திரு.வி.க. தமிழ்க்கொடை 22 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 22 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 23+369=392 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 195/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை சன்மார்க்க போதமும் திறவும் உலகிலுள்ள மார்க்கங்கள் பலவாகத் தோன்றும். அவைகளின் உள் நுழைந்து ஊன்றி நோக்கின், அவைகள் யாவும் ஒன்றாகவே விளங்கும். அவ்வொன்று சன்மார்க்கம் என்பது. என்னும் முன்னுரை சன்மார்க்கப் பொருளை விளக்கும். சன்மார்க்கத்தில் நின்று நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலியவற்றை நோக்குவோர்க்குப் பிரிவு உணர்வு தோன்றுதல் அரிது. அவர்க்குச் சமசர உணர்வே தோன்றும் என்று சமரசப் பொருள் விளக்குகிறார். அதனால் சன்மார்க்கம் சமரச சன்மார்க்கம் என்றாயதைத் தெளிவிக்கிறார். 1933 இல் சமரச சன்மார்க்க போதம் எனநூல் இயற்றியதையும் அந்நூலே சன்மார்க்க போதம் எனப்பட்டதையும் குறிக்கிறார். சன்மார்க்க போதம், சன்மார்க்கத் திறவு என்னும் தனித்தனி நூல் 1944இல் பொருளியைபு கருதி இணைக்கப்பட்டு இப்பெயர் கொண்டுள்ளது. சன்மார்க்க போம், தோற்றுவாய், சத், மார்க்கம், குருமார், சீர்திருத்தம், சங்கம் இறுவாய் என்னும் ஏழுதலைப்புகளில் இயல்கின்றது. சன்மார்க்கத் திறவு, தோற்றுவாய், குருமார் விளக்கம், வழிபாடும் அமைப்பும், சமரசமும் சீர்திருத்தமும் என்னும் நான்கு தலைப்புகளில் இயல்கின்றது. நூல் நிறைவில், திருவாரூர் வி. கலியாணசுந்தரன், சன்மார்க்க ஊழியன் எனத் தம்மைப் பதிவு செய்துள்ளார். இந்நூல் இரண்டும் பொருளமைதியில் இசைந்து நடப்பவை போலவே நூல் இயலும், நடையிலும், இசைந்து நடப்பன. சிறிதும், பெரிதுமான தொடர்கள் விளக்கங்கள் ஆகியவை எண்ணிக்கையிட்டு ஒவ்வொரு தலைப்பும் இத்தனை குறிப்புகள் எனக் காணுமாறு அமைந்துள்ளன. இவற்றுள் மார்க்கம் என்பதே விரிவானது. அது, 354 குறிப்புகளையுடையது. அடுத்து சீர்திருத்தம். அது 164 குறிப்புகளைடையது. தம்பட்டறிவு கொண்டே இந்நூலை இயற்றுவதாகத் தோற்றுவாயில் கூறுகிறார் திரு. வி. க. (11) சன்மார்க்க போதம் மாறுதல் இல்லாத அறிவு சத். அதற்குக் கருவி கரணங்கள் இல்லை. எல்லாவற்றையும் கடந்த இறைநிலை வழிபாட்டுக்கு உரியதாகாது. எல்லாவற்றிலும் கலந்த இறைநிலையே வழிபாட்டுக்கு உரியது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு பிரிவற்றது. இயற்கையை அன்னை என்றும் இறையை அப்பன் என்றும் கூறுவது கவிமரபு. இறை பிறப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை. அவதாரம் செய்வோர் குருமாரே ஆவர். வீரரைக் குருமார் இனத்தில் சேர்த்தல் மரபாகியது. குருமார் இறைவழி நிற்பவர்; ஆனால் அவர் இறையல்லர். இயற்கையோடியைந்த வாழ்வு நடத்துவோர் ஆத்திகர்; அவ்வாழ்வு நடத்தாது வேறு வழியில் செல்வோர் நாத்திகர். இயற்கையோடு இயைந்து வாழ்வது என்பதும் இறையோடு இயைந்து வாழ்வது என்பதும் ஒன்றே. துறவு என்பது செயற்கைக் குணத்தை நீப்பது. உடல் இறை கோயில். அதை நோய்க்குடில் ஆக்குவது தவறு. நல்லுடலுக்கு அறிகுறி மலச்சிக்கல் இன்மை. மலச்சிக்கல் போக்கும் பேராற்றல் நோன்புக்கு உண்டு. நாட்டின் உயர்ப்பு காடு. பசுமைக் காட்சி வழங்கா ஊர் பாழ். மொழி பெயர்ப்பில் காவிய இன்பம் நுகர்தல் இயலாது. காவயி இன்பத்திற்குத் தாய்மொழிப் பயிற்சி இன்றியமையாதது. பெண்மையினின்றும் தாய்மையும், தாய்மையினின்று இறைமையும் மலர்கின்றன. இயற்கையின் விளைவை எல்லார்க்கும் பொதுமையில் பயன்படுத்துவது இயற்கை அரசு. உயிரில் எவ்வித வேற்றுமையும் இல்லை. புரோகிதர் குருமார் அல்லர். புரோகித மதங்கட்கும் கடவுள் நெறியென்னும் சமயத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. சன்மார்க்கம் மன்பதைக்குப் பொதுவானது; சமயம் என்பது சன்மார்க்கமே. குருநாதன் அருள் கூடாதபோது மனமே குருவாகி வழிகாட்டி மறையும் நிலையும் உண்டு. அன்புதத்தால் மட்டும் ஒருவரைப் பெரியவரென்று எண்ணுதல் தவறு. குருமார்க்கு வழங்கப்படும் பெயர்கள் சில, சில இடங்களில் இறைக்கும் வழக்கப்படுகின்றன. அப்பெயர்களைக் கொண்டு கடவுள் அவதாரக் கதைகள் புனையப்பட்டன. புரோகிதர் உபதேசம் குருடருக்குக் குருடர் வழி காட்டுவதைப் போன்றது. எச்சீர்திருத்தத்திற்கும் இடம் தராத நாடு சமூகம் முதலியன இயற்கை அன்னையின் மறக்கருணைக்கு ஆளாகி அழிந்து படும். மேல்நாடு அரசியல் வெறியால் கெடுகிறது. கீழ்நாடு மதவெறியால் கெட்டது. ஆங்கே அவ்வெறியும் இங்கே இவ்வெறியும் தணிதல் வேண்டும். எண்ணமே மனிதன். சீர்திருத்தரிடம் நிந்தனை தலைகாட்டல் ஆகாது. தொண்டு என்பது முனைப்பில்லா இடத்தில் நிகழ்வது. நிதியுள்ள இடத்தில் பெரிதும் நீதி இருப்பதில்லை. சன்மார்க்க ஊழியர்க்குப் பயன்கருதாத தொண்டே வீடுபேறாகத் தோன்றும். சன்மார்க்கத் திறவு தனித்த இறைநிலைக்கு எவ்விதக் குறியும் அமைத்தல் கூடாது. குருமாரையும் அவர்தம் போதனைகளையும் ஒன்றாகவே கொள்ளுதல் வேண்டும். புரோகிதத்தால் உலகம் பட்டது போதும்! போதும்! சன்மார்க்க விளக்கத்துக்கு குருவழிபாடு இன்றியமை யாதது. வழிபாடற்ற இறைநிலையைப்பற்றி மன உணர்வினர் மல்லாட வேண்டியதில்லை. வழிபாட்டுக்கு அமைப்பு வேண்டும். அமைப்புக்குரிய இடம், இயற்கை வளஞ்செறிந்ததாய் இருத்தல் வேண்டும். தன்னலத்துக்கு மட்டும் செய்யும் எதுவும் வழிபாடாகாது. சகோதரநேயம் பெருகுவதற்குக் கலப்பு மணம் உடன் உண்ணல் இன்னபிற நற்றுணை செய்யும். பகுத்தறிவு கொண்டு, ஒன்றை ஆராய்ந்து கொள்ளுதற்கோ தள்ளுதற்கோ ஒவ்வொரு வர்க்கும் உரிமை உண்டு. பொருட் பொதுமை கருணையை அடிப்படையாகக் கொண்டது. மதப்பித்து புரோகிதத்தின் பிள்ளை. தீமையைத் தீமையால் போக்க முயலலாகாது. அம்முயற்சி தீமையையே பெருக்கும். பகைமை அறத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளாதவர் சீர்திருத்தத் தொண்டில் இறங்குதல் ஆகாது. - சன்மார்க்க போதமும் திறவும் வாழ்வியல் அறநூல் எனத்தக்கது. அவற்றில் திரட்டிய சிறுதிரட்டு முன்னே சொல்லப்பட்டவை; பன்னூற் பிழிவுச் செய்திகள் இவை. சமரச தீபம் தீபம் - விளக்கு; விளக்கும் நூல். சமயப் பொதுமையை விளக்கும் நூல் சமரச தீபம் எனப்பட்டது. சால்பிலே ஓங்கும் ஒருவர் பார்வையில், சமரசம், சன்மார்க்கம், பொதுமை, ஓப்புரவு என்பவையே விளங்கும். திரு.வி.க. சால்பர்; ஆதலால் அவர் பொழிவும், எழுத்தும், வாழ்வும், தொண்டும் எல்லாம் எல்லாம் பொதுமை மணம் கமழ்வராகவே திகழ்ந்தன. மாயவரத்தில் (மயிலாடுதுறையில்) கூடிய சமரச சன்மார்க்க மாநாட்டில் திரு.வி.க. பொழிந்த தலைமை யுரையே சமரச தீபம். இதன் முன்னுரை சுயமரியாதை இயக்கத் தோற்றத்தின் வரலாறு கொண்டு சிறக்கிறது. நட்பின் நயன் விளக்கம் பெறுகின்றது. மறத்துறைகளை வீழ்த்தி அறத்துறைகளை நிலைபெறுத்தது சமரச சன்மார்க்கம் ஒன்றே எனப் பொழிவைத் தொடங்குகிறார். உடல் உறுப்புகள் பன்மை; உடல் ஒன்று; மரம் செடி கொடி பன்மை; காடு ஒன்று. ஆதலால் பன்மையில் ஒருமை காணவேண்டும் என்கிறார். சமரச அடிப்படை பன்மையில் ஒருமைகாணல் எனத் தெளிவிக்கிறார். வேற்றுமை இடையே ஒற்றுமை காணல் இன்பம் என்று உலகியல் ஒருமையுற வழிகாட்டுகிறார். இயற்கையோடு இயைந்த வாழ்வு உலகியல் நடைமுறைக்கு நான்குதுறையும், கடவுள் நெறிக்கு நான்கு துறையும்கொண்டது என்பதைச் சுட்டிக் காட்டி விளக்குகிறார். முதற்பிரிவு, மக்கள் தொழிலாளர், வணிகர், அரசினர் பார்ப்பனர் (ஆசிரியர்) என்றும், அடுத்த பிரிவு கல்வி, இல்வாழ்வு, அறம் வளர்ப்பது. விடுதலைப் பேறு என்னும் பிரித்துக் காட்டுகிறார். இவ்விருவகை யிலும் நேர்ந்த விழ்ச்சியும் கேடுகளுமே நாட்டைக்குலைத் தமையை விளக்குகிறார். நாம், நிகழ்ந்துள்ள கேடுகளை அகற்றுதற்குப் பாடுபட வேண்டிய துறைகள் எவை என்பதை நிறைவில் விளக்குகிறார். அவர் இவர் என்னாமல் எல்லாரும் பாடுபடுதல், பெண்ணலன் காத்தல், பிறப்பால் சாதிகருதாமை, தீண்டாமை விலக்கல், கோயில் திருத்தம் பிராமணர் பிராமணரல்லாதார் பிணக்கு நீக்கம் என்று நாம் செய்ய வேண்டும் கடமைகளை வற்புறுத்துகிறார். அதற்கெனச் சன்மார்க்க சங்கம் பற்றி வரைகிறார். கடவுள் பிள்ளைகள் அனைவரும் சன்மார்க்க உறுப்பினர் என்றும், உறுப்பினர் கட்டணம், உயிர்களிடத்துச் செலுத்தும் அருள் என்றும் கூறுவது அருமை மிக்கதாம். வீடுதோறும் சங்கம் அமைக்கலாம். சங்கத்திற்கெனத் தனிநிதி சேர்த்தலாகாது என்று கூறும் திரு.வி.க. பெருநிதியால் இக்கால மடங்களும் கோயில்களும் பேயுறையும் இருட்குகைகளாக மாறிய தொன்றே நமக்கு எடுத்துக்காட்டு என்கிறார். வள்ளலார் அறிவுறுத்தும் சன்மார்க்க நெறியை அவர் கூறும் பாடல்களைக் காட்டி அச்சங்கத்தில் சேர அழைக்கிறார். மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மையிது தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம் விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியநீர் நன்மார்க்கம் சேர்வீர்இந் நாள் என அமைகிறார். சித்தமார்க்கம் உள்ளொளிக் கென்று பண்டை மக்கள் கடைப்பிடித் தொழுகிய மார்க்கம் சித்தமார்க்கம் என்றும், சித்த மார்க்கத்தில் புகுவார்களாயின், அவர்களிடை, ஒருதெய்வ வழிபாடு சமரச நோக்கு சகோதர நேயம் முதலிய நல்லியல்புகள் நிலவுதல் ஒருதலை என்றும் முன்னுரையில் திரு.வி.க. கூறுவது இச்சுவடியின் உட்கிடையை உணர்த்தும். சித்தமார்க்கம் பற்றி உரையாற்றிய இடம் திருவதிகை ஆதலின் தென்னார்க்காடு மாவட்டப் பெருமையும், திருவதிகையில் திருத்தொண்டாற்றிய திலகவதியார் பெருமையும் விரித்துரைக்கப்படுகின்றன. திருவதிகை நினைவு தோன்றும் போது நமது சைவச் செல்வம் - தவவிளக்கு - திலகவதியார் நினைவும் தோன்றுகிறது. திலகவதியாரை நினைப்போமாக. அனைத்துயிர்க்கும் தாங்கிய அருளினின்றும் மலர்ந்த சிவப் பொலிவும், தவக் கோலமும், திருவலகும், திருமெழுக்குத் தோண்டியும் கொண்ட ஓர் அற்புதத் தெய்வ வடிவம் புலனாகிறது. அத்தெய்வ வடிவை உன்னுவோம்; வாழ்த்துவோம்; வணங்குவோம். திலகவதியாரது தயா அன்றோ அப்பர் அருந்தமிழாகி நமக்குத் துணை செய்கிறது. அவர்தம் வேண்டுதலன்றோ ஆண்டவன் அருளாய் அப்பரை ஆண்டது? அம்மையார் உள்ளொளித் திறத்தை என்னென்று கூறுவது? ஒரு பெண் தெய்வத்தின் வேண்டுதல் எவ்வளவு காரியங்களை நிகழ்த்தியது! பெண்மையின் பெருமை என்னே! என்னே! என்று அவர் கூறும்போது அவர் இயற்றிய பெண்ணின் பெருமை நம் கண்முன் களிநடம் செய்கின்றது! அம்மட்டோ! திலகவதியார் திருத்தொண்டின் மேற் கொண்ட பேரன்பு அல்லவோ திரு.வி.க. தம் மகளார்க்குத் திலகவதி என்னும் பெயர் சூட்டிப் பேருவகை கொள்ள வைத்தது! சைவம் வேறு; சித்தாந்தம் வேறு என இரண்டு இல்லை. சித்தாந்தமே சைவம்; சைவமே சித்தாந்தம் என்பதை விளக்கி, சித்தாந்தம் என்பது சித்தர் கண்ட முடிவு எனத் தெளிவிக் கிறார். உலகில் காணும் சமயங்கள் யாவும் சித்தமார்க்கம் என்னும் ஒன்றினின்று பிறந்தனவே என்கிறார். சித்தன் என்னும் சொல்லுக்கு உலகில் வழங்கும் பெயர்கள் நந்தி, நாதன், அருகன், புத்தன், குமரன், தீர்த்தங்கரன், தீர்க்கதரிசி, கிறிது, நபி, குரு, ஆசாரியன் முதலியன. இப்பெயர் வேற்று மையைக் கருதாது, பொருள் ஒற்றுமையில் கருத்துச் செலுத்துவது சிறப்பு என்று சித்தமார்க்கப் பொதுமையைப் புகல்கிறார். சித்தாந்தம் எவருடைமை? என வினாவி, சித்தாந்தம் இன்னாருடைமை என்று யாண்டாயினும் பதிவு செய்யப்பட் டிருக்கிறதா? அதனை ஓம்பவந்த பெரியோர் அனைவரும் அதனை உலகுக்குரிய பொதுவுடைமை என்றே வலியுறுத்திச் சென்றனர் என்கிறார். உரிமை நமது உயிர் சமரச நோக்கு, உரிமை உணர்வின் சேய் சாதி முதலிய பேய்கள் தலைவிரித்தாடிய போது, நாயன்மார்கள் தோன்றி அப்பேய்களை ஓட்ட முயன்றார்கள். மனிதரை மனிதராகப் பாவியாத இடத்தில் சிவனருள் எங்ஙனம் நிலவும்? சமரச நோக்கு வளர வளரப் பிறர்க்குழைக்கும் பேறு கிடைக்கும். பிறர்க்குழைப்பதன்றோ பிறவிப் பயன்? தன்னிலும் பிற உயிரிலும் உள்ளது சிவம் என்று உணரும் எவனும், தன்னைப் போலவே பிறவுயிரையும் கருதுவன்; எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யான்; நலமே செய்வன். நாம் தமிழர்கள்; தமிழ்மொழியிலும் மறைகள் பிறந்துள்ளன. அவைகளிற் கலந்து பொருளுணர்ந்து ஓதினால் கன்னெஞ்சும் கரைந்துருகும். உருகுஞ் செயல் முதிர முதிர உள்ளொளி பெருகும். உருகுஞ் செயலும் உள்ளொளிப் பெருக்கத்திற்குத் துணை செய்யும் இக்கீற்றுகளின் மின்னொளியே சித்தமார்க்கமாய்ச் சிறக்கின்றது. சித்தமார்க்கம் வெளிவந்தது 12.11.1935. பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி பரம்பொருளே வாழ்க்கை வழி, வாழ்க்கைவழியே பரம்பொருள் என்னும் ஒருமை சுட்டும் நூல் இது. இந்நூலில் இன்னது கூறுவேன் என்றும், இவ்வியலில் இன்னது கூறுவேன் என்றும் முதற்கண்கூறி, கூறிய வரன்முறையில் நூலையும் இயலையும் கொண்டு செல்லுதல் நூன்முறையாம். இதனைத் தொல்காப்பியத்தில் காணலாம். சிலம்பு, மேகலை, சிந்தாமணி முதலிய பதிகங்களும் இந்நெறியில் இயங்குவனவே. இந்நூற்கண் - மனித இயற்கை, அமைதி, அமைதி வீழ்ச்சி . . . . அமைதி உலகம், புது உலகம், முன்னோர் உரைகள் முதலிய பொருள்கள் ஓதப்பட்டுள்ளன என்னும் முன்னுரைப்பகுதி இவ்வழிப்பட்டதாம். திரு.வி.க.வின் பொழிவு, பொழிவின் நிறைவில் இதுகாறும் இவை இவை கூறப்பட்டன என நிறைதல் வழக்கம். இவ்விரு முறைகளையும் நூல் செய்வாரும், பொழிவு செய்வாரும் மேற்கொள்ளல் நல்ல நெறி முறையாகும். திரு.வி.க. சொல்லி எழுதப்பட்ட நூல்களுள் இதுவும் ஒன்று. எழுதியதை நண்பகலில் ஞாயிற்றொளி நன்கு படரும் இடத்தில் அமர்ந்து எனது இடக்கண் காலும் சிற்றொளித் துணையால் பார்வை யிட்டுப் பார்வையிட்டுச் சில கூட்டல் - கழித்தல் - திருத்தல் முதலியன செய்தேன் என்பதால், அவர்தம் எழுத்துத் தொண்டின் அழுந்திய நோக்கு நன்கு புலப்படும். இருளில் ஒளி முதலிய நூல்கள் இவ்விடரொடு வெளிப்பட்டவையேயாம். எடுத்த பொருளை விரித்துக் கூறவேண்டும் அளவால் கூறியதாக நமக்குத் தோன்றினும், இந்நூலை ஒருகுறிப்புத் திரட்டு என்றே சொல்வேன் என்பதால், இன்னும் விரிவுடன் வரையவே எண்ணினார் என்பது விளங்கும். முதற்பதிப்பு 1949 இல் வெளிவந்தது. உலகம் அமைதியை விரும்புகிறது. மனித இயற்கை அமைதி என்று நூலைத் தோற்றுவாய் செய்கிறார். தாம் எடுத்துக்கொண்ட பொருள், கருத்து வேற்றுமைக்கு உரியது என்பதைத் தாமே உணர்ந்து கற்பார்க்குத் தெளிவூட்டும் வகையில், கருத்து வேற்றுமை இன்றியமையாதது. அதை எழுப்புவது இயற்கை. கருத்து வேற்றுமை இயற்கையின் பாற்பட்டது; அதற்கு மாறுபட்டதன்று. அவ்வேற்றுமை அறிவை விளக்கும்; வாழ்க்கையை வளர்க்கும்; அமைதியை நிலை பெறுத்தும்; சமூகத்தைப் பெருக்கும்; நாட்டைப் பேணும்; உலகை ஓம்பும் என்கிறார். ‘m~¿izÆ‹ mikâ v‹nd’ vd Éa¡F« âU.É.f., ஆதிமனிதன் வாழ்விலும் அமைதி நிலவியதை உரைத்து, இந்நாளில் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு அமைதி குன்றி விட்டது. எஞ்சி நிற்பது பத்தே, பத்து! என இரங்குகிறார். பத்து, நூறு ஆகுமோ? என வினாவி, ஆகும்! அமைதியை நினைக்க; பேசுக; எழுதுக. எல்லாம் ஆகும் என்கிறார். அமைதி குறைந்து வரும் உலகம் அமைதி நிறை உலகமாமோ? என்று எழும் ஐயம் அகற்றும் வகையால், வித்தில் இருந்து மீண்டும் வித்து உண்டாவதை எடுத்துக் காட்டி விளக்குகிறார். ãw¥ò tÊ mEgt«, fšÉtÊ mEgt«, ïa¡ftÊ mEgt«, rkatÊ mEgt«, ntWgy mEgt« M»a všyh« Toa mEgt¤jhš ‘thœ¡if¥ngW mikâ’ v‹D« c©ik òy¥g£lJ v‹W«, mikâia miltj‰FÇa tÊ âahd« v‹W« TW« âU.É.f., தியானம் மனிதனைத் தெய்வமாக்கும் - அமைதித் தெய்வம் ஆக்கும் என்கிறார். தியானத்திற்குரிய கொழுகொம்பு மனத்தைப் பண்படுத்து வதாய், அன்பை விளைப்பதாய், அமைதியை ஊட்டுவதாய் இருத்தல் வேண்டும். அத்தகைய பொருள் ஒன்று உண்டா? உண்டு. அஃது எது? அதுவே பரம்பொருள்; வாழ்க்கை வழி என்கிறார். bghUŸ, tÊghL, nr®¡if, thœ¡if tÊ, òu£á, bgUthœî vd MWgF¥ãš üiy ÉÇ¡F« âU.É.f., தோற்றுவாய், இறுவாய் என்று முன்னும் பின்னும் கொண்டு நூலை என்பகுப்பாக்குகிறார். “bghUŸ, khWjš miltJ x‹W; khWjš milahjJ k‰bwh‹W; K‹dJ rl«; ã‹dJ á¤., முன்னது அறிவு இல்லாதது; பின்னது அறிவுள்ளது; அறிவுப் பொருளே பரம்பொருள் என்கிறார். ஞாயிறும் கோள்களும் சுழல்கின்றன. ஒன்றற்கும் ஒன்றற்கும் உள்ள தொடர்பு சுழற்சியை நிகழ்த்துகிறது. இந் நிகழ்ச்சிக்கு அடிப்படை ஒன்று இருத்தல் வேண்டும். அவ் வொன்று சுழற்சியற்றதாய் இருத்தல் வேண்டும். அது பரம்பொருள் என்கிறார். பரம்பொருள் பாழ் - சூந்யம்; சூந்யம் உள்பொருள். பாழ் மனத்துக்கு எட்டாதது; வாக்குக்கு எட்டாதது; அண்ட பிண்ட சராசரங்களுக்கெல்லாம் மூலமாய் முதலாய் இருப்பது. எல்லாவற்றுக்கும் தாய்மைப் பீடம் அது. அதன் ஆற்றலைச் சொல்வதற்குச் சொல் இல்லை. அப் பாழ் - சூந்யம் - பரம் பொருள் எனப்படுகிறது. பரம்பொருள் இயற்கையைத் தன் உடலாகவும், தன்னை உயிராகவும் கொண்டது. பரமும் இயற்கையும் வேறாகத் தோன்றும்; கலப்பாகவும் தோன்றும்; ஒன்றாகவும் தோன்றும் இம்மூன்றும் அறிஞரால் - பேரறிஞரால் - காணப் பெற்றவை என்று கூறிப் பொருட்பகுதியை நிறைக்கிறார். இந்நூலுடன் உள்ளொளி நூலையும் கற்குமாறு தூண்டுகிறார். “xUt‹ j‹id tÊ¥gL¤JtJ tÊghL” v‹W bghUŸ TW« âU.É.f., இயற்கை பரம்பொருளின் உடல்; பரம்பொருள் உயிர். உடற்கருவி கொண்டே உயிருண்மை காண்டல் வேண்டும். இயற்கை உடலை வழிபட்டால், அஃது உயிராகிய பரத்தில் சேரும் எனக்கூறி, உடலை ஓம்புவதும் ஒருவித வழிபாடு என்று எனது அறிவு எனக்கு உணர்த்துகிறது என்கிறார். காலையில் எழுதல், கடன்களை முடித்தல், காற்றில் உலவல், ஞாயிற்றொளியில் மூழ்கல், நீரில் ஆடல், செபம் செய்தல், பொருந்திய உணவருந்தல், நற்றொழில் புரிதல், காவிய ஓவியங்களோடு உறவு கொள்ளல், ஆடல் பாடல்களில் ஈடுபடல், வேளையில் உறங்கி எழல் முதலியன உடலை நன்முறையில் ஓம்பும். ky¢á¡fš cwhjthW fh¥gJ« cliy tÊgLt jhF« v‹D« âU.É.f., வழிபாடு என்னும் பகுதியில் சில கருத்துமணிகளைப் பொறிக்கிறார். பரம்பொருளின் கோயில்களைச் சாய்ப்பதற்கென்று துப்பாக்கி, பீரங்கி, குண்டு முதலிய கொலைக்கருவிகள் வடிக்கப் படுகின்றன. வறுமையும் அறியாமையும் மலிவதற்குத் தலையாய காரணம் தேவைக்கு மேல் பொருள் ஈட்டிக் களியாட்டயர ஆசைப்படுதல். குடும்பம் ஒரு கோயில். ஒவ்வொரு குடும்பமும் அன்புக் கோயிலானால் உலகம் அமைதி வண்ணமாகும். அமெரிக்க அணுகுண்டு ஜப்பானில் இரண்டோர் இடத்தை எரித்தது. பத்திரிக்கை எழுத்துக்குண்டோ உலகையே எரிக்கிறது. பேசும் மனிதன் ஓவியமானால், பேசா ஓவியம் பேசும் போலும். நோய் போக்கும் சக்தி ஓவியத் தியானத்துக்கு உண்டு சமயங்களின் சமரசத்தைத் தெளியச் செய்வது தொண்டு நெறி. உயிர்த் தொண்டு செய்யப் புகுவோர் முதலில் தம்மைத் தொண்டராக்கிக் கொள்வது நல்லது. வழிபாட்டு முறைகளை நம்முன்னோர் முத்திறமாகப் பிரித்துள்ளனர். முதலாவது பரம்பொருளையே புகழ்ந்து நிற்பது; இரண்டாவது குறைபாடுகளை முறையிட்டு முறையிட்டு அழுது அழுது மன்னிக்குமாறு பரத்தை வேண்டுவது; மூன்றாவது தன்னலம் கருதி கோயிலுக்குப் போவது. இம் மூன்றும் முறையே உத்தமம், மத்திமம், அதமம் என்று முதியோ ரால் சொல்லப்பட்டன சேர்க்கை வழிபாடு செகத்தையே ஒன்றுபடுத்தும் என்பவை சில. சேர்க்கைப் பகுதியில், சேர்க்கை இயற்கை சேர்க்கை செறியாத இடமில்லை; பிரிவை நினையாதே; சேர்க்கையை நினை; நீ வாழ்வாய்; உலகமும் வாழும் சேர்க்கை இன்றி உலகம் நிலவாது; வாழாது , உலகை ஒரு குலக் குடும்பமாக்கத் திருவள்ளுவர் காட்டியது காதல் வழி. காதல் இயற்கைச் சேர்க்கை;பிரிவன்று; நீ அணிந்துள்ள ஒரு கோவணம்.. இத்தனைபேர் துணையைப் பெற்றிருக்கிறது! அஃது உலகச் சேர்க்கையைப் பெற்றிருக்கிறதா? இல்லையா? ஆதலின் சேர்க்கை இன்றி உலகில் எவரும் வாழ்தல் இயலாது என்பவற்றை நிரலே விளக்குகிறார். இலௌகிகம் (உலகியம்) வைதிகம் என்னும் வாழ்க்கை வழியை ஆய்கிறார். வெறும் இலௌகிகம் உலகாயதம்;வெறும் வைதிகம் ஆன்மார்த்தம். வாழ்க்கைக்கு இரண்டும் வேண்டும். இரண்டில் ஒன்று உயர்ந்தது மன்று; மற்றொன்று தாழ்ந்தது மன்று என்கிறார். எனது ஆராய்ச்சியிலும் சிந்தனையிலும், வாழ்க்கை, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்பதும், அது தொடர்ந்து தொடர்ந்து செல்வது என்பதும் படிப்படியே விளங்கின. கடவுள் உயிர் உலகம் ஆகிய இம்மூன்றும் தொடக்கம் முடிவு இல்லாதன. இவற்றால் மலரும் வாழ்க்கையும், தொடக்கம் முடிவு இல்லாதது என்று கூறுதற்கு இடமுண்டு. வாழ்க்கையை நடத்துவது பரம்பொருள் என்னும் உணர்வுடன் நடப்பது நேரிய வழி. அவ்வுணர்வு அற்று நடப்பது வேறு வழி. வாழ்க்கை வழி பரம்பொருள் என்பது நல்லுணர்வு அல்லது மெய்யுணர்வு என்றும், வாழ்க்கை வழி என்னுடையது என்று நினைப்பது தீய உணர்வு அல்லது பொய்யுணர்வு என்றும் குறிக்கும் அளவில் இங்கே நின்று விடுகிறேன். என்கிறார். பரம்பொருள் என்வாழ்க்கையை நடாத்துகிறது அதுவே வாழ்க்கை வழி என்னும் உறுதியில் நின்று வாழ்பவனே பாரமார்த்தகன். பாரமார்த்திகம் தன்னலத்தைச் சிதைத்துப் பரநலத்தைக் காக்கும் பண்புடையது. இதற்குக் காரணம் என்னை? பாரமார்த்திகம் எல்லா உயிரிடத்தும் பரம்பொருள் இருப்பதை உணர்த்துவது. பரத்தினிடம் நம்பிக்கை உடையாரை அணுகுண்டோ பிறவோ என் செய்யும்? குழந்தை பிறக்கும்போது மடமை - அறியாமை - உடையதாகப் பிறக்கிறது; பின்னர் அது வளர்கிறது; அறிவு ஆராய்ச்சித் துறையை அடைகிறது; அடைந்து இறுதியில் அறியாமையை அணைகிறது. அணையாவிடின் ஆராய்ச்சியால் விளையத் தக்க பயன் விளையாது. அல்லல் வினையினும் விளையும். முதல் மடமை அஞ்ஞானம்; இறுதி மடமை மெய்ஞ் ஞானம்; இந்த மடமையாகிய மெய்ஞ்ஞானம் பெற்றவரே சான்றோர் - ஆன்றோர் -பெரியோர் என்று போற்றப்படு கின்றனர். இவற்றை என் அநுபவ ஊற்றினின்றும் பொங்குவது என்று நேயர்கட்கு வணக்கத்துடன் அறிவிக்கிறேன் என்பது திரு.வி.க. கூறும் வாழ்க்கை வழித் தொகுப்பாகும். “òu£á ïa‰if be¿¡F mu© brŒtJ” v‹D« âU.É.f., குறைபாடுகள் உள்ளவரை புரட்சியும் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார். மனம் திரும்புதலும் புரட்சியே என்பவர், புரட்சியை அறப்புரட்சி மறப்புரட்சி எனப்பகுத்து ஆய்கிறார். உணவில், பொருந்திய உணவுப் புரட்சி, உடையில், பொறாமை எழுப்பாப் புரட்சி, மயிர்க்கும் மலர்க்கும் பழமை புரட்சி, வாழ்வில் இனிமைப் புரட்சி, சாதி நிறம் சாராப்புரட்சி, தொண்டுச் சமயப் புரட்சி, காதல் மணப்புரட்சி,அமைதிப் புரட்சி என்பவற்றை விரிவாகக் கூறிப் பெருவாழ்வில் புகுகிறார். உயிர் உரிய காலத்தில் பிரிவது மரணமாகாது என்கிறார். பரத்தில் படிந்த மனமுடைய மகன் பரம்பொருள் வாழ்க்கை வழி என்று உணர்ந்து நடப்பன். அவனை மரணம் அணுகாது; அவன் வாழ்வு பெருவாழ்வு - மரணமிலாப் பெருவாழ்வு என்பதை விளக்கி இறுவாய் வரைகிறார். தோழர்களே என விளிக்கும் திரு.வி.க. தோழமைப் பொதுமையை விளக்கி உரைக்கிறார். தோழமை உயர்வு தாழ்வு அற்றது; பெண் ஆண் வேற்றுமை அற்றது; எல்லா உயிரிலும் ஒரு பொருள் பொதுமையில் சேர்ந்திருப்பதை உணர்த்துவது; இவ்வுணர்வில் எல்லா உயிரும் சகோதரம் என்பதை விளங்கச் செய்வது. இத் தோழமை வளர வளர உலகிலுள்ள பலவிதக் குறைபாடுகள் குலையும். உலகம் விடுதலை பெறும் என்கிறார். இதுகாறும் பொது உலகம் பூக்கவில்லை; இனிப் பூக்கும் அதுவே புது உலகம். புது உலகைக் காண எழுக! எழுக! என நூலை நிறைவுறுத்துகிறார். மாந்தர், பரம்பொருள் இயல்புணர்ந்து, அப்பொருளாகத் தாம் மாறித் தம் வாழ்க்கை வழியை அமைத்து, எல்லா உயிரும் இன்புற்றிருக்க வாழும் வாழ்வே, பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி எனச் சுருங்க உரைக்கலாம். திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரை கள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! இன்ப அன்புடன், இரா. இளங்குமரன். பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix நூல் சன்மார்க்க போதமும் திறவும் முன்னுரை 2 குறிப்புரை 4 1. சன்மார்க்க போதம் 4 2. சத் 6 3. மார்க்கம் 17 4. குருமார் 55 5. சீர்திருத்தம் 61 6. சங்கம் 76 7. இறுவாய் 82 சன்மார்க்கத் திறவு 86 முன்னுரை 86 1. தோற்றுவாய் 86 2. குருமார் விளக்கம் 89 3. வழிபாடும் அமைப்பும் 96 4. சமரசமும் சீர்திருத்தமும் 101 சமரச தீபம் 107 முன்னுரை 107 சமரச தீபம் 113 சத்தும் மார்க்கமும் 116 வாழ்வு 118 நமது நாடு 120 நமது கடமை 123 சித்த மார்க்கம் 135 முன்னுரை 135 சித்த மார்க்கம் 136 2. சைவ சித்தாந்தம் 139 பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 177 முன்னுரை 177 1. தோற்றுவாய் 179 2. பொருள் 188 3. வழிபாடு 205 4. சேர்க்கை 234 5. வாழ்க்கை வழி 248 6. புரட்சி? 269 7. பெருவாழ்வு 309 இறுவாய் 349 திரு.வி.க. வாழ்க்கைச் சுவடுகள் 363 சன்மார்க்க போதமும் திறவும் முன்னுரை ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பழமொழி உலகத்தின் புறத்தோற்றத்தை ஒட்டிப் பிறந்தது. தோன்றும் புறத்தின் பலவிதம், அகத்தின் ஒரு விதத்தினது பரிணாமம். பன்மை காரணமா? காரியமா? ஒருமை இன்றிப் பன்மை இன்மையான், பன்மை காரியம் என்பதை நிறுவிக் காட்டுதற்கு விரிவுரை வேண்டுவதில்லை. உலகிலுள்ள மார்க்கங்கள் பலவாகத் தோன்றும். அவை களின் உள் நுழைந்து ஊன்றி நோக்கின், அவைகள் யாவும் ஒன்றாகவே விளங்கும். அவ்வொன்று சன்மார்க்கம் என்பது. மக்கள் வாழ்வில் பெறத்தக்க பேறுகள் பல என்பது பொது மொழி. ஒவ்வொன்றையும் தனித் தனியே பெறுவது அரிது. அப்பேறுகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையாயுள்ள ஒன்றைப் பெறுவது அவை எல்லாவற்றையும் பெறுவதாகும். அவ்வொரு பெரும் பேறு எது? அது சமரசப் பேறு. சமரசப் பேற்றில் எல்லாம் அடங்கும். இப்பெற்றி வாய்ந்த சமரசத்தைக் கூட்ட வல்லது எது? தனித்தனி நாடு - மொழி - நிறம் - வகுப்பு - மதம் முதலியன, உண்மைச் சமரசத்தை வழங்கவல்லன வாகுமா என்பது கேள்வி. இவைகள் பிரிவு உணர்வுகளை எழுப்பிக் கொண்டிருத்தல் வெள்ளிடைமலை. இவைகளினூடே ஒருமையாய்ப் பரந்து நின்று, மேலுங் கடந்து நிற்கும் சன்மார்க்கம் ஒன்றே, உண்மைச் சமரசத்தை வழங்கவல்லது என்னும் நுட்பம் அநுபவத்தில் விளங்குவது. இதனால் சன்மார்க்கம், சமரச சன்மார்க்கம் என்றும் வழங்கப்படுவதாயிற்று. சன்மார்க்கத்தில் நின்று, நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலியவற்றை நோக்குவோர்க்குப் பிரிவு உணர்வு தோன்றுதல் அரிது. அவர்க்குச் சமரச உணர்வே தோன்றும். அவ்வுணர்வும் செயலும் பெற்றவர். எல்லாம் பெற்றவராவர். சன்மார்க்க உணர்வு இயற்கையிலேயே என்னூடு அமைந்தது. இளமையில் அவ்வுணர்வுக்குச் சில வேளைகளில் அசைவு நேர்ந்ததுண்டு. அவ்வசைவால் எனது இயற்கை உணர்விற்கு அழிவு நேர்ந்ததில்லை. இவ்வியற்கை உணர்வும், பின்னே யான் கற்கவும் கேட்கவும் வாய்த்த நூல்கள், பெற்ற சேர்க்கை, உற்ற இல்லறம், ஏற்ற தொண்டுகள், பற்றிய இயக்கங்கள், நிகழ்த்திய போராட்டங்கள், செலுத்திய வாழ்வு முதலியவாற்றான் விளைந்த அநுபவமும் சேர்ந்து சன்மார்க்க உணர்வை என்னுள் நிலைபெறுத்தி விட்டன. பலதிறப் பொருள்பற்றி யான் பேசவோ எழுதவோ நேரும்போ தெல்லாம். அப்பேச்சிலும் எழுத்திலும் சன்மார்க்க உயிர்ப்பு, தானே நுழைந்து கொள்ளும். உலகம் பலதிறப் போராட்டங்களில் ஈடுபட்டுப் பட்டு அலுத்து அலுத்துச் சோர்வுற்று வருகிறது. சிற்சில இடங்களில் சன்மார்க்க வேட்கையும் ஒரு புடை எழுந்து வருகிறது. உலக முழுவதும் சன்மார்க்கம் பரவும் காலம் சேய்மையில் இல்லை. இந்நிலையில் சன்மார்க்கத்தைப்பற்றித் தனிநூல் ஒன்று இயற்றுமாறு இயற்கை அன்னை என்னை உந்தினள். அவ்வுந்துதற் கேற்ப, 1933-ம் ஆண்டில் என்னால் இயற்றப் பெற்றது சமரச சன்மார்க்க போதம் என்னும் இந்நூல். இப்பதிப்பு, சுருக்கத்தின் பொருட்டுச் சன்மார்க்க போதம் என்னுந் தலைப்பைத் தாங்க லாயிற்று. இடையிடை வேறு சில பொருள்களுஞ் சேர்க்கப் பட்டன. இந்நூற்கண் சத்தின் இயல், மார்க்கத்தின் விளக்கம், சமரசத்தின் சிறப்பு, குருமார் நிலை, சீர்திருத்த முறை, சங்க அமைப்பு முதலியன சுருங்கிய முறையில் விளக்கப் பெற்றிருக் கின்றன. இயற்கையோ டியைந்து வாழ்வது சன்மார்க்கத்தில் நிற்பது என்னும் உண்மை இந்நூலின் உள்ளுறை என்று சுருங்கச் சொல்லலாம். சமரச நோக்குடன் யாக்கப்பெற்ற இந்நூலை உலகம் அந்நோக்குடன் ஏற்று ஆதரிப்பதாக. யாதும் ஊரே யாவருங் கேளிர் சென்னை, 14 - 6 - 1933 திருவாரூர்-வி.கலியாணசுந்தரன் குறிப்புரை சன்மார்க்கத்தைப் பற்றிப் பொதுமுறையில் என்னால் நூல்கள் எழுதப்படுவதுண்டு. அம்மார்க்கத்துக்கென்று சிறப்பு முறையில் என்னால் இரண்டு நூல்கள் யாக்கப்பட்டன. ஒன்று சன்மார்க்க போதம்; மற்றொன்று சன்மார்க்கத் திறவு. முன்னைப் பதிப்பில் இவ்விரண்டும் தனித் தனியே வெளியிடப்பட்டன. இப்பதிப்பில் இரண்டும் ஒன்று சேர்க்கப் பட்டன. காரணம் இரண்டுக்குமுள்ள தொடர்பேயாகும். இராயப்பேட்டை 15 - 7 - 1944 திரு.வி.க. சன்மார்க்க போதம் 1. தோற்றுவாய் 1. இயற்கையை உடலாக்கொண்டு, என்றும் மாறுதலின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும், ஒன்றாய், உண்மையாய், அறிவாய், அன்பாய், இன்பாய், அழகாய் உள்ள இறை வாழ்க. 2. இறைக்கு உடலாய் நின்று, திருவிளையாடல் புரியும் இயற்கை வாழ்க. 3. இயற்கை - இறைவழி நின்று, உலகை நடாத்தி வருங் குருமார் வாழ்க. 4. கால தேச வர்த்தமான நிலைமைக்கு ஏற்றவாறு, அவ்வப் போது குருமார்வழிப் பிறந்த அருள் மொழிகள் வாழ்க. 5. அருள்மொழிகளின் பொருளாயுள்ள சன்மார்க்கம் வாழ்க. 6. சன்மார்க்க சங்கம் வாழ்க. 7. சன்மார்க்கம் அநாதி. அது தோன்றிய காலத்தை அறுதி யிட்டுக் கூறுதல் இயலாது. அதற்குப் பல பெயர்கள் வழங்கப்படு கின்றன. அப் பலபட்ட பெயர்களை நீக்கிப் பொருளைப் பார்த்தால் சன்மார்க்கம் ஒன்றே திகழும். 8. சன்மார்க்க சங்க அமைப்பு :- தலைமை - இறை; அமைச்சு - இயற்கை; நிருவாகக் கூட்டம் - குருமார் திருக்கூட்டம்; உறுப்புக்கள் - எல்லா உயிர்களும்; சந்தா - இரக்கம். 9. சன்மார்க்கம் உள்ள இடத்தில் சமரசம் உண்டு. சமரசம் உள்ள இடத்தில் சன்மார்க்கம் உண்டு. ஆதலால் சன்மார்க்கத்தைச் சமரசம் என்றோ, சமரச சன்மார்க்கம் என்றோ சொல்லலாம்; சுருங்கிய முறையில் மார்க்கம் என்றுஞ் சொல்லலாம். 10. சத்+மார்க்கம் = சன்மார்க்கம். சத் - உண்மை; இறை. மார்க்கம் - நெறி; இயற்கை. 11. சன்மார்க்க போதத்தில் புதியது ஒன்றுங் கூறப் புகுகிறே னில்லை. கற்றல் கேட்டலாலும், அறிஞரின் இணைக்கத் தாலும், சிறு சிறு தொண்டுகளில் ஈடுபட்டதாலும் பெற்ற அடைவுகளான், விளங்கிய அறிவு கொண்டு, குருமார் அருளிய உண்மைகளை அடியேன் உணர்ந்தவாறு, அவைகளைத் தொகுத்துச் சுருக்கிக் கூறவே புகுகிறேன். 12. முனைப்பு ஒதுங்கி ஒழிவதாக. குருமாரின் ஒளி வழி காட்டுவதாக. இயற்கை - இறையின் திருவருள் படிவதாக. 2. சத் 1. சத் என்பது உண்மை; உண்மையாவது என்றும் இருப்பது; உள்பொருள். 2. உள்பொருள் இருவிதம். ஒன்று என்றும் மாறுதல் அடையாததாய், ஒரே தன்மையதா யிருப்பது; மற்றொன்று மாறுதல் அடைந்து அடைந்து ஒரே நிலையதா யிராதது. முன்னையது அறிவு - சித்; பின்னையது அறிவற்றது - சடம் - மாயை - இயற்கை. 3. இயற்கைக்கும் அறிவெனுஞ் சித்துக்குந் தொடர்பு உண்டு. இத்தொடர்பால் இயற்கை இயங்குகிறது. 4. அறிவற்றது உள்பொருளாயினும் அது மாறும் பண்புடைமையான், அது சத் என்று வழங்கப்படுவதில்லை. மாறாத அறிவுக்கே சத் என்னும் வழக்கு உண்டு. 5. ஈண்டுச் சத் என்பது மாறாத அறிவெனுஞ் சித்தை உணர்த்துவது. 6. சத் என்னும் உண்மை உள்ள இடத்தில் அறிவு உண்டு. அறிவு உள்ள இடத்தில் அன்பு உண்டு. அன்பு உள்ள இடத்தில் இன்பு உண்டு. இன்பு உள்ள இடத்தில் அழகு உண்டு. ஆகவே, சத்தினை - உண்மை என்றும், அறிவு என்றும், அன்பு என்றும், இன்பு என்றும், அழகு என்றும் அநுபூதிமான்கள் கூறிப் போந்தார்கள். 7. சத் என்பதைப் பற்றி எழுந்துள்ள ஆராய்ச்சிகள் பலதிறத்தன. சத், சடம் என்றும் அறிவு என்றும் - உள்ளது சடம் ஒன்றே என்றும், அதனின்றும் அறிவு பரிணமிக்கிறது என்றும் - உள்ளது அறிவு ஒன்றே என்றும், அதனின்றும் சடம் பரிணமிக்கிறது என்றும் - சத் ஆன்மா என்றும், அவ்வான்மாவே கடவுள் என்றும்- ஆன்மா வேறு கடவுள் வேறு என்றும் - ஆன்மாவும் கடவுளும் ஒன்றுமல்ல வேறுமல்ல என்றும், அவை பொருளில் வேறாகவும் கலப்பில் ஒன்றாகவும் பிரிவின்றிக் கிடப்பன என்றும்- பலவாறு சொல்லப்படுகின்றன. இன்னோரன்ன தத்துவ நுட்பங்கள் யாவும் பேரறிஞரிடமிருந்து பிறந்தனவே யாகும். ஒவ்வொன்றிலும் அறிவு நுட்பம் இல்லாமல் இல்லை. அங்ஙன மாகக் கருத்துக்கள் பல திறத்தனவாய் அவரிடமிருந்து வெளிவந்தமைக்குக் காரணம் என்னை? காரணம் பலபடக் கூறலாம். இங்கே விரிவு வேண்டுவ தில்லை. பேரறிஞரிடமிருந்து பலதிறப்பட்ட தத்துவ நுட்பங்கள் வெளிவந்தமைக்குக் காரணம் என்ன என்று சரித்திரக் கண் கொண்டு நோக்கின், கால தேச வர்த்தமானங்களில் அவ்வப் போது நிகழும் மாறுதல் என்பது நன்கு புலனாகும். மக்களின் அறிவுநிலை ஒரு தன்மையதா யில்லாது, பலவகைப் பட்டதாய் இருத்தலான், அவ்வந் நிலைக்குப் பயன்படு முறையில் பேரறிஞரிட மிருந்து, அவ்வப்போது தத்துவக் கருத்துக்கள் பலதிறத்தனவாய் வெளிவந்திருக்கும் என்றுங் கூறலாம். ஒருவனே தன் வாழ்வில் பலவிதக் கருத்துடையனாதலும் ஈண்டுக் கருதற்பாலது. ஆகவே, பலதிறத் தத்துவங்கள் அறிஞர் வாயிலாக வெளிவந்ததில் தவறு தலில்லை என்க. அவை யாவும் உலக நலத்தின் பொருட்டு வெளி வந்தன என்று கூறுதல் மிகையாகாது. 8. பலதிறத் தத்துவ நூல்களைப் பயிலலாம்; கேட்கலாம். அவைகளால் அறிவு விளக்கம் உண்டாகும். ஆனால் அவை களைக் கருவிகளாகக் கொண்டு வாதத்தில் இறங்குத லாகாது. காட்டில் பலதிற மரங்களிருக்கின்றன. அம்மரங்க ளெல்லாஞ் சேர்ந்தே காட்டின்பத்தை ஊட்டுகின்றன. 9. சத் என்பது மாறுதலில்லாத உண்மை; மாறுதலில்லாத அறிவு. 10. மாறுதலில்லாத அறிவுக்குக் கருவி கரணங்களில்லை. கருவி கரணங்களுடன் கூடிய அறிவு கட்டுடையது. இவ்வறிவுக்கு நிலைக்களனாயுள்ள கருவி மூளை. உயிர்களின் மூளைகளில் வன்மை மென்மை இருத்தல் கண்கூடு. அவ்வன்மை மென்மை மற்ற கருவி கரணங்களுக்கேற்ற வண்ணம் அமை கின்றன. மனித உலகத்தையும், அதற்குப் படிப்படியாய்க் கீழ்ப்பட்டு நிற்கும் மற்ற உலகங்களையும் நோக்கின், அவைகள் கருவி கரண அமைப்பில் மனித உலகத்துடன் மாறுபட்டிருத்தல் காண்கிறோம். அவ்வவ் வமைப்புக்கேற்ற வண்ணம் மூளையின் தன்மை அமைகிறது. மீன் - பறவை - விலங்கு - மனித - உலகங்களின் மூளைகளைச் சோதித்துப் பார்த்தல், அம் மூளைகள் படிப்படியே மென்மையுற்றுக் கொண்டு போதலை அறியலாம். மற்ற உயிர்களின் மூளையினும் மனித மூளை மென்மையதா யிருத்தலால், மனித உலகம் பலப்பல புதுமைகளைக் காணக்கூடியதாயிருக்கிறது. கூர்தல் (உள்ளது சிறத்தல் - Evolution). முறைப்படி, கிடந்த உயிர்கள் ஊர்தலையும், ஊர்ந்த உயிர்கள் பின்னே சிறகைப் பெற்றுப் பறத்தலையும், பறந்த உயிர்கள் பின்னே நாற்கால்களைப் பெற்று நடத்தலையும், இவ்வுயிர்கள் பின்னே தங்கள் முன்னிரு கால்கள் கைகளாகி எழுந்ததும் மண்ணிற் படிந்த தங்கள் பின்னிரு கால்களைக் கொண்டு மக்களாகி வளர்தலையும் பெறலாயின. இவ்வியற்கை வளர்ச்சியில் அவ்வப்போது உள் உறுப்புக் களிலும் புற உறுப்புக்களிலும் உறும் மாறுதல்கள் பல. விளக்கம் உயிர் நூல்களிற் காண்க. இவ்வியற்கை வளர்ச்சியைச் சிந்திக்கச் சிந்திக்க இருகால் மனித நிலைக்கு மேலும் மேலும் நிலைகளிருத்தல் வேண்டும் என்பது விளங்கும். தாழ்ந்த உயிர்கள் இருகால் மனித னாகும் வரை துணைநின்ற இயற்கை, பின்னை வாளா இராது. அஃது உயிர்களை மேலும் மேலும் உயர்த்தத் தன் கடனை ஆற்றிக்கொண்டே யிருக்கும். கூர்தல் முறைப்படி, கருவி கரணங்கள் அருக அருக, மூளை மென்மை உற்று உற்று, அறிவு படிப்படியே விளக்கம் பெறுதல் தெளிவாகிறது. இதனை மனித நிலைவரை நாம் காண்கிறோம். இவ்வாறு படிப்படியாகக் கருவி கரணங்கள் அருகி அருகி, முற்றும் அற்றுப்போகும் ஒரு நிலையை, ஒவ்வோருயிரும் என்றாதல் ஒருபோது அடைந்தே தீர்தல் வேண்டும் என்று ஊகித்து உணர்தல் கூடும். மேல்நாட்டு இயற்கைக் கலைகளும், கீழ் நாட்டுத் தத்துவக் கலைகளும் நெருங்கி நெருங்கி, உறவாடி உறவாடி, ஒன்றுபடப்பட இந்நுட்பங்கள் பல வெளியாகும். கருவி கரணங்களைப் பெற்றுப் பெற்றுப் படிப் படியாக விளங்கி விளங்கி, அவ்வவ்வளவில் கருவி கரணங்களி னின்றும் விடுதலை அடைந்து, அடைந்து முற்றும் கருவி காரணங்களை இழந்து நிற்கும் அறிவு எத்தன்மையதாயிருக்கும்? அவ்வறிவு கட்டின்றித் தன் முழு இயல்புடன் இனிது விளங்கும். கட்டிலிருந்த அறிவுக்கு, இயற்கையின் துணை நல்கிக் கருவி கரணங்களைத் தந்து, அவ்வறிவை விளக்கி விளக்கித் தன்னைப் போலாக்குதற்கு என்றுங் கட்டில்லா ஓர் அறிவு தேவை என்று சொல்ல வேண்டுவதில்லை. அவ்வறிவே சத் என்பது. சத்தெனும் அறிவும் கருவி கரணங்களுடைய தாயின், அது கருவி கரணத் தொடக்குடைய அறிவை மேல் நிலைக்குக் கொண்டுவர இயலாததாய்க் கிடக்கும். ஆகவே, இயல்பாகக் கருவி கரண மில்லாத அறிவே சத் என்று உணர்க. 11. கருவி கரணமில்லாத அறிவு, கட்டில்லாததாதலின், அஃது என்றும் மாறுதலின்றி, ஒரு தன்மையதாயிருப்பது. 12. கட்டுள்ள அறிவென்றும், கட்டில்லா அறிவென்றும் அறிவு இருவிதம் ஏற்படுதல் சிந்திக்கத்தக்கது. கட்டு என்பது அறியாமை. அறிவு ஒன்றோ இரண்டா என்பதைப் பற்றிப் பலதிற ஐயப்பாடுகள் உண்டு. அவைகளை விரிக்கிற் பெருகும். முக்கிய மான இரண்டொன்று வருமாறு:- அறிவு இரண்டு என்றும், அவை சிற்றறிவு பேரறிவு என்றும், மண் புனல் தீ காற்று ஆகியவற்றில் வெளி (ஆகாயம்) நீக்கமற நிறைந்திருப்பது போலச் சிற்றறிவில் பேரறிவு நீக்கமற நிறைந்து நிற்கிறதென்றும், அறியாமை இயல்பாயுள்ள அறிவு சிற்றறிவு என்றும், அறியாமையே இல்லா அறிவு பேரறிவு என்றும், அறியாமை உள்பொருள் என்றும், அநாதி என்றும், அவ்வறியாமையி னின்றும் அறிவு விடுதலை அடைந்து பேரறிவில் இரண்டறக் கலப்பது வீடுபேறு என்றும், வீடுபேற்றில் அறியாமை ஞாயிற்றின் ஒளி முன்னே தாரகைகள் ஒடுங்குதல் போலப் பேரறிவின் முன் ஒடுங்கிக் கிடப்பதென்றும், அறிவு இரண் டெனில் ஒன்றுள்ள இடத்தில் மற்றொன்றிராதென்றும், ஆகவே அறிவு ஒன்றே என்றும், அதற்கு அறியாமை இயல்பில் இல்லை என்றும், அறியாமை உள்பொருள் அன்று என்றும், அது கானற்சலம் போன்றதொன்று என்றும், விவகாரத்தில் அஃது இருப்பதே போல் தோன்றுவதென்றும், பார மார்த்தத்தில் அதற்கு இருப்பு இல்லை என்றும், அறியாமையின் பொய்மை தெளிந்து அறிவாதல் வீடுபேறு என்றும் உலகம் பலவாறு கூறுகிறது. 13. அறியாமையைப் பற்றி எழுந்துள்ள சிக்குகள் பல. அச்சிக்குகள் அறுந்தால் உண்மை விளங்கும். அச்சிக்குகள் அறுதற்கு அறியாமை உள்பொருளா இல் பொருளா ஆதியா அநாதியா என்னும் வாதத்தில் இறங்குவது அநாவசியம். வாதம் எப்பொழுதும் உண்மை உணர்த்துவது அரிது. அறியாமையை உள்பொருள் என்போரும், இல்பொருள் என்போரும், ஆதி என்போரும், அநாதி என்போரும் விடுதலைக்கு முயலுதல் வேண்டுமென்னுங் கொள்கை யுடையவர். பொய் அறியாமையி னின்றோ அல்லது மெய் அறியாமையினின்றோ விடுதலை அடைவதற்குரிய முயற்சியில் தலைப்படுவது அறிவுடைமை. வாதத்தில் இறங்குவது அறிவுடைமை யாகாது. 14. கருவி கரணமின்றியும் கட்டின்றியும் உள்ளது சத்தெனும் அறிவு ஒன்றே. 15. ஒன்றாயுள்ள சத்தெனும் அறிவுக்கு இருவித நிலை உண்டு. ஒன்று எல்லாவற்றையுங் கடந்தது; மற்றொன்று எல்லா வற்றிலுங் கலந்தது. எல்லாவற்றிலும் என்றது இயற்கையை. 16. இயற்கையெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அறிவு நிலையை இறை என்றனர் ஆன்றோர். எங்கும் இறுத்தலை யுடையது இறை. 17. எல்லாவற்றையுங் கடந்த தனி அறிவு நிலை ஊர் பேர் அற்றது. அதையும் இறை என்பது உலக வழக்கு. 18. எல்லாவற்றையுங் கடந்த இறைநிலை வாக்கு மனங்கடந்தது; வழிபாட்டுக்கு உரியதாகாது. எவ்வெவற்றிலுங் கலந்த இறை நிலையே வழிபாட்டுக்கு உரியது. 19. அறிவு விளங்கும் இடத்தில் அன்பு நிகழ்தலும், அறிவு விளங்காது அறியாமைக் கட்டுள்ள இடத்தில் பகைமை முதலியன நிகழ்தலும் அநுபவத்தில் அறிவன. இறை, என்றுங் கட்டில்லா அறிவாயிருத்தலான், அஃது என்றும் அன்பா யிருப்பது. 20. அன்பில் இன்பு இருத்தல் வெள்ளிடைமலை. இறை அன்பாயிருத்தலான், அஃது என்றும் இன்பாயிருப்பது. 21. இன்பம் பொதுவாக எப்பொழுது பிறக்கிறது? நெஞ்சை அழகு கவரும்போது இன்பம் பிறக்கிறது. இறை, என்றும் இன்பமா யிருத்தலான், அஃது என்றும் அழகாயிருப்பது. 22. சத்தெனும் இறை ஒன்றற்கே உலகில் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பெயரையும் ஒவ்வொரு கடவுளாகக் கொள்வது அறியாமை. நீருக்கு உலகில் எவ்வளவோ பெயர்கள் வழங்கப்படுகின்றன. அப்பெயர்களின் பொருளாக உள்ளது நீர் ஒன்றே. 23. கட்டில்லா அறிவாய், அகண்டமாய், எல்லாவற்றையுங் கடந்துள்ள சத், மன உணர்வுக்கு எட்டாதது. 24. உணர்வு பலதிறந்தது. அது, கண் உணர்வு என்றும், காது உணர்வு என்றும், மூக்கு உணர்வு என்றும், நா உணர்வு என்றும், உடல் உணர்வு என்றும், மன உணர்வு என்றும் பலபட்டு நிற்பது. 25. கண் முதலிய உணர்வுகட்கு அடிப்படை மனஉணர்வு. 26. மனம் வெளிமனம் என்றும், உள்மனம் என்றும் இருவகைப்படும். இவை முறையே உருவ மனம் என்றும், அருவ மனம் என்றுஞ் சொல்லப்படும். 27. வெளி மனம் உருவங்களைக் கொள்ளவல்லதென்றும், உள் மனம் உருவங் கடந்தவைகளைக் கொள்ளவல்ல தென்றும் சாதாரண உலகஞ் சொல்லும். மற்ற உலகம் அங்ஙனஞ் சொல்வ தில்லை. 28. உள் மனம், நடு மனம் அடி மனம் என்று பிரியும் போது, வெளி மனத்தை முதல் மனம் என்று கொள்வது முறை. 29. முதல் அடி என்னும்போது நடு தொக்கியிருத்தல் இயல்பு. அது முதலையும் அடியையும் நோக்கி நடுவில் நிற்றலால் அதை முதலுடன் சேர்த்தோ அடியுடன் சேர்த்தோ விடுவது மரபு. 30. இங்கே சுருங்கிய முறையில் வெளி மனம் உள்மனம் என்று சொல்லப்பட்டது. 31. வெளி மனம் புலன்களுடன் உழல்வது. உள்மனம் புலன்களின் தொடர்பற்றது. 32. வெளி மனம் ஒழுக்கத்தை நிலை பெறுத்தாது. ஒழுக்கத்தை நிலைபெறுத்தவல்லது உள் மனம். உள் மனம் ஒழுக்கக் கோயில். 33. உருவமும் அருவமும் சேர்ந்த ஒன்றே அருவுருவ மென்பது. அருவுருவம் அருவத்திலும் உருவத்திலும் அடங்கி நிற்றலான், அதைத் தனிப்படுத்தாது உருவம் அருவம் என்று சொல்வது உலக வழக்காயிற்று. 34. உருவங்களில் பருமை நுண்மை உண்டு. பருமை உருவங்கள் கண்ணுக்குப் புலனாவன; நுண்மை உருவங்கள் கண்ணுக்குப் புலனாகாதன. 35. பருமை உருவங்களைக் கொள்வது வெளி மனம்; நுண்மை உருவங்களைக் கொள்வது உள் மனம். 36. நுண்ணுருவம், அருவம் என்று சொல்லப்படும். 37. அருவம், உருவ மற்றதன்று. அருவம் கண்ணுக்குப் புலனாகாமையால் அதை உருவமற்றதென்று சொல்வது தவறு. அருவம் கண்ணுக்குப் புலனாகாத நுண்ணுருவமுடையது. 38. அருவம் எண்ணம்போன்றது. எண்ணத்துக்கும் உருவம் உண்டு என்பது தத்துவ நூலார் துணிபு. 39. உருவம் மாயா காரியம்; இயற்கைக் கூறு. 40. மாயைத் தொடர்பு உள்ளவரை உருவம் எவ் வழியிலாதல் தலைகாட்டும். 41. மாயை பிருதிவி முதல் நாதம்வரை காரியப்பட்டு நிற்பது. நாதங் கடந்ததும் உருவம் நழுவும். 42. சத் என்பது உருவ அருவங்களில் கலந்து விளங்கி, அவைகட்கு மேலும் தனித்து விளங்குவது. 43. உருவ அருவ நிலைகளைக் கடந்து விளங்குந் தனித்த சத், இருவித மன உணர்வுக்கும் எட்டாதது. 44. இருவித மன உணர்வையும் பொதுவாக மன உணர்வு என்று கொள்ளலாம். 45. மன உணர்வுக்கு மேற்பட்ட நிலைகளும் உண்டு. 46. மன உணர்வுக்கு எட்டாத தனித்த சத்தின் இருப்பை, மன உணர்வினர் எப்படி உணர்வது? 47. மன உணர்வினர் தனித்த சத்தினை நேரே உணர்தல் இயலாதாயினும், அதன் இருப்பை அவர் உணர்தற்குக் கருவி இல்லாமலில்லை. கருவி எது? இயற்கை. இயற்கையைக் கொண்டு சத்தின் இருப்பை உணர்தல் கூடும். 48. நமது உடலில் உயிர் இருக்கிறது. அதன் உண்மையை எவ்வாறு உணர்கிறோம்? உடல் வாயிலாக அன்றோ உணர் கிறோம்? அதேபோல இயற்கை வாயிலாகச் சத்தெனும் இறை உண்மையை உணர்தல் கூடும். இயற்கை உடல்; இறை உயிர். 49. இறையை விடுத்து இயற்கை நிற்பதில்லை. இயற்கையிலே முற்றும் எங்கும் நீக்கமற இறை நிற்கிறது. 50. இயற்கை என்றும், இறை என்றும் சொல்லாலே பிரித்துக் கூறலாமேயன்றி, இரண்டையும் பொருளாகத் தனித்தனியே பிரித்துக் காண்டல் இயலாது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு பிரிவற்றது. 51. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள பிரிவற்ற தொடர்பைக் கொண்டு, இறையை, இயற்கை - இறை என்றும் சொல்லலாம். 52. இறை உயிராய், இயற்கையில் எங்கும் நீக்கமற நிற்றலான், இயற்கையாகிய உடல் இயங்கி இயங்கித் தன் கடனாற்றுகிறது. இயற்கையின் இயக்கத்தைச் சிந்திக்கச் சிந்திக்க இறை உண்மையை உணரலாம். 53. மன உணர்வு உடையோர், உடலாம் இயற்கையை விடுத்து, உயிராம் இறையைத் தனித்து உணர்தல் அருமை. 54. இறை, இயற்கை அளவில் நிற்பதன்று; இயற்கைக்கு மேலுங் கடந்து நிற்பது. இயற்கை கடந்த இறை நிலையின் நுட்பம் மன உணர்வைக் கடந்த பின்னையே விளங்கும். அது பேச்சற்ற அநுபூதி நிலை. மன உணர்விலே அப்பேச்சு எற்றுக்கு? அநுபூதியில் விளங்கத்தக்க ஒன்றைப் பேசிப் பேசி உலகம் இடர்ப்பட்டது போதும்! போதும்!! 55. மன உணர்வுடன் இருந்துகொண்டு, அவ்வுணர்வுக் கெட்டாது, இயற்கையையுங் கடந்து நிற்பதாயுள்ள அகண்டாகார அறிவாய தனி இறையைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் அரிய காலத்தை வீணில் கழிப்பதாகும். 56. உண்மை கண்ட ஞானிகள், வாக்கு மனங் கடந்த தனி இறை அறிதற் கரியதென்று அருளிய மொழிகள் பலபடக் கிடக் கின்றன. அறிதற்கரிய ஒன்றை அறிதற்கரியது என்று அவர்கள் அருளிப் போந்ததன் நோக்கம் என்னை? அவர்கள் நோக்கம், மன உணர்வினர், வாக்கு மனங் கடந்த தனி இறையைப் பற்றிப் பேசிப் பேசிக் காலத்தை வீணே கழியாது, இயற்கை - இறையைத் தியானித்துப் பண்படவேண்டுமென்பது. 57. இயற்கை - இறையைத் தியானித்துப் பண்பட்ட மனம், நாளடைவில் தானே ஒடுங்கி அடங்கும். அதற்குமேல் சில படிகளைக் கடந்து விளங்குவது அநுபூதி நிலை. 58. படிகள், புருடன் கலை விந்து நாதம் முதலியன. நாதங் கடந்த நிலை சொல்லுக்கு அடங்காதது. 59. அநுபூதி நிலையைப் பெறுவிப்பது இயற்கை - இறை. அவ்வியற்கை - இறைவழி நிற்பது மன உணர்வினர் கடன். 60. இயற்கையை அன்னை என்றும், இறையை அப்பன் என்றும் கூறுவது கவிமரபு. 61. இயற்கை - இறையைக் கவிகள் மனம்போனவாறு பாடிய பாக்களினின்றும் பல வடிவங்கள் பிறக்கலாயின. அவ் வடிவங்கள் இயற்கைப் படங்களாகும். அப்படங்களை, இயற்கை - இறையை நினைவூட்டுங் கருவிகளாகக் கொள்ளவேண்டுமே யன்றி, அவைகளை இயற்கை - இறையாகவே கொள்ளுதல் கூடாது. இவ்வாறே இயற்கைக் கூறுகள் வடிக்கப்பெறும் ஓவியங்களையுங் கொள்ளுதல் வேண்டும். நமது நெஞ்சம் இயற்கையினிடஞ் சென்று படிவதற்குக் காவிய ஓவியங்கள் பாலம் போலத் துணை செய்வன. 62. இறையை உயிராக்கொண்டு, தான் உடலாக நின்று, இயற்கை அன்னை தாங்கும் பலதிற அழகுக் கோலங்களும், அவள் புரியும் பலதிறத் திருவிளையாடல்களும், இறையின் இயல்கள் என்று சொல்லப்படும் அறிவு அகண்டம் அன்பு இன்பு அழகு முதலியனவும் பாக்களாகவும், ஓவியங்களாகவும், கதை களாகவும், நாடகங்களாகவும், பிறவாகவும் புலவர்களால் எழுதப் படுவதுண்டு. அவைகளை அவ்வவ்வாறே பொருளாக் கொள்வது தவறு. அவைகள் அறிவிக்கும் இயல்களை உன்னி உன்னி இன்புறுவது அறிவுடைமை. ஒரு நாட்டிற்கோ ஒரு கொள்கைக்கோ பிற எதற்கோ அறிகுறியாகக் கொடி பறக்க விடப்படுகிறது. அக்கொடி எதற்கு அறிகுறி என்பதை உணர வேண்டுமேயன்றிக் கொடிச் சீலையையும் நிறத்தையும் பொருளாக் கொள்வது அறிவுடைமை யாகாது. 63. இறை பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை. அஃது என்றும் மாறுதலின்றி ஒரு தன்மையதா யிருப்பது. 64. உலகு உய்யக் கடவுள் மனிதராக அவதாரஞ் செய்கிறார் என்று சில இடங்களில் சொல்லப்படுவது உண்டு. அஃது உபசாரமேயன்றி உண்மையன்று. 65. உலகின் பொருட்டு அவ்வப்போது அவதாரஞ் செய்வோர் குருமாரே யாவர். 66. குருமார் கடவுளாகவும், கடவுள் அவதாரமாகவும் சிற்சில இடங்களில் போற்றப்படுகிறார்; வீரரும் அவ்வாறே சிற்சில இடங்களில் போற்றப்படுகிறார். இதற்கு அடிப்படை யான காரணம், அன்பும் நன்றியறிதலும் ஆகும். அன்பும் நன்றியறிதலும் எல்லாஞ் சொல்லச் செய்வது இயல்பு. 67. வீரரைக் குருமாரினத்தில் சேர்த்தல் மரபாகியது. 68. குருமார் என்போர் தமக்கென ஒன்றில்லாதவராய், முனைப்புச் சிறிதுமின்றி, இயற்கை - இறைவழி நின்று, இறையொளி கண்டு, கருவி கரணச் சேட்டை ஒழியப் பெற்றவராய், கருவி கரணமெல்லாம் அமுதூறப் பெற்றவராய், இறையொளி நீங்காது விளங்கும் நெஞ்சத் தாமரை யுடையவராய், என்றும் அருளே யுடையவராய், சிவந்த பொன் வண்ணராய், இயற்கை வழிபாட்டாலும், பயன் கருதாப் பணியாலும் தம்மைப் பண்படுத்திக்கொண்ட உயிர்கட்கு மெய்ம்மொழி கூறி உண்மை விளக்குவோராய் இருப்பவர். 69. குருமார் இறைவழி நிற்பவர்; ஆனால் அவர் இறையல்லர். 70. எங்கும் இயங்கும் மின்சாரம், பொறி அமைத்துத் தொழிற்படுத்துமிடத்தே விளங்கித் தோன்றுவதுபோலக் கருவி கரணமின்றி எங்குமுள்ள சத், குருமாரின் நெஞ்சத் தாமரையில் ஒளியாய் நீக்கமின்றி விளங்கிக் கொண்டிருக்கும். 71. சத்தெனும் இறை, கருவி கரணங்கள் இல்லாததாத லாலும், அவ்விறையைக் காண்டல் அரிதாதலாலும், அதனொளி விளங்கும் நிலைக்களனாய்த், தமக்கென ஒன்றின்றி, அதன்வழி நின்று, அதன் அருளால் எதையும் நிகழ்த்து வோராய்க் குரு இருத்தலாலும், அக்குரு வாயிலாக உண்மை உணர்வதாலும் அவரைக் காணுங் கடவுளாகக் கொள்ள வேண்டுமென்பது ஒருவித மரபு. கடவுளும் குருவும் வேறாயினும், குரு வாயிலாகக் கடவுளை அடைதலாலும், குருவுக்குச் செலுத்தும் வந்தனை வழிபாடுகள் யாவும் கடவுளைச் சேர்தலாலும் இருவரையும் பிரித்துக்கூறாது, ஒன்றுபடுத்திக் கூறுதல் வேண்டுமென்பது மற்றொருவித மரபு. இருவரையும் ஒன்றுபடுத்துவதால் நாளடைவில், கடவுள் கருவி கரணமுடையார் என்னுங் கொள்கை பிறத்தற்கு இடம் நேர்தலால், இருவரையும் பிரித்துக் கூறுதல் வேண்டு மென்பது இன்னொருவித மரபு. கடவுளே குருவாக வருவதில்லை; ஆனால் கடவுளின் கூறுகள் குருவாக வருகின்றன என்பது வேறொருவித மரபு. இம்மரபுகளினின்றும் பிரிந்து படர்ந்த கொடிகள் பலப்பல. 72. மரபுகள் பலவாக உலகில் தோன்றிவிட்டன. அவை களின் நுட்பங்களைச் சமரச நோக்குடன் பார்க்கப் பழகுதல் வேண்டும். உலகம் பலவிதம். எல்லார் முகமும் ஒன்றாயமைவ தில்லை. எல்லார் கருத்தும் ஒன்றுபட்டிருப்பதில்லை. ஒவ் வொருவர்க்கு ஒவ்வொருவிதச் சுவையில் விருப்புத் தோன்றுதல் இயல்பு. ஒரு மரமே பலப்பல கவடுசோடுகள் விட்டுப் பிரிந்து, பலப்பல இலை அரும்பு மலர் காய் கனிகளையுந் தாங்கி நிற்கிறது. ஒரு பேர் யாற்றினின்றும் எத்துணையோ கால்வாய்கள் பிரிந்து பிரிந்து ஓடுகின்றன. இவ்வாறே மரபுகளும் ஒன்றி லிருந்தே நாளடைவில் பலவாய்ப் பெருகிவிட்டன. மரபுகள் யாவும் இறை - இயற்கை - குரு - இவைகளை ஒட்டியே சுழன்று சுழன்று நிலவிக் கொண்டிருக்கின்றன. அவ்வம்மரபை அவ்வம் மரபினர் மனங்கொண்டு பார்த்தால் பிணக்குக்கு இடமிராது. 73. சில இடங்களில் குருமாருக்கு வழங்கப்படும் பெயர்கள் கடவுளுக்கும் வழங்கப்படுகின்றன. அப்பெயர்களைப் பற்றிய வாழ்த்தும் வணக்கமும் எங்கே சாரும்? அவை குருமார் வாயிலாக எல்லாம்வல்ல இறையையே சாரும். 74. அவரவர் அறிவாற்றலுக்கு ஏற்றவண்ணம் இறை யுண்மை விளங்கும். அவ்வவ்வாற்றலளவில் எழும் வாழ்த்தும், நிகழும் வணக்கமும் சத் ஒன்றையே சாரும். வாழ்த்தும் வணக்கமும் மெய்யன்புவழி நிகழ்தல் வேண்டும். 75. கருவி கரணமிலாச் சத்தெனும் இறை ஒன்றே, குருமார் உள்ளத்தைக் கோயிலாக் கொண்டு, கால தேச வர்த்தமான நிலைகளை ஒட்டி, அவ்வந்நாட்டு மொழியில் மறையை அருளிச் செய்கிறது. ஆகவே குருமார் மொழிகள் எல்லாம் இறையின் மறைமொழியே யாகும். 76. இறைவனுக்கு இயற்கையுங் கோயில்; குருமாருங் கோயில். இவ்விரு கோயில் வழிபாட்டையும் இயற்கை வழிபாடாகவே கொள்ளலாம். 77. இறையை விடுத்து இயற்கையை மட்டுங் கொள்வோர் சிலர் இருக்கிறார். இயற்கை புலனாகும் ஒன்றாதலானும், இறை புலனாகா ஒன்றாதலானும் இயற்கையை மட்டுங் கொள்ளுதல் வேண்டுமென்பது அவர்தங் கொள்கை. அக்கொள்கை யுடையாரை இறை நேயர்களிற் சிலர் நாத்திகரெனக் கூறுவது வழக்கம். இதனை ஒட்டி வாதங்கள் எழுகின்றன. வாதமின்றி இருசாராரும் வாழ்வு நடாத்தலாம். இருசாராரும் மன உணர்வு உடையவராதலின், இருவர்க்கும் இறை புலனாவதில்லை. இருசாராரும் இயற்கையோ டியைந்த வாழ்வு நடாத்துவதில் ஒருமைப்பாடுடையவர். பிணக்கு எற்றுக்கு? இயற்கை உடல்; இறை உயிர். உடல்வழி நிற்பது, உயிர்வழி நிற்பதாகும். இயற்கையை மட்டுங் கொள்வோர் இறையை மறுத்தோ பழித்தோ கூறாமலும், இவரை மற்றவர் நாத்திகரென இகழாமலும் இருசாராரும் இயற்கைவழி நின்று கடனாற்றல் அறிவுடைமை இயற்கை நெறியே இறை நெறி. 78. இறை உயிர் ; இயற்கை உடல் என்னும் எண்ணத் துடன் இயற்கைவழி நிற்போரும், அவ்வெண்ணம் இன்றி இயற்கைவழி நிற்போரும் செயலில் ஒருமைப் பாடுடையவர். செயலில் ஒருமைப்பாடுடையவர் ஒருவரோ டொருவர் பிணங்க வேண்டுவதில்லை. 79. இறை உண்டு என்பது ஆத்திகம் என்றும், இறை இல்லை என்பது நாத்திகம் என்றும் சொல்லப்படுகின்றன. இறை உண்டு இல்லை என்னும் வாய்ப்பேச்சைக் கொண்டு, ஆத்திக நாத்திக நிலையை அளந்து கூறுதல் இயலாது. இயற்கை நெறி நிற்றல் நில்லாமை என்னுஞ் செயலைப் பொறுத்து ஆத்திக நாத்திக நிலை நிற்பது. 80. இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்துவோர் ஆத்திகர். அவ்வாழ்வு நடாத்தாது வேறு வழியில் செல்வோர் நாத்திகர். 81. இயற்கையோடியைந்த வாழ்வு என்பது உயிர்கள் வழிபாட்டையும் உடன்கொண்டது. 82. சத்தினைத் தனிப்படுத்தி, அதை மன உணர்வால் ஆராய்ந்து ஆராய்ந்து, காலம் போக்காது, அதனை அடைதற் குரிய மார்க்கத்தில் நின்றொழுகுவது சிறப்பு. 83. சத்தினை அடைதற்குரிய மார்க்கம் எது? 3. மார்க்கம் 1. சத்துக்குரிய மார்க்கம் இயற்கை. சத் - இறை ; மார்க்கம் - இயற்கை. 2. இயற்கையோடு இயைந்து வாழ்வது சத்மார்க்கம். (சத்தை அடைதற்குரிய மார்க்கம் சத்மார்க்கம் - சன்மார்க்கம்). 3. இயற்கையோ டியைந்து வாழ்வது என்பதும், இறையோ டியைந்து வாழ்வது என்பதும் ஒன்றே. 4. இறை, புலனாகாது இயற்கையுடன் எங்கும் என்றும் நீக்கமற நிறைந்து நிற்கும் ஒன்றாதலான், மன உணர்வினர் இயற்கையை விடுத்து இறையைத் தனியே நாடுதல், நீர் வேட்கையைத் தணித்துக்கொள்ளக் கானற் சலத்தை நாடி ஓடினவன் கதையாக முடியும். 5. இயற்கையும் இறையும் பிரிவின்றி இருத்தலானும், இறையை விடுத்து இயற்கை நிற்றலின்மையானும், இயற்கை என்னும்போது அஃது இறையையுங் குறிப்பதெனக்கொள்க. 6. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள ஒருமைப்பாட்டைப் புலப்படுத்த இறையை, இயற்கை - இறை என்றோ, இயற்கை என்றோ கூறலாம். 7. மன உணர்வு உடையோர், மார்க்கமாகிய இயற்கையைப் பற்றுக்கோடாகக்கொண்டு வாழ்வது ஒழுங்கு. அவர்க்கு அது சிறந்த வழிபாடாகும். 8. இயற்கையில் மனம் படியத் தக்க துறைகளில் மக்கள் இறங்கப் பயில்வது நல்வாழ்வுக்கு அடிகோலுவதாகும். 9. இயற்கைத் துறை நண்ணி, இறை இன்பம் நுகர முயலாது, இயற்கையை வெறுத்து, நெறியல்லா நெறியில் உழலுதல் கூடாது. 10. இயற்கையை வெறுப்பது இறையை வெறுப்பதாகும். இயற்கை, இறையின் உடலாதலால் இயற்கையை வெறுப்பதும் நாத்திகமாகும். 11. இயற்கை வாழ்வை வெறுப்பது துறவு என்று சில இடங்களில் கருதப்படுகிறது. அது தவறு. 12. துறவு என்பது என்னை? இயற்கைக் குணத்துக்கு மாறுபட்ட செயற்கைக் குணத்தை நீப்பது துறவாகும். 13. தன்னுயிரைப் போல் மன்னுயிரைக் கருதுவது உயிரின் இயற்கைக் குணம். அவ்விழுமிய குணம் விளங்காதவாறு அதனை மறைப்பது செயற்கைக் குணம். 14. செயற்கைக் குணத்தின் வரலாற்றை ஆராய்வதில் பொழுது போக்க வேண்டுவதில்லை. செயற்கைக் குணமிருத்தலை நாம் உணர்கிறோம். அதனை அகற்ற முயல்வது அறிவுடைமை. 15. பொறை, அன்பு, அருள், வண்மை, தனக்கென வாழாமை, பிறர்க்கென வாழ்தல், அவ்வாழ்வுக்குரிய தொண்டாற்றல், இன்ன பிற - இயற்கைக் குணத்தின் கூறுகளாம். 16. பொறாமை, எரி, பகை, வன்கண்மை, தனக்கென வாழ்தல், பிறர்க்கென வாழாமை, பிறர் நலங் கருதித் தொண்டாற்றாமை, இன்ன பிற - செயற்கைக் குணத்தின் கூறுகளாம். 17. துறவு என்பது செயற்கைக் குணத்தை நீப்பது. 18. செயற்கைக் குணத்தை நீத்து, இயற்கைக் குணத்தில் நிலைத்திருப்பின், இன்ப வாழ்வு கூடும். 19. செயற்கைக் குணத்தை எப்படி நீப்பது? இயற்கையை வெறாது, அதனுடன் இயைந்து வாழ வாழச் செயற்கைக் குணம் தானே ஒழியும். இயற்கை வாழ்வை வெறுப்பது செயற்கைக் குணத்தை நீப்பதாகாது. 20. உடலையும், பெண் ஆணையும், ஆண் பெண்ணையும், மண்ணையும், பொன்னையும், இன்ன பிறவற்றையும் வெறுத்து நீப்பது இயற்கை வாழ்வாகாது. 21. இயற்கை வாழ்வுக்குரிய உடல் முதலியவற்றை வெறுத்து நீத்தலைத் துறவெனக் கருதுவது பாவம். 22. முதலாவது உடலை நன் முறையில் ஓம்புதல் வேண்டும். 23. உடல், உயிர் விளக்கத்துக்கென இயற்கை - இறையால் வழங்கப்பட்ட உடைமை. உடல், இயற்கையின் காரியம். அஃது இறையின் கோயில். 24. இயற்கைக் காரியம், ஒவ்வொருவித உடலாக அமைந்து அமைந்து, உயிரைப் படிப்படியே விளக்கி விளக்கி, அதனை அறியாமையினின்றும் விடுதலை செய்து வருகிறது. அத்தகைய உடலை ஓம்பவேண்டுவது நம் பெருங்கடமை. 25. உடலை மாயை எனக் கருதி, அதனை வெறுத்தலும், ஒறுத்தலும், தீயொழுக்கத்துக்குப் பாழ்படுத்தலும், அகால மரணத்துக்கு உட்படுத்தலும் பாவம்; பாவம்; பெரும்பாவம். 26. உடல், இறைகோயில் அதை நோய்க்குடிலாக்குவது தவறு. அதனால் உயிர்நலனுக்குக் கேடு நேரும். 27. உயிரின் கட்டை அறுப்பதற்கு உடல் ஒரு கருவி. அக் கருவியைப் பழுதுபடுத்தல் உயிரின் நலத்துக்குக் கேடு சூழ்வதாகும். 28. உடலோம்புவது இயற்கை வாழ்வுத்துறைகளுள் ஒன்று. 29. உடலோம்பலுக்குரிய துறைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும். இன்றியமையாத சில வருமாறு :- மரஞ் செடிகள் சூழ்ந்து, காற்றும் ஒளியும் எளிதில் பரந்து படரும் வீட்டில் வாழ்தல், வைகறைத் துயிலெழல், காலைக் கடன்களை முடித்தல், கதிரொளியில் மூழ்கல், காற்றில் உலவல், குதிரை ஏற்றமோ, பந்தாட்டமோ, நீராடலோ, கடற்செலவோ, தரைச் செலவோ இவைகளில் ஒன்றையோ சிலவற்றையோ கொள்ளல், இயற்கை - இறையை நினைத்தல், பொருந்திய உணவு அருந்தல், பசிக்கனல் எழுந்த பின் சாப்பிடுதல், குறித்த வேளையில் கடனாற்றல், எரி பகை முதலியவற்றை எழுப்பும் துறைகளிலும் தொழில் முறை களிலும் ஈடுபடாதிருத்தல், இயற்கைப் பொருள்களை விருப்பொடு நோக்கி நோக்கி, உன்னி உன்னி மகிழ்தல், பெண்ணுடன் ஆணும் ஆணுடன் பெண்ணும் கலந்து வாழ்தல், ஒழுக்கங்காத்தல், பாவிய ஓவியங்களிற் கருத்திருத்தல், பிற உயிர்கட்கிரங்கல், தீங்கு செய்வோர்க்கும் நலஞ்செய்தல், இன்னோரன்ன பிற. 30. நல்லுடலுக்கு அறிகுறி மலச்சிக்கலின்மை. மலச் சிக்கலே எல்லா நோய்கட்குந் தாயகம். 31. மலம் சிக்கித் தங்கிப் பழமையாய், நஞ்சாய், உறுப்புக்களில் ஊறும். அதனால் நஞ்சு எவ்விடத்திலேனும் நோயரய்த் தலைதூக்கும். அந்நோய்க்குப் பலவிதப் பெயர்கள் மருத்துவரால் சூட்டப்படுகின்றன. 32. தங்கு மலம், பழமை ஆக ஆக, அது நஞ்சாகி, நாடி நரம்புகளில் தேங்கி, மூளையையும் பற்றும். 33. மலநஞ்சேறப்பெற்ற மூளையினர்க்கு அமைதித் தியானங் கூடுதலரிது. அவர்க்குத் தியானங் குலைந்து கொண்டே போகும். 34. தியானம் உடல் நலனுக்கும் உயிர் நலனுக்கும் வேண்டற் பாலது. இது பின்னுங் கூறப்படும். 35. மலச்சிக்கலால் வெம்மை எழும். அவ்வெம்மை பலவிதத் தீயொழுக்கங்கட்கு வழிகோலும். 36. மலச்சிக்கல் உறாதவாறு உடலைக் காப்பது அறிவுடைமை, உடற்பயிற்சியும், பொருந்திய உணவும், நல்லெண்ணமும், தியான மும் மலச்சிக்கல் உறாதவாறு காக்கும் (உணவில் சிறப்பாகக் குறிக்கத்தக்கன கீரையும் பழமும்.) 37. மலச்சிக்கலால் உறும் நோயைப் போக்க உலகம் மேற்கொள்ளும் முறைகள் பலதிறத்தன. அவைகள், முத்திறத்தில் அடங்கும். முத்திறமாவன : இறைவழி அதாவது தியானம், இயற்கை மருத்துவம், மருந்து முறை. 38. மலச்சிக்கல் உறின், அதை மருந்தால் போக்க முயல்வது, தற்காலச் சாந்தி தேடுவதே யாகும். மருந்தால் பழைய மல நஞ்சு அறவே நீங்காது. 39. நோன்பு முறை பொருந்தியது. இஃது இறைவழிக்கும் இயற்கை மருத்துவத்திற்கும் அரண் செய்வது; பொதுமையது. 40. அவரவர் உடல் நிலைக்கேற்றவாறு வாரத்துக்கொரு முறையோ மாதத்துக் கொருமுறையோ நோன்பிருப்பது நலம். நோன்பிகட்கு மலஞ்சிக்குதல் இல்லை. 41. மலச்சிக்கல்உறின், அதைப்போக்கும் பேராற்றல் நோன்புக்கு உண்டு. 42. நோன்பு, முறைப்படி இருத்தல் வேண்டும். நோன் பிருத்தற்கு முன்னாள், பகல் உணவு கொண்டு, அன்றிரவு எவ்வுணவுங் கொள்ளலாகாது. மறுநாள் காலை எழுந்து, காலைக்கடன்களை முடித்தல் வேண்டும். நோன்பு வேளையில் சோர்வு குமட்டல் மயக்கம் நேரும்போதெல்லாம் நீர் அல்லது உப்புக் கலந்த நீர் அருந்தல் வேண்டும். நீர் அருந்தாமல் இருப்பது தவறு. அருந்தும் நீர், சோர்வு குமட்டல் மயக்கங் களைப் போக்குவதுடன், உட்கருவிகளை வறள ஒட்டாமல் காத்து, அவைகளில் ஏறித் தேங்கி ஊறியுள்ள மல நஞ்சு கீழிறங்கத் துணை செய்யும். நோன்பின்போது தீயொழுக்க நினைவுந் தோன்றலாகாது. அந்நினைவு நாடி நரம்புகளை அரித்துப் பாழாக்கும். அச்சமயத்தில் தெய்வத் தியானஞ் செய்தும் தெய்வக் கதைகள் கேட்கும் இருப்பது நலம். காற்றொளி படராத இடங்களில் இருத்தலாகாது. முறைப்படி சூரிய நானம் செய்வது தவறுதலாகாது. மூன்றாம் நாள் வழக்கம்போலக் காலைக்கடன்களை முடித்து நோன்பு கழிக்கப் புகுதல் வேண்டும். நோன்பைப் படிப்படியே கழித்தல் வேண்டும். திடீரெனப் பரு உணவுகளை உண்ணுதல் பெறுந்தவறு; உண்ணின் நோன்பின் பயனுங்கெட்டு, மெலிந்த உட்கருவிக ளெல்லாம் இடர்ப்பட்டு, நலத்துக்குப் பதிலாகத் தீமை விளையும். முதலாவது நீர் பருகிப், பின்னே பழச்சாறு பருகிப், பின்னே நீர்மோர் கஞ்சி போன்றன பருகிப், பின்னே வழக்க உணவு ஏற்கலாம். இஃது ஒருநாள் நோன்பு முறையாகும். விரிவு, நோன்பு நூல்களிற் காண்க; இயற்கை மருத்துவரிடங் கேட்டுத் தெளிக. 43. நோன்பால் பண்பட்ட நல்லுடல் இயற்கை வாழ்வுக்குப் பொருத்தமானது. அந்நல்லுடல் தியானத்துக்குப் பெருந்துணை செய்யும். 44. நல்லுடலுக்கு மரஞ் செடி கொடிகளிடை வாழ்வதுந் தேவை. 45. மரஞ் செடி கொடி முதலிய தாவரங்கட்கும் உயிருண்டு. 46. ஒவ்வொரு வீட்டையும் மரஞ் செடி கொடிகள் சூழ்ந்திருத்தல் அழகு. 47. ஞாயிற்றொளியும் நறுங் காற்றும் எளிதில் நுழையும் முறையில் அமையும் வீடுகள் வாழ்வுக்கு உரியன. 48. ஒளியையும் காற்றையும் செயற்கைவழிப் பெறும் முறையில் வீடுகள் அமைதலாகாது. 49. நாடுகளின் தட்பவெப்ப நிலைமைக்கேற்ற வண்ணம் வீடுகள் அமைவது இயற்கைக்கு அரண் செய்வதாகும். மாறு பாட்டால் நோய் மிகும். 50. பாதைகளின் இரு பக்கமும் மர வரிசைகள் அமைந் திருத்தல் நல்லது. 51. பயிர் பச்சைகளின் பரவையும், சோலைகளின் ஓங்கலும் ஒவ்வோர் ஊருக்குந் தேவை. 52. காடுகளை நன்முறையில் காப்பது நாடுகளைக் காப்பதாகும். 53. நாட்டின் உயிர்ப்பு காடு; நாட்டைக் காப்பது காடு. 54. ஓரூரின் ஜனத்தொகையைப் பார்க்கிலும் மரஞ்செடி களின் தொகை அதிகமிருத்தல் வேண்டும். 55. மரஞ் செடி கொடி முதலியன உயிர்ப்பை (பிராண வாயுவை) உமிழ்கின்றன; கீரை, பூ, காய், கனி முதலியவற்றைக் கொடுக்கின்றன; பசுமைக்காட்சியை வழங்குகின்றன; பாடும் பறவைகளுக்கு இடந்தருகின்றன; வேறு நலன்களையும் அளிக் கின்றன. 56. பசுமைக் காட்சி வழங்காத ஊர் பாழ். அங்கே பிணிகள் பெருகும். பசுமை, மூளைக்கும் நாடி நரம்புகட்கும் நலஞ் செய்வது. அது வெம்மை தணிக்கும் இயற்கைமருந்து. 57. நகரங்களில் பிணிகள் பெருகுதற்குக் காரணங்கள் பல உண்டு. அவைகளுள் ஒன்று மரஞ் செடி பயிர் பச்சை முதலியன பெரிதும் இன்மை. 58. மரத்தடியிலிருந்தோ நின்றோ உலவியோ கதிரொளியில் முழ்குவது (சூரிய நானஞ் செய்வது) சிறப்பு. கதிரொளி, பச்சிலைகள் வாயிலாக உடலில் படர்வது பொருத்தம். 59. மக்கள், மரஞ் செடி முதலியவற்றை ஓம்புவது தங்களை ஓம்புவதாகும். 60. வாயில்லா ஏழைப் பிராணிகளை அன்புடன் வளர்த்தல் அறம். அவைகளை வதைப்பது அறமன்று. 61. நமது உடம்பைப்போலவே பிற உயிர்களின் உடம்பையும் பாவித்தல் வேண்டும். பிற உயிர்களின் உடம்புகளுக்குத் தீங்கு செய்வது நம் உடம்புக்கு நாமே தீங்கு செய்வதாகும். 62. இயற்கையில் ஒரு சக்தி இருக்கிறது. அதன் இயல்பு உயிர்களின் வளர்ச்சியை நாடுவது. அவ்வளர்ச்சிக்கென இயற்கையில் உடலங்கள் அமைகின்றன. அவ்வுடலங்களுக்குக் கேடு சூழ்வது இயற்கை வளர்ச்சியைத் தடுப்பதாகும். அத்தடை, கேடு சூழ்ந்தோரையுந் தாக்கி இடர்ப்படுத்தும். ஆகவே எவ்வுயிருடலுக்குங் கேடு சூழ்தலாகாது. 63. உயிருக்கு உடனமைந்துள்ள உடலோடு வேறு சில உடலங்களுமுண்டு. அவை வீடு, ஊர், நாடு, உலகம். இவைகளை யும் உடலைப் போலவே பாவித்தால் அன்பு ஊற்று தானே திறந்துகொள்ளும். 64. நல்வழியில் உடலை ஓம்புவதுடன் கல்வி பயின்று வருதல் வேண்டும். 65. கல்வி என்பது அறியாமையைக் கல்லி அறிவை விளக்குவது. அதாவது இருளையோட்டி ஒளியை வழங்குவது. 66. இளமையிலே கல்வி பயில முயல்வது நலம். 67. இளமை, பின்னெழும் வாழ்வு நிலையத்திற்கு அடிப்படை. 68. கல்வித் துறைகள் பல. அவைகளில் மக்கள் தத்தம் இயல்புக்கேற்ற ஒன்றைக் குறிக்கொண்டு, அதைச் சிறக்கப் பயில்வது முறைமை. பிற துறைகளில் ஒல்லும் வகை பொது அறிவு பெற முயல்வது ஒழுங்கு. 69. தொழிற் கல்வியும் கல்வியின் பாற்பட்டதே. 70. கல்வி, பெண் ஆண் என்னும் இருபாலார்க்கும் உரியது. 71. ஒத்த கல்வியுடைய ஒருவரை ஒருவர் மணப்பது செழுமை. 72. ஏட்டுக் கல்விப் பயிற்சியுடன் இயற்கைக் கல்விப் பயிற்சியுந் தேவை. 73. ஏட்டுக் கல்வி என்பது இயற்கையின் படம். 74. இயற்கையோடியைந்து நின்று வாழ்வு நடாத்திய அறிஞர், அவ்வாழ்வில் தாம் பெற்ற அநுபவங்களைப் பின் வருவோர் பொருட்டுப் பலதிறக் கலைகளாக எழுதிச் சென்றனர். அக்கலைகளின் பொருள் இயற்கை. 75. ஏட்டுக் கலைகள், இயற்கைக் கழகத்தில் எப்படிப் பயில்வது என்பதை உணர்த்துவன. 76. கலைகள் பலதிறத்தன. அவைகளை இருகூறு படுத்த லாம். ஒன்று இயற்கை இயல்களைக் கூறும் இனம்; இவ்வினம் அறிவியற்கலை (Science) எனப்படும். மற்றொன்று இயற்கைக் காட்சி இனம். இவ்வினம் காவிய - ஓவியக்கலை எனப்படும். 77. அறிவியற் கலையை வாழ்வு நலத்துக்குப் பயன் படுத்துவது நியாயம். அக்கலையைப் போருக்கும் கொலைக்கும் பயன்படுத்துவது தவறு. 78. அறிவியற்கலை வாழ்விற்குப் பயன்படு முறையில் வளர்ந்துவரின், அதனால் மன்பதைக்குத் தீங்கு விளையாது. அக்கலை போருக்கும் கொலைக்கும் என்று வளர்ந்துவரின், அதனால் மன்பதைக்குத் தீங்கு நேரும். 79. அறிவியற்கலை நன்முறையில் வளர வளர, இயற்கையை உடலாக்கொண்ட இறை உண்மையை எளிதில் உணர்ந்து உறுதிபெறுதல் கூடும். 80. காவியமும் ஓவியமும் இயற்கை அன்னையின் திருக் கோயில்கள். அக்கோயில்களில் நுழைந்து பார்த்தால், இயற்கை அன்னையின் உறுப்புக்களும், கோலங்களும், ஆடல்களும், இயற்கை வாழ்வுத் திறங்களும், இன்ன பிறவும் விளங்கும். 81. காவியங்கள் எழுத்தால் ஆக்கப்பட்ட சொல்லடுக்குக் கூடங்களல்ல; ஓவியங்கள் வரிக்கீற்றோ வடித்தலோ கொண்ட பிண்டங்களல்ல. அவைகளைப் பயின்று பயின்று, அவைகளின் நுட்பங்களைக் கூர்ந்து உன்னி உன்னி, அவைகளில் ஒன்றி ஒன்றி, ஈடுபடப்பட, அவைகள் இயற்கைப் படக்காட்சிக் கூடங்கள் என்பது நனி விளங்கும். 82. காவியமும் ஓவியமும் உயிர்களைச் செயற்கையி னின்றும் இயற்கையிற் சேர்க்கும் பாலங்கள். 83. எவ்வெம் மொழியில் எவ்வெக் காவியங்கள் தோன்று கின்றனவோ, அவ்வம் மொழியில் அவ்வக் காவியங்களைப் பயின்றால் காவிய இன்பத்தை நன்முறையில் நுகர்தல் கூடும். 84. ஒரு மொழியில் தோன்றிய காவியத்தை மற்றொரு மொழியில் பெயர்த்துப் பயின்றால் காவிய இன்பத்தை நுகர்தல் இயலாது. 85. மொழிபெயர்ப்பில் காவியக் கதைகள் அடங்கி வரும்; ஆனால் காவிய இன்பம் அடங்கி வாராது. 86. காவிய இன்பத்துக்குத் தாய்மொழிப் பயிற்சி இன்றியமை யாதது. 87. அறிவியற் கலைக்கு மொழிக் கட்டுப்பாடு வேண்டுவ தில்லை. அதை எம்மொழி வாயிலாகவும் பயிலலாம். 88. தாய்மொழி என்று பிற மொழிகளை நிந்தித்தலாகாது. 89. மொழிகளின் ஒலியில் வேற்றுமையுண்டு. கருத்தில் வேற்றுமை கிடையாது. 90. மயில் தோகை விரித்தாடுகிறது. அவ்வாடலைத் தமிழன் தமிழில் எழுதுகிறான்; வடமொழியன் வடமொழியில் எழுது கிறான்; ஆங்கிலன் ஆங்கிலத்தில் எழுதுகிறான்; மற்ற மற்றவர் தத்தம் தாய்மொழியில் எழுதுகிறார். இப்பலதிற மொழிகளா லாகிய பாடல்களின் முதற்பொருள் ஒன்றே யன்றோ? 91. மொழிகளின் தாயகமும் சிந்திக்கத்தக்கது. அது நாத மூலம். நாத மூலம் நாடுகளின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ற வாறும், பிற வேற்றுமைகளுக் கேற்றவாறும் பலதிற மொழியொலி களாகப் பரிணமிக்கிறது. 92. இசையும் நாடகமும் வாழ்க்கைக்குத் தேவை. 93. கலைக் கழகப் பயிற்சி நாளடைவில் இயற்கைக் கலைக் கழகப் பயிற்சியாக மாறும். அம்மாற்றம் பெறுதற்கு இயற்கையில் அறம் என்பது அமைந்திருக்கிறது. 94. அறம் இரு கூறுடையதென்றும், ஒன்று இல்லறமென்றும், மற்றொன்று துறவறமென்றும், முன்னையது பெண்ணுடன் வாழ்வதென்றும், பின்னையது பெண்ணை நீத்து வாழ்வதென்றும், அஃது இழிந்ததென்றும், இஃது உயர்ந்த தென்றும் சிலர் கூறுகிறார். அக்கூற்றுப் பொருளற்றது. 95. அழுக்காறு அவர் வெகுளி முதலிய தீக்குணங்களை அறுப்பது அறம். 96. அழுக்காறு முதலிய தீக்குணங்கட்கு அடிப்படையா யிருப்பது தன்னலம். 97. தன்னலம் அறுந்தால் அறம் விளங்கும். தன்னலத்தை அறுப்பது எப்படி? 98. ஒருத்தியோ ஒருவனோ தொடக்கத்தில் தன்னலம் உடையவராக இருத்தல் வெள்ளிடைமலை. அவளும் அவனும் உற்ற வயது அடையும்போது அவர்பால் காதல் எழுகிறது. அக்காதல் இருவரையும் ஒன்றுபடுத்துகிறது. பின்னே அவரவரிடம் தனித்தனியே தன்னலமாகக் கட்டுப்பட்டுக் கிடந்த அன்பு இருவரிடமும் பரவுகிறது. இருவர்க்கும் பிள்ளைகள் பிறந்த பின்னை இருவரிடமும் பரவிய அன்பானது மூன்றாவது உயிர்களிடம் பரவிப் பெருகுகிறது. பிள்ளைகளின் நலத்துக்குத் தாய் தந்தையர் தன்னலம் அற்றுத் தொண்டு செய்தலை விரித்துக்கூற வேண்டுவதில்லை. ஹிருவரும் ஹிளமைழீல் பெற்ற கலைஞானமும், நின்னே வாழ்க்கைழீல் பெற்ற அநுபவமும் ‘நம் உழீர்கட்கும், நம்மைச் சார்ந்த உழீர்கட்கும், மற்ற உழீர்கட்கும் என்ன வேற்றுமை ஹிருக்கிறது? என்று கருதச் செய்து, மற்ற உயிர்கட்குத் தொண்டு செய்ய உந்துகின்றன. இப்பொழுது அன்பு பிற உயிர்கள் மாட்டும் செல்வதாகிறது. அன்பு விளையும் இடங்களில் அழுக்காறு அவா வெகுளி முதலிய தீக்குணங்கள் இடம் பெறுவதில்லை. ஆகவே, தன்னல அழிவு, பெண் ஆண் கூட்டுறவில் நேர்தல் கருதற்பாலது. 99. தன்னல அழிவு, படிப்படியாகப் பெண் ஆண் கூட்டுறவால் நிகழ்தல் உள்ளங்கை நெல்லிக்கனி. அவ்வழிவு தனித்த வாழ்வில் எங்ஙனம் உறும்? 100. தனித்த வாழ்வில் தன்னலம் அழிதல் அரிது. ஒருவேளை அவ்வாழ்வில் தன்னலம் பெருகினும் பெருகும். 101. தன்னலத்தை நீப்பது துறவு. அது பெண் ஆணின் அன்பு வாழ்க்கையால் நிகழ்வது. ஆகவே, பெண் ஆணை நீத்தும், ஆண் பெண்ணை நீத்தும் வாழ்வது துறவாகாதென்க. 102. தீக்குணங்கட்கு உறைவிடமான தன்னலத்தை நீப்பது அறம் என்பது மேலே விளக்கப்பட்டது. அவ்வறத்தை இல்லறம் என்றோ துறவறம் என்றோ கூறலாம். 103. பெண் ஆண் கூட்டுறவு, அன்பு வளர்ச்சிக்கென ஏற்பட்ட இயற்கை அறம். 104. இயற்கை அறத்தை இல்லறம் (இல்லில் வாழும் அறம்) என்றால் என்ன? துறவறம் (தன்னலத்தைத் துறக்கும் அறம்) என்றால் என்ன? பெயரைப் பற்றிய போராட்டம் வேண்டுவ தில்லை. வேண்டுவது தன்னலத்தை அறுப்பது. 105. இயற்கை அறம் என்பது, இளமையில் பெற்ற கலைஞான இயல்களை வாழ்வில் செயலில் கண்டு தெளிந்து மெய்ஞ்ஞான அநுபூதிபெறச் செய்வது. 106. ஒருத்தியும் ஒருவனும் உற்ற வயது அடையும் போது, அவர்பால் காதல் இயல்பாகவே எழுகிறது. அவ்வெழுச்சி இயற்கையி னின்றும் பிறத்தலால், அதற்குரிய பெண் ஆண் கூட்டுறவு இயற்கையின் பாற்பட்டதென்று தெளிக. 107. இயற்கை அன்னையும், இறை அப்பனும் கூடி இருத்தலால் உலகம் முகிழ்த்துக் கொண்டிருக்கிறது. 108. உலகம் பெண் ஆண் மயமாயிருத்தல் கண்கூடு. 109. தாவரம் முதல் மக்கள் ஈறாக உள்ள உயிர்கள் யாவும் பெண்ணாகவே இல்லை, அல்லது ஆணாகவே இல்லை. உங்கள் பெண்ணும் ஆணுமாகவே அமைந்திருக்கின்றன. 110. பெண்ணும் ஆணும் இயற்கை அமைப்பிலிருத்தலால், பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் வெறுத்துத் துறத்தல் இயற்கை ஆறமாகாது. 111. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் துறத்தல் இயற்கை அறமாயின், இயற்கையில் பெண் ஆண் என்னும் வேற்றுமை தோன்றாதவாறு படைப்பு நிகழும். ஆனால் பெண் ஆண் என்னும் வேற்றுமை தோன்றவே படைப்பு நிகழ்ந்து வருகிறது. இயற்கையில் பெண் ஆண் தோற்றம் இருத்தலால், உலகிலும் பெண் ஆண் கலந்த அன்பு வாழ்வு நடைபெறுதல் வேண்டுமென்பது அறியத்தக்கது. 112. பெண்ணை நீத்தல் துறவு என்று எவரோ சிலர் கூறிப் போந்தனர். அது வழக்கில் வந்துவிட்டது. 113. இறை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று. அது பெண்ணிடத்திலுஞ் சிறந்து விளங்குகிறது. பெண்ணிடத்துள்ள இறைமையை உணர முயலாது, அவளை வெறுத்துக் காட்டுக் கோடுவது, இறையின் அகண்டாகாரத்தை மறுக்கும் பாவத்துக் குள்ளாவதாகும். 114. பெண்ணை வெறுத்தோடும் ஒருவன், தான் எங்கே இருந்து தோன்றினான் என்பதை எண்ணுவானாக. இவன் தந்தை ஒரு பெண்ணுடன் கூடி வாழாதொழிந்திருப்பனேல், இவன் விழுமிய பிறவியை எங்ஙனந் தாங்கியிருத்தல் கூடும்? தாய்மையுடைய பெண்ணை இழிவாகக் கருதுவது அறமாகாது. 115. உடல் தாங்குவதென்பது இயற்கைச் சட்டம். 116. உயிர் ஒளியாயிருப்பது. அவ்வொளி இருளால் மறைவுண்டு கிடக்கிறது. அம்மறைவைப் போக்குங் கருவி உடல். உடல்களைப் படிப்படியாகத் தந்தே இயற்கை அன்னை உயிரின் இருளை முறை முறையே போக்கி வருகிறாள். உயிர் உடல் தாங்குதல் என்னும் இயற்கைச் சட்ட நிறைவேற்றுதலுக்கென்று இயற்கையில் பெண் ஆண் தோற்றம் அமைந்திருக்கிறது. 117. படிப்படியாக உடலைத் தாங்குவதென்பது, படிப்படி யாக அன்பைப் பெருக்குவதாகும். 118. ஒருவன் உடல் தாங்கிப் பிறந்த பின்னையே, அவன் உலகு உயிர் கடவுளை ஆராய வல்லவனாகிறான். அவ்வாராய்ச்சி யால் அவன் மெய்யின்ப உண்மையை உணர்ந்து, அதனை நுகர முயல்கிறான். அவன் பிறவி தாங்காதிருப்பனேல், அவன் இம் முயற்சியில் தலைப்படுதல் கூடுமா? ஆகவே, பிறவி தாங்குதற்குத் தாய்மையுடைய பெண் வேண்டுமா வேண்டாமா என்பதை உன்னிப் பார்க்க. 119. ஒருவன் பிறவி எடுத்து, அழியா இன்பத்தை நுகர முயல்வதற்கு, அவன் தந்தை பெண்ணுடன் வாழ்ந்து துணை நின்றதுபோல, அவனும், சில உயிர்கள் தன்மாட்டுத் தோன்றி இன்ப நுகர முயல்வதற்குப் பெண்ணுடன் வாழ்ந்து இயற்கைப் போக்குக்குத் துணைபுரிதல் வேண்டும். அதற்கு உடன்படாது தனித்து வாழ்வது தன்னலத்தின் பாற்படுவதாகும். 120. தன்னலம் இயற்கைக்கு மாறுபட்டது; அஃது அஞ்ஞானம்; இருள்; இன்பமில்லாதது; பிணி உடையது. அதில் இயற்கை அருள் பதியாது. 121. பிள்ளைப் பேறு உண்டாவதும் உண்டாகாததும் இயற்கை - இறையின் செயல். பெண் ஆணுடனும், ஆண் பெண்ணுடனும் வாழ்ந்து இயற்கைக்கு அரண் செய்யத் தவறுதலாகாது. 122. பெண்ணுடன் ஆணும், ஆணுடன் பெண்ணும் கூடி வாழ இயலாத முறையில் சிலர் படைக்கப்படுகிறார். அவர் வாழ்விற்குப் புறம்பானவர். அவர் இயற்கை வேறு. 123. இல்வாழ்க்கைக்குரிய இயல்புடன் பிறந்து, வேண்டு மென்றே ஒருத்தி ஒருவனுடனும், ஒருவன் ஒருத்தியுடனும் வாழாது, சந்நியாசம் என்னும் பெயரால் தீயொழுக்கத்துக்கு எளியராய்த் திரிவோர் இயற்கை அன்னையால் ஒறுக்கப்பெறு வோர். இவரால் சமூகம் பல வழியிலும் அல்லலுறும். இவர் பாவிகள். 124. ஆண் ஞானிகளிற் சிலர், பெண்ணை இழித்துக் கூறிய தென்னை என்று சிலர் ஐயுறலாம். அவர் பெண் பிறவியை இழித்துக் கூறினாரில்லை. பெண்ணைக் காமப் பொருளாகவே கருதி இடர்ப்படுங் காமுகர்க்கு நல்லறிவுச் சுடர் கொளுத்த வேண்டி, அவர் காமத்தின் இழிவைப் பலவாறு விளக்கிப் போந்தனர். போகத்துக்கென்றே தாங்கள் படைக்கப் பட்டதாக அறியாமையால் கருதும் தீயொழுக்கப் பெண்களை நல்வழிப் படுத்த வேண்டியும் ஞானிகள் அவர்களை இழிவாகப் பேசினார்கள். பெண்ணிடத்திற் பிறந்து, பெண்ணிடத்தில் வளர்ந்து, பெண்ணிடத்தில் வாழ்ந்து, பெண்ணின் துணையால் ஞான உணர்வு பெற்ற பெரியோர், தாய்மைப் பெண்ணை ஒருபோதுங் குறைகூறமாட்டார். அவர் பெண்ணிடத்துங் கடவுளைக் காண்பவர். பெண்ணிடத்துள்ள இறைமை அவர்க்கே நன்கு புலனாகும். பெண்பிறவியை இழித்துக் கூறுவோர் பெரியோராகார். 125. பெண்பிறவி மிக விழுமியது. அப் பிறவியில் பெண்மை, தாய்மை, இறைமை என்னும் இயல்கள் சிறந்து விளங்குகின்றன. 126. பெண்மையினின்றும் தாய்மையும், தாய்மையினின் றும் இறைமையும் மலர்கின்றன. 127. பெண்மையில் பிள்ளைப் பேற்றிற்குரிய காதலும், தாய்மையில் பயன் கருதா அன்புத் தொண்டும், இறைமையில் பிறர்க்கென வாழ்தலும் திகழும். 128. பெண் வெறுங் காமக்கூடன்று. 129. பெண்ணை வெறுங் காமப்பொருளாகக் கருதி வாழ்வது மடமை. பெண்ணிடத்துள்ள பெண்மை தாய்மை இறைமை என்னுந் தன்மைகளை உணர்ந்து நடப்பவர் பெண் பிறவியின் விழுப்பம் உணர்ந்தவராவர். 130. பெண் ஆண் பிறவியில் உயர்வு தாழ்வு என்பது கிடையாது. இருபாலுள் உயர்வு தாழ்வு கற்பிப்பது இயற்கை நுட்பத்தை உணராமையே யாகும். 131. ஒரு நாட்டின் நாகரிகம் அந்நாட்டின் பெண் மக்கள் நிலையைப் பொறுத்து நிற்கிறது. 132. பெண்ணுரிமையுள்ள நாடு நாகரிக நாடு. அவ்வுரிமை யில்லா நாடு அநாகரிக நாடு. 133. உரிமை என்பது பெண் ஆண் இருபாலார்க்கும் பொதுவா யிருப்பது. இயற்கையில் ஆணுக்குள்ள உரிமை பெண்ணுக்கும் உண்டு; பெண்ணுக்குள்ள உரிமை ஆணுக்கும் உண்டு. 134. ஒருவன் ஒருத்தியையும், ஒருத்தி ஒருவனையும் மணந்து வாழ்வது நாகரிகம். ஒருவன் பல மகளிரையும், ஒருத்தி பல ஆடவரையும் மணந்து வாழ்வது அநாகரிகம். 135. நோய் போர் பூகம்பம் முதலிய காரணங்களால் சில இடங்களில் ஆடவர் தொகை சுருங்கி, மகளிர் தொகை பெருகலும், அல்லது அத்தொகை பெருகி இத்தொகை சுருங்கலும் நேரும். அவ்விடங்களில் ஒருவன் சில மகளிரை மணக்கவோ ஒருத்தி சில ஆடவரை மணக்கவோ நிலைமைக் கேற்றவாறு தற்காலிகமாக விதி கோலப்படும். தற்காலிக விதியை நிலைபேறாக உள்ள இயற்கை விதி என்று கொள்ளலாகாது. நிலைமை மாறியதும், ஒருத்திக்கு ஒருவன் - ஒருவனுக்கு ஒருத்தி என்னும் இயற்கை விதி ஆட்சியில் வரும். நிலைமையைச் சீர்செய்யும் பொறுப்பு இயற்கை அன்னையினுடையது. அவள் எப்படியாவது தன் கடனை ஆற்றுவள். 136. தீயொழுக்கம் மிகுந்த நாடுகளில் பல கொடுமைகள் நடைபெறும். அவைகளுள் ஒன்று ஓர் ஆடவன் பல மகளிருடன் கூடி மறவாழ்க்கை நடத்துவது. அவ்விடங்களில் நாளடைவில் அறிஞர் முயற்சியால் சீர்திருத்தம் படிப்படியே நிகழப்புகும். தொடக்கத்தில் இத்தனை மனைவியர் என்று தொகை குறிக்கப்படும்; பின்னே மேலும் தொகை சுருக்கப்படும். தொகை சுருங்கிச் சுருங்கி ஒருவன் ஒருத்தி - ஒருத்தி ஒருவன் என்னும் இயற்கை அறம் இடம்பெறும். தீயொழுக்க நாடுகளைச் சீர்செய்ய அவ்வப்போது அறிஞர் கோலும் முறைகளை இயற்கைச் சட்டமென்று கொள்வது அறமாகாது. 137. காதல் ஒரே இடத்தில் படிந்து ஒன்றி நிலைத்து நிற்பது. காமம் பல இடங்களில் ஓடி ஓடி அலைவது. 138. அன்புக்கூறு பலவிதம். அதில் விழுமியது காதல். காதல் ஒப்புயர்வற்றது. 139. ஒருவனுக்கு ஒருத்தி இடத்திலும், இவளுக்கு அவனிடத் திலும் காதல் எழுகிறது. அவர் தம் உள்ளத்தில் ஒப்பாகவோ உயர்வாகவோ பிறிதொன்று தோன்றாது; தோன்றினால் உள்ளத்தில் எழுந்த ஒன்று காதலாகாது. அது காமமாகும். ஒப்புயர்வற்ற ஒன்றே காதல். அஃது இருவர் அகத்தை ஒருமைப் படுத்துவது; அதாவது ஈருடலை ஓருயிராக்குவது. 140. ஒருத்தி தன்னியலுக்கியைந்த ஒருவனையும், அவ்வாறே ஒருவன் தன்னியலுக்கியைந்த ஒருத்தியையும் காதலித்து மணந்து கொள்வது இயற்கை நோக்குக்குத் துணைபோவதாகும். 141. காதல் மணம் நலந்தருவது. காம மணமும், கட்டுப் பாட்டு மணமும், இன்ன பிற மணங்களும் நலந்தருவனவாகா. 142. ஒருமைக் காதலில் பிறக்குங் குழந்தையே நல்லதாகும். நற்பிள்ளைகளால் ஆகும் உலகில் அன்பும் அமைதியும் நிலவும். 143. காதல் மணத்தில் பிரிவு நிகழ்தல் அரிது. மற்ற மணங் களில் பிரிவு நிகழ்தல் கூடும். 144. பெண் ஆண் கூட்டுறவு என்பது தெய்வத்தன்மை வாய்ந்தது. அதனின்றுந் தெய்வத் தன்மையை எழுப்பவல்ல அன்பு, தியாகம், தொண்டு முதலிய நறுங்குணங்கள் வளரும். 145. உளங்கலந்த கூட்டுறவு, அழுக்காறு அவா வெகுளி முதலிய தீக்குணங்களை ஒழித்து, அன்பு தியாகம் தொண்டு முதலிய நறுங்குணங்களை வளர்க்கும். 146. நறுங்குணங்களை வளர்க்கும் ஆற்றல், காதல் மணத்துக்கு உண்டு. 147. பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் கால முழுவதும் நீத்துத் தனித்து வாழ்வது இயற்கை வாழ்வாகாது. அவ்வாழ் வினர் அன்பின் தன்மையையுங் காணாது பிறவியைப் பாழ் படுத்தியவராவர். 148. மக்கள் இயல்பு சேர்ந்து வாழ்வது; தனித்து வாழ்வதன்று. சேர்ந்து வாழ்வது இயற்கைவழி நிற்பதாகும். தனித்து வாழ்வது இயற்கை வழிக்கு மாறுபட்டு நிற்பதாகும். 149. மண்ணையும் பொன்னையும் இன்ன பிறவற்றையும் வெறுப்பதும் துறவு என்று சில இடங்களில் கருதப்படுகிறது. இக்கருத்து இயற்கை வாழ்விற்கு முரண்பட்டது. 150. மண்ணும் பொன்னும் பிறவும் உயிர்களின் வாழ்விற் கென இயற்கை அன்னையால் வழங்கப்பட்டன. மண் பொன் முதலியன வாழ்விற்கு இன்றியமையாதன. 151. ஒவ்வொருவரும் தத்தம் இயல்புக்கியைந்த ஒவ்வொரு வித முயற்சியில் தலைப்பட்டு, அறவழியில் பொருளீட்டுதல் வேண்டும். முயன்று பொருளீட்டி வாழ்வு நடத்தாது, சோம்பித் திரிந்து, பிறர் கையை எதிர்பார்த்து நிற்பது வாழ்வாகாது. 152. பிறர்க்குப் பயன்படாத முறையில் பொருளைச் சேர்த்து வைப்பது பாவம். 153. குடும்பச் செலவுக்குப் போய்ப் பொருள் எஞ்சி நிற்குமாயின், அதனைக் கல்விச்சாலை, தொழிற்சாலை, மருத்துவச் சாலை முதலிய அறச்சாலைகட்குப் பயன்படுத்தல் வேண்டும். இதுவே மன்பதைக்குத் துணைபுரியும் முறைமை. 154. உழைத்துப் பிழைக்கத்தக்க உடல் நலம் வாய்க்கப் பெற்றோர்க்கு, நாடோறுஞ் சோறு கூறை அளித்து உதவி புரிவது பாவம். அவர்களைச் சோம்பேறிகளாக்குவது பெரும்பாவம். 155. சில சமயங்களில் ஆட்சிமுறை தவறுதலாலும், வேறு சில காரணங்களாலும் உடல் நலம் வாய்க்கப்பெற்றுத் தொழில் புரிய ஊக்கமுடையவரும், தொழில்கிடையாமையால் வருந்தல் நேரும். அந்நிலையில் அவர்க்கு உதவிபுரிதல் பாவமாகாது. 156. தொழில் கிடையா நிலைமையை மாற்றி, வறுமையைப் போக்க, அறிஞர் முயலுதல் வேண்டும். 157. சன்மார்க்கம் நேரிய முறையில் மன்பதையில் பரவினால் தொழில் கிடையாது வருந்தும் நிலை நேராது. இது பின்னும் விளக்கஞ் செய்யப்படும். 158. உழைத்துப் பிழைக்க இயலாத முடவர்க்கும், குருடர்க்கும், தீராப் பிணியாளர்க்கும், திக்கற்ற குழந்தைகட்கும், இவரணைய பிறர்க்கும் சோறு கூறை அளித்து உதவி புரிவது புண்ணியம். இவர்கட்கென அறச்சாலைகள் அமைப்பது பெரும் புண்ணியம். 159. எஞ்சும் பொருளை அறச்சாலைகட்குப் பயன் படுத்தாது, அதை வட்டிக்கென்றே கடன் கொடுத்தல் கூடாது; வட்டிக்குக் கடன் வாங்கும் பழக்கமும் தீயது. 160. இயற்கையை வெறாது, இயற்கையோடியைந்து வாழ்ந்து, தீக்குணங்களை அறுப்பது அறம் என்பது மேலே விளக்கப் பட்டது. 161. ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் இயற்கை வாழ்க்கை- காதல் வாழ்க்கை - இல்வாழ்க்கை - அன்பை வளர்க்கும். அன்பு வாழ்க்கை குடும்பத்தில் அமைதியை நிலைபெறுத்தும். குடும்பங் களின் அமைதி ஊரை நல்வழிப்படுத்தும். நல்ல ஊர்களினின்றும் செவ்விய நாடு மலரும். செவ்விய நாடுகளால் உலகில் அமைதி யும் ஒழுங்கும் நிலவும். உலக அமைதியும் ஒழுங்கும் வாழ்க்கைக்குத் தேவை. 162. எவ்வகை அமைதிக்கும் அடிப்படை காதல் வாழ்க்கை. 163. வாழ்க்கை இருவிதம். ஒன்று அக வாழ்க்கை; மற் றொன்று புற வாழ்க்கை. அக வாழ்க்கை இல்வாழ்க்கை என்பது; புற வாழ்க்கை கல்வி, தொழில், பொருள், அரசு முதலியவற்றைக் கொண்டது. 164. அக வாழ்க்கையின் நலத்துக்குப் புறவாழ்க்கையின் உரிமை இன்றியமையாதது. புற உரிமையின்றி அகத்தில் இன்பம் நிகழாது. 165. வாழ்க்கையின் அடியில் போட்டி இருத்தலாகாது. போட்டி போராட்டத்தை ஈனும். 166. போட்டியற்ற வாழ்க்கைக்கு நிலம் பொருள் உழைப்பு முதலியன பொதுவாதல் நல்லது. 167. பொதுமை அறம் வாழ்க்கையில் போட்டியையோ போராட்டத்தையோ எழுப்பாது. 168. கவிகள் இயற்கையைப் பலவாறு வருணிப்பதன் நோக்கம் என்னை? மக்கள் வாழ்க்கையில் இயற்கை இன்ப அன்புரிமையைப் பெறுதற்கு உலகில் பொதுமை அறம் நிலவ வேண்டுமென்பது அவர்கள் நோக்கம். உரிமை வாழ்க்கையை உணர்த்துவது கவிகள் மரபு. 169. இயற்கை ஒன்று; அதன் காரியம் பலவிதம். 170. இயற்கை பலவிதமாய்க் காரியப்பட்டு, ஆங்காங்கே தட்பம் வெப்பம் முதலியவற்றை வேறுபடுத்தலால், உலகில் பலவித மொழி நிறம் வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றைக் கொண்ட நாடுகள் பலவாகப் பிரிந்து கிடக்கலாயின. 171. நாடு என்பது வெறும் நிலப்பரப்பன்று. 172. கல்வி, தொழில், அரசு, வழக்க ஒழுக்கம், நாகரிகம் முதலியவற்றாலாகிய ஒன்று நாடு (Nation) என்பது. 173. இயற்கை அன்னையின் கருணைவழிக் காரியப்பட்ட அவ்வந் நாட்டுக்குரிய தன்மைகளுக்கேற்ற வண்ணம் அவ்வந்நாட்டார் வாழ்வு நடாத்துவது சிறப்பு. 174. ஒரு நாட்டார், தம் வழக்க ஒழுக்கங்களை மற்றொரு நாட்டாரிடை வலிந்து புகுத்துவதும், இவர், அவர் வழக்க ஒழுக்கங்களை ஆராய்ச்சியின்றி ஏற்று நடப்பதும் இயற்கையின் பாற்பட்ட செயல்களாகா. 175. தாய்மொழிவழிக் கல்வி பயில்வது இயற்கைக்கு அரண் செய்வதாகும். இயற்கை அறிவு விளங்கிய பின்னை மற்ற மொழிகளைப் பயில்வது நலந்தரும். 176. அவ்வந்நாட்டு மொழியில் அவ்வந்நாட்டுக்கு வேண்டப் படும் கலைகள் இயற்கை அன்னையால் அருளப்படுகின்றன. 177. நாட்டுக் கலைகளை அழியவிடும் நாடு பல நலன்களை இழந்து வாட்டமுறும். 178. நாட்டுக் கலைகள் நாட்டின் உயிர்நாடி. அவைகளை ஓம்புவது இயற்கை அன்னையின் அருளை நாடுவதாகும். 179. இயற்கையில் அமைந்த நாடு மொழி கலை தொழில் முதலியன அழியுமாறு எத்தேசம் இடந்தருகிறதோ, அத்தேசம் இயற்கை இன்பம் நுகர்தல் அரிது. 180. அவ்வந்நாடு தன் தன் இயற்கை வழி இயங்குகிறதா என்று பார்த்துக்கொள்ள அரசு என்பது ஏற்பட்டது. 181. அரசுகள் இயற்கைச் சட்டத்துக்கு மாறுபட்டு நடந்தால் உலகில் அமைதி நிலவாது. 182. இயற்கை - இறை பேரரசு. அவ்வரசின் உறுப்புக்களாக உலக அரசுகள் இயங்குதல் வேண்டும். பேரரசை மறக்கும் அரசு மன்பதைக்கு நலஞ் செய்வதாகாது. 183. இயற்கைச் சட்டத்தின்வழி இயங்கும் அரசே அரசாகும். 184. இயற்கை அரசு எது? இயற்கையின் விளைவை எல்லார்க்கும் பொதுமையில் பயன்படுத்துவது இயற்கை அரசு. இதற்கு உலகம் எப்பெயர் வழங்கினும் வழங்க. 185. ஒரு நாட்டார் மற்றொரு நாட்டாரைப் பற்றுவதும், இவர் அவர்க்கு எளிவருவதும் இயற்கைச் சட்டத்தை மீறுவதாகும். நாளடைவில் இரு சாரார்க்கும் கேடு நேரும். 186. நாடுகளின் பிரிவுகள் இயற்கையால் உண்டாக்கப் பட்டன. பிரிவுகள் இயற்கையின் காரியப்பாடுகளால் நிகழ்வன. காரியப்பாடுகளுக்குக் காரணமாக நிற்பது ஒன்றே. அவ்வொன்றை உயிராகவும், காரியப்பாடுகளை உடலுறுப்புக்களாகவும் கொள்ளுதல் வேண்டும். 187. நாடுகள் ஒன்றோடொன்று பிரிவுற்றிருந்தாலும், அவைகள் ஒன்றுடன் ஒன்று பிணங்குதல் கூடாது. அப் பிணக்கம் நாடுகளையும், நாட்டின்வழி உலகையும் துன்பஞ் செய்வதாகும். 188. உயிர் ஒன்று. அதன் போர்வையாகிய உடல் பல உறுப்புக் களைக் கொண்டது. உடலின் உறுப்புக்கள் ஒன்றோ டொன்று பிணங்கினால் உயிர் வாழ்வு என்னாகும்? உயிர் வாழ்வுக்கு உறுங்கேடு உடலின் உறுப்புக்கட்கெல்லாம் நேர்தல் இயல்பன்றோ? ஆகவே, நாடுகள் ஒன்றோடொன்று பிணங்காது, இணங்கி வாழ்தல் வேண்டும். அப்பொழுதே மன்பதை இயற்கையோ டியைந்த இன்பம் நுகர்தல் கூடும். 189. நாடு, நிறம், மொழி, வழக்க ஒழுக்கம் முதலியவற்றை ஒட்டி மக்களுக்குள் காணப்படும் வேற்றுமைகள் புறத் தோற்றத் தின் பாற்பட்டன. உள்நிலையில் எவ்வித வேற்றுமைத் தோற்ற மும் இல்லை. 190. உள் அமைதிக்குப் புற ஒற்றுமை இன்றியமையாதது. 191. நாடு, நிறம், மொழி, வழக்க ஒழுக்கம் முதலிய புற வேற்றுமைகளைக்கொண்டு மக்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பிப்பது அறியாமை. 192. பிறப்பில் உயர்வு தாழ்வு சில இடங்களில் கருதப் படுகிறது. இக்கருத்து ஆன்ம நேயத்தை அழிப்பதாகும். 193. பிறப்பில் உயர்வு தாழ்வு கருதும் இழிவு நாளடைவில் தீண்டாமை முதலிய கொடுமைகளைப் பெருக்குவதாகிறது. 194. மக்களுக்குள் தீண்டாமை கருதுவது மடமை. 195. கடவுள், தீண்டுங் கடவுள் தீண்டாக் கடவுள் என்று இரண்டுபட்டில்லை. ஒரு கடவுளில் தீண்டாமை எங்கிருந்து பிறக்கும்? 196. பிறப்பில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் கருதுவோர், அன்புக் கடவுளின் அன்பராயிருத்தல் முடியாது. 197. பிறப்பில் உயர்வோ தாழ்வோ தீண்டாமையோ கருதுவது ஜீவகாருண்யமாகாது. 198. பிறப்பில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை முதலிய கொடுமைகளைக் கருதும் இடம் நரக பூமியாகும். 199. பிறப்பில் மக்களெல்லாரும் சமத்துவமானவர் எல்லா உடல்களும் பூதங்களால் ஆக்கப்பட்டன. நிலம் நீர் நெருப்பு காற்று ஒளி முதலியன எல்லார்க்கும் பொதுவாகவே துணை செய்கின்றன. இன்ப துன்பங்கள் எல்லார்க்கும் பொது. 200. உயிரில் எவ்வித வேற்றுமையும் இல்லை. 201. கல்வி அறிவு ஒழுக்கம் முதலிய சிறப்புக்களில் எல்லாரும் ஒத்திருப்பதில்லை. இவைகளில் மக்கள் வேற்றுமைப் படுதல் கண்கூடு. 202. கல்வி அறிவு ஒழுக்கம் முதலிய சிறப்புக்கள் பொது உடைமை. அவை பிறப்பை ஒட்டின அல்ல. 203. எல்லா உயிர்களிலும் வீற்றிருக்கும் பரம்பொருள் ஒன்றே. அது பொதுவாக எல்லாரிடத்திலும் வீற்றிருக்கிறது. ஒரே பரம்பொருளைத் தாங்கியுள்ள உயிர்களுக்குள் பிறப்பில் உயர்வோ தாழ்வோ தீண்டாமையோ கற்பிப்பது அஞ்ஞானம். 204. எல்லா உயிர்களிடத்திலும் வீற்றிருக்கும் பரம் பொருளை உணர்ந்து தெளியும் ஒருவன், தனக்கும் மற்ற உயிர்கட்கும் உள்ள தொடர்பை உணர்தல் கூடும். பிற உயிர்கட்குத் தீங்கு நினைப்பது, தன்னுயிர்க்கே அத்தீங்காகுவது அவனுக்கு நன்கு விளங்கும். அவன் தன்னுயிரைப் போல மன்னுயிரைப் பார்ப்பன். 205. தன்னுயிரைப் போல் மன்னுயிரைக் கருதுவது சகோதர நேயம். 206. சகோதர நேயம் பெறாது தெய்வத் தன்மை அடைதல் இயலாது. 207. தன்னுயிரைப்போல மன்னுயிரைப் பார்க்கும் சகோதரநேயம் எப்படிக் கூடும்? உள்நோக்கைப் பெருக்கப் பெருக்க அந்நேயம் கூடும். 208. உள்நோக்கைப் பெருக்காது, புறநோக்கை மட்டும் பெருக்கப் பெருக்கப் பிளவு; பிணக்கு, போர், கொலை, கொள்ளை, பொய், நிந்தனை, ஏமாற்றம், இன்ன பிற பெருகி, உலகை இடர்ப்படுத்திக் கொண்டிருக்கும். 209. உள்நோக்கில் கருத்துச் செலுத்தாது புறநோக்கிலேயே கருத்துச் செலுத்திச், சகோதர நேயத்தைப் பற்றிப் பேசப்படும் பேச்சுக்களாலும், எழுதப்படும் எழுத்துக்களாலும் சிறிதும் பயன் விளையாது. 210. உள்நோக்கு எனில், பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் துறந்து, வீட்டை விட்டுக் காடு மலைகட்கோடித் தனித்திருந்து மூச்சைப் பிடிப்பதன்று. துறவு நுட்பம் மேலே சொல்லப்பட்டது. 211. பெண் ஆணுடனும், ஆண் பெண்ணுடனும் வாழ்தலால், தீயகுணங்கள் தேய்ந்து அன்பு வளர்கிறது. அன்பு, உள்நோக்குப் பெருக்கத்துக்கு உறு கருவி. 212. உள்நோக்கு விரிய விரியப் புறவேற்றுமைபொன்றும். அந்நிலையில் உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பு தெளி வாகும். அத்தொடர்பைத் தெளியத் தெளிய உயிர்களிடத்து அன்பு என்னும் சகோதர நேயம் பெருகும். 213. உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பு இயல்பா யிருப்பது அதைத் தெளிவது அநுபூதி (Realisation) எனப்படும். 214. உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பைத் தெளிவது ஞானம்; அதைத் தெளியாதிருப்பது அஞ்ஞானம். இத் தெளிவிற்கென்றே தனுகரண புவனபோகங்கள் இயற்கையில் ஏற்பட்டன. இவைகளை வெறுத்துத் துறந்தால் அநுபூதி உண்டாகாது. ஆதலால், அவைகளை வெறாது, அவைகளுட னிருந்து கொண்டே, தீக்குணங்களைப் போக்கி, அன்பைப் பெருக்கிப் பெருக்கி, அநுபூதி பெறுதல் வேண்டும். 215. அன்பைப் பெருக்கி, அநுபூதி பெறுதற்குரிய முழு மார்க்கம் சமயம் என்பது. 216. சமயம் என்பது சத்தைத் தெளிதற்குரிய மார்க்கம். 217. சத்துக்குரிய மார்க்கம் இயற்கை என்பது முன்னர்ச் சொல்லப்பட்டது. ஆகவே இயற்கை நெறி சமயம் என்க. 218. இயற்கையோடியைந்த வாழ்வு சமய வாழ்வாகும். 219. சமய வாழ்வு வேறன்று; இயற்கை வாழ்வு வேறன்று. 220. உலகியல் வாழ்வினின்றும் சமயம் பிரிந்து நிற்கும் ஒன்று என்று நினைப்பது தவறு. வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் சமயம் உண்டு. 221. உலக வாழ்வினின்றும் பிரிந்து நிற்பது சமய நெறியில் நிற்பது என்று கருதுவது, கானற் சலத்தை நாடி ஓடுவது போன்ற தாகும். 222. வாழ்வின் ஒவ்வொரு கூறிலும் தூய்மையாயிருப்பது சமயநெறி நிற்பதற்கு அறிகுறி. 223. சமயம் என்பது, வெறும் புறக்கோலம் என்றும், வெறும் சம்பிரதாயக் கட்டு என்றும் பலவிடங்களில் திரிபாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. சமயம் வெறும் புறக்கோலமுமன்று; வெறும் சம்பிரதாயக் கட்டுமன்று. 224. வெறும் வெறும் புறக்கோலங்களும் சம்பிரதாயக் கட்டுகளும், இவைகளை ஒட்டி எழுந்த வழக்க ஒழுக்கங்களும் சமயத்தின் பேரில் புரோகிதர்களால் நுழைக்கப்பட்டன. இவைகள், உயிர்க்கும் இறைக்கும் இயல்பாயுள்ள தொடர்பைத் தெளியப் படுத்தும் மார்க்கமாகிய சமயம் ஆகா. 225. புறக் கோலங்களும், சம்பிரதாயக் கட்டுகளும், இவை களை ஒட்டி எழுந்த வழக்க ஒழுக்கங்களும் புரோகித மதங் களின்பாற்பட்டன. 226. புரோகித மதங்கள் பல. அவை ஒவ்வோரிடத்தில் ஒவ்வொருவிதமாக விளங்கும். 227. புரோகித மதங்களில் கட்டுப்பாடுகளிருத்தலால், அவை உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பைத் தெளியப் படுத்தத் துணை செய்யா. அத்துணை செய்யாமையால் அம்மதங் களால் சகோதர நேயம் வளர்வதில்லை. அவைகள் சகோதர நேயத்தைக் குலைப்பவை என்றுங் கூறலாம். 228. புறக் கோலங்கள் பல தொடக்கத்தில் சுகாதாரத்துக் கெனக் கோலப்பட்டன. நாளடைவில் அவைகள் சமயப் பெயரில் குடிபுகுந்தன. 229. சுகாதாரத்துக்கு முரண்செய்யும் கோலங்களும் பின்னாளில் வாழ்வில் புகுந்துள்ளன. அவை, களையப்படல் வேண்டும். சுகாதாரத்துக்கு அரண் செய்யும் புறக்கோலங்களால் தீங்கில்லை. 230. புறக் கோலங்களைப் பூண்பது கடவுள் நெறி நிற்பது என்று எண்ணுதல் தவறு. புறக்கோலங்கள் மட்டும் இறையை உணர்த்தா. இறையை உணர்த்துவது இயற்கை. 231. நல்ல சம்பிரதாயங்கள் சில, சமூக (Society) வளன் கருதித் தொடக்கத்தில் வகுக்கப்பட்டன. அவைகளில் மூடப் பழக்க ஒழுக்கங்கள் நாளடைவில் குடிபுகுந்தன. அவைகட்கும் கடவுள் நெறிக்கும் தொடர்பில்லை. 232. சமூக நலனுக்குத் துணை செய்யும் சம்பிரதாயங்களால் தீங்கு விளையாது. 233. புறக் கோலங்களும் சம்பிரதாயங்களும் மதங்களாக நாளடைவில் புரோகிதரால் அறிவுறுத்தப்பட்டன. 234. புரோகித மதங்கள் புரோகிதரால் காணப்பட்டன. 235. சத்துக்குரிய மார்க்கமாகிய சமயம் ஒருவரால் காணப் படாதது; அஃது என்றும் இருப்பது. அது மக்களால் எங்கே திரிபாக உணரப்படுகிறதோ? அங்கே குருமாரில் எவராவது ஒருவர் தோன்றி, அதன் நுட்பத்தை அக்கால தேச வர்த்தமானங்கட் கேற்ற முறையில் விளக்கிச் செல்வர். 236. புரோகிதர் குருமாரல்லர். புரோகிதர் காமக் குரோதங் களுடையவர். புரோகிதர், தம் நலன் கருதி, மக்களை அறியாமை யில் அழுத்தி, மூடப் பழக்க ஒழுக்கங்களையும், வெற்றுச் சம்பிரதாயம் முதலிய கட்டுகளையும், பிற போலி களையும் அவரிடைப் பெருக்கிக்கொண்டிருப்பவர். குருமார் காமக் குரோதங்களில்லாதவர். குருமார், மக்கள் நலங்கருதி, அவர்கள் அறியாமையைப் போக்க, அவர்களை அறிவு ஒளியில் நடத்த முயன்றுகொண்டிருப்பவர். குருமார் யார் என்பதும், அவர் இயல்கள் இன்ன என்பதும் முன்னே சிறிது கூறப்பட்டன; பின்னுஞ் சில விளக்கப்படும். 237. புரோகித மதங்கட்கும் கடவுள் நெறியெனுஞ் சமயத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. 238. சமயம் என்பது என்ன? சமயம் என்பது உயிர்க்கும் சத்துக்கும் உள்ள தொடர்பைத் தெளியப்படுத்தும் மார்க்கம்; சத்துக்குரிய மார்க்கம் என்று சுருங்கச் சொல்லலாம்; சத்+மார்க்கம் - சன்மார்க்கம். 239. சமயம் என்பது சன்மார்க்கம். 240. சமயம் ஆராய்ச்சியைக் கடந்தது; ஆராய்ச்சிக்கு எட்டாதது. அஃது ஆராய்ச்சியில் அடங்கா ஒன்று. ஆராய்ச்சி முட்டும் இடத்தில் முளை விடுவது சமய உணர்வு. 241. சமயம் ஒன்றா? பலவா? சமயம் ஒன்றே. 242. உலகில் பல சமயங்கள் பேசப்படுதற்குக் காரணம் என்னை? சமயங்கள் பல இல்லை. சமயப் பெயர்கள் பல உண்டு. 243. உலகில் மொழிகள் பலவா யிருத்தலான், சமயத்துக்கும் பெயர்கள் பலவாக வழங்கப்படுகின்றன. உலகில் மண்ணுக்கு எவ்வளவோ பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர் பலவா யிருப்பினும் பொருள் ஒன்றே யன்றோ? 244. சமயத்தின் புறப் பெயர்களை நீக்கி, அதன் அகத்தை நோக்கின் பொருள் ஒன்றாயிருத்தல் புலனாகும். 245. பல சமய உணர்ச்சிக்குச் சில புறக் கோலங்களும் காரணமாக நிற்கின்றன. அவரவர் புறக்கோலங்கொண்டு அவரவர் இச்சமயத்தவர் அச்சமயத்தவர் என்று சொல்லப் படுகிறார். புறக் கோலங்கள் செயற்கையா இயற்கையா என்பது சிந்திக்கப் படல் வேண்டும். புறக் கோலங்கள் பிறப்பில் அமைவ தில்லை. உலகில் பிறந்த பின்னை சேர்க்கை காரணமாக ஒவ்வொருவர் ஒவ்வொருவிதப் புறக்கோலந் தாங்குகிறார். புறக்கோலங்கள் இயற்கைச் சின்னங்களாயின், அவைகள் படைப்பில் அமைதல் வேண்டும். அவைகள் படைப்பில் அமையாமையால் அவை களைச் செயற்கை என்று விளக்க வேண்டுவதில்லை. புறக் கோலங் களைக்கொண்டு, உலகில் சமயப் பாகுபாடுகள் செய்யப் படுதலால், அப்பாகுபாடுகள் இயற்கையின் பாற்பட்டன அல்ல என்பது வெள்ளிடைமலை. ஆகவே புறக்கோலச் சமயங்கள், உயிர்க்கும் இறைக்கும் உள்ள தொடர்பைத் தெளிவிக்கும் அநுபூதி நிலை கூட்டும் இயற்கைச் சன்மார்க்கமென்னுஞ் சமயம் அல்ல என்பது உணரத்தக்கது. 246. குருமார் ஆங்காங்கே தோன்றி அறிவுறுத்திய சமயம் ஒன்றே. அதுவே சன்மார்க்கம் என்பது. சன்மார்க்கம் ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு பெயர் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு பெயரையும் ஒவ்வொரு சமயமென்று கருதுவது திரிபேயாகும். அத்திரிபு நீண்ட காலம் உலகில் படிந்து கிடக்கிறது. ஆனால் அதனால் பெருந் தீமை விளையாது. தமது சமயம் தமது சமயம் என்று அவரவர் கருதுமாறு, அவரவர் தம் தம் சமயத்தில் நின்று ஒழுகுவாராயின், அவரவர் முடிவில் அடையும் அநுபூதி ஒன்றே ஆகும். திரிபால் அவரவர் தாம் தாம் கருதுஞ் சமய வழி நின் றொழுகாது, என் சமயம் மெய்; உன் சமயம் பொய் என்று வாதத்தில் இறங்கினால் தீமையே விளையும். 247. சமயத்துக்கும், சமய வாதத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இது வேறு; அது வேறு. 248. சமய வாதம் பொல்லாதது. அஃது எரி பகை முதலிய கொடுமைகளை வளர்ப்பது. எரி பகை முதலிய தீக்குணங்கள் அன்புக் கடவுளை எங்ஙனம் உணர்த்தும்? 249. சமய வாதம் சன்மார்க்கத்தை விளங்கச் செய்யாது. சமய வாதம் இழிந்தது; மிக இழிந்தது. 250. துன்மார்க்கத் துறைகள் பல உண்டு. அவைகளுள் தலையாயது சமய வாதம். சமய வாதிகளே துன்மார்க்கங்களில் தலையாயவர்கள். சமய வாதம் மக்களை விலங்காக்கும். 251. எக்காரணம் பற்றியும் மக்கள் சமய வாதத்தில் இறங்க லாகாது. 252. மக்கட்குச் சமயம் இயற்கை; சமய வாதம் இயற்கையன்று. 253. பலமொழி பேசுவோர் ஒரு காட்டின் வழியே போதல் நேர்ந்தது. அவர்கள் நெடுந்தூரம் நடந்தமையால் அவர்கட்கு நீர் வேட்கை எழுந்தது. நீர் நிலை சமீபத்திலில்லை. நீர் எங்கே கிடைக்கும் என்று ஒருவரை ஒருவர் அவரவர் மொழியில் வேட்கை மிகுதியால் விரைந்து கேட்டனர். ஒருவர் மொழி ஒருவர்க்குத் தெரியவில்லை. ஒருவரை ஒருவர் கேட்பது நீர் என்பதை அவரவர் உணராது, ஒருவரை ஒருவர் திட்டுவதாகக் கருதி, ஒருவரோடொருவர் அறைந்து கொண்டே ஓடினர். இடையிடை அறை, அடியாகவும் உதையாகவும் முதிரலாயிற்று. பலர்க்குக் காயங்களும் உண்டாயின. இவ்வாறு போரிட்டு ஓடுவோர் எதிரில், ஓர் அழகிய நீர் நிலை திடீரெனத் தோன்றியது. அதைக் கண்டதும் எல்லாரும் போரை மறந்து, அதனிடம் விரைந்து ஓடி, நீர் அருந்தி, இளைப்பாறச் சாய்ந்தனர். அங்கே பலமொழி பயின்ற ஒரு பெரியார் போந்தனர். அவர், நீர் அருந்திப் படுத்துக் கிடக்கின்ற கூட்டத்தாரைப் பார்த்தார். இவர்கள் உடல்களில் காயங்கள் காணப்படுகின்றன. இவர்கள் உறக்கத்திலிருக்கிறார்கள். உண்மை உணர்தல் வேண்டும் என்று கருதி, ஒரு மரத்தடியில் அவர் அமர்ந்து சாதாரிப்பண் பாடினர். அப்பாட்டு, உறங்கிய பலரை எழுப்பியது. அப்பலரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். அவ்வேளையில், அவர் பாட்டை ஒருவாறு முடித்து, அவர்களை நோக்கி, நீங்கள் யார்? c§fŸ clšfËš fha§fŸ g£oU¤j‰F¡ fhuz« v‹d? என்று கேட்டார், நடந்ததை அவரவர் தத்தம் மொழியில் சொற்றனர். பெரியார் உண்மை உணர்ந்து, அவரவர் மொழியில் அவரவர் விரும்பிய பொருள் ஒன்றென்பதை விளக்கிக் காட்டினர். அவர்கள் தங்கள் அறியாமை உணர்ந்து வருந்தினார்கள். சமய வாதிகள் இக்கதை நுட்பத்தை உணர்வார்களாக. 254. பசுக்களிற் சில வெண்மையா யிருக்கின்றன; சில செம்மையா யிருக்கின்றன; சில கருமையா யிருக்கின்றன; இன்னும் வெவ்வேறு நிறமுடைய பசுக்களும் உண்டு. சில பசுக்களுக்குக் கொம்புகள் நீண்டிருக்கின்றன; சிலவற்றிற்குக் கொம்புகள் வளைந்திருக்கின்றன; பற்பலவாறு கொம்புகளைக் கொண்ட பசுக்களும் உண்டு. இப்பலதிறப் புறவேற்றுமை களுடைய பசுக்களைக் கறந்தால், இவைகள் யாவும் அளிக்கும் பால் எத்தன்மையது? எல்லாம் பசுக்களும் வெண்ணிறப் பாலையே தருகின்றன. சமய வாதிகள் இவ்வெடுத்துக் காட்டின் நுட்பத்தை ஓர்வார்களாக. 255. புறப் பெயர் வேற்றுமைகளில் கருத்தைச் செலுத்தச் செலுத்தப் பன்மை விகாரமே தோன்றும். புறப்பெயர்களை நீக்கி, அகத்தை நோக்கினால், ஒருமை இன்பத்தை நுகரலாம். 256. சத் ஒன்றே. அதற்குரிய மார்க்கமும் ஒன்றே. அவ் வொன்றை எம்மொழியால் எப்பெயரால் அழைத்தால் என்ன? 257. சமயங்கள் பல என்று கொண்டு, மெய்ச் சமய பொய்ச் சமய வாதங்களைத் தொடுத்து, ஒரு சமயம் விடுத்து மற்றொரு சமயம் புகுதலும், அதற்கெனக் கிரியைகள் முதலியன செய்தலும் உலகில் பல இடங்களில் நடந்து வருகின்றன. அவை இயற்கையின் போக்குக்கு அரண்செய்வன அல்ல. 258. இறை ஒன்று. அஃது எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. அஃதில்லா இடம் இல்லை. எங்கே போனாலும் எங்கே வந்தாலும் அங்கங்கே இருப்பது ஓர் இறையே. உண்மை இவ்வாறாக எதை விடுத்து எங்கே போதல் என்பதும், எதைக் கொண்டு எங்கே வருதல் என்பதும் விளங்கவில்லை! 259. உலகில் சமயங்கள் பலவாயிருந்து, அவைகளில் மெய் பொய்ச் சமயங்களிருக்குமாயின், இயற்கைப் படைப்பில் இது மெய்ச் சமயம் என்னுங் குறி எம்முறையிலாதல் பொறிக்கப்படும். இயற்கைப் படைப்பில் அத்தகைக் குறி ஒன்றையுங் காணோம். இதனால் இயற்கைச் சமயம் ஒன்றே என்பது தேற்றம். 260. மக்கள், பிறந்த பின்னரே மற்றவர் சேர்க்கையால் தங்களை அம்மதத்தார் இம்மதத்தார் என்று சொல்லிக் கொள் கிறார்கள். பிறக்கும்போது அவர்கள் எச்சமயக் குறியுடனும் பிறப்பதில்லை. 261. மதவாதம், மதமாற்றம், மாற்றத்துக்கெனக் கிரியை முதலியன புரோகிதரால் நிறுவப்பட்டன. இயற்கைச் சன்மார்க்கத் துக்கு மதவாதமோ மதமாற்றமோ கிரியையோ ஒன்றும் வேண்டுவ தில்லை. 262. பல சமய உணர்வு கொள்வது தவறு. அவ்வுணர்வு, ஒரு சமயம் விடுத்து, மற்றொரு சமயம் புக இடம் பெறுதலால், அஃது ஒரு கடவுளைப் பல கடவுளராகப் பாவிக்கவும், இயற்கைப் படைப்பை அவதூறு செய்யவும் தூண்டுவதாகிறது. 263. மனந் திரும்புதற்கு மதவாதமோ, மதமாற்றமோ, அதற்கெனக் கிரியையோ வேண்டுவதில்லை. மதவாதம் முதலியன மனந்திரும்புதற்குத் துணைசெய்யாமல், பிடிவாதத் துக்கே துணைசெய்யும். 264. மக்களிடத்தில் பொதுவாக இருவித நிலைகள் இருக்கின்றன. ஒன்று பேய் நிலை; மற்றொன்று தெய்வ நிலை. பேய்நிலை தீய குணங்களின் உறைவிடம்; தெய்வ நிலை நல்ல குணங்களின் உறைவிடம். பேய் நிலையை ஜீவபோதம் என்றும், தெய்வ நிலையை ஜீவபோதம் அற்றது என்றும் சுருங்கச் சொல்லலாம். பேய் நிலையினின்றும் தெய்வநிலை அடைவது மனந்திரும்புவதாகும். இதற்குச் சன்மார்க்கம் என்னும் ஒரு சமயம் இயற்கையில் அமைந்திருக்கிறது. உள்ள அவ்வொன்றில் போதல் எங்கே? வருதல் எங்கே? 265. மத வாதமும், மத மாற்றமும், கிரியையும், இன்ன பிறவும் பேய்நிலையை நீக்கித் தெய்வநிலையை நல்குகின்றனவா என்பது கருதற்பாலது. இவைகளால் அம்மாறுதல் நிகழ்வதில்லை என்பது வெளிப்படை. 266. கல்வி கேள்வி ஆராய்ச்சிகளாலும், நல்லோர் சேர்க்கை யாலும், இன்ன பிறவாற்றாலும் மனம் படிப்படியாக மாறுதல் அடைந்துகொண்டே போகும். மனமாற்றமாவது அறிவுப்படி ஏறுவது. இஃது உள் நிகழ்ச்சி. 267. உள் நிகழ்ச்சி நொடிக்கு நொடி மாறுவதும் உண்டு. இது, மதம் மாறுதல் என்று சொல்லப்படின் உலகில் எத்துணை மதங்கள் தேவையா யிருக்கும்! ஒவ்வொருவனுக்கு ஒவ்வொரு போது ஒவ்வொரு மதம் வேண்டுமன்றோ? இதைக் கொண்டே சமயம் பலவாயிருத்தல் அரிது என்று ஊகித்து உய்த்துணரலாம். 268. மதங்களைப் பலவாக்கொண்டு, மதவாதத்திலும் மதமாற்றத்திலும் தலைப்படுவதால் விளையுந் தீங்குகள் பல அவ்வம் மதத்தார் தம் தம் மதத்தின் ஜனத்தொகையைப் பெருக்கவே முயல்வர். அம்முயற்சியால் மக்களிடை எழும் எரி, கொலைவரைப் பொங்கி எழுவதை உலகம் பலமுறை அநுபவித் திருக்கிறது. எரியைத் தூண்டும் மதவாதமும் மதமாற்றமும் கடவுள் நெறியாகா. எரி அற்ற இடத்தில் திகழ்வது கடவுள்நெறி. 269. மதவெறியால் கொலை செய்யப் புகுவோன், தன்னை வேறாகவும், தன்னால் கொலை செய்யப்படுவோனை வேறாகவும் நினைக்கிறான். தன் உயிரிலும், மற்றவன் உயிரிலும் ஈசன் ஒருவனே இருக்கிறான் என்னும் உணர்வு மத வெறியனிடத்தில் விளங்குவதில்லை. தன்னுயிரைப் போல் மன்னுயிரைப் பார்க்குஞ் சகோதர நேயமே கடவுள் நெறியில் நிற்பதற்கு அறிகுறியாகும். மதவெறியை எழுப்பும் மதவாதமும், மதமாற்றமும், இன்ன பிறவும் சகோதர நேயத்தை வளர்த்தல் அரிது. ஆகவே, மதவாதம், மதமாற்றம் முதலியவற்றில் தலைப் படாது? பேய் நிலையி னின்றும் தெய்வ நிலைக்கு மனத்தைத் திருப்பவல்ல கடவுள் நெறியெனுஞ் சன்மார்க்கத்தில் நிற்க மக்கள் முயலல் வேண்டும். 270. மனந்திரும்புதல் என்பது ஒருநாளில் இருநாளில் புறக்கிரியைகளால் நிகழ்ந்து விடாது. மனக்கோள், மாறி மாறி வளர்ந்து போகும் இயல்பினது. அவ்வளர்ச்சி மெய்யறிவு விளங்கும்வரை செல்லும். 271. மக்கட்கு மெய்யறிவு விளங்கும்வரை இடை இடையே ஒன்றைப்பற்றிய நம்பிக்கையும், அவநம்பிக்கையும் மாறி மாறித் தோன்றித் தோன்றி மோதிக் கொண்டேயிருக்கும். அவ்வப் போது உற்றுவரும் மாறுதலால், அவரவர் மனோ நிலைக்கேற்ற வண்ணம் நம்பிக்கைகள் பலதிறத்தனவாய்ப் பிறத்தல் இயல்பு. அவரவர் நம்பிக்கை வழி அவரவர் நடக்க அவரவர்க்கு உரிமை இருத்தல் வேண்டும். அவ்வுரிமையைப் பலாத்காரத்தாலோ, சம்பிரதாயங்களாலோ, இன்ன பிறவற்றாலோ இடர்செய்தல் தவறு. 272. இறை அப்பன் உரிமையோ டிருக்கிறான்; இயற்கை அன்னை உரிமையோ டிருக்கிறாள்; ஆகவே, உயிர்களும் உரிமையோடு உலகில் வாழ்தல் வேண்டும். 273. மெய்யறிவு விளங்கும்வரை ஒருவன் நம்பிக்கை இன்னொருவனுக்கும், இவன் நம்பிக்கை அவனுக்கும் மாறாகத் தோன்றுதல் கூடும். இத் தோற்றத்தால் ஒருவன் ஒருவனைத் தன் தன் வழியில் திருப்பும் முயற்சியும் அவன் அவன்பால் எழுதல் கூடும். இவன் தவறான வழியில் செல்கிறானென அவன் இரங்கியும், அவன் தவறான வழியில் செல்கிறானென இவன் இரங்கியும் ஒருவனை ஒருவன் திருப்பப முயல்கிறான். இதற்குப் பலாத்காரம் அநாவசியம். உண்மையான இரக்கம் பலாத்காரத்தில் இறங்கச் செய்யாது. பலாத்காரம் எழும் இடத்தில் நியாயம் இராது. பலாத்காரத்தால் ஒருவரை ஒருவர் திருப்ப முயல்வது காட்டுமிராண்டிச் செயலாகும். அன்பில் நின்று ஒருவன் தான் உண்மை என்று நம்புவதை மற்றவனுக்கு அறிவுகொளுத்த முயல்வது நாகரிகம். அன்புப் போதனையால் திரும்புவோர் திரும்புக; திரும்பா திருப்போரிருக்க. எதற்கும் எவர்க்கும் உரிமை இருத்தல் வேண்டும். உரிமை, பலாத்காரத்தால் பாழ்படலாகாது. 274. மதவெறியால் விளையுங் கேடுகளைக் காணுஞ் சிலர், கடவுள் நெறியே இக்கேடுகளுக்குக் காரணமாக நிற்றலான், அந்நெறியே வேண்டாம் என்று சொல்வதுண்டு. மதவாதிகளின் இழிந்த செயல்கள் இவர்களை இவ்வாறு சொல்லவும் நடக்கவும் தூண்டுகின்றன. கடவுள் நெறி இயற்கை என்று மேலே சொல்லப் பட்டிருக்கிறது. இதை உணர்வோர், மத வெறிக்கும் கடவுள் நெறிக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை எளிதில் தெளிவர். 275. மதவெறியை வெறுத்து ஒதுக்குவது விரும்பத்தக்கது. ஒதுங்கும் அளவுடன் நில்லாது கடவுள் நெறியெனுஞ் சன்மார்க்கத்தில் நிற்க உறுதிகொள்ளல்வேண்டும். தீமையை வெறுப்பது நன்மையைக் கடைப்பிடிப்பதாகாது. நன்மையைக் கடைப்பிடிப்பது தீமையை வெறுத்தொழிப்பதாகும். நன்மையைக் கடைப்பிடிப்பது சன்மார்க்கத்தில் நிற்பதாகும். சன்மார்க்கத்தில் நிலவா வாழ்வு சிறையுண்டா நீர் (Stagnant water) போன்றதாகும். 276. சன்மார்க்கத்துக்கு நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலிய வேற்றுமைகளில்லை. அம்மார்க்கம் மன்பதைக்குப் பொதுவாயிருப்பது. 277. சன்மார்க்கத்தில் நின்று நாடு மொழி முதலியவற்றில் பற்றுக்கொள்ளலாம். சன்மார்க்கத்தில் நில்லாது வெறும் நாடு மொழி முதலியவற்றைத் தனிமைப்படுத்தி, அவைகளிடத்துப் பற்றுக்கொள்வது உலக சகோதர நேயத்தைக் கண்டப்படுத்துவ தாகும். அதனால் மன்பதையில் போராட்டமே பெருகும். 278. நாடு மொழி முதலியவற்றிற் பற்றுச் செலுத்தல் கூடாதென்பது சன்மார்க்கத்தின் கருத்தன்று. அப்பற்று, மற்ற நாடு மொழி முதலியவற்றினிடத்துப் பொறாமை எழுப்பிப் பகைமை விளைப்பதாயிருத்தல் கூடாதென்பது சன்மார்க்கத் தின் கருத்து. சன்மார்க்கம் நாடு மொழி முதலியவற்றைக் கடந்து நிற்றலான், அதில் ஈடுபட்டு? நாடு மொழி முதலியவற்றிற் பற்றுச் செலுத்தினால், உலக சகோதர நேயத்துக்குப் பங்கம் நேராது. 279. எல்லா நாட்டார், எல்லா மொழியார் முதலிய எல்லாரிடத்திலும் வீற்றிருக்கும் சத்தெனும் பொருள் ஒன்றே என்று உணர்த்தும் ஆற்றல் சன்மார்க்கத்துக்கிருத்தலான், அம் மார்க்கத்தில் நின்று, நாடு மொழி முதலியவற்றிற் பற்றுக் கொள்வதால், பிரிவு உணர்வு எழுதற்கு இடம் இல்லாமற் போகிறது. 280. எல்லா உயிர்களிலும் வீற்றிருக்கும் பரம்பொருள் ஒன்றே என்று உணர்த்துவது சன்மார்க்க மாதலின், உலகில் சமரச ஞானத்தை வளர்ப்பதற்கு அதுவே சிறந்த கருவியாகிறது. அச்சிறப்பு அதன் மாட்டிருத்தலான், அது சமரச சன்மார்க்கம் என்று வழங்கப்படுவதாயிற்று. 281. சமரசம், வாழ்விற்கு இன்றியமையாதது. அது சகோதர நேயத்தை வளர்ப்பது. சமரச நோக்கு இல்லாவிடத்தில் சகோதர நேயம் பிறத்தலும் அரிது. சகோதர நேயத்துக்கு அடிப்படை சமரசம். அச்சமரச நோக்கை எளிதில் கூட்டவல்லது சன்மார்க்கம் ஒன்றே. 282. எவ்வுயிரும் ஆண்டவன் கோயில் என்னுஞ் சமரச சன்மார்க்க உணர்வின்றிப் பேசும் சகோதர நேயம் பொருளற்ற தொன்று. அது சிலரை நேசிக்கவும் சிலரைப் பகைக்கவும் தூண்டுவ தாகும். 283. உலகில் அமைதி வேண்டும். அமைதிக்குச் சகோதர நேயம் வேண்டும். சகோதர நேயத்தை, நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலிய பிரிவுகள் குலைத்து விடுகின்றன. ஆகவே, இவைகளைக் கடந்த ஒன்று சகோதர நேயத்துக்கு அவசியந் தேவை. அஃது எல்லா நாட்டார் எல்லா மொழியார் முதலிய எல்லார்க்கும் பொதுவாயிருத்தல் வேண்டும். அஃது எது? அஃது எல்லா உயிர்களிலும் வீற்றிருக்கும் சத் ஒன்றே. அதை உணர்த்தும் இயற்கை நெறி சன்மார்க்கம் என்பது. அச் சன்மார்க்கம் ஒன்றே நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலிய பேதங்களை நீக்கி, அபேதத்தை நிலைபெறுத்திச், சகோதர நேயத்தை வளர்த்து, அமைதி இன்பத்தை வழங்கவல்லது. 284. எல்லா உயிர்களிலுமுள்ள சத்தெனும் இறை உண்மையைக் கலைஞானத்தால் அறிவது ஒரு வழி; மெய்ஞ் ஞானத்தால் தெளிவது மற்றொரு வழி. கலைஞானத்தளவில் நின்று விடுவது வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகாது. மெய்ஞ்ஞானத் தெளிவுப் பேறே வாழ்வின் நோக்கத்தை நிறை வேற்றுவதாகும். 285. மெய்ஞ்ஞானத் தெளிவுக்குப் பலமுறைகள் அமைந் திருக்கின்றன. அவைகள் யாவும் நாட்டின் இயல்பு, மக்களின் இயல்பு முதலியவற்றிற்கேற்ற வண்ணம் அமைந் துள்ளன. அவைகள் எல்லாவற்றிலும் ஊடுருவிப் பொதுவாக நிற்பது ஒன்றுளது. அஃது எது? அது தியானம். 286. ஒளி உடலுக்கு எங்ஙனம் இன்றி அமையாததோ, அங்ஙனமே தியானம் உயிருக்கு இன்றி அமையாதது. 287. தியானத்தின் முதிர்ச்சியில் ஒருவித அமிழ்தம் பிறக்கும். அஃது உயிரையும் உயிர்வழி உடலையும் ஓம்பும். அவ் வமிழ்தம் பிறத்தலும் தெரியாது; உணவாதலும் தெரியாது. அஃது உயிருக்கும் உடலுக்கும் வழங்கும் ஆறுதலால், அதன் தன்மையை மட்டும் உணர்தல் கூடும். தொடக்கத்திலேயே தியானம் எளிய முறையில் ஒருவித ஆறுதல் அளிப்பது அநுபவத்தில் தெளிவாகும். 288. உடல் நலனுக்கும், உயிர் நலனுக்கும் தியானம் இன்றியமையாதது. அலையும் மனத்துக்கும், அதன்வழி உழலுங் கருவி கரணங்கட்கும், பிற உறுப்புக்கட்கும் தியானம் உதவும் நலனை அநுபவத்தில் உணரலாம். 289. தியானம், தியான யோகம் என்றுஞ் சொல்லப்படும். 290. யோகம் என்பதற்கு ஒன்றல் என்பது பொருள். 291. யோகம் என்பது மூச்சை அடக்குவதுதான் என்று சிலர் கருதுவதுண்டு. மூச்சைப் பிடிக்கும் முறைகள் எல்லாம் யோகங்கள் ஆகா. வழி துறையின்றி மூச்சைப் பிடிப்பதால் பல இடர்கள் விளைவதும் உண்டு. 292. யோக வகைகள் பல. அவைகளை இரண்டு இன மாகப் பிரிக்கலாம். ஒன்று மல யோகம்; மற்றொன்று அமல யோகம். 293. மலயோகம், உடல்நலன் கருதி முயன்று வலிந்து செய்வது. காற்றை ஈர்த்தல் நிறுத்தல் விடுதல் முதலியன மல யோகத்தின்பாற் பட்டன. இவைகளில் தவறுதல் நேரின் உடலுக்கே ஊறு நேரும். ஊரை ஏமாற்றவுஞ் சிலர் மலயோகம் பயில்வர். தீயொழுக்கத்துக்குஞ் சிலர் அவ்யோகம் பயில்வர். மலயோகம், தக்கார்மாட்டுக் கேட்டுப் பயின்று ஒழுங்காகச் செய்யப்படின், அதனால் உடலுக்கு நலன் விளையாமற் போகாது. மலயோகத்தால் ஆத்ம ஞானங் கைகூடாது. மலயோகிகள் ஆத்ம ஞானிகளல்ல. 294. மலயோக வகைகள் பல. மூச்சைப் பிடிக்கும் மலயோகம், மூச்சைப் பிடியாத மலயோகம், கண் காது முதலியவைகளின் வழிச் செய்யும் மலயோகம் முதலிய பலவகைகள் உருக் கொண்டன. அவைகளில் சிலவற்றில் சில சமயங்களில் ஒலி கேட்டலும் ஒளி தோன்றலும் நிகழும். இவைகளைக் கொண்டு சில மலயோகிகள் பெருங் கோட்டை கட்டி உலகை வஞ்சிக்க முயல்வார்கள். அவர்களுக்கு உலகம் மிக எச்சரிக்கையா யிருப்பதாக. 295. மூச்சைப் பிடிப்பதில் தவறுதல் நேர்ந்தால் நோயுண் டாகும். அந் நோயாளிகட்கும் சில வேளைகளில் ஒலி கேட்கும். இதற்குக் காரணம் நுரைஈரலின் நலிவும், மண்ணீரலின் சவலையும், பிறவுமாகும். 296. நோய்வாய்ப்படாத நல்ல மலயோகிகள் சிலருக்கும் ஒலி கேட்கும். அவ்வொலி அவர்களது பயிற்சி மிகுதியால் நரம்புக் குழாய்களினின்றும் பிறப்பதாகும். அஃது இயற்கையினூடு பரந்து நிற்கும் அருள்நாதம் அன்று. 297. மலயோகத்தில் தோன்றும் ஒளி, பயிற்சி மிகுதியால் நுண்ணிய நரம்பொலிகளின் உராய்தலால் தோன்றுவது. அது பூத ஒளி. அவ்வொளி அருள் நாதஒலிக்கு ஊற்றாயுள்ள ஞான ஒளி அன்று. 298. மலயோக ஒலிக்கும் ஒளிக்கும் அஞ்ஞான வேரைக் கல்லி அறுக்கும் ஆற்றல் கிடையாது. 299. கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பாவங் களில் தோய்ந்து கிடக்கும் ஒருவன், மலயோகத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரிடம் அணுகி, அவ் யோகப் பயிற்சி செய்து வருவானாயின், அவனும் ஒலி கேட்கவும் ஒளி தோன்றவும் பெறுதல் கூடும். அவ்வொலியும் ஒளியும் மேல் நிலை உய்க்கும் எனில் உலகில் ஒழுக்கமே வேண்டுவதில்லையன்றோ? ஆகவே, மலயோக ஒலி ஒளி அளவில் நின்று, உலகம் ஏமாறாமல் இருப்பதாக. 300. அமல யோகத்துக்கு அடிப்படை ஒழுக்கம். ஒழுக்கம் அற்ற இடத்தில் அமல யோகம் கூடுதல் அரிது. 301. ஒழுக்கத்துக்கு முதலில் பஞ்சசீலப் பயிற்சி தேவை. பஞ்சசீலப் பயிற்சி மிக மிக, மற்ற சீலங்கள் தாமே படியும். 302. பஞ்ச சீலங்கள்; கொல்லாமை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, காமுறாமை, பொய்யாமை. 303. அமல யோகம் வலிந்து முயன்று செய்வதன்று. அஃது இயற்கைவழி இயங்குவது. அதற்கு மூச்சைப் பிடித்தல் முதலியன வேண்டுவதில்லை. அதனால் உடலுக்கோ உயிருக்கோ தீங்கு விளையாது. அஃது உடலையும் உயிரையும் ஓம்பும்; ஆத்ம ஞானத்தைக் கூட்டும். அமல யோகம் எழுத்தால் எழுதிக் காட்டக் கூடியதன்று. 304. தியானம் முதிர முதிர அநுபவத்தில் - இயல்பில் - குருவருளால் அமல யோகம் படிப்படியே கூடும். ஆகவே, அமல யோகத்தைப்பற்றிச் சிந்திக்கவும் வேண்டுவதில்லை. தியானத்துக் குரிய அடிப்படையான துறைகளில் வாழ்வைப் பண்படுத்தி அதில் (தியானத்தில்) தலைப்பட முயல்வது ஒழுங்கு. 305. மேலே குறிப்பிட்ட உடலோம்பல், கல்வி, இல் வாழ்க்கை, ஒழுக்கம் முதலியவற்றினின்றும் பரிணமிப்பது தியானம். 306. தியானம் உயிர்; அதற்குரிய உறுப்புகள் உடலோம்பல் முதலியன. 307. உடலோம்பல் முதலியவற்றுடன் குறித்த ஒன்றைக் குறித்த காலத்தில் செய்து பண்படல், அகப்புறத் தூய்மை, வாய்மை, தன்னலம் பாராட்டாமை, பிறர் பொருளை இச்சியாமை, உயிர்களிடத்து இரக்கம், இரக்கங்கொண்டு உயிர்கட்குத் தொண்டு செய்தல், உள்ளநிறை, அடக்கம், பொறை, நடுநிலை, எரிபகை எழாமை, மன்னிப்பு, செய்த தீங்குகட்கு வருந்தி வருந்தி அழுதல், அவ்வழுகையால் மீண்டும் தீங்குகட்கு ஆளாகாத உறுதியும் ஆற்றலும் பெறுதல், ஒழுக்கங் காத்தல் முதலிய நல்லியல்புகளும் வேண்டற்பாலன. தியானம் என்னும் நிலையம் எழுதற்கு இவைகள் சாரங்கள் போன்று துணைசெய்வன. இந்நல்லியல்புகளை வாழ்வில் பெறாமல் தியானத்தில் அமர்வ தால், தியானம் சித்தியாது; அத்தியானம் குலைந்து குலைந்து போகும். ஆகவே, அந்நல்லியல்புகளைப் பெறும் முறையில் வாழ்வு நடாத்திப் பண்படல் வேண்டும். 308. தியானத்தில் அமரும் முறையிலும் தியானத்திற்குத் துணை சேரும். இதற்குப் பலதிற ஆசனங்கள் சொல்லப்படு கின்றன. அவைகளில் பத்மாசனம் சாலப் பொருந்தியது. பத்மாசனம் நாடி நரம்புகளை ஒழுங்கில் நிறுத்தித் தியானத்துக்கு அரண் செய்யும். 309. சர்வாங்க ஆசனம், சிரசாசனம், சவாசனம் முதலியன வும் உடலை நன்முறையில் ஓம்புவன. 310. ஆசனங்கள் அளவில் நிற்றல் தியானமாகாது. ஆசனங்கள் சாரம் போன்றன. ஆசனப் பயிற்சி இன்றியும் தியானங் கூடுதல் உண்டு. 311. தியானத்துக்குரிய சிறந்த இடம் இயற்கைவெளி. காடு, மலை, கடலோரம், ஆற்றோரம் முதலியன பொருந்தியன. காற்றும், ஒளியும், அமைதியும் குறைபடாத வேறிடங்களும் உரியனவாம். தியான முதிர்ச்சியில் இக்கட்டுப்பாடு வேண்டுவ தில்லை. 312. தியானம் எனில் எதைத் தியானிப்பது? தியானிக்க மனத்துக்கு ஏதாயினுங் குறி தேவை. குறியற்ற ஒன்றை மனம் தியானித்தல் அரிது. (மனத்தின் உருவ அருவ நிலைகளை மேலே காண்க.) மனங்கடந்த ஒரு நிலைக்குக் குறி வேண்டுவதில்லை. அந்நிலை கூடுதற்குத் தியானம் இன்றியமையாதது. 313. மனத்தால் இறைவனைத் தியானித்தல் வேண்டும் என்பது பொது வாக்கு. அது சிந்திக்கத்தக்கது. மனம் எல்லைக் குட்பட்ட ஒன்றைத் தியானிக்கவல்லது. இறையோ நாமரூப மின்றி எல்லையற்ற அகண்டமாயிருப்பது. எல்லையற்று அகண்டமாயிருக்கும் ஒன்றை எல்லையுடைய மனம் எப்படித் தியானிக்கும்? 314. இறை உயிர் என்பதும், இயற்கை உடல் என்பதும் முன்னர் விளக்கப்பட்டன. இறை அகண்டமாய் மன உணர்வுக்கு எட்டாததாயிருத்தலான், அதனைத் தனியே மனத்தால் தியானித்தல் இயலாது. அவ்வியலாமையைப் போக்க இறையாகிய உயிர், இயற்கையை உடலாக்கொண்ட ஒரு நிலையைத் தியானிக்க முயல்வது முறைமை. 315. தியானத்துக்குத் துணைபுரிய இயற்கை அன்னை, பலப்பல கோலந்தாங்கி நிற்கிறாள்; ஞாயிறு, திங்கள், வான், மீன், மலை, காடு, அருவி, ஆறு, ஏரி, குளம், பயிர், வெளி, கடல், பலதிற உடலம் முதலியன அவள்தன் அழகுக் கோலங்கள். 316. மலை தியானத்துக்கு மிகச் சிறந்த இடம். மலை மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையில் நிற்பது; கீழிருந்து மேல்நோக்குவது. கீழ்நோக்குத் துன்பத்தையும், மேல்நோக்கு இன்பத்தையும் வழங்குவது இயல்பு. துன்பம் அறிவுச் சுருக்கம். இன்பம் அறிவு விளக்கம். துன்பம் சூழும்போது மக்கள் கீழ்நோக்குவதும், ஒன்று விளங்காத போது அதை அறிவால் விளங்கிக்கொள்ள மேல்நோக்குவதும் இயற்கை. மேல் நோக்குடைய மலையை உன்ன உன்னத் துக்க நீக்கத்துக்குரிய தியானம் தானே கூடும் மலையே தியானம் மயமாக விளங்குவது. அது தன்னை அணைவோரையும் தியான மயமாக்கும். ஆதலால், மலை தியானத்துக்குச் சாலச்சிறந்ததாகிறது. 317. ஓய்ந்த நேரங்களில் தியானத்துக்கு மக்கள் மலைக்குச் செல்வது நலம் - (கடலடுத்த மலையை நாடுவது மிகச் சிறப்பு.) மலைமீது ஏறி நின்று, இயற்கை அன்னை வழங்குங் கோலங் களைக் கண்டு கண்டு, உன்னி உன்னி, அவைகளில் ஊன்றி ஊன்றி, ஒன்றப் பயிலல் வேண்டும். காலையில் செங்கதிர் பரப்பி நீலக்கடலில் எழும் இளஞாயிற்றை நோக்குவோம்; உன்னுவோம்; அதில் இரண்டற மூழ்குவோம்; மூழ்கித் தெளிந்தெழுந்து அஞ்ஞாயிறு நினைவுடன் வெயிலை நிலவாக்குமாறு பரந்து விரிந்து நிற்கும் ஒரு பச்சை மரத்தடியில் சேர்வோம்; சேர்ந்து நானா பக்கங்களிலும் உலவி உலவி, உதிர்ந்த சனிகளை உண்டு, அருவி நர் அருந்தி, ஓரிடத்தில் அமர்வோம். இயற்கை அன்னை புலன்களுக்கு விருந்து அளிக்கிறாள். தென்றலின் வீச்சும், அருவியின் முழவும், மயிலின் ஆட்டமும், குயிலின் கூவலும், வண்டின் பாட்டும், மலரின் மணமும், மானின் துள்ளலும், பிறவும் புலன்களுக்கு விருந்தாகின்றன. அவ்விருந்து நெஞ்சை ஒருமையில் நிறுத்தும். அதனால் அமைதி கூடிக்கிடப்போம். பகல் கழிந்த பின்னை மரத்தடியினின்றும் வெளிப்போந்து, இயற்கை அன்னையின் பெருங்கோலத்தை நோக்குவோம். நானா பக்கங்களிலும் பசுமை உருகி உருகிப் பெருகிப் பெருகிப் பாய்ந்து ஓடி இழிதருங் காட்சி நம்மை வயப்படுத்தும். பசுமைக் கடலில் மூழ்குவோம். அப் பசுமைக் கடல், தன்னில் மூழ்கிய சிந்தையை நீலக் கடலில் புகுத்தும். அதன் கண் தோய்நது இன்புறும் வேளையில் தண்ணிலவு பொழிந்து வெண்டிங்கள் காட்சியளிக்க முந்துகிறது. பறவையொலி கேட்கிறது. கால்நடை களின் மணியோசை கேட்கிறது. அந்திவான் செம்மையில் ஞாயிறு பொலிகிறது. ஒருபால் திங்களும் மற்றொருபால் ஞாயிறும் நேர்பட வழங்குங் காட்சியைக் காணும் கண்ணன்றோ கண்? அக்காட்சியில் படியும் நெஞ்சமன்றோ நெஞ்சம்? வெண்ணிலவு பொழிந்த வண்ணமா யிருக்கிறது. விண் மீன்கள் ஒளிர்கின்றன. நீலவான் அமைதியில் நெஞ்சம் முட்டுகிறது. இவ்வாறு இயற்கை அன்னையின் பலதிறக் கோலங்களில் நெஞ்சம் பதியக் கீழிறங்குவோம். கடலுடுத்துப், பசுமை போர்த்து, வான்முடி யணிந்து, இருகதிர் விழித்து நோக்கும் இயற்கை அன்னையின் அழகு வடிவம் மனத்தில் நின்று நின்று அமைதியூட்டும். அவ்வழகு வடிவைத் தியானிப்போம்; தியானித்த வண்ணமிருப்போம். 318. மலையினின்றுங் கீழிறங்கி வாழ்வில் தலைப்படும் வேளைகளிலும் இயற்கைத் தியானத்தை மறத்தலாகாது. இடையிடை மறுப்புநேரினும் நேரும். அம்மறப்புக்கு இரை யாகாதவாறு காப்புத் தேடுவது நல்லது. இதற்கு என் செய்வது? கருத்தில் நிலவும் இயற்கைக் கோலங்களைப் பாட்டாக எழுதவும் ஓவியமாக வரையவும் பயிலுதல் வேண்டும். இப்பயிற்சி இயற்கைத் தியானத்தை ஓம்பும். இயற்கைத் திருக்கோலங்களை முன்னோர்களும் காவியங்களிலும் ஓவியங்களிலும் இறக்கி வைத்துள்ளார்கள். அவைகளை ஆய்ந்து சிந்தித்து அவைகளில் ஈடுபட்டு ஒன்றுவதும் இயற்கைக் கோலங்களுடன் உறவு கொள்வதாகும். காவிய ஓவியங்கள் இயற்கையின் கூட்டுறவுக்குப் பாலம் போலத் துணை செய்வன. காவிய ஓவியங்களும் இயற்கை வழிபாட்டிற்கென ஏற்பட்டன என்று கூறல் மிகையாகாது. 319. காவிய ஓவியங்களை இயற்கைக் கோலத் தத்துவ நுட்பங்களின் அறிகுறிகள் என்னும் உணர்வுடன் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறின்றிக் காவியச் சொல்லையும், ஓவியப் பிண்டத்தையும் பொருளாக் கொள்வது தவறு. அது, விக்கிரக ஆராதனையாக முடியும். 320. எங்கும் உள்ள இறையை ஒரு சிறிய செயற்கை உருவாக நினைந்து வழிபடுவது இறையை நிந்தனை செய்வதாகும். இவ்வழிபாடு அறிஞரால் மறுக்கப்பட்டிருக்கிறது. இம் மறுப்பின் நுட்பம் தேறாத சிலர் காவிய ஓவியங்களையே மறுக்கப் புகுகிறார். இதுவுந் தவறு. 321. இயற்கைத் தியானம் முதிர முதிர நெஞ்சில் இயற்கை இயல்கள் படிகின்றன. இயற்கை இயல்கள் பலப்பல. அவை களின் உயிர் நாடியா யிருப்பது தனக்கென வாழாமை. இச்சீரிய இயல்நெஞ்சில் படிவதற்கு இயற்கைத் தியானம் இன்றியமையாத தாகிறது. 322. இயற்கைத் தியானம் மக்களிடத்துள்ள தன்னலம் என்னும் விலங்கியல்பை வீழ்த்தித் தேய்த்துப் பரநலம் என்னும் தெய்வ இயல்பைப் பெய்து வளர்க்கும். இயற்கைத் தியானத்தின் முன்னர், நாடு, மொழி, நிறம், வகுப்பு, மதம் முதலியவற்றால் தோன்றும் பிரிவு உணர்வுகளும், அவ் வுணர்வுகளால் எழும் பொறாமை பிணக்கு முதலிய இழிவுகளும் பொன்றும். எவ்வுயிரையும் தன்னுயிர் போல் கருதும் அன்பு நிலையை இயற்கைத் தியானம் கூட்டும் என்று சுருங்கச் சொல்லலாம். இயற்கைத் தியானத்தில் அமர்ந்து பார்க்கப் பார்க்க அதன்பெற்றி நன்கு புலனாகும். 323. இயற்கைத் தியானம் அலையும் மனத்தை அமைதியில் நிறுத்தும். அமைதி, வாழ்விற்கு வேண்டற்பாலது. அமைதி கருவி கரணங்களிலும் நாடி நரம்புகளிலும் புகுந்துள்ள வெம்மையைப் போக்கித் தண்மை வழங்கும் அமிழ்தம். வெம்மை, எரி பகை முதலிய தீமைகளை ஈனுவது. தண்மை அவைகளை நீக்கி அன்பு அருள் முதலிய நன்மைகளை நல்குவது. அன்பு அருள் முதலியன உடல் நலனுக்கும், உயிர் நலனுக்கும், பர நலனுக்கும் வேண்டுவன. இயற்கைத் தியானத்தால் அமைதியும் நல்லெண்ணமும் நல்லுடலும் பெறுதல் கைகண்ட பலன். 324. இயற்கைத் தியானம் உலகில் பெருகப் பெருக மன் பதையே தூய்மையுறும்; சகோதரநேயம் ஆக்கமுறும். பல்லோர் பலகால் முயன்றும் கைகூடாத சீர்திருத்தங்களையெல்லாம் இயற்கைத் தியானம் விரைவில் எளிதில் வாழ்வில் நிலைபெறச் செய்யும். 325. உலகை ஒழுங்குபடுத்தக் கற்றைக் கற்றை நூல்களும், பெரும்பெரும் மகாநாடுகளும், நீண்ட நீண்ட தீர்மானங்களும், கிளர்ச்சிகளும், புரட்சிகளும் வேண்டுவதில்லை. இயற்கைத் தியானம் ஒன்று சாலும். 326. இயற்கைத் தியானத்துடன் உயிர்த்தொண்டுஞ் செய்துவருதல் வேண்டும். இஃதும் இயற்கை வழிபாட்டின் பாலது. 327. நாளடைவில் இயற்கையின் பல கோலங்களைத் தியானிப்பதில் படிப்படியே சிற்சில மாறுதல் நிகழும். இதற்கு இயற்கை அன்னையே துணை செய்வாள். அத்துணையுடன் நமது சிறு முயற்சியும் கூடின் விரைவில் நலன் விளையும். இயற்கையின் பல கோலங்களைப் பற்றிய தியானம் நாளுக்கு நாள் படிப்படியாக மாறி மாறி, அது பெரிதும் ஞாயிற்றில் மட்டும் செல்வதாகும். இஃது இயற்கையின் போக்கு. நாமும் தொடக்கத்திலேயே ஞாயிற்றின்மீது சிறப்பாகக் கருத்துச் செலுத்துவோமானால் இயற்கையின் துணை எளிதில் கூடும். 328. ஞாயிறு, சிந்தையில் நின்று நின்று, இயற்கையின் வேறு கூறுகளையெல்லாம் நாளடைவில் தன் மயமாக்கும். இந்நிலையில் எங்கும் பரவியுள்ள இயற்கை ஒலி (அருள் நாதம்) கேட்கும். அவ்வொலி ஒவ்வொருவர்க்கு ஒவ்வொரு விதங் கேட்கும். ஒலி கேட்கும் நிலைக்குமேல் இயற்கையின் காரியப் பாடுகளாக உள்ள பன்மைக் கோலங்கள், அவைகளின் காரண மாக உள்ள ஒருமை அழகொளியாகித் தோன்றித் தோன்றி மறைவுறும். அவ்வொளி பெருகிப் பெருகி நிலைபேறாக நிற்க நிற்க மன உணர்வு முறை முறையே மாயத் தொடங்கும். 329. மன உணர்வு மாயும்போது, சில சமயங்களில் போராட்டம் சோதனை முதலியன நிகழும்; சித்தியும் கூடும். அவைகளுக்கு எளிமையாகாத உறுதி வேண்டும். அவ்வுறுதியில் குருநாதன் தோன்றித் துணை செய்வன். 330. குருநாதன் தோன்றி உண்மை விளக்கியதும் மன உணர்வு முற்றும் மாயும்; அஞ்ஞான வேர் அறுந்துபடும்; நான் என்பது சாகும்; உள்ளொளி எழும். 331. அரும்பு மலரானதும் மணம் எழுவதுபோல, மனம் ஒடுங்கியதும் உள்ளொளி எழும். 332. உள்ளொளியும், புறத்தே தோன்றும் இயற்கை அழகொளியும் ஒன்றும்போது தனித்த இறையின் தொடர்பு விளங்கும். அதற்குமேல் நேர்வது சொல்லுக்கடங்காதது. 333. குருநாதன் துணையின்றி, இயற்கை அன்னையின் அருளால் மிகமிகச் சிலர்க்கே மன உணர்வு கடந்து உள்ளொளி எழும் நிலை நேரே கூடும். பெரும்பான்மையோர்க்கு அந்நிலை எளிதில் நேரே கூடுவதில்லை. அவர்க்குக் குருமாருள் எவரேனும் ஒருவர் துணை செய்வர். 334. குருநாதன் துணை எளிதில் கிட்டாது. அத்துணைக்கு நிஷ்காமிய நெஞ்சம் தேவை. நிஷ்காமிய நெஞ்சை வழங்க வல்லது இயற்கைத் தியானம். இயற்கைத் தியானத்தால் நிஷ்காமியத்தில் பண்பட்ட நெஞ்சம் உண்டாகும். அதற்குமேல் குருநாதன் துணை கிடைக்கும். 335. இயற்கைத் தியானத்தால் நெஞ்சைப் பண்படுத்தாது, குருநாதன் துணையை மட்டும் தேடித் திரிவது வீணேயாகும். இவ்வாறு திரிவோர்க்கு மோசக்காரர் துணை கிடைக்கும். அத்துணையால் வாழ்க்கையே கெடும். 336. இயற்கையிலுள்ள சக்திகள் பல. அவைகளுள் ஒன்று அருட் சக்தி. அச்சக்தி நிலவாத இடம் இல்லை. அது, நிஷ்காமிய நெஞ்சில் நுழையத் துடி துடித்துக் கொண்டிருக்கும். இயற்கைத் தியானத்தால் நெஞ்சம் நிஷ்காமியம் பெறுந்தறுவாயில், அச்சக்தி நெஞ்சில் நுழையும்; நுழைந்து குருநாதன் வருகைக்கு வழிகோலும். 337. குருநாதன் அருள் கூடாதபோது மனமே குருவாகி வழிகாட்டி மறையும் நிலையும் உண்டு. 338. சிற்சில காரணம்பற்றி இயற்கைத் தியானத்தில் ஈடுபடும் வாய்ப்புக் கூடப்பெறாதார், குருமாரில் தமது கருத்துக்கு இனிய ஒருவரைத் தியானிக்கலாம். அத்தியானமும் இயற்கை ஒலியையும், ஒலிவழி ஒளியையும் வழங்கிப் பிற நிலைகளையும் கூட்டும். 339. இயற்கை வாயிலாகவும், குரு வாயிலாகவும் உயிர்களின் தியானத்தை ஏற்கும் இறை ஒன்றே. 340. இயற்கைத் தியானத்தின் முதிர்ச்சியால் குரு தரிசனம் பெற்று மேல் நிலையடைவது பெரும்பான்மை. குருதரிசன மின்றி அந்நிலை அடைவது சிறுபான்மை. 341. மன உணர்வு உள்ளவரை இறைவனை இயற்கை வாயிலாகவோ அதன் கூறாகிய குரு வாயிலாகவோ தியானிப்பது சிறப்பு. மன உணர்வு கடந்தபின்னை இறையுடன் தனித்த தொடர்பு கொள்ளும் ஒரு பெரும் நிலை படிப்படியே கூடும். 342. மன உணர்வு கடந்ததும் கூடுவது அமல யோகம். அது குருவருளால் கூடுவது. 343. யோகம் உருவமுள்ளவரை செல்லும். கடைசி நுண்ணுருவம் நாதம். நாதம் வரை யோகம் நிகழும். நாதத்துக்கு மேற்பட்டது உருவமற்ற நிலை. அது யோகங்கடந்த பெருநிலை. அங்கே சொல் ஏது? பொருள் ஏது? பேசா அநுபூதி. 344. குருவருள் பெற்ற பின்னை உள்ளொளி என்னும் ஆன்மசக்தி அடைந்தோர்க்கு இயற்கைக் கூறுகளெல்லாம் ஏவல் செய்யும். அதுகொண்டு அற்புதச் சித்துகட்கு இரையாதல் கூடாது. 345. அற்புதத்தால் மட்டும் ஒருவரைப் பெரியவரென்று எண்ணுதல் தவறு. 346. அவசியம் நேரும்போது ஒரோவழி ஒவ்வோரிடத்தில் சில பெரியோர் அற்புதஞ் செய்யும் வாய்ப்பு நேரும். அற்புதமே பெரியோர்க்குரிய பணியன்று. 347. மன உணர்வினர்க்கு மிக அரியனவாகத் தோன்றுவன வெல்லாம், உள்ளொளியினர்க்கு மிக எளியனவாகத் தோன்றும். இவர்கள் நிகழ்த்துஞ் சில செயல்கள் மன உணர்வினர்க்குச் செயற்கருஞ் செயல்களாக அதாவது அற்புதங்களாகத் தோன்றும். 348. உள்ளொளியும் புறவொளியும் ஒன்றித் தனித்த இறையின் தொடர்பை விளக்கி, அதற்கு மேலும் விளங்கும் அநுபூதி நிலையை மன உணர்வினர் ஆராய்ந்து ஆராய்ந்து மண்டையை உடைத்துக்கொள்ள வேண்டுவதில்லை. அரிய காலத்தை அவர்கள் அவ்வழியில் போக்குவது வீண்; அவ்வநுபூதி நிலையை எளிதில் கூட்டவல்ல இயற்கைவழி நிற்க முயல்வது அறிவுடைமை. 349. அநுபூதிமான்கள் வேற்றுமை யுணர்வற்றவர்; உலக சகோதர நேயமுடையவர். 350. அநுபூதி எது? நரகம் ஓரிடம் - சுவர்க்கம் ஓரிடம் என்னும் உணர்வற்ற ஒரு நிலை. இந்நிலையை மறைத்திருப்பது அஞ்ஞானம். அதனின்றும் விடுதலையடைவது அநுபூதி; வீடுபேறு. இதற்குரியது இயற்கை நெறி. 351. இதுகாறுங் கூறியவாற்றான் சத்தினை உணர்ந்து அடைதற்குரிய மார்க்கமாக நின்று துணைசெய்வது இயற்கை என்பது அறியற்பாலது. 352. இயற்கையே மார்க்கம்; சத்துக்குரிய மார்க்கம். 353. மார்க்கத்தை விடுத்துச் சத்தைமட்டும் பற்ற முயல்வது வெறும் பாழைப் பற்றுவதாகும். 354. இயற்கை நெறியே சாலச் சிறந்தது; எளியது; பொருந்தியது. இயற்கைநெறி நின்று உலகம் இன்புறுவதாக. 4. குருமார் 1. குருமார் சத்தெனும் இறையும் அல்லர்; மக்களும் அல்லர். 2. இறை, வடிவம் இல்லாதது; குருமார் வடிவம் உடையவர். இறைக்கு அவதாரம் இல்லை; குருமார்க்கு அவதாரம் உண்டு. 3. குருமார்க்கு வழங்கப்படும் பெயர்கள் சில, சில இடங்களில் இறைக்கும் வழங்கப்படுகின்றன. அப்பெயர்களைக் கொண்டு கடவுள் அவதாரக் கதைகள் புனையப்பட்டன. நாமரூப மில்லாத பரம்பொருளை எப்பெயரிட்டு அழைத்தா லென்ன? தோற்றக்கேடு இல்லாதது அதன் தன்மை என்பதை மட்டும் மறத்தலாகாது. 4. உலகில் கடவுளைக் கண்ட கதைகள் பல சொல்லப்படு கின்றன. அவைகள் யாவும் குருதரிசனக் கதைகளேயாகும். பரம்பொருள், தனியே ஒரு மாயா உருவந் தாங்கி வருவதன்று; அது நாம ரூபமின்றி, போக்கு வரவின்றி, அசைவின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பது; அஃது இயற்கையை உடலாக் கொண்டு, குருமார் நெஞ்சத்தாமரையில் ஒளிர்ந்து, மேலுங் கடந்து நிற்பது. அது மனஉணர்வு கடந்த நிலையில் அநுபவ மாத்திரையாய் விளங்குவது. 5. குருமாரும் பிறக்கிறார்; மக்களும் பிறக்கிறார்கள். ஆனால் அவர் பிறப்புக்கும் இவர்கள் பிறப்புக்கும் வேற்றுமை உண்டு. குருமார் அவசியம் நேரும்போது பிறப்பவர்; மக்கள் பிறப்பு அத்தகையதன்று. குருமார் ஞான உணர்வுடன் பிறப்பர்; மக்கள் அஞ்ஞானத் தொடக்குடன் பிறப்பார்கள். குருமார் உலக நலங்கருதிப் பிறப்பர்; மக்கள் அவ்வுணர்வுடன் பிறப்பவர் களல்ல. குருமார் வழிகாட்டிகள்; மக்கள், அக்குருமார் வழிபற்றி நடப்பவர்கள். குருமார் எல்லாஞ் செய்ய வல்லவர்; மக்கள் எல்லாஞ் செய்யவல்லவர்களல்ல. இன்னோரன்ன வேற்றுமைகள் பல உண்டு. 6. குருமார் வரலாற்றை ஆராய்ந்து கொண்டிருத்தல் அநாவசியம். அவரைக் காண நேரும்போது அவர்தம் வரலாறு விளங்கும். 7. கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் குருமார் இருத்தல் உண்மை. 8. குருமார் நிலை, புலனறிவு ஆராய்ச்சிக்கு எட்டாதது. அவர்நிலை, தியான முதிர்ச்சியில் மலரும் மாசற்ற மெய்யுணர்வில் விளங்குவது. 9. உணர்வு இருவகைத்து. ஒன்று பொய்யுணர்வு; மற்றொன்று மெய்யுணர்வு. 10. பொய்யுணர்வு நிலையுதலில்லாதது; மாறுவது. மெய்யுணர்வு நிலையுதலுடையது; மாறுதலில்லாதது. 11. மக்கள் மெய்யுணர்வு பெறும்வரை பொய்யுணர்வு கொண்டு ஆராய்ச்சியில் தலைப்படுகிறார்கள். அவ்வாராய்ச்சி யால் நிலைத்த முடிவுகள் ஏற்படுவதில்லை. அவரவர் கல்வி அறிவு அநுபவத்துக்கேற்ற அளவில் ஆராய்ச்சி முடிவுகள் தோன்றும். ஒருவனே ஒருபோது கண்ட முடிவை மற்றொரு போது மாறுபட உணர்ந்து, அதைமறுத்து வேறொரு முடிவு பெறுகிறான். ஆகவே, மெய்யுணர்வு பெறும்வரை நிலைத்த முடிவு புலப்படுதல் அரிது. 12. பொய்யுணர்வு, புலனறிவினின்றும் பிறப்பது. புலனறிவுக்கு எட்டாத நுட்பங்கள் பலவுள்ளன. அவைகள் புலனறிவு ஆராய்ச்சிக்கு எட்டாதன. அவைகளைப் புலனறிவால் ஆராய்ந்து ஏமாறுவது அறிவுடைமை யாகாது. 13. குருமாரின் அருள் மொழிகளிலும், அவரைக் கண்ட ஞானிகளின் உரைகளிலும் உறுதியும் அன்புங் கொண்டு ஒழுகி, உண்மைகாண முயல்வது அறிவுடைமை. 14. குருமார் நுண்ணுடல் உடையவர். அவ்வுடல் மன உணர்வுடன் வாழும் மக்கட்குப் புலனாகாது. இயற்கைத் தியானத்தில் முதிர்ச்சிபெற்ற மக்கட்கு அப்பொன்னுடல் புல னாகும். குருமாரைப்பற்றி முன்னருஞ் சொல்லப்பட்ட உரைகளை நோக்குக. 15. குருமாரெல்லோரும் ஒரே திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்க்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. குருமாரில் உயர்வு தாழ்வு கற்பிப்போருக்கு உண்மை ஞானம் விளங்காது. 16. குருமார் வடிவில் வெவ்வேறு பட்டவர்போல் காணப் படுவர். உணர்வில் அவரெல்லாரும் ஒருமைப்பாடுடையவர். மன உணர்வு கடந்த நிலையில் அவ்வொருமைப்பாடு நன்கு விளங்கும். 17. குருமார் அனைவரும் நுண்ணிய பொன்னுட லுடையவர். அவர் அந்நிலையில் நின்றே உலகுக்கு நலஞ் செய்து வருகிறார். சிலர் அவசியம் நேரும்போது பருவுடல் தாங்கியும் நலஞ் செய்வர். அப்பொழுதும் அவர்பால் நுண்ணுடல் உணர்வே நிலைத்து நிற்கும். 18. நுண்ணுடல் நிலையில் குருமார் பெரிதும் மோனத்தால் உண்மையைக் குறிப்பாக உணர்த்துவர். அம்மோனம் இயற்கைத் தியானத்தால் முதிர்ச்சி பெற்றவர்க்குக் காட்சியாகும். அக்காட்சி கண்ட ஞானிகள் அதை உலகுக்கு வெளியிட்டுள்ளார்கள். (குருமார் தொடுதல், மொழிதல் முதலிய வழிகளாலும் உண்மை உணர்த்துவது உண்டு.) 19. பருவுடல் தாங்குங் குருமார் போதனையினாலும் சாதனையினாலும் அவ்வப்போதைய உலகம் விரும்பும் முறையில் சன்மார்க்கத்தை விளக்கிச் செல்வர். அப்போதனை களை அவராகக் கொள்ளுதல் ஒழுங்கு. 20. குருமார் நுண்ணுடல் நிலையில் குறிக்கும் மோனம், மனங்கடந்த ஞானிகட்குக் காட்சியாவதால், அதன்கண் வேற்றுமை தோன்றுவதில்லை. பருவுடல் தாங்கிய நிலையில் குருமார் அருளும் போதனைகளில் வேற்றுமை தோன்றுவதைப் பற்றி உலகம் மலைவதுண்டு. 21. குருமார் போதனைகள், கால தேச வர்த்தமான நிலைமைகட்கேற்ற முறையில் வெளிவருதலால், அவைகளின் தோற்றத்தில் வேற்றுமை காணப்பெறுதல் இயல்பே. 22. மக்கள் பிறப்பு வகையில் ஒருமைப்பட்டவர்களா யிருந்தாலும் அவர்கள் சிறப்புவகையில் ஒருமைப்பட்டவர்களா யில்லை. மக்கள் மனோநிலை, வழக்க ஒழுக்கம், உடை, உணவு முதலியவற்றில் வேற்றுமைப்பட்டிருத்தல் கண்கூடு. இப் பலபட்ட மக்கட்குப் பலபட்ட போதனைகள் தேவை. பலப் பட்ட போதனைகளில் அவரவர் தம்தம் இயல்புக்கேற்ற ஒன்றைக் கொண்டொழுகுதல் நலம்; பிறவற்றை நிந்தித்தல் கூடாது. 23. குருமாரின் போதனைகள் தொடக்கத்தில் வேற்றுமை போலத் தோன்றும். முடிவில் அவ்வேற்றுமை உணர்வு இடம் பெறாதொழியும். 24. வேற்றுமை, புறத்தின்பாற் பட்டதென்பதும், அகத்தின் பாற் பட்டதன்று என்பதுங் கருதத்தக்கன. 25. குருமார், சன்மார்க்கத்தையே கால தேசவர்த்தமானத் துக்கேற்ற முறையில் விளக்கிப் போதித்துச் செல்வது வழக்கம், அப்போதனைகளில் சன்மார்க்க உயிர் நாடி ஓடிக் கொண்டே யிருக்கும். 26. பொன்னால் பணிகள் செய்யப்படுகின்றன. அப்பணிகள் கால நிலைக்கேற்ற வண்ணம் செய்யப்படுவது வழக்கம். அவை களின் தோற்றத்தில் எத்துணை மாறுத லிருப்பினும், அவைகள் யாவும் பொன்னால் செய்யப்பட்டவை என்பது உண்மை. புறம், வேற்றுமை யுணர்வை நல்கினும், அகம் அவ் வுணர்வை அகற்றும். புறவேற்றுமை உணர்வு நீண்டநேரம் நிலைத்திருப்ப தில்லை. பொன் போன்றது சன்மார்க்கம்; பணிகள் போன்றவை போதனைகள். சன்மார்க்கமே காலத்துக்கேற்ற முறையில் குருமாரால் போதிக்கப்படுவது. புறத்தோற்றம், வேற்றுமையுறச் செய்வதற்குக் காரணம், அவ்வப்போது மக்கள் மனோ நிலையில் உறும் மாறுதலே யாகும். 27. பலதிற மனோநிலையுடைய மக்களுக்குப் பயன்படு முறையில் குருமாரின் போதனைகள் அவ்வப்போது வெளி வருவதற்குக் காரணம், அவர் பலதிறப்பட்ட மக்கள்மீதுங் கொண்ட கருணையேயாகும். 28. ஒருவன் ஒரு குருவின் போதனையில் விருப்பங் கொண்டு, மற்ற குருமார் போதனைகளை நிந்திப்பது, அவன் தன் குருவின் போதனையையே நிந்திப்பதாக முடியும். நிந்தனை யுள்ள இடத்தில் குருதரிசனமே அரிதாகும். 29. சோலை இன்பம் நுகர, ஒரு சோலையில் நுழைந்து தனக்கினியதென்று தோன்றும் ஒரு மரத்தடியில் அமர்ந்த ஒருவன், தான் அமர்ந்த மரத்தின்மீது கொண்ட விருப்பத்தால், மற்ற மரங்களை வெறுத்து அவைகளை அழிக்கப் புகுவா னாயின், அவன் சோலை இன்பத்தை எங்ஙனம் நுகர்தல் கூடும்? பிற குருமார் போதனைகளை நிந்திப்பவன் கதையும் இத் தன்மைத்தே. 30. ஒரு குருவின் போதனைவழி ஒருவன் நின்று ஒழுகுவா னாயின், அவன் முடிவில் எல்லாக் குருமார் போதனைகளும் தன் குருபோதனையாகவே தோன்றக் காண்பன். ஆகவே, குருமார் போதனைகளெல்லாம் சன்மார்க்கம் என்று கொண்டு, எக் குருவின் போதனையையும் நிந்தியாது, அவரவர் தத்தம் மனத்துக்கியைந்த குருபோதனை வழி நின்றொழுகுவது அறிவுடைமை. 31. குருமார் வழிபாடு மேலே சொல்லப்பட்டது. குருமாரின் போதனைவழி நின்று அவரை வழிபடுதல் வேண்டும். அவர் போதனைவழி நில்லாது அவரைப்போல ஓர் உருவைச் செய்து, அவ்வுருவைமட்டும் வழிபடுவதால் உண்மை விளங்காது. குருமார், போதனைகளாகவே விளங்குகிறார். போதனைகளின் தத்துவ உணர்வற்ற வழிபாடு வெறும் விக்கிரக ஆராதனையாக முடியும். 32. குருமாரின் வாய்மொழிகள் தெய்வத் திருவருள் மொழிகளாகும். அவ்வருள் மொழிகளிற் சில வேதமாகவும் சில ஆகமமாகவும் நிலவும். 33. வேதமும் ஆகமமும் முறையே மந்திரம் தந்திரம் என்று சொல்லப்படும். மந்திரம் என்பது நுண்மை; தந்திரம் என்பது பருமை. மந்திரம் எண்ணம்; தந்திரம் செயல். வேதம் விதை போன்றது; ஆகமம் மரம் போன்றது. 34. வேதம் குருமார்வழிப் பிறக்கும்; ஆகமமும் சில சமயங்களில் அவர்தம் வழிப் பிறக்கும். 35. வேதாகமங்கள் குறிப்பிட்ட மொழியில் பிறக்கும் நூல்களல்ல. வேதாகமங்கள் பல மொழிகளில் பல இடங்களில் பிறந்திருக்கின்றன. அவைகள் யாவும் சன்மார்க்கத்தையே அறிவுறுத்துவன. வேதம் ஆகமம் என்பவற்றிற்கு அவ்வம் மொழியில் தனித்தனிப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. 36. வேதாகமம் ஒலி வடிவாயிருப்பது. அது குருமார் வழிப் பலதிற மொழிகளில் இறங்குவது. 37. குருமார் பெயரால் பிரதிநிதிக் கூட்டமென்றும், சம்பிரதாயங்களென்றும், அவைகட்கெனக் கோயில்க ளென்றும், மடங்களென்றும், இன்ன பிறவென்றும் பல கட்டுப்பாடுகள் ஆங்காங்கே ஏற்பட்டிருக்கின்றன. அவைகள் பொய்ம்மையின் பரிணாமங்கள். குருமாருக்குப் பிரதிநிதிக் கூட்டங்களோ, சம்பிரதாயங்களோ, அவைகட்கெனக் கோயில்களோ, மடங்களோ, பிறவோ வேண்டுவதில்லை. குருமார் பக்குவர்க்குக் காட்சியளித்து, அவர்க்கு உண்மை ஞானோபதேசஞ் செய்யக் காத்துக்கொண் டிருக்கிறார். அவர்க்கிடையில் மற்ற அஞ்ஞானத் தலை எடுப்புகள் எற்றுக்கு? 38. கோயில் மடம் முதலியன தொடக்கத்தில் ஓவிய காவிய தத்துவ நிலையங்களாகவும், குருமாரின் தெய்வ மொழிகளைப் பயிலும் நிலையங்களாகவுங் காணப்பட்டன. நாளடைவில் பிரதிநிதிகள் என்ற பெயரால் புரோகிதர்கள் அவைகளில் நுழைந்து, அவைகளைத் தங்கட்குரிய வியாபாரக் கடைகளாக மாற்றிக் கொண்டார்கள். 39. புரோகிதர்கட்குக் காசு கொடுத்து உபதேசம் பெறுவ தால் தெய்வநிலை கூடுமென்று கருதுவது அறியாமை. 40. புரோகிதர் உபதேசம் குருடருக்குக் குருடர் வழிகாட்டு வதைப் போன்றது. 41. குருமார் கருணை, ஞாயிற்றொளி போலப் பொழிந்த வண்ணமிருக்கிறது. அதற்குக் காசோ கட்டுப்பாடோ வேண்டுவ தில்லை. அக்கருணை ஒளிபட வாழ வேண்டுவது மக்கள் கடமை. 42. குருவுக்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப் படுகின்றன. 5. சீர்திருத்தம் 1. உயிர்களின் அறியாமையைப் போக்கி, அவைகளை அறிவு மயமாக்க வேண்டுமென்பது இயற்கை அன்னையின் வேட்கை. 2. இயற்கை அன்னை, தன் வேட்கையை நிறைவேற்ற உயிர்கட்குத் தனு கரண புவன போகங்களாகவும், பிற கூறு களாகவும் நின்று துணைசெய்கிறாள். 3. இயற்கை அன்னையின் துணை படிப்படியாக உயிர்களின் அறியாமையைப் போக்கி, அறிவை விளங்கச் செய்வதாகிறது. 4. உயிர்கள், தாவர முதல், விலங்கு உடல் தாங்கும் வரை, பகுத்தறிவு விளங்கப் பெறுவதில்லை. 5. உயிர்கள், விலங்கு உடலைக் கடந்து, மக்கள் உடலைத் தாங்கியதும் பகுத்தறிவு அரும்பப் பெறுகின்றன. 6. பகுத்தறிவைப் பெற்ற மக்கள் அறிவுமயம் என்னும் முழுநிலை எய்த முயலுதல்வேண்டும். 7. விலங்கு முதலிய உயிர்களிடம் பகுத்தறிவு விளங்கப் பெறாமையால், அவைகளிடஞ் சில குறைபாடுகள் பொருந்து கின்றன. ஆனால் அவைகள் பெரிதும் இயற்கை முறைகட்கு மாறுபட்டு நடப்பதில்லை. இஃது இங்கே சிறப்பாகக் கருதற்பாலது. 8. விலங்கு முதலியவற்றின் மாட்டுள்ள குறைபாடுகளைப் போக்க, இயற்கை அன்னை, பகுத்தறிவு விளங்குதற்குரிய நல்லுடலை அவைகட்குக் கருணை செய்கிறாள். 9. பகுத்தறிவு பெற்ற மக்கட்பிறவி, விலங்குக்கும் தெய்விகத்துக்கும் இடைப்பட்டது. 10. மக்களிடத்தில் பொதுவாக விலங்கியல்பும், தெய்விக இயல்பும் விரவியிருத்தல் கண்கூடு. 11. அழுக்காறு, அவா, வெகுளி, பகை, வன்மம், கொலை, தன்னலம் முதலியன விலங்கியல்புகள். பொறுமை, அன்பு, மன்னிப்பு, ஒப்புரவு, தியாகம், பரநலம் முதலியன தெய்வ இயல்புகள். 12. மக்கள் விலங்கியல்பினின்றும் முற்றும் விடுதலை யடைந்து, தெய்வ இயல்பை முற்றும் பெறுதற் பொருட்டு, அவர்கட்கு இயற்கை அன்னை பகுத்தறிவை விளங்கச் செய்கிறாள். 13. தெய்வ இயல்புகள் முற்றும் விளங்கப் பெறுவதே அறிவு மயம் என்னும் முழுநிலை எய்துவதாகும். 14. முழுநிலை எப்படிக் கூடும்? மக்கள், தாங்கள் பகுத்தறிவு பெறுதற்குத் துணை நின்ற இயற்கை வழியே வாழ்வு நடத்தி னால் முழுநிலை தானே கூடும். 15. மக்கள், பொதுவாகத் தங்கள் பகுத்தறிவை இயற்கை வழியிற் செலுத்துகிறார்களா? தங்கள் பகுத்தறிவு விளங்கப் பெறுதற்குத் துணை நின்றும், மேலும் முழுநிலை பெறுதற்குத் துணைசெய்ய முனைந்தும் நிற்கும் இயற்கைத் தாயைப் பாவிகள் மறக்கிறார்கள். இது மக்கள்பாலுள்ள குறைபாடு. 16. மக்கள் தாயை மறந்தாலும், தாய் மக்களை மறப்ப தில்லை. மக்கள் தங்கள் பகுத்தறிவை இயற்கைவழிச் செலுத் தாமையால், அவர்கள் வாழ்விடை மாசுகள் படிகின்றன. அம் மாசுகளைப் போக்கி மக்கள் வாழ்வைச் சீர்செய்ய இயற்கைத் தாய் அருள் சுரக்கிறாள். அவ்வருட்சுரப்பின் ஆக்கமே சீர்திருத்தம் என்பது. 17. சீர்திருத்தம் இயற்கைவழி எழுந்து அமைவதா யிருத்தல்வேண்டும். வேறு வழியில் எழுந்து அமைவது சீர்திருத்த மாகாது. அதனைச் சொன்முறையில் செயற்கைச் சீர்திருத்த மென்று கூறலாம். ஆகவே, சீர்திருத்தம் என்பது இயற்கைவழிப் பிறப்பதையே குறிப்பதென்க. 18. இயற்கைச் சீர்திருத்தம் தெய்வ இயல்பினின்றும் எழுவது. செயற்கைச் சீர்திருத்தம் விலங்கியல்பினின்றும் எழுவது 19.தெய்வ இயில்பினின்றும் எழுவது ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும். விலங்கியல்பினின்றும் எழுவது ஜீவபோதத்தை அடிப்படையாகக் கொண்டியங்கும். 20. இயற்கைச் சீர்திருத்தத்தால் சகோதர நேயம் பெருகும். மற்றதால் சகோதர நேயம் அருகும். இவ்விரு நிகழ்ச்சி கொண்டு, இயற்கைச் சீர்திருத்தம் எது என்பதை அளந்து அறிதல் கூடும். 21. சீர்திருத்தங்களிற் சில மக்களிடைத் தாமே படியும்; சில அறிஞரால் அறிவுறுத்தப்பெற்ற பின்னை மன்பதையில் நிலவும்; சில குருமார் வாயிலாக வெளிவந்து உலகுக்கு நலம் புரியும். இவை யாவும் இயற்கையின்பாற்பட்டனவே. 22. எச்சீர்திருத்தத்திற்கும் இடந்தாராத சமூகம், நாடு முதலியன இயற்கை அன்னையின் மறக்கருணைக்கு ஆளாகி அழிந்துபடும். 23. இயற்கை அன்னையின் இயல்பு கருணை. அக்கருணை பெரிதும் அறவழியில் இயங்குவது. சிவ சமயங்களில் அது மறவழியில் இயங்குவதும் உண்டு. 24. இயற்கை அன்னையின் அறக் கருணையினின்றும் பிறப்பன: ஒளி, நறுங்காற்று, நீர், நேயம், ஒப்புரவு முதலியன. அவள் மறக் கருணையினின்றும் பிறப்பன: பூகம்பம், புயல், கொள்ளைநோய், சீற்றம், போர் முதலியன. முன்னையது நிலை பேறாக நின்று நலஞ்செய்வது; பின்னையது அவ்வப் போது தோன்றி அறிவு கொளுத்துவது. இரண்டுங் கருணை யின் பாற் பட்டனவே. 25. நியதிவழி உயிர்கள் இயங்குங்கால், இயற்கை அன்னையின் அறக்கருணை அவ்வுயிர்களை ஓம்பி அவைகள் மேல்நிலை எய்துதற்குத் துணை செய்யும். உயிர்கள் நியதிவழி நில்லாது வழுக்கி விழுங்கால், இயற்கை அன்னையின் மறக் கருணை அவ்வுயிர்களை மீண்டும் நியதியில் நிறுத்த எழும் 26. மக்கள் பொதுவாக இயற்கைவழி நின்று மேல் நிலை எய்தல் வேண்டும் என்னும் நல்லியல்பு உடையவர்கள். அந் நல்லியல்புகளுக்குச் சிற்சில சமயங்களில் கேடு நேர்கிறது. 27. மக்களிடம் தெய்வ உணர்வும். விலங்கு உணர்வுமாக இரண்டும் கலந்திருத்தலான், அவ்வவ்வுணர்வினின்றும் கலைகள் பிறக்கின்றன. 28. தெய்வக் கலைகளால் உண்மைக் கல்வி பெருகும். மற்றக் கலைகளால் போலிக்கல்வி பெருகும். 29. உண்மைக் கல்வி வளர வளரத் தன்னலம் அருகும்; சகோதர நேயம் பெருகும். போலிக் கல்வி வளர வளரத் தன்னலம் தடிக்கும்; சகோதர நேயம் கெடும். 30. தன்னலம் அற அற இயற்கைச் சீர்திருத்தம் இடம் பெறும்; தன்னலம் மிகமிக அச்சீர்திருத்தம் இடம்பெறாது. 31. இயற்கைச் சீர்திருத்தம் இடம் பெறாத வாழ்வு சிறைநீர் போன்றதாகும். 32. உண்மைக் கல்விக்கு அழகு மற்றவர்களுக்கு ஊழியஞ் செய்வது. இக்கல்வியாளர் தம்மை மற்றவர்க்கு ஊழியரென்றே கருதித் தொண்டு செய்வர். போலிக் கல்வி. பேர் புகழ் தலைமை சூழ்ச்சி கரவு முதலிய தீமைகளை நாடத்தூண்டும். இக் கல்வியாளர் மற்றவர்க்குத் தம்மை ஊழியரென்று கருதாது, தங்கருத்து முற்றுற, நடிப்புத் தொண்டாற்றுவர். இவர்க்கு உலகம் எச்சரிக்கையா யிருத்தல் வேண்டும். 33. போலிக் கல்வியாளர் தந்நல மேலீட்டான் சமூகத்திலும், சமயத்திலும், அரசியலிலும் பிற துறைகளிலும் தாம் விரும்பு மாறு பலப்பல கட்டுப்பாடுகளைக் கிளத்துகிறார். அக்கட்டுப் பாடுகளால் மக்களின் நல்லியல்பு கெடுகிறது. 34. உலகில் எழும் வறுமை, போர், கொலைப் புரட்சி முதலிய கொடுமைகட்குக் காரணமாக நிற்பது போலிக் கல்வியாளரின் புன்மைச் செயலேயாகும். 35. உண்மைக் கல்வியாளர், வறுமை, போர், கொலைப் புரட்சி முதலியவற்றைப் பெரிதும், உண்டுபண்ணாமலே உலகுக்கு நலஞ் செய்வர். 36. கொலை கொலையைப் பெருக்குமென்பதும், அன்பு அன்பைப் பெருக்குமென்பதும் உண்மைக் கல்வியாளர்க்குத் தெரியும். அதனால் அவர் கொலைப்புரட்சி முதலிய துறைகளில் தலைப்படாது, இயற்கைவழி நின்று அன்புத் தொண்டாற்றுவர். 37. இவ்விருபதாம் நூற்றாண்டில் கல்வி பெருகுகிற தென்றும், புதுமை (invention) பெருகுகிறதென்றும் சொல்லப் படுகின்றன. இப்பெருக்கைக் கண்டு மகிழ்வுறுவது அறி வுடைமையாகாது. உலகில் மக்கள் அச்சமின்றி, குறையின்றி, வறுமையின்றி, உரிமையுடனும், அமைதியுடனும், சகோதர நேய உணர்வுடனும் வாழ்கிறார்களா என்பது கவனிக்கப்படல் வேண்டும். 38. கல்வியும் புதுமையும் நேரிய முறையில் பெறுகின், மன்பதை, அச்சம் குறை வறுமை முதலிய சிறுமைகளின்றி, உரிமையுடனும், அமைதியுடனும், சகோதர நேய உணர்வுடனும் நல்வாழ்வு பெற்று , இயற்கை இன்பம் நுகரும். 39. இக்கால உலகம் எக்காட்சி வழங்குகிறது? இக்கால உலகில் அச்சமும் குறைபாடும் வறுமையும் இன்ன பிறவும் தாண்டவமிடுவதும், உரிமையும் அமைதியும் சகோதர நேயமும் இன்ன பிறவும் ஒடுக்கமுறுவதுங் கண்கூடு, இந்நிலையைக் கூட்டியுள்ள கல்விப் பெருக்கும், புதுமைப் பெருக்கும் எங்ஙனம் நல்லனவாகும்? 40. இலட்சத்தொருவர் வயிறார உண்டு, கள்ளாட்டயர் வதைக் கண்டு, உலகம் நன்னிலையிலிருக்கிறது என்று கருதுவது மடமை. உலகம் என்பது சிலரன்று. 41. வாழ்விற்குக் கல்விச் செல்வம் பொருட் செல்வமுந் தேவை. 42. பொருட் செல்வம் ஒருபால் திரண்டும், மற்றொரு பால் வறண்டும் பயன்படுமாயின், உலகில் இடர் விளைந்த வண்ண மிருக்கும். பொருட் செல்வ இன்பம் எல்லாரும் நுகர்வதா யிருத்தல் வேண்டும். 43. ஏழைக் கூட்டம் பெருகுதலாகாது. அக்கூட்டம் பெருகாமைக்கு ஏழ்மை ஒழிதல் வேண்டும். ஏழ்மையைப் போக்க வல்லது பொருட் பொதுமையே யாகும். 44. இயற்கை, ஒளி காற்று நீர் முதலியவற்றை எல்லார்க்கும் பயன்படு முறையில் வழங்குகிறது. அவ்வியற்கையின் அருளால் விளையும் பொருளும் எல்லார்க்கும் பயன்படுதல் வேண்டும். இஃதே அறம். இவ்வற வாழ்வு சன்மார்க்கத்துக்கு வேண்டற் பாலது. 45. செல்வத்தில் கள்ளாட்டயர்தலும், வறுமையில் சிறுமை யுறுதலும் சத்திய வாழ்வுக்கு இடந்தருதல் அரிது. சத்தியம் இல்லாத இடத்தில் சன்மார்க்கம் ஆக்கமுறாது. சத்தியம் சன்மார்க்கத்தின் அடிப்படை. 46. சன்மார்க்க ஆக்கத்துக்குச் செல்வம் ஒருபால் திரண்டும், மற்றொருபால் வறண்டும் பயன்படும் முறை ஒழிதல் நல்லது. 47. உலகில் இன்பதுன்பம் பெருகுதற்குப் பலதிறக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவைகளுள் தலையாயது ஆட்சிமுறை என்று கூறலாம். 48. அரசு எவ்வழி அவ்வழி குடிகள். அரசு சன்மார்க்கத்தில் இயங்கின, குடிகளும் சன்மார்க்கர்களாக வாழ்ந்து இன்பம் நுகர்வார்கள். அரசு மற்ற மார்க்கத்தில் இயங்கின் குடிகள் நிலை என்னாகும்? 49. மக்கள் அனைவரும் சன்மார்க்கராக வாழும் ஒரு நிலை நேருமாயின், அப்பொழுது அரசும் வேண்டுவதில்லை. அந்நிலை என்றாதல் ஒருபோது கூடாமற் போகாது. அந்நிலை கூட்ட இயற்கை அன்னை முயன்ற வண்ணமிருக்கிறாள். இயற்கை அன்னையின்வழி மன்பதையை நிறுத்துதற்கும் ஒருவித நல்லரசு தேவை. 50. மக்களை இயற்கை வழியில் நிறுத்திச் சன்மார்க்கர் களாக்கத் துணை செய்வதற்கென்று அரசியல் அமைப்பு ஏற்பட்டது. அவ்வமைப்பு, இப்போது சன்மார்க்கத்தினின்றும் பிறழ்ந்து உழன்று வருகின்றது. அதனைச் சீர்செய்தல் வேண்டும். 51. அரசியல் சீர்திருத்தம் என்னும் பெயரால் ஆங்காங் குள்ள அரசியல் வாதிகளால் ஆட்சி முறைகள் கோலப்படு கின்றன. குடியாட்சி, கோனாட்சி, குடிக்கோனாட்சி முதலிய பெயர்கள் முறைகட்குச் சூட்டப்படுகின்றன. பெயர்கள் மாறு கின்றனவே யன்றி, மனோநிலை மாறுவதில்லை. பெயர்கள் மாற்றத்தால் மன்பதையின் துயரம் நீங்குமா? பெயர்கள் மாற்றத்தால் சில அரசியல்வாதிகள் நலமுறுகிறார்கள். 52. ஆட்சி எம்முறையில் இயங்கினும் இயங்க. முறையைப் பற்றியோ பெயரைப் பற்றியோ கவலையுற வேண்டுவதில்லை. மக்கள் அனைவரும் இன்ப வாழ்வு பெறுதற்குரிய நல்லாட்சியே போற்றற்குரியது. 53. பொருளாதாரப் புலவர்களும், அரசியல் ஞானிகளும் கூட்டம் கூட்டமாகப் பெருகாத காலத்தில் மக்கள் நுகர்ந்த இன்பங்கூட இந்நாளில் இல்லை என்று கூறல் மிகையாகாது. 54. இக்காலப் பொருளாதாரப் புலமைக்கும், அரசியல் ஞானத்துக்கும் பிறப்பிடம் மேல்நாடு என்று எவருங் கூறவர். 55. எல்லாவற்றிற்கும் உலகம் மேல் நாட்டைப் பார்த்து நடித்துவருங் காலம் இக்காலம். 56. மேல்நாட்டார் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடையவர். அவர்தஞ் சுறுசுறுப்பும் ஊக்கமும் அரசியல் துறையில் அளவுமீறிச் சென்றமையான், சாம்ராஜ்யப் பித்து அவர்தந் தலைக்கேறி விட்டது. 57. சாம்ராஜ்யத்தில் பொதுமை அறம் வளர்வதில்லை. இதனால் வாழ்க்கையில் போராட்டமும், கூடா ஒழுக்கமும், இன்னபிறவும் புகலாயின. இத் தீமைகளைப் பெருக்கும் சாம்ராஜ்யத்தால் மன்பதையில் அமைதி நிலவுமா? 58. சாம்ராஜ்யப் பித்தால் விளைந்ததென்னை? அடிக்கடி போர் எழுவது என்று சுருங்கச் சொல்லலாம். 59. மேல் நாடு முழுவதும் இப்போது முதலாளி தொழிலாளி போராட்டத்துக்கு இரையாகிவருதல் கண்கூடு. 60. கீழ்நாட்டின் நிலை எப்படி இருக்கிறது? கீழ்நாட்டின் நிலை இரங்கத்தக்கதாயிருக்கிறது. கீழ்நாடு இப்போது தனக்கென ஒரு கொள்கையுமின்றிக் கிடக்கிறது. மேல்நாடு ஆட்டும்வழி, கீழ்நாடு ஆடி வருகிறது. 61. குருமார் போதனைகள் பெரிதும் பிறந்த இடம் கீழ்நாடே யாகும். அப்போதனைகள் மதவெறியால் பாழ் பட்டன. 62. மேல்நாடு அரசியல் வெறியால் கெடுகிறது. கீழ்நாடு மதவெறியால் கெட்டது. அங்கே அவ்வெறியும், இங்கே இவ்வெறியும் தணிதல் வேண்டும். 63. வெறியைத் தணிக்கவல்ல மருந்து சன்மார்க்கமேயாகும். 64. மேல்நாடு தற்போதைய உலகக்குத் திறவாயிருத்தலான், அதன்கண் சன்மார்க்கம் ஆக்கம் பெறின், உலகம் நலமுறும். 65. மேல்நாட்டின் சுறுசுறுப்பும் ஊக்கமும் சன்மார்க்கத் தில் நுழைந்தால், உலகம் விரைவில் சன்மார்க்க மயமாதல் திண்ணம். 66. கீழ்நாடு ஒருபோது சன்மார்க்கத்தில் மூழ்கிப் பண் பட்டதாதலின், அது சன்மார்க்கத்தை மிக எளிதில் கடைப் பிடிப்பதாகும். 67. சன்மார்க்கத்தை நிலைபெறுத்துதற்கென்று முதல் தொழில் போராட்டம் உலக முழுவதும் பரவி வருகிறது. 68. முதலாளி, தொழிலாளியை அடக்கியாள முயல் கிறான். தொழிலாளி, வன்மங்கொண்டு, உறுத்தெழுந்து, முதலாளியை அறவே சாய்த்து, முதல் தொழில் வேற்றுமை இல்லாமற் செய்ய உறுமுகிறான். 69. தொழிலாளர் இயக்கம் நல்லதே. ஆனால் அது சன்மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடப்பதா யிருத்தல் வேண்டும். 70. தொழிலியக்கத்தார் சன்மார்க்கத் தத்துவங்களைத் தம்முடையனவாகக் கொண்டொழுகுதல் நல்லது. 71. சில இடங்களில் தொழிலியக்கத்தார் சன்மார்க்கத்தை வெறுத்து வருகிறார். அது தவறு. 72. சன்மார்க்கம் இயற்கை நெறியாதலான், அஃதற்ற எவ்வியக்கமும் மன்பதையைத் தூய்மை செய்யாது. 73. சன்மார்க்கம், எல்லாரும் இன்புற்று வாழ்தல் வேண்டும் என்னும் தத்துவத்தைத் தன்னகத்தே கொண்டது. அதன் தத்துவத்தை உணராது அதை வெறுப்பது பெருந்தவறு. 74. சன்மார்க்கம் சில இடங்களில் தொழில் இயக்கத் தாரால் வெறுக்கப்படுதற்குக் காரணம், அது புரோகித மதமெனத் திரிபாகக் கருதப்படுவதே யாகும். புரோகிதம், சன்மார்க்கம் அன்று என்பது மேலே பல இடங்களில் விளக்கப்பட்டது. 75. சில இடங்களில் பொதுமை வெறுக்கப்படுகிறது. காரணம் அது சத்தெனுஞ் செம்பொருளை ஏலாமை என்று கருதப்படுகிறது. இவ்வாறு சில பொதுவர் சொல்வதுண்டு இது தவறு. 76. வாழ்க்கைக்குச் சத்துந் தேவை; அதற்குரிய மார்க்கமுந் தேவை. சத்தென்றும் மார்க்கமென்றும் ஏன் பிரித்தல் வேண்டும்? 77. சத்தை விடுத்து மார்க்கம் இயங்குவதில்லை. 78. மார்க்கத்தில் நேரிய முறையில் நின்று ஒழுக ஒழுகச் சத்தின் உண்மை விளங்கியே தீரும். மார்க்கத்தில் பொதுமை நிலவாதொழியின் உலகில் போராட்டம் கூடாஒழுக்கம் முதலிய தீமைகள் எழும். இவைகள் சத்தின் இருப்பை விளங்கிக்கொள்ள மக்களை விடுவதில்லை. 79. சத்தின் விளக்கத்துக்கு மார்க்கம் வேண்டும். மார்க்கத்தில் பொதுமை நிலவல் வேண்டும். 80. சத்தின் உண்மையை மார்க்க வாயிலாக விளக்க வல்லது பொதுமை - பொதுமையே. 81. சத்தின் இருப்பை மறுக்கும் பொதுமை வேரற்ற மரம்போன்றதாகும். 82. பொதுமை போராட்டத்தை ஒழித்து, ஒழுக்கம் அமைதி முதலிய சத்துக்குரிய துறைகளை மார்க்கத்தில் நிலை பெறுத்தலால், அது மார்க்கத்துக்கு வேண்டப்படுகிறது. 83. ஒழுக்கம் அமைதி முதலியன எற்றுக்கு? உயிர்களை மார்க்கத்தளவில் நிறுத்துதற்கா? அன்று. ஒழுக்கம் அமைதி முதலியன, உயிர்களைச் சத்தாகிய பேரறிவின் மயமாக்கத் துணைபுரிவனவாம். 84. தொடக்கத்தில் உலகம் தொழில் வண்ணமாகவே இருந்தது. இடையே அதில் முதல் என்னுங் காளான் பூத்தது. 85. முதல் ஈன்ற கல்வியாளரும் பொருளாளரும் தமது நலங்கருதிப் போரை எழுப்பி உலகை பாழ்படுத்துகின்றனர். ஆதலின், பழையபடி உலகம் தொழில் வண்ணமாதல் வேண்டும். 86. உலகம் பழையபடி தொழில் வண்ணமாதற்கு நிலமும் பொருளும் உழைப்பும் பொதுமைப்படல் வேண்டும். 87. முதல் தொழில் வேற்றுமையைப் போக்கக் கொலைப் புரட்சி வேண்டுமென்பது சிலரது கருத்து. அக்கருத்துப் பரவுதலாகாது. அது பரவப் பரவத் தீமையே பெருகும். 88. புரட்சி இருவிதம். ஒன்று தன்னலத்தை அடிப்படை யாகக் கொண்டது. மற்றொன்று அந்நலத்தை அடிப்படையாகக் கொள்ளாதது. 89. (தன்னலக்)கொலையை அடிப்படையாகக் கொண்ட எவ்வியக்கமும் ஆக்கம் பெறாது. அஃது இயற்கைக்கு மாறுபட்டது. 90. போராட்டம் எழுவதன் நோக்கம் என்னை? எல்லாரும் இன்புற்று வாழ்ந்து அமைதி பெறுதல் வேண்டுமென்பது. அவ்வமைதியைத் தன்னலக் கொலைப்புரட்சி ஒரு போதும் உண்டுபண்ணாது. 91. கொலைப்புரட்சி, கொலைப்புரட்சிகளை அடிக்கடி உயிர்ப்பித்துக் கொண்டே யிருக்கும். அப்புரட்சி பெருகப் பெருக அமைதி ஏது? மக்களை மக்கள் பிடுங்கித் தின்னும் ஒரு நிலையே உலகில் ஓங்கும். 92. இயற்கையின் உட்கிடக்கை, மன்பதையை ஒருமை அன்பில் வளர்த்தல் வேண்டுமென்பதே யன்றி, அதனைப் பகைமையால் பிரித்தல் வேண்டுமென்பதன்று. 93. இயற்கையின் குறிப்புணர்வோர் கொலைப்புரட்சியில் தலைப்படமாட்டார். 94. இயற்கைக் குறிப்பை உணர்ந்து நடக்கும் ஆற்றல் வாய்ந்தவர் இயக்கங்களை நடாத்த முன்வருதல் நல்லது. 95. கொலைப்புரட்சியால் ஒன்றை மாய்த்து, ஒன்றை ஆக்குதல் இயலாது. கொலைப்புரட்சி, கொலைப்புரட்சிகளை ஈன்றுகொண்டு போகும் தன்மையதாதலின், அதனால் அமைதி நிலைபெறாது. அமைதி நிலைபெறாத இடத்தில் எதைச் சாதித்தல் முடியும்? 96. (தன்னலக்) கொலைப்புரட்சி எண்ணமே தீயது. 97. முதலாளி தொழிலாளியை அடக்கி ஆளுதற்குக் காரணம், அவன் இவனைச் சகோதரன் என்று கருதாமையே யாகும். வன்மத்தை வளர்க்கும். கொலைப்புரட்சி சகோதரநேயத்தை எங்ஙனம் உண்டு பண்ணும்? 98. முதலாளி, தொழிலாளியைச் சகோதரன் என்று உணர்வானாயின், அவன் இவனைத் தன்னைப்போல் நேசிக்கப் புகுவன். நேசப் பெருக்கத்தால் வேற்றுமைகள் தொலையும். 99. முதல் தொழில் வேற்றுமையைப் போக்கிச் சகோதர நேயத்தை வளர்த்துச் சமத்துவத்தை விளைக்க வல்லது சன்மார்க்கம் ஒன்றே. 100. மேல்நாட்டில் இப்பொழுது வீறுகொண்டு எழுந்துள்ள முதல் தொழில் போராட்டத்தின் முடிவு அரசியல் வெறியைத் தணிப்பதாகும். 101. அரசியல் வெறி தணியத் தணியச் சன்மார்க்க நாட்டம் மிகும். 102. (தன்னலக்) கொலைப்புரட்சிகள் மட்டும் இடை இடை நடமாடாதவாறு ஆங்காங்குள்ள அறிஞர் பாதுகாத்து வருதல் வேண்டும். 103. (தன்னலக்) கொலைப்புரட்சி நடமாட்டம் சன்மார்க்க உணர்வை விரைவில் நிலைபெறுத்தாது. 104. தொழிலாளர் இயக்கத்தை நடாத்துவோர், இயற்கைத் தத்துவத்தை உணர்ந்து நடப்பவரா யிருத்தல் நலம். அந்நடை (தன்னலப்) புரட்சியை நாடத் தூண்டாது. 105. (தன்னலப்) புரட்சி தற்போது நலஞ்செய்வது போலச் சிலர்க்குத் தோன்றலாம். பின்னே அது பேரிடர் செய்வதாகும். 106. (தன்னலப்) புரட்சியை நாடுவோரும் நாளடைவில் அதன் கொடுமை கண்டு அதனை வெறுப்பர். பின்னே அதை வெறுப்பதினும் தொடக்கத்திலேயே அதை நாடாதிருப்பது சிறப்பு. 107. சன்மார்க்கம் உலகில் பரவி, மன்பதையைத் தூய்மை செய்ய நாளாகும் என்றும், வன்மக் கொலைப் புரட்சி விரைவில் ஒன்றை நிகழ்த்தும் என்றும் சிலர் கருதுவதுண்டு. 108. வன்மப் புரட்சியால் விழும் தீமை, மீண்டும் உயிர்பெற்றுப் பன்முகங்கொண்டு எழும். சன்மார்க்கத்தால் விழும் தீமை, மீண்டும் உயிர்பெற்றெழாது. தீமையை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒன்றை ஏன் நாடுதல் வேண்டும்? 109. சன்மார்க்கம் இயற்கை நெறியாதலான், அதனால் கழிவன கழியும்; செழிப்பன செழிக்கும். கழிவும் செழிப்பும் இயற்கை வளர்ச்சிக்குத் துணைபுரிவன. 110. உலகில் தீமை கண்டே, போராட்டத்தை இயற்கை அன்னை அவ்வப்பொழுது எழுப்புகிறாள். போராட்டத்தை எழுப்பும் இயற்கை அன்னை, அதை நல்ல வழியில் நடாத்தி முடிப்பள். அவள்வழி நிற்க உலகங் கடமைப்படுதல் வேண்டும். அவள்வழிநில்லாது? முனைப்பால் கொலைப்புரட்சி முதலிய தீய வழிகளில் நுழைவது, வளர்ச்சிக்குத் தடைபுரிவதாகும். இயற்கைப் போக்கில் உறுதி கொள்ளுதல் அறிவுடைமை. 111. இயற்கை அன்னையின் ஆணையால் சில சமயம் புரட்சி இயக்கம் எழும். அது கலைவாயிலாகவோ பிற வாயிலாகவோ நிகழும். அவ்வியக்கத்துக்குத் துணைபோதல் அறவோர் கடன். என்னை? அதனடியில் தன்னலமோ வன்மமோ இன்மையும், அன்பும் அருளும் உண்மையும் என்க. 112. தன்னலத்தாலோ முனைப்பாலோ மறப்புரட்சி நிகழ்த்தலாகாது. இயற்கை ஆணைவழி நின்று இயக்கத்தின் பெயரால் எவ்வகைப் புரட்சியிலும் ஈடுபடலாம். அவ்வீடுபாடு அறத்தின்பாற்பட்டதே யாகும். அதனால் கர்மத் தாக்குதல் விளையாது. 113. இயற்கைப் போராட்ட எழுச்சி சீர்திருத்தத்துக்கு அறிகுறி. 114. போராட்டத்திடைச் சன்மார்க்க வேட்கையை எழுப்புவது அரிது என்பது சிலருடைய கருத்து. போராட்டத்திடைச் சன்மார்க்கம் எளிதில் புகும். தாகத்தால் வருந்தி வாடிக் களைப்புற்றோருக்கு நீரின் அருமை நன்கு தெரியும். வெயிலில் திரிந்து அலைந்தவர்க்கு நிழலின் அருமை நன்கு விளங்கும். ஆகவே, போராட்டத்தில் ஈடுபட்டுச் சலிப்புறுவோருக்குச் சன்மார்க்கச் சிறப்பு இனிது புலனாகும். 115. மேல்நாட்டு அரசியலுக்கு இப்பொழுது சன்மார்க்கந் தேவை. 116. மேல் நாட்டரசியல் சன்மார்க்கத்தில் இயங்குமாயின், உலக முழுவதும் சன்மார்க்க அரசு அரும்பும். 117. அரசு திருந்தினால் அகிலந் திருந்தும். 118. அரசு வாயிலாகச் சன்மார்க்கம் பரவின், சன்மார்க்கம் விரைவில் உலகைச் சீர்செய்யும் பின்னர் அரசே வேண்டாத நிலை நேரும். 119. பல துறைகளுள்ளும் அரசியற்றுறை சீர்திருத்தம் பெறுதல் அவசியம். அதன் சீர்திருத்தம் பிறவற்றை எளிதில் ஒழுங்கு செய்யும். ஆனாலும் அச் சீர்திருத்தம் எளிதில் கைகூடப் பிற துறைகளுஞ் சீர்திருத்தம் பெறுதல் நல்லது. 120. சாதி மதம் நிறம் மொழி நாடு முதலிய பித்துக்களால் எழும் வெறி, சன்மார்க்க வளர்ச்சிக்கு இழைக்கும் தீங்குகள் மேலே சுருங்கச் சொல்லப்பட்டன. அப்பித்த வெறி வாழ்வி னின்றும் அகலுதல் வேண்டும். 121. சாதி மதம் நிறம் மொழி நாடு முதலிய வேற்றுமை களைக் களைதற்குரிய சீர்திருத்த முறைகளைப் பலபடக் கூறலாம். இங்கே பொருந்திய ஒன்றைக் குறித்தல் சிறப்பு. அது கலப்பு மணம் என்பது. 122. கலப்பு மணம் இயற்கையின் பாற்பட்டது. அது பலதிற வேற்றுமைகளைக் களையவல்லது. 123. மக்கள் அனைவரும் இயற்கையில் சமரச சன்மார்க்கத்தில் ஒருமைப்பட்டவர். அவ்வொருமைப்பாட்டை மக்கள் உணர்ந்து நடக்கின்றார்களில்லை. அவ்வொருமை உணர்வைச் சாதி மதம் நிறம் மொழி நாடு முதலியன மறைக்கின்றன. இந்நாளில் மக்கள் ஒருவரோடொருவர் உறவு கொண்டு வாழ்தற்குரிய சாதனங்கள் பெருகி வருகின்றன. இஃது இயற்கை அன்னையின் கருணையே யாகும். இக்காலத்தில் கலப்பு மணம், சமரச சன்மார்க்க ஒருமை உணர்வை எழுப்புதற்கும் பெருந்துணை செய்வதாகும். 124. சடங்குகளும், சம்பிரதாயங்களும், கண்மூடி வழக்க ஒழுக்கங்களும், இன்ன பிறவும் சன்மார்க்க வளர்ச்சிக்குத் தடைசெய்கின்றன. இத்தடைகளும் நீங்கப் பெறுதல் வேண்டும். 125. சடங்குகளும் சம்பிரதாயங்களும் முற்றும் மன்பதையை விடுத்து எளிதில் திடீரென அகலுதல் அரிது. எவ்வளவு சீர்திருத்தஞ் செய்தாலும் அவைகள் ஒவ்வோரள விலாதல் ஒவ்வொரு விதமாகக் காலமிடங்களுக் கேற்றவாறு தலைகாட்டிக் கொண்டே யிருக்கும். அவைகளை அவ்வப்போது பொருந்திய முறையில், முறை முறையே சீர்திருத்தஞ் செய்தல் அறம். 126. கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் பலதிறத்தன. அவைகள், பலப்பல வடிவில் உலகை மயக்குறச் செய்யும். 127. இது கண்மூடி வழக்க ஒழுக்கம் ; இது கண்மூடி வழக்க ஒழுக்கமன்று என்று அறுதியிட்டு அறிஞராலும் கூற இயலாதபடி அவ்வழக்க ஒழுக்கங்கள் சாலவித்தை புரியும். ஒருவர்க்கு ஒன்று கண்மூடி வழக்க ஒழுக்கமாகத் தோன்றும்; மற்றொருவர்க்கு அஃது அவ்வாறு தோன்றுவதில்லை. இருவரும் அறிஞராயிருப்பர். கண்மூடி வழக்க ஒழுக்கங்களை மறுத்து வருவோரிடத்திலும், அவர் உணராத வகையில், அவைகளில் ஒன்றோ சிலவோ படிந்துகொண்டிருக்கும். கண்மூடி வழக்க ஒழுக்கங்களின் மாயை அளப்பரிது! 128. கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் இன்ன இன்ன என்று எப்படி அறுதியிட்டுச் சீர்திருத்தத்தில் இறங்குவது? இயற்கை நெறிக்கு மாறுபட்டனவெல்லாம் கண்மூடி வழக்க ஒழுக்கங்க ளெனக் கொண்டு சீர்திருத்தத்தி லிறங்குவது அறிவுடைமை. 129. கர்மம் நாள் கோள் ஆகியவைகளைப் பற்றி உலகில் பலதிறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. இவைகளின் ஆதிக்கம் உயிர்கள்மீது தாக்குறுவதில்லை என்று சொல்வதற்கில்லை. இத்தாக்குதலால் நல்லன விளைதலும் உண்டு; தீயன விளை தலும் உண்டு. 130. கர்மம் நாள் கோள் முதலியன இயற்கை - இறைவழி இயங்குவன. இவைகளை இயக்கும் ஒன்றன்வழி நிற்போரை இவைகள் என் செய்யும்? 131. இயற்கை - இறைவழி நிற்குஞ் சன்மார்க்கர், கர்மம், நாள் கோள் முதலியவற்றின் செல்வாக்கால் தாக்குறுவதில்லை. 132. கர்மம் நாள் கோள் முதலியவற்றின்மீது எந்நேரமுங் கருத்தை இருத்தித் துன்புறுவது மடமை. இவைகளை இயக்கும் ஒன்றன்மீது கருத்திருத்துவது அறிவுடைமை. 133. செய்த கர்மத்தை அநுபவித்தே தீர்தல் வேண்டும் என்றொரு நம்பிக்கையும் சில இடங்களில் இருந்து வருகிறது. இதுவும் மூட நம்பிக்கையின் பாற்பட்டதே. அறியாமையால் முன்னே செய்த கர்மங்களை (செய்கைகளை)க் குறித்து உண்மை யாக வருந்தி, மீண்டும் அத்தகைக் கர்மங்களில் மனஞ் செல்லா உறுதியில் நின்று, இயற்கை - இறையினிடம் நெஞ்சைப் பதித்து, தியானஞ் செய்யச் செய்யப் பழைய கர்மங்களின் வேர் அற்றுப் போகும். 134. கர்மம் நாள் கோள் முதலியவற்றைச் சிந்திப்பதற்குப் பதிலாக, இயற்கை - இறையைச் சிந்திப்பது சிறப்பு. 135. மக்கள் தனித்தனியே புறத்திலும் அகத்திலும் சீர்திருத்தம் பெறுதல் விழுப்பம். இதற்கு நல்லியக்கங்கள் தேவை. 136. நன்முயற்சிகளில் மக்கள் தனித் தனியே ஈடுபடுதல் சுருங்கிச் சேர்க்கையாக ஈடுபடுதல் பெருகின் அன்புக்குரிய ஒருமைப்பாடு ஓங்கும். அதனால் தனித்தனித் தூய்மையும் விளையும். 137. தனிமை உணர்வு வளர்ந்து, தனிமைப் பொருள் தனிமை அமைப்பு தனிமை அரசு முதலியவற்றைப் பெருக்கிச், சாம்ராஜ்யத்தை ஓங்கச் செய்து, தூய்மையைக் கெடுத்துப், போராட்டம் கூடா ஒழுக்கம் முதலிய தீமைகளை உலகில் நிலைபெறுத்தியது கருதற்பாலது. ஆதலின், சேர்க்கை ஈடுபாடே வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துவதாகும். 138. மக்களின் தூய்மை, வாழ்வுத் துறைகளை யெல்லாந் தூய்மை செய்யும். 139. புறச்சீர்திருத்தம் இயற்கைவழி உடலோம்பல், கல்வி, பொதுமை அறம் முதலியவற்றால் அமைவது; அகச் சீர்திருத்தம் சத்தியத்தால் அமைவது. 140. அகச் சீர்திருத்தத்துக்குச் சத்தியம் அவசியம். சத்தியம் இயற்கை வளர்ச்சிக்கு உரியது. 141. சத்தியம் ஒன்றுள்ள இடத்தில் எல்லா நல்லியல்பு களும் அமையும். 142. சத்தியத்தை எப்படி நிலைக்கச் செய்வது? நல் லெண்ணங்களால் அதை நிலைபெறுத்தலாம். நல்லெண்ணங் கட்குப் புறச் சீர்திருத்தத்துக்குரிய முறைகளும் துணை புரியும். 143. நல்லெண்ணங்கள் அகத் தூய்மைக்கு இன்றியமை யாதன. 144. அகத்தூய்மை அற்ற புறத்தூய்மையால் பயனில்லை. 145. நல்லெண்ணங்கள், உயிரையும், உயிர்வழி உடலையும் ஓம்பும் அமிழ்தம். 146. தீய எண்ணங்கள், கூரிய அம்புகள். 147. எண்ணமே மனிதன். 148. நல்லெண்ணங்களால் தம்மைப் பண்படுத்திக் கொண்டவரிடம், தீயோரின் எண்ணங்கள் பாயின், அவைகள் கூர்மை மழுங்கி வீழும், மற்றவரை அவைகள் துன்புறுத்தும். 149. நல்லெண்ணங்களால் தம்மைப் பண்படுத்திக் கொண்டவரால் தீயோரைத் திருத்தல் இயலும். 150. பிறரைச் சீர்திருத்தஞ் செய்யப் புகுவோர் முதலாவது தம்மைச் சீர்திருத்தஞ் செய்துகொள்வது முறைமை. 151. கல்வி, அறிவு, அநுபவம், வாய்மை, பொறுமை, இரக்கம், தீங்கு புரிவோர்பால் வன்மங் கொள்ளாமை, மன்னிக்குமியல்பு, பகைவரையும் நேசித்து நலஞ்செய்தல், தற்பெருமைக்கு இறையாகாமை முதலிய நறுங்குணங்கள் சீர்திருத்தத் தொண்டரின் உடைமைகள். 152. சீர்திருத்தரிடம் நிந்தனை தலைகாட்டலாகாது. நிந்தனை சீர்திருத்த இயல்பன்று. 153. மக்கள் மூட வழக்க ஒழுக்கங்கட்கு அடிமையாதற்குக் காரணமாக நிற்பது அவர்கள் மாட்டுள்ள அறியாமையாகும். 154. அறியாமையைப் போக்குதற்குரிய வழி அறியாமையை நிந்திப்பதன்று; அறிவை விளக்குவதாகும். இருளை நிந்திப்பதால் இருள் நீங்காது. ஒளியைக் கொண்டுவரின், இருள் தானே ஓடும். 155. சீர்திருத்தத் தொண்டுக்குரிய முறைகளைப் பலபடக் கூறலாம். அவரவர் தம் தம் அறிவாற்றலுக்குத் தக்கவாறும், காலதேச வர்த்தமானத்துக்கேற்றவாறும் முறைகளைக் கோலிக் கொள்ளலாம். 156. சீர்திருத்தப் பணிகளுக்குரிய வழிகள் பல. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன மூன்று. அவை பிரசாரம் விரதம் தியானம். இம்மூன்று வழியில் சீர்திருத்தப் பணிகளை நிகழ்த்தலாம். 157. இலட்சம் பிரசாரகர்கள் முயற்சியிலும் ஒரு நல்லோன் விரதமும் தியானமும் பெருநலஞ் செய்யும். 158. பொருளாதாரம், ஒழுக்கம் முதலியன குறைவின்றி நிறைவுபெற்று, அவைகளால் எல்லாரும் இன்புற்று வாழும் ஒரு நிலை, உலக முழுவதும் பரவின், அப்பொழுது சன்மார்க்கம் எற்றுக்கு என்று சிலர் கருதுவதுண்டு. இக்கருத்துத் தவறுத லுடையது. 159. சன்மார்க்கமென்பது உலக வாழ்வளவில் நின்று விடுவ தன்று. அது மேலுங் கடந்து நிற்பது, தியானம் முதலிய வற்றிற்குச் சன்மார்க்கம் வேண்டற்பாலது. 160. பொருள், ஒழுக்கம் முதலியவாற்றான் எல்லாரும் இன்புறும் நிலை, தியானம் முதலிய சன்மார்க்கத் துறைகட்குச் சாரம் போன்றது. 161. பொருள் முடையும், தீயொழுக்கமும், இன்ன பிறவும் மக்களிடை அமைதி நிலைபெறுத்தாமையான், மக்கள் சன்மார்க்கர்களாக வாழ்தற்கு இடம் நேராமற் போகிறது. பொருள் நிலை முதலியன ஒழுங்குபட்டு, எல்லாருங் கவலை யின்றி இன்புறுவாராயின், மக்கள் தியானம் முதலிய சன்மார்க்கத் துறைகளில் எளிதில் ஈடுபடுதற்கு வழி நேரும். 162. பொருளாதாரம் முதலியவற்றைச் சீர்செய்ய உலகம் முனைந்து நிற்பதன் அடிப்படையான நோக்கம் என்ன? வாழ்வில் அமைதி தியானம் முதலியன ஆக்கம் பெறுதல் வேண்டும் என்பதே. 163. உயிர்களின் அறியாமையை நீக்கி, அவைகளின் முழு அறிவை விளக்கஞ் செய்யப் புகுந்த இயற்கை அன்னை, பொருளாதாரம் முதலியன செம்மை பெறும் அளவில் தன் முயற்சியை நிறுத்திக் கொள்ளாள். அங்ஙனம் நிறுத்திக் கொள்வது இயற்கையின் அறமன்று; மேலும் உயிர்களின் நலத்துக்குத் துணைபுரிவது இயற்கை அறத்தின் இயல்பு. 164. உயிர் முழு விடுதலை அடையும் வரை, இடையிடை ஏற்படும் தடைகளை நீக்கிச் சீர்செய்வது இயற்கை அன்னையின் நியதி. 6. சங்கம் 1. சன்மார்க்க சங்கம், சமரச சங்கம் என்றும், சமரச சன்மார்க்க சங்கம் என்றும், மார்க்க சங்கம் என்றும் அழைக்கப் பெறலாம். 2. சன்மார்க்க சங்கம், கால தேச வர்த்தமானத்துக்கேற்ற முறையில் அவ்வப்போது ஒவ்வொருவிதப் பெயர் பெற்று வருகிறது. 3. சன்மார்க்க சங்கம் ஒருபோது ஒருவரால் காணப்பட்ட தன்று; அஃது என்றும் இருப்பது. 4. சன்மார்க்க சங்கத்தின் நுட்பம் ஒவ்வொருபோது ஒவ்வொருவரால் விளக்கஞ் செய்யப்படும். 5. சன்மார்க்க சங்கம் இறை முதல் எல்லா உயிர்களையும் அங்கமாகக் கொண்டது. 6. சங்கத்தின் தலைமை - இறை; அமைச்சு - இயற்கை; நிர்வாகக் கூட்டம் - குருமார் திருக்கூட்டம்; உறுப்புக்கள் - எல்லா உயிர்களும்; சந்தா - இரக்கம். 7. உறுப்புக்களாகிய உயிர்களிற் சிறந்தவர்கள் மக்கள். 8. அம்மக்கள் நான்கு வகைப்படுவார்கள். 9. முதல் இனத்தவர், இயற்கை வாழ்வு நடாத்தி, இயற்கைத் தியானத்தில் முதிர்ந்து, குருதரிசனம் பெற்று இறையொளி கண்டு, தங்களுக்கென ஒன்றுமின்றி, மற்றவர் பொருட்டு உடல் தாங்கிக் குருமாருடன் உறவுகொண்டு வாழ்வோர்; இரண்டாம் இனத்தவர், இயற்கை வாழ்வில் நின்று, இயற்கைத் தியானத்தில் அமர்ந்து, உயிர்கட்குச் சேவை செய்வோர்; மூன்றாம் இனத்தவர், சன்மார்க்கத்தை அறிவால் உணர்ந்து, உணர்ந்த வாறு நடக்க முயல்வோர்; நான்காம் இனத்தவர், சன்மார்க்க ஒருமை உணர்வின்றிப் பன்மை உணர்வுடன் வாழும் மற்றவர். 10. இவ்வினத்தவரைப் படிப்படியாக உயர்த்தி மேம்படுத்த வல்லது தொண்டு. 11. தொண்டு என்பது முனைப்பில்லாத இடத்தில் நிகழ்வது. முனைப்புள்ள இடத்தில் நிகழ்வது போலித்தொண்டே யாகும். தன்னலச் செயல் தொண்டாகாது. அதுவும் போலியின்பாற் பட்டதே. பயன்கருதாப் பணியே சிறந்த தொண்டாகும். 12. தொண்டு, உயிர்களின் அறியாமைக் கட்டை அவிழ்த்து அவிழ்த்து, அறிவை விளக்கஞ் செய்து செய்து, இயற்கை அன்னை உயிர் வளர்ச்சி நாடிப் பொழியுங் கருணையை, உயிர்கள் பெறத் துணைசெய்வது. 13. உயிர் நலனுக்கும் வளர்ச்சிக்கும் தொண்டு இன்றியமை யாதது. 14. தொண்டில்லா இடத்தில் இயற்கை அன்னையின் கருணை பாய்வதில்லை. 15. முதல் இனத்தவர் குருமாருடன் உறவு கொண்டவ ராதலின், அவரைப்பற்றி இங்கு ஒன்றும் விரித்துக்கூற வேண்டுவ தில்லை. 16. இரண்டாம் இனத்தவர், முதல் இனத்தவராதற்கு முயல்வது இயல்பு. அம்முயற்சி ஆக்கம் பெறுதற்குத் தமக்குரிய தியானம் முதலியவற்றுடன் தமக்குக் கீழுள்ளவரைத் தமது நிலைக்குக் கொணரத் தொண்டு செய்தல் வேண்டும். அத் தொண்டு அவரை மேன்மைப் படுத்தும். 17. மூன்றாம் இனத்தவரும் தாம் மேல் நிலை எய்துதற்குத் தமக்குக் கீழுள்ள மக்களைத் தமது நிலைக்குக் கொண்டுவர, அம்மக்கள் நலங் கருதி உழைத்தல் வேண்டும். அவ்வுழைப்பு அவரைத் தானே உயர்த்தும். 18. நான்காம் இனத்தவர் ஒருமைச் சன்மார்க்க உணர்வு பெறாதவராதலானும், தொண்டின் திறத்தை அறியாதவ ராதலானும், அவர் சிறக்கச் சன்மார்க்க வாயிலாகத் தொண்டு செய்து, தொண்டின் இயலை அவர்க்கு அறிவுறுத்த வேண்டுவது மற்றவர்கடமை. அவர் நலங்கருதித் தொண்டு செய்யாதவர் சன்மார்க்கராகார். 19. மக்கள், தங்களுக்குக் கீழ்ப்பட்டுள்ள அஃறிணை உயிர்களின் வளர்ச்சிக்குந் துணை நிற்றல் வேண்டும். இஃது இயற்கை அறம். 20. அஃறிணை உயிர்களும் படிப்படியாக வளர்ந்து பகுத்தறிவுடைய மக்களாதல் வேண்டும். அவைகளை வளர ஒண்ணாதவாறு அவைகட்கு இடையூறு செய்தல் பெரும் பாவம். 21. அஃறிணை உயிர்களின் வளர்ச்சிக்குக் கேடு சூழ் வோரின் வளர்ச்சியும் தடைபடுதல் இயல்பு. 22. ஓருயிர்க்குத் தீங்கு செய்வது, தன்னுயிர்க்குத் தானே தீங்கு செய்வதாகும். 23. எல்லா உயிர்களையும் தன்னைப்போல் கருதி வாழ்வது சிறந்த இயற்கை வாழ்வாகும். 24. மேலே கூறப்பெற்ற நான்கு இனத்தவர்கட்கும் அமைப்பு வேண்டுமா வேண்டாமா என்பது ஒரு கேள்வி. 25. முதல் இனத்தவர் குருமாருடன் தொடர்பு கொண்டு வாழ்தலின், அவரைப்பற்றி ஒன்றுங் கூற வேண்டுவதில்லை. 26. குருமாருடன் தொடர்பு கொண்டவர் இன்னார் என்று எப்படி உணர்வது? குருமாருடன் தொடர்பு கொண்டவரிடம் சிற்சில சிறப்பியல்புகள் அமைந்திருக்கும். அவைகளை முற்றும் விரித்தல் இயலாது. சிலவற்றை மட்டும் சொல்லுதல் கூடும். அவை, தமக்கென ஒன்றின்மை, பிறர்க்கென வாழ்தல், பெரிதும் மலையில் வதிதல், சூரிய ஒளியிலுள்ள பிராண சக்தியைக் காற்று வாயிலாக எளிதில் பருகி நாடி நரம்புக் கேற்றல், நரை திரை மூப்பு அணுகாமை, பிறர் நோய்களைத் தியானத்தாலோ, நோக்காலோ, பரிசத்தாலோ போக்கல், இன்ன பிற. இவ்வியல் புடையவர் குருமாருடன் தொடர்பு கொண்டவர் என்று உணர்தல் வேண்டும். 27. அமைப்புகள் பலவிதம். அவைகளைப் பணிக்குரிய அமைப்புகளென்றும், தியானத்துக்குரிய அமைப்புகளென்றும் இருகூறுபடுத்திக் கொள்ளலாம். 28. பணி அமைப்புகள் பின் மூன்றினத்தார்க்கும் பொது. அவைகள் வாயிலாக உயிர்த் தொண்டு நிகழ்ந்து வரும். 29. பணி அமைப்புகளாவன : பள்ளிக்கூடம், தொழிற்சாலை, மருத்துவச்சாலை முதலிய அறச்சாலைகள். 30. தியான அமைப்பு முறையில் மூவருள்ளும் வேற்றுமையுண்டு. 31. இரண்டாம் இனத்தவர்க்குரிய தியான அமைப்புகள் இயற்கையின் கோலங்கள். 32. மூன்றாம் இனத்தவர்க்குத் தியான அமைப்புகள் கலைகள். 33. நான்காம் இனத்தவர்க்கு வேறுவித அமைப்புகள் தேவை. அவை கோயில், மடம், சபை போன்றன. 34. இந்நான்காம் இனத்தவர் சமரச சன்மார்க்க உணர்வு அரும்பப் பெறாதவராதலின், இவர் நெஞ்சில் பன்மை உணர்வு மிகுந்து விளங்குதல் இயல்பு. இவரது பன்மை உணர்வைப் படிப்படியாக ஒருமைப்படுத்த மற்றவர் முயலுதல் வேண்டும். 35. இவ்வினத்தவர், தம் பன்மை உணர்வுக் கேற்றவாறு பலதிறக் கொள்கை உடையவராயிருப்பர். இவர் வழியே சென்று இவரைத் திருத்துவது மற்றவர் கடமை. 36. இவர், தம் கொள்கைக்கு (மதத்துக்கு) ஏற்றவாறு அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வர். தொடக்கத்தில் எவர் எவர் எந்த எந்தக் கொள்கையில் பற்றுள்ளங் கொள்கிறாரோ அவர் அவர் அந்த அந்தக் கொள்கைக்குரிய அமைப்பில் சேர்ந்து ஒழுகலாம. 37. ஒருவர் அமைப்புமீது மற்றொருவர் பகைமை கொள்ளா திருக்குமாறு அவர்க்குப் படிப்படியே அறிவு கொளுத்த வேண்டுவது சன்மார்க்கத் தெளிவுடையார் கடன். 38. பின்னே ஒருவர் கொள்கையை மற்றொருவர் கொள்கை யுடன் நடுநிலையில் நின்று சீர்தூக்கிப் பார்க்குமாறு அவர்க்குப் போதித்தல் வேண்டும். 39. நாளடைவில் தங் கொள்கையே மற்றவர் கொள்கை யாய்ப் பரிணமித்திருப்பதுபோல அவர்க்குத் தோன்றும். அவ்வேளையில் அவரிடம் பன்மை உணர்வு மாய்தற்கும், ஒருமை உணர்வு அரும்புதற்கும் இயற்கை அன்னை அருள் செய்வாள். 40. சன்மார்க்கத் தெளிவுடையார், நான்காம் இனத்தவரிடம் பலதிறப்பட்ட அமைப்புகளிலும் ஈடுபட்டுக் காட்டுதல் ஜீவ காருண்யமாகும். இவ்வீடுபாடு, எல்லாக் கொள்கைகளும் சன்மார்க்கம் ஒன்றையே குறிக்கொண்டு நிற்பன என்பதை, ஒருமை உணர்வு இல்லாதவர்க்கு அறிவுறுத்தும். 41. நான்காம் இனத்தவர் அமைப்புகளின் பெயர்கள் பலபடத் திகழ்கின்றன. அப்பெயர்களை மாற்றவேண்டுவது அநாவசியம். வெறும் பெயர் மாற்றத்தால் ஒன்றும் விளையாது. உள்ள பெயராலேயே அவ்வவ்வமைப்பு நடைபெற்று வரலாம். ஆனால், அவைகளில் சமரச சன்மார்க்கக் கொள்கை படிப்படியே இடம்பெற அறிஞர் முயலுதல் வேண்டும். உடல் எதுவாயினுமாக. அதனுள் சன்மார்க்க உயிர் நிலவுதல் அவசியம். 42. எவ்வமைப்பும் இல்லாத இடத்தில் புதிதாகச் சன்மார்க்கப் பெயரால் ஓர் அமைப்பு உண்டாக்கலாம். அதற் கென நிதியுஞ் சேர்க்கலாம். செலவு போக மிகுதி யுள்ளதைப் பணி அமைப்புக்கு உதவிவிடுதல் வேண்டும். 43. நான்காம் இனத்தவர்க்கு, ஆடல், பாடல், கூத்து, உலா, விழா முதலியவற்றில் வேட்கை நிகழ்தல் இயல்பு. அவைகளை மறுத்தல் கூடாது. மறுப்பால் நலன் விளையாது. சமரச சன்மார்க்க சங்கத் தத்துவம் அமையும் முறையில் அவைகளை நடாத்திக் காட்டவேண்டுவது அறிஞர் கடமை. 44. நான்காம் இனத்தவர் வழியே சென்று, அவரை நல் வழியில் திருத்தல்வேண்டும்; அவர் எளிதில் எதற்கும் இணங்கி வரும் இயல்புடையவர். 45. நான்காம் இனத்தவரின் தியான அமைப்புகள் மிக எச்சரிக்கையாக நடத்தப்பெறல் வேண்டும். அவைகளில் பிணக்கு பிளவு முதலியன நிகழ்தல் ஆகாது. 46. பிணக்கு பிளவுகளைத் தோற்றுவிக்கும் பேய்கள் பல உண்டு. அவைகளில் சிறப்பாகக் குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று தேர்தல்; மற்றொன்று நிதி. 47. பிளவு பிணக்குகள் நிகழாத முறையில் தேர்தல் நடைபெறின் ஒழுக்கத்துக்கு இழுக்கு நேராது. அவைகள் நிகழ்வதாயின், தேர்தல் முறையை அறவே விட்டுவிடுதல் நல்லது. நம்பிக்கைக்குரிய சிலரால் அமைப்புகள் நடைபெற்று வருதல் சிறப்பு. 48. நிதியுள்ள இடத்தில் பெரிதும் நீதி இருப்பதில்லை. 49. தியான அமைப்புகட்கு நிதி அநாவசியம். அவசியம் நேரின், வேண்டும் அளவில் நிதி திரட்டலாம். குறிப்பிட்ட ஒன்றற்குப் பயன்பட்டதுபோக, மிகுந்து நிற்பதைப் பணி அமைப்புகட்கு உதவுதல் ஒழுங்கு. 50. தியான அமைப்புகள் தூய்மைக்கும் ஒழுக்கத்துக்கும் நிலைக்களனாக இருத்தல் வேண்டும். இவைகட்குக் கேடு நிகழும்போதெல்லாம் அமைப்புகள் சீர்திருத்தஞ் செய்யப் பெறல் வேண்டும். 51. பிளவு பிணக்குகள் நிகழும் வேளைகளில் அவைகளை மேலும் மேலும் வளர்க்க முயல்வது தவறு. தியானத்தில் அமர்ந்தால் எல்லாம் ஒழுங்குபட்டுவிடும். இயற்கை - இறையைத் தியானித்தல் நலனே செய்யுந் தன்மையது. 52. ஒவ்வொருவரும் தம்தம் குறைபாடுகளை உணர்ந்து, இயற்கை - இறையைத் தியானிப்பது முறைமை. 53. குறைபாடுகளை நினைந்து நினைந்து, கசிந்து கசிந்து, உருகி உருகி அழுவது, இயற்கை - இறையின் அருளைப் பெறுதற்கு வழி தேடுவதாகும். 54. குறைகளை உணர்ந்து, அவைகளைப் போக்க முயல்கிறவன், சன்மார்க்கத்தில் நிற்க முயல்பவனாவன். 55. தன் குற்றத்தை உணர்கிறவன், பிறர் குற்றத்தை நாடான். 56. பிறர் தமது குற்றத்தை உணர்ந்து வருந்தும் போது, அக்குற்றத்தை மன்னிக்கும் மனம் பெறுதல் வேண்டும். அம்மனம் சன்மார்க்கத்தில் ஈடுபடுவதாகும். 57. தொகையில் நான்காம் இனத்தவரே பெருகியிருக்கிறார். இவர் தொகை சுருங்கி, மற்றவர் தொகை பெருகின், உலகில் பலதிறத் துன்பங்கள் நீங்கும். இது சன்மார்க்கரின் தொண்டைப் பொறுத்திருக்கிறது. 58. சன்மார்க்கத் தொண்டர், சன்மார்க்க சங்க நோக்கங் களைப் பரப்ப முயன்றவண்ணம் இருப்பாராக. 59. சன்மார்க்கம் அறத்தொண்டை அடிப்படையாகக் கொண்டது. 60. சன்மார்க்க ஊழியர்க்குப் பயன் கருதாத் தொண்டே வீடுபேறாகத் தோன்றும். 61. ஒவ்வொரு குடும்பமும் சன்மார்க்க சங்கமாய்த் திகழ அறிஞர் முயல்வது அழகு. இதற்குச் சன்மார்க்கக் கல்விச்சாலைகள் பெருகுதல் வேண்டும். 62. ஒவ்வொரு குடும்பமும் சன்மார்க்க சங்கமானால், பெரிய குடும்பமாகிய உலகம் சன்மார்க்க சங்கமாகும். அந்நாளே அகங்கார அரசு வீழும் நாள்; உலக விடுதலை நாள்; நன்னாள். 7. இறுவாய் 1. சத்தெனும் இறை ஒன்றே. 2. இறைக்கு உடல் இயற்கை. 3. இறை அப்பன்; இயற்கை அன்னை. 4. இயற்கை கடந்த இறை நிலையை மன உணர்வு உடையோர் ஆரவேண்டுவது அநாவசியம். 5. மன உணர்வு உடையோர், இயற்கை - இறையை வழிபடும் அளவில் நிற்பது ஒழுங்கு. 6. சத்தெனும் இறையை அடைதற்குரிய மார்க்கம் இயற்கை. 7. இறையை அடைதற்கு, இயற்கை இன்பத்தை வெறுத்துக் காட்டுக்கோடி, மூச்சைப் பிடித்தல் முதலியன தேவை என்று நினைப்பது தவறு. 8. இயற்கை நெறி, இறை நெறியாதலான், இயற்கை இன்பத்தை வெறுப்பது, இறை இன்பத்தை வெறுப்பதாகும். 9. பெண் ஆணுடனும், ஆண் பெண்ணுடனும் வாழ்வது இயற்கை. 10. பெண் ஆணை வெறுப்பதும், ஆண் பெண்ணை வெறுப்பதும் துறவென்று சொல்லப்படுவது தவறு. 11. தீய குணங்களை நீப்பது துறவு. 12. பெண்ணும் ஆணும் சம உரிமையுடையவர். 13. ஒருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் வாழ்வது அறம். 14. இயற்கைவழி நின்று, உடலோம்பிக், கல்வி பயின்று, இயல்புக்குரிய தொழின் முறைகளில் ஈடுபட்டு, இல்லறமேற்று, உயிர்கள் தொண்டு செய்து, இயற்கைத் தியானத்தில் பயிற்சி பெறுதல், இறைவழிபாடாகும். 15. இயற்கைநெறி நிற்பது, இறைநெறி நிற்பதாகும் இதுவே சமயம் என்பது. 16. சமயங்கள் பல இல்லை. உள்ள சமயம் ஒன்றே. அது சன்மார்க்கம். 17. இயற்கைத் தியான முதிர்ச்சியால் குருதரிசனம் பெறலாம். 18. குருமார் மக்களுமல்ல; கடவுளுமல்ல. மக்கள் கடவுளை அடைவதற்கு அவர் துணைசெய்பவர். 19. குருமார் நெஞ்சத் தாமரையில் என்றும் இறையொளி திகழ்ந்தவண்ணமிருக்கும். அவர் நுண்ணுடலுடையவர்; பொன் மேனியர்; இயற்கைத் தியான முதியோர்க்குக் காட்சியளித்து நலஞ்செய்பவர். 20. சடங்குகள் செய்து, காசு பறிப்பவர் குருமாரல்ல; அவர் புரோகிதர். 21. புரோகித மதங்கள் பலப்பல. அவைகள் வேறு; சன்மார்க்கம் வேறு. இரண்டுக்குந் தொடர்பில்லை. 22. சன்மார்க்கம் எல்லார்க்கும் உரியது. 23. சன்மார்க்கத்துக்கு நாடு, மொழி, நிறம், வகுப்பு, சாதி, மதம் முதலிய வேற்றுமைகளில்லை. 24. நாடு, மொழி, நிறம், வகுப்பு, சாதி, மதம் முதலிய வேற்றுமை உணர்வைக் கலப்பு மணம் ஒழிப்பதாகும். 25. பிறப்பில் உயர்வு தாழ்வு கருதுவது அஞ்ஞானம். 26. மக்கள் அனைவருஞ் சகோதரர்கள். 27. எல்லா உயிர்களிலும் வீற்றிருப்பது சத்தெனும் இறை ஒன்றே. அவ்வுண்மையை உணர உணரச் சகோதர நேயம் பெருகும். 28. கர்மம், நாள், கோள் முதலியன சன்மார்க்கரைத் தாக்குவதில்லை. 29. அறிவில் மேம்பட்டவர், அறிவில் கீழ்ப்பட்டவரை உயர்த்தத் தொண்டுசெய்தல் வேண்டும். 30. உயிர்கட்கு அழகு தொண்டே. 31. உயிர்களுக்குத் தொண்டு செய்வது, கடவுளுக்குத் தொண்டு செய்வதாகும். 32. சன்மார்க்கக் கலப்பில்லாத உலகியற்றுறையோ உயிரியற்றுறையோ இல்லை. 33. சன்மார்க்கம் உலகியலுக்குப் புறம்பானதன்று. 34. சன்மார்க்க சங்கம், இறை முதல் எல்லா உயிர்களையும் அங்கமாகக் கொண்டது. ஆகவே எல்லா உயிரும் சகோதரர். 35. எல்லா உயிர்களையும் சகோதரராகப் பார்ப்பவர் சன்மார்க்கராவர். 36. சன்மார்க்கத்தை விரித்துக்கூறுவது தெய்வமறை. 37. தெய்வ மறையின் நிலை மூன்று. அவை மோனம், ஒலி, மொழி என்பன. 38. மோனத்தினின்றும் ஒலியும், ஒலியின்றும் மொழியும் பிறக்கும். 39. இம்மூன்று நிலையும் குருமார்க்கு உரியன. 40. குருமார் பருவுடல் தாங்கும்போது, அவர் வாயிலாகத் தெய்வமறை மொழிவடிவில் வெளிவரும். 41. தெய்வமறை பல இடங்களில் பல மொழியில் பலவாறு இறங்கியிருக்கிறது. அவை யாவும் தெய்வத்திருவருள் மொழிகளே. அவைகள் உலகில் பல பெயர்கள் பெற்றிருக் கின்றன. 42. ஐயந் திரிபு மயக்கங்கள் நீங்கி, விளக்கம்பெறுதற்குக் குருமார் வாயிலாகப் பிறந்த தெய்வ அருள் மொழிகளைப் பயில்க; பயின்று அவைகளின் வழி நிற்க. 43. இச் சன்மார்க்க போதம் சுருங்கிய முறையில் யாக்கப் பட்டது. பலவேறு காலங்களில், பலவேறு இடங்களில் தோன்றி, அவ்வக் கால தேச வர்த்தமானங்களுக்கேற்ற முறையில் குருமார் வெளியிட்ட கருத்துக்களின் ஒருமைப்பாடு, அடியேன் உணர்வில் விளங்கிய முறைப்படி, இந்நூற்கண் தொகுத்துக் காட்டப்பட்டது. 44. அடியேன் பல துறைகளில் நின்று யாத்த நூல் பலவற்றிலும் சன்மார்க்க உயிர்நாடி ஓடிக்கொண்டிருக்கும். 45. இந்நூலுடன் தொடர்புகொண்ட வேறு ஒரு நூல் என்னால் யாக்கப்பட்டது. அது சன்மார்க்கத் திறவு என்பது. அதில் சில விளக்கங்கள் உள்ளன. 46. இயற்கையை உடலாக் கொண்டு, என்றும் மாறுத லின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ஒன்றாய், உண்மையாய், அறிவாய், அன்பாய், இன்பாய், அழகாய் உள்ள இறை வாழ்க. 47. இறைக்கு உடலாய் நின்று, திருவிளையாடல் புரியும் இயற்கை வாழ்க. 48. இயற்கை - இறைவழி நின்று, உலகை நடாத்தி வருங் குருமார் வாழ்க. 49. கால தேச வர்த்தமான நிலைக்கு ஏற்றவாறு, அவ்வப் போது குருமார் வழிப் பிறந்த அருள் மொழிகள் வாழ்க. 50. அருள் மொழிகளின் பொருளாயுள்ள சன்மார்க்கம் வாழ்க. 51. சன்மார்க்க சங்கம் வாழ்க. திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் சன்மார்க்க ஊழியன்  சன்மார்க்கத் திறவு முன்னுரை ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் சன்மார்க்க போதம் என்றொரு நூல் என்னால் இயற்றப் பட்டது. அந்நூலுடன் தொடர்பு கொண்டது இந்நூல். அது பொது நூல். இது சிறப்பு நூல். பொதுமையே சிலர் உள்ளத்தை நிறைவு செய்யும். சிலர் உள்ளத்தைப் பொதுமை நிறைவு செய்வதில்லை. இவருக்குச் சிறப்புந் தேவை. இத்தகையர் பொருட்டு இந்நூல் இயற்றப் பட்டது. சன்மார்க்க போதத்திலுள்ள பொதுமைகளைச் சிறப்பு முறையால் இந்நூல் திறந்துகாட்டும். இதனால் இந்நூலுக்குச் சன்மார்க்கத் திறவு என்னுந் தலைப்புச் சூட்டப்பட்டது. (முதற் பதிப்பிலிருந்த தலைப்பிலே சமரசம் என்பது, இரண்டாம் பதிப்பில் சுருக்கத்தின் பொருட்டு நீக்கப்பட்டது.) இரண்டு நூலிலும் இடம் பெற்றிருப்பவர் குருமார். குருமார் முன்னூலில் பொதுவாகச் சொல்லப்பட்டிருக்கிறார். அவர்தம் போதனைகள், பெயர்கள் முதலியன இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. இவ்விளக்கம் சன்மார்க்க சங்கத்தார்க்குப் பெருந்துணை செய்வதாகும். முன்னூலாகிய சன்மார்க்க போதத்தைப் படித்த பின்னர் நேயர்கள் இந்நூலைப் படிப்பார்களாக. யாதும் ஊரே யாவருங் கேளிர் திருவாரூர்-வி.கலியாணசுந்தரன் 1. தோற்றுவாய் 1. இயற்கையை உடலாக்கொண்டு, என்றும் மாறுதலின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ஒன்றாய், உண்மையாய், அறிவாய், அன்பாய், இன்பாய், அழகாய் உள்ள இறை வாழ்க. 2. இறைக்கு உடலாய்நின்று, திருவிளையாடல் புரியும் இயற்கை வாழ்க. 3. இயற்கை - இறைவழி நின்று, உலகை நடாத்தி வருங் குருமார் வாழ்க. 4. கால தேச வர்த்தமான நிலைமைக்கு ஏற்றவாறு அவ்வப் போது குருமார்வழிப் பிறந்த அருள் மொழிகள் வாழ்க. 5. அருள்மொழிகளின் பொருளாயுள்ள சன்மார்க்கம் வாழ்க. 6. சன்மார்க்க சங்கம் வாழ்க. 7. சன்மார்க்க போதம் என்னும் ஒரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அது, பொது நூல். அந்நூலில், சத் (உண்மை) இறை என்பதும், மார்க்கம் (வழி) இயற்கை என்பதும், சத்தை அடைதற்கு இயற்கை வழிபாடு தேவை என்பதும், இயற்கை வழிபாடு குருநாதன் காட்சியை வழங்கும் என்பதும், குருநாதன் காட்சியால் நுட்பம் விளங்கும் என்பதும், மிகச் சிலர் குருவருளின்றியும் இயற்கை வழி பாட்டளவிலேயே நுட்பம் விளங்கப்பெறுவர் என்பதும், இயற்கை கடந்த தனித்த இறைநிலை வாக்கு மனம் கடந்தது என்பதும், இன்ன பிறவும் விரித்துக் கூறப்பட்டன. 8. இறைநிலை இரண்டு. ஒன்று இயற்கையைக் கடந்து தனித்து நிற்பது; இது வாக்கு மனங்கட்கு எட்டாதது. மற்றொன்று இயற்கையுள்ளும் குருமாருள்ளும் ஒளிர்வது. 9. இயற்கை வாயிலாகவோ, குருவாயிலாகவோ இறையின் உண்மையை உணர்தல் கூடும். இதற்கு இயற்கை வழிபாடோ, குரு வழிபாடோ, அல்லது இரண்டுமோ தேவை. 10. இயற்கை வழிபாடு, சன்மார்க்க போதத்தில் விரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதலால், அதைப் பற்றிய விளக்கம் இங்கே வேண்டுவதில்லை. 11. குருமாரைப் பற்றியும் சன்மார்க்க போதத்தில் ஓர் அதிகாரம் உண்டு. அது, பொது முறையில் குருமாரைப் பற்றிச் சொல்வது. அப்பொழுது முறையைச் சிறப்பு முறையால் திறந்து காட்டுவது இந்நூல். 12. சிலர்க்குப் பொதுநூலே போதியதாயிருக்கும். அதனால், பொதுநூலில் சிறப்பு முறைகள் சொல்லப்பட வில்லை. 13. சன்மார்க்க போதத்தில் குறிப்பிட்ட சில கருத்துக்கள், விளக்கத்தின் பொருட்டும், தொடர்பு குறித்தும், இந் நூற்கண்ணும் சுருங்கிய முறையில் சில இடங்களில் ஆளப்படும். 14. சன்மார்க்க போதம் முன்னூல் என்று இந்நூற்கண் இனிக் குறிக்கப்படும். 2. குருமார் விளக்கம் 1. இறையுண்மை, குருமார் வாயிலாக உலகுக்கு விளங்கு தலால், குருமாரைப்பற்றிச் சிறப்புமுறையில் தெளிவு பெறுதல் வேண்டும். 2. குருவுக்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப் படுகின்றன. அவைகளுள் சில வருமாறு:- சித்தன், அருகன், புத்தன், கிறிது, நபி, மாடர், ஆச்சாரியன், தீர்த்தங்கரன், குமரன், மூர்த்தி முதலியன. இப்பலபட்ட பெயர்களின் பொருள் ஒன்றே. 3. குருவைப் பற்றிப் பலதிறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. இறைவன் குருவாக வருவன் என்று சிலரும் - இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவனாதலான், அவன் குருவாக வருவதில்லை என்று வேறு சிலரும் - குருவின் உள்ளத்துள் இறைவனது ஒளி நீக்கமின்றி இடையறாது திகழ்தலானும், அவர் தமக்கென ஒன்றின்றி இறைவன் வழியே நின்று கடனாற்றுதலானும், இறைவன் செயலுக்கெல்லாம் அவர் கருவியாக நிற்றலானும், அவரை இறைவன் என்று உபசாரமாகக் கொள்ளலாமென்று மற்றுஞ் சிலரும் கூறுவர். இன்னும் வெவ்வேறு கருத்துடைய வரும் உளர். 4. சத் என்னும் இறை, பிறப்பு இறப்பு இல்லாதது என்பதும், குரு, சமயம் நேரும்போது பிறப்பதுண்டு என்பதும் முன்னூலில் மிகத் தெளிவாக விளக்கஞ் செய்யப்பட்டிருக்கின்றன. 5. உண்மை விளங்கும்போது, குருநிலை தானே விளங்கும். குருநிலையைப்பற்றி விவாதம் வேண்டுவதில்லை. 6. குருமாருக்கென ஒரு தனித் திருக்கூட்டம் இருக்கிறது. இறை அருளால், அத்திருக்கூட்டத்தின் வாயிலாக உலகம் நடைபெற்று வருகிறது. 7. குருமார், பலப்பல இடங்களில் தோன்றிக் கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்ற முறையில் சன்மார்க்கத்தை விளக்கிப் போவர். 8. உண்மையை உணர்த்தக் குருமார், பருவுடல் தாங்கியும் வருவர். அவர் நுண்ணுடலுடன் பிறர்வாயிலாக உண்மையை உணர்த்துவதும் உண்டு. 9. சன்மார்க்கத்தை அடிப்படையாக்கொண்டு, இது காறும் வெளிப்போந்த குருமார் போதனைகள் பலதிறத்தன. 10. குருமார் போதனைகள், கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றவாறும், மக்களின் பலதிற இயல்புகளுக்கு ஏற்றவாறும் பலவகையாய்ப் பிறந்தன. 11. போதனைகளின் புறத்தோற்றம் பலவகை. அகத்தில் எல்லாம் ஒருவகையே. 12. பலவகை ஒருவகையாக விளங்குதற்கு வழிபாடு தேவை. 13. வழிபாட்டுக்குச் சில குறிக்கோள் வேண்டும். 14. குறிக்கோள், நுண்மை பருமை என இருவகைப்படும். இரண்டும் முறையே அகத்துக்கும் புறத்துக்கும் உரியன. 15. குறிக்கோளை எங்கிருந்து பெறுவது? குருமார் போதனைகளினின்றும் அவைகளைப் பெறுதல் கூடும். 16. குருமார் போதனைகளிற் படியப்படியக் குறிக்கோள் புலனாகும். 17. குறிக்கோள் பலபடப் புலனாகும். அவைகளை ஒருவித முறைக்கு உட்படுத்தித் தொகுத்துக் கொள்வது வழிபாட்டுக்கு வழிகோல்வதாகும். 18. குருமார் போதனைகளை வழிபாட்டின் பொருட்டு, எட்டு விதமாகத் தொகுத்துக் கொள்ளலாம். அவை வருமாறு:- (1) தெய்வம் ஒன்றென்பது (2) இயற்கை (3) அன்பு (4) அஹிம்சை (5) தர்மம் (6) நிஷ்காமியம் (7) அழகு (8) மோனம். 19. இவ்வெட்டும் ஒன்றே, ஒன்று உள்ள இடத்தில் பிறவும் இருக்கும். இந்நுட்பம், சன்மார்க்கத்தில் ஈடுபட்டு ஒழுக ஒழுகப் படிப்படியாக விளங்கும். 20. விளக்கத்தின் பொருட்டும், தொடக்கத்தில் மக்கள் மனோநிலை பலபட்டு நிற்றல் கருதியும் எட்டு என்று ஒரு விதக் கணக்கிடப்பட்டது. 21. ஒன்று எட்டாய், எட்டுப் பலவாகும். பல எட்டாய், எட்டு ஒன்றாகும். இந்நுட்பம் சன்மார்க்கத் தெளிவில் நன்கு விளங்கும். 22. எட்டையும் குருமாருள் பொருந்தக்கொள்வது ஒருவித ஒழுங்குமுறை. அம்முறை வருமாறு:- (1) தெய்வம் ஒன்று - மகம்மது நபி (2) இயற்கை - அன்னை (3) அன்பு - கிறிது (4) அஹிம்ஸை - விருஷபதேவர் (5) தர்மம் - புத்தர் (6) நிஷ்காமியம் - கிருஷ்ணமுர்த்தி (7) அழகு - குமரன் (8) மோனம் - தட்சணாமூர்த்தி. 23. இப்பிரிவால் ஒருவர் போதனையில் பிறர் போதனைகள் இல்லை என்று கொள்ளுதல் கூடாது. ஒருவர் போதனையில் பிறர் போதனைகளும் உண்டு. பிரிவு, வழிபாட்டின் பொருட்டுக் காட்டப்பட்டது. 24. மகம்மது நபி, ஒரு தெய்வ உணர்ச்சியை நிலை பெறுத்தியவர்; அவ்வொரு தெய்வம் பிறப்பு இறப்பு இல்லாதது என்பதை அறிவுறுத்தியவர்; விக்கிரக ஆராதனையைக் கடிந்தவர். அவர் போதனைகள் பல. அவைகளுள் தலையாயது தெய்வம் ஒன்று என்பது. தெய்வம் ஒன்று என்னும் உணர்வில் எல்லாவித சமரசமும் அடங்கும் மகம்மது நபி, நபி நாயகம் என்று போற்றப் படுகிறார். அவர் வாயிலாக வெளிவந்த ஆண்டவன் மொழி, திருக்குரான் எனப்படும். மகம்மது நபி விக்கிரக ஆராதனையைக் கடிந்தவராகலான், அவருக்கோ அவர் போதனைக்கோ அவர் தொடர்புகொண்ட எதற்கோ அறிகுறி யாகக்கூட உருவம் அமைத்தலாகாது. இது சிறப்பாகக் கவனிக்கத் தக்கது. 25. இயற்கை, அன்னையாவள் இயற்கையை அன்னை என்று சொல்வது மரபு. இயற்கைவழி நிற்பவர், சில சமயங்களில் குருவின் துணையின்றி இயற்கை வாயிலாகவே இறையொளி விளங்கப் பெறுதலால், இயற்கையும் குருமரபில் கொள்ளப் பட்டது. இயற்கை, இறைவனுக்கு உடலாயிருப்பது. இறை உருவமில்லாதது; எங்குமிருப்பது. இறை எங்கும் எப்படி இருக்கிறது? இறை, இயற்கையை உடலாக்கொண்டு, தான் உயிராக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இறையின் உண்மையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கையோடு இயைந்து வாழ்வது இறையோடு இயைந்து வாழ்வதாகும். இயற்கையை வெறுப்பது இறையை வெறுப்ப தாகும். இயற்கை வாழ்வு சன்மார்க்கத்துக்கு வேண்டற்பாலது. எக்காரணம் பற்றியேனும் குருமாருண்மையில் உறுதி கொள்ளாதார் இயற்கையை நேரே பற்றலாம். இயற்கை, ஆத்திகர் எனப்படுவோர்க்கும் நாத்திகர் எனப்படுவோர்க்கும் பொது. சன்மார்க்கம் அனைவர்க்கும் உரியது. 26. கிறிது, கடவுள் அன்பு என்பதை வலியுறுத்தியவர். அவரது போதனையினாலும் சாதனையினாலும், வெறுங் கிரியை, புறக்கோலம், புரோகிதம், பலி முதலிய கண்மூடி வழக்க ஒழுக்கங்கள் கடவுள் நெறி அல்ல என்பதும், அன்பு நெறியே கடவுள் நெறி என்பதும் நன்கு விளங்கின. கிறிதுவின் போதனை களைத் திரட்டிப் பார்த்தால் அவைகளினூடே அன்பு என்னும் உயிர்நாடி ஓடிக்கொண்டிருக்கும். அவருடைய போதனையும் சாதனையும் அன்பே. கிறிதுவின் சிலுவை, அன்புக்குரிய தியாகத்தின் அறிகுறி. அன்பு உள்ள இடத்தில் சமரசம் இருத்தல் இயல்பு. கிறிதுவின் மலைப்பொழிவில் அன்பு நெறியாகிய சன்மார்க்க இயல்கள் பொலிவது காணலாம். 27. விருஷபதேவர், அஹிம்சையைப் போதித்தவர். அவர்தம் போதனையால் அஹிம்ஸா பரமோதர்மா என்பதும், தயாமூல தர்மம் என்பதும் விளக்கம் பெற்றன. அஹிம்சை யாவது மன்னுயிரைத் தன்னுயிர்போல் கருதி ஒழுகுவது. இதுவே ஜீவகாருண்யம் என்பது. ஜீவகாருண்யம், சன்மார்க்கத் துக்கு அடிப்படை. சதுர் அநுயோகம் என்னும் பரமாகமம் பார்க்க. 28. புத்தர், தர்மோபதேசஞ் செய்தவர். பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல், கொலை வேள்வி புரிதல் முதலிய அதருமச் செயல்கள் புத்தரால் மறுக்கப்பட்டன. எல்லாரையும் ஒப்ப நோக்கும் சமதர்மம் அவரால் போதிக்கப்பெற்றது. எல்லாரையும் ஒப்ப நோக்குவதாவது எவ்வுயிர்க்குந் தீங்கு நினையாமை. இதற்கு மக்களிடத்துள்ள விலங்கியல்புகள் ஒழிதல் வேண்டும். மக்கள், விலங்கு இயல்பினின்றும் விடுதலையடையவும், தர்மவழியில் நின்று ஒழுகவும் புத்தரால் சீலங்கள் கோலப்பட்டன. பௌத்த சீலங்களால் தர்மமும், தர்மத்தால் சமரசமும் விளையும். பௌத்த தர்மம், சீலம் முதலியவற்றைத் திரிபிடகத்தில் நோக்குக. 29. கிருஷ்ணமூர்த்தி, நிஷ்காமிய கர்மத்தை உணர்த் தியவர். காமியப்போரிடைக் கிருஷ்ணமூர்த்தியின் நிஷ்காமிய கருமோபதேசம் எழுந்தது. காமிய நெஞ்சில் சமரச ஞானம் பிறவாது. நிஷ்காமிய நெஞ்சில் சமரசஞானம் நிலவும். நிஷ்காமியம் சமரசத்தின் ஊற்று. கிருஷ்ணமூர்த்தியின் நிஷ்காமியச் சிறப்பைப் பகவத் கீதையில் காண்க. 30. குமரன், அழகுக்கு அறிகுறி. அழகாவது இயற்கையி லுள்ள அழியா ஒளி. அவ்வழகு என்றும் அழியாதது; மாறுத லடையாதது; இளமையாயிருப்பது. இதனால் அழகுக்கு அறிகுறியாகக் குமார மூர்த்தம் கொள்ளப்பட்டது. அழகில் ஊறிக்கிடக்கும் உள்ளத்தில் வேற்றுமை உணர்வு தோன்று தற்கும் இடமில்லை. இது சமரச நிலை என்பது. அழகுக் கலைகள் - இயற்கையின் கோலங்கள், அவைகளின் ஓவியம் காவியம் முதலியன. 31. தட்சணாமூர்த்தி, மோனத்துக்கு அறிகுறி. மோனம் வாக்கு மனம் ஒடுங்கும் நிலை. மூர்த்தியின் பெருவிரலும் சுட்டு விரலும் ஒன்றியிருத்தல் உற்று நோக்கற்பாலது. பெருவிரல் இறையை உணர்த்துவது; சுட்டுவிரல் உயிரை உணர்த்துவது. பலவாறு அலைந்து உழன்று அமைதி இழந்து கிடந்த உயிர், இறையுடன் சேர்ந்து அமைதி பெறுகிறது. மோனத்தில் மூன்று நிலைகள் உண்டு. ஒன்று ஒலி; மற் றொன்று ஒளி; இன்னொன்று சாந்தம். வாக்கு மனம் ஒடுங்கும் மோனத்தில், இயற்கையின் நானா பேதங்கள் மறைந்து, அவை யெல்லாம் ஒலி மயமாகத் தோன்றும். ஒலி, இரண்டு விதம். ஒன்று வாக்கு மன உணர்வில் கேட்பது. இது மாயாநாத ஒலி. மற்றொன்று வாக்கு மனம் ஒடுங்கு நிலையில் எழுவது. இஃது இறை வடிவான ஒலி. இஃது அருள்நாத ஒலி. ஒலி, ஒளியை விளங்கச் செய்யும். இயற்கை வடிவங்கள் ஒலியாகி ஒளியாகும். ஒலிகடந்த நிலையில் எல்லாம் ஒளிமய மாக விளங்கும். ஒளிக்கு மேற்பட்டது சாந்தம். சாந்தத்தில் தெளிவுறுவது சன்மார்க்கம். 32. ஒளிவரை இயற்கையை உடலாக் கொண்டது இறைநிலை. ஒளிக்கு மேற்பட்டது தனித்த இறை நிலை. இது வாக்கு மனங்கடந்தது; சொல்லொணாதது. 33. ஒலிக்கு அறிகுறியாகப் பெரியோர் வாயிலாகப் பிறந்த தெய்வ மொழிகளைக் கொள்ளலாம். அவை வருமாறு: திருக்குரான், பைபில், பரமாகமம், திரிபிடகம், தசோப நிஷத், பிர்மசூத்திரம், பகவத்கீதை, சிவஞானபோதம், திருக்குறள், தேவார திருவாசக நாலாயிரப்பிரபந்தம், திருமந்திரம், கந்தரநுபூதி முதலியன. இவைகளினின்றும் பிறந்த வழிநூல்கள் பலப்பல. இவை யாவும் சன்மார்க்கத்தை அறிவுறுத்துவன. 34. ஒளிக்கு அறிகுறியாகத் தீபத்தைக் கொள்ளலாம். 35. சாந்தத்துக்கு அறிகுறியாக மரம், செடி, பாம்பு, மயில், யானை, புலி, சிங்கம், பசு ஆகிய இவைகள் சாந்தமயமாக ஒன்றியுள்ள முறையில் ஓவியம் பொறித்துக் கொள்ளலாம். 36. தனித்த இறை நிலைக்கு எவ்விதக் குறியும் அமைத்தல் கூடாது. 37. குருமார் பெயர்கள் சரித்திர முறையில் இங்கே குறிக்கப் படவில்லை. சரித்திரத்துக்கும் இந்நூன் முறைமைக்கும் தொடர் பில்லை. 38. ஈங்குக் குறிப்பிடாத குருமார் பலர் இருக்கிறார். அவர் மேற்குறிப்பிட்ட குருமார் வழிவழி வந்தவர். அவர்தம் போதனைகள் எட்டில் அடங்கும். அப்போதனைகள் யாவும் எட்டினின்றும் பிறந்த கவடு கோடுகளாகும். அவர் போதனை எதில் இயைவதா யிருக்கிறதோ, அவரை அதற்குடையவருடன் சேர்த்துக்கொள்க. பெயர்கள் ஒருவிதக் குறிக்கோளுக்காகக் காட்டப்பட்டன. பெயரில் கருத்துச் செலுத்துவதைப் பார்க்கிலும், போதனையில் கருத்துச் செலுத்துவது சிறப்பு. 39. சன்மார்க்க சங்கத்தார் நால் வகையினர். விளக்கம் முன்னூலில் பார்க்க. முதலிரு வகையினர் பொருட்டு எட்டு என்பதும், அததற்குரிய குரு என்பதும் வகுத்துச் சொல்லப் பட்டன. 40. சன்மார்க்கத்தில் முதலில் ஈடுபடுவோர்க்குப் பன்மை உணர்வு உண்டு. ஒவ்வொருவித உணர்வு ஒவ்வொன்றை விரும்பும் இயல்புடையதாயிருக்கும். அதற்குரிய முறையில் ஒன்று எட்டாக வகுக்கப்பட்டது. ஒவ்வொருவர்க்கு ஒவ்வொருவிதச் சுவையில் விருப்பு நிகழ்வது இயல்பு. 41. சன்மார்க்க சங்கத்தின் முடிந்த படியில் நிற்பவர்க்கு எல்லாம் ஒன்றாகவே தோன்றும். அவர்க்குக் குருமார் அனைவரும் உணர்வில் ஒருவராகவே தோன்றுவர். 42. குருமார் உள்ளத்தில் ஒளிரும் தெய்வம் ஒன்றாத லானும், அவ்வொன்றன்வழி அவர் இயங்கிச் சன்மார்க்கத்தை உலகின் பொருட்டுப் பலவகையாகப் போதித்தமையானும், அவர் மொழிகள் யாவும் ஒரு தெய்வ ஒலியின் பரிணாமமாகும். 43. குருமார் எல்லாரும் உணர்வில் ஒருவரேயாவர். 44. தொடக்கத்தில் எவர்க்கும் குருமாரின் வடிவில் நாட்டஞ் செல்லும்; பின்னே சன்மார்க்கப் பயிற்சி மிகமிக அவருக்குக் குருமாரின் உணர்வில் நாட்டஞ் செல்லும். வடிவில் தோன்றும் பன்மை, உணர்வில் ஒருமையாகும். 45. குருமார் போதனைகள் ஒரு தெய்வ ஒலியாதலின், அவை களுள் உயர்வு தாழ்வு கற்பித்தல் சன்மார்க்கத்தில் நிற்பதாகாது. 46. பன்மை உணர்வுடையவர்களில் எவர்க்கு எக்குருவின் போதனைமீது விருப்பம் நிகழ்கிறதோ, அவர், அக்குருவின் போதனைவழி நின்று ஒழுகுவாராக. அவ்வொழுக்கம், அவரைச் சன்மார்க்கத்தில் சேர்க்கும். 47. சன்மார்க்கச் சேர்க்கை நாளடைவில் குருமார் போதனைகளின் ஒருமையை விளங்கச்செய்யும். 48. ஒருவர், தாம் விரும்பும் குருவின் போதனைமீது பற்றுக்கொள்ளலாம். ஆனால் அது காரணமாக, அவர் மற்றக் குருமார் போதனைகளை நிந்தித்தலாகாது. நிந்திப்பின், அஃது அவர்தங் குருவின் போதனையையே நிந்திப்பதாகும். 49. நிந்தனை உள்ள இடத்தில் சன்மார்க்கம் விளங்குதல் அரிது. 50. குருமாரையும், அவர்தம் போதனைகளையும் ஒன்றாகவே கொள்ளுதல் வேண்டும். 51. குருமாருடைய போதனைகள்வழி நில்லாது, அவர்தம் உருவங்கட்கு மட்டும் வந்தனை வழிபாடுகள் செய்வது தவறு. இத்தகை வந்தனை வழிபாடுகள் செய்வோரது தொகை உலகில் பெருகியிருக்கிறது. குருமார் போதனைகள் வழி நிற்போரது தொகை உலகில் பெருகல் வேண்டும். இப்பெருக்கால் உலகில் சன்மார்க்கம் ஓங்கி வளரும். 52. குருமார் உள்ளத்தில் ஒளிர்வது இறையொளி. அவ்வொளி விளங்கப்பெறுதற்குக் குருமார் போதனைகள் வழி நின்றொழுகல் வேண்டும். 53. குருமார் வழிபாடென்பது, குருமார் போதனைகள் வழி நின்று ஒழுகி வழிபாடு செய்வது. குருமார் வழிபாடென்று பின்னே குறிக்கப்படும் இடங்களிலெல்லாம் இவ்வாறே கொள்க. 54. குருமார் போதனைகளில் சம்பிரதாயம், கட்டுப்பாடு முதலியவற்றை நுழைப்பது பாவம். குருமார் போதனைகள், சம்பிரதாயம் கட்டுப்பாடு முதலியவற்றைக் கடந்தவை. 55. குருமார் போதனைகளைச் சம்பிரதாயம் முதலிய கட்டுக்களால் பிரிவுபடுத்தி, உலகில் பல சமய உணர்வையும் பிணக்கையும் உண்டுபண்ணுவது ஆங்காங்குள்ள புரோகித மதம். 56. சம்பிரதாயம் முதலியன புரோகிதத்தின்பாற்பட்டன. புரோகிதம், சன்மார்க்கமன்று. 57. புரோகிதத்தால் உலகம் பட்டது போதும்! போதும்! இனி உலகம் சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்தொழுகுவதாக. 58. குருமார் போதனைகள் மன்பதைக் கென்று பிறந்தன; அவை குறிப்பிட்ட சிலர்க்கென்று பிறக்கவில்லை. 59. குருமார் சன்மார்க்கத்தை அறிவுறுத்தியவர். சன்மார்க்கம் பொதுவானது; எல்லார்க்கும் உரியது. 60. குருமார் உண்மையையும், அவர் அறிவுறுத்திய சன்மார்க்கத்தின் நுட்பத்தையும் அநுபவத்தில் தெளிந்து, அத்தெளிவை உலகுக்கு உணர்த்திய பிற்காலப் பெரியோர் சிலர் உளர். அவருள் குறிக்கத்தக்கவர்; தால்தாய், தாயுமானவர், சுவீடன்பர்க், பிளவட்கி அம்மையார், இராமகிருஷ்ணர், இராமலிங்கர் முதலியோர். 61. சன்மார்க்க விளக்கத்துக்குக் குருவழிபாடு இன்றியமை யாதது. 3. வழிபாடும் அமைப்பும் 1. வழிபாடு, வாழ்வுக்குத் தேவை. 2. வழிபாடு பொருளுடையதாயிருத்தல் வேண்டும். பொருளற்ற வழிபாடு கண்மூடி வழக்க ஒழுக்கங்களைப் பெருக்கும். 3. வழிபாடு என்னும் நினைவு தோன்றும்போதே, மக்களுக்கு இறை நினைவு தோன்றுவது இயல்பு. 4. வழிபாடு இறைக்கே உரியதாய், இறையையே சாரும். 5. இறை ஒன்று; இரு நிலையுடையது. ஒன்று தனித்த நிலை; மற்றொன்று இயற்கையையும் குருவையும் கோயில் கொண்ட நிலை. 6. இறையின் தனித்த நிலை அகண்டாகாரமானது; மனம் வாக்குக்கு எட்டாதது; வழிபாடற்றது. 7. உருவங்களில் படியும் இயல்பு வாய்ந்த மனம் முதலிய கரணமுடையவர் அகண்டாகார இறையை எப்படி வழிபடுதல் கூடும்? 8. வழிபாடற்ற இறை நிலையைப்பற்றி மன உணர்வினர் மல்லாட வேண்டுவதில்லை. 9. இயற்கையுள்ளும் குருமாருள்ளும் கோயில் கொண்ட இறைநிலை, மனம் முதலிய கரணமுடையவரின் வழிபாட்டுக்கு உரியது. 10. மனஉணர்வு ஒடுங்கி, வழிபாடற்ற நிலை பெறுதற்கும் வழிபாடு தேவை. 11. மனம் வாக்கு முதலிய கரணமுடையோர், இயற்கை வாயிலாகவோ குரு வாயிலாகவோ அல்லது இரண்டின் வாயிலாகவோ இறையை வழிபடலாம். எவ்வகை வழிபாடும் இயற்கையின் பாற்பட்டதே. முன்னூல் பார்க்க. 12. இயற்கை வழிபாடும், பொது முறையில் குருமார் வழிபாடும் முன்னூலில் விரித்துக் கூறப்பட்டன. இந்நூலில் சிறப்பு முறையில் குருமார் வழிபாடு மட்டும் கூறப்படும். 13. குரு வழிபாடென்பது ஒருவித முன்னிலைச் சுட்டு. அஃது இறையையே சாரும். 14. குரு வழிபாடென்பது, குரு உள்ளத்தில் ஒளிரும் இறை ஒளியைக் குறித்து நிற்பதாகும். 15. அவரவர் மனத்துக்கு இயைந்த குருவை அவரவர் கொள்ளலாம். 16. வழிபாட்டுக்கு அமைப்பு வேண்டும். 17. அமைப்பு வேண்டும் நிலையும் உண்டு; வேண்டா நிலையும் உண்டு. 18. மன உணர்வினர்க்கு அமைப்பு வேண்டும். மற்றவர்க்கு அமைப்பு வேண்டுவதில்லை. 19. இயற்கை, அமைப்பென்பதும் - நூல், அமைப் பென்பதும் - அவ்வவ் வமைப்புக்குரியார் இன்னார் இன்னார் என்பதும் - முன்னூலில் சொல்லப்பட்டன. 20. குருமார் அமைப்பின் விளக்கம் ஈண்டுக் குறிக்கத்தக்கது. 21. ஒவ்வொரு வீட்டிலும், வேறு தனி இடத்திலும் குருமார் அமைப்பை ஏற்படுத்தலாம். 22. பற்பல நோக்குடன் கட்டப்பெற்ற பழைய கோயில் மடம் முதலியவற்றைச் சன்மார்க்க முறையில் சீர்திருத்தஞ் செய்து, அவைகளை வழிபாட்டுக்குரிய அமைப்புக்களாகக் கொள்வதில் தவறுதல் இல்லை. 23. பழைய அமைப்புக்களின் பெயர்களை மாற்றுவது அநாவசியம். அவைகளில் சன்மார்க்கக் கொள்கை நிலவுவது சாலும். 24. தெய்விக அமைப்பு எதுவும், பிறப்பில் உயர்வு தாழ்வு கருதல், புரோகிதம், சம்பிரதாயம், கண்மூடி வழக்க ஒழுக்கம் முதலியவற்றிற்கு அடிமையாதல் கூடாது. 25. அமைப்புக்குரிய இடம், இயற்கை வளஞ் செறிந்ததா யிருத்தல் வேண்டும். 26. காடு மலை அடர்ந்த இடங்களும், கடலோரமும், ஆற்றோரமும், இன்ன பிறவும் இனியன. 27. காடு மலை ஆறு சமீபத்திலில்லாத இடங்களில் அமைப்பு நிறுவ நேர்ந்தால், அவ்விடங்களைச் செய்குன்றாலும், மரஞ்செடிகளாலும், நீர் நிலைகளாலும் அழகு செய்தல் வேண்டும். 28. இடம் எவ்வளவு விசாலமா யிருக்கிறதோ அவ்வளவும் நல்லது. 29. அமைப்புக்கெனக் குறிக்கப்பெற்ற இடத்தில் மிகச் சிறுபகுதி கட்டிடங்களுக்கென்றும், பெரும்பகுதி மரஞ்செடி களுக்கென்றும் ஒதுக்கப்படல் வேண்டும். 30. மரஞ்செடிகளைப் பெருக்கல் நல்லது. அவைகளை அழித்துக் கட்டிடங்களைப் பெருக்கல் கூடாது. 31. ஆல், அரசு, வேம்பு, அத்தி, புன்னை, கடம்பு, வன்னி, மா, பலா, வாழை, தென்னை, கமுகு, கிச்சிலி, நாரத்தை, எலுமிச்சை முதலிய மரங்களை வைத்து வளர்ப்பது சிறப்பு. 32. அமைப்பின் நுழைவாய்ப் பக்கம் போக, மற்ற மூன்று பக்கங்களிலும் சம இடை விட்டு விட்டு, வட்டமாகவோ சதுரமாகவோ, எட்டு இடம் குறித்துக்கொண்டு, ஒவ்வோரிடத் திலும் ஒவ்வொரு செய்குன்று அமைத்து, ஒவ்வொரு குன்றின் மீதும் ஓர் அழகிய கட்டிடம் எழுப்பலாம். முதல் கட்டிடத்தினுள், தெய்வம் ஒன்று என்பது எழுத்தால் எழுதப் பெறலாம். அதில் எவ்வுருவமும் அமைத்தல் கூடாது. இரண்டு முதல் எட்டுவரையு முள்ள கட்டிடம் ஒவ்வொன்றிலும் முறையே, அன்னை, கிறிது, விருஷப தேவர், புத்தர், கிருஷ்ணமூர்த்தி, குமரன், தட்சணாமூர்த்தி ஆகிய இவர்தம் ஓவியம் அமைக்கலாம். இயற்கை, அன்பு, அஹிம்ஸை, தர்மம், நிஷ்காமியம், அழகு, மோனம் என்பன முறை முறையே ஒளிருமாறு ஒவ்வோர் ஓவியமும் அமைதல் நல்லது. இயற்கை முதலியவற்றை எழுத்திலும் வரைந்து ஆங்காங்கே வைக்கலாம். அமைப்பின் நடுவில் ஒரு குன்று செய்து, அதன்மீதும் ஒரு கட்டிடம் எழுப்பிப், புற இதழ் பலவாகவும், அக இதழ் எட்டாகவும் கொண்ட ஒரு தாமரைப்பூ முகிழ்த்ததுபோல ஓர் ஓவியம் பொறிக்கலாம். அக இதழ் எட்டிலும், தெய்வம் ஒன்று, இயற்கை, அன்பு, அஹிம்ஸை, தர்மம், நிஷ்காமியம், அழகு, மோனம் ஆகியவற்றை முறைமுறையே வரையினும் வரையலாம். இந்நடுக்கட்டிடத்தில் உருவங்கள் அமைத்தல் கூடாது. 33. வெள்ளிய துகிலில் தாமரைப் பூ ஓவியம் பொறித்த கொடி சன்மார்க்கத்துக்கு உரியது. 34. தாமரைப்பூ பொறித்த அழகிய சின்னத்தைச் சன்மார்க்க ஊழியர்கள் அணிந்து கொள்ளலாம். 35. குருமார் திருமொழிகளின்வழி நின்றொழுகல், அவை களை ஓதல், பிரசாரம் செய்தில் முதலிய வகையில் வழிபாடு நிகழ்த்தலாம். 36. வழிபாடுகளுள் தலையாயது தியானம். 37. அவரவர் விருப்பத்துக்கியைந்த குருவை அவரவர் தியானிக்கலாம். ஒரு மரத்திலுள்ள கனிகளுள் எதை உண்டா லென்ன? 38. தியானம் தொடக்கத்தில் குருமீது செல்லும். நாளடைவில் அதனைக் குருபோதனைமீது செலுத்தப் பயிலல் வேண்டும். இப்பயிற்சி முதிர முதிரப் பன்மை உணர்வு கெடும். மேல் விளைவு முதலியவற்றை முன்னூலில் பார்க்க. 39. மக்கள் இயல் சார்ந்ததன் வண்ணமாவது. மக்கள் செம்மையுறத் தியானம் பெருந்துணை செய்யும். 40. தன் விளக்கத்துக்கும், பிற நலனுக்கும் தியானமும் தொண்டும் செய்தல் முறைமை. இரண்டும் வழிபாடேயாகும். 41. தன்னலத்துக்கு மட்டும் செய்யும் எதுவும் வழிபா டாகாது. 42. சன்மார்க்கம் மேலும் மேலும் விளங்குதற்குத் தன்னலம் துணை நில்லாது. அதற்குப் பரநல நாட்டமும் தொண்டும் தேவை. 43. பரநல நாட்டமும் தொண்டும் சன்மார்க்கத்துக்கு இன்றியமையாதன. 44. குருமார் வழிபாட்டில், நாடு, நிறம், மொழி, பிறப்பு, மதம் முதலிய வேற்றுமைகளும் - புரோகிதம், சம்பிரதாயம், கண்மூடி வழக்க ஒழுக்கம் முதலிய கட்டுக்களும் - குறுக்கிடலாகாது. குருமார் போதனைகளால் சகோதர நேயம் பரவாதவாறு இவ்வேற்றுமைகளும் கட்டுப்பாடுகளும் தடைசெய்து வருகின்றன. இன்னும் இப்பீடைகளைக் கட்டி அழவேண்டுவ தில்லை. 45. சத் என்னும் இறை, எவ்வுயிரிலும் நீக்கமற நிறைந் திருப்பது என்பது குருமார் போதனை. இதன் கருத்து என்னை? எல்லாருஞ் சகோதரர் என்பது. இச்சகோதர நேயத்தை மக்களிடை வளர்க்கப்போந்தவர் குருமார். அவர் வழிபாட்டில் வேற்றுமைகளும் கட்டுப்பாடுகளும் எற்றுக்கு? 46. வேற்றுமையும் கட்டுப்பாடும் உள்ள இடத்தில் குருமார் ஒளி விளங்கித் தோன்றாது. 47. சன்மார்க்கம் எல்லார்க்கும் உரியது. சகோதர நேயம் அதன் அடிப்படை. அதற்குரிய செயல்கள் அமைப்புகளில் நடை பெறுதல் நல்லது. 48. சகோதரநேயம் பெருகுதற்குக் கலப்புமணம், உடன் உண்ணல், இன்ன பிற, நற்றுணை செய்யும். 49. மன உணர்வு ஒடுங்குநிலை எய்தியவரும், மற்றவர் பொருட்டு வழிபாடு செய்வது பரோபகாரமாகும். 50. சன்மார்க்கப் பிரசாரத்துக்கென்று திருவிழாவுஞ் செய்யலாம். 51. திருவிழா வெறுங்களியாடல் முறையில் செய்தல் கூடாது. 52. ஏழு உருவங்களையோ, எட்டுப் போதனைகள் பொறிக்கப்பெற்ற கொடிகளையோ, எட்டுப் போதனைகளை யுடைய தாமரை ஓவியத்தையோ, வெறும் தாமரை ஓவியத்தையோ அல்லது ஒருங்கே இவையனைத்தையுமோ தாங்கி ஊர்வலம் வரலாம். 53. ஊர்வல முறைகளில் கட்டுப்பாடு வேண்டுவதில்லை. அவ்வவ் விடத்துக்குரிய நிலையை ஒட்டி முறைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம். 54. ஊர்வலத்தில் சன்மார்க்க பஜனை, பிரசாரம் முதலியன நடைபெறலாம். 55. வாத்தியம், இசைப்பாட்டு, இன்ன பிற விரும்பப்படின், அவ்வவ்விடத்தின் இயல்புக்கு ஏற்றபடி, அவைகளைப் பயன்படுத்தலாம். 56. அமைப்பு, திருவிழா முதலியன சன்மார்க்கப் பிரசாரத்துக் கென்று நடைபெறுவன என்பதை, மன்பதை உணரு முறையில் சங்கத்தார் நடந்துகாட்டல் வேண்டும். 57. அமைப்பு முதலியவற்றிற்கென நிதி திரட்டிச் சேமித்து வைத்தலாகாது. அவ்வப்போதைய நிகழ்ச்சிக்குத் தேவையான அளவில் பொருள் சேர்த்து, அவ்வந் நிகழ்ச்சியை நிறைவேற்றி விடுதல் வேண்டும். இதுகுறித்து முன்னூலில் விளக்கஞ் செய்யப் பட்டிருக்கிறது. அதை ஊன்றிக் கவனிக்க. 58. இச்சிறு நூலில் அமைப்பு முறைகளுக்குரிய துறை களையெல்லாம் விரித்துக்கூறல் இயலாது. குறிப்பாகச் சில இங்கே சொல்லப்பட்டன. இவைகளை அடிப்படையாகக் கொண்டு கால தேச வர்த்தமானத்துக்கு எற்ற முறையில் அறிஞர் விரும்புமாறு செய்யலாம். சன்மார்க்க சங்க நோக்கத்துக்கு மாறு படாத முறையில் எதுவும் நிகழ்தல் வேண்டும். இது கருதத் தக்கது. 4. சமரசமும் சீர்திருத்தமும் 1. சீர்திருத்த முறைகளின் விரிவை முன்னூலிற் காண்க. 2. இந்நூலுக்கேற்பச் சில சீர்திருத்த முறைகளைச் சிறப் பாகக் குறிப்பிடுவது ஒழுங்கு. 3. எச்சீர்திருத்தமும் இயற்கைக்கு அரண்செய்வதா யிருத்தல் வேண்டும். இயற்கைக்கு அரண்செய்யாத சீர்திருத்தம் எதுவும் விரைவில் வீழ்ந்துபடும். 4. குருமாரின் சமரசம் பரவாதவாறு தடைசெய்து வருவன பல. அவைகளுள் சிறப்பாக இங்கே குறிக்கத் தக்கன இரண்டு. ஒன்று புரோகிதம்; மற்றொன்று அரசு. 5. புரோகிதத்தால் சாதிமத வேற்றுமையும், அரசால் முதலாளி தொழிலாளி வேற்றுமையும் நாளுக்கு நாள் பெருகிச் சன்மார்க்கத்துக்கு இடையூறு செய்வதாயின. 6. சீர்திருத்த ஞானிகள் இடையிடைத் தோன்றிக் குருமார் போதனைகளிலுள்ள சமரசம் விளங்குமாறு தெய்வம் ஒன்றே என்பதையும், தெய்வ நெறியும் ஒன்றே என்பதையும் அறி வுறுத்திச் சமரசத்துக்குத் தடைகளாக உள்ள கண்மூடி வழக்க ஒழுக்கங்களை மறுத்துச் சென்றிருக்கிறார்கள். சமீபகாலத்தில் இராமகிருஷ்ணர், இராஜாராம் மோகன்ராய், இராமலிங்க சுவாமிகள் முதலியோர் தோன்றிச் சமரசத் துறையில் நின்று, கண்மூடி வழக்க ஒழுக்கங்களை மிக உரமாகக் கண்டித்து, ஒரே தெய்வம், ஒரே நெறி என்பதை வலியுறுத்தினர். இவர்கள் போதனையால் புரோகிதப் புன்மை உலகுக்கு ஒருவாறு விளங்கிச் சாதிமத சமரசம் உலகில் சிற்சில இடங்களில் அரும்பி வருகிறது. அரும்பியும், விளையத்தக்க பயன் விளையாமலிருக் கிறது. காரணம் என்னை? பொருளாதார சமரசம் பரவாமையே யாகும். முன்னைச் சீர்திருத்த ஞானி கட்குப் பொருளாதாரப் பொதுமையை உணர்த்தும் வாய்ப்போ அவசியமோ நேராமற் போயிற்று. அதைப்பற்றி ஆராய வேண்டுவதில்லை. 7. பலதிறச் சமரச போதனைகளுடன் பொருளாதார சமரச போதனையும் சேர்தல் வேண்டும்; சேர்ந்தால் விளையத்தக்க பயன் விளையும். 8. பொருளாதாரப் பொதுமைக்கென்று இந்நாளில் தோன்றியவர் காரல் மார்க். 9. சமரசத் துறைகளுக்கெல்லாம் அடிப்படை பொரு ளாதார சமரசம். 10. பொருண்மை வாழ்வுக்கு இன்றியமையாதது. இன்றி அமையாத அதில் சமரசம் இல்லையெனில், மற்றச் சமரசத் துறைகளால் விளையத்தக்க பயன் எப்படி விளையும்? 11. செயலில் குருமார் போதனைகள் நிறைவேறிச், சன்மார்க்கம் எங்கும் பரவி, மக்களிடைச் சகோதர நேயம் விளங்கவேண்டுமானால், பொருட் பொதுமையை உலகம் பெறுதல் வேண்டும். 12. பொருட் பேச்சு, சன்மார்க்கத்துக்கு எற்றுக்கு என்னுங் கேள்வி சில இடங்களில் பிறக்கலாம். இக்கேள்வி பிறத்தற்கு அடிப்படையாகச் சில கொள்கைகள் இடை நாளில் முளைத்தன. அவைகளைத் திரட்டி இங்கே மூன்றாகக் குறிக்கலாம். (1) கடவுள் வேறு உலகு வேறு என்பது. (2) உலக இன்பத்தைத் துறத்தல் கடவுள் நெறி என்பது. (3) உலகம் பொய் என்பது. இவைகள் இயற்கைக்கு முரண்பட்டன என்பது, பொதுவாக என்னுடைய நூல்கள் பலவற்றிலும், சிறப்பாகச் சன்மார்க்க போதத்திலும் விளக்கப்பட்டுள்ளது. விரிவு அந்நூல்களிற் பார்க்க. 13. கடவுள் நெறி வேறென்றும், உலகியல் வேறென்றும் நினைப்பது தவறு. கடவுளுக்கு உலகம் தேவை. உலகுக்குக் கடவுள் தேவை. கடவுளின்றி உலகமில்லை; உலகமின்றிக் கடவு ளில்லை. இரண்டையும் பிரித்துக் காட்டல் இயலாது. 14. கடவுளும் உலகமும் பிரிவின்றி ஒன்றுபட்டிருந்தலால், கடவுள் நெறி வேறு; உலகியல் வேறு என்று கொள்வது தவறு. உலக இன்பத்தைத் துறப்பதும், உலகம் பொய் என்று கருதுவதும் முறையே கடவுளின்பத்தைத் துறப்பதும், கடவுளைப் பொய் என்று கருதுவதுமாகும். 15. கடவுள் நெறியாகிய சன்மார்க்கத்துக்கு உலகம் தேவை. உலகுக்குப் பொருள் தேவை. ஆகவே, சன்மார்க்கத்துக்கு மற்றச் சமரசங்களுடன் பொருளாதார சமரசமும் தேவை. இதை முன்னாளில் விளக்கியவர் திருவள்ளுவர் உள்ளிட்ட சிலர்; இந்நாளில் விஞ்ஞான முறையில் விளக்கியவர் காரல் மார்க். 16. சாம்ராஜ்யக் கொடுமையால் சன்மார்க்க வளர்ச்சி குலைந்து விட்டது. இக்குலைவைப் போக்க வல்லது மார்க்ஸியம். 17. மார்க்ஸியத்தால் செல்வம் ஒருபால் பெருகி மற்றொருபால் அருகுதல் ஒழியும்; ஏழ்மை நீங்கும்; ஏழைகள் தொகை பெருகாது; உலகம் செம்மையுறும். உலகச் செம்மை சன்மார்க்க ஆக்கத்துக்குத் தேவை. 18. பொருட் பொதுமைக்குக் கொலைப் புரட்சி வேண்டும் என்பது சில இடங்களில் சொல்லப்படுகிறது. இது சன்மார்க்கத் துக்கு மாறுபட்டது. 19. கொல்லாமை, சன்மார்க்கத்தின் தத்துவங்களுள் சிறந்த ஒன்று. 20. பொருளாதார சமரசத்தாரிடைத் தத்துவத்தில் பெரிதும் மாறுபாடு நிகழ்வதில்லை. தத்துவத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முறையில் அவரிடை மாறுபாடு நிகழ்வது உண்டு. 21. தத்துவத்தை நிறைவேற்றக் கொலைப்புரட்சியைக் கைக்கொள்ளல்வேண்டும் என்னும் நியதியில்லை. 22. நியாயவரம்பில் நின்று, அஹிம்ஸையைக் கடைப்பிடித்து, மக்கள் அறிவு விளங்குமாறு சன்மார்க்கப் பிரசாரஞ்செய்து, பொருட் பொதுமைக்கு ஆக்கந்தேடலாம். இது, சன்மார்க்கத்துக்கு உரிய முறை. 23. சன்மார்க்க போதனையில் சகோதர நேயமிருத்தலால், அது, முதலாளி தொழிலாளிகளுக்குள் சகோதர நேயத்தை எழுப்பிப், பொருட் பொதுமையை நாளடைவில் உண்டு பண்ணும். 24. பொருட் பொதுமை உணர்வைப் பகைமையால் தனித்தனி மக்களிடை எழுப்புவது தவறு. சகோதர நேயத்தால் பொதுமையில் அவ்வுணர்வை எழுப்புதல் நலம். 25. பொருளாதார சமரச ஞானிகளில் ஒருவர் கொண்ட முறையையே மற்றவர் கொள்ளல் வேண்டும் என்னுங் கட்டுப்பாடில்லை. 26. முறை, கால தேச வர்த்தமானத்தை ஒட்டித்தானே அரும்புவது. அதில் கருத்துச் செலுத்தி வாதப்போர் நிகழ்த்துவது அநாவசியம். 27. கடவுள் நெறியாகிய சன்மார்க்கம், பொருட் பொதுமைக்கு மாறுபட்டது என்று அத்துறைவல்லாருள் ஒருசாரார் கூறுதலால், அவர்தம் போதனையைச் சன்மார்க்கர் எப்படி ஏற்பது என்னும் ஐயம் சில இடங்களில் நிகழலாம். 28. சன்மார்க்கத்துக்கு அரண் செய்யக் கூடிய போதனை களையே சன்மார்க்கர் கொள்வது நலம். 29. ஒருவர் போதனையிலேயே சன்மார்க்கத்துக்கு அரண் செய்வதும் முரண் செய்வதும் இருக்கலாம். பகுத்தறிவால் அரண் செய்வது எது என்பதை ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும். 30. பகுத்தறிவு கொண்டு, ஒன்றை ஆராய்ந்துகொள்ளு தற்கோ தள்ளுதற்கோ ஒவ்வொருவர்க்கும் உரிமை உண்டு. 31. பொருட்பொதுமை கருணையை அடிப்படையாகக் கொண்டது. 32. எல்லாரும் பொருளின்பத்தைப் பொதுமையில் நுகர்தல்வேண்டும் என்பது பொருட்பொதுமையின் நுட்பம். இது கருணையன்றோ? 33. ஏழைகள் தொகையைப் பெருக்கிச் சோறிடுவது கருணையாகாது. ஏழ்மையைப் போக்குவது கருணையாகும். விளக்கத்துக்கு முன்னூல் பார்க்க. 34. கருணையுள்ள இடத்தில் சமரசம் இருத்தல் இயல்பு. 35. கருணையுடையார் அனைவரும் சன்மார்க்கரேயாவர். 36. கருணை, சன்மார்க்கத்தின் உயிர். 37. சத் என்பது முழு கருணையுடைய ஒன்று. 38. பொருளாதார சமரசத்தார், புரோகித மார்க்கத்தை விரும்புவதில்லை. அதைக்கொண்டு, அவர் சன்மார்க்கத்தை வெறுப்பதாகக் கொள்ளலாகாது. புரோகிதமார்க்கம் வேறு; சன்மார்க்கம் வேறு. 39. புரோகித மார்க்கம் அருக அருகச் சன்மார்க்கம் ஆக்கம்பெறும். 40. கடவுள் நெறி என்னும் பெயரால் புரோகிதம் நடமாடுகிறது. அது கடவுள் நெறியன்று. 41. குருமார் பெயராலும் புரோகிதம் உலவிவருகிறது. குருமார்க்கும் புரோகிதத்துக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. 42. குருமார் போதனைகள் நேரிய முறையில் பரவாதவாறு தடைசெய்து வருவது புரோகிதம். இத்தகைப் புரோகிதத் துக்கும் குருமாருக்கும் எவ்வழியில் தொடர்பு இருத்தல் கூடும்? 43. குருமார் போதனைகளிலும் புரோகிதம் திரிபுகள் செய்திருக்கிறது. அத்திரிபுகளைப் பகுத்தறிவால் உணர்ந்து, அவைகளை ஒதுக்குதல் நல்லது. 44. கல்வி அறிவு ஒழுக்கத்திற் சிறந்து, உண்மை காண எதையும் பகுத்தறிவால் ஆராய்ந்து ஆராய்ந்து பண்பட்ட நெஞ்சிற்கு இது திரிபு? இஃது உண்மை என்பது இனிது விளங்கும். 45. பண்பட்ட நெஞ்சிற்கு இயற்கை அன்னையின் அருள் கிடைத்தல் இயல்பு. 46. பண்பட்ட நெஞ்சுடைய நன்மக்கள் வழித்தீமையைப் போக்க இயற்கை அன்னை எப்பொழுதும் முனைந்தே நிற்கிறாள். அவள் துணைபெற மக்கள் தங்களைப் பண்படுத்திக் கொள்ளல்வேண்டும். 47. பண்படாத மனத்துக்கு உண்மை விளங்காது. 48. குருமார் வரலாறுகளும் சரித்திர முறையில் பெரிதும் உலகில் வழங்கவில்லை. புரோகிதப் புனைந்துரைகள் பெரிதும் குருமார் வரலாறுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. 49. ஒரே குரு, ஒரு சாராரால் போற்றப்படுகிறார்; மற்றொரு சாராரால் தூற்றப்படுகிறார். இதற்குக் காரணம் என்னை? மதப்பித்தே யாகும். 50. மதப்பித்து, புரோகிதத்தின் பிள்ளை. 51. மதப்பித்து ஒரு சார்பில் அளவுகடந்த போற்றலையும், மற்றொரு சார்பில் அளவுகடந்த தூற்றலையும் எழுப்பும். 52. மதப்பித்து வளர வளரப் புரோகிதமும் வளர்ந்து வரும். மதப்பித்தால் புரோகிதத்தின் வாழ்வு நடந்து வருகிறது. 53. புரோகிதப் புனைந்துரைகளாலாகிய குருமார் வரலாறுகளை நம்புதல் கூடாது. அவைகளை மொழிக்குரிய இலக்கியங்களாகக் கொள்ளலாம். 54. சன்மார்க்க சங்க நோக்கத்தைப் பிரசாரஞ் செய்யும் போது, அந்நோக்கத்துக்கு மாறுபட்ட அமைப்புகளோ ஆட்சி முறைகளோ பிறவோ ஆங்காங்கே காணப்படின், அவைகளை வன்மையால் தாக்குதல் கூடாது. அமைப்புகளும், ஆட்சி முறைகளும், பிறவும் மக்களல்ல. அவைகள் மக்களால் கோலப்படுவன. மக்கள் சன்மார்க்கத்தில் திரும்பினால், அமைப்பு, ஆட்சிமுறை முதலியனவும் சன்மார்க்கத்தில் திரும்பும். ஆகவே, அன்பார்ந்த சன்மார்க்கப் பிரசாரத்தால், எதையும் ஒழுங்குபடுத்தவே முயலல் வேண்டும். வேறுவித வன்செயலில் புகுதல் கூடாது. அது சன்மார்க்க சங்க முறையாகாது. 55. மூர்க்கநெறி சன்மார்க்கமாகாது. எக்காரணம் பற்றியும் எதன் பொருட்டும் சன்மார்க்க சங்கத்தார் மூர்க்கத் துறையில் இறங்குதலாகாது. 56. சன்மார்க்கப் பிரசாரம் முதலியன அன்புவழியில் நிகழ்தல் வேண்டும். 57. தீமையைத் தீமையால் போக்க முயலலாகாது. அம்முயற்சி தீமையையே பெருக்கும். 58. தீமையைப் பிரசாரம் முதலியவற்றால் களைய முயல்வது அறம். 59. சீர்திருத்தப் பிரசாரகர், முதலாவது தம்மைப் பண்படுத்திக் கொள்ளல்வேண்டும். அவர்கள் நெஞ்சில் இரக்கம் இருத்தல் வேண்டும்; பகைமை இருத்தல் கூடாது. 60. பகைமையறத் தம்மைப் பண்படுத்திக் கொள்ளாதவர் சீர்திருத்தத் தொண்டில் இறங்குதலாகாது. 61. சீர்திருத்தத்துக்குரிய முறைகளுள் சிறந்த ஒன்று நோன்பு. உண்மை நோன்பால் எல்லாம் ஒழுங்குபடும். நோன்புக்கு உள்ள ஆற்றல் பெரிது. நோன்பு முறைகள் முன்னூலில் சொல்லப் பட்டுள்ளன. 62. நாடு, நிறம், மொழி, சாதி, மதம் முதலியவற்றைப் பற்றியெழும் வேற்றுமை யுணர்வு ஒழிவதாக. சகோதர நேயம் பெருகுவதாக. உலக முழுவதும் சன்மார்க்கம் பரவுவதாக. 63. இயற்கையை உடலாக்கொண்டு, என்றும் மாறுதலின்றி, எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் ஒன்றாய், உண்மையாய், அறிவாய், அன்பாய், இன்பாய், அழகாய் உள்ள இறை வாழ்க. 64. இறைக்கு உடலாய் நின்று, திருவிளையாடல் புரியும் இயற்கை வாழ்க. 65. இயற்கை - இறைவழி நின்று, உலகை நடாத்தி வருங் குருமார் வாழ்க. 66. கால தேச வர்த்தமான நிலைமைக்கு ஏற்றவாறு, அவ்வப்போது குருமார்வழிப் பிறந்த அருள்மொழிகள் வாழ்க. 67. அருள்மொழிகளின் பொருளாயுள்ள சன்மார்க்கம் வாழ்க. 68. சன்மார்க்க சங்கம் வாழ்க. திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் சன்மார்க்க ஊழியன்  சமரச தீபம் முன்னுரை உலகம் இப்பொழுது எந்நிலையில் இருக்கிறது? அதைச் சொல்லலும் வேண்டுமோ! உலகம் இயற்கைச் சன்மார்க்கத்தி னின்றும் வழுவிச் செயற்கைத் துன்மார்க்கத்தில் வீழ்ந்து வருகிறது. இது கண்கூடு. இவ்வீழ்ச்சிக்கு அடிப்படையான காரணம் என்னை? மக்கள் அறியாமையால் அரசியலுக்கும், புரோகிதத்துக்கும் அடிமைப்பட்டு இரையாகி வருவதைச் சிறந்த காரணமாகக் குறிக்கலாம். ஆங்காங்குள்ள அரசியல் வாதிகள், பேர், புகழ், தன்னலம் முதலியவற்றைக் குறிக்கொண்டு, குடியாட்சி என்றும் - கோனாட்சி என்றும் - குடிக்கோனாட்சி என்றும் - பலதிற அரசுகளை வகுத்து, மக்களை மயக்கி, ஒரு பக்கம் வஞ்சித்து வருகிறார்கள்; மற்றொரு பக்கம் புரோகிதர்கள் நின்று, பலதிறக் கண்மூடி வழக்க ஒழுக்கங்களை நாளுக்கு நாள் பெருக்கி மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்கள். இவ்விரு வழியிலும் மன்பதை நெருக்குண்டு துன்புறுகிறது. வஞ்சனைகள் பெருகப் பெருக, உலகம் சன்மார்க்கத்தினின்றும் வழுக்கி வீழ்தல் இயல்பன்றோ? துன்மார்க்க வீழ்ச்சிக்கு அழிவுவேலை ஒருபாலும், சன்மார்க்க எழுச்சிக்கு ஆக்கவேலை மற்றொருபாலும் நடந்து வருதல் வேண்டும். அழிவும் ஆக்கமும் சேர்ந்த ஒன்றே சீர்திருத்தம் என்பது. இந்நாளில் உலக முழுவதும், சீர்திருத்தத்தை விரும்புவது வெள்ளிடை மலை. இவ்விருப்பம் இயற்கை அன்னையின் ஏவலால் எழுவதாகும். இயற்கை அன்னை உலகைச் செப்பஞ் செய்ய, மறக்கருணையையும் அறக்கருணையையும் சொரிந்து வருவதை அறிஞர் தமது கூர்த்த மதியால் உணரலாம். மறக்கருணை அழிவுக்குத் துணைசெய்வது; அறக்கருணை ஆக்கத்துக்குத் துணை செய்வது. இயற்கை அன்னையின் வழி நின்று தொண்டாற்ற வேண்டுவது அன்பர் கடமை. உலகில் பலதிற இயக்கங்கள் எழுந்துகொண்டே இருக் கின்றன. அவ்வவ்வியக்கத்தில் ஈடுபடும் அறிஞர், அதை அதைச் சன்மார்க்கத்தில் செலுத்த முயலல் வேண்டும். இம்முயற்சிக்கு ஒல்லும் வகையாதல் துணைபோக வேண்டு மென்பது எனது தணியா வேட்கை. பலதிற மகாநாடுகளில் தலைமை வகிக்கும் பேறு எனக்கு அடிக்கடி வாய்ப்பதுண்டு. அம்மகாநாடுகளில் குறிக்கத்தக்கன சில. அச்சிலவற்றுள் மாயவரத்தில் கூடிய சமரச சன்மார்க்க மகாநாடும் ஒன்று. அம்மகாநாடு, ஒருவித சரித்திர சம்பந்த முடையதாகலின், அதைப்பற்றி இம்முன்னுரையில் மிகச் சுருங்கிய முறையிலாதல் கூறுதல் பொருத்தமென்று யான் கருதுகிறேன். வாழ்வில் பெறுதற்கு எளியன பல; அரியன சில. அவ்வரியனவற்றுள்ளும், அரியது ஒன்றுளது. அஃது எது? அதுவே நட்பு என்பது. செயற்கரிய யாவுள நட்பின் என்றார் திருவள்ளுவனார். யான் பலதிற உலகில் உலவும் பேறுடையேன். தமிழ் உலகு, சமய உலகு, அரசியல் உலகு, தொழிலாளர் உலகு, சீர்திருத்த உலகு முதலிய பல உலகங்கள் எனக்கு உண்டு. இப்பல உலகில் உலவுவது எனது இயல்பாகிவிட்டது. ஒவ்வோர் உலகிலும் உரிய நண்பர் சிலர் எனக்கு வாய்த்துள்ளனர். பொல்லாதது என்றும், நட்புக்குரிய ஈரமில்லாதது என்றும் சொல்லப்படும் இக்கால அரசியல் உலகிலும் இரண்டொரு நண்பரை யான் பெற்றேன். அவருள் இங்கே குறிக்கத்தக்கவர் ஒருவர். அவர், திருமிகு - ஈ.வே.இராமசாமி நாயக்கர் ஆவர். திருமிகு - இராமசாமியாரது நட்பு, முதன் முதல் எனக்கு 1919-ம் ஆண்டில் கிடைத்தது. அன்று முதல் அவரும் யானும் நண்பராகித் தமிழ்நாட்டுக் காங்ரஸில் சேவை செய்துவந்தோம். 1925-ம் ஆண்டு முதல், நண்பர் நாயக்கருக்குக் காங்கர பற்று, படிப்படியாகக் குறையலாயிற்று. இதற்குக் காரணம், சிலகூட்டத்தார் சூழ்ச்சி என்று சொல்லப்பட்டது. 1925-ம் ஆண்டின் இறுதியில் காஞ்சியில் எனது தலைமையில் தமிழ்நாட்டுக் காங்கிர (தமிழ் மாகாண மகாநாடு) கூடிற்று. அதில் நண்பர் இராமசாமியாரும், மற்றுஞ் சிலரும் சேர்ந்து ஒரு தீர்மானம் கொணர்ந்தனர். தலைவன் என்ற முறையில் நீதிநெறி நின்று, பொருந்திய காரணங்கூறி, அத்தீர்மானத்தைத் தள்ளும் நிலைமை எனக்கு ஏற்பட்டது. அச்செயல், நண்பர் நாயக்கருக்குச் சீற்றமூட்டிற்று. mj‹ gadhf, mt®, fh§»uÞ bfhŸif¡F khWg£l ‘#ÞoÞ! கட்சிக்கு வெளிப்படையாக ஆதரவு நல்கத் துணிவு கொண்டனர். அதனால், அவருக்கும் எனக்கும் அரசியலில் கருத்து வேற்றுமை அரும்பலாயிற்று. 1926-ம் ஆண்டு இறுதியில், அதுபோழ்து தமிழ்நாட்டுக் காங்கர நிருவாகக் கூட்டத்தவரா யிருந்தவருள் பெரும் பான்மையோர் ஒன்றுசேர்ந்து (கான்பூர்) காங்கர நிறை வேற்றிய தீர்மானங்கள் சிலவற்றுக்கு மாறுபட்டு நடக்க உறுதி கொண்டனர். அதற்குத் துணைநிற்க எனது மனச் சான்று இடங் கொடுக்கவில்லை. அதனால், தமிழ் நாட்டுக் காங்கர நிருவாகக் கூட்டத் தொடர்பைமட்டும் யான் அறுத்துக் கொண்டேன்; காங்கரஸில் சாதாரண அங்கத்தினனாக இருந்து காலங்கழிக்கலானேன். நண்பர் இராமசாமி நாயக்கர் முயற்சியால் 1927-ம் ஆண்டில் மாயவரத்தில் ஜடி கட்சிச் சார்பில் ஒரு பெரிய மகாநாடு கூடிற்று. அம்மகாநாட்டிற்கு இப்பொழுது சென்னை அரசாங்கத்தில் சட்ட அமைச்சராக உள்ள ஸர். கிருஷ்ணன் நாயர் தலைமை வகித்தார். தமிழ்நாட்டில் கூடிய பல மகாநாடுகளில் அதனை ஒரு சிறந்த மகாநாடென்றே கூறலாம். அம் மகாநாட்டுப் பந்தரில் எனது தொண்டும் ஏதாவது நிகழ்தல் வேண்டும் என்று நண்பர் நாயக்கர் உள்ளிட்ட சிலர் விரும்பினர். அவ்விருப்பம் சமரச சன்மார்க்க மகா நாடாக உருக்கொண்டது. அதற்குரிய தலைமைப் பதவி எனக்கே வழங்கப்பட்டது. இரண்டு மகாநாடுகளும் ஒரே இடத்தில் கூட நேர்ந்தமை யால், ஜடி கட்சித் தலைவர்களில் ஏறக்குறைய எல்லாரும் சமரச சன்மார்க்க மகாநாட்டிலும் கலந்து அளவளாவினர். மகாநாடு முடிந்த பின்னை, ஜடி கட்சித் தலைவர்களிடம் விடைபெற யான் போனேன். அப்பொழுது, ஜடி கட்சியின் பெருந்தலைவரும், இராஜ தந்திரத்தில் தலைசிறந்த வரெனப் பேர்பெற்றவரும், எனது கெழுதகை நண்பருள் ஒருவருமாகிய பனகால் ராஜா அவர்கள், என்னைப் பார்த்து, உங்களுக்கு எங்கள் அரசியல் பிடிப்பதில்லை; உங்கள் சமூக சீர்திருத்தம் எங்களுக்குப் பிடிக்கிறது. இது சன்மார்க்க மகாநாட்டில் நன்கு விளங்கிவிட்டது. Mfnt, r_f Ó®âU¤j¤âš eh« midtU« V‹ x‹Wnr®ªJ ciH¤jš TlhJ? என்று கேட்டார்கள். அப்படியே செய்யலாம் என்று புன்முறுவலுடன் கூறி, யான் விடை பெற்றுத் திரும்பினேன். சில திங்கள் கழிந்தன. நண்பர் நாயக்கரது குடியரசு பத்திரிகையினின்றும் புதுப்புதுப் பாணங்கள் கிளம்பின. அப்பாணங்கள் எனக்கென்றே செப்பஞ் செய்யப்பட்டனவோ என்று யான் ஐயுற்றேன்; அவ்வாறே உலகமும் ஐயுற்றது. கடவுளைப் பற்றியும், அடியார்களைப் பற்றியும் யான் மாறுபடும் முறையில் சுயமரியாதை என்னும் பெயரால் குடியரசில் பாணங்கள் பூட்டப்பட்டன. அப் பாணங்களால், சன்மார்க்க மகா நாடு கொண்ட சமூக சீர்திருத்த முறைகளைப் பரப்புதற்கு நண்பர் நாயக்கருடன் கலந்து தொண்டு செய்தல் வேண்டும் என்று யான் கொண்ட எண்ணம் பாழாயிற்று. சமூக சீர்திருத்தத்தில் நாயக்கருக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை இல்லையாயினும், கடவுள் நெறியில் அவருக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. அவ்வேற்றுமை நாளுக்குநாள் பெருகலாயிற்று. அப்பெருக்கால் தமிழ்நாட்டில் பெரும் புயற்காற்றும் வீசிற்று. பின்னே நாளடைவில், சுயமரியாதை என்னும் பெயர், ஓர் இயக்கமாகப் பரிணமித்தது. இவ்வியக்கம் தோன்றுதற்குக் காரணமாக நின்றது, மாயவரத்திற் கூடிய சமரச சன்மார்க்க மகா நாடாகலான், அதைப் பற்றி இம்முன்னுரையில் பிரதாபித்தல் நேர்ந்தது. நண்பர் நாயக்கர் முயற்சியும், எனது தலைமைக் கூட்டுறவும் ஒன்றிய சன்மார்க்க மகா நாட்டின் பயனாகச் சுயமரியாதை இயக்கம் என்னுங் குழவி பிறந்தமையால், அதற்குத் தந்தை நாயக்கரென்றும், தாய் யான் என்றும், அக்குழவி தந்தைவழி வளர்ந்து வருகிறது என்றும் யான் விளையாட்டாகச் சொல்வது வழக்கம். மாயவரத்திற் கூடிய சமரச சன்மார்க்க மகா நாட்டுத் தலைமை உரை, எனது தலைமை உரைகள் சிலவற்றைக் கொண்ட தமிழ்த் தென்றல் என்னும் நூலில் முதற்கண் ஒளிர்வது. அதனைத் தனி நூலாகவும் வெளியிடுதல் வேண்டும் என்று சில நண்பர் விழைந்தனர். அவர் விழைந்தவாறு, அத்தலைமை உரையை இச்சிறு நூலாக்கி, இம் முன்னுரையுடன் வெளியிடலானேன். நூலின் உள்ளுறைக் கேற்பச் சமரச தீபம் என்னும் பெயர் நூலுக்குச் சூட்டப்பட்டது. இந்நூற்கண், சமரசம், சன்மார்க்கம், சீர்திருத்தம் முதலியன சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. சன் மார்க்க போதம் என்னும் தலைப்புக்கொண்ட வேறொரு நூல் என்னால் இயற்றப்பட்டிருக்கிறது. அதன்கண், சன்மார்க்க விளக்கம், சமரச நுட்பம், சத்தின் இயல், இயற்கைக் கூறுபாடு, கண்மூடி வழக்க ஒழுக்க இழிவு, சீர்திருத்தம், சமதர்மம், சங்க அமைப்பு முதலியன விளக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டிருக்கின்றன. சமரச சன்மார்க்கத்தைப் பற்றிய விரிவை அந்நூலிற் காண்க. இராயப்பேட்டை 26 - 1 - 1934 திருவாரூர்-வி.கலியாணசுந்தரன் சமரச தீபம் சாதிநிற மொழிநாடு சமயவெறிச் சண்டையெலாந் தாண்டித் தாண்டி நீதியிலே விளங்குகின்ற நின்மலமாய் நித்தியமாய் நிறையாய் அந்தம் ஆதிநடு வில்லாத அகண்டிதமாய் ஆனந்த அறிவாய் நின்று போதலொடு வரவற்ற பூரணமே சுதந்திரமே போற்றி போற்றி திரு.வி.க. சகோதரிகளே! சகோதரர்களே! இச்சமரச மகாநாடு ஈண்டுக் கூடுமாறு முயன்று உழைத்த கெழுதகை நண்பர்கட்கும், உழுவலன்பர்கட்கும் எனது நன்றியறிதலைச் செலுத்துகிறேன். இம்மகாநாட்டில் தலைமை ஏற்றுக் கடனாற்றும் பேற்றைச் சிறியேற்கு நல்கிய உங்கட்கும் எனது வணக்கம் உரியதாக. இவ்வூழி, மகாநாட்டு ஊழி என்று கூறல் மிகையாகாது. இந்நாளில் உலகில் பலதிற மகாநாடுகள் கூடுகின்றன. அவற்றினிடையே ஒரு பாங்கர் இச்சிறு மகாநாடுங் குழுமி யிருக்கிறது. இக்கூட்டம் பயனற்றது என்று கருதுவோருமுளர்; இது பித்தர் ஈட்டம் என்று எள்ளி நகையாடுவோருமுளர்; இன்னும் வேறு வேறு வழியில் இதைக் குறை கூறுவோருமுளர். இவர் அனைவர்க்கும் இம்மகாநாட்டின் இன்றியமையாமை நாளடைவில் புலனாதல் ஒருதலை. பல்லாற்றானும் உலகை அலைத்துவரும் மறத்துறைகளை வீழ்த்தி, அறத்துறைகளை நிலைபெறுத்தவல்லது சமரச சன்மார்க்கம் ஒன்றே என்று உலகம் உணருநாள் சேய்மையில் இல்லை. சமரச சன்மார்க்கத்துக்குரிய ஒரு சில நோக்கங்களைக் குறிக்கொண்டு, ஈண்டியுள்ள இம்மகாநாட்டில், சமரச சன்மார்க்கத்தின் பெற்றியை விரித்துரைத்தல் அநாவசியம். ஆயினும், அது குறித்துச் சில உரை பகர்ந்து மேலே செல்கிறேன். சமரச சன்மார்க்கம் சமரசம் யாண்டுளதோ ஆண்டுச் சன்மார்க்கமும் உண்டு; சன்மார்க்கம் ஒன்றே சன்மார்க்கம் யாண்டுளதோ ஆண்டுச் சமரசமும் உண்டு. ஆகவே சமரசத்தைச் சன்மார்க்கமென்று, சன்மார்க்கத்தைச் சமரசமென்றுங் கொள்ளலாம். உலகிலுள்ள பன்மார்க்கங்கள் சமரசங் கூட்டாமை யானும், சமரசங் கூட்டுதலானும், உலகம் சன்மார்க்கத்தைச், சமரச சன்மார்க்கம் என்று வழங்கி வருகிறது. சன்மார்க்கத்தில் சமரசம் பொலிதலால், அதனைச் சமரசம் என்னும் அடையின்றிச் சன்மார்க்கம் என்று கொள்வது சாலும்; சமரச சன்மார்க்கம் என்று விளக்கமாகக் கோடலும் பொருந்தும். பன்மையில் ஒருமை உலகம் பலவிதம் என்பது பழமொழி. பலதிறப்பட்ட உலகில் சமரசம் எங்ஙனம் நிலவும் என்று சிலர் கருதலாம். உலகம் பலவிதம் என்பது எவரும் அறிந்ததொன்று. ஆனால், அப்பன்மை, ஒருமைச் சமரசத்தைக் கூட்டாது என்று கோடல் தவறு. உலகையும் உலகிலுள்ள பல பொருள்களையும் உற்று நோக்குழிப் பன்மை வழி, ஒருமை நிலவலையே, அவை அறிவுறுத்தல் காணலாம். நமது யாக்கையை எடுத்துக் கொள்வோம். பல உறுப்புக்கள் சேர்ந்த ஒன்றே யாக்கை என்பது. பன்மை உறுப்புக்களிடை ஒருமை யாக்கை ஒளிர்தல் கருதற்பாலது. பல செடி கொடி மரம் முதலியவற்றால் ஆக்கப் பட்ட ஒன்று, காடு என்று வழங்கப்படுகிறது. எனவே, பன்மையில் ஒருமை மிளிர்தலே நியதி என்க. அவ்வொருமை தேறாது, பன்மையில் மட்டும் பார்வை செலுத்தல் இடர் விளைக்கும். ஆதலால், பன்மையில் ஒருமை காண்டலே அறிவுடைமை. உலகை உற்று நோக்குவோம். உலகம், நாடு, மொழி, இனம் முதலியவற்றால் ஆக்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். நாடு ,மொழி, இனம் முதலிய பன்மைகளில்மட்டும் கருத்தைப் பதித்து, அதனதன் அளவில் சமரசங்கொண்டு, மக்கள் வாழ்வு நடாத்தப் புகுங்கால், பொறாமையும் போரும் பிணக்கும் நிகழ்கின்றன. நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகள் இல்லா தொழியுமோ? ஒருபோதும் அவை யில்லாதொழியா. அவை யாவும் இயற்கையில் அமைந்திருப்பன. அவை எங்ஙனம் ஒழியும்? வேற்றுமையுள்ள மட்டும் பொறாமை, போர், பிணக்கு நிகழல் இயல்பு என்று சிலர் முடிவு காண்கிறார். அம்முடிவு பொருந்திய தொன்றன்று. யாக்கையில் உறுப்பு வேற்றுமைகள் இருக்கின்றன. இவ்வேற்றுமை கொண்டு, உறுப்புக்கள் ஒன்றோ டொன்று பிணங்கின், யாக்கை நிலை என்னாம்? யாக்கையின் நலனுக்கு உறுப்புக்கள் யாவும் ஒன்றி உழைக்கின்றன. ஒன்றிய உழைப்பால் உறுப்புக்களும் நலனுறுகின்றன. நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகொண்டு, மக்கள் ஒருவரோடொருவர் பிணங்கிப் போரிடுவரேல், உலகில் அமைதி நிலவாது. அமைதியின்மை, பிணங்கிப் போரிடும் மக்கட்கும் இன்பமூட்டாது. மக்கள் பிணங்கிப் போரிடாது ஒன்றி வாழவரேல், அவர்களிடை இசைந்த இன்பம் செறியும். மக்கள் வாழ்வின் நோக்கம் என்னை? இன்பம் நுகர்வதன்றோ? வீண் போராலும் பிணக்காலும் எற்றுக்கோ பெறற்கரிய இன்பத்தை அருமை மக்கள் இழத்தல் வேண்டும்? வேற்றுமைகளினிடையே ஒற்றுமை காணின் இன்பம் நுகரலாம். ஒற்றுமையுணர்வு, வேறு பாடுகளால் போரையும் பிணக்கையும் உண்டுபண்ணாது; அவைகளினிடை அன்பும் ஆர்வமும் உண்டுபண்ணும். ஆதலால், வேற்றுமையில் ஒற்றுமை காணவே மக்கள் முயலல்வேண்டும். சத் மார்க்கம் ஒற்றுமையுணர்வை உலகிற் கூட்டவே பல பெரியோர் ஆங்காங்கே தோன்றிச் சன்மார்க்க போதனை செய்தனர். சன்மார்க்கம் என்பது, சத்தெனுஞ் செம்பொருளை யுணர்த்தும் மார்க்கமாகும். சத் - உண்மை. அல்லது கடவுள்; மார்க்கம் - நெறி. உண்மைநெறி அல்லது கடவுள் நெறியே சன்மார்க்க மென்பது. இச்சன்மார்க்கமே உலகில் சமயம் என்னும் பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகளில் நிலைபேறாக நின்று, வேற்றுமையுணர்வில் பழுத்த மக்கள், சன்மார்க்க மெனுஞ் சமயத்தையும் கூறிட்டு, வேறுபடுத்திப் போர்களைக் கிளப்பினார்கள். ஒரே கடவுள் உலகிலுள்ள சமயங்கள் யாவும் சத்தெனுஞ் செம்பொருள் ஒன்றையே குறிக்கொண்டு நிற்கின்றன. அவ்வந்நாட்டார், தத்தம் மொழியில் கடவுளைப் பல பெயரால் போற்றுகிறார். அப்போற்றலில் மொழி வேற்றுமையன்றிப் பொருள் வேற்றுமை யில்லை. ஆங்காங்குத் தோன்றிய அருளாளர் அறிவுறுத்திய சத் மார்க்கம், பின்னை நாளில் அவரவர் பெயரால் பலப்பல சமயங்களாக வழங்கப்பட்டது. அப்பெயர் வேற்றுமைகள் உலகில் சமயப் போர்களாக முடிந்திருக்கின்றன. நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகளுள் சமயமும் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. மக்கள் அறியாமையால், பல சமயங்களைக் கற்பித்துக்கொண்டாலும், அச்சமயங்களின் உள்ளக்கிடக்கை ஒரு பொருளையே பற்றி நிற்றல் வெள்ளிடைமலை. இது குறித்து, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்னும் நூலின் இறுதியில் சிறிது விரித்துக் கூறியுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. 1போதிய ஓய்வு கிடைப்பின்சன்மார்க்கத்தைப்பற்றி விரிந்த தனி நூலும் ஒன்று எழுத எண்ணி யிருக்கிறேன். எந்நாட்டாரும், எம்மொழியினரும், எவ்வினத்தாரும், எல்லாரும் சத்தெனுஞ் செம்பொருளாம் ஒரு கடவுளையே பல்வேறு பெயரால் போற்றுகிறார். நாடு, மொழி, இனம் முதலியவாற்றான் வேறுபட்டார்போல வாழும் மக்களை, ஒற்றுமைப்படுத்தவல்லது, சத்துக்குரிய மார்க்கம் ஒன்றே என்று அறுதியிட்டுக் கூறலாம். ஆதலால், நாடு, மொழி, இனம் முதலிய வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டு, இன்பம் நுகர்தற்கு, மக்கள் சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்தொழுகல் வேண்டும். அவ்வொழுக்கத்தான் ஒருமை இன்பம் நுகரலாம். சத்தும் மார்க்கமும் சத் விளக்கம் சத்தெனுஞ் செம்பொருள் தோற்றக் கேடுகளின்றி, என்றும் ஒரு பெற்றியா யிருப்பது; எங்கும் நீக்கமற நிறைந் திருப்பது. அதற்கு உடலில்லை; உறுப்பில்லை. அது மாற்ற மனங்கடந்து நிற்பது; சொலற்கரிய சூழலுடையது; எல்லாமாய் அல்லவுமாய் விளங்குவது; எல்லாவற்றையும் இயக்குவது. அஃதின்றி ஓரணுவும் அசையாது. அத்தகைய ஒன்றன் உண்மையை எங்ஙனம் உணர்வது? சத்தும் இயற்கையும் கண்ணுக்குப் புலனாகும் இயற்கை வடிவங்களின் வாயிலாகவே பரம்பொருளின் இருப்பை உணரல்வேண்டும். இயற்கையை ஆராய ஆராயச் சத்தெனுஞ் செம்பொருளின் உண்மை புலனாகும். ஊர் பேர் ஒன்றுமில்லா ஒன்றன் இருப்பை உணர்த்துங் கருவி, இயற்கை என்று சுருங்கச் சொல்லலாம். இயற்கையின் வாயிலாகவே சத்தெனுஞ் செம்பொருள் தன் அருட்டொண்டை நிகழ்த்தி வருகிறது. ஆகவே, சத்தை உணர்த்தும் மார்க்கம், இயற்கை இயற்கை என்பது கருதற்பாலது. சத்தெனுஞ் செம்பொருட்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை என்னென்று கூறுவது? அதை எழுத்தால் எழுதல் முடியுங்கொல்! சத்தெனுஞ் செம்பொருளாகிய இறைவனை என் அப்பன் என்றும், இயற்கையை என் அன்னை என்றும் யான் கொள்கிறேன். செயற்கைச் சேறு இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தல் இறைநெறி நிற்பதாகும். இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தாது, செயற்கைச் சேற்றில் வீழ்வது, இறைநெறி நிற்பதாகாது. இயற்கையோடியைந்து நிற்குமாறு படைக்கப்பட்ட மகன், நெறியல்லா நெறியாகிய செயற்கையில் வீழ்ந்து கிடத்தலால், அவன், தான் பிறந்த நாடு, தான் பேசும் மொழி, தனக்குரிய இனம் முதலிய கட்டுப்பட்ட சிலவற்றைக் கடவுளாக்கொண்டு, மற்ற நாடு மொழி இனம் முதலியவற்றோடு பிணங்கி, இடரிழைத்து வருகிறான். ஒருவன், தான் பிறந்த நாடு மொழி இனம் முதலிய வற்றில் சத்தெனும் செம்பொருளிருப்பதுபோல, மற்ற நாடு மொழி இனம் முதலியவற்றிலும் அப்பொருளிருத்தலை உணராமையால், அவன் வேற்றுமை உணர்வால் இடர்ப் படுகிறான். யாண்டுஞ் செம்பொருளுண்மையை உணர்வனேல், அவன் இடர்ப்படாது இன்பம் நுகர்வன். இறையின் ஒருமையும், இயற்கையின் பன்மைக்கோலமும் சத்தெனுஞ் செம்பொருள் என்றும் ஒரு பெற்றியாய்த் திரிபு முதலிய மாறுபாடின்றியிருப்பினும், அதனையுணர்ந்துங் கருவியாயுள்ள இயற்கை, பல்வேறு வடிவாகப் பரிணமித்துக் காட்சியளிக்கிறது. பல நாடுகள், பல மொழிகள், பல வழக்க ஒழுக்கங்கள் முதலிய யாவும் இயற்கை அன்னையின் திருவிளையாடல்கள். பன்னாடு பன்மொழி முதலியன இயற்கை அமைப்புக்கள். இயற்கையோடியைந்த வாழ்வு செலுத்து வோர்க்குப் பன்மை வடிவங்களின் பெருமை புலனாகும். பன்மையின் மாண்பு இயற்கை அன்னை பன்மை வடிவங்களாக ஏன் காட்சி யளிக்கிறாள்? mjdhy‹nwh cy»š nghU« ãz¡F« vG»‹wd? என்று சிலர் ஐயுறலாம். பன்மை இல்லையேல் உலகம் நடைபெறாது; மனிதன் கை கால் உறுப்புக்களின்றித் திண்மையாக ஒரே பிண்டமாகப் பிறப்பனேல், அவனால் என் செய்தல் இயலும்? இங்ஙனே பிறவும். மனிதனது ஒவ்வொர் உறுப்பும் தன் தன் கடனாற்றித், தனக்கும், தன்னையுடைய முதலுக்கும் இன்பூட்டுவதுபோல, அவ்வந் நாட்டினரும், மொழியினரும், பிறரும் தத்தங் கடனாற்றித் தமக்கும் உலகிற்கும் இன்பூட்டல் வேண்டும். இதற்கு ஒருமையுணர்வு வேண்டற் பாலது என்று மீண்டும் நினைவூட்டுகிறேன். இயற்கைவழி நிற்றல் எவரெவரை இயற்கை எங்கெங்கே பிறப்பிக்கிறதோ, அவரவர் ஆங்காங்கே உள்ள வழக்க ஒழுக்கங்கட்கு இயைந்த வாழ்வு நடாத்துவது, இயற்கை அன்னையை வழிபடுவதாகும். ஆங்காங்குள்ள தட்ப வெட்ப நிலைக்கேற்றவண்ணம், இயற்கை அன்னை, மொழி, நாடு, பொருள் முதலியவற்றை வழங்கி இருக்கிறாள். அவ்வளவில் உள்ளநிறைகொண்டு வாழ்வது இயற்கை வாழ்வாகும். நிறைகொள்ளாது பேராசையால் மற்ற நாடுகளையும் பொருள்களையும் பற்றி வாழவிரும்புவது செயற்கை வாழ்வாகும். இதனால் இயற்கைக்கு மாறுபட்ட வினைகள் நிகழ்கின்றன. அவ்வினைகளால் ஏற்றத் தாழ்வும், அடக்கு முறையும், பிற கொடுமைகளும் உலகிடை நுழைந்து துன்புறுத்துகின்றன; உலகில் இன்ப நுகர்ச்சியும் இல்லா தொழிகிறது. இப்பொழுது உலகம் எந்நிலையிலிருக்கிறது? செயற்கை வெம்மையில் வீழ்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. இது நிற்க. வாழ்வு உடலும் உயிரும் வெறும் இயற்கை வாழ்வு என்றால் ஒழுங்குமுறை இல்லாததா என்று சிலர் கடாவுவர். வாழ்வை அளித்த இயற்கை அன்னை, ஒழுங்கு முறைகளை வகுக்காதொழிவளோ? இயற்கையில் உலக நடைமுறைக்கெனச் சில வாழ்வு முறைகள் கோலப்பட்டிருக்கின்றன. வாழ்வு என்பது இரு திறத்தது. ஒன்று உடல் வாழ்வு; மற்றொன்று உயிர்வாழ்வு. உடல்வாழ்வு உலகியலைப் பற்றி நிற்பது; உயிர்வாழ்வு கடவுளைப் பற்றி நிற்பது. இவ்விரண்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. உயிர்வாழ்விற்கென்றே உடல்வாழ்வு ஏற்பட்டது. உடல் வாழ்வின்றி உயிர்வாழ்வு நலம்பெறல் அரிது. எனவே, கடவுள் நெறிக்கு உலகியல் இன்றியமையாததென்க. நான்கு துறைகள் உலகியல் நடைமுறைக்கென நான்கு துறைகளும், கடவுள் நெறிக்கென நான்கு துறைகளும் வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்நான்கில் எல்லாத் துறைகளும் அடங்கலால், பிறவற்றை விரித்துக் கூறவேண்டுவதில்லை. உலகியல் செவ்வனே நடைபெறற் பொருட்டு, மக்கள், தொழிலாளர் என்றும், வாணிபர் என்றும், அரசினர் என்றும், பார்ப்பனர் என்றும் பிரிந்து கடனாற்றி வரலானார்கள். இப்பிரிவு இயற்கையின் பாற்பட்டது. மக்கள் அனைவரும் ஒரே கடனாற்றப் புகுவரேல், உலகம் நடைபெறாது. ஆதலால், பிரிவு இன்றியமையாதது. இம்முறைவழி உலகம் இயங்கி வருகிறது. எங்குத் தொழிலாள ரில்லை? எங்கு வாணிபரில்லை? எங்கு அரசினரில்லை? எங்கு ஆசிரியரென்னும் பார்ப்பனரில்லை? அவ்வத் தொழிலாளர் யாண்டும் உளர். இஃது உலகியல் முறை. உயிர் வாழ்விற்கும் நான்கு துறைகள் ஏற்பட்டிருக்கின்றன. அவை: உலகு உயிர் கடவுள்முதலியவற்றை அறிவுறுத்துங் கல்வி ஒன்று; கற்றதை நிகழ்ச்சியில் கூட்டவல்ல இல்வாழ்வு மற் றொன்று; இல்வாழ்வால் பெறும் அன்பால் மனைவியுடன் உயிர்களுக்குதவும் அறம் வளர்ப்பது இன்னொன்று; அதன்வழி அழுக்காறு அவா வெகுளி முதலிய மாசுகளினின்றும் விடுதலை யடைந்து, எவ்வுயிரிலும் சத்தெனும் செம்பொருள் பொலிவது கண்டு, உயிர்கட்குச் செந்தண்மை பூண்டொழுகும் முடிந்தநிலை எய்துவது வேறொன்று. இந்நான்கும் மக்கட்கு வேண்டற்பாலன. இவையாவும் உலகில் இயங்கிவருகின்றன. எந்நாட்டில் மாணாக்கரில்லை? எந்நாட்டில் இல்வாழ்வோரில்லை? எந்நாட்டில் அறவோரில்லை? எந்நாட்டில் துறவோரில்லை? இவ்விரு முறைகளின் வழி, வாழ்வு நடாத்துவது இயற்கை யோடியைந்த வாழ்வு நடாத்துவதாகும்; அதாவது சன்மார்க்கத்தில் நிற்பதாகும். நமது நாடு பண்டை இந்தியா நமது நாட்டில் உலகியற்றுறைகளும், உயிரியற்றுறைகளும் செம்மை நெறியில் இயங்கு முறையில் மக்கள் இயற்கை வாழ்வு நடாத்தி வந்தார்கள். வந்த நாளில், நாடு செழுமையுற்றிருந்தது. அந்நாளில் தோன்றிய கலைகளின் பெருக்கை என்னென்பேன்! வீரர்களின் பெருக்கை என்னென்பேன்! அறப் பெருக்கை என்னென்பேன்! அப்பொழுது, நமது பாரத அன்னை முடி யணிந்து, கலையணிந்து, செங்கோலோச்சி, அரியாசனத்தில் வீற்றிருந்தாள்; அரசியல் குடியியல் அழகோடியங்கின; அன்பும் அருளும் ஆறாக ஓடின; எங்கணும் இன்ப வாழ்வு! எங்கணும் இயற்கையறம்! எங்கணும் சன்மார்க்கம்! பின்னை, நாளடைவில், பாரத மாதாவின் முடியும் கலையும் செழுமையும் கொழுமையும் வளனும் நலனும் பிறவும் மெல்ல மெல்ல நெகிழ்ந்து நெகிழ்ந்து சுருங்கிச் சுருங்கி இறுக லாயின. இந்நாளில் பாரதத்தாய் அடிமைக் குழியில் வீழ்ந்து கிடக்கிறாள். இச்சிறுமைக்குக் காரணம் என்னை? இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் வாழ்விற்கென ஏற்பட்ட தொழின் முறைகளை நடாத்திவந்த மக்களுக்குள், பிறப்பில் ஏற்றத் தாழ்வு புகுந்தமையே சிறுமைக்குச் சிறந்த காரணமாகும். தொழிற் பிரிவுகள் பிறப்புப் பிரிவுகளாக மாறின. பிறப்புவழி ஏற்பட்ட பிரிவுகள், இயற்கைக்கு மாறுபட்டனவாகலான், அந்நாள்தொட்டு, மக்கள் சன்மார்க்க மெனும் இயற்கை வாழ்வினின்றும் பிறழ்ந்து, துன்மார்க்க மெனுஞ் செயற்கை வாழ்வில் வீழலானார்கள். இப்பிறழ்ச்சியால், பார்ப்பனன் பிள்ளை பார்ப்பனனாகவும், அரசன் பிள்ளை அரசனாகவும், வாணிபன் பிள்ளை வாணிபனாகவும், தொழிலாளன் பிள்ளை தொழிலாளனாகவும் கருதப் பட்டனர். பௌத்தமும் பார்ப்பனமும் ஆசிரியத் தொழில் பூண்டிருந்தோர், அரசர்களைத் தம் வயப்படுத்தித், தம்வழி உலகம் இயங்கவேண்டுமென்னும் எண்ணங்கொண்டு முயன்று வந்த வேளையில், இடபதேவர், மஹா வீரர், புத்தர் முதலிய அருளாளர் கிளம்பிப், பிறப்பால் வகுப்பு வேற்றுமை கூடாது என்று எதிர்த்து வந்தனர். அம்முயற்சியில் புத்தர் பெருமான் வெற்றியும் பெற்றார். மீண்டும் நாடு சன்மார்க்கமெனும் இயற்கை அறநெறியில் இயங்கலாயிற்று. அவ்வியக்கத்தை ஒங்கவிடாது, பார்ப்பனர் சிறு முயற்சியால் தகைந்துவந்தனர். நாளுக்குநாள் புத்தர் பெருமான் அறவுரை ஆக்கம்பெற்று வருவது கண்ட பார்ப்பனத் தலைவர் சிலர், பௌத்த சமயம் புகுந்து, பௌத்த சமய ஆக்கத்தையே மாய்த்தனர். அன்று மீண்டும் எழுந்த பார்ப்பனர், பின்னைநாளில் தமக்கு எத்தகை இடையூறும் நேராதவாறு, எவ்வெக் கோட்டைகள் கட்டவேண்டுமோ, அவ்வக் கோட்டைகள் கட்டிக்கொண்டனர். பௌத்த மதக் கிளர்ச்சி தோன்றாதிருக்குமேல், பார்ப்பனர் தமது நலன் கருதி, இத்துணை அரண்கள் கோலி இருக்கமாட்டார். அச்ச மேலீட்டான், அவர் இயற்கைக்கு மாறுபட்ட பல துறைகள் வகுத்தனர் பாவம்! பெண் மக்களும் கல்வியும் முதல் முதல் பெண்மக்களும், தொழிலாளரும் கல்வி கற்றலாகாது என்னும் சட்டம் பார்ப்பனரால் செய்யப்பட்டது. கல்வி இல்லா மக்கள் விலங்காதல் இயல்பன்றோ? பெண் மக்கள்அருள்பூத்த நெஞ்சின ராகாலான், தங் (பார்ப்பனர்) கொடுமை கண்டு பொறாது அறக்கிளர்ச்சிக்குத் துணை நிற்பரெனக் கருதி, அவர்கட்கு (பெண்மக்கட்கு)க் கல்வி மறுக்கப்பட்டது. வேத காலத்தில் பெண்மக்கள் பலர் பெரும் பண்டிதைமாராக இருந்தனர். மிருதியில் பெண்கல்வி மறுப்புக் காணப்படுகிறது. மிருதிகள் புத்தர் காலத்திற்குப் பின்னரே எழுதப்பட்டன. இதனால் வேண்டுமென்றே பெண்கல்வி மறுக்கப்பட்டது நோக்கத்தக்கது. தொழிலாளரும் கல்வியும் தொழிலாளர் தொகையில் பெரும்பான்மையோராக இருத்தலான், அவர் கற்றவராயிருப்பின், புத்தர் அறக்கிளர்ச்சி போன்றதொரு கிளர்ச்சி எழுமேல், அதற்கு அவர் துணை புரிவரென்றஞ்சி, அவர் கல்வி கற்றலாகாது என்னும் விதி செய்யப்பட்டது. பின்னும் நாளடைவில் மேல்வகுப்பார் தம்மைக் கடவுளர் என்று மற்ற வகுப்பார் கருதித் தமக்கு ஏவல் செய்யுமாறு பல விதிகள் நிறுவினர். உயர் வகுப்பார் பிறப்புரிமை, பழைய நூல்களினிடையே செருகப்பட்டது. பிறப்புரிமைக் காப்புக்கெனக் கோயில்கள் மடங்கள் கட்டப் பட்டன. உயர் வகுப்பார்க்குள்ள உரிமைகளையும், மற்றவர்க் குள்ள சிறுமைகளையும் மிருதிகளில் இன்னுங் காணலாம். இக்கொடுஞ் சட்டங்கள் நந் தமிழ்நாட்டில் தலைகாட்டிய போது, அப்பொழுது தமிழ் நாட்டில் வதிந்த திருவள்ளுவர் முதலியோர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா - செய்தொழில் வேற்றுமை யான் என்று பிறப்புரிமைக் கொடுமையைக் கடிந்தனர். எவர் கடிந்தும், பிறப்பில் உயர்வு தாழ்வு கருதும் முறை யாண்டும் பரவலாயிற்று. நாட்டின் பெரும்பான்மையோர், கல்வி பெறாமையால் அம்முறைக்கு அடிமையாயினர். என் செய்வது? இயற்கை நெறிக்கு மாறுபட்டுப் பிறப்பில் உயர்வு தாழ்வு கொண்ட செயற்கை வாழ்வு நாட்டில் நடந்து வந்தது. சன்மார்க்கம் ஒழிந்து, சாதிமார்க்கம் எழுந்தது. செயற்கை முறையால் விளைந்ததென்னை? நாடு எல்லா நலன்களையும் இழந்து, அடிமைக் குழியில் வீழ்ந்த தொன்றே விளைந்த பயன். சாதி நான்குவிதத் தொழில்கட்கும் நான்குவிதச் சாதி யிருத்தல் வேண்டுமென்றும், இல்லையேல் உலகம் நடைபெறாதென்றும் சிலர் வாதமிடுகிறார். மக்கள் பிரிந்து, நான்குவிதத் தொழிலை யும் நிகழ்த்தவேண்டுமென்பதை யான் மறுக்கின்றேனில்லை. அப்பிரிவு, பிறப்புவழியில் இருத்தல் இயற்கைக்கு மாறுபாடு என்பது எனது உள்ளக்கிடக்கை. உலகில் எங்கணும் நான்குவித முறைகளிருக்கின்றன. ஆனால் யாண்டாதல் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதப்படுதலுண்டோ? சிறப்பில் உயர்வு தாழ்வு உறல் இயல்பு. இவ்விந்திய நாட்டில், ,ஹிந்துக்களிடை மட்டும், பிறப்பில் சாதி கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு கொள்ளாத நாடுகள் அழிந்து பட்டனவோ? படுகின்றனவோ? அவை யாவும் உரிமை இன்பத்தைச் செவ்வனே நுகர்ந்து வருகின்றன. பிறப்பால் சாதிக்கொண்டு, உயர்வு தாழ்வு கணிக்கும் இந்தியாவோ அடிமைக் குழியில் வீழ்ந்து தவிக்கிறது. நாளடைவில் நால்வகைச் சாதி, நாலுலட்சம் சாதிகளாய் விட்டன. சாதிக்குள் சாதியாகவும், கிளைக்குள் கிளையாகவும் சாதிக்குப்பைகள் பெருகிவிட்டன. திண்ணைக்கொரு சாதி, நடைக்கொரு சாதி, கூடத்துக்கொரு சாதி, மாடத்துக்கொரு சாதி, அறைக்கொரு சாதி, அடுப்புக்கொரு சாதி, கொல்லைக் கொருசாதி, வீட்டுக்கொரு சாதி, தெருக்கொரு சாதி, கோயிலுக் கொரு சாதி, மடத்துக்கொருசாதி, கடவுளுக்கொரு சாதி - எத்துணை எத்துணைச் சாதிகள்! நாடெங்கும் சாதிநாற்றமே வீசுகிறது. மூன்று பாவங்கள் நம் நாட்டார் பெண்ணுரிமை கடிந்த தீவினையும், பிறப்பால் சாதி வகுத்த தீவினையும், மக்களுள் தீண்டாமை கொண்ட தீவினையும் இப்பொழுது மூண்டெரிந்து நாட்டை அரிக்கின்றன; எரிக்கின்றன. இயற்கைக்கு மாறுபட்டு நின்றதன் பயனை இப்பொழுது நாடு அனுபவித்து வருகிறது. கொடுமை களைக் கண்டு இயற்கை அன்னை வாளா கிடப்பளோ? அவள் இப்பொழுது நாட்டை ஒறுத்து வருகிறாள். அன்பர்களே! நமது நாட்டுக்குள்ள சிறுமையைப் போல வேறு எந்நாட்டுக்கேனும் உண்டோ? நமது நாட்டு மக்கள் வயிறாரச் சோறு உண்கிறார்களா? அவர்கட்கு நல்லுடை உண்டா? நல்லுறக்கம் உண்டா? நமது நாட்டுக் கலைகள் எங்கே? தொழில்கள் எங்கே? எல்லாம் போயின. ஒரு சாண் வயிற்றிற்கு நம்மவர் கடல் கடந்து ஓடி மானம் இழக்கின்றனர். இவ்வளவிற்குங் காரணமா உள்ள தீவினைகளுக்குக் கழுவாய் தேடிக் குறைபாடுகளைக் களையவேண்டுவது நமது கடமை யன்றோ? நமது கடமை கழுவாய் முதலாவது நம் முன்னோர் செய்த தவறுதலுக்கு நாம் கழுவாய் தேடல் வேண்டும். கழுவாய் பிராமணர் மட்டும் தேடல்வேண்டும் என்னும் நியதி இல்லை. பிராமணரல்லாத மற்றவரும் கழுவாய் தேடக் கடமைப்படல் வேண்டும். பிராமணர் மற்றவரைச் சிறுமைப்படுத்துவதுபோல, மற்றச் சாதியாரும் ஒடுக்கப்பட்டவரைச் சிறுமைப்படுத்துகிறார். எல்லாரும் பெண்மக்களை வருத்துகிறார். ஆதலால், அனைவரும் தத்தங் குற்றமுணர்ந்து கழுவாய் தேடுவாராக. ஹிந்துக்களென்று இந்நாளில் தங்களைக் கருதிக் கொள்வோர் அனைவரும், நாடோறும் காலை மாலை இரண்டு வேளைகளிலும் ஆண்டவனை நோக்கி, வழிவழி நிகழ்ந்து வரூஉம் குற்றங்களை மன்னிக்குமாறு கேட்பாராக; கேட்கு மளவோடு நில்லாது, திங்கட்கொருமுறை நோன்பும் இருப்பாராக; இவ்வாறு உள்ளத்தைத் தூய்மைப்படுத்திப் படிப்படியாகச் சில திட்டங்களைக் கோலி, அவற்றைச் செயலில் நிகழ்த்த முயல்வாராக. திட்டங்களை முறைமுறையாக ஈண்டுத் தொகுத்துக் கூறவேண்டுவதில்லை. சில குறிப்புக்களை மட்டும் நினைவூட்டு கிறேன். (க) பெண்ணுலகு:- பெண் ஒரு பாதி; ஆண் மற்றொரு பாதி. இரண்டுஞ் சேர்ந்த ஒன்றே முழு மனிதத் தன்மை. அங்ஙனமாக, வாழ்வின் ஒரு பாதி உரிமை கடிவது எத்தகை அறியாமை? உடலில் ஒரு பாதி குருதியோட்டம் குன்றினால் உடல் நிலை என்னாகும்? பாரத மாதாவின் ஒரு பாதியாகிய பெண்ணுலகின் உரிமை கெட்டமையால், அவள் பக்க வாயுவால் பீடிக்கப்பட்டுக் கிடக்கிறாள். அந்நோய் நீங்கினாலன்றி அவளுக்கு உய்வில்லை. ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியுமுடைய ஒருவனும் ஒருத்தியும் . . . என்றார் நக்கீரனார். பெண்மகள் பண்டை நாளில் எல்லா வழியிலும் ஒத்து வாழும் உரிமை பெற்றிருந்தாள். அவ்வுரிமை இன்பத்தை மீண்டும் அவள் நுகருமாறு ஆண்மக்கள் நடந்து கொள்ளல் வேண்டும். பெண்ணுலகுக் கேட்டால் ஆணுலகுக்கும், பின்னை நாட்டுக்குமே ஊறு விளைந்துள்ளதை அன்பர்கள் கருதுவார்களாக. தாய்மைக்குரிய பெண்ணின் சிறுமை, நாட்டின் சிறுமையாதல் இயல்பு. ஆதலால், பெண்ணலன் நாட வேண்டுவது நம் பெருங்கடமை. பண்டைநாளில் ஆண்மகனோடு ஒத்த கல்வி பெற்றிருந்த பெண், இந்நாளில் அக்கல்வி ஏன் பெறுதல் கூடாது? நீண்ட நாளாக, நாட்டின் தாயாகிய பெண், கல்வி இழந்தமையால் நாட்டுக்கு விளைந்த கேடுகள் எண்ணில; எண்ணில. ஆண்மகன் இரண்டு மூன்று பெண்களை மணஞ் செய்து கொள்வதும், பெண் மகள் உற்ற வயது அடையா முன்னர் அவளைத் திருமணஞ்செய்து கொடுப்பதும், பெண்மகள் இளமையில் கைம்மை எய்தினால், வேறு களைகணின்றி, நரகிடை வீழ்ந்து வருந்துவதும், இன்னோரன்ன பிற நிகழ்ச்சி களும் எத்தகைக் கொடுமைகள்! அன்பர்களே! உன்னுங்கள். வழுக்கி வீழ்ந்த சகோதரிகள் (Fallen Sisters) நிலையை நினைக்கும்போது கண்ணீர் பெருகுகிறது. எல்லாத் துறை கட்கும் சாதி ஏற்பட்டதுபோல, விபசாரத்துக்கெனவும் ஒரு சாதி நாட்டில் ஏற்பட்டிருக்கிறது! என்ன இழிவு! என்ன இழிவு! ஓருவன் ஒருத்தியுடனும், ஒருத்தி ஒருவனுடனும் வாழும் முறை ஏற்படல் வேண்டும். (உ) பிறப்பால் சாதி :- பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டல் தொலைதல் வேண்டும். சிறப்பால் உயர்வு தாழ்வு தோன்றல் இயல்பு. உயர்குலத்தில் பிறந்தவன், எத்தகைக் கயமைத்துறையில் இழிந்து விளையாடினும், அவனை உயர்ந்தவனாகக் கருத வேண்டுமென்னும் நியதி இயற்கைக்கு அரண் செய்வதன்று. ஒருவனுக்கு உயர்வளிப்பது ஒழுக்கமன்றிப் பிறப்பன்று. தொழின் முறைபற்றி எழுந்த பிரிவு, பிறப்பைப்பற்றி எழலாயிற்று. அதைக் குலைத்தல் வேண்டும். இப்பொழுது அஃது இயல்பில் குலைந்தே வருகிறது. இன்னும் விரைந்து அதைக் குலைக்க முயலல் வேண்டும். அதற்கெனச் சில முறைகளைக் கடைப்பிடித்தல் நலம். (அ) பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுவதைத் தொலைத்தல் வேண்டும். (ஆ) பிறப்பு வழி உயர்வு கருதி, எவரையும் ஆசிரியராகக் கோடலாகாது. கல்வி அறிவு ஒழுக்கம் உடைய ஒருவன், எவனாயினும், அவனை ஆசிரியனாகக் கொள்ளும் பயிற்சி முதிரல் வேண்டும். (இ) பிறப்புரிமை வழி நிகழும் வினைகள், வழிபாடுகள் முதலியவற்றை ஒழித்தல் வேண்டும். (ஈ) பிறப்பால் உயர்வு கருதி, எவருக்கும் வந்தனை வழிபாடுகள் நிகழ்த்தலே கூடாது. (ங) தீண்டாமை விலக்கல்:-மக்களுக்குள் தீண்டாமை வகுத்தனினுங் கொடுமை பிறிதொன்றில்லை. அஃதொரு பெருநோயாய்ப் பாரதமாதாவைப் பிணித்திருக்கிறது. சிலர், தமது நலங் கருதி ஒருபோழ்து கொண்ட முறைகள் இப்பொழுது நாட்டையே அரிக்கின்றன. தீண்டாமையால் நாட்டுக்கு நேர்ந்துள்ள இடுக்கண்களை உணர்ந்தும், இன்னும் நம்மவர் அந்நோயைப் போக்கிக்கொள்ள மனங்கொள்கிறாரில்லை. தீண்டாமைக் குற்றம் பிராமணரிடத்தில் மட்டும் இல்லை; பிராமணரல்லாதார்பாலும் அக்குற்றம் உண்டு. தீண்டாமையில் பிராமணரினும் பிடிவாதமாகச் சில பிராமணரல்லாதாரிருத்தல் எனக்குத் தெரியும். பிராமணரல்லாதார் இயக்கம் பிராமணரல்லாதார் இயக்கம் என்று ஒன்று தோன்றி யிருக்கிறது. அதன் நோக்கம் என்னை? பிறப்பில் உயர்வு தாழ்வு கருதாது, பிராமணரும் தாமும் எல்லா வழியிலும் ஒத்து வாழல் வேண்டுமென்பது. அது காரணமாகப் பலதிறப் பிணக்குகளும் நிகழ்ந்து வருகின்றன. பிராமணரல்லாதார், பிராமணருடன் சமத்துவம்பெற முயல்வது போற்றற்குரியதே. ஆனால், பிராமணருடன் போராடி, அவருடன் ஒத்து வாழ எண்ணும் பிராமணரல்லாதாருள் எத்துணைபேர் தீண்டாமை விலக்கை ஏற்றுக்கொள்பவர்? அதற்கு உழைப்போர் எத்துணை பேர்? ஒரு சிலர் இருக்கிறார். பெரும்பான்மையோர்க்குத் தீண்டாமை விலக்கில் கவலையுண்டா என்பதே எனது கேள்வி. பறையர், பறையர், தீண்டல் கூடாது என்று ஒதுங்கிப் பார்ப்பனருடன் மட்டும் சமத்துவத்துக்குப் பார்ப்பனரல்லாதார் போராடினால், அப்போராட்டத்துக்கு இயற்கை அன்னை அருள் செய்வளோ? பிராமணரல்லாதார், பிராமணருடன் கலக்க முயல்வது போலத் தம்முடன் தீண்டாதார் என்று சொல்லப்படும் மக்கள் கலக்கப் பிராமணரல்லாதார் இடந்தரல் வேண்டும். அந்நல் லெண்ணம் பிராமணரல்லாதாரிடத்தில் வேரூன்றினால், அவர்தம் முயற்சிக்கு ஆண்டவன் துணை கிடைக்கும். தீண்டாமையைப் போக்கப் பிராமணரும், மற்றவரும், எல்லாரும் முயல்வாராக. போலிச் செயல்கள் தீண்டாமை போக்க முன்னை நாளில் சில அன்பர் முயன்றனர்; இந்நாளில் காந்தியடிகள் முயன்று வருகிறார். இப்பெரியோர்கள் சொல்வழி நின்று கடனாற்றச் சாதிக் கூட்டத்தார் ஒருப்படுகிறாரில்லை; ஆனால் அவர்களுடைய திருவுருவப் படங்களைப் பூசிக்கவும், அவைகட்குத் திருவிழாச் செய்யவும் ஒருப்படுகிறார். தீண்டாமையை விட்டொழிக்க நம்மவர் நடுக்குறுகிறார்! கோயில், குளம், தெரு முதலிய பொது இடங்களிலாதல் ஏழை மக்கட்கு உரிமையுண்டா? இல்லையே! தீண்டாமை யுள்ளமட்டும் நாட்டுக்கு உய்வில்லை என்பது ஒருதலை. வாய்ச் சீர்திருத்தம், வாய் வேதாந்தம் முதலியவற்றால் பயன் விளை யாது. தீண்டாமை உன்னும் மனோநிலை மாறுதல் வேண்டும். சாதியுடையார், சாதி யில்லாத ஆதிதிராவிடர் முதலியோரிடம் நன்றாகப் பழகல்வேண்டும். அப்பழக்கத்தால் வேற்றுமை யொழியும். சாதியில்லாத ஆதிதிராவிடர்களிற் கல்வி அறிவு ஒழுக்கமுடையாரைக்கொண்டு, சில தெய்வ வினைகளும் நிகழ்வித்தல் வேண்டும். கோயில்கள்:- சத்தெனுஞ் செம்பொருளை உன்னுதற் கும், போற்றுதற்கும் உரிய இடமாகக் கோயில்கள் கட்டப் பட்டன. நாளடைவில் அக்கோயில்களிலும் சாதிப்பேய் நுழைந்துகொண்டது. ஒரு கூட்டத்தார் இங்கும், மற்றொரு கூட்டத்தார் உங்கும், இன்னொரு கூட்டத்தார் அங்கும் நின்று கடவுளை வழிபடல் வேண்டுமாம்! கடவுள் முன்னிலையிலுமா உயர்வு தாழ்வு! கடவுளை மரம் செடி கொடி பாம்பு சிலந்தி யானை முதலியன பூசித்தன என்று புராணங்கள் புகல்கின்றன; கடவுள் உருவங்கள்மீது ஈக்கள் மொய்க்கின்றன; பல்லிகள் ஓடுகின்றன. இவைகட்கெல்லாம் இறைவனைத் தொடும் உரிமை யிருக்கும்போது, ஆறறிவுடைய மக்களுக்கா அவ்வுரிமையில்லை? சாதியார் கொடுமை என்னே! என்னே! கோயில்களை எப்படித் திருத்துவது? இரண்டு வழி குறிக்கலாம். ஒன்று, சாதிக்கோயில்களுக்குப் போகாம லிருப்பது; மற்றொன்று சத்தியாக்கிரகத்தால் மக்களுரிமையை நிலை நாட்டுவது. மடங்கள்:- பௌத்த சமயத்துக்குப் பின்னரே மடங்கள் பெரிதும் ஏற்பட்டன. சமய ஞானத்தை வளர்ப்பது மடங்களின் நோக்கம். ஒரு பற்றுமில்லாத சந்நியாசிகளே மடாதிபதிகளாக அமர்கிறார்கள். அச்சந்நியாசிகளைத் தலைமைகொண்ட மடங்களிலும் சாதிப்பேய் புகுந்திருக்கிறது! மடங்களையும், மடாதிபதிகளையும் குறை கூறவேண்டும் என்பது எனது நோக்கமன்று. நீண்டநாள் பழக்க ஒழுக்கத்துக்கு மடங்களும் மடாதிபதிகளும் அடிமைப்பட நேர்ந்திருப்ப தொன்றையே ஈண்டுக் குறிப்பிடுகிறேன். யாண்டாயினுமுள்ள ஒரு மடாதிபதி ,நாட்டுநிலை சமயநிலை முதலியவற்றை எண்ணிச் சமரசத்தை வளர்க்கப் புறப்படுவரேல், அவரைத் தெய்வம்போல் போற்றுவேன். காலதேச வர்த்தமானத்துக் கேற்றவாறு முறைகளை மாற்றுவதால் தீங்கு நேரிடாது; நலனே உறும். மடங்களையும் ,மடாதிபதிகளையும் ஒழுங்குபடுத்தும் ஆற்றல் பொது மக்கட்கு உண்டு. சத்தியாக்கிரகம் சிறந்த கருவி என்று சொல்லவேண்டுவதில்லை. பிராமணர் பிராமணரல்லாதார் இப்பொழுது தென்னாட்டில் பிராமணர் பிராமண ரல்லாதார் பிணக்கு யாண்டும் இருத்தல் உண்மை. இப்பிணக்கு, தொடக்கத்தில் அரசியலை ஒட்டி எழுந்தது. இப்பொழுது அது சமூகத்தில் குடியேறிவிட்டது. அதனால் விளைந்துவரும் பயன் என்னை? பிராமணருக்குள் மிக உரமான ஒற்றுமை நிலவி வருகிறது. பிராமணர் மகாநாடுகள் ஆங்காங்கே கூடிவரு கின்றன. சாதி வரம்பு கடந்து வாழ்வு நடாத்திய சில பிராமணரும் பழைய இருட்டில் புகலாயினர். சாதி மகாநாடுகள் பிராமணரல்லாதாருள் என்ன நிகழ்ந்து வருகிறது? பிராமணரல்லாதாருள் ஒவ்வொரு சாதியாரும் சாதி மகாநாடு கூட்டி வருகிறார். சாதி அழிவிற்காக இம்மகாநாடுகள் கூட்டப் படுகின்றன என்று சிலர் சொல்கிறார். அந்நுட்பம் எனக்கு விளங்க வில்லை! பழையபடி சாதிகள் உரம்படுமென்று எனது சிற்றறிவிற்குத் தோன்றுகிறது. ஒவ்வொரு சாதியாரும் சட்டசபை இருக்கைகளில் இடம்பெறத் தீர்மானஞ் செய்வது என்ன காட்டு கிறது? ஆகவே, பிராமணர் பிராமணரல்லாதார் பிணக்கால் நாட்டில் ஒற்றுமை விளையாது, வேற்றுமை விளைந்து வரல் கண்கூடு. இஃது அரசியல் மகா நாடன்றாதலின், ஈண்டு அரசியல் துறை பற்றிப் பலபடக் கூற யான் விரும்புகிறேனில்லை. எடுத்த பொருளுக்கேற்ப இரண்டோர் இரை பகர விழைகிறேன். நாட்டுக்குரிய தொண்டு நமது நாட்டில் இருவினை நிகழல்வேண்டும். ஒன்று நாட்டு விடுதலை; மற்றொன்று நாட்டிலுள்ள குறைபாடுகளைக் களைந்து சமரசப்படுத்துவது. அதற்கோர் அமைப்புவேண்டும்; இதற்கோர் அமைப்பு வேண்டும். முன்னதற்குப் புதியதோர் அமைப்பு காண வேண்டுவதில்லை. காங்கர என்னும் பழைய அமைப்பு ஒன்றிருக்கிறது. அரசியல் விடுதலைப் போருக்கு அதைக் கருவியாகக் கொள்ளலாம். மற்ற அமைப்புக்களில் அரசியலைப் புகுத்தாது, சமூக சீர்திருத்தத்துக்கென, அவற்றைப் பயன்படுத்தலாம். இவ்விண்ணப்பத்தை ஜடி கட்சி (பிராமணரல்லாத)த் தலைவரை நோக்கிச் செய்துகொள் கிறேன். ஜடி கட்சியார், காங்கிரஸில் சேர்ந்து, தேசத் தொண்டு செய்யுமாறும், அன்னார் தமது தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தைச் சமூக சீர்திருத்தத்துக்கெனப் பயன் படுத்துமாறும் வேண்டுகிறேன். விதிமுறை அமைப்பை விரும்புவோர் அந்நெறி பற்றிச் செல்வாராக. அவ்வமைப்பை விரும்பாதார் யான் குறிப்பிடுஞ் சன்மார்க்க சங்கத்தில் சேர்ந்து உழைப்பாராக. அது மக்களாகப் பிறந்த அனைவர்க்கும் உரியது. சன்மார்க்க சங்கம் சன்மார்க்க சங்கத்தைப்பற்றி முன்னர் ஒருமுறை நவசக்தி பத்திரிகையில் எழுதியுள்ளேன். அதன் ஒரு பகுதியை ஈண்டு எடுத்துக் காட்டுகிறேன். சங்கம் சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்தொழுக ஒரு கூட்டம் வேண்டற்பாலது. அதுவே, சன்மார்க்க சங்கம் என்பது. (1) சங்க நோக்கம் என்னை? (2) சங்க அங்கத்தவர் யாவர்? (3) நிர்வாக அங்கத்தவர் யார்? (4) அமைச்சர் எவர்? (5) தலைவர் எவர்? (6) சந்தா எவ்வளவு? இவ் வினாக்கட்கு யான் இறுக்கப்புகும் விடை சிலர்க்கு வியப்பூட்டும். (1) சங்க நோக்கத்தையும், அந்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தக்க முறைகளையும் ஈண்டு விரிக்கில் அவை பெருகும். அவை தொன்று தொட்டு நிலவி வருவன. ஆனால் காலநிலைக் கேற்றவாறு அவை ஓரளவில் நடைமுறைப் பொருட்டுக் கணிக்கப்படல் வேண்டும். ஈண்டு அவற்றைப் பற்றிப் பொதுப்படச் சுருங்கச் சொல்கிறேன். உயிர்த் தொண்டு கடவுள் தொண்டாம் சத்தாகிய கடவுள், யாண்டும் விற்றிருத்தலால், எவ் வுயிர்க்கும் மனமொழி மெய்களால் தீங்கு நிகழ்த்தாது, தன்னுயிரைத் தான் பரிந்து ஓம்புமாறு போல், மன்னுயிரையும் ஓம்பி, அவ்வுயிர் நலன் கருதித் தொண்டு செய்தல் சங்கத்தின் தலையாய நோக்கம். இப்பெரு நோக்கத்தை நிறைவேற்ற அகமுகத்திலும் புறமுகத்திலும் பணி செய்தல் வேண்டும். அகமுகப் பணிகளாவன:- அகத்திலுள்ள மெய்ப் பொருளைக் காணவேண்டி, அழுக்காறு அவா வெகுளி முதலிய தீ நீர்மைகளைக் களைதல், கொலை களவு கள் காமம் பொய்யெனும் ஐம்பெரும் பாவம் நிகழாதவாறு தன்னைக் காத்தல் முதலியன. புறப்பணிகளாவன:- தேசத் தொண்டு, அத்தொண்டிற்கு இடையூறாக உள்ள குறைகளைக் களைதல் முதலியன. தேசத் தொண்டும் கால நிலையைப் பொறுத்து நிற்பது. இப்பொழுது நமது நாட்டிலுள்ள குறைபாடுகளில் கவலை செலுத்தி, அவற்றைக் களையப் பாடுபடல் சிறந்த தேசத் தொண்டாகும். சுதேசியம், பெண்ணுரிமை, தீண்டாமை விலக்கல், வகுப்புப் பூசலொழித்தல், கருத்து வேற்றுமைக்கு மதிப்புக் கொடுத்தல், தேசத்திற் பிறந்தாரிடை அன்பு வளர்த்தல், கண்மூடி வழக்க ஒழுக்கங்களை அன்பு வழியில் தொலைத்தல் முதலிய அறத் துறைகளை ஓம்ப முயலுதல் இக்காலத்துக்குரிய சிறந்த தேசத்தொண்டாகும். இதைப் பற்றி இன்னும் விரிகிற் பெருகும். (2) உலகிலுள்ள அனைவரும் சன்மார்க்கத்தை விரும்புகிறார்; ஆனால் சிலரே விரும்பும் வழி நிற்க முயல்கிறார்; அவ்வழி நிற்பவரோ மிகச் சிலர். இம்முத்திறத்தாருஞ் சன்மார்க்க சங்க அங்கத்தவராவர். ஆகவே, இவ்வுலகிலுள்ள கடவுள் பிள்ளைகள் அனைவரும் சன்மார்க்க சங்க அங்கத்தவ ரென்க. (3) (அவருள்) நிர்வாக சபையார்; தம்முயிர் போல், மன்னுயிரையும் கொண்டு ஒழுகும் அருளொழுக்கத்தில் தேர்ச்சி பெற்றவர். (4) அமைச்சர்: நமது கண்முன் காட்சியளிக்கும் இயற்கை அன்னையார். (5) தலைவர்: சத்தெனுஞ் செம்பொருளாகிய அருட் கடவுள். (6) சந்தா: உயிர்களிடத்துச் செலுத்தும் அருள். இவை சங்கத்தின் அமைப்பாகும். சன்மார்க்க சங்கத்தின் அமைப்பின் வகை குறித்துச் சமயம் நேர்ந்துழி இன்னும் விரித்துக் கூறுவேன். இச் சன்மார்க்க சங்கமே என்னால் அடிக்கடி குறிப்பிடப்படுவது. இப்பெருஞ் சங்கத்துக்குக் கிளைகளாகப் பல சங்கங்கள் ஆங்காங்கே அமைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் கிளைச்சங்கம் அமைக்கலாம். வீட்டுத் தலைவனும் தலைவியும் முறையே சங்கத்தின் தலைவராகவும் அமைச்சராகவும் இருக்கலாம். வீட்டிலுள்ள மற்றவர் சங்கத்தின் அங்கத்தவ ராகலாம். இவர் சங்க நோக்கத்தை நிறைவேற்ற முயலல் வேண்டும். சன்மார்க்க போதனைக்கென ஒரு சங்கம் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு கிராமத்திலும் அமைத்துக் கொள்ள லாம். சங்கத்துக்கெனப் பெருங் கட்டிடங்கள் எழுப்ப வேண்டுவ தில்லை. ஓர் அழகிய சிறுநிலையம் சாலும். சங்கத்துக்கெனத் தலைவர் அமைச்சர் முதலியோரைத் தெரிந்தெடுத்தல், சந்தா சேர்த்து வரவு செலவு கணக்குப் படித்தல் முதலியன வேண்டா; வேண்டா. தேர்தலும், பொருளீட்டமும் மக்களைச் சன்மார்க்கத் தில் செலுத்தா. அவை முனைப்பை எழுப்பிப் போர் மூட்டும். சங்கத்தின் எவ்வினைக்காதல் பொருள் வேண்டி யிருப்பின், அவ் வினைக்கெனப் பொருள் சேர்த்து, அவ்வினை யாற்றல் வேண்டும். பின்னை அப்பொருளில் மிகுதி நின்றால், அதை உடனே ஏழை மக்கட்குப் பங்கிட்டுக் கொடுத்தல் வேண்டும். பெரும்பொருள் செலவாகும் வினை ஒன்றும் சங்கத்தில் நடைபெறுதல் கூடாது. சங்கத்துக்கெனத் தனிநிதி கூடவே கூடாது. பெரு நிதியால் இக்கால மடங்களும், கோயில்களும் பேயுறையும் இருட் குகைகளாக மாறியதொன்றே நமக்கு எடுத்துக்காட்டு. ஆதலால், விலங்குணர்வும் பேயுணர்வும் தோன்றாத முறையில் சங்கத்தை நடாத்தல் வேண்டும். சங்கத்தில் அருளொழுக்கத்தில் முதிர்ச்சி பெற்றோரைக் கொண்டு சன்மார்க்க போதனை செய்விக்கலாம். சங்க நோக்கத்தை ஒட்டிப் பலதிறத் தொண்டுகள் செய்யலாம். சன்மார்க்கம் இன்னது என்றும், சன்மார்க்கத்துக்கு இடையூறாகவுள்ள கொடுமைகள் இன்ன இன்ன என்றும் மிகத் தெளிவாக இராமலிங்க சுவாமிகள் உலகிற்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள்; அவ்வறிவுறுத்தல்களிற் சில வருமாறு:- நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளை யாட்டே மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பியசற் குருவே கால்வருணங் கலையாதே வீணில்அலை யாதே காண்பனஎல் லாம்எனக்குக் காட்டியமெய்ப் பொருளே மால்வருணம் கடந்தவரை மேல்வருணத் தேற்ற வணங்குநடத் தரசேஎன் மாலைஅணிந் தருளே கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக மலைவுறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறஎவ் வுலகும் வாழ்ந்தோங்கக் கருதிஅருள் வழங்கினைஎன் றனக்கே உலைவரும்இப் பொழுதேநற் றருணமென நீயே உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மையுரைத் தவனே சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே மதமென்றும் சமயமென்றும் சாத்திரங்க ளென்றும் மன்னுகின்ற தேவரென்றும் மற்றவர்கள் வாழும் பதமென்றும் பதமடைந்த பத்தரநு பவிக்கப் பட்டஅனு பவங்களென்றும் பற்பலவா விரிந்த மதமொன்றுந் தெரியாதே மயங்கியஎன் றனக்கே வெட்டவெளி யாயறிவித் திட்டஅருள் இறையே சதமொன்றுஞ் சுத்தசிவ சன்மார்க்கப் பொதுவில் தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்அணிந் தருளே சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த சாத்திரக்குப் பைகளெல்லாம் பாத்திரமன் றெனவே ஆதியிலென் உளத்திருந்தே அறிவித்த படியே அன்பாலின் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன் ஓதியுணர்ந் தோர்புகழுஞ் சமரசசன் மார்க்கம் உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம் சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச் சுத்தசிவ நிறைவையுள்ளே பெற்றுமகிழ்ந் தேனே தயையுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் சார்ந்தவரே இங்கவர்கள் தம்மோடுங் கூடி நயமுறுநல் லருள்நெறியிற் களித்துவிளை யாடி நண்ணுகஎன்றெனக் கிசைந்து நண்புறுசற் குருவே உயலுறும்என் உயிர்க்கினிய உறவேஎன் அறிவில் ஓங்கியபேர் அன்பேஎன் அன்பிலுறும் ஒளியே மயலறுமெய்த் தவர்சூழ்ந்து போற்றுமணி மன்றில் மாநடத்தென் அரசேஎன் மாலை அணிந் தருளே அருளுடையார் எல்லாரும் சமரசசன் மார்க்கம் அடைந்தவரே ஆதலினால் அவருடனே கூடித் தெருளுடைய அருள்நெறியில் களித்துவிளை யாடிச் செழித்திடுக வாழ்கவெனச் செப்பியசற் குருவே பொருளுடைய பெருங்கருணைப் புரணமெய்ச் சிவமே போதாந்த முதலாறும் நிறைந்தொளிரும் ஒளியே மருளுடையார் தமக்குமருள் நீங்கமணிப் பொதுவில் வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும் துங்கமே பெருஞ்சற் சங்கநீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன் அங்கமே குளிர நின்தனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய் மார்க்கமெலாம் ஒன்றாகும் மாநிலத்தீர் வாய்மையிது தூக்கமெலாம் நீக்கித் துணிந்துளத்தே - ஏக்கம்விட்டுச் சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் சத்தியநீர் நன்மார்க்கஞ் சேர்வீர்இந் நாள் இச்சன்மார்க்கத்தில் சேருமாறு எல்லாரையும் வேண்டு கிறேன். வந்தேமாதரம். திரு.வி.க.  சித்த மார்க்கம் முன்னுரை உயிர்கள் தாங்கும் பிறவிகள் பல. அவைகளுள் விழுமியது மனிதப்பிறவி. மனிதப்பிறவி விழுமியது என்று சொல்லாத சான்றோரில்லை. மனிதப்பிறவியில் உள்ளொளி அதாவது ஆத்மசக்தி பெருகுதற்குரிய வாய்ப்பு உண்டு. மற்றப் பிறவிகளில் அவ் வாய்ப்பு இல்லை. அதனால் மனிதப்பிறவி விழுப்பமுடைய தாகிறது. மக்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தக்கவழியில் பயன்படுத்தல் வேண்டும். உள்ளொளிகாலும் முறையில் மக்கள் வாழ்வை நடாத்துவது சிறப்பு. இல்லையேல், மக்கள் வாழ்வு விலங்குவாழ்வினும் கொடியதாகும். பண்டை மக்கள் வாழ்வு உள்ளொளியைக் குறிக்கொண்டு நின்றது. உள்ளொளி அவர்கள் வாழ்வில் அரும்பி மலர்ந்து வந்தது. உலக வாழ்வும் கடவுள் வழிபாடும் அவ்வொளிக்கென்றே அந்நாளில் கொள்ளப்பட்டன. உள்ளொளிக்கென்று அந் நாளில் கொள்ளப்பட்டன. உள்ளொளிக்கென்று பண்டை மக்கள் கடைப்பிடித்தொழுகிய மார்க்கம் சித்த மார்க்கம் என்பது ஆராய்ச்சியால் விளங்குகிறது. சித்தமார்க்கமே சமயம் என்பது சமய நோக்கு நாளடைவில் சிதையலாயிற்று. சிதைவால் விளைந்துள்ள கேடுகள் பல. பல தெய்வ வழிபாடு, பல சமய உணர்வு, சமயவெறி, சமயப்போர், அடக்குமுறை முதலிய கொடுமைகட்கு உலகம் இரையாகி வருதல் கண்கூடு. இந்நாளில் மன்பதைக்குச் சித்தமார்க்கப் பிரசாரம் தேவை. மக்கள், சித்தமார்க்கத்தில் நின்று, உலக வாழ்வையும் கடவுள் வழிபாட்டையும் உள்ளொளி எழுச்சிக்கெனப் பயன்படுத்தப் புகுவார்களாயின், அவர்களிடை ஒரு தெய்வ வழிபாடு, சமரசநோக்கு, சகோதரநேயம் முதலிய நல்லியல்புகள் நிலவுதல் ஒருதலை. சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் வாயிலாகச் சித்த மார்க்கத்தைப் பற்றிப் பேசும் பேறு எனக்குக் கிடைத்தது. சைவ சித்தாந்த மகாசமாஜத்தின் 29-வது ஆண்டுவிழா (23, 24, 25-12-1934) திருவதிகையில் நடைபெற்றது. தலைமைப்பதவி எனக்கு வழங்கப்பட்டது. தலைமையுரையில் சித்தமார்க்கத்தைப் பற்றிப் பிரதாபஞ் செய்யலானேன். அத்தலைமை உரையைக் கொண்டது இந்நூல். நூலின் உள்ளுறைக்கேற்ப நூலுக்குச் சித்தமார்க்கம் என்னும் தலைப்புச் சூட்டப்பட்டது. நூற்கண், சித்தமார்க்க வரலாறு, அதன் தொன்மை, அதனால் விளையும் பயன், அதன் முற்கால தற்கால நிலை, ஒரு தெய்வ வழிபாடு, சமரச நோக்கு, சகோதரநேயம் முதலியன ஓதப்பட்டுள்ளன. சமய உலகில் இது காலத்துக்குரிய நூலாக நின்று பயன் தருமென்று நம்புகிறேன் பிழை பொறுக்க. சென்னை இராயப்பேட்டை 12 - 11 - 35 திருவாரூர்-வி.கலியாணசுந்தரன் சித்த மார்க்கம் (திருவதிகையில் (23, 24, 25-12-1934) கூடிய சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் 29-வது ஆண்டு விழாத் தலைமை உரை) முத்த னேமுதல் வாமுகி ழும்முளை ஒத்த னேஒரு வாவுரு வாகிய சித்த னேதிரு வீழி மிழலையுள் அத்த னேஅடி யேனைக் குறிக்கொளே - அப்பர் 1. தோற்றுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! சைவ சித்தாந்த மகா சமாஜத்துக்கு யான் புதியவனல்லன்; யான் ஒரு பழைய தொண்டன். இங்கே ஈண்டியுள்ள சமாஜத் தின் இருபத்தொன்பதாவது ஆண்டு விழாக் கூட்டத்துக்கு என்னைத் தலைவனாக நீங்கள் தெரிந்தெடுத்தீர்கள். உங்கள் உழுவல் அன்புக்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன். சமாஜத்தின் ஆண்டு விழாக் கூட்டம், இம்முறை, தென் னார்க்காட்டிலே, திருவதிகை என்னும் இப்பழம்பெரும்பதியிலே குழுமியிருக்கிறது. சமாஜத்துக்கும் தென்னார்க்காட்டுக்கும் அன்பார்ந்த தொடர்பு உண்டு. சமாஜத்தின் தாயகம் தென் னார்க்காடு. இவ்வுறவு, சமாஜத்தை அடிக்கடி இந்த ஜில்லா விற்கு ஈர்க்கிறது போலும்! சைவ சித்தாந்த மகா சமாஜம் பிறந்த இடம் திருப்பாதிரிப் புலியூர். அதன் முதல் ஆண்டுவிழா பெரும்பற்றப்புலியூரில் நடை பெற்றது; வெள்ளிவிழா கிழக்குமருதூரில் நிகழ்ந்தது; பல ஆண்டு விழாக்கள் கூடலூர், திருப்பாதிரிப் புலியூர், திரு வெண்ணெய்நல்லூர் முதலிய பதிகளில் நடந்தேறின. இம்முறை, சமாஜத்தின் ஆண்டுவிழா திருவதிகையில் கொண்டாடப் பெறுகிறது. ஆகவே, தென்னார்க்காடு சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் ஈன்ற தாயாகவும், செவிலித் தாயாகவும் விளங்கு கிறது என்று சுருங்கச் சொல்லலாம். தென்னார்க்காடும் சிவநெறியும் தென்னார்க்காடு, சிவமயமாகப் பொலிதரும் வாய்ப் புடையது. இதன்கண், எல்லாத் திருப்பதிகட்கும் உயிர்நாடியா யுள்ள தில்லையம்பதி திகழ்கிறது; வேறுபல தொண்மைப் பதிகளும் ஆங்காங்கே ஒளிர்கின்றன. சமய குரவருள் இருவரையும், சந்தான குரவரையும், திருநீலகண்டர் - மெய்ப் பொருளார் - நரசிங்கமுனையர் முதலிய நாயன்மாரையும் ஈன்ற பெருமை தென்னார்க்காட்டுக்கு உண்டு. பெரிய புராணம், சிவஞானபோதம் முதலிய சிவ நூல்கள் எங்கே பிறந்தன? தென்னார்க்காட்டி லல்லவோ? கம்பரை வளர்த்தது எது, அங்கவை சங்கவையரை ஆட்கொண்டது எது? தென்னார்க்கா டென்று சொல்லவும் வேண்டுமோ? இராமலிங்கசுவாமிகள் அருளறம் ஓம்பியதும் தென்னார்க்காடேயாகும். தென்னார்க் காட்டுப் பாடலிபுரத்தில் எழுந்த கலைப்பெருக்கை விரித்துக் கூறவேண்டுவதில்லை. தென்னார்க்காட்டிலே தோன்றிய அறவோர் பலர்; அந்தணர் பலர்; பாவலர் பலர்; நாவலர் பலர்; வீரர் பலர்; கலைஞர் பலர்; தத்துவர் பலர்; ஞானிகள் பலர். தென்னார்க்காட்டைச் சிவம் பெருக்கும் ஒரு சக்தி பீடம் என்று கூறுதல் மிகையாகாது. தென்னார்க்காட்டின் இயற்கை வளத்தில் என்றுஞ் சிவமணங் கமழ்ந்துகொண் டிருக்கும். தவத்துக்கும் அமைதிக்கும் உரிய இயற்கை அமைப்புகள் தென்னார்க்காட்டில் பலபடக் கிடக்கின்றன. இங்கே ஒன்று நினைவிலுறுகிறது. அதன் வனப்பை என்னென்று கூறுவேன்! mJ ‘ifòidª âa‰wh¡ fÉ‹bgW td¥ò! இயற்கைச் சிவம் அங்கே நடம்புரிகிறது. அந்நடத்தைக் கண்ணுள்ளோர் காணலாம். அவண், எரிவாயி னின்றும் கல்லடுக்கு உருகி உருகி, வழிந்து வழிந்து, தேங்கித் தேங்கிக், குவிந்து குவிந்து, பாறையாய் இறுகி இறுகி ஓங்கலாயிற்றோ என்னத்தக்க ஒர் அழகிய குன்றோவியமும், அவ்வோவியத்தினின்றும் மற்றுமோர் ஓவியம் முகிழ்த்து எழுந்தாலெனப் பொலியும் ஓரு பூங்கோயிலும், அக்கோயிலைத் தன்னகத்தே காட்டும் பளிங்கென விளங்கும் ஒரு சுனையும், வெண்ணெய்ச் சடையன் அருளோ என்னப் பெருகிக் குன்றோவியத்தை அணைந்து அணி செய்யும் பெண்ணையும், பெருக்கு - பாட்டென ஒழுங்காயோடுதற்கு அரணாக இருபுறமும் நிற்கும் பசுஞ்சோலை மலைத்தொடர்வும், இன்ன பிறவும் காட்சியளிக்கும். அக்காட்சி கண்ணையுங் கவரும்; கருத்தையுங் கவரும்; தவங் கூட்டும்; அமைதியில் நிறுத்தும்; சிவமாக்கும். அக்குன்றில் அமர்ந்து இயற்கைச் சிவத்தில் ஈடுபடும் ஒருவன் சிவனடியனாதல் ஒருதலை. திருவதிகை இன்னோரன்ன சிறப்புக்கள் பலவுடைய தென்னார்க் காட்டிலே, வற்றாது மணிகொழிக்குங் கெடிலநதிக்கரையிலே, அன்பர்கள் பணி கொழிக்குந் திருவதிகையிலே, சைவ சித்தாந்த மகா சமாஜச் சார்பிலே நாம் அனைவரும் கூடியிருக்கிறோம். திருவதிகை நினைவு தோன்றும்போது, நமது சைவச் செல்வம் - தவ விளக்கு - திலகவதியார் நினைவும் தோன்றுகிறது. திலகவதியாரை நினைப்போமாக. அனைத்துயிர்க்கும் தாங்கிய அருளினின்றும் மலர்ந்த சிவப் பொலிவும், தவக் கோலமும், திருவலகும், திருமெழுக்குத் தோண்டியும் கொண்ட ஓர் அற்புதத் தெய்வ வடிவம் புலனாகிறது. அத் தெய்வ வடிவை உன்னுவோம்; வாழ்த்துவோம்; வணங்குவோம். திலகவதியாரது தயா அன்றோ அப்பர் அருந்தமிழாகி நமக்குத் துணை செய்கிறது? அவர்தம் வேண்டுதலன்றோ ஆண்டவன் அருளாய் அப்பரை ஆண்டது? அம்மையார் உள்ளொளித் திறத்தை என்னென்று கூறுவது? ஒரு பெண் தெய்வத்தின் வேண்டுதல் எவ்வளவு காரியங்களை நிகழ்த்தியது! பெண்மையின் பெருமை என்னே! என்னே! திருவதிகை, அட்டவீரட்டத்துள் ஒன்று. சிவபிரான் முப்புரம் எரித்த இடம் திருவதிகை என்று புராணம் புகல்கிறது. முப்புர மாவது மும்மல காரியம் என்று திருமூலர் கூறுகிறார். அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் - முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் - முப்புர மாவது மும்மலகாரியம் - அப்புரம் எய்தமை யாரறி வாரே எனவரூஉம் அவர்தம் திருமந்திரத்தை ஓர்க. திருவதிகை, முப்புரமென்னும் மும்மல எரிவுக்கு அறிகுறியா யிருப்பது. திருவதிகையில் ஆண்டவன் அப்பருக்குச் சூலைநோய் தீர்த்து அருள் புரிந்ததும், நம்பியாரூரருக்குத் திருவடி தீக்கை செய்ததும் முப்புரமென்னும் மும்மல எரிவை உணர்த்துவனவாம். வேறு பல அற்புதச் செயல்களும் திரு வதிகையில் நிகழ்ந்துள்ளன. திலகவதியாரது திருத்தொண்டை ஏற்ற திருவதிகையில் வீற்றிருந்தருளும் வீரட்டப் பெருமான் திருவருளை முன்னிட்டுச் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்னும் பெயரையே பொருளாக் கொண்டு பேசப் புகுகிறேன். 2. சைவ சித்தாந்தம் பெயரும் பொருளும் முதலாவது சைவ சித்தாந்தம் என்பதன் மீது கருத்துச் செலுத்துவோம். சைவ சித்தாந்தம், சைவம் என்றும், சித்தாந்தம் என்றும் வழங்கப்படுகிறது. சைவமும் சித்தாந்தமும் ஒன்றே. உலகில் எத்துணையோ சித்தாந்தங்கள் இருக்கின்றன. அவைகளை இன்ன இன்ன சித்தாந்தமென்று அடை மொழி யால் அணி செய்தல் வேண்டும். இல்லையேல், அதன் பெயரும் தத்துவமும் விளங்குதல் அரிதாகும். அடை அணியின்றிச் சைவம் மட்டும் சித்தாந்தம் என்று அழைக்கப் படுவது உலகறிந்த தொன்று. சித்தாந்திகள் சித்தாந்த சாத்திரம் என்னும் ஆட்சிகள், முறையே சைவர்களையும் சைவ சாத்திரத்தையும் உணர்த்தல் ஈண்டுச் சிந்திக்கற்பாலது. இச் சித்தாந்தம், உலகிலுள்ள எல்லாச் சிந்தாந்தங்களிலும் கலந்தும், கடந்து தனித்தும் நிலவுதலால், இஃது அடை அணியின்றிச் சித்தாந்தம் என்று வழங்கப்படுகிறதென்க. சித்தாந்தம் என்பதற்குப் பல பொருள்கள் சொல்லப்படு கின்றன. அப்பொருட்களுள் ஒன்று ஈண்டுச் சிறப்பாகக் குறிக்கத் தக்கது. அஃது எது? அது மிகவுந் தொன்மையது; ஆனால் பெரிதும் வழக்காறற்றது. சரித்திரக் கண்ணர்க்கு அதன் தொன்மையும், வழக்காற்றற்மையும் இனிது புலனாகும். வழக்காறற்ற ஒன்றைக் கூறுதலால் சில இடர்கள் உண்டு என்பது எனக்குத் தெரியும். தெரிந்தே அதனிடைத் தலைப்படுகிறேன். சித்தாந்தம் என்பதற்குச் சித்தர் கண்ட முடிவு என்பது பொருள். சித்தமார்க்கம் சித்தாந்தம். சித்தர், சிவசம்பந்த முடையவ ராதலால், அவர் கொண்ட மார்க்க மாகிய சித்தாந்தம், சைவ சித்தாந்தம் என்றும் வழங்கலாயிற்று. சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சித்தர் சிவத்தைக் கண்டவர் என்றார் திருமூலர். சைவம், சிவசம்பந்தம், சிவம் என்பது இறைவனுக்குரிய பல பெயர்களுள் ஒன்று. அப்பெயர், தொன்மை வாய்ந்தது. அதனாலும் அது சிறந்தது. ஒருகாலத்தில் அப்பெயரை உலகமே ஏற்றுப் போற்றியது. சிவ வழிபாடு ஒருபோது உலகம் முழுவதும் பரவியிருந்தது. இதற்குச் சான்றுகள் பல உண்டு. அவைகளை இம்முன்னுரை யில் விரித்துக் கூறுவது அநாவசியம். பால்டிக் கடல், அயர்லாந்து, நீலநதிக்கரை, துருக்கிதானம் முதலிய இடங்களில் இன்னும் சிற்சிலபோழ்து சிவலிங்கங்கள் கண்டு எடுக்கப்படுகின்றன. இஃது எதைக் குறிக்கிறது? சிவ வழிபாட்டின் பரப்பையன்றோ குறிக்கிறது? சிவம் என்பது பல பொருள் ஒரு சொல். அதற்குச் சித்தர் காலத்தில் கொள்ளப்பெற்ற பொருள் சுத்தம் என்பது. இதனை ஜைன சகதிரநாம வியாக்கியானத்திற் காணலாம். சிவம் அசைவற்றது; போக்குவர வில்லாதது; எங்கும் நீக்கமற நிறைந் திருப்பது; எல்லாவற்றிலுங் கலந்தும் கடந்தும் நிற்பது; எல்லா வற்றிலுங் கலந்தாலும் தனது இயல்பினின்றும் திரியாதது; சித்தத்தைத் தன்பால் வைத்தோர் உள்ளத்தில் ஒளிர்வது. மார்க்க வரலாறு சித்த மார்க்கம் முதன் முதல் கால்கொண்ட இடம் நாவலந் தீவு. நாவலந் தீவு என்னும் பெயர் நமது நாட்டுக்குரிய பெயர் களுள் ஒன்று. அப்பெயர் ஒருபோது உலகுக்கும் வழங்கிவந்தது. பரத கண்டம் என்னும் பெயர், நாவலந் தீவு என்னும் பெயருக்குப் பிற்பட்டது. நமது நாடு பரத கண்டம் என்னும் பெயர் பெறுதற்கு முன்னரே, அதன்கண் சித்தமார்க்கம் நிலவிய தெனில், அம்மார்க்கத்தின் தொன்மையை என்னென்று கூறுவது? சித்தமார்க்கம், நாவலந் தீவினின்றும் நானா பக்கங் களிலும் பரவிப் பரவி, ஆங்காங்குள்ள மொழியில் ஒவ்வொரு விதப் பெயர் பெறலாயிற்று. நாளடைவில் ஒவ்வொரு பெயர் ஒவ்வொரு சமயமாகக் கொள்ளப்பட்டது. இப்பொழுது பல வேறு பெயர்களால் பல வேறு இடங்களில் நிலவி வரும் சமயங்கள் யாவும், சித்தமார்க்கம் என்னும் ஒன்றினின்றும் பிறந்தனவே யாகும். சமயங்களெல்லாம் சித்த மார்க்கத்தி னின்றும் பிறந்தன என்னும் உணர்வே பல இடங்களில் மாண்டு விட்டது. இந்நாளில் எல்லாச் சமயங்களும் சித்த மார்க்கம் என்று சொல்வதும் எள்ளப்படும் போலும்! சித்தர் சித்தர் யாவர்? சித்தர் சித்தி பெற்றவர்; சித்தையுடையவர். சித்தாவது, ஆத்ம சக்தியினின்றும் எழுவது. சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் சிந்தனையில் மூழ்க மூழ்கச் சித்தவிகாரம் ஒடுங்கும். அஃது ஒடுங்க ஒடுங்க ஆத்ம சக்தி எழும். ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி என்றார் வாதவூரடிகள். ஆத்ம சக்தியில் பலதிறப் படிகளுண்டு. முழு ஆத்ம சக்தி எல்லாவிதச் சித்துக்களையும் கூட்டும். அச்சக்தியால் ஆகாத தொன்றில்லை. அதைப் பெற்றவர் எல்லாஞ் செய்யவல்லவ ராவர். இயற்கை, அவர்கட்கு ஏவல் செய்யும். அவர் செயற்கருஞ் செயல் செய்வர். அவர்தந் திறங்களைத் தாயுமானார் வித்தகச் சித்தர்கணம் என்னும் பகுதியில் விளக்கியுள்ளார். சித்தர், சிவத்தை நினைந்து நினைந்து, சிவமானவ ராதலால், அவர், நரை திரை மூப்பு சாக்காடு முதலியவற்றைப் பெறுவதில்லை. அவர் என்றும் ஒரு பெற்றியராய்ச், சிவந்த மேனியராய், என்றும் இளைஞராய், அழகராய் வாழ்பவர். சுழற்றிக் கொடக்கவே சுத்தி கழியுங் - கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித் - துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க் - கழற்றி தவிர்ந்துடல் அஞ்சன மாமே, மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள - வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் - நான்றவிம் முட்டை யிரண்டையுங் கட்டியிட் - டூன்றி யிருக்க உடம்பழி யாதே, உந்திச் சுழியின் உடனே பிராணனைச் - சிந்தித் தெழுப்பிச் சிவமந்திரத்தினால் - முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச் - சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே, நில நிறனுடை நேரிழை யாளொடுஞ் - சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு - ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் - பாலனு மாவர் பராநந்தி ஆணையே எனவரூஉம் திருமூலர் திருவாக்கு களை நோக்குக. இத்தன்மையோர் சித்தரெனப்படுவர். தென்னாடும் சித்த மார்க்கமும் தென்னாட்டில் சித்த மார்க்கம் நன்கு வளர்ந்து வந்தது. இடையில் அதற்குச் சிதைவு நேர்ந்தது. அப்போது, சமய குரவர் நால்வர் தோன்றி, அம்மார்க்கத்தை ஓம்பினர். அந்நால்வரும் சித்தரே. அவர் அறிவுறுத்தியதும் சித்தமார்க்கமே. தங்களை ஆட்கொண்ட மூர்த்தியைச் சித்தனே திருவாலவாய் மேவிய - அத்தனே என்றும், சித்த னைத்திரு வண்ணா மலையனை என்றும், சித்தா சித்தித் திறங்காட்டுஞ் சிவனே என்றும், சித்த னைச்சிவ லோகனை என்றும் அப்பெருமக்கள் போற்றி இருத்தல் காண்க. சிவன் எல்லாம் வல்லவனாதலால், அவன் சித்தன் என்னப்பட்டான். அவன் தொடர்புகொண்டு வாழ்வோருஞ் சித்தரெனப்பட்டனர். சித்தர் வந்து பணியுஞ் செல்வச் சிரபுர மேயவனே, சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்கு வார்கள். சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடம், சித்தர் சித்தம் வைத்தபுகழ் சிறுவன் ஊரன் என வரூஉந் தமிழ்மறை மொழிகளை உன்னுக. நால்வர் வரலாற்றை நோக்குழி, அவர்தம் உடல் இவ் வுலகில் இறந்துபடவில்லை என்பது நன்கு விளங்கும். ஞானசம்பந்தர் திருநல்லூர்ப் பெருமணத்திலே சிவசோதியிற் கலந்தார். நாவரசர் சிவானந்த ஞானவடிவில் ஒன்றினார். அவர், சிங்கத்தால் விழுங்கப் பெற்றார் என்னும் பொய்க்கதை பின்னே புனையப்பட்டது. நம்பியாரூரர் யானைமீதிவர்ந்து நொடித்தான் மலை நோக்கிச் சென்றார். மாணிக்கவாசகனார் மன்றில் புகுந்து ஒளியானார். இவர்கள் அருளிய தமிழ் மறையில் சாகா நிலைக்குரிய சான்றுகள் மலிந்து கிடக்கின்றன. ஈண்டுத் தாலிபுலாக நியாயம் பற்றி ஒன்றை மட்டும் எடுத்துக் காட்டுகிறேன். சொல்லுவ தறியேன் வாழி முறையோ - தரியேன் நாயேன் தானெனைச் செய்தது - தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற் - கருளிய தறியேன் பருகியும் ஆரேன் - விழுங்கியும் ஒல்ல கில்லேன் - செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து - உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப - வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் - தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை - குரம்பை தோறும் நாயுட லகத்தே - குரம்பை கொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய - அற்புத மான அமுத தாரைகள் - எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ - துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக் - கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய - கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை - என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற் - கருணை வான்தேன் கலக்க - அருளொடு பராவமு தாக்கினன் - இது திருவாசகத்தில் - திருவண்டப் பகுதியில் - இருப்பது. இதன்கண் மாணிக்கவாசகனார் தாம்பெற்ற இறவா நிலையை இனிது விளக்கியிருத்தல் காண்க. இப் பெருநிலையை அடைய முன்னைநாளில் முயன்றவர் பலர்; பின்னை நாளில் முயன்றவர் சிலர். இவருள் இராமலிங்க சுவாமிகளைச் சிறப்பாகக் குறிக்கலாம். இராமலிங்க சுவாமிகளுக்குத் திருவாசகத்தில் பொதுவாகத் தணியாக் காதல் உண்டு. சிறப்பாக அவர்தம் உள்ளத்தைக் கவர்ந்தது திருவண்டப் பகுதி. திருவண்டப் பகுதியில் உள்ள என்னையும் இருப்ப தாக்கினன் என்னும் பெருமொழி, சுவாமிகள் உள்ளத்தைக் கோயில் கொண்டது. சுவாமிகள் அதில் படிந்து படிந்து அதுவாக முயன்றார். தம்மை இருப்பதாக்கிக் கொள்ள வேண்டு மென்ற வேட்கை அவருள் முருகி எழுந்தது. அவ்வேட்கையைத் தணித்துக்கொள்ள இராமலிங்க சுவாமிகள் மாணிக்கவாசக னாரை அடைந்து அழுத அழுகை அளவிடற்பாலதன்று. அழுதால் உன்னைப் பெறலாமே என்னும் வாசகத்தின் நுட்பம் இராமலிங்க சுவாமிகளுக்குத் தெரியும். இராமலிங்க சுவாமிகள், மாணிக்கவாசகனாரை நோக்கி, உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற - திருவண்டப் பகுதி யெனுந் திருவகவல் வாய்மலர்ந்த - குருவென்றெப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ - இருவென்ற தனியகவல் எண்ணமெனக் கியம்புதியே என்று வேண்டுதல் செய்தார். இவ்வேண்டுதலின் நுட்பத்தை உன்ன உன்ன உண்மை விளங்கும். திருவண்டப் பகுதியில் உள்ளது இறவா நிலை. அந்நிலை பெற்றோர் சித்தராவர். சித்தன் என்னுஞ் சொல்லுக்கு உலகில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. அவைகளுள் சில வருமாறு :- நந்தி, நாதன், அருகன், புத்தன், குமரன், தீர்த்தங்கரன், தீர்க்கதரிசி, கிறிது, நபி, குரு, ஆச்சாரியன் முதலியன. இப் பெயர் வேற்றுமையைக் கருதாது, பொருள் ஒற்றுமையில் கருத்துச் செலுத்துவது சிறப்பு. சித்தர் திருக்கூட்டம் சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் சித்தி பெற்றவர் பலர் உளர். அவருள் மிகமிகப் பழமையானவர் சிலர். அச்சிலரே உலகுக்கு வழிகாட்டிகளாக நிற்கிறார். அவர் வழி உலகம் இயங்குகிறது. அவர் சேர்ந்த ஒரு தனித் திருக்கூட்டமும் இருக்கிறது. அத்திருக்கூட்டம், இமயத்தின் முடியிலுள்ள கைலாயத்தில் வீற்றிருக்கிறது. அக்கைலாயம் இராப்பகல் அற்றது. அது வேறு. இமயத்தடியிலுள்ள கைலாயம் வேறு. முன்னையது நுண்ணியது. பின்னையது பருமையது. இஃது அதை நினைவூட்டுவது. சமயம் நேரும்போதெல்லாம் அத் திருக்கூட்டத்தினின்றும் சிலர் போந்து, சித்தமார்க்கமென்னுஞ் சித்தாந்தத்தை ஓம்பிச் செல்வது வழக்கம். குருமார் திருக்கூட்டத்தை நம்பாத சமயத்தவர் இல்லை. அவர்தம் வருகையைச் சொல்லாத சமய வேதமும் இல்லை. இதனால் சமயங்களின் தாயகம் ஒன்றே என்பது நனி விளங்கு கிறது. அத்தாயகத்தின் பெயரைப்பற்றி உலகில் வாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. பொருள் ஒருமை புலனாகும்போது, வாதங்களெல்லாம் ஞாயிறு முற்பட்ட பனிப்படலம் போல இரிந்து ஒழியும். சித்தாந்த ஆட்சி சித்த மார்க்கம், தொடக்கத்தில் சித்தாந்தம் என்னும் பெயர் பெற்றிருந்தது. பின்னே அதற்கு வெவ்வேறு மொழியில் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டன. எனக்குத் தெரிந்தவரை இன்னும் இரண்டு சமயங்கள் சித்தாந்தப் பெயரை நெகிழ விடாம லிருக்கின்றன. ஒன்று சைவம்; மற்றொன்று ஜைனம். சைவம், சித்தாந்தம் என்று வழங்கப்படுவது வெள்ளிடைமலை. ஜைனம், சித்தாந்த மென்னும் வழக்குடைய தெனில், இந்நாளைய சைவ உலகத்துக்கு ஒரு வித வியப்பே தோன்றும். ஜைன தத்துவங்களைக் கொண்ட வேதத்துக்குச் சில பெயர்கள் சொல்லப்படுகின்றன.அவை, சதுர் அநுயோகம், பராமாகமம், சித்தாந்தம் முதலியன. சித்தாந்தம் என்னும் வேதப் பெயரைச் சமயத்துக்கும் வழங்கலாமன்றோ? சித்தாந்த பூசை என்னும் வழக்கு இன்னும் ஜைன உலகத்திலிருத்தல் கண்கூடு. ஆகவே, சித்தாந்தம் என்னும் தனி ஆட்சி ஜைனத்திலும் இருப்பது கவனிக்கத்தக்கது. கால மூவர் ஒவ்வொருபோதும் சித்த மார்க்கத்தை ஓம்பச் சிலர் போதருவர். அவ்வப்போது போந்தவர்களின் பெயர்களை ஈண்டு விரிக்கிற் பெருகும். அணித்தே தோன்றிய சிலர் மீது எனது எண்ணம் செல்கிறது. அவருள் குறிக்கத் தக்கவர், சுவீடன்பர்க், பிளவட்கி அம்மையார், தாயுமானார் ஆவர். சுவீடன்பர்க், சித்தர் நிலை அடைந்து அதி அற்புதச் செயல்களை நிகழ்த்தினார். அவைகளைக் கூறும் நுல்களும் இருக்கின்றன. அந்நூல்களின் சாரத்தைத் திரு. கோபால் செட்டியார் வடித்து உதவியுள்ளார். அவருக்கு எனது நன்றியறிதல் உரியதாக. பிளவட்கி அம்மையார் சித்தர் கூட்டத்தின் பல நுட்பங்களை விளக்கியுள்ளார். அவர், ஒருவரைச் சித்தர் கூட்டத் தலைவரென்று குறிப்பிடுகிறார். அத்தலைவரை அம்மையார் மோனமூர்த்தி (சைலன்ட் வாச்சர் - Silent Watcher) என்று சொல்கிறார். அம்மூர்த்திக்குரிய இயல்கள் சில, அம்மையாரால் விளக்கப்பட்டிருக்கின்றன. அவ்வியல்களை நோக்குழி மோனமூர்த்தி என்பவர் நம் தட்சணாமூர்த்தியாகக் காணப்படுகிறார். அம்மையார் கண்ட தியாசாபிகல் சங்கக் கோயில் ஒன்றில் தட்சணாமூர்த்தி உருவம் முன்னணியில் பதிக்கப்பட்டிருக்கிறது. தட்சணாமூர்த்தியை ஜைனர் விருஷப தேவர் என்றும், பௌத்தர் ஆதி புத்தர் என்றுங் கூறப. ***மாக்கயிலை மிசைநாப்பண்*** மூவிலையொரு நெடு வேலின் - மேவாத வினையவுணர், குன்றுபட நூழிலாட்டி - வென்றட்ட விறல் வெகுளியை, மூவெயிலின் முரண் முருக்கி - மூவர் சரணடைய நின்றனை, கருப்புநாண் வில்லிபட - நெருப்புமிழ் நெடு நோக்கினை, கோள்வலிய கொடுங் கூற்றைத் - தாள் வலியின் விழவுதைத்தனை, பரிவில்கே வலக்கிழத்தி - பிரிவில்லா ஒரு பாகனை, ஆன்றமெய் அறம் வளர்க்கும் - மூன்று கண் முனித்தலைவனை, ஆல நெடுநிழல் அமர்ந்தனை - கால மூன்றுமுடன் அளந்தனை, தாழ்சடை முடிச் சென்னிக் - காசறு பொன்னெயிற் கடவுளை, மன்னியபே ருலகனைத்தும் - நின்னுள்ளே நீயொடுக்கினை, நின்னின்று நீவிரித்தனை - நின்னருளின் நீகாத்தனை, எனவாங், காதிபகவனை அருகனை, மாதுயர் நீங்க வழுத்துவம் பலவே எனவரூஉந் திருக் கலம்பகத்தில் உள்ள அருகனுக்கும், சைவ நூல்கள் கூறும் தட்சணாமூர்த்திக்கும் ஏதாயினும் வேற்றுமை உண்டா என்று சிவநேயர்களைக் கேட்கிறேன். காய்தல் உவத்தல் அகற்றி, எதையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுக்கு அழகு. தாயுமானார், குருமரபு வணக்கத்தில் முதன் முதல் துய்ய கரமலரால் சொல்லாமல் சொன்ன உண்மை - ஐயனைக்கல் லால்அரசை யாம் அணைவ தெந்நாளோ என்று தட்சணா மூர்த்தியைப் போற்றி யிருக்கிறார்; வேறிடங்களில் வித்தகச் சித்தர் கணம் என்றும், நவநாத சித்தர் என்றும் அருளி யுள்ளார். அவரே, சைவ சமயமே சமயம் என்றும், சித்தாந்த வீதிவருந் தேவே என்றும், சித்தாந்த முத்திமுதலே சிரகிரி விளங்கவரு தட்சணா மூர்த்தியே என்றும் திருவாய் மலர்ந் திருக்கிறார். இத்திருவாக்குகளை முறை முறையே ஆராய்ந்து பார்த்தால், தாயுமானார், சித்த மார்க்கத்தையே சைவமென்றும் சித்தாந்த மென்றும் உலகுக்கு அறிவுறுத்தினார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல உணரக் கிடக்கிறது. இனித் தாயுமானாரது உபதேச மரபை நோக்குவோம். அவர், தங்குருவை, மூலன் மரபில்வரு மௌன குருவே என்று போற்றுகிறார். மூலன் மரபு எது? அது திருமந்திரத்தில் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திருமந்திரம் சித்தமார்க்கத் திறங்களைக் கொண்ட ஒரு பெருங் கருவூலம்; தமிழ்ச் சித்த வேதம். சித்த வேதம் தமிழ்ச் சித்தவேத மெனில், வேறு மொழியிலும் சித்தவேதம் உண்டோ? என்னும் ஐயம் பிறக்கும். சித்தவேதம் பல மொழியில் வெளிவந்திருக்கிறது. வேதம் ஒன்றே. அது சித்தரால் வெளிவருதலால் சித்தவேதம் எனப்பட்டது. சித்தர் செழுமறைசேர் நாவராய் என்பது ஞானசம்பந்தர் திருமொழி. உலகில் ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் பெரியோர் அருளியதை வேதம் வேதம் என்று சொல்லிக்கொள்கிறார். வேதம் ஒன்றா? பலவா? வேதத்தின் காரணத்தை நோக்கும் போது அதை ஒன்று என்றும், அதன் காரியத்தை நோக்கும் போது அதைப் பல என்றும் சொல்லலாம். ஒன்றிலிருந்து பல தோன்றுதலும், பல, ஒன்றில் அடங்குதலும் இயல்பு. ntj¤â‹ fhuz« vJ?, fhÇa« vJ?, காரணம் ஒலி; காரியம் எழுத்து. மொழிகளின் எழுத்துக்களெல்லாம் எங்கே யிருந்து பிறக்கின்றன? அவை, ஒலியிலிருந்து பிறக்கின்றன என்று எவருங் கூறுவர். ஒலி, நாதம் எனப்படும். நாதம் இருவகை. ஒன்று மாயா நாதம்; மற்றொன்று அருள்நாதம். மாயாநாதம் எல்லார்க்குங் கேட்பது. அருள் நாதம் அமல யோகிகட்கு மட்டுங் கேட்பது. வேதம் அருள் நாத வடிவாயிருப்பது. அமல யோகிகள் அருள்நாதங் கேட்கப் பெறுவது ஒரு நிலை.அதற்கு மேற்பட்டது அருட்சோதி. அருட் சோதியைக் கண்டு அதில் ஈடுபட்ட பெரியோர்வழி அருள்நாதங் காரியப்படும். நாதவடிவாயுள்ள வேதம், வரி வடிவாய்ப் பெரியோர்கள் வாயிலாகப் பலமொழியில் காரியப்படுகிறது. நந்தமிழ் மொழியிலும் வேதம் காலத்துக்கேற்ற முறையில் அவ்வப்போது சான்றோர்கள் வழியே வெளிவந்திருக்கிறது. அவ்வாறு வெளிவந்த அருள்நூல்களில் திருமந்திரமும் ஒன்று. திரு மந்திரத்தின் வாயிலாகப் பல நுட்பங்களை உணர்தல் கூடும். திருமுலர் திருமந்திரத்தை அருளிய திருமூலர், சித்தர் கூட்டத்தைச் சேர்ந்தவர்; தமிழில் வேதத்தை அருளுதற்கு இராப்பகலற்ற கைலையினின்றும் மண்ணுலகு நோக்கினவர்; சித்தமார்க்கம் சித்தாந்தம் என்பதைத் தெளிவு செய்தவர். இவைகளை அகச்சான்று கொண்டே நிறுவிக் காட்டலாம். அச்சான்றுகளிற் சில வருமாறு:- விளக்கிப் பரமாகும் மெய்ஞ் ஞானச் சோதி, அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி, துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து, வளப்பில் கயிலை வழியில்வந் தேனே - இருந்தேன்இக் காயத்தே எண்ணிலி கோடி, இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே, இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே, இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே - சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில், உத்தம மாகவே ஓதிய வேதத்தின், ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி, அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே - மாலாங்க னேயிங்கு யான் வந்த காரணம், நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு, மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின், சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே - பின்னைநின் றென்னே பிறவி பெறுவது, முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர், என்னைநன் றாக இறைவன் படைத்தனன், தன்னைநன் றாகத் தமிழ்ச் செய்யு மாறே - பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட், டிதமுற்ற பாச இருளைத் துரந்து, மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே, திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே - சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன், சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர், முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச், சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே - ஆகமம் ஒன்பானதிலான நாலேழு, மோகமி னாலேழு முப்பேத முற்றுடன், வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மையொன், றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே - உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து, மடலான மாமாயை மற்றுள்ள நீவப், படலான கேவல பாசந் துடைத்துத், திடமாத் தனையுற்றல் சித்தாந்த மார்க்கமே - தானான வேதாந்தந் தானென்னுஞ் சித்தாந்த, மானாத் துரியத் தணுவன் றனைக் கண்டு, தேனார் பராபரஞ் சேர்சிவ யோகமாய், ஆனா மலமற் றருஞ்சித்தி யாதலே - நித்தம் பரனோ டுயிருற்று நீள்மனம், சத்தம் முதல்ஐந்துந் தத்துவத் தால்நீங்கிச், சுத்த மசுத்தந் தொடரா வகைநினைந், தத்தன் பரன்பால் அடைதல்சித் தாந்தமே - தானவனாகுஞ் சமாதி தலைப்படில், ஆன கலாந்தநா தாந்தயோகாந்தமும், ஏனைய போதாந்தம் சித்தாந்த மானது, ஞானமெனஞேய ஞாதுரு வாகுமே - சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும், அவமவ மாகு மவ்வவ் விரண்டுஞ், சிவமாஞ் சதாசிவன் செய்தொன்றா னானால், நவமான வேதாந்த ஞானசித் தாந்தமே - சித்தாந்தத் தேசீவன் முத்திசித்தித்தலாற், சித்தாந்தத் தேநிற்போர் முத்திசிச் தித்தவர், சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலால், சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே. இத் திருமந்திர மொழிகளால், இராப்பகலற்ற கைலையில் சித்தர் கூட்டம் இருத்தல், சித்தருட் சிலர் சமயம் நேரும்போது உலகிடைப் போதரல், அவர் வாயிலாக நாதவடிவாயுள்ள வேதம் காரியப் படல், சித்தமார்க்கம் சிவநெறியாகிய சித்தாந்தம் என்பது முதலிய உண்மைகளைப் பெறுகிறோம். காலம் சித்தமார்க்கம் உண்டாகிய காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலாது. அது காலவரையில் அகப்படாமையால் அதனை அநாதி என்றுங் கூறுப. ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே எனவும், இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி எனவும், ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள் - ஞானப்பா லாட்டி நாதனை அர்ச்சித்து - நானும் இருந்தேன எனவும் வரூஉந் திருமூலர் திருவாக்குகள் சித்த மார்க்கத்தின் தொன்மையை உணர்த்துவன. சித்த மார்க்கம் மிக மிகத் தொன்மையது என்று கூறும் அளவில் யான் நின்றுவிடுகிறேன். சித்தாந்தத்தின் சமரசம் சித்தாந்தம், உலகு உயிர் கடவுள் என்னும் மூன்றற்கும் அநாதி நித்தியங் கூறுவது. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில் - பதிபோல் பசுபாசம் அநாதி என்றார் திருமூலர். உலகு உயிர் கடவுள் என்னும் மூன்றனுள் ஒவ்வொன்றைப் பொருளாக் கொள்வோருமுளர்; இரண்டிரண்டைப் பொருளாகக் கொள் வோருமுளர். மூன்றையும் பொருளாகக் கொள்வோருமுளர். எல்லாக் கொள்கையும் எவ்வழியிலாதல் இம்மூன்றனுள் அடங்கும். இம்மூன்றில் அடங்காத கொள்கை இல்லையென்றே கூறலாம். சித்தாந்தம் முப்பொருளுக்கும் உண்மை கூறுதலால், அதன் கலப்பில்லாத கொள்கை இருத்தற்கு இடம் ஏது? சித்தாந்தத்தை விடுத்துத் தனியே நிற்கும் கொள்கை இல்லை என்க. முப்பொருளை வெவ்வேறாகக் கொள்வோரு மிருக்கிறார்; ஒன்றாகக் கொள்வோரு மிருக்கிறார். சித்தாந்தம் இருசாரா ரிடத்தும் மாறுபடுவதில்லை. சித்தாந்தம் பொருட்டன்மையில் மூன்றையும் வெவ்வேறாகவும், கலப்புத் தன்மையில் மூன்றையும் ஒன்றாகவும் கொண்டிருக்கிறது. இதனால், சித்தாந்தம் எக்கொள்கையிலும் எவ்விதத்திலாதல் தொடர்பு கொண்டு நிலவும் தன்மையது என்பது அறியக் கிடக்கிறது. சித்த மார்க்கம் என்னும் சித்தாந்தம் ஒன்றே முன்னை நாளில் எங்கும் பரவியிருந்தது. பற்பல காரணங்களால் அதற்குச் சிதைவு நேர்ந்தது. சிதைவால் பொருள் அழிவதில்லை என்பது அறிஞர் கூற்று. சிதைவால் நேர்ந்த கூறுபாடுகள் ஆங்காங்கே நிலவிக்கொண் டிருக்கின்றன. அவைகள் யாவும் சித்தாந்தத்தின் உறுப்புகளே யாகும். இப்பெற்றிவாய்ந்த சித்தாந்தம் எவருடைமை? சித்தாந்தம் இன்னாருடைமை என்று யாண்டாயினும் பதிவு செய்யப் பட்டிருக்கிறதா? அதனை ஓம்பவந்த பெரியோர் அனைவரும், அதனை உலகுக்குரிய பொது உடைமை என்றே வலியுறுத்திச் சென்றனர். சித்தாந்தம் ஒரு சாதியார்க்கோ, ஒரு மதத்தார்க்கோ, ஒரு நாட்டார்க்கோ, ஒரு மொழியார்க்கோ, ஒரு நிறத்தார்க்கோ மட்டும் உரியதன்று. அது மன்பதைக்கே உரிய ஒன்று. ஒன்றது பேரூர் வழியா றதற்குள - என்றது போல இருமுச் சமயமும் - நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் - குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே (திருமந்திரம்), ஓதுசம யங்கள் பொரு ளுணரு நூல்கள் ஒன்றோடொன் றொவ்வாமல் உளபலவும் இவற்றுள் - யாதுசம யம் பொருள்நூல் யாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல எனும்பிணக்க தின்றி - நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நிற்பதுயா தொருசமயம் அதுசமயம் பொருள் நூல் (சித்தாந்தசாத்திரம்), வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் - மாறுபடுங் கருத்தில்லை (தாயுமானார்) எனவரூஉம் ஆன்றோர் மொழிகளைச் சிந்தித்துச் சித்தாந்தத்தின் சமரசத்தை உணர்க. இதுகுறித்துச் சைவத்தின் சமரசம் என்றொரு தனி நூல் எழுதியிருக்கிறேன். விரிவு அதிற் காண்க. திருநாவுக்கரசர் திருவருள் பெற்ற இடத்தில் நாம் கூடி யிருக்கிறோமாதலால், அவர்தம் வாழ்வினின்றும் சமரசத்துக்கு ஒரு குறிப்பை இங்கே எடுத்துக் காட்டலாமென்று கருதுகிறேன். திருநாவுக்கரசர் தொடக்கத்தில் சைவ நெறியில் நின்றா ரென்றும், பின்னே சமணசமயம் புகுந்தாரென்றும், மீட்டும் சைவ சமயம் நோக்கினா ரென்றும் புராணம் கூறுகிறது. திருநாவுக்கரசர் ஆண்டவன் அருள் பெற்றதும் வாய் மலர்ந்த பதிகத்தில் நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையா தொருபோதும் இருந்தறியேன் என்றும், சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந் தறியேன் - நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன் நாமம் என்நாவில் மறந்தறியேன் என்றும் அருளியுள்ளார். இம்மொழி களால் அவர் எப்பொழுதும் சிவபெருமானை மறக்கவில்லை என்பது தெளிவாகிறது. இதைக் காணுஞ் சிலர், அப்பர் சமணராயிருந்தபோது சிவபெருமானை மறந்திருந்தவ ரல்லவோ? அவர் எப்பொழுதும் சிவபெருமானை மறந்தறியேன்; மறந்தறியேன், என்று பாடி யிருக்கிறாரே. இஃதென்ன! முரண்பாடாயிருக்கிறது! என்று வியப்புறலாம். உண்மை விளங்கினால் வியப்புக்கு இடமிராது. அப்பர் காலத்தில் சாதிமத வேற்றுமைகள் மலிந்திருந்தன. அவர்தந் தாய் தந்தையர் அந்நாள் வழக்கிலிருந்த சைவநெறி பற்றி ஒழுகினார். பெற்றோர் வழியே அப்பரும் நிற்கலானார். அவ்வேளையில் ஆண்டவன் அருள் அப்பருக்கு விளங்கித் தோன்றவில்லை. அவர் நூலாராய்ச்சியில் தலைப்பட்டார். அவ்வாராய்ச்சியின் பயனாக அவருக்குச் சமண சமயம் மெய்ச்சமயம் என்று தோன்றிற்று. அவர் சமண சமயம் புகுந்தார். அங்கும் அவருக்கு ஆண்டவன் அருள் விளங்கித் தோன்றவில்லை. அவர் கலைஞானியாகவே வாழ்ந்தார். பின்னை அவருக்கு ஆண்டவன் அருள் கூடிற்று. கூடியதும், அப்பருக்குச் சமரச ஞானம் பிறந்தது. அவர், யான் தொடக்கத்தில் தாய் தந்தையர் வழி நின்று சிவன் என்ற பெயரால் செய்த வழிபாடும், பின்னே சமணனாகி அருகன் என்ற பெயரால் நிகழ்த்திய வழிபாடும் ஒரு பரம் பொருளையே சார்ந்திருக்கின்றன. உள்ள பரம்பொருள் ஒன்றே. அவ்வுண்மை இப்பொழுது விளங்குகிறது. ஆகவே, எப்பொழுதும் ஆண்டவனை யான் மறந்தறியேன் என்று பாடியருளினார். இதில் என்ன வியப்பு? தெய்வம் ஒன்றே. அதை அடையும் நெறியும் ஒன்றே. இந்நெறிக்குப் பல பெயர்கள் உலகில் வழங்கப்படுகின்றன. திருநாவுக்கரசர், தாம் திருவருளால் உணர்ந்த சமரசத்தைப் பல இடங்களில் அழகிய தமிழால் பாடி உலகுக்கு உபகரித்துள்ளார். அவைகளில் சில வருமாறு - வாது செய்து மயங்கு மனத்தராய் - ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் - யாதோர் தேவர் எனப்படு வார்க்கெலாம் - மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே; விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயம் செய்தே - எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்ற தாகும் - ஆறொன் றியசம யங்களின் அவ்வவர்க் கப்பொருள்கள் - வேறொன் றிலாதன; ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன - சமயமவை ஆறினுக்குந் தலைவன் தான்காண். இத் திருவாக்குகள் அப்பர் கொண்ட சமயத்தின் சமரசத்தை விளங்கச் செய்வனவாம். சமயத்தின் தற்கால நிலை சித்தாந்தம் என்னும் பெயர்மீது மட்டுங் கருத்துச் செலுத்திச் சிலர் அதை வெறுக்கிறார். பெயர்மீதுமட்டுங் கருத்துச் செலுத்தி ஒன்றை வெறுத்தல் கூடாது. பொருள் மீதும் நாட்டஞ் செலுத்துவது அறிவுக்கு அழகு. சித்தாந்தம் எப்பெய ரால் அழைக்கப்பட்டா லென்ன? வெவ்வேறு பெயர்களால் அஃது இப்பொழுது அழைக்கப்படாமலா இருக்கிறது? அதற்கு எத்துணையோ பெயர்கள் இப்பொழுது புனையப்பட்டுள்ளன. பெயரைப் பற்றிய கவலையே வேண்டுவதில்லை. சித்தாந்தத்தின் தத்துவம் - உண்மைப் பொருள்- சிதைய அதைக் கோடலாகாது. தமிழ் நாட்டில் சித்தாந்தம் என்னும் பெயருக்கு இன்னும் பெரும்பழுது நேரவில்லை. ஆனால் அதன் பொருளுக்கு ஒரோவழியில் பழுது நேர்ந்து வருகிறது. தமிழ் நாட்டில் சித்தாந்தப் பொருளுக்குச் சாதி, மதம், நாடு, மொழி, நிறம் முதலிய தளைகள் இடப்பட்டிருக்கின்றன. அத்தளைகள் சித்தாந்தத்தின் சொரூபத்தைக் குலைத்து வருதல் கண்கூடு. சைவ சித்தாந்திகள் என்று தங்களை நினைந்து கொண் டிருப்போர் பலர், சைவ சித்தாந்தம் எல்லார்க்கும் உரிய ஓர் அகண்டம் என்னும் உணர்வின்றிக், கட்டுப்பட்ட கண்மூடி வழக்க ஒழுக்கங்களைச் சைவ சித்தாந்தம் என்று கொண்டு வாழ்வு நடாத்துகிறார். இது தவறான கொள்கை. இதைக் களைந்தெறிதல் வேண்டும். இதற்குச் சைவசித்தாந்த நுண்ணறிவாளர் சேவை தேவை. சித்தாந்தம் தொன்மை வாய்ந்ததாயின் ஆக; சமரசம் உடையதாயின் ஆக; பிறநலன் உடையதாயின் ஆக. இவை களைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டுவதில்லை. சித்தாந்தம் உலக வாழ்வுக்கு இயைந்ததா? j‰fhy¤J¡F V‰wjh? என்று கேட்பவர் இருக்கிறார். சைவ சித்தாந்தம் உலக வாழ்வுக்கு இயைந்தது; தற்காலத்துக்கும் ஏற்றது. இங்கே சித்தாந்த முறைபற்றிச் சில நுட்பங்களைக் குறிக்க விரும்புகிறேன். விரிவு சித்தாந்த நூல்களிற் பார்க்க. உலக வாழ்வும் சித்தாந்தமும் சித்தாந்தம், உலகு உயிர் கடவுள் என்னும் மூன்றுக்கும் அநாதி நித்தியம் கூறுவது என்பது மேலே காட்டப்பட்டது. உலகம், சடம்; அறிவில்லாதது. உயிர், அறியாமை விரவிய அறிவுடையது. கடவுள், அறியாமையே இல்லாதவர். முற்றறி வுடையவர். அறிவுக்கு அறிகுறி இரக்கம். அறிவுடைய ஒன்று இரக்க முடையதா யிருத்தல் இயல்பு. கடவுள் முற்றறிவுடையவ ராதலின், அவர் முழு இரக்கமுடையவரா யிருக்கிறார். இரக்கத்தின் இயல் என்னை? அதன் இயல் பிறர் துன்பங் களைந்து நலஞ் செய்ய எழுவது என்று சுருங்கச் சொல்லாம். துன்பத்துக்குப் பிறப்பிடம் அறியாமை. உயிர் அறியாமை யுடையதாகலின், அது துன்பமுடையதாயிருக்கிறது. உயிர் துன்பமுடைமையான், அதன் துன்ப நீக்கத்துக்குக் கடவுளின் இரக்கம் பயன்படுகிறது. உயிரினிடத்துத் துன்பம் இல்லையேல், கடவுளின் இரக்கம் பயன்படாது கிடக்கும். கடவுள், உயிரின் துன்பத்தை எப்படிப் போக்குகிறார்? அவர், உயிரை மாயாகாரியமாகிய தனுகரணபுவனபோகங் களில் - அதாவது உலக வாழ்வில் - செலுத்தி, அதைத் தன்னைப் போல் ஆக்கமுயல்கிறார். மாயாகாரியமாகிய உலகம் இல்லை யாயின், கடவுள், உயிர்த்துன்பத்தை எவ்வழியில் களைய வல்லார்? கடவுளின் இரக்கம் உயிருக்குப் பயன்படுதற்கு உலகம் துணையாக நிற்கிறது. ஆகவே, ஒன்றற் கொன்று இன்றியமை யாத முறையில் மூன்றும் இருத்தல் கவனிக்கத் தக்கது. உலகுயிர், கடவுளுக்குத் தேவை. கடவுள், உலகுயிர்க்குத் தேவை. உலகுயிரின்றிக் கடவுளில்லை. கடவுளின்றி உலகுயிரில்லை. தானலா துலகமில்லை சகமலா தடிமையில்லை, சகமலா தடிமையில்லை தானலால் துணையுமில்லை என்பன அப்பர் திருவாக்குகள. உயிர், மாயாகாரியமாகிய உலகவாழ்வால், அறியாமை நீங்கி, அறிவு விளக்கம் - பெறுவதாகிறது. அறியாமை அழுக்கைக் கழுவும் ஆற்றல் மாயைக்கு உண்டு. அஃது அதன் இயல்பு. மாயா தனுவிளக்கு என்று சித்தாந்த சாத்திரங் கூறுகூதை நோக்குக. மாயை சடமாதலின், அது, தானே உயிரை அணுகாது. உயிர் அறியாமையுடையதாதலின், அதுவும் தானே மாயை யுடன் சேராது. இரண்டையுங் கூட்டுதற்குத் துணை செய்வோரே கடவுள் ஆவர். இரண்டையுங் கூட்டுவது படைப்பு என்பது. படைப்பு என்பது, இல்லாத ஒன்றை உண்டு பண்ணுவ தன்று. உள்ள ஒன்றை உள்ள ஒன்றுடன் சேர்ப்பது படைப் பென்று சொல்லப்பட்டு வருகிறது. கடவுள், அறியாமையே இல்லாதவராய், முற்றறிவுடையவராதலின், அவர் மாயையை யும் உயிரையும் ஒன்று சேர்க்கும் இயல்புடையவரா யிருக்கிறார், அவ்வியல்பு அவர்மாட்டுள்ள இரக்கமென்க. உயிர், கடவுள் துணையால் மாயாகாரியமாகிய தனுகரணபுவன போகங்க ளென்னும் உலகவாழ்வைப் பெறுகிறது. கடவுள், மாயையைக்கொண்டு உயிருக்குப் பலவகை உடலை நல்கி நல்கி, இறுதியில் பகுத்தறிவுக்கு நிலைக்களனாக நிற்கும் மனிதப்பிறவியை நல்குகிறார். பகுத்தறிவு பெற்ற மனிதர் என் செய்தல் வேண்டும்? அவர், முழு அறிவு விளக்கம் பெற்றுக் கடவுளை அடைய முயலுதல் வேண்டும். உலகவாழ்வைத் துறந்தால் முழு அறிவு பெற்றுக் கடவுளை அடையலாம் என்றொரு போலிக் கொள்கை எப்படியோ உலகில் நுழைந்துவிட்டது. அதனால் உலகம் படும் பாட்டை எம்மொழியால் விளக்க வல்லேன்! உயிரின் அறிவுவிளக்கத்துக்கெனக் கடவுளால் அருளப்பெற்ற தனுகரண புவன போகங்களையா துறப்பது? அந்தோ! நன்றி கொன்ற பாவம் சூழ்ந்துவிடுமே! கடவுள் எங்கும் இருக்கிறார். அவரில்லாத இடமில்லை. அவர் உலகில் உலகாக இருக்கிறார்; உயிரில் உயிராக இருக்கிறார். எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் - அங்கங் கிருப்பதுநீ அன்றோ பராபரமே என்றார் தாயுமானார். எங்குமுள்ள இறையைக் காண ஒண்ணாதவாறு மறைத்திருப்பது அறியாமை. அறியாமை நீங்க நீங்க, அவ்வவ்வளவில் இறையிருப்பும் விளங்கிக்கொண்டே போகும். முழு அறியாமை நீக்கத்தில், இறை எங்குமுள்ள உண்மை புலனாகும். எங்கும் இறையைக் காண உலகிடைப் போந்த உயிர்கள், உலகைத் துறப்பது எனில், அப்பகுதியிலுள்ள இறையை அவைகள் காணா தொழிவதாகும். ஆகவே, உலகவாழ்வைத் துறத்தல் என்னும் உணர்வுக்கே இடந் தருதல் கூடாது. உலகவாழ்வு, நம்பொருட்டுக் கடவுளால் அருளப் பெற்ற கொடை என்னும் உறுதியில் நிற்றல்வேண்டும். பகுத்தறிவால், உலகவாழ்வு கடவுள்கொடை என்பதை உணர்ந்து வாழ்வதே சிறப்பு. அவ்வுணர்வின்றி வாழ்வது வாழ்வாகாது. அது விலங்கு வாழ்வாகும். விலங்கு வாழ்வு துன்பத்தைப் போக்காது; கடவுளை அடையச் செய்யாது. அது பிறவித் துன்பத்தைப் பெருக்கிக்கொண்டே போகும். இங்கே, கண்ணுதலோன் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி - எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி - விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் - எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் - பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் - புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் - பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் - கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் - வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் - செல்லா அநின்ற இத் தாவர சங்கமத்துள் - எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் - மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்று வாதவூரடிகள் அருளியுள்ள அமுத வாக்கை நோக்குக; அதைப் பருகுக; பருகிப் பருகி ஆண்டவன் சீரைப் பாடுக. பிறவித் துன்பம் நீங்கும். உலகவாழ்வு கடவுள் கொடை என்னும் உணர்வுடன் வாழ்ந்து, பிறவிப்பெருங்கடல் நீந்தி, இறைவனடி சேர்தலாகிய இறவாத இன்பநிலை பெற உயிர்கள் உழைத்தல் வேண்டும். அவ்வுழைப்பு முறைகள் பெரியோர்களால் அருளப்பட்டுள்ளன. அவைகளிற் சிலவற்றையாதல் பின்னே விளக்குவன். உலகு - உயிர் - கடவுள் என்னும் முப்பொருட்கும் உண்மை கூறும் சித்தாந்தம் - தனு கரண புவன போகங்களால் உயிர் அறிவு விளக்கம் பெறுதல் வேண்டும் என்று அறிவுறுத்தும் சித்தாந்தம் - உலகுக்கு இயைந்ததா அன்றா என்பதை அறிஞர்கள் ஆராய்வார்களாக. தற்காலமும் சித்தாந்தமும் இனிச் சித்தாந்தம் காலத்துக்கு ஏற்றதாகுமா என்பதைச் சிந்திப்போம். மூன்று பொருட்கும் உண்மை கூறும் சித்தாந்தம் அவ்வக்காலத்துக்குரிய முறையில் பயன்பட்டு வரும் என்பதில் ஐயமில்லை. முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளே - பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே என்று மாணிக்கவாசகனாரும், காலமொடு தேசவர்த்த மான மாதி கலந்துநின்ற நிலைவாழி கருணை வாழி என்று தாயுமானாரும் அருளியிருத்தலை ஊன்றிப் பார்க்குமாறு அறிஞர்களைக் கேட்டுக் கொள்கிறேன். புதுமைக்குப் புதுமையாகவும், காலதேசவர்த்தமானமாகவும் இருக்கும் இறையைக் கூறுஞ் சித்தாந்தத்தை, எக்காலத்துக்கும் உரிய ஒன்று என்று சொல்லுதல் மிகையாகாது. காலத்துக்கேற்றவாறு பயன்படச் சித்தாந்தம் சித்தமாயிருக்கிறது. அதை அவ்வாறு பயன்படுத்தத் தற்காலச் சித்தாந்திகள் சித்தமா யிருக் கிறார்களா? காலத்துக் கேற்ற முறையில் அகண்ட சித்தாந் தத்தைப் பயன்படுத்த முயலவேண்டுவது அறிஞர் கடமை. தற்கால வாழ்வுக்கு வேண்டப்படுவன பல. அவைகளின் உயிராக உள்ளன சில. அச்சில - ஒரு தெய்வ வழிபாடு, உரிமை உணர்வு, சமரச நோக்கு, பிறர்க் குழைத்தல், சகோதர நேயம், இன்ப வாழ்வு முதலியன. ஒரு தெய்வ வழிபாடு, சித்தாந்தத்துக்கு உடன்பாடு. இஃது உலகில் நானாபக்கங்களிலும் தோன்றிய பெரியோர் பலராலும் அறிவுறுத்தப்பட்டது. நந்தமிழ் நாட்டுப் பெரியோர் களும் ஒரு தெய்வ வழிபாட்டையே அறிவுறுத்தி னார்கள். தெய்வம் ஓன்றாயிருக்கும்போது, உண்மை கண்டவர் எங்ஙனம் பல தெய்வ வழிபாடு கூறுவர்? உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே (அப்பர்) என்றும், ஒன்றென் றிருதெய்வம் உண்டென்றிரு (பட்டினத்தார்) என்றும், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் ஒன்று கண்டீர் உலகுக்கு ஒரு தெய்வம் (திருமூலர்) என்றும் எழுந்த திருவாக்குகள் பல. பெரியோர் அனைவரும் ஒருமுகமாக ஒரு தெய்வ வழிபாட்டை வலியுறுத்தியிருப்பப், பல தெய்வ வழிபாடு எப்படிக் கால்கொண்டது? இதற்குப் பலர் பலவாறு கூறுப. அப் பலவற்றில் தலைப்பட வேண்டுவதில்லை. இரண்டொன்றை ஈண்டுப் பொறித்தல் சாலும். கடவுளுக்குப் பல மொழியில் பல பெயர்கள் வழங்கப் பட்டன. அவருக்குப் பல இயல்களுஞ் சொல்லப்பட்டன. பெயர் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வம் என்றும், இயல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வம் என்றும் கல்வி யறிவுத் தெளிவில்லாதவர்களால் கொள்ளப்பெற்றன. சமயவாதிகளும், மடாதிபதிகளும், புரோகிதர்களும், குறுகிய நோக்குடையவர் களும், இவரனைய பிறரும், தங்கள் நலங் கருதி, ஏழைமக்கள் கல்வியறிவுத் தெளிவின்றிக் கொண்ட பொய்க் கொள்கையை, வாதப் போர்களாலும், பிறவாற்றாலும் நிலைபெறுத்தி விட்டார்கள். இவ்வாறு, பலதெய்வ வழிபாடு உலகிடைக் கால் கொண்டது. கடவுள் நாமரூப மில்லாதவர். அவரை எம்மொழிப் பெயரால் அழைத்தாலென்ன? ஒரு நாமம் ஓருருவம் ஒன்று மிலாற்கு ஆயிரம் - திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ என்று மாணிக்கவாசகனார் அருளியுள்ளார். ஆயிரம் திருநாமத்துக்கும் ஆயிரம் தெய்வம் கொள்ளவேண்டு மென்பதா அப்பெரியார் கருத்து? ஆண்டவன் இயல்களும் பலவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வோர் இயலையும் ஒவ்வொரு தெய்வமாகவா கொள்வது? ஆண்டவன் இயல்களுள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது ஒன்று. இவ்வியலை விஷ்ணு என்று விளம்புகிறோம். விஷ்ணு என்னுஞ் சொல் வியாபகம் என்னும் பொருளுடையது. ஆண்டவன் என்றும் இளையனாய் அழகான யிருத்தல் மற்றுமோரியல். இவ்வியலை முருகு (முருகன்) என்று சொல்கிறோம். முருகு என்னுஞ் சொல்லுக்கு இளமை அழகு முதலிய பொருள்களுண்டு. ஆண்டவனது பிரணவாகாரம் விநாயகமூர்த்தம் என்றும், எல்லாவற்றையும் இயக்குதல் நடராஜமூர்த்தம் என்றும், மங்களமாய் நன்மையாய்த் தூய்மையாயிருத்தல் சிவம் என்றும் கொள்ளப்பட்டன. மற்றும் பல இயல்களுக்கும் மற்றும் பல பெயர்கள் சூட்டப்பட்டன. இவ்வாறு இயல்களை ஒட்டியும் ஆண்டவனுக்குப் பல பெயர்கள் பிறந்தன. பெயர்களின் பொருள் ஒன்றே. இந்நுட்பந் தேறாது, ஒவ்வொரு பெயரை ஒவ்வொரு தெய்வமாகக் கொண்டு, வாதப்போர் நிகழ்த்துவது அறியாமை. சித்தாந்த நுட்பங்கள் பரவாத இந்நாளில் கல்வி அறிவு இல்லாதவர்களிடைப் பல தெய்வ வழிபாட்டுணர்வு வழி வழியே படிந்து படர்ந்து வருகிறது. அதைப் போக்க அறிவும் அன்புமுடைய ஒப்புரவாளர் உழைத்தல் வேண்டும். ஒரு தெய்வ வழிபாடு, உரிமை உணர்வை வளர்த்துவரும். பல தெய்வ வழிபாடு, அடிமை உணர்வைப் பெருக்கும். உரிமை உணர்வு வாழ்வுக்கு இன்றியமையாதது. அவ்வுணர்வு வாழ்வுக்கு ஒளி போன்றது. ஒளி காலாத இடம் சாக்கடையாகும்; நரகக் குழியாகும். தற்காலச் சைவ உலகம் எப்படி யிருக்கிறது? தற்காலச் சைவ உலகில் உரிமை உணர்வு அருகி வருதல் கண்கூடு. சைவ நூல்களில் மட்டும் உரிமை ஒளி கான்றிக் கொண்டிருக் கிறது. சிவம் கட்டில்லாதது. கட்டில்லா ஒன்றே உரிமை மயமா யிருப்பது. சிவம் உரிமை மயமாய் எங்கும் வீற்றிருக்கிறது. உரிமைச் சிவம், உயிர்களைத் தன்னைப்போலாக்க அருள் சொரிகிறது. அதனால் உயிர்கள், தனு கரண புவன போகங் களைப் பெற்றுச் சிறிது கட்டவிழப்பெறுகின்றன; உரிமை ஊற்றுக் கண் சிறிது திறக்கப்பெறுகின்றன; மேலும்மேலும் உரிமை உணர்வைப் பெருக்கவல்ல வாழ்வுத் துறைகளில் உயிர்கள் நண்ணுதல் வேண்டும். உயிர்கள் உரிமைச் சிவத்துடன் தொடர்பு கொள்ளக்கொள்ள, அவைகளிடம் உரிமை உணர்வு பெருக்கி கொண்டே போகும். உயிர்கள் சிவத்துடன் தொடர்பு கொள்ளாது, வெறுங் கர்மத்துடன் தொடர்பு கொள்ளக் கொள்ள அடிமை உணர்வு வளர்ந்துகொண்டே போகும். கர்மம், கர்மம் என்று, கர்மத்தையே நினைந்து நினைந்து, இந்நாடு பலவழியிலுங் குலைந்து வருகிறது. கடவுளை மறந்த இடத்திலேயே கர்மம் தன் ஆணை செலுத்தும். மற்ற இடத்தில் அதன் ஆணை செல்லாது. தன்னை யறிந்த தத்துவ ஞானிகள் - முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் - பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் - சென்னியில் வைத்த சிவனரு ளாலே என்பது திருமூலர் திருமொழி; நாளென் செயும்வினை தானென் செயும்எனை நாடிவந்த, கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசர்இரு, தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுங் தண்டையுஞ் சண்முகமும், தோளுங் கடம்பும் எனக்குமுன் னேவந்து தோன்றிடினே என்பது அருணகிரிநாதர் திருவாக்கு. நாளின் மீதும் கோளின்மீதும் கருத்தை இருத்தாது, அவைகளை இயக்கும் எல்லாம்வல்ல இறைவன்மீது கருத்தை இருத்தினால் அவைகள் என் செய்யும்? ஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தை நாடோறும் ஓதி உய்க. உரிமை, உயிரின் நீர்மை, உரிமை, உயிரின்மாட்டு இயல்பாய் அமைந்திருப்பது. உயிர் கல்லன்று; பந்தன்று. கர்மத்தைத் தகர்த்தெறியும் உரிமை, உயிருக்கு இருக்கிறது. இயல்பில் அமைந்துள்ள உரிமை உணர்வை மேலும் மேலும் ஒம்ப வேண்டுவது உயிரின் கடமை. மார்க்கண்டேயர் வரலாற்றை ஆராய்ந்து பார்க்க. அது நமக்கு அறிவுறுத்துவ தென்னை? விதியை மதியால் வெல்லலா மென்பதன்றோ? மார்க்கண்டேயர் விதியை எப்படி வென்றார்? அவர் சித்தத்தைச் சிவன்பால் வைத்தே விதியை வென்றார். சிவத்தில் தொடர்பு கொண்டு உறுதியில் நிற்போரை விதி ஒன்றுஞ் செய்யாது. அதன் ஆற்றல் தானே குன்றி ஒழியும். உரிமை உணர்வுக்குச் சிவத்தின் தொடர்பு இன்றியமையாதது. அத்தொடர்பால் அஞ்சாமை உதிக்கும் . அஞ்சாமை உதிக்குமிடத்தில் உரிமைக் கதிரொளி எழுந்து, அடிமை இருளை அகற்றும். அப்பர் சுவாமிகள் சரித்திரத்தை நாம் படிக்கிறோம்; கேட்கிறோம். அவர்தம் வாழ்வு அஞ்சாமைக்கும் உரிமை உணர்வுக்கும் ஓர் இலக்கியமாக நிற்கிறது. அவர், அஞ்சா நெஞ்சையும் உரிமை உணர்வையும் எவ்வாறு பெற்றார்? தாமார்க்குங் குடியல்லா ஒருவர் திருவடியைப் பற்றியே அவ்வியல்புகளை அவர் பெற்றார். அவர் திருவாக்கினின்றும் நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம். என்றும் நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் இருநிலத்தில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை முதலிய வீரமொழிகள் பிறந்தன. இம்மொழிகளில் அஞ்சாமையும் உரிமையும் தாண்டவம் புரிகின்றன. இம்மொழிகளில் தோய்வோமாக; தோய்ந்து தோய்ந்து உரிமை உணர்வு பெறுவோமாக. மங்கையர்க்கரசியார் உரிமை உணர்வை என்னென்று சொல்வேன்! அம்மையாரை உரிமைச் செல்வம் என்று யான் போற்றுகிறேன். அவர், நெடுமாறனுக்கு வாழ்க்கைத் துணையாக நின்றவர். நெடுமாறன் தழுவிய ஒரு சமயத்தைத் தழுவ அம்மையார் உடன்படவில்லை. அவர், நாயகன் கொள்கையைத் தழுவி நடக்க மனங்கொள்ளாது, தமது மனதுக்கினிய ஒரு கொள்கையில் உறைந்து நின்று, அவனுடன் வாழ்ந்தார். அம்மையாரது உரிமை உணர்வைக் கருதுங்கள். நாயகனைத் தம்வழித் திருப்பவும் அம்மையார் முயன்றார். அவர், அரசனுடன் பிணங்காது, அவனுடன் வாழ்ந்தே, திருஞான சம்பந்தரை வரவழைத்துச் செயற் கருஞ் செயல்களைச் செய்வித்தார். அச்செயல்களின் நிகழ்ச்சிக்கு ஊற்றாயிருந்தது எது? அம்மையாரது உரிமை உணர்வன்றோ? மங்கையர்க் கரசியார் வாழ்வில் உரிமை மணம் கமழ்ந்துகொண்டிருந்தது. இத்தகை உரிமை, பின்னே பெண்ணுலகினின்றும் பிடுங்கப்பட்டது. பெண்ணடிமை எங்கணும் மல்கிவிட்டது. பெண்ணொரு பாகனை - அம்மையப்பனை - வணங்கும் உலகிலும் பெண்ணடிமை நுழைந்தது வியப்பே. bg©zoik bfh©l cyF¡F¥ bg©zh»a bgUkh‹ âUtUŸ v¥go¡ »il¡F«? பெண்ணுரிமையின் வீழ்ச்சி ஆணுரிமையின் வீழ்ச்சி என்பதைத் தெளிந்து இனியாதல் ஆணுலகம் நடப்பதாக. யான் எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூலில் பெண்ணுரிமையை விரித்துக் கூறியுள்ளேன். உரிமை நமது உயிர். அதை எக்காரணம் பற்றியும் இழந்து வாழ்தல் கூடாது. உரிமையற்ற வாழ்வு வாழ்வாகாது. உரிமை வாழ்வே வாழ்வாகும். இதற்கு உரிமைச் சிவத்துடன் இயைந்த வாழ்வு வேண்டற்பாலது. சமரச நோக்கு, உரிமை உணர்வின் சேய். உரிமை உணர்வு இல்லாத இடத்தில் சமரச நோக்குப் பிறத்தல் அரிது. சைவம் சமரசமுடையது என்பது உண்மை. அச்சமரசம் இப்பொழுது எங்கே இருக்கிறது? அஃது ஏட்டில் இருக்கிறது; வாக்கில் இருக்கிறது; செயலில் இருக்கிறதா? சாதி மதம் நிறம் மொழி நாடு முதலியவற்றைக் கடந்த சிவம் வீற்றிருந்தருளும் திருக்கோயில்களிலாதல் சமரசம் உண்டா? சாதியற்ற சிவத்தைச் சாதிமயமாக்கிய நாட்டுக்கு எங்கிருந்து உய்வு வரும்? எவ்வுயிரும் நீங்கா துறையும் இறை சிவன் என்று - எவ்வுயிர்க்கும் அன்பா யிரு என்பது சைவ சமய நெறி. பாட்டு நன்றாயிருக்கிறது! பாட்டுக்கேற்ற நடை உண்டா? சாதி முதலிய பேய்கள் தலைவிரித்தாடியபோது, நாயன்மார்கள் தோன்றி, அப்பேய்களை ஓட்ட முயன்றார்கள். சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள் - போத்திர முங்குல முங்கொண்டென் செய்வீர் என்று அப்பர் இடித்துரைத்தார். சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும், ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு, பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக், கோதிலமுதானானைக் குலாவுதில்லை கண்டேனே என்று வாதவூரர் அழுதார். அப்பருக்கும் வாதவூரருக்கும் திருவிழாக்கள் செய்யப்படு கின்றன. அவர்கள் வாக்குக்கோ? வெட்கம்! வெட்கம்! திருநாளைப்போவார், அப்பூதியடிகள், திருநீலநக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நமிநந்தியடிகள் முதலியோர் வரலாறுகள் படிக்கப்படுகின்றன. ஆனால் நடக்கையோ? எல்லா மரபினரையும் அடியவராகக் கருதி அவர்கட்கெல்லாம் அடியேன் அடியேன் என்று நம்பியாரூரர் பாடினார். அவ்வடியவர் திருவுருவங்களும் திருக்கோயில்களில் வைக்கப் பட்டுள்ளன. திருத்தொண்டத் தொகை பாராயணமும், திருக்கோயில் வழிபாடும் பெருமிதமாக நடைபெறுகின்றன. ஆனால், வாழ்வில் சாதிப்பித்து மாய்ந்ததா? மரம், பாம்பு, சிலந்தி, யானை, பறவை, விலங்கு முதலியவற்றிற்கு முத்தி கொடுத்த கருணைவள்ளல் எழுந்தருளியுள்ள இடத்திலுமா சாதி வேற்றுமை? கொடுமை! கொடுமை! சாதிவேற்றுமை தொலைந்து சமரசம் பரவும் வரை, சைவம் ஓங்கி வளராது. சாதிச் சைவத்துக்குச் சிவனருள் துணை செய்யாது. மனிதரை மனிதராகப் பாவியாத இடத்தில் சிவனருள் எங்ஙனம் நிலவும்? மனிதரை மனிதராக நினையாத ஒருவன் எங்ஙனஞ் சைவனாவன்? சாதி முதலிய களைகளைக் களைந்து, சைவ வான்பயிரை ஓம்ப இளைஞர்கள் ஊக்கங் கொண்டெழுதல் வேண்டும். இளைஞர்களே! சைவ இளைஞர்களே! சைவ உலகை நோக்குங்கள்; சைவ உலகம் சவலையுற்றிருப்பதை உணருங்கள்; உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம் - நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்கோயில் என்று இளங்குழந்தை - ஞானமூர்த்தி - அருளிய மொழியை உன்னுங்கள்; எங்குஞ் சிவம் கோயில்கொண்டிருத்தலைத் தெளியுங்கள்; எங்குமுள்ள சிவத்துடன் சம்பந்தம் பெறுவதன்றோ சைவம்? அச்சிவ சம்பந்தம் இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? சாதி சம்பந்தமன்றோ இப்பொழுது உலவுகிறது? சைவம் எங்கே? அனலிடை நின்ற சைவம் - புனலிடை நின்ற சைவம் - எங்கே? நீற்றறையில் நின்ற சைவம் - கடலில் நின்ற சைவம் - எங்கே? அச்சித்த சைவம் எங்கே? எங்கே? சாதிச் சைவமன்றோ இப்பொழுது நெளிந்துகொண் டிருக்கிறது? நினைக்க நினைக்க உள்ளம் உருகுகிறது; ஊன் குழைகிறது; கண்ணீர் பெருகுகிறது. சாதி மதம் மொழி நாடு முதலிய அஞ்ஞானப் புற்றுக்கள் சைவத்தின் மீது - அன்பின்மீது - எழும்பிப் படர்ந்துவிட்டன. அவைகளைத் தகர்க்க எழுங்கள்; சைவம் சமரசமுடையது; அஃது எவர்க்கும் உரியது; அன்பே சிவம் என்னும் உண்மையைப் பறைசாற்ற எழுங்கள்; ஞானசம்பந்தர் மறைக்காட்டினின்றும் வீறு கொண்டு மதுரைக்கு எழுந்ததை நினையுங்கள்; மங்கையர்க் கரசியார் ஞானசம்பந்தரை எதிர்நோக்கிய வேட்கையை எண்ணுங்கள்; குலச்சிறையார் விரதத்தையும் வீரத்தையும் கருதுங்கள்; உங்கட்கு எழுச்சி தானே பிறக்கும். முதலாவது திருக்கோயில் சாதிப்பேயை ஓட்ட உறுதி கொள்ளுங்கள்; பிற இடங்களிலுள்ள மற்றப் பேய்கள் தாமே ஓடும். என்றும் நாம் யாவர்க்கும் இடைவோமல்லோம் இருநிலத்தில் எமக்கு எதிராவார் யாருமில்லை என்று அஞ்சா நெஞ்சங் கொண்டு எழுங்கள்; அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்பு செயல் வேண்டும் - எப்பாரும் எப்பதமும் எங்கணுநான் சென்றே எந்தை நின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும் - செப்பாத மேனிலைமேற் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட் சோதி செலுத்தியிடல் வேண்டும் - தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும் தலை நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே என்று வேண்டுதல் செய்து எழுங்கள்; சிவசோதி உங்களுக்கு வழிகாட்டும்; நால்வர் துணை உங்களுக்குக் கிடைக்கும்; அஞ்சாது எழுங்கள்; எழுங்கள். சமயத்தவர் உணர்வில் சமரசம் பதிந்தால், உலகில் பிற சமரச துறைகள் தாமே வளம்பெறும். ஆதலால், சமரசத்துறை களின் கூறுபாடுகளை ஈண்டு விளக்கவேண்டுவதில்லை. சமரச நோக்கு வளர வளரப் பிறர்க்குழைக்கும் பேறு கிடைக்கும். ãw®¡FiH¥gj‹nwh ãwÉ¥ga‹? நான் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் என்றார் திருமூலர். தன்னலம் நாடாது பிறர்க்கு உழைக்கும் உள்ளம் சிவத்துக்குரிய சிறந்த கோயில். பிறர்நலம் நாடி உழைத்தல் சிறந்த சிவத்தொண்டு. சைவம் ஓங்கவேண்டுமானால், சைவர் பிறர் நலம் நாடிச் சமரச நோக்குடன் உழைப்பவராதல் வேண்டும். முன்னைப் பெரியோர்கள் தங்கள் உடல் பொருள் ஆவி மூன்றும் பிறர் உடைமை என்று கருதி வாழ்வதையே பிறவிப் பேறாகக் கொண்டார்கள். யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை என்று பெரியபுராணம் அறிவுறுத்துகிறது. இப்பொன்மொழியின் உள்ளக்கிடக்கையைத் துருவித் துருவிச் சிந்தித்துச் சிந்தித்து அதன் பொருளாழத்தை உணர முயல்வோமாக. இக்காலச் சைவப் பெரியார் வாழ்வினுள் ஆறுமுக நாவலர் வாழ்வு சைவ உலகுக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது. சிவத்தொண்டுக்கெனத் தமது வாழ்வையே அர்ப்பணஞ் செய்தவர் நம் நாவலர் பெருமான். காலத்துக்கேற்ற தொண்டுகள் பல அவரால் செய்யப்பட்டன. நாமும் இக்காலத்துக்கேற்ற முறையில் தொண்டு செய்தல் வேண்டும். விஞ்ஞானகலர் பிரளயாகலரைத் தம்மைப்போலாக்கவும், பிரளயாகலர் சகலரைத் தம்மைப்போலாக்கவும் முயன்ற வண்ணமா யிருக்கிறார் என்று சிவாகமங்கள் கூறுகின்றன. இக்கூற்றின் உட்கிடக்கை என்னை? அறிவால் உயர்ந்தோர் அறிவால் தாழ்ந்தோரைத் தமது நிலைக்குக் கொண்டுவர உழைத்தல் வேண்டுமென்பதன்றோ? இச்சீரிய உண்மையை உணர்ந்து சைவப்புலவர்கள் நடப்பார்களாக. தில்லைக்கூத்தன் ஐந்தொழில் புரிகிறான்? எவர் பொருட்டு அவன் ஐந்தொழில் புரிகிறான்? தன்பொருட்டா? இல்லை. அவன் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். உயிர்கள் பொருட்டே அவன் ஐந்தொழில் புரிகிறான். அவனை வணங்கி அவனை அடைய விரும்புவோரும், தம்பொருட்டு வாழாது பிறர்பொருட்டு வாழ உளங்கொள்ளல் வேண்டும். பிறர் பொருட்டு வாழ்தலாவது பிறர்நலன் நாடிக் காலத்துக்கேற்ற தொண்டு செய்வது. தமது நலங் கருதாது பிறர்க்கு உழைக்குந் தொண்டர் கூட்டம் பெருகப் பெருக உலகம் பல வழியிலும் சீர்திருத்தம் பெறும். பிறர்க்கு உழைக்க உழைக்கச் சகோதரநேயம் பெருகும். அவ்வுழைப்பால் உயிர்க்கும் உயிர்க்கும் உள்ள தொடர்பு விளங்கும். அத்தொடர்பைக் கூறிட்டிருப்பது அஞ்ஞானம். அஞ்ஞானத்தை ஆண்டவனருளால் போக்க முயலல்வேண்டும். இதுபற்றியே அப்பரெம்பெருமான், கூற்றாயின வாறுவிலக்ககிலீர் என்று இறைவனை வேண்டித் தமது தமிழ்மறையைத் தொடங்கினார் போலும்! கெடிலநதிக் கரையில் பிறந்த அச் செம்மொழி வாழ்க; வாழ்க. கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன், ஏற்றா யடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும், தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு தொடக்கி முடக்கியிட, ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டா னத்துறை அம்மானே என்பது திருவாக்கு. இத்திருவாக்குக்கு விரிவுரை கூறப் புகுகிறேனில்லை. எடுத்த சகோதர நேயத்துடன் இதனை இயைபுபடுத்தும் அளவில் நின்று மேற்செல்வேன். அதிகைக் கெடில வீரட்டானத் துறைஅம்மானே! கொடுமை பல செய்தன நான் அறியேன்; தோற்றா தென்வயிற்றின் அகம்படியே குடரோடு தொடக்கி முடக்கியிட அடியேன் ஆற்றேன்; ஏற்றாயடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன்; கூறு ஆயினவாறு விலக்ககிலீர் என்று நாவுக்கரசர் ஆண்டவனை நோக்கி வேண்டுதல் செய்திருத்தலைக் காண்க. சிவம் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமா யிருப்பது. சிவம் இல்லாத இடம் இல்லை. எவ்வுயிர்க்கும் உயிராயிருப்பது சிவம். சிவம் எல்லா உயிரிலும் இருத்தலால், எல்லா உயிரும் சகோதரம் என்பதில் ஐயமில்லை. சிவத்தை வழிபட ஒருவன் புகுகிறான். சிவமோ, தன்னை வழிபடப் புகும் ஒருவனையும் பிறவுயிரையும் தொடர்புபடுத்தி யிருப்பது. அச்சிவத்தை எப்படி வழிபடுவது? ஒருவன் தன்னைப் பிறவுயிர்களினின்றும் வேறுபடுத்திச் சிவத்தை வழிபடப் புகுவானாயின் அவனது வழிபாடு துவிதத்தின்பாற் படுவதாகும். துவிதவழிபாடு பிறவித்துன்பத்தைப் போக்காது. தன்னிடத்தும் பிறவுயிரிடத்தும் விளங்குவது சிவமேயாதலால், தன்னையும் பிறவுயிரையும் வேறுபடுத்தாது, அதாவது கூறிடாது, அவன் சிவத்தை வழிபாடு செய்தல் வேண்டும். இதுவே அத்துவித வழிபாடு எனப்படும். அத்துவித வழிபாடு பிறவித் துன்பத்தைப் போக்கும். ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊன மில்லை என்பது அப்பர் அருண்மொழி. மதவாதிகள் துவிதம் என்றும் அத்துவிதம் என்றும் உலகை மருட்டுவது வழக்கம். அம் மருட்டல்கண்டு அன்பர்கள் மலைவுற வேண்டுவதில்லை. துவிதம் பிரிவை உணர்த்தலால், அது சகோதரநேயத்துக்குத் தடை செய்வது. அத்துவிதத்தில் பிரிவின்மையால், அது, சகோதரநேயத்துக்கு இடந்தருவது. சகோதரநேயத்துக்கு அத்துவிதமென்றும், மற்றதைத் துவிதமென்றுங் கொள்க. ஒருவன் தன்னைப் பிறவுயிர்களினின்றும் வேறுபடுத்தாது, இரண்டு சார்பிலும் ஒன்றித் தொடர்பு கொண்டுள்ள சிவத்தை வழிபடுவதென்பது, தன்னைப்போலப் பிறவுயிரையுங் கொண்டு வாழ்வதாகும். இதுவே சகோதரநேயம் என்பது. தன்னிலும் பிற உயிரிலும் உள்ளது சிவம் என்று உணரும் எவனும், தன்னைப் போலவே பிறவுயிரையுங் கருதுவன்; எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யான்; நலமே செய்வன். எவ்வுயிரையுந் தன்னைப் போல் கருதித் தீங்கு செய்யாது நலஞ் செய்வது சகோதரநேயத்தின் இயலாகும். இதுவே சிறந்த சிவவழிபாடு. எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின், தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே என்றார் தாயுமானார். கூற்றா யினவாறு என்னுந் திருப்பாட்டை நோக்குவோம். கொடுமைபல செய்தல் என்பது அப்பர் ஒருபோது தம்மையும் பிறவுயிரையும் வேறாகக் கருதியதை உணர்த்துவது. வேற்றுமைக் கருத்து எல்லாக் கொடுமைகட்குங் காரணமாக நிற்றலான், அதன பயனைக் கொடுமைபல என்றார்; தம்மையும் பிறவுயிரையும் வேறாக நினைத்தது அறியாமை யாதலின், யான் அறியேன் என்றார். தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு தொடக்கி முடக்கியிட ஆற்றேன் என்பது கொடுமையின் விளைவு அல்லது விரிவு என்க. இனிப் பிரிந்து வணக்கஞ் செய்யாது, பிரியாது வணக்கஞ் செய்வேன் என்பார் ஏற்றா யடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்றார். பிரியாது வணங்குவதாவது பிறவுயிரை யும் தன்னுயிரெனக் கருதும் சகோதர நேயமாகும். நீண்ட காலமாகச் சகோதரநேயம் பெறாதவாறு தடை செய்துவரும் பிரிவை விலக்குமாறு, நம் பெருமான், கூறுஆயினவாறு விலக்ககிலீர் என்று ஆண்டவனையே வேண்டுதல் செய்தார். இதனால் பிரிவின் ஆற்றலை (அதாவது அறியாமைத் திறத்தை) ஒருவாறு விளக்கியவாறாம். கூற்றாயினவாறு என்னுந் திருப்பாட்டின் உள்ளுறை சகோதரநேயம். இவ்வாறு எனது சிற்றறிவுக்கு விளங்குகிறது. அப்பர் சகோதரநேயத்தைப் பெற்றார் என்பதற்குச் சான்றுகள் பல உள. ஈண்டைக்கு அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ, ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும்நீ ஒருகுலமும் சுற்றமும் ஒரூரும்நீ, துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையாய்என் நெஞ்சந் துறப்பிப்பாய்நீ, இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்தும்நீ இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன்நீயே என்னுந் திருத்தாண்டகச் சான்று ஒன்று சாலும். அப்பர், தம்மிலும் பிறவுயிரிலும் உள்ளது சிவம் ஒன்றே என்ற உண்மை உணர்ந்து, சகோதரநேயத்தில் நின்றவராதலால், அவரை நஞ்சமுதம் கொல்லவில்லை; நீற்றறை எரிக்கவில்லை; யானை பணிந்து சென்றது; கடல் தாங்கிற்று. எங்கும் அன்பாகிய சிவத்தைக் கண்டோர்க்கு எங்கணும் அன்பாகிய சிவமே விளங்கும். இது சகோதரநேயம். சகோதரநேயம் தற்காலச் சைவ உலகில் எந்நிலையிலிருக் கிறது? சாதி வேற்றுமைக்கு இரையாகுஞ் சைவ உலகில் சகோதரநேயம் எவ்வாறு நிலவும்? சைவத்தின் உயிராகிய சகோதரநேயம் சைவ உலகில் இல்லை எனில், சைவம் வளர்தற்கு இடம் ஏது? சகோதரநேயம் சைவத்தை வளர்க்கும் உயிர்ப்பு என்பதை உணர்ந்து, சைவஉலகம் இனியாதல் நடப்பதாக. நூலுரைகளைக் காட்டும் அளவில் சைவ உலகம் நிறைவு கொள்ளுதலாகாது. புறங்கூறல், பொறாமை, இகல், தன்னலம் முதலியன சகோதரநேயத்தை அரிக்கும் விஷப்பூச்சிகள். இவைகளுக் கிரையாகாதவாறு பொதுவாக எல்லாரும், சிறப்பாகச் சைவப் புலவர்களும் தங்களைக் காத்துக்கொள்வார்களாக. சகோதரநேயம் இன்ப வாழ்வைக் கூட்டுதல் ஒருதலை. சகோதரநேயத்தில் உறைந்துநின்ற திருநாவுக்கரசர், எந்நாளும் இன்பமே துன்பமில்லை என்றார். அப்பர், அழியா இன்பத்தை இவ்வுலகிலேயே பெற்றமை கவனிக்கத்தக்கது. இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு என்று வன்தொண்டரும் தமது வாழ்வின் அநுபவத்தை வெளியிட் டுள்ளார். இன்ப வாழ்வைச் சகோதர நேயத்தால் இவ்வுலகிலேயே பெறுதல் கூடும். இன்பம், இவ்வுலகி லில்லை அவ்வுலகி லுண்டு என்று கருதுவது சித்தவிகாரமாகும். இன்பம் எங்குமிருப்பது. சிவமே இன்பம். ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்து இன்பமே என்றார் வாதவூரடிகள். சகோதரநேயம் பெருகப் பெருக, மாயை தானே மறைந்து மறைந்து மாயும்; இன்பம் தோன்றும். இன்ப வாழ்வுக்குச் சகோதரநேயம் வேண்டும். முறைகள் நாம் பிறந்தோம்; வளர்கிறோம்; இறக்கப்போகிறோம். இறந்தபின் மீண்டும் பிறப்போம். இவ்வாறு பிறவிச் சகடம் சுழன்று சுழன்று வருகிறது. இச்சுழல் ஒழிதல் வேண்டும். இது பற்றியே பெரியோர்கள் இறவாமையை வேட்டு நின்றார்கள். மனிதப் பிறவி விழுமியது. இப்பிறவி இறவாத இன்பநிலை பெறுதற்குத் துணைசெய்யும் வாய்ப்புகளை யுடையது. இப்பிறவியிலேயே இறவாமை பெற முயலுதல் வேண்டும். இறவாமை என்பதும், மீண்டும் பிறவாமை என்பதும் ஒன்றே. இறக்கும் ஒருவன் மீண்டும் பிறப்பன். இறவாத ஒருவன் மீண்டும் பிறவான். யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக்கு என் கடவேன் என்பது திருவாசகம். இக்காயம் நீக்கி இனிஒரு காயத்தில் - புக்குப் பிறவாத போம்வழி தேடுமின் என்பது திருமந்திரம். இத் திருமொழிகளை உற்றுநோக்குக. இறவாமைப் பேறு இருவிதம். ஒன்று பருவுடல் நிலையிலேயே அப்பேறு பெறுவது. இஃது அருமை. மற்றொன்று பருவுடல் நீத்த நுண்ணுடல் நிலையில் அப்பேறு பெறுவது. எந்நிலையிலாதல் இறவாமை பெறுவது ஈண்டுக் கருதற்பாலது. மனிதப் பிறவியின் நோக்கம் இறவாத இன்பத்தைப் பெறவேண்டுமென்பது. அந்நோக்கத்தை நிறை வேற்றுதற்கென்றே பெறுதற்கரிய மனிதப் பிறவி நமக்கு ஆண்டவனால் அருளப்பட்டது. இப் பிறவியிலேயே இன்பப் பேற்றை அடைய முயலுதல் வேண்டும். இதற்குரிய முறைகள் ஆன்றோர்களால் கோலப்பட்டன. அவைகளை விரித்துக் கூறுதல் என்னால் இயலாது. மிகச் சிலவற்றை இங்கே குறிக்க விரும்புகிறேன். இளைஞர்கள் பெற்றோர்வழி நின்று கற்பன கற்கப் புகுவது ஒழுங்கு; ஏதாவது ஒருவித நியமத்தில் குறிவைத்து, அதனை வழாது செய்யப் பயில்வது சிறப்பு; உலகியல், உயிரியல், கடவுளியல் முதலியவற்றை ஆராய்வதில் தலைப்படுதல் விழுப்பம். இதற்குத் துணையாக மேல்நாட்டுக் கலைகளையும் நாடுவது நல்லது. தற்போது மேல்நாட்டுக் கலைகள் உரிமை உணர்வினின்றும் பிறத்தலால், அவைகளும் வாழ்வுக்கு வேண்டற்பாலன. நமது பண்டைக் கலைகளின் நுட்பங்கள் பல, தற்கால மேல்நாட்டுக் கலைகளால் விளக்கம் பெறும் என்பதில் ஐயமில்லை. பொருளுண்மை, சத்காரியம், மனோவசியம், யோகக் காட்சி, நுண்ணுடற் காட்சி, இளமை காத்தல் முதலிய வற்றைத் தற்கால மேல்நாட்டுக் கலைகள் தெளிவாக விளக்கஞ் செய்து வருகின்றன. இவை சித்தமார்க்க விளக்கத்துக்குத் துணை செய்வனவாம். மேல்நாட்டில் பொதுவாகத் தேகாத்ம உணர்வு பெருகி நின்றாலும், சிறப்பாகச் சில இடங்களில் ஆத்மசக்திக்குரிய (சித்தமார்க்கத்தின் அடிப்படையாகவுள்ள) சில துறைகள் காணப்பட்டுவருகின்றன. ஸர். ஆலிவர் லாட்ஜ் போன்றாரது ஆராய்ச்சி மேல்நாட்டில் என்றாதல் ஒரு பெரும் மாறுதல் செய்யாமற் போகாது. ஆதலால், இளைஞர்கள் கலை ஆராய்ச்சியில் மேல்நாடு கீழ்நாடு என்னும் வேற்றுமை பாராட்ட வேண்டுவதில்லை. இளமையில் கற்றனவற்றை வாழ்வில் பெறுதற்கு முயல்வது அறம். இதற்கு முதலாவது உடம்பை நன்முறையில் ஓம்புதல் வேண்டும். நேரிய முறையில் உலக இன்பத்தை நுகர உளங் கொளல் வேண்டும். இல்லையேல், பிறவிநோக்கம் நிறை வேறாது. உயிர் விளக்கத்துக்கென உடம்பும் உலகும் ஆண்டவ னால் கொடுக்கப்பட்டன. அவைகளைத் துறக்க வேண்டு மென்று சிலர் கூறுவர். இஃது இயற்கைக்கு மாறுபட்ட கொள்கை. இக் கொள்கையுடையார் சேர்க்கை இளைஞர் வாழ்வைப் பாழ்படுத்தும். உடலோம்புதற்கும், உலக இன்பத்தை நுகர்தற்கும் இல்வாழ்வில் நண்ணுதல் வேண்டும். இல்வாழ்வு அன்பைப் பெருக்குவது. தனித்த வாழ்வு அன்பைப் பெருக்கல் அரிது. பெண் ஆண் கூட்டுறவில் அன்பெனும் அமிழ்தம் பிறத்தல் இயல்பு. இல்வாழ்விற் பிறக்கும் அன்பை இல்லத்தளவில் சிறைப் படுத்தலாகாது. அதை ஓடவிடுதல் வேண்டும். அன்பு வளர்ச்சிக்கு ஒப்புரவுக் கழகங்களில் சேர்ந்து ஒல்லும்வகை தொண்டு செய்வது நல்லது. இல்வாழ்வாலும் - தொண்டாலும் - அன்பைப் பெருக்க முயல்வதுடன், சிவ வழிபாட்டாலும் அன்பைப் பெருக்க முயலலாம். சிவமும் அன்பும் ஒன்றே. அன்பே சிவம். சிவ சிந்தை அன்பைப் பெருக்கும். சிவ வழிபாட்டுக்கெனத் திருக்கோயில்கள் அமைக்கப் பட்டன. பண்டைக் காலத்தில் திருக்கோயில்கள் ஓவியக் கூடங்களாக விளங்கின. ஓவியங்கள் சிவத்தின் இயல்களை உணர்த்தும் அறிகுறிகள். ஓவியக்கூறுகளில் படிவது சிவத்தை வழிபடுவதாகும். ஓவிய நுட்பத்தை உணராது, கோயில் வழிபாடு செய்வது விக்கிர ஆராதனையாக முடியும். காவியங் களும் சிவத்தின் இயல்களைத் தெரிப்பன. அவைகளுடன் உறவு கொள்வதும் சிவ வழிபாடாகும். சிவ வழிபாட்டுக்குரிய பூக்கள் எட்டு என்று சிவாகமங்கள் சொல்கின்றன. அவை:- கொல்லாமை, புலனடக்கம், பொறுமை, இரக்கம், அறிவு, மெய், தவம், அன்பு என்பன. இவைகளைக் சீலங்களென்று பெரியோர் கூறுப. சீலம் வாழ்வுக்கு விழுப்பந் தருவது. சீலமில்லா வாழ்வில் சிவம் விளங்காது. ஆகவே, சீலத்தையும் ஓம்புதல் வேண்டும். நாம் தமிழர்கள். தமிழ்மொழியிலும் மறைகள் பிறந் துள்ளன. அவைகளிற் கலந்து, பொருளுணர்ந்து ஓதினால், கன்னெஞ்சுங் கரைந்துருகும். உருகுஞ் செயல் முதிர முதிர உள்ளொளி பெருகும். உருகுஞ் செயலும் உள்ளொளிப் பெருக்கத்துக்குத் துணை செய்யும். சிவம், உயிரையும் இயற்கையையும் உடலாக்கொண்டது. உயிரையும் இயற்கையையும் வழிபடுவதும் சிவவழிபாடாகும். உயிர் வழிபாடாவது உயிர்க்குத் தொண்டு செய்வது. இது முன்னே சொல்லப்பட்டது. இயற்கை வழிபாடு உள்ளொளியை எழுப்பும் ஆற்றல் வாய்ந்தது. இயற்கையோடியைந்து வாழ்வது இறையோ டியைந்து வாழ்வதாகும். இயற்கை வாழ்வைப்பற்றியும் வழிபாட்டைப்பற்றியும் என்னுடைய நூல்களிலெல்லாம் விரிவாக விளக்கியுள்ளேன். இங்கே இரண்டோர் உரை கூறும் அளவில் நின்று மேற்செல்வேன். காலையில் இளஞாயிறு எழுவதைக் காண்பதும், மாலையில் அதன் ஒளியில் மூழ்குவதும், இரவில் திங்கள் நிலவு படர நீலவானில் படிவதும் வாழ்வுக்குரியன. ஓய்ந்த நேரத்தில் மலைக்குச் சென்று சோலைப் பசுமையையும், ஏரியின் நிறைவையும், ஆற்றோடத்தையும், கடல் நீலத்தையும் காண்டலும் - வண்டின் பண்ணையும், பறவைப் பாட்டையும், அருவியின் முழக்கையும் கேட்டலும் - ஒளியிலும், காற்றிலும், தோய்தலும் - வாழவுக்கினியன. இவ்வியற்கை வழிபாடு முதிர முதிர இயற்கையின் நானாபேதங்கள் படிப்படியாக மறையும். அவை யாவும் ஒலியாகத் தோன்றும். அந்நிலையில் சிவம் ஒலியாகத் திகழும். பின்னே ஒலியும் மறைந்து ஒளி தோன்றும். இங்கே சிவம் ஒளியாக விளங்கும். ஒலிமறைந்து ஒளிதோன்றும் நிலையில், குருநாதன் காட்சிதந்து, நீறளித்து, உண்மைப்பொருளை அறிவுறுத்துவன். ஞானசம்பந்தர் அருளிய நீற்றுப் பதிகத்திலுள்ள நீறு இதுவே. இந் நிற்றைப் பிற்காலச் சித்தர் முப்பு என்றனர். முப்பு என்பது சிவநீறு. அது குருவருளால் கிடைப்பது. சிவநீற்றை உண்டு அணிபவர்க்கு மாற்றமனங் கடந்த மேல்நிலை விளங்கும். அந்நிலை பெற்றோர்க்கு நரை ஏது? திரை ஏது? பிணி ஏது? மூப்பு ஏது? சாக்காடு ஏது? சித்தி தருவது நீறு, கவினைத் தருவது நீறு, துயிலைத் தடுப்பது நீறு, வெந்துயர் தீர்ப்பது நீறு, ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பத் தருவது நீறு எனவரூஉந் திருநீற்றுப் பதிக மொழிகளைப் பார்க்க. ஒளிக்குமேலுள்ள நிலையைச் சொல்லால் சொல்லுதல் இயலாது. அது வாக்கு மனங் கடந்தது. அதைத் தெளிதற்குக் கல்லாலின் கீழமர்ந்த கருணை வடிவை - ஆனந்த அமுதை - சித்த குருவை - அடைவோம்; சிந்திப்போம்; தியானிப்போம்; அமைதி - அமைதி - அமைதியில் நிற்போம். அமைதி எங்கே? யான் எங்கே? அமைதியே! பேசா நிலை எதுவோ! சொல்லாமற் சொல்லும் பொருள் எதுவோ! நினையாமல் நினைக்கும் வகை எதுவோ! அறியேன்; அறியேன்; அறியேன். அகந்தையில் அழுந்திக் கிடக்கும் நாயேன் - பேயேன் - எதை அறிவேன்! எதை உணர்வேன்! சாந்தம் சாந்தம் சிவம்! சாந்த உலகில் - சிவபுரியில் - சிங்கமும் புலியும் பசுவும் மயிலும் பாம்பும், சகோதரநேயத்தில் மூழ்கி, ஆனந்தத்தில் திளைத்து நிற்கின்றன. உலகம் அச் சிவபுரியாதல் வேண்டும்; அச்சிவபுரியில் யான் வாழ்தல் வேண்டும். அமைதியே! அடைக்கலம்; அடைக்கலம். சாந்தம் சாந்தம் சிவம்! 3 மகா சமாஜம் சிவபுரியிலிருந்து சைவ சித்தாந்த மகா சமாஜத்துக்கு வருகிறேன். சிவபுரிச் செல்வம் பெறுதற்குப் பழைய காலத்தில் பலதிறச் சாதனங்களிருந்தன. இப்பொழுது அவைகளிற் பல - ஏறக்குறைய எல்லாம், சிதறுண்டும் - பழுதுபட்டும் - போயின. தற்காலத்துக்குச் சைவ சித்தாந்த மகா சமாஜம் போன்ற சாதனங்கள் தேவை. ஒன்றுக்கு ஆக்கந் தேட ஒருவர் இருவர் சேர்ந்து உழைப்பதினும் பலர் சேர்ந்து உழைப்பது நலம். அப்பலரும் ஒழுங்குபட்ட ஓர் அமைப்புள் நின்று தொண்டு செய்தால் பெருநலன் விளையும். அமைப்புக்களாகிய சபைகளின் இன்பத்தைத் தற்கால உலகம் நன்கு நுகர்ந்துவருகிறது. பெரும்பெரும் ஆட்சிமுறைகளெல்லாம் சபைகளின் வாயிலாகவே நடந்து வருகின்றன. நான்குபேர் கூடுகிற இடத்தில் நான் இருப்பேன் என்று கிறிது பெருமான் கூறியருளினர். வாயாரத் தன்னடியே பாடுந்தொண்டர் இனத்தகத்தான் என்று அப்பரும், இணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்து என்று வாதவூரடிகளும், நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் என்று பட்டினத்தாரும், தொண்டரொடு கூட்டுகண்டாய் என்று தாயுமானாரும் சங்கச் சிறப்பைச் சாற்றியருளினர். திருக்கூட்டச் சிறப்பு பெரிய புராணத்தில் திகழ்கிறது. எதற்கும் ஒருவித அமைப்பிருத்தல் முறை என்பது பெரியோர் உட்கிடக்கை. ஆகவே, சிவநெறி வளர்ச்சிக்கெனத் தோன்றியுள்ள சபைகளுக் கெல்லாம் தாயகமாகச் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்று ஒன்றிருத்தல் போற்றற்குரியதே. சைவ சித்தாந்த மகா சமாஜம் தோன்றி இருபத்தொன்பது ஆண்டுகளாகின்றன. சமாஜம் அவ்வப்போது ஒவ்வொருவிதத் தொண்டை ஆற்றி யிருக்கிறது. இப்பொழுது - திருமிகு - மயிலை - பாலசுப்பிரமணிய முதலியார் அமைச்சரா யமர்ந்த நாள் தொட்டு - சமாஜம், சில நற்காரியங்களை நிகழ்த்தி வருகிறது. அவைகளுள், பன்னிரு திருமுறையையும் - பதினான்கு சாத்திரத்தையும் - அடக்கவிலையில் சமாஜம் வெளியிட்டது சிறப்பாகக் குறிக்கத்தக்கது. இம்முறையில் சமாஜச் சார்பில் இன்னும் பல நூல்கள் வெளிவருமென்று உலகம் எதிர்பார்க் கிறது. சமாஜம் ஆற்றத்தக்க தொண்டுகள் இன்ன இன்ன என்று பலபடக் கூறலாம். அவைகள் பெரிதும் ஒவ்வோராண்டும் மேடையில் பேசப்பட்டன. அவைகள் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை மீண்டும் இங்கே விரித்துக் கூறுதற்கு மனம் எழவில்லை. பொதுவாகச் சிலவற்றையும், வரும் ஆண்டில் செய்யத்தக்க சிலவற்றையும் குறிக்கவே மனம் எழுகிறது. சமாஜத்துக்கு ஆக்கந் தேடல் வேண்டும். எவ்வழியில் சமாஜத்துக்கு ஆக்கந் தேடுவது? நிதிமேல் சிலர் கருத்துச் செல்லும். நிதி, சில சமயம் நீதிமன்றத்தை நாடும். குறிப்பிட்ட ஒன்றற்கெனப் பொருள் சேர்த்து, அவ்வொன்றற் கென்றே அப்பொருளைச் செலவு செய்தல் வேண்டும். பொருளைச் சேமித்துவைத்தல் கூடாது. அன்புநிதி சேர்த்தல் சிறப்பு. அன்பு எல்லாஞ் செய்யும். நாயன்மார்கள் அன்புச் செல்வத்தைச் சேர்த்தே வாழ்வு நடாத்தினார்கள். செல்வன் கழலேத்துஞ் செல்வம் செல்வமே என்றார் பிள்ளையாரும். அழுக்காற்றால் புழுங்காமை, புறங்கூறாமை, பிறர்குற்றம் பாராட்டிக் களியாமை, தன்னலம் பாராட்டாமை, பொறுமை, ஒப்புரவு, தியாகம், சகோதரநேயம், பொதுத்தொண்டில் ஆர்வம் முதலிய இயல்புகள் சைவ உலகில் ஆக்கம் பெறின், சமாஜம் தானே ஆக்கம் பெறும். சமாஜ அங்கத்தவரும் நேயரும், நாடோறும் துயிலெழும் போதும் துயிலப் புகும்போதும், தூயமனங் கொண்டு, சமாஜ நலன் கருதியும் உலக நலன் கருதியும், கருணைக் கடவுளை நினைந்து வாழ்த்திவரின், சமாஜம் நலம்பெறும். சைவ இளைஞர்கள் முயன்று தொண்டாற்றினால், சமாஜ அங்கத்தவர் தொகை பெருகும். சைவ மங்கையர் அங்கத்தவர் தொகையைப் பெருக்கச் சமாஜம் உழைக்கும் என்று நம்புகிறேன். சைவத்தைச் சிறக்கச் செய்தவர் நால்வர். அவர்களால் பாடப்பெற்ற கோயில்களே திருக்கோயில்களெனப் போற்றப் படுகின்றன. அந்நால்வரையும் - அவர்தம் அருள்மொழி களையும் - சைவவுலகும், கோயில் அதிகாரிகளும் போற்றும் அளவை ஈண்டு விரித்துக்கூற வேண்டுவதில்லை. மற்ற உலகில் குருமார் போற்றப்படுவது போலச் சைவ உலகில் குருமார் போற்றப்படுவதில்லை. ஆதலால், நால்வர் விழாவும், திருமுறை விழாவும், திருமுறைப் பாராயணமும், பிரசாரமும் நன்முறையில் திருக்கோயில்களில் நிகழ்த்துவிக்கச் சமாஜம் பெருங்கிளர்ச்சி செய்வது அறம். நால்வர் மொழிகள் ஆண்டவன் அருள்நாதக் காரியப் பாடாதலால், அவைகளில் என்றும் தெய்வத் திருவருட்சக்தி திகழ்ந்துகொண் டிருக்கும். அச்சக்தியைப் பயன்படுத்த வேண்டுவது மக்கள் கடமை. நால்வர் நன்மொழி, வாழ்வு நலன் களைத் தரும்; நாள்கோள் கொடுமைகளைப் போக்கும்; பிணி அறுக்கும். இத்துணை ஆற்றல் வாய்ந்த அருண்மொழி களை நாம் பெற்றும் பெறாத வறியர்களாக வருந்துகிறோம். நம்பிக்கை அற்றுவிட்டது. நம்பிக்கைக்குள்ள வல்லமை அதிகம். அஃது எல்லாஞ் செய்யும். நம்பிக்கையால் மேல்நாட்டன்பர் சிலர் மருந்தின்றிக் கொடிய நோய்களைத் தீர்த்து வருகிறார். அவர் களுடைய நம்பிக்கை அவர்களைச் சித்தி பெறச் செய்கிறது. தெய்வத் திருவருட்சக்தி இடையீடின்றி ஒடிக்கொண்டிருக்கும் நால்வர் மொழியில் உறுதிகொள்ளுமாறு பொதுமக்களிடைச் சமாஜத்தார் பிரசாரஞ் செய்தல் வேண்டும். பொதுவாகத் திருமுறைகளை ஓதுவது நல்லது. அற்புதப் பதிகங்களை அடிக்கடி ஓதுவது சிறப்பு. நாடோறும், திருநீற்றுப் பதிகம், கோளறுபதிகம், திருமுருகாற்றுப்படை, கந்தரநுபூதி முதலியவற்றை ஓதி உணவுகொள்ள ஒவ்வொரு வரும் உறுதிகொள்ளல்வேண்டும். இவ்வுறுதி வாழ்வு நலத்துக்கு வேண்டற்பாலது. திருக்கோயில்களிலும் பிற இடங்களிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் அவைகளில் ஒழுங்குமுறை இல்லை. வழிபாட்டில் ஒழுங்குமுறை இருத்தல் வேண்டும். பலரும் ஒன்றி வழிபடுதல், மறை ஓதல் முதலிய நற்பயிற்சிகள் நம்மிடம் இல்லை. பலரும் ஒன்றித் தொண்டாற்றுதற்குச் சமாஜம் வழிகாட்டலாம். மிகச் சில இடங்களில், விழாக்காலத்தில், பல அன்பர்கள் ஒன்றுசேர்ந்து, திருவாசகத்திலுள்ள சிவபுராணத்தை ஓதி வருகிறார்கள். திருப்பதிகளிலெல்லாம் சிவபுராணத்தை அவ்வாறு ஓதும்படி ஆங்காங்குள்ள சமாஜ நேயர்கள் முயற்சி செய்வார்களாக. சைவ உலகம் உறக்கத்தி லிருப்பது உண்மை. உறக்கத்தைப் போக்கப் பல வழிகள் சொல்லப்படுகின்றன. தற்போது சிறப்பாக இரண்டு வழிகளைக் கடைப்பிடிக்கலாம். ஒன்று தல யாத்திரையை உயிர்ப்பிப்பது; மற்றொன்று புராணப் பிரசங்கத்தைப் பெருக்குவது. இரண்டும் முறைப்படி நடை பெறின், சைவ உலகில் ஒருவிதக் கிளர்ச்சி உண்டாகும். அருணகிரிநாதரின் அருள் நூல்களைப் படிப்போர் தொகை நாளுக்குநாள் பெருகுகிறது. அந்நூல்களை ஒருங்கே கொண்ட ஒரு பதிப்பு அடக்க விலையில் வெளிவரின் ஏழைமக்கள் நலம் பெறுவார்கள். அப்பனுவல்களை வெளி யிடும் தொண்டில், திருமுறைகளை வெளியிட்டுப் பேரும் புகழும் பெற்ற சமாஜம் ஈடுபடலாம். சாதிமதச் செருக்கும் வேற்றுமையும் நாளுக்கு நாள் அருகி அருகிப் பொன்றுமாறும், சுத்தசிவமார்க்கம் எங்கெங்குந் தழைத்து ஒங்குமாறும், சகோதரநேயம் எங்கணும் பெருகு மாறும் எல்லாம்வல்ல சித்தனாகிய சிவகுருநாதனை நினைந்து திங்களுக்கு ஒருநாளாதல் அன்பர்கள் தவங்கிடக்க உறுதி கொள்வார்களாக. அத்தவம் விளம்பரம் அற்றதா யிருத்தல் வேண்டும். வரும் ஆண்டில் இத்தொண்டுகளிற் சிலவற்றையாதல் நிகழ்த்தச் சமாஜம் விரதம் பூண்பது நல்லது. இதுகாறும் எனது புன்மொழியைக் கேட்பதில் உங்கள் அரிய காலத்தைச் செலவழித்தீர்கள். உங்கள் பெருந்தகைமைக்கு எனது வணக்கம் உரியதாக, பிழை பொறுக்க. சைவசித்தாந்த மகா சமாஜம் வாழ்க; சைவம் வாழ்க; உலகம் வாழ்க. திரு.வி.க வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம் அர நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே  பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி முன்னுரை உலகம் மாறுதல் அடைந்து வருகிறது. மாறுதலினின்றும் ஏதோ ஒரு புது உலகம் மலரும். அவ்வுலகம் உலகாயத மயமாய் இருக்குமென்று பல இடங்களில் பேசப்படுகிறது. உலகாயதத் துடன் தெய்விகமும் கலந்த ஓர் உலகம் புதுமையில் மலர்தல் வேண்டுமென்பது எனது வேட்கை. அவ்வேட்கை ஒரு நூலை இயற்ற என்னை உந்தியது. எனது உடல்நிலையும், கட்புலன் தொல்லையும், செவிப்புலன் தொல்லையும் பழையபடி நூல் இயற்ற என்னை விடுவதில்லை. கவலை அறியா என்மனம் கவலையுற்றது. படலம் எனது வலது கண்ணை முற்றும் மறைத்தது; இடது கண்ணை இன்னும் முற்றும் மறைக்கவில்லை. இக்கண் உமிழும் சிற்றொளி என்னை அங்கும் இங்கும் நடமாடத் துணைபுரிகிறது. ஏறக்குறைய அறுபத்தைந்து வயதுவரை என் கைப் பட எழுத்துத் தொண்டு ஆற்றி வந்தேன். இப்பொழுது அத் தொண்டுக்கு இடர் நேர்ந்தது. என் கை இன்னும் வீறுகிறது. ஆனால், அதைக் கண் தடைசெய்கிறது. தமிழ்ப் புலவரைச் சுருக்கெழுத்துப் பயிலுமாறு பலமுறை யான் பேசிப் பார்த்தேன்; எழுதிப் பார்த்தேன். பயன் விளைய வில்லை. இந் நேரத்தில் புலவருள் சுருக்கெழுத்துப் பயின்ற ஒருவர் என் பக்கத்திருப்பின் என் வாய் ஓய்வு பெறாது; எதை யேனும் பிதற்றிக் கொண்டிருக்கும். அப்பிதற்றல்கள் நூல்களாகும். சென்னை : செயின்ட் எபா உயர்நிலைப்பள்ளியில் படிக் கும் ஒரு குழந்தை - என் அருமைத் தமையனார் திரு. வி. உலகநாத முதலியார் பேர்த்திமாருள் ஒரு செல்வி - யான் சொல்வதை எழுத முன்வந்ததை ஈண்டுக் கழிபேருவகையுடன் குறிக் கிறேன். அக் குழந்தையின் பெயர் டி. சிவயோகவல்லி. எங்கள் வீட்டில் வளர்ந்து வரும் செல்வக் குழந்தைக்கு என்ன கைம்மாறு செய்வது? செல்வி - சிவயோக வல்லிக்கும் கல்விச் செல்வத்தை யும், பொருட் செல்வத்தையும் வாழ்க்கைச் செல்வத்தையும், நீண்ட நாளையும், நல்ல யாக்கையையும், வேறு பல பேறு களையும் அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனை வழுத்து கிறேன். யான் சொல்லக் குழந்தை எழுதியதை, நண்பகலில் ஞாயிற்றொளி நன்கு படரும் இடத்தில் அமர்ந்து எனது இடதுகண் காலும் சிற்றொளித்துணையால் பார்வையிட்டுப் பார்வையிட்டுச், சில கூட்டல் - கழித்தல் - திருத்தல் முதலியன செய்தேன். ஒற்றைக் கண்ணொளி என்னை ஏமாற்றியுமிருக்கும். இந்நூலை யானே என் கைப்பட எழுதியிருப்பின் நூல் விரிவடைந்திருக்கும். குழந்தையின் வேலையைச் சுருக்க வேண்டிக் குறிப்புக் குறிப்பாகக் கருத்துக்களை வெளியிட லானேன். இந்நூலை ஒரு குறிப்புத் திரட்டு என்றே சொல் வேன். எனது கண் படலம் நீங்கி ஒளி பெற்றால், இந்நூலை விரிவாக்க எண்ணியுள்ளேன். நூலின் பொருளுக்கேற்பப் பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி என்னும் தலைப்பு அணியப்பட்டது. இந்நூற்கண் - மனித இயற்கை, அமைதி, அமைதி வீழ்ச்சி, அதற்குரியகாரணம் மீண்டும் அமைதிபெறல், சாம்ராஜ்யம், சமதர்மம், பரம்பொருள் உண்மை, பரத்தின் தனித்த நிலை, கலந்த நிலை, ஒன்றுக்கும் அளவு உண்மை, பரவெளி, சூந்யம், விஞ்ஞானத்தின் எல்லை, சடாகாசம், சிதாகாசம், வழிபாட்டுத் திறங்கள், காவிய ஒவிய வழிபாடுகள், தியானம், சேர்க்கைச் சிறப்பு, சேர்க்கையில் அன்பு பெருகல், சேர்க்கை வழிபாடு, முறையீடு, வாழ்க்கை வழி, வாழ்க்கைப் பேறு, பரம்பொருள் வாழ்க்கை வழி, தடைகள், அறப்புரட்சியின் பெருமை, மறப் புரட்சியின் சிறுமை, அறியாமை நீங்கும் வழி, கிறிது பெரு மான் போதனையும் சாதனையும், மார்க்ஸியமும் காந்தியமும், உலகம் ஒரு குலமாதல், அறவோர் புரட்சி, மரணமிலாப் பெரு வாழ்வு, அமைதி உலகம், புது உலகம், முன்னோர் உரைகள் முதலிய பொருள்கள் ஓதப்பட்டுள்ளன. முதுமையில் - உடல்நிலையும், கட்புலனும், செவிப்புலனும் தொல்லை விளைத்து வரும் வேளையில் - இந்நூல் இயற்றப் பெற்றது. அறிந்தோ அறியாமலோ நிகழ்ந்துள்ள பிழைகளைப் பொறுக்குமாறு தோழர்களை வேண்டுகிறேன். சென்னை 15 - 9 - 1949 திருவாரூர்-வி.கலியாணசுந்தரன் 1. தோற்றுவாய் உலகம் அமைதியை விரும்புகிறதா? வெறுக்கிறதா? உலகம் அமைதியை விரும்புகிறது ; வெறுப்பதில்லை. ஆனால் உலகில் அமைதி நிலவுகிறதா? குலவுகிறதா? இல்லை. உலகில் அமைதி நிலவாது குலவாது குலைந்து குலைந்து போகிறது. காரணம் என்னை? உன்னுக; உன்ன உன்ன உண்மை விளங்கும். மனித இயற்கை உலகில் அமைதி நிலவாது குலவாது குலையினும், அஃது அமைதியை விரும்பாமலில்லை. இஃது எதைப் புலப்படுத்து கிறது? இது, மனித இயற்கை அமைதி என்பதைப் புலப்படுத்து கிறது. இந்நுட்பத்தை, எனது கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, அநுபவம் முதலியனவும் தெளிவு செய்கின்றன. இதனால் மனித இயற்கை அமைதி என்று யானும் கூறுகிறேன். என் கூற்றுக்கு மாறுபட்ட கருத்தும் உலவுவது எனக்குத் தெரியும். மாறுபட்ட கருத்தை வரவேற்க என் உள்ளம் விரைவது வழக்கம். கருத்து வேற்றுமை கருத்து வேற்றுமை இன்றியமையாதது. அதை எழுப்புவது இயற்கை. கருத்து வேற்றுமை இயற்கையின் பாற்பட்டது; அதற்கு மாறுபட்டதன்று. அவ்வேற்றுமை அறிவை விளக்கும்; வாழ்க்கையை வளர்க்கும்; அமைதியை நிலைபெறுத்தும்; சமூகத்தைப் பெருக்கும்; நாட்டைப் பேணும்; உலகை ஓம்பும். ஒரு பொருளைப்பற்றி அறிஞர் கூட்டங்களில் வாதப்போர் நிகழ்கிறது. அங்கே கருத்து வேற்றுமை தாண்டவம் புரிகிறது. அத் தாண்டவம் உண்மையை விளக்கிக் கொண்டே போகும். உண்மை விளக்கத்துக்குக் கருத்து வேற்றுமை இன்றியமை யாதது. உண்மை விளங்க விளங்க அமைதி நிலைபெறுதல் இயல்பு. ஆகவே, அமைதிக்குக் கருத்து வேற்றுமை துணை செய்வது கருதற்பாலது. சான்றோர் இம் மண்ணுலகில் எத்துணையோ சான்றோர் தோன்றி னர். அவர் அனைவரும் அமைதியை அறிவுறுத்திச் சென்றனர். அவர்தம் செம்மொழிகள் அமைதி அமைதி என்று முழங்கா நிற்கின்றன. அமைதி வாழ்க்கைப் பேறு என்பது சான்றோர் உள்ளக் கிடக்கை அவரது உள்ளக் கிடக்கை, வாழ்க்கையின் குறிக்கோள் என்று உணர்ந்து உலகம் நடக்குமாயின், உலகில் அமைதி ஏன் நிலவாது? உலகம் எப்படி? இப்பொழுது உலகம் எப்படி இருக்கிறது? சொல்லலும் வேண்டுமோ! அந்தோ! நிலைமையை வருணிக்க மனம் எழ வில்லை. அந்நிலைமையை நினைக்க நினைக்க உள்ளம் உருகு கிறது; கண்ணீர் பெருகுகிறது; மெய் விதிர்விதிர்க்கிறது. உலகம் கொடுமையாயிருக்கிறது; கோரமாயிருக்கிறது; கொலைக் களனா யிருக்கிறது என்று சுருங்கச் சொல்லி மேற்செல்கிறேன். தொண்ணூறு பங்கு இந்நாளில் உலகம் அமைதியை இழந்து வருவது கண்கூடு. வேறு சான்றுகள் வேண்டுவதில்லை. நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு அமைதி குன்றிவிட்டது. எஞ்சி நிற்பது பத்தே. பத்து, நூறு ஆகுமோ? ஆகும்! அமைதியை நினைக்க; பேசுக; எழுதுக. எல்லாம் ஆகும். ஒரு மூலையில் மனித இயற்கை அமைதி. அவ்வமைதி மனிதத்தை விடுத்து அறவே மாய்ந்தொழியாது; மாய்ந்தொழியும் நிலை ஒரு போதும் நேராது. இயற்கை அமைதி எவ்வாறு மாய்ந்தொழி யும்? அது மன்பதையில் யாண்டாயினும் ஒரு மூலையில் ஒன்றிக் கிடக்கும். சமயம் நேருங்கால் அது மீண்டும் ஆக்கம் பெறும். களைகள் இயற்கை சாகாது. சாவது செயற்கையே. ஆனால் செயற்கை இயற்கைக்கு இடைஇடையே தொல்லை விளைக் கிறது. எவ்வாறோ செயற்கையால் இயற்கைக்குத் தொல்லை நேர்கிறது! மனித இயற்கையில் செயற்கைக் களைகள் முளைத்துத் தழைக்கின்றன. செயற்கைக் களைகள் : - கொடுமை, கோரம், கொலை முதலியனவும் அவற்றின் சேய்களுமாம். இவை, களையப்படின் இயற்கை அமைதி தானே செழிக்கும். முயற்சி அமைதியை நிலைபெறுத்துதற்கு உலகம் முயலாம லில்லை. முயற்சி எங்கணும் தோன்றியபடியே இருக்கிறது. அம்முயற்சிக்குப் பெரிதும் ஏழை மக்களே துணை போகி றார்கள்; மற்றவர்கள் துணை போகிறார்களில்லை. இவர்கள் ஏழை மக்கள் முயற்சிக்குக் கேடு சூழவும் முற்படுகிறார்கள். இவர்கள் மடமையால் கொடுமையும், கோரமும், கொலையும் வீறி எழுந்து அமைதியைக் குலைப்பனவாகின்றன. ஆதி காலத்தில் ஏழை மக்கள் முயற்சிக்குக் கேடு சூழ்வதற் கென்றே ஒரு கூட்டம் திரண்டுள்ளது. இக்கூட்டம் ஆதி காலத்தில் இல்லை. அதனால் மக்களிடை அமைதி நிலவியிருந்தது. இதை உறுதிப் படுத்தப் பழைய உலக ஆராய்ச்சி தேவை. ஆதி மனிதன் எப்படி வாழ்ந்தான்? அவன் காலத்தில் முதல் தொழில் வேற்றுமை இருந்ததா? nghÈÞ, g£lhs«, muR KjÈad ïUª jdth? என்று முறை முறையே ஆராய்ந்தால் உண்மை காண லாம். இங்கே விரிந்த ஆராய்ச்சி வேண்டுவதில்லை. எடுத்த பொருளுக்கேற்ப இரண்டொரு குறிப்பை மட்டும் பொறித்தல் சாலும். இரு திணை உலகம் இருவகை. ஒன்று அஃறிணை உலகம்; மற்றொன்று உயர்திணை உலகம். அவ்வுலகினின்றும் இவ்வுலகம் பிறந்தது. அஃறிணையினின்றும் ஆதியில் தோன்றிய உயர்திணை மனி தனைப் பற்றியும், அவனது வாழ்க்கையைப் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் ஆய்ந்து ஆய்ந்து, அறிஞர் வெளியிட்ட கருத்துக்கள் பலப்பல. அவற்றைச் சிந்திக்கச் சிந்திக்க மனித இயற்கை அமைதி என்பது புலனாகும். அஃறிணை உலகம் எத்தகையது? அமைதியுடையது. பெரிதும் அமைதி யுடையது. அஃறிணையினின்றும் பிறந்த உயர் திணை உலகமும் அமைதியுடையதாகவே யிருத்தல் வேண்டு மன்றோ? உயர்திணை மனிதன் ஆதியில் அமைதி யுடையவ னாகவே வாழ்ந்தான். அஃறிணை உலகைச் சிறிது நோக்குவோம்; காலை வானில் ஒரு பெரும் செந்தாமரை; மாலைவானில் ஒரு பெரும் வெண்தாமரை; செறிந்த முத்துப் பூக்கள்; ஒளி வழி; வான விதானம் - மறிகடல்; மரகத வயல்; கருங்காடு; சாந்தமலை - ஞாயிற்றின் வெப்பம்; கடல் ஆவி; மேக எழுச்சி; மழைப் பொழிவு; அருவி வீழ்ச்சி; ஆற்றோட்டம்; கடற்கலப்பு- அன்னத் துயில் ; கன்றா; வண்டிசை; குயில்பாடல்; மயில் ஆடல் - சுறா நெளிவு; காளை எக்காளம்; பாம்புப்பணம்; மான் மருட்சி; புலிப்பாய்ச்சல்; குரங்குலா - அஃறிணையின் அமைதி என்னே! என்னே! ஆதி மனிதன் இவ்வஃறிணை உலகினின்றும் உதித்த உயர்திணை உலகம் அமைதியற்ற தாகுமோ? ஆகாது. ஆதியில் தோன்றிய உயர் திணை மனிதன் அமைதி உடையவனாய் வாழ்ந்தான். அவனது வாழ்க்கை அவனை அமைதியுடையவனாக்கிற்று. அவ்வாழ்க்கை எத்தகையது? ஆதிமனிதன் உழுதான்; நூற்றான்; குடிசையில் வாழ்ந்தான்; சரக்கைத்தந்து சரக்கைப்பெற்றான். பின்னாளில் சரக்கை விற்றுப் பணம் பெற்று, அதைக்கொண்டு சரக்கையே வாங்கினான்; பணத்தைப் பெருக்கினானில்லை. அவனே முதலாளி; அவனே தொழிலாளி. அவன் காலத்தில் முதலாளி தொழிலாளி வேற்றுமை இல்லை. அப்பொழுது போலி இல்லை; பட்டாளம் இல்லை; கொலைக் கருவிகள் இல்லை; அரசும் இல்லை. எங்கும் எங்கும் அமைதி நிலவியது. அக்காலம் மீண்டும் வருமா? வரும். ஆதி மனிதனுடைய அமைதி வாழ்வு படிப்படியே குலைந்தது. அவனது அமைதி நிலையே மாறியது. எப்படி? ஆதி மனிதனிடை நாட்டாண்மை புகுந்தது; குறுநிலமும் பெரு நிலமும் புகுந்தன; மன்னராட்சி நுழைந்தது; மன்னர் மன்ன ராட்சி நுழைந்தது; முதலாளி தொழிலாளி வேற்றுமை வீறியது. அதனால் செல்வம் ஒரு பக்கம் பெருகியது. மற்றொரு பக்கம் அருகியது. செல்வராட்சி வளர்ந்தது; வளர்ந்து வளர்ந்து சாம்ராஜ்யமாகியது. சாம்ராஜ்யப் பெயரால் பலதிற ஆட்சி முறைகள் பரவின; பத்திரிகை, போலி, பட்டாளம், கொலைக் கருவி, போர் முதலியன பெருக்கெடுத்தன; எங்கணும் சுரண்டல்- நடுக்கம் - அச்சம் - சட்டம் - கொடுஞ்சட்டம் - அடக்குமுறை முடுக்கின. இவற்றால் அமைதி குலைந்தது. குலைந்த அமைதி மீண்டும் நிலைக்குமோ? நிலைக்கும். விதை - விதையாதல் ஆதிகால அமைதி மீண்டும் உயிர்த்தெழுமா என்று ஐயுறல் வேண்டா. மீண்டும் எழும் என்று உறுதி கொள்க; நோன்பு கொள்க; உழைக்க. இயற்கையின் நோக்கையும் போக்கையும் உணர்ந்தால் அமைதி மீண்டும் உயிர்த்தெழலில் எவ்வித ஐயமும் தோன்றாது. விதை முளையாய், செடியாய், மரமாய், கவடுகோடு விடுத்துத், தழைத்து நின்று, அரும்பு - மலர் - காய் கனிகளை அளித்து, மீண்டும் பழையபடி விதையே ஆகிறது. இத்தத்துவத்தை எண்ணித் தெளிவோர்க்குப் பழைய அமைதி, இடையிடையே பற்பலவாறு மாறி மாறி, மீண்டும் அமைதியாகவே முடிவது நன்கு விளங்கும். ஆகவே, ஆதி மனிதனது அமைதி இடையிடையே பலவித மாறுதல் அடை யினும், அது மீண்டும் அதுவாதல் இயற்கை யென்க. விதையின் கதை ஆதி காலத்திற்குப் பின்னர் உலகில் எத்துணையோ மாறுதல்கள் உற்றன. அந்நாளில் நாகரிகம் இல்லை; விஞ் ஞானம் இல்லை; இன்ன பிற இல்லை. இந்நாளில் நாகரிகமும், விஞ்ஞானமும், இன்ன பிறவும் விரைந்து வளர்ந்து ஓங்கிச் செறி கின்றன. இவற்றைக் கண்ட இக்காலம், எவ்வகையில் அக் காலமாக விரும்பும்? இஃது இயற்கைக்கே மாறுபாடு என்று சிலர் கருதலாம். இவர் மேற்போந்த விதையின் கதையைச் சிந்திப்பாராக. பழமையில் புதுமை பழைய விதை முளையாய், செடியாய், மரமாய்த் தழைத்துக் கனியாய்ப் புது விதையாகிறது. விதை மீண்டும் விதையாதல் உண்மை. ஆனால் அவ்விதைக்கும் இவ்விதைக்கும் வேற்றுமை உண்டு. அதில் சில பழைய சக்திகள் உள்ளன. இதில் வேறு சில புதிய சக்திகள் புகுந்தன. புதிய சக்திகளைப் புகுத்து வது இயற்கைக் கூறுகளின் கருணை. அக்கருணை, உலக வளர்ச்சியை நாடிப் புதுப்புது சக்திகளைப் புகுத்துகிறது. இதேபோல ஆதி மனிதன், இடையில் எத்துணையோ மாறுதல் அடைந்து அடைந்து மீண்டும் ஆதி மனிதனேயாவன். ஆனால் அம்மனிதனுக்கும் இம்மனிதனுக்கும் வேற்றுமை உண்டு. அவனிடத்தில் விஞ்ஞான சக்தி பெரிதும் நுழையவில்லை. இவனிடத்தில் அச்சக்தி நுழைந்துள்ளது. அந்நாளில் அவன் பெற்ற அமைதியை இவன் இந்நாளில் வெவ்வேறு வழியில் பெற்றே தீர்வன். இஃது இயற்கை. மனிதன் இழந்த அமைதி மீண்டும் அவனிடை உயிர்த்தெழும். வழி இக்காலக் கொடுமை, கோரம், கொலை முதலியன ஒழிந்தாலன்றி அமைதி நிலைபெறாது. கொடுமை, கோரம், கொலை முதலியன எங்ஙனம் ஒழியும்? சாம்ராஜ்ய ஆட்சி முறை ஒடுங்க ஒடுங்க, அமைதி கால்கொண்டு கால்கொண்டு உயிர்த்தெழும் என்று சில அறிஞர் கூறுகின்றனர். இக்கூற்றை யான் மறுக்கின்றேனில்லை. சாம்ராஜ்ய ஆட்சிமுறை எவ் வாறு ஒடுங்கும்? இதற்கு அறிஞர் கோலியுள்ள வழிகள் பலப் பல. அவற்றுடன் சேரத்தக்க ஒன்றை ஈண்டுச் சிறப்பாகக் குறிக்க விரும்புகிறேன். அது மனிதனைத் தெய்வமாக்குவது. தியானம் மனிதன் விலங்கினின்றுந் தோன்றியவன். அவன்பால் விலங்கியல்புகள் மலிகின்றன. அம்மலிவு சுருங்கி அருகுதல் வேண்டும். இதற்கு வழி என்ன? தியானம் தியானம் என்று யான் அறைகூவுவேன். எனது அநுபவம் யான் பிறந்தேன்; வளர்ந்தேன்; ஏட்டுக்கலைகளைப் பயின்றேன்; ஒருவித அநுபவம் பெற்றேன். இயற்கைக் கலைகளைப் பயிலும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அதனால் யான் வேறு ஒருவித அநுபவம் அடைந் தேன். எனது வாழ்க்கை பலவித இயக்கங்களின் தொடர்பு கொண்டது. நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டேன். தொழி லாளர் இயக்கத்தில் தோய்ந்தேன். உலக விடுதலையே நாடு களின் விடுதலை என்ற உணர்வு என்னகத்தில் அரும்பியது. இஃது இன்னொரு வித அநுபவத்தைக் கூட்டிற்று. உலக விடுதலையை அறிவுறுத்துவது மார்க்ஸியம் என்பர் சிலர்; காந்தியம் என்பர் சிலர். யான் இரண்டையும் நடுநிலை நின்று ஒல்லும் வகை ஆய்ந்தேன். இவ்வாய்வால் மற்றும் ஒரு வித அநுபவம் என்னிடம் உற்றது. இளமையில் யான் என் தாய் தந்தையர் ஏற்ற சமயத்தை ஏற்று ஒழுகினேன். பின்னே பல சமய நூல்களைப் பயில வேண் டும் என்ற வேட்கை எழுந்தது. அவ்வேட்கை ஒருவாறு நிறை வேறியது. சமயங்களின் ஒருமைப்பாடு எனக்கு விளங்கிற்று. இவ்விளக்கத்தால் பிறிதொருவித அநுபவம் என்பால் படிந்தது. இவ்வநுபவங்களுடன் வேறு பலவித அநுபவங்களும் என்னில் திரண்டன. எல்லா அநுபவங்களும் என்னுள் தனித் தனியே நிற்கவில்லை. அவை யாவும் என்னுள் ஒன்றின. ஒன்றிய அநுபவத்தால் என்ன விளைந்தது? அமைதி விளைந்தது. வாழ்க்கைப் பேறு அமைதி என்னும் உண்மை எனது அடைவாயிற்று. அமைதியைப் பெறுதற்குப் பல வழிகள் அறிஞரால் கோலப்பட்டன. அவற்றுள் தலையாயதாய் எனக்கு விளங்கு வது தியானம். கொழு கொம்பு தியானம் மனிதனிடத்துள்ள விலங்கியல்பைக் களைய வல்லது; புற மனத்தை ஒடுக்கி, நடு மனத்தை எழுப்பி, அடி மனத்தை விழிக்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது. (தியானம் இவ்வளவில் நிற்பதில்லை. நாதம் என்னும் பிரணவ தரிசனம் வரை துணை செய்யும்). தியானம் மனிதனைத் தெய்வமாக்கும் - அமைதித் தெய்வமாக்கும். தியானத்துக்கு ஒரு கொழு கொம்பு தேவை. அக்கொழு கொம்பு விலங்கியல்பைப் பெருக்குவதாய், கருவி கரணங்களை எரிப்பதாய், மூர்க்கத்தை வளர்ப்பதாய் இருத்தல் கூடாது. அக்கொழு, மனத்தைப் பண்படுத்துவதாய், அன்பை விளைப்ப தாய், அமைதியை ஊட்டுவதாய் இருத்தல் வேண்டும். அத் தகைய பொருள் ஒன்று உண்டா? உண்டு. அஃது எது? அதுவே பரம்பொருள்; வாழ்க்கை வழி. 2. பொருள் பொருள் எது? இதுபற்றி எழுந்த ஆராய்ச்சிக்கு ஒர் அளவில்லை. இவ்வாராய்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை; இனியும் நிகழலாம். ஆராய்ச்சியாளரால் அவ்வப் போது காணப் பெற்ற முடிவுகள் பற்பல. அவற்றுள் நிலைத்தன சில; நிலையாதன சில. இருவகை பொருள் இருவகை. மாறுதல் அடைவது ஒன்று; மாறுதல் அடையாதது மற்றொன்று. அது சடம்; இது சித். சடம் அறிவில்லாதது; சித் அறிவு. அறிவிலாப் பொருளினும் அறிவுப் பொருள் பல வழியிலும் மேம்பட்டது. ஆதலின், அறிவுப் பொருளைப் பரம்பொருள் என்று உலகம் போற்றுகிறது. பரம்பொருள் - மேலான பொருள்; எல்லாவற்றையுங் கடந்த மேலான பொருள். இயக்கம் சடம் மாயை. மாயையின் காரியம் இயற்கை. இயற்கை இயங்குகிறது. சடம் எப்படித் தானே இயங்கும்? இயற்கையில் இயக்கம் நிகழ்தல் உண்மை. அதை ஏன் நினைத்தல் வேண்டும்? ஏன் ஆராய்தல் வேண்டும்? அது தானே நிகழ்கிறது என்று சிலர் கூறுகின்றனர். இக்கூற்றை அறிவு உலகம் ஏலாது. அறிவில்லாத சடத்தை இயக்க ஓர் அறிவுப் பொருள் தேவையே. அதுவே சித் என்பது. அச்சித்தே பரம்பொருள். முத்தொழில் மாயா காரியமாகிய இயற்கை உலகம் நாமரூபமுடையது; அகல நீளமுடையது; எல்லையுடைய கண்டம்; அகண்ட மன்று. இம்மண்ணுலகம், மற்ற உலகங்கள், ஞாயிறு முதலிய எல்லாம் நாமரூபமுடையன; அகல நீளமுடையன; எல்லையுடைய கண்டங்கள்; அகண்ட மல்ல. நாமரூப அகலநீள எல்லையுடைய கண்டப் பொருள்கள் யாவும் மாறுதல் அடைவன. அவை தோன்றும்; நிற்கும்; மறையும். இவ்வாறு தோற்றநிலை இறுதி நிகழ்தற்குத், தோற்றநிலை இறுதியற்ற ஒன்று வேண்டுமா? வேண்டாவா? வேண்டும். அதுவே பரம்பொருள். ஞாயிறும் கோள்களும் கோள்கள் ஞாயிற்றைச் சுற்றுகின்றன. ஞாயிறு தன்னைத் தானே சுற்றுகிறது. கோள்களின் சுழற்சிக்கும் ஞாயிற்றின் சுழற் சிக்கும் ஒருவிதத் தொடர்பு இருக்கிறது; இல்லையேல் சுழற்சி நிகழாது. அத்தொடர்பை வான நூல்கள் விளக்குகின்றன. ஞாயிறு பொழியும் ஒளிக்கதிர்கள் கோள்களை இயக்குகின்றன. அவ்வியக்கத்தினின்றும் சொல்லொணாத ஒரு பெரும் வேகம் புறப்படுகிறது. அவ்வேகம் உமிழும் சக்தி அலைகள் ஞாயிற்றை இயக்குகின்றன. ஒன்றற்கும் ஒன்றற்கும் உள்ள தொடர்பு சுழற்சியை நிகழ்த்துகிறது. இந்நிகழ்ச்சிக்கு அடிப்படை ஒன்று இருத்தல் வேண்டுமன்றோ? இல்லையேல் ஞாயிறும், கோள் களும், பிறவும் சுழற்சியற்று, எல்லாம் விழுந்து துகள்துகளாய் மாயும். அவ்வொன்று சுழற்சியற்றதாய் இருத்தல் வேண்டும். அது பரம்பொருள். அகிலம் ஞாயிறும், கோள்களும், பிறவும் சேர்ந்த ஒன்றே அகிலம் என்பது. அகிலம் ஒன்றா? பலவா? ஒன்றென்ற காலம் போயிற்று. பலப்பல அகிலங்கள் இப்பொழுது காணப்பட்டன; இன்னும் பல காணப்படலாம். இவ்வகிலங்கள் ஒன்றுடன் ஒன்று இயைபு இன்றித் தனித்தனியே நிற்கவில்லை; ஒன்றுடன் ஒன்று இயைந்தே நிற்கின்றன. அவ்வியைபு நுண்ணியது; மிக நுண்ணியது. அந்நுண்மையில் ஓர் ஆணையுள்ளது. அவ் வாணை அகிலங்களைப் பிணித்துள்ளது. அவ்வாணை பரம் பொருள். கண்டம் - அகண்டம் அணுமுதல் அகிலம் வரையுள்ள எல்லாம் நாமரூப அகல நீளமுடைய கண்டப் பொருள்கள். இவை மாறுதல் அடையும் அறிவற்ற சடங்கள். இச்சட உலகங்கள் இயங்குதற்கு நிலைக் களனாய், அடிப்படையாய், தாரகமாய் இருப்பது பரம்பொருள் என்று கருதப்படுகிறது. பரம்பொருள் 1நாமரூபம், அகல நீளம், தோற்றக் கேடு முதலியன அற்ற அகண்டம் என்றுங் கருதப் படுகிறது. அவ்வகண்டம் எத்தகையதாய் இருக்கும்? அதை நினைத்தல் முடியவில்லை; சொல்லல் முடியவில்லை. அதை நினைந்தால் அது நினைப்பில் அடங்குவதாகும். சொன்னால் சொல்லில் அடங்குவதாகும். நாமரூப அகல நீளமுடையனவே நினைப்பில் அடங்கும்; சொல்லில் அடங்கும். பரம்பொருளோ நாமரூப அகல நீளமற்ற அகண்டிதம். அஃது எந்நினைப்பில் அடங்கும்? எச்சொல்லில் அடங்கும்? எதிலும் அடங்காத ஒரு பொருள் இருக்குமா என்னும் ஐயமும் பிறக்கும். ஐயம் வேண்டா. ஏன்? நாமரூப அகல நீளம் முதலியன உடைய கண்டப் பொருள்கள் இயங்குதற்கு ஒரு நிலைக்களன் இருந்தே தீரல் வேண்டும். அந்நிலைக் களன் கண்டப் பொருளாயிருத்த லாகாது. கண்டம் கண்டத்தை எப்படித் தாங்கும்? எப்படி இயக்கும்? அக்கண்டத்தை இயக்க இன்னொரு கண்டம் தேவையாகும். இவ்வாறு கண்டம் முடிவின்றிப் போய்க் கொண்டே யிருக்கும். முடிவு காண்டல் இயலாது. ஆதலின், கண்டங்களை இயக்க ஓர் 1அகண்டமே வேண்டும். இதில் ஐயம் பிறத்தற்கு வழி இல்லை. சூந்யம் அகண்டம் இருத்தல் உண்மை. அஃது எவ்வண்ணம் இருக்கும்? அதன் இயல்பு என்னை என்று சிலர் எண்ணலாம். அகண்டப் பொருள் நாமரூபமற்றது; அகல நீளமற்றது; எல்லை யுடையதன்று; தோற்றக் கேடு உடையதன்று; அறிவாயிருப்பது. இன்னோரன்ன இயல்புகளையுடைய அகண்டத்தை எவ்வாறு உணர்வது? உணர்த்துவது? தொல்லை! தொல்லை! அகண்டப் பரம்பொருள் பாழ்; சூந்யம் பூஜ்யம்; ஸைபர்; ஸீரோ. இத்தகைய ஒன்றை எவ்வாறு உணர்வது? உணர்த்துவது? ஒன்று? பரம்பொருளைப் பாழ் - சூந்யம் என்றதும் பலர்க்கும் சீற்றம் பிறக்கும். அவர் என்ன நாதிகம் என்று பாயினும் பாய்வர். பரம்பொருளைச் சூந்யம் என்னாது ஒன்று என்று சொல்லலாமே என்று சிலர் கருதல் கூடும். அகண்ட பரத்தை ஒன்று என்று சொல்வதும் தவறு. அதை ஒன்றென்று சொல்வது உபசாரம். அஃது ஒன்றையுங் கடந்தது. பரத்தை ஒன்று என்று சொல்லி வருவது மரபு. அம்மரபு வழியே நின்று, யானும் அதை ஒன்று ஒன்று என்று சொல்லி வருகிறேன். வடிவம் அளவு முதலியன அற்ற புள்ளியை, வடிவம் உடைய ஒரு நுண்ணிய குறியிட்டுக் கலைஞர் விளக்கும் மரபை ஈண்டு மனத்திற் கொள்க. ஒன்றுக்கும் நாமரூப அகல நீளங்கள் உண்டு. இவையற்றது பரம்பொருள். இதை ஒன்று என்று எங்ஙனம் இசைப்பது? பரம் ஒன்றையுங் கடந்ததெனில், அதை அரை - கால் - வீசம்... என்று இசைக்கலாமோ? இசைத்தலாகாது. ஏன்? அரை - கால் - வீசம் ...KjÈadî« நாமரூப அளவை யுடையனவே. பின்னே என்னென்று கூறுவது? ஒன்றும் விளங்கவில்லை. எல்லாங் கடந்த பாழ் - சூந்யம் என்று கூறும் நெருக்கு ஏற்படுகிறது. நெருக்கில் பெருக்கு விளங்குவது இயல்பு. பரம்பொருளின் உண்மைநிலை சூந்யம்; சூந்யமே. சூந்யத்தைப் பற்றித்தப்பாdஎண்ண«ஒUகாலத்திšஉலகிšஉலவியது. அவ்வெண்ணம் இன்னும் உலகை விடுத்து அறவேஒழியவில்லை. ஆனால் அஃது அறிவு உலகில் நிலை பெறாதொழிந்தது. உள்பொருள் - இல்பொருள் சூந்யம் இல் பொருளா? உள் பொருளா? இல்பொரு ளென்று சாதாரண உலகம் சாற்றும்; உள் பொருளென்று அறிவியல் உலகம் அறையும். கணிதம் ஓங்கி வளர்ந்து வரும் காலம் இது. இக்காலத்தில் சூந்யம் பொருளன்று என்று சொல்வது அறியாமை. சூந்யம் பொருள்; உள்பொருள். இது நம் முன்னோர் கண்ட உண்மை. இவ்வுண்மை இந்நாளில் உறுதிப் பட்டு வருகிறது. சூந்யம் உள்பொருளே. ஒன்று - கோடி ஒன்று பெரிதா? கோடி பெரிதா? அளவில் கோடி பெரிதா யிருக்கலாம்; ஆனால் தன்மையில் ஒன்றே பெரிது. ஒன்று இல்லையேல் கோடி ஏது? கோடி ஒன்று சேர்ந்த தொகையே கோடி. கோடிக்கு முதன்மை ஒன்றே. அவ்வொன்று எது? இரண்டு அரை சேர்ந்தது; நான்கு கால் சேர்ந்தது. இப்படியே ஒன்றைச் சுருக்கிக் கொண்டு போகலாம். போகப் போக என்ன முடிவு ஏற்படும்? சூந்ய முடிவே ஏற்படும். ஒன்றுக்கு முதலாய் இருப்பது சூந்யம். இது சிந்திக்கத் தக்கது. சூந்யம் மனத்துக்கு எட்டாதது; வாக்குக்கு எட்டாதது. ஆனால் அஃது அகிலங்கட்கெல்லாம், எண்களுக்கெல்லாம் முதலாய் - மூலமாய் - இருப்பது. அதன் ஆற்றலை என்னென்று சொல்வது! சொல்வதற்குச் சொல்லுண்டோ? அண்டபிண்ட சராசரங்களெல்லாம் சூந்யத்தில் அடங்கிக் கிடக்கின்றன. எல்லாவற்றிற்கும் தாய்மைப் பீடம் சூந்யம்; அளப்பரிய சூந்யம். சூந்யம் எல்லா ஆற்றல்களினும் ஆற்றல் வாய்ந்தது. அதி லிருந்தே எல்லாம் தோன்றுகின்றன; நிற்கின்றன; ஒடுங்கு கின்றன. சூந்யம் எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாதலின், அது பரம்பொருள் என்று பகரப்படுகிறது. அநுபவ உண்மை பரம்பொருள் சூந்யம் என்பது வெறும் பேச்சன்று. மூச் சன்று. mஃது அநுபவத்தில் விளங்கும் உண்மை. அEgt«, தானே வானத்தினின்றும் இறங்காது. இதற்கு முயற்சி வேண் டும்; நேரிய முயற்சி வேண்டும். நேரிய முயற்சியில் தலைப் படாது, சூந்யத்தைக் குறை கூறுவது அறிவுடைமையாகாது. நாதம் வரை ஒருவன் தியானத்தில் அமர்கிறான். தியானம் முதிர முதிர அவனது புறமனம் ஒடுங்கப் பெறும்; நடுமனம் விளக்கமுறும்; அடி மனம் விழிப்படையும். மேலும் தியானத்தில் ஆழ ஆழப் பிராணன் முதலிய பல படிகளைக் கடத்தல் கூடும். இறுதியில் நாத முழக்கம் எழும். நாதம் கடந்தால் என்ன விளங்கும்? ஒன்றும் காணோம். நாதம் வரை உருவோ அரு உருவோ அருவோ காட்சியளிக்கும். மேலே என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. வெறும் பாழ் - சூந்யம் - வெளி - பரவெளி! அங்கே தியானம் இடம்பெறாது. பரவெளி எல்லையற்ற அகண்டம். தியானம் நாதம் வரை செல்லும் தன்மையது. அதையும் கடந்தது பரவெளி; பரம்பொருள். தியான சூந்யம் தியானம் பரவெளியை உணர்த்துதற்கு ஏணி போன்று துணை புரிவது. இங்கே எடுத்துக்காட்டுகள் பல குறிக்கலாம். விரிவைப் பின்னே வைத்துக் கொள்கிறேன். இங்கே சில குறித்தல் போதும். வானளாவிய மலை ஒன்று நிற்கிறது; அமைதியாய் நிற்கிறது. அதைச் சோமன் என்பவன் பார்த்தான். பார்வை அசைய வில்லை, அசையாப் பார்வை தியானமாகிறது; தியா னம் வலுக் கிறது; வலுக்க வலுக்க மலை மறைகிறது. சோமனுக்கு மலை புலனாகவில்லை. அவனிருப்பே அவனுக்குத் தெரிய வில்லை. பாமன் என்பவன் ஒரு காட்டுள் புகுந்தான். ஒரு மான் அவனை நோக்கியது. அந்நோக்குப் பாமனைக் கவர்ந்தது. கவர்ச்சி நோக்கை மாய்த்தது. மான் எங்கே! பாமன் எங்கே! கோமன் என்ற ஒருவன் உலா வந்தான். அவன் காதில் ஒரு கிளியின் பேச்சு விழுந்தது. அப்பேச்சில் அவன் மூழ்கினான். அம்மூழ்க்கு அவனை எங்கேயோ கொண்டு போயிற்று. ஒரே வெளி! ஒரே பாழ்! ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஓர் அழகிய பசுமரக்கிளை. அக்கிளை தாமன் என்ற ஒரு வனை அழைத்தது. அவன் அதன் அருகே சென்றான். அவ் வழகிய பசுங்கிளை அவனுள் நுழைந்தது. அவன் அதனுள் நுழைந்தான். படிப்படியே நுழைவின் உணர்வு அற்றது. உணர்வு அற்றால் என்ன விளங்கும்! ஓ! தியானம் - ஆழ்ந்த தியானம் - உருவை அரு உருவாக்கி, அருஉருவை அருவாக்கி, இறுதியில் அருவையும் பொன்றச் செய்யும். மேலே பரவெளி அன்றி வேறென்ன இருக்கும்? ஒரு கலைஞர் பஞ்சாங்கம் கணிக்க அமர்ந்தார். அவர் முன்னே கோள்களும் உடுக்களும் உருள்கின்றன. அவற்றைக் கலைஞர் அளக்கிறார்; அறிவால் அளக்கிறார். எல்லாம் படிப் படியே மயங்கி மயங்கி அருகி அருகிப் பூஜ்யம் - ஸைபர் - ஆகின்றன. அங்கிருந்து புது ஆண்டு பிறக்கிறது. புது ஆண்டுப் பிறப்புக்குத் தோற்றம் எது? ஒன்று மில்லாச் சைபர்! ஆண்டு பிறந்த பின் மீண்டும் கோள்களும் உடுக்களும் காட்சி யளிக்கின்றன. எப்பொருளை எவர் ஆய்ந்தாலும், இறுதியில் அப் பொருள் சூந்யமாகவே முடியும். ஆகவே, எல்லாவற்றிற்கும் நிலைக்களன் - அடிப்படை - தாரகம், சூந்யம் - வெளி பரவெளி - பரம்பொருள் என்க. இருவகைச் சூந்யம் சூந்யம் பலவகை. பலவகை இருவகையில் அடங்கும். ஒன்று சடாகாசச் சூந்யம்; இன்னொன்று சிதாகாசச் சூந்யம். முன்னையது அறிவற்றது; பின்னையது அறிவுள்ளது. அதை முடிந்த பொருளாகச் சிலர் கூறுவர்; இதை முடிந்த பொருளாகச் சிலர் கூறுவர். சிதாகாசச் சூந்யம் இரண்டுக்கும் என்ன வேற்றுமை? சடாகாசச் சூந்யம் அளவில் அடங்கும்; செயல் நிகழ்த்தும். சிதாகாசச் சூந்யத்துக்கு இவ்விரண்டும் இல்லை. இச்சூந்யம் அளவற்றது; செயலற்றது; சடாகாசச் சூந்யத்துக்கும் தாயகமாயிருப்பது. யான் பரம் பொருளைப் பற்றிக் குறிப்பிட்டுவரும் சூந்யம் இதுவே. புத்தர் - சங்கரர் இங்கே இருபெரியாரிடத்து என் நெஞ்சம் செல்கிறது. ஒருவர் புத்தர்; மற்றொருவர் சங்கரர். இருவராலும் சூந்யம் அறிவுறுத்தப் பெற்றது. இருவர் சூந்யமும் சொல்லில் ஒன்றுமை யுடையன; ஆனால் பொருளில் வேற்றுமை யுடையன. புத்தர் புகன்றது சடாகாசச் சூந்யம். சங்கரர் சாற்றியது சிதாகாசச் சூந்யம். இது பரவெளி - பரம்பொருள். நிர்க்குணம் - சொரூபம் சூந்யம் நிர்க்குணம் என்றும், சொரூபம் என்றும் உலகில் வழங்கப்படுகிறது. நிர்க்குணம் வேதாந்த வழக்கு; சொரூபம் சித்தாந்த வழக்கு. இவ்வழக்குக்களைப்பற்றிப் பெரும் பெரும் வாதப்போர் நிகழ்ந்த காலமுண்டு. இப்பொழுது அப்போர் குன்றி வருகிறது. நல்ல காலம்! பரம்பொருளைச் சூந்யம் என்றதும் சீறி விழுவோர் காதில் நிர்க்குணம், சொரூபம் என்ற பழைய வழக்குகள் விழுந்தால், அவர் ஆறுதல் அடைகிறார். இனி வருங்காலத்தில் சூந்யமும் ஆறுதல் அளிப்பதாகும். சூந்ய ஆட்சி சூந்யம் என்ற ஆட்சி சிலர்க்கு ஏன் ஆறுதல் அளிப்பதில்லை? இதற்குக் காரணம் என்னை? சூந்யம் என்பது இல் பொருள் என்று சில இடங்களில் கருதப்பட்டதாகும். இந் நாளில் சூந்யம் உள்பொருள் என்று கணிதம் முதலிய கலைகளால் உறுதி செய்யப் பெற்றுள்ளது. இனி சூந்யத்தைப் பற்றி எழுந்த ஐயம் திரிபு மயக்கங்களெல்லாம் மாறும்; உண்மை விளங்கும். குழப்பம் பரம்பொருளைச் சூந்யம் என்று வழங்குவதால் குழப்பம் ஏற்பட்ட காலத்தையும் உலகம் கண்டது. அவ்வுலகைக் கண்ட அறிஞர் சிலர் பரம்பொருளைச் சூந்யம் என்று வழங்கலாகாது என்று சொல்லத் துணிந்தனர். வேறு சிலர் பரம்பொருள் சூந்ய மன்று என்று மறுத்தனர். இவை யாவும் கருணையினின்றும் பிறந்தன என்பது எனது ஆராய்ச்சியிற் போந்த உண்மை. காலதேசவர்த்தமானங்கள் என்னென்னவோ செய்யும். அவை அரணை முரணாக்கும்; முரணை அரணாக்கும். ஆத்திகம் - நாத்திகம் உலகில் ஆத்திகம் நாத்திகம் என்று இரு கட்சிகள் உலவு கின்றன. இவை உலகை அலைத்து அலைத்து நாசமாக்கு கின்றன. இனி உலகம் அவ்வலையால் நாசமுறாது என்று நினைக் கிறேன். நம் முன்னோர் உணர்த்திய சிதாகாசச் சூந்ய நுட்பம் விஞ்ஞானத்தாலும் நிறுவப் பெறும் காலத்தில் நாம் வாழ் கிறோம். இக்காலத்தில் ஆத்திக நாத்திக வாதங்கள் வறண்டே போகும். சிதாகாசப் பரவெளியில் - அப்பெரும் சூந்யத்தில் - ஆத்திகம் ஏது? நாத்திகம் ஏது? இரண்டும் அற நிற்பது பரம்பொருள். பரம்பொருளில் (சகுணத்தில் - தடதத்தில்) படிந்த நெஞ்சில் ஆத்திக நாத்திக வாதம் எழாது. அப்பொருளில் படியாத நெஞ்சிலேயே ஆத்திக நாத்திக வாதக்குப்பைகள் திரளும். அச்சிறுமை வாதத்தில் நெஞ்சைப் புரளச் செய்வது கொடுமை - கோரம் - கொலை முதலியவற்றை வளர்ப்பதாகும். இப்பாழும் நெஞ்சமே போர் உலகைப் படைக்கிறது. இஃது ஒழிக. நெஞ்சைப் பரம்பொருளில் படிய வைப்பது நல்லது. mjdhš mikâ cyf« mU«ò«., ஆராய்ச்சி இந்நாளில் சில புதுமைகள் தோன்றுகின்றன. அவை போலிகள். போலிகளுள், ஆராய்ச்சிப் புதுமையும் ஒன்று. இப் புதுமை, ஆராய்ச்சி இன்னதென்று தெரியாதாரையும் தன் வயப்படுத்துகிறது; ஆபாசங்களை உளறச் செய்கிறது. ஆபாசங்கள் மக்களை மாக்களாக்குகின்றன; உலகைப் பாழ் படுத்துகின்றன. ஆராய்ச்சி வேண்டா என்று யான் கூறுகிறேனில்லை. ஆராய்ச்சி - கலைஞர் ஆராய்ச்சி - தேவையே. கலைஞர் ஆராய்ச்சியே தேவை. ஆராய்ச்சிக் கலைஞர்க்குக் கலைப்புலமை மட்டும் போதாது. அதனுடன் அவரிடம் ஒன்று சிறப்பாகப் படிதல்வேண்டும். அஃது, ஒரு பொருட்கண் காய்தல் உவத்தல், அகற்றி ,நடுநிலை நின்று, எதையும் ஆராயும் பண்புடைமை. எக்காரணம்பற்றியும் ஆராய்ச்சியாளரிடத்தில் துரபிமானம் துதைதல் கூடாது. ஆராய்ச்சி ஒவ்வோர் இடத்தில் முட்டுப்படும். முட்டுப் பட்டுப் பட்டு நிற்பதை, அவரவர் தாம் தாம் கண்ட முடிவு களாகக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இஃது, ஒன்றைப் பற்றிப் பலதிறக் கொள்கைகள் உலவுமாறு செய்கிறது. பல திறக் கொள்கைகள் ஆராய்ச்சியை முடிவு கட்டுமோ? கட்டா. அவை மேன்மேலும் ஆராய்ச்சியை வளர்த்துச் செல்லும். முட்டுப்பட்டு மோதுண்பது போக, முட்டுக்களையும் கடந்து கடந்து செல்ல முயல்வதே அறிவுடைமை. அம்முயற்சி சிந்தனை ஆகும். சிந்தனையை மேலும் மேலும் எழுப்புவதே நுண்ணிய ஆராய்ச்சியை வளர்ப்பதாகும். இதைச் சிந்தனை - ஆராய்ச்சி என்று சொல்லலாம். இதன்கண் சில அரிய நுட்பங் கள் மிடையும். சிந்தனை - ஆராய்ச்சியும் ஓரிடத்தில் தடைபடும். அது மாயாகாரியமாகிய இயற்கையின் எல்லை. அதைக் கடந்து ஆராய்ச்சி செல்லாது. ஆராய்ச்சிக்குரிய கட்டுப்பட்ட பொருள் அங்கில்லை. அங்கே ஆராய்ச்சி என்செய்யும்! அந்தோ! ஆராய்ச்சிக்கு ஒரு வரம்பு உண்டு. அது மாயாகாரியங் களாகிய உருவ அருவுருவ அருவ உலகங்கள் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்தது. மேலே செல்லும் ஆற்றல் அதற்கில்லை. அத்தகைய ஒன்றில் சிக்குற்று, அதையே முடிவாக்கொண்டு, பரம் ஏது என்று நினைப்பது தவறு. விஞ்ஞானம் இங்கே விஞ்ஞானம் நெஞ்சை ஈர்க்கிறது. விஞ்ஞானியை நோக்குவோம். பெரிய விஞ்ஞானி ஆராய்ச்சியில் இறங்கு கிறான்; பூதத்தை ஆராய்கிறான்; பௌதிகத்தை ஆராய்கிறான்; எதை எதையோ ஆராய்கிறான்; அவற்றைப் பிய்த்துப் பிய்த்துப் பார்க்கிறான்; சில முடிவுகளைக் காண்கிறான். முடிவுகள் அவனுடன் மாய்வதில்லை. அவை பின்வருவோர்க்குத் துணை புரிந்து அவரை ஊக்குவதாகின்றன. இவ்வாறு விஞ்ஞானம், ஆராய்ச்சி உலகை வளர்த்துத் தானும் வளர்கிறது. விஞ்ஞான உலகம் இன்னும் முழுமை எய்தவில்லை. அஃது ஒரு காலத்தில் முழுமை எய்தியே தீரும். அக்காலத்தில் விஞ்ஞான அற்புதங்களில் மக்களுக்கு மயக்கம் தோன்றாது. பிறப்பும் வயதும் விஞ்ஞானத்திற்குப் பிறப்பிடம் இயற்கை. இயற்கைச் சக்திகள் அறிஞரால் ஆராயப்படுகின்றன. அவ்வாராய்ச்சிகள் விஞ்ஞானக் கலைகளாகின்றன. விஞ்ஞானக்கலை, என்று கருக்கொண்டதோ தெரிய வில்லை. அது குழந்தையாய்த் தவழ்ந்து மழலைச் சொல் ஒழுகக் கைவீசிய காலம் ஒருவாறு புலனாகிறது. அது பதினாறாம் நூற் றாண்டு என்று தெரிகிறது. இப்போது விஞ்ஞானியின் வயது நானூறு என்று கூறலாம். தோற்றம் விஞ்ஞானம் ஏன் தோன்றியது? அதன் தோற்றத்துக்குக் காரணம் என்னை? காரணம், மலர்ந்து விரிந்து பெருகிவரும் உலகம், ஒருகாலத்தில் விஞ்ஞானத்தின் துணையாலேயே நடக்கும் நிலைமை நேரும் என்று இயற்கை அன்னை எண்ணிய தாகும். வருங்கால நிலையைப் பன்னூறு ஆண்டுகட்கு முன்னரே உணரும் ஆற்றல் இயற்கை அன்னைக்கு உண்டு. அதனால் வருங்கால உலகின் தேவைகளுக்குரிய சாதனங்களை இயற்கை அன்னை முன்னரே அருள்வது அவளது இயல்பு. வேறு துறைகளில் விஞ்ஞானம் தோன்றிப் பல நூறு ஆண்டுகளாயினும், இன்னும் உலகம் அதன் பயனை முற்றும் அடையவில்லை. விஞ்ஞானத்தின் முழுப் பயனை அடையப்போகும் உலகம் விரைந்து விரைந்து மலர்ந்து நெருங்கி வருகிறது. இப்போது விஞ்ஞானியின் வயது நானூறு. இஃது அவ னது காளைப்பருவம். காளைப்பருவத் திருவிளையாடல்கள் இந்நாளில் நிகழ்ந்து வருகின்றன. வாழ்க்கைக்குத் துணை புரியத் தோன்றி வளர்ந்த விஞ்ஞானம், இப்பொழுது வேறு துறைகளை நண்ணி ஆடல் புரிகிறது. எரிகுண்டு அணுகுண்டு முதலியன உலகுக்கு எற்றுக்கு? சாம்ராஜ்யம் விஞ்ஞானம் நேரே வளரவில்லை. அதற்கு ஒரு துணை கூடியது. அது சாம்ராஜ்யம். சாம்ராஜ்யத்தால் விஞ்ஞானம் வளர்ந்ததென்றும், சாம்ராஜ்யம் விஞ்ஞானத்தால் வளர்ந்த தென்றும் சொல்லப்படுகின்றன. சாம்ராஜ்ய வளர்ச்சிக்கென்று விஞ்ஞானம் தோன்றியதா? விஞ்ஞான வளர்ச்சிக்கென்று சாம்ராஜ்யம் தோன்றியதா? இக்கேள்விகளுக்குப் பிறந்த விடைகளில் பல எனக்குத் தெரி யும். விஞ்ஞான வளர்ச்சிக்கென்று சாம்ராஜ்யம் தோன்றிய தென்றே பல பேரறிஞர் கருதலாயினர். பேரறிஞர் உள்ளத்தில் எளிதில் உண்மை முகிழ்க்கும். உண்மை என்ன? விஞ்ஞான வளர்ச்சிக்கென்று சாம்ராஜ்யமும் வளர இயற்கை அன்னை திருவுளம் கொண்டாள் போலும்! இனி இயற்கை அன்னையின் திருவுள்ளம் மாறுதலடையலாம். அவள் சேயாகிய விஞ்ஞானத்துக்குச் சாம்ராஜ்ய உதவி இனி வேண்டுவதில்லை. மாறுதல் இப்பொழுது விஞ்ஞானம் ஒரு நிலையை அடைந் துள்ளது. இனி அதன் வளர்ச்சிக்குச் சாம்ராஜ்ய உதவி தேவை இல்லை. அது சமதர்மத்துடன் தோழமைபூண்டு, பொருந்திய கடமையை நேரிய முறையில் ஆற்றுவதாகும். இதுகாறும் விஞ்ஞான வளர்ச்சிக்குச் சாம்ராஜ்யம் சாரமாக நின்று துணைபுரிந்தது. இப்பொழுது விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் அதற்குச் சாம்ராஜ்யச் சாரம் தேவை யில்லை. இன்னும் சாம்ராஜ்யச் சாரம் நிற்பதாயின், அது விஞ்ஞான நிலையத்துக்கு இடர் விளைப்பதாய்த் தானும் இடருற்று நாசமாகும். விஞ்ஞானத்தை நல்வழிப்படுத்த வேண்டு மென்று, அதன் தாயாகிய இயற்கை அன்னை, அதற்கும் சாம் ராஜ்யத்துக்கும் உற்றிருந்த தொடர்பை அறுக்கத் தீர்மானித்து விட்டாள். இனி சாம்ராஜ்யத்துக்கு என்ன வேலை? இயற்கை யுடன் போர் தொடுப்பதா அதன் வேலை? உற்பத்திக்குப் பயன்படத்தக்க விஞ்ஞானத்தைச் சாம் ராஜ்யம் நாசத்துக்குப் பயன்படுத்துகிறது. இம்மாறுபாட்டை இயற்கை அன்னை கண்டு வாளா கிடப்பளோ? தன் நோக் குக்கும் போக்குக்கும் அரண் செய்யாத முரண்களை அழிப்பது இயற்கையின் கடமை. அக்கடமையை இயற்கை அன்னை ஆற்ற முனைந்து நிற்கிறாள். இதுகாலை, சாம்ராஜ்யத்தின் ஆக்கம் குன்றத் துவங்கி விட்டது. அதனால் விஞ்ஞானத்தின் அழிவு வேலை குன்றி விடும். விஞ்ஞானத்தின் அழிவு வேலை குன்றின் அதன் ஆக்க வேலை பெருகும். அப்பெருக்கம் இயற்கையின் நோக்கையும் போக்கையும் நிறைவேற்றும்; உலகை நன்முறையில் வளர்க்கும். இப்பொழுது பசியும், பட்டினியும், அகால மரணமும், வேறு பல கொடுமைகளும் உலகை அரித்து அரித்து வருதல் கண்கூடு. மக்கள் தொகையோ நாளுக்குநாள் பெருகுகிறது. அதற்கேற்ற உற்பத்தி பெருகுகிறதா? இல்லை. உற்பத்தி பெருகினாலன்றி உலக கோரம் நீங்காது. உற்பத்திப் பெருக்குக்கென்று தோன்றிய விஞ்ஞானம் சாம்ராஜ்யப் போருக்குப் பயன்படுகிறது; கொலைக் கருவிகளை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுகிறது. இதனால் உலகைப் பசி, பட்டினி, அகால மரணம் முதலியன அரிக்கின்றன. சீர் செய்தல் சாம்ராஜ்யம் உள்ள மட்டும் போர்கள் மூண்டு கொண்டே இருக்கும். போர்கட்கு விஞ்ஞானம் பயன்பட்டுக்கொண்டே போகும். இக்கோரத்தை இயற்கை அன்னை இனிப் பார்த் திருப்பளோ? அவள் நிலையைச் சீர்செய்யவே முந்துவள். எப்படி? இயற்கை அன்னையால் விஞ்ஞானத்தை அழிவுக்குப் பயன்படுத்தும் சாம்ராஜ்யம் சாய்க்கப்படும்; விஞ்ஞானத்தை ஆக்கவேலைக்குப் பயன்படுத்தவல்ல ஒரு தர்ம ஆட்சி நிறுவப்படும். தர்ம ஆட்சியில் விஞ்ஞானம் நன்கு வளர்ந்து, தனது எல்லையைச் சேரும். அது பரம்பொருள் நம்பிக்கைக்கு வழி காட்டுவதாகும். இதற்குரிய குறிகள் இப்பொழுதே தோன்றி வருகின்றன. விஞ்ஞான ஒடுக்கம் விஞ்ஞானியின் ஆராய்ச்சி சட உலக அளவில் உழல்வது. அதற்குமேல் அவன் ஆராய்ச்சி எங்கே செல்லும்? அஃது ஒடுக்கமுறும்; விஞ்ஞானத்தின் வரம்பு நாதம். அது மாயையின்- சுத்தமாயையின் - எல்லை. இது நம்முன்னோரால் உணர்த்தப் பெற்றது. விஞ்ஞானி நாதப் படி ஏறியதும், அவன் வேலை அற்றுப்போகும் . அவன் வேலை இழந்தவனாய்க் கிடப்பன். ஆறுதல் ஊதியம் அவனுக்குக் கிடைக்குமோ என்னவோ தெரியவில்லை. பழையநாளில் விஞ்ஞானம் இயற்கையின் உள்ளே மறைந்து நின்று பரம்பொருள் உணர்வுக்கு வழிகாட்டியது. இனி அஃது இயற்கையை விடுத்து வெளியே வந்து அவ்வழி காட்டும், இவ்வேலைக்கு விண்ணப்பம் செய்ய விஞ்ஞானி விரும்பலாம். இந்நாளில் விஞ்ஞானி கடவுள் உண்மையை மறுப்பவன் என்ற கெட்ட பெயர் பெற்றான். இனி அப்பெயர் அவனை விடுத்து அகலும். வரலாறுகள் அறிஞர் வரலாறுகளை இளைஞர் படிப்பது நல்லது. அவ்வரலாறுகளில் பலதிறக் கதிர்மணிகள் ஒளிர்கின்றன. அவற்றின் ஒளி இளைஞர்மீது படர்தல் சிறப்பளிக்கும். அறிஞர் பல திறத்தவர். அவர்தம் பெயர்கள் பலவற்றை ஈண்டுக் குறித்தல் இயலாது. சிலவற்றை மட்டும் குறிக்கிறேன். பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம் பார்க்கப்படுவது வழக்கம். ஹக்ஸிலியின் முன் வாழ்க்கை, பரம்பொருளை உணர விழையவில்லை; அதை மறுத்தும் நின்றது. அவரது இறுதி வாழ்க்கை, மறுப்பை மறுப்பதாயிற்று. அன்னிபெஸண்ட் அம்மையார், தமது குழவி ஒன்று இறந்துபட்டதைக் கண்டு, பரம்ஏது என்று பேசலாயினர். அப்பேச்சு நிலைத்து நின்றதா? இல்லை. அம்மையார் பிற்கால வாழ்க்கை பரம் பரம் என்றே முழங்கியது. ஸர் ஓலிவர் லாட்ஜ் என்பவர் ஏறக்குறைய நாற்பதாண்டு பரம்பொருள் உண்மையில் கவலை செலுத்தினாரில்லை. அவர் தம் கவலை பூத பௌதிகங்களை ஆராய்வதிலேயே சுழன்றது. நாற்பதாண்டு கடந்த பின்னர் பூத பௌதிக இயக்கத்துக்கு உயிர்ப்பாய்த் துணைபுரியும் வேறொன்றுளது என்ற முடிவுக்கு அவர் வந்தனர். அவரது பிற்கால ஆராய்ச்சி பரம்பொருள் உண்மையை நிறுவுவதாயிற்று. ஐன்டன் ஒரு பேரறிஞர். அவர்தம் ஆராய்ச்சி பரம் பொருள் இருப்பை உறுதிப்படுத்துவதாயிற்று. பெட்ரன்ட்ரஸல், அணித்தே எழுதிய நூல்களில் , உலகங்களெல்லாம் ஒரு சித்தெனும் செம்பொருளின் கருவில் அடங்கி இயங்குகின்றன என்ற கருத்துக் காணப்படுகிறது. அவர்தம் பழைய கருத்துக்களடங்கிய நூல்கள் இனி என்ன செய்யும்? இந்நாளில் எழுத்தாளர் உலகில் ஒப்புயர்வற்று விளங்கும் பெர்னார்ட்ஷாவின் இளமை பைபிலை எப்படி எண்ணியது? இப்பொழுது அவருடைய முதுமை அதை எப்படி எண்ணு கிறது? ஒருவர் வாழ்க்கையில் எத்தகைய மாறுதல் ! எட்டாதன எல்லாவற்றிற்கும் விஞ்ஞானத்தை எதிர்பார்த்தல் தவறு. இக்கால விஞ்ஞானத்துக்கு எட்டாதன எவ்வளவோ இருக் கின்றன. ஈண்டுச் சில சொல்கிறேன். வாழ்க்கை என்று தோன்றியதோ அன்றே கலையும் தோன்றியது. வாழ்க்கைக்கும் கலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இக்கால வாழ்க்கைக்குப் போதிய கலைகள் வளர்ந்து ஆக்கம் பெற்றுள்ளன. ஆக்கம் பெற்றுள்ள கலைகளெல்லா வற்றையும் பயின்று பயன்படுத்தத்தக்க மூளையுடைய குழந்தை கள் பிறக்கின்றன. சில கலைகளை மட்டும் பயிலும் குழந்தைகள் ஒரு தலைமுறையில் பிறக்குமாயின், மற்றக் கலைகளின் கதி என்ன ஆகும்? வாழ்க்கையின் கதி என்ன ஆகும்? அவை சிதறுண்டு போகும். இயற்கையை உடலாகக்கொண்ட பரத்தின் கருணை, வாழ்க்கையைச் சிதற விடுமோ? விடாது. பரம், இயற்கை வாயி லாக எல்லாக் கலைகளையும் பயிலும் குழந்தைகளை ஒவ்வொரு தலைமுறையிலும் படைத்து, வாழ்க்கை சிதறுண்ணாதவாறு காத்து, அதை ஒழுங்குபடுத்தியே வருகிறது. இந்நுட்பம் அறிவிப்பது என்னை? விஞ்ஞான உலகம் உன்னுவதாக. உலகில் எத்தனையோ கோடி கோடி உயிர்கள் தோன்று கின்றன. ஒன்றன் முகத்தைப்போல மற்றொன்றன் முகம் அமைவ தில்லை. ஏன்? இயற்கைப்பரம் உலகை நடாத்தும் விதமே விதம்! உள் ஒழுக்கங்களைப் புறத்தே உணர்தல், தொலைவுச் செய்திகளைக் கருவியின்றி அறிதல், கனவில் எதிர்கால நடப்புக்களைத் தெளிதல், அகக்காட்சியால் புற நிகழ்ச்சிகளைத் தெரிதல் முதலியன இந்நாளில் நடைபெறுதல் காண்கிறோம். இவற்றை விஞ்ஞான உலகம் ஆய்ந்தே வருகிறது. விஞ்ஞானத் துக்கு எட்டாதனவும் உள்ளன. அவை பொய்ப்படுமோ? சொல் - பொருள் உலகம் எத்தனையோ வகை. அவற்றுள் சொல்லுலகம் பொருளுலகம் என்ற இரண்டை மட்டும் இங்கே எடுத்துக் கொள்கிறேன். சொல் எது? பொருள் எது? வெளிப்படை. தெருவே ஒரு பசு போகிறது. அதை ஒருவன் ஆ என்கிறான்; இன்னொருவன் கோ என்கிறான். வேறொருவன் கெள (Cow) என்கிறான்; ஒருவன் சொல்வது இன்னொருவ னுக்கு விளங்கவில்லை. இவன் சொல்வது வேறொருவனுக்கு விளங்கவில்லை. ஒருவனை ஒருவன் உறுத்து நோக்குகிறான். சிலசமயம் போரும் மூண்டுவிடும். இது சொல்லுலகம். பொருளை நேரே நோக்குங்கால் எவர்க்கும் வேற்றுமை தோன்றுவதில்லை. இது பொருளுலக மாண்பு. சொல் பல; பொருள் ஒன்று. பன்மை விபரீதம் விளைத்தல் இயல்பு. சொல்பொருள் இரண்டும் உள்ளவரை வேற்றுமை இடம்பெறும். 1இரண்டும் அற்ற இடத்தில் உண்மை விளங்கும். சொல்பொருள் என்ற உணர்வு நிலவும்வரை தொல்லை சூழும். 2இரண்டையும் கடந்தால் மோனம் கூடும். மோனத்தில் பரம் பொருள் விளங்கும். மோனம் இன்னதென்று தெளிந்து உணர்ந்த சான்றோ ரால் அருளப்பெற்ற அநுபவக்கலைகளும் இருக்கின்றன. அவை ஆராய்ச்சிக்குப் பொருந்தி வரவில்லை என்று தள்ளுவது மடமை. கொழுகொம்பு பரம்பொருளை உணர்தற்குத் தியானம் இன்றியமை யாதது என்று சொல்லப்படுகிறது. தியானத்துக்குக் கொழு கொம்பாய்த் துணைபுரியவல்லது பரம்பொருள். பரம் பொருளோ சூந்யம். சூந்யம் எங்ஙனம் கொழுகொம்பாகும்? திண்டாட்டம்! சொல்லமுடியாத திண்டாட்டம்! மனம் மனம் பரம்பொருளாகிய சூந்யத்தை எவ்வாறு எண்ணும்? மனம் உருவம், அருவுருவம், அருவம் முதலிய எல்லையுடைய பொருள்களை எண்ணும் இயல்புடையது. 3எல்லையற்ற ஒன்றை அதனால் எண்ணுவது இயலாது. பரம் எல்லையற்றது. அதை எல்லையுடைய மனம் எப்படி எண்ணும்? பரத்தை உருவாக நினைத்தல் கூடாதென்றும், அருவாக நினைத்தல் கூடுமென்றும் சிலர் பேசுகின்றனர். இப்பேச்சு, பொருளற்றது, உருவம், அருவுருவம், அருவம் எல்லாம் உருவத் தின் பாற்பட்டனவே. உருவம் பருமை; அருவுருவம் அதன் பரு நுண்மை; அருவம் - நுண்மை. மூன்றற்கும் வடிவம் உண்டு. இது பற்றி உள்ளொளி என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். இங்கே விரிவு வேண்டுவதில்லை. (இந்நூலுடன் தொடர்பு கொண்டது உள்ளொளி என்னும் நூல். இந்நூலைப் படிப் போர் அந்நூலையும், அந்நூலைப் படிப்போர் இந்நூலையும் படிப்பது நலம்.) மனத்தின் உருவோ, அருவுருவோ, அருவோ தங்கும்; இவற்றைக் கடந்த ஒன்று தங்குதல் அரிது. 1உருவம், அருவுருவம், அருவம் ஆகியவற்றைக் கடந்த பரம்பொருளை மனத்தில் நினைப்பதென்பது கானற்சலத்தைச் சலமென்றே நம்பி ஓடி ஏமாந்தவன் கதையாக முடியும். இரு நிலை பின்னே வழி என்ன? மக்கள் தியானத்தில் அமர்ந்து பரம்பொருளை எவ்வண்ணம் உணர்தல் கூடும்? பரம்பொருள் எல்லாவற்றையுங்கடந்து தனித்து நிற்கும் சூந்யமாயினும், அது தன்னுள் அடங்கிநிற்கும். அகில அண்டங்களிலெல்லாம் - அணுக்களிலெல்லாம் - நீக்கமற நிறைந்தும் நிற்கிறது. இது பரம்பொருளின் அன்பு - அருள். இங்கே பரம்பொருள் ஒன்றற்கு இருவித நிலை இருத்தல் கருதற்பாலது. பரம்பொருளின் கடந்த நிலை வெறும் பாழ் - சூந்யம்- வெளி. அந்நிலை தியானத்துக்கு உதவாது; அதை மனத்துடன் கூடிய மனிதன் எண்ணி எண்ணி ஏன் சாதல் வேண்டும்? தியானத்துக்கு வேண்டப்படுவது பரத்தின் கலந்த நிலை என்பதை அன்பார்ந்த மகன் உணர்வானாக. உணர்ந்து அதைத் தியானிக்க உறுதிகொள்வானாக. கடந்த நிலை நிர்க்குணம் சொரூபம் எனப்படுவது. கலந்த நிலை சகுணம், தடதம் எனப்படுவது. சகுணம் வேதாந்த ஆட்சி; தடதம் சித்தாந்த ஆட்சி. பரம்பொருள் மாயாகாரியமாகிய அண்டபிண்டங்க ளென்னும் இயற்கை உலகங்களிலெல்லாம் கலந்து நிற்கும் நிலையே - சகுணம் - தடதம் - என்பது. இந்நிலை பரம் பொருள் இயற்கையைத் தன் உடலாகவும் தன்னை உயிராகவும் கொண்டது என்று விளக்கம் செய்யலாம். ஒன்றா? இரண்டா? இங்கே இயற்கையும் சொல்லப்படுகிறது; பரமும் சொல்லப்படுகிறது. என்ன? பொருள் ஒன்றா இரண்டா என் னும் ஐயப்பாடு தோன்றலாம். பொருள் ஒன்றே என்றும், இரண்டு என்றும், இரண்டும் கலப்பில் ஒன்றாய்ப் பொருளில் வேறாய்ப் பொலிகின்றன என்றும் தத்துவ நூல்கள் சாற்று கின்றன. இம்மூவிதக் கருத்துக்களினின்றும் விரிந்த கிளைகள் பலதிறத்தன. அவைகளும் உயிர்கட்கு நிழல் தந்தே நிற்கின்றன. திறங்கள் பரம்பொருள் ஒன்றே என்பவர், அப்பொருளின் பரி ணாமம் இயற்கை என்றும் , இயற்கை பொருள் அன்று என்றும் கூறுவர். மற்றவர் இதை மறுப்பர். அவர் இயற்கையைத் தனிப் பொருளென்பர். இன்னொரு சாரார், இயற்கை தனிப்பொரு ளாயினும், அது பரத்தை விடுத்து நிற்பதில்லை என்றும், பரம் பொருள் அதில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்றும் இயம்புவர். இவ்வாதங்களில் யான் மூழ்கி மூழ்கித் திளைத்துக் களைத்த காலம் நினைவுக்கு வருகிறது. அக்களைப்பு என்னைப் பின் னாளில் வாதங்களில் வீழ்த்துவதில்லை. இதனால் - வாதப் போர் - அறிவுப்போர் - வேண்டா என்பது எனது கருத்தன்று. உயர்ந்த தத்துவங்களை உணர்தற்கு அறிவுப்போர் தேவையே. ஆனால், அப்போரளவில் நின்று விடலாகாது. உண்மை உணர அநுபவத் துறையிலும் இறங்குதல் வேண்டும். மூன்றன் இன்றியமையாமை அநுபவத் துறையில் இறங்கி உழைப்போர்க்கு மூன்று நிலைகளின் இன்றியமையாமை விளங்கும். அவர்க்கு ஒரு நிலையில் பரமும் இயற்கையும் வேறாகத் தோன்றும். இன் னொரு நிலையில் கலப்பாகத் தோன்றும்; வேறு ஒரு நிலையில் ஒன்றாகவுந் தோன்றும். இம்மூன்றும் அறிஞரால் - பேரறிஞ ரால் - காணப்பெற்றவை. அவை வாழ்க; அவர் வாழ்க. சகுணம் தியானத்துக்குப் பரத்தின் கலந்த நிலையென்னும் சகுணம் அல்லது தடதம் கொழு கொம்பாய்த் துணைபுரியும். சகுணம் அல்லது தடதம் எது? பரம் இயற்கையை உடலாகக் கொண்ட நிலை. இது கோயில் - பெருங்கோயில். கோயில் எதற்கு? வழிபாட்டுக் கன்றோ! வழிபாடு பெருக; தியானம் ஓங்க. 3. வழிபாடு வழிபாடு மன மொழி மெய்களால் நிகழ்வது. மன வழிபாடு தியானம் என்பது. வழிபாட்டின் உயிர் போன்றது தியானம். அதில் மற்றவையெல்லாம் அடங்கும். வழிபடுதல் வழிபாடு என்னுஞ் சொல் புதுப்புதுப் பொருளை வழங்குந் தன்மையது. அதைக் காலத்துக்குரிய பொருளால் காண்பது சிறப்பு. வழிபடுதல் வழிபாடு. இது வெளிப்படை. யார் வழிபடு தல்? மகன் வழிபடுதல். மகன் தன்னை ஒழுங்குபடுத்திப் பண் படுத்த முயல்வது தன்னை வழிப்படுத்துவதாகும். அப்பா, முதலில் நீ வழிபடு என்ற உலக வழக்கை நோக்குக. ஒருவன் தன்னை வழிப்படுத்துவது வழிபாடென்க. குறைபாடு மனிதன் தன்னை வழிப்படுத்த ஏன் முயலல்வேண்டும்? அவனிடத்தில் குறைபாடுகள் இருக்கின்றன? அக்குறைபாடு களைப் போக்குதற்கு மனிதன் தன்னை வழிப்படுத்த முயலல் வேண்டும். குறைபாடுகள் இருந்தால் என்ன? அவற்றை நீக்க மனிதன் ஏன் முயலல்வேண்டும்? குறைபாடுகள் மனிதனை மனிதனாக்கா; அவனை விலங்காக்கும். மனிதன் விலங்கானால் நாடு காடாகு மன்றோ? இந்நிலையை, உயர்ந்த மனிதப் பிறவியை உயிர் தாங்கத் துணைநின்று, அப்பிறவியை மேம்படுத்தக் கருணை சொரியும் இயற்கை அன்னை வளர விடுவளோ? விடாள். அவள் தூண்டுதலால் மனிதன், தன்பாலுள்ள குறைபாடுகளை நீக்க முயல்கிறான். அம்முயற்சி ஆன்மநேயத்தை வளர்ப்பதாகும். குறைபாடுகள் மனிதனிடத்தில் எப்பொழுது புகுந்தன? எவ்வழியில் புகுந்தன? அவைகள் இயற்கையா? செயற்கையா? இவ்வினாக்களுக்கு விடை பெறச் சங்கரரையும், இராமா நுஜரையும், மெய்கண்டாரையும் மற்றவரையும் அடையுங்கள். குறைபாடுகள் மனிதனிடத்தில் இருத்தல் வெள்ளிடை மலை. அவற்றைப்போக்க மனிதன் முயல்வது அறிவுடைமை. இம்முயற்சிக்கு அவன் ஆராய்ச்சித்துறை நண்ணுவதா? அநு பவத்துறை நண்ணுவதா? ஆராய்ச்சி நடந்தது; நடக்கிறது; இனி யும் நடக்கும். ஆராய்ச்சி, இறுதியில் அநுபவத்துறை நண்ணவே மகனை உந்தும். அறியாமை குறைபாடுகள் எங்கிருந்து பிறக்கின்றன? அவற்றின் ஊற்று எது? எது எது என்று துருவித் துருவிச் சென்றால் என் னென்னவோ கிடைக்கும். இறுதியில் கிடைப்பது ஒன்று. அஃது அறியாமை. அறியாமை உள்ளமட்டும் குறைபாடுகளின் கொதிப்பு அடங்காது. குறைபாடுகளுக் கெல்லாம் ஊற்றாயுள்ள அறி யாமை மறைந்து தூர்தல்வேண்டும். ஊற்று, தானே மறைந்து தூர்ந்து விடுமா? தானே தூர்ந்து விடாது. அது தூர்ந்து அடை படும்மட்டும் குறைபாடுகள் கொதித்துக் கொதித்துப் பொங்கி வழியும். வழி என்ன செய்வது? அறிவுடைய மக்களே! சிந்தியுங்கள். என்ன வழி புலனாகிறது? அறியாமை, வழியைக் காட்டுமோ? உணர்த் துமோ? அறியாமை அற்ற பரம் பொருளிடத்துச் செல்வோம். வழி புலனாகும். பரம்பொருள், இயற்கை உலகங்களெல்லாவற்றிலும் கலந்து நிற்பதை எண்ணுவோமாக; நினைப்போமாக; உன்னுவோ மாக; உன்ன உன்ன வழி ஒரோவழியாதல் புலப்படும். கருணை உயிர்களின் அறியாமையை விலக்கும்பொருட்டு, எல்லா உலகங்களையும் கடந்து நிற்கும் பரம்பொருள், அவ்வுலகங்கள் எல்லாவற்றிலுங் கலந்தும் நிற்பதாயிற்று. இதுவே கருணை! பெருங் கருணை! அளப்பருங் கருணை! இக்கருணையை என் னென்று வியப்பது! என்னென்று புகழ்வது? என்னென்று போற்றுவது? அதை வியந்து, புகழ்ந்து, போற்றிய பெரியோர் பாக்களை ஓதி ஓதி உருகுவோமாக. கொடை இயற்கைப்பரம் உயிர்களின் அறியாமையைப் படிப்படியே விலக்கக் கருணைகூர்கிறது. பரம்பொருளின் கருணை உயிர் களுக்குப் பலப்பல உடலங்களைக் கொடுக்கிறது. அக்கொடை, உயிர்களின் அறியாமையை, அவ்வவ்வுடலுக்கு ஏற்றவாறு, அவ்வவ்வளவில் ஒதுக்குகிறது. அறியாமை ஒதுங்க ஒதுங்க அவ்வவ்வளவில் அறிவு விளக்கம்பெறும். இவ்விளக்கத்துக்கு மூலமாயிருப்பது பரத்தின் அருட்பெருங்கொடை என்பதை மறத்தலாகாது. பெறுதல் - பெறாமை அருட்பெருங் கொடையின் துணையை அஃறிணை உலகம் நேரே பெறுகிறது. உயர்திணை உலகம் அத்துணையை நேரே பெரிதும் பெறுவதில்லை. ஏன்? உயிர்களுக்கு மக்கள் பிறவியில் (உயர்திணை உலகில்) ஆறாவது அறிவு அரும்புகிறது. அவ்வறிவே பகுத்தறிவு என்பது. பகுத்தறிவு அரும்புதலால் மக்களிடம் ஒருவித உரிமை உணர்வு மலர்கிறது. அதனால் பரம்பொருளின் கொடை நேரே துணை புரிவதில்லை. பகுத்தறிவு கொண்டும், உரிமை உணர்வு கொண்டும் மகன் தானே கரையேறல்வேண்டும்; அதாவது அறியாமையினின்றும் விடுதலை அடைதல்வேண்டும். நன்றியறிதல் மகன் பரம்பொருள் துணையால் பலதிற உடலங்களைப் பெற்றுப் பெற்று, இப்பொழுது பகுத்தறிவுக்குரிய இப்பிறவியை எய்தியுள்ளான். இது பரத்தின் கொடை என்று அம்மகன் உணர்ந்து, அதனிடத்து நன்றியறிதலுடையவனாய் நடந்தால், அவன் அறியாமையினின்றும் விடுதலை அடைதல் கூடும். ஆனால் அவன் இனம் நன்றியறிதலுடையதாய் வாழ்கிறதா? இல்லை; பெரிதும் இல்லை. அவ்வினம் நன்றியை மறந்தன்றோ வாழ்கிறது? எங்கே விடுதலை? எங்ஙனம் விடுதலை? அநுபவக் கலைகள் பரத்தின் மாண்பை நன்குணர்ந்த சான்றோர் சிலரால் எழுதப்பெற்ற அநுபவக்கலைகள் இருக்கின்றன. அவையும் பரம்பொருளின் அருளால் பிறந்தனவே. அக்கலைகளின் துணைகொண்டாதல் பகுத்தறிவுடைய மகன் பரம்பொருளின் கருணையை நினைக்கிறானா? இல்லை. முனைப்பு அறியாமை, பரம்பொருளின் கருணையையும், சான்றோர் கலைகளையும் மறைக்கிறது! மறைப்பால், மகன்பால் முனைப்பு- செருக்கு - அகங்காரம் - ஆணவம் - முடுகி எழுந்து சீறி அடர் கிறது. யான் மனிதன்; பகுத்தறிவுடையவன்; எல்லாம் என் னால் ஆகும். பரம் என்ன? கருணை என்ன? என்று நினைக்கும் புன்மை மகனைக் கெடுக்கிறது. என் அறியாமையை நீக்கப் பரத்தின் கருணை பொழிகிறது என்று மகன் நினைப்பனேல், அவன் நெஞ்சம் அவனை வழிப்படுத்த உறுதி கொள்ளும். அந்நிலையில் வழிபாட்டின் நுட்பம் அவனுக்கு விளங்கும். கொடுமைகள் முனைப்பு இன்றா தோன்றியது, நேற்றா தோன்றியது? அந்தோ! அஃது என்று தோன்றியதோ தெரியவில்லை! அதன் கொடுமைகளை அறிஞர் அநுபவங்கள் அறைகின்றன; கலை கள் முழங்குகின்றன; கதைகள் கழறுகின்றன; வரலாறுகள் விளம்புகின்றன. அறிஞர் அநுபவங்களும் கலைகளும் முனைப்பின் கொடுமைகளை நுண்மையில் தெரிவிக்கின்றன. கதைகளும் வரலாறுகளும் அக்கொடுமைகளைப் பருமையில் அறிவிக் கின்றன. இவ்வறிக்கையினின்றும் இரண்டொன்றை எடுத்துக் காட்டுதல் நலமென்று தோன்றுகிறது. கதைகள் கற்பனை என்று இக்காலத்தவர்க்கு விரித்துச் சொல்ல வேண்டுவதில்லை. கதைகள் முப்புரக் கதை, சூரன் கதை, இரணியன் கதை, இராவணன் கதை முதலியவற்றை நோக்குக. ஆணவத்தின் வீறுகள் தெரிய வரும். என்னே! வச்சிர தேகங்கள், அழியா வரங்கள், பொன் - பொருள், பெண் கொள்ளைகள், தேவர் சிறைகள், அடக்கு முறைகள், கொலைகள், கோரக் கொலைகள்! என்னே! என்னே! இவை யாவும் ஆணவத்தின் பரிணாமங்கள். இவையெல்லாம் என்ன ஆயின? நிலையாக நின்றனவா? வரலாறுகள் கற்பனைக் கதைகள் கிடக்க, நடந்த வரலாறுகள் நம் முன்னே நிற்கின்றன. பெரிய அலெக்ஸாண்டர், நெப்போலியன், கெய்ஸர், ஹிட்லர் முதலியோர் 1உலகையே ஒரு குடைக்கீழ் ஆளவேண்டும் என்ற ஆசையால் விழுங்கப்பெற்றவர். அவர் தம் ஆசை - பேராசை - என்ன ஆயிற்று? அணுகுண்டு ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் ஆணவச் சண்டை மூண்டது. ஜப்பான் வெற்றிமேல் வெற்றி பெற்றது. அது கண்டு அமெரிக்கா என்ன செய்தது? ஜப்பானில் சில இடங்களில் மூர்க்க அணுகுண்டை வீசியது. அவ்விடங்கள் நாசமாயின. அங்கே பசும்புல் தலைகாட்டவும் எத்துணை ஆண்டுகள் ஆகுமோ? இக் கோரக்கொலையைப் பிரிட்டனும் ஆதரித்தது! ஆணவ அரசு மனிதனது ஆறாவது அறிவென்னும் பகுத்தறிவும், உரிமை உணர்வும் என்னென்னவோ செய்கின்றன! அணுகுண்டில் அறிவைச் செலுத்தியுள்ள மனிதன், பகுத்தறிவை - உரிமை உணர்வை - என்று நல்வழிப்படுத்தப்போகிறான்? அணுகுண்டு என்றதும், அச்சம் - நடுக்கம் - கலக்கம் முதலியன தோன்று கின்றன; தோன்றியும் மனிதக்குலம் நல்லறிவு பெறவில்லை! ஆணவத்தின் அரசே அரசு! அதுவே வெற்றி பெறுகிறது! இவ் வரசு இந்நாளில் வீடுதோறும், தெருவுதோறும், ஊர்தோறும், நாடுதோறும், உலக முழுவதும் நுழைந்து நுழைந்து தன்னாட்சி நடத்துகிறது. விளைவு இவ்வாட்சியின் விளைவு என்ன? எங்கும் எங்கும் பசி - பட்டினி - மரணம்; எங்கும் எங்கும் கொள்ளை - கொலை - குழப்பம்; எங்கும் எங்கும் துப்பாக்கி - பீரங்கி - குண்டு; எங் கணும் எங்கணும் மேடை - பேச்சு - நஞ்சு; எங்கணும் எங்கணும் தேர்தல் பேய் - சட்ட பூதம் - அடக்குமுறை அரக்கன்; எங்கணும் எங்கணும் பதவி ஆசை - பட்ட ஆவல் - தலைமை வெறி. எல்லாரும் தலைவர் ஆகவே விரைகிறார்; முனைகிறார்; அதை நிறைவேற்றிக்கொள்ள இழிதுறைகளில் இறங்குகிறார். தொண்டராக விரும்புவோர் அரியராயினர். ஆட்சிமுறை என்னென்னவோ பெயரால் மாறுகிறது. அதனால் மக்களின் மனோநிலை மாறவில்லை; பதவி பட்ட அதிகாரப்பித்து மாற வில்லை; தொண்டுப் பித்து ஏறவில்லை. நிலையாமை பட்டம், பதவி, அதிகாரம் முதலியவற்றைக் குறை கூறு வது நிலையாமையை வலியுறுத்துவதாகும் என்று சிலர் நினைக்கலாம். அறிஞரால் நிலையாமையும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது; நிலையும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது; இரண்டும் வாழ்க்கைக்குத் தேவைபோலும்! வாழ்க்கைக்குச் சிற்சில போது நிலையாமை தேவையாகும். சிற்சிலபோது நிலை தேவை யாகும். யான் அறிந்த ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்மணி பட்டினத்தார் அருளிய நிலையாமைப் பாடல்களை இழித்துப் பேசுவதை ஒரு பெரும்பணியாகக் கொண்டிருந்தனர். அவர்க்கு ஒரு குழந்தை பிறந்தது. சில ஆண்டு வளர்ந்து அக்குழந்தை இறந்தது. சகோதரியார்க்கு விளைந்த துயரம் அளப்பரிய தாயிற்று. அவ்வேளையில் அவர்க்குப் பட்டினத்தார் பாடல்கள் ஆறுதலளித்தனவாம். இதை என் தலைமையில் அச்சகோதரி யார் ஓரிடத்தில் பேசியபோது வெளியிட்டனர். வாழ்க்கையில் ஈடுபட்டு இன்பதுன்பங்களை அநுபவித் தோர் மொழிகள் கொள்ளத்தக்கன. அவை நல்வழி காட்டும்; சில உண்மைகளையும் புலப்படுத்தும். வாழ்க்கையில் ஈடுபடா தார் கூற்று, சிலசமயம் அவரையுங் கெடுக்கும்; ஊரையுங் கெடுக்கும். ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவுமோ? உலகப் பழுது உலகம் போராட்டங்களால் அலுத்துவிட்டது. உலுத்து விட்டது. அதன் அரண்களும் பரண்களும் இடிந்து முறிந்து வீழ்கின்றன; கூரைகள் அசைகின்றன. . கட்டுக்கோப்புக்கள் தளர்கின்றன. பலவழியில் உலக நிலையம் பழுதுபட்டது. அது புதுக்கப்பெறல் வேண்டும். புதுக்கல் எப்படிப் புதுக்குவது? சமதர்மத்தால் புதுக்கலாம் என்ற பேச்சு உலக முழுவதும் பரவிவருகிறது. இதற்கு யான் மாறு பட்ட கருத்துடையவனல்லன். சமதர்மம் எனக்கு உடன்பாடு. சமதர்மம் சமதர்மம் எத்துணையோ வழியில் - வகையில் - முறையில் பேசப்படுகிறது. எதைக் கொள்வது? மார்க்ஸியத்தை அடிப் படையாக்கொண்ட சமதர்மமே கொள்ளற்பாலது என்று பலர் கருதுகின்றனர். மார்க்ஸியம் மட்டும் போதாதென்பதும், அதனுடன் காந்தியமும் கலக்கவேண்டுமென்பதும் எனது உள்ளக்கிடக்கை. உலகமும் தெய்வமும் மார்க்ஸியத்தின் அடியில் வெறும் உலகாயதம் உருள் கிறது. காந்தீயத்தின் அடியில் அழியாத் தெய்விகம் பொலிகிறது. இரண்டும் கலந்த ஒன்றே வாழ்க்கையை நன்முறையில் வளர்க்க வல்லதென்று யான் எண்ணுகிறேன். தர்மம் உலகமும் தெய்வமும் கலந்த வாழ்க்கையினின்றும் உதிப்பது தர்மம். இத்தர்மம் இந்திய முனிவரரால் காணப் பெற்றது. இஃது இந்தியாவின் விழுமிய செல்வம். அச் செல்வத்தை இந்தியா இப்பொழுது இழந்து வாடுகிறது. அதனால் உலகமும் வதைகிறது. மீண்டும் இந்தியா தன் செல்வத்தைப் பெறுமாயின் அது நலமுறும்; உலகுக்கும் நலம் புரியும். தர்மம் எது? சமதர்மம் எது? இரண்டும் ஒன்றே. விளக் கத்தின் பொருட்டுத் தர்மம், சமதர்மம் என்று வழங்கப்படுகிறது. யான் விரும்பும் சமதர்மம் சடமும் பரமும் (Matter and spirit) கலந்த ஒன்றிலிருந்து எழுவது என்று பல ஆண்டுகளாக யான் சொல்லி வருகிறேன். தர்ம வளர்ச்சிக்கு இரண்டும் கலந்த வாழ்க்கை தேவை. வழிபாடு பழைய உலகைப் புதுக்கும் ஆற்றல் சமதர்மத்துக்கு உண்டு என்று பேசுவதால் மட்டும் - எழுதுவதால் மட்டும் - பயன் விளையாது. பேச்சும் எழுத்தும் செயலாதல் வேண்டும். செயலுக்குக் குண்டு வேண்டுவதில்லை. போர் வேண்டுவ தில்லை. மூர்க்கமின்றிச் சமதர்மத்தை வளர்க்கலாம். வழி என்ன? சில கூறுதல் கூடும். அச்சிலவற்றுள் சிறந்த ஒன்றை இங்கே எடுத்துக்காட்ட என் மனம் விழைகிறது. அதை எண்ணும் போதே என் மனம் குளிர்கிறது. அஃது எது? அது வழிபாடு. வழிபாட்டால் தோன்றிநின்று வளரும் சமதர்மமே சன்மார்க் கத்தை ஓம்பவல்லதாகும். மூர்க்கம் சமதர்மத்துக்கு மனிதன் முதல்முதல் தன்னை ஒழுங்கு படுத்தல் வேண்டும்; பண்படுத்தல்வேண்டும்; வழிப்படுத்தல் வேண்டும். அதனால் சமதர்மம் ஆக்கமுறும். அத்தர்மம் சன் மார்க்கத்தை நிலைபெறுத்தும். பிற அதை நிலைபெறுத்தல் அரிது. இக்காலச் சமதர்மிகள் என்று சொல்லப்படுஞ் சிலரிடை மூர்க்கம் - இரத்தம் சிந்தல் - கருத்து வேற்றுமையைக் கொல்லல் முதலிய கொடுமைகள் செறிந்திருத்தல் கண்கூடு. மூர்க்கத் தாலும் கொலையாலும் எழும் சமதர்மம் மூர்க்கத்தையும் கொலையையும் வளர்த்தல் இயற்கை. வழிபாட்டால் பண்பட்ட மக்கள் முயற்சியினின்றும் சமதர்மம் எழுவது சிறப்பு. அதனால் மூர்க்கமும் கொலையும் குன்றும். வழிபாட்டுவிதம் மனிதனிடத்துள்ள குறைபாடுகளைப் போக்க வல்லது வழிபாடு. அவ்வழிபாடு பலவிதம். அவை இயற்கைக்கூறுகள் வழிபாடு, அவற்றின் படங்களாகிய காவியஓவிய வழிபாடு, உயிர் வழிபாடு முதலியன. இவையெல்லாம் இயற்கை வழிபாட்டில் அடங்கும். இயற்கை, பரம்பொருளின் உடல்; பரம்பொருள் உயிர். உடற்கருவி கொண்டே உயிருண்மை காண்டல்வேண்டும். இயற்கை உடலை வழிபட்டால், அஃது உயிராகிய பரத்தில் சேரும். வாதப்போர் உலகில் சில இடங்களில் இயற்கையை வழிபடுவோர்க்கும் பரத்தை வழிபடுவோர்க்கும் வாதப்போர் நிகழ்கிறது. இயற்கை வழிபாடு நாதிகமாம்! பரவழிபாடு ஆதிகமாம்! இது போலி வாதம்; பொருளற்ற வாதம். உண்மை வழிபாடு நாதிக ஆதி கங்களைக் கடந்தது. பலதிற வழிபாடுகளை ஈண்டுப் பரப்பவேண்டுவதில்லை. சிலவற்றைச் சிறக்கவைத்தல் சாலும். உடல் முதல் முதல் உடல்மீது என் கருத்துச் செல்கிறது. உடல் என்னுடன் இருப்பது; பிரியாது இருப்பது. முதல் முதல் அதன்மீது கருத்துச் செல்வது இயல்பு. என் உடலை இங்கே முன்னிலைச் சுட்டாகவே குறிப்பிட்டேன். என் உள்ளத்தில் எல்லா உடலங்களும் திரண்டு நிற்கின்றன. பொதுவாக இங்கே உடல் என்கிறேன். உடலை ஓம்புவதும் ஒருவித வழிபாடு என்று எனது அறிவு எனக்கு உணர்த்துகிறது. எவ்வகை வழிபாட்டுக்கும் உடல் இன்றியமையாததன்றோ? வழிபாட்டுக்கு மட்டுமா? மற்றும் பல வற்றிற்கும் உடல் இன்றியமையாதது. உடலின் இன்றியமை யாமையை விரிக்கப்புகுந்தால் அஃதொரு தனி நூலாகும். உடல் உரம் இல்லாதவன் வாழ்க்கை எதற்குப் பயன்படும்? அவன், வாழ்க்கை இன்பத்தை இழந்த பாவியேயாவன். பரத்தின் உண்மையை உணர்தற்கென்று, அது கொடுத்த வாழ்க்கையைப் பாழ்படுத்தினவனை என்னென்று கூறலாம்? அவனைப் பாவி என்றும் கூறலாம்; பிற என்றும் கூறலாம். உடம்பினை முன்னம் இழுக்கென் றிந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. என்று திருமூலர் அருளியுள்ளனர். அதில், உடற்கண் பரம் பொருள் கோயில்கொண்டிருத்தல் பொலிதருகிறது. அப் பொலிவு சிந்தனைக்கு உரியது. சத்துக்கள் நோய் அணுகாதவாறும், நரை திரை மூப்பு நண்ணாத வாறும் உடலைப் பேணவேண்டுவது மக்கள் கடமை. உடல் பல திறச் சத்துக்களால் ஆக்கப்பட்டது. அவற்றுள் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு முதலிய உலோகச் சத்துக்கள் சிறந்தன. இவை குன்றக் குன்ற உடல் தளர்ச்சியுறும். தளர்ச்சியால் நோய்கள் பெருகும். சத்துக்கள் குன்றாதவாறு அவற்றைக் காத்தல் அரிது. வாழ்க்கையில் எங்ஙன மாயினும் அவை குன்றுதல் நேரும். அச் சத்துக்களுக்கு ஈடுசெய்வது நல்லது. உடல் தளர்ச்சியுறாதவாறு அதை ஓம்புதற்கென்று ஞாயிறு ஒளியைப் பொழிகிறது. அதில் பலவகைச் சத்துக்கள் இருக்கின்றன. பொன், வெள்ளி, செம்பு, இரும்பு முதலிய உலோகச் சத்துக்களும் இருக்கின்றன. இச்சத்துக்களை உடலில் இறங்கச் செய்தால், அவை, இழந்த சத்துக்களுக்கு ஈடு செய்யும். அதனால் உடல்வளம் குறையாதவாறு காத்தல்கூடும். இவ்வித்தை பெரியது; மிகப் பெரியது. செத்த வித்தை சூரியச் சத்துக்களை உடலில் இறக்கச் சில பயிற்சிகள் முன்னோரால் காணப்பெற்றன. அவை முற்றும் இப்பொழுது நிலவுகின்றனவா? இல்லை. அவை எங்கே போயின? இன்றும் அப்பயிற்சிகளில் சிலவற்றைத் தெரிந்தவர் இருக்கின்றனர். இருந்தும் என்ன பயன்? தமக்குத் தெரிந்ததை அவர் பிறர்க்குச் சொல்வதில்லை. அவர் இருப்பிடமும் பலர்க்குத் தெரிவதில்லை. அவர் எதையும் சொல்லமாட்டார். அவரை என்னென்று கூற லாம்? கொலைஞர் - கொலைஞர் - என்று கூறாது வேறென்ன கூறுவது? இந்நாளில் வளர்ச்சியுற்று வரும் விஞ்ஞானம், செத்த வித்தையை என்றாதல் உயிர்ப்பித்தே தீரும். பயிற்சி முறைகள் காலையில் எழுதல், கடன்களை முடித்தல், காற்றில் உலவல், ஞாயிற்றொளியில் மூழ்கல்,நீரில் ஆடல், ஜெபம் செய்தல், பொருந்திய உணவருந்தல், நற்றொழில் புரிதல், காவிய ஓவியங்களோடு உறவுகொள்ளல், ஆடல் பாடல்களில் ஈடுபடல், வேளையில் உறங்கி எழல் முதலியன உடலை நன் முறையில் ஓம்பும். மலச்சிக்கல் உறாதவாறு காப்பதும் உடலை வழிபடுவதாகும். பிற உடலங்கள் தன் உடலைமட்டும் ஓம்புதல் போதாது. அது தன்னல மாகும். பிற உடலங்களை ஓம்புவது தன் உடலையும் ஓம்புவ தாகும். பிற உடலங்கட்கு எக்காரணம் பற்றியும் ஊறுசெய்த லாகாது. அது தன்னுடலுக்கு ஊறு செய்வதாக முடியும். கூக்குரலும் பதிலும் சில ஆட்சிகளில் ஏழைமக்கள் கூட்டம் திரண்டு பெருகும். அக்கூட்டம் பசியால் வாடி வதையும்; வதை, அதைப் போதிய உணவு பெற முடுக்கும்; அதிக ஊதியம் கேட்கத் தூண்டும்; கூக்குரல் எழுப்பும். என்ன பதில்? பதிலா? பதிலைப் பாருங்கள்! ஏழைமக்கள் உடலங்களைத் தடிகள் தாக்கும்; துப்பாக்கிகள் சுடும்; கொடுஞ் சட்டங்கள் சிறைக்கோட்டங்களில் தள்ளும். இந்நாளில் பெண்மணிகளையும் தடிகளும், துப்பாக்கிகளும், சிறைக்கோட்டங்களும் விடுவதில்லை. அவர்களின் முத்துப் பல்லும், பவளவாயும், நீலக்கண்ணும், தாமரை முகமும் சாடப்படும். கண்ணீர்ப்புகை அவர்தம் முகத்தைப் பாழ்படுத்தும். இரத்த ஆற்றில் உடலங்கள் கோரப்போர்களில் ஆயிரம் ஆயிரம் உடலங்கள் சாய் கின்றன. இரத்த ஆறுகளில் அவைகள் மிதக்கின்றன! மிதந்து ஓடுகின்றன! பரம்பொருளின் கோயில்களைச் சாய்ப்பதற் கென்று துப்பாக்கி, பீரங்கி, குண்டு முதலிய கொலைக் கருவிகள் வடிக்கப்படுகின்றன. வறுமையும் அறியாமையும் பரத்தின் கோயில் வழிபாடு, கேடுற்றுக் கிடக்கும் காலத்தை நாம் காண்கிறோம். மக்கள் மனம் திரும்புமோ? திரும்பும். இதற்கு வழிபாடு தேவை. வழிபாடு பெருகினால் உடல்வதை தானே அருகும். இவ்வழிபாட்டுக்கு உடலம் பரத்தின் கோயில் என்னும் உணர்வு விளக்கம் பெறல்வேண்டும். இவ்விளக்கம் வறுமையும் அறியாமையும் மலியும் இடங்களில் உறுதல் அரிது. ஆதலின், வறுமையையும் அறியாமையை யும் ஒழிக்க முயல்வது உடலோம்பலுக்குரிய முதல் வழி பாடென்று தெளிக. தேவைக்குமேல் வறுமையும் அறியாமையும் மலிவதற்குக் காரணம் என்னை? காரணங்கள் பலபடக் கூறலாம். தலையாய ஒன்றை ஈண்டு நினைவூட்டுகிறேன். அது தேவைக்கு மேல் பொருளீட்டிக் களியாட்டயர ஆசைப்படுதல். இவ்வாசை ஒரு கூட்டத்தை வறுமையில் - அறியாமையில் - அழுத்துகிறது. தேவைக்குமேல் பொருள் சேர்த்தல் அஹிம்சைக்கு மாறுபாடு என்று விருஷப தேவர் அறிவுறுத்தியதை ஈண்டு வலியுறுத்துகிறேன். தேவை யளவில் நிற்கும் தர்ம வாழ்க்கை உடலை நன்முறையில் ஓம்பும்; எவ்வுடலுக்கும் கேடு சூழாது. இல்வாழ்க்கை ஒருவன் தன்னை வழிப்படுத்தவும், ஒருத்தி தன்னை வழிப்படுத்தவும் தனித் தனியே வாழாது சேர்ந்து வாழ்தல் வேண்டும். இவ்வாழ்க்கை உடல் நலனைக் காக்கும்; வளர்க்கும். இல்வாழ்க்கையில் பிள்ளைப் பேறென்னும் பெரும்பேறு உறுதலால், அஃது அன்புப் பெருக்குக்கும், பொறுமை - தியாகம்- தொண்டு முதலியன ஓங்குதற்கும் துணை புரியும். அதனால் நல்ல குடும்பம் அமையும். குடும்பம் ஒரு கோயில். ஒவ்வொரு குடும்பமும் அன்புக் கோயிலானால், உலகம் அமைதி வண்ண மாகுமன்றோ? இல்வாழ்க்கை என்னும் புனித வாழ்க்கையில் தலைப்படுவது வழிபாட்டுக்குக் கால்கொள்வ தென்க. இது பற்றிப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை என்றொரு தனிநூல் யாத்துள்ளேன். விளக்கம் அதிற் காண்க. இயற்கை யுலகம் இயற்கை யுலக வழிபாடு என் நெஞ்சில் நுழைகிறது. அவ்வழிபாடு சிறந்தது; சாலச் சிறந்தது. இயற்கை உலகம் ஒன்றா? இரண்டா? கோடி கோடி. அவற்றையெல்லாம் சேர்த்துத் தியானித்தல் தொடக்கத்தில் இயலாது. அவையாவும் நாம ரூப அகல நீளங் கொண்டனவே; எல்லையுடையனவே. ஆனாலும், அவை சிறிய மனத்தில் தொடக்கத்தில் அடங்குதல் அருமை. அவ்வருமையைப் போக்க இயற்கைக் கூறுகளை அடைதல் நல்லது. முன்னர்ப் பொருளின் தலைப்பின் கீழ்ச் சில குறிப்பிட்டுள்ளேன். அவை நேயர்கள் நினைவிலிருக்கும். இயற்கைக் கூறுகள் கடல், வயல், காடு, மலை, உடுக்கள், திங்கள், ஞாயிறு முதலிய இயற்கைக் கூறுகளைத் தியானித்தல் எளிது. இவை தியானத்துக்குப் பொருந்திய கொழுகொம்புகள். மயில், குயில், வானம்பாடி, வண்டு, மான், ஆன், கன்று, ஆறு முதலியனவும் தியானத்தை எளிதில் கூட்டும். எவரெவர் மனம், எந்த எந்த இயற்கைக் கூற்றில் செல்கிறதோ, அவரவர் அதை அதைத் தியானிக்கலாம். தியானத்தின் விளைவு ஒன்றேயாகும். தொடக்கத்தில் தோற்றமுறும் வேறுபாடுகள் பின்னே மறைந்து மறைந்து ஒன்றாதலை அநுபவத்தில் காணலாம். சூரிய தியானம் இயற்கைக் கூறுகளில் சிறந்தது ஞாயிறு. ஞாயிற்றின் சிறப்பு மெய்ஞ்ஞானிகளாலும் போற்றப்படுகிறது; விஞ்ஞானி களாலும் போற்றப்படுகிறது. சூரிய தியானம் மிக மிக, அதில் மற்ற இயற்கைக் கூறுகளைத் தியானிக்கும் பயன்களெல்லாம் விளையும்; ஒன்றும். சூரிய தியானம் இயற்கை உலகங்க ளெல்லா வற்றையும் கடக்கவும் துணைபுரியும்; கடந்தால் தியானமும், தியானிக்கப்படுவதும், பிறவும் மறையும்.. இவ்வாறு துணைபுரியும் பண்பு தியானத்துக்கு உண்டு. காவியம் காவிய வழிபாட்டைச் சிறிது கருத்தில் இருத்துவோம். காவியம் ஒரு கோயில். அக்கோயில் கல்லால், மண்ணால், சுவரால், இன்ன பிறவற்றால் ஆக்கப்படுவதன்று. அஃது எழுத்தால், சொல்லால், அசையால், சீரால் இன்ன பிறவற்றால் ஆக்கப்படுவது. வடிவங்கள் காவியத்துக்கு எழுத்து அடிப்படை. எழுத்துக்கள் உருவங்கள்; வரிவடிவங்கள். இவை இல்லையேல் நுண்ணிய கருத்துக்கள் வெளிவந்து உலகை நடாத்தல் இயலாது. கருத்துக்கள் வெளிவருதற்கு எழுத்துக்கள் முதன்மை என்பது கருதப்படல் வேண்டும். எழுத்து இன்னதென்று உணராத ஒருவன், என்ன கருமையின் கழிகளையும் கோடுகளையும் கீறல்களையும் மக்கள் கட்டி அழுகிறார்களே என்று எள்ளுவன். இவனும், ஓவிய நுட்பம் தேறாது. அதைக் கல், மண், செம்பு என்று சொல்வோனும் அண்ணன் தம்பிகளேயாவர். நுண்ணிய கருத்து விளக்கத்துக்குப் பருவடிவங்கள் இன்றியமையாதன. நுண்ணிய மனத்துக்குப் பருஉடல் அரணாக நிற்றலை விளக்கிக் காட்டவேண்டுவதில்லை. கோயில் உலகில் காவியம் என்னும் பெயரால் பல சுவடிகள் நடமாடுகின்றன. அவை காற்றில் பறக்கும் வெற்றேடுகள். கோயில்கள் என்று போற்றப்படும் காவியங்களாக அமைந்தவை சிலவே. காவியக் கோயில்கள் எம்மொழியிலும் அமையலாம்; எவ்வழியிலும் அமையலாம். அதற்குக் கட்டுப்பாடு இல்லை. வால்மீகி, சங்கரர், காளிதாசன், ஷேக்பியர், ஷெல்லி, நக்கீரர், இளங்கோ, திருஞானசம்பந்தர், ஆண்டாள் முதலியோர் எடுத்த கோயில்கள் தியானத்துக் குரியன. பயன் சான்றோர் காவியம், மன அலையை - எரியை - ஒடுக்கும்; தணிக்கும். அஃது அமைதியை நிலைபெறுத்தும். காவியப் பணி இவ்வளவில் நின்றுவிடுவதில்லை. அதன் எல்லை பெரிது. அது குடிமையைக் காக்கும்; ஊரை ஒழுங்குபடுத்தும்; நாட்டைப் பண்படுத்தும்; உலகை வழிப்படுத்தும். சுரங்கம் காவியத்தைச் சுரங்கம் என்றும் சொல்லலாம். அது பெருஞ் சுரங்கம்; வற்றாச் சுரங்கம்; இயற்கைச் செல்வத்தை வாரி வாரி வழங்கும் வளமைச் சுரங்கம். காவியத்தில் ஈடு பட்டவர்க்கு, அது சுரங்கம் - வற்றாச் சுரங்கம் - என்பது நனி விளங்கும். பஞ்ச காலம் காவிய ஈடுபாடு பெருகுவது வாழ்க்கைக்கு நலம் பயக்கும். அவ்வீடுபாடு சுருங்கின் என்ன பயக்கும்? அதை சொல்லலும் வேண்டுமோ? இந்நாளில் காவியம் பல இடங்களில் கதையாகக் கருதப்படுகிறது. இதைப் பஞ்ச காலமென்று சொல்லலாம். கதைகள் இக்காலத்தில் கதைகள், வெறுங்கதைகள், வெறிக்கதை கள், களிக்கதைகள் முதலிய சிறுமைக் கதைகள் பெருக்கெடுத் துள்ளன. அவை புறமனத்தை ஓரளவிலாதல் அடங்கச் செய் யுமோ? பின்னை என்ன செய்யும்? அக்கதைகள் ஓடும் மனத்தை ஓடவே துரத்தும்; ஆடும் மனத்தை ஆடவே கடவும்; அலையும் மனத்தை அலையவே ஏவும். ஓடும் மனம் - ஆடும் மனம் - அலை யும் மனம் - வாளா கிடக்குமோ? அம்மனம் குரங்காய், மாக்க ளாய், களிக் கூட்டமாய், கொடுங்கோலாய், சட்டமாய், குண்டாய், போராய், பெரும்போர் ஆகுமன்றோ? கோர உலகம் இக்கொடிய கதை உலகுடன் மற்றுமொரு கோர உலகம் உறவு கொண்டுள்ளது. இரண்டும் சேர்ந்தால் என்ன விளையும்? விளைவு கண்கூடு. இவ்வேளையில் உலகம் பல வழியிலும் வதைகிறது. அதை வதைப்பனவற்றுள் ஒன்று பத்திரிகை உலகம்; பத்திரிகை உலகம் என்று அஞ்சாது கூறலாம். உட்போரைக் கிளப்புவது கட்சிப் பத்திரிகை; வெளிப்போரைக் கிளப்புவது நாட்டுப் பத்திரிகை. அங்கும் இங்கும் சிறு சிறு போர்களைக் கிளப்பிக் கிளப்பிப் பத்திரிகை உலகம் அலுத்தது; இப்பொழுது அஃது உலகப் பெரும்போர் மீது நாட்டஞ் செலுத்துகிறது; இரண்டு உலகப் போரை முடித்தது; மூன்றாம் பெரும் போருக்கு வழிகோலு கிறது. கோரப் பத்திரிகை உலகம் உமிழும் நஞ்சை உண்டு உலகைக் காக்க இந்நாளில் சிவபிரான் வருவரோ? அமெரிக்க அணுகுண்டு ஜப்பானில் இரண்டோர் இடத்தை எரித்தது. பத்திரிகை எழுத்துக்குண்டோ உலகையே எரிக்கிறது. அவ்வெரியைத் தணிக்க ஓரிடஞ் செல்வோம். அஃது எவ்விடம்? அது காவிய உலகில் ஒரு பூங்கா எனப் பொலிவது. சிலம்பு அஃது அரசு துறந்த அரசு - ஒழுக்கம் உன்னும் ஒழுக்கம் - கலை பயிலும் கலை - இளங்கோவின் எழுத்து - தமிழ் சுவைக்கும் தமிழ் - சிலம்புத் தமிழ். அத்தமிழில் பாவெனப் பரந்து ஓடும் ஆறுகளில் நெஞ்சம் மூழ்கித் திளைக்கிறது. மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லா நின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி. பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி காமர் மாலை அருகசைய நடந்த வெல்லா நின்கணவன் நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி. வாழி அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிர்ஒம்பும் ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி. . . . . .. குரவமும் வகுளமுங் கோங்கமும் வேங்கையும் அரவமு நாகமுந் திலகமு மருதமுஞ் சேடலுஞ் செருந்தியுஞ் செண்பக வோங்கலும் பாடலந் தன்னொடு பன்மலர் விரிந்து குருகுந் தளவமுங் கொழுங்கொடி முசுண்டையும் விரிமல ரதிரலும் வெண்கூ தாளமுங் குடசமும் வெதிரமுங் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்கரின் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்திப் பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய் அருவி முல்லை அணிநகை யாட்டி விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா வவிரறற் கூந்தல் உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை யென்ற பொய்யாக் குலக்கொடி . . . காவிய ஆறுகளில் மூழ்கித் திளைத்து ஓவியக் கரை நண்ணுவோம். ஓவியம் காவியக்கோயில் கருக்கொள்ளுதற்கு முன்னரே ஒவியக் கோயில் உருக்கொண்டது. ஓவியக் கோயில் உருக்கொண்ட காலத்தை அறுதியிட்டுக் கூறுதல் இயலவில்லை. மொகஞ் சதாரோ, ஹாரப்பா முதலியவற்றிற்கு முன்னரே ஓவியக் கோயில் காணப்பட்டது. இதற்கு மொகஞ்சதாரோ, ஹாரப்பா ஓவியங்கள் சான்றாக நிற்கின்றன. ஓவியமும் பிண்டமும் ஓவியம் - வர்ணம், மண், மரம், கல், செம்பு முதலியவற்றால் எடுக்கப்படுவது; வடிக்கப்படுவது. ஓவிய உருவம் முகிழ்த்ததும், அதன் பிண்டம் மறையும். ஓவியத்துக்கும் பிண்டத்துக்கும் வேற்றுமை உணராதார் ஓவியத்தைக் கல், மண், செம்பு என்று பேசித் திரிவர். அவர்க்கு, ஓவியத்துக்கும் பிண்டத்துக்கும் உள்ள வேற்றுமையை அறிவுறுத்த வேண்டுவது கலைஞர் கடமை. அவ்வேற்றுமையை என் நூல்களில் விரித்துக் கூறியுள்ளேன். எழுத்தும் எடுப்பும் நுண்ணிய கருத்துக்கள் அடங்கிய தத்துவங்கள் காவியத் தில் எழுத்தாய்க் காட்சியளிப்பதுபோல், அவை ஓவியத்தில் எடுப்பாகக் காட்சியளிக்கும். ஓவியமும் ஒருவிதக் காவியம். எழுத்துக் காவியம் தத்துவங்களை எளிதில் உணர்த் தும்; ஓவியக் காவியம் அவைகளை எளிதில் உணர்த்துவது அருமை. ஓவியத்தில் பயிற்சி பெற்றவர்க்குத் தத்துவங்களின் நுட்பம் படிப்படியே விளங்கும். ஓவியப் பயிற்சி பெறும் உள்ளம் கலைக்கோயிலாகும். மனிதன் மனிதனாதல் நமது நாட்டுக் கோயில்களில் பெரும்பான்மையன ஒவியக் கூடங்களே. அக்கோயில்களில் நுழைந்தால் அங்கே பெரிதும் எக்காட்சி பெறுகிறோம்? ஓவியக் காட்சியைப் பெறுகிறோம். அக்காட்சி கண்ணிலும் நுழைகிறது; கருத்திலும் நுழைகிறது. அக்கண்ணும் கருத்தும் கருவிகரணங்களின் கரடு முரடுகளை நீக்கி மனிதனை மனிதனாக்குகின்றன. அவன் ஓவியக் கோயி லாகிறான். ஓவியவழிபாடு உறுதுணை புரிவது. நுட்பம் இங்கே ஓவிய நுட்பத்தைச் சிறிதாதல் விளக்க என் நெஞ்சம் விரைகிறது. நூலைப் பெருக்கவும் எனக்கு விருப்ப மில்லை. முருகன் அல்லது அழகு, உள்ளொளி முதலிய நூல்களில் ஒவிய நுட்பத்தை ஒருவாறு விளக்கி உள்ளநிறை கொண்டேன். இங்கே அதை ஒருசிறிது தொட்டுவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன். சிதம்பரம் இவ்விடத்தில் சிதம்பரம் என்னுள்ளத்தில் கோயில் கொள்கிறது. சிதம்பரத்துக்குக் கோயில் என்றொரு பெயரும் உண்டு. அக்கோயிலுள் யான் பலமுறை சென்று வழிபாடு நிகழ்த்தியுள்ளேன். சிதம்பரக் கோயில் என்னுள் எப்படித் திகழ்கிறது? அது கல்லாக - மண்ணாக - சுவராக - கட்டிடமாகத் தோன்றிய காலம் இளமையிலேயே கழிந்தது. இப்போது அத்திருக்கோயில் என்னுள் ஒர் ஓவிய வேதமாகத் திகழ்கிறது. பல ஏட்டு நூல்கள் ஒரு சிதம்பர நூலுக்கு ஈடாகா என்ற முடிவுக்கு வந்தேன். பள்ளிப் பயிற்சி சிதம்பர வேதத்தை யான் ஒருமுறையா பயின்றேன்? பலமுறை பலமுறை பயின்றேன். எங்கெங்கே பயின்றேன்? பதஞ்சலிப் பள்ளியில், நால்வர் பள்ளியில், சேக்கிழார் பள்ளி யில், சாந்தோக்கியப் பள்ளியில், பாம்பன் பள்ளியில், ஐன்டன் பள்ளியில் பயின்றேன். அப்பயிற்சியால் யான் பெற்ற இன்பம் எனக்கே தெரியும். சிதம்பர வேதம் மூன்று காண்டங்களாலும், பல படலங் களாலும் ஆக்கப்பட்டது. மூன்று காண்ட அளவில் இங்கே நிற்க விரும்புகிறேன். முக்காண்டங்கள் எவை? அவை ஞான சபை, நடராஜ மன்றம், சிவகாமிக் கழகம். ஞான சபை, பரம்பொருள் எல்லாவற்றையுங் கடந்து, வெளியாய்- சூந்யமாய் - இருப்பதை அறிவிப்பது; சிவகாமிக் கழகம், நாமரூபமுடைய இயற்கையைத் தெரிவிப்பது. ஞானசபைப் பரம், சிவகாமி இயற்கையுடன் கலந்த நிலையில் தோன்றும் ஒரு பெரும் அசைவை (Motion) - இயக்கத்தை - கூத்தை - உணர்த்துவது நடராஜ மன்றம். ஞானசபை, கடந்த பரத்துக்கு அறிகுறி என்றும், சிவகாமி ஓவியம் இயற்கைக்கு அறிகுறி என்றும், நடராஜ ஓவியம் இயக்கத்துக்கு - கூத்துக்கு - அறிகுறி என்றும் சுருங்கக் கொள்ள லாம். இவ்வறிகுறிகளைக் கொண்ட சிதம்பரம் ஓர் ஓவியக் கூடமாக ஓர் இடத்தில் நிற்கிறது. அஃது அண்ட சராசரங்களின் தத்துவங்களை அடக்கி ஓர் ஓவியப் பள்ளியாய்த் திகழ்கிறது. நேயர்களே! சிதம்பரத்தைச் சிந்தியுங்கள்! எது சிதம்பரம்? தென்னார்க்காட்டிலுள்ள ஓரு கட்டடமா சிதம்பரம்? அன்று. சிதம்பரம் சராசரங்களின் ஓர் ஓவியம். எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந் தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே. வேதங்க ளாட மிகுஆ கமமாடக் கீதங்க ளாடக் கிளரண்டம் ஏழாடப் பூதங்க ளாடப் புவன முழுதாட நாதங்கொண் டாடினான் ஞானானந்தக் கூத்தே. தேவர சுரர்நரர் சித்தர் வித் தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயஞ் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. காளியோ டாடிக் கனகா சலத்தாடிக் கூளியோ டாடிக் குவலயத் தேயாடி நீடிய நீர்தீகால் நீள்வா னிடையாடி நாளுற அம்பலத் தேயாடும் நாதனே. அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப் பண்டையா காசங்கள் ஐந்தும் பதியாகத் தெண்டினிற் சத்தி திருஅம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே. நாதத் தினிலாடி நாற்பதத் தேயாடி வேதத்தி லாடித் தழலந்த மீதாடி போதத்தி லாடிப் புவன முழுதாடுந் தீதற்ற தேவாதி தேவர் பிரானே. இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை நானும் அறிந்தேன் படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலுந் தாமாய்நின் றாடுகின் றாரே. அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி தெண்டிரை சூழ்ந்த திசைகள் எழுகோடி எண்டிசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி அண்ட நடஞ்செயும் ஆலயந் தானே. அம்பல மாவ தகில சராசரம் அம்பல மாவது ஆதிப் பிரானடி அம்பல மாவது அப்புத்தீ மண்டலம் அம்பல மாவது அஞ்செழுத் தாமே. ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட இன்புறும் ஏழினும் ஏழைம்பத் தாறாட அன்பது மாடினான் ஆனந்தக் கூத்தே. எனவரூஉம் திருமூலர் திருமந்திரப் பாக்களை ஓர்க. பாற்கடற் பள்ளி பாற்கடலில் பாம்பணையில் திருமால் பள்ளி. திருமால் உந்தியில் நான்முகன் தோற்றம். இஃதோர் ஓவியம். இதன் நுட்பம் என்னை? பாற்கடல் - விந்தொளி; பாம்பணை - நாதஒலி (நாதத்துக்கு மேல் தத்துவம் இல்லை); திருமால் - பரம்பொருள்; பள்ளி - அசைவின்மை அல்லது மோனம்; நான்முகன் தோற்றம்- படைப்பு. இதுபற்றி, தமிழ்நாடும் நம்மாழ்வாரும் என்னும் நூலில் உருவம் என்னும் தலைப்பின் கீழ்ச் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளேன். சிலுவைக் கோலம் கிறிது பெருமான் சிலுவைக் கோலம் என் முன்னே நிற்கிறது. அக்கோலம் நெஞ்சிற் படியப் படிய, அது சட தத்துவங்களெல்லாவற்றையும் கடந்த தெய்வீக அன்பைப் பொழியும். அவ்வன்பு வெள்ளத்தால் பகைமை இரிந்து ஓடும். அங்கே பொறுமை பொங்கும்; தியாகம் கொழிக்கும். உலகம் அமைதிக் காட்சியை வழங்கும். சிலுவைக் கோலத் தியானம், இவ்வுலகைப் பரலோக மாக்குமென்று சுருங்கச் சொல்கிறேன். அத்திருக்கோலம் செகத்தின் சிந்தனையில் நிற்குங் காலத்திலேயே உலகம் விடுதலை அடையும்; அமைதி பெறும். சிலுவை வாழ்க. மற்றவை இங்கே எடுத்துக்காட்டுக்கென்று மூன்று ஓவியம் கொள்ளப்பட்டன. மற்றத் தெய்விக ஓவியங்களும் பலவிதத் தத்துவ நுட்பங்களைக் கொண்டனவே. முருகன் அல்லது அழகு சைவத் திறவு முதலிய நூல்களில் என் கருத்துக்களைக் காணலாம். பன்மையில் ஒருமை ஓவிய உருவங்கள் பலவாயினும் - அவற்றுள் எதைத் தியானித்தாலும் - விளையும் பலன் ஒன்றே. இஃது அநுபவத்தில் உணரத் தக்கது. உயிர்ப்பு ஓவியத்தை நோக்கிப் பயிலுங்கால் அதன் தத்துவங்கள் உள்ளத்தில் படிதல் வேண்டும். அவ்வாறு படிய வைப்பதே உயிர் ஓவியமாகும். தத்துவங்களை உள்ளத்தில் படிவியாத ஒன்று ஓவியமாகாது; அது வெறும் பிண்டம். மேடைத் தமிழ் ஆசிரியரும், எனது கெழுதகை நண்பரு மாகிய அறிஞர் - தெய்வசிகாமணி ஆச்சாரியார் ஓவியத் துறையில் கைபோயவர். ஒருநாள் எங்கள் பேச்சு ஓவியத்தில் திரும்பியது. நண்பர் மேசைமீதிருந்த இரண்டு சஞ்சிகைகளை எடுத்தார். இரண்டிலும் நடராஜ உருவங்கள் இருந்தன. ஓவியப் பெரியார் ஓர் உருவத்தைக் காட்டி, இதில் நடராஜ ஓவியம் இல்லை என்றார்; மற்றொன்றைக் காட்டி, இதன்கண் நடராஜ ஓவியம் உயிருடன் ஒளிர்கிறது என்றார். விளக்கம் விரித் துரைக்கப்பட்டது. யான் ஒருமுறை திருவல்லம் சென்றேன். அங்கே பழம்பெருங்கோயில் ஒன்று நிற்கிறது. அஃது என் உள்ளத்தைக் கவர்ந்தது. கவர்ச்சி என்னை ஓரிடத்தில் அமரச் செய்தது. அமர்ந்ததும் எனது நாட்டம் ஓவியங்கள் மீது நடந்தது. ஓவியக் கண்ணும் கருத்தும் என்னை ஓவியமாக்கின. அந்நிலையில் ஓவியங்கள் என்னுடன் பேசுவது போன்றதொரு தோற்றம் உண்டாயிற்று. பேசும் மனிதன் ஓவியமானால், பேசா ஓவியம் பேசும்போலும்! இவ்வியல்பு உயிரோவியத்துக்கு உண்டு என்று மேடம் பிளாவெட்கி வாய்மலர்ந்துள்ளார். தியானம் ஓவியத் தியானம் புலன்களின் குறும்புகளைத் தகர்க்கும்; மன அலைவைத் தடுக்கும்; கருவி கரணக் கிளர்ச்சியை ஒடுக்கும்; அமைதியைக்கூட்டும; பொய், பொறாமை, புறங்கூறல், வன்மங் கொள்ளல், பகைமை பாராட்டல் முதலிய இழிவுகளைப் போக்கும்; உயிர்களைத் தன்னைப் போல் கருதும் அன்பை எழுப்பும்; உயிர்களுடன் கலந்து வாழச் செய்யும்; அவை களுக்குத் தொண்டாற்ற ஊக்கும்; தனக்கென்று வாழாது பிறக்கென வாழும் வாழ்வை நல்கும். இப்பெரு நிலைகளைக் கூட்டும் ஓவியத் தியானத்தின் பெருமையை என்னென்று கூறவல்லேன்! ஓவியத் தியானம் மனிதரை மனிதராக்கும்; தேவராக்கும்; இறுதியில் பரமாக்கும். நோய் நோய் போக்கும் சக்தி ஓவியத் தியானத்துக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. சோதனையில் வெற்றியும் தோல்வி யும் விளைவது தெரிகிறது. வெற்றி தோல்வி அவரவர் மனோ நிலையைப் பொறுத்தன. ஓவிய வழிபாட்டால் சிலர்க்குப் பிணி நீங்கியதை யான் கண்டிருக்கிறேன்; ஒரு நிகழ்ச்சியை மட்டும் ஈண்டுப் பொறிக்கிறேன். விஞ்ஞானக் கலைஞர் ஒருவர் மூளைக்கோளாற்றால் வருந்தலாயினர். அவர் இரவில் பெரிதும் உறங்குவதில்லை. கனவுகள் - தீயகனவுகள் - அவரைத் தொல்லைப் படுத்துமாம்; அவர் முன்னே விகார உருவங்கள் உலவுமாம்; வெட்டுக் குத்துக் கொலைகளால் இரத்தம் பெருகுமாம்; அப்பெருக்கில் பிணங்கள் மிதக்குமாம்; அலறி அலறி எழுந்து அவர் ஓடுவராம். அக்கலைஞரை யான் ஒருமுறை பார்த்தல் நேர்ந்தது. தமது நிலையை எனக்கு அவர் எடுத்துச் சொன்னார். முதலில் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. பின்னே ஓவியத் தியானம் நினைவுக்கு வந்தது. அவரைத் திருவொற்றியூர்க்குச் செல்லுமாறும், வடி வுடை மாணிக்க ஓவியத்தைத் தியானிக்குமாறும், பின்னே மதில்களிலும் கோபுரங்களிலும் வனப்புடன் வீற்றிருக்கும் ஓவியங்களில் அங்கங்கே ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டேன். கலைஞர் அப்படியே செய்தனர். ஒரு திங்கள் கடந்தது. மூளை நலம் பெற்றது. ஓவியத் தியானத்தின் வெற்றி என்னே! என்னே! தொண்டர் ஓவியத் தியானம் செய்து, தம்மை ஒழுங்குபடுத்தியவர் - பண்படுத்தியவர் - வழிப்படுத்தியவர் - தொண்டுக்கு அருக ராவர். கருவி கரணங்கள் ஓய்ந்த இடத்திலே விளங்குவது தொண்டு. அவை தலை விரித்துக் கூத்தாடும் இடத்தில் தொண்டு தோற்றமே உறாது. தொண்டுக்குப் பதிலாகப் போர் மூளும். ஆகவே, ஓவியத் தியானத்தில் மூழ்கி எழுந்தவரே தொண்டுக்கு உரியராவர் என்று வலியுறுத்துகிறேன். இத் தொண்டர் கூட்டம், வீட்டில் - ஊரில் - நாட்டில் - மலிந்தால் உலகம் தொண்டு மயமாகும். தொண்டரால் அமையப் பெறும் கழகங்கள், அரசியல் மன்றங்கள், சமயக் கூட்டங்கள், சட்ட சபைகள், அரசுகள் எல்லாம் உலகுக்கு நன்மை பயப்பனவாகும். தொண்டரிடைப் பதவி பட்டப் போர், வேறு சிறுமைப் போர் முதலியன தோன்ற மாட்டா. தொண்டரைப் பெருக்கும் ஓவிய வழிபாடு - ஓவியத் தியானம் - ஓங்கி வளர்க. தொண்டு நெறி உலகில் பல சமயங்கள் இருக்கின்றன. அவை யாவும் ஓரே கருத்துடையன என்னும் கொள்கை இப்பொழுது ஆக்கம் பெற்றுவருகிறது. சமய சமரசம் எங்கும் பேசப்படுகிறது. சமயங் களின் சமரசத்தைத் தெளியச் செய்வது எது? தொண்டு என்று யான் சொல்வேன். தொண்டைச் சொல்லாத சமயம் இல்லை. அத்தகைய சமயங்க ளெல்லாவற்றையும் ஒரு பெயரிட்டு இனி வழங்குதல் சிறப்பு. அப்பெயர் எதுவென்று சிலர் மருளினும் மருள்வர். அம்மருட்சியைப் போக்கவல்லது யான் குறிக்கும் ஒன்று. அவ்வொன்றைத் தொண்டுநெறி - தொண்டுநெறி என்று அறைகிறேன். எல்லாச் சமயங்களும் தொண்டு நெறியில் அடங்கும். உலகில் தொண்டு நெறி ஆட்சி, பெருகுவதானால், உலகம் ஒருமைப்படும்; சாந்தம் அடையும். ஓவியத் தியானம் உலகைத் தொண்டுநெறியால் ஒருமைப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. ஓவியத்தில் பரம்? எல்லாம் கடந்து மிளிரும் பரம்பொருளை ஒரு சிறு ஓவியத்தில் வைத்தா வணங்குவது என்னும் வினா எழலாம். இவ்வினாவுக்கு விடையிறுப்பதும் இந்நூலின் நோக்கங்களில் ஒன்று. எல்லாம் கடந்த பரம்பொருளைக் கண்ணால் காண்டல் இயலாது; மனத்தால் நினைத்தல் இயலாது. இவ்வியலாமை எனக்கு நன்கு தெரியும். நன்கு தெரிந்தே யான் ஓவியம் - ஓவிய வழிபாடு - தேவை - தேவை என்று பேசியும் எழுதியும் வருகிறேன். எல்லாம் கடந்த பரம்பொருள், உயிர்கள் தன்னை வழிபடுதற்கென்று இயற்கையில் கலந்து நிற்கிறது. அக்கலந்த நிலை வழிபாட்டுக்கு உரியது; தியானத்துக்குப் பொருந்தியது. அக் கலந்தநிலையின் படங்களே காவிய ஓவியங்கள். ஓவியத்தை ஒரு சிறு வடிவமென்று கருதலாகாது. அது பரம்பொருள் இயற்கையுடன் கலந்த தத்துவ நுட்பத்தை உணர்த்துவது. இதை ஓவியத் தியானம் நன்கு தெரிவிக்கும். ஓவியத் தியானம் உயிர்க்குப் பரம்பொருளின் கலந்த நிலையை உணர்த்தும். அவ்வுணர்வு, பரம்பொருளின் கடந்த நிலையை விளங்கச் செய்யும். அதற்கு மேல் யான் என் சொல்லவல்லேன்? அந்நிலை சொல்லில் அடங்காதது. ஊழல்கள் ஓவிய வழிபாடு சிற் சில இடங்களில் குலைந்து விட்டது. காரணம் ஓவிய வழிபாடன்று; ஒவியமுள்ள இடங்களில் ஆபாசக்குப்பைகளாகிய ஊழல்கள் மலிந்தமையாகும். அம்மலிவு ஓவிய வழிபாட்டையே சில இடங்களில் குறை கூறச் செய்தது. எல்லாவற்றையும் கடந்த பரத்தை நேரே தியானித்தல் வேண்டுமென்றும், அதைப் பிறவற்றில் வைத்துத் தியானித்தல் கூடாதென்றும் சிலர் வீறிட்டுப் பல திற இயக்கங்களைக் கண்டனர். அவர் சூந்யமாக உள்ள பரத்தை, எல்லையுடைய மனத்தால் கட்டுப்படுத்த முயன்றனர் போலும்! அம்முயற்சி யால் புலக்குறும்புகளும், மன அலைவுகளும், கருவி கரணச் சேட்டைகளும் ஒடுங்குமா? ஒடுங்கா; ஒருபோதும் ஒடுங்கா; மூர்க்கம் வளரினும் வளரும். ஓவியத்தியானத்தில் அமர்ந்து அநுபவம் பெற்றால், அதன் இன்றியமையாமை இனிது விளங்கும். உள்ளத்தில் ஊழல்கள் மலியும் இடங்களில் சென்றே ஓவியத்தைத் தியானிக்க வேண்டும் என்னும் நியதியில்லை, மனத்துக்கினிய எந்த இடத்திலும் அமர்ந்து ஓவியத்தை உளங்கொண்டு தியானிக்கலாம். ஓவியம் எனது உள்ளத்தைக் கோயில் கொண்டுவிட்டது. அதைத் தியானிப்பதற்கென்று யான் எங்குஞ் செல்வதில்லை. நடக்கும்போதும், துயிலும்போதும், மற்ற காலங்களிலும் எனது உள்ளம் தியானத்தை விடுவதில்லை. அது தானே நிகழ் கிறது. அதற்கெனத் தனிமுயற்சி செய்வது அற்றுப்போயிற்று. படங்கள் வழிபாடென்று பலதிறப் படங்கள் பூசிக்கப்படுகின்றன. அவற்றுள் சில மூர்க்கர் படங்களாகவும் இருக்கும். அப்படங் களை வழிபடுவோர் உள்ளத்தில் மூர்க்கம் படிந்து கேடு விளைக்கும். இன்னார் மூர்க்கர் இன்னார் மூர்க்கரல்லாதவர் என்று அறிவது அரிது. ஆதலின், தெய்வ ஓவியங்களில் ஏதாவதொன்றை வழிபடுவது சிறப்பு. இசை இசை வழிபாட்டைப்பற்றி என் வாழ்நாளில் யான் பலபடப் பேசியிருக்கிறேன்; எழுதியிருக்கிறேன். இங்கே இரண்டொரு சொல்லைத் தூவிச் செல்கிறேன். கருவி கரண வீறுகளைச் சிதைத்து, நெஞ்சை அமைதியில் எளிதில் நிறுத்தவல்லது இசை. இவ்வல்லமையற்றது இசையாகாது. அதை வசை என்றுங் கூற லாம். அருவி முழவு, தரங்கப்பாட்டு,. மூங்கில் ஓசை, வண்டு யாழ், பறவைத் துழனி, 1தேவாரப் பண் ஆதியன, மதயானை - சீறு புலி- மனக்குரங்கு முதலியவற்றின் மூர்க்கத்தைப் போக்கி, அவற்றை யும் வயப்படுத்தும் பண்பு வாய்ந்தன. கருவி கரணங்களை எழுப்பிக் கூத்தாடச் செய்வதை இசை என்று இயம்பலாமா? இந்நாளில் சங்கீதம் என்னும் பெயரால் மேடைகள் விரிந்தும், உயர்ந்தும் வருகின்றன. அம்மேடைகள் கிளப்பும் ஒலி, வாழ்க்கையை வழிப்படுத்துகிறதா இல்லையா என்று சோதித்துப் பார்த்தல் வேண்டும். அது வாழ்க்கையை வழிப் படுத்துவதாயின், அதை இசை என்று கொள்ளலாம். இல்லை யேல் என்னென்று கொள்ளல்வேண்டும்?. . . . இயற்கை இசையும், அதற்கு அரண் செய்யும் பண்களும் அமைதி உலகைப் படைக்கும். இப்படைப்புக்கென்று இசை வழிபாடு நிகழ்வதாக. உயிர்த் தொண்டு வழிபாடுகளில் உயிர்த்தொண்டும் ஒன்று. இதை அறிவுறுத்தாத சான்றோர் இல்லை. உயிர்த்தொண்டு செய்யப் புகுவோர் முதலில் தம்மைத் தொண்டராக்கிக் கொள்வது நல்லது. தொண்டரல்லாதார் உயிர்த்தொண்டு செய்யப் புகுந்தால் ஊருக்கே கேடு விளையும். விளைந்த கேடுகள் வர லாற்று நூல்களில் படிந்து கிடக்கின்றன. சகோதரர்கள் தமது நலத்தை எண்ணியும், பேர்புகழ்களைக் கருதியும், பதவி பட்டங் களை நினைந்தும், பிற பேறுகளை உன்னியும் தொண்டர் என்னும் பெயரால் வெளிவந்து, உலகைக் கெடுப்பது அற மாகாது. அச்சகோதரர்கள் - வழிபாட்டால் தங்களைப் பண் படுத்தித் தொண்டில் இறங்குவார்களாக. முத்திறம் வழிபாட்டு முறைகளை நம் முன்னோர் முத்திறமாகப் பிரித்துள்ளனர். முதலாவது பரம்பொருளையே புகழ்ந்து நிற்பது; இரண்டாவது குறைபாடுகளை முறையிட்டு முறை யிட்டு, அழுது அழுது, மன்னிக்குமாறு பரத்தை வேண்டுவது; மூன்றாவது தன்னலம் கருதி கோயிலுக்குப் போவது. இம்மூன்றும் முறையே உத்தமம், மத்திமம், அதமம் என்று முதியோரால் சொல்லப்பட்டன, 1வரிவள ரவிரொளி யரவரை தாழ வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக் கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் கனலெரி யாடுவர் காடரங் காக விரிவளர் தருபொழி லிளமயி லால வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும் எரிவள ரினமணி புனமணி சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர் அழகினை அருளுவர் குழகல தறியார் கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர் நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார் சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி ஏற்றையொ டுழிதரு மெழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார் திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி வீந்தவர் சுடலைவெண் ணீறு மெய்பூசி வேறுமோர் சரிதையர் வேடமு முடையர் சாந்தமு மகிலொடு முகில்பொதிந் தலம்பித் தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி ஏந்துவெள் ளருவிக ளெழில்திகழ் சாரல் இடைச்சுர மேவிய இவர்வண மென்னே. இது பரம்பொருளைப் புகழ்தல். 1வேயே யனதோ ளுமையுதவும் மிளிர்பொற் கலசப் பாலுண்ட தூயோய் இருகன் னியர்கணவா சோதி வேலா மயில்வீரா நாயேன் இழைத்த பிழைபொறுத்துன் நளின பாதந் தரல்வேண்டும் ஆயே யனைய போரூரா அடியேன் உன்றன் அடைக்கலமே. மாண்டு பிறவா நெறியருளும் மன்னா வானோர் முதலெவரும் வேண்டும் பொருளே பொய்யவனேன் மெய்யாந் துணையே நாயடியேன் ஈண்டிங் கிழைத்த குற்றங்கள் எல்லாம் பொறுத்தே எளியேனை ஆண்டு கொளல்வேண் டும்போரூர் ஐயா வுன்றன் அடைக்கலமே. வினையேன் இழைத்த பெரும்பிழைகள் பொறுத்தாட் கொண்ட மெய்த்தேவே நினையேன் வேறோர் புகலிடமும் அறியேன் சிறியேன் நின் மலனே கனை மா பிறவிக் கடல்கடப்பக் கழல்தாட் கலனைத் தரவேண்டும் அனை யே யனைய போரூரா அடியே னுன்றன் அடைக்கலமே. பொன்னே யனைய அருள்தந்தாய் பொற்பார் திருத்தாள் தொழத்தந்தாய் மன்னே யதனை மறந்திகழ்ந்த மதியி லேனென் றினியுய்கேன் மின்னே யனைய பொய்வாழ்வை விழைந்த கடையே னாயிடினும் அன்னே யனைய போரூரா அடியே னுன்றன் அடைக்கலமே. ஏது செயினுங் கொடியேனுக் கிரங்கி யாண்ட பெருந்தாதாய் தீத னிவனென் றெனை யிகழ்ந்தாற் சிறியேற் குயுமோர் நெறியுளதோ ஓது மதிபோல் அருளமிர்தம் உதவும் ஆறு முகப்பெருமான் ஆசி புதல்வா போரூரா அடியே னுன்றன் அடைக்கலமே. கண்ணின் மணியே யுயிர்க்குயிரே கரும்பின் சுவையே பெருந்தேனே நண்ணுங் கதியே சுரர்பதியே நாதா அதிக சிவபோதா எண்ணும் அடியார் பெருவாழ்வே என்னா யகனா கியதேவே அண்ணுங் கனியே போரூரா அடியே னுன்றன் அடைக்கலமே. இது முறையீடு. தியானம் எற்றுக்கு? தியானம் எற்றுக்கு? gu«bghUis¤ âahÅ¥gtD¡ F« k‰wtD¡F« v‹d nt‰Wik? என்று கேட்பவரும் இருக்கின்றனர். அவரை நோக்கி, வாழ்க்கையில் அமைதி வேண்டுமா? nt©lhth? என்று யான் கேட்கிறேன். அமைதி வேண்டா என்று எவர் கூறுவர்? அமைதி வேண்டுமெனில் அதைப் பெறுதற்குரிய வழி என்ன? வழி உண்டா? இல்லையா? வழி உண்டு. அமைதி நிலவாதவாறு கேடுசூழப் புறமனம் காத்து நிற்கிறது. அக்காவல் ஒதுங்கினாலன்றி அமைதி நிலவுதல் அரிது; காவல் தானே ஒதுங்குமோ? அதை ஒடுக்கியே ஒதுக்கல் வேண்டும். அதை ஒடுக்கவல்லது எது? தியானம். அத்தகைய தியானம் வாழ்க்கைக்கு வேண்டுமா? வேண்டாவா? தியானத்தில் நிற்போனைப் புறமனக் குறும்பு ஒன்றும் செய்யாது. மற்றவனை அஃது அலைக்கும். அவன் வாழ்க்கைக் கும் இவன் வாழ்க்கைக்கும் வேற்றுமை இருக்குமா? இராதா? ஒழுக்கம் விழுப்ப முடையது; அதை உயிரினும் ஓம்புதல் சிறப்பு என்று அறிஞர் பேசுகின்றனர்; எழுதுகின்றனர். வெறும் பேச்சும் எழுத்தும் ஒழுக்கத்தை ஓம்புமா? ஒழுக்கத்துக்கு உறைவிடம் நடுமனம். அம்மனத்தை விளங்கச் செய்வது தியானம். அடிமனம் தெய்விகத்துக்கு இருப்பிடம். அம்மனத்தையும் விழிக்கச் செய்வது தியானம். புறமனத்தை ஒடுக்கி, ஒழுக்கத்துக்கும் தெய்விகத்துக்கும் ஆக்கந்தேடும் தியானம் வேண்டுமா? வேண்டாவா? எவர் பொருட்டு? வழிபாடு எவர் பொருட்டு? மக்களின் பொருட்டா? பரத் தின் பொருட்டா? மக்கள் பொருட்டே வழிபாடு நிகழ்ந்து வருகிறது. பரத்தின் பொருட்டு அஃது எற்றுக்கு நிகழ்தல் வேண்டும்? பரம்பொருள் பொதுவாயிருப்பது. பொது எல்லார்க்கும் பொதுவில் காற்று வீசுகிறது. கதிரொளி கால்கிறது; மழை பெய்கிறது. அதே போல எல்லார்க்கும் பொதுவில் பரத்தின் அருள் பொழிகிறது. அஃது ஓரிடத்தில் அதிகமாகவும், மற்றோரிடத்தில் குறைவாகவும் பொழிவதில்லை. அவ்வருளைப் பெறுதற்கு மகன் வழிபாடு செய்தல் வேண்டும். கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுங் களிப்பே காணார்க்குங் கண்டவர்க்குங் கண்ணளிக்குங் கண்ணே வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே நரர்களுக்குஞ் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே எல்லார்க்கும் பொதுவில்நட மிடுகின்ற சிவமே என்னரசே யான்புகலும் இசையுமணிந் தருளே. என்று இராமலிங்க சுவாமிகள் அருளியுள்ளார்கள். சுவாமி கள் கண்ட உண்மை இப்பாட்டாகியது. இக்கருத்து கிறிது பெருமான் மலைப்பொழிவிலும் இலங்குகிறது. பெருமான் மலைப்பொழிவையும் மற்ற மணி மொழிகளையும் கிறிது மொழிக்குறள் என்னும் நூலாகப் பாடியுள்ளேன். அதிலுள்ள இரண்டு குறள் வருமாறு : நல்லார்க்கும் பொல்லார்க்கும் ஞாயிறெழ இறைவன் எல்லார்க்கும் செய்கின்றான் இன்பு. நடுநிலையர் மற்றவர் நன்றுபெற மாரி விடுகின்றான் தேவன் விழைந்து. இருளும் அருளும் மகன் நிகழ்த்தும் வழிபாட்டளவில் அவனது அக இருள் நீங்கும்; அவ்வளவில் அருள்ஒளி விளங்கும். வழிபாடு பூரணம் எய்திய நிலையில் இருள் முற்றும் அகலும்; அருளும் முற்றும் படியும். செல்வம் வழிபாட்டைப் பற்றி உலவும் கருத்துக்கள் கணக்கிடற் பாலன அல்ல. அவற்றுள் சிலவற்றையாவது ஈண்டு விரிக்க என் மனம் எழவில்லை. ஒன்றை மட்டும் உரைக்கலாமென்று எண்ணுகிறேன். ஒருவன் நாடோறும் கோயிலுக்குப்போய் வழிபாடு செய்கிறான். இன்னொருவன் கோயிலுக்கே போவதுமில்லை; வழிபாடு செய்வதுமில்லை. அவனை வறுமை வாட்டுகிறது. இவனைச் செல்வம் சிறப்பிக்கிறது. முன்னவனுக்கு வயிறெரி கிறது. அவன் என்ன! யான் நாடோறும் கோயிலுக்குப்போய் வழிபாடு செய்கிறேன். என்னை வறுமை வாட்டுகிறது. கோயி லுக்கே செல்லாத பாவிக்குச் செல்வம் சிறக்கிறது. பரம் பொருளுக்குக் கண்ணில்லைபோலும் என்று வழிபாட்டையே ஏசுகிறான். வழிபாட்டுக்கும் செல்வப் பேற்றுக்கும் தொடர்பில்லை. உண்மை வழிபாடு மற்றவர் செல்வத்தைக் கண்டு பொறாமை யுறாது. போலி வழிபாடே பொறாமையை எழுப்பும்; பிறரைப் பழிக்கும்; பரத்தையும் நிந்திக்கும். பயன் கருதாமை செல்வப் பேறோ பிற பேறுகளோ கருதிப் பரத்தை வழி படுவது உண்மை வழிபாடாகாது. பயன் கருதாமை வழி பாட்டின் உயிர்நாடி என்பது சான்றோர் கருத்து. இது கீதையின் உள்ளம். வழிபாடு நேரியதாயிருத்தல் வேண்டும். அது விழுப்பந் தரும். விழுப்பம் யாருக்கு? வழிபடுவோருக்கென்க. பரத்தி னிடத்து ஒன்றையும் எதிர்பாராது ஒருவன் நிகழ்த்தும் வழி பாடே சிறந்தது. வழிபாடு எவர் பொருட்டு? மக்களின் பொருட்டா? பரத்தின் பொருட்டா? விடை வேண்டுங் கொல்! சேர்ந்து வழிபாட்டைத் தனித்துச் செய்வதா? சேர்ந்து செய்வதா? அறிஞர் அதையும் வியக்கின்றனர்; இதையும் வியக்கின்றனர். ஒருவர் இருவர் அருளாளராவதினும், பலர் அருளாளராவது உலகுக்கு விரைவில் நலம் பயக்கும். சேர்க்கையில் உணர்வு பெருகுதல் இயல்பு. சேர்க்கை வழிபாடு செகத்தையே ஒன்று படுத்தும். அச்சேர்க்கைமீது நாட்டஞ் செலுத்துவோம். 4. சேர்க்கை சேர்க்கை இயற்கையா? செயற்கையா? இயற்கை. இயற்கையில் பிரிவு இல்லையோ? உண்டு. ஆனால் அது பிரிவுக்கென்று நிகழ்வதில்லை; சேர்க்கையின் ஆக்கத்துக் கென்று நிகழ்வது. அப்பிரிவு, தன்னை என்றும் நிலைபேறாக்கத் தோன்றுவதன்று. அது நிலையில்லாத ஒன்று. அத்தகைய பிரிவு எங்ஙனம் இயற்கையின் பாற்படுவதாகும்? யாண்டும் சேர்க்கை யாண்டில்லை? அது யாண்டும் இருக்கிறது. சேர்க்கை செறியாத இடமில்லை என்று சுருங்கச் சொல்லலாம். கலையும் புவனமும் தத்துவக்கலைகளையும் தத்துவப்புவனங்களையும் எண்ணுவோமாக. அவை எங்கே தோன்றுகின்றன? எங்கே ஓடுங்குகின்றன? எண்ணங்கள் எங்கெங்கேயோ ஓடுகின்றன; திரிகின்றன; திரும்புகின்றன; வாடுகின்றன; எழுகின்றன; மீண்டும் ஒடுகின்றன; திரிகின்றன; . . . .எண்ணங்களில் என்னென்னவோ தோன்றுகின்றன. அத்தோற்றங்கள் தொடர்ந்து தொடர்ந்து நீண்டு நீண்டு செல்கின்றன. அவை எங்கே சென்றாலும், எங்கே முட்டினாலும், எங்கே மோதினாலும் ஒரு முடிவை அடைந்து தீரல்வேண்டும். அம் முடிவைப் பற்றித் தத்துவ உலகில் அறிவுப்போர் இன்னும் நிகழ்ந்து வருகிறது. ஒலி தத்துவங்கள் அணு அணுவாய் நுணுகி நுணுகி ஒளியாய் ஒலியாகும். ஒலியை முடிவாகக் கொள்ளலாமோ? கொள்ள லாகாது. ஏன்? ஒலியும் வடிவுடையதென்பது ஆராய்ச்சியால் நிறுவப்பட்ட உண்மை. அவ்வடிவு யோகியர்க்குப் புலனாகியது; இனிவரும் விஞ்ஞானியர்க்கும் நன்கு புலனாகும். புலனாகும் ஒன்று வடிவுடையது; மாறுந் தன்மையது. மாயை அமைதியில் நின்று ஒலியை ஆய்ந்தால் அதன் மூலம் புலப்படும். அம்மூலம் மாயை என்று கருதப்படுகிறது. (மாயை மூவகை. அவை பிரகிருதி, அசுத்தம், சுத்தம் என்பன. சுத்த மாயை நுண்ணியது. அதன் தடிப்பு அசுத்த மாயை. இதன் தடிப்பு பிரகிருதி மாயை. மாயையின் தோற்றுவாய் ஒலி அல்லது நாதம். இங்கே ஒலியின் மூலம் பொதுவாக மாயை என்று கூறப்பட்டது.) மாயை பொருள் என்றும் சொல்லப்படுகிறது. பொருள் அன்று என்றும் சொல்லப்படுகிறது. இரண்டும், ஆன்றோர் மொழிகள். அங்கும் ஐயப்பாடே. மகன் மெய்யுணர்வு பெறும் வரை, அவன்பால் ஐயப்பாடு ஊசலாடிக் கொண்டிருக்கும். மாயை பொருளோ? பொருளன்றோ? அதைப்பற்றிய கவலை இங்கே வேண்டுவதில்லை. மாயை பொருள் அன்று என்று வாதிப்போரும் விவகார உலகில் அது பொருள் என்று புகல்கின்றனர். விவகாரம் நமது வாழ்க்கை விவகார உலகிலேயே நடக்கிறது. யான் அவ்வுலகிலிருந்தே கடனாற்றுகிறேன். விவகார உலகில் மாயை பொருள் என்பதில் கருத்து வேற்றுமை பெரிதும் இல்லை. அவ்வுலகில் எழுந்த ஆராய்ச்சி, எல்லா உலகங்கட்கும் மூல காரணம் மாயை என்று தெரிவிக்கிறது. மாயைத் திரட்சி அம்மாயை முதல் முதல் ஒலியாகிறது. ஒலி ஒளியாகிறது. ஒளியினின்றும் பலதிறத் தத்துவங்கள் தோன்றுகின்றன. இத்தத்துவங்கள் கலைகளாகவும் புவனங்களாகவும் உருவெடுக் கின்றன. உருவெடுத்த கலைகள் எத்துணை! புவனங்கள் எத் துணை! இவை யாவும் படிப்படியே சேர்க்கை பெற்ற திறங்கள் சிந்தனைக் குரியன. கலையும் இனமும் கலை நூல்களைக் கருதுவோம். அவற்றின் மூலமாகிய மாயை, ஒலியாய், எழுத்தாய், சொல்லாய், தொடராய், பகுதியாய் நூலாகிறது. நூல் பலதிறச் சேர்க்கை பெற்ற ஒரு பிண்டம். கலையில் எத்தனையோ இனங்களிருக்கின்றன. அவை யாவும் கலை என்னும் ஒரு பொதுச் சேர்க்கையில் அடங்கி நிற்கிறது. புவனம் புவனமும் பலதிறச் சேர்க்கை பெற்ற ஒரு பிண்டமே. மாயா ஒலித்திரள் அணு அணுவாய்ச் சேர்ந்து சேர்ந்து புவனமாகிறது. புவனம் சேர்க்கையின் ஆக்கமா? அன்றா? உன்னுங்கள். கலைகள் எவ்வளவு? புவனங்கள் எவ்வளவு? அவ்வளவும் சேர்க்கையே. தொல்காப்பியம் கலைகளில் எதை ஆய்ந்தாலும் அது பலவிதச் சேர்க்கை களைப் பெற்ற ஒன்று என்பது நனி விளங்கும். எடுத்துக் காட்டுக்கென்று ஈண்டு ஏதேனும் ஒரு கலையைக் கொள்வது நலம். எக்கலையைக் கொள்வது? என் மனம் எதை எதையோ நினைக்கிறது; நினைந்து நினைந்து ஓரிடத்தில் அமர்கிறது. அவ்வோரிடம் தொல்காப்பியக் கலை என்று நேயர்கட்கு அறிவிக்கிறேன். உலகக் காப்பியம் தொல்காப்பியம் எது? யான் உலகையே தொல்காப்பியம் என்று சொல்வது வழக்கம். உலகம் ஒரு காப்பியம் என்று அறிஞர் கூறுவர். அக்காப்பியத்தின் வயது என்ன? இருநூறு கோடி. அதைத் தொல்காப்பியம் என்று சொல்லலாமன்றோ? அத்தொல்காப்பியத்திலுள்ள பொருள்களெல்லாம் படிந்து வருமாறு ஒரு கலை வடிக்கப் பெற்றது. அது முதன்முதல் தமிழில் வடிக்கப்பெற்றது. அதுவே, தொல்காப்பியம் என்னும் தமிழ்க்கலை. தொல்காப்பியச் சேர்க்கை தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்று மூன்று சேர்க்கை கொண்ட ஒரு பெரிய நூல். எழுத்து ஒலியின் சேர்க்கை. சொல் எழுத்தின் சேர்க்கை. சொல்லின் சேர்க்கை பொருள். பொருளில் என்ன பேசப் படுகிறது? உலகச் சேர்க்கை பேசப்படுகிறது. அமைப்பு தொல்காப்பியப் பொருளில் நால்வகை நிலங்கள், அவ்வந் நிலத்துக்குரிய மரங்கள், பூக்கள், பறவைகள், விலங்குகள், மக்களினங்கள், பெண் ஆண் வாழ்க்கை, வழக்க ஒழுக்கங்கள், செய்யுள் யாப்புக்கள் முதலியன ஓவியங்களாய் அமைந்துள்ளன. அவ்வோவியங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சேர்ந்தே நிற்கின்றன. நிலத்தொடர்பு நால்வகை நிலங்கள் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்திருக்க வில்லை. அவை ஒன்றை ஒன்று தொடர்ந்து தொடர்ந்து இடை யீடின்றிக் கிடக்கின்றன. இத்தொடர்புடைய நால்வகை நிலங்களாலாகியதே உலகம் - நாம் வாழும் உலகம். உலகம் நாம் வாழும் உலகம் தனித்தா நிற்கிறது? அது தனித்து நிற்றல் முடியாது. அது சேர்க்கை பெற்றே நிற்கிறது. நாம் வாழும் உலகம் ஞாயிற்றைச் சுற்றுகிறது. மற்ற உலகங்களும் அவ்வாறே சுற்றுகின்றன. அவ்வுலகங்கள் ஒவ்வொன்றும் ஞாயிற்றின் கதிரால் உறவு கொண்டு, எவ்வித முட்டுமின்றிப் பிணக்கு மின்றிச் சுற்றிச் சுழன்று வருவதை - மனமே! நினைந்து பார்; பிரிவை நினையாதே; சேர்க்கையை நினை; நீ வாழ்வாய்; உலகமும் வாழும். உலக உறவு எல்லா உலகங்களும் தங்களுடன் உறவு கொண்டிருப்ப தோடு ஞாயிற்றுடனும் உறவுகொண்டிருக்கின்றன. ஞாயிறும் எல்லா உலகங்களின் உறவைப்பெற்றிருக்கிறது. இல்லையேல் எவ்வுலகமும் இராது; ஞாயிறும் இராது. இங்கே உலகங்களும் ஞாயிறும் ஒன்றோடொன்று சேர்க்கை பெற்றிருத்தல் கருதற்பாலது. இனம் புல், செடி, கொடி, மரம், புழு, பறவை, விலங்கு, மனிதம் முதலியவற்றைப் பாருங்கள். ஒவ்வொன்றும் தன் தன் கூட்டத் துடன் சேர்ந்து வாழ்கிறது. புல்லில் பல இனங்களிருக்கின்றன. அவ்வவ்வினம் அதன் அதனுடன் ஒன்றுபட்டு உறைகிறது. அவ்வினங்களெல்லாம் சேர்ந்த ஒன்று புல் என்ற பொதுப் பெயரைப் பெற்றிருக்கிறது. அதனால் புல் - புல்லினம் என்ற ஆட்சி பிறந்ததென்று தெரிகிறது. இவ்வாறே மரம் - மரவினம், புழு - புழுவினம், மீன் - மீனினம், பாம்பு - பாம்பினம், பறவை - பறவையினம், விலங்கு - விலங்கினம், மக்கள் - மக்களினம், முதலிய வழக்காறுகள் தோன்றின. வகைக்குள் தொகைகள் துலங்கு கின்றன. அவற்றுள் சேர்க்கை சிறத்தல் சிந்திக்கத் தக்கது. சாதி, சமயம், நிறம்,மொழி, நாடு முதலியவற்றிலும் வகையும் தொகையும் தொடர்பு பெற்றுள்ளன. மனித வகுப்பு ஒன்று. அதில் எத்தனையோ தொகுப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறே சமயம் முதலிய ஒவ்வொன்றிலும் தொகுப்புக்கள் உண்டு. தொகுப்புக்கள் திரண்டு திரண்டு வகுப்புக்களாதலை உன்னிச் சேர்க்கை நுட்பத்தை உணர்வது அறிவுடைமை. இவ்வாறே கலைகளிலும் வகையும் தொகையும் இருத்தல் மேலே சொல்லப்பட்டது. உலகம் ஒன்று. அது, சரம் என்றும் அசரம் என்றும், அஃறிணை என்றும் உயர்திணை என்றும் வகுக்கப்பட்டிருக் கிறது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வோரினம். ஆனாலும், எல்லாம் ஒன்றுடன் ஒன்று சேர்க்கை பெற்றிருக்கின்றன. எல்லாம் சேர்ந்த ஒன்றே உலகம். சேர்க்கையின்றி உலகம் நிலவாது; வாழாது. வளர்ச்சி உலகில் வளர்ச்சி என்றொரு பண்பு இயற்கையில் அமைந்திருக்கிறது. அது கூர்தல் அல்லது உள்ளது சிறத்தல் (Evolution) என்பது. இதை ஆய்ந்தால் ஒன்றிலிருந்தே பலவகை உடலங்கள் தோன்றிய நுட்பம் தெரியவரும். முதல் முதல் ஒரு பெண் தாது பிறந்தது. அதிலிருந்து ஓர் ஆண் தாது பிறந்தது. இரண்டும் சேர்ந்து சில தாதுப் பொருட்களை ஈன்றன. அவற்றிலிருந்து, புல், செடி, கொடி, மரங்களும் மீன், புழு, பாம்புகளும், பறவைக்கூட்டங்களும், விலங்கினங்களும் மக்கள் குழுக்களும், பிறவும் தோன்றின. இவ்வளர்ச்சியில் பலவிதச் சேர்க்கைகள் உண்டு. வளர்ச்சித் தத்துவத்துக்கும் சேர்க்கை வேண்டுமென்று தெளிக. வீடு - உலகம் மக்கள் வாழ்க்கை, வீட்டில் தொடங்குகிறது. அங்கே சேர்க்கை உண்டா? இல்லையா? இல்லை என்று எவரும் கூறார். அவ்வீடு, தெருவாய், ஊராய், வட்டமாய், மாவட்டமாய், நாடாய், உலகாகிறது. இதில் சேர்க்கைத்திறம் வெள்ளிடை மலையென விளங்குகிறது. உலகம் - அகிலம் - பரம் நாம் வாழும் உலகமும், மற்றக் கோள்களும், உடுக்களும், பிறவும், ஞாயிறும் ஒன்றுபட்ட ஒரு குடும்பம் என்பது இயற்கை ஆராய்ச்சியால் நன்கு விளங்குகிறது. இவை எல்லாம் சேர்ந்த ஒன்றே அகிலம் என்பது. ஓர் அகிலம் இன்னோரகிலத்துடன் தொடர்பு பெற்றே நிற்கிறது. எல்லா அகிலங்களும் இயங்கு தற்குத் துணை புரிவது பரம்பொருள். இப்பரம்பொருள் எவ்வாறு துணைபுரிகிறது? எல்லா அகிலங்களிலும் - எங்கெங்கும் - நீக்கமறச் சேர்ந்து நின்று பரம்பொருள் துணை புரிகிறது. உரைசேரும் எண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில் வரைசேரும் முகில் முழவ மயில்கள் பல நடமாட வண்டு பாட விரைசேர்பொன் னிதழிதர மென் காந்தள் கையேற்கும் மிழலை யாமே. என்று ஞானசம்பந்தப் பெருமான் அருளியதை அமைதி யில் நின்று நினைக்க நினைக்கப் பரம்பொருளின் சேர்க்கை நுட்பம் இனிது புலனாகும். எல்லாவற்றிலும் சேர்ந்து நின்று உயிர்கட்குத் துணைபுரியும் பரம்பொருளை எம்முறையில் வழிபடுவது? தனித்து நின்றா? சேர்ந்து நின்றா? சேர்ந்து நின்று வழிபடுவது சிறப்பு. சேர்க்கை வழிபாடு உலகில் வெவ்வேறு முறையில் நடைபெற்றுவருகிறது. அதைக் கூர்ந்து கூர்ந்து உணரவேண்டுவது மக்கள் கடமை. எல்லாவற்றிலும் நீக்கமின்றிச் சேர்க்கை பெற்றுள்ள பரத்தை வழிபடுவது எல்லாவற்றையும் எதையும் வழிபடுவ தாகும். இது பற்றியே மற்ற வழிபாடுகளினும் பரவழிபாடு சிறப்பாகச் சான்றோரால் அறிவுறுத்தப்பட்டது. கூறுகள் மக்கள், கூட்டங் கூட்டமாகக் கோயிலுக்குப் போகிறார் கள்; பாடல் பாடுகிறார்கள். வணக்கஞ் செய்கிறார்கள். மேலும் சில வழிபாடுகள் அவர்களால் ஆற்றப்படுகின்றன. உலகில் வகுப்புச் சங்கங்கள், சமயச் சபைகள், கல்விக்கழகங்கள் ,அரசியல் மன்றங்கள் முதலிய அமைப்புக்கள் ஆங்காங்கே காணப் பட்டுள்ளன. பலதிறப்பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், தொழிற்சாலைகள், திக்கற்றவர் விடுதிகள் முதலியன யாண்டும் பிறங்குகின்றன; கூட்டுறவு இயக்கம், சாரண இயக்கம், சகோதர இயக்கம் முதலியன எங்கணும் இலங்குகின்றன. இவை யாவும் சேர்க்கை வழிபாட்டின் கூறுகள். இவ்விடங்களில் வழிபாடுகள் துண்டு துண்டாக நிகழ்கின்றன. இவற்றின் குறிக்கோள் உலகச் சேர்க்கை என்பதில் ஐயமில்லை. தன்னலமற்ற தொண்டு கோயில் ஒன்றுதானே வழிபாட்டுக்கு உரிய இடம். பிற அமைப்புக்கள் வழிபாட்டுக்கு உரிய இடங்களா என்று சிலர் கருதல் கூடும். தன்னலமற்ற தொண்டுகள் எவ்விடங்களில் நிகழினும் - எவ்வமைப்புக்களில் நிகழினும் - அவை யாவும் வழி பாட்டுக்குரிய கோயில்களேயாகும். இங்கே எண்ணத்தக்கது சேர்க்கை வழிபாடு ஒன்றே. தனிமை துண்டு துண்டாக நடைபெறும் சேர்க்கை வழிபாட்டில் தனிமை தலைகாட்டாமலிராது, அதனால் உலகச் சேர்க்கைக்கு இடர் விளையும். உலகில் தோன்றிய பெரியோர் அனைவரும் தான் என்பதை அதாவது தனிமையைத் தொலைக்கவே முயன்றனர். தனிமை என்பது சேர்க்கைக்கு இடர் விளைப்ப தென்று அவர் நன்கு உணர்ந்தமையால், அதைத் தொலைக்க அவர் முயன்றனர் என்று யான் கருதுகிறேன். தனிமையைத் தொலைக்க அவ்வக்காலப் பெரியோர் கொண்ட முறை அவ்வக் காலத்துக்கு உரியதாயிற்று. முறை இக்காலத்துக் குரியதாய்ப் புத்துயிர் பெறல் சிறப்பு. கார்ல் மார்க் தனிமையைத் தொலைக்க இந்நாளில் முனைந்தவர் சிலர். அவருள் குறிக்கத்தக்கவர் கார்ல் மார்க். கார்ல் மார்க் (1818-1883) ஜெர்மனியில் பிறந்தவர்; அறிஞர் ஹெகலிடம் தத்துவம் பயின்றவர். அவர்க்கும் இவர்க் கும் கருத்தில் வேற்றுமை விளைந்தது. கார்ல் மார்க்ஸுக்குத் தனிமையில் - தனிமைப் பொருளுடைமையில் -வெறுப்பும், சேர்க்கையில் - சேர்க்கைத் தொழின் முறையில் - விருப்பும் உண்டாயின. இக்கொள்கை அக்கால ஜெர்மனிக்குப் பிடிக்க வில்லை. அதை முன்னிட்டு ஜெர்மனி மார்க்ஸைத் துரத்தியது. கார்ல் மார்க் என் செய்தார்? ஜெர்மனியின் பொருட்டுத் தமது கொள்கையை விட்டுக் கொடுக்க நினைந் தாரில்லை. அவர் தமது கொள்கையில் உறுதியுடன் உறைந்தே நின்றனர். மார்க் பெல்ஜியம் நோக்கினர். பெல்ஜியம் அவரை ஏற்றதா? இல்லை. அவர் பிரான்ஸுக்கு ஓடினர். பிரான் குடியரசு நாடு. அந்நாடாதல் அவர்க்கு இடந்தந்ததா? இல்லை. ஏழை மார்க்ஸின் நெஞ்சம் சுழன்றது. சுழன்ற நெஞ்சில் இங்கிலாந்து தவழ்ந்தது. கருத்து வேற்றுமையை மதிக்கும் பெருமை வாய்ந்த இங்கிலாந்து மார்க்ஸுக்கு இடம் கொடுத்தது. அவர் காலம் அங்கேயே கழிந்தது. மார்க்ஸுக்கு இங்கிலாந்து இடம் கொடாமல் அவரை அலைய வைத்திருப்பின், உலகை ஒருமைப்படுத்த வல்ல காபிடல் போன்ற சீரிய நூல்கள் வெளி வந்திருக்குமோ? புது உலகம் மார்க்ஸின் உள்ளத்தில் பழைய உலகின் சிறுமைகள் புகுந்தன; அவ்வுலகின் அலைவும் குலைவும் தொடர்ந்து நுழைந்தன. உலகைப் புதுக்க அவர் உள்ளம் கிளர்ந்து எழுந்தது; எழுந்து புதிய உலகைப்படைத்தது. அம்மானதப்படைப்பு நூல்களாகவும் இயக்கமாகவும் உருக்கொண்டது. மார்க்ஸைப் புது உலகம் படைக்க வந்த ஒருவர் என்று கூறல் மிகையாகாது. ஏகாதிபத்தியக் கொடுமையால், உலகம், பசி - பட்டினி - நோய் - அகால மரணம் - அடக்கு முறை - உரிமைக்கேடு - போர் முதலியவற்றறால் அரிக்கப்படுவது கார்ல் மார்க்ஸின் நெஞ்சைப் பிளந்தது; புது உலகைப் படைக்கக் கடவியது. அவரது கல்வியும், கேள்வியும், அறிவும், அன்பும், ஆராய்ச்சியும், அநுபவமும் - முதல் தொழில் அற்ற ஓர் உலகை, வறுமைக் கொடுமை செல்வத்திமிர் அற்ற ஓர் உலகை, போலி பட்டாளம் அற்ற ஓர் உலகை, அரசும் அற்ற ஓர் உலகை, உற்பத்தி சாலை போர்க்கருவிகளை வடியாததைக் காணும் ஓர் உலகை, சாதி மத நிற நாடு முதலிய வேற்றுமைகள் நெளியாத ஓர் உலகை, எல்லா மக்களும் ஒரே சமூகம் என்று கொள்ளும் ஓர் உலகை, தனிமை அதாவது தன்னலம் அற எல்லாரும் சேர்ந்து தொழில் புரிந்து வாழும் ஓர் உலகை, இவையெலாஞ் சேர்ந்த ஒரு புது உலகைப் படைக்க நெருக்கின. அந்நெருக்கு மார்க்ஸியமாய் ஒரு புது உலகைப் படைத்தது. லெனின் புது உலகை அமைக்க வல்லது மார்க்ஸியம். அம் மார்க்ஸியம் பலரால் ஆராய்ச்சி செய்யப்பெற்றது. அவ் ஆராய்ச்சியினின்றும் வெளி வந்த கருத்துக்கள் பல. அவற்றுள் பெரும்பான்மையன உதட்டு அளவில் - வாதப்போர் அளவில் - வெற்றுரை அளவில் நிற்கலாயின. மார்க்ஸியத்தைப் பயின்று, தெளிவடைந்து, அதை மக்கள் வாழ்க்கையாக்க முனைந்து முயன்றவர் சிலர். அவருள் சிறந்தவர் லெனின் என்பவர். லெனின் தலைமையில் டிராட்கி முதலியோர் எழுப்பிய கிளர்ச்சியால் ருஷ்யாவில் (1917)ஒரு பெரும் புரட்சி நிகழ்ந்தது. அதன் பயனாக மார்க்கிஸியம் ருஷ்யாவில் ஒர் அளவில் - மிகச் சிறிய அளவில் - கால் கொண்டது. அஃது இன்னும் நிலையமாக எழவில்லை. ஏன் எழவில்லை? கட்சி லெனின் (1924) மறைந்தபின் அவர் தம் சீடர்களுக்குள் நேர்ந்த பிணக்கு, டிராட்கி கட்சி என்றும், டாலின் கட்சி என்றும் இருபிரிவைத் தோற்றுவித்தது. அதனால் டாலின் ஆட்சி ஆக்கம் பெற்றது. கருத்து வேற்றுமை வளர்ந்தது. அவ்வேற்றுமை மூர்க்கத்தால் ஒடுக்கப்பட்டது. மார்க்ஸிய வளர்ச்சிக்குக் கருத்து வேற்றுமை உயிர் போன்றது. அவ்வுயிர் மாய்க்கப் பட்டது. ஒரேவிதக் கருத்து நெளியலாயிற்று. அதனால் வளர்ச்சி குன்றியது; மார்க்ஸிய நிலையம் எழவில்லை. முக்கூறு மார்க்ஸியம் பொதுவாகச் சமதர்மம் என்றும், பொது உடைமை என்றும் பேசப்படுகிறது. இது பருமைப்பேச்சு. மார்க்ஸியத்தின் நுண்மையில் நுழைந்து பார்த்தல் வேண்டும். பார்த்தால் மார்க் பொதுமையில் முக்கூறு இருத்தல் இனிது விளங்கும். முதற்கூறு சோஷியலிஸம்; இரண்டாவது கம்யூனிஸம்; மூன்றாவது பெர்பெக்ட் (Prefect) கம்யூனிஸம் அதாவது முழு கம்யூனிஸம். இதைச் சுத்த கம்யூனிஸம் என்று சொல்லலாம். ருஷ்யா இப்பொழுது ருஷ்யாவிலுள்ளது ஒருவித சோஷிய லிஸம். லெனின் மறைந்து பல ஆண்டுகளாயின. ஆகியும் ருஷ்யா சோஷியலிஸ அடியிலேயே நிற்பதாயிற்று. அச் சோஷியலிஸம், இடைப்பட்ட கம்யூனிஸமாகவும் இன்னும் வளரவில்லை. முழு கம்யூனிஸம் வெறும் கனவு உலகிலேயே நடமாடுகிறது. கருத்து வேற்றுமை வளர்ச்சி உறாமைக்குக் காரணங்கள் பல கூறப்படுகின்றன. அவற்றுள் எதைத் தலையாயதாகக் கொள்ளலாம். எனது சிற்றறிவிற்கு எட்டுவது ஒன்று. அது கருத்து வேற்றுமைக்கு இடம் தந்து, உலகச் சேர்க்கைக்கு ஆக்கந்தேட இப்பொழுதுள்ள ஆட்சி தவறியதாகும். கருத்து வேற்றுமை இடம் பெற்றிருப்பின், பிணக்கால் தோன்றிய இரண்டு கட்சியும் ஒன்றுபட்டிருக் கும். அவ்வொற்றுமை ருஷ்யாவின் வளர்ச்சிக்கும், உலகச் சேர்க்கைக்கும் ஊக்கமூட்டியிருக்கும்; இரண்டாம் உலகப் போர் நடந்திராது. மார்க்ஸியமும் காந்தியமும் கருத்து வேற்றுமை வளர்ந்திருந்தால் சில உண்மைகள் விளங்கி இருக்கும். உண்மை விளக்கத்தால் மார்க்ஸியம் அறி வுறுத்தும் சேர்க்கை அறத்தில் காந்தியம் புகுந்திருக்கும். மார்க்ஸியம் காந்தியத்துடன் கலந்து விரைந்து வளர்தற்கு இடமுண்டாகியிருக்கும். புது உலக ஆக்கத்துக்கு மார்க்ஸியம் மட்டும் போதாது என்றும், அதனுடன் காந்தியமும் சேரவேண்டும் என்றும் யான் பேசியும் எழுதியும் வருவது நாட்டவர்க்குத் தெரியும். மார்க்ஸியத்தின் அடியில் உருளும் உலகாயதமே என்னை இவ்வாறு பேசவும் எழுதவும் தூண்டுகிறது. காந்தியத்தின் அடியில் தெய்விகம் திகழ்வதை யான் நன்கு உணர்கிறேன். மார்க்ஸியம் உடலாகவும் காந்தியம் உயிராகவும் எனக்குத் தோன்றுகின்றன. உடலும் உயிரும் ஒன்றுபட்டுக் குலவுவ தன்றோ வாழ்க்கை? இந்தியா ருஷ்யா, மார்க்ஸியத்தையும் காந்தியத்தையும் ஒன்று படுத்தி வளர்க்குமா? வளர்த்தால் நலன் விளையும். இந்தியாவே இரண்டும் சேர்ந்த ஒன்றை வளர்ப்பதற்குரிய நாடு என்று எனது அநுபவம் அறிக்கைசெய்கிறது. இந்திய முன்னோர் போதித்த சேர்க்கை. சடமும் பரமும் ஒன்றுபட்ட ஒன்றை அடிப்படை யாகக் கொண்டது அவ்வடியினின்றும் சேர்க்கை நிலையம் எழுதல் சிறப்பு. மார்க்ஸியம் உலகச் சேர்க்கை அளவில் நிற்கிறது. அச்சேர்க்கையின் உயிர் பரம் என்பதை உணர்த்த வேண்டுவது இந்தியாவின் கடமை. காலநிலை கார்ல் மார்க்ஸை உலகாயத போதனை செய்யுமாறு ஏவியது. அவர்க்குப் பின்னால் விஞ்ஞான உலகம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. விஞ்ஞானமே பரத்தைக் கொள்ளுங்காலம் பிறந்து வருகிறது. திருவள்ளுவம் மார்க்ஸியமும் காந்தியமும் இன்று தோன்றியவை. இரண்டுக்கும் பிறப்பிடம் சில உண்டு. அவற்றுள் ஒன்று திருவள்ளுவம். திருவள்ளுவர் கொள்கையை ஈண்டு யான் திருவள்ளுவம் என்று சொல்கிறேன். காதல் மணம் திருவள்ளுவர் சேர்க்கை எது? அஃது இயற்கைச் சேர்க்கை. அதை அவர் அருளிய திருக்குறளில் பார்க்கலாம். திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் முப் பாலுடையது. திருக்குறளின் காமம் காதலை உணர்த்துவது. காமத்திற் சிறந்தது காதற்காமம் என்று பரிபாடல் பகர்கிறது. பொருட்பாலும் அறத்துப்பாலும் காமத்துப்பாலின் அரண்கள். காமத்துப்பாலில் காதல் மணம் கமழ்கிறது. காதல் இயற்கையிலுள்ளது. அஃது ஈருயிரை ஒன்று சேர்ப்பது. இதற் கென்று காதல் இயற்கையில் கோயில் கொண்டது. அக் கோயிலைக் காண இயற்கையோடியைந்து வாழ்தல் வேண்டும். அவ்வாழ்வு அன்புக் கடவுளை உணர்த்தும். காதல் வளர்ச்சி காதல் ஈருயிரை ஒன்றுபடுத்தும் அளவில் நின்றுவிடுவ தில்லை. அது குழந்தையாய்ப் பிறக்கவும், அன்பாகிக் குடும்ப மாய் அமையவும் தோன்றாத் துணையாக நிற்கிறது. அன்புக் குடும்பம் ஒரு வீட்டில் மட்டும் கட்டுப்பட்டுக் கிடப்பதன்று. அஃது ஊராய், நாடாய், உலகமாகிறது. உலகம் ஒரு பெருங் குடும்பம். தடைகள் உலகை ஒருகுலக்குடும்பமாக்கும் ஆற்றல் காதலுக்கு உண்டு. அவ்வாற்றலை மறிக்கச் சில செயற்கைத் தடைகள் குறுக்கிட்டுள்ளன. அவை சாதி, மதம், நிறம், சமுகம், நாடு முத லிய வேற்றுமைகளின் விளைவுகள். இவை செயற்கைக் களை கள். களைகள் என்றாதல் பறிக்கப்படும். காதல் மணத்தை மறிக்க எத்துணைச் சாதிச்சட்டங்கள், எத்துணை மதச் சட்டங்கள், எத்துணை நிறச்சட்டங்கள், எத்தனைச் சமுகச் சட்டங்கள், எத்துணை நாட்டுச் சட்டங்கள் உலகில் நிறுவப்பட்டுள்ளன. அவை பாறை போலவும், மலைபோலவும், சுறாப்போலவும், திமிங்கலம் போலவும் காதல் உரிமை நாவாயை மறித்துத் தடுக்கின்றன. இத்தடைகளை நீக்கிக் காதல் மணத்தை உரிமை பெறச் செய்தால் உலகம் ஒரு குலமாதல் திண்ணம். இந்நாளில் வேற்றுமைத் தடைகளை உடைத்துத் தள்ளுதற்கென்று பலதிற இயக்கங்கள் தோன்றி வருகின்றன. இவ்வியக்கங்கள் வெற்றி பெற்றதும் காதல் உரிமையுடன் நடம்புரியும், அந்நடம் காலும் ஒளியால் சாதி மத நிற சமுக நாடு முதலிய வேற்றுமைகளின் உணர்வு ஒடுங்கும். உலகம் ஒரு குலக்குடும்பமாய்க் குலவும். உலகை ஒரு குலக் குடும்பமாக்கத் திருவள்ளுவர் காட்டி யது காதல் வழி. காதல் இயற்கைச் சேர்க்கை; பிரிவன்று. அன்பு காதல் சேர்க்கை கனிந்து கனிந்து, தெய்விக அன்புச் சேர்க்கைச் சுவையை ஊட்டும். தெய்விக அன்புச் சேர்க்கையே பரம்பொருள் சேர்க்கை என்பது. பரம்பொருள் சேர்ந்து கலவாத இடம் உண்டோ? பரம் எல்லாவற்றிலும் - எங்கெங்கும்- நீக்கமற நிறைந்திருப்பது. காதல் சேர்க்கை பரம்பொருள் சேர்க்கையை உணர்த்துவதென்பதை மறத்தலாகாது. பெரியோர் எல்லாவற்றிலும் நீங்காது சேர்க்கை பெற்றுள்ள பரம்பொருளைச் சேர்ந்து வழிபடுவது நல்லதா? தனித்து வழிபடுவது நல்லதா? பண்டைப் பெரியோர் பலரும் பரம் பொருளைத் திருக்கூட்டத்துடன் சேர்ந்து சேர்ந்தே வழிபட்டது உலகுக்குத் தெரியும். சான்றோர் மொழிகளை ஈண்டு நிரப்புதல் கூடும். ஆனால், விரிவுக்கு அஞ்சுகிறேன். இரண்டொன்றை மட்டும் நினைவூட்டுகிறேன். சாங்காஞ் சரணாங்கச் சாமி என்று புத்தர் பெருமானும், நான்கு பேர் எங்கே சேர்கின்றனரோ அங்கே நானும் இருப்பேன். என்று கிறிது பெருமானும், மட்டிட்ட . . . . . . . . . . ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் என்று திருஞானசம்பந்தரும், மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் . . . என்று தாண்டக வேந்தரும் வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்து . . . என்று வாதவூர் அடிகளும், . . . தொண்டரொடு கூட்டுகண்டாய் . . . என்று தாயுமானாரும் அருளியிருத்தல் காண்க. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டத்தொகை சேர்க்கை வழிபாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டு. அத்தொகையில் ஒரு பாட்டு கலங்கரை விளக்கென மிளிர்கிறது. அதைப் பார்ப்போம்; பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. இது, திருத்தொண்டத் தொகையுள் தொகையாய் இலங்குவது. இதைத் தொகையுள் தொகை என்று கூறலாம். திருத்தொண்டர் புராணம் பாடிய சேக்கிழார் சேர்க்கை வழிபாட்டை நூல் முழுவதும் ஆங்காங்கே வலியுறுத்தி யுள்ளனர். அஃது ஊன் உள்ளம் உயிர் எல்லாவற்றையுங் கவரும். ஞானசம்பந்தரையும், நாவுக்கரசரையும் அடியார் குழாம் சந்திக்குங் காட்சிகளில் சேர்க்கை இன்பம், சேக்கிழார் தமிழ்க் கடலில் அன்பு அலையாய்க் கொழிக்கிறது. திருத்தொண்டர் புராணப் பாயிரத்தில் திருக்கூட்டச் சிறப்பு என்றொரு பகுதி, ஏரி நிறைந்த செல்வம் போலக் காட்சியளிக்கிறது. அதில் அழுந்துமாறு நேயர்களை வேண்டு கிறேன். தனித்த வாழ்க்கை உலகில் மக்கள் தனித்து வாழ்தல் அரிது. பிறர் துணை யின்றித் தனித்து வாழ்தலென்பது வீண் கனவு; பேய்த்தேர்; ஆகாயத்தாமரை. ஓர் இளைஞன் தனித்து வாழ வேண்டுமென்று மலைக்குச் சென்றான்; அங்கே ஓர் இடத்தில் தனியே அமர்ந்தான். பசி அவனைப் பீடித்தது. அவ்வேளையில் அவ்வழியே ஒரு முதியோர் அதையும் இதையும் பார்த்து நடந்தார்; இளை ஞனைக் கண்டார்; அவன் பசியால் வாடுவதை உணர்ந்தார்; அவன் அருகே அணைந்தார். முதியோர் இளைஞனை உற்று நோக்கி, உன்னைப் பசி வாட்டுவது எனக்குத் தெரிகிறது. என்னிடம் கட்டுச்சோறு இருக்கிறது. அதை இருவரும் பகிர்ந்து உண்ணலாம் என்றனர். அதற்கு இளைஞன், ஐயா! யான் தனித்திருப்பதற்கு வந்தேன் என்றான். ‘ïij¢rh¥ãL! பின்னே உரையாடலாம் என்றார் முதியோர். பசி இளைஞனை முதியோர் விருப்பத்துக்கு இணங்கச்செய்தது. இருவரும் அன்புடன் உணவருந்தினர். சிறிதுநேரம் ஓய்வுகொண்டனர்; பிறகு, முதியோர் இளைஞனைப் பார்த்து, தம்பி! தனித்த வாழ்க்கை உலகில் நடைபெறாது. இஃது இயற்கை விதி. உன் தாய் தந்தையர் சேர்க்கை இல்லையேல் நீ பிறந்திருப்பாயா? உன் உடல் எவ்வளவு அணுக்களின் சேர்க்கையால் ஆக்கப்பட்டிருக் கிறது! பல உறுப்புக்களால் உன் உடல் அமைந்திருக்கிறதே! நீ அணிந்துள்ள கோவணத்தை நினைந்து பார். பருத்தியைப் பயிரிட்டவர் எத்துணை பேர்? அதை நூற்றவர் எத்துணை பேர்? நிலத்தை உழ உழவன் தேவை. இராட்டையையும் தறியையும் அமைக்கத் தச்சன் தேவை. தச்சனுக்கு உளி தேவை. உளிக்கு இரும்பு வேண்டும். இரும்பை வடிக்கக் கருமான் வேண்டும். இரும்பு எப்படிக் கிடைக்கும்?... இப்படியே முடிவின்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். நீ அணிந்துள்ள ஒரு கோவணம் இத்தனை பேர் துணையைப் பெற்றிருக்கிறது? அஃது உலகச் சேர்க்கையைப் பெற்றிருக்கிறதா? இல்லையா? ஆதலின், சேர்க்கையின்றி உலகில் எவரும் வாழ்தல் இயலாது. இதை உணர்ந்து நடப்பாயாக என்று சொல்லி விடைபெற்றனர். அப்பொழுது இளைஞன் முதியோரை வணங்கி, தங்கள் பொன்மொழி என் மனத்தைத் திருப்பியது. உங்கள் சேர்க்கை இப்பொழுது இங்கே எனக்குக் கிடைக்காவிட்டால் யான் பசியால் வருந்தி மாண்டிருப்பேன். பரம்பொருள் சேர்க்கை என்பால் இருத்தலையும் யான் உணர்கிறேன் என்று உரைத் தான். முதியோர் வழியே நடந்தனர். இளைஞனும் ஊருக்குத் திரும்பினன். அன்றுமுதல் அவன் சேர்ககைச் சிறப்பைத் தான் உணர்ந்து நடந்ததோடு, அதை மற்றவர்க்கும் போதித்து வந்தனன். சேர்க்கைச் சிறப்பை என்னென்று வர்ணிப்பது? சேர்க்கை வழிபாடு சேர்க்கை இயற்கையில் சிறந்து விளங்குதற்குக் காரணம் என்னை? இயற்கையில் சேர்க்கை பெற்றுள்ள பரம்பொருளை உணர்த்துதற்குச் சேர்க்கை வழிபாடு இன்றியமையாததென்று, உலகம் உணர்ந்து நடக்கும் பொருட்டு,. இயற்கையில் சேர்க்கை சிறந்து விளங்குகிறதென்க. சேர்க்கை வழிபாடு முதிர முதிரப் பரம்பொருள் எல்லா வற்றிலும் சேர்ந்து நிற்றல் இனிது விளங்கும். அவ்விளக்கம் பரம்பொருளே வாழ்க்கை வழி என்னும் உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனியென உணர்த்தும். வாழ்க்கை வழி பரம்பொருளே - பரம்பொருளே வாழ்க்கை வழி இதைத் தெளிதற்கு வழிபாடு தேவை; சேர்க்கை வழிபாடு தேவை. 5. வாழ்க்கை வழி வாழ்க்கை எது? இது குறித்து நினைந்த மக்கள் - நினைக் கின்ற மக்கள்- எவ்வளவு பேர்? அவர்தம் தொகையை எந்தக் கருவிகொண்டு - எந்தக் கணக்குக்கொண்டு - அளவிடல் முடியும்? அத்தொகை எண்ணில் அடங்காதது. அதை எவ்வாறு அளவிட்டுக் கூறுதல் கூடும்? இதுகாறும் வாழ்க்கையைக் குறித்து வெளிவந்துள்ள கருத்துக்கள் வானக்கடலெனப் பரவிக் கிடக்கின்றன. அவற்றுள் நம் நாட்டவரிடத்திருந்து வெளி வந்தவை சில; மேல்நாட்டவரிடத்திருந்து வெளிவந்தவை பல. இலௌகிகமும் வைதிகமும் நம் நாட்டவர் கருத்துக்களால் விளைந்தது என்னை? மேல்நாட்டவர் கருத்துக்களால் விளைந்தது என்னை? முன்னைக் கருத்துக்களால் வைதிகம் உயர்ந்தது; இலௌகிகம் தாழ்ந்தது. பின்னைக் கருத்துக்களால் வைதிகம் தாழ்ந்தது; இலௌகிகம் உயர்ந்தது. இலௌகிகமாவது உலக சம்பந்த முடையது; வைதிகமாவது வேத சம்பந்தமுடையது. (வித் என்னும் அடியிலிருந்து பிறந்தது வேதம். வித் - அறிவு. அறிவுத் தொடர்புடையது வைதிகம்). வெறும் இலௌகிகம் உல காயதம்; வெறும் வைதிகம் ஆன்மார்த்தம். வாழ்க்கைக்கு இரண்டும் வேண்டும். இரண்டில் ஒன்று உயர்ந்ததுமன்று; மற்றொன்று தாழ்ந்ததுமன்று. உயர்வும் தாழ்வும் வாழ்க்கையை வளர்க்கமாட்டா. வாழ்க்கையை வளர்ப்பது சமன். இந்நாளில் நம் நாட்டில் இலௌகிதம் சிறிது உயர்வது சிறப்பு; மேல் நாட்டில் வைதிகம் சிறிது உயர்வது சிறப்பு. இரண்டும் சமப்படின் உலக வாழ்க்கை நன்கு நடைபெறும். வாழ்க்கைத் திறங்கள் வாழ்க்கை எது? உடலும் உயிரும் கூடி நிற்பது வாழ்க்கை என்றும், உடலை விடுத்து உயிர் நீங்கியதும் வாழ்க்கை அற்றுப்போகிறது என்றும் சில இடங்களில் கருதப்படுகின்றன. இக்கருத்தை ஒரோ வழி - ஏக தேசத்தில் ஏற்கலாம்; முடிந்த முடிபாக ஏற்றலாகாது. ஏன்? உலகில், தனி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, கிராம வாழ்க்கை, நாட்டு வாழ்க்கை, உலக வாழ்க்கை, சமய வாழ்க்கை முதலிய பலதிறங்கள் பேசப்படுகின்றன. இப்பேச்சால் வாழ்க்கை பலதிறம் என்பது தெரிகிறது. பலதிறம் வாய்ந்த வாழ்க்கையை உடலுயிர் அளவில் நிறுத்தல் முறையோ என்னும் ஐயப்பாடு தோன்றும். உடலுயிர் சேர்ந்த வாழ்க்கை, மற்ற வாழ்க்கைத் திறங்களுக்கு நிலைக்களன் என்று கொள்ளலாம். மூவிதம் கடவுள், உயிர், உலகம் ஆகிய மூன்றும் சேர்ந்த ஓன்று வாழ்க்கை என்று சில அறிஞர் கூறுகின்றனர். இக்கூற்று விழுமியது. இதன் நுட்பத்தை உணர அநுபூதி தேவை. உலக வாழ்க்கை, உயிர் வாழ்க்கையாய், இரண்டும் சேர்ந்து கடவுள் வாழ்க்கையாகும். கடவுள் வாழ்க்கையில் உலக வாழ்க்கையும், உயிர் வாழ்க்கையும், அவற்றின் கூறுகளும், திறங்களும், பிறவும் அடங்கும். அங்கே வாழ்க்கையின் குறிக்கோளும், அதன் முழுமையும் தெளிவாகும். நன்மை - தீமை பெரும் பேற்றைக் குறிக்கொண்டுள்ளது வாழ்க்கை. அஃது எது என்று தெரிந்துகொள்ள உயிர்கள் கடமைப்படல் வேண்டும். அதைத் தெரிந்துகொள்வதால் என்ன பயன்? அதனால் நன்மை உண்டா? தீமை உண்டா? என்று சிலர் வினவ லாம். நன்மை உண்டெனில், ஒன்றைத் தெரிந்துகொள்ள முயல்வதும், தீமை உண்டெனில் அதைத் தெரிந்துகொள்ள முயலாதிருப்பதும் நியாயமாகா. அறிவு வளர்ச்சிக்கு எதையும் ஆராய்தல் நல்லது. ஆராய்ச்சியால் விளங்கும் அறிவு நல்லதை ஏற்கும்; தீயதை ஒதுக்கும். வாழ்க்கையும் நடக்கையும் வாழ்க்கை இன்னதென்று அறிந்துகொள்ளுதல் மட்டும் போதாது. அதற்குரிய நடக்கை வேண்டும். வாழ்க்கை இன்ன தென்று உணர்ந்தும் நல்வழியில் நடவாதார் உளர். வாழ்க்கை இன்னதென்று உணராமலும் நல்வழியில் நடப்பவர் உளர். தெளிவு என்றாதல் நடக்கையைச் சீர்செய்யாமற் போகாது. ஆதலின், அறிவால் வாழ்க்கை இன்னதென்று விளங்கிக் கொள்வதால் தீமை விளையாது. வாழ்க்கை அமைவு வாழ்க்கை எது என்பதைப்பற்றி முன்னர் இரண்டோர் உரை பகரப்பட்டன. அவற்றை ஒட்டி உலகியலில் நின்று சில கூறலாமென்று எண்ணுகிறேன். வாழ்க்கை எது? பிறப்பு, வளர்ப்பு, கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, தொழில், பொருளீட்டல், இல்லறம், சூழல் முதலியன மருவி ஓங்குவது வாழ்க்கை என்று சுருங்கிய முறையில் சொல்லிவிடலாம். ஒரு செடி வளர, ஒளி, காற்று, நீர், நிலம் முதலியன தேவையாகின்றன. அதேபோல வாழ்க்கை வளரப் பலதிறக் கூட்டுறவு தேவை என்க தொடக்கம் - முடிவு வாழ்க்கைக்குத் தொடக்கம் உண்டா? இல்லையா? முடிவு உண்டா? இல்லையா? அஃது இடையீடின்றி தொடர்ந்து செல்வதா? அன்றா? இவ்வினாக்களைச் சிந்திக்க சிந்திக்க விடை கள் தாமே பிறக்கும். விடைகள் சிந்தனையின் அளவை நிலை களைப் பொறுத்துப் பிறப்பன. ஆழ்ந்த சிந்தனையில் வானிற் பதிந்துள்ள பல பேரறிஞர் எண்ணங்களும் துணை செய்யும். எனது ஆராய்ச்சியிலும் சிந்தனையிலும் வாழ்க்கை, தொடக்க மும் முடிவும் இல்லாதது என்பதும், அது தொடர்ந்து தொடர்ந்து செல்வது என்பதும் படிப்படியே விளங்கின. கடவுள், உயிர், உலகம் ஆகிய இம்மூன்றும் தொடக்கம் முடிவு இல்லாதன. இவற்றால் மலரும் வாழ்க்கையும் தொடக்கம் முடிவு இல்லாததென்று கூறுதற்கு இடமுண்டு. கடவுளுக்கும் உயிருக்கும் தொடக்க முடிவு இல்லை என்று சொல்லலாம். cyF¡F¡ Tlth bjhl¡f Koî ïšiy v‹W TWtJ? என்று சிலர் கருதலாம். உலகம் சடம். அது மாறுந்தகையது. ஆனால், அழியுந் தகையதன்று. (மாறுதலை அழிவென்று சொல்வதும் உண்டு. இஃது உபசாரம்) மாறுங் காரிய உலகத்தைக் கண்டு, அதற்குக் காரணமாயுள்ள ஒன்றை அழியுந் தகையதென்று எண்ணுதல் கூடாது. இது நிற்க. பொருள் வாழ்க்கை என்னும் சொல்லின் பொருளை உன்னிப் பார்க்க. வாழ் என்னும் சொல்லின் அடியாக வாழ்க்கை பிறந்தது. வாழ் என்னும் சொல்லின் பொருள் என்னை? என் றும் நன்றாயிரு என்பது அதன் பொருள். இப்பொருளை உளங் கொண்டு, வாழ்க்கையை உன்னிப் பார்க்க. வாழ்க்கை தொடக்க முடிவு உடையதா? bjhl®ªJ bjhl®ªJ brš tjh? என்பதிலுள்ள உண்மை இனிது விளங்கிவிடும். வழக்காறுகள் இப்பொழுதுதான் வாழ்க்கை என்னைத் தொடர்ந்தது; என் வாழ்க்கை இன்னும் நிலைக்கவில்லை; என் வாழ்க்கை ஒருவாறு நடக்கிறது; என் வாழ்க்கையிலே ஒரு குறையும் இல்லை - என்ற வழக்காறுகள் வாழ்க்கையின் உண்மையை ஒரு வாறு புலப்படுத்துவனவாம். வழக்காறுகள் பிதற்றல் அல்ல. அவை சில அநுபவங்களின் திரட்டு. அவற்றை ஆராய்வது, செயற்கைக் கலைகளையும் இயற்கைக் கலைகளையும் ஆராய்வதாகும். கலப்பு ஏன்? வாழ்க்கை சிறந்ததே. ஆனால், அதில் நலமும் தீங்கும் ஏன் கலந்து நிற்றல் வேண்டும்? இக்கலப்பு இயற்கையன்று; செயற்கை. இதற்குக் காரணம், மனிதன் பகுத்தறிவால் பெற்ற உரிமை உணர்வேயாகும். இதுபற்றி நூல் தொடக்கத்தில் சில குறிப்புக்கள் பொறிக்கப்பெற்றன. அவற்றைப் பார்க்க. வாழ்க்கையில் துன்பமும் உண்டு - இன்பமும் உண்டு. முள்ளும் உண்டு - பூவும் உண்டு; வாழ்க்கையை நிலையாகவும் கொள்ளலாம் - நிலையாததாகவும் கொள்ளலாம்; துளியாகவும் கொள்ளலாம் - கடலாகவும் கொள்ளலாம்; வாழ்க்கை அவ சியமாகவும் தோன்றும் - அநாவசியமாகவும் தோன்றும்; ஆதியாகவும் தோன்றும் - அநாதியாகவும் தோன்றும் - இவ் வாறு வாழ்க்கைக் கூறுகளைச் சொல்லிச் செல்லலாம். எல்லாம் அவரவர்பால் அமையும் மனோநிலையைப் பொறுத்தன. மனம்போல வாழ்வு என்பது பழமொழி. அநுபவிக்க வாழ்க்கை எத்தகையதாயினும் ஆக. அதன் குறிக்கோள் நிறைவேறுதல் வேண்டும். குறிக்கோள் நிறைவேற வாழ்க்கையை அநுபவிக்கக் கடமைப்படல் வேண்டும். அநுபவத்திற்கென்று வாழ்க்கை ஏற்பட்டது. அநுபவிக்கும் முறைமை நேரியதாயிருந் தால் நலன் விளையும்; வேறு வழியினதாயிருந்தால் தீமை விளையும். நேரிய வழி எது? வேறு வழி எது? வாழ்க்கையை நடத்து வது பரம்பொருள் என்னும் உணர்வுடன் நடப்பது நேரிய வழி. அவ்வுணர்வு அற்று நடப்பது வேறு வழி. வாழ்க்கை வழி பரம்பொருள் என்பது நல்லுணர்வு அல்லது மெய்யுணர்வு என்றும், வாழ்க்கை வழி என்னுடையது என்று நினைப்பது தீய உணர்வு அல்லது பொய்யுணர்வு என்றும் குறிக்கும் அளவில் இங்கே நின்று விடுகிறேன். விளக்கம் பின்னை. நன்மையும் தீமையும் கலந்து கலந்து போராடிப் போராடி வாழ்க்கையைத் தூய்மை செய்யும். இத்தூய்மை வாழ்க்கை வழி பரம்பொருள் என்பதை உணர்த்தும். இதை அநுபவத்தால் பெறலாம். இவ்வநுபவத்தைப் பெறுதற்கென்று வாழ்க்கையில் நன்மை தீமை முதலிய வேற்றுமைகளும் போராட்டங்களும் நிகழ்கின்றன என்று கொள்க. என்னாலா? பரத்தாலா,? ஓர் இளைஞன், யான் பிறந்தேன்; வளர்ந்தேன்; படித்தேன்; தொழில் செய்கிறேன்; வாழ்கிறேன்; என்னை ஒரு பொருள் நடத்துகிறது என்று யான் நம்புகிறேனில்லை என்கிறான். அநுபவத்திற் கனிந்த ஒரு முதியவன், என் வாழ்க்கையை ஏதோ ஒன்று நடத்துகிறது. அஃது இயக்க யான் இயங்குகிறேன் என்கிறான். இருவர் கூற்றும் கூர்ந்து கூர்ந்து நல்லுளத்தால் கருதத் தக்கன. என்வாழ்க்கை, என்னால் நடைபெறுகிறதுஎன்று நினைக்கத் தூண்டுவது உலகாயதம். என் வாழ்க்கையை ஏதோ ஒன்று நடக்கச் செய்கிறது என்று கருதச்செய்வது பாரமார்த்தி கம். அந்த நினைவால் விளைவதென்னை? இந்தக் கருத்தால் விளைவதென்னை? உலகாயதம் சமயம் நேருங் கால் தன்னலத் தின் பொருட்டுப் பிறரை வருத்தும்; அவர் தம் இரத்தத்தை உறிஞ்சும்; அவரைக் கொலை செய்ய ஏவினும் ஏவும். பார மார்த்திகம் தன்னலத்தைச் சிதைத்துப் பரநலத்தைக் காக்கும் பண்புடையது. இதற்குக் காரணம் என்னை? பாரமார்த்திகம் எல்லா உயிரிடத்தும் பரம்பொருள் இருப்பதை உணர்த்துவது. அதனால் அது பிறர்க்குக் கேடு சூழ எவரையும் தூண்டுவ தில்லை. பாரமார்த்திகன் என்று தன்னைச் சொல்லிக்கொள் வோன். பிறர்க்குத் தீமை செய்வதில்லையோ என்னும் வாதம் உலகில் நிகழாமலில்லை. பாரமார்திகன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக்கொண்டு, பிறர்க்குக் கேடு சூழ்வானாயின், அவன் பாரமார்த்திகனாகான். அவன் உலகாயதனே ஆவன். மற்றவர்க்குக் கேடுசூழ்வோன் எவனாயினும் அவன் பார மார்த்திகனாகான். பாரமார்த்திகம் வேடத்திலோ - கோலத் திலோ - நடிப்பிலோ - பிற போலிகளிலோ நிலவுவதன்று. ஒரு மனிதன் அவன் வாழ்க்கையில் சில பொழுது பாரமார்த்திக னாகவும் சில பொழுது உலகாயதனாகவும் நடப்பதும் உண்டு. பிறர்க்குக் கேடு சூழும்போதெல்லாம் அவன் உலகாயதனாவன். தன்னைப்போலப் பிறரையும் நினைந்து நலம் செய்யும் போதெல்லாம் அவன் பாரமார்த்திகனாவன். பரம்பொருள் என் வாழ்க்கையை நடாத்துகிறது. அதுவே வாழ்க்கை வழி என்னும் உறுதியில் நின்று வாழ்பவனே பாரமார்த்திகன் என்று உலகம் உணர்ந்து நடப்பதாக. பாரமார்த்திகத்தின் பெயரால் தீட்சை - உபதேசம் முதலியன செய்பவருள் எத்தனையோ உலகாயதர் இருக்கின்றனர்! சொல்லுலக உலகாயதமும் பார மார்த்திகமும் வேறு; பொருளுலக உலகாயதமும் பாரமார்த்தி கமும் வேறு. ஆராய்ச்சி - நம்பிக்கை வாழ்க்கை வழி பரம்பொருள் என்னும் உணர்வு சிலரிடத்தில் எளிதில் எழும்; சிலரிடத்தில் அரிதில் எழும், சிலரிடத்தில் எளிதிலோ அரிதிலோ எழுவதில்லை. முதல் சிலர் நம்பிக்கையாளர்; இரண்டாம் சிலர் ஆராய்ச்சியாளர்; மூன் றாம் சிலர் சிந்தனை அற்றவர். சிலர் நம்பிக்கை ஆராய்ச்சியாகும். சிலர் ஆராய்ச்சி நம்பிகையாகும். சிலரிடம் இரண்டும் கலந்து மயங்கிப் பேர் ஊர் இல்லாமல் அழிந்துபடும். சிலரிடம் காலத்துக்குக் காலம் மூன்றும் முறை முறையே நிகழும். இம்மாறுதல்கள் இயற்கை. அவை பலதிறக் கொள்ளை களாய் உலகில் நிலவிப் போர் பிணக்கு முதலியவற்றை மூட்டுகின்றன. உள்ளத்தில் உறும் மாறுதல்கள் என்னென் னவோ செய்யும், மாறுதலின் நுட்பத்தை உணர்வோருக்கு எவ்வித நடுக்கமும் தோன்றாது. நம்பிக்கையின் விளைவு விரைந்து நிகழும். ஆராய்ச்சியின் விளைவு விரைந்து நிகழாது. நம்பிக்கை தொல்லையின்றிப் பயன் விளைக்கும். ஆராய்ச்சி தொல்லையுடன் பயன் அளிப்பினும் அளிக்கும்; அளியாமற் போயினும் போகும். நம்பிக்கை 1மலையே வா என்றால் மலை வரும். ஆராய்ச்சி மலையை அழை யாது; அழைப்பினும் அது வாராது. வலிமை எதற்கு அதிகம்? நம்பிக்கைக்கா? ஆராய்ச்சிக்கா? நம்பிக்கை நம்பிக்கை ஒரு பெரும் கொள்கை என்று அறிவுறுத்தி யவர் சிலர். அவருள் சிறந்தவர் கிறிதுபெருமான். நம்பிக்கை யின் வலிமை அவராலேயே உலகுக்கு நன்கு புலப்பட்டது என்று பறை சாற்றலாம். நமது நாடும் ஒருகாலத்தில் நம்பிக்கை யில் பேர் பெற்றிருந்தது. நம்பிக்கை நோய்களைப் போக்கும்; குறைகளைக் களையும்; நினைந்ததைக் கூட்டும்; நம்பிக்கையால் ஆகாத தொன்றில்லை. நம்பிக்கை, மருத்துவச்சாலைகள் பெருகாத வாறும், சிறைக்கோட்டங்கள் துதையாதவாறும், சட்டங்கள் மலியாதவாறும் காத்து வரும். நம்பிக்கை ஒரு காலத்தில் உலகை நல்வழியில் நடாத்தியது; அதில் அமைதியை நிலைபெறுத் தியது; தெய்விகத்தைத் திகழச் செய்தது. அத்தகைய நம்பிக்கை நாளுக்கு நாள் குன்றியது. அதனால் மருத்துவச் சாலைகள் பெருகின. சிறைக்கோட்டங்கள் துதைந்தன; சட்டங்கள் மலிந் தன. உலகம் அமைதியை இழந்து அல்லலுறுவதாயிற்று. மதிப்பு இந்நாளில் நம்பிக்கைக்கு மதிப்புண்டா? ஆராய்ச்சிக்கு மதிப்புண்டா? எதற்கு உண்டு என்று சொல்ல வேண்டுவ தில்லை. இக்காலம், நம்பிக்கை மடமை இருள் என்றும், ஆராய்ச்சி அறிவு ஒளி என்றும் கருதுகிறது. இக்கருத்து நிலைத்து நில்லாது. இதில் மாறுதல் நிகழும். ஒளி - இருள் நம்பிக்கை ஒளியாய் இருந்த காலமுண்டு. அக்காலம் மறைந்தது. நம்பிக்கையில் இருள் சூழ்ந்தது. அந்நாளில் ஆராய்ச்சி, இருளால் விழுங்கப்பட்டது. இந்நாளில் அதில் ஒருவிதச் சிற்றொளி புகுந்தது. அவ்வளவில் அதன் இருள் கழிந் தது. மீண்டும் நம்பிக்கையில் ஒளி சேரும். ஆராய்ச்சியில் இருள் சூழும். இஃது என்ன விபரீதம் என்று நேயர்கள் நினைக்க லாம். தாய் - சேய் நம்பிக்கை தாய் போன்றது. ஆராய்ச்சி சேய் போன்றது. இப்பொழுது ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது, என்றாதல் அஃது ஒரு நிலையில் தாயாகும். தாய் நம்பிக்கை என்பதை மறத்த லாகாது. நம்பிக்கையினின்றும் பிறக்கும் ஆராய்ச்சி மீண்டும் நம்பிக்கையாகும். இஃது இயற்கை. விதை முளையாய், செடி யாய், மரமாய், கனியாய் மீண்டும் விதையாகிறதன்றோ? அவ்வாறே நம்பிக்கை. ஆராய்ச்சியாய், மீண்டும் நம்பிக்கை யாகும். பழைய நம்பிக்கைக்கும் புதிய நம்பிக்கைக்கும் தெளி வில் சில வேற்றுமைகள் தோன்றும். .இது வளர்ச்சித் தத்துவத் தில் அரும்பும் புதுமையால் நிகழ்வது. இப்புதுமையைப் பற்றி முன்னர் இரண்டோர் இடத்தில் விளக்கம் செய்துள்ளேன். மறப்பு கிறிதுபெருமான் நம்பிக்கையைப் போதனையினாலும் சாதனையினாலும் நாட்டினர். அந்நம்பிக்கை இப்பொழுது ஆராய்ச்சியாயிற்று. அவ்வாராய்ச்சி தடுமாறும் காலம் நெருங்கி யிருக்கிறது. இன்று தடுமாறும் ஆராய்ச்சி, நாளை நம்பிக்கையாகும். ஆராய்ச்சி, நம்பிக்கையின் சேய் என்பதை உலகம் மறந்தது. அம்மறப்பு உலகை அணுகுண்டால் அழிக்க முனைகிறது. இதைப் போக்கவல்லது நம்பிக்கை. 1பரத்தினிடம் நம்பிக்கை உடையாரை அணுகுண்டோ பிறவோ என் செய்யும்? விளைந்த பயன் பழைய நம்பிக்கை உலகம் , ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற உண்மையைப் பரப்பியது. அதனால் உலகம் ஓர் அன்பு நெறியைக் கடைப்பிடித்து ஒழுகியது; ஒருமைப் பாட்டைக் குறிக்கொண்டு நின்றது; அமைதி இன்பத்தை நுகர்ந்தது. புதிய ஆராய்ச்சியுலகம் என்ன செய்தது? ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பதின் உணர்ச்சியையே சிதைத்தது; ஓர் அன்பு நெறியைப் பலவகைப் பகைமை நெறிகளாகப் பிரித்தது; ஒருமைப்பாட்டுக்குக் கேடு சூழ்ந்தது; அமைதியைக் குலைத்தது. ஆராய்ச்சிச் சேய் இப்பொழுது மதர்த்த பருவம் எய்தியுள்ளது. அப்பருவத்துக்குரிய திருவிளை யாடலை அது நிகழ்த்துகிறது. அப்பருவம் முதிர்ந்து கனியக் கனிய மீண்டும் ஆராய்ச்சி நம்பிக்கையாகும். அந்நம்பிக்கை மறுபடியும் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற உண்மையை வளர்க்கும். இஃது உறுதி; திண்ணம்; ஒருதலை. நம்பிக்கையா தாய்? ஆராய்ச்சியா சேய்? நன்று! நன்று! நம்பிக்கை மடமையை அடிப்படையாகக் கெண்டது; ஆராய்ச்சி அறிவை அடிப்படையாக் கொண்டது. m«klikÆÈUªjh ï›t¿î ãw¡F«? என்று அலமருவோர் இருப்பர். குழந்தை பிறக்கும்போது மடமை - அறியாமை - உடைய தாகப் பிறக்கிறது; பின்னர் அது வளர்கிறது; அறிவு ஆராய்ச்சித் துறையை அடைகிறது; அடைந்து இறுதியில் அறியாமையை அணைகிறது; அணையாவிடின் ஆராய்ச்சியால் விளையத் தக்க பயன் விளையாது; அல்லல் விளையினும் விளையும். மடமையில் ஞானம் மடமை என்னும் சொல் ஐயப்பாட்டுக்கு இடம் தருவது. முடிந்த தெளிவு அநுபவத்திலேயே - அநுபூதியிலேயே - பிறக்கும். முதல் மடமை அஞ்ஞானம்; இறுதி மடமை மெய்ஞ்ஞானம். இந்த மடமையாகிய மெய்ஞ்ஞானம் பெற்றவரே சான்றோர் - ஆன்றோர் - பெரியோர் என்று போற்றப்படுகின்றனர். நம்பிக்கையும் விஞ்ஞானமும் இயற்கைப் புலவர் இயற்கைக் கூறுகளைக் காண்கிறார். அவர்தம் நெஞ்சம் அவற்றில் தவழ்கிறது. ஒரு புலவன் நெஞ்சம் தவழ்ந்து தவழ்ந்து ஒரு பறவையில் நிலைத்து நிற்கிறது. அவன் அப்பறவை ஆகிறான். அவன் வாய் பாடுகிறது. எதைப் பாடு கிறது? வானத்தில் பறக்கும் பறவையைப் பாடுகிறது. அப் பறவைப்பாட்டில் பின் வந்த புலவர் ஆழ்கிறார். அவர் நெஞ்சில் பழைய கற்பனைப் பறவை (இயற்கைப் பறவை) படிந்து செயற்கைப் பறவையாகிறது; நாளுக்குநாள் மரப்பறவை யாகிறது; இரும்புப் பறவையாகிறது. அது தொடர்ந்து தொடர்ந்து புலவர் வழிவழியே விமானமாக மருவுகிறது. இக்கால விஞ்ஞானி காணும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்தால் அதன் அதன் தோற்றம் பழைய புலவோர் கற்பனையினின்றும், நம்பிக்கையினின்றும் - பிறந்ததென்பது தெரியவரும். இந்நுட்பங் களை உணர உணர இக்கால விஞ்ஞானக்கலை நம்பிக்கைக் கலையினின்றும் பிறந்தது என்னும் உண்மை உள்ளத்தில் பதியும். கற்பனை தடித்துத் தடித்துப் பொருளாவதை மெய்ஞ்ஞானக் கலைகளிற் காண்க. எனது கருத்துச் சிலர்க்கு உளறலாகத் தோன்றினும் தோன்றும். யான் முதியன். என் வாய் உளறும். அவ்வுளறல் அநுபவ ஊற்றினின்றும் பொங்குவது என்று நேயர்கட்கு வணக்கத்துடன் அறிவிக்கிறேன். என் வாழ்க்கை, வெறும் கல்வி, அறிவு முதலியவற்றால் மட்டும் ஆக்கப்பட்டதன்று; இக்கால அறிஞர் பலரது உறவைப் பெற்றது; கிறிது, நால்வர், ஆழ்வார் அன்புக் கடலில் மூழ்கியது; டார்வின், ஒலிவர் லாட்ஜ், ஐன்டன் முதலியோர் ஆராய்ச்சியையும் வெறுத்ததில்லை. இவ்வாழ்க்கை ஆராய்ச்சி உலகை வெறுக்குமோ? வெறாது. எனது வாழ்க்கை, நம்பிக்கை யுலகின் சேய் ஆராய்ச்சி என்னும் உண்மையிலும், இனி ஆராய்ச்சியுலகம் நம்பிக்கையுலகமாகும் என்னும் உண்மை யிலும் உறுதிகொண்டது. இவ்வுறுதி என்னை எதெதையோ உளறச் செய்கிறதோ என்னவோ தெரியவில்லை. சங்கரர் - கண்ணப்பர் ஆதிசங்கரர் அறிஞர்; பேரறிஞர்; அறிவு ஒன்றே பொருள் என்றவர்; அறிவே ஆனவர். அத்தகைய ஒருவராலும் நம்பிக்கை மாண்பு பேசப்பட்டது. கலைஞானம் சிறிதுமின்றி, நம்பிக்கை யிலே உறைந்து உறைந்து, அன்பே வடிவாய்க் , கண்ணைப் பிடுங்கிக் கடவுள் கண்ணில் அப்பிய ஒருவர் செயலை ஆதி சங்கரர் வியந்து வியந்து பாடுகிறார்; போற்றிப் போற்றிப் புகழ்கிறார். சிவபுஜங்கம் முதலிய நூல்களை ஆய்க. காரணம் என்ன? பேரறிஞர் ஆதிசங்கரர்க்கு நம்பிக்கை மாண்பு புலனாகியது. நம்பிக்கை விழுப்பத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாகக் கண்ணப்பர் செயலை அவர் அறிவால் கொண்ட னர். நம்பிக்கையின் சிறப்புக்குக் 1கண்ணப்பர் கதை ஒன்று போதும். பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உணர்வு நம்பிக்கையால் எளிதில் பிறக்கும். அவ் வுணர்வு ஆராய்ச்சியால் அரிதில் தோன்றும். ஆராய்ச்சியில் சிலகாலம் கழியினுங் கழியும். கழிந்தாலும் அஃது என்றாதல் நம்பிக்கையாய் உண் மையை உணர்த்தியே தீரும். போலி ஆராய்ச்சி நம்பிக்கையில் பிறந்து மீண்டும் நம்பிக்கையாகும் ஆராய்ச்சியை யான் வெறுப்பதில்லை. அதனிடத்தில் எனக்கு விருப்பு உண்டு. சில இடங்களில் ஆராய்ச்சி, போலியில் - இழிவில் - இறக்கப்படுகிறது. அவ்வாராய்ச்சி எனக்குப் பிடிப்பதில்லை. அஃது உலகை எவ்வெவ்வழியில் அலைக்கிறது என்பதை யான் உணர்கிறேன். நேரிய ஆராய்ச்சி தேவை என்பது என் உட்கிடக்கை. ஆராய்ச்சி, விஞ்ஞானம் முதலிய கலைகளின் துணையால் நிகழ்வது நல்லது. சுந்தரர் - கண்ணப்பர் மீண்டும் யான் கண்ணப்பரிடஞ் செல்கிறேன்; அங்கே சுந்தரமுர்த்தி சுவாமிகளைக் காண்கிறேன். அவர் கண்ணப்பரை *கலைமலிந்த கண்ணப்பர் என்று பாடி வழிபடுகிறார். என்ன, கல்வியே பயிலாத கண்ணப்பரைக் 1கலைமலிந்த கண்ணப்பர் என்று சுந்தரர் பாடுகிறாரே என்று என் நெஞ்சம் நம்பிக்கை யினின்றும் ஆராய்ச்சியை நண்ணியது. கண்ணப்பர் கல்வி இல்லாதவர். ஆனால் நம்பிக்கை உடையவர்; நம்பிக்கையில் மயக்கமற்ற உறுதியுடையவர். அவர்க்கு முதல் நம்பிக்கை, ஆராய்ச்சியாய் மருவுவதற்குள், இரண்டாவது நம்பிக்கை விரைந்து எழுந்தது. இந்நம்பிக்கையில் அடங்காத கலை இல்லை - கலைப் பயன் இல்லை. எல்லாம் எல்லாம் இந்நம்பிக்கையில் அடங்கும். இதை உணர்ந்தே சுந்தரர் கலைமலிந்த கண்ணப்பர் என்று பாடினர் போலும். இவ் விளக்கம், என்னுள் எழுந்த ஆராய்ச்சியை நம்பிக்கைக்குத் தூக்கிச் சென்றது. இளமையும் முதுமையும் பரம்பொருள் வாழ்க்கை வழி என்று நம்பி, உலகில் வாழ்வது தலையாய வாழ்க்கையாகும். இதற்கு மாறுபட்டது கடையாயது. இக்கருத்தை இக்கால இளைஞன் ஏற்பானோ? எல்லாம் என்னால் என்றன்றோ அவன் இறுமாந்து நடக் கிறான். அவனது இறுமாப்பைக் காணும் முதியன், என்னால் ஒன்றுமில்லை; எல்லாம் பரம்பொருளால் என்று மொழி கிறான். அங்கே முனைப்பு; இங்கே தாழ்மை. ஒன்றுக்கொன்று முரண்பாடு. இளைஞன் வட துருவத்தில் நிற்கிறான்! முதியன் தென்துருவத்தில் நிற்கிறான்; வாழ்க்கை நேரே ஒரே வழியில் நடப்பதில்லை. அதனை எத்தனையோ தடைகள் மறிக்கின்றன. மறியலால் அவ்வப் போது மாறுபாடு உறுகிறது. மாறுபாட்டை மட்டும் இளைஞன் சிந்தித்துச் சிந்தித்து வருவானாயின், பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உணர்வை அவன் பெறாமற் போகான். இளைஞன் ஒருபோது குடியனாயிருந்தான்; கள்ளனா யிருந்தான். பின்னே அவனுக்குக் குடியும் களவும் தீமையெனத் தோன்றின. அத்தோற்றம் அவனுக்கு விடுதலை நல்கியது. இளைஞன் குடியனாய், கள்ளனாய் இருந்தபோது, குடியும் களவும் அவனுக்குத் தீமையெனத் தோன்றினவோ? .இல்லை; அவை நல்லனவாகவே அவனுக்குத் தோன்றின. பின்னே இரண்டும் தீயன என்று அவன் உணரலானான். முன்னே குடியும் களவும் நல்லன என்று இளைஞன் உணர்வில் தோற்றுவித்தது எது? இளைஞனே! உன்னுக. எது என்று உன்ன உன்ன அறியாமை என்று அறிவாய். உன்னை ஏமாற்றும் அறியாமையுடைய நீயா எல்லாம்! எல்லாம் உன் னாலா! நீ குடியனாய், கள்ளனாய் இருந்தபோது, உன்னையே நீ வஞ்சித்துக்கொண்டாய். வேண்டுமென்று உன்னை நீ வஞ் சித்துக்கொண்டாயில்லை; அறியாமையால் உன்னை வஞ்சித்துக் கொண்டாய். உன்னைக் கெடுக்கும் வஞ்சனையை அறியாத நீயா எல்லாம்! உன்னாலா எல்லாம்! இளைஞனே! உன் அருகேயுள்ள முதியவன் அநுபவத்தை எண்ணி எண்ணி மனந் திரும்புவாயாக; மனந்திரும்பிப் பரம்பொருள் வாழ்க்கைவழி என்னும் உண்மையைத் தெளிய முயல்வாயாக. இளைஞன் என் செய்வான்! பாவம்! முனைப்பு அவனை ஆட்டுகிறது; அலைக்கிறது. முனைப்பு என்னென்னவோ செய் யும்; பரம்பொருளையும் மறக்கச்செய்யும். பரம்பொருளோ முனைப்பற்றது. அஃது எதையும் எவரையும் மறப்பதில்லை. அதற்கு மறப்பு ஏது? அஃது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அறிவு; தூய அறிவு; முழு அறிவு. அத்தகைய பரம் எதை மறக் கும்? எவரை மறக்கும்? இஃது ஆராய்ச்சிக் காலம். இப்பொழுதா பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் பேச்சு? என்று இளமை உலகம் கறுத்து உறுத்து எழும். ஆராய்ச்சி, இளைஞர்க்குமட்டும் உரியதன்று. அது முதியர்க்கும் உரியது. அதில் இப்பொழுது யான் மூழ்கப் போகின்றேனில்லை. அதைச் சிறிது நோக்கித் திரும்புகிறேன். உலகத்தோற்றம் நாம் வாழும் உலகம் செஞ்ஞாயிற்றினின்றும் சிந்திய ஒரு துண்டு. அத்துண்டே நமது உலகம்; இப்பெரிய உலகம். உலகம் ஒரு சிறுதுண்டு. அது நமக்கு மிகப்பெரியதாய்த் தோன்றுகிறது! இவ்வுலகம் ஏறக்குறைய ஒரு நூறு கோடி ஆண்டு வெறும் அனற்பிழம்பாய் எரிந்தும் கொதித்தும் கனலை உமிழ்ந்தும் கிடந்தது. பின்னே (ஒரு நூறு கோடி ஆண்டாய்த்) தணிந்து தணிந்து வருவதாயிற்று. அது முற்றும் தணியும் காலம் என்றோ? அதைப் பற்றிய சிந்தனை இங்கே வேண்டுவ தில்லை. நமது உலகம் தணிந்து தணிந்து, நீர்ப்பகுதி என்றும், நிலப்பகுதி என்றும் பிரிந்தது. நீரிலும் நிலத்திலும் பலவகை உயிர்கள் தோன்றித் தோன்றி வளர்ந்து வருகின்றன. அனற் பிழம்பாய்ப் படிப்படியே தணிந்து வரும் உலகில் உயிர்கள் எப்படி உதித்தன? அனல் தணியத் தணியச் சிறு சிறு தாதுப் பொருட்கள் உண்டாயின என்றும், அவற்றின் கூட்டுறவால் பெண் உறுப்புப் பிறந்தது என்றும், அதைத் தொடர்ந்து ஆண் உறுப்பு அமைந்தது என்றும், இரண்டும் சேரச்சேரப் புல்லும், பூச்சியும், மீனும், பாம்பும், பறவையும், விலங்கும், மனிதமும் தோன்றின என்றும் சொல்லப்படுகின்றன. இத்தோற்ற முறை டார்வின் முதலிய இயற்கைக் கலைஞரால் காணப்பெற்றது. இக்கலைஞருள்ளும் கருத்து வேற்றுமை உண்டு. கலைஞர் உயிர் வளர்ச்சியைப் படிப்படியே கிளந்து கூறிக் கூறிக் குரங்கினின்றும் மனிதன் உதித்தான் என்று விளக்கிச் செல் வது அறிவுக்கு விருந்து அளிக்கிறது. அவ்விருந்து அறிவு உலகத் துக்கு நலம் புரிந்தே வருகிறது. ஆனாலும், ஐயப்பாடு நிகழாம லில்லை. டார்வின் உள்ளிட்டவர் உயிர்த்தோற்றத்தின் மூலத்தை யும், மனித உலகத்துக்கு மேற்பட்டுச் செல்லும் வளர்ச்சியையும் நன்கு விரித்து விளக்கினாரில்லை. அவரால் விளக்கவும் இயலா தென்று கூறலாம். அறிஞர் விஞ்ஞானத்தைக் கருவியாக் கொண்டு ஆராய்ச்சித் துறையில் இறங்குவது வழக்கம். விஞ்ஞானம் அவர்க்கு எவ்வளவு தூரம் துணை செய்கிறதோ அவ்வளவு தூரம் அவர்தம் ஆராய்ச்சியும் செல்லும். இனி வருங்கால விஞ்ஞானம் ஆராய்ச்சியைப் பெருக்கிப் பரம்பொருள் உண்மையின் உணர்வை எழுப்பும் என்று எண்ணுகிறேன். விஞ்ஞான வளர்ச்சி டார்வின் முதலியோர் உள்ளது சிறத்தல் என்னும் கூர்தல் (Evolution) அறத்தை அடியாக் கொண்டு ஆராய்ச்சி நிகழ்த்தினர். அவ்வாராய்ச்சியில் வளர்ந்த தத்துவம் மனிதம் வரை எட்டி யுள்ளது. இதுவரை துணை புரிந்த வளர்ச்சித் தத்துவம் மேலும் மேலும் துணை புரியாதோ? துணைபுரியக் காத்து நிற்கிறது. அதற்கு ஆக்கந்தேட இன்னும் போதிய அளவில் விஞ்ஞானம் ஓங்கவில்லை; ஓங்கியதும், வளர்ச்சித் தத்துவமும் மேலும் மேலும் வழிகாட்டுவதாகும். பரத்தின் நிறைவு பரம்பொருள் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது. அது செஞ்ஞாயிற்றிலும், அதிலிருந்து சிந்திய அனற்பிழம்பிலும், இடை வெளியிலும், அனற்பிழம்பின் தணிக்கையிலும், அதி னின்றும் அரும்பிய நுண்ணிய தாதுக்களிலும், அவற்றின் சேர்க்கையிலும், சேர்க்கையின் பயனிலும், பயனாகத் தோன்றிய உயிர்களிலும், அவற்றின் வளர்ச்சியிலும், விஞ்ஞானத்திலும், ஆராய்ச்சியிலும், பிறவற்றிலும் நீக்கமற நின்று, எல்லாவற்றை யும் இயக்குகிறது. அவ்வியக்கத்தினால் எல்லாம் நிகழ்கின்றன. பரம்பொருள் இல்லாத அணுவுமில்லை; அண்டமும் இல்லை; இயக்கமும் இல்லை. எதுவும் அதை விடுத்து நிற்பதில்லை; அசைவதில்லை. பரத்தை விடுத்து வாழ்தல் எதனாலும் இயலாது. அவனன்றி ஒரணுவும் அசையாது. அத்தகைய பரத்தின் துணையின்றி அனற்பிழம்பினின்றும் உயிர்த்தாதுக்கள் எப்படி உருக்கொள்ளும்? தாதுக்கள் சடம். சடம் அறிவில்லாதது. அறிவில்லாத சடத்தினின்றும் அறி வுள்ள உயிர் எங்ஙனம் தோன்றும்? தென்னை இலுப்பை யாகுமோ? எவ்வகைத் தோற்றத்துக்கும் மூலம் - முதன்மை - பரம்பொருள். அதை மறக்கலாமா? கூர்தலும் பரமும் டார்வின் உள்ளிட்டார் உலகத்தோற்றத்துக்கும் வளர்ச் சிக்கும் அடிப்படையாக நிற்பது இயற்கையிலுள்ள கூர்தல் அறம் என்று கண்டனர்; கொண்டனர். இயற்கைக் கூர்தல் அறத்தின் எழுச்சிக்கும், இயற்கையை உடலாகக்கொண்டுள்ள பரமாகிய உயிரின் கூட்டுறவு தேவை. இது டார்வின் உள்ளிட்டார்க்கு அந் நாளில் விளங்கவில்லை. அவர்தம் அறிவு சடத்தளவில் நின்றது; பரத்தில் செல்லவில்லை. முன்னோர் நம் முன்னோர் தாம் பெற்ற மெய்யறிவால் சடத்தைக் கடந்து பரத்தின் உண்மையை உணர்ந்தவர். அவர்க்குச் சடத்தில் நிகழும் வளர்ச்சித் தத்துவத்தின் முதலும் முடிவும் விளங்கின. அவருள் ஒருவராகிய மாணிக்கவாசகர் அவ் விளக்கத்தைச் சுருங்கிய முறையில் வெளியிட்டிருத்தலை விவேகத்தால் ஆய்க. அவர்தம் திருவாசகம் வருமாறு :- ***கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின் பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்*** இத்திருவாசகத்தில், கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி என்பது, பரத்தினிடத்திருந்து உலகம் தோற்றமுறுவதை அறிவுறுத்துகிறது. புல்லாகி. . . எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்பதில் வளர்ச்சித் தத்துவம் நிலவுகிறது. அவ்வளவில் மாணிக்கவாசகர் நின்றாரில்லை. அவர்மேலும் சென்று மெய்யாஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்று அருள்கிறார். இது வளர்ச்சித் தத்துவத்தின் முடிவையும், அதற்கு மேலுள்ள அழியா நிலையையும் உணர்த்துகிறது. மாணிக்கவாசகர் கண்ட உண்மை இனி வரும் விஞ்ஞான உலகத்துக்குத் துணைபுரிவதாகும். எதுவும், தோற்றக் கேடில்லாத பரத்தினின்றும் தோன்றும்; நிற்கும்; ஒடுங்கும் - மீண்டும் அவ்வாறே தோன்றும்; நிற்கும்; ஒடுங்கும். இந் நிகழ்ச்சிக்கு நிலைக்களன் பரம் என்பது உண்மை. இவ்வுண்மையை உணர்ந்து தெளிவு பெறுவோர்க்குப் பரம்பொருள் வாழ்க்கை வழி என்பதில் எவ்வித ஐயப்பாடும் தோன்றாது. அப்பர் உலகில் நீண்ட காலம் வாழ்ந்து, பரத்தின் அருளைப் பெற்று, தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டு மென்று, கருணையுடன் தமிழ் மழைபொழிந்த அன்புமுகில் - அப்பர் எம்பெருமான் திருவாக்குகளில் என் உள்ளம் செல்கிறது. முதலில் இவ்விடத்திற்கு ஏற்ற ஒன்றை எடுத்துக்காட்டுகிறேன். என்னி லாரு மெனக்கினி யாரில்லை என்னி லும்மினி யானொரு வன்னுளன் என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக் கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே. இப்பாட்டை நோக்குக; ஊன்றி நோக்குக; முதலடி, எல்லாம் என்னால் என்று செருக்கி நடக்கும் இளைஞனுக்கு ஆர்வமூட்டும். ஆர்வத்தால் ஆரவாரிக்கும் அவனுக்கு இரண் டாம் அடி அறிவு கொளுத்தும். அதன்கண் பரத்தின் உண்மை ஒளிர்கிறது. அதை அவன் பார்க்கிறான். mt‹, ‘gu« v§nf ïU¡»wJ? என்கிறான். மற்ற இரண்டடியும் பரம் உள்ளக் கோயில் கொண்டிருப்பதை அறிவிக்கின்றன. அஃது இளைஞ னுக்கு விளக்கமாகிறது. நமக்கு நாம் இனியவர் என்று நினைப்பது அறியாமை என்றும், அது நம்மை வஞ்சிக்கிறது என்றும் உயிர்கட்கு உண்மையில் இனிமை செய்வது பரம் பொருள் என்றும், அப்பரம்பொருள் நமக்குள்ளிருந்தே நமக்குத் துணை புரிகிறது என்றும் பொதுவாக உலகமும், சிறப்பாக இளமை உலகமும் உணர்ந்து, பரம்பொருள் வாழ்க்கை வழி என்று தெளிந்து நடக்குமாறு அப்பர் எம்பெருமான் திருப் பாடல் வழிகாட்டுகிறது. அவர்தம் திருவாக்கில் உறுதி கொள்வோமாக; கொண்டால் பரம்பொருள் இயக்க நாம் இயங்குவதை நன்கு தெளியலாம். இதை மற்றுமொரு திருப் பாட்டால் அப்பர் எம்பெருமான் உலகுக்கு உணர்த்துகிறார். ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே இப்பாட்டு, பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மைக்கு ஓர் இலக்கியம். சுந்தர மூர்த்தி பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாழ்க்கையில் பரிணமித்தது. அவர்தம் வரலாற்றைத் திருத்தொண்டர் புராணத்தில் பார்க்க. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் சாதிமணம் சிதைவு செய்யப் பெற்றது. அது பரத்தின் அருளால் நிகழ்ந்தது என்று சுவாமிகள் நெஞ்சம் நினைந்தது. அவ்வாறு நினைந்த நெஞ்சினின்றும் கீழ்வரும் தமிழ்ப்பாட்டுச் சுரந்தது. பித்தாபிறை சூடிபெரு மானேயரு ளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள் அத்தாவுனக் காளாய்இனி அல்லேனென லாமே. இப்பாட்டிற் போந்துள்ள, நினைக்கின்றேன் மனத் துன்னை. . . அத்தா உனக்காளாய். . . என்னுஞ் செம்மொழி எவருள்ளத்தையும் வயப்படுத்தும். அன்றுமுதல் சுந்தரர் உடல் பொருள் ஆவி மூன்றும் பரத்துக்கென்று அர்ப்பணமாயின. பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையில் அவருக்கு உறுதி உண்டாயிற்று. அவ்வுறுதி சோதனைக் காலத்திலும் பிறழ்ந்ததில்லை. சுந்தரர் எதையும் பரத்தின் வாயிலாகவே பெற்று வாழ்ந்தவர். அவர்தம் மனமொழி மெய்களெல்லாம் பரமாயின. அவர் வாழ்க்கை பரத்தின் வாழ்க்கையாயிற்று என்றுஞ் சொல்லலாம். காதலிலும் பரம் பரம்பொருளின் ஆணைப்படி சுந்தரர் திருவாரூரில் வதிந்தபோது, அவர் நாடோறும் கோயிலுக்குப் போவது வழக்கம். திருவாரூரிலேயே பிறந்து வளர்ந்த சிவக்கொழுந்து பரவையார் என்பவரும் நாடோறும் கோயிலுக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவர்க்கும் சந்திப்பு நேர்ந்தது. அவர் காதல் இவரை விழுங்கியது. இவர் காதல் அவரை விழுங்கியது. இருவரும் பரத்தின் அடியவர். அவர்க்குக் காதலும் பரமே யாகியது. சிறிதுநேரத்திற்குள் காதற் சூழலிடை நின்ற பரவையார் வீடு நோக்கினர். அப்பொழுது, 1பாச மாம்வினைப் பற்றறுப் பான்மிகும் ஆசை மேலும்ஓர் ஆசை அளிப்பதோர் தேசு மன்னஎன் சிந்தை மயக்குற ஈச னார்அருள் எந்நெறிச் சென்றதே. உம்பர் நாயகர் தம்கழல் அல்லது நம்பு மாறறி யேனை நடுக்குற வம்பு மால்செய்து வல்லியின் ஒல்கியின் றெம்பி ரான்அருள் எந்நெறிச் சென்றதே. பந்தம் வீடு தரும்பர மன் கழல் சிந்தை ஆரவும் உன்னும்என் சிந்தையில் வந்து மால்செய்து மானென வேவிழித் தெந்தை யார்அருள் எந்நெறிச் சென்றதே. என்று சுந்தரர் வாய் பிதற்றியது. சுந்தரர்க்குப் பரவையார் காதல் எம்பிரான் அருளாகவே தோன்றியது. பின்னே சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவொற்றியூரில் சங்கிலியாரைப் பரத்தின் அருளால் மணந்தனர் என்று அவரது வரலாறு கூறுகிறது. சங்கிலியார் அன்பும் சுந்தரர்க்கு எம்பிரான் அருளாகவே காணப்பெற்றது. சுந்தரர் இல்வாழ்க்கை வெறும் வாழ்க்கையா? பரத்தின் வாழ்க்கையா? பரத்தின் வாழ்க்கை என்று அறுதியிடலாம்; இதை அகச்சான்றால் நிறுவலாம். பெரியோர் தமது அநுப வங்களை உலகத்தின் பொருட்டு வெளியிடுவது இயற்கை. அவ்வியற்கைப்படி சுந்தரமூர்த்தி சுவாமிகளும் தமது வாழ்க்கைக் கூறுகளை ஆங்காங்கே பாடல்களில் பொறித்துச் சென்றனர். சுவாமிகள் பரவைக்கும் சங்கிலிக்கும் தமக்கும் உற்ற காதல் வாழ்க்கை, பரத்தின் அன்பு வாழ்க்கை என்று அருளியது கருத்தில் இருத்தத்தக்கது. பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன்* * ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள் சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்தோள் * * இத்தமிழ் தனக்குரிய காதலாகவே - அன்பாகவே - காட்சி அளிக்கிறது. பரவைக்கும் சங்கிலிக்கும் சுந்தரர்க்கும் நேர்ந்த கலவி - பற்று - காதல் - பரமாகவே விளங்குகிறது. பரத்தின் நடுநிலை சுந்தரர் தெய்வ அன்பு அவரைத் தம்பிரான் தோழராக் கிற்று. தோழமை, பெண், பொன், நெல் முதலியவற்றையும் நல்கத் துணை நின்றது. விரிவை அவர்தம் வரலாற்றிற் காண்க. பரத்தின் தோழமை சுந்தரர் செய்த தவறுதலுக்குத் துணைநின்றதா? இல்லை. சுந்தரர் திருவொற்றியூரில் செய்த தவறுதல் அவரது இரண்டு கண்களையும் ஒளியிழக்கச் செய்தது. அந்நிலையில் தம்பிரான் தோழர் பாடிய பாக்கள் மக்கள் வாழ்க்கையைக் காக்க வல்லன என்று கூறலாம். அப்பாக்களில் ஒழுக்கத்தின் உயர்வும், சீலத்தின் சிறப்பும், பண்பின் மேன்மையும் மிடைந்து செறிந்து துதைந்து மலிகின்றன. வழுக்கலிலும் பரம் தமிழ்ப் பெருமான் கண் இழந்ததும் ஒரு பதிகம் பாடுகிறார். அதில் முதல் பாட்டை மட்டும் ஈண்டுக் காட்டுகிறேன். அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானால் பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நான்அறி யேன்மறு மாற்றம் ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே. இத்திருமொழியில் அழுக்குமெய், திருவடி அடைதல், பிழைபாடு, திருவடிப் பிழையாமை, வழுக்கி வீழ்தல், வீழ்த லிலும் பரத்தை மறவாமை, பரம் ஒழுக்கம் என்பது, முறையீடு முதலிய வாழ்க்கைப் பொருள்கள் தேங்கி வழிதலை நோக்குக. பரத்தை மறவாது நினைப்பவர்க்கும் வழுக்கி வீழ்தல் நிகழலாம். அவ்வேளையில் பரத்தின் நினைவு அழியாதிருத்தல் அருமை. சுந்தரர் வாழ்க்கையில் அவ்வருமை இடம் பெற வில்லை. அவர் வழுக்கி வீழ்ந்தபோதும் பரநாமத்தை மறந்தா ரில்லை. வழுக்கி வீழினும் நின்பெயர் அல்லால் மற்றும் நானறி யேன்மறு மாற்றம்எனவரும் அவர்தம் மொழி வழுக்கி வீழும் உலகைக் காக்கவல்லது. இன்னோரிடத்தில் தம்பிரான் தோழர், ஏழிசையாய் என்னும் பாட்டில் யான் செய்யும் துரிசுகளுக்கு உடனாகி என்கிறார். இது பரம்பொருளின் பரிபூரண நிலையை உணர்த்துவது. துரிசுகளுக்கு உடனாகி என்பதை இழிந்த மனத்தால் நோக்குதல் கூடாது. இழிந்த மனம் மனிதனை வீழ்த்தும். அத்திருவாக்கில் பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மை ஒளிர்கிறது. இதற்குச் சுந்தரர் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு என்பதை வலியுறுத்த வேண்டுவதில்லை. பிரான்ஸி முனிவர் கிறிது அன்பராகிய பிரான்ஸி முனிவரது வரலாற்றை என் நெஞ்சம் மறக்குமோ? அவர்தம் வாழ்க்கை, பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மைக்கு ஓர் அரண் என்று கூறலாம். பிரான்ஸி முனிவர் வாழ்க்கை, உலகம் பரத்தின் வழி நடப்பது என்பதை விளக்குவது என்று மன்பதை உணர்வ தாக; உணர்ந்து நடப்பதாக. கிறிது கிறிது பெருமான் போதனையும் சாதனையும் பரம் பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையில் தோன்றும் ஐயப்பாடுகளையெல்லாம் களையும் வல்லமை வாய்ந்தன. அப்போதனையும் சாதனையும் நம்பிக்கைக் கொள்கையாய் உலகில் நிலவுகின்றன. அக்கொள்கையில் யான் உறுதி கொண்டவன். 1என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும், ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை; களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை. அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டு கிறார்; அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்த வர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகின்றன என்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைப்பதுமில்லை ; நூற்பதுமில்லை. என்றாலும் சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமை யிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்த தில்லை என்று உங்களுக்குச் சொல்கிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ் விதமாக உடுத்துவித்தால் உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சய மல்லவா? ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப் போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். எனவரும் ஏசுகிறிதுவின் நன்மொழிகள் என் வாழ்க் கையைப் பண்படுத்திவருதலை யான் அறிவேன். பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. 1வழியும் சத்தியமும் ஜீவனும் நானே இதுவும் கிறிதுவின் செம்மொழிகளுள் ஒன்று. இம் மொழி பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மை, வாழ்க்கையில் படிந்து ஒன்றுதற்குத் துணை - உறுதுணை - பெருந் துணை - நற்றுணை - செய்தல் நிச்சயம். மாணிக்கவாசகர் அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங் குன்றே அனையாய் என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே. நாயிற் கடையாம் நாயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே வைத்திட் டிருக்கும் அதுவன்றி ஆயக் கடவேன் நானோதான் என்ன தோஇங் கதிகாரங் காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ்வைப்பாய் கண்ணுதலே. இப்பாடல்கள் திருவாசகத்தில் உள்ளவை. இவை, வாழ்க்கைப் பொறுப்புப் பரம்பொருளினுடையது என்னும் உண்மையை உறுதிப்படுத்தல் காண்க. பரம்பொருள் வாழ்க்கை வழி, வாழ்க்கை வழி பரம்பொருள். 6. புரட்சி? பரம்பொருள் வாழ்க்கை வழி என்பது உண்மை; மாறாத உண்மை. இவ்வுண்மையை உணர்தற்கென்றே உயிர்கள் உலகில் பிறவி தாங்குகின்றன. பிறவி நோக்கம் நிறைவேறாதவாறு சில தடைகள் மறிக்கின்றன. அத்தடைகளைத் திரட்டி இரு கூறிடலாம். அவை அகத்தடைகள் புறத்தடைகள் என்பன. மிகச் சில முன்னர் ஆங்காங்கே சுருக்கிச் சொல்லப்பட்டன. அறியாமை முதல் புறத்தடைகட்குப் பிறப்பிடம் அகத்தடைகள்; அகத்தடை கட்குத் தாயகம் அறியாமை. அறியாமைக்கு அகத்தடைகள் பிள்ளைகள்; புறத்தடைகள் பேரர்கள். அறியாமை முதல் சாய்ந்தால் பிள்ளைகள் பேரர்கள் குழந்தை குட்டிகளெல்லாம் கூட்டோடே சாயும். முதலைச் சாய்க்க ஒரு சாதனம் உண்டு. அச் சாதனம் மிகப் பழையது. அது சின்முத்திரை; மோன முத்திரை. அஃது இக்காலத்தில் எளிதில் கிடைப்பதரிது. பலரது நாட்டம் அதின்மீது செல்வதில்லை. அச்சாதனம் கிட்டினால் அகப் புறத்தடைகளெல்லாம் தாமே இறைப்பொழுதில் விலகும்; அறியாமை, வறுபட்ட நெல்லாய் முளைவிடா தொழியும். புறத்தடைகள் முதல் முதல் புற உலகம் தூய்மை உறும் வழிகாண முயல் வது நலம். அவ்வழி அக உலக அழைப்பாகும். இங்கே புறத் தளவில் நிற்க என்மனம் ஒருப்படுகிறது. புறத்தடைகள் பலப்பல. அத்தடைகளைத் தகர்த்தல் வேண்டும். எப்படித் தகர்ப்பது? அதற்குக் கருவி யொன்று தேவை. அது புரட்சி என்பது. புரட்சி என்றதும் சிலர்க்கு நடுக்கம் உண்டாகிறது. அவர் உள்ளம் பிரெஞ்சுப்புரட்சி, ருஷ்யப் புரட்சி முதலியவற்றை நினைக்கிறது. அதனால் அவர்க்கு நடுக்கம் உண்டாகிறது. பேயா? பிசாசா? புரட்சி என்றால் என்ன? பேயா? பிசாசா? பூதமா? புலியா? கரடியா? அன்று; அன்று. புரட்சி வாழ்க்கையை - சமூகத்தை - உலகத்தை - ஒழுங்குபடுத்திப் பண்படுத்துவது. அஃது இயற்கை நெறிக்கு அரண் செய்வது; முரண் செய்வதன்று. என்றும் புரட்சி புரட்சி எங்கும் என்றும் அறிந்தோ அறியாமலோ நிகழ்ந்த வண்ணமிருக்கிறது. கூர்ந்து நோக்கினால் புரட்சிக்கு ஓய்வு கிடையாதென்பதைத் தெளியலாம். குறைபாடுகள் உள்ளவரை புரட்சியும் நிகழ்ந்து கொண்டிருக்கும். குறைபாடுகள் எவ் விடத்தில் இல்லை? குறைபாடுகள் ஒவ்வொருவர் உள்ளத் திலும், குடும்பத்திலும், ஊரிலும், நாட்டிலும்,உலகிலும் இருக்கின்றன. அவைகளைக் குலைத்தாலன்றி உலகம் நன் முறை யில் இயங்காது. ஆதலின், இங்கே புரட்சியின் இன்றியமை யாமையை வலியுறுத்த வேண்டுவதில்லை. புரட்சி எது? புரட்சி எது? ஒரு வண்டி ஓடுகிறது. அஃது எப்படியோ ஓரிடத்தில் பாதையை விடுத்து ஒரு கால்வாயில் இறங்கி விடுகிறது. அக்காட்சி காணும் மக்கள் என் செய்கிறார்கள்? அவ்வண்டியைப் புரட்டிப் புரட்டிப் பாதையில் கொணர்ந்து சேர்க்கிறார்கள். இது புரட்சி. ஒருவன் திண்ணையில் உறங்கிக்கிடக்கிறான். அவன் உருண்டு உருண்டு தரையில் விழுகிறான்; விழுந்ததும் கண் விழித்து எழுந்து மறுபடியும் திண்ணையை அடைகிறான். இதில் புரட்சி உண்டு. ஒருவன் வழிப்போக்கரை மறித்துத் திருடிப் பிழைப்பதை ஒருவிதத் தொழிலாகக் கொண்டான். ஒரு நாள் அவன் உடல் போலிஸாரிடம் சிக்கியது. சிறை அவனை அழைத்துத் தன் னிடம் சேர்த்தது. அங்கே அவனது மனோநிலை புரண்டது. திருடு கெட்டது என்று அவன் உணரலானான். இம்மன மாற்றம் புரட்சி அன்றோ? இயற்கையில் பல தத்துவங்கள் அமைந்துள்ளன. அவற் றுள் ஒன்று நியதி. அந்நியதி வழியே உயிர்களின் வாழ்க்கை நடைபெறுதல் வேண்டும்; பிறழ்ந்து நடைபெறின் வழுக்கல் நேரும். வழுக்கி விழுந்த உயிர்கள் வழியல்லா வழியில் உழலும். அதனால் பலவிதத் தொல்லைகள் விளையும். இஃது இயல்பு. தொல்லைகள் உயிர்களை விழிக்கச் செய்து, அவற்றைப் புரட்டிப் புரட்டி நியதி வழியில் செலுத்தும். இப்புரட்டல் புரட்சி ஆகாது வேறு என்ன ஆகும்? உணராதார் இவ்வாறு வழுக்கல்களும் புரட்சிகளும் வாழ்க்கையிலும் சமுகத்திலும் பிறவற்றிலும் நிகழ்ந்த வண்ணமிருக்கின்றன. இதை உணராதார் புரட்சி என்றதும் பிரான்ஸையும் ருஷ்யாவை யும் நினைந்து நடுக்குறுகின்றனர். இந்நடுக்கம் புரட்சியைப் பேய், பிசாசு, பூதம், புலி, கரடி என்று நினைக்கச் செய்கிறது. இந் நினைவு மாறுதல் வேண்டும். இதற்கும் புரட்சி தேவை. நியதி மீறல் இந்நாளில் உலகம் எக்காட்சி வழங்குகிறது? பல வழியிலும் உலகம் இயற்கை நியதியை மீறி மீறி நெறியல்லா நெறியில் வீழ்ந்து வீழ்ந்து நெளியுங் காட்சியை வழங்குகிறது. உலகை நன்னெறியில் நிறுத்த எத்தனையோ இயக்கங்கள் தோன்றின; தோன்றுகின்றன. கிளர்ச்சிகள் எழுந்தன; எழுகின்றன. போர்கள் மூண்டன; மூள்கின்றன. இவையெல்லாம் சிற்சில இடங்களில் புரட்சி ஆயின; ஆகின்றன. மனந்திரும்பல் நல்ல போதனைகளைக் கேட்டும், நல்ல இயக்கங்களிற் சேர்ந்தும், நல்ல நூல்களைப் படித்தும் மனந்திரும்புவோரும் இருக்கின்றனர். தாமே மனந்திரும்புவது போற்றற் குரியது. மனந் திரும்புவதில் நிகழ்வதும் புரட்சியே. இருவிதம் புரட்சி இருவிதம். ஒன்று அறப்புரட்சி; மற்றொன்று மறப் புரட்சி. அறப்புரட்சி இரத்தம் சிந்தாது; மறப்புரட்சி இரத்தம் சிந்தும். அப்புரட்சி கொல்லாமை; இப்புரட்சி கொலை. அஃது அருள்; இது மருள். அஃது அஹிம்சை; இது ஹிம்சை. அறம் - மறம் அறப்புரட்சிக்கு இடந்தருவது அறிவுடைமை. அங்கே அருளும், அன்பும், அறமும் நிலைக்கும். மறப்புரட்சிக்கு இடந் தருவது அறியாமை. இங்கே இகலும் எரியும் கொலையும் கூத்தாடும். வாளால் வெட்டுவோன் வாளால் வெட்டப் படுவான் என்பது கிறிது பெருமான் திருவாய்மொழி. வாள் வாளையே பெருக்கும்; பீரங்கி பீரங்கியையே பெருக்கும்; அணு குண்டு அணுகுண்டையே பெருக்கும். இவ்வாறு தொல்லை களை வளர்த்து உலகை நாசப்படுத்தும் மறப்புரட்சி வேண்டா; வேண்டா. குறைகளைப் போக்க அறப்புரட்சியைக் கடைப்பிடிப்பது நலம். இல்லையேல் மறப்புரட்சி வலிந்து எழும். இயற்கையில் இருபுரட்சியும் உண்டு. சால்புடையது அறப்புரட்சியே. வளர்ச்சித் தடை இயற்கைச் சக்தி உலகை வளர்க்கிறது. வளர்ச்சி ஒருவிதத் தத்துவம். அஃது ஆக்கம் பெறின் எவ்விதப் புரட்சியும் நிகழாது. வளர்ச்சியைத் தடுக்கத் தீய சக்திகள் சீறுமாயின், அங்கே புரட்சி புகுதல் இயல்பு. ஏன்? வளர்ச்சியைத் தடுக்கும் தீய சக்திகளை ஒடுக்கும் பொருட்டே புரட்சி புகுகிறது. ஓர் இடத்தில் புரட்சி புகுகிறதெனில் அவ்விடத்தில் வளர்ச்சிக்குக் கேடுசூழும் தீய சக்திகள் தலை விரித்தாடுகின்றன என்று கொள்ளல் வேண்டும். இயற்கைவழியே உலகம் இயங்கினால் புரட்சி புகுதற்கு இடம் இராது. சில இங்கே வளர்ச்சியை மறித்து நிற்கும் சில தடைகளைக் கிளந்து கூறலாம் என்று எண்ணுகிறேன். இடையிடையே ஆங்காங்கே தடை நோய்களுக்குரிய மருந்தாம் அறப்புரட் சியைக் குறித்துச் செல்வதையும் என் நெஞ்சம் விரும்புகிறது. தடைகளிற் சில வருமாறு : உணவு மக்கள் தோன்றி முப்பது லட்சம் ஆண்டுகள் ஆயின என்பது சில அறிஞர் கண்ட முடிவு; அதை நாற்பது லட்சம் என் போரும் உளர்; இதற்கு மாறுபட்ட கருத்தினரும் இருக்கின்றனர். மக்கள் இனம் தோன்றியபோது அவ்வினம் அருந்தியது பொருந்திய உணவாகவே இருந்தது. பொருந்திய உணவு சைவ உணவென்று நமது நாட்டில் வழங்கப்படுகிறது. பின்னை அதனுள் பொருந்தா உணவு அதாவது புலால் உணவு நுழைந்தது. அதைத் தொடர்ந்து மூர்க்கம் புகுந்தது. மூர்க்கம் வளர்ந்து, மக்கள் கூட்டத்தைப் பல வழியிலும் அலைக்கிறது. அக்கூட்டத்தை விடுத்து மூர்க்கம் ஒழியவேண்டுமாயின், அது பழைய பொருந்திய உணவை அருந்த முயல்வது சிறப்பு. மனிதனும் விலங்கும் மனிதனுடைய பல், நா, நகம், குடல் முதலிய உறுப்புக்கள் பொருந்திய உணவுக்கென்று அமைந்தன என்பதும், புலி முதலிய விலங்குகளின் பல், நா, நகம், குடல் முதலிய உறுப்புக்கள் பொருந்தா உணவுக்கென்று அமைந்தன என்பதும் ஆராய்ச்சி யால் நன்கு தெளிவாயின. இடைநாளில் மனிதன் எவ்வாறோ தவறி விட்டான். தவறிய காரணங்களை இந்நூலில் விரித்தல் அநாவசியம். பொருந்தியதும் பொருந்தாததும் பொருந்திய உணவு மனிதனை என்ன செய்யும்? பொருந்தா உணவு அவனை என்ன செய்யும்? பொருந்தியது சாத்விகத்தை வளர்க்கும்; பொருந்தாதது மூர்க்கத்தை வளர்க்கும். முன்னையது ஆயுளைப் பெருக்கும்; பின்னையது ஆயுளைச் சுருக்கும். அது நோய்க்கு இடந்தாராது; இது நோய்க்கு இடந் தரும். இவ்வாறு பல கூறிச் செல்லலாம். ஜீவகாருண்யம் நம் முன்னோர் ஜீவகாருண்யத்தை முற்படுத்திப் பொருந் திய உணவுக்குச் சிறப்புத் தேடினர். இந்நாளில் ஜீவகாருண் யத்தை ஒட்டிப் பொருந்திய உணவு என்றால், அதை உலகம் பெரிதும் ஏற்பதில்லை. விஞ்ஞான ஆராய்ச்சி பொருந்தா உணவு மக்களுக்கு உரியதா? அன்றா? என்று பல இடங்களில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. ஜெர்மெனி யிலும் அமெரிக்காவிலும் செய்யப் பெற்ற ஆராய்ச்சிகளே சிறந்து விளங்கலாயின. விஞ்ஞானக் கலை கொண்டும், கருவி கொண்டும் அவ்விடங்களில் அறிஞர் நிகழ்த்திய ஆராய்ச்சிகள் பொருந்தா உணவு மக்களினத்துக்கு உரியதன் றென்றும், பொருந்திய உணவு உரிய தென்றும் ஐயம் திரிபு மயக்கம் அறத்தெளிவு செய்தன. விஞ்ஞான உலகம் பொருந்திய உண வின் பெற்றியை உணர்த்திவிட்டது. இவ்வுணவு இனி ஆக்கம் பெறும். பொருந்திய உணவின் நலத்தைப் பற்றி நூல்களும் ஆராய்ச்சிகளும் வெளிவந்த பின்னர், மேல் நாடுகளிலும் மரக்கறி விடுதிகள் ஆங்காங்கே அமைந்து வரலாயின. ஐம்பதாண்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் பிலடல்பியாவில் ஓர் உணவு மகாநாடு கூடியது. அம்மகாநாட்டில் டாக்டர் மெக்படின் என்பவர் இன்னும் ஐம்பதாண்டுக்குள் அமெரிக்க நாட்டில் பொருந்திய உணவு மணங்கமழும் என்று மொழிந்தனர். அவர்தம் மொழி வெளிவந்து ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டுகளாயின. இன்னும் இருபத்தைந்து ஆண்டுக்குள் அவர்தம் கருத்து நிறைவேறுதல் வேண்டும். நிறைவேறினால் அவர்தம் மொழி தீர்க்கதரிசனமாகும். பட்டாளங்களுக்கு உணவு நூலாசிரியர் ஆட்டோகாக் என்பவர் பட்டாளங் களுக்குப் பொருந்திய உணவு தந்துவரின் உலகில் போர் நடைபெறுதல் அரிதாகும் என்று கூறியுள்ளனர். அக்கூற்று இன்னும் சோதனை செய்யப்படவில்லை. ஆட்டோகாக்கின் எண்ணம் இனியாதல் நிறைவேறுவதாக. ஹிட்லர் ஜெர்மெனியை ஒரு குடைக்கீழ் ஆண்ட ஹிட்லர் பொருந் திய உணவு அருந்தியவர். ஆனால், அவர் தம்மைப் போலத் தம்மைச் சூழ்ந்தவரையும் அவ்வுணவுகொள்ளுமாறு போதித் தாரில்லை. ஜெர்மெனியைச் சுற்றிப் பிரிட்டனும், பிரான்ஸும், அமெரிக்காவும், ருஷ்யாவும் படையெடுத்து நெருங்கிய காலத்தில், ஹிட்லர், என்னிடத்தில் ஒரு தனிக் கருவி உண்டு. அஃது ஐரோப்பாவைத் துகள் துகளாக்கும் ஆற்றல் பெற்றது. mij ï¥bghGJ ah‹ ga‹gL¤âdhš flîŸ v‹id k‹Å¥ghuh? என்று இரங்கி நின்றனராம். இச்செய்தி சில பத்திரிகைகளில் வெளிவந்தது. ஹிட்லர் மனத்தில் கடைசி நாளில் (போலி) வெற்றி நிலவியதா? இரக்கம் நிலவியதா? இரக்கம் நிலவியது. காரணம் என்னை? அவர் பொருந்திய உணவை அருந்தி வந்ததாகும். இரக்கம் போர்த் தொடக்கத்தில் அவர்பால் ஏன் உதிக்கவில்லை? சூழலின் நெருக்கு இரக்கத்தை மறக்கச் செய்தது போலும்! ருஷ்யா இந்நாளில் உலகவர் உள்ளத்தைக் கவர்ந்துவரும் நாடு எது? ருஷ்யா என்று சொல்லலாம். இதற்குக் காரணம், ருஷ்யா சமதர்ம நாடென்று உலகத்தவரால் கொள்ளப்பட்டிருப்பதைக் கூறலாம். இச்சமதர்ம நாடு பொருந்திய உணவைப் பெருக்கு தற்கு ஏதேனும் முயற்சி செய்கிறதா? அங்கே உள்ள செம் படைகட்கு அவ்வுணவு அளிக்கப்படுகிறதா? இல்லையே. மூர்க்கத்தால் அமையும் சமதர்மம் எங்ஙனம் போர் பூசல்களை நிறுத்துவதாகும்? சமதர்ம நோக்கங்களுள் போர் பூசலை நிறுத்துவதும் ஒன்றன்றோ? இனியாதல் ருஷ்யா பொருந்திய உணவின் மீது கருத்துச் செலுத்துவதாக; பட்டாளங்களுக்கு அவ்வுணவை அளிக்க உளங்கொள்வதாக. பாரதநாடு பொருந்திய உணவுக்கு முதல் முதல் கால்கொண்ட நாடு நமது பாரதநாடு. அவ்வுணவால் விளையும் நலன்கள் பல. அவற் றுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன இரண்டு. ஒன்று கொல்லாமை; மற்றொன்று தேவைக்குமேல் பொருள் திரட்டாமை. இவை அஹிம்ஸையின்பாற்பட்டன. பாரத நாட்டில் கொல்லாமை விதை விழுந்து பல்லாயிரம் ஆண்டுகளாயின. அவ்விதையை முதல் முதல் விதைத்தவர் விருஷபதேவர். அவர் கொல்லாமையை அறிவுறுத்தியதோடு நின்றாரில்லை. தேவைக்குமேல் மனிதன் பொருள் சேர்த்து வைத்தல் கூடாதென்றும் அருளினர். தேவைக்குமேல் பொருள் சேர்த்து வைப்பது பிறரை ஹிம்சிப்பது என்று அவர் கருதினர். கொல்லாமையும், தேவைக்குமேல் பொருள் சேர்த்து வையாமையும் வேற்றுமையற்ற ஒன்று என்று விருஷபதேவர் திருவுள்ளம் எண்ணியது. அவ்வெண்ணம் மெய்யுணர்வால் முகிழ்த்தது. மெய்யுணர்வு தேவரை அஹிம்ஸா பரமோதர்மா என்று போதிக்கச் செய்தது. தேவர் அறிவுறுத்திய தர்மம் - சம தர்மம், வாழ்க்கையை - சமூகத்தை - உலகத்தைப் போரின்றிக் காத்து நல்வழிப்படுத்துந் திறனுடையது. அத்தர்மம் மார்க்ஸி யமும் காந்தியமும் கலந்த ஒன்று என்று இந்நாளில் யான் பேசியும் எழுதியும் வருகிறேன். காந்தியம் என்பது நாட்டில் புதியதாகத் தோன்றியதன்று. அது விருஷபதேவர் வழி வழியே வாழையடி வாழையென வளர்ந்து வருவது. விருஷபர் தர்மம் போரை அறவே தொலைத்து அமைதியை ஓம்பவல்லது. வெறும் பேச்சு! போர் கூடாது என்று எங்கணும் பேசப்படுகிறது. வெறும் பேச்சால் என்ன பயன் விளையும்? பேச்சுக்கேற்ற செயல்வேண் டும். மூர்க்கம் உள்ளவரை போர் நிகழாமல் இராது. மூர்க்கத்தை ஒழிக்கவல்லனவற்றுள் சிறந்தது பொருந்திய உணவு. இவ் வுணவைப் போர் வீரர் அருந்தினால் அவர்பாலுள்ள மூர்க்கம் குறையும். மூர்க்கம் குறைந்தால் போர் தானே பொன்றும். உணவும் குணமும் உலகம் அமைதியை இழந்து நிற்கிறது. அமைதிக்குச் சாத்விகம் தேவை. சாத்விகத்துக்குப் பொருந்திய உணவு தேவை. மன்பதையில் பொருந்திய உணவு பரவப் பரவ உலகம் நல் வழி யில் வளரும். உணவுக்கேற்ற குணம் என்றனர் கீதாச்சாரியர். ஆடு மாடு முதலியன மனிதன் தனது நலத்தின் பொருட்டு, ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் முதலியவற்றை அகால மரணத்துக்குட்படுத்து கிறான். அதனால் உலக வளர்ச்சித் தத்துவத்துக்கு இடர் விளைகிறது. இதை அன்னிபெஸண்ட் அம்மையார் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லியதை யான் இளமையிலேயே கேட்டேன். பின்னே யான் செய்த ஆராய்ச்சிகளால் அம்மையார் வலியுறுத்தியதின் நுண்மை செவ்வனே விளங்கியது. ‘ML, khL, nfhÊ, g‹¿, Û‹ KjÈat‰iw¥ gil¡fKoahj kÅjD¡F, mt‰iw mÊ¡F« cÇik v§»UªJ tªjJ? என்னுங் கருத்தைக் - காந்தியடிகள் பன்முறை பறைசாற்றியதும் எனக்குத் தெரியும். பொருந்தா உணவு - புலால் உணவு - காரண மாக நாடோறும் நடக்கும் கொலைகள்! ஆ! ஆ! எத்தனை எத் தனை கோடி! ஏழை உயிர்கள் என்ன செய்யும்? முறையிட அவற்றுக்கென்று நீதிமன்றம் உண்டோ? பிற உண்டோ? திக்கற்ற ஏழை உயிர்களின் கொலை, மக்கள் உலகைக் கொலைக் களனாக்கி வருகிறது. மக்களுலகில் கொலை நிற்க வேண்டு மானால், ஏழை உயிர்களின் கொலை நிற்றல் வேண்டும். பொருந்தா உணவு ஒழிந்தால் மக்களும் குணமடைவார்கள்; ஏழை உயிர்களும் குணமடையும். குணம், வளர்ச்சித் தத்துவம் தடைபடாமல் நேரிய முறையில் ஓங்குதற்குத் துணைபுரியும். 1கொல்லான் புலானை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் என்றும், 2கொல்லாமை எத்தனைக் குணக்கேட்டை நீக்கும் . . . கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே கொல்லா விரதம் குவலயமெல் லாம்ஓங்க எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே. என்றும் சான்றோர் அருளிய கருணை மொழிகளைச் சிந்தித்து உண்மை உணர்க. இது புரட்சிக்காலம். பலதிறப் புரட்சிகளுள் உணவுப் புரட்சியும் நடைபெறுதல் வேண்டும். உணவுப்புரட்சி மூர்க்க உலகை மாற்றி அமைதி உலகாக்கும். அது மக்களைத் தெய்வ மாக்கும். உடை உடையிலும் புரட்சியா? v‹nd òu£á ntf«! என்று சிலர் நினைக்கலாம். காலவேகம் உடைப்புரட்சி மீதும் செல் கிறது. அமைதிக்கு எத்தனையோ விதப் புரட்சிகள் தேவை. அவற்றுள் ஒன்று உடைப்புரட்சி. இதில் என்ன வியப்பு? உடைக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டா? இல்லையா? தொடர்பு உண்டு எனில் புரட்சி தேவையே; இல்லையெனில் புரட்சி தேவையில்லை. இக்காலக் கலைகள் உடைக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பு உண்டு என்று நவில்வதும் ஈண்டுக் குறிக்கத்தக்கது. சர்க்கா முற்கால மக்கள் உடைக்கென்று அங்கும் இங்கும் அலைந்தாரில்லை. அவர்கள் தங்கள் உடைகளுக்கென்று தாங்களே உழைப்பார்கள். அந்நாளில் பலவகைப் பாடல்கள் முழங்கும். அவற்றுள் சர்க்கா முழக்கமும் ஒன்றாயிருக்கும். ஓய்ந்த வேளைகளில் பெண் மக்கள் கைகள் சும்மா இரா. அவை சர்க்காவைச் சுழற்றிக்கொண்டிருக்கும். நாளடைவில் சர்க்கா ஓசை குன்றியது. இந்நாளில் அஃது அறவே குன்றியது. அக் குன்றுதலை இயற்கை அன்னை விரும்பினாளில்லை. அவளரு ளால் சர்க்காவை உயிர்ப்பிக்க இந்நாளிலும் ஒருவர் தோன்றினர். அவர் கதூரிபாய் கணவர். செல்வன் - ஏழை அந்நாளில் உடையிலும் பொதுமை நிலவியது. செல்வன் உடை, ஏழை உடை என்ற வேற்றுமையை அந்நாள் காண வில்லை. இந்நாள் அவ்வேற்றுமையைக் காண்கிறது. விஞ்ஞான இயந்திரங்களாலும் சாம்ராஜ்ய ஆட்சிமுறைகளாலும் உடை வகைகள் ஓங்கின. செல்வன் உடை, ஏழை உடை என்ற வேற் றுமை தோன்றலாயிற்று. இவ்வேற்றுமை பொறாமையை எழுப்புந் தன்மையது. பொறாமையும் போரும் வேற்றுமை பொறாமையை ஈனும்; பொறாமை போரை ஈனும். இன்று பொறாமை - நாளை போர் என்பது அநுபவ மொழி. பொறாமைக் கனல் எரியும் வாழ்க்கை இனியதாகுமோ? ஆகாது. பொறாமைக் கனல் அற்ற புனித வாழ்க்கையே இனிய தாகும். ஒரேவித உடை இயந்திரங்கள் இனி அருகுமா? அருகா. அருகா எனில் எல்லார்க்கும் ஒரே வித உடை எவ்வாறு அமையும்? சமதர்ம காலத்தில் இயந்திர சாலைகளெல்லாம் பொதுமையாகும். அக்காலத்தில் உடைகள் உயர்வு தாழ்வின்றி ஒழுங்குபடும். அவ்வந்நாட்டார் தட்ப வெப்ப நிலைமைக்கேற்றவாறு ஒவ்வொரு நாட்டுக் கென்று ஒவ்வொரு வித உடை ஏற்பட்டது. ஒரு நாட்டார் உடையை இன்னொரு நாட்டார் அணிவது இயற்கைக்கு முரண்பட்டு நடப்பதாகும். அவ்வந்நாட்டார் தம்தம் நாட்டு உடையை அணிவது இயற்கைக்கு அரண் செய்வதாகும். வெம்மை நாட்டில் வாழ்வோர் மூன்று சட்டை அணிவது எற்றுக்கு? இஃது இயற்கைக்கு மாறுபட்டு நடப்பதன்றோ? அமைதி உடைக்கோலம் அமைதி ஊட்டுவதாய் இருத்தல் நல்லது. அக்கோலம் தீய எண்ணங்களைத் தோற்றுவிப்பதாய் இருத்த லாகாது. சிறப்பாகப் பெண்மணிகள் உடையில் தெய்விகப் பொலிவு திகழ்தல் மேன்மை. போலிஸார்க்கென்றும், போர் வீரர்க்கென்றும், தளபதி கட்கென்றும் தனித்தனி உடைகள் அணியப்படுகின்றன. அவ்வுடைகள் எத்தகைய காட்சியை வழங்குகின்றன? அமைதிக் காட்சியை வழங்குகின்றனவா? இல்லை. உடைக்கோலம் அமை தியை வழங்குவதாய் இருத்தல் இனியது. உடைப்புரட்சி என்று நிகழும்? அணி பழைய நாளில் இயற்கையுடன் வாழ்ந்த மக்களைப் பொன்னும், முத்தும், பவளமும், மணியும், இன்ன பிறவும் அணி செய்தன. இன்னும் அவ்வணி அறவே ஒழியவில்லை. இக்கால நாகரிகம் படர்ந்த சில இடங்களில் மட்டும் அது குலைந்து வருகிறது. போலிகள் சில இடங்களில் பொன்முத்து முதலியவற்றிற்குப் பதிலாகப் போலிகள் அணியப்படுகின்றன. இது காலத்தின் கோலம். காலமும் கோலமும் எவ்வெவ் வழியில் ஓடினும் ஓடுக. இங்கே நாம் கருதத்தக்கது ஒன்றுளது. அது போலி அணி களைப் பற்றியது. போலிகளும், பொன்முத்து முதலிய மூல அணிகளின் மாண்பை உணர்த்துவன என்க. இயற்கை மருந்துகள் பொன், முத்து, பவளம், மணி முதலியன பலதிற நோய்கள் உடலை அணுகாதவாறு காத்துவரும் இயற்கை மருந்துகள். இம்மருந்துகள் இன்னும் மருத்துவர்களால் கையாளப் படுகின்றன. இக்காலத்தும் சிறப்பாகக் காசநோய்க்குப் பொன், முத்து, பவளம் முதலிய மருந்துகள் கொள்ளப்படுதலைக் காண்கிறோம். அவற்றின் விழுப்பம் நம் முன்னோரால் நன்கு அறியப்பட்டது. அவ்விழுப்பத்தால் அவர் உள்ளத்தில் கனன்று பூத்த உணர்ச்சி, தாம் விரும்பும் பொருள்களிலெல்லாம் பாய்ந்தது. முன்னோர் பரம்பொருளையும் பொன்னே, மணியே, முத்தே என்று பாடுவதை ஒரு வழக்காகவும் கொண்ட னர். ஏன் கொண்டனர்? அவற்றின் நலத்தை உலகுக்கு உணர்த்த வேண்டுமென்பது அவர்தம் உட்கிடக்கை. பொன், முத்து முதலியவற்றின் நினைப்பே நோய்களைப் போக்கி வரும். மலர்கள் பண்டைநாளில் நறுமலர்கள் மக்கள் வாழ்க்கையை மணஞ்செய்தன. அவர்கள் தலையிலும் கழுத்திலும் கையிலும் மலர் மணங்கமழ்ந்த வண்ணமிருக்கும். நாளடைவில் ஆண் மக்கள் மலரைப் பெரிதும் விடுத்தார்கள். அவர்கள் நெஞ்சில் மலர்மணம் கமழ்வதில்லை. பெண்ணுலகம் மட்டும் மலர் மணத்தை இன்னும் வெறுக்கவில்லை. அவ்வுலகில் இன்னும் மலர்மணம் கமழ்கிறது. சில இடங்களில் மணமற்ற இதழ்களும், செயற்கை அரும்புகளும் பெண் உலகை அடிமைப்படுத்தி யுள்ளன. இது விரும்பத்தக்க தன்று. மலர் மணம் மக்களில் - சமூகத்தில் - உலகில் கமழ்தல் வேண்டும். இல்லையேல் அவை மணம் பெறா. இனி மலர், மக்களின் மனத்தில் - தலையில் - கழுத்தில் - கையில் - வாழ்க்கை யில் - ஏறிப் பழையபடி ஆட்சி புரிவதாக. புலனாகாத ஒளி மலரில் உண்டு. அது நாற்றத்தைப் போக்கும்; நுண்ணிய நச்சுப்பூச்சிகளை மாய்க்கும். வேறு பல பண்புகளும் மலரிடைப் படிந்துள்ளன. தாவர நூல்களை ஆய்க. மயிர் மயிர் இயற்கை உடை. அஃது உடற்காப்புக்கென்று இயற்கையில் அமைந்தது. அதில் குறும்பு புரிதற்கு எவர்க்கும் உரிமையில்லை. தலைமயிர் எவ்வளவோ மாறுதல் அடைந்தது. மாறு தலைப் பற்றி நூல்களும் எழுதப்பட்டன. ஆதியில் மயிரை வெட்டவோ நீக்கவோ கருவி கிடையாது. அஃது உரிமையுடன் வளர்ந்தது. பின்னே கருவிகள் தோன்றின. மயிரில் சீர்திருத்தம் நுழைந்தது. கருவிகளால் மயிர் சில இடங்களில் வெட்டப் பட்டது; சில இடங்களில் மொட்டையடிக்கப்பட்டது; சில இடங்களில் தலைமயிர் மட்டும் நீக்கப்பட்டது; தாடி நீக்கப் படவில்லை. சில இடங்களில் தலைமுழுவதும் க்ஷவரம் செய்யப் பட்டது. ஆனால், கருவி உச்சிக்குடுமியை அணுகுவதில்லை. மயிர் இயற்கையில் அமைந்தது. அதைப் பலவாறு குலைப் பது முறைமையா? க்ஷவரத்தால் நுண்ணிய நரம்புகள் அசைந்து நடுங்கிக் குலையும். அக்குலைவால் நரம்புத்தளர்ச்சி உண்டாகும். ஆகவே, தலைமயிரை வளரவிடுவது இயற்கைக்கு அரண் செய்வதாகும். மலர்க்கும் மயிர்க்கும் பழமை புரட்சி செய்வதாக. இனிமை ஆதி மனிதன் வாழ்க்கையில் இனிமை தவழ்ந்தது. அவன் இயற்கையுடன் வாழ்ந்து இனியனானான். இனிமை, வாழ்க்கை யுடன் இரண்டற்று நிற்பது ஒழுங்கு. மக்கள், இயற்கை இனி மையை இழந்து, செய்கை உணவு - உடை - உரை முதலியவற்றால் அதைத் தடவுவது இனிமையாகாது. அஃது இன்னாமை யாகும். மனித வாழ்க்கை படிப்படியே இனிமையை இழந்து வருகிறது. இன்னாமை அவனது உடைமையாகி வருகிறது. மகன் இன்னாமையை நினைக்கிறான்; பேசுகிறான்; அதற்குரிய செயல் களை ஆற்றுகிறான். அவன் வாழ்க்கை இனிமையை எங்ஙனம் நுகர்தல் கூடும்? பெறுதற்கரிய வாழ்க்கை, மூர்க்கத்துக்கு இரையாகிறது. இவ்வாழ்க்கை வீழ்வதாக. மீண்டும் மனிதன் பழைய இனிமை வாழ்க்கையைப் பெறுவானாக. இதற்கு அவன்றன் நினைவு - பேச்சு - செயல் - எல்லாம் இனிமையாதல் வேண்டும். அதனால் அரும்பும் இனிய வாழ்க்கை மூர்க்கத்துக்கு இரையாகாது. ஐம்புலன் மனிதன்பால் ஐம்புலன் அமைந்துள்ளன. அவ்வமைப்பின் நோக்கம் என்ன? புறத்துக்கும் அகத்துக்கும் தொடர்பை உண் டாக்குவது அவ்வமைப்பின் நோக்கம். இதுபற்றியே ஐம்புலன் புறத்துக்கும் அகத்துக்கும் இடையே பொருந்தின போலும். புலனைந்தும் இனிமையில் திளைத்தால் புறமும் அகமும் இனியனவாகும். காண்டல் - கேட்டல் ஐம்புலனும் இனிமையில் திளைத்தற்கு, மனிதன் காண்டல் கேட்டல் முதலியன எல்லாம் இனிமை பயப்பனவாய் இருத்தல் வேண்டும். அவை இன்னாதனவாயின் மனித வாழ்வில் இனிமை தவழ்தல் அரிது. இக்கால மனிதன் - ஏழை மகன் -வீட்டிலே இனிமை காணாது, வெளியே புறப்படுகிறான். என்ன காண்கிறான்? சீனத்தில் இரத்த ஆறு, வங்கத்தில் குண்டு வீச்சு, மலேயாவில் தூக்கு முதலிய கோரங்கள் கொட்டை எழுத்துக்களில் பதிக்கப் பெற்ற விளம்பரங்களைக் காண்கிறான்; பசி பட்டாளங்களைக் காண்கிறான்; கண்ணிருண்ட என்புக்கூடுகளைக் காண்கிறான். இக்காட்சிகள் இனியனவா? உயர்பிறவி தாங்கிய அரிய மனிதன் செவியிலாதல் இனிமை இறங்குகிறதா? ஐயோ! பாவம்! அவன் முன்னோர் செவிகள் வண்டிசையையும், குயில் குரலையும், அருவி முழவை யும் கேட்டுக் கேட்டு இனிமையைப் பருகின; தேவாரப் பண்களை மாந்தி மாந்தி இனிமையில் மூழ்கின. யாழும் குழலும் அவர்தம் செவியணியாயின. அச்செவிகள் குழந்தை மழலை அமுதை உண்டு உண்டு இனிமையில் தேங்கின. அவர்க்கு எல்லாம் இனிமை! எங்கும் இனிமை! அப்பெரியோர் வழிவந்த இக்காலச் செல்வன் - இருபதாம் நூற்றாண்டு மைந்தன் - நாகரிகக் காளை - என்ன கேட்கிறான்? அவன் காதில் அம்மா பசி - கண் தெரியவில்லை - ஒரே மயக்கம் - இரண்டுநாள் பட்டினி என்னும் கூக்குரல்கள் விழுகின்றன. மின்னல் வண்டி- புகைவண்டி - மோட்டார் வண்டி முதலியவற்றின் அதிர்ச்சிகள் அவன் காதை அடைக்கின்றன. காளை ஓட்டமெடுத்துக் கடைத் தெருவை அணைகிறான். அங்கே ஒரே இரைச்சல் - ஒரே சந்தடி- சண்டைப்பேச்சுக்கள் - காதைச் செவிடுபடுத்துகின்றன. இவற் றிடை ரேடியோ பேய் அலறுகிறது. மைந்தன் மயங்குகிறான்; மயக்கத்துடன் உணவு விடுதியை நோக்குகிறான்; காபி குடிக் கிறான். மயக்க வெறி தலைக்கேறுகிறது. இந்நிலையில் அவன் காது வேலை செய்யுமோ? அக்காதில் இனிமை இறங்குமோ? மாறுதல் பழைய இசை புதிய வசையாயிற்று. பழைய சங்கீதம் புதிய வெங்கீதமாயிற்று. பழைய பாட்டுப் புதிய வேட்டாயிற்று. எங்கே இனிமை? காண்டல் கேட்டல் எல்லாம் இனிமை பெறவில்லை எனில் வாழ்க்கையில் இனிமை எவ்வழியில் நிலவும்? வாழ்க்கை யின் பயன் என்னவாகும்? கொடுமையாகும்; கோரமாகும்; கொலையாகும். இக்காலச் செல்வனது வாழ்க்கை இனிமை என்னே! என்னே! துறவு மேலும் வாழ்க்கை இனிமையைக் கெடுக்கப் பொல்லாத துறவு ஒன்று ஏற்பட்டது. இத்துறவு வாழ்க்கை இனிமையைத் துளைத்து வருகிறது. ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் வெறுப்பது துறவாம்! அத்துறவு வீடு பேற்றை அளிக்குமாம்! நல்ல துறவு! நல்ல வீடுபேறு! மனத்துக்கண் மாசில்லாமை துறவு என்னும் சீரிய கொள்கை சிதறி வருகிறது. துறவு நெறியல்லா நெறி சென்று உழல்கிறது. திருவள்ளுவர் அறிவுறுத்திய துறவு மீண்டும் உயிர் பெற்றால் வாழ்க்கை இனியதாகும். இல்வாழ்க்கை இனிமை இல்வாழ்க்கையில் உண்டு என்பதை மக்கள் உணர்ந்து நடப்பார்களாக. இது குறித்து, பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை என்றொரு நூல் என்னால் இயற்றப்பட்டது. அந்நூல் மிக நுண்மையாக - அமைதியாக - அறப்புரட்சி நிகழ்த்தி வருகிறது. தள்ளல் - கொள்ளல் தீய படக்காட்சி, களியாடல், களிக்கதை, வெறிப்பேச்சு, தலைமைச் செருக்கு, அதிகாரமிடுக்கு, புறங்கூறல், தன்னலம், சுரண்டல், பிரிவு நினைப்பு முதலியன இனிமையைக் கொல்லும் யமன்கள். இவை தள்ளற்பாலன. நற்காட்சி, நல்லோர் இணக் கம், தெய்வத்தியானம், ஒப்புரவு, தாழ்மை, உழவு நோக்கு, ஒருமை நாட்டம், முதலியன இனிமையை ஓம்பும் தெய்விகங்கள். இவை கொள்ளற்பாலன. புது உலகம் மக்கள் இனியதை நினைந்து, இனியதைப் பேசி, இனியதைச் செய்து வாழும் வாழ்க்கையிலே இனிமை கெழுமும். இன்னாத வாழ்க்கையால் அலுத்து உலுத்த இவ்வுலகம் மறைந்து, இனிய வாழ்க்கையால் புது உலகமாக மாறுதல் வேண்டும். இம்மாற்றத்தைச் செய்வது புரட்சி. சாதி நிறம் முதலியன நமது நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்க்கை நலத்துக்கென்று வருணாசிரம தர்மம் காணப்பட்டது. அத்தர்மம் சிலகாலம் நன்முறையில் நடந்தது. பின்னே அதன்கண் பிறப்பில் உயர்வு தாழ்வு கருதும் சாதிப் பாகுபாடுகள் இடம் பெற்றன. இப்பாகுபாடுகள் தர்ம நோக்கைச் சிதைத்து, அதர்ம நோக்கைப் பெருக்கின. தர்மம் தனது நிலையினின்றும் பிறழ்ந்தது. அது சாதிப்பாகுபாடுகளை வளர்ப்பதில் தனது நோக்கத்தைத் திருப்பியது. புத்தர் முதலியோர் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் அதர்மத்தை ஒழிக்க முதல் முதல் புரட்சி செய்தவர் புத்தர் பெருமான். அப்புரட்சி அவர் காலத்தில் ஓரளவில் வெற்றி அளித்தது. புத்தர் அறப் புரட்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. அது காலத்துக்கேற்ற வாறு பலப்பல இயக்கங்களாய் மாறுதல் நிகழ்த்தியே வருகிறது. புத்தர் புரட்சிக்கு ஆக்கந்தேடியவர் திருவள்ளுவர், நால்வர், ஆழ்வார், ராஜாராம் மோஹன்ராய், தயானந்த சரவதி முதலியோர். பிறப்பில் உயர்வு தாழ்வு கருதும் புன்மை, ஆட்சி யில் உள்ளவரை, புத்தர் அறப்புரட்சி ஒடுங்கி மறையாது. சிறப்பு பிறப்பால் சாதி கருதாத சமயத்தார் பலர் இந்தியாவில் குடிபுகுந்தனர். அவர்தம் கூட்டுறவும் இந்திய மக்கள் கண்ணைத் திறந்தது. இந்திய நாகரிகமும், தர்மமும், ஆத்ம ஞானமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்து விளங்கின. அச்சிறப்பை இடைக்கால இந்தியா நல்வழியில் அநுபவிக்க வில்லை. சாதிப் பாகுபாடுகள் இந்திய சமூக வளர்ச்சியைத் தகைந்தன. அவை இந்தியாவில் தோன்றாதிருந்தால் இந்திய நாகரிகமும், தர்மமும், ஆத்ம ஞானமும் உலகெங்கும் பரவி யிருக்கும். உலகம் ஒரு குலமாகியிருக்கும்; இரண்டு உலகப்போர் நடந்திரா. இந்தியாவுக்குக் கேடு சூழ்ந்து வரும் சாதிப் பாகுபாடுகளை இன்னுமா வளரவிடுவது? இன்னுமா அவை நாகரிகத்தையும், தர்மத்தையும் ஆத்ம ஞானத்தையும் சிறைப்படுத்தி இருத்தலைக் கண்டு களிப்பது? சாதிப் புன்மையைச் சாய்க்கவேண்டுவது எவர் கடமை? இந்திய மக்கள் கடமையன்றோ? நிறம் உலகில் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொருவித மடமை, வளர்ச்சிக்கு இடர் செய்துவருகிறது. அம்மடமைகளில் ஒன்று பிறப்பில் நிற வேற்றுமை கருதுவது. தட்ப வெட்ப நிலைமைக் கேற்றவாறு ஆங்காங்கே நிற வேற்றுமை அமைகிறது. அவ் வேற்றுமையை உயர்வு தாழ்வுக்குப் பயன்படுத்துவது அறிவா? அறியாமையா? அமெரிக்கா பழைய நீக்ரோ மக்களை இழிவு படுத்துகிறது. இங்கிலாந்தில் சில உணவு விடுதிகளில் இந்தியர் உள்ளே நுழைதல் கூடாது என்று வரையப்பெற்ற பலகைகள் தொங்குமாம். தென்னாப்பிரிக்கா வெள்ளையர் இன்னும் நிறவெறியில் மூழ்கி மயங்கிக் கிடக்கின்றனர். அங்கே கரு நிறத்தார் வேட்டையாடப்படுவதை உலகறியும். அவ்வேட் டையைத் தடுக்கக் காந்தியடிகள் எவ்வளவு முயன்றனர்! என்ன பயன் விளைந்தது? குருமார் புற நிறத்திலா கருத்தை இருத்துவது? தட்ப வெப்பத்தால் உறும் ஒன்றையா பொருளாக் கொள்வது? அறியாமை! அறியாமை! உலகக் குருமார் என்று போற்றப்படும் புத்தர், கிறிது, மகமது முதலியோர் எந்ந நாட்டில் பிறந்தனர்? வெள்ளை நாட்டிலா பிறந்தனர்? நிறத்திமிர் படைத்த மக்கள் இனியாதல் நல்லறிவு பெற்றுச் சகோதர நேயத்தை வளர்க்க முற்படுவாராக. நிறவேற்றுமையைக் கருதுவது வளர்ச்சிக்கு இடுக்கண் புரிவதாகும். இதை விஞ்ஞான உலகம் நன்கறியும். அவ்வுலகம் நிறத் திமிரைப் போக்க முயன்றால் நலன் விளையும். மொழி உலகை அழகு செய்வன பல. அவற்றுள் ஒன்று மொழி. மொழி இல்லையேல் கலை ஏது? கலை இல்லையேல் வாழ்க்கை ஏது? வாழ்க்கைக்கும் மொழிக்கும் உள்ள தொடர்பு பெரிது. அத்தகைய மொழியிலும் போராட்டம் புகுந்து தொல்லை விளைக்கிறது. இஃது இழிவு! இழிவு! நாதம் மொழிகள் எல்லாவற்றிற்கும் ஊற்றாயிருப்பது நாதம். அங்கே பன்மை கிடையாது. ஒருமையே நிலவுகிறது. அவ் வொருமையினின்றும் பிறக்கும் பன்மைச் சேய்களுக்குள் ஏன் போராட்டம் நிகழல் வேண்டும்? ஒரே நாதத்தினின்றும் பிறப்பது, பலபட்டு விளங்குதற்குக் காரணம், தட்ப வெப்ப நிலையும் பிறவுமாகும். தட்ப வெப்பத்தால் உண்டாகும் வேற்றுமையைப் போருக்குப் பயன் படுத்துவது கூர்த்தமதியாகாது. நினைப்பில் ஆழ்தல் மொழிப்போர் புரிவோர் தம்தம் தாய் மொழியை நினைந்து நினைந்து, அதில் ஆழ்ந்து ஆழ்ந்து சென்றால் அம் மொழி நாதமாதலை உணரலாம். இவ்வாறே ஒவ்வொரு மொழி யினரும் நினைப்பில் ஆழ்ந்தால் உண்மை காணப்பெறுவர். மொழிகட்குத் தாய்மைப் பீடம் ஒன்றென்னும் நினைவு பெருகப் பெருக மொழிப் பகை அருகும்; அன்பு பெருகும். பன்மொழி ஒருவன் முதல் முதல் தனது தாய் மொழியைப் பயிலலாம். பின்னே அவன் பல மொழிகளைப் பயிலலாம். பலமொழிப் புலமை வாழ்க்கைக்கும் சமுகத்துக்கும் இன்றியமையாதது. இதை உணர்ந்தால் போர் தானே பட்டுப்போகும். இசையில் ஒருமை மொழி வெறி கொண்டு ஒரு மொழியினர் மற்றொரு மொழியை இழித்துரைப்பதும், கெடுக்க முயல்வதும் கொடுமை. ஒருவர் மொழியை இன்னொருவர் கெடுப்பது தம் கையைத் தாமே வெட்டிக்கொள்வதாக முடியும். பலமொழிப் பாடல்கள், இசையில் தமது பன்மையை ஒடுக்கி ஒருமையைப் புலப்படுத்து கின்றன. இசை மொழிகளைக் கடந்தது. இந்நுட்பத்தை மொழி வெறியினர் உணர்ந்து நல்வழிப்படுவாராக. நாட்டுப் பித்து இந்நாளில் நாட்டுப் பித்தால் மோதுண்போரும் உளர். நாட்டுப் பித்துப் பலவிதச் சிறுசிறு போர்களை மூட்டி வந்தது. அப்போர்களெல்லாம் திரண்டு முதல் உலகப் போராயின. அப்போர் நாட்டுப்பித்தை ஓர் அளவில் குறைத்தது. இரண்டாம் உலகப்போர் அப்பித்தை மற்றுமோர் அளவில் குறைத்தது. மூன்றாம் உலகப்போரால் நாட்டுப்பித்து அறவே ஒழியும் போலும்! அந்தோ! போரையா எதிர்பார்த்துக் கிடப்பது? அறிவு எங்கே போயிற்று? ஒரு குலம் எல்லா நாட்டாரும் மக்கள் குலத்தில் சேர்ந்தவரே. எல்லார்க்கும் இருகால், இருகை, இருகண், இருசெவி, ஒரு மூக்கு ஒரு தலையே இருக்கின்றன. ஒரு குலத்திலா சண்டை மூள்வது? உலகம் ஒன்று. அது நாடுகளாய்ப் பிரிகிறது. பிரிவை மக்கள் செய்தார்களில்லை; மலையும், காடும், ஆறும், கடலும், பிறவும் நாடுகளைப் பிரித்துள்ளன. இப்பிரிவால் சகோதர நேயத்தையா இழப்பது? சாதி நிற மொழி நாடு முதலியவற்றை ஒட்டி எழுந்த போராட்டங்கள் போக; ஒழிக. இனி எவ்வகைப் போராட்டமும் எழாதவாறு காப்பது அறிவுக்கு அழகு, அறிவு, மக்கள் வாழ்க்கையை அழகு செய்யாது இனி வாளாகிடக்குமோ? அறிவு, அன்பால் புரட்சி செய்யும். அறிவும் அன்பும் சேர்ந்த புரட்சியே அறப்புரட்சி என்பது. நூல் நூல் என்பதற்குப் பல பொருள் சொல்லப்படுகின்றன. பலபட்ட பொருள்கள் பெரிதும் உரை நூல்களில் வீற்றிருக் கின்றன. அவற்றை ஈண்டு யான் திரட்டிக் காட்டப் போவதில்லை. பரம்பொருள் இயற்கையை உடலாக்கொண்ட பெருநிலை யின் நீழல் நூல் என்று இப்பொழுது சொல்லலாம். நூல் உயிர்கட்குப் புரியுந் துணைத் திறங்கள் பல. அவற்றுள் ஒன்று பரம்பொருள் இயற்கை வாயிலாக உயிர்களை ஓம்புதலுக்குத் துணைபுரிவது. வேதம் இப்பெருமை வாய்ந்த நூல்களுள் உயிர்போன்றது வேதம். வேதத்தைப்பற்றிய கருத்து வேற்றுமைகள் பல வழியில் தோன்றின. அவ்வேற்றுமைகள் நேரிய முறையில் வளர்ந்தால் நலம் விளைந்திருக்கும். கருத்து வேற்றுமைகள் மூர்க்கப் போர்க் கருவிகளாகக் கொள்ளப்பட்டன. அக்கருவிகள், என் வேதம் பெரிது; உன் வேதம் சிறிது. என் வேதம் மெய்; உன் வேதம் பொய் என்னும் போர்களைக் கிளப்பிவிட்டன. இக்கால உலகம் வேதம் பரம்பொருளின் உண்மையை உணர்த்துவது. அத்தகைய ஒன்றைப் போருக்குப் பயன்படுத்துவது மடமை. அம்மடமையைப் பொறுமையுடன் தாங்கி நிற்கிறது இக்கால உலகம். இதைப் பாழும் உலகம் என்னலாமா? வாழும் உலகம் என்னலாமா? எது வேதம்? இப்பொழுது வேதம் எது என்று எண்ணி எண்ணிப் பழைய கொள்கையை உயிர்த்தெழச் செய்தால் உலகில் பல விதப் போர்கள் மாய்ந்தொழியும்; உலகம் ஒருமைப்படும். வேதம் எது? வேதம் அருள் நாதம்; பிரணவம். நாதம் ஒரு தத்துவம். அஃது எல்லாத் தத்துவங்கட்கும் தாயகம். நாதம் அறிவாகிய பரத்தினின்றும் பிறக்கும் முதல் தத்துவம். அஃது இருவகை. ஒன்று மாயா நாதம்; மற்றொன்று அருள் நாதம். அதிலிருந்து உலகங்களெல்லாம் தோன்றும்; இதிலிருந்து வேதம் தோன்றும். அருள் நாதமாகிய வேதத்தை என்னென்று கூறலாம். அதை அறிவாகிய பரம்பொருளை உணர்த்தும் ஒர் அழியா நிலையம் என்று கூறலாம். இக்கூற்று இன்று தோன்றிய தன்று; நேற்றுத் தோன்றியதன்று; என்றோ தோன்றியது! நாள் தெரியவில்லை. மொழியற்றது நாதம் மொழியற்றது; நாத வேதமும் மொழியற்றது. அஃது எம்மொழியிலும் மருவும். அதற்கெனத் தனித்த ஒரு மொழி கிடையாது. நாத வேதம், தென்மொழி, வடமொழி, அராபி, ஹீப்ரு, லத்தின் முதலிய பல மொழிகளில் நூலாக இறங்கும். மொழியற்ற ஒன்று எம்மொழியில் இறங்கினா லென்ன? வேதம் மொழியற்ற ஒன்று என்ற கொள்கை - பழங் கொள்கை - வேற்றுமைகளையும் போர்களையும் போக்கும். பருமை நுண்மை மொழிகள் பருமை. அப்பருமை அளவில் நிற்போர் மனம் பன்மையிலேயே தோய்ந்து தோய்ந்து போருக்குப் பலியாகும். அம்மனம் நுண்மையில் திரும்பினால் ஒருமையில் நின்று இன்பம் நுகரும். பருமைத் தோற்றத்தில் கருத்தை இருத்தி, ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தால், அக்கருத்துப் பருமையின் முதலாகிய நுண்மையில் படியும். அந்நுண்மை மொழியற்ற ஒன்றை எளிதில் உணர்த்தும். அங்கே வேதம் இன்னதென்பது இனிது புலனாகும். அத்தகைய வேதத்தைக் கொழுத்துத் தடித்த பருமை உலகம் போருக்குப் பயன்படுத்துகிறது! என்ன அறியாமை! புன்மை! வேதத்தைப் பருமையில் நோக்கிப் போரிடும் உலகம், அதின் நுண்மையை உணர்ந்து திருந்துதற்கு அறிவுப் புரட்சி வேண்டுமா? வேண்டாவா? வேதாந்தம் வேதாந்தம் என்ற ஓர் ஆட்சி வழக்கிலிருக்கிறது. வேதாந்தம் என்றால் என்ன? வேதம் + அந்தம் = வேதாந்தம். வேதாந்தம் உபநிஷத் - உபநிடதம். சூத்திர - அமிழ்தம் உபநிடதம் ஆதியில் வடமொழியில் இறங்கியது. அஃது ஒரு பெரும் அறிவுக் கடல்; ஞானசாகரம். அக்கடலை - சாகரத்தை வியாசர் தம் அறிவால் கடைந்து ஒரு சூத்திர அமிழ்தை உலகுக்குத் தந்தனர். அது பிரம சூத்திரம் என்றும், வேதாந்த சூத்திரம் என்றும், வியாச சூத்திரம் என்றும் வழங்கி வருகிறது. பிணக்கற்றது வேதாந்த சூத்திரம் நம் முனிவரர் அறிவு உழைப்பெல்லாம் திரண்டுள்ள ஒரு கருவூலம். அதில் மேல்நாட்டுத் தத்துவங்க ளெல்லாம் அடங்கும். தத்துவ உலகில் ஒப்புயர்வற்றுத் திகழும் ஒரு பெரும் ஞானக்கலை வேதாந்த சூத்திரம். அச்சூத்திரம் ஒரு சார்புடையதன்று. அஃது எல்லாச் சார்பினருக்கும் ஒளி வழங் கும் ஞான விளக்கு. இது ஆகும், அது ஆகா என்னும் பிணக்கு அதன்கண் இல்லை. அறிவுக் கோயில்கள் அப்பெரு நூலுக்கு விரிவுரை கண்டவர் நீலகண்டர், சங்கரர், இராமாநுஜர், மருத்துவர், சோமநாதர் முதலி யோர். அவ்வுரைகளை என்னென்று வியப்பது! அவற்றை அறிவுக்கோயில்கள் என்று போற்றலாம். அவற்றுள் உயர்வு தாழ்வு கற்பிப்பது தவறு. பல ஏன்? பல உரைகள் ஏன் என்று சிலர் கேட்கலாம். காலதேச வர்த்தமானமும் மக்கள் மனோநிலையும் ஒரே படித்தாய் இராமல் பலவாறு மாறுதல் அடையும் பண்பு இயற்கையில் ஏன் அமைந்துள்ளது என்று அவரை நோக்கி யான் கேட்கிறேன். இன்னும் பல உரைகள் காணப்படலாம் என்பது என் கருத்து. காலதேச வர்த்தமான மாறுதலும், மக்கள் மனோநிலை மாறுதலும் பல உரைகளைத் தோற்றுவித்தல் இயற்கை. எவர்க்கும் சூத்திர உரைகளெல்லாம் அறிவுக்கோயில்கள். அறிவை எவர் வெறுப்பர்? எம்மொழியினர் வெறுப்பர்? எந்நாட்டவர் வெறுப்பர்? எவரும் வெறார். அவ்வறிவுரைகள் சாதி மத நிற மொழி நாடு முதலிய எல்லாவற்றையும் கடந்து நின்று எவர்க்கும் பயன்படுவன. மடமும் மரபும் அத்தகைய மாணிக்க உரைகளைப் பாதுகாப்பதற்கென்று ஆன்றோரால் மடங்கள் நிறுவப்பெற்றன. தொடக்கத்தில் ஒவ்வோர் உரையின் காப்புக்கென்று ஒவ்வொரு மடம் காணப் பெற்றது. பின்னே நாளடைவில் மடங்களின் நிலைமை மாறி யது. உரைகளில் உயர்வு தாழ்வு கற்பித்து ஒரு மடத்தார் இன் னொரு மடத்தாரைத் தாக்கலாயினர். அத்தாக்குதல் தீயாயிற்று. தீ அவரவரளவில் நிற்கவில்லை. அஃது அவ்வம் மடத்தில் பற்றுக் கொண்டொழுகிய மரபினரையும், அவர்தம் வழிவழியையும் தொடர்ந்து தொடர்ந்து எரிக்கலாயிற்று. அறிவு வளர்ச்சிக் கென்று ஏற்பட்ட மடங்கள் போருக்கும் பூசலுக்கும் நிலைக் களன்களாயின. உரைகள் வெறும் மரபுகளாயின. மரபு கள் வாளா கிடக்குமோ? போர் போர், அறிவினின்றும் எழுந்து அன்பால் வளர்ந்தால் அதை வரவேற்கலாம். அஃது அறிவை விடுத்து, வாயிலும் கையிலும் கனன்றால் என் செய்வது? முறைகளை மாற்றிக் கனலைத் தணிக்கமுயல வேண்டுவது அறிஞர் வேலை. பொதுமை தனித்தனி உரைக்கென்று ஏற்பட்ட தனித்தனி மடங்கள், இனி எல்லா உரைகளுக்குமென்று பொதுமைப் படல் நன்று. பொதுமை, போரையும் பூசலையும் போக்கும். மடங்களில் மரபுகளால் கட்டுண்டு கிடக்கும் உரைகள் மக்கள் மனத்தில் குடியேறினால் நற்பயன் விளையும். மடங்கள் சாதிமத வேற்றுமைகளினின்றும் விடுதலை அடைதல் விழுப்பம். இதற்கு என் செய்வது? அறிவுப் புரட்சியை அழையுங்கள். அஃது என் செய்வது என்பதைத் தெரிவிக்கும். இராமாயண பாரதம் நமது நாட்டில் இராமாயணமும், பாரதமும் இமயம் முதல் கன்னி வரை படிக்கப்படுகின்றன. இதனால் பலவித இராமாயணங்களும் பாரதங்களும் தோன்றுதற்கு இடம் உண்டாயிற்று. பன்மையில் மாறுபாடும் வேறுபாடும் நுழைதல் இயல்பு. வால்மீகி இராமாயணம், வாலி - சுக்கிரீபன் - அநுமான் முதலியோரைக் குரங்குகளென்றும், இராவணன் - கும்பகர்ணன்- விபீஷணன் முதலியோரை அரக்கரென்றும் சொல்கிறது. ஜைன இராமாயணம் அவ்வாறு கூறவில்லை. அது வாலி முதலியோரையும் இராவணன் முதலியோரையும் வித்யாதரர் என்று கூறுகிறது. இராவணன் சீதையைத் தூக்கிச்சென்று அசோக வனத்தில் சிறைப்படுத்திய காரணத்தால் இராமபிரா னுக்கும் இராவணனுக்கும் போர் நடந்ததென்று வால்மீகி இராமாயணம் விளம்புகிறது. அறவோராகிய இராமபிரான் மாண்பையும் சீதாதேவி சிறப்பையும் இராவணன் கேள்வியுற்று, ஓடி வந்து, அவ்விருவரையும் அன்புடன் அழைத்துச் சென்று, அசோக வனத்தில் அமர்த்தி, அவர் வாயிலாக அறவுரை கேட்டு வந்தான் என்றும், இராவணன் எடுத்துச் சென்ற சீதை மெய்ம்மைச் சீதை அல்ல என்றும், அவன் பொய்ம்மைச் சீதையையே எடுத்துச் சென்றான் என்றும் வேறு சில இராமாயணங்கள் சாற்று கின்றன. இன்னும் சில மாறுபாடுகளையும் வேறுபாடுகளையும் பற்பல இராமாயணங்களிற் காணலாம். வியாசபாரதம் திரௌபதை ஐவர்க்கும் மனைவி என்று பகர்கிறது. ஜைன பாரதம் அர்ச்சுனன் ஒருவனுக்கே அவள் மனைவியாய் வாழ்க்கைப்பட்டாள் என்று புகல்கிறது. இம் மாறுபாடுகளும் வேறுபாடுகளும் என்ன அறிவிக் கின்றன? நூற்புரட்சியை அறிவிக்கின்றன. பெரிய புராணம் தமிழ் நாட்டில் பெரியபுராணம் என்றொரு நூல் பலரால் ஓதப்படுகிறது. எந்நோக்குடன் அது பெரிதும் ஓதப்படுகிறது? வீடுபேறு எய்தல் வேண்டுமென்னும் நோக்குடன் அஃது ஓதப் படுகிறது. இந்நோக்கு அப்புராணத்தின் மாண்பை விளக்குவ தாகாது. தொண்டு பெரியபுராணத்தின் பருமை நோக்கைப் பலபடப் பேச லாம். அப்பலப்பட்ட பேச்சு இங்கே தேவையில்லை. ஒன்றை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிக்க விரும்புகிறேன். பெரிய புராணத்தைத் துருவித் துருவி முற்றும் ஆராய்ந்தால் ஒரு விழுப்பொருள் கிடைக்கும். அது தொண்டு என்னும் விழுப் பொருள். அப்பொருளை நூலில் பதித்த ஆசிரியர் நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்ற தலைப்பை வேய்ந்தனர். அது கருதத்தக்கது. தொண்டர் புராணம் என்ன அறிவுறுத்தும்? தொண்டை என்று சொல்லலும் வேண்டுமோ? தொண்டு வீடு பேற்றினும் மேம்பட்டதென்று சேக்கிழார் எண்ணினர். அவர் திருக்கூட்டச் சிறப்பில், கேடும் ஆக்கமும் என்னும் பாட்டில் வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்று நாயன்மார் திறத்தை விளக்கியிருத்தல் காண்க. இதை உணராது வேறு நோக்குடன் பெரியபுராணத்தை ஓதி வருதலில் மாறுதல் உறுதல் வேண்டும். அப்பொழுதே பெரியபுராணத்தின் உள்ளம் பெரிதும் புலனாகும். இம்மாறுதலை இயற்கையே செய்யும். அச்செயலை என்னென்று கூறலாம்? புரட்சி என்று கூறலாம். செம்பொருள்கள் பெரியபுராணத்தில் வேறு பல செம்பொருள்களும் மிளிர்கின்றன. அவை காதல், சாதி வேற்றுமை பாராட்டாமை, தோழமைக்கு எளிமை, நீதிக்கு நேர்மை, சரித்திரக் குறிப்பு, அன்புக்கு எல்லையின்மை, வழிபாட்டில் கட்டுப்பாடின்மை, புரட்சி முதலியன. இவை யெல்லாம் புராணத்தை ஓதுவோர் நெஞ்சில் ஒரு காலத்தில் நின்றன; இப்போது நிற்பதில்லை. பழமையைப் புதுக்க என்ன எழல் வேண்டும்? அது பெரிய புராணத்தின் போதனைகளில் ஒன்று. அஃது அன்புப் புரட்சி. கதைப்புனைவு சீவக சிந்தாமணி என்னும் செந்தமிழ்ப் பெருங்காப்பியத் துடன் பிணங்கிச் சேக்கிழார் பெரியபுராணத்தைப் பாடினர் என்றொரு கதை நாட்டில் உலவி வருகிறது. இதற்குச் சான்று பெரிய புராணத்தில் காணப்படவில்லை. சேக்கிழார்க்குப் பின்னர் எவரோ ஒருவர் ஒருவிதக்கதையைப் புனைந்துவிட்ட னர். அக்கதை உமாபதி சிவாச்சாரியார் பெயரால் புனையப் பட்டிருக்கிறது. அக்கதைக்கும் பெரியபுராணத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இத்தொடர்பின்மை பொதுவாகத் தமிழர் நெஞ்சிலும், சிறப்பாகச் சைவர்நெஞ்சிலும் புகுந்து நிலைத்தல் நல்லது. இதற்கு உரிய தொண்டை அறிஞர் ஆற்றுவாராக. தொல்காப்பியம் நூல்களைப்பற்றிக் கால ஆராய்ச்சி முதலியன நிகழ்த்தல் சரித்திர உலகுக்குத் தேவையே. சில நூல்களின் காலம் முதலியன ஆராய்ச்சிக்கும் எட்டுவதில்லை. அந்நூல்களுள் ஒன்று தொல்காப்பியம். தொல்காப்பிய வயது பல அறிஞரால் கணிக்கப்பட்டு வருகிறது. சிலர் பதினாயிரம் என்று இன்புறுகின்றனர்; சிலர் நாலாயிரம் என்று உவக்கின்றனர். சிலர் மூவாயிரம் என்று மகிழ்கின்றனர்; சிலர் இரண்டாயிரம் என்று மயங்குகின்றனர். அவர் அவர் கூறும் காரணம் பொருந்தியதுபோலவே தோன் றும். வெறும் சரித்திரக் கண்ணுக்குத் தொல்காப்பியக்காலம் புலனாதல் அரிது. அக்காப்பியக் கால ஆராய்ச்சிக்கு மொழி நூல், நில நூல், தாவர நூல், உயிர் நூல், கணித நூல், வான நூல், உளநூல், தத்துவநூல், வாழ்க்கை நூல் முதலிய நூல்களின் துணை வேண்டும். பலதிற நூலாராய்ச்சி உடையவர் ஒன்று கூடித் தொல்காப்பியத்தை ஆராய்ந்தால் காலத்துடன் வேறு பல நுட்பங்களும் தெளிவாகும். இவ்வாறு பல கலைஞர் குழுமித் தொல்காப்பியத்தை ஆராய்ச்சி செய்ததில்லை. இது காறும் வெளிவந்துள்ள ஆராய்ச்சிகள் குழப்பத்தை விளைத்து வருகின்றன. குழப்பம் புரட்சியைக் கிளப்பும். திருக்குறள் தமிழ் நாட்டில் பிறந்த நூல்களில் உலக நூலாகப் போற்றப்படுவது திருக்குறள். திருக்குறள் தமிழ் மொழியில் பிறந்தாலும், அதின் பொருள்கள் பொதுவாக மக்கள் வாழ்க்கைக்கு உரியனவாய்ப் பொலிகின்றன. இத்தகைய உலக நூலுக்குப் பண்டைக்காலத்தில் சிலர் உரைகண்டனர்; இடைக்காலத்தில் சிலர் உரை கண்டனர். இக்காலத்திலும் சிலர் உரை காண்கின்றனர். இவ்வுரைகளிற் சில வகுப்பு வெறியையும், சில மதவெறியையும், சில மொழி வெறியையும், அடிப்படையாக் கொண்டு எழுந்தவை. அவ்வெறிகள் திருக்குறள் உலகில் ஒருவித மயக்கத்தை உண்டுபண்ணி வருகின்றன. வெறி மயக்கம், நெறியில் நிற்குமோ? மிகச் சில வெறியற்ற உரைகளும் உலவு கின்றன. அவை அவ்வக்காலச் சமூக நிலைக்கேற்றவாறு அமைந்தவை. இதைக் காலக் கண்ணாடி அறிவிக்கிறது. திருக் குறள் ஆராய்ச்சிக்குப் பலதிறக் கலைகளின் துணை தேவை. இப்பொழுது சிறப்பாக இருவிதக் கலைகளின் துணை தேவை. ஒன்று ஜைனக்கலைத் துணை; மற்றொன்று மார்க்ஸியக்கலைத் துணை. இரண்டும் பொருந்திய புரட்சி நிகழ்த்திக் காலத் துக்குரிய வழியில் திருக்குறளை மலைவிளக்காக்கும். தேவைக்கு மேல் பொருளீட்டா அறத்திலும், வேறு சில தத்துவங்களிலும் ஜைனத்துக்கும் மார்க்ஸியத்துக்கும் தொடர்பு உண்டு. ஆகும் நூல் - ஆகா நூல் கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகா. அதேபோல நூலெல் லாம் நூலாகா. எவை ஆகும் நூல்கள்? எவை ஆகா நூல்கள்? புலக்குறும்புகளை ஒடுக்கிச் சால்பளிப்பனவெல்லாம் ஆகும் நூல்கள்; பிற ஆகா நூல்கள். புலக்குறும்புகளை ஒடுக்க இயலாத ஏடுகளால் நல் வாழ்க்கை அரும்பாது. அக்குறும்புகளை வளர்க்கும் ஏடுகளால் நல்வாழ்க்கை எவ்வாறு அரும்பும்? ஆழ்ந்த சிந்தனையில் அமரச்செய்யும் பண்புடைய நூல்களைப் பயில்வது நல்லது. அத்தகைய நூல்கள் இந்நாளில் சுமை சுமை என்று தள்ளப்படுகின்றன. இது நல்வாழ்க்கை யால் நாட்டை வளர்ப்பதாகாது. வெறும் தீக்களிப்பை எழுப்பும் ஏடுகள் புலக்குறும்புகளை வளர்த்து வாழ்க்கையைக் கெடுக்கும். சிறுவர்க்குப் போதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவர்களுக்கு நமது தமிழ் நாட்டில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வாக்குண்டாம், நன்னெறி, நீதிநெறிவிளக்கம் முதலிய அறநூல்கள் போதிக்கப் பட்டன. இப்பொழுது அவை நன்முறையில் போதிக்கப்படுவ தில்லை. வேறு கயமை நூல்கள் பெரிதும் பள்ளியை நிரப்பு கின்றன. அவை குழந்தை உலகுக்கு விளைத்துவரும் கேட்டை என்னென்று உரைப்பது? புரட்சியால் பழமை புதுக்கப் பெறல் வேண்டும். கட்டுப்பாடு கல்விக்கென்று கட்டுப்பாடு இருத்தல் கூடாது. அதற் கென்று ஓர் இலாக்கா வேண்டுவதில்லை; அதிகாரிகள் வேண்டு வதில்லை; சோதனைகள் வேண்டுவதில்லை. இக் கட்டுப்பாடு களால் கல்வித்துறை தனது உரிமையை இழந்தது. அத்துறை விடுதலை அடைந்து உரிமைபெற மக்கள் அறிவுப் புரட்சி செய்வாராக. ஆட்சி ஆதி மனிதன் காலத்தில் ஆட்சியே கிடையாது. அதற்குப் பின்னர் ஆட்சி பிறந்து வளர்ந்தது. அது கோனாட்சி என்றும், குடிக் கோனாட்சி என்றும், குடியாட்சி என்றும் பல பெயர் பெறலாயிற்று. இவ்வாட்சிகளெல்லாம் நாளடைவில் சாம் ராஜ்யங்களாயின. சாம்ராஜ்ய முறையை வீழ்த்தி மக்களாட்சி என்னும் சமதர்மத்தை அமைக்க முயற்சி துவங்கியுள்ளது. சாம்ராஜ்யமும் சமதர்மமும் உலகில் இப்பொழுது பல கட்சிகள் இருக்கின்றன. அவை களிற் பல கணக்கில் சேராதவை. கணக்கில் சேர்ந்துள்ளவை இரண்டு. அவை சாம்ராஜ்யமும் சமதர்மமுமாகும். இரண்டும் ஒன்றை ஒன்று உறுத்து உறுத்து நோக்குகின்றன. சாம்ராஜ்யம் தன்னைக் காத்துக்கொள்ள அணுகுண்டுவரை நீண்டுள்ளது. இனிச் சாம்ராஜ்ய முறைக்கு இடம் உண்டா? அதற்கு இடம் அளிக்க இயற்கை இணங்குமா? இனி சமதர்மமே ஆக்கமுறும். இதற்குரிய குறிகள் தோன்றியுள்ளன. சமதர்மம் வேண்டற்பாலதே. எத்தகைய சமதர்மம்? அடிப்படையில் உலகாயதம் உலவாது ஆன்மார்த் தம் உலவுஞ் சமதர்மமே வேண்டற்பாலது. உடலும் உயிரும் யான் மார்க்ஸியத்தையும் போற்றுகிறேன்; காந்தியத்தை யும் போற்றுகிறேன். இரண்டும் சேர்ந்த சமதர்மம், உலகை நல்வழியில் நடாத்தும் என்று யான் நம்புகிறேன். எனக்கு மார்க்ஸியம் உடலாகவும் காந்தியம் உயிராகவும் தோன்று கின்றன. உடலும் உயிரும் தனித்தனியே நின்றால் வாழ்க்கையின் கதி என்ன ஆகும்? மார்க்ஸியமும் காந்தியமும் ஒன்றினால் சமதர்ம வாழ்க்கை நல்ல வழியில் முகிழ்க்கும். அவ்வாழ்க்கை உலகில் பெருகப் பெருக உலகம் ஒரு குலமாகும். கார்ல் மார்க் சமதர்மத்தின் கடைசி நிலை இப்படி இருத்தல் வேண்டுமென்று கனவு கண்டுள்ளனர். அக்கனவு உலகில் பொலி இராது; பட்டாளம் இராது; அரசும் இராது. இவ்வுலகம் வெறும் உல காயதத்தால் அமையுமோ? ஒரு போதும் அமையாது. இதற்கு ஆன்மார்த்தம் இன்றியமையாதது. மார்க் நெஞ்சம் தொடக் கத்தில் உலகாயதத்தை நினைந்தது; முடிவில் தன்னை அறியா மலே ஆன்மார்த்தத்தை நினைந்துவிட்டது. பழைய இந்திய முனிவரர் எண்ணிய எண்ணங்கள் - உபநிஷத் கருத்துக்கள் - மார்க் நெஞ்சம் சமதர்மத்தின் கடைசி நிலையை நினைந்த போது, அந்நினைவில் ஒன்றின போலும்! சமதர்மம் பரம் பொருள் வாழ்க்கை வழி என்னும் உணர்வை மக்களிடைப் பரப்புவதாய் அமைதல் வேண்டும். இஃது எனது வேண்டுதல். முனிவரர் ஆட்சி பழைய இந்தியாவில் மன்னராட்சியே பெரிதும் நடந்தது. ஆனால் அவ்வாட்சி எவரால் நடத்தப்பட்டது? மனத்துக்கண் மாசில்லா முனிவரரால் நடத்தப்பட்டது. அம்முனிவரர் தமக்கென வாழாதவர்; மற்றவர் நலத்துக்கென்றே வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்; காற்றில் உலவி, ஞாயிற்றொளியில் மூழ்கி, நறுநீரில் ஆடி, காய்கனிகளை உண்டு, பரத்துக்கே தமது உள்ளத்தைக் கோயிலாக்கினவர்; தம் மனமொழி மெய் களெல்லாம் உலக நலத்துக்குப் பயன்படல் வேண்டுமென்று தவத்தில் உறைந்து நின்றவர்; பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையை உணர்ந்து நடந்தவர்; அக்கொள்கை மக்கள் வாழ்க்கையிலும் படிந்து, அவர்தம் வாழ்க்கை அவ் வண்ணம் ஆதல்வேண்டும் என்ற நோன்பை ஏற்றவர். அவர் வழியே பெரிதும் மன்னராட்சி நடந்தது. இதை இக்கால மன்னராட்சி என்று எப்படிக் கூறுவது? ஆட்சியில் எம் மாறுதல் நேரினும் நேர்க. அஃது எப்பெயர் பெறினும் பெறுக. அது தன்னலமற்றவரால் நடத்தப்பெறல் வேண்டும். வேறு துறைகளிலும் இந்நாளில் புரட்சி பெரிதும் அரசியலை ஒட்டி நிகழ்கிறது. இனி வேறு துறைகளிலும் புரட்சிகள் நிகழலாம். அவை யாவும் அறப்புரட்சியா யிருத்தல் வேண்டுமென்று இயற்கை அன்னை எண்ணுகிறாள். அதற்கு அறிஞர் துணைபோனால் உலகில் அறநெறி வளரும். சமயம் ஐயோ! சமயமா? அது கஞ்சா; அபினி; நஞ்சு; வேண்டா வேண்டா என்று அலமருவோர் உளர்; சமூகத்தில் உற்றுள்ள கேடுகளுக்கெல்லாம் மூலமாக நின்றது சமயம். அதுவா வேண்டும்? வேண்டா என்று கடிவோர் உளர். இது பரபரப் பான காலம். சமயத்தை நினைக்க ஓய்வும் இல்லையே என்று கவல்வோர் உளர். இன்னும் வெவ்வேறு வகையில் சமயம் வேண்டா என்று கூறுவோரும் உளர். இவர் அனைவரும் நன்மதியினர். ஆனால் இவர்க்குச் சமயத்துக்கும் சமய அநுஷ் டானத்துக்கும் அதாவது சமய நடைக்கும் உள்ள வேற்றுமை தெரியவில்லை. இது வருந்தத்தக்கது. மாசும் தூசும் சமயம் பரம்பொருளைப்போல என்றும் இருப்பது. அதில் மாசோ தூசோ ஒன்றும் படியாது. அதைக் கடைப்பிடித்து ஒழுகும் முறையிலும் துறையிலும் மாசும் தூசும் படியும். இம்மாசு தூசுகளைச் சமயத்தின்மீது சுமத்துவது தவறு. கள்ள வாணிபம் திருநீறு பூசிய ஒருவனும், திருமண் அணிந்த இன்னொரு வனும், சிலுவை பூண்ட வேறொருவனும், குரான் ஓதிய மற்றொருவனும் சேர்ந்து ஒரு கூட்டு வாணிபம் செய்தனர்; சூது, வஞ்சனை, சூழ்ச்சி முதலியவற்றால் கொள்ளை லாபம் அடைந்தனர். அவரைக் காணும் போதெல்லாம் சிலர்க்கு வயிற் றெரிச்சல் உண்டாகும். அவ்வெரிச்சல் சமயம் மோசக்காரர்க் கென்று ஏற்பட்டது. m¢rka« V‹? என்று சமயத்தையே ஏசுமாறு தூண்டுகிறது. திருநீறு பூசாமலும், திருமண் அணியாமலும், சிலுவை பூணாமலும், குரான் ஓதாமலும் வாழும் சிலர் கூடி வாணிபம் செய்தனர். மோசம் செய்து செய்து ஏராளமான லாபம் பெற்றனர். இவரைக் கண்டதும் சமயத்தை ஏசுவோர் என்ன பேசுவர்? சைவமாவது, வைணவமாவது, கிறிதுவமாவது, இலாமாவது, வேறு எச்சமயமாவது நேர்மையற்ற முறையில் கள்ள வாணிபம் முதலியன செய்யுமாறு அறிவுறுத்துகிறதா? இல்லையே. வீணாகச் சமயத்தின்மீது பழி சுமத்தப்படுகிறது! வீண்பழி சுமத்துவதில் பேர்பெற்றது இவ்வுலகம்; இப்பொல் லாத உலகம். சமயத்தின் பெயரால் நவகாளி, பீஹார், டெல்லி, அமிர்தசர முதலிய இடங்களில் (1945-46) இந்துக்களுக்கும் முலிம்களுக்கும் போர்கள் மூண்டன. அவ்விடங்களில் என்னென்ன கொடுமை கள் நடைபெற்றன! உலகம் எப்பொழுதும் காணாத கொடுமை கள் நடைபெற்றன. வீடுகள் தகர்க்கப்பட்டன; கோயில்கள் இடிக்கப்பட்டன; கடைகள் சூறையாடப்பட்டன; சாவடிகள் கொளுத்தப்பட்டன. தெருக்களில் சுவாலை; பிணக்குவியல்; இரத்த வெள்ளம்; எங்கும் எங்கும் சூறை - கொள்ளை - கொலை. பதிகள் பலவழியிலும் நாசமாயின. பெண்மணிகள் கதி என்ன ஆயிற்று? மனித விலங்குகள் -இருகால் விலங்குகள் - வெறி கொண்டு, பெண் உலகின்மீது பாய்ந்தன; பெண்களை வேட்டை யாடின; அவர்களை நிர்வாணமாக்கின; திரட்டித் திரட்டித் துரத்தின; மனம் போனவாறு கற்பழித்தன. இக்கொடுஞ் செயல்கள் யாவும் ஹிந்து மதத்தின் பெயராலும் இலாத்தின் பெயராலும் நடந்தன. உபநிஷத்தும், குரானும் இவ்வாறு அட்டூழியம் புரியுமாறு அறைகின்றனவா? இல்லை; இல்லை என்று அறுதியிடலாம். சமயத்தின்மீது வீண்பழி சுமத்தப்படு கிறது. மக்களின் விலங்கியல்பைப் போக்கவந்த சமயம் விலங்கி யல்பையா பெருக்கும்? சமயத்தை நேரிய முறையில் ஆராய்ந்து உணர வேண்டுவது மக்கள் கடமை. பரமும் உயிரும் இங்கே யான் சமயத்தின் தாதுப்பொருள் முதலியவற்றைப் பற்றி விரித்துரைக்கப் போவதில்லை. அவை என்னுடைய வேறு நூல்களில் கொலுவீற்றிருக்கின்றன. இங்கே சுருங்கிய முறை யில் பரம்பொருளுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை, உயிர் உணரத் துணைபுரிவது சமயம் என்று மட்டும் சொல்லிக் செல்கிறேன். சமய வாழ்க்கை பரத்துக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை உணர்வதால் என்ன பயன்? பயனற்ற ஒன்றற்கென்று கிடக்கும் சமயம் தேவையா? இக்கேள்விகள் மிகப்பொருந்தியன போலத் தோன்றும். இத்தோற்றம் அறிஞர் முன்னே உருவெளியாய்ப் போகும். ஞாயிற்றொளியால் உலகுக்கு என்ன நலன் என்று கேட்பது போன்றது, பரத்தால் உயிருக்கு என்ன நலன் என்று கேட்பது. பரத்துக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை உணர்வது வாழ்க்கையை வளம் செய்வதாகும். அத்தொடர்பை உணர்த்து தற்கென்று சமயம் ஏற்பட்டது. சமயம் பரத்தை மட்டும் உணர்த்துவதன்று; உயிரை மட்டும் உணர்த்துவதன்று; உலகை மட்டும் உணர்த்துவதன்று; அது மூன்றையும் மூன்றற்குமுள்ள தொடர்பையும், பிறவற்றையும் உணர்த்துவது. பரத்துக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை உணர்ந்தால் மற்றத் தொடர்புக ளெல்லாம் தாமே விளங்கிவிடும். அதனால் பரத்துக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை உணர்த்துவது சமயம் என்று சுருங்கச் சொன்னேன். இத்தொடர்பை உணர்ந்து நடப்பவன் வாழ்க்கைக்கும், மற்றவன் வாழ்க்கைக்கும் வேற்றுமை உண்டு. முன்னவன் வாழ்க்கை உலகுக்கு நலன் செய்யும். பின்னவன் வாழ்க்கை உலகுக்குக் கேடு செய்யும். இங்கே சமயம் வேண்டுமா? வேண்டாவா? சமயம் வேண்டா என்போர் உண்மையை ஆராய்ந்து முடிவு காண்பாராக. சமய நடை சமயத்தில் வாழ்க்கைக் கூறுகளெல்லாம் அடங்கும். வாழ்க்கைக் கூறுகளெல்லாம் சேர்ந்த ஒன்றே சமயம் என்பது. இச்சமயத்தைக் கடைப்பிடித்து நடக்குங்கால், ஏதேனும் கேடு நேரின், வாழ்க்கைக் கூறுகளெல்லாம் பழுதுபட்டுச் சிதறுண்டு போகும். அவ்வேளையில் அதர்மம் வீறிட்டுத் தர்ம உலகத் தையே ஒழிக்க உருமும். ஆகவே, சமய நடை என்றும் பாது காக்கப்பெறல் வேண்டும். அந்நடை, சமயத்துக்கு வழிகாட்டு வது. இதை மறத்தலாகாது. சமயத்துக்கும் சமய நடைக்கும் வேற்றுமை இருப்பதை ஈண்டு மீண்டும் வலியுறுத்துகிறேன். குறைபாடுகள் இந்நாளில் சமய நடை கேடுற்றுவருதல் கண்கூடு. அத னால் பலவிதக் குறைபாடுகள் வாழ்க்கையில் புகலாயின. இக்குறைபாடுகளைக் களைதற்கென்று பலதிற இயக்கங் கள் தோன்றுகின்றன. அவை சில சீர்திருத்தங்களைச் செய் கின்றன. அவற்றுள் இரண்டொன்றையாதல் ஈண்டுச் சொல்லலாமென்று எண்ணுகிறேன். உலகம் ஒரு குலம் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பது அழியா மொழி. இம்மொழிக்கு இலக்கியமாக உலகம் வளர்ந்திருந்தால், அஃது எவ்விதத் தொல்லைக்கும் உட்பட்டிராது. அதை எவ்விதத் தொல்லையும் பீடித்திராது. இப்பொழுது பலதிறத் தொல்லைகள் உலகை அரிக்கின்றன; எரிக்கின்றன. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் செம்மொழி செயலாய், வாழ்க்கையில் ஒன்றினால், உலகம் ஒரு குலமாகும்; தெய்விக மாகும். ஒருமை? தெய்வம் ஒன்று. அஃது உலகில் பலவாயிற்று. பல ஆனதால் தீமை விளையாது. பின்னே எதில் தீமை விளையும்? மூலமா யுள்ள ஒன்றை மறப்பதினாலேயே தீமை விளையும். உலகம் பெரிதும் ஒருமை வயப்பட்டுக் கிடப்பதில்லை; பன்மை வயப்பட்டுக் கிடக்கிறது. அதனால் உலகம் பன்மையை நினைக் கிறது; பன்மையைக் காண்கிறது; பன்மையைக் கேட்கிறது; பன்மையில் உழல்கிறது. அஃது ஒருமையை எண்ணுதற்கும் வாய்ப்பு நேர்வதில்லை. அவ்வாய்ப்பை உண்டுபண்ணுவது சமயம். ஒன்றும் பலவும் சமய நூல்கள் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் உண்மையை முழங்காமல் இல்லை; முழங்கிய வண்ணமிருக்கின்றன. அம்முழக்கத்துக்குப் பொல்லாத உலகம் செவிசாய்க்கிறதா? ஒன்றே பல ஆயிற்று என்னும் உணர்வு இருந்தால் போதும். அது காப்பளிக்கும். அவ்வுணர்வை இழந்தால் ஒன்று மறையும்; பல காட்சி அளிக்கும். அம்மறைவும் இக்காட்சியும் சும்மா இருக்குமோ? விபரீதத்தை விளைக்கும். அறிஞர் வேலை! பொன் ஒன்று. அது பலதிறப் பணிகள் ஆகிறது. மாவு ஒன்று. அது பலவிதப் பலகாரங்கள் ஆகிறது. பணி பலகாரங் கள்மீது மட்டும் கருத்துச் செலுத்தினால் மூலப் பொன்னும் மாவும் உணர்வில் மறைதல் இயல்பன்றோ? புறப்பன்மை சண்டையை மூட்டுகிறது. அறிஞர் மூலத்தின் ஒருமையை விளக்கிச் சண்டையைப் போக்குகின்றனர். இவ்வேலையைச் செய்யத் தூண்டுவது சமயம். குருவும் மடமும் 1பணம் பறிக்கும் போலிக் குருமார் கூட்டங்களும், மடங் களும், பிற அமைப்புக்களும் பன்மையை மக்கள் உள்ளத்தில் பதித்துச் சண்டையைக் கிளப்புகின்றன. தன்னலம் தன் கடனை ஆற்றுகிறது. கலகத்துக்கும் குழப்பத்துக்கும் உலகம் இரை யானால் அதற்கென்ன? சமயக் கோலந்தாங்கிப் போலிக் குருமார் கூட்டங்களும், மடங்களும், பிற அமைப்புக்களும் சமய உலகுக்கே கேடு சூழ்கின்றன. அவ்வப்போது பெரியோர் தோன்றிப் பன்மை விபரீதங்களைப் போக்கிப் பொதுமைக்கு ஆக்கந்தேடுகின்றனர். கட்டுப்பாடுகள் சமயத்தின் பெயரால் கட்டுப்பாடுகள், மூடவழக்க ஒழுக்கங்கள், பொருளற்ற சடங்குகள் முதலியன சமுகங்களில் நுழைந்து ஆட்சிபுரிகின்றன. அவற்றையே சமயங்களாகக் கருதி மோசம் போகும் சமூகங்களுமிருக்கின்றன. இவை உலக வளர்ச்சியைத் தடுத்து வருகின்றன. தடைகளை ஒழித்து உலக வளர்ச்சிக்குத் துணைபுரியவேண்டுவது எவர் கடமை! சீர்திருத்த நெஞ்சம் படைத்த அறிஞர் கடமை. புறக்கோலங்கள் வேற்றுமை நினைவூட்டும் புறக்கோலங்கள் பல உள்ளன. அவை எவ்வெக்காரணம்பற்றி எவ்வெப்போது தோன்றின என்று ஆராய்ச்சி செய்தல் அநாவசியம். அதைச் சரித்திர உலகுக்கு விட்டு விடுவோம். அவ்வாராய்ச்சி சமய உலகத்துக்கு வேண்டுவதில்லை என்று யான் நினைக்கிறேன். புறக்கோலங்கள் இப்பொழுது எதற்குப் பயன்படுகின்றன? வேற்றுமை உணர்வை எழுப்பவும் போர்களைக் கிளப்பவும் பயன்படுகின்றன. அவற்றால் இனி சமுகத்துக்கு நன்மை செய்தல் இயலாது. அவை அன்பு கனிந்த அறிவால் ஒதுக்கப்படல் வேண்டும். கோயில்கள் உலகில் சிவாலயம் என்றும், விஷ்ணுவாலயம் என்றும், ஜைனப்பாழி என்றும், பௌத்தப் பள்ளி என்றும், கிறிதுவக் கோயில் என்றும், மசூதி என்றும் பலதிறத் தெய்வ நிலையங்கள் இருக்கின்றன. இவற்றை அடைந்து அவ்வம் மதத்தார் தொழுகை நிகழ்த்தி வருகின்றனர். அந்நிலையங்கள் வேற்றுமை உணர்வுக்கும் போருக்கும் உரிய களன்களாக இன்று நிற்கின்றன. இந்நிலைமை மாறினால் நலம் விளையும். சமய நிலையங்களெல்லாம் மக்கள் அனைவர்க்கும் பொதுவாதல் வேண்டும். எல்லாரும் அவற்றுள் போகவும் வரவும் உரிமை பெறல்வேண்டும். 1எல்லாம் ஒரே சமய நிலையங் கள் என்னும் உணர்வு மக்களிடைப் பரவுதல் வேண்டும். இதைச் சன்மார்க்க போதமும் திறவும் என்னும் நூலில் விளக்கி யுள்ளேன். மதமாற்றம் பன்மை உணர்வால் விளைந்த கேடுகள் பல. அவற்றுள் ஒன்று மதமாற்றக் கொடுமை. மதமாற்றம் பல சமய நினைப்பை யும் பல கடவுளர் எண்ணத்தையும், பொய்ச் சமய மெய்ச் சமய உணர்வையும் பெருக்கி வருகிறது. 1ஒரே தெய்வ நெறியில் மதமாற்ற நிகழ்ச்சிக்கு இடம் ஏது? பன்மை உணர்வே இதற்குக் காரணமாக நின்றது. போனது போக. இனி மதமாற்றம் உலகினின்றும் அகல்வது நல்லது. அதனால் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் முதுமொழி வாழ்க்கையாதல் ஒருதலை. முனிவரர் பழைய முனிவரர் வாழ்க்கையைச் சமய உலகத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவர்தம் வாழ்க்கை பரவாழ்க்கையையும் உலக வாழ்க்கையையும் ஒன்றாகவே கொண்டது. அவர்தம் கருத்து, பன்மை இயற்கைக் கூறுகளின் வாயிலாக, ஒருமைப் பரத்தினிடம் படிந்து கிடந்தது. அப்படிவு அவரை உலகத்தை விடுத்து ஓட்டவில்லை; உலக நலத்துக்குப் பாடுபடவே உந்தியது. பரம், இயற்கையை உடலாக்கொண்ட தென்னும் உண்மையை உணர்ந்தோர்க்கு உலக நலன் கருதிப் பாடுபடுவது சிறந்த தொண்டெனத் தோன்றும். அத்தொண்டு பண்டை முனிவரர் வாழ்க்கையாய்த் திகழ்ந்தது. அம்முனிவரர் வாழ்க்கை பரவுலகுக்கும் இயற்கை உலகுக்கும் உள்ள தொடர்பை உணர்த்துவது. அவ்வுணர்வை அவர்க்கு ஊட்டியது சமயம். சமயவழி நின்று ஓழுகிய முனிவரர் வாழ்க்கையை இனிவரும் உலகம் ஓர் எடுத்துக்காட்டாகக் கொண்டு வாழ்வதாக. சமய அநுஷ்டானத்தில் - நடையில் - அவ்வப்போது புகுந்த கட்டுப்பாடுகளினின்றும் உலகம் விடுதலை அடைந்தால், பரத்துக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை இனிது உணர்த்தும் சமய உலகம் ஆக்கம்பெறும். இவ்வாக்கத்துக்குப் புரட்சி தேவை; அறிவுப் புரட்சி தேவை; அன்புப் புரட்சி தேவை. இவ் விரண்டும் சேர்ந்த ஒன்றே அறப்புரட்சி என்பது. சமய உலகில் அறப்புரட்சி எழுக; எழுக. உலகம் முற்காலத்தில் சமுகம் ஆங்காங்குச் சிறு சிறு எல்லையில் துண்டு துண்டாக நின்று வளரத் தொடங்கியது. அது, வகுப்பில், மதத்தில், நிறத்தில், மொழியில், நாட்டில் - நின்று நின்று வளர்ந்து, இப்பொழுது நாட்டையும் தாண்டி உலகமாக முயல்கிறது; அதாவது உலகம் ஒரு குலமாக முயல்கிறது என்க. உடலும் உறுப்பும் உடல் பல உறுப்புக்களால் ஆக்கப்பெற்றது. நமது எண்ணம் பெரிதும் உடல்மீது செல்கிறதா? உறுப்புக்கள் மீது செல்கிறதா? உடல்மீதே பெரிதும் செல்கிறது. உடலோம்பல் என்று சொல்கிறோம்; உறுப்போம்பல் என்று சொல்கிறோ மில்லை. உடல் நலம் உறுப்புக்கள் எல்லாவற்றிற்கும் நலம் செய்யும். ஒர் உறுப்பு நலம் மற்ற உறுப்புக்களுக்கு நலம் செய்யுமா? பழக்கம் உடல் போன்றது உலகம். உறுப்புக்கள் போன்றன வகுப்பு, மதம், நிறம், மொழி, நாடு முதலியன. உலகை விடுத்து, உறுப்புக்களிலேயே மக்கள்கூட்டம் நீண்ட காலம் கருத்தைச் செலுத்தி வந்தது. அதனால் பலதிற இன்னல்கள் விளைய லாயின. இன்னும் பல இடங்களில் மக்கள் கூட்டத்தின் கருத்து உலகின்மீது செல்வதில்லை; உறுப்புக்களின் மீதே செல்கிறது. நீண்டகாலப் பழக்கம் சமுகத்தை விடுத்து விரைவில் அகலாது. பழக்கம் கொடியது. உலக எண்ணம் இயற்கை அன்னையின் நோக்கு உலகை ஒரு சமுக மாக்குவதில் திரும்பி வருகிறது. அவள், உறுப்பு நினைப்பை மாற்றி, அதை உலக நினைப்பாக்கக் கருதி விட்டனள். இனி எவ்விதத் தடையும் நேராது. உலகம் உலகம் என்னும் எண் ணம் ஓங்கி வளர்க. உலக எண்ணம் உறுப்புக்களுக்கு நலனே செய்யும். வெறும் உறுப்புக்கள் எண்ணம் உலகை இடர்ப்படுத்தி வரும். இதற்குச் சரித்திரம் சான்று கூறும். உலகம் ஒரு குலம் என்பதை மக்கள் மறந்து, உறுப்புக்கள்மீது மட்டும் தனித்தனியே பற்றுக்கொண்டு வெறியால் புரிந்த போர்கள் ஆயிரம்! ஆயிரம்! அவை சரித்திரங் களில் படிந்து கிடக்கின்றன. அவற்றைச் சிந்தித்து, உலகம் ஒரு குலம் என்னும் உண்மையை உணர்ந்து மக்கள் நடப்பாராக. போக்கு வரவு முதலியன அந்நாளில் போக்குவரவு சாதனங்கள் குறைவு. அக்காலச் சமூகத்துக்கு அவ்வளவே போதியதா யிருந்தது. அதற்கேற்ற அளவில் மக்கள் நடமாட்டம், வழக்க ஒழுக்கம், வாணிபம், கொள்ளல் கொடுத்தல், ஆட்சிமுறை முதலியன நிகழ்ந்தன. இந்நாளில் போக்கு வரவு சாதனங்கள் பெருகி வருகின்றன. இன்னும் பெருகும். அச்சாதனங்களுக்கேற்றபடி மக்கள் தரைச் செலவு, கடற்செலவு, வழக்க ஒழுக்கம், வாணிபம், கொள்ளல் கொடுத்தல், ஆட்சிமுறை முதலியனவும் பெருகும். சென்னை - லண்டன் - மாகோ முன்னே சென்னையினின்றும் லண்டனுக்குச் செல்ல எத்துணையோ நாளாகும். இப்பொழுது இருபத்திரண்டு மணி நேரத்தில் லண்டனுக் கேகலாம். நாற்பது மணி நேரத்திற்குள் உலகையே வலம்வரும் விமானங்கள் காணப்படுகின்றன. மனித வேகம் இவ்வளவில் நிற்கப் போவதில்லை. வேகம் மேலும் மேலும் பறக்கப்போகிறது. மகன், காலைச்சிற்றுண்டி அருந்திச், சென்னையினின்றும் லண்டனுக்கேகி, அங்கிருந்து மாகோ போந்து, பகல் உணவுக்குச் சென்னை சேரத் துணைபுரியும் சாதனங்களைக் காணும் காலம் நெருங்குகிறது. விஞ்ஞானத் திருவிளையாடல் மோட்டார் வண்டி, மின்னல் வண்டி, புகைவண்டி முதலியன தரையில் ஓடும் நிலைமை இனி மாறும். அவை தரையை விடுத்து மேலெழும்பி ஓடும் நிலைமையை அணித்தே அடையும். விஞ்ஞானம் என்னென்னவோ திருவிளையாடல் புரியப்போகிறது. அஃது இனி அழிவு வேலையை விடுத்து, ஆக்க வேலைக்குத் திரும்பும். அக்காலத்தில் இவ்வுலக நிலையே தலைகீழாகும். அப்புது உலகம் என் கருத்தில் நிற்கிறது. கலப்பு மணம் இக்காலத்தில் பழைய கட்டுப்பாடுகள் நிலைக்குமா? நிலையா. இனி உலகில் கலப்பு மணம் ஏராளமாக நடைபெறும். உலகை ஒரு குலமாக்கும் சாதனங்களில் சிறந்தது காதலை அடிப்படையாகக் கொண்ட கலப்பு மணம். காமத்துப்பாலை உலகுக்குத் தந்தருளிய தெய்வப் புலவர் வாழ்க. (காதல் மணத்தால் உலகைப் பொதுமை யாக்குவது திருவள்ளுவம் என்பது முன்னர் விளக்கப்பட்டது.) முதலில் உலகம் சில காலத்துக்கு முன்னர், யான் முதலில் தமிழன், இரண்டாவது இந்தியன், மூன்றாவது உலகவன் என்று சொல்லி வந்தேன். இனி அவ்வாறு சொல்ல என் மனம் விரையாது. காலநிலை மாறியது. அதற்கேற்ப என் கருத்தும் மாறியது. இப்பொழுது, யான் முதலில் உலகவன், இரண் டாவது இந்தியன், மூன்றாவது தமிழன் என்று சொல்லி வருகிறேன். உலகம் வாழ்ந்தால், தமிழ் வாழும்; தமிழ்நாடும் வாழும் என்னும் உறுதி எனக்கு ஏற்பட்டு விட்டது. தமிழர் வாய் இப்பொழுது சிலர் எம் நாடு, எம் நாடு என்று பேசு கின்றனர். அதைக் காணும் தமிழர் வாயும், எம் நாடு எம் நாடு என்று எதிரொலி செய்கிறது. இது தமிழரிடைப் புகுந்த செயற்கை; தமிழரது இயற்கையன்று. தமிழ் நெஞ்சம் போக்கு வரவு சாதனங்கள் சுருங்கி இருந்த காலத்திலும் தமிழன் நோக்கு ஓர் இடத்தில் கட்டுப்பட்டுக் கிடந்ததில்லை. அவனது பண்பாடு அவனது நோக்கை உலகக் கனவு காணச் செய்தது. தமிழ் நெஞ்சம் உலகை மறந்ததில்லை. 1உலகம் உவப்ப என்றும், 2ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், 3உலகெலாம் என்றும், 4உலகம்யாவையும் என்றும் தமிழ் நினைந்தது; பாடியது. 5யாதும் ஊரே யாவரும் கேளிர் 6எவ் வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகல் முதலிய தெவிட்டாத தேன் மொழிகளைக் காண்க. பெரிய புராணத்துள் அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணத்தில், மூவேந்தர் தமிழ்வழங்கும் நாட்டுக் கப்பால் முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும்*** என்று ஒரு தமிழ் அமைச்சர் அருளியதை ஈண்டு உன்னி உன்னி உவப்போமாக. மரபு பழந்தமிழ் நெஞ்சம் உலகம் உலகம் என்றே நினைந்தது. அந்நெஞ்சம் வானெனப் பரந்தது. அத்தமிழ் வழி வழி வந்த மக்கள் மனோநிலை இற்றை ஞான்று மாறுபட்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்னை? சூழலே காரணம். இனிச் சூழலும் திருந்தும்; பழந்தமிழ்க் கனவும் நினைவாய்ச் செயலாகும். இக்காலத்தை யான் எதிர்நோக்கி வாழ்கிறேன். எனது வழி வழி மரபு, இந்நாளில் முதலில் உலகவன், இரண்டாவது இந்தியன், மூன்றாவது தமிழன், என்று என்னைக் கூறச் செய்தது. என்னை முதலில் உலகவனாகக் கருதச்செய்த பெருமை யான் ஈடுபட்ட பல இயக்கங்களுக்கு உண்டு; சிறப்பாகத் தொழிலாளர் இயக்கத்துக்கு உண்டு. இவ்வியக்க மாண்பை விஞ்ஞான முறையில் உலகுக்கு உணர்த்திய கார்ல் மார்க் வாழ்க. காந்திய ஒலி உலகை ஒரு குலமாக்க இயற்கை அன்னை உறுதி கொண்டு விட்டாள். இனி, குறுக்கிடும் தடைகளெல்லாம் பொடிப்பொடி யாகும். அவற்றைப் பொடிப்பொடியாக்க என்ன வேண்டும்? மார்க்ஸைக் கேட்கலாமா? காந்தியடிகளைக் கேட்கலாமா? இருவரும் புரட்சி புரட்சி என்கின்றனர். எப் புரட்சி? காந்திய ஒலி கேட்கிறது. அமைதி உலகம் புறத்தடைகள் நீங்கினால் அகத்தடைகள் தாமே அகலும். அகத்தடைகள் அகன்றால் அறியாமைத் திமிர் தானே ஒடுங்கும்; அறிவு விளக்கம் பெறும். அறிவு விளக்கம், பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையை உறுதிப்படுத்தும். யோகம் அறியாமை ஒடுக்கத்துக்கு எவ்வளவோ வழிகள் முன் னோரால் கோலப்பட்டன. அவை யாவும் சரியை- கிரியை- யோகங்களில் அடங்கும். யோகம் பொதுவாக மக்களை மயக் கும் பான்மையுடையது. யோக வகைகள் பல. அவற்றுள் வெறுக்கத்தக்கனவும் உள; விரும்பத்தக்கனவும் உள. விரும்பத்தக்கனவும் இந்நாளில் வழிதுறை இழந்து வழுக்கி வீழ்தற்குரிய சேற்றுக் களனாயின. இனி வருங்காலத்தில் பழைய யோகநெறியில் மக்கள் கருத்துச் செல்லுதல் அருமையாகும். கிறிது வழி பின்னை அறியாமை எவ்வாறு ஒடுங்கும்? கிறிது பெருமான் வழிகண்டுள்ளனர். அது காலத்துக்குரியது; எளியது. அவ்வழி எவரையும் அழைப்பது; எவரையும் தள்ளாதது. கிறிது பெருமான் போதனையும் சாதனையும் என்னைப் பலவாறு திருத்தின. அப்போதனையும் சாதனையும் குறிப்பிட்ட ஒரு கூட்டத்தார்க்கு மட்டும் உரியன அல்ல. அவை உலகுக்கு உரியன. கிறிது உலகுய்யத் தோன்றியவரே அன்றிக் குறிப் பிட்ட ஒரு கூட்டத்தார் மட்டும் உய்யத் தோன்றியவரல்லர். அவர்தம் போதனையையும் சாதனையையும் பொதுவுடைமை என்று கூறாது வேறென்ன கூறுவது? கிறிதுபெருமான் கோலிய எளிய வழியைச் சிறிது நோக்குவோம். பிழையும் தண்டனையும் ஒரு சிறு குழந்தை தவறு இழைக்கிறது. அதைக் காணும் மக்கள் என்ன பேசுகிறார்கள்? குழந்தை தெரியாமல் தவறு இழைத்தது என்று பேசுகிறார்கள். தெரியாமை அதாவது அறியாமை குழந்தைப் பருவத் தவறுகளிலே கருதப்படுகிறது. குழந்தைப்பருவம் கடந்த பருவங்களில் நிகழும் தவறுகளிலே அறியாமை கருதப்படுகிறதா? பெரிதும் கருதப்படுவதில்லை. எப்பருவத்திலும் அறியாமை கருதப்படும் பயிற்சி தேவை. ஒரு சிறு மாணாக்கன் வகுப்பில் ஒரு பிழை நிகழ்த்து கிறான். உடனே ஆசிரியர் சீறி அம்மாணாக்கனைக் கடிகிறார்; தடிகிறார். இங்கே மாணாக்கன் பிழை அறியாமையால் நிகழ்ந்தது என்று ஆசிரியர் ஏன் கொள்ளவில்லை? அதை அறியாமை என்று கொள்ளாதது ஆசிரியர் அறியாமை. உலகில் பிழையும் தண்டனையும் பெருகிப்பெருகி, அரசு களையும், சட்டங்களையும், நீதிமன்றங்களையும் சிறைக் கோட்டங்களையும், தூக்குமேடைகளையும் மலிவித்தன. இவ் வுலகம் மாறுதல்வேண்டும். இம்மாறுதலுக்கென்று பிறந்தவை கிறிதுபெருமான் போதனையும் சாதனையும். பிழைபாடும் மன்னிப்பும் குடும்பத்தில் கணவன், ஏதோ ஒரு குற்றம் செய்கிறான். மனைவி, எப்படியோ அறியாமையால் குற்றம் நிகழ்ந்து விட்டது என்று எண்ணுகிறாள். எண்ணியதும் அவள்மாட்டு இரக்கம் சுரக்கிறது. மனைவியின்பால் வன்மம் கனன்றிருந்தால் இரக்கம் சுரக்க இடம் நேர்ந்திராது. மனைவியினிடம் வன்மம் கனன்றெழாது இரக்கம் சுரந்தமையால் விளையும் பயன் என்னை? கணவன் மனம் திருந்தும்; மீண்டும் குற்றம் செய்ய நடுங்கும்; பாவத்துக்கும் அஞ்சும். அவன் மனம் பரத்தின் கோயிலாகும். ஒரு வேலையாள் ஒருநாள் ஒரு பொன் சங்கிலியைத் திருடினான். அவன் சொந்தக்காரனிடம் ஒப்படைக்கப்பட்டான். விசாரணை நடந்தது. சொந்தக்காரன் மனம், இவனைத் திருடச் செய்தது அறியாமை என்று நினைந்தது; இரங்கியது. இரக்கத் தால் அவன், அப்பா, இனிமேல் திருட்டு வேலையை விட்டுவிடு என்று சொல்லி அவனை விடுதலை செய்தான். அன்றே வேலை யாள் மனம் திரும்பியது. அவன் நல்லவனானான். பிழையை இரக்கத்தால் ஒருவன் மன்னிக்க மன்னிக்கப் பிழை செய்கிறவன் திருந்துவன். அவன் திருந்தத் திருந்த அவனை விடுத்து அறியாமை விலகும். மன்னிப்பால் ஒரு சார்பில் இரக்கம் சுரக்கச் சுரக்க, மற்றொரு சார்பில் அறியாமை மறையும். அன்பு உலகம் குற்றத்துக்கும் தண்டனைக்கும் மூலமாயிருப்பது அறி யாமை. இவ்வறியாமை இரக்கத்தாலும் மன்னிப்பாலும் அகல்வதை ஓர்க. அறியாமை அகன்று இரக்கம் பெருகினால் குற்றம் குறையும்; குலையும். இந்நிலை தண்டனைகளைத் தகர்க் கும்; அரசுகளை விலக்கும்; சட்டங்களை உடைக்கும்; நீதி மன்றங்களை நீக்கும்; சிறைச்சாலைகளைப் போக்கும்; தூக்கு மேடைகளைத் தொலைக்கும். இத்தகைய அன்பு உலகைப் படைக்கவே கிறிது பெருமான் தோன்றினர். தூக்கிலும் அருள் கிறிது பெருமான் தூக்குமேடையில் நிற்கிறார். அவரைக் கொலைஞர் சிலுவையில் தூக்கி ஆணி அறைகிறார். ஆணிகள் பெருமான் கைகளிலும் கால்களிலும் இறங்குகின்றன. அந்நிலை யிலும் - அவ்வேளையிலும் - இவர் என்ன செய்கிறாரென்று இவர்க்குத் தெரியவில்லை. ஆண்டவனே, இவரை மன்னியும் என்று ஏசுபெருமான் அருள் சுரக்கிறார். எந்நிலையில் - எவ் வேளையில் - கிறிது பெருமான் நெஞ்சம் அருள் சுரக்கிறது! பாருங்கள்! கொலைஞர் ஆணி அறைகின்றனர். கிறிதுபெருமா னுக்கு அச்செயலின் கொடுமை விளங்கவில்லை; அறியாமையே விளங்குகிறது. கொலைஞர் அறியாமை கிறிதுவின் அருளைச் சுரப்பிக்கிறது. ஏசுகிறிது, அருளால் - இரக்கத்தால் - கருணை யால் - உயிர்களின் அறியாமையை ஒழித்துக் குற்றங்களைக் குலைக்க வந்தவர். அவர் அருள் உலகை ஆள்வதாக. உயிர் அணிகள் அருள் நெஞ்சம் அன்பே தெய்வம் என்று உணரும்; அவ்வுணர்வு தன்னை மட்டும் நேசிக்கச் செய்யாது; அயலவனை நேசிக்கச் செய்யும்; பகைவனையும் நேசிக்கச் செய்யும். கிறிது அன்பே தெய்வம்என்றார்; அயலவனை நேசி என்றார் ; பகைவனையும் நேசி என்றார். இம்மூன்றும் மொழிகளா? வெறும் மொழிகளா? உயிர் அணிகள்; உயிர் அணிகள். பகைவனை நேசித்தல் பகைவனை நேசி என்பதன் நுட்பம் என்னை? ஒருவன் தன் பகைவனை நேசிக்க நேசிக்க அப்பகைவனும் நேசனாவன். அவனிடத்தும் அன்புத் தெய்வம் வீற்றிருக்கிறது. பகைவனை நேசியாது வெறுத்தால் யாண்டும் உள்ள பரம்பொருளைச் சில இடத்தில் மறப்பதாகும். பரத்தை மறந்த இடத்தில் பாவங்கள் புகும்; துதையும். ஆகவே பகைவனை நேசி என்னும் திருமொழி பொருள் பொதிந்த ஒன்று என்று உணர்க. எப்புரட்சி? பகைவனை நேசிக்கும் மனம் எங்கணும் மலர்ந்தால் உலகில் பகைமை ஏது? பகைமையற்ற உலகமே அன்பு உலகம்; அமைதி உலகம். மனித இயற்கை அமைதி. அவ்வமைதி எப்படியோ குலைந்தது; அமைதியை உயிர்ப்பிக்கப் புரட்சி அகத்தில் நிகழ் தல் வேண்டும். அகம் புறமாதல் இயல்பு. புரட்சி எனில் எப் புரட்சி? மறப்புரட்சி ஆவேசத்தில் எழுந்து, ஆவேசத்தில் கனலைக் கக்கி, ஆவேசத்தில் மறையும். அதற்கு வயது இரண்டொருநாள் அல்லது இரண்டொரு வாரம் அல்லது இரண்டொரு மாதம். அதற்குமேல் அது வாழ்வு பெறுவதில்லை. மறத்தால் மறமே வளரும். அறப்புரட்சி அறிவினின்றும் அன்பால் எழுவது. அஃது உலகில் குறைகள் உள்ளவரை உயிருடன் உலவும். அப்புரட்சி விருஷப தேவர், புத்தர், கிறிது, திருவள்ளுவர் முதலியோரால் காணப்பெற்றது. அறப்புரட்சி நீண்டகாலமாக உலகில் தன் கடனை ஆற்றி வருகிறது. உலகிலுள்ள குறைகளையெல்லாம் போக்கி, மனித இயற்கைக்கு உரிய அமைதியை நிலைபெறுத் தியே அப்புரட்சி மறையும். அறப்புரட்சி வாழ்க! 7. பெருவாழ்வு அமைதி உலகம் வாழ்க்கைக்கு உரியது; பொருந்தியது. அவ்வுலகம், வாழ்க்கை வளர்ச்சிக்கென்று தக்க நலங்களை யெல்லாம் நல்கும். அந்நலங்களெல்லாம் சேர்ந்து, வாழ்க் கையைச் செவ்வனே வளர்த்து, அதைப் பெருவாழ்வுப் பேற் றுக்குப் பண்படுத்தும். எது? பெருவாழ்வு எது? உலகில் எத்தனையோ வாழ்க்கைத் திறங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஏதேனும் ஒன்று பெரியதாய் இருக்கும். அதைப் பெருவாழ்வு என்று கூறலாமா? அவ்வாழ்வு என்றாதல் ஒருநாள் அழிந்துபடும். அழிந்துபடுவது பெருவாழ் வாகாது. ஆதலின், பெருவாழ்வென்பது வேறொன்றாயிருத்தல் வேண்டும். அது மரணமிலாப் பெருவாழ்வு என்று கூறப்படு கிறது. வழக்காறு மரணமிலாப் பெருவாழ்வு என்று ஒன்றிருக்குமா என்று திகைப்பர் சிலர்; சிந்திப்பர் சிலர்; ஆராய்வர் சிலர்; திகைப்பும், சிந்தனையும், ஆராய்ச்சியும் எற்றுக்கு? வழக்காறு ஒன்று போதுமே. வழக்காறுகளை அலட்சியஞ் செய்தலாகாது. அவை அநுபவத்தினின்றும் பிறந்தவை. சாகாக்கலை, வேகாக்கலை, பெருவாழ்வு, மரணமிலாப் பெருவாழ்வு முதலிய வழக்காறுகளை நோக்குக. அவ்வழக் காறுகள் இன்று தோன்றியன அல்ல; நேற்றுத் தோன்றியன அல்ல. அவை தொன்றுதொட்டன. மரணமிலாப் பெரு வாழ்வைப் பழைய சித்த நூல்களில் காணலாம்; அவற்றின் வழிவழி வந்த நூல்களில் பார்க்கலாம். அக்கருத்து வேறு சில நூல்களிலும் திகழ்கிறது. உலக நிகழ்ச்சிகள் மரணமிலாப் பெருவாழ்வு உண்டு என்று நிறுவுதற்கு ஏதுக்கள் இருக்கின்றன; நூல்கள் இருக்கின்றன; வேறு சான்று களும் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஈண்டுத் திரட்டிக் காட்டவேண்டுவ தில்லை. உலக நிகழ்ச்சிகள் சிலவற்றை மட்டும் ஈண்டுக் காட்டுகிறேன். உலகில் உயிர்கள் தோன்றுகின்றன; படிப்படியே வளர்கின்றன. வளர்ச்சியின் நோக்கம் ஒன்றிருத்தல் வேண்டு மன்றோ? அஃது எதுவாயிருக்கலாம்? எண்ணுக. சில காரணங்களால் உலகில் அமைதி குலைகிறது. அக்குலைவைப் போக்கப் பேச்சோ, எழுத்தோ, இயக்கமோ, கிளர்ச்சியோ, புரட்சியோ இயற்கையாய் எழுகிறது. அவ் வெழுச்சிக்கெனக் கூட்டங்கள் திரள்கின்றன. அக்கூட்டங்களின் முயற்சியால் குலைந்த அமைதி மீண்டும் எழுந்து நிலவுவதா கிறது. உலகம் குலைந்தொழிந்தால் என்ன என்று மக்கள் ஏன் சும்மா இருப்பதில்லை? அவர்களிடை அமைதி நாட்டம் ஏன் தோன்றுகிறது? உன்னுக. உயிர்கட்கு நோய் வருகிறது. அதைத் தடுக்க மருந்துகள் பரிந்து நிற்கின்றன. அம்மருந்துகள் தோன்றியதற்குக் காரணம் என்னை? உயிர்கள் செத்தொழிந்தால் என்ன என்று மக்கள் வாளாகிடக்கிறார்களா? இல்லை. காரணத்தைச் சிந்திக்க. உலகில் காலத்துக்குக் காலம் தேவைகள் பெருகுகின்றன. அத்தேவைகளுக்கு ஈடுசெய்ய விஞ்ஞானிகள் முயல்கிறார்கள். அவர்கள் முயற்சி நாளடைவில் வெற்றி காண்கிறது. வெற்றிக் குரிய சாதனங்கள் எப்படியோ கிடைத்து விடுகின்றன. அச் சாதனங்கள் காலத்துக்கேற்றவாறு பயன்படுதற்கென்று இயற்கையில் அமைந்துள்ளன. அவற்றைக் காண்பதற்கென்று அறிஞரும் பிறக்கின்றனர். தேவைப்பெருக்கம், சாதனங்கள், அறிஞர் பிறப்பு முதலியன ஏன் உண்டாகின்றன? ஆராய்க. இவ்வாறு இன்னும் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே போகலாம். உலக நிகழ்ச்சிகளை யெல்லாம் எண்ணிப் பார்த் தால் வாழ்க்கையின் நோக்கம் ஏதோ ஒன்றிருத்தல் வேண்டு மென்பது விளங்காமற் போகாது. அது மரணமிலாப் பெரு வாழ்வாய் இருக்கும் என்று ஊகஞ்செய்யலாம். கம்பர் நாடு இங்கே கம்பர் படைத்த ஒரு நாடு என் கருத்தைக் கவர் கிறது. கம்பர் கண்ட நாடு எது? கோசலம் என்று சொல்லலாம். ஆனால் கம்பர் கோசலத்தை நேரில் கண்டவரல்லர். அவர் தாம்பாட எடுத்த காவியத்துக்கேற்பக் கோசல நாடு என்னுந் தலைப்பை அணிந்து ஒரு புது நாட்டைப் படைத்தனர். அது நாட்டுக்கோர் இலக்கியமாய் இலங்குவது. கற்பனை நாடு கம்பர் கனவில் ஒரு கற்பனை நாடு அரும்பியது. அஃது இந்நாளில் சில இடங்களில் நினைவாகவும், மிகச் சில இடங்களில் காட்சியாகவும் மலர்ந்து வருகிறது. புலவரது இன்றைய கற்பனை நாளை விஞ்ஞான ஆராய்ச்சியில் பொருளாகும். கற்பனை எவ்வாறு பொரு ளாகும்? தெளிவுக்கு ஆதிசங்கரர், காண்ட், பைனோஸா முதலியோரை அணுகுவது நல்லது. கற்பனை பொருளா தலைப்பற்றி முன்னரும் சில உரை பகர்ந்துள்ளேன். மரணம்? கம்பர் தமது நாட்டில் 1கூற்றமில்லை என்றும், காரணம், குற்றமிலாமை என்றும் கூறுகிறார். இக்கூற்றின் உள்ளம் என்ன? கம்பர் நாட்டில் பெரிதும் காலத்தில் உயிர்ப் பிரிவு நிகழும் என்பதும், அகாலத்தில் அப்பிரிவு நிகழாது என்பதும் கம்பர் உள்ளமாயிருக்கலாம். உயிர் காலத்தில் பிரிவது மரணமாகாது. உயிர்காலத்தில் பிரிவது நாட்டில் குறைபாடு இன்மையைத் தெரிவிப்பது; அகாலத்தில் பிரிவது நாட்டில் குறைபாடு உண்மையை அறிவிப்பது. பசி, பட்டினி, வறுமை முதலியன இன்மை காலத்தில் உயிர் நீங்குவதைக் கூட்டும். பசி முதலியன அகாலத்தில் உயிர்நீங்குவதை உண்டு பண்ணும். கம்பர் பொதுமை கம்பர் நாட்டில் கூற்றமின்மைக்குக் காரணம் என்னை? அவர் நாட்டில் பொதுமை பொதுள்வதே காரணம். கம்பர் நாட்டில் 2வண்மை இல்லை ஏன்? அதில் வறுமை கிடையாது. அந்நாட்டில் 3கொள்வோரும் இல்லை; கொடுப்போரும் இல்லை. ஏன்? அங்கே இல்லாரும் இல்லை; உடையாரும் இல்லை. அந்நாட்டில் 4எல்லார்க்கும் எல்லாப் பெரும் செல்வ மும் உண்டு. அதனால் அங்கே இல்லாரும் இல்லை; உடை யாரும் இல்லை. இத்தகைய ஒரு நாட்டில் பசி ஏது? பட்டினி ஏது? வறுமை ஏது? 1எங்கணும் விளைவு; எங்கணும் உணவு; எங்கணும் விருந்து; எங்கணும் திருமணம்; எங்கணும் ஆடல்பாடல்; எங்கணும் கலை; எங்கணும் கழகம்; எங்கணும் ஒழுக்கம்; கம்பர் நாடு எத்தகையது! அதைக் காணுங்கள்: இத்துணைச் சிறப்பு வாய்ந்த நாட்டில் யமபயம் என்னும் அகால மரணத்துக்கு இடம் ஏது? இதுபற்றியே கம்பர், கூற்ற மில்லையோர் குற்றமிலாமையால் என்று பாடி மகிழ் வெய்தினர். வயது மனிதர்க்கு வயது 1நூறு. இஃது உலக வழக்கு. சோதிடக் கலைப்படி மனிதர்க்கு வயது நூற்றிருபது. கழிவு இருபது போக எஞ்சி நிற்பது நூறு. 2இந்த நூறு வயதுக்குக் கேடு நிகழாதவாறு காப்பது அறிவு. இதற்குப் பசி, பட்டினி, கவலை, தீய ஒழுக்கம், கொடுங்கோன்மை முதலியன இல்லாத நாடு தேவை. பிசிராந்தையார் கம்பருக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புலவர் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர். அவர் தம் பெயர் பிசிராந்தையார் என்பது. அவர் பாடிய பாடல்களில் ஒன்று புறநானூற்றுள் பொலிகிறது. அது, நாம் எதிர்பார்க்கும் புது உலகுக்கு ஒளி வழங்குவது. அப்பாட்டைப் பார்ப்போம். யாண்டுபல வாக நரையில வாகுதல் யாங்கா கியரென வினவுதி ராயின் மாண்டவென் மனைவியொடு மக்களும் நிரம்பினர் யான்கண் டனையரென் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே. இவ்வொரு பாட்டில் எத்துணைத்பொருள்! இது பழம்பாடல்களின் பண்பு. இப்பாட்டில் அகால மரணம் காட்சி தரவில்லை. அகால மரணத்துக்கு அடிப்படை கவலை. பிசி ராந்தையார்க்கு மனைவியாலோ, மக்களாலோ, பிறராலோ கவலை விளைந்ததில்லை. அரசனாலும் அல்லல் விளைய வில்லை. இம்மாண்பு செறிந்த ஊர் எப்படி இருக்கும்? சான்றோர் நிரம்பியதாயிருக்கும். இதற்கு விரிவுரை வேண்டுவ தில்லை. கவலை அறியா மனம்பெற்ற புலவர் தம் ஊரை, ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் - சான்றோர் பலர்யான் வாழும் ஊரே என்று சிறப்பித்து மகிழ்கிறார். புலவர் பின்வரும் உலகுக்கு வித்திட்டிருத்தல் காண்க. அவ்வூரை நாம் நாடாக்கி னோமா? உலகாக்கினோமா? என்னே நன்றி! இடை நாளில் கம்பர், பிசிராந்தையார் ஊரை நாடாக்க முயன்றனர்; இந்நாளில் அதை உலகாக்க கார்ல்மார்க்ஸும் காந்தியடிகளும் முயன்றனர். அவர்தம் முயற்சி வெல்க. பிசிராந்தையார் ஊர் உலகமாயின் அகாலமரணம் இடம் பெறாது; மரணமிலாப் பெருவாழ்வு மல்கும். இது நிற்க. யம பயம் அகால மரணமாவது யமபயத்தைக் குறிப்பது. கம்பர் நாடு யமபயம் அற்ற ஒன்று. எவ்விதக் குறைவுமின்றி, நல்லொழுக்கத் தில் நின்று வாழ்வோரை யமபயம் அணுகுதல் அரிது. மற்ற வர்க்கு அப்பயம் நேரும். அகால மரணத்துக்குக் காரணம் நாட்டின் குறைபாடு என்று அடிக்கடி சொல்ல வேண்டுவ தில்லை. பல பெரியோர் யமபயத்தைக் கடிந்தே வந்தனர்; கடிந்த தால் தாம் பெற்ற அநுபவத்தை உலகுக்கு உணர்த்தியும் வந்தனர். அவர்தம் வாய்மைகளில் சில வருமாறு; 1நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நானுடன் போவது திண்ணம் ... ... ... ... 2தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கிஉன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியஎன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாஅந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே. 3எல்லாம் அறிந்தவரும்*** அல்லார்ந்த மேனியொடு குண்டுகண் பிறைஎயிற் றாபாச வடிவ மான அந்தகா நீயொரு பகட்டாற் பகட்டுவ தடாதடா காசு நம்பால் செல்லா தடாஎன்று பேசவா யதுதந்த செல்வமே*** இத்திருவாக்குகளில் யமபயம் வீழ்ந்து பட்டுச் செத்து ஒழிந்து கிடத்தலை ஓர்க. யமபயம் என்பது மரண பயம். மரணம் என்பதற்கு யமன் என்ற சொல் நீண்டகாலமாக ஆளப்பட்டு வருகிறது. ஊன் உயிர் மரணம் எது? ஊன் உயிர் வேறுபடுவது மரணம் என்று கருதப்படுகிறது. காலத்தில் ஊன்உயிர் வேறுபடாமலும் வயதைப் பெருக்கி உலகத்தில் இருக்கலாம். உடலில் தேய்வுறும் சத்துக்களைச் சூரியசத்துக்களால் ஈடு செய்தால், ஊன் உயிர் வேறுபடாமல், உலகத்தில் நீண்ட காலம் வாழலாம். நீண்ட காலம் என்பது நூறு வயதுக்கு மேற்பட்டது. சில இடங்களில் சிலர் நூற்றைம்பது - இருநூறு - முந்நூறு - ஆண்டுகளுக்குமேல் வாழ்ந்து வருவதைக் கேட்கிறோம். எத்துணை ஆண்டு களாயினும் ஒருநாள் ஊன் உயிர் வேறுபடும். அந்நாள் சூரிய சத்தை ஏற்கும் பசை ஊன் சத்தில் அற்றுப் போகும் நாள் என்று உணர்க. இது சூரியசத்தால் வாழ்வோர் அடையும் நிலை. பரத்தின் அருட்சத்தால் வாழ்வோர் நிலை 1வேறுவிதம். அஃது ஓதாதுணரும் வித்தையால் விளைவது. அவ்வித்தை சொல் லால் சொல்லுந் தகையதன்று. அது, பரத்தின் அருளாலோ, இயற்கையின் தூண்டுதலாலோ, குருநாதன் நோக்காவோ விளங்குவது. அது குறித்துச் சொல்லால் என்ன சொல்வது? தோற்றக்கேடு தோற்றமுண்டேல் மரணமுண்டு. இது சுந்தரர் மெய்ம்மொழி. நாமரூபத்துடன் தோன்றும் ஒவ்வொன்றும் என்றாதல் மறைந்து போதல் ஒருதலை. இது நியதி; இயற்கை நியதி. உடல் தோன்றுவதையும் மறைவதையும் காண்கிறோம். இத்தோற்றமும் மறைவும் இயற்கை. மாயா காரியங்களெல்லாம் இவ்வியற்கையுடையனவே. உடல் உலகம் முதலிய மாயா காரிய நாம ரூபங்களெல்லாம் தோற்றக் கேடு உறுவதைக் காண்பதற்குப் பலமுறைகள் உள்ளன. அவற்றுள் இந்நூலின் பொருளுக்கேற்ற ஒன்றைக் குறிக்கிறேன். அது தியானம். தியானத்தில் தியானத்தில் அமர்ந்து ஆழ்ந்து போகப்போக மாயா காரிய நாம ரூபங்கள் படிப்படியே மறையும். தியானம் நாதம்வரை செல்லும். அதற்குமேல் மாயைத் தொடர்பில்லை. பின்னை என்ன இருக்கிறது? ஒரே வெளி - எல்லையற்ற வெளி - பரவெளி. அவ்வெளியைத் தியானத்தில் உணர்ந்து, உயிர் திரும்புங்கால், மறைந்த மாயாகாரிய நாமரூபங்களெல்லாம் - தத்துவங்க ளெல்லாம் - பழையபடி காட்சியளிக்கும். இவ்வாறு பர வெளியை உணர்ந்து திரும்புவோர் தமது அநுபவங்களை உலகுக்கு வெளிப்படுத்துவது வழக்கம். 1இப்படிப் பலமுறை சென்று சென்று திரும்புவது ஒரு நிலையில் அற்றுப்போகும். அதுவே பரவெளியில் உயிர் ஒன்றுவது; அத்துவிதமாவது. இது மரணமிலாப் பெருவாழ்வு. இந்நிலை கூடியதும் மாயா காரியமாகிய உடல் செயலற்றதாகும். அது மண்ணுக்கோ, எரிக்கோ, பிறவற்றிற்கோ இரையாகும். சுடல் இடல் யோக ஞானியர் உடலைத் தீயால் சுடுதல் கூடாதென்றும், அதை மண்ணில் இடுதல் வேண்டுமென்றும் ஒரு சம்பிரதாயம் சில இடங்களில் ஆட்சியிலிருக்கிறது. ஞானியர் உடல் ஊனாய்க் கழிவதும் உண்டு; உயிர்ப்பாய் ஒளிர்ந்து போவதும் உண்டு. இவ்வுயிர்ப்புடலை மண்ணில் இடுவது சம்பிரதாயம் போலும். இதுபற்றிக் கருத்து வேற்றுமை இருத்தல் எனக்குத் தெரியும். புத்தர், இராமகிருஷ்ணர் முதலியோர் உடல்கள் எரிக்கப் பட்டமை ஈண்டுக் குறிக்கத்தக்கது. சித்தர் மரபு, யோகஞானியர் உடலைத் தீயால் சுடுதல் கூடாதென்றும், அதை மண்ணில் இடுதல் வேண்டுமென்றும் அறைகூவுகிறது. அவ்வறைகூவல் என் புறச்செவியைப் பலநாள் குடைந்தது; பின்னே என் உட்செவியின் உறக்கத்தைப் போக் கியது. சித்தர் உள்ளத்தை உணர்ந்து தெளியவேண்டு மென்று என்னுள் வேட்கை எழுந்தது. அது தணியாததாயிற்று. அவ் வேட்கை என்னைத் தூங்காமல் தூங்கி உண்மையைச் சிந்திக் கவுஞ் செய்தது. இது குறித்து யான் பட்டபாட்டை என்னென்று சொல்வேன்! அதை என்னுள்ளத்துள்ள பரம்பொருள் அறியும். யான் கண்ட உண்மை என்ன? அதைக் கூற என் மனம் விழைய வில்லை. சான்றோர் மொழிகளையே என் மனம் நாடுகிறது. முன்னைத் திருமூலர் மொழிகளில் இரண்டொன்றையும், பின்னை இராமலிங்க சுவாமிகள் மொழிகளில் இரண் டொன்றையும் அகழ்ந்து எடுத்துக் காட்டுவது நன்று என்று என் மனம் எண்ணுகிறது. அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில் வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில் நொந்து நாய்நரி நுகரி னுண்செரு வந்துநாய் நரிக்குண வாகும்வை யகமே. எண்ணிலா ஞானி உடலெரி தாவிடில் அண்ணல்தங் கோயில் அழலிட்ட தாங்கொக்கும் மண்ணின் மழைவிழா வையகம் பஞ்சமாம் எண்ணரு மன்னர் இழப்பார் அரசே. புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது நண்ணி யனல்கோக்கில் நாட்டில் அழிவாகும் மண்ணி லழியில் அலங்கார பங்கமாம் மண்ணுல கெல்லா மயங்குந்தீ மண்டியே - திருமூலர் பிறந்தவரை நீராட்டிப் பெருகவளர்த் திடுகின் றீர் பேய ரேநீர் இறந்தவரைச் சுடுகின்றீர் எவ்வணஞ்சம் மதித்தீரோ இரவிற் றூங்கி மறந்தவரைத் தீமூட்ட வல்லீரால் நும்மனத்தை வயிர மான சிறந்தவரை யெனப்புகழச் செய்துகொண்டீர் ஏன் பிறந்து திரிகின் றீரே. கட்டாலுங் கனத்தாலுங் களிக்கின்ற பேயுலகீர் கலைசேர்ந் தாரைப் பொட்டாலுந் துகிலாலும் புனைவித்துச் சுடுகின்றீர் புதைக்க நேரீர் சுட்டாலுஞ் சுடுமதுகண் டுமதுடம்பு துடியாதென் சொல்லீர் நும்மைத் தொட்டாலுந் தோடமுறும் விட்டாலுந் கதியிலைமேற் சூழ்வீ ரன்றே. பரனளிக்குந் தேகமிது சுடுவதப ராதமெனப் பகர்கின் றேன்நீர் சிரநெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள் பற்பலருஞ் சித்த சாமி உரனளிக்க எழுகின்ற திருநாள்வந் தடுத்தனஈ துணர்ந்து நல்லோர் வரனளிக்கப் புதைத்தநிலை காணீரோ கண்கெட்ட மாட்டி னீரே. - இராமலிங்க சுவாமிகள் பிறப்பு - இறப்பு பிறப்பு இறப்பு உண்டா? இல்லையா? இவ்வாதம் உலகை மயக்கி வருகிறது. பாரமார்த்திக உலகில் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. இரண்டும் சித்தவிகார மயக்கமே. வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியெனும் பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ. கரணங்க ளெல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன் சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. எனவரும் திருவாசகத்தைத் தியானித்துப் பார்க்க. விவகார உலகம் விவகார உலகம் சித்த விகாரமுடையது. அதில் பிறப்பும் உண்டு; இறப்பும் உண்டு. இப் பிறப்பு இறப்பை நீக்கவே ஆன் றோர் முயன்றனர். அவர்தம் முயற்சியால் பெற்ற அநுபவங்கள் உலகை நடாத்தி வருகின்றன. யான் விவகார உலகில் வாழ்பவன். என் போன்றார்க் கென்று சான்றோர் போதனைகள் பிறந்தன. அப்போதனைகள் வழிநின்று என் கருத்துக்களை வெளியிடுகிறேன். வெளியீடு என்னுடையது. அதில் தவறுகள் நிகழுமேல் அவை என்பாலன வாம். மன்னிக்க. ஒரு பெரியோர் மொழி இங்கே ஒரு பெரியோர் திருவாய்மொழி என் கருத்தில் தோன்றி என் கண் முன்னே நிற்கிறது. அப்பெருமொழியில் ஈடுபடுவோம். தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார் கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே அந்தணா ரூர்தொழு துய்யலா மையல்கொண் டஞ்சல் நெஞ்சே. இது ஞானசம்பந்தர் மறைமொழி. இதைப் பீடிகையாக் கொண்டு சில கூற விரும்புகிறேன். உலகீர் மரணம் வரும். எந்த நாள் வாழ்வு பெறப் போகி றீர்? வாழ்வுக்குப் பரத்தை அடையுங்கள் என்று ஞானசம்பந்தர் கருணை நினைக்கிறது; கேட்கிறது; வழி காட்டுகிறது. மரண நினைவு முதலில் பெருமான் மரணத்தை நினைவூட்டுகிறார். மரண நினைவு வாழ்க்கையின் ஒரு கூறு. அது வாழ்க்கையைப் பல வழி யிலும் பண்படுத்தும். அதனால் பெருமான் முதல் முதலில் மரணத்தை நினைவூட்டுகிறார் என்று கொள்க. மரண நினைவு உலக இன்பத்தை நுகர விடுமோ? அது நெஞ்சை நிலையாமை மயமாக்குமே என்று பலர் ஐயுறுவர். பெரியோர் நோக்கை உணர முயன்றால் எவ்வித ஐயப்பாட்டுக் கும் இடம் உண்டாகாது. இரண்டு கூற்று ஆன்றோர், உலகம் நிலை - வாழ்வு பெறுங்கள் என்றும் கூறுவர்; உலகம் நிலையாமை - வாழ்வு மாயம் என்றும் கூறுவர். இரண்டும் வாழ்க்கை நலனுக்கென்று எழுந்தவை. மரணமிலாப் பெருவாழ்வுக்கென்று உலக வாழ்வு ஏற்பட்டது. இதைத் தெளிந்து நடப்போர்க்கு நிலையாமைப் போதனை வேண்டுவதில்லை. பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உணர்வோடு அவர் உலகில் வாழ்வர். அவர்க்கு நிலை யாமைப் போதனை அநாவசியம். அவ்வுணர்வற்று, உலகமே நித்தியம் என்று எண்ணி மாபாதகங்களைச் செய்து, களிக் கடலில் அழுந்தி, மரணமிலாப் பெருவாழ்வின் திசையையும் அறியாது கிடப்போர்க்கு நிலையாமைப் போதனை வேண்டற் பாலதே. அஃது ஒரு புணையாய்த் துணை நின்று பாதுகாப் பளிக்கும். பரத்தை மறந்து உலகாயத்தில் வீழ்ந்து கிடப்போர்க்கு நிலையாமைப் போதனை அவசியம் என்பது சான்றோர் கருத்து. இன்னோரன்ன பல கருத்துக்களை உளங்கொண்டு சான்றோர், நிலை - நிலையாமை என்னும் இரண்டையும் உலகுக்கு அறி வுறுத்தினர். ஒருவரில் இரண்டு ஒருவரே இருவிதக் கருத்தை வெளியிடும் நோக்கத்தைத் துருவித்துருவி ஆராய்தல் வேண்டும்; சிந்தித்தல் வேண்டும்; ஆழ ஆழச் சிந்தித்தல் வேண்டும். ஆழ்ந்த சிந்தனையில் விளங்காத நுட்பம் ஒன்றுமில்லை. சில பெரியோர் உரைகளில் இரண்டொன்றை இங்கே துணைக்கொள்கிறேன். திருமங்கையாழ்வார் வாழ்க்கை, நிலை - நிலையாமை என்னும் இரண்டையுங் கண்டது. அவர்தம் முன்வாழ்வு உலகை உறுதியாகக் கொண்டது; பின்வாழ்வு பரத்தின் அடியை உறுதியாக்கொண்டது. இரண்டும் அவர்தம் பாக்களில் விரவி நிற்கின்றன. வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி வேற்கணார் கலவியே கருதி, நின்றவா நில்லா நெஞ்சினை யுடையேன் என்செய்கேன் நெடுவிசும் பணவும், பன்றியாயன்றுபாரகங் கீண்ட பாழியானாழியானருளே, நன்று நானுய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும் நாமம். இடும்மையாலடர்ப்புண்டிடுமினோதுற்றென் றிரந்தவர்க்கில்லையேயென்று நெடுஞ்சொலால்மறுத்தநீசனேன் அந்தோ நினைக்கிலேன் வினைப்பயன்றன்னை கடுஞ்சொலார் கடியார் காலனார்தமரால் படுவதோர் கொடுமிறைக்கஞ்சி நடுங்கிநான் வந்துன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய். இத்திருவாக்குகளின் உள்ளங்காண அவற்றில் ஒன்றுக. திருஞானசம்பந்தர், வாழ்க்கை நிலையை வலியுறுத்தியே பெரிதும் பாடியவர். ஆனாலும் அவர் நிலையாமையை மறந்தாரில்லை. மண்ணினல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணினல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே. வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே. எனவும், நம்பொருள் நம்மக்களென்று நச்சியிச்சை செய்துநீர் அம்பரம் அடைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம் உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே. இன்றுநன்று நாளைநன்று என்றுநின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் யெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே. எனவும் வரும் திருப்பாக்களை நோக்குக. இவ்விருவிதக் கருத்தும் ஒருவருடையன. முன்னிரு பாடல் களில் நிலையாமை காணப்படவில்லை; பின்னிரண்டில் அது காணப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆண்டவன் அருள் வழிநின்று பெண்ணுடன் வாழ்ந்தவர்; வாழ்வுக்கென்று பொன் நெல் முதலியவற்றைப் பெற்றவர். அவர், பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை . . . பத்தூர்புக் கிரந்துண்டு . . . . முத்தாரம் இலங்கியொளிர் மணிவயிரக் கோவை அவைபூணத் தந்தருளி மெய்க்கினியா நாறும் கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவிஇருந் தீரே. . . . . காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் . . . . . . . . கந்தமுதல் ஆடையா பரணம் பண்டாரத் தேஎனக்குப் பணித்தருள வேண்டும் . . . . . . . ஆற்றவேல் திருவுடையீர் நல்கூர்ந்தீ ரல்லீர் அணியாரூர் புகப்பெய்த அருநிதய மதனில் தோற்றமிகு முக்கூறில் ஒருகூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்க ஒட்டேன் காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும் . . . . . பொறிவிரவு நற்புகர்கொள் பொற்சுரிகை மேலோர் பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும் கறிவிரவு நெய்ச்சோறு முப்போதும் வேண்டும் . . . நீள நினைந்தடியேன் உமைநித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மடவாள் அவள்வாடி வருந்தாமே கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவையட்டித் தரப்பணியே. என்றும், . . . வாழ்வாவது மாயம் மண்ணாவது திண்ணம் . . ஊன்மிசை உதிரக் குப்பை ஒருபொருள் இலாத மாயம் மான்மறித் தனைய நோக்கி மடந்தைமார் மதிக்கும் இந்த மானுடப் பிறவி வாழ்வு வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்.. சொல்லிடில் எல்லை இல்லை சுவையிலாப் பேதை வாழ்வு நல்லதோர் கூரைபுக்கு நலம்மிக அறிந்தேன் அல்லேன். . . மணமென மகிழ்வர் முன்னே மக்கள்தாய் தந்தை சுற்றம் பிணமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன் . . . பொய்த்தன்மைத் தாய மாயப் போர்வையை மெய்யென் றெண்ணும் வித்தகத் தாய வாழ்வு வேண்டிநான் விரும்ப கில்லேன் . . என்றும் திருவாய் மலர்ந்துள்ளனர். இக் கருத்து இரண்டும் ஒருவரிடத்துப் பிறந்தவை. அறிவால் சிவனேயாகிய மாணிக்கவாசகனார், முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியுமென .. என்றும், பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாடோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட ஐயா ... ... ... ... என்றும் ஓதியிருத்தலை உன்னி உண்மைகாண முயல்க. நீண்டகாலம் உலகில் வாழ்ந்து பலதிற யோகஞான அநுபவங்களைப் பெற்ற திருமூலராலும் இருவகைக் கருத்து வெளியிடப் பட்டுள்ளன. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. இப்பாடலை உற்றுநோக்குக. பண்டம்பொய்க் கூரை பழகி விழுந்தக்கால் உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே . . இப்பாடலையும் உற்று உற்று நோக்குக. ஒருவர் திருவாக்கில் நிலையும் நிலையாமையும் விரவி இருத்தல் காண்க. . . . பட்டினத்துப் பிள்ளையைப்போல் யாரும் துறக்கை அரிதரிது. . . என்று தவராஜசிங்கமாகிய தாயுமானவரால் சிறப்பிக்கப் பெற்றவர் 1பட்டினத்தடிகள். அவரை முற்றத் துறந்த முனிவர் பெருமான் என்று உலகம் போற்றுகிறது. பட்டினத்தார் உள்ளந் துறந்த ஒருவர். அவர்தங் கருத்துப் பொன்னேபோல் போற்றுந்தகையது. 1. . .பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும் செந்தா துதிர்ந்த நந்தன வனத்தும் தென்ற லியங்கு முன்றி லகத்தும் தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும் பூவிரி தரங்க வாவிக் கரையிலும் மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் வேண்டுழி வேண்டுழி யாண்டான் டிட்ட மருப்பி னியன்ற வாளரி சுமந்த விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த ஐவகை அமளி அணைமேற் பொங்கத் தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சின் நெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பிப் பாயின் மீது பரிபுர மிழற்றச் சாயலன் னத்தின் தளர்நடைப் பயிற்றி . . .அஞ்சொன் மடந்தைய ராகந் தோய்ந்தும் சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தின் அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும் வாடினர்க்கென்றும் வரையாது கொடுத்தும் பூசுவன பூசியும் புனைவன புனைந்தும் தூசு நல்லன தொடையிற் சேர்த்தியும் ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து மைந்தரும் ஒக்கலும் மகிழ்வன மகிழ்ந்தும் இவ்வகை இருந்தோ மாயி னும்அவ்வகை மந்திர எழுந்தைந்தும் வாயிடை மறவாது சிந்தை யின்வழிச் செலுத்தலின் அந்த முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம் நின்னது பெருமை யன்றோ இது பதினொராந் திருமுறையில் திருவிடைமருதூர் மும்மணிக்கோவையிலுள்ளது. மையாடு கண்ணியும் மைந்தரும் வாழ்வும் மனையும்செந்தீ ஐயாநின் மாயை உருவெளித் தோற்றம் அகிலத்துள்ளே மெய்யா யிருந்தது நாட்செல நாட்செல வெட்டவெறும் பொய்யாய்ப் பழங்கதை யாய்க்கன வாய்மெல்லப் போனதுவே இது திருப்பாடற்றிரட்டிலுள்ளது. எனது நிலை யான் பிறந்தேன்; வளர்ந்தேன். எனது உடல்நிலை குலை யும்வரை பலதிற இயக்கங்களில் சேர்ந்து தொண்டாற்றினேன். எனக்கு நிலையாமை தெரியாதா? தெரியும். தெரிந்தும் உலகை வெறுத்தேனில்லை? காட்டுக்கு ஓடினேனில்லை? தொண் டாற்றினேன்; ஆற்றுகிறேன். எனக்கு வயதாகிறது. புலன்கள் தொல்லை விளைத்து வருகின்றன. இந்நிலையிலும் இன்றியமையாத சில கடன்களைச் செய்தே வருகிறேன். படுக்கையில் கிடக்கும் இந்நேரத்திலும் இந்நூலை இயற்றும் தொண்டில் ஈடுபட்டேன். நிலையாமை எனக்குச் சலிப்பூட்டவில்லை, நிலையும் என்னை உலகாயதத்தில் அழுத்தவில்லை. உலகில் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது எனக்கு விளங்கிற்று. இவ்விளக்கம் என்னுள் படியுமாறுஅருள் கூர்ந்த பெரியோர்க்கும் கலைகட்கும் எனது வணக்கம் உரியதாக. என் தந்தையார், தாயார், தமையனார், மனைவி, மக்கள் முதலியோர் போயினர். யானும் போவேன். எங்கே போவேன்? யமனிடத்திலா? பரத்தினிடத்திலா? எச்சரிக்கை திருஞானசம்பந்தர், தந்தையார் போயினார் தாயாரும் போயினார் தாமும் போவார் என்றருளி, கொந்தவேல் கொண்டொரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார் என்று யமபயத்தைக் காட்டி உயிர்களுக்கு எச்சரிக்கை வழங்கு கிறார். இவ்வெச்சரிக்கை யமபயத்துக்கு ஆளாதல் கூடாது என்பதை அறிவிப்பது. வழி எச்சரிக்கை வழங்கிய பெருமான் யமபயத்தைத் தடுப்ப தற்கு ஏதேனும் வழிகாட்டுகிறாரா? வழிகாட்டுகிறார். அதைக் கண்கொண்டு பார்ப்போமாக; கருத்துக்கொண்டு நோக்கு வோமாக. எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தியால் ஏழை நெஞ்சே என்றொரு கேள்வி திருப்பாட்டில் திகழ்கிறது. இக்கேள்வி என் முன்னே நிற்கிறது; மனிதவர்க்கத்தின் முன்னேயும் நிற்கிறது. விழிப்பு அக்கேள்வி என்னுள் நின்று நின்று என் கண்ணை விழிக்கச் செய்கிறது. எக்கண்ணை விழிக்கச் செய்கிறது? அகக் கண்ணை விழிக்கச் செய்கிறது. அகக்கண் விழிப்புப் பர வழியைக் காட்டுவது; அப்பரமே வாழ்க்கை வழி என்னும் உண்மையை உறுதிப்படுத்துவது. இவ்வுறுதி, வாழ்க்கையைப் பண்படுத்தித் திருஞானசம்பந்தர் அருளும் வாழ்வை - பெருவாழ்வை - மரணமிலாப் பெருவாழ்வை - நல்கும். பிறவாமை பரத்துக்கு இருவித நிலை உண்டல்லவா? அவற்றுள் கடந்தநிலை உயிரைத் தன்னுடன் ஒன்றுபடுத்தி மீண்டும் பிறவாமை என்னும் இறவாமையை அருள்வது; அதாவது இரண்டற்ற அத்துவித நிலையைக் கூட்டுவது; மற்றொரு கலந்த நிலையும் இப்பேற்றை வழங்குவதே. சிற்சில சமயம் அது பிறப்பையும் அளிக்கும். அப்பிறப்பு, தொண்டுக்கென்று அமை வது; கருமப்பயனால் அமைவதன்று. இரண்டுக்கும் இடையில் யான் அகால மரணமென்னும் யமபயத்தை வெறுக்கி றேன்; ஆனால் தொண்டுக்கெனக் கிடைக்கும் பிறவியை வெறுக் கின்றேனில்லை. பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உணர்வைப் பெறுதற்கு உலகம் வேண்டும்; உலக வாழ்க்கை வேண்டும். இப்பெருமையுடைய உலகம் இப்பொழுது கொலைக்களனாய் இருக்கிறது. இவ்வேளையிலா வீடுபேற்றை விழைவது? இவ் வேளையில் உலகைக் கொல்லாக் களனாகக் காண என் நெஞ்சம் எழுகிறது. ஆதலின், அது வீடுபேற்றை விழையாது, தொண்டுக் கென்று பிறவியை விழைகிறது. தொண்டுப் பிறவிக்கும் மற்றப் பிறவிக்கும் வேற்றுமை உண்டு. எனது வாழ்க்கையை அகால மரணமென்னும் யமபயமும் விழுங்கவில்லை; வீடுபேறும் தன் வயப்படுத்தவில்லை. இரண் டுக்கும் இடையில் என் வாழ்க்கை நிற்கிறது. இஃதென்ன! ஒன்றும் விளங்கவில்லை; ஒரே குழப்பமா யிருக்கிறது என்று சிலர் மயங்கலாம். இம்மயக்கத்துக்குக் காரணமாக நிற்பது ஒன்று. அஃது ஊன் உயிர்ப்பிரிவு. இதைத் தெளிவு செய்ய ஒல்லும்வகை முயல்கிறேன். ஊன் உயிர்ப்பிரிவு ஊன் உயிர்ப்பிரிவு பொதுவாக மரணம் என்று கருதப் படுகிறது. மரணம் என்னும் சொல் மயக்கத்துக்கு மூலமாக நிற்கிறது. ஊன் உயிர்ப்பிரிவு பொதுவாக எவர்க்கும் நிகழ்வது. நல்லார்க்கும் பொல்லார்க்கும் அப்பிரிவு நிகழும். அது சிலரை மரணத்துக்குட்படுத்தும்; சிலரை மரணத்துக்குட்படுத்தாது. மரணம் மரணமின்மை மரணம் எது? மரணமின்மை எது? பரம்பொருள் வாழ்க்கை வழி என்று உணராது, வாழ்க்கையைத் தீய வழியில் செலுத்துவோரின் ஊன் உயிர்ப் பிரிவை மரணம் என்றும், பரம்பொருள் வாழ்க்கை வழி என்று உணர்ந்து, வாழ்க்கையை நல்வழியில் நடாத்துவோரின் ஊன் உயிர்ப்பிரிவை மரண மின்மை என்றும் கொள்க. இரண்டுக்கும் என்ன வேற்றுமை? முன்னையது பரத்தில் ஒன்றுவது. பின்னையது அதில் ஒன் றாதது. பரத்தில் ஒன்றாத உயிர் மீண்டும் ஊன் பிறவி தாங்கும். இது கருமப்பிறவி; தொண்டுக்கென்று தாங்குவதன்று. பிறவி பரம்பொருள் உண்மையிலே விளக்கம் பெறுதற்கென்று பிறவி உறுகிறது. இவ்வாறு உறும் பிறவிகளில் ஏதாவதொன்றில் பரம்பொருள் உண்மை விளங்கிவிடும். ஆதலின், அடிக்கடி பிறவி தாங்குவதால் தீமை விளைவதில்லை. ஒவ்வொரு பிறவியும் பரம்பொருள் உண்மை விளக்கத்துக்கு ஒவ்வோர் அளவிலாதல் துணைபுரியும். இதை மறத்தலாகாது. இம்மறவாமை வாழ்க் கையை நல்வழிப்படுத்தும். இரண்டும் பெருவாழ்வு பரத்தின் கடந்த நிலையில் ஒன்றுவதும் பெருவாழ்வு; தொண்டுக்கென்று பிறவி தாங்குவதும் பெருவாழ்வு. இப்பிறவி பரம்பொருள் உண்மையைத் தெளிவதற்கென்று தாங்குவ தன்று. அத்தெளிவு முற்பிறவிலேயே விளங்குவது. அவ் விளக்கத்துடன் தாங்கும் பிறவி தொண்டுக்குரியது. இப்பிறவியும் பெருவாழ்வு பெற்றதென்க. ஞானசம்பந்தப் பெருமான் பாட்டில் பொலியும் வாழ்வு இரண்டையும் உணர்த்துவதென்று யான் கருதுகிறேன். இறப்பின் இழிவு பிறப்பு வெறுக்கத்தக்கதன்று. ஏன்? அதைக் கொண்டே இறப்பைத் தவிர்த்தல் வேண்டும். ஆதலால், பிறப்பு வெறுக்கத் தக்கதன்றென்க. யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் என்று மாணிக்கவாசகர் இறப்பைக் குறித்து இரங்குதல் காண்க. இம்மணிவாசகத்தில் இறப்பின் இழிவு தொனித்தலை உணர்க. அவரே மற்றுமோரிடத்தில் செத்தே போனால் சிரியாரோ என்று அருளியுள்ளனர். இக்கருத்தடங்கிய மணிமொழிகள் பல உள்ளன. இனிப் பிறவாமை மரணத்தை வெறுத்தலாவது இனிப்பிறவாமையை விரும்புவது. பிறவாமையை வேண்டி வேண்டி மாணிக்கவாசகர் பொழிந்த மொழி ஒன்றா இரண்டா? பலப்பல. எடுத்துக் காட்டுக்கென்று ஒன்றைக் கொள்வோம். வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம்நின்பால் தாழ்த்துவதுந் தாமுயர்ந்து தம்மையெல்லாந் தொழவேண்டிச் சூழ்த்துமது கரமுரலுந் தாரோயை நாயடியேன் பாழ்த்தபிறப் பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே. இத்திருமொழியில் பிறப்பறுத்தல் பேசப்படுகிறது. பிறப்பறுத்தலாவது பிறவாமையை உணர்த்துவது. இறவாமை என்பதும் இதுவே. பிறவாமையே இறவாமை; இறவாமையே பிறவாமை. இக்காய நீக்கி இனியொரு காயத்தில் புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின் . . எனவரும் பாடல் திருமந்திரத்தில் உள்ளது. இப் பாடல் பிறவாமையை அதாவது இறவாமையை இப்பிறவியிலேயே பெறுதல்வேண்டும் என்று அறிவு கொளுத்துகிறது. இந் நிலைமை எவ்வாறு கூடும்? வழி எது? வாழ்வுக்கு வழி மரணமென்னும் யமபயத்தை எடுத்துக்காட்டிய சம்பந்தர்- மரணமிலாப் பெருவாழ்வை வாழ்வு என்று சுருங்கிய முறை யில் அறிவுறுத்திய ஞானசம்பந்தர் - அவ்வாழ்வை அடைதற் குரிய வழிகாட்டாமற் போவரோ? அவர் வழிகாட்டுகிறார். கண்ணுள்ளோர் அதைக் காண்க. ஞானசம்பந்தர் எந்தநாள் வாழ்வதற் கேமனம் வைத்தி யால் ஏழை நெஞ்சே என்று கேட்டு அவ்வளவில் நின்றாரில்லை. அவர் மேலும் தொடர்ந்து செல்கிறார்; சென்று அந்தணா ரூர்தொழு துய்யலாம் மையல்கொண்டு அஞ்சல்நெஞ்சே என்று வழிகாட்டுகிறார். அவர் காட்டுவது பரவழி. பரத்தைத் தொழுது உய்யலாம் என்று அவர் அறுதியிடுகிறார். பரத்தில் உறுதிகொண்டு, அதை இடையறாது வழிபடுவதால்- தியானிப்ப தால் - வாழ்வு அதாவது மரணமிலாப் பெருவாழ்வு கூடும் என்பது ஞானசம்பந்தர் கருத்து. பாவம் தியான யோகம், பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையை உறுதிப்படுத்தும். அவ்வுறுதி எவ்விதப் பாவத்தை யும் நிகழ்த்தத் தியானயோகியை விடாது. பாவத்துக்கு அஞ்சும் மனம் அவனுக்கு அமையும். பாவத்தின் சம்பளம் மரணம் என்று விவல்ய வேதம் கூறுகிறது. பாவத்துக்கு அஞ்சும் மனம் பரத்தில் படிந்ததாகும். பரத்தில் படிந்த மனமுடைய மகன் பரம்பொருள் வாழ்க்கை வழி என்று உணர்ந்து நடப்பன். அவனை மரணம் அணுகாது. அவன் பிறவாமையை அதாவது இறவாமையை அடைவது, வாழ்வு - பெருவாழ்வு - மரணமிலாப் பெருவாழ்வு. நல்வழிப்படுத்தல் இவ்வாழ்வுக்கென்று பிறவி தாங்கிய மனிதன், நெறியல்லா நெறியில் உழன்று, களியாட்டிலும், பிற தீமைகளிலும் வீழ்ந்து, தன்னை மறந்து, தன்னை உடையானையும் மறந்து, பிறர்க்குக் கேடு சூழ்வானாயின், அவனை நல்வழிப்படுத்துவது எப்படி? சான்றோர் போதனைகளாலும் சாதனைகளாலும் அவனை நல்வழிப்படுத்தலாம். அப்போதனைகளும் சாதனைகளும் அவன்கண்ணைத் திறக்கும். அவ்வேளையில் அவனுக்கு நிலை யாமைப் போதனை புணையாகும். அவன் போன்றோர்க் கென்றே நிலையாமைப் போதனை சான்றோர் வாயிலாகப் பிறந்தது என்று கூறலாம். நிலையாமை சான்றோர் பலதிறப் போதனைகளுடன் நிலையாமையை யும் போதித்தனர். அதுவும் சிலர் மனத்தைத் திருத்தும் என்று அவர் கருதியிருப்பர். அவர்தம் பொன்மொழிகளிற் சில வருமாறு :- நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு - திருக்குறள் தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர் ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் முதியோ ரென்னான் இளையோ ரென்னான் கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பஇவ் வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும் கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து மிக்க நல்லறம் விரும்பாது வாழும் மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ. - மணிமேகலை மன்னுநீர் மொக்கு ளொக்கு மானிட ரிளமை யின்பம் மின்னினொத் திறக்குங் செல்வம் வெயிலுறு பனியி னீங்கும் இன்னிசை யிரங்கு நல்யா ழிளியினு மினிய சொல்லாய் அன்னதால் வினையி னாக்க மழுங்குதற் கென்னை யென்றாள். - சீவக சிந்தாமணி ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ, வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் . . . - குலசேகரப் பெருமான் தாயே தந்தையென்றும் தாரமேகிளை மக்களென்றும், நோயே பட்டொழிந்தேன் - திருமங்கையாழ்வார் எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார் எம்மாடும் சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் . . - அப்பர் மத்த யானை ஏறி மன்னர் சூழவரு வீர்காள் செத்த போதே யாரு மில்லை சிந்தையுள் வைம் மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா . . . - சுந்தரர் ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. - திருமூலர் ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டீர் சதமல்ல பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி யேகம்பனே. - பட்டினத்தார் தந்தைதாய் தமர்தாரம் மகவென்னும் இவையெலாஞ் சந்தையிற் கூட்டம் இதிலோ சந்தேக மில்லைமணி மாடமா ளிகைமேடை சதுரங்க சேனை யுடனே வந்ததோர் வாழ்வுமோர் இந்த்ரசா லக்கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்தமன மாங்கிருமி சேர்ந்தமல பாண்டமோ வாஞ்சனையி லாத கனவே எந்தநா ளுஞ்சரி யெனத்தேர்ந்து தேர்ந்துமே இரவுபக லில்லா விடத் தேகமாய் நின்றநின் அருள்வெள்ள மீதிலே யானென்ப தறவு மூழ்கிச் சிந்தைதான் தெளியாது சுழலும்வகை என்கொலோ தேடரிய சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந் தமே. -தாயுமானார். இம்மொழிகள் பரத்தை மறந்து செருக்கித் தமது நலத்தின் பொருட்டுப் பிறரை வருத்தி வரும் இழிந்த மாக்களுக்கென்று பிறந்தவை. இவை என்றாதல் அவரை நல்வழிப்படுத்தியே தீரும். மரணத்தைப் பற்றி மரணத்தைப் பற்றி எத்தனையோவிதக் கருத்துக்கள் வெளி வந்துள்ளன. அவற்றுள் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. உலகில் மரணத்தை விரும்புவோரும் இருக்கிறார்; வெறுப் போரும் இருக்கிறார். இன்பமென்று மகிழ்வோரும் இருக்கிறார்; துன்பமென்று வருந்துவோரும் இருக்கிறார். அதை ஏற்பவரும் இருக்கிறார்; ஏலாதவரும் இருக்கிறார். மரணத்துக்கு அஞ்சு வோரும் இருக்கிறார்; அஞ்சாதவரும் இருக்கிறார். இக்கால ரவீந்திரரும், காந்தியடிகளும், வேறு சிலரும் உயிர் நீப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர் மரணத்தைப் பற்றி நல்லுரைகள் பகர்ந்தனர். அவ்வுரைகள் அவரவர் வாழ்க்கை அநுபவத்தி னின்றும் திரண்டவை என்று கொள்க. தற்கொலை வாழ்க்கையிலே தோன்றும் கைப்பு, மானமழிவு, சொல்லொணாக்கவலை, தீராப்பிணி, தொல்லை, பழி, பாவம் முதலியன சிலரை மரணத்தை விரைந்து எதிர்நோக்குமாறு கடவும்; தற்கொலை புரிந்துகொள்ளுமாறும் முடுக்கும். தற்கொலை கொடியது; கொடியது; மிகக்கொடியது; அக்கொலையை மறுத்துக் கூறாத அறிஞர் இல்லை. அதனால் தொல்லை நீங்குமென்று நினைப்பது தவறு. ஒருவரது வாழ்க்கை, பருவுடல் மறைவுடன் முடிவதில்லை. அது மேலும் மேலும் தொடர்ந்து செல்வது. இதை உணராது தற்கொலை புரிந்து கொள்வது மடமை. சதா நிஷ்டர் ஊன் உயிர்ப்பிரிவை விரும்புதலும் கூடாது; வெறுத்தலும் கூடாது. எதுவும் தானே நிகழுமாறு விடுவது சிறப்பு. சகமீ திருப்பினும் மரணமுண் டென்பது சதாநிஷ்டர் நினைப்ப தில்லை என்று தாயுமானார் கழறுகிறார். இஃது எனக்கு இன்பூட்டுவது. பிறவிப்பேறு மரணமிலாப் பெருவாழ்வு வாழ்க்கையின் குறிக்கோள். அதை நிறைவேற்றுதற்கென்று வாழ்க்கை அளிக்கப்படுகிறது. அவ்வாழ்க்கையைப் பரம்பொருள் வழியே செலுத்தினால் மரணமிலாப் பெருவாழ்வு பெறுதல்கூடும்; வேறு வழியில் செலுத்தினால் இறந்தும் பிறந்தும் உழலல் நேரும். அரிய பிறவியைப் பாழ்படுத்துவது அறிவுடைமை யாகுமோ? பெறு தற்கரிய பிறவியைப்பெற்றும், பெறுதற்கரிய பேற்றை இழக்க லாமோ? மரணத்தை வென்றவர் உலகில் எத்தனையோவிதப் புரட்சிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் தலையாயது மரணத்தை வெல்லச் செய்வது. இப் புரட்சி செய்து மரணத்தை வெல்வதற்கென்று ஒரு மரபு உலகிடைத் தோன்றியது. அது சித்தர் மரபு என்று நமது நாட்டில் வழங்கப்படுகிறது; வேறிடங்களில் வெவ்வேறு பெயர் பெற்றுள்ளது. அம் மரபில் நின்று புரட்சி செய்து மரணத்தை வென்றவர் பலர். மிகச் சிலரை ஈண்டு நினைவூட்டிக் கொள் கிறேன். விருஷப தேவர் உலகுக்கு ஒருமலை - பெரிய பனிமலை. ஞாயிற்றொளி யால் பொன்மலை - பொன்னில் ஒரு வெள்ளிமலர் - தூய்மைப் படிவம் - திருக்கயிலை - அதன் நடுவண் ஓர் அறச்சுடர் - தயா மூலம் - தவநிலை - ஊனெலாம் உயிர்ப்பொளி - சாகாச் செல்வம் - சிவகதி அடைவு - யார்? விருஷப தேவர் - அருகர் - சித்த பரமேஷ்டி. அவர் அஹிம்சையை நினைந்து நினைந்து, பேசிப் பேசி, கடைப்பிடித்து ஒழுகி ஒழுகி, அதன் மயமாய் இறவாச் செல்வம் எய்தியவர். புத்தர் அரசின் அடியில் ஒரு தர்மசோதி - சத்திய ஞானம் - பழம் பிறப்புணர்வு - எவர்? புத்தர். இவர் சத்திய ஞானத்தால் பழம் பிறப்பை உணர்ந்து மரணத்தை வென்றவர். பழம் பிறப்புணர்வு பிறவாமை என்னும் இறவாமையைச் சேர்க்கும் இயல்புடையது. சோக்ரதர் நாகரிகம் வளர்ந்த நாடு - மேல்நாட்டை வளர்த்த நாடு. கிரீ நாடு; அந்நாட்டில் தோன்றிய தத்துவமணி சோக்ரதர். அவர் உண்மையின் பொருட்டு, அஞ்சாது, மகிழ்வுடன், நஞ்சுண்டு சாவைத் தவிர்த்தவர். அவர் உண்மையில் கொண்ட உறுதி அவரைப் பெறும்பேறடையச் செய்தது. கிறிது அன்புக்கடல் - தியானப்பொழில் - பொறுமை மலை - கிறிதுபெருமான் சிலுவையில் அறையப்பட்டார். அவர் மாண்டார் என்று அவர்தம் உடல் கல்லறையில் வைக்கப்பட் டது. அவர் மாண்டனரா? இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார்; உலவினார்; சீடர்களுக்குக் காட்சியளித்தார்; அவருடன் பேசினார். மரணம் அவரை அணுகவில்லை. உயிர்த்தெழலின் நுட்பம் விளங்கப் பெறின், மரணமிலாப் பெருவாழ்வின் நுட்பம் விளங்கிவிடும். அப்பெருவாழ்வுக்குக் கிறிது பெருமான் வாழ்க்கை ஒரு பேரிலக்கியம். தமிழ் மார்க்கம் ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவி நின்ற சித்தர் மரபு நாளடைவில் பல இடங்களில் மறையலாயிற்று. அம்மரபு தமிழ்நாட்டில் நீண்டகாலம் நிலைத்து வாழ்வு பெற்றது. அதனால், அது 1தமிழ் மார்க்கம் என்றும் போற்றப் பெற்றது. இன்னும் தமிழ்மக்களால் அம்மார்க்கம் சித்தர் மரபு சித்தர் மரபு என்று பேசப்படுகிறது. நால்வர் தமிழ்நாட்டிலும் சித்தர் மரபு இடைக்காலத்தில் ஒரு விதச் சவலை உற்றது. அவ்வேளையில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் தோன்றி, அம்மரபுக்கு ஆக்கம் தேடினர். சித்தர் மரபின் உயிர்நாடியாயுள்ள மரணமிலாப் பெரு வாழ்வு நால்வர் பாக்களில் ஆனந்தத் தாண்டவம் புரிகிறது. காலனைக் கடிதல் என்னும் இறவாமை இல்லாத இடம் நால்வர் பாக்களில் உண்டோ? திருஞானசம்பந்தர் பரஞ்சோதியில் ஒன்றியவர், திருநாவுக் கரசர் பரமானந்த ஞான வடிவானவர். சுந்தர மூர்த்தி பிரணவம் என்னும் வெள்ளை யானைமீது இவர்ந்து, கயிலை சேர்ந்து பரமானவர். மாணிக்கவாசகர் சிதாகாசப் பரவெளியில் கலந்தவர். இந்நால்வராலும் சித்தர் மரபின் உயிர்நாடியாகிய மரணமிலாப் பெருவாழ்வு உயிர்ப்பிக்கப் பெற்றது. அற்புதம் நால்வர், சித்தர் மரபினராதலின், அவர் அற்புதஞ் செய்த னர் என்று சில இடங்களில் கருதப்படுகிறது. சித்தர் அற்புதம் வேறு; மற்றவர் அற்புதம் வேறு. அதில் உள்ளுறை உண்டு; இதில் ஜாலம் உண்டு. போலிச் சித்தர் நால்வர் வரலாற்றில் சித்து என்னும் அற்புத நிகழ்ச்சிகள் காணப்படுகின்றன. அற்புத நுட்பங்கள் பின்னாளில் நேரிய முறையில் கொள்ளப்படவில்லை. அற்புதங்களின் பருமையே பிற்கால மக்களிடைப் படியலாயிற்று. அவற்றின் நுண்மை அவர்களிடைப் படியவில்லை. அதனால் அற்புதங்களில் ஒருவித வியப்பும் மயக்கும் ஏற்பட்டன. அவை எவர் எவர் பெயராலோ இக்காலத்தில் புனையவும் படுகின்றன. புனைவு போலிச் சித்தர் தொகையைப் பெருக்கியது. உள்ளுறை முன்னோர் அற்புதங்கள் பொருளுடையவை. அவற்றிற்கு உள்ளுறை உண்டு. உள்ளுறை இந்நாளில் பெரிதும் மறக்கப் பட்டது. தியோசாபிகல் சங்கத்தைக் கண்ட பெரியார் மேடம் பிளவட்கி, முன்னோர் அற்புதங்களில் உள்ளுறை உண்டு என்பதை வலியுறுத்தியது என் நினைவுக்கு வருகிறது. விரிவஞ்சி, இங்கே தமிழ்நாட்டுப் பெரியோர் அற்புதங்கள் அளவில் நிற்க எண்ணுகிறேன். பருமையும் உள்ளுறையும் திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் சில அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன இரண்டு. ஒன்று திருமருகல் அற்புதம்; மற்றொன்று திருமயிலை அற்புதம். இவ்விரண்டிற்கும் பிள்ளையார் பாடல்களில் பருமைச் சான்றுகள் இல்லை; நுண்மை திகழ்கிறது. சடையானுமால் என்னும் திருமருகல் பதிகத்தையும், மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை என்னும் திருமயிலைப் பதிகத்தையும் உற்று உற்று நோக்கிப் பாருங்கள். அற்புதங்களின் பருமை காணப்படு கிறதா? ஒன்றுங் காணப்படவில்லை. பருமை புராணங்களிலும் விழாக்களிலும் காட்சியளிக்கிறது. நுண்மை பருமையாதல் இயற்கை. வாழ்க்கைக்கு ஓரளவில் பருமை வேண்டும்; மற்றோர் அளவில் நுண்மையும் வேண்டும். அற்புதங்களில் பருமையும் உண்டு; நுண்மையும் உண்டு. அற்புத நிகழ்ச்சிகளைப் பொய் என்று கூற யான் முனைகின்றேனில்லை. அந்நிகழ்ச்சிகளை முன்னிலைப்படுத்தி, அவற்றிற் படிந்துள்ள உள்ளுறை காண முயல்கிறேன். அற்புதங்களை ஆழ்ந்து ஆழ்ந்து சிந்திக்கச் சிந்திக்க அவற்றின் உள்ளுறை புலனாகும். திருமருகல் திருமருகலில் வணிகன் அரவால் தீண்டப்பட்டு உயிர் நீத்தான். அவனை மணம்புரிய அவனுடன் போந்த பெண்மணி கதறிக்கதறிப் புலம்பினாள். அப்புலம்பல் அவ்வழியே எழுந் தருளிய திருஞானசம்பந்தர் செவியைத் துளைத்தது; நெஞ்சை உருக்கியது. பெருமான் அவ்விடம் போந்து சடையா யெனு மால் என்னும் பதிகத்தை ஓதி வணிகனை எழுப்பினர். இது புராணத்தில் உள்ளது. இதன் உள்ளுறை என்ன? வணிகன் - உயிர்; நஞ்சு - பாவம்; விளைவு - மரணம். ஞான சம்பந்தர் பாவமென்னும் நஞ்சைப் போக்கி உயிரின் மரணத்தைத் தவிர்த்தனர். (உயிர்கள் மரணத்துன்பத்தினின்றும் விடுதலை அடைதற்குரிய வழிகாட்ட வருவோர் மெய்க்குரவர் எனப் படுவர்.) பதிகத்திற் போந்துள்ள மெலிவு முதலிய சொற்கள் மரணத்தைக் குறிப்பன. மரணத்தைத் தவிர்க்கும் மருந்து பரத்தின் திருவருள். மருத்துவர் ஞானசம்பந்தர். திருமயிலை அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு - என்பு தோல் போர்த்த உடம்பு என்பது பொய்யாமொழி. இம்மொழி பிறவியின் உயிர்நாடி அன்பு என்பதை அறிவுறுத்துகிறது. இதை உளங்கொண்டு, திருமயிலை அற்புதத்தை ஆய்வோமாக. அன்புள்ள பிறவி உயிருடையது; மற்றையது என்பு தோல் போர்த்த உடம்பு, அதாவது பிணம். மக்கள் பிறவி விழுமியது. அப்பிறவியிலேயே மரணமிலா வாழ்வைப் பெறுதல்வேண்டும். இதற்கு அன்பெனும் உயிர் பிறவியில் நிலவுதல் வேண்டும். வாழ்க்கையில் அன்பை வளர்த்து, அதின் வண்ணமாவது சாகாமை என்னும் செல்வத்தை அடைவ தாகும். அன்பு வளரா வாழ்க்கை மரணக்குழியில் வீழ்ந்துபடும். ஞானசம்பந்தர் சித்தர் மரபை ஓம்ப வந்தவர். அவர் சித்தர் மரபுக்குரிய இறவாமையைப் போதனையினாலும் சாதனை யினாலும் வலியுறுத்துவதைத் தொண்டாக்கொண்டவர்; அவர்தம் தொண்டால் என்பு அன்புப் பெண்ணாகியது. என்பு, அன்பற்ற நிலையை உணர்த்துவது. அந்நிலை மரணத்தை விளைப்பது. மரணத்தைத் தவிர்க்கச் சம்பந்தர் என்பில் அன்பெனும் உயிரை நுழைத்தனர். அன்பு நுழைந்ததும் என்பு உயிர் பெற்றெழுந்தது. சம்பந்தர் என்பைப் பெண்ணாக் கியது, உயிர்நிலை என்னும் அன்பை மக்களிடை நுழைத்த தாகும். பெண் அன்புக்கு அறிகுறி. பதிகத்தில் அன்புத்தொண்டு அமைந்திருத்தல் காண்க. அப்பூதி அடிகள் மகன் திருநாவுக்கரசர் அரவு தீண்டி உயிர்நீத்த அப்பூதிஅடிகள் மகனை எழுப்பினர் என்று புராணம் கூறுகிறது. அவ்வற்புதத் திற்கென்று நாவரசரால் பாடப்பெற்ற ஒன்றுகொலாம் என்னும் பதிகத்தில் எவ்விதச் சான்றும் பருமையில் காணப் படவில்லை. மரணத்தை நல்கும் பாவ நஞ்சு விலக்கப்பட்ட தென்றும், மரணமிலா வாழ்வு அளிக்கப்பட்டதென்றும் கொள்க. இஃது உள்ளுறை. முதலைவாய்ப் பிள்ளை சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலை வாயினின்றும் பிள்ளையை வரவழைத்ததற்குப் பதிகத்தில் 1சான்று இருக் கிறதே என்று சிலர் எண்ணலாம். சான்றிருத்தல் உண்மை. உண்மையின் உள்ளுறையை உணர முயல்வது அறிவுக்கு அழகு. முதலை - ஆணவம் - பாவம்; பிள்ளை - உயிர். ஆணவத்தால் விழுங்கப்பெற்ற உயிர் மரணத்தினின்றும் எளிதில் விடுதலை அடையுமோ? சுந்தரமூர்த்தி சுவாமிகள் விடுதலைக்கு வழி காணவந்தவர். அவர் ஆணவ முதலையிலிருந்து உயிராகிய பிள்ளையை மரணத்தினின்றும் விடுதலை செய்தனர் என்க. ஊமைப்பெண் மாணிக்கவாசகர் ஊமைப்பெண்ணைப் பேசவைத்தனர் என்று அவரது சரித்திரம் சாற்றுகிறது. ஊமை உயிரின் இருள் சூழ்ந்த மரண நிலையை அறிவிப்பது. ஊமை பேசியது மரணத்தி னின்றும் உயிர் எழுந்ததைத் தெரிவிப்பது. திருச்சாழலில் மரணமிலாப் பெருவாழ்வின் நுட்பம் ஆங்காங்கே விளங்குதல் சிந்திக்கற்பாலது. ஆழ்வார் ஆழ்வார் அருளிய தமிழ் மறையிலும் சித்தர் நிலை பேசப்பட்டிருக்கிறது. அவர்தம் மொழிகளைச் சித்தர் மரபுளங் கொண்டு நோக்குதல் வேண்டும். நோக்கினால் ஆழ்வாரும் சித்தர் மரபினர் என்பது நனி விளங்கும். திருமூலர் தென்னாட்டில் திருமுலர் காலத்தில் சித்தர் மரபுக்கு அசைவு நேர்ந்தது. அதைப்போக்கத் திருமூலர் முயன்றனர். அம்முயற்சி திருமந்திரம் என்ற சித்த நூலாக உருக்கொண்டது. இப்பொழுதுள்ள நூல்களில் திருமந்திரத்தைப் போன்று, சித்தர் நெறியை விரித்துரைக்கும் பெருநூல் ஒன்றும் இல்லை. திருமூலர் மரணமிலாப் பெருவாழ்வைப் பல வழியில் - பல வழியில் - வலியுறுத்தி உலகுக்கு வழிகாட்டினர். சித்தர் மரபுக்குப் புத்துயிர் அளித்தவர் திருமூலர் என்று கூறல் மிகையாகாது. பின்னாளில் சித்தர் மரபு என்பது, திருமூலர் மரபு என்ற வழக்கையும் பெற்றது. சித்தர் மரபைச் சார்ந்த தாயுமானார் தம் குருவை மூலன் மரபில்வரு மௌன குருவே என்று போற்றி யிருத்தல் காண்க. மற்றவர் பட்டினத்தார், அருணகிரிநாதர், தாயுமானார் முதலி யோரும் சித்தர் மரபை - திருமூலர் மரபை - வளர்க்க வந்தவரே. அவர்தம் பாக்களில் மரணமற்ற வாழ்வு மருவுகிறது. தென்னாட்டில் ஏறக்குறைய ஒரு நூறு ஆண்டுக்கு முன் னர்த் தோன்றியவர் இராமலிங்க சுவாமிகள். இவரும் சித்தர் வழி வழி வந்தவர் என்பதில் ஐயமில்லை. வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட மரபினில்யான் ஒருவ னன்றோ . . . என்பது சுவாமிகளின் திருவாக்கு. இராமலிங்க சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திரு வருட்பாவில், சித்தர் மரபின் உயிர்நாடி என்று சொல்லப்படும் மரணமிலாப் பெருவாழ்வை யாண்டும் யாண்டும் காணலாம் சான்றோர் மொழிகள் சாகா நிலையைப் பற்றிச் சித்தர் மரபின் வழிவழி வந்த தென்னாட்டுச் சான்றோர்கள் அருளிய மொழிகள் கடலினும் பரப்புடையன; ஆழமுடையன. இரண்டொரு திவலையை ஈண்டுத் தெறிக்கிறேன். வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவ ரேனும் பாதியும் உறங்கிப் போகும் நின்றதில் பதினை யாண்டு பேதைபா லகன தாகும் பிணிபசி மூப்புத் துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகரு ளானே. - தொண்டரடிப்பொடி ஆழ்வார் மறந்துறந்து வஞ்சமாற்றி யைம்புலன்க ளாசையும் துறந்துநின்க ணாசையே தொடர்ந்துநின்ற நாயினேன் பிறந்திறந்து பேரிடர்ச் சுழிக்கணின்று நீங்குமா மறந்திடாது மற்றெனக்கு மாயநல்க வேண்டுமே. - திருமழிசை ஆழ்வார் தரைமுதல் ... ... நரைதிரை கெடுதகை யதுஅரு ளினன் ... கேடு மூப்புச் சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும் ஆடு போல நரைகளா யாக்கை போக்க தன்றியும் ... பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச் செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன் ... செடியாய உடல் ... ... ... கடியார்ந்த பொழிற்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல் மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே. - ஞானசம்பந்தர் பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின் பேதை பங்கன் பார்த்தனுக் கருள்கள் செய்த பாசுப தன்தி றமே . . . பூவார்ந்த சென்னி ... ... ... சாவாமே காத்தென்னை ஆண்டாய் போற்றி ... இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும் பெரியான்றன் பெருமையே பேச நின்று... வானந் துளங்கிலென் மணகம்ப மாகிலென் மால்வரையும் தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண் டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே. பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும் சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல் மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே. - அப்பர் சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎந் தலைவனை ... ... மழைக்கரும்பு ... ... ... . ... ... பிறவாமைப் பெருமை பெற்றேன் ... ... மற்றுப்பற் றெனக் கின்றி ... .... பெற்றலும்பிறந் தேன்இனிப் பிறவாத தன்மைவந் தெய்தினேன் ... - சுந்தரர் ... ... செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித் துவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை குரம்பை தோறும் நாயுட லகத்தே குரம்பைகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய அற்புத மான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவ துள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக் கள்ளூ றாக்கை அமைத்தனன் ஒள்ளிய கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை என்னையும் இருப்ப தாக்கினன் ... ... - மாணிக்கவாசகர் - திருஅண்டப்பகுதி பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப் பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப் பிராண னடைபேறு பெற்றுண் டீர்நீரே. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே. புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில் உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும் புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே. - திருமூலர் பிறவா திருக்க வரம்பெறல் வேண்டும் பிறந்துவிட்டால் இறவா திருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ அறமார் புகழ்த்தில்லை யம்பல வாண ரடிக்கமலம் மறவா திருமனமே யதுகாண்நன் மருந்துனக்கே. நீற்றைப் புனைந்தென்ன நீராடப் போயென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் ஏற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டாய் ஆற்றிற் கிடந்துந் துறையறி யாம லலைகின்றையே. - பட்டினத்தார் தலைமயிர் கொக்குக் கொக்கந ரைத்துக் கலகலெ னப்பற் கட்டது விட்டுத் தளர்நடை பட்டுத் தத்தடி இட்டுத் தடுமாறித் தடிகொடு தத்திக் கக்கல்பெ ருத்திட் டசனமும் விக்கிச் சத்தியெ டுத்துச் சளியுமி குத்துப் பித்தமு முற்றிப் பலகாலும் சிலதயி லத்திட் டொக்கவெ ரிக்கத் திரிபலை சுக்குத் திப்பிலி இட்டுத் தெளியவ டித்துற் றுய்த்துடல் செத்துட் டுயிர்போமுன் சிலபுகழ் கற்றுச் சொற்கள்ப யிற்றித் திருவடி யைப்பற் றித்தொழு துற்றுச் செனனம றுக்கைக் குப்பிர பத்திக் கருள்தாராய்... கத்தூரி ... ... ... ... கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை உடன்முயல் குற்றேவல் அடிமை செயும்வகை அருளாயோ... மகரகேதனத்தன்... ப்ப தொருநாளே... ஏட்டி லேவரை ... .... .... காக்கை நாய்நரி பேய்க்கு ழாமுண யாக்கை மாய்வதொ ழிந்திடாதோ... மரணப்ர மாத நமக்கில்லை...... (அலங்காரம்) - அருணகிரிநாதர் மருமலர்ச் சோலைநெறி நன்னீழல் மலையாதி மன்னுமுனி வர்க்கே வலாய் மந்த்ரமா லிகைசொல்லும் இயமநிய மாதியாம் மார்க்கத்தில் நின்று கொண்டு கருமருவு காயத்தை நிர்மலம தாகவே கமலா சனாதி சேர்த்துக் காலைப் பிடித்தனலை அம்மைகுண் டலியடிக் கலைமதியி னூடு தாக்கி உருகிவரும் அமிர்தத்தை யுண்டுண் டுறங்காமல் உணர்வான விழியை நாடி ஒ‹nwh டிரண்டெனாச் சமரச சொரூபசுகம் உற்றிடஎன் மனதின் வண்ணந் திருவருள் முடிக்க இத் தேகமொடு காண்பனோ தேடரிய சத்தாகி என் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோ மயானந் தமே. - தாயுமானார் நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனா லுடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான eடத்தரசேvன்னுரிமைeயகனேvன்றுtidªJtidª தேத்துதுநாம் வம்மினுல கியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாங் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருண மிதுவே. - இராமலிங்க சுவாமிகள் எதை அடைவது? மரணமிலாப் பெருவாழ்வுக்கு எதை அடைவது? பரத்தை அடைதல்வேண்டும். காரணத்துக்கு விரிவுரை வேண்டுவ தில்லை. பரம் பிறப்பு இறப்பு இல்லாதது. பிற எல்லாம் பிறப்பு இறப்பு உடையன. பரத்தை அடைந்தால் பிறப்பு இறப்பு ஒழியும். பிறவற்றை அடைந்தால் பிறப்பு இறப்பு ஒழியா. சாகா வழி பரம்பொருள் கருணையுடையது. அஃது அறியாமையால் கட்டுண்டு கிடக்கும் உயிர்கட்குத், தனுகரண புவன போகங் களை வழங்கி, அவற்றின் அறிவை விளக்குகிறது. உயிர்கள் படிப்படியே அறிவு விளக்கம் பெற்றுப் பெற்று, மக்கள் பிறவி யில் பகுத்தறிவு பெறுகின்றன. அவ்வறிவால் மக்கள் பரத்தின் கருணையை மறவாது, வாழ்க்கையை நடாத்தினால், பரம் பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையை உணர்தல் கூடும். அவ்வுணர்வு சாகாமைக்கு வழிகாட்டும். யோகம் பரத்தை மறவாது நினைவிலிருத்தப் பண்டை மூதறிஞர் கண்ட வழிகள் பல. அவற்றுள் ஒன்றைச் சிறப்பாக உலகம் கொண்டது. அது யோகம். கிளைகள் முன்னாளில் யோகம் ஞானத்தின் இறுதிப்படியாய் நின்று துணைபுரிந்தது. அவ்யோகத்தில் நாளுக்குநாள் பல கிளைகள் விரிந்தன. அவற்றுள் சில உடலோம்புதற்கும், சில ஆயுள் வளர்தற்கும், சில சித்துக்களுக்கும், சில அகக்காட்சிக்கும், சில நோய் தீர்த்தற்கும், சிற்சில வேறு சில நலன்களுக்கும் பயன்பட்டு வந்தன. இடைக்காலத்தில் யோகக்கூறுகளில் போலிகளும் குடியேறின. போலிகளால் பொய், மோசம், ஏமாற்றம், சூது, வாது முதலிய சிறுமைகள் சூழ்ந்தன. பின்னாளில் நல்ல யோக வகைகளும் படிப்படியே குலையலாயின. அவற்றால் காலத்துக் குரிய பயனை விளைத்தல் இயலாமற் போயிற்று. ஆங்கொருவர் ஈங்கொருவர் நலம் பெறலாயினர். அந்நலத்தால் உலகம் உய்ந்து விடுமோ? உலக நலன் வருங்காலம், ஒருவர் இருவர் நலனை நாடாது; உலக நலனை நாடும். அக்காலத்தில் ஒருவர் இருவர் நலத்துக்குரிய யோகங்கள் மக்களுக்குப் பயன்படுதல் அரிதாகும். காலம் இயற்கை நோக்கின் வழியே திரும்பும் பான்மையது. இப் பொழுது இயற்கை நோக்கு உலகை ஒரு குலமாக்குவதில் திரும்பி வருகிறது. அதற்கேற்றவாறு பழைய யோக வழிகள் பயன்படுமா? பயன்படா என்று காலம் பதிலிறுக்கும். பழைய யோகங்கள் இயற்கை நோக்குக்கு அரண் செய்யப் புதுமைச் சக்திகளைப் பெறுதல் வேண்டும். பழமையும் புதுமையும் புது உலகத்துக்குப் புதுயோகம் தேவை. புது உலகம் எங்கிருந்து பிறக்கும்? பழைய உலகினின்றும் பிறக்கும். அவ் வாறே புது யோகமும் பழைய யோகத்தினின்றும் பிறக்கும். எப் புதுமைக்கும் தாயகம் பழமை என்பதை மறப்பது நன்றிகொல்வ தாகும். பயன் பழைய யோகங்களால் விளையத்தக்க பயன் இப்பொழுது விளைவதில்லை. அவை உடலுக்கு ஓர் அளவில் நலன் செய் கின்றன; குணப்பெருக்குக்கோ உயிர் நலனுக்கோ துணைபுரிவ தில்லை. காரணம் அவற்றை முறைப்படி பயிற்சி செய்யும் மரபு குலைந்தமையாகும். குலைவுக்கு மூலம் காலப்போக்கு. விளம்பர யோகிகள் இந்நாளில் யோகிகள் என்று அங்கும் இங்கும் சிலர் வதிகின்றனர். அவருள் பலர் வெறும் விளம்பர யோகிகளாக விளங்குகின்றனர். அவர் யோகம் என்னும் பெயரால் - ஜால வித்தை, ஹிப்னாடிஸம், மெமெரிஸம் முதலியவற்றால் - மக்களை ஏமாற்றுகின்றனர். உண்மை யோகிகள் இந்நாளில் இருப்பரேல் மழைவளம் சுருங்காது; வறுமை, பிணி, அகால மரணம், உலகப்போர் முதலியன சண்டதாண்டவம் புரியா. புதுமையாக்கல் இயற்கையின் நோக்கு வேறு வழியில் திரும்பி வரும் இக்காலத்தில் பழைய யோகப் பேச்சுக்கள் வேண்டுவதில்லை. அவற்றைக் காலத்துக்கேற்றவாறு புதுமையாக்க முயல்வது அறிவுடைமை. இயற்கையை உடலாக்கொண்ட பரத்தின் அருளால் உலகம் வளர்ந்து வருகிறது. அவ்வளர்ச்சியினிடை இப்பொழுது ஒருவிதப் புதிய உலகம் தோற்ற முறுகிறது. அவ்வுலகில் படிப்படியே தனிமை வீழும்; பொதுமை அதாவது சேர்க்கை எழும். இந்நாளில், தனி மனிதனுக்கு நலஞ்செய்யும் யோகம் வேண்டுமோ? வேண்டா. பொதுமைப் புது உலகில் தன்னல யோகம் இடம் பெறாது. பொதுமைச் சேர்க்கை வாழ்க்கை பெருகப்பெருக அதற்கு ஆக்கந்தேடுவதில் மக்கள் கருத்துச் செல்லும். சேர்க்கை வாழ்க்கைக்கு எப்படி ஆக்கந்தேடுவது? தனிமை என்னும் தன்னலத்தை அகற்றிப் பிறர்க்கெனப் பாடு படுவது சேர்க்கைக்கு ஆக்கந்தேடுவதாகும். சேர்க்கை வாழ்க்கை யில் தன்னலம் எழுந்தால் வளர்ச்சி தேக்கமுறும். சேர்க்கை வளர்ச்சிக்குத் தன்னலம் தலைகாட்டலாகாது. புதுஉலக அறம் காலத்துக்கேற்ற கோலம் கொள்வது மனிதத்தின் இயல்பு. தனக்கென வாழாது பிறக்கென வாழ்வது புது உலகின் அறம். இவ்வறம் முன்னே வெறும் உபதேசமாய் ஏட்டில் கிடந்தது; மிகச் சிலர் வாழ்க்கையில் மட்டும் நடப்பாயிருந்தது. இப் பொழுது அது மக்கள் கூட்டத்தின் வாழ்க்கையாதல் வேண்டும்; இல்லையேல் காலத்துக்குரிய சேர்க்கை அறம் நடைபெறுதல் அரிதாகும். சேர்க்கை வளர்ச்சிக்குத் தீங்கிழைப்பது இயற்கை யின் நோக்கை எதிர்ப்பதாய் முடியும். இயற்கை நோக்கை எதிர்ப்பது நிலைத்து ஆக்கம் பெறாது. அந்நோக்கை மாற்றல் எவரால் இயலும்? அது பரத்தின் அருளால் நிகழ்வது. அத் தகைய ஒன்று சிறுமை எதிர்ப்பால் வீழ்ந்து படாது. சிறுமை எதிர்ப்புச் சிலகாலம் சமூக வளர்ச்சியைச் சிறிது தடைசெய்யும். தடை விரைவில் உடைந்து போகும். புது யோகம் பொதுமைச் சேர்க்கை வளத்துக்குரிய யோகம் எது? சேர்க்கை வாழ்க்கைக்கு என் செய்யலாம் என்று நினைந்து நினைந்து அவ்வண்ணமாய் வாழ்வது புதுயோகம். இது காலத்துக்குரிய யோகம் - தியான யோகம் - அதாவது பரோப கார சிந்தனை. ஒருவனே வீடுபேறெய்தல் வேண்டும் என்னுந் தன்னல யோகத்தை இனி வருங்காலம் ஏலாது. புது உலக மக்கள் பண்பே மாறுதல் அடையும். தன்னலத் துக்கு ஊற்றாயிருந்த தத்துவங்கள் இனி ஒடுங்கும்; ஒடுங்கிப் பரநலத்தை வளர்க்கும் தத்துவங்களாக மாறிப் புதுமைபெறும். அதனால் தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்தல் என்னும் பொதுமை அறம் - சேர்க்கை அறம் - வளரும். வித்து புதுயோகத்தில் தன்னலம் இராது. தான், பிறவற்றின்-பிறரின்-உறுப்பு என்னும் உணர்வு செழிக்கும். அதில் வலிந்து மூச்சுப் பிடித்தல், அதனால் முகம் சிவந்து இரத்தம் கருகல், தவறுதலால் காது செவிடாதல், கண் பஞ்சடைதல், நரம்புக் கட்டுக் குலைதல், மூளைக் கோளாறு முதலிய கொடுமைகள் தலைகாட்டா. புதுயோகம் நுண்ணிய எண்ணத்தில் எளிதில் நிகழ்வது. அதின் வித்து, சேர்க்கை எண்ணம் - சிந்தனை. சேர்க்கை அறம் சேர்க்கையைப் பற்றி ஒரு தனி அதிகாரம் இந்நூற்கண் அமைந்துள்ளது. அதிலே சேர்க்கைத் தத்துவம் விரிவாக உரைக்கப்பட்டிருக்கிறது. சேர்க்கையற்ற ஒலியோ, அணுவோ, உலகோ, அகிலமோ, பிறவோ இல்லை. எல்லாவற்றிலும் சேர்க்கை பெற்றிருப்பது பரம். அப்பரத்தை எண்ண எண்ணச் சேர்க்கை, அறமாகுதல் - தர்ம மாகுதல் - சமதர்மமாகுதல் - தெளிவாகும். படிப்படியே தொடக்கத்தில் எல்லாவற்றிலும் சேர்க்கை பெற்றிருக்கும் பரத்தை நேரே நினைத்தல் பெரும்பான்மையோர்க்கு இய லாது. மலை, காடு, வயல், கடல் முதலியவற்றைத் தனித்தனியே நினைந்து நினைந்து பயிற்சிபெறுதல் நல்வழி காட்டும். அப் பயிற்சியால் பின்னே மலை முதலியவற்றையெல்லாம் ஒருங்கே சேர்த்து நினைக்கும் வாய்ப்புக்கிட்டும். அஃது உலகை வளர்க்கும் ஞாயிற்றின் நினைப்பைக் கூட்டும். அந்நினைப்பு எல்லா உலகங்களுஞ் சேர்ந்த அகிலத்தில் கொண்டுபோய் விடும். ஓர் அகில நினைப்பு எல்லா அகிலங்களிலும் நுழைந்து பரவிப் பெருகும். இப்பெருக்கு எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்துள்ள பரத்தை நினைக்கும் பேற்றை வழங்கும். பேதம் அபேதம் பரத்தை நினைப்பது எல்லாவற்றிலும் - எவ்வுயிரிலும் - செல்லும். இது, தான் பிறர் என்னும் பேத உணர்வை அகற்றும். பேதம் அகன்றதும் அபேதம் சிறக்கும். இஃது இயல்பு. பொதுமை பொதுளல் தன்னிலும் பிறவற்றிலும் என்றும் நீங்காமல் வீற்றிருக்கும் பரம் ஒன்றே என்று உணர்ந்து, அவ்வொன்றையே எண்ணி எண்ணி, அவ்வெண்ணச்சார்பாய்த் தெளிவடைந்த நெஞ்சம், எவ்வுயிர்க்காதல் தீங்கு செய்தலை நாடுமோ? நாடாது. ஒருவேளை நாடினும் அத்தீங்கு தன்னையும்பற்றிப் பாதித்தல் அந்நெஞ்சுக்குச் செவ்வனே விளங்கும். அவ்விளக்கத்தில் பொதுமை பொதுளும். அங்கே தனிமைக்கு இடம் ஏது? பர உணர்வின் பரிணாமம் நம் முன்னோர் பரத்தைத் தியானிப்பதில் மக்களை ஈடுபடுமாறு அறிவுறுத்தியதன் நோக்கத்தை ஆய்ந்து ஓய்ந்து பார்த்தல் வேண்டும். பார்த்தால் அவரது நோக்கம் இனிது புலனாகும். பர தியானம், எல்லாவற்றிலும் - எவ்வுயிரிலும் - பரம் இருத்தலை விளங்கச் செய்யும். எல்லாவற்றிலும் பரம் என்னும் கருத்தைப் பெறுவது தனக்கும் பிறவற்றிற்கும் உள்ள தொடர்பை உணர்வதாகும். எல்லாவற்றிலும் பரம் என்னும் உணர்வி னின்றும் பரிணமிப்பது பொதுமைச் சேர்க்கை அறம். மதக்கொடுமைகள் இடைநாளில், பரம், எங்கும் - எல்லாவற்றிலும் - சேர்க்கை பெற்றிருக்கும் அறத்தை மக்கள் மறக்காலாயினர்; பரம் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கிறது என்று கருதலாயினர். அக்கருத்துப் பொதுமை உணர்வையே கவ்வியது. பரத்தின் பெயரால் பலவிதப் போலிமதங்கள் கற்பிக்கப்பட்டன. மதக் கொடுமைகள் அட்டூழியங்களாயின. விளக்கம் புதுமை யோகம் சேர்க்கையை அடிப்படையாக் கொண் டது; எங்குமுள்ள பரத்தைத் தியானிப்பது; தியானத்தால் தனக்கும் பிறர்க்கும் உள்ள ஒருமையை வளர்ப்பது; தானும் பிறரும் சேர்ந்த ஒன்றே சமூகம் என்பதை விளங்கச் செய்வது; சமூக நலனுக்குப் பாடுபடுவது விழுமிய தொண்டு என்னும் உறுதியில் நிறுத்துவது. இவ்வாறு பரோபகார சிந்தனையில் ஆழ்ந்து ஆழ்ந்து பயிற்சி பெறுவது புதுயோகம். இந்த யோகம், எல்லாவற்றிலும் பரம் - எல்லாம் பரம் - என்னும் உண்மை ஞானத்தைப் பெறச்செய்யும். ஆசை அறல் சேர்க்கை என்னும் சமூகத்துக்கென்று வாழ்க்கையை நடாத்துவதில் மனமொழி மெய்களெல்லாம் பிறர்க்கென்றே அர்ப்பணமாதல் நல்லது. 1வாழ்க்கை, பிறர்க்கு-பிறர்க்கு- என்னும் சிந்தனையிலும் சிறந்த யோகம் வேறொன்றிருக்குமோ? அந்த யோகம், ஆசையை அறுக்கும்; தேவைக்குமேல் செல்ல மனத்தை விடாது. இவ்விரண்டும் மக்களை நல்வழிப்படுத்தும். நல்வழியில் நிற்கும் மக்கள் அகாலமரணம் அடைவது அரிது. அவர்கள் வாழ்க்கை சாகா நிலையைப் பெறும். இப்பேற்றை அளிப்பது புது உலகம். குற்றமற்ற உலகம் தனிமையில் செல்வம் ஒருபக்கம் பெருகி, மற்றொரு பக்கம் அருகுகிறது. அதனால் பசி, பட்டினி, அகால மரணம் முதலிய துன்பங்கள் விளைகின்றன. அத்தனிமை ஒழிந்தால் உலகில் பசி, பட்டினி, அகால மரணம் முதலிய துன்பங்கள் தொலையும். துன்பங்கள் துதையாத உலகே குற்றமில்லாததாகும். குற்ற மில்லாத உலகில் மரணமென்னும் யமபயம் அற்றுப்போகும். இதுபற்றியே கம்பர், கூற்றமில்லை ஓர் குற்றமிலாமையால் என்று தமது நாட்டைச் சிறப்பித்தனர். ஆசை இக்கால வாழ்க்கை ஆசைப் பேய்க்கு இரையாகிறது. அவ்வாசை கொலை, களவு, கள், காமம், பொய் முதலிய பாவங் களாகி உலகை வருத்துகிறது. இவ்வருத்தத்தைப் போக்குதற் கென்று சட்டங்கள் செய்யப்படுகின்றன. அச்சட்டங்கள் வருத்தத்தைப் போக்குகின்றனவா? இல்லை. அவை மேலும் மேலும் வருத்தத்தைப் பெருக்கி வருதல் கண்கூடு. என் செய்வது? வருத்தத்துக்கு மூலமாயுள்ள 1ஆசை அறுதல் வேண்டும். புதுஉலகச் சேர்க்கை வாழ்வில் தனிமை இடம் பெறாமை யால் ஆசைப்பேய் தலைவிரித்தாடுதல் குறையும்; ஆசையை எழுப்பும் தன்னல விதை சிதையும். ஆசையினின்றும் விடுதலை யடையும் மக்கள் ஒழுக்கமுடையவர்களாதல் திண்ணம். ஒழுக்கம் மரணமிலாப் பெருவாழ்வை நல்கும். ஒழுக்கம் தனிமையற்ற பொதுமையில் அதாவது சேர்க்கையில் செல்வம் ஒருபால் பெருகுவதுமில்லை; மற்றொருபால் அருகுவதுமில்லை. இந்நிலைமை ஒழுக்கத்தை ஓம்புமென்று விளக்கலும் வேண்டுமோ? நல்வாழ்க்கைக்கு வறுமைக்கொடுமையும் கூடாது; செல்வத் திமிரும் கூடாது. இரண்டுமற்ற வாழ்க்கையே ஒழுக்க உலகை ஈனும். 2செல்வ மென்னும் அல்லலிற் பிழைத்தும் நல்குர வென்னும் தொல்விடம் பிழைத்தும் என்று மாணிக்கவாசகனாரும், 3வாழ்வெனும் மையல் விட்டு வறுமையால் சிறுமை தப்பி..... என்று அருணந்திசிவனாரும் அருளிய மொழிகளை உளங் கொண்டு ஆய்க. வறுமைக்கொடுமை ஒரு வழியில் தீய ஒழுக்கத்தை வளர்க்கும்; செல்வத்திமிர் வேறு வழியில் தீய ஒழுக்கத்தை வளர்க்கும். இரண்டும் அற்ற ஒருநிலை நல்லொழுக்கத்தை ஓம்பும். நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்துக்குப் பொதுமை அறம் இன்றியமையாதது. ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். என்பது திருவள்ளுவர் திருவாக்கு. பொருள் வெளிப்படை. ஈண்டு விழுப்பம் என்பது மரணமிலாப் பெருவாழ்வை உணர்த்துவது. தொண்டும் யோகமும் மரணமிலாப் பெருவாழ்வுக்கு எவ்வுலகம் தேவை? ஒழுக்க உலகம் தேவை. ஒழுக்கம் தனிமையில் வளர்தல் அருமை. அது பொதுமையில் எளிதில் வளரும். ஆகவே, பொதுமை உலகைப் படைக்க முயல்வது காலத்துக்குரிய தொண்டாகும். அத் தொண்டை இடையறாது நினைந்து நினைந்து ஆற்றுவது இக் காலத்துக்குரிய யோகம் - தியான யோகம் - என்று கூறலாம். குற்றங்கள் பொதுமை உலகில் புறக்குற்றங்கள் பொன்றும்; அகக் குற்றங்கள் அழியும். இருவகைக் குற்றங்களும் இடம்பெறாத ஒழுக்க உலகில் யமனுக்கு அதாவது மரணத்துக்கு என்ன வேலை? யமன் வேலையற்றவனாவன். இந்நுட்பத்தை உணர்ந்து, (பசி, பட்டினி, வறுமை அற்ற தமது நாட்டில்) கூற்றமில்லை ஓர் குற்றமிலாமை யால் என்று பாடிய கம்பருக்கு உலகம் கடமைப்படுவதாக. கம்பர் கற்பனை, காட்சியாகும் காலம் நெருங்கி வருகிறது. அப்பர் ஓவியம் ஒருவர் இருவர் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறு வதைப் பார்க்கினும், உலகம் அவ்வாழ்வைப் பெறுவது நன் றன்றோ! அத்தகைய உலகைப் படைக்க முயன்ற அனைவர்க்கும் எனது வணக்கம் உரியதாக. அப்புது உலக வாழ்வு, நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம், நடலை இல்லோம், ஏமாப்போம், பிணிஅறியோம், பணிவோம் அல்லோம், இன்பமே எந்நாளும் துன்ப மில்லை . . . . எனவரும் அப்பர் அருள் மொழியில் ஓவியம் பெற்றிருத்தல் காண்க. மார்க் - காந்தி இந்நாளில் பொதுமைப் புது உலகைப் படைக்க வந்தவர் சிலர். அவருள் குறிக்கத்தக்கவர் கார்ல் மார்க்ஸும், காந்தி யடிகளுமாவர். அவர்தம் உலகம் மரணமிலாப் பெருவாழ்வைப் பெருக்கும் என்று யான் உறுதியாக நம்புகிறேன்; அதற்கென வாழ்கிறேன்; பரம்பொருளின் அருள் தேவை; மக்களின் கூட்டுறவு தேவை. மார்க்ஸியமும் காந்தியமும் ஒன்றுக; புதுஉலகம் மலர்க; மரணமிலாப் பெருவாழ்வு மல்க; ஒங்க! இறுவாய் தோழர்களே! இந்நூலின் இறுவாயில் நேயர்களாகிய உங்களைத் தோழர்களே என்று விளிக்கிறேன். எல்லாருந் தோழராதல் வேண்டு மென்பது எனது வேட்கை. அவ்வேட்கை யுடன் யாக்கப்பெற்றது இந்நூல். தோழர் யார்? தோழர் இன்னார் இன்னார் என்று பகுத்துப் பகுத்து நினைப்பதும் சொல்வதும் தவறு. எல்லாரும் தோழரே யாவர். இதில் என்ன ஐயம்? எல்லா உயிரிலும் ஒரே பரம்பொருள் வீற்றிருக்கிறது. அப் பொருள் ஓருயிரில் அதிகமாகவும் மற்றோருயிரில் குறைவாகவும் வீற்றிருக்கவில்லை. அஃது எல்லா உயிரிலும் ஒரே விதமாக வீற் றிருக்கிறது. அப்பொருளை உணர்ந்தால் எல்லா உயிரும் தோழ ராகவே காணப்படும். அந்நிலையில் பராபரனும் தோழன் என் னும் உண்மை செவ்விதில் தெளிவாகும். அத்தெளிவு பெற்ற பெரியோருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரா பரனை, ஏழிசையாய், இசைப்பயனாய் இன்னமுதாய், என்று போற்றித் தொடர்ந்து, என்னுடைய தோழனுமாய் என்று வழுத்தியிருத்தல் காண்க. இத்திருப்பாட்டிற் போந்துள்ள தோழனுமாய் என்பது, பின்வந்த இராமலிங்க சுவாமிகளுக்குத் தேனென இனித்தது. அவ்வினிமை சுவாமிகள் உள்ளத்தில் தேங்கித் தேங்கி, ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்து ஊழியிலின் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே என்னுந் தீந்தமிழ்ப் பாடலாகப் பொங்கியது. தோழமையின் விழுப்பம் என்னே! என்னே! உலகம் பராபரனை ஆண்டவன் என்றும், தலைவன் என்றும், சகோதரன் என்றும் ஆன்றோர் கொண்டதை உலகம் கண்டது. அவ்வுலகம் அவ்வளவில் நின்றுவிடவில்லை. அது பரனைத் தோழன் என்று அழைத்த பெரியோரையும் ஈன்றது. அப் பெரியோர் வாழ்க; அவர் உலகம் வளர்க. மேடை முற்காலத்தில் மேடையில் நின்று பேசினோர் கூட் டத்தைப் பார்த்து விளித்த விளிப்புக்கள் பலதிறம். அவை யெல்லாம், ஒருபோது, பெருமாட்டிகளே - பெருமான்களே என்று திரண்டன; அவ்விளிப்புப் பின்னே, சகோதரிகளே - சகோதரர்களே என்று மாறியது. அம்மாறுதல் இப்பொழுது, தோழர்களே என்று மருவியுள்ளது. உலகம் பலவழியிலும் வளர்ச்சியடைந்து வருகிறது. அது மேடையிலும் வளர்ச்சியடைந்துள்ளது. மேடை வளர்ச்சி மன்பதை வளர்ச்சியாதல் ஒருதலை. இன்று மேடை நாளை உலகம் என்பது அறிஞர் மொழி. தோழமை தோழமையைப் பற்றி இறுவாயில் விரித்துச் சொல்ல வேண்டுவதில்லை. தோழமை உயர்வு தாழ்வு அற்றது; பெண் ஆண் வேற்றுமை அற்றது; எல்லா உயிரிலும் ஒரு பொருள் பொதுமையில் சேர்ந்திருப்பதை உணர்த்துவது; இவ்வுணர்வால் எல்லா உயிரும் சகோதரம் என்பதை விளங்கச் செய்வது. இத்தோழமை வளர வளர, உலகிலுள்ள பலவிதக் குறைபாடுகள் குலையும். உலகம் விடுதலைபெறும். பரத்தில் உறுதி தோழமைக்குப் பலவித நல்லியல்புகள் வாழ்க்கையில் படிதல் வேண்டும். அவற்றுள் உயிர் போன்றது ஒன்றுளது. அவ்வொன்று பிற நல்லியல்புகளை எளிதில் படிவிக்கும் ஆற்றல் வாய்ந்தது. அஃது எது? அது பரத்தின் உண்மையில் 1உறுதி கொள்வது. அவ்வுறுதி எவ்வுயிரையும் தோழராகக் கருதுதற்குக் கொழுகொம்பாகும். எங்குமுள்ள பரத்தின் உண்மையில் உறுதி கொள்ளாது, தோழர் தோழர் என்று பேசுவதும், எழுதுவதும் பொருளற்ற போலியாகும். போலி, நெஞ்சைப் பாம்புப் புற்றாக்கும். பரத்தின் உண்மையில் உறுதிகொண்ட நெஞ்சில் அன்பு கோயில் கொள்ளும். அன்பினின்றும் முகிழ்ப்பது தோழமை - உண்மைத் தோழமை. தோழமைக்கு வித்து, பரத்தின் உண்மை யில் உறுதிகொள்வது என்று சுருங்கச் சொல்லலாம். வழிபாடு பரத்தின் கடந்தநிலை - 1பாழ் - சூந்யம். அந்நிலையுடைய பரம், கருணையால் இயற்கையை உடலாக் கொண்டு, உயிர்கட்கு நலஞ் செய்கிறது. இயற்கை காவியமாகிறது; ஓவியமாகிறது; பிறவாகிறது. இயற்கையும், காவிய ஓவியமும், பிறவும் வழி பாட்டுக்குரியன. வழிபாடு மனத்தின் கரடு முரடுகளைப் போக்கும்; அதைப் பலவழியிலும் பண்படுத்தும். பண்பட்ட மனம் வாளா இராது. அஃது உயிர்கட்குத் தொண்டு புரிய விரையும். விஞ்ஞானம் பரம்பொருள் உண்மையில் ஐயங்கொள்ள வேண்டா - எவ்வித ஐயமும் கொள்ள வேண்டா - வேண்டா - என்று அறை கூவுகிறேன். எனது அநுபவம் உங்கள் முன்னிலையில் என்னை அலறகூவச் செய்கிறது. முன்னோர் பரத்தின் உண்மையைத் தியானயோகம் முதலியவற்றால் உணரலாயினர். பின்னே மக்கள் வாழ்க்கையில் விஞ்ஞானம் முளைத்தது. அது மூளையில் வெறும் உலகாயத நஞ்சை உமிழ்ந்தது. அதனால் வாழ்க்கை, தியானயோகம் முதலியவற்றை உதறியது. இப்பொழுது விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து வருகிறது. வளர்ச்சியில் நஞ்சு அருகுகிறது. அது தனது பழைய நிலையைக் குறித்து வருந்து கிறது. விஞ்ஞானம் பரத்தின் உண்மையை உணர ஆர்ப்பரிக் கிறது. இக்காலத்தில் பரம்பொருள் உண்மையில் ஐயங் கொள்வது அறிவு வளர்ச்சியை நாடுவதாகாது. உலக நிலை தோழர்களே! தொண்டுளங்கொண்டு, உலகை - நாம் வாழும் உலகை - நோக்குங்கள். அஃது எக்காட்சியை வழங்கு கிறது? கொடுங்காட்சியை - கோரக்காட்சியை - கொலைக் காட்சியை - வழங்குகிறது. இக்காட்சியை மாற்ற வேண்டுவது எவர் கடமை? நம் கடமையன்றோ? காரணம் உலகம் பாழ்பட்டதற்குக் காரணம் என்னை? பரம் பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையை மறந்தமை காரணம் என்று இந்நூல் முழங்குகிறது. மூல காரணத்தை உணர்ந்து, காலத்துக்கேற்ற தொண்டாற்றுவது சால்பு. தனிமை பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையை உலகம் ஏன் மறந்தது? தனிமை, உலகைத் தன்னலத்தில் ஆழ்த்தியது. அதனால் உலகில் போராட்டங்கள் மலிந்தன. போராட்டங்கள் பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையை மறப்பித்தன. அவை ஒழிதற்கு முதலில் தனிமை உணர்வு சாதல் வேண்டும். தனிமை செத்தால் சேர்க்கை வளம் பெறும். சேர்க்கை வளத்துக்குப் பொதுமை அறம் இன்றியமை யாதது. புரட்சி பொதுமையை உலகில் நிலைபெறுத்தல் எளிதன்று. அதற்கென்று கோலப்பெற்ற வழிகள் பலப்பல. அவற்றுள் சிறந்தது புரட்சி. புரட்சி எனில் எப்புரட்சி? மறப்புரட்சியா? அறப்புரட்சியா? எவ்வளவோ மறப்புரட்சிகள் எழுந்தன; விழுந்தன. உலகில் பொதுமை அறம் நிலைத்ததா? ஆகவே, மறப்புரட்சியை மறப்பது நல்லது. உலகில் தோன்றிய பெரியோர் பலரும் அறப்புரட்சியை அறிவுறுத்தினர். அதற்கு ஆக்கம் தேட முயல்வது அறிவுடைமை. அறப்புரட்சிக்குத் தன்னலமற்ற தொண்டு தேவை. தன்னலத்தால் உலகம் பட்டபாடு போதும்! போதும்! சேர்க்கை தன்னலம் தனிமையில் சிறத்தல் இயற்கை. தனிமை சாய்ந்தால் தன்னலமுஞ் சாயும். தனிமையைச் சாய்க்கவல்லது சேர்க்கை. சேர்க்கை உணர்வு ஓங்க ஓங்க எல்லா உயிரிலும் சேர்க்கை பெற்றுள்ள ஒரு பொருளின் உண்மை விளங்கும். அவ்விளக்கம், பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையைத் தெளிவு செய்யும். இத்தெளிவுக்குச் சேர்க்கை அடிப்படை. இஃது உள்ளத்தில் இருத்தத்தக்கது. தடைகள் பரம்பொருள் வாழ்க்கை வழி என்னும் உண்மையை உணராதவாறு மறிக்குந் தடைகள் பல உண்டு. அவைகட்கு மூலமாயிருப்பது அறியாமை. அறியாமையை அகற்ற முயலல் வேண்டும். அம்முயற்சிக்கு இரக்கமும் மன்னிப்பும் உயிர் நாடிகள். தண்டனை எரிநெய்யாகும். அது கொள்ளத்தக்க தன்று. தண்டனை கொடிய அரசுகளையும், சட்டங்களையும், சிறைக்கோட்டங்களையும், தூக்குமேடைகளையும், இன்ன பிறவற்றையும் பெருக்கும். இப்பெருக்கு உலகைப் பேயாக்கும். அது வேண்டா. இரக்கமும், மன்னிப்பும் அறப்புரட்சிக்கு ஆக்கந் தேடும். அறப்புரட்சி, தடைகளை நீக்கும்; அறியாமையைப் போக்கும்; அறிவை விளக்கும். அமைதி அறிவு விளக்கத்தால் உலகம் ஒரு குலமாகும்; ஒரு குலத் தில் அமைதி நிலவும்; அன்பு ஊற்றெடுக்கும்; அருள் பொங்கி ஆறாகும். பெருவாழ்வு அமைதியும் அன்பும் அருளும் செறிந்த உலகில் அறம்-பொதுமை அறம்-வளரும். அவ்வுலகில் பட்டினி ஏது? வறுமை ஏது? அகால மரணம் ஏது? அதில் யமபயம் இராது; மரண மிலாப் பெருவாழ்வு மல்கும். குறிக்கோள் மரணமிலாப் பெருவாழ்வு வாழ்க்கையின் குறிக்கோள். இக்குறிக்கோள் நிறைவேறுதற் கென்று, உலகு, பிறப்பு, கல்வி, தொழில், வாழ்க்கை, வழிபாடு, தொண்டு, ஆட்சி முதலிய சீர்கள் அமைந்தன. இவை யாவும் செம்மை வழியில் இயங்கி னால் நல்ல பொது உலகம் பூக்கும். புது உலகம் இதுகாறும் பொது உலகம் பூக்கவில்லை; இனிப் பூக்கும் அதுவே புது உலகம். புது உலகம், சாதி மதம் நிறம் மொழி நாடு முதலியவற்றைக் கடந்து நிற்கும்; ஒரு குலமாகும்; பொலி, பட்டாளம், சிறைக்கோட்டம், தூக்குமேடை முதலியவற்றைத் தொலைக்கும்; கொலைக் கருவி வடித்தலை ஒழிக்கும்; உற் பத்தியைப் பெருக்கும்; விருஷப தேவர் அஹிம்சையையும், புத்தர் சீலத்தையும், கிறிதுவின் அன்பையும், திருவள்ளுவர் வாழ்க்கை நலத்தையும், மார்க் - காந்தி பொதுமையையும் காணும்; ஒம்பும். எழுக இத்தகைய புது உலகைக் காண எழுக; எழுக. காண்போம் - காண்போம் என்று உறுதிகொண்டு எழுக; எழுக. பரம் பொருள் வாழ்க்கை வழி என்னும் உணர்வுடன் எழுக; எழுக. எல்லாம் கைகூடும். வாழ்க பரம்; வாழ்க இயற்கை; வாழ்க வாழ்க்கை; வெல்க அறம் - தர்மம்- சமதர்மம். திருஅருட்பா அச்சந் தவிர்த்தே அருளிற் செலுத்துகின்ற விச்சை அரசே விளங்கிடுக - நச்சரவம் ஆதிக் கொடியவுயிர் அத்தனையும் போயொழிக நீதிக் கொடிவிளங்க நீண்டு. கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - தெருள்நயந்த நல்லோர் நினைத்த நலம்பெருக நன்றுநினைத் தெல்லோரும் வாழ்க இசைந்து. புல்லொழுக்க மெல்லாம் புணரியிடைப் போயொழிக நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக - இல்லொழுக்கில் செத்தார்க ளெல்லாம் திரும்ப எழுந்துமனம் ஒத்தாராய் வாழ்க உவந்து. பொதுமை வேட்டல் நாடுகளைப் பற்றுவதில் நாட்டங்கொள் அரசு நாளுநாள் சட்டத்தால் நடுக்குறச்செய் அரசு காடுகளை அழித்துவருங் கருணையில்லா அரசு கட்டிடத்தில் நூல்காட்டிக் கற்பழிக்கும் அரசு பாடுகளைப் பெருக்குவித்துப் பலஉயிர்கொள் அரசு பலவிதமாய்க் கொலைக்கருவி பரப்புகின்ற அரசு கேடுபுரி இன்னவைகள் கெட்டழிய இறையே கேண்மைமிகு அருளாட்சி கிட்டஅருள் விரைந்தே அனைத்துயிரும் ஒன்றென்னும் ஆட்சியரு ளாட்சி ஆருயிர்கள் பசியறியா ஆட்சியரு ளாட்சி வனப்புடைய பெண்ணுள்ளம் மகிழ்வதரு ளாட்சி வாழ்க்கைவழிப் பரநலத்தை வளர்ப்பதரு ளாட்சி தனக்குரிய மொழியிடத்தே காப்பதரு ளாட்சி தனைப்போலப் பிறரைஎண்ணுந் தன்மையரு ளாட்சி உனைத்தினமும் நினையுணர்வை யூட்டலரு ளாட்சி ஒளியாட்சி அருளாட்சி ஓங்கஅருள் அரசே.  திரு.வி.க. வாழ்க்கைச் சுவடுகள் 1883 பிறப்பு (ஆகடு 26) 1891 சென்னை இராயப்பேட்டையில் தொடக்கப் பள்ளியில் சேர்தல் 1894 வெலி பள்ளியில் சேர்தல். நோயால் கல்வி தடைப்படுதல். நான்கு ஆண்டுகள் பள்ளிக் கல்வி இல்லை. 1898 - 1904 மீண்டும் வெலி பள்ளியில் சேர்தல். ஆசிரியர் கதிரைவேற் பிள்ளை சார்பாக நீதிமன்றத்துக்குப் போனதால் இறுதித் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தார். 1901-1906 யாழ்ப்பாணம் கதிரைவேற் பிள்ளையிடம் தமிழ் இலக்கியம், சைவ சாத்திரங்கள் பயிலுதல் 1907 கதிரைவேலர் மறைவு. 1907-1908 பென்சர் கம்பெனியில் பணி 1908 கதிரைவேலர் வரலாறு (முதல் நூல்) எழுதுதல். 1908-1910 மயிலைப் பெரும்புலவர் தணிகாசல முதலியா ரிடம் தமிழும் சைவ சாத்திரங்களும் பயிலுதல். பெரியபுராணத்தைக் குறிப்புரையுடன் சிற்றிதழ் களாக வெளியிடத் தொடங்குதல். 1908 நீதிபதி சதாசிவ ஐயர் தொடர்பு 1910 அன்னி பெசண்ட் அம்மையாரைச் சந்தித்தல். (அம்மா என்றே திரு.வி.க. இவரைக் குறிப்பது வழக்கம்) 1910 - 1916 வெலி பள்ளியில் ஆசிரியப் பணி 1912(செப் 13) திருமணம் - மனைவியார்: கமலாம்பிகை 1914 சுப்பராய காமத், எ.சீனிவாச ஐயங்கார் தொடர்பு 1915 பாலசுப்பிரமணிய பக்தஜன சபைத் தோற்றம். 1916 - 1917 வெலி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர். 1917 தொ.ச. தலைவர் பி.பி.வாடியா தொடர்பு: இத் தொடர்பே திரு.வி.க. தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபடக் காரணமாயிற்று. 1917 கல்லூரிப் பணியை விடுத்தல், திசம்பர் 7-ல் தேசபக்தன் ஆசிரியர் ஆதல். 1918 (ஏப்ரல் 27) இந்தியாவிலேயே முதல் தொழிலாளர் சங்கம் (சென்னைத் தொழிலாளர் சங்கம்) தோன்று தல். திரு.வி.க. துணைத் தலைவர். செப்டெம்பர் முதல் நாள் மனைவியார் கமலாம்பிகை மறைவு 1919 (மார்ச் 18) காந்தியடிகளை முதன்முதலாகச் சந்தித்தல். (அக் 11) பெரியார் ஈ.வே.ரா.வின் நட்பைப் பெறுதல். (டிச. 17) லோகமான்ய பாலகங்காதர திலகரை வ.உ. சிதம்பர னாருடன் சென்று காணுதல். 1920 மத்தியத் தொழிலாளர் சங்கத் தோற்றம். சூலை இறுதியில் தேசபக்தன் நிலையத்தை விடுத்து நீங்குதல். அக்டோபர் 22இல் நவசக்தி தொடங் குதல். 1921 சூலை மாதம் ஆளுநர் வில்லிங்டன் அழைத்துக் கடுமையாக எச்சரித்தல். நாடு கடத்தப்படுவார் என்ற நிலையில் சர்.தியாகராய செட்டியார் தலையிட்டால் அத்தண்டனை நிறுத்தப்படுதல். 1925 (நவம்பர் 21, 22) தமிழ்நாடு காங்கிர வரலாற்றில் தனிச்சிறப்புடைய மாநாடு காஞ்சீபுரத்தில். தலைவர் திரு.வி.க. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானத்தை ஏற்காமல் தள்ளியதால் பெரியார் ஈ.வே.ரா. மாநாட்டிலிருந்து வெளியேறுதல். இதன் விளைவாகத் தமிழக அரசியலில் பெருமாறுதலுக் கான திருப்பம் ஏற்பட்டது. 1939 காங்கிர ஆட்சியிலும் பக்கிங்ஹாம் ஆலை வேலைநிறுத்தம். 1943 அறுபதாண்டு நிறைவு மணிவிழா 1944 திரு.வி.க.வாழ்க்கைக் குறிப்புக்கள் வெளிவருதல் 1947 சூன் 9 முதல் திசம்பர் 7 வரை காங்கிர ஆட்சி யில் திரு.வி.க.வுக்கு வீட்டுச் சிறைவாசம். 1949-50 ஒரு கண் பார்வை முதலில் மறைந்து, பின் இரு கண்களுமே பார்வை இழத்தல். 1953 செப்டெம்பர் 17-ல் மறைவு. நன்றி : சாகித்திய அக்காதெமி காலவரிசைப்படி பொருள்வழிப் பிரிக்கப்பட்ட திரு.வி.க.வின் தமிழ்க்கொடை I. வாழ்க்கை வரலாறுகள் 1. நா. கதிரைவேற் பிள்ளை சரித்திரம் 1908 2. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் 1921 3. பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை 1927 4. நாயன்மார் வரலாறு 1937 5. முடியா? காதலா? சீர்திருத்தமா? 1938 6. உள்ளொளி 1942 7. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 1 1944 8. திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள் 2 II. உரை நூல்கள் 9. பெரிய புராணம் - குறிப்புரையும் வசனமும் 1907-10 10. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் 1923 11. காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை 1932 12. திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) 1939 13. திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941 III. அரசியல் நூல்கள் 14. தேசபக்தாமிர்தம் 1919 15. என் கடன் பணிசெய்து கிடப்பதே 1921 16. தமிழ்நாட்டுச் செல்வம் 1924 17. இன்பவாழ்வு 1925 18. தமிழ்த்தென்றல் அல்லது தலைமைப்பொழிவு 1928 19. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து 1930 20. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத்திரட்டு 1 1935 21. தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு 2 1935 22. இந்தியாவும் விடுதலையும் 1940 23. தமிழ்க்கலை 1953 IV. சமய நூல்கள் 24. சைவ சமய சாரம் 1921 25. நாயன்மார் திறம் 1922 26. தமிழ்நாடும் நம்மாழ்வாரும் 1923 27. சைவத்தின் சமரசம் 1925 28. முருகன் அல்லது அழகு 1925 29. கடவுட் காட்சியும் தாயுமானாரும் 1928 30. இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் 1929 31. தமிழ்நூல்களில் பௌத்தம் 1929 32. சைவத் திறவு 1929 33. நினைப்பவர் மனம் 1930 34. இமயமலை அல்லது தியானம் 1931 35. சன்மார்க்க போதமும் திறவும் 1933 36. சமரச தீபம் 1934 37. சித்த மார்க்கம் 1935 38. ஆலமும் அமுதமும் 1944 39. பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி 1949 V. பாடல்கள் 40. உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் 1931 41. முருகன் அருள் வேட்டல் 1932 42. திருமால் அருள் வேட்டல் 1938 43. பொதுமை வேட்டல் 1942 44. கிறிதுவின் அருள் வேட்டல் 1945 45. புதுமை வேட்டல் 1945 46. சிவனருள் வேட்டல் 1947 47. கிறிது மொழிக்குறள் 1948 48. இருளில் ஒளி 1950 49. இருமையும் ஒருமையும் 1950 50. அருகன் அருகே அல்லது விடுதலை வழி 1951 51. பொருளும் அருளும் அல்லது மார்க்ஸியமும் காந்தியமும் 1951 52. சித்தந் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல் 1951 53. முதுமை உளறல் 1951 54. வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல் 1953 ______ 1. ஈண்டுக் குறிக்கப்பெற்ற நூல் பின்னே எழுதப்பட்டது. அதன் பெயர் சன்மார்க்க போதமும் திறவும் என்பது. 1. இன்னஉரு இன்னநிறம் என்றறிவ தேலரிது . . - திருஞானசம்பந்தர் அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது. - காரைக்காலம்மையார் பூதங்க டோறும் நின்றாயெனி னல்லாற் போக்கிலன் வரவில னெனநினைப் புலவோர் கீதங்கள் பாடுத லாடுத லல்லாற் கேட்டறி யோமுனைக் கண்டறி வாரை . . - மாணிக்கவாசகர் 1. அங்கிங் கெனாதபடி யெங்கும் . . . . . . . தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாந் தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த் தழைத்ததெது? மனவாக் கினில் தட்டாமல் நின்றதெது? . . . - தாயுமானார் அண்டமெலாம் பிண்டமெலாம் உயிர்களெலாம் பொருள்கள் ஆனவெலாம் இடங்களெலாம் நீக்கமற நிறைந்தே கொண்டவெலாம் கொண்டவெலாம் கொண்டுகொண்டு மேலும் கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக் கண்டமெலாம் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவாய் கடந்தவெளி யாயதுவும் கடந்ததனி வெளியாம் ஒண்டகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய் ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர். - இராமலிங்க சுவாமிகள் 1. சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க. - திருவாசகம் 2. பெம்மான் ... சும்மா இருசொல் லறஎன் றலுமே அம்மா பொருளொன் றும்அறிந் திலனே - கந்தரநுபூதி 3. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே - திருவாசகம் உரையற்ற தொன்றை உரைசெயும் ஊமர்காள் - திருமந்திரம் 1.* சிவன் உருஅருவம் அல்லன் . . . . - சிவஞான சித்தியார் 1. தினைத்தனையோர் பொறையிலா உயிர்போங் கூட்டைப் பொருளென்று மிகஉன்னி மதியால் இந்த அனைத்துலகும் ஆளலாம் என்று பேசும் ஆங்காரந் தவிர்நெஞ்சே அமரர்க் காக முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க நினைத்தபெருங் கருணையன்நெய்த் தானம் என்று நினையுமா நினைந்தக்கால் உய்ய லாமே. - அப்பர் *1. பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ பத்திநெறி யில்லை வேத பாரா யணப்பனுவல் மூவர்செய் பனுவலது பகரவோ இசையு மில்லை . . . தேவரெலாம் தொழச்சிவந்த செந்தாள் முக்கண் செங்கரும்பே மொழிக்கு மொழி தித்திப் பாக மூவர்சொலுந் தமிழ்கேட்குந் திருச்செ விக்கே மூடனேன் புலம்பியசொல் முற்று மோதான் - தாயுமானார் 1 *ஞானசம்பந்தர் 1. சிதம்பரசுவாமிகள் 1. கடுகு விசுவாசம் காண்இம் மலையைக் கடுகஅப்பாற் போஎன்றாற் போம். பழியில் விசுவாசம் பார்த்திம் மலையை விழுகடல் என்றால் விழும் - கிறிது மொழிக் குறள் 1. மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட்டிருசுடர் லீழினும் அஞ்சல்நெஞ்சே திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்பா திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே - அப்பர் 1. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. - மாணிக்கவாசகர் *1 திருத்தொண்டத் தொகை *1. பெரியபுராணம் *1. மத்தேயு - 6 : 25 - 31. 1. யோவான் - 14 : 6. 1. திருவள்ளுவர். 2. தாயுமானார் 1. சாதிமதம் மரபுமதம் சார்புமதம் சாகச் சமயமதம் வழக்குமதம் சழக்குமதம் சாய வாதமதம் பேதமதம் வட்டிமதம் வீழ மடங்கள்மதம் கோயில்மதம் மாயமதம் மாயச் சூதுமதம் வேடமதம் சூழ்ச்சிமதம் குலையத் தொன்மைஅறம் அன்பழிக்குந் துயர்மதங்கள் தொலைய ஆதிமுடி வில்லாத அருட்சோதி தேவே அகிலமெலாஞ் சன்மார்க்கம் ஆர்த்தெழச்செய் யரசே. - பொதுமைவேட்டல் *1. வேறுபடுஞ் சமயமெல்லாம் புகுந்து பார்க்கின் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா. - தாயுமானார் 1. அத்துவித வத்துவைச் ... ... ... ... ... மதசம்மதம் பெறாச் சாலம்ப ரகித மான சாசுவத புட்கல நிராலம்ப ஆலம்ப சாந்தபத வ்யோம நிலையை ... ஆதியந்தங் காட்டாத ... ... வாதமிடுஞ் சமயநெறிக் கரிய தாகி ... மெய் விடா .. ... மதங்கள் தொறும் நின்ற குருவே ... இமையளவு ... ... சமயநெறி காணாத சாக்ஷிநீ - தாயுமானார் 1. நக்கீரர். 2. âருவள்ளுவர். 3. சேக்கிழார் 4. கம்பர் 5. புறநானூறு 6. திருக்குறள். 1. கூற்ற மில்லையோர் குற்ற மிலாமையால் - கம்பராமாயணம் : நாட்டுப்படலம் 2. வண்மை யில்லையோர் வறுமை யின்மையால் - கம்பர் : நாடு 3. தெள்வார் ... ... ... கொள்வா ரிலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ. 4. கல்லாது ... ... ... எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வம் எய்த லாலே இல்லாரு மில்லை உடையார்களு மில்லை மாதோ - கம்பர் : நகரம் எறிதரும் அரியின் சும்மை எடுத்துவா னிட்ட போர்கள் குறிகளும் போற்றிக் கொள்வார் கொன்றநெற் குவைகள் செய்வார் வறியவற் குதவி மிக்க விருந்துண மனையி னுய்ப்பான் நெறிகளும் புதையப் பண்டி நிரைத்துமண் ணெளிய ஊர்வார் முந்துமுக் கனியி னானா முதிரையின் முழுத்த நெய்யில் செந்தயிர்க் கண்டங் கண்டம் இடைஇடை செறிந்த சோற்றில் தந்தமி லிருந்து தாமும் விருந்தொடுந் தமரி னோடும் அந்தணர் அமிர்த உண்டி அயில்வுறும் அமலை யெங்கும். தாலி ஐம்படை தழுவு மார்பிடை மாலை வாயமு தொழுகு மக்களைப் பாலி னூட்டுவார் செங்கைப் பங்கயம் வானி லாவுறக் குவிவ மானுமே. குயிலினம் வதுவை செய்யக் கொம்பிடைக் குனிக்கு மஞ்ஞை.. பொருந்திய மகளி ரோடு வதுவையிற் பொருந்து வாரும் . . . பந்தினை இளையவர் பயிலிடம் மயிலூர் கந்தனை யனையவர் கலைதெரி கழகம் சந்தன வனமல சண்பக வனமாம் நந்தன வனமல நறைவிரி புறவம். பெருந்த டங்கண் பிறைநுத லார்க்கெலாம் பொருந்து செல்வமுங் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க் கீதலும் வைகலும் விருந்து மன்றி விளைவன யாவையே. கோதைகள் சொரிவன குளிரிள நறவம் பாதைகள் சொரிவன பருமணி கனகம் ஊதைகள் சொரிவன வுறையுறு மமுதம் காதைகள் சொரிவன செவிநுகர் கவிகள். கூறு பாடலும் குழலின் பாடலும் வேறு வேறு நின்றிசைக்கும் வீதிவாய் . . . கலஞ்சு ரக்கு நிதியங் கணக்கிலா நிலஞ்சு ரக்கு நிறைவள நன்மணி பிலஞ்சு ரக்கும் பெறுதற் கரியதங் குலஞ்சு ரக்கும் ஒழுக்கங் குடிக்கெலாம். - கம்பர் : நாடு 1. வேதநூற் பிராயம் நூறு . . . . - தொண்டரடிப்பொடி ஆழ்வார். 2. கரிய மேகம தோ ... ... ... கசட னாய்வய தாயொரு நூறுசெல் வதனின் மேலென தாவியை நீயிரு கமல மீதினி லேவர வேயருள் புரிவாயே. . . - அருணகிரிநாதர் 1. திருமந்திரம் 2. கந்தரலங்காரம் 3. தாயுமானார் 1. மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட் டூன்றி யிருக்க வுடலழி யாதே. நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ் சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு ஞாலம் அறிய நரைதிரை மாறிடும் பாலனு மாவர் பராநந்தி ஆணையே. எளிய வாதுசெய் வாரெங்கள் ஈசனை ஒளியை யுன்னி யுருகு மனத்தராய்த் தெளிய வோதிச் சிவாய நமவென்னுங் குளிகை யிட்டுப்பொன் னாக்குவன் கூட்டையே. - திருமூலர் 1. தத்துவம் அனைத்துந் தனித்தனி கடந்தே தத்துவா தீதமே னிலையில் சித்தியல் முழுதுந் தெரிந்தனம் அவைமேற் சிவநிலை தெரிந்திடச் சென்றேம் ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும் ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்று அத்தகை யுணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும் அருட்பெருஞ் சோதியென் னரசே. - அருட்பா. * 1. பதினொராந் திருமுறை பாடிய பட்டினத்தார் திருப்பாடற்றிரட்டுப் பாடியவர் அல்லர் என்று சிலர் கருதுகின்றனர். இரண்டையும் பாடியவர் ஒருவரே என்று கருதுவோரும் உளர். 1. மூப்புற் றுச்செவி ... ... வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள் வாய்க்குச் சித்திர முருகோனே ... - அருணகிரிநாதர் 1. உரைப்பா ருரையுகந்து . . . .. ... கரைக்கான் முதலையைப் பிள்ளைதரச்சொல்லு காலனையே. - சுந்தரர் 1. எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி யிரங்கவும்நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே. எல்லாரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறென் றறியேன் பராபரமே. - தாயுமானார் 1. ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே. - திருமூலர் 2. போற்றித் திருஅகவல். 3. சிவஞான சித்தியார் 1 அந்திவட் டத். . . . . . . . . . . . புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ. . . - அப்பர் 1. விந்துநா தங்கடந்து சுத்த வெறுவெளியில் அந்தமிலாப் பாழடங்கத் தேக்கியபின் - முந்திவரும் அவ்வறிவுக் கப்பாலுஞ் சென்றகண்ட முள்ளடக்கிச் செவ்வறிவே யாகித் திகைப்பொழிந்திட் - டெவ்வறிவுந் தானாய வீடருளித் தன்னிற் பிரிவில்லா ஊனாகி எவ்வுயிர்க்கும் உட்புகுந்து - மேனியிலார் அஞ்சவத்தை யுங்கடந் தாயபெரும் பேரொளிக்கே. . . பாரும் திசையும் படரொளியா லேநிறைந்தான் தூருந் தலையுமிலாத் தோன்றலான் - வேராகி வித்தாகி வித்தின் விளைவாகி மேவுதனுச் சத்தாதி பூதங்கள் தானாகிச் - சுத்த வெறுவெளியாய்ப் பாழாய் வெறும்பாழுக் கப்பால் உறுபொருளாய் நின்ற ஒருவன். . . - நெஞ்சுவிடுதூது