தமிழ்ப்புலவர் பெருமக்கள் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : தமிழ்ப்புலவர் பெருமக்கள் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14 + 58 = 72 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 65/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கியிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதியிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `mtiu KGikahf¥ gl«ão¤J¡ fh£L« ü‰gh toÉyhd xUtÇ brhšy£Lkh? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுறை எண் பக்கம் I. டாக்டர் உ.வே. சாமிநாதையர் 15 1. இளமைப் பருவம் 15 2. பிள்ளையவர்கள் மாணவர் 21 3. ஆசிரியர் பதவியும் நூல்கள் வெளியீடும் 24 4. நற்குணங்கள் 31 II. சதாவதானி-செய்குதம்பிப் பாவலர் 35 1. இளமையும் கல்வியும் 35 2. சென்னையில் பாவலர் 40 3. பாவலர் சதாவதானி யாதல் 44 4. இல்லற வாழ்க்கையும் தமிழ்த் தொண்டும் 49 III. மறைமலையடிகள் 52 1. கல்விப் பயிற்சி 52 2. பலவகைப் பணிகள் 60 3. தமிழ்ப் பேராசிரியர் 63 4. அடிகளின் பிற்கால வாழ்க்கை 67 I. டாக்டர் உ.வே. சாமிநாதையர் (1855-1942) 1. இளமைப் பருவம் தமிழின் சிறப்பு மொழியின் வளர்ச்சிக்கெனப் பணிபுரிவதே முதன்மையான நாட்டுத் தொண்டாகும். மொழியின் சிறப்பே நாட்டின் பெருமையை விளக்க வல்லது. மொழிச் சிறப்பு அதன் இலக்கியங்களைப் பொறுத்தது. இலக்கியங்கள் நிறையப் பெற்றுள்ள மொழியும், அம்மொழியினைக் கொண்ட நாடும் பெருமைக்குரியவை ஆகும். செந்தமிழ் மொழி இலக்கியத் தேனிலே ஊறியது; இனிமை விருந்தளிப்பது: யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பதை உணர்த்துவது; ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று ஓதுவது; பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்று இசைப்பது. தமிழ், இன்பத் தமிழ்; பாவின் சுவைக்கடல். நாட்டின் இழிநிலை ஊனிலே எம்முயிர் உள்ளளவும் நிதம் ஓதி உணர்ந்து இன்புறுவோமே.... தமிழ் நூலின் நன்னயம் முற்றும் தெளிவோமே என்னும் உணர்ச்சி அக்காலத் தமிழனிடத்தில் மிகுந்திருந்தது. ஆனால், இடைக்காலத்தில் தமிழ்நாடு வேற்று நாட்டவரின் ஆட்சிக்கு உட்பட நேரிட்டது. தமிழன் தன் உணர்ச்சியை இழந்தான்; மொழிப்பற்று அற்றான்; நாட்டுப் பற்றைத் துறந்தான். இதன் பயனாகத் தமிழ் இலக்கியங்கள் அழிந்தன; ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் பல நூல்கள் ஆற்றோடு போயின. நூல் வறுமை பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் படிக்க விரும்பியவர்களுக்குத் தமிழ் நூல்கள் கிடைப்பது முயற் கொம்பாயிற்று. தமிழில் இன்னின்ன நூல்கள் இருக்கின்றன என்பதைக் கூடத் தமிழர்கள் அறிய முடியாமற் போயிற்று. தமிழ் படிக்க நாடுவோர் அவ்விடைக் காலத்தில் தக்க ஆசிரியர் களை, அதாவது தமிழ் ஏடுகளைச் சேகரித்து வைத்திருந்தவர் களைத் தேடிக் கண்டுபிடித்துப் படிக்க வேண்யை துன்ப நிலை ஏற்பட்டது. படிக்கும்போது ஒவ்வொரு நூலையும் ஆசிரியரின் ஏட்டிலிருந்து மாணவர்கள் புதிய பனை ஏடுகளில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதனால் தமிழ்க் கல்வி பயிலுவதென்பது பலருக்கு அரிய செயலாயிருந்தது. நூல் வெளியீட்டு முயற்சி இங்ஙனம் அரிய நூல்கள் ஆற்றோடு போய்க் கொண் டிருப்பதையும், தமிழ் கற்க விரும்வுவோர் தக்க நூல்கள் கிடைக்காமல் ஊர் ஊராக அலைந்து தேடவேண்டியேற்படுவ தையும் உணர்ந்தவர் பலர். இத்துன்ப நிலையறிந்து வருந்தி, ஆற்றோடு போகவிடாமல் எஞ்சியுள்ள நூல்களையேனும் திரட்ட வேண்டும் என்று உழைத்தோர் சிலர். அவ்வாறு திரட்டியவைகளை அச்சிற் பதிப்பித்து வெளியிட முயன்றோர் மிகச் சிலர். டாக்டர் உ.வே. சாமிநாதையர் இவ்வண்ணம் கிடைக்கும் நூல்களைத் திரட்டி, அவற்றை அச்சிற் பதிப்பிக்கும் பணியினையும் மேற்கொண்டு உழைத்த வருள் டாக்டர் உ.வே. சாமிநாதையர் சிறந்தவர் ஆவர். உத்தமதானபுரம் சோணாடு சோறுடைத்து என இலக்கியப் புகழ் பெற்றது தஞ்சை மாவட்டம். இன்றும் தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என இம்மாவட்டம் சிறப்புப் பெற்றுள்ளது. இம்மாவட்டத்திலே காவிரியும், அதன் கிளையாறுகளாகிய அரிசிலாறு, குடமுருட்டி, திருமலைராயன், வீரசோழனாறு முதலியவைகளும் பாய்ந்து வளம் பெறச் செய்துள்ள நிலப் பகுதி பாபநாச வட்டாரமாகும். இவ்வட்டாரத்தில் உள்ள உத்தம தானபுரம் என்னும் சிற்றூரே டாக்டர் உ.வே. சாமிநாதையர் பிறந்த ஊராகும். உத்தமதானபுரத்தில் இவ்வளவு ரூபாய் உடையவர் என்று கணக்கிட்டுச் சொல்லும் சொத்து உடையவர் ஒருவரும் இல்லை. ஆனால் அவ்வூரில் நீரும் நிழலும் விளைநிலங்களும் நிறைந்திருந்தன; சான்றோர் நிறைந்திருந்தனர்; இசைப் புலவர்களும் மொழிப் புலவர்களுமாகச் சிலர் இருந்தனர்; அமைதியும் மனநிறைவும் அவ்வூர் மக்களிடத்து நிறைந்திருந்தன. ஐயரின் பெற்றோர் உத்தமதானபுரத்தில் வாழ்ந்தவர்களுள் வேங்கட சுப்பையர் என்பார் ஒருவராவார். அவர் இசையிலும் தமிழ் மொழியிலும் புலவராக விளங்கினார்; சமயப்பற்று மிகுந்த வராக இருந்தார். உடையார் பாளையம், அரியலூர் ஆகிய இடங்களின் குறுநில மன்னர்களுடைய அரண்மனைகளில் இசைப் புலவராக இருந்தார். தம்மை நாடிவந்த மாணவர் பலருக்கு இசையினையும் தமிழ் மொழியினையும் கற்பித்து வந்தார். இசை கற்பிப்பது, புராணப் பிரசங்கங்கள் செய்வது போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சிறிதளவு வருவாயில் அவர் குடும்பம் நடந்துவந்தது. அவருடைய நற்பண்புகளுக்கும் தூய மனத்திற்கும் ஏற்றவாறு இல்லக்கிழத்தியார் அமைந்தார். சரசுவதி என்னும் பெயர் பூண்ட அவ்வம்மையார், மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்னுமாறு, மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் உடையவராய்த் தம் கணவரின் வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்பவராய் நடந்து கொண்டார். ஐயரது பிறப்பு ஒத்த கருத்தும், ஒத்த பண்பும், ஒத்த நலனும் வாய்ந்தவர் களாய் விளங்கிய வேங்கடசுப்பையரும் சரசுவதி அம்மையாரும் ஓருயிரும் ஈருடலுமாக விளங்கினர். எனினும், குழந்தை பிறக்கவில்லை என்னும் கவலை நீண்ட காலம்வரை அவர்கள் மனத்தை வருத்திவந்தது. இக்கவலையைப் போக்க வந்தது போல, 1855- ஆம் ஆண்டு, பிப்ரவரித் திங்கள், 19- ஆம் நாள் இவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. பிள்ளைக்கலி தீர்க்க வந்த அக்குழந்தையைப் பெற்றோர் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர்; குழந்தைக்கு வேங்கடராமன் என்னும் பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்பெயர் தம் மாமனாரின் பெயராக இருப்பதால் சாமிநாதன் என்னும் பெயரால் குழந்தையைத் தாயார் அழைத்துவந்தார். தாயார் இட்டு அழைத்த பெயரே குழந்தைக்கு இறுதிவரை நிலைத்துவிட்டது. அக்காலப் பள்ளிப் படிப்பு சாமிநாத ஐயர், அருமைக் குழந்தையாக வளர்ந்து, குறநடை நடந்து, குதலை மொழி பேசிப் பெற்றோரை மகிழ்வித்தார். பின் ஐந்தாண்டு அடைந்தவுடன், திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். முதன் முதலில் வேங்கட சுப்பையரே தம் புதல்வருக்கு நிகண்டுகள், சதகம், இசை முதலியவற்றைக் கற்பித்து மனப்பாடம் செய்துவைத்தார். பிறகு ஐயரவர்கள் திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வியை நன்கு பயின்றார். அக்காலத் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு இக்காலப் பள்ளிப் படிப்புப் போன்றதன்று; பிள்ளைகள் வைகறையில் விழித்தெழுந்து பள்ளிக்குச் சுவடித் தூக்குகளுடன் செல்லுதல் வேண்டும். பனை ஓலை ஏடுகள் பலவற்றை ஒரு மரப்பலகை மீது அடுக்கி வைத்துக் கட்டி, அப்பலகையைக் கயிறு கோத்துத் தூக்கிச் செல்வதற்குச் சுவடித் தூக்கு என்பது பெயர். மாணவர்கள் பள்ளி சென்றதும், சுவடித் தூக்கை ஓரிடத்தில் மாட்டிவைப்பர்; பிறகு முதல் நாள் நடந்த பாடங்களை முறையாக இருந்து மனப்பாடமாக ஒப்புவிப்பர். இதற்கு முறை சொல்லுதல் என்பது பெயராகும். ஆசிரியர் வீட்டிற்குள் இருந்தபடியே மாணவர்கள் கூறுபவைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார். முறை சொல்லுதல் முடிந்ததும் பிள்ளைகள் ஏரி, வாய்க்கால், குளம் முதலிய இடங்களுக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக்கொள்வர்; தத்தம் ஆடைகளில் புதிய மணலை எடுத்துக்கொண்டு பள்ளி திரும்புவர்; பள்ளி சேர்ந்ததும், பழைய மணலை அகற்றிவிட்டுப் புதிய மணலைப் பரப்புவர். எழுதிப் பழக வேண்டிய பிள்ளைகள் அதில் எழுதுவர்; பிற பிள்ளைகள் தத்தம் பாடங்களைப் படிப்பர். ஒன்பது மணிக்குப் பிள்ளைகள் காலை உணவுக்கு அனுப்பப்படுவர்; மீண்டு வந்ததும், பன்னிரண்டு மணிவரை படித்துவிட்டுப் பகல் உணவுக்குச் செல்வர்; மீண்டும் பள்ளிக்கூடம் பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கி, இரவு ஏழு மணிவரை நடைபெறும். அன்றாடம், பிள்ளைகள் பாடத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்புகையில் மண், பறவை, ஊர், விலங்கு இவற்றின் பெயர்களில் வகைக்கு ஒன்றை ஆசிரியர் சொல்லி அனுப்புவார். பிள்ளைகள் மறுநாள் பள்ளிக்கு வரும்போது இப்பெயர்களை மறவாமல் கூறவேண்டும். பிள்ளைகளின் நினைவாற்றலைப் பெருக்க அக்கால ஆசிரியர் களால் இம்முறை கையாளப்பட்டது போலும்! இப்பள்ளிகளில் திறமையும் உடலுரமும் உடையவன் சட்டாம் பிள்ளையாக இருப்பான். ஆசிரியர் இல்லாத காலங்களில் சட்டாம்பிள்ளை சர்வாதிகாரியாக இருப்பது வழக்கம். பழைய மாணவர்கள் புதிதாக வந்து சேரும் மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதும் உண்டு. அக்கால மாணவர்கள் மணலைக் கற்பலகையாகவும், பனை ஓலையைக் காகிதமாகவும், எழுத்தாணியைப் பேனா வாகவும் கொண்டனர். அக்கால மாணவர் முதலில் எழுதப் பழகுவது மணலில்தான். ஆசிரியர் முதலில் எழுதிக் காட்ட, அவ்வெழுத்துக்களை மாணவர்கள் வாயால் உரத்துச் சொல்லிக்கொண்டே விரலால் மணலில் எழுதுவார்கள். பிறகு பனை ஓலையை வாரி, ஒழுங்காக நறுக்கித் துளையிட்டுக் கோக்கக் கற்பிக்கப்படுவர். அதற்குப் பிறகு எழுத்தாணி பிடித்து எழுதக் கற்பிக்கப்படுவர். எழுதத் தெரிந்தபின், சுவடியிலுள்ள எழுத்துக்கள் தெளிவாகத் தெரிவதற்காக மை பூசும் விதத்தையும் மை கூட்டும் விதத்தையும் மாணவர் அறிந்து கொள்வர். சுவடிகளில் மை பூசுவதற்கு மையாடல் விழா என்பது பெயராகும். இத்தகைய பள்ளிகளில் பிள்ளைகள் ஐந்தாம் வயதில் சேர்க்கப்படுவர். முதலில் ஆசிரியர் நெடுங்கணக்குக் கற்பிப்பார். எழுத்துக்கள் வந்த பிறகு, ஒவ்வொன்றாகச் சுவடி துவக்கப்படும். இதற்குச் சுவடி துவக்கல் என்பது பெயர். ஐயர் பலரிடம் பாடங் கேட்டல் இவ்வண்ணம் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பை முடித்துக்கொண்ட சாமிநாத ஐயர், அரியலூர்ச் சடகோப ஐயங்காரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். ஐயங்கார் வேங்கட சுப்பையரின் நண்பர். வேங்கட சுப்பையரின் பாட்டுக்கு ஐயங்கார் வீணை வாசிப்பார். இருவரும் அடிக்கடி இசை பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருப்பர். சடகோபர் நன்றாகத் தமிழ் பயின்றவர். ஆதலின், அவரிடம் மாணவர் பலர் சேர்ந்து பாடங்கேட்டனர். சாமிநாதையர் அவரிடம் திருவரங்கத்து அந்தாதி, திருவேங்கட மாலை, திருவேங்கடத்து அந்தாதி முதலிய நூல்களைப் பாடங்கேட்டார். பிறகு சாமிநாதையர் மேலும் சில புலவர்களிடமும், செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடமும் பல நூல்களைப் பாடங்கேட்டார்; கிருஷ்ண உபாத்தியாயர் என்பாரிடம் தெலுங்கு மொழி பயின்றார்; இடையிடையே தம் தந்தையாரிடம் இசை பயின்று இனிமையாகப் பாடக் கற்றார். சாமிநாதையர் இவ்வளவுடன் திருப்தி கொள்ளவில்லை; மேலும் பல தமிழ் நூல்களைக் கற்க விரும்பினார். அக்காலத்தில் புலவர்களுள் மிகச் சிலர் தவிர மற்றையோர் எல்லா நூல் களையும் படித்தவர்களாக இல்லை; நூல்கள் கிடைக்கவு மில்லை. எனவே, தக்கார் ஒருவரைத் தேடிக் கற்றல் வேண்டும் என்னும் அவா ஐயர் மனத்தில் எழுந்தது. தம் தந்தையாரைப் போல இசைப்புலவர் ஆகுமாறு சிலர் அவரைத் தூண்டினர்; ஆனால் அவர் அதற்கிசையவில்லை. ஐயருக்கு அதுவரை பாடஞ்சொல்லிய ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர் களிடம் பயின்றால் எல்லா நூல்களையும் பாடங்கேட்க முடியும் என்று கூறினர். பிள்ளையவர்களைப் பற்றி முன்னரே கேள்வி யுற்றிருந்த ஐயரும் அம் மகா வித்துவானை அடையும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 2. பிள்ளையவர்கள் மாணவர் மாணவராகச் சேர்தல் சாமிநாதையர் தமது பதினேழாம் வயதில் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தார். வேங்கட சுப்பையர் தம் புதல்வரை அழைத்துச் சென்று பிள்ளையவர்களிடம் அடைக்கலப்படுத்திவிட்டார். பிள்ளையவர்கள் அவ்வமயம் திருவாவடுதுறை மடத்தின் ஆதீன வித்துவானாகவும் அம்மடத்தின் தலைவராகிய மேலகரம் சுப்பிரமணிய தேசிகரின் உயிர்த் தோழராகவும் விளங்கினார். மயிலாடுதுறையில் (மாயூரத்தில்) நிலையாக வாழ்ந்தார். அவர், ஐயரவர்களின் அறிவுக் கூர்மையையும் அடக்கத்தையும் கண்டு மகிழ்ச்சியோடு அவரைத் தம் மாணவராக ஏற்றுக்கொண்டார். இதனால் ஐயரவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. குருகுல வாழ்க்கை ஐயர் பிள்ளையவர்களை நிழல்போலத் தொடர்ந்து வந்தார்; ஆசிரியர்க்கு வேண்டும் பணிகளை முட்டின்றிச் செய்தார்; ஆசிரியர் கூறும் செய்யுள்களைப் பனை ஏட்டில் எழுதினார்; ஆசிரியர் ஓய்வு கண்டு, அவரிடம் பாடம் கேட்டுப் பல நூல்களைப் பயின்றார்; இலக்கியங்கள் பலவற்றைக் கற்றார்; இலக்கணங்களை ஐயந்திரிபற அறிந்தார்; செய்யுள் இயற்றும் திறன்பெற்றார்; பனை ஓலை ஏடுகளைத் திறமையாகப் படிக்கவும் எழுதவும் கற்றார். அவர் இவ்வாறு ஆறு ஆண்டுக்காலம் பிள்ளையவர்களுடன் இருந்து, அரிய கலைச் செல்வத்தைத் திரட்டினார். கலை வள்ளலாக விளங்கிய பிள்ளையவர்கள், இல்லை என்னாமல் கலைச்செல்வத்தை அள்ளியள்ளி வழங்கினார்; அவரை அணுகிப் படித்தவர்கள் தத்தம்மால் வாரிக்கொண்டு செல்லும் அளவு கலைச் செல்வத்தைப் பெற்றுக்கொண்டனர். ஐயரவர்கள் தம்முடைய கலைப்பசி அடங்கும் வரை கலைச்செல்வத்தை அள்ளிக் கொண்டார். இசைப் பயிற்சி ஐயர் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டுவந்தபோது, அதே ஊரில் இருந்த கோபால கிருஷ்ண பாரதியாரிடம் இசை பயின்றார். ஆனால் இசை பயில்வது தமிழ்க்கல்வியை ஆழ்ந்து பயில ஒட்டாமற் செய்துவிடுமெனப் பிள்ளையவர்கள் கூறவே, ஐயர் அதைக் கைவிட்டார். பெயர் : சாமிநாதன் ஐயரது இயற் பெயராகிய வேங்கடராமன் என்பதை மாற்றியதும் பிள்ளையவர்களே ஆவார். அவர் ஐயருக்குச் சாமிநாதன் என்றொரு பெயர் இருப்பதை முதலில் அறியார். அவர் ஒருநாள் ஐயரைப் பார்த்து, உம் வீட்டார் உம்மை அழைப்பது இப்பெயர் கொண்டா? எனக் கேட்டார். ஐயர், வேங்கடராமன் என்பது என் மூதாதையர் பெயராதலின், சாமிநாதன் என்னும் பெயரால்தான் வீட்டார் அழைப்பர். சாமிநாதன் சாமா எனத் திரிந்து, வீட்டில் அழைக்கும் பெயர் சாமா என்றாயிற்று, என்று கூறினார். உடனே பிள்ளையவர்கள், சாமிநாதன் என்னும் பெயரே நன்றாயிருக்கிறது; இனி அப் பெயர் கொண்டே அழைப்பேன், என்று கூறி, அன்று முதல் அப்பெயரிட்டே அழைத்துவந்தார். அவர் விரும்பியவாறு அப்பெயரே இறுதிவரை ஐயருக்கு நிலைத்து விட்டது. ஆசிரியர் செய்த உதவி ஐயர் பிள்ளையவர்களிடம் நெருங்கிப் பழகி அவர் மனம் மகிழும் வண்ணம் நடந்துவந்தார். ஆதலால் அவர், தம்மை நாடி வந்த செல்வர்கள் பலரிடம் ஐயரை அறிமுகப்படுத்திவைத்தார். தாம் திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றபோதெல்லாம் ஐயரையும் உடனழைத்துச் சென்று மடத்திலுள்ள தம்பிரான் களுடன் நெருங்கிப் பழகச் செய்தார்; மடத்துத் தலைவரவர் களிடம் ஐயரை அறிமுகப்படுத்தி, அவர்தம் அன்புக்கு இலக்காக்கினார்; தம்முடைய மாணவர்களுட் சிறந்தவரான தியாகராச செட்டியாருடன் ஆழ்ந்த நட்புக் கொள்ளச் செய்தார். ஆசிரியர் அன்பு பிள்ளையவர்களின் மாணவராகிய தியாகராச செட்டியார், கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்தார். தம் தந்தையாருக்கு உதவியாக இருந்து, பொருளீட்டித் தம் குடும்பத்துக்கு உதவினால் நலமாக இருக்கும் என்பதை அறிந்த ஐயர், செட்டியாரிடம் தம் எண்ணத்தைக் கூறினார். செட்டியாரும் உடனடியாக ஒரு தமிழாசிரியர் வேலை பார்த்து, அதனை ஏற்றுக்கொள்ளுமாறு ஐயரிடம் கூறினார். ஆனால் பிள்ளையவர்கள் அது வேண்டாமென்று கூறி, மேலும் சிறிது காலம் தம்மிடம் பயிலுமாறு ஐயருக்குக் கட்டளை யிட்டார். அதை மீற முடியாத ஐயர், தம் தந்தையார் விருப்பத்திற்கு இணங்க இடையிடையே தம்மூர் சென்று, சுற்றுப்புறங்களில் புராணப் பிரசங்கங்கள் செய்து, அவற்றில் கிடைத்தவற்றைத் தந்தையாருக்கு உதவி வந்தார். கல்லூரி ஆசிரியர் இத்தறுவாயில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் காலமானார். ஐயரவர்கள் மிக வருந்தித் திருவாவடுதுறை மடத்துத் தலைவரிடம் போய்ச் சேர்ந்தார்; மடத்துத் தலைவரிடம் சில நூல்களைப் பயின்றார்; மடத்துப் பிள்ளை களுக்குப் பாடம் சொன்னார். இவ்வாறு பயின்றும் பயில்வித்தும் காலங்கழித்துக்கொண்டு இருக்கையில், கும்பகோணம் கல்லூரியில் இருந்து விலக முடிவு செய்த தியாகராச செட்டியார், தம் பதவியில் ஐயரை அமர்த்தினார். இப்பதவியில் அமர்வதற்கு என்று மடத்துத் தலைவர் ஐயருக்களித்த நற்சாட்சிக் கடிதத்தில், பிள்ளையவர்களிடம் ஆறாண்டுக் காலமும், தம்மிடம் நான்காண்டுக்காலமும் ஐயர் படித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். ஐயர் பதவிக்காகக் கல்லூரி சென்றபோது, கல்லூரித் தலைவர் ஒரு செய்யுள் செய்யுமாறு பணித்தார். உடனே ஐயர் ஓர் அழகிய செய்யுளைப் புனைந்து கொடுத்தார். அச்செய்யுளின் பொருட்செறிவையும் சொல் நயங்களையும் கண்ட அத் தலைவர், உடனே தமிழாசிரியர் பதவியில் ஐயரை அமர்த்தினார். 3. ஆசிரியர் பதவியும் நூல்கள் வெளியீடும் மகாவித்துவான் பட்டம் ஐயரது புலமைத் திறனையும் அவர் செய்யுட்கள் பலவற்றை இயற்றியுள்ளதையும் அறிந்த திருவாவடுதுறை மடத்துத் தலைவர், அவருக்கு மகாவித்துவான் என்னும் பட்டம் அளித்துச் சிறப்பித்தார். தமிழ் ஆசிரியர் ஐயர் கல்லூரியில் பதவி ஏற்ற பிறகு, மாணவர்களுடைய அன்பை மிக விரைவில் பெற்றார். அவர்கள் மிக விரும்பிக் கற்குமாறு இலக்கண இலக்கியங்களை அவர்களுடைய மனமறிந்து கற்பித்து வந்தமையால், ஐயரிடம் மாணவர்களுக்கு மிகுந்த அன்பு ஏற்பட்டது. கல்லூரியில் மட்டுமன்றி ஐயர் வீட்டிலும் வந்து பலர் பல நூல்களைப் பாடங்கேட்கத் தொடங்கினர். அச்சமயத்தில்தான் ஐயரவர்களுக்கு முதற் குழந்தையாக ஓர் ஆண்மகவு பிறந்தது. ஐயர் ஒரு குழந்தைக்குத் தந்தையாகியும் குடும்பப் பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கவலை தம் மைந்தருக்குக் கூடாதென்று கருதிய வேங்கட சுப்பையர் குடும்பப் பொறுப்பு முழுவதையும் தாமே ஏற்றுக் கொண்டார். ஐயர் வீட்டுக் கவலை எதுவுமின்றித் தமிழ் நூல்களைப் படிப்பதும், கேட்க வருபவர்களுக்குப் பாடஞ் சொல்வதும், கல்லூரி மாணவர்களுக்கு நல்ல முறையில் கல்வி கற்பிப்பதுமாகக் காலங் கழித்துவந்தார். சிந்தாமணிப் பதிப்பு ஐயரவர்களின் திறமையைக் கேள்விப்பட்டு, அவருடன் பழகி நட்புப் பூண்டவர்களுள் கும்பகோணம் முன்சீபாகிய சேலம் இராமசாமி முதலியார் குறிப்பிடத் தக்கவராவர். அவர் தம்மிடமிருந்த சீவக சிந்தாமணிப் பிரதி ஒன்றைக் கொடுத்துப் பாடம் கேட்க விரும்பினார். அதில் பிழைகள் மலிந்திருந்ததை ஐயர் எடுத்துக்காட்டவே, பிழையின்றி அதைப் பதிப்பிக்கத் தாம் பொருளுதவி செய்வதாக அவர் உறுதி கூறினார். ஐயர் அதற்கிசைந்து, சீவக சிந்தாமணியின் பிரதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டார்; ஊர் ஊராக அலைந்து திரிந்து, பல பிரதிகளைக் கண்டுபிடித்து, ஒப்பு நோக்கி, பிழையறத் திருத்தி, 1887-ஆம் ஆண்டில் அதை வெளியிட்டார். அதன் மூலம் ஐயரின் பெயரும் புகழும் தமிழகத்தில் பரவின. பூண்டி-அரங்கநாத முதலியார் பூண்டி அரங்கநாத முதலியார் எம்.ஏ. அவர்கள் சென்னை மாகாணக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியர்; ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த புலமை பெற்றவர்; கச்சிக் கலம்பகம் என்னும் தமிழ்ச்செய்யுள் நூல் இயற்றியவர்; தமிழ் அறிஞர்களிடம் மட்டற்ற அன்புடையவர். கும்பகோணத்தில் சிந்தாமணி முதலிய நூல்களை ஆராய்ந்து அச்சிடும் பணியில் இறங்கிய ஐயரைப் பற்றி அவர் கேள்வியுற்றார்; ஐயருடன் நேரிற் பழகி அளவளாவ அவாக் கொண்டார். ஐயர் போன்ற அறிஞர்கள் சென்னையி லிருப்பதால் இன்னும் நல்ல தொண்டாற்ற முடியும் என எண்ணினார்; தம் கல்லூரியில் வேலை வாங்கித் தருவதாக ஐயரைச் சென்னைக்கு அழைத்தார். தாம் இயற்றிய கச்சிக் கலம்பகத்தைச் சென்னையில் ஐயரைக் கொண்டே அரங்கேற்றுவித்தார். பூண்டி அரங்கநாத முதலியாருடன் நேரிற் பழகிய ஐயரவர்களும், முதலியாரின் நட்பை விரும்பிச் சென்னை மாகாணக் கல்லூரியில் பதவி பெறுவதை விரும்பினார். ஆனால் ஐயருடைய தந்தையார் இதற்கிணங்கவில்லை. அவர் சமயப்பற்று மிக்கவர்; சைவநெறி வழுவாதவர். சைவத் தலமாகிய கும்பகோணத்திலேயே வாழ்ந்திருத்தல் வேண்டு மென்று அவர் விரும்பினார். தந்தையின் விருப்பத்தை மீறி நடப்பதற்கு விரும்பாத ஐயர், சென்னை போகும் விருப்பத்தை ஒழித்துவிட்டுக் கும்பகோணத்திலேயே இருந்து விட்டார். நூல்கள் வெளியீடு ஐயர் பிறகு, பத்துப்பாட்டு என்னும் நூலைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்; அந்நூலை நச்சினார்க்கினியர் உரையுடன் 1888-இல் புத்தக வடிவில் வெளிக்கொணர்ந்தார். தமிழகம் அதுவரை புத்தக வடிவில் காணாதிருந்த நூல்கள் பலவற்றைத் தேடிக் கண்டுபிடித்து வெளியிடும் இடர் மிகுந்த வேலையைத் தம் விருப்பப் பணியாக மேற்கொண்டார். ஐம்பெருங்காப்பியங்களைப் புத்தக வடிவில் பார்த்துவிட வேண்மென்னும் பேரவாக் கொண்டார். அதற்கேற்பத் தமிழ் நாட்டில் பலரிடமிருந்து அரிய தமிழ் நூல்களையெல்லாம் வெளிப்படுத்துமாறு வேண்டுகோட் கடிதங்கள் வந்தவண்ண மாயிருந்தன. இவை ஐயரவர்கட்கு மேன்மேலும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தன. அவர், வழக்கம் போல மீண்டும் பல ஊர்களுக்குச் சென்று, சிலப்பதிகார ஏட்டுப்பிரதிகள் பலவற்றைப் பெற்றார்; அவற்றை ஒப்பு நோக்கி, ஒழுங்குப்படுத்தி, 1892-இல் நூல் வடிவில் வெளியிட்டார். சிலப்பதிகாரம் வெளியான பிறகு, மீண்டும் ஏட்டுப் பிரதிகளைக் கண்டுபிடித்து இரண்டாண்டுகளில் புறநானூறு நூல் வடிவில் வெளிவருமாறு செய்தார். ஆதரவாளர் மறைவு இங்ஙனம் இடையறா முயற்சி செய்து சலியா உழைப்பின் மீது சங்கத்தமிழ் நூல்களை ஒன்றன்பின் ஒன்றாகத் திருத்தமுற, நல்ல முறையில் குறிப்புக்கள் அளித்து, அச்சிற் பதிப்பித்துக் கொண்டு வருகையில், ஐயரின் நெருங்கிய நண்பர்களான சேலம்- இராமசாமி முதலியார், பூண்டி- அரங்கநாத முதலியார், தியாகராச செட்டியார், ஐயரின் தந்தையார் முதலியோர் ஒருவர்பின் ஒருவராக இவ்வுலக வாழ்வை நீத்தனர். மணிமேகலை வெளியீடு புறநானூறு வெளிவந்த நான்காண்டுகள் கழித்து, 1898-இல் மணிமேகலை ஒரு நூலாக வெளிப்பட்டது. ஐம்பெருங் காப்பியங்களையும் நூல் வடிவில் கொண்டுவர வேண்டுமென்று ஐயரவர்கள் மிகப்பெரு முயற்சி எடுத்தும் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய மூன்றை மட்டும் வெளிப்படுத்த முடிந்ததே ஒழிய வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரண்டு நூல்களும் கிடைக்கவேயில்லை. சென்னைக்கு மாற்றம் ஐயரவர்களின் தந்தையார் 1900-இல் காலமானார். அதன் பிறகு இரண்டாண்டுகள் வரை ஐயர் கும்பகோணத்திலேயே இருந்தார். கும்பகோணம் கல்லூரியில் ஐயர் திறமை மிக்க தமிழாசிரியர் என்று புகழப் பெற்றார். மாணவர் மனநிலைக் கேற்பத் தமிழ் கற்பிப்பதில் வல்லவர் என்னும் புகழ் பரவியத னால், அரசாங்கம் ஐயரைச் சென்னை மாகாணக் கல்லூரிக்கு மாற்றியது. கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகள் பணி யாற்றிய பிறகு, 1903-ஆம் ஆண்டு இறுதியில் ஐயர் சென்னை வந்து சேர்ந்தார். மாகாணக் கல்லூரிப் பேராசிரியர் ஐயர் சென்னை மாகாணக் கல்லூரியிலும் மாணவர் விரும்பிப் போற்றும் ஆசிரியரானார். அந்தக் காலத்தில் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களில் தமிழும் தமிழாசிரியரும் மதிக்கப்படுவ தில்லை. ஆனால் அத்தகைய காலத்திலே, ஐயர் மாணவர் அனைவரும் தம்மிடம் அன்பு கொள்ளுமாறு செய்துவிட்டார்; தமிழ்ப்பாடம் என்றால் விரும்பிப் பாடம் கேட்குமாறு செய்து விட்டார். மாணவர்கள் பாடம் கேட்பதில் கவனக்குறைவாக இருந்தாலும், குறும்புகள் செய்து கொண்டிருந் தாலும் நயமாகத் திருத்தியும் சிலேடை மொழிந்தும் அவர்களைத் திருத்திவிடுவார். ஐயர் ஆழ்ந்த கல்வியுடையவர் என்பதை அறிந்துகொண்ட மாணவர்கள் அவர்பால் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொள்ளத் தலைப்பட்டனர். கட்டுரைகளை ஒழுங்காக எழுதாத மாணவர்களை ஐயர் கண்டிப்பது வேடிக்கையாக இருக்கும். ஒரு முறை நிறையப் பிழைகளுடன் கட்டுரை எழுதியிருந்த ஒரு மாணவனைப் பார்த்து, கல்லூரிக்குச் செலவிடும் பணத்தைக் கழனியில் போட்டாலும் பலன் கிடைத்திருக்குமே! என்று ஐயர் கூறினார். மற்றொரு முறை , தமிழைப் படிப்பதைவிட வடமொழியைப் பயின்றிருக்கலாமே! என்று ஒரு மாணவனிடம் கூறினார். இவ்வாறு அவர்கள் மனத்தில் பதியும் வண்ணமும், சுடுசொற்கள் இல்லாவண்ணமும் கண்டிப்பதில் ஐயர் திறமை மிகுந்தவர். பலவகைத் தமிழ்த் தொண்டு இவ்வண்ணம் பதினாறு ஆண்டுகள் சென்னை மாகாணக் கல்லூரியில் ஐயரவர்கள் பேராசிரியராயிருந்து, பின்னர் விலகினார். இதனிடையே சென்னை, அண்ணாமலை, மைசூர், காசி, திருவனந்தபுரம், ஆந்திரப் பல்கலைக் கழகங்களில் உள்ள தமிழ்க் குழுக்களில் உறுப்பினராக அமர்ந்து, தமிழ்த் தொண்டு பல புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் தேர்வுக்குழுவின் தலைவராகப் பல ஆண்டுகள் இருந்து, அருந்தொண்டு செய்தார். புதிய நூல்கள் வெளிவரல் ஐயரவர்கள் சென்னை வந்த பிறகும் ஏட்டுச் சுவடிகளைத் தேடிப் பிடிப்பதையோ, பழைய சுவடிகளைப் புதிய நூல்களாக வெளியிடுவதையோ கைவிடவில்லை. அவர் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு என்னும் நூலை 1903-ஆம் ஆண்டில் வெளிப்படுத்தினார். அதற்கு மறு ஆண்டே பதிற்றுப்பத்து என்னும் பழைய நூல் வெளிவந்தது. அதன் பிறகு, ஐயர் பதினான்கு ஆண்டுகள் கழித்து (1918-இல்) பரிபாடலை வெளியாக்கினார். பாராட்டுகள் குன்றா முயற்சியும் தளரா ஊக்கமும் கொண்ட ஐயரை அரசாங்கம் பலவகைகளிற் சிறப்பித்தது. 1906-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் முதல் நாள் அவருக்குப் பெரும் பேராசிரியர் என்னும் பொருளையுடைய மஹா மஹோபாத்யாய என்னும் பட்டத்தை வழங்கியது; அதற்கு முன் ஆண்டில் ஆயிரம் ரூபாய் சன்மானம் அளித்தது. அவருக்குப் பேராசிரியர் பட்டம் கிடைத்தது பற்றிக் கும்பகோணம் கல்லூரி பாராட்டுக் கூட்டம் நடத்தியது. அப்போது அக்கல்லூரியில் தமிழாசிரியராயிருந்த வை. மு. சடகோப ராமாநுஜாச்சாரியார் ஐயரை மிகப் பாராட்டிப் பேசினார். தேசியகவி சி. சுப்பிரமணிய பாரதியார் வாழ்த்துப்பாக்கள் அனுப்பினார். கவி ரவீந்திர நாத் தாகூர் சென்னை வந்திருந்த சமயத்தில் ஐயரை வீட்டில் வந்து கண்டு பாராட்டிச் சென்றார். பாரத தர்ம மகா மண்டலத்தார் ஐயரது தமிழ்த் தொண்டினை அறிந்து, 1917-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் திராவிட வித்யாபூஷணம் என்னும் பட்டத்தை வழங்கிப் பெருமைப்படுத்தினர். ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி ஐயரவர்கள் 1919-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் தம் பதவியிலிருந்து விலகினார். ஆனால் ஐந்தாண்டுகளுக்குள் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் விருப்பப்படி, அண்ணாமலை தமிழ்ப்பிரிவுத் தலைவர் பதவி ஏற்று 1924-இல் அண்ணாமலை நகரம் சென்று, மூன்றாண்டுகள்வரை அப்பதவியில் இருந்தார். புதிய பட்டங்கள் காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரி சுவாமிகள் 1925-ஆம் ஆண்டில், தாக்ஷிணாத்ய கலாநிதி என்னும் பட்டத்தை ஐயருக்கு வழங்கினார். அதே ஆண்டு ஜூன் திங்களில் மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் 5000 ரூபாய்கள் கொண்ட பணமுடிப்பு ஒன்று ஐயருக்கு வழங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம் 1932-ஆம் ஆண்டு ஆகட் திங்களில் ஐயருக்கு இலக்கியப் பேரறிஞர் என்னும் பொருள் கொண்ட டாக்டர் பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது. 80-ஆம் ஆண்டு நிறைவு விழா 1935-ஆம் ஆண்டில் ஐயருக்கு 80 வயது நிறைவானது. அந்த 80-ஆம் ஆண்டுவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகம் அவர் தொண்டினைப் பாராட்டி ஒரு தேநீர் விருந்தளித்தது. அவ்விழாவில் திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் அளித்த ஐயரவர்களின் திருவுருவப்படம் செனேட் மண்டபத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஐயரவர் களுடைய தமிழ்த் தொண்டினைப் பாராட்டி 3000 ரூபாய்கள் கொண்ட பணமுடிப்பு ஒன்று ஐயரிடம் அளிக்கப்பட்டது. புதிய நூல் வெளியீடு அவ் விழாவிற்குப் பிறகும் ஐயர் ஓய்வு பெறவில்லை. மீண்டும் ஏட்டுச் சுவடி ஆராய்ச்சியில் இறங்கிக் குறுந்தொகை எனும் அரிய நூலை 1937-இல் அச்சிற் பதிப்பித்தார். எண்பது வயதாகியும் இவ்வாறு ஓயாமல் உழைத்துக்கொண்டிருந்த அவருடைய மனவலிமையைப் பாராட்டிச் சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு 1500 ரூபாய்கள் கொடுத்துதவியது. ஐயரது மறைவு 1942-இல் சென்னை நகர்மீது ஜப்பானியர் குண்டு வீசுவர் என்ற அச்சம் ஏற்பட்டு, நகரைத் துறந்து வெளியிடம் செல்லுமாறு அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தது. அவ்வமயம் ஐயர் திருக்கழுக்குன்றம் சென்று, அங்குள்ள திருவாவடுதுறை மடத்தில் இருந்தார். சென்னையில் இருந்தபோதே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்து படுத்த படுக்கையினரானார். அவர் ஒரு நாள் அங்குத் திடீரெனத் தம் எண்பத்தெட்டாம் வயதில் காலமானார். அவரது பிரிவைப் பொறாமல் தமிழ்நாடு முழுவதும் வருந்தியது. அவரது பிரிவு தமிழ் நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பெருநஷ்டமாகும். ஐயரவர்கள் காலஞ் சென்ற பிறகு, அவர் அரும்பாடு பட்டுத் திரட்டி வைத்திருந்த ஓலைச் சுவடிகள் அனைத்தும் அடையாறு பிரம்ம ஞான சபையில் சேர்க்கப்பட்டன. அங்கு இவற்றைத் தனிப்பிரிவாக வைத்து, அதற்கென ஒரு புலவரை நியமித்து, வெளிவராத நூல்களை ஆராய்ந்து வெளியிடுவதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம் முயற்சியின் பலனாகச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. இம்முயற்சியை மேற்கொண்டு தம் பொருளில் நடத்தி வருபவர் ஸ்ரீமதி ருக்மணி அருண்டேல் அவர்கள். அவர்களுக்கு நமது நன்றி உரியதாகுக. 4. நற்குணங்கள் பலவகைத் தொண்டுகள் டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள் முன் சொன்ன தமிழ்ப் பணிகளுடன் பொதுத் தொண்டிலும் ஈடுபட்டுழைத்தார். திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு இயக்கத்தைத் (T.U.C.S) துவக்கியவர்களுள் இவரும் ஒருவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் துவக்கப்பட்ட நாள் முதல் அதிற் பங்கு கொண்டு, அதன் நிரந்தர உறுப்பினரானார். மேலைச் சிவபுரி சன்மார்க்க சபையினரின் ஆண்டு விழாக் கூட்டங்களில் மும்முறை ஐயர் தலைமை தாங்கிப் பணியாற்றி மகிழ்ந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்தார் விருப்பத்திற்கு இணங்கி, சங்கத் தமிழும், பிற்காலத் தமிழும் என்பது பற்றிச் சொற் பொழிவு செய்தார்; பின்னர் ஒரு முறை, பண்டைத் தமிழ் இசையும் இசைக்கருவிகளும் என்பது குறித்துப் பேசினார். சென்னையில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாட்டத்தில் தலைமை வகித்துப் பேசினார். இச்சொற்பொழிவுகள் அனைத்தும் நூல் வடிவில் வெளிவந்துள்ளன. ஐயர் திங்கள், வார இதழ்களில் அரிய பல கட்டுரைகளை வெளியிட்டுவந்தார். தம் சுயசரிதத்தை எழுதினார்; ஆனால் அது முடியும் முன்னரே காலமானார். அந்நூல் பிறகு அவர் குமாரரால் முழுவதும் அச்சிடப்பட்டது. காலத்தின் திறமை ஐயரவர்கள் இன்னின்ன நேரத்தில் இன்னின்ன வேலை களைச் செய்தல் வேண்டும் என்னும் வரையறை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி நடந்துவந்தார். வைகறையில் அவர் துயில் எழுவார்; காலைக் கடன்களை முடிப்பார்; சிறிது நேரம் இறை வணக்கத்தில் அமர்ந்திருப்பார்; பிறகு, காப்பி அருந்திவிட்டுத் தேவார, திருவாசகங்களைப் படித்துக் கொண்டிருப்பார். அவர் பிறகு அச்சகத்திலிருந்து வரும் அச்சுப்பிரதிகளைப் பார்த்துப் பிழையறத் திருத்தியனுப்புவார்; புதிதாக அச்சிட வேண்டும் நூல்களை ஆராய்ந்து ஒழுங்கு செய்வார். பத்து மணிக்குக் குளித்துத் தம் துணிகளைத் தாமே துவைப்பார்; பிறகு பூசை முடித்து உணவு உண்பார்; பின்னர் ஓய்வாக அமர்ந்து திருக்குறள், நாலடியார் முதலியவற்றைப் படிக்கச் செய்து அவற்றினை ஆராய்வார்; சிறிது அயர்ந்து உறங்கியபின், பகல் ஒரு மணிக்குக் காப்பி அருந்துவார். பின்னர் அவர் நூலாராய்ச்சி, அதன் பிறகு மாணவர்க்குப் பாடஞ் சொல்லுதல், மாலையில் சரித்திரக் குறிப்புகள் எழுதுதல் போன்றவற்றைக் கவனிப்பார். இடையிடையே தம்மைத் தேடிக்கொண்டு வருபவர்களை வரவேற்று, அளவளாவிப் பேசி மகிழ்வூட்டி அனுப்பி வைப்பார். இரவு ஏழு மணி முதல் எட்டரை மணி வரை மாணவர்க்குப் பாடஞ்சொல்லுவார்; இரவு ஒன்பது மணியானதும் உணவு உண்டு, தாயுமானவர் பாடல் போன்ற பக்திப் பாடலைப் பாடிக்கொண்டே படுக்கைக்குப் போவார். இவ்வாறே ஒவ்வொரு நாளிலும் ஒரு நிமிட நேரத்தையும் வீணாக்காமல் ஐயர் தொண்டாற்றிவந்தார். அடக்கம் உடையவர் ஐயர் மிகச் சிறு வயதிலிருந்தே நற்குண நல்லொழுக் கங்களைக் கடைப்பிடித்துவந்தார். எவரிடத்தும் கடுகடுத்துப் பேசும் வழக்கம் அவரிடம் இல்லை. அடக்கம் அமரருள் உய்க்கும் என்பதைத் தம் வாழ்வில் மெய்ப்பித்துக் காட்டியவர் ஐயர் எனலாம். தம் அடக்கத்தாலும் பணிவாலும் ஐயர் தம் ஆசிரியராகிய பிள்ளையவர்கள் உள்ளத்தைக் கவர்ந்தது மட்டுமின்றித் திருவாவடுதுறை மடத்துத் தலைவராயிருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகருடைய அன்பையும் ஆதரவையும் பெற்றிருந்தார். குடும்பப் பொறுப்பு சென்னை மாகாணக் கல்லூரியில் பதவி ஏற்க வருமாறு பூண்டி அரங்கநாத முதலியார் அழைத்த காலத்தில் தம் தந்தையார் விரும்பவில்லை என்பதற்காக ஐயர் சென்னை செல்ல மறுத்துவிட்டார். தம் தந்தையிடம் ஐயருக்கிருந்த அன்பும் பற்றும் அளவிட்டு உரைக்க கூடியன அல்ல. ஐயர் பெற்றோரிடம் பேரன்பு பூண்டவர். தம் தந்தையார் குடும்பப் பொறுப்பை ஏற்றுப் பெரிதும் சங்கடப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதறிந்த ஐயர், தாம் பிள்ளையவர்களிடம் படித்துக் கொண்டிருக்கும்போதே, தம் ஆசிரியருடன் போகுமிடங்களில் தமக்குக் கிடைக்கும் பரிசில்களைத் தந்தையாருக்கு அனுப்பி வந்தார்; இடையிடையே உத்தமதானபுரம் சென்று, புராணப் பிரசங்கங்கள் செய்து, அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயினைத் தம் தந்தையாரிடம் அளித்துவந்தார்; இறுதியாகக் கும்பகோணம் கல்லூரியில் வேலை கிடைத்தவுடன் தம் குடும்பத்தையே கும்பகோணத்திற்கு அழைத்துவந்து வைத்துக்கொண்டார். தமிழ்ப் பற்று தமிழை அனைவரும் படிக்கவேண்டும் என்று தூண்டு வதில் ஐயரவர்கள் முன்னணியில் இருந்தார். தமிழ் மணம் எங்கும் வீசவேண்டும் என்பது அவரது பேரவா. ஐயரவர்கள் தமிழ் கற்பிக்கும்போது ஒரு சிறு செய்தியையும் விடாமல் கூறுவார். இலக்கியங்களை எடுத்துக் கொண்டால், பாட்டை இசையுடன் படிக்கச் சொல்லுவார்; தக்க இசையுடன் படித்துக் காட்டுவார். செய்யுளை மாணவர்கள் அறியும் வகையில் சீர்பிரித்துக்காட்டி, இலக்கணக்குறிப்பு, பொருள் முதலியவற்றை விளக்குவார்; சொல்நயம், பொருள் நயம் முதலியவற்றை நயமாக விளக்கியுரைப்பார். தமிழர்கள் எண்ணுவதும் பேசுவதும் எழுதுவதும் தமிழாகவே இருக்கவேண்டுமென்பது ஐயரது கருத்து; பிற மொழிகளிலுள்ள நல்லறிஞர் நூல்கள் தமிழில் வெளிவரச் செய்ய வேண்டும் என்பதும் ஐயரது அவா. ஐயரவர்களிடம் பிறர் குற்றத்தை மறத்தல், புறங்கூறாமை, நன்றி மறவாமை, பெரியோரைப் பேணல், அன்புடைமை, அடக்கமுடைமை, பிறர் துயர்துடைத்தல், ஊக்கமுடைமை முதலிய நற்பண்புகள் நிறைந்திருந்தன. இவற்றால், ஐயரவர் களிடம் நாட்டின் பெரும்புலவர்கள் நன்மதிப்பும் அன்பும் கொண்டிருந்தனர்; ஐயரது இடையறா நூலாராய்ச்சித் தொண்டிற்குத் தத்தம்மால் இயன்ற உதவி செய்தனர். மற்றைப் புலவர்கள் ஐயரவர்களின் தமிழ்ப்பெருந்தொண்டு கண்டு, அவரிடம் நீங்கா அன்பு கொண்டனர்; தமிழ் மக்கள் அவரைத் தமிழ்த்தாத்தா என்னும் அன்புப் பெயரால் அழைக்கத் தொடங்கினர். தமிழக்காக வாழ்ந்தார் ஐயரவர்கள் தமிழ் வாழ்வு வாழ்ந்தார். எண்பத்தெட்டு ஆண்டுகளில் குழந்தைப்பருவம் நீங்கலாக மற்றைக்காலம் முழுவதும் தமிழையே படித்து, தமிழுக்காகவே உழைத்து, தமிழாலேயே வாழ்ந்து, தமிழைக் கொண்டே பெரும் புகழ் எய்தினார். சென்னை அறிஞர்கள் ஐயரவர்களின் உருவச்சிலை ஒன்றைச் சென்னை மாகாணக் கல்லூரியின் முகப்பில் வைத்துச் சிறப்பித்துள்ளனர். அவருடைய திருவுருவப் படங்கள் சென்னைப் பல்கலைக்கழகச் செனேட் மண்டபத்திலும் கும்பகோணம் கல்லூரி மண்டபத்திலும் காட்சி அளிக்கின்றன. தமிழ் படித்தவர் ஐயர் பதிப்பித்த நூல்களைப் படியாமல் இருத்தல் இயலாது. எனவே, தமிழ் படித்தவர் ஐயரை மறக்கவே முடியாது. தமிழ் இலக்கியம் உள்ள அளவும் ஐயரது பெயரும் புகழும் தமிழ்நாட்டில் இருக்கும் என்பது உறுதி. வாழ்க ஐயரது தமிழ்த் தொண்டு! II. சதாவதானி - செய்குதம்பிப் பாவலர் (கி. பி. 1855-1950) 1. இளமையும் கல்வியும் நாஞ்சில் நாட்டுத் தமிழர் நாஞ்சில் நாடு சங்க காலத்திலிருந்தே தமிழ் வளம் குன்றாத நாடாக இருந்துவருகிறது. நாஞ்சில் நாடு சில நூற்றாண்டு களாகச் சேரநாட்டுடன் இணைந்திருப்பினும், நாஞ்சில் நாட்டுத் தமிழர் தம் தாய்மொழியைத் தம் உயிரினும் உயர்வாய்ப் போற்றுகின்றனர். அத்தமிழருள் புலமை மிக்கார் பலர் இருந்தனர்; இன்றும் இருந்துவருகின்றனர். முன்னர் இருந்து மறைந்த பெரும்புலவருள் சிறந்தவரே பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள். இந்த நூற்றாண்டுப் புலவருள் சிறந்தவர் மூவர். அவருள் ஒருவர் இசைச் செல்வர் இலக்குமணப் பிள்ளை; மற்றொருவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை; பிறிதொருவர் சதாவதானி-செய்குதம்பிப் பாவலர். முலிம் தமிழ்ப் புலவர்கள் நம் தமிழ்நாட்டு முலிம்கள் யார்? அவர்கள் தமிழரே. இலாத்தைத் தழுவியவர். அவர்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை தமிழையே தாய் மொழியாகக் கொண்டவர். ஆதலின் அவர்கள் தங்கள் தாய் மொழியாகிய தமிழின் வளர்ச்சியில் கருத்துக் கொண்டவரே யாவர். தமிழ் நூல்கள் நெடுங்காலமாக இந்து சமயத் தொடர்புடையனவாக இருந்து வந்தமையால், முலிம்கள் அந்த நூல்களை மிகுதியாய்க் கற்க வாய்ப்பில்லை. அங்ஙனம் இருந்தும் முலிம்கள் சிலர் எல்லாத் தமிழ் நூல்களையும் கற்றுப் பெரும் புலவராய்த் திகழ்ந்தனர். அவருள் தலைசிறந்தவர் எட்டயபுரத்தரசரது அவைப் புலவராயிருந்த உமறுப் புலவர் என்பவர். அவர் நபி நாயகம் அவர்களின் வரலாற்றைக் காவியமாகப் பாடி அழியாப் புகழ் பெற்றவர். அவருக்குப்பின் திருச்சிராப்பள்ளியில் பிச்சை-இப்ராஹீம் புலவர் என்பவர் சிறந்திருந்தார். அவர் திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய் வேலை பார்த்தவர்; கம்பராமாயணச் சொற்பொழிவுகளில் இணையற்றவர் எனப் பெயர் பெற்றவர். மதுரை மாவட்டத்து உத்தமபாளையம், போடிநாயக்கனூர் முதலிய இடங்களில் முலிம் புலவர் சிலர் இருக்கின்றனர். இந்த நூற்றாண்டு முலிம் புலவருள் குறிப்பிடத் தக்க பெருமையுடையவர் நமது செய்குதம்பிப் பாவலர் என்றால் மிகையாகாது. பாவலர் பெற்றோர் நாஞ்சில் நாட்டின் கோநகரமாக விளங்குவது நாகர் கோவில். அதனையடுத்துள்ளது கோட்டாறு என்னும் சிற்றூர். அதனையடுத்த இலங்கடை என்னும் ஊரே நமது பாவலர் பிறந்த பதியாகும். அப்பதியில் வாழ்ந்த பக்கீர் மீரான் சாகிப் என்பவருக்கு ஐந்தாம் மகனாராய்ப் பிறந்தவர் நமது பாவலர். அவர் தாயார் சமய ஒழுக்கத்தில் பெயர் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தையாரும் தாயாரும் குணச்சிறப்புப் பெற்றவரே அன்றிப் பணச் சிறப்புப் பெற்றவரல்லர். பள்ளிக்கல்வி பாவலர் விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் மூதுரையை மெய்ப்பிப்பார் போல இளமைப் பருவத்திலேயே தம் நுண்ணறிவைக் காட்டலானார். தமக்குத் தோன்றிய பல ஐயங்களையும் விளங்காதவற்றையும் தம் பெற்றோரிடம் கூறி விளக்கம் பெற்றார்; தாயாரிடம் சமயத் தொடர்பான பல செய்தி களைக் கேட்டுணர்ந்தார். சுருங்கக் கூறின், அவர் பள்ளியில் சேர்க்கப்படுமுன்னரே, இவன் கல்வியில் கருத்துடையவன் என்னும் எண்ணத்தைத் தம் பெற்றோர்க்கு உணர்த்திவிட்டார் எனலாம். அவர் ஐந்து வயதில் தம் சமூக வழக்கப்படி குர்-ஆன் கற்க அனுப்பப்பட்டார். அவர் மூன்றாண்டுகள் சமயக் கல்வியைக் கற்ற பிறகு எட்டாம் ஆண்டில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். எட்டு வயதுடைய அவர் அரை வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆயின் அவரது அறிவு நுட்பத்தைக் கண்ட தலைமையாசிரியர் இருபது நாட்களில் அவரை முதல் வகுப்புக்கு மாற்றினார். ஒரு திங்கள் கழித்து அவரை இரண்டாம் வகுப்புக்கு மாற்றினார். பின்னர்ச் சில மாதங்களில் நான்காம் வகுப்பிற்கு மாற்றினார். பாவலர் அடுத்த ஆண்டு ஐந்தாம் வகுப்பிற் சேர்ந்து படித்துத் தேர்வில் சிறந்து விளங்கினார். வறுமையும் வாட்டமும் மேற்கல்வி கற்க ஆர்வம் கொண்ட பாவலரை வேறு பள்ளிக்கனுப்பிப் படிக்கவைக்கப் பெற்றோரிடம் பண வசதியில்லை. ‘nkny go¡f nt©L«’ v‹W ghty® Jo¤jh®; ‘ãŸis ÉU«ãí« go¡f it¡f¥ gz« ïšiyna! என்று பெற்றோர் துடித்தனர். முடிவு யாது? பாவலர் தம் தந்தையாருடன் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். ஆயினும் அவர் உள்ளம் கல்வி கற்பதிலேயே அவாவி நின்றது. புலவர் சங்கரநாராயணர் சங்கரநாராயணர் என்ற பெயருடைய ஆசிரியர் ஒருவர் இளங்கடையில் வாழ்ந்துவந்தார். அவர் அக்காலத்தில் வாழ்ந்த பெரும் புலவருள் ஒருவர். அப்பெரியார் நன்னூல் முதலிய தமிழ் இலக்கண நூல்களையும் கம்பராமாயணம் முதலிய இலக்கிய நூல்களையும் நன்கு படித்தவர். மாணவர் பலர் அவ்வாசிரியரிடம் தமிழ்க் கல்வி பயின்றுவந்தனர். சங்கரநாராயணர் பாடம் சொல்லுவதில் வல்லவர் எனப் பெயர் பெற்றவர் ஆதலின், பலாச்சுளையை மொய்க்கும் ஈக்களைப் போல மாணவர் பலர் அவரைச் சூழ்ந்திருக்கலாயினர். புலவர் பெருந்தன்மை பாவலரும் வேறு சில மாணவரும் சங்கர நாராயணரிடம் தமிழ் பாடம் கேட்க விரும்பினர். புலவர் அவர்களது விருப்பத்திற்கு இசைந்தார்; மாணவர்கள் நன்னாளில் ஆசிரியர் திருமுன்னர் கூடினர். பாடம் தொடங்குமுன் அவரவர் ஆசிரியர்க்குத் தரவேண்டிய காணிக்கையை வெற்றிலையில் வைத்து மடித்துக் கொடுத்தார். ஒருவர் மூன்று ரூபாய் கொடுத்தனர்; மற்றொருவர் ஐந்து ரூபாய் கொடுத்தார்; பிறிதொருவர் ஏழு ரூபாய் கொடுத்தார்; இப்படி அவரவர் வசதிக்குத் தக்கபடி அளித்தனர். நமது பாவலர் வறுமைவாய்ப் பட்டவராகலின், எட்டணாவை வெற்றிலையில் வைத்துக் கொடுத்தார். ஆசிரியர் அதனை மட்டும் தனியே வைத்துவிட்டுப் பாடம் தொடங்கினார். பாடம் முடிந்த பின்னர் ஆசிரியர் பாவலரை மட்டும் நிறுத்திக்கொண்டு மற்ற மாணவரை அனுப்பிவிட்டார். அவர் தமது எட்டணாக் காணிக்கையை ஏற்காது தம்மை விரட்டி விடுவாரோ என்று பாவலர் கண்கலங்கினார். அவ்வமயம் புலவர் பாவலர் கொடுத்த வெற்றிலையை எட்டணாவுடன் பாவலரிடம் நீட்டினார். அது கண்ட பாவலர் கண்கலங்கி நின்று, ஆசிரியர் அவர்களே, அடியேன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் பல நாள் பாடுபட்டு இந்த எட்டணாவைச் சேர்த்தேன். எனது காணிக்கை குறைவானதென்று கருதி, என்னைப் புறக்கணிக்கலாகாது என்று கூறி வேண்டினார். புலவர் நகைத்து, தம்பீ, நீ கொடுத்ததை நான் ஏற்றுக் கொண்டேன். நான் இப்பொழுது உனக்கு அதனைத் தருகின்றேன்; ஏற்றுக்கொள். நீ தவறாது வந்து படி; உன் அவா அடங்கும் வரை வந்து படி. இன்று இல்லாவிடினும் எதிர்காலத்தில் உன்னிடம் நான் காணிக்கை பெறுவேன். நீ கவனத்துடன் படி என்று நன்மொழி கூறினார். மாணவர் புலவரது பெருந்தன்மையைப் பாராட்டி அவரிடம் விடைபெற்றுச் சென்றார். தமிழிற் புலமை புலவர் ஒருநாள் கற்பித்த பாடங்களைப் பாவலர் மறுநாள் ஒப்பிக்கலானார். ஏனைய மாணவரினும் பாவலர் சிறந்து நின்றதைக் கண்ட புலவர் மனம், பாவலர் நன்மையில் நாட்டங் கொண்டது. புலவர் பாவலரிடம் மிக்க அன்பு காட்டலானார். பாவலர் நீர் வேட்கை கொண்டவரைப் போலத் தமிழ்க்கடல் நீரைப் பருகலானார். நன்னூல், இலக்கண விளக்கம், தொல் காப்பியம் முதலிய இலக்கண நூல்களை நன்கு பயின்றார். நாலடியார், திருக்குறள் போன்ற அறநூல்களைப் பாடங் கேட்டார். கம்பராமாயணம், பெரியபுராணம், பாரதம் போன்ற பெருங்காவியங்களைக் கற்றார். பேச்சாற்றல் பலர் நன்றாய்ப் படித்திருப்பார்கள்; பேச அறியார்கள். பலர் திறம்படப் பேசுவர்; நன்கு பயின்றிலர். சிலர் நன்றாய்ப் படித்திருப்பர்; நன்கு பேசுவர்; ஆயின் எழுதுவதில் சுவை யற்றிருப்பர். இம்மூன்றிலும் வல்லமை பெற்றவர் மிகச் சிலரே யாவர். நமது பாவலர் இச்சிலருள் ஒருவராவர். அவர் பல நூல்களை நன்றாய்ப் படித்தவர்; கடல்மடை திறந்தாற் போலப் பேசும் ஆற்றல் பெற்றவர்; திறம்பட எழுதுவதிலும் வல்லவர். அவர் தம் பதினைந்தாம் வயதிலேயே நன்றாய்ப் பேச வல்லவர் எனப் பெயர் பெற்றார். செய்யுள் செய்தல் செய்யுள் செய்தலில் இரு வகையினர் உண்டு: ஒரு வகையினர் தமக்குப் பட்டன எல்லாம் பாடுவார்; அப்பாக்களில் இலக்கண அமைதி இராது. ஆயினும் அவை பாக்கள் எனப் பாராட்டுப் பெறும். வேறோரு வகையினர் இலக்கண வரம்புக்கு உட்பட்டுப் பாடுவர்; பாக்கள் சொற்செறிவும் பொருட் செறிவும் பெற்றிருக்கும். அவை மொழி வளர்ச்சிக்கேற்ற இலக்கிய வரிசையிற் சேர்க்கத் தக்கவை. இத்தகைய பாக்களைப் பாடுவதில் நமது பாவலர் வல்லவர். அவர் தமது பதினைந்தாம் வயதிலேயே அந்தாதி, பிள்ளைத் தமிழ் முதலிய பிரபந்தங்களும், பலவகைச் சித்திரக்கவிகளும் பாடினார். அவற்றுள் இன்று அச்சாகி யுள்ளவை திருநாகூர்த் திருவந்தாதி, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி என்பன. நிரம்பிய இலக்கண-இலக்கியப் புலமையுடன் பாடிய கவிகள் ஆதலின் அவை, தமிழன்னையின் தமிழ்த் தோட்டத்தில் வாடா மலர்களாய்க் காட்சி அளிக்கின்றன. 2. சென்னையில் பாவலர் சென்னை வாழ்க்கை சங்கரநாராயணப் புலவரிடம் படித்துவந்த பாவலர் தமது பத்தொன்பதாம் வயதில் தம் மரபைச் சேர்ந்த பெரியார் ஒருவர் பாடிய மெய்ஞ்ஞானப்பாடல் திரட்டு என்னும் நூலை அச்சிடச் சென்னை சென்றார்; அங்கு ஓர் அச்சகத்தில் அந்நூலைத் தந்து, சில மாதங்களுக்குள் அச்சிடச் செய்து வெளிப்படுத்தினார். அவர் அங்குத் தங்கியிருந்த பொழுது ஸ்ரீபத்மநாப விலாசம் என்னும் அச்சகத்தின் உரிமையாளரான இட்டா-பார்த்தசாரதி நாயுடு என்பவரது நட்புக் கிடைத்தது. நாயுடு தமிழில் மிக்க ஈடுபாடு உடையவர்; புலவர்களுடன் பொழுது போக்குவதில் பெருமகிழ்ச்சி கொண்டவர். அவர் பாவலருடைய பெரும்புலமையை நன்கு அறிந்தார்; அவரது பேச்சு வன்மையைப் பார்த்து மகிழ்ந்தார்; நூல்களைப் பிழையின்றிப் பதிப்பிக்கும் ஆற்றலை நேரிற் கண்டார்; இத்தகைய ஒருவர் நமது அச்சகத்தில் இருத்தல் நல்லது என்று கருதினார்; தம்மிடம் தங்கிவிடுமாறு பாவலரை வேண்டினார்; அவருக்குத் திங்கள் தோறும் அறுபது ரூபாய் தருவதாக வாக்களித்தார். அவர் தம்மிடம் காட்டிய அன்பினைப் பாராட்டிப் பாவலர் சென்னையில் தங்க இசைந்தார். பிழையற்ற நூல்கள் நாயுடுவின் அச்சகத்தில் அச்சான நூல்கள் பல. அவை இலக்கண நூல்கள், இதிகாச நூல்கள், புராண நூல்கள், நிகண்டுகள் எனப் பலதிறப்பட்டவை. அவற்றைப் பார்க்கப் புலவர் பலர் அச்சகத்தில் நியமனம் பெற்றிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மேலாகப் பாவலர் இருந்தார். பாவலர் நினைவாற்றல் மிக்கவர்; ஆதலின் அச்சுக்குச் செல்லு முன்னரே ஒவ்வொரு நூலையும் பார்த்துப் பிழையறத் திருத்தி வந்தார்; நூல் அச்சாகும் பொழுதும் அச்சுப் பிழைகளை மிக்க கவனத்துடன் திருத்திவந்தார். செய்யுட்களைச் சீர் பிரித்து எழுதுதல், அச்சிடுதல் என்பன சிரமமான வேலை. யாப்பிலக்கணத்தைப் படித்தவரே அவற்றைச் செய்ய முடியும். பாவலர் அவற்றைத் திறம்படச் செய்துவந்தார். அவர் நிகண்டு முதலிய பொது நூல்களைத் தம் பெயரால் வெளிப்படுத்தினர்; இந்து சமயச் சார்பான நூல்களில் தம் பெயரைப் பதிப்பாசிரியராய் வெளிப்படுத்தவில்லை. அவர் நாயுடுவின் வேண்டுகோட்படி நபிநாயகத்தின் வரலாறு கூறும் சீறாப்புராணத்தினைப் பிழையறப் பரிசோதித்து அச்சிட்டார்; அதில் உள்ள ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களுக்கு உரையெழுதினார். பாவலர் புகழ் சீறாப்புராணத்திற்கு உரை வந்ததைக் கண்ட முலிம் பெரு மக்கள் அந்நூலை ஆவலோடு வாங்கிப் படித்தனர்; பாவலரது உரைச் சிறப்பினை படித்து மகிழ்ந்தனர்; இலாத்தின் சிறப்பை விளக்கவந்த இயற்றமிழ்ப் புலவர் என்று அவரை உளமாரப் பாராட்டினர். அவர் பெயரால் வெளியிட்ட நிகண்டு முதலிய நூல்கள் செல்விய முறையில் அச்சாகி வெளிவந்ததைக் கண்ட தமிழ்ப் புலவர் பலர் அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் வரைந்தனர்; சென்னைப் புலவர் பலர் அவரை நேரிற் கண்டு தம் பாராட்டைத் தெரிவித்தனர்; அவரை அடிக்கடி சந்தித்துப் பழகவும் தொடங்கினர்; பாவலரைத் தலைமைப் பதிப்பாள ராகப் பெற்ற நாயுடு அவர்களைப் பாராட்டினர். நாயுடு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அவர் பாவலர் சொற்படி நூல்களைப் பதிப்பித்துவந்தார். அருட்பா-மருட்பா பூசல் பாவலர் இங்ஙனம் தமிழ்ப்பணி ஆற்றிவந்த பொழுது சென்னை மாநகரில் புலவர்க்குள் பூசல் ஒன்று தோன்றியது. இராமலிங்க அடிகள் பாடிய ஆறாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள் அருட்பா என்னும் பெயர் கொண்ட நூலாக வெளிவந்தன. அந்நூல் அருட்பா அன்று; அடிகளுடைய பாக்கள் அருட்பாக்கள் அல்ல; அவை மருட்பாக்களே ஆகும். ஆகையால் நூலுக்கு மருட்பா என்று பெயரிடுதலே ஏற்புடையது என்று ஒருசார் புலவர்கள் கொதித்தெழுந்தனர். அருட்பாக் கட்சியினர்க்கு அடிகளார் மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் தலைவராக விளங்கினார். மருட்பாக் கட்சியினர்க்கு யாழ்ப்பாணத்துக் கதிரைவேற் பிள்ளை என்பவர் தலைவரானார். இருதிறத்தாரும் பெரும் புலவர்கள்; தத்தம் காரணங்களை விளக்கிப் பல கூட்டங்களிற் பேசினர்; துண்டு வெளியீடுகள் விடுத்தனர். வரவர இரண்டு கட்சிகளும் நெருங்கிப் பூசலிடத் தொடங்கின. மருட்பாக் கட்சியினர் அடிகள் நூலுக்கு அருட்பா என்று பெயரிடலாகாது என்று வழக்குத் தொடுத்தனர். பூசலில் பாவலர் பங்கு பாவலர் இருதிறத்தார் வாதங்களையும் கூர்ந்து கவனித்தார்; இருதிறத்தார் சொற்பொழிவுகளையும் நேரிற் கேட்டார்; இருகட்சியினருடைய துண்டு வெளியீடுகளையும் படித்தார்; இருதிறத்து வாதங்களையும் சீர்தூக்கிப் பார்த்தார்; அருட்பாவைப் படித்தார்; எச்சமயத்துவரும் பாடி இன்பம் துய்க்கத் தகும் நூல் அருட்பா என்பது. இஃது அன்பு ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு எழுந்த நூல். இந்நூல் அருட்பா என்னும் பெயருடன் இருத்தலே ஏற்புடையது, என்ற முடிவுக்கு வந்தார். ஆதலால் அவர், தாம் முலிம் என்பதையும் மறந்து, தமிழன் என்ற முறையில் சொற்போரிற் குதித்தார். மருட்பாக் கட்சியினர் முதல் நாள் கூட்டம் நடத்திய இடத்தில் பாவலர் அடுத்த நாள் கூட்டம் நடத்தினார்; அருட்பாக்களை இசையுடன் படித்துக் காட்டிப் பல மேற்கோள்களுடன் பொருளை விளக்கி, இத்தகைய உயரிய கொள்கைகளைப் போதிக்கும் இப்பாக்கள் அருட்பாக்களா? மருட்பாக்களா? பொது மக்களாகிய நீங்களே முடிவு கூறுங்கள், என்று நயம்பட நவின்றார். ஒரு முலிம் புலவர் சைவசமயப் பாடல்களை மேற்கோளாகக் காட்டினமை, கடல்மடை திறந்தாற் போலப் பேசினமை, வாதிடும் திறமை, கம்பீரமான தோற்றம் ஆகிய இவற்றில் சென்னைப் பொதுமக்கள் ஈடுபட்டனர்; பாவலரை மனமாரப் பாராட்டிப் பேசினர். பாவலரது கட்சி நாள்தோறும் வலுப்பெற்று வந்தது. அதனா ல் மருட்பாக் கட்சியினர் தம் கிளர்ச்சியை விட்டொழித்தனர். அருட்பாவிற்காக வாதிட்டு வென்ற பாவலர் புகழ் சென்னையில் மட்டுமின்றித் தமிழகம் முழுவதும் பரவியது. நல்லவர் நட்பு பாவலருடைய நற்குணங்களிலும் செய்யுள் இயற்றுந் திறத்திலும் பெரும்புலமையிலும் பேச்சு வன்மையிலும் வாதத் திறனிலும் ஈடுபட்ட புலவர் பலராவர். அவர்கள் நாடோறும் பாவலரைக் கண்டு அளவளாவுதல் செய்தனர். அப் புலவருள் காஞ்சிபுரம் மஹாவித்தவான் இராமசாமி நாயுடு என்பவர் ஒருவர். அப்பெரியார் சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியிருந்தார். உத்தியோகதரும் வணிகரும் பிறருமாகக் பலர் அவரிடம் தமிழ்ப் பாடம் கேட்டுவந்தனர். அவரிடம் கல்வி கற்றுப் பெரும் புலவரானவர் பலர். அப்பெரியார் கம்ப ராமாணயத்திற்கு முதலில் உரை வரைந்து புகழ் பெற்றவர். அப்பெரியார் பாவலருக்கு உயிர் நண்பரானார். பாவலர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் சென்னையில் பெரும்புலவர் பலர் இருந்தனர். அவருள் டாக்டர் உ. வே. சாமி நாதையர், பூண்டி அரங்கநாத முதலியார், கா. நமச்சிவாய முதலியார், அஷ்டாவதானம்-பூவை-கலியாண சுந்திர முதலியார், திருமயிலை - வித்துவான் சண்முகம் பிள்ளை முதலியோர் குறிப் பிடத்தக்கவர் ஆவர். பாவலர் இப்பெரியார்களை அடிக்கடி சந்தித்துப் பேசிவந்தார்; இப்பெரியார்களுடைய சொற்பொழிவு களைக் கேட்டு மகிழ்ந்தார். இப்பெரியார்களும் பாவலருடைய நற்பண்புகளிலும் புலமையிலும் ஈடுபட்டுப் பழகினர். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது ஆன்றோர் அநுபவ வாக்கன்றோ? 3. பாவலர் சதாவதானி யாதல் கலியாணசுந்தரம் பிள்ளை பாவலர் சென்னையில் இருந்தபொழுது அவரைக் காண விரும்பிப் போந்த அயலூர்ப் புலவர் பலராவர். அவருள் மதுரை மாவட்டத்து முதுகுளத்தூரைச் சேர்ந்த கலியாணசுந்தரம் பிள்ளை ஒருவர். அவர் சிறந்த தமிழ் அறிஞர்; செய்யுள் செய்தலில் சமர்த்தர். அவருக்கு அவதானம் செய்யவும் தெரிந்திருந்தது. அவதானம் என்பது, மனத்தில் நினைவுறுத்திக் கொள்ளல் ஆகும். எட்டுப்பேர் எட்டு விதமான பொருள் பற்றி ஒரே சமயத்தில் கேள்வி கேட்க, அக்கேள்விகளை மனத்தில் அமைத்து, அவற்றுக்கு முறைப்படி விடை கூறுதல் அஷ்டா வதானம் என்பது. பத்துவிதக் கேள்விகட்கு விடையளித்தல் தசாவதானம் எனப்படும். நூறு விதக் கேள்விகளையும் மனத்தில் நினைவுறுத்தி விடைகூறுதல் சதாவதானம் எனப் படும். இதற்கு மிகுந்த நினைவாற்றல் வேண்டும். அவதானத்தில் சோதனை பாவலர் அவதானத்தில் நட்பிக்கையற்றவர். அது புரட்டு நிறைந்தது என்பது அவர் கருத்து. அதனால் அவர், கலியாணசுந்தரம் பிள்ளை தமக்கு அவதானம் தெரியும் என்றபோது நம்பவில்லை; அவநம்பிக்கையோடு பேசினார். அதனால் வருத்தம் கொண்ட பிள்ளையவர்கள், நான் கூறுவது உண்மை. நான் அவதானம் செய்து காட்டுவேன், என்றார். பாவலர் மறுநாள் பகலில் இரண்டு மணிக்கு அவரை வருமாறு கூறினார். அடுத்த நாள் குறிப்பிட்ட நேரத்தில் பிள்ளையவர்கள் வந்தார். பாவலர் தம் நண்பர் ஒருவருடனும் பிள்ளையவர் களுடனும் அச்சகத்தின் மாடிக்குச் சென்றனர். பாவலர் ஒரு வெண்பா எழுதி, அதன் ஒரு படியைத் தம் நண்பரிடம் காட்டினார்; ஒரு படியைத் தாம் வைத்துக்கொண்டு கண்டப் பத்திரிகை கொடுக்கலானார். ஒரு பாட்டில் அல்லது சொற்றொடரில் உள்ள எழுத்துக் களுக்கு முறையே வரிசை எண் கொடுத்து, தனித்தனி எழுத்துக் களாகத் துண்டு படுத்திக் குலுக்கி வைத்துக்கொண்டு தொடர் பில்லாமல் இன்ன எண்கொண்ட எழுத்து இது என்று ஒவ்வொன்றாய்க் கொடுத்து, முடிவில் தவறின்றி அச் செய்யுளையோ அத்தொடரையோ கூறுதல்* கண்டப் பத்திரிகை எனப்படும். அவதானியும் தமக்குத் தரப்படும் எழுத்துக்களைத் தம் மனத்தில் இருத்தி, இறுதியில் சேர்த்துக் கூறிவிடுவர். இவ்வளவு நினைவாற்றல் மிக்க சோதனையைப் பிள்ளையவர்கள் செய்துகாட்டத் தயாராயிருந்தார்; பாவலர் கூறிய எழுத்துக்களை எல்லாம் தம் மனத்தில் முறைப்படுத்தி வைத்துக்கொண்டார்; பின்னர்ப் பாட்டைப் பிழையின்றிக் கூறினார். அவர் கூறிய பாட்டுப் பாவலர் இயற்றிய பாட்டே என்பதைப் பாவலரும் அவரது நண்பரும் கண்டு பெருவியப்புக் கொண்டனர். உடனே பாவலர் பிள்ளையவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டு, ஐயா, தங்கள் அவதானத் திறனை அறியாது யான் கூறியவற்றைப் பொறுத்தருள வேண்டுகிறேன், என்று கூறினார். பிள்ளையவர்கள் நகைத்தனர். பாவலர் அவதானம் செய்தல் அப்பொழுது மாடியின் கதவு தட்டப்படும் ஓசைகேட்டது. கதவு திறக்கப்பட்டதும், அச்சகமுதலாளியின் மகனாரும் அலுவலர் சிலரும் உள்நுழைந்தனர். அவர்கள், இங்கு என்ன நடந்தது? எங்களுக்கும் செய்துகாட்டுங்கள், என்று ஆவலுடன் கூறினர். அவ்வமயம் பிள்ளையவர்கள் நடந்ததை விரிவாய்க் கூறி, அதை மற்றொரு முறை செய்து காட்ட ஒப்புக்கொண்டார். வந்தவர்கள், பாவலர் முன்னர்ச் செய்தபடி செய்தனர். அப்பொழுது பாவலர் பிள்ளையவர்களைப் பார்த்து, இதற்கு நீங்கள் விடை கூறுகின்றீர்களா? நான் கூறட்டுமா? என்று கேட்டார். உடனே பிள்ளையவர்கள், நீங்களும் சொல்வீர் களோ? என்று கேட்க, இதோ சொல்லுகிறேன், என்று கூறி விடையைக் கூறினார். அதுகேட்ட அனைவரும் வியப்புற்றனர்; பிள்ளையவர்கள் சொல்லொணா வியப்படைந்தார். பாவலர் அன்றுமுதல் நாள்தோறும் தம் அலுவலகத்தில் அவதானம் செய்து வரலானார்; அதனால் அவதானத்தில் தேர்ச்சி மிக்கவரானார். ஆசிரியர் அன்பு பாவலர் 1906-ஆம் ஆண்டில் தம்மூர்க்குச் சென்றனர்; அங்குத் தமக்குத் தமிழறிவு புகட்டிய ஆசிரியப் பெருந்தகையைச் சென்று கண்டனர்; ஆசிரியர் ஒரு நண்பரது உதவியில் இருக்கக் கண்டனர். பாவலர் அவருக்குப் பலமுறை பண உதவி செய்து வந்தவர் ஆதலின், ஆசிரியர் பாவலரைக் கண்டதும், அப்பனே, நான் கடிதம் எழுதும் பொழுதெல்லாம் பணம் தவறாது அனுப்பிவருகிறாய். நான் உனது குருபக்தியைப் பெரிதும் பாராட்டுகிறேன். நீ நலம் பெற்று வாழ்வாயாக, என்று உளமார வாழ்த்தினர்; சென்னை வாழ்க்கையை விசாரித்தனர். அப்பொழுது பாவலர் தமக்கு அவதானம் செய்யத் தெரியும் என்பதைப் பணிவுடன் குறிப்பிட்டார். ஆசிரியர் மிக்க வியப்புற்று, நான் அதனைப் பார்க்கவேண்டும், நான் அதனைப் பார்க்கவேண்டும், என்றார். சோடசாவதானம் செய்தல் பாவலர்க்கு அவதானம் செய்யத் தெரியும் என்ற செய்தி கோட்டாற்றிலும் சுற்றுப்புறங்களிலும் காற்றாய்ப் பறந்தது. முலிம் பெருமக்கள் அதனைக் காண விரும்பினர். ஒரு நாள் இலாமிய மதகுரு ஒருவரது தலைமையில் பள்ளிவாசல் முன் அறிஞர் கூட்டம் ஒன்று கூடியது. குறித்த நேரத்தில் அவதானம் தொடங்கிற்று. பாவலர் அவதானம் என்பது பற்றி விளக்கமாய்ப் பேசிச் சோடச (பதினாறு) அவதானத்தைப் பற்றி விளக்கினார். உடனே வரிசைக்கு எட்டுப்பேராய் இரண்டு வரிசைகளில் பதினாறு அறிஞர்கள் உட்கார்ந்து பாவலரைச் சோதித்தனர். பாவலர் கூட்டத்தில் உலவிக்கொண்டே ஒவ்வொருவர் கூறியவற்றையும் மனத்தில் இருத்திக்கொண்டார்; பதினாறு பேரும் கூறி முடித்தபின், ஒவ்வொருவர்க்கும் தனித்தனியே விடையளித்தார். அனைவரும் வியப்பும் களிப்பும் அடைந்தனர். அன்று அவருக்கு அளிக்கப்பட்ட ஆடைகள் பல. பாவலர் அவற்றை எல்லாம் தம் கைகளால் வாங்கித் தம் ஆசிரியர் திருவடிகளில் வைத்துத் தம் குருபக்தியை மெய்ப்பித்தார்; கூட்டத் தலைவரால் சோடசாவதானி (சோடச அவதானி) என்னும் பட்டமும் பொன்னாடை ஒன்றும் அளிக்கப்பட்டன. நாஞ்சில் நாட்டு மக்கள் அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. சென்னையில் சதாவதானம் செய்தல் சோடசாவதானியாகிய பாவலர் சில நாட்கள் கழித்துச் சென்னை மீண்டார். அவர் சென்னை மீள்வதற்கு முன்னரே கோட்டாற்றில் செய்த சோட சாவதானத்தைப் பற்றிய விவரங்கள் அச்சக முதலாளிக்கு எட்டிவிட்டன. அவர் பாவலரது வருகையை ஆவலோடு எதிர்நோக்கியிருந்தார்; பாவலர் தம் அச்சகம் வந்து சேர்ந்ததும், ஐயா, தாங்கள் சென்னையில் சதாவதானம் செய்துகாட்ட வேண்டும்; நான் பார்க்கவேண்டும். நீங்கள் மறுத்தல் ஆகாது, என்று கூறினார். மறுக்க வழியின்றிப் பாவலர் ஒப்புக்கொண்டார். உடனே சதாவதான அறிக்கைத் தாள்கள் ஆயிரக் கணக்கில் அச்சிடப் பட்டுச் சென்னை மாநகரில் கொடுக்கப்பட்டன. 1907-ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 10-ஆம் நாள் விக்டோரியா மண்டபத்தில் திருவாளர் கண்ணபிரான் முதலியார் என்பவர் தலைமையில் அவதானம் தொடங்கியது. சதாவதானம் என்பது மிகவும் கடினமானது. நா ஒன்றைப் பேசும்; அதே சமயத்தில் கை ஒரு செயலைச் செய்யும்; அதே சமயத்தில் மனம் எஞ்சிய தொண்ணுற்றெட்டுச் சோதனைகளைத் தாங்கிக்கொள்ள வேண்டும். பாவலரைச் சோதிக்க வரிசைக்கு ஐம்பது பேர் வீதம் உட்கார்ந்துகொண்டனர். கேள்விகள் தொடங்கின. பாவலர் உலவிக் கொண்டே அனைத்தையும் மனத்தில் வாங்கினார்; கணக்குகள், சீட்டாட்டக் கேள்விகள், சோதிடக் கேள்விகள் முதலிய பல திறத்துக் கேள்விகட்கும் ஒழுங்காக விடையிறுத்துவந்தார். இவற்றுக்கிடையே கண்டப் பத்திரிகையாகக் கொடுக்கப்பட்ட எழுத்துக்களை அவ்வப் போது கேட்டுக்கொண்டார்; பிழையின்றி விடையளித்தார். இச்சோதனைகளுடன் ஈற்றடி கொடுத்துச் செய்யுள் இயற்றும் சோதனையும் தரப்பட்டது. (1) விராடனையே பெண்ணெனலாமே (2) மாமனுக்குக் கந்தன் மகன் இவ்விரண்டையும் ஈற்றடிகளாய்க் கொண்ட இரண்டு வெண்பாக்கள் பாடவேண்டும். பாவலர் இரண்டு வெண்பாக்களைப் பாடிக்காட்டினார். அவை கீழ்வருவன: உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதுமொன்றை எண்ணும் பொழுதும் எரிமுன்னாய்-மண்ணில் வராடவனையே தெய்வம் மன்னனெனும் சொற்ற விராடனையே பெண்ணெனலா மே. (1) அண்டர் முறையால் அலைகடலில் பள்ளிகொண்ட கொண்டல்வண்ண மேனிக் குரிசிலாம்-விண்டுபெற்ற காமனுக்கு முற்றுங் கருதும் படியமைந்த மாமனுக்குக் கந்தன் மகன் (2) இத்தனையும் நடந்த பிறகும் கண்டப் பத்திரிகைக்கு விடை தரப்படவில்லை. அதனைக் கொடுத்தவர் அப்பொழுது மாணவராயிருந்த (இன்றைய ரசிகமணி) டி. கே. சிதம்பரநாத முதலியார். அவர், கண்டப்பத்திரிகைக்கு விடை யெங்கே? என்றனர். உடனே பாவலர் அதற்கும் விடை அளித்தார். அவையோர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அச்சக முதலாளியான இட்டா-பார்த்தசாரதி நாயுடு பாவலர் இருகரங்கட்கும் தங்கத் தோடாக்களை இட்டார்; ஏனையோர் பட்டாடைகளையும் பொன்னாடைகளையும் போர்த்தனர்; புலவர்கள் பாமாலைகளைப் புனைந்தனர். அன்றைய இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சதாவதானச் சிறப்பு என்னும் சிறு நூலாக வெளிவந்தது. அன்று முதல் பாவலர், சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். பாவலருடைய புகழ் தமிழகம் முழுவதும் பரவியது. 4. இல்லற வாழ்க்கையும் தமிழ்த் தொண்டும் திருமணம் பாவலர் 1907-ஆம் ஆண்டின் இறுதியில் தம் சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்பொழுது அவருக்குத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. பாவலரது திருமணத்திற்குத் தமிழ் நாட்டின் பல ஊர்களிலிருந்தும் புலவர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். திருமணத்தன்று வெளியூர் நண்பர் சிலர் வாழ்த்துச் செய்திகள் அனுப்பினர்; பலர் பரிசுகள் அனுப்பினர். நண்பர்களும் உறவினர்களும் சூழ்ந்திருந்த நன்னாளில் திருமணம் திருவுடன் நடந்தேறியது. திருமணம் முடிந்த ஒரு திங்களுக்குள் பாவலர் சென்னை மீண்டார்; இரண்டு ஆண்டுகள் அங்குத் தங்கியிருந்தார்; பல நூல்களை அச்சிட்டு வெளிப்படுத்தினார்; 1909-இல் தம் ஊருக்கு மீண்டார். அதற்குப் பிறகு அவர் சென்னை செல்ல இயலவில்லை. இல்லற வாழ்க்கை பாவலர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டார். அவருக்கு மனைவியாராக வாய்த்தவர் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்; அன்பு, அடக்கம், பொறை முதலிய நற்குணங்கட்கு இருப்பிட மானவர்; தம் கணவர் சிறந்த கல்விமான் என்பதையும், அவரை மணாளராகப் பெற்றது தமது பேறே என்பதையும் நன்கு உளங்கொண்டவர். ஆதலின் அவ்வம்மையார் தம் கணவர் மனம் மகிழுமாறு நடந்துவந்தார். அவருடைய நல்லியல்புகளைக் கண்ட பாவலர் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். காதலர் இருவரும் கருத்தொருமித்து இல்லறத்தை இனிதே நடத்த லாயினர். ஊற்றார் உறவினரும் நண்பர்களும் பாவலரை இளங்கடையிலேயே தங்கிவிடுமாறு வற்புறுத்தினர். ஏதேனும் ஒரு தொழில் செய்யப் பொருள் வழங்குவதாகச் சிலர் முன்வந்தனர். பாவலரிடம் பாடம் கேட்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் பலர் அவரைக் தங்கிவிடுமாறு வற்புறுத்தினர். சிலர் பொருள் உதவி செய்து நூல்கடை ஒன்று வைத்துக் கொடுத்தனர். பொது மக்கள் ஆர்வத்தைக் கண்ட பாவலர் தம்மூரிலேயே தங்கத் தீர்மானித்துத் தொழிலை நடத்தலானார். பாடம் கற்பிக்கும் சிறப்பு நூல்கடை வாணிக நேரம் போக எஞ்சிய நேரங்களில் பலர் போந்து பாவலரிடம் பாடம் கேட்கலாயினர். பாவலர் கற்பிக்கும் ஆற்றல் மிக்கவர். அவரிடம் கல்வி கற்றபின் கடைமாணாக்கரும் முதல் மாணவராவர், என்று பாவலரைப் பாராட்டுவோர் இன்றும் கூறுவது வழக்கம். அவரது நூல் கடையில் கணக்கப் பிள்ளையாக இருந்த ஒருவர் அவரிடம் தமிழைக் கற்றுச் சொடசாவதானியாகவும் சமய விரிவுரையாளராகவும் ஆயினார். இன்று நாஞ்சில் நாட்டிலுள்ள புலவர் பலர் பாவலருடைய மாணவர்களே யாவர். பாடம் சொல்லுதலே தமிழை வளர்க்க விரும்புவோர் மேற்கொள்ளும் சிறந்த தொண்டாகும் என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் கூறுவது வழக்கம். அக்கூற்றைச் செயலளவில் செய்து காட்டியவர் சிலரேயாவர். அச்சிலருள் நமது பாவலர் ஒருவர். சிறந்த தமிழ்த் தொண்டு தமிழ் நூல்களைப் பிறருக்குக் கற்பிப்பதால் பலரும் தமிழின் அருமை பெருமைகளை உள்ளவாறு உணர்கிறார்கள். அங்ஙனம் உணர்ந்து தமிழ்ப் புலமை பெறுபவர் பலருக்குத் தமிழ் நூல்களைக் கற்பிப்பர். இத்தொண்டினால் நாட்டில் தமிழறிந்தார் தொகை மிகுதிப்படும். தமிழ் படித்தவர் தொகை மிகுதிப்படின், தாய்மொழியின் சிறப்பும் பழமையும் பலராலும் பாராட்டப்படும்; தாய்மொழி அப் பலராலும் வளர்ச்சி பெறும். எந்த மொழியில் படித்தவர் தொகை அதிகமோ, அந்த மொழி நன்கு பாதுகாக்கப் பெற்று வளர்ச்சியுறும் என்பது உலகம் கண்ட உண்மை. ஆதலின் அத்தகைய சிறந்த தொண்டினைச் செய்தலே ஏற்றது எனக் கருதியே பண்டைப் புலவர்கள் பாடம் சொல்லும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். மஹா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டார் பலர். அப்பலரால் தமிழிலக்கியம் வளம் பெற்றது. இவ்வாறே ஒவ்வோர் ஆசிரியரிடமும் பயின்ற மாணவர்களால் மொழி வளர்ச்சி பெற்றது. ஒரு மரத்திலிருந்து பல கிளைகள் தோன்றுதல் போல ஓராசிரியரிடமிருந்து மாணவர் பலர் தோன்றுகின்றனர். அந்தப் பலரும் ஆசிரியர்களாக மாறின், அவர் ஒவ்வொருரும் சிறந்த முறையில் தமிழ்த் தொண்டு புரியலாமன்றோ? இவை அனைத்தையும் கருதியே, முன்னோர் பாடம் சொல்லும் தொண்டினை மேற்கொண்டனர். அதனை மேற்கொண்டு கணக்கற்ற தமிழர்களைத் தமிழ் அறிஞர் களாக்கிய நம் பாவலருக்கு நமது நன்றி உரியதாகுக. பாவலர் குடும்பம் பாவலர் சென்ற ஆண்டிற் காலமானார்; ஏறத்தாழ 78 ஆண்டுகள் வாழ்ந்தார். அவருக்குப் பிள்ளைகள் ஐவர் உளர்; நால்வர் ஆடவர். மூன்றாம் மைந்தர் வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். மற்றவர் தந்தையார் செய்துவந்த தொழில் செய் கின்றனர். தமிழ்த் தொண்டு பாவலர் ஏறத்தாழ நாற்பதாண்டுகளாகத் தம்மூரில் தங்கித் தமிழ்ப் புலவர்களைப் பெருக்கிவந்தார்; பொருள் பொதிந்த தம் அரிய சொற்பொழிவுகளால் தமிழ் மக்கட்குத் தமிழ்ப் பற்றை ஊட்டிவந்தார். அப்பெரியார் தம் ஓய்வு நேரங்களில் பாடி வைத்துள்ள நூல்கள் பல. அவற்றுள் சிலவே அச்சாகி வெளி வந்தவை. அவற்றுள் ஷம்சுத்தாசீன் கோவை, கல்வத்து நாயக மவர்கள் இன்னிசைப் பாமாலை என்பன குறிப்பிடத்தக்கவை. முடிவுரை பாவலர் அவர்கள் சிறந்த தமிழ்ப் புலவர்; பெரும் புலவர்களால் மதிக்கப் பெற்றவர்; எண்ணிறந்த தமிழ் நூல்களைப் பிழையறப் பதிப்பித்தவர்; பல நூல்களைப் பாடித் தமிழ் இலக்கியத் தொகையைப் பெருக்கியவர்; ஐம்பதாண்டுகட்டு மேலாகக் தமிழ்ப் புலவர்கள் பலரை உண்டாக்கிவந்தவர். அப்புலவர்பெருமானுடைய தமிழ்ப் பணிகளால் தமிழ் முலிம்கள் பெருமையுற்றனர்; பொதுவாகத் தமிழர் மகிழ்ச்சி யுற்றனர்; தமிழன்னை சிறப்புற்றாள். நீங்கள் பாவலரைப் போலத் தமிழ் வளர்ப்பதில் ஊக்கம் கொள்ள வேண்டும் என்பதே அப்பெரியார் உங்கட்குவிடுக்கும் வேண்டுகோளாகும். பாவலர் புகழ் பல்லாண்டு வாழ்க! III. மறைமலையடிகள் (1876-1950) 1. கல்விப் பயிற்சி முன்னுரை தமிழ்நாட்டில் டாக்டர் உ. வே. சாமிநாதையர் போலவே பெரும்புலவராக வாழ்ந்த சிலருள் மறைமலை அடிகள் ஒருவராவர். அவர் தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மூன்று மொழிகளிலும் வல்லவர்; சைவத்திலும் தமிழிலும் சிறந்த ஆராய்ச்சி பெற்றவர்; பல ஆராய்ச்சி நூல்கள் எழுதியவர்; அவை அனைத்தையயும் கூடுமான வரை பிறமொழி கலவாத தமிழ் நடையிலேயே எழுதி வெளியிட்டவர்; ஐயரவர்கள் வெளியிட்ட பத்துப்பாட்டு முதலிய சங்க நூல்களுக்குப் பொருத்தமான பொருள் கூறக் கூடியவர்; அரிய ஆராய்ச்சி நூல்கள் வரைந்தவர். அவருடைய செய்யுள் நூல் சங்கப் புலவராகிய நக்கீரனார் இயற்றிய திருமுருகாற்றுப் படையை ஒத்திருக்கின்றது எனின், அவரது பெருமையை என்னென்பது! சுருங்கக் கூறின், மறைமலையடிகள் சிறந்த புலவர்; சிறந்த பேச்சாளர்; அரிய ஆராய்ச்சியாளர்; மிக உயர்ந்த தமிழ்-ஆங்கில இதழாசிரியர்; செய்யுள் இயற்றுவதிலும் வல்லவர்; செய்யுள்களுக்கு உரை வகுப்பதிலும் இணையற்றவர். அவரைப் போல இப்பண்புகளனைத்தும் ஒருங்கே பெற்ற பெருந்தமிழ்ப் புலவரைத் தமிழகம் கண்டதில்லை என்று அறிஞர் கூறுவர். இத்தகைய தமிழ்ப் பெரியார் வரலாற்றைத் தமிழ் மாணவர்களாகிய நீங்கள் படித்தறிய வேண்டுவது உங்கள் கடமை அல்லவா? பிறப்பு மறைமலையடிகள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த் நாகப்பட்டினத்திற்கு அடுத்த சிற்றூரில் 1876-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 15-ஆம் நாள் பிறந்தார். அவர் தந்தையார் சொக்கநாதப் பிள்ளை என்பவர்; தாயார் சின்னம்மையார் என்பவர். அவர்கள் சோழியச் சைவ வேளாள மரபினர். அவர்களுக்குப் பல ஆண்டுகள் வரை பிள்ளைப்பேறு இல்லை. அதனால் சின்னம்மையார் திருக்கழுக்குன்றத்தில் நாற்பது நாள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். இறைவன் திருவருளால் ஒர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்குத் திருக்கழுக்குன்றத்தின் பெயராகிய வேதாசலம் என்பது இடப்பட்டது. அப்பெயரே தமிழில் மறைமலை எனப்படும். பின்னர் இவ்வாசிரியர் துறவு மேற்கொண்டபொழுது அடிகள் என்று அழைக்கப்பட்டார். அதனால் அப்பெரியார் மறைமலை அடிகள் என்று பிற்காலத்தில் அனைவராலும் அழைக்கப்பட்டார். இச்சிறப்புப் பெயரையே நாமும் நூல் முழுவதும் ஆள்வோம். வளர்ப்பு அடிகளின் பெற்றோர் நடுத்தர வளமுடைய குடும்பத்தினர்; ஆதலால் அடிகள் ஓரளவு செல்வமாக வளர்ந்துவந்தார். அவர் சிறு நடை நடந்து, மழலை மொழி பேசி, பெற்றோர் உள்ளங்களைக் கவர்ந்தார்; அவர்கள் உண்ணும்பொழுது ஓடிச் சென்று தம் சிறிய கைகளினால் உணவைத் தொட்டும் பிசைந்தும் துழாவியும், அவ்வுணவை எடுத்துப் பெற்றோர் வாயில் வைத்தும், தாம் எடுத்து உண்டும், பெற்றோரை மனம் மகிழச் செய்தார். கடவுள் அருளாள் பிறந்த அடிகளைப் பெற்றோர்கள் சீராட்டிப் பாராட்டி வளர்க்கலாயினர். இங்ஙனம் பெற்றோர்களால் பேணி வளர்க்கப்படுகையில், அவரது குழவிப் பருவத்திலேயே, தந்தையார் திடீரெனக் காலமானார். எனவே, தாயார் சின்னம்மையார் தம் பிள்ளைக்குத் தாயாராகவும் தந்தை யாராகவும் இருந்து, முழுஅன்பினையும் செலுத்தி வளர்த்து வந்தார். கல்விப் பயிற்சி அடிகள் ஐந்து வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். விளையும் பயிர் முளையில் தெரியும் என்னும் பழமொழிக்கேற்ப, அடிகள் அச் சிறுபருவத்திலேயே அறிவு நுட்பம் வாய்க்கப் பெற்றிருந்தார்; ஆசிரியர் வகுப்பில் கற்பித்தவற்றை உடனே ஒப்பிக்கும் ஆற்றல் பெற்று இருந்தார். எப்பாடத்தையும் ஒரு முறை படித்தவுடன் அதன் விவரங்களை எடுத்துக்கூறும் வன்மை பெற்றிருந்தார். எல்லா மாணவரிடத்தும் மிக்க அன்பும் மரியாதையும் காட்டிப் பழகிவந்தார்; ஆசிரியன் மாரிடத்து மிக்க பயத்துடனும் பக்தியுடனும் பழகிவந்தார். அவருடைய இத்தகைய சீரிய பண்புகள் ஆசிரியரையும் மாணவர்களையும் ஒருங்கே கவர்ந்தன. இக்கவர்ச்சியால் நாளடைவில் அவர் மாணவர் தலைவர் ஆனார். தமிழ்நூற் பயிற்சி அடிகள் தம் பதினாறாம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் நூல்களைப் படிக்கவேண்டும் என்று விரும்பினார். அவர் ஒரு நாள் நாகைக் கடற்கரையில் அமர்ந்து, கீழ்வருமாறு தமக்குள் எண்ணினார்: ஒவ்வொருவனும் தன் தாய்மொழி நூல்களை நன்றாய்ப் படிக்கக் கடமைப்பட்டிருக்கிறான்; அவ்வாறு படிக்க வேண்டுவது அவனது பிறப்புரிமையாகும். பிழைப்புக்காக வேறு எத்தகைய கல்வியைப் பயின்றாலும் தாய்மொழி வளர்ச்சி கருதித் தாய்மொழியைக் கற்பதும், அந்நூல்களிலுள்ள அருமை பெருமைகளைக் கற்று இன்புறுதலும் அவசியமாகும். இம்முறைப்படி தமிழனாகிய நான் என் தாய்மொழி நூல்களைக் கற்க விரும்புகின்றேன்; அவற்றைக் கற்பிக்கத் தக்க ஆசிரியரைக் காணவேண்டும்; அவரை எவ்வாறேனும் வேண்டிக்கொண்டு அவர் மாணவராதல் வேண்டும். தமிழுக்குப் பெயர்போன நாகை நாகப்பட்டினம் நெடுங்காலமாகவே தமிழுக்குப் பெயர் போனது. இதனை விளக்கக் கீழ்வரும் செவி வழிச் செய்தி அறிஞரால் கூறப்படுகிறது. ஒருமுறை காளமேகப் புலவர் நாகை சென்றார்; சோறு விற்குமிடம் எது? என்று, ஒரு தெருவில் பாக்கு வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கேட்டார்; அதற்கு அவர்கள் நகைத்து, சோறு தொண்டையில் விற்கும், என்று குறும்பாகப் பதில் கூறினார்கள். அதனால் வெகுண்ட காளமேகம் அருகில் கிடந்த அடுப்புக்கரி ஒன்றை எடுத்து, எதிரிலிருந்த ஒரு வீட்டுச் சுவர் மீது, பாக்குத் தெறித்துவிளை யாடுசிறு பாலகர்க்கு நாக்கு . . . . . . . என்பது வரை எழுதி, பசி கடுகியதால், உண்டுவந்து பிறகு பிள்ளைகளை வைது எழுத வேண்டும் என்று, இரண்டாம் வரியை அப்படியே விட்டுவிட்டுச் சென்றார். அவர் செயலைக் கவனித்துக்கொண்டிருந்த பிள்ளைகள், அவர் சென்ற பின், சுவர் அருகே வந்து, அவர் எழுதி விட்டுச் சென்றதைப் படித்தனர். வாக்கியம் குறையாக இருத்தலைப் பார்த்து, ஒரு கரித்துண்டை எடுத்து, நாக்குத் தமிழ்விளங்க நாகேசா, என்று இரண்டாம் வரியை முடித்துவிட்டு, வழக்கம் போல் விளையாடிக்கொண்டிருந்தனர். நாக்குத் தெரித்துவிழ நாகேசா என்று இரண்டாம் வரியை முடிக்கவேண்டும் என்று திரும்பி வந்த காளமேகம், தாம் விட்டுச் சென்றது நிறைவாக்கப் பட்டிருத்தலைக் கண்டார்; அது பிள்ளைகள் செயல் என்பதை அறிந்தார்; அவர்தம் தமிழறிவிற்கு வியந்தார்; அப்பிள்ளைகளை அருகில் அழைத்து ஆசீர்வதித்துச் சென்றார். ஆசிரியர் நாராயணசாமிப் பிள்ளையவர்கள் இத்தகைய தமிழ்ப்பற்று மிகுந்த நாகையில் படித்த அடிகள், தமிழிற் புலமை பெறவேண்டும் என்று விரும்பியதில் வியப்பில்லை அன்றோ? அடிகள் தக்க ஆசிரியரைத் தேடிவந்த பொழுது, திருவாளர் நாராயணசாமிப் பிள்ளை என்பவர் பெயரைக் கேள்விப்பட்டார். பிள்ளையவர்கள் நாகையில் புத்தகக் கடை வைத்திருந்தார். அவர் திருவாங்கூர்ச் சீமையில் சிறிது காலம் இருந்தார். அப்பொழுது அவரிடம், மனோன் மணீயம் என்னும் நாடகநூலைப் பிற்காலத்தில் எழுதி வெளியிட்ட சுந்தரம் பிள்ளைஎன்பவர் தமிழ் கற்றார். நாகையிலும் பலர் அவரிடம் தமிழ் பயின்றனர். அக்காலத்தில் வெளியிடப்பட்டிருந்த எல்லாத் தமிழ் நூல்களும் அவரது புத்தகக் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆதலால் மாணவர்கள் புத்தகங்களுக்காகத் துன்பமடையவில்லை; வேண்டிய நூல்களை விலைகொடுத்து வாங்கி ஆசிரியரிடம் நன்கு பயின்றனர். பிள்ளையவர்கள் தமது இளமைப் பருவத்தில் பெரும் புலவர் ஒருவரிடம் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல் களையும், பனையோலை ஏடுகளாய்க் கிடந்த சங்க நூல்களை யும், இடைக்காலத்துச் சமய நூல்களையும், பிற்காலத்து இதிகாசப்புராணங்களையும் நன்கு பயின்றவர். அவர் அக்கால முறைப்படி இலக்கண சூத்திரங்களையும் ஆயிரக்கணக்கான செய்யுட்களையும் மனப்பாடம் செய்து பெயர் பெற்றவர். பெரும்பாலும் இலக்கண நூல்களைப் பாராமலேயே அவர் பாடஞ் சொல்லுதல் வழக்கம் எனின், அவரது இலக்கண அறிவை என்னென்பது! அடிகள் பிள்ளையவர்களின் மாணவர் தமக்குரிய ஆசிரியரைத் தேடி அலைந்த அடிகள் தமது நல்வினை காரணமாக, மேற்சொன்ன பிள்ளையவர்களிடம் வந்து சேர்ந்தார்; அவரது பெரும் புலமையைக் கேள்வியுற்றவர் ஆதலின், அவரை நேரிற் கண்டதும், அவர் திருவடிகளில் தம் முடிபட வீழ்ந்து பணிந்தார். சிவந்த உடல்-திருநீற்றுப் பொலிவு பெற்ற திருமுகம்-பிறரை வசீகரிக்கும் விழிகள்-இனிய பேச்சு இவற்றை உடைய இளைஞர் தம்மைப் பணிந்ததைக் கண்ட பிள்ளையவர்கள், ஆசிகூறி அருகில் அமரச் செய்தார்; அவரது வரலாற்றை வினவினார். அடிகள் தமது நிலையை விளக்கமாகக் கூறித் தாம் வந்த நோக்கத்தையும் கூறினார். தமிழ் கற்க வேண்டும் என்பதில் அடிகளுக்கிருந்த அவாவினைக் கண்ட பிள்ளையவர்கள், எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தார். அவர் அடிகளை அன்புடன் நோக்கி, தம்பீ! மாணவர் பலர் என்னிடம் தமிழ் பயின்றுள்ளனர்; ஆயின், தமிழ் கற்க வேண்டும் என்பதை உன்னைப்போல் சிறந்த குறிக்கோளாகக் கொண்டிலர். நீ அதனைச் சிறந்த குறிக்கோளாகக் கொண்டிருத்தலால், உனது பிற்கால வாழ்வில் தமிழகம் போற்றத்தகும் பெரும் பேராசிரிய னாக விளங்குதல் உறுதி, என்று வருவது கூறி ஆசீர்வதித்தனர். அன்று முதல், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையர் களிடம் டாக்டர் உ.வே. சாமி நாதையர் பேரார்வத்துடன் தமிழ் கற்றாற்போல, நாகைப் பிள்ளையவர்களிடம் அடிகள் தமிழ் கற்கலானார். உண்மை மாணவர் அடிகள் பிள்ளையவர்களைத் தம்மை வாழ்விக்க வந்த கடவுளாகவே கருதினார்; நாள்தோறும் பிள்ளையவர்களிடம் இருந்து பழகி அவருக்கு அணுக்கத் தொண்டாரானார்; அவருடைய குறிப்பறிந்து அவர் விரும்பின அனைத்தும் செய்தார்; இளைஞரது தமிழ்ப் பற்றும், ஆசிரியரன்பும், பணிவும், எதிர்கால வாழ்க்கையில் விருப்பமும், சமயத்தில் ஆழ்ந்த பற்றும் ஆகிய பண்புகள் அனைத்தையும் கண்டு உள்ளம் இளகிய பிள்ளையவர்கள், தாம் ஈன்ற மகனைப் போலவே அடிகளைக் கருதலானார்; நாள்தோறும் தமிழ்ப்பாடங்களை நன்முறையில் கற்பிக்கலானார். நான்காண்டுகட்குள் அடிகள் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களையும், சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, நாலடியார், திருக்குறள் முதலிய இலக்கிய நூல்களையும் பழுதறப் படித்து முடித்தார்; தம் ஆசிரியரைப் போலவே இலக்கண சூத்திரங்களையும் சிறந்த இலக்கிய நூல்களையும் நெட்டுருச் செய்தார். அப்பருவத்திலேயே பொதுநலத்தொண்டு அடிகள் பிள்ளையவர்களிடம் ஒவ்வொரு நூலாகப் படித்து வரும்பொழுது அதனைப் பிற மாணவர்க்குக் கற்பிக்க விரும்பினார்; அதற்கென இந்து மதாபிமான சங்கம் என்னும் பெயருடன் கழகம் ஒன்றைத் தோற்றுவித்தார்; தம்முடன் பள்ளியில் படித்து வந்த மாணவர்க்குத் தமிழ் அறிவையும் சமய உணர்ச்சியையும் ஊட்ட அக்கழகத்தினைப் பயன்படுத்தினார். தாம் ஆசிரியரிடம் ஒன்றைப் பாடம் கற்பதும், அதனையே தாம் ஆசிரியராக இருந்து பிறர்க்குக் கற்பிப்பதும் ஆகிய முயற்சி அவரைச் சில ஆண்டுகட்குள்ளாகவே பெரும் புலவராகச் செய்தது; பாடம் கற்பிக்கும் சிறந்த ஆசிரியராகவும் செய்தது. இப்பயிற்சியால் அவர் இருபது வயதிற்குள் பெரும் புலவருள் ஒருவராகவும் சிறந்த பேச்சாளராகவும் கருதப்பட்டார். அடிகள் தமிழ் நூல்களைப் படிப்பதோடு ஆங்கில நூல்களையும் நாடோறும் படித்துவந்தார். படிப்படியாக ஆங்கிலச் செய்யுள் நூல்கள் பலவற்றையும் வசன நூல்கள் பலவற்றையும் படித்துமுடித்தார். அப்பயிற்சியின் பயனாக ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் ஆற்றலும் எழுதும் ஆற்றலும் பெற்றார். திருமணம் சின்னம்மையார் தம் செல்வ மைந்தர்க்கு, அவரது பதினேழாம் வயதில் திருமணம் செய்து வைத்தார். அவருக்கு வாய்த்த மனைவியாரது பெயர் சௌந்தரவல்லி என்பது. அவ்வம்மையார் அடிகளை மணந்துகொண்ட அந்நாள் தொட்டுத் தாம் இறக்கும் வரை (ஏறத்தாழ நாற்பத்தைந்து ஆண்டுகள்) பல்லோர் பாராட்டக் கணவர்க்கு ஏற்ற காரிகையராய் நடந்துவந்தார். அவருடைய பணிவு, கணவர் பக்தி, தம் இல்லத்திற்கு வந்தோரிடம் காட்டும் அன்பு, விருந்து உபசரிப்பு இன்ன பிறவும் அடிகள் வீட்டில் ஒருமுறை பழகிய வரும் மறத்தல் இயலாது. சுருங்கக் கூறின், சௌந்தரவல்லி அம்மையாரைப் போன்ற உண்மை மனைவிமாரைக் காணுதல் அரிது. பிள்ளைகளைப் பேணுவதில் அத்தகைய உத்தம தாய்மாரைக் காணுதலும் அருமை. சிந்தாமணி அடிகளின் பதினெட்டாம் வயதில் சௌந்தரவல்லி அம்மையார் ஒரு பெண்மகவைப் பெற்றார். அப்பொழுது அடிகள் மிக விரும்பிப் படித்துவந்த சிந்தாமணி என்னும் தமிழ்ப் பெருங்காவியத்தின் பெயரையே அப் பெண்குழந்தைக்கு இட்டு மகிழ்ந்தார். அடிகள் அந்நிலையிலும் பிள்ளையவர்களிடம் இடைவிடாது தமிழ் பயின்றுவந்தார். 2. பலவகைப் பணிகள் சோமசுந்தர நாயகர் சோமசுந்தர நாயகர் சென்னையைச் சேர்ந்தவர்; சிறந்த சைவசித்தாந்தி; சைவசித்தாந்த உண்மைகளைக் கேட்பவர் உள்ளத்தில் நன்கு பதியவைக்கும் சொல் வல்லமை உள்ளவர்; அவருடைய சொற்பொழிவுகள் தமிழ் நாடெங்கும் நடை பெற்றன; சைவத்தில் சிறந்த சொற்பொழிவாளர் என்று மக்கள் அவரைப் பாராட்டினர். நாகையில் நாயகர் நாகையில் சைவசித்தாந்த சபை ஒன்று இருந்தது. நமது அடிகளும் அதில் உறுப்பினராயிருந்தார். நாயகர், நாகைச் சைவர் வேண்டுகோளின்படி நாகைக்கு வந்தார்; அங்குச் சமயச் சொற்பொழிவுகள் பல செய்தார். அடிகள் அவை அனைத்தையும் விடாமல் கேட்டுவந்தார்; நாயகருடைய தமிழன்பினையும் சைவ நூல்களின் அறிவையும் கண்டு வியப்பும் மரியாதையும் கொண்டார்; நாயகரைத் தமக்கேற்ற சைவசமய ஆசிரியராக மனத்தில் கொண்டார். சமயப் போராட்டத்தில் அடிகள் நாகையில் சஜ்ஜனப் பத்திரிகை என்னும் பெயருடன் வாரந்தோறும் பத்திரிகை ஒன்று வெளிவந்தது. வேதாந்த சாத்திரங்களில் பற்றுக்கொண்ட ஒருவர், நாயகரின் சைவ சித்தாந்த கூற்றுகள் சிலவற்றை மறுத்துப் பல கட்டுரைகள் எழுதிவந்தார். அடிகள் அக்கட்டுரைகளைக் கூர்ந்து படித்தார்; நாயகர் கூறிய கருத்துக்களோடு அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தார்; நாயகருடைய கருத்துக்களே சிறந்தவை என்பதை நன்குணர்ந்தார்; தாம் உணர்ந்த உண்மையைத் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் மூலம் வெளிப்படுத்தினார். நாயகர் பாராட்டு முருகவேள் என்னும் புனைப்பெயருடன் அடிகள் எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தும் சென்னையிலிருந்த நாயகர் படித்தார்; அவை வாதத்திறமையுடன் ஒழுங்கான முறையில் எழுதப்பட்டிருந்ததைக் கண்டார். சைவசித்தாந்த உண்மைகளை உறுதிப்படுத்திய அக்கட்டுரைகளை எழுதிய முருகவேள் யாவர்? என்பதை அறிய விரும்பினார்; நாகைச் சைவசித்தாந்த சபையாருக்கு அது குறித்துக் கடிதம் எழுதினார். அச்சபையினர் அடிகளின் வரலாற்றைத் தெளிவாக எழுதி அனுப்பினர். சில மாதங்களுக்குப் பிறகு நாயகர் நாகை சென்றார்; அடிகளை நேரிற் கண்டு அன்போடு அணைத்துக் கொண்டார். அடிகள் சென்னையிலிருந்தால் சைவ சித்தாந்தம் வளரத் தொண்டு புரியலாம் என்று நாயகர் அறிவித்தார்; அடிகளை விரைவில் சென்னைக்கு வருமாறு ஏற்பாடு செய்வதாக நாயகர் வாக்களித்தார். அன்று முதல் அடிகள் நாயகரைத் தம் சமயக் குருவாகக் கொண்டார். கட்டுரை ஆசிரியர் அடிகள் மாணவராக இருந்தபொழுது, காரைக்காலில் இருந்து வெளிவந்த திராவிட மஞ்சரி, என்னும் வாரத் தாளுக்குக் கட்டுரைகள் எழுதி வந்தார்; பிறகு நாகையில் இருந்து வெளிவந்த நீலலோசனி என்னும் வாரத்தாளிலும் கட்டுரைகள் வரைந்து வெளியிட்டார்; தமிழ் இலக்கியக் கட்டுரைகளும் சைவசித்தாந்த கட்டுரைகளும் அவரால் எழுதி வெளியிடப்பட்டன. நாகை-வேதாசலம் பிள்ளை என்னும் பெயருடன் வெளிவந்த அக்கட்டுரைகள் தமிழ் நாட்டு அறிஞரை மகிழ்வித்தன; அடிகளது புலமைத் திறனையும் நன்கு வெளிப்படுத்தின. சுந்தரம் பிள்ளையவர்களுடன் தொடர்பு திருவனந்தபுரம் அரசர் கல்லூரிப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணீயம் என்னும் தமிழ் நாடக நூலை எழுதி வெளியிட்டார். அதனைப் படித்த அடிகள் அந்நூலைப் பாராட்டிப் பிள்ளையவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். பிள்ளையவர்கள் இளமையில் நாகை-நாராயணசாமிப் பிள்ளையவர்களிடம் தமிழ் படித்தவர் அல்லவா? அதனால் அடிகளும் தம்மாசிரியரிடம் தமிழ் பயின்றவர் என்பதை உணர்ந்த பிள்ளையவர்கள் மிக்க இன்புற்றார்; அடிகளுடன் நெருங்கிய கடிதப் போக்குவரத்தை மேற்கொண்டார். பிள்ளையவர்கள் அழைப்பு பிள்ளையவர்கள் தம் ஆசிரியரையும் அடிகளையும் திருவனந்தபுரம் வருமாறு அன்புடன் அழைப்பு விடுத்தார். அவ்வழைப்பை ஏற்றுக்கொண்ட இருவரும் நாகையிலிருந்து புறப்பட்டுத் திருவனந்தபுரம் சென்று பிள்ளையவர்களைக் கண்டனர்; அவர் விருந்தினராகத் தங்கினர். பிள்ளையவர்கள் அடிகளோடு பேசிப்பேசி அவருடைய தமிழ் இலக்கிய அறிவையும் சமய இலக்கிய அறிவையும் நன்குணர்ந்து பாராட்டினார்; தம் ஆசிரியரைப் பார்த்து, இந்த இளம் வயதில் பெரும் புலவராகவுள்ள இவர் (அடிகள்) பிற்காலத்தில் சிறந்த பேராசிரியராகத் திகழ்வார் என்று சோதிடம் கூறி மகிழ்ந்தார். ஆசிரியரும் அடிகளும் சுந்தரனார் இல்லத்தில் ஒரு வாரம் தங்கியிருந்த பிறகு, அவரிடம் பிரியா விடை பெற்று நாகை மீண்டனர். 3. தமிழ்ப் பேராசிரியர் திருவனந்தபுரத்தில் தமிழாசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களுக்கும் அடிகளுக்கும் கடிதத் தொடர்பு ஏற்பட்டு வளர்ந்துவந்தது. சில மாதங்கள் கழிந்த பிறகு பிள்ளையவர்கள் அடிகளைத் திருவனந்தபுரத்திற்கு வருமாறு அழைத்தார். அடிகள் அவர் அழைப்புக்கிணங்கித் திருவனந்தபுரம் சென்றார். பிள்ளையவர்கள் அந்நகரத்திலிருந்த ஆங்கிலப் பள்ளியொன்றில் தமிழாசிரியராக வேலை பார்க்குமாறு ஏற்பாடு செய்தார். அடிகள் அவ்வேலையை மகிழ்ச்சியோடு ஏற்றார்; மாணவர் மதித்துப் பாராட்டப் பாடங் கற்பித்தார். ஆயின், அந்நகரத் தட்ப-வெப்ப நிலை அவரது உடல்நலத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் அவர் இரண்டரை மாத காலமே தமிழாசிரியர் வேலையில் இருந்தார். அதன் பிறகு வேலையைவிட்டு நாகைக்குச் சென்றுவிட்டார். ஆயினும் அவர் திருவனந்தபுரத்தில் இருந்த இரண்டரை மாத காலத்தில் அவர் செய்த நற்பணிகள் பலவாகும். அவர் திருவனந்தபுரத்தில் சைவசித்தாந்த சொற்பொழிவுகள் பல செய்தார்; சங்கத் தமிழ் நூல்கள் பற்றி இலக்கியச் சொற்பொழிவுகள் பல ஆற்றினார்; திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் நாடகத் தமிழ் பற்றி ஒரு விரிவுரை ஆற்றினார். அவருடைய சொற்பொழிவுகள் அந்நகர மக்களுக்குத் தமிழிலும் சைவத்திலும் நல்ல பற்றை உண்டாக்கின. அடிகள்-பத்திரிகை ஆசிரியர் திருவாளர் J.M. நல்லசாமிப் பிள்ளை என்பவர் அக்காலத்திலிருந்த மாவட்ட நீதிபதிகளுள் ஒருவர். அவர் சைவசித்தாந்த சாத்திரங்களில் பெரும்புலமை பெற்றவர்; சைவசித்தாந்த உண்மைகள் நாடு முழுவதும் பரவவேண்டும்-அதற்காக ஆங்கிலத் தாள் ஒன்றை நடத்தவேண்டும் என்று விரும்பினார்;அவ்வாறே அச்சமயக் கருத்துக்கள் பரவத் தமிழ்த்தாள் ஒன்றையும் நடத்த விரும்பினார். அதனைத் தம்மோடு உடன் இருந்து நடத்தத்தக்க ஒருவரைத் தேடினார். சோமசுந்தர நாயகர் நமது அடிகளைச் சிபாரிசு செய்தனர். பிளையவர்கள் அடிகளைக் கண்டு உரையாடி அவரது பெரும் புலமையை நன்கறிந்து மகிழ்ந்தார். அவரைத் தம்முடன் அழைத்துச் சென்று பத்திரிகை தொடங்கினார். அடிகள் முதல் ஐந்து மாத இதழ்கட்கு மட்டும் ஆசிரியராக இருந்தார்; பிறகு அவ்வேலையை விட்டு நாகை மீண்டார். பரிதிமாற் கலைஞர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் அக்காலத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் வி.கோ சூரியநாராயண சாதிரியார் என்பவர். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த புலமை உடையவர்; தமிழ் வளர்ச்சியில் அளவு கடந்த ஆர்வம் உடையவர். எப்பொழுதும் செந்தமிழிலேயே பேசும் நற்பழக்கம் உடையவர்; தமிழ்மொழியை நன்கு ஆராய்ந்து தமிழ்மொழி வரலாறு என்னும் நூலை எழுதியவர்; தமிழில் நாடக நூல் இல்லை என்னும் குறையை நீக்க ரூபாவதி, கலாவதி முதலிய நாடக நூல்களை எழுதியவர்; ஆங்கிலச் செய்யுட்கள் பலவற்றைத் தமிழ்ச் செய்யுட்களாகச் செய்து புகழ் பெற்றவர்; மாணவர் பலரை வீட்டில் வைத்துக்கொண்டு வருவாய் சிறிதும் இல்லாமல் நாள்தோறும் கற்பித்துவந்தவர். இத்தகைய சிறந்த பண்புகளால் அவரைக் கல்லூரி அதிகாரிகளும் பிறரும் பெரிதும் போற்றிவந்தனர். அவரது வடமொழிப் பெயரைப் பரிதிமாற் கலைஞன் எனத் தமிழில் மாற்றிக்கொண்டதைக் கண்ட தமிழ் அறிஞர் அவரைப் பாராட்டிப் புகழ்ந்தனர். அடிகள் கிறித்தவக் கல்லூரியில் தமிழாசிரியர் பரிதிமாற் கலைஞருக்கு அடுத்த நிலையில் தமிழாசிரியர் ஒருவர் தேவைப்பட்டார். அப்பதவிக்கு விண்ணப்பங்கள் பல வந்தன. கல்லூரித் தலைவரான மில்லர் துரை விண்ணப்பங் களை யெல்லாம் சாதிரி யாரிடமே கொடுத்துத் தக்காரைத் தேர்ந்தெடுக்குமாறு பணித்தார். சாதிரியார் சிலரைக் கல்லூரிக்கு வரவழைத்து, வகுப்பில் பாடம் நடத்துமாறு ஏற்பாடு செய்தார். அங்ஙனம் பாடம் நடத்திய புலவருள் நம் அடிகளும் ஒருவர். சாதிரியார் அவரையே தமக்கு உதவி ஆசிரியராகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். அன்று முதல் கலைஞரும் அடிகளும் தமிழக் கடலில் இறங்கி நீந்தலாயினர். டாக்டர் மில்லர் போன்ற ஆங்கிலப் பேராசிரியர்கள் கூட்டுறவால் அடிகள் நாடோறும் ஆங்கில அறிவை நன்கு வளர்த்துவந்தார். அவர் ஆங்கிலத்தில் மாதத்தாள் நடத்தும் வல்லமை பெற்றமைக்குக் காரணம், கிறித்தவக் கல்லூரி நூல் நிலையத்திலிருந்து அவர் கற்ற எண்ணிறந்த ஆங்கில நூல்களே என்னலாம். சூரியநாராயண சாதிரியார் தம் பெயரைத் தமிழில் மாற்றி வைத்துக்கொண்டதைக் கண்ட பின், அடிகள், வேதாசலம் என்னும் தமது பெயரையும் மறைமலை எனத் தமிழ்ப் பெயராக மாற்றிக்கொண்டார். எனினும், அவர் ஆசிரியராக இருந்தபொழுது நாகை-சொ. வேதாசலம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டுவந்தார். சாதிரியாருடைய சேர்க்கை யால் அடிகளுக்குத் தனித் தமிழ்ப்பற்று வளர்ந்தது. தமிழ் தனக்கென இலக்கண வரம்புடைய மிகப் பழைய மொழி; பெரும்பாலான எண்ணங்களை வெளியிட அம்மொழியில் சொற்களுண்டு; சிற்சில சந்தர்ப்பங்களில் பிறமொழிச் சொற்கள் சிலவற்றைக் கடன் வாங்குதல் போதும். ஆகவே, பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலவாமலே தமிழ் எழுதலாம் என்னும் முடிவைச் சாதிரியாரும் அடிகளும் ஒப்புக்கொண்டனர். m‹W Kjš mofŸ TLkhd tiuÆš brªjÄœ¢ brh‰fis¡ bfh©nl f£Liufisí« üšfisí« vGjyhÆd®.* மாணவர் கருத்தைக் கவர்ந்த ஆசிரியர் ஏறத்தாழ இருபது அல்லது இருபத்தொரு வயதுடைய அடிகள் நெற்றியில் திருநீறணிந்து வகுப்பிற்குச் செல்வதும், பண்ணோடு பாடல்களைப் பாடுவதும், செய்யுளில் சொல் அமைதியையும் பொருளழகையும் எடுத்துக் கூறுவதும் பல மேற்கோள்களைத் தந்து செய்யுட் கருத்தை விளக்குவதும், ஆங்கிலம் வடமொழி இவைகளிலிருந்து ஒப்புநோக்குப் பகுதி களைக் கொடுத்தலும் மாணவரைப் பெரிதும் மகிழ்வித்தன. அவர்கள் அவரது பெரும் புலமையையும் கற்பிக்கும் ஆற்றலையும் நன்குணர்ந்து பாராட்டி மகிழ்ந்தனர். செய்யுள் நூல் ஆசிரியர் அடிகள் கல்லூரி ஆசிரியராக இருந்தபொழுது சென்னை அரண்மனைக்காரத் தெருவில் குடியிருந்தார். அவரது பள்ளி வருமானம் போதுமானதாக இல்லை. அதனால் ஒரளவு வறுமைத் துன்பம் குடும்பத்தில் தலை காட்டியது. ஒருமுறை அவர் கொடிய வயிற்று வலியால் துன்புற்றார். அப்பொழுது அவர் தம் நோயை நீக்குமாறு முருகப் பெருமானை வேண்டினார். நோய் நீங்கியதும் அவர் முருகக் கடவுளுக்குத் தம் நன்றியை அறிவிக்க ஒரு மும்மணிக்கோவை நூல் பாடத் தொடங்கினார். எனினும் அந்நூல் தொடர்ந்து பாடப்படாமல் பல காரணங்களால் இடையில் விடப்பட்டு ஒன்றரை ஆண்டுகட்குப் பிறகு நூலாக முற்றுப் பெற்றது. அதன் பெயர் திருவொற்றி முருகன் மும்மணிக் கோவை என்பது. அந்நூல் 1366 அடிகளை உடையது; சொற்சுவையும் பொருட்சுவையும் பொருந்தியது. பழந்தமிழ் நூல்களைப்போன்ற நடையும் அழகும் அமைந்தது. 4. அடிகளின் பிற்கால வாழ்க்கை அடிகளிடம் பயின்ற மாணவர்கள் பரிதிமாற் கலைஞர் 1903-ஆம் ஆண்டு காலமானார். மறைமலையடிகள் அவரது பிரிவால் மிக்க துயருற்றார்; அதற்குப்பின் அக்கல்லூரியில் ஆசிரியராக இருப்பதை வெறுத்தார். சென்னை நகர நெருக்கடி வாழ்க்கை அவரது உத்தியோக வெறுப்பை வளர்த்தது. எனினும் அவர் 1911-ஆம் ஆண்டுவரை வேண்டா வெறுப்புடன் ஆசிரியர் வேலை பார்த்தார்; அக்காலத்தில் முல்லைப்பாட்டு ஆராய்ச்சி, பட்டினப்பாலை ஆராய்ச்சி முதலிய கல்லூரி வகுப்புகளுக்குத் தேவையான ஆராய்ச்சி நூல் களும் வேறு பல நூல்களும் எழுதி வெளியிட்டார். அந்நூல்கள் நாடு முழுவதும் பரவின; கடல் கடந்த தமிழரிடத்தும் பரவின. அதனால் அவர்க்கு யாண்டும் பெரும் புகழ் ஏற்பட்டது. அவர் முப்பது வயதிற்குள் சிறந்த நல்லாசிரியர் என்றும் செய்யு ளாசிரியர் என்றும் உரையாசிரியர் என்றும் ஆராய்ச்சி அறிஞர் என்றும் பண்பட்ட சொற்பொழிவாளர் என்றும் பாராட்டப் பெற்றார். அக்காலத்தில் அவரிடம் கல்வி பயின்று தமிழ்ப்பற்றுக் கொண்ட மாணவர் பலர். அவருள் குறிப்பிடத் தக்கார், தமிழறிஞர் என்று இப்பொழுது பாராட்டப்படும் நாவலர் ச. nrhkRªju ghuâah® ã.V.ã.vš., S. வையாபுரிப் பிள்ளை பி. V., ã vš., T. K. áj«guehj KjÈah® ã.V., பி. vš., C. N. K¤Ju§f KjÈah® ã.V., பி. எல். முதலியோ ராவர். இவர்கள் அல்லாமல் அடிகள் இல்லத்திற்குச் சென்று தமிழ் பயின்றவர் பலர். அவருள் முதல்வர் சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழாசிரியரா யிருந்த மணி. திருநாவுக்கரசு முதலியார் என்பவர். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாகப் பல நூல்களை எழுதி வெளி யிட்டவரும், செந்தமிழ்ச் செல்வி ஆசிரியராக இருந்தவரும் சிறந்த சைவசித்தாந்த சொற்பொழிவாளரும் ஆகிய திரு. இள அழகனார் என்பவர் ஒருவர். சிறந்த நாவல்களை எழுதி வெளியிட்ட நாகை-தண்டபாணிப் பிள்ளை, நாகை-கோபால கிருட்டினப் பிள்ளை முதலியோரும் அடிகளின் மாணவர்களே. அடிகளார் குடும்பம் அடிகளுக்குப் பெண்மக்கள் மூவரும் ஆண்மக்கள் நால்வரும் தோன்றினர். பல அரிய தமிழ் நூல்களை எழுதி வெளியிட்ட திருவாட்டி-நீலாம்பிகை அம்மையார் என்பவர் அடிகளாரது இரண்டாம் மகளார் ஆவர். முதல் மகளார் பல ஆண்டுகட்கு முன்னரே காலமானார். மூன்றாம் மகளார் திருவாட்டி-திரிபுரசுந்தரி என்பவராவர். இவர் சென்னை நகராண்மைப் பெண்பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக இருந்துவருகின்றார். ஆண்மக்கள் நால்வருள் முன்னவர் திருஞானசம்பந்தர். அவர் மலேயாவில் அலுவல் பார்க்கின்றார். அடுத்தவர் பெயர் மாணிக்கவாசகர் என்பது. அவரும் சென்னை நகராண்மைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கின்றார். அடுத்தவர் திருநாவுக்கரசர் என்பவர். இவர் தமிழ்ப் புலவர்; மறை திருநாவுக்கரசு என்று நாட்டவரால் அழைக்கப்படுபவர். இவர் சிறந்த பேச்சாளர்; சைவ சயமச் சொற்பொழிவாளர். நான்காம் மகனார் சுந்தரமூர்த்தி என்பவர். இவர் சென்னையில் மருத்துவராக இருக்கின்றார். மறைமலை அடிகள் மேற்சொன்ன எல்லா மக்களின் தோற்றத்தின் பிறகு, அடிகள் சைவத்தையும் தமிழையும் நாட்டிற் பரவச்செய்ய உறுதிகொண்டார்; அதற்குக் குடும்பப் பொறுப்பில் இருந்து விடுதலை அடைதல் நலமெனக் கருதினார்; வீட்டிலிருந்தபடியே இல்வாழ்க்கை அளவில் துறவு பூண்டார்; காவி உடை அணிந்துகொண்டார். அதுமுதல் மக்கள் அவரை மறைமலை அடிகள் என்று அழைப்பாராயினர். பல்லாவரத்தில் மாளிகை அடிகள் கல்லூரி ஆசிரியர் வேலையிலிருந்து விலகியதும் தமிழகம், இலங்கை முதலிய பகுதிகளில் சுற்றித் தமிழ், சைவம் ஆகிய இரண்டையும் பற்றிப் பல சொற்பொழிவுகள் செய்தார். அவரது பேச்சிலீடுபட்ட பிரபுக்களும் வணிகரும் உத்தியோ கதர்களும் அவருக்குப் பெரும் பொருள் உதவி செய்தனர். அடிகள் அப்பணத்தைக்கொண்டு சென்னையை அடுத்த பல்லாவரத்தில் அழகிய மாளிகை ஒன்றைக் கட்டிமுடித்துக் குடியேறினார்; நாளடைவில் பல நூல்களைத் தாமே எழுதி வெளியிட்டுப் பொருளீட்டினார்; சிறிய அச்சகம் ஒன்றை ஏற்படுத்தினார். படிப்படியாக நாற்பதாண்டுகளில் நாற்பதாயிரம் ரூபாய் பெறத்தக்க நூல்நிலையத்தை ஏற்படுத்தினார். வடமொழி நூல்கள், தமிழ் நூல்கள், ஆங்கில இலக்கியம், வரலாறு, சமயம் என்னும் மூவகையில் வெளிவந்த ஆங்கில நூல்களும் அவர் நூல்நிலையத்தை அழகு செய்கின்றன. அடிகள் மறைவு அடிகள் 1950-ஆம் ஆண்டு ஆகடு மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆம் வயதில் நோய் வாய்ப்பட்டார்; ஒரு மாத காலம் நோயால் வருந்தி, செப்டெம்பர் மாதம் 15-ஆம் நாள் மறைந்தார். அடிகளது மறைவு தமிழ் நாட்டிற்கு ஈடுசெய்ய முடியாத பெரிய நஷ்டமாகும். சிறந்த பண்புகள் அடிகள் சுய முயற்சியால் முன்னுக்கு வந்தவர்; உழைப்பே உருவமானவர்; பல நூல்களைத் தாமே படித்துப் படித்துப் பண்பட்ட புலமையடைந்தவர்; ஊக்கம், உழைப்பு மிக்கவர்; தம் மனத்திற்கு மாறாக எதனையும் செய்யார்; எத்தகைய நன்மை வரினும் தம் கொள்கைக்கு மாறானதைச் செய்யாதவர். இத்தகைய மனவுறுதி உடைய பெருமக்களைக் காண்பது மிக்க அருமை அல்லவா? பிறந்தது முதல் தமிழைப் பேசும் தமிழர் தம் தாய் மொழி நூல்களை நன்கு கற்கவேண்டும்; அம் மொழியை நன்கு வளர்க்க வேண்டும்; தமிழ் வளர தமிழ் இனம் வளரும் என்பது அடிகளது அறிவுரை. அழியாப் புகழ் அடிகள் தூய தமிழில் எழுதவேண்டும் என்னும் கொள்கையை வற்புறுத்தி அவ்வாறே எழுதி வெற்றி பெற்றவர். ஆதனால் தமிழ்மொழி வரலாற்றில் அவர் சிறந்த இடம் பெற்றுவிட்டார். அவருடைய மொழி பெயர்ப்பு நூல்கள், செய்யுள் நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், சாதாரணக் கட்டுரை நூல்கள், கடித நூல்கள், சொற்பொழிவு நூல்கள் என்பன நாற்பதாண்டுகளாக நாடெங்கும் பரவி, செந்தமிழ் நடையை நன்மக்களிடையே பரப்பிவருகின்றன. அந்நூல்கள் உள்ளவரை அடிகளது பெயரும் புகழம் அழியாமல் நாட்டில் நிலை பெற்றிருக்கும். அடிகளார் புகழ் எங்கும் பரவுக!  * இரண்டு, மூன்றாம் வகுப்புக்களில் தனித்தனி எழுத்துக்களைக் கொண்ட சிறிய அட்டைகளைக் கொடுத்து, சொற்களை அமைக்கப் பழக்கும் முறையின் வளர்ச்சியே கண்டப் பத்திரிகை என்பது. * இதனை அடிகளே என்னிடம் கூறினர்.