மறைந்த நகரம் அல்லது மொஹெஞ்சொ-தாரோ பொருநை வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : மறைந்த நகரம், பொருநை ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 14+138 = 152 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 145/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : திருமதி வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. முன்னுரை இச் சிறு நூல், பண்டைத் திராவிட நகரங்களான மொஹெஞ்சொ-தரோ, ஹரப்பா என்பவற்றை அகழ்ந்து ஆராய்ந்த அறிஞர் வெளியிட்ட கருத்துக்களைத் துணையாகக் கொண்டு, நம் தமிழகத்துச் சிறு மாணவர்க்கு எளிதில் விளங்கும் பொருட்டுத் தெள்ளிய எளிய நடையில் எழுதப்பட்டது. இத்தகைய அழிந்த பழைய நகரங்கள் பல நம் தமிழகத்தில் உண்டு. அவை கொற்கை, காயல், புகார், உறையூர், வஞ்சி, மாமல்லபுரம் முதலியன. அவற்றில் மாணவர்க்கு ஒரு பற்று உண்டாகவும், தமிழ்நாட்டுப் பண்டை வரலாற்றின் பெரும்பகுதி இன்றளவும் மண்ணில் புதை யுண்டுதான் கிடக்கின்றது என்பதை அவர்கள் அறியவும் நமது திராவிட நாகரிகம் வரலாற்றுப் புகழ்பெற்ற எகிப்திய நாகரிகத்தினும் விஞ்சியது என்பதையும் அஃது இந்தியா முழுவதும் பரவியிருந்த தனி நாகரிகம் என்பதையும் நம் சிறார் அறிந்தின்புறவும் இந் நூல் உதவலாம். இத்தகைய சிறு நூல்கள் பல வெளிவரல் நாட்டுக்கு நன்மை விளைக்கும். சேக்கிழார் அகம், 28-11-45 மா. இராசமாணிக்கம் பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர் களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கி யிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதி யிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `ï‹iwa jÄHuJ thœÉš jÄœ v›thW ïU¡»‹wJ? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர்வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமைகளையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியினிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமை யால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங்களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்கவழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை எண் பக்கம் மறைந்த நகரகம் 1. மண்ணுள் மறைந்த வரலாறு 15 2. நகர அமைப்பு 19 3. கட்டிடங்கள் 22 4. வீட்டுப் பொருள்கள் 26 5. உணவு-உடை-தொழில் 30 6. வாணிபம் 34 7. கலைகள் 38 8. சமயக்கலை 42 9. இடுதலும் சுடுதலும் 46 10. சிந்துவெளி எழுத்துகள் 50 11. சிந்துவெளி மக்கள் திராவிடரா? 54 12. நமது கடமை 58 பொருநை 1. மேற்கு மலைத் தொடர் 65 2. பொருநையாறு 73 3. அணைக் கட்டுகள் 85 4. பொருநை நாட்டு வரலாறு 96 5. பொருநைக்கரை ஊர்கள் 101 6. பொருநைக்கரை ஊர்கள் - II 114 7. பொருநைக்கரை ஊர்கள் - III 121 8. பொருநைக்கரை நாகரிகம் 141 1. மண்ணுள் மறைந்த வரலாறு மலைப்பாங்கான இடங்களில் இருந்த மிகப் பழைய மனிதன் மலைக்குகைகளில் வாழ்ந்துவந்தான். ஆற்றங்கரைகளில் இருந்த மிகப் பழைய மனிதன் களிமண்ணைக் கொண்டு சுவர்களை அமைத்தான்; தழைகளையும் புற்களையும் கொண்டு கூரை அமைத்தான்; இங்ஙனம் அமைத்த குடிசைகளில் வாழ்ந்து வந்தான். காடுகளில் இருந்த மனிதன் மரங்களிலும் மர அடியிலும் வசித்து வந்தான். கடற்கரை ஓரங்களில் இருந்த மனிதன், அங்கிருந்த மரங்களின் அடியில் சிறு குடில்களை அமைத்துக் கொண்டு வாழ்ந்தான். இவ்வாறு ஒவ்வோர் இடத்திலும் வாழ்ந்த மனிதர்கள் அவ்வவ்விடத்தில் இயல்பாகக் கிடைத்த காய் கனிகளைத் தின்றனர்; விலங்குகளை வேட்டை யாடினர்; ஆறு, கடல்களில் உள்ள மீன்களைப் பிடித்துத் தின்றனர். மக்கள் அறிவு நாளடைவில் வளர்ச்சி பெறுதல் இயல்புதானே! அறிவு வளர வளர மக்கள் பயிர்த் தொழில், நெசவு, பேசக்கற்றல் முதலியவற்றில் தேர்ச்சி பெற்றனர்; தமக்குள் பல சமூகங்களை அமைத்துக்கொண்டனர்; தம் எண்ணங் களைத் தெரிவிக்கப் பலவகைச் சித்திர எழுத்துக்களைக் கையாண்டனர்; அவற்றைக் களிமண் பாத்திரங்கள்மீது பொறித்து வந்தனர்; கற்களைக் கருவிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியபின் கற்பாறைகள்மீதும் சித்திர எழுத்துக்களைத் தீட்டலாயினர். கற்களுக்குப் பிறகு, பண்டை மக்கள் செம்பு, வெண்கலம், ஈயம், வெள்ளி, பொன், இரும்பு இவற்றைக் கண்டறிந்தனர்; அவற்றைக் கொண்டு பாத்திரங்கள், கருவிகள் முதலியன செய்து கொண்டனர்; எனினும், இப் பண்டை மக்கள் மண் பாத்திரங்களையே மிகுதியாகப் பயன்படுத்தினர். இம் மக்களுள் ஒரு நிலத்தார் ஒரு சமூகத்தார் பிறிதொரு நிலத்தாருடனும் சமூகத்தாருடனும் நாளடைவில் கலந்து உறவாடினர்; அவர்களுக்குள் போக்குவரவும் வாணிகமும் கைத்தொழிலும் திருமணக் கலப்பும் உண்டாயின. பல குடும்பங்கள் ஒன்றாகத் தகுதிவாய்ந்த இடங்களில் குடியேறி வாழலாயினர். அவ்விடங்கள் சிறியனவாயின் `சிற்றூர் எனவும், பெரியனவாயின் `பேரூர் எனவும், மிகப் பெரியன ஆயின் `பட்டினம் எனவும் வழங்கலாயின. அறிவும் நாகரிகமும் வளர வளர மக்கள் உலோகங்களை மிகுதியாகப் பயன்படுத்தத் தொடங்கியதும் - பயனற்ற கற்கருவிகளையும் மட்பாத்திரங்களையும் விலக்கி விட்டனர். அவை கவனிப்பார் அற்று நாளடைவில் மண்ணுள் புதையுண்டன. பண்டை மக்கள் இறந்தவரை மண் தாழிகளில் புதைத்து வந்தனர்; அடிக்கடி இடம் மாறி வந்தனர்; அக் காலங்களில் பயனற்ற பழைய பொருள்களைக் கழித்துப் போதல் வழக்கம். அவையும் நாளடைவில் மண்ணிற் புதையுண்டன. கடல் ஓரங்களில் இருந்த பல ஊர்கள் கடல் கொந்தளிப்பால் துறக்கப்பட்டன. ஆற்றோரம் அமைந்திருந்த அழகிய நகரங்கள் ஆற்று வெள்ளத்திற்கு அஞ்சித் துறக்கப்பட்டன. பல நகரங்கள் வேற்றார் வரவினால் பாழாக்கப்பட்டன. சில நகரங்கள் மண் மாரியால் அழிந்தன. இங்ஙனம் பல நகரங்கள் நாளடைவில் துறக்கப்பட்டன; அழிக்கப்பட்டன. அவை பல ஆண்டுகட்குப் பின்னர் மண் மூடுண்டு விட்டன; பல நகரங்கள் புதையுண்ட இடங்களில் அடர்ந்த காடுகள் தோன்றிவிட்டன. பல நகரங்கள் ஆறுகளின் அடியிலும் கடல் அடியிலும் அடக்கமாயின. இந் நிகழ்ச்சிகள் நடந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. பின்னர்ப் பல புதிய நகரங்கள் தோன்றின; அவற்றுள்ளும் பல மேற் சொன்னவாறே மறைந்தன; சில இன்றும் இருக்கின்றன. இங்ஙனம் பல நகரங்கள் மண்ணுள்ளும் ஆற்றடியிலும் கடலடியிலும் மறைப்புண்ட செய்தி இப்பொழுது எப்படி வெளியாகிறது? என்பது தகுந்த கேள்வி அன்றோ? அவ்வக்கால மக்கள் எழுதி வைத்த சித்திர எழுத்துக்களைக் கொண்டும் செம்பு முதலிய தகடுகளில் எழுதிவைத்த பட்டயங்களைக் கொண்டும் கற் கம்பங்களில் பொறித்துள்ள வாசகங்களைக் கொண்டும் பழங்காலப் பனை ஓலைச் சுவடிகளைக் கொண்டும் இப்பண்டை மக்கள் வாழ்க்கையை ஆராய்ச்சியாளர் ஒருவாறு உணர்ந்தனர்; `இம் மக்கள் வாழ்ந்த இடங்கள் என்ன ஆயின? என்று, ஐயந்தோன்றும் இடங்களிற் சென்று மண்ணை அகழ்ந்து ஆராய்ந்தனர்; மண்ணைத் தோண்டுதற்கு முன்னரே பல இடங்களில் மண்மீதே பழங்காலப் பானை ஓடுகள், மணிகள் முதலியன சிதறிக்கிடக்கக் கண்டனர்; ஊக்கங்கொண்டு அப் பகுதிகளை அகழ்ந்து ஆராயலாயினர்; சில இடங்களில் பழைய வீடுகளைக் கண்டனர்; தெருக்களைக் கண்டனர்; மட்பாண்டங் களைக் கண்டனர்; பலவகை உலோகப் பாத்திரங்களையும் கருவிகளையும் கண்டனர்; மட்பாண்டங்கள்மீதும் உலோகச் சிதைவுகள் மீதும் இருந்த சித்திர எழுத்துக்களையும், பின்னர் உண்டான எழுத்துக்களையும் கண்டனர்; அவற்றை அரும்பாடுபட்டுப் படித்து அறிந்தனர்; பழைய நூல்களில் கூறப்பெற்ற செய்திகளை இக்காட்சிப் பொருள்களோடு ஒப்பிட்டுப் பழைய வரலாற்றை ஒருவாறு அறியலாயினர். இவ்வாறு மண்ணைத்தோண்டி, மறைந்த நகரங்களைக் கண்டறியும் முயற்சியே புதைபொருள் ஆராய்ச்சி எனப்படும். இந்த ஆராய்ச்சி உலகம் முழுவதிலும் நடைபெறுகின்றது. எகிப்து, இராக், சீனம், இந்தியா ஆகியவையே பழைய நாகரிகம் கொண்ட நாடுகள் என்று, இன்றளவும் நடைபெற்ற ஆராய்ச்சியால் ஆராய்ச்சியாளர் முடிவு கட்டியுள்ளனர்; இந்நாடுகள் ஏறக்குறைய 5,000 ஆண்டுகட்கு முன்பே உயர்ந்த நாகரிகத்தில் திகழ்ந்தவை என்றும் மெய்ப்பித்து இருக்கின்றனர். இது நிற்க. நீங்கள் படிக்கும் இந்திய வரலாற்று நூலில், `இந்தியாவின் பழங்குடிகள் முண்டர், திராவிடர், என்பவராவர். அவர்கட்குப் பின் இந்தியா வந்தவர் ஆரியர். அவர்கள் சிந்து நதிக்கரையில் இருந்த பழங்குடிகளை விரட்டித் தங்களைத் தாபித்துக் கொண்டனர் என்று படிக்கிறீர்கள் அல்லவா? அந்த ஆரியர் பாடியுள்ள ரிக் வேதத்திலும் பிற்காலப் புராணங்களிலும் ஆரியர்க்கும் ஆரியர் அல்லாத பழங்குடி மக்களுக்கும் பல சண்டைகள் நடந்தன என்பதைப் படிக்கிறோம்; அப்பண்டை மக்கள் உயர்ந்த நாகரிகத்தில் வாழ்ந்தவர்கள் என்பதையும் வாசிக்கிறோம்; ஆரியர் சமக்கிருதம் பேசிய மக்கள். திராவிடர் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய வற்றைப் பேசும் மக்களுடைய முன்னோர் என்பதையும் நாம் படிக்கிறோம்; எனவே, நம் முன்னோரையே ஆரியர் எதிர்த்தனர் என்பதை அறிகிறோம். அறியவே, `ஆரியர் வரும்பொழுது நம் முன்னோர் வாழ்ந்திருந்த நகரங்கள் எவை? என்று ஆவலோடு கேட்க விரும்புதல் இயல்புதானே! நம் முன்னோர், ஆரியர் வருமுன், முண்டர் முதலியோருடன் கலந்து இந்தியா முழுவதும் இருந்து வந்தனர். ஆரியர் வந்தபொழுது சிந்து யாற்றங்கரையிலும் சிந்து-பஞ்சாப் மண்டிலங்களிலும் நூற்றுக்கணக்கான அழகிய நகரங்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்திருந்தனர்; அவை ஆரியர் படையெடுப்பாலும் ஆற்று வெள்ளத்தாலும் துறக்கப்பட்டன. அவை இன்று மண்மேடிட்டுக் கிடக்கின்றன. அவற்றுள் இரண்டே சிறந்த முறையில் தோண்டப் பெற்றவை. அவையே மொஹெஞ்சொதரோ, ஹரப்பா என்பவை. முன்னது சிந்து மண்டிலத்தில் இருக்கிறது; பின்னது பஞ்சாப் மண்டிலத்தில் இருக்கிறது. இவை 5,000 ஆண்டுகட்கு முற்பட்டவை என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். இவற்றின் விவரம் அடுத்த பகுதியிற் காண்க. 2. நகர அமைப்பு மொஹெஞ்சொ-தரோ நகரம் அமைந்துள்ள இடத்தில் பல மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றையே ஆராய்ச்சியாளர் தோண்டிப் பார்த்தனர். அவற்றுள் பெரியது 1300 கெசம் நீளமும் 670 கெசம் அகலமும் உடையது. இதற்கு அடுத்தது 440 கெசம் நீளமும் 330 கெசம் அகலமும் உடையது. இந்த இரண்டு மண்மேடுகளைச் சுற்றிலும் சிறு மண்மேடுகள் பல இருக்கின்றன. முன்னவை நகரமாகவும் பின்னவை நகரத்தின் பகுதிகளாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் நினைக்கின்றனர். மொஹெஞ்சொ-தரோ 5000 ஆண்டுகட்குமுன் சிந்து யாற்றின் கரை ஓரமே இருந்தது. சிந்துயாறு அடிக்கடி தன் போக்கை மாற்றிக்கொள்வதுண்டு. அதனால் இன்று அஃது ஏறக்குறைய ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. ஹரப்பா நகரம் ராவி ஆற்றங் கரையில் அமைந்து இருந்தது. படகுகளின் போக்கு வரவு கருதியே இந்நகரங்கள் ஆற்றோரம் அமைக்கப் பட்டன. இந்நகரங்களில் படகுகளில் ஏற்றப்படும் பொருள்கள் தடையின்றிச் சென்று அரபிக் கடலை அடையும்; அங்குப் பெரிய படகுகளில் அல்லது கப்பல்களில் ஏற்றப் பெற்றுக் குறிப்பிட்ட நாடுகளை அடையும். இந்த வாணிப வசதிக்காகவே இந்த நகரங்கள் அக்காலத்தில் சிறப்புப்பெற்று இருந்தன. மொஹெஞ்சொ-தரோ அமைந்துள்ள இடம் மிகப் பரந்த சமவெளி ஆகும். நகரம் ஒரு சதுரக்கல் பரப்புடையது. அதில் பத்தில் ஒரு பாகமே தோண்டப்பெற்று, ஆராய்ச்சி நடை பெற்றுள்ளது. இந் நகரம் அழிவுறாத நிலையில் இருப்பது பாராட்டத்தக்கது. ஹரப்பா நகரம் அழிந்துபட்ட நிலையில் காணப்படுகிறது. அதன் கட்டடப் பகுதிகளைக் கண்ட மக்கள் செங்கற்களை எல்லாம் எடுத்துச் சென்றனர்; புகைவண்டிப் பாதை அமைப்பவரும் பல பொருள்களை எடுத்துக் கொண்டனர். இவற்றால், அந்நகர அமைப்பு முதலியவற்றை உள்ளவாறு கண்டறியக் கூடவில்லை. மொஹெஞ்சொ-தரோவின் தெருக்கள் காற்று வசதியைக் கருதிக் கிழக்கு மேற்காகவும் தெற்கு வடக்காகவும் அமைந்துள்ளன. பெரிய தெருக்களைச் சிறிய தெருக்கள் நேராக வெட்டிச் செல்கின்றன. பெரிய தெருக்கள் அரைக்கல் முதல் முக்கால் கல் அளவு நீளம் உடையன; 20 முதல் 33 அடி அகலம் உடையன. பெரிய தெருக்களில் மூன்று வண்டிகள் ஒரே காலத்தில் போகலாம். 9 முதல் 18 அடி அகலமுள்ள தெருக்கள் பல. நான்கடி அகலமுடைய சந்துகள் பல. இச்சந்துக்களுக்கும் நடுத்தரத் தெருக்களுக்கும் பெரிய தெருக்களுக்கும் இணைப்பு இருக்கின்றது; சில தெருக்கள் செங்கல் சிதைவுகளையும் மட்பாண்டச் சிதைவுகளையும் கொண்டு கெட்டிப்படுத்தப் பெற்று இருக்கின்றன. சில புழுதி படிந்து கிடக்கின்றன. தெருக்கோடி வீட்டுச் சுவர்கள், வண்டிகள் உறையாதபடி வளைவாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வளவு முன்யோசனை யோடு அமைக்கப் பெற்ற வீட்டுச் சுவர்களைக் கண்டு, அக்கால மக்களின் அறிவுத் திறனை ஆராய்ச்சியாளர் வியக்கின்றனர். ஒவ்வொரு தெருவிலும் ஒழுங்கான கால்வாய் (கழிவுநீர்ப் பாதை) இருத்தல் வியப்பினும் வியப்பே! வீட்டிலிருந்து செல்லும் சிறிய கால்வாய் தெருக்கால்வாயுடன் கலக்கும் இடத்தில் சதுரக்குழி கட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் மூன்றடி உயரமுடைய தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. அத்தாழிகளின் அடியில். நீரைப் பெருங் கால்வாயில் போகச் செய்து குப்பையைத் தேக்கத்தக்க சிறு துளைகள் இருத்தலை நோக்க, சிந்துவெளி மக்களது நுண்ணறிவு வியத்தற்கு உரியதே அன்றோ! மேல் மாடங்களிலிருந்து கழிநீர்க் குழைகள் சுவருக்கு உள்ளேயே அமைக்கப்பட்டு இருத்தல் பின்னும் வியப்பை விளைக்கிறது. தெருக்களில் ஓடும் பெரிய கால்வாய்கள் மீது சதுரக் கற்கள் மூடப்பட்டுள்ளன; சில இடங்களில் செங்கல்-கருங்கல்-மூடிகளும் இடப்பெற்று உள்ளன. நீண்ட கால்வாய்களுக்கு இடையிடையே மூலை முடுக்குகளில் பெரிய தொட்டிகள் புதைக்கப் பட்டுள்ளன. அவற்றிலிருந்து கழிவுநீர் வேறு கால்வாய்கள் மூலம் பிரிந்து நகருக்கு வெளியே செலுத்தப் பட்டது. பெரிய கால்வாய்கள் முடியும் இடங்களில் ஐந்தடி உயரமும் இரண்டரை அடி அகலமும் உடைய மதகுகள் கட்டப்பட்டுள்ளன. இவை வெள்ள நீரையும் வடிக்கத் தக்கவை. இவற்றை எல்லாம் பார்த்த ஆராய்ச்சியாளர் இது போன்ற சுகாதார அமைப்பு அப்பண்டைக்காலத்து இருந்த வேறு நகரங்களில் இல்லை என்று கூறி வியக்கின்றனர். இதனை நோக்க, நமது நாகரிகம் எவ்வளவு சிறப்புடையது என்பதை எண்ணிப் பாருங்கள். ஒவ்வோர் இல்லத்திலும் மலம் கழிக்கும் ஒதுக்கிடம் இருக்கிறது. அது நன்றாகத் தளவரிசை இடப்பெற்றுத் தூய்மையாக இருக்கிறது. அது நாடோறும் நகர சபைத் தோட்டிகளால் தூய்மை செய்யப்பட்டு வந்தது. மேல் மாடங்களிலும் இத்தகைய ஒதுக்கிடங்கள் இருக்கின்றன. மொஹெஞ்சொ-தரோ சிறந்த வாணிப நகரமாக இருந்தது. அதனால் அங்கு இருந்தவர் நல்ல நாகரிகம் கொண்ட மக்களாவர். எனவே, தெருக்கள் காற்று வசதி உடையனவாக அமைக்கப்பட்டன; தெருக்கள் எல்லாம் இணைப்புண்டு கிடந்தன; சுகாதாரம் சிறந்த முறையில் கவனிக்கப்பட்டது. விநோதப் பொது இடங்கள் பல இருந்தன. கால்வாய் வசதி நன்முறையில் அமைக்கப்பெற்று இருந்தது. பெரிய தெருக்களின் கோடியில் காவற்கூடங்கள் இருந்தன. சிற்றுண்டிச்சாலைகள் இருந்தன. இவற்றை நோக்க, இவை எல்லாவற்றையும் கண்ணுங் கருத்துமாகக் கவனிக்கத்தக்க நகராண்மைக் கழகம் ஒன்று இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவு. மிக்க புகழ்படைத்த எகிப்தியரும் பாபிலோனியரும் சுமேரியரும் அப்பழைய காலத்தில் கண்டிராத நகர அமைப்பு முறையை இச் சிந்து வெளி மக்கள் கையாண்டு இருந்தனர். இவர்கள் நாகரிகமே உலகில் உயர்ந்ததாகும் என்று ஆராய்ச்சியாளர் கூறி மகிழ்கின்றனர். 3. கட்டிடங்கள் மொஹெஞ்சொ-தரோவில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் இருவகைச் செங்கற்களால் ஆகியவை: மழை, வெயில், காற்று இவற்றால் துன்பப்படாத படி இருக்கச் சுட்ட செங்கற்களே புறச்சுவர்கட்குப் பயன்படுத்தப்பட்டன; உட் சுவர்களுக்கு உலர்ந்த செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. களிமண் சாந்து சுவர்களின் மேல்பூச்சாகப் பயன்பட்டது. சில வீட்டுச் சுவர்கள் தவிடு கலந்த களிமண் சாந்தால் மெழுகப் பட்டுள்ளன. சுவர், தரை, கூரை இம்மூன்றும் களிமண் சாந்தால் ஆனவையே. அக்கால மக்கள் உத்திரங்களைப் போட்டு, அவற்றின் மீது நாணற்பாய் பரப்பி, அப்பாய்கள்மீது களிமண் சாந்தைக் கனமாய்ப் பூசிக் கூரை அமைத்தனர். கூரையையும் தரையையும் சுவர்களையும் ஒழுங்கு படுத்த மட்டப் பலகை பயன்பட்டது. ஒவ்வொரு தெருவிலும் வீடுகள் அணி அணியாக இருக்கின்றன. அகன்ற தெருக்களில் உள்ள வீடுகளைவிடக் குறுகிய தெருக்களில் உள்ள வீடுகளே நன்னிலையில் இருக்கின்றன. எல்லாக் கட்டிடங்களின் சுவர்களும் பருத்தவையாக இருக்கின்றன. அவை மூன்றரை முதல் ஆறடிவரை தடித்த வையாக இருக்கின்றன. பல வீடுகள் இரண்டு அடுக்குளை உடையவை; சில மூன்று அடுக்குகளை உடையவை; பல அகன்ற முற்றங்களை உடைய ஒரே அடுக்கினை உடையவை. எல்லா வீடுகளும் தளம் உடையவை. சில கட்டிடங்கள் கடைகளாக இருந்தவை; சில கோவில்கள் என்று கருதத்தக்கவை; பல எளியவர் வீடுகள். வீட்டு அறைகள் நல்ல காற்றோட்டம் புகத்தக்கவாறு சன்னல்கள் கொண்டவை. பெரிய வீடுகளில் களஞ்சியங்கள் தரையில் பதிக்கப்பட்டிருந்தன. சில வீடுகளில் சமையல் பாத்திரங்கள் வைத்தற்குரிய மரப்பெட்டிகள் சுவர்களிலேயே இணைக்கப்பட்டிருந்தன. செல்வருடைய மாளிகைகள் அகன்று நீண்ட தாழ்வாரங்கள், முற்றங்கள், சிறிய-பெரிய அறைகள் இவற்றை உடையன. மேல் மாடங்களிலும் பல அறைகள் உண்டு. மேல் மாடத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் இன்றும் நன்னிலையில் இருக்கின்றன. சில மாளிகைகளில் மர ஏணி வைக்கப் பட்டிருந்தது. மேல் மாடங்களில் நீராடும் அறையும் இருத்தல் வியப்பிற்குரியதே யன்றோ! இக்காலத்தில் இருத்தல் போலவே பெரிய மாளிகையில் பெண்கள் இருக்கத் தனி அறையும், பலர் கலந்து பேசத் தனி அறையும், படுக்கை அறையும், சாமான் அறையும், சமையல் அறையும் இருத்தல் பாராட்ட த்தக்கது. சமையல் அறைகள் வெளிச்சமும் காற்றோட்டமும் பொருந்தியவை. அவ்வறைகளில் தண்ணீர்வைக்கத் தாழிகள் தரையில் புதைக்கப்பட்டுள்ளன; சமையல் பொருள்களை வைக்க மண்சாடிகள் பயன்பட்டன; கழிவுநீரைக் கொண்டு செல்ல சமையல் அறை முற்றத்திலிருந்து சிறிய கால்வாய் வெளிச் சென்றது. வீட்டு வாயில்கள் யாவும் பெரும்பாலும் ஐந்தடிக்கு மேற்பட்டனவாக இல்லை. பெரிய வீட்டு வாயிலின் அகலம் ஏறக்குறைய 8 அடிகளாகும். அவ்வீட்டார் எருது முதலிய கால்நடைகளை வளர்த்தனர் போலும்! அவர்கள் அவற்றை முற்றங்களிலேயே கட்டிவந்தனர். மேல் மாடம் 6 அடிக்கு மேற்பட்ட உயரம் உடையதாக இல்லை. வாயிலின் உயரத்தையும் தளத்தின் உயரத்தையும் நோக்க, இங்கு வாழ்ந்த மக்கள் இராக்கில் இருந்த சுமேரியரைப் போலக் குள்ளராக இருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். ஹரப்பாவில் பெருங் களஞ்சியம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது. அதன் நீளம் 168 அடி; அகலம் 135 அடி; உயரம் 52 அடி; சுவரின் கனம் 9 அடி. இரண்டு வரிசையாக இரண்டு மண்டபங்கள் அதில் இருக்கின்றன. இவை தானியங்கள் கொட்டிவைக்கப் பயன்பட்டவை. தொழிலாளர் இல்லங்கள் இக்காலத்துப் போலீசார் வீடுகள் போலக் கட்டப்பட்டுள்ளன. 5000 ஆண்டுகட்கு முற்பட்ட கிணறுகள் பல இன்றும் நீர்ச் சுரப்பை உடையனவாக இருக்கின்றன. ஆராய்ச்சியாளர் அந்த நீரையே பருகின்றனர். அக் கிணறுகள் இக்காலக் கிணறுகளைப் போலவே அமைந்துள்ளன; கிணற்றைச் சுற்றிலும் தளம் செவ்வனே அமைந்துள்ளது; தொட்டிகள் இருக்கின்றன; சிறு கால்வாய் இருக்கிறது. எல்லாக் கிணறுகளும் உருளைகளைக் கொண்டவையே. மொஹெஞ்சொ-தரோவில் வெளிப்பட்ட கட்டிடங்களுள் குறிப்பிடத் தக்கவை அரண்மனை போன்ற கட்டிடமும். அழகிய செய்குளம் ஒன்றுமே ஆகும். செய்குளம் இக்காலப் பொறிவ லாளரும் (Engineers) கண்டு திகைக்குமாறு அமைந்துள்ளது. தண்ணீர் இருக்கத்தக்க இடத்தின் நீளம் 40 அடி; அகலம் 25 அடி; ஆழம் 8 அடி. இதற்கு ஒழுங்கான படிக்கட்டுகள் உள்ளன. குளம் சுற்றிலும் 4 1/2 அடி நடைபாதை உடைய சுவர் இருக்கிறது. அதற்கப்பால் குளத்தைச் சுற்றிலும் 7 அடி அகலமுள்ள பெருஞ் சுவர் ஒன்று அமைந்துள்ளது. குளத்தின் அடிமட்டமும் அடிமட்டச் சுவர்களும் செங்கல்லும் ஒருவகை நிலக்கீலும் கொண்டு தள வரிசை இடப் பட்டுள்ளன. இதில் நீரைப் பரப்ப மூன்று பெரிய கிணறுகள் பக்கத்தில் இருக்கின்றன. அழுக்கான குளத்துநீரை அப்புறப் படுத்தக் குளத்தின் மூலை ஒன்றில் சதுரப் புழை ஒன்று இருக்கிறது. அது மதகுபோல அமைக்கப்பட்டுள்ளது. சுருங்கக் கூறின், இச் செய்குளத்தின் வேலைப்பாடு ஒன்றே ஆராய்ச்சியாளரைப் பெருவியப்புக்கு உள்ளாக்குகிறது.* இக் குளத்திற்கு வடக்கே எட்டு அறைகள் இருக்கின்றன. அவற்றுக்கு மேலும் அறைகள் இருந்திருக்க வேண்டும். அவை சமயச் சார்புடைய பெரு மக்கள் வாழ்ந்தனவாக இருக்கலாம். கீழ் அறைகளில் நீராட வசதி அமைக்கப்பட்டிருக்கிறது. சுவர்கள் தடித்தவை; கதவுகள் உறுதியானவை. கட்டிடங்கட்குப் பயன்பட்ட செங்கற்கள் பெரும் பாலும் ஒரே அளவுடையன. அஃதாவது, நீளத்திற் பாதி அகலம்; அகலத்திற் பாதி கனம். இவை தேவைக்கு ஏற்ற வடிவில் செய்யப்பட்டுள்ளன. சில சதுரமாகவும் சில வளைவாகவும், சில மூலைகளுக்கு ஏற்றவாறு முக்கோணமாகவும் அமைந்துள்ளன. இவற்றைச் சுட்ட காளவாய்கள் பல வட்டவடிவினவாக இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன. 4. வீட்டுப் பொருள்கள் மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த நம் முன்னோர் தங்கள் வாழ்விற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர். அப்பொருள்கள் களிமண், மரம், செம்பு, வெண்கலம், சங்கு, வெண்கல் முதலியவற்றால் செய்யப்பட்டவை. அவற்றுள் மட்பாண்டப் பொருள்களே பல. மட்பாண்டப் பொருள்களே பிறரால் கொள்ளப்படாதவை. ஆதலின் அவையே உண்மை நாகரிகத்தை விளக்குவன. சிந்து ஆற்றுக் களிமண்ணுடன் அப்ரகம், சுண்ணாம்பு, தெளிந்தமண் இவற்றைக் கலந்து நன்றாக அரைத்து மட்பாண்டங்கள் செய்யப்பட்டன. இவற்றைச் செய்யும் வேட்கோவர் பலராக மொஹெஞ்சொ-தரோவில் இருந்திருத்தல் வேண்டும். மட்பாண்டங்களை மெருகிடத் தக்க கருவிகளும் அக்காலத்தில் இருந்தன. மட்பாண்டங்கள் பலவும் செந்நிறமும் கருநிறமும் கொண்டவை யாகவே இருக்கின்றன. பலவற்றின் மீது ஊர்வன, பறப்பன, நடப்பன, நீந்துவன முதலியன ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. பறவைகள், விலங்குகள் இவற்றின் ஓவியங்களே பல. விலங்குகளின் ஓவியங்கள் புல் தரையுடனும் காடுகளுடனும் சேர்த்து இயற்கைக் காட்சியாக எழுதப் பட்டுள்ளன. பலவகை இலைகள், பூங்கொத்துக்கள், இலைகள் மீது உருவங்கள், வட்டத்திற்குள் வட்டம், இவற்றைக் குறிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன. சில தாழிகள் மீது மரங்கள் தீட்டப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பலவகைப்பட்டவை; பல வகைக் கிண்ணங்கள், சிறு தண்டின்மீது பொருத்தப் பெற்ற தட்டுகள், சிறிய அகல்கள், சிறிய மூக்குடைய ஏனங்கள், தட்டுகள், தாம்பாளங்கள், வட்டில்கள், படிக்கங்கள், குடங்கள், தோண்டிகள், சால்கள், சிறிது குடைவான பாத்திரங்கள், மலர்வைக்கும் கண்ணாடிப் பாத்திரம் போன்றவை, பம்பர உருவில் அமைந்த சீசாக்கள், இக் காலச் சீசாக்களைப் போன்றவை, பானைகள், சட்டிகள், நீர்த்தொட்டிகள், பலவகை மூடிகள், புரிமணைகள் முதலியன. இவை அல்லாமல் பூசைக்குரிய மட்பாண்டம், கனல்சட்டி, குமிழ்கள் கொண்ட தாழி, ஒற்றைக் கைப்பிடி அல்லது இரட்டைக் கைப்பிடி கொண்ட பாத்திரங்கள், மைக் கூடுகள், எலிப் பொறிகள், பலவகை விளக்குகள் முதலியன குறிப்பிடத்தக்கவை. இவற்றின் வேலைப்பாடு கண்டு ஆராய்ச்சியாளர் வியக்கின்றனர். சில தாழிகளின் வெளிப்புறமும், சிறிய பாண்டங்களும், தட்டுகளும் பீங்கான் போலப் பளபளப்பாக்கப் பட்டிருக்கின்றன. இதனால், சிந்துவெளி மக்கள் அப்பண்டைக்காலத்திலேயே பீங்கான் செய்யும் முறையை ஒருவாறு உணர்ந்திருந்தனர் என்பது தெரிகிறது. அவர்கள் அம்மி, குழவி, உரல் இவற்றைப் பயன்படுத்தினர். மா அரைக்கும் கல் எந்திரங்கள் நிரம்பக் கிடைத்துள்ளன. கல் ஊசி, எலும்பு ஊசி, கற்கோடரி, செம்பு அரிவாள், மரக் கட்டில்கள், நாணற் பாய்கள், கோரைப் பாய்கள், மேசைகள், நாற்காலி போன்ற உயர்ந்த மரப் பீடங்கள் முதலியன இருந்தன. விளையாட்டுக் கருவிகள் பல கிடைத்துள்ளன: மண் கொண்டு செய்யப்பட்ட விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, ஆண் பெண் பதுமைகள், சிறு செப்புகள் முதலியன நிரம்பக் கிடைத்துள்ளன. குச்சி ஒன்றின்மீது பறவை ஏறுவதும் இறங்குவதுமாக இருத்தற்குரிய வசதியோடுகூடிய கருவிகள் சில கிடைத்தன. சிலுகிலுப்பைகள் நேர்த்தியானவை. மூன்று மண்பந்துகள், வால்புறம் துளையுடைய கோழி, குருவிபோன்ற ஊதுகுழல்கள் கண்ணைக் கவர்வனவாகும். `500 ஆண்டுகட்கு முன் செய்யப்பட்ட ஊது குழல்கள் இன்றும் ஊதத்தக்க நிலையில் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் கூறுதல் வியக்கத் தக்கதன்றோ? உடல் வேறு தலைவேறாகச் செய்து கயிற்றால் இணைக்கப்பட்டுத் தலை அசைக்கும் எருதுகள் பலவாகக் கிடைத்துள்ளன. களிமண் வண்டிகள் சில கிடைத்துள்ளன. வெண்கல வண்டிகள் சிலவே கிடைத்தன. சொக்கட்டான் கருவிகள் பல வடிவங்கள் கொண்டுள்ளன. சிந்துவெளி மக்கள் பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், வெள்ளீயம், காரீயம் இவற்றைக் கொண்டு பல பொருள்களும் அணிகளும் செய்துகொண்டனர். பொன், வெள்ளி நகைகள் சிலவே கிடைத்துள்ளன. அவர்கள் இவ்விரண்டையும் கலந்து `எலக்ட்ரம் என்னும் புதிய உலோகத்தையும் செய்யக் கற்றிருந்தனராம்; செம்பையும் வெள்ளீயத்தையும் கலந்து `வெண்கலம் ஆக்கவும் அறிந்திருந்தனர். அவர்கள் செம்பையும் வெண்கலத்தையும் உருக்கி வார்ப்படம் ஆக்கினர்; தகடுகளாகத் தட்டி ஆணி கொண்டு பொருத்தினர்; இவ்விரண்டு முறைகளாற் றான் எல்லாப் பொருள்களையும் செய்து கொண்டனர்; பொன், வெள்ளிப் பொருள்களுக்குப் பொடி வைத்துப் பற்றவைக்கும் முறையைக் கையாண்டனர். கத்தி, வாள், ஈட்டி, அம்பு, உடைவாள், சுத்தி, இரம்பம், வேல், உளி, வாய்ச்சி முதலியவை செம்பாலும் வெண்கலத் தாலும் ஆனவை. பல்வேறு அளவுடைய கோப்பைகள், நீர்ச்சாடிகள், தட்டுகள், தாழிகள் இவற்றின் மூடிகள் இன்ன பிறவும் செம்பாலும் வெண்கலத்தாலும் இயன்றவை. தோல் சீவும் உளிகளும் மழித்தற் கத்திகளும் குறிப்பிடத்தக்கவை. மழித்தற் கத்திகள் நான்கு விதமாக இருக்கின்றன: (1) அரைவட்ட வடிவில் அமைந்தவை; (2) `ட போன்று அமைந்தவை; (3) வளைவுள்ளவை; (4) நீண்டு நேராக முனை மட்டும் வளைவாக அமைந்தவை. இவை அல்லாமல் உழு கருவிகள், நெசவாளர் கருவிகள், துளையிடும் கருவிகள், கொட்டாப்புளிகள், இழைப் புளிகள் முதலியனவும் அக்கால மக்களால் பயன்படுத்தப் பட்டன. சிந்துவெளி மக்கள் கழுத்துமாலை, காப்பு, மோதிரம், கால்காப்பு, பலவகைக் கற்கள் பதித்த கழுத்துமாலைகள், இரண்டு முதல் ஆறு சரங் கொண்ட மாலைகள், இடைப்பட்டை (ஒட்டியாணம்), உள்ளே அரக்கிட்ட காப்பு, பலவகைப்பட்ட வளையல்கள், ஓவியம் தீட்டப்பட்ட வளையல்கள், நெற்றிச் சுட்டிகள், காதணிகள், மூக்கணிகள், சமயத் தொடர்புள்ள பதக்கங்கள் முதலியவற்றை அணிந்தனர். கழுத்து மாலைகள் பார்க்க அழகானவை. பொன்னாலும் பச்சைக் கற்களாலும் செய்த மணிகள் கோக்கப்பட்டவை சில; குழவி வடிவத்திலும் உருண்டை வடிவத்திலும் செய்யப்பட்ட தங்க மணிகளும் நீலப்பளிங்குக் கல்லாற் செய்யப்பட்ட மணிகளும் சேர்க்கப்பட்ட மாலைகள் சில; தங்கத்தால் தட்டையாகச் செய்யப்பட்டு இரண்டு மணிகளைச் சேர்த்துப் பற்றவைத்துள்ளவை, நிளமாகக் கோக்கப்பட்ட மாலைகள் சில; 27 மணிகள் பல வடிவிற் செய்து கோக்கப்பட்ட மாலைகள் சில; 70 தங்கமணிகள் கொண்ட மாலைகள் சில; 240 மணிகள் கொண்ட நான்கு சரங்கள் கொண்ட மாலைகள் சில. இவ்வாறு பலதிறப்பட்ட கழுத்து மாலைகள் கண்களைக் கவருகின்றன. மணிகள் நன்கு மெருகிடப்பட்டுள்ளன; நடுவில் ஒழுங்காகத் துளையிடப் பெற்றுள்ளன. துளையிடும் கருவி மிகவும் நுட்பமானதாக இருந்திருத்தல் வேண்டும். துளை வழவழப்பாகவும் ஒழுங்காகவும் இருப்பதைக் காண, அத்தொழிலாளர் சிறந்த பயிற்சி உடையவர் என்பது தெளிவாகிறது. சில மணிகளில் ஓவியங்கள் காணப்படுகின்றன. சில பட்டை வெட்டப்பட்டுள்ளன. சில தங்கக் கவசம் கொண்டவை. பல வகை நகைகளைக் காண, மொஹெஞ்சொ-தரோவில் அப் பழங்காலத்தில் தொழில் நுட்பம் வாய்ந்த பொற் கொல்லரும், மணிகள் செய்பவரும், சங்கு அறுப்பவரும், பிறரும் நன்முறையில் வாழ்ந்தனராதல் வேண்டும் என்பது தெரிகிறது. பொத்தான்கள் பலவகைப்பட்டவையாகக் கிடைத்துள்ளன. இவற்றால், அம்மக்கள் சட்டை அணியும் வழக்கம் உடையவர் என்பதை அறியலாம். கொண்டை ஊசிகள் பல கிடைத்தன. இவற்றால் அம்மக்கள் கூந்தலை முடிபோடும் முறையையும் பின்னலையும், அறிந்தவர் என்பதை அறியலாம். அக்காலப் பெண்டிர் தலை நாடாக்களையும் பயன்படுத்தினர்; சீப்புகளையும் கண்ணாடிகளையும் பயன்படுத்தினர்; கொண்டையைப் பின்புறமாகவும் தலைமீதும் போட்டுக் கொண்டை ஊசிகளைச் செருகினர்; கண்களுக்கு மை இட்டுக் கொண்டனர்; முகத்திற்கு ஒருவகைப் பொடி பூசிக்கொண்டனர். சுருங்கக்கூறின், `இம்மகளிரைப் போலத் தூய்மையிலும் அழகை விரும்பியதிலும் சிறந்தவர் பிறநாடுகளில் அக்காலத்தில் இல்லை என்னலாம் என்பது ஆராய்ச்சியாளர் முடிபு. 5. உணவு-உடை-தொழில் சிந்து ஆற்றுவெளி பருவ மழையும் ஆற்றுப் பாய்ச்சலும் சிறப்புப்பெற்று விளங்கியதாகும். ஆதலின், அங்கு இருந்த நிலங்கள் செழிப்புற்று இருந்தன; வண்டல் மண் படிந்திருந்தன; சிறந்த மருத நிலங்களாக விளங்கின. ஆதலின், அங்குக் கோதுமை, நெல், வாற்கோதுமை (பார்லி), பருத்தி, பட்டாணி, எள், பேரீந்து, முலாம்பழம் முதலியன ஏராளமாகப் பயிராக்கப் பட்டன. இன்னும் அப்பகுதிகளில் நெல்லும் கோதுமையும் சிறப்புடைய விளைபொருளாக இருக்கின்றன. இப் பலவகை விளைபொருள்களை அப்பண்டை மக்கள் தாழிகளிற் சேமித்து வைத்தனர். சிந்துவெளி மக்கள் பொதுவாகப் புலால் உண்ணும் வழக்கத்தினர்; சோற்றிலேயே இறைச்சியைக் கலந்து தயாரிக்கும் `புலவு என்னும் ஒருவகை உணவு அவர்களால் அமைக்கப்பட்டு வந்தது. அவர்கள் சோற்றில் ஆடு, மாடு, பன்றி, ஆமை, முதலை இவற்றின் இறைச்சித் துண்டங்களைக் கலந்து `புலவு செய்தனர்; பலவகை மீன் இனங்களை உண்டுவந்தனர்; பல திறப்பட்ட பறவைகளை உண்டனர்; பிற நாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மீன் இனங்களையும் இறைச்சி வகைகளையும் உண்டனர்; இறைச்சித் துண்டங்களை உலர்த்திப் பக்குவப் படுத்திப் பெரிய தாழிகளில் அடைத்து அவ்வப்போது பயன்படுத்தி வந்தனர்; இவற்றோடு பலவகைக் காய் கறிகளையும், பால், வெண்ணெய், தயிர், மோர், நெய் முதலியவற்றையும் உணவுப் பொருள்களாகக் கொண்டிருந்தனர்; பலவகைப் பழங்களையும் உண்டுவந்தனர். அவர்கள் மா அரைத்துப் பலவகை உணவுப் பொருள்கள் செய்து வந்தனர்; வாணல்சட்டி, ஆட்டுக்கல், இட்டலி ஊற்றும் சட்டி இவை கிடைத் துள்ளமையே இம்முடிபுக்குச் சான்றாகும்; மசாலைப் பொருள்களை இடித்து, அவற்றைப் பல அறைப் பெட்டியில் வைத்திருந்தனர்; மரம், சிப்பி, சங்கு, செம்பு, களிமண், வெண்கலம் இவற்றால் ஆன பலவகைக் கரண்டிகளைப் பயன்படுத்தினர். சிந்துவெளியில் பருத்தி ஏராளமாகப் பயிரானது. அதனால் அம் மக்கள் நூல் நூற்று ஆடைகளை நெய்து உடுத்து வந்தனர். ஏழைகள் சாதாரணப் பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தி வந்தனர். செல்வர் பூ வேலைப்பாடு பொருந்திய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தி வந்தனர்; சிலர் கித்தான் போன்ற முரட்டு ஆடைகளை உடுத்தனர். சிலர் நாரால் ஆன ஆடைகளையும் உடுத்தி இருந்தனர். அவக்ள் இடக்கையும் மார்பும் மறையுமாறு போர்வை போர்த்துக் கொண்டிருந்தனர்; சட்டைகள் அணிந்து வந்தனர்; கழுத்துப் பட்டைகளும் பயன்படுத்தி வந்தனர். பெண்கள் பாவாடைகளைப் பெரிதும் பயன்படுத்தி வந்தனர்; பாவாடைகளை இறுக்க, மணிகள் சேர்த்துச் செய்யப்பட்ட ஒட்டியாணம் போன்ற அரைக் கச்சைகளைப் பயன்படுத்தினர். அக் கச்சைகள் சில முன்புறம் முகப்பு வைக்கப் பெற்றவை. பணக்காரப் பெண்கள் மெல்லிய மேலாடைகளை அணிந்து வந்தனர். மொஹெஞ்சொ-தரோ சிறந்த வாணிப நகரம் ஆதலால், அங்குப் பல நாட்டு மக்களும் வசித்திருந்தனர். அவர்களுள் மங்கோலியரும் இருந்தனர். அவர்கள் தலையில் ஒருவகை முண்டாசு இருந்தது. சிந்து வெளி மக்கள் முதன்மையாகக் கொண்டிருந்த தொழில் வாணிபமே ஆகும். ஆயினும் கொத்தர்கள், குயவர்கள், கல்தச்சர், மரத்தச்சர், கன்னார், பொற்கொல்லர், இரத்தின வேலைக்காரர், முத்திரை செதுக்குவோர், சங்கறுப்போர், மீன் பிடிப்பவர், வண்டி ஓட்டுவோர், நாவிதர், தோட்டிகள், காவலாளிகள், கப்பல் தொழிலாளர், உழவர், நெசவாளர், தையற்காரர், பின்னல் வேலை செய்பவர், தந்த வேலைக்காரர், மணிகள் செய்பவர், பாய் பின்னுவோர் எனப் பலவகைத் தொழிலாளரும் அந்நகரில் இருந்தனர். இவர்கள் எல்லோரும் கைதேர்ந்த தொழிலாளர் என்பது மொஹெஞ்சொ -தரோவிற் கிடைத்த பலவகைப் பொருள்களைக் கொண்டு நன்கு அறியலாம். மொஹெஞ்சொ-தரோவில் உள்ள கட்டிடங்களைக் காணக் கொத்தர் வேலைத்திறத்தை நன்கு அறியலாம். அவர்கள் கேவலம் பணத்திற்காகத் தொழில் செய்தவர் அல்லர்; கலைக்காகவே செய்து வந்தனர். என்பதை நன்றாக உணரலாம். வியப்பூட்டும் விதமான விளையாட்டுப் பொருள்கள், நுண்ணிய வேலைப்பாடு கொண்ட மிகச் சிறிய பொருள்கள், எலும்பு களையும் பிறவற்றையும் புதைத்து அடக்கம் செய்வதற்கு அமைந்த தாழிகள், பலவகை ஓவியங்கள் தீட்டப் பெற்ற பாண்டங்கள், கழிநீர்க் குழைகள், ஒலிப் பெருக்கிக் குழைகள், செங்கற்கள் முதலியவற்றைத் திறம்படச் செய்த வேட்கோவர் தொழில் திறமையை என்னென்பது! ஒரு நடனப் பெண் சிலை ஒன்று வெண்கலத்தால் ஆனது; வார்ப்படம் கொண்டது. அதன் வேலைப்பாட்டைக் கண்டு ஆராய்ச்சியாளர் வியக்கின்றனர். மெல்லிய தகடுகளாக அமைந்த ஈட்டிகளும் சிறிய - அழகிய - கூரிய பற்களைக்கொண்ட இரம்பங்களும், கோடரிகளம், அரிவாள் மணைகளும், இடைவாள்களும், நீண்ட வாள்களும், அம்புகளும், பிறவும் கன்னார்தம் தொழில் திறமையை விளக்குவன அல்லவா? அரண்மனைக்குள்ளும் காளவாய்களை வைத்துப் போர்க் கருவிகளைச் செய்துவந்த கன்னார வேலையாட்கள் எப்படிப் பட்ட தொழில் திறம் வாய்ந்தவராக இருத்தல் வேண்டும்! பொன் காப்புகள், வளையல்கள், அட்டிகைகள், கழுத்து மாலைகள், அவற்றில் சேர்க்கப்பட்ட பொன் மணிகள், பூ வேலைப்பாடுகொண்ட மணிகள், பல வடிவங்கொண்ட மணிகள், நுட்ப வேலைப்பாடு கொண்ட தலைச் சாமான்கள், சுட்டிகள், காதணிகள், கடகங்கள் முதலியன செய்த அப் பழங்காலப் பொற்கொல்லர் எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருந்திருத்தல் வேண்டும்.! இக்காலத்தில் சொல்லப்படும் நவரத்தினங்கள் அக்கால மக்கள் நகைகளில் பதிக்கப்பெற்று இருந்தன எனின், அக்கற்களைச் சோதித்தல், அவற்றைப் பட்டை தீட்டுதல், வேண்டிய அளவிற்குத் தக்கபடி செய்தல், மெருகிடல் முதலிய நுட்பமான வேலைகளில் கைதேர்ந்த இரத்தினப் பணியாளர் இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? ஓர் அங்குலத்திற்கும் உட்பட்ட அளவுடைய முத்திரை களைச் செய்தல், அவற்றில் பலவகை உருவங்களைச் செதுக்குதல், அக்கால வழக்கில் இருந்த சித்திர எழுத்துக்களைப் பொறித்தல், நுண்ணிய இரம்பம் கொண்டு ஓரங்களை அறுத்தல் முதலிய தொழில்களைக் காண, மொஹஞ்சொ-தரோவில் சிறந்த செதுக்கு வேளையாளர் இருந்தனர் என்பது தெரிகிறதன்றோ? சங்கை இரம்பத்தால் அறுத்து, அரம் செதுக்கும் கருவி முதலியவற்றைக் கொண்டு பல்சக்கரம், சதுரத்துண்டு, முக்கோணத் துண்டு, இருதயம் போன்ற வடிவங்கள் முதலியன செய்யப்பட்டுள்ளன. இச் சங்குப் பொருள்கள் பல நகைகளில் பதிக்கப் பெற்றுள்ளன எனின், இவை எவ்வளவு நுட்பமாகத் திறம்பட வேலைசெய்யப்பட்டிருத்தல் வேண்டும்.! படகுகள், கப்பல்கள் என்பன கடல் வாணிபம் செய்பவருக்குத் தேவையானவை அல்லவா? ஆயிரக்கணக் கான மைல்கள் தூரம் சரக்குகளைக் கொண்டுச் செல்லத்தக்க கப்பல்களோ, பெரிய படகுகளோ நன்முறையில் செய்யப்படல் வேண்டும் அல்லவா? ஆதலால், சிந்து வெளியில் திறமை பெற்ற கப்பல் தொழிலாளர் இருந்திருத்தல் வேண்டும் அன்றோ? எல்லாத் தொழில்களிலும் கடினமானது மணி செய்யும் தொழிலே மிகச் சிறிய மணிகளைக் கற்களைக் கொண்டு செய்தல், அவற்றில் ஒரே அளவுள்ள வழ வழப்பான துளை களைக் கடைதல் என்பன சிறந்த தொழில் திறமையைக் காட்டும் சான்றுகளாம். நீள மணிகள், தட்டை மணிகள், உருண்டை மணிகள், பல முனையுள்ள மணிகள், ஓவியம் கொண்ட மணிகள் என்பன கண்களையும் கருத்தையும் கவர்வனவாகும். 6. வாணிபம் சிந்துவெளி மக்கள் கொண்டிருந்த வாணிபம் உள்நாட்டு வாணிபம், வெளிநாட்டு வாணிபம் என இரண்டாகக் கூறலாம். மொஹஞ்சொ-தரோவிற் பயன்படுத்திய செம்பு முதலிய கனிப்பொருள்கள் இராச புதனம், மத்திய மாகாணம் முதலிய இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. மான் கொம்புகள் காஷ்மீரிலிருந்தும், வைரமும் வெள்ளி கலந்த ஈயமும் ஆப்கானித்தானத்தி லிருந்தும், ஒருவகை உயர்தரப் பச்சைக்கல் வடபர்மாவிலிருந்தும், திபேத்திலிருந்தும், பொன், கோலார் அனந்தப்பூரிலிருந்தும் கொண்டு வரப்பட்டன. ஒருவகைப் பச்சைக்கல் மைசூரில் இருந்தும், உயர்தர `அமேசான் என்னும் பச்சைக்கல் நீலகிரியிலிருந்ம், சங்கு முத்து முதலியன பாண்டிய நாட்டிலிருந்தும் கொண்டு செல்லப்பட்டன. இவற்றால் அப்பண்டைக் காலத்தில் இந்திய உள்நாட்டு வாணிபம் எவ்வளவு சிறப்பாக நடந்து வந்தது என்பதை எளிதில் அறியலாம். இஃதன்றிச் சிந்துவெளி மக்கள் இந்தியா முழுவதையும் நன்கு அறிந்திருந்தனர் என்பதும் புலனாகும். சிந்துவெளியிற் கிடைத்த எழுத்துக் குறிகள், முத்திரைகள், ஓவியங்கள், கருவிகள், மட்பாண்டங்கள் முதலியவற்றை நன்றாக ஆராய்ந்த நிபுணர்கள் அவற்றுக்கும் ஏலம், சுமேர், மெசொபொட்டேமியா, எகிப்து முதலிய நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர். இப்பொருள்களின் ஒருமைப்பாட்டாலும், ஏற்றுமதி-இறக்குமதிப் பொருள்களாலும் நம்முன்னோர் செய்து வந்த வெளிநாட்டு வாணிபத்தை ஒருவாறு அறியலாம். (1) சலவைக்கல் சிந்து வெளியில் இல்லை. ஆனால் சலவைக்கல் பொருள்கள் பல கிடைத்துள்ளன. சலவைக்கல் `ஏலம் என்னும் நாட்டில் மிகுதியாகக் கிடைக்கிறது மேலும், சலவைக்கல் முத்திரைகளில் உள்ள வேலைப்பாடுகள் ஏலம் நாட்டைச் சேர்ந்தன. ஆதலின், அவை அந்நாட்டிலிருந்தே வந்தனவாதல் வேண்டும். (2) சுமேரியா நாட்டில் சிந்து வெளியிற் செய்யப்பெற்ற முத்திரைகள் சில கிடைத்தன. (3) உடலின் துவாரம் உள்ள முட்களைப் போன்ற அமைப்பைக் கொண்ட மண்பாண்டங்கள் சில ஏலம், சுமேரியா நாடுகளில் கிடைத்தன. அவை இந்தியாவிற்கே உரியவை. (4) ஒருவகை வெள்ளைப் பச்சைக் கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் ஒன்று பாய்வடிவ வேலைப்பாடு கொண்டதாக மொஹஞ்சொ-தரோவில் கிடைத்தது. அத்தகைய பாத்திரங்கள் சுமேரியா, ஏலம், மெசொபொட்டேமியா நாடுகளில் கிடைத்துள்ளன. (5) பச்சைக்கல் பாத்திரம் ஒன்றன்மீது நந்தி உருவம் கோவிலில் இருப்பதாகப் பொறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அப்பண்டைக் காலத்திலேயே நந்தி வழிபாடு சிந்துவிலிருந்து சுமேரியாவுக்குச் சென்றது என்பது விளங்குகின்றது. (6) முத்திரைகளும் பிற பாத்திரங்களும் செய்தற்குரிய உயர்தரக் கற்கள் சுமேரியாவுக்கு அனுப்பப்பட்டன. (7) எகிப்து, சுமேரியா, ஏலம் முதலிய நாடுகளிலிருந்து முறுக்குண்ட கொம்புகளைக் கொண்ட செம்மறியாடுகள் சிந்து வெளிக்கு அனுப்பப்பட்டன. (8) சுமேரியாவிற்குச் சிந்து வெளியிலிருந்து இரத்தின மணிகள் கொண்டு செல்லப்பட்டன. (9) சிந்துவெளி மக்கள் யானைத் தந்தம், யானைத் தந்தத்தாலான சீப்புகள், சதுரங்கவிளையாட்டுக்கருவிகள் முலியவற்றைச் சுமேரியாவுக்கு ஏற்றுமதி செய்தனர். (10) பாரசீக வளைகுடாவிலிருந்து மட்பாண்டங்கள் மீது பூசப்பட்ட செங்காவிப் பொடி சிந்து வெளியில் இறக்குமதி செய்யப்பட்டது. (11) கிரேக்க சிலுவை பொறிக்கப்பட்ட முத்திரைகள் சிந்துவெளியிலிருந்தே அயல் நாடுகட்கு அனுப்பப்பட்டன. (12) இரண்டு இடங்களிலும் காணப்பட்ட எழுத்துக் குறிகள் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கின்றன. (13) எகிப்தில் சில பீடங்களின் கால்கள் எருதின் கால்களைப்போல இருக்கின்றன. மொஹஞ்சொ-தரோவில் இத்தகைய பீடங்கள் கிடைத்துள்ளன. இன்ன பிற சான்றுகளால், சிந்து வெளி மக்கள் மேற்கு நாடுகளுடன் தரை வழியாகவும், கடல் வழியாகவும் வாணிபம் நடத்தி வந்தனர் என்பதை நன்கறியலாம். உள்நாட்டு வாணிபத்தின் ஒரு பகுதி சிந்து ஆற்றின் மூலமாகவே நடந்தது. அப்பண்டைக் காலத்தில் ஒரேவித நாகரிகத்தில் இருந்த சிந்து வெளி நகரங்கள் பல, சிந்து ஆற்றின் வழியே தமக்குள் வாணிபம் நடத்திக்கொண்டன; அரபிக்கடல் துறைமுகப் பட்டினங்கட்குத் தம் பொருள்களைப் படகுகளில் ஏற்றிச் சிந்து ஆற்றின் மூலம் அனுப்பின; மேற்குப்புற நாடுகளி லிருந்து துறைமுகப் பட்டினங்களை அடைந்த பொருள்களை முன் சொன்ன படகுகள் மூலமே பெற்றுக் கொண்டன. பண்டை மக்கள், இவ்வாறு சிந்து யாற்றுவழியே வந்த பொருள்களைக் கப்பல்களில் ஏற்றிக் கொண்டு துறைமுகங் களை விட்டுக் கரை ஓரமாகவே தென் பலுசித்தானம், தென் பாரசீகம், இராக், அபிசீனியா, எகிப்து என்னும் நாடுகளுடன் வாணிபம் செய்தனராதல் வேண்டும். அப்பண்டை மக்கள் பயன்படுத்திய முத்திரை ஒன்றில் கப்பல் படம் ஒன்றும், பானைமீது ஓடத்தின் படம் ஒன்றும் காணப்படுகின்றன. இப்படங்களால் கடலிற் செல்லும் கப்பல்களையும் ஆற்றில் செல்லும் ஓடங்களையும் நன்கு அறிந்து பயன்படுத்தினர் என்பதை அறியலாம். சிந்து வெளிக்கு `ஜேட் என்னும் ஒருவகைக் கல் நடு ஆசியாவிலிருந்து வந்தது. அக்கல் சிந்து வெளி மூலம் தென் பாரசீகம், இராக், சுமேரியா, சிரியா எகிப்து நாடுகட்கு அனுப்பப்பட்டது. எனவே, அக்காலத் தரை வாணிபம் ஏறக்குறைய 3000 மைல் தொலைவில் நடந்து வந்தது என்பது அறியத் தக்கது. இத்தரைவழி வாணிபத்திற்கு அப்பண்டை மக்கள் எருதுகளையும் கோவேறு கழுதைகளையும் பயன் படுத்தினர். அவற்றுள்ளும் கழுதைகளையும் பயன்படுத்தினர். அவற்றுள்ளும் எருதுகளே மிகுதியாகப் பயன்பட்டன. சுருங்கக் கூறின், எருதுகளே அப்பண்டைக்கால வாணிபத்தை வளர்த்தன என்னலாம். பண்டை மக்கள் வாணிபத்தின் பொருட்டுக் கையாண்ட நிறைக் கற்கள் குறிப்பிடத் தக்கவை. இவை அனைத்தும் வழவழப்புடனும் பளபளப்புடனும் காணப்படுகின்றன. நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்று அளவுகளும் ஒரே முறையில் இருக்கும்படி செய்யப்பட்டுள்ள கற்களே பல. இவை மிகச் சிறிய அளவு முதல் பல்வேறு நிறைகளைக் குறிப்பனவாக இருக் கின்றன. சில வியத்தற்குரிய பெரிய அளவைக் குறிப்பன. சில உருண்டு நீண்டவையாக இருக்கின்றன. வேறு சில நிறைகள் இன்றைய விறகுக் கடைகளில் உள்ள நிறைகளைப் போலப் பெருத்திருக்கின்றன. அவை கூம்பிய உச்சியை உடையன. அவற்றுள் ஒன்று 25 பவுண்டுக்கும் மேற்பட்ட நிறை உடையது. இந் நிறைக்கற்கள் யாவும் கருங்கல், மாக்கல், பளிங்குக் கல், பச்சைக் கல், மங்கிய சிவப்புக் கல் முதலிய பலதிறப்பட்ட கற்களால் அழகுறச் செய்யப்பட்டுள்ளன. நிறை அளவுகள் குறிப்பிடத் தக்கவை. அவை 1, 2, 4, 8, 16, 32, 64, 160, 200, 320,640, 1600, 3200, 6400, 8000, 128000 ஆகிய எண்களைக் குறிப்பன. ஒன்று என்பது 0.8565 கிராம் ஆகும். `இந்த அளவைகள் அனைத்தும் சிந்துவெளிக்கே உரியவை. இவற்றைக் காண, சிந்துவெளி மக்கள் வாணிபத்திற் சிறந்த பெருமக்கள் என்பதில் ஐயமில்லை என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். தராசுத் தட்டுகள் செம்பாலும், தண்டு வெண்கலத்தாலும் செய்யப்பட்டன போலும்! அளவு கோல் இருந்தது. முத்திரை பதிக்கும் பழக்கமும் அக்காலத்தில் இருந்தது. இதுவரை கூறிவந்த செய்திகளால், சிந்து வெளியில் வாழ்ந்த நம்முன்னோர், இந்தியா முழுவதிலும் தரை வழியாக வாணிபத்தை நடத்தி வந்தனர் என்பதும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் எகிப்து வரையில் வெளிநாட்டு வாணிபத்தைத் திறம்பட நடத்தி வந்தனர் என்பதும், தக்க நிறைகளையும் பிற அளவைகளையும் முத்திரைகளையும் பெற்றிருந்தனர் என்பதும் நன்கு விளங்குகின்றன அல்லவா? 7. கலைகள் மொஹஞ்சொ-தரோவில் வாழ்விற்குரிய கலைகள் எல்லாம் இருந்தன. எழுத்துக்கள் இருந்தமையால் அம்மக்கள் மொழி உணர்ச்சி உடையவர் என்னலாம்; மேலும், முத்திரை களில் பலகதைகளைக் குறிப்பிடும் சம்பவங்கள் பொறிக்கப் பட்டிருத்தலால், இலக்கியக் கலை உணர்ச்சி உடையவர் என்னல் தவறாகாது. அன்று சிந்துவெளியில், தோன்றிய காவியக் கலை உணர்ச்சியே, பிற்கால இராமாயண - பாரதங் களில் காணப்படும் காவிய இன்பத்திற்கு அடிப்படையாகும் என்பதில் தவறில்லை. எனவே, சிந்துவெளி மக்கள் இலக்கிய உணர்ச்சி கொண்ட நாகரிக மக்களே என்பது பொருந்தும். காவியக் கலை உணர்ச்சி அற்ற மக்களுக்கு ஓவியக் கலை உணர்ச்சி தோன்றாது. சிந்து வெளி மக்கள் பானை ஓடுகள் மீதும் ஓவியங்கள் திறம்படத்தீட்டி இருத்தலைக் காண - இதுவரை கிடைத்துள்ள 1000-க்கு மேற்பட்ட முத்திரைகளிலும் ஓவியங்கள் செதுக்கியுள்ளதை நோக்க-அவர்தம் ஓவியக்கலை அறிவை நாம் எளிதில் உணரக்கூடும். ஓவியம் காவியம் போன்றதே. காவியம் உள்ளத்தைக் கொண்டு படித்து உணரப்படுவது; ஓவியம் கண்கொண்டு காணப்படுவது. நூலில் உள்ளதைச் சித்திர வடிவில் காட்டலே ஓவியக்கலை. எனவே, காவியக்கலை உள்ள இடத்தேதான் ஓவியக்கலை உண்டாகும். மொஹஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ள ஓவியங்கள், மிகத் தெளிவாக அக்கால நிலையையும், நாகரிகத்தையும் உணர்த்த வல்லவையாக இருக்கின்றன. அவை பிற்கால ஓவியக் கலையின் பிறப்பிடம் என்னலாம். ஒரு வட்டத்திற்குள் பல வட்டங்கள் பிழைபடாமல் இட்டுள்ள முறை போற்றுதற்கு உரியது. பல பாண்டங்கள்மீது மரங்கள், இலைகள், இலைக் கொத்துகள், சருதக் கட்டடங்கள், குறுக்கும் நெடுக்குமாக உள்ள முக்கோணங்கள், பறவைகள், பாம்புகள், மீன்கள், மலையாடுகள், காட்டு எருமைகள் முலியவற்றின் உருவங்கள் செவ்வையாகத் தீட்டப்பட்டுள்ளன. அரை அங்குலத்திற்கும் உட்பட்ட அளவுடைய முத்திரைகள்மீதும் அழகிய ஓவியங்கள் தீட்டும் தொழில் நிபுணர் அக்காலத்தே இருந்தனர் என்பது வியப்பினும் வியப்பன்றோ! சிந்துவெளி மக்கள் சிற்பக் கலையையும் வளர்த்தவர் ஆவர். மொஹஞ்சொ-தரோவிற் கிடைத்த சுண்ணாம்புக்கல் கொண்டு செய்யப்பட்ட சிலை ஒன்றே அவர்தம் நுண்ணறிவைத் தெள்ளிதில் உணர்த்தப் போதுமானது. அவ்வுருவம் யோகி அல்லது சமயத் தலைவர் உருவம் ஆகும். அது சித்திரத் தையலைக் கொண்ட போர்வை ஒன்றைப் போர்த்துள்ளது; மீசை இன்றித் தாடி மட்டும் வைத்துள்ளது; அத்தாடி ஒழுங்காக அமைக்கப் பட்டுள்ளது; தலைமயிர் ஒழுங்காகச் சீவப்பெற்று வட்டப் பதக்கத்துடன் கூடிய தலை அணியால் அழுத்தப் பட்டுள்ளது. இச்சிலையைக் கண்டு ஆராய்ச்சி யாளர் அதிசயிக்கின்றனர். ஹரப்பாவில் சில கற்சிலைகள் கிடைத்துள்ளன. அவை வியக்கத்தக்க முறையில் வழவழப்பாகச் செய்யப்பட்டுள்ளன. கைகள் தனியே செய்து இணைப்பதற்கு ஏற்றவாறு அச்சிலை களில் துளைகள் இருக்கின்றன. அவ்வாறே தலைகளும் இணைக்கப்பட்டன. கற்களில் இணைப்பு வேலையைச் செய்யத்துணிந்த அப் பேரறிஞர்தம் சிற்பக்கலை அறிவை என்னென்பது! இந்த ஆடவர் சிலைகள், மணற் கல்லாலும், பழுப்பு நிறக் கற்களாலும் செய்யப்பட்டவை. வெண்கலத்தால் செய்யப்பட்ட நடனப் பெண் உருவம் ஒன்றும் சிந்துவெளி மக்களது கலை அறிவைக் காட்டுவதாகும். வெண்கல வார்ப்படம் கொண்டு செய்யப்பட்ட அவ்வுருவம், வழ வழப்பாகவும் ஒழுங்காகவும் அமைந்துள்ளது. அது நடனம் செய்யத் தயாராகவுள்ள ஒருத்தியை உணர்த்துவதாகும். வேறு சில நடனச் சிலைகள் இடக்காலைத் தூக்கி வலக்கால்மீது நின்று நடனம் செய்வது போல அமைக்கப்பட்டுள்ளன. இச் சிலைகள் சிவ பெருமானது பிற்கால நடனத்திற்குத் தோற்றுவாய் ஆகலாம் என்பது அறிஞர் கருத்து. சிற்பக்கலை கிரேக்கரிடமிருந்தே இந்தியாவிற்கு வந்தது என்று இதுவரை பலரும் நம்பினர். அது தவறு என்பதையும், இந்தியாவிலேயே சிற்பக்கலை தனி முறையில் தோன்றி வளர்ச்சி பெற்றது; அது வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டது என்பதையும் சிந்துவெளிச் சிலைகள் மெய்ப்பித்துவிட்டன. சில சித்திரங்களைக் கொண்டு பார்க்கையில், அக்கால மக்கள் தவுல், மிருதங்கம், வீணை, தாளங்கள் முதலியவற்றைக் கையாண்டனர் என்பதை உணரலாம். எனவே, அவர்கள் இசைக் கலை உணர்ச்சியை உடையவராகவே இருந்தனர் என்பது தேற்றம், நடன மாதின் சிலையையும் வேறு சில நடனச் சிலை களையும் நோக்க, அப்பண்டை மக்கள் நடனக்கலை அறிவையும் பெற்றிருந்தனர் என்பது தெளிவாகும். சிந்து வெளியிற் கிடைத்துள்ள நிறைக் கற்கள் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் காணப்பட்டன. அவற்றின் மிகக் குறைந்த அளவு தசாமிச பின்னத்திற் செல்கிறது; பேரளவு 15 பவுண்ட் வரை செல்கிறது. இதனால், அக்கால மக்களது கணிதப் புலமை நன்கு தெளிவாகிறதன்றோ? `எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வாழ்ந்தனர். சிந்துவெளி மக்கள் மருத்துவக் கலையிலும் ஓரளவு தேர்ச்சி பெற்றவர் ஆவர். இக்கால ஆயுர்வேத யூனானி மருத்துவப் புலவர் கையாளும் `சிலா சித்து என்னும் மருந்து மொஹஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளது. `சிலா சித்து என்பது வயிற்றில் உண்டாகும் குடலைப்பற்றிய - நுரையீரலைப் பற்றிய-நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. அஃது, இமயமலைப் பாறைகளில் கசிந்து வருவது. அதனை மலைநாட்டார் கொண்டுவந்து கொடுத்தனர்; இன்றும் கொடுக்கின்றனர். அவர்கள் சம்பர்மான் கொம்புகளைப் பொடியாக்கி மருந்தாகப் பயன்படுத்தினர் என்பதும் தெரிகிறது. மாட்டுக் கொம்புகள் கிண்ணம்போலக் குடையப்பட்டுள்ளதை நோக்க, அவை மருந்துவைக்கப் பயன்பட்டன வாதல் வேண்டும் என்பது அறியக்கிடக்கிறது. சிந்துவெளி மக்கள் வீடுகள் கட்டியுள்ள முறையிலிருந்து இராசி கணங்களின் இயக்கங்களைக் கவனித்து வந்தவர் என்பதை அறியலாம். `அவர்கள் காலத்தில் இராசி மண்டலத்தில் எட்டு இராசிகளே இருந்தன. அக்காலம் ஏறக்குறைய கி. மு. 5610 எனக் கூறலாம். அது சுமேரியர் நாகரிகமே தோன்றாத காலம் என்று ஹீரா பாதிரியார் கூறியுள்ளார். கைத்தொழிற் கலைகளில் சிந்துவெளி மக்கள் மிக்க தேர்ச்சி பெற்றவர் என்பது முன் பகுதியில் விளக்கப்பெற்றது. அவர்கள் உடற் பயிற்சியிலும் ஓரளவு பயிற்சி பெற்றவர் என்பது சில முத்திரைகளில் உள்ள ஓவியங்களைக் கொண்டு கூறலாம். மொஹஞ்சொ-தரோ சிறந்த வாணிபத்தலம் ஆதலால், நகரெங்கும் காவற் கூடங்கள் இருந்தன. அங்கிருந்த காவலாளிகள் கள்வரைப் பிடிக்கத்தக்க அறிவு நன்கு பெற்றவராதல் வேண்டும். இன்றேல், நகரம் நன்னிலையில் இருத்தல் இயலாதன்றோ? இதுவரை கூறியவற்றால், மொஹஞ்சொ-தரோ, ஹரப்பா முதலிய சிந்துவெளி நகரங்களில் வாழ்ந்த நம் முன்னோர், வாணிபத்தால் சிறப்புற்றுக் கைத் தொழிலிலும் சிறப்படைந்து, இசை, நடனம், சிற்பம், ஓவியம், கணிதம் முதலிய பலவகைக் கலைகளில்-வாழ்க்கை இன்பத்திற்குத் தேவையான கலைகளில்-பயிற்சி பெற்று இன்ப வாழ்வு வாழ்ந்தனர் என்பது வெள்ளிடை மலைபோல் விளக்க மாதல் காண்க. இனி, அடுத்த பகுதியில் அவர்தம் சமயக் கலை அறிவைக் காண்போம். 8. சமயக்கலை சிந்துவெளியில் கணிமண்ணாற் செய்து சுடப் பெற்ற சிறிய வடிவங்களும், முத்திரைகளும், உலோகத் தகடுகளும் தாயித்துக்களும் நிரம்பக் கிடைத்தன: அவற்றைக் கொண்டு அக் காலத்தவருடைய கடவுள் வணக்கத்திற்கு உரிய பொருள்கள் இன்னவை என்பதை ஒருவாறு அறியலாம். உலகத்துப் பண்டை மக்கள், தமக்குப் பலவகை உணவுப் பொருள்களைத் தரும் தரையைத் தாயாக மதித்து வழிபட்டனர். அவர் போலவே சிந்துவெளி மக்களும் தரைப் பெண் (நிலமக்கள்) வணக்கம் கொண்டிருந்தனர்; அவ்வம்மைக்கு ஆடு, கோழி முதலியவற்றைப் பலியிட்டு வந்தனர். அத்தேவதை நிரம்ப நகைகளை அணிந்திருந்தது; தலையில் விசிறிப் பாகையை உடையது. சிந்துவெளி மக்களிடம் சிவ வணக்கமே சிறப்பாகக் குடிகொண்டு இருந்தது என்பதைக் குறிப்பன போலக் கணக்கற்ற இலிங்கங்கள் கிடைத்துள்ளன. இடைக்காலைத் தூக்கி ஆடும், நடராசர் சிலை போன்றது கிடைத்துள்ளது. ஒரு முத்திரையில் மனித உருவம் ஒன்று யோகத்தில் இருப்பது போலப் பொறிக்கப் பட்டுள்ளது. மார்பில் முக்கோண வடிவப் பதக்கங்கள் காண்கின்றன. கைகள் நியைக் கடகங்கள் பூட்டப் பெற்றுள்ளன. இடுப்பில் இரட்டைப் பட்டையாக ஓர் அரைக்கச்சை காணப்படுகிறது. இவ் வுருவத்தின் வலப்புறம் யானையும் புலியும் இடப்புறம் எருதும் காண்டா மிருகமும் நிற்கின்றன. பீடத்தின் அடியில் இரண்டு மான்கள் இருக்கின்றன. யோகியின் தலைமீது வளைந்த எருமைக் கொம்புகள் இருக்கின்றன. `இவ்வுருவம் சிவனைக் குறிப்பது; தலைமீதுள்ள கொம்புகளும் பூங்கொத்தும் திரிசூலத்தைக் குறிப்பன; விலங்குகள் பக்கத்தில் இருத்தல், சிவன் - பசுபதி என்பதைக் குறிப்பது. மூன்று தலைகள் நன்கு தெரிவதால், பின்பக்கம் இரண்டு தலைகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். இலிங்கங்கள் பலவடிவினவாகக் கிடைத்துள்ளன. ஹரப்பாவில் மட்டும் 600-க்கு மேற்பட்ட சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. பண்டை மக்கள் சிறிய இலிங்கங்களைத் தாயித்துக்கள் போலக் கழுத்திலோ கையிலோ கட்டி இருந்தவராதல் வேண்டும்; இவையன்றி, முத்திரைகளும் செம்பு வில்லைகள் போன்றனவும் அணியப்பட்டு வந்தன. ஒரு முத்திரையில் ஓர் உருவம் உட்கார்ந்திருக்கிறது; அதன் இருபுறமும் வரிசையாகச் சிலர் நின்று வணங்குகின்றனர்; பத்தர் தலைமீது படம் விரித்தாடும் பாம்பு போன்ற தலையணிகள் காணப் படுகின்றன. இக்காட்சி, புத்தர் பெருமானை நாக அரசர்கள் வணங்குவது போன்ற காட்சியை நினைப்பூட்டுகிறது. `கண்ணபிரான் கலியன் என்னும் நாக அரசனை வென்ற பிறகு அவனும் அவனைச் சேர்ந்தவரும் கண்ணனை வணங்கும் காட்சியே அது என்று ஆராய்ச்சியாளர் சிலர் கூறுகின்றனர். இஃது உண்மையாயின், அப் பழங்காலத்திலேயே வைணவமும் இந்நாட்டில் இருந்தது என்பது புலனாகும். கொம்புள்ள தெய்வங்கள், நாற்றைத் தெய்வங்கள் போன்றவை சில முத்திரைகளில் காணப்படுகின்றன. வேறு சிலவற்றில் அறுவர் நின்று யோகம் செய்வதுபோல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. `நிற்கும் நிலையில் யோகம் புரிதல் சமணர்க்கே சிறப்பானது. மேலும் இவை வட மதுரையில் உள்ள சமணர் சிலைகளை ஒத்துள்ளன. எருது சமணரது அடையாளக் குறி ஆகும். சில முத்திரைகளில் யோகியின் முன்புறம் எருது இருத்தல் குறிப்பிடத்தக்கது. ஆகவே, இவ்வுருவம் இடப தேவரைக் குறிப்பதாகலாம் என்று ஆராய்ச்சியாளர் சிலர் அறைவர்; இதனையே வேறு சிலர், `சிவபெருமானைக் குறிப்பது என்பர். சூரிய வணக்கமும் மொஹஞ்சொ-தரோவில் இருந்தது. கலப்பு உருவங்கள் பல, வணக்கம் பெற்றிருந்தன. மனிதத் தலை, யானை உடல், எருதின் கொம்புகள், புலியின் கால்கள், புலி வால் இக்கூட்டு உருவம் ஒன்று தெய்வமாக வணங்கப் பெற்றது. எருதுக் கொம்புகளுடன் கூடிய மனித உருவம் ஒன்று காணப்படுகிறது. அதன் கால்கள் எருதின் கால்கள் ஆகும். இத்தகைய விநோத உருவங்கள் சுமேரியாவில் நிம்பக் கிடைத்துள்ளன. இம் மனிதர் `தெய்வ சக்தி வாய்ந்தவர் என்பது அப்பண்டை மக்கள் எண்ணம். பெண்ணும் புலியும் சேர்ந்த உருவம் ஒன்றும் கிடைத்தது. புலியை ஒரு தேவதையாகப் பழைய மக்கள் எண்ணினர் போலும்! கொம்பு முளைத்த பாம்புகள் வணங்கப் பெற்றன. கருடப் பறவைகள் வணங்கப் பெற்றன. மர வணக்கம் சிந்து வெளியில் சிறப்பாக இருந்தது. மரங்களின் அடியில் மேற்சொன்ன பலவகை விநோத உருவங்கள், இருப்பதாகச் சில முத்திரைகளில் பொறிக்கப் பட்டுள்ளன. மரத்தின் அடியில் ஆடு முதலியவற்றை மர தேவதைகட்குப் பலி இடுதல் சில முத்திரைகளால் புலனாகிறது. மர தேவதைகள் இன்றும் தமிழ் மக்களால் வணக்கம் பெறுதல் ஈண்டு நினைக்கத்தக்கது. ஆற்று வணக்கமும், அக்காலத்தில் இருந்தது. இவ் வணக்கம் இன்றும் `பதினெட்டாம் பெருக்கம், என்னும் பெயரில் நமது தமிழ் நாட்டில் இருப்பதையும் சிறப்பாக இந்தியா முழுவதிலும் இருப்பதையும் அறிக. சமய சம்பந்தமாகத் தாயித்து அணிதல் அக்கால வழக்கம். இவ்வழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றதன்றோ? அணில், செம்மறியாடு முயல், மான், நாய் ஆகிய விலங்குகளின் உருவங்கள் - கல், பீங்கான், வெண்கலம் சுடட களிமண் ஆகியவற்றின் வில்லைகளில் பொறிக்கப்பட்டு மேலே துளை யிடப்பட்டுள்ளன. அவை கயிறு கொண்டு கட்டிக்கொள்ளப் பயன்பட்டன. தலைப்பில் முடியிடப்பெற்ற சிப்பியாலான தாயித்து ஒன்று மந்திர சத்தி உடையதாகக் கருதப்படுகிறது. சில தாயித்துக்களில் சுவதிகா, கிரேக்கச்சிலுவை போன்ற குறிகள் காணப்படுகின்றன. சமய சம்பந்தமான பதக்கங்களும் பண்டைக் காலச் சிந்துவெளி மக்களால் அணியப்பட்டு வந்தன. விழாக்கள் நடைபெற்றன; கடவுள் உருவங்கள் ஊர் வலமாக எடுத்துச் செல்லப்பட்டன; சமய சம்பந்தமாக இசையும் நடனமும் வழக்கில் இருந்தன. மொஹஞ்சொ-தரோவில் கோவில்கள் இருந்திருத்தல், வேண்டும். கருப்பவதிகளைக் குறிக்கும் பதுமைகள், கைக்குழந்தைகளை ஏந்தி நிற்கும் தாய் மாரைக் குறிக்கும் பதுமைகள் தவழ்ந்து செல்லும் குழந்தைகளைக் குறிக்கும் பதுமைகள் முதலியவனவும் விலங்குப் பதுமைகளும் பிரார்த்தனையின் பொருட்டுக் கோவில்களில் வைக்கப் பெற்றனவாக இருத்தல் வேண்டும் என்று அறிஞர் நினைக்கின்றனர். இப்பழக்கம் தமிழரிடையே இன்றளவும் இருந்து வருகின்றது. சுருங்கக் கூறின், சிந்துவெளி மக்கள், (1) தரைப்பெண் வணக்கம் (2) இலிங்க வணக்கம் (3) சிவ வணக்கம் (4) நந்தி வணக்கம் (5) சூரிய வணக்கம் (6) விலங்கு வணக்கம் (7) பறவை வணக்கம் (8) நாக வணக்கம் (9) மர வணக்கம் (10) ஆற்று வணக்கம் (11) சிறு தெய் வணக்கம் (12) விநோத தெய் வணக்கம் (13) கண்ணன் வணக்கம் முதலியவற்றை உடையவர் என்று கூறலாம். இவற்றோடு அவர்கள், (1) சமயத் தொடர்பான தாயித்துக்களையும் முத்திரைகளையும் பதக்கங்களையும் அணிந்து வந்தார்கள், (2) பலியிட்டு வந்தார்கள், (3) பலவகைப் பொருள்களைப் படைத்து வழிபட்டார்கள், (4) கடவுளர்க்கு விழாக்களை நடத்தி வந்தார்கள், (5) பிரார்த்தனை செலுத்தி வந்தார்கள், (6) சமயத் தொடர்பாக இசையும் நடனமும் வளர்த்தார்கள், (7) மந்திர மாயங்களில் பழகினார்கள், (8) யோகப் பயிற்சியையும் நன்கு அறிந்து பழகி இருந்தார்கள் என்பவற்றையும் ஒருவாறு உணரலாம். சுருங்கக் கூறின், இன்று இந்து மதத்தில் உள்ள பெரும்பாலான வழிபாடுகளும் பழக்க வழக்கங்களும் சிந்து வெளி மக்களுடைய சமயத்தனவே ஆகும். எனக்கூறல் தவறாகாது. 9. இடுதலும் சுடுதலும் கிரீ, எகிப்து முதலிய பண்டை நாடுகளில் முற்காலத்தில் இறந்தாரைப் புதைத்து வந்தனர்; பாரசீகத்தில் பிணங்களை எறிந்து விலங்குகட்கும் பறவைகட்கும் இரையாக்கினர். திபேத்தில் இறந்தார் உடலைப் பல பாகங்களாக வெட்டிப் பன்றிகட்கும் நாய்கட்கும் போட்டனர்; இன்றும் போடு கின்றனர். பண்டைத் தமிழ் நாட்டில் பெரிய தாழிகளில் இறந்தாரைப் புதைத்து வந்தனர்; மண் பெட்டிகளை இரண்டாகத் தடுத்து, ஒரு பாதியில் இறந்தவர் உடமையையும், மற்றொரு பாதியில் அவர் பயன்படுத்திய கருவிகளையும் வைத்து அடக்கம் செய்தனர். இத்தகைய தாழிகள் பல பல்லாவரம், புதுக்கோட்டை, ஆதிச்ச நல்லூர் முதலிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. இன்னும் வெளியில் எடுக்கப்படாத தாழிகள் ஆயிரக்கணக்கில் புதுக்கோட்டைச் சீமையில் இருக்கின்றன. இங்ஙனம் புதைத்த இடங்கள் மீது அடையாளக் குறிகள் வைத்தலோ, கட்டலோ பழைய வழக்கம். எகிப்திய அரசர்களைப் புதைத்த இடங்களில் கண்ணையும் கருத்தையும் கவரவல்ல பிரமிட் கோபுரங்கள் கட்டப்பட்டன. அவை 5000 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டன. ஆயினும், இன்றும் புதியனவாகக் காணப் படுகின்றன. புத்தரது உடலை எரித்து, சாம்பலையும் பற்களையும் அரசர் பலர் பங்கிட்டுக் கொண்டனர்; தத்தம் நாடுகளில் அவற்றை அடக்கம் செய்து, அவ்விடங்களில் வானளாவும் கோவில்களைக் கட்டினர். இத்தகைய கோவில்களோ பிற சின்னங்களோ சிந்து வெளியிற் கிடைத்தில்; இடுகாடோ-சுடுகாடோ கிடைத்தில. ஆயின், சந்துகளில், வீடுகட்கு அடியில் நீர் அருந்தும் குவளைகட்குள் இருந்த எரித்த சாம்பலும் எலும்புத் துண்டுகளும் ஏராளமாகக் கிடைத்துள்ளன. அவற்றை நோக்க, சிந்துவெளி மக்கள் இறந்தவர் உடலை எரித்துச் சாம்பலையும் எலும்புகளை யும் சேமித்துப் புதைத்து வந்தனர் என்பது தெரிகிறது. இப் பழக்கம் இன்றும் நம்மிடை இருந்துவருதல் குறிப்பிடத்தக்கது. ஹரப்பாவில் கிடைத்த சவக் குழிகளில் இரண்டு மூன்று அடுக்குகள் உண்டு. மிகவும் அடியில் இருந்த சவக்குழிகளில் பிணங்களை நேராகப் படுக்கவைத்துக் கைகளை மார்பின்மீது மடக்கி வைத்துப் புதைத்து வந்தனர் என்பது தெரிகிறது. நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்ட உடல்கள் மூன்று வகையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளன: (1) சில உடல்கள் தனித்தனியே இடம்விட்டுப் புதைக்கப்பட்டுள்ளன. (2) சில நெருக்கமாகப் புதைக்கப் பட்டிருக்கின்றன; (3) சில ஒன்றன்கீழ் ஒன்றாகப் புதைக்கப்பட்டுள்ளன. இப்பழக்கம் பலுசித்தானத்திலும் பெரு வழக்குடையதாக இருந்தது. அவ்வுடல்களின் அருகில் நீருடைய மட்பாண்டங்கள், கோப்பைகள், தட்டுகள் இறந்தார் பயன்படுத்திய பிறபொருள்கள் முதலியன புதைக்கப்பட்டன. ஹரப்பாவில் எடுக்கப்பட்ட தாழிகள் எல்லாம் ஓவியங்கள் தீட்டப்பெற்றன. ஒவ்வொன்றின் மேலும் வித விதமான ஓவியங்கள் காணப்படுகின்றன. ஒரு தாழியின் கழுத்தருகில் கருடப் பறவைகள் இரண்டுவரிசைகளில் பறப்பன போலத் தீட்டப்பட்டுள்ளன; அவ்வரிசைகட்கு இடையே இலைக்கொத்துகள் காணப்படும் தொட்டிகள் அணியணியாக வைக்கப்பட்டுள்ளன. பிற தாழிகள்மீது, செம்படவன் வலை போட்டு மீன் பிடிப்பது போலவும், மீன் - ஆமை - பறவைகள் - இலைகள் முதலிய பல பொருள்களைப் போலவும் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. அக்கால மக்கள் மயில்களைத் தெய்வத்தன்மை உடையவையாக மதித்தனர். இம் மயில்களின் துணையைக் கொண்டு, மனிதர் ஆவிகள் மேல்உலகம் போவன் என்பதை அக்காலத்தவர் எண்ணி வந்தனரோ - அல்லது சூக்கும் உடலே மயிலாக உருவகப்படுத்தப் பட்டதோ, தெரியவில்லை. ஒரு தாழி மீதுள்ள சித்திரங்களில் மூன்று மயில்கள் பறப்பனப்போலத் தீட்டப்பட்டுள்ளன. அம் மயில்கட்கு நடுவில் விண்மீன்கள் வரையப் பட்டுள்ளன. ஆதலின், `மயில்கள் சூக்கும் உடல்களைக் குறிப்பன; அவை மேல் உலகத்தை அடைவதாகப்பண்டையோர் எண்ணினர், என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். சில தாழிகள்மீது சிறிய மயில்கள் அணியணியாக இருப்பனபோல ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. வேறு சிலவற்றின்மீது ஐந்து மயில்கள் பறப்பனபோலக் காணப்படுகின்றன. சிலதாழிகள் மீது காணப்படும் மயில்களின் தோகை திரிசூலம் போலக் காணப் படுகிறது. சில மயில்களின் தலை மீது இரண்டு கொம்புகளும் அவற்றுக்கு இடையில் நிமிர்ந்த மலர்க்கொத்தும் காணப்படு கின்றன. சில தாழிகள்மீது பறவைமூக்குடைய மனித உருவங்கள் காணப்படுகின்றன. இவை, மயில்கள் வரையப்பட்ட கருத்துக் கொண்டே வரையப்பட்டவை; அஃதாவது, `சூக்கும் உடம்பைச் சுமந்து செல்லும்வன்மை வாய்ந்தவை ஆகலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். ஒரு தாழிமீது பறவைமூக்குடைய மனித உருவம் தீட்டப்பட்டுள்ளது. அவ்வுருவம் இடக்கையில் அம்பும் வில்லும் வைத்துள்ளது. அதன் இருபுறமும் இரண்டு எருதுகள் நிற்கின்றன. அவ்வெருதுகளைக் கயிறுகொண்டு கட்டி, அவற்றின் கயிற்றை மனித வுருவம் தன் வலக்கையில் பிடித்துள்ளது. இடப்புறமுள்ள எருதை நாய் ஒன்று துரத்திவந்து, வாலைப் பிடித்துக் கடித்து இழுக்கின்றது. நாய்க்குப் பின், தலைமீது கொம்பு முளைத்த மயில்கள் இரண்டு பறக்கின்றன. அவற்றிற்கு அருகில் பெரிய வெள்ளாடு ஒன்று நிற்கிறது. அதன் கொம்புகள் 8 திரிசூலங் களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பல உருவங்களைக் குறிக்கும் இச் சித்திரம், `யமன், உயிரைக் கவர்ந்து செல்வதைக் குறிப்பதாகலாம், என்று அறிஞர் நினைக் கின்றனர். இறந்தவர் அணிந்திருந்த அணிகளும், பயன்படுத்திய பாண்டங்களும், பிற பொருள்களும் உணவுப் பொருள்களும் தாழிகளில் இருந்து எடுக்கப்பட்டன. இவற்றை எல்லாம் இறந்தவர் சாம்பலுடன் தாழிகளில் இட்டுப் புதைத்துவிடல் அப்பண்டை மக்கள் பழக்கம் என்பது தெரிகிறது. தாழிகளில் சூளை இடப்பெற்ற மண் அப்பங்கள் கிடைத்ததைக் குறிப்பாகக் கூறலாம். பல தாழிகளில் தங்க நகைகள் அகப்பட்டன: நவரத்தினங்கள் கிடைத்தன. இவ்வாறு தாழிகளில் இறந்தார் அணிகளைப் புதைத்தல் பண்டை மேற்குப்புற நாடுகளிலும் இருந்து வந்த பழக்கமே ஆகும். ஒரு பிணக் குழியிற் கிடைத்த முத்திரை ஒன்றில், கட்டில்மீது மங்கை ஒருத்தி சாய்ந்துகொண்டு இருப்பதுபோல உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இதனால், `இறந்த ஆடவனுக்கு உரிய மனைவி கணவனுடன் இறக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கலாம். என்று அறிஞர் கருதுகின்றனர்; `இறந்தவர், அடுத்த வாழ்க்கையில் இப்பிறவியில் இருந்தபடியே இருக்க விரும்பினர்; அவ் விருப்பத்தாற்றான் மனைவியும் உடன் இறந்தவளாதல் வேண்டும் என்று எண்ணுகின்றனர். மொஹஞ்சொ-தரோ, ஹரப்பா முதலியன சிறந்த நாகரிகமும் செல்வப் பெருக்கமும் உடைய நகரங்கள்; வாணிபப் புகழ்பெற்ற நகரங்கள், ஆதலின், அவற்றில் பல நாட்டுமக்கள் குடி புகுந்தனர்; அவரவர் தத்தம் நாட்டுப் பழக்கத்திற்கு ஏற்பவே இறந்தார் உடலைப் புதைத்தும், எரித்தும் நாய் நரிகட்கு இட்டும் வந்தனர் என்பதை ஹரப்பாவில் கிடைத்த புதைகுழிகளைக் கொண்டு அறியலாம். இப் பலவகை அடக்க முறைகள் இன்றும் சென்னை, கல்கத்தா, பம்பாய் போன்ற வாணிபப் பெருக்கம் கொண்ட நகரங்களில்-பல நாட்டுமக்கள் வசிக்கின்ற நகரங்களில் - காணலாம். எனினும், சிந்துவெளி மக்கட்கே சிறப்பாக இருந்த பழக்கம் இடுதலும் சுடுதலுமே ஆகும் என்பது, மொஹஞ்சொ-தரோவில் வீடுகட்கடியில் கிடைத்த சாம்பல் கொண்ட மட்கலங்களாலும், ஹரப்பாவில் கிடைத்த முழுவுடல் புதை முறையாலும் நன்கறியலாம். மேலும், சிந்துவெளி மக்கள் மறு பிறவு உணர்ச்சி உடையவராக இருந்தனர் என்பதும் அறியத்தக்கது. 10. சிந்துவெளி எழுத்துகள் சிந்துவெளியிற் கிடைத்த முத்திரைகளில் பெரிறிக்கப் பட்டுள்ள சித்திரக் குறிகளே சிந்து மக்கள் மொழிக்குரிய எழுத்துக்கள். அவற்றை வகைப்படுத்தி, `சிந்துவெளி எழுத்துக் களின் பட்டியல் என்றும் `பண்டை இந்திய எழுத்துக்களின் அமைப்பு முறை என்றும், `சிந்துவெளி எழுத்துகள் என்றும் அறிஞர்கள், தாம்தாம் அறிந்தவரை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுக்குப் பிறகு டாக்டர் ஹன்ட்டர் என்னும் பேரறிஞர் விரிவாக ஆராய்ந்து அழகிய நூல் ஒன்றை 1934-ல் வெளி யிட்டார். இந்த எழுத்துகள் படிக்கமுடியாத நிலையில் இருக்கின்றன. இவை படிக்கப்பட்ட பிறகே சிந்து வெளி மக்களின் உண்மை வரலாற்றை உள்ளவாறு உணரக்கூடும்; இத்தகைய எழுத்துகள் சுமேரியாவிலும் கிடைத்துள்ளன. எகிப்தியப் பழைய எழுத்துக்களும், பிற மேல்நாடுகளில் கிடைத்த எழுத்துகளும் சிறிது வேறுபாட்டுடன் பெரிதும் ஒத்துள்ளன. இவை அனைத்தும் ஒரு பொது எழுத்து முறையிலிருந்து நெடுங் காலத்திற்கு முன்னரே பிரிந்தனவாதல் வேண்டும் என்று டாக்டர் ஹன்ட்டர் கருதுகிறார். `டெனடட் என்னும் ஒருவகைக் கல்மீது சுண்ணம் தடவிச் சுட்டு, அதன்மீது எழுத்துக்களும் விலங்கு முதலிய உருவங்களும் பொறிக்கப்பப் பெற்றுள்ளன. இக் கற்காளாகிய பொருள்கள், சதுரமாகவும் நீள் சதுரமாகவும் நீண்டு உருண்ட வடிவமாகவும் நீள் சதுரமாகவும் நீண்டு உருண்ட வடிவமாகவும் அமைந்துள்ளன. சில முச்சதுரமாக அமைந்துள்ளன. அவை சீட்டுகள் (இரசீதுகள்) என்று டாக்டர் ஹன்ட்டர் கருதுகிறார். வேறு சில கயிற்றிற் கோத்துக் கழுத்தில் கட்டிக்கொள்வன போல அமைந்துள்ளன. செம்பாலாய நீள் சதுரத் தகடுகள் பல நாணயங்கள் என்று கருதப்படுகின்றன. அவற்றில் விலங்கின் உருவம் மேலும் எழுத்துக்கள் கீழுமாகப் பொறிக்கப்பப் பட்டுள்ளன சிலவகை எழுத்துக் குறிகளைக் கொண்ட பொருள்கள் ஒப்பந்தச் சீட்டுகள் என்று கருதப்படுகின்றன. சிந்துவெளி மக்கள் இவற்றோடு நின்றுவிடவில்லை. அவர்கள் தோல், பட்டு, பாபிர என்பவற்றையும் பயன்படுத்தி எழுதி இருக்கலாம். எழுத்துகள் மேலிருந்து கீழ் நோக்கி எழுதப் பட்டுள்ளன; நேராக அமைந்துள்ளன. இந்த எழுத்துக்கள் அகர வரிசை உடையன அல்ல. இவற்றுள் சித்திர எழுத்துகள் பல; ஒலிக் குறிப்பு உடையன பல. இவை வலம் - இடமாக வாசிக்கப்பட வேண்டியவை; சில இடங்களில் இடம் - வலமாக வாசிக்கத் தக்கபடி அமைந்துள்ளன. இவை பலவேறு காலங்களின் வளர்ச்சி உடையனவாகக் காணப்படுகின்றன. இந்த எழுத்துக்களால் அறியப்படுபவை பின் வருவன ஆகும்: 1. சிந்துவெளி எழுத்துகள் உச்சரிப்பைக் குறிப்பன. 2. அவை ஒலிக் குறிப்பையும் உணர்வுக் குறிப்பையும் அடிப்படையாகக் கொண்டவை. 3. அந்த அடிப்படை கி. மு. 3000-க்கு முற்பட்டது. 4. இவை சுமேரியர் - எகிப்தியர் எழுத்துக் குறிகளை ஒத்திருக்கின்றன. ஆதலால் மிகப் பழைய காலத்தில் சித்திர எழுத்துக்களை மூலமாகக்கொண்ட ஒரு பொது மொழியி லிருந்தே இவை அனைத்தும் பிரிந்தனவாதல் வேண்டும். 5. சிந்துவெளி மக்கள் அரபிக்கடல், செங்கடல், நடுத்தரைக் கடல் ஆகிய இம் மூன்றன் வழியாக மேற்குப் புற நாடுகளோடு வாணிபம் செய்து வந்தனர் ஆதலின், அவர்களிடமிருந்தே சைப்ர தீவினர், பொனீசியர், சபியர் என்பவர்கள் சிந்து வெளி எழுத்துக் குறிகள் சிலவற்றைக் கடன் பெற்றிருக்கலாம். அசோகன் சாசனங்களில் காணப்படும் பிராமி எழுத்துகள் கி. மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. `அவை இழந்து விட்ட இந்திய எழுத்துக் குறிகளிலிருந்தே தோன்றினவாதல் வேண்டும் என்று ஸர். அலெக்சாண்டர் கன்னிங்காம் நெடுநாட்களுக்கு முன் கருதினார். அவர் கருதியது சரியே என்பதைப் பேராசிரியர் லாங்டன் உணர்ந்தார்; `சிந்து வெளி எழுத்துக் குறிகளிலிருந்தே பிராமி எழுத்துக்கள் தோன்றின வாதல் வேண்டும் என்று பல காரணங்களைக் காட்டி மெய்ப்பித்துள்ளளார். சிந்துவெளி நாகரிகம் கி. மு. 2500-க்கு முற்பட்டது. பிராமி எழுத்துகள் கி. மு. 300-க்குச் சரியானவை. `இவற்றுக்கு இடைப்பட்ட காலத்து எழுத்துகள் என்று கருதத் தக்க குறிகளைக் கொண்ட சாசனம் ஒன்று நடு இந்தியாவில் விக்கிரமகோல் என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. இன்னும் பல சான்றுகள் நாளடைவில் வெளிப்படலாம். புதுச்சேரியை அடுத்த அரிக்கமேடு என்னும் இடத்தில் பிராமி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. அங்கு மேலும் சில பழைய குறிகள் கிடைக்கலாம். சிந்துவெளி எழுத்துக்களைச் சோதிக்கையில், தெளிவான வேறுபட்ட 234 எழுத்துக் குறிகள் காண்கின்றன. பிராமியில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஒ என்னும் 8 உயிர் எழுத்துகளும் 33 மெய் எழுத்துக்களும் காணப்படுகின்றன. இவற்றால் உண்டான உயிர்மெய் எழுத்துக்கள் (33ஒ8=) 264 ஆகும். இவற்றில் 50 எழுத்துக்களுக்கு உரிய குறிகள் சிந்து வெளி எழுத்துகளில் தெளிவாகக் காணப்படுகின்றன. ஆசிய - ஆட்ரேலியா (முண்டா) மொழிகளின் குறியீடுகள் சில, சிந்துவெளி எழுத்துக் களில் காணப்படுகின்றன. அவற்றின் குறியீடுகள் சில பிராகூயி மொழி எழுத்துகளிலும் காணப்படுகின்றன. இந்தியாவில் முண்டா மொழிகளே திராவிட மொழிக்கு முற்பட்டவை. ஆதலின், அவை திராவிடத்திலும் ஓரளவு கலந்திருக்கலாம். சிந்துவெளி மக்கள் மொழி, ஓரசை உடைய சொற் களையே பெரிதும் கொண்டதாகம். அம்மொழி சமக்கிருதம் அன்று. ஆரியர் கி. மு. 1200-க்கு முன் இந்தியாவிற் புகவில்லை. அவர்கட்கு முன் சிந்து வெளியில் இருந்தவர் திராவிடர் ஆகலாம். பலுசித்தானத்தில் உள்ள பிராகூயி மொழியில் பேரளவு திராவிடக்கலப்பு இருக்கிறது; பிராகூயி மக்கள் மண்டை ஓடுகளை ஒத்தவை மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளன; சிந்துவெளி மொழி பிராகூயியைப் போலவே ஓரசைச் சொற்களை உடையதாக இருக்கிறது. இவற்றால், திராவிட மொழி வட இந்தியாவில் ஆரியர் வருகைக்குமுன் இருந்தது என்று கூறலாம். திராவிடரே தங்கள் கலைகளையும் பிறவற்றையும் ஆரியரிடம் ஒப்படைத்தவர் ஆதல் வேண்டும் என்று டாக்டர் ஹன்ட்டர் அறைந்துள்ளார். வட பிராமி எழுத்துகளும் தென் பிராமி எழுத்துகளும் சிந்துவெளி எழுத்துக்களிலிருந்து வளர்ச்சி பெற்றவையே ஆகும். வட பிராமி ஆரியராலும் தென் பிராமி திராவிடராலும் வளர்க்கப்பட்டவை. வடபிராமி ஆரிய மொழிக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்பெற்றவை. சிந்துவெளி எழுத்துக்களைக் கொண்ட மொழி பழைய திராவிடமே ஆகும் என்று ஹீரா பாதிரியார் கூறுகின்றார். பிராமி எழுத்து முதலில் வடமொழிக்காக ஏற்பட வில்லை; உயிர் எழுத்துகளில் அ, இ, உ ஆகிய மூன்றுக்கும் அதிகச் சிறப்பை அளிப்பதும், இன எழுத்துக்களைப் பெறாததும் ஆகிய ஒரு மொழிக்கென அமைக்கப்பட்டுப் பின்னரே வடமொழிக்கு ஏற்றபடி புதிய குறிகள் உண்டாக்கப் பட்டன. இந்தியாவில் இருக்கும் மொழிகளுள் இங்ஙனம் இருப்பது தமிழ் ஒன்றுதான். எனவே, பிராமி முதலில் தமிழுக்கென அமைந்த எழுத்தாக இருத்தல் வேண்டும் என்று வேறு சில மொழி ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இதுவரை கூறியவற்றால் சிந்துவெளி எழுத்துக் குறிகள் பண்டைத் திராவிட மொழிக்காகத் திராவிட மக்கள் தோற்றுவித்தனவே ஆகும் என்பதை அறியலாம். 11. சிந்துவெளி மக்கள் திராவிடரா? இந்தியாவில் இருந்த பழங்குடிகள் முண்டர் அல்லது கொலேரியர் என்பவர். அவர்களை வென்று இந்தியா முழுவதும் பரவி இருந்தவர் திராவிடர். அத் திராவிடர்க்குப் பிறகே ஆரியர் வந்தனர். இது சரித்திர ஆசிரியர் எல்லோரும் ஒப்புக்கொண்ட உண்மை ஆகும். கொலேரியர் இனத்தவரே கோண்டர், சரவர் முதலிய மலைவாணர். இவர்கள் அநாகரிக மக்கள். இவர் இனத்தவர் ஆட்ரேலியா வரை பரவி இருக்கின்றனர். எனவே, இவர்கள் சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர் என்று எந்த அறிஞரும் கூறத் துணியார். சிந்துவெளி நாகரிகமோ ஆரியருடையதன்று என்பது ஆராய்ச்சியாளர் பலரது துணிபு. எனவே, சிந்துவெளி நாகரிகம் திராவிடர்க்கே உரியது என்பது கூறாமலே அமையும் அன்றோ? ஆயின் கி. மு. 3000-ல் திராவிட மக்கள் வடஇந்தியாவில் இருந்தனர் என்பதற்கு வேறு சான்றுகள் இருக்குமாயின், இக் கூற்றை ஒருவாறு ஒப்புக் கொள்ளலாம். ஆதலின், அச் சான்றுகளைக் காண்போம். (1) ஆரியர் சிந்து நதிக்கரையில் செய்த முதல் நூல் ரிக் வேதம். அதில் ஏறத்தாழ 400 திராவிடச் சொற்கள் கலந்திருக் கின்றன. (2) ரிக் வேதம் இழித்துக்கூறும் இலிங்க வழிபாடு திராவிடருடையதே ஆகும். (3) இன்று வட இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழி யிலும் திராவிட மொழியின் அடிப்படையான இலக்கணம் அமைந்திருக்கிறது. (4) பலுசித்தானத்தில் உள்ள பிராகூயி மொழியில் திராவிடச் சொற்கள் இருக்கின்றன; அம்மொழியாளர் பழக்க வழக்கங்கள் பல திராவிடருடையன; அவர்கள் உருவ அமைப்பிலும் திராவிடரை ஒத்துள்ளனர். (5) வட இந்தியாவில் கோண்டர், கூயியர், இராச்மகாலியர், ஒராஒனர் முதலிய மலைவாணர் திராவிடச் சொற்களையே பேசுகின்றனர். (6) இன்றுள்ள இந்திய மக்கள் இனப்பட்டியல் படி, டெக்கான், தென் இந்தியப் பகுதிகளில் இருப்பவர் திராவிடர்; பம்பாய், சிந்து மாகாணங்களில் இருப்பவர் சிதிய-திராவிடர்; கிழக்குப் பஞ்சாப், ஐக்கிய மண்டிலம், பீகார் மண்டிலம் இவற்றில் இருப்பவர் ஆரிய திராவிடர்; வங்காளம், ஒரிஸா மாகாணங்களில் இருப்பவர் மங்கோலிய-திராவிடர். எனவே, ஏறக்குறைய இந்தியா முழுவதிலும் (காஷ்மீர், இராசபுதனம் தவிர) திராவிடர் இன்றும் இருக்கின்றனர் என்பது அறியத் தக்கது. இது காறும் கூறிய சான்றுகளாலேயே திராவிட மக்கள் இந்தியா முழுவதிலும் ஆரியர் வரும்பொழுது இருந்தனர் என்பதை அறியலாம். இவ் வுண்மையைச் சிந்து வெளி ஆராய்ச்சி கொண்டு நிறுவலாம்: (1) சிந்து வெளியில் இலிங்க, வணக்கம் இருந்தது. சிந்துவெளி மக்கள் சமயப் பழக்கங்கள் எல்லாம் இன்றும் திராவிட மக்களிடம்-சிறப்பாகத் தமிழ் மக்களிடம்-இருந்து வருகின்றன. (2) சிந்துவெளி வீட்டு வாயில்கள் ஆறடி உயரத்திற்கு உட்பட்டவையே; திராவிடர் உயரமும் ஆறடிக்கு உட்பட்டதே. (3) தென்னிந்திய திராவிடர் கி. மு. 4000லேயே சுமேரியருடன் கடல் வாணிபம் செய்தவர்; சிந்துவெளி மக்களும் சுமேரியருடன் கடல் வாணிபம் செய்தவர். (4) திருநெல்வேலி, நீலகிரி, ஹைதராபாத் சமத்தானம் ஆகிய இடங்களில் காணப்பட்ட சித்திர எழுத்துகளே சிந்து வெளியிலும் காணப்பட்ட எழுத்துக்கள் ஆகும். (5) சிந்து வெளியில் காணப்பட்ட மண்டை ஓடுகள் சில பல்லாவரம், ஆதிச்ச நல்லூர் இவற்றிற் கிடைத்த மண்டை ஓடுகளை ஒத்துள்ளன. (6) சிந்துவெளி மக்கள் மேலாடை போர்த்திருந்தது போலவே இன்றும் திராவிடர் போர்த்திருப்பது காணலாம். (7) திராவிடச் சொற்கள் ஓரசையே உடையவை. சிந்துவெளியினர் பேசிய மொழியும் ஓரசை உடையதே. (8) தென் இந்திய திராவிடர் பிணங்களைத் தாழிகளில் புதைத்தனர்; சிந்துவெளியினரும் பிணங்களைத் தாழியிற் புதைத்தனர். (9) ஆரியர், கிருஷ்ணனையும் அவன் படை வீரரையும் யமுனைக் கரையில் எதிர்த்தனர்; இந்திரன், கிருஷ்ணன் மகளிரைக் கொன்றான்; படைகளை அழித்தான் என்று ரிக்வேதம் கூறுகிறது. கிருஷ்ணன், தமிழ் மக்களது முல்லைநிலக் கடவுள்: பழமையான கடவுள். சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் திராவிடரே என்பதை உணரலாம். ஆரியர் வந்தபோது சிந்துவெளியில் இருந்த நம் முன்னோரான திராவிடர் எப்படி இருந்தனர் என்பதை, ஆரியர் செய்த ரிக்வேதம் கொண்டே அறிதல் நல்லதன்றோ? அவர்கள் அநாரியர் (ஆரியர் அல்லாதவர்); தட்டை மூக்கினர்; கரு நிறத்தார்; மாறுபட்ட வழிபாடு உடையவர்; வேற்று மொழியைப் பேசுபவர்; சிறந்த செல்வப்பெருக்குடன் வாழ்பவர்; கோட்டைகளையுடைய நகரங்களில் வாழ்பவர்; போரில் ஓநாய் போலப் பேரோசை இடுபவர். அவர்கள் தாசர்; சுயநலக்காரர்; வேள்வி செய்யாதவர்; கொடிய மொழியினர்; கால்நடைகளை வளர்ப்பவர்; ஆரியர் பசுக்களைக் களவாடுபவர்: அவர்களில் இலிபிஷன், துனி, சுமுரி, சம்பரன், வர்ச்சினன், திரிபிகன், ருதிக்ரன், அநர்சனி, ரிபிந்தன், பல்புதன், பிப்ரு, வங்க்தின் முதலியோர் அரசர்கள் ஆவர். இவர்களில் வங்ரிதன் 100 நகரங்களுக்குத் தலைவன்: சம்பரன் 90 முதல் 100 வரைப்பட்ட நகரங்களை உடையவன். கிருஷ்ணன் 60 ஆயிரம் கறுப்பரை உடையவன்; யமுனைக் கரையில் இருந்து கொண்டு ஆரியரை எதிர்ப்பவன். தாசர் தமக்கென்றே உரிய பழக்க வழக்கங்களை உடையவர்; சமயக் கொள்கைகளை உடையவர்; வணிகர்; மந்திர மாயங்களில் வல்லவர்; `குயவன், அயு என்பவர் இருவரும், தண்ணீரில் (தண்ணீரால் ஆழப்பெற்ற பாதுகாப்பு இடத்தில்) இருந்துகொண்டு ஆரியர்க்கும், அவர்தம் கால்நடைகட்கும் துன்பம் விளைவிப்பவர். இந்திரன் 30 ஆயிரம் தாசர்களைக் கொன்றான்; 150 படைகளை அழித்தான். . . . . . . . இவற்றால், நாம் அறிவது `ஆரியர் அல்லாத தாசர் வணிகர்களாக இருந்தனர்; செல்வர்களாக இருந்தனர்; பாதுகாப்பு மிகுந்த நகரங்களில் வாழ்ந்திருந்தனர்; தாச அரசர்கள் 100 நகரங்கள் வரை வைத்துப் பேரரசு செலுத்தினர்; போதியவன்மை பெற்ற ஆரியரையே எதிர்த்து நின்றனர்; ஆரியர்க்கு விளங்காத மொழியைப் பேசினர்; மந்திர மாயங்களில் வல்லவர்; தமக்கொன்று அமைந்த வழிபாடு உடையவர்; கால்நடைகளை உடையவர்; பணத்தில் கண்ணானவர் என்பதே. இவர்கள் ஆரியருடன் இட்ட போர்களையே பிற்காலப் புராணங்களில் தேவர்கட்கும் அசுரர்கட்கும் நடந்த போர்களாக மாற்றி எழுதிவிட்டனர் என்பதை அறிவுடையோர் அறிவர். இங்ஙனம் நம் முன்னோரான திராவிடர் சிந்து வெளியில் வாழ்ந்தபோது மங்கோலியர், பாரசீகர், அல்பைனர், சுமேரியர் முதலிய அயல் நாட்டினர் வாணிபத்தின் பொருட்டு அங்குக் குடியேறி இருந்தனர்; முண்டர் அல்லது கொலேரியர் (இந்தியப் பழங் குடிகள்) திராவிடருடன் கலந்து வாழ்ந்தனர். இதனால்தான், சிந்துவெளியில் கிடைத்த எலும்புகளும் மண்டை ஓடுகளும், திராவிடருடையன - மங்கோலியருடையன - அல்பைனருடையன - முண்டருடையனவாகக் காணப் படுகின்றன. தோண்டப்பெறாத இடங்கள் தோண்டப் பெறின், மேலும் பல சான்றுகள் கிடைக்கும்; வரலாறும் உறுதிப்படும். 12. நமது கடமை இதுவரை கூறிவந்த செய்திகளால், புதை பொருள் ஆராய்ச்சியே, உண்மை வரலாறு கண்டறிவதற்குப் பெருந்துணை செய்வது என்னும் உண்மையை நன்கறியலாம். இந்தியாவிலேயே புகழ்பெற்று விளங்கியவர் திராவிடரே ஆவர். திராவிட மொழிகளுள் பழமையானது தமிழ் ஒன்றே. அதன் இலக்கண இலக்கியங்கள் பல. அழிந்தவை போக, இன்று இருப்பவை சில. அவற்றுள் மிகப் பழமையானது தொல்காப்பியம். அதன் குறைந்த காலம் கி. மு. 500 என அஞ்சாது கூறலாம். எனவே, அது இன்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன் செய்யப்பட்டது. அந்நூல் தமிழ் மக்களின் போர்முறை, அரசியல், வாழ்க்கை நிலை, மொழிநிலை முதலியவற்றைத் தொகுத்துக் கூறிச் செல்கிறது. தொல்காப்பியர் 1600-க்கு மேற்பட்ட சூத்திரங்கள் செய்துள்ளார்; அவற்றில் தமக்கு முன் இலக்கணப் புலவர் பலர் இருந்தனர் என்பதை ஏறக்குறைய 100 இடங்களில் சுட்டிச் செல்கிறார். எனவே, 2500 ஆண்டுகட்கு முன்பே - தொல்காப்பியர்க்கு முன்பே - தமிழ் இலக்கணப் புலவர் பலர் இருந்தனர் என்பது தெளிவாகிறதன்றோ? அத் துணை இலக்கண நூல்கட்கும் இலக்கிய நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் அல்லவா? இலக்கியம் கொண்டே இலக்கணம் செய்யப்படுதல் வழக்கம். ஆதலால், தொல்காப்பியர்க்கு முற்பட்ட இலக்கண ஆசிரியர் இலக்கண நூல் செய்யப் பேருதவி செய்தவை பல இலக்கியங்களாக இருத்தல் வேண்டும் அல்லவா? இவற்றால் ஏறக்குறைய 3000 ஆண்டுகட்கு (கி. மு. 1000-க்கு) முன்னரே தமிழில் பண்பட்ட இலக்கிய நூல்கள் பல இருந்தன என்பதை ஐயமற அறியலாம். இன்றுள்ள புறநானூறு என்னும் நூலைப் பார்த்தால், வான்மீகர் பாடிய பாட்டும், தரும புத்திரனைப்பற்றி நேரே பாடிய பாடலும் காணப்படுகின்றன. இராமாயண - பாரதகாலம் கி. மு, 1400-800 என்பது சரித்திராசிரியர் கூற்று. எனவே, இதிகாச காலத்துச் (கி. மு. 1000-க்கு முற்பட்ட) செய்திகளும் தமிழ் நூல்களில் இடம் பெற்றுள்ளன: `முதல் சங்கம் இன்றுள்ள கன்னியாகுமரிக்கும் தெற்கே இருந்த நாட்டில் நடந்தது; இடைச் சங்கம் கடல் கொண்ட கவாட புரத்தில் நடந்தது எனவரும் கூற்றுகள், தமிழ் நூல்கள் கி. மு. 1500-க்கும் முற்பட்ட காலத்தில் இருந்தன என்பதை விளக்கு கின்றன. இது நிற்க, தென் இந்தியா பல ஆயிரம் ஆண்டுகளாகவே நாகரிகம் பெற்றது என்பதற்கு அடையாளமாக, எங்குத் தோண்டினும் புதை பொருள்கள் கிடைத்தபடியே இருக் கின்றன. அவைகள் கற்கால மக்களுடையன; செம்புக்கால மக்களுடையன; பிற்கால மக்களுடையன. பல்லாரி, அனந்தப்பூர், கடப்பை, கர்நூல் கோட்டங்களில் கற்கால மக்களின் மட் பாண்டங்களும் 2000-க்கு மேற்பட்ட கல் சமாதிகளும் கிடைத்துள்ளன; நூற்றுக் கணக்கான கல்லுளிகள், வேறு பல கற்கருவிகள், சுத்திகள், மரச்சீப்புகள், புலிப்பற்களால் ஆன தாயித்துக்கள், களிமண் காப்புகள் முதலியன கிடைத்தன. பல்லாவரத்தில் சிந்துவெளியில் கிடைத்ததுபோலக் களிமண்ணும் மணலும் சேர்த்துச் செய்யப்பெற்ற (Tara Ctoat) மனித உருவம் கிடைத்தது. பல பழங்காலத் தாழிகள் கிடைத்தன. சேலத்தில் பல்லாரியில் கிடைத்தவை போன்ற மட்பாண்டங் களும், கூந்தல் அலங்காரம் பெற்ற மண்ணாலாய பெண் உருவங்களும் கிடைத்தன; குடிசைகளைப் போன்ற பிணப் பெட்டிகள் பல கண்டெடுக்கப் பட்டன. கோயமுத்தூர்க் கோட்டத்தில் உள்ள செட்டிபாளையத் திலும் ஒரு மணமேடு இருக்கிறது. அதனுள் கல்லாலான பிணக்கோவில் கண்டறியப்பட்டது. அதற்குள் மழ மழப்பான கறுப்புநிற மண்பாண்டங்கள் கிடைத்தன; மூடியுடை கோப்பைகள் கிடைத்தன. கோப்பை மூடிமீது மான் அல்லது ஆடு நிற்பதுபோலச் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய மூடிகள் பாரசீகத்தில் கண்டெடுக்கப்பட்டன. புதுக்கோட்டையில் எண்ணிறந்த கற்காலத் தாழிகளும், இருப்புக் காலத்துப் பிணப்பெட்டிகளும் கிடைத்துள்ளன. திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலிக் கோட்டங்களில் பல வகையும் பல நிறமும் கொண்ட மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ஆதிச்ச நல்லூரில் ஏறக்குறைய ஏக்கர் ஒன்றுக்கு ஆயிரம் தாழிகள் வீதம் 114 ஏக்கர்களில் தாழிகள் புதைக்கப்பட்டுள்ளனவாம். அவற்றுள் சிவற்றில் இரும்பு, வெண்கலம், பொன் இவற்றாலான பொருள் களும் அடக்கம் செய்யப்பெற்று இருந்தன. புதுச்சேரியை அடுத்த செம்பியம்பாளையத்தில் சிந்து வெளியிற் கிடைத்த விசிறிப்பாகை அணிந்த பெண்ணுருவம் போன்ற ஒன்றும், பல மட்பாண்டங்களும் மணிகளும் கிடைத்தன; அரிக்கமேட்டில் கணக்கற்ற நுட்பமான மணிகள் (சிந்துவெளியிற் கிடைத்தன போலக்) கிடைத்துள்ளன. புதுச்சேரியை அடுத்துள்ள பிரஞ்சுப் பகுதி மெய்யாகவே ஆராய்ச்சிக்குரிய அற்புத இடமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே சிறப்புப் பெற்றுவந்த சேர-சோழ-பாண்டிய தலைநகரங்களான காவிரிப்பூம் பட்டினம், வஞ்சிமா நகரம், கொற்கை முதலியனவும், உறையூர், முசிரி, தொண்டி, காயல் முதலியனவும் தெளிவான ஆராய்ச்சிக்கு உரியவை. மொஹஞ்சொ-தரோவைப் போலவே புகார், முசிரி, காயல், கொற்கை முதலியன அயல் நாடுகளுடன் வாணிபம் செய்துவந்த பண்டை நகரங்கள். அவற்றில் இன்றும் ரோம நாணயங்கள் கிடைக்கின்றன. கி. மு. 1000-ல் வாழ்ந்த சாலமோன் அரசர்க்கு மயில்கள் அனுப்பிய தமிழ்நாடு, கடல் வாணிபத்தில் சிறந்திருந்தது என்பதில் ஐயமுண்டோ? இவ்விடங்களை எல்லாம் சாத்திரீய முறையில் ஆராய்ச்சி செய்யத் தமிழ் மக்கள் அரசியலாரைத் தூண்டவேண்டும்; அப் பணியில் தமிழ்ப் பற்றுடைய அறிஞரையே ஆராய்ச்சியாளராக அமர்த்த முனைதல் வேண்டும்; `கண்ட எல்லாம் ஆரிய நாகரிகமே எனச் சாதிக்க முயலுவோரை அப்பணியில் அமர்த்தலாகாது; அங்ஙனமே கண்ட எல்லாம் `தமிழ் - திராவிட நாகரிகமே என்பவரையும் அமர்த்தல் ஆகாது. உள்ளதை உள்ளவாறு உரைக்கும் உண்மையாளரையே அத்திருப்பணி யில் அமர்த்தல் வேண்டும். மெய்யான ஆராய்ச்சி நடைபெறின், இந்திய சரித்திர உலகம் வியப்புறுமாறு அரிய பொருள்கள் கிடைக்கும்; திராவிடர் தொன்மை நாகரிகம் உலகெங்கும் உணர வழி உண்டாகும்: வின்சென்ட் மித் கூறினாற்போல, இந்திய சரித்திரம் வைகையாற்றிலிருந்து கட்டப்பெறும் அந்நாளே உண்மை வரலாறு வெளிவந்த நன்னாள் ஆகும். ஆதலின், தமிழ்ச் செல்வர்களே! நமது தாய் மொழி உயர்ந்தது; அஃது இந்நாட்டில் பழங்காலத்தில் அரசாட்சி செலுத்தியது; மிகப்பழையது; இன்றும் அழியாது நிலையுற்று இருப்பது; அங்ஙனமே நமது நாகரிகம் தொன்மையது; பழுதற்றது. ஆன்ம உணர்ச்சியும் இறை உணர்ச்சியும் மனிதத் தன்மையும் உடையது. அஃது உலகிலேயே இறுமாந்து நிற்கத்தக்கது. அதனை மறைக்கச் சிலர் முனைகின்றனர். அம் முயற்சிக்கு இடங்கொடாது, நீங்கள் தமிழ் அறிஞர்களாகி, நூல் ஆராய்ச்சியிலும் புதைபொருள் ஆராய்ச்சியிலும் புலமை எய்தி, நம் உயிர்போன்ற தாய்மொழியையும் தாய் நாகரிகத்தையும் உலகம் உணரச் செய்ய முனைவீர்களாக! உங்கட்கு எல்லாம் வல்ல தமிழ் அன்னை அருள் புரிவாளாக!  பொருநை முகவுரை பொருநையாறு மேற்கு மலைத்தொடரில் உள்ள பொதிய மலையில் தோன்றிப் பாய்கிறது. இஃது இலக்கியங்களில் போற்றப்பெறும் சிறப்பை உடையது; தென் பாண்டிய நாட்டு மக்களுக்குச் செவிலித்தாயாக விளங்கி வருவது. இது கடலொடு கலந்த இடத்தில் கொற்கை என்னும் துரைமுகப்பட்டினம் சங்க காலத்தில் சிறந்து விளங்கியது. இவ்யாறு தோற்றமெடுக்கும் மேற்கு மலைத்தொடரின் அமைப்பும் சிறப்பும், பொருநை ஆற்றில் போக்கும், அதன் கண் ஆங்காங்கு அமைந்துள்ள அணைகளின் பயனும், பொருநை நாட்டு வரலாறும், பொருநைக்கரை ஊர்கள் பற்றிய விவரங்களளும், பொருநை நாட்டு நாகரிகமும் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. பாபநாசம், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு நீர்த்தேக்கம் இவற்றை யான் பார்வையிட உதவியவரும் புகைப்படங்களை எடுத்து வழங்கியவருமாகிய அம்பாசமுத்திரம் டாக்டர். ஆழ்வார் ஐயங்கார், டாக்டர். சுப்பிரமணிய பிள்ளை என்னும் இருவருக்கும் எனது நன்றி உரியது; கிருஷ்ணாபுரம், ஆதிச்ச நல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆர்வார் திருநகரி, கொற்கை என்னும் இடங்களை யான் பார்க்க உதவியவரும் புகைப்படங்களை எடுத்துத் தந்தவருமாகிய ஸ்ரீவைகுண்டம், கோட்டை இரா. இலக்குவன் அவர்களுக்கு எனது நன்றி உரியது. இந்நூல் எழுதத் திருநெல்வேலி கெசட்டியர் முதலிய நூல்களை உதவிய பாளையங்கோட்டை செயின்ட்டு ஜான் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. ஆ. செபரெத்தினம், M.A, அவர்களுக்கும், ஸ்ரீவைகுண்டம் வித்துவான் சங்கரநாராயணன் அவர்களுக்கும், அம்பாசமுத்திரம் வித்துவான் வை. குஞ்சிதபாதமையர் அவர்களுக்கும், தென்காசி வித்துவான் மா. குற்றாலம் அவர்களுக்கும் எனது நன்றி உரியதாகுக. மா. இராசமாணிக்கம் 1. மேற்கு மலைத் தொடர் மேற்கு மலைத் தொடர் இன்றுள்ள மதுரை, இராமனாதபுரம், திருநெல்வேலி, நாஞ்சில் நாடு என்னும் நிலப் பகுதிகளைக் கொண்டதே பழைய பாண்டிய நாடு. பழைய கால முதல் இன்றளவும் இந்நாட்டின் மேற்கு எல்லையாக இருந்து வருவது மேற்கு மலைத் தொடராகும். இத் தொடர் மதுரை மாவட்டத்திலிருந்து ஏறத்தாழக் கன்னியாகுமரி வரையில் சில இடங்களில் வளைவாகவும் நெளிவாகவும் அமைந்துள்ளது; திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசித் தாலூகாவில் சிறிது வளைவாகக் காணப்படுகிறது; அதற்கு அப்பால் பாபநாசம் வரையில் நேராகவும், பின்பு தென் கிழக்கில் வளைவாகவும் அமைந்திருக்கிறது; பன்னிரண்டு கல் தொலைவிற்குப் பிறகு கடல் வரையில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. உயர்ந்த குடுமிகள் பொருநையாறு பாயும் சமவெளியில் எப்பகுதியிலிருந்து பார்ப்பினும் மாண்பு மிக்க இம்மலைத் தொடரின் காட்சி விழிகட்கு விருந்தளிப்பதாயிருக்கின்றது. சிவகிரியிலிருந்து தென்காசித் தாலூகாவின் வட எல்லை வரை இத்தொடர் ஐயாயிரம் அடிவரை உயர்ந்து காணப்படுகிறது. சில இடங்களில் ஐயாயிரம் அடிக்கு மேலும் உயரமுள்ள குடுமிகள் (சிகரங்கள்) காணப்படுகின்றன. சிவகிரியை அடுத்துள்ள இத்தொடரின் உச்சி ஏறத்தாழ 5,700 அடி உயரமுள்ளது. புளியங்குடியை அடுத்துள்ள மலையின் உச்சி ஏறத்தாழ 6,300 அடி உயர முள்ளது; கிருஷ்ணாபுரத்தை அடுத்துள்ள மலையுச்சி 5,900 அடி உயரமுள்ளது; இதற்குத் தென் புறம் செல்லச் செல்ல, ஆரியன் காவுக் கணவாய் வரையில் உயரம் குறைந்து காணப்படுகிறது. கணவாய்க்கு அப்பால் இக் கணவாய்க்கு அப்பால் இத்தொடர் படிப்படிப்பயாக உயர்ந்து செல்கிறது. ஐந்தருவியாறு பாயும் மலைப்பகுதியின் உயரம் ஏறத்தாழ 5,000 அடியாகும். குற்றால அருவிக்கு மேலுள்ள `பஞ்சந்தாங்கி என்னும் மலையின் உச்சி ஏறத்தாழ 5,100 அடி உயரமுள்ளது. தென்காசி, அம்பாசமுத்திரம் தாலூக்காக்களின் எல்லையில் அமைந்துள்ள `மத்தளம் பாறை என்னும் இடத்திற்கு மேல் உள்ள மலைப் பகுதி உயரத்தில் சிறிது தாழ்ந்துள்ளது. இவ்விடத்தில் இம் மலைத் தொடர் அகற்சி அடைகின்றது. பாபநாசத்திற்கு மேலுள்ள மலைப் பகுதியில் நெருக்கமடைகிறது. அடிவாரத்தில் சிறு சிறு குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றுக்குப் பின் உயரமான குன்றுகள் காணப்படுகின்றன. இவற்றுக்கிடையில் அகன்ற பள்ளத்தாக்கு களும், இங்கும் அங்குமாக மிகப் பரந்த பீட பூமிகளும் அமைந்துள்ளன. இவற்றுக்கப்பால் வானளாவிய மேற்கு மலைத் தொடர் கண்ணுக்கினிய காட்சியை அளிக்கின்றது. பொதிகை மலை இது பொதிய மலை, பொதியில் எனவும் பெயர் பெறும். மேற்கு மலைத் தொடரில் அகத்திய மலை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஏறத்தாழ 6,125 அடி உயரமுள்ளது. `ஏக பொதிகை என்றும் இஃது அழைக்கப்படும். `அகத்திய முனிவர் தமிழ் மருத்துவ நூலையும், தமிழிலக்கண நூலையும் எழுதிய பின்பு இம் மலையைத் தம் வாழிடமாக் கொண்டார்; மக்கள் நலனைக் கருதி இம்மலையிலிருந்து இறங்கிப் பாயும்படி பொருநையாற்றைப் படைத்தார்,ங என்பது செவிவழிச் செய்தியாகும். அகத்தியல் வாழிடமாகக்கொண்டதால் இம்மலை `அகத்திய மலை எனப் பெயர்பெற்றதாம். கூம்பிய பொட்டலத்தைத் தலைகீழாக வைத்தாற்போன்ற அமைப்பை உடைய இம்மலை, மேற்கு மலைத் தொடரிலேயே குறிப் பிடத்தக்க பகுதியாகும். இது பருவ காலத்தில் பல வாரங்கள் தொடர்ந்தாற் போல மேகங்களால் மறைக்கப் பட்டிருக்கும். இம்மலை வடகிழக்குப் பருவக் காற்று, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய இரண்டின் பயனையும் பெறுகின்றது. பொதிகைக்குத் தெற்கே அகத்திய மலைக்குச் சிறிது தெற்கே ஐந்தலைப் பொதிகை என்னும் மலைப் பகுதி உயர்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் ஐந்து குடுமிகள் இருத்தலால், இப்பகுதி இப் பெயர் பெற்றது. ஐந்தலைப் பொதிகைக்கப்பால், மேற்கு மலைத் தொடர் நாங்குநேரி எல்லை வரையில் தென்கிழக்காக அமைந்துள்ளது, அங்கு இத் தொடர் மலை விட்டு விட்டு அமைந்துள்ளது; பல இடங்களில் செங்குத்தாகவும் இருக்கின்றது. திருக்கறுங்குடிக்கு மேல் இத் தொடர் ஏறத்தாழ 6000 அடி, உயரம் உள்ளதாகக் காணப்படுகிறது. திருக்குறுங்குடிக்கு அருகில் இம்மலைத் தொடரின் ஒரு பகுதிக்கு `மகேந்திர மலைத் தொடர் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இம் மகேந்திர மலைத்தொடர் வரவர உயரத்தில் குறைந்து முடிகிறது. பனைக்குடிக்கப்பால் இத் தொடர் மீண்டும் படிப்படியாக உயர்ந்து, ஆரல்வாய் மொழிக் கணவாய் வரையிற் செல்லுகிறது. இத்தொடரின் இறுதிக் குன்று என்று சொல்லப்படுவது கன்னியாகுமரிக்குச் சிறிது மேற்கே கடலிலிருந்து இரண்டு அல்லது மூன்று கல் தொலைவில் உள்ளது. இக்குன்று முடிய இதுகாறும் கூறப்பெற்ற மலைத் தொடர் முழுமையும் மேற்கு மலைத் தொடர் என்றே பெயர் பெறும். காடுகள் ஏறத்தாழ இரண்டாயிரத்து எழுநூற்றுக்கு மேற்பட்ட பல வகை மருந்துச் செடிகள் பொதிகை மலைப்பகுதியில் காணப்படுகின்றன என்று மருத்துவ நிபுணர் கூறுகின்றனர். மலைத் தொடரில் தேக்கு நன்கு பயிராகின்றது. விறகுக்குரிய மரங்களும் காடுகளில் கிடைக்கின்றன. கோங்க மரம் மிகுதியாகக் காணப்படுகின்றது. வானுற ஓங்கி வளம் பெற வளர்ந்துள்ள மரங்கள் இத்தொடர் மலையை ஆங்காங்கு அழகு செய்கின்றன. கற்புடைய மங்கையர் தத்தம் காதர்கணவரே கதியெனப் பற்றுக் கொண்டிருப்பது போல, ஆங்காங்கு உள்ள மரங்களைக் கொடிகள் சுற்றி வளரும் காட்சி கண்டு மகிழத் தகுவது. பல வகை வண்ண மலர்கள் செடிகளிலும் மரங்களிலும் பூத்து இயற்கை அன்னையின் எழிலை மிகுத்துக் காட்டுகின்றன. மலைமீது பெய்யும் மழை நீர் மலைச் சரிவுகளின் வழியே பேரொலி செய்துகொண்டு ஆங்காங்கு அருவியாக ஓடும் காட்சி விழிகட்கு விருந்தாக அமைந்துள்ளது. கவின் பெறு காட்சி பொருநையாறு பாயும் சமவெளியிலிருந்து பார்ப்பின், மேற்கு மலைத்தொடர் பச்சைப் பசுங்கொண்டலான திருமால் போல் காட்சி அளிக்கின்றது. அம்மலைப் பகுதியிலிருந்த கீழிறங்கி வரும் அருவிகள், அப்பெருமானது மார்பில் அணிந்த மலர் மாலைகளை ஒத்திருக்கின்றன. மலையில் ஆங்காங்கே மலர்ந்துள்ள செந்நிற மலர்கள், அப்பெருமானது கண்கள், வாய், கைகள், உந்தி, திருவடிகள் போலக் காட்சி அளிக்கும். பச்சை நிற மரம், செடி, கொடிகளைத் தன்மீது பெற்றுள்ள இம்மலைத் தொடர், பச்சை நிறப் போர்வையைப் போர்த்துக்கொண்டு மலையரசி படுத்திருப்பது போன்ற காட்சியை நினைவூட்டும். மலைமீது புலிகளின் உறுமலும், யானைகளின் பிளிறலும், கரடிகளின் உறுமலும், காட்டு எருமைகளின் முழக்கமும், அருவிகளின் ஆரவார ஒலியும் அமைதி நிலவும் வானைப் பிளந்து செல்லும். தோட்டங்கள் இந்நாட்டில் ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்னர் மலையின் சில பகுதிகள் பயிர் செய்வதற்கு ஏற்றவாறு பண்படுத்தப்பட்டன; அவற்றில் காப்பி, தேயிலை முதலியன பயிராக்கப்பட்டன. இன்றும் பயிராக்கப்படுகின்றன. இத்தகைய பெருந் தோட்டங்கள் பொதிய மலைப் பகுதியிலும், மகேந்திர மலைத் தொடர்ப்பகுதியிலும் இருக்கின்றன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மேற்கு மலைத்தொடர்ப் பகுதிகளில் ஏலக்காய்த் தோட்டங்கள் மிகுதியாய் இருக்கின்றன. பல வகை வாழைத் தோட்டங்களும் வளமாக இருக்கின்றன, பலாத் தோப்புக்கள் பலவுண்டு. இவற்றிற் கிடைக்கும் பழங்களும், காப்பி, தேயிலை, ஏலக்காய் முதலியனவும் விற்பனையாகின்றன. பண்படுத்தப்பட்ட மலைச் சரிவுகளில் கிழங்கு வகைகளும் பயிராகின்றன. இலக்கியத்தில் பொதிகை திருமலை நாயக்கர் என்பவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்டு வந்தார். அப்பொழுது வாழ்ந்த குமரகுருபர அடிகள், தாம் இயற்றிய மீனாட்சி அம்மை குறம் என்னும் நூலில் பொதிய மலைச் சிறப்பைக் கற்பனை நயம்படப் பாடியுள்ளார். பொதிய மலைக் குறத்தி தன் மலைவளத்தைக் கூறுவதாகப் பல செய்யுட்கள் அந்நூலில் அமைந்துள்ளன. அச்செய்யுட்களின் திரண்ட பொருளைக் கீழே காண்க: ``நான் வாழும் பொதிய மலை திங்களைத் தன் முடியில் சூடிக்கொள்ளும் அளவிற்கு உயர்ந்தது; முகில்கள் மிகுதியாகச் சூழப் பெற்றது; தமிழ் முனிவனாகிய அகத்தியன் வாழும் பெருமையுடையது; அங்கயற்கண்ணி அம்மையின் திருவருள் பெருக்கெடுத்து வருவது போல அருவி நீர்ப் பெருக்குடையது. 1 எங்கள் மலையில் மதம் பொருந்திய களிறுகள் பிளிரும்: பாண்டியன் தமிழும் இளந் தென்றலும் கலந்து விளையாடும். பொதிய மலை பொன்மயமான குடுமிகளை உடையது. இம் மலையிற்றான் தென்றல் வளருகின்றது; வடகலையும் தென் கலையும் ஒன்றாகப்பயில்கின்றன; குன்றுதோறாடும் குமரன் விளையாடுகின்றான்; பொன்னும் ஒன்பது வகை மணிகளும் விளைகின்றன. இம்மலையின் சிறப்பு சோக்கி அங்கயற்கண் அம்மை அகமகிழ்கின்றான். இம்மலையில் சிங்கமும், ஆண் யானையும் அம்மையின் அருளால் பகைமை நீங்கி ஒரு பக்கம் பிணையும் விளையாடல் புரியும்; கொடிய கரடி, மானுடன் வேறொரு பக்கம் விளையாடிக் கொண்டிருக்கும்; விடங்கொண்ட பட நாகமும் மடமயிலும் மற்றொருபால் விருந்து அயரும். குறவர் குடியிருப்பு ``குன்றக் குறவராகிய நாங்கள் வாழ்கின்ற இடம் குறிச்சி எனப் பெயர் பெறும்; எங்கள் குடிசைகளின் முன் உள்ள பாறை களின்மீது புதிய தினை காய்ந்து கொண்டிருக்கும்; அப்பாறை யிலேயே உரல் அமைந்திருக்கும்; நாங்கள் அவ்வுரலில் தினை முதலிய தானியங்களைப் பெய்து, சந்தன உலக்கை கொண்டு குற்றுவோம். வலைகளும், வார்களும் குடிசையின் முன் இறப்பில் தொங்கிக்கொண்டிருக்கும். நாங்கள் துடி, முரசு என்னும் தோற் கருவிகளை ஒலிக்கச்செய்வோம். எங்கள் வீட்டுக் கொல்லை களில் பெண் மானும், பெண் யானைக் குட்டியும் விளையாடிக் கொண்டிருக்கும். புலியும் புல்வாயும் நட்புடன் பழகும். கற்பிளவு களில் வரிவேங்கையும் மானும் ஒன்றாக உறங்கிக்கொண் டிருக்கும். கரிய மலைச் சரிவுகளில் வெண்ணிற அருவிகள் பேரொலியோடு வழிந்து இறங்கிக்கொண்டிருக்கும். குறவர் தொழில்கள் ``நாங்கள் வள்ளிக் கிழங்குகளைக் கல்லி எடுப்போம்; முல்லைக் கொடியில் குறிஞ்சி மலர்களை வைத்துத் தொடுத்துக் கூந்தலில் சூடிக்கொள்வோம்; பழச்சாற்றையும் தேனையும் கலந்து பருகுவோம்: பசிய தழைகளையும் மரயுரியையும் ஆடையாகச் செய்து உடுத்துக்கொள்வோம்; செழுந்தினை மாவும் நறுந்தேனும் கலந்து விருந்தினர்க்கு உண்ணக் கொடுப்போம்; புலித்தோலாகிய படுக்கையில் உறங்குவோம்; காலையில் எழுந்து கயற்கண்ணியின் காலில் விழுந்து எங்கள் தீவினைகளைப் போக்கிக்கொள்வோம்.2 மலைவாணர்: பலியர் மேற்கு மலைத் தொடரில் பலியர், காணியர் என்னும் இருவகுப்பினர் வாழ்கின்றனர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர நயினார் கோவில் தாலுகாவை அடுத்துள்ள மலைப்பகுதிகளில் பலியர் வாழ்கின்றனர். இவ்வினத்தார் மதுரை மாவட்டத்திலுள்ள வருஷ நாட்டுப் பள்ளத்தாக்கிலும், இராமநாதபுர மாவட்டத்திலும், சீவில்லிப்புத்தூர்த் தாலூகாவை அடுத்த மலைப்பகுதிகளிலும் மிகப் பலராக வாழ்கின்றனர். இவர்கள் சதுரமான முகமும், தடித்த உதடுகளும், பரந்த தலைமுடியும் உடையவர்; குட்டையானவர். ஆடவரும் பெண்டிரும் முழங்காலுக்கு மேல் சிறிய அழுக்கடைந்த துணியை உடுத்தியிருப்பர். இம்மக்கள் நீராடுவதில்லை; சிதைந்த ஒருவகைத் தமிழில் பேசுகின்றனர்; மலைக்குகைகளிலும் இயற்கையாக அமைந்த குடைவுகளிலும் வாழ்கின்றனர்; சில இடங்களில் தேக்கமர இலைகளால் கூரை அமைத்துக் குடியிருக்கின்றனர். இவ்வினத்தார் பலவகைக் கிழங்குகளையும் காட்டுக் காய்கனிகளையும் உண்டு வாழ்கின்றனர். அரசாங்கத்திற்குச் சொந்தமான காடுகளைக் குத்தகைக்கு எடுத்தவர் பொருட்டுக் கிழங்குகளையும், ஏலக்காயையும், தேனையும் மெழுகையும் சேகரித்துக் கொடுப்பர்; தம் வேலைக்குப் பதிலாக அவர்களிட மிருந்து தானியங்களைப் பெறுவர்; அவற்றைச் சமைத்து உண்பர்; தேன் எடுப்பதற்காக மிக உயர்ந்த பாறைகளிலும் அஞ்சாது ஏறுவர்; ஓர் எஃகுத்துண்டையும் பஞ்சையும் கொண்டு நெருப்பை உண்டாக்குவர்; இவருள் மலைச் சரிவுகளிலுள்ள தோட்டங்களைக் காவல்காத்து ஊதியம் பெறுபவரும் உண்டு. இவருட் சிலர் கிறித்தவராக வுள்ளனர். அவர்கள் ஓரளவு உடைச் சிறப்புடன் காணப்படுகின்றனர். இம்மக்கள் குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் தங்கள் வாழ்க்கைக்கு இனி ஒன்றும் கிடைக்காது என்பதை அறிந்தவுடன் வேறு இடத்திற்குக் குடிபோவர்; சில சமயங்களில் உணவுக்குரிய மான் முதலிய விலங்குகளையும் பறவை களையும் வேட்டை யாடுவர். இவர்கள் கால் நடைகளை வளர்ப்பதில்லை; பயிர்த்தொழிலும் செய்வதில்லை. இவர்களிடை நடைபெறும் திருமணத்தில் எவ்விதச் சடங்கும் செய்யப்படுவதில்லை; மண நீக்கம் உண்டு; ஒருவன் பல பெண்டிரை மணத்தல் வழக்கம். இவ்வினத்துப் பெண்கள் ஆடவரைப் போலவே உழைத்து வேலை செய்பவர். குழந்தையை உடைய தாய், இடத்தோளில் ஏணைபோலக் கட்டிக் குழந்தையை எடுத்துச் செல்வாள். வேலை செய்யப் பயன்படாதவரும் மிக்க வயதானவரும் மற்றவர் போல் கவனிக்கப்படுவதில்லை. இவர்களுக்கு இனத்தலைவன் என்று ஒருவன் இல்லை. ஒவ்வொருவனும் தன் குடும்பத்தில் உண்டாகும் சச்சரவுகளைத் தானே தீர்த்துக்கொள்வான். பொருநையாறு தோன்றும் பொதிகைமலையிலும் பலியர் வாழ்கின்றனர். இவர்கள் பொருநையாற்று நீரை அசுத்தப்படு வதில்லை. ஆற்றுப் போக்கில் நீராடும் மக்களை எண்ணியே இவர்கள் தண்ணீரை அசுத்தப்படுவதில்லை என்று கூறு கின்றனர். காணியர் இவ்வினத்தால் எளிமையும் நேர்மையும் உடையவர்; பலியரைவிட எல்லாத் துறைகளிலும் முற்போக்கானவர்: இவர் தம் குடியிருப்புக்களுக்கு `வாடி என்பது பெயர். மக்களும் விலங்கு களும் நடமாடாத மலைப்பகுதிகளில் இவர் தம் இருக்கைகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு குடிசையும் மூங்கிலாலும் புல்லாலும் சமைந்திருக்கும்; இவர்கள் தம் குடியிருப்பைச் சுற்றிலும் பயிர் செய்து வாழ்வர்; சோளம், மிளகாய், வாழை முதலியவற்றைப் பயிரிடுவர்; சில கிழங்கு வகைகளைக் கல்லி எடுத்து உண்பர். இவர்கள் கஞ்சாவைப் பயிரிட்டுப் புகைப்பர்; பனங்கள்ளை உண்பர். தங்கள் வாழிடம் இனிப் பயிர் செய்ய ஏற்றதன்று என்பதை அறிந்தவுடன், இம்மக்கள் வேறு இடத் திற்குக் குடியேறுவர். இவருட் சிலர் கிறித்தவராகிக் குடியானவர் போலப் பயிர்த் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவ்வினத்தார் காட்டு வழிகளைக் சிறந்தவர்கள்; ஒருவருக்கு அடங்கி வேலை செய்வதில் விருப்ப மில்லாதவர். வில் அம்புகளைக் கையாளுகின்றனர். ஒவ்வொரு குடியிருப்புக்கும் பரம்பரைத் தலைவன் உண்டு. மற்றவர் அவனுக்கு முற்றிலும் அடங்கி வாழ்கின்றனர். மாடசாமி, சொரி முத்தையன், சாதா முதலிய சிறு தெய்வங்கள் இவர் தம் வணக்கத்திற்குரியவை. அடர்ந்தகாடுகளில் ஆள் நடமாட்ட மில்லாத இடங்களை ஆவிகளின் உறைவிடம் என்று இம்மக்கள் கருதுகின்றனர். திருமண ஒப்பந்தம் இவர்களால் மதிக்கப்படு கின்றது; ஆயினும், மண நீக்கம் உண்டு. இவர்கள் தமிழ், மலையாளம் கலந்த ஒரு மொழியைப் பேசுகின்றனர். இவ் வினத்தார் மேற்கு மலைத்தொடரின் மேற்குப் பகுதியிற்றான் மிகப்பலராக வாழ்கின்றனர். 2. பொருநையாறு இலக்கியத்தில் பொருநை இராமாயணத்தில் பொருநையாறு இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. சுக்கிரீவன் சீதையைத் தேடப் புறப்பட்டவானர வீரரிடம், `அகத்திய முனிவரது இசைவுடன் நீங்கள் முதலைகள் நிறைந்த பெரிய தாம்பரபர்ணி ஆற்றைக் கடந்து செல்லுங்கள். காதலனுடன் செல்லும் காதலிபோல அது தன் நீருடனும் பிற பொருள்களுடனும் சென்று கடலிற் கலக்கின்றது. அதைக் கடந்து சென்றால் தங்கக் கதவுகளையுடைய பாண்டிய நாட்டின் தலைநகதைக் காண்பீர்கள், என்று கூறியுள்ளான். வியாச பாரதத்திலும் பொருநையாறு குறிக்கப்பட்டுள்து. திருவிளையாடலில் பொருநை ``கார்மேகங்கள் பொதிகை மலைமேல் கூடி மழையைப் பொழிந்தன. மலையிலிருந்த `இழும் என்னும் ஒலியோடு வெள்ளிய அருவிகள், புறப்பட்டு விழத் தொடங்கின. பொதியமாகிய மலைமடந்தை `தண் பொருநை என்னும் பெண் மகவு பெற்றாள். அப்பெண் மகவு முல்லை நிலத்தின்கண் தவழ்ந்து இனிய பாலைப் பருகியது; பின்பு அதனினின்றும் நீங்கி மெல்லக் காலால் (கால்வாயாகச்) சென்று வயல்களோடு விளையாடியது; அதன் பாய்ச்சலால் மருத நிலத்தில் வாழை மரங்கள் வளம்பெற்றன; மாமரங்கள் மலர்ச்சி பெற்றன; தென்னை மரங்கள் இளநீரைப் பெற்றன; கூந்தற் பனைகள் குதூகலித்தன; தாமரை முதலிய மலர்கள் மலர்ச்சி பெற்றன; அவற்றில் இருந்த மதுவை உண்ண வண்டுகள் வட்டமிட்டன. ``இங்ஙனம் மருத நிலத்தை வளப்படுத்தித் தானும் மங்கைப் பருவம் அமைந்த இப்பொருநை, நீண்ட தாழையாகிய வேலியையுடைய நெய்தல் நிலத்தைச் சூழ்ந்த சோலையில் தங்கியது. ஆற்றின் இருகரைகளிலும் உள்ள மலர்களிலிருந்து சிந்திய மலர்கள் அம்மங்கைக்கு மாலைகளாகக் காணப்பட்டன. வெள்ளத்தில் தோன்றிய நுரை அவளுக்குப் போர்வயைக அமைந்தது. ஆற்றில் அடித்து வரப்பட்ட பொன்னும் மணியும் அவளுக்குப் பொன்னரி மாலையாகவும் மணிகள் பதித்த மாலையாகவும் விளங்கின. இத்தகைய பொலிவோடு அன்னநடை நடந்து சென்ற பொருநை என்னும் மங்கை நல்லாள், கடலாகிய தன் கணவனோடு சேர்ந்துகொண்டாள். ஆற்று வெள்ளம் ``கீழ் மக்களிடத்தில் உள்ள பொருள், இம்மை மறுமைப் பயன்களில் அவா நீங்கிய யோகியர் கைப்படின் குற்றத்தின் நீங்கித் தூய்மை அடைதல்போல, இயற்கையில் உவர்ப்புடைய கடல் நீர், மேகத்தின் கைப்பட்டவுடன் உவர்ப்பு நீங்கி உலகத்து உயிர்கட்கு அமுதமாகிறது. இங்ஙனம் அமுதமாக மாறிப் பொழிந்த மழைநீர் பொருநை ஆறாகப் பெருக்கெடுத்து வருகின்றது. அதன் அலைகள் குவளை முதலிய மலர்களைக் கரைகளில் ஒதுக்குகின்றன; இரண்டு கரைகளிலும் சங்குகளைச் சிதறச் செய்கின்றன. ஆற்று வெள்ளம் பக்கங்களில் சூழ்ந்த காஞ்சி மரங்களைத் தள்ளிக்கொண்டு கரை உடையும்படி செல்கின்றது. ``இங்ஙனம் விரைந்து செல்லும் வெள்ளம் தனக்கு இருபுறங்களிலுமுள்ள சிவன் கோவில்களில் நெருங்குகின்றன; முல்லை நிலத்திலுள்ள ஆவின்பால், தயிர், நெய், கோநீர், சாணம் என்பவற்றையும் தேனையும் தன் மலைகளாகிய கைகளால் முகந்து கோவில்களுள் வீசுகின்றது; கதூரியையும் சந்தணத்தையும் பூசுகின்றது; நறிய மணமுள்ள மலர்களைத் தூவுகின்றது, இச்செயல்களால், பொருநை வெள்ளம், சிவபூசை செய்யும் அடியார்களை ஒத்திருக்கிறது. அவ்வெள்ளம் மலைகளிலுள்ள மணி, பொன், வைரம் குழை முதலியவற்றை வயல் களம் சிறந்த மருத நிலத்தில் நிரப்புகிறது; அரைப்பட்ட அகிலையும் சந்தனத்தையும் சேர்க்கிறது; தன் நன்னீரால் இனிய அமுதத்தினை உண்பிக்கிறத. அஃதாவது, பொருநை வெள்ளம் மேலே சொல்லப்பெற்ற மணி, பொன் முதலியவற்றைப் பூட்டி, அகிலையும் சந்தனத்தையும் பூசி, இனிய அமுதத்தினை உண்பித்து, மருத நிலமாகிய மங்கையை, அவளது பருவத்திற்கு ஏற்றவற்றை ஆராய்ந்து, செவிலித் தாயைப் போல வளர்க் கின்றது என்பதாம். ``வேதம் முதலிய நூல்கள், சிவபெருமானை எங்கும் நிறைந்த பரம்பொருள் என்றும், திருநீறு முதலிய சாதனங்களை வீடுபேற்றிற்கு வழி என்றும் கூறும். அங்ஙனம் கூறுதலை அறிந்தும் தெளியாதவரின் அறிவு கலக்கத்தை அடையும். அது போலப் பொருநை வெள்ளம் முதலில் கலக்கத்தை அடைகிறது. நூல்கள் கூறும் முறையால் வீட்டினை உணர்ந்த பெரியோர் அறிவு தெளிந்து இருப்பது போலச் சில நாட்களுக்குப் பின்பு பொருநை நீர் தெளிவை அடைகின்றது. வேதத்திலிருந்து அறுபத்து நான்கு கலைகள் கிளைத்துள்ளன. அவை போலப் பொருநை வெள்ளத்திலிருந்து பல கால்கள் கிளைத்துச் செல்கின்றன; சென்று சோலைகளிலும் கழனிகளிலும், ஓடைகளிலும் பிற ,இடங்களிலும் சேருகின்றன; சேர்ந்து, சிவனடியார் உள்ளத்தில் நிறைந்துள்ள அன்பு போல மேற்சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் நிரம்புகின்றன. ``அழிவில்லாச் சிவசக்தி ஒருத்தியே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களையும் நடத்தும் பொருட்டு வெவ்வேறு பெயர்களில் உருவங்கள் தாங்கி நிற்கின்றாள். அவள் போலவே கடல் நீர் ஒன்றே பொருநை ஆறாகவும், கால்வாய்,குளம், கிணறு, அகழி எனவும் பெயர்கள் வேறுபட்டுப் பல்வேறு உருவங்களில் நாட்டு உயிர்களை வளர்க்கின்றனது. உழவர் செயல்கள் 1 உழவர்கள் அழகிய ஏரைப்பூட்டி மருதப் பண்களைப் பாடிக்கொண்டே வயல்களை உழுகின்றனர். தாய்மார் வாயிலிருந்து வருகின்ற கனிவோடு கூடிய பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களைப் போல, ஏரில் பூட்டப்பெற்ற எருதுகளும், எருமைக்கடாக்களும் மனம் மகிழ்ந்து தம் உடல் வருத்தத்தை மறந்து உழைக்கின்றன. உழவர்கள் ஏர்களில் பல நிறங்களுடைய எருதுகளைப் பூட்டி உழுகின்றனர்; வேறு சிலர் நீரினைக்கட்டிச் சேறாக்கு கின்றனர்; மற்றும் சிலர் கடவுளை வணங்கிச் செந்நிறமுடைய நெல் விதைகளை விதைக்கின்றனர்: மேலும் சிலர் நாற்றுநடுகின்றனர்; சிலர், பகைவரைப் போலப் பகை செய்கின்ற களைகளைக் களைகின்றனர். ``பண்ணை வெல்லுகின்ற இனிய மொழிகளையுடைய உழத்தியர், தங்கள் பவளம் போன்ற சிவந்த வாய்க்குச் செவ்வல்லி மலர்களைப் பகை என்றும், தம் கண்களுக்குச் செங்குவளை மலர்களும் கருங்குவளை மலர்களும் பகையாயுள்ளன என்றும், தங்கள் அழகிய முகத்திற்கத் தாமரை மலர்கள் பகையாக உள்ளன என்றும் கருதி, அவைகளை வயல்களிலிருந்து களைகின்றனர். ``ஐயத் திரிபு ஆகிய குற்றம் நீங்கக் கற்றவர் இயற்றிய நூலில் உள்ளடங்கி இருக்கம் பொருள் போல, வளர்கின்ற கருவானது அடங்கி இருக்கிறது. சிறந்த நூற் பொருளின் அளவை உணர்த்துகின்ற கருத்துரையின் தோற்றம் போலக் கருவெளித் தோன்றுகிறது; இலக்கண வரம்பு அமைந்த கல்வி நிறையப் பெறாத புன்கவிஞர் தலைநிமிர்த்து இருத்தல் போலக் கரு தலை எடுத்து நிற்கின்றது. மேலே கூறப்பெற்ற நூலின் உரைபோலப் பயிர் தலைவிரிந்து காணப்படுகின்றது. கற்புடை மகளிர் தலைவணங்கி இருத்தல் போலச் சில நாட்களுக்குப் பின்பு பயிர் தலைசாய்த்து நிற்கின்றத. அன்பு மிக்க பக்தியாகிய வித்தை விதைத்து, விருப்பமாகிய நீரைப் பாய்ச்சி நின்ற அடியவர்க்க இறைவனது திருவருளாகிய பயன் விளை கின்றது. அதுபோல, உழவர் நாள்தோறும் பருவம் பார்த்து நல்ல விளைபுலன்களை முயற்சியோடு பாதுகாத்தலால் சிறந்த நெற்பயில் விளைகின்றது. ``உழவர் பிறை வடிவில் அமைந்த அரிவாளைக் கையிலேந்தி வெண்ணெல், செந்நெல் விளைவுகளை வேறு வேறாக அறுத்துக் கற்றை களாக்கி, நெற் களத்தில் பெரிய போர்களாகக் குவிக்கின்றனர்; பின்பு வைக்கோலை நீக்கிப் பதர் போகத் தூற்றி, நெல்லைப் பொலிகளாகக் குவித்து, ஊர்த் தேவதைகளுக்கும் வறியவர்களுக்கும் வரையறுத்தபடி கொடுக் கின்றனர்; எஞ்சிய நெல்லை அளக்கின்றனர்; அதனில் இறைப்பொருளாக ஆறில் ஒரு பங்கு கொடுக்கின்றனர்; மிகுதியை வண்டியில் ஏற்றிக் கொண்டு போய்த் தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றம் இவர்களை உண்பித்துத் தாமும் உண்ணுகின்றனர். பொருநையாறு பொருநையின் போக்கு நெல்லை மாவட்டத்தின் ஆறுகள் பல மேற்கு மலைத் தொடரிற்றான் தோற்றமாகின்றன பொருநை இம்மாவட்டத் திலுள்ள முக்கிய ஆறு. இஃது ஏறத்தாழ 1750 கல் பரப்பளவில் விழும் நீரைக்கொண்டு செல்கிறது. இந்த ஆற்றின் முழு நீளம் எழுபத்தைந்து கல். இது வடகிழக்கு, தென்மேற்குப் பருவக்காற்று களின் முழு நலனையும் பெறுகிறது. அதனால் இதனில் நீர்வளம் குறைவதில்லை; இதன் படுகை என்றும் வறட்சி அடைவதில்லை. பொதிகை மலையில் தோன்றும் பொருநையாறு மலைமீது சில கல் தொலைவு வரை மரங்கள் செறிந்த பள்ளத்தாக்கு வழியே வேகமான நீரோட்டத்துடன் பாய்கிறது; பின்பு நூறு அடி உயரமான பாறை உச்சியிலருந்து கீழே விழுகிறது; அங்கிருந்து பல தொடர்ந்த அருவிகள்மூலம் நூறு அடி கீழே இறங்குகிறது. அங்கு இதன் இடப்பக்கத்தில் பேயாறு, உள்ளாறு என்பன வந்து சேருகின்றன. இவற்றால் நீர்ப்பெருக்கு மிகுந்த பொருநை, ``வானதீர்த்தம்1 என்னும் இடத்திற்கு மேல் கண்கொள்ளாக் காட்சி தரும் அருவியாகக் கீழே விழுகின்றது. இங்ஙனம் பொருநை கீழே விழும் இடத்திற்கு அருகில், சிங்கம்பட்டி ஜமீந்தாரியில் தோன்றும் பாம்பாறு வந்து இதன் வலப்பக்கத்தில் சேருகின்றது. அதற்கு ஒன்றரைக் கல்லுக்கு அப்பால் கட்டனை மலைத் தோட்டத்தின் கீழ்க்கோடியில் காரியாறு என்பது இடப்பக்கமாக வந்து பொருநையிற் கலக்கின்றது. பின்னர்க் கௌடலையாறு, மயிலாறு என்பன பொருநையின் வலப்பக்கத்தில் வந்து கலக்கின்றன. இவ்யாறுகள் அனைத்தும் சேர்ந்த பின்பு பெருந்தோற்றத்துடன் வரும் பொருநையின் போக்கிற்றான் மேலணை கட்டப்பட்டுள்ளது. மேலணை கட்டப்படுவதற்கு முன்பு, பொருநையாறு, பாம்பாறு சேருமிடத்திலிருந்த புகழ்பெற்ற சொரிமுத்தையன் கோவில் வரையிலும் ஏறத்தாழ மூன்று கல் தொலைவு மைலுக்கு 20 அடி வீதம் கீழிறங்கியது. கோவிலுக்கு அருகில் சரிவான பாறைகள் வழியே செல்லும்போது, ஆற்று நீர் வேகமான நீரோட்டத்தைப் பெறுகிறது: அங்கிருந்து ஐந்துகல் தொலைவு வரை மேட்டுப்பாங்கான நிலத்திற் செல்லுகிறது. அங்கு இதன் இடப்பக்கத்தில் முண்டன் துறைக்க அருகில் சேர்வையாறு என்பது கலக்கின்றது. அதற்கு அப்பால் இயல்காக அமைந்துள்ள பள்ளத்தாக்கு வழியே பொருநை பாய்கிறத. அவ்விடத்திற்றான் கீழணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டுள்ளது.1 இவ்வணை கட்டப்படாததற்கு முன்பு பொருநை இரு கிளைகளாகப் பிரிந்து, இரு பாறைத் தீவுகளை உண்டாக்கி, முந்நூறு அடி உயரத்திலிருந்து கண்ணுக்கினிய காட்சி நல்கும் அருவியாகக் கீழே விழுந்தது. இங்ஙனம் விழுந்த அருவி நீருக்குக் கலியாண தீர்த்தம் என்பது பெயர். அருவிநீர் விழுந்தபோது பாறையின்மேல் மோதிச் சிதறுண்டு மூன்று பிரிவுகளாகப் பிரிந்து, அரைக்கல் தொலைவுக்குள் மீண்டும் ஒன்று சேர்ந்தது. கீழணை கட்டப்பட்ட பிறகு பொருநையின் இயல்பான போக்குத் தடைப்பட்டுவிட்டது. அதனால் பாபநாச அருவியில் நீர்வருதல் இல்லை. கீழணையில் தேக்கப்பட்ட நீர் குகைகள் வழியாகக் கீழே கொண்டு செல்லப்படுகிறது. அதிலிருந்து மின்சாரம் எடுக்கப்பட்ட பிறகு, அந்நிலையத்திலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் வழியாக வெளியில் விடப்படு கிறது. அங்ஙனம் விடப்படும் நீர் கலியாண தீர்த்தத்திற்குக் கீழ்ப்பகுதியிலுள்ள பழைய ஆற்றுப் போக்கில் சேருகின்றது. அங்ஙனம் சேர்ந்த நீரே பாபநாசம் என்னும் ஊரை அடுத்த மலையடிவாரத்தில் வந்து விழுகின்றது. மலைமீது அணைகள் கட்டப்படுவதற்கு முன்பு பாபநாசத்திலிருந்து இது கடலில் கலக்கும் இடமான புன்னைக் காயல் வரை - ஏறத்தாழ அறுபது கல் தொலைவுவரை - இதன் இறக்கம் மைலுக்கு ஆறடியிலிருந்து மூன்றடிக்கும் குறைவாகவே மாறிவந்தது. அம்பாசமுத்தில் தாலூகாவில் இதன் இறக்கம் மைலுக்கு 6 அடியாக இருந்தது. ஸ்ரீவைகுண்டம் தாலூகாவைக் கடந்த பிறகு இதன் இறக்கம் மைலுக்கு மூன்றடிக்கும் குறைவாகவே இருந்தது. சாதாரண வெள்ளக் காலத்தில் அம்பாசமுத்திரத்திற்கருகில் இதன் ஆழம் பதினைந்து அடியாக இருந்து வந்தது; ஸ்ரீ வைகுண்டம் அணைக்கட்டுக்குக் கிழக்கே ஆறு அடியாக இருந்தது. அம்பாசமுத்திரம் தாலூகாவில் முந்நூறு அடி அகலத்தில் ஓடும் இவ்யாறு, கடலிலிருந்து பன்னிரண்டு கல் தொலைவிலிருக்கும் ஆழ்வார் திருநகரியில் கால் மைலுக்கு மேற்பட்ட அகலமுடையதா யிருப்பதுதான் இதற்கக் காரணம். அடிக்கடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. சில சமயங்களில் சேதங்கள் ஏற்பட்டன. 1914-இல் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு அருகில் நீர் மட்டம் இருபதரை அடி வரை உயர்ந்து கடுஞ்சேதம் விளைத்தது. மலைமீது அணைகள் ஏற்பட்ட பின்பு வெள்ளக் கொடுமை குறைந்துவிட்டது. கரைகள் அணைக்கட்டுகள் கட்டப்பட்டிருக்கும் பல இடங்களில் நல்ல கரைகள் போடப்பட்டுள்ளன. ஸ்ரீவைகுண்டம் அணைக்கு இரண்டரைக்கல் மேற்கேயிருந்து கடலோடு கலக்கும் இடத்திற்கு இரண்டு கல் தொலைவுவரை ஏறத்தாழப் பதினாறு கல் தொலைவு நல்ல கரைகள் அமைந்துள்ளன. காலப் போக்கில் ஆற்றின் கழிமுகப்பகுதி அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. கடற்கரையை அடையும் போது ஆற்று நீர் வளைந்து வளைந்து செல்லும் உப்பங்கழிகள் மூலம் செல்லுகிறது. புன்னைக் காயலில் உள்ள இரு முகத்துவாரங்களில் ஒன்று எப்பொழுதும் திறந்திருக்கம்; மற்றொன்று சில மாதங்களில் மூடியிருக்கும். பெயர்க் காரணம் இதன் பழைய பெயர் பொருநை என்பது. அப்பெயர் காலப் போக்கில் வழக்கிழந்தது. இன்று இது தாம்பிர பரணி என்று வழங்கப்படுகிறது. சம்கிருதத்தில் `தாம்ரா; என்பதற்குச் `செம்பு அல்லது `சிவப்பு என்பது பொருள். அச்சொல்லின் மறுபாதி `பர்ணா (இலை அல்லது மரம்) என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது. ஆதலின் `செம்பு நிறமான ஆறு என்றோ, `செவ்விலை ஆறு என்றோ இதற்குப் பொருள் கொள்ளலாம். இவற்றுள் முதற் சொல்லே பொருத்தமாகத் தோன்றுகிறது. ஆனால் `தாம்பிர பரணி மகாத்மியம் என்னும் நூலின் ஆசிரியர் கூற்றின்படி இரண்டாம் பெயரே மக்களிடை வழங்கிவருகிறது. பார்வதி பரமசிவன் திருமணத்தின்போது எல்லாக் கடவுளருமே கயிலையிற் கூடினர். அதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தத. அதனைச் சமப்படுத்த அகத்தியர் தெற்கே அனுப்பப்ட்டார். அவர் தம்முடன் தாமரைப் பூமாலை ஒன்றைக் கொண்டு சென்றார். அம்மாலை சிவந்து அழகிய பெண்ணாக மாறியது. பார்வதி பரமசிவன் தமது மணக் கோலத்துடன் அகத்தியருக்குப் பொதிகையில் காட்சி அளித்தபோது, அப் பெண்ணை ஓர் ஆறாக ஓடும்படி அவர்கள் பணித்தனர். அப்பொழுது அகத்தியர் ஒரு விமானத்தில் ஆற்றுடனே சென்று, அதன் வழியில் தூய பல மண்டபங்களையும் நீராடு துறைகளையும் அமைத்தார். ஆறுதோன்றும் இடத்திலிருந்து பாபநாசம் வரையிலும் தேவர்களுக்காக முப்பத்திரண்டு நீர்த்துறைகளும், பாபநாசத்துக்கு அப்பால் மனிதர்க்காக எண்பத்தாறு துறைகளும் அமைக்கப்பட்டன என்பது தாம்பிரபரணி மகாத்மியத்தில் கூறப்படுகிறது. `இவ்யாற்று நீரில் தாமிரம் கரந்திருக்கிறது. இதன் நீரை அலுமினியப் பாத்திரத்தில் எடுத்துச் சில நாட்கள் வைத்திருந்த பின், நீரின் அடியில் தாமிரம் படிந்திருப்பதைக் காணலாம். இங்ஙனம் தாமிரம் கலந்துள்ள காரணத்தால் இவ்யாறு `தாமிரபரணி எனப் பெயர் பெற்றது, என்று அறிஞர் அறைகின்றனர். பொருநையின் துணையாறுகள் மலைமீது துணையாறுகள் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, காரியாறு, கௌடலை யாறு, மயிலாறு, சேர்வையாறு முதலியன மலைப்பகுதியில் பொருநையிற் கலக்கும் ஆறுகளாகும். பெரிய பொதிகைத் தெற்கேயுள்ள `நாகபொதிகை என்றழைக்கப்படும் மலையில் பாம்பாறு தோன்றுகிறது. வழியிலுள்ள குன்றுகளைக் கடக்கும்போது அஃது இரண்டு அருவிகளாகக் கீழே விழுகிறது; வட கிழக்குத் திசையில் ஆறு கல் சென்று பொருநையிற் கலக்கிறது. பாம்பாறும், சேர்வையாறும் பிறவும் பருவக் காற்றுகளின் மழையினால் தோன்றும் சிறப்பு ஆறுகள் ஆகும். சமவெளியில் துணையாறுகள் சமவெளியில் பொருநையிற் கலக்கும் முக்கியமான முதல் ஆறு மணிமுத்தாறு என்பது. இது செங்கல் தேரியின் மேற்பாகத்தில் ஆழ்ந்த சோலை ஒன்றில் தோன்றுகிறது. இதனுடன் வறட்டாறு, குசன்குழியாறு என்பன சேருகின்றன. கருமந்தி அம்மன் அணையிலிருந்து வெளியேறும் கீழ் மணிமுத்தாற்றில் தேவைக்கு மேற்பட்ட நீர் குசன் குழியாற்றிற் சேருகின்றது. மலையடிவாரத்திலுள்ள மணிமுத்தாற்று அணைக்கட்டிலிருந்து தண்ணீரைக் கொண்டு செல்லும் `பெருங்கால் என்னும் கால்வாயே சிங்கம்பட்டி ஜமீந்தாரிக்கு உயிர் நாடியாக இருக்கின்றது. கல்லிடைக்குறிச்சிக்கு இரண்டுகல் மேற்கே, கன்னடியன் அணைக்கட்டுக்கு மேற்கே குசன்குழியாறு பொருநையுடன் சேருகிறது. குசன்குழியாறு சமவெளியை அடைவதற்குச் சிறிது தொலைவிற்குமுன்பு அருவியாக விழுகிறது. அம்பாசமுத்திரம் தாலூகாவின் மேற்கேயுள்ள மலைத்தொடரிலிருந்த கோரையாறு என்பது தோன்றி வடக்கு நோக்கிப் பாய்கிறது; சிறிது தொலைவு சென்றபின்பு ஊர்க்காடு என்னும் இடத்திற்குக் கிழக்கே கன்னடியன் கால்வாயிற் கலக்கின்றது.1 வராக நதி ஜம்பு நதி என்பது கடையம் பெரும்பற்றுக்கு மேற்கேயுள்ள மலைப்பகுதியின் கீழ்க்சரிவில் தோன்றுவது. இராம நதி என்பது. மேலக் கடையத்தைச் சார்ந்த மலைப் பகுதியில் தோற்ற மெடுக்கிறது. இவ்விரண்டு யாறுகளும் இரவண சமுத்திரம் என்னும் இடத்திற்க அருகில் கலக்கின்றன. இங்ஙனம் இரண்டும் ஒன்றான புதியயாறு வராக நதி என்ற பெயருடன் பாய்கிறது. ஜம்பு நதியில் மூன்றும், .இராம நதியில் ஒன்றும், வராக நதியில் இரண்டுமாக அணைக்கட்டுகள் அமைந்துள்ளன. கடனா நதி2 இது சிவசயிலத்திற்கு மேற்கேயுள்ள குன்றுகளில் தோன்றுவது. இவ்யாறு, பாப்பான்குளம் என்னும் இடத்தில், மேலே குறிக்கப்பெற்ற வராக நதியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, திருப்புடைமதுதூரில் பொருநையின் இடக்கரையில் அதனுடன் சேருகிறது. இத்துணையாற்றில் ஆறு அணைக் கட்டுகள் உள்ளன. பச்சையாறு3 இது நாங்குநேரித் தாலூகாவில் உள்ள வெள்ளிமலையின் வடகிழக்குச் சரிவில் தோன்றுகின்றது: வழியில், கீழ் மணி முத்தாற்றிலிருந்து கருமந்தி அம்மன் கால்வாய் வழியாக வரும் நீரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்கிறது: நாங்குநேரி, திருநெல்வேலித் தாலூக்காக்கள் வழியே பாய்ந்து, அவ்விடங் களில் நீர்ப்பாசத்திற்கு உதவுகிறது: தருவை என்னும் இடத்தில் பாளையன் கால்வாயிற் கலக்கிறது. சிற்றாறு குற்றால அருவியைத் தோற்றுவித்துள்ள சிற்றாறு பொதியமலைக்கு வடபாலுள்ள திரிகூடமலைப் பகுதியில் தோன்றி, மலை மீதே தேனருவி முதலிய அருவிகளாக விழுந்து, இறுதியில் குற்றாலம் என்னும் தலத்தில் குற்றால இருவியாக விழுகிறது. பின்பு சிற்றாறு என்னும் பெயருடன் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. குற்றாலத்திற்கு வடக்கேயுள்ள சொக்கம்பட்டி மலைகளி லிருந்து கறுப்பாறு என்பது தோன்றித் தென்கிழக்கிற் பாய்கிறது. பம்புலி4 (Pampuli) என்னும் இடத்திற்கு மேற்பாலுள்ள மலைகளில் தோன்றும் அநுமான் நதி என்பது தென் கிழக்காகப் பாய்கிறது. இவ்யாற்றில் முன் சொல்லப் பெற்ற கறுப்பாறு கலக்கின்றது. இங்ஙனம் நீர்ப்பெருக்கம் மிகுந்த அநுமான் நதி, வீரகோளம் புதூர் என்னும் இடத்தில் சிற்றாறிற் கலந்து மறைகிறத. இவ்வாறு நீர் வளம் கொண்ட சிற்றாறு தென்காசி, திருநெல்வேலி தாலூக்காககளிற் பாய்கிறது. சங்கர நயினார் கோவில் தாலூகாவில் உள்ள கழுகுமலைக் கருகில் சிற்றாறு ஒன்று தோன்றித் தெற்கு நோக்கி வருகிறது. இதன் பெயர் உப்போடை என்பது. இவ்யாறு பாயும் பகுதியில் விழும் மழை நீர், பக்கங்களில் உள்ள குளங்களை நிரப்புவதால், இதனில் வந்து சேரும் நீர் குறைவாகவே இருக்கும். இவ்வுப்போடை கோவில்பட்டி தாலுகா வழியே திருநெல்வேலி தாலூகாவில் நுழைந்து, கங்கை கொண்டான் என்னும் ஊருக்கருகில் மேலே சொல்லப்பெற்ற சிற்றாற்றிற் கலக்கிறது. இது கலப்புண்ட பின்னர்ச் சிற்றாறு தெற்கு நோக்கிப் பாய்ந்து சீவலப்பேரி என்னும் இடத்திற் பொருநையாற்றிற் கலக்கின்றது. சிற்றாற்றின் நீளம் நாற்பது கல். இதனில் பதினெட்டு அணைக்கட்டுகள் அமைந்துள்ளன. இவ்யாற்றின் நீர் ஏறத்தாழ முப்பதாயிரம் ஏக்கர் நிலம் பயிராக உதவுகின்றது. நீர்வளம் மேலே செல்லப்பெற்ற பல துணையாறுகளிலும், பொருநையிலும் பலஅணைகள் கட்டப்பட்டுள்ளன: பல கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன, அணைகளால் தேக்கப் பெறும் நீர் கால்வாய்கள் வழியே கொண்டு செல்லப்பட்டுப் பெரிய குளங்களில் நிரப்பப்படுகிறது. ஆற்று நீரும், கால்வாய் நீரும், குளத்து நீரும் நீர்ப்பாசனத்துக்கு நன்கு பயன்படுத்தப் படுகின்றன. இதனால் தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலித் தாலூகாக்கள், ஸ்ரீவைகுண்டம் தாலூகாவின் பெரும் பகுதி, திருச்செந்தூர் தாலூகாவின் பெரும் பகதி, நாங்குநேரி, சங்கரநயினார் கோவில், கோவில்பட்டி என்னும் தாலூகாக்களின் சில பகுதிகள், மருதவளக் காட்சியை நல்குகின்றன. 3. அணைக் கட்டுகள் காவிரியும் பொருநையும் தென்மேற்குப் பருவக் காற்றுப் பயனை அடையும் சிறப்பு ஆறுகளாகும். bghUie, Ús¤âš á¿ajhŒ ïU¥ãD«, jÄHf¤âš gaDŸs MwhF«., இதன் பாய்ச்சலைப் பெறும் நிலங்களில் பெரும்பாலும் ஆண்டின் இருபோகம் விளைகின்றது. கோடகன், கன்னடியன், பாளையன் கால்வாய்களுக்கு அருகில் உள்ள இடங்களில் ஏக்கருக்கு இரண்டு டன்னுக்கும் மேலாகவே நெல் விளைகின்றது. நிலத்தின் அடிமண், ஈரத்தையும் உரச் சத்தையும் நன்கு பாதுகாத்து நல்ல விளைச்சல் இருக்கும்படி செய்கிறது. அணைக்கட்டுகள் பொருநையாற்றில் எட்டு அணைக்கட்டுகள் இருக் கின்றன. ஸ்ரீவைகுண்டத்திலுள்ள எட்டாம் அணைக்கட்டைத் தவிர மற்றவை பழமையானவை. அவை எப்பொழுது யாரால் கட்டப்பட்டன என்பதுபற்றித் திட்டமாக நமக்கு ஒன்றும் தெரியவில்லை. இந்த அணைக்கட்டுகளிலிருந்து கால்வாய்கள் வழியாக அல்லது குளங்கள் வழியாகத் தண்ணீர் வயல்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. சில குளங்கள், ஒரு முறை நீர் நிரம்பிவிட்டால் விளைச்சலுக்கு வேண்டும் அளவு தண்ணீர் வழங்கத் தக்கனவாய் இருக்கின்றன. கோடைமேலழகியான் அணைக்கட்டு இது பழைய காலத்து அணைக்கட்டு. பாபநாசம் குன்றுகளிலிருந்து இறங்கும் பொருநையாறு குறுகிய இடுக்கு வழியில் செல்கிறத. வழியில் குன்றுகளிலிருந்து விழுந்த பாறைகள் அதன் போக்கைத் தடுக்கின்றன. அங்ஙனம் அவை தடுக்கும் இடத்தின் ஒரு கோடியிலுள்ள நீண்ட பாறைத் தொடரே அணைக்கட்டாக உதவுகிறது. அப்பாறையில் துளைகள் உண்டாக்கப்பட்டுக் கால்பாய்கள் வழியே நீர் கொண்டு செல்லப்படுகிறது. நதியுண்ணி அணைக்கட்டு இஃது அம்பாசமுத்திரத்திற்குச் சிறிது மேற்கே அமைந் துள்ளது. இது பாறை மீது கட்டப்பட்டுள்ளது, இவ்வணையி லிருந்து ஒரு கால்வாய் பிரிகிறது. அதிற் செல்லும் நீர் கீழை அம்பாசமுத்திரம், மேல் அம்பாசமுத்திரம், பிரம்ம தேசம், ஊர்க்காடு, சாத்தப்பட்டு* முதலிய ஊர்களைச் சேர்ந்த வயல்களுக்குப் பயன்படுகிறது. கன்னடியன் அணைக்கட்டு மணிமுத்தாறு பொருநையுடன் சேருமிடத்தை அடுத்து இவ்வணைக்கட்டு அமைந்துள்ளது. ஹார்லி என்னும் துரைமகனார் 1842-இல் இதனைத் திருத்தி அமைத்தார். பின்னரும் இது நன்கு பழுது பார்க்கப்பட்டது. ஆற்றின் தென்கரையில் இவ்வணையிலிருந்து ஒரு கால்வாய் பிரிகிறது. இந்த அணைக்கட்டுத் தோன்றியது குறித்து ஒரு கதை கூறப் படுகிறது. அந்தணன் ஒருவன் வேலூர் அரசனது நோயை அகற்றி, அவனிடமிருந்து அளவள்ள செல்வம் பெற்றான்: தெற்கே வந்து அறச் செயல் புரிய நினைந்து அகத்தியரிடம் யோசனை கேட்டான். அகத்திய முனிவர் பொருநையின் குறுக்கே அணை ஒன்று கட்டும்படி அவனிடம் கூறினார்: அணைக் கட்டிலிருந்து கால்வாயின் போக்கை உணர்த்தப் பசு ஒன்றை அனுப்பினார்! பசு சென்ற நெறியே கால்வாய் வெட்டப்பட்டது. அது படுத்த இடத்தில் குளம் கட்டப்பட்டது. அவ்வணை 14,16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கால்டுவெல் பாதிரியார் கருதுகின்றார். அரியநாயகபுரம் அணைக்கட்டு இவ்வணை, கன்னடியன் அணைக்கு ஆறுகல் தொலைவில் உள்ள அரியநாயகபுரத்தில் கட்டப்பட்டுள்ளது. நாயக்கர் அரசியல் தளவாயாக இருந்த அரியநாத முதலியாரால் இது கட்டப்பட்டது. ஆதலின் இப்பெயர் பெற்றது என்று அறிஞர் அறைகின்றனர். ஆற்றின் வலப்பக்கத்தில் கோடகன் கால்வாய்க்கு இவ்வணையிலிருந்து நீர் செல்லுகிறது. இதுகாறும் கூறப்பெற்ற நான்கு அணைக்கட்டுகளும் அம்பாசமுத்திரம் தாலூகாவில் அமைந்திருப்பவையாகும். பழவூர் அணைக்கட்டு இது திருநெல்வேலித் தாலூகாவில் உள்ளது. இங்குப் பொருநையாற்றின் வலக்கரையிலிருந்து பாளையன் கால்வாய் புறப்படுகின்றது. இக்கால்வாய் 27 கல் நீளம் உள்ளது. இக் கால்வாய்க்கு நீர் வழங்க இவ்வணைக்கட்டு உதவுகிறது. பச்சையாறு, இக்கால்வாய் வெட்டப்பட்ட பின்பு இதனிற்றான் `கருவை என்னுமிடத்தில் கலக்கின்றது. சுத்தமல்லி அணைக்கட்டு இதுவும் திருநெல்வேலித் தாலூகாவில் உள்ளது. இங்கு ஆற்றின் இடக்கரையில் பதினேழு கல் நீளமுள்ள திருநெல்வேலிக் கால்வாய் இவ்வணையிலிருந்து செல்கிறது. இந்த அணை ஆற்றின் குறுக்கே மிகச் சாய்வாகக் கட்டப்பட்டிருப்பதால், ஆற்றின் அகலத்தைவிட இதன் அகலம் நான்கு மடங்கு மிகுந்திருக்கிறது. மருதூர் அணைக்கட்டு இதுதான் பழைய அணைக்கட்டுகளில் மிகப் பெரியது. இது முக்கால் கல் நீளத்தில் குதிரை லாட வடிவில் அமைந் துள்ளது. இஃது இங்குள்ள மக்களால் படிப்படியாகச் செம்மைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இது 1808-இல் பழுது பார்க்கப்பட்டது. ஆற்றின் வலப்புறத்தில் கீழக்கால் என்னும் கால்வாய் வழியாகவும், இடப்புறத்தில் மேலக்கால் என்னும் கால்வாய் வழியாகவும் நீர்பாய இவ்வணை உதவுகிறது. இவ்வணை முன் சொல்லப்பெற்ற அணைக்கட்டுகளைவிட மிகுதியான அளவில் நீர்ப்பாசனத்திற்கு உதவுகிறது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு இஃது ஆங்கிலேயர் ஆட்சியின்பொழுது கட்டப்பட்டது. இவ்வணைக்கட்டு மூலம் பயிராகும் நிலத்தில் ஏறத்தாழ 12,800 ஏக்கர். மருதூர்க் கீழக்கால்வாய் மூலம் நிர;மபும் குளங்களால் பயிராக்கப்பட்டு வந்தது. மேலும், ஆற்றிலிருந்து நேரடியாகக் கால்வாய்கள் மூலம் கொற்கைக் குளம், ஆற்றூர்க் குளம் முதலியவை நிரம்பிப் பாசனத்துக்குப் பயன்பட்டு வந்தன. ஆனால் இவை ஒழுங்காக நன்முறையில் பயன்படவில்லை. ஆதலின் 1855-இல் கேப்டன் ஹார்லி என்ற பொறியர் இதுபற்றி ஒரு திட்டம் கொண்டுவந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் அணைக்கட்டு ஒன்று கட்டி, வடக்கே தூத்துக்குடியிலிருந்து தெற்கே குலசேகரப்பட்டினம் வரையில் நீர்ப்பாசனத்துக்கும் படகுப் போக்குவரவுக்கும் ஏற்பாடு செய்வதே அதன் நோக்கம், அணைக்கட்டின் மேலே ஒரு பாலம் கட்டவும் தூத்துக்குடிக்குக் குடிநீர் தரவும் திட்டம் தீட்டப்பட்டது. அத்திட்டம் அரசாங்கத்தினரால் ஏற்கப்பட்டது. 1857-இல் சிப்பாய்க் கலகம் குறுக்கிடவே, இத்திட்டம் நின்றது. பக்கிள் (Puckle) என்பவர் 1866-இல் விவசாயிகளை ஊக்கப்படுத்தி, அவர்களிடமிருந்து 20,000 ரூபாய் வசூலித்தார். பாளையங்கோட்டையில் இருந்த பழைய கோட்டையிலிருந்து கற்கள் முதலியன அங்குக் கொண்டு செல்லப்பட்டன. 1868-இல் தண்ணீர்த் தட்டு ஏற்பட்டதால் உடனடியாக ஒரு கால்வாய் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டது; படகுப் போக்குவரவுக்கு வழி செய்யும் திட்டம் மட்டும் கைவிடப்பட்டது. 8.31 லட்சம் ரூபாயில் முப்பத்து மூவாயிரம் ஏக்கர் நிலம் பயிர் செய்யப்படலாம் எனத் திட்டமிடப்பட்டது. எதிர்பார்த்த வசதிகள் அமையாததால் இத்திட்டம் 1871-இல்தான் முடிக்கப்பட்டது. 1874-இல் தூத்துக்குடிக்குக் குடிநீர் ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டன. 1875-இல் ஆற்றின் தென்பாகத்தில் அறுபதாயிரம் ரூபாய் செலவில் ஐந்து குளங்கள் அமைக்கப்பட்டன. அணைக்கட்டு விபரம் இவ்வணையின் நீளம் 1380 அடி. இது உச்சியில் 7 1/2 அடி அகலமுள்ளது. இப்பொழுதுள்ள பாலம் 1890-இல் கட்டி முடிக்கப்பட்டது. அணைக்கட்டிலிருந்து வடகால், தென்கால் என்னும் இரு கால்வாய்கள் நீரைக்கொண்டு செல்கின்றன, வடகால்வாயிலிருந்து பிரியும் முதற் கால்வாய் கொற்கை வரையிற் செல்கின்றது. கொற்கைக்கு அப்பால் வடகால்வாயின் நீர் ஆறுமுகமங்கலக் குளம், பேய்க்குளம் முதலியவற்றை நிரப்பிப் பாசனத்திற்கு உதவுகிறது, தெற்குக் கால்வாய் கடம்பாக் குளம், ஆற்றூர்க்குளம், கீரனூர்க் குளம் முதலியவற்றை நிரப்புகிறது. அடிக்கடி அழிவு நேரிடுவதைத் தடுக்க ஆற்றின் கரைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குளங்கள் மிக்க அளவில் நீரைக்கொள்ள, உயர்ந்த கரைகளை எழுப்பி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் முதன் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டபோது பொருநையாறு திருநெல்வேலி மாவட்டத்தின் தேவையை நிறைவாக்கும் என்று அரசினர் நம்பினர்: ஆயின், இவ்வேற்பாடுகள் போதா என்பதை விரைவில் உணர்ந்தனர்., சில ஆண்டுகளில் உழவர்க்கு நீர் வேண்டும் காலங்களில் அணைக்கட்டுகளில் போதிய நீர் கிடைக்கவில்லை. ஆதலின் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டை மேலும் பெரிதாக்க முயற்சி செய்யப்பட்டது. அம்முயற்சியின் விளைவாக, நீர்ப் பாசன வசதி பெறும் நிலங்கள் மிகுதிப்பட்டன. பாபநாசம் நீர்த்தேக்கத் திட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு நீர்ப்பாசத் தேவைகளை முற்றிலும் நிறைவாக்க முடியாததால், ஆற்று வழியில் மலைமீதே ஒரு நீர்த்தேக்கட் கட்டும் யோசனை உருவெடுத்தது. வெள்ளக் காலத்தில் பெருகும் நீரை வீணாகவிடாது தேக்கி வைத்து நன்கு பயன்படுத்துவதே அதன் நோக்கம். ஹார்லி துரைமகனார் முதன்முதல் இதற்குத் திட்டமிட்டார். சொரிமுத்தையன் கோவிலுக்கு மேற்பகுதியில், பாபநாச அருவிக்கு ஐந்து கல் தொலைவுக்கு அப்பால், ஆற்றின் அகலம் 300 அடி இருக்கும் இடத்தில் 50 அடி உயரத்துக்கு அணை ஒன்றைக் கட்டி நீரைத் தேக்குவதே அவரது திட்டமாகும்: மேலும், படகுப் போக்கு வரவுக்கு வசதி செய்து தூத்துக்குடி, புன்னைக்காயல், குரசேகரப்பட்டினம் முதலிய கடற்கரை ஊர்களுடன் அம்பா சமுத்திரத்திலுள்ள ஊர்களை இணைக்க விரும்பினார். ஆயின், அவரது திட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. பக்கிள் என்ற அறிஞர் 1872-இல் இத்திட்டத்தைச் சில மாறுதல்களுடன் அரசினர் பார்வைக்குக் கொணர்ந்தார். நார்பர் (Norfor) என்பவர் சொரிமுத்தையன் கோவிலுக்கு அருகிலுள்ள இடத்தைப் பார்வையிட்டு, அவ்விடம் போதிய நீரைத் தேக்கி வைக்க ஏற்றதன்று என்று கூறிவிட்டார். 1875-இல் தண்ணீர்த் தட்டு ஏற்பட்டது. அப்பொழுது மேஜர் மல்லின் (Major Mullins) என்ற அறிஞர் பாபநாசத்துக்கு அருகில் பொருநை இரண்டு கிளைகளாகப் பிரியுமிடமே அணை அமைக்க ஏற்ற இடம் என்று கூறினார். ஆயினும் உருப்படியாக ஒன்றும் தொடங்கப்படவில்லை. இவ்வாறு மாவட்ட அதிகாரிகள் பலமுறை முயன்றும் அரசினர் புதிய அணைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. மலைமீது பொருநையாற்றில் பாம்பாறு, கௌடலை யாறு, காரியாறு, மயிலாறு என்பன சேர்ந்து நீர் பெருகிவரும் இடமே அணைகட்டத்தக்க இடம் என்று பொறிவல்லுநர் முடிவு செய்தனர்; அங்குத் தேக்கப்படும் நீரை ஆற்றுப் போக்கிலேயே விட்டுக் கலியாண தீர்த்தத்திற்கு மேற்பகுதியில் அமைந்த பள்ளத்தாக்கில் மற்றோர் அணை கட்டவும் முடிவு செய்தனர்; 1938-ஆம் ஆண்டு இவ்வேலைக்குத் திட்டமிட்டனர்; 1944-இல் வேலையின் ஒரு பகுதியை முடித்தனர்; 1952-இல் மற்றொரு பகுதியை முடித்து விட்டனர். மேலணை மலை அடிவாரத்திலிருந்து ஏறத்தாழ எட்டுக்கல் தொலைவில் மேலணை அமைந்துள்ளது. ஆற்றின் போக்கில் இயற்கையாக அமைந்துள்ள மலைகளையே சுவர்களாகக் கொண்டு, சுவர் இல்லாத பகுதியில் சுவர் எழுப்பி இத்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கட்டப்பட்டுள்ள அணையின் நீளம் 744 அடி. அணை உச்சியின் அகலம் 15 அடி. இவ்வாறு தேக்கப்பட்டுள்ள நீர், தேக்கத்தின் அடியிலுள்ள குழைகள் வழியாகப் பொருநையாறு என்ற பெயரில் வெளிவருகிறது. கீழணை இங்ஙனம் கீழ்நோக்கி வரும் பொருநையாற்றில் சேர்வையாறு என்னும் துணையாறு வந்து கலக்கிறது. இதற்கு அப்பால், முன் கூறப்பெற்ற கலியாண தீர்த்தத்திற்கு மேற்பகுதியில் அமைந்துள்ள பள்ளத்தாக்கில் கீழணை கட்டப்பட்டுள்ளது. முன்பு இப்பள்ளத்தாக்கின் வழியே சென்ற பொருநையாறு கலியாண தீர்த்தம் என்னும் இடத்திலிருந்து அருவியாக விழுந்து வந்தது. கீழணை கட்டப்பட்ட பிறகு, பழைய ஆற்றின் போக்குத் தடைப்பட்டு விட்டதால்: முன்பு புகழ் பெற்றிருந்த அருவி இப்பொழுது காணக்கூடவில்லை. அப்பகுதி காய்ந்து கிடக்கிறது. கீழணையின் நீர் மட்டம் மிகுதிப்படும் பொழுதுதான் அப்பக்கத்தில் அருவி நீரைக் காண இயலும், சுருங்கக் கூறின், இந்நீர்த் தேக்கத் திட்டத்தால் பாபநாச அருவி மறைந்து விட்டது எனலாம். ஆயினும் அருவி என்னும் பெயரொன்று இருக்கவேண்டும் என்று எண்ணிச் சிறிதளவு நீர், தேக்கத்திலிருந்து ஓர் இடுக்கு வழியே விடப்படுகிறது. அந்த நீர் உருண்டோடி வந்து, `அகத்தியர் அருவி என்னும் பெயருடன் மிகச் சிறிய அளவில் பிறிதோர் இடத்தில் விழுகின்றது. கீழணையால் நீர் தேக்கப்பட்டுள்ள இடம், நீர் தேக்கப்படுவதற்கு முன்பி ஓட்டன் தளம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இந்த இடத்தில் சிறுத்தை, புலி முதலிய கொடிய விலங்குகள் நீர் குடிப்பது வழக்கம். அணை கட்டத் தொடங்கியபிறகு இவை நூற்றுக் கணக்கில் சுடப்பட்டன. அந்த இடத்தில் பேய்ச்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது. அக் கோவிலில் இருந்த அம்மன் சிலை ஒன்று புதிதாகக் கட்டப் பட்டுள்ள கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி நிலையம் கீழணையால் பொருநையின் பழைய போக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுவிட்டது. இங்ஙனம் தடுக்கப்பட்ட ஆற்று நீர், கீழணையின் அடியில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய குழைகள் வழியே 3596 அடி நீளம் மலைச் சரிவில் கீழ்நோக்கிச் செல்கிறது. ஒவ்வொரு குழையின் உள் அகலம் 9 அடி. ஓரு குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் இந் நீர் நான்கு சிறிய குழைகள் வழியே கீழ்நோக்கி இறங்குகின்றது. இந்த ஒவ்வொரு குழையின் நீளம் 648 அடி. குழையின் உள் அகலம் 5 3/4 அடி. இந்நான்கு குழைகளும் கீழ்நோக்கிச் செல்லும் கடைசி இடத்தில் மின்சார உற்பத்தி நிலையம் கட்டப்பட்டுள்ளது. அந்நிலையம் மூன்ற அடுக்குகளைக்கொண்டது. குழை வழியே வரும் நீர், நிலையத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுக் குழையில் வேகமாகச் சுழன்று கீழே விழுகின்றது. இவ்வாறு நான்கு குழைகளிலுமிருந்து வந்து சுற்றிக் கீழே விழும் நீர் ஒரு சிற்றாறாக வெளிப்படுகின்றது. இந்த நீரே இன்று பொருநை நீராய்க் கருதப்படுகின்றது. இந்நீர்ப் போக்குச் சிறிது தூரம் சென்ற பின்பு, பழைய பொருநைப் போக்கில் கலந்துவிடுகின்றது. அணைகளின் நோக்கம் நீர்ப்பாசனத்திற்கு வேண்டும்பொழுது தண்ணீரை விடவும்,, அதேசமயத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வேண்டும் மின்சாரத்தை உண்டாக்கவும் அந்த இரண்டு அணைகளும் மலைமீது கட்டப்பட்டுள்ளன. இம் முயற்சியால் பழைய ஆற்றின் போக்குத் தடைப்பட்டு விட்டது: அருவியின் பேரழகு கெட்டுவிட்டது. ஆயினும், மக்கள் நலன் கருதி இவ்வணைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை நாம் மறத்தலாகாது. இங்குள்ள மின்சார நிலையத்தில் உண்டாக்கப்படும் மின்சாரம், தென்காசி, இராஜபாளையத்திற்கும், மதுரைக்கும், கோவில்பட்டிக்கும், தூத்துக்குடிக்கும் பிற இடங்களுக்கும் செல்லுகிறது. இம் மின்சாரப் போக்கு பைக்காரா மின்சாரப் போக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்ஙனம் பொருநையாறு வயல்களுக்குப் பயன்படுதல் போல் ஒளி வழங்கவும் பயன்படுகிறது என்பதை அறிய, இதற்கு நாம் மிகுதியும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா? மணிமுத்தாறு நீர்த்தேக்கம் சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த மலைப் பகுதியில் இரண்டு சிற்றாறுகள் தோன்றுகின்றன. ஒன்று கீழ் மணிமுத்தாறு: மற்றொன்று மேல் மணி முத்தாறு. இவ்விரண்டும் ஒன்று சேர்ந்து மணிமுத்தாறு என்ற பெயருடன் மலைப் பகுதிகளைத் தாண்ட வெளி வருகிறது. அங்ஙனம் வெளிவரும் இடத்தில் இவ்யாற்றின் நீரைத் தேக்க அணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அரைச் சந்திரன் வடிவத்தில் இத்தேக்கம் அமைந்திருக்கிறது. மூன்று பக்கங்களிலும் மேற்கு மலைத்தொடர் அரணாக அமைந் துள்ளது: ஒரு பக்கம் பலமான சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இவ்விடம் கல்லிடைக்குறிச்சிக்கு ஆறு கல் தொலைவில் இருக்கின்றது. இவ்வணையின் நீளம் ஏறத்தாழ இரண்டலை மைல். அணையின் நடுப்பகுதி சிமெண்டால் கட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து இருபக்கங்களிலும் மண் அணை கட்டப் பட்டுள்ளது. சிமெண்ட் அணையின் உயரம் 137 அடி. இந்த அணையின் அடியில்தான் மணிமுத்தாறு செல்கின்றது. மண் அணையின் மிகுதியான உயரம் 100 அடி. அறுபது சதுரமைல் பரப்பிலிருந்து பெய்யும் மழை நீர் இத்தேக்கத்தில் பெருகி நிற்கும். இந்த அணையின் ஒரு கோடியிலிருந்து முப்பதுமைல் நீளமுள்ள கால்வாய் தெற்கு நோக்கி வெட்டப்பட்டுள்ளது. இக்கால்வாயி லிருந்து ஆங்காங்கு பன்னிரண்டு கிளைக் கால்வாய்கள் வெட்டப்படும். இக்கால்வாய் வழியே விடப்படும் நீர் அம்பாசமுத்திரம் தாலூகாவில் எழுபத்தைந்து குளங்களையும், திருநெல்வேலித் தாலூகாவில் முப்பத்திரண்டு குளங்களையும், ஸ்ரீவைகுண்டம் தாலூகாவில் பதினெட்டுக் குளங்களையும், நாங்குநேரித் தாலூகாவில் நூற்று இருபத்திரண்டு குளங் களையும், திருச்செந்தூர்த்தாலூகாவில் எழுபத்து நான்கு குளங்களையும் நிரப்புமாம். இந்த அணைக்கட்டினால் எண்பத்து மூவாயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாச வசதி ஏற்படும் பழைய குளங்களினால் பயனடையும் இருபதினாயிரம் ஏக்கர் நிலங்களை இத்தேக்க நீர் செழிக்கச் செய்யும். இந்த நீர்த்தேக்க வேலை ஐந்தாண்டுகள் நடைபெற்றது. 4. பொருநை நாட்டு வரலாறு இன்றுள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி என்னும் மாவட்டங்கள் சேர்ந்த நிலப் பகுதியே பழைய பாண்டிய நாடாகும். இப்பாண்டிய நாட்டின் தென் பகுதியில்தான் பொருநை ஆறு பாய்கின்றது. பொருநை ஆறு பாய்ந்து வளப்படுத்தும் பாண்டிய நாட்டுப் பகுதியை நாம் `பொருநை நாடு என்று அழைக்கலாம். இப்பகுதியும் பாண்டிய நாட்டினதே. ஆதலின், பாண்டிய நாட்டு வரலாறே பொருநை நாட்டு வரலாறு ஆகும். சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ 1800 ஆண்டுகட்கு முற்பட்ட காலமே `சங்க காலம் என்று கூறப்படுவது. அக்காலத்திற்றான் தொல்காப்பியம், திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் முதலிய நூல்கள் இயற்றப்பட்டன. அந்நூல்களி லிருந்தும் வட இந்தியா நூல்களிலிருந்தும் கல்வெட்டுக்களிலிருந்தும் அயல் நாட்டார் குறிப்பிகளினின்றும் சங்க காலப் பாண்டியர் வரலாற்றை ஒருவாறு நாம் அறியலாம். சங்க காலப் பாண்டியர் பலராவர். அரசனுக்கு உதவியாக ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற இரண்டு பேரவையினர் இருந்து நாட்டு ஆட்சியைக் கவனித்து வந்தனர். நாட்டில் யானைப்படை, குதிரைப் படை, தேர்ப்படை, காலாட்படை என்னும் நாவ்வகைப் படைகளும் இருந்தன. அரசர் அவ்வப்போது தம் நாட்டின் மீது படையெடுத்து வந்த அயலாரைப் புறங்கண்டு நாட்டைப் பாதுகாத்தனர்: ஆறுகளிலிருந்த வாய்க்கால்களை வெட்டு வித்தனர்: மழை நீர் தேங்கி இருக்கத் தக்க பெரிய ஏரிகளை அமைத்தனர்; குடிகளது நல் வாழ்வில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். சங்க காலப் பாண்டியர் தலைநகரம் வையையாற்றங் கரையில் அமைந்துள்ள மதுரையாகும். அவர் தம் துறைமுகப் பட்டினம் பொருநை ஆறு கடலொடு கலக்கும் இடத்தில் அமைந்திருந்த கொற்கை என்பது. பாண்டியரது கொடி மீன் கொடி; அரசாங்க முத்திரை மீன்; பாண்டியர் மாலை வேப்பம்பூ மாலை. பாண்டிய நாட்டில் பாண்டிய அரசனுக்கு உதவியாகச் சிற்றரசர் பலர் இருந்தனர். கோடைக்கானல் மலையை ஆண்டு வந்து கோடைப் பொருநனும், பறம்பு மலைநாட்டை ஆண்டு வந்தி பாரியும், பொதினி மலைநாட்டை ஆண்டு வந்த பேகனும், பொதிய மலை நாட்டை ஆண்டு வந்த ஆய் அண்டிரனும் சிற்றரசருள் குறிக்கத் தக்கவர். சங்க காலத்தில் தமிழரசர் மூவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போரிட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. சோழன் கரிகாலன் சேர பாண்டியரை வென்றான்; சேரன் செங்குட்டுவன் சோழ பாண்டியரை வென்றான்; தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேர சோழரையும் அவருக்கு உதவியாக வந்த ஐம்பெருவேளிரையும் வென்று வாகை சூடினான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த ஆரியரை வென்று அழியாப் புகழ்பெற்றான். இடைக் காலம் ஏறத்தாழக் கி.பி. 300-இல் தொண்டை நாடு பல்லவர் என்ற புதிய மரபினர் ஆட்சிக்கு உட்பட்டது. அவர்களால் தாக்குண்டு தெற்கே வந்த களப்பிரர் சோழ நாட்டையும், பாண்டிய நாட்டையும் கைப்பற்றினர். இவர்கள் காலத்தில் பாண்டிய நாடு குழப்பமுற்றது. ஏறத்தாழக் கி.பி. 575-இல் இக்களப்பிரரை ஒழித்துக் கடுங்கோன் என்ற பாண்டியன் மதுரையில் அரசு கட்டில் ஏறினான். அவன் மரபினர் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்து பாண்டிய நாட்டை ஆண்டு வந்தனர். அக்காலப் பாண்டியருள் அரிகேசரி என்ற நெடுமாறன், முதலாம் வரகுணன், இரண்டாம் வரகுணன் என்பவர் குறிக்கத் தக்கராவர். அக்காலத்தில் சோழர் பல்லவர்க்கு அடங்கி மிகச் சிறிய நிலப் பகுதியை ஆண்டு வந்தனர்; பாண்டியருடன் மணவுறவு கொண்டிருந்தனர். பாண்டியர்பல்லவருடனும், சாளுக்கியருடனும் அடிக்கடி போர் நிகழ்த்த வேண்டி யவராயினர். நெடுமாறன், பல்லவனை வென்ற முதலாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய வேந்தனை நெல்வேலி என்ற இடத்தில் வெற்றி கண்டான்; அதனால் `நெல்வேலி வென்ற நெடுமாறன் எனப் பெயர்பெற்றான், முதலாம் வரகுண பாண்டியன் பல்லவரைப் பல இடங்களில் வென்று வாகை சூடினான். இரண்டாம் வரகுணன் பல்லவரை எதிர்த்துப் பல இடங்களில் போர் செய்தான்; இறுதியில் கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் என்னும் இடத்தில் நடைபெற்ற கொடிய போரில் தோல்வியுற்றான். இப்போருக்குப் பின்பு பல்லவராட்சி ஒழிந்து சோழராட்சி தலை தூக்கியது. சோழப் பேரரசர் கி.பி 10-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு முடிய ஏறத்தாழ 300 ஆண்டுகள் தென் இந்தியாவில் பேரரசு செலுத்தினர். கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாண்டிய நாடு சோழர் ஆட்சிக்கு உட்பட்டது. முதலாம் இராசராசன் (கி.பி. 985-1012) காலம் முதல் சோழப் பேரரசு மறையும் வரையில் பாண்டிய நாட்டிற்கு இராசராசப் பாண்டியநாடு என்று பெயர் வழங்கிற்று. சோழப் பேரரசை ஏற்றுக்கொண்ட பாண்டியர் சோழர் பிரதிநிதிகளாக இருந்து நாடாள அநுமதிக்கப்பட்டனர். அங்ஙனம் இருக்க இசையாது பலர் சோழருடன் ஓயாது போர் தொடுத்தனர். அதனால் சோழர்கள் கோட்டாறு முதலிய பாண்டிய நாட்டுப் பகுதிகளில் நிலப்படைகளை வைத்து அந்நாட்டின் எழுச்சியை அடக்கி வைத்தனர்; தம் உறவினரைச் `சோழ-பாண்டியர் என்ற பெயருடன் பாண்டிய நாட்டை ஆளச் செய்தனர். இக்காலத்தில் பாண்டியர் சேரரோடு மணவுறவு கொண்டனர்; இலங்கை மன்னருடன் நட்புக் கொண்டனர்; இலங்கை மன்னருடன் சேர்ந்து சோழ ஆதிக்கத்தை எதிர்த்தனர். கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் பாண்டிய மன்னானக இருந்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் (கி.பி. 1216-1238) காலத்தில் பாண்டியர் செல்வாக்கு நெல்லூர் வரையிலும் பரவியது. இவன் சோழப் பேரரசனை வென்று, மீணடும் அவனுக்கே சோழ அரசை வழங்கிய பெருமை உடையவன். இவனுக்குப் பின் வந்த அரசர்கள் மிக்க புகழ் உடையவர்கள். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268-1311) என்பவன் பாண்டியப் பேரரசனாக இருந்த பொழுதுதான் மார்க்கோபோலா என்ற வெனீசு நகரத்து வணிகரும் வாசப் என்று முலிம் வரலாற்று ஆசிரியரும் பாண்டிய நாட்டைப் பார்வையிட்டனர். கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அல்லாவுதீன் கில்ஜியின் மடைத்தலைவரான மாலிக் காபூர் என்பவர் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்து வந்து, பல நகரங்களைக் கொள்ளியிட்டுப் பெரும் பொருளைத் திரட்டிச் சென்றார். இந் நிகழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர் சிறப்புக் குறையத் தொடங்கியது. முலிம்கள் ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் மதுரையை ஆண்டனர். பிற்காலம் பின்னர் விசய நகர வேந்தர் படையெடுத்து வந்தமையால் பாண்டிய நாடு பாண்டியர் ஆட்சிக்கு வந்தது. ஆயினும் அரச மரபினருள் ஒற்றுமை இன்மையால் அடிக்கடி பாண்டிய ரிடையே உள்நாட்டுப் பூசல்களும், குழப்பங்களும் மிகுந்தன. இக்குழப்ப காலத்தில் சேர மன்னர் மேற்கு மலைத்தொடர் வழி யாகப் பாண்டிய நாட்டில் நுழைந்து களக்காடு, சேர்மாதேவி முதலிய பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். இறுதியில் இந்நாடு விசயநகர வேந்தரின் பிரதிநிதிகளாக வந்த நாயக்கர் ஆட்சிக்கு உட்பட்டது. விசயநகரப் பேரரசு அழிவுற்ற பின்பு மதுரையை ஆண்டு வந்த நாயக்கர் வலுப் பெற்றனர். அவர்களது ஆட்சி கி.பி. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் பாண்டிய நாட்டில் நிலைத்திருந்தது. நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தெலுங்கு நாட்டில் இருந்துவந்த படைத்தலைவர்கள் பாண்டிய நாட்டின் பல பகுதிகளில் பரவினர். நாயக்க ம்ன்னர் அப்படைத் தலைவர் களையும் அவர்கட்கு முன்னரே இந்நாட்டில் இருந்த சிற்றரசர் களையும் பாளையக்காரராக மாற்றினர்; ஒவ்வொருவருக்கும் சில கிராமங்களின் ஆட்சி உரிமையை வழங்கினர்; வேண்டும் போது தங்ககட்குப் படை உதவி செய்யுமாறும் ஏற்பாடு செய்தனர். இந்த ஏற்பாடு சிறிது காலம் செவ்வையாக நடைபெற்றது. நாயக்கர் ஆட்சிக்குப் பிறகு கி.பி. 18-ஆம் நூற்றாண்டில், தமிழகம் கருநாடக நவாப்பின் ஆட்சிக்கு உட்பட்டது. அக்காலத்தில் இங்கு வாணிகத் புரிய வந்த ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் இந்நாட்டு அரசியலில் புகுந்து, இரண்டு கட்சிகளை உண்டாக்கினர். இக்கட்சியால் பல ஆண்டுகள் இந்நாடு சீர்கெட்டது; அமைதியற்ற நிலை பரவியது. இறுதியில் ஆங்கிலேயர் தமது முயற்சியில் வெற்றி பெற்றனர். பாண்டிய நாட்டில் பாளையக்காரரிடம் வரி வசூலிக்கும் உரிமையைக் கர்நாடக நவாபு ஆங்கிலேயரிடம் ஒப்புவித்தார். அப்பொழுது தான் பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த கட்டபொம்ம நாயக்கரும், அவரைச் சேர்ந்த பாளையக்காரரும் ஆங்கிலேயரிடம் வரி செலுத்த மறுத்தனர்; எட்டையபுர மன்னரும், அவரைச் சேர்ந்த பாளையக்காரரும் ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தனர். பல வீரச் செயல்களுக்குப் பின்னர்க் கட்டபொம்ம நாயக்கர் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டார். பாண்டிய நாட்டில் நடைபெற்ற கொள்ளைகளும் குழப்பங்களும் ஆங்கிலேயரால் அடக்கப் பட்டன. ஆங்கில ஆட்சி ஏற்பட்ட பின்பு நாட்டில் அமைதி நிலவத் தொடங்கியது. ஆங்கில ஆட்சிக்குப் பிறகு இன்று நமது ஆட்சி நடைபெறுகின்றது. 5.பொருநைக்கரை ஊர்கள் பாபநாசம் பொதிய மலையில் தோன்றி, மலைமீதுள்ள காடு களிடையே பதினைந்து கல் பிரயாணம் செய்துவரும் பொருநை, முன்னூறு அடி உயரத்திலிருந்து கீழே உள்ள பாறைகள்மீது அருவியாகச் சில ஆண்டுகட்க முன்புவரை விழுந்துவந்தது. அது விழுந்த இடத்திற்கு இருபக்கங்களிலும் மலைப் பாறைகளும் அவற்றின்மீது காடுகளும் இருந்து அருவிக்கு அழகு செய்தன. பேரழகுடனும் பேரொலியுடனும் கீழே விழுந்த அருவி நீரில் நீராடுவோர்க்குப் பாபம்விநாசம் ஆகும் என்பது பண்டையோர் நம்பிக்கை. ஆதலால் இந்த அருவி விழுந்த இடத்திற்குப் `பாபவிநாசம் எனப் பெயரிட்டனர். அப்பெயரே நாளடைவில் `பாபநாசம் என மருவி வழங்கப்படுகின்றது. அருவியின் அருகே அகத்தியர் கோவில் ஒன்று இருக்கிறது. ஒரு காலத்தில் சிவபிரானுக்கும் உமையம்மைக்கும் திருக்கயிலாயத்தில் திருமணம் நடந்தது. அதைக் கண்டு களிக்க உலகத்தார் அனைவரும் திருக்கயிலையிற் கூடினர். அதனால் தென்னாடு உயர்ந்து வடபகுதி தாழ்ந்தது. உயர்ந்த தென் பகுதியைச் சமப்படுத்தச் சிவபெருமான் அகத்தியரைத் தென் னாட்டிற்கு அனுப்பினார்; தமது திருமணச் சிறப்பைக் காணக் கூடவில்லையே என்று வருந்திய அகத்தியருக்கு, அவர் சென்று தங்கும் இடத்தில் தமது திருமணக் கோலத்தைக் காட்வதாகச் சிவபெருமான் வாக்களித்தார். அகத்தியர் தென்னாடு வந்து நிலத்தைச் சமப்படுத்திப் பொதிய மலையில் தங்கிவிட்டார். சிவபெருமான் வாக்களித்ததற்கு ஏற்ப, இப்பொழுது ஆண்டு தோறும் அருவியின் அருகிலுள்ள அகத்தியர் கோவிலிலிருந்து அவரது உருவச் சிலை பாபவிநாச ஈசுவரர் கோவிலுக்குத் திருமண நாளில் எடுத்துச் செல்லப்படுகிறது. இது தல வரலாறு தெரிவிக்கும் செய்தி. ``அகத்தியர் கோவிலுக்கு அருகில் அகத்தியர் முதலிய முனிவர் பலர் இருந்தனர்; இங்குள்ள மூலிகைகளின் குணங் களை ஆய்ந்தனர்; பல மருத்துவ நூல்களை எழுதினர். இந்த மூலிகைகளில் அடிபட்டு வருவதால்தான் பொருநையாற்று நீருக்கு நோய்களைப் போக்கும் ஆற்றல் இருக்கிறது. இங்குள்ள ஒவ்வொரு வகைப் பச்சிலையையும் எடுத்துக் கதம்பமாகச் சேர்த்துக் கறி சமைத்து உண்ணின், பல நோய்கள் நீங்கம், என்று மக்கள் கூறுகின்றனர். அருவிக்கும் ஒரு கல் தொலைவில் பாபவிநாச ஈசுவரர் கோவிலும் பல மண்டபங்களும் சத்திரங்களும் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ளன. அருவியில் நீராடவரும் மக்கள் கோவிலுக்குப் பலவகைக் காணிக்கைகள் செலுத்து கின்றனர். சித்திரை விழா சமயத்தில் பத்து நாட்கள் இங்குத் திருவிழா நடைபெறுகிறது. கோவில் நல்ல முறையில் அமைந்துள்ளது. சிவன் கோவிலை அடுத்துள்ள ஆற்றுப் பகுதியில் நூற்றுக்கணக்கான மீன்கள் இருக்கின்றன. அவை கோவிலுக்கு வந்து செல்லும் மக்கள் போடும் உணவுப் பொருள்களை உண்டு வாழ்கின்றன. இக்காட்சி உள்ளத்திற்கு உவகை ஊட்டுவதாகும். பாபநாசத்திற்கு மேல் பாபநாசத்திற்குமேல் உள்ள மலைப் பகுதியில் பத்துக்கல் நீளம் வரையில் மோட்டார் செல்லத்தக்க பாதை ஒன்று மிக நல்ல முறையில் போடப்பட்டுள்ளது. அப்பாதை முடிவு பெறும் இடத்தில் பொருநையாற்றின் குறுக்கே மேலணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மேலணையிலிருந்து ஆறு கல் தெற்கே ஆற்றின் போக்கில்-கலியாண தீர்த்த அருவி விழும் இடத்திற்கு அருகில் பாபநாசத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் கீழணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. மின்சாரத்தைத் தோற்றுவிப்பதற்கென்றே இந்த இரண்டு அணைக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வணைகள் அமைந்துள்ள இடங்களில், அணைத்தொடர்பான அலுவலரும் மின்சார நிலையத்தில் வேலை செய்பவரும், வசிப்பதற்குரிய சிற்றூர்கள் அமைந்திருக்கின்றன. கீழணையிலிருந்து மேலணைக்குச் செல்லும் பாதையில் இரண்டு கல் தொலைவில் சேர்வையாறு வந்து பொருநையிற் கலக்கின்றது. அவ்விடம் முண்டன்துறை எனப் பெயர் பெறும். அவ்விடத்தில் காட்டு வளமனை (Forest Bangalow) ஒன்று கட்டப் பட்டுள்ளது. இவ்வளமனையைச் சுற்றியுள்ள காடு கண்ணுக்கு விருந்தளிக்க வல்லது. மேலணைக்கு மேற்புறமாக மூன்று கல் தொலைவில் வான தீர்த்தம் அமைந்துள்ளது. இஃது அமைந்துள்ள இடத்தை இயற்கையன்னையின் இதயம் என்று இயம்பலாம். இங்கு மக்கள் மிக முயன்று வந்து நீராடுவர். வழி கடுமையும் கொடுமையும் நிறைந்தது. ``வாழ்நாளைக் கொடுத்து வானதீர்த்தம் ஆடு என்னும் பழமொழி இன்றும் வழங்கி வருகின்றது. இதனால் இவ்வருவிக்குச் செல்வது எவ்வளவு கடினம் என்பது நன்கு புலனாகும். இவ்வருவி நீர் உடல் வலியை நீக்கும்; மலையின் உட்பகுதியிலிருந்த வருவதால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். வான தீர்த்தத்திற்கு ஐந்து கல் தொலையில், நடுக்காட்டில், `கன்னி கட்டி என்னும் இடத்தில், காட்டு நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. கட்டளை மலைத் தோட்டத்தின் வழியேதான் இதற்குச் செல்லுதல் வேண்டும். மேலணைக்குப் பக்கத்தில் சொரிமுத்தையன் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு ஆண்டு தோறும் திரளான மக்கள் ஆடி அமாவாசைதோறும் செல்கின்றனர். அப்பகுதியில் அடர்ந்த காடுகள் நிரம்ப உண்டு. கட்டனை மலைக்கு அப்பால் இருப்பது கோட்டை மலை. அதன்மீது ஒரு காலத்தில் கோட்டை இருந்தது என்பதற்கு அடையாளமாகக் கோட்டைச் சிதைவுகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலும் சேரவேந்தர் மேற்கு மலைத்தொடரைக் கடந்துவந்து திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டனர். அவர்தம் கல்வெட்டுகள் சேர்மாதேவியில் உள்ள கோவிலிலும் பிற இடங்களிலும் காணப்படுகின்றன. மேலும், கட்டளை மலைக் கணவாய் வழியாகச் சேர மன்னர் எளிதிற் பாண்டிய நாட்டை அடையலாம். இவற்றை நோக்க, சேர வேந்தரே தம் படைகளுக்காக இக்கோட்டையை அமைத்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். விக்கிரம சிங்கபுரம் இது பாபநாசத்தை அடுத்து இருப்பது. இங்கு மலை யடிவாரத்தில் பஞ்சாலை ஒன்று அமைந்திருக்கிறது. இதில் ஏறத்தாழ ஐயாயிரம் மக்கள் வேலை செய்கின்றனர். இப்பகுதியில் பிறந்து வளர்ந்தவரே சிவஞானபோதம் என்னும் சைவசித்தாந்த சாத்திதிற்கு விளக்கவுரை கண்ட சிவஞான முனிவர். அம்பாசமுத்திரம் இது பாபநாசத்திற்குக் கிழக்கே ஆறு கல் தொலைவில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூர் பொருநைக்கு வடகரையில் இருக்கிறது. ïj‰F miu¡fš bjhiyÉš M‰¿‹ mU»š vǤjhSilah® nfhÉš mikªJŸsJ.* இதில் வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவை கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனாக இருந்த மாறன் சடையன் என்பவன் காலத்தவை, அவற்றில் இவ்வூரின் பழைய பெயர் `இளங்கோக்குடி என்பது காணப்படுகிறது. வணிகர்க்கு `இளங்கோக்கள் என்பது பெயர். இளங்கோக்காளன வணிகர் குடியேறி இருந்த காரணத்தால், இவ்வூர் அந்நாளில் `இளங்கோக் குடி எனப் பெயர் பெற்றது போலும்! வீரபாண்டியன், முதலாம் இராசராசன், சுந்தர சோழ பாண்டியன் முதலிய மன்னர் தம் கல்வெட்டுக்கள் இங்கு இருக்கின்றன. இங்கு நெசவுத் தொழில் சிறந்த முறையில் நடைபெறுகின்றது. செங்குந்த முதலியார், ஈழுவர் முதலியோர் இத்தொழிலைச் செய்து வருகின்றனர். கல்லுடைக்கும் தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது; கற்றூண்கண் செதுக்கப்படுகின்றன. இவை இராமேசுவரம் முதலிய இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கருங்காலி முதலிய மரங்களைக் கொண்டு பலவகைப் பொருள்களும் விளையாட்டுச் செப்புகளும் மிகுந்த அளவில் செய்யப்படுகின்றன. பாபநாசத்தி லிருந்து பொருநையாற்று வழியே வருபவர் காணத்தகும் முதற் பெரிய ஊர் இதுவேயாகும். பிரமதேசம் இஃது அம்பாசமுத்திரத்திற்கு வடக்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. நீர்வளமும் நிலவளமும் பொருந்திய இவ்வூரில் பிராமணர் பலராக வாழ்கின்றனர். இங்குக் கயிலாசநாதசுவாமி கோவில் ஒன்று இருக்கின்றது. இக்கோவில் தூண்களில் நேத்தியாண சிற்பங்கள் காணப்படுகின்றன. வாயின் உள்ளே கல்லுருண்டை கொண்டுள்ள இரண்டு யாழிகளைக் குறிக்கும் சிற்பங்கள் வியத்தகு வேலைப்பாடு கொண்டவை. அக்கல்லுருண்டைகள் வாயினுள்ளேயே அங்கும் இங்கும் ஆடுகின்றன. அவற்றை வெளியே எடுத்தல் இயலாது. கோவிலின் வடக்குத் திருச்சுற்றிலுள்ள சோமவார மண்டபம் பார்க்கத்தகுந்த ஓர் இடமாகும். இம்மண்டபத்தில் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. இரண்டு குரங்குகள் அழகு ஒழுகச் செதுக்கப்பட்டுள்ளன. பரிவீரர்கள், விலங்குகள், பாம்புகள், பறவைகள் முதலியவற்றைக் குறிக்கும் சிற்பங்கள் காணத்தக்கவை. இம்மண்டப முகப்பில் இரண்டு யானைகளைக் குறிக்கும் சிற்பங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு யானையின் உருவமும் அதன்மீதுள்ள வீரனின் உருவமும் ஒரு கல்லில் செதுக்கப்பட்டுள்ள அருமைப்பாடு கண்டு வியத்தற் குரியது. பல வகை இசைகளை எழுப்பும் கற்றூண்கள் இம்மண்டபத்தின் சிறப்பை மிகுதிப்படுத்துகின்றன. கல்லிடைக்குறிச்சி இவ்வூர் பொருநையின் வடகரையில், அம்பா சமுத்திரத்திற்கு எதிரில் அமைந்துள்ளது. இடையில் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டுள்ளது. இவ்வூர்க்கு வடக்கே கன்னடியன் கால்வாய் எல்லையாக அமைந்துள்ளது. நீர் வளம் மிகுந்த இவ்வூரைச் சுற்றிலும் பச்சைக் கம்பளம் பரக்க விரித்தாற் போன்ற காட்சியைப் பசிய வயல்கள் வழங்குகின்றன. கல்லிடைக்குறிச்சிக்கும், அம்பாசமுத்திரத்திற்கும் இடையிலுள்ள பெரும் பாதையின் இரண்டு பக்கங்களிலும் பசிய வயல்கள் கண்ணுக்கினிய காட்சியை நல்குகின்றன. கோவில்களும் சத்திரங்களும் இங்கு மிகுதியாக இருக்கின்றன. சடாவர்மன் குலசேகரன் 1 (கி.பி. 1190-1214) மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1235) முதலிய மன்னர் தம் கல்வெட்டுக்கள் இங்குள்ள கோவில்களில் காணப்படுகின்றன. எனவே, மருதவளம் மிகுந்து காணப்படும் இவ்வூர் காலத்தாற் பழைமை வாய்ந்தது என்பதை எளிதில் அறியலாம். இங்குள்ள பிராமணர் மிக்க செல்வம் படைத்தவர். இவ்வூரில் நடைபெறும் நெசவுத் தொழில் அவர் தம் கையில் இருக்கின்றது; நெசவாளர்களுக்குப் பணம் கொடுத்து அவர் களிடம் துணிகளைப் பெற்றுத் திருவாங்குர் முதலிய இடங் களுக்கு அனுப்புகின்றனர். வட்டிக்குப் பணம் கொடுப்பதும் ஒரு தொழிலாக நடந்து வருகிறது. பலர் வெளி மாகாணங்கட்குச் சென்று அரசாங்க அலுவல்களிலும் வாணிகத் துறையிலும் அமர்ந்துள்ளனர். திருப்புடை மருதூர் இவ்வூர் பொருநையின் வடகரையில் இருக்கின்றது. இவ்வூருக்கு எதிர்ப்புறத்தில் கடனாநதி பொருநையில் வந்து கலக்கின்றது. இங்கு நாரம்புநாத சுவாமி கோவில் என்று ஒரு சிவன் கோவில் இருக்கின்றத. அக்கோவிலில் உள்ள கோமதி அம்மன் பிணிகளைப் போக்க வல்லவன் என்பது மக்கள் நம்பிக்கை; அதனால் பிள்ளைப்பேறு எளிதில் உண்டாவதற்கும் நோய்கள் நீங்குவதற்கும் அவ்வம்மனை வேண்டிக் கொள் கின்றனர்; பேய் பிடித்த பெண்களை இவ்வம்மன் கோவிலுக்குக் கொண்டு வருகின்றனர். தங்கள் வேண்டுதலுக்கு அறிகுறியாகக் குழந்தைகளின் சிலைகள், தொட்டில்கள் முதலியன செய்து கோவிலில் வைக்கின்றனர். இங்கு ஆண்டு தோறும் தைப்பூசம் மிக்க சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. சடையன் மாறனது வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும், முதலாம் இராசராசனது கடற்படை வெற்றியைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்றும் இங்கு இருக்கின்றன. வீரவநல்லூர் பொருநையாற்றுக்குத் தென்பால் அமைந்துள்ள இவ்வூர் நீர்வளமும் நிலவளமும் மிக்கது. இவ்வூரைச் சுற்றிலும் பசிய வயல்கள் விழிகட்கு விருந்தளிக்கும். இவ்வூரில் நெசவுத் தொழில் சிறந்த முறையில் நடைபெறுகிறது. பூமிநாத சுவாமி கோவில் என்னும் பழைய சிவன் கோவில் ஒன்று இவ்வூரின் பழமையை உணர்த்துகின்றது. கவிஞர் பலரும் இவ்வூரை அணி செய்கின்றனர். சேர்மா தேவி சேரன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பது இதன் முழுப்பெயராகும். இஃது இங்குள்ள கல்வெட்டுக்களால் தெரிகின்றது. ஒரு சமயம் சேர மன்னர்இவ்வூரை வென்று ஆண்டனர் என்பதற்கு இப்பெயர் ஏற்ற சான்றாகும். இப்பெயர் நாளடைவில் `சேர்மாதேவி எனக் குறைந்து வழங்கப்படுகிறது. இதன் அருகிலுள்ள `கொழுந்து மாமலை என்னும் குன்றில் பல மூலிகைகள் இருக்கின்றன. அதனால் இது மருத்துவர் யாத்திரை செய்ய ஏற்ற இடமாக இருந்து வருகின்றது. இவ்வூரைச் சார்ந்த பழைய கிராமம் என்ற பகுதி பொருநையாற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறத. அங்கு முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் என்னும் சோழ மன்னர் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சேர்மாதேவியில் கோவில்கள் பலவாக இருக்கின்றன. அவற்றுள் திரிமூர்த்தி கோவில்களே பலவாகும். பொருநைக் கரையிலுள்ள பக்தர் பிரியர் கோவில் அழகானது. இதன் வெளிச் சுவர்களிலுள்ள வேலைப்பாடு காணத்தகுவது. இக்கோவில் நன்கு பாதுகாக்கப்படவில்லை. இதனிற் முதற் குலோத்துங்க சோழன் கல்வெட்டு ஒன்றும், வீரபாண்டியன் (கி.பி. 1255-1267) கல்வெட்டுக்கள் ஆறும் இருக்கின்றன. இதற்கு அருகில் பொருநையில் நீராடும் துறை ஒன்று கட்டப் பட்டுள்ளது. தைத்திங்கள் நிறைமதியன்று கங்கை நீர் அங்குப் பொருநையுடன் சேருவதாக நம்பப்படுகிறது. அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த நாளில் அங்கு நீராட வருகின்றனர். அழகியப்பர் கோவில் என்பதும் ஆற்றங்கரையிலேயே அமைந் திருக்கிறது. அழகியப்பர், மக்களுக்குத் தேவைப்படும் போது மழையை வருவித்து மக்களைக் காப்பவர் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாகும். இதற்காக `வருணஜெபம் என்னும் விழாவும் இங்கு நடைபெறும். இங்குள்ள மிளகுப் பிள்ளையார் மிக்க புகழ்பெற்றவர். கன்னடியன் கால்வாயில் நீர் குறையும்போது, இப்பிள்ளையார்கக்கு மிளகு நீர் முழுக்கு நடைபெறுதல் உண்டு. இங்கு நடைபெறும் தொழில்களுள் நெசவுத் தொழில் குறிப்பிடத் தக்கது. அடுத்துக் குறிப்பிடத் தக்கது மட்பாண்டத் தொழிலாகும்; பலவகை அழகிய மட்பாண்டங்கள் இங்குச் செய்யப்படுகின்றன; மலையாள நாட்டிற்கு மிகுதியாக அகுப்பப்படுகின்றன; புகை வண்டி நிலையத்திற்க அருகில் மட்பாண்டங்கள் கோபுர வடிவில் அடுக்கப்பட்டுள்ள காட்சி கண்டு மகிழத்தகும். சேர்மாதேவி வயல் வளத்தில் சிறந்து விளங்கும் ஊராகும். இதுகாறும் கூறப்பட்ட ஊர்கள் அம்பா சமுத்திரம் தாலூகாவைச் சேர்ந்தவை. பொருநையாறு அம்பாசமுத்திரம் தாலூகாவிலிருந்து திருநெல்வேலி தாலூகாவிலும் பாய்ந்து கடலில் கலக்கின்றது. இனித் திருநெல்வேலித் தாலூகாவில் அமைந்துள்ள பொருநைக்கரை ஊர்களைப்பற்றிய விவரங் களைக் காண்போம். திருநெல்வேலி கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய சைவ குரவர் இருவர் பாடல்களிலும் திருநெல்வேலி குறிக்கப் பட்டுள்ளது. இது பொருநையாற்றின் வடகரையில் அமைந்துள்ள பேரூராகும். இவ்வூரைச் சுற்றிலும் நெல் வயல்கள் வேலிபோல் அமைந்துள்ளன. இக்காரணத்தால் இவ்வூர் `நெல்வேலி எனப் பெயர்பெற்றது;* சிறந்த தலமாதலால் `திரு என்னும் அடைமொழி பெற்றுத் `திருநெல்வேலி என வழங்கப்படுகிறது. ஊரின் நடுநாயகமாக நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவில் இரண்டு பகுதிகளாக அமைப்புண்டது. ஒன்று நெல்லையப்பருக்கு உரியது: மற்றொன்று காந்திமதி அம்மனுக்கு உரியது. சுவாமி - அம்மன் கோவில்களின் முகப்புகள் மர வேலைப்பாடு கொண்டவை. தேர்களில் சிறப்பாகக் காணப்படும் இத்தகைய அரிய வேலைப் பாடுகள் இந்த இரண்டு முகப்புகளிலும் அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது. இவை நம் முன்னோரது மரவேலைத்திறனை உலகிற்கு உணர்த்தும் வகையில் உயர்ந்து காணப்படுகின்றன. காந்திமதி அம்மன் கோவிலுள்ள ஊஞ்சல் மண்டபம் தொண்ணூற்றாறு கற்றூண்களால் அழகு பெற அமைக்கப் பட்டுள்ளது. சலவைக் கற்களால் அமைக்கப்பட்ட தரை வழ வழ என்று இருக்கிறது, ஐப்பசித்திங்களில் காந்திமதியம்மனுக்குத் திருமணம் நடைபெற்றதும், இம்மண்டபத்தில் ஊஞ்சல் விழா மூன்றுநாள் நடைபெறும். சமயத் சொற்பொழிவுகளும், இசையரங்குகளும் இங்கு நிகழும். அம்மன் கோவிலிலுள்ள ஆயிரக்கால் மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும் உடையது. அங்குக் காந்திமதி அம்மனுக்குத் திருமணச் சடங்கும் பங்குனி உத்திரச் செங்கோல் திருவிழாவும் நடைபெறும். நெல்லையப்பர் திருக்கோவிலிலுள்ள மணிமண்டபம் பார்க்கத் தகுவது. ஒரே பெரிய கல்லில் நடுவிற் பெரிதாக ஒன்றும், அதனைச் சுற்றிலும் உருவிலும் உயரத்திலும் பல்வேறுபட்ட நாற்பத்தெட்டுச் சிறுதூண்களும் அமைக்கப்பட்டுள்ள இரண்டு தூண்கள் இம்மணிமண்டபத்தை அழகு செய்கின்றன. ஒவ்வொரு சிறு தூணையும் தட்டினால் ஒருவித இனிய ஓசை உண்டாகின்றது. இம் மண்டபம் கி.பி. 7-M« ü‰wh©oš kJiu k‹ddhf ïUªj beLkhw‹ v‹gtdhš f£l¥ g£lJ v‹W jyòuhz« br¥ò»wJ.* கி.பி. 10-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரையிலும் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியர், சோழர் கல்வெட்டுக்கள் பலவாகக் கோவிற் சுவர்களில் காணப்படுகின்றன. இக் கல்வெட்டுக்களில் சுவாமியின் பெயர் திருநெல்வேலி உடையார், திருநெல்வேலி உடைய நாயனார் என்றும், அம்மன் பெயர் திருத்தாமக்கோட்டமுடைய நாச்சியார் என்றும் காணப்படுகின்றன. கோவிலைச் சுற்றியுள்ள தேரோடும் தெருக்கள் சிறந்த முறையில் அமைக்கப்பட்டன. இப்பேரூரில் ஒரு கல்லூரியும் பல உயர்நிலைப் பள்ளிகளும் மிகப்பல தொடக்கநிலைப் பள்ளி களும் இருந்து மக்களுக்குக் கல்வி அறிவை ஊட்டி வருகின்றன. ஆற்றின் தென்கரையில் கொக்கரகுளம் என்னுமிடத்தில் மாவட்ட ஆட்சிக்குரிய அலுவலகங்கள் அமைந் திருக்கின்றன. திருநெல்வேலையையும் பாளையங் கோட்டையையும் இணைப்பது பொருநையாற்றின் மீதுள்ள பாலமாகும். இது 1843-இல் கட்டப்பட்டது, சுலோசன முதலியார் என்று பெருஞ் செல்வர் இதற்குப் பொருளுதவி புரிந்தார். பாளையங் கோட்டைக் கற்கள் இப்பாலங்கட்டப்பப் பயன்பட்டன. இதன் நீளம் ஏறத்தாழ 900 அடியாகும். ஒவ்வொன்றும் 60 அடி அகலமுள்ள பதினொரு வளைவுகள் இப்பாலத்தில் அமைந்துள்ளன. இப்பாலத்திற்கு அப்பால் பாளையங்கோட்டை என்னும் பேரூர் அமைந் திருக்கிறது., திருநெல்வேலி நகரத்தின் ஒரு பகுதியாகவுள்ள பேட்டை என்னும் இடம் சிறந்த வாணிக இடமாகும். திருநெல்வேலி மாவட்டத்துப் பல பகுதிகளிலிருந்து வரும் பொருள்களும் இம்மாவட்டத்திற்கு வெளியிலிருந்த வரும் பொருள்களும் இங்குத்தான் முதலில் குவிகின்றன. இங்குள்ள வணிகரே இவற்றை வாங்கி மாவட்டத்தின் பல பகுதிகட்கும் வெளி நாட்டுக்கும் அனுப்புகின்றனர். பேட்டை வாணிகம் முதலில் முலிம்கள் கையிலேயே இருந்தது. பின்னர் வேளாளரும் இலைவாணியரும் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். இப்பேட்டையைச் சேர்ந்த முலீம் வணிகர் பலர் பம்பாய், இரங்கூன், இலங்கை முதலிய இடங்களில் தங்கிப் பேட்டையோடு வாணிகத் தொடர்பு கொண்டுள்ளனர். இங்கு நடைபெறும் சிறப்புத் தொழில் நல்லெண்ணெய் தயாரித்தலாகும். இவ்வூரில் ஏறத்தாழ நூறு செக்குகளில் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இம் மாவட்டத்தின் பலபகுதி களிலிருந்தும் எள் இங்குக் கொண்டு வரப்படுகிறது; நல்ல எண்ணெய் பல ஊர்கட்கும் அனுப்பப் பெறுகிறது. பாளையங்கோட்டை மதுரை விசுவாத நாயக்கரது படைத் தலைவரான அரியநாத முதலியாரால் இவ்வூரில்ஒரு கோட்டை கட்டப் பட்டது என்று மதுரை வரலாறு கூறுகிறது. தென்பாண்டி நாட்டைக் காக்க இங்கு நிலப்படையும் கோட்டையும் தேவையாயின. இங்ஙனம் பாளையம் (சேனை) இருக்கக் கட்டப்பெற்ற கோட்டையாதலின் இது `பாளையங்கோட்டை எனப் பெயர் பெற்றது. பிற்காலத்தில் இக்கோட்டை கருநாடக நவாபின் போர்வீரரும் ஆங்கிலப் போர் வீரரும் தங்கி இருக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது. .இக்கோட்டை சிறைச்சாலை யாகவும் பயன்பட்டது. ஒரு காலத்தில் தக்க வசதிகள் பெற்று, தென்னாட்டு வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற இக்கோட்டை இன்று உருத்தெரியாமல் அழிந்து விட்டது. இதன் கற்கள் அணைக்கட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு விட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி முதற் பேரூராகும்: அடுத்தது திருநெல்வேலி; மூன்றாம் பேரூர் பாளையங்கோட்டை என்பது. இப் பேரூரில் ரோமன் கத்தொலிக்கரும், பிராடெடென்ட்டு கிறித்தவரும் மிகப் பலராக வாழ்கின்றனர். இவ்விரு திறத்தார்க்கும் உரிய கோவில்கள் பல இங்கு இருக்கின்றன. மூன்று கல்லூரிகள், நான்கு உயர்நிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு, குருடர் பள்ளி ஒன்று. செவிடர் ஊமையர் பள்ளி ஒன்று ஆகப் பல கல்வி நிலையங்களும் இருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் கிறித்தவ சமயத்தொண்டு புரிகின்ற நிலையங்களின் தலைமை அலுவலகங்கள் பாளையங் கோட்டையிற்றான் இருக்கின்றன. சேர்ந்த ஏனைய பேரூர்களை விடச் சிறந்து விளங்குகிறது. மேலப்பாளையம் இவ்வூர் பாளையங்கோட்டைக்கு அருகில் உள்ளது: இதில் குடியிருப்பவர் அனைவரும் முலிம்களே யாவர். நெய்தல், சாயம் தோய்த்தல், தோல் பதனிடுதல் இவர்தம் தொழில் களாகும். கம்பளங்கள் இங்குச் செய்யப்படுகின்றன. இவை திருநெல்வேலி மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் இலங்கையிலும் நன்கு செலவாகின்றன. இங்குள்ள பெருவணிகர் ஏர்வாடி, தென்காசி, கடையநல்லூர் முதலிய இடங்களிலுள்ள நெசவுத் தொழிலாளருக்கு நூல்கொடுத்துப் பலவகை ஆடை களைப் பெற்று இலங்கைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இவ்வூரி லுள்ள பலர் பம்பாயிலும், பர்மாவிலும், மலேயாவிலும் சென்று வாணிகம் செய்து வந்தனர். இவ் வாணிகர் மேலப்பாளையத்தின் சுற்றுப் புறங்களில் மிகுதியான நிலங்களை வாங்கியுள்ளனர். மணப்படை வீடு பாண்டி மன்னர் காலத்தில் இவ்வூர் படை இருந்த இடமாக விளங்கியது என்று செவிவழிச் செய்தி கூறுகிறது. இவ்வூர்ப் பகுதிகளில் பண்டைக் காலச் செங்கற்கள் கிடைக் கின்றன. இங்குள்ள சிவன் கோவில் மிக்க சிறப்பு வாய்ந்தது. கருவறைச் சுவர்களின் வெளிப்பக்கம் அருமையான வேலைப் பாடுகள் உள்ளன. இக்கோவிலின் பிறசுவர்களிலும் பண்டைக் காலச் சிற்பத்திறன் நன்கு காட்டப்பட்டுள்ளது. இவ்வூரை அடுத்துள்ள வெள்ளிமலை, கீழநத்தம் முதலிய நகரங்களில் பண்டைக் காலத்தாழிகள் கிடைக்கின்றன. இவையனைத்தையும் நோக்க இன்றுள்ள மணப்படைவீடும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் பண்டைக் காலத்தில் சிறப்புற்ற நிலையில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. சீவலப்பேரி இவ்வூர் பொருநை யாற்றின் வடகரையில் சிற்றாறு கலக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது. சிற்றாற்றிற் கலக்கும் உப்போடை பழைய காலத்தில் தனித்து வந்து பொருநையிற் கலந்து வந்தது. அதனால் இவ்வூர் சிற்றாறு, உப்போடை, பொருநை என்னும் மூன்றும் கூடுமிடமாக இருந்தது. அக் காரணத்தால் இவ்வூர் முக்கூடல் எனப் பெயர் பெற்றது. முக்கூடற்பள்ளு என்னும் நூலிற் குறிக்கப் பெறும் முக்கூடல் இதுவேயாகும். பொருநையாறு இவ்விடத்தில் அகன்று காணப்படுகிறது. இங்குள்ள அழகர் கோவிலில் பாண்டியர் கல்வெட்டுக்களும், சோழர் கல்வெட்டுக்களும் காணப் படுகின்றன. இங்குள்ள மருகல்தலை என்னும் இடத்தில் பௌத்தர்களால் குடையப் பட்டனவாகக் கருதப்படும் பாறைக் குடைவுகள் இருக்கின்றன. பெரிய பாறை ஒன்றில் படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. ஊரால் இவற்றைப் ``பஞ்சபாண்டவர் படுக்கைகள் என்று கூறுகின்றனர். பாறைக் குடைவுகளில் பாலி மொழிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றின் எழுத்துக்கள் அசோகனுடைய கல்வெட்டு எழுத்துக்களை ஒத்து இருக்கின்றன என்று எழுத்தாராய்ச்சி அறிஞர் அறைகின்றனர். இவ்வூரில் ஆண்டு தோறும் மாட்டுச் சந்தை சிறப்புற நடைபெறுகின்றது. 6. பொருநைக்கரை ஊர்கள் -II கிருஷ்ணாபுரம் இது திருநெல்வேலி-திருச்செந்தூர்ப் பாதையில் பாளையங் கோட்டைக்கு ஆறுகல் தொலைவில் அமைந் துள்ளது. இவ்வூருக்கு நேர் கிழக்கில் இரண்டரைக்கல் தொலைவில் பொருநையாறு பாய்கிறது. கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் (கி.பி. 1563-1573) மதுரையை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கரால் இவ்வூரும் கோவிலும் புதியனவாக அமைக்கப் பட்டன.* இவ்வூர் மிகச்சிறிய கிராமமாக இருக்கின்றது. ஆயின் ஆங்காங்குப் பழைய வீட்டின் அடிப்படைகளும் பிறவும் இருத்தலை நோக்க, இவ்வூர் முதலில் பெரியதாய் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. ஒரு காலத்தில் சீரும் சிறப்பும் பெற்றிருந்த இவ்வூர், இன்று கவனிப்பாரற்ற சிறிய ஊராய் இருக்கின்றது. பெரிய கோபுரம் கொண்ட வேங்கடாசலபதி கோவில் மட்டும் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுகின்றது. ஊரும் கோவிலும் வளமாயிருந்த காலத்தில் கோவிற்பூசைக்குப் பொருநையாற்றி லிருந்து திருமஞ்சன நீர் நாடோறும் கொண்டு வரப்பட்டதாம். இப்பொழுது திங்களில் குறிப்பிட்ட பத்து நாட்களில் மட்டுமே ஆற்று நீர் திருமஞ்சனத்திற்காக கொண்டுவரப்படுகின்றது. இக்கோவில் மண்டபங்களுள் இரண்டு குறிக்கத்தக்கவை. அவை கோபுரத்தை அடுத்துள்ள திருமண மண்டபமும், கோவிலுள் அமைந்துள்ள அரங்க மண்டபமுமாகும். இவை இரண்டும் கண்ணையும் கருத்தையும் தம்பால் ஈர்க்கும் சிற்பங்களைக் கொண்டவை; இச் சிற்பங்கள் அமையப் பெற்ற தூண்கள் கிருஷ்ணபுரத்திற்குத் தென்மேற்கே இரண்டு கல் தொலையிலுள்ள பாறையிலிருந்து பெயர்த்தெடுக்கப் பெற்றவை. இவை இன்னிசை ஒலிக்கும் கற்கள். திருமண மண்டபம் திருமண மண்டபத்தில் முதலில் வருவாரை வரவேற்பன போல ஆறு தூண்கள் இருக்கின்றன. இவற்றில் அருமையான சிற்ப நுட்பங்கள் அமைந்த சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் கிழக்கிலிருந்து முறைப்படுத்திக் காண்போம். முதல் தூணில் தெய்வ நங்கை ஒருத்தி நடனக் கோலத்தில் நிற்கிறாள். அவள் காதுக ளை ஓலைகள் அணி செய் கின்றன. இரண்டாம் தூணில் உள்ள சிலைகளுள் முதன்மையாக அமைந் திருப்பது குறத்தி ஒருத்தி யின் சிலை. ``அவள் அரச குமாரன் ஒருவனைத் தோளில் தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். தூணின் கீழ்ப் புறம் அன்னப்பறவை மீது அமர்ந்த அரசி, தன் கையி லுள்ள கிலுகிலுப்பையைத் காட்டி குமாரனது கவனத்தை ஈர்க்கிறாள். குறத்தி குமாரனுடன் ஓடிவிடுகிறாள். அரசி குறி கேட்பது போலவும், குறத்தி உன் தலைவிதி; உன் மகன் வாரான் என்று குறி கூறுதல் போலவும் தூணின் வடபால் சிலைகள் அமைந்துள்ளன. அரசன் குதிரை மீது மகனைத் தேடி வருகிறான். வழியில் வழிமறித்த வீரன் ஒருவனைக் குதிரை தன் முன்னங் கால்களால் நசுக்குகிறது: அவ்வீரன் தன் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி மூச்சடக்கிக் குதிரையின் அமுக்கலைத் தாங்குகிறான். இக்காட்சிகள் தூணின் மேற்குப் பகுதியிற் சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. இத்துணைச் செய்திகளையும் சிற்பங் களைக் கொண்டே உணரும்படி அமைந்துள்ள சிற்பவேலை வியந்து பாராட்டற்குரியதன்றோ? மூன்றாம் தூணில் அருச்சுனன் தவக்கோலம் காட்டப் பட்டுள்ளது. அவன் வலக் கையில் பாசுபதமும் இடக்கையில் காண்டீபமும் காண்கின்றன. விசயன் நீண்ட தாடியுடன் நிற்கிறான். முகத்தில் வீரம் விளங்குகிறது; நகங்கள் வளர்ந்திருக்கின்றன. நான்காம் தூணில் நாகக்கணை தாங்கிய கண்ணன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவன் முகத்தில் அருள் புலப்படும்படி சிற்பம் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. குரங்காட்டி ஒருவன் தோளில் குரங்குடன் விளையாடுவதையும், கையிற் கிளியுடன் அழகி ஒருத்தி நிற்பதையும் குறிக்கும் சிற்பங்கள் அதே தூணில் அழகுடன் காணப்படுகின்றன. ஐந்தாம் தூணில் முதன்மையானது குறவன் ஒருவனது உருவம். அவன் அரச குமாரியைத் தூக்கிச் செல்கிறான். அவளுக்கு இடப்புறம் அரசகுமாரன் குதிரையில் வந்து ஈட்டியால் அவனது விலாவிற் குத்துகிறான்; விலாவிலிருந்து குருதி பெருகிக் கொப்பூழ்வரை வருகிறது. குறவன் வலி தாங்காது துன்புறுகிறான்; விலா எலும்புகளும் கழுத்து நரம்புகளும் தெரியும் நிலையில் உடலை வளைந்துகொடுக்கிறான். அவனுக்கு இடப்பக்கம் மற்றொரு வீரன் வலக்கையில் வாளேந்திக் குறவன்மீது பாய்கிறான். குறவன் மீது அமர்ந்துள்ள அரசகுமாரி அவனது குடுமியைப் பற்றி இழுக்கிறாள். தன்னைக் காக்க வீரர் வந்து விட்டதை அறிந்ததும் அவள் முகம் பொலிவு பெறுகிறது. இத்தூண் சிற்பங்கள் இத்துணை விவரங்களையும் உணர்த்து கின்றன. இவற்றின் வேலைப்பாடு நேரிற் கண்டு வியத்தற்கு உரியது. ஆறாம் தூணில் முதன்மையானது நடன மகளைக் குறிக்கும் சிற்பமாகும். அவள் வலக்கையில் மலர்ப் பந்தும் இடப்புற உள்ளங்கையில் மாதுளம்பழமும் கொண்டு நடன மாடுகிறாள். இதுவும் கண்ணைக் கவரும் தன்மை வாய்ந்தது. அரங்கமண்டபம் நாயக்கர் காலத்தில் இம்மண்டபம் ஆடலுக்கும் பாடலுக்கும் பயன்பெற்ற காரணத்தால்தான் `அரங்க மண்டபம் எனப் பெயர் பெற்றது. இம் மண்டபத்தில் தென்புறம் ஏழும் வடபுறத்தில் ஏழுமாகத் தூண்கள் நிற்கின்றன. ஒவ்வொரு தூணிலும் விழிகட்கு விருந்தளிக்கும் சிற்பங்கள் காணப்படு கின்றன. இவற்றுள் மிக வியந்து பாராட்டத்தக்க வேலைப்பாடு கொண்டவை சில. அவற்றுள் வீரபத்திரர் சிலை, மன்மதன் சிலை, இரதி சிலை என்பன குறிப்பிடத்தக்கவை. வீரபத்திரர் உருவம் உயரமானது. அகன்ற நெற்றி, விரிந்த மூக்கு, நீண்ட மீசை, வெளியில் தெரியும் கோரைப் பற்கள், சுருங்கிய கன்னம், கோபப் பார்வையைக் குறிக்கும் முகம் ஆகிய இவை மிகத் தெளிவாக அமைக்கப்பட்டுள்ளன. வீரபத்திரரது வலக்கையில் ஈட்டியும் இடக்கையில் சதுரக் கேடயமும் இருக்கின்றன. ஒருகால் தூக்கிய நிலையில் இருக்கின்றது; அக்கால் குழைந்து, உருண்டு இருக்கின்றது. நரம்புகளும் நகங்களும் தெளிவாகத் தெரிகின்றன; இடுப்பில் மடிப்புகள் காணப்படுகின்றன. சுருங்கக்கூறின், இச் சிற்பம் மிக அரிய வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது எனலாம். மன்மதனைக் குறிக்கும் சிற்பம் சிறப்புற அமைந்துள்ளது. அவனது இடக்கையில் கரும்பு வில் இருக்கின்றது. அக்கரும்பில் கணுக்கள் வகுக்கப்பட்டுள்ள நேர்த்தி நேரிற் கண்டுகளிக்கத் தக்கது. அவன் வலக்கையில் மலர்வாளி பிடித்திருக்கிறான். வலக்கையில் மலர்ப்பந்தைப் பிடித்தபடி இரதி மன்மதனை மகிழ்ச்சியோடு பார்த்து நிற்கிறாள். வலப்புறத்தில் தோழி ஒருத்தி அவளுக்குக் குடை பிடிக்கிறாள். இச் சிற்பங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொள்வனவாகும். ஒரு தூணில் இரதியின் சிலை முதன்மை பெற்று விளங்குகிறது. அவள் தன் இடக்கையில் கண்ணாடியையும் வலக்கையில் மலர்ப்பந்தையும் கொண்டு அன்னப்பறவை மீது அமர்ந்திருக்கிறாள். தூணின் கீழ்ப்புறம் இரதியின் தோழி நடமாடுகிறாள். மன்மதன் சிவபெருமானால் எரிக்கப்பட்ட போதிலும், இரதியின் விழிகட்கு மட்டும் காணப்படுவான் என்று சிவபெருமான் வரம் கொடுத்திருப்பதால், இரதி என்றும் வாழ்வரசியாக இருக்கின்றாள் என்பதை உணர்த்த அவளது கழுத்தில் தாலி தொங்கவிடப்பட்டுள்ளது. புராணத்துள் கூறப்படும் இக்கதை நுட்பத்தைக் கண்டு இரதிக்குத் தாலி அமைத்த சிற்பியின் நுண்ணறிவு பாராட்டத் தக்கது. ஆதிச்ச நல்லூர்* பொருநையாற்றுப் பாய்ச்சலைப்பெறும் இடங்களில் சில, புதைபொருள் ஆராய்ச்சிக்கு ஏற்றவையாக இருக்கின்றன. அங்கு பண்டைக்கால மக்களை அடக்கம் செய்த தாழிகள் புதையுண்டு கிடக்கின்றன. அவற்றுள் சேர்மாதேவி, பாளையங்கோட்டை, கிருஷ்ணாபுரம், ஆதிச்ச நல்லூர், கொங்கராயக்குறிச்சி, ஆழ்வார் திருநகரி, திருக்கோளுர், அப்பன் கோவில், தென் திருப்பேரை, கொற்கை, மாறமங்கலம் என்பன குறிக்கத்தக்கவை. (Rea) என்ற புதைபொருள் ஆராய்ச்சியாளர் இவ்விடங்களைப் பார்வையிட்டு ஆராய்ச்சி நிகழ்த்தி யுள்ளார். இவ்விடங்களுள், புதைபொருள் ஆராய்ச்சிக்கு உரிய உலகப் புகழ்பெற்ற இடமாகவுள்ள ஆதிச்ச நல்லூரில் நிகழ்ந்த ஆராய்ச்சிபற்றிய விவரங்களை இங்குக் காண்போம். புதைபொருள் ஆராய்ச்சி ஆதிச்சநல்லூர் பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் பதினோராவது மைலில்- பொருநையாற்றின் தென்கரையில் இருக்கின்றது. இது ஸ்ரீவைகுண்டம் தாலுகாவைச் சேர்ந்தது; இப்பழம்பதியின் மேற்குப் பகுதியில் உயர்ந்த மண்மேடு காணப்படுகின்றது. அங்கு .இறந்த வரைப் புதைத்த தாழிகள் புதையுண்டு கிடக்கின்றன. டாக்டர் ஜாகர் (Dr. Jafpr) என்ற ஜெர்மானியர் 1876-இல் அம்மேட்டின் ஒரு பகுதியைத் தோண்டிச் சுடப்பட்ட மண் தாழிகளையும் பாத்திரங்களையும் இரும்புக் கருவிகளையும் எலும்புக் கூடுகளையும் வெளியில் எடுத்தார்: பின்பு அவற்றை ஜெர்மனிக்குக் கொண்டு சென்றார். அம்மேடு சரளைவெட்டும் இடமாகப் பயன்படுத்தப் பட்டதால், மேலும் பல பொருள்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. அரசாங்கம் அவ்விடத்தைச் சரளை வெட்டும் இடமாகப் பயன்படுத்தக்கூடாது என்று ஆணை பிறப்பித்தது. 1900-இல் அரசாங்கம் புதைபொருள் ஆராய்ச்சிக் குழுவினர் அம்மேட்டின் பல இடங்களைத் தோண்டிப் பார்த்துப் பல பொருள்களைச் சென்னைப் பொருட்காட்சிச் சாலைக்கு எடுத்துச் சென்றனர். திருவாளர் ரீ அவற்றை ஆராய்ந்து, பல உண்மைகளை வெளியிட்டார். இவற்றின் சுருக்கத்தைக் கீழே காண்க: புதைபொருள்கள் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இப்பொருள்களில் நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்ட தாழிகளும் பாத்திரங்களும் இரும்புப் போர்க் கருவிகளும் இரும்பாலான பிற கருவிகளும் பித்தளை நகைகளும் பெட்டிகளும் சில தங்க நகைகளும் பெட்டிகளும் சில தங்க நகைகளும் சில கல் திரிகைகளும் இருக்கின்றன. நைந்த துணியின் பகுதிகளும் அரிசி முதலிய தானியங்களின் உமியும் தாழிகளுள் காணப்பட்டன. பெரும்பாலான பாத்திரங்கள் மண்ணைக் கொண்டே செய்யப்பட்டுள்ளன. பித்தளைப் பாத்திரங்களும் சில கிடைத்துள்ளன. விளக்குகள் இரும்பால் செய்யப்பட்டவை. பித்தளை நகைகள் அருகிக் காணப்படுவதிலிருந்து,பித்தளை அப்போது மிகுதியாகக் கிடைக்க வில்லை என்பது தெரிகிறது. நெற்றிச்சுட்டி போன்ற ஒன்றுதான் தங்கத்தால் செய்யப்பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் நேர்த்தியான பாண்டங்கள் வனைவதிலும், உலோக வேலைப்பாட்டிலும், நெசவுத் தொழிலிலும் மரவேலைப்பாட்டிலும் சிறந்திருந்தனர் என்பது தெளிவாகும். இரும்பு மண்வெட்டிகள் முதலிய வற்றை நோக்க, அம்மக்களது பயிர்த்தொழில் பண்பட்டது என்பது தெரிகிறது. பித்தளையில் விலங்குகளைப் போல உருக்கி வார்த்திருப்பது, அவர்களது கைத்தொழில் சிறப்பை விளக்குகிறது. தாழிகள் புதை தாழிகள் பெரியவை; ஒரு கால் உடையவை; கோளவடிவில் மூன்றடி விட்டம் உடையவை; உயரம் விட்டத்தை விடச் சிறிது மிகுதியானது. சில தாழிகளின் கழுத்துக்கள் நல்ல வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன. ஒவ்வொரு தாழிக்கும் மூடி இருக்கின்றது. சில தாழிகளில் மட்டும் முழு எலும்புக் கூடு இருக்கிறது. சிலவற்றில் எலும்புகளை மட்டும் வைத்துப் புதைத்திருக்கலாம் என்பது தெரிகிறது. அவற்றோடு மண்ணும் உலோகத்தாலான வேறு பல பொருள்களும் தாழிக்குள் வைக்கப்பட்டிருந்தன. முழு எலும்புக்கூடு இருக்கும் தாழிகளில் உடம்பு முடக்கி வைக்கப்பட்டது என்பது தெரிகிறது. சில தாழிகளில் எலும்புகளே காணவில்லை. சில மண்டை ஓடுகளில் நெற்றியில் துளைகள் உள்ளன அவை தலையில் தாக்கப்பட்டு இறந்த மக்களுடையன என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். சில தாழிகளில் சாம்பல் காணப்படுகிறது. அச்சாம்பல் பிணங்களைப் புதைத்தபோது செய்யப்பட்ட சடங்குகளில் எரிந்த மரத்தின் சாம்பலாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். உலோகப் பொருள்கள் பூச்சாடிகள், மணி வடிவத்தில் வாய் கொண்ட ஜாடிகள், வளையல் முதலியன பித்தளையால் செய்யப்பட்டவை. இவை அனைத்தும் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. இவை பண்டை மக்களின் கலைத் திறமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். .ப் பித்தளைப் பொருள்கள் பெரும்பான்மை தாழிகளின் உள்ளேயே காணப்படுகின்றன. மண்வெட்டி, வாள், ஈட்டி, விளக்கு முதலியவை இரும்பால் செய்யப்பட்டுத் தாழியின் வெளிப்புறத்தில் இருந்தன. இவை சில இடங்களில் தாழியுள்ளும் காணப்பட்டன. இக்கருவிகளின் நுனிகள் கீழ் நோக்கி இருந்தன. இறந்தோரின் உறவினரால் இவை மண்ணிற் செருகப்பட்டிருக் கலாம். இவற்றுள் பல கருவிகள் துருப்பிடித்துள்ளன; ஆயினும், உறுதியாக உள்ளன. சில கருவிகள் உருத்தெரியாமல் பொடியாய் விட்டன. தங்க நெற்றிச்சுட்டி தங்க நெற்றிச்சுட்டிகள் சில தாழிகளிற்றான் கிடைத்தன. சிலவற்றில் தங்கத் தகடுகள் காணப்பட்டன. இவற்றைக் கோக்க நூலே பயன்பட்டிருத்தல் வேண்டும். இவற்றை அணியும் வழக்கம் இப்பொழுது இப்பகுதியில் இல்லை. இவற்றையுடைய தாழிகள் பத்து அல்லது பதினைந்து அடி ஆழத்தில் புதைக்கப்பட்டுக் கற்களால் நன்கு மூடப்பட்டிருந்தன. இவை பெரிய தாழிகள், பித்தளை, இரும்பு இவற்றாலான பிற பொருள்கள் இவற்றில் நிறைந்துள்ளன. இவ்வடையாளங்கள் இருப்பின், அங்குத் தங்கச்சுட்டி உறுதியாகக் கிடைக்கும் என்று சொல்லலாம். சில தாழிகளில் தங்கச்சுட்டிகள் நொறுக்கிப் போடப் பட்டிருந்தன. சில சுட்டிகள் முட்டை வடிவில் அலங்காரம் எதுவுமின்றிக் காணப்பட்டன; சிலவற்றில் புள்ளிகளும் கோடுகளும் இடப்பட்டுள்ளன. மட்பாண்டங்கள் பல மண் பானைகள் நன்னிலையில் காணப்படுகின்றன; களிமண் தரையுள்ள இடங்களில் நொறுங்கிக் கிடக்கின்றன. மட் பாத்திரங்கள் தாழியின் உள்ளும் வெளியிலும் கிடைக்கின்றன. சில பானைகள் நல்ல கருப்புக் களிமண்ணாலும், சில சிவப்புக் களிமண்ணாலும், சில இரண்டும் கலந்த கலவையாலும் செய்யப்பட்டுள்ளன. சில பானைகளுக்கு நிறம் கொடுக்கப்பட் டுள்ளது. இங்குக் கிடைத்துள்ள மட்பாண்டங்கள் இப்பகுதியில் இக்காலத்தில் பயன்படுத்தப்படும் மட்பாண்டங்களினின்றும் மிகுந்த வேறுபாடு உடையனவாகத் தெரியவில்லை. பழைய ஊர் ஆதிச்ச நல்லூர் மண் மேட்டிலிருந்து வடக்கே ஒரு கல் தொலைவில் பொருநையாற்றின் வடகரையில் கொங்கராயக் குறிச்சி என்னுமிடத்தில் பழைய ஊர் ஒன்று இருந்தமைக்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. அறிஞர் ரீ, இவ்விடத்தை நன்கு ஆராய்ந்தார். பளபளப்புடன் காணப்படும் மட்பாண்டப் பொருள்கள் பல அங்கு கண்டறியப்பட்டன. ``கொங்கராய குறிச்சி என்ற இடத்தில் ஊர் அமைத்து வாழ்ந்த மக்களது இடுகாடாக ஆதிச்ச நல்லூர் மண்மேடு இருந்திருத்தல் வேண்டும். பண்டைக் காலத்தில் இவ்விரண்டு இடங்களும் அடுத்தடுத்து இருந்தனவாதல் வேண்டும். பிற்காலத்தில் பொருநையாற்றின் போக்கு இவ்விடங்களைப் பிரித்திருத்தல் வேண்டும் என்று அறிஞர் ரீ கருதுகின்றார். இப்பண்டை மக்கள் தங்கள் இறந்தவரைக் காக்க முயற்சி எடுத்துக்கொண்டாற் போலவே தங்களைப்பற்றிய விவரங்களைக் குறித்து வையாமல் மறைந்தது வருந்தத் தக்கதன்றோ? ஸ்ரீவைகுண்டம் இவ்வூர் பொருநையின் வடகரையில் அமைந்துள்ளது. இது திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையுடன் ஒரு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீவைகுண்டபதி சுவாமி கோவில் உயர்ந்த கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. அதனால் இவ்வூர் ஸ்ரீவைகுண்டம் எனப் பெயர் பெற்றது. இக்கோவிலில் இருக்கும் திருவேங்கட முடையார் மண்டபம் சிற்பங்கள் நிறைந்தது. ஏகாதசி மண்டபத்தின் கதவுகள் வைகுண்ட ஏகாதசி அன்றுதான் திறந்துவிடப்பெறும். இப்பகுதியில் கயிலாசநாதசுவாமி கோவில் என்று ஒரு சிவன் கோவிலும் இருக்கிறது. கோட்டைப் பிள்ளைமார் ஊரின் வடகோடியில் பத்தடி உயரத்திற்க மண் சுவர்கள் உள்ள கோட்டை ஒன்று காணப்படுகின்றது. அதனுள் வாழ்பவர் கோட்டைப் பிள்ளைமார் என்று அழைக்கப்படுகின்றனர். இவர் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்குமுன் பாண்டி மன்னர்க்கு முடிசூடும் உரிமை பெற்றிருந்தனராம்; ஏதோ மனத்தாங்கலால் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களை விட்டு இங்குக் குடியேறிக் கோட்டை அமைத்து வாழலாயினராம். கோட்டையுள் வெளி ஆடவர் எவரும் செல்ல அநுமதியில்லை; அரசாங்க அலுவலரும் போதல் இயலாது; ஊர்ப் பெண்கள் கோட்டையுள் செல்லலாம். பட்டணத்துப் பிராமணர் எனப்படுபவரே இவர்களுக்கு குருமார். அப் பிராமணர் திருமணக் காலத்தில் கோட்டையுள் நுழைவர்; திருமண அறையுள் மணப் பெண்ணுக்கும் அவர்களுக்கும் இடையில் ஒரு திரை இடப்படும். ஒரு பெண் இறப்பின், அப்பெண்ணை யாரும் பார்க்க முடியாதபடி சாக்குப்பையுள் போட்டுத் தைத்து, வடக்கு வாசல் வழியாக அறுநூறு அடி தொலைவிலுள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று எரித்து விடுவர். இவர்தம் பணிமக்கள் `கொத்தமார் எனப்படுவர். இவர்களும் கோட்டைப் பிள்ளைமாருடன் பாண்டிய நாட்டின் வடபகுதியிலிருந்து வந்தவராம், இவர்தம் பெண்கள் கோட்டையுள் வேலை செய்கின்றனர். தொடக்க காலத்தில் கொத்தமாரும் கோட்டையுள் வாழ்ந்தனர். அவர்கள் வழக்கத்திற்கு மாறாகக் கல் வீடுகளும் ஓட்டு வீடுகளும் கட்டலாயினர். அவ்வீடுகளை இடிக்கவேண்டுமென்று பிள்ளைமார் வழக்குத் தொடுத்தனர். அக்கோட்டையைக் கட்டியவர் தாங்களே என்றும், பிள்ளைமார்களுக்கு உரிய உரிமை தங்கட்கும் உண்டு என்றும் கொத்தமார் எதிர் வழக்காடினர். ஆயின், நீதிமன்றம் பிள்ளைமாருக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தது. அதன் பயனாகக் கொத்தமார் கோட்டைக்கு வெளியில் வாழ்ந்துவருகின்றனர். கோட்டைப்பிள்ளைமார் 1917-இல் நானூறு பேர் இருந்தனர். இப்பொழுது குழந்தைகள் உட்பட ஐம்பத்தைந்து பேரே இருக்கின்றனர். வரவர மக்கள் தொகை குறைந்து வருகிறது. கோட்டைப்பிள்ளைமாருக்குக் கோட்டைக்கு வெளியில் விடுதிகள் இருக்கின்றன. இவர்கள் அமைச்சர் முதலிய பெருமக்களையும் எண்பர்களையும் இங்குத்தான் வரவேற்கின்றனர். நமது மாநில ஆளுநராயிருந்த ஸ்ரீ பிரகாசா அவர்கள் கோட்டையினுள் விடப்படவில்லை. வெளி விடுதியிற்றான் அவருக்கு வரவேற்பு நடைபெற்றது. அப் பெரியார், நீங்கள் உலக முன்னேற்றத்தைக் கண்டு உங்கள் பழக்க வழக்கங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். தனித்து வாழ்தல் வளர்ச்சிக்கு ஏற்றதன்று , என்று இப்பிள்ளைமார்க்கு அறிவுரை புகன்றனர். ஸ்ரீவைகுண்டம் நிலவளம் மிக்கது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் சிறந்து விளங்கிய குமரகுருபர அடிகள் இப்பதியினரேயாவர். அவரால் தோற்றுவிக்கப்பட்டதே திருப்பன்தாள் காசி மடம் என்பது, அம்மடத்துக்குத் தலைவராக உள்ள அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள், குமரகுருபரர் பெயரால் ஆடவர் உயர்நிலைப்பள்ளி ஒன்று நடைபெறப் பொருளுதவி செய்துள்ளார்; மகளிர் உயர்நிலைப் பள்ளியையும் பெரிய நூல்நிலையம் ஒன்றையும் இவ்வூரில் நடத்தி வருகின்றனர். ஆழ்வார் திருநகரி இது ஸ்ரீவைகுண்டத்திற்கு ஐந்துகல் தொலைவில் திருச்செந்தூர்த் தாலூகாவில் பொருநையாற்றுத் தென்கரையில் அமைந்துள்ளது. இஃது ஆழ்வார் பன்னிருவருட் புகழ்பெற்று நம்மாழ்வார் இருந்து, தம் திருவாய்மொழி இயற்றியருளிய திருப்பதியாகம். இதன் பண்டைப் பெயர் திருக்குருகூர் என்பது; ஆற்றங்கரையில் அமைந்திருப்பதால் மருதவளம் மிக்குடையது. இங்குள்ள ஆதிநாதப் பெருமாள் கோவில் மிகப் பெரிய அமைப்பில் கட்டப்பட்டுள்ளது; வானளாவிய கோபுரமும் உயர்ந்த மதிலும் கோவிலின் புறத்தோற்றத்தை அழகு செய்கின்றன. கோவிலுள் பல மண்டபங்களும் பல தெய்வங்களின் சிறு கோவில்களும் அமைந்துள்ளன. இக் கோவிலில் உள்ள புளியமரம் சிறப்பு வாய்ந்தது. அதன் பொந்தில் நம்மாழ்வார் இருந்து தவம் செய்தனர் என்பது தல வரலாறு. அதன் அடியிற்றான் நம்மாழ்வாரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவ்விடத்தில் நம்மாழ்வார்க்கக் கோவில் கட்டப்பட்டுள்ளது. பெருமாள் கோவில் விழாக்களில் வைகாசி விழா சிறப்புடையது. இவ்விழாவில் நம்மாழ்வாருக்கே சிறப்பிடம் தரப்படுகிறது. இக்கோவிலில் உள்ள திருமாமணி மண்டபம், திருமஞ்சன மண்டபம், கண்ணாடி மண்டபம் என்பன சிற்பவேலைப்பாடு மிகுந்தவை. மொட்டைக் கோபுரமும் அதில் அமைந்துள்ள உருவங்களும் சிறந்த வேலைப்பாடு கொண்டவை. பெருமாள் கோவிலுக்கு முன்புள்ள மூன்று மாடங்களையுடைய கோபுரத்தின் மூன்று கட்டடங்களிலும் காணப்படும் மரத்தூண்கள், யாழிகள், சாளரங்கள் மேற்கட்டுவிதானம் என்பவை சிறந்த மர வேலைப்பாடு கொண்டவை. வேறு எக்கோவிலிலும் காணக்கிடையாத கல்நாதசுரம் ஒன்று இக்கோவிலில் இருக்கிறது. இழ கருங்கல்லில் குடையப்பெற்ற இசைக்கருவி. இது ஏறத்தாழ ஓரடி நீளமுள்ளது. இதன் மேற்பகுதி கால் அங்குல அகலமும் அடிப் பகுதி ஓரங்குல அகலமும் உடையது. அடிப் பாகத்தில் பித்தளைப் பூண் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வொப்பற்ற இசைக்கருவி மதுரையை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கரால் இக்கோவிலுக்கத் தரப்பட்டது என்று கோவிலார் கூறுகின்றனர். நம்மாழ்வார் தமிழ்நாட்டு வைணவத் தலங்களைத் தம் பாக்களில் குறித்துள்ளர். அவற்றுள் எட்டு, ஆழ்வார் திருநகரியைச் சுற்றி இருக்கின்றன. அவை திருப்புளியங்குடி, நத்தம், ஸ்ரீவைகுண்டம், குளந்தை, தென்திருப்பேரை, துணைவில்லி மங்கலம் (இங்கு இரண்டு கோவில்கள் உள்ளன). திருக்கோளூர் என்னும் இடங்களிலுள்ள திருக்கோயில்களாகும். இவற்றோடு திருக்குருகூரையும் சேர்த்து, மக்கள் `நவ திருப்பதிகள் என்று கூறுவர். இவற்றுள் திருக்கோளூரிற் பிறந்தவரே மதுரகவி யாழ்வார் என்பவர். சைவத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி என்பவர் தொகுத்துப் புகழ் பெற்றாற் போலவே ஆழ்வார்களுடைய அருட் பாடல்களைத் தொகுத்து முறைப்படுத்திய பெருமை நாதமுனிகள் என்ற வைணவப் பெரியாரைச் சார்ந்தது. அப்பெரியார் ஆழ்வார் திருநகரிக்கு வந்து, நம்மாழ்வார் பாடியருளிய திருப்பாவை யுள்ளிட்ட நாலாயிரம் பாசுரங்களையும் எழுதித் சென்றார் என்பது தல வரலாறு கூறும் செய்தியாகும். இராமாநுஜரும் இத் திருப்பதிக்கு வந்த நம்மாழ்வாரைத் தரிசித்துச் சென்றார். பின்பு தோன்றிய வைணவப் பெருமக்கள் பலரும் இப் புனித நிலத்தை அடைந்து நம்மாழ்வாரைப் பணிந்து சென்றனர். இத் தலத்திற்றான் மதுரகவியாழ்வார் நம்மாழ்வாருக்கச் சீடராகப் பல ஆண்டுகள் இருந்து பெருமை பெற்றார். 7. பொருநைக்கரை ஊர்கள் - III கொற்கை இலக்கியத்தில் கொற்கை ``கொற்கை, கடற்கரை உயர்ந்த மணல்மேடு வாய்ந்தது. அதை அடுத்துக் கடற்கரைச் சோலை அமைந்திருந்தது. அங்குப் பேயின் தலைபோல் தோன்றும் தாழை மரங்கள் படர்ந்திருந்தன. அவற்றில் முள் நிறைந்த புற இதழ்களையுடைய தாழைப் பூக்கள் தூய வெண்ணிறத்தோடு மலர்ந்து இருந்தன. அம்மலர்களின் மணம் கடற்கரையின் பிலால் நாற்றத்தைப் போக்கியது. ``கொற்கைக் கடலில் முத்து விளையும் சிப்பிகள் மிகுதியாக இருந்தன. அவை முத்துக்குளித்தவர்க்கே அன்றி மீன் பிடித்தவர்க்கும் அகப்பட்டன. அங்ஙனம் அகப்பட்ட சிப்பிகளில் முத்துக்கள் இருக்குமாதலால், அவற்றை விலைகொடுத்து வாங்கக் கொற்கைப் பட்டினத்தார் கரையில் காத்திருந்தனர். மீன் பிடித்தவர் தாம் கொண்டுவந்த சிப்பிகளை விலையாகக் கொடுத்து கள் வாங்கிக் குடிப்பது வழக்கம். ``சங்கெடுக்கும் தொழிலாளர் சுறாமீன்களை ஒதுக்கி விட்டுக் கடலில் மூழ்குவர்; கடலின் அடியில் கிடக்கும் உயர்ந்த வலம்புரிச் சங்குகளை எடுத்து வந்து பெரிய படகுகளில் சேர்ப்பர்; பின்பு படகுகளைச் செலுத்திக் கொற்கைத் துறைமுகத்தில் வந்து இறங்குவர். அப்பொழுது கொற்கை மக்கள் அவர்தம் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கரையில் நின்றிருப்பர்; மகிழ்ச்சியோடு சங்குகளை முழக்கி ஆரவாரமாக வரவேற்பர். ``நிறைமதி நாளன்று அந்திப்பொழுதில் சூரியன் மறைந்தபின் முழுநிலாக் கடலில் தோன்றிக் காட்சி அளிக்கம் அல்லவா? அந்த நேரத்தில் கொற்கைப் பெண்கள் கடற்கரையில் கூடிக் கடல் தெய்வத்தை வழிபடுவர்; தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த முத்துக்களை உதவி செல்வத்தைப் பெருக்கும் கடல் தெய்வத்திற்கு முத்துக்களையும் வலம்புரிச் சங்குகளையும் சொரிந்து வழங்குவர். ``இயற்கையாகச் சிப்பிகளிலிருந்து வெளிப்பட்டுக் கரையோரத்தில் அலைகளால் தள்ளப்படும் முத்துக்களும் இருக்கம். அம்முத்துக்கள் அவ்வழியே செல்லும் குதிரைகளின் கால் குளம்புகளில் பட்டு வடு உண்டாக்கும்; குதிரைகளின் நடையைத் தடுக்கும். ``உப்பு வாணிகர் பிள்ளைகள் கொற்கைக் கிளிஞ்சல்களை எடுத்து விளையாடுவர். அவர்களோடு விளையாடும் குரங்குக் குட்டி கடற்கரையில் இருக்கும் கிளிஞ்சலை எடுத்து, அங்கு விழுந்து கிடக்கும் முத்துக்களைக் கிளிஞ்சலுக்குள் வைத்து `கிலு கிலு என்று ஆட்டி விளையாடும். இச் செய்திகள் அகநா நூற்றுப் பாடல்களிலிருந்து அறியப்படுவன. ``கொற்கை இப்பெரிய உலகில் மேன்மையுடன் புகழும் பெற்றுச் சிறந்து விளங்கும் நகரம்; விளைந்து முதிர்ந்த முத்துக்கள் மிகுந்த நகரம்; சங்கு குளிக்கும் மக்கள் பெருகி வாழும் சேரியை உடைய நல்ல நகரம், என்று மதுரைக் காஞ்சி கூறுகின்றது. கொற்கையின் பழமை பொருநையாறு இன்று கடலோடு கலக்கும் இடத்திற்கு நான்கு கல் உள்தள்ளி, அவ்யாற்றின் வடகரையில் கொற்கை என்னம் பெயருடன் ஒரு சிற்றூர் இருக்கின்றது. பண்டைக் காலத்தில் பொருநையாறு இவ்வூர் அருகிற்றான் கடலொடு கலந்து வந்தது. பொருநையாற்று மண்ணும் மணலுட் பல நூற்றாண்டுகளாக வந்து படிப்படியாக மேடிட்டுக் கடலைப் பின்னோக்கிச் செல்லும்படி செய்து விட்டதால் கொற்கை, துறைமுக நகரத்திற்கரிய வசதியை இழந்து விட்டது. இன்றுள்ள கொற்கையிலும் சுற்றிப்புறங்களிலும் கிளிஞ்சல்களும், முத்துச் சிப்பிகளும் தரைக்கடியில் சிறிது ஆழத்திற் கிடைத்தலே, கடல் இந்நிலப்பகுதியை அடுத்து இருந்தமைக்கு ஏற்ற சான்றாகம். கொற்கைக்குப் பின்னர்க் காயல் (இன்றைய `பழைய காயல்) பாண்டியர் துறைமுக நகராமாக விளங்கத் தொடங்கியது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காயலே சிறந்த துறைமுக நகரமாக இருந்தது என்பதை மார்க்கோபோலோ குறித் துள்ளார். பின் நூற்றாண்டுகளில் கொற்கை பற்றிய பேச்சே யாண்டும் காணப்படவில்லை. எனவே, ஏறத்தாழக் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுடன் கொற்கைப் பொலிவு மறைந்துவிட்டது என்று கொள்ளுதல் தவறாகாது. கொற்கை நகரம் சங்க நூல்களில் பேசப்படுதலால், அதன் பழைமையை நாம் நன்கு உணரலாம். கி.பி. முதல் நூற்றாண்டில் தென் இந்தியக் கரையோரமாக வந்த `பெரிப்ளூ என்ற பிரயாண நூலின் ஆசிரியரும், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் இங்ஙனம் வந்த தாலமியும் இப்பண்டை நகரத்தைச் சிறந்த துறைமுகம் என்று குறிப்பிட்டுள்ளனர்; குமரிமுனையைச் சுற்றி வந்த கிரேக்க வணிகர் முதலில் இத்துறைமுகத்துக்குத்தான் வந்தனர் என்று குறித்துள்ளனர். மேலும், அவர்கள் மன்னார் வளைகுடாவைக் `கொற்கை வளைகுடா என்றே குறித் துள்ளமை, அவர்கள் காலத்தில் கொற்கை பெற்றிருந்த பெருஞ் சிறப்பினை நன்கு விளக்குவதாகும். சங்க நூற்களிற் பாராட்டிப் பேசப்பெற்ற கொற்கைத் துறைமுகம் கிறிது பிறப்பதற்கு முன்பே புகழ் பெற்றிருந்தது என்று கருதுதல் தவறாகாது. பாரசீகர், அரேபியர், பொனீஷியர், எத்தியோப்பியர், கிரேக்கர், உரோமர் என்ற மேலை நாட்டவர், பர்மியர், சீனர் முதலிய கீழை நாட்டவரும் வாணிகத் துறையில் கொற்கைத் துறைமுகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். கொற்கைப் பெருந் துறை முத்தெடுக்கும் தொழிலிலும் பெயர் பெற்றிருந்தது. எனவே, முத்துக்களும் சங்குகளும் சங்கால் செய்யப் பெற்ற பலவகைப் பொருள்களும், மிக்க அளவில் அயல்நாடுகட்கு ஏற்றுமதியாயின. மேலும் தமிழ் நாட்டிற் கிடைத்து வந்த தங்கம், யானைத் தந்தம், கருங்காலி, சந்தனம் முதலிய விலையுயர்ந்த மரங்கள், யானைக் கொம்பு, மயில்தோகை, கிராம்பு, ஏலம் முதலிய மணப் பொருள்கள், பட்டாலும் பருத்தியாலும் இயன்ற ஆடைகள், அரிசி முதலியன அயல்நாடுகட்கு அனுப்பப்பட்டன. ஏறத்தாழக் கி.மு. 1400-இல் வாழ்ந்துவந்த அத்தீனிய அரசர்கள் இக்கடல் வாணிக உறவினால் பாண்டியர்களை மதித்துப் போற்றினமைக்கு அறிகுறியாகப் `பாண்டியோன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டனர். கருங்கடலின் கரையிற் கட்டப்பட்ட வாணிக நகரங்களும் பாண்டியனது துறைமுகப் பட்டினத்தின் பெயரால் `கொல்கீ (கொற்கை) என வழங்கப் பெற்று வந்தன. பின் நூற்றாண்டுகளில் உரோமப் பேரரசர் களான அகட, கிளாடிய முதலியோர் பாண்டிவேந்தருடன் நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; பாண்டியர் அவைக்குத் தூதர்கள் மூலம் பரிசுப் பொருள்களை அனுப்பித் தங்கள் அன்பையும் நட்பையும் அறிவித்துக் கொண்டனர். ``ஐரோப்பிய நாடுகட்கு மிகுதியான அரிசியை ஏற்றுமதி செய்த நகரம் பொருநைக்கரையில் இருந்த கொற்கையேயாகும். இத்தகைய வாணிகம் அக்காலத்தில் கிரேக்கர் வசம் இருந்தது. கிரேக்கர்க்கு முன்பு இந்திய வாணிகம் பாரசீகர், பொனீஷியர் என்பவரிடமே பெரும்பான்மை இருந்தது. தமிழ்ச் சொற்களாகிய தோகை, அரிசி, இஞ்சி முதலியன ஹீப்ரு முதலிய மொழி நூல்களில் காணப்படுகின்றமை, இப்பண்டைக் கடல்வாணிக உண்மையை வலியுறுத்துவதாகும், என்று ஆராய்ச்சி அறிஞர் கூறுகின்றனர். சங்ககாலத்திற்குப் பிறகு கொற்கை பெற்றிருந்த சிறப்பை நன்கு அறிவிக்கும் சான்றுகள் மிகுதியாக இல்லை. பாண்டிய நாடு கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரைப் பாண்டியர் ஆட்சியில் இருந்தது; பின்னர் ஏறத்தாழ முந்நூறு வருட காலம் சோழராட்சியில் இருந்தது. அக்காலத்தில் பாண்டியநாடு இராசராசப் பாண்டிநாடு எனவும், கொற்கை சோழேந்திரசிம்ம சதுர்வேரிமங்கலம் எனவும் பெயர்களைப் பெற்றிருந்தன. அக்காலத்திற்றான், ஆட்சி மாறுபாட்டாலும் முன்னர்க் கூறப்பெற்ற இயற்கைக் கேடுகளாலும் கொற்கை தன்பொலிவை இழந்துவிட்டது. கி.பி. 12-ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்த பாண்டியர் காலத்தில், கொற்கையின் சிறப்பைக் காயல் துறைமுகம் பெற்றுவிட்டது. கால்டுவெல் ஆராய்ச்சி திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ்க்கரையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் தங்கிக் கிறித்துவ சமயத்தொண்டு செய்தவரும் ``திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற இணையற்ற நூலை எழுதி அழியாப் புகழ் பெற்றவருமான கால்டுவெல் ஐயர் சென்ற நூற்றாண்டில் இக் கொற்கையைப் பார்வையிட்டார்; ஆங்காங்கச் சில இடங்களைத் தோண்டி ஆராய்ச்சி நிகழ்த்தினார்; கொற்கையில் சங்குத் தொழிற்சாலை ஒன்று இருந்தமைக்குரிய அறிகுறிகளைக் கண்டார்; அங்குப் பலவகை நாணயங்கள் அவருக்குக் கிடைத்தன, அப்பெரியார் வேலைப்பாடமைந்த பெரிய தாழிகள் பலவற்றைக் கண்டார்; அங்குள்ள `அக்கசாலை என்னும் சிற்றூரைப் பார்வையிட்டு, அவ்விடத்தில் பண்டைப் பாண்டியர் நாணங்களைச் செய்து தந்தனர் என்ற கருத்தை வெளியிட்டார். ``நெல்லை மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளில் பழைய நாணயங்கள் மிகப்பலவாகக் கிடைக்கின்றன. வேறு இடங்களில் கிடைக்காத சதுர நாணயங்கள் இங்கு மிகுதியாகக் கிடைக் கின்றன. அவையனைத்தும் கொற்கைப் பாண்டியருடையவே என்பதில் ஐயம் இல்லை. ``கொற்கையில் கிடைத்த செம்பு நாணயங்கள் சிலவற்றில் முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044) உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறத்தில் அவனது நின்ற தோற்றமும் மற்றொரு புறத்தில் அவனது நின்ற தோற்றமும் மற்றொரு புறத்தில் அவனது இருந்த கோலமும் பொறிக்கப் பட்டுள்ளன. இத்தகைய நாணயங்கள் சோழநாட்டின் வட எல்லை முதல் குமரிமுனை வரையுள்ள தென்னிந்தியப் பகுதி களில் காணப்படுகின்றன. இதனால், சோழர் கொற்கை உள்ளிட்ட பாண்டிய நாட்டைக் கைப்பற்றியாண்டனர் என்பது தெளிவாகிறதன்றோ? என்று கால்டுவெல் பாதிரியார் கூறியிருத்தல் கவனிக்கத்தகும். வளம் நிறைந்த பெருநகரம் சிறந்த முறையில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கடல்வாணிகம் நடைபெற நிலைக்களமாக இருந்த கொற்கை, சோழரது கடற்றுறைப் பட்டினமாகிய காவிரிப்பூம்பட்டினம் போன்று அயல்நாட்டு வணிகர் தங்கியிருக்கத்தக்க மாட மாளிகைகளைக் கொண்டு தெருக்களையும், நம் நாட்டு வணிகர் வாழத்தக்க வளமிகுந்த தெருக்களையும், பலதுறைத் தொழிலாளர்கள் வாழத்தக்கத் தெருக்களைஸயம் பல தொழிற்சாலைகளையும், வணிக இடங்களையும், கப்பல்களில் வைக்கத்தக்க பண்டகசாலைகளையும், இறக்குமதியாகும் பொருள்களை வைக்கத்தக்க பண்டகசாலைகளையும், பெரிய கடைத்தெருக்களையும், கோவில்களையும் பிறவற்றையும் தன்னகத்தே பெற்றிருந்தது என்பது கூறாதே அமையுமன்றோ? அஃது அரசன் வாழ்ந்த இடமாகவும் இலக்கியது என்று சிலப்பதிகாரம் முதலிய தொன்னூல்கள் செப்புவதால், அரண்மனையையும் பெற்றுப் பொலிவுடன் விளக்கமுற்றிருந்தது என்று கருதுதல் பொருத்தமேயன்றோ? சுருங்கக் கூறின், சுமேரியர் நாகரிகத்தின் உயிர் நாடியாக விளங்கிய பாபிலோன் நகரம் போலப் பாண்டியரது நாகரிக வளத்திற்கு உயிர்நாடியாகக் கொற்கைப் பெரு நகரம் விளங்கியது என்று சொல்வது ஏற்புடையது. கொற்கை தனது பெருந்துறை முத்துக்களாலும் கடல் வாணிகத்தாலும் பாண்டியர்க்குப் பெருஞ்செல்வம் அளித்து வந்த காரணத்தாற்றான், பாண்டியனைக் ``கொற்கைக் கோமான், என்றும் ``கொற்கையாளி என்றும் புலவர்களும் குடிமக்களும் உளமகிழ்ந்து பெருமிதத்தோடு பாராட்டலாயினர். இன்றைய கொற்கை இன்றைய கொற்கை மிகச் சிறிய சிற்றூராக இருக்கின்றது. இச் சிற்றூருக்கும் அக்கசாலை என்னும் இடத்திற்கும் இடையே ஏரி போன்ற பரந்த இடம் அமைந்திருக்கிறது. இப்பரந்த இடத்தின் நடுவில் சிறு கோவில் ஒன்று இருக்கிறது. அது வெற்றிவேல் அம்மன் கோவில் என்று பெயர் பெற்றுள்ளது. அங்கப் பழைய காலத்தின் கண்ணகியின் உருவச்சிலை இருந்த தாகவும், அஃது எவ்வாறோ மறைந்து போனதாகவும், அவ்விடத்தில் இப்பொழுது துர்க்கையின் சிலை வைக்கப் பட்டிருப்பதாகவும் எங்களுக்குப் பல இடங்களைக் காட்டிவந்த பெரியவர் ஒருவர் கூறினார். கோவலன் மதுரையில் கொலையுண்டதற்கப் பதிலாகக் கண்ணகி சீற்றம் பொங்கி மதுரையை அழித்தாள் அல்லவா? அப்பத்தினித் தெய்வத்தின் உள்ளத்தைக் குளிர்விக்க அப்பொழுது கொற்கையை ஆண்ட வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறத. அந்த வெற்றிவேற் செழியன், தான் ஆண்ட கொற்கையில் கண்ணகியம்ம்னுக்குக் கோவில் எடுப்பித்திருத்தல் இயல்பே. அவன் அவ்வம்மனை வழிபட்டிருத்தலும் பொருத்தமே யாகும். வெற்றிவேற் செழியனால் வழிபடப்பட்ட அம்மன், `வெற்றிவேல் அம்மன் எனப் பெயர் பெற்றதில் வியப்பில்லை யன்றோ? இப்பொழுது கோவிலில் உள்ள அம்மனுக்குச் `செழுகை நங்கை என்பது பெயர் என்று ஊரார் உரைக்கின்றனர். `செழிய நங்கை (செழியன்-பாண்டியன்) என்ற பெயரே இவ்வாறு `செழுகை நங்கை என மாறி வழக்குப் பெற்றிருக்கலாம். செழியனால் பூசிக்கப்பெற்ற நங்கை செழிய நங்கை எனப் பெயர் பெற்றாள் போலும்! இக்கோவிலுக்கு அருகில் சில இடங்களில் பழைய உறைகிணறுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. நாங்கள் அவற்றுள் ஒன்றன் நீரைப் பருகினோம். அது குடிநீராகவே இருக்கின்றது. ஏரி போன்ற அவ்வகன்ற இடமெங்கும் பண்டைக் கால மட்பாண்டச் சிதைவுகளுள் காணப்படுகின்றன. இவையும், உறைகிணறுகளும், கோவிலும் அங்கு இருத்தலை நோக்க, அப்பரந்த இடம் முழுமையும் பண்டைக் காலத்தில் கொற்கை நகரின் ஒரு பகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்று கருத இடந்தருகிறது. அப்பரந்துள்ள பகுதி பிற்காலத்தில் பள்ளமாகி நீர் நிற்கும் இடமாக மாறி இருத்தல் வேண்டும். வெற்றிவேலம்மன் கோவிலுக்கு நேர் மேற்கில் பழுதுபட்ட சிவன் கோவில் ஒன்று வாழைத் தோடடத்துக்கிடையில் இருக்கிறது. இதனில் இப்பொழுது சிவலிங்கம் இல்லை; பிள்ளையார் திருவுருவம் இருக்கின்றது. கோவிலின் கருவறை மட்டுமே எஞ்சி நிற்கின்றது. இதன் சுவர்களில் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒரு பகுதியைப் படத்திற் பாருங்கள். இக்கோவிலை `அக்கசாலை ஈசுவர முடையார் கோவில் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அக்கசாலை என்பது முன் சொல்லப்பட்ட ஏரி போன்ற பரந்த வெளிக்கு அப்பால் உள்ள சிற்றூராகும். பண்டைக் காலத்தில் அக்கசாலை என்பது. இச்சிவன் கோவில் உள்ள பகுதியையும் உள்ளடக்கியதாக இருந்ததென்று கருத இக்கோவிற் கல்வெட்டு இடந்தருகிறது. அக்கசாலையில் இன்றும் நிலத்தைத் தோண்டும் பொழுது பல நாணயங்கள் கிடைக்கின்றன என்றும், அங்குப் பல காலமாக வாழ்ந்து வந்தவருட் பெரும்பாலார் பொற்கொல்லரே என்றும், அவர்கள் இப்பொழுது பிழைப்பைக் கருதிப் பல ஊர்கட்கும் சென்றுவிட்டனர் என்றும் ஊரார் உரைக்கின்றனர். முன் சொல்லப்பெற்ற கோவில் கல்வெட்டுக்களில் கொற்கை `மதுரோதய நல்லூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையின் சிறப்புக்குச் செல்வம் கொழித்த கொற்கை பெருங்காரணமாக இருந்தமை கருதியே கொற்கைக்கு `மதுரோதய நல்லூர் எனப் பிற்கால மன்னர்கள் பெயரிட்டனர் போலும்! கொற்கைச் சிற்றூரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஒன்றேகால் அடிச் சதுரச் செங்கற்கள் கிடைக்கின்றன. நிலத்தைத் தோண்டும் பொழுது ஐந்தடி ஆழத்தில் களிமண்ணும், பத்தடி ஆழத்தில் சங்குகளும் நிரம்பக் கிடைக்கின்றன; பதினைந்து அடி ஆழத்தில் தோண்டும் பொழுது ஒருவகைச் சேறு கிடைக்கின்றது. இங்கு உப்பங்கழி இருந்தது என்பதற்கும் கடல் அருகில் இருந்தது என்பதற்கும் இவை உரிய அறிகுறிகள் என்று ஊர் முதியவர் உரைத்தனர். கொற்கையம்பதியில் பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்றது என்று ஊரார் உரைக்கும் வன்னிமரம் ஒன்று இருக்கின்றது. அது நேரே நிமிர்ந்து இராமல் தரையை ஒட்டியபடி பத்தடி சென்று, மேலே நிமிர்ந்துள்ளது. அதன் அடிப்பாகத்தில் பெரிய பொந்து அமைந்திருக்கிறது. அதற்கு எதிரில் சாலை நடுவே சமண தீர்த்தங்கரர் சிலையொன்று மண்ணுள் பாதியளவு புதையுண்டு இருக்கின்றது. மற்றொரு தீர்த்தங்கரர் சிலை ஊரையடுத்த தோட்டம் ஒன்றில் காணப் படுகிறது. இவை இங்கு இருத்தலை நோக்க இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமண சமயத்தவரும் வாழ்ந்திருந்தனர் என்பதை அறியலாம். கொற்கையைப் பற்றிப் பல குறிப்புக்களைச் சேர்த்து வைத்துள்ளவரும் கொற்கைக்கு வரும் ஆராய்ச்சியாளருக்கு உறுதுணையாக இருப்பவருமாகிய சிவராமப்பிள்ளை என்னும் முதியவரிடம் ஒரு செப்பேட்டு நகல் இருக்கின்றது. ``ஸ்ரீவரகுண மகாராயர்க்கு யாண்டு 13 என்பது காணப்படும். அப்பட்டயத்தில் `பழங் காசு ஆயிரத்து நானூனுறு, `பொன் எட்டு, `அரண்மனைக்கு மரக்கலராயர்.1 ஆயிரம் பொன்னும், உப்பு லாபத்தில் நூறு பொன்னுக்கு இருபத்தைந்து பொன்னும் செலுத்தக் கடவர்..... ஒரு பொன் எடையும் அதற்கு மேற்பட்ட ஆணிமுத்தும் வலம்புரிச் சங்கும் அகப்பட்டால் அவைகளை மரக்கலராயர் அரண்மனைக்குச் செலுத்தி விடவும். என்னும் வாசகங்கள் காணப்படுகின்றன. இவற்றை நோக்க, அக்காலத்தில், `பழங்காசு என்றொரு பழைய நாணயம் வழக்கில் இருந்தது. `பொன் என்பது ஒரு நாணயத்தில் பெயர், கடல் வாணிகத்துக்காகப் பல மரக்கலங் களை வைத்திருந்தவர் `மரக்கலராயர் எனப்பெயர் பெற்றார், உப்பு உண்டாக்கும் தொழிலும், உப்பு வாணிகமும் கொற்கைக் கருகில் நடைபெற்றிருக்கலாம், `பொன் என்னும் பெயர் நிறுத்தல் அளவைப் பெயராகவும் இருந்தது. `ஆணிமுத்து என்பது முத்துக்களில் சிறந்தது, சங்குகளில் வலம்புரிச் சங்கு உயர்ந்தது. இவை இரண்டும் அக்காலத்தில் கொற்கைப் பெருந்துறையில் கிடைத்து வந்தன என்னும் விவரங்களைத் தெளிவாக அறியலாம். கொற்கையில் இன்று வாழும் முதியவர்கள் கொற்கை வளநாடு பற்றிக் கீழ்க்காணப் பெறும் பழம்பாடல்1 ஒன்றைப் பாடுகின்றனர்: `` ஆலமரம் அரசமரம் ஆனதிந்த நாடு அதன்பிறகு புன்னைமரம் ஆனதிந்த நாடு நாலாம்யுகம் தன்னில்வன்னி மரமான நாடு நாற்றிசையும் சீர்த்திபெற்று நலமிகுந்த நாடு அக்கரையும் மதிபுனையும் சொக்கலிங்க ஈசன் அழகுமுடி கொண்டஐயன் அருள்புரியும் வண்மை திக்கனைத்தும் புகழ்நின்ற ஜெகதேவி செழுகிநங்கை சென்னிவெற்றி வேல்தாய் முக்கியமாய் அருள்புரியும் கோட்டைவாழ் ஐயன் முகனையுடன் சிறந்திருக்கும் நாவலடி மெய்யர் ... ..... .... தக்கார்புகழ் முக்காணி வடக்குவாழ் செல்வி மனமகிழ்ந்து அரசுசெய்யும் 2 பொற்கைவள நாடு சீரான தென்மதுரைச் தேசமது செழிக்கத் திருவளரும் பொற்கையென்று தினம்புகழப் பெற்றோரும் காராளர் வம்சமிது நகரமிது செழிக்கக் கனையோகன் அரசுசெய்யும் பொற்கைவள நாடு. காயல் உலகப் புகழ்பெற்ற கொற்கைத் துறைமுகம் கடற்றுறைப் பட்டினமாகப் பயன்படத் தவறியதற்குப்பின்பு ஏறத்தாழக் கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டில் காயல் பாண்டியநாட்டுத் துறைமுக நகரமாகச் சிறப்புப்பெற லாயிற்று. இது பண்டைக் காலத்தில் கடற்கரையில் அமைந்திருந்தது, நாளடைவில் கடல் பின்தங்கிச் சென்ற காரணத்தால், இப்போது கடற்கரைக்கு இரண்டுகல் தொலைவில் உள்நாட்டில் பாழடைந்த சிற்றூராகக் காட்சியளிக்கிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இவ்வளநகரைப் பார்வையிட்ட வெனிஸிய வணிகரான மார்க்கோபோலா காயலைப்பற்றியும் மன்னார் குடாவில் முத்துக் குளித்தலைப்பற்றியும் பாண்டியன் செல்வத்தைப்பற்றியும் கீழ்வருமாற கூறியுள்ளார். ``காயல் பாண்டியநாட்டின் சிறந்த துறைமுகப் பட்டினம். இங்கு அரேபியா, ஏடன் முதலிய பல நாட்டுக் கப்பல்கள் பலவகைப் பொருள்களையும் குதிரைகளையும் இறக்குமதி செய்கின்றன. பிற நாடுகட்குப் பொருள்களைக் கொண்டு செல்லும் அயல்நாட்டுக் கப்பல்களும் காயல் துறைமுகத்தில் தங்கிப் போகின்றன. காயலிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள் களுள் குறிப்பிடத்தக்கது முத்து. ஏப்ரல் திங்கள் முழுவதும், மே திங்களில் முதற் பாதியுமாக ஏறத்தாழ ஒன்றரைத் திங்கள் கடலில் முத்தெடுக்கப்படுகிறது. ``முத்துக் குளிப்பவர் சிறிய படகுகள் பலவற்றுடன் ஒரு பெரிய கப்பலிற் செல்கின்றனர்; ஏறத்தாழ (மன்னார்) வளை குடாவில் அறுபது கல் தொலைவு செல்கின்றனர்; பெரிய கப்பலிலிருந்து சிறிய படகுகளை இறக்கி, அவற்றில் தாமும் ஏறிக்கொள்கின்றனர்; பின்பு கடலில் குதித்துக் கடலடியை அடைகின்றனர்; தங்கள் இடுப்பைச் சுற்றிலும் கட்டியுள்ள வலைப் பைகளில் முத்துச் சிப்பிகளைச் சேர்க்கின்றனர்: மூச்சுத் திணறும்போது வெளியே வந்துவிடுகின்றனர்; மீண்டும் கடலடிக்குச் சென்று சிப்பிகளைச் சேர்க்கின்றனர்; இவ்வாறு ஒரு நாளில் பலமுறை கடலடிக்குச் சென்று சிப்பிகளை எடுக்கின்றனர். ``இங்ஙனம் எடுக்கப்படுகின்ற சிப்பிகளிலிருந்து கிடைக்கும் முத்துக்கள் பல நாடுகட்கு அனுப்பப்படுகின்றன. முத்து எடுக்கும் தொழிலால் பாண்டியன் பெறுகின்ற வருமானம் மிகுதியாகும். விலை மதிப்பு மிகுந்த முத்துக்களை அரசனே வாங்கிக் கொள்கிறான். அரசனிடம் விலையுயர்ந்த முத்துக்களும் பிறவகை மணிகளும் மிகப் பலவாக இருக்கின்றன. அவன் தன் கழுத்தைச் சுற்றிலும் நவரத்தின மாலை அணிந்திருக்கிறான்; விலை மதிக்கமுடியாத முத்துக்களையும் மணிகளையும் பட்டுக் கயிற்றால் கோத்துத் தொங்க விட்டிருக்கிறான்; நாள்தோறும் அம்மணிகளை உருட்டிப் பூசை செய்கிறான். அம்மணிமாலை பாண்டியர் பரம்பரைக்கே உரியது. மன்னன் முத்துக்கள் நெருக்கமாகப் பதிக்கப்பெற்ற மூன்று வளையங்களைக் கைகளில் அணிந் திருக்கிறான். அவனுடைய காலணிகளும் விலை மதிக்கமுடியாதவை. சுருங்கக் கூறின், அரசன் அணிந்துள்ள நகைகளின் மதிப்பும் வளமிகுந்த ஒரு நகரத்தின் மதிப்பும் ஏறத்தாழச் சமமாகும் என்று கூறலாம். ``ஆண்டுதோறும் பாண்டிய நாட்டில் இறக்குமதியாகும் குதிரைகள் மிகப்பல. இவற்றை வாங்கப் பாண்டியர் ஆண்டுதோறும் செலவிடும் தொகை மிகுதியாகும். இந்நாட்டு மக்களுக்குக் குதிரை வளர்ப்பில் பழக்கமில்லை. அதனால் ஆண்டுதோறும் பல குதிரைகள் இருக்கின்றன; சில பயன்படாமற் போகின்றன. எனவே, ஒவ்வொரு ஆண்டும் புதிய குதிரைகள் பெரும் பொருள் கொடுத்து வாங்கப்படுகின்றன. மார்க்கோபோலோவின் சமகாலத்தவரான பாரசீக வரலாற்று ஆசிரியர் வாசப் (Wassaf) என்பவரும் காயலைப் பற்றிப் பல செய்திகள் வெளியிட்டுள்ளார் இந்தியா, சீம் ஆகிய வற்றின் பொருள்கள் அனைத்தும் இங்கு வந்தன என்றும், மேலைநாட்டு ஆடம்பரப் பொருள்கள் அனைத்தும் இத்துறை முகப்பட்டினத்தின் வழியாகவே அடிக்கடி ஏற்றுமதி செய்யப் பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மார்க்கோபோலோ, வாசப் இவர் தம் குறிப்புக்களிலிருந்து, காயல் துறைமுகத்தில் நடைபெற்று வந்த கடல் வாணிகச் சிறப்பையும் பாண்டியன் செல்வ வளத்தையும் நன்கு அறியலாம். இவர்கள் கூற்று உண்மை என்பதைக் காயல் நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கிடைக்கும் பழம் புதைபொருள்களால் அறியலாம். அரேபியா, சீனம் முதலிய நாடுகளுக்குரிய பல நிறமும் மதிப்பும் வாய்ந்த உடைந்த பாண்டங்கள் அங்குக் கிடைத்துள்ளன. கி.பி. 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாலிக்-காபூர் இந்நகரத்தைக் கொள்ளையிட்டு, பத்து லட்சம் பவுன் மதிப்புள்ள பொருள்களைக் கொண்டு சென்றார் என்பது கூறப்படுகிறது; இந்நகரம் இருந்த இடத்திற்கு அடியில் ஏராளமான புதைபொருள்கள் இன்னும் கிடைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் நம்புகின்றனர். வாகோடகாமா 1498-இல் இங்கு வந்தபோது காயல் நகரில் முத்தெடுக்கும் தொழில் ஒரு முலீம் அரசன் பார்வையில் நடைபெற்றது. 1514-இல் போர்த்துகீசியராகிய பார்போசா இந்நகர் வந்த காலை முத்தெடுக்கும் உரிமை உயிலன் என்னும் மன்னனிடம் இருந்தது. 1542-இல் சேவியர் மகான் இக்கடற்கரையைப் பார்வையிட்டபோது, முத்தெடுக்கும் உரிமை போர்த்துகீசியர் கையில் இருந்தது.1658-இல் டச்சுக்காரர் போர்த்துகீசியரைக் காயல் பகுதியில் இருந்து துரத்திவிட்டனர்; புன்னைக் காயலில் பல தொழிற்சாலைகளை அமைத்து வாணிகம் செய்தனர். டச்சுக்காரர் புன்னைக் காயலைச் சிறப்பிட மாகக் கொண்டதை நோக்க உலகப் புகழ்பெற்ற காயல் அவர்கள் காலத்தில் பொலிவிழந்துவிட்டது என்பதை அறியலாம். சேவியர் மகான் 1543-இல் இங்கு ரோமன் கத்தோலிக்கர் கோவில் ஒன்றைக் கட்டினார். டச்சுக்காரர் இங்கு ஒரு பிராடெடென்ட்டுக் கோயிலைக் கட்டினர். அலாவுத்தீன் கில்ஜியின் படைத் தலைவர் ஒருவரது உடல் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது; அவ்விடத்தில் மசூதி ஒன்று கட்டப் பட்டது. ஆப்பிரிக்க விக்கரகம் வைத்து வழிபடப் பெற்ற காப்பிரிச்சாமி கோவில் ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. கால்டுவெல் ஐயர் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் காயல் நகரம் சென்று பார்வையிட்டார். பிற்பகுதியில் காயல் நகரம் சென்று பார்வையிட்டார். அவர் அங்குப் பல நாணயங் களை விலைகொடுத்து வாங்கினார். அவை அனைத்தும் காயல் நகரின் வயற்புறங்களிலிருந்து எடுக்கப் பெற்றவை. பாண்டியர், சோழர், நாயக்க மன்னர் நாணயங்கள் அங்குக் கிடைத்தன. அவற்றுள் இராசராச சோழன் காலத்துச் சோழ நாணயங்கள் சிலவாகும். பாண்டியர் நாணயங்கள் பலவற்றில் சுந்தர பாண்டியன் பெயரும், சிலவற்றில் குலசேகர பாண்டியன், வீர பாண்டியன் முதலியோர் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தன. சிவற்றில் பெயர்களே இல்லை. இந்த நாணயங்களைக் காயலில் வாழும் மக்கள் `பொடிக்காசு என்று கூறுகின்றனர். இவை மட்டுமின்றி, அரேபியர் முதலில் அயல் நாட்டாருடைய பொன், வெற்றி நாணயங்களும் அங்குக் கிடைத்தனவாம். மதுரை நாணயங் களுக்கும் காயலில் கிடைத்த பாண்டியர் நாணயங்களுக்கும் வேறுபாடு சிறிதளவு காணப்படுகிறது. எனவே, காயலில் கிடைத்த பாண்டியர் நாணயங்கள் காயல் நகரிலேயே செய்யப்பட்டிருத்தல் வேண்டும் என்பது கால்டுவெல் ஐயரது கருத்தாகும். காயல் நகரும் அதன் அயல் இடங்களும் மிகுதியான புதை பொருள்களை உடையனவாகும். புதைந் தொழிந்த கட்டடங்களும் கிணறுகளும் நாணயங்களும் பலப்பல மணலுக்கடியில் காணப்படுவதை நாம் இன்றும் காணலாம். இங்ஙனம் பண்டைக் காலத்தில் சிறப்புடன் விளங்கி அழிந்த காயல், இப்பொழுது `பழைய காயல் என வழங்கப்படுதல் இயற்கைதானே. 8. பொருநைக்கரை நாகரிகம் கல்வி சங்க காலப் பாண்டியனான ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கல்வி பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளான். ``ஒரு தாய் பல பிள்ளைகளைப் பெறுகிறாள். அவள் அப்பிள்ளைகளும் கற்றவனையே பெரிதும் விரும்புவாள். ஒரு குடும்பத்தில் பார் இருக்கலாம். அப்பலருள் மூத்தவனையே அழையாமல், அவருள் படித்தவனையே அரசனும் அழைத்து யோசனை கேட்பான். சமுதாயத்தில் தகுதியால் உயர்ந்த வரும் தாழ்ந்தவரும் உண்டு. தாழ்ந்தவருள் ஒருவன் கற்றவனாயிருப்பின், அவன் தாழ்ந்தவன் என்று உயர்ந்தவர் கருதார்; அவனை மதித்து யோசனைகளைக் கேட்பர். ஆதலால் ஒவ்வொருவரும் எப்பாடு பட்டாயினும் கல்வியைக் கற்றல் வேண்டும். நாடாண்ட மன்னனே இங்ஙனம் கல்வியின் தேவையை வற்புறுத்தினான் எனின், அக் காலக் கல்விநிலை எங்ஙனம் இருந்திருத்தல் வேண்டும்! அக் காலத்தில் அரசர், வணிகர், வேளாளர், கொல்லர் முதலிய பல தொழில் செய்தவர் அனைவரும் கல்வி கற்றனர். அரச மாதேவியர், சிற்றரசர், மகளிர், குறத்தி, குயத்தி முதலிய பல துறை மகளிரும் நற்றமிழை நலமுறக் கற்றுக் கவிபாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். இவர் தம் பாடல்கள் புறநானூறு முதலிய தொகை நூல்களில் காணப்படுகின்றன. மதுரையை ஆண்ட பூதப் பாண்டியன் மனைவியும், பறம்புமலை நாட்டை ஆண்ட பாரி மகளிரும், ஒக்கூரில் வாழ்ந்த மாசாத்தியாரும், கொற்கையைச் சூழ்ந்த மகேறாக்கம் என்ற நாட்டைச் சேர்ந்த (மாறேக்கத்து) நப்பசலையாரும், பாண்டிய நாட்டைச் சேர்ந்த பெண்பாற் புலவராவர். இவர் தம் பாடல்கள் சொற் செறிவும், பொருட் செறிவும் மிகுந்தவை ; பதினெட்டு நூற்றாடுகளாகத் தமிழ் மக்களால் பாராட்டப்பட்டு வருபவை. இங்ஙனம் அக்காலச் சமுதாயத்தில் இருந்த ஆடவரும் பெண்டிரும் வேறுபாடின்றிக் கல்வி கற்கப் பல பள்ளிகள் பாண்டிய நாட்டில் இருந்தன என்று கூறுதல் மிகையாகாது, பாண்டியர் இயல்-இசை-நாடகம் என்ற முத்தமிழையும் வளர்க்க மதுரையில் சங்கம் வைத்தனர்; புலவரைக் கூட்டினர்; இயற்றமிழை வளர்த்த புலவர்களையும், இசைத் தமிழை வளர்த்த பாணர்களையும், நாடகத் தமிழை வளர்த்த கூத்தரையும் சிறப்பித்தனர். சங்க காலத்திற்குப் பின்பு தமிழரசர் ஆட்சியின்மையால் பல்லவ நாட்டில் தமிழ் நன்கு வளரவில்லை; பாண்டிய நாட்டிலும் சங்கம் இல்லை. சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலம் சமய வளர்ச்சிக்கு மிகுந்த காலம்; சமயப் போராட்டங்கள் நடந்த காலம். எனவே இக்காலத்தில் பொதுக் கல்வியைவிடச் சமயக் கல்வி சிறந்திருந்தது. சோழநாட்டில் காரைக்கால் அம்மையார் சமயப் பாடல்களைப் பாடினாற் போலவே, பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த ஆண்டாள் அம்மையார் சமயப் பாடல்களைப் பாடி அழியாப் புகழ் பெற்றனர். இவ்வாறே நம்மாழ்வார், மதுரகவி யாழ்வார் என்ற வைணவப் புலவர் பெருமக்கள் பல அருட்பாடல்களைப் பாடினர். வடமொழிக் கடலையும், தென் மொழிக் கடலையும் நிலை கண்டுணர்ந்து தொல்காப்பியம் - சொல்லதிகாரத்திற்கு உரைகண்ட சேனாவரையர் கொற்கையை அடுத்த ஆற்றூரைச் சேர்ந்தவர். இவர் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு. இவர் காலத்தில் கொற்கையைச் சூழ்ந்த நாடு `மாறேக்கநாடு* எனப் பெயர் பெற்றிருந்தது. அந்நாட்டிற்குத் தலைநகர் `மாறேக்கம் என்பது. ``புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறேக்கத்தார் இக்காலத்துப் `பெண் மகன் என வழங்குவர் என்று சேனாவரையர் சொல்லதிகாரத்தில் எழுதியுள்ளார். திருக்குருகை எனப் பெயர் பெற்ற ஆழ்வார் திருநகரில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் தோன்றியவரே திருக் குருகைப் பெருமாள் கவிராயர் என்பவர். இவர் மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள் முதலிய நூல்களைச் செய்து புகழ் பெற்றவர். மாறனலங்காரத்திற்கு உரை எழுதிய காரிரத்தினக் கவிராயர், அவர்புத்திரனான திருமேனிக் கவிராயர் ஆகிய இருவரும் தென்திருப்பேரையைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீவைகுண்டம் என்ற திருப்பதியில் பிறந்து மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் முதலிய பல நூல்களைப் பாடியவர் குமரகுருபர அடிகள். இவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருநெல்வேலியில் சிந்து பூந்துறையில் உள்ள சைவ மடத்தில் இருந்தவர் வெள்ளி அம்பலவாணத் தம்பிரான் என்பவர். இவரும் 17-ஆம் நூற்றாண்டினர். இவர் ஞானபரண விளக்கம் முதலிய சமய நூல்களை எழுதியவர் 17-ஆம் நூற்றாண்டில் ஆழ்வார் திருநகரில் சுப்பிரமணிய தீட்சிதர் என்பவர் பிரயோக விவேகம் என்ற இலக்கண நூலைச் செய்து புகழ்பெற்றார்; திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்த ஈசான தேசிகர் என்ற சாமிநாத முனிவர் இலக்கணக் கொத்து, திருச்செந்திற் கலம்பகம் முதலிய நூல்களைச் செய்தார். திருநெல்வேலியை அடுத்துள்ள ரெட்டியார் பட்டியில் வைணவராய்ப் பிறந்து வளர்ந்து புலமை பெற்ற பின்பு கிறித்தவ சமயத்தைத் தழுவி இரட்சணிய யாத்திரிகம் முதலிய செய்யுள் நூல்களை இயற்றியவர் கிருஷ்ண பிள்ளை என்பவர். இவர் கால்டுவெல் ஐயர், போப்பையர் காலத்தவர்; சிறந்த தமிழ்ப் புலவர். தொழிலும் வாணிகமும் பொருநைக்கரை ஊர்களில் இன்று பலவகைத் தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் நெசவுத் தொழில் குறிப்பிடத்தக்கது. நூல் நூற்கும் தொழில் சங்ககால முதல் பெண்களிடமே இருந்து வருகிறது. நூல் நூற்றல் குடிசைத் தொழில்களுள் சிறந்தததாகவும் இருக்கின்றது. நூற்பு ஆலைகளிலும் பெண்கள் வேலை செய்கின்றனர். அம்பா சமுத்திரம், கல்லிடைக் குறிச்சி, வீரவநல்லூர்,, சேர்மாதேவி, சயதுங் நல்லூல் முதலிய ஊர்களிலும் சுற்றுப்புறச் சிற்றூர் களிலும் நெசவுத் தொழில் நடைபெறுகின்றது. செங்குந்தர், சாலியர், பட்டு நூல்காரர், முலீம்கள், ஈழுவர் முதலியோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவ்விடங்களில் நெய்யப்பெறும் உயர்தர ஆடைகளும் பிறவும் மலையாள நாட்டிற்கும் பிற இடங்கட்கும் அனுப்பப் பெறுகின்றன; நெசவுத் தொழிலில், நூல் நூற்பவர், சாயத் தொழிலாளர், நெய்பவர் எனப் பலதிறத் தொழிலாளர்ப பிழைக்கின்றனர். பாய் செய்யும் தொழில் பத்தமடை முதலிய இடங்களில் நடைபெறுகின்றது. குளத்து ஓரங்களிலும் வாய்க்கால் ஓரங்களிலும் கோரல கிடைக்கின்றது. இதனை ஏலத்தில் எடுத்துவந்து, பதப்படுத்திப் பல நிறங்களை ஊட்டிப் பலவகைப் பாய்கள் செய்யப்படுகின்றன. இப்பாய்கள் திருநெல்வேலியைச் சேர்ந்த பேட்டைக்கு அனுப்பப் பெறுகின்றன. அங்குள்ள வணிகர் இவற்றை உள்நாட்டுப் பல பகுதிகட்கும் அனுப்பு கின்றனர்; பர்மா, மலேயா முதலிய நாடுகட்கும் ஏற்றுமதி செய்கின்றனர். பத்தமடையில் செய்யப்படும் பாய்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை முலீம்களால் செய்யப்படுகின்றன. மிக மென்மையும் வழவழப்பும் உடைய இப்பாய்களின் விலை மிகுதியாகும். பனைமரத் தொழிலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பனை ஓலைகளைப் பதப்படுத்திப் பாய்கள் செய்கின்றனர்; தடுக்குகள் முடைகின்றனர்; சிறியனவும் பெரியனவுமாகப் பலவகைக் கூடைகளைச் செய்கின்றனர்; ஓலை களுக்கு வண்ணங்களை ஊட்டிப் பலநிறக் கூடைகளும் தயாரிக் கின்றனர்; ஓலைகளைக் கொண்டு பலவகை விளையாட்டுப் பொருள்களையும் செய்கின்றனர்; பனையோலைகள் வீட்டுக் கூரையாகவும் அமைகின்றன; பனை நாரைக் கொண்டு கயிறு பின்னப்படுகிறது. பனை நுங்கும் பதனீரும் விற்பனை செய்யப் படுகின்றன. பனங்கிழங்கு உணவாகப் பயன்படுகிறது. பனஞ்சாறு கொண்டு வெல்லம், கற்கண்டு தயாரிக்கப் படுகின்றன. மெழுகு வளையல்கள் ஸ்ரீவைகுண்டம் தாலூகாவைச் சேர்ந்த மாறமங்கலத்தில் உள்ள கவரை நாயக்கரால் தயாரிக்கப்படுகின்றன. இவர்கள் பம்பாய் வளையல்களை வரவழைத்து வாணிகம் செய்கின்றனர். திருநெல்வேலி, நரசிங்கநல்லூர், சயதுங்க நல்லூர், கொற்கையை அடுத்துள்ள ஏரல் என்னும் ஊர்களில் வெண்கலப் பாத்திரங்கள் செய்யப்படுகின்றன. இவை வெளி நாட்கட்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பேரூரிலும் பொற்கொல்லர், இரும்புக் கொல்லர், தச்சர், மண்பாண்டத் தொழிலாளர் முதலியோர் தத்தம் தொழில் களில் ஈடுபட்டுள்ளனர். தோலைப் பதம் செய்து பலவகைச் செருப்புகள் செய்யப்படுகின்றன. திருநெல்வேலிச் செருப்புக்கள் பெயர் பெற்றவை. பதனிடப்பட்ட தோல் பல இடங்கட்கும் அனுப்பப் பெறுகிறது. பொருநையாறு கடலொடு கலக்கும் இடத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் மீன் பிடிக்கும் தொழில் நடை பெறுகிறது. மீன்களைக் காயவைத்துப் பதப்படுத்தி உள்நாட்டுப் பகுதிகட்கு அனுப்புவதில் பரதவர் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். மீன் உணக்கல் ஈழ நாட்டிற்கும் அனுப்பப் பெறுகிறது. முத்தெடுக்கும் தொழில் பல நூற்றாண்டுகளாகக் கொற்கையை அடுத்த கடற்பகுதிக்கே உரியதாக இருந்தது. பின் நூற்றாண்டுகளில் தூத்துக்குடி* இத்தொழிலில் சிறந்து விளங்கியது; மூர் ஜாதியினர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் என்போர் முத்தெடுக்கும் தொழிலை முதன்மையாகக் கருதினர். இன்றும் தூத்துக்குடிப் பரதவர் அத்தொழிலில் தலைசிறந்து விளங்குகின்றனர். கொள்கை, காயல் என்ற துறைமுகங்களை அடுத்த பகுதிகளில் பண்டைக் காலத்தில் உப்பளங்கள் இருந்தன. இப்பொழுதும் சிறிதளவு இருந்த வருகின்றன. ஆயின் தூத்துக்குடியிற்றான் உப்பு தயாரிக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. திருமால் கையில் சங்கு இருப்பதாக நூல்கள் கூறுகின்றன. ``சங்கறுப்பது எங்கள் குலம். சங்கரனார்க்கு ஏது குலம் என்று நக்கீரர் சொன்னதாக ஒரு பாடல் உண்டு. மார்கழி மாதம் நாள்தோறும் வைகறையில் தாதன் சங்கை ஊதிக்கொண்டு வருவது இன்றும் வழக்கமாக இருக்கின்றது. கோவில் விழாக்களில் சங்கு ஊதுவது உண்டு. மகாபாரதப் போரில் கண்ணன் சங்கூதினான் என்பது வரலாறு. இவ் விவரங்களை நோக்க, சங்கு பலநூற்றாண்டுகளாகவே மக்களால் பயன் படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. சங்குகளில் மிகவுயர்ந்தது வலம்புரிச் சங்கு. ஒரு வகைக் கடற் பூச்சியின் மேற்கூடே சங்கு என்பது. இப்பூச்சிகள் கடலடியில் இருக்குமார். முத்துச் சிப்பிகளைப் பொறுக்கிச் சேர்ப்பது போலவே ஆட்கள் கடலடிக்குச் சென்று இவற்றைத் சேர்க்க வேண்டும். ஆண்டு தோறும் அக்டோபர்த் திங்கள் முதல் மேத் திங்கள் வரையில் கடலிலிருந்து சங்குகள் எடுக்கப்படும். இத்தொழிலில் முத்தெடுக்கும் தொழிலைப் போலவே பண்டைக் காலத்தில் சிறப்பாக நடைபெற்றது. கொற்கையிலும் காயலிலும் சங்குத் தொழிற்சாலை இருந்திருத்தல் வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. பழந்தமிழ்ப் பெண்கள் சங்கு வளையல்களை அணிந்து வந்தனர்என்று நூல்கள் நுவல்கின்றன. கி.பி. 14-ஆம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களாலும் இந்து நிலையங்கள் சீர் கெட்டமையாலும் இத் தொழில் பாண்டிய நாட்டில் வளர்ச்சி யடையவில்லை. தமிழகத்து மாடுகளின் நெற்றியில் சங்கு மாலைகளைக் காணலாம். சங்குகளைக் கொண்டு வளையல், மோதிரம் முதலிய பல பொருள்கள் செய்யப்படுகின்றன. ஆனால் பொருநை நாட்டில் செய்யப்பெற்ற இத்தொழில் இன்று வங்கத்தில் நடைபெறுகிறது. இங்கிருந்து சங்குகள் அங்கு அனுப்பப் பெறுகின்றன. சிட்டகாங்கில் இத்தொழில் முன்னேறியுள்ளது. வங்கம், அஸாம், திபெத் நாட்டுப் பெண்கள் சங்கு வளையல்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர். வேலைப் பாடும் பளபளப்பும் கொண்ட சங்கு வளையல்களை வாங்க மாதர் விரும்புகின்றனர்; உறுதியுள்ள வேலைப்பாடு அற்ற வளையல்களைத் திபேத் முதலிய நாட்டு மாதர் விரும்பி வாங்குகின்றனர். தூத்துக்குடி, இராமேசுவரம், இலங்கை என்னும் இடங்களிலிருந்து சங்குகள் வங்கத்திற்கு அனுப்பப்படுகின்றன. இவற்றுள் தூத்துக்குடியை அடுத்துள்ள கடலில் கிடைப்பவையே சிறந்தவை என்று மதிப்பிடப் பட்டுள்ளன. தூத்துக்குடியிலிருந்து ஆண்டுதோறும் அனுப்பப்பெறும் சங்குகள் ஏறத்தாழ மூன்று லட்ச ரூபாய்கள் மதிப்புள்ளவை. பொருநை நாட்டில் செய்யப்படுகின்ற பொருக்களுள் நாட்டுத் தேவைக்கு மேற்பட்டவை இலங்கை, மலேயா முதலிய நாடுகட்கு அனுப்பப்படுகின்றன. ஆடுமாடுகள், நல்லெண்ணெய், வெங்காயம் மிளகாய், பனையோலைப் பாய்கள், நார், பனைவெல்லம், பனங்கற்கண்டு, லுங்கி ஆடைகள் முதலியன இலங்கைக்கு ஏற்றுமதியாகின்றன; சில சமங்களில் அரிசியும் அனுப்பப்பெறுகிறது. கோரைப் பாய்கள், மிளகாய் பதப்படுத்தப்ப தோல், லுங்கி ஆடைகள் முதலியன சிங்கப்பூர்க்கு ஏற்றுமதியாகின்றன. பம்பாய் முதலிய இடங்களிலிருந்து உலர்ந்த தானியங்களும், மலையாள நாட்டிலிருந்து தேங்காய், தேங்காய் நெய், மிளகு, இஞ்சி, பாக்கு, தேக்கு, கயிறுகள்,பாய்கள் முதலியன வருவிக்கப்படுகின்றன. திருநெல்வேலியைச் சேர்ந்த பேட்டை என்னம் இடம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வாணிகத் துறையில் உயிர்நாடி போன்றது. பம்பாய் முதலிய பல இடங்களிலிருந்த வரும் பொருள்கள் இங்கிருந்துதான் மாவட்டத்திலுற்ற பல இடங்கட்கும் பிரிவினையாகின்றன; நாட்டுப் பொருள்களும் இங்கிருந்தே வெளி இடங்களுக்கு அனுப்பப்பெறுகின்றன. சமயநிலை சமயத் துறையிலும் பொருநை நாடு சிறந்து விளங்கியது. பொருநைக் கரையில் உள்ள சீலப்பேரியில் பௌத்தரது குகை காணப்படுவதால், பொருநைக் கரையில் பௌத்த சமயம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே பரவியிருந்தது என்பதை அறியலாம். கொற்கை முதலிய இடங்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் காணப்படுதலை நோக்க, பௌத்த சமயத்தைப் போலவே சமண சமயமும் பரவியிருந்தது என்பது பெறப்படும். குற்றாலம், திருநெல்வேலி என்னும் இரண்டு சைவப் பதிகளும் சைவ சமயக் குரவரால் பாடப் பெற்றன. ஆழ்வார் திருநகரி, தென்திருப்பேரை முதலிய வைணவத் திருப்பதிகளும் ஆழ்வார்களால் சிறப்பிக்கப்பெற்றன. ஆழ்வார்களுள் தலைமணியாக விளங்கம் நம்மாழ்வார் பொருநை நாட்டவரே, அவர் பாடிய திருவாய்மொழி இறவாத புகழுடையது. அதற்குப் பேரறிஞர் பலர் விரிவுரை எழுதினாரெனின் அதன் பெருமையை நாம் நன்கு உணரலாமன்றோ? நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வாரும் பொருநை நாட்டவரே. அவர் பாடிய பாடல்கள் பல. இப்பெருமக்களால் பொருநை நாட்டில் வைணவம் சிறந்து விளங்கியது. அரேபியர் கூட்டுறவாலும் முலிம் ஆட்சியாலும் பொருநை நாட்டில் இசுலாம் பரவியது. பொருநைக்கரை ஊர்களில் முலிம்கள் வாழ்கின்றனர். மேனாட்டார் தமிழகத்தோடு வாணிகம் செய்து வந்தமையாலும் பாதிரி மார்களின் இடைவிடாத உழைப்பாலும் ஊக்கத்தாலும் பொருநை நாட்டு ஊர்களில் கிறிதவ சமயம் நன்கு பரவியது. அச்சமயம் பரவப்பரவக் கல்வியும் பரவியது. கலைகள் திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் திருக்கோவில் பொருநை நாட்டுக் கட்டக் கலைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். கோவிற் கோபுரங்களில் உள்ள சிற்பங்களும் கற்சிலைகளும் இந்நாட்டுச் சிற்பக் கலைத் திறனை நன்கு விளக்க வல்லலை. கிருஷ்ணாபுரத்துச் சிற்பங்கள் நம் முன்னோரது சிற்பத் திறனை உலகறியச் செய்வனவாகும். நெல்லையப்பர் கோவிலிலும் காந்திமதியம்மன் கோவிலிலும் உள்ள முன் வளைவுகளில் இருக்கும் மரவேலைப்பாடு மிக வியந்து பாராட்டற்குரியது. பல கோவில்களின் மேற்கூரைகளில் உள்ள ஓவியங்களும் சிற்றாறு பாயும் குற்றாலத்தில் உள்ள சித்திர சபையும் பொருநை நாட்டு ஓவியக் கலைக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளாகும். ஒவ்வொரு கோவிலிலும் உள்ள நடனச் சிற்பங்கள் நம் நாட்டு நடனக்கலைக்கு ஏற்ற சான்றாகும். சைவ, வைணவக் கோவில்களில் இசையரசிகள் இருந்து இசைக் கலையை வளர்த்தனர் என்பதைப் பல கல்வெட்டுச் செய்திகள் உணர்த்துகின்றன. இன்றும் திருக்கோவில்களில் அருட் பாடலைப் பாடும் இசைவாணர் இருந்து வருகின்றனர். பொருநை நாட்டில் இப்பொழுது தமிழிசை வளர்பிறை போல வளர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. அமைதியுள்ள வாழ்க்கை பொருநை நாட்டில் சைவர், வைணவர், முலிம்கள், கிறிதவர் என்னும் பல சமயத்தினரும் ஊர்தோறும் வாழ்கின்றனர், பெரும்பாலான ஊர்களில் இச்சமயத்தார் கோவில்களும் இருக்கின்றன. சமயத்தால் வேறுபட்டிருப்பினும், இவரனைவரும் தமிழரே; இவர்தம் தாய் மொழி தமிழே; ஆதலின் இவர்கள் இந்த உண்மையை உணர்ந்து, சமயப் பூசல்களுக்கு இடந்தராது, மனவொற்றுமையோடு எல்லாத் துறைகளிலும் கலந்து உறவாடுகின்றனர். இதனால் சமுதாயத்தில் அமைதி நிலவுகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.  1. ``திங்கண்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை தங்குமுயல் சூழமலை தமிழ்முனிவன் வாழுமலை அங்கயற்கண் அம்மைதிரு வருள்சுரந்து பொலிவதெனப் பொங்கருவி தூங்குமலை பொதியமலை யென்மலையே. 2. ``புல்வாயின் பார்வைவெம் புலிப்பார்வை யிணங்கும் புதுத்தினைகல் லுரற்பாறை முன்றில்தொறும் உணங்கும் கல்விடரில் வரிவேங்கை கடமானோ டுறங்கும் கருமலையிற் வெள்ளருகி கறங்கிவழிந் திறங்கும் சில்வலையும் பல்வாரும் முன்னிறப்பில் தூங்கும் சிறுதுடியும் பெருமுரசும் திசைதொறுநின் றேங்கும் கொல்லையில்மான் பிணையுமிளம் பிடியும்விளை யாடும் குறிச்சியெங்கள் குறச்சாதி குடியிருப்ப தம்மே. 1 ``அன்புறு பத்தி வித்தி ஆர்வநீர் பாய்ச்சுந் தொண்டர்க்(கு) இன்புறு வான ஈசன் இன்னருள் விளையு மாபோர் வன்புறு கருங்கால் மள்ளர் வைகலுஞ் செவ்வி நோக்கி நுன்புல முயன்று காக்க விளைந்தன நறுந்தண் சாலி. 1. இது, `பாணதீர்த்தம் எனவும் வழங்கப்படுகிறது. 1. மேலணை, கீழணை பற்றிய விவரங்கள் மூன்றாம் பகுதியிற் காண்க. 1. கன்னடியன் கால்வாய் வெட்டப்படுவதற்கு முன்பு இவ்யாறு பொருநையாற்றில் கலந்து வந்தது. 2. Ghatana nadhi: கருணையாறு என்பது இதன் பழைய பெயர். 3. பாலையன் கால்வாய் வெட்டப்படுவதற்கு முன்பு இப்பச்சையாறு பொருறை யாற்றுடன் கலந்து வந்தது. 4. ``பைம்பொழில் என்பது இதன் பழைய பெயர் போலும்! * சாத்தன்பற்று என்பது இவ்வாறு மாறி வழங்குகிறது போலும்! 3-1109 * இஃது `எரிச்சாருடையார் என்று தவறாக வழங்கப்படுகிறது. * வேதசர்மா என்ற சிவபக்தர் இறைவனுக்குப் படைக்கச் சிறிது நெல்லைக் கரையில் வைத்துவிட்டு ஆற்றில் குளித்தார். அப்போது பெருமழை வந்தது அவர் ஓடிவந்து நெல்லைப் பார்த்தார். நெல்லைச் சுற்றிலும் ஒரு வேலி அமைந்திருந்தது; அதனால் நெல் நனையவில்லை, அந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை. இங்ஙனம் நெல்லைச் சுற்றி தெய்வீக வேலி அமைந்த காரணத்தால் இவ்வூர் `நெல்வேலி எனப் பெயர் பெற்றது என்பது புராணச் செய்தி. * ``நீதிதழைத் தோங்குதிரு நெல்வேலி நாதர்முன்பு நிலைபெற் றோங்கச் சோதிமணி மண்டபத்தைத் தூயமாக மேருவெனத் துலங்கச் செய்தே வேதிகைபொற் படிதூண்கள் விளங்குதிரு வாயிலணி விரவிச் சூழ்ந்த கோதில்மணிக் கோபுரமும் சேண்மதிலும் வெள்விடையும் குலவச் செய்தான். -திருநெல்வேலி தலபுராணம் ** விசுவாத நாயக்கர் காலத்தில் நாயக்கர் படைத்தலைவராக விளங்கிய அரிநாயக முதலியாருக்கு மைத்துனரான தெய்வச்சிலை முதலியார் இக்கிருஷ்ணாபுரம் ஊரைத் தம் அரசர் பெயரால் அமைத்தனர் என்பதும், திருவேங்கடாசலபதி கோவிலையும் பிறவற்றையும் எடுப்பித்தார் என்பதும் அவர்மீது பாடப்பட்டுள்ள தெய்வச்சிலையார் விறலிவிடு தூது என்னும் நூலிற் கூறப்பட்டுள்ளன. கிருஷ்ண பூபதியே ஊரையும் கோவிலையும் அமைத்தனர் என்று ஊர்க்கோவிலில் உள்ள செப்புப் பட்டயம் கூறுகிறது. இவ்விரண்டு சான்றுகளையும் நோக்க, அரசர் ஆணைப்படி, தெய்வச்சிலை முதலியார் என்ற அமைச்சர் இவற்றை அமைத்தனர் என்று கோடலே பொருத்தமானது. * ஆதித்த(ன்) நல்லூர் என்பது நாளடைவில் `ஆதிச்ச நல்லூர் என மாறி வழங்குகிறது. செ. 130, 201 முதலியன. 1. மரக்கலராயர் என்பதின் திரிபே மரைக்காயர் என்பது 1. கொற்கை ஈசுவரமூர்த்தியா பிள்ளை என்ற முதியவர் எங்கள் முன்னிலையில் இப்பாடலைப் பாடிக்காட்ட, தென்காசி வித்துவான் குற்றாலம் என்பவர் இதனை எழுதினர். 2. சிலப்பதிகாரத்திற் கூறப்பெற்றுள்ள பொற்கைப் பாண்டியன் இங்கு ஆண்டான் என்றும், அதனால் `பொற்கை என்பது இவ்வூரின் பெயராயிற்று என்றும் உரைக்கின்றனர். ஆயின், சங்க நூல்களில் இவ்வூர் `கொற்கை என்றே பேசப்படுகின்றது. ** இது `மாறேக நாடு என்றும் வழங்கும். * இதன் பழைய பெயர் தூதுக்குடி என்பது. ஆசிரியரின் பிற நூல்கள் (கால வரிசையில்) 1. நாற்பெரும் வள்ளல்கள் 1930 2. ஹர்ஷவர்த்தனன் 1930 3. முடியுடை வேந்தர் 1931 4. நவீன இந்திய மணிகள் 1934 5. தமிழ்நாட்டுப் புலவர்கள் 1934 6. முசோலினி 1934 7. ஏப்ரஹாம் லிங்கன் 1934 8. அறிவுச்சுடர் 1938 9. நாற்பெரும் புலவர்கள் 1938 10. தமிழர் திருமண நூல் 1939 11. தமிழர் திருமண இன்பம் 1939 12. மணிமேகலை 1940 13. மொஹெஞ்சொதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் 1941 14. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (முதல் தொகுதி) 1941 15. பல்லவர் வரலாறு 1944 16. மறைந்த நகரம் (மாணவர் பதிப்பு) 1944 17. சேக்கிழார் (ஆராய்ச்சி நூல்) 1945 18 இரண்டாம் குலோத்துங்கன் 1945 19. கட்டுரை மாலை 1945 20. செய்யுள் - உரைநடைப் பயிற்சி நூல் 1945 21. முத்தமிழ் வேந்தர் 1946 22. காவியம் செய்த கவியரசர் 1946 23. விசுவநாத நாயக்கர் 1946 24. சிவாஜி 1946 25. சிலப்பதிகாரக் காட்சிகள் 1946 26. இராஜேந்திர சோழன் 1946 27. பல்லவப் பேரரசர் 1946 28. கட்டுரைக் கோவை 1946 29. சோழர் வரலாறு 1947 30. ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1947 31. பண்டித ஜவாஹர்லால் நெஹ்ரு 1947 32. வீரத் தமிழர் - 1947 33. இருபதாம் நூற்றாண்டுப் ஸபலவர் பெருமக்கள் 1947 34. இந்திய அறிஞர் 1947 35. தமிழ்நாட்டு வடஎல்லை 1948 36. பெரியபுராண ஆராய்ச்சி 1948 37. கதை மலர் மாலை (மலர் ஒன்று0 1948 38. இராஜன் சிறுவர்க்குரிய கதைகள் 1948 39. சிறுகதைக் களஞ்சியம் (பகுதி 1- 3) 1949 40. மேனாட்டுத் தமிழறிஞர் 1950 41. தென்னாட்டுப் பெருமக்கள் 1950 42. இந்தியப் பெரியார் இருவர் 1950 43. தமிழ்ப் புலவர் பெருமக்கள் 1950 44. நாற்பெரும் புலவர் 195 45. மறைமலையடிகள் 1951 46. அயல்நாட்டு அறிஞர் அறுவர் 1951 47. சங்கநூற் காட்சிகள் 1952 48. இளைஞர் இலக்கணம் (முதல் மூன்று பாரங்கட்கு உரியது) 1953 49. விஞ்ஞானக் கலையும் மனித வாழ்க்கையும் 1953 50. பாண்டிய நாட்டுப் பெரும் புலவர் 1953 51. சேக்கிழார் (மாணவர் பதிப்பு) 1954 52. திருவள்ளுவர் காலம் யாது? 1954 53. சைவ சமயம் 1955 54. கம்பர் யார்? 1955 55. வையை 1955 56. தமிழர் திருமணத்தில் தாலி 1955 57. பத்துப்பாட்டுக் காட்சிகள் 1955 58. இலக்கிய அறிமுகம் 1955 59. அருவிகள் 1955 60. தமிழ் மொழிச் செல்வம் 1956 61. பூம்புகார் நகரம் 1956 62. தமிழ் இனம் 1956 63. தமிழர் வாழ்வு 1956 64. வழிபாடு 1957 65. இல்வாழ்க்கை 1957 66. தமிழ் இலக்கணம் (இளங்கலை வகுப்பிற்கு உரியது) 1957 67. வழியும் வகையும் 1957 68. ஆற்றங்கரை நாகரிகம் 1957 69. தமிழ் இலக்கண இலக்கியக் கால ஆராய்ச்சி 1957 70. என்றுமுள தென்றமிழ் 1957 71. சைவ சமய வளர்ச்சி 1958 72. பொருநை 1958 73. அருள்நெறி 1958 74. தமிழரசி 1958 75. இலக்கிய அமுதம் 1958 76. எல்லோரும் வாழவேண்டும் 1958 77. தமிழகக் கலைகள் 1959 78. தமிழக ஆட்சி 1959 79. தமிழக வரலாறு 1959 80. தமிழர் நாகரிகமும பண்பாடும் 1959 81. தென்பெண்ணை 1959 82. புதிய தமிழகம் 1959 83. நாட்டுக்கு நல்லவை 1959 84. தமிழ் அமுதம் 1959 85. பேரறிஞர் இருவர் 1959 86. துருக்கியின் தந்தை 1959 87. தமிழகக் கதைகள் 1959 88. குழந்தைப் பாடல்கள் 1960 89. கட்டுரைச் செல்வம் 1960 90. தமிழகப் புலவர் 1960 91. தமிழ் மொழி இலக்கிய வரலாறு (சங்க காலம்) 1963 92. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் 1964 93. தமிழ் அமுதம் (மாணவர் பதிப்பு) 1965 94. சேக்கிழார் (சொர்ணம்மாள் நினைவுச் சொற்பொழிவுகள்) 1969 95. பத்துப்பாட்டு ஆராய்ச்சி 1970 96. கல்வெட்டுகளில் அரசியல் சமயம் சமுதாயம் 1977 97. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி 1978 98. இலக்கிய ஓவியங்கள் 1979 பதிப்பு ஆண்டு தெரியாத நூல்கள் 99. சிறுவர் சிற்றிலக்கணம் 100. பைந்தமிழ் இலக்கணமும் கட்டுரையும் 101. பாண்டியன் தமிழ்க் கட்டுரை (தொகுதி -2) ஆங்கில நூல் 102. The Development of Saivism in South India 1964 பார்வைக்குக் கிடைக்காத நூல்கள் 1. பதிற்றுப்பத்துக் காட்சிகள் 2. செந்தமிழ்ச் செல்வம் 3. தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 4. பள்ளித் தமிழ் இலக்கணம் 5. செந்தமிழ்க் கட்டுரை (முதல், இரண்டாம் புத்தகங்கள்) 6. செந்தமிழ்க் கதை இன்பம் (முதல், இரண்டாம் பகுதிகள்)