்தில் அப்பண்பிiனக் குறைக்கும் சாதி வேறுபாடுகள், செல்வன்-வறியன் என்ற வேறுபாடு முதலியன தலைகாட்டலாகாது, அயல் நாடுகளில் பிறவியினால் உயர்வும் தாழ்வும் கற்பித்துக் கொண்ட பாழான சாதிப் பிரிவுகள் இல்லை; ஆயின், செல்வன்-வறியன் என்ற வேறுபாடு இருந்துவருகிறது. அறநெறி கற்பிக்கும் அறிவுக் களஞ்சியம் என்று போற்றப்படும் வேதங்கள் முதலிய எண்ணிறந்த நூல்களும், உலகத்தை உய்விக்கத் தோன்றியனவாகக் கூறப்படும் பத்து அவதாரங்களும் தோன்றிய நம் நாட்டில்-ஆயிரக் கணக்கான சாதிகளும், செல்வன்-வறியவன் என்ற வேறுபாடும், நகரத்தான்-கிரhமத்தான் என்ற வேறுபாடும் பல நூற்றாண்டுகளhக வேரூன்றி வளர்ந்து இந்திய சமுதாயத்தை மனிதப் பண்பாடற்ற சமுதாயமாக ஆக்கிவிட்டது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற அருள் மொழி பிறந்த தமிழகத்திலும் தொழில் பற்றிய பிரிவுகள் காலப் போக்கில் பிறவி பற்றிய பிரிவுகளாக இடம் பெற்றுவிட்டன; ‘பிரமன் இவ்வாறு படைத்தான்’ என் நூல்களில் எழுதப் பட்டன. தண்ணீரும் உட்புக முடியாது அமைக்கப்பட்ட அறைகள் போல இச்சாதிகள் ஒன்றுக்கொன்று மயிரிழைப் பற்றுமின்றித் தனித்து இயங்கவிடப்பட்டன. இதனால் தமிழ்ச் சமுதாயம் பல்லாயிரக் கணக்கான சாதிக் குழுக்களாகச் சின்னபின்னப்படுத்தப்பட்டது. முழு மனிதவுடல் பல்லாயிரம் கூறுகளாக வெட்டப்படின் எத்தகைய கோரக்காட்சியை நல்குமோ, அதுபோலத் தமிழ்ச் சமுதாயமும் எண்ணிரந்த பிரிவுகளை உண்டாக்கிக்கொண்டு மனிதப் பண்பை இழந்து விட்டது. எண்ணிறந்த கீழ்ச்சாதிகள் ஏற்பட்டன. ‘இவர்க்கு இவர் பணியவேண்டும், ஏவல் கேட்கவேண்டும்’ என்பன நூல்களில் எழுதிவைக்கப்பட்டன. நடைமுறையிலும் இவை கையாளப்பட்டன. இவற்றால் சங்க காலத்திற்குப் பிறகு தமிழ்ச் சமுதாயம் தன் இயற்கை வலியை இழக்கத் தொடங்கியது. சாதிகள் தோன்றலைக் கண்டு உளம் வருந்திய திருநாவுக்கரசர், “ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளார்” என்று அழுத்தந் திருத்தமாக அறையலாயினர்; இவ்வாறே ஆழ்வார்களும் சாதிப் பிரிவுகளைக் கண்டித்தனர்; பக்தி ஒன்றுக்கே மதிப்புக் கொடுத்தனர். ஆயினும், நாயன்மார் ஆழ்வார் மறைவுக்குப் பிறகு சாதிகள் வேரூன்றிவிட்டன. கடல் கடந்த நாடுகளை வென்று அடிப்படுத்திய சோழர்கள் காலத்திற்றான் இப்பாழான சாதிகள் சமுதாயத்தின் உயிர் நாடியைச் சிதைத்துவிட்டன. மன்னனுடைய கோலுக்கும் வேலுக்கும் முன்புறத் தோற்றத்தில் சமுதாயம் ஒன்றுபட்டதாகக் காணப்பட்டது. ஆனால் உள்ளீடாகச் சமுதாய இருதயத்துடிப்பின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. சமுதாயத்தில் பிறவியினாலும் தொழிலாலும் தாழ்த்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும், நசுக்கப்பட்டும் வளமற்ற வாழ்க்கையுடன் துடிதுடித்துக்கொண்டிருந்த மக்களிடையே ஒன்றுப்பட்ட சமுதாய உணர்ச்சி எங்ஙனம் தலைகாட்ட முடியும்? இந்த அவல நிலையே படையெடுத்து வந்தவர்க் கெல்லாம் தமிழகத்தைப் பணியவைத்தது என்று கூறுதல் தவறாகாது. ஒற்றுமை இழந்த சமுதாயம் எங்ஙனம் தன்மானத் தோடு வாழ இயலும்? மனிதப் பண்பை இழந்த சமுதாயம் வந்தவர்க்கு அடிபணிந்தது. சங்ககாலத்தில் மோரியர் படையெடுப்பை முறியடித்த தமிழ்ச் சமுதாயம், ஆயிரம் ஆண்டுகட்குப் பிறகு சாதாரண படையெடுப்புக்களையும் எதிர்த்து நிற்கு முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒற்றுமையற்ற சமுதாயத்தில் அன்பு தலைகாட்ட இடமில்லை. அன்பு வளர்ச்சியின் முடிவே அருளாதலால், அருள் தோன்றவும் இடமில்லை. அருட்பெரியார் இங்ஙனம் சமுதாயத்தில் அன்புக்கும் அருளுக்கும் இடமின்றி இருத்தலைக் கண்ட சித்தர்கள் இதற்குரிய காரணத்தை ஆய்ந்தார்கள்; சாதி வேறுபாடுகளே காரணம் என்பதைக் கண்டார்கள்; அவற்றின் சார்பாகத் தோன்றிய மூடப் பழக்க வழக்கங்களும் மக்களை மாக்களாக மாற்றியதையும் அறிந்தார்கள். இவற்றால் உளம் நொந்த அப்பெரியார்கள், “ஆண்சாதி பெண்சாதி ஆக இருசாதி வீண்சாதி மற்ற எல்லாம்-குதம்பாய் வீண்சாதி மற்ற எல்லாம்” என்று சமுதாயத்திலிருந்த சாதி வேறுபாடுகளைக் கடிந்தனர். உள்ளத்தில் கள்ளமில்லாத கடவுளன்பே உயர்ந்தது. அத்தகைய அன்பு இல்லாமல், “காசி ராமேஸ்வரம் கால்நோவச் சென்றாலும் ஈசனைக் காணுவையோ?-குதம்பாய்! ஈசனைக் காணுவையோ” “உள்ளங்கால் வெள்ளெலும் பாகத் திரியினும் வள்ளலைக் காணுவையோ?-குதம்பாய்! வள்ளலைக் காணுவையோ” என்று கடிந்தனர். இராமலிங்க அடிகள் கி. பி. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகளும் இத்தவறுகளைக் கண்டார்; உள்ளம் வெதும் பினார்; அன்பு அருள் என்னும் இரண்டும் சமுதாயத்தில் மலர்ச்சி பெறாமைக்குச் சாதிகளும் மதப் பூசல்களும் சமுயப் போராட்டங்களுங் காரணம் என்பதை உணர்ந்தார்; இவற்றை ஊக்கியவை சாத்திர நூல்கள் என்பதையும் அறிந்தார்; சாதி வேறுபாடுகளைக் கற்பிக்கும் மநுதர்ம சாத்திரம் போன்றவற்றால்தான் சமுதாயம் சீரழிந்தது என்பதை நன்குணர்ந்தார்; மத வெறியினால் மக்கள் மாறுபட்டு ஒருவரையொருவர் அழித்துக்கொண்டதை வரலாற்று வாயிலாக அறிந்தார்; ஒரே மதத்தைச் சார்ந்த பல சமயங்கள் ஒன்றோடொன்று பூசலிட்டு மடிந்ததையும் உணர்ந்தார். அவரது அருள் உள்ளம் அருள்மொழியைக் கீழ்வருமாறு பொழிந்தது: சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்; சாத்திரக் குப்பையும் தவிர்ந்தேன்... சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்! அழிந்தழிந்து வீணேநீர் அழிதல் அழகலவே” இப்பொன்னுரைகளைத்தாம் பின்வந்த விவேகானந்தரும் காந்தியடிகளும் பாரதியாரும் மேலும் மேலும் வற்புறுத்தி மறைந்தனர். ஆனால், எதனையும் எண்ணிப் பார்த்து அறநெறியில் செல்ல மக்கள் மனம் துணிவு பெறவில்லை. பழங்காலக் கோட்பாட்டின் பிணிப்பு என்னும் சிறையினின்று மக்கள் விடுதலை பெற்றால்தான், இதுகாறும் கூறப்பெற்ற ஆபாசங்கள் ஒழியும்; மக்கள் வாழ்வில் அன்பும் அருளும் அரும்பி மலரும். சமுதாய வாழ்வில் அமைதி இருந்தாற்றான் ஒருவரை யொருவர் நேசிக்கும் அன்பு தோன்றும். அவ்வன்பின் கனிவே அருள் என்பது. “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று இராமலிங்க அடிகள் கூறி வருந்தினா ரென்பது அருள் மலர்ச்சியால் ஏற்பட்ட உணர்ச்சியாகும். மனிதரை மனிதராகக் கருதி நடக்கும் பண்பு வளர்ச்சி பெறின், பிறவுயிர்களையும் தம்போல் உயிருள்ளன. என்று கருதும் மனப்பான்மை தோன்றி வளரும். அமைதிக்கு இடமுண்டா? சமுதாயத்தில் ஒருவரை யொருவர் உளமார நேசித்துத் தம்மைப் போலவே பிறரையும் கருதுதல், ஒருவர் தவறுகளை மற்றவர் பொறுத்தல் முதலிய பண்புகள் பரவினாற்றான், அச்சமுதாயம் அமைதி பொருந்திய சமுதாயமாக மாறும். சமுதாயத்தில் அமைதி நிலவினாற்றான், அன்பு பெருக்கெடுக்கும்; அன்பு கனிந்தவிடத்து அருள் உணர்ச்சி தோன்றும். “இன்ன வகுப்பாருடன் பேசும்போது அறுபத்துநான்கு அடி தூரத்திலிருந்து பேசவேண்டும்; இன்ன வகுப்பாருடன் பேசும் போது நாற்பத்தெட்டடி தூரத்தில் நின்று பேசவேண்டும்; இன்னார் இன்னவரைத் தொடலாகாது; இன்னார் இன்னின்ன தெருக்களில் நடக்கக்கூடாது; இன்னின்ன வகுப்பார் கோவில்களில் நுழையக்கூடாது” என்பன போன்ற வரையறை களைப் பெற்றுள்ள சமுதாயத்தில் மக்கள் மன அமைதியுடன் வாழ இடமுண்டா? ‘அன்பே சிவம்’ என்ற சொல்லுக்குப் பொருளுண்டா? அன்பிருந்தால் மனித இனம் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிந்து ஒற்றுமையற்று வாழ வழி வகுக்கப்பட்டு இருக்குமா? இறைவன் திரு முன்னே வேறுபாடுகள் புகுத்தப்பட்டிருக்குமா? ‘அனைவரும் ஆண்டவன் மக்கள்’ என்னும் உண்மைக்கு இச்சமுதாயத்தில் இடமுண்டா? சமய இழி நிலை சமுதாயத்தில் இன்னின்ன வகுப்பார் உத்தியோகங்களைப் பார்க்க வேண்டும், இன்னின்ன வகுப்பார் பரம்பரைத் தொழில்களைச் செய்யவேண்டும் என்று பல நூற்றாண்டுகளாக வரையறுக்கப்பட்டிருந்தனர். இந்த வரையறையால் எண்ணிறந்த சாதிகள் படிக்க முடியாமற் போய்விட்டன. இதனால் விளைந்த பயன் என்ன? சமுதாயத்தில் படிக்கும் வசதியும் பொருள் வசதியும் பெற்றவர் உயர்ந்தவராயினார். மற்றையோர் அவர்கiள அண்டிப்பிழைக்கும் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டனர். இதனால் பல சாதி மக்கள் பல நூற்றாண்டுகளாகக் கல்வி யறிவே பெறாத நடைப்பிணங்களாக இருந்தனர். எனவே, பரந்த கல்வியறிவு இல்லாத காரணத்தால் குருட்டு நம்பிக்கைகளையும் மூடக் கொள்கைகளையும் பின்பற்றும் பரிதாப நிலையை அடைந்தனர்; கண்டவற்றை யெல்லாம் சிறு தெய்வங்களாகவும் பெருந் தெய்வங்களாகவும் பகுத்துக்கொண்டு வழிபடலாயினர். இங்ஙனம் கல்வி அறிவற்ற மக்கள் அறிவின்றி அல்லற்படுதலையே, தமது வாணிக முதலாகக் கொண்டு, சூழ்ச்சியில் சிறந்த சிலர், சமயத் தொழில் நடத்தத் தொடங்கிவிட்டனர். “இக்குற்றத்துக்கு இன்னது செய்வது கழுவாயாகும்” என்று கூறி, ஏழை மக்களிடம் பொருள் பறித்து வாழலாயினர். இவ்வாறு உண்டான சமய அநீதிகள் பல. இவ்வாறு “எத்தகைய குற்றம் செய்தாலும் கழுவாய் உண்டு” என்ற உபதேசத்தால் குற்றங்கள் பெருகினவே தவிரக் குறையவில்லை. அறிவும் ஆராய்ச்சியும் அற்ற மக்கள் தெய்வங்களின் பெயரால் தாம் செய்வன வெல்லாம் சமயச் சடங்குகள் என்று கருதினர். அவர்களை ஏமாற்றி வந்த குருமார் கூறியன. எல்லாம் சமயக் கோட்பாடு என நம்பினர்; கடவுளுக்கு எருமை, ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிடுதலும், கள், சாராயம், சுருட்டு, பழம், தேங்காய் முதலியவற்றைப் படைத்தலும் அக்கடவுளரைத் திருப்திபடுத்தும் செயல்களே என்று கருதினர்; கடவுளால் படைக்கப்பட்ட மக்களைப் பல்லாயிரே இனங்களாகப் பிரித்துக் கொடுமைப்படுத்தி, அதே சமயத்தில் கடவுளுக்குப் பலியிடுதலும் பூசை செய்தலும் செய்தால் நலன் ஏற்படும் என்று நம்பச் செய்தனர் சூழ்ச்சியாளர். இக்கேவல நிலையில் பல நூற்றாண்டுகள் கழிந்தன. சாதி வெறி ஆங்கிலக் கல்வி உலக அறிவை ஊட்டிவரும் இக் காலத்தில்தான் என்ன வாழ்கிறது? குடும்பச்சண்டைகள், சாதிச் சண்டைகள், சமயச் சண்டைகள் நிறைந்திருக்கின்றன; ஆனால் கோவிலுக்குப் போவதிலும், தேங்காய் பழம் உடைப்பதிலும் குறைவில்லை. ஒவ்வொரு சாதியாரும் தங்களுக்கெனச் ‘சாதிச் சங்கம்’ அமைத்துக்கொண்டு ஆரவாரம் செய்தலைத்தான் காண்கின்றோம். அச்சங்கமாவது அச்சாதியினர் அனைவருக்கும் நலன் செய்கின்றதா? அதுவும் இல்லை. போதாக் குறைக்கு ஒரே சாதியினர்க்குள் பல்வேறு அரசியல் கட்சிகள் புகுந்து பல்வேறு பிரிவுகளை உண்டாக்குகின்றன. உயர் அலுவலில் உள்ள ஒரு சாதியான் தன் இனத்தவரையே பல அலுவல்களில் அமர்த்து வதைப் பார்க்கின்றோம். படித்த அவனிடம் சாதி வெறி தலைவிரித்தாடுகின்றது. பள்ளித் தேர்வுகளிலும் பரிசுகள் கொடுப்பதிலும் உதவிச் சம்பளம் வழங்குவதிலும் இச் சாதி வெறியைக் காண்கின்றோம். இச்சாதி வெறியால் மக்கள் நெறி தவறுகின்றனர்; பொய் பேசுகின்றனர்; ஒருவரையொருவர் ஏமாற்றுகின்றனர். ஒரு கல்லூரிக்கு உரிய பொருளுதவியைப் பல சாதியாரிடமிருந்து பெற்றுக்கொண்டு, அக்கல்லூரியில் ஒரு சாதியாரையே வேலையில் அமர்த்தும் கொடுமையையும் நாம் காண்கின்றோம். இப்படியே கோவில் முதலியவற்றில் ஒரு குறிப்பிட்ட சாதியினரே பணி செய்யக் காண்கின்றோம். இக்nகடு கெட்ட நிலைகளால் ஒரு இனத்தவர் மற்றொரு இனத்தவரை வெறுக்க வழி ஏற்படுகிறது. இந்நிலையில் சமுதாய ஒற்றுமை எப்படி ஏற்பட முடியும்? சமுதாய ஒற்றுமை ஏற்பட்டாலன்றோ அன்பு மலரும். அன்பின் அடிப்படையிலன்றோ அருள் தோன்றும். இவற்றை யெல்லாம் அறிஞர் ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். சுமயம் என்பது யாது? பெரும்பாலான மக்களுக்குச் சமயம் என்பது இன்னது என்பதே தெரியாது. மொட்டை அடித்தல், தேங்காய் பழம் படைத்தல், ஒரு கும்பிடு போடுதல் என்பனவே சமயத்தின் செயல்களென்று கருதுவோர் பலராவர். இவர்களைக் கொண்டு பிழைக்கும் சூழ்ச்சிக்காரர், இவர்களை ‘ஆஸ்திகர்கள்’ என்றும்; அறிவும் ஆராய்ச்சியும் எதனையும் சிந்தித்துச் செய்யும் பற்றலும் உடையவiர ‘நாஸ்திகர்கள்’ என்றும் வாய் கூசாது கூறுகின்றனர். எண்ணிப் பார்க்கும் ஆற்றலில்லாத மக்கள் இச்சூழ்ச்சிக்காரர் சொல்வதே மெய்யென்று நம்புகின்றனர்; நம்பி, தம் இனமக்களையே தவறாகக் கருதுகின்றனர். இப்பாமர மக்கள் தங்கள் மூளைக்குச் சிறிதும் வேலைகொடுப்பதில்லை. சமயம் என்பது என்ன? இது பற்றி இன்று இந்திய அரசாங்கத்தின் துணைத்தலைவரும், சிறந்த தத்துவ அறிஞருமாகிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுவதைக் காண்க. “சமுதாய நலத்துக்காக ஒவ்வொருவரையும் உழைக்கத் தூண்டுவதும் உயர்ந்த வாழ்க்கையை நடத்தவழி கோலுவதும் சமயமாகும். மிகுதியான கொள்கைகளையும் சடங்குகளையும் புகுத்துவதையோ, சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதையோ சமயம் என்று கூறமுடியாது. சாதி, இனம், நிறம் என்ற வேறுபாடு கட்கு மேலோங்கி நிற்பதுதான் உண்மைச் சமயமாகும்.” இது சமயத்தின் இலக்கணமாயின், சைவ சமயமோ வைணவ சமயத்தின் இலக்கணமாயின், சைவ சமயமோ வைணவ சமயமோ இன்றுள்ள நிலையில் சமயங்கள் என்று சொல்ல முடியுமா? “எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்ற தாயுமானவர் கருத்தையே டாக்டர் இராதாகிருஷ்ணன் கருத்து ஒத்திருக்கிறதன்றோ? இதுதான் உண்மைச் சமயத்தின் இலக்கண மாகும். இவ்விலக்கணத்திற்கு மாறுபட்டது சமயமாகாது. 10. சமயம் பற்றிய உண்மைகள் சமயம் என்பது யாது? மனிதர் உலகில் நேர்மையாக வாழ்வதற்குரிய பாதையை வகுத்துக் கூறும் கருத்துக்களின் திரட்சியே மதம் அல்லது சமயம் என்று சொல்லப்படும் என்பது விவேகானந்தர் அருள் மொழி. எனவே, உலகத்தைப் படைத்த பேராற்றல் ஒன்று உண்டு என்பதை உளங்கொண்டு, தன் உள்ளொளி தெளிவாகத் தெரிவிக்கும் குற்றமற்ற பாதையில் வாழ்பவன் சமயத்தைப் பின் பற்றுபவன் எனப்படுவான். அப் பரம்பொருளைச் சிவனாகக் கொண்டவன் சைவன் என்றும், விஷ்ணுவாகக் கொண்டவன் வைணவன் என்றும், பரம பிதாவாகக் கொண்டவன் கிறித்தவன் என்றும், அல்லாஹ் என்று நினைப்பவன் முசுலீம் என்றும் பெயர் பெறுவர். இவ்வாறு பல சமயத்தவர் தத்தம் சமயப் கொள்கை களைப் பின்பற்றினாலும், இவர் அனைவரும் வழிபடும் கடவுள் ஒன்றே; பெயர்களே வேறுபடுவன; சமயப் பழக்க வழக்கங்கள் சிலவே வேறுபடுகின்றன. வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இவ்வெல்லாச் சமயத்தவரும் ஒன்றுபட்டே இருக்கின்றனர். இந்த உண்மையைத்தாமாகச் சிந்திக்கும் அறிவுடையோர் நன்கு அறிவர். ஆதலால் அப்பெருமக்கள் எல்லாச் சமயங்களையும் ஒன்று போலவே கருதுவர். ஒரு நகரத்தை அடையப் பல வழிகள் இருப்பது போலப் பரம்பொருளை உணர்த்தப் பல வழிகள், பல சமயங்கள் இருக்கின்றன. இவ்வுண்மைகளைத் தாமே சிந்திக்கும் ஆற்றலில்லாத சாதாரண மக்களே சமய வாதுகளிலும், கடவுளர் போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சமுதாய அமைதியைக் குலைப்பர். சமயத்தின் இலக்கணத்தை நன்கு அறிந்தும், பொது மக்களின் அறியாமையையும், மூடபக்தியையும் அடிப்படையாக வைத்துப் பற்பல சமயப் பூச்சுடைய கற்பனைக் கதைகளைக் கட்டிவிட்டுச் சிலர் சமய வாணிகம் செய்து வாழ்வு நடந்துவர். அவர் தம் பிழைப்புக்காகவே விழாக்களும் பூசனைகளும் பிறவும் நாளடைவில் கோவில்களிலும் வீடுகளிலும் மலிந்துவிட்டன. ஒவ்வொரு வீட்டிலும் பல வகை நோன்புகள் தோன்றிவிட்டன. ஒருவன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் பல வகைச் சடங்குகளைச் செய்யத் தூண்டப்படுகிறான். அவன் இறந்ததும் அவனுக்காக அவன் மகன் தான் இறக்கும் வரையில் திதி, மாசியம், கருமாதி முதலியவற்றின் பெயரால் பல சடங்குகளைச் செய்யவேண்டுபவனாகிறான். இவை யெல்லாம் இன்னின்ன பயன்களைத் தரும் என்று நூல்களில் எழுதப்பட்டுள்ளன. இவற்றின் உண்மையை அறிந்தவர் எவருமில்லை. ஆயினும், மக்கள் நம்பிக்கையால் இவற்றைச் செய்கின்றனர். பிற சமயங்களில் பெரும்பாலும் இச் சடங்குகள் இல்லை. இவற்றைச் செய்யாத பிறசமயத்தினர் நரகத்திற்குச் செல்கின்றனரா? சென்றனரா? அங்ஙனமாயின், உலக மக்களுள் பெரும்பாலோர் (இறந்தவர்) நரகத்தில் அல்லவா இருக்க வேண்டும்? இவற்றை அறிவற்ற பாமர மக்கள் எண்ணுவதில்லை. ஏசுநாதரால் கண்டிக்கப்பட்ட ஆயக்காரர் போன்ற புரோகிதரும், பூசாரிகளும், சைவ வைணவ மக்களைத் தங்கள் வாழ்வுக்காகச் சமயத் துறையில் முழு மூடர்களாக ஆக்கி வைத்துள்ளனர் என்று கூறுதல் தவறாகாது. “சமுதாய நலத்துக்காக ஒவ்வொருவரையும் உழைக்கத் தூண்டுவதும், உயர்ந்த வாழ்க்கையை நடத்த வழி கோலுவதும் சமயமாகும். மிகுதியான கொள்கைகளையும், சடங்குகளையும் புகுத்துவதையோ சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதையோ சமயம் என்று கூற முடியாது. சாதி இனம், நிறம் என்று வேறுபாடுகட்கு மேலோங்கி நிற்பதுதான் உண்மைச் சமயம் என்பது.” இஃது இந்திய அரசாங்கத்தின் துணைத்தலைவரும். சிறந்த தத்துவ அறிஞருமாகிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது பேச்சாகும். இவ்வறிஞர் உலக தத்துவ சாத்திரப் பேராசிரியருள் தலைசிறந்தவர்; தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; எண்ணிறந்த சமய தத்துவ மாநாடுகளில் சமய தத்துவ முழுக்கம் செய்தவர்; ‘சமுதாயத்தைப் பிளவுபடுத்துவது சமயம் ஆகாது’ என்று இவர் கூறுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. எண்ணிறந்த சாதிகளைக் கொண்டது இந்து சமயம் என்றால், அச்சாதிகள் இருக்கும் வரையில் இந்து மதம் மதமாகாது என்பது இவர் கூற்றால் பெறப்படும் உண்மையாகும். இதே அறிஞர் மேலும் சில உண்மைகளைக் கீழ் வருமாறு கூறுகின்றார்: “வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் மனித இனம் தான் கண்ட அறிவுதான் முடிவானது என்ற மயக்கத்தில் இருந்தது. இந்த மயக்கத்தால் பொறாமையும் வெறுப்பும் வளர்ந்தன. பரம்பரை மதக் கோட்பாடுகளின் பிடிப்பு என்னும் நோயால் இந்த உலகம் வருந்தியுள்ளது.” இப்பொன்னுரை ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. தமிழகத்தில் உண்டான சமண-பௌத்த போரட்டங்களும், சைவ-வைணவப் போராட்டங்களும், சைவ-சமணப் போராட்டங்களும் இவற்றின் விளைவுகளும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை. ஒவ்வொரு சமயத்தையும் சிறுமையாக எண்ணித் தம் சமயமே உயர்ந்தது என்று வாதிடும் நீலகேசி போன்ற நூற்பொருள்கள் இராதா கிருஷ்ணன் கூற்றை மெய்ப்பிக்கின்றன. ஒரு சமயத்தார் மற்றோரு சமயத்தாரைக் கழுவேற்றியதும். பிற கொடுமைகள் செய்ததும்-தான் கண்ட அறிவுதான் முடிவானது என்ற மயக்க உணர்ச்சியின் விளைவாகும். இச்சமயக் கொடுமைகளாலும் இந்நாட்டில் சமுதாய வாழ்க்கை அமைதியை இழந்தது. சமணரைச் சைவர் அழித்தனர்; சைவரைச் சமணர் அழித்தனர்; ஒருவர் கோவில்களை மற்றவர் அழித்தனர். இவ்வாறே இந்நாட்டுக்கு வந்த வேற்றுச் சமயத்தினரும் இச்சமயக் கிளர்ச்சியை வளர்த்தனர்; கோயில் செல்வத்தைக் கொள்ளைகொண்டனர். இத்தகைய இழி செயல்களால் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் சமுதாயம் இழிந்து அல்லற்பட்டது. அருள் மொழி “நம் கோட்பாடுகள் எல்லாம் சத்தியத்தை நோக்கிச் செல்கின்றனவே யொழிய, முற்றிலும் சத்தியமானவை என்று கூறிவிட முடியாது என்பதை உணர்ந்தால், இன்னும் அதிக சத்தியத்தைப் போதிக்கக் கூடிய பிறதத்துவங்களை நாம் காணும்போது, நம் கோட்பாடுகளைத் திருத்தி வைத்துக் கொள்ளத் தயாராகிவிடுவோம். ஆகவே, இந்நிலையில் எந்த ஞான தத்துவமும் அதிகார பூர்வமானதோ கட்டாயமாக மனிதர் எல்லோரும் பின் பற்றவேண்டும் என்று கூறக் கூறியபடி முடிவானதோ அல்ல.” டாக்டர் இராதாகிருஷ்ணனது இந்த அறிவுரை ஒவ்வொரு சமயத்தராது அகக்கண்களையும் நன்கு திறக்கவல்லது. இந்த உண்மை உணரப்படுமாயின், ஒவ்வொரு சமயத்தாரும் பிற சமய உண்மைகளை அறிந்து பயன் பெற முற்படுவர். இதனால் சமய வெறி நீங்கும்; எதிலும் உண்மை காணும் ஆர்வம் பிறக்கும்; எல்லாச் சமயங்களையும் மதித்து நடக்க மனம் இடம் தரும். “உலகம் உருப்படவேண்டுமானால், எல்லோருக்கும் ஆத்மீக ஒருமைப்பாடு தேவை. ஆதலால் மனித இனம் உலக ஒற்றுமையைக் கருதி, தன் சிந்தனையின் அடிப்படையையும் இவ்வாழ்க்கையின் அடிப்படையையும் மாற்றிக்கொள்ள வேண்டும்”. இதுவும் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது அருள்மொழியாகும். இதன் சுருக்கமே நம் பழந்தமிழ்ப் புலவர் ஒருவரால் இராண்டாயிரம் ஆண்டுகட்கு முன், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறப்பட்டது. இப்பொன்னுரை உள்ளத்தில் நன்குபதியுமாயின், சாதிப் பூசலுக்கு இடம் இல்லை; சமய வெறிக்கு இடமில்லை. உயர்வு-தாழ்வு முதலிய வேறுபாடுகட்குச் சிறிதும் இடமில்லை. இந்நிலை மலரப் பெற்ற சமுதாயமே உண்மைச் சமயத்தைப் பின் பற்றும் அறிவுடைய சமுதாயமாகும். இதற்கு உரிய பரந்த எண்ணமும் விரிந்த நோக்கமும் நம்மிடையே மலர்தல் வேண்டும். 11. இல்லை-உண்டு சென்ற பகுதியில் குறிக்கப்பெற்ற இந்திய அரசாங்கத் துணைத் தலைவராக உள்ள டாக்டர் இராதா கிருஷ்ணன் அவர்கள் கூறிய அருள்மொழிகளை அறிந்தோம். அப்பெரியாரே ஆத்திகர் நாத்திகர் என்பவரைப் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளார்: “இன்று நம்மிடையே நாத்திகர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் உண்மையில் நாத்திகர் அல்லர். ஆனால் நம்முடனே இருந்துகொண்டு போலி வேடதாரிகளாய் ஆத்திகம் பேசி அறநெறியில் செல்லாமலும், உண்மையான பக்தி இல்லாமலும் திரிபவரே உண்மையில் நாத்திகர்.” நாத்திகம் என்பது இந்நாட்டுக்குப் புதியதன்று. இரவு-பகல் என்பது போலவே. கோடை-மழை என்பது போலவே, இன்பம்-துன்பம் என்பதுபோலவே, உண்டு-இல்லை என்பது போலவே, மொழி தோன்றிய நாள் தொட்டு ஆத்திகம்-நாத்திகம் என்பன இருந்து வருகின்றன. ஒன்றுக்கொன்று எதிரிடையாகச்சொற்கள் அமைந்திருப்பதுபோலவே பொருள்களிலும் அமைந்திருக்கக் காணுகின்றோம். வீட்டில் விளக்கு எரிய பாஸிடிவ்-நெகடிவ் (உண்டு-இல்லை) உள்ளது-எதிர்மறையானது) என்னும் இரண்டு மின்னிசைகளாற்றான் விளக்கு எரிகின்றது. ஆளுங் கட்சிக்கு எதிர்க்கட்சி இருந்தாற்றான் சட்டசபை நிகழ்ச்சிகளில் உயிரோட்டம் காணப்படுகின்றது. இறைவனுடைய படைப் பிலேயே இவ்வாறு உண்டு-இல்லை என்னும் பண்புகளைக் காண்கின்றோம்; இப்பண்பு அவனால் படைக்கப்பட்ட மக்களிடமும் இருத்தலின் வியப்பில்லை அல்லவா? இந்த உண்மையை உணர்ந்தே அறிவிற் சிறந்த ஆன்றோர் பல நூற்றாண்டுகட்கு முன்பே இல்லை என்னும் கருத்தையும் ஒரு சமயமாகக் கொண்டனர். இதற்கு ‘லோகாதயம்’ என்று பெயரிட்டனர். சங்ககாலத்தில் பூம்புகார், காஞ்சி, வஞ்சி, மதுரை முதலிய பெருநகரங்களில் பல சமயவாதிகள் இருந்தனர். சைவவாதி, வைணவ வாதி, வைதிக வாதி, பௌத்த வாதி, சமண வாதி, ஆசீவகவாதி, லோகாயத வாதி எனப் பல சமயத்தாரும் தனித் தனியே தம் கொள்கைகளைப் பரப்பிவந்தனர். எல்லாச் சமயக் கொள்கைகளையும் மக்கள் கேட்டு அறிவு பெறட்டும், அவரவர்க்கு விருப்பமான கொள்கைகளைப் பின்பற்றட்டும் என்ற பரந்த நோக்கத்துடன் இத்தமிழகத்தை யாண்ட முடிவுடை மூவேந்தர் இச்சமய வாதிகளை ஆதரித்தனர்; இந்திர விழா போன்ற பெரு விழாக்களில் இப்பல சமய வாதிகளையும் பேசுவித்தனர். சங்ககாலத்தில் தமிழரசர்களிடம் காணப்பட்ட இப்பரந்த சமயநோக்கம் பின் நூற்றாண்டுகளில் காணப்பட வில்லை. ஆயினும் லோகாயத சமயம் நாட்டில் இன்றுவரையில் நிலைத்து வந்திருக்கின்றது என்பதை இலக்கியங்கள் ஒப்புக் கொள்ளுகின்றன. கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் “நாத்திகம்பேசி நாத்தழும் பேறினர்” என்றும், “லோகாதய மெனும் பாம்பு” என்றும் கூறுவன அக்காலத் தமிழகத்தில் லோகாதயமும் நாத்திகமும் இருந்தன என்பதை மெய்ப்பிக்கின்றன. கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் சீதைக்கு ஒட்டியாணம் போடுவதைப் பற்றிக் குறிப்பிடும் இடத்தில், “கடவுள் உண்டு என்றும் இல்லை என்றும் பல கோணங்களி லிருந்து பார்க்கும் சமயவாதிகளைப்போலச் சீதைக்கு அலங்காரம் செய்த பெண்கள் அச் சீதைக்கு ஒட்டியாணம் போடுவதற்கு இடை உண்டா இல்லையா என்பதைப் பற்றி ஆராய்ந்து, இறுதியில் அவளது இடைக்கு ஒட்டியாணத்தை அணிவித்துத் துன்பம் செய்தனர்.” “பல்லியல் நெறியிற் பார்க்கும் பரம்பொருள் என்ன யார்க்கும் இல்லைஉண்டு என்ன நின்ற இடையினுக் கிடுக்கண் செய்தார்” என்று கூறியுள்ளமை கவனிக்கத்தக்கது. இதனால் கம்பர் காலத்திலும் கடவுள் உண்டு என்றும் இல்லை என்றும் பேசப்பட்டு வந்தமை நன்கு அறியலாம். இதே நிலைமை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமலிங்க அடிகள் காலத்தில் இருந்ததையும் அவர் வாக்கால் அறியலாம். உலகத்தில் காணப்படும் பொருள்களே உண்மை. கண்ணுக்கும் மனத்துக்கும் எட்டாததைப் பற்றிக் கவலை வேண்டா மனிதன் பெற்றுள்ள அறிவைக்கொண்டு நேர்மையான வாழ்க்கை கடத்துவதே சாலும்’ என்பது உலகாயதர் வாதம். இதனை அருட்பாவில் காணலாம். இங்ஙனம் கூறுவோர் உண்டு என்று அடிகள் கூறியுள்ளார். ஆனால் இன்று தமிழகத்தில் உள்ள-ஒரு சிலரால் ‘நாத்திகர்’ என்று கூறப்படுவோர் இதுகாறும் கூறப்பெற்ற வகையினர் அல்லர். இவர்கள் சைவ நாயன்மார்களுள் ஒருவரான திருமூலர் சொன்ன ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் உண்மைக் கொள்கையை ஒப்புக் கொண்டவர்; இக் கொள்கை நாட்டில் பரவவே இடைவிடாது பிரசாரம் செய்கின்றனர். ‘ஒருநாமம் ஓருவரும் இல்லாதான்’ என்று மணிவாசகர் சொன்னதையே இவர்களும் சொல்கின்றனர். ‘உருவம் அற்ற இறைவனுக்கு உருவத்தைக் கற்பிக்க வேண்டா. ஒரு நாமம் இல்லாதவனுக்குப் பல நாமங்கள் கற்பிக்க வேண்டா. வள்ளுவர் கூறிய செம்பொருளை மனத்தால் வழிபடிவோம். பகுத்தறிவைக் கொண்டு தக்கது இன்னது தகாதது இன்னது என்பதை ஆராய்ந்து நேரிய வழியில் மனிதப் பண்புடன் வாழ்க்கையை நடத்துங்கள்’ என்பதே ததுழகத்துப் பகுத்தறிவாளர் செய்து வரும் பிரசாரமாகும். மனிதன் தோன்றிய நாள் தொட்டு அவனது அறிவு படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது போல அவனது சமயக் கொள்கைகளும் அவன் அச்சம் காரணமாகவும், அறியாமை காரணமாகவும், பிறர் கூறியதை நம்பியதன் காரணமாகவும், கட்டிவைத்த சமயக் கட்டுக்கதைகள் (Mythologies) இன்று சமய நூல்களாகக் கருதப்படுகின்றன. இக்கதைகளை நன்கு ஆராய்ந்தால், ஒரு பற்றுக்கோடு இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருளின் உண்மைத் தன்மை கெட்டுவிடுகின்றது. இக்கதைகளால் மக்களின் ஒழுக்கமும் கெடுகின்றது, என்பதைப் பலமேற் கோள்களுடன் விளக்கி வருகின்றனர். முருகப்பெருமான் பரம் பொருள் என்றும் வள்ளி தெய்வயானையும் இச்சாசக்தி கிதியாசக்தி எனவும், முருகன் தாங்கிய வேல் ஞானசக்தி என்றும் சூரபன்மன் மாயை என்றும் இவற்றை உருவகப் படுத்திக் கூறுவதே கந்தபுராணம் என்றும் கச்சியப்ப சிவாசாரியார் கூறியுள்ளார். ஆனாடி நாட்டில் நடைபெறுவது வேறு. கந்தபுராணத்தின் உயிர் நாடியான இக்கருத்து மக்களுக்கு அறிவிக்கப்படாமல் கந்தபுராணக்கதை பல கிளைத் கதைகளோடு பொழுதுபோக்குக்காக மக்களுக்குச் சொற் பொழிவுகள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இதனால் சமுதாயம் அடைந்த பயன் யாது? சூரபதுமன் விழா, தக்கயாக நிகழ்ச்சி முதலியன ஆண்டுதோறும் பெரும் பொருட்செலவில் நடைபெறுவதால் பாமர மக்கள் அடையும் பயன் யாது? எல்லாம் வல்ல இறைவனையும் இறைவியையும் மக்கள் பள்ளியறை கொண்டு சேர்ப்பது தவறு அன்றோ? இஃது இறைவனை இழிவுபடுத்தும் செயலன்றோ? பின்தோன்றிய கிறித்தவத்திலும் இசுலாத்திலும் இச்செயல்கள் நடை பெறுகின்றனவா? என்று இந்நாட்டுப் பகுத்தறிவு வாதிகள் கேட்கின்றனர். ‘மனிதன் தன் வாழ்க்கையில் ஓரு முறைதான் ஒருத்தியை மணந்து கொள்கிறோன். அவன் ஆண்டு தோறுமா மணந்து கொள்கிறான்? மனிதனே செய்யாத இவ்வீண் வேலையை ஆண்டவன்மீது சுமத்தி அவன் ஆண்டுதோறும் இறைவியை மணந்துகொள்வதாக விழாக்கொண்டாடுதலும் அதற்கு எனப் பெரும் பொருள் செலவிடலும் வீண் வேலைதானே?’ என்று அவர்கள் கேட்கின்றனர். இவை யெல்லாம் பல சமய அறிவையும் பரந்த உலக அறிவையும் உடையவர் கவனிக்கத்தகும் செய்திகளே. சுமய அறிஞர்கள் இவற்றை நடுவு நிலையிலிருந்து ஆராய்ந்து காலத்துக்கு ஏற்ற முறையில் கொள்வன கொண்டு, தள்ளுவன தள்ளிச் சமயத்தை நன்முறையில் அமைப்பதுதான் அறிவுடைமையே தவிர, அவர்களை ‘நாத்திகர்’ என்னும் ஒரே சொல்லால் புறக்கணித்துவிடல் சமய நலத்திற்கோ, சமுதாய நலத்திற்கோ நாட்டு நலத்திற்கோ ஏற்றதன்று. மிகப் பெரிய நகரங்களில் பொது மேடைகள் அமைத்துப் பல்லாயிரக் கணக்கான அறிஞர் முன்னிலையில் சமயவாதிகளும், பகுத்தறிவு வாதிகளும் தத்தம் கருத்துக்களை எடுத்துக் கூறச்செய்து உண்மை காணவே நாட்டு நடப்பில் நன்னோக்கும் கொண்டவர் செயற்பாலதாகும். இதனை விடுத்து, ஒருவர் இல்லாத இடத்தில் மற்றவர் பேசுவதும், ஒருவரை ஒருவர் தாக்கிப்பேசுவதும், இவற்றை மிகுதியாக விளம்பரப்படுத்திச் செய்தித் தாள்களில் வீண்பெருமை கொள்ளலும் சுயநலக்காரர் நலமடைதலும் நாட்டு நலத்துக்கேற்ற செயல்களாகா. வழி வழியாக வருகின்ற கோட்பாடுகளையும் சமய நூல்களையும் ஆராய்ந்து அவற்றில் உள்ள குற்றம் குறைகளைக் கூற இச்சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொரு வருக்கும் உரிமை உண்டு. ‘ஒருவனே தேவன்’ என்பதை ஒப்புக்கொண்ட எல்லோருக்கும் இவ்வுரிமை உண்டு. அவருக்கு அத்தகைய உரிமை இல்லை என்று அறிவுடையார் கூறார். உண்மைச் சமயவாதியும் கூறார், ஐரோப்பாவில் ரோமன் கத்தோலிக்க சமயத்தை மார்ட்டின் லூதர் வன்மையாகக் கண்டித்தார்; காலத்திற்கேற்ற பல புதிய கருத்துக்களைப் புகுத்தினார்; இல்லற வாழ்க்கையை நிகழ்த்திக்கொண்டு சமயகுருமார் சமயப் பணி ஆற்றலாம் என்று பிரசாரம் செய்தார். அவர் அமைத்த புதிய சீர்திருத்த சமயமே பிராடஸ்டன்ட் சமயம் என்பது. இங்கிலாந்து முதலிய நாடுகளிலெல்லாம் அச்சமயமே இன்று பரவி யிருக்கின்றது. இவ்வாறே சமயக் கருத்துக்களையும் சமய முறைகளையும் காலத்துக்கேற்றவாறு மாற்றி அமைப்பதுதான் அறிவுடைமை. இவ்வுண்மைகளை உலகச் சமயங்களின் வரலாறுகளையும் மனிதனது நாகரிக பண்பாடுகளின் வளர்ச்சியையும் நண்குணர்ந்த பெருமக்கள் சமயம் நன்னிலையை அடைய வேண்டும் என்று உண்மையாகவே விரும்பும் பெருமக்கள் உளமார ஆதரிப்பர் என்பதில் ஐயமில்லை. இவற்றை யெல்லாம் உளங்கொண்டு சமயப் பேரறிஞராகிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள், “இன்று நம்மிடையே நாத்திகர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உண்மையில் நாத்திகர்கள் அல்லர்” என்று கூறினார் என்பது இங்கு அறியத்தகும் உண்மையாகும். “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.” 12. சமயவெறி நாட்டு வரலாற்றை நன்கு கவனிப்போமாயின், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சமயமும் தன் செல்வாக்கை நிலைநாட்டப் பிற சமயங்களை ஒழிக்க முயன்றதும் சமயப்போராட்டங்கள் நிகழ்ந்ததும் அறியலாம். இதனால் மக்கள் கண்ட பயன் யாது? சுமணர்க்கும் பௌத்தர்க்கும் ஓயாத சமய வாதங்கள் நடைபெற்றன. பலர் பார்க்கத்தக்க இடத்தில் நாவல்மரக் கிளையை நட்டுச் சமயவாதிகளை வாதுக்கழைப்பது, வாதில் தோற்றவர் வென்ற சமயத்தைத் தழுவுவது வழக்கம் என்பது குண்டலகேசி-நீலகேசி வரலாறுகள் தெரிவிக்கின்றன. சைவரான சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்குச் சமணர் தீ வைத்துவிட்டனர் சைவர்களிடம் சமணர்கள் வாதில் தோற்றமையால் கழுவேறினர் அல்லது ஏற்றப்பட்டனர் என்பதை அறிகின்றோம். “வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில்சாக் கியர்கள் நின்பால் பொறுப்பரி யனகள் பேசிப் போவதே நோய தாகி. குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே” என்பது தொண்டரடிப்பொடி யாழ்வார் பாசுரமாகும். திருஞானசம்பந்தர் ஒவ்வொரு திருப்பதிகத்திலும் பௌத்தரையும் சமணரையும் வன்மையாகத் கண்டித்துள்ளiதக் காணலாம். பல்லவ அரசனான இரண்டாம் நந்திவர்மன் பௌத்தரையோ சமணரையோ கழுவேற்றியதாகக் காஞ்சி வைகுந்தப்பெருமான் கோவிலில் சிற்பம் காணப்படுகிறது. அப்பெரு வேந்தன் அப்புறச் சமயத்தார் என்று அவனது செப்புப் பட்டயம் செப்புகின்றது. பிற்காலச் சோழர் காலத்தில் சைவமும் வைணவமும் ஒன்றை யொன்று தாக்கிக்கொண்டன. சிவன் கோவிலைக் கண்காணிக்கும் மாகேசுவரர்கள், வைணவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளல் ஆகாது. அங்ஙனம் வைத்துக்கொண்டால் மாகேசுவர பதவியினின்றும் நீக்கப்படுவர் என்று திருக்கடவூர்ச் சிவன் கோவில் மாகேசுவரர் செய்த தீர்மானத்தை அக்கோவில் கல்வெட்டொன்று குறிக்கின்றது. அதிராசேந்திரன் அல்லது முதற் குலோத்துங்கன் காலத்தில் சிறந்த வைணவ ஆச்சாரியான இராமாநுசர் சைவர் கொடுமைக்கு ஆற்றாது சோழ நாட்டை விட்டு மைசூர் நாட்டிற்குச் சென்று விட்டார் என்பது வரலாறு கண்ட உண்மை. கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கூத்தப்பெருமானுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த கோவிந்தராசர் சிலையைக் கடலில் எறிந்துவிட்டான் என்பதைத் தில்லைக் கல்வெட்டும் ஆடுதுறைக் கல்வெட்டும், குலோத்துங்கன் உலாவும் அறிவிக்கின்றன. “மாலும் நான்முகனும் காணாத சிவன்” என்னும் கருத்தை ஏறத்தாழ முன்னூறு இடங்களில் சேக்கிழார்பெருமான் தமது பெரியபுராணத்தில் கூறிச்சென்றார். இதுகாறும் கூறப்பெற்றவை அனைத்தும், தத்தம் சமயமே உண்மைச் சமயம்-பயன்தரும் சமயம் என்று மக்கள் கொண்ட நம்பிக்கையால், சமுதாயத்திற்கு விளைந்த கேடுகள் ஆகும். இவர்கள் வாழ்ந்த காலத்தைச் “சமய காலம்” என்று கூறுவதைவிட, “சமய வெறி கொண்ட காலம்” என்று கூறுவதே ஏற்றதன்றோ? தென்னிந்திய வரலாற்றில் சைவர் வைணவர் வைதிகர் என்போர் சேர்ந்து பௌத்தத்தையும் சமணத்தையும் ஒடுக்கினர். பின்பு சைவரும் வைணவரும் ஒருவரை யொருவர் தாக்கிக்கொண்டனர். பின்பு முஸ்லிம்களின் படை யெடுப்பிலும் ஆட்சியிலும் சைவரும் வைணவரும் ஒடுக்கப்பட்டனர். “விணை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற பழமொழிக் கேற்ப, ஒவ்வொரு சமயத்தாரும் தாம் விதைத்தற்கேற்ற பயனை அடைந்தனர் என்பது வரலாறு கண்ட உண்மை. ஏன் இக்கேடுகள் சமுதாயத்தில் நடைபெற வேண்டும்? “வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் மனித இனம் தான் கண்ட அறிவுதான் முடிவானது என்ற மயக்கத்தில் இருந்தது. இந்த மயக்கத்தால் பொறாமையும் வெறுப்பும் வளர்ந்தன. ‘பரம்பரை மதக்கோட்பாடுகளின் பிடிப்பு’ என்னும் நோயால் இந்த உலகம் வருந்தியுள்ளது” அறிவிற் சிறந்த டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது இந்த அருள்மொழி கருத்தில் இருக்கத்தக்கது. இதுவே உண்மையாகும். மனிதன் தன் அறிவாற்றலால் ஒருசமயத்தை உண்டாக்குகிறான், பின்வருவோர் தமது சமயவெறியால் அச்சமயத்திற்கு இழுக்கைத் தேடுகின்றனர் என்பதுதான் வரலாறு அறிவிக்கும் உண்மை. ஆதலால் நாம் அறியவேண்டும் உண்மைச் செய்தி யாது? “நம் கோட்பாடுகள் எல்லாம் சத்தியத்தை நோக்கிச் செல்கின்றனவே யொழிய, முற்றிலும் சத்தியமானவை என்று கூறிவிட முடியாது என்பதை உணர்ந்தால், இன்னும் அதிக சத்தியத்தைப் போதிக்கக் கூடிய பிற தத்து வங்களை நாம் காணும்போது நம் கோட்பாடுகளைத் திருத்தி வைத்துக் கொள்ளத் தயாராகி விடுவோம். ஆகவே, இந்நிலையில் எந்த ஞான தத்துவமும் அதிகார பூர்வமானதோ கட்டாயமாக மனிதர் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று கூறக் கூடியபடி முடிவானதோ அன்று,” என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் கூறும் அருள் மொழி எண்ணிப் பார்க்கத் தக்கது. இப்பெரியாரது இவ்வருள் மொழி சமய வெறியை அகற்றி அறிவு நெறியைப் பரப்ப வல்லது. ஒவ்வொருவருடைய சமய உண்மைகளையும் மதிக்கத் தூண்டுவது; எல்லாச் சமயங்களிடத்தும் பொது நோக்குக் கொள்ளச் செய்வது. நாத்திகர் யார்? மெய்யெல்லாம் திருநீறு-நீண்டதாடி அல்லது மழித்தலைக் கொண்ட தலை-உடலெல்லாம் உருத்திராக்க மாலை-இடையில் காவியாடை-செய்வனவெல்லாம் ஒழுக்கக் கேடான செயல்கள்-இத்தகையோரைப்பாமர மக்களும், இவ்வேடதாரிகளிடம் சிறிது பணம் பறித்து உண்ணும் கபடதாரிகளும், இவர்களைச் சமய மேன்மக்களெனக் கொண்டாடுகின்றனர். ஒருசில செய்தித்தாள்களும் பணம் பெற்றுக்கொண்டு இவர்களை விளம்பரப்படுத்துகின்றன. இப்போலி வேடதாரிகளைச் சிவபெருமான் அவதாரமென்றும். நால்வர் அவதாரமென்றும் நயவஞ்சகர் நாக்கூசாது பொய்யாகப் போற்றுகின்றனர். சைவ சமயத்தின் உண்மைக் கொள்கைகளைக் கடுகளவும் பின்பற்றாத இவர்கள் ஆத்திகப் பெரியார்களென அறிவிக்கப் படுகின்றனர். இவர்களைப் போலவே தொழிலாளிகள் வாழ்க்கையை வளப்படுத்தாத செல்வரும், ஏழைகளை வருத்தும் செல்வரும், அச்செல்வரைக் காக்கை பிடித்து வாழும் சிலரும், பற்பல துறைகளில் ஒழுக்கம் கெட்ட பிறகும் நந்தியெம் பெருமான் கால்வழி வந்தவர் என்றும் தமது பணத்தாலும், பிரசார வன்மையாலும் கூறிவருவதை நாட்டிற் பிறந்த நல்லறிஞர் நன்கு அறிவர். இவர் அனைவரும் உண்மையில் ஆத்திகரா? டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களது அருள்மொழியைக் கீழே காண்க: “இன்று நம்மிடையே நாத்திகர்கள் என்று அழைக்கப் படுபவர்கள் உண்மையில் நாத்திகர் அல்லர். ஆனால் நம்முடனே இருந்துகொண்டு போலி வேடதாரிகளாய் ஆத்திகம் பேசி அறநெறியிற் செல்லாமலும் உண்மையான பக்தி இல்லாமலும் திரிபவரே உண்மையில் நாத்திகர்.” இந்த உண்மையைப் பொதுமக்கள் நன்கு உணரவேண்டும்; உணர்ந்தால்தான் போலிகள் திருந்துவர்; உண்மைச் சமயவாதிக்கு நாட்டில் மதிப்பு ஏற்படும். ஒழுக்கமுடையவனே சமயவாதி-பொதுமக்களுக்கு உழைப்பவனே சமயவாதி என்னும் உண்மை உலகில் நிலவவேண்டும். இது நிலவினாற்றான் ஒவ்வொரு சமயமும் தூய்மை பெறும்; தம்மை ‘ஆத்திகர்’ என்று சொல்லும் ‘நாத்திகர்’களும் திருந்துவர். இந்த உண்மைகள் எல்லாம் இராமலிங்க அடிகனாரது அருட்பாவில் பொய்ந்து கிடக்கின்றன. மக்கள் அருட்பா அமுதினைப்பருகி, “எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்” என்னும் மந்திரம் ஒன்றையே நினைந்து வாழும் நாளே, இச் சமுதாயம் நல்வாழ்வுத் துறையில் செல்லத் தொடங்கும் நன்னாளாகும். 13. தேவை யாது? டாக்டர் இராதாகிருஷ்ணன் “மதம் என்ன நோக்கத்திற்காக ஏற்பட்டதோ அந்த நோக்கத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. மனித இனத்தின் உயர்வுக்குப் பாடுபடுவதை விடுத்துச் செல்வர்களின் நலனைப் பாதுகாக்கவும், இன்றைய சமுதாய அமைப்பை மாற்றமில்லாது அப்படியே வைத்துக்கொள்ளவும்தான் அது உதவுகிறது.” என்று இந்தியக் குடியரசின் துணைத்தலைவராக உள்ள டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் தமதுமேனாட்டு யாத்திரையில் நைரோபி என்னுமிடத்தில் பேசியபொழுது குறிப்பிட்டுள்ளார். இது மிகச் சிறந்த பொன்மொழி. ஆழ்ந்த கல்வியும் அகன்ற அறிவும் பழுதற்ற அநுபவமும் வாய்ந்த இப்பெரியார் கூற்று முற்றிலும் உண்மை யென்பதைச் சமுதாயத்தை ஊன்றிக் கவனிக்கும் ஒவ்வொருவரும் எளிதில் அறிந்து கொள்ளலாம். “மதம் என்ன நோக்கத்திற்காக ஏற்பட்டதோ அந்த நோக்கத்தை மக்கள் புரிந்துகொள்வில்லை” என்பது இப்பெரியார் கூறும் குற்றச்சாட்டாகும். நம் நாட்டு மக்கள் எந்நிலையில் இருக்கின்றனர் என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டும் ஒன்றாகும். நமது சமுதாயத்தில் நூற்றுக்கு எண்பத்தைந்து பேருக்குக் கல்வியறிவு இல்லை. எஞ்சிய பதினைந்து பேருள் பத்துப் பேருக்கு எழுதப் படிக்கத்தான் தெரியும். எஞ்சிய ஐவரும் நால்வர் சிறிது படித்துவிட்டுப் பல துறை யலுவல்களில் இருப்பவர். எஞ்சிய ஒருவரோ சுய அறிவோ சொல்லறிவோ இல்லாதவர். இந்த இழிந்த நிலையில் உள்ள சமுதாய மக்கள், மதம் என்ன நோக்கத்திற்காக ஏற்பட்டது என்பதை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்? நமது நாட்டுச் சமயங்களுள் இந்து சமயம் வைணவத்தையும் வைதிகத்தையும் பாமர மக்களின் பல்வேறு வகைப்பட்ட சமயக் கொள்கைகளையும் தன்பாற் கொண்டதாகக் கூறப்படுகின்றது. அடுத்தது, இந்நாட்டில் புதுவதாகப் புகுந்த இசுலாம். அதற்கு அடுத்தது கிறித்தவம். இம்மூன்று சமயங்களிலும் மக்களை அறிவுடைய மக்களாக-மனிதத் தொண்டு செய்யத்தக்கவராகப் பழக்கப்படுத்தி வருவது கிறித்தவமேயாகும். “உன்னைப்போல மற்றவனையும் நேசி,” “உன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு,” “பிறர்க்குத் தொண்டு செய்வதே பேரின்பம்” என்பன அச்சமயத்தின் அறிவுரைகளாகத் திகழ்கின்றன. மனிதத் தொண்டுதான் சமயத்தின் உயிர் நாடி என்பது ஏசுநாதர் உலகத்திற்கு விடுத்த அருள்மொழியாகும். ஏழாயிரம் கற்களுக்கப்பாலிருந்து தம் தாய் நாட்டில் வாழ்வின் வசதிகளையும் துறந்து இந்நாடு போந்த வீரமாமுனிவர், போப்பையர், கால்டுவெல் ஐயர், ராட்லர், வின்சுலோ முதலிய மேனாட்டுப் பாதிரிகள் இந்நாட்டு மக்களோடு மக்களாய் வாழ்ந்து கல்விக் கூடங்கள், மருத்துவ மனைகள் முதலியவற்றை யமைத்து நம்மால் தாழ்த்தப்பட்டும் அவமதிக்கப்பட்டும் துறத்தப்பட்ட மக்களுக்கு வழங்கி, அவர்களைக் கல்வித் துறையிலும் அறிவுத் துறையிலும் உயர்வடையச் செய்தனர். இந்திய நாட்டு வரலாற்றிலேயே இவர்களது தொண்டு பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டுவதாகும். இப்பெருமக்கள் தாம்தாம் தங்கியிருந்த பகுதிகளைச் சேர்ந்த மொழியைக் கற்றுப் புலமை எய்திக் காவியங்களைப் பாடியுள்ளனர்; பல நூல்களை ஆங்கிலத்திலும் பிற மேனாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்துள்ளனர்; மேனாட்டு ஆராய்ச்சி முறையைத் தழுவி இந்திய மொழிகளையும் இலக்கிய நூல்களையும் பல்லாண்டுகள் ஆராய்ந்து அரிய ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டுள்ளனர். இப் பெருமக்கள் வரவால் இந்நாட்டு ஏழை மக்களுக்குக் கல்வி வசதியும் மருத்துவ வசதியும் அறிவு விளக்கமும் உண்டாயின; நம் நாட்டு மொழிகளையும் நூல்களையும் உலகத்தார் அறியவும் வசதி உண்டாயிற்று. இசுலாமும் கிறித்துவமும், இந்து சமுதாயத்தில் இருந்த சாதி வேறுபாடுகளைக் கொண்டிராத காரணத்தாலும் தொண்டினாலும் இந்நாட்டில் நன்கு செழித்துப் பரவின. இந்து சமுதாயம் ஏறத்தாழ மூவாயிரம் பெருஞ்சாதி களையும், ஒவ்வொரு பெருஞ்சாதியிலும் மூன்று முதல் பன்னிரண்டு வரை உட்பிரிவுகளையும் கொண்டதாக இன்றளவும் இருந்து வருகின்றது. இதனால் இந்து சமயத்தினர் பல்லாயிரம் பிரிவினராகப் பிரிந்து வாழும் பரிதாக நிலை ஏற்பட்டுள்ளது. இச்சமயத்தில் சைவர் ஒரு சாரார்; வைணவர் ஒரு சாரார்; வைதிகர் பிறதொரு சாரார். இவை எவற்றிலும் தொடர்பு கொளளாத-இவற்றையே அறியாத-கோடிக்கணக் கான கிராமமக்கள் பிறிதொரு சாரார். சைவ வைணவர்க்கும் பல நூற்றாண்டுகளாக நடந்து வந்த சமயவாதங்களும் கொடுமை களும் பல; இவ்வாறு ஒவ்வொரு உட்சமயமும் பிரிதொரு உட்சமயத்தோடு போராடி வந்தது. ஒவ்வொரு சமயத்திற்கும் தனித்தனியே சமயத்தலைவர் உண்டு. அத்தலைவர்கள் தத்தம் சமய மக்களுக்குச் சமய உண்மைகளைக் கூறி மக்களை அறநெறியில் வாழ அறவுரை செய்ய வேண்டும் என்ற நியதி பண்டைக்காலத்தில் இருந்தது. ஆயினும் நாளடைவில் சமயத்தலைவரிருந்த மடத்திற்கு பெரும் பொருள் சேர்ந்ததும், அப்பீடத்திற்கு வரத் தகுதியற்ற ஆட்கள் பீடத்தில் அமர்ந்த பிறகு பொதுமக்களுக்கு அவர்களுக்கும் இருந்த தொடர்பு அறுந்துவிட்டது. கல்வி, கேள்வி, ஒழுக்கம் ஆகிய மூன்றிலும் பழுதுற்றவர்களே பெரும்பாலும் சில இடங்களில் சமயபீடத்தில் அமரலாயினர். சுமய வளர்ச்சிக்காகப் பொதுமக்கள் கொடுத்த செல்வம் பயன்ற்ற வழிகளில் பாழாயிற்று. “எது சமயம்? சமயத்தின் நோக்கம் யாது?” என்பது சமயத் தலைவர்களுக்கே புரியாத செய்தி. சமயத்தைப் பற்றிப் பொது மேடைகளில் பேசுவோரும் சமயம் என்பது இன்னது, அது இன்ன நோக்கத்திற்காக ஏற்பட்டது என்று கூறுவதில்லை. அறிவுக்குப் பொருத்தமில்லhத பாட்டியின் கதைகளை மணிக்கணக்கில் பேசி மக்களை மேலும் மடையர்களாகச் செய்கின்றனரே தவிர, சமயத் துறையில் அறிவுள்ளவராகவும் ஒழுக்கமுள்ளவராகவும் செய்யவில்லை. சமயத்தைப் பற்றிப் பேசுவோரே போதிய கல்வியும் சமய ஆராய்ச்சிமில்லாத வராக இருந்தலும் இக்குறையைப் பொதுமக்கள் அறியாமலிருத்தலுமே காரணமாகும். கல்வி அறிவுடைய இளைஞர்களிடத்தில் இச்சமயப் பிரசாரகர் கைவரிசை செல்லுவதில்லை. அவ்விளைஞர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இவர்களால் பதிலளிக்க முடிவதில்லை. இந்தப் பரிதாப நிலை இருக்கும்பொழுது சமயம் உண்டாயதன் நோக்கம் பொது மக்களுக்கு எவ்வாறு புலனாகும்? டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்ற பேரறிஞர்கள் இதுதான் சமயம், சமயம் தோன்றியதன் கருத்து இதுதான், மக்கள் இன்னவாறு வாழ்வதே சமப வாழ்வு என்பனவற்றைத் திட்டமாக வரையறை செய்து செய்தித்தாள்கள் வாயிலாக வெளிப்படுத்தவேண்டும்; மக்களது அறிவிற்கோ, ஒழுக்கத்திற்கோ, வாழ்விற்கோ பயன் தராத விழாக்களைச் சட்டபூர்வமாக ஒழித்தல் வேண்டும்; மக்கள் வாழத்தகும் நேரிய சமய வாழ்க்கை இது என்பதை அறிவித்து, மக்கள் தாமாகவே சென்று கோயில்களில் (காசியில் நடைபெறுவதுபோல) வழிபடலாம் என்னும் முறையை வழக்கிற்கு கொண்டு வருதல் வேண்டும். கோயில் சொத்துக்களை அரசாங்கம் கைப்பற்றித் தொழிற்சாலைகளையும் மருத்துவ மனைகளையும் கல்லூரி களையும் உண்டாக்குதல் வேண்டும். அவ்வச் சமயத்தைச்சார்ந்த ஏழை மக்களுக்கு அவை பயன்படும் படியாகச் செய்தல் வேண்டும். சமயம் மனிதனை வாழ்விக்கவேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை மக்களுக்கு உணர்த்துதல் வேண்டும். ஆழ்ந்த சமய நூற் கல்வியும் அகன்ற சமய ஆராய்ச்சி அறிவும் பெற்ற அறிஞர்களை சமயச் சொற்பொழிவாளராக அமையுமாறு திட்டமிடல் வேண்டும். இன்றுள்ள சமுதாய அமைப்பை-சாதி வேறுபாடுகளைச் சட்ட மூலமாக மாற்றவேண்டும். பொதுமக்கள் தாமாகவே இக்குறைகளை உணர்ந்து திருந்த வேண்டும் என்று எதிர்பார்த்தல் அறிவுடைமையாகாது. ஆதலால் பொறுப்புள்ள அரசாங்கம், பெரும்பாலும் பாமர மக்களைக் கொண்ட இச்சமுதாயத்தில் மெல்ல மெல்லச் சட்ட திட்டங்களின் வாயிலாகவே சமய சீர்திருத்தத்தையும் சமுதாய சீர்திருத்தத்தையும் புகுத்துதல் வேண்டும். இந்நிலைமை உண்டாயின், “மதம் மனித குலத்தின் உயர்வுக்குப் பாடுபடுவதை விடுத்துச் செல்வர்களின் நலனைப் பாதுகாக்கவும் இன்றுள்ள சமுதாய அமைப்பை மாற்றமில்லாது அப்படியே கொள்ளவும்தான் உதவுகிறது” என்னும் டாக்டர் இராதாகிருஷ்ணனது குற்றச் சாட்டுக்கு இடமுண்டாகாது. அறிவுடையோர் இதனைப் பற்றிச் சிந்திப்பாராக. டாக்டர் இராதாகிருஷ்ணன் கூற்று மனிதன், தான் கூறும் குறிக்கோள்களுக்கு ஏற்ப நடப்பதில்லை. சொல்வது வேறு, செய்வது வேறு. அவ்வாறு கொள்கைகளைக் கடைப்பிடிக்காதுவிட்ட காரணத்தால்தான், இன்று மனிதன், துன்பபடும் நிலையில்இருக்கின்றான் என்பது இந்திய அரசாங்கத்தின் துணைத்தலைவர் மெய்யுரை. முன் இதழில் கூறியபடியே, நம் நாட்டில் பாமரராய் விலங்குகளாய் வாழ்கின்ற மக்கள் பெருதொகையினர். அவர்களுக்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது. சிறிது கற்ற மக்களும் வறுமையால் பீடிக்கப்பட்டுத் தாமாக எதனையும் எண்ணிப்பார்க்கும் பண்பை இழந்துவிட்டனர். இத்தகைய மக்களுக்கு அறங்கூறு வோருள்ளும், அறிவுரை வழங்குவோருள்ளும் பெரும்பாலார் போதிய கல்வியறிவு இல்லாதவரேயாவர். சமயத் தலைவர்கள் என்று கூறப்படுவோருள் பலர், சமய ஆராய்ச்சி அறிவும் சமய நூலறிவும் இல்லாதவர். சமயத் தோற்றம், மனிதனின் படிப்படியான வளர்ச்சி, அவனுடை பழக்க வழக்கங்கள், எண்ணங்கள், சமுதாய உணர்ச்சி, நம்பிக்கைகள் இவைபற்றிய பரந்த அறிவு-ஒழுக்கத்தையும் சமயத்தையும் பேசுவோர்க்கு இன்றியமையாதது. பாட்டியின் கதைகளைப் பேசும் சமயச் சொற்பொழிவாளர் இந்நாட்டில் பெருத்துள்ளனரேயன்றி, அவற்றை ஆராய்ந்து சமய உண்மைகளைக் கண்டு, கடிய வேண்டுவனவற்றைக் கடிந்து, கொள்ளவேண்டுவனவற்றைக் கொண்டு சமய வாழ்க்கை இதுவெனக் காட்டும் அறிஞரைக் காணுதல் நாட்டில் அருமையாக இருக்கின்றது. மக்களால் போற்றப்படும் சமயத் தலைவர்கள், கற்றறிந்த பெருமக்கள் என்று கூறத்தக்கவருள் பலர், தாம் கற்கவேண்டுவன வற்றைக் கற்றவரல்லர்; தாம் பொது மக்களுக்குக் கூறும் அறிவுரைப்படி கடுகளவும் நடப்பதில்லை. சமயக்கொள்கைகள் இவையெனக் கூறும் சமயவாதிகள் தம்மளவில் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை. இன்னின்னவாறு மக்கள் நடக்கவேண்டும் என்று கூறுவோர் தம்மளவில் அவ்வாறு நடப்பதில்லை. எந்தெந்த ஒழுக்க விதிகள் மக்கள் வாழ்க்கைக்குத் தேவை என்று அறிஞர்கள் அல்லது சமயப்பிரசாரகர் கூறுகின்றனரோ, அவற்றை அவர்களே பின்பற்றி நடப்பதில்லை. அசோகன் தான் பொதுமக்களுக்கு அறிவுறுத்திய கொள்கைகளை நடைமுறையில் செய்து காட்டினான். அந்நேர்மை கண்ட மக்கள் மனமகிழ்ச்சியோடு அவனைப் பின்பற்றினார்கள். அந்நிலைமை சமயச் சொற்பொழிவாளரிடமோ அறிவுரை கூறும் அறிஞரிடமோ இல்லாததால் மக்கள், சமயத்தின் மீதும், ஒழுக்கத்தின்மீதும் கொண்ட நம்பிக்கையை நெகிழவிடுகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு வழிகாட்டிகளாக வருவோர் செய்யும் தவறுகளால்தான் பொதுமக்களிடம் சமயப்பற்றும், வாழ்க்கை ஒழுக்கமும் கெடுகின்றன என்பது பெரிதும் உண்மையாகும். பொதுமக்களின் தலைவர்களாக விளங்கும் பல கட்சித் தலைவர்களும் அரசியல் மேதைகளும் சமயத் தலைவர்களும் பிறபெரியோர்களும் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்று இருப்பராயின், பொதுமக்கள்மீது குறை காணுதல் தவறாகும். இப்பெருமக்களே சமுதாயத்தை நடத்திச் செல்பவர். இவருள் ஒழுங்கிருக்குமாயின்-தாம் பிறர்க்குக் கூறுகிறபடியே தம்மளவில் நடப்பராயின், அந்நடத்தையைப் பாராட்டிப் பொதுமக்களும் பின்பற்ற வழியுண்டு. “அரசாங்க அலுவலர் பொதுமக்களிடம் கைக்கூலி பெறுதலாகாது” என்று அறிவுரை கூறும் உயர் அலுவலர் தாமே பெருந்தொகையைக் கைக்கூலியாகப் பெறுவராயின், அவர்தம் அறிவுரையை அவர்கீழ் வேலைசெய்யும் அலுவலர் எங்ஙனம் மதிப்பர்? நம் அதிகாரி பெருந்தொகை கைக்கூலியாக வாங்கும்போது நாம் சிறுதொகையைக் கைக்கூலியாக பெறுதல் இழுக்கில்லை என்று எண்ணத்தானே மனம் செல்லும். ‘ஒழுக்கம் விழுப்பம் தரும் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறும் சமயத் தலைவரும், சமயச் சொற்பொழிவாளரும் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுதலைக் காணும் பொதுமக்கள் அவர்களை எவ்வாறு மதித்தல் கூடும்? ‘இத்தகைய பெரியவரே, சொல்வதொன்றும் செய்வதொன்றுமாக இருப்பின், இங்ஙனமிருத்தல் உலகியல் போலும்!’ என்று கருதித் தாமும் அவ்வழி நடத்தல் இயல்பே. இங்ஙனம் பெரியோர் முதல் சிறியோர் ஈறாக, அனைவரும் சொல்வது ஒன்று செய்வது மற்றொன்றாக நடப்பதாற்றான் சமுதாயத்தில் ஒருவரையொருவர் நம்ப முடியவில்லை; ஒருவர்மீது ஒருவர் நல்லெண்ணம் கொள்ள முடியவில்லை. இதனால் மனிதனை மனிதன் மதிக்க முடியவில்லை; நம்பிக்கையுடன் வாழமுடியவில்லை. இந்த நிலையில் ஒவ்வொரு சமுதாயமும் வலியிழந்து துன்புறுகின்றது. சுருங்கக்கூறின், இவ்வவல நிலை மாற வேண்டும்; மனிதன் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும்; ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்னும் பரந்த கொள்கைகளை வளர்க்க வேண்டும்; தன்னைப்போல் பிறரையும் மதித்து நடக்கப் பழகவேண்டும். தன்னினும் எளியவரிடம் அன்பு காட்டிப் பழகவேண்டும்; புத்தர் பெருமானைப் போல, இயேசு நாதரைப் போல, இராமலிங்க அடிகளைப்போல, எல்லா உயிர்களிடமும் அன்பும் அருளும் தவழ நடந்துகொள்ளுதல் வேண்டும். இத்ததைய அன்புநிலை ஒவ்வொரு சமுதாயத்திலும் பரவுமாயின், மக்கள் இனம் மாண்புடைய இனமாக வாழமுடியும். ‘எல்லோரும் வாழ வேண்டும்’ என்பது ஒவ்வொருவர் நல்லெண்ணமாக உள்ளத்தில் வேரூன்றி வளரவேண்டும். இந்நிலையிற்றான், ஒவ்வோர் இனமும் இன்புற்று வாழமுடியும். 14. இராமலிங்கர் மணிமொழிகள் 1. சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகும். 2. உயிர்கள் மீது அருள் உடைமையே தெய்வ வழிபாடு 3. ஆண்கள் பெண்கள் முதலிய அனைவரிடத்திலும் சாதி-சமயம்-மதம்-ஆசிரமம்- சூத்திரம்-கோத்திரம்-குலம்-சாத்திர சம்பந்தம்-தேச மார்க்கம்-உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நீங்கி எல்லோரும் தம்மவராய்க் கொள்ளுதல் உயிர் ஒழுக்கமாகும். 4. மனத்தைத் தீய வழிகளில் செல்ல விடாமையே கரண ஒழுக்கம் என்பது. 5. உயிர்கள் பசி தாகம் பிணி இச்சை எளிமை அச்சம் கொலை இவற்றால் துன்பத்தை நுகரக் கண்ட போதும் அல்லது கேட்டபோது அல்லது இவ்வாறு உண்டாகும் என்று அறிந்தபோது ஆன்ம உருக்கம் உண்டாகும். 6. இறைவன் நிழலைத்தரும் குளிர்ந்த மரம் போன்றவன்; மரத்தின் நிழல் போன்றவன்; நிழல் தரும் இன்பம் போன்றவன்; ஓடையில் ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீர் போன்றவன்; அத் தண்ணீரில் மலர்ந்த நறுமண மலர் போன்றவன்; மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்றுப் போன்றவன்; அக்காற்றில் விளையும் இன்பம் போன்றவன்; அவ்வின்பத்தின் பயன் போன்றவன். 7. இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்; எல்லோருக்கும் நலம் கொடுப்பவன். 8. உயிர்க்கொலை செய்பவரும் புலால் உண்பவரும் உறவினத்தார் அல்லர்; புறவினத்தார். 9. உயிர்களிடத்தில் இரக்கமுடையவர் எல்லோரும் சமரச சன்மார்க்கத்தைச் சேர்ந்தவராவர். 10. சமயக்கூட்டங்களும் அக்கூட்டங்களில் பேசப்படுகின்ற கலைகளும் அக்கலைகள் காட்டும் பல கதிகளும் காட்சிகளும் அக்காட்சிகள் உணர்த்துகின்ற கடவுளரும் எல்லாம் பிள்ளை விளையாட்டு. 11. நால் வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலியவையும் பிள்ளை விளையாட்டு. 12. பழியையும் பாவத்தையும் உண்டாக்கும் சிறு நெறிகளில் மனத்தைச் செல்ல விடலாகாது; சன்மார்க்கம் என்னும் பெருநெறியிலேயே மனத்தைச் செலுத்தவேண்டும். 13. ஒன்றைச் செய்யுமுன் அது நல்லதா, கெட்டதா என்பதைப் பகுத்தறிந்து செய்வதே அறிவுடைமை. 14. வைகறையில் எழுந்து சிறிது நேரம் உட்கார்ந்து திருநீறு தரித்து இறைவனை வழிபடல் வேண்டும். 15. பொய் பேசுதல், பிறர் பொருளை வெளவுதல், பிறர் நலத்தில் பொறாமைப் படுதல், பிறர்க்குக் கேடு செய்வதில் மகிழ்ச்சி கொள்ளுதல், புறங்கூறுதல், இரக்கப் பண்பு இல்லாமல் நடந்துகொள்ளுதல், நன்றி மறத்தல் முதலிய தீய பண்புகள் ஒருவருடைய நல்வாழ்வைக் கெடுத்துவிடும். 16. அடக்கமுடைமை, பெரியோரைச் சார்ந்து நடத்தல், முயற்சியுடைமை, பரந்த நோக்கம், விரிந்த மனப்பான்மை, உண்மை பேசுதல், பொறாமைப்படாதிருத்தல், எதனையும் ஆழ்ந்து யோசித்தல், இனியவை கூறல், கடவுள் உணர்ச்சி, எவ்வுயிரையும் தன்னுயிர் போல் எண்ணுதல், உலக நெறியறிந்து ஒழுகுதல் முதலிய பண்புகள் ஒருவரது நல்வாழ்க்கைக்கு அமைந்த படிகளாகும். 17. சமயப்பூசல்-சாதிப்பூசல்-கட்சிப்பூசல் முதலியன ஒருவரது துன்பத்திற்குரிய படிகளாகும். 18. அளவறிந்து உண்ணுதல், அளவறிந்து பேசுதல், செய்வன திருந்தச் செய்தல், யாவரும் பாராட்டும் படி நடத்தல் முதலிய பண்புகள் ஒருவரை எப்பொழுதும் இன்பத்தில் இருத்தத் தக்கவை. 19. கணவன், மனைவி மக்களை காக்கும் பொறுப்பை அறிந்தவனாக இருத்தல் வேண்டும்; மனைவி வாழ்வரசிக்குரிய இலக்கணத்தோடு இலங்கவேண்டும்; பிள்ளைகள், பெற்றோர் சொற்படி நடக்கவேண்டும்; இம்மூவரும் தத்தம் கடமைகளை உணர்ந்து நடப்பின், அவர்கள் வீடு இன்பம் தரும் இனிய வீடாகும். 20. ஒவ்வோர் உயிரும் கடவுள் அம்சம் என்று எண்ணி எல்லா உயிர்களிடத்தும் அருள் உணர்ச்சியோடு நடந்து கொள்பனே அறிஞன் ஆவான். 15. சமய வாழ்க்கை இறைவன் படைப்பு பரந்த நிலப்பரப்பு-அகன்று ஆழமான பெருங்கடல்-வானளாவிய மலைகள்-கதிரவன் தண்மதி-இலட்சக்கணக்கான விண்மீன்கள்-அளவிட முடியாத வானவெளி-இன்னபிறவற்iறக் காணும்போது இவை அனைத்தையும் தோற்றுவித்து இயக்கும் பேராற்றல் ஒன்று இருத்தல் வேண்டும் என்று கருதுகிறோம். ஓர் அழகான தோட்டத்தைக் காணும்போது அதனை அமைத்த ஒருவன் இருத்தல் வேண்டும் என்று எண்ணுவதுபோல, இவ்வற்புத வுலகைப் படைத்த பேராற்றல் ஒன்று இருத்தல் வேண்டும் என்று எண்ணுதல் இயல்பேயன்றோ? அப்பேராற்றiல மெய்ப்பொருள், செம்பொருள், இறை, ஆற்றல் (சக்தி) எனப் பலவாறு பெயரிட்டு அழைக்கலாம். இதனையே சைவர் சிவன் என்றும், வைணவர் விஷ்ணு என்றும், சாக்தர் சக்தி என்றும், கௌமாரர் குமரன் என்றும், கணபதர் கணபதி என்றும், முஸ்லிம்கள் அல்லாஹ் என்றும், கிறித்தவர் பரமபிதா என்றும் பலவாறு பெயர்கள் இட்டு அழைப்பர். வழிபாடு இப்பேராற்றல் யாண்டும் பரவி நீக்கமற நிறைந்துள்ளது; ஆதலால் உருவமற்றது. ஆயினும் இதற்கு உருவம் அமைத்து வழிபடப் பண்டை மக்கள் விரும்பினர்; தத்தம் அறிவு ஆற்றல்களுக்கு ஏற்றவாறு பலவகை உருவங்களை அமைத்து வழிபடலாயினர். தனித்தனியாக வாழ்ந்த மக்கள் நாளடைவில் ஒன்று சேர்ந்து சிற்றூர்களில் வாழத் தொடங்கினர். அப்பொழுது அவரவர் வழிபட்ட தனித்தனிக் கடவுளர் சிற்றூர்களில் ஒன்று சேர்க்கப்பட்டனர். காலப்போக்கில் பேரூர்கள் தோன்றி அரசு ஏற்பட்டது. பேரூர்களில் பலதிறப்பட்ட மக்கள் சேர்ந்து வாழலாயினர். அப்பேரூர்களில் பலதிறப்பட்ட மக்கள் வழிபட்டுவந்த கடவுளரும் குடியேற்றம் பெற்றனர். இன்று ஒரு நகரத்தில் உள்ள மக்கள் விஷ்ணு, சக்தி, முருகன், கணபதி, மதுரை வீரன், கருப்பன், முனீசுவரன், காட்டேரி, காளியம்மாள் முதலிய பலதிறப்பட்ட தேவர்களையும் தேவதைகளையும் தத்தம் விருப்பக் கடவுளாக வழிபடுகின்றனர் அல்லவா? இவர்களைப் போலவே பண்டை மக்களும் தத்தம் அறிவுக்கும் மரபுக்கும் ஏற்பப் பல தெய்வங்களை வழிபடலாயினர். பல இனத்தவர் ஒரே நகரில் வாழ்ந்தாலும், அவரவர் வழிபாட்டு முறைகள் இன்று வேறுபட்டிருத்தல் போலவே பண்டை நாளிலும் வேறுபட்டிருந்தன. அவ்வம்மக்கள் தத்தம் அறிவு நிலைக்கு ஏற்பத் தத்தம் தெய்வங்களைப்பற்றி எண்ணலாயினர்; அத்தெய்வங்களின் ஆற்றல்களை விளக்கினர். அத்தெய்வங்கள் செய்தனவாகவும் செய்யக் கூடியனவாகவும் தாங்கள் நம்பின வற்றையும் தம் முன்னோர் சொன்னவற்றையும் வெளியில் பரப்பினர். இவையே சமயக் கட்டுக் கதைகள் (Mythologies) என்பன. அர்ச்சகர் பின்பு சிறிய கோவில்கள் பெருங்கோவில்களாக மாறின. கோவில் பூசைக்குக் தனி மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் நாளடைவில் ஏற்படுத்திய கோவில் அமைப்புக்களும் திட்டங்களும் பலவாகப் பெருகின. தெய்வங்களின் அருகிலேயே இருந்து பூசை முதலியன செய்து வந்த காரணத்தாலும், சமய சாத்திரம் அறிந்தவர் என்ற காரணத்தாலும் பொது மக்கள் இவர்களைத் தூயவர்களாகக் கருதலாயினர். மக்களோடு பழகுபவர் தெய்வங்களோடு பழகுபவர்களைத் தொடலாகாது என்ற நிலை ஏற்பட்டது. அர்ச்சகர் வாக்கு ஆண்டவன் வாக்கு என்று பாமரமக்கள் நம்பவும் தொடங்கினர்; நம்பி ஏமாந்தனர். இங்ஙனம் கோவில்மீதும் அர்ச்சகர்மீதும் பொதுமக்களுக்கு அளவற்ற நம்பிக்கை ஏற்பட்டது. சமுதாயமக்கள் தன்னை உயர்ந்தவனாகக் கருதத் தொடங்கியவுடன் அர்ச்சகன் வைத்தது சட்டமாயிற்று. அவன் கடவுள் பெயராலும், சமயத்தின் பெயராலும், தீய தேவதைகள் பெயராலும்-யாவும் அறிந்தவன் போல்-மக்களை ஏமாற்றத் தொடங்கினான்; தன் இனத்துக்குச் சாதகமான பலவற்றை எழுதிச் ‘சமய சாத்திரங்கள்’ என்று சொன்னான். மக்கள் அளவற்ற நம்பிக்கையால் குருடராயும் ஊமையராயும் இருந்து அவற்றை ஏற்றுக்கொண்டனர். சமயத் தலைவர்கள் நாளடைவில் அரசகுருமாராகவும் அமர்ந்தனர். நாட்டு ஆட்சியில் அவர்கள் செல்வாக்கு விஞ்சியிருந்தது. ரஷ்யாவில் ரஸ்புடீன் அரசகுருவாக இருந்து செய்து திருவிளை யாடல்களை வரலாறு கூறுகிறதன்றோ? மேனாடுகளில் ‘பாவ மன்னிப்புச் சீட்டுகள்’ விற்கப்பட்டன. நமது நாட்டில் ‘பிராயச் சித்தம்’ என்பதன் பெயரால் குருமார் பணத்தைப் பறித்தனர். அநாகரிகச் செயல் கோவில்களில் சமய கட்டுக்கதைகளுக்கெல்லாம் விழாக்கள் நடத்தப்பட்டன; இன்றும் நடைபெற்று வருகின்றன. முருகன் ஆண்டுதோறும் சூரசம்மாரம் செய்தல், இறைவன் ஆண்டுக் கொருமுறை திருமணம் செய்தல் முதலியன நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. இறைவனுக்கு இறைவி, பிள்ளைகள் நாளடைவில் கற்பிக்கப்பட்டனர். இறைவன் நம்மைப்போலவே இன்ப துன்பங்கள் உடையவனாகவும் மனைவியாடு வாழ்பவ னாகவும் மக்களைப் பெற்று வளர்ப்பவனாகவும் கதைகள் கட்டப்பட்டன. கடவுள் ஆசை நாயகியையும் வைத்திருப்பதாகக் கதைகள் கட்டப்பட்டுவிட்டன. மனிதன் எவ்வெவ்வாறு வாழ்கிறானோ அவ்வவ்வாறு கடவுளும் வாழ்வதாகக் கற்பனைக் கதைகள் தோன்றின. எதனையும் ஆழ்ந்து எண்ணும் பழக்கமில்லாத மக்கள், இக்கற்பனைக் கதைகளையெல்லாம் உண்மையென்றே நம்புகின்றனர். கல்வி கற்றவரும் ஆழ்ந்து எண்ணும் ஆற்றல் உள்ளவரும் இவற்றைக் கற்பனைக் கதைகள் என்று எண்ணுவர். ஆத்திகம்-நாத்திகம் கோவிலுக்குப் போதல், சமயக்குறி நெற்றியில் இடுதல், சமயக் கதைகளைக் கேட்டல், சமய விழாக்களில் கலந்து கொள்ளல் என்பவையே இன்று சமயச் செயல்களாகக் கருதப்படுகின்றன. இவற்றைச் செய்கின்ற ஒருவன் வணிகத்தில் கள்வனாக இருக்கலாம், கொள்ளை லாபம் அடிப்பவனாக இருக்கலாம், பல நிலையங்களில் பணம் வெளவினோனாக இருக்கலாம்; ஒழுக்கக் கேடனாகவும் இருக்கலாம்; அவன் ‘ஆஸ்திகன்’ என்று போற்றப்படுகிறான். மேற்சொன்னவற்றில் ஒன்றோனும் செய்யாதவனாய், நல்லொழுக்கமுடையவனாய், சிறந்த படிபாளியாய் இருப்பவன் ‘நாத்திகன்’ என்று தூற்றப்படுகிறான். “இறைவன் ஒருவன் உண்டு; ஒன்றே குலம் ஒருவனே தேவன்; அந்த இறைவனை வழிபடப் பொருட் செலவு தேவையில்லை. ஆவனை எங்கும் எப்பொழுதும் வழிபடலாம். சமயத்தின் பெயரால் நடைபெறும் கொள்ளைகள் ஒழிக மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிக,” என்று நாடெங்கும் சுற்றித் திரிந்து பொது மக்களுக்கு அறிவுரை கூறும் அறிஞனும் ‘நாத்திகன்’ என்றும் ஏசப்படுகிறான். இது வேடிக்கையன்றோ? இதுதான் இன்று நம் நாட்டுச் சமயநிலை. சமய வாழ்க்கை மனிதனை மனிதனாக எண்ணத் தூண்டும் அன்பே சமயம்; அந்த அன்பே சிவம்; இச்சிவத்தை நம்புவனே ஆஸ்திகன்; சாதி வேறுபாடு காட்டாதவனே ஆஸ்திகன். எல்லா உயிர்களிடத்தும் ஆன்மா உண்டு என்பதை மதித்து, அன்பும் அருளும் காட்டுபவனே ஆஸ்திகன்; எத்தகைய சோதனை வரினும் ஒழுக்கத்திலிருந்து தவறாதவனே ஆஸ்திகன். அவன் நடமாடும் கோவில்களாகிய மனிதரை நேசிப்பவன்; தீய பண்புகள் இல்லாமல் வாழ்க்கையை நடத்துபவன், எல்லோரும் இன்புற்றுயிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றையும் அவன் அறியான்; பிறர் துயரம் தன் துயரம் போலக் கருதி உதவுவான்; எல்லோராலும் நல்லவன் என்று பாராட்டப் படுவான்; எதனையும் நன்கு ஆராய்ந்து கொள்ளத்தக்கதையே கொள்வான்; இங்ஙனம் வாழ்பவன் வாழ்க்கையே சமய வாழ்க்கை எனப்படும். 16. வெற்றியின் இரகசியம்* நம்முடைய கடமைகளை நாம் எவ்விதக் குறைவுமின்றித் தொடர்ந்து செய்வது வெற்றியின் வழிக்கு நம்மை அழைத்துச் செல்லுவதாகும். இயற்கையோடு இயைந்த வாழ்வு, மன அமைதிக்கும் உள்ளப் பண்பாட்டிற்கும் ஏற்றதாகும். இயற்கை நமக்கு அறிவுறுத்தும் கருத்துக்கள் மிகப்பலவாகும். ஓட்டமுiடய ஆற்றினையும் தேக்கமுடைய குட்டையையும் நாம் காணுகின்றோம். அவை நமக்குக் கற்பிக்கும் பாடங்கள் யாவை? ஓட்டமுடைய ஆற்றின் நீர் எப்போதும் புதியதாகவும் தூய்மையுடையதாகவும், பருகத்தக்கதாகவும், பார்ப்பதற்கு மகிழ்ச்சி தருவதாகவும் இருக்கும். தேக்கமுடைய குட்டை நீர் பாசி படர்ந்து பசுமை நிறம் கொண்டு பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கின்றது. கொசு முதலிய கொடிய கிருமிகளின் வாழ்விடமாக அது அமைந்திருக்கின்றது. எனவே, ஓட்டமுடைய ஆற்று நீரே சிறந்தது என்பதையும், தேக்கமுடைய ஆற்று நீர் பயனற்றதாயிருப்பதோடு தீமையும் பயக்கின்றது என்பதையும் நாம் அறிகிறோம். நாம் வாழ்க்கையில் வெற்றியைக் காண வேண்டுமாயின், ஓட்டமுடைய ஆற்றினைப்போல் ஒழுகவேண்டும். தன்னுடைய அறிவாற்றலைப் பயன்படுத்தி முன்னேற்றம் பெற விரும்பாதவன் வெற்றியின் முதற்படிக்கே வர இயலாதவனாகின்றான். கடமைகளைத் தொடர்ந்து செய்வதே வெற்றிக்குரிய வழியாகும். தொடர்ந்து நாம் கடமைகளைச் செய்து வருவோமானால், வாழ்க்கையின் எல்லாவகை இன்பங்களையும் எளிதில் பெறுதல் கூடும். தன்னல மில்லாதிருத்தல் சிறந்த பண்பாகும். தன்னலமாற்றவர்களே தியாக உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். பலவித வண்ணங்களின் மூலமாக இயற்கை நமக்குத் தியாக உணர்வை அறிவுறுத்துகின்றது. வெண்மை நிறம் எல்லோராலும் விரும்பப் படுகிறது. வெண்மை நிறத்தைப் போலவே பசுமை நிறமும், சிவப்பு நிறமும் எல்லோராலும் விரும்பப் படுகின்றன. ஆனால் கருப்பு நிறத்தை எவரும் விரும்புவதில்லை. இதற்கு என்ன காரணம்? வேதிநூற்கலையின் அறிவைத் துணைக்கொண்டு பார்த்தால், சிவப்பு நிறம் சிவப்பு நிறமே அன்று என்றும், பச்சை நிறம் பச்சை நிறமே. அன்று என்றும், கருப்பு நிறம் கருப்பு நிறமே அன்று என்றும் அறியலாம். பசுமையான இலை, ஒளியில் உள்ள பல வர்ணங்களையும் ஏற்றுக் கொண்டு புதியதாகத் தோன்றுகிறது. ஆனால் நமக்குப் பசுமை நிறம்தான் தோன்றுகின்றது. அந்த இலைக்குரிய இயல்பான வண்ணம் பிற வண்ணங்களை ஏற்றிக் கொண்ட போதிலும், பசுமையை வெளிப்படுத்துகின்றது. இந்தத் தன்மை மட்டும் பல வண்ணங்களை ஏற்றுக்கொண்டு உரிய வண்ணத்தை வெளிப்படுத்தும் தன்மை மட்டும் கருப்பு நிறத்துக்கு இல்லை. அது ஒளியில் உள்ள எல்லா வண்ணங்களையும் ஏற்றுக்கொண்டு ஒன்றனையும் வெளிவிடா திருக்கின்றது. கருப்பு நிறத்துக்குத் தியாக உணர்வும் கொடைப் பண்பும் இல்லையென்றுதான் கூறவேண்டும். சூரிய ஒளியிலிருந்து பெறும் சிறு அணுவைக் கூட அது வெளியிடுவதில்லை. இதனால் நாம் அறிவதென்ன? “கொடுப்பவனே பெறுபவனாவான்” என்னும் உண்மையை நாம் உணர முடிகிறதல்லவா? வெள்ளைப் புறா, வெண்மை நிற முத்து, வெள்ளைக் கண்ணாடி முதலியன தூய்மைக்குரிய சின்னங்களாகும். வெண்மை நிறத்தை நாம் நமக்குரிய வழிகாட்டியாகக் கொள்ளவேண்டும். தியாக உணர்வை நாம் நன்றாகப் பெற்ற பின்பு பிறர்க்கு அந்த உணர்வை உண்டாக்கும் வகையில் வாழ்தல் வேண்டும். தன்னலமற்ற நிலையே வெற்றியின் இறுதி நிலை-இன்ப நிலை என்று கூறலாம். யான் எனது என்னும் செருக்கற்று வாழும் நிலையை ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும். அந்த நிலையே வெற்றிக்குரிய சிறந்த நிலையாகும். சாதரணமாக மாணவர்களின் கூட்டங்களில் பேசிக்கொண்டிருக்கும் போது, “நாம் பேசுகிறோம்” என்ற எண்ணமானது அவர் உள்ளத்தே மிகுதியாக ஆட்சி செய்யத் தொடங்கிவிட்டால், அவருடைய பேச்சுப் பயனற்றதாகி விடுகின்றது. பேசவே முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டுவிடுகிறது. அது வரையும் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவர் அப்போது தயங்குகிறார்; வார்த்தைகளைத் தொகுப்பதில் முனைகின்றார்; தம்மால் சரியாகப் பேச முடியாதிருப்பதைக் கண்டு அவையினர் ஏதேதோ பேசுவதைக் கண்டு கவலை கொள்கிறார். அவருடைய இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? “நான் பேசுகிறேன்” என்ற எண்ணம்தான் அவருடைய அந்த நிலைமைக்குக் காரணமாகும். நாம் ஏதாவது சிந்தனையிலோ அல்லது வேலையிலோ ஈடுபடுவோமானால், “நான்” என்பதை மறந்து ஈடுபடவேண்டும். அப்போதுதான் கடமையைச் சரிவரச் செய்ய முடியும். ‘நான்’ என்பதை மறந்து ஈடுபடும் செயல்கள் எந்த அளவுக்கு வெற்றியைத் தருகின்றன-புகழைத் தருகின்றன என்பதற்குப் பின்வரும் சான்றினைக் காண்போம்: இரண்டு இராஜபுத்திர வீரர்கள் அக்பருடைய அரண்மனைக்கு வேலைக்காகச் சென்றார்கள். அக்பர் அவர்களுடைய தகுதியைப் பற்றிக் கேட்டார். அவர்கள் தாங்கள் வீரர்கள் என்று கூறிக்கொண்டனர். அவர்கள் கூற்றினை மெய்ப்பிக்குமாறு அக்பர் ஆணையிட்டார். வீரர் இருவரும் தங்கள் வாளை உருவினர். அந்த வாள் மிக்க கூர்மையாக இருந்தது. வாளின் இருபுறங்களும் ஒளி வீசின. அந்த ஒளி அவர்களுடைய வீரம் மிகுந்த உள்ளுணர்வை வெளிக் காட்டுவதாக இருந்தது. வீரர் இருவரும் போரிட்டனர். இறுதியில் இருவரும் இறந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியால் நாமறிவதென்ன? வீரர்கள் வாள்தாங்கிப் போரிட்டபோது தங்களை மறந்தனர்; வீரமே வடிவாயினர். அதனால்தான் காத்துக்கொள்ளும் உணர்ச்சி இல்லாமல் உணர்ச்சியாகப் போராடி உயிர் துறந்தனர். ‘நான்’ என்பதை அவர்கள் மறந்தார்கள்-வீரத்தோடு போர்புரிந்தார்கள் என்பதை நாம் உணர்தல் வேண்டும். அன்பு வாழ்க்கையின் வெற்றிக்குரிய இரகசியங்களில் ஒன்றாகும். நாம் பிறரிடம் அன்பு செலுத்தினால் தான் பிறரும் நம்மிடம் அன்பு செலுத்துவர். அன்பென்னும் யாக்கை அகத்துறுப்பு இல்லாதவர்க்கு மெய் வாய் கண் மூக்கு செவி யெல்லாம் என்ன பயனைத் தரும் என்று வள்ளுவர் வினவுகின்றார். “புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.” இந்த அன்புணர்ச்சியோடு கண்ணோட்டமும் மனிதர்க்கு இருக்கவேண்டும். தம்முடன் பழகியவர் கூறும் மொழிகளை மறுக்கமுடியாத நிலையே கண்ணோட்டமாகும். கண்ணோட்டம் என்று ஒன்று இருப்பதால்தான் உலகம் வாழ்கின்றது. அஃது அளவோடு தீமை பயக்காத நிலையினதாக இருக்கவேண்டும் என்பதையும் நாம் உணரவேண்டும். உடலில் உள்ள கை என்னும் உறுப்பு பிற எல்லா உடலுறுப்புக்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். அவ்வாறில்லாமல், கை, தானே தனித்தியங்க வேண்டுமென்று விரும்பினாலும், நம்முடைய உழைப்பில் பிற எல்லா உடலுறுப்புக்களும் ஏன் வாழ்வு பெறவேண்டும் என்று எண்ணினாலும், அது எந்தவித உதவியும் இல்லாது இயக்கமற்றுப் போய்விடும். அன்பின் முதிர்ந்த நிலையே கூட்டுறவு எனப்படும். கூட்டுறவு அன்புணர்ச்சியின் மூலம்தான் உறுதிப்படும். அன்புடைமையால் நாம் முன்னேறலாம். வணிகன் ஒருவன் தன்னிடம் வழக்கமாகப் பொருள்கள் வாங்குவோரை அன்போடும் கவலையோடும் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் வணிகனுக்கும் நல்ல உறவு ஏற்படும் அதனால் இருதிறத்தாரும் நலமுடன் வாழ வழி ஏற்படும். கப்பல் தலைவனை உதாரணத்திற்காக எடுத்துக் கொள்வோம். கடலில் செல்லும் கப்பலுக்குத் திடீரென்று ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டது என்றால், கப்பல் தலைவன் தன்னைக் காத்துக்கொள்ள முனைதல் கூடாது. தக்க முறையில் கப்பலில் உள்ள பிரயாணிகளை யெல்லாம் காப்பாற்றிய பின்பே, அவன் தன்னைப்பற்றி எண்ணவேண்டும். அதற்குள் கப்பலுக்குப் பேராபத்து ஏற்பட்டு மூழ்கிவிடுமானால், கப்பல் தலைவனும் தன் இறுதியை ஏற்கத்தான் மானால், கப்பல் தலைவனும் தன் இறுதியை ஏற்கத்தான் வேண்டும். அங்ஙனம் மக்கள் நலனையே பெரிதாகப் போற்றித் தன் கடமையைச் செய்யும் கப்பல் தலைவனே சிறந்தவனாவான். Òபுன்சிரிப்போடும் மகிழ்வோடும் இருப்பதும் வெற்றிக்குரிய வழிகளாகும். மனித சமுதாயத்தின் சிரிக்கும் மொட்டுகளாக நாம் இருக்கவேண்டும். வாழ்நாள் முழுவதும் இன் சொல் உடையவராகவும் பணிவுடையவராகவும் நாம் நடந்துகொள்ளவோமாயின், நம்மை யாராலும் வெல்லுதல் இயலாது. பணிவுடைனாயிருத்தல், இன் சொலுடையவனா யிருத்தல் ஆகிய இரண்டே சிறந்த அணிகலன் களெனத் திருவள்ளுவரும் போற்றுகின்றார். “பணிவுடையன் இன்சொல னாதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற” என்பது வள்ளுவர் வாக்கு. பணிவுடைமை என்பது தாய், தந்தை, ஆசிரியர், குரு என்பவரிடத்து-நம்மினும் மிக்காரிடத்துக் காட்ட வேண்டும் பண்பாகும். இன்சொல் என்பது யாவர் மhட்டும் கொள்ளவேண்டும் ஒன்றாகும். செயலால், உள்ளத்தால், உணர்ச்சியால் நாம் வாழ்கிறோம் என்பதையும்-ஆண்டினால், உயிர்ப்பினால், நாழிகையால் நம் வாழவில்லை என்பதையும் உணரவேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பிறரால் பாராட்டப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது கூடாது எந்த ஒரு நல்ல செயலும் எல்லோராலும் போற்றப்படாது. சமுதாயத்தில் பலதிறப்பட்ட மனமுடைய மக்கள் வாழ்வதுதான் இதற்குக் காரணம். நம்முடைய செயலின் விளைவு யாதாக இருக்கும், அதனால் ஏற்படக்கூடிய எதிர்காலப் பலன்கள் யாவை-அந்தச் செயல்கள் வெற்றியைத் தருமா அல்லது தோல்வியைத் தருமா-என்றெல்லாம் நாம் எண்ணிக் காலத்தைக் கடத்தக்கூடாது. அந்த எண்ணங்களால் சிறந்த பயன் நமக்குக் கிடைப்பதில்லை. பலவிதமான குழப்பங்களுள் செயலாக முகிழ்தலும் தடைப்பட்டுவிடும். நாம் கடமைகளைத் தவறாது செய்தல் வேண்டும். நாம் செய்யும் கடமைகள் அவற்றுக்குத் தக்கச் சிறப்பினைப் பெறுவது உறுதியாகும். கடந்த காலச் செயல்களின் விளைவுகளை எண்ணியோ, எதிர்காலத்தைப் பற்றி எண்ணியோ நாம் வெறுப்பும் பெருவிருப்பும் கொள்ளுதல் கூடாது. நடந்துவிட்டதைப் பற்றியோ நடக்க வேண்டுவது பற்றியோ கவலைப்படாமல், நடப்பது பற்றி, அதாவது, நிகழ்காலத்தைப் பற்றி எண்ணி ஏற்ப நடந்துகொண்டால், நாம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். வளர்ச்சி பெறவேண்டிய விதை ஒன்றுக்கு வேண்டிய காற்று, தண்ணீர், மண்வளம் முதலியன இயற்கையாக அமைந் துள்ளன. விதை அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுகின்றது. அதனால் அது, வளமாக வாழ்வதைக் காணுகின்றோம். அவ்வாறே மனிதனுடைய வளர்ச்சிக்கு வேண்டிய எல்லாச் சாதனங்களையும் இயற்கை அளிக்கின்றது. நமக்குக் கிடைத்துள்ளனவற்றை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு சிறந்து வாழ்வதுதான் அறிவுடைமையாகும். நிலவொளி இல்லாத, இருள்மிக்க இரவில் இருபது கற்களுக்கப்பால் உள்ள ஓரிடத்துக்கு நடந்து செல்லவேண்டிய நிலைமை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நம் கையில் பாட்டரி விளக்கோ அல்லது மண்ணெண்ணெய் விளக்கோ இருக்கின்றது என்றும் வைத்துக் கொள்வோம். அந்த விளக்கொளியால் பத்தடி தொலைவுதான் நாம் நடந்து செல்ல முடியும். அதனால் அதற்கு அப்பால் உள்ள இடத்தில் ஒளியே இராது என்று எண்ணி அஞ்சுவது கூடாது. விளக்கொளி தெரிந்த பத்தடித்தொலைவு நடந்து சென்று கடந்த பின்பு, மீண்டும் அந்த விளக்கொளியால் மேலும் பத்தடித் தொலைவு நடந்து செல்ல முடியும் என்பதை நாம் அறியலாம். அவ்வாறே உண்மையான உழைப்பாளி தன்னுடைய உழைப்பில் எந்த விதமான தடையும் பெறமாட்டான். பயன் கருதாத அவனுடைய உழைப்பு அவனுக்கு நல்ல பயனைக் கொடுக்கும். எனவே, நன்மை தராத-நமக்கு வெறுப்பளிக்கக் கூடிய நிகழ்ச்சிகளை நாம் மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்து, நம்மை நாமே குழப்பத்துள் ஆழ்த்திக் கொள்ளக்கூடாது. நீராடிக் கொண்டிருக்கும் போதும் தவறிக் குளத்தில் மூழ்கிவிடும் ஒருவன், நீந்தத் தெரியாதவனாக இருந்தாலும், தன்னுடைய மனவுறுதியால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடும். ஆனால் சாதாரணமாக அந்த நிலையில், மக்கள் மனத்திட்பத்தை இழந்து, அச்சம் மிகவும் கொள்ளுகிறார்கள்; அதனால் நம்பிக்iக இழந்து விடுகிறார்கள்; நீருக்கு இரையாகி விடுகிறார்கள். அவ்வாறே மனத்திட்பம் இல்லாத பலர் தங்களுடைய கடமைகளைச் செய்யும்பொழுது ஏற்படக் கூடிய பல வகையான தடைகளைக் கண்டு அஞ்சி, அவற்றை இன்முகத்தோடு ஏற்றுக் கடக்க வேண்டும் என்று கருதாமல், துன்புற்றுப் பயன்தரத்தக்க நல்ல விளைவையே இழந்து விடுகிறார்கள். “இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில்” என்றார் வள்ளுவர். இனி, நாம் எதிர்காலத்தையும், வெற்றியையும் நோக்கிச் செல்லும் நம் மனநிலையைப்பற்றி அறிவோம்; எதிர்காலத்தையும் வெற்றியையும் நோக்கிச் செல்லும் நம் மனநிலையைத் தன்னுடைய நிழலைப் பிடிக்க முயலும் மனிதனுடைய முயற்சிக்கு ஒப்பிட்டுக் கூறலாம். தன்னுடைய நிழலைப் பிடிக்க முயலும் மனிதன் தன்னுடைய வாழ்நாள் எல்லாம் முயன்றாலும் முடியாது. ஆனால் அவன் நடந்து செல்லும் நிலையிலிருந்து திருப்பிச் சூரியனை நோக்கி நிற்பின், அவனது நிழல் அவனுக்குப்பின் அவனைத் தொடர்ந்து செல்லும். அதுபோலவே நாம் வெற்றியை நோக்காமல், கடமைகளில் நம்முழுக் கவனத்தையும் செலுத்தி முயலும்போது, வெற்றி நமக்குக் கிடைக்கிறது என்று எண்ணவேண்டும். எனவே, வெற்றியை நாடி நாம் செல்லக்கூடாது, வெற்றி நம்மை நாடி வரவேண்டும் என்பனவற்றை நாம் உணரவேண்டும். நாம் நம்முடைய இடத்திலிருந்து கொண்டு-மகிழ்ச்சியாகவும், இன்சொல், பணிவுடைமை முதலிய சிறந்த பண்புகளைக் கொண்டும் இருப்போமாயின், வெற்றி நம்முடைய காலடிகளை நாடிவந்து தஞ்சம்புகும் என்று சொல்லவும் வேண்டுமோ? அச்சமின்மை என்பது வெற்றியின் இரகசியங்களுள் ஒரு பிரிவாகும். சிங்கம் முதலிய காட்டு விலங்குகளையும், கொடிய பகைவர்களையும், அச்சமின்மையால் வெற்றி கொள்ள முடியும். இமாலயப் பகுதிகளில் வாழ்ந்த சுவாமி இராமதீர்த்தர் அவர்கள் அச்சமின்மையைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார்: “நான் இமாலயப் பகுதிகளில் சுற்றியுள்ளோன்; அங்குள்ள பள்ளத்தாக்குகளுக் கொல்லாம் சென்று மீண்டுள்ளேன். அங்கு நான் புலிகளையும், கரடிகளையும், ஓனாய்களையும் பிற கொடிய விலங்குகளையும் கண்டேன். அவையும் என்னைக் கண்டன. ஆனால் அவற்றில் எனக்கு எந்தவிதத் தீமையும் விளையவில்லை. காடிய விலங்குகளின் கண்கள் என்னை நோக்கின. என் கண்கள் அவற்றின் கண்களைச் சந்தித்தன. அந்த அளவில் அவை வந்தவழி மீண்டன. என் உள்ளத்தில் இருந்த அச்சமின்மை கண்களில் ஒளிவிட்டு விளங்கியமையே அதற்குக் காரணம். எனவே, யாரும் எதன்பொருட்டும் அஞ்சுதல் கூடாது. அஞ்சாமை நமக்குத் தீங்குகளை உண்டாக்காது.” நரம்புக் கோளாறாலும் வேறு சில காரணங்களாலும் எற்பட்ட கை உதறல் உள்ள ஒருவன், ஒரு சாடியில் உள்ள எண்ணெயையோ நீரையோ பிறிதொரு சாடிக்கு ஊற்றுவானே யானால், முழுமையும் ஊற்ற முடியாது. எண்ணெய் அல்லது நீரின் துளிகள் சிதறிக்கிடப்பதைக் காணலாம். அதே சமயத்தில் எவ்விதக் குறையும் இல்லாத கைகளையுடையவன் ஒரு சாடியிலிருந்து மற்றொரு சாடிக்கு எண்ணெயை ஊற்றினால், எண்ணெய்த் துளிகளின் சிதறலில்லாமல் வெற்றியுறக் காரியத்தைச் செய்து முடிப்பான். இந்த எடுத்துக்காட்டின் மூலம் குறை இல்லாமல் ஒரு செயலைச் செய்ய முற்படுவோமாயின், அது பெரும் பயனை அளிக்கும் என்பதை அறியலாம். அஞ்சாமை உணர்ச்சியால் நமக்கு இயல்பாக உள்ள பல குறைகளும் நீங்கிவிடும் என்பதற்கு ஒருசான்று காண்போம்; கப்பற் பிரயாணம் செய்துகொண்டிருந்த இராணுவ வீரன் ஒருவனுக்குத் திடீரென்று கடுமையான நோய் வந்துவிட்டது. அவனைச் சோதனை செய்த டாக்டர் அவனுடைய நோயால் பலர்க்கும் பயங்கர விளைவு ஏற்படக்கூடும் என்றும், கொடிய பிணியால் பீடிக்கப்பட்டுள்ள அவனைக் கப்பலிலிருந்து கடலில் எறிந்துவிடுவதே பிறரைக் காப்பதற்குரிய வழி என்றும் கூறிவிட்டார். மருத்துவர் கூறிய செய்தி அவனுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அதுவரை எழுந்திருக்கவும் முடியாமல் துன்புற்றிருந்த அவன், மருத்துவர் தன்னைக் கடலில் எறிந்துவிட வேண்டும் என்று கூறியதைக் கேட்டதும் வீராவேசம் கொண்டான். தன்னைப் பிணியுடையவன் என்றும் பயனற்றவன் என்றும் அவர் சொன்னதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; வலிமையை வரவழைத்துக் கொண்டு மருத்துவரை நோக்கி நடந்தான்; அவர்முன்பு துப்பாக்கியை நீட்டியபடி, “நான் நோயுடையவனா? நான் நோயுடையவன் என்று நீர் சொல்லுகிறீரா? அப்படியானால் நான் உம்மைச் சுட்டு விடப்போகிறேன்” என்று கூறினான். அப்போது அவன் எது பற்றியும் அஞ்சவில்லை. துப்பாக்கியைக் கண்டு அஞ்சிய மருத்துவர், அவன் நலமுடன் இருப்பதாக நற்சான்றிதழ் எழுதிக் கொடுத்துவிட்டார். இராணுவ வீரன் அஞ்சாமல் செய்த செயல் அவனுக்கு வெற்றியினை அளித்துவிட்டது. இருந்த குறையும் நீங்கிவிட்டது. எனவே, அச்சமில்லாமல் வாழப் பழக வேண்டும். தன்னம்பிக்கை என்பதும் வெற்றிக்குரிய ரகசியங்களுள் ஒன்றாகும். வெற்றிக்குரிய அடிப்படையே தன்னம்பிக்கை என்றும் சொல்லலாம். எவனொருவன் தன்னைத்தான் காத்துக் கொள்ள முனைந்து வெற்றி காணுகின்றனோ அவனுக்குத்தான் இறைவன் அருளும் கிட்டும் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். காட்டு விலங்குகளில் சிங்கம் வலிமையுடையது. அது தன்னைத்தானே நம்புகிறது. வலிமை, வீரம், முதலிய பண்புகiளக் கொண்டு எல்லாவகைத் துன்பங்களையும் தாங்கும் நிலையில் சிங்கம் உள்ளது. அதற்குக் காரணம், சிங்கம் தன்னை நம்புகிறது என்பதே யாகும். கிரேக்கர்கள் இந்தியாவில் முதன் முதலாக யானைகளைக் கண்டபோது அவற்றை “நடமாடும் மலைகள்” என்றனராம். நடமாடும் மலைகள் என்று சிறப்பித்துச் சொல்லப் பட்ட யானைகள் சிங்கத்தைப் போல அஞ்சாமையோடு இருப்பதில்லை. அவை உறங்கும்போதும் பகைவரைப் பற்றிய கவலைகொண்டே உறங்குகின்றன. அந்த வேளையில் எந்தவிதத் துன்பமும் வந்துவிடல் கூடாதே என்பதற்காக அவற்றுள் ஒன்று விழித்துக் கொண்டிருக்கும். அவை தம்மைத்தாம் பலவீன முடையனவாக எண்ணுவதே அதற்குக் காரணமாகும். இரண்டு சகோதரர்கள் ஓர் ஊரில் இருந்தார்கள் அவர்கள் தங்கள் முன்னோருடைய சொத்தினை இருசமமாகப் பிரித்துக் கொண்டனர். ஒருவன் சில ஆண்டுகளில் பிறரிடம் பணத்துக்காக இறைஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான்; மற்றொருவன் தான் பெற்ற பணத்தை பத்துமடங்காகப் பெருக்கிவிட்டான். அவர்கள் இருவரையும் நோக்கி, “ஏன்? எப்படி?” என்ற வினாவை நாம் கேட்போமானால், உண்மை விளங்கிவிடும். பொருளை இழந்து வறியவனானவன் தானாக எந்தச் செயல்களையும் செய்யாமல் ஏவலர்களை ஏவிக் கொண்டிருந்தான்; பஞ்சுமொத்தைகளில் படுத்துறங்குவதையே பேறாகக் கொண்டான்; பெருஞ் செல்வம் இருந்த காரணத்தால் தானாக வேலைசெய்வது தரத்திற்குக் குறைவானது என்று நினைத்துப் பணியாட்களின் துணையை நாடினான். ஆதனால் அவன் செல்வம் இழிந்தான்; வறியவன் ஆனான். மற்றொருவன் தன்னுடைய எல்லா வேலைகளையும் தானாக செய்து கொண்டான்; முடியாத நெருக்கடியான நேரங்களில் மட்டும் ஏவலாளர்களின் துணையை நாடினான். அதனால் செல்வத்தின் செல்லுதலைத் தவிர்க்க அவனால் முடிந்தது; செல்வத்தைப் பெருக்கவும் அவனால் முடிந்தது. மனிதன்தான் தனக்குரிய விதியை நிர்ணயித்துக் கொள்ளும் தலைவனாகின்றான் என்பதை நாம் அறிதல் வேண்டும். கடமைகளைச் சரிவரச் செய்தல், தன்னலமின்மை, தியாக உணர்வு, அன்புணர்ச்சி, இன்முகம் காட்டல், அச்சமின்மை, தன்னம்பிக்கை முதலிய நல்ல பண்புகள் ஒருவருடைய வெற்றிக்குரிய அடிப்படைப் பண்புகளாகும். 17. நாத்திகர் யார்? உலகத்தையும் உயிர்களையும் படைத்த கடவுள் ஒருவர் உண்டு. அவர் வகுத்துள்ள நன்னெறி பற்றி அவர் மனம் மகிழ நடப்பதே நல்லது என்னும் உண்மையை ஒப்புக்கொண்டு அங்ஙனமே வாழ்க்கையை நடத்துவோர் ஆத்திகர் எனப்படுவர். இந்நெறிக்கு மாறனவர் நாத்திகர் எனப்படுவர். *ஒருவர் கடவுள் உண்டு என்று சொல்கிறார்; வளமாக வாழ்க்கை நடத்தத் தவறான வழிகளில் பொருள் ஈட்டுகிறார்; திருநீறும் பையுமாக இருக்கிறார்; திருநீற்றை ஓயாது பூசுகிறார். இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஒருவர் கடவுள் இல்லை என்கிறார். “இயற்கையாக உலகமும் உயிர்களும் உண்டாயின். ஹியற்கையே கடவுள். அதுவே பேராற்றல் என்பது. மனிதன் தன் அறிவு கொண்டு வாழவேண்டும். மனிதன் தன் உயர்ந்த செயல்களால் தன்னை உயர்த்திக்கொள்கிறான்;” என்று சொல்கிறார்! அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்துகிறார்; எல்லோரிடத்திலும் அன்போடு பழகுகிறார்; ஏழைகளுக்கு உதவி செய்கிறார், ‘ஏழை பங்காளர்’ என்று பாராட்டப்படுகிறார். இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஒருவர் செல்வர்; பேராசையால் பிறர் செல்வத்தையும் தமதாக்கிக்கொள்கிறார்; அங்ஙனம் ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் பல குடும்பங்களை அழிக்கிறார்; பெருஞ் செல்வர் ஆகிறார்; செல்வரான பிறகு சில கோவில்களில் திருப்பணி செய்கிறார்; ‘கொடை வள்ளல்’ என்று பெயர் பெருகிறார்; அவரை நன்கு அறிந்த செல்வரும் கோவில் பூசாரியும் அவரை ‘நல்லவர்-பக்திமான்’ என்று பாராட்டுகின்றனர். இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஒருவர் கோவில் திருப்பணி செய்யத் தொடங்குகிறார்; கோவிலின் பல பகுதிகளை அகழ்கிறார்; அப்பொழுது கோவிலுக் குரிய நகைப்பெட்டி கிடைக்கிறது. அவர் அதைத் தமதாக்கிக் கொள்கிறார்; அந்நகைகளை உருக்கி விற்றுப் பெருஞ் செல்வர் ஆகிறார். இவர் ஆத்திகரா? நாத்திகரா? “அன்பே சிவம், ஒழுக்கம் உயிரினும் சிறந்தது” என்று ஊரார்க்கு அறம் உரைக்கும் புராணிகர், கட்டிய மனைவியைத் தவிக்கவிட்டு, அறநெறி தவறிக் கைம்பெண் ஒருத்தியுடன் வாழ்க்கை நடத்துகிறார்; கட்டிய மனைவிக்குப் போதிய வாழ்க்கைப் பணமும் தருவதில்லை; அவளை வீட்டில் வைத்து வாழ்வதுமில்லை. கற்புடைய அம்மங்கை நல்லாள் கணவனது தகாத போக்கை எண்ணி எண்ணி உருக்குலைகிறாள். இவர் ஆத்திகரா? நாத்திகரா? ‘சாதிகள் கூடாது. கடவுள் முன்னிலையில் எல்லோரும் சமமானவர்’ என்று கூறிய இராமலிங்க அடிகள் பெயரால் கழகம் வைத்து நடத்தும் ஒருவர், அக்கழக ஆண்டு விழாவில் “ஐயா, பந்தியில் சோறு வட்டிக்கும் நீங்கள், எவரேனும் எந்தச் சாதி என்று உங்களைக் கேட்டால் சைவ முதலியார் என்று சொல்லுங்கள்,” என்று கூறுகிறார். இவருக்கு மனைவியர் இருவர் உண்டு; கூத்தி ஒருத்தி உண்டு. சமரச சன்மார்க்க நெறியைப் பரப்பிய இராமலிங்க அடிகளார் கழகத்திற்கு இவர் தலைவர். இவர் ஆத்திகரா? நாத்திகரா? “அன்பே சிவம். சைவ சித்தாந்த நெறிப்படி வாழ்வதே சைவர் கடமை. அறநெறி தவறலாகாது.” என்று தம்மைப் பார்க்க வருவோரிடம் குழையப் பேசும் மடாதிபதி ஒருவர், அறநெறி தவறி, சைவ சமயப் பிரசாரத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பணத்தை ஒழுக்கக் கேடான செயல்களில் செலவிடுகிறார், தம் குறையை மறைக்கப் செய்தார். அவர்கள் அவரை வானளாவப் புகழ்கின்றனர். கைக் கூலிப் பெறும் செய்தித்தாள்கள், அறநெறி தவறி, அவரைச் ‘சிவபெருமான் அவதாரம்’ என்று வெளியிடுகின்றன. சிவநெறிக் குமாறக நடக்கின்ற இம்மடாதிபதி ஆத்திகரா? நாத்திகரா? பெரிய உருத்திராக்க மாலை, குழைத்துப் பூசப் பெற்ற திருநீற்றுச சின்னங்கள், கேட்பாரைப் பிணிக்கும் சொவன்மை உடையவர் ஒருவர். இவர் பேசும்போது கேட்பவர் உள்ளம் குழைகின்றது. இவர் கடவுள் பெயரால்-பல அறச் செயல்களின் பெயரால் மக்களிடம் பெரும் பொருள் திரட்டுகிறார்; ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சிறிதளவு பொருள் உதவுகிறார்; பலர் அறிய ஒரு பெருங் கோவிலில் அர்ச்சனை நடத்துகிறார்; பெரும் பணத்தை விழுங்கி விடுகிறார்; கடவுளின் பெயராலும் சமயத்தின் பெயராலும் மக்களை ஏமாற்றும் இவர் பிறரை நாத்திகர் என்கிறார்; அவர்களுக்கு ஒழுக்கம் இல்லை என்கிறார். இப்பெரியார் ஆத்திகரா? நாத்திகரா? படிப்பது சைவ சித்தாந்தம், -பூசுவது திருநீறு-மற்றொருவன் மனைவியோடு இன்பமாகப் பொழுது போக்குதல்-இப்படி ஒருவர். இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஒரு சமயச் சொற்பொழிவாளர். காதலித்து ஒருத்தியை மணந்து கொள்கிறார். ஆண்டுகள் சில கழிகின்றன. இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். பண ஆசை மேலீட்டால் வேறு ஒருத்தியை மணந்து கொள்கிறார். முதல் மனைவியும் பிள்ளைகளும் தெருவில் நிற்கின்றனர். அவரோ ஊரெல்லாம் சுற்றித் தம் சமயத்தின் சிறப்பையும் கடவுளின் அருளையும் பற்றி ஓயாது சொற்பொழிவு ஆற்றுகிறார். இவர் ஆத்திகரா? நாத்திகரா? நீ தாழ்த்தப்பட்டவன்-உனக்குக் கோவில் இடமில்லை-நீ கோவிலுள் வரின், சுவாமி தீட்டுப் பட்டு விடும்-வராதே,” என்று கூறும் சாதி வெறியர்கள் ஆத்திகரா? நாத்திகரா? “பகவானை மக்கள் காண முடியாது-அவனை மகிழ்விக்க வேண்டுமானால் அவனுடைய உண்மை அடியார்களான பாகவதர்களை (வைணவ சமயச் சொற்பொழி வாளர்களை) நீங்கள் மகிழ்விக்க வேண்டும். அடியார்களை மகிழ்விப்பது ஆண்டவனை மகிழ்விப்பதாகும்,” என்று சொல்லிக்கொண்டு, பாமர மக்களிடமும் எண்ணிப் பார்க்கும் ஆற்றல் இல்லாத மக்களிடமும் பல திருவிளையாடல்களை புரியும் சமயச் சொற்பொழிவாளர்கள் ஆத்திகரா? நாத்திகரா? “இறைவன் அம்மையாகவும் அப்பனாகவும் இருக்கிறான். ஆண்மை, பெண்மையாகிய இரு சக்திகளின் செயற்கையே கடவுள். ஆண் பெண் ஆகிய இருவரும் ஒன்றி வாழ்வதே இல்லறம். அதுவே கடவுளுக்கு உகந்தது,” என்று அறநெறி பேசும் பெரியவர்கள், ஏழ்மை காரணமாகத் தம்மிடம் வேலைக்கு வந்துள்ள கணவனை வேறுபடுத்தி அவன் மனைவியைத் தன் வயப்படுத்திக் கொள்ளுதல்- ஆத்திகமா? நாத்திகமா? இவர் ஆத்திகரா? நாத்திகரா? ஒருவர், நாள்தோறும் தவறாமல் கோவிலுக்குப் போகிறார். அவர் நெல் வாங்குகிறார்; நெல்லில் சாவி (அரிசி யில்லாதது) யைக் கலந்து நெல் விற்பனை செய்கிறார்; இப்படி மக்களை ஏமாற்றிப் பொருள் வாங்குகிறார். மற்றொருவர் மிளகாய்த்தூளில் செம்மண் பொடியைக் கலந்து விற்பனை செய்கிறார். இவர் சன்மார்க்க சங்கத்தின் செயலாளர். வேறொருவர் உளுந்து வாணிகர்; உளுந்து நிறத்தை ஒத்த சிறு மணலைப் படிபடியாக வாங்கி உளுந்தோடு கலந்து விற்பதில் சமர்த்தர். இவர் கோவில் தருமகர்த்தர். இவரது தவறான வாணிகத்தைத் தனித்தனியே கண்டிக்கும் ஊர்மக்கள் பலராவர். இவ்வணிகர்கள் யாரை இங்ஙனம் ஏமாற்றுகின்றார்கள்? கடவுளால் படைக்கப் பட்ட தங்கள் உடன் பிறந்தவர்களையே ஏமாற்றிப் பொருளீட்டுகின்றார்கள்; பொது மக்களின் கண்களைத் துடைக்கவும் மேலும் ஊரை ஏய்க்கவும் பக்தர்களாகவும், அறப்பணி செய்பவர்களாகவும் நடிக்கின்றனர். இவர்கள் ஆத்திகரா? நாத்திகரா? காப்பிக்கொட்டை வணிகர் சிலர் வேறு கொட்டைகளைக் கலந்து வறுத்து அரைத்து கலப்புப்பொடி விற்கமுனைகின்றனர் என்பது சொல்லப்படுகிறது. இங்ஙனமே தூய பாலில் தண்ணீர் கலந்து விற்கும் பால் வணிகரும் உண்டு. இவர்கள் போடும் திருநீற்றுப் பட்டைகளிலோ நாமங்களிலோ குறைவில்லை; இவர்கள் கோவிலுக்குப் போவதிலும் குறைவில்லை! நோன்புகள் நோற்பதிலும் விரதங்களைப் பின்பற்றுவதிலும் தவறுவதில்லை; மார்பு வரையில் ஆடையைக் கட்டிக்கொண்டு சுவாமி ஊர்வலத்தில் முன்னணியில் வருகின்றனர். இத்தகையர் ஆத்திகரா? நாத்திகரா? இவ்வாறு உலகில் இறைநெறி ஒன்றாகவும், நடைமுறை மற்றொன்றாகவும் பலரிடம் காணப்படுகின்றது இத்ததையோர் வெட்கமின்றித் தம்மை ஆத்திகர் என்று தாமே கூறிக் கொள்கின்றனர். இவர்களிடம் உண்மையான கடவுள் பக்தியோ, உடன்பிறப்பு அன்போ, மனிதப் பண்போ இருக்க வழியுண்டா? கடவுளை உண்மையாக நம்பும் ஒருவன் அவனால் படைக்கப்பட்ட மக்களிடம் மதிப்புக்கொள்வான்; அவர்களிடம் உண்மையாக நடந்துகொள்வான். தன்னைப்போலப் பிறரை எண்ணுபவனே கடவுளை மதிப்பவனாவன். அவனே ஆத்திகன். தன் போன்ற மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கீழ்மகன் வெளி வேடத்தை-சமயக் குறிகளை-இட்டாலும், கோவில்களைச் சுற்றினாலும், அயோக்கியன்! அவனே நாத்திகன். மனிதப் பண்போடு நடந்துகொள்பவனே ஆத்திகன். அவனே ஒவ்வொருவரிடமும் கடவுளைக் காண்பவன். பழகத்தக்க மாண்புடையவன் அவனே. அவனே மனிதருள் மாணிக்கம். 18. இன்ப வாழ்வு* சிலர் முறையீடு உயர்ந்த கருத்துக்களையும் சிறந்த அறிவுரைகளையும் படிக்கவும் கேட்கவும் போதிய அளவுக்கு நேரமில்லை என்று பலர் கூறுவதை நாம் காணுகின்றோம். நேரமில்லாக் குறையால் தான் உயர்ந்த கருத்துக்களையும் சிறந்த அறிவுரைகளையும் படிக்கவும் கேட்கவும் முடிவதில்லை என்பது அவர்கள் கருத்து. சிறந்த அறிவுரைகளைக் கொண்ட வேதங்கள் போன்ற நூல்களைப்படிக்க வேண்டுமாயின், இமயமலையை அடுத்த காடுகளுக்குச் சென்று அமைதியாக வாழ்கின்ற வாய்ப்பு வேண்டும் என்றும் பலர் எண்ணுகின்றனர். இது தவறான எண்ணம் என்று தான் குறிப்பிட வேண்டும். “என்னுடைய வேலைகளும் உறவினர்களும் நண்பர்களுமே என்னுடைய நேரத்தை மிகவும் கவர்ந்துவிடுகின்றனர்,” என்று கூறப்படும் இந்நாட்களில், வழிபாட்டு வேண்டுகோள் முறையும் மாறியுள்ளதை நாம் காணலாம். “இறைவ, என்னுடைய விரோதிகளிட மிருந்து என்னைக் காப்பாற்று,” என்று சொல்வதற்குப் பதிலாக, “இறைவ, நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று,” என்பது சொல்லப்படுகிறது. நண்பர்களின் தொடர்பு, என்பது சொல்லப்படுகிறது. நண்பர்களின் தொடர்பு, விருப்பு வெறுப்புக்கள், துயரங்கள் முதலியன நமது நேரத்தைக் கொள்ளை கொள்ளுகின்றன. இவையல்லாமல் இன்னும் சில கடமைகளும் நமக்கு உள்ளன. நம்முடைய குழந்தைகளையும் மனைவியையும் கவனித்துக் கொள்ளுதல், நம்மைக் காண வருவோரைக் காணுதல், சில நூல்களைப் படித்தல் என்னும் முறையில் கடமைகள் நீளுகின்றன. இந்த நிலையில் மன அமைதிக் குரிய நூல்களைப் படிப்பதும் பற்றற்ற பெருவாழ்வு வாழ்வதும் எப்படி முடியும்? நமக்குப்பல கடமைகள் எவ்வாறு வந்து சேர்ந்தன? யாரேனும் அந்தக் கடமைகளை நம்மேல் சுமத்தினரா? என்பனவற்றை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருவன் அலுவலகத்தில் சென்று பணியாற்றுவதைக் கடமையெனக் கருதுகின்றான். ஆனால் அந்தக் கடமையை மேற்கொள்ளுமாறு செய்தது யார்? அவன் தன்னுடைய வாழ்வு கருதி அலுவலகப் பணியை மேற்கொள்ளுகின்றான் என்பதை அறியலாம். இந்த முறையில்தான் ஒவ்வொரு கடமையையும் மனிதனே வகுத்துக் கொள்ளுகின்றான். உலகில் தன்னைக் கட்டுப்படுத்துவன எவையுமில்லை என்பதை உணரும் மனிதன்-கட்டுப்பாடுகள் யாவும் தன்னிடமிருந்தே அமைகின்றன என்பதை அறியும் மனிதன் மிக்க மகிழ்ச்சியோடு இருப்பான். குழப்பமும் தெளிவும் மேலே நாட்டறிஞர் ஒருவரிடம் ஒருவன் சென்று சேர்ந்தான். அவன் அவரைப் பார்த்து, “ஐயா, என் வாழ்வு குலைந்துவிட்டது. என்னால் எந்தக் கடமைகளையும் சரிவரச் செய்ய முடியவில்லை. இந்த உலகில் மனிதன் எந்தக் கடமையைத்தான் சரிவரச் செய்யமுடியும்?” என்று கூறி வருந்தினான். அவனுடைய வெறுப்புற்ற நிலைக்குரிய காரணம் யாதெனக் கேட்டறிய அறிஞர் விரும்பினார். அவன் தன்னுடைய எண்ணங்களைப் பின்வருமாறு வெளிப்படுத்தினான்: “மனிதன் இந்த உலகில் நூறாண்டு காலம் வாழுகின்றான். குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பயனற்றுப் போகின்றன. நாம் நாள்தோறும் பல மணிநோரங்கள் உறங்குகிறோம். இந்த நிலையில் நூறாண்டு காலம் என்பது நீண்டகாலமாக எனக்குத் தெரியவில்லை. குழந்தைப் பருவமும் முதுமைப் பருவமும் உறங்கும் காலமும் நீங்கலாக, எஞ்சியுள்ள நேரம் உண்ணவும் உறங்கவும் உடுக்கவும், நாளை என்பதுபற்றி எண்ணவும், நண்பர்களையும் உறவினர்களையும் பற்றிச் சிந்திக்கவும், குழந்தைகள் மனைவி பற்றிக் கவலை கொள்ளவுமே சரியாகிவிடுகின்றது. இந்த நிலைமையில் உயர்ந்த நூல்களைப் படிப்பது எப்படி? இறைவனை நினைப்பது எப்படி? இறைவனை எண்ணவும் உயர்ந்த நூல்களைப் படிக்கவும் நேரமில்லாமல் போய்விடுகின்றதே! இதனால் எனக்கு வாழ்க்கையிலேயே வெறுப்பு ஏற்பட்டு விட்டது.” அவன் கூறியதைக் கேட்ட அறிஞர், அவனுக்காக இரங்கி, ஆறுதல் கூறிப் பின்வருமாறு பேசலானார்: “உலகில் உள்ள மக்கள் பலர் தற்கொலை செய்து கொள்ளுகின்றார்கள். அவர்களுக்குத் தகுந்த உயர்நிலைகள் கிடைக்காமையே காரணம். உன்னுடைய இரங்கத்தக்க கூற்றைக் கேட்ட பின்பு உன்னிடம் நானும் என் வருத்தத்தைப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். உன்னிடம் என்னுடைய துயரங்களைக் கூறிப் பரிமாறிக் கொள்ள வேண்டுமென்று என் மனச்சான்று கூறுகின்றது. நான் சொல்லப்போவது, நீ சொன்னதைவிட இரங்கத்தக்க நிலையாகும். “நண்ப, எனக்கென்று ஒருபிடி மண்ணும் உரிமையில்லை, நிலமும் இல்லை. எனக்கு விருப்பமான பயிர் வகைகளைப் பயிரிட்டுப் பலன்காண விழையும் எனக்கு ஏற்ற நிலம் இல்லையே என்று எண்ணும்போதுதான் மிகுந்த வருத்தம் உண்டாகின்றது.” அவன் அறிஞர் கூற்றைக் கேட்டு வியப்புற்றான். “ஐயா, நீங்கள் மிகுதியாக உண்ணுவீர்கள் என்பதையும் சுவையான உணவுப் பொருள்களையே நாடுவீர்கள் என்பதையும் நான் கேட்டிருக்கிறேன். உங்கள் நாவினை அந்த அளவுக்கு பழக்கப்படுத்திவிட்டு இப்போது துயருறுகிறீர்கள் என்பதை நான் உணர்கிறேன். உங்களுக்கு வேண்டிய அளவு உணவுப் பொருள்களைக் கொடுக்க நாட்டில் நிலங்களா இல்லை? உங்களுக்கு விருப்பமான பயிர் வகைகளைப் பயிரிட்டுத்தர வயல்கள் இல்லாமலா போய்விட்டன? உங்கள் வெறுப்பு மனப்பான்மை வேடிக்கையாக உள்ளது ஐயா,” என்று கூறி நகைத்தான். அவன் நகைப்பதைக் கண்டதும் அறிஞர் சினம் கொண்டு பேசத் தொடங்கினார்: “நண்ப, நீ சொன்ன படி பரந்த அளவில் நிலம் இருப்பது உண்மைதான். ஆனால் அந்த நிலத்தின் பெரும்பகுதி மலைகளாலும், குன்றுகளாலும், கடல்களாலும், ஆறுகள் ஏரிகள் குளங்களாலும், லண்டன்மா நகரம் போன்ற பெரு நகரங்களாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நீ மறந்து விட்டாய். ரயில் பாதைகள், தெருக்கள், சந்துகள் முதலியன நிலத்தின் எஞ்சிய பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கப்பால் மனிதனுக்கு உடைமையாகும் நிலப்பரப்பு எவ்வளவு இருக்கும்? அவனுக்கு உரிமையாகும் அந்த நிலப்பரப்பிலும் கோழிகளும், புறாக்களும் இவை போன்ற இன்னபிற பறவைகளும், யானைகளும், குதிரைகளும் இடம் பெற்று விடுகின்றன. பலவகையான பயிர்வகைகளை விளைவிக்கக்கூடிய நிலங்களையே இவை உரிமையாக்கிக் கொள்ளுகின்றன. அதனால்தான் எனக்குரிய உணவுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நிலம் இல்லையென்று நான் சொன்னேன். இங்குள்ள நிலங்கள் இப்பகுதியில் உள்ள மக்களுக்குப் போதிய அளவு உணவுப் பொருள்களைப் பயிரிட்டுத் தரமுடியாதவை என்பதை எண்ணும்போது, என் கூற்றுத் தவராகுமா? ஏனவேதான் நான் இறக்கவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்,” என்றார். “ஐயா, உங்கள் கூற்றுத் தவறானது.இந்த உலகம்-உங்களைக் காப்பாற்றும் வலிமை பெற்றதுதான்,” என்று அவன் கூற, அறிஞர்,” “என்னுடைய குறை அடிப்படை இல்லாதது-பொருத்தம் இல்லாதது என்றால், பேரின்பப் பெருவாழ்வு பெற-இறைவன் அருட்செயல்களை எண்ண-இறைவனை வழிபட-நேரமில்லை என்று கூறும் உன்னுடைய கூற்றும் பொருத்தம் இல்லாததும் அடிப்படை இல்லாததுமாகும் என்பதை மறந்துவிடாதே. எனக்கு வேண்டுவனவற்றை நிலம் தரும் என்பது உறுதியானால், உனக்கு வேண்டுவனவற்றைக் காலம் தரும் என்பதும் உறுதியாகும். நிலம் என் உணவுக் குறையைப் போக்கும்; காலம் உன்னுடைய மனக்குறையை நிறைவு செய்யும்,” என்று கூறினார். இந்த நிகழ்ச்சியால் காலம் என்பது மனிதவாழ்வில் மிக உயர்ந்தது என்பதையும், அதனை அளந்து பயன்படுத்திச் சிறக்க வேண்டும் என்பதையும் நாம் அறியலாம். பலவிதக் கடமைகள் மிகுந்துள்ளபோது, சமயக் கல்வியைக் கற்பதும் சமயத் துறையில் நல்ல தேர்ச்சி பெறுவதும் எப்படி என்பதை நாமறிய வேண்டும். எடுத்துக் காட்டு ஒருவன் குதிரைமீது அமர்ந்து நெடுந்தொலைப் பயணம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய குதிரை நீர்வேட்கையால் துன்புற்றது. நல்ல வேலையாக அவன்கிணறு ஒன்றினைக் கண்டான். அந்தக் கிணற்றில் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. இயந்திரத்தின் உதவியால் கிணற்றிலிருந்து நீர் வெளியே கொணரப்பட்டு அங்கிருந்த வயல்களுக்கு இறைக்கப்பட்டது. இயந்திரத்தின் பேரொலி குதிரைக்கு அச்சத்தைத் தந்தது. அது மிரண்டது. அதனால் அவன் அங்கிருந்தவர்களை அணுகி இயந்திரத்தை நிறுத்துமாறு கூறினான். அவர்கள் அவ்வாறே செய்தனர். குதிரை அச்சமில்லாமல் நீர்த்தொட்டியை அணுகியது. அத்தொட்டியில் சிறுநீர்த்துளியும் இல்லாமலிருந்ததைக் கண்டு அவன் சினம் கொண்டான்; அங்கிருந்தவர்களை அழைத்து, “உங்களை இயந்திரத்தை தான் நிறுத்தச் சொன்னேனே தவிர நீறை நிறுத்தக் சொல்லவில்லையே! புதிய ஒரு விருந்தினனை எப்படி உபசரிப்பது என்பதே உங்களுக்குத் தெரியவில்லையே! போங்கள். தண்ணீர் வருமாறு செய்யுங்கள்,” என்றான். அவர்கள் பணிவும் அன்பும் கலந்த குரலில், “உங்களை நல்ல முறையில் உபசரிக்க வேண்டும் என்னும் ஆவல் ஆவலைக் கெடுத்துவிட்டீர்கள். இயந்திரம் வேலை செய்தால்தான் நீர் வெளிவரும். இயந்திரம் நின்றுவிட்டது; நீரும் நின்றுவிட்டது. இயந்திரத்தின் ஒலி கேட்டுக் குதிரை மிரண்டு விடுகிறது என்று நீங்கள் சொல்லலாம். நாங்கள் என்ன செய்ய முடியும்? இயந்திரத்தின் ஒலி கேட்கும்போது தண்ணீர் குடிக்கும் அளவுக்குக் குதிரையை நீங்கள் பயிற்றுவித்திருக்க வேண்டும், ” என்றனர். பிறகு இயந்திரம் போடப்பட்டது. குதிரையின் நீர்வேட்கை தணிந்தது. மன வளர்ச்சி தேவை இந்தச் சிறு கதையால் நாம் பெறும் விளக்கம் யாது? சமய அறிவைப் பெறப் போதிய நேரமில்லை என்று குறைபட்டுக் கொள்வதை விட்டு, உள்ள நேரத்திலேயே சமயக் கல்விக்கெனக் சிறிது காலத்தை ஒதுக்கிப் பயன்பெற வேண்டும். என்பதேயாகும். இந்த உலகில் ஒலியில்லாத பகுதிகளே இல்லை. எனவே, அமைதியான இடத்தை நாடிச் சென்றுதான் சமய அறிவு பெறவேண்டும் என்று விருப்பம் வேண்டா. நம்மைத்துன்புறுத்துவது நம்மைச் சூழ்ந்துள்ள பரந்த உலகம் அன்று; என்பதையும், நாம் படைத்துக் கொள்ளும் பிணைப்புகளே நம்மைத் துன்புறுத்துகின்றன என்பதையும் நாம் உணரவேண்டும். இல்லறக் கடமைகளைத்தவிர வேறொன்றும் அறியாதவர்களும், தங்கள் இனம் தவிர வேறெதைப் பற்றியும் அறிய விரும்பாதவர்களும் இன்று பலராக உள்ளனர். நாமாக படைத்துக் கொள்ளும் இந்தப் பிணைப்புக்களே நமக்குத் துன்பத்தைக் கொடுக்கின்றன. பரந்த உலகில் வாழும் மனம் நமக்கு வளரவேண்டும். வேலைகளின் தன்மை எப்போதும் சுறு சுறுப்பாக இருப்பதாகவும் மேலும் பல கடமைகளைச் செய்ய நேரம் இல்லாமல் இருப்பதாவும் சிலர் கூறிக்கொள்ளுகின்றனர். பணி புரியவும் அறிவு பெறவும் போதிய அளவுக்கு நேரமிருந்தும்கூட அவர்கள் நேரமில்லை. நேரமில்iல என்றே கூறுகின்றனர். இதற்குக் காரணம் வேலைகளின் தன்மைகளைச் சரிவர அறியாமையேயாகும். வேலைகளின் தன்மையாது? விஞ்ஞான வல்லுநர்கள் வேலையின் தன்மையைப் பற்றிக் கூறுவதற்கும் சமயத்துறை வல்லுநர்கள் கூறுவதற்கும் வேறுபாடுண்டு. ஓரு திட்டத்தை வகுத்துக்கொண்டிருப்பது வேலையாகாது என்றும், நிலத்தில் பந்து உருண்டு ஓடுவது வேலையாகாது என்றும், மலையின்மீது முயற்சியோடு ஏறவது வேலையாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். வேலையின் தன்மைபற்றி விஞ்ஞான வல்லுநர்கள் கூறும் இக்கருத்து வேடிக்கையாக உள்ளது. உளநூல் அறிஞர்கள் வேலையின் தன்மைபற்றி என்ன கூறுகின்றார்கள் என்பதைக் காண்போம். நம்முடைய மூளை எப்nபாது நாம் செய்யும் வேலையோடு உறவு கொள்ளுகின்றதேh, அப்போதுதான் நாம் வேலை செய்கின்றோம் என்பது பொருள். சுவாசித்தல் என்பது ஒரு தொழிலன்று என்பது உளநூலார் கருத்து. மூளை அந்தத்தொழிலோடு உறவு கொள்ளாமையே அதற்குக் காரணம். இரத்த ஓட்டமும் தொழிலாகாது என்பது அவர்கள் கருத்து. தொழில் அல்லது வேலை எது என்பது பற்றி உளநூலார் தரும் விளக்க மொன்றைக் காண்போம்: இராணுவத்தில் பணியாற்றிய வீரன் ஒருவன் தயிர் வெண்ணெய் முதலியவைகளை வாங்கி அவற்றைக் கையிலெடுத்துக்கொண்டு வீடு நோக்கி நடந்துகொண்டிருந் தான். அவன் இராணுவ வீரன் என்பதையும் அவனையும் அறியாமலேயே சில நேரங்களின் இராணுவப் பயிற்சிகளைச் செய்யத் தொடங்கிவிடுவான் என்பதையும் ஊரார் அறிவர்; தயிர் வெண்ணெய் ஆகியவற்றைக் கையில் கொண்டு நடந்துவந்த வீரனைக் கண்டதும், அவனைக் கொண்டு சிறிது பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டுமென விரும்பினர். அதனால் அவன் காதுகளில் விழும்படியாக “அட்டன்ஷன்” என்று கூறினர். அவ்வளவுதான். நடந்துகொண்டிருந்த அவன் தன் கையிலிருந்தனவற்றை நிலத்தில் விட்டுவிட்டு, விரைத்து நின்றுகொண்டான். தயிரும் வெண்ணெயும் மண்ணில் கிடப்பதையும் வீரன் விரைத்து நிற்பதையும் கண்டு ஊரார் சிரித்து மகிழ்ந்தனர். “அட்டன்ஷன்” என்று சொல்லைக் கேட்ட பின்பு வீரன் செய்தது தொழில்தானே என்றவினா எழும்பொழுது, உளவியலார் ‘இல்லை’, என்று கூறுகின்றனர். அவர்கள் அதனைப் ‘பிரதிபலிப்புச் செயல்’ என்று கூறுகின்றனர்; பிரதிபலிப்புச் செயலோடு மனம் ஒன்றவில்லையாதலால், அது தொழிலாகாது என்று கூறுகின்றனர். மனத்தை எந்த அளவுக்குப் பயன்படுத்துகின்றேமோ அந்த அளவுக்கு நம் வாழ்நாளும் நீடிக்கும். மனத்தைக் கொண்டு நாம் மிகப் பல செயல்களை ஒரு நாளில் செய்து முடிக்கலாம். எடுத்துக்காட்டு அரசு, நம்பி என்னும் நண்பர் வழியில் ஒருவரை ஒருவர் கண்டனர். அரசு நம்பியைப் பார்த்துக் கோவிலுக்கு வருமாறு வேண்டினான். நம்பி வரமறுத்து, அவனை விளையாட வருமாறு வேண்டினான். இருவருக்கும் ஒன்றுபட்ட மனம் இல்லை யதலால், அரசு கோவிலுக்கும் நம்பி விளையாடவும் சென்றனர். கோவிலுக்குச் சென்ற அரசு இறை வழிபாட்டில் ஒன்ற முடியாது தவித்தான். அங்கு ஓதுவார்கள் இசையோடு தேவாரப் பாடல்களைப் பாடியதை அவனால் கேட்கமுடியவில்லை. நாதசுர ஒலியை அவனால் சுவைக்க முடியவில்லை. அங்கு வந்து வழிபாடு நிகழ்த்துவோர்களைக் காணவும் அவனுக்கு விருப்பமில்லை; கோவிலுக்கு ஏன் வந்தோம், நம்பியோடு விளையhடச் சென்றிருக்குலாமே,’ என்று எண்ணிக் கலங்கினான்; அங்கிருந்து புறப்பட்டான். விளையாட்டு அரங்கிற்குச் சென்ற நம்பி அங்கிருந்தவர் களோடு கலந்து விளையாட முடியவில்லை; அரசு இல்லாது விளையாட அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் நண்பனோடு உரிமையாக விளையாடும் விளையாட்டுக்களை நினைத்துக் கொண்டான்; ‘அவனோடு கோவிலுக்குச் சென்றிருந்தாலும் தேவாரப் பாடல்களையும், நாதசுர இனிமையையும், கேட்டு மகிழலாமே’, என்று எண்ணி வருந்தினான்; அங்கிருந்து புறப்பட்டான். அரசும் நம்பியும் வழியில் மீண்டும் ஒருவரை ஒருவர் கண்டனர். விளையாட்டரங்கத்திற்கு வராமற்போனது பற்றி வருந்துவதாக அரசு கூறினாள். கோவிலுக்கு வராமற்போனது பெரும் பிழையாய்விட்டது என்று நம்பி கூறினான். அரசும் நம்பியும் போன்றவர்கள் இன்னும் நம்மிடையே பலராக உள்ளனர். சில வேளைகளில் நம் முடைய உடல் இருக்கும் இடங்களில் உள்ளம் இருப்பதில்லை. சிறந்த அறிஞர்கள் பேசும் கூட்டங்களில் இருப் போருள் எத்துணையர் உண்மையாகச் சொற்பொழிவாளரின் சொற்பொழிவில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சொல்லிவிடலாம். அவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். எல்லோரும் நாற்சுவர்களுக்கு இடைப்பட்ட அந்தச் சொற்பொழிவு மண்டபத்தில் இருப்பர் என்பது மட்டும் உறுதியான உண்மை யாகும். ஆனால் எல்லோருடைய மனமும் பெரும்பாலும் சொற்பொழிவில் ஈடுபடுவதில்லை. ‘அழுதால் உன்னைப் பெறலாம்’ மனிதனது சிறந்த வாழ்வுக்கு அடிப்படையாக அமைவது அவனது மனமேயாகும். தனிமையான வாழ்வில் மனம் வளர்கின்றது என்றும், இல்லற வாழ்வில் மனம் பண்படுகின்றது என்றும் பொது வாழ்வில் அது பயன் படுகின்றது என்றும் கூறலாம். மனிதனுடைய செயல்களை வைத்துக்கொண்டு அவன் யார் என்று முடிவு கட்டுவதைவிட, அவனுடைய எண்ணங்களைக் கொண்டே அவன் யார் என்பதை உறுதி செய்வது நல்லது. செய்த குற்றங்களை எல்லாம் எண்ணி யெண்ணி வருந்தும் ஒருவன், இறைவனிடம் முறையிடும்பொழுது உண்மையாகவே தான் செய்த குற்றங்களை எல்லாம் எண்ணி வருந்துவான். அந்த குற்றங்கள் நீக்கப் பட்டால், தான் இனித் தீத்தொழில்கள் செய்வதில்லை யென்றும் தூயவனாக வாழ முயல்வது என்றும் அவன் உறுதி கொள்வான். அப்பெhழுது அவன் இறைவனோடு ஒன்றிவிடுகிறான் என்றுதான் கூறவேண்டும். அந்த நேரத்தில் அவன் நல்லவனாகின்றான். இதனைவிளக்க ஒரு சிறு கதையை இங்குக் காண்போம்: எடுத்துக்காட்டு செல்வன் ஒருவன் மிகுந்த பொருளைத் தன் வீட்டில் வைத்திருக்கிறான் என்பதை அறிந்த கள்வர்கள் அதனைத் கவர்ந்துகொள்ள விழைந்தனர். செல்வத்தைக் கவரநினைத்த கள்வர்கள் அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளலாயினர்; அந்த வீட்டின் எதிரே மரம் ஒன்று உயர்ந்து வளர்ந்திருந்ததைக் கண்டனர். அந்த மரத்தின் கிளையொன்று வீட்டின் திறந்த சன்னல்வரை வளர்ந்திருந்ததைக் கண்டு, மகிழ்ந்தனர்; மரத்தில் கயிற்றைக் கட்டி விட்டு அதன் துணைகொண்டு நள்ளிரவில் அந்த வீட்டின் சன்னலை அடைந்தனர். கள்வர் தலைவன் சிறிதுநேரம் யோசித்தான்; கோடைக்காலமானதால் அந்த வீட்டினர் ஐந்தாம் மாடியில்தான் படுத்திருப்பர் என்று எண்ணி உள்ளே நுழைந்தான். அவனுடைய தோழர்களும் உள்ளே நுழைந்தனர். அப்போது அவன் தான் தேடி வந்த செல்வம் எங்கிருக்கும் என்பது பற்றி எண்ணலானான்; வேறு எந்த எண்ணத்திலும் ஈடுபடாமல், அது பற்றியே எண்ணலானான்; பெருஞ் செல்வர்கள் தங்கள் செல்வத்தை இரும்புப் பெட்டிகiள நம்பி வைக்கமாட்டார்கள் என்றும், பிறரால் எளிதில் கவரப்படும் நிலையிலும் வைக்கமாட்டார்கள் என்றும் எண்ணினான்; மூன்றாம் அடுக்கில் ஒருபுறத்தில் நிலத்துக் கடியில்தான் புதைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் முடிவோடு அங்குச்சென்றான்; நிலத்தை ஓசைபடாமல் தோண்டினான்; தேடி வந்த பெரும்பொருள் இருக்கக் கண்டான்; எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு புறப்படத் தயாரானான். அந்தநேரத்தில் அவன்மனம் அமைதி, குழப்பம், முதலிய நிலைகளின் மோதுகளமாய் இருந்தது. அப்போது மெல்லிய ஓசை அவன் செவிகளிற் கேட்டது, யாரோ வருகிறார்கள் போலும் என்றெண்ணினான். அந்த அளவில் அவன் நெஞ்சு படபடத்தது; எவரிடமும் அகப்பட்டுவிடக் கூடாதே என்று எண்ணினான். அதுவரையும் எதிர்கால விளைவுகள் பற்றி எண்ணாத அவன், பெரிதும் வருந்தினான். அவனுடைய நண்பர்களும் முகம் வெளுத்துச் செய்வதறியாது இருந்தனர். கள்வர் தலைவன் அங்கு அமர்ந்தபடியே இறைவனை எண்ணி வேண்டிக்கொண்டான். “இறைவ, நான் எவர் கண்ணிலும் படாமல் தப்பவேண்டும். நீ என் தவறானச் செயலுக்கு என்னை மன்னித்துவிட வேண்டும். இந்த நிலையிலிருந்து நான் விடுபட்டுத் தப்பிவிடின், உன் புகழ்பாடும் அடியவருள் ஒருவனாக மாறிவிடுவேன்; இல்லை யெனின், பற்றற்று வாழும் வாழ்வினனாகி விடுவேன்; உன்னுடைய பணிகளுக்கே என்னை முழுவதும் உரிமையாக்கி கொள்வேன். என் செயலை மன்னித்துவிடு.” கள்வர் தலைவனின் இந்த மூறையீடு மனம் ஒன்றிய முறையீடாகும். அது அவன் அடிமனத்தினின்று வெளிப்போந்த வேண்டுகோள் என்றும் சொல்லலாம். அதன் விளைவு யாது? அவன் செவிகளிற்பட்ட ஒலி அடங்கியது. அவனும் அவனுடைய நண்பர்களும் எந்தவித ஆபத்து மின்றி வெளியேறினர். படிப்பினைகள் இதனால் நாம் சில படிப்பினைகளைப் பெறமுடியும். அவை, (1) எதனையும் வெளித் தோற்றத்திலிருந்து மதிப்பிடுதல் கூடாது; (2) மனிதனை அவனுடைய செயல்களைக் கொண்டே மதிப்பிட்டு விடக்கூடாது; (3) அவனுடைய எண்ணங்களைக் கொண்டே அவன் யார் என்பதைத் துணியவேண்டும்; (4) எளிய குடியில் பிறந்த ஒருவன் அல்லது ஒருத்தி உலகுக்கு உண்மையான உயர்ந்த நெறிகளை வற்புறுத்திக் கூறுதல் இயலும் என்பனவாகும். இக்கருத்தினை வலியுறுத்தத்தக்க இலக்கிய நிகழ்ச்சி யொன்று கூறுவோம்: மாதவி மாண்பு மாதவி பரத்தையர் குலத்தில் பிறந்தவள் தான் என்றாலும், உயர்ந்த ஒழுக்கத்தோடு சிறந்த பெண்ணாக-கடமையுணர்ந்த மனைவியாக வாழ்ந்தாள்; தன்னுடைய வாழ்வை அவலமாக்கி விட்ட ‘கலை’, தன்னுடைய மகள் மணிமேகலை வாழ்வில் குறுக்கிடாமல் காத்தாள்; பரத்தையர் குலப் பெண்ணாலும் ஒழுக்கத்தொடு ஒருவனோடு உண்மை அன்போடு வாழமுடியும் என்பதை வாழ்ந்து காட்டினாள்; பாசப் பினைப்புக்களினின்று நீங்கிப் பிறர்க்குத் தொண்டுபுரியும் காரிகையர் குலத் தோன்றல்களால் முடியும் என்பதை, மணிமேகலையைப் பிக்குணியாக்கி மெய்ப்பித்துக் காட்டினாள். மனநிலை ஒருவனை அவனுடைய நண்பர்களைக் கொண்டு மதிப்பிடலும் சில வேளைகளில் தவறாப் முடிந்துவிடும். சிலர் சிறைகளில் வாழும்போது சுவர்க்கத்தில் வாழ்வதாகவே கருதுகிறார்க ணள். பன்யன் என்னும் மேலைநாட்டுக் கவிஞர் “பில்கிரிம்ஸ் புரோக்ஸ்” என்னும் நூலைச்சிறைச் சாலையில் தான் எழுதி முடித்தார். மில்ட்ன் என்னும் பெருங் கவிஞர்தம் சிறப்புடைய பெருநூல் ஒன்று அவருடைய சிறை வாழ்வின் போதுதான் வெளிப்பட்டது. சர்.வால்ட்டர் ராலே “உலக வரலாறு” எழுதியதும், டேனியல் டீ போ என்பார் “ராபின்சன் குருசோ” எழுதியதும் சிறைச்சாலைகளில்தான் என்பதை நாமறிதல் வேண்டும். இந்திய நாட்டின் தலைவர் பலர் தம் சிறை வாழ்க்கையின் போது அரிய பல நூல்களை எழுதியுள்ளனர். லோகமான்ய திலகர் “கீதா ரகசியம்” என்னும் நூலைச் சிறைச் சாலையில்தான் எழுதிமுடித்தார். கள்வன் வேண்டியதைப் பெற்றான். அதற்குக் காரணம் அவனுடைய உண்மையான...... ஆழமான-தூய்மையான வேண்டு கோளேயாகும். சுள்வன் செய்தது தவறான செயலேயாகும். பிறருடைய உடைமைகளைக் கவருவது என்பமு பீடுடைய செயலன்று. ஆயினும் கள்வனுடைய வேண்டுகோள் நிறை வேற்றப்பட்டது. இதனால் நாம் பெறும் படிப்பினை யாது? குற்றங் குறைகளிலிருந்து உண்மையைக் காணவேண்டும் என்பதுதான் நாம் பெறும் படிப்பினையாகும். அருளைப் பெறும் முறை மனிதன் இறைவன் அருளைப் பெறும் முறை யாது? மனிதன் ஒன்றிய மனத்துடன் இறைவனை வேண்டின், அருள் பெறுவான்; அவன் மனம் மாசறும்; அவன் தூய்மை பெறுவான். ‘அழுதால் உன்னைப் பெறலாமே’ என்பது திருவாசகம். மூவகை மனநிலைகள் நிலையற்ற மனமுடையவர்கள், நிலையான மனமுடைய வர்கள், சஞ்சலமுடைய மன முடையவர்கள் என்று மனிதர்களை மூவகையாக-மூன்று வகையான உணர்ச்சிகளைக் கொண்ட வர்களாக-மூன்றுவகையான உள்ளங்களைக் கொண்டவர் களாகப் பகுக்கலாம். நிலையற்ற மனம் என்பது என்ன? பென்சில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதைக் கையின் நடுப்பாகத்தில் நேராக வைப்போம். சில வேலைகளில் தான் அது பிடிப்புக் கொண்டு நிற்கும்; காற்றின் மிகச் சாதாரண அலைகூட அந்தப் பென்சிலைப் கீழே விழச் செய்துவிடும். இதுதான் நிலையற்ற மனத்தை விளக்கத் தகுந்த சான்றாகும். அதே பென்சிலை மேஜைமீது படுக்கை நிலையில் வைப்போமாயின், அது அசைவதில்லை. படுக்கை நிலையில் எங்கு வைத்தாலும் பென்சில் அசைவதில்லை. நிலையான மனமுடைவர்களும் இந்த நிலையினரேயாவர். பென்சிலை இருவிரல்களுக் கிடையில் வைப்போமாயின், அது சிறிது நேரம் அசையாமலும் சில நேரங்களில் அசைந்துகொண்டும் இருக்கும். இது சஞ்சல மனமுடையவர்கள் நிலையை ஒக்கும். சிலருடைய மனம் எப்போதும் அமைதியாய் இருப்பதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தால் அவர்கள் துன்பப் பட்டுக்கொண்டிருப்பார்கள். நண்பர்களுடைய சூழல் சில நேரங்களில் அவர்களுக்கு இன்பம் தரக்கூடும். ஆனால் அது நீடித்திருக்காது. சிலருடைய மனம் அமைதியாகவே எப்போதும் இருக்கும். நிறைவோடு இருக்கக் கூடிய அந்த மனத்தில் எப்படியாவது சலனம் அல்லது சஞ்சலம் ஏற்பட்டுவிட்டால், மீண்டும் அமைதி பெறுவது என்பது எளிதான செயலாக அமையாது. இந்த நிலையினரே நம்மில் பெரும்பாலராக உள்ளனர். உள்ள வுறுதி மாலை உலாச்சென்றுவர உலகப்பன் புறப்பட்டான். வழியில் அவன் நண்பன் அழகப்பன் அவனைக் கண்டான். உலகப்பன் எதையும் தாங்கும் உள்ளம் படைத்தவன். அவன் அழகப்பனைக்கண்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டன். அழகப்பன் தன் நண்பன் கரங்களைக் குலுக்கி, அவனோடு சிலமணி நேரங்கள் பேசிக் சென்றான். உலாச் சென்ற உலகப்பன் தன் பழைய நண்பன் அழகப்பனைக் கண்டான்; பேசினான். இவையிரண்டும் சில மணி நேரநிகழ்ச்சிகள் தாம். ஆனால் அந்தச் சந்திப்பு உலகப்பனின் உள்ள அமைதியைக் கெடுத்தது; அழகப்பன் சொன்ன செய்தியையே மீண்டும் எண்ணலானான் அவன் சொன்ன செய்தியை உலகப்பன் நாளும் எண்ணினான்; கவலை வளர்ந்தது. அந்தக் கவலையின் வளர்ச்சி, வாரம், மாதம் என்ற இரு நிலைகளையும் கடந்து, ஆண்டு என்னும் பெரு நிலையையும் கடந்தது; இருதியில் அஃது அவன் உயிரைக் கவரும் நிலையையும் அடைந்தது. மனத்தின் இத்தகைய உணர்ச்சிகள் மனித வாழ்வுக்கே முற்றுப் புள்ளி இடுகின்றன. நம்மையும் அறியாமல் ஏற்படும் சில இன்னல்களை எளிதில் கடந்துவிடும் மனம் நமக்கு இருக்கு மாயின், நம்மை நாம் வளர்த்துக்கொள்ளும் நிலை பெறுவோம். மனத்தின் குறை என்ன என்பதை அறிந்து, அந்தக் குறையைக் களைவது நீடித்த நல்வாழ்வை விரும்புவோரின் கடமையாகும். நாம் வீரர்களைப்பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும்: அவர்கள் கலங்காத மனமுடையவர்கள். எந்தச் சூழ்நிலையும் அவர்கள் மனத்தை மாற்ற முடியாது. அசைவு அவர்கள் மனத்தில் ஏற்படாது. கண்ணாடிமுன் ஒருவன் சென்று நின்று பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். கண்ணாடி அவன் முகத்தைப் பிரதிபலிக்கின்றது. ஆயின் அக்கண்ணாடி அவனுடைய முகத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதை நாம் அறியவேண்டும். அவன் இடக் காதில் அணிந்திருக்கும் குழை வலக் காதில் அணிந்திருப்பது போலக் கண்ணாடியில் தோன்றும். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கண்ணாடி முன்னர் நின்றிருந்தாலும், அஃது அவனுடைய முகத்தைத்தான் பிரதிபலிக்கும். அதை விட்டு அகன்றுவிட்டால், கண்ணாடி பழைய நிலையில் தூய்மையுடையதாகவே காட்சி யளிக்கும். அறிவையும், சிறந்த பண்புகளையும் கொண்ட மனிதர்களை இந்தக் கண்ணாடிக்கு ஒப்பாகச் சொல்லலாம். முடிவுரை மனிதனது வாழ்நாளில் அவனது அலைந்து திரியும் கட்டங்கள் பலவாக ஏற்படுதல் இயல்பேயாகும். அந்த நிலையில் அவனுக்கு உறு துணையாக இருப்பன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல்களேயாகும். தீய நண்பர்கள் கூட்டுறவால் துன்புறும் ஒருவன்-எதிர்பாராது துன்பச் சூழலில் அகப்பட்டுக் கொள்ளும் ஒருவன் கலங்காத மனம் கொள்ளவேண்டும். மனத்தை அலையவிடாமல் சமயோசித அறிவைப் பயன்படுத்திச் சிறந்து வாழத் தெரிந்து கொள்ளவேண்டும். 19. கடவுள் எங்கே இருக்கிறார்? கடவுள் என்பது உலகத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் பேராற்றல் என்று பெரியோர் கூறியுள்ளனர். “உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர் தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.” என்பது கம்பர் கூற்று. இப் பேராற்றலை ஆணாக உருவகப்படுதித்திச் சிவன் என்றும், திருமால் என்றும், பிரமன் என்றும் பரமபிதர் என்றும், அல்லாஹ் முருகன் என்றும், விநாயகர் என்றும், பல சமயத்தார் பல பெயர்களை யிட்டு வழங்குகின்றனர். இப் பேராற்றலையே பெண்ணாக உருவகப்படுத்துச் ‘சக்தி’ என்று அழைப்பதும் உணடு. ‘இப் பேராற்றல் எது? என்பது பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளனர்: தாயுமானவர்-இப்பேராற்றல் எங்கும் ஒளிமயமாய் இருப்பது; இன்பமயமாய் இருப்பது; அருள் நிறைந்தது; உயிர்க்குயிராய் இருப்பது; மனம், வாக்கு, காயம் இவற்றுக்கு அப்பாற் பட்டது; இரவு பகல் அற்ற வெளியில் இயங்குவது,” என்று கூறியுள்ளனர். இராமலிங்க அடிகள், “கோடையில் இளைப்பாற்றிக் கொள்ளத்தகும் குளிர்ந்த மரம், அம்மரம் தரும் நிழல், அந் நிழல் தரும் கனிந்த கனி, ஓடையில் ஊறும் தீஞ்சுவைத் தண்ணீர், அத் தண்ணீரின் இடையில் மலர்ந்த மணமலர், மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்று, அம்மெல்லிய காற்றில் விளைகின்ற சுகம், இன்பத்தின் பயன்-இவை யெல்லாம் கடவுள்,” என்று கூறியுள்ளார். “அன்பே சிவம்” என்று சைவர் கூறுகின்றனர். “அன்பே கடவுள்” என்று கிறித்துவம் கூறுகிறது. பிறசமயங்களும் அவற்றையே கூறுகின்றன. “அறிவே கடவுள்” என்பர் தாயுமானவர். “ஆண்டவன் அருள் வடிவானவன்” என்பர் சிலர். “உண்மையே கடவுள்” என்பார் காந்தியடிகள். இவற்றால் நாம் அறிவது என்ன? உலகத்திலுள்ள நல்லனயாவிலும் இறைவன் இருக்கிறார் என்பது பெரியோர் கருத்தென்பது தெரிகிறது. “கடவுள் எங்கே இருக்கிறார்?” என்னும் கேள்விக்குப் பலர் பலவாறு விடை பகர்ந்துள்ளனர். பாறையைச் சிறுசிறு கற்களாக உடைத்துப் பாதையை அமைக்கும் தொழிலாளிகள் வெயிலால் மண்டை வெடிக்கவும், கால்கள் கொப்பளிக்கவும் வேலை செய்கின்றனர். ஒவ்வொரு தொழிலாளியின் உடல் முழுவதும் வியர்வை தோன்றி வழிகின்றது. அப்பாதை மனிதர் நலத்துக்காக அமைக்கப்படுகின்றது. அந்தத் தொழிலாளியின் உழைப்பில் கடவுள் இருக்கிறார்,” என்று இரவீந்திர நாத் தாகூர் அவர்கள் கூறியுள்ளனர். அநாதைப் பிள்ளைகளை வைத்து வளர்க்கும் பெருந் தொண்டில் ஈடுபட்டிருந்த திருமதி டீக்கன் என்ற மேனாட்டு அம்மையார், “இப் பிள்ளைகளுக்குத் தொண்டு செய்வதிலே நான் கடவுளைக் காண்கிறேன்,” என்று கூறியுள்ளார். “அநாகரிக மக்களான நீகிரோவர்க்கு எழுத்து அறிவித்தல், அவர்களை அறிவுடையவர் ஆக்குதல், நாகரிகம் உடையவராக வாழச் செய்தல் என்னும் முயற்சிகளில் நான் கடவுளைக் காண்கிறேன்,” என்று டேவிட் லிவிங்ஸ்டன் என்ற பெரியார் செப்பியுள்ளார். “களங்கமற்ற உள்ளம் உடைய வனிடத்தில் கடவுள் இருக்கிறார்; தவறுகள் செய்யாதவனிடம் அவர் இருக்கிறார்,” என்றார் இயேசுநாதர். “அன்பர் அகத்தில் ஈசன் இருக்கின்றான்” என்றார். ஒரு சைவப் பெரியார். இப்படிப் பலர் பலவாறு கூறியுள்ளனர். நாம் இவற்றை ஆழ்ந்து எண்ணிப் பார்க்கவேண்டும். இக் கூற்றுக்களின் கருத்து என்ன? இறைவர் அன்பு வடிவானவர். அன்பு உடையவனிடம் அவர் வெளிப்படுகிறார்; தொழிலாளியிடம் அவனது உழைப் பாகத் தம்மை வெளிப்படுத்துகிறார். மனிதர் தத்தமக்கு உரிய கடமைகளைத் தவறாது செய்தல் வேண்டும். தவறு உடைய வற்றைச் செய்யலாகாது. அகச்சான்று வகுக்கும் அறநெறியின் படி வாழ்க்கையை நடத்துவதே நேர்மையானது. அத்தகையவர் காசி, இராமேசுவரம் செல்லத் தேவையில்லை. குற்றமற்ற வாழ்க்கை ஒன்றே கடவுளைக் காட்டவல்லது என்பன இப்பெரியோர் கூற்றுக்களால் அறியலாம். இவற்றில் எல்லாம் கடவுள் இருக்கிறார் என்பது அப் பெரியோரின் நம்பிக்கை யாகும். உலக இயற்கையை மனிதன் உணர வேண்டும்; தான் செய்யத்தகும் கடமைகளை நன்கு அறிதல் வேண்டும், அறநெறிக்கு மாறுபடாத வாழ்க்கை வாழவேண்டும்; பிறர்க்கு உதவி செய்தல், எல்லோரிடமும் அன்பாக நடத்தல், தன்னைப் போலவே பிறரையும் மதித்தல், பிறர் குற்றங்களுக்காக இரங்குதல், பிறர் செய்த பிழைகளைப் பொறுத்தல் முதலிய சீரிய பண்புகளை மேற்கொண்டு ஒழுகுவோரிடம் கடவுள் இருக்கிறார். ஒவ்வொரு வரையும் “நடமாடும் கோவில்” என்றார் திருமூலர். இந்த உண்மையை உள்ளத்தில் பதிய வைத்து, எல்லோரையும் மதிக்கத்தக்க மனிதனிடத்தில் கடவுள் இருக்கிறார். பிறர் செய்யும் தவறுகளைத் தன் தவறுகள் போல எண்ணிப்பொறுக்கும் மனவிரிவு படைத்தவனிடத்தில் கடவுள் இருக்கிறார்; “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று உள்ளம் கசியும் உத்தமரிடம் கடவுள் இருக்கிறார். சுருங்கக்கூறின், எங்கெல்லாம் நல்லன உண்டோ, அங்கெல்லாம் கடவுள் இருக்கிறார். ஒரு சிற்றூரின் மீது ஆங்கிலேயர் வானவூர்தியிலிருந்து குண்டுகளைப் பொழிந்தனர். அச் சிற்றூரிலிருந்த வீடுகள் அழிந்தன. குடிமக்கள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்க விரைந்தனர். அத்தகைய துன்ப நிலையில், குண்டு களைப் பொழிந்த வானவூர்தி கெட்டுவிட்டது. குண்டுகளைப் பொழிந்த வீரர் இருவர் அவ்வூர்தியிலிருந்து அதே சிற்றூர்க்கு அருகில் இறங்கினர். அவ்வூரைச் சேர்ந்த இளநங்கை ஒருத்தி அவர்களைக் கண்டாள்; அவர்களுடைய வாடிய முகங்களைப் பார்த்தாள். அவளுக்கு இரக்கம் உண்டாயிற்று. பிறர் பார்த்தால் அவர்களைக் கொன்று விடுவார்கள் என்பதை அவள் அறிவாள். அவர்களே தங்கள் சிற்றூரைப் பாழாக்கியவர்கள் என்பது அவளுக்குத் தெரியும்; தெரிந்திருந்தும், அவள் அவர்களுக்கு உதவி செய்யத் துணிந்தாள். அந்நங்கை அவ்விருவரையும் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றாள்; அவர்களது பசியைப் போக்கினாள்; அன்றிரவு ஓய்வு கொள்ளும்படி வசதி செய்தாள்; மறுநாள் பொழுது விடியுமுன் அவர்களைத் தப்பிப் பிழைக்கும் படி அனுப்பிவிட்டாள். தன் ஊரை அழித்த-தன் வீட்டை அழித்த-அக் கொடியவருக்கு உதவி செய்த அந்நங்கையைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? அவள் உள்ளத்தில் கடவுள் இருக்கிறார்; அவளது செயலில் கடவுள் இருக்கிறார். அவளைக் கடவுள் திருவுருவம் என்று சொல்வது தவறாகுமா? திக்கற்ற நோயாளி விடுதி ஒன்று சென்னையில் இருந்தது. நானும் காலம் சென்ற திரு. வி. க. அவர்களும் அதைப் பார்க்கச் சென்றோம். அவ்விடுதியில் அநாதை நோயாளிகள் கட்டில்களில் படுத்திருந்தனர். அமெரிக்க இளநங்கை ஒருத்தி எங்களை வரவேற்றாள்; ஒவ்வொரு நோயாளியிடமும் அழைத்துச் சென்று, அவரைப் பற்றிய விவரங்களை எடுத்துச் சொன்னாள். அவ்வமயம் அடுத்த கட்டிலில் படுத்திருந்த முதியவர் ஒருவர்-இருமல் நோயால் துன்புற்றவர்-திடீரென உட்கார்ந்து இருமினார். இருமியதால், அவர் வாயிலிருந்து கோழையும் எச்சிலும் வெளிவந்தன. எங்களுடன் இருந்த அமெரிக்க நங்கை தன் இரு கைகளையும் ஏந்தி அக் கோழையையும் எச்சிலையும் பெற்றுக் கொண்டாள். நாங்கள் இருவரும் அவள் முகத்தைப் பார்த்தோம். அவள் முகம் மிகுந்த மலர்ச்சியோடு காணப்பட்டது. “தம்பி, இவளிடம் கடவுள் இருக்கிறார். இவள் சிறந்த உள்ளம் படைத்த பெண்ணரசி,” என்று திரு. வி. க. அவர்கள் கூறினார்கள். கடவுள் எங்கே இருக்கிறார்? நீங்களே விடை கூறுங்கள். **சுவாமி இராம தீர்த்தர் அவர்களின் “Secret of Success” என்னும் சொற்பொழிவின் கருத்துக்களைத் தழுவி இஃது எழுத;ப பெற்றது. *பலதிறப்பட்ட தவறான செயல்கள் உலகில் நடைபெறுகின்றன. அவற்றைக் குறிக்கப் பல செய்திகள் இங்குத் தரப்பட்டுள்ளன. இவை எந்தத் தனிப்பட்டவரையும் சுட்டுவன அல்ல. *இது இராமதீர்த்த அடிகளது “balanced mind” என்ற சொற்பொழிவைத் தழுவி எழுதப்பட்டது.