வீரத்தமிழர் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : வீரத்தமிழர் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+82 = 96 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 90/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. முகவுரை வீரத் தமிழர் என்னும் பெயர்கொண்ட இந்நூல் பள்ளி மாணவர் படித்துப் பயன்பெற வேண்டும் என்னும் நோக்கம் கொண்டு எளிய நடையில் எழுதப் பெற்றுள்ளது. வீரபத்தினி, வீரத்தமிழ்மகள் நீங்கலாகவுள்ள பதின்மர் வரலாறுகளும் தென் இந்திய வரலாற்றில் - சேர, சோழ, பாண்டி, விஜயநகர வரலாறுகளில் - சிறப்பிடம் பெற்றவை ஆகும். இப்பதின்மர் வரலாறுகளும் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 16ஆம் நூற்றாண்டு முடியத் தமிழக வரலாற்றை ஒருவாறு விளக்கித் தமிழர் வீரச் செயல்களை நன்குணர்த்துவன; தமிழர் வீரமரபினர் - அரசியல் அறிஞர் - பேரரசு கட்டியாளத் திறனுடையவர் என்பவற்றை எளிதில் உணர்த்துவன. உரனற்றுக் கிடக்குந் தமிழ் இளைஞர் உரம் பெற இத்தகைய வீரத்தமிழர் பற்றிய நூல்கள் இக்காலத்தே பெரிதும் வேண்டப்படுவன என்பது தமிழ் அறிஞர் அறிந்ததொன்றே அன்றோ? சேக்கிழார் அகம், சென்னை மா. இராசமாணிக்கம் பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர் வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங் களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை எண் பக்கம் 1. சோழன்-கரிகாலன் 15 2. வீர பத்தினி 22 3. சேரன்-செங்குட்டுவன் 31 4. வீரத்தமிழ் மகள் 39 5. சோழன்-கோச் செங்கணான் 45 6. படைத்தலைவர்-பரஞ்சோதியார் 51 7. பாண்டியன்-நெடுமாறன் 58 8. சோழன் - இராஜராஜன் 66 9. இராஜேந்திர சோழன் 71 10. இராஜேந்திரன் வீர மக்கள் 77 11. சடையவர்மன் - சுந்தர பாண்டியன் 84 12. தளவாய்-அரியநாத முதலியார் 88 1. சோழன்-கரிகாலன் முன்னுரை அருமை மாணவர்களே, நமது தமிழகம் மிக்க தொன்மை வாய்ந்தது; அதன்கண் பேசப்பட்ட தமிழ் மொழியும் பழமை வாய்ந்தது; அதனைப் பேசிய நம் முன்னோர் கல்வி, கேள்வி, உழவு, வாணிகம், ஒழுக்கம், வீரம், நாகரிகம் இவற்றில் பலநூறு ஆண்டுகட்கு முன்னரே ஒப்புயர்வற்று விளங்கினர்; ஆடவரும் பெண்டிரும் சிறந்த நிலையில் புலமை பெற்று வாழ்ந்தனர்; இன்னவர் உயர்ந்தவர், இன்னவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் கல்வி கேள்விகளிற் சிறந்திருந்தனர். போர் வீரர்தம் மனைவியரும் மகளிரும் தாய்மாரும் அரண்மனை அந்தப்புரக் காவற் பெண்டிரும் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தனர் எனின், நம் பாட்டிமார் பெற்றிருந்த கல்வி நிலையை என்னென்பது! நம் தமிழ் அரசர் ஆண்பாற் புலவரையும் பெண்பாற் புலவரையும் வேறுபாடின்றி வரவேற்றுத் தக்க மரியாதைகள் செய்து ஆதரித்து வந்தனர். இங்ஙனம் பழந் தமிழ் மக்கள் கல்வி கேள்விகளிற் சிறந்திருந்தமையால், நமதுநாடு, நமதுமொழி என்று நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் சிறக்கப் பெற்றிருந்தனர்; நாட்டுப் பற்று மிகுமாயின் வீரவுணர்ச்சி தானாகவே தோன்றி வளர்ச்சிபெறும். ஆதலின், நம் முன்னோர் கல்வி கேள்விகளில் சிறந்திருந்தாற் போலவே வீரத்திலும் சிறந்திருந்தார்கள்; அதனாற்றான் திரைகடல் ஓடித் திரவியம் தேடினர்; மேனாட்டார் நாகரிக எல்லையைக் காண்பதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே கப்பல்களைக் கடலிற் செலுத்தி அயல் நாடுகளைக் கைப்பற்றினர்; தம் நாடு படையெடுக்கப்பட்டது எனின், தமிழ்ப் பெண்மணி தன் தந்தையைப் போருக்கனுப்புவாள்; அவன் இறப்பின், தன் தமையனை அனுப்புவள்; மற்றொருநாள் தன் உயிரனைய கணவனை அனுப்புவள்; அனைவரும் மடியினும் மனந்தளராது தன் ஒரே மகனையும் போருக்கு அனுப்பி மகிழ்வாள்; இறந்தவர் மீது எழுப்பப்பட்ட வீரக்கற்களைக் கண்டு மகிழ்வாள்; என் குடும்பத்து ஆடவர் நாட்டுக்கு நற்பணி புரிந்தனர் என்று எண்ணி வீறு கொள்வாள். அவள் மனம் மகிழுமே தவிரத்துயர் உறாது. அவள் கண்களிலிருந்து நீர்த் துளிவராது. இத்தகைய வீரப் பெண்மணிகள் வழி வந்த நாம் இன்று எப்படி இருக்கின்றோம்? நமக்கு அழுத்தமான நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் வேண்டுமாயின், வீரத் தமிழர் வரலாற்றை நாம் படித்துப் பயன் பெறல் வேண்டும். அத்தகைய சிறப்பு மிக்க வீரத் தமிழருள் சிலர் வரலாறுகளை இந்நூலிற் படித்துப் பயன் பெறுக. இளஞ்சேட் சென்னி சங்ககால வீரருள் இணையற்ற புகழுடையவன் கரிகாற் சோழன். இவன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்ற வீர அரசன் மரபில் வந்தவன். அச் சென்னி கி. மு. மூன்றாம் நூற்றாண்டினன். அவன் காலத்தில் பிந்துசாரன் வட இந்தியாவில் பேரரசனாக இருந்தான். அவன் விந்தியமலைக்குத் தென்பாற்பட்ட நிலப் பகுதியைக் கைப்பற்ற விரும்பினான்; அதனால் பெரும் படையோடு தெற்கே வந்து தக்கண பீடபூமியில் இருந்த பதினாறு அரசர்களை வென்று, வேங்கடத்திற்கு வடக்கேயுள்ள நாடு முழுவதையும் கவர்ந்து கொண்டான். பின்னர்த் தமிழகத்தையும் கவர்ந்து கொண்டான். பின்னர்த் தமிழகத்தையும் கைப்பற்ற வேண்டும் என்னும் ஆவல் அவனுக்கு உண்டாயிற்று. ஆதனால் அவன் மூன்று படைகளைத்தமிழ் நாட்டின் மீது ஏவினான்; முதலில் வந்தபடை புதிதாக வெல்லப்பட்ட தக்கண படையாகும்; இரண்டாம் படை வங்காளிகளைக் கொண்ட படையாகும்; மூன்றாம் படை மோரிய அரசாங்கப் படை ஆகும். இப்படைகள் மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாகத் தமிழ் அகத்தில் நுழைந்து சிற்றரசர் பலரைத் தாக்கின; பல இடங்களில் வெற்றியும் தோல்வியும் அடைந்தன. முடிவில் இளஞ்சேட் சென்னி என்ற சோழன் அப் படைகளை முற்றிலும் முறியடித்துத் தமிழகத்திற்கு அப்பால் துரத்தியடித்தான். அப் பெரு வீரன் வெற்றி கொள்ளாவிடில் தமிழகம் மோரியர்க்கு அடிமைப்பட்டிருக்கும். பிந்துசாரனுக்குப் பின் வந்த அசோகன் தமிழகம் ஒழிந்த இந்தியா முழுவதையும் அரசாண்டான். அவன் தன் கல் வெட்டுகளில், என் நண்பர்களான சேர-சோழ-பாண்டியர் என்று தமிழரசரை நட்பு முறையிற் குறிப்பிட்டான் என்பதற்கு, அவன் காலத்தில் தமிழரசர் பெற்றிருந்த சுய ஆட்சியே காரணமாகும் அல்லவா? அரியணைக்குப் போராட்டம் இத்தகைய பெருமைக்குக் காரணமாக இருந்த இளஞ் சேட் சென்னி மரபில் வந்த கரிகாலன் இளமை முதலே வீரனாக விளங்கினான்; இவன் உறையூரை ஆண்ட சோழ அரசனுக்குத் தம்பி மகன். அந்த அரசன் இறந்த பின் நாட்டில் குழப்பம் உண்டாயிற்று. கரிகாலன் உறையூரிலிருந்து வெளிப்பட்டுப் பல இடங்களில் அலைந்து திரிந்தான். நாட்டில் இருந்த நல்லறிஞர்அக்கால வழக்கப்படி அரசனைத் தேர்ந்தெடுக்கப்பட்டத்து யானையை ஏவினர். அது பல இடங்களிலும் அலைந்து திரிந்து முடிவில் கருவூரில் இருந்த கரிகாலனைத் தன்மீது வைத்துக்கொண்டு உறையூரை அடைந்தது. அதுகண்ட பெருமக்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து கரிகாலனை அரசன் ஆக்கினர். பங்காளிகள் கரிகாலனை ஒழிக்க வழி தேடினர்; இவனைப் பிடித்துச் சிறைக்கூடத்தில் அடைத்தனர்; அதற்குள்ளேயே இவனைக் கொன்றுவிடத் துணிந்து சிறைக்கூடத்திற்கு எரியூட்டினர். பெருவீரனான கரிகாலன் எவ்வாறோ தப்பி வெளிச்சென்றான்; தன் தாய் மாமனான இரும்பிடர்த் தலையார் என்ற புலவரது உதவி பெற்று, மதிற்புறத்தைக் காவல் செய்து வந்த வாள்படைஞரைப் புறங்கண்டான்; பின்னர்த் தாயத்தாரை ஒழித்து அரியணையைக் கைப்பற்றினான். போர்ச் செயல்கள் தன் நாட்டை விரிவாக்கி ஆளவேண்டும் என்னும் எண்ணம் கரிகாலனுக்கு உண்டாயிற்று. அதனால் இவன் பெரிய போர்கள் பல செய்ய வேண்டிவரும் அல்லவா? அதற்காகப் பெரும்படையைத் தயாரித்தான்; வாட்படை, ஈட்டிப்படை, யானைப்படை, குதிரைப்படைகளைத் தயார் செய்தான். சேர, பாண்டியர்க்கு மேற்பட்ட படைவன்மையைப் பெருக்கிக்கொண்ட பிறகு கரிகாலன் சேர-பாண்டியரைத் தாக்கினான். போர் கடுமையாக நடந்தது. இருதிறத்து வீரரும் வீராவேசம் கொண்டு போரிட்டனர்; வாள்கள் மின்னின; ஈட்டிகள் பாய்ந்தன; வேல்கள் பறந்தன. போர்க்களத்தில் ஒரே குழப்பம் நிலவி இருந்தது. முடிவில் கரிகாலன் வெற்றி பெற்றான்; சேர, பாண்டியரைத் தனக்கு அடங்கி நடக்குமாறு செய்து பன்றி நாட்டிற்குச் சென்றான். பன்றிநாடு என்பது நாகப்பட்டினத்தைச் சுற்றியுள்ள நாடு. அங்கு நாகர் வகுப்பினர் அரசாண்டு வந்தனர். அவர்கள் தலைநகரம் நாகப் பட்டினம் என்பது. கரிகாலன் நாகரை வென்று அவர் தம் பன்றிநாட்டைத் தன் சோழநாட்டுடன் சேர்த்துக்கொண்டான். பின்னர்க் கரிகாலன் மேற்கே சென்று திருவாங்கூர், கொச்சி, குடகு, மலையாள ஜில்லாக்கள் இவற்றை வென்று சேர அரசர் பலரை அடி வணங்கச் செய்து நடு நாட்டை அடைந்தான். நடு நாடு என்பது தென்னாற்காடு ஜில்லாவாகும். அதற்குத் தலைநகரம் திருக்கோவலூர். அதனைத் தலைநகராகக்கொண்டு நடு நாட்டை ஆண்டவர் மலையமான்கள் என்பவர். கரிகாலன் மலையமானைப் போரில் வென்று தனக்கு அடங்கிய அரசன் ஆக்கித் தொண்டை நாட்டை அடைந்தான். தொண்டை நாடு என்பது பாலாற்றுக்கும் வட பெண்ணைக்கும் இடைப்பட்ட நாடு. அந்நாடு மலைகளும் காடுகளும் அடர்ந்த நிலப்பகுதியாகும். அதனில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு குறும்பர் என்பவர் வாழ்ந்துவந்தனர். அவர்கள் அந்நாட்டை இருபத்துநான்கு கோட்டங்களாகப் பிரித்து ஆண்டுவந்தனர். கரிகாலன் அக்குறும் பரைப் போரில் வென்று தொண்டை நாட்டைக்கைப்பற்றினான்; காடுகளை அழித்து மக்கள் பயிரிடுதற்கேற்ற விளைநிலங்களாகச் செய்வித்தான்; நாற்பத்தெண்ணாயிரம் வேளாளரைத் தொண்டை நாட்டிற் குடியேற்றினான்; தொண்டை நாட்டின் தலை நகரமான காஞ்சீபுரத்தை அழகிய நகரமாக்கினான்; அதனைச் சுற்றிலும் பலமான மதிற் சுவர் எழுப்பினான்; ஏகாம்பரேசுவரர் கோவிலைச் சிறப்பித்தான். தொண்டை நாட்டில் இப்பொழுது வாழும் வேளாளர், நாங்கள் கரிகாலனால் குடியேற்றப்பட்ட வேளாளர் மரபினர் என்று கூறுதல் கவனிக்கத்தக்து. இங்ஙனம் கரிகாலன் சேர-பாண்டிய நாடுகளை வென்று அடிப்படுத்தித் தொண்டை நாட்டையும் சோழ நாட்டுடன் சேர்த்த பிறகு வடபெண்ணையாறு வரை சென்று வடுகச் சிற்றரசரையும் வென்றான். இவ்வாறு வென்று பேரரசை ஏற்படுத்தின முதற் சோழன் கரிகாலனே ஆவன். இவன் பிரதிநிதியாக அத் தெலுங்க நாட்டில் இருந்த சோழனுடைய மரபினரே கி. பி. 7-ம் நூற்றாண்டில் கடப்பை, கர்நூல் ஜில்லாக்களை ஆண்ட ரேனாண்டுச் சோழர் என்பவர். இமயத்தில் புலிக்கொடி இவ்வாறு ஏறத்தாழ வடபெண்ணையாறு உள்ள தென்னாட்டைத் தன் அடிப்படுத்திய கரிகாலன் இமயம் வரை சென்று மீள விரும்பினான்; அதனால் பண்பட்ட படையுடன் வடக்கு நோக்கிச் சென்றான். வட இந்திய அரசரை வெல்ல வேண்டும் என்பது அவன் நோக்கம் அன்று; இமயம்வரை சென்று மீள்வதால் தன்னை வட நாட்டரசர் பேரரசன் என்று மதிக்கவேண்டும் என்றோ, அல்லது சைவனான தான் சிவபெருமான் இருக்கும் கயிலையைத் தன் அகத்தே பெற்ற இமயத்தைத்தரிசிக்க வேண்டும் என்றோ எண்ணி இவன் சென்றிருக்கலாம். தமிழ் அரசனைக் கண்ட வட நாட்டரசர் பலர் அவனை வரவேற்று உபசரித்தனர். மகத நாட்டு மன்னன் தன் அடையாள மாகப் பட்டி மண்டபம் கொடுத்தான்; வச்சிர நாட்டு வேந்தன் கொற்றப்பந்தர் அளித்தான்; அவந்தி அரசன் தோரணவாயில் வழங்கினான். கரிகாலன் இமயமலை அடிவாரம் வரை சென்று தன் அரசாங்க முத்திரையாகிய புலிக் குறியை அம்மலைமீது பொறித்து மீண்டான். இச் செயலை நமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் அழகாகப் பாராட்டியுள்ளது படித்து மகிழ்தற் குரியது. இலங்கைப் படையெடுப்பு இங்ஙனம் கி. மு. முதல் நூற்றாண்டின் இறுதியில் பேரரசனாக இருந்த கரிகாலன் இலங்கையைக் கைப்பற்ற எண்ணங்கொண்டான். இலங்கை நீண்ட காலமாகவே தமிழ் நாட்டுடன் வாணிகத் தொடர்பை நெருக்கமாகப் பெற்றிருந்தது. கி. மு. இரண்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் சோழ அரசன் ஒருவன் இலங்கை மீது நாட்டம் சென்றதில் வியப்பில்லை அன்றோ? அதனால் கரிகாலன் பண்பட்ட படை வீரருடன் பல கப்பல்களிற் சென்று இலங்கையில் இறங்கினான். இலங்கை அரசன் தன் உரிமைக்குக் கேடு விளைக்க வந்த சோழனைத் தாக்கப் பெரும் படையுடன் விரைந்தான். பல போர்களில் வெற்றி பெற்றுப்பண்பட்ட சோழ வீரர் இலங்கை வீரரை விரைவில் வெற்றி கொண்டனர். இலங்கை கரிகாலன் ஆட்சிக்கு உட்பட்டது. கரிகாலன் அங்குத் தன்தானைத்தலைவன் ஒருவனைப் பிரதிநிதியாக இருந்து ஆண்டுவரச் செய்து சோணாட்டை அடைந்தான்; இலங்கையிலிருந்து பன்னிரண் டாயிரம் மக்களைச் சோணாட்டிற்குக் கொண்டுவந்தான். இங்ஙனம் வெல்லப்பட்ட நாட்டு மக்களை, வென்றவர் தம் நாட்டுக்கு மாற்றுதல் அரசியல் தந்திரமாகும். கரிகாலன் அம் மக்களைக் காவிரிக்குக் கரை இடப் பயன்படுத்தினான் என்று நூல்கள் நுவல்கின்றன. கரிகாலன் சிறப்பு இப்பெரு வீரன் பெற்ற வெற்றிகளால் தென்இந்தியாவில் நிலைத்த புகழுடம்பு பெற்றான். ïtid¥ g‰¿¢ r§f üšfŸ, fȧf¤J¥ guÂ, _t® cyh., பெரிய புராணம் முதலிய நூல்கள் பாராட்டியுள்ளன. ரேனாண்டுச் சோழர் முதல் கி. பி. 14-ம் நூற்றாண்டு வரை பொத்தப்பி, சித்தூர், நெல்லூர் முதலிய தெலுங்க நாட்டுப் பகுதிகளை ஆண்ட தெலுங்கச் சோடர் (சோழர்) தம்மைக் கரிகாலன் மரபினர் என்று கல்வெட்டு களிலும் பட்டயங்களிலும் கூறிக்கொண்டனர். கன்னட நாட்டுச் சிற்றாசர் பலரும் இவ்வாறே தம்மைக் கூறிப் பெருமை பாரட்டிக்கொண்டனர். கி. பி. 11-ம் நூற்றாண்டில் கோதாவரி யாறுவரை தம் செல்வாக்கைப் பரப்பிப் பேரரசராக விளங்கிய இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் முதலிய வரும் தம்மைப் புகழ் பெற்ற கரிகாலன் மரபினர் என்றே கூறி மகிழ்ந்தனர். இவற்றை நோக்க, இப் பெருமகன் வீரச்செயல்களும் சோழப் பெரு நாட்டை அமைத்த ஆற்றலும் தமிழ் மக்கள் உள்ளத்தில் நன்கு பதிந்து போற்றப்பட்டு வந்தன என்பதும் அவ்வக்காலப் புலவர் இவற்றைத் தத்தம் நூல்களில் குறித்து மகிழ்ந்தனர் என்பதும் அங்கைக் கனி ஆகும். அத்தமிழ் மக்களைப் போலவே இக்காலத் தமிழ் மக்களாகவுள்ள நாமும் இப் பெருமகன் சிறப்பைப் பேசுவோமாக! 2. வீர பத்தினி பத்தினி வரலாறு கண்ணகி என்பவள் சோழநாட்டுப் பெண்மணி. அவள் தந்தை காவிரிப்பூம் பட்டினத்தில் வணிகவேந்தனாக இருந்தவன். கண்ணகிக்குக் கணவனாக அமைந்த கோவலன் அதே நகரத்தைச் சேர்ந்த மற்றொரு வணிக அரசன் மகன். கோவலன் கண்ணகியை மணந்து இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடத்தினான். சிறிதுகாலம் கழிந்தது. காவிரிப்பூம்பட்டினத்தில் நடன அரசியாக விளங்கியவள் மாதவி. அவளது பேரழகிலும் நடனத்திலும் ஈடுபட்ட கோவலன் தன் காதலியைத் துறந்து மாதவியுடன் வாழ்ந்து வந்தான். அவ்வாறு தன் கணவன் தன்னைத் துறந்திருந்த பொழுது கண்ணகி எவ்வாறு இருந்தாள்? அவள் சிறந்த பத்தினி; ஆதலால் தன் கணவனது ஒழுக்கக் கேட்டைத்தன் பெற்றோரிடமோ, அவன் பெற்றோரிடமோ சொல்லி முறையிடவில்லை; தாய்வீடு செல்லவும் இல்லை. அவ்வுத்தமி, தன் கூந்தலைக் கோதி முடிக்கவில்லை; நல்ல ஆடைகளை உடுத்துக் களிக்கவில்லை. அவளது மாசற்ற மேனிமாசுற்றுக் கிடக்கத் தன் கணவனது இல்லத்தில் தனி வாழ்க்கை நடத்தி வந்தாள்; தன் பெற்றோர் வரினும் கோவலன் பெற்றோர் வரினும் தன் முகத்தில் வலிந்து புன்னகையை வருவித்துக்கொண்டு உரையாடுவாள். அவளது உயரிய கற்பு நிலையைக் கண்ட அப்பெற்றோர் தமக்குள் வியந்து பாராட்டி, தனியே மனம் வருந்திச் செல்வர். ஒருநாள் ஊழ்வினை வசத்தால் கோவலன், மாதவி பாடிய பாடலைத் தவறாகக் கருதி அவளைத் துறந்து மனைவியிடம் வந்தான். வந்த அவனை அம் மங்கை நல்லாள் இன்முகத்துடன் வரவேற்றாள். அவளது கற்பின் திறத்தை நன்குணர்ந்து தன் செயலுக்கு நாணம் கொண்ட கோவலன், நான் செய்தது தவறு. என் செல்வம் தொலைந்தது, என்றான். உடனே கண்ணகி மாதவிக்குத் தரத் தன்னிடம் பொருள் இல்லை என்று வருந்தினனோ என்று கருதி, என் காற்சிலம்புகள் இரண்டு உள. அவற்றைக் கொள்க என்று மலர்முகத்துடன் உரைத்தாள். கோவலன் அவளது தூய உள்ளத்தைக் கண்டு வியந்து, நான் மதுரைக்குச் சென்று ஒரு சிலம்பை விற்று வரும் பணத்தை முதலாகக் கொண்டு வாணிகம் செய்வேன் என்றான். கண்ணகி அந்த யோசனையை வரவேற்று நானும் உம்முடன் வருவேன் என்றாள். கோவலன் அதற்கு உடன்பட, இருவரும் அன்று விடியற்காலத்தில் எவர் கண்ணிலும் படாமல் மதுரையை நோக்கி நடந்து சென்றனர். வழியில் சமணப் பெண்துறவியார் உதவி பெற்றுப் பலநாள் வழி நடந்து பீடுமிக்க மாடமதுரையை அடைந்தனர். கோவலன் கண்ணகியை ஆயர் மகள் ஒருத்தி வீட்டில் அடைக்கலமாக விட்டுச் சென்று பாண்டியன் மாநகரத்தைப் பார்வையிட்டான்; மறுநாள் உணவுண்டு கண்ணகியிடம் பிரியாவிடை பெற்று, அவளது ஒருகாற் சிலம்புடன் கடைத் தெருவிற்குச் சென்றான். அப்பொழுது பாண்டியனது, அரண்மனைப் பொற்கொல்லன் தன் பணியாட்கள் பின்னேவரப் பெருமிதத் துடன் நடந்துவந்தான். அவனைக் கண்ட கோவலன், தன் கையிலிருந்த சிலம்பை அவனுக்குக் காட்டினான். விலைமதிப்பற்ற சிலம்பினைக் கண்டதும் பொற்கொல்லன் விழித்தகண் இமையாது அதனைப் பார்த்தான்; பிறகு, ஐய, இஃது அரசமாதேவியர்க்கே ஏற்ற சிலம்பு. இதனை யான் அரசர்க்கு உணர்த்தி வருமளவும் இங்கிருக்க என்று ஓர் இடத்தில் இருக்கச் செய்து, அரண்மனையை நோக்கி விரைந்தான். அவன் தனக்குள், நான் அரசியின் சிலம்பொன்றைக் கவர்ந்துகொண்டேன். அது என்னிடம் உள்ளது என்பது வெளிப்படு முன் இச்சிலம்பினைக் காட்டி இவனைக்கள்வன் என்று கூறித் தண்டிக்கச் செய்யின், நான் தப்பலாம் என்று கூறிக் கொண்டே சென்றான். அப்பொழுது அரசன் அவசரமாக அந்தப்புரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தான். பொற்கொல்லன் இடையிட்டு வணங்கி, அரசே, நமது அரசியாரது காணாமற்போன சிலம்பு அகப்பட்டுவிட்டது. அதனைத் திருடியவன் நமது நகரத்திலேயே அதனை விற்க வந்திருக்கிறான் என்றான். ஊழ்வினை வசத்தால் அறிவு மயங்கிய மன்னவன் கொலையாளிகளை அழைத்து, இவன் காட்டும் கள்வன் கையில் சிலம்பு இருக்குமாயின் அவனைக் கொன்று அச்சிலம்பை நம்மிடம் கொண்டு வருக என்று ஆணையிட்டான். கொலையாளிகள் பொற்கொல்லனுடன் சென்று கோவலன் இருந்த இடத்தை அடைந்தனர். கோவலனுடைய மாசற்ற முகத்தையும் அவனது கோலத்தையும் கண்டு இவன் கள்வன் அல்லன் என்றனர். வஞ்சகப் பொற்கொல்லன் நெஞ்சில் ஈரமின்றிக் களவு நூலைப்பற்றியும் கள்வர் திறமைகளைப் பற்றியும் நீண்ட சொற் பொழிவாற்றி அவர்கள் மனத்தை மயங்கச் செய்தான். அதிகம் கூறுவானேன்? ஊழ்வினை உறுப்ப, அந்தோ! குற்றமற்ற கோவலன் கொல்லப்பட்டான். பத்தினி கொலைச் செய்தி அறிதல் கோவலன் கொலையுண்டது பற்றிக் கண்ணகி இருந்த ஆயர்பாடியில் அபசகுனங்கள் காணப்பட்டன. குடத்துப் பால், மோர் விட்டும் உறையாதிருந்தது; எருது கண்ணீர் உகுத்து நின்றது; உறி வெண்ணெய் உருகி மெலிந்தது; பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணிகள் இற்று நிலத்தில் விழுந்தன. இந்தக் கேடுகளைக் கண்ட ஆயர் மகளிர், இவை விரைந்து வருவதோர் துன்பத்தை உணர்த்தும் அறிகுறிகள். ஆதலின் நமது வழிபடு கடவுளாகிய கண்ணனைப் பாடி ஆடிப் பரவுவோம் என்று முடிவு செய்தனர்; உடனே மாயவன் நப்பின்னைப் பிராட்டியுடன் ஆடிய குரவைக் கூத்து ஆடத் தொடங்கினர். குரவை என்பது எழுவர் அல்லது ஒன்பதின்மர்கைகோத்து ஆடும். கூத்து. ஆயர் மகளிர் அக்கூத்தினை ஆடிக்கொண்டே கண்ணபிரான் வீரச் செயல்களையும் பிற நல்ல இயல்புகளையும் அப்பெருமான் எடுத்த பிற அவதாரங்களையும் பாராட்டிப் பாடினர். அப்பொழுது ஆயர் முதுமகள் ஒருத்தி அங்கு வந்தாள். அவள் மதுரையில் நடந்த கொடுஞ் செயல் ஒன்றைக் கேட்டு, அதனை ஆயர்பாடியிற் கூற விரைந்து வந்தாள். அவள் கண்ணகியைக் கண்டதும் திடுக்கிட்டு அச் செய்தியைக் கூறவில்லை; குரவையாடி நின்ற மகளிரிடம் அச்செய்தியை அறிவித்துக் கண்ணகியைப் பார்த்துக் கண்ணீர்விட்டு நின்றாள். அந்த நிலையில், குரவைக் கூத்தைக் கவனித்து நின்ற கண்ணகி தான் தங்கியிருந்த ஆயர்வீட்டு மகளைப்பார்த்து, தோழி, என் காதலர் இன்னும் வரவில்லையே! என் நெஞ்சம் கலங்குகின்றது. என் உடல் நடுங்குகின்றது. எனது மூச்சுத்தீயுடன் கூடியதாக இருக்கிறது. என்னை நோக்கி அந்த ஆயர்மகளிர் என்னவோ பேசிக்கொள்கின்றனர். அவர்கள் என்ன பேசுகிறார்களோ தெரியவில்லையே! அவர் சென்றபொழுதே என் நெஞ்சம் கலங்கியது. ஐயோ! அவர்க்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லையே! என்று நெருப்பிற்பட்ட புழுப்போலத் துடிதுடித்தாள். அவள் உள்ளம் பலவாறு எண்ணமிட்டது. பாவம்! தன் கணவனை நம்பி, அவனுடன் புதிய ஊரில் பிழைக்கலாம் என்று கால்கடுக்கப் பலநாள் நடந்துவந்த நங்கையாகிய கண்ணகி உற்றார் உறவினர் அற்ற புதிய ஊரில் என்ன செய்வாள்! அவள் மனம் பட்டபாட்டை யாரே எடுத்துரைக்க வல்லார்! இங்ஙனம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிப் புண்பட்ட மனத்துடன் பொருமிக் கொண்டிருந்த கண்ணகி காதில் விழும்படி, முன்சொன்ன ஆயர் முதுமகள், இவள் கணவன், பாண்டியன் அரண்மனையில் இருந்த சிலம்பைத் திருடிய கள்வன் என்று கருதப்பட்டுக் கொலை செய்யப்பட்டான் என்னும் துன்பச் செய்தியைக் கேள்விப் பட்டேன் என்று மிகுந்த வருத்தத்துடன் வாய்விட்டுக் கூறினாள். பத்தினி புலம்பல் முதுமகள் கூறிய துயரச் செய்தியைக் கேட்ட கண்ணகி பொங்கி எழுந்தாள்; தன்னை மறந்தாள்; நிலத்தின் மீது மயங்கி விழுந்தாள். கார்முகில் போன்ற அவள் கூந்தல் காற்றில் அசைந்தாடித் தரையிற் புரண்டது. வீழ்ந்த கண்ணகி மயக்கம் தெளிந்து எழுந்தாள். அவள் விழிகள் சிவந்தன. அவள் தன் கண்கள் கலங்கும்படி கைகளால் மோதிக்கொண்டு அழுதாள். அப்பத்தினி, ஐயனே, என் உள்ளம் கவர்ந்த உத்தமனே, நீ எங்கு இருக்கின்றனை! என்று வாய்விட்டு அழுதாள்; பாண்டிய மன்னன் செய்த தவற்றால் நான் என் கணவனை இழந்தேனே! அந்தோ! அவன் இறந்தான் என்பது கேட்டும் யான் இன்னும் உயிர் தாங்கி இருக்கின்றேனே! அறக்கடவுளே, நீ உலகத்தில் இருப்பது மெய்யா? இந்த அநீதியைப் பார்த்துக்கொண்டா இருக்கின்றனை? கள்வன் அல்லாத என் கணவனைக் கள்வன் என்று கருதிக் கொலை செய்வித்த பாண்டியனான காவலன் குடிகட்கு அமைந்த உண்மைக் காவலனே? என்று பலவாறு கூறிப் புலம்பினாள். பிறகு அப்பத்தினி கதிரவனைப் பார்த்து, காய் கதிர்ச்செல்வனே, நீ அறிய என் கணவன் கள்வனோ? என்று அழுதாள். அப்பொழுது, பத்தினியே, உன் கணவன் கள்வனோ? என்று அழுதாள். அப்பொழுது, பத்தினியே, உன் கணவன் கள்வன் அல்லன். குற்றமற்ற அவனைக் கள்வன் என்று கொலை செயவித்த இவ்வூரை விரைவில் எரி உண்ணும் என்று ஒரு குரல் கேட்டது. கண்ணகியைச் சூழ இருந்தோர் அனைவரும் அது கேட்டுத் திடுக்கிட்டனர். பின்னர் பத்தினியாகிய கண்ணகி தலைவிரி கோலமாகப் புலம்பிக்கொண்டே மதுரை நகரத்திற்குட் புகுந்தாள்; தன் ஒற்றைச் சிலம்பைக் கையில் பற்றிக்கொண்டு தெருத்தெருவாக அழுதுகொண்டு சென்றாள். அவள், மதுரை மாநகரத்துப் பத்தினிகளே, என் கணவன் என் காற்சிலம்பு ஒன்றைவிற்க இந்த நகரத்துக்கு வந்தான். மதிகெட்ட மன்னன் அவனைக் கள்வன் என்று கருதிக் கொலை செய்வித்தான். இது நீதியாகுமா? நீங்களே சொல்லுங்கள் என்று அரற்றினாள். மதுரை நகரப் பத்தினிப் பெண்கள் அவள் பரிதாப நிலையைப் பார்த்து அழுதனர்; ஆடவரும் கண்ணீர்விட்டனர்; கலங்காத உள்ளம் படைத்த காளையரும் மனம் கலங்கி மாழ்கினர். இங்ஙனம் மன்னன் தவற்றை மாநகரத் தார்க்கு அறிவித்த கண்ணகி இறுதியில் தன் தலைவன் கொல்லப்பட்ட இடத்தை அடைந்தாள்; அவனது ஆவியற்ற உடலைக் கண்டு வேடன் விட்ட அம்பு மார்பில் தைக்கப்பெற்ற மான்போலப் பதைபதைத்து வீழ்ந்தாள்; அவனது உடலைத் தழுவி அழுதாள்; அக்கோரக் காட்சியைக் கண்ட அங்கிருந்த மக்களும் கண்ணீர் விட்டுக் கதறினர். அத்துன்பநிலையைக் காணப்பொறாது மறைபவன் போலச் சூரியனும் மேல்கடலுள் மறைந்தான். உடனே இருள் சூழத் தலைப்பட்டது. வீர பத்தினி இருள் சூழ்ந்தவுடன் கண்ணகி கொலைக்களத்தை விட்டுப் புறப்பட்டாள். அவள் தன்னை இக்கதிக்குக் கொண்டுவந்த பாண்டியனைக் கண்டு அவன் செய்த மாபாதகத்தை விளக்கித் தன் ஆத்திரத்தைத் தணிக்க விரும்பி அரண்மனை நோக்கி நடந்தாள். அப்பொழுது, தன் கணவனுக்குக் கேடு நிகழத்தக்க அறிகுறியாகத் தீக்கனாக் கண்ட அரசமாதேவி, பாண்டியனை அடைந்து தான் கண்ட கனவினைக் கூறத் தொடங்கினாள். அவ்வமயம் அரண்மனை வாயிற் காவலன் உதடு துடிக்க உடல் நடுங்கப் பாண்டியனிடம் ஓடி வந்து, பெருமானே, ஒற்றைச் சிலம்பைக் கையில் பிடித்தவளும் கணவனை இழந்தவளும் ஆகிய ஒருத்தி உம்மைக்காண வந்திருக்கிறாள் என்றான். உடனே பாண்டியன், அவளை உடனே வரவிடு என்றான். கண்ணீர் தாரை தாரையாக ஒழுகச் சோகமுகத்துடன் இளங்கொடி போன்ற கண்ணகி காவலன் முன் நின்றாள். அரசன் அவளை நோக்கி, அம்மே நீ யார்? நீ வந்த காரணம் யாது? என்றான். அது கேட்ட பத்தினி தன்னை மறந்தாள்; ஆராய்ச்சி அறிவற்ற அரசனே, ஒரு புறவினுக்காகத் தன் உடம்பைத் தியாகம். செய்த சிபியும், ஒரு பசுக் கன்றுக்காகத் தன் ஒப்பற்ற மகனைத் தேர்க்காலில் கொன்ற மநுச் சோழனும் ஆண்ட புகார் நகரம் எனது பதி. நான், அப்பதியில் புகழ் பெற்ற வணிகனான மாசாத்துவான் மகனாக விளங்கி இன்று உன்னால் கொல்லப்பட்ட கோவலன் என்பவனுக்கு மனைவி. என் பெயர் கண்ணகி என்றாள். மன்னவன், மங்கை மனக்கொதிப்போடு உரைத்ததை மனமுருகக் கேட்டு, அம்மையே, கள்வனைக் கொல்வது கடுங்கோல் ஆகாதே! என்றான். உடனே பத்தினி, அரச, என் கணவன் கள்வன் அல்லன். அவன் என் காற் சிலம்பு ஒன்றை விற்க இன்று வந்தான். இதோ இருக்கிறது மற்றேரு சிலம்பு. எனது சிலம்பு மாணிக்கப்பரலை உடையது. உண்மை ஆராயாது நீ அவனைக் கொன்று என் வாழ்வைக் கெடுத்தாய் என்று ஆவேசமாகப் பேசினாள். அரசன் திடுக்கிட்டான்; உன் சிலம்பை உடைத்துக் காட்டுக என்றான். கண்ணகி தன் சிலம்பைப் படீரெனத் தரைமீது அறைந்தாள். அதிலிருந்து மாணிக்கப் பரல்கள் வெளிப்பட்டன. அவற்றுள் ஒன்று மன்னவன் வாயை அடைப்பது போல அவன் வாயில் தெறித்தது. வேந்தன் உடனே உண்மையை உணர்ந்தான்; அவன் உடலும் உயிரும் நடுங்கின; பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் குற்றமற்ற இளைஞனைக் கொலை செய்த நானே கள்வன். என் முன்னோர் புகழ் என்னால் அழிந்தது; என் ஆயுள் கெடுக! என்று கூறிக்கொண்டே மயங்கி வீழ்ந்தான். அவனது கோப்பெருந்தேவியும் குலைகுலைந்து கண்ணீர் விட்டுக் கணவன் பக்கத்தில் வீழ்ந்தாள். அவ்வளவே: இருவரும் பிணமாயினர். கண்ணகி அரண்மனையை விட்டு வெளிப்பட்டாள். அவள் உரத்த குரலில், மதுரை மாநகரப் பத்தினிகளே, தெய்வங்களே, சான்றோர்களே, நான் பத்தினி என்பது உண்மையாயின், என் கணவனைக் கொலைசெய்த இம்மாநகரை அழிப்பேன் என்று கூறித் தன் இடப்புற மார்பைத்திருகி, நகரத்தை மும்முறை வலம் வந்து எறிந்தாள். உடனே மதுரை தீப்பற்றிக்கொண்டது. பெருந் தீ பரவி நகரை நாசமாக்கியது. வீரபத்தினி ஆவேசம் கொண்டவளாய்த் தெருக்களில் அலைந்தாள். அப்பொழுது மதுரையின் அதிதேவதை பெண்ருத் தாங்கி வீரபத்தினியைச் சந்தித்து, அம்மையே, நின் சினம் தணிக. பெரியோர் சாபப்படி இன்று உன்னால் மதுரை அழிக்கப்பட்டது. நின் கணவன் முற்பிறப்பில் செய்த தவற்றுக்குத் தண்டனையாக இப்பிறப்பில் கொல்லப்பட்டான். நீ இன்றைய பதினான்காம் நாள் உன் கணவனைக் கண்டு விண்ணகம் புகுவாய் எனக் கூறி மறைந்தது. கண்ணகி விண்ணகம் அடைதல் மதுராபதி என்ற அத்தெய்வம் கூறியவற்றைக்கேட்ட கண்ணகி பெருமூச்சுவிட்டாள்; என் காதலனைக் காணாத வரை என்மனம் அமைதி அடையாது என்று கூறி, நகரத்தின் மேற்கு வாயிலை அடைந்தாள்; அங்கு இருந்த துர்க்கையின் கோவிலில், நான் கிழக்கு வாசலில் என் கணவனுடன் வந்தேன். இன்று மேற்கு வாசலில் தனியே செல்கின்றேன் என்று மனமுடைந்து கூறினாள்; தன் வளையல்களை அங்கு உடைத்தெறிந்தாள்; பின்னர் இரவு, பகல் என்பதை அறியாது வைகைக் கரைவழியே மேற்கு நோக்கிச் சென்றாள்; சேர நாட்டை அடைந்தாள்; பதினான்காம் நாள் ஒரு மலைமீது வேங்கை மரத்தடியில் நின்றாள். அப்பொழுது விண்ணிலிருந்து விமானம் ஒன்று வந்தது. அதில் கோவலன் இருந்தான். கவலையுற்ற கண்ணகி கவலை நீங்கி அவனுடன் விண்ணகம் புகுந்தாள். கண்ணகி வீரம் இந்த உருக்கமான வரலாற்றில் கண்ணகியின் வீரமே நாம் கவனிக்கத் தக்கது. வீட்டு வாயிற்படி கடவாத நிலையில் இருந்த பத்தினி, தன் கணவன் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டான். என்பதை அறிந்ததும் வீரவுணர்ச்சி கொண்டாள்; முன்னர்த் தான் அறியாத மாநகரிற் புகுந்தாள்; மாநகரத்தார்க்குத் தன் குறையையும் பாண்டியன் தவற்றையும் விளக்கினாள்; அத்துடன் நின்றனளா? பாண்டியனையே நேரிற்கண்டு வழக்குரைத்தாள்; அவன் செய்தது அநியாயம், மாபாதகம் என்பதைத் தெளிவாக மெய்ப்பித்தாள்; தன் கணவன் பெயர்-மாமனார் பெயர் கூற அஞ்சும் பேய்ப் பெண்களைப் போலன்றி அஞ்சாது, தேவைப் பட்ட பொழுது அவற்றைக் கூறித் தன்னைத் தெரிவித்தாள். தான் செய்தது பெரும்பாதகச் செயல் என்பதை உணர்ந்து பாண்டியனை இறக்கச் செய்த அப் பத்தினியின் வீரத்தை-மதுரையை அழித்த அவளது தெய்வக் கற்பினை என்னெனப் புகழ்வது! வீர பத்தினியின் நினைவு நம் தமிழ் நாட்டுப் பெண்மணிகள் உள்ளத்தில் நிலைத்து நின்று வீரவுணர்ச்சியை ஊட்டுமாக. 3. சேரன்-செங்குட்டுவன் வடநாட்டு யாத்திரை I. செங்குட்டுவன் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரரசன். இவன் பட்டம்பெற்ற பொழுது வயது இருபது. இவனுக்கு இளங்கோ அடிகள் என்ற இளவல் இருந்தார். அவர் துறவு பூண்டு, சேரர் தலைநகரமான வஞ்சி மா நகரிலேயே இருந்து, தமிழ் ஆராய்ச்சியிலும் சமய ஆராய்ச்சியிலும் தமது பொழுதைக் கழித்தார். செங்குட்டுவன் தந்தையான இமய வரம்பன்-நெடுஞ்சேரலாதன் இறந்தபொழுது; அக்கால வழக்கப்படி, அவன் மனைவியும் செங்குட்டுவன் தாயுமான நற்சோணை என்ற சோழர்மகள் உடன் கட்டை ஏறினாள். செங்குட்டுவன் தன் தாயின் நினைவாகக் கல் நட்டுக் கோயில் எடுக்க எண்ணினான். அவளது உருவத்தைச் செதுக்குதற் கேற்ற கல்லைப் பொதியமலை அல்லது இமயமலையிலிருந்து கொண்டுவரலாம் என்று சிற்பிகள் கூறினர். வீர இளைஞனான செங்குட்டுவன், நமது நாட்டு மலையாகிய பொதியத்திலிருந்து கல் கொண்டுவருவதலில் சிறப்பென்னை? பல நாடுகளைக் கடந்து, எதிர்த்தாரை வென்று, இமயத்திலிருந்து கல் கொணர்தலே வீரம் என்று விளம்பித் தன் பண்பட்ட படையுடன் வடநாட்டு யாத்திரை செய்தான். செங்குட்டுவனது யாத்திரை நோக்கத்தை அறியாத வடநாட்டு அரசர், அவன் தம்மீது படையெடுத்து வருவதாக எண்ணினர்; அதனால் பல இடங்களில் தனித்தனியே தாக்கினர். வீர இளைஞனான செங்குட்டுவன் மட்டற்ற மகிழ்ச்சிகொண்டு அங்கங்குப் போர் நடத்தி வாகை புனைந்தான். வட அரசர் தமிழர் வீரத்திற் சிறந்தவர் என்பதை அறிந்தோம் என்று கூறி அகன்றனர். வெற்றி வீரனாக இமயம்வரை சென்ற செங்குட்டுவன் தன் தாயின் உருவம் அமைத்தற்குரிய கல்லைச் சிற்பிகளைக்கொண்டு தேர்ந்தெடுத்தான்; அதனைக் கங்கையாற்றில் தூய்மை செய்வித்துத் தன் நாடு மீண்டான். அவன் கட்டளைப்படி கை தேர்ந்த சிற்பிகள் அக்கல்லில் நற்சோணையின் திருவுருவத்தைச் செதுக்கினர். அவ்வுருவத்தின் கீழ் அவள் பெயரும் சிறப்புகளும் பொறிக்கப்பட்டன. நல்ல நாளில் அக்கல் நல்ல இடத்தில் நடப்பட்டது. பிறகு அங்குக் கோவில் கட்டப்பட்டது. செங்குட்டுவன் நற்சோணை அம்மன் கோவிலுக்கு வேண்டிய நிலங்களைத் தானமாக அளித்தான். அன்றுமுதல் நற்சோணை அம்மன் சேரர் குலதெய்வம் ஆனாள். செங்குட்டுவன் போர்ச் செயல்கள் புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா? பெரு வீரனான நெடுஞ் சேரலாதனுக்குப் பிறந்த செங்குட்டுவன் இருபது வயதில் வடநாடு சென்று, தன்னை எதிர்த்தாரை வென்று தன் எண்ணத்தை நிறை வேற்றிக்கொண்டு மீண்டான் என்பதை முன்னர்க்கண்டோம். அவன் அத்துடன் நிற்கவில்லை. அவன், கரிகாற்சோழனைப் போலத் தன் காலத்தில் இணையற்ற வீரனாகவும் பேரரசனாகவும் இலங்கினான். செங்குட்டுவன் மாமனான மணக்கிள்ளி மகன் இறந்தவுடன் அவன் மகனான நெடுமுடிக்கிள்ளி என்பவன் அரியணை ஏற முயன்றான், ஆயின், அவன் பட்டம் பெறலாகாதென்று அவன் தாயத்தார் கூறி நாட்டில் கலகம் விளைவித்தனர். சோழநாடு அரசன் இன்றிச் சில மாதங்கள் அல்லல் உற்றது. தன் மைத்துனச் சோழன் பட்டம் பெற முடியாது தவிக்கிறான் என்பதைச் செங்குட்டுவன் கேள்வியுற்றான்; உடனே பெரும் படையுடன் சோழ நாட்டை அடைந்தான்; தன் மைத்துனச் சோழற்கு மாறாகக் கலகம் விளைவித்த அரச மரபினர் ஒன்பதின்மரை நேரிவாயில் என்ற இடத்தில் போரிட்டு வென்றான்; நெடுமுடிக் கிள்ளியைச் சோழ வேந்தனாக அரியணை ஏற்றினான்; சோழ நாடு அமைதி பெறும்வரை அங்குத் தங்கி இருந்து பிறகு வஞ்சிமாநகருக்குத் திரும்பினான். இங்ஙனம் செங்குட்டுவனிடம் தோற்றோடின சோழ மரபினர் செங்குட்டுவன்மீது பழிதீர்த்துக் கொள்ளப் பாண்டியன் உதவியை நாடினர். மதி கெட்ட பாண்டியன் அவர்களுடன் சேர்ந்து பெரிய படையுடன் கொங்கு நாட்டு வழியே சேரநாட்டைத் தாக்கச் சென்றான். இதனை உணர்ந்த செங்குட்டுவன், போர் என்ற சொல் கேட்டவுடன் மகிழ்ச்சி யால் துள்ளிக் குதிக்கம் இயல்புடைய தன் பெருவீரர்களுடன் கொங்குநாட்டுக்கு விரைந்தான். இருதிறத்தார்க்கும் கொங்கர் செங்களம் என்ற இடத்தில் கடும்போர் நடைபெற்றது. சேரன் யானைக் கூட்டத்துள் பாயும் சிங்கம் போலப் பாய்ந்து பகைவரைச் சின்ன பின்னப்படுத்தினான். பகைவர் கதிரவனைக் கண்ட பனிபோல் மறைந்தனர். சோழ-பாண்டியர் அன்றுமுதல் செங்குட்டுவன் ஆட்சி முடிய அமைதியாக அடங்கிக் கிடந்தனர். மேற்குக் கடற்கரையில் மங்களூர்க் கரை ஓரமாகக் கடம்பர் என்ற மரபினர் இருந்தனர். அவர்கள் படகுகளை வைத்துக்கொண்டு கடலோரமாக வந்த வாணிகக் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளையிட்டு வந்தனர். அதனால் சேரநாட்டுக் கடல் வாணிகம் குன்றத் தொடங்கியது. இதனை அறிந்த செங்குட்டுவன் தன் கப்பற் படையைச் செலுத்தி அக் கடற்கடம்பரைப் பல இடங்களில் மடக்கிப் போரிட்டு அழித்தான். இவ்வீரச்செயலால் அவனது ஆட்சிக் காலத்தால் கடற்கொள்ளைக் கூட்டத்தார் துன்பம் இல்லாதிருந்தது. வீரபத்தினி வரலாறு உணர்தல் ஒருநாள் செங்குட்டுவன் மலைவளம் காணச்சென்றான். அவனுடன் அரசமாதேவியான இளங்கோ வேண்மாள், இளங்கோ அடிகள், அமைச்சன், சேனைத்தலைவன், வீரர்சிலர் சென்றனர். யாவரும் வஞ்சி மாநகர்க்கு அருகில் இருந்த மலைகட்கிடையே அமைந்த பள்ளத்தாக்கில் தங்கி இயற்கை இன்பத்தை நுகர்ந்தனர். அப்பொழுது மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்ற புலவர் அங்கு வந்தார். அவர் அவர்கட்கு நெருங்கிய நண்பர். யாவரும் அவரை வரவேற்றுப் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வமயம் அப்பக்கத்து மலைவாழ் மக்கள் தேன் முதலிய மலைப் பொருள்களுடன் வந்து அரசனைப் பணிந்துநின்றனர். அவர்கள் அன்பிற்கு மகிழ்ந்த அரசன் அவர்களுடன் அளவளாவி, உங்கள் மலைநாட்டில் விசேடம் ஏதேனும் உண்டோ? என்று கேட்டான். அவர்கள், பெருமானே, உண்டு. சிலநாட்களுக்கு முன் ஓர் இளமங்கை-கணவனை இழந்தவள் - பேரழகி - இம் மலைச் சாரலில் வேங்கை மரத்தடியில் வந்து நின்றாள். அப்பொழுது வான்வழியே விமானம் ஒன்று வந்து அவளை ஏற்றிக்கொண்டு சென்றது. இந்த அற்புதக் காட்சியை நாங்கள் மறக்கக் கூடவில்லை என்றனர். அவ்வற்புதச் செய்தி கேட்ட அனைவரும் ஒன்றும் புரியாது விழித்தனர். அப்பொழுது சாத்தனார் யான் அவள் வரலாறு அறிவேன் என்று கூறி, கண்ணகி வரலாற்றைத் தாம் மதுரையில் கேள்வியுற்றபடியும் பிறகு தாமே நேரில் கண்டதையும் விளக்கமாக வுரைத்தார். இளங்கோவேண்மாள், பாண்டியன் இறந்தவுடன் அவனுடன் உயிர்நீத்த அரசமாதேவி பத்தினியே. ஆயின், நம் நாடு அடைந்து விண்ணகம் புகுந்த இப்பத்தினி நம்மால் தொழத் தக்கவள் என்றாள். யாவரும் அதற்கு உடன்பட்டனர். வீரவுரை செங்குட்டுவன், கண்ணகி அம்மனுக்குக் கல் கொண்டுவர இமயம் செல்வோம். முப்பது ஆண்டுகட்குமுன் என் தாயார் பொருட்டு இமயம் சென்றதைப்பற்றிக் கோசல நாட்டு அரசரான கனகவிசயர் என்பவர், நாம் இல்லாத காலத்தில் சேரன் இங்குவந்து தன் வீரத்தைக் காட்டிச் சென்றனாம். நாம் இருக்கின்ற இப்பொழுது அவன் வந்து செல்லட்டும், பார்ப்போம் என்றனராம். மேலும் அவர்கள், தமிழர் வீரத்தையும் ஆற்றலையும் இழித்துப் பேசினராம். அத்தகைய அறிவீனர்க்கு அறிவு கொளுத்துதல், சுத்தவீரர்கடமை அன்றோ? ஆதலின், கண்ணகி அம்மனுக்குக் கல் எடுக்கச் செல்லும் முயற்சியில் தமிழர் வீரத்தை வடவர்அறியச் செய்து மீள்வோம். நமது மாநகரத்தில் நமது வடநாட்டு யாத்திரையைப் பறை யறைந்து அறிவிக்கவும். நமது படைகளைப் பிரயாணத்திற்குத் தயாரிக்கவும் என்று அமைச்சர்க்கும் சேனைத் தலைவர்க்கும் கட்டளையிட்டான். வடநாட்டு யாத்திரை பெரு வீரனாகிய செங்குட்டுவன், குறித்த நல்ல நாளில் நல்ல நேரத்தில் வடநாடு நோக்கிப் புறப்பட்டான். அவன் சிறந்த சிவபத்தன்; சிவனருளாற் பிறந்தவன்; அதனால் சிவபிரனை வணங்கிப் புறப்பட்டான், எங்கள் மன்னர் பெருமான் வெற்றி பெற்று மீள்வானக என்று மாநகரத்தார் வாழ்த்தி வழி அனுப்பினர். சேரன் தன் படைசூழ வடக்கு நோக்கிப் புறப்பட்டான்; சில நாட்கள் கழிந்து நீலகிரியில் தங்கி இளைப்பாறினான். அங்குப் பல நாட்டரசர் பல பொருள்களை அனுப்பி அவனுக்கு மரியாதை செய்தனர். வடபெண்ணையாறு முதல் கங்கை வரை பேரரசு செலுத்திய நூற்றுவர் கன்னர் (சாதவாஹனர் என்ற சதகர்ணிகள்) அரசியல் தூதரை அனுப்பிச் செங்குட்டுவனுக்கு என்ன வசதிகள் செய்துதரவேண்டும் என்று கேட்டனர். கங்கையாற்றைக் கடத்தற்குப் படகுகளைத் தயார் செய்து வைக்குமாறு சேரன் கூறினான். நூற்றுவர் கன்னர் அவ்வாறே படகுகளைத் தயார் செய்து வைத்தனர். பேரரசரான நூற்றுவர் கன்னர் செங்குட்டுவனது நட்பைத் தங்கட்குச் சிறந்ததாக மதித்தனர் எனின், நம் தமிழ் வேந்தனது பெரு வீரத்தையும் அரசியல் அறிவையும் என்னென்பது! கனகவிசயர் செங்குட்டுவன் கங்கையின் வடகரையை அடைந்து உத்தரகோசலம் சென்று தன் படைகளுடன் தங்கினான். உத்தரகோசலத்திற்றான் தமிழர் ஆற்றலை இழித்துரைத்த கனக-விசயர் இருந்தனர். அவர்கள் சிற்றரசர் பலரையும் பெருஞ் சேனையையும் திரட்டிக்கொண்டு போருக்குத் தயாராக இருந்தனர். செங்குட்டுவன் தங்கள் நாட்டை அடைந்தான் என்றவுடன் அவனை நாற்புறமும் சூழ்ந்துதாக்கினர். தமிழன் வீரம் கனக-விசயர் செருக்கை அடக்கித் தமிழர் வீரத்தை வட நாடு அறியச் செய்ய வேண்டும் என்று தயாராகக் காத்திருந்த செங்குட்டுவன் அவர்கள் தாமே வந்து தாக்கியதைக் கண்டு மகிழ்ந்தான்; தானாக வரும் போரை வரவேற்பது சுத்த வீரன் கடமை அன்றோ? இரு திறத்துப் படைகளும் கைகலந்தன. சேரவீரர் தம் தமிழ் ஆற்றல் விளங்க வீராவேசம் கொண்டு போரிட்டனர். பல போர்களில் வெற்றி ஒன்றையே தரிசித்த அவ்வீரர்கள் வடநாட்டாரை வெற்றி காண வேண்டும் என்னும் வேட்கையால் மொய்யமர் விளைத்தனர். புவிக்கூட்டத்து நடுவில் சிங்க ஏறு பாய்வது போலச் செங்குட்டுவன் பகைவர் கூட்டத்துட் பாய்ந்தான். அவன் வீரவாள் தன் வேலையை விரைந்து செய்தது. அரசனே முன் பாய்ந்து வேலை செய்வதைக் கண்ட சேர வீரர் முன்னேறிப் போர் விளைத்தனர். போர் பதினெட்டு நாழிகை நடந்தது. சேரர் பெருமான் வடவரை வென்று வாகை சூடினான். தமிழர் ஆற்றலை இகழ்ந்துரைத்த கனக-விசயர் சிறைப்பட்டனர். பகைவர் முடிமீது பத்தினிக்கல் பின்னர்ச் சேர வேந்தன் ஏவற்படி சிற்பிகள் பத்தினி உருவம் செதுக்குதற்குரிய கல்லை இமயமலையில் தேர்ந்தெடுத்தனர்; அதனைத் தமிழரை இழிவாகப் பேசிய கனக விசயர் முடித் தலைமீது ஏற்றிக் கங்கை வரை கொண்டுவந்தனர்; கங்கையில் அக்கல்லை நீராட்டினர்; பின்னர் வஞ்சி நோக்கிப் புறப்பட்டனர். தமிழர் மகிழ்ச்சி தமிழகத்துப் பேரரசனான செங்குட்டுவன் வடநாடு சென்று வடவருடன் போரிட்டு வாகை புனைந்து அவரைச் சிறை செய்து வருவதைக் கேள்வியுற்ற தமிழகத்தார் பொதுவாகவும் சேர நாட்டார் சிறப்பாகவும் உவகைக் கடலுள் ஆழ்ந்தனர். செங்குட்டுவன் தன் படை வீரர் சிலரிடம், தமிழர் ஆற்றலை இழித்துரைத்த கனக-விசயர் இவர்தாம். இவர்களைத் தமிழகத்தின் சார்பாக எம் வேந்தன் வென்று கொணர்ந்தான் என்று சோழ-பாண்டியரிடம் இவர்களைக்காட்டி வஞ்சி மாநகர்க்கு அழைத்து வருக என்று ஆணையிட்டுத் தன் நாடு மீண்டான். அப் பெருமகனைச் சேர நாட்டு நானில் மக்களும் நன்கு வரவேற்று நன்மலர் தூவி வாழ்த்தி மகிழ்ந்தனர். பத்தினிக்குக் கோவில் பத்தினி வந்து நின்ற மலையருகில் கோவில் கட்டப்பட்டது. கனக-விசயர் முடித்தலை நெரித்த கல்லில் பத்தினியின் உருவம் செதுக்கப்பட்டது. அவ்வுருவத்தின் அடியில் பெயரும் சிறப்பும் பொறிக்கப்பட்டன. நல்ல நேரத்தில் பத்தினிச்சிலை நடப்பட்டது. அந்த நல்ல நாளில் நடைபெறும் விழாவிற் பங்கெடுத்துக்கொள்ளச் செங்குட்டுவன் அரசர் பலரை வரவழைத்திருந்தான். அவருள் குறிப்பிடத்தக்கவர் கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன் ஒருவன்; நூற்றுவர் கன்னர், மாளுவ நாட்டு மன்னர் என்பவர். சிறைப்பட்ட கனக-விசயரும் உடன் இருந்தனர். இவ்வரசர் அனைவரும் இருக்கக் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்து கண்ணகியின் தோழியான தேவந்தியும் பிறரும் வந்து பத்தினிக் கடவுளைத் தொழுதனர். பத்தினியம்மன் விண்ணகத்தே தோன்றியாவரையும் வாழ்த்தி, இறுதியில் செங்குட்டுவன் வாழ்க! என்று வாழ்த்தி மறைந்தது. கயவாகு முதலிய வேந்தர், அம்மே, நீ இங்குக் கோவில் கொண்டவாறே எங்கள் நாடுகளிலும் கோவில்கொள்ள வேண்டும் என்று வேண்டினர். அம்மன் அதற்கு இசைந்தது. தேவந்தி பத்தினிக் கோவிலில் இருந்து நாளும் பூசை செய்து வரலானாள். விழா, பூசை என்பன குறைவற நடந்து வரச் சேர வேந்தன் தக்க வசதிகளைச் செய்தான். வீரவேந்தன் மேற்கொண்ட இவ்வரிய செயலால் அவன் தம்பியாரான இளங்கோ அடிகள் பாடிய சிலப்பதிகாரம் என்னும் காவியத்தில் சிறப்பிடம் பெற்றான். வீரத் தமிழன் தமிழர் ஆற்றலை இழித்துரைத்தனர் என்பதைக் கேட்டவுடன் செங்குட்டுவன் கொண்ட ஆத்திரம்-தமிழர் ஆற்றலை அப்பகைவர் அறியச் செய்ய வேண்டும் என்னும் மனத் மனத் துணிவு அங்ஙனமே பகைவர் நாட்டில் அவர்களைப் புறங்கண்டு சிறை செய்து தமிழர் ஆற்றலைத் தெளிவாக விளக்கிய வீரம் என்பன இக்காலத் தமிழராகிய நாம் நன்கு கவனிக்கத்தக்கவை. தமிழர் வீரத்தை வடவர் அறியச் செய்த அப்பெருந் தமிழனைப் போற்றி, இக்காலத் தமிழராகிய நாம் நமது பண்டைச் சிறப்பைப் புதுப்பித்து நல்வாழ்வு வாழ முயலவேண்டும் அல்லவா? 4. வீரத்தமிழ் மகள் மறக்குடி மகளிர் தமிழகத்தில் வீரர் மறவர் எனப்பட்டனர். மறம் என்பது வீரம் என்னும் பொருளை உடையது. தமிழ்ப் போர் வீரர் மறவர் எனப் பெயர் பெற்றனர். நாம் அவர்கள் மரபினரே ஆவோம். முறக்குடி மகளிர் வீரப் பெண்மணிகள்; போர் என்ற சொல் கேட்டதும் ஆடவரைவிட அகமிக மகிழ்வார்கள்; தம் ஆடவர்களைப் போர்க்கோலம் கொள்ளச் செய்து வாழ்த்தி வழி அனுப்புவர்; அந்த ஆடவர் வெற்றி பெறினும் அல்லது மார்பிற் காயம்பட்டு இறப்பினும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவர்; ஆயின், அவர்கள் புறத்திற் புண்பட்டனர் எனில் அல்லது முதுகிற் காயம்பட்டு இறந்தனர் எனில் அளவற்ற வருத்தமும் வெட்கமும் அடைந்து புழுப்போலத் துடிதுடிப்பர்; வீட்டிற்குத் தனிமகனாக இருந்தும் அவன் மார்பிற் காயம்பட்டு இறப்பின், அவனைப் பெற்ற தம்மை அல்லது அவனுக்கு வாழ்க்கைப்பட்ட தம்மை அல்லது அவனுடன் பிறந்த தம்மைப் பாராட்டிக்கொள்வர்; தம் வீட்டு ஆடவர் இறந்தார் எனக் கேட்டு மன மகிழ்வரே தவிரக் கண்ணீர்விட்டுக் கதறார்; மார்பிற் காயம்பட்டு உயிருடன் மீண்டுவரும் தம் ஆடவரை மலர் முகத்துடன் வரவேற்று, வேண்டும் உபசாரங்கள் செய்வர். அப்பெண்மணிகள் தம் தாய்நாட்டைக் காக்கத் தம் உயிரைத் துரும்பாக எண்ணிப் போர்புரியும் வீரரையே விரும்புவர்; மறக்குடிப் பெண்கள் அத்தகைய வீரரையே கணவராக ஏற்றுக்கொள்வர். அவர்கள், பிள்ளைகளைப் பெற்று நாட்டுக்குத்தருதல் எங்கள் கடமை; அவர்களைச் சான்றோர் ஆக்குதல் தந்தைமார் கடமை; வேல், வாள் முதலிய போர்க் கருவிகளைத் தயாரித்து அவர்களிடம் கொடுத்தல் கொல்லர் கடமை; அவர்களுக்கு நல்ல நடையைக் கற்பித்து நாட்டுக்குகந்த குடிமக்களாகச் செய்தல் வேந்தன் கடமை; போரில் யானைகளைக் கொன்று முன்னேறிப் போரிடல் அப்பிள்ளைகள் கடமையாகும் என்று அடிக்கடி அறைவது வழக்கம். இத்தகைய மறக்குடியைச் சேர்ந்தவரே இக்காலத் தமிழ் மக்கள்; எனினும் இன்றுள்ள கள்ளர்-மறவர்-படையாட்சியர் என்னும் வகுப்பினர் சிறப்பாகப் பண்டைமறக்குடி (போர் வீரர்) மரபினராவர். மறக்குடி மகள் பாண்டிய நாட்டுப் பழம்பதி ஒன்றில் நாம் இங்குக் குறிக்கும் மறக்குடி மகள் வாழ்ந்து வந்தாள். அவள் வழிவழியாகப் பாண்டிய நாட்டுப் போர்வீரராக இருந்த மறவர் மகள். அவள் வீட்டில் தகப்பன், தாய், தமையன்மார் இருந்தனர். அவள் ஒருத்தியே மகன் ஆதலின், அவள் பெற்றோர் அவளைத் தம் வீட்டிலேயே வைத்திருந்தனர். அவள் கணவனும் அவ் வீட்டிலேயே வாழ்ந்து வந்தான். அம்மகளுக்கு மைந்தன் ஒருவன் பிறந்து வளர்பிறை போல வளர்ந்து வந்தான். வீட்டில் இருந்த அனைவரும் மனமொத்து வாழ்ந்து வந்தனர். பாண்டிய நாட்டில் போர் இங்ஙனம் மறக்குடிமகள் தன் பெற்றோருடன் வாழ்ந்து வருகையில், சோழ வேந்தன் பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்தான். பாண்டிய நாடு முழுவதும் இச்செய்தி அறிவிக்கப் பட்டது. கிராமங்கள்தோறும் பறையறைந்து அறிவிக்கப்பட்டது. பாண்டியன், பாண்டியநாட்டு வீர மக்களே, சோழன் நம்மீது படையெடுத்துவிட்டான். நாம் நமது நாட்டு உரிமையைக் காக்க உயிர் விடுவோம். வீட்டுக்கு ஒருவராக வருக என்று செய்திவிடுத்தான். மறக்குடி மகள் - தந்தை அரசன் விடுத்த செய்தியைக் கேட்ட மறக்குடி மகள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள்; போர் வந்துவிட்டது. வீரர்க்குக் கொண்டாட்டமே. அப்பா, அண்ணா, காதலரே, உங்களில் போருக்குச் செல்பவர் யார்? என்று ஆவலோடு கேட்டாள். அவள் தகப்பன், அம்மையே, பல ஆண்டுகளாகப் போர் இல்லை என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்தேன். உன் தமையன்மாரும் கணவனும் இளைஞர்கள்; அவர்கள் இன்னும் பல போர்களைக் காணப்போகிறவர்கள். நானே முதியவன்; இதை விட்டால் வேறு போர் எப்போழுது நேருமோ? அதுவரை நான் இருப்பது என்ன உறுதி? ஆதலால் உணர்ச்சி குன்றியுள்ள எனக்கு உணர்ச்சி ஊட்ட இந்தப் போரே ஏற்றது. நான் இதிற் கலந்து கொள்வேன் என்று கூறினான். உடனே வீர மகள் தன் வீரத் தந்தைக்குப் போர் உடை தரித்தாள்; படைக் கலங்களை எடுத்துக் கொடுத்தாள். அனைவரும் முதியவனுக்கு மலர்மாலையிட்டுத் தம் குல தெய்வத்தை வழிபட்டு மலர்முகத்துடன் வழியனுப்பினர். முதியவன் படையிற் சேர்ந்தான். அவ்வளவே அவனுக்கு இளமை திரும்பியது என்று கூறத்தான் வேண்டும். அவன் போர் வெறி கொண்டு முன்னணியில்நின்றான்; சோழர் படைவீரர் பலரை வெட்டிச் சாய்த்தான். அம்முதியவன் போர்த் திறமை கண்டு பாண்டியன் பாராட்டினான். பகைவர் அம்முதியவனால் தமக்கு நேரும் பேரிழப்பைப் பார்த்து வருந்தி அவனையே குறி நோக்கி அம்புகளை எய்தனர். முதியவன் மார்பில் அம்புகள் தைத்தன; இரத்தம் வெளிப்பட்டு ஓடத்தொடங்கியது. ஆயினும் என்ன? முதியவன் வீறுகொண்டு வாள் வீசித் திரிந்தான். இறுதியில், அந்தோ! கோழை ஒருவன் பின் நின்று தாக்கவே, வீழ்ந்து இறந்தான். தந்தை கல் நின்றான் இங்ஙனம் முதியவன் வெற்றிமேல் வெற்றி பெற்று இறுதியில் மடித்ததை விவரமாகக் கேட்ட அவன் இல்லத்தார் மகிழ்ச்சி அடைந்தனர். அவ்வீரன் உடலைப் புதைத்த இடத்தில் பெரிய அகன்றகல் ஒன்றை நட்டனர்; அதனில் அவன் உருவத்தைப் பொறித்தனர்; அதன் கீழ் பெயரும் பீடும்பொறித்தனர்; மலர் தூவி வழிபட்டனர். அவ்வழிபாட்டில் கலந்துகொண்ட மறக்குடி மகள் கல் நின்றான் எந்தை (வீரக் கல்லாக நின்றான் என் அப்பன்) என்று வாய்விட்டுக் கூறி மகிழ்ந்தாள். கணவன் வீரம் நாட்கள் சில சென்றன. மீட்டும் போர்ப்பறை ஒலித்தது. வீட்டுக்கு ஓர் ஆள் வேண்டும் என்று அரசன் ஆணை பிறந்தது. மறக்குடி மகள் துள்ளிக் குதித்தாள். அவளது கணவன் நான் போவேன் என்றான்; உடன்பிறந்தார் ஒவ்வொருவரும் நான், நான் என்றனர். வீரமகள் தன் கணவன் போதலையே விரும்பினாள். அவள் உள்ளம் பூரித்தது. தன் கணவன் தன் தாய் நாட்டுக்காகப் போர்புரியச் செல்கிறான் என்பதை நினைத்த பொழுது அவள் முகம் அன்று மலர்ந்த தாமரை மலர்போல மலர்ச்சியுற்றது. அவள் அவனுக்கு வீரவுடை உடுத்து வீர வாளையும் கேடயத்தையும் கொடுத்து அனுப்பினாள். கணவன் போர்க்களம் சென்றான்; தன்னால் இயன்ற வரை வாட்போர் புரிந்தான்; பகைவர் விட்ட அம்புகள் அவன் மார்பில் தைத்து ஊடுருவின. ஆயினும் காளைப் பருவம் உடைய அவன் களைப்புறாது போர் செய்தான். எனினும் அவன் அடைந்த காயங்கள் பல. இறுதியில் அவன் மார்பில் ஓர் அம்பு சென்று தைத்தது. வீரன் மண்ணிற் சாய்ந்தான். அவன் வீரச் சிறப்பைக்கேட்ட மறக்குடி மகள் முகமலர்ச்சியுடன் போர்க்களம் சென்றாள்; அவன் புண்பட்ட மார்பைத் தழுவி, என் கணவன் களப்பட்டான் என்று கூறி மகிழ்ந்தாள். பாண்டியன் அத் தமிழ்ப் பெண்மணியின் வீரவுணர்ச்சியைப் பாராட்டி மகிழ்ந்தான். தமையன்மார் வீரம் சோழ-பாண்டியர் போர் நிற்கவில்லை. ஆதனால் பாண்டியற்குப் படை வீரர் தேவைப்பட்டனர். அதனால் அவன் நாடெங்கும் பறையறைவித்தான். மறக்குடி மகளுடைய தமையன்மார் இருவருள் முதல்வன் போருக்குப் புறப்பட்டான். வழக்கம் போல அவன் தங்கை அவனுக்குப் போர் உடை உடுத்துக் கருவிகள் கொடுத்து அனுப்பினாள். அவ்வீரன் தன் பங்குக்கு உரிய கொண்டைச் செய்து மார்பில் வேல் பாய்ந்து மடிந்தான். மறக்குடி மகளும் அவள் தாயும் போர்க்களம் சென்று அம்மகன் உடலைத் தழுவி மகிழ்ந்தனர். பாண்டியன், மறக்குடி மகன் வீரவுணர்ச்சியைப் பலபடப் பாராட்டினான். மறுநாட் போருக்கு மற்றொரு தமையன் சென்றான். அவன் தந்தை, தமையன், தங்கை கணவன் இவர்கள் மடிந்ததை எண்ணிச் சினம் மிகக்கொண்டு போரிட்டான்; பகைவரைக் கலக்கினான்; வேலும் வாளும் கொண்டு போர்புரிந்தான். அக்காளையின் பேராற்றலைக் கண்டு காவலன் களித்தான். ஆயின், அந்தோ! அவன் சோழ வீரன் வாளுக்கு இரையாகி இறந்தான். அப்பெரு வீரனுடைய தங்கையும் தாயும் அகமிக மகிழ்ந்தனர். மகனது வீரம் நாட்கள் சில கடந்தன. மீண்டும் அரசன் ஆணை குடிகட்கு அறிவிக்கப்பட்டது, மறக்குடி நல்லுயிர் துறந்தனர் அல்லவா? இனி எஞ்சி இருந்தவன் மறக்குடி மகளின் ஒரு மகனே ஆவன். அவன் பதினாறு வயதுடைய இளைஞன்; மறக்குடியிற் பிறந்தவன் ஆதலின் நல்ல உடற்கட்டுடன் விளங்கினான். அத்தனி மகனைத் தாய் அன்புடன் அழைத்து, நமது தாய் நாட்டு உரிமைப் போரில் உன் பாட்டனார், தந்தையார், மாமன்மார் மடிந்ததை நீ அறிவை. இப்பொழுது போராடும் பெரும்பேறு உனக்குக் கிடைத்துள்ளது. நமது குடிச்சிறப்பை விளக்கிப் போர் புரிந்து மீள்கஎன்று கூறி, அணைத்து உச்சிமோந்து தாயன்பு பொருந்த ஆசி கூறி அனுப்பினாள். அம்மகன் மிகுந்த மனக்களிப்புடன் போர்க்களம் சென்றான்; பாண்டியனைக் கண்டு பணிந்தான்; அவனது இசைவு பெற்று முன்னணியிற் சென்று கடும் போர் செய்தான். அவன் உடம்பு முழுவதும் பகைவர் அம்புகள் தைத்தன. அம்புகள் தைக்கப் பெற்ற அந்நிலையில் அம்மைந்தன் முள்ளம் பன்றி போலக் காணப்பட்டான். அவ்வீரத் தமிழ் மகன் தன்னால் இயன்றவரை அமர் செய்து முடிவில் ஆவி துறந்தான். வீரத் தமிழ் மகள் மறக்குடி மகள் தன் ஒரு மகன் இறந்த செய்தி கேட்டுப் போர்க்களம் புகுந்தாள்; தன் மைந்தனது ஆவியற்ற உடலை-மார்பில் காயம் பட்ட உடலை-கணக்கற்ற அம்புகள் தைக்கப் பெற்ற உடலைக் கண்டாள். அவள் முகம் மலர்ந்தது. அப் பெண்மணி, அன்றொரு நாள் எந்தை இந்தப் போர்க்களத்தில் இறந்து கல்லானான்; பின்னொரு நாள் என் காதற் கணவன் இக் களத்தில் நாடு காக்கப் போரிட்டு மடிந்தான்; பிற்றைநாட்களில் என் ஐயர் (தமையன்மார்) இக்களத்திற் போர் புரிந்து மாண்டனர். இன்று என் ஒப்பற்ற மகன் முள்ளம் பன்றி போல உடம் பெல்லாம் அம்புகள் தைக்கப் பெற்று வீரசுவர்க்கம் அடைந்தான். யான் பெற்ற பேறே பேறு, என்று எண்ணினாள். இக்கருத்து அவ் வீரமகள் வாயிலிருந்து கீழ்வரும் செய்யுளாக வெளிப்பட்டது. கல்நின்றான் எந்தை; கணவன் களப்பட்டான்; முன்னின்று மொய்யவிந்தார் v‹Ia®;—ã‹Å‹W கைபோய்க் கணைஉதைப்பக் காவலன் மேலோடி எய்போற் கிடந்தான்என் *ஏறு. *ஏறு ஆண் சிங்கம் (மகன்). 5. சோழன்-கோச் செங்கணான் கோச்செங்கணான் காலநிலை ஏறக்குறையக் கி. பி. 4-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவர் என்ற புதிய மரபினர் வடக்கில் இருந்து தொண்டை நாட்டைச் சோழரிடமிருந்து கைக்கொண்டனர். பல்லவர்கள் தெற்கு நோக்கி வந்ததால் தொண்டை நாட்டின் வடபகுதியில் மலைகளிலும் காடுகளிலும் சுயேச்சையாக வாழ்ந்து வந்த களவர் (களப்பிரர்) என்ற வீரமரபினர் நெருக்குண்டு தொண்டை நாட்டிற் புகுந்தனர்; தொண்டைநாடு பல்லவர் கைப்பட்டதும் நடு நாட்டில் (தென் ஆர்க்காடு ஜில்லாவில்) புகுந்தனர். அவர்கள் ஒரு பக்கம் வடக்கே பல்லவருடனும் தெற்கே சோழருடனும் போரிடவேண்டிய நிலைமை ஏற்பட்டது; தங்கள் படை வன்மையால் சோழ நாட்டைக் கைப்பற்றினர். இங்ஙனம் சோழநாட்டைக் கைப்பற்றி ஆண்டகளப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் என்பவன். அவன் காவிரிப்பூம் பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டின் வடபகுதியையும் நடுநாட்டையும் அரசாண்டான். அவன் காலம் ஏறத்தாழக் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி (கி. பி. 425-475) என்னலாம். அச்சுதன் சோழநாட்டுடன் நிற்கவில்லை; பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் வென்றான். இவ்வெற்றிகளால், பன்னெடு நூற்றாண்டுகளாகத் தமிழகத்தை ஆண்டுவந்த சேர-சோழ பாண்டியர் அரசு இழந்து முடியிழந்து தலைமறைவாக வாழ வேண்டியவர் ஆயினர். சோழர் வழிவழியாகச் சைவசமயத்தவர். புதியவராக வந்த களப்பிரர் வேறு சமயத்தவர். அவர்கள் பௌத்தத்தையும் சமணத்தையும் முதலில் ஆதரித்தார்கள். அதனால் சைவ வைணவ சமயங்கள் அரசன் ஆதரிப்பிற் குறைந்தன. அரசன் எவ்வழி அவ்வழிக் குடிகள் அல்லவா? அதனால் குடிகளுட் பலர் தங்கள் பழைய சமயங்களை மறக்கலாயினர்; புதிய சமயங்களில் பற்றுக்கொள்ளலாயினர். அந்தந்த நாட்டிற் பிறந்த அரசன் இருந்து ஆளாத நாடு, சமயம் - கல்வி கலை முதலிய அனைத்திலும் சீர்கெடுதல் உலக வரலாறு உரைக்கும் உண்மை அல்லவா? கோச்செங்கணான் பெற்றோர் இங்ஙனம் தமது நாடிழந்து-முடியிழந்து-கோலிழந்து கரந்துறை வாழ்க்கை நடத்திய சோழ அரச மரபினருள் சுபதேவன் என்பவன் ஒருவன். அவன் தில்லையிற் குடிபுகுந்து வாழ்ந்தான்: தன் மரபு மறுமலர்ச்சி பெற மங்கை பங்கனை வரம் வேண்டினான்; தன் மரபினை வாழவைக்கத் தக்க மைந்தன் பிறக்கவேண்டும் என்று மாதொருபாகனை மனங்குழைந்து வேண்டினன். பக்தி வலையில் அகப்படும் இயல்புடைய கூத்தப்பெருமான் கனிவுள்ளம் கொண்டான். அப்பிரானது திருவருளால் சுபதேவன் மனைவியான கமலவதி என்பவள் கருவுற்றாள். பத்துத்திங்களும் பதமுறக் கழிந்தது. அம் பலவன் அருளால் ஆண்மகவு பிறந்தது. அம்மைந்தன் கண்கள் சிறிதளவு செந்நிறத்துடன் காணப்பட்டன. அதனால் கமலவதி செங்கணான் (செங்கண்ணான்) என்று பெயரிட்டாள். செங்கணான் உரிமை வேட்கை செல்வ மைந்தனான செங்கணான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தான். கண்ணை இமைகள் காப்பதுபோலப் பெற்றோர் தம் அரசாளப் பிறந்த மகனை ஆசையுடன் பாதுகாத்து வளர்த்தனர். செங்கணான் கூர்த்த மதியுடைவன்; பேரரசனான கரிகாலன் மரபினன் அல்லவா? சுபதேவன் தன் ஒப்பற்றமைந்தனுக்குச் சோழர் வரலாற்றைப் பசுமரத்தாணிபோல உள்ளத்தில் நன்கு பதியுமாறு உரைத்துவந்தான். ஆருயிர் அன்னை வீரம் செறிந்த சோழர் மரபின் சிறப்பெல்லாம்-சோழமாதேவியர் கல்வி-ஒழுக்கம்-வீரம் முதலிய நல்ல இயல்புகள் எல்லாம் சீரிய முறையில் எடுத்துரைத்தாள். செல்வனான செங்கணான் அரசிளங் குமரர்க்கு உரிய படைக்கலப் பயிற்சிகளில் பலவாறு பழகிப் பண்பட்ட புலமை பெற்றான்; வாட்போரிற் சிறந்து விளங்கினான். தன் முன்னோர் பேரரசுராக இருந்த பெற்றியையும் தன் தந்தை தலைமறைந்து வாழும் வறிய நிலையையும் எண்ணி எண்ணி மனம் புண்ணானான். அவன் கூத்தப்பிரான் அருளால் பிறந்தவன் அல்லவா? அதனால் அவன் தன் பெற்றோருடன் நாள்தோறும் கூத்தப்பிரான் திருக்கோவில் சென்று வழிபடலானான்; தங்கள் மரபுக்கு சேர்ந்த இழிவை நீக்கி அருளுமாறு பன்முறை பெருமானை வேண்டினான். படையைச்சேர்த்தல் நாட்டைக் களப்பிரர் கைக்கொண்ட நாள் முதல் தமிழர் உள்ளம் உரிமை வேட்கையில் வேரூன்றியது. தமிழர் அங்கங்குப் படைக்கலப் பயிற்சி பெற்றனர்; களப்பிரர்க்கு முன் சோழர் படையில் இருந்த வீரர்கள் தங்கள் தங்கள் ஊர்களில் போர்ப் பயிற்சிக் கூடங்களை மறைவாக வைத்து வீரர்களைத் தயாரித்து வந்தனர். சோழ அரச மரபினர் பழையாறை, திருவாரூர்; உறையூர் முதலிய இடங்களில் களப்பிரர்க்கு அடங்கிய சிற்றரசராக இருந்து வந்தனர். அவர்கள் மறை முகமாகத் தங்கள் உரிமையைப் பெற வேலை செய்துவந்தனர். படையெடுப்பு சுபதேவன் இவை அனைத்தையும் நன்கு அறிந்தவன். ஆதலால் அவன் இரகசியமாக அரசமரபினர் அனைவர்க்கும் ஆட்களை ஏவிப் போருக்குத் தயாராக இருக்குமாறு ஏற்பாடு செய்தான்; தில்லையிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் இருந்த தமிழ் வீரர்களை ஒரு படையாகத் திரட்டினான். அப்படைக்குச் செங்கணான் தலைமை பூண்டான். அவ்வீரமைந்தன் சோழ அரச மரபில் வழிவழியாக வைத்துப் பயன் பட்டு வந்ததும் பல வெற்றிகட்குக் காரணமாக இருந்து சோழரால் பூசிக்கப் பட்டு வந்ததுமான வாளை எடுத்துக்கொண்டு தன் குலதெய்வமான கூத்தப்பிரான் கோவிலை அடைந்தான்; உள்ளம் உருக இறைவனை வேண்டினான்; பின்னர்த் தன் உணர்ச்சிமிக்க படையுடன் பூம்புகார் நோக்கிச் சென்றான். சோழர் - களப்பிரர் போர் செங்கன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தாக்கினான் என்பதைக் கேள்வியுற்ற சோழ நாட்டுப் பழைய படைத்தலைவர், சிற்றரசர், வீரர்கள் முதலியவர்கள் அங்கங்குப் போர் தொடுத்து வெற்றி பெற்றனர்; பல படைகள் செங்கணான் உதவிக்கு வந்தன. செங்கணான் நாட்டுப் பற்றும் வீர வுணர்ச்சியும் தெய்வ பக்தியும் கண்ட வீரர் தம்மை மறந்து போரிட்டனர்; அவனே தங்கள் சோழ வேந்தன் என்று கருதி வீராவேசத்துடன் அமர் புரிந்தனர். பகை அரசன் பூம்புகாரைவிட்டு மறைந்தான்; கரிகாலனை பேரரசனாகப் பெற்றுச் சிறந்த கடற்றுறைப் பட்டினமாகவும் தலைமை நகரமாகவும் இருந்த பூம்புகார் மீட்டும் சோழர்க்கே உரியதாயிற்று. சோழர் - பல்லவர் போர் இங்ஙனம் சோழ நாட்டைக் களப்பிரரிடமிருந்து மீட்ட செங்கணான் சோழ மன்னனாகத் தில்லையில் முடிசூட்டிக் கொண்டான்; தன் மரபினர் ஆண்டு வந்த தொண்டை நாட்டையும் மீட்க விரும்பினான். அப்போது தொண்டை நாடு பல்லவர் ஆட்சியில் இருந்தது. கோச்செங்கணான் தன் மீது படையெடுத்து வருவதை அறிந்த பல்லவ மன்னன் தன் தம்பியான புத்தவர்மன் தலைமையில் பெரும் படையை ஏவினான். புத்தவர்மன் கடல்போன்ற சோழர் சேனையோடு போரிட்டான் என்று பல்லவர் செப்புப் பட்டயம் செப்புகிறது. இதனால் கோச்செங்கணான் மிகப் பெரிய சேனை வைத்திருந்தான் என்பது தெரிகிறது; சோழ நாட்டு உரிமைக்காக ஆயிரக்கணக்கில் தமிழ் வீரர் படையில் சேர்ந்து தொண் டாற்றினர் என்பதும் விளக்கமாகிறது அல்லவா? சோழர் - கொங்கர் போர் தொண்டைநாட்டை வென்ற சோச்செங்கணான் எக்காரணம் பற்றியோ கொங்குநாட்டையும் தாக்கினான்; கொங்குநாடு அரசர் பலரது ஆட்சியில் இருந்தது. சோழ வேந்தன் அவர்களை எலல்ம் போர்களில் முறியடித்து அவர்களைத் தனக்கு அடங்கிய அரசர்கள் ஆக்கினான். சோழ - சேரர் போர் கோச்சோழன், சேர வேந்தனுடனும் போரிடல் நேர்ந்தது. சேரன் யானைப்படையிற் சிறந்தவன். சோழன் காலட்படையிற் பெரியவன். இருதிறத்தார்க்கும் கடும்போர் நடந்தது. முடிவில் சேரமன்னன் கொல்லப்பட்டான். பாராட்டுரை இங்ஙனம் கோச்செங்கணான் உரிமை இழந்த தன் தாய்நாட்டுக்கு உரிமைதேடித் தந்தான்; அவன் காலத்துத் தமிழர் அவனுடன் ஒத்து உழைத்து உரிமை பெற்றனர். அவர்களது உளமார்ந்த ஒத்துழைப்பாற்றான் கோச்செங்கணான் கொங்கர் - சேரர் - களப்பிரர் - பல்லவர் என்ற அரசர்களை முறியடித்துத் தன் உரிமையை நிலைநாட்டிப் பேரரசனாக விளங்கினான். இவ்வாறு தம் நாட்டக்கு உரிமை தேடித் தந்த அவ் வீரத் தமிழன் போர்ச் செய்கைகளைப் பொய்கையார் என்ற பைந்தமிழ்ப் புலவர் களவழி என்னும் நூலில் குறித்துப் பாராட்டியுள்ளார். கோச்செங்கணானுக்குப் பின் சோழநாடு பல்லவர்க்கு அடிமையானது. ஆயினும் அடிமைப்பட்ட அக்காலத்திலும் கோச்செங்கணான் வீரச் செயல்கள் தமிழ்மக்கள் உள்ளத்தில் வேரூன்றி இருந்தன. இஃது எங்ஙனம் நமக்குத் தெரிகிறது? கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை யாழ்வார் என்னும் வைணவப் பெரியார் கோச் சோழனைப் பற்றித் தம் பாக்களில் பாடிப் பாராட்டியுள்ளதால் அறிகிறோம். அப் பெரியார் அவனைப் பற்றிக் கீழ்வருமாறு குறித்துள்ளார். 1. உலகமாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன் 2. தென்தமிழன் வடபுலக்கோன். 3. கழல் மன்னர் மணிமுடிமேல் காகமேறத் தெய்வவாள் வலங்கொண்ட சோழன். 4. விறல்மன்னர் திறல் அழிய வெம்மா வுய்த்த செங்கணான் கோச்சோழன். 5. படைமன்னர் உடல்துணியப் பரிமா வுய்த்த தேராளன் கோச்சோழன். கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் வாழ்ந்த சுந்தரர் என்ற சைவ சமய ஆசிரியர் நம் தமிழ்வீரனை, தென்னவனாய் உலகாண்ட செங்கணான் என்று பாராட்டிப் பாடியுள்ளார். கி. பி. 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழன், நான் பேரரசனான் கோச்செங்கட் சோழன் மரபினன் என்று தன் செப்புப் பட்டயத்தில் கூறிக்கொண்டான். இவற்றுக் கெல்லாம் கோச்செங்கணான் வீரமே உரிய காரணம் அன்றோ? 6. படைத்தலைவர்-பரஞ்சோதியார் பரஞ்சோதியார் இவர் நமது நாட்டில் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் பல்லவ அரசனான நரசிம்மவர்மனிடம் சேனைத் தலைவராக இருந்தவர். இப் பொரியோர் மஹாமாத்திரர் மரபில் வந்தவர். மஹாமாத்திரர் என்பவர், அரசனது ஆலோசனை அவையினர். அரசன் மஹாமாத்திரரைக் கலந்தே நாட்டு அரசியலை நடத்துவான்; பிறரோடு போர் புரிவான். மஹாமாத்திரரே அரசனை வழிப்படுத்துபவர். அவர்கள் நற்குடிப் பிறப்பும் சிறந்த போர்ப் பயிற்சியும் பல கலைகளிற் பண்பட்ட புலமையும் உடையவராக இருத்தல் வேண்டும் என்பது விதியாகும். இத்தகைய உயர் பதவியினர் மரபினரே மஹாமாத்திரராக அடுத்தடுத்து வருவர். பரஞ்சோதியார் முன்னோர் மஹாமாத்திரராக இருந்தவர். எனவே, நமது பரஞ்சோதியார் நமது தமிழ் நாட்டுப் பெருமக்கள் வரிசையில் வைத்து எண்ணத் தக்கவர் ஆவர். இவர் மருந்துவம் - வானநூல் இசை கணிதம் - அரசியல் போர்முறை முதலிய பல துறைகளில் அறிவு நிரம்பி இருந்தார்; இவை அனைத்திற்கும் மேலாகச் சிறந்த ஒழுக்க சீலராகவும் உயர்ந்த சிவபத்தராகவும் விளங்கினார். இவரைச் சேனைத் தலைவராகக் கொண்ட பல்லவன் - நரசிம்மவர்மன் சிறந்த வைணவ பக்தன். அங்ஙனம் சமயத்தில் வேறுபட்டிருந்தும் அரசன் பரஞ்சோதியாரைப் படைத் தலைவராக வைத்திருந்தமை, அவருடைய அரசபத்தியையும் வீரத்தையும் கருதியே ஆகும் என்பது நன்கு விளங்கலாம். பரஞ்சோதியார் மனைவியார் தஞ்சாவூர் ஜில்லா சீகாழியை அடுத்த திருவெண்காடு என்னும் ஊரினர். அவ்வூர் சங்க காலத்தில், புகழ் பெற்றிருந்த காவிரிப்பூம் பட்டினத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அத்தலத்தில் பிறந்த காரணத்தால் அம்மையார்க்குத் திருவெண் காட்டு நங்கை எனப் பெற்றோர் பெயரிட்டனர். அவ்வம்மையார் நிறைந்த கல்வியும் சிறந்த ஒழுக்கமும் பரந்த நோக்கமும் விரிந்த சிந்தையும் உடையவர்; கணவரை மகிழ்விப்பதையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர். இத்ததைய உத்தம பத்தினியாருடன் பரஞ்சோதியார் இல்லறம் என்னும் நல்லறத்தை இனிதே நடத்தி வந்தார். பல்லவர் - சாளுக்கியர் போர் II. துங்கபத்திரையாறு முதல் நர்மதைநதி வரையுள்ள பரந்த நிலப் பகுதியைச் சாளுக்கியர் என்பவர் அரசாண்டு வந்தனர். அவர்கள் தெற்கே இருந்த பல்லவப் பேரரசருடன் ஓயாது போரிட்டபடி இருந்தனர். அங்ஙனம் போரிட்ட சாளுக்கியரில் குறிப்பிடத்தக்க பெருவீரன் இரண்டாம் புலிகேசி என்பவன். இவன் பல்லவராது செல்வாக்கைத் தென்னாட்டில் பரவவிட லாகாது என்ற எண்ணம் கொண்டவன். இவனே வட இந்தியப் பேரரசனான ஹர்ஷனைப் போரில் முறியடித்தவன்; அந்த மமதையால் பல்லவநாட்டின் மீது படையெடுத்தான். அப்பொழுது நரசிம்ம வர்மன் தகப்பனான மஹேந்திர வர்மன் பல்லவ மன்னனாக இருந்தான். அவன் போர்த்திறம் மிக்கவன்; பகைவனது முதல் வேகத்தை எதிர்க்காது விடுத்து அவன் களைப்புறும் பொழுது திடீரெனத் தாக்கி அழிக்கும் தந்திரம் மேற்கொண்டவன். அதனால் அப்பல்லவன் புலி கேசியைத் தன் நாட்டிற்குள் தாராளமாக வரவிட்டான். இத் தந்திரத்தை அறியாத புலிகேசி நேரே காஞ்சிவரை வந்தான்; நகரத்தை முற்றுகையிட்டான். பல்லவன் கோட்டைக்குள்ளிருந்து வெளியில் வரவில்லை. இவன் பேடி என்று இகழ்ந்து புலிகேசி பல்லவ நாட்டின் தென் எல்லையாகிய காவிரியாறு சென்று அங்குச் சிலநாள் ஓய்வு எடுத்துக்கொண்டான். இதற்குள் மஹேந்திரன் தன் படைகளைப் பல கூறுகளாகப் பிரித்துத் தன் மகனான நரசிம்மவர்மன் தலைமையிலும் பிறசேனைத் தலைவர் தலைமையிலும் காஞ்சியைச் சூழ வைத்துப் போருக்குத் தயாராகக் காத்திருந்தான். உண்மை உணராத புலிகேசி அயர்ந்த நிலையில்-எதிர்ப்புக்குத் தயாராகாத நிலையில் காஞ்சியை நெருங்கினான். அப்பொழுது முன்னேற்பாடாக நாற்புறத்தும் இருந்த பல்லவர் படைகள் திடீரெனப் பகைவரைக் சூழ்ந்து கொண்டன. எதிர்பாராத எதிர்ப்பைக் கண்ட சாளுக்கிய வீரர் திகைத்து நின்றனர். போர் பல இடங்களில் நடந்தது. களைத்திருந்த சாளுக்கிய வீரர் எவ்வளவு நேரம் புதிதாகப் போரைத்தொடங்கிய பல்லவவீரரை எதிர்த்து நிற்றல் கூடும்? மேலும் பல்லவவீரர் உள் நாட்டினர்; பகைவரோ நாட்டிற்குப் புதியவர்; நடு உள்நாட்டில் பல்லவவீரர் நடுவில் அகப்பட்டுக் கொண்டனர்; ஆதலின் அவர்கள் தங்கள் தங்கள் உயிருக்காகப் போராடி முடிவில் தோல்வியுற்று நாலா பக்கங்களிலும் ஓடினார்கள். மஹேந்திரவர்மனும் இளவரசனான நரசிம்ம வர்மனும் புலிகேசியைத் தொடர்ந்து சென்று, அவனை முற்றிலும் முறியடித்தனர்; முறியடித்துத் தங்கள் நாட்டு எல்லைக்கப்பால் துரத்தினர். பல்லவர் - சாளுக்கியர் போர் II ஆண்டுகள் சில கழிந்தன. கி. பி. 630-ல் நரசிம்மவர்மன் பல்லவ அரசன் ஆனான். அவனிடமே நமது பரஞ்சோதியார் படைத்தலைவரானார். நரசிம்மவர்மன் சாளுக்கியனை மனத்திற்கொண்டே தன் படையைப் பலமடங்கு பெருக்கினான். பரஞ்சோதியார் அப்படைகள் எல்லாவற்றுக்கும் தலைமை பூண்டு விளங்கினார். புலிகேசி கி. பி. 642-ல் மீண்டும் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான்; பல்லவரது எல்லைப்புறப்படையை எளிதில் வென்று நாட்டிற்குள் நுழைந்தான்; அங்கங்கு இருந்த காவற்படைகளை வெற்றி கொண்டு காஞ்சீபுரத்தை நெருங்கினான். அதுவரை அவனைப் பெரும்படை கொண்டு எதிர்க்காமலே பல்லவன் விட்டுவிட்டான்; பகைவனைத் தன் நாட்டிற்குள் நன்கு இழுத்து, பிறர் உதவியை அவன் பெறாதாவாறு பரஞ்சோதியார் யோசனைப்படி நரசிம்மவர்மன் இத்தந்திரம் செய்தான். காஞ்சிக்கு அண்மையில் பகைவன் நெருங்கினான் என்பதை அறிந்ததும் பரஞ்சோதியார் அவனைப் பரியலம் என்னும் இடத்தில் தாக்கினார்; போர் மாபெரும் போராக உருவெடுத்தது; பரஞ்சோதியார் தம் முன்னணிப் படைகளை முடுக்கினார். அப்படை சாளுக்கியர் படையை நன்கு தாக்கிவதைத்தது. சாளுக்கியன் முன்னர்த் தோற்றோடினவன் ஆதலால் தக்க ஏற்பாட்டுடன் வந்திருந்தான். அவன் எப்படியும் வருவான் என்பதை எதிர்பார்த்தே பல்லவர் படைவன்மையைப் பல ஆண்டுகளாகப் பெருக்கி இருந்தனர். ஆதலின் இருதிறத்துப் படைகளும் களைப்பின்றிப் போரிட்டனர். எனினும், சாளுக்கியனுக்கு உணவும் படையும் குறையலாயின. அவன் பகைவரது நாட்டு நடுவில் சிக்கிக்கொண்டதால் அவ்வசதிகளை இழந்து தவித்தான். இந்த நிலையில் பரஞ்சோதியார் பகைவரைத் தள்ளிக்கொண்டே மணிமங்கலம் என்ற இடத்தை அடைந்தனர். அங்குக் கோரமான போர் நடை பெற்றது. அக்கொடிய போரில் பகைவர் பின் வாங்கினர்; பின் வாங்கிக் கொண்டே சூரமாரம் என்ற இடத்தை அடைந்தனர். அங்கும் கடும் போர் நடந்தது. அப்போர், யமனும் கண்டு அஞ்சத்தக்க போராக இருந்தது. நரசிம்மவர்மன் தன் உயிரைத் துரும்பாக மதித்துப் போரிட்டான். பரஞ்சோதியார் போர்க்களம் எங்கும் காணப்பட்டார். அவரது முகத்தைக் கண்டு வீரர் வீறுகொண்டு அமர் புரிந்தனர். அதிகம் அறைவதேன்? அங்கு நடந்த போரில் சாளுக்கியன் முறியடிக்கப்பட்டான். உணவும் ஓய்வும் இல்லாத சாளுக்கிய வீரர் சிதறி ஓடலாயினர். அவர்கட்கு முன் புலிகேசி ஓடலானான். வாதாபி கொண்டது நரசிம்மவர்மன் பரஞ்சோதியாரைப் பார்த்து, பகைவநன விடாது துரத்திச் சென்று வாதாபியை அழித்து வருக என்று ஆணையிட்டான். அஞ்சா நெஞ்சமும் ஆண்மையும் படைத்த தமிழராகிய பரஞ்சோதியார் மிக்க மகிழ்ச்சியுடன் பகைவர் சேனையைத் துரத்திச் சென்றார். அவரது வீரத்தைக் கண்டு பல்லவ வீரர் முன் பாய்ந்து ஓடினர். பரஞ்சோதியார் இருக்கும் பொழுது பயம் ஏது! என்று பாடிக்கொண்டு பகைவர் பின்னே ஓடினர். சாளுக்கிய சேனை புலிகேசியுடன் வாதாபிக்குள் நுழைந்தது. சாளுக்கியரது புகழ் பெற்ற கோநகரமான வாதாபிக்குள் பரஞ்சோதியாரும் நுழைந்தார். அங்குக் கொடிய போர் ஒன்று நடந்தது. அப்போரில் பகைவர் படை அழிந்தது. புலிகேசி என்ன ஆனான் என்பது தெரியவில்லை. வாதாபி பரஞ்சோதியார் கைப்பட்டது. அங்கு நடந்த போரில் அந் நகரத்தின பல பகுதிகள் அழிந்தன; அரண்மனைச் செல்வம் முழுவதும் கரிகள்-பரிகள் முதலியனவும் பரஞ்சோதியார் கைப்பட்டன பரஞ்சோதியார் நகர நடுவில் வெற்றித்தூண் ஒன்றை நாட்டுவித்தார். அத்தூண் இன்னும் இருக்கின்றது. அதன்மீது வாதாபி என்ற சொல்லும் நரசிம்மவர்மன் என்ற சொல்லுமே படிக்கத்தக்கனவாக இருக்கின்றன. மற்றவை சிதைந்துவிட்டன. அழியாப் புகழ் இங்ஙனம் பல்லவ மன்னன் சார்பாகப் பரஞ்சோதியார் போரிட்டுக் கைப்பற்றிய வாதாபி நகரம் பதின்மூன்று வருடகாலம் பல்லவர் ஆட்சியில் இருந்தது எனின், அதுவரை சாளுக்கியர் தலையெடுக்க முடியாத நிலையில் ஒடுங்கிக் கிடந்தனர் எனின், பரஞ்சோதியார் போர் வன்மையை என்னென்பது! அவரது ஆழ்ந்த யோசனையாலும் அநுபவம் நிறைந்த தந்திரத்தாலும் போர் நடத்திய திறமையாலும் பல்லவன் வாதாபி கொள்ள முடிந்தது. இவ்வீரச் செயலால் பரஞ்சோதியார் அழியாப் புகழ் பெற்றார். அவர் வாதாபியில் கைக்கொண்ட பொருள்களை எல்லாம் கொண்டுவந்து நரசிம்மவர்மன் முன் வைத்துப் பணிந்தார். இந்த நிகழ்ச்சி என்றும் தமிழ் மக்கள் நினைவில் இருப்பதற்காக-பரஞ்சோதியார் என்ற தமிழர் வீரத்தைப் பின் வருவார்க்கு வெளிப்படுத்துவதற் காக சிற்ப வடிவத்தில் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் உட்பிராகாரச் சுவரில் காட்டப்பட்டுள்ளது. அச்சிற்பத்தை இன்றும் காணலாம். கோச்செங்கணான் வீரச்செயல்களை அவனுக்குப் பலநூறு ஆண்டுகட்குப் பின் வந்த திருமங்கையாழ்வார் பாராட்டுமாறு பொதுமக்கள் உள்ளத்தில் வேரூன்றி இருந்தாற்போல பரஞ்சோதியாரது வீரப் போரும் பல நூறு வருடகாலம் மக்கள் நினைவில் இருந்து வந்தது கி. பி. ஏழாம் நூற்றாண்டில் நடந்த இவ்வீரச் செயலைக் கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்திற் பாரட்டிக் கூறியுள்ளதே இதற்குப் போதிய சான்றாகும். அப் பெருமான் கூறியுள்ள பாட்டைக் காண்க: மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாபித் தொன்னகரம் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்தும் பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும் இன்னனஎண் ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார். இங்ஙனம் தமது செயற்கரிய பெரிய வீரச் செயலால் அழியாப் புகழ்பெற்ற பரஞ்சோதியார் என்ற தமிழரே, அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவரான சிறுத்தொண்டர் என்பவர். இந்த வீரத் தமிழர் பெயர் போர்த்திறத்தால் தென்னிந்திய வரலாற்றிலும், சமய ஆற்றலால் பெரிய புராணத்திலும் ஒப்புயர்வற்ற இடம் பெற்றுவிட்டது. 7. பாண்டியன்-நெடுமாறன் நெடுமாறன் முன் சொன்ன வாதாபிப்போர் நடந்த காலத்தில் பாண்டிய அரசனாக இருந்தவன் இந்த நெடுமாறன். இவன் கி. பி. 640 முதல் 680 வரை மதுரை மன்னனாக விளங்கினான். இவன் சிறந்த போர்வீரன். இவன் மனைவியார் சோழ அரசன் மகளார். அவரே அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவராகிய மங்கையர்க் கரசியார். அம்மையார் பழுத்த சைவர். கணவனான நெடுமாறன் சமணச் சார்புடையவன். ஆயினும் அம்மையார் நன்மொழி யாலும் அமைச்சர்-குலச்சிறை (நாயனார்) ஆட்சி முறையாலும் பாண்டியன் சைவசமயத்தை வளரவிட்டான்; பின்னர்த் திருஞான சம்பந்தர் நன் முயற்சியால் அரசனே சைவனாக மாறினான். அம்மாற்றத்திற்குப் பிறகு பாண்டிய நாட்டில் சைவ சமயம் நன்கு வளரலாயிற்று. பாண்டியன் படைவன்மை இப்பாண்டி மன்னனுக்கு ஒப்பற்ற மகன் ஒருவன் இருந்தான். அதன் பெயர் கோச்சடையன் என்பது. அவன் இளவரசனாக இருந்து பாண்டிய அரசியலைக் கவனித்து வந்தான். தன் நாட்டிற்கு வடக்கே இருந்த பல்லவரை அழிக்கச் சாளுக்கியர் அடிக்கடி படையெடுத்து வந்து, பல்லவ நாட்டின் தென் எல்லையும் பாண்டிய நாட்டின் வட எல்லையுமான உறையூரில் தங்கியிருத்தல் தனது நாட்டுப் பாதுகாப்புக்கு ஏற்றதன்று என்று நெடுமாறன் எண்ணினான்; அங்ஙனம் பல்லவரை வென்று உறையூர்வரை வந்து தங்கும் சாளுக்கியர் சுயாட்சி பெற்றுள்ள தன்னாட்டையும் தாக்க விரும்பலாம் - அங்ஙனம் தாக்கிக் கைக்கொள்ள முயல்வது இயற்கை என்பதையும் கருதினான். அதனால் அந்த அரசியல் அறிஞன் வாதாபிப் போருக்குப் பின் தன் படையைப் பன்மடங்கு பெருக்கினான்; சமயம் நேரின், சாளுக்கியரையும் பல்லவரையும் ஒருங்கே தாக்கத்தக்க படை தன்னிடம் இருத்தல் வேண்டும் என்பது அவனது அவா. இந்த நோக்கத்துடனே பாண்டிநாட்டு இளைஞர்க்குத் தக்க போர்ப் பயிற்சி ஈந்து, திறம் மிக்க படை ஒன்றை வட எல்லைப்புறத்தில் நிலைப்படையாக வைத்திருந்தான்; சில படைகளை வட எல்லையிலிருந்து தலை நகரமான மதுரைவரை அங்கங்கே இருக்கச் செய்தான். பல்லவர் - சாளுக்கியர் நரசிம்மவர்மனுக்குப் பிறகு பரமேசுவரவர்மன் என்பவன் பல்லவப் பேரரசன் ஆனான். அவன் சிறந்த சிவபக்தன்; வடமொழிப் புலவன்; உருத்திராக்க மணிகளைக்கொண்டு சிவலிங்க வடிவமாகச் செய்த முடியையே அரச முடியாகத் தரித்து அரசாண்ட பக்தன். அவன் பக்தியிற் சிறந்திருந்தாற் போலவே வீரத்திலும் சிறந்திருந்தான். அவன் மகனான இராஜசிம்மன் இளவரசன்; சிறந்த போர் வீரன். இரண்டாம் புலிகேசிக்குப் பிறகு அவன் மகன் முதலாம் விக்கிரமாதித்தன் சாளுக்கியர் அரியணை ஏறினான். அவன் தன் தந்தை சிறப்புக்கும் வாதாபி அழிவிற்கும் தங்கள் பெருமை குன்றியதற்கும் பல்லவரே காரணர் என்பதை அறிந்தவன்; ஆதலால் பல்லவரைப் பழிக்குப்பழி வாங்கக் காத்திருந்தான்; தந்தை தயாரித்த பெரும் படையைப் போல இரு மடங்கு அதிக எண்ணிக்கையுள்ள வீரரைத் தயாரித்தான்; பல மாதங்கட்கு வேண்டிய போர்க் கருவிகள், உணவுப் பொருள்கள் முதலிய வற்றை ஏற்பாடு செய்தான்; பரமேசுவரன் சிவபக்தியில் மிகுதியும் ஈடுபட்டவன் ஆதலால் அவனை எளிதில் வென்று வாகை சூடலாம் என்று மனப்பால் குடித்தான். இந்த எண்ணத்துடன் அவன் கி. பி. 674-ல் பல்லவ நாட்டின் மீது திடீரெனப் படையெடுத்தான். பல்லவர் - சாளுக்கியர் முதற்போர் சாளுக்கியனது படையெடுப்புத் திடீரென ஏற்பட்டதால் பரமேசுவரன் சிறிது பின்வாங்க நேரிட்டது. அவன் தன்னால் இயன்றவரை போரிடத் துணிவுகொண்டு பல இடங்களில் சாளுக்கியனை எதிர்த்துப் பொருதான். பழிக்குப் பழிவாங்கி இழந்த பெருமையைப் புதுப்பிக்க விரும்பிய சாளுக்கியன் முன்னேற்பாடு தக்க முறையில் செய்து கொண்டு வந்தவன் ஆதலால் எளிதில் பல்லவனைத் தோற்கடித்தான். பல்லவன் தன் பிரதிநிதிகளாக இருந்து ஆந்திர மாகாணத்தை ஆண்டுவந்த உறவினரிடம் படைஉதவி பெற ஓடிவிட்டான் போலும்! விக்கிரமாதித்தன் களிப்புடன் காஞ்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அக்களிப்பு மிகுதியால் தன் தந்தையைப் போலவே பல்லவ நாட்டுத் தென் எல்லையான உறையூரில் சென்று தங்கினான். அவன் அங்கு ஏறக்குறைய ஒரு மாதம் தங்கி யிருந்தான்; அப்பொழுது தனது வெற்றிக்கு அறிகுறியாகக் கத்வல் என்ற கிராமத்தை ஒருவனுக்குத் தானமாக அளித்தான். பாண்டியன் முன்னேற்பாடு தான் எதிர்பார்த்தபடியே சாளுக்கியன் பல்லவ நாட்டின் மீது படையெடுத்தான் - பல்லவனை முறியடித்தான் - தந்தையைப் போலவே உறையூரில் வந்து தங்கியிருக்கிறான் என்பதைப் பாண்டியன் நெடுமாறன் கேள்வியுற்றான்; சாளுக்கியன் பெரிய கடல் போன்ற சேனையுடன் வந்திருக்கிறான் என்பதை யும் அறிந்தான். உடனே நெடுமாறன் வட எல்லைப்புறப் பாதுகாவலைப் பலப்படுத்தினான்; பாண்டிய நாட்டுப் படைகள் எல்லாம் பாண்டிய நாட்டு வடஎல்லைப் புறத்தில் குவிந்தன. சாளுக்கியன் பேராசை பாண்டியன் இவ்வாறு செய்துவந்த முன்னேற்பாட்டைச் சாளுக்கியன் அறியான். மேலும் பாண்டிய நாட்டைத் தாக்க வேண்டும் என்பது அவன் எண்ணம் அன்று. ஆயினும் விதி யாரை விட்டது? தன் ஜன்மப் பகைவனான பல்லவனை எளிதில் வெற்றிகொண்டு விட்டதால் சாளுக்கியனுக்குத் தலைகால் புரியவில்லை. அந்த மகிழ்ச்சியில் தன்னை மறந்து தன் வீரர்கட்கெல்லாம் பெருவிருந்து நடத்திக்கொண்டு உறையூரில் இருந்த அவன் சோழநாட்டு வளமையையும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி பாய்ந்து செல்வவளம் பரப்பி வரும் பாண்டிய நாட்டின் பெருமையையும் உறையூரிற் கேட்டறிந்தான்; பல்லவ நாட்டை வென்றமையால் அதன் கண்ணதாகிய சோழநாடு தனக்கு அடங்கியதாகவே கருதினான். எஞ்சியுள்ள பாண்டிய நாட்டைக் கைப்பற்றினால் விந்திய மலைமுதல் குமரிமுனை வரை நாமே ஒப்பற்ற பேரரசனாக இருக்கலாம் அல்லவா? அங்ஙனம் இதுவரை நம்முன்னோர் எவரும் இருந்திலர். நாம் முயன்று பார்ப்போம் என்று எண்ணினான். இந்த எண்ணம் நாடோறும் வளர்ந்துவந்து அடக்க முடியாத நிலைக்கு வந்தது. பேராசை பிடர்பிடித்துத் தள்ளியதால் சாளுக்கியன் பல்லவன் தன்னை இனித் தாக்கமாட்டான் என்றும், எளிதில் பாண்டியனை முறியடித்துவிடலாம் என்றும் கருதினான்; பின் வருவதை முற்ற ஆராயாது, தன் படைத் தலைவரைக் கலந்து, ஆலோசித்தான். அரசன் உளக்குறிப்பைக் குறிப்பாக அறிந்து அவன் மதிப்பைப் பெற விரும்பிய அத்தானைத் தலைவர்கள் அவனுக்குப் பேராவலை உண்டாக்கி விட்டனர். அவ்வளவே: சாளுக்கியர் படை பாண்டிய நாட்டு வட எல்லையைத் தாக்கத் தொடங்கியது. நெல்வேலிப்போர் நாம் திடீரெனத் தாக்குவதால் பல்லவனைப் போலப் பாண்டியனும் ஓடிவிடுவான்; பாண்டிய நாட்டை எளிதில் வென்றுவிடலாம் என்று சாளுக்கியன் நம்பியிருந்தான். ஆனால் பாண்டிய நாட்டு எல்லைப்புறத்தண்டை நெருங்கித் தாக்கத் தொடங்கியதும் பாண்டிய நாட்டுப் படைவீரர் போருக்கு எல்லா ஏற்பாடுகளுடனும் இருந்தனர் என்பதை அறிந்து திடுக்கிட்டான்; ஆயினும் வெற்றி வெறி விடவில்லை. அதனால் அவன், வருவது வரட்டும். போர் நடைபெறட்டும் என்று ஆணையிட்டான். பாண்டியன் நெடுமாறனே போர்க்களத்தில் பெருஞ் சேனைக்குத் தலைமை தாங்கினான். அவன் மகனான கோச்சடையன் ஒரு பக்கப் படைக்குத் தலைமை ஏற்றான். வாழையடி வாழையாகச் சேனைத் தலைவராக இருந்துவரும் அநுபவமும் ஆற்றலும் மிக்க படைத்தலைவர் பலபடைகட்குத் தலைமை பூண்டனர். இரு திறத்துப் படைகளும் வட எல்லைப்புறத்தில் நெல்வேலி என்ற இடத்திற் கடும்போர் செய்தன. இருதிறத்துப் படைகளும் போரிட்டது இரண்டு கடல்கள் போரிட்டாற் போன்ற பயங்கரமான காட்சியை அளித்தது. கணக்கற்ற வீரரும் கரிகளும் பரிகளும் குதித்தும் பாய்ந்தும் புரண்டும் முட்டியும் மோதியும் போரிட்டதால் கிளம்பிய தூளி கதிரவனை மறைத்தது; அதனால் கதிரவன் ஒளி சந்திரன் கோட்டைபோல் ஒளி மங்கிக்காணப்பட்டது. முரசொலி இடியோசை போல அச்ச மூட்டியது. உறைகளிலிருந்து வெளிப்பட்ட வாள்கள் மின்னல்போலக் கண்களைப் பறித்தன. கரிகள் கார்முகில்போல அசைந்தமை கார்காலத் தோற்றத்தை அளித்தது. போர்க்களத்தில் உயர்ந்த குதிரைகள் நின்றிருந்த காட்சி கடல் அலைகள்போலத் தோன்றியது. அவற்றின் நடுவில் யானைகள் செய்த குழப்பம் கடலில் பயமுறுத்தும் பெரிய உயிர்கள் வரும்போது உண்டாகும் சுழலை ஒத்திருந்தது. கடலி லிருந்து சங்குகள் புறப்பட்டாற்போலப் படைக் கடலிலிருந்து வீரர் சங்குகளைக் காட்டி ஊதினர். சுத்தி, கேடயம், வில், ஈட்டி, வேல் என்பன பறந்தன. பகைவர் போரிட்டு வீழ்ந்துகிடந்த காட்சி, காண்டா மிருகத்தால் முறிக்கப்பட்ட செடிகளும் மரங்களும் வீழ்ந்து கிடந்தகாட்சியை ஒத்திருந்தது. போர் வீரர்கள் நாகம், புன்னாகம் முதலிய மரங்களைப்போல அணி அணியாக நின்றிருந்தனர். யானைகள் ஒன்றோடு ஒன்று போரிட்ட பொழுது தந்தங்கள் குத்திக்கொண்டு எடுபடாது நின்றன. பரிவீரர் வாட்கள் ஒன்றோடொன்று பின்னிக் கொண்டு எடுக்க முடியாமல் நின்றனர். சிலர் தனித்தனி ஆட்களைத் தாங்கி மயிர் பிடித்துச் சண்டை செய்தனர். கதாயுதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதின. செந்நீரும் யானைகளின் மதநீரும் நிலத்தில் தோய்ந்து பரந்து கிடந்தது, தரையில் மஞ்சல் பூசினாற்போன்ற காட்சியைத் தந்தது. போர்க்களம் எங்கும் வீரர் - கரிகள் பரிகளுடைய தலை, கை, கால் முதலிய உறுப்புகள் வெட்டுண்டு பரந்து கிடந்தன. இரு பக்கத்து வீரரும் நின்று போரிட்டனர்; ஓடிச் சண்டையிட்டனர்; பாய்ந்து தாக்கினர்; பதுங்கிப் பாய்ந்தனர்; யாறாக ஓடிய இரத்தத்தின்மேல் பாலமாக அமைந்த யானை உடம்புகள்மீது வீரர்கள் நின்றுகொண்டு போரிட்டனர். இறந்த வீரர் கைகளில் வாள், வேல் முதலியன அப்படியே இருந்தன. அவர்கள் போரிட்ட நிலையில் இறந்து கிடந்தனர். அவர்கள் விழிகள் சிவந்திருந்தன. பெரிய வீரர்கள் அணிந்திருந்த அணிகள் பொடியாகிச் சிதறிக் கிடந்தன. வெற்றி என்னும் தெய்வம் ஊஞ்சலில் இருந்து முன்னும் பின்னுமாக ஆடி அசைந்தது. பாண்டியன் தன் நாட்டு உரிமைக்காக உயிர் கொடுத்துப் போரிட்டான். பகைவனே மண்ணாசையால் போரிட்டான். இந்த நெருக்கடியான சமயத்தில் பாண்டிய நாட்டிலிருந்து மேலும் மேலும் புதிய படைகள் வந்து போர்க்களத்தில் குவிந்த வண்ணம் இருந்தன. பாண்டியன் படை எண்ணிக்கையில் மிகுதிப் பட்டுக்கொண்டே வரச் சாளுக்கியன்படை குறைந்து கொண்டே வந்தது. அவனுக்குப் புதிய படைகள் வரவும் உணவுப் பொருள்கள் வரவும் வழியில்லை. அவன் தெற்கே வந்த வழியைப் பரமேசுவரன் அடைத்துவிட்டான்; அத்துடன் நில்லாது தெலுங்க நாட்டிலிருந்தும் தொண்டை நாட்டிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான போர் வீரர்களைத் தயாரித்து நெல்வேலியை நோக்கி வந்து கொண்டிருந்தான். எனவே, சாளுக்கியன் வடக்கே பல்லவனாலும் தெற்கே பாண்டியனாலும் வளைத்துக் கொள்ளப்பட்டான். பல்லவன் நெல்வேலிக்குப் பெரும்படையுடன் வருகிறான் என்பதைக் கேள்வியுற்ற சாளுக்கியன், இந்தப் பாண்டியனையே வெல்ல முடியவில்லையே. இனிப் பல்லவனும்வரின் அழிந்தோம் என்று முடிவு செய்துகொண்டு கடும்போர் புரிந்தான். அதிகம் அறைவதேன்? பாண்டியன் நெடுமாறனால் சாளுக்கிய விக்கிரமாதித்தன் நெல்வேலிப் போரில் முறியடிக்கப் பட்டான். சாளுக்கியன் பல்லவன் கைக்கு அகப்படாமல் ஓடி விடலாம் என்று எண்ணியவனாய் நெல்வேலிப் போர்க்களத்தி லிருந்து வடக்கு நோக்கிச் சென்றான். அதற்குள் பல்லவன் படை அவனைப் பெருவள நல்லூர்* என்னும் இடத்தில் வளைத்துக் கொண்டது. பாவம்! சாளுக்கியன் என்ன செய்வான்? எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு என்ற வள்ளுவர் வாக்குக்கு இணங்க நடவாமையால் தன்னைத் தானே நொந்துகொண்டான்; ஆயினும் வீரன் ஆதலால் எஞ்சி யிருந்த தன் சேனையுடன் பல்லவனைத் தாக்கிப் போரிட்டான்; அப்போரில் தான் ஒருவனே எஞ்சினான்; உருமாறித்தப்பித் தன்னாடு சேர்ந்தான் என்று பரமேசுவரவர்மன் பட்டயம் பகர்கின்றது. அழியாப்புகழ் சாளுக்கிய வீரனைத் தமிழ் வீரனாகிய நெடுமாறன் நெல்வேலிப் போரில் தோற்கடியாது விடின் தமிழுலகம் முழுவதும் சாளுக்கியர் ஆட்சிக்கு உட்பட்டுவிடும். அஃதாவது தமிழர் வேற்றரசர் ஆட்சிக்கு அடிமைப்பட்டிருப்பர். அத்துடன் பல்லவ அரசனும் தனிப்பட்ட முறையில் அவனை வென் றிருத்தல் இயலாது; அதனால் பல்லவ அரசும் ஒழிந்திருக்கும். எனவே, தமிழகத்தின் உரிமையைக் காத்த பெருமை மஹாவீரனாகிய சாளுக்கிய விக்கிரமாதித்தனை வென்ற பெருமை நமது தமிழ் அரசனான நெடுமாறனுக்கே உரியதாகும். அவ்வெற்றிக்குக் காரணம் அவன் ஆழ்ந்த சிந்தையுடன் செய்த போருக்குரிய முன்னேற்பாடே ஆகும் அன்றோ? இங்ஙனம் தமிழ் நாட்டு உரிமையை நெல்வேலிப் போரால் நிலைநாட்டிய பெருந் தமிழ் வீரனைத் தமிழ் மக்கள் பலநூற்றாண்டுகள் மறக்கவில்லை. அதனால் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அவனை, நிறைக் கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் என்று ஏத்தெடுப்பாராயினர். 8. சோழன் - இராஜராஜன் முன்னுரை பல்லவர் ஆதிக்கத்தில் ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகள் சோழநாடும் தொண்டை நாடும் இருந்தன. கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ அரசனை முறியடித்து ஆதித்த சோழன் என்பவன் சோழப் பேரரசை நிலை நாட்டினான். அதுமுதல் ஏறத்தாழ முந்நூறு ஆண்டுகள் சோழர், துங்கபத்திரைமுதல் கன்னிமுனைவரைப் பட்ட பெருநிலப் பகுதிக்கு ஒப்புயர்வற்ற, முடி மன்னராக விளங்கினர். இங்ஙனம் பேரரசராக விளங்கிய மன்னருள் சோழப் பெருநாட்டை அமைத்த முதல் அரசன் இராஜராஜன் ஆவன். வடக்கே கங்கைவரையும் கிழக்கே சாவகத்தீவு வரையும் தன் வீரத்தை விளக்கிய சோழப் பேரரசன் இராஜேந்திரன் ஆவன். இந்த இரண்டு தமிழப் பேரரசர் பிற்கால வரலாற்றில் தமிழர் வீரத்தை உலகறியச் செய்த பெருமக்களாவர். ஆதலின் இவர்கள் வீர வரலாற்றை இக்காலத் தமிழராகவுள்ள நாம் அறியக் கடமைப் பட்டிருக்கிறோம் அல்லவா? இராஜராஜன் பேரவா இராஜராஜ சோழன் தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்டுவந்தான். அவன் தென்னாட்டைக் கட்டியாளவேண்டும் என்னும் பேரவாக்கொண்டான்; அதனால் தன் காலாட் படையையும் கப்பற் படையையும் பெருக்கினான்; படைக்கருவிகளை எண்ணிலவாகச் செய்வித்துக் குவித்தான்; படையெடுக்கவேண்டிய முறை-போர் செய்யத்தக்க முறை-வென்ற நாடுகளை நடத்தவேண்டிய முறை இவற்றைத்தன் படைத்தலைவர்க்கு விளக்கமாக உரைத்து அவர்கள் தலைமையிற் படைகளைச் சேர - பாண்டிய நாடுகள் மீது சோழன் ஏவினான். பெரும் படைகட்கு முன் சேர - பாண்டியர் நிற்க இயலாது தோற்றனர். சோழனது கடற்படை பாண்டிய நாட்டுத் துறைமுகங்களையும் சேரநாட்டுத் துறைமுகங்களையும் தன் வசப்படுத்தியது; சேர பாண்டியர் மரக்கலங்களை அழித்தது. உள் நாட்டிற் புகுந்த சோழர் படை, வீரா வேசத்துடன் போரிட்டு இரண்டு நாடுகளையும் கைப்பற்றியது. இங்ஙனம் தமிழகம் முழுவதும் தன் ஆட்சியின்கீழ் வந்ததால் இராஜராஜன் மும் முடிச்சோழன் என்று பெயர் பெற்றான். இலங்கைப் போர் தமிழகத்தை வென்ற இராஜராஜன் அதனை அடுத்த இலங்கைத்தீவின் மீது நாட்டத்தைச் செலுத்தினான்; தனது வன்மை மிக்க கடற்படையின் உதவியால் ஆயிரக்கணக்கான வீரரை இலங்கைத் தீவில் இறக்கினான். ஈழப் படைகட்கும் சோழர் படைகட்கும் கடும்போர் நடந்தது. போர், பல இடங்களில் பல நாள் கடுமையாக நடந்தது. முடிவில் இலங்கை அரசன் தென் இலங்கைக்கு ஓடிவிட்டான். அதனால் வட இலங்கை சோழன் கைப்பட்டது. இராமன் இலங்கையைச் சேரக் குரங்குகளில் உதவியால் பாலத்தைக் கட்டினான்; அரும் பாடுபட்டுக் கூரிய அம்புகளை விட்டு இராவணனைக் கொன்றான். ஆனால் இராஜராஜன் கப்பல்களைக் கொண்டு இலங்கையை அடைந்தான்; இலங்கை அரசை அழித்தான். ஆதலின் இராஜராஜன் இராமனினும் மேம்பட்டவன் என்னும் செய்தி சோழர் பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இராஜராஜன் பெயர்கொண்ட சிவன் கோவில் ஒன்று கட்டப் பட்டது. அஃது இன்றும் அங்கு இருந்து தமிழரசன் ஆற்றலை உலகிற்கு அறிவித்து வருகின்றது. தமிழகத்துக்கு அப்பால் சேர நாட்டிற்கு வடக்கே இருந்த குடகு, கங்க நாடு, நுளம்பர் நாடு, தடிகைபாடி முதலிய நாடுகளை வெல்ல வேண்டும் என்று இராஜராஜன் விரும்பினான். அவன் விருப்பப்படியே சோழரது கடல் போன்ற சேனை மேற்கிலும் வட மேற்கிலுமாகப் பிரிந்து சென்று அந்த நாடுகளை வென்றன. தொண்டை நாட்டுக்கு வடக்கே கிருஷ்ணையாறுவரை இருந்த தெலுங்கநாடு சிற்றரசர் பலரது ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இராஜராஜன் அங்கும் படைகளை ஏவி அந்த நாட்டையும் தன் ஆட்சிக்கு உட்படுத்தினான். அரசியல் கொள்கை இராஜராஜன் வென்ற நாடுகளில் பெரும்பாலன, அந்த நாட்டு அரசர் ஆட்சியிற்றான் விடப்பட்டன. அந்த அரசர் சோழப் பேரரசனுக்கு அடங்கித் தம் நாட்டை ஆண்டுவர வேண்டும்; போர்க் காலங்களில் படைத் துணைபுரிய வேண்டும்; ஆண்டு தோறும் நாட்டு வருவாயில் ஒரு பகுதி பேரரசனுக்குச் செலுத்த வேண்டும் என்பனவே அவன் விதித்த விதிகள். இவற்றுக்கு மாறாக நடந்த அரசர்களே அரசவுரிமையை இழந்தவர்கள். அவர்கட்குப் பதிலாகச் சோழ அரச மரபினர் அந்த நாடுகளை ஆள விடப்பட்டனர். இதுவே சோழர் கையாண்ட அரசியல் கொள்கையாகும். முன்னீர்ப் பழந்தீவுகள் இராஜராஜன் குமரிமுனைக்குக் தென்மேற்கே இந்துப் பெருங்கடலில் இருக்கும் மாலத்தீவுகளின் மீது படை யெடுத்தான். அவை அக்காலத்தில், முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் எனப்பட்டன. அதற்குக் காரணம் அவை எண்ணிக்கையில் பன்னீராயிரம் தீவுகளாக இருந்தனவோ, என்னவோ தெரியவில்லை. அத்தீவுக்கட்கு அரசர் தம்மைப் பன்னீராயிரம் தீவுகட்கு அரசர் என்று கூறுதல் மரபு இராஜராஜன் தன் கடற்படை வன்மையால் அத்தீவுகளைக் கைக்கொண்டான். சோழர் - சாளுக்கியர் போர் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட நாடு வேங்கைநாடு என்பது. அது கி. பி. 7-ம் நூற்றாண்டு முதல் சாளுக்கியர் ஆட்சியில் இருந்தது. அதனை ஆண்டவர் கீழைச் சாளுக்கியர் எனப்பட்டனர். இராஜராஜன் காலத்தில் வேங்கைநாட்டு அரியணைக்குப் பங்காளிகள் போட்டியிட்டனர். விமலாதித்தன் என்பவனும் அவன் தமையனும் ஒரு கட்சியினர். இவர்கள் இராஜராஜன் உதவியை நாடினர். எதிர்க் கட்சியினர் மேலைச் சாளுக்கியர் உதவியை நாடினர். இராஜராஜன் தன் செல்வமைந்தனான இராஜேந்திரன் தலைமையில் பெரும்படையை வேங்கி நாட்டிற்கு அனுப்பினான்; சோழன் படை வருவதை அறிந்த மேலைச் சாளுக்கிய அரசனான சத்யாரயன் தன்னைச் சரண்புகுந்த கட்சியாருக்காகப் பெரும் படையுடன் வந்து இராஜேந்திரனைத் தாக்கினான். இராஜேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டிற்குள் நுழைந்தான்; பல ஊர்களை எரியூட்டினான்; எதிர்த்தாரைக் கொன்று குவித்தான்; சாளுக்கியர் படையைப் பல இடங்களில் முறியடித்தான்; மேலைச் சாளுக்கியன் போர்க்களத்திலிருந்து ஓடி ஒளிந்தான். இந்த வெற்றியால், சோழர் கீழைச் சாளுக்கிய (வேங்கை) நாட்டிற்கு விமலாதித்தன் அண்ணனை அரசனாக்கினர். இராஜராஜன், விமலாதித்தனுக்குத் தன் மகளான - இராஜேந்திரன் தங்கையான - குந்தவையை மணம் செய்து கொடுத்தான். இந்தப் புதிய உறவினால் சோழரது செல்வாக்குக் கோதாவரியாறுவரை பரவியது. இஃது தமிழரசனது அரசியல் அறிவுநுட்பத்தைக் காட்டுகிறதன்றோ? மகேந்திர மலையில் வெற்றித்தூண் சோழனது படை வலியால் விமலாதித்தன் கட்சியார் வேங்கை நாட்டு அரசர் ஆனதைச் சிற்றரசர் எதிர்த்தனர். அவர்கட்கு உதவியாகவோ அல்லது மேலைச் சாளுக்கியன் தூண்டுதலாலோ மகேந்திர மலைப்பகுதியைச் சேர்ந்த அரசன் ஒருவன் வேங்கை நாட்டைத் தாக்கினான். உடனே இராஜேந்திரன் ஒரு படையுடன் சென்று அந்த அரசனைப் போரில் புறங்காட்டச் செய்தான்; அவனது நாட்டைக் கொள்ளையடித்தான்; தன் வெற்றிக்கு அடையாளமாகத் தூண் ஒன்றை நட்டான். அத்தூணில் குலூத நாட்டு அரசனான விமலாதித்தனை இராஜேந்திர சோழன் வென்றான் என்பது குறிக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் தமிழ் அரசன் மகேந்திர மலையில் வெற்றித்தூண் நாட்டியதும் அத்தூணில் தமிழில் தன் வெற்றியைப் பொறித்துள்ளதும் பாராட்டத்தக்கன அல்லவா? அழியாப் புகழ் இங்ஙனம் இராஜராஜன் வடக்கே கிருஷ்ணை முதல் தெற்கே குமரிமுனைவரையில் பெருநாட்டை ஏற்படுத்தி ஆண்டது, அவனது அரசியல் ஆண்மையையும் போர்வன்மையையும் குன்றின் மீதிட்ட விளக்கென ஒளிரச்செய்கிறது. சிறந்த கடற்படையை வைத்துக்கொண்டு சேரபாண்டியரை வென்றதும், இலங்கை, மாலத்தீவுகள் ஆகியவற்றை வென்றதும் தமிழரது கடற்படை வன்மையையும் கடற்படையை வைத்து ஆள்வதில் தமிழர் திறனுடையவரே என்பதையும் நன்கு அறிவிப்பதாகும். ஈழத்தை வென்று அங்குக் கோவில் ஒன்றைக் கட்டிச் சோழர் காலக் கட்டத் திறனைக் கடல் கடந்த நாட்டிலும் தெரியச்செய்த ஆண்மையாளன் புகழை என்னென்பது! இராஜராஜன் போரிலும் அரசாட்சியிலும் சிறந்திருந்தாற் போலவே சமயத் துறையிலும் இசை-ஓவியம்-நடனம்-நாடகம், மருத்துவம் முதலிய கலை வளர்ச்சிக்குரிய செயல்களைச் செய்வதிலும் சிறந்திருந்தான். அவனது ஒப்புயர்வற்ற வரலாறு அவனை மஹா ராஜராஜ* என்று வரலாற்று ஆசிரியரைக் கூறச் செய்தது. அப்பெருமகன் நமது தமிழ்ப் பேரரசன் என்பதை எண்ணி, நாம் வீறுகொள்வதில் வியப்பில்லை அன்றோ? 9. இராஜேந்திர சோழன் இளவரசன் தந்தையினும் சதமடங்கு தனயன் என்பது பெரியோர் வாக்கு. அதற்கு இணங்கப் பேரரசனான இராஜராஜனுக்குப் பன்மடங்கு வலியனாகவே இராஜேந்திரன் விளங்கினான். அவன் இளவரசனாக எறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் இருந்தான். அவன் பட்டம் பெற்ற பொழுது அவன் வயது ஏறக்குறைய நாற்பத்தைந்து என்னலாம். எனவே, அவ்வீரன் தன் வாலிப வயதைத் தன் இளவரசுப் பட்டத்திலேயே கழித்தான்; இளவரசனாக இருந்தே தந்தையின் சார்பாகத் தமிழ்ப்பெரு நாட்டில் மாகாணத் தலைவனாக இருந்து அரசாட்சி புரிந்தான்; மஹாதண்ட நாயகனாக இருந்து பெரும் போர்களை நடத்தி வெற்றி பெற்றான்; இளவரசனாக இருந்தபோதே மேலேச் சாளுக்கியனை நடுங்கச் செய்தான். இவற்றால் அவன் அரசுபெற்றபொழுது அரசியல் அறிஞனாகவும் மிகச் சிறந்த போர் வீரனாகவும் விளங்கினான். இவற்றுடன் அப் பெருமகன் சிறந்த தமிழ்ப் புலவனாகவும் விளக்கமுற்றுப் பண்டிதசோழன் என்று பெயர்பெற்று இருந்தான். இளவரசன்-இராஜாதிராஜன் தன் தந்தையின் ஆட்சிக் காலத்தில் தான் இளவரசனாக இருந்து பல போர்களை நடத்தி நாட்டைப் பாதுகாத்து வந்தாற்போலவே, இராஜேந்திரன் தான் பட்டம் பெற்றதும் தன் மைந்தருள் தக்கவனான் இராஜாதிராஜனை இளவரசனாக்கிச் சோழப் பெருநாட்டை ஆளச் செய்தான்; இரண்டாம் மகனான இராஜேந்திர தேவனை ஒரு மாகாணத்திற்குத் தலைவ னாக்கினான்; மற்றோரு மகனான வீர ராஜேந்திரனை வேறொரு மாகாணத் தலைவனாக இருக்கச் செய்தான். பேரரசன் இங்ஙனம் தன்மைந்தரைப் பல மாகாணங்களில் அரசாளச் செய்து கவலையின்றி வாழ்ந்து வந்தான். இலங்கைப் போர் இராஜராஜன் காலத்தில் வட இலங்கை சோழர் ஆட்சிக்கு உட்பட்டது அன்றோ? தென் இலங்கைக்கு ஓடிய அரசன், இராஜேந்திரன் பட்டம் பெற்றவுடன் வட இலங்கையை மீட்க முயன்றான்; பெரும்படை திரட்டி வட இலங்கையைத் தாக்கி னான். அதனை அறிந்த இராஜேந்திரன் தன் கப்பற்படையின் ஒரு பகுதியை இலங்கைக்கு அனுப்பினான். ஆயிரக்கணக்கான சோழ வீரர் கப்பல்களில் சென்றனர்; வட இலங்கையில் இருந்த சோழப் படையுடன் சேர்ந்தனர்; வன்மையாகப் போரிட்டனர். இலங்கை அரசன் சிறைப்பட்டான். அவன் முடியும் அரசமாதேவியர் முடிகளும் நகைகளும் உயர்ந்த மணிகளும் சோழ வீரர் வசமாயின. இவற்றுடன் ஐம்பது ஆண்டுகட்குமுன் சோழரிடம் தோற்ற பாண்டியன் இலங்கை இறைவனிடம் ஒளித்து வைத்திருந்த இந்திரன் ஆரம் என்ற விலை உயர்ந்த மணிமாலையும் அகப்பட்டது. இலங்கை மன்னனே அகப்பட்டதால் முழு இலங்கையும் இராஜேந்திரன் வசப்பட்டது. இலங்கை வேந்தன் தஞ்சாவூருக்குக் கொண்டுவரப்பட்டான். அவன் அங்குப் பன்னிரண்டு வருடம் இருந்து இறந்தான். அவன் மகன் தலைமறைவாக இலங்கையில் வளர்க்கப்பட்டு வந்தான். பாண்டி நாட்டுப் போர் இராஜேந்திரன் இலங்கைப் போரை நடத்தி வந்த பொழுது பாண்டிய மரபினர் நாம் விடுதலை பெற இதுவே தக்கசமயம் என்று கலகம் செய்யத் தொடங்கினர். இதனை உணர்ந்த இராஜேந்திரன் சினங்கொண்டு தானே நேரிற் படை எடுத்துச் சென்றான். உலகப் புகழ்பெற்ற பெருவீரனான இராஜேந்திரனே வருவதைக் கேட்ட பகைவர் பெரும்படையைத் தயாரித்தனர்; எனினும், பாவம்! படுதோல்வி அடைந்தனர்; பொதிய மலைக் காடுகளிற் சென்று புகுந்துகொண்டனர். பாண்டிய நாட்டு அரும்பொருள்கள் பல இராஜேந்திரற்குக் கிடைத்தன. அவன் பாண்டி நாட்டிற்கும் சேர நாட்டிற்கும் தன் மகன் ஒருவனைப் பிரதிநிதியாக இருந்து ஆண்டுவரச் செய்தான். கங்கை கொண்ட சோழன் புதிய தலைநகரம் இராஜேந்திரன் தன் பெயரால் தலைநகரம் ஒன்றை அமைக்க மனம் கொண்டான்; அதற்கு உரிய இடத்தைத் தன் தந்தை புதியதாக உண்டாக்கிய ஜயங்கொண்ட சோழபுரத்திற்கு அருகில் தேர்ந்தெடுத்தான்; அங்கு இருந்த காடுகளை ஒழித்தான்; நிலத்தைப் பண்படுத்தி நகரத்தை அமைக்கத் தொடங்கினான்; தன் பெரு நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த சிறந்த கட்டட வல்லுநரை வரவழைத்தான்; தான் விரும்பியவாறு அழகிய அரண்மனையையும் பெரிய வியத்தகு வேலைப்பா டமைந்த சிவன் கோவிலையும் பெரிய மாடமாளிகைகளையும் கூடகோபுரங்களையும் அமைக்கச் செய்தான். அந்த நகரத்தின் மீது கங்கை நீரைத் தெளித்தல் நலம் என்று பெரியோர் கூறினர் போலும்! உடனே தன் சேனைத் தலைவருள் ஒருவனது தலைமையில் பெரிய பண்பட்ட படை ஒன்றை ஏவிக் கங்கை நீரைக் கொணர ஏற்பாடு செய்தான். வடநாட்டில் போர் இங்ஙனம் இராஜேந்திரனால் அனுப்பப்பட்ட படை, வேங்கைநாடுவரை எதிர்ப்பின்றிச் சென்றது. அப்படை கோதாவரிக்கு வடக்கே சென்ற பொழுது அங்கங்கு இருந்த சிற்றரசர் பலர் அப்படையினது நோக்கத்தை அறியாராய் வந்து தாக்கினர். சோழர் படை அவர்களை எளிதில் வென்று ஒரிஸா மாகாணத்தை அடைந்தது. அங்கு இருந்த சிற்றரசர் பலர் ஒன்று சேர்ந்து சோழப் படையை வழிமறித்துப் போரிட்டனர். பண்பட்ட பேரரசன் படைக்கு முன் அச்சிற்றரசர் படைகள் சூரியனுக்கு எதிரில் தோன்றும் மின்மினி ஆயின. இங்ஙனம் பல போர்க்களங்களில் வாகை சூடிச் சென்ற படை மேற்கு வங்காளத்தை அடைந்தது. அந்தப் பகுதியில் பேரரசனாக இருந்தவன் மகிபாலன் என்பவன். அவன் தன் சிற்றரசரைத் துணையாகக் கொண்டு சோழப்படையை எதிர்த்தான். போர் ஓரளவு கடுமையாகவே நடந்தது. முடிவில் மகிபாலன் தோற்றுச் சிறைப்பட்டான். கங்கைகொண்ட சோழன் இப்போர்கட்குப் பிறகு சோழப்படை கங்கையாற்றை அடைந்தது; பொற்குடங்களில் கங்கை நீரை முகந்துகொண்டது; பேரரசன் ஆணைப்படி, அக்குடங்களை, தோற்றமன்னவர் முடிமீது வைத்து மீண்டது. இங்ஙனம் தனது வீரப்படை வாகைசூடி வருதலைக் கேள்வியுற்ற இராஜேந்திரன் அப் படையை வேங்கைநாட்டிலிருந்து வரவேற்றான்; அங்கிருந்து வழிநெடுப் பல க்ஷேத்திரங்களில் தான தருமங்கள் செய்து கொண்டே புதிய நகரத்தை அடைந்தான்; அங்குக் கங்கை நீரைத் தெளித்தான்; அந்நகரத்திற்குக் கங்கைகொண்ட சோழபுரம் எனப் பெயரிட்டான். அன்று முதல் இராஜேந்திரன் கங்கை கொண்ட சோழன் எனவும் கங்கை கொண்டான் எனவும் பெயர் பெற்றான். கடாரம்கொண்ட சோழன் அக்கால வாணிகம் இராஜராஜன்-இராஜேந்திரன் காலங்களில் சோழ நாட்டுத் தமிழர், சீனம்-மலேயா-கிழக்கு இந்தியத் தீவுகள் முதலிய நாடுகளுடன் சிறந்த முறையில் கடல் வாணிகம் செய்து வந்தனர். மலேயா-கிழக்கிந்தியத் தீவுகள் ஸ்ரீவிஜயநாடு எனப்பட்டன. அதனால் இரு நாடுகட்கும் கடல் வாணிகம் சிறப்புற நடந்தது. அவன் வேண்டு கோட்படி சோழ மன்னர் நாகப்பட்டினத்தில் பௌத்த விஹாரங்கள் இரண்டினைக் கட்ட வசதி அளித்தனர்; கிராமம் ஒன்றை மானியமாக அளித்தனர். இக்கூட்டுறவினால் தமிழ் வாணிகர் ஆயிரக் கணக்கில் கடல் கடந்த நாடுகளிற் குடியேறி வசித்து வந்தனர்; சீன நாட்டுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். சோழன் படையெடுப்பு இராஜேந்திரன் ஆட்சியிறுதியில் ஸ்ரீவிஜய நாட்டிற்கும் சோழப் பெருநாட்டிற்கும் என்ன மனத்தாங்கள் ஏற்பட்டது - ஏன் எற்பட்டது - என்பன விளங்கவில்லை. இராஜேந்திரன் கடற்படை ஆயிரக்கணக்கான சோழ வீரரை ஏற்றிக்கொண்டு கடல் கடந்து சென்றுது; முதலில் மாநக்கவாரம் (நிக்கோபர் - தீவுகள்) கைக்கொண்டது; பிறகு மலேயா, சுமத்ரா, ஜாவா முதலிய நாடுகளில் இருந்த துறைமுகங்களில் வீரர்களை இறக்கியது. இறங்கிய சோழ வீரர் பல முக்கியமான நகரங்களைக் கைப்பற்றினர். பகைவரது முக்கியமான நகரம் கடாரம் என்பது. அஃது இப்பொழுது கெடா எனப்படுகிறது. இங்ஙனம் கடாரம் முதலிய நாடுகள் கைக்கொள்ளப்பட்ட பின் அந்நாட்டு அரசன் சோழப் பேரரசனுடன் சமாதானம் செய்துகொண்டான் போலும்! அதுமுதல் இராஜேந்திரன் கடாரம்கொண்ட சோழன் என்று அழைக்கப்பட்டான். இப்போரில் சோழ வீரர் வென்ற இடங்களைப் படத்திற் காண்க. அரிய செயல் இக்கடற்போரினால் இராஜேந்திரன், வரலாற்றில் மிக உயரிய இடத்தைப் பெற்றான். சந்திரகுப்த மோரியன் முதலிய வடநாட்டுப் பேரரசர் எவருமே இச்செயல் செய்ததில்லை. சமுத்திரகுப்தன் தென்னாடு நோக்கி வந்து மீண்டாற் போலவே இராஜேந்திரனும் வடநாடு சென்று வெற்றி முழக்கத்துடன் மீண்டான். ஆனால் வட நாட்டுப் பேரரசன் எவனுமே கடல் கடந்து நாடு பிடித்ததில்லை; வெற்றிகொண்டதும் இல்லை. இத்தகைய செயற்கருஞ் செயலைச் செய்த காரணத்தால் நமது தமிழ் அரசனாகிய இராஜேந்திரன் இந்தியப் பேரரசருள் முதல்வன் என்னும் இடத்தைப் பெற்றான் என்னல் தவறாகாது. இங்ஙனம் தமிழ் மரபுக்கு அழியாத பெருமையைத் தேடித்தந்த அப்பெரு மகன் பொன்னடிகளைப் போற்றுவோமாக! 10. இராஜேந்திரன் வீர மக்கள் I இராஜாதிராஜன் ஈழப்போர் இராஜேந்திரன் காலத்தில் இலங்கை முழுவதும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டது ஆனால் இலங்கை இளவரசன் இரகசியமாக இலங்கையில் வளர்க்கப்பட்டான் என்பன கூறப்பட்டன அல்லவா? அந்த இளவரசன், இராஜாதிராஜன் பட்டம் பெற்ற காலத்தில் உற்ற வயதடைந்தான். அவன் நாட்டுப் பற்று மிக்க இலங்கை இளைஞரைத் தன் படையிற் சேர்த்துச் சோழர் ஆதிக்கத்தை இலங்கையிலிருந்து ஒழிக்க முற்பட்டான். அவனுக்கு உதவியாகத் தன் குடும்பத்துடன் ஈழத்திற்கு வந்திருந்த கன்னோசி அரசனான வீரசலாமேகன் என்பவன் இருந்தான். இலங்கை இளவரசன் தனது ஆட்சிக்கு உலைவைக்கப் பார்ப்பதை அறிந்த இராஜாதிராஜன் பெரும்படையுடன் ஈழ நாட்டை அடைந்தான்; இளவரசனைப் போரில் முறியடித்தான்; அவனுக்கு உதவியாக இருந்த நாட்டை இழந்து ஈழத்தில் அடைக்கலம் புகுந்திருந்த பாண்டியனையும் பறக்கச் செய்தான்; வீரசலாமேகனையும் புறங்காட்டச் செய்தான்; அவனுடைய மனைவியையும் அக்கையையும் பிடித்தான்; அவன் தாயின் மூக்கை அரிந்தான். ஏராளமான செல்வம் சோழன் கைப்பட்டது. சோழர் - சாளுக்கியர் போர் I இராஜாதிராஜன் காலத்தில் மேலைச் சாளுக்கிய அரசனாக இருந்தவன் ஆஹவமல்லன் என்பவன். அவன் சிறந்த போர் வீரன். அவன் கீழைச் சாளுக்கிய நாட்டைத் தன் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ள முயன்றான். அதனால் சோழருடன் போரிடவேண்டியவன் ஆனான், இராஜாதிராஜன் சாளுக்கியப் படையைத் தாக்கிக் கடும் போர் செய்தான்; தானைத்தலைவர் பலரைக் கொன்றான்; காம்பீலி நகரத்தைத் தாக்கி அங்கு இருந்த சாளுக்கியர் அரண்மனையை இடித்துத் தள்ளினான். சோழனுக்கு ஆற்றாது ஆஹவமல்லன் பின் வாங்கிச் சென்றான். சோழர் - சாளுக்கியர் போர் II மேலைச் சாளுக்கியரைச் சேர-பாண்டியரைப் போலத் தங்கட்கு அடங்கிய அரசராகக் செய்யாதவரை தங்கட்கு அவர்களால் ஓயாது போராட்டங்கள் நடந்தே தீரும் என்பதை இராஜாதிராஜன் நன்கு உணர்ந்தவன். மேலும் போர் இன்றி அமைதியாக இருந்தனன் என்று கூறுவதற்கு அவன் வீரவரலாறு இடம் தந்திலது. எப்பொழுதும் போர்செய்து கொண்டிருப்பதையே அவன் விருப்பமாகக் கொண்டவன். அதனால் அவன் இரண்டாம் முறையாக ஆஹவமல்லனைத் தாக்கச் சென்றான். இராஜாதிராஜன் தன் தம்பியும் இளவரசனுமான இராஜேந்திர தேவனை உடன் அழைத்துச் சென்றான்; இரட்டபாடி (மேலைச் சாளுக்கிய நாடு) எல்லைக்குட் புகுந்து நகரங்களையும் கிராமங்களையும் தீக்கு இரையாக்கினான். சோழன் தனது நாட்டைப் பாழாக்குவதை அறிந்த ஆஹவமல்லன் பெருஞ்சீற்றங்கொண்டு படையொடு விரைந்தான். இருதிறத்தாரும் கிருஷ்ணையாற்றின் கரையில் உள்ள கொப்பம் என்ற இடத்திற் சந்தித்தனர். போர் கடுமையாக நடந்தது. வாழ்வு, அல்லது இறப்பு என்ற முறையில் இருதிறத்தாரும் போரிட்டனர். ஆஹவமல்லன் தந்திரத்தில் கைதேர்ந்தவன். அவன், இராஜாதிராஜனைக் குறிபார்த்துக் கொல்வோமாயின், சோழவீரர் பின்னிடுவர்; அத்தக்க சமயத்தில் அவரைப் புறங்காட்டி ஓடச் செய்யலாம் என்று எண்ணினான். அதனால் அவனும் அவன் ஆட்களும் இராஜாதிராஜன் ஏறியிருந்த களிற்றையும் அவனையுமே குறிபார்த்து அம்புகளைச் சோனைமாரி போல எய்தனர். சோழ வேந்தன் வாட்போர் புரிந்துகொண்டிருந்த அமயம் அவனது யானை அம்புகள்பட்ட காயங்கள் பொறாது வீழ்ந்தது. இராஜாதிராஜனும் மார்பில் அம்பு தைக்கப் பெற்று யானைமீதிருந்தபடியே உயிர் நீத்தான்; அதனால் யானைமேல் துஞ்சிய தேவர் எனப்பட்டான். சிறந்த வீரன் இராஜாதிராஜன் பிறவி வீரன்; தந்தையின் காலத்திலும் ஓயாத போர்கள் புரிந்தான்; தன் காலத்திலும் ஓயாத போர்களே செய்தான்; அவனுக்கு ஓய்வு இல்லை பேரரசைக் கட்டிக் காப்பதே அவன் வேலையாக இருந்தது. அவன் அஞ்சா நெஞ்சினான்; பெரிய வீரன். அச்சிறப்பு நோக்கியே, இராஜேந்திர சோழன் தன் மூத்த மகனுக்குப் பட்டம் அளியாமல் இரண்டாம் மகனான இராஜாதிராஜனை இளவரசனாக்கிப் பின் முடிபுனையத் தகுதியுடையவன் ஆக்கினான். தந்தை இருந்த பொழுதே இராஜாதிராஜன் அசுவமேதம் செய்தான் எனின், அவன் வீரத்தை யாரேவிரித் துரைப்பார்! இராஜேந்திரதேவன் கொப்பத்துப் போர் பெருவீரனான இராஜாதி ராஜனுக்கு மக்கள் இருந்தனர் எனினும் அவன் தன் தம்பியான இராஜேந்திர தேவனையே இளவரசனாக்கினான் எனின், அவனது வீரமும் ஆண்மையும் அரசியல் அறிவும் பாராட்டத்தக்கவை அல்லவா? கொப்பத்துப் போரில் இராஜாதி ராஜன் இறந்ததும், ஆஹவமல்லன் எதிர்பார்த்தது போலவே-சோழ வீரர் திகைப்படைந்து அச்சங் கொண்டு சிதறி ஓடத் தொடங்கினர். அந்த நெருக்கடியான நிலையில் பின் இருந்தஇராஜேந்திர தேவன் முன் சென்று படைவீரர்க்கு ஊக்க மூட்டிப் போரை நடத்தினான்; தனிவாள் கொண்டு சாளுக்கியர் படையைச் சின்ன பின்னப் படுத்தினான்; அரசனை இழந்தோம் என்ற ஆத்திரத்தினால் வெறி கொண்ட சோழவீரர், வீர ஆவேசம் கொண்டு போரிட்டனர். இராஜேந்திரன் மீது கணக்கற்ற அம்புகள் தைத்தன. உதிரம் பெருகியது. எனினும் அவன் கவலைப்படவில்லை; கணக்கற்ற தலைவர்களை வெட்டிச் சாய்த்தான்; சாளுக்கியர் படை நிலைகலங்கியது. ஆஹவமல்லனுக்கு உதவியாக வந்த சிற்றரசர் சிலர் கொல்லப் பட்டனர்; எஞ்சியோர் ஓட்ட மெடுத்தனர். அவர்கட்கு முன் ஆஹவ மல்லன் முகம் கவிழ ஓடினான். போர்க் களத்தில் கணக்கற்ற யானைகள், குதிரைகள் அகப்பட்டன; அரசமாதேவியர் பிடிபட்டனர்; உயர்ந்த மணிகளும் பொன் நகைகளும் கிடைத்தன. இராஜேந்திரன் அப்போர்க் களத்திலேயே (அதுகாறும் எந்தச் சோழ அரசனும் செய்யாதது) சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்டான்; பின்னர்க் கோலாப்பூர் வரையும் பகைவரை விரட்டிச் சென்றான்; கோலாப்பூரில் வெற்றித் தூணை நாட்டித் தன் நாடு மீண்டான். முடக்காறு போர் இரண்டு ஆண்டுகட்குப் பிறகு ஆஹவமல்லன் தொல்லை மீட்டும் தலை காட்டியது. இராஜேந்திர தேவன் தன் மகனான இராஜ மஹேந்திரன் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினான். அவ்வீர மகன் அப்படையுடன் சென்று முடக்காறு என்னும் இடத்தில் பகைவனுடன் போரிட்டு வென்றான். ஆஹவ மல்லன், பாவம்! இந்த இரண்டாம் போரிலும் புறங்காட்டி ஓடினான். இலங்கைப் போர் இங்ஙனம் சோழ வேந்தன் வடக்கே சாளுக்கியருடன் கடும்போர் செய்துகொண்டிருந்த சமயத்தில் இலங்கையில் மீண்டும் கலகங்கள் நடைபெற்றன. இராஜேந்திர தேவன் தலை நகரத்தில் இருந்தபடியே ஒரு பெருஞ் சேனையை ஈழநாட்டிற்கு அனுப்பினான். அப்படை சென்று கொடிய போர் உடற்றியது. முன்சொல்லப்பட்ட வீரசலாமேகன் மணிமுடி இழந்தன்; இலங்கை அரசனுடைய மக்கள் இருவர் சிறைப்பட்டனர். இலங்கைக் குழப்பம் பேரளவு அடங்கியது. கூடல் சங்கமப் போர் I வேங்கைநாட்டைத் தம் ஆதிக்கத்தில் வைத்துக் கொள்ள மேலைச் சாளுக்கியர் படாதபாடுபட்டனர். சோழர் வேங்கை அரசர்க்குத் தம் பெண்களை மணம் செய்துகொடுத்து நெருங்கிய உறவுகொண்டு, அவர்களைத் தம் ஆதிக்கத்திலிருந்து அசைக்க முடியாதபடி செய்துவிட்டனர். இதனால் மனம் பதறியே ஆஹவமல்லன் சோழருடன் பல முறை போரிட்டான்; தோற்றான். மூன்றாம் முறையாகத் தன் படைகளை இரண்டாகப் பிரித்து வேங்கைநாட்டைத்தாக்க ஒரு படையை ஏவினான்; மற்றொரு படையைக் கோதாவரியம் கிருஷ்ணையும் சந்திக்கும் இடத்தில் (கூடல் சங்கமத்தில்) வைத்திருந்தான். இராஜேந்திரதேவன் தன் தம்பியான வீர ராஜேந்திரனைப் போருக்கு அனுப்பினான். அவன் வேங்கைக்குச் சென்ற சாளுக்கியார் படையை நையப் புடைத்து, அதன் தலைவர் களைத் துரத்திக் கொண்டே கூடல் சங்கமத்தை அடைந்தான்; ஆங்கிருந்த ஆஹவமல்லனையும் அவன் மக்களையும் சிற்றரசரையும் சேனைத்தலைவரையும் புறங்காட்டி ஓடச் செய்தான். வீர ராஜேந்திரன் கூடல் சங்கமப் போர் II மேற்சொன்ன போருக்குப் பிறகு வீரராஜேந்திரனே சோழப் போரரசன் ஆனான். அவன் அச்சம் என்பதை அணுவளவும் அறியாதவன். அவனது பேராண்மையைப் பாராட்டிக் கல்வெட்டுகள் பலவாறு பேசுகின்றன. அவன் அரசனான பிறகு கூடல் சங்கமத்தில் இரண்டாமுறை போர் நடைபெற்றது. அப்போர் மிகக் கொடுமையானது. அதனில் சாளுக்கியரைச் சேர்ந்த எண்ணிறந்த சிறந்த வீரர் கொல்லப் பட்டனர்; தானைத் தலைவர் எழுவர் மாண்டனர்; கங்கர், நுளம்பர், காடவர் என்ற சிற்றரசர் தலை அறுப்புண்டனர். அத்தலைகள் கங்கைகொண்ட சோழபுரத்து அரண்மனை வாயிற் கதவில் அறையப்பட்டன. ஆஹவமல்லன், இங்ஙனம் போர்க்களத்தில் படையிழந்து தானைத்தலைவரை இழந்து அவமானம் அடைவதைவிட இறப்பதே நல்லது என்று எண்ணினான்; இதே இடத்தில் சில நாட்களுக்குள் நாம் இருதிறத்தாரும் சந்திப்போம். வரத்தவறுபவர், போர் விதியை அவமதித்த கீழ் மக்கள் ஆவர் என்று ஒரு கடிதம் வரைந்து வீர ராஜேந்திரனுக்கு அனுப்பித் தன் மக்களுடன் ஓடிவிட்டான். கடிதம் கண்ட வீர ராஜேந்திரன், சுத்தவீரனாதலால் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்; கூடல் சங்கமத்தில் ஏறத்தாழ ஒரு மாதம் ஆஹமல்லனை எதிப்பார்த்துத் தன் படையுடன் காத்திருந்தான். ஆஹவமல்லன் தான் குறித்த நாளில் வந்து சேரவில்லை. வீரராஜேந்திரன் காத்திருந்து ஏமாற்றம் கொண்டான். அதனால் கோபம் கொண்ட அவன் இரட்டபாடிமீது படையெடுத்தான்; நகரங்களைத் தீக்கு இரையாக்கினான்; எதிர்த்த தானைத் தலைவர்களைப் புறங்காட்டி ஓடச் செய்தான்; துங்கபத்திரைக் கரையில் வெற்றித்தூண் ஒன்றை நாட்டினான்; ஆஹவ மல்லனைப் போன்ற உருவம் ஒன்னிறச் செய்து அதனைப் பலவாறு அவமானப்படுத்தினான். பின்னர் வீரராஜேந்திரன் கிருஷ்ணைக் கரையில் ஆஹவமல்லன் மகனான விக்கிரமாதித்தனை முற்றிலும் முறியடித்தான்; வேங்கைநாட்டைத் தன் ஆதிக்கத்தின்கீழ் நிலைக்கச் செய்து மீண்டான். ஆஹவமல்லன் இறந்த பிறகு தன் தமையனிடம் பகைமைகொண்ட விக்கிரமாதித்தன் வீர ராஜேந்திரன் உதவியை வேண்டினான்; அவனது மகளை மணந்து சோழனுக்கு மருமகன் ஆயினான் எனின், சாளுக்கியன் எந்த அளவு சோழனை மதித்திருத்தல் வேண்டும் என்பதை நன்கு உணரலாம் அல்லவா? பொன்றாப் புகழ் இங்ஙனம் பல போர்களைச் செய்து, இராஜராஜன் அமைத்த பேரரசை அரும்பாடுபட்டு இராஜேந்திரன் மக்கள் மூவரும் பாதுகாத்தனர் எனின், அத்தமிழரசர் வீரம், ஆண்மை, அரசியல் அறிவு இவற்றை நாம் எங்ஙனம் பாரட்ட வல்லோம்? 11. சடையவர்மன் - சுந்தர பாண்டியன் பாண்டியர் விடுதலை ஒவ்வொரு சோழ அரசன் காலத்திலும் பாண்டியர் தம்மாட்சிபெற முயன்றமை முன் சொன்ன சோழர் வரலாறு களிலிருந்து அறியலாம் அல்லவா? பாண்டியர் இங்ஙனம் முயன்றுகொண்டே வந்து ஏறத்தாழக் கி. பி. 1200-ல் தம்மாட்சி பெற்றனர். பாண்டியர் தம்மாட்சி பெற்றாற் போலவே சேரர் முதலிய அரசரும் படிப்படியாகச் சோழர் ஆட்சியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டனர். இதற்குப் பிற்காலச் சோழ வேந்தரது வலியின்மையே காரணமாகும். இங்ஙனம் தம்மாட்சி பெற்ற பாண்டியருள் மாறவர்மன் - சுந்தர பாண்டியன் பெருவீரனாக விளங்கினான். அவன் பல நாடுகளை வென்று தன் அடிப்படுத்தினான். அவனுக்குப் பின்வந்த பாண்டியர் காலத்தில் நாடு சுருங்கியது. ஆயினும் பின் வந்த (கி. பி. 1251-1271) சடையவர்மன் - சுந்தரபாண்டியன் என்பவன் காலத்தில் பாண்டியர் பேரரசராக விளங்கினர். அப்பெருமகன் வீர வரலாறு தென் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத்தக்கது. போர்ச் செயல்கள் பாண்டியன், சோழரைப் போலப் பெருநாடு கட்டிப் பேரரசனாக ஆளவேண்டும் என்று விரும்பினான்; அதற்காகத் தன் நிலப்படையைப் பல வழிகளிலும் பெருக்கினான்; கடற்படையையும் பல வழிகளிலும் பெருக்கினான்; இங்ஙனம் தன்னைப் பலப் படுத்திக்கொண்ட பாண்டியன் முதற்கண் சேரநாட்டின் மீது படையெடுத்தான். அவனது கடல் போன்ற சேனையைக் கண்ட சேரன் எதிர்த்துப் போர் புரியும் ஆற்றல் இன்றிப் புறங்காட்டி ஓடினான். அதனால் சேரநாடு எளிதில் பாண்டியன் வசப்பட்டது. சுந்தரபாண்டியன் காலத்தில் சோழநாடு எல்லையில் மிகச் சுருங்கிவிட்டது. அதனை ஆண்டு வந்தவன் மூன்றாம் இராஜேந்திரன் என்பவன். அவன் போர்வலி அற்றவன். ஆதனால் பாண்டியன் சோணாட்டின்மீது படையெடுத்தான்; சோழன் பயனற்றமுறையில் போரிட்டுத் தோல்வியுற்றான்; பாண்டிய னுக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டி அடங்கி இருப்பதாக ஒப்புக்கொண்டான். பேரரசனான முதலாம் இராஜராஜன் கொண்டிருந்த வீரம் என்ன, மூன்றாம் இராஜேந்திரன்பட்ட சிறுமை என்ன என்பதை எண்ணிப்பாருங்கள். வீரம் அற்ற வேந்தன் கைப்படும் நாடு சிறுமையே உறும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி போதிய சான்றாகும். சோழர் வலியற்றவரான பின்னர் ஹொய்சளர் உதவியை நாடலாயினார். ஹொய்சளர் மைசூரை ஆண்ட கன்னடர். சோழர் அவருடன் பெண் கொடுத்து உறவு கொண்டனர். அதனால் பையப் பைய ஹொய்சளர் சோழநாட்டில் ஆதிக்கம் செலுத்த லாயினர்; திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் உள்ள கண்ணனூர் என்னும் இடத்தில் படை ஒன்றை வைத்துக்கொண்டு சோழ வேந்தனுக்கு உற்றுழி உதவி வந்தனர். இதனை உணர்ந்த பாண்டியன் கண்ணனூரைத் தாக்கினான்; ஹொய்சளப் படைவீரரும் படைத்தலைவனும் போரிற் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த யானைகள், குதிரைகள், நிதிக்குவியல்கள் என்பன பாண்டியன் கைப்பட்டன. பின்னர் பாண்டியன் இலங்கையைத் தாக்கினான். இலங்கை அரசன் அறிவுடையவன். அவன் பாண்டிய அரசனுக்கு அடங்கிக் கப்பம் கட்டுவதாக ஒப்புக்கொண்டான்; பல யானைகளையும் விலை உயர்ந்த ஆடையாபரணங்களையும் கப்பமாகக் கொடுத்தான். அப்பொழுது தென்னார்க்காடு ஜில்லாவைப் பெரும் புகழுடன் ஆண்டு வந்தவன் பல்லவர் மரபில் வந்த கோப்பெருஞ் சிங்கன் என்பவன். அவன் திருநாவலூரை அடுத்த சேந்தமங்கலம் என்பதைத் தலைநகராகக் கொண்டவன். அவன் பாண்டிய னுடன் போரிட விரும்பாமல் முன்கூட்டியே தன் கப்பப் பொருளை அனுப்பினான். ஆயினும் சுத்த வீரனாக பாண்டியன், போரிட்டு அடக்காது கப்பப் பொருளைப் பெறேன் என்று கூறிச் சேந்த மங்கலத்தை முற்றுகையிட்டான். போரில் கோப்பெருஞ்சிங்கன் தோல்வியுற்றான். பாண்டியன் அவனிடம் கைப்பற்றிய பொருள்களை அவனுக்கே அளித்துத் தனக்கு அடங்கிய குறுநில மன்னனாக இருக்குமாறு செய்து மீண்டான். பிறகு பாண்டியன் வடஆர்க்காடு ஜில்லாவையாண்ட பாணர்களைத் தாக்கித் தன் அடிப்படுத்தினான்; கொங்கு நாட்டின்மீது படையெடுத்தான். கொங்கு நாடு என்பது சேலம், கோயம்புத்தூர், நீலகிரி ஜில்லாக்கள் கொண்ட நிலப்பகுதி. பாண்டியன் கொங்குநாட்டு அரசர்களைப் போரில் முறியடித்து, அவர்களைத் தனக்கு உட்பட்ட சிற்றரசராக்கினான். பின்னர்ப் பாண்டியன் தொண்டை நாட்டின் மீது பாய்ந்தான். அப்போது வடபெண்ணையாறு முதல் பாலாறு வரைப்பட்ட பெரு நிலப்பரப்பைக் கண்டகோபாலன் என்பவன் ஆண்டுவந்தான். அவன் தெலுங்கச் சோட அரசன். அவன் தலைநகரம் காஞ்சீபுரம். பாண்டியன் அவன்மீது படையெடுத்துச் சென்றான்; போரில் கண்டகோபாலனைக் கொன்றான்; நெல்லூரில் வீராபிஷேகம் செய்து கொண்டான்; கண்டகோபாலன் தம்பியர் அடிபணிந்து வேண்ட, அவர்கட்குக் கண்டகோபாலனது நாட்டை அளித்துத் தனக்கு அடங்கி யிருக்குமாறு செய்தான். இந்த வெற்றிக்குப் பிறகு சுந்தரபாண்டியன் கிருஷ்ணை யாறுவரை படையுடன் சென்று ஆங்காங்கு இருந்த அரசர் களைப் புறங்காட்டச் செய்து தன் அடிக்கீழ்ப்படுத்தித் திரும்பினான். நிலைத்த புகழ் சோழர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பாண்டியருள் சடையவர்மன் - சுந்தரபாண்டியனே ஈடும் எடுப்பும் அற்ற பெருவீரனாக விளக்கமுற்றவன். அவனுடைய கல்வெட்டுகள் வடக்கேயுள்ள கிருஷ்ணை என்னும் பேராறு வரையில் உள்ள பல நாடுகளிலும் காணப்படுகின்றன. எனவே, அவனது ஆட்சி நமது தமிழகத்திலும் அதற்கு அப்பாற்பட்ட நாடுகளிலும் பரவி இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகிறது அன்றோ? சுந்தர பாண்டியன் தில்லைக்கூத்தப்பிரான் திருக் கோவிலையும் திருவரங்கப் பெருமானது திருக்கோவிலையும் பொன் வேய்ந்தான்; திருவரங்கத்தில் பல பெரிய திருப்பணிகள் செய்தான்; இரண்டு கோவில்களிலும் தன் திருவுருவச் சிலை களைச் செய்து கொடுத்து, தன் பிறந்த நாளாகிய மூலத்தன்று விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தான்; கோவில் பொன் வேய்ந்த பெருமாள் என்று பெயர் பெற்றான். தென் இந்திய வரலாற்றில் தமிழப்பேரரசனாக இருந்த வருள் கடைசி அரசன் சுந்தரபாண்டியனே ஆவன். அவனுக்குப் பிறகு பாண்டியர் வன்மை இழந்தனர்; சோழர் முன்னரே ஆட்சிவன்மை இழந்துவிட்டனர். இதனால் தென்னிந்தியாவில் வேற்றரசர் ஆதிக்கம் தோன்றி வலுப்பெறலாயிற்று. 12. தளவாய்-அரியநாத முதலியார் கி. பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழகம் முன் சொன்ன சடையவர்மன் சுந்திரபாண்டியற்குப் பிறகு தமிழர் ஆட்சி வலி இழந்தது. பெயரளவில் சேர-சோழ-பாண்டியர் நாடாண்டுவந்தனர். தென் இந்தியாவில் ஹொய்சளர் என்ற கன்னடர் பேரரசராக இருந்தனர். தக்ஷிணப் பீடபூமியில் மேலைச்சாளுக்கியர் ஆண்ட பெருநாட்டை யாதவர் என்ற அரச மரபினர் ஆண்டுவந்தனர்; கிழக்குப் பகுதியைக் காகதீயர் என்பவர் அரசாண்டனர். அந்தக் காலத்தில் - கி. பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவை ஆண்டவர் அல்லாவுத்தீன் கில்ஜி என்பவர். அவரது மலையைத் தாண்டி தக்ஷிணத்தின் மீது படையெடுத்தார்; முதலில் யாதவ அரசன் அடிபணிந்தான்; பின்னர்க் காகதீய மன்னன் தோற்கடிக்கப்பட்டான்; அவன் பின் ஹொய்சளன் அடக்கப்பட்டான்; அவனுக்குப் பின் பாண்டியன் பட்டம் இழந்தான். மதுரையில் முலிம் ஆட்சி ஏற்பட்டது. முலிம் படையெடுப்பை அறியாத தென்னாடு தன்னாட்சி இழந்து தவித்தது. யாண்டும் சமயமாற்றம் நடைபெற்றது. ஹிந்து சமயக் கோவில்கள் சீரழிந்தன. நாட்டுச் செல்வம் கொள்ளை போயிற்று. சுருங்கக் கூறின் தங்கள் சமயத்தைக் காக்கவும் தங்கள் நாட்டையும் உடைமையையும் பாதுகாக்கவும் வலிய அரசாங்கம் ஒன்று வேண்டும் என்பதை மக்கள் உணரலாயினர்; தக்ஷிண பீடபூமியில் முலிம் அரசு ஒன்று ஏற்பட்டுவிட்டதால், துங்கபத்திரைக்குத் தென்பாற்பட்ட நிலப்பகுதியேனும் அன்னியர் படையெடுப்பிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்ச்சி தென்னாட்டார் உள்ளத்தில் வேரூன்றியது. விஜயநகர அரசு ஹொய்சளர் ஆட்சிக்கு உட்பட்ட சங்கமன் என்ற சிற்றரசனுக்கு மக்கள் ஐவர் இருந்தனர். அவர்கள் சிற்றரசர் பலரிடம் உத்தியோகதராக இருந்து அரசியல் அநுபவம் பெற்றவர்கள். அவர்கள் ஹரிஹரர், புக்கர், கம்பணர் மாறப்பர், முத்தப்பர் என்பவர்கள். அவர்கள் ஹொய்சளப் பேரரசு அழிந்ததும் அதனைப் கைப்பற்றித் துங்கபத்திரைக்குத் தென்பாற்பட்ட பகுதியில் ஆளத் தொடங்கினர். அவர்கள் துங்கபத்திரையின் கரையில் மலைகளையே இயற்கை அரணாகக் கொண்ட ஓரிடத்தில் புதிய நகரம் ஒன்றை அமைத்தனர். அதுவே விஜய நகரம் என்பது. கம்பணவுடையார் புக்கர் மகனாரான கம்பணவுடையார் என்பவர் புகழ்பெற்ற வீரர். அவர் தமிழகத்தை அடிப்படுத்தப் பெரும் படையொடு வந்தார்; காஞ்சியை ஆண்ட சம்புவராயன் என்பவனைப் போரில் முறியடித்துத் தமக்கு அடங்கியவனாகச் செய்தார்; மதுரைமீது படையெடுத்து அங்கு ஐம்பது ஆண்டுகளாக இருந்துவந்த முலிம் ஆட்சியை ஒழித்துப் பாண்டியனை அரசன் ஆக்கினார்; சோழ-பாண்டியரை விஜய நகர அரசுக்கு உட்பட்டு இருக்குமாறு செய்தார்; வேற்றாரால் உண்டான துன்பங்களைப் போக்கினார்; அவர்களால் அழிக்கப்பட்ட கோவில்களைப் பழுது பார்த்தார்; மக்கள் மனங்குளிரப் பல நல்லறங்களைச் செய்தார். தென்னாட்டு மக்கள் மனம் குளிர்ந்து விஜயநகர அரசினை வாழ்த்தலாயினர். விஜயநகரப் பேரரசு இதனை ஏற்படுத்திய பேரரசர் நோக்கம் என்ன? இந் நாட்டுச் சமயங்களையும் மக்கள் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் எனபதே ஆகும். அதனாற்றான் அவர்கள் தென் னிந்திய முழுவதையும் வென்ற போதினும் அதனைத் தங்கள் நேரடியான ஆட்சியில் வைத்துக்கொள்ளாமல் அந்தந்த நாட்டு அரசரையே ஆளவிட்டனர்; அவர்கள் தத்தம் நாட்டை ஆண்டுவரலாம்; விஜயநகரப் பேரரசர்க்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்; ஆண்டு தோறும் பேரரசுக்குக் கப்பம் கட்டி வரவேண்டும்; போர்க்காலங்களில் தங்கள் விகிதாசாரப்படி படை அனுப்பி உதவி புரியவேண்டும் என்பனவே பேரரசின் நிபந்தனைகள் ஆகும். இந்த விதிகட்குக் கட்டுப்பட்டு ஏறத்தாழக் கி. பி. 1350 முதல் தென்னாட்டு அரசர் அமைதியோடு தங்கள் நாடுகளை ஆண்டு வரலாயினர். துங்கபத்திரை ஆற்றுக்கப்பால் விந்தமலைவரை முலிம் அரசு ஏற்பட்டு இருந்தது. அது பாமினி அரசு எனப்பட்டது. அந்த அரசர்கட்கும் விஜயநகர அரசர்கட்கும் அவ்வப்போது போர்கள் நடைபெற்றன. எனினும் விஜயநகரப் பேரரசு நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ச்சி பெற்று வலுப்பெற்று வந்தது. ஒரே சுல்தானால் ஆளப்பட்டு வந்த பாமினி அரசு நாளடைவில் ஐந்தாகப் பிரிந்து ஐவரால் ஆளப்படலாயிற்று. அவை பீஜப்பூர், கோல்கொண்டா; பீதர், பீடார், அஹமத்நகர் அரசுகள் எனப்பட்டன. இந்த ஐந்து அரசுகளும் தமக்குள் ஒற்றுமையின்றிப் போரிட்டன. இதனால் விஜயநகர அரசு அவர்கள் படையெடுப்பின்றி நன்கு வளரலாயிற்று. கிருஷ்ணதேவ ராயர் விஜயநகரப் பேரரசருள் அழியாப் புகழ் பெற்றவர் கிருஷ்ணதேவ ராயர்1. அவர் சிறந்த வீரர்; பெரும் புலவர்; பல நாடுகளை வென்று தம் புகழ் நிறுத்தியவர். அவர் காலத்தில் தென்னாட்டுக் கடல் வாணிகம் சிறந்த நிலையில் இருந்தது. அவரை நேரிற்கண்ட இட்டாலியர், முலிம்கள், போர்ச்சுகீசியர் முதலியோர் அவருடைய குணநலன்களையும் ஆட்சிச் சிறப்பையும் பலபடப் பாராட்டி எழுதியுள்ளனர். அவர் காலத்தில் அவரது பிரதிநிதியாக (தக்ஷிணமஹா மண்டலேசுவரராக இருந்து) தென்னாட்டைக் கவனித்து வந்தவர் நாகம நாயக்கர் என்பவர். அவர் சிறந்த போர் வீரர்; கிருஷ்ணதேவரது தந்தையார்க்குச் சேனைத் தலைவராக இருந்தவர்; இராயரது நன்மதிப்பைப் பெற்ற பிரபுக்களில் முதல்வர். அவருக்கு விசுவநாத நாயக்கர் என்ற ஒரே மகனார் இருந்தார். அவரும் தந்தையாரைப் போலச் சிறந்த வீரர்; இராயர்க்குப் பக்கத்திலேயே இருந்து பணிவிடைகளைச் செய்து இராயரது நன்மதிப்புக்கு ஆளானவர். தமிழர் நிலைமை விஜயநகரப் பேரரசு ஏற்பட்ட நாள் முதல் தமிழர் பலர் அந்த அரசில் சிறந்த பதவிகளைத் தாங்கித் தொண்டாற்றி வந்தனர். தமிழர் சிலர் விஜயநகரத்தில் குடியேறி அரசாங்க அலுவலாளராக இருந்து வந்தனர். விஜயநகர வேந்தர், சைவம், வைணவம் முதலிய தென்னாட்டுச் சமயங்களைப் போற்றி வளர்த்தி வந்தமையாலும் நாட்டில் அமைதியை நிலைநாட்டி வந்தமையாலும் தமிழர் அந்த அரசர்களை மனமார வாழ்த்தி அமைதியாக வாழ்ந்து வந்தனர். மெய்ப்பேட்டில் அரியநாயகர் காஞ்சீபுரத்திற்குப் பக்கத்தில் மெய்பேடு என்னும் சிற்றூரில் பிறந்தவர் நமது அரியநாயக முதலியார். அவர் வேளாளர் மரபினர். அவர் பெற்றோர் சிறந்த ஒழுக்கமும் தெய்வபக்தியும் உடையவர். அவர்களால் வளர்க்கப்பட்ட அரிய நாயகரும் இளமை முதலே நற்குணங்களில் சிறந்து விளங்கினார்; கோவில் அர்ச்சகரிடம் தமிழ் கணிதம் - சோதிடம் இம் மூன்றையும் பிழையறக் கற்றார்; ஊரில் இருந்த உடற்பயிற்சிக் கூடத்திற் சேர்ந்து குதி - சிலம்பம் - குத்துச் சண்டை - வாட்போர் முதலியவற்றிலும் பயிற்சி பெற்றார். அவருக்குப் பதினாறு வயதடைந்த பொழுது ஒரு நாள் மாலை ஊருக்கு வெளியே இருந்த வெளியிடத்தில் உடற்பயிற்சி செய்துவந்தார். அப்பொழுது அவ்வழிச் சென்ற சாதிரியார் ஒருவர் அவரைக் குறுகி, தம்பீ, உன் கைரேகையைக் காட்டு என்றார். இளைஞர் காட்டினார். சாதிரியார் கைரேகையை நன்கு கவனித்து, வியப்புற்றார்; தம்பீ. நீ அரச ஊழியத்தில் மிக வுயர்ந்த பதவிகளைப் பெறுவாய். உனக்கு அரசயோகம் வரும். நீ பெருஞ் செல்வனாக விளங்குவாய். அங்ஙனம் நீ விளங்கும் பொழுது என்னைச் சேர்ந்தவர் உன்னைக் காணின் அவர்கட்கு உன் சம்பத்தில் கால் பகுதியைக் கொடுப்பாயா? என்று கேட்டார். அரியநாயகர் அங்ஙனமே தருவதாக எழுதிக்கொடுத்தார். சாதிரியார், தம்பீ, நீ விஜயநகரம் செல்; இராயர் அரசாங்கத்தில் வேலை பார்; படிப்படியாக உயர்வாய் என்றார். அரியநாயகர் விஜயநகரம் செல்ல விரும்பினார்; அந்தப் புதிய இடத்தில் வேண்டிய தெலுங்கு மொழியில் எழுதவும் பேசவும் பயிற்சி பெற்றார்; பின்னர்த் தமது விருப்பத்தைப் பெற்றோரிடம் கூறினர். முதலில் அவர்கள் அதற்கு இணங்க வில்லை; ஆயினும், அவர் வற்புறுத்தி வேண்டவிடை தந்தனர். கடும் பிரயாணம் பதினாறு வயது நிரம்பப் பெற்ற அரிய நாயகர் பலநூறு மைல்களுக்கு அப்பால் இருந்த விஜயநகரம் செல்ல என்ன செய்தார்? அவரோ ஏழை; அதனால் நடந்து செல்லத் துணிந்தார்; காஞ்சியிலிருந்து விஜயநகரம் செல்லக்கூடிய பெருவழியே நடந்து, கிடைத்த இடத்தில் சோறுண்டு, வழியிற் பல இன்னல்களை அடைந்து இறுதியில் போக பூமி என்று போற்றப்பட்ட விஜயநகரத்தை அடைந்தார். படிப்படியான உயர்வு விஜயநகரம் சென்ற அரியநாயகர் தென்னாட்டு பெருந் தலைவரான நாகம நாயக்கர் மாளிகையைக் கேட்டறிந்து அடைந்தார்; நாகமரிடம் வணக்கமாக நின்று தமது ஊர் - மரபு - படிப்பு - குடும்ப நிலை இவற்றை விளக்கமாக உரைத்தார். தமிழ் இளைஞர் நல்லியல்புகளும் அவரது எளிய வரலாறும் நாகமர் உள்ளத்தை உருக்கின. அவர் அரியநாயகரைத் தம்மிடம் கணக்கராக அமைத்துக் கொண்டார். அரியநாயகர் அடக்கம், வேலையில் சுறுசுறுப்பு முதலியன விசுவநாத நாயக்கர் உள்ளத்தைக் கவர்ந்தன. மேலும் இருவரும் ஏறத்தாழ உற்ற வயதினர்; விசுவநாதர் வாள்-சிலம்பப் பயிற்சிகளைப் பழகுவதுண்டு. அவற்றில் அரியநாயகரும் சிறந்தவர் என்பதை அறிந்ததும் விசுவநாதர் அரியநாயகரைப் பெரிதும் நேசிக்கலானார். நாளடைவில் இருவரும் உயிர் ஒத்த நண்பர் ஆயினர். அவர்கள் நெருக்கத்தைக் கண்ட விசுவநாதர் பெற்றோர் அரிய நாயகரை அரியநாதர் என்று அழைக்க லாயினர். இப்பெயரே நின்று, வரலாற்றில் இடம் பெற்று விட்டது. விசுவநாதருடன் அரியநாதர் கிருஷ்ணதேவராயர் அவைக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் இராயர் கொடுத்த கணக்கு ஒன்றை அவையோர் போடமுடியாமல் விழித்த பொழுது அரியநாதர் நின்ற நிலையிலேயே விடை கூறினார். அவரது கணிதப் புலமையைக் கண்ட இராயர் அவரைத் தம் அரசாங்கக் கணக்கராக அமர்த்திக் கொண்டார். ஆண்டுக்கு ஒரு முறை அரசாங்கக் கணக்கை ஒழுங்காகப் போட்டு முடிப்பது வழக்கம். அரியநாதர் அதனைப் பிழை இன்றி விரைவில் போட்டுக் காட்டியதால், அவர் அரசாங்கப் பெரிய கணக்கருள் ஒருவராக நியமனம் பெற்றார். நவராத்திரி விழா வன்று பலியிடத்தக்க கடா, நீண்டு வளைந்த கொம்புகளை உடையதாக இருந்தது. கொம்புகள் கழுத்தை வெட்ட இடையூறாக இல்லாத நிலையில் அக்கடாவைப் புல்தின்னச்செய்து பலியிட்ட காரணத்தால் அவர் அரசாங்க முதன்மைக் கணக்கராக நியமனம் பெற்றார்; பிறிதொரு நாள் இராயர் அவைக்கு வந்த வடநாட்டு மல்லனை, மற்றவர் மற்போர் புரியத் தயங்கி நின்ற அவயம், வரவேற்று, மற்போர் திறம்படப் புரிந்து அவனைப் தோல்வியுறச்செய்து விஜயநகரப் பேரரசின் மானத்தைக் காத்தார். அன்று முதல் இராயர் படையில் தளவாய் (சேனைத்தலைவர்) பதவியைப் பெற்றார். தமிழர் வீரம் இராயர், பீஜப்பூர் சுல்தானிடம் போரிட்டு இராயச்சூரை மீட்க முயன்றார். அப்பொழுது நடைபெற்ற பெரும் போரில் அரியநாதர், விசுவநாதர் முதலிய தளவாய்கள் தத்தம் படைகளுடன் சென்று போரிட்டனர். போரில் தோற்ற பீஜப்பூர்ச் சேனைத் தலைவன் ஓடுவதாகப் போக்குக் காட்டித் தன் ஒரு பகுதிப் படையுடன், போரைக் கவனித்துக்கொண்டு தனியே இருந்த கிருஷ்ணதேவராயரைக் கொல்ல விரைந்தான். அவனது போக்கையே கவனித்திருந்த அரியநாதர் தம் படையுடன் விரைந்து, இராயர்க்கும் பகைவனுக்கும் இடையில் நின்று பகைவனுடன் போரிட்டார். அப்பொழுது தான் இராயர் தமக்கு வர இருந்த பேராபத்தை உணர்ந்தார். அவ்வமயம் அரியநாதர் அப் பகைவனைத் தோற்கடித்துச் சிறைசெய்து இராயர்முன் கொணர்ந்து நிறுத்தினார். இராயர்தம் உயிரைக் காத்ததுடன் பகைவனையும் சிறை செய்த தமிழ் வீரரை ஆனந்தக் கண்ணீர்விட்டுத் தழுவினர்; அவருக்கு அந்த இடத்திலேயே அமைச்சர் பதவியை அளித்து மகிழ்ந்தார். அரியநாதர் அன்று முதல் முதலி என்ற பட்டத்தையும் பல்லக்கில் ஏறும் உரிமையையும் பெற்றார்; அரியநாத முதலியார் என்று பெயர் பெற்றார். நாயக்க அரசில் சேவை தென்னாட்டில் சோழன் பாண்டியனை வென்று நாட்டைக் கவர்ந்தான். இராயர் ஆணைப்படி நாகமர் சோழனை முறியடித்துப் பாண்டியனுக்கு அரசுநல்கினர். அவன் பிள்ளை இன்றி இறந்தான். அதனால் விசுவநாதர் மதுரை மன்னராக அனுப்பப்பட்டார். அரியநாதர் இல்லாமல் விசுவநாதர் இருப்பாரா? அரியநாதர் மதுரை அரசுக்குத் தளவாயாகவும் முதல் அமைச்சராகவும் இருந்தார்; நாடு முழுவதும் சுற்றி, அடங்காப் பிடாரிகளாக இருந்த சிற்றரசர்களைச் சாம-பேத-தான-தண்டங்களால் அடக்கி நாயக்க அரசுக்குப் பணியச் செய்தார்; பஞ்ச பாண்டியரைத் தனிப்போரில் வென்று குமரிமுனைவரைப் பட்ட நாட்டை நாயக்க அரசில் சேர்த்தார்; சேலம், கோயமுத்தூர் முதலிய இடங்களில் தனிக்காட்டு அரசர்களாக இருந்த சிற்றரசர்களை அடக்கி மதுரை மன்னர்க்கு அடங்கியவராக இருக்கச் செய்தார். அச்சிற்றரசர் மனமகிழ்ந்து என்றும் அடங்கி இருப்பதற்காக நாட்டை எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்தார்; ஒவ்வொருவர்க்கும் ஒரு பாளையத்தை ஆளக் கொடுத்தார். சிறந்த அரசியல் அறிவு கொண்ட இச் செயலினால் பாளையக்காரர் மன அமைதி பெற்று நாடாளலாயினர்; ஆண்டுதோறும் மதுரை மன்னர்க்குக் கப்பம் கட்டிவந்தனர்; போர்க்காலங்களில் அவர்க்குப் படை உதவி புரிந்துவந்தனர். விசுவநாதர் தமிழ் நாட்டுக்குப் புதியவர். அவரைத் தமிழ் மக்கள் மனமார ஏற்றுக் கொள்ளவும், தமிழ் மக்கள் மனப் பான்மை அறிந்து நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும் ஆண்மையுள்ள தமிழர் தேவை. அந்தத் தேவையை அரியநாதர் களைந்தார். அவரால் நாயக்க அரசு தமிழ்நாட்டில் வேரூன்றியது; கொள்ளையும் கொலையும் அமைதியற்ற வாழ்க்கையும் நிலவி இருந்த தமிழ்நாட்டில் அமைதி அச்சமின்மை செங்கோன்மை தெய்வ வழிபாடு என்பன நிலவ மூலகாரணராக இருந்தவர் அரியநாதரே ஆவர். தமக்கு அரசவுரிமை தந்த அப் பெருவீரரைப் பாளையக்காரர் அனைவரும் மனமாரப் பாராட்டினர். இன்றும் அவர் மரபினர் அரிய நாதரைப் பாராட்டி வருகின்றனர். ஒப்புயர்வற்ற பதவி கி. பி. 1565-ல் தலைக்கோட்டை என்னும் இடத்தில் விஜய நகரப் பேரரசிற்கும் பாமினிச் சுல்தான்களுக்கும் போர் நடந்தது. அப்போர்க்களத்தில் அரியநாதர் பங்கு கொண்டார். போரை நடத்திய இராமராயர், போர்க்களத்தில் யாவரும் அறிய, அரியநாதரே, நான் ஒரு வேளை இறந்தால், நீரே மஹாராயராக மகுடாபிஷேகம் செய்துகொண்டு நமது பேரரசைக் காப்பீராக என்றார் எனின், முதலியாரிடம் பேரரசர்க்கு இருந்த பெருமதிப்பை என்னென்பது! தலைக்கோட்டைக் போருக்குப் பின் விஜயநகரப் பேரரசுக்கு அரியநாதரே தளவாயாக நியமனம் பெற்றர். அவர் அந்தவேலையுடன், மதுரை நாயக்க மன்னரிடம் தளவாய், முதல் அமைச்சர் வேலைகளையும் கவனித்து வந்தார். முதலியார் மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் உள்ள கோவில் களில் பல திருப்பணிகள் செய்தார்; இன்றும் அவருடைய உருவச் சிலையை மதுரை ஆயிரக்கால் மண்டபத்தில் கண்டுகளிக்கலாம். அப்பெரு வீரர் விஜயநகரப் பேரரசு போற்றத்தக்கநிலையைத்தம் அருங்குணங்களாலும் வீரத்தாலு மன்றோ பெற்றார்? அவர் வழிவந்த பெருமக்கள் இன்றும் தளவாய் முதலியார் என்னும் பெயருடன் திருநெல்வேலியில் இருந்து வருகின்றனர். நமது கடமை இங்ஙனம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர் வீரர்களாக வாழ்ந்தார்கள்; பேரரசுகளை ஏற்படுத்தி ஆண்டார்கள்; கடல் கடந்து நாடுகளை வென்றார்கள்; கிழக்கே சீனம் வரையும் மேற்கே இட்டாலி வரையும் கடல் வாணிகம் செய்து புகழ் பெற்றார்கள்; தங்கள் தாய்மொழியையும் தாய் நாட்டையும் இரண்டு கண்களாகக் கருதிப் பாதுகாத்தார்கள். அவ்வீரத் தமிழர் மரபில் வந்த நாம், அவர்கள் வாழ்க்கையின் சிறந்த நிலைகளை உளங்கொண்டு புத்துணர்ச்சி பெற்று, இக் காலத்திற்கு ஏற்ற முறையில் வீரத் தமிழராக விளங்குவோமாக! 