கல்வெட்டுக்களும் அரசியல் வரலாறும் வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் நிலவன் பதிப்பகம் நூற் குறிப்பு நூற்பெயர் : கல்வெட்டுக்களும் அரசியல் வரலாறும் ஆசிரியர் : வரலாற்றுப் பேரறிஞர் மா. இராசமாணிக்கனார் பதிப்பாளர் : முனைவர் க. தமிழமுது பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 12+92 = 104 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 95/- படிகள் : 1000 மேலட்டை : தமிழ்க்குமரன் & வி. சித்ரா நூலாக்கம் : வி. சித்ரா அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : நிலவன் பதிப்பகம், பி 3, பாண்டியன் அடுக்ககம், சீனிவாசன் தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம் 044 2433 9030. பதிப்புரை மொழியாலும், இனத்தாலும், அறிவாலும் சிறந்தோங்கி விளங்கிய பழந்தமிழ்க்குலம் படிப் படியாய் தாழ்ச்சியுற்று மீள முடியாத அடிமைச் சகதியிலும், அறியாமைப் பள்ளத்திலும் வீழ்ந்து கிடந்த அரசியல் குமுகாய வரலாற்று உண்மை களைத் தேடி எடுத்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எம் தந்தையார் தமிழ்மண் பதிப்பகத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு தொடங் கினார். என் தந்தையின் பதிப்புச் சுவடுகளைப் பின்பற்றி எம் பதிப்புப் பணியைச் செய்து வருகிறேன். தமிழ்ப் பேரறிஞர் முனைவர் மா. இராசமாணிக்கனார் இலக்கிய ஆய்வுகள், சமயம் சார்ந்த ஆய்வுகள், வரலாற்றாய்வுகள், கோவில் ஆய்வுகள், கல்வெட்டு ஆய்வுகள், மாணவர் நலன் குறித்து அவர் எழுதிய 110 நூல்களும் ஆய்வாளர்களுக்கும் மாணவர் களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படத்தக்க நூல்களாகும். இவற்றில் 18 நூல்களை 2012இல் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தொடர் பணியாக 2014இல் 21 நூல்களை தமிழுலகம் பயன்படும் வகையில் எம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதனை அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன். - க. தமிழமுது நுழையுமுன் மனிதரில் தலையாய மனிதரே! ஆசிரியர், ஆய்வாளர், அறிஞர் என்று தம் உழைப்பாலும் திறமையாலும் விடாமுயற்சியாலும் படிப்படியாக உயர்ந்த இராசமாணிக்கனார் தமிழ்நாடு கண்ட மிகச் சிறந்த சிந்தனையாளர்களுள் ஒருவர். மொழி, இனம், நாடு எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பற்றி ஆழச் சிந்தித்தவர்களுள் அவர் குறிப்பிடத்தக்கவர். சமயஞ் சார்ந்த மூட நம்பிக்கைகளும், சாதிப் பிணக்குகளும், பிறமொழி ஈடுபாடும், பெண்ணடிமைத் தனமும், சடங்கு நாட்டமும், கல்வியறிவின்மையும் தமிழ்ச் சமுதாயத்தைச் சூறையாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்தான் இராசமாணிக்கனார் தம் ஆசிரிய வாழ்க்கையைத் தொடங்கினார். தாமுண்டு, தம் குடும்பமுண்டு, தம் வேலையுண்டு என்று அவரால் இருக்க முடியவில்லை. தமிழ் இலக்கியங்களைப் பழுதறப் படித்திருந்தமையாலும், இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படைச் சான்றுகளிலிருந்து அவரே அகழ்ந்து உருவாக்கி யிருந்தமையாலும் மிக எளிய நிலையிலிருந்து உழைப்பு, முயற்சி, ஊக்கம் இவை கொண்டே உயரத் தொடங்கியிருந்தமையாலும் தம்மால் இயன்றதைத் தாம் வாழும் சமுதாயத்திற்குச் செய்வது தமது கடமையென அவர் கருதி யிருந்தார். மொழி நலம், தமிழ்த் திருமணம், சாதி மறுப்பு என்பன அவருடைய தொடக்கக் காலக் களங்களாக அமைந்தன. தாய்மொழித் தமிழ், தமிழரிடையே பெறவேண்டிய மதிப்பையும் பயன்பாட்டையும் பெறாமலிருந்தமை அவரை வருத்தியது. `தமிழ் நமது தாய்மொழி ஈன்ற தாயைப் போற்றுதல் மக்களது கடமை. அது போலவே நமது பிறப்பு முதல் இறப்பு வரையில் நமக்கு உறுதுணையாக இருந்து நம்மை வாழச் செய்யும் மொழியைக் காப்பதும் வாழ்விக்கச் செய்வதும் தமிழராகிய நமது கடமை. `இன்றைய தமிழரது வாழ்வில் தமிழ் எவ்வாறு இருக்கின்றது? ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு பேசும்போது பெரும்பாலும் பிறமொழிச் சொற்களைக் கலந்தே பேசுவதைக் காண்கிறோம். இப்பிறமொழிச் சொற்கள் நம் மொழியிற் கலந்து தமிழ் நடையைக் கெடுத்துவிடுகின்றன. ஒரு தமிழ்ச் சொல்லுக்குப் பதிலாகப் பிற மொழிச் சொல்லைப் பயன்படுத்தினால், அந்தத் தமிழ்ச்சொல் நாளடைவில் வழக்கு ஒழிந்துவிடும் `பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதில் தலைசிறந்தவர் தமிழரே ஆவார். மொழிக் கொலை புரிவதில் முதற்பரிசு பெறத்தக்கவர் நம் தமிழரே ஆவர்! `நம் தமிழ்நாட்டுச் செய்தித் தாள்களில் தமிழ்ப் புலமையுடையார் பெரும்பாலும் இல்லையென்றே கூறலாம். அதனாலும், நல்ல தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இன்மையாலும், மிகப் பலவாகிய பிறமொழிச் சொற்களைக் கலந்து தமிழ் எழுதி வருகிறார்கள். இவற்றைத் `தமிழ்ச் செய்தித்தாள்கள் என்று கூறுவதற்குப் பதிலாக `கலப்பு மொழிச் செய்தித்தாள்கள் என்று கூறுதலே பொருந்தும். இவ்வாறு செய்தித் தாள்களில் மொழிக் கொலை புரிவோர் வேற்று நாட்டவரல்லர், வேறு மொழி பேசும் அயலாரல்லர். தமிழகத்தில் பிறந்து தமிழிலேயே பேசிவரும் மக்களாவர் என்பதை வெட்கத்துடன் கூற வேண்டுபவராக இருக்கிறோம். நாடு முழுவதும் மொழி நலம் குன்றியிருந்தமையைத் துறை சார்ந்த சான்றுகளோடும் கவலையோடும் சுட்டிக் காட்டியதோடு இராசமாணிக்கனார் நின்றுவிடவில்லை. மொழியை எப்படி வளர்ப்பது, காப்பாற்றுவது, உயர்த்துவது என்பதே அவருடைய தொடர்ந்த சிந்தனையாக இருந்தது. காலங் காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த சமுதாயம் அவர் கண் முன் நின்றது. வடமொழி ஆதிக்கமும் ஆங்கிலப்பற்றும் தமிழ் மக்களின் கண்களை மூடியிருந்தன. தம் மொழியின், இனத்தின், நாட்டின் பெருமை அறியாது இருந்த அவர்கட்குத் தமிழின் தொன்மையையும் பெருமையையும் சிறப்பையும் எடுத்துச் சொல்வது தம் கடமையென்று கருதினார் இராசமாணிக்கனார். அக்கடமையை நிறைவேற்ற அவர் கையாண்ட வழிகள் போற்றத்தக்கன. தம்முடைய மாணவர்களை அவர் முதற்படியாகக் கொண்டார். நல்ல தமிழில் பேசவும் எழுதவும் அவர்களுக்குப் பயிற்றுவித்தார். சிறுசிறு கட்டுரைகளை உருவாக்கப் பயிற்சியளித்தார். மொழிநடை பற்றி அவர்களுக்குப் புரியுமாறு கலந்துரையாடினார். மொழி நடையைச் செம்மையாக்குவது இலக்கணமும் பல நூல்களைப் படிக்கும் பயிற்சியுமே என்பதை விளங்க வைத்தார். இலக்கணப் பாடங்களைப் பள்ளிப் பிள்ளைகள் விரும்பிப் படிக்குமாறு எளிமைப்படுத்தினார். அதற்கெனவே நூல்களை உருவாக்கினார். அவரிடம் பயின்ற மாணவர்கள் அவர் இலக்கணம் சொல்லிக் கொடுத்த அழகையும், படிப்படியாக இலக்கணத்தை நேசிக்க வைத்த திறனையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளனர். பயிலும் நேரம் தவிர்த்த பிற நேரங்களிலும் மாணவர்களுடன் உரையாடித் தமிழ் மொழியின் வளமை குறித்து அவர்களைச் சிந்திக்கச் செய்தார். அவரிடம் பயின்றவர்களுள் பலர் பின்னாளில் சிறந்த தமிழறிஞர்களாகவும், நூலாசிரியர்களாகவும் உருவானமைக்கு இத்தகு பயிற்சிகள் உரமிட்டன. பள்ளி ஆசிரியராக இருந்த காலத்திலேயே ஒத்த ஆர்வம் உடையவர்களைச் சேர்த்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த பொது மக்களுக்குத் தமிழ்க் கல்வியூட்டும் பணியை அவர் செய்துள்ளார். `வண்ணையம்பதியில் தனலட்சுமி தொடக்கப் பள்ளியில் பேராசிரியரின் தமிழ்த்தொண்டு தொடங்கியது. அங்குத் தொடர்ந்து வகுப்புகள் நடத்தினார். பணிகளில் இருந்தவர்களுக்கு வார இறுதி நாட்களில் தமிழ் வகுப்பெடுத்தார். உறவினர்களைக் கூட அவர் விட்டு வைக்க வில்லை. `குடியரசு இதழில் சொற்ப ஊதியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தம் மைத்துனர் பு. செல்வராசனை `வித்துவான் படிக்க வைத்து, சென்னை அப்துல் அக்கீம் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபெறச் செய்தார். தமக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் மொழிச் சிந்தனைகளை விதைக்கப் பயன்படுத்திக் கொண்டவர், `தமிழர் நல்வாழ்க்கைக் கழகம், `நக்கீரர் கழகம், `மாணவர் மன்றம் முதலிய பொது நல அமைப்புகளோடு தம்மை இணைத்துக் கொண்டார். 1946 இல் சென்னை நக்கீரர் கழகம் என்ற அமைப்பினைத் தொடங்கிய காலத்துப் பேராசிரியர் அவர்களின் அரவணைப்பும் தொண்டும் கழகத்திற்குக் கிடைத்துக் கழகம் வளர்ந்து சிறந்தது. 1946 ஆம் ஆண்டில் நக்கீரர் கழகம் `திருவள்ளுவர் என்ற திங்கள் ஏட்டினை நடத்தத் தொடங்கியபோது, பேராசிரியர் தம் கட்டுரைகளை வழங்கியதோடு அல்லாது, தாம் நட்புப் பூண்டிருந்த தவத்திரு ஈரா பாதிரியாரின் கட்டுரையையும் பெற்றுத் தந்து இதழுக்குப் பெருமை சேர்ந்தார். அடியவனின் தமிழ் தொண்டிற்கு ஊக்கமும், உள்ளத்திற்கு உரமும், துவண்டபோது தட்டி எழுப்பி ஊட்ட உரைகளும் அளித்துச் சிறப்பித்தவர் பேராசிரியர் என்று இராசமாணிக்கனாரின் தமிழ்த் தொண்டை நினைவு கூர்ந்துள்ளார் நக்கீரர் கழக அமைப்பாளர் சிறுவை நச்சினார்க்கினியன். கல்வி வழி விழிப்புணர்வில் பெருநம்பிக்கை கொண்டிருந் தமையால், `அரசியலாரும் சமூகத் தலைவர்களும் நாடெங்கும் கல்விக் கூடங்களை ஏற்படுத்த வேண்டும். கல்வி கற்கும் வயதுடைய எந்தச் சிறுவனும் சிறுமியும் கற்காமல் இருத்தல் கூடாது என்று முழங்கிய இப்பெருமகனார், தாம் வாழ்ந்த பகுதியில் இருந்த அத்தனை குடும்பங்களின் பிள்ளைகளும் பள்ளிப் படிப்புக் கொள்ளுமாறு செய்துள்ளார். பெண்கள் பின்தங்கிய காலம் அது. `அடுப்பூதும் பெண்ணுகளுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்கள் மிக்கிருந்த காலம். அந்தக் கால கட்டத்தில்தான் பேராசிரியர் பெண் கல்விக்காகக் குரல் கொடுத்தார். எட்டாம் வகுப்பே படித்திருந்த தம் மனைவிக்குத் தாமே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்து அவரை, `வித்துவான் பட்டம் பெறச் செய்தார். `என் கணவர் எனக்கு ஆங்கிலப் பாடமும் தமிழ்ப்பாடமும் கற்பித்து வந்தார். பாடம் கற்பிக்கும் நேரத்தில் பள்ளி ஆசிரியராகவே காணப்பட்டார். ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக் கொள்ளும் வகையில் கல்வி கற்றுப் பொருளீட்ட வேண்டும் என்பது என் கணவர் கருத்து. அதனால், என்னைப் பெண்கள் பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தினார். மாணவியர்க்கு மொழியுணர்வும் நாட்டுணர்வும் வருமாறு பேசவேண்டும் என்று அவர் அடிக்கடி கூறுவார் என்று `என் கணவர் என்ற கட்டுரையில் திருமதி கண்ணம்மாள் இராசமாணிக்கனார் கூறியுள்ளமை இங்குக் கருதத்தக்கது. மொழி, இனம், நாடு இவற்றைப் பற்றி அறிந்திருந்தால் தான் அவற்றை நேசிக்கவும் அவற்றிற்குத் துணை நிற்கவும் முடியுமென்பதில் அவர் தெளிவாக இருந்தமையால்தான், `கல்வியில் அக்கறை காட்டினார். அவருடைய ஆசிரியப் பணி அதற்குத் துணையானது. தம்மிடம் பயில வந்தவர்க்கு மொழியுணர் வூட்டினார். `தமிழகத்தில் ஆட்சி தமிழிலேயே இயங்க வேண்டும். எல்லாக் கல்வி நிலையங்களிலும் ஆங்கிலம் ஒழிந்த எல்லாப் பாடங்களையும் தமிழில் கற்பித்தல் வேண்டும் என்பது அவர் கொள்கையாக இருந்தது. அறிவியல் மனப்பான்மையை ஊட்டி வளர்க்கும் முறையில் அமைந்த பாடநூல்களையே பிள்ளைகள் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். உலக நாடுகளோடு தம் நாட்டை ஒப்பிட்டுப் பார்த்துக் குறைகளை நிறைவாக்கும் மனப்பாங்கு வளரும்படியான முறையில் கல்வி அளிக்கப்படல் வேண்டும். கடவுள் பற்றும், நல்லொழுக்கமும், சமுதாய வளர்ச்சியில் நாட்டமும் ஊட்டத் தக்க கல்வியை ஏற்ற திட்டங்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார். `பேச்சுத் தமிழே எழுத்துத் தமிழுக்கு அடிப்படை ஆதலால், நமது பேச்சுத் தமிழ் பெரும்பாலும் தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்பொழுது தான் நாம் எழுதும் தமிழ் நல்ல தமிழ் நடையில் இருக்கமுடியும் என்பது அவர் கருத்தாக இருந்தமையால், தம்மிடம் பயின்ற மாணவர்களை அவர் நல்ல தமிழில் பேசுமாறு வழிப்படுத்தினார். அதற்காகவே தாம் பணியாற்றிய பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருந்த மாணவர் மன்றங்களைச் செயலூக்கம் பெற வைத்தார். தமிழ் மன்றங்கள் இல்லாத கல்வி நிலையங்கள் அவற்றைப் பெறுமாறு செய்தார். பேச்சையும் எழுத்தையும் இளைஞர்கள் வளப்படுத்திக் கொள்ள உதவுமாறு `வழியும் வகையும் என்றொரு சிறு நூல் படைத்தளித்தார். எண்ணங்களை எப்படி உருவாக்கிக் கொள்வது, அந்த எண்ணங்களை வெளிப்படுத்த எத்தகு சொற்களைத் தேர்ந்து கொள்வது, அச்சொற்களை இணைத்துத் தொடர்களை எப்படி அமைப்பது, பின் அத்தொடர்களைக் கேட்டார்ப் பிணிக்கும் தகையனவாய் எங்ஙனம் அழகு படுத்துவது என்பன பற்றி நான்கு தலைப்புகளில் அமைந்த இந்நூல் இளைஞர் களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் இராசமாணிக்கனாரின் மொழி வழிச் சிந்தனைகளுக்கும் சிறந்த சான்றாக அமைந்தது. தமிழ்மொழியின் தொன்மை, பெருமை இவற்றைத் தமிழர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே `தமிழ் மொழிச் செல்வம், `தமிழ் இனம், `தமிழர் வாழ்வு, `என்றுமுள தென்றமிழ், `புதிய தமிழகம் என்னும் அவருடைய நூல்கள் தமிழ் மக்களுக்கு அவர்கள் மறந்திருந்த மொழியின் பெருமையை, சிறப்பை அடையாளப்படுத்தின. `ஒரு மொழி பேசும் மக்கள் தம் மொழியின் பழைமை களையும் பெருமையையும் வளர்ச்சியையும் நன்கு அறிந்தாற்றான், அம்மொழியி னிடத்து ஆர்வமும் அதன் வளர்ச்சியில் கருத்தும் அம்மொழி பேசும் தம்மினத்தவர் மீது பற்றும் கொள்வர். இங்ஙனம் மொழியுணர்ச்சி கொள்ளும் மக்களிடையே தான் நாட்டுப்பற்றும் இனவுணர்ச்சியும் சிறந்து தோன்றும். ஆதலின், ஓரினத்தவர் இனவொற்றுமையோடு நல் வாழ்வு வாழ மொழிநூலறிவு உயிர்நாடி போன்ற தாகும். இம்மொழி நூலறிவு தற்காப்புக்காகவும், தம் வளர்ச்சிக்காகவும் வேண்டற்பாலது என்பதைத் தமிழ் மக்கள் அறிதல் நலமாகும் என்ற அவர் சிந்தனைகள் இந்நூல்கள் மக்களிடையே வேர் பிடிக்கச் செய்தன. தமிழ் மக்களுக்கு மொழிப் பற்றையும், மொழியறிவையும் ஊட்டிய அதே காலகட்டத்தில், அவர்களை நாட்டுப்பற்று உடையவர்களாகவும் மாற்றினார். தமிழ் நாட்டின் பெருமையை, வரலாற்றை இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே, `தமிழக ஆட்சி, `தமிழ்க் கலைகள், `தமிழர் நாகரிகமும் பண்பாடும், `தமிழக வரலாறு என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். நாட்டுக்காக உழைத்த அறிஞர்களின் வரலாறுகளைச் சிறுசிறு நூல்களாக்கி இளைஞர்கள் அவற்றைப் படித்துய்ய வழிவகுத்தார். இளைஞர்கள் படித்தல், சிந்தித்தல், தெளிதல் எனும் மூன்று கோட்பாடுகளைக் கைக்கொண்டால் உயரலாம் என்பது அவர் வழிகாட்டலாக இருந்தது. மொழி, இனம், நாடு எனும் மூன்றையும் தமிழர்க்குத் தொடர்ந்து நினைவூட்டல் எழுதுவார், பேசுவார் கடமையென்று அவர் கருதியமையால் தமிழ் எழுத்தாளர்கள் எங்ஙனம் அமைதல் வேண்டுமென்பதற்குச் சில அடையாளங் களை முன்வைத்தார். `தாமாக எண்ணும் ஆற்றல் உள்ளவரும் உண்மையான தமிழ்ப்பற்று உடையவருமே நல்ல எழுத்தாளர். தமிழ் எழுத்தாளர் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் படித்தவராக இருப்பது நல்லது. தாழ்ந்துள்ள தமிழ்ச் சமுதாயத்தை உயர்த்தப் பயன்படும் நூல்களை எழுதுவதையே எழுத்தாளர்கள் தங்கள் சிறந்த கடமையாகக் கருத வேண்டும். சமுதாயத்தில் இன்றுள்ள தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், கண்மூடித் தனமான பழக்க வழக்கங்கள் முதலிய பிற்போக்குத் தன்மைகளை வன்மையாகக் கண்டிக்கும் நெஞ்சுறுதி எழுத்தாளர்க்கு இருக்கவேண்டும் அத்தகைய எழுத்தாளர்கள், `தமிழர் என்ற அடிப்படையில் ஒன்று கூடுதல் வேண்டும் என்று அவர் விழைந்தார். அதனாலேயே மதுரையில் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் மதுரை எழுத்தாளர் மன்றத்தை உருவாக்கி அது சிறந்த முறையில் இயங்குமாறு துணையிருந்தார். இம்மன்றத்தின் தலைவராக இருந்து மன்றத்தின் முதல் ஆண்டு விழாவில் அவர் ஆற்றிய உரை தமிழ் எழுத்தாளர் கடமைப் பற்றிய அவருடைய அறை கூவலாக அமைந்தது. `தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக ஆட்சி மொழியாக இருந்த நமது தமிழ் பிற்காலத்தில் தனது அரியணையை இழந்தது; இப்பொழுது வளர்ந்து வருகின்றது. எழுத்தாளர்கள் இதனை மனத்தில் பதிய வைத்தல் வேண்டும் அதன் தூய்மையையும் பெருமையையும் தொடர்ந்து பாதுகாப்பதே தங்கள் கடமை என உணர்தல் வேண்டும். `மக்கள் பேசுவது போலவே எழுதவேண்டும் அதுதான் உயிர் உள்ள நடை என்று சொல்லிப் பாமர மக்கள் பேச்சு நடையையே எழுத்தாளர் பலர் எழுதி வருகின்றனர். பாமர மக்களது நடை பொதுமக்களுக்கு நன்கு தெரியும்; அதைத் தெரிந்து கொள்ள எழுத்தாளர் நூல்களை விலை கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை அல்லவா? கொச்சை மொழி பேசும் மக்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை ஊட்டுவதோடு, இனிய, எளிய, செந்தமிழ் நடையையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் எழுத்தாளரது கடமையாக இருத்தல் வேண்டும். எழுத்தாளர் தங்கள் எளிய, இனிய செந்தமிழ் நடைக்கு மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமே தவிர, மக்களுடைய பேச்சு நிலைக்குத் தங்களை இழித்துக் கொண்டு போவது முறையன்று. சிறந்த கருத்துக்களோடு பிழையற்ற எளிய நடையையும் பொதுமக்களுக்கு ஊட்டுவது எழுத்தாளர் கடமை என்பதை அவர்கள் மறந்து விடலாகாது. இதுவே அறநெறிப்பட்ட எழுத்தாளர் கடமை என்பதை நான் வற்புறுத்த விரும்புகிறேன். சாதிகள் ஒழிந்து சடங்குகள் அற்ற சமயம் நெறிப்படத் தமிழர், `தமிழ் வாழ்வு வாழ வேண்டுமென்பதில் அவர் கருத்தாக இருந்தார். அதனால் தான், வாழ்க்கையின் தொடக்க நிலையான திருமணம் தமிழ்த் திருமணமாக அமைய வேண்டுமென அவர் வற்புறுத்தினார். இதற்காகவே அவர் வெளியிட்ட `தமிழர் திருமண நூல், தமிழ்ப் பெரியார்களின் ஒருமித்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தமிழ் நாட்டளவில் அதற்கு முன்போ அல்லது பின்போ, ஏன் இதுநாள் வரையிலும் கூட வேறெந்தத் தமிழ் நூலும் இதுபோல் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஒருமித்த அரவணைப்பைப் பெற்றதாக வரலாறு இல்லை. `எல்லோரும் வேலை செய்து பிழைக்கவேண்டும். பிச்சை எடுப்பவரே நாட்டில் இருக்கக் கூடாது `வலியவர் மெலியவரை ஆதரித்தால் நாட்டில் அமைதியும் இன்பமும் பெருகும் என்று கூறும் இராசமாணிக்கனார், `கல்வி மட்டுமே ஒருவரைப் பண்படுத்துவதில்லை. ஒழுக்கம் வேண்டும். எல்லோரும் ஒழுக்கத்திற்கு மதிப்பைத் தரவேண்டும். ஒழுக்கம் உயிரினும் சிறந்தது. ஒழுக்கத்தோடு உறையும் கல்விதான் மனிதனை உயர்விக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மொழி, இனம், நாடு, கல்வி, சமயம், மக்கள் நலம், கோயில்கள் எனப் பலவும் கருதிப் பார்த்துத் தமிழ் மொழி சிறக்க, தமிழினம் உயர, தமிழ்நாடு வளம்பெறப் பயனுறு சிந்தனை விதைகளைத் தம் வாழ்நாள் அநுபவ அறுவடையின் பயனாய் இந்த மண்ணில் விதைத்த இராசமாணிக்கனார், `உண்மை பேசுதல், உழைத்து வாழுதல், முயற்சியுடைமை, அறிவை வளர்த்தல், நேர்மையாக நடத்தல், பிறர்க்குத் தீங்கு செய்யாமை முதலியன நேரிய வாழ்க்கைக்குரிய கொள்கைகளாம் என்று தாம் கூறியதற்கு ஏற்ப வாழ்ந்த நூற்றாண்டு மனிதர். மறுபிறப்பு நேர்ந்தால், `மீண்டும் தமிழகத்தே பிறக்க வேண்டும் என்று அவாவிக் கட்டுரைத்த தமிழ்மண் பற்றாளர். `அவரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டும் நூற்பா வடிவிலான ஒருவரி சொல்லட்டுமா? எனக் கேட்கும் அவரது கெழுதகை நண்பர் வல்லை பாலசுப்பிரமணியம் சொல்கிறார்: `இராசமாணிக்கனார் மதியால் வித்தகர்; மனத்தால் உத்தமர், `மனிதரில் தலையாய மனிதரே எனும் அப்பர் பெருமானின் திருப்பூவணப்பதிகத் தொடர் இப்பெருந்தகையைக் கருத்தில் கொண்டே அமைந்தது போலும்! டாக்டர் இரா. கலைக்கோவன் உள்ளுரை எண் பக்கம் முன்னுரை 13 1. அரசியல் வரலாறு 19 2. கல்வெட்டுக்களும் சமய வரலாறும் 49 முன்னுரை ஓரு கட்டிடத்திற்கு மண், செங்கல், சுண்ணாம்பு, கருங்கல் முதலியன தேவைப்படுகின்றன. இவ்வாறே ஒரு நாட்டு வரலாற்றில் அந்நாட்டு இலக்கியம், புதைபொருள், கல்வெட்டுக்கள், பழங்காலக் கட்டிடங்கள் முதலிய மூலப்பொருள் களாக அமைகின்றன. இம்மூலப்பொருள்களுள் ஒரு பகுதியினவாகிய கல்வெட்டுக்கள் நம் தமிழகத்து (1) அரசியல் வரலாற்றையும், (2) சமய வரலாற்றையும், (3) சமுதாய வரலாற்றையும் எந்த அளவு அறிய உதவுகின்றன என்பதை உணர்த்தவே இங்கு மூன்று சொற்பொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன. கல்வெட்டுப் பணியகம் இக்கல்வெட்டுக்கள் பல எழுத்து வடிவங்களில் அமைந் துள்ளன. அவை பிராமி, வெங்கி-பல்லவா, தெலுங்கு-கன்னடம், கிரந்தத்தமிழ், வட்டெழுத்து, மலையாளம், கோலெழுத்து, நந்திநாகரி முதலியன. இப்பலவகை எழுத்து வடிவங்களையுடைய கல்வட்டுக்கள் பல்லாயிரக்கணக்கில் நம் தமிழகத்தில் இருக்கின்றன. சென்னை கல்வெட்டுப் பணியகம் இதுகாறும் ஏறத்தாழ 30,000 கல்வெட்டுக்களைக் கண்டு பிடித்துள்ளது. கன்னட நாட்டுப் பணியகம் ஏறக்குறைய 11,000 கல்வட்டுக்களைக் கண்டறிந்துள்ளது. திருவாங்கூரிலும் புதுக்கோட்டையிலும் கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் பல. பணியகம் கண்டுபிடித்து வெளிப்படுத்தாதிருக்கும் கல்வெட்டுக்களும் பல்லாயிரமாகும். கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப் பெறாமலுள்ள கல்வெட்டுக்களும் பலவாகும். இத்துறையினர் ஆண்டுதோறும் தாம் கண்டறிந்த கல்வெட்டுக்களின் சத்துப்பொருள்களையும், பிற விவரங்களையும் ஆண்டு அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். இவ்வாண்டு அறிக்கை மேற்சொன்ன மூவகை வரலாற்றுக்கும் பெருந்துணை செய்வதாகும். இவையன்றித் தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் என்னும் தலைப்பில் பன்னிரண்டு பெரு நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றிலுள்ள கல்வெட்டுக்கள் இந்நாட்டை ஆண்ட பல்லவர், சோழர், பாண்டியர், ஹொய்சலர், விஜய நகரத்தரசர், நாயக்க மன்னர் முதலியோர் வரலாற்றை அறியப் பெருந்துணை செய்வன. இந்திய எழுத்துக்கள் வரலாற்று உண்மைக்கும் பொருந்தியனவாக ஆராய்ச்சி யாளர் ஒப்புக்கொண்ட இந்திய எழுத்துக்கள் நான்கு வகைப்படும். அவை (1) பிராமி, (2) கரோஷ்டி, (3) திராவிடீ, (4) யவனாணியா என்பன. இவற்றுள் யவனாணியா என்பது கிரேக்கரும் அவரைச் சார்ந்தவரும் பயன்படுத்தி வந்தவை. கரோஷ்டீ என்பது வடமேற்கு இந்தியாவின் ஒரு பகுதியில் ஏறத்தாழ கி. பி. 4-ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த எழுத்து முறையாகும். பிராமி என்பது கிமு. முதல் மூன்று நூற்றாண்டுகளில் அசோகனுடைய கல்வெட்டுக்களிலும், தென் இந்தியக் குகைகளிலும் காணப்படும் எழுத்து முறையாகும். பிராமி எழுத்து முறை மேற்சொன்ன இரண்டு எழுத்து முறைக்கும் மாறுபட்டது. பிராமி எழுத்துக்களை நன்கு ஆராய்ந்த அறிஞர்கள், அது தமிழுக்கென அமைக்கப்பட்ட குறியாகலாம் எனக் கருதுன்றனர். திராவிட என்பது வட்டெழுத்து. உருவெழுத்து முதலிய நிலைகளைத் தாண்டி அகர வரிசை எழுத்துக்களைப் பெற்ற பிராமி லிபி, ஏறத்தாழ கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் புகுந்து, நாட்டு நிலைக்கேற்பச் சிறிது சிறிதாய வளர்ச்சியடைந்து, வட்டெழுத்தாக மாறியிருத்தல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். வட்டெழுத்து ஒரு காலத்தில் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்திருத்தல் வேண்டும். தொண்டை நாட்டிலும், காவிரி வரையுள்ள தமிழகத்தி லும் பல்லவராட்சி ஏற்பட்ட பிறகு, பல்லவரால் போற்றி வளர்க்கப்பட்ட பிராமி லிபியின் வழிவந்த கிரந்தமும், அதனை ஒட்டிவளர்ந்த கிரந்தத் தமிழும் வழக்காறு பெறத்தொடங்கின. அக்காலத்தில் பல்லவராட்சி ஏற்படாத பாண்டிய நாடு, சேர நாடு, கொங்கு நாடுகளில் வட்டெழுத்து வழங்கி வந்தது. பல்லவர்க்குப் பின்பு தென்னிந்தியா முழுவதையும் ஒரு குடைக்கீழ் வைத்தாண்ட சோழர் காலத்தில் கிரந்தத் தமிழே பெரு வழக்குப் பெற்றது. சோழர்க்குப் பின் தமிழகத்தை ஆண்ட விஜயநகர அரசர் காலத்திலும், மகாராஷ்டிர மன்னர்கள் காலத்திலும் நாகர எழுத்துக்கள் தமிழகத்தில் இடம் பெற்றன கல்வெட்டுக்களின் தோற்றம் இந்திய எழுத்துக்களைப் பற்றி இதுகாறும் கூறப்பெற்ற விவரங்கள், இந்தியாவில் உள்ள கல்வெட்டுக்களிலிருந்தும், செப்பேடுகளிலிருந்தும் தெரிவனவாகும். இந்தியக் கல்வெட்டுக்கள் எவ்வாறு தோன்றலாயின என்பது அடுத்து எழும் வினாவாகும். பிராமி எழுத்துக்களைக் கொண்ட அசோகன் காலத்துக் கல்வெட்டுக்கள் பௌத்த சமயக் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதற்காக உண்டானவையாகும். பின்வந்த பட்டயங்களும் கல்வெட்டுக்களும் கல்வியிற் பெரியவர்க்கும், வீரர்கட்கும், கோவில்கட்கும் அவ்வப்போது நிலதானம் முதலிய தானங்கள் செய்யப்பட்டபோது எழுதப் பெற்றவையாகும். ஒருபொருளைக் குறித்துக் கல்லில் வெட்டி, அக்கல்லைப் பலரும் சேர்ந்து பார்க்கத்தக்க கோவில்போன்ற பொது இடங்களிலும் பதித்து மக்களைக் காணச் செய்வது நம் நாட்டில் இன்றளவும் இருந்துவரும் வழக்கமாகும். போரில் இறந்த வீரனுக்குக் கல் நாட்டி அதன் அடியில் அவனுடைய பெயரையும் சிறப்புக் களையும் வெட்டுவிக்கும் செயல் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. அசோகன் கல்வெட்டுக்கள் அசோகனுடைய தூண் கல்வெட்டுக்களுள் இரண்டு தமிழகத்தையும் அதனுள் பௌத்தம் பரப்பப்பட்டதையும் குறிக்கின்றன, சௌராஷ்டிர நாட்டில் கிர்நார் நகரத்திற்கு அருகிலுள்ள பாறை ஒன்றில் எழுதப்பட்ட அசோகனது கல்வெட்டில் கீழ்க்கண்ட பகுதி காணப்படுகின்றது; (1) அருள் உள்ளம் கொண்ட தேவனாம்பிரியராகிய அரசர் பெருமானது (அசோகரது) ஆட்சிக்கு உட்பட்ட எல்லா இடங்களிலும், இவ்வெல்லைக்கு அப்பாற் பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர நாடுகளிலும், தாமிர பரணி (இலங்கை)யிலும், அதற்கு அப்பாற்பட்ட நாடுகளிலும் அருளும் சிறப்பும் பொருந்திய அரசரால் இருவகை மருத்துவ முறைகள் அமைக்கப்பட்டன. அவை மக்களுக்கு மருத்துவம் கால்நடைகளுக்கு மருத்துவம் என்பன. இக்கல்வெட்டுச் செய்தியால் அசோகன் தனது நாட்டிலும் தமிழ் நாட்டிலும் பிறநாடுகளிலும் மருத்துவ நிலையங்களை அமைத்தமை அறியப்படும். (2) பிஷாவர் நகரத்திற்கு அருகில் காணப்படும் மற்றொரு கல்வெட்டிலும், அசோகன் பௌத்த துறவிகளைத் தமிழகத்திற்கும், பிற நாடுகளுக்கும் அனுப்பி, அங்குப் பௌத்த அறத்தைப் பரவச்செய்தான் என்பது கூறப்பட்டுள்ளது. அக்கல்வெட்டுப் பகுதி இதுவாகும்: அறவெற்றி என்னும் வெற்றியே சிறப்புமிக்க மன்னரால் (அசோகரால்) முதல்தரமான வெற்றியென்று மதிக்கப்படுகின்றது. இவ்வெற்றி இந்நாட்டிலும் பிற மேனாடுகளிலும் தெற்கே உள்ள சோழ, பாண்டிய, தாமிரபரணி (இலங்கை) வரையிலும் அடிக்கடி அரசரால் கைப்பற்றப்பட்டது. அசோகன் தன் நாட்டில் மட்டுமன்றி, மேலை நாடுகளிலும் தமிழகத்திலும் இலங்கையிலும் பௌத்த துறவிகளை அனுப்பிச் சமயப் பிரசாரம் செய்வித்தான் என்பதே இதன் பொருளாகும். இவ்விரு கல்வெட்டுக்களாலும் பௌத்தம் தமிழகத்திற்கு வந்த வரலாறு நன்கு அறியப்படும். பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்து தங்கிய சமணரும் பௌத்தரும் முதலில் தாம் வாழ்ந்த மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்களில் வெட்டுவித்தவையே இந்நாட்டுக் கல்வெட்டுக்களுள் பழைமையானவையாகும். அவை சித்தன்ன வாசல், யானை மலை, அழகர் மலை, திருப்பரங்குன்றம், சமண மலை முதலிய இடங்களில் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழக் கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாகக் கருதப்படுகின்றன. செப்புப் பட்டயங்கள் வேதங்களில் வல்ல பிராமணர்களுக்கும், கல்வியில் வல்ல புலவர் களுக்கும், அரச மரியாதையுடைய அரசாங்க உயர் அலுவலர்க்கும் அரசன் கிராமங்களையோ நிலங்களையோ மானியமாகக் கொடுத்தல் பண்டைய வழக்கம். இத்தகைய மானியங்கள் செப்பேடுகளில் குறிக்கப்பட்டன. இன்று தென்னிந்தியாவில் உள்ள இத்தகைய செப்பேடுகளுள் பழைமையானது. கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட மயிதவோலு பட்டயம் என்பது. இது பிராக்ருத மொழியில் எழுதப்பட்டது; சிவகந்தவர்மன் என்ற பல்லவ இளவரசனால் வெளியிடப்பட்டது. இங்ஙனம் வெளியிடப்பட்ட பிராக்ருத பட்டயங்களுக்குப் பிறகு வடமொழிப் பட்டயங்கள் பல்லவ மரபினரால் வெளியிடப்பட்டன. அவற்றுள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தும் வருணனை மிகுந்தும் இருப்பன முதலாம் பரமேசுவரவர்மன் வெளியிட்ட கூரம் செப்பேடு களாகும். பல்லவர் தமிழகத்தை ஆண்ட பொழுதே பாண்டி மன்னராக இருந்த வரும் செப்பேடுகள் வெளியிட்டனர். அவற்றுள் சிறந்தவை வேள்விக்குடிச் செப்பேடுகள், சின்னமனூர்ச் செப்பேடுகள் என்பன. இவ்வாறே சேர மன்னர் விடுத்த செப்பேடுகள் பல; விஜயநகர வேந்தர் காலத்து செப்பேடுகள் பலவாகும். கல்வெட்டுக்கள் செப்புப் பட்டயங்கள் வெளியிடப்பட்டபொழுதே கல்வெட்டுக்களும் பல்லாயிரக்கணக்கில் வெளிப்படலாயின. அவை அரசரால் வெளிப்படுத்தப் பட்டவை என்றும், குடிமக்களால் வெளிப்படுத்தப்பட்டவை என்றும், அரசாங்க அலுவலரால் வெளிப்படுத்தப்பட்டவை என்றும் பலவகைப் படும். அவற்றுள் பெரும் பாலான ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவில் தொடர்பால் ஏற்பட்டன வாகும். கோவிலைக் கட்டுதல், சிற்பங்களை அமைத்தல், திருமேனிகளை எழுந்தருளச் செய்தல், பூசை விழாக்கள் நடைபெறச் செய்தல், சமய நூற் போதனை அளித்தல், நந்தவனங்கள் அமைத்தல், திருக்குளங்கள் வெட்டுவித்தல் பலதிறப்பட்ட கோவிற் பணியாளர்களை நியமித்தல், சமயத் தொடர்பான நடனங்களையும் நாடகங்களையும் நடைபெறச் செய்தல், திருப்பதிகங்களை ஓதச்செய்தல், கோவிலை அடுத்து மடங்களை அமைத்தல், மடங்களில் சமய போதனை செய்தல், மருத்துவமனைகளை வைத்து நடத்தல், கோவில்களில் பலவகை மண்டபங்களை கட்டுவித்தல், அவற்றிலிருந்து சமயப் பிரச்சாரம் செய்தல், திருச்சுற்று மாளிகையில் சரசுவதி பண்டாரம் அமைத்தல் முதலிய திருக்கோவில் தொடர் பான செயல்களை அறிவுறுத்த எண்ணிறந்த கல்வெட்டுக்கள் தோன்றலாயின. ஒவ்வோர் ஊர்க்கோவிலும் அவ்வூர் மக்களால் சமயத் தொடர்பான செயல்களுக்கேயன்றித் தம் வாழ்க்கைத் தொடர்பான செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டன. ஊராட்சி மன்ற உறுப்பினர் ஊர்க்கோவில் மண்டபத்தில் கூடியே ஊராட்சி அலுவல்களைக் கவனித்தனர். எனவே, ஊராட்சித் தொடர்பான செய்திகளை அறிவிக்கும் கல்வெட்டுக்களும் கோவில்களில் இடம்பெற்றன. அறங்கூறவையத்தாரும் கோவிலில் கூடியே வழக்குகளை ஆய்ந்து அறங்கூறினர். ஒவ்வொரு சமூகத்தாரும் தம்முள் ஏற்பட்ட பிணக்குகளைத் தீர்த்துக்கொண்ட விவரங்களும் சமுதாயத்தில் அவ்வப்போது ஏற்பட்ட சட்ட திட்டங்களும் கோவில்களில் இடம்பெற்றன. அரசர்களாலும், அவர் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாலும், அரசாங்க அலுவலராலும் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களில் அரசமரபும், அரசர் செய்த போர்ச்செயல்களும், அறச் செயல்களும் குறிக்கப்பட்டன. சுருங்கக் கூறின், ஒவ்வொரு நூற்றாண்டிலும் தோன்றி கல்வெட்டுக்கள் அந்நூற்றாண்டி லிருந்த அரசியல் நிலையையும், சமய நிலையையும், சமுதாய நிலையையும் பெரிதளவு அறிவிக்கும் வகையில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இம் முன்னுரையை உளங்கொண்டு, முதற்கண் தமிழகத்து அரசியல் நிலையைப்பற்றிக் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் சொல்லும் செய்திகளைக் காண்போம். I. அரசியல் வரலாறு பல்லவர் காலம்: சிவகந்த வர்மன் பல்லவர் பட்டயங்களுள் காலத்தால் முற்பட்டது மயிதவோலு பட்டயம் என்பது. இரு பாரத்வாச கோத்திரத்தைச் சேர்ந்த பல்லவ இளம்பேரரசன் சிவகந்தவர்மனால் காஞ்சியி லிருந்து வெளியிடப்பட்டது. அப்பொழுது பேரரசனாக இருந்த பல்லவனது பத்தாம் ஆட்சி ஆண்டில் இப்பட்டயம் வெளிப் படுத்தப்பட்டது. ஆந்திர பதத்தில் உள்ள விரிபரம் என்னும் சிற்றூரை மறையவர் இருவருக்கு உரிமையாக்கினமை இப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இச்செய்தி யால், ஆந்திர பதத்தில் பல்லவன் ஒருவன் ஆண்டுவந்தான் என்பதும், அவன் பிரநிதியாக இளம்பேரரசன் சிவகந்தவர்மன் காஞ்சியிலிருந்து தொண்டை நாட்டை ஆண்டுவந்தான் என்பதும் புலனாகின்றன. இப்பட்டயத்திலுள்ள பிராக்ருத எழுத்துக்கள் ஏறத்தாழக் கி.பி. 3-ஆம் நூற்றாண்டிலேயே தொண்டை மண்டலத்தில் கால் கொண்டது என்பதை இப்பட்டயம் உறுதிப்படுத்துதல் காணலாம். மேற்கூறப்பெற்ற பட்டயத்தை அடுத்துக் கிடைத்துள்ளது. ஹிரகதகல்லிப் பட்டயம் என்பது, ஹிரகதகல்லி என்பது பல்லாரிக் கோட்டத்தில் உள்ள சிற்றூர். இப்பட்டயம் பல்லவ தர்ம மகா இராசாதிராசன் சிவகந்தவர்மன் என்பவன் பட்டம் பெற்ற 8-ஆம் ஆண்டில் விடுத்ததாகும். பப்ப மகாராசன் விடுத்த தானத்தை உறுதிப்படுத்தவும் விரிவுபடுத்தவும் இதுவிடப்பட்டது. இப்பட்டயத்தில் பல்லவ அரசாங்க அலுவலர் பெயர்களும், நாட்டின் உட்பிரிவுகளும், சிவகந்தவர்கமன் அக்நிஷ்டோமம். வாஜபேயம், அசுவமேதம் என்னும் பெருவேள்விகளைச் செய்தவன் என்பதும் குறிக்கப்பட்டுள்ளன. முதல் பட்டய அறிவைக்கொண்டு இப்பட்டயச் செய்தியை நோக்கும்பொழுது, பப்ப மகாராசன் ஆந்திர பதம் உள்ளிட்ட பல்லவ நாட்டை ஆண்டபொழுது, சிவகந்தவர்மன் காஞ்சியில் இளம்பேரரசனாக இருந்தான் என்பதும், அவன் இறந்த பிறகு இச் சிவகந்தவர்மனே பல்லவ மகாராசாதிராசன் ஆயினன் என்பதும் நன்கு விளங்கும். இவ்விரண்டாம் பட்டயமும் காஞ்சியிலிருந்தே விடப்பட்டதாகலின், இச் சிவகந்தவர்மன் காலத்தில் காஞ்சி பல்லவர் தலைநகரமாகி யிருத்தல் வேண்டும் என்று கருதுதுல் பொருந்தும், இவன் பெருவேள்விகளைச் செய்தவன் என்பதனால் பேரரசனாக விளங்கியவன் என்பது பெறப்படும். இடைக்காலப் பல்லவர் மேற்கூறப்பெற்ற இரண்டு பட்டயங்களும் பிராக்ருத மொழியில் எழுதப் பட்டவை. ஆனால் பின்வந்த பட்டயங்கள் பிராக்ருத உரைநடையும் வடமொழிச் செய்யுள் நடையும் கலந்து எழுதப்பட்டவை. இவற்றுள் பெரும்பாலான ஆந்திர பதத்தில் உள்ள பல ஊர்களிலிருந்து பல்லவர் பலரால்வெளியிடப் பட்டன வாகவும், சில பட்டயங்கள் மட்டுமே காஞ்சியிலிருந்து வெளியிடப்பட்டன வாகவும், சில பட்டயங்கள் மட்டுமே காஞ்சியிலிருந்து வெளியிடப்பட்டன வாகவும் காணப்படுகின்றன. இப்பட்டயங்களின் காலம் ஏறத்தாழ கி.பி. 340-முதல் 575-வரை என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இதே காலத்தில் பல்லவ நாட்டிற்கு மேற்கே இருந்த கதம்பர்கள் வெளியிட்ட கல்வெட்டுக்களும் அவர்களுக்குத் தெற்கே இருந்த கங்கர்கள் வெளியிட்ட கல்வெட்டுக்களும் கதம்பர்-பல்லவர், கதம்பர்-கங்கர், கதம்பர்-கங்கர்-பல்லவர் போர்ச்செய்திகளைக் குறிக்கின்றன. இவையன்றிக் கி.பிஇ 575-க்குப் பின்வந்த பல்லவர் பட்டயங்களும், இவ்விடைக்காலப் பல்லவர் செய்த போர்ச் செயல்களைக் குறித்துள்ளன. இவையனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தல் இன்றியமையாதது. இவ்விடைக்காலப் பல்லவர், ஆந்திர நாட்டைச் சேர்ந்த தாம்ராப, பலக்கட, மேன்மாதூர, தசனபுரம், பிகீரோ ஓங்கோடு, தர்சி, இராயகோட்டம், சந்தலூர், உதயேந்திரம், உருவப்பள்ளி என்னும் ஊர்களிலிருந்து பல பட்டயங்களை விடுத்திருத்தலும் காஞ்சியிலிருந்து சில பட்டயங்களை விடுத்திருத்தலும், பிறநாட்டார் பட்டயங்களில் இவர்கள் செய்த பல போர்கள் குறிக்கப்பட்டிருத்தலும் நன்கு ஆராய்ந்தால், இவ்விடைக்காலப் பல்லவர் காஞ்சியில் நிலைத்திருந்து தொண்டை நாட்டை ஆளமுடியவில்லை என்பது தெளிவாகிறது. பிற்காலப் பல்லவர் பட்டயங்கள் இவ்விடைக்காலப் பல்லவர்-களப்பிரர், சோழர், பாண்டியர், சேரர் என்பவரோடு போரிட்டனர் என்று கூறியதன் மூலம், இவ்விடைக்காலத்தில் தமிழகம் பெரிதும் போர்க்களமாகக் காணப்பட்டது என்னும் உண்மையை வற்புறுத்துகின்றன. ஏறத்தாழக் கி.பி. 340-இல் வட இந்தியாவில் பேரரசனாக இருந்த சமுத்திரகுப்தன் தென்னாடு நோக்கிப் படையெடுத்து வந்தான். அப்பொழுது அவனைத் தென்னாட்டரசர் பலரும் எதிர்த்தனர். அங்ஙனம் எதிர்த்தவருள் அப்பொழுது காஞ்சியை ஆண்டுவந்த விஷ்ணுகோப பல்லவன் என்பவன் ஒருவன் என்று சமுத்திரகுப்தனது அல்லாஹபாத் தூண் கல்வெட்டுக் கூறு கின்றது. இக்குறிப்பைத் தென்னிந்திய வரலாற்றில் மிகச்சிறந்த ஒன்றாக வரலாற்று அறிஞர் கொண்டுள்ளனர். இக்குறிப்பினால் ஏறத்தாழக் கி.பி. 340-இல் காஞ்சியில் பல்லவன் இருந்து ஆண்டமை தெளிவாகின்றதன்றோ? இதுகாறும் கூறப்பெற்ற இடைக்காலக் கல்வெட்டுக்களை நன்கு ஆராய்ந்து ஆராய்ச்சியாளர் கீழ்வருமாறு இடைக்காலப் பல்லவர் பட்டியலையும் அவர் தம் காலங்களையும் குறித்துள்ளனர். குமாரவிஷ்ணு I (கி.பி. 340-350) கந்தவர்மன் I (கி.பி. 350-375) வீரகூர்ச்சவர்மன் (கி.பி. 375-400) கந்தவர்மன் II (கி.பி. 400-436) (இவன் மக்கள் மூவர்) சிம்மவர்மன் I இளவரசன் குமாரவிஷ்ணு II (கி.பி. 436-460) விஷ்ணுகோபன் கந்தவர்மன் III சிம்மவர்மன் II புத்தவர்மன் (கி.பி. 460-475) நந்திவர்மன் I விஷ்ணுகோபன் குமாரவிஷ்ணு III (கி.பி. 525-550) சிம்மவர்மன் III (கி.பி. 550-575) சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615) பிற்காலப் பல்லவர் : சிம்மவிஷ்ணு (கி.பி. 575-615) கூரம் பட்டயம், காசக்குடிப் பட்டயம், வேலூர்ப்பாளையப் பட்டயம் என்பன, மூன்றாம் சிம்மவர்மன் மகன் சிம்மவிஷ்ணு என்று கூறி, அவனைப் பற்றிக் கீழ்வருமாறு தெரிவிக்கின்றன: சிம்ம விஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவன் காவிரி பாயப்பெற்ற சோழநாட்டைச் சோழரிடமிருந்து கைப்பற்றினான். இவன் பகைவரை அழிப்பதில் திறம் படைத்தவன். இவ்வரசன் களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் என்பவரை வெற்றிகொண்டான். இவன் பக்தி ஆராதித விஷ்ணு-சிம்ம விஷ்ணு என்று உதயேந்திரப் பட்டயத்தில் குறிப்பிடப் பட்டுள்ளான். இவனுக்குப் பின்வந்த முதலாம் மகேந்திரவர்மன் முதலிய அரசர்கள் காஞ்சியில் நிலைத்திருந்து 7,8,9-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் பெரும் பகுதியை ஆண்டு வந்ததை நோக்க, இடைக்காலப் பல்லவர்க்குப் பின், தமிழரசரை வென்று பல்லவ ஆதிக்கத்தை நிலை நாட்டிய பெருமை இச்சிம்ம விஷ்ணுவையே சாரும் என்று கொள்ளுதல் பொருத்தமாகும். சிம்மவிஷ்ணு சதுத்வேதிமங்கலம் என்ற சில ஊர்கள் தமிழகத்தில் இருந்தன என்பதைக் 1கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள ஆதிவராகர் கோவிற்சுவரில் இவனுது உருவச் சிற்பம் காணப்படுக்கின்றது. அதன் மேற்புரத்தில் ஸ்ரீ சிம்ம விஷ்ணு போதாதிராஜன் என்னும் பெயர் பொறிக்கப் பட்டுள்ளது. இவையனைத்தையும் நோக்கப் பிற்காலப் பல்லவ வேந்தருள் இவன் முதல்வன் என்பது நன்கு விளங்கும். மகேந்திரவர்மன் : (கி. நி. 615-630) மேற்கூறப்பெற்ற ஆதிவராகர் கோவிலில் சிம்மவிஷ்ணுவின் உருவச் சிலைக்கு எதிர்ப்புறச் சுவரில் அவன் மகனான மகேந்திர போதாதி ராஜனது உருவச்சிலை பொறிக்கப்பட்டுள்ளது. இவனது ஆட்சியில் சாளுக்கியர்-பல்லவர் போர் கடுமையாக நடைபெற்றது. அப்பொழுது சாளுக்கிய அரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி என்பவன். ஆவனது படையெடுப்பையும் போர் நிகழ்ச்சியையும் சாளுக்கியரது ஐகொளே கல்வெட்டு உணர்த்துகின்றது. இதேபோரைப்பற்றிக் காசக்குடி முதலிய பல்லவர் பட்டயங்களும் சில விவரங்களைக் கூறுகின்றன: வெண்சாமரைகளையும், நூற்றுக்கணக்கான கொடிகளையும் குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளப்பிப் பரவிய தூளி சாளுக்கியனை எதிர்க்கவந்த பல்லவவேந்தனது ஒளியை மங்கச் செய்தது. லிகேசியின் படைக்கடலைக்கண்டு காஞ்சி அரசன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான். துள்ளிவிழும் கயல்மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனுடைய யானைகளது மதநீர் விழுந்தமையால், ஓட்டம் தடைப்பட்டுக் கடலிற் கலக்கவில்லை. புலிகேசி பல்லவப் பனியைப் போக்கும் பகலவனாய்ச் சேர, சோழ, பாண்டியரைக் களிப்புறச் செய்தான். இது ஐகொளே கல்வெட்டுச் செய்தி. இரண்டாம் நந்திவர்ம பல்லவன் வெளியிட்ட காசக் குடிப்பட்டயம், மகேந்திரன் தன் பகைவரைப் புள்ளலூரில் அழித்தான் என்று கூறுகின்றது. இவ்வாறு இப்பட்டயம் பகைவர் என்று குறிப்பிட்டது சாளுக்கியரை என்றே ஆராய்ச்சியாளர் கொண்டனர்; கொண்டு, சாளுக்கியன் படையெடுத்து வந்ததும் அவனை எதிர்த்து நிற்கமாட்டாது காஞ்சிபுரக்கோட்டைக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கலாம். தன்னை எதிர்ப்பவர் இல்லாமையால் புலிகேசி உறையூர் வரையிலும் சென்றிருக்கலாம். அவன் திரும்பி வடக்கு நோக்கி வருகையில் மகேந்திரன் காஞ்சிக்கு அருகில் உள்ள புள்ளலூரில் அவனை எதிர்த்து முறியடித்திருக்கலாம். இங்ஙனம் சாளுக்கியன் தோல்வியுற்று ஓடியதால்தான் மகேந்திரன் இப்படையெடுப்பிறகுப் பின்னரும் காஞ்சியில் அரசனாக இருந்தான். அவனுக்குப் பின் அவன் மகனும் பல்லவ வேந்தனானான். இதனை நோக்க, இருவர் கல்வெட்டுக் கூற்றுக்களும் உண்மையென்று கோடலில் தவறில்லை, என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. நரசிம்மவர்மன் : (கி.பி. 630-668) மகேந்திரன் மகனான நரசிம்மவர்மன் பல்லவேந்தனாக இருந்தபொழுது, பல்லவர்-சாளுக்கியர் போர் மீண்டும் நடைபெற்றது என்பதைக் கூரம்பட்டயம், உதயச் சந்திரமங்கலப் பட்டயம், வேலூர்ப்பாளையம் பட்டயம் என்பன குறிக்கின்றன. புலிகேசியின் மகனான முதலாம் விக்கிரமாதித்தன் விடுத்த கர்நூல் பட்டயம், இரண்டாம் புலிகேசி பகையரசர் மூவரால் தோற்கடிக்கப்ட்டான்; வாதாபியிலிருந்த கோவில்கள் வருவாயின்றித் தவித்தன,2 என்று கூறுகின்றது. இவ் விக்கிரமாதித்தன் மகனான விநயாதித்தன் விடுத்த சோரம் பட்டயம், சாளுக்கியர் மரபின் அழிவிற்கும் தாழ்விற்கும் பல்லவரே பொறுப்பாளிகள், என்று முறையிடுகின்றது.3 இவ்விரு திறத்துப் பட்டயங்களோடு, வாதாபியில் நரசிம்மவர்மனால் நிறுத்தப்பட்ட வெற்றித்தூண் கல்வெட்டுச் செய்தியும் ஆராயத்தக்கது. பல்லவர்-சாளுக்கியர் போரினைப்பற்றிக் கீழ்வருமாறு பல்லவர் பட்டயங்கள் பகர்கின்றன:- (1) கூரம் பட்டயம்: கீழ்மலையிலிருந்து கதிரவனும் திங்களும் தோன்றினாற் போலப் பல்லவர் மரபில் நரசிம்மவர்மன் தோன்றினான். அவன் வணங்காமுடி மன்னரது முடிமேல் இருக்கும் சூடாமணி போன்றவன்; தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்றவன்; நரசிங்கப்பெருமான் தோன்றினாற் போலப் பிறந்தவன்; சேர, சோழ, பாண்டி, களப்பிரரை முறியடித்தவன்; பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடைபெற்ற போர்களில் புலிகேசியைத் தோற்று ஓடச்செய்தவன்; அப்புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தின் மீது வெற்றியென்னும் சொல்லைப் பொறித்தவன்.4 (2) உதயச் சந்திர மங்கலப் பட்டயம்: நரசிம்மவர்மன் அகத்தியனைப் போன்றவன்; வல்லவ அரசரை (சாளுக்கியரை)ப் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடைபெற்ற போர்களில் வென்றவன்; வாதாபியை அழித்தவன்.5 (3)வேலுர்ப் பாளையப் பட்டயம்: நரசிம்மவர்மன் விஷ்ணுவைப் போன்ற புகழுடையவன்; அவன் பகைவரை அழித்து வாதாபியில் தனது வெற்றித்தூணை நாட்டினான்6 இப்பட்டயப் கூற்றுக்களையும், சாளுக்கியர் பட்டயக் கூற்றுக்களையும் நோக்கி ஆராய்ச்சியாளர் இப்போரைப்பற்றிக் கீழ்வருமாறு கூறுகின்றனர். புலிகேசி முன்பு படையெடுத்தது போலவே நரசிம்மவர்மன் காலத்திலும் மிகுந்த எதிர்ப்பின்றிப் பல்லவ நாட்டிற்குள் நுழைந்துவிட்டான். இவ்வாறு எதிரியைத் தன் நாட்டுக்குள் நுழையவிட்டுப் பிறர் உதவியை அவன் பெறாதுசெய்து, அவனை வளைத்து முறியடித்தலையே பல்லவர் போர்த் தந்திர மாகக் கொண்டனர். முதற்போர் பரியலம் என்னும் இடத்தில் நடந்தது. புலிகேசி பின்னடைந்தான். பின்பு இரண்டாம் போர் மணிமங்கலம் என்னும் இடத்தில் நடைபெற்றது. அங்கும் சாளுக்கியன் பின்வாங்கினான். மூன்றாம் போர் சூரமாரம் என்னுமிடத்தில் நடந்தது. அதற்குப்பின் சாளுக்கியன் ஆற்றானாய் ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து பல்லவர் சேனை விரட்டிச் சென்றது; இறுதியில் வாதாபி என்னும் சாளுக்கியர் கோநகருள் நுழைந்து அந்நகரத்தை அழித்தது. வாதாபியில் தக்கிண ஈரப்பன் கோவிலுக்கு அருகில் உள்ள கம்பம் ஒன்றில் நரசிம்மவர்மனது பதின்மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக் காணப்படுகின்றது. அது சிதைந்திருக்கிறது. அதில் வாதாபி என்னும் சொல்லும், நரசிம்மவர்மன் என்ற சொல்லும் படிக்கப் கூடியனவாக உள்ளன.7 இதனை நோக்க, வாதாபி பல்லவர் ஆட்சியில் பதின்மூன்று ஆண்டுகள் இருந்தது என்று சொல்லலாம். இம்முடிவுக்கு ஏற்பவே, நரசிம்மவர்மன் தன் கல்வெட்டுக்களில் தன்னை வாதாபி கொண்டவன் என்று அழைத்துக் கொண்டான்.8 இலங்கைப் போர் இரண்டாம் புலிகேசி பகையரசர் மூவரால் தோற்கடிக்கப் பட்டான் என்று கர்நூல் பட்டயம் கூறிற்றன்றோ? அம்மூவர் யார்? அம்மூவருள் ஒருவன் பல்லவனான நரசிம்மவர்மன்; மற்றொருவன் அவன் பங்காளியும் பல்லவ நாட்டின் ஆந்திரப் பகுதியை ஆண்டவனுமாகிய பல்லவனாக இருந்தவன்; மூன்றாம் அரசன் மானவன்மன் என்ற இலங்கையரசன். இவ்விலங்கை யரசன் பகைவன் தாக்குதலால் பட்டத்தை இழந்து, நரசிம்மவர் மனிடம் அடைக்கலம் புகுந்தான். அவ்வமயத்திற்குள் புலிகேசி பல்லவ நாட்டின்மேல் படையெடுத்தான். எனவே, மானவன்மன் பல்லவர் படைகளுக்குள்ளும் ஒரு பகுதிக்குத் தலைமைதாங்கிப் போர் உடற்றியிருக்கலாம். பல்லவனது வெற்றிக்குப் பிறகு மானவன்மன் பல்லவனது கப்பற்படையைத் துணையாகக் கொண்டு, இலங்கையை அடைந்து, தன் பகைவனைத் தோல்வியுறச்செய்து அரசனானான் என்று இலங்கை வரலாறு (மகாவம்சம்) கூறுகிறது. இவ்வெற்றிச் செய்தியைக் காசக்குடிப் பட்டயம், நரசிம்மன் இலங்கையில் பெற்ற வெற்றி, இராமன் இலங்கையில் பெற்ற வெற்றிபோன்றது, என்று கூறியுள்ளது. இவ்வாறு நூற்செய்திகள் பல, கல்வெட்டுச் செய்திகளால் உறுதிப்படுதல் ஆங்காங்குக் கண்டுகளிக்கத்தகும். இத்தகைய பெருவெற்றிகளுக்குப் பிறகு நரசிம்மவர்மன் தன்னை மஹாமல்லன் என்று அழைத்துக்கொண்டான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இப்புதுப்பெயர் ஏற்பட்ட பின்னர்ப் புதுப்பிக்கப்பட்ட கடல்துறைப் பட்டினமே மஹாமல்லபுரம் என்பது. இப்பெயர் நாளடைவில் சுருங்கி, மாமல்லபுரம் என்றும் மல்லபுரம் என்றும் மல்லை என்றும் வழங்கலாயிற்று. பரமேசுவர வர்மன் I: (கி.பி 670-685) முதலாம் மகேந்திர வர்மன் காலத்தில் தொடங்கப்பட்ட பல்லவர் சாளுக்கியர் போர் ஒவ்வொரு பல்லவன் ஆட்சியிலும் தொடர்ந்து நடைபெற்றது என்பது இருதிறத்தார் பட்டயங்களாலும் வெளியாகின்றன, முதலாம் பரமேவர வர்மன் காலத்தில் இரண்டாம் புலிகேசியின் மகனான முதலாம் விக்கிர மாதித்தன் (கி.பி. 656-680) பல்லவர் நாட்டின்மீது படையெடுத்தான். அப்படை யெடுப்பைப்பற்றி இருதிறத்தார் பட்டயங்களும் கீழ்வருமாறு கூறுகின்றன. சாளுக்கியர் பட்டயங்கள்: (1) கர்நூல் பட்டயம்: விக்கிரமாதித்தன் மூன்று கூட்டரசைவென்று தன் உரிமையை நிலைநாட்டினான். (2) கத்வல் பட்டயம்: ஸ்ரீ வல்லபனாகிய விக்கிரமாதித்தன் ஈசுவர போத்தரசனை (பரமேசுவர வர்மனை) வென்றான்; தென்னாட்டின் ஒட்டியான்மாக விளங்கும் காஞ்சியைக் கைப்பற்றினான்9. (3) விநயாதித்தன் வெளியிட்ட சோரம் பட்டயம்: பல்லவனைத் தோற்கடித்த பிறகு விக்கிரமாதித்தன் காஞ்சியை அடைந்தான். (4) கேந்தூர்ப் பட்டயம்: தமிழரசர் அனைவரும் கூடி விக்கிரமாதித்தனை எதிர்த்தனர்10. பல்லவர் பட்டயங்கள்: (1) பரமேசுவரன் வெளியிட்ட கூரம் பட்டயம்: பரமேசுவர வர்மன் பிறர் உதவியில்லாமல் பெரும்படை கொண்ட விக்கிரமாதித்தனை கந்தையைச் சுற்றிக்கொண்டு ஓடும்படிச் செய்தான்.11 (2) இரண்டாம் நந்திவர்மன் வெளியிட்ட உதயேந்திரப் பட்டயம்: பரமேசுவர வர்மன் பெருவள நல்லூரில் நடந்த பெரும்போரில் வல்லபன் (சாளுக்கியன்) படையை முறியடித்தான்.12 (3) மூன்றாம் நந்திவர்மன் வெளியிட்ட வேலுர்ப்பாளையப் பட்டயம்: பரமேசுவரவர்மன் சாளுக்கிய அரசரது பகைமையாகிய இருளை அழிக்கும் பகலவனாக விளங்கினான்.13 இவ்வாறு இருதிறத்தார் பட்டயங்களும் வெற்றி யொன்றையே குறித்தலைக் கண்டு ஆராய்ச்சியாளர் கவலை கொள்ளவில்லை. சாளுக்கியன் காஞ்சியைக் கைப்பற்றியது, அவனது கத்வல் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே பல்லவன் பெருவளநல்லூரில் சாளுக்கியனைத் தோற்கடித்ததைக் கூரம் பட்டயம் கூறுகின்றது. இவ்விரண்டும் ஒரே படையெடுப்பில் வெவ்வேறு காலங்களில் உண்டானவை என்று ஆராய்ச்சி யாளர் கொண்டு, போரைப்பற்றிய விவரங்களைக் கீழ்வருமாறு கூறியுள்ளனர்: விக்கிர மாதித்தன் முதலில் பல்லவனைத் தோற்கடித்துக் காஞ்சியைக் கைப்பற்றினான். பிறகு நேரே (கத்வல் பட்டயம் கூறுமாறு) சோழநாட்டில் உள்ள உரக புரத்தை (உறையூரை) உடைந்து தங்கினான். பல்லவர் பட்டயம் கூறும் பெருவளநல்லூர் திருச்சிராப்பள்ளிக்கு 12 கல்தொலைவில் உள்ளது; எனவே, அஃது உறையூர்க்கும் அண்மையதே ஆகும். விக்கிரமாதித்தன் தோல்வியுற்ற இடம் பெருவளநல்லூர் ஆகும். எப்பொழுதும் தான் தோற்ற செய்தியை எந்த அரசனும் தன் பட்டயத்தில் கூறான் அல்லவா? ஆதலின், பெருவளநல்லூரில் தோற்றதாகச் சாளுக்கியர், பட்டயங்கள் கூறவில்லை. . காஞ்சியை இழந்ததாகப் பல்லவர் பட்டயங்கள் கூறவில்லை; இங்ஙனம் காணின், முதலில் வெற்றி கொண்ட சாளுக்கியன் முடிவில் இழிவான தோல்விபெற வேண்டியவன் ஆயினான் என்பது பெறப்படும்.”* பெருவளநல்லூர் போர் முதலாம் பரமேசுவரவர்மனுக்கும், முதலாம் விக்கிர மாதித்தனுக்கும் லால்குடியை அடுத்த பெருவள நல்லூரில் நடைபெற்ற போர் வரலாற்றுச் சிறப்புடையது. அப்போருக்குப் பின் சாளுக்கியர் வன்மை பேரளவு ஒழிந்தது என்று கூறலாம். ஆதுபோலவே பல்லவர் செல்வாக்குத் தென்னிந்தியாவில் மிகவும் ஓங்கியது என்று கூறலாம். பரமேசுவர வர்மன் விடுத்த கூரம் பட்டயம், இப்பல்லவர்-சாளுக்கியர் போரை வருணனை அமையக் கூறியிருத்தல் படித்து இன்புறத்தக்கது. அதனைக் கீழே காண்க: கணக்கற்ற வீரரும், கரிகளும், பரிகளும், நடந்து சென்றமையாற் கிளம்பிய தூளி கதிரவனை மறைப்பக் கதிரவன் ஒளி சந்திரன் கோட்டைபோல் மங்கியது. முரசொலி இடியோசைபோல அச்சமூட்டியது. உறையிலிருந்து வெளிப் பட்ட வாட்கள் மின்னல்போலக் கண்களைப் பறித்தன. கரிகள் கார்மேகங்கள் போல அசைந்தமை கார்காலத் தோற்றத்தைக் காட்டியது. போரில் உயர்ந்த குதிரைகள் நின்றிருந்த காட்சி கடல் அலைகள் பொங்கிநின்றனபோலத் தோன்றியது. அவற்றின் இடையில் கரிகள் செய்த குழப்பம் கடலில் அச்சுறுத்தும் பெரிய உயிர்கள் வரும்போது உண்டாகும் சுழலை ஒத்திருந்தது. கடலிலிருந்து சங்குகள் புறப்பட்டாற்போலச் சோனைக்கடலிலிருந்து வீரர் சங்கொலி எங்கும் பரப்பினர். கத்தி, கேடயம் முதலிய பறந்தன, பகைவர் போரிட்டு வீழ்ந்து கிடந்த நிலைமை, காண்டா மிருகத்தால் முறிக்கப்பட்ட செடிகளும் மரங்களும் வீழ்ந்து கிடக்கும் நிலையை ஒத்திருந்தது. போர் வீரர்கள் நாகம், புன்னாகம் முதலிய மரங்கள் நிறைந்த காடுகளை ஒப்ப அணியணியாக நின்றனர். வீரர் வில்லை வளைத்து அம்பை விடுத்தபோது உண்டான ஓசை, காட்டில் காற்றுத் தடைப்பட்ட காலத்தில் உண்டாகும் பேரோசையை ஒத்திருந்தது. கரிகள் ஒன்றோடொன்று பொருதபொழுது தந்தங்கள் குத்திக்கொண்டு எடுபடாது நின்றன. குதிரை வீரர், வாட்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிக் கொண்டு எடுக்க முடியாமல் நின்றனர். சிலர் மயிர்பிடித்து இழுத்துச் சண்டையிட்டனர். கதைகள் ஒன்றோடொன்று மோதின. செந்நீரும் கரிகள் மதநீரும் நிலத்தில் தோய்ந்து பரந்த காட்சி, தரையில் மஞ்சன் பூசினாற்போல ஆயிற்று. வீரர்களுடைய கரி-பரிகளுடைய தலைகளும் கைகளும் தொடைகளும் பிறவும் வெட்டுண்டு சிதறுண்டன. இரு திறத்தாரும் முன்னும் பின்னும் அலைந்து, ஓடிச் சண்டையிட்டனர். ஆறாக ஓடின இரத்தத்தின் மேல் பாலமாக அமைந்த யானை உடலங்கள் மீது வாள் வீரர் நின்று போரிட்டனர். அப்பொழுது வெற்றியணங்கு வெற்றி என்னும் ஊஞ்சலில் இருந்து ஆடினாள். இறந்த வீரர் கைகளில் வாள் முதலியன அப்படியே இருந்தன. அவர்கள் போரிட்ட நிலையிலேயே இறந்து கிடந்தனர். அவர்கள் கண்கள் சிவந்திருந்தன. பெரு வீரர் அணிந்திருந்த அணிகள் யாவும் பொடியாகிக்கிடந்தன. பேய்கள் முதலியன செந்நீர்க் குடித்து மதிமயங்கின. முரசுக்கேற்ற தாளம்போலத் தலையற்ற முண்டங்கள் கூத்தாடின. முழு நூறாயிர வீரருடன் வந்த விக்கிரமாதித்தன் தனியனாய்க் கந்தையைப் போர்த்துக்கொண்டு ஓடி ஒளிந்தான். இப்போரில் சண்டையிட்ட பரமேசுவரவர்மனது போர்க்கரியின் பெயர் அரிவாரணம்; குதிரையின் பெயர் அதிசயம். இரண்டாம் நந்திவர்மன் : (கி.பி. 710-775) பட்டம் பெற்ற வரலாறு: இவன் காலத்தில் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் மிக மேம்பாடுற்றது. ஆதன் திருச்சுற்று உட்சுவர்கள் மீது பல்லவர் வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியின் கீழும், அந்நிகழ்ச்சியைக் குறிக்கும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முதற் சிற்பம் இரண்டாம் பரமேசுவரவர்மன் இறப்பைக் குறிக்கின்றது. நான்காம் சிற்பத்தில் ஸ்ரீமல்லன், இரணமல்லன், சங்கிராம மல்லன், பல்லவ மல்லன் ஆகிய நால்வரும் இரணிய வர்மன் பிள்ளைகளாகக் குறிக்கப்பட்டுள்ளனர். அங்கு, பரமேசுவரன், நான் போவேன் என்று தொழுது நின்ற இடம் என்னும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. பின்பு இரணியவர்மனும், தரணி கொண் கோசரும், நகரத்தாரும் பிறரும் குறிக்கப்பட்டுள்ளனர். பின்னர் இளைஞனான பல்லவ மல்லன் `நந்திவர்மன் என்ற பெயரால் அபிடேகம் செய்யப்பெற்ற செய்தி பொறிக்கப் பட்டுள்ளது. இச்சிற்பங்களை நன்கு கவனித்து இவற்றின் அடியிலுள்ள கல்வெட்டுச் செய்திகளையும் நன்கு படித்த ஆராய்ச்சியாளர் கீழ்வருமாறு கூறியுள்ளனர்: இரண்டாம் பரமேசுவரவர்மன் இறந்த பிறகு கடிகையரும் மூலப் பிரகிருதியாகும் அமைச்சரும் இரணியவர்ம மகாராசனைக் கண்டனர்; தமக்கோர் அரசனைத் தரவேண்டினர். உடனே இரணியவர்மன் தன் மைந்தர் நால்வரையும் அழைத்து, யார் அரசராக விரும்புகிறீர்? என்று கேட்டான். முதல் மூவரும் மறுத்தனர். பன்னிரண்டு வயதுடைய பல்லவ மல்லன் தான் அரசனாக விழைவதை வணக்கத்தோடு கூறினான். தரணிகொண்ட போசர் தனது இசைவைத் தருமாறு இரணியவர்மனை வற்புறுத்தினார். நிறகு தந்தையும் தரணிகொண்ட போசரும் தந்த கைப்படைகளை ஏந்திப் பல்லவமல்லன், பல மலைகளையும் காடுகளையும் தாண்டிக் காஞ்சிக்கு வந்தான். அவன் வருதலை அறிந்த பல்லவடி அரையன் பெருஞ்சேனையுடன் எதிர்கொண்டு அவனை யானை மீது அமர்த்தி அழைத்து வந்தான். பல்லவ மல்லனை நகரச் செல்வரும், `காடக முத்தரையர் முதலிய சிற்றரசரும் பிறரும் வரவேற்று அபிடேகம் செய்தனர்; நந்திவர்மன் என்னும் பெயரை அபிடேகப் பெயராகச் சூட்டினர். `விடேல்விடுகு, கத்வாங்கதரன், ரிஷபலாஞ்சினன் என்னும் பட்டத்திற்குரிய விருதுப் பெயர்களை வழங்கினர். நந்திவர்மன் அரசன் ஆனான்.14 இவற்றால் கோவிற் சிற்பங்களும், அவற்றின் அடியில் குறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் எந்த அளவு வரலாற்றுச் சிறப்புடையன என்பதை நன்கறியலாம் அல்லவா? இரண்டாம் நந்திவர்மன் வரலாற்றை அறிய, இவன் காலத்தில் வெளிப்பட்ட பட்டயங்கள் உதவிபுரிகின்றன. இவனது 22-ஆம் ஆட்சியாண்டில் வெளிவந்த காசக்குடிப் பட்டயம், இவனது 21-ம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட உதயேந்திரப்பட்டயம், இவனது 58-ம் ஆட்சியாண்டில் வெளிவந்த தண்டன் தோட்டம் பட்டயம், இவனது 61ஆம் ஆட்சியாண்டில் வெளிவந்த கொற்றங் குடிப்பட்டயம் என்பன குறிப்பிடத்தக்கவை. இவனது 65-ஆம் ஆட்சியாண்டில் வெளிவந்த மாமல்லபுரக் கல்வெட்டு ஒன்று. இக்கல்வெட்டினால் இவன் 65 ஆண்டுகள் அரசாண்டான் என்பது ஐயமறத் தெரிகின்றதோ? இச்சான்றுகளுடன் இரண்டாம் விக்கிரமாதித்தனது கயிலாசநாதர் கோவில் கல்வெட்டு ஒன்றும், சாளுக்கியக் கீர்த்திவர்மன் காலத்து வக்கலேரிப் பட்டயமும், கேந்தூர்ப் பட்டயமும், பாண்டியர்கள் வெளியிட்ட வேள்விக்குடி, சின்னமனூர்ப் பட்டயங்களும் இவன் செய்த போர்களையும் ஆட்சிபற்றிய செய்திகளையும் நன்கறிய உதவிபுரிகின்றன. பல்லவர்-பாண்டியர் போர் நந்திவர்மன் கும்பகோணத்தை அடுத்திருந்த நாதன்கோவில் என்னும் ஊரிலிருந்த கோட்டையில் தங்கியிருந்தான். அப்பொழுது தமிழரசர் அக்கோட்டையை வளைத்துக்கொண்டனர். அவ்வமயம் பல்லவனது படைத் தலைவனான உதயசந்திரன் என்பவன் பெரும்படையுடன் வந்து தமிழரசரை வளைத்துக்கொண்டு கடும்போர் புரிந்தான்; பாண்டியர் படையை நிம்பவனம், சூதவனம், சங்கரகிராமம், மண்ணைக்குறிச்சி, சூரவழுந்தூர் முதலிய இடங்களில் வென்றான் என்று உதயேந்திரப் பட்டயம் கூறுகின்றது. பாண்டியரது வேள்விக்குடிப் பட்டயம், நெடுவயல் குறமடை, மண்ணிக்குறிச்சி, திருமங்கை, பூவளூர், கொடும்பாளூர், பெரியலூர் முதலிய இடங்களில் பாண்டியன் வெற்றிபெற்றான் என்று கூறுகின்றது. இவ்வாறு இருதிறத்தார் பட்டயங்களும் வெற்றி ஒன்றையே கூறுதலும், இரு போருக்குப்பின்னர் அரிகேசரி பராங்குசமாறவர்மன் தொடர்ந்து பாண்டியநாட்டை ஆண்டு வந்ததும், அவ்வாறே நந்திவர்மன் பல்லவ வேந்தனாக இருந்து வந்ததும் நோக்க, உதயசந்திரன் நந்திவர்மனைப் பகைவர் முற்றுகையிலிருந்து விடுவித்ததோடு, தமிழரசரைப் பல போர்களில் வென்றிருத்தல்வேண்டும். அவ்வாறே தமிழரசர் சில இடங்களில் நடைபெற்ற போர்களில் வெற்றி பெற்றன ராதல் வேண்டும் எனக் கோடலே முறை. இப்போர் நிகழ்ச்சிகள் பல்லவ மல்லனது 21-ஆம் ஆட்சியாண்டில் வெளியான உதயேந்திரம் பட்டயத்தில் கூறப்பட்டிருப்பதால், பல்லவர்-பாண்டியர் போர் நந்திவர்மன் ஆட்சியில் ஏற்பட்ட முதற்போராக கருத இடமுண்டு. பல்லவர்-சாளுக்கியர் போர் இரண்டாம் விக்கிரமாதித்தனது (கி.பி. 733-746) கல்வெட்டு ஒன்று காஞ்சி கயிலாசநாதர் கோவிலில் கன்னட மொழியில் இருக்கின்றது. விக்கிரமாதித்தன் கயிலாசநாதர் கோவில் செல்வத்தைக் கண்டு வியந்தான். அதனைத் தான் எடுத்துக்கொள்ளாமல் அக்கோவிலுக்கே விட்டு விட்டான். ஏழையர்க்கும் மறையவர்க்கும் பொன்னை வழங்கினான் என்று அக்கல்வெட்டுக் கூறுகின்றது.15 இவ்விரண்டாம் விக்கிரமாதித்தனது மகனான இரண்டாம் கீர்த்திவர்மன் (கி.பி. 746-757) வெளியிட்ட வக்கலேரி, கேந்தூர்ப் பட்டயங்கள், பல்லவரைப் பழி வாங்கும் எண்ணத்துடன் விக்கிரமாதித்தன் காஞ்சியை நோக்கி விரைந்தான்; போரில் பல்லவ மல்லனை முறியடித்தான். பல்லவன் ஒரு கோட்டைக்குள் ஒளிந்துகொண்டான்: சாளுக்கியன் பல்லவனுடைய கடுமுக வாத்தியம், சமுத்திரகோஷம், கத்வாங்கக்கொடி, போர் யானைகள், விலையுயர்ந்த மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன. ஆனால் இப்போரைப்பற்றிப் பல்லவர் பட்டயங்கள் ஒன்றுங் குறிக்கவில்லை, ஆயினும் பொதுவாக, `பல்லவன் வல்லபரை வென்றனன் என்று பல்லவனது கொற்றங்குடிப் பட்டயம் கூறுகின்றது.16இக்கூற்றையும், இப்போருக்குப் பின்னர் பல்லவமல்லனே தொடர்ந்து அரசாண்டதையும் நோக்க, இரண்டாம் விக்கிரமாதித்தன் பல்லவநாட்டைக் கைப்பற்றி ஆளவில்லை என்பது தெளிவாகும். பல்லவன்-இரட்டன் உறவு வேலூர்ப்பாளையப்பட்டயம், (இரண்டாம்) நந்திவர்மன் மனைவி ரேவா என்பவள். ஆவள் மகன் தந்திவர்மன் என்று கூறுகின்றது. தந்திதுர்க்கன் என்பவன் சாளுக்கியரை முறியடித்து. இராட்டிரகூட ஆட்சியை ஏற்படுத்திய முதல் மன்னன். அவனுக்கு வைரமேகடன் என்ற மறுபெயரும் உண்டு. அவனையும் பல்லவ மல்லனையும் காஞ்சியிற் கண்டதாகத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இவையனைத்தையும் ஒருசேர நோக்கி, தந்திதுர்க்கன் சாளுக்கியரை முறியடிக்க நந்திவர்மன் உதவியை நாடிப் பெண் கொடுத்திருத்தல் வேண்டும்; அந்த உறவின் வலிமையால் இராட்டிரகூட அரசைச் சாளுக்கிய நாட்டில் ஏற்படுத்தியிருத்தல் வேண்டும்; ரேவா என்பவள் தந்திதுர்க்கன் மகளாதல் வேண்டும். அதனாற்றான் நந்திவர்மன் மகன் பாட்டன் பெயரைப் (தந்தி) பெற்றிருத்தல் வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். மூன்றாம் நந்திவர்மன்: (கி.பி. 825-850) இவன் மேலே சொல்லப்பட்ட தந்திவர்மன் மகன். இவன்காலத்துப் பட்டயங்களுள் சிறந்தது வேலூர்ப்பாளையப் பட்டயமே ஆகும், இஃது இவனது ஆறாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டது. நந்திவர்மன் படைக்கலப் பயிற்சியில் பண்பட்டவன்; பிறரால் பெறுதற்கரிய பல்லவப் பெருநாட்டின் செழிப்பைப் பெற்றவன். அவன் அதற்காகக் போர்க்களத்தில் தன் பகைவரைக் கொன்றான். அவனது வாளால் துணிக்கப்பட்ட பானைகள் அணிந்திருந்த முத்துமாலைகள் போர்க்களத்தில் சிதறிக்கிடந்த காட்சி, போர்க்கள மங்கை தன் பற்களைக்காட்டி நகைப்பது போல் இருந்தது,17 இவ்வாறு இப்பட்டயத்தில் குறிக்கப்பட்ட போர் பல்லவனுக்கும் இராட்டிரகூட அரசனான அமோகவர்ஷனுக்கும் நடைபெற்றது. இவன் தந்தையான தந்திவர்மன் இரட்ட அரசனுக்கு அடங்கிய அரசனாக இருந்தான். அவ்விழிவைப் போக்கிக்கொள்ளவே நந்திவர்மன் இராட்டிர அரசனைத் தாக்கி வெற்றி பெற்றான். இவனது மனைவி, அமோகவர்ஷ நிர்வதுங்கன் என்ற இராட்டிரகூட அரசனது மகள் என்று இவன் மகனான நிர்பதுங்கன் வெளியிட்ட பாகூர்ப்பட்டயம் பகர்வதாலும், இந் நந்திவர்மன் இரட்ட மன்னனோடு மணவுறவு கொண்டவன் என்பது தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தெள்ளாற்றுப் போர்: (கி.பி. 832) நந்திவர்மனது பத்தாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட திருநெய்த்தானம் கல்வெட்டில் இவனது தெள்ளாற்று வெற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தெள்ளாறு என்பது வட ஆர்க்காட்டுக் கோட்டத்தில் வந்தவாசிக் கூற்றத்தில் இருப்பது. பல்லவன் இரட்டனுடன் போரிட்ட அமயம் பார்த்துப பாண்டியன் ஸ்ரீமாரன் ஸ்ரீவல்லபன் சேரசோழருடன் பெண்ணையாற்றைத் தாண்டி, வடஆர்க்காட்டுக் கோட்டத்திற்குள் நுழைந்தான். இதனை யுணர்ந்த பல்லவன் பெருஞ் சேனையுடன் வந்து, பகைவரைத் தெள்ளாற்றில் முறியடித்தான்; அதுமுதல் தெள்ளா றெறிந்த நந்திவர்மன் என்று கல்வெட்டுக்களில் போற்றப் பட்டான். இவனது தெள்ளாற்று வெற்றியைப் பாராட்ட எழுந்ததே நந்திக் கலம்பகம் என்னும் நூல். அதனில் இப் போரைப் பற்றிப் பல விவரங்கள் விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. அந்நந்திக் கலம்பகம் தெள்ளாற்றுப் போர் விவரங்களை அறியப் பெருந்துணை செய்கின்றது. திருநெய்த்தானக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ள போர்ச் செய்தியை விரிந்த முறையில் விளக்கி வைக்கும் உறுகருவியாக இந்நூல் விளங்குகின்றது. இங்ஙனம் கல்வெட்டுக் குறிப்பிற்கு இலக்கியம் பெருந்துணையாகவும் இலக்கியத்தில் காணப்படும் குறிப்பிற்குக் கல்வெட்டுப் பெருந்துணையாகவும், பொருந்திவரும் காட்சியை வரலாற்றுத் துறையில் பல இடங்களில் கண்டு களிக்கலாம். பாகூர்ப்பட்டயம் இப்பட்டயம் நிருப துங்கவர்மன் வெளியிட்டது. இதனில் அவ்வரசன் தன் தாயான சங்கா என்னும் இராட்டிரகூட அரசகுமாரியைப் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளான்: இவள் இலக்குமியின் அவதாரம் என்னலாம்; ஈன்ற அன்னையைப் போலக் குடிமக்களைப் பாதுகாப்பவள். அரசனது நற்பேறே சங்கா உருவில் வந்தது என்று சொல்லலாம். இவள் சிறந்த நுண்ணறிவு உடையவள்; எல்லாக் கலைகளிலும் வல்லவள். இக்கூற்றியனையடுத்து, பாண்டியனிடம் முன்பு தோல்வி யுற்ற பல்லவர் படை அரசனது அருளால் (நிருபதுங்கன் படை செலுத்தியதால்) பாண்டியனை அரிசிலாற்றங்கரையில் முறியடித்தது என்று கூறியுள்ளான்.18 பாண்டியன் சீமாறன் சீவல்லபன் குடமூக்குப்போரில் பல்லவனை வென்றதாக வேள்விக்குடிப் பட்டயம் கூறுகின்றது. இவ்விரண்டையும் நோக்க, இருவர் கூற்றும் உண்மை என்பதைப் பின்வரும் செய்திகளால் அறியலாம். மூன்றாம் நந்திவர்மனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் குடமூக்குப்போர் நிகழ்ந்திருத்தல் வேண்டும். அப்போரில் பாண்டியன் சீமாறன் பல்லவர் படையையும், அவனுக்குத் துணையாக வந்த கங்க அரசனான பூதுகனையும் வென்றிருக்கலாம்.19நிருபதுங்கன் பட்டம் பெற்ற பிறகு அரசிலாற்றங்கரையில் படைசெலுத்திப் போர்க்களம் சென்றதால் பல்லவனுக்கு வெற்றி ஏற்பட்டது. இதனைத்தான், முன்னொருமுறை பாண்டியர்க்குத் தோற்ற பல்லவர் படை இப்பொழுது அரசனது அருளால் வெற்றிபெற்றது என்று பாகூர்ப்பட்டயம் கூறுவதாகலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். திரும்புறம்பியப் போர்: (கி.பி. 880) சீமாறன் சீவல்லபன் மகனான இரண்டாம் வரகுணன் (கி.பி. 862-880) ஏறத்தாழக் கி.பி. 880-இல் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான். அப்பொழுது பல்லவவேந்தனாக இருந்து நிருபதுங்கவர்மன் மகனான அபராஜித வர்மன் போருக்குச் சென்றான். அவனுக்குத் துணையாக அவனது பாட்டனும் கங்க அரசனுமான முதலாம் பிருதிவீபதி என்பவன் பெரும்படையுடன் சென்றான். தஞ்சையை ஆண்ட ஆதித்த சோழனும் (கி.பி. 870-907) பல்லவனுடன் சேர்ந்து கொண்டான். இம்மூவரும் வரகுண பாண்டியனைத் திருப்புறம்பயம் என்னும் இடத்தில் கடுமையாக எதிர்த்தனர். வரகுணன் முற்றிலும் முறியடிக்கப் பட்டான். கங்கமன்னனும் இப்போரில் கொல்லப்பட்டான்.20 பல்லவ ஆட்சியின் மறைவு திருப்புறம்பியப் போரில் அபராஜித பல்லவனுக்கு உதவியாக இருந்த ஆதித்த சோழன் (கி.பி. 870-907), அபராஜிதனைப் போரில் முறியடித்துத் தொண்டைநாட்டைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது. பெரிய யானை மீதிருந்த அபராஜிதன் மீது ஆதித்தசோழன் பாய்ந்து அவனைக் கொன்றான்; கோதண்டராமன் என்னும் பெயர் பெற்றான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டு கூறுகின்றது.21இவற்றால் ஆதித்த சோழன் பல்லவனைக் கொன்று தொண்டைநாட்டைக் கைப்பற்றினமை நன்கு தெரிகின்றது. இவ் ஆதித்த சோழன் காளத்திக்கு அருகில் தொண்டைமான் நாடு என்னும் இடத்தில் இறந்தான். இவன் மகனான முதற்பராந்தகன் இவன் இறந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டினான். அது கோதண்டராமேசுவரம் எனவும், ஆதித்தேச்சரம் எனவும் பெயர் பெற்றது.22 இச்சோழனை அடுத்து வந்த பராந்தகன் முதலிய சோழ மன்னர்களின் கல்வெட்டுக்கள் பல்லவர் ஆண்ட நாடு முழுவதையும் காணப்படுவதாலும், பல்லவ வேந்தர் கல்வெட்டுக்கள் பல்லவர் ஆண்ட நாடு முழுவதும் காணப்படுவதாலும், பல்லவ வேந்தர் கல்வெட்டுக்கள் இப்பிற்காலத்தில் யாண்டும் காணப்படாமையானும் பல்லவர் ஆட்சி ஏறத்தாழக் கி.பி. 890-இல் தமிழகத்திலிருந்து மறைந்துவிட்டது என்பதும், சோழர்கள் தமக்குரிய சோழ நாட்டையே அன்றிப் பல்லவர் ஆண்ட தொண்டை நாட்டையும் கைப்பற்றி ஆளலாயினர் என்பதும் தெள்ளிதிற் புலனாதல் காண்க. ஒரு நாட்டு அரசியல் வரலாற்றை அறியவும், அந்நாடாண்ட அரசர்பட்டியலை அறியவும் செப்புப் பட்டயங்களும், கல்வெட்டுக்களும் எந்த அளவு துணை செய்கின்றன என்பதை நன்கு உணர்த்தவே, பல்லவரது அரசியல் வரலாறு இவ்வளவு விரிவாகத் தரப்பட்டது; இவ்வரலாற்றை அறியப் பல்லவ நாட்டைச் சுற்றியிருந்த பிறநாடுகளில் அக்காலத்து வெளிப்போந்த கல்வெட்டுக்களும் இப்பல்லவர் வரலாறு அறிவதற்கு உறுதுணையாக அமைகின்ற நிலையும் நன்கு விளக்கப்பட்டது. இதுகாறும் கூறப்பெற்ற முறையிலேயே கல்வெட்டுக்களின் துணையைக் கொண்டு, பாண்டிய நாட்டு வரலாற்றையும், சேரநாட்டு வரலாற்றையும் அழகுற அமைக்கலாம். இம் முறையைப் பின்பற்றியே வரலாற்றுப் பேராசிரியர் பலரும் சோழர் வரலாறு, பாண்டியர் வரலாறு, தஞ்சை நாயக்க மன்னர் வரலாறு, மதுரை நாயக்க மன்னர் வரலாறு, சாம்புவராயர் வரலாறு, ஹொய்சளர் வரலாறு, கதம்பர் வரலாறு, கங்கர் வரலாறு, கீழைச் சாளுக்கியர் வரலாறு, மேலைச் சாளுக்கியர் வரலாறு எனப் பலதிறப்பட்ட வரலாற்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர்; இக் கல்வெட்டுக்களுக்கு உறுதுணையாகக் கிடைக்கும் இலக்கியச் செய்திகளும், அயல் நாட்டார் குறிப்புக்களும் பிறவும் இந்நூல்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. பாண்டியரைப் பற்றிய சில செய்திகள் பல்லவர் வரலாற்றினைக் கல்வெட்டுக்கள் கொண்டு முறைப்படிக் கூறியதுபோலப் பாண்டியர் வரலாற்றையோ சோழர் வரலாற்றையோ கூறுவது மிகை. ஆதலால் அரசியல் வரலாறுகளை முறையாகக் கூறுதலை விடுத்துச் சில அரசியற் செய்திகளை மட்டும் ஆங்காங்குக் குறித்துச் செல்லுதல் நலம் என்று எண்ணுகின்றேன். தென்னிந்திய வரலாற்றில் களப்பிரர் என்னும் ஒரு மரபினர் இடம் பெற்றுள்ளனர். அம்மரபினர் பல்லவர் பட்டயங்களிலும், பாண்டியர் பட்டயங் களிலும் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளனர். கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் பாண்டி மன்னனாக இருந்த நெடுஞ்சடையன் பராந்தகன் வெளியிட்ட வேள்விக் குடிப்பட்டயம் இக்களப்பிரரைப்பற்றி அறியப் பெருந்துணை புரிவதாகும். நம் சங்க நூல்களில் கூறப்பட்டுள்ள பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியனை முதல்வனாகக் குறிப்பிட்டு நெடுஞ்சடையன் பராந்தகன் வரையிலும் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர் பெயர்களும், அவர் தம் செயல்களும் இப்பட்டயத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றால் இப்பட்டயம் சங்கத்தின் இறுதிக் காலத்திலிருந்து (கி.பி. 300), கி.பி. 8-ஆம் நூற்றாண்டு முடியப் பாண்டிய மன்னர்களைப் பற்றிய செய்திகளைக் கூறுகின்றது என்பது வெளிப்படை. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கொற்கைகிழான் நற்கொற்றன் என்பவனுக்கு வேள்விக்குடி என்னும் ஊரைத் தானமாகவிட்டான் அவனும் அவன் மரபினரும் அதனை அனுபவித்து வந்தனர். அந்நிலையில் களப்பிரன் என்னும் கலியரசன் பாண்டிய நாட்டை கைப்பற்றிக்கொண்டான். அவன் காலத்தில் வேள்விக்குடிப் பட்டயம் செல்லாததாகிவிட்டது. (களப்பிர அரசு எவ்வளவு காலம் பாண்டிய நாட்டில் இருந்தது என்பது உறுதியாகக் கூறமுடியவில்லை.) ஆயினும் ஏறத்தாழக் கி.பி. 575-ல் களப்பிரர் ஆட்சியைக் கடுங்கோன் என்ற பாண்டியன் தோன்றி அகற்றினான். அவனுக்குப் பின்னர் மாறவர்மன் அவனிசூளாமணி, செழியன் சேந்தன், மாறவர்மன் அரிகேசரி, கோச்சடையன் ரணதீரன், அரிகேசரி பராங்குச மாறவர்மன் என்போர் பாண்டிய நாட்டை முறைப்படி ஆண்டனர். இவர்கட்குப் பின்பு நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790) ஆட்சி புரிந்தான். அவனது மூன்றாம் ஆட்சியாண்டில் இவ் வேள்விக்குடி செப்பேடு வெளியிடப்பட்டது. வேள்விக்குடியை அனுபவித்தற் குரிய கொற்கை கிழான் மரபினன் ஒருவன் இப்பாண்டிவேந்தனிடம் வந்து, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பொறித்துக் கொடுத்த பட்டயத்தைக் காட்டி நீதி வேண்டினான். பழைய பட்டயத்தைப் பரிசோதித்த பாண்டியன் அவனுக்கே வேள்விக்குடியை உரிமையாக்கினான். அப்பொழுது பொறிக்கப் பட்டதே வேள்விக் குடிச்செப்பேடு. பாண்டியர் மரபில் வழிவழியாகக் கூறப்பட்டு வந்து செய்திகளை இப்பட்டயத்தில் இடம்பெற்றுள்ளன என்று கொள்ளுதல் பொருந்தும். மதுரையை ஆண்ட வடுக கருநாடர் வேந்தன் திரு ஆலவாய்ப் பெருமானுக்குச் சந்தனம் அரைத்துத் தந்துவந்த மூர்த்தி நாயனார்க்குச் சந்தனக்கட்டைகள் கிடைக்காதபடி செய்தான் என்று பெரியபுராணம் கூறுகின்றது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் புகாரைத்தலைநகரமாகக் கொண்டு அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர அரசன் ஆண்டு வந்தான் என்று அக்காலத்தில் வாழ்ந்த புத்ததத்தர் என்ற பௌத்த துறவி தாம் வெளியிட்ட அபிதம்மாவதாரம் என்னும் நூலில் குறித்துள்ளார். கூற்றுவநாயனார் களந்தை என்னும் ஊரில் முடிசூட வேண்டும் என்று விரும்பியதாகவும், அவர் சோழர் அல்லராதலால் அங்ஙனம் முடிசூட்டத் தில்லைவாழ் அந்தணர் மறுத்ததாகவும் பெரிய புராணம் கூறுகின்றது. இவையனைத்தையும் ஆழ்ந்து நோக்கின், களப்பிரர் சோழபாண்டிய நாடுகளைக்கைப்பற்றி ஆண்டனர் என்று கருத இடம் உண்டாகின்றது. அளவரிய அதிராசரை அகலநீக்கி அகலிடத்தைக் களப்ரனெனும் கலியரசன் கைக்கொண்டதனை எனவரும் வேள்விக்குடிப் பட்டயத்தின் வரிகள் இக்கருத்தினை உறுதிப்படுத்தல் காணத்தக்கது. பாண்டியரும் தமிழ்ச் சங்கமும் பாண்டியர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை வைத்து நடத்தினர் என்று இறையனார் களவியலுரை தெறிவாகக் கூறுகின்றது. நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினேன்காண், என்பது அப்பர் தேவாரம், சங்கத் தமிழ் மாலை முப்பதும் என்பது ஆண்டாள் பாசுரம். இவையனைத்தையும் நோக்க, மதுரையில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் போன்ற புலவர்களோடு வாழ்ந்த காலம் சங்கமிருந்த காலமாக இருத்தல் கூடும் என்று எண்ண இடந்தந்தது. இந்த எண்ணம் சரியே மதுரையில் தமிழ்ச்சங்கம் இருந்தது -என்பதை ஏறத்தாழக் கி.பி. 916-இல் மூன்றாம் இராசசிம்மபாண்டியன் வெளியிட்ட சின்னமனூர்ப் பட்டயம் செப்புகின்றது.: மா பாரதந் தமிழ்ப்படுத்து மதுராபுரிச் சங்கம்வைத்தும் மகா ராசரும் சார்வபௌமரும் மகீமண்டலங் காத்திகந்த பின். இப்பட்டயம் மேற்சொன்ன இலக்கியச் சான்றுகட்குப் பிற்பட்டதாயினும், சங்க காலமுதல் வழிவழியாகக் கூறப்பட்டுவந்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய செய்திகளை நினைவிற்கொண்டு, இது பிற்காலத்தில் வரையப்பட்டது என்று கொள்வதில் தடையுண்டோ? சோழர் அரசியல் வரலாறு சங்க காலத்தில் கல்வெட்டுகள் தோன்றவில்லையாதலால், சங்ககாலச் சோழர் வரலாறு கல்வெட்டுக்களைக்கொண்டு கூறுமாறு இல்லை. பல்லவர்க்குப் பின்வந்த பிற்காலச் சோழர், கல்வெட்டுகள் தோன்றிவளர்ந்த காலத்தவர் ஆதலாலும், அவர்தம் பரந்துபட்ட ஆட்சியில் கல்வெட்டுகள் காணக்கிடைத்த லாலும் இப்பிற்காலச் சோழர் வரலாறு கல்வெட்டுகள் காணக்கிடைத்த லாலும் இப்பிற்காலச் சோழர் வரலாறு கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் கொண்டும், இவரது சமகாலத்தில் வாழ்ந்த இரட்டர், மேலைச் சாளுக்கியர் கீழைச் சாளுக்கியர் ஆகியோர் வெளியிட்ட கல்வெட்டுகளைக் கொண்டும், சோழர் கால வரலாற்றினைத் தெளிவாகக் கூறுதல் இயலவில்லை. இத்துறையில் காலஞ் சென்ற கோபிநாதராயர்; பண்டித எல். உலகநாத பிள்ளை, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாதிரியார், திரு. டி.வி. சதாசிவப் பண்டாரத்தார் முதலிய நல்லறிஞர்கள் பல நூல்களை வெளியிட்டனர். கல்வெட்டுத் துறையினர் மேன்மேலும் கிடைத்துவரும் கல்வெட்டுக்களைக் கொண்டு சோழர் வரலாற்றை விரிவாக்கி வருகின்றனர். திருவாலங்காட்டுப் பட்டயம், லீடன் பட்டயம் முதலியன பிற்காலச் சோழர் பெயர்களைக் குறிக்கின்றன. பராந்தகனுடைய ஆட்சிக் காலத்தில் அவன் வென்ற நாடுகளான பாணப்பாடி, தொண்டைநாடு, வைதும்பநாடு என்ற பகுதிகளில் இரட்ட மன்னனான மூன்றாம் கிருணணனுடைய கல்வெட்டுக்கள் காணப்படுதலாலும், அவன் தன் பட்டயங்களில், கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன் என்று கூறிக்கொள்வதாலும், மூன்றாம் கிருஷ்ணன் சோழப்பெரு நாட்டின் வடபகுதியைச் சோழனிடமிருந்து வென்றனன் என்னும் உண்மை கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. இங்ஙனம் பேரரசனாக இருந்த மூன்றாம் கிருஷ்ணனுக்குப் பின் ஏறத்தாழக் கி.பி. 975-இல் இருந்து இரட்டைபாடியில் இரட்டர் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை; சாளுக்கியர் கல்வெட்டுக்கள் காணக் கிடக்கின்றன. முதலாம் இராசராச சோழன் காலத்தில் தோன்றிய கல்வெட்டுகளிலும், பின்வந்த சோழர் கல்வெட்டுக்களிலும் இரட்டை பாடியைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர் என்பதே கூறப்பட்டுள்ளது. இவ்வீரிடத்துக் கல்வெட்டுக்களாலும் இரட்டைபாடியில் ஏறத்தாழக் கி.பி. 975இல் இரட்டரது ஆட்சி ஒழிந்து, சாளுக்கியரது ஆட்சி ஏற்பட்டது என்னும் உண்மையை நன்கறியலாம். மெய்க்கீர்த்தி இராசராச சோழன் அரசாண்ட காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என்னலாம். இவன் சிறந்த கல்விமான்; உயர்ந்த போர்வீரன்; பாராட்டத்தகும் பண்புகள் பெற்றவன்; சிறந்த சிவபக்தனாயினும் பிற சமயங்களை வெறுக்காதவன்; பல நாடுகளை வென்ற பெரு வீரனாயினும் தனது சோழப்பெரு நாட்டில் அமைதியை நிலவச்செய்த அண்ணல். இவனுக்கு முற்பட்ட பல்லவர், பாண்டியர் பட்டயங்களிலும், கல்வெட்டுக் களிலும் அரசமரபு கூறப்பட்டிருக்கும்; அந்தந்த அரசனது சிறப்பு சிறிதளவு கூறப்பட்டிருக்கும்; முற்றும் கூறப்பட்டிராது; விளக்கமாகவும் கூறப்பட்டிராது. இம்முறையையே ஆதித்த சோழனும், அவன் வழிவந்தவரும் பின்பற்றி வந்தனர். ஆயினும், சோழன் இராசராசன் இந்த முறையை அடியோடு மாற்றிவிட்டான்; தன் ஆட்சியாண்டுகளில் முறையே நடைபெற்ற போர்ச்செயல்களை முறையே வெளிவந்த கல்வெட்டுக்களில் முறைப்படி குறித்துவரலானான். சான்றாக ஒன்று கூறுவோம்; இராசராசன் முதலில் காந்தளூர்ச்சாலையில் கலம் அறுத்தான். இந்த வெற்றியே இவன் கல்வெட்டுக்களில் முதலிடம் பெற்றது. இதன் பின்னர்ச் செய்த போர் இரண்டாம் இடம்பெற்றது. இப்படியே ஒன்றன்பின் ஒன்றாக முறைப்படி குறிக்கப்பட்டன. இங்ஙனம் இப்பெரியோன் ஒழுங்கபெறக் குறித்தவையே பிற்கால அரசராலும் பின்பற்றப்பட்டன. அக் குறிப்புகளே இன்று சோழர் வரலாற்றுக்கு உறுதுணை செய்கின்றன. பட்டயம் அல்லது கல்வெட்டுக்குத் தொடக்கமாக ஒரு தொடரை அழகாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். `இஃது இவனது பட்டயம் அல்லது கல்வெட்டு என்று எளிதில் கூறிவிடத்தக்கவாறு அத் தொடக்கம் இருக்கிறது. அது திருமகள் போல என்பதாகும். இவனது வீர மகனான இராசேந்திரன் கல்வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடையவை. இங்ஙனமே பின்வந்தார் பட்டயங்களும் கல்வெட்டுக்களும் வேறுவேறு தொடக்கம் கொண்டவை. இத்தகை ஒழுங்குமுறையை அமைத்த இப்பேரரசன் அறிவாற்றல்களை என்னெனப் பாராட்டுவது!23. இராசராசன் மெய்க்கீர்த்தி வதிஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமைபூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியும் தடிகைப்பாடியும் நுளம்ப பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை யிலக்கமும் திண்டிறல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரூழியுள் எல்லா யாண்டுத் தொழுதக விளங்கும் யாண்டு செழியரைத் தேசுகொள் ஸ்ரீகோராஜகேஸரி வன்மரான ஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு இருபத்தொன்பதாவது உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர். சோழர் சீரழிவு மிக்க சிறப்புடன் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலிருந்து 12-ஆம் நூற்றாண்டு முடியத் தென்னிந்தியாவை ஆண்டுவந்த சோழர் 13-ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வலிகுன்றத் தொடங்கினர். மூன்றாம் இராசராசன் (கி.பி.1215-1246) சோழமன்னாக இருந்தபொழுது, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோணாட்டின் மீது படையெடுத்தான். உறையூரும் தஞ்சையும் நெருப்புக்கு இரையாயின; பல மாட மாளிகைகளும் கூடகோபுரங்களும் ஆடரங்குகளும் மண்டபங்களும் அழிக்கப்பட்டன. சோழ அரசன் எங்கோ ஓடி ஒளிந்தான். சோணாட்டுப் பெண்களும் பிள்ளைகளும் தவித்தனர். பாண்டியன் இடித்த இடங்களில் கழுதை ஏர்பூட்டி உழுது வெண்கடுகு விதைத்தான்; பைம்பொன் முடிபறித்துப் பாணர்க்குக் கொடுத்தான்; ஆடகப்புரிசை ஆயிரத்தளியை அடைந்து சோழவளவன் அபிடேக மண்டபத்து வீராபிடேகம் செய்துகொண்டான்; பின்னர்த் தில்லைநகரை அடைந்து பொன்னம்பலப் பெருமானைக் கண்களிப்பக் கண்டு மகிழ்ந்தான்; பின்னர்ப் பொன் அமராவதி சென்று தங்கியிருந்தான். அப்பொழுது, ஓடிஒளிந்த இராசராசன் தன் மனைவி மக்களோடு அங்குச்சென்று தன் நாட்டை அளிக்குமாறு குறையிரந்து நின்றான். பாண்டியன் அருள் கூர்ந்து அங்ஙனம் சோணாட்டை அளித்து மகிழ்ந்தனன். இக்காரணம் பற்றியே இவன் சோணாடு வழங்கி அருளிய சுந்தரபாண்டியன் எனக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்றுளன். இப்பாண்டியன் படையெடுப்பைப் பற்றி இராசராசன் கல்வெட்டுக்களில் குறிப்பில்லை. ஆனால் பாண்டியன் மெய்ப்புகழ் இதனைச் சிறந்த தமிழ் நடையில் குறித்துள்ளது. அது படித்து இன்புறத்தக்க பகுதியாகும்24. பூமருவிய திருமடந்தையும் புவிமடந்தையும் புயத்திருப்ப நாமருவிய கலைமடந்தையும் சயமடந்தையும் நலஞ்சிறப்ப -------------------------------------------- -------------------------------------------- பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப் பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக் கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர வெஞ்சின இவுளியும் வேழமும் பரப்பித் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக் காவியும் நீலமும் நின்று கவினிழப்ப வாவியும் ஆறும் அணிநீர் நலனழித்துக் கூடமும் மாமதிலும் கோபுரமும் ஆடரங்கும் மாடமும் மாளிகையும் மண்டபமும் பலஇடித்துத் தொழுதுவன் தடையா நிருபர்தம் தோகையர் அழுத கண்ணீர் ஆறு பரப்பிக் கழுதைகொண் டுழுது கவடி வித்திச் செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புகலோட்டிப் பைம்பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிப் பாடரும் சிறப்பிற் பருதி வான்தோய் ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற் சோழ வளவன் அபிஷேக மண்டபத்து வீராபி ஷேகம் செய்து புகழ்விரித்து நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி மீளும் தறுகண் மதயானை மேற்கொண்டு நீராழி வையம் முழுதும் பொதுவொழித்துக் கூராழி யும் செய்ய தோளுமே கொண்டுபோய் ஐயப் படாத அருமறைதேர் அந்தணர்வாழ் தெய்வப் புலியூர்த் திருஎல்லை யுட்புக்கு பொன்னம் பலம்பொலிய ஆடுவார் பூவையுடன் கோல மலர்மேல் அயனும் குளிர்த்துழாய் மாலும் அறியா மலர்ச்சே வடிவணங்கி வாங்குசிறை அன்னம் துயிலொழிய வண்டெழுப்பும் பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில் ஒத்துலகம் தாங்கும் உயர்மேரு வைக்கொணர்ந்து வைத்தனைய சோதி மணிமண்டபத் திருந்து சோலை மலிபழனச் சோணாடும் தானிழந்த மாலை முடியும் தரவருக என்றழைப்ப மான நிலைகுலைய வாழ்நரிக் கப்புறத்துப் போன வளவன் உரிமையொ டும்புகுந்து பெற்ற புதல்வனைநின் பேர்என்று முன்காட்டி வெற்றி அரியணைக்கீழ் வீழ்ந்து தொழுதிரப்பத் தன்னோடி முன்இகழ்ந்த தன்மையெலாம் கையகலத் தானோ தகம்பண்ணித் தண்டார் முடியுடனே விட்ட படிக்கென்றும் இதுபிடிபா டாகஎனிப் பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்கும் செங்கயல்கொள் மூன்றும் திருமுகமும் பண்டிழந்த சோழபதி என்னும் நாமமும் தொன்னகரும் மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி. ஹொய்சளரும் தமிழகமும் கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னனாக இருந்த முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தபோது கோப்பெருஞ்சிங்கன் என்ற சோழர் சிற்றரசன் மூன்றாம் இராசராசசோழனைச் சிறையிலிட்டான், அப்பொழுது மைசூர்ப் பகுதியை ஆண்ட ஹொய்சல மன்னனான வீரநரசிம்மன் என்பவன் பெரும்படையுடன் சென்று கோப்பெருஞ் சிங்கனை வென்று சோழவேந்தனைச் சிறைமீட்டான்25. இவ்வீரநரசிம்மன் செல்வாக்குக் காஞ்சி முதல் திருநெல்வேலி வரை பரவியிருந்தது என்பதைப் பல கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. விருத்தாசலம் தாலூகாவைச் சேர்ந்த திருவடத் துறைக்கோவில் திருமேனிகள் சிலவற்றினை வீரநரசிம்மன் கொண்டு சென்றான் என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது26. பூததேயநாயகன், மகாப்பி ரதானி அம்மண்ண தண்டநாயகன், கொப்பைய தண்டநாயகன் என்போர் காஞ்சியில் இருந்த படைத்தலைவர் ஆவர். இவர்கள் காஞ்சியிலுள்ள அத்திகிரி முதலிய கோவில்கட்குப் பல நிபந்தங்கள் விடுத்துள்ளனர்.27 நரசிம்மனது மற்றொரு தண்டநாயகன் வல்லயன் என்பான். திருமழபாடிக்கோவிலுக்குப் பல நிபந்தங்கள் விடுத்தான்28. நரசிம்மனது மனைவியான சோமணதேவியின் பரிவாரப் பெண்களில் ஒருத்தி திருக்கோகர்ணம் கோவிலுக்கு நிபந்தம் விடுத்தாள்29. இங்ஙனமே ஹொய்சலதண்ட நாயகரும் பிறரும் பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தனர்; அரசியலிலும் தொடர்புகொண்டிருந்தனர்30. பாண்டியப் பேரரசின் முடிவு இங்ஙனம் சோழப்பெருநாட்டை அலைக்கழித்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிக்குப்பின்னர், ஏறத்தாழக் கி.பி. 1310-இல் சடையவர்மன் வீரபாண்டியன் என்ற இரண்டு சகோதரர்கள் தம்முள் பூசலிட்டனர்; சுந்தர பாண்டியன் தோல்வியுற்றான்; தோல்வியுற்ற அவன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூரைத் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்படி அழைத்தான் என்பது கல்வெட்டால் தெரிகின்றது. முன்னால் இராசராசன் சுந்தரபாண்டிய தேவர் துலுக்கருடன் வந்த நாளிலே ஒக்கூருடையாரும் இவர் தம்பிமாரும் அனைவரும் அடியாரும் செத்துங் கெட்டுப்போய் அலைந்து ஊரும் வெள்ளத்தாலும் கலகத்தாலும் பாழா யிருக்கிற அளவிலே31 பாண்டியநாட்டில் சேரன் ஆட்சி முலீம் படையெடுப்புக்குப் பின் பாண்டியநாடு சீரழிந்தது. அவ்வமயம் சேரமன்னன் இரவிவர்மன் குலசேகரன் என்பவன் பாண்டியநாட்டின் மீது படையெடுத்தான்; போரில் வீரபாண்டியனையும் சுந்தரபாண்டியனையும் வென்று சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். அவன் கல்வெட்டுக்கள் பூந்தமல்லி, காஞ்சி, திருவரங்கம் என்னும் ஊர்களில் காணப்படுகின்றன.32 விஜயநகர ஆட்சி தென்னாட்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பின் அமைதியை உண்டாக்கிய பெருமை விஜயநகரப் பேரரசைச் சேர்ந்தது; விஜயநகர ஆட்சியை ஏற்படுத்திய முதற் பரம்பரை, சாளுவ நரசிம்மரால் ஏற்படுத்தப்பட்ட இரண்டாம் பரம்பரை, நரச நாயக்கரால் ஏற்படுத்தப்பட்ட மூன்றாம் பரம்பரை இவற்றைச் சாரும். இவ்வொவ்வொரு பரம்பரை அரசரைப் பற்றிய செய்திகளைக் கல்வெட்டுக்களைக் கொண்டு உணரலாம். விஜயநகர முதல் அரச பரம்பரையைச் சேர்ந்த வீர குமார கம்பணவுடையார் என்பவன் தென்னாட்டை ஆண்டு வந்ததாகக் கி.பி. 1364-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட அவனது காஞ்சி கயிலாச நாதர் கோவிற் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.33 விசுவநாத நாயக்கர் மதுரையில் நாயக்கர் ஆட்சியை ஏற்படுத்தியவர் விசவநாத நாயக்கர் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இச் செய்திகளை நம்பி வரலாறு எழுதியவர்களும் உண்டு. விசுவாத நாயக்கர், விஜயநகரப் பேரரசர் சார்பில் மதுரையில் கவர்னராக இருந்திருக்கலாம் என்று நினைக்க அவருடைய கல்வெட்டுக்கள் இடந்தருகின்றன. அச்சுத ராயரது ஊழியன் என்று அவர்தம் கல்வெட்டுக்களில் கூறியுள்ளனரே தவிர மதுரை மன்னராகத் தம்மைக் கூறிக்கொள்ளவில்லை.34இங்ஙனம் செவிவழிச் செய்திகள் பல கல்வெட்டுச் செய்திகளால் உறுதிப்படாமை கவனிக்கத்தக்கது. விசவநாத நாயக்கர் கி.பி. 1533 முதல் கி.பி. 1542 வரை மதுரையில் கவர்னராக இருந்தார் என்று கருதவே கல்வெட்டுக்கள் இடந்தருகின்றன. பாண்டிய நாட்டில் வாணாதிராயர் கம்பணர் ஆட்சிக்குப் பின்பும் நாயக்கர் ஆட்சி ஏற்படுவ தற்கு முன்பும் இருந்த இடைக்காலத்தில் பாண்டிய நாடு மாவலி வாணராயர் ஆட்சியில் இருந்ததாகக் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. இராமநாதபுர மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் கி.பி. 1453-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, மஹாவலி வாணதரையர் சீர்மையான மதுரை மண்டலம் என்று குறிக்கின்றது.35இவ்வாணாதிராயர்கள் தம்மை மதுராபுரி நாயகன் என்றும், பாண்டிய குலாந்தகன் என்றும் கி.பி. 1483-இல் கல்வெட்டுகளில் குறிப்பிட் டுள்ளனர்.36புதுக்கோட்டை நாட்டிலுள்ள குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் இரண்டு, பாண்டியர் தோல்வியையும், வாணாதிராயர் வெற்றியையும் (செய்யுள் நடையில்) கூறியுள்ளன. மால்விட்ட படைதுரந்து வடுகெறிந்த மகதேசன் வடிவேல் வாங்கக் கால்விட்ட கதிர்முடியே யிந்திரனைப் புடைத்தது முன் கடல்போய் வற்ற வேல்விட்ட தொருதிறலு முகிலிட்ட தனிவிலங்கும் வெற்பி லேறச் சேல்விட்ட பெருவலியு மாங்கேவிட்37 டுடைந்தான் தென்னவர்கோவே. இழைத்த படியிதுவோ வெங்கணா வென்றென் றழைத்த வழுகுரலேயால் தழைத்த குடை மன்னவர்கோன் வாணன் வடிவேலால் தோற்றுடைந்த தென்னவர்கோன் போன திசை.38 சேதுபதிகள் இராமநாதபுரச் சீமையை ஆண்டுவந்தவர் மறவர் மரபினரான சேதுபதி அவர்கள் கி.பி. 1752-இல் விஜயரகுநாத சேதுபதி காத்ததேவர் அல்லது. அரசு நிலையிட்ட விஜயரகுநாத சசிவர்ணத் தேவர் என்பவரும் பேராற்றல் வாய்ந்த சேதுபதியாக இருந்தார் என்பதைப் பட்டயங்கள் உணர்த்துகின்றன.39 சிவகங்கை எனப்பட்ட சதுர்வேதி மங்கலத்தில் உள்ள சசிவர்ண ஈசுவரன் உடையார் கோவில் இச்சேதுபதியின் மகனரால் கட்டப்பட்டது. அவர் பெயர் முத்துவடுகநாத பெரிய உடையார்த் தேவர் என்பது. இவ்விளவரசர் சேதுகாவலர் செம்பியன்நாடன், இறந்த காலமெடுத்தான், சங்கீத வித்யா வினோதன், குளந்தை நகராதிபதி ரவிகுல சேகரர், சமர கோலாகலர் என்றெல்லாம் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளார். முலிம்கள் ஆட்சி கி.பி. 14-ஆம் நூற்றாண்டிலும், கி.பி. 18, 19ஆம் நூற்றாண்டுகளிலும் தமிழகத்தில் முலிம்கள் ஆட்சி இருந்தது என்பதைப் பல கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. மாறவர்மன் வீரபாண்டியன் காலத்தில் துருக்கர் ஆட்சி இருந்தது. கோவிற் கடமைகள் தவறின. இவர் தென்னாடு போந்து துருக்கரை விரட்டி நாடு முழுவதும் செம்மையான ஆட்சி நிலவச்செய்தார். பண்டைமுறைப்படி எல்லாக்கோவில்களிலும் பூசையும் விழாவும் நடைபெறும்படி கவனிக்கப் பல அதிகாரிகளை நியமித்தார்40 என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது. அசரத் நவாபு சாகேப் பாண்டியநாட்டை ஆண்டு வருகையில் ஐரோப்பியர் படை ஒன்று, வெள்ளையர் படை ஒன்று, மதுரைக்கருகே தங்கியிருந்தபோது மதுரையிலுள்ள சொக்கநாதர் கோவிலை யும், திருப்பரங்குன்றத்திலுள்ள பழனியாண்டவர் கோவிலையும் சீர்குலைத்தனர் என்று திருப்பரங்குன்றம் கல்வெட்டு கூறுகின்றது. முடிவுரை இங்ஙனம் சங்ககாலம் முதல் வெள்ளையர்காலம்வரையில் தமிழக அரசியல் வரலாற்றை அறிவதற்குப் பல்லாயிரக்கணக்கா கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் துணைபுரிகின்றன. இவற்றை முறைப்படுத்தி ஆராய்ந்து, தமிழகத்து வரலாற்றை அவ்வப்போது வெளிப்படுத்திவந்த அரசாங்கக் கல்வெட்டு அறிஞர்களுக்கும், அவ்வப்போது வரலாற்று நூல்களை எழுதி வெளியிட்டுவந்த வரலாற்றுப் பேராசிரியர்களுக்கும் தமிழ் மக்கள் நன்றி உரியதாகும். II. கல்வெட்டுக்களும் சமய வரலாறும் பிராமிக் கல்வெட்டுக்கள் அசோகன் கல்வெட்டுக்களுக்குப் பிறகு ஏறத்தாழ அவ்வடிவத்திலேயே அமைந்த பிராமிக் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டு மலைக்குகைகள் பலவற்றில் காணப்படுகின்றன. அவை காணப்படும் குகைகளில் சமணச் சிற்பங்களும் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. சில குகைகளில் பௌத்தர் உருவச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மதுரை மாவட்டத்திலுள்ள யானை மலைக் குகையிலும், அழகர் மலைக்குகையிலும், திருப்பரங்குன்றம் குகையிலும், சமணமலைக்குகையிலும் பிராமிக் கல்வெட்டுக்களும், சமணத் தீர்த்தங்கரர் உருவச் சிற்பங்களும் உள்ளன. இதே மாவட்டத்திலுள்ள அரிட்டாபட்டி என்னும் சிற்றூர்க்கு அருகில் உள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக் கப்பட்டுள்ளன. கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம் பிரிய திஸன் என்னும் மன்னனுக்கு அம்மானாகிய அரிட்டர் என்னும் பௌத்த துறவி அசோகனது மகனான மகேந்திரனுடன் பாண்டி நாட்டில் பௌத்த சமயத்தைப் பரவச் செய்தார்; அந்த அரிட்டர் என்பவர் வாழ்ந்த மலைக்குகைக்கு அருகில் இருந்த ஊருக்கு அவர் பெயரே வழங்க லாயிற்று. அதுவே இந்த அரிட்டா பட்டி என்று ஆராய்ச்சி யாளர் கருதுகின்றனர். இக் கல்வெட்டுக்களைக் கொண்டு சமணத்துறவிகள் சந்திரகுப்த மௌரியன் காலத்திலேயே தென்னாடு போந்தனர் என்னும் சமணர் கூற்றும், அசோகன் காலத்திலேயே பௌத்த துறவிகள் தமிழகம் போந்து சமயப் பிரசாரம் செய்தனர் என்னும் அசோகனது கல்வெட்டுச் செய்தியும் உறுதிப்படுதலைக் காணலாம். சங்ககாலக் கோயில்கள் இன்றுள்ள சங்க நூல்களின் காலம் ஏறத்தாழக் கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை என்று சொல்லலாம். இப்பரந்துபட்ட காலத்தில் தமிழகத்தில் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் முதலிய சமயங்களுக்குரிய கோவில்கள் இருந்தன என்பதைச் சங்க நூல்களால் அறியலாம். அவை சுற்று மதிலை உடையவை; உயர்ந்த வாயில்களை உடையவை; அவ்வாயில்கள் மீது உயர்ந்த மண்ணீடுகள் (கோபுரங்கள்) பெற்றவை; அம் மண்ணீடுகள் மீது வண்ணம் தீட்டப்பெற்ற வடிவங்கள் அமைந்திருந்தன என்பன போன்ற செய்திகள் மணிமேகலை, மதுரைக் காஞ்சி முதலிய நூல்களால் அறியப்படும். இக்கோவில்களனைத்தும் செங்கற் சுவர்களாலும், மட்சுவர்களாலும் அமைந்தன. இவற்றிற் சில ஓடு வேயப் பெற்றவை; சில சார்ந்து வேயப் பெற்றவை; மற்றும் சில உலோகத் தகடுகள் வேயப் பெற்றவை. கி.பி. 2ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் செய்யப்பெற்ற மணிமேகலை என்னும் காவியத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம், ஆசீவகம், உலோகாயதம், வைதிகம் முதலிய பல சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்பது குறிக்கப்பட்டுள்ளது. இச்சமயவாதிகள் தத்தம் சமயக் கொள்கை களைத் தமிழகம் முழுவதும் பேசிவந்தனர். மக்கள் அவரவர்க்கு விருப்பமான சமயத்தைப் பின்பற்றி வந்தனர். பல்லவர் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த விஜய கந்தவர்மன் என்ற பல்லவன் காலத்தில் புத்தவர்மன் மனைவியான சாருதேவி என்பவள் நாராயணன் கோவிலுக்கு நில தானம் செய்தனள் என்று குணபதேயப்பட்டயம் கூறுகின்றது.1 திருக் கழுக்குன்றத்துச் சிவன் கோவிலுள்ள கடவுளுக்குக் கந்தசிஷ்யன் என்ற பல்லவன் நிலம் விட்டதாகவும், அதனை முதலாம் நரசிம்மவர்மன் புதுப்பித்தாகவும் ஆதித்த சோழன் கல்வெட்டு கூறுகின்றது.2 கோச்செங்கணான் திருவக் கரையிலுள்ள சிவன் கோவிலில் பெருமாளுக்குச் சிறு கோவில் ஒன்று கட்டியிருந்தான். அதிராஜேந்திரன் அதனைக் கல்லால் புதுப்பித்தான்.3 ஆந்திர நாட்டிலுள்ள கந்து தூரத்தில் இருந்த பெருமாள் கோவிலுக்கு இளவரசன் விஷ்ணுகோப பல்லவன் நிலதானம் செய்தான் என்று உருவப் பள்ளிப்பட்டயம் கூறுகின்றது.4 மகேந்திரவர்மன் இவன் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்ந்த மன்னன். இவன் மலைச்சரிவுகளைக் கோவில்களாகக் குடைந்த முதலரசன். இவை குடைவரைக் கோவில்கள் எனப்படும். இக்கோவில் பல்லவபுரம் (பல்லாவரம்), வல்லம், மாமண்டூர், மகேந்திரவாடி, தளவானூர், சீயமங்கலம், மண்டபப்பட்டு, திருச்சி மலைக்கோவில், சித்தன்னவாசல், குடுமியான்மலை முதலிய இடங்களில் காணப்படுகின்றன. ஒவ்வொன்றிலும் இவன் விருதுப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் குணபரன் அவணி பாஜனன், லளிதாங்குரன், சத்திய சந்தன், புருஷோத்தமன், நரேந்திரன், விசித்திர சித்தன், சேத்தகாரி, போத்தரையன், சத்துரு மல்லன், விக்கிரமன், கலகப் பிரியன், மத்தவிலாசன், சங்கீரண சாதி என்பன குறிக்கப்பெற்றுள்ளன. இவனது மண்டபப்பட்டு கல்வெட்டு செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் என்பன இல்லாமல் மும்மூர்த்திகட்கு விசித்திர சித்தன் அமைத்த கோவில் இது என்று கூறுகிறது. இதனால் இம்மன்னன் காலத்திற்கு முன்னால் கற்கோவில்கள் தமிழகத்தில் இல்லை யென்பதும், இருந்த கோவில்கள் செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் இவற்றால் ஆனவை என்பதும் தெளிவாகின்றன. இவற்றோடு மகேந்திரனுக்கு முன்னரே தமிழ் மக்கள் கோவில் கட்டத் தெரிந்திருந்தனர் என்பதும், அவை அழியத்தக்க மரம் முதலியவற்றால் கட்டப்பெற்றவை என்பதும் புலனாகின்றன. இப் பேரரசன் குடைவரைக் கோவில்களுள் மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்கவரம், நாமக்கல் என்னும் இடங்களில் உள்ளவை பெருமாள் கோவில்களாகும். சீயமங்கலம், பல்லாவரம், தளவானூர், வல்லம், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் குடையப்பெற்றவை சிவன் கோவில்களாகும். மண்டபப்பட்டில் குடையப் பெற்றது மும்மூர்த்தி கோவிலாகும். சித்தன்னவாசலில் குடையப் பெற்றவை சமணர் கோவில்களாகும். எனவே, இவன் காலத்தில் சமணரும், சைவரும், வைணவரும் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது வெளியாகும். வல்லம் குகைக் கோவிலில் உள்ள தமிழ்க் கல்வெட்டு கீழ்வருவது: பகாப் பிடுகு லளிதாங்குரன் சத்துருமல்லன் குணபரன் மயேந்திரப் போத்தரசன் அடியான் வயந்தப்பிரி அரசர் மகன் கந்தசேனன் செய்வித்த தேவகுலம் இங்ஙனம் காணப்படும் கல்வெட்டுக்களைக் கொண்டே இவனது சமயத்தையும், திருப்பணியையும் அறிய இடமுண்டாகிறது. திருச்சிராப்பள்ளி மலைக்கோவில் கல்வெட்டுக்கள் இரண்டு, அவற்றுள் ஒன்று ஆற்றை விரும்பும் அரன், தோட்டங்களையும், விரும்பத்தக்க குணங்களையும் உடைய காவிரியாற்றைக்கண்டு அவள் மீது காதல் கொள்வானோ என்று மலையரையன் மகள் ஐயமுற்று தான் தன் பிறப்பகத்தை விட்டு இம்மலைமீது நின்று `இவ் யாறு பல்லவனுடையது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள், என்று கூறுகிறது. மற்றொரு கல்வெட்டு குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவனாதலின், இதற்கு எதிர்முறையில் இருந்து திரும்பிவந்த அவனது அறிவு இக்கோவிலில் அவன் வைத்துப் பூசித்த லிங்கத்தினால் உலகமெல்லாம் பரவுவதாக என்று செப்புகிறது. இவனது சீய மங்கலக் கல்வெட்டு, அவனி பாஜன பல்லவேசுரம் என்னும் இக்கோவிலை லலிதாங்குர மன்னன் தன்னுள்ளத்தைப் பேழையாகவும், நன்மையை அதனுள் வைக்கும் நகையாகவும் கொண்டு அமைத்தான் என்று குறிக்கின்றது. இவனது மகேந்திரவாடிக் கல்வெட்டு நல்லார் பாராட்டுவதும் மக்கட்கு இன்பம் பயப்பமும் ஆகிய அழகிய மகேந்திர விஷ்ணுக்ருஹம் என்னும் முராரியின் பெருங்கற் கோயிலை மகேந்திரனது பேரூரில் மகேந்திர தடாகக் கரையில் குணபரன் அமைத்தான் என்று கூறுகின்றது. இவனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்றான குணபரன் என்பது குணதரன் என்று சேக்கிழாரால் குறிக்கப்பட்டது. இவ்விருதுப் பெயரின் துணையைக் கொண்டே அப்பரைத் துன்புறுத்தியவனும், முதலில் சமணனாக இருந்து பின் சைவனானவனும் இம்முதலாம் மகேந்திரவர்மனே என்று ஆராய்ச்சியாளர் முடிவு கட்டினர். ஏனவே, இவ்விருதுப் பெயரைக் கொண்ட கல்வெட்டு அப்பரது காலத்தைத் துதியத்தக்க சான்றாக அமைந்தது என்பது பொருந்தும். நரசிம்மவர்மன் இன்று மகாபலிபுரம் என்று வழங்கப்பெறும் கடற்றுறைப்பட்டினம் உண்மையில் மகாமல்லபுரம் என்ற பெயரைக்கொண்டதாகும். மகாமல்ல புரத்திலுள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் என்று கூறப்படும் ஒற்றைக்கற் கோவில்களை அமைக்கத் தொடங்கியவன் மேற்சொல்லப்பட்ட மகேந்திரவர்மன் மகனான நரசிம்மவர்மனாவான். இவனுடைய விருதுப் பெயர்கள் மேற்சொன்ன ஒற்றைக் கற்கோவில்களில் பொறிக்கப்பெற்றுள்ளன. அவற்றுள் மகாமல்லன், ஸ்ரீபரன், ஸ்ரீமேகன், ஸ்ரீநிதி என்பன குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் காணப்படும் மகாமல்லன் என்ற விருதுப் பெயரின் துணையைக்கொண்டும், அவ்வூருக்கு இன்று வழங்கும் பெயரைக்கொண்டும் அதன் மரூஉ மொழியாக ஆழ்வார்கள் பயன்படுத்திய மல்லை என்னும் பெயரைக்கொண்டும் ஆராய்ச்சியாளர் இக் கடற்றுறைப் பட்டினம் மாமல்லனால் விரிவாக்கப்பட்டு பெயரிடப்பட்டதாயிருத்தல் வேண்டும். மகாமல்லபுரம் என்ற பெயரே மகாபலிபுரம் என்று திரிந்து வழங்குகிறது. மகாமல்லபுரம் என்பது மாமல்லை என்றும் மல்லை என்றும் மரூவி வழங்கலாயிற்று என்று கூறலாயினர். மாமல்லபுரத்திலுள்ள ஒற்றைக் கற்கோவில்கள் நான்கும் சிவன் கோவில்கள் என்று அங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. முதலாம் பரமேசுரவர்மன் மாமல்லபுரத்திலுள்ள கணேசர் கோவில், இராமானுசர் மண்டபம் என்னும் இரண்டும் இப் பல்லவனால் அமைக்கப்பட்டவை. இவை முதலிற் சிவன் கோவில்களாக இருந்தவை என்பதை இவற்றின் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. கணேசர் கோவிலில் வெட்டுவித்த வடமொழிச் சுலோகங்கள் படித்து இன்புறத்தக்கவை. அவற்றுட் சில கீழே காண்க. 1. காமனை அழித்த சிவன், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூத்தொழிலுக்கும் காரணன்; இவன், அத்யந்த காமனுக்கு வேண்டியதெல்லாம் கொடுப்பானாக. 2.கால் பெருவிரலால் கயிலாயத்தையும் தசானனையும் பாதாளம் வரை அழுத்திய அஜனை (சிவனை) ஸ்ரீ நிதி தலைமேல் வைத்துள்ளான். (பரமேசுவரன் சிவனைத் தலையில் தாங்கியுள்ளான்). 3.பத்தி நிறைந்துள்ள மனத்தில் பவனை (சிவனை)யும், கைம்மீது அழகிய நகைபோல நிலத்தையும் தாங்கியுள்ள ஸ்ரீபரன் நீண்டகாலம் வெற்றியுறுவானாக. 4. பகைவர் நாட்டை வென்று ரணஜயன் என்று பெயர்பெற்ற அத்யந்த காமராசன் இந்தச் சம்பு (சிவன்) கிருகத்தைக் கட்டுவித்தான். 5. அத்யந்த காமன் தன் பகைவர் செருக்கை அழித்தவன். ஸ்ரீ நிதி, காமராசன், ஹராராதனத்தில் ஆஸக்தி உடையவன்; சிவனுடைய அபிடேக நீரும் மணிகளால் ஆன தாமரைகளும் நிறைந்த மடுப்போலப் பரந்த தனது தலைமீது சங்கரன் எப்போதும் குடிகொண்டிருக்கப் பெற்றுள்ளான். 6. அரசன் சங்கரனை அடைய விரும்பி இந்தப்பெரிய சிவமந்திரத்தை (கோவிலை)த் தன் குடிகளின் அவா முற்றுப்பெறக் கட்டுவித்தான். 7. தீயவழியில் நடவாமல் காக்கும் சிவன் எவனது உள்ளத்தில் இரானோ, அவனுக்கு ஆறுமுறை திக் (சாபம்) அத்யந்த காம பல்லவேவரக்ருஹம்.5 இவற்றால், பரமேசுவர வர்மனுடைய வீரமும் சிவ பக்தியும் நன்கு புலனாகும்; தருமராசர் மண்டபம், கணேசர் கோவில், இராமாநுசர் மண்டபம் என்பன யாவும் சிவன் கோவில்களே என்பது இவ்விடங்களில் உள்ள கல்வெட்டுக் களால் நன்கறியலாம். f©kÂfis¡ bfh©L átȧf tothf mik¡f¥g£l Koia¤jiyÆš jǤâUªj ï¥nguurdJ átg¡âia v‹bd‹gJ!6 இராசசிம்மன் (கி.பி. 685-705) கருங்கற்களைச் செங்கற்களைப்போல வைத்து அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கற்கோவிலைத் தமிழகத்தில் முதன் முதல் எடுப்பித்தவன் இராசசிம்ம பல்லவனாவன். இவன் கட்டியதாகக் கூறப்படுவது மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோவிலாகும். அதன் பெரிய அளவு காஞ்சியிலுள்ள கயிலாச நாதர் கோவிலாகும். அதிலுள்ள கல்வெட்டுக்கள் அதனைப் பெரிய கற்றளி என்று கூறுகின்றன. அக்கோவிலில் மட்டும் இவனுடைய விருதுப் பெயர்களாக ஏறத்தாழ 250 காணப்படுகின்றன. அவற்றுள் ரிஷபலாஞ்சன், ஸ்ரீ சங்கர பக்தன், ஸ்ரீ ஆகமப்பிரியன், சிவசூடாமணி என்பன இவனது சைவசமயப்பற்றை நன்கு விளக்குவனவாகும். இவன் சைவ சித்தாந்தத்தில் பேரரறிவு படைத்தவன் என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது. ரிஷபலாஞ்சன் என்பதால் இவன் நந்தி முத்திரையை அரச இலச்சினையாகக் கொண்டவன் என்பதும், ஸ்ரீ சங்கர பக்தன் என்பதால் சிறந்த சிவபக்தன் என்பதும் ஆகமப்பிரியன் என்பதால், ஆகமங்களை நன்கு கற்றவன் என்பதும் ஆகம விதிப்படிக் கோவில் அமைத்தவன்; பூசைகள் நடைபெறச் செய்தவன் என்பதும் தெளிவாகின்றன. சிவ சூடாமணி என்பதால், இவன் தன் தந்தையைப் போலவே கண்மணியால் செய்யப்பெற்ற இலிங்கத்தையே மகுடமாகத் தாங்கி இருந்தவன் என்பது தெளிவாகின்றது. இக்கலியுகத்தில் இவன் வானொலி கெட்டது வியப்பே; இவன் சைவ சித்தாந்தப்படி நடப்பவன் என்று மற்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது.7 இவன் வானொலி கேட்டதாகக் கூறப்படும் கல்வெட்டுச் செய்தி பூசலார் நாயனார் வரலாற்றைப்பற்றியதாகும் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இவன் சைவசித்தாந்தப்படி நடப்பவன் என்று கல்வெட்டுக் கூறுதலைக் காண்க; இவன் காலத்திலேயே சைவசிந்தாந்த நூல்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகின்றது. இப்பெருமகன் இப்பெரிய கற்றளிக்குச் செய்திருக்கும் அறங்கள் பலவாகும்; அளித்த செல்வம் மிகுதியாகும். முதலாம் விக்கிரமாதித்தன் காஞ்சி கைலாசநாதர் கோவில் செல்வத்தைக் கண்டு வியந்து அதனைத் தான் எடுத்துக் கொள்ளாமல் அக்கோவிலுக்கே விட்டுவிட்டான் என்று அவனது கன்னடக் கல்வெட்டு8 கூறுதல் மேற்கூறிய உண்மைக்குத் தக்க சான்றாகும். இவன் மனைவி ரங்கபதாகை கயிலாசநாதர் கோவிலுள் ஒரு சிறு கோவிலைக் கட்டினாள் என்று ஒரு கல்வெட்டு குறிக்கின்றது. இவன் மகனான மகேந்திரனும் அப்பெரிய கற்றளியுள்ள ஒரு சிவன் கோவிலை அமைத்ததாக மற்றொரு கல்வெட்டு கூறுகின்றது. இப்பெரிய கற்றளியில் பிற்காலச் சோழருடைய கல்வெட்டுக்கள் பலவாகக் காண்கின்றன. சோழ மன்னர் காலத்தில் இப்பெருங்கோவில் மாடவீதிகள், வெளிச் சுற்று, மடவளாகம் முதலிய வற்றையும், மிகப் பெருஞ் செல்வத்தையும் பெற்றிருந்தது என்பதை இக் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. சோழர் காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் பெருமாள், மாடெலாஞ் சிவனுக்காகப் பெருஞ்செல்வம் விடுத்தல் செய்தான், என்று கூறினதை இக்கல்வெட்டுக்கள் மெய்ப்பிக்கின்றன. இப்பெருங் கோவில் உட்புறச்சுற்று முழுவதும் சிறுசிறு கோவில்களாகவே அமைக்கப்பட்டுள்ளது. அவற்றுள், அம்மனைக் குறிக்கும் பலதிறப்பட்ட சிற்பங்கள் உள்ளன. பாற்கடல் கடைந்த வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு, மார்க்கண்டனுக்காக எமனை உதைத்த வரலாறு, பரமன் பார்த்திபன் போர், சிவனார் நால்வர்க்கும் அறம் உரைத்த காட்சி, இராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சி, திருமால் சிவனை வழிபட்டு ஆழிப்பெற்ற வரலாறு, பிரமன் - நாமகள் திருமணம், திருமால் திருமகள்; அம்மையப்பர் திருமணம் முதலிய புராண இதிகாசச் செய்திகள் பலவும் சிற்பங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இரண்டாம் நந்தி வர்மன்: (கி.பி. 710-775) இவ்வரசன் சிறந்த வைணவ பக்தன்; திருமங்கையாழ்வார் காலத்தவன். இவனை அரிசணபரன் என்று காசக்குடிப்பட்டயமும்; முகுந்தன் திருவடிகளைத் தவிர வேறு ஒன்றுக்கும் இவன் தலை வணங்கவில்லை என்று தண்டன் தோட்டப் பட்டயமும் கூறுகின்றன. கூரத்திலுள்ள கேசவப் பெருமாள் கோவில் இவன் காலத்தில் கட்டப்பட்டது. இவன் பல்வேறு கோவில்கட்குத் தானங்கள் செய்துள்ளான். காஞ்சியிலுள்ள முத்தீவரர் கோவில் இவன் காலத்தில் மிக்க சிறப்படைந்தது. அக்கோவில் திருக்குறிப்புத் தொண்டநாயனார் வழிபட்ட கோவிலாகும் என்பது கூறப்படுகின்றது. அதற்கேற்ப அவரது உருவச்சிலை அக்கோவிலில் இருத்தலையும் இன்றும் காணலாம். மேலும், அக்கோவில் ஏகாலியர் மேற்பார்வையிற்றான் இன்று வரையில் இருந்து வருகின்றது. அதனைக் கற்றளியாகக் கட்டியவன் தம் மகாதேவி என்ற பல்லவ அரசி. அக்காலத்தில் அக்கோவில் 49 தேவரடியார்கள் இசை, நடனக் கலைகளை வளர்த்து வந்தனர் என்று அக்கோவிற் கல்வெட்டு9 கூறுகின்றது. இந்நந்திவர்மன் காலத்தில் தென்னார்க்காட்டுக் கோட்டத்து மணலூர்ப் பேட்டை மகாதேவர்க்குச் சித்த வடவனார் மகள் (திருக்கோவிலூர் அரசன் மகள்) சிற்றூர் ஒன்றைத் தேவ தானமாக இட்டாள்10. இந்நந்திவர்மன் 108 பிராமணர்க்குப் பிரம்ம தேயமாக ஒரு சிற்றூரைவிட்டான். இச்செய்தியைக் குறிப்பதே உதயேந்திரப்பட்டயம்.11 இவ்வேந்தன் மறையவர்க்குப் பல கிராமங்களைத் தானமாக விட்டான். இச்செய்திகளைக் கூறுவனவே காசக் குடிப்பட்டயம், பட்டத்தாள் மங்கலப் பட்டயம், கண்டன் தோட்டப் பட்டயம் என்பன. இவன் காலத்தில் ஆர்க்காடு நகருக்கு அருகிலுள்ள பஞ்சபாண்டவர் மலையில் ஒரு குகை சமணர்க்காக அமைக்கப் பட்டது. அங்குள்ள கல்வெட்டில் நந்தி போத்தரையர்க்கு ஐந்தாம் யாண்டு நாகர் நந்தி குரவர் வழிபடப் பொன் இயக்கியார்க்குப் படிமம் எடுக்கப்பட்டது. என்னும் செய்தி காணப்படுகின்றது. இதனால் இவ்வேந்தன் காலத்தில் சமணர் இருந்தமை தெளிவாகும். இரண்டாம் நந்திவர்மன் தரும சாத்திரப்படி நடவாத மக்களை அழித்து, அவர் தம் நிலத்தைக் கைப்பற்றி வரியிலியாக மறையவர்க்கு அளித்தான் என்பது உதயேந்திரப்பட்டயச் செய்தி. இதனை ஆராய்ந்த அறிஞர் தாம போக் (Thomas Foulkes), இந்த நிலத்திற்குரியர் சமணர். அவர்களை அழித்து, இந்நிலத்தை மறையவர்க்குக் கொடுத்தமை பல்லவ மல்லன் வரலாற்றில் ஒரு களங்கத்தை உண்டு பண்ணிவிட்டது. ஆயினும், இச்செயல் அக்கால நிலையை ஒட்டியதாகும்12 என்று கூறியிருத்தல் கவனிக்கத்தகும். இதனால் வைணவனான பல்லவ மல்லன், தன் முன்னோர் சமணர்க்கு விட்டிருந்த நிலத்தைக் கவர்ந்து, உரிமையாக்கினான் என்பது தெளிவாதல் காண்க. இப்பேரரசன் பட்டம் பெற்றதையும் பல்லவர் வரலாற்றையும் காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிலுள்ள சிற்பங்கள் தெளிவுபடுத்துகின்றன. பரமேசுவர விண்ணகரம் எனப் பெயர் பெற்ற அக்கோவிலில் உள்ள சிற்பங்களுள் ஒன்று இப்பல்லவ மல்லனது சமயக் கொடுமையைக் குறிக்கின்றது. அரசன் அரியணையில் அமர்ந்துள்ளான். அவனுக்குப் பின் ஒருத்தி கவரி வீசுகிறாள். அரசற்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவேற்றப்படுகின்றனர். இச் சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலைகொண்ட கோவிலையும் அதன் வலப்புறம் வைகுந்தப் பெருமாள் கோவில் போன்ற கோவிலையும் குறிக்கும் சிற்பங்கள் காண்கின்றன. ஆழ்வார்சிலை முதல் மூன்று ஆழ்வாருள் ஒருவரைக் குறிப்பதாகலாம். அவர் அக்காலத்திற் பூசிக்கப்பட்டனர் போலும்! சமணர், புத்தர் போன்ற புறச்சமயத்த வரை அழித்து வைணவம் நிலைநாட்ட முயன்றதைத் தான் அச்சிற்பங்கள் உணர்த்துகின்றன. இஃது அக்காலத்தை ஒட்டிய செயல்போலும்! கழுவேற்றப் பட்டவர் யாவராயினும் ஆகுக; இச்சிற்பங்களால் பல்லவமல்லன் நடத்தை இன்னது என்பது நன்கு புலனாகிறது.13 வைணவர், பௌத்தர்க்கு அல்லது சமணர்க்கு இழைத்த இக்கொடுமைகளை நோக்க, சம்பந்தர் காலத்தில் சமணர் கழுவேற்றப்பட்டனர் என்று பெரிய புராணம் கூறுதலோ, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுள்ள சிற்பங்கள் இதனை உணர்த்தலோ உண்மைக்கு மாறானது என்று கூறுதல் இயலாமை காண்க. மூன்றாம் நந்திவர்மன்: (கி.பி. 825-850) இரண்டாம் நந்திவர்மன் பேரனான இந்நந்திவர்மன் சிறந்த சிவபக்தன். நந்திக் கலம்பகம் என்னும் தமிழ் நூலுக்கு உரியவன் இவனே. பாரத வெண்பா பாடிய பெருந்தேவனார் இவன் காலத்தவர். கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன், என்று சுந்தரரால் ஏத்தெடுக்கப் பெற்றவன் இப்பெருமகனே ஆவன். இவனைத் `தமிழ்ப் பெரும்புலவன் என்றும், `புலவர் போற்றும் புரவலன் என்றும் நந்திகலம்பகம் பாராட்டுகின்றது. இவன் பொன்னேரிக்கு அடுத்த திருக்காட்டுப்பள்ளியில் ஒரு சிவன் கோவிலைக் கட்டி, ஒரு சிற்றூரைத் தேவதானமாக விட்டான். இதனைக் குறிக்க எழுந்ததே வேலூர் பாளையப்பட்டயம். இவன் திருநேகசுவரத்தை தன் பெயரால் குமார மார்த்தாண்டபுரம் என்று அழைத்துத் தானமாக விடுத்தான். திருவல்லம் சிவபெருமானுக்குப் பல அறங்கள் செய்துள்ளான். இவன் திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த திருக்கற்குடி என்னும் இடத்தில் உள்ள நிலத்தை மறையவர்க்கு அளித்தான்; திருவிடை மருதூரில் கோவில் திருப்பணி புரிந்தான். இவன் காலத்தில் திண்டிவனம் கூற்றத்தில் `திகைத்திறலார் என்றவர் பெருமாளுக்கு ஒரு கோயில் கட்டினார். நந்திவர்மன் மனைவியான மாறம் பாவையார் தஞ்சையை அடுத்த நியமம் என்னும் சிற்றூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சித்திரை நாளில் திருவமுது செய்தருள, நெய், பால், தயிர் ஐந்து நாழியும், அரிசி பதக்கும் வாங்க ஐந்து கழஞ்சு பொன் அளித்தாள். மேலும் இவ்வம்மை செய்துள்ள திருப்பணிகள் பல. இவள் கணவனான கழற்சிங்கன் காவேரி பாக்கத்துக்கு `அவனி நாராயணச் சதுர்வேதி மங்கலம் என்று தன் பெயரிட்டு அதனை பிரமதேயமாக அளித்தான். இங்ஙனம் மூன்றாம் நந்திவர்மன் செய்த தேவதானங்கள் பல; விடுத்த பிரமதேயங்கள் பல; செய்த கோவில் திருப்பணிகளும் பல. இவனுடைய சிற்றரசரும் பிறரும் செய்த அறப்பணிகள் பல, குன்றாண்டார் கோவில் (புதுக்கோட்டை) திரு ஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க வழுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான்.14 நந்திவர்மன் பொன்னேரிக்கு அடுத்த திருக்காட்டுப்பள்ளியிலுள்ள சிவன் கோவிலுக்கு அவ்வூரையே தேவதானமாக விட்டான்.15 ஒருவன் திரு நெய்த்தானம் சிவன் கோவிலில் நந்தா விளக்குக்காகப் பொன் அளித்தான்.16 ஒருவன் செந்தலை சுந்தரேசுவரர் கோவிலுக்கு நிலமளித்தான்.17 திருவல்லம் கோவிலுக்கு மூன்று சிற்றூர்கள் தேவதானமாக விடப்பட்டன. அங்கு திருப்பதிகம் ஓதுவார் உள்ளிட்ட பல பணி செய்வார்க்கு 2000 காடி நெல்லும், 20 கழஞ்சு பொன்னும் தரப்பட்டன.18 ஒருவன் திருப்பராய்ததுறையில் உள்ள கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் தந்ததாகக் கல்வெட்டுக் கூறுகின்றது.19 ஒருவன் குடி மல்லம் பரசுராமேசுவரர்க்குத் திருநந்தா விளக்கு கட்கும், நெய்க்குமாக நிலமளித்தான்.20 சிவனது திரு அடையாளத்தை நெற்றியிற் கொண்ட (திருநீறு அணிந்த) நந்திவர்மன் கைகளைக் குவித்து, எனக்குப்பின் வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பாராக என்று நந்திவர்மன் வேண்டுவதை வேலூர் பாளையப் பட்டயச் செய்தி கூறுகின்றது. இத்தகைய சிறந்த சிவபக்தனுக்குச் சுந்தரர் வணக்கம் செலுத்தியதில் வியப்பில்லையன்றோ? இப்பெருமகன் காலத்தில்தான் முதன் முதல் திருப்பதிகம் சிவன் கோவிலில் ஓதப்பட்டது என்பதைக் கல்வெட்டினால் அறிகின்றோம். நிருபதுங்க வர்மன்: (கி.பி. 850-882) இவன் மூன்றாம் நந்திவர்மன் மகன். இவன் காலத்தில் கோவில் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற்றன. இவன் மனைவியான காடவன் மாதேவி 108 கழஞ்சுப் பொன்னைத் திருவாலங்காட்டுக் கோவிலுக்கு அளித்தாள். நந்தி நிறைமதி என்பவள் கூரம்சிவன் கோவிலுக்குத் திருவமுதுக்காக 11 கழஞ்சுப் பொன் கொடுத்தாள். திருக்கோவலூர் வீரட்டானேசுவரர் கோவில், திருச்சன்னம் பூண்டி, திருக்கண்டியூர், திருத்தவத்துறை முதலிய கோவில்களுக்கு நிவந்தங்கள் விடப்பட்டன.21 இவ்வாறே திருமுக்கூடல் வெங்கடேசப் பெருமாள் கோவில், காவேரிப்பாக்கம் வரதராஜப் பெருமாள் கோவில் இவற்றிற்குப் பொதுமக்களால் பொன் அளிக்கப்பட்டது.22 இவன் மகனான அபராஜிதன் காலத்தில் நடைபெற்ற திருப்பணிகள் பலவாகும். அபராஜிதன் மனைவியான மாதேவியடிகள் திருவொற்றியூரிலுள்ள சிவன் கோவிலில் விளக்குகள் வைக்க 30 கழஞ்சுப்பொன் அளித்தாள். திருத்தணிகையிலுள்ள சிவன் கோவில் இவன் காலத்தில் நம்பியப்பி என்பவனால் கட்டப்பட்டது. அச்செயலைப் பாராட்டி, அபராஜிதன் ஒரு வெண்பாப் பாடினான். இவ்வெண்பா அச்சிவன் கோவிலில் காணப்படுகின்றது. அதனைக் கீழே காண்க. வதிஸ்ரீ : திருந்து திருத்தணியற் செஞ்சடையீ சற்குக் கருங் கல்லாற் கற்றளியா நிற்க – விரும்பியே நற்கலைக ளெல்லாம் நவின்ற றசீர் நம்பியப்பி பொற்பமையச் செய்தான் புரிந்து இது பெருமான் அடிகள் தாம் பாடி அருளித்து23 திருவொற்றியூர், மாங்காடு, சத்தியவேடு என்னும் இடங்களில் உள்ள கோவில்கள் அபராஜிதன் காலத்தில் சிறப்புற்றன. பலர் இக்கோவிலுக்குத் தானஞ் செய்தனர்.24 தளிப் பரிவாரம் பல்லவர் காலத்தில் கோவில் வேலைகளில் ஈடுபட்ட அனைவரும் தளிப்பரிவாரம் என்னும் தொகுதிப் பெயரால் குறிப்பிடப்பட்டனர்.25 கோவிலின் சிறப்புக்கும், வருவாய்க்கும், தக்கவாறு பரிவாரம் சிறுத்தும் பெருத்தும் இருந்தது. அப்பர் காலத்து மகேந்திரவர்மன் ஆதரவு பெற்றது சீராளாவில் (Cezarla) உள்ள கபோதீசுவரர் கோவில். அதனை அவ்வேந்தன் காலத்தில் மேற்பார்வையிட 12பேர் இருந்தனர்.26 எனின், அக்கோவில் தளிப்பரிவாரம் பெரியது என்பது புலப்படுகிறதன்றோ? 2. முதலாம் பரமேசுவர வர்மன் கட்டிய கூரம் கோவிலில் (1) இரண்டு வேதியர் பூசையைக் கவனித்தனர். (2) பாரதம் கூற மண்டபத்தைத் தூய்மை செய்து தினந்தோறும் அங்கு விளக்கேற்றி வைக்க ஒருவன் இருந்தான். (3) பாரதம் படித்து விளக்குபவன் ஒருவன் இருந்தான்.27 3. இரண்டாம் நந்தி வர்மன் காலத்து முந்தீச்சுவரர் கோவிலில் (1) மூன்று மறையவர் பூசையைக் கவனித்தனர்; (2) இருவர் தட்டளி கொட்டனர்; (3) 44 தேவரடியார் இருந்தனர்; (4) இத்தேவரடியார்க்கு உணவளித்த தவசிகள் இருந்தனர்; (5) கோவிலை விளக்கும் தவசிகள் 12 பேர் இருந்தனர்; (6) இவர் அனைவரையும் கவனித்துக் கோவில் ஆட்சி நடத்த தளி ஆழ்வார் இருந்தனர்.28 4. (1) மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் திருவல்லம் கோவிலில் பூசை செய்யச் சில மறையோர்கள் இருந்தனர்; (2) ஸ்ரீ பலி கொட்டுவார் இருந்தனர்; (3) திருப்பள்ளித்தாமம் பறிக்கார் இருந்தனர்; (4) திருப்பதிகம் பாடுவார் இருந்தனர்; வேறு பல பணி செய்வார் இருந்தனர்.29 5. மாறம்பாவையரது நியமம் கல்வெட்டில், தளிப்பணி செய்யும் மாணிகள் என்பது காண்கின்றது.30 இவர்கள் கோவிலைச் சார்ந்த மடத்தில் வாசித்துக் கொண்டு கோவிற்பணி செய்துவந்த மாணவராகலாம். பல்லவர் ஆட்சியில் மடங்கள் இருந்தன என்பதற்குக் காஞ்சித் திருமேற்றளிக் கல்வெட்டும், காவேரிப் அபாக்கம் கல்வெட்டும் சான்றாதல் காணலாம். காவேரிப் பாக்கம் கல்வெட்டில் மாடத்துச் சத்தப் பெருமக்களிடம்31 விளக்குக்கு எண்ணெய் வாங்கப் பொன் தானம் செய்யப்பட்டது என்ற செய்தி காணப்படுகிறது. இதனால் மடத்து ஆட்சி நடத்தி, எழுவர் கோவில் ஆட்சியிலும் பங்கு கொண்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு.32 கம்பவர்மன் ஆட்சிக்காலத்தில் திருவெற்றியூரில் ஒரு மடம் இருந்தது. அதன் தலைவன் பெயர் நிரஞ்சன குரவர் என்பது.33 சிவன் கோவிலை மேற்பார்த்து வந்தவர் அமிர்தகணத்தார்34 எனப்பட்டனர். தேவரடியார் அடிகள்மார்35 என்றும் மாணிக்கத்தார் என்றும் பெயர் பெற்றனர். கோவில் ஆட்சி கோவில்களை மேற்பார்வையிடும் பொறுப்பு முன்சொன்ன அமிர்த கணத்தார், கணப்பெருமக்கள், மடத்துச் சத்தப் பெருமக்கள் என்பவரிடம் இருந்தது மட்டும் அன்றி, ஊரவையாரிடமும்36 இருந்தது. உக்கலில் இருந்த பெருமாள் கோவில் ஆட்சி உக்கல் சபையாரிடம் இருந்தது.37 இங்ஙனமே குடிமல்லம், கூரம், திருமுக்கூடல், திருக்கோவலூர், திருவல்லம், தொண்டூர், திருநின்றவூர், திருக்கோடிகா, திருத்தவத்துறை, திருத்தணிகை முதலிய ஊர்க்கோவில்கள் ஊரவையார் மேற்பார்வையில் இருந்தன.38 இவ்வூரவையார் ஆளுங்கணத்தார்39 எனவும் கணப்பெருமக்கள்40 எனவும் பெயர் பெற்றனர். மக்கள் பெற்றிருந்த நாயன்மார் பெயர்கள் பாடல்பெற்ற தலங்கள் பல பல்லவர் காலத்தில் கற்றளிகளாக இராமையால், பல்லவர் காலக் கல்வெட்டுகளை அக்கற்றளிகள் பெற்றில. மேலும், கல்வெட்டுப் பெற்ற கோவில்கள் பிற்காலச் சோழர்காலத்தில் புதுப்பிக்கப்பட்டபொழுது, அங்கிருந்த பல்லவர் காலக் கல்வெட்டுகள் சில அழிந்திருக் கலாம். கங்கை கொண்ட சோழீச்சரத்துக் கல்வெட்டுக்களே41 இப்பொழுது சிதைந்து கிடக்கின்றன எனின், கி.பி. 7, 8 ,9-ஆம் நூற்றாண்டுப் பல்லவர் கல்வெட்டுகள் இயல்பாகவே அழிவுற்றிருத்தலில் வியப்பில்லை. புதுப்பித்தவர் அறிவின்மையால் அழிந்தன பலவாகலாம்.42 ஆதலின் பல்லவர் காலத்தில் சைவ சமய நிலையும், நாயன்மார் பெற்றிருந்த சிறப்பும், கோவில் உற்றிருந்த உயர்வும் உள்ளவாறு உணரக்கூடவில்லை. ஆதலின், இன்றுவரை வெளி வந்துள்ள கல்வெட்டுக்களைக் கொண்டே நாயன்மார் காலத்துச் சைவசமயநிலை ஒருவாறு கூறப்பட்டது. இங்ஙனமே பல்லவர்காலத்து மக்கள் வைத்து வழங்கிய நாயன்மார் பெயர்களைக் கல்வெட்டுக்களைக்கொண்டு கீழ்வருமாறு கூறலாம்:- மானி, ஸ்ரீ தண்டி, கலிப்பகை, புகழ்த்துணை விசையரையன், மாறன் பாவையார், சடையன் பள்ளி, பங்கன அடிகள், சிறுநங்கை, நம்பி, சிறு நம்பி, கம்பன் அரையன், கலிமூர்க்க இளவரையன், பூதி கண்டன், காடவன் மாதேவியார், தண்டியங்கிழார், நந்தி நிரைமதி, சிவநந்தி பாதிரி கிழார் சிங்கன், குறும்ப கோளரி, பெருநங்கை, போற்றி நங்கை மாதேவி அடிகள், நம்பி அப்பி, கஞ்சாறன் அமர்நீதி, சத்திப்பல்லவன்.43 பாண்டியர் காலம் பல்லவர் காலத்திலேயே பாண்டிய நாட்டு மன்னர்களாக விளங்கிய பாண்டி வேந்தர் பல்லவரைப் போலவே சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களை ஆதரித்து வந்தனர். மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 640-670) எனப்பட்ட நெடுமாறன் காலத்தில் சம்பந்தர்க்கும் சமணர்க்கும் ஏற்பட்ட சமயப்போரில் சமணர் வலிகுன்றினர் என்பது பெரிய புராணத்தால் அறியக்கிடக்கின்றது. அவ்வரிகேசரி தன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட (அரிகேசரி நல்லூரில்) ஊரில் ஒரு சிவன் கோவிலைக் கட்டினான். அவ்வரிகேசரி நல்லூரே இக்காலத்தில் சின்னமனூர் எனப்படுகிறது. அவ்வூர்க் கோவிலி லுள்ள சிவபெருமானையே மாணிக்கவாசகர், கலையார் அரிகேசரியாய் போற்றி! எனத் தம் போற்றித் திருவகவலில் பாராட்டியுள்ளார் அவ்வரிகேசரி பாண்டியனது பெயரனான அரகேசரி பராங்குச மாறவர்மன் (கி,பி, 710-765) கொங்கு நாட்டிலுள்ள திருப்பாண்டியக் கொடுமுடிச் சிவன் கோவிலுக்குப் பொற் குவியலும் பன்மணித்திறளும் மனமுவந்து கொடுத்தனன் என்று வேள்விக் குடிச் செப்பேடுகள் விளம்புகின்றன. இவன் மகனான நெடுஞ்சடையன் பராந்தகன் (கி.பி. 765-790) சிறந்த வைணவ பக்தன். இவனை, பரமவைஷ்ணவன்; தானாக நின்றிலங்கு மணி நீள்முடி நிலமன்னன் என்று சீவரமங்கலச் செப்பேடுகள் புகழ்கின்றன.44 இவனது ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வார் பாண்டிய நாட்டில் வாழ்ந்தவராவர். இவ்வரசன் கொங்கு நாட்டில் காஞ்சிவாய்ப் பேரூரில் திருமாலுக்குக் குன்றமன்னதோர் கோவில் எடுப்பித்தான் என்று சீவரமங்கலச் செப்பேடுகள் செப்புகின்றன. இவனது முதல் அமைச்சரான மாறன் காரி என்பவன் கி.பி. 770-ல் ஆனைமலையில் நரசிங்கப் பெருமாளுக்கு ஒரு கற்றளி அமைத்தான் என்று ஆனைமலைக் கல்வெட்டு கூறுகின்றது.45 இப்பாண்டியனது சேனைத் தலைவனான சாத்தன் கணபதி என்பவன் திருப்பரங்குன்றத்திலுள்ள கோவிலுக்குத் திருப்பணி புரிந்தான்; அங்குள்ள திருக்குளத்தையும் திருத்தினான்; அறச் செயல்களையும் ஒழுங்குபடுத்தினான். இச்சேனைத் தலைவனது, மனைவியான நக்கன்கொற்றி என்பவள் திருப்பரங்குன்றத்தில் துர்க்கைக்கும் சேட்டைக்கும் வெவ்வேறு கோவில் அமைத்தனள்.46 வரகுண மகாராசன் (கி.பி. 792-835) சிராப்பள்ளி இறைவற்கு விளக்கெரிப்பதற் காக 125 கழஞ்சுப் பொன் தானம் அளித்தான்; அம்பாசமுத்திரத்துக் கோவிலுக்கு 290 பொற்காசுகள் நாள் வழிபாட்டிற்கு நிவந்தமாக வழங்கினான்.47 இரண்டாம் வரகுணன் (கி.பி. 862-880) திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு ஆண்டு முழுதும் நாள் வழிபாடு நடத்துவதற்கு 1400 பொற்காசுகளை நிவந்தமாக வழங்கினான்.48 இப்பாண்டிய மன்னன் நிருபதுங்கன் (கி.பி. 850-882) காலத்தவன். நிருபதுங்கனது 18-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு திருவதிகை வீரட்டானத்தில் உள்ளது. ஆதனில் இவ்வரகுணன் திருவதிகைப் பெருமானுக்குத் தானம் செய்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ்வரகுணன் திருவதிகையைத் தரிசித்தனன் என்பது வெளிப்படை. இங்ஙனம் திருவதிகையைத் தரிசித்தபின்னர் இவன் திருவதிகைக்குத் தெற்கேயுள்ள தில்லைக்குச் சென்று கூத்தப்பெருமானை வணங்கி இருத்தல் இயல்பேயன்றோ? இவன் சிறந்த சைவன் என்பதைத் திருவதிகைக் கல்வெட்டாலும் திருச்செந்தூர்க் கல்வெட்டாலும் தெளியலாம். தென்னவன் ஏத்தும் சிற்றம்பலத்தான் என்று மணிவாசகர் குறித்தனர் என்றுகோடல் பொருத்தமுடையது. ஆராய்ச்சியாளர் பலர், மணிவாசகர் இவ்விரண்டாம் வரகுணன் காலத்தவர் என்றே கூறியுள்ளனர். திருப்பதிப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான தி. பொ. பழனியப்ப பிள்ளையவர்கள் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையும் இதனையே வலியிறுத்தலைக் காணலாம்.49 முடிவுரை இதுகாறும் கூறப்பெற்ற கல்வெட்டுச் சான்றுகளால் ஏறத்தாழக் கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை தமிழகத்தில் செங்கற் கோவில்களும் கற்கோவில்களும் இருந்தன என்பதும் அவை சைவ, வைணவ, சமண, பௌத்த சமயங்களைச் சேர்ந்தவை என்பதும், இவற்றை முடிமன்னரும் பொதுமக்களும் போற்றி வளர்த்தனர் என்பதும், கோவில் ஆட்சி நடைபெற்றுவந்தது என்பதும், கோவிலில் தேவரடியார் முதலிய பலவகைப் பணிமக்கள் இருந்து தொண்டாற்றினர் என்பதும், மடத்துச் சத்தப் பெருமக்கள் போன்ற கல்வெட்டுத் தொடர்களால் சில கோவில்களை அடுத்தேனும் மடங்கள் இருந்து சமயப்பணி செய்திருத்தல் வேண்டும் என்பதும், கோவில்களில் பக்தர்களின் அருட்பாடல்கள் ஓதப்பட்டு வந்தன என்பதும், பூசையும், விழாக்களும் சிறப்புற நடந்தன என்பதும், சமய வெறியால் பிறசமயத்தினர் ஒரோ வழித்துன்புறுத்தப் பட்டனர் என்பதும், அரசன் எச்சமயத்தவனாக இருப்பினும் பொதுவாக எல்லாச் சமயங்களையும் பாதுகாத்து வந்தான் என்பதும், சமயப் பெரியார்களின் பெயர்களைப் பொதுமக்கள் தம்பிள்ளை கட்கு இட்டு வழங்கினர் என்பதும் நன்கு புலனாகின்றன. பிற்காலச் சோழர் காலம் பல்லவப் பேரரசை ஒழித்துச் சோழப் பேரரசை நிலைநாட்டிய ஆதித்தசோழன் காவிரியின் இருகரைகளிலும் இருந்த பழைய செங்கற் சிவன் கோவில்களைக் கருங்கற் கோவில்களாக மாற்றினான்.50 ஆதித்தன் மகனான முதற் பராந்தகன் தில்லைச் சிற்றம்பலத்தில் பொன் வேய்ந்தான்.51 இவனது மூத்த மகனான இராசாதித்தன் திருநாவலூரில் சிவன் கோவிலைக் கட்டினான்.52 இவன் தம்பியான கண்டராதித்தர் திருப்பழனத்திற்குப் பக்கத்தில் கண்டராதித்த சதுர்வேதிமங்கலம் என்ற ஊரை உண்டாக்கினார். அங்கு ஒரு சிவன்கோயிலைக் கட்டினார்.53இவர் மனைவியாரான செம்பியன் மாதேவியார் செய்த திருப்பணிகள் மிகப் பல. இவர் ஆதித்தனைப் பின்பற்றிப் பாடல் பெற்ற கோவில் சிலவற்றைக் கற்றளிகளாக மாற்றினார். அவை திருத்துருத்தி, திருக்கோடிகா, ஆரூர் அரநெறி, திருவக்கரை, திருமுதுகுன்றம், தென்குரங்காடுதுறை, திருநல்லம், ஆனாங்கர் என்னும் இடங்களில் இருப்பவை.54 இவரால் நிலதானமும், பொன்வெள்ளிப் பாத்திரங்களும், நகைகளும், விளக்குகளும், பெற்ற கோவில்கள் பல. இவ்வம்மையார் செம்பியன்மாதேவி என்று தம்பெயரால் ஓர் ஊரை அமைத்துச் சிவன் கோவிலைக் கட்டினாள். அதனில் கண்டராதித்தனைத் சிவலிங்கமாக அவர் பூசிப்பதை உணர்த்தும் படிமம் அமைக்கப்பட்டுள்ளது. இராசராசன் I: (கி.பி 985-1014) இப்பேரரசன் ஆறு ஆண்டுகள் முயன்று தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான்; அதனில் கடவுளார் திருமேனிகளையும் நாயன்மார் திருமேனிகளை யும் எழுந்தருளச் செய்தான்; ஒவ்வொன்றுக்கும் விலையுயர்ந்த நகைகள் செய்வித்தான். பூசைக்கும் விழாவுக்குமாகப் பல கிராமங்களை மானியமாக விட்டான். அவனைப் பின்பற்றி அரச குடும்பத்தினரும், அரசாங்க அலுவலரும் மிகப்பல தருமங்கள் செய்தனர். அக்கோவில்களில் இசை நடனங்களை வளர்க்கத் தமிழகத்தின் பல கோவில்களிலிருந்து 400 பதியிலார் குடியேற்றப் பட்டனர். ஒவ்வொருத்திக்கும் ஒரு வீடும் ஒரு வேலி நிலமும் தரப்பட்டன. திருப்பதிகம் ஓத 48 பேர் பல ஊர்களிலிருந்து நியமிக்கப் பட்டனர்.55 இராசேந்திரன் I (கி.பி. 1012-1044) இவன் தந்தையைப்போலவே தான் புதிதாக அமைத்த கங்கைகொண்ட சோழபுரத்தில், கங்கைகொண்ட சோழேச்சுரம் என்னும் மிகப்பெரிய சிவன் கோவிலைக் கட்டினான்.56 இவன் மகனான முதலாம் இராசாதிராசன் மன்னார் குடியில் சயங்கொண்ட சோழேச்சரத்தையும், இராச இராசேச்சுவரத்தையும் கட்டு வித்தான். குடந்தைக்காரோணம் என்ற கோவிலைப் புதுப்பித்தான்.57 முதற் குலோத்துங்கன் திருநீற்றுச் சோழன் எனவும் பரம மகேச்சுவரன் எனவும் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறான்.58 இவன் காலத்தில் வேங்கிநாட்டுத் திராட்சாராமன் பீமேசுவரர் கோவில் சிறப்படையத் தொடங்கியது.59 ஆடு துறையை அடுத்துள்ள சூரியனார் கோவில் இவன் காலத்தில் கட்டப் பட்டது.60 இவன் மகனான விக்கிரமசோழன் தில்லைக் கோவிலுக்குப் பெருஞ்சிறப்புச் செய்தான்; தன் சிற்றரசர் கொணர்ந்த திறைப் பொருளின் பெரும் பகுதியை அக்கோவிலைப் புதுப்பிப்பதில் செலவிட்டான். பொன்னம் சூழ்ந்த திருமாளிகை, கோபுரவாசல், கூடசாலைகள், பலிபீடம், தேர் ஆகியவற்றைப் பொன்வேய்ந்தான்; தன் பெயரால் திருவீதியும், திருமாளிகையும் அமைத்தான். கூத்தப்பெருமாள் உலாப்போகச் சிறப்பான ஏற்பாடுகள் செய்வித்தான். இவன் மகனான இரண்டாம் குலோத்துங்கள் தன் தந்தை விட்டுச் சென்ற தில்லைத் திருப்பணிகளை முற்றுப் பெறச் செய்தாள்; அங்கு மேலும் பல திருப்பணிகளைச் செய்தான். எழுநிலைக்கோபுரங்களை அமைத்தான்; அம்மனுக்குத் திரு மாளிகை அமைத்தான்; பேரம்பலத்தைப் பொன்வேய்ந்தான்.62 சிறந்த சிவபக்தனான இவன் சேக்கிழாரைக் கொண்டு பெரியபுராணம் பாடச் செய்தான். இவன் மகனான இரண்டாம் இராசராசன் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் அற்புத வேலைப்பாடமைந்த பெரிய சிவன் கோவிலைக் கட்டினான். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இவ் விராசராசன் ஆகிய மூவரும் ஒட்டக் கூத்தரால் பாடப்பெற்ற சிறப்புடையவர். மூன்றாம் குலோத்துங்க சோழன் திருவிடைமருதூருக்கு அருகில் திருபுவன வீரேசுவரம் என்ற பெரிய சிவன் கோவிலைக் கட்டினவன். தில்லையில் முகமண்டபம், கோபுரம், அம்மன் திருச்சுற்றுக் கோபுரம் இவற்றைக் கட்டினவன் அல்லது பழுது பார்த்தவன்; காஞ்சி ஏகாம்பரர் கோவில், மதுரைச் சிவன் கோவில், திருவிடைமுருதூர்க் கோவில், தாராசுரத்தில் உள்ள ஐராவதேசுவரர் கோவில், திருவாரூர்ப் பூங்கோவில் இவற்றில் திருப்பணிகள் செய்தான்.63 அரசுமா தேவியரும் திருப்பணிகளும் சோழப் பேரரசர்கள் கோவில் திருப்பணிகள் செய்தாற் போலவே அரசமா தேவியரும் பல திருப்பணிகள் செய்திருக் கின்றனர் என்பதை எண்ணிறந்த கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. சோழப் பேரரசுக்கு அடங்கிய சிற்றரசர்களான நுளம்பாதிராசர், யாவதராயர், சாம்புவராயர், வாணகோவரையர், பொத்தப்பிச் சோழர், மிழலை நாட்டுத் தலைவர், வைதும்பமகாராசர், சேதிராயர், மழவராயர், காடவராயர், முனையதரையர், முத்தரையர் முதலியோரும் அவ்வவர் தேவிமாரும் செய்துள்ள திருப்பணிகள் எண்ணிலவாம்.64 திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சேந்தமங்கலத்தைச் தலைநகராகக் கொண்டு சிற்றரச னாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் என்ற பல்லப மரபினன் செய்த திருப்பணிகள் மிகப்பல. அமைச்சர்களும் தானைத் தலைவர்களும் செய்த அறப்பணிகள் பல. முதற் குலோத்துங்கனது சேனைத் தலைவனான நரலோக வீரன் என்ற காலிங்கராயன் செய்துள்ள திருப்பணிகள் பலவாகும்.65 வணிகர் முதலிய குடிமக்களும் தத்தம் ஆற்றலுக்கு ஏற்றவாறு திருப்பணிகள் செய்துள்ளனர் என்பதைத் திருவிளக்குடி, திருப்பாசூர், திருச்சிற்றேமம், திருப்புகலூர், திருவிடைமருதூர், திருக்காளத்தி முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுக்களால் அறியலாம்.66 ஒரு சாதாரண குடும்பப் பெண் தன் நகைகளை விற்றுக் கோவிலுக்கு நிலம் வாங்கிவிட்டாள் என்று காஞ்சிக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.67 இது காறும் கூறப்பெற்ற கல்வெட்டுச் சான்றுகளால் பிற்காலச் சோழர் காலத்தில் அரசர் முதல் சாதாரணக் குடிமகன் ஈறாக இருந்த அனைவரும் தத்தம் ஆற்றலுக்கு ஏற்றவாறு சமயத் தொண்டில் ஈடுபட்டிருந்தனர் என்பதை நன்கறியலாம். திருக்கோவில் வளர்ச்சி பல்லவர் காலத்தில் செங்கற் கோவில்களாக இருந்த பல சோழர் காலத்தில் கற்கோவில்களாக மாறின என்பதைப் பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஒரு கோவில் கற்றளியாவதற்கு முன் அங்குள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்துத் திருப்பணி முடிந்தபின், புதிய சுவர்கள் மீது அவற்றைப் பொறித்து, முன்னோரது அறச்செயலைப் பாதுகாக்கும் முறை சோழர் காலத்தில் இருந்தது. சாதாரணமாக ஒவ்வொரு கோவிலும் கருவறை, நடுமண்டபம், முன்மண்டபம் இவற்றைப் பெற்றிருக்கும். பிறகு கோவிலைச் சுற்றிலும் ஒரு திருச்சுற்றும் மதிலும் அமைப்புறும். அத்திருச்சுற்றில் கருவறையை அடுத்துக் கோவில் சொத்துக்களைக் கண்காணிக்கும் சண்டேசுவரர்க்குக் கோவில் அமைக்கப்படும். அத்திருச்சுற்றில் வலம் வரும் முறையில் பல தெய்வங்கள் இடம் பெற்றிருக்கின்றன. மதிலில் ஒன்று முதல் நான்கு வாயில்கள் கோவிலுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். வாயில்மீது சிறிய கோபுரங்கள் அமைக்கப்படும். முதலாம் இராசேந்திரன் காலம் வரை கருவறைக்கு மேலுள்ள விமானம் உயர்த்திக் கட்டப்பட்டது. பிற்காலத்தில் விமானம் தாழ்த்தப்பட்டுக் கோபுரங்கள் உயர்த்தப்பட்டன. பெரிய கோவில்களுள் நந்தவனங்களும் திருக்குளங்களும் உண்டாயின.68 பெரிய கோவில்களில் இரண்டாம் திருச்சுற்றும் மூன்றாம் திருச்சுற்றும் கட்டப்பட்டன. அச்சுற்றுகளில் அரசர், சிற்றரசர் முதலியோர் எடுப்பித்த சிறிய கோவில்கள் இடம்பெற்றன.69 கோவில்கள் செல்வாக்கில் பெருகப்பெருக அவற்றில் பல மண்டபங்கள் ஏற்பட்டன. இலக்கணங் கற்பிக்கும் மண்டபம், நடன மண்டபம், நாடக மண்டபம், திருப்பதிகம் பாடவும், எழுதவும் பயன்பட்ட திருக்கைக்கோட்டி மண்டபம், ஊற்றுக்கால் மண்டபம், யாகசாலை முதலிய ஏற்பட்டன.70 சிலகோவில் களில் ஆயிரக்கால் மண்டபமும் மாளிகையும் இருந்தன. நீடூர்க் கோவில் இருந்த மாளிகை புராண நூல் விரிக்கும் புரிசை மாளிகை எனப்பெயர் பெற்றது.71 பல பெரிய கோவில்களில் மடங்கள் இருந்தன. அங்கு சரவதி பண்டாரம் என்ற நூல் நிலையமும் இருந்தது.72 இங்ஙனம் பல துறைகளிலும் வளர்ச்சியுற்ற கோவில்களுட் சில ஊரவையார் மேற்பார்வையில் இருந்தன; சில கோவிலைச் சார்ந்த மடத்துத் தலைவர்கள் ஆட்சியில் இருந்தன; சில ஆண்டார் என்ற சைவ அடியார் ஆட்சியில் இருந்தன; சில மாகேசுவரர் என்ற சைவத் துறவிகள் ஆட்சியில் விடப்பட்டன. பெரிய கோவில்கள் தனிக்குழுவினர் ஆட்சியில் இருந்தன. அவர்கள் ஸ்ரீ காரியம் செய்வார், கோவில் கணப் பெருமக்கள் என்று பலவாறு பெயர் பெற்றிருந்தனர். அக்குழுவினருள் ஊரவையாரும், மாகேசுவரரும், மடத்துத் தலைவரும் இடம் பெற்றிருந்தனர்.73 கோவில் பற்றிய சிறப்புச் செய்திகள் அரசன் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுதல் உண்டு. கோவிலி லிருந்த பொக்கிஷ சாலை ஸ்ரீ பண்டாரம் எனப்பட்டது. அதுபற்றிய கணக்குப் புத்தகம் ஸ்ரீ பண்டாரப் புத்தகம் எனப்பட்டது. சிவன் கோவிலைச் சேர்ந்த தேவரடியார் முதலிய மக்களுக்கும், பசுக்கள் முதலிய கால் நடைகளுக்கும் சூலப்பொறி பொறிக்கப்பட்டிருந்தது.74 கோவில்களின் வரவு செலவு கணக்குகள் அரசாங்க அதிகாரிகளால் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்டன. மதுராந்தகன் கண்டராதித்தன், காழியாதித்தன், அருமொழி மூவேந்த வேளான் முதலிய அரசாங்க அலுவலர் பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இவர்கள் கோவில் நகை களைக் கணக்கிட்டுக் குறித்துக்கொள்ளுதலும், கோவிந் கணக்குகளைப் பார்வை யிடுதலும், கோவில் பணத்தைக் கையாடுதல் முதலிய குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தலும் செய்து வந்தனர். பொருள் வருவாய் இல்லாத சிறியகோவில்கள் பக்கத்துக் கோவில்களின் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்றுவந்தன. இங்ஙனம் பெற அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.75 கோவில் விழாக்கள் சோழர் காலக் கோவில்களில் சித்திரை, வைகாசி, ஆனி முதலிய மாதங்களில் அந்தந்த மாதங்களுக்குரிய விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன. இறைவன் ஊர்வலத்தின் போதும் கோவிலைச் சேர்ந்த நடன மாதர் நடன மாடினர்.76 நாயன்மாரும் ஆழ்வாரும் வாழ்ந்து மறைந்த ஊர்க் கோவில்களில் அவர்களுடைய உருவச்சிலைக்கும் செப்புப் படிமங்களும் எழுந்தருளப் பெற்றன. அவற்றிற்கு நாட்பூசையும், ஆண்டுவிழாக்களும் நடைபெற்றன.77 சோழ அரசர்கள் சிறந்த கோவில் விழாக்களை நேரில் கண்டு களித்தனர். விக்கிரம சோழன் திருவாரூரில் தேவாசிரிய மண்டபத்தில் இருந்துகொண்டு சித்திரைத் திருநாளைக் கவனித்தான். இரண்டாம் இராசராசன் திருவொற்றியூரில் நடைபெற்ற பங்குனி உத்தர விழாவில் கலந்துகொண்டான். மூன்றாம் குலோத்துங்கன் அதே கோவிலில் இராசராசன் என்று பெயர் கொண்ட மண்டபத்தில் இருந்துகொண்டு ஆனி விழாவைக் கவனித்தான். அதே கோவிலில் நடந்த ஆவணித் திருநாளில் மூன்றாம் இராசராசன் கலந்து கொண்டான்.78 இவ்வாறு கோவில் விழாக்களில் முடிமன்னர்கள் பங்கு கொண்டமை பொதுமக்கள் கொண்டிருந்த சமயப்பற்றினை மேலும் வளர்ப்பதாக இருந்தது. கோவில்களில் திருமுறைகள் இன்றுள்ள முறையில் திருமுறைகளை முறைப்படுத்தியவன் முதலாம் இராசராசசோழன் என்று இலக்கியம் கூறுகின்றது. ஆனால் அதற்கு முன்பே திருவல்லம் முதலிய ஊர்க்கோவில்களில் திருப்பதிகங்கள் ஓதப்பட்டன என்று பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இராசராசன் கட்டிய பெரிய கோவிலில் மட்டும் 48 ஓதுவார் இருந்து திருப்பதிகங்கள் ஓதினர். இத்திருப்பதிகங்களைப் பிராமணர், தேவரடியார் முதலிய பலரும் கோவில்களில் ஓதி வந்தனர். மார்கழி மாதத்தில் திருப்பள்ளி யெழுச்சி, திருவெம்பாவை என்பனவும் ஓதப்பட்டன. இவ்வாறே வைணவக் கோவில்களில் திருப்பாவை ஓதப்பட்டது.79 இங்ஙனம் திருப்பதிகம் ஓதுவார் பெற்ற மானியம் திருப்பதிகக்காணி எனப்பட்டது முதற் குலோத்துங்கனது சேனைத் தலைவனான நரலோகவீரன் திருமுறைச் செப்பேடுகளில் எழுதிவைத்தான். திருமுறைகளை அடிப்படையாகக் கொண்ட பெரிய புராணம் செய்யப்பட்ட பிறகு திருமுறைகளைப் போற்றுவார் தொகை மிகுதிப்பட்டது. திருமுறைகள் பல கோவில்களிலும் படியெடுத்து வைக்கப் பட்டன. கோவிலில் பாதுகாப்பான இடங்களில் வைத்துப் போற்றப்பட்டன. குறுக்கை- திருஞான சம்பந்தன் குகை, திருவிடைவாய்- திருத்தொண்டத் தொகையான் குகை, தோணிபுரத்துத் தேவாரச் செல்வன் குகை முதலிய பாதுகாப்பான இடங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டன.80 பல கோவில் களில் திருமுறைகளைப் பாதுகாத்தல், அழிந்தவற்றைப் புதுப்பித்தல், பிறர்க்குக் கற்பித்தல், இவற்றைச் செய்ய அறிஞர் இருந்தனர். அவர்கள் தமிழ் விரகர் எனப்பட்டனர். அவர்கள் திருமுறையை ஓதிய மண்டபம் திருக்கைக் கோட்டி மண்டபம் எனப்பட்டது.81 கோவில்களில் விளக்கப்பட்ட சமயநூல்கள் சிவதர்மம், பிரபாகரம், பாரதம், இராமாயணம், புராணங்கள், திருஞானம், சோமசித்தாந்தம், ஆளடை நம்பி, ஸ்ரீ புராணம் முதலிய நூல்கள் கோவில்களில் படித்துப் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டன.82இவையல்லாமல், கன்னிவன புராணம், பூம்புகலூர் நாடகம் என்பன கல்வெட்டுக்களில் காணப்படு கின்றன.83 இவை கோவில்களில் படிக்கப்பட்டனவா அல்லது நாடகமாய் நடிக்கப்பட்டனவா என்பது விளங்கவில்லை. மடங்கள் தமிழ்நாட்டுக் கோவில்களை அடுத்து மடங்கள் இருந்தமை முன்னமே குறிக்கப்பட்டுள்ளது. அவை இறைவன் பெயர்களைத் தாங்கியும், அடியார் பெயர்களைத் தாங்கியும், அரசர் சிற்றரசர் பெயர்களைத் தாங்கியும், வேறு பல பெயர்களைத் தாங்கியும் விளக்கமுற்றிருக்கின்றன. திருநீலவிடங்கன் மடம், சிவலோகநாயகன் மடம், பஞ்சநதி வாணன் மடம், அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் மடம், கூத்தாடு நாயனார் மடம் என்று இறைவன் பெயர்களைத் தாங்கின சில.; 84அருண்மொழி தேவன் மடம், இராசேந்திர சோழன் மடம். குலோத்துங்க சோழன் மடம், வாணராயர் மடம், வீரபாண்டியன் மடம் முதலியன. அரசர் சிற்றரசர் பெயர்களைக் கொண்டன:85 தில்லைவாழ் அந்தணர் மடம், திருஞான சம்பந்தர் திருமடம், திருநாவுக்கரசர் மடம், சிறுத்தொண்டர் திருமடம், திருமூலர் திருமடம், சுந்தரப்பெருமாள் மடம் முதலியன நாயன்மார் பெயர்களைத் தாங்கின.86 முந்நூற்று இருபத்து நால்வன் மடம், தன்ம வாணிகன் மடம், எழுநூற்றுவன் மடம், அஞ்ஞூற்று எண்மன் திருமடம், நாலாயிரவன் திருமடம் என்பன வணிகர் குழுவினரால் ஏற்படுத்தப்பட்ட மடங்களாக இருக்கலாம்.87 இவையல்லாமல் சங்கர தேவன் அறச்சாலை, பெருந்திருவாட்டி அறச்சாலை, அறப்பெருஞ் செல்விச்சாலை என்ற பெயர்களுடன் பல அறச்சாலைகள் இருந்தன.88 இவையல்லாமல் பல்வேறு பெயர்களில் பல மடங்கள் தமிழ் நாடெங்கும் இருந்தன. சிலமடங்களை அடுத்து மருத்துவ மனைகள் ஏற்பட்டிருந்தன. இம்மடங்களிலிருந்த தலைவர்கள் சமய போதனை செய்து வந்தனர்; கோவில் ஆட்சியில் பங்கு கொண்டனர் என்பன கல்வெட்டுக்களால் அறியப்படுகின்றன. கோவிலைச்சார்ந்த இம்மடங்கள் அல்லாமல் காளாமுகச் சைவர் நடத்திவந்த கோமடங்களும், காபாலிகச் சைவர் நடத்திவந்த மடங்களும், வீர சைவ மடங்களும், கோளகி மடத்தார் நடத்திவந்த சைவ மடங்களும், வாரணாசிக் கொல்லா மடத்தார் நடத்திவந்த மடங்களும், வாரணாசி பிட்சாமடத்தார் நடத்திவந்த மடங்களும், தமிழகத்துச் சந்தான மடங்களும் பிறவும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சமயத்தொண்டு செய்துவந்தன. மேலே சொல்லப்பட்ட குகைகளும், மடங்களும் சமயக் கல்வியை நாட்டில் பரப்பின; அருட்பாடல்களைப் பாடப் பலரைத் தயாரித்தன; மக்கள் செந்நெறிபற்றி வாழ வகை செய்தன என்று கூறுதல் பொருந்தும். மக்கள் கொண்ட சைவப் பெயர்கள் பல்லவர் காலத்திலேயே நாயன்மார் பெயர்கள் சில மக்கள் பெயர்களாக விளங்கினமை காட்டப்பட்டது. இங்ஙனம் பெயரிடுதல் பிற்காலச் சோழர் காலத்தில் மிகுதிப்பட்டது என்பதைப் பல கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. திருவெண்காட்டு நங்கை, மூக்கன் ஐயாறன். பரவை நங்கையார், கண்ணப்பர், புகழ்துணையடிகள், கோட்புலி, அரிவாள்தாயன், நம்பி ஆரூரன், திருநீலகண்டன், சிறுத்தொண்ட நம்பி முதலிய பல பெயர்கள் கல்வெட்டுக்களில் மக்கள் பெயர்களாகக் காணப்படுகின்றன. கண்ணப்ப தேவர் கமுகந்தோப்பு, திருஞானசம்பந்த நல்லூர், திருநாவுக்கரசர் நல்லூர் எனப்பல இடங்களுக்கு நாயன்மார் பெயர்கள் வழங்கப்பட்டிருந்தன. திருத்தொண்டத் தொகை நல்லூர், திருத்தொண்ட தொகை மங்கலம், திருமுறைத் தேவாரச் செல்வன், தேவாரம் அழகியான், ஆண்டார் திருத்தொண்டத் தொகையான் என்ற பெயர்கள் பொதுமக்கள் திருத்தொண்டத் தொகையிடத்தும், பிற திருமுறைகள் மீதும் வைத்திருந்த நன்மதிப்பை நன்கு காட்டுகின்றன. சிவபெருமான் பெயர்களான ஆடவல்லான், வீரிவிடங்கன் என்பன அக்கால அளவைகளுக்குப் பெயராக இருந்தமை, அக்கால மக்களது சமயப்பற்றை நன்கு விளக்குகிறதல்லவா? திருமுறைகளை நன்கு படித்த பழக்கத்தால் அவற்றில் காணப்படும் அரிய தொடர்களைத் தம்மக்கட்கு இட்டு வழங்கிய பொதுமக்கள் அக்காலத்தில் இருந்தனர். (1) சிவாய நம வென்று நீரணிந்தேன் என்பது அப்பர் தேவாரம். நீரணிந்தான் சேதிராயன் என்பது ஒருவன் பெயர். (2) நச்சுவார்க்கினியர் போலும் நாகையீச்சுவனாரே என்பது அப்பர் தேவாரம், நச்சினார்க்கினியன் தில்லையம்பல மூவேந்த வேளான் என்பது ஒருவன் பெயர். (3) மழபாடி வயிரத்தூணே என்பது அப்பர் வாக்கு; ஆனை மங்கலமுடையான் பஞ்சநதி வயிரத்தூண் என்பது ஒருவன் பெயர். (4) மறையணி நாவினானை மறப்பிலார் மனத்துளானை என்பது அப்பர் வாக்கு; மறையணி நாவினான் பட்டன் என்பது ஒருவன் பெயர். (5) ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்பது சம்பந்தர் வாக்கு, ஆணை நமதென்ற பெருமாள் என்பது ஒருவன் பெயர். (6)பொன்னார் மேனியனே என்பது சுந்தரர் வாக்கு. பொன்னார் மேனி விளாகம் என்பது ஓர் இடத்தின் பெயர்.89 மக்களது சமயப்பற்று மூன்றாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் ஹொய்சல வீர நரசிம்மதேவன் படையெடுத்து வந்து சோழ நாட்டின் பல பகுதிகளை அழித்தான்; கோவில்களில் இருந்த திருமேனிகளை எடுத்துச் சென்றான். அப்படையெடுப்புக்குப் பின் அத்திருமேனிகள் அடியார்களால் புதியனவாகச் செய்யப்பட்டன. ஹொய்சலர் படையெடுப்பால் சில கோவில்கள் பழுதுற்றன. படையெடுப்பிற்குப் பின்னர் அவை புதுப்பிக்கப்பட்டன. இவ்வாறு முலீம்கள் படையெடுப்பின்போதும் பல கோவில்கள் அழிக்கப்பட்டன. பாண்டிய நாட்டுத் திருப்புத்தூர்ச் சிவன்கோவில்90 கல்வெட்டு முதலியவை இவ்வுண்மையை உணர்த்தும். இங்ஙனம் பழுதுற்ற கோவில்கள் பிற்காலத்தில் செப்பனிடப்பட்டன என்பதை நோக்க, பொதுமக்கள் சமயத்தின்பாற் கொண்ட பற்றை நன்கறியலாம். பௌத்த சமயம பல்லவர் காலத்திலிருந்தே நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரம் சீன வணிகர் பொருட்டுக் கட்டப்பட்டிருந்தது. நாகை சிறந்த துறைமுக நகரமாகப் பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் விளங்கியது. இராசராசன் அப்பௌத்த வணிகருக்கு இடந்தந்து ஆதரித்தான். அவ்விடத்தில் கட்டப்பட்ட பௌத்தர் கோவில் சூடாமணி வர்மவிகாரம் எனப்பட்டது. அதற்கு ஆனை மங்கலம் என்ற கிராமம் பள்ளிச்சந்தமாக விடப்பட்டது. இத்தானபட்டயமே லீடன் பட்டயம் எனப்படுவது. லீடன் என்பது ஹாலந்து நாட்டிலுள்ள நகரம். ஆனைமங்கலப் பட்டயம் அங்கு எடுத்துச் செல்லப்பட்டது; அதனால் அப்பெயர் பெற்றது. சமண சமயம் பல்லவர் காலத்தில் சமணர் செல்வாக்கு மிகவும் குன்றி விட்டதாயினும், சமணம் அடியோடு அழிந்து விடவில்லை. இன்றளவும் தமிழகத்துச் சிற்றூர் களிலும் பேரூர்களிலும் சமணர் இருந்து வருகின்றனர். இதனை நோக்க, பல்லவர்க்குப் பிற்பட்ட சோழர் காலத்திலும் அவர்கள் தங்கள் கோவில் களையும் மடங்களையும் குறைந்த அளவிலேனும் வைத்துப் பாதுகாத்து வந்தனர் என்று எண்ணுதல் பொருந்தும். இவ் வெண்ணத்தை உறுதிப்படுத்தக் கல்வெட்டுக் களும் இடந்தருகின்றன. முதற் பராந்தகன் காலத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தமங்கலத்தில் ஜினகிரிப் பள்ளி இருந்தது. சிறு வாக்கம் என்ற சிற்றூரில் ஸ்ரீகரணப்பெரும்பள்ளி இருந்தது. கீரைப்பாக்கத்தில் தேசவல்லப ஜினாலயம் இருந்தது. திருப்பருத்திக் குன்றம் என்ற சமண காஞ்சியில் ரிஷி சமுதாயம் என்ற பெயரில் சமண முணிவர் கூட்டம் ஒன்று இருந்தது.91 வடஆற்காடு மாவட்டத்தில் விடால் என்ற ஊரையடுத்த குன்றில் இரண்டு குகைகள் உள்ளன. அவற்றின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றைப் பல்லவனும், மற்றொன்றை ஆதித்த சோழனும்கட்டினர். இக் குகைகளில் சமண முனிவர் தங்கியிருந்தனர். வள்ளி மலை, பஞ்சபாண்வர் மலை இவற்றில் சமணக் குகைகள் காணப்படு கின்றன. சமணத் தீர்த்தங்கரர் உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. தென்னார்க்காடு மாவட்டத்தில் சிறு கடம்பூர், மேல் சித்தாமூர், திருநறுங் கொண்டை முதலியன குறிப்பிடத்தக்க சமணர் கோவில்கள் இருந்த ஊர்களாகும் முதலாம் இராசராச சோழனுடைய தமக்கையாரான குந்தவை பிராட்டியார் தாதாபுரத்தில் எடுப்பித்த குந்தவைஜினாலயம் குறிப்பிடத் தக்கது. அவ்வம்மை யாரே போளூர் தாலூகா திருமலையிலுள்ள சமணக்கோவிலையும், திருச்சி, மேற்பாடியிலுள்ள சமணக் கோவிலையும் கட்டுவித்தார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. கண்டராதித்த பெரும் பள்ளி என்பது கண்டராதித்த சோழனால் எடுப்பிக்கப்பட்டது.92இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் சோழர்காலத்தில் சமணர் கோவில்கள் இருந்து வந்தன. இவற்றுள் இன்று பல அழிந்து விட்டன, சில இருந்துவருகின்றன. பாண்டியர்கள் சோழப் பேரரசு தென்னிந்தியாவில் நிலைபெற்றிருந்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் ஏறத்தாழ ஒரே அளவு சமய வளர்ச்சி காணப்பட்டது. பாண்டிய மன்னர்கள், அரசாங்க அலுவலர், பொதுமக்கள் சமய வளர்ச்சியில் ஈடுபட்டனர் என்பதைப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சோழர் ஆட்சியில் அடங்கிக்கிடந்த ஸ்ரீவல்லப பாண்டியன் மனைவி சோழ நாட்டிலுள்ள திருவியலூர்க் கோவிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கினாள். முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் திருப்புவனத்தில் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலுக்குத் தேவதானமாக ஒரு கிராமத்தை விட்டான். முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியனிடம் அமைச்சனாக இருந்த குருகுலத்தரையன் என்பவன் இராமநாதபுரம் மாவட்டம் திருத்தங்காலிலுள்ள திருமால் கோவிலையும், சிவன் கோவிலையும் கி.பி. 1232-இல் கற்றளிகளாக மாற்றினான். முதல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் தில்லை நடராசப் பெருமாள் திருக்கோவிலைப் பொன்வேய்ந்து சிறப்பித்தான்; மேலைக் கோபுரத்தை எடுப்பித்தான்; திருவரங்கக் கோவிலையும் பொன்வேய்ந்தான்; அங்கு அவன் செய்த திருப்பணிகளும், விட்ட நிபந்தங்களும் அளித்த அணிகலன்களும் பலவாகும்.93 முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன சேரன், சோழன், ஹொய்சலன் முதலிய அரசர்களை வென்று, அவர் தம் நாடுகளிலிருந்து கைப்பற்றிப் கொணர்ந்த பொருள்களைக் கொண்டு திருநெல்வேலித் திருக்கோவிலில் ஒரு திருச்சுற்று மாளிகையை எடுப்பித்தான். மாறவர்மன் விக்கிரமபாண்டியன், (கி.பி. 1268-1281) சிவன் கோவில்களையும், திருமால் கோவில் களையும், அமண்பள்ளிகளையும் இராசாக்கள் நாயன் என்னும் பெயரால் நான் வழிபாடும், திருவிழாவும் நடத்துவதற்கு இறையிலி நிலங்கள் வழங்கினான்.94 தென்காசிப் பாண்டியருள் ஒருவனான சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422-1463) தென்காசிப் பெருங்கோவிலை எடுப்பித்தான்; இக் கோவிலில் நாள்வழிபாட்டிற்கும், ஆண்டு விழாவிற்கும் தேவதான இறையிலியாகப் பல நிலங்கள் இவ்வரசனால் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெருமகன் எத்தகைய குறைகளுமின்றி இத்திருக் கோவிலைப் பாதுகாத்து வரும்படி சிவனடியார் களையும், தன் வழித் தோன்றல்களையும் வேண்டிக் கொண்டமை உள்ளத்தை உருக்குவதாகும்.95 இப்பாண்டியனது இத்திருப்பணி சில செந்தமிழ்ப் பாடல்களாக உள்ளது. அக்கல்வெட்டுப் பாடல்களைக் கீழே காண்க: 1. மனத்தால் வகுக்கவு மெட்டாதகோயில் வகுக்க முன்னின் றெனைத்தான் பணிகொண்ட நாதன்தென் காசியென்று மண்மேல் நினைத்தா தரஞ்செய்து தங்காவல் பூண்ட நிருபர்தந் தனைத்தாழ்ந் திறைஞ்சித் தலைமீ தியாறுந் தரித்தனனே. 2. ஆரா யினுமிந்தத் தென்காசி மேவும்பொன் னாலயத்து வராத தோர் குற்றம் வந்தாலப் போதங்கு வந்ததனை நேராக வேயொழித் துப்புரப் பார்களை நீதியுடன் பாரா ரறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே. 3. சேலே றியவயற் றென்காசி யாலயந் தெய்வசெய லாலே சமைந்ததிங் கென்செய லல்ல அதனையின்ன மேலே விரிவுசெய் தேபுரப் பாரடி வீழ்ந்தவர்தம் பாலேவல் செய்து பணிவன் பராக்ரம பாண்டியனே. 4. சாத்திரம் பார்த்திங் கியான் கண்ட பூசைகள் தாம்நடத்தி யேத்தியன் பால்விசுவ நாதன் பொற்கோயிலென் றும்புரக்க பார்த்திபன் கொற்கைப் பராக்ரம மாறன் பரிவுடனங் கோத்திரந் தன்னிலுள்ள ளார்க்கு மடைக்கலங் கூறினனே.96 நாயக்க மன்னர்கள் பாண்டியர்க்குப் பின் வந்த நாயக்க மன்னர்கள் செய்த திருப்பணிகள் பலவாகும். முலிம் படையெடுப்பால் அழிந்த மதுரை மீனாட்சியம்மன் கோவிலைப் புதுப்பித்த பெருமை நாயக்க மன்னரையே சாரும். இவ்வாறே இராமேசுரம் திருவுத்திர கோசமங்கை முதலிய சிறந்த இடங்களிலுள்ள கோவில்களுக்கு இவர்கள் செய்த திருப்பணிகளும் அளித்த தானங்களும் பலவாகும்.97 இந்நாயக்க மன்னரது ஆட்சியின் கீழிருந்த சேதுபதி மன்னர்கள் இராமேசுவரம் கோவிலுக்கும் தங்கள் ஆட்சிக்குட்பட்ட கோவிலுக்கும் செய்துள்ள தானங்களும், திருப்பணிகளும் பலவாகும். சிவகங்கையிலுள்ள சசிவர்ம ஈவரம் சேதுபதியால் கட்டப்பட்டது.98 சமயத்திற்காகத் தியாகவுணர்ச்சி தென்னார்க்காடு மாவட்டத்துச் சேந்தமங்கலம் சிவன் கோவிலில் திருவிழா வெற்றிபெற முடிவதற்காகப் பெற்றான் என்பவன் தன் தலையைத் தானே அறுத்து உயிர்விட்டான். அப்பெரு மகனது தியாகத்தைப் பாராட்டி அச்சிவன் கோவில் அதிகாரிகள் அவன் குடும்பத்தாருக்கு விளை நிலமும் மனை நிலங்களும் உதிரப்பட்டி என்ற பெயரில் அளித்தனர்.99 மதுரையில் அஹமத் காதர் சாஹெப் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் கி.பி. 1792-ல் ஐரோப்பியப்படை மதுரையருகில் தங்கி, மீனாட்சியம்மன் கோவிலிலும், திருப்பரங்குன்றத்திலுள்ள பழனியாண்டவர் கோவிலிலிலும் சேதங்கள் விளைத்தது. திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோவிலுக்குள் நுழைய அப்படை முயன்றது. அப்பொழுது அக்கோவிலைச் சேர்ந்த வைராகி முத்துக்கருப்பன் மகனான கட்டி என்பவன் அப்படை கோவிலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகக் கோபுரத்திலிருந்து கீழே விழுந்து தன்னுழீரை மாய்த்துக் கொண்டான். எதிர்பாராத இச் செயலைக் கண்ட அப்படை, தன் முயற்சியைக் கைவிட்டுச் சென்றது. இங்ஙனம் தன் உயிரைத் தியாகம் செய்து கோவிலைக் காத்த அத்தியாகவீரனைப் பாராட்டி கோவில் அதிகாரிகள் அவன் குடும்பத் தாருக்கு இரத்தக் காணிக்கை என்னும் பெயரில் நிலமளித்தனர்.100 முடிவுரை இதுகாறும் கூறப்பெற்ற கல்வெட்டுச் செய்திகளால் தென்னாட்டில் கோவில்கள் வளர்ந்த வரலாற்றை நன்கறியலாம். அக்கோவில்களில் பூசை விழா முதலியன நடைபெற அரசர் முதல் ஆண்டி ஈறாக அனைவரும் மேற்கொண்ட முயற்சிகளை நன்கறியலாம். கோவில்கள் இசை, நடனம், சிற்பம், ஓவியம், நாடகம் முதலிய நுண்கலைகளையும் சமயக் கலையறிவையும் புகட்டும் அற்புதக் கலைக் கூடமாக விளங்கியதை அறியலாம்; பொதுமக்கள் சமய நூல்களிலும், அடியார்களிடமும் கொண்டிருந்த பற்றினை அறியலாம். சுருங்கக் கூறின், பண்டைக் காலத்தில் திருக்கோவில் வளர்ச்சியே தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சியாக இருந்தது என்று கூறுதல் பொருத்தமாகும். கல்வெட்டுகளும் சமுதாய வரலாறும் நாடும் நடப்பும் முன்னுரை தமிழகத்தின் ஒரு பகுதியான தொண்டைமண்டலம் கோட்டம், நாடு, ஊர் என்னும் பிரிவுகளைப் பெற்றிருந்தது. சோழ மண்டலம் வளநாடு, ஊர் என்ற பிரிவுகளைப் பெற்றிருந்தது. பாண்டிமண்டலம் வளநாடு, நாடு அல்லது கூற்றம், ஊர் என்னும் பிரிவுகளைப் பெற்றிருந்தது. வளநாடு அல்லது கோட்டம் என்பது இக்கால மாவட்டம் போன்றது என்னும், நாடு அல்லது கூற்றம் என்பது இக்காலத்து வட்டத்தைப் போன்றது என்றும், மண்டலம் என்பது இக்கால மாநிலம் போன்றது என்றும் கொள்ளலாம். அரசமுறை தமிழரசர் பெரும்பாலும் தந்தை, மகன் என்ற முறையிலேயே ஆண்டு வந்தனர். பட்டத்திற்குரிய பிள்ளை இல்லாதபோது, இரண்டாம் நந்திவர்ம பல்லவன் பட்டம் பெற்றாற் போல, மாண்ட அரசனுக்குப் பங்காளிப் பிள்ளைகள் பட்டம் அடைதல் உண்டு. நேர் வழியில் பட்டம் பெறுவோர் இல்லையாயின், இரண்டாம் இராசாதிராசன் பட்டம் பெற்றாற்போல, மகள் வயிற்றுப்பேரன் பட்டம் பெறுதலும் உண்டு. அரசிறை தமிழ்க்குடிகள் நிலவாரியா, விளையும் நெல்லின் ஒரு பகுதியை அல்லது அக்கால வழக்கிலிருந்த நாணயத்தைச் செலுத்திவந்தனர். பெரும்பாலும் நெல்லே செலுத்தப்பட்டு வந்தது. இத்ததைகய பலவகை வரிகளை ஊர்ச்சபையார் குடிகளிட மிருந்து, ஆண்டுதோறும் வாங்கி மன்னன் தலைநகரத்திலிருந்த அரசாங்கப் பொருள் நிலையத்திற்கு அனுப்பி வந்தனர். ஒவ்வொரு தொழிலாளரும் தட்டார்ப்பாட்டம் என்றாற்போலத் தொழிலுக்கு ஏற்ற பெயர்கொண்ட வரியைச் செலுத்திவந்தனர். அளவைகள் நீட்டலளவைகள் சுந்தரபாண்டின்கோல் என்றாற் போல அரசன் பெயரைப் பெற்றேனும், உலகளந்தகோல் என்றாற் போல வேறு பெயர் பெற்றேனும் வழக்கில் இருந்தன. நிலங்களெல்லாம் குழி, மா, வேலி என்ற முறையில் அளக்கப்பட்டன.1 முகத்தலளவைக் கருவிகள் அரசர், அரசியர் பெயர்களைத் தாங்கியும், பொதுப்படவும் வழக்கில் இருந்தன. செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி, கலம் முதலியன முகத்தலளவைப் பெயர்களாகும். பொன், வெள்ளி முதலான உயர்ந்த பொருள்கள் கழஞ்சு (10 காணம் ஒரு கழஞ்சு), மஞ்சாடி, காணம் (4 குன்றிமணி எடை) என்னும் நிறை கற்களாலும், பிற பொருள்கள் பலம், துலாம் என்னும் நிறை கற்களாலும் நிறுக்கப்பட்டு வந்தன. நாணயங்கள் தமிழரசர் ஆட்சிக்காலங்களில் பலவகை நாணயங்கள் வழக்கிலிருந்தன. அவனிபசேகரன் கோளகை, சோணாடு கொண்டான், (முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்து நாணயம்), எல்லாந்தலையானான் என்ற நாணயம், (முதல் சடைய வர்மன் சுந்தரபாண்டியன் காலத்தது) என்றாற்போன்ற நாணயங்கள் பாண்டிய நாட்டில் வழக்கில் இருந்தன.2 பொன் என்பது சிறு நாணயத்தின் பெயர் காசு (10 பொன் கொண்டது 1 காசு) என்பது மற்றொரு நாணயத்தின் பெயர். இறையிலி தமிழரசர் ஆட்சிக் காலங்களில், நிலங்கள் கோயில்களுக்கு மறையவர்க்கும் பிறர்க்கும் வரியின்றித் தானமாக வழங்கப் பட்டன. அவற்றுள் கோயில்களுக்கு விடப்பட்டவை தேவதானம் எனவும், திருவிடையாட்டம் எனவும் பெயர் பெற்றன; பௌத்த - சமணக் கோயில்களுக்கு விடப்பட்ட நிலதானம் பள்ளிச்சந்தம் எனப்பட்டது; மறையவர்க்கு உதவப்பெற்றது பிரமதேயம், பட்டவிருத்தி எனப்பட்டது; மடங்களுக்கு விடப்பட்ட நிலம் மடப்புறம் எனப் பெயர் பெற்றது; புலவர்க்கு விடப்பட்டது புலவர் முற்றூட்டு எனப் பெயர் பெற்றது இதனைப் பல கல்வெட்டுகளால் அறியலாம். ஊராட்சி ஒவ்வோர் ஊரிலும் அறிஞரவை இருந்த ஊராட்சியைக் கவனித்து வந்தது. ஊரவையுறுப்பினர் பொதுமக்களால் குடவோலை வாயிலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர். சிற்றூர்கள் சிலவற்றைச் சேர்த்து, அவையை அமைத்து ஆண்டமையும் உண்டு. உறுப்பினர்க்கு நிலமும், சொந்தமனையும், கல்வியறியும், ஒழுக்கமும் தகுதிகளாக வரையறுக்கப்பட்டிருந்தன. ஊரவையில் - சில உட்கழகங்களும் இருந்தன. அவை சம்வத்சர வாரியம், தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், பஞ்சவார வாரியம் என்பன. நியாயம் வழங்குவது, அறநிலையங்களைக் கண்காணிப்பது ஆகியவை சம்வத்சர வாரியரது கடமை களாகும்; நீர்நிலைகளைப் பாதுகாத்துப் பயன்படச்செய்தல் ஏரி வாரியர் கடைமை; நிலங்களைப் பற்றிய எல்லாவற்றையும் கவனிப்பது தோட்ட வாரியரது தொழில்; நாணய ஆராய்ச்சி செய்தல் பொன் வாரியர் கடமை. இவ்வாறு ஒவ்வோர் உட்கழகமும் ஒரு குறிப்பிட்ட பணியைக் குறைவறச் செய்து வந்தமையால், கிராம ஆட்சி செவ்வனே நடைபெற்று வந்தது. ஊரவையினரைத் தேர்ந்தெடுக்கும் முறை தொண்டை நாட்டு உத்தரமேரூரிலுள்ள ஒரு கல்வெட்டில் காணலாம். அது முதற் பராந்தக சோழனது ஆணைப்படி கி.பி. 921இல் பொறிக்கப் பட்டது. ஆவணக்களரி முதலியன ஒவ்வோர் ஊரிலும் எழுதப்பட்ட ஆவணங்களைப் பதிவு செய்ய ஆவணக்களரி இருந்தது என்பது பல கல்வெட்டுகளால் தெரிகின்றது.3 தமிழ் வேந்தர்கள் நால்வகைப் படையிலும் சிறந்து இருந்தனர். இவையன்றிப் பெருநாட்டிற்கு உட்பட்ட மண்டலங் களில் தனித்தனியே `நிலைப்படைகள் வேறு இருந்தன. சமுதாயம் சங்க காலத்தில் நம்மால் அறியப்படமுடியாத சாதிகள் பிற்காலக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ஒவ்வொரு சாதியும் அதற்கு விதிக்கப்பட்ட கட்டுதிட்டங்களிலிருந்து மாறலாகாது என்ற பொதுக்கொள்கை இருந்தது. ஆயினும், நாளடைவில் பல்வேறு சூழ்நிலைகளால் இக்கட்டுப்பாடு தளர்ந்து வந்ததை வரலாற்றில் காண்கிறோம். கலப்புச் சாதிகளும், அச்சாதியினர்க்குரிய கடமைகளும் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. அனுலோமர் பிரதிலோமர் என்ற கலப்புச் சாதியார் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர். அனுலோம வகுப்பாருள் ஒரு பகுதியினர் கட்டடக்கலை, தேர்வேலை செய்தல், கோபுரங்கட்டல், மண்டபங்களிலும் கோபுரங் களிலும சிற்பங்களை அமைத்தல் முதலிய பணிகளைச் செய்யலாம் என்று வடமொழிச் சாத்திரங்களைத் துணையாகக் கொண்டு கோவில்பட்டர்கள் முதற் குலோத்துங்கன் ஆட்சிக்காலத்தில் திட்டம் வகுத்தனர் என்று ஒரு கல்வெட்டுக் குறிக்கின்றது.4 மேற்கூறப்பெற்ற தொழில்களைச் செய்தவரும், இரும்புக் கொல்லரும், பொற் கொல்லரும், கல்தச்சரும், மரத்தச்சரும், `இரதகாரர் என்ற பிரிவினராவர் என்று மற்றொரு கல்வெட்டுக் கூறுகின்றது. அரசகுலப் பெண்ணுக்கும் வைசியர்க்கும் பிறந்தவன் `ஆயோகவன் எனப்பட்டான் என்று ஒரு கல்வெட்டுக் கூறுகின்றது. ஆயோகர் பிரதிலோம உறுப்பினரைச் சேர்ந்தவராவர். இவர்கள் ஆடைகளை நெய்து அரசர்க்கும் வேதியர்க்கும் கடவுளர்க்கும் கொடுத்து வந்தனர். இவருட்சிலர் திரிபுவனை போன்ற இடங்களில் இறையிலியாக நிலங்கள் பெற்றுக் கோவிலுக்கும் மறையவர்க்கும் வேண்டிய ஆடைகளை நெய்துவந்தனர்.5 வெங்காலநாடு, தென்கொங்கு முதலிய பகுதி களிலிருந்து கல் தச்சருக்கும், பொற்கொல்லருக்கும் சோழ அரசனால் சில புதிய உரிமைகள் வழங்கப்பட்டன என்று கருவூர், பேரூர்க் கல்வெட்டுகள் தெரிவிக்கின்ற. வீட்டில் நடைபெறும் நல்ல காரியங்களுக்கும், அல்லவற்றிற்கும் அவரவர் விருப்பப்படி இரண்டு சங்குகளை ஊதுதல், பறையடித்தல் அல்லது வாத்தியம் வாசித்தல், வீட்டைவிட்டு வெளிச்செல்லுகையில் மிதியடி அணிதல், தம் வீட்டுச் சுவர்களுக்குச் சுண்ணாம்பு பூசுதல், இரட்டைச் சன்னல்களை வைத்த இரண்டடுக்கு மாடி வீடுகளைக் கட்டிக் கொள்ளுதல், வீட்டின் முன்புறத்தை அல்லிமலர் மாலைகளால் அழகு செய்தல் என்பன போன்ற உரிமைகள் அக் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.6 மேலே கூறப்பெற்றவை `புதிய உரிமைகள் என்பதை நோக்க, அக்காலப் பொற்கொல்லரும், கல் தச்சரும் சமுதாயத்தில் எத்தகைய நிலையில் இருந்தனர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இவ்வாறே ஒவ்வொரு குறிப்பிட்ட வகுப்பினரும் பல கட்டுப்பாடுகளுக்குள் அகப்பட்டுத் தம் மனம் போனவாறு, வாழவழியின்றித் தவித்தனர், என்பதை இக்கல்வெட்டுகள் நன்கு உணர்த்து கின்றன அல்லவா? வலங்கை, இடங்கை வகுப்புகள் என்பன குறிப்பிடத் தக்கவை. இப்பிரிவுகள் எவ்வாறு உண்டாயின என்ற உண்மையைக் கூறக்கூடவில்லை. வலங்கையர் சோழப்படை வீரராக இருந்தனர். இடங்கையர் காசியப முனிவரது வேள்வியைக் காக்கத் தீக்குழியிலிருந்து படைக்கப்பட்டனர். சோழமன்னன் அரிந்தமன் என்பான் வடநாட்டிலிருந்து மறையவரைத் தமிழகத்திற்குக் கொணர்ந்தபோது, அவர்தம் மிதியடிகளையும் உடைகளையும் தாங்கிக் கொண்டு இடங்கையர் தென்னாடு வந்தனர்.... இவ்வினத்தார்க்கு ஏதேனும் துன்பம் வருமாயின், இனத்தார் அனைவரும் ஒன்று சேர்ந்து அவற்றைப்போக்க முயல வேண்டும் - கொக்கின் இறகு அணியப்பெற்ற முடிக்கப் பெறாத கூந்தலுடைமையே இவர்க்கு அடையாளம் - இவர்க்கு முன்பாகத் தாரைக் கொம்பும் சங்கும் ஊதப்படல் வேண்டும் - இவ்விதிக்கு மாறு பட நடக்கும் இடங்கையர், இனத்தினின்றும் வெளியேற்றப்படுவர் - அவர்கள் `சுருதிமான்கள் என்று கருதப்பட மாட்டார்கள். இவ்வினத்தாருள் 98 உட்பிரிவுகள் இருந்தன.7 இவ்விடங்கை, வலங்கை இனத்தவர்கள் பெரும்பாலும் வேறுபட்டே இருந்தனர். ஒருவர் தங்கி வழிபட்ட கோவில் மண்டபத்தில் மற்றொரு இனத்தார் தங்கி வழிபட விரும்ப வில்லை. இத்தகைய வெறுப்புணர்ச்சி ஆடல் பாடல் மகளிருள்ளும் நிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்டிர் நிலை தமிழகத்துப் பெண்டிர் கணவரைப் போலவே பெரும் பாலான செயல்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது தெரிகின்றது. கணவன் அறச்செயலைச் செய்தாற் போலவே அவன் மனைவியும் அறச்செயல்கள் செய்ததையும் கல்வெட்டால் அறிகிறோம். பெண்களுக்குத் தனிச்சொத்து இருந்தது. அதனை அவர்கள் விருப்பம் போலச் செலவு செய்தனர். சோழப் பேரரசன் மனைவியான செம்பியன் மாதேவியார் முதல், கோவிற் பணிப்பெண்ணான தேவரடியார் ஈறாகக் கோவிலுக்கும் பிற அற நிலையங்களுக்கும் தானம் செய்துள்ள விவரங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பெண்கள் மடங்களுக்குச் சென்று சமயக் கல்வி கற்றுவந்தனர்.8 முடிமன்னரும் சிற்றரசரும் ஒருத்திக்கு மேற்பட்ட பலரை மனைவியராகப் பெற்றிருந்தனர். எனினும், ஒருவன் ஒருத்தியை மணந்து வாழும் முறையே சமுதாயத்தில் பெருவழக்குடையதாக இருந்தது. உடன்கட்டை ஏறல் கணவன் இறந்தபின் அவன் மனைவி உடன்கட்டை ஏறுதல் என்பது பற்றிச் சில கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. சுந்தர சோழன் இறந்தவுடன், அவன் மனைவியும் முதல் இராசராச சோழனுக்குத் தாயுமான வானவன் மாதேவி உடன்கட்டை ஏறினாள் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. வீரசோழ இளங்கோவேளார் என்ற சிற்றரசன் இறந்தவுடன் அவன் மனைவியான கங்கமாதேவியார் உடன் கட்டை ஏறினாள். கன்னட நாட்டில் கங்க நாட்டுத் தலைவன் மகள் தன் பெற்றோர் தடுத்தும் கணவனுடன் உடன் கட்டை ஏறினாள். இச்செய்தியைக் கன்னட நாட்டுக் கல்வெட்டு விரிவாகக் கூறுகின்றது. இவ்விருவர் நினைவையும் அக்கணவனின் தந்தை பாராட்டுவதை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.9 இறந்த அரசர்க்கு உருவச்சிலைகள் கோவில்களில் அமைத்தலும், பூசை முதலியன செய்தலும் சோழர் கால வழக்கில் இருந்தன. இவையன்றி, இறந்த அரசனுக்குக் கோவில் கட்டிப் பூசை விழா முதலியன நடைபெறச் செய்தலும் இக்கால வழக்கில் இருந்தது. சோழப் பேரரசை ஏற்படுத்திய ஆதித்த சோழனுக்குக் காளத்தியை அடுத்த தொண்டை மாநாடு என்ற இடத்தில் அவன் மகனான முதற் பராந்தகன், ஆதித்தேச்சரம் என்ற கோயிலைக் கட்டினான். முதல் இராசராசன், மேற்பாடியில் அழிஞ்சிகை ஈச்வரம் என்ற கோயிலை அரிஞ்சயன் நினைவாக எடுப்பித்தான். முதலாம் இராசேந்திரன் பஞ்சவன் மாதேவீச்சரம் என்ற கோவிலைப் பஞ்சவன் மாதேவியின் நினைவாகக் கட்டினான். இத்தகைய கோவில் `பள்ளிப்படை எனப் பெயர் பெற்றது. தேவரடியார் கோயில்களிலிருந்து தொண்டாற்றிய பெண்டிருள் தேவரடியார் ஒரு வகையினர், இவர்கள் கோவிலில் திருவலகிடல், திருமெழுகிடல், கடவுள் படைப்புக்குரிய அரிசியைத் தூய்மைச் செய்தல், திருப்பதிகம் பாடுதல் முதலிய பணிகளைச் செய்து வந்தனர். மேலும் இவர்கள் விழாக்காலங்களில் திருநீற்றுத் தட்டையும் மலர்த்தட்டையும் ஏந்தியிருந்தனர். அம்மனை அணிசெய்து எழுந்தருளு வித்தபோது, அம்மனுக்குக் கவரி வீசுதல் இவர்தம் தொழில். இத்தேவரடியார் ஒரு வகுப்பைச் சேர்ந்தவரல்லர். எல்லா வகுப்புப் பெண்டிரும் இப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது தெளிவாகின்றது. முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் `ஆச்சப்பிடாரன் கணபதி நம்பி என்ற அழகிய பாண்டிய பல்லவரையன் ஒரு படைத்தலைவன். அப்பெருமகன் பாலாற்றங்கரையிலுள்ள திருவல்லம் கோவிலிற் பணிகள் செய்வதற்குத் தன் குடும்பப் பெண்களைத் தேவரடியாராக ஒப்புவித்தான்; அப்பெண்கள் சூலப்பொறி பொறிக்கப்பட்டுக் கோவிற் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று திருவல்லம் கல்வெட்டுக் கூறுகின்றது. தேவரடியாருள் சிலர் நடனமாடவும் அறிந்திருந்தனர்.10 தனியிலார் இவர்கள் ஆடல் பாடல்களில் வல்லவர். இவருள் சிவன் கோவிலில் பணி செய்தவர் ரிஷபத் தளியிலார் என்றும், வைணவ கோவிலில் பணி செய்தவர் ஸ்ரீ வைஷ்ணவ மாணிக்கம் என்றும் பெயர் பெற்றனர் என்று கருதக் கல்வெட்டுகள் இடந்தருகின்றன. இவர்கள் நாளடைவில் தேவரடியாரைப் போலக் கவரி வீசுதல் முதலிய பணிகளையும் மேற்கொண்டனர்.11 இத்தகைய ஆடல் மகளிரும் தேவரடியாரும் செய்துள்ள அறச்செயல்கள் பல. எண்ணிறந்த கல்வெட்டுகள் இவ்வுண்மையைத் தெரிவிக்கின்றன. இத் தேவரடியார் விரும்பினால் ஒருவரை மணஞ்செய்து கொண்டு வாழ வசதியளிக்கப்பட்டது. நாகன் பெருங்காடன் என்ற ஒருவன், சதுரள் சதுரி என்ற தேவரடியாளை மணந்து கொண்டான் என்று திருவொற்றியூர்க் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.12 அடிமைகள் மக்களை அடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்தமையை உணர்த்தும் கல்வெட்டுகள் சில உண்டு. அவருள் பெரும்பாலர் கோவில்களுக்கே தம்மை விற்றுக் கொண்டனர்; பிறரால் விற்கப்பட்டனர் சிலர். மாதரிருவர் தம்மையும் தம் உற்றார் உறவினரையும் ஒரு கோவிலுக்கு விற்ற செய்தி ஒரு கல்வெட்டில் காணப்டுகிறது. ஒருவன் 13 காசுகளுக்கு அறுவரைக் கோவிலுக்கு விற்றான். திருவிடந்தைப் பெருமாள் கோவிலுக்கு 12 குடும்பங்களைச் சேர்ந்த மீன் பிடிப்பவர் தங்களை அடிமைகளாக அர்ப்பணித்துக் கொண்டார்கள். அரசன் முத்திரையிடப்பட்ட பெண்கள் அரண் மனையில் அலுவல் பார்த்தனர். 700 காசுகளுக்கு மாதர் நால்வர் திருவாலங்காட்டுக் கோவிலுக்கு விற்கப்பட்டனர். சிற்றரசர் களிடம் அடிமைகள் இருந்தனர். அவர்கள் மணந்துகொண்ட மனைவிமார் அடிமைகள் சிலரைச் சீதனமாகக் கணவர் வீட்டிற்குக் கொண்டு வருதல் அக்கால வழக்கமாக இருந்தது. அங்ஙனம் கொண்டு வரப்பெற்ற அடிமைகளைத் தம் மனைவியர் இசைவு பெற்று வைராதராயர் என்ற பெருமகன் ஒரு மடத்திற்கு விற்றுவிட்டான். உடனே அவ்வடிமைகளுக்குச் சூலப்பொறி பொறிக்கப்பட்டது. அவர்கள் தம் கடமைகளிலிருந்து தவறின் தண்டிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டது.13 வேளாளர் மூவர், மாதர் இருவரையும் அவர் தம் பெண்களையும் திருவக்கரைக் கோவிலுக்கு விற்று விட்டனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள கீழையூர்க் கோவிலுக்கும் மடத்திற்கும் விடப்பட்ட அடிமைகள் பலராவர். இவ்வாறே ஒரு பெருமகன் மட அடிமைகள் பலரை விலைக்கு வாங்கித் திருவாலங்காட்டு மடம் ஒன்றுக்குத் தானமாகக் கொடுத்தான். கி.பி. 1201-ஆம் ஆண்டில் ஒரு வேளாளன் தன்னையும், தன்பெண்கள் இருவரையும் வறுமையின் காரணமாகத் திருப்பாம்புரம் கோவிலுக்கு விற்று விட்டான். அடிமைகள் பரம்பரையாகக் குறிப்பிட்ட சிலரிடம் இருந்து வந்தனர் என்பதையும் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஒரு கல் தச்சன் தன்னையும் தன் மனைவியையும் தன்னுடைய புதல்வர் நால்வரையும் ஒரு கோவிலுக்கு விற்று விட்டான்.14 திருமணத் திருத்தம் வடஆர்க்காடு மாவட்டத்திலுள்ள படைவீட்டைத் தலை நகராகக் கொண்டு சோழர்க்கு அடங்கிச் சம்புவராயர் என்ற சிற்றரசர் தொண்டை நாட்டின் ஒரு பகுதியை ஆண்டுவந்தனர். படைவீட்டு நகரத்தைச் சூழ்ந்த நிலப் பகுதியில் வேதியர் பலர் வாழ்ந்துவந்தனர். அவருள் கன்னடரும், தமிழரும், தெலுங்கரும், இலாளரும் எனப் பல வகையினர் இருந்தனர் ஒரு காலத்தில் அவரிடையே மணப்பெண்ணுக்காக மணமகன் வீட்டாரிடம் பொருள் பெறும் வழக்கம் தோன்றியது. பொன் கொடுத்துப் பெண் கொள்ளும் வாய்ப்பு இல்லாதவர் துன்பப்பட்டனர். இந்நிலை வளர்ந்து வந்ததைக் கண்ட அவ்வேதியருள் நல்லறிஞர், சம்புவராயனது ஆணைபெற்று நல்லதோர் திருமண ஏற்பாட்டைச் செய்துகொண்டனர். இற்றைநாள் முதலாக இந்தப் படைவீட்டு ராஜ்யத்துப் பிராமணரில் கன்னடியர், தமிழர், தெலுங்கர், இலாளர் முதலான அசேஷ கோத்ரத்து அசேஷ சூத்திரத்தில் அசேஷ சாகையிலவர்களும் விவாகம் பண்ணுமிடத்துக் கன்னியா தானமாக விவாகம் பண்ணக் கடவராகவும். கன்னியாதானம் பண்ணாமல் பொன் வாங்கிப் பெண் கொடுத்தால் பொன் கொடுத்து விவாகம் பண்ணினால், இராஜதூஷணத்துக்கு உட்பட்டுப் பிராமணீயத்துக்கும் புறம்பாகக் கடவர் என்று பண்ணின தர்மதாபன சமயபத்திரம்; இப்படிக்கு அசேஷ வித்வ மகா ஜனங்கள் எழுத்து.15 இவ்வாறு ஒவ்வொரு இனத்தவர் அல்லது தொழில செய்பவர் தம்மோடு செய்துகொண்ட பலவகை ஏற்பாடு களைப் பல கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கோவிலில் கடன்பெறுதல் தஞ்சை மாவட்டத்து ஆலங்குடி என்னும் சிற்றூரில் கொடிய பஞ்சம் கி.பி. 1152இல் ஏற்பட்டது. அதனால் அவ்வூரார் அக்கோவில் பண்டாரத்திலிருந்து சுவாமிக்கும் அம்மனுக்கும் உரிய 1011 கழஞ்சு நிறையுள்ள பொன் நகைகளையும், 464 பலம் நிறையுள்ள வெள்ளிச் சாமான்களையும் கடனாகப் பெற்றனர். பஞ்சம் தீர்ந்த பிறகு இக்கடன் திருப்பித் தரவேண்டும் என்பது ஏற்பாடு.16 கல்வி நிலை முன்னுரை நமது தமிழகம் ஒரு காலத்தில் தமிழ் ஒன்றையே பேசும் மக்களைக் கொண்ட சமுதாயத்தைப் பெற்றிருந்தது. ஆயின், நாளடைவில் வடமொழி வல்லாராகிய சமணரும், பௌத்தரும், வைதிகரும் தத்தம் சமய நூல்களுடன் இந்நாட்டில் குடியேறினர். அவர்தம் சமயக் கருத்துகள் நாளடைவில் தமிழ்ச் சமுதாயத்தில் இடம் பெற்றன. தமிழர் சிலர் பௌத்தத்தையும், சமணத்தையும் தழுவினர். வைதிகர் கொணர்ந்த சமயக் கருத்துகளுள் கடவுளர் பற்றிய கருத்து களும் தமிழரிடம் முன்னரே இருந்த சமயக் கருத்துகளோடு கலக்கலாயின. இங்ஙனம் ஏற்பட்ட வடநாட்டினர் கூட்டுறவால் தமிழகத்தில் பல சமயங்கள் பரவத் தொடங்கின; வழிபாட்டு முறைகளும் சமயக்கலைகள் பலவும் பரவலாயின. தமிழரசர், விருந்தினரை வரவேற்று உபசரித்தல்போல, இவ்வடவரை அன்போடு வரவேற்று ஆதரவு நல்கினர்; சமணப் பள்ளிகட்கும், பௌத்த விகாரங்கட்கும் நிலதானங்கள் அளித்தனர்; நான்மறையாளர்க்குப் பல சிற்றூர்களைத் தானமாக வழங்கினர். இங்ஙனம் தமிழகத்தில் குடியேறிய வடவர் நாளடைவில் தமிழைக் கற்றுத் தமிழ் மக்களோடு நெருங்கிப் பழகலாயினர். கபிலர், பரணர் போன்ற வைதீகச் சான்றோர் தமிழில் பெரும் புலவர்களாக விளங்கினர்; மன்னர்களால் நன்கு மதிக்கப் பெற்றனர். சமணர் கூட்டுறவால் `சல்லேகனம் (வடக்கிருத்தல்) போன்றவை தமிழ் வேந்தரால் கைக்கொள்ளப் பட்டன. வைதிகர் கூட்டுறவால் தமிழரசர் இராச சூய யாகம் போன்ற வேள்விகளைச் செய்யலாயினர்; குறிஞ்சிநிலத் தெய்வமான முருகன் சுப்பிரமணியனாக்கப் பட்டான்; பாலைநிலத் தெய்வமான கொற்றவை துர்க்கை எனப் பெயர் பெற்றாள்; சிவன் வேதகால உருத்திரனோடு இணைக்கப் பட்டான். இங்ஙனம் சமயத் துறையிலும் சமுதாயத் துறையிலும் வடவர் கூட்டுறவால் ஏற்பட்ட மாற்றங்கள் பலவாகும். இவற்றுள், தனித் தமிழ் மொழியில் வடசொற்கள் கலக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 4 ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கதம்ப அரசமரபைத் தோற்றுவித்த மயூரசர்மன் என்ற பிராமணன், காஞ்சியிலிருந்த கடிகையில் கல்வி கற்கவந்தான் என்று தாளகுண்டா கல்வெட்டுக் கூறுகின்றது. இக்காஞ்சி வடமொழிக் கல்லூரி பல்லவ அரசன் பார்வையில் இருந்தது.17 தென்னிந்தியாவில் பௌத்தத்திற்குப் பெயர் போன நகரமாகவும் அவ்வாறே சமணத்திற்குச் சிறப்புற்ற நகரமாகவும், வடமொழிக் கல்விக்குப் புகழ் வாய்ந்த கோ நகரமாகவும் காஞ்சி விளக்கமுற்றிருந்தது என்பதைச் சமண, பௌத்த, வைதீக நூல்கள் கூறுகின்றன. இக்கல்விச் சிறப்பு கி.பி. 7ஆம் நூற்றாண்டிலும் குறையாமல் இருந்த தாற்றான், திருநாவுக்கரசர், கல்வியிற் கரையிலாத காஞ்சிமா நகர் எனப் பாராட்டினார் போலும். இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழிங்கர் (சோழசிங்கபுரம்) மலைமீது இருந்த கடிக்குக்கு மானியம் விடப்பட்டதாகத் திருவல்லம் கல்வெட்டுக் குறிக்கின்றது. இங்ஙனம் கடிகையிலிருந்த அசலம் (மலை) ஆதலால், சோழிங்கர் மலை `கடிகாசலம் எனப்பட்டது. பாகூர் என்பது திருப்பாதிரிப்புலியூர்க்கும், புதுச்சேரிக்கும் இடையிலுள்ள பெரிய பாதையில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இங்குப் பல்லவர் காலத்தில் ஒரு வடமொழிக் கல்லூரி இருந்தது. அக் கல்லூரியில் பதினான்கு கலைகள் கற்பிக்கப்பட்டன; பதினெட்டு வகை வித்தைகளும் நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள், மீமாம்சை, நியாயம், தர்ம சாதிரம், புராணம், மருத்துவம், வில்வித்தை, இசை, பொருள் நூல் முதுலியனவும் பாங்குறக் கற்பிக்கப்பட்டன. இக்கல்லூரி நடப்பதற்கு மூன்று கிராமங்கள் தானமாக விடப்பட்டன.18 பேரூர்களிலும் நகரங்களிலும் பிராமணர் தங்கியிருந்த பகுதி `பிரமபுரி எனப்பட்டது. பல்லவப் பேரரசர் தனிப்பட்ட மறையவர் கல்வியைப் பாராட்டி ஊர்களையும் நிலங்களையும் தானஞ் செய்தனர். இரண்டு வேதங்களிலும் ஆறு அங்கங்களிலும் வல்லவனான கோலசன்மன் என்ற பிராமணனுக்கு ஆந்திர நாட்டில் ஓங்கோடு என்ற சிற்றூர் தானமாகக் கொடுக்கப்பட்டது. அதனைக் குறிப்பதே ஓங்கோட்டுப் பட்டயம்.19 இரண்டாம் நந்திவர்மனால் சோமயாஜி என்ற மறையவனுக்குக் கொடுகொள்ளி என்ற சிற்றூர் தானமாக வழங்கப்பட்டது. அவன் நான்கு வேதங்களில் வல்லவன்; சாமவேதம் பாடுவதில் சமர்த்தன்; ஆறு அங்கங் களையும் பழுதற உணர்ந்தவன்; செய்யுள், நாடகம், கதைகள், இதிகாசங்கள் இவற்றில் சமர்த்தன்; நல்லொழுக்கம் மிக்கவன்; வேத விதிப்படி நடப்பவன் என்று காசாக்குடிப் பட்டயம் அவன் சிறப்பினை விளக்குகிறது.20 பொதுக் கல்வி வடமொழிக் கல்லூரிகளை வைத்து ஆதரித்தாற் போலப் பல்லவ மன்னர் தமிழ்க் கல்லூரிகளையும் வைத்து ஆதரித்தனர் என்று கூறுதற்குச் சான்றுகள் இல்லை. ஆயினும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் உரைநடையிலும் செய்யுள் நடையிலும் இருத்தலைக் கொண்டும், பல்லவர் காலத் தமிழ் நூல்களாகச் சைவத்திருமுறைகளும், ஆழ்வார் அருட்பாடல்களும், நந்திக் கலம்பகம், பாரதவெண்பா, திருக்கயிலாய ஞானவுலா முதலிய நூல்கள் இருத்தலைக் கொண்டும், பல்லவர் காலத்தில் தமிழ்க் கல்வி, நாட்டு மொழிக் கல்வி என்ற முறையில் நன்கு சிறந்திருந்தது என்று கொள்ளுதல் பொருத்தமாகும். செப்புப் பட்டயங்களில் எழுத்துகளைச் செதுக்கும் கம்மியரும், கற்பாறைகளில் எழுத்துகளைச் செதுக்கிய கல் தச்சரும் கற்றறிந்த மாந்தர் என்பதில் தடையில்லையன்றோ? இங்ஙனம் பொதுக் கல்வி இருந்ததோடு, கல்லாதவர்க்கும், கற்றவர்க்கும் பயன்படத் தக்கவகையில் கோவில்களில் பாரதம், இராமாயணம் போன்ற இதிகாச நிகழ்ச்சிகளும், புராணச் செய்திகளும் பொதுமக்களுக்குப் படித்து விளக்கப்பட்டன. இத்தகைய சமய பிரச்சாரத்தினால் பொதுமக்கள் இதிகாசங்கள் முதுலியவற்றைப் படியாமலேயே நல்லறிவு பெறலாயினர். மடங்கள் சமயப் பெருமக்கள் தங்கியிருந்த இடங்கள் மடங்கள் எனப் பெயர் பெற்றன. அத் தலைவர்கள் சிறந்த கல்விமான் களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் சிறந்த கல்விமான்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் விளங்கினர். அவர்கள் வாழ்ந்த மடங்கள் மாணவர்க்குக் கல்வி புகட்டும் கலைக் கூடங்களாகவும், யாத்திரிகர், திக்கற்றவர் முதலியோர்க்குப் புகலிடங்களாகவும், சமயவுண்மைகளை உணர்த்தும் அருள் நிலையங்களாகவும் விளங்கின. இவை அரசர், சிற்றரசர் செல்வர் முதலியவரால் அமைக்கப் பட்டவை. சைவ மடங்களுள் காபாலிக மடம், பாசுபத மடம், காளாமுக மடம் எனப் பல திறப்பட்டவை இருந்தன. காபாலிகர் மடம், காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலை அடுத்து இருந்தது என்பது மகேந்திரன் வரைந்த மத்த விலாசத்தைக் கொண்டு உணரப்படும். கொடும்பாளூர் முதலிய இடங்களில் காளாமுகச் சைவமடங்கள் இருந்தன என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. திருக்கச்சி மேற்றளியைச் சார்ந்த மடமொன்று நந்திவர்மன் ஆட்சிக் காலத்தில் இருந்தது என்று கல்வெட்டுக் கூறுகின்றது. காவிரிப் பாக்கத்து வரதராசப் பெருமாள் கோவில் கல்வெட்டில் `மடத்துச் சத்த பெருமக்கள் என்ற தொடர் காணப்படுகிறது. இத் தொடரால், மடத்தை மேற்பார்த்த அறிஞர் எழுவர் இருந்தனர் என்பது தெரிகின்ற தன்றோ? இராசசிம்ம பல்லவன் சைவ சித்தாந்தத்தில் வல்லவன் என்று காஞ்சி கயிலாசநாதர் கோயிற் கல்வெட்டுக் கூறுதலை நோக்க, பல்லவர் காலத்தில் சைவ சித்தாந்த சாத்திரங்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது பெறப்படும். எனவே, அச் சமயக்கல்வி சில மடங்களிலேனும் கற்பிக்கப்பட்டு வந்திருத்தல் வேண்டும் என்பது தவறாகாது. பல்லவர் காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டி மன்னர் ஆட்சியில் தோன்றிய வேள்விக்குடி பட்டயம், சின்னமனூர்ப் பட்டயம் போன்ற பட்டயங்களில் வரையப்பட்டுள்ள அகவற்பாக்களைக் காண, அவற்றை எழுதப் பாண்டிய மன்னரால் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப் புலவர்கள் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெளிவாகும். பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் கிராம சபைகள் இருந்து பல துறைகளிலும் பணியாற்றியதையும்,. அரசாங்க அலுவலர் பலரிருந்து அரசகாரியங்களை முறைபடக் கவனித்து வந்ததையும் நோக்க, அவர் அனைவரும் கல்விகற்ற பெருமக்கள் என்று கோடல் தவறாகாது. சோழர் காலம் சோழர் காலத்தில் திண்ணைப் பள்ளிகள் மிக இருந்தன. அவற்றில், இருந்த ஆசிரியர் `வாத்தி எனப்பட்டார்.21 கோவில்களில் திருப்பதிகங்கள் பாடுதலும், இராமாயணம், பாரதம், புராணங்கள் இவற்றை விளங்க உரைத்தலும் இருந்தமையால், பொது மக்கட்கு இவற்றின் வாயிலாகக் கல்வி பரப்பப்பட்டு வந்ததென்று கொள்ளலாம். பல்லவர் காலத்தில் இருந்தவாறே சோழர் காலத்திலும் வேத பாடசாலைகள் இருந்தன; சமணப் பள்ளிகளில் கல்வி கற்பிக்கப்பட்டது. பௌத்த விகாரங்களும் கல்வித் தொண்டை மேற்கொண்டன. சோழப் பெருவேந்தர் வடமொழிக் கல்வியை நன்கு வளர்த்தனர். வியாகரணம் போன்ற தனித் துறைக் கல்விக்குப் பொருளுதவி செய்யப்பட்டது.22 வடமொழியில் உயர் கல்வி பெறுதற்காக எண்ணாயிரம், திரிபுவனை, திருமுக்கூடல் முதலிய இடங்களில் பெரிய வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. எண்ணாயிரம் என்ற இடத்திலிருந்த வடமொழிக் கல்லூரியில் 270 முதல்நிலை மாணவரும் 70 மேல்நிலை மாணவரும் கற்க வசதி ஏற்படுத்தப்பட்டது. 14 ஆசிரியர்கள் இருந்தார்கள். முதல்நிலை மாணவருள் நாற்பதின்மர் இலக்கணம் படித்தனர். எஞ்சியோர் வேதங்களைக் கற்றனர். மேனிலை மாணவர் இலக்கணம், மீமாம்சை, வேதாந்தம் முதலிய பாடங்களைக் கற்றனர். புதுச்சேரிக்கு அண்மையில் உள்ள திரிபுவனையில் இருந்த வடமொழிக் கல்லூரியில் 270 மாணவரும் 12 ஆசிரியரும் இருந்தனர். அங்குப் பாரதம், இராமாயணம், மனுசாத்திரம் முதலியன கற்பிக்கப்பட்டன. ஆசிரியரும், மாணவரும் கவலையின்றி வாழ வசதி செய்யப்பட்டிருந்தது. திருமுக்கூடல் வடமொழிக் கல்லூரியில் இருக்கு, யஜுர் ஆகிய இரண்டு வேதங்களும், இலக்கணமும் கற்பிக்கப் பட்டன. மூன்று ஆசிரியர் பணியாற்றினர். ஒவ்வொரு வேதத்தையும் படிக்கப் பத்து மாணவர்க்கு இடமளிக்கப் பட்டது. இலக்கணம் கற்க 20 மாணவர் சேர்க்கப் பெற்றனர். விக்கிரம சோழன் ஆட்சியில் திருவாவடுதுறையில் மருத்துவக் கல்லூரி இருந்தது. திருவொற்றியூர்க் கோவிலில் வடமொழி இலக்கணம் கற்பிக்க ஒரு கல்லூரி இருந்தது. அது குறைவின்றி நடைபெற 65 வேலி நிலம் தானமாக விடப்பட்டிருந்தது.23 மடங்கள் சோழர் காலத்தில் சமயச் சார்பான பலவகை மடங்கள் ஏற்பட்டுப் பொதுக் கல்வியையும் சமயக் கல்வியையும் மக்களிடையே நன்கு பரப்பின என்று கூறலாம். காளாமுகச் சைவர் கொடும்பாளூர் முதலிய இடங்களில் மடங்களை அமைத்துக் கொண்டு வாழலாயினர்.24 திருவொற்றியூரில் காபாலிக மடம் இருந்தது. அதன் தலைவர் அனைவரும் `சதுரானன பண்டிதர் என்றே பெயர் பெற்றனர். அவர்கள் மடத்து ஆட்சியில் பங்கு கொண்டனர்; காபாலிக சைவத்துக்குரிய `சோமசித்தாந்தம் என்ற நூலைப் பொதுமக்களுக்கு எடுத்து விளக்கினார்.25 கோளகி மடம் என்ற பெயரில் பல மடங்கள் பல ஊர்களில் இருந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பா சமுத்திரத்தை அடுத்த வாலீவரம் என்னும் இடத்தில் ஒரு மடம் இருந்தது. அங்கு இரண்டு ஆசாரியர்கள் இருந்தனர். அவர்கள் `திருஞானம் என்னும் நூலைக் கோவிலிற் படித்து விளக்கினார். திருச்செந்தூர் வட்டத்திலுள்ள ஆற்றூரில் கோளகி மடம் இருந்தது. அவ்வூர்க் கோவிலில் திருஞானத்தைப் பாடத் தென்னிந்திய மடங்கள் பலவற்றிலிருந்து 11 சீடர்கள் நியமனம் பெற்றிருந்தனர். அப் பல மடங்களின் தலைவர்கள் பல சந்தானங்களைச் சேர்ந்தவர்கள். இவ்விவரங்களிலிருந்து கோளகி மடங்கள் பல சந்தானங்களையுடையவை என்பதும், திருவாரூர், மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் கோளகி மடங்கள் இருந்தன என்பதும் அறியக் கிடக்கின்றன.26 கோளகி மடத்தை முதன் முதலில் டெக்கானில் ஏற்படுத்தியவர் விவேவரசம்பு என்பவர் அம்மடத்தில் பொதுக் கல்வியும் சமயக் கல்வியும் கற்பிக்க ஆசிரியர்கள் இருந்து வேதங்கள், இலக்கியம், ஆகமங்கள் இவற்றைக் கற்பித்தனர்; இசை, நடனக் கலைகளை வளர்க்கப் பாடு மகளிரும், மருத்துவர் ஒருவரும், பலவகைப் பணியாளரும் இருந்தனர்; ஆடுமகளிரும், வாத்தியக்காரரும் நியமனம் பெற்றனர்.27 இந்த ஏற்பாட்டை நோக்கத் தமிழகத்துக் கோளகி மடங்களிலும் ஏறத்தாழ இந்த ஏற்பாடே நிலவியிருந்தது என்று கொள்ளுதல் பொருத்தமாகும். காசியைச் சேர்ந்த கொல்லா மடத்துக் கிளை மடங்கள் தொண்டை நாட்டுத் திருப்பாசூர் முதலிய இடங்களில் இருந்தன. பாண்டிய நாட்டுப் பிரான் மலையில் ஒரு மடம் இருந்தது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் அந்த மடத்துக்கு நிலங்களை அளித்தான். திருவானைக்காவிலும் ஒரு மடம் இருந்தது.28 காசியைச் சேர்ந்த பிட்சா மடத்துக் கிளைகள் பந்தணை நல்லூர், பாண்டி நாட்டுத் திருப்புத்தூர், தேவிகாபுரம் (வட ஆர்க்காடு மாவட்டம்), திருநெல்வேலி மாவட்டத்து மணப்படைவீடு முதலிய இடங்களில் இருந்தன. அவற்றைச் சேர்ந்த தலைவர்கள் சமயப் பிரசாரம் செய்து வந்தனர்.29 ஏறத்தாழக் கி.பி. 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சில புதிய மடங்கள் தோன்றின. அவற்றுள் சிறந்தது திருச்சத்தி முற்றத்துத் திருஞானசம்பந்தன் திருமடம் என்பது. அம்மடத்தைச் சேர்ந்த ஆண்டார் பரிதிப் பெருமாள் என்பவரது சந்தானத்தில் வந்த ஒருவர் திருச்சத்தி முற்றத்து முதலியார் அவரது சந்தானத்தைச் சேர்ந்த கிளைமடங்கள் ஆனைக்கா, உசாத்தானம், வீழிமிழலை, வலிவலம் முதலிய இடங்களில் தோன்றின.30 திருவிடை மருதூரில் இருந்த மாளிகை மடத்து முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த தத்தனுடையார் ஈசானதேவர் என்பவர் நல்லூரில் இருந்தார். அவருடைய மாணவி அவருக்கு ஒரு மடம் கட்டித்தந்தாள்; நிலங்களையும் உதவினாள்31 பெரும்பற்றப் புலியூர் நம்பி, தில்லையிலிருந்த மாளிகை மடத்துத் தலைவரான வெண்காடர்க்கு மாணவரான விநாயகன் என்பவர் தமக்கு ஞானாசிரியர் என்று கூறுகிறார். இதனால் நம்பியின் காலத்தில் தில்லையில் மாளிகை மடம் ஒன்று இருந்தது என்பது தெரிகிறது.32 இம்மாளிகை மடத்துத் தலைவர் ஒருவர்பிற்கால நூல்களாகிய வேதாரணிய புராணப் பாயிரத்திலும், திருக்கானப்பேர்ப் புராணப் பாயிரத்திலும் துதிக்கப் பெற்றுள்ளார்.33 இத்துதிகளால், மாளிகை மடத்து ஆசிரியர்கள் சிவஞான நூல்களில் வல்லவர்கள் என்பதும், அவர்களிடம் பெரும் பற்றப் புலியூர்நம்பி போன்றோர் பலர் படித்துப் புலமையும் ஞானமும் பெற்றனர் என்பதும் தெளியலாம். இத்தகைய மாளிகைமடமே திருவிடைமருதூரில் இருந்தது என்று கோடலில் தவறில்லை. சண்பைக்குடி முதலியார் சந்தானத்தைச் சேர்ந்த மடம் ஒன்று திருவானைக்காவில் இருந்தது. முதல் மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1230) திருவாரூரில் ஆசாரம் அழகியான் திருமடம் என்று ஒன்று இருந்தது. அதன் கிளை பாண்டியநாட்டுத் திருப்புத்தூரில் திருஞான சம்பந்தன் திருமடம் என்ற பெயருடன் விளங்கியது. மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் கோவந்தபுத்தூரில் திருத்தொண்டத் தொகையான் திருமடம் என ஒன்று திகழ்ந்தது. அதன் கிளை மடம் தில்லையில் இலங்கியது. பாண்டிநாட்டுத் திருப்புத்தூரில் சுமார் கி.பி. 1280இல் இதே பெயர் கொண்ட மடம் ஒன்று இருந்தது.34 ஆண்டார் - மருதப்பெருமாள் சந்தானத்தைச் சேர்ந்த நமசிவாயம் என்பவர் ஏறத்தாழக் கி.பி. 1230 - இல் திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டன் திருமடத்தைக் கட்டினார். அதற்கு நிலம் தானம் செய்யப்பட்டது.35 அரச குருமார் சோழர் வழிவழிச் சைவராதலால், சிறந்த பக்திமான்களாக விளங்கினர். அவர்கள் தீட்சைபெற்ற சிவனடியாராக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். சிவபாத சேகரனான முதலாம் இராசராசனுக்கு ஈசானசிவ பண்டிதர் அரசகுருவாக இருந்தார். அவர் சித்தாந்தசாரம் என்னும் நூலை எழுதியவர். முதலாம் இராஜேந்திரனுக்குச் சர்வசிவபண்டிதர் அரச குருவாக விளங்கினார். முதற் குலோத்துங்கன் தன் குருதேவர் சொன்னபடி நூற்றெட்டுச் சதுர்வேதிபட்டர்களுக்கு ஒரு சிற்றூரைப் பிரமதேயமாக விட்டான். ஈசுவரசிவன் என்பவர் மூன்றாம் குலோத்துங் கனுடைய அரசகுரு. அவர் சிவதரிசனம் என்னும் நூலிலும் பிற வித்தைகளிலும் வல்லவர். அவர் சித்தாந்த ரத்னாகரம் என்னும் சைவ சமய நூலைச் செய்தார். திருலோசன சிவாசாரியார் என்பவர் சித்தாந்த சாராவளி என்பதன் ஆசிரியர்.36 தாராசுரத்து இராசராசேசுவரத்தில் நூற்றெட்டுச் சிவாசாரியருடைய திருஉருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் கீழும் `தத்புருஷசிவா, `அகோர சிவா, `ஈசான சிவா, `தர்மசிவா என அவரவர் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிவாசாரியர்களும் முற்சொல்லப்பட்ட அரச குருமாரும் சமய நூல்கள் சிலவற்றையேனும் எழுதி வெளியிட்டிருக்கலாம்; தமிழ் மக்களுக்குச் சமயப் பிரசாரம் செய்திருக்கலாம் என்று கோடலில் தவறில்லை. குகைகள் குகைகள் என்பன ஒருவகை மடங்கள். இவற்றின் குருமார் திருமுறைகளைப் பாதுகாத்தனர்; பிறருக்குக் கற்பித்தனர்; யாத்திரிகரை உண்பித்தனர். இத்தகைய குகைகள் திருத்துறைப் பூண்டி, குறுக்கை, சீகாழி, திருவிடைவாய், திருப்புகலூர், திருமாகாளம், திருமணஞ் சேரி, தில்லை, இராமநாதபுர மாவட்டத்திலுள்ள சதுர்வேதி மங்கலம் முதலிய இடங்களில் இருந்தன என்பது கல்வெட்டுகளால் தெரிகின்றன.37 இக் குகைகள் பெரும்பாலும் சிவன் கோவில்களுள் கட்டப்பட்டன. பாதுகாப்பு மிகுந்தனவாக இருந்தன; திருமுறைகளில் வல்ல சைவத்துறவிகளைத் தலைவர்களாகப் பெற்றிருந்தன. இத்தலைவர்களிடம் பயிற்சி பெற்ற சீடர்கள், பல்வேறு குகைகளில் இருந்து திருமுறைத் தொண்டு செய்து வந்தனர் என்பது கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது. சரவதி பண்டாரம் கோவில்களிலும், மண்டபங்களிலும், நூல் நிலையங்கள் இருந்தன என்பது சில கல்வெட்டுகளால் தெரிகின்றன.38 இத்தகைய நூல் நிலையங்கள் இருந்திராவிட்டால், இன்று நாம் காணும் பழந்தமிழ் நூல்கள் பாதுகாக்கப்பட்டிரா அன்றோ? தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் பேணி வளர்ந்த நூல் நிலையமே அவர்க்குப் பின்வந்த மகாராட்டிரரால் வளர்க்கப் பட்டது. அதுவே இன்று தஞ்சை அரண்மனையிலுள்ள சரவதி மகாலில் இருக்கும் பெரிய நூல் நிலையமாகும்.39 பிற்காலம் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சியில் மடங்கள் செழிப்புற்றிருந்தன. அக்கிரகாரங்கள் பல ஏற்பட்டமையால் வடமொழிக் கல்வி நன்கு வளர்ச்சியுற்றது. வெள்ளையர் ஆட்சி ஏற்பட்ட மிகப் பிற்பட்ட காலத்திலும் அரசர்க்குப் பதிலாகப் பச்சையப்ப முதலியார் போன்ற வள்ளல்கள் கல்வி பரவத் தொண்டு செய்தனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுள்ள கல்வெட்டு இவ்வுண்மையை உணர்த்துகின்றது. இந்து மாணவர்க்குச் சட்டம் கற்பிக்கவும், ஆங்கிலம் கற்பிக்கவும் இரண்டு ஆசிரியர்கள் பச்சையப்பர் அறத்தைக் கொண்டு நியமிக்கப்பட்டனர்.40 கல்வெட்டுகளும் தமிழ்க் கல்வியும் சேர, சோழ பாண்டிய வேந்தரும், நாயக்க மன்னரும், பிறரும் வடமொழிக் கல்விக்கு ஆதரவு தந்தது போலத் தமிழ்க் கல்விக்குத் துணை புரிந்தனர் என்று கூறத்தக்க நிலையில் தமிழ்க் கல்லூரிகள் இருந்தனவாகக் கூறுவதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் இல்லை. ஆயினும், தமிழகத்தில் நாட்டு மருத்துவமோ, நாட்டுக் கல்வியோ வளராமலில்லை. எண்ணிறந்த தமிழ்ப் புலவர் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அவர்கள் இயற்றிய நூல்களும் பாக்களும் பலவாகும். ஏறத்தாழக் கி.பி. 6 அல்லது 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்பிடுகு முத்தரையன் என்ற சிற்றரசனைப் புலவர் நால்வர் பாராட்டிப் பாடிய பாடல்கள், திருச்சிராப்பள்ளியை அடுத்த செந்தலை என்னும் ஊரிலுள்ள சிவன் கோவிலில் கல்வெட்டு களாகக் காணப்படுகின்றன. அவற்றைப் `பாய்ச்சில் வேள்நம்பன், `ஆசாரியர் அநிருந்தர், `கோட்டாற்று இளம் பெருமானார், `குவாவங் காஞ்சன் என்னும் நால்வரும் பாடியுள்ளனர். வேள்விக்குடிச் செப்பேடுகளில் காணப்படும் ஆசிரியப் பாவினைப் பாடியவர் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த - பாண்டிய நாட்டுப் புலவரான - ஏனாதி சாத்தன் சாத்தன் என்பவர். கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ அரசனாக இருந்த அபராஜிதவர்மன் திருத்தணிகை வீரட்டானேசுவரர் கோவிலில் பாடிய வெண்பா இன்னும் கல்வெட்டாகக் காட்சியளிக்கின்றது. ஏறத்தாழகி.பி. 10ஆம் நூற்றாண்டில் வெட்டப் பட்டதாகக் கருதப்படும் கல்வெட்டு ஒன்று மதுரையை அடுத்துள்ள கீழ்மாத்தூர்ச் சிவன் கோவிலில் உள்ளது. அக்கோவிலைக் கட்டியவர் பல்கலை விற்பன்னரும், பெரும் புலவருமாகிய தென்னவன் தமிழவேள் என்று அக் கல்வெட்டுக் கூறுகின்றது. புதுக்கோட்டைச் சீமையில் சித்தன்னவாசல் மலைக் குகையில் பாடல் வடிவில் அமைந்த கல்வெட்டு, மதுரையாசிரியன் இளங்கௌதமனார் என்பவரால் பாடப்பட்டது. இவர் காலம் கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதற்குலோத்துங்கன் காலத்தில் (கி.பி. 1070 - 1120) தமிழ்நாட்டுப் பெரும் புலவராக விளங்கியவருள் மருதத்தூருடையான் குன்றம் திருச்சிற்றம்பலமுடையான், கவி குமுத சந்திரன் திரு நாராயண பட்டன், வீரைப்பரசமய கோளரி மாமுனி, நெற்குன்றங்கிழார் களப்பாள ராசர் என்பவர் குறிப்பிடத் தக்கவர். திருநாராயண பட்டர் (முதல்) `குலோத்துங்க சோழன் சரிதை பாடிய பெரும் புலவர். பரசமய கோளரி மாமுனி என்பவர் கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என்பனவற்றைப் பாடியவர். இவருக்கு நிலதானம் செய்யப்பட்டது.41 குன்றம் திருச்சிற்றம்பல முடையான் பாடிய கவிக்குப் பரிசிலாகப் பெற்ற ஊர் குடிக்காடு இரும்பூதி என்பது.42 களப்பாளராசர், திருப்புகலூர் அந்தாதி பாடியவர்.43 மூன்றாம் குலோத்துங்கன் அவைப் புலவருள் ஒருவர் வீராந்தப் பல்லவரையர் என்பவர். சொக்கசீயர் என்ற புலவர் கோப்பெருஞ்சிங்கனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் பல கோவில்களில் கல்வெட்டுகளாகக் காணப்படுகின்றன.44 மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய (கி.பி. 1216 - 38) அவைப் புலவராக இருந்தவர் காரானை விழுப்பரையர் என்பவர்.45 சிதம்பரம் தெற்குக்கோபுரத்து எதிரிலுள்ள நந்தி மண்டபத்தில், வரையப்பட்ட கல்வெட்டு ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் ஐந்தைப் பாடிய புலவர் புவனேகவீரத் தொண்டைமானான தாயினல்ல பெருமாள் முனையதரையன் என்பவர். இவர் காலம் மாறவர்மன் விக்கிரமபாண்டியன் காலமாகும் (கி.பி. 13-ஆம் நூற்றாண்டு) தென்காசிப் பாண்டியருள் ஒருவனான அரிகேசரி பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422-62) தென்காசியில் பெரிய சிவன் கோவிலைக் கட்டி முடித்தான். அங்கு அவன் பாடியனவாகக் காணப்படும் பாடல்கள் சில காணப்படு கின்றன. அவை பக்தியும், உருக்கமும் வாய்ந்தவை. கி.பி. 15ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வேணாட்டு அரசனாக இருந்த சேரமான் பெருமாள் வஞ்சி மார்த்தாண்டன் என்பவன் பாடிய பாடல்கள் மாயூரத்தை அடுத்த மூவலூர் சிவன் கோவில் கோபுரவாயிலில் கல்வெட்டாகக் காட்சியளிக்கின்றன.46 கி.பி. 16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில், ஆற்றுவான் பாடி வித்வான்களில் திருவெங்கல நாதர் மகன் வடமலையார்க்கு நிலம் தானமாகக் கொடுக்கப் பட்டது என்று தேவிகாபுரத்துக் (வடஆர்க்காடுமாவட்டம்) கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இக்கல்வெட்டுப் பகுதியால் ஆற்றுவான் பாடி வித்வான்கள் பலர் என்பதும், அவருள் திருவெங்கலநாதர் மகன் வடமலையார் ஒருவர் என்பதும் தெளிவாகின்றன அல்லவா? கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தென்காசிப் பகுதியை ஆண்ட அதிவீரராம பாண்டியன், திருவண்ணாமலைப் புலவன் சிதம்பரநாதன் என்பானுக்கு நிலமளித்ததாக ஒரு கல்வெட்டுக் கூறும். அதிவீரராம பாண்டியனுக்குப் பின் வந்த வரதுங்கராம பாண்டியனுக்கு அவைப்புலவராக விளங்கியவர் காசிக்கலியன் கவிராயர் என்பவர். இவர் அப்பாண்டியனைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் தென்காசி விவநாதர் கோவில் கோபுரத்தில் வெட்டப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி வட்டத்தில் இராமநாதபுரம் என்ற மறுபெயர் கொண்ட பூசன்குடியில் உள்ள பிள்ளையார் கோவில் கல்வெட்டு ஒன்றில் சில பாடல்கள் காணப்படுகின்றன. அவற்றைப் பாடிய புலவர் முத்துக் குமாரசுவாமி என்பவர் அவர் காலம் கி.பி. 18ஆம் நூற்றாண்டின் இறுதியாகும்.47 குடுமியான் மலைக் கல்வெட்டுகளில் ஆதிநாதர் என்ற புலவர் பாடியதாக ஒரு வெண்பா காணப்படுகின்றது. திருக்கச்சூர் ஆலக் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்று பொய்யாமொழி மங்கலம் என்ற ஊர், பெருநம்பி என்ற முத்தமிழ் ஆசிரியர்க்கு உரியது என்று கூறுகின்றது. இதனால் இப்பெருநம்பி என்ற புலவர் தம் புலமைத் திறத்தால் பொய்யா மொழி என்ற ஊரைத் தானமாகப் பெற்றவர் என்பது தெரியலாம். தென்னார்க்காடு மாவட்டத்தில் கடலூர்ச் சிவன் கோவில் கல்வெட்டு ஒன்று, புலவன் அகளங்கன் என்பவன் ஆயிரம் குழி நிலம் அக்கோவிலுக்குத் தானமாக விட்ட செய்தியைக் கூறுகின்றது. சோழநாட்டுத் திருக்கடவூர்ச் சிவன்கோவில் கோபுரத்தில் உள்ள பாடல் காலகாலன் என்ற புலவரால் பாடப்பட்டது என்று புலவரால் பாடப்பட்டது என்று அக்கோவிற் கல்வெட்டுக் கூறுகின்றது. புதுக்கோட்டைச் சீமை, திருமெய்யம் வட்டம், காரையூர் மாரியம்மன் கோவில் கல்வெட்டு ஒன்றில், தமிழ்ப் புலவர் பங்களராயர் என்பவர் பெயர் காணப்படுகிறது. வட ஆர்க்காடு மாவட்டம் திருவல்லம் சிவன்கோவில் கல்வெட்டு ஒன்று திருவல்லையந்தாதி பாடிய குறட்டி வரதையன் என்ற புலவருக்கு நிலதானம் செய்ததைக் குறிக்கின்றது.48 இங்ஙனம் பெயர் தெரிந்த புலவர் பலர், கல்வெட்டுகளில் காணப்படுகின்றனர். பெயர் தெரியாப் புலவர் பலருடைய பாடல்கள் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் காணப்படுகின்றன. வழக்கு வீழ்ந்த நூல்களும் புலவர்களும் பாட்டும் பரிசும் வேம்பையர்கோன் நாராயணன் கி.பி. 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் 104 பாடல்களை அந்தாதியாகப் பாடியுள்ளார். அவை திருச்சிராப்பள்ளிக் குன்றின்மேல் பொறிக்கப்பட்டுள்ளன.49 முதல் இராசராச சோழன் மேல் ஸ்ரீ இராசராசவிசயம் என்ற நூல் இயற்றப்பட்டது. இப்பேரரசனால் கட்டப்பட்ட இராசராசேசுவரம் கோவில் மீது நாடகம் ஒன்று அவன் காலத்தில் இயற்றப்பட்டது. அது இராசராசேசுவர நாடகம் எனப்பட்டது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் அவன் மகனான வீரராசேந்திரன் மீது `வீர அணுக்க விஜயம் என்ற நூலைப் பூங்கோவில் நம்பி என்பவர் பாடினார்; பாடி, நிலங்கள் தானமாகப் பெற்றார். முதற் குலோத்துங்கனைப் பற்றிக் குலோத்துங்க சோழ சரிதை என்ற கவிதை திரு நாராயண பட்டர் என்பவரால் பாடப்பட்டது. முதற் குலோத்துங்கன் காலத்தில் அருணிலை விசாகர் என்ற புலவர் பாரதத்தைத் தமிழில் பாடினார் என்று திருவாலங்காட்டுக் கல்வெட்டுக் கூறுகின்றது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1235) காலத்தில் புதுக்கோட்டைச் சீமைத் திருவரண்குளத்துக் கல்வெட்டு ஒன்று, தேவன் திருவரண் குளமுடையான் என்ற புலவர் பாடிய பேர்வஞ்சி என்ற நூலை ஊரார் கேட்டு மகிழ்ந்து அவர்க்கு `மறச்சக்கரவர்த்திப் பிள்ளை என்ற பட்டமும், ஒரு சிற்றூரில் பாதியும் வழங்கிச் சிறப்பித்தனர் என்று கூறுகின்றது.50 மூன்றாம் இராசராச சோழன் காலத்தில் காஞ்சி வரதராசப் பெருமாள் கோவிலில் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று, திரு ஆழி பரப்பினான் கூத்தன் என்ற புலவர் சிந்துப் பிரபந்தம் ஒன்று பாடி, வள்ளுவப்பாக்கம் என்ற ஊரை முற்றூட்டாகப் பெற்றார் என்று குறிக்கின்றது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக்குட்பட்ட காங்கேயன் என்ற தலைவன் தன்மீது பிள்ளைக்கவி பிரபந்தம் பாடிய சிறுபெருச்சியூர்க் கொடிக் கொண்டான் பெரியான் - ஆதிச்சதேவன் என்ற புலவருக்குச் சாத்தனேரி என்ற ஊரில் நிலங்கள் அளித்ததாகப் பெருச்சியூர்ச் சிவன் கோவில் கல்வெட்டுக் கூறுகின்றது. கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டியன் ஒருவனுக்குப் பிரதிநிதியாக இருந்த கரியமாணிக்க ஆழ்வான் என்ற தலைவன் மீது பாடப்பட்டது கப்பற் கோவை. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் அச்சுததேவமகாராயரின் பிரதிநிதியாக இருந்த வெங்கள நாயக்கர் தென்னாட்டை ஆண்டு வந்தார். அந் நாயக்கரின் கீழ்த் தலைமை அதிகாரியாக இருந்த தீத்தாரியப்பப் பிள்ளை என்பவர், வீரமாலை என்னும் நூலைப் பாடிய பாண்டிக் கவிராசரைச் சிறப்பித்தனர். அதைச் செட்டிநாட்டு ராங்கியம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டுக் கூறுகின்றது. அதே நூற்றாண்டில் உத்தண்ட வேலாயுதக்கவி என்பவர், திருவதிகைச் சிவன்மீது கலம்பகம் ஒன்று பாடி, மனையம் நிலங்களும் பெற்றனர் என்று திருவதிகைக் கல்வெட்டுக் கூறுகின்றது.51 தமிழ்நூற் செய்திகளும் கல்வெட்டுகளும் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் என்ற செய்யுள் இலக்கண நூல்கள் இரண்டையும் செய்தவர் அமிதசாகரர் என்ற சைன முனிவர் என்பதும், இவர் குணசாகரர் என்ற அறிஞரது மாணவர் என்பதும் யாப்பருங்கலப்பாயிரத்தால் அறியப்படும் செய்திகளாகும். இச் செய்திகள் உண்மை என்பதை நீடூர்ச்சிவன் கோவிற் கல்வெட்டு உறுதிப் படுத்துகின்றது. காரிகைக் குளத்தூர் மன்னவன் அமிதசாகர முனிவரைக் கொண்டு காரிகை செய்வித்தவனுடைய வழித் தோன்றல் பாண்டி நாட்டுக் கழுகுமலைக் கல்வெட்டுகள் இரண்டால், குணசாகரர் என்ற சமண ஆசிரியர் தம் சமயக் கொள்கைகளைப் பரவச் செய்யச் சிலரை நியமித்தனர் என்ற செய்தி அறியப்படுகின்றது.52 விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் என்ற மூவர்க்கும் ஆசிரியராக இருந்த ஒட்டக்கூத்தரைப்பற்றி அறியக் கீழ்வரும் கல்வெட்டுச் சான்றாதல் காண்க:- (வதி)ஸ்ரீ ஸரவதிதேவியை எழுந்தருளிவித்தார். இவ்வூர் (தஞ்சை) 20ஆம் காணி உடைய மலரி உடையார். இந்தக் கவிச்சக்கரவர்த்திகள் பேரனார் கவிப்பெருமாளான ஒவாத கூத்தார்.53 இக் கல்வெட்டால், கூத்தனூரில் கலைமகளுக்குக் கோயில் எடுத்தவர் மலரி உடையாரான கவிச்சக்ர வர்த்தியின் பேரனார் ஓவாதகூத்தர் என்பது தெளிவாகும். மலரி உடைய கவிச்சக்ர வர்த்தி என்பது ஒட்டக்கூத்தரையே குறிக்கும் என்பது மலரி வருங்கூத்தன்றன் வாக்கு என்ற தண்டியலங்கார மேற்கொள் செய்யுளால் தெளிவாகும். `மலரி என்பது சோணாட்டு த் திருஎறும்பியூரின் பழம் பெயர் என்பது கல்வெட்டால் தெரிகின்றது. பாண்டிய நாட்டுத் திருவாடானையையடுத்து மலரி என்ற ஊர் உண்டு. இவற்றுள் ஒன்றே கூத்தரது ஊர் என்று அறிஞர் சிலர் கருதுவர். நாமகள் கோயிலுள்ள இன்றைய பூந்தோட்டம் என்னும் ஊரே பண்டைக்காலத்தில் `மலரி எனப்பெயர் பெற்றிருந்தது என்று கருதுதல் தவறாகாது இஃது அறிஞர் ஆராய்ச்சிக்கு உரியது. ஞானாமிர்தம் என்ற சைவசமயநூல் வாகீசமுனிவர் இயற்றியது இந்நூலைக்கொண்டு, இவரது காலமும் வரலாறும் அறியப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டம் திருவாலுசுவரம் கோவிலிலுள்ள கல்வெட்டுகளில், கோளகி மடத்து ஞானாமிர்த ஆச்சாரிய சந்தானத்தவரான அகோர தேவர்................ அச்சந்தானத்தைச் சார்ந்த புகலிப் பெருமாள்54 என்ற தொடர்கள் காணப்படுகின்றன. இவற்றால், ஞானாமிர்த ஆசிரியர் கோளகி மடத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இச்சாசனங்கள் இரண்டும் கி.பி. 1254இல் பொறிக்கப்பட்டவை யாதலால், இக்காலத்துக்கு முற்பட்டவர் ஞானாமிர்த ஆசிரியர் என்பதும் வெளியாகின்றது அல்லவா! சேனாவரையர் தமது தொல்காப்பிய உரையில் (தொல்காப்பியம், சொல்லதிகாரம், பெயரியல் சூத். 10) புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோக்கத்தார் இக்காலத்தும் பெண்மகன் என்று வழங்குப என்று பயிலுமிடம் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாட்டுக்குப் பெயர். மாறோக்கத்தார் இக்காலத்தும் வழங்குப என்று சேனாவரையர் கூறியுள்ளமையால், அவர் அந்நாட்டு நிலையை நேரில் அறிந்தவர் என்பது புலப்படும். கொற்கைப் பக்கத்துத் தாமிரபரணியின் அக்கரையில் உள்ள ஆற்றூர்ச் சிவன் கோவில் கல்வெட்டு ஒன்று, ஆற்றூர்ச் சேனாவரையன் என்பார், ஆசிரியர் மாணாக்கர் முறையில் தம் முன்னோரிடமிருந்து தமக்குக் கிடைத்த நிலம் முதலியவற்றை ஆற்றூர்ச் சிவனுக்கு அளித்ததாகக் கூறுகிறது.55 இக் கல்வெட்டின் காலம் கி.பி. 1276. இது இரண்டாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தது. இக்கல்வெட்டுச் செய்தியையும் சேனாவரையர் உரை விளக்கத்தையும் ஊன்றி நோக்க, தொல்காப்பிய உரையாசிரியராகிய சேனாவரையரே கல்வெட்டில் குறிக்கப் பெற்றவர் என்று கொள்ளுதல் பொருந்துவதாகும். எனவே, சேனாவரையர் காலம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு என்று கொள்ளுதல் தகும். இங்ஙனமே பரிமேலழகர், காளமேகப் புலவர், அரிதாசர், காலிங்கராயர், உண்ணாமுலை எல்லப்ப நயினார், சைவ எல்லப்ப நாவலர், குகை நமச்சிவாயர்56 முதலிய புலவர் பெருமக்களின் காலங்களைக் கணித்தறியக் கல்வெட்டுகள் பெருந்துணை புரிகின்றன. இதுகாறும் கூறப்பெற்ற கல்வெட்டுச் செய்திகளால், பல்லவர்காலம் முதல் பிற்பட்ட காலம் வரை, தமிழகத்தில் எண்ணிறந்த புலவர் பெருமக்கள் இருந்து, தமிழ்ப்பணி செய்து வந்தனர் என்பதும், தமிழ்க் கல்லூரி என்பதை உணர்த்த கல்வெட்டுச் சான்று இல்லாவிடினும், தமிழ்க் கல்விக் கூடங்கள் மிகப் பலவாக இருந்திருத்தல் வேண்டும் என்று ஊகிக்கக் கல்வெட்டுகளிற் காணப்படும் புலவர் பெயர்களே தக்க சான்று என்பதும் நன்கு அறியப்படும். சிற்பக்கலை காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலின் உட்புறச் சுவர்களில் பல்லவ அரசர் உருவங்களும் அவர்தம் செயல்களும் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அடியில் கல்வெட்டுகளும் இருக்கின்றன. அக் கல்வெட்டுகளைக் கொண்டே நாம் பல்லவர் வரலாற்றை நன்கு அறிகிறோம். பல்லவர் காலத்தில் இருந்த சிற்பக்கலை வளர்ச்சியைவிடச் சோழர்காலச் சிற்பக்கலை மிக்க வளாச்சியுற்றது என்பது தஞ்சைப் பெரிய கோவில், கங்கைகொண்ட சோழேச்சுவரம், தாராசுரத்திலுள்ள ஐராவதேசுவரர் கோயில், திரிபுவனைச் சிவன் கோவில் இவற்றிலுள்ள அரிய சிற்பங்களைக் கொண்டு நன்குணரலாம். இவ்வளர்ச்சி விசய நகர வேந்தர் காலத்தில் மேலும் நன்கு வளர்ச்சியுற்றது என்பதைத் திருவண்ணாமலை, மதுரை, இராமேசுவரம் முதலிய இடங்களிலுள்ள சிவன் கோவில் சிற்பங்களைக் கொண்டு நன்கறியலாம். கங்கை கொண்ட சோழேச்சுரத்திலுள்ள சண்டீசப் பதமுணர்த்தும் சிற்பம் இன்றும் கண்டு மகிழத்தக்க பேரழகோடு விளங்குகின்றது. கோவையையடுத்த பேரூர்ச் சிற்பங்கள் மிக்க வேலைப்பாடுள்ளவை. சில கோவில்களில் கருவறையின் புறச்சுவர்களில் புரைகள் அமைக்கப்பெற்று அவற்றில், நாயன்மார் உருவச்சிற்பங்கள் வைக்கப்பெற்றன. புரைக்குக்கீழே அம் மூர்த்தத்தின் பெயர் பொறிக்கப்பட்டது. தில்லையை அடுத்த கீழைக் கடம்பூரில் இத்தகைய கல்லெழுத்துகளைக் காணலாம். ஆனை உரித்த தேவர், லிங்கபுராணத்தேவர், ஆனையாண்ட தேவர் (கணபதி), உலகாண்ட மூர்த்தி முருகாண்டார் (முருக நாயனார்), திருக்குறிப்புத் தொண்டர், தண்டிப் பெருமாள் என்பன அவற்றுள் சிலவாகும். இவ்வாறே தாராசுரத்து ஐராவதேச்சுரர் கருவறையின் புறச்சுவர்களில் நாயன்மார் வரலாற்று நிகழ்ச்சிகள் சிற்பங்களாகக் காண்கின்றன. ஒவ்வொன்றின் கீழும் கல்வெட்டுக் காணப்படுகின்றது. சிற்பக்கலையின் மற்றொரு பகுதி, செம்பு, பித்தளை முதலிய உலோகங்களைக் கொண்டு உருவங்களை அமைத்தல், இத்துறையிலும் தமிழ் மக்கள் சிறந்திருந்தனர் என்பது சோழர்காலக் கல்வெட்டுகளைக் கொண்டும், பிற்காலக் கல்வெட்டுகளைக் கொண்டும் நன்கறியலாம். தஞ்சைப் பெரிய கோயிற் கல்வெட்டுகள் 57 இவற்றை நன்குணர்த்தும், நாயன்மார் படிமங்களும் பல கோவில்களில் அமைத்து வழி படப்பட்டன. அவற்றின் அடியில் தத்தா! நமரே காண் என்ற மிலாடுடையார் படிமம் என்பன போன்ற விளக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஓவியக்கலை சித்தன்னவாசல் ஓவியங்கள், பல்லவர் கால ஓவியக்கலை வளர்ச்சியை நன்குணர்த்துகின்றன தஞ்சைப் பெரிய கோயிற் கருவறையின் புறச்சுவர்களிலுள்ள ஓவியங்கள் சிவ பெருமான் சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட வரலாறு, சிவ பெருமான் கயிலையில் வீற்றிருக்கும் திருக்கோலம், அப்பெருமானை நோக்கிச் சுந்தரர் யானைமீதும், சேரமான் குதிரைமீதும் கயிலை செல்லும் காட்சி, சோழர்கால ஆடுமகளிர், பாடுமகளிர் இவர்களை உணர்த்தும் காட்சி முதலியவைகள் விழிகட்கு விருந்தளிப்பனவாகும். இச் சோழர்கால ஓவியங்கட்கு மேலே சாந்து பூசப்பெற்று, அச்சாந்தின்மீது தஞ்சையை யாண்ட நாயக்கமன்னர்கால ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவை அக்கால அரசர் அரசியர் உடைச்சிறப்பு, கூந்தல் ஒப்பனை, அணிகலன்கள் முதலிய பல விவரங்களை நமக்குத் தெரிவிக்கின்றன. இவ்வாறே மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிவபெருமான் செய்த அறுபத்துநான்கு திருவிளையாடல்கள் மதுரை நாயக்க மன்னர் காலத்தில் ஓவியங்களாக வரையப்பெற்றன. ஒவ்வொரு திருவிளையாடலைக் குறிக்கும் ஓவியத்தின் அடியில் விளக்கம் எழுதப்பட்டுள்ளதை இன்றும் காணலாம். இசைக்கலையும் நடனக்கலையும் குடுமியான் மலைக் கல்வெட்டிற் காணும் விவரங்களிலிருந்து, முதலாம் மகேந்திர வர்மன் சிறந்த இசைப் பயிற்சியுடையவன் என்பதை அறியலாம். கோவில்களில் குறிப்பிட்ட நாட்களிலும் விழாக்காலங் களிலும், ஊர்வலத்திலும், ஆடல் பாடல்கள் நடைபெற்றன. பல்லவர் காலத்திலும், சோழர் காலத்திலும் பெரும்பாலான கோவில்களில் ஆடலிலும், பாடலிலும் வல்ல மகளிர் இருந்தன ரென்பதைப் பல கல்வெட்டுகள் அறிவிக்கின்றன.58 கோவில்களில் தமிழக்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக் கூத்து, சாந்திக் கூத்து முதலியன ஆடப்பட்டன.59 நடனக் கலை ஆசிரியன்மார் கூத்தரசர், நிருத்தப் பேரையர், நட்டுவ ஆசான் எனப் பலவாறு பெயர் பெற்றிருந்தனர். அவர்கள் பெற்றிருந்த காணி கூத்துக்காணி, நட்டுவக்காணி எனப்பட்டன.59 திருவிடைமருதூரில் தளியிலார்க்கும், தேவரடியார்க்கும் பாட்டுக் கற்பிக்கப் பாணன் இருந்தான். அவன் பெற்றிந்த மானியம் `பாணப்பேறு எனப்பட்டது.61 திருவொற்றியூர்க் கோவிலில் பதியிலார், இஷபத்தளியிலார் என்ற இருவகை நடன மகளிர் இருந்தனர். பதியிலார் சொக்கம், சந்திக்குனிப்பம் என்ற நடன வகைகளை நடிக்கும் போது, இஷபத்தளியிலார் வாய்ப்பாட்டுப் பாடினர். இப்பின்னவர் அகமார்க்கம், வரிக்கோலம் என்ற நடனவகைகளை ஆடினர். திருமுறைப் பதிகங்களின் உட்கருத்துகளை நடித்துக் காட்டுதலும் இவர்களது தொழில். நாடகக்கலை தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசேசுவர நாடகம் சோழர் காலத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடித்துக் காட்டப்பட்டது. அதனை நடித்துக் காட்டிய விசயராசேந்திர ஆசாரியனுக்கு ஆண்டுதோறும் 120 கலம் நெல் தரப்பட்டது. விக்கிரமாதித்த ஆசாரியன் என்ற இராசராச நாடகப்பிரியன் என்பவன், பந்தணை நல்லூரில் `நட்டுவப்பங்கு பெற்றவனாக இருந்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டுக் கூறுகின்றது. இதனால் இராசராச நாடகம் என ஒன்றிருந்து நடிக்கப்பட்டது என்பது அறியக்கிடக்கிடத்தல் காண்க. 62 முதற் குலோத்துங்கன் காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற ஒரு நூல் இயற்றப்பட்டது; இயற்றியவனுக்குப் பரிசு தரப்பட்டது. அந்நூல் திருப்பாதிரிப்புலியூரைப் பற்றியது.  1. S.I.I. Vol. 5 No.s. 446; 448 321; 421; 432 and 440 Ins of Pudukottah State No. 305 2. A.R.E. 1929 30 Part II Para 4; INS of Pudukottah State. Nos. 439, 440. 3. S.I.I. Vol 5 No 303 Ins of Pudukottah State Nos. 401 408 487 etc. 4. 479 of 1908 5. 189 of 1925; 508 of 1922 208 of 1919 6. 66 of 1890, 562 of 1893 nad 135 of 1905 7. 341 of 1907 489 of 1907 and 34 of 1913; A.RE 191 Para 47 8. 49 of 1911 ARE 1909 P 75 9. V.V. 65-66; 366 of 1903; 141 of 1898 499 of 1911 10. 128 and 212 of 1912; A R E 1922 P 102 212 of 1912 11. 183 of 1923; 141 of 1895 and 212 of 1912 etc. 12. 147 of 1912 and 411 of 1925 13. 218 of 1925; 217 of 1925; 141 of 1922 80 of 1913 94 of 1926 ARE 1925 11.18 14. 183 if 1904 74, 76 of 1925 91, 90 of 1926; 86 of 1911. 296 of 1911; 409 of 1925. 15. S.I.I. Vol. I. NO. 56 16. 50 of 1890 17. Ep. IND Vol. 7 P 24 18. Ep. IND Vol. 18 P 11 19. EP IND. Vol. 15 P 250 20. S.I.I. Vool. 2 P 346 21. 323 of 1917 and 17 of1920 22. 233 of 1911; 333 of 1928 18 of 1898; 202 of 1912. 23. 333 of 1917, 176 of 1919 182 of 191, 159 of 1925 202 of 1912. 24. 129 of 1907; 352 357 of 1911 and 192 of 1928. 25. 371 of 1912. 26. 359 of 1916 364 of 1916 ARE 1929 - 30 P 77 27. ARE 1917 P 124 28. 111 of 1930 209 211 of 1924 and ARE 1929 - 30 P. 9. 29. 72 of 1930-31; 164 and 173 of 1935-36; 352 of 1912 443 of 1909. 30. 586 of 1908; 218 of 1908; 392 of 1908; 108 and 109 of 1911 31. 49 of 1911; ARE 1909 P 75 32. நம்பி திருவிளையாடல் பாயிரம் செய்யுள் 23. 33. மேற்படி முகவுரை பக் 20. 34. 129 of 1908 192 of 1929 104 of 1908. 35. 76 of 1922. 36. S.I.I. Vol. 2 Nos 20 & 90 413 of 1902 301 of 1907 190 of 1907 40 of 1906 ARE 1908 68 37. 471 of 1912 233 of 1917, 10 of 1918, 87 of 1927 24 of 1917 28 of 1914 48 of 1935 and 311 of 1928 38. 218 of 1901 etc. 39. The Nayaks of Tanjore 40. 289 of 1941 - 42 41. 114 of 1925, 626 of 1920; 198 of 1919; 128, 129 of 1902 42. Pudukottah Inscription No. 129 43. 96 of 1927 - 28 44. S.I.I. Vol. 8 pp 39 - 41. 45. MER 1927-8, P 47 46. 3290 of 1913. Travancore Archaeological Series Vol. P.P., 95 -101 செந்தமிழ் Vol. 4 251 47. 365 of 1912 T.A.S. Vol. I pge 279, 80T.A.S. Vol. I 84 350 359 of 1929 - 40. 48. 361 of 1929-30 377 of 1906 463 of 1921ï 50 of 1906. 49. S.I.I. Vol. 4 No. 167 50. M E R 1930-31 P 44 M E R 1905, 8 548 of 1904 198 of 1919 482 of 1905 புதுக்கோட்டைக் கல்வெட்டுத் தொகுதி 278 51. 522 of 1919 75 of 1924 and 26 of 1926 புதுக்கோட்டைக் கல்வெட்டு 966 376 of 1921. 52. 534 of 1921; S.I.I. Vol. 5 P 134; Ibid Nos. 310, 334 53. 109 of 1927 - 28 54. 359 of 1916; 361 of 1917 55. 465 of 1929 - 30 56. 41 of 1833; S.I.I. Vol. 4 P 145; S.I.I. Vol. 4 No. 199; 550 of 1919 B 419 of 1928-29 P 86; 117, 118 of 1891 -2 P. 68 S.I.I. Vol. No. 58 57. S.I.I. Vol. 2 Nos. 23. 2530, 34, 39, 43, 48 and 50. 58. 166 of 1926; 617 of 1920; 272 of 1923. 141 of 1910 etc. 59. 120 of 1925; 250 of 1925; 154 of 1895 etc. 60. 23 of 1895; 255 of 1925; 206 of 1931; S.I.I. Vol. 2. 66 61. 141 of 1895. 62. S.I.I. Vol. 2. 67 Tamil Polil Vol. 23 pp 152 - 3; 129 of 1903.