திரு.வி.க. தமிழ்க்கொடை 20 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 20 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 19+301=320 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை சைவ சமய சாரம் காரைக்குடி சிவனடியார் திருக்கூட்டத்தார் வெளியிட்ட குறுஞ்சுவடி சைவ சமய சாரம் என்பது. சைவசமயம் தோற்ற முற்ற காலம் அளந்து கூற முடியாப் பழமையது. பழைய மறையாம் இருக்கு வேதத்திலும் பழந்தமிழ் நூல்களிலும் இடம் பெற்ற பெற்றியது. அதன் தொன்மை ஒன்று கொண்டு மட்டும் போற்ற வேண்டுவதில்லை. அதன் சமரசநிலை அருமைமிக்கது. அன்பும் அருளும் கெழுமிய சமயம் அது. சைவ சமயத்துள்ள சமரசமே தாயுமானவர் முதலானவர்களை ஈர்த்தது. நால்வர் உரையும் சமரச உரையேயாம் என்பவற்றைப் பற்பல பாடல்களைக் காட்டி நிறுவுகிறார் திரு.வி.க. சைவ சமயத்தை அன்பு சமயம் என வழங்கலாம் என்னும் திரு.வி.க. அன்பே சிவம் என்பதைத் திருமூலர் மணிவாசகர் வாக்குகளைக் காட்டி உறுதி செய்கிறார்.ïiw, அன்பு வடிவாக இருத்தலால் அடியாரும் சாதி பேதம் பாராட்டாது எவ்வுயிர் மாட்டும் அன்புடையராகத் திகழவேண்டும் என்பதன் அடையாளமே திருநீறு உருத்திராக்கக் கோலம் முதலியவையாம் என்கிறார். அன்பராவார் அனைவரும் சிவனடியாரே என்கிறார். வழிபாடு இருவகைய. அவை ஆலய வழிபாடு, உயிர் வழிபாடு என்பவை. அவை படமாடுங்கோயில், நடமாடுங் கோயில் என்பன. இவற்றுள் நடமாடும் கோயில் வழிபாடே சிறப்புடையது என்பதைச் சான்று காட்டி நிறுவுகிறார். ஆடு கோழி முதலிய உயிர்கள் தாங்கியுள்ள உடல்களும் சிவாலயங்களே. இச் சிவாலயங்களுக்கு ஊறு செய்வார் சிவனடியார் ஆகார் என்பதை வள்ளலார் அருள் மொழியால் நிறுவுகிறார். சைவ அன்பர்கள் நெறிக்கு மாறுபட்டு நிற்பாரைத் திருத்தி நலப்படுத்துவதை நெறியாகக் கொள்ள வேண்டும் என்பதைச் சேரவாரும் செகத்தீரே என்னும் தாயுமானவர் மொழியால் அழைக்கிறார். அறச்சாலைகள் அருள் நிலையங்கள் அமைக்கவும், சைவ நெறிபரப்பவும் வேண்டிக் கட்டுரையை நிறைவிக்கிறார். இக்குறிப்புகள் திரு.வி.க. பொழிவுகள், எழுத்துகள் ஆயவற்றில் பொதுமை ஊடகமாய்த் திகழ்வனே யாம். நாயன்மார் திறம் கட்டுரையாய் இருந்து நூலாக்கம் பெற்ற சுவடி இது. தொண்டினிடத்து ஆர்வமுடையார்க்கு இந்நூல் பெருந் துணை செய்யும் என்பது வீடும் வேண்டா விறலின் விளங்கி, தொண்டுக்காகவே பிறவி வேண்டும் என வேட்கை வரைந்த திரு.வி.க. முகவுரை வரைவு இது. ஆண்டவன் அடிக்கு அன்பு செலுத்தித் தலைமைப் பேறு எய்தினவர் நாயன்மார் என நாயன்மார்க்கு விளக்கம் தருகிறார். இடம் மரபு சாதி தொண்டு தொழில் கோலம் ஆயவற்றில் நாயன்மார் வேறு பட்டவர் ஆயினும் அன்பால் ஒன்றுபட்டவர் என்று அடியார் திறத்தைத் திரட்டாக்கி வைக்கிறார் திரு.வி.க. பல்வேறு சாதியராகிய நாயன்மார் அடியார் என்னும் ஒருமையில் கோயிலில் இடங்கொண்டு தெய்வநிலை எய்தியமையைச் சுட்டும் திரு.வி.க. இந்நாயன்மார்களைப் போல இந்நாள் வாழும் பாரம மக்களும் தேசசேவையில் ஒன்றிய அன்பு கொள்வராயின், உலக இன்பம் எளிதில் கிடைக்கும் எனத் தம் காலச் சூழலுக்குப் பயனாக்க அறை கூவுகிறார். சுந்தரமூர்த்தியார் வாழ்வு சாதிப்புன்மை நொறுக்கியதை எடுத்துக்காட்டால் விளக்குகிறார். பக்கம் பக்கம் எழுதும் செய்தியைப் பத்தியளவில் முடிக்கிறார். நாவுக்கரசர் அப்பூதியார், அப்பர் சம்பந்தர், சேரமான் வண்ணார், நமிநந்தி திருநீலநக்கர் ஆயோரை எடுத்துக் காட்டிச் சாதிமை ஒழிப்புத் தொண்டை நயனுறச் செய்கிறார். கோத்திரமும் குலமும் கொண்டென் செய்வீர் என்றும் அப்பரடிகள் வாக்கால் தாமும் கேட்கிறார் திரு.வி.க. உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலிய வற்றிற்கு ஊற்றாயுள்ள ஓர் அறநெறி பற்றி ஒழுகியவர் நாயன்மார் என்பதைத் திருநீலகண்டர், இயற்பகையார், மெய்ப் பொருளார், திருநாவுக்கரசர், சுந்தரர், செருத்துணையார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார், கண்ணப்பர், எறிபத்தர், ஏனாதியார் வரலாறுகளின் வாயிலாகச் சுருக்கியும் பெருக்கியும் சுட்டியும் காட்டி நிறுவுகிறார். நிறைவில் திருத் தொண்டத் தொகையை வைக்கிறார். இறைவன் ஒருவன்; பிறப்பு தொழில் கோலம் பால் என்பவை இறையைச் சார்தற்குத் தடையில்லை; அன்பு நெறியே இறை நெறி; அதற்கு அடியார் வரலாறு வழிகாட்டி என்பதை இச்சுவடியில் நிறுவுகிறார் திரு.வி.க. விடுதலை வேள்விக்கு நாயன்மார் வரலாறு துணைப் படுதல், பாஞ்சாலி சபதம் கிளர்ந்த பார்வையொடு ஒப்பதாம். நாயன்மார் திறம் முதற்பதிப்பு 1922 செப்டம்பர் 4. தமிழ் நாடும் நம்மாழ்வாழும் தமிழ்நாடென்பது ஒரு தனிநாடு. அந்நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்கு ஓழுக்கங்கள் முதலியன உண்டு. பிறநிலங்கள் நாடாதற்கு முன்னரே. தமிழ் நாடு தன்முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கியம் இலக்கணம் மருத்துவம் சோதிடம் வேதம் முதலிய வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ் நாட்டுக்கு வேதம் - மறை சிறப்பாக இருந்தது என்பது கருதற்பாற்று. இக்கருத்து திரு. வி. க. வுக்கு 1923 இல் ஏற்பட்டுள்ளது. இன்றும் இவற்றைத் தமிழர் உணர்ந்துளரோ? இன்றேனும் உணர்ந்தால் பலப்பல சிக்கல்கள் தாமே அவிழ்ந்து போய்விடும் என்பதை எண்ணிப் பார்ப்பவர் அறிந்து கொள்ள முடியும். எண்ணுவதும், கண்டு கொள்வதும் அவற்றின்படி நிற்பதும் தானே நெட்ட நெடுங்காலமாகத் தமிழர் அறியாப் பொருளாக உள. தோற்றுவாய் இறுவாய் என்பவைக்கு இடையே பதின்தலைப்புகளில் நம்மாழ்வார் கமழ்கிறார். அனைத்தும் ஆழ்வார் வாக்கையே அடிப்படையாகக் கொண்டவை. ஆழ்வாய் என்ற சொல்லுக்கு ஆண்டவன் அருள் வெள்ளத்தில் ஆழந்து கிடப்பவர் என்பது பொருள் என்கிறார். நம் ஆழ்வார் என்னும் பெயரருமை காணும் திரு. வி. க. என் ஆழ்வார் என்று வணங்கி என்னளவில் இன்புறாது உலகவரை யும் உளப்படுத்தி அவரோடு நம் ஆழ்வார் என்று வணங்கு கிறேன் என்கிறார். மாறும் தன்மைய உலகில் மாறா ஒன்று இருத்தல் வேண்டும்: அது கடவுள் என்பது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து இருக்கிறது. அவ்வித்து எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும். மாறுதல் உடையதாயின் அதற்கொரு வித்து வேண்டியிருக்கும். ஆகவே எவ்வித மாறுதலும் இல்லா வித்து இறை. அதனை மெய்யுணர்வால் உணர்ந்தவர் நம்மாழ்வார். எப்பொருட்டும், வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற கார் முகில் என்கிறார். எல்லாவற்றுக்கும் வித்தாயுள்ள ஒன்று எல்லாவற்றிலும் இருத்தல் வேண்டும். அவ்வித்தின் உண்மையை உணர, தம் உயிரைப் போல் மற்ற உயிர்களைக் கருதும் சகோதர நேயம் தானே பிறக்கும். எவ்வுயிரியிலும் இறைமையைக் காண்பவர் அகம் புறம் என்னும் வேற்றுமை உணர்வு கெடப் பெற்ற மெய்யறிவாளர். அந்நிலை எய்தியவர் நம்மாழ்வார். எங்கும் கடவுள் எனக் கண்ட அவர், மண், புனல், தீ, காற்று, வெளி, திங்கள், ஞாயிறு, உயிர் என்னும் எண்வகை வடிவுகளில் கண்டு பிறர் வழிபாட்டுக்கு வழிகாட்டினார். மண் புனல் முதலியவை இயற்கையின் கூறுகள். இயற்கை உடல்; இறை உயிர். இரண்டன் தொடர்பு நம் உடலுக்கும் உயிர்க்குமுள்ள தொடர்பு. இயற்கையைப் பாடி இறைமையைப் பாடும் பாடல்கள் இயற்கை இறைமணம் கமழ்வன. இயற்கையில் உள்ள பெண்மையும் ஆண்மையும் இறைமையுள்ளும் இருத்தலைக் கண்டவர் ஆழ்வார். ஆதலால் இறையை உருவங்கள் தத்துவ நுட்பம் உடையவை. கதைகளின் உள்ளுறை என்ன? பாரதம், பாவிசும், குருச்சேத்திரம் - கிளர்ச்சி பொருந்திய மனம். நூற்றுவர் - தீய எண்ணங்கள். ஐவர் - நல்ல எண்ணங்கள்; மனச் சான்றொலி - கண்ணபிரான் கீதை உபதேசம். கண்ணபிரான் லூதிப் பச்சை மரத்தடியில் பசுக்களும் பெண்களும் சூழ நிற்கும் திருக்கோலம். பச்சைமரம் - இயற்கை; கண்ணபிரான் - இறை. குழலோசை - இசையொலி. பசுக்கள் - சாந்தம்; பெண்மக்கள் - அமைதி நிலை. அவதாரங்களின் கருத்து என்ன? மீன் - நீரில் வாழ்வது: நிலத்தில் நகர்தலும் செய்யாது. ஆமை - சிறுகால் கொண்டு ஊர்ந்து செல்வது. பன்றி - நன்றாக நடக்க வல்லது. நரசிம்மம் - விலங்கினமும் மனித உருவும் கலந்தது. வாமனன் - முழு மனிதம் விளங்கா நிலை. பரசுராமன் - முழுமனிதன்; சாந்தமில்லான். இராமன் - அழகன்; சாந்தன்; ஒவ்வொருபோது பூர்வஞானம் உடையவன். கண்ணன் - மனித உடலும் தெய்வு நிலையும் எப்போதும் பூர்வஞானமும் உடையவள். ஒவ்வோர் அவதாரமும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலை. இது தார்வின் கண்ட உள்ளது சிறத்தல் (பரிணாமம்). நம்மாழ்வார், மும்மூர்த்திகளுக்கு மேம்பட்ட பரம் பொருளைத் திருமால் என்னும் பெயராலே வழிபட்டவர். வழிபாடு மனிதனை விடாது. அது இயல்பாக நிகழ்ந்து வரும். தற்பயன் கருதாமையே வழிபாடு. வழிபாடு இருவகை: அக வழிபாடு, புற வழிபாடு என்பவை. ஆழ்வார் பாடல்கள் சமரச ஞானம் கொண்டவை. ஆழ்வார் நாட்டைத் தமிழ்ப் பாட்டால் ஓம்பினார். இவற்றின் விளக்கமும் சான்றுமாக இலங்குவது தமிழ்நாடும் நம்மாழ்வாரும். ஆழ்வார் பாடல்களில் எவ்வளவு ஆழங்கால் பட்டவர் திரு. வி. க. என்பதன் சான்றாக விளங்கும் நூல் இது. அத்தனை சான்றுகள் உள. சைவத்தின் சமரசம் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையில் நாற்பத்தோராம் ஆண்டுவிழாத் தலைமையுரையாகத் திரு.வி.க. பொழிந்த பொழிவின் எழுத்துரு சைவத்தின் சமரசம் என்னும் இச்சுவடி யாகும். சைவம், பல சமயங்களாகவும் முடிவில் தனித்த பெருஞ் சமயமாகவும் நிற்றலால், அதன்கண் சமரசமுடைமை அறிஞர்க்குப் புலனாகாமல் போகாது. எனத் தம் அணிந்துரை யில் திரு.வி. க. கூறுகிறார். உயிர்களின் இயற்கை, இன்ப விருப்பு துன்ப வெறுப்பு துன்பக்கடல் கடந்து இன்பக்கரையேற வாய்த்த செவ்விய பிராவாய் சமயம் என்கிறார். சமயப் பெயரால் போரிடுவோர் சமயஞானிகள் அல்லர். ஆன்ம நேயத்தை வலியுறுத்துவதே சமயம். ஒரு ஞாயிறு படம் பிடிப்போர் படப்பிடிப்பில் பல்வேறு தோற்றமுடையதாகத் தோன்றினும் அஞ்ஞாயிறு ஒன்றே என்பதுபோல் இறையும் எச்சமயத்தார்க்கும் ஒன்றேயாம். எச்சமயம், எல்லாச் சமயங்களையும் சகோதர சமயங்களாகத் தழுவுகிறதோ, அது சமரச நோக்குடைய சன்மார்க்க சமயம் என்று போற்றப்படும். மக்களுள் மிகத் தொன்மை வாய்ந்த தமிழ் மக்களால் காணப்பட்டது சைவ சித்தாந்தம். தமிழர் இயற்கையில் விளங்கும் முருகை முழுமுதற் பொருளாகக் கொண்டவர். இயற்கைச் சமரச அன்பில் சமரசம் அன்றிச் சண்டைக்கு இடமேது? தமிழர், தம் மெய்யுணர்வால் கட்டுடையது உயிர் என்றும், கட்டு அற்றது முருகு என்றும் கண்டமையால் அதனைக் கந்தழி என்றனர். இறையை அடைதற்கு இல்லற நெறியே இறைநெறி எனத் தெளிந்தனர். முருகு, கந்தழி என்று போற்றப்பட்ட இறை, பின்னே சிவம் எனப் பெற்றது. நால்வரும், திருமூலரும், சேக்கிழாரும், பிற்குரவர்களும் பிறரும் சைவம் வளர்த்தனர். சாதி பேதம் முதலிய பேதங்களைக் கடந்து சிவமாய் நின்ற பெரியோரைப் பற்றி அப்பேதங்களை உடையவர் ஆயும் ஆய்வு பொருளுடைய தாகாது. பன்மையில் ஒருமை காணலே அறிவுடைமையாம். மூல நூல்களுக்கு வாய்த்த உரைமயக்கிலே ஈடுதல் வேண்டா. தன்னந் தனியராயத் தமிழ்மக்கள் கண்ட சமயம், முதல்முதல் சமணம், பௌத்தம், முதலிய சமயங்களோடு கூட்டுறவு கொண்டு, பின் வடமொழிக் கலைகளோடு நட்புப் பெற்று, ஏகான்ம வாதம் முதலிய சமயங்களோடு உருவடைந்து உலகில் அருள்நெறியாகி வளர்ந்து வருகிறது. சைவ சித்தாந்தத்தில் வேற்றுமைக்கு இடமில்லை. உருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு, அருவவழிபாடு, இவைகடந்த பெருநிலை என வழிபாட்டு முறை நான்கடையது. சைவம், உலகு, உயிர், இறை என்னும் முப்பொருள் உண்மையது சைவம். யான் இயற்கை அன்னையை மாலை என்னேன். பிறப்பு இயல்புடைய உயிர் களைச் சைவ சமயம் தத்துவங்கடந்த தனிப்பரம் பொருளாகக் கொள்வது இல்லை. உண்மையைக் குறிக்கொண்டு ஆய்வோர்க்கு வேதாந்த சித்தாந்த வேற்றுமை தோன்றவே தோன்றாது. அஞ்ஞானி உலகை நோக்கும் பொழுது உலகும், மெய்ஞ்ஞானி உலகைப் பார்க்கும் பொழுது சிவமும் தோன்றும். சிவம் தோன்று வோர்க்கு உலகம் தோன்றாது. பிறர்க்குழைக்கம் பெருந்தகைமை, கைம்மாறு கருதாத தொண்டு, வேற்றுமை பாராட்டாமை வாழ்வதே சைவ வாழ்வு. அதுவே நடமாடும் கோயில் வழிபாடு. இறைவன் அருளாளன்; பிழையை நினைந்து கசிந்து உருகுவோரை மன்னிப்பவன். சிவநெறி பரப்புவதும், சமரச உணர்வைப் பெருக்குவதும், மடங்களும் கோயில்களும் சீலத்துடன் திகழப்பாடுவதும், அவற்றுக்கென அயராது தொண்டாற்றும் தொண்டர் கூட்டம் உண்டாக வேண்டும், இவற்றை மெய்யுறப் பரப்புவார் அவையம் வேண்டும். இவை நம் முன்னணி வேலைகள். இவற்றை வித்துக் கூறும் நூல் சைவத்தின் சமரசம். முருகன் அல்லது அழகு இயற்கை உடல்; அதன் உயிர் முருகு என்னும் அடிப்படை யில் கிளர்ந்த ஆய்வு நூல் முருகன் அல்லது அழகு. பழந்தமிழர் முருகை மணமும் இளமையும் கடவுட்டன்மை யும் அழகுமுடைய செம்பொருளாகக் கொண்டனர் எனத் தமக்குத் தோற்றமுற்றதை நூன்முகத்தில் குறிக்கிறார். முருகன் எனக்கட்டுரையாக வெளிப்பட்டதும் பின்னே விரிவாக்கம் பெற்று நூலுருக் கொண்டதையும் நூற்பெயர் விரிவுற்றதையும் நூன்முகத்தில் காண்க. நூல்வடிவில் முருகன் வெளிப்பட்ட ஆண்டு 1925. நூல் பன்னிரு தலைப்புகளில் இயல்கின்றது. பன்னிருகை என்னும் உள்ளீடு ஆகலாம். முருகின் பொருளையும் முருகன் பொதுமையையும் விளக்குவது முதற்கட்டுரை. மணமும் இளமையும் கடவுட்டன்மையும் அழகும் எவருடைமை? இவை எல்லார்க்கும் உரிய உடைமை அல்லவோ? . . என்பதில் பொருளும் பொதுமையும் பொலிதல் காண்க. அழகு அழிவற்றது; ஆதலால் அழியா அழகு ஆகும்; அழகு கையால் செய்யப்படும் செயற்கை அல்லதாய் இயற்கையுடையதாய் இருப்பதால், கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பு ஆகும். mH»‹nkš Muh¡ fhjYila cyf« ‘mHF v¥go ïU¡»wJ? என வினாவின் விழிக்கிறது. புலன்களுக்குப் பொருளாகாத அது இல்பொருளோ எனில், உணர்வில் உறுதல், வினையாற்றல், துன்பம் நீக்கி இன்பமாக்கல் முதலியவற்றை உடைய அது உள்பொருளேயாம். அழகு இயற்கை வாயிலாக உணரக் கிடக்கிறது. அழகு புறத்தே நிற்பது போல அகத்தும் நிற்கிறது. தோற்றம் ஒடுக்கம் அற்றது அழகு; இயற்கை அழகில் தோயும் உள்ளம் இன்ப உலகமாகின்றது; அழகில் தோயா வாழ்வு வாழ்வு அன்று; அழகில் தோய்ந்த வாழ்வு மனமாசற்றுப் பொலிகின்றது; முருகன் அழகன்; சொக்கனும் அழகன் என்பவற்றின் விளக்கமே அழகு என்னும் கட்டுரை. முருகு பழந்தமிழ்ச் சொல். அதன் பழமை, தமிழ்க்கடவுள் என்பதாலும், குறிஞ்சி நிலக் கடவுள் என்பதாலும் விளங்கும். பழமை மிக்க தொல்காப்பியர்க்கு முற்படவே முருகு வழிபாடு ஏற்பட்டு விட்டது. இயற்கைக்கும் முருகுக்கும் தொடர்புபோல், முருகுக்கும் உயிர்கட்கும் தொடர்புண்டு. இத் தொடர்பை உணர வேண்டும். உணரின் உயிரும் முருகாகி விடலாம். இயற்கைமணம், மாறா இளமை, கடவுட்டன்மை, அழியா அழகு எய்தலாம். யோகம் யோகம் எனப் புலன்களை அடக்கி அடக்கி அவற்றைக் கெடுத்தல் மடமை. புலன்கள் வாழ்வுக் கெனப் படைக்கப் பட்டவை. ஆற்றுப்படுத்தும் புலவர்கள். அவர்களை அடக்குவதும் ஒடுக்குவதும் இயற்கைக்கு மாறானவை. புலன்களை அவற்றின் வழியே போகவிடாமல் நெறிப்படுத்தலே முறைமை. இயற்கை எழிலைத் துய்க்க எழுந்தவை ஓவியம், இசை முதலாம் கலைகள். இறையுறை கோயில்கள், இக்கலைவிளக்கக் கூடங்கள். இறையை நம்மவர் ஏழிசையாய் இசைப் பயனாய்க் கண்டனர்! அவ்வழியே இயற்கை வழி! இயற்கையில் படிந்த உள்ளம் முனைப்பு உறாது; அழுக்காறு அவா முதலாம் கேடுகளுக்கு இரையாகாது. முனைப்பும் பிறமாசும் அற்ற நிலை முருகு உறைநிலை. முருகெனும் அழகு நல்லொழுக்க நங்கையர் மாட்டு உறைவது. அல்லொழுக்க முடையார் மாட்டு உறையாதது. அருணகிரியார் பழித்தது அல்லொழுக்கத்தவரையே அன்றி முருகனையும் நங்கையரையும் அன்று என்று கொள்ளல் முறை. உறுதி இரட்டை உணர்வை அழித்து ஒருமைப்படுத்துவது. அவ்வொருமையால் அடைய விரும்பும் எல்லாமும் அடையலாம்; உறுதியில்லானுக்கு இறையும் துணையுறாது. அவ்வுறுதிக்குக் கொள்ளவேண்டுவ இரண்டு. ஒன்று, நோன்பு; மற்றொன்று வழிபாடு. இடைக்காலத்தில் தமிழர்கள் முருகனைச் சிவமாக் கொண்டு போற்றும் நெறிபற்றினார்கள். தமிழ் முருகனைத் தமிழாகக் கண்டு தமிழால் போற்றுதலே தகவாம். பின்னாளில் சமய வாணர் தங்களுக்குள் போரிட்டுத் தூற்றி எழுதிய ஏட்டுச் சுவடிகள் பல. அவற்றுள் சில ஒழுக்க நூலெனப் பிடிவாதத்தால் கொள்ளப்படுகின்றன. இயற்கை முருகன் பலப்பல கட்டுக்கதைகளுக்கு உரியவன் ஆக்கப்பட்டு நாட்டு சீர்குலையலாயிற்று. குலைவு ஏற்படுத்திய குழப்பக் கதைகளுக்கும் காரணம் கூறுவாரும் எழுந்தனர். பழந்தமிழ்க் கொள்கை பாழ்படலாயிற்று. புராணங்களுக்கு வழிகாட்டி புத்த சாதகக் கதைகள். தமிழ்மக்களை நோக்கி, முருகன் எல்லாப் பொருள் களிலும் நீக்கமற நிறைந்தவன். அவனுக்குப் புதிய கோயில்கள் எழுப்புதல் வேண்டா. இருக்கும் கோயில்கள் போதும். அவன் செந்நெறி வளர்க்கும் கழகம், கல்லூரி, அறநிலையங்கள் முதலிய கோலுங்கள்! நீங்கள் முருகாகத் திகழ்வீர்கள் என நூலை நிறைக்கிறார். இப்பொருட் சுருக்க விரிவு என விளங்குவது, முருகன் அல்லது அழகு. திரு.வி.க. நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதன் பயன்பாட்டால் அவர்தம் நூல்கள், கட்டுரை கள் ஆகிய அனைத்துப் படைப்புகளும் திரு.வி.க. தமிழ்க் கொடை என்னும் வரிசையில் வெளிப்படுகின்றன. திரு.வி.க. நூல்களையும் கட்டுரைகளையும் ஒருமொத்த மாகப் பெறும்பேறு இதுகாறும் தமிழ்மண்ணுக்கு வாய்க்க வில்லை. அவர்வாழ்ந்த நாளிலேயே சிலநூல்கள் கிட்டும்; சிலநூல்கள் கிட்டா! தேசபக்தன் நவசக்தி யில் வந்த கட்டுரை களுள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிலவற்றையன்றி முற்றாகப் பெறும் பேறோ அறவே வாய்த்திலது. திரு.வி.க. வழங்கிய வாழ்த்து, அணிந்துரை முதலியனவும் தொகுத்தளிக்கப் பெறவில்லை. இவற்றையெல்லாம் தனிப்பெருஞ் சீரிய பதிப்பில் ஒருமொத்தமாக வழங்கும் பெருமையைக் கொள்பவர் தமிழ்மண் பதிப்பக நிறுவனர் கோ.இளவழகனார் ஆவர். பாவாணர் நூல்கள், ந.சி.க.நூல்கள், அப்பாத்துரையார் நூல்கள், இராகவனார் நூல்கள், அகராதிப் பதிப்புகள் எனத் தொகுதி தொகுதிகளாக வெளியிட்டு, அவ்வெளியீட்டுத் துறையின் வழியே தமிழ்மொழி, தமிழின மீட்சிப் பணிக்குத் தம்மை முழுவதாக ஒப்படைத்துப் பணியாற்றும் இளவழகனார் திரு.வி.க. தமிழ்க் கொடைத் தொகுதிகளை வெளியிடுதல் தமிழகம் பெற்ற பெரும் பேறேயாம். வாழிய அவர்தம் தொண்டு! வாழியர் அவர்தம் தொண்டுக்குத் துணையாவார்! அன்புடன் இரா. இளங்குமரன் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix நூல் சைவ சமய சாரம் 3 நாயன்மார் திறம் 13 முகவுரை 14 நாயன்மார் திறம் 15 தோற்றுவாய் 15 தமிழ் நாடும் நம்மாழ்வாரும் 39 முன்னுரை 40 1. தோற்றுவாய் 43 2. கடவுள் - வித்து 46 3. எங்கும் 49 4. அட்ட மூர்த்தம் 56 5. இயற்கை 61 6. உருவம் 74 7. அவதாரம் 86 8. மூவர் முதல் 92 9. வழிபாடு 96 10. சமரசம் 102 11. பாட்டு 109 12. இறுவாய் 114 சைவத்தின் சமரசம் 117 அணிந்துரை 118 கடவுள் திருத்தொண்டு 120 சைவத்தின் சமரசம் 121 இறுவாய் 180 முருகன் அல்லது அழகு 185 நூன்முகம் 187 குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் 190 1. முருகன் பொருளும் பொதுமையும் 191 2. அழகின் இயலும் கூறும் 193 3. முருகின் தொன்மை 204 4. இயற்கைவழி அழகைக் காண்டல் 211 5. பாட்டும் ஓவியமும் இசையும் பிறவும் 221 6. முருகைக் காண முனைப்பையறுத்தல் 236 7. அருணகிரியாரும் பெண்ணுலகும் 243 8. உறுதியும் நோன்பும் 260 9. பொதுநெறியும் தமிழும் 269 10. பின்னைத் திரிபுகள் 276 11. இயற்கையும் முருகனும் 291 12. வேண்டுகோள் 296 கச்சியப்பர் 301 சைவ சமய சாரம் (1921) சைவ சமய சாரம் திருச்சிற்றம்பலம் மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனு நீரைப் பாய்ச்சித் தம்மையு நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே. - அப்பர் திருச்சிற்றம்பலம் காலம் உலகத்திலே பல சமயங்கள் நிலவுகின்றன. அவைகளுள் பெரும்பாலன கால தத்துவத்துக்குக் கட்டுப்பட்டுக் கிடக்கின்றன. கிறிதுவ சமயம், பௌத்த சமயம் முதலிய சமயங்கள் தோன்றிய காலங்களைச் சரித்திரங்கள் கிளந்து கூறுகின்றன. ஆனால் சைவசமயமோ காலங் கடந்து நிற்கிறது. சைவசமயம் இன்ன காலத்தில் இன்னவரால் உண்டாக்கப் பட்டதென்று எவராலும் எந்நூலாலும் அளந்து கூற முடியாது. பழமையிற் சிறந்த இருக்குவேதத்திலும், தமிழ் நாட்டுச் சங்க நூல்களிலுஞ் சிவமென்னுஞ் செம்பொருள் காணப்படுகிறது. முன்னைப் பழமைக்குப் பழமையாயும், பின்னைப் புதுமைக்குப் புதுமை யாயும் இலங்குஞ் சிவமென்னுஞ் செம்பொருளின் தொடர் புடைய சைவ சமயத்தின் கால வரை அளவிடற் பாலதன்று. சமரச நிலை சைவசமயம் தொன்மையிற் சிறந்து விளங்குதலைக் கொண்டு, அதனைப் போற்றவேண்டுமென்று வலியுறுத்துவது அறிவுடைமையாகாது. மேன்மக்கள் தொன்மை கருதி ஒன்றைக் கொள்ளவும் மாட்டார்கள்; புதுமை கருதி ஒன்றைத் தள்ளவும் மாட்டார்கள். அவர்கள் ஒன்றை அறிவால் அளந்து ஆராய்ந்து அதன் உண்மை காணவே முயல்வார்கள். ஆராய்ச்சிக்குக் கருவியாக நிற்பது தொன்மையதாயினுமாக; புதுமையதாயினு மாக; வேண்டற்பாலது ஒன்றே, அது பொருளுண்மை. இதனைச் சைவ சமய சந்தானாசாரியருள் ஒருவராகிய உமாபதி சிவா சாரிய சுவாமிகள் தமது சிவப்பிரகாசமென்னும் அரிய நூலில், தொன்மையவா மெனுமெவையு நன்றாகா வின்று தோன்றியநூ லெனுமெவையுந் தீதாகா துணிந்த நன்மையினார் நலங்கொண்மணி பொதியுமதன் களங்க நவையாகா வெனவுண்மை நயந்திடுவர் நடுவாந் தன்மையினார் பழமையழ காராய்ந்து தரிப்பர் தவறுகலும் பொருளின்கட் கார்னாய்த் தறிதல் இன்பமயினாற் பலர்புகழி லேத்துவரே திலருற் றிகழ்ந்தனரே லிகழ்கதிடுவர் தமக்கென வொன்றிலரே என்று ஓதியிருத்தல் காண்க. தொன்மை ஒன்றே கருதிச் சைவ சமயத்தைப் போற்று வோர் போற்றுக. தொன்மையோடு பொருளுண்மையும், சமரச மும், அன்பும், ஜீவகாருண்யமும் விளங்கும் ஒரு சமயம் நிலவு மேல், அஃது அறிஞர் உடைமையாகும். தொன்மையின்றிச் சமரசம் முதலியன ஒளிரும் சமயமொன்றுளதாயின், அஃதும் அறிஞர்க்குரியதே. தொன்மையோடு பிறபொருள் பொலிதல் பொன் மலரில் நறுமணங் கமழ்வது போலாம். சைவ சமயத்தில் தொன்மையோடு பொருளுண்மை சமரசநிலை முதலியன காணப்படின், அதைப் போற்றவேண்டுவது அறிஞர் கடமை. எந்தச் சமயம் பிறசமயங்களைப் பொய் என்று தள்ளுகிறதோ அந்தச்சமயம் சிறந்த சமயமாகாது. உலகத்தில் தோன்றியுள்ள சமயங்கள் யாவும் மெய்ப்பொருளாகிய கடவுளொன்றையே போற்றுகின்றன. ஒரு கடவுளைப் போற்றுஞ் சமயங்களுள் பொய்ச் சமயம் மெய்ச் சமயம் என்ற பிரிவு நிகழ்தற்கே யிட மில்லை. சைவசமயம் இச்சமயமாகும், இச்சமயமாகாது என்று பிரித்துரைக்கவில்லை. இவ்வுண்மையைச் சைவசமய சாத்திர மாகிய சிவஞான சித்தியார் நன்கு அறிவுறுத்துகிறது. அச் செய்யுள் வருமாறு:- ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள் ஒன்றோடொன் றொவ்வாம லுளபலவு மிவற்றுள் யாது சமயம் பொருள்நூ லியாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்ல வெனும் பிணக்கதின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நிற்பதுயா தொருசமயம் அதுசமயம் பொருள்நூல் ஆதலினா லிவையெல்லாம் அருமறையா கமத்தே அடங்கியிடும் அவையிரண்டும் அரனடிக்கீ ழடங்கும். சைவசமயத்திற் போந்துள்ள சமரசப்பான்மை கண்டே, எவரும் போற்றுந் தாயுமான சுவாமிகளும் சைவ சமயத்தை இராஜாங்கத்திலமர்ந்த சமயமென்றும், அச்சமயமே சமய மென்றும், அச்சமயத்தில் செகத்தவர் அனைவரும் சேரவேண்டு மென்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். அத்திருப் பாடல்கள் வருமாறு:- விண்ணவரிந் திரன்முதலோர் நார தாதி விளங்குசப்த ருஷிகள்கன வீணைவல் லோர் எண்ணரிய சித்தர்மநு வாதி வேந்தர் இருக்காதி மறைமுனிவ ரெல்லா மிந்தக் கண்ணகன்ஞா லம்மதிக்கத் தானே யுள்ளங் கையினெல்லிக் கனிபோலக் காட்சி யாகத் திண்ணியநல் லறிவாலிச சமயத் தன்றோ செப்பரிய சித்திமுத்தி சேர்ந்தா ரென்றும். செப்பரிய சமயநெறி யெல்லாந் தன்றன் தெய்வமே தெய்வமெனுஞ் செயற்கை யான அப்பரிசா ளருமஃதே பிடித்தா லிப்பால் அடுத்த தந்நூல்களும் விரித்தே யனுமா னாதி ஒப்பவிரித் துரைப்ப ரிங்ஙன் பொய்மெய் யென்ன ஒன்றிலையொன் றெனப்பார்ப்ப தொவ்வா தார்க்கும் இப்பரிசாஞ் சமயமுமாய் அல்ல வாகி யாதுசம யமும்வணங்கு மியல்ப தாகி. இயல்பென்றுந் திரியாம லியம மாதி எண்குணமுங் காட்டியன்பா லின்ப மாகிப் பயனருளப் பொருள்கள்பரி வார மாகிப் பண்புறவுஞ் சௌபான பட்சங் காட்டி மயல றுமந் திரஞ்சிட்சை சோதி டாதி மற்றங்க நூல்வணங்க மௌன மோலி அயர்வறச்சென் னியில்வைத்து ராசாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ. அந்தோவீ ததிசயமிச் சமயம் போலின் றறிஞரெலாம் நடுவறிய அணிமா வாதி வந்தாடித் திரிபவர்க்கும் பேசா மோனம் வைத்திருந்த மாதவர்க்கும் மற்று மற்றும் இந்திராதி போகநலம் பெற்ற பேர்க்கும் இதுவன்றித் தாயகம்வே றில்லை யில்லை சந்தான கற்பகம்போ லருளைக் காட்டத் தக்கநெறி யிந்நெறியே தான்சன் மார்க்கம். சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளி காட்டு மிந்தக் கருத்தை விட்டுப் பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதருந் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேரவாருஞ் செகத்தீரே. எல்லாச் சமயங்கட்குந் தாயகமாயுள்ள சைவ சமயத்தை நிலை நிறுத்த இத்தமிழ் நாட்டிற்றோன்றிய சமயாசாரியாராகிய நால்வரும் சமரச உண்மையையே உலகத்துக்கு அறிவுறுத்தி யுள்ளார். அவர்கள் அருளிச் செய்துள்ள தமிழ்வேதத்தை முறை யாகப் பொருளுணர்ந்து ஓதுவோர்க்குச் சமரச உண்மையே புலனாகும். தமிழ் வேதத்தில் சமரச உரைகள் பலபடக்கிடக் கின்றன. அவைகளுள் சில வருமாறு:- வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதே வனலால் தேவர்மற் றில்லையே. விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயஞ் செய்து எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும் பரிவினாற் பெரியோ ரேத்தும் பெருவேளூர் பற்றி னானை மருவிநான் வாழ்த்தி யுய்யும் வகையது நினைக்கின் றேனே. ஆறொன் றியசம யங்களி னவ்வவர்க் கப்பொருள்கள் வேறொன் றிலாதன விண்ணோர் மதிப்பன மிக்குமவன் மாறொன் றிலாதன மண்ணொடு விண்ணக மாய்ந்திடினும் ஈறொன் றிலாதன வின்னம்ப ரான்ற னிணையடியே. போற்றுந் தகையன பொல்லா முயலகன் கோபப்புன்மை ஆற்றுந் தகையன ஆறு சமயத் தவரவரைத் தேற்றுந் தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந் தகையன வின்னம்ப ரான்ற னிணையடியே. - அப்பர் அன்பு சைவ சமயத்தை அன்பு சமயம் என்றுங்கூறலாம். சமரச சமயத்தில் அன்பே ஒழுகுதல்வேண்டும். சைவசமயம், சமரச சமயம் என்பதற்கு அறிகுறி, அஃது அன்புமயமாகப் பொலிவதே யாகும். சைவம் - சிவசம்பந்தம். சிவம் - அன்பு. சிவசம்பந்தம் - அன்பு சம்பந்தம். அன்பே சிவம் என்பதற்கு ஆன்றோர் உரைகள் வருமாறு:- அன்புஞ் சிவமுமிரண் டென்ப ரறிவிலார் அன்பே சிவமாவ தாரு மறிகிலார் அன்பே சிவமாவ தாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருப் பாரே. - திருமூலர் மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காண வந்தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே. - மாணிக்கவாசகர் சைவம் அன்பை அறிவுறுத்தலால், அச்சமயத்தை அவலம் பித்து ஒழுகுவோர் சாதி பேதம் முதலியன பாராட்டாது எவ்வுயிரிடத்தும் அன்பு செலுத்தல் வேண்டும். எல்லாவுயிர்களி டத்தும் அன்பு செலுத்துபவரே சைவ ரெனப்படுவர். அக் கொள்கையுடையார் இன்னா ரென்பதைப் புலப்படுத்தும் பொருட்டுச் சிவனடியவர்களுக்கு விபூதி ருத்திராக்க தாரணம் ஏற்படுத்தப்பட்டது. விபூதி தூய்மையைக் காட்டுவது. பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள் என்றார் சேக்கிழாரும். உருத்தி ராக்கம் சிவபெருமான் திருவருட் கண்களினின்றும் பிறந்த தாகப் புராணங்கள் கூறுகின்றன. கண்ணுக் கணிகலம் கண் ணோட்டம் என்பது திரிகடுக வாசகம். எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாத கூட்டத்தார் இன்னார் என்பதை விளக்கும் புறச் சின்னங்கள் நீறுங் கண்டிகையுமாம். இது காலை, சில குடியருங் கொலைஞரும் விபூதி ருத்திராட்சந் தரித்து அச்சின்னங்களின் மாண்பைக் கெடுத்துவருகிறார். மடங்களிலும் சிவ சின்னங் களின் மாண்பு இறந்துபட்டது. ஊரை வஞ்சிப்பதன் பொருட்டே சில சகோதரர்கள் சிவவேடம் பூண்கிறார்கள். என்செய்வது! ஈண்டுக் கவனிக்கற்பாலது ஒன்றே. அஃது, அன்பு நெறிக்கு அடையாளமாகவே விபூதி ருத்திராட்ச தாரணம் ஏற்படுத்தப் பட்ட தென்பது. சைவ சமயத்துக்கு அடிப்படை அன்பேயாகும். அவ்வன்பைத் தாங்காது, சிவ சின்னங்களைத் தாங்கி, உயிர் களுக்குத் தீங்கு நினைப்பவர்கள் சைவர்களாக மாட்டார்கள். எவ்வுயிரும் பராபரன் சந்நிதியதாகும் இலங்கும் உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில் என்ற கொள்கையில் தலை சிறந்து விளங்கு மக்கள், எத்தேசத்தவர் களாயினும், எக் குலத்த வர்களாயினும், எச் சமயத்தவர்களாயினும், எவ்வேடத்தவர் களாயினும் - அவரனைவரும் - சைவரேயாவர். சுருங்கக்கூறின் அன்பர் அனைவருஞ் சிவனடியாரே யாவர் என்னலாம். வழிபாடு சைவ சமயத்தில் இருவித வழிபாடுகள் வகுக்கப்பட்டிருக் கின்றன. ஒன்று ஆலய வழிபாடு; மற்றொன்று உயிர்கள் வழி பாடு. ஆலயமும் உயிர்களும் முறையே படமாடுங்கோயில் நட மாடுங் கோயில் எனப்படும். இவ்விரண்டனுள் நடமாடுங் கோயில் வழிபாடே சிறப்புடையது என்று சைவ சமய நூல்கள் கூறுகின்றன. படமாடக் கோயில் பகவற் கொன்றீயின் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடக் கோயில் பகவற் கங்காமே. - திருமந்திரம். எவ்வுயிரும் நீங்கா துறையும் இறைசிவனென்று எவ்வுயிர்க்கும் அன்பா யிரு. - சைவசமயநெறி உயிர்களை வழிபடுங் காலத்துச் சாதிபேதம் முதலியன பாராட்டலாகாதென்று சைவ சமயங் கூறுவதை விரிக்கிற் பெருகும். பெரிய புராணத்துட் போந்துள்ள நாயன்மார் வரலாறுகளால் சைவ சமயம் சாதிபேதம் முதலியவற்றைப் பாராட்டுவதில்லை என்பது நன்கு விளங்கும். சமயாசாரியர் களும் சாதி பேதத்தை மறுத்திருக்கிறார்கள். சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை யல்லலறுத் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. - மாணிக்கவாசகர் சாத்தி ரம்பல பேசும்சழக் கர்காள் கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே. சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவா ரவர்செல்வம் மதிப்போ மல்லோம் மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில் அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே. - அப்பர் உயிர்கள் வழிபாடு என்பதில் மக்கள் முதலிய எல்லா உயிர்கள் வழிபாடு மடங்கும். சைவ சமயிகள் எந்த உயிர்கட்குந் தீங்கு செய்தலாகாது. சிலர் விபூதி ருத்திராட்சந் தரித்துச் சிவாலய வழிபாடு முறையாகச் செய்கின்றனர்; அடியார் பூசை யுஞ் செய்கின்றனர்; அன்னதானங் கொடிகட்டிச் செய்கின்றனர். இந்நற்காரியங்கள் செய்யும் மனிதர் ஆடு கோழி முதலிய பிராணிகளைக்கொன்று அவைகளின் புலாலை உண்பாராயின், அன்னவர் சைவராகார்; சிவனடியாராகார். ஆடு கோழி முத லிய உயிர்கள் தாங்கியுள்ள உடலங்களும் சிவாலயங்களே யாகும். இச்சிவாலயங்களுக்கு ஊறுசெய்பவர்களைச் சைவர் சிவனடியார் என்று எவ்வாறழைப்பது? படிப்பது திருவாசகம் இடிப்பது சிவன் கோயில் என்பது தமிழ்நாட்டுப் பழமொழி களுள் ஒன்று. திருவாசகம் முதலிய சைவ நூல்களை ஓதி உயிர்களின் உடலங்களை அழிக்கும் மாக்களைக் கண்டே இப்பழமொழி எழுந்தது போலும்! சைவ சமயம் ஜீவகாருண்ணிய சமயம். ஆதலால் கொல்லாவிரதங் கொண்டவரே சைவர். மற்ற வர் எவரோ! மருவாணைப் பெண்ணாக்கி ஒருகணத்திற் கண்விழித்து வயங்கு மப்பெண் உருவாணை யுருவாக்கி யிறந்தவரை எழுப்புகின்ற வுருவ னேனுங் கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணுங் கருத்த னேலெங் குருவாணை யெமதுசிவக் கொழுந்தாணை ஞானியெனக் கூறொ ணாதே. - இராமலிங்க சுவாமிகள் விண்ணப்பம் எல்லாச் சமயங்கட்குந் தாயகமாயுள்ள சைவ சமயத்தைக் கடைப்பிடித் தொழுகுவோர் தாம் மாத்திரஞ் சமய நூல்களை ஓதி உணர்ந்து, சிவாலயங்களையும் உயிர்களையும் வழிபட்டு, கொல்லாமை முதலிய விரதங்களை அனுஷ்டிக்கும் அளவோடு நிற்றலாகாது. அவர் மற்றவரையும் தம் வழியில் நிறுத்த முயலல் வேண்டும். பிறர் அறியாமை கண்டு, இரக்கமுற்று, அவர் அறி யாமை ஒழிக்க முயல்வதும் ஜீவகாருண்ணியமே. சமயா சாரியர்கள் முதலிய பெரியோர்கள் தேவார திருவாசக முதலிய நூல்களை ஏன் அருளிச் செய்தார்கள்? மெய் கண்டார் முதலியோர் ஞான நூல்களை எவர் பொருட்டுத் திருவாய் மலர்ந்தருளினார்? பின் வருவோர் உய்யவேண்டுமென்னுங் கருணையாலன்றோ? நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வைய கம் என்றன்றோ திருமூலர் ஓதியிருக்கின்றார்? இவ்வளவு பரந்த கொள்கையைத் தாங்கியுள்ள சைவ சமய நூல்களை எல்லாரும் ஓதியுணரச் சைவசமயிகள் உழைத்தல்வேண்டும். சைவ மடங்களில் ஒரு வகுப்பார்க்கே ஞான நூல்கள் போதிக்கப்பட்டு வருவதைச் சைவ சமயிகள் கவனித்து மடங்களைத் திருத்த முயலல் வேண்டும். தாகமுடையார்க்குத் தண்ணீர் உதவ வேண்டுவது அன்பர் கடமை. அது போல ஞானதாகமுடை யோர் எவராயினும் அவர்க்கு ஞான நூலைப்போதிக்க வேண்டு வது சைவக் குரவர்கள் கடமை. ஞான தாகங் கொண்டு ஓடி வருவோர்க்கு ஞான நூலைப் போதிக்க மறுப்பது அறமாகாது. கொலைஞர்க்கும் இவர்க்கும் வேற்றுமையுண்டோ? சமரசத்தை யும் அன்பையும் ஜீவகாருண்ணியத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ள சைவ சமயக்கொள்கையைப் பரப்பமுயல வேண்டுவது ஒவ்வோர் உண்மைச் சைவர் கடமை என்பதை அறி வுறுத்த வேண்டுவதில்லை. பௌராணிக சைவம் ஒன்று இடை யில் தோன்றி ஞான சமயத்தை இடர்ப்படுத்துகிறது. சைவ சமயம் எல்லாச் சமயங்களுக்குத் தாயகமாயிருப்பதைக் கருதியே தாயுமானார் சேரவாருஞ் செகத்தீரே என்று கூவி உலகத் தையே அழைக்கிறார். அவர் திருவடி போற்றுஞ் சைவ உலகம் அவரைப் போல உலகத்தை நோக்கி ஏன் அழைத்தலாகாது? உலகம் சைவ சமய உண்மை கண்டு அதை அனுஷ்டிக்குமாறு சைவ சமயிகள் சைவ சமய ராஜாங்கத்தை ஒழுங்கு படுத்துவார் களாக. சைவ சமயிகளே! அன்பர்களே!! உங்கள் சமயம் காலங் கடந்தது; சமரசத்தைப் போதிப்பது; அன்பு நெறியை விளக்கு வது; உயிர்கள் வழிபாட்டை அறிவுறுத்துவது; எவருங் கொள் ளுஞ் சமயமாயிருப்பது. கொலையைப் போதிக்குஞ் சமயங்க ளெல்லாம் வளம் பெற்று வளர்கின்றன. கொல்லாமையைப் போதிக்கும் உங்கள் சமயம் என்ன நிலையை அடைந்திருக் கிறது? மெய் கண்ட சாத்திரத்தை வாசிப்போர் எத்தனை பேர்? விபூதி ருத்திராட்சம் தரித்தவருள் எத்துணைப் பேருக்கு அந்நூற் பெயர் தெரியும்? ஜீவகாருண்ணியமன்றோ உங்கள் சமயக் கொள்கை? அருட்குறிகளாகிய சிவ சின்னங்களைத் தரித்துச் சிவனடியார் என்று நடித்துக் கொலை செய்கின்றார் பலர்; புலாலுண்கிறார் பலர். அந்தோ! கொடுமை!! கொடுமை!!! ஆங்காங்கே சிவனடியார் திருக்கூட்டங்களை ஏற்படுத்துங்கள்; பாடசாலை வைத்தியசாலை முதலிய அறச்சாலைகள் அமை யுங்கள்; ஆங்கே ஞானசாத்திர போதனை செய்யுங்கள்; ஜீவ காருண்ணிய நெறியை ஓம்புங்கள்; சைவ சமயக் கொள்கையை - அன்பு நெறியை - ஜீவ காருண்ணியத்தைப் பரப்புங்கள்; அதற்கு வேண்டிய உதவி புரியுங்கள். திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவ ரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாம்அர னாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. - திருச்சிற்றம்பலம். * இம்முறை சைவ சமய சாரத்தைப்பற்றிச் சில குறிப்புகள் மிகச் சுருக்கமாக எழுதப்பட்டன. இனிச் சைவ சமயத்தைப் பற்றிய பொரு ளுண்மை, தத்துவநிலை, வேதாந்தத்தோடு இயைபுடைமை முதலியன எழுதப்படும்.  நாயன்மார் திறம் முகவுரை நாயன்மார் என்னும் ஒரு சிறு கட்டுரை 1921- ஆம் வருட சுதேசமித்திரன் அநுபந்தத்துக்கென என்னால் எழுதப்பட்டது. அக்கட்டுரை முதன் முறை நூல் வடிவாகக் காரைச் சிவனடியார் திருக்கூட்டத்தார் விரும்பியவாறு 1922-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அப்பதிப்பில் பெரு மாறுதல் ஒன்றுஞ் செய்யப்படவில்லை. இரண்டாம் பதிப்பில் சிற்சில மாறுதல்கள் செய்யப் பட்டன; நூலுக்கு நாயன்மார் திறம் என்னுந் தலைப்புச் சூட்டப்பட்டது. நூற்கண் சாதிப் பகைமை யின்மை, அன்பு சமய மாண்பு, தொண்டின் சிறப்பு, நாயன்மார் கொண்ட உண்மை உறுதி அஞ்சாமை ஒழுக்கம் வீரம் முதலியன, மக்கட்கு இன்றியமை யாத வேறு பல செம்பொருள்கள் சுருங்க ஓதப்பட்டுள்ளன. திருத்தொண்டத் தொகையும் இதனோடு சேர்க்கப்பட்டிருக் கிறது. தொண்டினிடத்து ஆர்வமுடையார்க்கு இந்நூல் பெருந்துணை செய்யும். இராயப்பேட்டை சென்னை திருவாரூர் - வி. கலியாணசுந்தரன். நாயன்மார் திறம் பாய வாருயிர் முழுவதும் பசுபதி யடிமை ஆய வெவ்வகைப் பொருள்களு மவனுடைப் பொருள்கள் மேய விவ்வண மலதுவே றின்றென வுணர்ந்த தூய மெய்த்தவத் தடியவர் துணையடி தொழுவாம். - கச்சியப்பர் தோற்றுவாய் தமிழ் நாட்டில் வாழ்ந்த கடவுள் அடியவர் இருவிதப் பெயரால் அழைக்கப்படுகின்றனர். ஒன்று நாயன்மார் என்பது; மற்றொன்று ஆழ்வார் என்பது. முன்னையது சிவனடியவர்க்கும், பின்னையது திருமாலடியவர்க்கும் வழங்கப்படுகின்றன. ஆண்டவன் அடிக்கு அன்பு செலுத்தித் தலைமைப் பேறெய்தினவர் நாயன்மார் எனப்படுவர். நாயன் -தலைவன். நாயன்மார் - தலைவர். தலைவனைப் போற்றித் தலைவராயவர் நாயன்மாரென்க. நாயன்மார் என்னுஞ் சொல்லிற்கு வேறு பல பொருள் கூறுவோரும் உளர். பொருள் பலபடினும் கருத்து ஒன்றாக முடியும். அறுபத்து மூவரும் அப்பாலவரும் நாயன்மார் என்னும் பெயர் அறுபத்து மூவர் என்னுந் திருக்கூட்டத்தவர்க்கு வழங்கப்பட்டு வருவது தமிழ்நாட்ட வர்க்குத் தெரியும். அறுபத்து மூவர் என்னுந் தொகைக்குறிப்பைக் கண்டு, அடியவர் அறுபத்து மூவரே என்று கோடலாகாது. அறுபத்து மூவரல்லாத ஏனைய பக்தரும் அடியவரே யாவர். இவ்வுண்மை, பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன், அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் எனவரூஉந் திருத்தொண்டத் தொகைப் பத்தாஞ் செய்யுளால் நனி விளங்கும். இறைவன் ஒருவனே. உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே என்று அப்பரும், ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று திருமூலரும் அருளியிருத்தல் காண்க. ஒரே இறைவனுக்குப் பல விடங்களில் பலதிறப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. தென் னாட்டில் இறைவனுக்கு வழங்கப்படும் பெயர் சிவம் என்பது. இதனை, தென்னாடுடைய சிவனே போற்றி - எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி எனவரூஉம் மாணிக்கவாசகனார் திரு வாக்கால் உணர்க. எந்நாட்டவர்க்கும் இறைவனாயுள்ள ஒருவன் திருவடிக்கு அன்பு செய்வோர் எந்நாட்டிலும் இருப்பர். எந் நாட்டன்பரும் அடியவரேயாவர். பின்வருந் தென்னாட்டு மக்கள், தங்கள் நாட்டில் தோன்றிய நாயன்மாரே கடவுள் அடியவரென்றும், மற்ற நாட்டில் அடியவர் தோன்ற மாட்டா ரென்றுங் கொள்ளாதிருக்குமாறு திருத்தொண்டத் தொகை பாடிய பெருமான், அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன் என்று அருளினார். தென்னாட்டுக்கு அப்பாலுள்ள நாடுகளிலும் அடியவருளர் என்பதை அத்திருவாக்கு உணர்த்து கிறது. அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன் என்னும் நன்மொழிக்கு மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக் கப்பால் முதல்வனார் அடிசார்ந்த முறைமையோரும் என்று சேக்கிழார் விரிவுரை கூறியிருத்தல் ஈண்டு உன்னற்பாலது. நூல்வழி அறுபான் மும்மை நாயன்மாரைப் பற்றிக் கூறும் முதல் நூல் திருத்தொண்டத் தொகை; வழி நூல் நம்பியாண்டார் நம்பி திருவந்தாதி; சார்புநூல் பெரிய புராணம். பின்வந்த நூல்களுஞ் சில உள. அந்நூல்களை நிரலே கிளந்தாய்ந்து எழுதப்புகின், இஃதொரு பெரு நூலாக விரியும். ஆதலால் ஒரு சிறு கட்டுரை அளவாக இப்பொருளை என் சிற்றறிவிற் கெட்டிய வாறு - என்னால் இயன்ற வரை - சுருங்க எழுதப் புகுகிறேன். அன்பில் ஒருமைப்பாடு நாயன்மார் அறுபத்து மூவரும் தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில், பல்வேறு மரபுகளில், பல்வேறு சாதிகளில் தோன்றினவர். அவர்தந் தொண்டுகளும் பலதிறப் பட்டவை. அவர்தந் தொழில்களுங் கோலங்களும் பலதிறப்பட்டவை. நாயன்மார் இடத்தானும், மரபானும், சாதியானும், தொண் டானும், தொழிலானும், கோலத்தானும் வேறு பட்டவரா யினும், கடவுளிடத்தில் அன்பு செலுத்துவதில் அவரெல்லாரும், ஒன்றுபட்டவரே யாவர். இவ்வாறே நமது தேசத்தில் வாழும் மக்கள் பிறப்பாலும் சிறப்பாலும் பிறவாற்றாலும் வேறுபடினும், பொதுஜன சேவையில் ஒன்றுபட்டவர்களா யிருத்தல் வேண்டும். கடவுள் சேவையில் நாயன்மார் வேறுபடாது ஒன்றுபட்டமையான், அவர் வீடுபே றெய்தினர். அவர் இன்னும் ஆலயங்களில் பூசிக்கப் படுகின்றனர். அறுபத்துமூவர் நினைவு தோன்றுங்காலத்து, அவர்தந் தொழில் சாதி முதலியன மனத்தில் தோன்றுகின்றனவோ? இல்லையே. அவரெல்லாருஞ் சிவனடியார் என்னும் ஓரெண்ணமே உள்ளத்தில் எழுகிறது. சாதிப்புன்மை அறுபத்துமூவர் அனைவர்க்கும் ஒரேவித பூசை, விழா, வணக்கம் முதலியன நடைபெறுகின்றன. கண்ணப்பரை வேடரென யாவராயினுங் கழிக்கின்றனரோ? திருக்குறிப்புத் தொண்டரை வண்ணாரென எவராவது ஒதுக்குகின்றனரோ? திருநாளைப் போவாரைப் பஞ்சமரென யாராவது தள்ளுகின்றனரோ? இவரனைவரையும் இன்னுங்கோயில்களில் பிராமணரல்லரோ பூசிக்கின்றனர்? இந் நாயன்மாரைப்போல இந்நாள் வாழும் பாரதமக்களும் தேச சேவையில் ஒன்றிய அன்பு கொள்வார் களாயின், உலக இன்பம் விரைவில் எளிதில் கிடைக்கும். அறுபத்து மூவருள் வேதியரிருந்தனர்; வேளாளரிருந் தனர்; சாலியர் இருந்தனர்; சான்றார் இருந்தனர்; பஞ்சமர் இருந்தனர்; பரதவர் இருந்தனர்; வண்ணார் இருந்தனர்; வேடர் இருந்தனர்; வேறுபல சாதியாருமிருந்தனர். இப்பெரியவர்கள் தாங்கள் பிறந்த சாதியில் உயர்வு தாழ்வு கற்பித்துக்கொண்டு தாங்கள் செய்த சேவையில் ஒருவரோ டொருவர் மலைந்து பூசல் விளைத்தார்களோ? எல்லோரும் ஆன்மநேய ஒருமைப் பாட்டில் கட்டுப்பட்டுக் கிடந்தனர். அவர்தம் வழி வழி வந்த தமிழ் மக்கள் இப்பொழுது சாதிப் பகைமையில் தலைசிறந்து விளங்குகிறார்கள். என்னே காலம்! என்னே கொடுமை!! சுந்தரர் திருத்தொண்டத் தொகை பாடிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆதிசைவ பிராமண குலத்தில் பிறந்தார்; நரசிங்க முனையர் என்னுங் குறுநில மன்னர் வீட்டில் வளர்ந்தவர்; பாவை என்னும் உருத்திர கணிகையையும், சங்கிலி என்னும் வேளாளப் பெண்ணை யும் மணந்தார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் வாழ்வில் சாதிப்புன்மை இடம் பெற்றதோ? அப்புன்மை நொறுங்குண்டது என்றே சொல்லலாம். திருநாவுக்கரசரும் அப்பூதியடிகளும் திருநாவுக்கரசர் வேளாளகுலத்தில் பிறந்தவர். இவரைக் குருவாகவும் கடவுளாகவும் பொன்னாகவும் பொருளாகவும் அப்பூதியடிகள் போற்றினார். அப்பூதியடிகள் பிராமண குலத் தில் தோன்றியவர். அப்பூதியடிகள், திருநாவுக்கரசு சுவாமிகள் பால் அன்புகொண்டு, அவரை வரவேற்றுப் போற்றிய முறை களையும், அவரோடமர்ந்து உண்ட நேயத்தையும் அவரது வரலாற்றிற் காண்க. அப்பரும் சம்பந்தரும் வயதில் முதிர்ந்த வேளாளராகிய அப்பர் சுவாமிகள், குழந்தைப் பருவமுடைய பிராமணராகிய திருஞானசம்பந்த சுவாமிகளைக் கண்டவுடன் பணிந்ததும், இவர் அவரை என் அப்பரே(தந்தையரே) என்று கூவி விழுந்ததும், அப்பர், சம்பந்தர் சிவிகையைத் தாங்கியதும், அதையறிந்ததும் சம்பந்தர் அப்பர் திருவடியில் விழுந்து வணங்கியதும் இருவரும் க்ஷேத்திர யாத்திரை செய்து பலதிறக் குலங்களிற்றோன்றிய நாயன்மாரின் மடங்களிலும் வீடுகளிலும் உண்டதும் தமிழ் நாட்டில் நிகழ்ந்தன வேயாம். திருநாவுக்கரசர் - சம்பந்தர் காலத்தில் அடியவரிடைச் சாதிப்புன்மை ஆக்கம் பெறவேயில்லை ஆவுரித்துத் தின்றுழனும் புலையரேனும் - கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே என்பது அப்பர் திருவாக்கு. நலமிலராக நலமதுண்டாக நாடவர் நாடறிகின்ற - குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்பணி சூலச்சிறை பரவும் -கலைமலி காத்தன் என்பது சம்பந்தர் திருவாக்கு. சேரமானும் வண்ணானும் சேரமான் பெருமாள் நாயனார் சேரநாட்டு மன்னர். அவர் ஒருநாள் யானைசேனை புடைசூழ நகர்வலம் வந்தபோது, அவரெதிரே ஒரு வண்ணான் வெளுத்த வடிவினனாகப் போந்தான். மழை நீரால் அவன் தலைமீதிருந்த உவர்மண் கரைந்து ஒழுகி அவன் உடலை வெளுக்கச் செய்தது. அவ்வெண்ணிறம் திருநீறு பூசிய வேடம் போல் சேரர்பெருமானுக்குப் புலனாயிற்று. ஆனதும் சேரர் பெருமான் யானைவிட்டிழிந்து வண்ணான் காலில் விழுந்தார். அவன் அஞ்சி, அடி வண்ணான் என்று அலறினான். மன்னர் அடிச்சேரன் என்று விழுந்து விழுந்து அவனை வணங்கினார். மன்னர் பிறப்பெங்கே? வண்ணான் பிறப்பெங்கே? மன்னர் சிறப்பெங்கே? வண்ணான் சிறுமை எங்கே? எல்லாம் அன்புக்குமுன் ஓடின. நமிநந்தி - திருநீலநக்கர் சாதியால் தீட்டு உண்டு என்னுங் கருத்துக்கொண்டிருந்த நமிநந்தியடிகளுக்குக் கடவுள், எல்லா மனிதருஞ் சிவகணங்களே என்ற உண்மையை அறிவுறுத்தியதையும், அந்தணச் செல்வ ராகிய திருநீலநக்கர், தம்மில்லம் போந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்குத் தம் வீட்டின் நடுவண், வேதிகையின் பாங்கர், இடந் தந்து உபசரித்ததையும், வேறு பல நாயன்மார் சாதி பேதங் கருதாது, எல்லாரிடத்துஞ் சமரச உணர்வுகொண்டு, அன்ன மிட்டு வழிபட்ட வரலாற்றையும் பெரியபுராணத்திற் பரக்கக் காண்க. சாதி பாராட்டாமை நாயன்மார் காலத்தில் சாதிபேதம் இருக்கவில்லை என்று சொல்லுதல் முடியாது. அவர்கள் காலத்தில் சாதி பேதம் இருந்தது. ஆனால் சாதிபேதம் பாராட்டப்படவில்லை. சாதி பேதங் கூடாது என்று உபதேசிக்கும் தற்கால நாகரிக தேவதை தாண்டவம் புரியும் இந்த வேளையில், சாதி நிந்தை, சாதிப் பகைமை, சாதிப்பூசல், சாதிக் கூட்டம், சாதிப் பற்று முதலிய கொடுமைகளே நடம் புரிகின்றன. நாயன்மார் காலத்தில் தற்கால நாகரிகம் பரவி யிருக்கவில்லை. ஆனால் அக்காலத்தில் சாதி பேதத்தால் நிந்தையாதல், பகைமையாதல், பிறவாதல் மூண்டு கனன்றெழவில்லை. அக்காலம் நாகரிகக் காலமோ? இக்காலம் நாகரிகக் காலமோ? உண்மையை அறிஞர்கள் ஆராய்வார் களாக. அந்தணர் பெருமானாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத் தொண்டத் தொகையில் எல்லாச் சாதியாரையும் அடியார்க்கும் அடியேன் என்று வழுத்தி யிருக்கிறார். திருநாவுக்கரசு சுவாமிகள், சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங்குல முங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளு மாற்பேறரே என்று திருவாய்மலர்ந்திருக்கிறார்கள். வேறு பல நாயன் மாரும் சாதிபேதத்தை மறுத்தோதியிருக்கிறார். நாயன்மார் காலத்தில் சாதி வேற்றுமை யிருந்தும், அதைக் கருதாது, அவர் அன்பின் வழி நின்று ஒழுகியதுபோல, இக்காலத்தும் அவர்தம் வழித் தோன்றிய தமிழ்மக்கள் சாதியில் கருத்தைச் செலுத்தாது, அன்புநெறிபற்றித் தொண்டு செய்ய முயல்வார்களாக. அன்பு நெறி இனி நாயன்மார் சமய நிலையைச் சிறிது ஆராய்வோம். நாயன்மார் அனைவரும் சைவசமயிகள் என்று சிலர் கூறிவிடுவர். நாயன்மார் எத்தகைப் பொருள் கொண்ட சைவ சமயத்தைப் பற்றி ஒழுகினார் என்பது ஆராயத்தக்கது. நாயன்மார் கடவுளைச் சிவமென்னும் நாமத்தால் வழிபட்டு வந்தார். அவர் சிவமென்னுஞ் செம்பொருளை அன்பாகக் கொண்டார்; கண்டார். இதை, ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை யன்பே என்னுந் திருவாசகமும், அன்புஞ் சிவமு மிரண்டென்பர் அறிவிலார் அன்பு சிவமாவ தாரு மறிகிலார் அன்பு சிவமாவ தாரு மறிந்தபின் அன்பே சிவமா யமர்ந்திருப் பாரே என்னுந் திருமந்திரமும் வலியுறுத்தும். அன்பு சமயம் அன்பாகிய சிவத்தை வழிபடுஞ் சமயநெறிபற்றி ஒழுகினவர் நம் நாயன்மார் என்று தெரிகிறது. சைவம் - சிவசம்பந்தம்; சிவம் -அன்பு; சைவசமயம் - அன்பு சமயம். அன்பு சமயமாகிய சைவசமயமே நாயன்மார் கைக்கொண்டது. நாயன்மார் கடைப் பிடித்த சைவம் சாதிச் சைவமன்று; மடச் சைவமன்று; வேடச் சைவமன்று. சிவத்தின் நிலை நாயன்மார் அன்பாஞ் சிவத்தைத் தாய்தந்தை, மனைவி, மக்கள், நண்பராகப் போற்றினார்; கோயிலாக வணங்கினார்; உயிர்களாகத் தொழுதார்; உலகமாக வழிபட்டார். இக் கருத் தடங்கிய தமிழ்வேத மொழிகள் சில வருமாறு:- ஏழிசையா யிசைப்பயனா யின்னமுதா யென்னுடைய தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக் குடனாகி மாழையொண்கண் பரவையைத்தந் தாண்டானை மட்டிலா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னாரூ ரிறைவனையே அப்பனீ அம்மைநீ ஐயனுநீ அன்புடைய மாமனு மாமியுநீ ஒப்புடைய மாதரு மொண்பொருளுநீ ஒருகுலமுஞ் சுற்றமுமோ ரூருநீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையாயென் னெஞ்சந் துறப்பிப்பாய்நீ இப்பொன்னீ இம்மணிநீ இம்முத்துநீ இறைவனீ ஏறூர்ந்த செலவனீயே இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் நாயி றாகி ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. நெறிக்குரிய முறைகள் நாயன்மார் பற்றியது அன்புநெறி என்னும் ஒரு நெறியா யிருப்பினும், அந்நெறியில் பல துறைபற்றி அன்னார் வீடுபேறெய் தினர். சரியைத் தொண்டு செய்தார் சிலர்; கிரியைத் தொண்டு செய்தார் சிலர்; யோகிகளாக வாழ்ந்தார் சிலர்; ஞானிகளாக வாழ்ந்தார் சிலர். சிலர் பிரமசாரியா யிருந்தார்; சிலர் இல்லறங் கொண்டார்; சிலர் துறவறங் கொண்டார். சிவவேடந்தரித்தார் சிலருளர்; தரியாதார் சிலருளர். வன்றொண்டர் சிலர்; மென் றொண்டர் சிலர். மலரால் அர்ச்சித்தாருமுளர்; கல்லால் அர்ச்சித்தாருமுளர். இத்தொண்டு, ஒழுக்கம், அர்ச்சனை முதலிய முறைகள் பலபட்டிருப்பினும், இவைகட்கெல்லாம் அடிப்படை அன்பு என்பது ஈண்டுக் கருதற்பாலது. மறத் தொண்டுகள் எந்நெறி நின்றும் எவ்வேடங் கொண்டும் ஆண்டவனை வழுத்தலாம். சுந்தரர் ஆண்டவனைப் பெண்பொருட்டுத் தூதுவ னாகக் கொண்டார். இயற்பகையார் தம் மனைவியாரை ஒரு சிவனடியார்க்குத் தானஞ் செய்தார். கண்ணப்பர் கடவுளுக்குப் புலாலுணவை ஊட்டினார். (இதில் ஓர் உண்மை உண்டு. சங்கராச்சாரியர் முதலியோர் இதை ஆண்டிருக்கிறார். எனது ஆராய்ச்சிக் குறிப்புரை கொண்ட பெரிய புராணப் பதிப்பில் கண்ணப்பர் புராணம் பார்க்க.) சண்டேசுரர் சிவபூசையின் பொருட்டுத் தம் தந்தையார் காலை வெட்டினார். சிறுத் தொண்டர் பிள்ளையைக் கொன்றார். கோட்புலியார் சுற்றத் தாரைக் கொலைசெய்தார். இச்செயல்களுஞ் சிவத் தொண் டாகவே பாவிக்கப்பட்டன. காரணம் அன்பேயாகும். அரனடிக் கன்பர் செய்யும் பாவமும் அறமதாகும் என்றார் பின்வந்தாரும். எச்செயல் கொண்டும், எத்தொண்டு செய்தும் நிட்காமிய கருமத்தை வளர்க்கலாம். அன்பு நெறியின் அறிகுறிகள் நாயன்மார் வரலாற்றை ஊன்றி ஆராயுமிடத்து, அவர் தம் வரலாற்றினின்றும் சமய ஒழுக்கத்தின் அறிகுறிகள் புலனாகும். அவ்வறிகுறிகள் பல. அவை உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியன. உண்மையுள்ள இடத்தில் எல்லா நல்லியல்புகளும் அரும்பும். எல்லாவற்றிற்கும் அடிப்படை உண்மை. எல்லா அறங்கட்குந் தாயகம் உண்மை என்று அற நூல்கள் முழங்குகின்றன. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்றார் திருவள்ளுவரும். உண்மை முதலியன அறுபான் மும்மை நாயன்மார் சரிதங்களில் போந்துள்ள உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியன என்றும் அறநெறியை விரும்பும் மக்கட்கு வேண்டற்பாலனவாம். பண்டைக் காலத்தில் இவைகள் மக்களின் உயிரணியாயிருந்தன. இப்பொழுது உடலணிகள் மிக்கு உயிரணிகள் அழிந்தன. அதனால் நாடு துன்பக் கடலில் வீழ்ந்து கிடக்கிறது. நாட்டைத் துன்பக் கடலினின்றும் இன்பக் கரையில் ஏற்றுவிக்கும் நாவாய்கள் உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியனவாம். இவைகளை வலியுறுத்தும் நாயன்மார் வரலாற்றை ஓதுவதால் நாட்டுக்கும் உயிருக்கும் இன்பந் தேடுவதாகும். ஏறக்குறைய எல்லா நாயன்மாரும் உண்மை, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியவற்றிற்கு ஊற்றாயுள்ள ஓர் அறநெறிபற்றி ஒழுகினவரே யாவர். ஈண்டுச் சில குறிப்புகளை எடுத்துக் காட்டுகிறேன். எடுத்துக்காட்டுகள் திருநீலகண்ட நாயனார் என்பவர் சிதம்பரத்திலிருந்தவர். அவர் குயவர் குலத்தில் பிறந்தவர். அப்பெரியார் அடியவர் களுக்குத் திருவோடு வனைந்து கொடுக்குந் திருத்தொண்டு செய்துவந்தவர். அவர் சிற்றின்பத்துறையில் எளியராய்ப் பரத்தைபால் அணைந்து நண்ணினார் எனக் கருதி, அவர்தம் மனைவியார், தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம் என்று கூறினார். அதுகேட்ட நாயனார், நீ எம்மை என்று பன்மை மொழியால் கூறினமையால், உன்னையும் உன்னினமாகிய வேறு பெண்களையும் மனத்திலும் இனித் தீண்டுவதில்லை என்று உறுதிசெய்து கொண்டார். தாம் செய்து கொண்ட உறுதிவழியே நாயனார் ஒழுகினார். ஒரே இல்லத்தில் உறையும் மனைவியை மனத்திலும் தீண்டாது வாழ்வது அரிதோ எளிதோ என்பதை அன்பர்கள் சிந்தித்தல் வேண்டும். இத்தகை மனவுறுதி யுடைய மக்களல்லவோ பாரதமாதா வயிற்றில் உதித்தல்வேண்டும்? காவிரிப்பூம் பட்டினத்தில் இயற்பகையார் என்பவர் ஒருவர் இருந்தனர். அவரது விரதம் எவர் எதைக் கேட்பினும் இல்லை என்னாது வழங்குவது. அவருடைய மனோ நிலையைக் கடவுள் சோதிக்க வேண்டி, ஓரடியவர் வேடந்தாங்கி, அவர்தம் வீடு சேர்ந்து, நாம் ஒன்றுநாடி நும் இல்லம் போந்தோம் என்றார். நாயனார், அஃதென்பால் உள தாயின் கொடுப்பேன் என்றார். சிவனடியார், நும் மனைவி வேண்டும் என்று கேட்டார். நாயனார் மனங் கோணாது தம் இல்லக்கிழத்தியாரை வழங்கினார். 1இச்செயல் எவரே செய்யவல்லார்! இது செயற் கருஞ் செய்கையன்றோ? தாம் ஏற்ற விரதத்துக்கு எவ்வழியிலுங் கேடு நேராவண்ணம் காத்துக் கொண்ட உண்மை நிலையையும், உறுதி பிறழாமையையும், எவர்க்கும் அஞ்சாமையையும் என்னென்று வருணிப்பது? இயற்பகைபோல விரதங் காக்க வல்ல புதல்வர்களல்லவோ பாரத மாதாவின் வயிற்றில் தோன்றல்வேண்டும்? திருக்கோவலூரில் ஓர் உண்மையாளரிருந்தார். அவர் மெய்ப்பொருள் நாயனார் என்பவர். அவர் திருக்கோவலூரை ஆண்ட மன்னருள் ஒருவர். மெய்ப்பொருள் நாயனார் ஆட்சியில் நகர முழுதும் உண்மை கடைப்பிடித் தொழுகும் அறமணமே கமழ்ந்து கொண்டிருந்தது. அவர் ஆட்சியில் பொறாமை கொண்ட முத்தநாதன் என்பவன் பன்முறை மெய்ப்பொருள் நாயனாரோடு எதிர்த்துத் தோல்வியுற்றான். முடிவில் முத்த நாதன், சிவனடியார் வேடந்தாங்கி மெய்ப்பொருளை வஞ்சனை யால் கொல்ல வேண்டும் என்று எண்ணி, உடல் முழுவதும் திருநீறு பூசித், தலையில் சடை புனைந்து, உடைவாள் மறைக்கப் பெற்றிருந்த ஒரு புத்தகக் கவளியேந்தி, மைபொதி விளக்குப் போல மனத்தினுட் கறுப்புக்கொண்டு, பொய்வேடந் தாங்கி நாயனார் அரண்மனை நுழைந்தான். திருடன், எல்லாப் படிகளையுங் கடந்து, கடைசிப் படி வாயில்காவலனாகிய தத்தன் என்பான் தன்னைத் தடுத்தும், சிவனடியார் என்னும் உரிமை கொண்டு, மன்னர் துயில் அறைக்குச் சென்றான். அரசர் அவனைக் கண்டதும் எழுந்து வணங்கி இருக்கச் செய்தார். பகைவன், மெய்ப்பொருளே! சிவபிரான் அருளிய ஓர் ஆகமத்தை உனக்கு உபதேசிக்க இங்கு வந்தேன். உன் மனைவி இங்கே யிருத்தலாகாது. எனக்கோர் உயர்பீடம் அமைப்பாயாக. நீ கீழேயிருந்து யான் சொல்வதைக் கேட்டல் வேண்டும் என்றான். உண்மை கடைப்பிடித் தொழுகும் நாயனார், பாவி சொற்படி மனைவியை வெளியே செல்லுமாறு கட்டளை யிட்டுப், பீடமமைத்து, அதிலே வஞ்சகனை யிருக்கச்செய்து, தாங் கீழேயிருந்து உபதேசத்தைச் செவிமடுக்கப் பேராவல் கொண்டு அவனை வணங்கினார். அப்பொழுது, இரக்கமிலா அரக்கன் புத்தக மெடுப்பதுபோலப், பையிலிருந்து உடைவாளை எடுத்து மெய்ப்பொருளைக் குத்தினான். இரத்த வெள்ளம் பெருகிற்று. அவ்விடத்திலேயே மனம் வைத்திருந்த தத்தன் ஓடிவந்து முத்தநாதனைக் கொல்லத் தொடங்கினான். அவ் வேளையில் மெய்ப்பொருள் நாயனார் சினமுற்றனரோ? முத்தநாதன்மீது வன்மங் கொண்டனரோ? முத்தநாதனைக் கொல்லுமாறு தத்தனை ஏவினரோ? பின்னை என்ன செய்தர்? இரத்தஞ் சோர நிலத்தில் விழும் மெய்ப்பொருளார், வாளோச்சி நிற்கும் தத்தனை நோக்கி, தத்தா! இவர் நம்மவர் என்று நீண்ட கையால் தடுத்து, ஊரவராலும், மற்றவராலும் இப் பெரியார்க்கு எவ்விதத் தீங்கும் நேராதவாறு பாதுகாத்து, இவரைக் கொண்டுபோய் நகரத்துக்கப்பால் விடுத்து வருவாயாக என்று ஆணைதந்தார். தத்தனும் மன்னர் ஆணைப்படியே செய்தான். முத்தநாதன் எவ்வித இடையூறுமின்றி நகரத்தை விட்டேகினான் என்ற செய்தி நாயனார் செவிக்கெட்டிய பின்னரே அவரது உயிர் சிவபதமடைந்தது. தம்மைக் கொன்ற பாவியின் உயிர்க்குந் தீங்கு செய்யாத அந்தணரை ஈன்ற நாடு நமது தமிழ்நாடு. மெய்ப்பொருள் போன்ற பல மெய்ப் பொருள்கள் இவ்வேளை நந்தாய் வயிற்றில் பிறத்தல் வேண்டும். திருநாவுக்கரசர் வரலாறு தமிழ்நாட்டவர்க்கு நன்கு தெரியும். அவர், அவர்தம் தமக்கையாராகிய திலகவதியாரால் ஞான தீக்கை செய்விக்கப்பெற்ற பின்னர்த் தூய்மை பெற்று ஆண்டவன் அடியவரானார். ஆண்டவன் அடியவர் என்பதற்கு அறிகுறிகள் பல உண்டு. அவைகளுள் சிறந்தன இரண்டு. ஒன்று உண்மை கடைப்பிடித்தல்; மற்றொன்று அச்சம் அறியாமை. உண்மையுள்ள விடத்தில் அஞ்சாமை யிருக்கும். இஃதுள்ள விடத்தில் அஃதிருக்கும். திருநாவுக்கரசரிடத்தில் இவ்விரண்டுஞ் சிறந்து விளங்கின. மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும் வித்தை வித்திப் பொய்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகிற் சிவகதி விளையு மன்றே பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் புகழ்புரிந் தார்க்கருள் செய்யும் ஐயஞ்சி னப்புறத் தானும் ஆரூ ரமர்ந்த அம்மானே இவை திருநாவுக்கரசர் திருவாக்குகள். இவைகளால் அவர் கடைப்பிடித்த உண்மைநெறி விளங்குகிறது. திருநாவுக்கரசரை ஒறுக்க நினைந்து, அவரை அழைத்து வருமாறு மன்னன் அமைச்சரை ஏவியபோது, அவர் சிறிதும் அச்சங் கொள்ளாது, ஒரு பதிகம் பாடினார். அப்பதிகம் அஞ்சாமைக்கு உறையுளாக நிற்பது. அப்பதிகப் பாக்களுள் சில வருமாறு:- நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே அகலிடமே இடமாக ஊர்கள் தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம் புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான் இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம் துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவார் சொல்லுஞ் சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம் நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம் காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக் கன்மனமே நன்மனமாக் கரையப் பெற்றோம் பாராண்டு பகடேரி வருவார் சொல்லும் பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே என்றுநாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம் ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றோ உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார் பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப் புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே சடையுடையான் சங்கக் குழையோர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி விடையுடையான் வேங்கை அதள்மே லாடை வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர் உம்மோடு மற்று முளராய் நின்ற படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம் பாசமற வீசும் படியோ நாமே அஞ்சாமை திகழச் சுவாமிகள் அருளிய பாக்கள் இன்னும் பல உண்டு. அவைகளில் இரண்டொன்று வருமாறு:- அஞ்சாமை யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் விண்பால் திசைகெட் டிருசுடர் வீழினு மஞ்சல்நெஞ்சே திண்பால் நமக்கொன்று கண்டோந் திருப்பா திரிப்புலியூர்க் கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும் தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண் டூனமொன் றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே இப்பாக்களை உற்று நோக்கினால் நாவரசர் நிலை நன்கு புலனாகும். பல்லவன், சுவாமிகளை நீற்றறையில் நிறுத்தியபோதும், நஞ்சூட்டி வஞ்சித்தபோதும், மிதிக்குமாறு யானையைத் தூண்டிய போதும், கல்லோடு பிணித்துக் கடலி லெறிந்த போதும், அடிகள் தெறல்களை யெல்லாந் தாங்கிப் பொறுத்துக் கொண்டிருந்து, எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாத அறத்தைக் கடைப்பிடித் தொழுகினார். உண்மையும் அஞ்சாமையும் மலர்ந்துள்ள நெஞ்சில் பொறுமையும், மாற்றாரிடத்தும் அன்பு சொரிதலும், எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமையும் நிலவுதல் இயல்பு. இவ்வியல்புடையவரே வீரராவர். இவ்வீரப்பிள்ளைகள் நமது பரத கண்டத்தில் தோன்றுவார்களாக. நாயன்மார் உண்மையுடையவராதலின், அவர் ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பி வந்தார்; அவர் வைராக்கியத்தைச் சாதிக்கும் ஆன்மசக்தி பெற்றிருந்தார். ஒருவனுடைய வாழ்வு அவனது ஒழுக்கத்தையே பொறுத்து நிற்கிறது. ஒழுக்கமில்லாதவன் உயிரில்லாதவன். ஒழுக்கமில்லா மாந்தர் நடைப் பிணங்களாவர். ஒழுக்கத்தின் மேன்மை உணராது வாழ்பவன் மனிதப் பிறவி தாங்கினவனாகான். நாயன்மார் அனைவரும் உயிர் விளக்கத்துக்கு ஆதாரமான ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பினமையான், அவர் செயற்கருஞ் செயல்களை மிக எளிதில் செய்து, பெறற்கரும் பேறுகளைப் பெற்றார். ஒழுக்கஞ் சிறந்ததென்பதை அறிவுறுத்தும் நாயன்மார் வரலாறுகள் பல இருக்கின்றன. ஈண்டு ஒருவர் ஒழுக்க நிலை குறித்தல் சாலும். தம்பிரான் தோழரென்னுஞ் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றில் ஒழுக்கத்தின் மேன்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் இல்லறத்திலிருந்து கடவுளைப் போற்றினவர்; கடவுள் வாயி லாகத் தாம் வேண்டும் பொன் பொருள் பெண் முதலியவற்றைப் பெற்றவர்; கடவுளுக்கு நண்பரெனப் போற்றப்பட்டவர். சுருங்கக்கூறின் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் விரும்பியவாறு கடவுளை ஏவல்கொண்டவர் என்று கூறலாம். ஆண்டவனையே தோழராகக் கொண்ட ஒருவர்தம் பெருமையை என்னென்று இயம்புவது? இத்துணைச் சிறப்பு வாய்ந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒருமுறை கூறிய உறுதிமொழியினின்றும் பிறழ்ந் ததைக் காரண மாகக்கொண்டு கடவுள் அவருடைய கண்கள் இரண்டையும் பிடுங்கிவிட்டார். கடவுள் அன்பரது நட்பைப் பார்க்கிலும் அவரது ஒழுக்க நீதியையே சிறப்பாகக் கொள்வர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தொண்டை நாட்டுத் திருப்பதி களைத் தொழுது திருவொற்றியூர் சேர்ந்தபோது, அங்கே இறைவனுக்குப் புட்பத்தொண்டு செய்து கொண்டிருந்த சங்கிலியார் என்பவரைக் கண்டு காதலுற்று, அவரைத் தாம் மணம்புரிய விரும்பித் தந்தோழராகிய ஆண்டவனை வழக்கம் போலக் கேட்டார். பாவையாரை முன்னர்ச் சுவாமிகளுக்கு மணஞ் செய்வித்த சிவ பெருமான் சங்கிலியாரையும் அவருக்கு அளிக்க இசைந்தனர். ஆனால் கடவுள் சங்கிலியாரைக் கொண்டு, மற்றொரு மனைவி வாழுந் திருவாரூர்க்கு மீண்டுஞ் செல்லேன் என்ற உறுதி மொழியைப் பசுமை நிறைந்த மகிழமரத்தடியில் சுந்தரர் வாயிலாக வாங்குவித்தார். சுந்தரர் தாங்கூறிய உறுதி மொழிப்படி சில நாள் சங்கிலியாரோடு திருவொற்றியூரில் வாழ்ந்தார். ஒருநாள் சுந்தரர்க்குத் திருவாரூர் நினைவு தோன்றித் திருவாரூர்க்குச் செல்லப் புறப்பட்டுத் திருவொற்றியூர் எல்லை கடந்தார்; கடந்ததும் அவருடைய இரண்டு கண்களும் பட்டன. என் செய்வார்! சுந்தரர் ஆண்டவனோடு தாம் நட்புரிமைகொண்டமை யான், தாம் என் செயினும் கடவுள் மன்னித்துவிடுவார் என்று கருதினர்போலும்! இறைவனுக்கு வேண்டுவது ஒழுக்கம். சுந்தரமூர்த்தி சத்தியந் தவறியபடியால், கடவுள் அவர்க்குப் பாடங் கற்பித்தார். கடவுளைத் தோழராகக் கொண்டு, அவர் வாயிலாக எல்லா இன்பங்களையும் நுகர்ந்து வந்த சுந்தரமூர்த்தி, ஒருமுறை ஒரே குற்றஞ் செய்ததற்குக் கடவுள் அவரை மன்னியாது ஒறுத்தாரெனின், காலை முதல் மாலை வரை - வாழ்நாள் முழுதும் - பொய்யே நினைந்து, பொய்யே பேசி, பொய்யே செய்து வாழ்வோரது பின்னைய கதி எவ்வாறாமோ? கடவுள் நீதி வடிவாக விளங்குபவர். அவர் நடுநிலை பிறழாது நீதிபுரிவோர். சுந்தரர் நண்பரென்று அவர் செய்த தவறுதலுக்கு அவரைக் கடவுள் மன்னித்து விட்டாரோ? சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒழுக்கத்தின் மேன்மை யுணர்ந்து அன்றுமுதல் கடவுளைப் பாடும்போதெல்லாம் கடவுள் ஒழுக்கமயமா யிருப்பவர் என்னுங் குறிப்புவிளங்க ஓதிக்கொண்டு வந்தார். அத்திருப் பாடல்களுள் சில வருமாறு:- அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன் அதுவு நான்படப் பாலதொன் றானால் பிழுக்கை வாரியும் பால்கொள்வ ரடிகேள் பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நானறி யேன்மறு மாற்றம் ஒழுக்க வென்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே மானை நோக்கியர் கண்வலைப் பட்டு வருந்தி யானுற்ற வல்வினைக் கஞ்சித் தேனை யாடிய கொன்றையி னாயுன் சீல ழங்குண ழஞ்சிந்தி யாதே நானு மித்தனை வேண்டுவ தடியேன் உயிரொடு நரகத்தழுந் தாமை ஊன முள்ளன தீர்த்தருள் செய்யாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே விண்பணிந் தேத்தும் வேதியர் மாதர் வெருவிட வேழமொன் றுரித்தாய் செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் தேவர்தம் மரசே தண்பொழி லொற்றி மாநக ருடையாய் சங்கிலிக் காஎன்கண் கொண்ட பண்பநின் னடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே செய்வினை யொன் றறியாதேன் திருவடியே சரணென்று பொய்யடியேன் பிழைத்திடினும் பொறுத்திடநீ வேண்டாவோ பையரவாவிங் கிருந்தாயோ என்னப் பரிந்தென்னை உய்யவருள் செய்யவல்லான் உளோம்போகீ ரென்றானே ஆலந் தானுகந் தமுது செய்தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்துஞ் சீலந் தான்பெரி துழடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானை ஏல வார்குழ லாளுமை நங்கை என்று மேத்தி வழிபடப் பெற்ற கால காலனைக் கம்ப னெம்மானைக் காணக் கண்ணடி யேன்பெற்ற வாறே குறைவிலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழைக்கா துடையானே உறவிலேன் உனையன்றி மற்றடியேன் ஒருபிழை பொறுத்தா லிழிவுண்டோ சிறைவண் டார்பொழில்சூழ் திருவாரூர்ச் செம்பொனே திருவா வடுதுறையுள் அறவனே யெனைஅஞ்ச லென்றருளா யாரெனக் குறவமரர்க ளேறே கடவுள் தண்டனை என்பது இரக்கத்தால் நிகழ்வது. செய்த குற்றத்தை யுணர்ந்து, அது குறித்துக் கசிந்து கசிந்துருகி அழு வோர்க்குக் கடவுள் உடனே அருள்செய்வர். சுந்தரர் அழுது அழுது கண்களைப் பெற்றனர். அவர்தம் வரலாற்றால் ஒழுக்கத்தின் விழுப்பம் விளங்குதல் காண்க. செருத்துணை நாயனார் என்பவர் திருவாரூரில் கமலா லயத்தில் புட்பத் திருத்தொண்டு செய்துகொண்டிருந்தபோது கழற்சிங்க நாயனாரும், அவர்தம் மனைவியாரும் சுவாமி தரிசனஞ் செய்து முன் பின்னாகத் திருக்கோயில் வலம் வந்தனர். அம்மையார் புட்பமண்டபத்துக்கு வெளியே கிடந்த ஒரு பூவையெடுத்து மோந்தனர். அது கண்ட செருத்துணையார், கழற்சிங்கர் மனைவியார் மூக்கை அறுத்தனர். சோர்ந்து விழுந்த தேவியரது அழுகை கேட்ட கழற்சிங்க நாயனார், ஆண்டுப் போந்து, நிகழ்ந்த செய்தியை விசாரித்து, முதலில் மலரைத் தொட்டது கரமாதலால் அதைத் துணித்தல் வேண்டுமென்று தேவியார் கரத்தைத் தாமே கொய்தார். கழற்சிங்கர் ஒரு மன்னர்; செருத்துணையார் ஒரு வேளாளர். இருவருந் தொண்டர். மலரை முகந்தவர் மன்னர் மனைவியார் என்று அஞ்சித் செருத்துணையார் அவரைத் தண்டியாது விடுத்தனரோ? நீதிக்கு மன்னர் மனைவியானா லென்ன? மற்றவர் மனைவியான லென்ன? கழற்சிங்கர் தாம் மன்னர் என்னும் இறுமாப்பால் தம் மனைவியார் மூக்கையறுத்த தொண்டரைத் தண்டித்தாரோ? தம் மனைவியார் சிவாலயத்தில் சிவபிரானுக்குரிய பூவைத் தொட்டதே குற்றம் என்று தம் மனைவியாரின் கரத்தைத் தாமே துண்டித்தார். தண்டனை கொடுமையாயிருக்கலாம். இருவரும் நீதி ஒழுக்கத் தருமத்தில் பிறழவில்லை யென்பதையே ஈணடுக் கருதுதல் வேண்டும். பெண்மணிகள் நாயன்மாருள் பெண்மக்களு முளர். காரைக்கா லம்மையார், மங்கையர்க்கரசியார் இவ்விருவர் பெருமை வருணிக்கற்பாலதன்று. காரைக்காலம்மையார் அன்பும் அறிவும் நிரம்பப் பெற்றும், அவையில்லா நாயகனோடு கலந்து இல்லறம் நடாத்தி, அவன் மனத்துக்கிசைய ஒழுகிவந்தார். அம்மையார் திருவருளால் மாம்பழம் பெற்றதைக் கண்டு நாயகன் இது தெய்வம் என்று எண்ணிப் பாண்டிநாட்டுக்குச் சென்றான். சென்ற நாயகனை மறவாது காரைக்காலம்மையார் மனத்தில் போற்றியே வந்தனர். பிரிந்த நாயகன் பாண்டி நாட்டில் வேறொரு மாதினை மணம் புரிந்து, பிள்ளை பெற்று, அப்பிள்ளைக்கு முதல் மனைவியாரின் பெயரை சூட்டி, அம்மையாரைக் குலதெய்வமாகத் தொழுது வந்தான். சிலநாள் கழித்து அம்மையார் உறவினரோடு நாயகன் பதிக்குச் சென்று தம் வருகையை அவனுக்குத் தெரிவித்தனர். அவன் இரண்டாம் மனைவி மக்களோடு போந்து, அம்மையார் திருவடியில் விழுந்து வணங்கினான். அவன் செயல்கண்ட அம்மையார், இவன் பொருட்டு ஓம்பிய இப்புலால் உடல் எற்றுக்கு என்று உதறினார். உதறினதும் அம்மையார் பேய் வடிவம் பெற்றார். அம்மையார் கல்வி நிலையும், ஞான நிலையும் வருணனைக் கெட்டாதன. அத்துணைக் கல்விஞானம் பெற்றிருந்தும், அவர், தம் நாயகன் பிரியு மட்டும் தாம் அவனை விடுத்துப் பிரியாம லும், தமது நிலையை ஏனையோர்க்குப் புலப்படுத்தாமலும் வாழ்ந்து வந்ததை இக்காலப் பெண்மக்கள் உற்றுநோக்கி உய்த்துணரல் வேண்டும். அம்மையாரின் தத்துவஞானப் புலமை கீழ்வரும் (அம்மையார் அருளிச்செய்த) சில பாக்களால் நன்கு புலனாகும். இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படருநெறி பணியா ரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே யீண்டிறக்கஞ் செய்வான் -இறைவனே எந்தா யெனவிரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் tªjh yJkh‰W th‹? அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே -அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்ப்பா ராகாசம் அப்பொருளுந் தானே யவன் அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் -என்றுந்தான் எவ்வுருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவ மேது இப்பாக்கள் அம்மையாரின் உறுதிநிலையை உணர்த்தும். மங்கையர்க்கரசியார், நின்றசீர்நெடுமாறன் என்னும் கூன் பாண்டியன் மனைவியார். கூன்பாண்டியன் சைவசமயம் விடுத்துச் சமண சமயந் தழுவினான். அரசன் எவ்வழி அவ்வழி குடிகள். மதுரைமா நகரம் சமண சமயத்தால் மூடப்பட்டிருந்தது. கோயில் பூசைகளுக்கும் முட்டு நேர்ந்தது. மங்கையர்க்கரசி யார்க்குச் சைவ சமயத்தில் பற்றுண்டு. நாயகன் செல்லும் வழி நாமும் செல்லலாம் என்ற எண்ணம் நாயகியார்க்கு உண்டாக வில்லை. நாயகன் வேறு சமயந் தழுவினமையான், அவனை விடுத்து அம்மையார் பிரியவுமில்லை; அவன் கொண்ட சமயத்தைத் தழுவவுமில்லை. அம்மையார் நாயகனோடு வாழ்ந்து, அவன் விருப்பப்படி நடந்துவந்தார். நாயகனையும் பதியையுந் திருத்த வேண்டுமென்னும் மனவெழுச்சி அம்மையாரை விட்டகல வில்லை. மங்கையர்க்கரசியார் முயற்சியால் திருஞான சம்பந்த சுவாமிகள் மதுரைக் கெழுந்தருளிச், சைவ சமயத்தை நிலைநிறுத்தி, அரசன் முதலிய பலரைச் சைவ சமயந் தழுவுமாறு செய்தனர். இவ்வளவிற்குங் காரணர் மங்கையர்க்கரசியாரே யாவர். இவர்தம் வீரச்செயலை என்னென்று கூறுவது? இப்பொழுது நமது தேசத்தில் அன்புநெறி அருகியிருக் கிறது. அதை மீண்டும் தேசத்தில் நிலைபெறுத்தப் பல மங்கையர்க்கரசிகள் தேவை. ஆண்மக்கள் மேல்நாட்டு நாத்திக மயக்கத்தில் உறங்கினும், தாய்மார்கள் அவர்களைத் தட்டி எழுப்பிச் சுதேச ஞான பாதையில் நடக்குமாறு செய்தல் வேண்டும். பெண்மக்கள் மனங்கொண்டால் விதேசியம் ஒழிந்து, சுதேசியம் வளர்ந்தோங்கும் என்பதிற் சந்தேகமில்லை. நாயன்மார் செய்துவந்த திருத்தொண்டிற்குப் பெரிதும் நாயகிமார் துணை செய்தனர். பெண் மக்களின் உதவியின்றி எக்காரியமுஞ் சித்தி பெறாது. மங்கையர்க்கரசியார் ஒருவர் உழைப்பில்லாவிடின் சைவ சமய மெங்கே? சிவனடியார் எங்கே? ஆதலால் பெண் மக்கள் உழைப்பு இன்றியமையாதது. வீரம் கடவுள் அடியவர் என்பவரெல்லாங் கோழைகள் என்றும், அவர்தம் நெறியில் வீரம் இல்லை என்றும் இக்காலத்துச் சிலர் பேசுவதுண்டு. இவரனைவரும் அடியவர் வரலாற்றை ஊன்றி ஆராயாமலே வாயில் வந்தவாறு பேசுகிறார். நாயன்மார் வரலாற்றில் வீரஞ் செறிந்துகிடத்தல் வெள்ளிடைமலை. கண்ணப்பர் அன்பர்; பேரன்பர். அவர்தந் தொழில் என்ன? வேட்டையாடுவது. கோழை வேட்டையாடுவாரோ? கண்ணப்பர் வேட்டைத் திறம் பெரியபுராணத்தில் நன்கு வருணிக்கப்பட் டிருக்கிறது. எறிபத்தர் கருவூரில் வாழ்ந்த ஒரு சிவனடியார். அவர் சிவகாமியாண்டாரின் புட்பத் தொண்டுக்கு ஊறு செய்த பட்டத்து யானையை வீசி எறிந்தார். பிழைசெய்த யானை - மன்னர் யானை - பட்டத்து யானை - என்று எறிபத்தர் அஞ்சினரோ? ஒரு யானையை மழுவால் எறிந்து வீழ்த்தியது வீரமா? கோழமையா? அறிஞர்கள் உன்னுவார்களாக. ஏனாதி நாத நாயனார் என்பவர் ஒரு வீரர். சிலம்பக் கூடம் அமைத்து வாள்வித்தை பயிற்றுவிப்பது அவர்தந் தொழில். வாள்வித்தை பயிற்றுவித்த ஒருவர் அடியவரா யிருந்தமை கருதத்தக்கது. மற்றும் பல நாயன்மாரது வீரத் திறங்களை ஈண்டு விரிக்கின் கட்டுரை பெருகும். அவைகளைப் பெரிய புராணத்திற் காண்க. நாயன்மார் வீரம், இகலை அடிப்படையாகக் கொண்ட தன்று. இகலை அடிப்படையாகக் கொண்டெழுவது வீரமாகாது. வீரத்தினடியில் அன்பு - ஈரம் - இரக்கம் - ஊர்தல் வேண்டும். எறிபத்தர், மன்னரிடம் அன்புரை கூறியதும், ஏனாதிநாத நாயனார், அதிசூரனை முதன்முறை புறமுதுகிடச் செய்து, பின்னே அவன் அடியவனாய் முகங்காட்டியபோது, தாமே அன்பால் தலை சாய்த்துக் கொடுத்ததும் புலப்படுத்துவ தென்னை? இவை, நாயன்மார் ஈரநெஞ்சின ரென்பதை யல்லவோ புலப்படுத்துகின்றன? ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே பாரம் ஈசன் பணியல தொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்னால் விளம்புந் தகையதோ - பெரியபுராணம் இறுவாய் நாயன்மார், உண்மை - உறுதி - அஞ்சாமை - ஒழுக்கம் - வீரம் முதலியவற்றைக் காத்துவந்த குறிப்புகள் பல படக் கிடக்கின்றன. விரிவு பெரியபுராணத்திற் காண்க. நாயன்மார் தாம்கொண்ட வீர வைராக்கியம் முற்றுப்பெறு மட்டும் உயிரையும் பொருளாக மதியாது உழைத்துவந்ததை நேயர்கள் கவனிப்பார்களாக. நாயன்மார் கண்ணைப் பிடுங்கியும், கழுத்தை யறுத்தும், கையை யறைத்தும், தலையை யெரித்தும், வயிற்றைக் கீறியும், பிள்ளையை யறுத்தும், வேறு பல செயற்கருஞ் செயல் களைச் செய்தும் தமது வீர வைராக்கியத்தைச் சாதித்தனர். வைராக்கியத்தைச் சாதிக்கும் பொருட்டு மண்ணை யிழக்கலாம்; பொன்னை யிழக்கலாம்; பெண்ணை யிழக்கலாம்; உடலையும் ஒழிக்கலாம்; உயிரையும் ஒழிக்கலாம். பிற உயிர்க்குத் தீங்கு செய்யாது தியாகத்துக்கு உட்படுவதே அறவொழுக்கம். பிறர்க்குத் தீங்கு சூழ்வித்து ஒருவர் வாழ விரும்புவது அற நெறி யாகாது. வைராக்கிய நெறியை வளர்க்கும் அறிவாற்றல் பெறுவதற்கு நாயன்மார் சரிதங்கள் உறுது செய்யும். நாயன்மார் சரிதங்களை வாசிப்பதனாலும், அவர்தந் திருநாமங்களை ஓதுவதனாலும், அவரது திருவாக்குகளைப் பாராயணஞ் செய்வதனாலும், அவரைப் பூசிப்பதனாலும் உண்மை சிறந்து, உறுதி, அஞ்சாமை, ஒழுக்கம், வீரம் முதலியன அரும்பும். மனிதன் எதை நினைக்கிறானோ, எதைப்பற்றிப் பேசுகிறானோ, அவன் அதனதன் வண்ணமாக மாறுகிறான். இவ்வுண்மை உணர்ந்த முன்னோர்கள், மக்கள் அறிவு உலகாயத மதத்தில் தோயாதவாறு காக்கும் பொருட்டுச் சந்தியாவந்தனம், க்ஷேத்திர யாத்திரை, ஆன்மார்த்த பூசை, வேதமோதல், புராணங் கேட்டல் முதலிய ஞான முறைகளைக் கோலினார்கள். இப்பொழுது நமது நாட்டுக் கல்வி அருகினமையால் நாத்திகம் பெருகுகிறது. ஆதலால் இந்நாளில் நாயன்மார் திறம் நாட்டுக்கு எல்லாவழியிலும் பயன்படுவதாக. நாயன்மார் திறத்தைப் போற்றி, அவர்தங்குணங்களைப் பெறுவது, பழந்தமிழ் நாட்டை மீண்டும் படைப்பதாகும். சகோதரிகளே! சகோதரர்களே! நாயன்மாரை மறவாது போற்றுங்கள்; அவர்தம் பாடல்களை ஓதுங்கள்; நீங்கள் அவர் ஆவீர்கள்; அவரைப்போலச் செயற்கருஞ் செயல்களைச் செய்வீர்கள். தில்லைவா ழந்தணரே முதலாகச் சீர்படைத்த தொல்லையதாந் திருத்தொண்டத் தொகையடியார் பதம் போற்றி ஒல்லையவர் புராணகதை யுலகறிய விரித்துரைத்த செல்வமலி குன்றத்தூர் சேக்கிழா ரடிபோற்றி - உமாபதி சிவாச்சாரியார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டத் தொகை திருச்சிற்றம்பலம் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (1) இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (2) மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (3) திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (4) வம்பறா வரிவண்டு மணநாற மலரும் மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (5) வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன் கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (6) பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன் விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் கழற்சத்தி விரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (7) கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதி தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (8) கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப் பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (9) பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. (10) மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கணனார்க் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார் ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே. (11) - திருச்சிற்றம்பலம்  தமிழ் நாடும் நம்மாழ்வாரும் முன்னுரை தமிழ் நாடென்பது ஒரு தனி நாடு. அந் நாட்டுக்கெனத் தனிமொழி, தனி வழக்க ஒழுக்கங்கள் முதலியன உண்டு. பிற நிலங்கள் நாடாதற்கு முன்னரே, தமிழ்நாடு தன் முயற்சியால் தனக்கெனச் சிறப்பாக இலக்கிய இலக்கணம், மருத்துவம், சோதிடம், வேதம் முதலியன வகுத்துக் கொண்டது. ஈண்டுத் தமிழ்நாட்டுக்கு வேதம்-மறை சிறப்பாக இருந்தது என்பது கருதற்பாற்று. அப் பண்டை மறை இறந்துபட்டதென்று தமிழ் மக்கள் கூறுப. இக் கூற்றை வலியுறுத்தப் பழந்தமிழ் நூற்சான்றுகளும் உள்ளன. இந்நாளில் தமிழ மக்கள், நால்வர் அருளிய தேவார திருவாசகங்களையும், ஆழ்வார் பன்னிருவர் அருளிய நாலாயிரப் பிரபந்தத்தையும் தங்கள் வேதங்களென்று போற்றுதல் எவரும் அறிந்ததொன்றே. அடியேன் அரசியல் தொண்டில் இறங்குவதற்கு முன்னர்த் தமிழ் வேதங்களில் ஏதாவதொன்றை நாடோறும் ஓதுவது வழக்கம்; ஓதும் வேளையில் ஆராய்ச்சிக்குரிய பாக்களின் பாங்கர் குறிப்புக்கள் இடுவதுண்டு. அக் குறிப்புக்களைத் திரட்டிப் பின்னர் ஆராய்ச்சி முறையாகச் சில நூல்கள் இயற்ற வேண்டு மென்பது எனது நோக்கம். அரசியல் தொண்டில் யான் இறங்கா திருப்பின், எனது நோக்கம் ஒருவாறு நிறைவேறி யிருக்கும். 1921 -ஆம் வருடச் சுதேசமித்திரன் அநுபந்தத்தில் நாயன் மார் என்னும் சிறு கட்டுரை ஒன்று எழுதினேன்: அதன்கண் அடுத்த ஆண்டு - அதாவது 1922- ஆம் ஆண்டு - ஆழ்வாரைப் பற்றி எழுதுவதாகக் குறிப்பிட்டிருந்தேன். போதிய ஓய்வின்மை யால் நம்மாழ்வார் ஒருவரைப் பற்றி மாத்திரம் எழுதலாமென்று பின்னர் எண்ணினேன். ஒருவரைப் பற்றிச் செவ்வனே எழுதவும் போதிய ஓய்வு நேராமையானும், ஒரு வருட அநுபந்தம் விரிவுக்கு இடந் தாராதாகலானும் நம்மாழ்வாரைப் பற்றி யான் எடுத்து வைத்த குறிப்புக்கள் சிறுகட்டுரையில் அடங்காவெனத் தோன்றினமையானும், கால நிலையை உற்று நோக்கித் தமிழ் நாடும் நம்மாழ்வாரும் என்னும் இக்கட்டுரையை வரைய லானேன். இதற்கு முன் தேசபக்தன், சுதேசமித்திரன் என்னும் பத்திரிகைகளின் வருட அநுபந்தங்களில், யான் எழுதிய மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, நாயன்மார் என்னும் கட்டுரைகள், நூல் வடிவாக வெளிப்போந்து தமிழ் நாட்டில் உலவுவதைக் கண்ட சாதுரத்ந சத்குரு புத்தக சாலையார், அவைகளைப் போல இக் கட்டுரையும் நூல் வடிவாய் உலவ வேண்டுதென்று விரும்பிக் கேட்டனர். அவர் விரும்பியவாறே தமிழ்நாடும் நம்மாழ்வாரும் என்னும் இக் கட்டுரையை நூல் வடிவாக்கினேன்; முதற் பதிப்பை மட்டும் அவர் வெளியிடவும் இசைந்தேன். அம் முதற் பதிப்பு மித்திரன் அநுபந்தத்தில் உள்ளவாறே வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1934-ஆம் ஆண்டில் வெளி வந்தது. அப் பதிப்பில் சில புதுப் பொருள் சேர்க்கப்பட்டன; பொருள்கள் முறைப்படுத்தப்பட்டன; தமிழ் நாடு எது என்பதும், நம்மாழ்வார் அந் நாட்டை எவ்வாறு வளர்த்தார் என்பதும் சுருங்கச் சொல்லப்பட்டன; இறை வித்து என்பது இறைநிலை, அட்ட மூர்த்த விளக்கம், இயற்கை இறை, இயற்கை உருவம், அவதார நுட்பம், மும்மூர்த்திகளின் நிலை, வழிபாடு, சமரசம், பாட்டியல் முதலியன விளக்கப்பட்டன. இவையாவும் ஆழ்வார் திருவாக்கை அடிப்படையாகக் கொண்டே நிறுவப்பட்டன. இந் நான்காம் பதிப்பில் புதுப்பொருள் சில சேர்க்க எண்ணியிருந்தேன். அவ்வெண்ணம் கண் படலத்தால் தகையப் பெற்றது. என் செய்வேன்! எல்லாம் ஆண்டவன் அருள். தமிழ் நலம் கருதுவோர்க்கு இந்நூல் தீஞ்சுவை பயக்கு மென்பதில் ஐயமில்லை. தமிழர் இந் நூலை ஆதரிப்பாராக. சென்னை 30. 11. 1949 திருவாரூர் - வி. கலியாணசுந்தரன். தமிழ்நாடும் நம்மாழ்வாரும் பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை உயிரளிப்பான் எந்நின்ற யோனியு மாய்ப்பிறந் தாய்இமை யோர்தலைவா மெய்ந்நின்று கேட்டரு ளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே. - நம்மாழ்வார் 1. தோற்றுவாய் தமிழ் நாடு எது? வட வேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து என்று ஆசிரியர் பனம்பாரனார் எல்லையிட்டுக் கூறிய நிலப்பரப்பா? அன்று. ஆசிரியர் பனம்பாரனார் நிலப்பரப்பை மட்டும் தமிழ் கூறு நல்லுலகத்து என்று கூறினாரில்லை. அவர் அந்நிலப் பரப்பில் வாழும் மக்கள் வழக்க ஒழுக்கங்கள் முதலியவற்றை உளப்படுத்தியே, தமிழ்கூறு நல்லுலகத்து என்றார். எனவே, தமிழ் நாடென்பது, தமிழ் மொழி பேசும் மக்கள் வாழும் வெறும் நிலப்பரப்பு மாத்திர மன்று. அம் மக்களின் நடை உடைகள், வழக்க ஒழுக்கங்கள், கல்வித் துறைகள், தொழில் முறைகள், அரசியல் நெறிகள், இன்னோரன்ன பல சேர்ந்த ஒன்றே தமிழ் நாடென்பது. நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமன்று. புராண நூல்கள் நாட்டுப் படலம் நவிலுமிடத்து, வெறும் நிலப்பரப்பை மட்டும் நவிலாது, மக்கள் வழக்க ஒழுக்கங்கள், தொழின் முறைகள் முதலியவற்றைக் கிளந்து நவில்வது கருதற்பாலது. ஒவ்வொரு நாட்டவர்க்குச் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருப்பது போலத் தமிழ் மக்கட்குஞ் சிறப்பாகச் சில வழக்க ஒழுக்கங்களிருக் கின்றன. அவைகளைக் கொண்ட ஒன்றே தமிழ் நாடாகும். தமிழ் நாட்டைக் கோலிய அறிஞர் பலர்; அன்பர் பலர்; மறவர் பலர்; மன்னர் பலர்; பாவலர் பலர்; தொழிலாளர் பலர்; இவர்களால் கட்டப்பெற்ற தமிழ் நாட்டைப் பின்னர் அழகு செய்தார் இரு கூட்டத்தார். அவருள் ஒரு கூட்டத்தார் நாயன்மார் எனப்படுவர்; மற்றொரு கூட்டத்தார் ஆழ்வார் எனப்படுவர். முன்னவர் கடவுளைச் சிவமாகப் போற்றியவர்; பின்னவர் ஆண்டவனைத் திருமாலாகத் தொழுதவர். ஆழ்வார் என்ற சொல்லுக்கு ஆண்டவன் அருள் வெள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பவர் என்பது பொருள். ஆழ்வார் பன்னிருவர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தமிழ் நாட்டிலே, பொருநை (தாமிரபரணி) வளஞ் செய்யுந் திருநெல்வேலியிலே, திருக்குருகூரிலே, வேளாள மரபிலே தோன்றினவர். திருக்குருகூர் என்னும் பதி ஆழ்வார் திருநகரி என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நம்மாழ்வார்க்குச் சடகோபர், காரிமாறன், பராங்குசர் முதலிய பெயர்களுமுண்டு. அவர் அருளிச் செய்த பிரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன. நம்மாழ்வார் காலத்தைப் பலர் பலவாறு பகர்கிறார். கலியுகம் பிறந்த நாற்பத்து மூன்றாம் நாள் நம்மாழ்வார் அவதரித்தார் என்று சம்பிரதாய நூல்கள் நுவல்கின்றன. இதைச் சரித்திர ஆராய்ச்சியாளர் ஏற்பதில்லை ஆராய்ச்சியாளரும் நம்மாழ்வார் காலத்தைப் பற்றி இன்னும் ஒருதலையான முடிவிற்கு வந்தாரில்லை. சரித்திரத்தார் இதுகாறுஞ் செய்துள்ள ஆராய்ச்சி களை நோக்குழி, ஆழ்வார், நான்காம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தினர் என்பது பெறப் படுகிறது. ஆழ்வாருள் குருகூர்ப்பெரியார் நம்மாழ்வார் என்னுந் திருப்பெயர் பெற்றிருக்கிறார். அவர் திருவாக்கினின்றும் ஒழுகிய தமிழ் அமிழ்தும், அதன் கருத்துச் சுவையும் அவர்க்கு அத் திருநாமத்தை நல்கின என்னலாம். அறிவிற் சிறந்த எவரும் - அன்பிற் சிறந்த எவரும் - ஆழ்வாரை நம் அறிஞர், நம் அன்பர் என்று போற்றுவர். அச் சான்றோர் திருவாக்கை ஓதும்பேறு பெறுங் கிறிதுவர், மகமதியர், பௌத்தர், சமணர், சைவர், வைணவர் முதலிய எல்லாச் சமயத்தவரும், அவரை, நம் சமயத்தவர் நம் சமயத்தவர் என்று கொள்வர். பாவலர் சடகோபர் திருவாக்கை நோக்குவாராயின், அவரை நம் பாவலர் என்று பாடுவர். தத்துவ ஆராய்ச்சியினர், அவரை நம் தத்துவ மூர்த்தி என்று தழுவுவர். காய்தல் உவத்தல் அகற்றி, உண்மை ஆராயப்புகும் எவரும், மாறனாரை நம்மவர் என்று வழிபடுவர். உலகத்திலுள்ள அனைவரும் நம்மவர் என்று ஆழ்வாரைப் போற்றும் பொருட்டு, எம்பெருமான் நம்மாழ்வார் என்று அவரை ஆட்கொண்டார் போலும்! நம்மாழ்வார் ஒரு நாட்டார்க்கோ, ஒரு சமயத்தார்க்கோ, ஓரினத்தார்க்கோ மட்டும் உரியவரல்லர். அவர் எல்லா நாட்டார்க்கும், எல்லாச் சமயத் தார்க்கும், எல்லா இனத்தார்க்கும் உரியவர். எல்லாரும் நம் ஆழ்வார் என்று போற்றும் ஒரு பெரியாரை அளித்த தமிழ் நாட்டை மனத்தால் நினைக்கிறேன்; வாயால் வழுத்துகிறேன்; கையால் தொழுகிறேன். தமிழ் நாடளித்த பெருவாழ்வை, என் ஆழ்வார் என்று வணங்கி, என்னளவில் இன்புறாது, உலகவரையும் உளப்படுத்தி, அவரோடு நம் ஆழ்வார் என்று வணங்குகிறேன். நம்மாழ்வார் தமிழ் நாட்டை ஓம்பக்கொண்ட முறைகள் பெரிதும் போற்றத்தக்கன. நம்மாழ்வார் போன்றோர் கொண்ட முறைகளின் திறத்தால் இன்னும் தமிழ்நாடு அழிவுறாமலிருக் கிறது. உலகத்தில் எத்துணையோ நாடுகள் தோன்றி நின்று அழிந்தன. இந்நாளில் மிகச் செல்வாக்குப் பெற்றுள்ள சில நாடுகளும் அழிவுறுங் குறிகள் தோன்றிவருகின்றன. அறிவால் - அன்பால் - இறையருள் நாடிக் கோலப்படும் நாடுகள் வீழ்ந்து படல் அரிது. விலங்கியல்பால் - மூர்க்கத்தால் - வாணிபத்தால் - அரசியலால் - கட்டப்படும் நாடுகள் எளிதில் வீழ்ந்துபடும். நமது தமிழ்நாடு எத்துணையோ இடர்களுக்கு உட்பட்டும் இன்னும் வீழ்ந்துபடாமல் நிலவி வருகிறது. இதற்குக் காரணமென்னை? காரணம், தமிழ்மக்கள் அன்புக் கால் கொண்டு, அறிவுச் சுவரெழுப்பி, இன்பத்தமிழ் நிலையங்கோலினமையாகும். அந் நிலையத்தில் அருள்மணங் கமழ்ந்த வண்ணமிருக்கிறது. இவற்றால் தமிழ்நாடு கட்டப்பட்டமையால், அஃது இன்னுங் குலையாமல் நிலவா நிற்கிறது. இவ்வாறு கட்டப்பட்ட தமிழ்நாட்டை ஓம்பினவருள் ஒருவர் நம் ஆழ்வார். நம்மாழ்வார் அருளிய தமிழ் மறையை ஆராய்ந்தால், அதனிடை அவர் கொண்ட முறைகள் புலப்படும். அவர் தமிழ்நாட்டை இறையுணர்வால், அன்பால், இன்பால், பொதுமையால், அழகுப் பாக்களால், இன்ன பிறவற்றால் ஓம்பினார். இனி அம்முறைகள்மீது கருத்துச் செலுத்துவோம். 2. கடவுள் - வித்து கடவுளைப்பற்றி உலகில் எழுந்துள்ள கொள்கைகள் பலப்பல. அவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாயிருப்பது ஒன்றே. அவ்வொன்றை மக்கள் தங்கள் பன்மையுணர்வால் பலவாறு ஏற்றுப் போற்றி வாழ்கிறார்கள். பன்மை என்பது ஒருமையினின்றும் பிறப்பது. ஒருமை இன்றேல் பன்மை இல்லை. பன்மைக்கு வித்து ஒருமை. உலகம் அவன் என்றும், அவள் என்றும், அஃது என்றும் சுட்டி உணரப்படுவது. சுட்டுப் பொருளின் இயல் மாறுதல் உறுவது. மாறுதலின்றி என்றும் ஒரு பெற்றியதாய் இருப்பது அதன் இயல் அன்று. உலகை உற்று நோக்குவோம். உலகிலுள்ள ஒவ்வொன்றும் மாறுதலுறுவதா யிருப்பதைக் காண்கிறோம். எல்லாம் மாறுதலுறுவனவாயின், அவற்றின் மாறுதல் நிகழ்ச்சிக்கு ஒரு நிலைக்களன் வேண்டுமன்றோ? நிலைக்களன் ஒன்றில்லையேல், எதுவும் ஒழுங்கு முறையில் இயங்கி மாறுதலுறாது. ஆகவே, ஒரு நிலைக்களன் இன்றியமையாததாகிறது. அந் நிலைக்களன், தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததாய், என்றும் ஒரு பெற்றியதாய், எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் - தாரகமாய் - இருத்தல் வேண்டும். இல்லையேல் அது நிலைக்களன் ஆகாது. தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் உடையதை என்னென்று கூறுவது? தோற்றம் ஒடுக்கம் முதலிய மாறுதல் இல்லாததை என்னென்று கூறுவது? முன்னையதைச் சடம் அல்லது மாயை என்றும், பின்னையதைச் சித்(அறிவு) அல்லது கடவுள் என்றும் முன்னோர் கூறிப் போந்தனர். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து இருக்கிறது. அதுபோல எல்லாவற்றிற்கும் ஒரு வித்து இருத்தல் வேண்டும்; வேண்டுவது இயல்பு. அவ் வித்து, எவ்விதமாறுதலும் இல்லாத தாய் இருத்தல் வேண்டும். அது மாறுதல் உடையதாயின், அதற்கொரு வித்துத் தேவையாகும். ஆதலால், எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது எவ்வித மாறுதலும் இல்லாததாய் இருத்தல் வேண்டும் என்பது உணர ற்பாலது. மாறுதல் உடையது சடம் என்றும், மாறுதல் இல்லாதது சித் என்றும் மேலே சொல்லப்பட்டன. மாறுதலுடைய சடத்துக்கு, மாறுதல் இல்லாத சித் வித்தாயிருத்தல் இயல்பு. சடவுலகமெல்லாம் தோன்றி நின்று ஒடுங்குதற்கு வித்தா யிருப்பது சித் என்று தெளிக. அச் சித் என்னும் வித்தினின்றும் எல்லாம் தோன்றும்; அதனிடை எல்லாம் நிற்கும்; அதனுள் எல்லாம் ஒடுங்கும். எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்தற்கு மக்கள் முயலுதல் வேண்டும். அம் முயற்சிக்கென்று மக்கள் பிறவியும், வாழ்வும், பிறவும் இயற்கையில் அமைந்திருக்கின்றன. அவ்வியற்கை அமைப்பு வழிநின்று மக்கள் ஒழுகினால், அவ் வொழுக்கம் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்த்தும். ஆனால் அவ்வழி நில்லாது, எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை மட்டும் எளிதில் உணர்தல் அருமை. அருமை என்று அஞ்ச வேண்டுவதில்லை. அருமையை எளிமையாக்க இயற்கை அன்னை முனைந்து நிற்கிறாள். அவள் வழி நிற்க மக்கள் முயல்வார்களாக. தமிழ் நாட்டிற்றோன்றிய நம்மாழ்வார், உலகு உய்யத் தோன்றிய குருமூர்த்திகளுள் ஒருவர். அவர் இயல்பால் மெய் யுணர்வு பெற்று, எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள வித்தினை உணர்ந்தார்; உணர்ந்தவாறு அதை உலகுக்கு உணர்த்தினார். இது பற்றி அவர் பொழிந்த அமுத மொழிகள் பல. அவற்றுள் சில வருமாறு: ஊழிதோ றூழி . . . யாவகை உலகமும் யாவரும் இல்லா மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து இரும்பொருட் கெல்லாம் அரும்பெறல் தனிவித்து ஒருதானாகி . . . . - திருவாசிரியம் -4 தானே தனித்தோன்றல் தன்ளைப் பொன் றில்லாதான் தானே பிறர்கட்கும் தன்தோன்றல்-தானே . . . வைப்பாம் . . . எப்பால் யவர்க்கும் நலத்தால் உயர்ந்துயர்ந்து அப்பாலவன் . . இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனிமுதல் எம்மான் . . . ஒக்கலை வைத்து. . . ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன் . . ஓவாத் துயர்ப்பிறவி . . . மூவாத் தனிமுதலாய் . . சீர்மைகொள் வீடு சுவர்க்க நரகீறா ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும் வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனிநின்ற கார்முகில்போல் வண்ணன் . . . எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை ஆழ்வார் உணர்ந்து, அவ்வுணர்வால் தமிழ் நாட்டை ஓம்பினார். அவ்வாழ்வார் நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? அஃது, ஆழ்வார் உணர்ந்து உணர்த்திய வித்தின் மீது கருத்துச் செலுத்துகிறதா? இல்லை. அது போலிகள் மீது கருத்திருத்தித் தன் வாழ்வைக் குலைத்து வருகிறது. இந்நாளில் ஆழ்வார் அமிழ்தைப் பருகத் தமிழ்நாடு வேட்கை கொண்டு எழுவதாக. 3. எங்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்து உண்டு. அவ்வவ் வித்து அததற்கு உரியதாய்த் துணைநின்று, அதனை அதனை ஓம்பி வருகின்றது. அவ் வித்து ஒவ்வொன்றும் தொடர்பில்லாமல் இருக் கிறது. கடவுள் என்னும் வித்தோ அத்தகையதன்று. அஃது எல்லா வித்துக்களுக்கும் வித்தாயிருப்பது, எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எங்கே இருக்கும்? அதற்கெனத் தனித்த ஓரிடம் உண்டோ? எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்று எல்லாவற்றிலும் இருத்தல் வேண்டும். அஃது இல்லாத இடம் எங்கே இருக்கும்? என்னை? எல்லாம் அதனால் இயங்க வேண்டுமாதலால், அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்கும் இயல்பினதாய் இருத்தல் நியதி. ஆகவே, அதற்கு உரிய இடம் இங்கு அங்கு என்று குறிப்பிடுதற்கு இல்லை. அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிற்பதும், எங்கெங்கே பார்த்தாலும் அங்கங்கே நிற்பதும் அதன் இயல் என்க. நம்மாழ்வார் எல்லாவற்றிற்கும் வித்தாயுள்ள ஒன்றை உணர்ந்தார். அஃது எல்லாவற்றிலும் நீக்கமற நிற்றலைத் தெளிந்தார்; அத் தெளிவை உலகுக்கு அறிவுறுத்தினார். யவரும் யாவையும் எல்லாப் பொருளும் கவர்வின்றித் தன்னுள் ஒடுங்க நின்ற பவர்கொள் ஞானவெள் ளச்சுடர் மூர்த்தி . . அமைவுடை அறநெறி . . அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே. என்னுள் கலந்தவன் . . . மன்னு முழுவே ழுலகும் வயிற்றினுள் தன்னுள் கலவாத தெப்பொருளுந் தானிலையே. எப்பொருளுந் தானாய் .. வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த் தானத்தும் எண்டிசையும் தவிராது நின்றான் தன்னை .. . எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே பொங்கிய புறம்பால் பொருளுள வேனும் அவையுமோ நீயின்னே யானால் மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலன் இறந்ததும் நீயே. பூவைகள் போல் . . .. யாவையும் யாவருமாய் நின்ற மாயன் துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை யாய்உல கங்களுமாய் இன்பமில் வெந்நர காகி இனிய நல் வான் சுவர்க் கங்களுமாய் மன்பல் உயிர்களு மாகிப் பலபல மாய மயக்குக்களால் இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்றேதும் அல்லலிலனே. யானு நீ தானே யாவதோ மெய்யே அருநர சுவையும் நீ ஆனால் வானுயர் இன்பம் எய்திலென் மற்றை நரகமே எய்திலென் எனிலும் யானுநீ தானாய்த் தெளிதொறும் நன்று மஞ்சுவன் நரகம் நானடைதல் வானுயர் இன்பம் மன்னி வீற்றிருந்தாய் அருளுநின் தாள்களை எனக்கே என வரூஉம் ஆழ்வார் மொழகளை உற்று நோக்குக. சுவர்க்க நரகத்திலும் பரம்பொருள் இருக்கிறது என்று ஆழ்வார் விளக்கியுள்ளார். இவ்வாறு இறையின் சர்வவியா பகத்தை வேறு எவரே விளக்கினர்! எங்கு முள்ள பரம்பொருளைத் தெளிந்தவர்க்குத் தனிப்பட்ட சுவர்க்கம் ஏது? தனிப்பட்ட நரகம் ஏது? அவர்க்கு எல்லாம் ஆண்டவன் இடம்; எல்லாம் இன்ப உலகம். பரம்பொருள் எங்கும் உள்ளது என்னும் உண்மையை ஆன்றோர் பல துறைகளிலும் உலகுக்கு விளக்கிப் போந்தனர். அந் நுட்பம் பலப்பல கதைகள் வாயிலாகவும் விளக்கப்பட்டது. அக் கதைகளுள் சிறந்த ஒன்று பிரகலாதனைப் பற்றியது. பிரகலாதன் கதையால் விளங்குவது என்னை? பரம்பொருள் எங்கும் உள்ளது என்பது அக் கதையால் விளங்குவது. இதனை ஆழ்வார் பலவிடங்களில் விளம்புகிறார். ஈண்டைக்கு ஒரு திருப்பாட்டுச் சாலும். எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கில்லை யாலென் றிரணியன் தூண்புடைப்ப அங்கப் பொழுதே அவன்வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான்பெருமை ஆராயும் சீர்மைத்தே. பரம் பொருள் அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பின் இருக்க. அதனால் உலகுக்கு என்ன பயன்? அதனை ஏன் வலியுறுத்தவேண்டும் என்று சிலர் கருதலாம். இது சிந்திக்கத்தக்கதே. சிந்திக்கச் சிந்திக்கப் பல நுட்பங்கள் விளங்கும். அவைகளில் ஒன்றை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பிடுவது நலம். வாழ்வு இருவிதம். ஒன்று நல்வாழ்வு; மற்றொன்று அஃது அல்லாதது. நல்வாழ்வு எது? மற்றைய வாழ்வு எது? அமைதியுற்ற வாழ்வு நல்வாழ்வு என்றும், அமைதியற்ற வாழ்வு நல்வாழ்வு அல்லாதது என்றும் சுருங்கச் சொல்லலாம். வாழ்வில் பல நலங்கள் பொருந்தியிருப்பினும், அதன்மாட்டு அமைதி ஒன்றில்லையேல், அது நல்வாழ்வாகாது. நல்வாழ்வுக்கு அறிகுறி அமைதியே யாகும். அமைதி வாழ்வுக்குச் சகோதர நேயம் இன்றியமையாதது. சகோதர நேயம் எப்படி உண்டாகும்? சகோதர நேயம் என்னும் பெயரால் உலகில் எத்துணையோ அமைப்புக்கள் ஏற்பட்டிருக் கின்றன. அவற்றால் சகோதரநேயம் வளர்கிறதா? அமைதி வாழ்வு நிலைக்கிறதா? இல்லையே. தற்கால உலகை நோக்கினால் உண்மை விளங்கும். தற்கால உலகை நோக்குவோம். அஃது எக்காட்சி வழங்குகிறது? பொய், பொறாமை, கொலை, கொள்ளை, போர் முதலியவற்றை யல்லவோ அது வழங்குகிறது? இதற்குக் காரணம் என்னை? அமைதிக்குரிய சகோதரநேயம் பெருகிப் பரவாமையேயாகும். அமைதிக்கெனச் சட்டங்கள் செய்யப்படுகின்றன; ஆயுதங்கள் தாங்கப்படுகின்றன; வேறுபல கட்டுகளும் வகுக்கப் படுகின்றன. இவற்றால் அமைதி நிலவுகிறதா? அச்சத்தால் ஒருபோதும் உண்மை அமைதி நிலவாது. சகோதர நேயம் ஒன்றே உண்மை அமைதியை நிலை பெறுத்தவல்லது. சகோதர நேயம் என்பது தன்னுயிரைப் போல மன்னுயிரைக் கருதும் அன்பேயாகும். அன்பை- நாடு, மொழி, நிறம், இனம், மதம், இன்னபிற கூட்டுதல் அரிது. ஏன்? நாடு, மொழி முதலியன எல்லைக்கு உட்பட்டன. எல்லைக்குட்பட்ட கண்டப்பொருள் கட்டற்ற பரந்த அன்பை எங்ஙனங் கூட்டும்? அவைகளால் ஒவ்வோர் அளவில் கட்டுப்பட்ட அன்பு கூடலாம், கட்டுப்பட்ட அன்பால் அமைதி நிலை பெறாது. ஒருவேளை அதனால் கலகம் விளையினும் விளையும். பரந்த அன்புக்கு, எல்லையற்ற - கட்டற்ற - ஒன்றன் தொடர்பு தேவை. எல்லையற்ற - கட்டற்ற - ஒன்று எங்கு முள்ள இறை யன்றிப் பிறிதில்லை. இறையுடன் தொடர்பு கொள்ளக்கொள்ள, அத் தொடர்பு, தன்னுயிரிலும் மற்ற உயிர்களிலும் உள்ளது ஒன்றே என்னும் உணர்வே நல்கும். எல்லையற்று - கட்டற்று - எங்கும் நீக்கமற நிறைந்துள்ள அகண்டத்தில் அன்பு கொண்ட வரிடம், தம்முயிரைப்போல் மற்ற உயிர்களைக் கருதும் சகோதர நேயம் தானே பிறக்கும். பராபரம் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்து நிற்றலால், அதற்கும் உயிர்களெல்லாம் உறுப்புக்களாகின்றன; ஒருறுப்புக்குத் துன்பம் நேரின், அத் துன்பம் மற்ற உறுப்புக் கட்கும் நேர்தல் இயல்பு. தன் உறுப்புக்களில் எதற்காவது கேடு சூழ அறிவுடைய எவனாதல் நினைப்பனோ? எவனும் நினை யான். எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்கொண்ட ஒருவன் பிறருக்குத் தீங்கு செய்தல் தனக்கே தீங்கு செய்தல் ஆதலை நன்கு உணர்வன். ஆகவே, எங்குமுள்ள பராபரத்துடன் தொடர்பு கொள்வதால், சகோதர நேயம் பிறக்கும் என்பது தெளியற் பாலது. அதனால் உண்மை அமைதி நிலவும். சகோதர நேயத்தால் உலகில் அமைதி நிலைபெறுதல் வேண்டும் என்னும் பெருங்கருணையால், ஆன்றோர், பராபரம் எங்குமுள்ள உண்மையைப் பலபடியாக உலகுக்கு உணர்த்தினர். இப் பேருணர்வு பெருகுதற்குரிய அரசியல், கல்வி, தொழில் முதலியன உலகுக்குத் தேவை. ஆழ்வார் எங்குமுள்ள பரம்பொருளை உணர்ந்து, அதனுடன் ஒன்றித் தாம் அற்று, அதுவாய் நின்றார். அவர் தம்மையும் பிறவற்றையும் அதுவாக் கண்டார். இந்நிலை பெற்ற ஒருவர் எவ்வுயிரைத் தமக்கு வேறாகக் கருதுவர்? அங்ஙனங் கருதுதற்கு இடம் ஏது? இப் பெருநிலை பெறுவோரே சகோதர நேயம் என்னும் ஜீவகாருண்யச் செல்வராவர். யானே என்னை . . யானே நீ என் னுடைமையும் நீயே . . . என்னை முற்றும் உயிருண்டு என்மாய ஆக்கை இதனுள் புகுந்து என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் . .. இன்றென்னைப் பொருளாக்கித் தன்னைஎன் னுள்வைத்தான். . . மாயம் செய்யேல் . . நேசம்செய்து உன்னோடு என்னை உயிர்வே றின்றி ஒன்றாகவே கூசம் செய்யாது கொண்டாய் . . . ஊனில் வாழ்உயிரே . . தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் . . . எனதாவி யுள்கலந்த பெருநல்லுதவிக் கைம்மாறு எனதாவி தந்தொழிந்தேன் இனிமீள்வதென்பதுண்டே எனதாவி ஆவியும் நீ பொழிலேழும் உண்ட எந்தாய் எனதாவி யார்யானார் தந்தநீகொண் டாக்கினையே. பற்ப நாபன் . . . எற்பரன் என்னை யாக்கிக் கொண்டெனக்கே தன்னைத்தந்த கற்பகம் . . உணர்வி லும்பர் . .யானும் தானா யொழிந்தேனே. என்னுடைக் கோவலனே . . உன்னுடைச் சோதிவெள்ளத் தகம்பால் உன்னைக் கண்டு . . என்றைக்கு மென்னை உய்யக்கொண்டு போகிய அன்றைக்கன் றென்னைத்தன் னாக்கிஎன்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை .. தாள்களை எனக்கே .. தோள்களை யாரத் தழுவிஎன் னுயிரை அறவிலை செய்தனன் சோதீ .. ஆறெனக்கு .. எனதாவியும் உனதே .. ஏகமூர்த்தி . . . உன் ஆக முற்றும் அகத்தடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே. மாயனென் . . . காயமும் சீவனுந் தானே . . எல்லாங் கடவுள் என்று ஆழ்வார் மனமார வாயாரப் பாடியுள்ளார். அந் நிலையைப் பலப்பல விதமாக அவர் பாடிப்பாடி மகிழ்கிறார். அவ்வாறு பாடுவதில் அவர்க்குச் சலிப்புத் தோன்றுவதில்லை. ஓரிடத்தில் அவர் - உண்ணும் பொருள் - தின்னும் பொருள் - முதலியனவும் கடவுள் என்று அருளியுள்ளார். உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற் றிலையும் எல்லாம் கண்ணன் எப்பெருமான் என்றென்றே கண்கள்நீர் மல்கி என்று ஆழ்வார் கடவுள் உறவு காட்டுதல் காண்க. உண்ணுஞ் சோறும் பருகும் நீரும் கடவுளாம்! மயிர் சிலிக்கிறது. எம் பெருமக்கள் நிலை என்னே! என்னே! அந்நிலையை எண்ணி எண்ணி அழுகிறேன். உண்ணும் பருகும் என்னுஞ் சொற்கள் என் ஊனை - என் உயிரை - நெகிழச் செய்கின்றன. ஆழ்வார் கடவுளாகக் கொள்ளாத பொருளும் உண்டோ? அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள். எல்லாங் கடவுள் மயமாக உள்ள உண்மைக் காட்சி எப்பொழுது புலனாகும்? இதற்குரிய வழிகள் பல உண்டு. அவைகளுள் ஈண்டு குறிக்கத் தக்கது ஒன்று. அது, புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு ஒழிதல் வேண்டும் என்பது. புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு உள்ள மட்டும் யாண்டுங் கடவுள் உண்மையைக் காண்டல் அரிது. கடவுள் உண்மையை யாண்டுங் காணாத வரை, உயிர்கள் ஐம்புல வேடருக்கு இரையாகிச் சகோதர நேயத்தைச் சிதைத்துக் கொண்டிருக்கும். அகக்கண் திறக்கப்பெறின், ஐம்புலன்கள் நல்வழியில் நின்று, சகோதர நேய ஊற்றைத் திறக்கும். அகவிளக்கத்தால் அகமே புறம் என்னும் உண்மை விளங்கும். புறம் அகம் என்னும் வேற்றுமை உணர்வு கெடப்பெற்ற மெய்யறிஞர்க்கு எல்லாம் கடவுள் மயமாகப் புலப்படுதல் இயல்பு. அவ்வறிஞர்க்கு இன்பமுமில்லை - துன்பமுமில்லை. சுவர்க்கமுமில்லை - நரகமுமில்லை; செல்வமுமில்லை - வறுமையுமில்லை அவர்க்கு எல்லாங் கடவுள்; எங்குங் கடவுள். இந் நிலையை ஆழ்வார் பெற்றமையால், அவர் எவ்வுயிரிலும் இறையைக் காணும் ஜீவகாருண்யச் செல்வரானார். அன்றேநங் கண்காணும் ஆழியான் காருருவம் இன்றேநாம் காணா திருப்பதுவும் - என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து. மனனக மலமற மலர்மிசை எழுதரும் மனனுணர் வளவிலன் பொறியுணர் வவையிலன் இனனுணர் முழுநலம் எதிர்நிகழ் கழிவினும் இனனில னென்னுயிர் மிகுநரை இலனே. நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனதாவியுள்ளே நாக்கு நீள்வன் ஞானமில்லை நாடோறும் என்னுடைய ஆக்கை யுள்ளும் ஆவி யுள்ளும் அல்ல புறத்தி னுள்ளும் நீக்க மின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே. கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும் கோலமில் நரகமும் யானே என்னும் கோலந்திகழ் மோக்கமும் யானே என்னும் கோலங்கொள் உயிர்களும் யானே என்னும் கோலங்கொள் தனிமுதல் யானே என்னும். இத்திருமொழிகளின் நுட்பத்தை உன்னுக. அமைதி வாழ்வுக்குரிய சகோதர நேயத்துக்குத் தமிழ் நாட்டில் நம்மாழ்வார் எவ் விதை விதைத்தார்? பரம் பொருள் எங்கும் உள்ளது என்னும் விதையை ஆழ்வார் விதைத்தார். அவ் விதையினின்றும் எழுந்து வளர்ந்து ஓங்கி அன்பு மரம் நிற்கிறது. அதன் தண்ணிழலில் அமர்ந்து இன்பத்தை நுகர வேண்டுவது மக்கள் கடமை. 4. அட்ட மூர்த்தம் எங்கும் கடவுள் என்பது உண்மை. இது புறம் அகம் என்னும் வேற்றுமை நோக்கு முற்றும் அற்றவர்க்கு நன்கு விளங்கும்; மற்றவர்க்கு விளங்காது. வேற்றுமை அற்ற நோக்கை எப்படி பெறுவது? அதற்குரிய வழி என்னை? வேற்றுமை அற்ற நோக்கைப் பெறுதற்குப் பலப்பல வழிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளுள் எளியது ஒன்று. அது வழிபாடு. வழிபாட்டுக்கு ஏதாவது குறி வேண்டும், எங்கும் கடவுள் என்பது எக்குறியை வழங்கும்? அஃது எதையும் எளிதில் வழங்குதல் அரிது. எங்கும் கடவுளிருத்தலைக் கண்டு, அதை உலகுக்கு உணர்த்திய ஆழ்வார் அவ்வளவில் நின்றாரில்லை. அவர், தாம் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுதல் வேண்டும் என்ற கருணை யுடையவர். மக்களின் பலபட்ட நிலைக்கு ஏற்றவாறு எங்கும் கடவுள் என்னும் உண்மையை, அவர் பலப்பல விதமாக வடித்து முறைமுறையே கிளந்து கூறியுள்ளார். அக் கூற்றுக்களைத் திரட்டிப் பார்த்தால், வழி பாட்டுக்குரிய துறைகள் இனிது புலனாகும். எங்குங் கடவுள் என்னில், எதுவும் எளிதில் நெஞ்சில் படிவ தில்லை. எங்கும் கடவுள் என்பதற்குப் பதிலாகக் கடவுள், மண் - புனல் - தீ - காற்று - வெளி - திங்கள் - ஞாயிறு - உயிர் என்னும் எட்டாக விளங்குகிறது என்னில், இது நெஞ்சில் ஒருவாறு படியுந் தகையதாகிறது இரண்டுக்கும் கருத்தில் வேற்றுமையில்லை. ஆனால் முன்னையதைப் பார்க்கிலும், பினனையது உள்ளத் திற்கு எளிதில் பொருளாதல் கருதற்பாலது. இறையை அட்டமூர்த்தமாகச் சொல்வது இந் நாட்டு மரபு. அட்ட மூர்த்தத்தில் அடங்காததொன்றில்லை. எல்லாம் அட்ட மூர்த்தத்தில் அடங்குதலான், எங்குமுள்ள இறையை அட்ட மூர்த்தி என்று முன்னோர் கூறிப் போந்தனர். அவர் கண்ட உண்மையை ஆழ்வாருங் கண்டு, அதை உலகுக்கு உணர்த்தினார். ஆண்டவன் அட்டமூர்த்தமாக விளங்குவதை ஆழ்வார் ஆங்காங்கே மிக அழகுபடப் பாடியுள்ளார். அவைகளிற் சில வருமாறு: நாழாலமர் .. பாருநீ வானுநீ காலுநீ தீயுநீ நீரும்நீ யாய்நின்ற நீ கண்ணுள்ளே . . மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும் விண்ணுமாய் விரியும் எம்பிரா னையே தளர்வின்றி .. . வளரொளி ஈசனை மூர்த்தியைப் பூதங்கள் ஐந்தை இருசுடரை .. நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய் சீரார் சுடர்கள் இரண்டாய் . . என்றுகொல் சேர்வது . . ...ÃyÚ® எரிகால் விண்உயிர் என்றிவை தாம்முதலா முற்றுமாய் நின்ற எந்தாயோ . . பிறந்த மாயா . . சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே . . ஏகமூர்த்தி இருமூர்த்தி . . . . .ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் . . காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும் காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும் காண்கின்ற வெந்தீயெல்லாம் யானே என்னும் காண்கின்ற இக்காற்றெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும் காண்கின்ற கடல்வண்ண னேறக் கொலோ காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல்லுகேன் காண்கின்ற வென்கா ரிகைசெய் கின்றவே. புகழுநல் லொருவ னென்கோ பொருவில்சீர்ப் பூமி யென்கோ திகழும்தண் பரவை யென்கோ தீயென்கோ வாயு வென்கோ நிகழுமா காச மென்கோ நீள்சுட ரிரண்டு மென்கோ இகழ்விலிவ் வனைத்து மென்கோ கண்ணனைக் கூவு மாறே. மண் , புனல், தீ, கால் முதலிய யாவும் கடவுள் என்று ஆழ்வார் அருளிய மொழிகளைக் கொண்டு, சிலர், மண் முதலியனவே கடவுள் என்றும், அவைகட்கு வேறாகக் கடவுள் என்பதொன்று இல்லை என்றும் கொள்ள முந்தலாம். ஆழ்வார் மண் முதலியவற்றைக் கடவுளாகக் கூறியது, அவ்வப் பொருளை யன்று; அவ்வப் பொருளில் நீக்கமற நிறைந்து, அது அதுவாய், அது அது இயங்கத் துணை புரிவதாயுள்ள கட்டற்ற - சுட்டற்ற - அறிவை என்க. உலகத்தார், மண் முதலியவற்றையே பொருளாகக் கொண்டு, அவைகளில் அத்துவிதமாகக் கலந்துள்ள அறிவை ஆய்ந்து தேறாது இடர்ப்படுவர் என்னுங் கருணை மேலீட்டான், ஆழ்வார் எப்பொருளும் ஆண்டவன் அல்லன் என்றுஞ் சிலவிடங்களில் அறிவுறுத்தினார். மூவுலகங் களுமாய் அல்லனாய் உகப்பாய் . . ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன் காணலும் ஆகான் உளனல்லன் இல்லை அல்லன் பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம் கோணை பெரிதுடைத்தெம் பெம்மானைக் கூறுதலே. இத் திருப் பாடல்களை உற்று நோக்குக. மண் முதலிய வற்றை, மாறுதலற்ற பொருளாகக் கொள்ளாது, அவைகளுள் கலந்துள்ள அறிவையே அப்பொருளாகக் கொள்ளுதல் வேண்டும் என்று தெளிக. அறிவைப் பொருளாகக் கொள்வோர்க்கு வேறொன்றுந் தோன்றுவதில்லை என்னும் வேதாந்த உண்மை யும் ஈண்டு உன்னற்பாலது. இறை, மண் முதலியனவாக இருக்கிறதென்றும், அவையல் லாததாயும் இருக்கிறதென்றும் சொல்லப்படுகின்றன. இவ்விரு விதமும் ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்தனவே. இவை களைக் கொண்டு ஆழ்வார் மாறுகோளுடையார் என்று சிலர் ஐயுறலாம். ஆழ்வார் எவ்வித மாறுகோளும் உடையவரல்லர். இருவிதக் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், ஆழ்வாரது உள்ளக்கிடக்கை புலனாகும். பரம்பொருள் மண் முதலியனவாக விளங்குவது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் நீக்கமறக்கலந்து நிற்றலை உணர்த்துவது பரம்பொருள் மண் முதலியன அல்லாதது என்பது, அப் பொருள் மண் முதலியனவற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் நிற்றலை உணர்த்துவது. ஆகாயம், மண் முதலிய வற்றில் கலந்திருப்பதோடு தனித்தும் இருத்தல் போலப் பரம் பொருளும், உலகெலாமாகியும் வேறாகியும் விளங்குகிறதென்க. நிழல்வெய்யில் சிறுமை பெருமை குறுமை நெடுமையுமாய்ச் சுழல்வன நிற்பன மற்றுமாய் அவையல் லனுமாய் . . . விண்மீ திருப்பாய் மலைமேல் நிற்பாய் கடல்சேர்ப்பாய் மண்மீ துழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்துறைவாய் . . அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான். . பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் பரந்தவண் டமிதென நிலவிசும் பொழிவற கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள்தோறும் கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே. பிறந்த மாயா பாரதம் பொருத மாயா நீயின்னே சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே கறந்த பாலுள் நெய்யேபோ லிவற்றுள் எங்கும் கண்டுகொள் இறந்து நின்ற பெருமாயா உன்னை எங்கே காண்கேனே என்று ஆழ்வார் அருளியிருத்தலை நோக்குக. பரம்பொருள் மண் முதலியனவாகியும் அல்லவாகியும் விளங்குவது என்றெழுந்த ஆன்றோர் மூலமொழிகளினின்றும் துவைதம், கேவலாத்துவிதம், விசிஷ்டாத்துவிதம், சுத்தாத்து விதம் முதலியன பிறந்தன. உலகம் பலவிதமாதலின், இவை யாவும் உலகிற்கு வேண்டற்பாலன. இவைகட் கெல்லாம் பொருளாயிருப்பது ஒன்றே. மெய்யுணர்வு விளங்கும்வரை, ஐயம் திரிபு மயக்கம், மாறி மாறித் தோன்றிப் பலவித உணர்வை எழுப்பிக் கொண்டிருத்தல் இயல்பு. நம்மாழ்வார் திருவாக்கு ஒன்றே. துவைதிக்கு ஒரு விதமாகவும், கேவலாத்துவிதிக்கு வேறொரு விதமாகவும், விசிஷ்டாத்துவிதிக்கு இன்னொரு விதமாகவும், சுத்தாத்து விதிக்கு மற்றொரு விதமாகவும் விளங்குகிறது. ஒரே பூ ஓவிய னுக்கு ஒருவிதமாகவும், தத்துவனுக்கு வேறுவிதமாகவும், தாவரனுக்கு இன்னொரு விதமாகவும், மற்ற மற்றவர்க்கு மற்ற மற்ற விதமாகவும் விளங்குவது இயல்பன்றோ? இதில் வியப் பொன்றுமில்லை. ஆழ்வார் திருவாய்மொழி எல்லார்க்கும் பயன்படு முறையில் எழுந்ததென்க. அத்தகைய சமரச ஞானியைத் தந்த பெருமை நந்தமிழ் நாட்டுக்கே உண்டு. போர விட்டிட் டென்னை நீபுறம் போக்கலுற்றால் பின்னையான் ஆரைக் கொண்டெத்தை அந்தோ எனதென்பதென் யானென்பதென் தீர இரும்புண்ட நீரது போல என்னா ருயிரை ஆரப் பருக எனக் காரா வமுதா னாயே. 5. இயற்கை மண் புனல் முதலியன இயற்கையின் கூறுகள். அவற்றை மண் புனல் முதலியன என்று வகுத்துச் சொல்வதற்குப் பதிலாக இயற்கை என்று தொகுத்துங் கூறலாம். இயற்கை உடல்; இறை உயிர். இறையாகிய உயிர், இயற்கையாகிய உடல் வாயிலாக உயிர்கட்கெல்லாம் நலஞ் செய்கிறது. இயற்கைக்கும் இறைக்கும் உள்ள தொடர்பு, நமது உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது. உடல் புலனாவது. உயிர் புலனாகாதது. புலனாகாத உயிரின் உண்மையை எப்படி உணர்கிறோம்? புலனாகும் உடலைக் கொண்டே புலனாகாத உயிர் உண்மையை உணர் கிறோம். இவ்வாறே உடலாகிய இயற்கையைக் கொண்டு, உயிராகிய இறையின் உண்மையை உணர்தல் வேண்டும். இதனை ஆழ்வார், திடவிசும் பெரிவளி நீர் நிலம் இவைமிசை படர்பொருள் முழுவது மாயவை யவைதொறும் உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே. என்று நுண்மையாக விளங்கியிருத்தலை ஓர்க. இயற்கையை விடுத்து, இறையை உணர்தல் அரிது. இயற்கை வழி இறையை உணரவேண்டி யிருத்தலால், இயற்கையை இறைவடிவாகவும் இறையாகவும் போற்றுதல் ஆன்றோர் வழக்கு. இத்தகைய இயற்கையை வெறுப்பதும் துறப்பதும் அறியாமையாகும். இறை இறை என்று வாயால் முழங்கிச் செயலில் இயற்கையை வெறுத்துத் துறப்பது ஆத்திகமாகாது. இயற்கை கடந்த இறை நிலையும் உண்டு. அது காண்டற் கரியது; மனத்தாலும் உணர்தற்கரியது. மன உணர்வு கடந்த நிலையில் அது விளங்குவது. இலனது வுடையனி தெனநினை வரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன். புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்தஅந் நலனுடை ஒருவனை நணுகினம் நாமே. யாருமோர் நிலைமைய னெனவறி வரியஎம் பெருமான். உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தஇந்நிலைமை உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர் வரிது . . என்றார் ஆழ்வாரும். மனவுணர்வுடையோர், இயற்கையைக் கடந்துள்ள இறை நிலையைப் பற்றி மல்லாட வேண்டுவதில்லை. அவர் இயற்கை வடிவாயுள்ள இறையைக் கருத்திருத்தி வழுத்தவே முயலல் வேண்டும். இவ் வழிபாடு, படிப்படியாக ஓங்கி, மனங்கடந்த தனி உணர்வு நிலையைக் கூட்டும். மனவுணர்வு கடந்து நின்ற ஆன்றோர் பலரும் இயற்கை இறையையே பெரிதும் போற்றினர். இயற்கை கடந்த தனி இறையை மிகச் சிறிது குறிப்பிடுவது அவர்தம் வழக்கம். உலகம், இயற்கையை விடுத்தால், அஃது இறை உண்மையை உணராது இடர்ப்படும் என்ற கருணை மேலீட்டான், ஆன்றோர் இயற்கை இறையையே பெரிதும் உலகுக்கு அறிவுறுத்தலாயினர். இயற்கையைப் போற்றுவதும், இயற்கை இறையைப் போற்றுவதும் ஒன்றே. சில அறிஞர் இறையை இயற்கை என்றே போற்றுவர்; சிலர் இயற்கை வடிவான இறை என்று போற்றுவர். அப் போற்றுதலும் இப் போற்றுதலும் சென்று சேருமிடம் ஒன்றே. ஆகவே, இயற்கையைப் போற்றுவோர் யாவரும் இறையைப் போற்றுவோரேயாவர், இதுபற்றிப் பொதுவாக எனது நூல் பலவற்றிலும் சிறப்பாகச் சன்மார்க்க போதமும் திறவும் என்னும் நூலிலும் விளக்கியுள்ளேன். எல்லாவற்றிற்கும் பிறப்பிடமாய், எங்குமிருப்பதாய் உள்ள வித்தை உணர்ந்த ஆழ்வார் - எங்குமுள்ள அவ்வித்தை எட்டு மூர்த்தமாக உலகுக்கு உரைத்தருளிய நம்மாழ்வார் - இறை வடிவம் இயற்கை என்பதை பலபடப் பாடிப்பாடி, இயற்கையின் மாண்பை இனிது விளக்கினார். ஆழ்வார் இயற்கையில் தோய்ந்து, இறையில் திளைத்து, இறை இன்பம் கொழிக்க இயற்கைப் பாக்களைத் தமிழில் பொழிந்தார். அவர் பாக்களில் எங்கும் இயற்கை; எங்கும் இறை; எங்கும் இயற்கை இறை. ஆழ்வார் அருளிய இயற்கைப் பாக்களை நோக்குவோம். அவைகளில் பூக்கள் மலர்கின்றன! ஞாயிறு வெயில் வீசுகிறது; திங்கள் அமுதம் பொழிகிறது; சோலை மணங்கமழ்கிறது; மலைகள் நிற்கின்றன. மேகங்கள் தவழ்கின்றன; பறவைகள் பறக்கின்றன; ஆநிரைகள் மேய்கின்றன; ஆயர்கள் ஆடுகி றார்கள்; குழலோசை கேட்கிறது; உயிர்கள் உலவுகின்றன; உலகம் புலனாகிறது. இஃதென்ன அருமை! ஒருவர் பாக்களில் இவ்வளவு பொருள்! சொற்புலவோர் இயற்கைக் கூறுகளை வருணிப்பது வழக்கம். அவர்கள் பாக்களில் சொற்களைக் காணலாம்; பொருள்களைக் காண்டல் அரிது. நம்மாழ்வார் பாக்களிலோ பொருள்கள் பொலிகின்றன. அப் பொருட்கண் அறிவு செறிந்து, அன்பு நிறைந்து, இன்பம் பிலிற்றுகிறது. இவ்வுண்மை என்னை? நம்மாழ்வாரை அடைவோம். நம்மாழ்வார் - பூ, ஞாயிறு, திங்கள், மலை முதலிய அவ்வப் பொருள் வடிவாகப் புறக் கண்களால் மாத்திரங்கண்டு, அவை களைப் பாக்களாகப் பாடினாரில்லை. அப்பொருட்களின் ஊடே கலந்துள்ள ஓர் அகண்டாகாரப் பேரறிவை ஆழ்வார் தமது அகக்கண்ணால் கண்டு, அதனைப் பாக்களாகப் பாடினார் என்பது தெரியவருகிறது. அக் காட்சி முதிர்ச்சியால், தமது அகத்துள்ள அறிவும், புறத்துள்ள அறிவும், ஒன்றுபட்டு ஊற்றிய இன்பக் குழம்பே ஆழ்வார் பாக்கள் என்னலாம். ஆழ்வார் கொண்ட பூவும், ஞாயிறும், திங்களும், பிறவும் ஆண்டவன் வடிவங்கள். அவர் பூ முதலியவற்றை இறைவனாகவே வழிபட்டுப் பாக்களை அருளினார். நம்மாழ்வார் இயற்கை வாயிலாகக் கடவுளைக் கண்டு, அக்கடவுள் தம்முள்ளத்துள்ள செம்பொருள் என்பதை உணர்ந்து, எல்லாம் கடவுள் மயம் என்னும் உண்மையை உலகுக்கு அறிவுறுத்திய பாக்கள் பல. அவற்றுள் சில வருமாறு: பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலரென்றும் காண்டொறும் - பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரானுருவே என்று. பெய்வளைக் கைகளைக் கூப்பிப் பிரான்கிடக் குங்கட லென்னும் செய்யதோர் நாயிற்றைக் காட்டிச் சிரீதரன் மூர்த்தியீ தென்னும் நையுங்கண் ணீர்மல்க நின்று நாரண னென்னுமன் னேஎன் தெய்வ வுருவில் சிறுமான் செய்கின்ற தொன்றறி யேனே. அறியும்செந் தீயைத் தழுவி அச்சுத னென்னும் மெய்வேவாள் எறியும்தண் காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்த னென்னும் வெறிகொள் துழாய்மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்ற தென் கண்ணுக் கொன்றே ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும் நின்றகுன் றத்தினை நோக்கி நெடுமாலே வாவென்று கூவும் நன்றுபெய் யும்மழை காணில் நாரணன் வந்தானென் றாலும் என்றின மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத் தையே, கோமள ஆன்கன்றைப் புல்கிக் கோவிந்தன் மேய்த்தன என்னும் போமிள நாகத்தின் பின்போய் அவன்கிடக் கையீ தென்னும் ஆமள வொன்று மறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால்செய்து செய்கின்ற கூத்தே. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே யென்னும் உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தானென்று துள்ளும் கருவுடைத் தேவில்க ளெல்லாம் கடல்வண்ணன் கோயிலே யென்னும் வெருவிலும் வீழ்விலு மோவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே விரும்பிப் பகைவரைக் காணில் வியலிட முண்டானே என்னும் கரும்பெரு மேகங்கள் காணில் கண்ணனென் றேறப் பறக்கும் பெரும்புல ஆநிரை காணில் பிரானுள னென்றுபின் செல்லும் அரும்பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின் றானே. இத் திருப் பாடல்களில் இறைவன் உறைவதை யான் எடுத்துக்காட்ட வேண்டுவதில்லை. இவை என் மனத்துக்கு அமுதாகின்றன. ஆழ்வார் இயற்கையைக் கண்டு மகிழ்கிறார். அதன்கண் ஆண்ட வனைக் காண்கிறார்; இன்புறுகிறார். அவர் நிலை என்னே! என்னே! இதுதான் ஆழ்வார் கண்ட தமிழ் நாடோ? என்னருமைத் தமிழ்நாடே! ஆழ்வார்க்குக் கடவுளாகத் தோன்றியபூ, ஞாயிறு, திங்கள், மலை, கடல் முதலியன இப்பொழுது எவ்வாறு காணப்படுகின்றன? அவைகளைக் கடவுளாகக் காட்டுங் கல்வி இப்பொழுது போதிக்கப்படு கிறதோ? அந்நாளில் கடவுள் கல்வி கற்பிக்கப்பட்டது. கற்குங் கல்வியெல்லாங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரானென்றே என்றும், உரைப்பெல்லாம் - நின்னன்றி மற்றிலேன் கண்டாய் என்றும் நம்மாழ்வார் ஓதியிருத்தல் காண்க. மணிவண்ணன் கல்வி இப்பொழுது எங்கே? கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்னுங் கல்வியன்றோ இப்பொழுது போதிக்கப்படு கிறது? காலக் கொடுமையோ? எமது தீவினையோ? தெரிய வில்லை. இந்நாளில் இயற்கையை இறைவனாகக் காண்போர் எத்துணைபேர்? தாய் தந்தையரைக் கடவுளாக வழிபடுவோர் எத்துணை பேர்? பூவைக் கண்டதும் எம்பிரான் திருமுகம், எம்பிரான் திருக்கரம், எமதையன் திருமேனி, எமதையன் திருவடி என்று போற்றுவோர். எத்துணைபேர்? கடலைக் கண்டதும் கடவுளைக் கருதுவோருளரோ? மலையைப் பார்த்ததும் மாயோன் என்று ஓடுவோருளரோ? கருமேகத்தை நோக்கினதும் கண்ணனென்று ஆர்ப்பரிப்பாருளரோ? ஞாயிற்றைக் காட்டி சீதரன் என்று சொல்வோரைக் காணோம். திங்களைச் சுட்டி மணிவண்ணா என்று மகிழ்வோரைக் காணோம். கோக்களைக் கோபாலா என்று தழுவுவோரில்லை. குழலோசையைக் கேட்டுக் கோவிந்தா என்று கூத்தாடுவோரில்லை. தமிழ் நாடே! நம்மாழ்வாருக்கு வழங்கிய காட்சியை இப்பொழுது வழங்காயோ? அந்தோ! தமிழ் நாட்டின் உருக்குலைந்துவிட்டதே! என் செய்வோம்! நம்மாழ்வார் - பூ, மேகம், வண்டு, பறவை முதலியவற்றைப் பார்த்துப் பார்த்து, ஆண்டவனை நினைந்தும் அழைத்தும் வழுத்திய திரு வாக்குகள் உள்ளத்தைக் குழையச் செய்கின்றன. மேகங்க ளோவுரை யீர்திரு மால்திரு மேனியொக்கும் யோகங்க ளுக்களுக் கெவ்வாறு பெற்றீர் உயிரளிப்பான் மாகங்க ளெல்லாம் திரிந்துநன் னீர்கள் சுமந்து நுந்தம் ஆகங்கள் நோவ வருத்தும் தவமா மருள்பெற்றதே. என்றும், வண்டுக ளோவம்மின் நீர்ப்பூ நிலப்பூ மரத்தி லொண்பூ உண்டுக ளித்துழல் வீர்க்கொன் றுரைக்கியம் ஏனமொன் றாய் மண்துக ளாடி வைகுந்தமன் னாள்குழல் வாய்விரைபோல் விண்டுகள் வாரும் மலருள வோநும் வியலிடத்தே என்றும், அஞ்சிறைய மடநாராய். . . என்றும், விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள் . . . என்றும், பூவைபைங் கிளிகள்பந்து தூதைபூம் புட்டில்கள் யாவையும் திருமால் திருநாமங்க ளேகூவி யெழும் . . என்றும், இன்னுயிர்ச் சேவலும் நீரும் கூவிக்கொண்டு இங் கெத்தனை என்னுயிர் நோவ மிழற்றேல் மின்குயில் பேடைகாள் என்னுயிர்க் கண்ண பிரானை நீர்வரக் கூவுகிலீர் . . . என்றும், ஆழ்வார் இயற்கைப் பொருள்களை விளித்து ஆண்ட வனை வழுத்தியிருத்தல் காண்க. இது காலை, நமது நாட்டில் பறவை முதலியவற்றை நோக்கிப் பாடுவோருளரோ? பறவைகளும் வாடுங்கால மன்றோ இக்காலம்? பறவைகளுக்கே மகிழ்ச்சியில்லை எனில் பாடு வோர்க்கு மகிழ்ச்சி ஏது? பாட்டென்பது மகிழ்ச்சியின் பொங்க லன்றோ? பறவைகளே! உங்களைக் கூவிக் கூவிக் கடவுளைப் பாடுவோர் இப்போது இல்லை. உங்கள் முன்னோரை நம்மாழ்வார் பாடியிருக்கிறார்! அழைத்திருக்கிறார்; தூது கொண்டிருக்கிறார். இப்பொழுதோ? *** உங்கள் தலை எழுத்தோ? எங்கள் தலை எழுத்தோ? தெரியவில்லை. இவ்வாறு நம்மாழ்வார் இயற்கை வாயிலாக் கடவுளைக் கண்டு மகிழ்ந்து பாடிய முறையால் தமிழ் நாட்டைவளர்த்தது கருதற்பாலது. இயற்கை உடல் இறை உயிர் என்பதை ஆழ்வார் இன்னும் எத்தனை எத்தனையோ விதம் விதமாக விளக்கி யுள்ளார். அவைகளில் இங்கே ஒன்று சிறப்பாகக் குறிக்கத் தக்கது. அஃது ஆழ்வார் முன்னே இயற்கையை வருணித்துப் பின்னே மூர்த்தியைப் போற்றுவது. இதன் நுட்பம் என்னை? திருப்பதிகளில் மூர்த்தி எழுந்தருளி யிருக்கிறார். அம் மூர்த்தியைப் பெரிதும் சோலையோ ஆறோ பிறவோ சூழ்ந்திருக்கும். இயற்கை வளம் மிகுந்துள்ள இடங்களிலேயே பண்டை நாளில் பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. இயற்கை உடல் என்பதும். இறை உயிர் என்பதும் மேலே விளக்கப்பட்டன. இவ்வுண்மையை உள்ளத்திற்கொண்டு, இயற்கை வளஞ்சூழ்ந்த திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள மூர்த்தியைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். சிந்தித்துப் பார்க்க பார்க்க, இயற்கை உடல் இறை உயிர் என்னும் உண்மைக்கு, இயற்கை வளஞ் சூழ்ந்த இடத்தில் மூர்த்தி எழுந்தருளியிருப்பது ஒருவித அறிகுறி என்பது புலனாகும். இயற்கைஉடல் - இறை அதன் உயிர் என்பதை உணர்த்துதற்குத் திருக்கோயில்கள் சிறந்த இலக்கியங்களாகவும் படங்களாகவும் பொலிதருகின்றன. நம்மாழ்வார், இயற்கை உடல் இறை உயிர் என்னும் உண்மையை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிந்தவர். அவர் அவ் வுண்மையைச் சீரிய செந்தமிழ்ப் பாக்களால் உலகுக்கு உணர்த்துகிறார். ஆழ்வார் திருப்பதிகட்குச் செல்லும்போது முதலில் இயற்கை வளம் காட்சியளிக்கும். அதனை அவர் இறையின் மேனியாக் கருதி வருணிப்பர். பின்னே உயிராகிய மூர்த்தியைப் போற்றுவர். சொன்னால் விரோதம் . . . . தென்னா தெனாவென்று வண்டு முரல் திரு வேங்கடத்து என்னானை . . ஆரா அமுதே . . சீரார் செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் . . . மானேய் நோக்கு நல்லீர் . . . வானார் வண்கமு கும்மது மல்லிகை கமழும் தேனார் சோலைகள் சூழ்திரு வல்லவா ழுறையும் கோனாரை . . . என்றுகொல் தோழிமீர் . . . . . . . . . . பொன்திகழ் புன்னைமகிழ் புதுமா தவிமீ தணவி தென்றல் மணங்கம ழும்திரு வல்லவாழ் நகருள் நின்ற பிரான் . . . . . . நிச்சலும் . .. - பச்சிலை நீள்கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சணி மாடங்கள் மீதண வும் தண் திருவல்லவாழ் நச்சர வின்அணை மேல்நம் பிரானது நன்னலமே. காண்பதெஞ் ஞான்று . . பாண்குரல் வண்டினொடு பசுந்தென்றலு மாகியெங்கும் சேண் சினை யோங்குமரச் செழுங்கா னல்திருவல்ல வாழ் மாண்குறள் கோலப்பிரான் . . பாதங்கள் . . ஓத நெடுந் தடத்துள் உயர்தா மரைசெங் கழுநீர் மாதர்கள் வாண்முகமும் கண்ணுமேந்தும் திருவல்லவாழ் நாதனிஞ் ஞாலமுண்ட நம்பிரான் தன்னை . . நாடொறும். . . ஆடுறு தீங்கரும்பும் விளைசெந் நெலுமாகி எங்கும் மாடுறுபூந் தடஞ்சேர் வயல்சூழ் தண்திரு வல்லவாழ் நீடுறை கின்ற பிரான் . . கழல்வளை . . குழலென்ன யாழுமென்னக் குளிர்சோலையுள் தேனருந்தி மழலை வரிவண்டுகள் இசைபாடும் திரு வல்லவாழ் சுழலின் மலிச்சக்கரப் பெருமான் . . உணர்த்த லூடல் . . திணர்த்த வண்டல்கள்மேல் சங்குசேரும் திருவண்வண்டூர் புணர்த்த பூந்தண்டுழாய் முடிநம் பெருமானை . . நோக்கும் பக்கமெல் லாம்கரும்பொடு செந்நெ லோங்கு செந்தாமரை வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை வண்துலை வில்லி மங்கலம் . . காலம் பெற . . கோலச்செந் நெற்கள் கவரிவீசுங் கூடுபுனல் திருப் பேரை யிற்கே. எளிதாயின . . கிளிதா வியசோலை கள்சூழ் திருப்பேரான் . . . உண்டுகளித் . . வண்டுகளிக்கும் பொழில்சூழ் திருப்பேரான் . . ஆழ்வார் திருவாக்கினின்றும் பிறந்த இத் திருமொழிகளில் இயற்கை இறைமணங் கமழ்தலைத் தேர்க. இயற்கை இன்பத் துறைகளுள் தலையாயது பெண் ணின்பம். பெண்ணின்பத்தைத் துறப்பது, இயற்கை இன்பத்தைத் துறப்பதாகும். இயற்கை இன்பத்தைத் துறத்தல் இறை இன்பத்தைத் துறத்தலாகும். இயற்கை அமைப்பைக் கூர்ந்து நோக்கி, அதன்வழி ஒழுகினால், இறை இன்பத்துக்கு ஊற்றா யிருப்பது பெண்ணின்பமென்பது நனி விளங்கும். இப்பெற்றி வாய்ந்த பெண்ணின்பத்தைத் துறத்தல் வேண்டு மென்றும், அத் துறவு பேரின்பத்தைக் கூட்டுமென்றும் ஓரிழிந்த கொள்கை இடைக்காலத்தில் உலகிடை நுழைய லாயிற்று. அக் கொள்கையைப் பின்னவர், பெரியோர் உரைகள் மீது ஏற்றிவிட்டனர். இஃது அறியாமை. பெண்மை துறக்கத் தக்கதாயின், அஃது இயற்கையில் அமைய வேண்டுவதில்லை. இயற்கை, பெண் ஆண் மயமா யிருத்தல் கண்கூடு. இயற்கை, பெண் ஆண் மயமாயிருத்தலால், அதன் உயிராகிய இறையும் அம் மயமாயிருத்தல் வேண்டும் இயற்கை வழி இறை உண்மையை உணர்ந்த ஆன்றோர், இறை யின்பால் பெண் ஆண் கூறு இத்தலை உலகுக்கு உரைத்தனர். இவ்வுண்மை கண்ட நாடு நமது நாடு. இப் பெரு நாடு இப்பொழுது எந்நிலையிலிருக்கிறது? பெண்ணைத் துறந்தால் பேரின்பகுத்துக் வழியுண்டாகும் என்னுஞ் சோம்பேறி ஞானம் பேசி, அடிமை இருளில் அது வீழ்ந்து கிடக்கிறது. பெண்மை இல்லையேல் உலகம் ஏது? தாய்மைக்கு இடம் ஏது? தாயைப் பழித்த பாவம் நாட்டைச் சூழ்ந்து நிற்கிறது. இது குறித்துப் பெண்ணின் பெருமை முதலிய நூல்களில் விரித்துக் கூறி யுள்ளேன். நம்மாழ்வார் இறையருள் பெற்றவர்; இறையை யுணர்ந்தவர். இயற்கை வடிவாக இறை பொலிவதைக் கண்டவர்; இயற்கையின் பெண்மையும் ஆண்மையும் அதன் உயிராயுள்ள இறையினிடத்தும் இருத்தலைத் தெளிந்தவர். அதனால் எல்லாப் பெண்மைக்கும் ஆண்மைக்கும் வித்தாயுள்ள இறையின் பெண்மையைத் தாய் என்றும், அதன் ஆண்மையைத் தந்தை என்றும் அவர் பாடலானார். பெற்றதாய் நீயே பிறப்பித்த தந்தை நீ . . மாயோனிகளாய். . . . .எல்லாம் எவ்வுயிர்க்கும் தாயோன் . . நீயும் நானும் . . தாயும் தந்தையு மாயிவ் வுலகினில் வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே. ஒத்தார். . அத்தாயாய்த் தந்தையாய் அறியாதன அறிவித்த அத்தா . . போகின்ற . . தாய் தந்தை உயிர் ஆகின்றாய் . . மேலாத் . . மேலாத் தாய் தந்தையு மவரே . . வந்தருளி . . முந்தைத்தாய் தந்தையே முழுவே ழுலகமுண்டாய் . . சிந்தையாலும் . . தேவபி ரானையே தந்தை தாயென் றடைந்த வண்குருகூரவர் சடகோபன் . . இறையின் பெண்மை நலந்துய்க்க உயிர்கள் பெண்ணலம் பேணுதல் வேண்டும். பெண்ணலம் பேணப் பேணப் பெண்மை பரிணமிக்கும். பெண்மையாவது, பொறாமை முதலிய தீநீர்மைகள் ஒழிந்து, பொறுமை முதலிய நன்னீர்மைகளைப் பெறுவது - அதாவது அருள்நிலை பெறுவது. இப் பெண்மை பெறாதவர் மாக்களாக உலகில் வாழ்ந்து பிறர்க்குத் தீங்கு விளைத்த வண்ண மிருப்பர். அவரைப் பண்படுத்தவல்லது இறையின் பெண்மைக் கூறாகும். ஆழ்வார் இறைவனது பெண்ணலந் துய்த்துப் பெண்மை நிலை எய்திப் பேறுபெற்றவர். இதற்கு அவர் தம் அருட்டிருப் பாக்களே சான்று கூறும் நம்மாழ்வார் பாக்களில் அகத்துறை நலம் கமழ்தல் கருதற்பாலது. பொதுவாக அவர்தம் பாக்களில் பலவற்றிலும் - சிறப்பாக அவர்தம் திருவிருத்தத்திலும் அகத்துறை நலங் கமழ்தல் வெள்ளிடைமலை. அந் நலம்பட ஆழ்வார் எற்றுக்குப் பாடினார்? உலகம் அந் நலம் பெறுதல் வேண்டு மென்பது அவரது உள்ளக்கிடக்கை. இடைநாளில் பெண்ணைப் பற்றிய சிறுமைகள் பல உல கிடைப் பரவின. இதற்குப் போலிச் சந்நியாசிகளும் போலி ஞானிகளுமே காரணர்களாவார்கள். இவர்கள் பெண்ணை மாயை என்றும், பெண் பிறவிக்கு வீடு பேறில்லை என்றும், பெண்ணைத் துறந்தால் பேரின்பம் விளையும் என்றும் பல கதைகளைக் கட்டி விட்டார்கள். அக் கதைகளால் உலகம் கெடலாயிற்று. அக் கேட்டினை ஒழிக்கவே ஆங்காங்குப் பெரியோர் தோன்றினர். அவருள் ஒருவர் நம்மாழ்வார். நம்மாழ்வார் தாம் நுகர்ந்த இறையின்பத்தை அகத்துறைப் பாக்களாக வார்த்து உலகுக்கு உதவினார். அப் பாக்களில் தமிழ்ப் பெண்மை தாண்டவம் புரிகிறது. திண்பூஞ் சுடர்நுதி நேமியஞ் செல்வர் விண்ணாடனைய வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம் இவையோ கண்பூங் கமலம் கருஞ்சுட ராடிவெண் முத்தரும்பி வண்பூங் குவளை மடமான் விழிக்கின்ற மாயிதழே. மாயோன் வடதிரு வேங்கட நாடவல் லிக்கொடிகாள் நோயோ உரைக்கிலும் கேட்கின் றிலீர் உரையீர் நுமது வாயோ அதுவன்றி வல்வினை யேனும் கிளியுமெள்கும் ஆயோ அடுந்தொண்டை யோஅறை யோவி தறிவரிதே. அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும் இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர் ஈங்கோர் பெண்பால் பொருளோ வெனுமிகழ் வோஇவற் றின்புறத் தாளென் றெண்ணோ தெருளோம் அரவணை யீர்இவள் மாமை சிதைக்கின்றதே. பண்டும் பலபல வீங்கிருள் காண்டும் இப்பாயிருள்போல் கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம் காளவண்ண வண்டுண் துழாய்ப் பெருமான்மது சூதனன் தமோதரன் உண்டு முமிழ்ந்தும் கடாயமண் ணேரன்ன ஒண்ணுதலே. வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன தாமிவையோ கண்ணன் திருமால் திருமுகன்தன் னொடும்காதல் செய்தேற் கெண்ணம் புகுந்தடி யேனொடிக் கால மிருக்கின்றதே. காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு அசுரைச்செற்ற மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர் தூவியம் பேடையன் னாள்கண்களாய துணைமலரே. கண்டுகேட் டுற்றுமோந் துண்டுழலும் ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக் கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேன் உன் திருவடியே. பலபலவே யாபரணம் பேரும் பலபலவே பலபலவே சோதி வடிவுபண் பெண்ணில் பலபல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம் பலபலவே ஞானமும் பாம்பணைமே லாற்கேயோ . உகவை யால்நெஞ்ச முள்ளு ருகியுன் தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால் தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடுசிறு சோறுங் கண்டுநின் முகவொளி திகழ முறுவல் செய்து நின்றிலையே. இத் தமிழ்ப் பெண்மையில் தோய்ந்து தமிழ்ப் பெண்மை பெறுக. இயற்கை, இறையின் உடலாகலான், அஃது இன்பமுடை யது என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அத்தகைய ஒன்றை வெறுத்துத் துறப்பது இறைநெறி நிற்பதாகாது. இக்கால உலகம் பெரிதும் இயற்கையினின்றும் வழுக்கிக் செயற்கையிலே வீழ்ந்து கிடக்கிறது. அதனால் அஃது உற்றுவருந் துன்பத்துக்கு ஓர் அள வில்லை. இப்பொழுது உலக முழுவதும் குழப்பமாயிருத்தல் கண்கூடு. அக் குழப்பம் எப்படி ஒழியும்? உலகம் இயற்கைவழி நிற்பதாயின், குழப்பம் ஒழிதல் திண்ணம். ஆழ்வார் தமிழில், இயற்கை நெறிமிக அழகுபடப் பொலிகிறது. அந் நெறி நிற்பதற்குக் கட்டில்லை; காவலில்லை. அந் நெறியில் உலகம் ஏன் நிற்றல் கூடாது? நிற்க எழுக! எழுக! உலகமே எழுக! 6. உருவம் எங்கும் இறை என்பது மனத்துக்குப் பொருளாமாறு, அதனை அட்டமூர்த்தம் என்றும், இயற்கை இறை என்றும் விளக்கிய அவ்வளவில் ஆழ்வார் நின்றாரில்லை. அவர் மேலுஞ் சென்றனர். இயற்கை இறையை உருவமாகவும் அவர் அருளி யுள்ளார். அது சிலர்க்குப் பிடிப்பதில்லை. இறை எங்கும் உள்ளது என்று அருளிய ஆழ்வாரே, இறையை உருவமாகவும் அருளியுள்ளாராதலின், அவர்தம் உட்கிடக்கையை உணர முயல வேண்டுவது அறிஞர் கடமை. ஆழ்வாரது உட்கிடக்கை முற்றும் என்போன்றார்க்கு விளங்குதல் அரிதே. ஆயினும் இயற்கை இறைவழி நின்று, ஒல்லும் வகையாதல் உண்மை காண முயல்கிறேன். முயற்சி அளவில் இயற்கை இறை துணை செய்யாமற் போகாது. இறையை நேரே மனவுணர்வின் உணர்தல் இயலாது. இறையை உணர்தற்கு இயற்கையின் துணை தேவை. இயற்கை வழி நின்று இறையை உணர்தல் வேண்டும் என்பதும், இயற்கையை விடுத்து இறையை உணர்தல் இயலாது என்பதும் முன்னே விளக்கப்பட்டன. காவியர் ஓவியர் முதலியோர் இறையின் உடலாகிய இயற்கைக் கோலங்களைப் பாக்களாக எழுதியும், ஓவியங்களாக வரைந்தும் வடித்தும் இன்புறுவது வழக்கம். அவர்தம் பாக்களிலும் ஓவியங்களிலும் இயற்கைக் கோலங்கள் படிகின்றன. அப் படிவுகளால் இயற்கைப் படங்கள் முகிழ்க்கின்றன. அப் படங்களின் கூறுகளைச் சிந்தையாற் பெருக்கிப் பெருக்கிப் பார்த்தால், அவைகள் இயற்கைக் கோலங் களாக முடிதல் காணலாம். வெறும் எழுத்தும், கீறலும், சாந்தும், பிறவும் படங்களாகா. அவ்வெழுத்து முதலியவற்றில், காவிய ஓவியர் அறிவில் படிந்து இறங்கி அமையும் இயற்கைக் கோலமே படம் என்னும் பெயர் பெறுகிறது. இயற்கைப் படங்களி னின்றும் உருவங்கள் பிறக்கின்றன. அவ் வுருவங்கள் இயற்கைக் கோலங்களின் அறிகுறிகள் என்பதை மறத்தலாகாது. இதைப் பற்றி முருகன் அல்லது அழகு என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். அதையே ஈண்டு மீண்டுங் கூற வேண்டியதில்லை. விரிவு ஆண்டுக் காண்க. தொடக்கத்தில், உருவம், இயற்கை இறையை நினை வூட்டும் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. நாளடைவில் அதற்கு வழிபாடு ஏற்பட்டது. இயற்கை இறை நினைவின்றி, உருவத்தையே பொருளாகக் கொண்டு, அதையே நினைந்து நினைந்து செய்யப் படும் வழிபாடு தவறுதலுடையது. அவ் வழிபாடு விக்கிரக ஆராதனையின்பாற் பட்டது. உருவத்தைப் பொருளாகக் கொள்ளாது, அவ்வுருவம் உணர்த்தும் தத்துவத்தைப் பொரு ளாகக் கொண்டு, செய்யப்படும் வழிபாட்டுக்கு அர்த்தம் உண்டு. அது நாளடைவில் இயற்கை இறையை உணர்த்துவதாகும். தத்துவ உணர்வின்றி, வெறும் உருவத்தை மட்டும் வழிபடுவது, இயற்கை இறையை உணர்த்துவதாகாது. காவியத்தின் வழியும் ஓவியத்தின் வழியும் பிறந்த வடிவங்கள் பலப்பல; அவ் வடிவங்களினின்றும் எழுந்த புராணக் கதைகளும் பலப்பல. தொடக்கத்தில் அவைகள் இயற்கைத் தத்துவ நுட்பங்களுக்கு அறிகுறிகளாகக் கொள்ளப்பட்டன. பின்னே காவியம் ஓவியம் புராணம் என்னும் பெயர்களால் பலப்பல ஆபாசங்கள் தோன்றிக் குவிந்தன. அவ்வாபாசங்கள் இயற்கைத் தத்துவத்துக்கு அடங்காதனவாய்க் கிடக்கின்றன. அவைகளால் நாடு பல வழியிலும் பாழ்படுகிறது. இங்கே இயற்கைத் தத்துவத்துக்கும் பொருளாகிப் பொருந்தும் சில வடிவங்களை நோக்குவோம்; அவைகளை ஆழ்வார் திருப் பாடல்வாயிலாக நோக்குவோம். தம்பாலாப் . . பல்லுருவை எல்லாம் படர்வித்த வித்தாஉன் தொல்லுருவை யாரறிவார் சொல்லு. எல்லாவற்றிலும் நீக்கமற நின்று, அதை அதை உருப்படுத்தும் இறை, சித்தாய்(அறிவாய்)ப் பொலிவது. அதுவே அதன் தொல் லுருவம்; அழியா உருவம். அது வாக்கு மனங்கட்கு எட்டாதது. இறைவனைக் காண்டற்கரியன் என்று ஆழ்வார் பலவிடங்களில் அருளியுள்ளார். வாக்கு மனங்கடந்த முழுமுதற் பொருளை வாக்கு மனமுடையார் எப்படி வழிபடுவது? இதற்கு இயற்கைவழி பாடென்றும், இயற்கைப்பட வழிபாடென்றும் இரண்டு ஏற்பட்டிருக்கின்றன. இயற்கைப்பட வழிபாடு, இயற்கை இறையை உணர்த்தும். இயற்கை வழிபாடு தனித்த இறையை உணர்த்தும். கண்ணுஞ்செந் தாமரை கையும் அவைஅடி யோஅவையே வண்ணம் கரியதோர் மால்வரை போன்று மதவிகற்பால் விண்ணும் கடந்தும்ப ரப்பால்மிக் குமற்றெப் பால்யவர்க்கும் எண்ணு மிடத்ததுவோ எம்பி ரான தெழில்நிறமே. இத் திருவாக்கை நெஞ்சிற் கொள்வோம். கண்ணும் செந்தாமரை - கையும் அவை - அடியோ அவையே - வண்ணம் கரியதோர் மால் வரை. . -இஃதோர் இயற்கைப் படம். கண்ணும் கையும் அடியும் செந்தாமரை. மேனி கரியது; மால் வரை போன்றது. கரிய நீலமேனியில் செந்தாமரைக்கண்; செந்தாமரைக் கை; செந்தாமரை அடி. கருநீலத்தில் செம்மை மலர்வது அழகிய தன்றோ? வானளாவிய நீலமலை; அதன் முடியிலும் நடுவிலும் அடியிலும் செவ்விய தாமரைக்காடு. இக் காட்சியை நோக்கு வோம். இது புலன்களுக்கு விருந்தாகிறது. இதில் இயற்கை அன்னையின் எழில் மணம் வீசுகிறது. அவ்வெழிலில் நெஞ்சம் படிகிறது; திளைக்கிறது; எழுகிறது; அதை முன்னுகிறது. அழகுத் தோற்றம் மனத்தில் படமாகிறது படம் பாவலர்க்குப் பாட்டா கிறது; ஓவியர்க்கு ஓவியமாகிறது. பாட்டும் ஓவியமும் இயற்கையின் அமைவு அல்லவோ? பாட்டும் ஓவியமும் தம்பால் ஈடுபடுவோரைப் பாலம்போல நின்று, இயற்கை அன்னையுடன் சேர்க்கின்றன. இயற்கை அன்னை என்ன செய்கிறாள்? தன்பால் அணைந்த ஆருயிர்களைத் தன் வயப்படுத்தி, அப்பனாம் இறையி னிடஞ் சேர்க்கிறாள். அதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை. அது சொல்லற்கரியது. சொல்லற்கரிய நிலை, பாட்டின் பின்னிரண் டடியில் திகழ்கிறது. விண்ணும் கடந்தும் பரப்பால் மிக்கு மற்றெப்பால் யவர்க்கும், எண்ணுமிடத்தவோ எம்பி ரான தெழில் நிறமே என்பது வாக்கு மனங் கடந்த இறை நிலையை உணர்த்துவது. இறை நிலையையும், அதன் நிறம் கோலம் முதலியவற்றின் நுட்பத்தையும், நிறமுயர் கோலமும் பேரு முருவும் இவையிவையெள்று அறமுயல் ஞானச் சமயிகள் பேசிலும் அங்கங் கெல்லாம் உறவுயர் ஞானச் சுடர்விளக் காய்நின்ற தன்றி ஒன்றும் பெறமுயன் றாரில்லை யால்எம் பிரான் பெருமையையே. என்று ஆழ்வார் விளக்கியுள்ளதைச் சிந்தித்துப் பார்க்க; சிந்தித்துச் சிந்தித்து உண்மை தெளிக. உலகிலுள்ள சமயங்கள் பல. அவ்வச் சமயத்தார் இறைவனை உணர்தற்குத் தத்தம் வழக்க வொழுக்கங்கட்கேற்ப இறைக்கோலம் பேர் உரு முதலியன வழங்குகின்றனர். அக் கோலம் முதலியன இறையை உணர்த்தும் அறிகுறிகளேயன்றி, அவைகளே இறை அல்ல. இறைக்கெனக்கோலம் முதலியன இல்லை. இறை ஞான மயமாயிருப்பது. அது பலவாறு மக்களால் கொள்ளப்படுகிறது. அக்கொள்கைகளின் தத்துவங் களைக் காண முயல்வது அறிவுக்கழகு. தத்துவ வழியில் உணரத்தக்க இறைநிலைகளை ஆழ்வார் அழகுபட அருள்கிறார். எடுத்துக்காட்டுக்கு இங்கே ஒரு பாட்டைக் கொள்வோம். உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும் எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்எரி நீர்வளிவான் மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள் கண்ணாய் அருவினை யேன்உயி ராயின காவிகளே. இத் திருமொழியைப் பார்க்கப் பார்க்க இறையின் மூன்று நிலைகள் புலனாகும். (1) உண்ணா துறங்காதுணர்வுறும் எத்தனையின் தனிநிலை. (2) எரி நீர் வளிவான், மண்ணாகிய எம்பெருமான். . யோகியர்க்கும், எண்ணாய் மிளிரும் இயல்பின வாம் - இஃது இறை, இயற்கையை உடலாகக் கொண்ட நிலை. (3) எம்பெருமான் தனது வைகுந்த மன்னாள் கண்ணாய் . . - இஃது இயற்கை இறையின் கோலப் படத்தைக் குறிப்பது. மூன்றாவது இரண்டாவதைக் காட்டும்; இரண்டாவது முதலாவதை உணர்த்தும். இயற்கையினின்றும் பெற்ற திருவுருவங்களில் தத்துவக் குறிப்புக்கள் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளை அவ்வப் போது தோன்றிய தத்துவர் விளக்கிச் சென்றனர்; தத்துவங்கள் கரந்து விளங்குமாறு பாவலர் உருவங்களை வருணிப்பது வழக்கம். பாக்களிலுள்ள வருணனைகள் இயற்கை இன்பத்தை யும், பொருள்கள் தத்துவங்களையும் உணர்த்துவனவாம். ஆழ்வார் திருப்பாடல்களில் போந்துள்ள திருவுருவங்கள் பல திறத்தன. அவைகட்கெல்லாம் தத்துவங்கூறுதல் என்னால் இயலாததொன்று ஒரோ வழி கூற முயல்கிறேன். ஆழ்வார் அருளிய பல பாக்களில் படர்ந்து செல்லாது, சுருக்கத்தின் பொருட்டு, அவர் அருளிய திருவாசிரியத்தில் சில பகுதிகட்கு என் சிற்றறிவுக் கெட்டிய சில நுட்பங்களை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். பிறவற்றிற்கும் அவ்வாறே கொள்க. செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடிஅஞ் சுடர்மதி யம்பூண்டு பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய் திகழ்பசுஞ் சோதி மரகதக் குன்றம் . . இறை, முகிலுடுத்துப் பரிதி மதி (சூரிய சந்திரர்) பூண்டு பலசுடர் (உடுக்கள்) புனைந்திருப்பது, அஃது இயற்கையை உடலாகக் கொண்டு விளங்குவதைத் தெரிவிப்பது இயற்கைக் கோலம் உருவாகும்போது, முகில் நீல மேனியாகிறது; மதியும் பரிதியும் முறையே சங்கு சக்கரமாகின்றன: பல்சுடர் முடி - கை - திரு - அடி ஆகின்றன. நீலமேனி தண்மையது. அதைத் தியானிக்கத் தியானிக்க, அது புலன்களின் வெம்மை, மன வெம்மை, கரணவெம்மை முதலிய வெம்மைகள் ஒழிய, அங்கங்கே தண்மை தங்க, நல்லெண்ணத்தையும், நல்லுணர்வையும் எழுப்பிப் படிவிக்கும். சங்கு ஒலிப்பது; சக்கரம் சுழல்வது; முடி முதலியன ஒளிர்வன. உலகம் ஒலியினின்றும் பரிணமிப்பது. அவ்வொலி சுழன்று சுழன்றே பரிணமிப்பது இயல்பு. ஆகவே, சங்கும் சக்கரமும் உலகத் தோற்றத்துக்கு அறிகுறியாயுள்ள கருவிகள். திருமுடியும், திருக்கைகளும், திருவும், திருவடியும் செவ்விய ஒளிமயமாய்த் திகழ்வன. (சித்)ஒளி, ஒலியின் மூலம். ஒளி தொகை வகைப்படும். திருமுடியின் ஒளி, தொகை வகைப்படும். திருமுடியின் ஒளி, தொகை முறையில் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவது. திருக்கைகளின் ஒளியும், திருவடிவின் ஒளியும், வகை முறையில் தாம் ஒலியின் மூலம் என்பதை உணர்த்துவன. திருக்கைகள் சங்கையும் சக்கரத்தையும் ஏந்துவன. சங் கொலிக்கும் சக்கரச் சுழற்சிக்கும் அடிப்படை திருக்கைகளின் ஒளி. திரு ஒளி, உயிர்களின் பல்வகைச் செல்வங்கட்கு ஊற்றாகும். பல்வகைத் திருவைப்பெற்ற உயிர்களின் இன்பப்பேற்றிற்கு நிலைக்களன் திருவடி ஒளி. ஒளி - விந்து ; ஒலி - நாதம். விந்து நாதங்களின் உள்ளும் புறமும் நின்று, அவைகளை இயக்குவது இறை ஒளி என்க. (இறை ஒளி விந்து ஒளியன்று) இறையின் மற்றொரு வடிவாலும் இந் நுட்பம் விளங்கும். அது வருமாறு: கடலோன் கைம்மிசைக் கண்வளர் வதுபோல் பீதக ஆடை முடிபூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப மீதிட்டுப் பச்சை மேனி மிகப்ப கைப்ப நச்சுவினைக் கவர்தலை அரவின் அமளிஏறி எறிகடல் நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவன் அயன் இந்திரன் இவர்முதல் அனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக மூவுல களந்த சேவடி யோயே. - திருவாசிரியம் -1 இதன் கண் இறைவன் உந்தியுடன் பாற்கடலில் அரவணை யில் பள்ளி கொண்டிருப்பது விளங்குகிறது, பாற் கடல் - விந்து; பாம்பணை - நாதம்; உந்து - படைப்பு. உலகம் உருக்கொள்ளுதற்கு நாதம் பாம்புபோல் மண்டித்த லால், நாதம் பாம்பணை என்னப்பட்டது. இறைவன் பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளிகொண்டிருப்பது, அவன் விந்து நாத தத்துவங்கட்கு மேற்பட்டவன் என்பதையும், அவைகளை இயக்க வல்லவன் அவனே என்பதையும் தெளிவிப்பது. உந்தியில் நான் முகனைத் தரும் தோற்றம் படைப்பை அறிவுறுத்துவது. திருவாசிரியத்தின் முடிபைப் பார்க்க. நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி இமையவர் தலைவனும் முதலா யாவகை உலகமும் யாவரும் அகப்பட நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும் மலர்சுடர்பிறவும் சிறிதுடன் மயங்க ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும் அகப்படக் கரந்து ஓ ராலிலைச் சேர்ந்தஎம் பெருமா மாயனை அல்லது ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே. ஆல் இலை, விரிந்த உலகங்களெல்லாம் ஒடுங்குவதைக் குறிப்பது. அதன்மீது ஆண்டவன் பள்ளி கொண்டிருப்பது, எல்லாம் ஒடுங்குதற்குரிய இடமாயிருப்பவனும் அவனே என்பதை உணர்த்துவது. இவ்வாறு காவிய ஓவியங்கள் வழிப்பிறந்த உருவங்களைப் பொருளாகக் கொள்ளாது, அவைகளின் மூல இயல்களை, அவைகளின் வாயிலாக உணர்ந்து தெளிந்து வழிபடுவது சிறப்பு ஆழ்வார் பாக்களில் திருவுருவங்களின் உள்ளுறை இனிது பொலி தல் காண்க. தத்துவங்களைக் கதைகள் வாயிலாக விளக்குவதும் ஒரு வித மரபு. அக் கதைகளின்றும் உருவங்கள் பிறத்தலும் உண்டு. கதைகளையும், கதையுருவங்களையும் தத்துவக் கண்கொண்டு பார்த்தலே அறிவுடைமை. இல்லையேல் பன்மைக் கடவுள் உணர்வும், பிற ஆபாசங்களும் பொருளாகி, அறிவு விளக்கத்துக்கு கேடு சூழ்ந்து கொண்டேயிருக்கும். புராணேதிகாசக் கதைகளை ஆழ்வார் விலக்கவில்லை. அக் கதைகளையும் அமைத்து ஆழ்வார் பல பாடல்கள் பாடியுள்ளார். வினையேன் . . சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா . . ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானை . . வேவாரா . . மாவாய் பிளந்து மருதிடைபோய் மண்ணளந்த மூவா . . உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மக ளாயர் மடமகள் என்றிவர் . . மாறு சேர்படை நூற்று வர்மங்க ஓரைவர்க் காயன்று மாய்ப்போர் பண்ணி நீறு செய்த எந்தாய் நிலங்கீண்ட அம்மானே தேறு ஞானத்தர் வேத வேள்வி யறாச் சிரீவர மங்கலநகர் ஏறிவீற் றிருந்தா யுன்னை எங்கெய்தக் கூவுவனே. பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கைசெய்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும் நிறந்த னூடு புக்கென தாவியை நின்றுநின் றுருக்கி யுண்கின்றஇச் சிறந்த வான்சுட னேரைஉன என்றுகொல் சேர்வதுவே. குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றமொன் றேந்தியதும் உரவு நீர்ப்பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும்பல அரவில் பள்ளிப்பி ரான்றன் மாயவி னைகளை யேயலற்றி இரவு நன்பகலும் தவிர்கிலம் என்னகு றைவெனக்கே கேயத் தீங்குழ லூதிற் றும்நிரை மேய்த்ததும் கெண்டை ஒண்கண் வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும்பல மாயக் கோலப் பிரான்றன் செய்வகை நினைந்துமனம் குழைந்து நேயத் தோடுக ழிந்த போதெனக் கெவ்வுல கம்நிகரே. ஏற்றரும் வைகுத்தத்தை யருளும் நமக்கு ஆயர்குலத்து ஈற்றிளம் பிள்ளையொன்றாய்ப் புக்கு மாயங்களே யியற்றி கூற்றியல் கஞ்சனைக்கொன்று ஐவர்க்காய் கொடுஞ் சேனை தடிந்து ஆற்றல்மிக் கான் பெரிய பரஞ்சோதிபுக்கவரியே. இத்திருப்பாக்களில் போந்துள்ள கதைகள் எல்லாவற்றுக் கும் தத்துவங்கள் கூறின் பொருள் விரியும். தாலிபுலாக நியாயம் பற்றிக் கதைகளில் ஒன்றையும், கதை யுருவங்களில் திரண்ட ஒன்றையும், இங்கே கொள்வோம். குருக்ஷேத்திரப்போர் பாரதத்தில் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அப்போர் நிகழ்ச்சியைக் கேட்பதில் மக்களுக்கு அதிக விருப்பம். அப் போரில் நூற்றுவர் ஒரு பக்கமும், ஐவர் மற்றொரு பக்கமும் நின்று பொருதனர் என்றும், கண்ணபிரான் தேர்ச் சாரதியாய் வீற்றிருந்து கீதையை அறிவுறுத்தினர் என்றும் கதை சொல்கிறது. இக் கதையின் உட்பொருள் என்னை? குருக்ஷேத்திரம் - கிளர்ச்சி பொருந்திய மனம்; நூற்றுவர் - தீய எண்ணங்கள்; ஐவர் -நல்ல எண்ணங்கள்; மனச் சான்றொலி - கண்ணபிரான் கீதை உபதேசம். மனத்திடைத் தீய எண்ணங்களும், நல்ல எண்ணங்களும் பிறக்கின்றன. அவைகளில் தீயன பலவாகவும், நல்லன சில வாகவும் பிறத்தல் இயல்பு. இதுபற்றியே தீய எண்ணங்கள் நூற்றுவர் என்றும், நல்ல எண்ணங்கள் ஐவர் என்றும் உருவாக்கப் பட்டன. தீமை, நல்லதை வீழ்த்தித் தன்னாட்சி செலுத்த முயல் கிறது. அப்பொழுது மனச்சான்றாகிய உள்ளொலி எழுகிறது. நல்லது அதற்குச் செவி சாய்க்கிறது. அதனால் நன்மை, ஆக்கமும் ஆற்றலும் பெற்றுத் தீமையை வீழ்த்துவதாகிறது. இதுவே பாரதப் போர் என்பது. இப்போர் நடைபெறாத இடம் உண்டோ? உள்ளொலியின் வழி நின்றால் நலம் பெற்றுத் தீமையை வீழ்த்தலாம் என்பது கதையின் கருத்து. இது நிற்க. அழகிய உருவங்களுள் இங்கே ஒன்று புலனாகிறது. அது கண்ணபிரான், குழலூதிப் பச்சைமரத்தடியில் பசுக்களும் பெண்களும் சூழநிற்குந் திருக்கோலம். பச்சை மரம் - இயற்கை; கண்ணபிரான் - இறை; குழலோசை - இசையொலி; பசுக்கள் - சாந்தம்; பெண் மக்கள் - அமைதிநிலை. இயற்கை உடல், இறை உயிர். பச்சை மரமும் - அதனடியில் கண்ணன் நிற்பதும் - இயற்கை உடல் என்பதையும், அதன் உயிர் இறை என்பதையும் விளக்குவன. குழலோசை, இயற்கையில் இறை இசைமயமாய் வீற்றிருப்பதைத் தெரிவிப்பது. இயற்கை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு இறையின் இசை (நாதம்) யாகிய கண்ணன் குழலோசை கேட்கும். அவ்விசை உயிர்கட்குச் சாந்தத்தை நல்கி, அமைதி நிலையைக் கூட்டும். அச் சாந்தமும், அமைதியும் முறையே கண்ணபிரானைச் சூழ்ந்துள்ள பசு நிரையாகவும், பெண்ணினமாகவும் உருவகிக்கப்பட்டன. இது குறித்து யான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். (நவசக்திசிலம்-12, பரல் - 28 பார்க்க) இப் பலப்பட்ட திருக் கோலங்களின் மூலம் ஒன்று என்பதை மறத்தலாகாது. திருக்கோலங்கள் யாவும், அவ் வொன்றன் இயல்களை விளக்கும் தத்துவக் குறிகளாகும். ஆழ்வார், திருக்கோலங்களை அழகிய பாட்டோவியத்தில் படியச் செய்திருத்தல் உள்ளத்தைக் கவர்கிறது. இருள்விரித் தாலன்ன மாநீர்த் திரைகொண்டு வாழியரோ இருள்பிரிந் தாரன்பர் தேர்வழிதூரல் அரவணைமேல் இருள்விரி நீலக் கருநா யிறுசுடர் கால்வது போல் இருள்விரி சோதிப் பெருமான் உறையும் எறிகடலே. திருமா லுருஇவாக்கும் மேருஅம் மேருவில் செஞ்சுடரோன் திருமால் திருக்கைத் திருச்சக் கரமொக்கும் அன்ன கண்டும் திருமா லுருவோ டவன்சின்ன மேபிதற் றாநிற்பதோர் திருமால் தலைக்கொண்ட நங்கட்குஎங் கேவரும் தீவினையே. விட்டிலங்கு செஞ்சோதித் தாமரைபாதம் கைகள் கண்கள் விட்டிலங்கு கருஞ்சுடர் மலையே திருவுடம்பு விட்டிலங்கு மதியம்சீர் சங்குசக் கரம்பரிதி விட்டிலங்கு முடியம்மான் மதுசூ தனன் தனக்கே. தூநீர் முகில்போல் தோன்றும்நின் சுடர்கொள் வடிவும் கனிவாயும் தேநீர் கமலக் கண்களும் வந்தென் சிந்தை நிறைந்தவா மாநீர் வெள்ளி மலைதன் மேல் வண்கார் நீல முகில்போலத் தூநீர்க் கடலுள் துயில்வானே எந்தாய் சொல்ல மாட்டேனே. கருமா ணிக்க மலைமேல் மணித்தடந் தாமரைக் காடுகள்போல் திருமார்வு வாய்கண் கையுந்தி காலுடை யாடைகள் செய்யபிரான் திருமா லெம்மான் செழுநீர் வயல்குட்ட நாட்டுத் திருப்புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னை மீரிதற்குஎன் செய்கேனோ. காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன்மலையின் மீமிசைக்கார் முகில் போல் மாசின மாலி மாலிமா னென்றங் கவர்படக் கனன்றுமுன் நின்ற காய்ச்சின வேந்தே கதிர்முடி யானே கலிவயல் திருப்புளிங் குடியாய் காய்சின வாழி சங்குவாள் வில்தண் டேந்தியெம் மிடர்கடி வானே. அழகிய திருகோலங்களில் ஈடுபடும் நெஞ்சம் இயற்கை இறையினிடம் படிவதாகும். இதற்கு அழகிய திருக்கோலங்கள் பாலம் போலத் துணை செய்யும். ஆகவே, திருக்கோலங்களில் கிளர்ந்த உணர்வுடன் ஈடுபடப்பட இயற்கை இறையினிடம் வேட்கை எழுதல் ஒருதலை. ஆழ்வார் தமது நெஞ்சம் அக் கோலங்களில் ஈடுபட்டதை, பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும் - நீலாழிச் சோதியாய் ஆதியாய் தொல்வினைஎம் பால்கடியும் நீதியாய் நிற்சார்ந்து நின்று. என்றும், கொண்டல்தான் மால்வரைதான் மாகடல்தான் கூரிருள்தான் வண்டறாப் பூவைதான் மற்றுத்தான் - கண்டநாள் காருருவம் காண்தோறும் நெஞ்சோடும் கண்ணனார் பேருருவென் றெம்மைப் பிரிந்து. என்றும், எங்ங னேயோ வன்னைமீர்கா ளென்னை முனிவதுநீர் நங்கள்கோலத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின் சங்கினோடும் நேமியோடும் தாமரைக் கண்களோடும் செங்கனிவா யொன்றினோடும் செல்கின்ற தென் நெஞ்சமே. என்றும், திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள் கண்டவத் திருவடி என்றும் திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும் செவ்வடி யும்செய்ய கையும் திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய கமலமார் பும்செய்ய வுடையும் திருச்செய்ய முடியும் ஆரமும் படையும் திகழவென் சிந்தை யுளானே. என்றும், உலகுக்கு உணர்த்தி யிருத்தல் காண்க. திருவுருவங்கள் தத்துவக் குறியுடையன என்பதை ஆழ்வார் பல விடங்களில் பலவிதமாகக் கூறியுள்ளார். கண்ணபிரான் திருவிளையாடல்கள் பலவிடங்களில் ஆழ்வாரால் அழகுபடக் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவ் விடங்களில் பெரிதும், மாயம் என்னுஞ் சொல்லை ஆழ்வார் பெய்திருப்பது கூர்ந்து நோக்கற்பாலது. அவ்வாறு அருளியதன் நோக்கம் என்னை? உருவங்களையே பொருளாக் கொள்ளாது, அவைகள் உணர்த்தும் தத்துவங்களைப் பொருளாக் கொள்ளு தல் வேண்டும் என்பதாகும். கீழ்வரும் ஆழ்வார் மொழிகளில் நெஞ்சை ஊன்றுக. குரவை ஆய்ச்சியர் . . அரவில் பள்ளிப் பிரான்தன் மாயவினைகளை . . கேயத் . . . மாயக் கோலப் பிரான் . . இகல்கொள் . . அகல் கொள் வைய மளந்த மாயன் என் அப்பன்றன் மாயங்களே . . மண்மிகைப் பெரும்பாரம் நீங்கவோர் பாரதமா பெரும்போர் பண்ணி மாயங்கள் செய்து . . இறை ஒன்று. அஃது உயிர். இயற்கை அதன் உடல். இயற்கையினின்றும் முகிழ்க்குங் கோலங்கள் பல. அக் கோலங்கள் ஆழ்வார் உள்ளத்தில் படிந்து எழுப்பிய மகிழ்ச்சி, பொங்கித் ததும்பித் தமிழ்ப் பாக்களாக வழிந்து தேங்கி நிற்கிறது. அத் தேக்கத்தில் இயற்கையின் கோலங்கள் காட்சியளிக்கின்றன. கண்ணுள்ளோர் அவற்றைக் காண்க. ஆழ்வார் பாடல்களை, இயற்கைத் திருக்கோலக் காட்சி என்று கூறல் மிகையாகாது. அக் காட்சி நிலையம் கோலிய ஆழ்வார் வாழ்க. அவரை ஈன்ற தமிழ் நாடு வாழ்க. 7. அவதாரம் உருவங்கள் தத்துவ நுட்பங்களாயின், அவதாரங்களின் கருத்து என்னை? என்று சிலர் கேட்கலாம். கேட்பதற்கு இடனும் உண்டு. அவதாரங்களைப் பற்றிப் பலவிதக் கருத்துக்கள் உலகில் உலவி வருகின்றன. அவைகளைப் பற்றி எழுந்த வாதப் போர் களும் பல. இறைவன் மனிதனாக அவதரிப்பன் என்று சிலர் கூறுவர். எங்கு முள்ள இறைவன் எங்ஙனம் மனிதனாக அவதரித்தல் கூடும் என்றும், ஆகவே, இறைவன் மனிதனாக அவதரியான் என்றும், இறை ஆணைப்படி அவதரிக்கும் குருவை உபசாரமாக அன்பால் இறைவன் என்று சொல்வது உலக வழக்கு என்றும் வேறு சிலர் கூறுவர். வீரரையும் குருமாரையும் நாளேற நாளேற இறைவன் அவதாரமென்பது உலகியல் என்று மற்றுஞ் சிலர் கூறுவர். இன்னும் பலப்பல வாறு கூறுவோருமுளர். ஆழ்வார் அவதாரங் களைத் தள்ள வில்லை. அவர் அவைகளை ஏற்றுப் போற்றியே இருக்கிறார். ஆனா னாளுடையான் என்றஃ தேகொண்டுகந்து வந்து தானே இன்னருள் செய்தென்னை முற்றவும் தானானான் மீனாய் ஆமையுமாய் நரசிங்க முமாய்க் குறளாய் கானார் ஏனமுமாய்க் கற்கியா மின்னம் கார்வண்ணனே. சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு ஆதியஞ்சோதி உருவை அங்குவைத் திங்குப்பிறந்த வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார் ஓதி உணர்ந்தவர் முன்னா என்சவிப் பார்மனிசரே. காண்டுங்கொலோ நெஞ்சமே கடியவினையே முயலும் ஆண்டிறல் மீளிமொய்ம்பின் அரக்கன் குலத்தைத் தடிந்து மீண்டுமவன் தம்பிக்கே விரிநீர் இலங்கை யருளி ஆண்டுதன் சோதிபுக்க அமரர் அரியேற்றினையே. ஏற்றரும் வைகுந்தத்தை அருளும் நமக்கு ஆயர் குலத்து ஈற்றிளம் பிள்ளையொன் றாய்ப்புக்கு மாயங்களே இயற்றி கூற்றியல் கஞ்சனைக் கொன்று ஐவர்க்காய் கொடுஞ்சேனை தடிந்து ஆற்றல்மிக் கான்பெரிய பரஞ்சோதி புக்கவரியே. என வரூஉந் திருவாக்குக்களை நோக்குக. அவதாரங்களைப் பற்றி யான் பன்முறை சிந்திப்பதுண்டு; ஆராய்வதுண்டு. சிந்தனையாலும் ஆராய்ச்சியாலும் எனக்கு டார்வின் கொள்கையில் உறுதி ஏற்பட்டு விட்டது. டார்வின் முதலியோரை நாத்திகர் என்று தள்ளுதல் அறிவுடைமை யாகாது. அவர்தம் ஆராய்ச்சித் திறன்கள், நம் பெரியார் கண்ட அநுபவங்களுக்கு எவ்வெவ் வழியில் அரண்செய்கின்றன என்று பார்ப்பது அறிவுக்கு அழகு. டார்வின் முதலிய பேரறிஞர் கண்ட பல உண்மைகள், நமது நாட்டில் பல புராணக் கதைகளாக நிலவி வருகின்றன. புராணக் கதைகளை உள்ளவாறே கொள்வது பௌராணிக மதமாகும். ஞானநூல் ஆராய்ச்சியுடையவர். புராணக் கதைகளை அப்படியே கொள்வதில்லை. அவர், கதைகளின் உட்கிடக்கைகளைக் காணவே முயல்வர். எதையும் பகுத்தறிவு கொண்டு ஆய்ந்து தெளிவடைவது சிறப்பு. உலகை நோக்குவோம். தாவர முதல் மக்கள் ஈறாக உலகம் ஆக்கப்பட்டிருத்தலைக் காண்கிறோம். தாவர முதல் மக்கள் ஈறாக உள்ளன யாவும் உயிர்களே. அவைகள் உடலமைப்பில் வேற்றுமையுறுகின்றன அவ்வவ்வுடலமைப்புக்கேற்ற வண்ணம் அவ்வவ்வுயிர் அறிவு விளக்கம் பெறுகிறது. இது பற்றியே முன்னோர், உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவுவரை வகுத்துக் காட்டினர் போலும். உயிர்களின் அறிவு உடலமைப்புக்கேற்ற வண்ணம் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். அவ் வளர்ச்சி புதிய ஒன்றிலிருந்து உறுவதில்லை. வளர்ச்சி, உள்ளத்தி லிருந்தே உறுகிறது. இது கூர்தல் (Evolution) எனப்படும் (கூர்தல் - உள்ளது சிறத்தல்). இக் கூர்தல் நியாயப்படியே டார்வின், உயிர் வரலாற்றை விளக்கிப் போந்தனர். நம் நாட்டவர் கொண்டுள்ள அவதாரங்களைப் பார்ப்போம். அவை மச்சத்தினின்றும் தொடங்குகின்றன. ஒவ்வொன்றும் படிப்படியே வளர்ந்து வருதல் கருதற்பாலது. மச்சம் நீரில் வாழ்வது. அது நிலத்தில் நகர்தலுஞ் செய்யாது. கூர்மம்(ஆமை) சிறு கால்கொண்டு ஊர்ந்து செல்வது. வராகம் நன்றாக நடக்க வல்லது நரசிம்மம், விலங்கினமும் மனித உருவும் கலந்தது. மனிதத் தோற்றத்துக்குக் கால்கொண்ட இடம் இதுவே. பின்னே வாமனன் தோன்றினன். வாமனன் மனிதனா யினும், அவன் முதலில் தோன்றினவனாதலின், அவன்பால் மனிதப் பிறவிக்குரிய முழுமை விளங்கவில்லை. அவன் குறளனாகவே இருந்தான். பரசுராமன் முழு மனிதன்; ஆனால் சாந்தமில்லாதவன். ஸ்ரீராமன் அழகன்; சாந்தமுடையவன்; ஒவ்வொருபோது பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன். கண்ணன் மனித உடலும் தெய்வ நிலையும் உடையவன்; எப்பொழுதும் பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன். இவ்வவதாரம் ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையை உணர்த்துவது. இந் நிலையை நம்மவர் கற்பம் என்பர். உயிர் வர்க்கம் மீனா யிருந்தது ஒரு கற்பம். ஆமையானது மற்றொரு கற்பம்; இவ்வாறே பிறவும். அவதாரங்களை இறைவன் மீது ஏற்றுவது என்னை? இஃது உன்னத் தக்கது. உயிர்கட்கு அறியாமைக் கட்டு உண்டு. அதனால் அவைகட்கு இயல்பில் அறிவு விளங்குவதில்லை. அறிவு விளக் கத்துக்கென அவைகள், மாயா உடலங்களைத் தாங்குகின்றன. அவ்வுடலால் அறிவு விளங்கப்பெறுகின்றன. அறியாமையால் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள், தாங்களே மாயா உடலங்களை எங்ஙனம் தாங்க வல்லனவாகும்? இதற்கு ஒரு துணை இன்றி யமையாததாகிறது. அத் துணை, அறியாமைக் கட்டில்லாத தாயிருத்தல் வேண்டும். அப்பொழுதே அஃது அறியாமைக் கட்டுடைய உயிர்கட்குத் துணை செய்யவல்லதாகும். அறியாமைக் கட்டில்லா ஒன்றே சித் என்னுஞ் செம்பொருள். அச் சித், எங்கும் நிறைந்தது; எல்லாவற்றிற்கும் வித்தாயிருப்பது. அஃது உயிர் களின் உள்ளும் புறமும் நின்று, அவைகள் மாயா உடலங்களைத் தாங்கத் துணை செய்கிறது. அத் துணையின்றி உயிர்கள் மாயா உடலங்களைத் தாங்குதல் அரிது. இதனால் துணையின் பெருமை விளங்குதல் காண்க. சித் என்னுஞ் செம்பொருளின் துணையால், எல்லாம் நிகழ்வதால், எந் நிகழ்ச்சியையும் அதன்பாற்படுத்திச் சொல்வது ஒருவித மரபு. அம் மரபு பற்றிப் புராணங்கள் அவதாரங்களை ஆண்டவன் பாற்படுத்தின போலும். இம் முறையில் அவதார நுட்பம் எனக்கு விளங்குகிறது. அக் கண்ணுங் கருத்துங் கொண்டு ஆழ்வார் கூறிய அவதாரங்களை நோக்கு கிறேன். யான் மனிதன்; குறையுடையவன்; எனக்கு இப்பொழுது விளங்கியுள்ளதை விளம்பினேன். திருமால் அடியவர் மண்மீது பிறத்தலை ஆழ்வார் பலபடப் பாடியுள்ளார். அங்ஙனம் அவர் பாடியதும் சிந்திக்கற்பாலது. கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக் கினியன கண்டோம் தொண்டீ ரெல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல் பண் டான் பாடிநின் றாடிப் பரந்து திரிகின் றனவே. திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக, கரியமுகில் வண்ணன் எம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் இரியப் புகுந்திசை பாடி எங்கும் இடங்கொண் டனவே. இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைய பூதங்க ளேயாய்க் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின் றனவே. கொன்றுயி ருண்ணும் விசாதி பகைபசி தீயன வெல்லாம் நின்றிவ் வுலகில் கடிவான் நேமிப் பிரான்தமர் போந்தார் நன்றிசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார் சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர் சிந்தையைச் செந் நிறுத்தியே. இப் பாடல்களை உன்னுக. அவதாரங்களால் உயிர்கட்கு நலன் உண்டு என்பது ஆழ்வார் கருத்து. அக் கருத்தை ஆழ்வார் பாடல்களிற் காண்க. நாட்டில் பிறந்தவர் நாரணற் காளன்றி யாவரோ நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு நாட்டை அளித்துய்யச் செய்து நடந்தமை கேட்டுமே. மாய மறிபவர் மாயவற் காளன்றி யாவரோ தாயம் செறுமொரு நூற்றுவர் மயங்கஓ ரைவர்க்காய் தேசம் அறியவோர் சாரதி யாய்ச்சென்று சேனையை நாசம் செய்திட்டு நடந்தநல் வார்த்தை அறிந்துமே. கண்ண னல்லா லில்லை கண்டீர் சரண் அதுநிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தான் திண்ணமா நும்முடைமை யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம் மினோ எண்ணவேண்டா நும்ம தாது மவனன்றி மற்றில்லையே. இத் திருப்பாடல்களில் கண்ணனெம் பெருமான், சாது சனங் களைக் காத்தற் பொருட்டும் - கொடியவரை ஒறுத்து மண்ணின் சுமை நீக்குதற்பொருட்டும் - வந்தான் என்பது திறம்பட வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இதை உன்னுமாறு அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஈண்டு நாம் அறியத்தக்க உண்மை ஒன்றுளது அது, கண்ணன்பால் அன்பு செலுத்து வோர் அனை வரும் - அவனடி சேர முயல்வோர் எல்லோரும் - சாது தர்மத்தை நாட்டவும் அதர்மத்தை வீழ்த்தவும், கண்ணனைப்போல, ஒல்லும் வகை முயலுதல் வேண்டும் என்பது. கண்ணன் அவதாரத்தால் அறியக் கிடக்கும் உண்மை களுள் தலையாயது இதுவே என்றுங் கூறலாம். இத்தகைய தொண்டு செய்யாது, கண்ணபிரான் ஆலயத்தை மட்டும் வலம் வருவதாலும், சந்நியாசங் கொண்டு காடு நோக்கி ஓடுவதாலும், வேறு பல தன்னல உழைப்பாலும் பிறவி நோக்கம் நிறைவேறாது. கண்ணன் காட்டிய வழியை நாமும் கடைப்பிடிப்போமாக. ஆழ்வாரும் அந்நெறியைச் சிறப்பித்துக் கூறியுள்ளார். இப்பொழுது உலகம் உரிமையிழந்து வாடுகிறது. இவ் வேளையில் உரிமைக்கு உழைப்பது கண்ணன் திருவடிக்குச் செய்யுந் திருத்தொண்டாகும். 8. மூவர் முதல் தொழில் மூன்று. அவை ஆக்கல், அளித்தல், அழித்தல் என்பன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூர்த்தியுண்டு. இவர் மும்மூர்த்தி எனப்படுவர். மும்மூர்த்திகட்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. மும்மூர்த்திகளைப் பிர்மா - விஷ்ணு - ருத்ரன் - என்று நாம் சொல்கிறோம்; சிலர், பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி - என்கிறார். அவர்கட்கு இன்னும் வெவ்வேறு பெயர்களும் உலகில் உரைக்கப்படுகின்றன. அவைகளிற் சில வருமாறு: ஒஸிரி - ஐஸி - ஹோர (எகிப்தியர்) ; ஓடின் - பிரீயா - தார் (காண்டிநேவியர்); ஆனு - இயா - பேல் (அரியர்) ; தௌலாக் - பான் - மொல்லாக் (துருயுதர்); அமிர் தாப்பர் - அவலோகீதீசுரர் - மன்ஜூசுரி (வட புலப்புத்தர்); கேதர் - பினா - சொக்மா(யூதர்); அஹுரமஜதர் - மித்திரர் அஃரிமான் (பாரஸீகர்). உண்மை ஒன்று. அது பலவிதமாக வழங்கப் படுகிறது. மும்மூர்த்தி வழக்கு உலகுக்குப் பொது என்பது உணரத் தக்கது. மும்மூர்த்திகளும் முத்தொழில் செய்பவராதலின், அவர்கள் முழுமுதற்பொருள் அல்லர். முழுமுதற் பொருளின் அருட்சுடர், அவர்களிடம் பாய்ந்து, அவர்களை இயக்குகிறது. இதுபற்றியே, வடமொழி வேதம், முழுமுதற்பொருள் மும்மூர்த்தி கட்கும் மேம்பட்டது என்றும், அது சதுர்த்தம் என்றும் கூறு கிறது. தமிழ் நாட்டிற்றோன்றித் தமிழ் வேதம் அருளிய சைவ வைணவ குரவன்மாரும் முழுமுதலை மூவராய முதல்வன் என்றும், மூவருள் முதல்வன் என்றும், மூவர்க்கும் முதல்வன் என்றும் போற்றிப் போந்தனர். இது பற்றி நம்மாழ்வார் வாயிலாகப் பிறந்த திருமொழி களைப் பார்ப்போம். குறிப்பில். . . . மூவரில் முதல்வனாக . . - திருவாசிரியம் -3 முதலாம் திருவுருவம் மூன்றென்பர் ஒன்றே முதலாகும் மூன்றுக்கு மென்பர். . தானோ ருருவே தனிவித்தாய் தன்னில் மூவர் . . மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை தஞ்சமாகிய . . . . .மூt® தம்முள்ளும் ஆதியை . . தேவர் முனிவர்க் கென்றும் காண்டற் கரியன் மூவர் முதல்வன் ஒருமூவுல காளி . . தமிழ்நாட்டிற் றோன்றிய அறிஞர் நான்காவது பொருளைக் கண்டு போற்றியது தமிழ்மக்களின் தத்துவ ஆராய்ச்சித் திறத்தைப் புலப்படுத்துகிறது. அந் நான்காம் பொருளைக் காண்போர் சமரச ஞானிகளாய் வாழ்வர். நம்மாழ்வார் சமரச ஞானத்தால் தமிழ்நாட்டை ஓம்பியது பின்னர் விளக்கப்படும். நான்காவது பொருள் ஒன்றே. அதுவே பரம்பொருள். அதற்கு உலகில் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயரில்லா ஒன்றற்கு எப்பெயரை வழங்கினாலென்ன? யாருமோர் நிலைமையன் எனவறி வரியஎம் பெருமான் யாருமோர் நிலைமையன் எனவறி வெளியஎம் பெருமான் பேருமோர் ஆயிரம் பிறபல வுடையஎம் பெருமான் பேருமோர் உருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே என்றார் நம்மாழ்வாரும். பேரில்லாப் பொருளுக்குச் சிவன், விஷ்ணு, யோஹோவா, அல்லா முதலிய நற்பெயர்கள் உலகில் வழங்கப்படுகின்றன. நமது நாட்டில் ஒரு சிக்கு உண்டு. அது , சிவன் விஷ்ணு என்னும் பெயர்கள், மும்மூர்த்திகளின் பெயர்களிலும் முழு முதற் பொருளுக்குரிய பெயர்களிலும் வருவது பெயர்களில் ஒற்றுமை இருந்தாலும் பொருளில் வேற்றுமை இருக்கிறது. அவ் வேற்றுமை உணர்வோர்க்கு எவ்வித ஐயப்பாடும் எழாது. சைவ குரவர், விஷ்ணு அறியாச் சிவன் என்றும், சிவனே விஷ்ணு என்றும் சொல்லியுள்ளார். அவ்வாறே வைணவ குரவரும் சிவன் அறியா விஷ்ணு என்றும், விஷ்ணுவே சிவன் என்றும் கூறியுள்ளார். இவர்தம் வாய்மைகளின் உட்பொருளை உணர்ந்தால் உண்மை விளங்கும். விஷ்ணு அறியாச்சிவன் என்பதிலுள்ள விஷ்ணு மும்மூர்த்தியைச் சேர்ந்தவர். சிவனே விஷ்ணு என்பதிலுள்ள விஷ்ணு முழுமுதற் பொருள். சிவனறியா விஷ்ணு என்பதிலுள்ள சிவன் பெயர் மும்மூர்த்திகளுள் சேர்ந்தது. விஷ்ணுவே சிவன் என்பதிலுள்ள சிவன் பெயர் முழு முதலுக்குரியது. முழுமுதற் பொருளுக்கு ஊர் பேர் ஒன்றுமில்லை. ஒன்று மில்லா ஒன்றற்குப் பல பெயர்கள் உரைக்கப்படுகின்றன. அப் பெயர் ஒவ்வொன்றும் முழுமுதற் றன்மையை உணர்த்துவது. முழுமுதற் பொருள் வியாபகமுடையது. மங்களமுடையது. வியாபகமுடையது விஷ்ணு; மங்களமுடையது சிவம். இரண்டும் ஒன்றையே உணர்த்துதல் காண்க. செக்கர் மாமுகி . . சிவனய னிந்திரன் இவர்முத லனைத்தோர் தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . . . . நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி இமையவர் தலைவனும் முதலா யாவகை யுலகமும் யாவரும்அகப்பட ..(âUtháÇa«) என்றும், வரிவளையால் . . தெரிவரிய சிவன்பிரமள் அமரர்கோன் பணிந்தேத்தும் விரிபுகழான் . . என்றும், பேசநின்ற சிவனுக்கும் பிரமன்தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே . . என்றும், தளர்ந்தும் . . கிளர்ந்து பிரமன் சிவனிந் திரன்விண் ணவர்சூழ விளங்க ஒருநாள் காண வாராய் விண்மீதே என்றும், நோலா தாற்றேன் . . நீலார் கண்டத் தம்மானும் நிறைநான் முகனும் இந்திரனும் சேலேய் கண்ணார் பலர்சூழ விரும்பும் திருவேங் கடத்தாளே என்றும் ஆழ்வார் அருளிய மொழிகளிற் போந்துள்ள சிவ நாமங்கள் மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய உருத்திரனை உணர்த்துவன. சுரரறி . . . . பராபரன் புரமொருமூன் றெரித் தமரர்க்கும் அறிவீய்ந்து அரனய னெனவுல கழித்தமைத் துளனே, எனவும், வலத்தனன் திரிபுரம் எரித்தவன் . . . . . எனவும், கள்ள வேடத்தை . . வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேற லாமை விளங்க நின்றதும் எனவும், வேறுகொண்டு . . . . . . ஏறு சேவகனார்க் கென்னையு முளளென்மின்களே எனவும், என் திரு மார்பன் தன்னை என் மலைமகள் கூறன் தன்னை . . எனவும், என்னப்பன் எனக்கா யிகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப் பனுமாய் . . எனவும் வரூஉந் திருவாய்மொழிகளிற் போந்துள்ள சிவ நாமங்கள் முழுமுதலைக் குறிப்பன. நம்மாழ்வார், மும்மூர்த்திகளுக்கு மேம்பட்ட பரம் பொருளைத் திருமால் என்னும் பெயராகவே வழிபட்டவர். அப் பொருளைப் போற்றுவதே சிறப்பு, அஃது ஒன்றே. அதற்குப் பெயர்கள் பல. 9. வழிபாடு வழிபாடு வாழ்வுக்கு வேண்டற்பாலது. வழிபாட்டை உயிர் களின் இயற்கை என்றுங் கூறலாம். ஒருவித வழிபாடு ஒழிந்தால் மற்றொருவித வழிபாடு இயற்கையாக வந்து சேரும். அதற்கெனத் தனி முயற்சி எதுவும் வேண்டுவதில்லை. மனிதன் வழிபாட்டை விட்டாலும் வழிபாடு அவனை விடாது. மன்பதையில் அஃது இயல்பாகவே நிகழ்ந்து வரும். வழிபாடே வேண்டா என்று சொல்வோரும் உளர். அவர், தம்மால் வெறுக்கப்படும் ஒன்றே வழிபாடு என்று கருதுவோ ராவர். அவரை அறியாமலே அவரிடம் வேறு வித வழிபாடு நிகழும். அவர் அதை வழிபாடு என்று சொல்ல விரும் பாம லிருக்கலாம். வழிபாடு என்னும் பெயரைப் பற்றிய கவலை வேண்டா. வழிபாடு என்பதற்குரிய பொருளிருப்பது போதும். வழிபாடில்லா மனித வாழ்வு. இல்லை யென்று கூறுதல் மிகையாகாது. வாழ்வு, வழிபாட்டைப் பின்னி நிற்கும் ஒன்று. வழிபாடுகள் பல திறத்தன. அவற்றின் விரிவு ஈண்டைக்கு வேண்டுவதில்லை, வழிபாடு எத்திறத்தாயினுமாக, அதன் உயிரா யிருப்பது ஒன்று. அது தற்பயன் கருதாமை. தற்பயன் கருதாது செய்யப்படும் வழிபாடே சாலச் சிறந்தது. அதுவே கடவுளுக் குரியது. ஆழ்வார் அருளிய பாடல்களை ஆராய்ந்தால் அவர் கொண்ட வழிபாடுகள் புலப்படும். அவைகள் பல வகையாகக் காணப்படும். அவற்றைத் திரட்டி இருகூறுபடுத்தலாம். ஒன்று புற வழிபாடு. மற்றொன்று அக வழிபாடு. பிற இவைகளின் கிளைகள். புற வழிபாடு, கடவுளை வேறாகவும் தன்னை வேறாகவும் கருதிச் செய்யப்படுவது. அக வழிபாடு கடவுளைத் தன்னுள் கொண்டு தியான யோகஞ் செய்வது. இவ் விரண்டும் நாளடைவில் புறம் அகம் என்னும் வேற்றுமையை நீக்கி, எங்குமுள்ள இறையை உணர்த்திப் பிற உயிர்க்கும் தன்னுயிர்க்கும் வேற்றுமை தோன்றாப் பெருநிலை கூட்டும். வேற்றுமை தோன்றாமையே சகோதர நேயத்துக்கு அடிப்படை. ஆகவே, சகோதர நேயத்துக்கு வழிபாடு இன்றியமையாததென்றுணர்க. சகோதர நேயம் வெறும் பேச்சாலும் எழுத்தாலும் உண்டாகாது; அதற்கு வழிபாடு வேண்டும். வழிபாட்டால் இறையை உணர்தற்கென்று மனைவி மக்க ளைத் துறக்க வேண்டுவதில்லை. காட்டுக்கு ஓட வேண்டுவ தில்லை; மூச்சைப் பிடிக்க வேண்டுவதில்லை. விட்டிலிருந்தே மனைவி மக்களோடு வாழ்ந்தும், மூச்சைப் பிடியாமலும் இறையை உணர்தல் கூடும். மனைவி மக்களும் இறைவன் உடைமை; வீடு வாசலும் இறைவன் உடைமை; தானும் இறைவன் உடைமை; எல்லாம் இறைவன் உடைமை. எல்லாவற்றிலும் இறை இருக்கிறது. எதைத் துறப்பது? எதை வெறுப்பது? ஒன்றையும் துறவாமலும் வெறாமலும் எல்லாம் இறை உடைமை என்று வழிபாடு செய்யச் செய்ய உண்மை விளங்கும். ஆழ்வார் அறிவுறுத்திய வழிபாடுகளுள் புற வழிபாட்டை முதலில் எடுத்துக் கொள்வோம், இவ் வழிபாட்டுக்கு ஆழ்வார் திருமால் திருவுருவைக் கொழு கொம்பாகக் கொண்டார். அத் திருவுருவில் ஆழ்வார் வைத்த அன்புக்கு ஓரளவில்லை. அவ் வுருவில் அவர் நெஞ்சம் படிந்து ஒன்றுபட்டு உருகியதை எழுத்தால் எழுதல் இயலாது. அன்பு கரைபுரண்டு ஓடுகிறது. ஆழ்வார் அன்பில் மூழ்கி அடியவராய் இறைவனுக்கு மலரிடு கிறார்; இறைவனைப் பணிகிறார்; நண்பராய் இறைவனுடன் உறவு கொள்கிறார்; குழந்தையாய் அவனிடம் விளையாடுகிறார்; தலைவியாய் அவனோடு கூடுகிறார். திருமாலின் நீலமேனியும் தாமரைக் கண்ணும், கையும் காலும் ஆழ்வாருக்கு அமிழ்தா கின்றன; அவ்வுருவில் அவர்திளைக்கிறார்; புலன்கள் ஒன்று கின்றன; கண்கள் நீர் பொழிகின்றன; கைகள் குவிகின்றன; மயிர் சிலிர்க்கிறது. ஆழ்வார் அவ்வுருவமே ஆகிறார். அவர்தம் வாய் தமிழ் பாடுகிறது. மக்களே! அத் தமிழ் வெள்ளத்தில் படிந்து ஆடுக. திண்ணன் வீடு முதல்மு ழுதுமாய் எண்ணின் மீதிய னெம்பெருமான் மண்ணும் விண்ணுமெல் லாமுட ணுண்டநங் கண்ணன் கண்ணல்ல தில்லையோர் கண்ணே. வாய்கொண்டு மானிடம் பாடவந்த கவியேனல்லேன் ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்பிரா னெனக்கேயுளன் சாய்கொண்ட இம்மையும் சாதித்து வானவர் நாட்டையும் நீ கண்டு கொள்ளென்று வீடும்தரும் நின்று நின்றே வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன தாமிவையோ கண்ணன் திருமால் திருமுகம் தன்னொடும் காதல்செய்தேற் கெண்ணம் புகுந்து அடியனோ டிக்கால மிருக்கின்றதே. அந்தாமத் தன்புசெய்தென் ஆவிசேர் அம்மானுக்கு அந்தாம வாழ்முடிசங் காழிநூ லாரமுள செந்தா மரைத்தடங்கண் செங்கனிவாய் செங்கமலம் செந்தா மரையடிகள் செம்பொன் திருவுடம்பே. புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி எண்ணுமின் எந்தை நாமம் இப்பிறப் பறுக்கு மப்பால் திண்ணநாம் அறியச் சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமர ராவார். அறியாக் காலத் துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து அறியா மாமாயத் தடியேனை வைத்தாயால் அறியா மைக்குறளாய் நிலம் மாவலி மூவடிஎன்று அறியாமை வஞ்சித்தாய் எனதாவி உள்கலந்தே. எழுமைக் குமென தாவிக் கின் னமு தத்தினை எனதாருயிர் கெழுமிய கதிர்ச் சோதியை மணி வண்ணனைக் குடக்கூத்தளை விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னல் கனியினைத் தொழுமின் தூய மனத்தரா யிறையும் நில்லா துயரங்களே. கோலமே தாமரைக் கண்ணதோ ரஞ்சன நீலமே நின்றென தாவியை ஈர்கின்ற சீலமே சென்றுசெல் லாதன முன்னிலாம் காலமே உன்னைஎந் நாள் கண்டு கொள்வனே. உரைக்க வல்லே னல்லேனுன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்க ணென்று செல்வன் நான் காதல் மைய லேறினேன் புரைப்பி லாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன். மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற நேசத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான். . திருவுருவம் ஆழ்வார் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் படிந்துவிட்டது. உருவம் இயற்கை இறையின் படமன்றோ? இப் பொழுது அவ்வுருவம் தன் மூலத்தை உணர்த்துவதாகிறது. புற வழிபாடு அகவழிபாடாகிறது. ஆழ்வாருக்குத் தியான யோகம் கூடலாயிற்று. உருவம் சோதியாய் நிற்கிறது. சோதி புறமெல்லாம் தோன்றுகிறது. மண் புனல் காற்று விண் திங்கள் ஞாயிறு ஆகிய எல்லாம் சோதி மயமாகின்றன. எங்குஞ் சோதி! எல்லாம் இறை மயம்! வேற்றுமையே காணோம், இந்நிலைபெற்ற பெரியோர்க்கு எல்லாம் ஒன்றே. அடங்கெழில் சம்பத்து - அடங்கக்கண் டீசன் அடங்கெழில் அஃதென்று - அடங்குக உள்ளே. உள்ளம் உரைசெயல் - உள்ள இம்மூன்றையும் உள்ளிக் கெடுத்திறை - உள்ளில் ஒடுங்கே. உணர்வி லும்பர் . . உணர்வி னுள்ளே இருத்தினேன் அதுவும் அவன தின்னருளே . . . . பிரான்பெரு . . . . . .என்னுள் இரான்எனில் பின்னையா னொட்டு வேனோ. குரைகழல்கள். . உரைகொள் சோதித்திருவுருவம் என்னதாவி மேலதே. சொல்லீர் என்னம்மானை என்னாவி ஆவிதனை . . நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே நாக்குநீள்வன் ஞானமில்லை நாடொறும் என்னுடைய ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் அல்லபு றத்தினுள்ளும் நீக்கமின்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்தறிந்தே. என்ன தாவி மேலையாய் ஏர்கொ ளேழு லகமும் துன்னி முற்று மாகிநின்ற சோதிஞான மூர்த்தியாய் உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும் இன்னவண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே. புறமும் அகமும் ஒன்றும் வழிபாட்டினின்றும் எழுவது உண்மை அன்பாகும். அவ்வன்பு ஆவியினின்றும் எழுவது. அதில் விளங்குவது மெய்யறிவு. இவ்வறிவு நிலைக்கு அடிப்படை அன்பு நிலை. அன்பின்றி அறிவு விளக்கமுறாது. அன்பில்லா அறிவு அறிவாகாது. அன்பினின்றும் அரும்பும் அறிவு மெய் யறிவு; கடவுளறிவு; பேரறிவு. வாழ்வுக்கு முதல் முதல் வேண்டற் பாலது அன்பு, மற்றவை பின்னை. இது பற்றியே ஆண்டவன் அன்பு வடிவாயிருக்கிறான் என்றும், அவனை அன்பால் பெறலாம் என்றும் பல அறிஞர் கூறியுள்ளனர். அன்பை ஒருவன் பெற வேண்டுமானால், அவன் தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணஞ் செய்தல் வேண்டும். பேராசையும் சீவபோதமும் உள்ள இடத்தில் அன்பு நிகழாது. ஒருவன் தனக்கென்று பொருளீட்டி அதற்கண் பற்று வைத்து, ஆண்டவனை அதற்கு வேறாக் கொண்டு, அவன்பால் அன்பு செலுத்துவானாயின், அவ்வன்பு உண்மையதாகாது. பொருளை வேறாகவும், ஆண்டவனை வேறாகவும் கருதி வழிபடுவதால் பிறவித் துன்பம் வளர்ந்தே போகும். ஒருவன் தனக்கு உள்ள வற்றை ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்தால், அவன் ஆண்டவன் பிள்ளையாவன். ஆண்டவன் உடைமைகளெல்லாம் அவனுடையனவாகும். எல்லாம் ஆண்டவன் உடைமையாகவே இருக்கின்றன. அவனுடைய செல்வத்தில் ஒரு பகுதியை ஒருவன் தன்னுடையது என்று நினைப்பது அஞ்ஞானம். அவ்வஞ்ஞானம் நீங்கினால் தன்பொருள் பிறர் பொருள் என்ற வேற்றுமை உணர்வு ஒழியும்; எல்லாம் ஆண்டவன் பொருள் என்ற ஒருமையுணர்வு தோன்றும். அதனால் மனிதனிடத்துள்ள காமகுரோத முதலிய தீக்குணங்கள் கெடும். அக் குணங்களில்லாத இடத்தில் மெய்யன்பு நிகழும். நம்மாழ்வார், தமக்கென்று ஒன்றையும் கொள்ளாது, எல்லாவற்றையும் ஆண்டவன் திருவடிக்கு அர்ப்பணஞ் செய்து, உண்பன தின்பனவும் அவன் பொருள் என்று வாழ்ந்த பேரன்பர். ஊனில் வாழுயிரே நல்லைபோ உனைப்பெற்று வானுளார் பெருமான் மதுசூதனன் என்னெம்மான் தானும் யானுமெல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம் தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதுமொத்தே. ஆராவ முதே யடியே னுடலம் நின்பா லன்பாயே நீரா யலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே . . . . நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் வினைகொள்சீர் பாடிலும் வேமெனதாருயிர் சுனைகொள் பூஞ்சோலைத் தென்காட்கரை என்னப்பா நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மையே. எனவரூஉந் திருவாய்மொழிகளைக் காண்க. அன்புப் பெருக்குக்கு அடிப்படை வழிபாடு. வழிபாடு உயிருக்கு உறுதி பயப்பது. அன்பு வெறுங் கலை ஞானத்தால் நிகழாது. மனமொழி மெய்களால் இடையறாது ஆண்டவனை வழிபட வழிபட அன்பு நிகழும். வழிபாட்டைச் செய்யாது, நம்மாழ்வாரின் பாடல் - எழுத்துகளை மட்டும் ஓதி, எல்லாம் கடவுள் என்று வாய் வேதாந்தம் பேசுவதால் உண்மை அன்பு நிகழாது. ஆகவே வாழ்விற்கு வழிபாடு வேண்டற்பாலது ஆழ்வார் வழிபாட்டால் இறையன்பில் தோய்ந்து பேறு பெற்றார். இறையன்பே எவ்வுயிரையும் தன்னைப்போல் கருதும் சகோதர நேயத்தைக் கூட்டுவதாகும். ஆழ்வார் காட்டிய வழி இது. அவ் வழி நிற்போமாக. 10. சமரசம் ஆழ்வார் எங்குமுள்ள இறையை உணர்ந்து, அதனை வழி பட்டவர். அதனால் அவர் சமரசத்தை அறிவுறுத்தலானார். அவருக்கு எல்லாம் இறையாக - அன்பாக - சகோதரமாகத் தோன்றின. சமரச ஞானத்துக்கு இறையின் சர்வ வியாபக உணர்வு இன்றியமையாதது. இஃது ஆழ்வார் திருவாக்குக்களால் நன்கு விளங்குகிறது. இறையின் சர்வ வியாபக உணர்வை அடிப்படையாக் கொண்ட சமரசமே உண்மையானது. இந்நாளில் சமரசம் பெரிதும் பேசப்படுகிறது. ஆனால் சமரச ஞானம் பெரிதும் பரவுவதில்லை. காரணம் என்ன? அகண்ட உணர்வு இன்மையேயாகும். மக்கள், நாடு - மொழி - நிறம் - சாதி - மதம் முதலியவற்றுள் ஏதாவது ஒன்றன்மீது பற்றுக்கொண்டு வாழ்கிறார்கள், நாடு மொழி முதலியன கண்டங் கண்டமாயிருப்பன. கண்ட புத்தி எங்ஙனம் சமரசஞானத்தைக் கூட்டும்? சில வேளைகளில் அப் புத்தி, எரி பகைகளை மூட்டிப் போரை விளைவிப்பினும் விளைவிக்கும். சமரசத்துக்கு நாடு மொழி முதலிய எல்லாவற்றிற்கும் பொதுவாயுள்ள ஒன்று தேவை. அஃது எது? அஃது இறை ஒன்றே. இறை அகண்டமா யிருப்பது; நாடு மொழி முதலியவற்றைப் போலக் கட்டில் அடங்காதது; எல்லாம் அடங்க இடந்தருவது. அவ்விறையினிடம் அன்பு கொண்டால், உண்மைச் சமரச ஞானம் எளிதில் அரும்பும். இறை ஒன்றே. அவ்வொன்றற்குப் பல மொழியில் பல பெயர் கள் வழங்கப்படுகின்றன. உலகில் அவ்வப்போது குருமார் தோன்றி, அவ்வக்கால தேச வர்த்தமானத்துக்கு ஏற்றவண்ணம் இறை உண்மையை அறிவுறுத்திச் செல்வார். அவர்தம் போதனைகள் யாவும் ஓர் இறையையே குறிக்கொண்டு நிற்பன. குருமார் போதனைகள் பல சமயங்களாகக் கொள்ளப் பட்டன. பலபட்ட மனோநிலையுடைய மக்களுக்கு அவர்தம் போதனைகள் பலவழியிலும் பயன்பட்டு வருமுறையில் அமைந் திருக்கின்றன. எவர்க்கு எப்போதனையில் அன்பு நிகழ்கிறதோ, அவர் அப் போதனைவழி நின்று ஒழுகலாம். அவர் பிற போதனைகளை நிந்தித்தலாகாது. நமது நெறியைப் போன்றே பிற நெறிகளும் இருக்கின்றன என்று எண்ணுதல் சிறப்பு. எல்லாப் போதனை கட்கும் பொருளாயிருப்பது ஒரே இறையாதலின், எப்போதனையை நிந்திப்பினும், அஃது அவ்விறையையே சாரும். ஊர் ஒன்று, அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எவ்வழிச் சென்றாலும் அவ்வூரை அடையலாம் அது போல இறை ஒன்றே. அதற்குரிய எந்நெறிபற்றி ஒழுகினும் அதை அடையலாம். ஒன்றை ஒன்று குறை கூறுவது எற்றுக்கு? அஃது அஞ்ஞானம். குருமார் போதனைகளைப் புரோகிதர் பாழ்படுத்தி விட்டனர். புரோகிதரால் கோயில், மடம் முதலியன கெட்டன; சம்பிரதாயங்கள் முளைத்தன; சம்பிரதாயங்களால் கண்மூடி வழக்க வொழுக்கங்கள் பெருகின. சம்பிரதாயங்களும், அவைகளினின்றும் எழுந்த மூடப் பழக்க வொழுக்கங்களும் புரோகித மதங்களாயின. இப்பொழுது கடவுள் பெயரால் புரோகித மதங்கள் ஆக்கமுற்றிருக்கின்றன. புரோகித மதத்துக்கும் கடவுள் நெறிக்கும் வேற்றுமை தெரியாது உலகம் இடர்ப்படுகிறது. அருளாளர் அருளிய மெய்ந்நெறிகளைப் புரோகிதக் கலைகளும் புதர்களும் மூடிக்கொண்டிருக்கின்றன. அவைகளைக் களைந்தெறிதல் வேண்டும். அதற்குக் கருவிகளாக ஆழ்வாரும், அவர் போன்றாரும் அருளிய சமரச மொழிகளைப் பயன்படுத்தலாம். இதற்குரிய ஆற்றல்பெற இறைவனை வழுத்துவோமாக. ஆழ்வார் அருளிய சமரச மொழிகளிற் சில வருமாறு: வணங்கும் துறைகள் பலபல ஆக்கி மதிவிகற்பால் பிணங்கும் சமயம் பலபல ஆக்கி அவையவைதோ றணங்குய் பலபல ஆக்கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய் இணங்கும்நின் னோரையில் லாய்நின்கண் வேட்கை எழுவிப்பவனே அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர் என அடி அடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் அவரவர் விதிவழி அடையநின் றனரே. பிணக்கற அறிவகைச் சமயமும் நெறிஉள்ளி உரைத்த கணக்கறு நலத்தனன் அந்தமில் ஆதியம் பகவன் வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு உணக்குமின் பசையற அவனுடை உணர்வு கொண் டுணர்ந்தே. யாவையும் யவரும் தானாய் அவரவர் சமயந்தோறும் தோய்விலன். . மாட்டாதே யாகிலும்இம் மலர்தலைமா ஞாலம்நின் மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம்வைக்க மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய மாட்டேநீ மனம்வைத்தால் மாஞாலம் வருந்தாதே, அறிவினால் குறைவில்லா அகல்ஞானத் தவரறிய நெறிஎல்லாம் எடுத்துரைத்த நிறைஞானத் தொரு மூர்த்தி . . எங்குவந் துறுகோ என்னையாள் வானே ஏழுல கங்களும் நீயே அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீ இன்னே யானால் மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலன் இறந்ததும் நீயே. உருவாகிய ஆறு சமயங்கட் கெல்லாம் பொருவாகி நின்றா னவன் . . . . . இறை ஒன்றாய்ப் போக்கு வரவு இல்லாததாய் எங்கும் நீக்கமற நிற்பது. அவ்விறை, அடியவர்க்கு அருள் புரியும் வழிகள் பலவுள அவைகளுள் ஒன்று குரு மூர்த்தமாக வந்தருள்வது. தமக்கு அருள் புரிந்த குருமூர்த்தத்தைச் சிறப்பிப்பது அடியவர் வழக்கம். அச் சிறப்பும் இறையையே சாரும். குருமூர்த்தத்துள் ஒளிர்வது இறையாகலின், அக் குருமூர்த்தத்தைப் போற்றுவது இறையைச் சேர்தல் இயல்பு. குருமார் எல்லா ரிடத்திலும் ஒளிர்வது இறையொன்றே யாதலின், குருமாருள் உயர்வு தாழ்வு கற்பித்தலாகாது. அவர் அனைவரும் உணர்வில் ஒருவரேயாவர். ஒரு குருவைப் போற்றுவது மற்றக் குரு மாரையும் போற்றுவ தாகும் அவ்வாறே ஒருவரை நிந்திப்பதும் மற்றவரை நிந்திப்ப தாகும். ஒருவரைப் போற்றி, மற்றவரை நிந்திப்பது, எல்லாரையும் நிந்திப்பதாக முடியும். ஆகவே நிந்தனையே கூடாது. இறுக்கும் இறையிறுத் துண்ண எவ்வுல குக்கும் தன்மூர்த்தி நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன் தானே மறுத்திரு மார்வன் அவன்தன் பூதங்கள் கீதங்கள் பாடி வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மினீரே. இப்பாட்டை உற்று நோக்குக. இறை ஆணைப்படி ஆங்காங்கே குருமார் வீற்றிருக்கிறாரென்பதும், இறையொன்றே அவரனைவரையும் இயக்குகிறதென்பதும் விளங்குகின்றன. ஆழ்வார் மொழியால் இறை, குருமார் வாயிலாகப் பல நெறிகளை அருள்கிறது என்பதும் விளங்குகிறது. நம்மாழ்வார் சமரச ஞானியாதலால், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடம் தலையன்பு காட்டுகிறார். அவர், ஏனைய மூர்த்திகளிடத்திலும் இறையைக் காண்கிறாராதலின், முனிவின்றி அவர்களையும் தம் மூர்த்தியாகக் கொண்டு போற்றுகிறார். இவ்வாறு சமரச ஞானத்தால், நம்மாழ்வார் தமிழ்நாட்டைக் காத்து வந்தார். அத்தகைய சமரச ஞானம் பிறந்த தமிழ் நாட்டில், நாளடைவில், சமயச் சண்டைகள் பெருகலாயின. ஆழ்வார் கொண்ட அறிவும் அன்பும் நிறைந்த சமரச நெறி அருகிற்று. அகங்கார மதமும், கோபமதமும், தெய்வ நிந்தனை மதமும் பெருகின. சில மதவாதிகள், விஷ்ணு சிவன் என்னுஞ் சொற்களைப் பிடித்து அலைத்துப் பொருள்விடுத்துப் பூசல் விளைத்துத் தமிழ்நாட்டின் அறிவையும் அன்பையும் குலைத்தார்கள். அவர்கள், நம்மாழ்வார் அருளிய தமிழ் வேதத்தை முற்றும் ஓதி, அதன் பொருளுண்மை கண்டிருந்தால், எம் மதத்தினிடமும் பகைமை கொள்ளார்கள். மதப்போர் செய்வோர் சைவராயினு மாக, வைணவ ராயினுமாக, மற்றெவராயினுமாக. அவரை அன்பரென நான் போற்றமாட்டேன். சைவருட் சிலரும் வைண வருட்சிலரும் தத்தம் தமிழ் வேதங்களை ஆராயும்போது, துவேஷ புத்தி கொண்டு, எங்கே திருமால் குறை கூறப்பட்டிருக்கிறார் - எங்கே சிவபெருமான் இழித்துக் கூறப்பட்டிருக்கிறார் என்று குறைகளைத் தடவிப் பிடிப்பதிலேயே கருத்தைப் பதிய வைக் கிறார். சமசரப் பகுதிகள் இக் குருடர்களுக்குப் புலனாவ தில்லையோ என்னவோ தெரியவில்லை. சமயவாதிகள் கீழ்வரும் நம்மாழ்வார் வாய்மொழிகளை ஊன்றி நோக்குவார்களாக. உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந் நிலைமை உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரி துயிர்காள் உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரிஅயன் அரன்என்னு மிவரை உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே ஒன்றென பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன் நான்முகன் அரன்என்னு மிவரை ஒன்றுநும் மனத்துவைத் துள்ளிநும் இருபசை யறுத்து நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே, ஒளிமணி வண்ண னென்கோ ஒருவனென் றேத்த நின்ற நளிர்மதிச் சடைய னென்கோ நான்முகக் கடவு ளென்கோ . . படைப்பொடு கெடுப்புக்காப்பவன் பிரம பரம்பரன் சிவபிரானவனே . . யானும் தானா யொழிந்தானை யாதும் யாவர்க்கும் முன்னோனைத் தானும் சிவனும் பிரமனும் ஆகிப்பணைத்த தனிமுதலை . . முனியே நான்முகனே முக்கண்ணப்பா . . அவாவ றச்சூழ் அரியை அயனை அரனை அலற்றி . . இவை போன்ற திருவாக்குகள் இன்னும் பல உள. உலகம் அன்பிழந்து தவிக்கும் இவ் வேளையிலாவது, இத் திருவாக்கு களின் கட்டளைப்படி மக்கள் நடத்தலாகாதா? நம்மாழ்வார், சமய வாதிகளை விளித்து, இலிங்கத்திட்ட புராணத் தீரும் சமணரும் சாக்கியரும் வலிந்த வாதுசெய் வீர்களும் மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான் மலிந்து செந்நெல் கவரி வீசுந் திருக்குருகூ ரதனுள் பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும் பொய்யில்லை போற்றுமின்னே. என்று நல்லறிவுச்சுடர் கொளுத்தியுள்ளார். ஆழ்வார் தம்மை ஆட்கொண்ட திருமால், எல்லாச் சமயக் கடவுள் என்று வலி யுறுத்துகிறார். மற்றச் சமயத்தவரும் தத்தங் கடவுளைச் சமயத்தவர் போற்றுவதாகப் புகன்றுள்ளார் இதனால் அறியக் கிடக்கும் உண்மை என்னை? ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு பெயரால் ஒரே கடவுளை வழிபடுகிறது என்பது பெறப்படுகிறது. ஒவ்வொரு வேளையில் அடியவர், தம்மை ஆட்கொண்ட மூர்த்தியினிடத்தில் தலையன்பு காட்டுவதைக் கொண்டு, அவ்வடியவரைப் போற்றுவோர் தெய்வ நிந்தனை புரிந்து, மதச்சண்டை செய்வது அறிவுடைமையாகாது. நம்மாழ்வார் சமசர ஞான உபதேசம் பெற்ற நாடு எது? நம் தமிழ் நாடன்றோ? அத்தகை நாடு பின்னை நாளில் மதச் சண்டையால் இடர்ப்பட்டது. இன்னும் மதச்சண்டை புரிய முனைந்து நிற்போர் தமிழ் நாட்டில் இல்லாமற் போகவில்லை இவரால் நமது தமிழ் நாட்டின் மாண்பு கெடுகிறது. ஆண்டவ னருளால் மதச் சண்டை ஒழிக. சமசர நோக்கைக் கெடுக்குங் கொடுமைகள் பல. அவை ஒவ் வொன்று ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு விதமாகத் தலைசிறந்து தீமை செய்யும். நமது நாட்டில் சாதிப்பகை அதிகம் சாதிபேதம் என்னும்பேய் சமரசத் தெய்வத்தை நிலைபெறுத்துவதில்லை. அப் பேய் பொல்லாதது. ஆழ்வாரிடம் அப் பேய் ஒன்றுஞ் செய்யவில்லை. அவர் சாதியைக் கடிகிறார். எவராயினும் அவர் ஆண்டவனுக்கு அன்பராவரேல், அவரைத் தம் மடிகள் என்று ஆழ்வார் பாடி யிருக்கிறார். குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து எத்தனை நலந்தானிலாத சண்டாள சண்டாளர்க ளாகிலும் வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள் கலந்தார், அடியார் தம்மடி யார் எம்மடிகளே. இத்திருப்பாட்டில் சாதிவேற்றுமை கடியப்பட்டிருத்தல் காண்க. சமசர ஞானத்தால் விளையும் நலன்கள் பல. அவைகளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கது ஒன்று. அஃது அஞ்சாமை. சத்திய முள்ள இடத்தில் அஞ்சாமை இருத்தல் இயல்பு. சத்தியமாவது சத்தினிடத்தது. சத் என்பது அழியாத உண்மை. அதுவே இறை. இறையினிடத்தில் உறைந்து நின்று, அது யாண்டுமிருத்தலை உணர்ந்து, சமரச ஞானம் பெற்றவர்க்குப் பகைமை ஏது? பகைமை யில்லாத இடத்தில் அச்சம் ஏது? சமரச நோக்கு இல்லாதார் பகைத்து எழுந்து பாய்ந்தாலும், சமரச ஞானிகள் அவரைப் பகைத்து எதிர்க்கவும் மாட்டார்; புறமுதுகிட்டு ஓடவும் மாட்டார். அவர், அன்பால் - பொறுமையால் - உறுதி யாக நிற்பர். இதுவே அஞ்சாமை என்பது. இறைவனிடம் கொள்ளும் உறுதியே அஞ்சாமை. இன்னோரன்ன நுட்பங் களெல்லாம் செறிய, உன்னைச் சிந்தை செய்து செய்துஉன் நெடுமாமொழி இசைபாடி யாடிஎன் முன்னைத் தீவினைகள் முழுவேர் அரிந்தனன் யான் உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த இரணியன் அகல்மார்வங் கீண்டஎன் முன்னைக் கோளரியே முடியாத தென்னெக்கே என்று ஆழ்வார் ஓதியிருத்தல் காண்க. உன்னைச் சிந்தை செய்து என்று ஆழ்வார் அருளியதன் நுட்பத்தை ஓர்க. உண்மைப் பொரு ளாகிய ஆண்டவனிடத்து ஐயுறாது உறுதி கொண்டு, அவனைச் சிந்தித்துப் பாடி ஆடி எல்லாம் பெறலாம். உன்னைச் சிந்தனையி னால் இகழ்ந்த இரணியன் என்னுங்குறிப்பால். ஆண்டவனை இகழலாகா தென்பதை ஆழ்வார் அறிவுறுத்துகிறார். ஆழ்வார் என் முன்னைக் கோளரியே என்று விளித்து, முடியாத தென்னெனக்கே என்று மிடுக்காக வீறு கொண்டு அஞ்சாமை காட்டுகிறார். இம் மிடுக்கும், இவ் வீறும், இவ் அஞ்சாமையும் தமிழ் நாட்டுக்கு இதுபோழ்து வேண்டற்பாலன. இவைகட்குச் சமரச ஞானம் இன்றியமையாதது. 11. பாட்டு இறை உண்மையை - இறை நிலையை - இறை நேயத்தை - இறை வழிபாட்டை - இன்ன பிறவற்றை நம்மாழ்வார் எதன் வாயிலாக உலகுக்கு உணர்த்தினார்? பாட்டின் வாயிலாக என்பது சொல்லாமலே விளங்கும். ஆழ்வார் தமிழ் நாட்டைப் பாட்டால் ஓம்பினார் என்று சிறப்பாகச் சொல்லலாம். ஆழ்வாரது பாட்டியல் முன்னருஞ் சிலவிடங்களில் எடுத்துக் காட்டப்பட்டது. பாட்டு எது? உலகம் பாட்டு; உயிர்கள் பாட்டு; இறையும் பாட்டு; இம் மூன்றையும் ஒன்றுபடுத்தியிருப்பதும் பாட்டு; எல்லாம் பாட்டு. என்றும் மகிழ்ச்சியில் மூழ்கி இருப்பவர்க்கு பாட்டு நுட்பம் இனிது விளங்கும். பண்டை மூதறிஞர் தங்கருத்துக்களைப் பெரிதும் பாட்டாக வெளியிட்டுச் சென்றனர். இதற்குக் காரணம் என்னை? காரணங்கள் பலபடக் கூறப்படுகின்றன. அப் பல சரக்கை ஈண்டுப் பரப்ப வேண்டுவதில்லை. தலையாய காரணம் ஒன்று கூறலாம். அது, பண்டை நாளில் மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தமை என்க, இயற்கை வாழ்வில் கவலை முதலியன தோன்றுவதில்லை. அவ் வாழ்வு என்றும் மகிழ்ச்சியையே ஊட்டிக் கொண்டிருக்கும். மகிழ்ச்சி நெஞ்சில் பாட்டுத் ததும்பி வழிவது இயல்பு. இயற்கையைத் துருவி ஆராய்ந்தால் எங்கும் ஒலிமயமா யிருத்தல் புலனாகும். அவ்வொலியைக் கொண்டு எவ்வளவோ புதுமைகள் இந்நாளில் காணப்படுகின்றன. நெடுந்தூரத்தில் ஒருவரோடொருவர் கம்பி வாயிலாகப் பேசிக் கொள்வதை அறியாதார் இல்லை. புலன்களும் கரணங்களும் காமகுரோதங் கட்கு இரையாகாமல், இயற்கையில் ஒன்றப் பெற்று, அமைதியில் நிலைத்திருப்பவர்க்குக் கருவி முதலிய துணைகள் வேண்டுவ தில்லை இவ்வமைதி நிலை எய்தப் பெறுவோர் அமலயோகிகள் எனப்படுவர். மலயோகிகள் வேறு; அமல யோகிகள் வேறு. தொலைவில் பேசப்படுவது அமலயோகிகட்கு எளிதில் கேட்கும். அச் சக்தி அவர்கட்கு இயற்கையில் அமைகிறது. எல்லாவற் றிற்கும் அடிப்படையாயுள்ள இயற்கை ஒலியுடன் உறவு கொண்டவர்க்குத் தூரம் என்பது குறுக்கிடுவதில்லை. இயற்கை ஒலியில் ஆழ்வோர் இசையில் திளைப்பர். அவ் விசையின்பத்தின் மாண்பை என்னென்று சொல்வது! அதைச் சொல்வதற்குஞ் சொல் உண்டோ? அது சொல்லாகிய கட்டுக் கடங்காதது! அதன் மாண்பு என்னே, என்னே! வண்டின் மூரலிலும், சங்கின் முழக்கிலும், கிளியின் மழலையிலும், குயிலின் குரலிலும் இயற்கை இசைப்பாட்டு எழுகிறது - வானுற ஓங்கிய மூங்கில்களிலும். பழுத்துச் சாய்ந்த செஞ்சாலிக் கதிர் களிலும், கடலின் அலைகளிலும், இயற்கை இசைப்பாட் டெழுகிறது. இவ்விசைப்பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டுப் பயிற்சி பெறுவோர்க்குக் காடு மலை வயல் கடல் முதலியன பாட்டாகத் தோன்றும். காடு மலை முதலியன பட்டாப் பொலிவதைக் குயில் அறியும்; மயில் அறியும்; எல்லாம் இறை மயம் என்னும் உண்மை கண்ட அறிவு முதிர்ந்த அன்பர் அறிவர். காடு முதலியவற்றைப் பாட்டாகப் பார்ப்போர்க்கு எல்லாம் பாட்டாகவே தோன்றும்; இயற்கை முழுவதும் பாட்டாகவே தோன்றும். எல்லாவற்றையும் பாட்டாக உணரும் நெஞ்ச மன்றோ நெஞ்சம்! அந் நெஞ்சிலன்றோ பாட்டுத்தெய்வம் நடம் புரியும்! இயற்கை, பாட்டாயின், அதன் உயிராகிய இறையும் பாட்டே. இயற்கை இறை, பாட்டு மயமாயிருக்கிறது என்று சொல்லலாம். பாட்டாக உள்ள ஒன்றைப் பாட்டால் உணர்வது எளிது. உயிர்கள், பாட்டு ஆக முயலல் வேண்டும். உயிர்களின் இயல் பாட்டே. ஆனால் அவைகள் செயற்கையில் படியப் படியப் பாட்டியலை இழக்கின்றன. அவைகள், இயற்கை வாழ்வில் தலைப்படப் படத் தங்களுக்குரிய பாட்டியலைப் பெறும். உயிர்கள் நலத்துக்கு இயற்கையோடியைந்த இனிய வாழ்வு தேவை. ஆழ்வார் இயற்கை இறையையும் தம்மையும் பாட்டாகக் கண்டு தமிழ் பாடிய தமிழ்ச் செல்வர். அவர் தம் பாடலைத் தமிழ்க் கருவூலம் என்று கூறலாம். ஆழ்வார் திருமாலைப் பாட்டிசைக் கலையாகக் கண்டு பாடியதை, மெல்லிய லாக்கை . . . . . . . . . . . . . . . . சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன். . . . . நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம் ஆவியும் ஆக்கையும் தானே . . . . . தாமரைக் கண்ணனை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . நாவலர் பாமருவி நிற்கத் தந்த பான்மையேய் . . செவிகளா லாரநின் கீர்த்திக் கனியென்னும் கவிகளே காலப்பண் டேனுறைப்பத் துற்று . . சூழ்கண்டாய் . . . . . . . யாழின் இசையே அமுதே விண்ணுளார் . . . . . . . . . பண்ணுளாய் கவிதன்னுளாய் . . . . . . . . இன்கவி பாடும் பரம கவிகளால் தன்கவி தான்தன்னைப் பாடுவியாது இன்று நன்குவந் தென்னுட னாக்கியென் னால்தன்னை வன்கவி பாடுமென் வைகுந்த நாதனே. செஞ்சொற் கவிகாள் உயிர்காத்தாட் செய்ம்மின் திருமா லிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து . . நண்ணா வசுரர் . . பண்ணார் பாடலின் கவிகள் யானாய்த் தன்னைத் தான்பாடித் தென்னா வென்னும் என்னம் மான் . . கண்ணுள் நின்றகலான் கருத்தின்கண் பெரியன் எண்ணில் நுண்பொருள் ஏழிசையின் சுவைதானே . . என வரூஉம் அவர்தம் திருவாய்மொழிகளாற் காண்க. ஆழ்வார் பாடி ஆடுதலை விரும்பி நின்றதை, மதுசூதனை யன்றி மற்றிலேனென் றெத்தாலும் கருமமின்றி துதிசூழ்ந்த பாடல்கள் பாடியாட நின்றூழி யூழிதோறும் விதிசூழல் புக்கெனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள்செய்ய விதிசூழ்ந்த தாலெனக்கே லம்மான் திரிவிக்சிரமனையே. அழுவன் தொழுவன் ஆடிக்காண்பன் பாடி அலற்றுவன் . . எனவரூஉம் திருவாக்குகளால் உணர்க. நம்மாழ்வார் எல்லாவற்றையும் பாட்டாகக் கண்டு, தாமும் பாட்டாகிப் பாட்டாயுருகித் தமிழ் பாடினார். அவரை அவர்தம் பாக்களில் பார்க்கலாம். அவர், அவர்தம் பாட்டாக நமக்குக் காட்சி யளிக்கிறார்; அவரைப் பார்ப்போம்: செழுநீர்த் தடத்துக் கயல்மிளிர்ந் தா லொப்பச் சேயரிக்கண் அழுநீர் துளும்ப வலமரு கின்றன வாழியரோ முழுநீர் முகில் வண்ணன் கண்ணன் விண் ணாட்டவர் மூதுவாரம் தொழுநீ ரிணையடிக்கே அன்பு சூட்டிய சூழ்குழற்கே. முடிச்சோதி யாயுனது முகச்சோதி மலர்ந்ததுவோ அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன் கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே. ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய் நீரெல்லாம் தேறியோர் நீளிரவாய் நீண்டதால் பாரெல்லாம் உண்ட றம் பாம்பணையான் வாரானால் ஆரெல்லே வல்வினையேன் ஆவிகாப் பாரினியே, பொன்னுல காளீரோ புவன முழு தாளீரோ நன்னலப் புள்ளி னங்காள் வினை யாட்டி யேன்நா னிரந்தேன் முன்னுல கங்களெல்லாம் படைத்த முகில்வண்ணன் கண்ணன் என்னலங் கொண்ட பிரான் தனக்கென் னிலைமை யுரைத்தே கங்குலும் பகலும் கண்துயி லறியாள் கண்ணநீர் கைகளா லிறைக்கும் சங்குசக் கரங்க ளென்றுகை கூப்பும் தாமரைக் கண்ணென்றே தளரும் எங்ஙனே தரிக்கே னுன்னைவிட் டென்னும் இருநிலம் கைதுழா விருக்கும் செங்கயல் பாய்நீர்த் திருவரங் கத்தாய் இவள் திறத் தென்செய்கின் றாயே. இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோநீ இன்னேயானால் சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென் றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் கறந்தபால் நெய்யே நெய்யின் இன் சுவையே கடலினுள் அமுதமே அமுதில் பிறந்தஇன் சுவையே சுவையது பயனே பின்னைதோள் மணந்தபேராயா! வந்து தோன்றாய் அன்றேலுன் வையம் தாய மலரடிக்கீழ் முந்தி வந்து யான்நிற்ப முகப்பே கூவிப் பணிகொள்ளாய் செந்தண் கமலக் கண்கைகால் சிவந்த வாய்ஓர் கருநாயிறு அந்த மில்லாக் கதிர்பரப்பி அலர்ந்த தொக்கும் அம்மானே. மல்லிகை கமழ்தென்ற லீரு மாலோ வண்குறிஞ்சி இசை தவருமாலோ செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ செக்கர் நன் மேகங்கள் சிதைக்கு மாலோ அல்லியந் தாமரைக் கண்ண னெம்மான் ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன் புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிட மறிகிலம் தமிய மாலோ. உகக்குநல் லவரொடு முழிதந் துன்றன் திருவுள்ள மிடர்கெடுந் தோறும் நாங்கள் வியக்கவின் புறுதுமெம் பெண்மை யாற்றோம் எம்பெரு மான்பசு மேய்க்கப் போகேல் மிகப்பல அசுரர்கள் வேண்டுருவங் கொண்டுநின் றுழிதரு வர்கஞ்ச னேவ அகப்படி லவரொடும் நின்னொ டாங்கே அவத்தங்கள் விளையுமென் சொற்கொ ளந்தோ. ஆழ்வார் பாக்களை ஆழ்வாரே என்று வாழ்விற் கொண்டு போற்றி உய்வோமாக. 12. இறுவாய் நம்மாழ்வார் நந்தமிழ் நாட்டில் தோன்றினார்; தோன்றிப் பிறவியாலாய பயனைப் பெற்றார். அவர், எல்லா வற்றிற்கும் வித்து இறை ஒன்றே என்னும் உண்மை கண்டார்; அவ்விறை எங்கும் இருத்தலை உணர்ந்தார். எங்குமுள்ள அவ் விறையை அட்ட மூர்த்தமாகவும், இயற்கை வடிவாகவும், இயற்கைப் பட மாகவும் கொண்டு வழிபட்டார்; இறை மூவர் முதல் என்பதை யும் இறையை உணர்தற்குச் சமரச ஞானம் இன்றியமையாதது என்பதையும் தெளிந்தார். தாம் உணர்ந்து தெளிந்ததைப் பாட்டாக உலகுக்கு உதவினார். ஆழ்வார் பெற்றபேறு மற்றவர்க்கும் பாட்டாகத் துணைசெய்கிறது. இப் பேறுபெற்ற ஒருவரை ஈன்ற நாடு நந்தமிழ்நாடு. நம்மாழ்வார் அறிவால் - அன்பால் - வழிபாட்டால் - சமரசத்தால் - பாட்டால் - தமிழ்நாடு வளர்ந்தது. அந் நாடு இப்பொழுது எவ்வாறிருக்கிறது? தமிழ்நாடே! ஆழ்வார் காலத்தில் நீ எந்நிலையில் இருந்தாய்? இப்பொழுது எந்நிலையில் இருக்கிறாய்? உனது அறிவும் அன்பும் பாட்டும் எங்கே சென்றன? உனக்கு எத் துணையோ இடுக்கண்கள் நேர்ந்தன. அவைகளை யெல்லாம் ஒடுக்கி உன் நிலை குலையாதவாறு காத்துக் கொண்டாய். இப்பொழுது நேர்ந்துவரும் இடுக்கண்களால் உன் நிலை குலையுமோ என்ற அச்சம் அடிக்கடி நிகழ்கிறது. உன் வழக்க ஒழுக்கங்கள் நாளுக்கு நாள் மறைந்து வருகின்றன. தமிழ் நூலாராய்ச்சி குன்றி வருகிறது. உன் வயிற்றில் பாவலர் தோன்றுவதைக் காணோம். நம்மாழ்வார் போன்ற பெரியார் பலர் உன் பால் உதிக்குமாறு ஆண்டவன் அருள் செய்வா னாக. தமிழ் மக்களே! நீங்கள் வாழும் நாட்டு நிலையைக் கருதுங்கள்; நம்மாழ்வரும், அவர் போன்ற மற்றப்பெரியோரும் ஓதிய நூல்களை - பாக்களை - உண்மை நெறியை - நீங்கள் கைவிட்டமையே உங்கள் சிறுமைக்குக் காரணம்; நம்மாழ்வார் காலத்துக் கல்விபெற முயலுங்கள்; நம்மாழ்வார் கொண்ட அறிவும் - அன்பும் - சமரசமும் - செறிந்த கடவுள் நெறி நிற்க முயலுங்கள்; சமயச்சண்டை செய்யாதேயுங்கள்; தெய்வ நிந்தனை புரியாதேயுங்கள்! சாதிப்பற்றைக் களையுங்கள்; நம்மாழ்வார் பெயரால் அறச்சாலை அமையுங்கள்; எல்லாரும் நம்மாழ்வாராக உழையுங்கள்; பரோபகார சிந்தையை வளருங்கள்; முழு உரிமைக்காகப் பாடுபடுங்கள். இவ்வொன்றால் உங்கள் நாடு பண்டை நிலை எய்தும், அஞ்சாதேயுங்கள்; எழுங்கள்; எழுங்கள்; எழுந்து ஆழ்வார் திருவாக்கை நோக்குங்கள்: அத் திருவாக்கின்படி நடக்க முயலுங்கள்.  சைவத்தின் சமரசம் அணிந்துரை உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே - அப்பர் உலகம் பலவிதம் என்பது பழமொழி. இப்பொது மொழி அவரவர் உலகுக்கேற்ற பொருளை விளக்குவது. ஒவ்வொரு வர்க்கு ஒவ்வோருலகுண்டு. எனக்கும் ஓருலகுண்டு. அவ்வுலகில் நின்று பலவிதத்தை இருவிதத்தில் அடக்க எண்ணுகிறேன். ஒருவிதம் வேறுபடுஞ் சமயமெலாம் புகுந்து பார்க்கின், விளங்குபரம் பொருளே நின் விளையாட் டல்லால் - மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன, வாரிதியின் நதித்திரள்போல் வயங்கிற் றம்மா எனவரூஉந் தாயுமானார் திருவாக்கின்படி சமரச உணர்வு பெற்று வாழ்வது; மற்றொருவிதம் சமரசத்துக்கு மாறுபட்டு வாழ்வது; இவ்விரண்டையும் உலகில் காண்கிறோம். பின்னையதன் வளர்ச்சியே முன்னையதன் முடிவு என்பது எனது கொள்கை, கேணி, குளம், ஏரி, ஆறு, கடல் என்பன பெயரளவில் வேறுபட்டு நிற்பினும், அவைகளின் பொருளடக்கம் புனல் என்பதொன்றேயன்றோ? சைவம், பல சமயங்களாகவும் முடிவில் தனித்த ஒரு பெருஞ் சமயமாகவும் நிற்றலால், அதன்கண் சமரசமுடைமை அறிஞர்க்குப் புலனாகாமற்போகாது, சமரச ஞானியாகிய தாயுமான சுவாமிகள், ஆகார புவனத்தில், பல சமயங்களைக் குறிப்பிட்டு இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி என்று வைதிக சைவத்தைப் போற்றியிருத்தல் காண்க. இச்சமரச உண்மை தெரிப்பது இந்நூல். இச்சிறு நூல் வெளிவருதற்குக் காரணராயிருந்தவர் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையினர். இவர்தஞ் சபையின் நாற்பத்தோராம் ஆண்டு நிறைவிழாவிற்குத் தலைமை வகிக்கு மாறு சிறியேனைக் கேட்டனர்; கேட்டபோது எனது முன் னுரையை எழுதிக் கொணருமாறும் விரும்பினர். அவர் விருப் பத்துக்கிணங்கி - இந்நூலுள்ளுறையாம் இக்கட்டுரையை எழுதிச் சென்றேன். இரத்தாட்சி ஆண்டு மார்கழித் திங்கள் 13,14ஆம் நாட்களில் (1924ஆம் வருடம் டிசம்பர் மாதம் 27, 28ஆம் நாட்களில்) நடைபெற்ற ஆண்டு விழாப் பேரவையில், முதல் நாள் தொடக்கத்தில், முன்னுரையாக இக்கட்டுரையையொட்டிச் சுமார் இரண்டு மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தினேன். அச் சொற்பொழிவைச் செவிமடுத்த சபையினரும், வேறு சில அன்பரும் அது நூல் வடிவாக வெளிவரல் வேண்டுமென்னும் விருப்பத்தை அடியேற்குத் தெரிவித்தனர். சைவ உலகிற்குப் பயன்படுமாறு இக்கட்டுரைக்குச் சைவத்தின் சமரசம் என்னும் பெயர் நல்கி, இந்நூல் வடிவாக இதை அச்சிட லானேன். இதற்குக் காரணராக உள்ள தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபையினர்க்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன். இந்நூலின் உள்ளுறை, ஒரு சபையின் ஆண்டுவிழாக் கூட்டத்தில் பேசிய முன்னுரையாகலான், பெரிதும் பேசு முறைபற்றி, இயன்றவரை குறியீடுகளை நீக்கி, எளிய நடையில் இதை எழுதியிருக்கிறேன். கல்வி, அறிவு, ஆராய்ச்சியில் குறை பாடுடைய எளியேன் எழுத்தில், கருத்தில் பிறவற்றில் பிழைகள் நிகழ்ந்திருக்கலாம். அப் பிழைகளைப் பொறுத்தருளுமாறு அன்பர்களை வேண்டுகிறேன். சைவ உலகம் இச்சிறு நூலை ஆதரிப்பதாக. குற்றநீ குணங்கள் நீ கோதில் ஆலவாயிலாய் - ஞானசம்பந்தர். சென்னை இராயப்பேட்டை 14.1.1925. திருவாரூர் - வி. கலியாணசுந்தரன். கடவுள் திருத்தொண்டு தேவாரம் நன்க டம்பனைப் பெற்றவள் பங்கினன் தென்க டம்பத் திருக்கரக் கோயிலான் தன்க டன்னடி யேனையுந் தாங்குதல் என்க டன்பணி செய்துகி டப்பதே. - அப்பர் திருவாசகம் அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமுங் குன்றே யனையாய்! என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ இன்றோ ரிடையூறு எனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே! நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே. - மாணிக்கவாசகர் பெரிய புராணம் வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம். - சேக்கிழார் சைவத்தின் சமரசம் எழுவாய் சகோதரிகளே! சகோதரர்களே! சிவமணமுந் தமிழ்மணமுங் கமழும் திருமந்திர நகர மென்னும் இத் தூத்துக்குடிக்கண், ஆண்டவன் அருணெறியை வளர்த்துவரூஉஞ் சைவ சித்தாந்த சபையின் நாற்பத்தொன்றாம் ஆண்டு விழாவை இனிது கொண்டாடும் பொருட்டுக் குழுமி யுள்ள இப்பெருங் கழகத்திடை நின்று, நீங்கள் பணித்த தொண் டாற்றச் சிறியேன் ஈண்டுப் போந்துள்ளேன். இத் தொண்டாற் றும் பேற்றை வழங்கிய உங்களுக்கு எனது நன்றியறிதலான வணக்கத்தைச் செலுத்துகிறேன். அடியேன் ஆற்றப்புகுந் தொண் டில் குற்றங் குறைகள் நிகழுமேல், அவைகளைப் பொறுத்தருளு மாறு வேண்டுகிறேன். சமயம் சமய நாவாய் உலகில் வாழும் உயிர்கள் யாவும் இன்பத்தில் விருப்பும் துன்பத்தில் வெறுப்பும் இயல்பாகக் கொள்வதைக் காண் கிறோம்; இன்பம் பெறவேண்டி உயிர்கள் முயன்று பல துறை களிலிறங்கி உழைப்பதையுங் காண்கிறோம். இக் காட்சிகளான் நாம் பெறுவதென்னை? படைப்பு நோக்கம் இன்பப் பேற்றைக் குறிக்கொண்டு நிற்பதென்னும் உண்மை பெறுகிறோம். உயிர்கள் துன்பக்கடல் கடந்து இன்பக்கரை ஏறுவதெப்படி? அதற்கொரு நாவாய் வேண்டுமன்றோ? அதுவே சமயம் என்னுஞ் செவ்விய நாவாய். சமயம் சமயமென்னுஞ் சொற்குப் பலர் பலவாறு பொருள் கூறுப. அச்சொற்பொருள் குறித்து ஈண்டு ஆராய்வதில் நமது அரும் பொழுதைப் போக்க வேண்டுவதில்லை. உலக வழக்கையொட்டிச் சுருங்கக் கூறின், இன்பப் பொருளாம் இறைவனை அடை தற்கு உயிர்கள் கடைப்பிடித்தொழுகும் ஓர் அற வழியே சமயம் என்று கூறலாம். சமயமென்பதொன்றில்லையேல் உலகில் அறமேது? அன்பேது? ஆன்ம உணர்வேது? மக்களை விலங்கினின்றும் பிரித்து, அவர்களைச் செந்நெறியில் நிறுத்தி, ஆண்டு வருவது சமயமெனில், அதன் பெற்றியை என்னென்று கூறுவது? சமயமென்பது, நாட்டினும் மொழியினும் வகுப்பினும் வழக்க ஒழுக்கங்களினும் இன்னோரன்ன பிறவற்றினும் மக்கட்கு விழுப்பந் தருவது. நாடும் பொழியும் பிறவும் மக்களைப் பிரிக்குந் தகையன. சமயமோ அப் பிரிவைப் போக்குந் தகையது. நாட்டுப் பற்றும், பிற பற்றுக்களும் அன்பைத் தம்மளவில் கட்டிப் பிணிப் பன. சமயப்பற்றோ அன்பைக் கட்டிப் பிணியாது பெருக்குவது. நாடு முதலியன சில வேளைகளில் பெரிதும் - தம் வளம் அருகும் வேளையில் அல்லது பிறநாட்டு வளம் பெருகும் வேளையில் - அழுக்காறு அவா வெகுளி இத் தொடக்கத்துத் தீக்குணங்களாம் வெம்மை உமிழும் ஊற்றுக் கண்களாகும். சமயமோ எவ்வேளை யிலும் அடக்கம் பொறை அருள் ஈகை ஒப்புரவு இத்தொடக் கத்து நறுங் குணங்களாந் தண்மை சொரியும் ஊற்றுக்களனா யிலங்கும். சமய ஞானம் சமய ஞானமில்லாத நாட்டார் தமது நாட்டையே (Nation) கடவுளெனக்கொண்டு, அதன் வழிபாட்டுக்கெனப் பிற நாடு களைப் பலியிடுவர். சமயஞான நாட்டமுடையோர் அம் மற வினையாற்ற ஒருப்படார். இவர், நமது நாட்டுக்கும் பிறநாடு களுக்குமுள்ள வேற்றுமை என்ன? நமது நாட்டையும் பிற நாடு களையும், மலைகளும் ஆறுகளும் காடுகளும் கடல்களும் பிரித் திருக்கின்றன. நாட்டுக்கேற்பத் தட்பவெப்ப நிலைகள் மக்கட்குப் பலதிற நிறம் மொழி வழக்க வொழுக்கங்களை வழங்கியிருக் கின்றன. இவ் வேற்றுமை ஒரு நாட்டு மக்களுக்கும் மற்றநாட்டு மக்களுக்குமுள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டை எங்ஙனங் கல்லும்? எல்லாருள்ளத்தும் வீற்றிருப்பவர் ஒரு கடவுளே. எந் நாட்டினரும் எம்மொழியினரும் எவரும் எல்லாருஞ் சகோ தரரே என்று எவர்க்குந் தீங்கிழையாது, சமயம் நேர்ந்துழி ஒல்லும் வகை நலமே புரிய முயல்வர். வேற்றுமை நாட்டமுடைய நாட்டார், வகுப்பார் முதலிய யாவரையும் ஒற்றுமைப்படுத்த வல்லது சமயமொன்றே. இத்தகைய சமயம் மக்கட்கு இன்றி யமையாதது என்று சொல்லவும் வேண்டுமோ? உலகில் சிலவிடங்களில், சிலவேளைகளில் போருக்கும், கொலைக்கும், பிற கொடுமைகட்கும் சமயமுங் காரணமாக நிற்றலான், அதுவும் வேண்டுவதில்லை என்று கூறுவோருமுளர். சமயப் பெயரால் போரிடுவோர் சமய ஞானிகளல்லர். அவர் சமய உண்மை கைவரப் பெறாத பித்தர்; உன்மத்தர். அவ ருள்ளத்தில் உண்மை ஞானம் விளங்கினால் அவர் பித்த மயக்கந் தீரப்பெற்றுத் தமது அறியாமையை உணர்வர், சமயப் பெயரால் நிகழுங் கொடுமைகளைக் களையவுஞ் சமய ஞானம் வேண்டற் பாலது. அன்புநெறி ஓம்பவந்த எச்சமயக் குரவராதல் தங் கொள்கை தழுவ ஒருப்படாத பிறரை வருத்துமாறு அறைந் துள்ளனரா? அவ்வாறறையும் ஒருவர் சமய குரவராவரோ? சமயஞானமின்றிச் சமயப்பெயரால் பித்துக் கொண்டு, களி களும் மடிகளும் நிகழ்த்துங் கொடுவினைப் பழிகளைச் சமயத் தின்மீது சுமத்துவது அறிவுடைமை யாகாது. சமயஞானம் வேண்டாமென்று சாற்றுஞ் சகோதரர்கள், அன்னசாலை வைத்தியசாலை பாடசாலை முதலிய அறச்சாலைகள் அமைக்கு மாறும், கூவல் குளந்தொட்டு வளம் பெருக்குமாறுந் தூண்டு வது எது என்று சிறிது நேரஞ் சிந்திப்பார்களாக. ஆன்மநேயம் நிலைபெறுத்துவது தன்னலத்தை அறுத்துத் தனக்கும் பிறர்க்கும் வேற்றுமை இல்லையென்னும் ஆன்ம ஞானத்தை அறிவுறுத்துஞ் சமயமா வேண்டா? இந்நாளில் உலகில் சமய ஞானம் அருகிவருத லாலன்றோ (ஒரு நாட்டாரை மற்றொரு நாட்டார் வருத்தி யடக்கித் தாமின்ப நுகர) நாடுகளில் ஆலகாலமனைய நச்சுக் காற்றும், காலனும் அஞ்சத்தக்க கொலைக் கருவிகளும், இன்னோரன்ன பிறவும் காணப்படுகின்றன? மக்களிடை அரும்பியுள்ள இத்தீய விலங்குணர்வைச் செகுக்கச் சமயம் வேண்டுமா வேண்டாவா? உலகில் ஆன்ம நேயத்தையும் சகோ தர உரிமையையும் அமைதியையும் நிலைபெறுத்த வல்லது சமயம் சமயமே! எச்சமயம்? சமய உண்மை சமயம் இன்றியமையாததெனில் எச்சமயத்தைக் கொள்வது என்னும் வினா எழாமற் போகாது. உலகிலோ பல சமயங்களிருக் கின்றன. எச்சமயத்தைக் கொள்வது? எச்சமயத்தைத் தள்வது? உலகிலுள்ள சமயங்களை எண்ணால் கணக்கிட்டுவிடலாம். ஆனால் மக்கள் மனத்திடையூருஞ் சமயங்களின் தொகையை எவ்வாறு கணக்கிடுவது? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சமயமுண்டு என்று கூறுவது மிகையாகாது. சமய உண்மை என்பது அவரவர் அறிவாற்றலுக்கும் அநுபவத்துக்கும் ஏற்ற வாறு விளங்கித் தோன்றுவது. தெய்வம் ஒன்றே ஞாயிற்றைப் படம் பிடிக்க ஒருவன் புறப்பட்டதாக வைத்துக்கொள்வோம். அவன் ஞாயிறுபால் அணுகி அதன் உண்மை வடிவைக் கண்டுபிடித்தற்கு முன்னர், அவன் தங்கு மிடந்தோறும் ஒவ்வொரு படிவமாக ஞாயிறு திகழ்வது நோக்கி, அவ்வப்போது புலப்படும் வடிவை அவன் பிடித்து வருவானா யின், ஒரு ஞாயிறே பல வடிவங்களாகத் தோன்றுவது கண்டு அவன் வியப்புறுவன். கடவுள் நிலையும் இத் தன்மைத்தே. தெய்வமொன்றே பலவாக அவரவர் அறிவு ஆராய்ச்சி அன்பு நிலைக் கேற்றவாறு புலப்படுகிறது. இவ்வுண்மை யுணர்ந்த பெரியோருங் கடவுள் நிலையை மக்கள் அறிவுநிலைக் கேற்ற வண்ணம் அறிவுறுத்தியுள்ளார். ஆண்டவன் நிலை கிறிது ஒருவரே கடவுளை ஓரிடத்தில், பரலோகத்துள்ள எங்கள் பிதாவே என்றும், மற்றோரிடத்தில், பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம் என்றும், இன்னோரிடத்தில், பரலோக ராஜ்யம் உங்களுள்ளிருக்கிறது என்றும் உலகுய்ய ஓதியிருக்கிறார். நந் தமிழ்ப் பெரியோரும் அப்பன்நீ அம்மைநீ ஐயனுநீ அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ என்றும், வடிவேறு திரிசூலந் தோன்றும் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும் என்றும், இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமானனாய் எறியுங் காற்று மாகி என்றும், சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் என்றும், நின்னாவார் பிறரன்றி நீயே யானாய் என்றும், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே என்றும் ஆண்டவன் நிலையைப் பலபட உலகோர்க்கு உணர்த்தியிருத்தல் காண்க. எல்லாமாய் அல்லவுமாய் இலங்குங் கடவுளை அன்பால் எப்படி ஏத்தினாலென்ன? தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமல மன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கைகண் டாரு மஃதே வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார் ஊழ்கொண்ட சமயத் தன்னான் உருவுகண் டாரை யொத்தார் எனவரூஉங் கம்பன் கருத்தும் ஈண்டு உன்னற்பாற்று. சமயத்தில் சமரச மணம் உலகிலுள்ள எல்லாச் சமயங்களும் ஒரு கடவுளையே பல பெயரால் பல வடிவங்களாகப் போற்றிப் புகழ்கின்றன. இவ் வுணர்வோடு எச்சமயத்தை ஆய்ந்தாலும் அச்சமயத்தில் சமரச மணங் கமழ்வது காணலாம். அம் மணங் கமழப் பெறாத சமய மொன்றிருப்பதாகத் தெரியவில்லை; இருக்குமேல் அது கடவுள் நெறிகாட்டுஞ் சமயமாகாது. எச்சமயம், எல்லாச் சமயங் களையுஞ் சகோதர சமயங்களாகத் தழுவுகிறதோ, அது சமரச நோக்குடைய சன்மார்க்க சமய மென்று போற்றப் படும். எச்சமயம் பிற சமயங்களைப் பொய்யெனக் கருதுகிறதோ பழிக்கிறதோ, அது சமரச சன்மார்க்கத்தை வளர்ப்பதாகாது. சமரச நோக்குடைய சமயமெதுவோ, அது சாதி மத நாடு மொழி நிற வேற்றுமைகளைப் பாராட்டாது; எல்லா உயிர்களிடத்தும் ஒரே வித அன்பு செலுத்துமாறு மக்களை ஏவும். அச்சமயம் கைம்மாறு கருதாப் பணியாற்றுமாறு போதிக்கும்; தனக்கென வாழாது பிறர்க்கென வாழுமாறு அறிவுறுத்தும்; தியாக உணர்வு நல்கும்; உயர்வு தாழ்வை ஒதுக்கும். இன்னோன்ன விழுமிய நோக்கங்களையுடைய சமய மெதுவோ அதுவே சமயம். கடவுள் சமயம் உலகில் தோன்றிய மெய்க்குரவர் பலரும் அறிவும் அன்புஞ் செறிந்த ஒரு நெறியை அறிவுறுத்தினர். அந்நெறி உயிர்கட்குத் துன்பமூட்டும் முனைப்பையறுத்து இன்பமூட்டுவது. துன்ப மூட்டும் முனைப்புடையார்க்கு நெறிகள் பலவாகத் தோன்றுதல் இயல்பே. முனைப்பற்ற இடத்திலன்றோ சமரச சன்மார்க்கம் மிளிரும்? முனைப்பை வளர்க்குமாறு எச்சமய மாவது சொல்கிறதா? ஒன்றேனுமில்லை. இதனால் சமயங் களின் ஒற்றுமை புலப்படும். பல முத்துக்கள் கோவைபட்டு நிற்க, அவைகளினூடே ஒரு நூலிழை நுழைந்து நிற்றல்போலப் பல சமயங்களினூடே சமரச சன்மார்க்கமென்னும் உயிர்நாடி புகுந்து நிற்கிறது. அச் சமரச சன்மார்க்கமே கடவுள் சமயம். அச் சமயமே, மேலே எச்சமயமென்றெழுந்த வினாவிற்குச் செவ்வ னிறை இறுக்குஞ் சமயம். சைவ சித்தாந்தம் சைவ சித்தாந்தம் தொன்மையது நாம் இன்று இவண் ஒரு சைவ சித்தாந்தப் பெருங்கழக ஆண்டுவிழாக் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறோமாதலால், அச் சைவ சித்தாந்தம் சமரச சன்மார்க்கத்துக்கு எவ்வளவு தூரம் அரண் செய்கிறதென்பதைச் சிறிது ஆராய்வோம். சைவ சித்தாந்தத்தின் சமரச நுட்பத்தை ஆராயுமுகத்தான், அதன் வரலாற்றையும் ஊடே ஊடே சில உரைகளால் குறிப் பிட்டுச் செல்ல எண்ணுகிறேன். சைவ சித்தாந்தம் மிகத் தொன்மையது. மக்களுள் மிகத்தொன்மை வாய்ந்த தமிழ் மக்களால் அந் நெறி காணப் பட்டது. தமிழ் மக்களின் தொன்மை சரிதத்தால் அளந்துரைக்கும் பான்மையதன்று. அவர்கள் தொன்மை, சரித்திர காலத்தையுங் கடந்து நிற்பது. இப்பொழுது இந்துமகா சமுத்திரமென வழங்கப்படும் நீர்ப்பரப்பு, நிலப்பரப்பாயிருந்த ஞான்று, அதன்கண் தமிழ்மக்கள் வதிந்து, தாங்கள் நாகரிகத்தை வளர்த்து வந்தார்களென்று சொல்லப்படுகிறது. விரிவு ஆராய்ச்சியாளர் நூல்களிற் காண்க. இயற்கை அழகும் முருகனும் பழந்தமிழர், இயற்கை நிலையமாகிய மைவரையில் இயற்கை உணவுகொண்டு, இயற்கை உடையணிந்து, உலகெனும் இயற்கை நூல் பயின்று, இயற்கையுடன் கூடி, இயற்கையைப் பாடி, இன்ப வாழ்வு நடத்தி வந்தபோது, அவர்க்கு இயற்கை யினுள் பிரிவின்றி விராவி நிலவும் அழியா அழகு புலனாயிருத் தல் வேண்டும். இயற்கையுள் வாழ்வோர்க்குக் கைபுனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பு எளிதில் புலனாகும். அப் பேரழகை முருகெனும் முழுமுதற் பொருளென்று தமிழ்மக்கள் போற்றி வந்தார்கள். முருகு என்னுஞ் சொற்கு அழகு இளமை மணம் என்று புலவர் பொருள் கூறுப. என்றும் மாறா இளமை யும் நீங்கா மணமும் அழியா அழகுறை யிடத்தில் அதனோடு நீக்கமின்றி நிலவுதலியல்பு. இம்மூன்றும் ஒன்றிய முருகே பழந்தமிழரால் இறையெனப் போற்றப்பட்டது. முருகு என்பது பின்னை அன் விகுதிபெற்று முருகன் என்று வழங்கலாயிற்று. பழைய கிரேக்கர் அழகு நுட்பந்தெளிந்து, அழகு வாழ்வை நடாத்தி, இன்பந் துய்த்ததும் நினைவிற்கு வருகிறது. இது போழ்தும் அழகோம்ப அமெரிக்க அறிஞருட் சிலர் பெரு முயற்சி செய்து வருவதோடு நில்லாது, அதற்கெனக் கழகமுங் கண்டு வருகிறார். தமிழர் அந்நாள் கண்ட அழகு, சமரச அன் பொழுகும் நன்மனத்துக்குக் காட்சியளிக்கும். மாறுபட்டு வேறு பட்டுக் கலாம் விளைக்கும் உள்ளத்துக்கு இயற்கையழகு எவ்வழியில் புலனாகும்? எவ்வறிஞரும் போற்றும் அழகையே பழந்தமிழர் பொருளெனப் போற்றியது காண்க. இயற்கை அழகை வெறுப்போர் இறையின்ப நுகராது, செயற்கை வெம்மையிலன்றோ வீழ்ந்து இடர்ப்படுவர்? இயற்கையை விடுத்து இறைவனைத் தேடுவது காசிக்குச் செல்லவேண்டுமென்று கதிர்காமத்தை நோக்கி நடப்பதை ஒக்கும். கந்தழி அழகாம் முருகைப் பொருளெனப் போற்றிய நந் தமிழ்ப் பெரியோர் பின்னைத் தாங்கண்ட உண்மைப் பொருளைக் கந்தழி என்னும் பெயரால் வழிபடலாயினர். (கந்து - கட்டு : அழி - அற்றவிடம்) முழுமுதற் பொருள் கட்டற்றது என்ற முடிவு அந்நாளிலேயே தமிழ் மக்கட்குத் தோன்றியது போலும். முருகு ஒருபோது தோன்றுவதும் மற்றொருபோது மறைவதுங் கண்டு, அத்தோற்ற மறைவை நம் மூதறிஞர் ஆராயத் தலைப்பட்டிருப்பர். அவ்வாராய்ச்சியான் முருகிற்குத் தோற்ற ஒடுக்கமில்லை யென்றும், தம்மாட்டுள்ள அறியாமை என்னுங் கட்டு அதை மறைக்கிறதென்றும், அவ்வறியாமை விலகும்போது அது தோன்றுகிறதென்றும் அவர்தம் பேரறிவு அவர்க்கு உணர்த்தியிருக்கும். அந்நாள் தொட்டுத் தமிழ் மக்கள் கட்டுடையன உயிர்களென்றும், கட்டில்லாதது கடவுளென்றுங் கருதிக் கடவுளைக் கந்தழியெனப் போற்றியிருப்பா? கந்தழி என்பதை ஆராய்ந்தால் இவ்வுண்மை பெறப்படுதல் காண்க. கட்டு - உயிர் - கடவுள் மக்கட்குக் கட்டுண்டு என்பதும், ஆண்டவனுக்கு அஃதில்லை என்பதும் எச்சமயத்தவரும் ஒப்பமுடிந்த உண்மை. கட்டைப் பொருளாக் கொள்ளாத சமயத்தாரும் விவகாரத்தில் கட் டுண்மை மறுக்கிறாரில்லை. ஆதலால் கந்தழி, கட்டைப் பொருளாக் கொள்ளாத சமயத்தார்க்கும் உரியதாகுமென்க. கடவுளைத் தமிழ் மக்கள் கந்தழி என்று வழிபட்டமையான், அவர்கள் கட்டு, உயிர், கடவுள் என்னும் மூன்று பொரு ளுணர்வு பெற்றிருந்தார்களென்பது புலனாகிறது. தமிழ் மக்கள் அவ்வுணர்வு பெற்றிருந்தார்களென்பதை அவர்கள் தமிழ் எழுத்துக்களுக்கிட்டுள்ள உயிர், மெய், உயிர்மெய் என்னும் பெயர்களைக் கொண்டு நன்கு வலியுறுத்தலாம். உலகிலுள்ள சமயங்களெல்லாம் பொருளுண்மை கூறு வதில் பலதிறக் கருத்துடையனவாயினும், அவையாவும் அறி யாமையொன்று உண்டென்றும், அதனினின்றும் ஆன்மா விலகி, அஃதில்லா ஆண்டவனோடு கலக்க வேண்டுமென்றுங் கூறாதொழிகின்றனவோ? அறியாமையை உள்பொருளாக் கொள்வோரும் இல்பொருளாக் கொள்வோரும் அதை யொழிக்க முயல்வதுண்மையே. பாரமார்த்திகப் பேச்சு இப் பொழுது இந்நிலையில் வேண்டுவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் கண்ட முப்பொருளுண்மை எப்பொருள் பற்றியாதல் எந்நிலையிலாதல் எச்சமயத்தவராலுங் கொள்ளப்படுவதே. இல்லற நெறியே பற்றுக்கோடு முப்பொருள் உண்மை கண்ட நம் முன்னோர் வீடு பேற்றிற்கு இல்லற நெறியையே பற்றுக்கோடாகக் கொண்டு வாழ்ந்தனர். மிக மிகப் பழைய காலத்தில் தமிழ் நாட்டில் துறவறமென்றொரு நெறியிருந்தது என்பது தெரியவில்லை. சமண பௌத்த மதங்கள் தோன்றிய பின்னரே நமது நாட்டில் துறவு என்னும் பிரிவு தோன்றிற்று என்று சில அறிஞர் கருது கிறார். துறவு ஏற்பட்ட பின்னையே இன்பம், சிற்றின்பமெனவும் பேரின்பமெனவும் பிரிந்தது போலும்! பண்டைக் காலத்தில் இயற்கையோடு இயற்கையாய், ஒருவனும் ஒருத்தியும் வாழ்ந்து வந்தமையான், அவர் நுகர்ந்த இன்பம் வீட்டுக்குரிய இன்ப மாகவுந் துணை செய்தது. 1கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள எனவும், 2பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை உடையேன் எனவும் வரூஉம் ஆன்றோர் மொழிகளின் பொருளுண்மையை யோர்ந்துணர்க. ஆணும் பெண்ணும் இயற்கையை விடுத்துப் பிரிந்து தனிப்பட்டுச் செயற்கையாளராய் வாழும் இந்நாளில் பண்டைக் கால நிலை அறிதலரிதே. பழந்தமிழர் தாம் போற்றிய அழகைப் பெண்ணென்றும் மாதரென்றும் அழைத்த நுட்பத்தை உல கோர் தேர்ந்தால், அவர் இல்லறத்தின் மாண்பை உணரப் பெறு வர். விரிவு களவியல், திருக்கோவையார் முதலிய நூல்களிற் காண்க. (பெண், மாதர், அழகு இவை ஒருபொருட் சொற்கள்.) அத்தகை இல்லறத்தை வெறுப்போர் அரியர். தமிழ் மக்களின் இல்லறவின்பம் பல சமயத்தார்க்கும் உரித்தே. விரிப்பிற் பெருகும். சிவம் எனும் திருநாமம் முருகு, கந்தழி என்னும் பெயர்களால் போற்றப்பட்டு வந்த கடவுட்பெயர், பின்னைப் பெரிதுஞ் சிவமெனுந் திருப்பெயரால் போற்றப்படலாயிற்று. சிவம் என்பது தென்மொழி என்றும் வடமொழி என்றும் வாது செய்குநரும் தமிழ் நாட்டிலுளர். சிவம் என்பது செம்மையினடியாகப் பிறந்த தனித் தமிழ்ச் சொல்லென்றும், அச்செழுஞ் சொல்லின் பொருட் செறிவு நோக்கி வடமொழியாளர் அதைத் தம் நூற்களில் நுழைத்துத் தம்மொழியாட்சியிற் கொணர்ந்தனரென்றும் இந்நாளாராய்ச்சி யாளர் சிலர் கூறுகிறார். வடமொழியாளர் சிவமெனுஞ் சொற்குக் காந்தி, மங்கலம், ஆனந்தம், அறவோர் உள்ளத்துறை வது, சராசரங்களின் தோற்ற ஒடுக்கத்துக்கு நிலைக்களனாய்க் கிடப்பது, இருளைப் போக்கி அருளைத் தருவது, முற்றறி வுடையது, தூயது, இன்பந் தருவது முதலிய பல பொருள் விரித்துள்ளார். இப்பொருள்கள் அறிஞருள்ளத்தைக் கவரு மென்பதில் ஐயமில்லை. விரிவு வடமொழி நூல்களிற் காண்க. சிவமெனுஞ் செம்பொருளைச் சாந்தம் சிவம் அத்வைதம் என்று வேதாந்தம் வழுத்துகிறது; சிவமெனுநாமந் தனக்கே யுடைய செம்மேனி எம்மான் என்று தமிழ் வேதம் புகழ்ந் துரைக்கிறது. சிலப்பதிகாரம் முதலிய நூல்களிலும் சிவ பெருமான் பிறவா யாக்கைப் பெரியோன் என்று போற்றப் படுதல் காண்க. அடியார்க்கு நல்லாருள்ளிட்ட உரையாசிரியர் பலரும் சிவபெருமானைக் குறிக்குமிடங்களிலெல்லாம் இறை வன் என்ற சொல்லானே குறித்துச் செல்வதும் உன்னத்தக்கது. எச்சமயத்தவரும் போற்றுந் தாயுமான சுவாமிகளும் ஆண்ட வனைச் சிவமெனும் நாமத்தாற் போற்றுகிறாரெனில் அத்திரு நாமத்தின் மாண்பை என்னென்றியம்புவது? தெய்வம் வேறுள தென்பவர் சிந்தனை நைவ ரென்பது நற்பர தற்பர சைவ சிற்சிவ னேயுனைச் சார்ந்தவர் உய்வரென்பதும் யானுணர்ந் தேனுற்றே என்பது சுவாமிகள் திருவாக்கு. சிவ என்னுந் திருநாமத்திலுள்ள தெய்வத் தன்மை நோக்கியே, சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்றிடச் சிவகதி தானே என்று திருமூலநாயனாருந் திருவாய் மலர்ந்தருளினார். சைவம் சி என்பது சூரியகலை என்றும், வ என்பது சந்திர கலை என்றும் யோக நூல்கள் கூறும், சிவமென்பது கடவுளியல்பு களெல்லாவற்றையும் தன்னகத்தே அடக்கியுள்ள ஒரு பெருஞ் சொல்லாகலான், அதுவே சிறப்பாகச் சைவ நன்மக்களாலும் மற்றவர்களாலுங் கொள்ளப்பட்டது. இச் சிவசம்பந்தமுடைய சமயமும் சைவம் என்னும் பெயர் பெற்றது. சைவம் வளர்த்தோர் தமிழ்மக்கள் கண்ட சமயம் பின்னைத் திருஞானசம்பந் தர், திருநாவுக்கரசர், சுந்தர மூர்த்தி, மாணிக்கவாசகர், திருமூலர், சேக்கிழார் முதலிய பெரியோரால் வளர்க்கப்பட் டது. முதல் நால்வரைச் சைவத் திருவாளர் சமய குரவரெனப் போற்றி வருகிறார். இவர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் வேறு சில கொள்கைகளும் பரவலாயின. சிறப்பாகச் சமண பௌத்த மதங்களைக் குறிப்பிடலாம். நால்வர் அருளிய தேவார திரு வாசக மென்னுந் தமிழ் வேதத்தில் சமரச சன்மார்க்கத்துக்கு வேண்டப்படுஞ் செம்பொருள் பலவுஞ் செறிந்து கிடக்கின்றன. தாலிபுலாக நியாயம் பற்றி ஈண்டு இரண்டொன்று எடுத்துக் காட்டுகிறேன். கடவுள் நிலை கடவுளைப் பற்றித் தமிழ் வேதம், தேவராயும் அசுரராயுஞ் சித்தர் செழுமறைசேர் நாவராயு நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மா லீசனென்னும் மூவராய முதலொருவன் மேயது முதுகுன்றே என்றும், இன்னவுரு இன்னநிறம் என்றறிவதேல் அரிது நீதிபலவும் தன்ன வுருவாம் என்றும், விறகிற் றீயினன் பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் என்றும், ஒரு நாமம் ஒருவரும் ஒன்றுமில்லார்க்கு ஆயிரந் திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ என்றும், ஈறிலாப் பதங்க ளியாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே என்றும் முழங்குதல் காண்க. அவ் வேதம் சமரச ஞானத்தைப் பற்றி, வாது செய்து மயங்கு மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலும் ஏழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதே வனலால் தேவர்மற் றில்லையே என்றும், விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ்செய்தே எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற் கேற்றதாகும் என்றும், ஆறொன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அப் பொருள்கள் வேறொன் றிலாதன என்றும், ஆறுசமயத் தவரவரைத் தேற்றுந் தகையன என்றும், மிக்க சமயங்கள் ஆறினுருவாகி நின்ற தழலோன் என்றும் ஓதுதல் காண்க. இச் செம்மை நல்லுரைகள் ஒரு கூட்டத்தார்க்கோ உரியனவாகும்? அவை சமரச நாட்டமுடைய அனைவர்க்கும் உரியனவாம். எவர் எக்கருத்தை நாடினும் அவர் அக் கருத்தைத் தேவார திருவாசகத்திற் காணலாம். இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை யாருன்னை அறியகிற் பாரே என்னுமொரு திருப்பாட்டுத் தமிழ் வேதத்தில் மிளிர்கிறதெனில் அதன் மாண்பைக் கூற யான் அருகனாவனோ? திருமூலர் திருவாக்கு : திருமூலர் திருவாக்கில் பலசமயக் கருத்துக்கள் ஒளி செய்வதை ஈண்டு விரித்துக்கூற இடமின்மை கருதி வருந்துகிறேன். திருமூலர் அன்பே சிவம் என்ற உண்மை கண்ட அன்பர். ஒன்றது பேரூர் வழியா றதற்குள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது என்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே என்று சமரசஞான அறிவுச்சுடர் கொளுத்திய அறிஞர் அவர். தேயமு நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக் காயமிந் நாட்டிடைக் கண்டுகொண் டேனே என்று பொருளிடங் காட்டிய பெரியார் அவர். அவரை எவ்வறிஞர் எவ்வன்பர் எவ்யோகி எந்நாட்டார் எச் சமயத்தார் போற்றாதொழிவர்? சேக்கிழாரின் விரிந்த நோக்கு தெய்வச் சேக்கிழார் அன்பை என்னென்று சொல்வேன்? எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன்றாள் மறவாமை பொருளென்றே என்றும், மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக் கப்பால் முதல்வனார் அடிசார்ந்த முறைமை யோரும் என்றும் அப்பெரியார் அருளிய திருவாக்குகளை நோக்குழி அவர் பரந்த மனமும் விரிந்த நோக்கும் எவரை இன்புறச் செய்யா? சைவம் வளர்த்த சந்தான குரவர் இவ்வன்புடைய செல்வர்களால் வளர்க்கப்பட்ட சைவவான்பயிர் பின்னை மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவனார் ஆகிய நால்வரால் ஓம்பப்பட்டு வந்தது. இந்நால்வருஞ் சந்தான குரவரெனச் சைவ சித்தாந்திகளால் போற்றப்படுகிறார். இவர்கள் காலத்தில் தமிழ் நாட்டில் பலசமயக் கொள்கைகள் பரவி வேரூன்றின. பெரிதும் ஏகான்மவாதக் கொள்கை பரவி வந்ததென்பது இவர்கள் நூல்களால் தெரியவருகிறது. ஈண்டு வடமொழிக் கலைகளைப் பற்றிச் சிலவுரைகள் வழங்கலாமெனக் கருதுகிறேன். வேதமும் ஆகமமும் சைவ உலகத்துக்கு வேதம் பொது நூல்; ஆகமம் சிறப்பு நூல். வேதத்தை வேறாகவும் ஆகமத்தை வேறாகவும் சைவர் கொள்வதில்லை. இதனால் அவர்க்கு வைதிக சைவரென்னும் பெயரும் வழங்கி வருகிறது. வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனூல் ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதம தென்னில் பெரியோர்க் கபேதமே என்று திருமூலர் உண்மை விளக்குகிறார். வேதத்திற்கும் ஆகமத்திற்கும் வேற்றுமை கண்டிலேன் என்று நீலகண்டர் வாய்மை வெளியிட்டுள்ளார். வேதநூல் சைவநூலென் றிரண்டே நூல்கள் வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள் என்று அருணந்தி சிவனாரும் மெய்ம்மை கூறியிருக்கிறார். இந்நாளில் தமிழ்நாட்டிலுள்ள சில அறிஞர் வட மொழிவேதந் தமிழர்க்கு உரியதன்றென்றும், அஃது ஆரியர்க்கே உரியதென்றும் ஆராய்ச்சி யுலகிற்கு அறிவுறுத்துகிறார். ஒரு நூல் ஒரு கூட்டத்தார்க்கே உரியதாவ தெப்படி? அறிவும் ஆராய்ச்சியும் எல்லாருக்கும் பொதுவாயிலங்குவன. நியூட்டன் (Newton) என்னும் அறிஞர் கண்ட உண்மை அவரினத்தார்க்கு மட்டும் உரியதாகுமோ? ஆண்டவன் திருவருள் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொருவர் அறிவில் விளங்கி ஒவ்வோர் உண்மையை வெளியிடுகிறது. சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய நாம் அவ்வுண்மை தேறாது பிணக்குற்றுப் போரிடுகிறோம். ஆரியரும் திராவிடமும் ஒழுங்குபட்ட வடமொழி வேதமும் வேதாந்தமும் பிறவும் எந்நாட்டிடைப் பிறந்தன? ஐந்து நதி பாயும் நமது அழகிய நாட்டிலன்றோ அவை பிறந்தன? சரித்திர ஆராய்ச்சியாளர் கூற்றுப்படி ஆரியர் குளிர்மிகுந்த வடபுலத்திலிருந்து போந்தவ ராயினும், அவர் நந்நாட்டிடைப் புகுதற்கு முன்னர், நந்நாட்டிடை மக்களாதல் நாகரிகமாதல் நிலவி யிருக்கவில்லையோ? திராவிடர் விந்தியமுங் கடந்து இமயம்வரை கோலோச்சி வாழ்ந்தனர் என்று கூறமுந்தும் ஆராய்ச்சியாளர் வடமொழி ஒரு கூட்டத் தார்க்கே உரிமையுடைத்து என்று மன்றாடுவதன் பொருள் விளங்கவில்லை. குடிபுகுந்த ஆரியர் தன்னந்தனியராய்க் காடு திருத்தி நாடாக்கி அரசுகண்டு கலைகளை வளர்த்து வந்தா ரென்று எப்படிச் சொல்லுதல் கூடும்? போந்த மக்களும் நிலையாக விருந்த மக்களும் ஒன்றுபட்டே வினைகளாற்றி யிருத்தல் வேண்டும். ஆரியர் நாகரிகமும் திராவிடர் நாகரிகமும் ஒன்றுபட்டு நமது நாட்டிடை யமுனை கங்கைபோல் ஓடுகின்றன. என்னுங் கருத்துப்பட வங்காளக் கவியரசர் ரவீந்திரநாதர் வெளி யிட்டுள்ள செம்மொழியும் ஆராயற்பாலது. ஆரியர் திராவிடர் என்னும் இருவரும் ஓரினத்தவராகி வேத வேதாந்த உண்மை களை நமது நாட்டுக்குத் தந்தார் என்று கொள்வது சமய உலகத்துக்கு நலஞ் செய்தாகும். ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்பது போன்ற பல கருத்துக்கள் தமிழ் வேதத்தில் செறிந்து கிடப்பதை ஈண்டு விரிக்கிற் பெருகும். ஆராய்ச்சி உலகும் சமய உலகும் பண்டை இந்திய மக்கள் திராவிடர்களா ஆரியர்களா என்று ஆராய்ந்து சில அறிஞர் தாம் தாம் கண்ட முடிவுகளை வெளியிட்டுள்ளார். ஆராய்ச்சியுலகம் கணத்துக்குக் கணம் மாறுபடுவது. முதல் முதல் மக்கள் எங்கே படைக்கப்பட் டார்கள் என்பதைப்பற்றிப் பலதிற ஆராய்ச்சிகள் நிகழ்ந்து வருகின்றன. மாறுபட்ட கருத்துக்கள் பலதிறத்தனவா யுலவு கின்றன. இப் பீடைகளைக் கொணர்ந்து சமய உலகில் நுழைத்து அன்பு நெறியைப் பாழ்படுத்தலாமோ? இதனால் ஆராய்ச்சி வேண்டுவதில்லை என்று யான் கூற முந்தவில்லை. ஆராய்ச்சிக் கரடியை விடுத்துச் சமய உலகைக் கலக்கலாகாதென்பது எனது வேண்டுகோள். ஆராய்ச்சியிற் புகுவோர் நடுநிலை பிறழாத் தூயரா யிருத்தல் வேண்டும். அவர்க்கு ஒன்றனிடத்தில் காய்தலாதல் உவத்தலாதலிருத்தலாகாது. இப் பெருங் குணத்தோடு நமது நாட்டில் இந்நாளில் உண்மை ஆராய்வோர் எத்துணை பேர் என்று விரல்வைத்து எண்ணிவிடலாம். அபிமானப்பேய், ஆராய்ச்சி ஆண்டவனை வழிபட விடுமோ? நமது தமிழ்நாட்டு அறிஞர் ஆராய்ச்சி, திருஞானசம்பந்தர் பிராமணர், திருநாவுக் கரசர் வேளாளர் என்னும் உண்மைகாணும் அளவில் இப்பொழுது எட்டியிருக்கிறது! இன்னும் அவ்வாராய்ச்சி எம்முகட்டைக் கிழித்து எவ்வானத்தை முட்டுமோ அறிகிலேன்! சாதி பேதம் முதலிய பேதங்களைக் கடந்து சிவமாய் நின்ற பெரியோரைப் பற்றி அப் பேதங்களில் வீழ்ந்து நெளிவோர் என்ன கூறினும் யான் மயக்குறேன். என்னருமைச் சகோதரர் களாகிய நீங்களும் மயக்குறலாகாதென்று விண்ணப்பித்துக் கொள்கிறேன். ஆராய்ச்சி உலகு வேறு, சமய உலகு வேறு என்று மீண்டும் வலியுறுத்தி மேலே செல்கிறேன். வடமொழிப் பொது நூலாகிய வேதமும், வேதாந்தமும் பலதிறப்பட்ட கிடக்கைகளைக் கொண்டிருப்பது போலத் தோன்றினாலும், அவைகளை முற்றும் ஆராய்வோர்க்கு அவை களில் பன்மை புலனாகாது ஒருமையே புலனாகும். வேத வேதாந்தம் மாயையை ஓரிடத்தில் மித்தை என்று கூறும்; மற்றோரிடத்தில் நித்தியம் என்று கூறும் இம் மாறுபட்ட கருத்துக்கள் பலரை மருட்டுமென்பது திண்ணம். முழுமுதற் பொருளுண்மை காண்பதிலும் இத்தகை மருட்சி விளைத லுண்மை. எதையும் முற்றும் ஆராய்ந்து தெளிவோர் ஒரே உண்மை பெறுவர். வேதாந்த சாத்திரம் பலபடப் பல கிளைகளாப் பரந்து விரிந்து கிடக்கும் வேத வேதாந்தமென்னும் பெருங்கடலில் வியாசர் என்னும் பேரறிஞர் தமது அறிவென்னுங் கோல் நாட்டிக்கடைந்து, வேதாந்த சூத்திரம் (பிரம்ம சூத்திரம்) என்னும் அமுதை உலகிற்கு ஈந்தார். அச் சூத்திரம் உரையின்றி ஆட்சியிலிருந்தபோது, வேதாந்த சித்தாந்த துவைத அத்வைதப் பிணக்குகளெழவில்லை. பின்னர் அவ்வேதாந்த சூத்திரத்துக்கு நீலகண்டர், சங்கரர், இராமாநுஜர், மத்துவர் முதலியோர் உரைகள் கண்டனர். ஒரு மூலத்துக்குப் பலர் உரை காண்டல் ஆராய்ச்சி யுலகிற்குப் பெரு விருந்தளிப்பதாகும். நமது நாட்டில் உரைகள் மதங்களாகிச் சமய வாதங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றன. உரை கண்ட அறிஞர்களை யான் தொழுகிறேன். அவ்வுரைகளை ஆண்ட பின் சந்ததியாரின் குறுகிய நோக்கம் நாட்டுக்கே தீங்கிழைத்து வருகிறது. பன்மையில் ஒருமை காண்க வேதாந்த சூத்திரத்துக்கு உரை காணப் புகுந்தோர் வதிந்தி காலநிலையைச் சரித்திரக் கண்கொண்டு நோக்குவோர்க்கு எவ்விதத் திரிபும் நிகழாது. பல உரைகளையும் படித்து அவைகளில் தோன்றும் பன்மைகளில் ஒருமை காண்டல் அறிவுடைமை. வாதத்தில் நுழைந்து நம்மவர் நாட்டைச் சாக்கடையாக்கியது நமது தீவினையே யாகும். மாறுபட்ட கருத்துக்களைக் காணும்போதும் கேட்கும் போதுஞ் சினந்து, எரிந்து வேகாது, அன்புளங்கொண்டு, அவைகளை ஏற்று, உண்மை காண உழைக்கும் பெருந்தகைமையை நம்மவர் என்று பெறுவரோ அறிகிலேன். அறிவே பொருளெனக் கொண்ட சங்கரர், அன்பே பொரு ளெனக்கொண்ட புத்தர்பெருமான் அறிவுறுத்திய அன்புச் சமயம் - அறக்கொள்கை - ஒழுக்கநிலை மாறுபட்டு, எங்கும் கடவுளில்லை; அறிவெனும் பொருளில்லை; பூதங்களே நித்தியம் என்னும் நாத்திக உணர்வு பரவி வேரூன்றிய காலத்தில் தோன்றினவர். அந் நாத்திகத்தை ஒழிக்க அப் பெரியார் பௌத்தர்கள் மெய்யெனக்கொண்ட சடம் பொய்ப்பொரு ளென்றும், அவர்கள் பொய்யெனப் புகன்ற சித்தொன்றே மெய்ப்பொருளென்றும் உறுதிப்படுத்துவதிலேயே தமது பெரும்பொழுதைக் கழித்தார். அவர் உழைப்பும் போதனையும் அக் காலதேவதைக்கு எத்தகை இன்பளித் திருக்குமென்பதை யான் இயம்ப வேண்டுவதில்லை. ஒரே உண்மை பலர் வாயிலாக வெளிப்படுதல் பௌத்தர்கள், புத்தர் அறிவுறுத்திய அறநெறிவிடுத்து நாத்திகம் போதிப்பதிலேயே எவ்வாறு கருத்துச் செலுத்தினரோ அவ்வாறு சங்கரர்க்குப் பின் வந்தாருட் சிலர், சகுண வழிபாடு அழியும் முறையில் தம் மதம் பரப்ப முயன்றனர். சங்கராச் சாரியார் ஒருமை ஞானத்தை உலகிற்கு அறிவுறுத்தினாரேனும், அவர் சகுண வழிபாட்டினின்றுஞ் சிறிதும் வழுவாது, சமய ஒழுக்கத்தைக் காத்துவந்தார். அவர் பின்வந்தார் சிலர், நாம் பிரமம் என்னுங் கொள்கையைப் பரப்புவதில் கண்ணுங் கருத்துமாயிருந்தமையால் சகுண வழிபாடு வீழலாயிற்று. அவ் வேளையில் இராமாநுஜ மத்துவ பாடியங்கள் தோன்றலாயின. அத்தோற்றமுங் காலதேவதையின் வேண்டுதலென்றே யான் கொள்வேன். ஒரே உண்மையைக் காலமிடங்களுக்கேற்ற வண்ணம் பலவாறு அறிஞர் வாயிலாக ஆண்டவனே அறிவுறுத்துகிறான் என்னும் உண்மையில் உறுதியுடையார் எவரையும் எக் கொள்கையையுங் குறை கூறார். மெய்கண்ட சாத்திரம் மக்கள் வேதாந்த உண்மை காணப்பெறாது, பலதிறக் கருத்துடையவர்களாய், இடர்ப்பட்ட வேளையில் ஆண்டவ னருளால் மெய்கண்டார் தோன்றிச் சிவஞானபோதம் என்னுஞ் சீரிய நூலை உலகிற்குத் தந்தார். இந்நூல் பொது நூலாகிய வேதத்தையும் சிறப்பு நூலாகிய ஆகமத்தையும் உடன்பாடாகக் கொள்ளுஞ் சமரச இயல்புடையது. இச் சிவஞான போதத்தையொட்டிச் செய்யுள் பாடியம் போன்ற சிவஞான சித்தி என்னும் வழி நூலும், அதைத் தழுவிச் சிவப் பிரகாசம் முதலிய சார்பு நூல்களுந் தோன்றின. இவைகட்கு மெய்கண்ட சாத்திரமென்னும் பொதுப்பெயர் வழங்கி வருகிறது. இது வேதாந்த ஆராய்ச்சியில் நேர்ந்த பிணக்குகளை ஒழிக்க எழுந்த சித்தாந்த நூலென்பது. வேதாந்தத் தெளிவாஞ் சைவசித் தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம் எனவரூஉம் உமாபதி சிவத்தின் திருவாக்கான் வலியுறுத்தப் படுதல் காண்க. தன்னந்தனியராய் தமிழ்மக்கள் கண்ட சமயம், முதல் முதல் சமணம், பௌத்தம் முதலிய சமயங்களோடு கூட்டுறவு கொண்டு, பின் வடமொழிக் கலைகளோடு நட்புப் பெற்று, ஏகான்ம வாதம் முதலிய சமயங்களோடு உறவாடி, முடிவில் மெய்கண்டார்வழிச் சித்தாந்த உருவடைந்து, உலகில் அருணெறியாகி வளர்ந்து வருகிறது. இனி மெய்கண்ட சாத்திரம் தற்போதைய உலகம் விரும்பும் சமரச ஞானத்தை எவ்வளவில் தழுவி நிற்கிறது என்பதைச் சிறிது ஆராய்வோம். மெய்கண்ட சாத்திரம் தத்துவம் முப்பத்தாறை யும் பொருளாகக் கொண்டிருக்கிறது. (முப்பத்தாறின் விரிவு தொண்ணூற்றாறு; விளக்கம் தத்துவக் கட்டளைகளிற் காண்க.) ஒவ்வொரு தத்துவமும், ஒவ்வொரு சமயப் பொருளாக விளங்குவது. முப்பத்தாறையும் பொருளாக் கொண்ட மெய் கண்ட சாத்திரம் எத்தத்துவத்தை - எச்சமயத்தை - ஒதுக்கல் கூடும்? எதைக் குறைகூறல் கூடும்? சைவ சித்தாந்தம் தனித்தும் எல்லாச் சமயங்களிலும் ஊடுருவிப் பாய்ந்தும் நிற்பது. எல்லாச் சமயங்களுஞ் சேர்ந்த ஒன்றே சைவ சித்தாந்த மென்றுங் கூறலாம். சைவ சித்தாந்தம் யானை கண்ட குருடர் பிணக்கைப் போக்கிய ஒருவனையொத்திருக் கிறது. சைவ சித்தாந்தம் தனக்கு வேறாக ஒரு சமயம் இருக்கிறதென்று நினைக்க இடம்பெறவில்லை. சைவ சித்தாந்திகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளுஞ் சிலர்பால் வேற்றுமை உணர்விருக்கலாம். ஆனால் சைவ சித்தாந்தத்தில் வேற்றுமைக் கிடமில்லை. இவ்வுண்மையை, ஓது சமயங்கள் பொருளுணரு நூல்கள் ஒன்றோடொன்று ஒவ்வாமல் உளபலவும் இவற்றுள் யாது சமயம் பொருள்நூல்யா திங்கென்னில் இதுவாகும் அதுவல்ல எனும்பிணக்க தின்றி நீதியினால் இவையெல்லாம் ஓரிடத்தே காண நிற்பதுயா தொருசமயம் அதுசமயம் பொருணூல் எனவரூஉம் அருணந்தி சிவாச்சாரியார் திருவாக்கானுணர்க மற்றுமோரிடத்தில் அவ்வறிஞர், வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பித் தாழ்வெனுந் தன்மை யோடுஞ் சைவமாஞ் சமயஞ் சாரும் ஊழ்பெற லரிது என்னுஞ் செய்யுளில் சைவத்தின் நுண்ணியலை மக்கட்கு அறிவுறுத்தி யிருக்கிறார். தாழ்வுள்ள இடத்தில், அதாவது முனைப்பற்ற இடத்தில் சைவம் பொலியுமென்று மெய்கண்ட சாத்திரஞ் சாற்றுகிறது. அந்நிலை பெற்றோர் எவராயினுமாக, அவர் தென்னாட்டாராக; வடநாட்டாராக; கீழ் நாட்டாராக; மேல்நாட்டாராக. எவருள்ளத்தில் சீவபோதமில்லாத தாழ்வு ஏற்படுகிறதோ அங்கே சிவம் விளங்குமென்க. அச் சிவ சம்பந்த மாகிய சைவம் பிறப்பையொட்டிய தாமோ? மொழியை யொட்டியதாமோ? நாட்டை யொட்டிய தாமோ? பிற வேற்றுமைகளை யொட்டியதாமோ? ஆகாது ஆகாது. நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ என்றார் மாணிக்கவாசகனாரும். இந் நிலையை உலகம் சைவ மென்றழைப்பினும் அழைக்க; அல்லது வேறெப்பெயரிட் டழைப்பினும் அழைக்க. வழிபாட்டுமுறை மெய்கண்ட சாத்திரத்தின் சமரச நுண்மை, அது குறிக்குஞ் சமய வழிபாட்டுமுறைகளாலும் இனிது விளங்கும். அச் சாத்திரம் வழிபாட்டுக்கெனச் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கு படிகள் வகுத்திருக்கிறது. இவைகள் முறையே உருவ வழிபாடு (சரியை), அருவுருவ வழிபாடு (கிரியை), அருவ வழிபாடு (யோகம்) இவை கடந்த ஒரு பெருநிலை (ஞானம்) எனப்படும். உலகிலுள்ள சமயங்களின் வழிபாடுகளை நோக் குழிச் சில உருவ வழிபாட்டையும், சில அருவுருவ வழிபாட்டையும் சில அருவ வழிபாட்டையும், சில ஞான வழிபாட்டையுங் கொண்டிருத்தல் காணலாம். சைவ சித்தாந்தம் இந்நான்கையும் கொண்டிருப்பதால் அச்சமயங்களெல்லாம் சைவ சித்தாந்தத் துக்கு வேறாக எங்ஙனம் நிலவும்? மெய் கண்ட நூல் அறிவுறுத்துஞ் சமயம் உலகில் சரியா மதமாய், கிரியா மதமாய், யோக மதமாய், ஞான மதமாய் யாண்டும் பரந்து விளங்கும் ஒரு பெருஞ் சமரச சமயமென்பதையோர்ந்துணர்க. சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய இவைகள் ஒன்றற்கொன்று இயைபின்றி இயங்குவன வல்ல. இந் நான்கும் அரும்பு மலர் காய் கனிபோல் ஒன்றற் கொன்று தொடர்புண்டு கிடப்பன. சரியா கிரியா யோகஞ் செலுத்தியபின் ஞானத்தால் சிவனடியைச் சேர்வர் என்று மெய்கண்ட சாத்திரம் புகலுதல் காண்க. முப்பொருளுண்மை இனி மெய்கண்ட சாத்திரம் அறிவுறுத்தும் பொரு ளுண்மைமீது சிறிதுநேரங் கருத்தைச் செலுத்துவோம். மெய்கண்ட சாத்திரம் முப்பொருளுண்மை கூறுகிறது. உலகு உயிர் கடவுள் ஆகிய இம் மூன்றும் அநாதி நித்திய மென்னுங் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு சைவ சித்தாந்தம் இயங்குகிறது. இம் மூன்றனுள் ஒன்றையோ இரண்டையோ அல்லது மூன்றையுமோ சமயங்கள் பொருளாக் கொண்டிருக் கின்றன. சைவ சித்தாந்தம் முப்பொருட்கும் உண்மை கூறலான், அதன்கண் எச் சமயப் பொருளுண்மையுங் காணலாம். காணும் உலகு நிலை முதலாவது கண்கூடாகத் தோன்றும் உலகை எடுத்துக் கொள்வோம். உலகைச் சிலர் நித்தியமென்றும், சிலர் அநித்திய மென்றுங் கூறுகிறார். காரியத் தோற்றத்தை அநித்தியமென்று சொல்வதில் பலர்க்குக் கருத்து வேற்றுமை யில்லை. காரணத்திற்கு நித்தியா நித்தியம் கழறுவதில் பலதிறக் கருத்து வேற்றுமைகளுண்டு. உலகம் நாமரூபத்தோடு விளங்கலான் அஃது அழிதன் மாலையதே. அஃது அழிந்தொடுங்குங் காரணமெது என்பது ஆராயற்பாற்று. காரிய உலகம் சடமாயிருத்தலால் காரணமுஞ் சடமாயிருத்தல் வேண்டுமென்பது சிலர் கொள்கை. அஃது அணுவாயினுமாக; பரமாணுவாயினுமாக; அல்லது வேறு எச்சக்தியாயினுமாக. அது சடமாயிருத்தல் வேண்டுமென்பது அவராராய்ச்சியாற்போந்த உண்மை. உலகம் பொய்தோற்ற முடையதாகலின் அஃதொரு சடத்தினின்றுந் தோன்ற வேண்டுவதில்லையென்றும், அது சித்தெனுஞ் செம்பொருளின் சாயலேயென்றுஞ் சில அறிஞர் வாதிப்பர். இஃது அறிவொன்றே பொருளென்போர் கூற்று. இதற்கு முற்றும் மாறாகச் சடப்பொருள் ஆராய்ச்சியாளர் அறைகிறார். இவர் ஆகாயத்திற்கோட்டை கட்டுபவரல்லர். இவர் கூற்றுங் கவனிக்கற் பாலதே. இவ்வறிஞர். அறிவெனுஞ் செம்பொருட்குத் தனி யிருப்பில்லையென்றும், அவ்வறிவு சடத்தினின்றும் பிறக்கிறதென்றுந் தம்மாராய்ச்சிவழி நின்று பகர்கிறார். இவ்வாறே இவ்வாராய்ச்சித் துறையில் கைபோய ஆசிரியர் ஹெக்கல் உள்ளிட்ட கூர்த்த மதியினர் கருதுகிறார். இயற்கை ஆராய்ச்சி உலகில் ஆசிரியர் ஹெக்கலுக்குள்ள மதிப்பு எவர்க்குமில்லை யென்று சொல்லலாம். அவர்கண்ட பல உண்மைகளை அடிப்படையாகக் கொண்டே மேல்நாட்டு அறிஞர் பற்பலவாறு இயற்கையை ஆய்ந்து வருகிறார். ஆசிரியர் ஹெக்கல் எழுதிய தி ரிட்டல் ஆப் தி யுனிவர் (The Riddle of the Universe) என்னும் நூலுக்கு மறுப்பெழுதப் புகுந்த அறிஞர் ஸர் ஒலிவர் லாட்ஜும் ஏனையோரும் சடத்தைப் பொய்யென் றாதல் அது சித்தின் பரிணாம மென்றாதல் உரைத்தாரில்லை. அறிவெனுந் தனிப் பொருளுண்மையையே அன்னார் வலியுறுத்து கிறார். இயற்கையை ஆராய்வோர் தாங்கண்ட அளவு உண்மை கூறிக் காணாதவற்றை ஆராயுங் கருத்துடையார். அவர் தங் கருத்துக்குப் பொருளாகாத எதையும் உண்மையென்று நிறுவ ஒருப்படார். அம்மெய்யர்கள் கண்டவரை உண்மையென்று உலகமும் ஒப்பும். மேல்நாட்டு மனோதத்துவ சாத்திரிகளும் உலகு உயிர் கடவுளைப்பற்றிப் பலவாறு உரைத்திருக்கிறார்கள். அவ்வுரைகள் யாவும் பூதபௌதிக ஆராய்ச்சிக்காரரால் வலியுறுத்தப்பட்டாலன்றி உண்மை உலகம் அவைகளை ஏற்றுக் கொள்ளாதென்க. உலகுபற்றி மெய்கண்ட சாத்திரம் மெய்கண்ட சாத்திரம் இதைப்பற்றி என்ன அறிவுறுத்து கிறது? அந்நூல் அறிவினின்றுஞ் சடந் தோன்றுகிறதென்பதை யாதல், சடத்தினின்றும் அறிவு தோன்றுகிறதென்பதையாதல் ஏற்றுக்கொள்ளவில்லை. சடம் தனியிருப்புடைய ஒரு பொரு ளென்றும், அஃது அறிவுப் பொருள் முயற்சியால் தொழிற் படுகிறதென்றும் அந்நூல் அறிவுறுத்துகிறது. உலகம் காரியமென்பதும், அது மாயையினின்றுந் தோன்றுகிற தென்பதும் இந்நாட்டறிஞர் பலர் ஒப்ப முடிந்த உண்மை. ஆனால், காரணமாய மாயை உள் பொருளா இல்பொருளா என்னும் பெருவழக்கு நீண்ட காலமாக நாட்டில் நடைபெற்று வருகிறது. மித்தை அநிர்வசனியம் என்னுஞ் சொற்கள் நமது நாட்டில் உலவாத எந்த மூலைமுடுக்குகளு மில்லை. வழக்கெல்லாம் பாரமார்த்திக நிலையை - முத்த நிலையைப் பற்றியனவே யன்றி, விவகாரத்தில் பெத்த நிலையில் - ஒன்றுமில்லை. விவகாரத்தில் உலகம் பொய்யென்று சொல்வோர் எவருமில்லை. பாரமார்த்திகத்தில் மாயை இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றிய விவாதம் அவசியமோ? பேச்சற்ற இடத்தில் வாதமேது? வழக்கேது? இயற்கை அன்னை யான் மாயையைப் பொய்யென்று கூறேன். அஃது என்னைவிட்டுப் பொய்யாகப் பொன்றுங் காலம் நேரின் நேர்க. அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. யான் தோன்றத் துணைநின்று, என்னுடன் உடலாய், அவ்வுடல் வழியான் அறிவு விளங்கப் பெறவும் இன்பநுகரவும் செஞ் ஞாயிற் றொளியாய், வெள்ளிய நிலவாய், எழின் மலையாய், மணி கொழிக்கும் அருவியாய், செழும்பொழிலாய், அழகிய மலராய் இனிய பெண்ணமுதாய், செம்பாவாய், பல்கலையாய் எனக்குறுதுணை செய்துவரும் எனது இயற்கை அன்னையை - மாயாதேவியை - யான் எவ்வாறு பொய்யென்பேன்? இயற்கைத் தாயன்றோ தனது தலைவனாம் இறைவன் உண்மையை அறிவிக்கிறாள்? அவள் அளித்த வாழ்வன்றோ நமது வாழ்வு? அவ்வாழ்வோ டிசைந்த இன்பமன்றோ இறையின்பம்? இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு என்று வன்றொண்டப் பெருந்தகையார் நமக்கு அறிவுறுத்திப் போந்தார். இத்திருவாக்கின் பெருக்கே வங்காளக் கவியரசர் யாத்த கீதாஞ்சலி என்னும் உலகுபுகழ் நூல். இறைவன் வடிவா யிலங்கும் இயற்கையைப் பொய் பொய் யென்று இன்பமிழந்து வாடுகிறோம். நம்மாண் மக்களிடத்து ஆண்மை காணோம்? பெண் மக்களிடத்துப் பெண்மை காணோம். நாம் மக்களில் மிக இழிநிலை எய்தியிருக்கிறோம். உலகம் பொய்யென்ற பேச்சும் எழுத்தும் போதும்! போதும்! திலகர் பெருமான் எழுதியுள்ள கீதா ரகசியத்தை ஆராய்ந்து பார்க்க. உலகுண்மையைப் பாரமார்த்திக நிலையில் மறுப்போரும் விவகார நிலையில் மாறாது நின்று உண்மைக்குத் துணைபோத லால், எச்சமயத்தாரும் மெய்கண்ட நூல் அறிவுறுத்தும் உலகுண்மையை ஏற்பர் என்பது ஒருதலை. உயிரின் நிலை இனி உயிரைப்பற்றிச் சைவ சித்தாந்த மெய்கண்ட நூல் என்ன உரைக்கிறது என்பதை நோக்குவோம். உயிர் ஒருவரால் படைக்கப்பட்டதன்று என்றும், அஃதென்று மிருப்பதென்றும், ஆனால் அஃது அறிவிலாச் சடப் பொருளுமன்று முற்றறி வுடைய சித்துப் பொருளுமன்று என்றும், பொருளுண்மையில் உயிர் இவைகளுக்கு வேறாக எண்ணப்படினும் அது தனித்து நிற்குமியல்பின தன்றென்றும், உயிர் சடத்தொடு கூடும்போது சடமாகவும் சித்துடன் கூடும்போது சித்தாகவும் சார்ந்த தன் வண்ணமாயிருப்பதென்றும் மெய்கண்டநூல் முழங்குகிறது. இவ்வாறெல்லாம் வளைந்து வளைந்து கூறாது உயிரைச் சித்தென்று கூறலாமே என்னும் வினா எழலாம். சித்தாந்தம், உயிர்க்கு அறியாமை இயல்பாய் அமைந்து கிடப்பதென்னும் உறுதியுடையதாகலான், அஃது உயிரை முற்றறிவுடைய சித்தென்று எவ்வாறு சொல்லும்? உயிர்க்கு அறியாமை யுண்டு என்று ஏகான்மவாதிகளும் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அதைப் பொரு ளாகக் கொள்கிறார்களில்லை. அஃது இடையிற்றோன்றும் ஒரு பொய்த் தோற்றமென்று அவ்வறிஞர்கள் அறைகிறார்கள். அத் தோற்றமற்ற இடமே வீடு என்றும் அவர்கள் சொல்கிறார்கள். சைவசித்தாந்தம் உள்ள ஒன்றினின்றும் ஒன்று தோன்றுமே யன்றி, ஒன்றுமில்லாத பாழினின்றும் எதுவுந் தோன்றா தென்னுங் கொள்கையில் உறுதியுடையதாகலின், அது பொய்த் தோற்றக் கூற்றை ஏற்பதில்லை. பொய்த் தோற்றம் எங்கிருந்து தோன்றிற்று என்று சித்தாந்தங் கேட்கிறது. உயிர்க்கு அறியாமை இயல்பாக உண்டு என்று சித்தாந்தந் தெரிப்பதால் அது (சித்தாந்தம்) முத்தியிலும் அதன் (உயிரின்) அறியாமையின் ஒடுக்கஞ் சொல்லுகிறதன்றி நீக்கஞ் சொல்வ தில்லை. ஞாயிறு முன்னே தாரகைகளின் ஒளி விளங்கித் தோன்றா திருப்பதுபோல முத்தியிலும் ஆணவம் (அறியாமை) தன்வினை குன்றிக் கிடக்கிறது என்று சொல்லப்படுகிறது. அறியாமை அநித்திய மென்போர் தங்கோளுக்கேற்ப வீடுபேறு விளம்புகிறார்; நித்தியமென்போர் தங்கோளுக்கேற்ப வீடுபேறு குறிக்கிறார். மனவுணர்வும் தருக்கநிலையும் உள்ள மட்டும் எல்லாம் பேதமாகத் தோன்றுதலியல்பு. இங்கே, உங்கள் பேத மன்றியே உண்மை பேதமில்லையே என்னுஞ் சிவவாக்கியர் திருவாக்கு நினைவிற்கு வருகிறது. படைப்பு நிகழ்ச்சி உயிர், அறியாமை என்னுங் கட்டால் பிணிக்கப்பட்டிருப் பதால், படைப்பு என்பதொன்று நிகழ்ந்துவருகிறது. படைப் பென்றால் சூந்யத்தினின்றும் ஒன்றைப் புதிதாக உண்டுபண்ணுவ தன்று; உள்ள ஒன்றையே காரியப்படுத்துவது. உயிர்கள் முற்றறிவுடைய கடவுளாயின், ஏன் உடல் தாங்கி உலகில் வருதல் வேண்டும்? உடல் உலகம் எல்லாம் பொய்யென்றும் படைப்பு முதலியன யாவும் பாவனையென்றுஞ் சொல்லப்படுகின்றன. வாதத்தையும் விவகாரத்தையும் அவ்வறிஞர்கள் பாவனையாகக் கொண்டால் அவர்கட்குப் பெரிதும் நன்றியறிதலுடையவனா யிருப்பேன். (நிற்க) பாவனைத் தோற்றம் எங்கிருந்து முளைத்தது என்னும் வினாவிற்கு, அறிவுக்கெட்டாத கேள்வி; தர்க்கத்துக் குரிய தன்று; அப்பா! இருந்து பார் என்னும் விடை எழுகிறது. இவ்வினாவிற்குச், சைவ சித்தாந்தம், உயிர்கட்டுடைய தாகலின், அக் கட்டையறுத்துத் தன்னைப்போல் அதை (உயிரை) ஆக்க வேண்டுமென்னுங் கருணை மேலீட்டான், கட்டில்லா ஆண்டவன் (உயிரின் கட்டை - அறியாமையைப் போக்கி, அதன் அறிவை விளக்க) உள்பொருளாகிய மாயையைத் தனுகரண புவன போகங்களாகக் காரியப் படுத்தி உயிர்க்கு உதவுகிறான் என்னும் விடையிறுக்கிறது. என்று நீ அன்றுநான் உன்னடிமை யல்லவோ என்றும், அருளுடைய பரமென்றோ அன்றுதானே யானுளன் எனக்கே ஆணவாதி பெருகுவினைக் கட்டென்றும்** என்றும், காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவியைப் போல் கட்டுண் டிருந்த எமை** என்றும் தாயுமானார் தமது அனுபவத்தைத் தெரிவித்திருக் கிறார். விவகாரத்தில் உயிருண்மையும் அதற்கு ஆணவமுண்மை யும் ஏகான்ம வாதிகளாலும் மறுக்கப்படுவதில்லை. ஆணவம் - கர்மம் - மாயை - பாசம் அறியாமையோடு கூடிச் செயலின்றிக் கிடந்த உயிர், தனுகரண புவன போகங்களைப் பெற்றதும் அறிவு விளங்கிச் செயல் பெறுகிறது. அச்செயலே வினையென்றுங் கர்ம மென்றுஞ் சொல்லப்படுகிறது. உள்ளதற்கே தோற்றங் கூறும் அறத்தை அடிப்படையாகச் சைவ சித்தாந்தங் கொண்டுள் ளமையால், கர்மமென்பதும் மாயையில் கரந்து நின்று, அம் மாயை காரியப்பட்டு உடலாம்போது விளங்கித் தோன்றுகிற தென்று, அது (சித்தாந்தம்) பகர்கிறது. (ஆணவம் கர்மம் மாயை ஆகிய மூன்றையுஞ் சேர்த்துப் பாசமென்ற ஒரு சொல்லான் சித்தாந்த நூல்கள் சொல்லும்.) உயிர் சார்ந்ததன் வண்ணமாதல் உயிர் தனித்து நில்லாது சார்ந்ததன் வண்ணமாயிருப்ப தென்று மெய்கண்ட சாத்திரம் மொழிவது பெரிதுங் கருதற் பாலது. இந்தஉடல் அறிவு அறியாமையும் நீயில்லை யாதொன்று பற்றின் அதன் இயல்பாய் நின்று பந்தமறும் பளிங்கனைய சித்து நீ என்று தாயுமானவர் உயிரியல்பு தெரித்தல் காண்க. எவரெவர் எவ்வெவ்வழிபற்றி ஒழுகுகிறாரோ, அவரவர் அவ்வவ்வழி ஒழுக்க நீரராதலியல்பு. உணவுக்கேற்ற குணம் பெறுதலும் ஈண்டு உன்னத்தக்கது. சேரிட மறிந்துசேர் என்னும் பழமொழியின் உள்ளக்கிடக்கையும் சார்ந்ததன் வண்ணமென்னும் உண்மையை வலியுறுத்துவது. நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு என்றார் திருவள்ளுவரும். உலகியல் எடுத்துக்காட்டுகளை இங்கே பலபடக் கூற விரும்புகிறேனில்லை. உலகியலில் உயிர்கள் நிலை கலப்புற்றுப் புலப்படுத்தும் உண்மைகளை உறுதிப்படுத்தக் காட்சியளவையே சாலும்; பிற வேண்டுவதில்லை, உலகைக்கொண்டு உயிருண்மை யையும், இரண்டையுங் கொண்டு ஆண்டவனுண்மையையுங் கண்டு, உயிர் இரண்டுமல்லாத ஒன்றாய்ச் சார்ந்ததன் வண்ணமா யிருக்கும் நுட்பத்தை உலகிற்குணர்த்திய தமிழ்மக்களின் ஆராய்ச்சி முதுமை வியக்கற்பாலதே. நிட்காமியப்பணி - இறைபணி அறியாமையோடு கூடிய உயிர், ஆண்டவனருளால் தனு கரண புவன போகங்களை அடைந்து, அவைகளால் விளங்கப் பெற்ற தன்னறிவால், தனக்கு வாழ்வளித்த பெரு வாழ்வாம் ஆண்டவன் அருட்டிறத்தைப் புகழ்ந்து புகழ்ந்து நிட்காமியப் பணியாற்றி வரின், ஆகாமிய வினை பீடித்தலின்றிப் பேரின்பம் நுகரும். உயிர் அவ்வருள்வழி நில்லாது, ஆண்டவன் உதவியை மறந்து, தான் என்று இறுமாந்து, காமியப் பணியாற்றினால் பிறவி வேரறாது; துன்பம் வளர்ந்துகொண்டே போகும். இவ்வுண்மை கண்டே மணிவாசகனார், கண்ணுதலோன் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கும் எட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்ல சுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என்று அருளிய திருவாக்கை நோக்குக. உயிர், ஆணவத்தோ டத்துவிதமா யிருப்பதினின்றும் நீங்கி, மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதமாதற்கு நிட் காமியப் பனியென்னும் இறைபணி நிற்றல் வேண்டுமென்க. இதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். கடவுள் நிலை இனிக் கடவுள் நிலையைப் பற்றிச் சித்தாந்தம் என்ன கூறுகிறது? இதைப்பற்றி விரித்துரைக்க வேண்டுவதில்லை, சிலவுரை பகர்ந்து மேற்செல்கிறேன். கடவுளைப் பற்றி மெய் கண்ட சாத்திரம், பலகலையா கமவேதம் யாவையினுங் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே அதுதான் நிலவும்அரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி நின்மலமாய் ஏகமாய் நித்த மாகி அலகிலுயிர்க் குணர் வாகி அசல மாகி அகண்டிதமாய் ஆனந்த உருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே என்று சுருங்கச் சொல்லி விளங்கவைத்திருத்தலை உன்னுக. சைவ சித்தாந்தக் கடவுள் பிறப்பில்லாததென்பதையும், மும்மூர்த்திகளையுங் கடந்த முதற்பொருளென்பதையுஞ் சிறப்பாக ஈண்டு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பௌராணிக மதம் எல்லாவற்றையும் குழப்பிக் கூறலான், இச் சிறப்பை இங்கே குறித்தல் நேர்ந்தது. ஆண்டவன் பிறப்பில்லாதவன் என்பதை, பிறப்பில் பெருமானை பிறப்போ டிறப்பென்றும் இல்லா தான்காண் பாலனாய் வளர்ந்திலாப் பான்மை யானே பெண்ணாண் பிறப்பிலியாய் தோற்றக்கே டில்லா தான்காண் பிறவாது மிறவாதும் பெருகி னானை பிறவாத பெருமையானை என வரூஉம் தமிழ் வேத மெய்ம்மொழிகளிற் காண்க. இவை போன்ற மொழிகள் பன்னூற்றுக் கணக்காகக் கிடக்கின்றன. பிறப்பு இயல்புடைய உயிர்களைச் சைவ சமயம் தத்துவம் கடந்த தனிப்பரம் பொருளாகக் கொள்வதில்லை. சைவத்துக்குள்ள தனிச் சிறப்புக்களுள் இஃதொன்று. இலாம் மதமும் ஆண்டவனுக்குப் பிறப்பிறப்புக் கூறுவதில்லை. சில சமயங்கள், அறிவால் அன்பால் கடவுள் நிலை பெற்ற உயிர் களைக் கடவுளாகக்கருதி வழிபட்டு வருகின்றன. கடவுள் நிலை பெற்ற உயிர்களை அன்பு மிகுதியால் கடவுளாக வழிபடுவதுங் கடவுளை வழிபடுவதேயாகும். கடவுள் பிறப்பிறப்பில்லாதவர் என்பதொன்றே ஈண்டுக் கருதற்பாற்று. வழிபாட்டைப் பற்றிய கவலை நமக்கு வேண்டா. செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ என்று அப்பர் சுவாமிகளும், அல்லலாந் தொழிற்படைத்தே அடிக்கடி யுருவெடுத்தே மல்லல்மா ஞாலங்காக்க வருபவர் கடவுளென்னில் தொல்லையாம் பிறவிவேலை தொலைந்திடாது இருள் நீங்காது நல்லது மாயைதானும் நானென வந்துநிற்கும் என்று தாயுமான சுவாமிகளும் ஓதியிருத்தலை நோக்குக. இறைவன் மூவர் முதல்வன் என்பதனை, மூவராய முதலொருவன் மூவர்கோன் மூவர்க்கு முதலானான் காண் மூவரறியாச் சிந்தூரச் சேவடியானை முப்பத்து மூவரும் மற்றொழிந்த தேவருங் காணாச் சிவபெருமான் மூவரு மறிகிலர் என வரூஉந் தமிழ்மறை யுரைகளாலுணர்க. தமிழ் நாட்டிற்றோன்றிய ஆழ்வார்கள் அருளிய நாலாயிரப் பிரபந்தமும் தமிழ் மறையாக நம் மக்களால் போற்றப்பட்டு வருகிறது. அம்மறையுங் கடவுளை நான்காவது பொருளென்றே முறையிடுகிறது. மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கு முதல்வன் தன்னை மூவர் தம்முளும் ஆதியை மூவர் முதல்வன் மூவுலகாளி என வரூஉம் நம்மாழ்வார் திருவாய் மொழிகளை ஓர்க. வடமொழி வேதமும் எல்லாம் வல்ல இறைவனைச் சதுர்த்தம் என்று சாற்றுகிறது. நால்வரும் ஆழ்வாரும் முறையே இறைவனைச் சிவமென்னும் பெயராலும் திருமாலென்னும் பெயராலும் ஓதினாலும், அவ்விரு பெரியோர் உள்ள முழுவதும் நான்காவது பொருளில் பதிந்து கிடந்தது கருதத்தக்கது. கடவுள் பெயரைப் பற்றிய வாதம் நமக்கு வேண்டுவதில்லை. பெயர் எதுவாயினுமாக, ஜிஹோவா, அல்லா முதலியனவாயினுமாக. முழுமுதற் பொருள் நால்வரும் ஆழ்வாரும் மும்மூர்த்திகளுள் வைத்து எண்ணப்படும் உருத்திரனையாதல் விஷ்ணுவையாதல் முழுமுதற் பொருளாகக் கொண்டாரில்லை நால்வர் விட்டுணு கடவுளல்ல என்று சொற்றதும், ஆழ்வார் அரண் கடவுளல்ல என்று சொற்றதும் மும்மூர்த்திகளுள் விளங்கும் விட்டுணுவை யும் அரனையுமெனக் கொள்க. அயன் அரி அரன் என்னும் மூவரும் நான்காவது பொருளாம் ஆண்டவன் அருட்சக்தி வழிநின்று படைத்தளித் தழிக்குந் தொழிலாற்றலான்1 அவர் செயலைக் கடவுள் செயலாகக் கூறுதல் நம்மனோர் மரபு. அதனால் மும்மூர்த்திகள் கூறாக உலகிடைத் தோன்றி உலகை யோம்பும் பெரியோர்களைக் கடவுள் கூறாக நம்மவர்களிற் சிலர் வழிபட்டு வருவதுந் தொன்றுதொட்ட வழக்கமாயிற்று. விரிக்கிற் பெருகும். இது நிற்க. சைவ சித்தாந்தம் முப்பொருளுண்மை கூறினாலும் பொருளொன்றே என்னும் கொள்கையையும், வேறு வேறு என்னுங் கொள்கையையும் தன்னகத்தே தாங்கி நிற்றலால் எக் கொள்கையினரிடத்தும் அது மாறுபட்டு நிற்பதில்லை. கடவுள் உலகுயிரோடு நீக்கமறக் கலந்து நிற்றலானும், கடவுளுக்கு வேறாகப் பிரிந்து உலகும் உயிரும் நிற்றலின்மையானும் கலப்பால் ஒற்றுமையும் பொருடன்மையால் வேற்றுமையுஞ் சைவ சித்தாந்தந் தெரிவிக்கிறது. பொருளொன்றே என்று கூறுவோரை நோக்கி, ஆம் கலப்பால் ஒன்றே என்றும், பொருள் வேறு வேறு என்போரை நோக்கி ஆம் பொருட் டன்மையால் வேறு வேறு என்றும் இருவரையும் தன்னுடன் சேர்த்துப் பிணக்கொழிக்கும் பெருந்தகைமை வாய்ந்தது சைவ சித்தாந்தம். கலப்பால் ஒற்றுமையும் பொருட்டன்மையால் வேற்றுமையுமுடைய ஒரு நிலையையே சைவ சித்தாந்தம் அத்துவிதம் என்று சொல்கிறது. உலகெலா மாகி வேறாய் உடனுமாய் என்று மெய்கண்ட சாத்திரம் முழங்குகிறது. அத்துவிதம் அத்துவிதமென்னுஞ் சொல்லிலுள்ள அகரத்துக்கு மெய்கண்டார் அன்மைப் பொருள் கொண்டார். எண்ணுப் பெயர்முன் வரும் அகரம் அன்மைப் பொருள் குறிக்குமென்பது அவர் கருத்து. ஒன்றென்பதற்கு ஏகமென்னுஞ் சொல்லிருப்ப, இரண்டைக் குறித்தற்குத் துவிதமென்னுஞ் சொல்லிருப்ப. வேதாந்தம் இரண்டையும் விடுத்து, அத்துவிதமென்று அறைவதன் நோக்கமென்ன? ஒன்று இரண்டு என்று சொல்ல முடியாத நிலையை அத்வைதம் என்ற வேதாந்தம் அருளியிருக்கிறது. நமது சைவ சித்தாந்தத் தவப்பொருளாம் மெய்கண்டார் இவ்வுண்மையைக் கண்டமையான். பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதன் அருள் மேவுநாள் எந்நாளோ என்று தாயுமானாரும் அவரைப் போற்றலானார். ஆகவே சைவ சித்தாந்தங் கூறும் முப்பொருளும், அவைகளின் கலப்பும் பல சமயத்தார் கருத்துக்களுக்குப் பெரிதும் அரண் செய்தல் காண்க. எல்லார்க்கும் பொதுவாக உள்ள வேதாந்த உண்மை இஃதென ஒவ்வோர் அறிஞர் கூறியவாறு மெய்கண்டாருந் தாங் கண்ட வேதாந்த உண்மையை உலகிற்கு அறிவுறுத்தி னார். அவ்வுண்மை, சித்தாந்தம், சுத்தாத்துவிதம் முதலிய பெயர் களால் வழங்கப்பட்டு வருகிறது. வேதாந்தமும் சித்தாந்தமும் ஏகான்மவாதமே வேதாந்தமெனக் கூறுவோர்க்கும், இச்சித்தாந்தக் கொள்கையுடையார்க்கும் என்றும் போர் நிகழ்ந்து வருவதை யான் அறிவேன். வேதாந்தமென்பது ஒரு கூட்டத்தார் உடைமையன்று. வேதாந்தம் என் பொருள் என் பொருள் என்று போரிடுவோர்க்கு அஃதென்றும் பொரு ளாதல் அரிது; அரிது. என்னை? வேதாந்தம் வாதப் போர் களைக் கடந்தொளிர்வதாகலின் என்க. வேதாந்தமாதல் சித்தாந்த மாதல் போரிடுமாறு யாண்டுக் கூறுகிறது? உண்மையைக் குறிக்கொண்டு ஆராய்வோர்க்கு வேதாந்த சித்தாந்த வேற்றுமை தோன்றவே தோன்றாது. வேதாந்தமென்பது யாது? வேட்கையற்றவிடமன்றோ வேதாந்தம்? வேட்கையறுத்தல் என்பது எல்லாவற்றையுந் துறந்து காட்டுக்குப் போய் மூக்கைக் பிடித்திருப்பதன்று. தன்னல மறுத்து மற்றவர்பொருட்டுக் கைம்மாறு கருதாது தொண்டு செய்வதே வேட்கையறுத்தலுக்கு அறிகுறியாம். வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுத்தம் வேட்கை யொழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை யொழிந்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கைவிட் டாரே என்பது திருமூலர் திருவாக்கு. வேட்கை தணிந்த இடம் வேதாந்தமென வேதாந்த இயல்பு கூறிய அப்பெரியாரே மீண்டும், சிவமாதல் வேதாந்த சித்தாந்த மாகும் என்றும், வேதாந்தஞ் சித்தாந்தம் வேறிலா முத்திரை என்றும், சித்தாந்தத் தேசீவன் முத்திசித் தித்தலால் சித்தாந்தத் தேநிற்பர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலால் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே என்று ஓதியிருத்தலை நோக்குழி, வேதாந்தமே சித்தாந்த மென்பதும், இஃதே அஃதென்பதுஞ் செவ்விதின் விளங்குதல் காண்க. இத் திருமூலர் மரபு வழிவந்த மௌனகுருபால் ஞானோப தேசம் பெற்ற சமரசஞானச் செல்வராகிய தாயுமான சுவாமி களும், *** தரணிமிசை லோகாயதன், சமயநடை சாராமல் வேதாந்த சித்தாந்த சமரச சிவானுபூதி மன்னவொரு சொற்கொண் டெனைத்தடுத் தாண்டபின் வாழ்வித்த ஞானகுருவே, மந்த்ரகுரு வேயோக தந்த்ரகுருவேமூலன் மரபில்வரு மௌனகுருவே எனவும், வேதாந்த சித்தாந்த சமரச நன் னிலைபெற்ற வித்தகச் சித்தர் கணமே எனவும், வேதாந்தஞ் சித்தாந்தம் வேறென்னார் கண்களிக்கும் நாதாந்த மோன நலமே பராபரமே எனவும், போதாந்தப் புண்ணியர்கள் போற்றிசய போற்றியெனும் வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே எனவும், முத்தாந்த வீதி முளரிதொழும் அன்பருக்கே சித்தாந்த வீதிவருந் தேவே பராபரமே எனவும், வேதாந்த சித்தாந்த வேற்றுமையின்மை விளக்கியிருத் தலை ஆய்க. இவ்வுண்மை கண்ட அத் தாயுமான சுவாமிகளே, பொய்கண்டார் காணாப் புனிதமெனும் அத்துவித மெய்கண்ட நாதனருள் மேவுநா ளெந்நாளோ என்று மெய்கண்டாரைப் போற்றியதை முன்னரும் எடுத்துக் காட்டியுள்ளேன். இதனால் மெய்காண்டார் சித்தாந்தம் எது என்பதை விரித்துரைக்க வேண்டுவதில்லை. வேதாந்தத் தெளிவாஞ் சைவசித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம் என்னுந் திருவாக்கும் முன்னர் எடுத்துக் காட்டப்பட்டதே. ஆகவே, மெய்கண்டார் சொற்ற சித்தாந்தம் வேதாந்தத்துக்கு முரண்படுவதன்று என்பது கவனிக்கற்பாலது. அபிமானத்தால் வேற்றுமை உணர்வு ஒருவர் கருத்தை மற்றொருவர் உணராமல் கிடப்பதே விவாதத்துக்கு இடமுண்டாக்குகிறது. அன்பர்கள் வேதாந்த நூல்களையும் சித்தாந்த நூல்களையும் விருப்பு வெறுப்பின்றி முறையாகப் பயில்வார்களாயின், எந்நூலினும் மாறுகோள் காணமாட்டார்களென்பது ஒருதலை. வேதாந்த நூல்களைப் பயில்வோர் அந்நூல்களில் அபிமானமும், சித்தாந்த நூல் களைப் பயில்வோர் அந்நூல்களில் அபிமானமுங் கொள்வதால் வேற்றுமையுணர்வு தோன்றுகிறது. இரண்டிற்கும் வேற்றுமை உண்டு உண்டு என்ற சிலர் சில நூல்கள் எழுதிவிட்டுச் சென்ற னர். அன்னார் குறிப்பிட்ட வேற்றுமையன்றி உண்மையில் வேற்றுமை இருப்பதாகத் தோன்றவில்லை. பாழும் அபிமானம் மக்களைப் பாழ்படுத்துகிறது. வேதாந்தம் வேதாந்தமென்று சிலர் சில நூல்களைப் பயின்று தாம் பெற்ற கலைஞானங்கொண்டு, அது பொய்; இது பொய்; எல்லாம் பிரமம் என்று உலகத்திற்குப் போதிப்பதால் விளையுந் தீமையை என்னென்று கூறுவேன்? இப்போதனை யால் உலகில் நாத்திக உணர்வு பரவித் தீயொழுக்கஞ் செறியு மென்பதில் ஐயமில்லை. வேட்கையற்ற இடத்தில் மிளிர வேண்டிய வேதாந்தம், இந்நாளில் ஏட்டில் - காவித்துணியில் - பேச்சில் மொட்டைத் தலையில் - மிளிர்கிறது! பற்று பற்று என்று எல்லாவற்றையும் வெறுக்கும் ஒருவிதச் சோம்பேறி வேதாந்தமும் நமது தமிழ் நாட்டில் பரவி யிருக்கிறது. உண்மை வேதாந்தம் எதையும் பொய்யென்று கூறாது; எதையும் பற்றெனத் தள்ளாது. எல்லாங் கடவுள் மயமாயிருக்கும்போது அதன்கண் பொய்யேது? எல்லாமஃதாயிருக்கும் போது எதைப் பற்றென வெறுப்பது? எல்லாம் மெய்; எதையும் வெறுத்த லாகாது என்று அறிவுறுத்துவது எதுவோ, அதுவே மக்கள் வாழ்வைத் தூய்மை செய்யவல்ல செய்கை வேதாந்தமாகும். யான் - எனது என்னும் பற்றறல் எந்த வேதாந்த சித்தாந்த ஞான நூலை எடுத்தாலும், அஃது உலகைத் துறக்குமாறு - ஆசையை யறுக்குமாறு - அறிவுறுத்துகிறதே என்று சிலர் வினவலாம்; சிலர் ஐயுறலாம். ஞான நூல்கள் உலக ஆசையைத் துறக்குமாறு போதிப்பது உண்மையே. உலகிடை வாழும் மனிதன் உலகை விடுத்து எங்கே போவது? காட்டுக்குச் சென்று மூச்சைப் பிடித்து ஆகாயத்திற் பறப்பதா? அல்லது கல் மரம்போல் கிடப்பதா? என்செய்வது? உலகைத் துறப்பது என்றால் அது யான், எனது என்னும் பற்றை அறுப்பதாகும். உலகை ஆண்டவனாகக் காணாத வனுக்கு யான், எனது என்னும் பற்றுக்களுண்டு. அப் பற்றறால் அவனுக்குத் துக்கம் வளர்ந்து கொண்டு போகும். ஒருவன் மனைவியை ஏன் துறத்தல் வேண்டும்? மைந்தரை ஏன் வெறுத்தல் வேண்டும்? அவர்கள் உள்ளத்தில் ஆண்ட வனில்லையோ? கடவுள் வீற்றிருக்குங் கோயில்களையா வெறுப்பது? கடவுள் காட்சி நல்குங் கோயில் என்னும் எண்ண மின்றி, என்புதோல் போர்த்த உடலைப் பொருளாகக் கொள்ப வனுக்கு எல்லாந் துன்பமாகவே தோன்றும், என்புதோல் போர்த்த உடல் என்னும் எண்ணத்தை விடுப்பதே துறப்பதாகும்; ஆசையை யறுப்பதாகும். எல்லாம் கடவுள் எல்லாவற்றிலும் ஆண்டவன் நீக்கமற நிறைந்திருக்கும் போது எதை வெறுப்பது? எதைத் துறப்பது? கடவுள் எப்பொருளில்லை? எல்லாம் அவன் வடிவம்: எல்லாம் அவன் உடைமை; எல்லாம் அவன் செயல் எல்லாம் அவன் என்னும் ஞானமின்றி உலகாயதவழி நின்று உலக இன்பத்தைத் துய்ப்பவனுக்கும், உலகம்பொல்லாதது என்று காட்டுக்குச் சென்று பட்டினி கிடந்து உடலை வருத்தி வருத்திப் புலன்களைக் கொன்று உணர்வைக் கெடுத்துக் கொள்பவனுக்கும் என்ன வேற்றுமை? இருவரும் ஆண்டவன் இன்பப் பேற்றை யிழந்தவரேயாவர். எல்லாங் கடவுளெனக் கொண்ட உயிர்களை வழிபடுவோனுக்கு இவ்வுலகமே கயிலாயமாகும். பட்டினத்தடிகள் பாடல் முற்றத் துறந்த முனிவர் பெருமானாராகிய பட்டினத் தடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில், (பதினொராந் திருமுறையில் சேர்ந்தது) உலகாயத முறையில் உலகை வெறுத்தலை மறுத்து, எல்லாம் ஆண்டவனாகக் கொண்டுங் கண்டும் இன்பந் துய்த்தலைப் போற்றியிருக்கிறார். அப் பொன்னுரை வருமாறு:- மலர்தலை உலகத்துப் பலப்பல மாக்கண் - மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ - மனையும் பிறவுந் துறந்து நினைவருங் - காடும் மலையும் புக்குக் கோடையில் - கைம்மே னிமிர்த்துக் காலென்று முடக்கி - ஐவகை நெருப்பி னழுவத்து நின்று - மாரி நாளிலும் வார்பனி நாளிலும் - நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும் சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும் - உடையைத் துறந்தும் உண்ணாதுழன்றும் - காயுங் கிழங்குங் காற்றுதிர் சருகும் - வாயுவும் நீரும் வந்தன அருந்தியுங் - களரிலுங் கல்லிலுங் கண்படை கொண்டும் - தளர்வுறும் யாக்கையைத் தளர்வித் தாங்கவர் - அம்மை முத்தி அடைவதற்காகத் - தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர் - ஈங்கிவை செய்யா தியாங்க ளெல்லாம் - பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்தும் - செந்தாதுதிர்ந்த நந்தன வனத்தும் - தென்ற லியங்கு முன்றி லகத்தும் - தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும் - பூவிரி தரங்க வாவிக் கரையிலும் - மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும் - வேண்டுழி வேண்டுழி யாண்டான் டிட்ட - மருப்பி னியன்ற வாளரி சுமந்த - விருப்புறு கட்டின் மீமிசைப் படுத்த - ஐவகை அமளி அணைமேற் பொங்கத் - தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப் - பட்டினுட் பெய்த பதநுண் பஞ்சி - னெட்டணை அருகாக் கொட்டைகள் பரப்பிப் - பாயன் மீது பரிபுர மிழற்றச் - சாயலன்னத் தின் தளர்நடை பயிற்றி -*** அஞ்சொன்மடந்தையராகந் தோய்ந்தும் - சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தின் - அறுசுவை அடிசில் வறிதினிதருந்தா - தாடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும் - வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும் - பூசுவன பூசியும் புனைவன புனைந்தும் - தூசு நல்லன தொடையிற் சேர்த்தியும் - ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து - மைந்தரும் ஒக்கலும் மகிழ்வன மகிழ்ந்து - இவ்வகை யிருந்தோ மாயினும் அவ்வகை - மந்திரவெழுத்தைந்தும் வாயிடை மறவாது - சிந்தை நின்வழிச் செலுத்தலின் அந்த - முத்தியும் இழந்திலம் முதல்வ அத்திறம் - நின்னது பெருமையன்றோ. இதுவே ரவீந்தரநாதர் அறிவுறுத்தி வரும் அன்புச் சமயமாகும். விவேகானந்தர் லண்டனில் நிகழ்த்திய எல்லா வற்றிலுங் கடவுள் (God is Everything) என்னுஞ் சொற்பொழிவும் இக் கருத்துக்கு அரண் செய்வதாகும். விவேகானந்தரின் விளக்கம் சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளை நன்மனங் கொண்டு வாசிப்போர் சோம்பேறி வேதாந்தம் - திண்ணை வேதாந்தம் முதலிய போலி ஏட்டு வேதாந்தங்களை விடுத்து, வீறுகொண்டு, எப்பற்றுமின்றி உயிர்களுக்கு ஊழியஞ் செய்யப் புறப்படுவர் என்பது திண்ணம். விவேகானந்தர் சோம்பலெனுந் திண்ணை வேதாதந்தத்தைப் போதித்தாரில்லை. அவர் உபநிடதக் கருத்துக்களின் நுட்பத்தையே உலகுக்குரைத் தார். அவ்வேதாந்த வீரர்1 எல்லாவற்றையும் இறைவனாகக் காண்க; தொண்டு செய்க என்றும், அஞ்சா நெஞ்சுடைய ஆண்டகை மக்கள் தேவை. நமக்கு இரத்தத்தில் வீரச் செறிவும் நரம்புகளில் உரமும் இரும்பனைய தசைக்கட்டும் எஃகனைய நரம்புகளுந் தேவை*** என்றும், நம்மைச் சுற்றிலுமுள்ள எல்லாவற்றையும் எல்லாரையுங் கடவுளாகக் கண்டு வழி படுங்கள்; மனிதர்களும், ஜெந்துக்களும் நம்முடைய கடவுளர்கள். நாம் முதலாவது வணங்கத்தக்க கடவுளர் நம்முடைய தேசத்தாரே யாவர்*** என்றும் பேசியிருக்கிறார். உடலை ஓம்புமாறும், வீரர்களாக உலாவி மற்றவர்கட்குக் கிழமைபூண்டு வாழுமாறும் அவர் பலவிடங்களில் அறிவுறுத்தியிருக்கிறார். உலகுக்குப் பயன்தரத்தக்க இத்தகைய வேதாந்தமே நமக்கு வேண்டும். இச் செய்கை வேதாந்தத்துக்குத் துவிதம் அத்துவிதம் என்னும் இரண்டும் இன்றியமையாதன. உண்மை வேதாந்தம் ஒன்றைவிட்டு ஒன்றைத் தள்ளாது. துவிதத்தைக் குறைகூறும் வேதாந்தம் வேதாந்தமாகாது. துவித வழி அத்துவிதம் மெய்கண்டார் துவிதவழி அத்துவித உண்மையை அறிவுறுத்தியிருத்தலால், அவர் போதனை உலகைச் செம்மை நெறியில் நடாத்தும் இயல்பினதாய்ப் பொலிகிறது. வேதமுட னாகம புராண இதி காசமுதல் வேறுமுள கலைக ளெல்லாம் மிக்கான அத்துவித துவிதமார்க் கத்தையே விரிவா யெடுத் துரைக்கும் ஓதரிய துவிதமே அத்துவித ஞானத்தை உண்டுபணு ஞான மாகும் என்று தாயுமான சுவாமிகள் அருளிச் செய்துள்ள அநுபவ மொழிகளை அன்பர்கள் கருத்தூன்றி நோக்குவார்களாக. துவித வழிபாடே அத்துவித ஞானத்தை உண்டு பண்ணுவதாகும். வாயால் வெறும் அத்துவிதம் பேசுவது வீண் பேச்சேயாகும். வேத வேதாந்தம், துவிதம் அத்துவிதமென்னும் இரண்டை யும் போதிப்பதன் நுட்பத்தை ஆராயல் வேண்டும். உலகிற்குத் துவிதம் மிக இன்றியமையாதது. இக்கருத்துப் பற்றியே மெய்ஞ் ஞானச் செல்வராய தாயுமானார் ஓதரிய துவிதமென்றும், அதுவே அத்துவித ஞானத்தை உண்டு பண்ணும் ஞான மென்றும் உலகை நோக்கி அறைகிறார். ஆதலால் 1வேத வேதாந்தம் முறையிடும் துவிதத்தையுங் கொள்ளல் வேண்டும்; அத்துவிதத்தையுங் கொள்ளல் வேண்டும். ஒன்றைக் கொண்டு மற்றொன்றைத் தள்ளுதல் வேத வேதாந்தக் கொள்கைக்கு மாறுபடுவதாகும். மெய்கண்டார் இரண்டையுங் கொள்கிறார். உலகு உயிர்களில் சிவம் உலகங் கடவுளா உயிர் கடவுளா என்னுங் கடாக் களுக்கு மெய்கண்ட சாத்திரம் ஆம் அல்ல என்று விடை யிறுக்கும். உலகிலும் உயிர்களிலும் ஆண்டவன் நீக்கமற நிறைந் திருத்தலால் ஆம் அவை (கலப்பால்) கடவுள் என்றும், உலகம் தோற்ற நிலை இறுதி என்னும் விகாரமுடைய சடமாகலானும், உயிர்க்கு அறியாமை உண்மையானும் அவை (பொருளால்) கடவுளல்ல என்றும் அந்நூல் விரித்துக்கூறும். உலகு உயிர்களில் கடவுள் எவ்வாறு நீக்கமற நிறைந் திருத்தல் கூடுமென்றும், இருபொருள் ஓரிடத்தில் எவ்வாறு, ஒன்றி நிலவுமென்றும், ஒன்றுள்ள இடத்தில் மற்றொன்றிரா தென்றுஞ் சில அறிஞர் கருதுவர். இருபொருள் ஓரிடத்திலிரா என்னும் நியாயம் உருவப் பொருளுக்கன்றி அருவப் பொருளுக் கில்லை. எள்ளுங் கொள்ளும் ஒரே இடத்தில் இருப்புப் பெறுதல் அரிது. என்னை? இரண்டும் உருவப் பொருளாகலான் என்க. இந்நியாயத்தைக் கொணர்ந்து அருவப் பொருளில் நுழைத்தலாகாது. ஆகாயம் என்னும் சூக்கும பூதம் காற்று, தீ, புனல், மண் ஆகிய நான்கு தூல பூதங்களிடை நீக்கமற நிறைந் திருக்கவில்லையோ? இவ்விடத்தில் இரண்டு பொருள் ஓரிடத் தில் ஒன்றியிரா என்னும் நியாயம் பேசலாமோ? ஆகாயம் வடிவில்லாப் பொருள். அஃது எங்கணும் நீக்கமற நிறைந்திருக்கும் இயல்புடையது. சடத்தன்மையுடைய சூக்கும பூதத்துக்கே நீக்கமற நிறைந்து நிற்கும் இயல்பிருக்கும் போது, சித்சொருப மாகிய சிவம் உலகுயிர்களில் நீக்கமற நிறைந்திருக்கும் இயல்புடையதாகாதோ? மரத்தால் செய்யப்பட்ட யானையை இருவர் உற்று நோக்கி ஆராய்வதாக வைத்துக் கொள்வோம். ஒருவன் மரத் தியல்பை நன்கு உணர்ந்தவன். மற்றொருவன் யானை வடிவ இயல்பைச் செவ்வனே உணர்ந்தவன். முன்னவன் மாயானையைப் பார்த்து, இது நல்ல மரமன்று; விரைவில் உலுத்துப் போகும் என்று சொல்கிறான்; பின்னவன், இக்காது யானைக்காது போலில்லை. இதை ஒழுங்குபடுத்தல் வேண்டும் என்று சொல் கிறான். முன்னவன் உள்ளத்தில் மரமுன்மையும் யானையின்மை யும், பின்னவன் உள்ளத்தில் யானையுன்மையும் மரமின்மையும் விளங்குவதைச் சிந்திக்க. இவ்வண்ணமே அஞ்ஞானி உலகை நோக்கும்பொழுது உலகும், மெய்ஞ்ஞானி அதைப் பார்க்கும் பொழுது சிவமுந் தோன்றும். át¤ njh‰wKilah®¡F cy»šiy; ï¤njh‰WKilah®¡F m¤njh‰wÄšiy.* மெய்கண்டார் சித்தாந்தம் சிவந் தோன்றும்போது உலகமிருக்கிறதா இல்லையா என்னும் வாதம் ஏகான்ம வாதிகட்குஞ் சித்தாந்திகட்கும் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. அந்நிலையில் ஏகான்ம வாதிகள் கூறுகிறபடி உலகம் பொய்யாகப் பொன்றுகிறதோ அல்லது சித்தாந்திகள் சொல்லுமாறு உலகம் இருந்துந் தோன்றாமலிருக்கிறதோ அதைப்பற்றி என்போன்றார் ஏன் மன்றாடல் வேண்டும்! சிவம் தோன்றப் பெறுவோர்க்கு உலகம் தோன்றாதென்பதொன்றே கருதற்பாற்று. விவகார நிலையைப் பற்றி ஏகான்மவாதிகட்கும் சித்தாந்திகட்கும் எவ்விதப் போருமில்லை. விவகார உலகில் வாழும் இருவரும் போரின்றி உயிர்கள் வழிபாட்டைச் செய்து வருவாராக. வழிபாட்டில் கருத்துப் பதிந்தால் வாதத்துக்கிடமேது? உயிர்களைச் சிவமாக வழிபடுந்தொண்டிற் புகாது ஏடுகளைக் கட்டியழுவோர் அழுக. ஏடுகளைப் புரட்டிப் புரட்டி வாதஞ்செய்வோரைப் பார்க்கினும், வழிபாட்டிற் கருத்துடையாரே விரைவில் உண்மை நிலை காண்போராவர். மெய்கண்டார் வழிபாட்டிற்குரிய உண்மை ஞானம் போதித்தலால், அவர் போதனை, பணியில் விருப்புடையோர்க்கு ஏற்புடைத்தாகும். வேதாந்தம் அறிவுறுத்தும் பொருள் ஒன்றா இரண்டா என்னும் வாதம், உலகில் எழுந்து, உலகை இடர்ப்படுத்தி வந்த நாளில், மெய்கண்டார் தோன்றி, வேதாந்த உண்மை இஃதென உலகுக்குச் சித்தாந்தப்படுத்திக் காட்டினார். உபநிடதங்களாய வேதாந்தம் எவ்வாறு துவிதம் ஏகம் அத்துவிதம் என்னும் மூன்றற்கும் இடந்தருகிறதோ, அவ்வாறே மெய்கண்டார் போதனையும் அம் மூன்றற்கும் இடந்தந்து நிற்பது நோக்கத் தக்கது. மெய்கண்டார் அருளுரை சமரச நாட்டமுடைய எவர்க்கும் - வழிபாட்டில் விருப்புடைய எவர்க்கும் - உண்மை காணும் நோக்குடைய எவர்க்கும் - உரியது என்பது அவர் வாய்மொழியை ஆராய்வோர்க்கு இனிது புலனாகும். சமரச இயல்பு இதுகாறுஞ் சைவ சித்தாந்த சமயநோக்கினும், தத்துவ நிலையினும், பொருளுண்மையினும், பிறவற்றினும் மற்றைச் சமயங்களோடு மாறுபடாது. பெரிதும் முற்றும், சிறிது ஒரோ வழியும் ஒத்துப் போகுஞ் சமரச இயல்புடைய தென்பதைப்பற்றி எனது சிற்றறிவுக் கெட்டியவாறு சொல்லி வந்தேன். இனி அச் சமரச இயல்புக்குரிய உயர்ந்தோர் தாழ்ந்தோர்க் குழைத்தல், கைம்மாறற்ற பணி, பிறப்பு வேற்றுமை பாராட்டாமை, எவ்வுயிரையும் தன்னுயிர்போல் பாவித்தல், பாவமன்னிப்பு முதலிய அறவழிகள் அதன்மாட்டுண்டா என்பதைத் தெரிந்து கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொன்றைப் பற்றியும் விரித்துரைப்பின் உரை பெருகுமாதலால் சுருங்கச் சொல்லப் புகுகிறேன். பிறர்க்குழைக்கும் பெருந்தகைமை சைவ சித்தாந்தம் உயிர்களை விஞ்ஞானகலரென்றும், பிரளயாகலரென்றும், சகலரென்றும் முக்கூறுபடுத்தியிருக் கிறது. ஒருமலமுடையார் விஞ்ஞானகலரென்றும், இருமல முடையர் பிரளயாகலரென்றும், மும்மலமுடையார் சகல ரென்றுஞ் சொல்லப்படுவர். விஞ்ஞானகலர் தமக்குக் கீழ்ப் பட்டுள்ள பிரளயாகலரைத் தம் நிலைக்கு உயர்த்தவும், பிரளயாகலர் சகலரைத் தம் பேற்றையடையுமாறும் முயன்று வருகிறாரென்று சிவாகமங்கள் செப்புகின்றன. இதனின்றும் நாம் கற்றுக் கொள்ள வேண்டுவதென்னை? உயர்ந்தோர் தாழ்ந் தோரை உயர்த்தித் தம் நிலைக்குக் கொணர வேண்டுமென்ப தன்றோ? ஆண்டவன் என்ன செய்கிறான்? அறியாமைக் கட்டால் பீடிக்கப்பட்டு இருட்டில் கிடக்கும் உயிர்களைத் தனது நிலைக்குயர்த்த உவைகட்கு இவ்வுடலையும், உலகையும், வாழ்வை யும் வழங்கித் துணைசெய்து வருகிறான். இவ்வருட்குணம் அவன் படைப்புக்குட்பட்ட ஒவ்வோருயிரினிடத்தும் இருத்தல் வேண்டும். இக் குணமில்லார் கடவுளன்பராகார். பிறர்க் குழைக்கும் பெருமையாளரே கடவுளிடத்தன்புடையராவர். கைம்மாறு கருதாத தொண்டு பிறர்க்குழைக்குங்கால் எவ்வித கைம்மாறுங் கருதாது உழைத்தல் வேண்டும். கைம்மாறு கருதி உழைப்பது எவ்வுயிரி லும் வீற்றிருக்கும் இறைவனுக்கு அன்பு செலுத்துவதாகாது. இக்காரணம் பற்றியே நிட்காமியப்பணி என்று சமய நூல்கள் முழங்குகின்றன. சைவ சித்தாந்த வழி இதை உறுதிப்படுத்த எந்நூலையுந் தேட வேண்டுவதில்லை. சைவர்கள் தொழும் நடராஜ மூர்த்தியைச் சிறிது உற்று நோக்குவோம். அம்மூர்த்தி நிட்காமிய கருமத்துக்கே ஓரிலக்கியமாக விளங்குவது காண லாம். அப்பெருமான் ஓயாது நடனம்புரிகிறான். ஒரு நொடிப் பொழுது அவ்வாண்டவன் திருக்கூத்தை நிறுத்துவானாயின் அகிலம் என்ன பாடுபடும்? இவ்வகிலமும் அகிலத்துள்ள உயிர்களுமியங்கித் தங்கடனாற்றவன்றோஆண்டவன் ஓயாது இயங்குகிறான்? வையம் உய்யப் பெருங் கூத்தாடும் பெம்மான் தன் செயற்கருஞ் செயலைக் குறித்து இறுமாப்பெய்துகிறானா? அல்லது ஏதாவது கைம்மாறு கருதுகிறானா? ஒன்றுமில்லை. உயிர்களுய்தல் வேண்டும் என்னுங் கைம்மாறற்ற பெருங்கருணை யொன்றே கொண்டு எம்பெருமான் ஆடுகிறான். என்ன கருணை? இவனன்றே அருட்கடல்? கிருபா சமுத்திரம்? இவ்வருள் மூர்த்தியை அடைய உயிர்கள் என் செய்யல் வேண்டும்? அவனைப் போலவே கருணையால் கைம்மாறு கருதாது பிறர் நலம் நாடித் தொண்டு செய்தல் வேண்டும். கடவுளை அடைதற்குரிய வழிகளுள் சிறந்தது இதுவே. நடராஜன் புரியுந் தாண்டவம் ஆனந்தத் தாண்டவம் என்றுஞ் சொல்லப்படுகிறது. அதன் பொருளென்னை? நிட்காமிய கருமத்தில் ஆனந்தமுண்டு என்பதன்றோ? காமிய கருமம் நரகத் துன்பத்தையன்றோ அளிக்கும்? சைவர்களுக்கு வேறு வீடுபேறு எற்றுக்கு? கைம்மாறு கருதாப் பணியாற்றி இவ்வுலகிலேயே இன்ப நுகர்ந்து வாழலாமன்றோ? வீடுபேறு பெற்றுச் செயலின்றிக் கிடப்பதைவிட நிட்காமியப் பணி செய்து இவ்வுடலையே இன்ப நிலையமாக்கிக் கொள்வது நலம். கேடும் ஆக்கமுங் கெட்ட திருவினார் ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்னுஞ் சேக்கிழார் பெருமான் சொன்மலரை முடிமீதணிந்து ஆனந்தக் கூத்தாடுவேன். வேற்றுமை பாராட்டாமை பிறர் நலம் நாடிக் கைம்மாறு கருதாது தொண்டு செய் வோர்க்குக் குறுக்கே பிறப்பு வேற்றுமையும் பிறவேற்றுமை களும் நிற்குமோ? சமரசம் பேசுஞ் சைவ சித்தாந்தம் பிறப்பால் சாதி வேற்றுமை பாராட்டுமோ? பாராட்டுமாயின் அது சமயமாகாது. அன்பே சிவம் என்னுஞ் சீரிய கொள்கையைத் தாங்கியுள்ள சைவம், பிறப்பு வேற்றுமையை எவ்வாறு பாராட்டல்கூடும்? சைவ சமயாச்சாரியராகிய அப்பரெம் பெருமான், சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தரமுங் குலமுங் கொண்டு என்செய்வீர் என்று குலம் பேசுவோரை நோக்கிக் கேட்கிறார். ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்கரந்தாற் கன்பராயின் அவர்கண்டீர் நாம் வணங்குங் கடவுளாரே என்று மற்றுமோரிடத்திலும் அப்பெரியார் பிறப்பு வேற்றுமையை மறுத்திருக்கிறார். சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாண்டானை என்று மணிவாசகனாருங் கூறிப் போந்தார். பெரிய புராணமென்னும் அன்பு நூலை முற்றும் ஒதிப் பொருள் தேறுவோர்க்குச் சாதி வேற்றுமை தோன்றவே தோன்றாது. சாதிப்பகை கடியவே அந்நூலெழுந்ததென்றும் யான் கூறுவேன். வேறெந்தச் சைவ நூலும் அன்பைக் குலைக்கும் பிறப்பு வேற்றுமையைப் பாராட்டி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. படமாடக் கோயில் பரமற்கொன் றீயில் நடமாடக் கோயில் நம்பற்கங் காகா நடமாடக் கோயில் நம்பற்கொன் றீயின் படமாடக் கோயில் பரமற்கங் காமே என்னுந் திருப்பாட்டில் திருமூலர் நடமாடுங் கோயில்களாகிய உயிர்கள், வழிபாட்டைச் சிறப்பித்துக் கூறியிருக்கிறார். உயிர்கள் என்றால் எவைகளை? உயர்ந்த சாதி உயிர்களை மட்டுமா? பொதுவாக நடமாடுங் கோயிலென்றே அப் பெரியார் ஓதியிருக்கிறார். உலகிலுள்ள ஆடு மாடு முதலிய எல்லா உயிர்களையும் உள்ளிட்டே திருமூலர் நடமாடுங் கோயிலென்று அருளிச்செய்தார். நடமாடுங் கோயிலென்று மனிதர்களைமட்டுங் கொண்டு வேறு பல உயிர்களை விலக்குவதுங் கூடாது. தாவரமுள்ளிட்ட எல்லா உயிரும் என்றே பொருள் கோடல்வேண்டும். தாவரங்களில் எல்லா உயிர்க் குணங்களுமிருப்பதை டாக்டர் போ கண்டு வருகிறார். எவ்வுயிரும் நீங்கா துறையும் இறை சிவன் என்று எவ்வுயிர்க்கும் அன்பா யிரு என்று சைவ சமயநெறி விளக்கமாகக் கூறுகிறது. எவ்வுயிரும் என்றமையான் சைவ சமயம் எவ்வுயிரை நீக்குதல் கூடும்? தாவர முள்ளிட்ட எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தல் வேண்டு மென்பதே சைவ சித்தாந்தத்தின் கொள்கை. இக்கொள்கை யுடைய ஒரு பெருஞ் சமயத்துக்குச் சாதி வேற்றுமை ஏது? வேறு வேற்றுமை ஏது? சைவரென்று தம்மைச் சொல்லிக்கொள்ளுஞ் சிலர் சாதி வேற்றுமை பாராட்டுவதுண்மை. ஆனால் சைவ சமயத்துக்கு எவ்வேற்றுமையுமில்லை. சைவ வாழ்வு எவ்வேற்றுமையும் பாராட்டாது பிறர்நலம் பேணி வாழ்வதே சைவ வாழ்வெனில், அச் சைவம் ஒரு கூட்டத்தார்க் குரியதாகுமோ? சைவம் எல்லார்க்குமுரியது. உயிர்க் கொலை யும் புலைப் புசிப்புமில்லா ஒருவன் எச்சமயத்தவனாயினும் அவன் தன்னைச் சைவம்(ன்) என்று சொல்லால் தனது ஜீவ காருண்ய நெறியைத் தெரிவிக்க விரும்புகிறான். சைவம் ஜீவ காருண்யமுள்ள இடங்களிலெல்லாம் இருப்பது. இவ்வுயர்வு நோக்கியே தாயுமானார், சைவ சமயமே சமயம் என்றும், இராஜாங்கத்தி லமர்ந்தது வைதிக சைவம் என்றுங் கூறி, எவ்வுயிர்த் திரளும் உலகிலென் னுயிர்எனக் குழைந்துருகி தம்முயிர்போல் எவ்வுயிருந் தானென்று தண்ணருள்கூர் செம்மையருக் கேவலென்று செய்வேன் பராபரமே எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவுநின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே, கொல்லாவிரதங் குவலயமெல் லாம் ஓங்க எல்லார்க்குஞ் சொல்லுவது என்னிச்சை பராபரமே கொல்லா விரதங் கொண்டாரே நல்லலோர்மற் றல்லாதார் யாரோ அறியேன் பராபரமே கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும் எனவரூஉம் மொழிகளான் சைவம் இஃது என்று உலகிற்கு அறிவுறுத்தினார். சைவம் சமரச நோக்குடையது இராமலிங்க சுவாமிகள், சைவம் சமரச நோக்குடைய சன்மார்க்கமெனும் ஜீவகாருண்ய நெறியென்று கடல்மடை திறந்தாற்போல் பொழிந்திருக்கிறார். மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும் கண்ணுறப் பார்த்துஞ் செவியுறக் கேட்டுங் கணமுநான் சகித்திட மாட்டேன் எண்ணுறு மெனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம் நண்ணும் அவ் வருத்தந் தவிர்க்கநல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய் உருவஎன் னுயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம் ஒருவில்என் னுயிரும் ஒருவும் என்னுளத் தொருவனே நின்பதத் தாணை இவ்வுலக வழக்கிலே உயிர் இரக்கத்தால் இலகுகின் றனன்நான் என்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் னுயிரும் நீங்கும்நின் திருவுளம் அறியும் கொலை புரிவார் தவிரமற்றை யெல்லாரும் நினது குலத்தாரே உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்களெல்லாம் உறவினத்தா ரல்லர் அவர் புறவினத்தார் தயையுடையா ரெல்லாருஞ் சமரசசன் மார்க்கஞ் சார்ந்தவரே அருளுடையா ரெல்லாருஞ் சமரசசன் மார்க்கம் அடைந்தவரே எவ்வுயிரும் பொதுவெனக்கண் டிரங்கி உபகரிக்கின் றார்யாவர் அந்தச் செவ்வியர்தஞ் செயலனைத்துந் திருவருளின் செயலெனவே தெரிந்தேன் எத்துணையும் பேதமுறா தெவ்வுயிருந் தம்முயிர்போல் எண்ணி யுள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடமென நான் தெரிந்தேன் கருணை யொன்றே வடிவாகி எவ்வுயிருந் தம்முயிர்போவ் கண்டு ஞானத் தெருணெறியிற் சுத்தசிவ சன்மார்க்கப் பெருநீதி செலுத்தா நின்ற பொருணெறிசற் குணசாந்தப் புண்ணியர் இவ்வருளுரைகளால் சைவம் சன்மார்க்கமென்பதும், சன்மார்க்கம் ஜீவகாருண்ய மென்னும் அருணெறி யென்பதும் வெள்ளிடைமலையென விளங்குதல் காண்க. அருள் - கருணை - இரக்கம் - தயை - உடையார்க் கெல்லாம் இப் பெருஞ் சமயம் உரியதென்க. கடவுள் கருணை வெள்ளம் அருளுடையார்பால் பிறர் குற்றம் பொறுத்தலும், குற்ற மிழைப்போர் தங்குற்ற முணர்ந்து மனந்திரும்பி வருந்துவரேல் அவரை மன்னிப்பதும் இயல்பா யமைந்திருத்தல் வேண்டும். இவ்வியல்பில்லாதார் அருளாளராகார். சைவ சமயத்துக்கு இவ்வியல்புண்டு. சைவம் போற்றுஞ் சிவம் திருவருளையே தனக்குரிய வடிவாகக் கொண்டிருப்பது. மாறிலாதமாக் கருணை வெள்ளமே என்று தமிழ்மறையும், கற்பனை கடந்தசோதி கருணையே வடிவ மாகி என்று பெரிய புராணமும், உருவருள் குணங்க ளோடும் உணர்வருள் உருவிற் றோன்றுங் கருமமு மருள் அரன்தன் கரசர ணாதி சாங்கந் தருமருள் உபாங்க மெல்லாந் தானருள் தனக்கொன் றின்றி அருளுரு வுயிருக் கென்றே ஆக்குவன் அமல னன்றே என்று மெய்கண்ட சாத்திரமுங் கூறுதல் காண்க. பாவமன்னிப்பு ஆண்டவன் தடங்கருணைப் பெருங் கடலாயிருத்தலா லன்றோ எவர் எப் பிழை செய்யினும், அவர் அப் பிழை நினைந்து நினைந்து, வருந்தி வருந்திக் கசிந்து கசிந்து உருகும் போது அவரை மன்னிக்கிறான்? பாவ மன்னிப்புத்தங்கள் மதத் திற்கே உரியதென்றும், தங்கள் மதமே பாவிகளை ரட்சிக்கும் கொள்கையுடைய தென்றும், ஏனைய சமயங்கள் புண்ணியர் களுக்கே பேறு வழங்குவனவென்றுங் கிறித்துவப் பாதிரிகள் பேசுவது வழக்கம். திருவிளையாடற் புராணத்துள்ள மாபாதகந் தீர்த்த படலத்தின் உள்ளுறையை ஆய்ந்தால், சிவபெருமான் எத்தகைப் பாவத்தை மன்னித்தாரென்பது நனிவிளங்கும். பாவங் குறித்து மனந் திரும்பி வருந்தாதாரைப்பற்றிய பேச்சே வேண்டுவ தில்லை. அவர் வினை அவரைத் துன்புறுத்திக்கொண்டே யிருக்கும். தாம் நிகழ்த்திய பாவங் கருதி, வருந்தி வருந்தி, மனந் திரும்பி, ஆண்டவனை நோக்கி, இடையறாது அறிக்கை செய் வோரைப் பற்றியே ஈங்கு நான் குறிப்பிட்டுப் பேசுகிறேன். கர்மம், பிரார்த்த சஞ்சித ஆகாமியங்களாகப் பிரிந்து நின்று, தன் கடனாற்றி வருகிறதெனச் சாத்திரங்கள் சொல்வதன் பொருளென்ன என்று சிலர் வினவலாம். மனிதன் அறியாமை யால் பாவச்செயல் புரியும் நீரன் என்பதை எவரும் மறுக்க மாட் டார். மன உணர்வுடைய மனிதன் பாவத்தினின்றும் பிழைத்த லரிது. பாவம் பெருகிப் பெருகிப் பிறவித்துன்பத்தில் அவனை அழுத்தி வருமாயின், அவன் உய்வது எந்த நாள்? அவனை உய் விக்கும் நெறியே கடவுள் நெறியாகும். பாவவினையிழைக்கும் மகன் தன் வினையுணர்ந்து மனம் பதைத்துத் தந்தையாம் ஆண்டவனை நோக்கிக் கதறிக் கதறி அழுவானாயின், அவன் வினை நசிக்கும், மனந்திரும்பல், குற்றமுணர்ந்து வருந்தல். ஆண்டவனை நோக்கி முறையிடல் முதலியன எளியன அல்ல. மிக அரியன; மிக அரியன. இவ்வுண்மை தேறாதார் ஆற்றிய வினையை அனுபவித்தே தீரல் வேண்டுமென்று சொல்வர். குற்றத்தையுணர்ந்து வருந்தவதினுஞ் சிறந்த அனுபவம் பிறி தில்லை. வருந்தும் வேளையில் இரக்கமுடைய இறைவன் வாளா இருப்பனோ? இரான்; இரான். அவன் திருவருளைப் பொழி கிறான். விரிப்பிற் பெருகும். தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே எனவரூஉந் திருமூலர் திருவாக்கு ஈண்டுக் கருதற்பாற்று. பாவிகளைக் காப்பது சைவ சமயம் பாவிகளைக் காப்பதைத் தனக்குரிய கொள்கையாகக் கொண்டிருக்கிறது. சைவம் எவனையும் வேண்டா என்று தள்ளாது. முள்ளுச் செடிக்கு முத்தி உதவிய சைவம் - பன்றிக் குட்டிக்குப் பால்கொடுத்த சைவம் - எவ்வுயிரை விலக்கும்? இருப்பு நெஞ்ச வஞ்சனேனை ஆண்டுகொண்ட நின்னதாள் யானே பொய் என்னெஞ்சும் பொய் என்னன்பும் பொய் ஆனல் வினையேன் அமுதா லுன்னைப் பெறலாமே இல்லை நின்கழற் கன்பதென்கணே ஏலுமேலு நற்குழலி பங்கனே கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்டு என்னை நின்கழற் கன்ப னாக்கினாய் எல்லையில்லை நின்கருணை கல்லாமனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனை ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக்கே குழைந்து வேசறு வேனை விடுதிகண்டாய் வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே கன்னெஞ் சுருக்கிக் கருணையினா லாண்டுகொண்ட அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன் பேயென துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனை கற்போலும் நெஞ்சங் கசிந்துருகக் கருணையினால் (நிற்பானை வெறுப்பனவே செய்யும் என் சிறுமையை நின்பெருமையினால் பொறுப்பவனே வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ யளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகவென் றருள்புரி வாயே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே யாய சிவபத மளித்த செல்வமே சிவபெரு மானே இரும்புதரு மனத்தேனை ஈர்த்து ஈர்த்துஎன் என்புருக்கி கரும்புதரு சுவை எனக்குக் காட்டினை என வரூஉம் மணிவாசகனார் கல்லையுங் கரைக்கும் அமுத மொழிகளில், சிவபெருமான் அருட்பெருக்கும், மக்கள் பிழைபடுந் தன்மையும், அப் பிழையுணர்ந்து வருந்தலும், அப் பிழையை ஆண்டவன் தன்னருளால் களைதலும் பிறவுங் காண்க. காந்தியடிகள் காட்டும் வழி அருள் வடிவினராகிய சிவபெருமான், மக்கள் அறியாமை யால் பிழை நிகழ்த்திப் பின்னர் அதுகுறித்து வருந்தித் தம்மை வேண்டுவாராயின், அவர் பிழை பொறுத்தாண்டு அருள்புரிந்த வரலாறுகள் பல. இந் நாளில் உலகம் போற்றும் பெரியாரும், மக்கள் வாழ்வைத் தூய்மைப்படுத்த அருணெறி யோம்பிவரும் அருளாளரும், திருநீலகண்ட நாயனாரும் மெய்ப்பொருள் நாயனாரும் மீண்டும் ஓருருக்கொடு ஈண்டுப் போந்தாலென நமது நாட்டிடை வாழ்பவருமாகிய காந்தியடிகள், தம்முள்ளிட் டாருடன் நாடோருங் காலைப் போழ்தில் சபர்மதி நதிக்கரை யில், சத்தியாக்கிரக ஆசிரமத்தில் பாவ மன்னிப்புக் குறித்து, அருட்பெருங் கடவுளாகிய சிவபரஞ்சுடரை வழுத்தி வருவதுங் கவனிக்கத்தக்கது. இவ்வுண்மையை மகாத்மா காந்தி கோஹத் குழப்பத்தை முன்னிட்டுத் தில்லியில் உண்ணாவிரதம் பூண்டு தவங்கிடந்தபோது (25-9-29) யங் இந்தியா பத்திரிகை வாயிலாக உலகிற்கு அறிவுறுத்தினார். அவர்தம் மெய்யுரை வருமாறு:- [‘The news of kohat set the smouldering mass aflame. Something had got to be done. I passed two nights in restlessness and pain. On Wednesday I knew the remedy, I must do penance, In the Satyagrahashram at the time of morning prayer we ask Shiva, God of Mercy, to forgive our sins knowingly or unknowingly committed. My penance is the prayer of a bleeding heart for forgiveness for sins unwittingly committed’] கோஹத் செய்தி எனது உள்ளத்தில் அனல் மூட்டிற்று. ஏதாயினுஞ் செய்யவேண்டுமென்று தோன்றிற்று. இரண்டு நாளிரவு அமைதியின்றியும் நோயொடுங் கழித்தேன்; புதன் கிழமை மருந்து கண்டேன். நான் பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். சத்தியாக்கிரக ஆசிரமத்தில் காலை ஜெபத்தில், தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு கருணைக் கடவுளாகிய சிவபரம் பொருளை நாங்கள் வேண்டுகிறோம். அறியாமற்செய்த பாவமன்னிப்புக் குரிய பிராயச்சித்தம் செந்நீர் பொங்கும் எனது இதயத்தி னின்றுமெழும் ஜெபமேயாகும். சிவபரம்பொருள் அருட்பெருங் கடவுள் என்றும், அன்றாடம் தெரிந்தோ தெரியாமலோ ஆற்றும் பாவங்களைக் குறித்து முறையிடுதற்குரிய இடம் அப் பெருமான் திருவடி என்றும் மகாத்மா காந்தி உலகிற்கு அறிவுறுத்துகிறாரெனில், அருண்மூர்த்தியாகிய சங்கரனைப்பற்றி யான் என்ன கூற வல்லேன்? பாவ மன்னிப்புச் சைவ சமயத்திலிருப்பதைச் சைவ நன்மக்கள் உணர்ந்து பிறர் குற்றம் பாராட்டல், புறங்கூறல் முதலிய தீக்குணங்களை விடுத்துச் சிவத்தொண்டு செய்தால் அருணெறி யாண்டுப் பரவாது? அருள் நெறி நம் முன்னோர் நமக்கு அறிவுறுத்திச் சென்ற அருணெறியை மகாத்மா காந்தி உலகிடை யோம்ப முனைந்து நிற்கிறார். உலகில் தோன்றிய எல்லாப் பெரியோரும், சமய குரவரும் ஜீவகாருண்யத்தையே அறிவுறுத்திப் போந்தனர். அப் பெருநெறி பல நாட்டில் பல சமயங்களாகப் பிரிந்து நிற்கிறது. அருணெறியை எச்சமயப் பெயரால் அழைக்கினும் அழைக்க. அதைக் குறித்து எனக்கு கவலையில்லை. வேண்டுவது அருணெறியே. இப்பெரு நெறி உலகில் பரவப் பரவப் பலசமய உணர்வு மாண்டு எல்லாருஞ் சகோதரர் என்னும் உணர்வு உயிர்களிடை விளங்கி உலகில் அமைதி நிலைபெறும். அவ்வருணெறி மகாத்மா காந்தி வாயி லாகக் கீழ்நாட்டில் இதுபோழ்து வளர்ந்து வருகிறது. மேல் நாட்டில் இயற்கை ஆராய்ச்சி முதிர்ந்து வருகிறது. இரண்டும் ஒன்றுபடுங் காலமும் நெருங்கியிருக்கிறது. அதுபோழ்து ஒரு புதிய உலகந் தோன்றும். அவ்வுலகம் எல்லா வழியிலுஞ் சமரசத்தையே விரும்பும். அஃதொரு சமரச சமயத்தையும் விழைந்து நிற்குமென்பது திண்ணம். சமரசம் சமரசமாவது எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாத அருணெறியே யாகும். அச் சமரச சமயம் நமது சைவ சித்தாந்தமாக மிளிர நாமேன் இப்பொழுதே முயலலாகாது; சைவ சித்தாந்தத்தில் சமரசமில்லையா? பொருளுண்மை இல்லையா? அன்பில்லையா? அருளில்லையா? என்ன இல்லை? எல்லாமிருக்கின்றன. எல்லாம் பெற்ற நாம் என்ன செய்கிறோம்? போனது போக. இனியாவது நம்மை மறந்து, நம்பாலுள்ள குற்றங் குறைகளைப் பாராட்டாது, குறைவிலா நிறைவாங் கோதிலா அமுதாம் - நடராஜ மெய்யன் - ஐந்தொழில் புரியும் ஐயன் - திருவருளை முன்னிட்டு அன்புக் கடனாற்றுவோமாக. நமது முன்னணி வேலை ஜீவ காருண்யம் சைவம் அதாவது ஜீவகாருண்யம் உலகெலாம் பரவல் வேண்டும் என்னும் எண்ணம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இடையறாது ஊர்ந்து ஊர்ந்து நிற்றல்வேண்டும். சைவம் தமிழ் நாட்டார்க்கே உரியதென்றும். அச் சமயத்தைத் தமிழ் நாட்டு பெட்டியிலே அடைத்துப் பூட்டிடல் வேண்டுமென்றுங் கூறுங் குறுகிய நோக்குடையாருஞ் சிலருளர். சைவ சாத்திர ஆராய்ச்சி யுடையார். அக் கூற்றை ஏற்றுக் கொள்வரோ? சித்தாந்த நூல்கள் கூறுந் தத்துவம் எச்சமயத்திலில்லை? இவ்வழி நின்று பார்த்தால் சைவ சமயமில்லாத இடமேயில்லை என்று சொல்ல லாம். இவ்வுண்மை மேலே ஒரு சிறிது விளக்கப்பட்டிருத்தல் காண்க. இவ்வழி நின்று விளக்குவது ஒருபால் கிடக்க. இந்தியாவில் சிவ சம்பந்தம் சிவ சம்பந்தம் இந்தியாவில் எப்பகுதியிலில்லை என்று அந்நண்பரை நோக்கி வினவினால் அவர் என்ன விடை யிறுப்பரோ தெரியவில்லை. பழந் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாய் கேரள நாட்டில் சிவாலயங்களில்லையோ? தெலுங்கு நாட்டில் சிவாலங்களில்லையோ? மைசூர், ஹைதராபாத், நாகபுரி, பம்பாய் முதலிய இடங்களில் பெரும்பான்மையோராயுள்ள வீர சைவர் - சிவாத்துவித சைவர் - எக்கடவுளைத் தொழுகிறார்? நேபாளர் காமீரர் ஆண்டவனை எப்பெயராய் வழுத்துகிறார்? இராஜபுதனத்தில் இன்னுஞ் சிவலிங்க மலிவைக் காணலாமே. பரதகண்டத்துள்ள ஹிந்துக்கள் அனைவரும் போற்றுங் காசியம்பதியில் வீற்றிருக்கும் விசுவநாதன் எவன்? மற்றைப் பகுதிகளிலுள்ள சாக்நேயர் யாவர்? காணாதிபத்தியர் யாவர்? கௌமாரர் யாவர்? சிவராத்திரி விரதம் இமயம் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாடப்படுவது அச்சகோதரர்க்குத் தெரியாதுபோலும்! ஹிமயத்தின்முடி கௌரிசங்கர் என்னும் பெயர் தாங்கி நிற்பதை அவ்வன்பர் அறியார் போலும்! உலகெலாஞ் சென்று சமரச ஞானத்தைப் பரப்பிய வேதாந்த பானு - சுவாமி விவேகாநந்தர், ஏ, இந்தியாவே! நீ தொழுங் கடவுள் முனிவர்க்கு முனிவன் என்பதை - எல்லாந் துறந்த சங்கரன் என்பதை - உமைக்கு நாயகன் என்பதை - மறவாதே என்று முழங்கியிருப்பதைத் தமிழ் நாட்டு நண்பர்கள் கண் விழித்துப் பார்ப்பார்களாக. இது நிற்க. இன்னும் வேறு வழியில் சைவம் உலகில் பரவி வருவதும் உள்ளத்துறுகிறது. பழைய வைதிக சமயமென அறிஞரால் போற்றப்படும் ஆரிய சமாஜத்தின் அடிப்படையான தத்துவம் என்ன? சைவ சமயங் கூறும் முப் பொருளுண்மையன்றோ? உலக முழுவதுஞ் சமரசம் என்னும் ஒரே சமயம் பரவப் போகிறதென்றும், அதற்கென ஒரு ஜெகத் குரு தோன்றப்போகிறாரென்றும், போதித்து வரும் தியோ சாபிகல் சங்கத்தார் கந்தக் கடவுளின் கூறாகிய சனத்குமாரரை யல்லவோ பெருங் குருவாகப் போற்றி வருகிறார்? மேல்நாட்டில் சைவம் மேல்நாட்டில் பலவிடங்களில் இயற்கைப் பொருளாராய்ச்சி முதிர்ந்து வருகிறது. அவ்வாராய்ச்சி இயற்கையை உள்பொரு ளாகக் கொண்டுள்ள சித்தாந்த சமயத்துக்கு எவ்வெவ் வழியில் துணைசெய்யுமென்று யான் கூற வேண்டுவதில்லை. மேல் நாட்டு ஆன்ம தத்துவ சாத்திரிகளிற் சிலர் சைவ சித்தாந்தம் அறிவுறுத்தும் முப்பொருளுண்மை, அத்துவிதநிலை முதலிய வற்றிற்கு உடன்பட்டு வருகிறார். மேல்நாட்டில் சில இடங்களில் சைவ உணவைப் பற்றிய உணர்வும் இயக்கமும் மிக விரைவாகப் பரவி வருகின்றன. இவ் வேளையில் சைவம் தமிழர்க்கே உரியது என்று சொல்வது சைவ உலகிற்கு நலஞ் செய்வதாமோ? மூவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டிற் கப்பால் முதல்வனார் அடிசேர்ந்த முறைமை யோரும் என்று தெய்வச் சேக்கிழார் அந்நாளிற் கூறிப் போந்த உண்மையை யாவது குறுகிய நோக்குடையோர் கூர்ந்து சிந்தித்துத் திருந்து வாராக. குறுகிய நோக்குடையார்க்கு அஞ்சாது பரந்தவழி நின்று அருட்டொண்டு செய்ய உறுதிகொள்ள வேண்டுவது நமது முதல் வேலை. சிவநெறி பரப்புக ஒவ்வொருவரும் நமது ஜீவகாருண்ய மதம் - அருணெறி - யாண்டும் பரவல் வேண்டும் என்று இடையறாது எண்ணல் வேண்டும். அவ்வெண்ணமே தவமென்பது. அத் தவத்துக்கு இறையருள் சுரக்கும். ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என வரூஉம் நம் முன்னோர் திருஉள்ளக் கிடக்கையை ஓர்ந்துணரல் வேண்டும். சிவத்திற்குமேல் தெய்வமில்லை சித்திக்குமேல் சாத்திரமில்லை என்றும். சைவத்தின் மேற் சமயம் வேறிலை என்றும் ஏட்டிலுள்ள பழைய உரைகளைப் புகன்று கொண் டிருப்பதால் என்ன பயன் விளையும்? சிவமென்பது அன்பென் றும், சைவமென்பது எவ்வுயிர்க்குந் தீங்கு நினையாது நலம் பேணும் அருணெறி யென்றும் உலகோர் ஒப்புமாறு அறிவு கொளுத்த முயலல் வேண்டும்; பௌராணிக சைவத்துக்கும் சித்தாந்த சைவத்துக்கும் உள்ள வேற்றுமையை விளங்க வைத்தல் வேண்டும். சைவ சித்தாந்திகள் எச்சமயத்தாரையும் தங்களுக்கு மாறுபட்டவராகக் கருதலாகாது. சைவ சமயத்தார் தங்கொள்கையை யாண்டும் பரப்பினால் மெய்ச்சமயம் பொய்ச் சமயம் என்னும் வாதமும், என் கடவுள் உன் கடவுள் என்னும் போராட்டமும் அறவே ஒழியும். ஒரு சமயம் விடுத்து மற்றொரு சமயம் புகும் அறியாமையும் நீங்கும். பாதிரிமதம் (கிறிது கொள்கையன்று) முதலிய மதங் களில் புகுந்தவர்களை மீண்டுஞ் சித்தாந்த நெறியில் சேர்க்க உளங்கொளல் வேண்டும். இதுகாறும் சமரசம் பேசி மற்றைச் சமயத்தாரைச் சித்தாந்த நெறியில் சேர்க்க வேண்டுமென்று சொல்வது அறமா என்று சிலர் ஐயுயறாம். சித்தாந்த சமயத்தில் பிறரைப் புகுத்தலென்பது பல சமய உணர்வை அழிப்பதாகும். ஒரு சமயத்திலிருந்து மற்றொரு சமயத்திற்கு வலிந்து எவரையும் ஈர்ப்பதன்று. சமரச உணர்வளிப்பது சித்தாந்த சமயம் திருநாவுக்கரசர் திருவருணெறி தமக்குக் கூடாதபோது தாம் பிறந்த சமயம் விடுத்துச் சமண சமயம் புகுந்தாரென்றும், ஆண்டிருந்து மீண்டும் சைவசமயம் போந்தாரென்றுஞ் சொல்லப் படுகின்றன. சமணராயிருந்த நாவரசர் மீண்டுஞ் சைவசமயம் புக்காரென்பது, சமண சமயமென்றொரு சமயமுண்டு; சைவ சமயமென்றொரு சமயமுண்டு என்னும் வேற்றுமை யுணர் வின்றி எல்லாந் திருவருள் சமயம் என்னும் மெய்யுணர்வு பெற்றதேயாகும். நாவரசர் சமணராயிருந்தபோது அருகன் ஒரு கடவுளென்றும், சிவபிரான் மற்றொரு கடவுளென்றும், இவ் விருவருள் சிறந்த கடவுள் அருகனென்றும் உறுதி கொண்டிருந் தார். பின்னர் அவர்தம் அறிவில் ஆண்டவன் திருவருள் விளங்கப்பெற்றதும் தாம் பிறந்த சமயத்தில் போற்றிய கடவுளும், சமண சமயந் தழுவியபோது வழுத்திய கடவுளும் சிவபரஞ் சுடராகவே யிருப்பது கண்டு, ஆண்டவனே! உன்னை எப்பொழுதும் மறந்தறியேன் என்னும் பொருள்பட, சலம் பூவோடு தூபமறந்தறியேன் - தமிழோடிசை பாடல் மறந் தறியேன் - நலத்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் - உன்னாமம் என்னாவில் மறந்தறியேன் என்னுஞ் சமரச ஞானப் பாடல் பாடியருளினார். ஆதலால் சமரச உணர்வளிப்பதே சித்தாந்த சமயத்தில் சேர்ப்பதென்பது. இச் சமரச ஞானத்தை இன்னார்க்குப் போதிக்கலாம் இன்னார்க்குப் போதித்தல் கூடாது என்னும் நியதியிருத்த லாகாது. ஞான வேட்கையுடைய எவர்க்கும் ஞானசாத்திரம் போதிக்கலாம். நான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்று நம் ஆன்றோர் கூறினாரேயன்றி, இக்குலத்தாரே இன்பம் பெறல் வேண்டும், இச்சமயத்தாரே இன்பம் நுகர வேண்டும் என்று கூறினரோ? நம் ஆண்டவன் பன்றிக்கும் கருக்குருவிக்கும் நாரைக்கும் யானைக்கும் பாம்புக்கும் சிலந்திக்கும் செடிக்கும் கொடிக்கும் முத்திகொடுத்த சரிதங்களைப் படிக்கிறோம்; கேட்கிறோம். அத்தகைய அருட் கடவுளைப் போற்றுஞ் சைவர்கள் தங்களைப்போல மனித உடல் தாங்கியுள்ள உயிர்கள் மீது இரக்கங் காட்டாது தீண்டாமைப் பாடல் பாடுவது அறமா அன்பா அருளா என்று கேட்கிறேன். போன காலமெல்லாம் போக. இனியாவது அருள்நெறிக்குறியார் இவரே என்னும் நியதியின்றி எவ்வெவ்வழியில் சமரச ஞானத்தைப் பரப்பல் வேண்டுமோ அவ்வவ் வழியில் பரப்ப முயலல் வேண்டும். மடங்களும் கோயில்களும் நம் முன்னோர் திருவருள் நெறி வளர்ச்சிக்கென மடங் களையும் கோயில்களையும் ஏற்படுத்தினர். கலை ஞானப் பயிற்சிக்கென மடங்களும், மெய்ஞ்ஞானப் பேற்றிற்கெனக் கோயில்களும் காணப்பட்டன. அம் மடங்களுங் கோயில்களும் இப்பொழுது எந்நிலையிலிருக்கின்றன? மடங்களில் என்பு தோல் போர்த்த புன்குரம்பைகள் காணப்படுகின்றன. கோயில் களில் கல் செம்புகள் காட்சியளிக்கின்றன. மடங்களில் ஞானமாஞ் சக்தி காணோம். கோயில்களில் அன்பாஞ் சிவத்தைக் காணோம். அவ்வருணெறிக் கழகங்கள் கொலை களவுகள் காமம் பொய் முதலிய பாவங்களுக்கு நிலைக்களன்களாக மாறிவிட்டன. அம்மாற்றங்கண்டுங் கேட்டுந் தேவாரமோதும் நாம் - சிவத்தைத் தொழும் நாம் - சைவரென்று சொல்லிக் கொள்ளும் நாம் - வாளா கிடக்கிறோம். நமக்குக் கண்ணீர் பெருகவில்லை; செந்நீர் கொதிக்கவில்லை. நமக்கு உடலையும் உணர்வையும் ஆண்டவன் ஏன் தந்தான்? நம் முன்னோர் மடங்கட்குங் கோயில்கட்கும் ஏன் பெரும்பொருள் ஈட்டி வைத்தனர்? அருணெறி வளர்ச்சிக் கன்றோ? எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை - செய்ந்நன்றி கொன்ற மகற்கு என்று நாயனார் அருளிய மெய் யுரையைச் சிந்தையிலிருத்தல் வேண்டும். செய்ந்நன்றி கொன்ற பாவம் நந்தலைமீது கிடக்கிறது. அது கிடக்க, நாம் நீறணிந்து அஞ்செழுத்தோதி ஆண்டவனை வழிபடுகிறோம். அவ் வழி பாட்டை ஆண்டவன் ஏற்றுக்கொள்வனா? உலகை உய்விக்கும் ஒரு நெறிக்கு இடர் விளைந்துள்ளபோது, அவ்விடர் களைய முயலாது ஆண்டவனை மட்டும் வழிபடல் போதுமா? அவ்வழி பாட்டான் நமது கடனை ஆற்றினவராவோமா? அவ்வழி பாடாதல் ஆண்டவன் வழிபாடாமோ? அது தந்நல வழிபாடே யாகும். தொண்டர் கூட்டம் வேண்டும் மடங்களையும் கோயில்களையும் எப்படித் திருத்துவது? எல்லாங் காலச் செயல்; சிவா என்று காலங் கழித்துவிட்டுப் போகலாம் என்றும், இன்னும் பலவிதமாகவும் பலர் நினைப்பது முண்டு; பேசுவதுமுண்டு. மடங்களையுங் கோயில்களையும் திருத்த வழியா இல்லை? எத்துணையோ வழிகளுண்டு! ஆயிரஞ் சிவனடியார் உடல் பொருளாவி மூன்றையுஞ் சைவ சமயத்துக் கென அர்ப்பணஞ் செய்து நாமார்க்குங் குடியல்லோம் என்றெழும் உணர்வும், அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை என்ற அஞ்சா நெஞ்சமும், கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சி வாயவே, என்ற உறுதியுங்கொண்டு திருவருளை முன்னிட்டுப் புறப்பட்டால் வழியா ஏற்படாது? வழியிது முறையிஃது என்று குறிப்பிட்டு உங்கள் அரிய காலத்தைக் கொள்ளைகொள்ள விரும்புகிறேனில்லை. இப்பொழுது வேண்டற்பாலது தொண்டர் கூட்டம். அத் திருக்கூட்டங் கூடினால் வழியும் முறையும் பின்னர்க்கோலிக்கொள்ளலாம். வழியும் முறையும் திருவருள் காட்டும்; கூட்டும். திருவருள் துணைகொண்டு மடங்களையுங் கோயில்களையும் ஒழுங்குபடுத்தி, அவைகளின் வாயிலாக அருணெறியோம்ப முயல்வது நமது தலையாய கடமைகளுள் ஒன்று என்று சொல்வேன். உறுதி நிலை வேண்டும் பண்டைக் காலத்தில் நம்மக்களிடை ஆண்டவன் திருவடிப் பற்றில் ஓர் உறுதிநிலையிருந்தது. அந்நிலையை இக்கால மொழியில் நம்பிக்கை அல்லது விசுவாச மதமென்று எளிய நடையில் சொல்கிறேன். கிறிதுவ சகோதரர்கள் விசுவாசம் - விசுவாசம் என்று அடிக்கடி சொல்வார்கள். இதைப்பற்றிக் கிறிது மிக உரமாகப் பலவிடங்களில் பேசியிருக் கிறார். அம் மாசிலாக்கொள்கை நமது நாட்டில் வேரூன்றி யிருந்தது. இன்னும் தற்கால நாகரிக நஞ்சு ஏறாதவிடங்களில் அக் கொள்கை இறந்துபடாது நிலவி வருகிறது. அம் மேலாங் கொள்கை பல விடங்களில் தற்காலப் படிப்பாலும், போலி ஞானப் பேச்சாலும் இறந்துபட்டு வருகிறது. பண்டைநாளில் நம்மவர் நோய்வாய்ப்படின், மந்திர மாவது நீறு என்னுந் திருப்பதிகமோதி, நீறணிந்து, ஆண்டவனை வழுத்தி, நோய் போக்கி வந்தனர். அக்காலத்தில் தெய்வப் பிரார்த்தனை யால் பல அருவினைகள் ஆற்றப்பட்டு வந்தன. கண்ணில்லார் கண் பெற்றதும், செவியில்லார் செவி பெற்றதும், பிறவும் இக்காலத்தவர்க்கு நாவல் கதை போல் தோன்றலாம். அவர் இக் கொள்கையை மூடபக்தி என்று எள்ளி நகையுமாடுவர். மனோதத்துவ நுட்பந் தெரிந்த நன்மக்கள் இக் கொள்கையை எள்ளி நகையாடார். நம் சமயகுரவர் நிகழ்த்திய அற்புதங்களும், கிறிது முதலிய பெரியோர் நிகழ்த்திய அற்புதங்களும் பழைய காலத்தில் நடந்தன. இக் காலத்திலும் பெந்தகோதே சங்கத்தார் ஆண்டவனருளில் உறுதிகொண்டு, மனத்தை அவன்கீழ்க் கிடத்தி, ஜெபத்தால் பலப்பல நோய்கள் தீர்ப்பதை யான் நேரிற் கண்டு வருகிறேன்; நம்மவர்களில் சிலர் இன்னும் முருகக்கடவுள் கோயிலை வலம் வருதலாலும், தெருவில் புரள்வதாலும், வெல்லக்கட்டி கரைப்பதாலும் பலதிற நோய்கள் போக்குவதையுங் கண்டு வருகிறேன். கிறிதுவின் அருட் பெருக்கும் முருகன் அருட்பெருக்கும் மக்கள் மனோநிலையைப் பொறுத்துப் பொங்கி எழுவன. அமெரிக்க நாட்டில் சில அறிஞர் இலௌகிக முறையில் மனோதத்துவ வலியால் எத்துணை அருவினைகள் நிகழ்த்துகிறார்! அத்தகை மனோ சக்தியை - நம்பிக்கை மதத்தை - வாய் வேதாந்திகள் இகழும் மூட பக்தியை மீண்டும் உயிர்ப்பிக்க நாம் முயலல் வேண்டும். திருநீறும் கண்டிகையும் நம் முன்னோர் திருவருள் நெறியில் நிற்போர் இன்னார் என்று உலகோர்க்கு அறிவுறுத்தத் திருநீற்றையும் கண்டிகையை யும் புறச் சின்னங்களாக ஏற்படுத்தினர். திருநீறு மாசிலா உள்ளத்தைக் காட்டும் அறிகுறி. பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள் என்றார் தெய்வச் சேக்கிழார். கண்டிகை ஆண்டவன் கண்மணி என்று சொல்லப்படுகிறது. கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் என்பது ஆன்றோர் வாக்கு. கண்ணையே அருளுக்குச் சுரப்பிடமாகக் கொள்வது உலகியல் வழக்கு. கண்டிகை உயிர்களிடத்துச் செலுத்தும் இரக்கத்தை அறிவிப்ப தாகும். சுருங்கக் கூறின் நீறுங் கண்டிகையும் இரக்க அக முடைமையைப் புறத்தே காட்டுஞ் சின்னங்களாகப் பண்டைக் காலத்தவரால் கொள்ளப்பட்டன என்று கூறலாம். நீற்றையுங் கண்டிகையையும் பொருளாக்கொண்ட மெய்ப்பொருள் நாயனார் அப்பெயரால் அழைக்கப்பட்டதும், அக்காலத்துக் கேற்ப அவர் தம்மைக் குத்திக்கொன்ற முத்தநாதனிடங் கருணை காட்டி, அவன் உயிர்க்கு எவராலுந் தீங்கு நேராதவாறு காத்த தும், சேரமான் பெருமாள் நாயனார், உவர்மண மழையால் கரையப் பெற்று நீற்றுக் கோலமளிக்கக் காரணனாய் நின்ற ஒரு வண்ணானைச் சிவனடியாரெனத் தொழுததும், பிறவும் பண்டை நீறு கண்டிகையின் உள்ளக்கிடக்கையைத் தெரிவிப்பன வாம். நீறிடா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே என்று மணிவாசகனார் நீற்றின் உள்ளுறை புகல்கிறார். அதன் உள்ளுறை யாது? இரக்கமில்லா உள்ளத்தவரைக் கண்டால் உள்ளம் நடுக்குறுகிறது என்பது. வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன் வேடநெறி நிற்பார் வேடம் மெய்வேடம் என்றார் திருமூலரும். அந்நீறுங் கண்டிகையும் இது போழ்து குடியர் வெறியர் காமுகர் கொலைஞர் பொய்யர் வஞ்சகர் முதலிய மாக்கள் உடலங்களிலும் இடங்கொண்டிருப்பதைக் காணக் காணக் கண்ணீர் பெருகுகிறது. நீறு கண்டிகை அணிந்து எத்துணைப் பாவங்கள் செய்தாலும், அப்பாவங்களைச் சின்னங்கள் தாங்கித் தமக்கு நலஞ் செய்யுமென்னும் அறியாமை இன்னுஞ் சிலரிடத்துண்டு. வேறு பல சிறுமைகளுமுண்டு. அவைகளை விரிப்பிற் பெருகும். ஈண்டு யான் வலியுறுத்தப் போந்தது நீறு கண்டிகையின் உண்மை பொன்றியுள்ள இந்நாளில் அவைகளை அணிந்திருப்போரே சைவரென்னும் நியதி யிருத்தலாகாதென்பதே. எவ்வுயிரையுந் தம்முயிர்போல் கருதிக் கொலை புலை தவிர்ப்போ ரனைவரையும் சைவ ராகக் கோடல் வேண்டுமென்பது எனது கருத்து. இக் கருத்தைப் பரப்ப முயல வேண்டுவது நங்கடன்களுளொன்று. அஞ்செழுத்து வண்மை முன்னைநாளில் அஞ்செழுத்து, பொருளுணர்ந்து ஓதப்பட்டது. இப்பொழுது அதைச் செவியுறுத்தும் குருமாரில் எத்துணைப்பேர்க்கு அஞ்செழுத் துண்மை தெரியுமென்பது வெள்ளிடைமலை மகரமாகிய மலத்தால் நகரமாகிய மறைப் புற்றுள்ள யகரமாகிய நான் (ஆன்மா) வகரமாகிய திருவருள் வாயிலாகச் சிகரமாகிய கடவுளொடு சேரல் வேண்டுமென்னும் பொருளுணர்வோடு ஓதி ஓதி, அவ்வோதல் பின்னர்ப் பொரு ளாகி அழியாநிலை எய்துவிக்கும் நெறி கண்டு வந்தனர் நம் முன்னோர். அஞ்செழுத்தோதலால் பெறற்கரிய பெரும்பேறு பெறலாம். தமிழ் வேதத்திலுள்ள பஞ்சாக்கரப் பதிகங்களைப் பார்க்க. நல்லக விளக்கது நமச்சி வாயவே என்னுந் திருவாக்கையோர்க. அஞ்செழுத்தில் அடங்காத தென்னை? உலகு உயிர் கடவுள் எல்லாம் அவ்வெழுத்தில் அடங்கியிருக்கின்றன. இப்பொழுது அவ்வெழுத்துக்கள் பொரு ளிழந்து வரிவடிவங்களாக நிற்கின்றன. அஞ்செழுத்தின் உண்மையை உலகோர்க்கு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உணர்த்த முயல்வது நம் பெருங் கடமை. சிவ - தீக்கை சிவ - தீக்கை இன்னார் தான் செய்யவேண்டும், இன்னார்தான் பெறல்வேண்டும் என்னுங் கட்டுப்பாட்டைக் களைதல் வேண்டும். கொலை புலை நீத்துப் பன்னிரு திருமுறை. பதினான்கு சாத்திரம் முதலிய திருவருள் நூல்களில் வல்லராய்த் தேர்ச்சியடைவோர் எவராயினும் அவருக்குத் தீக்கை செய்யும் உரிமை வழங்கப்படல் வேண்டும். தீக்கை நாடி வருவோர் எவராயினும் அவர்க்குத் தீக்கை செய்ய வேண்டும். சந்தான குரவருள் ஒருவராய உமாபதி சிவாச்சாரியார் பெற்றான் சாம்பான் என்பவனுக்குத் தீக்கை செய்ததை நந்தமிழ்நாட்டுச் சைவ மக்கள் கவனித்து நடப்பார்களாக. முன்னணி வேலைகள் இன்னும் அருணெறி வளர்ச்சிக்கெனக் கல்லூரி, மருத்துவ விடுதி முதலிய அறச்சாலைகளைக் குறிப்பிட்டு, உங்கள் அரிய காலத்தைப் போக்க விரும்புகிறேனில்லை. நமது முன்னணி வேலைகள் பற்பலவாகக் கிடக்கின்றன. அவைகளை ஒழுங்குபட நடாத்த நல்லமைப்புகள் தேவை. அமைப்புக்கு இன்றியமை யாதது ஒற்றுமை. முதலாவது சைவமக்களுக்குள் அவ்வொற்றுமை வேண்டும். அவ்வொற்றுமை நிகழாது அதை குலைத்து வருவது அழுக்காறென்பது எத்தொண்டில் ஈடுபடுவோரிடத்திலும் அழுக்காறிருத்தலாகாது. தன்னை வேறாகவும் பொதுத் தொண்டை வேறாகவும் கருதல் வேண்டும். இக் கல்வியை மேல் நாட்டாரிடமிருந்து நாம் பயிலல் வேண்டும். சைவப் புலவர் தொண்டு சைவப் புலவர் ஒவ்வொருவரும் தமக்குமேல் கற்றாரிலர் என்று இறுமாந்து, எவருந் தமது அடிவருடியே வாழ்தல் வேண்டுமென்னும் பேய்க்குணங் கொண்டு, வாழ்ந்தமையே சைவ உலகக் கேட்டிற்குத் தலையாய காரணமென்று எனக்குத் தோன்றுகிறது. சைவப் புலவர்களுக்குக் கூவலாமை குரை கடலாமை கதையை நினைவூட்ட வேண்டுவதில்லை. போன காலம் போக, இன்று முதலாவது சைவப் புலவர்கள் சைவ உலகஞ் சிறுமைப்பட்டு வருவது கருதித் தங்களை மறந்து அருட்டொண்டு செய்ய ஒன்றுபடுவார்களாக. சைவப் பெருஞ்சமாஜம் அவர்களனைவரும் ஒன்றுபட்டுச் சைவ உலகிற்கென ஒரு பெருஞ் சமாஜம் காண்டல் வேண்டும். அதற்குக் கிளையாகப் பல ஜில்லா சபைகள், தாலுக்கா சபைகள், கிராம சபைகள் தோன்றுதல் வேண்டும். இப்பொழுது தமிழ் நாட்டில் எண்ணிறந்த சங்கங்கள் ஒன்றற்கொன்று தொடர்பின்றிக் கிடக் கின்றன. அவைகளெல்லாம் ஒன்றுபட்டால் ஒரு பெருஞ் சமாஜம் நாளையே தோன்றும். சில ஆண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்றோர் அமைப்புத்தோன்றி நற்றொண்டு செய்து வந்தது. இப்பொழுது அச் சமாஜமெங்கே? நிட்டைகூடி ஆண்டுக்கொருமுறை விழித்து மீண்டும் அஃது ஒடுக்கம் புகுகிறது. அதன் குலைவுக்குக் காரணம் சொல்லவும் வேண்டுமோ? மீண்டும் அதைப் பழையபடி உயிர்ப்பிக்க முயலல்வேண்டும். அல்லது புதிதாக வேறொன்று காணமுயலல் வேண்டும். சமயப்பிரசாரம் இவ்வமைப்புக்கட்கும் பிறவற்றிற்கும் முதல் முதல் பிரசாரம் வேண்டற்பாலது. ஒவ்வொரு சைவ சங்கமும் இவ் வருந்தொண்டு செய்து வரலாம். சங்கங்களிலுள்ள அங்கத்த வர்கள் ஓய்ந்த நேரங்களில் எளிய மக்களிடைப் போந்து ஜீவகாருண்ய உபதேசஞ் செய்யலாம்; துண்டுப் பிரசுரங்கள் வெளியிடலாம். பிரசாரத்துக்கெனச் சிறப்பாகக் கல்வி அறிவு ஒழுக்கமுடைய அறவோரை ஒவ்வொரு சங்கத்திலுஞ் சேர்த்து, அவர்க்குச் சோறு கூறையளித்து, அவர் வாயிலாக எவ்வளவோ பிரசாரஞ் செய்விக்கலாம். பிரசாரத்துக்குப் பொருள் வேண்டுமே என்னுங் கவலை பலருக்குண்டு. அருணெறி வளர்ச்சிக்குப் பெரும் பொருள் எற்றுக்கு? புத்தர் பெருமான் ஒரு காசுமின்றி ஒழுக்கமுடை அறவோரைக் கொண்டே தமது அறநெறியை உலகிற் பரப்பி வந்தார். பெரும்பொருள் சேர்த்து வைப்பது பின்னர் உலகாயத மதத்துக்கு அடிகோலிவைப்பதாகும். மடங்களின் தற்கால நிலையும், கோயில்களின் தற்கால நிலையும் எனது கூற்றை வலியுறுத்தும். பெரும் பொருள் காரணத்தாலன்றோ கிறிதுநாதர் பெயரால் நடத்தப்பட்டு வரும் பல சங்கங்கள் சமய ஞானமற்ற அமைப்புக்களாக மாறுபட்டன? பொருட் செல்வம் பெறமுயல்வதைப் பார்க்கிலும் அருட்செல்வம் பெறமுயல்வது சிறப்பு. செல்வன் கழலேத்துஞ் செல்வம் செல்வமே என்றார் ஞானசம்பந்தப் பெருந்தகையார். அச் செல்வத்தால் உலகைப் பலவழியில் திருத்தலாம். சங்கத்தார் திருவருள் நெறி வளர்ச்சிக்கெனப் புறப்பட்டால் ஆண்டவன் உதவி பலவழிகளிலும் வந்து சேரும். நமது கடமை பணி செய்வது. ஒவ்வொரு சங்கத்தாரும், வாரத்துக்குக் குறைந்தது இவ்வளவு பேரைக் கொல்லாமை நோற்குமாறு செய்ய வேண்டும் என்னும் உறுதி கொண்டுழைத்தல் வேண்டும். அரிய நூல்கள் வெளியிடுதல் சங்கங்கள் அரிய நூல்களைக் காலநிலைக் கேற்றவாறு வெளியிட முயலல்வேண்டும். நூல்கள் வெளியீடென்று எல்லாச் சங்கத்தாரும் பழைய புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுவதால் பெரும்பயன் விளையாது. பழைய நூல்களை ஒருசிலர் வெளி யிடலாம். பழைய நூற் கருத்துக்களை எளிய நடையில் கற்றவரைக்கொண்டு எழுதுவித்து முதுக்கல்வி இல்லாதார்க்கு அவைகளைப் பயன்படுத்தல் வேண்டும். சிவஞான பாடியத்தை எளிய நடையில் எழுதி நாட்டிற்கு உதவினால் எத்தகைய நலன் விளையுமென்பதை யான் கூறவேண்டுவ தில்லை. மேல்நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளர் உழைப்பு நமது சமய ஆராய்ச்சிக்கு இன்றியமையாதது. அதை நாம் இழிவாகக் கருதலாகாது. சைவ சித்தாந்தம் இயற்கையை உள்பொருளாகக் கோடலால், அக் கொள்கைக்கு மேல் நாட்டார் இயற்கை யாராய்ச்சி பெருந்துணை செய்வதாகும். ஆதலால் மேல்நாட்டு மொழிகளிலுள்ள தாவர நூல், விலங்கு நூல், பூதபௌதிக நூல் முதலியவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து நாட்டுக்கு நலஞ் செய்யல் வேண்டும். ஆங்கிலங் கற்ற தமிழ் நன்மக்கள் சித்தாந்த உண்மைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குந் தொண்டில் தலைப்படல்வேண்டும். அவர்கள் மேல்நாடு போந்து சித்தாந்த உண்மையைப் பரப்பவும் முயலல் வேண்டும். சடத்தின் இயல்பை நன்கு ஆராய்ந்துள்ள மேல்நாட்டு மக்கட்கு ஆத்திக உணர்வை நஞ் சித்தாந்த ஞானமளிக்கு மென்பதில் ஐயமில்லை. எத்துணையோ மக்கட்கு ஆத்திக உணர்வு வழங்கவல்ல அருட்செல்வத்தையுடைய நாம், அதைப் பிறர்க்குப் பயன் படுத்தாது வாளாகிடப்போமாயின், நமது வாழ்வில் ஆற்ற வேண்டிய கடனை ஆற்ற தொழிந்தவராவோம். அக்கடனாற்ற நாம் முற்படுவோமாக. தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபை இத் தூத்துக்குடிச் சபை நாற்பத்தோராண்டுகளாகப் பல அறத்தொண்டுகளை ஆற்றி வருவது குறித்துக் கழிபேருவகை எய்துகிறேன். தொன்மையும் செல்வாக்குமுடைய இச்சபை இக்கால நிலையுணர்ந்து சில புது முறைகளைக் கடைப்பிடித்து வழிகாட்டினால் சைவ உலகத்துக்கு உயிர் நல்கும் பேற்றிற்குரிய தாகும். திருநீற்றுச் செல்வம் - பாண்டிமாதேவி - எனதாருயிர்த் தெய்வம் - மங்கையர்க்கரசி வாழ்ந்த நாடன்றோ இச்சைவத் தென்பாண்டி நாடு? குலம் பிறப்பு முதலிய புறவேற்றுமை கருதாது குலச்சிறையார் சிவநெறி வளர்த்த நாடன்றோ இத் தமிழ்த் தென்பாண்டி நாடு? இத் திருநாட்டிலன்றோ சைவம் அனலிடையும் புனலிடையும் நின்று தன் பெற்றியை விளக்கி யது? அத்தகைத் தமிழ்ச் சைவத் திருநாட்டிலன்றோ இச்சபை சைவம் வளர்த்து வருகிறது? அந்நாளில் சைவத்துக்குற்ற இடுக்கணைப் பார்க்கிலும் இப்பொழுது நேர்ந்துள்ள இடுக்கண் சாலவுங் கொடிது. இந்நாளில் பல மங்கையர்க்கரசிமார் தேவை; பல குலச்சிறையார் தேவை. மங்கையர்க்கரசியாருங் குலச் சிறையாருந் தோன்றுவரேல் திருஞான சம்பந்தர் வருவார். மங்கையர்க்கரசியாரையும் குலச்சிறையாரையும் நல்க இச் சபையார் முயலல் வேண்டும். அம்முயற்சி எழுமாறு அங்கயற் கண்ணிபங்கன் ஆலவாய் அவிர்சடைக் கடவுள் அருள்புரிவா னாக. இறுவாய் தொகுப்புரை சகோதரிகளே! சகோதரர்களே! இதுகாறுஞ் சமயத்தின் இயல்பு இஃது என்பதும், உலகிற்குச் சமயம் இன்றியமையாதது என்பதும், எல்லாச் சமயங்களும் ஒரு கடவுளையே பல பெயரால் பலவழியில் போற்றுகின்றன என்பதும், சமரச சமயமொன்றே கடவுள் நெறி என்பதும், சமயங்கள் பலவாய்க் கிடப்பினும் அவைகள் யாவும் சமரசத்தையே குறிக்கொண்டு நிற்கின்றன என்பதும், தொன்மை வாய்ந்த தமிழ்மக்கள் கண்ட முருகு - கந்தழி எச்சமயத்துக்கும் உரிய பொருள் என்பதும், அப்பொருளே சிவமாக இன்றுகாறும் போற்றப்பட்டு வருகிறது என்பதும், அச் சிவ சம்பந்தமுடைய சைவம் சமயகுரவர் சந்தான குரவர் முதலியோரால் ஓம்பப்பட்டது என்பதும், அச்சைவம் எச்சமயத்தோடும் பிணக்கின்றியும் எச்சமயக்கொள்கையையும் நீதியினால் தன்னகத்தே தாங்கியும் நிற்குஞ் சமரச சமயம் என்பதும், அது முனைப்பற்ற இடத்தில் பொலியும் அன்புச் சமயம் என்பதும், அந்நிலையை எப்பெயரிட்டும் அழைக்கலாம் என்பதும், சைவத்தின் தத்துவம் - வழிபாடு முப்பொருளுண்மை- அத்துவித நிலை - முதலியன சமரச நோக்குடையன என்பதும், உலகு உயிர் கடவுள் மூன்றும் அநாதி நித்தியம் என்பதும், அவை பொருளால் வேறுபட்டும் கலப்பால் ஒன்றுபட்டும் நிற்பன என்பதும், சைவசித்தாந்தக் கடவுள் பிறப்பிறப்பில்லாதது என்பதும், அது நான்காவது பொருள் என்பதும், துவித வழி அத்துவிதத்தை அறிவுறுத்தலே வேதாந்த நெறி என்பதும், அவ் வழியே மெய்கண்டார் போதித்த வழி என்பதும், வேதாந்தமே சித்தாந்தம் இஃதே அஃது என்பதும், அது பொய் இது பொய் என்று உலகைத் துறந்து ஓடுவது வேதாந்தம் அன்று என்பதும், தன்னல மறுப்பதே உலகைத் துறப்பது என்பதும், எல்லாம் ஆண்டவன் என்று உயிர்களை வழிபடுதலே செய்கை வேதாந்தம் என்பதும், வேதாந்த சித்தாந்த ஒற்றுமை யுணர்ந்து வழிபாட்டில் கருத்தைச் செலுத்தி நாட்டுக்கு நலஞ்செய்ய வேண்டும் என்பதும், சமரச இயல்புகள் இன்னின்ன முறையில் சைவத்திலிருக்கின்றன என்பதும், பிறப்பை யொட்டி உயர்வு தாழ்வு பாராட்டாமை - கைம்மாறற்ற பணி - பிறர்குற்றம் பொறுத்தல் - பாவமன்னிப்பு முதலியன சித்தாந்த சைவ சமயத்தில் சிறப்பாக விளங்குகின்றன என்பதும், அருள் - கருணை - இரக்கம் - தயை உள்ள இடங்களிலெல்லாம் சைவம் மிளிரும் என்பதும், 1சைவம் ஒரு சமயம் அன்று என்பதும், உலகில் அது பல அறிஞர்வழி ஓங்கி வருகிறது என்பதும், சைவ சமய ஆக்கங்கருதி முன்னணி வேலைகளாக இன்னின்ன பணிகள் செய்யவேண்டும் என்பதும், இவைகளை யொட்டிப் பிறவுஞ் சொல்லப்பட்டன. இச் சொற்பொழிவை இவ்வளவு நேரம் பொறுமையோடு செவிமடுக்கத் திருவுளங்கொண்ட உங்கள் பெருந்தகைமைக்கு வணக்கஞ் செலுத்துகிறேன். உங்கள் அரிய காலத்தை என் வெற்றுரைகளை இன்னுங் கேட்கும் வழியில் செலவழிக்க விரும்புகிறேனில்லை. எனது சிறுமை உரைகளில் பிழைகள் நிகழ்த்திருக்குமேல் அவைகளைப் பொறுத்தருளுமாறு மீண்டு மொருமுறை வேண்டுகிறேன். சொற்பொழிவின் சாரம் அன்பர்களே! இதுகாறுங் கூறிவந்ததன் முடிவு என்ன? சைவம் அருணெறி என்பதன்றோ? அருளாளர்களே! உலகை உற்று நோக்குங்கள்; உலகில் எந்நெறி பெருகியிருக்கிறது? அருணெறியா? மருணெறியா? உன்னுங்கள். கொலைச்சாலை களின் பெருக்கை என்னென்று கூறுவது? கொலைக் கருவிச் சாலைகளின் பெருக்கை என் கூறுவது? அந்தோ! உள்ளம் நடுக்குறுகிறது! இக்கொலைப் பெருக்கிற்குக் காரணர் யாவர்? ஜீவகாருண்யத்தையே மூல தர்மமாகக் கொண்டுள்ள சைவர் களாகிய நீங்களல்லவா? சைவர்களே! உங்கள் சமயம் யாது? நீரில் மூழ்குவதா? துணி தோய்ப்பதா? நீறிடுவதா? அனுட்டானஞ் செய்வதா? கோயில் வலம் வருவதா? அன்று; அன்று. இவை யாவும் புறவொழுக்கங்களாகும். ஜீவகாருண்ய நெறியே உங்கள் உள்நெறி. அஃதில்லையேல் குளித்தலும் பூசலும் பிறவும் என்னாம்? நீங்கள் உங்கள் அருட்டொண்டை ஆற்றியிருப்பின், உலகில் உயிர்க்கொலை நிகழுமோ? புலைப் புசிப்பு நிகழுமோ? உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் மடங்களையுந் தீண்டுமளவு பரவியிருப்பதைக் கவனிக்கின்றீர்களா? சைவ உலகின் கவலை யீனம் என்னே என்னே! இனி அருளுலகம் மறையுமோ என்னும் அச்சமும் உண்டாகிறது. உங்கள் ஒற்றுமையின்மை - உழைப் பின்மை - சித்தாந்த ஞானத்தை உலகுக்கறிவுறுத்த முன்வராத தன்னலம் - உலகைத் துன்புறுத்துகின்றன. நஞ்சமயம் தமிழர்க்கே உரித்து. அது தமிழ்நாட்டளவிலேயே கட்டுப்பட்டுக் கிடத்தல் வேண்டும் என்னுங் குறுகிய நோக்கை உதறித் தள்ளுங்கள்; நானா பக்கங்களிலும் அருணெறியோம்ப முயலுங்கள். பரந்த நோக்குடைய ஒரு கொள்கையை - மன்பதைக்குரிய ஒரு சமயத்தைப் - பிறர்க்குப் பயன்படுத்தாது, அதைச் சிறைப்படுத்து வதுஞ் சிறுமைப்படுத்துவதும் அறமாமோ? எத்துணையோ உயிர்கள் அருளுணர்வு பெறுவதை மறிப்பது மறச்செயலன்றோ? அதனினும் வன்கண் - கொடுமை - கொலை - வேறொன் றுண்டோ, தானத்திற் சிறந்தது எது? ஞானதானமன்றோ? அதையா தடுப்பது? ஆண்டவன் அருளமுதைப் பருகச் சேர வாருஞ் செகத்தீரே என்று உங்கள் ஆன்றோர் உலகை நோக்கிக் கூவி அழைத்திருப்பதைக் கருதுங்கள். எச்சமயத்தவரும் வந்திறைஞ்சா நிற்குஞ் சிற்சபேசனை - ஆனந்தத் தாண்டவனை - வழிபடும் நீங்களா உங்கள் சமய உண்மையை மறைப்பது? அக் கரவை யொழித்து அன்பே சிவமென் றெழுங்கள்; அருளே சக்தியென்றெழுங்கள். நீங்கள் உலகொளியாவீர்கள். பெரியோர்க்கு பெரியோர்களே! உங்களுக்கு என்ன இல்லை? அறிவு நூல்களில்லையா? அன்பு நூல்களில்லையா? அருணூல் களில்லையா? எல்லாம் உண்டு. வேண்டற்பாலது எழுச்சியே. நெருப்பிடை நின்ற ஞானசம்பந்தரை நினையுங்கள்; நீற்றறையில் கிடந்து கடலில் மிதந்த நாவரையரை நினையுங்கள்; ஆண்டவனைத் தூதுகொண்ட ஆண்டகையை நினையுங்கள்; நினைந்து நினைந்து ஊக்கங் கொள்ளுங்கள். நீலகண்டர் உறுதி, இயற்பகைகையின் ஈகை, மெய்ப்பொருள் பொறுமை, கண்ணப்பர், கனிவு, மங்கையர் கரசியார் வீரம் - இவைகள் எங்கே போய்விட்டன? பிறர்க் குழைக்க நீங்கள் புறப்பட்டால் இம் மாண்புகளெல்லாம் உங்களிடத்தில் பொங்கியெழுமென்பது திண்ணம். மெய்கண்ட சாத்திரமென்னும் ஞானவாளிருக்கும் போது உங்களுக்கென்ன அச்சம்? சிவநேயர்களுக்கு சிவநேயர்களே! எவரையுஞ் சிவமாக வழிபடுங்கள்; எச் சமயத்தையுஞ் சிவசமயமாகக் கொள்ளுங்கள்; எக் கடவுளரையுஞ் சிவமாகத் தொழுங்கள். உலகிலுள்ள ஆடு மாடுகள் அம்மா அம்மா என்று கதறிக் கதறி உங்களை அழைக்கின்றன. அருளுலகம் உங்களை அழைக்கிறது. செவி சாயுங்கள். அன்புளங்கொண்டு எழுங்கள்; அருள் முகங்கொண்டு எழுங்கள்; தொண்டாற்றப் புறப்படுங்கள். வித்தகம் பேசவேண்டா; பணிசெய்யப் புறப் படுங்கள்; உங்கள் அருணெறி உலகெலாம் பரவப்போதுண்மை. மேல்நாடுங் கீழ்நாடும் ஒன்றுபட்டு ஈனப்போகும் உலகு உங்கள் அருணெறியையே தழுவும். அந்நெறியே அவ்வுலகிற்குரிய நெறியாகும். ஆதலால் அந்நெறி வளர்க்க எழுங்கள்; எழுங்கள். வடமொழி தென்மொழிச் சண்டை வேண்டா; ஆரியர் தமிழர் சண்டை வேண்டா. எவ்வுயிரையுஞ் சிவமாகக் கொண் டெழுங்கள். எல்லா நலன்களும் உண்டாகும். எல்லாம் சிவமயம் ஆண்டவனே! எல்லாவற்றையும் ஆக்கும் அயனே! அளிக்கும் அரியே! அழிக்கும் அரனே! நின்னைச் சிவமெனும் மங்களப் பெயரால் நாங்கள் வழிபடுகிறோம். எல்லாஞ் சிவமய மென்பதை நாங்கள் உணரல் வேண்டும்; எங்கணுஞ் சிவநெறி யாம் அருணெறி பரவல் வேண்டும்; எங்கணும் அருளறம் - எங்கணும் அருளரசு - எங்கணும் அருட்டொண்டு - பெருகல் வேண்டும். அருள் செய்க; அருள் செய்க. முன்னைப் பழமைக்கும் பழமையாயிருக்கின்ற முதல்வன் நீ! பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நிற்கும் பெரியோன், நீ பிள்ளைப் புதுமைக்கும் புதுமையாய் நிற்கும் பெரியோன், நீ! புதுமுறையில் அருணெறி வளர்க்க முயல்கிறோம். அருள்செய்க. சாந்தம் சிவம் அத்வைதம். காலமொடு தேசவர்த்த மான மாதி கலைந்து நின்ற நிலைவாழி! கருணை வாழி! மாலறவுஞ் சைவமுதன் மதங்க ளாகி மதாதீத மானவருண் மரபு வாழி! சாலமிகு மெளியேனிவ் வழக்குப் பேசத் தயவுவைத்து வளர்த்த அருட் டன்மை வாழி! ஆலடியிற் பரமகுரு வாழி வாழி! அகண்டிதா காரஅரு ளடியார் வாழி! - தாயுமானார்  முருகன் அல்லது அழகு நூன்முகம் இயற்கை பல அழகிய வடிவங்களாய்க் காட்சியளிக்கிறது. அக்காட்சியை மறுப்போரில்லை. இயற்கையைக் கூர்த்த மதி யால் ஆராய ஆராய அதன் உள்ளுறையொன்று உணர்வில் உறுகிறது. இயற்கை உடல்; அதன் உள்ளுறை உயிர். உயிரை முருகு அல்லது முருகன் என்று தமிழ்நாட்டார் கொண்டனர். இவ்வுடலையும் உயிரையும் உலகம் ஆராய்ந்தவண்ணமிருக் கிறது. அவரவர் ஆராய்ச்சியிற் போந்த உண்மைகளும் பலப்பல. இன்னும் ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது. முருகனைப்பற்றிய பலதிறக் கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதல் முதல் முருகனுண்மை கண்ட பழந்தமிழர், முருகனை எவ்வாறு கொண்டனர் என்று ஆராயத் தலைப்பட்டதில், அவர் முருகை, மணமும், இளமை யும் கடவுட்டன்மையும் அழகுமுடைய செம்பொருளாகக் கொண்டனர் என்பதும் பிறவும் விளங்கின. இக்கொள்கை அடியேனுக்கு மிக விழுமியதாய்த் தோன்றிற்று. இவ்விழுமிய கொள்கை நாட்டில் நிலைபெறின், நாட்டுக்குப் பலவழியிலும் நலன் விளையுமென்னும் வேட்கை என்மாட்டெழுந்தது. வேட்கை மேலீட்டான், அமயம் வாய்ந்துழி வாய்ந்துழி, விழுமிய கொள்கையைப் பற்றிப் பேசியும் எழுதியும் வருகிறேன். காரைக்குடியினின்றும் முகிழ்த்த குமரன் என்னுந் திங்கள் மலரின் முதலிதழில், என்னால் எழுதப்பெற்ற முருகன் என்னுஞ் சிறு கட்டுரை யொன்று வெளிவந்தது. அக்கட் டுரையைக் கண்ட நண்பர் சிலர், அதை நூல் வடிவாக வெளியிடு மாறு, கடிதம் எழுதிக்கொண்டே யிருந்தனர். அக்கட்டுரை ஒரு திங்கள் தாளுக்கென எழுதப்பட்டமையான், அதை யான் நினைந்த வண்ணம் எழுதல் இயலாமற் போயிற்று. அன்பர்கள் விழைந்தவாறு, பின்னை, அக்கட்டுரையை முதன் முறை நூலாக்க முயன்றபோதும், அதனிடை, நினைந்த பல பொருள் கள் சேர்க்கப் போதிய ஓய்வு கிடைக்கவில்லை. ஆகவே முதற் பதிப்பில் மிகச் சில பொருள் சேர்த்து, நூலுக்கு முருகன் என்னுந் தலைப்பீந்தேன். அப்பதிப்பு 1925-ம் ஆண்டு வெளி வந்தது. அழகைப்பற்றி என்பால் கருக்கொண்டிருந்த பல பொருளை இரண்டாம் பதிப்பில் உருக்கொள்ளச் செய்யலாமென்று எண்ணிக் கொண்டிருந்தேன். அவ்வெண்ணம் இரண்டாம் பதிப்பில் ஒருவாறு முற்றுப்பெற்றது. இரண்டாம் பதிப்பு 1927-ம் ஆண்டு வெளிவரலாயிற்று. இரண்டாம் பதிப்பில் பல புதுப்பொருள் கூட்டப்பட்டன. நூலின் உள்ளுறைக்கேற்ப நூலுக்கு முருகன் அல்லது அழகு என்னுந் தலைப்பு அணியப்பட்டது. அழகை அடிப்படையாக் கிடத்தி நூல் எழுதப்பட்டமையான், நூலுக்கு அம்முடி சூட்டப் பட்டதென்க. இயற்கையழகை முருகெனக்கொண்டு பழந்தமிழர் வழிபாடு நிகழ்த்தி வந்தனர். இவ்வாறு முருகனை வழிபடுவோர் தொகை நாளடைவில் அருகிவிட்டது. அதனால் பல கடவுளர் உணர்வு, பன்னெறி உணர்வு, போராட்டம், கட்சிகள், பிரிவுகள் முதலிய இழிவுகள் தோன்றலாயின. பழைய இயற்கை வழிபாடு மீண்டும் புத்துயிர் பெறின், இழிவுகள் தொலைதல் ஒருதலை. இயற்கை வழிபாடு மீண்டும் நாட்டில் உயிர்த்தெழல் வேண்டு மென்பது எனது வேணவா. அவ்வவா மேலீட்டான் யாக்கப்பட்ட நூல் இது. இந்நூற்கண், முருகன் சொற்பொருள் விளக்கம், அழகி னியல், இளமைப் பேறு, இயற்கை யழகே முருகென்பது, பாட்டு ஓவியம் இசை இவைகளின் வழி இயற்கை அன்னையை வழி படல், பெண்ணின் பெருமை, நோன்பின் திறம், முருகனடியார் இயல்பு முதலியன ஓதப்பட்டிருக்கின்றன. இந்நூலை முற்றும் பயில்வோர் உள்ளத்தில் இயற்கை வழிபாட்டில் ஆர்வம், ஒரே கடவுள் ஒரே நெறி என்னும் உறுதி, எவ்வுயிர்க்குந் தீங்கு நினையாப் பேரறம் முதலியன நிலவும். இயற்கை என்னும் எனது ஆருயிர் அன்னைக்கும், அவ் வியற்கையை விடுத்து என்றும் நீங்காத அழகு என்னும் அப்ப னுக்கும் இந்நூலைக் கோயிலாக்கித், தமிழ் மலர் தூவி, ஒல்லும் வகை வழிபாடு நிகழ்த்தி யிருக்கிறேன். வழிபாட்டு முறையில் குற்றங் குறைகளிருப்பின், பொறுத்தருளுமாறு அன்பர்களை வேண்டுகிறேன். மூன்றாம் பதிப்பு 1930-ம் ஆண்டிலும், நான்காம் பதிப்பு 1938-ம் ஆண்டிலும், ஐந்தாம் பதிப்பு 1943-ம் ஆண்டிலும், ஆறாம் பதிப்பு 1944-ம் ஆண்டிலும், ஏழாம் பதிப்பு 1946-ம் ஆண்டிலும் வெளிவந்தன. இஃது எட்டாம் பதிப்பு. முதுமையில், என் கண்களில் ஊறு நேர்ந்தது. சிகிச்சை செய்யப்படும் இவ்வேளையில், இவ்வெட்டாம் பதிப்பு அச் சாகியது. எனது நிலை கண்டு, அச்சுப் பிழை பார்த்துத் துணை புரிந்த வித்துவான் - அன்பு கணபதி அவர்கட்கு எனது நன்றி உரியதாக. பிழை பொறுக்க. இயப்பேட்டை சென்னை 20.08.1950 திருவாரூர் - வி. கலியாணசுந்தரன். குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமே கலையு நிறையு மறிவு முதிர முதிரு மதுர நறவமே கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே அலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே அறிவு ளறிவை யறியு மவரும் அறிய வரிய பிரமமே மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே இழுமெ னருவி சொரியு மிமைய முதல்வி புதல்வன் வருகவே இயலு நடையும் வடிவு மழகும் எழுத வரியன் வருகவே ஒழுகு கருணை முழுகு கமல வதனன் வருக வருகவே ஒருவ னிருவ ரொடுகை தொழுநல் உபய சரணன் வருகவே விழுது விடுவெ ணிலவு பொழியு நகையன் வருக வருகவே விளரி பயிலு மளியு ஞிமிறும் விரவு குரவன் வருகவே மழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே மழலை முதிர முதிரு மதுர வசனன் வருக வருகவே வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே 1. முருகன் பொருளும் பொதுமையும் (முருகன் - முருகு - முருகின் சொற்பொருள் - மணம் இளமை கடவுட்டன்மை அழகு - பழந்தமிழர் கூர்த்தமதி - முருகன் ஒரு கூட்டத்தவர் கடவுள் அல்லன் - மொழி வேற்றுமையால் இறைவன் பல பெயர் பெறல் - மணம் இளமை இறைமை அழகு எல்லார்க்கும் பொது.) முருகன் எவன்? முருகையுடையவன் முருகன். முருகு என்றால் என்னை, முருகு என்பது பல பொருள் குறிக்கும் ஒரு சொல். அப் பல பொருளுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கன நான்கு. அவை மணம், இளமை, கடவுட்டன்மை, அழகு என்பன. இந்நான்கு பொருளடங்கிய ஒரு சொல்லால் பண்டைத் தமிழ் மக்கள் முழுமுதற் பொருளை அழைத்தது வியக்கத்தக்கது. இயற்கை மணமும், மாறா இளமையும், எல்லாப் பொருளையுங் கடந்தொளிருந் தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இலங்குவது கண்டு, அப்பொருள்கள் முறையே உறைதற் கிடம் பெற்றுள்ள முருகன் என்னுஞ் சொல்லை, அவ்விறைவனுக்குப் பழந் தமிழ்மக்கள் சூட்டியதன் திறமையை நோக்குழி அவர்களது கூர்த்தமதி புலனாகிறது. உலகத்தின் நானா பக்கங்களிலும் வாழ்ந்து வரும் மக்கள், தங்கள் தங்கள் அறிவாற்றலுக் கேற்றவாறு, தங்கள் தங்கள் மொழியில் கடவுளுக்குப் பலதிறப் பெயர்கள் சூட்டியிருக் கிறார்கள். அப்பெயர்கள் ஒவ்வொன்றினும் ஒவ்வொரு சிறப்புப் பொருள் விளங்குகிறது. சிலவற்றில் பொருத்தமில்லாப் பொருள்களும் உண்டு. முருகன் என்னுஞ் சொல்லிலோ அறிஞர் போற்றும் பொருள்களே மிளிர்கின்றன. ஆதலால் அறிஞர் போற்றற்குரியதும், மகிழ்ச்சி யூட்டக்கூடியதும், பொருத்த முடையதுமாக இருப்பது முருகன் என்னுந் திருப்பெயர். முருகன் ஒரு கூட்டத்தவர்க்குரிய கடவுள் என்று கருதுவது அறிவுடைமை யாகாது. எக் கூட்டத்தவர் எம்மொழியால் போற் றும் எப்பொருளாயினும், அப்பொருட்கண் இறை இயல்புகள் காணப்பெறின், அதைக் கோடலே அறிவுடைமை யாகும். இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும், அழியா அழகும் அறிவிற் சிறந்த எச்சமயத்தவருங் கொள்ளும் ஆண்டவனுக்குரிய இயல்புகளாம். இவ்வியல்புகள் அமைந்த ஒன்றைத் தமிழ்மக்கள் முருகன் என்று வழுத்துகிறார்கள். ஏனைய மொழியினரும் அவ்வியல்புகளின் பொருள் நல்க வல்ல தமது மொழியால் தாம் வழிபடும் இறைவனுக்குப் பல பெய ரிட்டழைக்கலாம். அப்பெயர்ப் பொருளை ஆராய்ந்து, தமிழில் பெயர்த்தெழுதினால், அது முருகாக விளங்குதல் வேண்டும். தமிழ்ப் பெயராகிய முருகெனுஞ் சொல் தனக்குரிய பொருண்மை அழியப்பெறாது எம்மொழியில் வழங்கப்பட்டாலென்ன? கடவுளை மணமுடையதாகவும், இளமையுடையதாகவும், இறைமையுடையதாகவும், அழகுடையதாகவும் எவர் எம் மொழிப் பெயரால் தொழினும், ஆண்டு எம்பெருமான் முருகன் எழுந்தருள்வானென்க. மணமும் இளமையும் கடவுட்டன்மையும் அழகும் எவருடைமை? இவை எல்லார்க்குமுரிய உடைமையல்லவோ? ஆதலால் மணமுடைமை, இளமையுடைமை, கடவுட்டன்மை யுடைமை, அழகுடைமை ஆகிய இவைகளைப் போற்ற மறுப் போர் முருகனைப் போற்ற மறுப்போராவர். மணமுடைமை முதலிய நான்கினையும் போற்ற மறுப்போர் இருப்பு நெஞ்சமும் வன்கண்மையுமுடைய முரடராயிருப்பர். அன்னார் நெஞ்சில் முருகு அலர்தலும் அரிது. 2. அழகின் இயலும் கூறும் (அழகு - அழியா அழகு - அழியும் அழகு - நக்கீரனாரும் அழகும் - இயற்கை செயற்கை - உள்பொருள் இல்பொருள் - பருமை நுண்மை - அழகரும்புமிடங்கள் - அழகுக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்பு - அழகின் பன்மை ஒருமை - அழகு புரியுந் துணை - அழகும் புலன்களும் - புற அழகு அக அழகு - அழகுக்குத் தோற்ற ஒடுக்கமின்மை - பேரின்பம் சிற்றின்பம் - வன்றொண்டர் மாணிக்க வாசகர் - அழகும் இன்பமும் - அகநானூறு, கலித்தொகை, பத்துப் பாட்டு, திருக்கோவையார் - பெண்ணும் அழகும் - அழகுக் கோயில்கள் - அழகும் வாழ்வும் - அழகிடைமணம் இளமை கடவுட்டன்மை மருவல் - அழகு பெறும் வழி - உணவு முறை - பெருந் திண்டி களியாடல் மருந்துகள் முதலியவற்றின் கேடுகள் - மேல்நாட் டார் இயற்கை முறை - கந்தழி - பாண்டி நாட்டில் கடவுளை அழகாக் கொண்டது - திருமுருகாற்றுப்படையில் முருகின் நான்கு கூறு.) இனி மணம், இளமை, கடவுட்டன்மை, அழகு என்னும் நான்கு பொருளில் அழகு என்பதை மட்டும் யான் ஈண்டுச் சிறப்பாக எடுத்துக் கொள்கிறேன். என்னை? அழகு உள்ள இடத்தில் ஏனைய மூன்றும் விரவி நிற்றலின் என்க. அழியா அழகில் மணமும் இளமையும் இறைமையும் கலந்து நிற்றல் இயல்பு. அழியா அழகு என்று ஈண்டுக் குறிப்பிட்டது உன்னற் பாலது. அழியா அழகெனில் அழியும் அழகென்று ஒன்றுண்டோ என்னும் ஐயம் சிலருள்ளத்திலாதல் பிறக்கலாம். அழகின் அழியாமை நோக்கி, ஈண்டு அழியா என்னும் அடையால் அழகைச் சிறப்பித்ததன்றி, அழியும் அழகுக்கு எதிர்மறையாக அழியா என்று அழகைச் சிறப்பிக்கவில்லை யென்றுணர்க. உலகில் ஒவ்வோருண்மைக்கும் மாறுபட்ட போலியுண்டு. போலிக்கண் உண்மை யின்மையான், அஃது அழிந்துபடுகிறது. இம்முறையில் அழியா உண்மை யழகிற்கும் மாறுபட்ட அழியும் போலி யழகென்று ஒன்றிருக்கு மன்றோ? அப்போலி அழகை அழியும் அழகு என்று அழைக்கலாமன்றோ? இதனால் அழகை இருகூறுபடுத்தி அழியா அழகு. அழியும் அழகு என்று சொல்லவேண்டுவதில்லை. அழிவதை அழகென்றுங் கொள்ள வேண்டுவதில்லை. இது பற்றியே அழியா என்று அழகைச் சிறப்பித்தவாறு காண்க. அழகுப் போலியை அழியும் அழகு என்றதும் முகமன் என்க. இயற்கையோடு வாழ்ந்து, இயற்கையோடு படிந்து, இயற்கையை ஆய்ந்து, இயற்கையி லுறையும் அழகெனும் முருகைக் கண்ட பழந்தமிழ்ப் புலவர்கள் அழகின் இயல்பைப் பற்றி என்ன கூறியுள்ளார்கள்? அதைச் சற்று நோக்குவோம். பழந் தமிழ்ப் புலவர்களுள் ஈண்டு நக்கீரனார் ஒருவரைக் கோடல் சால்பு. நக்கீரனாரின் புலமை கருதி மட்டும் அவரை ஈண்டுக்கொள்ள வேண்டுவதில்லை. அவர் இயற்கையில் முருகை யுணர்ந்து முருகாற்றுப்படை பாடியதில் தமது புலமை செலுத்தியவர் என்னுந் தொடர்புரிமை கொண்டு அவரை ஈண்டுக் கோடலே ஏற்புடைத்து. நக்கீரனார் தாமுணர்ந்த அழகைப் பொது முறையில் திருமுருகாற்றுப்படையாகப் பாடி மகிழ்ந்தார். அவ்வாற்றுப் படைக்கண் ஓரிடத்தில் அழகின் இயல்பு இத்தகையதெனச் சிறப்பு முறையில் அவர் அறிவுறுத்தி யிருக்கிறார். கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு என்று அப்புலவர் அழகியல் தெரித்தவாறு காண்க. கையால் செய்யப்படுவது செயற்கை. கையால் செய்யப் படாதது இயற்கை. மலையும் ஆறும் காடும் கடலும் எவர் கையால் ஆக்கப்பட்டன? ஞாயிறும் திங்களும் விண்மீன்களும் எவரால் செய்யப்பட்டன? புனலுக்குத் தண்மை ஈந்தவர் எவர்? நெருப்புக்கு வெம்மை யூட்டினவர் யாவர்? இயல்பாக அரும்பிய இவைகளின் அழகே கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பாகும். மற்றையது போலி. கைபுனைந் தியற்றா இவ்வழகு அழியாத் தன்மையது என்று மேலே தொகையாகச் சொல்லப்பட்டது. அதை ஈண்டு வகைப்படுத்திச் சில உரை பகர்தல் நலனெனத் தோன்றுகிறது. அழகு உள்பொருளா அல்லது மக்கள் உள்ளம் இயற்கையில் படியும்போது அங்கே உருவெளியாய்த் தோன்றும் இல் பொருளா என்பது ஆராயத்தக்கது. அழகைப் பற்றி எண்ணாத இடமில்லை; பேசாத இடமில்லை; போற்றாத இடமில்லை. அழகின்மாட்டு உலகங் கொண்டுள்ள பற்றுப்போல வேறெதன் மாட்டும் அஃது அப் பற்றுக் கொண்டில்லை. அழகு அழகு என்றே உலகம் அழகில் உறைந்து நிற்கிறது. இவ்வாறு அழகுடன் வாழும் உலகை நோக்கி, அழகு எப்படி இருக்கிறது என்று வினவின், அதைச் சொல்லால் சொல்ல இயலாது அது விழிக்கிறது. புலன் களுக்கும் பொருளாகாத ஒன்றைப்பற்றி என்ன சொல்வது, என்னே அழகின் நுட்பம்! புலன்கட்குப் பொருளாகாமை என்னும் ஒன்று கொண்டு, அழகிற்கின்மை கூறலாமோ எனின், அஃதும் அற மெனத் தோன்றவில்லை. என்னை? உணர்விலுறுத்தல், வினை யாற்றல், துன்ப நீக்கி இன்பமாக்கல் முதலியன அழகால் பெறு கிறோம். இத்தகை நிகழ்வுடைய ஒன்றன் இருப்பை எங்ஙனம் மறுத்தல் கூடும்? உலகில் புலன்களுக்குப் பொருளாகும் பொருள்களு முண்டு; பொருளாகாப் பொருள்களுமுண்டு. இவைகளை முறையே பருமை (Concrete) என்றும் நுண்மை (Abstract) என்றும் உலகங் கொண்டிருக்கிறது. பருமைக்கு உண்மை கூறலும், நுண்மைக்கு இன்மை கூறலும் அறிவுடைமையல்ல. என்னை? ஊனப் புலன்களுக்குப் பொருளாகாது உணர்வில் நிகழ்ச்சி யளவில் உறுத்தும் பொருள்களுமுண்டு. அறிவு அறம் அன்பு நீதி முதலியன புலன்களுக்கு வடிவால் காட்சி வழங்கும் பருப் பொருட்களல்ல. இவை காட்சி வழங்காமையான், இவற்றின் உண்மைக்கும் மறுப்புக் கூறலாம் போலும்! இவை உள்ளனவே யன்றி இல்லன வல்ல. இவற்றின் உண்மை, இவற்றை யுடைய பருப்பொருள் வாயிலாக உணரக் கிடக்கிறது. அறிஞன் வழி அறிவும், அறவோன் வழி அறமும், அன்பன் வழி அன்பும், நீதி மான் வழி நீதியும் உணர்விற்படுதல் ஓரற்பாற்று. இவைபோன்ற பல நுண்மைகளிருக்கின்றன. இவற்றுள் அழகுமொன்று. அழகுடைப் பொருள் கொண்டு அழகை யுணர்கிறோம். ஆகவே, அழகென்பது பருப் புலன்களுக்கு வடிவாகத் தோன்றாத நுண்ணிய உள்பொருளெனக் கொள்க. அஃது உருவெளி யன்றெனத் தெளிக. அந்நுண்மைப் பொருள் யாண்டும் நீக்கமற நிற்பது. யாண்டும் நிறைந்துள்ள அந்நுண்பொருள் சில வேளைகளில் சில இடங்களில் தனதிருப்பை உயிர்கட்கு அறிவுறுத்தவோ என்னவோ மின்னொளிபோல் தன் (நுண்ணிய) தோற்றத்தைப் புலப்படுத்துகிறது. இளஞாயிறு தனது செங்கதிரை நீலக்கடலில் பரப்பும்போது அப்பரவையிடை அழகு ஒளிர்கிறது. அஞ் ஞாயிறு தனது இளவெயிலை, பசுங்கடல் பொங்கி யெழுந்தா லென உருண்டு திரண்டு பரந்து ஒளி நுழைதற்கு மிடமின்றிச் செறிந்து மிடைந்து சரிந்து சாய்ந்து நிற்குங் குறிஞ்சிக் காடுகளின் பச்சை மேனியில் உமிழும்போது அவ்விடை அழகு அரும்பு கிறது. திங்கள் தன் பால் நிலவை, வெள்ளை வெளேலென வெள்ளி அறல் படர்ந்தாலென மிளிரும் வெள்ளிய மணல்மீது காலும்போது அங்கே அழகு ஒழுகுகிறது. இவ்வாறு சில வேளைகளில் சில இடங்களில் அழகு தனது நுண்ணிய காட்சி வழங்குதல் உணர்க. அழகு எதன் வாயிலாக உணரக் கிடக்கிறது? அழகு தன்னையுடைய இயற்கை வாயிலாக உணரக் கிடக்கிறது. அதற்கும் இதற்குமுள்ள தொடர்பென்னை? அழகுக்கும் இயற்கைக்குமுள்ள தொடர்பை என்னென்று கூறுவது? அழகின் உடல் இயற்கை. இயற்யினூடே அழகு நீக்கமின்றி விராவி நிற்கிறது. இயற்கையை விடுத்து அழகை ஆராய்ந் துணரல் அரிது. அழகின் இருப்புணர்தற்குக் கருவியாயுள்ள இயற்கையும் அழகைப்போல உள்பொருளேயாம். இயற்கை, பலப் பல வடிவங்களாகத் தோன்றித் தோன்றி மறையினும், அதன் முதல் கேடுறுவதில்லை. உள்ளதற்குத் தோற்றமே யன்றி இல்லதற்குத் தோற்றமில்லை என்பது அளவை. அழியாது கிடக்கும் இயற்கை முதலுக்கு அடிப்படையாக நிலவுவது அழகாகும். அழகினின்றும் அரும்பி மலர்ந்து காட்சியளிப்பது இயற்கை என்று சுருங்கச் சொல்லலாம். அழகுக்கும் இயற்கைக்கு முள்ள தொடர்பு நோக்கி, அஃதே இஃது இஃதே அஃது என்றுங் கொள்ளலாம். தனக்கு அடிப்படையாக நிற்கும் அழகைப் பலப்பல வடிவங்களாக இயற்கை காட்டிக் காட்டி, உலகைக் கவர்ந்து மகிழ்ச்சி யூட்டுகிறது. ஒவ்வோர் இயற்கைப் பொருட்கண் கருத்தை ஒற்றி ஒற்றி, உன்ன உன்ன அதனதன் அழகு தனித் தனியே உணர்வில் உறுதல் பெறலாம். இப்பயிற்சி முதிர முதிர எல்லா இயற்கைப் பொருட்கும் அடிப்படையாக ஒரே அழகு நிலவல் உணரலாம். எனவே அழகு தனித்தனிப் பன்மையாகவும், பரந்த ஒருமையாகவும் உயிர்கட்கு உறுதுணை செய்தல் ஓர்க. அழகு உயிர்கட்குப் புரிந்துவரூஉம் உறுதுணையை என் னென் றுரைப்பது? அழகோ, புலன்கட்குப் பொருளாகாதது. அஃது உயிர்கட்குப் புரிந்துவரூஉந் துணையோ, அளவில் அடங்காதது. அழகு புலன்கட்குப் பொருளாகிறதில்லை. ஆனால் அது புலன்கட்கு விருந்தாகிறது. அழகில் தோயாத புலன்கள் உரமிழந்து உலர்ந்து போகும். புலன்கெட்ட உயிர் கட்கு வாழ்வேது? வளர்ச்சி யேது? இன்பமேது? இன்ப நுகர்ச் சிக்கு வாயாகவுள்ள புலன்கள் அழகில் படிந்த வண்ணமிருத்தல் வேண்டும். அப்படிவால் புலன்கள் பருகும் விருந்தமிழ்தம் உடலையும் உயிரையும் ஓம்புவதாகும். அழகு புறத்தே நிற்பதுபோல அகத்தேயும் நிற்கிறது. புறமும் அகமும் ஒன்றும்போது அழகுணர்வு புலனாகும். அதற்குக் கருவிகளாக இருப்பனவே புலன்கள். அப்புலன்கள் அழகில் தோய்ந்ததும், ஆங்காங்குள்ள அழகு, மலரினின்றும் மணம் வீசுவதுபோலத், தன்னினின்றும் தன் ஒளி பொழியத் தொடங்குகிறது. அதனால் உடலும் உயிரும் ஆக்கமுறும். அழகு புலனாகாத நுண்மையதாய் உலகிற்குப் புரிந்துவரூஉம் உதவி உணர்வால் உணரத்தக்கது. உலகிற்கு அடிப்படையாய் நின்று துணைபுரியும் அழகு, தோற்ற வொடுக்கமுடையதாயின், அதை அழகு என்று அழைத் தல் பொருந்தாது. தோற்ற ஒடுக்க முடைய மாறுதலை (விகா ரத்தை) அழகு என்று எங்ஙனம் அழைப்பது? தோற்ற வொடுக்க மிலா ஒன்றே அழகாகும். அத்தகைய ஒன்றைப் படைப்பவர் யாவர்? வளர்ப்பவர் யாவர், இக்கருத்துப்பற்றியே அழகை அழியா இயற்கை அழகு என்று ஆன்றோர் ஆண்டு வருகின்றார். அவ்வழகில் தோய்ந்து அழகராய நக்கீரனார், அழகைக், கைப்புனைந் தியற்றாக் கவின்பெருவனப்பு என்று கூறிப்போந் தார். இவ்வழகே பழந்தமிழர் போற்றிய முருகு முருகாகும். கைபுனைந் தியற்றா இயற்கை அழகில் கருத்தைப் பதிய வைத்துள்ள ஒருவன், அதனோடு புணருந்தொறும் புணருந் தொறும் அவனுள்ளத்துள் சொலற்கரிய இன்பங் கிளர்ந்தெழும். அவ்வின்பத்தைப் பின்வந்தார் பேரின்ப மெனவும் சிற்றின்ப மெனவும் பிரித்துக் கூறினார். பண்டைநாளில் இன்பம் இன்ப மாகவே பிரிவின்றிக் கிடந்தது. மக்கள் வாழ்வு, செயற்கையில் வீழ்ந்த நாள் தொட்டு, இன்பம் பேரின்பமெனவும், சிற்றின்ப மெனவும் பிரிந்தது போலும்! பண்டைத் தமிழ் நூல்கள் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றை மட்டும் அறிவுறுத்தலை இன்றுங் காணலாம். மக்கள் செயற்கை வாழ்வில் தலைப்பட்ட நாள்தொட்டு வீட்டின்பமென ஒரு தனியின்பம் வகுக்கப்பட்டது போலும்! முன்னை நாளில் நான்காவதாகிய வீட்டின்ப மெனும் பேரின்பம் மூன்றாவதாகிய இன்பத்தில் அடங்கியிருந்தது. ஆதலால் இயற்கை யழகில் தோயும் ஒருவனதுள்ளம் நுகரும் இன்பம் சிற்றின்பமாமோ பேரின்பமாமோ என்று ஆராய வேண்டுவதில்லை. அதை முன்னைய முறைப்படி இன்பமென்று மொழியலாம்; பின்னைய வழக்குப்படி பேரின்பமெனச் சொல்லலாம். அவ்வின்பத்துக்கு ஒப்பாகவாதல் உயர்வாகவாதல் வேறோரின்பமுளதோ? அவ்வின்பத்தை யன்றோ வன்றொண்டர் நுகர்ந்தார்? மாணிக்கவாசகர் பருகினார்? அவ்வின்பம் அழகுள்ள இடங்களிலெல்லாமிருக்கும். அழகில்லா இடமுமுண்டோ? இவ்வுலகமே அழகுவடிவம். இவ்வழகிய உலகிடை நின்று அண்ணாந்து பார்த்தால், மேலும் கீழும் சுற்றும் முற்றும் அழகு சொரிவது காணலாம். அழகிய நீலப் படாத்தின் விரிவில் நித்திலந் தூவினாலென வானத்தி லூருஞ் செவ்விய அழகை என்னென்று வருணிப்பது? ஞாயிற் றின் ஒளியை என்னென்று நவில்வது? திங்களின் நிலவை என்னென்று செப்புவது? கோள்களின் மின்னலை என்னென்று கூறுவது? கரிய காட்டின் காட்சியை எப்படி எடுத்துக் காட்டு வது? கைநீட்டும் அலைகடலின் கவினை எங்ஙனம் கழறுவது? என்னே அண்டத்தின் அழகு! இவையெலாஞ் சேர்ந்த ஒன்றே இயற்கை யன்னையின் அழகு வடிவம். அவ்வழகே அழியா அழகு. அதுவே முருகென்னும் பேரழகு. பண்டைத் தமிழ் மக்கள், இயற்கைவழி வாழ்வு செலுத்தி, அதற்கு அடிப்படையாயுள்ள அழகுண்மை கண்டு, அவ்வழகால் இயற்கை அழகுபெறுவது நோக்கி, அவ்வியற்கையை வழிபட்டு, முழுமுதற்பொருட்டு அழகு என்னும் பொருள்பட முருகன் என்னும் பெயரணிந்தார்கள். அவர்கள் இயற்கை வாயிலாக முருகைக் கண்டு நுகர்ந்த இன்பத்தை அகநானூறு, கலித் தொகை, பத்துப்பாட்டு, திருக்கோவையார் முதலிய நூல்களில் காணலாம். அவ்வின்ப ஊற்றைத் திறக்கவல்ல அழகு இயற்கை வாயிலாகக் காணக்கிடக்கிறது. இயற்கையில் உள்ளத்தைப் பதித்து, அதனோடு ஒன்றி வாழ்ந்துவரின், இயற்கைப் பேரழகு - முருகு - புலனாகும். செம்பொன்னை யுருக்கி வார்த்தாலெனக் காட்சியளிக்கும் அந்திவான் செக்கரழகும், கொண்டல் கொண்டலாக ஓடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும், அத் தண்புனல் மணற் கற்களை அரித்தோடும் அருவியின் அழகும், பச்சைப் பசேலெனப் பெருங்காட்சி யளிக்கும் பொழில்களின் அழகும், அவைகளில் பச்சைப் பாம்பெனப் பின்னிக் கிடக்கும் பசுங்கொடிகளின் அழகும், அவைகளினின்றும் அரும்பியுள்ள நகைமலரின் அழகும் மக்கள் உள்ளத்துள்ள இன்ப ஊற்றைத் திறப்பன வல்லவோ? மயிலாடும் அழகும், மான் நடக்கும் அழகும், நந்தூரும் அழகும் புலவருக்கு விருந்தல்லவோ? இவ்வழகெலாந் திரண்ட அழகே பெண்ணழகு. பெண், மாதர் என்னுஞ் சொற்களுக்கு அழகென்பதே பொருள். பலதிற இயற்கை அழகுகளெல்லாம் அவள் மாட்டிருத்தலால், அவளை அழகெனும் பெண் - மாதர் - என்று நந்தமிழ் மக்கள் அழைத் தார்கள். அழகுக்கு உறைவிடமாகிய பெண்ணின்பால் எது இல்லை? எல்லாமிருக்கின்றன. அவள் மாட்டு முகிலுண்டு; திங்களுண்டு; மலர்களுண்டு; குயிலுண்டு; மயிலுண்டு; மானுண்டு; பிறவும் உண்டு. முருகன் வடிவெலாம் அவள். அவள் பால் - முருகை - அழகைக் காண்டலன்றோ இன்பம்? இத்தகைய இன்பப் பொருளைத் துன்பப் பொருளாக எவன் கொள்வான்? காமுகன் - கீழ்மகன் - கயவன் கொள்வான். இயற்கை யின்ப நுட்பந் தெரிந்த ஒருவன் ஒருநாளும் பெண்ணைத் துன்பப்பொருளாகக் கருதான். பெண்ணினல் லாள் பாட்டாக இருக்கிறாள்; எந்தை முருகனாக இருக்கிறாள்; தூய இன்பமாக இருக்கிறாள். அப்பெண் தெய்வத்தைத் தொழுகிறேன். பெண்ணெனும் தெய்வ அழகு, அறியாமை அழுக்காறு அவா முதலிய கொடுமைப் பாறைகளை உடைத்து, இன்ப ஊற்றைத் திறக்கும். அவ்வின்பத்தில் தோய்ந்த பழந் தமிழ்ப் புலவர் பாடல்கள் முருகன் உறையும் அழகுக் கோயில் களாம். பழந்தமிழ் நூல்களைப் படிப்பதும் அழகெனும் முருகனை வழிபடுவதாகும். முருகன் இயற்கை வாயிலாகத் தனதழகை நாடோறும் பொழியாதிருப்பின் உலகில் அழகேது? அழகில்லையேல் வாழ்வேது? ஒருவனது வாழ்வு அவனது அழகையே பொறுத்து நிற்கிறது. உடலில் நரப்பில் உரங்குன்றப் பெறுகிறவன் அழ குடையவனாயிரான். ஒருவனது உடல் நலத்தை அவனது அழகு புலப்படுத்தும். உலகிலுள்ள உயிர்களெல்லாம் உடல் நலமுற்று இன்பந் துய்த்து வாழ்தல் வேண்டும் என்னும் பேரருளால் முருகன் இயற்கை வாயிலாக அழகை உதவுகிறான். எம்பெரு மான் நீலக்கடலில் காலையில் நெருப்புப் பிழம்புபோல ஞாயி றாகப் புறப்பட்டு உலகுக் குதவாவிடின், உலகம் என்ன பாடு படும்? அவன் திங்களாக அமுதம் பொழிந்து உலகுக் கின்ப மூட்டுவதை உணராத புலன்களும் புலன்களாமோ? முருகன் மலையாக நின்றும், ஆறாக ஓடியும், காடாக விளங்கியும், கட லாக ஒலித்தும், உடலாக உடனிருந்தும் உயிர்களை ஓம்பிவரும் திருவருட்டிறத்தை எவரே புகழவல்லார்? முருகன் இயற்கை வாயிலாக ஆடிவரும் திருவிளையாடல்களை ஈண்டு விரிக்கிற் பெருகும். இயற்கை வாயிலாக முருகன் புரிந்துவரும் பேருதவியை மக்கள் நேரே பெறுவார்களாயின், அவர்கள் என்றும் அழியா அழகுடையவர்களா யிருப்பார்கள். இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வில் மக்கள் தலைப்படலால், அவர்கள் விரைவில் அழகு குன்றி மாண்டுவிடுகிறார்கள். ஆதலால் மக்கள் இயற்கைக்கு அரணாமாறு வாழ்வு நடாத்தப் பயில்வார்களாக. இயற்கை வாழ்வு நடாத்துவோர் உள்ளம், அழுக்காறு அவா முதலிய யம தூதர்கள் உலவும் நிலமாகாது, அவர்கள் உள்ளம் அன்பு இரக்கம் முதலிய தெய்வ கணங்கள் வாழும் நன்னிலமாகும். அழுக்காறு அவா முதலிய பேய்த்தன்மைகள் மகனை நோய் வாய்ப்படுத்தி விரைவில் அவனைக் கொல்லும். அவையல்லா அன்பு இரக்கம் முதலிய தெய்வ நீர்மைகள் ஒருவ னது வாழ்வை வளர்க்கும். இதற்குரிய வழி இயற்கை யழகாம் முருகை - முருகனை - வழிபடுவதாகும். என்றும் இளையாய் அழகியாய் என்று முருகனது இயல்பை ஓதிய நக்கீரனார், உன்னை யொழிய ஒருவரையும் நம்புகிலேன் - பின்னை யொருவரையான் பின்செல்லேன் என்று அருளிச் செய்திருத் தல் காண்க. என்றும் அழியா அழகை விரும்புவோர் எம்பெரு மான் முருகனடியைத் தமக்குரிய புகலாக் கோடல் வேண்டும். இயற்கை வாயிலாக முருகு என்னும் அழியா அழகை உணர்ந்தவர்பால் என்றும் மணமே கமழ்ந்து கொண்டிருக்கும்; அவர்மீது புலால் மணம் கமழாது. அவர் மணத்துக்கென வேறு செயற்கைப் பொருளைத் தேட வேண்டுவதில்லை. வைகறைத் துயிலெழுந்து, காலைக் கடனை ஒழுங்காக முடித்து, தண் புனலாடி, நறுங் காற்றில் மூழ்கி, ஞாயிற்றொளியிற் படிந்து, இயற்கை உணவுகொண்டு புறத்தை அழகு செய்தும், அழக்காறு வெகுளி அவா முதலிய தீ நீர்மைகளைக் களைந்து, அன்பு அருள் அறம் முதலிய நன்னீர்மைகளை மணந்து, அகத்தை அழகு செய்தும் வாழும் ஒருவன்மீது இயற்கை மணங் கமழுமென்பது ஒருதலை. இவ்வாழ்வு பெறாத சோம்பரின் புறத்திலும் அகத்திலும் அழுகல் நாற்றம் வீசும். இயற்கை வாழ்வு நடாத்தும் ஒருவனது உள்ளும் புறமும் முருகெனும் அழகு கோயில் கொள்கிறது. அழகுள்ள இடத்தில் புலால் முடைக்கு இடமேது? அழகில் மணமிருத்தல் இயல்பு. இயற்கை மணங் கமழப் பெறுவோர் என்றும் இளமை யுடையரா யிருப்பர். இயற்கை மணம் உடல் நலனுக்குக் கேடு சூழாது. மக்களை முதுமை யணுகாதவாறு அம்மணங் காத்து வரும். அழகில் மணம் ஒன்றி நிற்றல்போல அதன்கண் இளமை யும் ஒன்றி நிற்கிறது. இளமை விரும்பாதார் உலகில் உளரோ? அகவை முதிர்ந்த கிழவனும் மீண்டும் இளமை பெற விரும்புவன். இளமையில் மக்களுக்குள்ள காதலுக்கோ ரளவில்லை. இளமை, முருகன் கூறுகளிலொன்று. ஆகவே என்றும் இளமையுடையவ ராக வாழ விரும்புவோர் எம்பெருமான் முருகனை எப்பொழு தும் நினைந்த வண்ணமிருப்பாராக. இயற்கைக்கு முதலாக (காரணமாக) உள்ள முருகு என்றும் இளமையா யிருப்பதால், இயற்கைப் பொருள்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்றுகின்றன. முருகின் இளமை குன்றுவதாயின், இயற்கையும் தன் செயலில் குன்றும். ஆனால் இயற்கை எத்துணைக் காலம் எவ்வெவ் வழியில் தொழிற் படினும், அஃது இளைத்துச் சலித்துச் சாய்வதில்லை. என்னை? முதலாகவுள்ள முருகு என்றும் இளமையாயிருப்பதால், வினையாகிய இயற்கையும் என்றும் இளமை என்னும் வளமை குன்றாமல், ஒரு பெற்றியாய்த் தன் செயலைச் சலிப்பின்றிச் சாய்வின்றி நடாத்திக்கொண்டு போகிறது. ஆதலால் இயற்கை வழி முருகை யுணர்வோன் என்றும் இளையனாயிருப்பன். மலைக்கிழங்கை உண்டும், காட்டுப் பழங்களைத் தின்றும், வயல் மணிகளை (தானியங்களை)ப் புசித்தும், கடற் காற்றைப் பருகியும் வாழ்வோரை விரைவில் முதுமை அணுகாது. இயற்கைப் பொருள்களைத் தங்கள் விருப்பப்படி வேறு பல பொருளொடும் புலாலொடுங் கலந்து அவித்துப் பதன்செய்து விலாப் புடைக்க உண்பதிலேயே பொழுது போக்கும் மாக்களை விரைவில் முதுமை அடர்ந்து வருத்தும். பெருந் திண்டியானும், களியாடல்களானும், தீயொழுக்கத்தானும் உடல் வளத்தைக் கெடுத்து, முதுமையென்னும் மூதேவியை மணந்து கொண்ட சிலர், மீண்டும் இளமை யாஞ் சீதேவியை மணக்க முயல்கிறார். இம்முயற்சியில் தலைப்படுவோருட் சிலர் பொன் வெள்ளி இரும்பு இவைகளால் செய்யப்பட்ட மருந்துகளை உண்கிறார்; சிலர் நடைப் பயிற்சி குதிரை யேற்றப் பயிற்சி முதலிய துறை களிலிறங்குகிறார்; சிலர் படுக்கையோடு கிடந்து, கடவுளே கடவுளே என்று வாயால் மட்டுங் கடவுளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அமெரிக்கா, ஜெர்மனி முதலிய இடங் களில் முதுமை நீக்கி இளமைபெற இளங்குரங்குகளின் உயிர்ப்பு முளைகளைப் பெயர்த்து மக்கள்பால் அவைகளை அமைக்கும் முறை கையாளப்பட்டு வருகிறது. ஓருயிர் நலத்துக்கு இன்னோர் உயிரைக் கொல்வது இயற்கைச் செந்நெறியாகாது. இயற்கைக்கு மாறுபட்டு வாழ்வைத் தொடக்கத்தில் நடாத்திப் பின்னைச் சாக்காட்டுக்கஞ்சி மருத்துவம் முதலிய செயற்கை முறைகளைக் கையாள்வதினும், முன்னைய பிழைபாடுணர்ந்து இயற்கை அன்னையின் திருவருளைப்பெற, மீண்டும் அவள் அருள் நாடியுழைப்பின் அவள் இரங்கியருள்வாள். இயற்கைத் துணையால் முதியோர், இளமைப் பேறு பெறுதல் அரிதன்று. அமெரிக்காவில் சில அறிஞர் இயற்கைத் துணையால் இளமை காக்க முயன்று வருகிறார். பண்டைத் தமிழ்நாட்டார் இயற்கையோடு முரண்படா வாழ்வு நடாத்தி, இயற்கை அழகாம் முருகனை வழிபட்டமையான், அவர் இளமை இன்பம் நுகர்ந்துவந்தனர். குமரனை மன மொழி மெய்களால் தொழுவோர் என்றுங் குமரனாயிருப்பது இயல்பே. இளமை காக்க விரும்புவோர் என்றும் இளையனாக உள்ள முருகனைப் பொருள் தெரிந்து போற்றி உய்வாராக. இயற்கை மணமும் மாறா இளமையும் உடைய ஒன்று எவ்வித மாறுதலும் எய்தாது. அஃது என்றும் ஒரு பெற்றியதா யிலங்கும். மாறுபாடின்றி என்றும் ஒரு பெற்றியதா யிருப்பது கடவுளியல்பாகும். தோற்றம் ஒடுக்கமென்னும் மாறுதல் தத்துவத்துக்குண்டு. மாறுதலில்லாக் கடவுள், தத்துவங் கடந்த தனிப்பொருளென்று அறிவு நூல்கள் முழங்குகின்றன. இதுவே கந்தழி என்பது. இயற்கை மணமும் மாறா இளமையும் மாறுதலுடைய தத்துவத்துக்கில்லை. அவை மாறுதலில்லாக் கடவுளுக்கேயுண்டு. அழியா அழகில் இயற்கை மணமும், மாறா இளமையும் இருத்தல்போலக் கடவுட்டன்மையு மிருத்தல் காண்க. இவை யெலாமுடைய ஒன்றை முருகன் என்று நம் முன்னோர் கொண்டனர். அம்முருகனை இடையீடின்றி வழி பட்டு வரின் கடவுட்டன்மையும் பெறலாம். ஆகவே முருகு என்னும் அழகில் மணமும் இளமையுங் கடவுட்டன்மையும் ஒன்றியிருத்தலுணர்க. பழந் தமிழர் தாம் தொழுத கடவுளை அழகுப் பொரு ளாகவே கொண்டனர் என்பதற்குப் பல சான்றுகள் உள. அச் சான்றுகளுள் இரண்டொன்று வருமாறு : தமிழ் பிறந்த இடமும், தமிழ் வளர்த்த குறுமுனி வாழ்ந்த இடமும், தமிழ்ச் சங்கம் மருவிய இடமும் பாண்டி நாடு என்று சொல்லப்படுகிறது. அப்பாண்டி நாட்டுப் பழைய மக்கள் தங்கள் ஆலவாய் அவிர்சடைக் கடவுளைச் சொக்கன் என்னும் பெயரால் வழிபட்டார்கள். (அச்சொக்கன் பின்னைச் சுந்தரேசனானான்) சொக்கன் என்னுஞ் சொற்குரிய பொருளென்னை? முழு அழகன் - பேரழகன் என்பது. சொக்கு - பேரழகு. பாண்டி நாட்டில் சிறப்புற்று விளங்கும் மற்றொரு பழம்பதியாகிய திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள கடவுளைத் தமிழ் மக்கள் அழகன் என்று போற்றி யிருத்தலையும் உன்னுக. அழகனே ஆலவாயில் அப்பனே அருள் செய்வாயே - அப்பர் தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய் சொக்கனே யஞ்ச லென்றருள் செய்யெனை - ஞானசம்பந்தர் மொக்கணி யதனின் முழுத்தழல் மேனி சொக்க தாகக் காட்டிய தொன்மையும் - மாணிக்க வாசகர் பலபலநாமம் சொல்லிப் பழித்தசிசு பாலன்தன்னை அலவலைமை தவிர்த்த அழகன் அலங்காரன்மலை குலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே - பெரியாழ்வார் பண்டைத் தமிழர் அழகை அல்லது முருகைப் பொரு ளாகக் கொண்டு வழிபாடு நிகழ்த்தி வந்தனரென்பது வெள் ளிடைமலை. இதுகாறுங் கூறியவாற்றான், மணம், இளமை, கடவுட் டன்மை, அழகு ஆகிய இவைகளின் பொருளாக முருகன் பொலி தலும், இந்நான்கனுள் ஒன்றாய அழகிடை ஏனைய மூன்றும் பிரி வின்றி விராவி நிற்றலும், அதனான் அவ்விராவுதலுடைய அழகை முருகெனக் கோடலும், பிறவும் பெறப்படுகின்றன. முருகில் இவ்வியல்புகள் கெழுமியிருத்தலை யுணர்ந்த புலவர் பல்லோர். அவருள் பழையவர் நக்கீரனார். இவர் அரு ளிய திருமுருகாற்றுப்படையை, முருகில் ஒளிரும் நுண்ணியல் களின் பருமை அல்லது பரிணாமம் என்று கூறலாம். நூல் முற் றும் அவ்வியல்புகள் பொதுளி நிற்பினும், அவை வெளிப்படை யாகவும் விளக்கமாகவும் நூலின் இறுவாயில் ஆசிரியரால் நிரலே பெய்யப்பெற்றிருக்கின்றன. கீரனார், அரும் பெறன் மரபின் பெரும் பெயர் முருக என்று முருகின் பெயர் வழித் தொன்மை குறித்து, அம்முருகில் திகழும் அழகையும், அவ்வழகி னூடே பிரிவின்றி விராவி நிற்கும் மணம், இளமை, கடவுட்டன்மை என்னும் இவைகளையும் ஒரு சேரவைத்து, அணங்குசால் உயர் நிலை தழீஇப் பண்டைத்தன் - மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி என்று கூறியிருத்தல் காண்க. அணங்கிற்கு ஈண்டு அழகுப் பொருள் கொள்க. 3. முருகின் தொன்மை முருகு என்னுஞ் சொல் வரலாறு - முருகு முருகனானமை - முருகன் சொல்வழக்குக் காலம் - முருகன் தொன்மைக்கு இரண்டு குறிப்புக்கள் - முதன் மகன் தோன்றிய இடமும் மக்கள் வாழ்வு முதல் முதல் தொடங்கப்பட்ட இடமும் - தமிழரின் மலைவாழ்வும் முருகும் - பெயரின் பன்மையும் பொருளின் ஒருமையும் - நால்வகை நிலத்தில் அழகின் கூறுபாடுகள் - தொல்காப்பியக் காலம் - தொல்காப்பியத்துக்கு முன்னரே முருகன் வழிபாடுண்மை - விலங்கும் முதல் மகனும் - ஹெக்கல், டார்வின் கொள்கை - உள்ளது சிறத்தல் - திருமால் பத்துப் பிறவி நுட்பம் - பழைய மகன் பல்லமைப்பு - பல்லுக்கும் மூளைக்கு முள்ள இயைபு - மகனுக்குக் கடவுளுணர்வுற்ற காலம் - மக்கள் மாக்கள் நிலை - முதன் மக்களின் உணவு முதலியன - மக்கள் அட்டில் தொழில் கொண்ட காலம் - இயற்கை முருகன் அநாதி.) முருகு என்னுஞ் சொல்வழக்கு எந்நாளில் உண்டாயிற்று? அதன் வரலாறென்னை? முருகு என்பது மிகத் தொன்மை வாய்ந்த ஒரு தமிழ்ச் செஞ்சொல். பண்டை நாளில் தமிழ்ச் சொற் கள் பல முதல்நிலையளவாக நின்று ஆட்சிபெற்று வந்தன. பின்னே நாளடைவில் அவைகளுள் பல இடைநிலை இறுதி நிலைகள் பெறலாயின. அச்சொற்களுள் முருகு என்பதும் ஒன்று. முருகு என்னும் முதல்நிலை அன் என்னும் ஆண்பால் இறுதி நிலையேற்று முருகன் ஆயிற்று. ஆகவே முருகினின்றும் முருகன் பிறந்தானென்க. முருகுக்கும் முருகனுக்கும் பொருளில் வேற் றுமை யுண்டோவெனில் இல்லை யென்க. இரண்டும் ஒரு பொருளையே குறிப்பன. முருகே முருகன்; முருகனே முருகு. முருகு அல்லது முருகன் என்னுஞ் சொல் வழக்கு மிகமிகத் தொன்மையது. அச்சொல் வழக்கு இந்நாளையது என்று எவ ரானும் வரையறுத்துக் கூறல் இயலாது. தொன்மை வாய்ந்த முருகன் என்னுந் தமிழ்ச்சொல் இன்னும் இறந்துபடவில்லை; இன்னும் ஆட்சி பெற்றே நிற்கிறது. அச்சொல்வழி அதற்குரிய பொருளை இன்னும் போற்றுவோருளர்; பாடுவோருளர். இன் றும் அப்பெயரான் விழாக்கள் நடைபெறுகின்றன; நோன்புகள் கொண்டாடப்படுகின்றன. அச்சொல்லின் உறுதியும் மாண்பும் தூய்மையும் என்னே என்னே என்று இறும்பூதெய்துகிறேன். முருகின் தொன்மை காணச் சிறப்பாக ஈண்டு இரண்டு குறிப்புக்கள் பொறிக்கலாம். ஒன்று முருகன் தமிழ்க் கடவுள் என்பது; மற்றொன்று முருகன் மலை நிலக் கடவுள் என்பது. இவ்விரண்டானும் முருகன் தொன்மை நனி விளங்கும். தமி ழன், தமிழ்ப் பெருமான், தமிழ் இறை, முத்தமிழோன் எனவும், குறிஞ்சி கிழான், மலை கிழவோன் எனவுந் தமிழ்ப் பெரியோர் முருகனை அழைத்திருத்தல் காண்க. தமிழின் முதுமையையும், தமிழ் மக்களின் பழமையையும் ஈண்டு விரிக்கிற் பெருகும். முதன் மகன் தோன்றிய இடம் தமிழ்நாடு என்று ஆராய்ச்சியாளர் கண்ட உண்மை யொன்றை ஈண்டு நினைவூட்டுவது சாலும். இப்பழம் பெரு நாட்டார் கட வுளுக்கு முதல் முதல் தூவிய சொன்மலர் முருகு எனில், அதன் தொன்மையை என்னென்று இயம்புவது! மக்கள் வாழ்வு முதல் முதல் தொடங்கப்பட்ட இடம் மலை என்பது அறிஞர் கொள்கை. இஃது இயற்கை நூலாசிரியர் பலர் ஒப்பமுடிந்த உண்மை. மலையில் வாழ்ந்த பழைய மக்கள் தங்கள் கடவுளைக் குறிஞ்சி கிழான் மலைகிழவோன் என்று கோடல் இயல்பு. பழந்தமிழ் மக்கள் மலையிடை வாழ்ந்தபோது, தங்கள் கடவுளை மலைநிலக் கடவுளாகக் கொண்டதில் வியப்பென்னை? மக்களின் நல்வாழ்வு மலையிடை அரும்பிய போழ்து முருகெனுஞ் சொல்லும் அலர்ந்தது. இத்தகைய சொல்லின் தொன்மையை எங்ஙனம் அளந்துரைப்பது? மலையில் வாழ்ந்த தமிழ் மக்கள், பின்னைப் பிற நிலங் களில் குடிபுகுந்து, அவ்வந் நிலங்களின் இயல்புக்கேற்ப முழு முதலுக்குப் பலவேறு பெயரிட்டார்கள். பலவேறு பெயர்களைக் கொண்டு, கடவுளரும் பலர் என்று கோடலாகாது. நிலத்தின் இயல்பிற்கேற்ப இடப்பட்ட பெயர்கள் பலவாயினும், அவை யாவும் ஒரு பொருளையே குறிக்கொண்டு நிற்பனவாம். அவ் வொரு பொருள் எது? அஃது இயற்கையிலுள்ள அழகு அல்லது முருகு என்க. இயற்கை யழகு காடாகப் பசுமைக் காட்சி வழங்கிய போது, அவ்வழகை அல்லது முருகைத் தமிழ்மக்கள் திருமால் என்றார்கள். 1மற்ற நிலக்கடவுள் பெயர்களையும் இவ்வாறே கொள்க. தமிழ் மக்கள் அழகெனும் முருகைப் பொருளாகக் கொண்டதொன்றே ஈண்டுக் கருதற்பாற்று. தமிழ் மக்கள் வாழ்வு, என்று மலைநிலத்தில் துவங்கப்பட்டதோ, அன்று தொட்டு இன்றுவரை, முருகன் தமிழ் நாட்டுத் தெய்வமாகப் போற்றப்பட்டு வருகிறான். தமிழ்நாட்டுப் பழங்கடவுள் முருகனே. தமிழ் நாட்டைப்பற்றிய எவ்வாராய்ச்சிக்குந் தொல்காப்பி யத்தைக் கருவியாகக் கொள்வது வழக்கம். என்னை? இப்பொழுதுள்ள தமிழ் நூல்களுள் தொல் காப்பியம் பழமையுடையதாகலின் என்க. தொல்காப்பியக் கால ஆராய்ச்சி இன்னும் முற்றுப்பெறவில்லை. அஃது இன்னும் வளர்ந்து செல்கிறது. அது குறித்து இதுகாறும் ஆராய்ந்தவர்க் குள்ளுங் கருத்து வேற்றுமை உலவி வருகிறது. தொல்காப்பியக் காலம் இத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முன்னர் என்று -ஆராய்ச்சியாளர் கூறுகிறாரேயன்றி ஏறக்குறைய ஆதல் இக்காலம் என்று எவரும் அறுதியிட்டுக் கூறினாரில்லை. தொல்காப்பியனார் காலம் மூவாயிரம், ஐயாயிரம், பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருத்தல்வேண்டுமென்று முறை முறையே சிலர் கிளந்து கூறியுள்ளனர். தொல்காப்பியனார் காலம் எத்துணை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஆயினுமாக. அவர் காலத்தில் முருகன் வழிபாடு இருந்ததா இல்லையா என்பதொன்றே ஈண்டு ஆராயற்பாலது. தொல்காப்பியனார் காலத்தில் முருகன் வழிபாடு இருந் தது என்பதற்கு அவர்தம் நூலினுள்ளே அகச்சான்றுகளுண்டு. அக்காலத்தில் முருகன் வழிபாடு இருந்தது உண்மை. அப் பொழுது அஃது எந்நிலையிலிருந்தது? தொடக்க நிலையிலா அல்லது பழகி வளம் பட்ட நிலையிலா? பழகிப் பழகி முதிர்ந்து வளம்பட்ட நிலையில் அவ்வழிபாடு அந்நாளில் இருந்தது. ஆகவே தொல்காப்பியனார் காலத்துக்கு முன்னரே தமிழ் நாட்டில் முருகன் வழிபாடு ஆட்சியிலிருந்ததெனக் கொள்க. எப்படி? தொல்காப்பியத்தில் நால்வகை நிலன்களும், அவ்வந்நில இயலுக் கேற்றவாறு மக்கள் கொண்ட வழக்க ஒழுக்கங்களும், பிற வாழ்வுத் துறைகளும் பேசப்படுகின்றன. அப்பேச்சான் தொல்காப்பியக் காலத்துக்கு முன்னரே தமிழ் மக்கள் குறிஞ்சி நிலம் விடுத்து, மற்ற முல்லை மருதம் நெய்தல் நிலங்களில் குடிபுகுந்து, வாழ்வு நடாத்தினார்கள் என்று தெரிகிறது. தமிழ் மக்கள் நால்வகை நிலங்களிலும் வாழ்வு துவங்கா முன்னர் அதாவது அவர்கள் மலைநிலத்தில் மட்டும் வாழ்ந்த வேளை யில், அவர்கள் முருகன் வழிபாட்டைத் தொடங்கிப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். இது முருகனுக்குரிய குறிஞ்சி கிழான், மலை கிழவோன் முதலிய சிறப்புப் பெயர்களான் அறியக் கிடக்கிறது. மலையிடைமட்டும் மக்கள் வாழ்வு துவங்கிய நாள் எந்நாளோ? மலையிடை மக்கள் நல்வாழ்வு செலுத்தப் புகுமுன்னர் மக்கள் எப்படி இருந்தார்கள்? மக்கள் தோற்ற வரலாற்றை ஆராய்ந்தால் பலதிற உண்மைகள் போதரும். மக்கள் தோற்ற வரலாற்றைப் பற்றிச் சமய நூல்கள் பலவாறு பகர்கின்றன. அவை நம்பிக்கை யுலகுக்கு உரியனவாம். இயற்கைத் துணைகொண்டு ஆராய்ந்து முடிவு கண்ட அறிஞர், மக்களின் மூதாதைகள் விலங்குகளென்று கருதுகின்றனர். மக்களுலகின் தோற்றுவாய்க்கு நிலைக்களன் விலங்கு உலகம் என்பது அக் கூர்த்தமதியினர் ஆராய்ச்சியிற் போந்த உண்மை. இவ்வாராய்ச்சியிற் புகுந்து பன்னெடு நாள் உழைத்துப் பலதிற நுட்பங்களை உலகிற்குணர்த் திய ஹெக்கல், டார்வின் முதலிய பேரறிஞர்க்கு உலகங் கடமைப் படுவதாக. நமது நாட்டுப் புராணங்கள் சில இவ்வுண்மையை ஒரு வாறு கதைகள் வடிவாக அறிவுறுத்துகின்றன. புராண நூல் களில் பல இடங்களில் திருமாலின் பத்துப் பிறவிகள் சொல்லப் படுகின்றன. கூர்தல் அல்லது உள்ளது சிறத்தல் (Evolution) முறைபற்றி அப் பத்தையும் உற்று நோக்கின், படிப்படியாக உயிர்களின் பிறவி வளர்ச்சி புலனாகும். நம் நாட்டுப் பௌராணி கர்கள் பெரிய ஹெக்கல்கள், டார்வின்கள் போலும்! விலங்கினின்றும் பிறந்த மகனுக்குத் தொடக்கத்தில் பல திற விலங்குக் கூறுகளிருந்தன. அவைகளுள் ஒன்று பல். அந்நாளைய மகனுக்குக் கூரிய வாளனைய கோரைப் பற்க ளிருந்தன. அப் பல் நாளடைவில் தேய்ந்து தேய்ந்து இப்பொழு துள்ள நிலையை அடைந்திருக்கிறது. கோரைப் பல்லினின்றுந் தேய்வுற்ற அப்பல்லுக்கு இன்னும் நாய்ப்பல் என்னும் வழக் கிருத்தலை யோர்க. கோரைப் பல்லெனும் விலங்குப் பல் லுடைய பாவைகள் இன்னுங் கோயில்களில் நின்றுகொண் டிருக்கின்றன. அவை நமது மூதாதைகளின் நினைவுக் குறி களாகும். விலங்கினின்றும் பிறந்த மகனுக்குக் கடவுள் உணர்வெனும் அன்புநெறி உடனே விளங்கியிராது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குக் கடவுள் உணர்வு தோன்றியிருக்கும். எப்போது அவ்வுணர்வு தோன்றியிருக்கலாம்? நீண்ட கோரைப்பல் விலங்குணர்விற்கு அறிகுறி, அஃதிருந்தமட்டும் மகனுக்குக் கடவுள் உணர்வு தோன்றியிராது. பல்லுக்கும், குடரின் உள்ளுறுப்புச் சிலவற்றிற்கும், மூளைக்குந் தொடர்புண்டு. பல் தேயும் அளவினதாக உள்ளுறுப்புக்களுந் தேயும். அவ்வுறுப்புக்கள் தேயும் அளவினதாக மூளையின் வன்மை அருகி மென்மை பெருகும். மென்மை அளவாக அறிவு விளக்கமுறும். சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இருந்த மக்களின் உள்ளுறுப்புக்கட்கும், சில நூறு ஆண்டுகட்கு முன்னர் இருந்த மக்களின் உள்ளுறுப்புக்கட்கும், இப்போதைய மக்களின் அவ்வுறுப்புக்கட்கும் வேற்றுமையுண்டு. இப்பொழுதுஞ் சில உள்ளுறுப்புக்கள் பயனின்றிக் கிடக்கின்றன என்று மருத்துவ அறிஞர் கருதுகின்றனர். இவ்விரிந்த ஆராய்ச்சியில் ஈண்டு நுழைய வேண்டுவதில்லை. விலங்கினின்றும் பிறந்த மகன் எப்பொழுது கடவுள் உணர்வு பெற்றிருப்பான் என்பதொன்றே ஈண்டு நமக்குத் தேவை. விலங்கினின்றும் தோன்றிய மகன், வடிவான் விலங்கொடு வேறுபட்டு விளங்கினும், உணர்வால் நீண்டநாள் அதனொடு வேறுபடாமலிருந்தான். பின்னைப் பல் முதலியன தேய்வுற வுற உணர்வானும் அவன் விலங்கினின்றும் வேறுபடலானான். ஆகி யும் மகன் இன்னும் விலங்குணர்வினின்றும் முற்றும் விடுதலை யடைந்தானில்லை. விடுதலையடையாமையான் அவன் இனத் துள் இரு பிரிவு தோன்றலாயின. ஒன்று மாக்கள் இனம்; மற் றொன்று மக்கள் இனம். மாக்களாவார் விலங்கை யொத்த ஐயறி வுடையார்; மக்களாவார் ஆறறிவுடையார். மாவு மாக்களும் ஐயறி வினவே மக்கள் தாமே ஆறறி வுயிரே என்றார் தொல் காப்பியனார். அம்மாக்களும் மக்களுஞ் சேர்ந்த ஒன்றே மன்பதை என்பது. ஆறாவது அறிவு எது? அவ்வறிவே கடவுள் உணர்வெனும் அன்புநெறி விளக்கத்துக்கு நிலைக்களனா யிருப்பது. அவ்வறிவு விளங்கிய மக்கள், அவ்வறிவு விளங்காத மாக்களினின்றும் பிரிவுற்றபோழ்து, அவர்களிடை (மக்களிடை)க் கடவுள் உணர்வு அரும்பியிருத்தல் வேண்டும். அக்கடவுள் உணர்வே மக்களையும் மாக்களையும் வேறுபடுத்துவதென்க. மக்களிடைக் கடவுளுணர்வு, அவர்கள் மலையிடைமட்டும் வாழ்ந்த போது தோன்றினமையால், அவர்கள் கடவுளைக் குறிஞ்சி கிழான், மலைகிழவோன் என்று போற்றினார்கள் போலும்! மாக்கள் மக்கள் இயல்புகளும் தொல்காப்பியனார் காலத் தில் முதிர்ந்த ஆட்சியிலிருந்தன. ஆதலால் அவ்வேற்றுமை தோன்றிய காலமும் தொல்காப்பியத்துக்கு முந்தியதே. அவ் வேற்றுமையுற்ற காலத்தைக் கணித்துக் கூறல் எளிதோ? ஆத லால் முருகன் தொன்மையைக் காலவரையறைப்படுத்திக் கூறலும் எளிதாகுங்கொல்? மகன் தொடக்கத்தில் காய்கறிகளை அவித்துத் தின்றா னில்லை. அவன் அவற்றை இயற்கையாகவே உண்டு கழித்து வந் தான். பின்னை அவன் பல்லாயிரம் ஆண்டு கடந்து காய்கறி களை அவித்துத் தின்னலானான். அக்காலத்தை இயற்கை நூல் வல்லார் சிலர் இற்றைக்குச் சுமார் முப்பதாயிரம் ஆண்டிற்கு முன்னதெனச் சொல்கிறார். முதல் முதல் மலையிடை வாழ்வு துவக்கிய மக்கள், காய்கறிகளைப் பசுமையாகவே உண்டிருத்தல் வேண்டும். அவர்கள் முருகனுக்குத் தேனும் தினையும் வைத்து வழிபட்டதை அன்பர்கட்கு நினைவூட்டுகிறேன். மன்பதைக்குள் மாக்கள் மக்கள் வேற்றுமை புலனாய்க் கடவுள் உணர்வு பெற்றபோதும், மக்கள் காய்கறிகளைப் பசுமையாகவே புசித்திருந்தார்கள் என்று ஊகித்துணரலாம். அந்நாள் முப்பதினாயிரம் ஆண்டிற்கு மேம் பட்டு, எத்துணை ஆயிரம் ஆண்டு கடந்து நிற்குமோ தெரிய வில்லை. இதுகாறுங் கூறிவந்த சில குறிப்புக்களான், முருகு என் னுஞ் சொல் வழக்கு எந்நாளில் உண்டாயிற்று என்று காண்டல் இயலாமற் போயிற்று. பின்னை எம்முடிபு கொள்வது? மன் பதைக்குள் மாக்கள் மக்கள் வேற்றுமையுணர்வு தோன்றி, மக்களினத்தில் கடவுள் அறிவு அரும்பிய நாள்தொட்டு, முருகு என்னுஞ் சொல்வழககுத் தோன்றியிருத்தல் வேண்டும். அந் நாள் இன்னும் ஆராய்ச்சி யுலகிற்கு எட்டவில்லை. முருகெனுஞ் சொல்வழக்குக் காலத்தைக் காண்டலே அரிதாயிருக்கிறது. அங்ஙனமாக, அச்சொற்பொருள் காலத்தை ஆராயப் புகுவது அறியாமையாகவே முடியும். இவ்வாராய்ச்சி யில் தலைப்பட வேண்டுவதில்லை. முருகெனுஞ் செம்பொருள் கால எல்லைக்கு உட்பட்டதன்று என்று கொள்வதே அறிவுடைமை. முருகன் காலங் கடந்த கடவுள். இயற்கை என்று உண்டோ, அன்று முதல் முருகனும் உளன். இயற்கை அநாதி; முருகனும் அநாதி. மலையிடை வாழ்ந்த தமிழ் மக்கள் தங்கட்குக் கண்கூடாகக் காட்சியளித்த இயற்கையை அடிக்கடி கண்ணாற் கண்டு, உளத் தால் முகந்து, அதை இடையறாது நினைந்து நினைந்து, அதன் கண் படிந்த வாழ்வு நடாத்தினார்கள். அதன் பயனாக அவர்கள் இயற்கையினுள் பிரிவின்றி விராவி நிற்கும் அழகையும், அழகின் மாறாத இளமையையும், இளமையிலூரும் அழியா மணத்தை யும், இவையுடைய ஒன்று எல்லாவற்றையுங் கடந்து மாறுதலின்றி யொளிருந் தன்மையையுங் கண்டார்கள். இவ்வழகு, இளமை, மணம், கடவுட்டன்மை ஆகிய இயல்புகளைக் கொண்ட ஒன்றைப் பண்டைத் தமிழ் மக்கள் முருகு என்னுஞ் சொல்லால் அழைத்துப் போற்றினார்கள். முருகு என்பது பொருள் பொதிந்த ஒரு சொல். அம்முருகையுடையவன் முருகன். 4. இயற்கைவழி அழகைக் காண்டல் (முருகும் இயற்கையும் உயிர்களும் - உயிர்கட்கு முருகன் இயற்கை வாயிலாகப் புரிந்துவருந் துணை - உயிர்கள் முருகனாதல் - அதற்குரிய வழி - எண்ணம் - அகம் புறம் - இயற்கை வழிபாடு - புல னடக்கத்தின் நுட்பம் - திருமூலர் - ஆண்டகைமை - அப்பரும் புலனடக்கமும் - இறையியல்பு - இயற்கைக்கும் புலன்கட்குமுள்ள தொடர்பு - இயற்கையும் புலன்களும் - புலவன் இயற்கையின் மகன் - இயற்கை வழிபாட்டின் கூறுபாடு - அழகுப் பொருள்கள் - பெண்மை வழிபாடு.) முருகன் என்றும் இளையனாய், மணமுடையனாய்க், கடவுட்டன்மை யுடையனாய், அழகுடையவனாயிருத்தலால் உயிர்கட் கென்னை? உயிர்கள் அவ்வியல்களைப் பெறும் வழி யுண்டுகொல்? முருகன்பால் அவ்வியல்புகள் இயற்கையாய் அமைந்து கிடத்தற்குப் பொருளுண்டு. உயிர்களும் அந்நிலை எய்தல் வேண்டும் என்பது முருகன் திருவுள்ளக்கிடக்கை. இயற்கைக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பைப்போல் முருகனுக்கும் உயிர் கட்குந் தொடர்புண்டு. இத்தொடர்பை உணரவேண்டுவது உயிர்களின் கடமை. முருகனோ உயிர்களைத் தன்னைப் போலாக்க ஆவல் கொண்டு நிற்கிறான். அவ்வாவலன்றி வேறு ஆவல் அவனுக்கில்லை. அவ்வாவலுடன் எப்பொழுதும் முருகன் இயற்கை வாயிலாக உயிர்கட்குத் துணை புரிந்தும் வருகிறான். ஞாயிறு, காற்று, புனல் முதலிய இயற்கைப் பொருட்களின் வாயிலாக, முருகன் உயிர்களை ஓம்பா தொழிவனேல், உலக மேது? உயிரேது? வாழ்வேது? நாடோறும் இயற்கை வாயிலாகத் தாங்கள் பெற்று வரூ உம் துணை இயற்கையினுடையதா அல்லது அதன் உள்ளுறை யாக உள்ள முருகனுடையதா என்பதை உயிர்கள் உய்த்துணரல் வேண்டும். அத்துணை, இயற்கையினுடையது என்று கருது வோர், இளமை மணம் கடவுட்டன்மை அழகு ஆகியவற்றைப் பெறல் அரிது. இயற்கை வாயிலாக முருகனுடைமையாம் அத் துணை பெறுவதை உணர்வோர் முருகனாகலாம்; அதாவது அவனது இயல்புகளைப் பெறலாம். முருகன் இயல்புகளாய இயற்கை மணமும், மாறா இளமை யும், கடவுட்டன்மையும், அழியா அழகும் பெற ஒவ்வொருவரும் விரும்புவர். அவற்றை விரும்பாதார் அரியர். வெறும் விருப்ப மட்டுங் கொள்வதிற் பயனில்லை. விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலே அறிவுடைமை. அதை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது? எம்முறை பற்றி நிறைவேற்றிக் கொள்வது? முதலாவது வேண்டற்பாலது முருகைப் பற்றிய எண்ணம். முருகனை எண்ணும்போதெல்லாம் அவன் மணமுடையான், இளமையுடையான், கடவுட்டன்மையுடையான், அழகுடை யான் என்று நினைத்தல் வேண்டும். அந்நினைவு கூடுதற்குப் புறத்தே அவ்வியல்புகளுடைய இயற்கைப் பொருட்கண்மீது கருத்தைப் பதிய வைத்தல்வேண்டும். அகத்தில் ஒன்று நிலை பெறுதற்கு அதன் தொடர்பாயுள்ள புறமும் அதனுடன் ஒன்று தல் வேண்டும். என்னை? அகமே புறமாகலின் என்க. இரண் டிற்குந் தொடர்பிலா வாழ்வு செம்மையதாகாது. ஆதலால், முருகை உணர்தற்கு அகப்புற ஒற்றுமை இன்றியமையாதது. அகத்தின் வாயிலாகப் புறத்திற் புகுதல் ஒருமுறை. புறத்தின் வாயிலாக அகத்தை அணைவது இன்னொரு முறை. இரண்ட னுள் முன்னையது மிக அரியது; இடர்ப்பாடுடையது; முடிவு காண்டல் என்னும் உறுதியுங் கூட்டாதது. பின்னையதோ எளியது; இயற்கையில் இயங்குவது; உறுதி கூட்டுவது. ஆகவே புறவழி பற்றுதலையே ஈண்டு யான் கொள்கிறேன். முருகன் குணங்குறி கடந்தவன். அவனது இயல்புகளை உணர்வில்- நிகழ்ச்சியில் பெறுதலே இயலும். உணர்வில் - நிகழ்ச்சியில் அவைகளைப் பெறுதற்கும் தொடக்கத்தில் அவை களின் பருமை நினைவு வேண்டற்பாலது. இதற்கு வழி என்னை? முருகன் குணங்குறி கடந்த ஒருவனாயினும், இயற்கை அவனுக்கு உடலாக அமைந்திருக்கிறது. அவ்வுடல் வழி உயிராம் முருகை யுணர்தல் கூடும். ஆகவே முருகை உணர விரும்புவோர் இயற்கையைப் பற்றுக் கோடாகக் கோடல் வேண்டும். கொள் ளின், முருகை இயற்கை உணர்த்தும். உயிர்கள் இயற்கையோடு உறவு கொள்ளும் அளவினதாக, அவைகளின் மாட்டு முருகன் உணர்வும் பெருக்கெடுக்கும் இஃதென்ன! இயற்கை வடிவங் களை நாடோறும் காண்கிறோம்; இயற்கையுடன் வாழ்கிறோம். முருகைக் காண்கிறோமில்லையே என்று சிலர் கருதலாம். காண்பனவெல்லாம் காட்சியாகா. அங்ஙனே வாழ்வெல்லாம் வாழ்வாகா. புலன்களைத் தீய வழியில் செலுத்திக்கொண்டு, இயற்கையை ஒரோவழிக் காண்டலும், அதனுடன் வாழலும் முறையே அதைக் காண்பதுமாகாது; அதனோடு வாழ்வது மாகாது. முருகை இயற்கை உணர்த்தும் என்னும் உறுதி யோடு, புலன்களை இயற்கைக்கு மாறுபட்ட நெறிகளில் தோய விடாது, அவைகளை இயற்கையில் நிலைபெறுத்தி, இயற்கை யுடன் கலந்த உறவு கொள்ளப் பயிலல்வேண்டும். இப்பயிற்சிக்கு முதல் முதல் வேண்டற்பாலது புலன் தூய்மை. புலன்களின் பயிற்சிக்கேற்ற வண்ணம் உலகில் வாழ்வு அமைகிறது. புலன்கள் தீயவழியில் உழலின், வாழ்வுந் தீயதாகும். அவை நல்ல வழியில் இயங்கின், வாழ்வும் நல்லதாகும். ஈண்டுத் தீயவழி நல்லவழி என்பன முறையே செயற்கை இயற்கை வழி களைக் குறிப்பனவாம். புலன்கள் நிலையை வாழ்வு பொறுத்து நிற்றலான். அப்புலன்களைத் தூய்மைப்படுத்துவதில், இயற்கை வழி முருகைக் காண விழைவோர் கண்ணுங் கருத்துமாயிருப் பாராக. இறையை உணர்தற்குப் புலன்களை அடக்குமாறு ஆன் றோர் அறிவுறுத்தியிருப்ப, நீவிர் அப்புலன்களைத் தூய்மைப் படுத்துங்கள் என்று நவில்கிறீர். புலன்களை அடக்காது ஆட விடுதலால் நலன் விளையுங்கொல் என்று சிலர் வினவலாம். சின்னாளாகப் புலனடக்கம் என்னுஞ் சொற்றொடர் தனக்குரிய பொருளிழந்து நிற்கிறது. புலனடக்கம் என்பதற்குப் புலனை ஒடுக்கி அழித்தல் என்னும் பொருள் சொல்லப்படுகிறது. அது தவறு. புலன் கெட்டால் அறிவேது? வாழ்வேது? யோகம் யோகம் என்று சில்லோர் புலன்களை ஒடுக்கி ஒடுக்கி முடிவில் அவைகளைக் கெடுத்துக் குருடராய்ச், செவிட ராய், நோயராய் மாள்கிறார். புலன்கெட்ட ஒன்று அறிவற்ற பொருளாதல் வெள்ளிடைமலை. அறிவின் ஆக்கத்துக்கெனப் படைக்கப்பட்ட புலன்களை அறிவுக் கேட்டிற்குப் பயன்படுத்தல் எத்தகைய மடமை? புலன்கள் ஒடுக்கப்படுவனவாயின், அவை ஏன் படைப்பில் அமைதல் வேண்டும்? ஆண்டவன் படைப்பில் பொருளற்றதொன்று தோன்றுமா, தோன்றவே தோன்றாது. ஆண்டவன் படைப்பில் தோன்றியுள்ள ஒவ்வொன்றும் பொரு ளுடையது; அருமையானது; வாழ்விற்குரியது. புலன்கள் மக்கள் வாழ்விற்கெனப் படைப்பில் அமைந் துள்ள அறிவுக் கருவிகள். அவைகளின் வாயிலாகவே உயிர்கள் எல்லாவற்றையும் உளத்தால் உணர்தல் வேண்டும். புலன்கள் புறத்தையும் அகத்தையும் ஆற்றுப்படுத்தும் பெரும்புலவர்கள். அத்தகைப் புலவர்களை அடக்குவதும் ஒடுக்குவதும் இயற் கைக்கு மாறுபட்டு நடத்தலாகும். புலனடங்கி வாழுமாறு ஆன்றோர் அருளியதன் கருத் தென்னை? புலனடங்கி வாழுமாறு ஆன்றோர் அருளிய மெய் யுரைகளைப் பொன்னேபோல் போற்றுகிறேன். புலனடக்கம் என்பதற்கு ஆன்றோர் கொண்ட கருத்தை உணர்தல்வேண்டும். அன்னார் புலன்களைக் கெடுத்தொழிக்குமாறு ஒருபோதும் அறிவுறுத்தினாரில்லை. புலனடக்கத்தைப் பிறழக்கொண்டு, புலன்களைக் கெடுத்து, உலகம் இடர்ப்படப் போகிறதென்று அஞ்சி, யோக நெறியில் தேர்ச்சிபெற்ற திருமூலனார், அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆகுமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே என்று கூறிப் போந்தார். இத்திருமூலனாரே பல இடங்களிற் புல னடக்கங் கூறியுள்ளார். அப்புலன் அடக்கம் என்பதற்குப் புலன் கேடு என்பது பொருளாயின், அவர் அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் என்னுந் திருமந்திரத்தை ஓதியிரார். ஆகவே, புலனடக்கம் என்பதன் பொருளை ஓர்தல் வேண்டும். புலனடக்க மென்றால் என்னை? புலன்களைத் தீய வழியில் செல்லாதவாறு காத்தலே புலனடக்க மென்பது; புலன்களைக் கெடுத்தல் என்பதன்று. நாவடக்கம் - வாயடக்கம் - கையடக்கம் என்னும் வழக்குகளை நோக்குக. ஒன்றையுந் தின்னாதே; பேசாதே; செய்யாதே என்று முறையே பொருள் கொள்ளலாம் போலும்! பொருந்திய உணவை அளவாக உண்; தீயனவற்றையும் பயனில் சொற்களையும் பேசாது வாய்மையைப் பேசு; பிறர் பொருள் கவரல் முதலியனவற்றைச் செய்யாது நல்லனவற்றைச் செய் என்று அவ்வழக்குத் தொடர்கட்குப் பொருள் கூறல் மரபு. அங்ஙனே புலன் அடக்கம் என்பதற்கும் பொருள் கோடல் வேண்டும். புலனடக்கம் என்பது புலன் அழிவைக் குறிப்பதன்று. இத்தொடர் புலன்களை நெறியல்லா நெறியில் செலுத்தாமையைக் குறிப்பதென்க. இயற்கையுடன் உறவுகொண்டு, புறத்தையும் அகத்தையும் ஒன்றச் செய்து, உயிர்கட்கு இன்பமூட்டப் படைப்பில் அமைந் துள்ள புலன்களை அவா என்னும் பேய்க்கும், மற்றும் பல செயற்கை நரகத்துறைகட்கும் அடிமைப்படுத்தல் இயற்கையை யும், அதன் உள்ளுறையாம் முருகையும் மறப்பதாகும். இம் மறப்புள்ள மட்டுந் துன்பம் நீங்காது. உலகில் ஆண்டகைமை என்னுஞ் சொல் வழங்கப்படுகிறது. எது ஆண்டகைமை? அவா முதலிய பேய்கட்குப் புலன்களை அடிமைப் படுத்தாது காப்பதே ஆண்டகைமை. இவ்வாண்டகைமையுடைய ஒருவனே மகன்; ஒருத்தியே மகள் என்க. உரன்என்னுந் தோட்டியான் ஒரைந்துங் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து என்றார் திருவள்ளுவனார். பெரியோர் புலன்களை நோக்கி, நீங்கள் கள்ளர்கள்; வஞ்சகர்கள்; பேய்கள்; உங்களைக் கொல்லல்வேண்டும்; அடக் கல்வேண்டும்; ஒடுக்கல் வேண்டும் என்று பலதிறமாகப் பேசி யிருத்தலைப் பற்றியுஞ் சிலர்க்கு ஐயந் தோன்றலாம். புலன்கள், அவா முதலிய பேய்கட்கு எளியனவாகும்போது, அவைகளைக் கடிந்து, நன்னெறியில் திருப்பவேண்டி, அவைகளை நொந்தும், வைதும், குறை கூறியும் பெரியோர் பேசுவது வழக்கம். இது குறித்து ஈண்டு விரித்துக் கூறல் வேண்டுவதில்லை. இதைப்பற்றிப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலினும் விளக்கியுள்ளேன். ஈங்கு ஒரு பெரியார் கருத்தை எடுத்தாளும் அளவில் நின்று மேற்செல்ல விரும்புகிறேன். எப்பெரியாரை ஈண்டுக் கொள்வது நலன்? அகவையிலும், அறிவிலும், அன்பிலும் முதிர்ந்த அப்பரெம்பெருமானாரைக் கொள்கிறேன். அப்பெரியார், படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாற் கெடுவதிம் மனிதர்வாழ்க்கை காண்டொறுங் கேதுகின்றேன் முடுகுவ ரிருந்து ளைவர் மூர்க்கரே யிவர்க ளோடும் அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி ஒழுக்கறா வொன்பதுவா யொற்றுமை யொன்று மில்லைச் சழக்குடை யிதனு ளைவர்சங்கடம் பலவுஞ் செய்ய அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே உயிர்நிலை யுடம்பே காலா யுள்ளமே தாழி யாகத் துயரமே யேற்ற மாகத் துன்பக்கோ லதனைப் பற்றிப் பயிர்தனைக் சுழிய விட்டுப் பாழ்க்குநீ ரிறைத்து மிக்க அயர்வினா லைவர்க் காற்றே னாரூர்மூ லட்ட னீரே பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து சித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும் அத்தனே அமரர் கோவே ஆரூர்மூ லட்ட னீரே புள்ளுவ ரைவர் கள்வர் புனத்திடைப் புகுந்து நின்று துள்ளுவர் சூறை கொள்வர் தூநெறி விளைய லொட்டார் முள்ளுடை யவர்கள் தம்மை முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங் குணர்வினா லெய்ய லாமே இத்திருப்பாக்களால், புலன்கள் தீயவழியில் தம்மை யீர்த்து அலைத்தலையும், அவைகளின் கொடுமைகளையும் விளக்கியவாறும், அக்கொடுமைகளினின்றும் விடுதலையடை வான் ஆண்டவனைக் குறையிரந்து வேண்டுமாறுங் காண்க. தீய வழியுழலும் புலன்களை அடக்கியாளல்வேண்டுவது அறிஞர் கடமை. அப்பர் சுவாமிகள் புலன்களை நல்வழிப்படுத் தவே முயன்றார். புலன்களைத் தீயவழியினின்றுங் காத்து, அவைகளை நல்வழிப்படுத்த அப்பர் முயன்றாரேயன்றி, அவை களை அழித்துத் தாமும் அவைகளுடன் அழிய முயன்றா ரில்லை. தீநெறியில் தம்மை ஈர்க்கும் புலன்களைக் கடிந்து, அவைகளை நோக்கி, நம் ஆண்டகை என்ன கட்டளை யிடுகிறார் பாருங்கள்! கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன் தன்னை எண்டோள் வீசிநின் றாடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்களோ செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்றிற மெப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை மூக்கே நீமுரலாய் வாயே வாழ்த்துகண்டாய் - மத யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்தனை வாயே வாழ்த்து கண்டாய் ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து பூக்கை யாலட்டிப் போற்றியென் னாதஇவ் வாக்கை யாற்பயனென் புலன்கள் எதற்காகப் படைக்கப்பட்டன? அன்பர்களே! அப்பர் அருண்மொழியை உற்று நோக்குங்கள்; உன்னுங்கள்; புலன்களின் கடனை உணருங்கள். நலன் தரும் புலன்களையா கெடுப்பது? அழிப்பது? அந்தோ! கொடுமை! கொடுமை! ஆகவே புலன்களைத் தீய பேய் வழியில் உழலாதவாறு காத்து, இறை வழியில் திருப்புவதே அவைகளைத் தூய்மைப் படுத்துவ தாகும் இறைவன் காண்டற்கரியன்; மாற்ற மனங் கடந்து நிற்கும் மறையோன். அவனை உணர்தற்கு அவன் உடலாகவுள்ள இயற்கையைப் பற்றல் வேண்டும்? இயற்கையை எவைகளால் பற்றுதல் வேண்டும்? புறத்துக்கும் அகத்துக்கும் நடுவண் நிற்கும் புலன்களாலென்க. இயற்கைக்கும் புலன்கட்குமுள்ள தொடர்பு பெரிதும் உன்னற்பாலது. இயற்கையும் புலன்களும் இயைந்து நிற்குமாறே படைப்பும் அமைந்திருக்கிறது. மக்கள் உடலில் புலன்கள் ஏன் அமைதல் வேண்டும் என்று சிறிது நினைந்து ஆராய்ந்தால், அப்படைப்பு நோக்கம் புலனாகும். இயற்கையினுடன் உறவு கொள்ள வேண்டுவது புலன்களின் கடன். இயற்கையோ புலன் களை விட்டுப் பிரிவதில்லை. அது புலன்களை என்றுங் கவர்ந்த வண்ணமிருக்கிறது. கவர்ச்சிக்குரிய பொருள் இயற்கையின்மாட் டொளிர்கிறது. அப்பொருளென்னை? அஃது, இயற்கை வேறு தான் வேறு என்று பிரித்துக் கூறுதற்கு இடனின்றி, இரண்டும் ஒன்றே என்று சொல்லத் தக்கவாறு நிற்கும் அழகு அல்லது முருகாகும். அவ்வியற்கை யழகு புலன்கட்குப் பருமையாகப் பொருளாகாது, நுண்ணியதாக நிலவுவதாயினும், அது புலன்கள் மீது நோக்கங் கொள்ளாத நேரமில்லை. புலன்கள் வழி உயிர்களைத் தன் வழிப்படுத்த அது நினையாத நேரமில்லை. அழகு, புலன்களைத் தன்வயப்படுத்தக் காத்துக் கொண்டிருக்கிறது. அழகு, புலன்கள் வாயிலாக உளத்திற் புகுந்து, படிந்து, உயிரையும் உடலையும் தன் மயமாக்க விரைந்து நிற்கிறது. இஃது அழகின் இயல்பு. அழகின் கவர்ச்சிக்கு எளிமையாகும் இயல்பும் புலன்கட்கு உண்டு. இடையிடையே பேயின் தூண்டுதலுக்கு இரையாகும் இயல்பும் அவைகட்கு உண்டு. இதனால் புலன்களின் இயல் புக்குத் தகைவு நேர்கிறது. தகைவு புலன்களின் செயற்கை நீர்மை யன்றி இயற்கை நீர்மை யன்று. செயற்கைத் தடையை மக்கள் அறிவால் விலக்கின், புலன்கள் தங்கள் இயற்கைத் தன்மைப்படி அழகின் கவர்ச்சிக்கு எளியனவாகும். இவ்வாறு எளிமை யாதலே புலன்களின் பொருந்திய இயல்பென்க. இயற்கைக்கும் புலன்கட்குமுள்ள இயைபு காந்தத்துக்கும் இரும்புக்குமுள்ள இயைபையொத்தது என்று கூறலாம். இங்ஙனம் புலன்கட்குரிய இயல்பு வழி அவைகளை இயக்கலே அவைகளைத் தூய்மைப் படுத்துவதாகும். ஒத்த ஒன்றை ஒத்த ஒன்றுடன் பொருத்துவது அருமை யன்று. இது மிக எளிது. தொடக்கத்தில் சிறு முயற்சி செய்தல் வேண்டும். பின்னர் முயற்சியின்றி வினை இயல்பாக நிகழ்ந்து வரும். புலன்கள், மாறி நின்று மயக்கும் செயற்கைப் பயிற்சியில் நீண்டநாள் பழகியமையான், அவைகட்குரிய இயல்பில் அவை களைக் கொணர்ந்து நிறுத்தச் சிறு முயற்சி வேண்டற்பாலதே. இது பொது முறை. முயற்சியின்றியும் சிலர்க்கு அந்நிலை கூடலுண்டு. தொடக்கத்தில் சிறிது வலிந்து முயன்று புலன்களை இயற்கையில் பொருத்திவிடின், அப்பொருத்தத்துக்கென எதிர்நோக்கி நிற்கும் இயற்கை அழகு அல்லது முருகு அவை களைத் தன்வழிப்படுத்தி நன்னெறியில் நிறுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆகவே தொடக்கத்தில் சிறுமுயற்சியில் தலைப்படல் வேண்டுவது உயிர்களின் கடமை. ஆண்டவன் எனக்குப் புலன்களை வழங்கியிருக்கிறான். அவன் புலன்களை எனக்கு வழங்கா திருப்பின் பிறவியால் யான் என்ன பயன் பெறுவேன்? வாழ்வை இயற்கை மயமாக்கி, அழ கில் மூழ்கி, இன்ப நுகர்தற்பொருட்டே புலன்கள் ஆண்டவ னால் எனக்கு வழங்கப்பட்டன. அப்புலன்களைக் கொண்டு இயற்கையைக்கண்டவண்ணமாய், அதன் இசையைக் கேட்ட வண்ணமாய், அதன் இனிமையை நுகர்ந்த வண்ணமாய், அதன் மணத்தை முகர்ந்த வண்ணமாய், அதன் ஊறலை ஏற்ற வண்ண மாய் உலகில் வாழ்வு நடாத்தப் பயில அடியேன் பெரிதுங் கடமைப்பட்டிருக்கிறேன். இல்லையேல் யான் இன்பமிழந்து துன்பக்குழியில் வீழ்ந்தவனாவேன். இயற்கை வாயிலாக இறைவனைக் காண்டல் வேண்டும் என்னும் எண்ணம் முதல் முதல் எனது நெஞ்சில் உறைந்து நிற்றல் வேண்டும். அவ்வெண்ணம் முதிர்ந்து முதிர்ந்து புலன்களை இயற்கையில் கடவுகிறது. புலன்கள், இயற்கையில் படிந்து படிந்து, அவ்வியற்கையின் கண் பொலியும் வடிவிலா அழகை உள்ளத்துக்கு உணர்த்துகின்றன. அவ்வழகு புலன்கட்கும் உள்ளத்துக்கும் விருந்தாகி, அகப்புற வேற்றுமையைக் களைந்து ஊட்டும் இன்பம் சொலற்பாலதன்று. நிகழ்ச்சியில் அது நுகரத்தக்கது. இயற்கையை எண்ணி எண்ணிப் புலன்களை இயற்கை வழிச் செலுத்தி இன்பநுகர்கிறவனே புலவன். அப்புலவனுடைய புலன்களும் புந்தியும் இயற்கையில் தோய்ந்து ஒன்றுபடலானும், அவ்வொற்றுமை அகப்புற வேற்றுமை உணர்வைக் களைத லானும், அவன் இயற்கை அன்னையின் மகனாகிறான். இயற்கை யிலுள்ள அழகெனும் அப்பன் அவனைத் தன்வண்ணமாக்கு கிறான். அம்மகனைப் பிணி மூப்பு சாக்காடு அணுகா. அவன் அழியா அழகனாகிறான். இந்நிலை பெறுதற்குக் கடைப் பிடிக்கும் இயற்கை வாழ்வே முருகனடியைப் புகலாகக் கொள்வ தென் றுணர்க. இயற்கை வழிபாட்டிற்கு எங்ஙனம் அடிகோல்வது? அழகோ இயற்கையில் யாண்டும் பொலிகிறது. இயற்கையில் அழகிலா இடமில்லை. இவ்வழகொருமை உணரும் பெருநிலை கூடப்பெற்றார்க்குப் பொதுவாக இயற்கை வழிபாடெனக் குறித்துவிடலாம். அழகைப் பன்மையாக உணரும் தொடக்க நிலையிலிருப்போர்க்கு இயற்கை வழிபாடு என்று பொதுவாகக் குறிப்பதால் பயன் விளையாது. அன்னார் இயற்கை வழி பாட்டைப் படிப்படியே தொடங்குவது நலன்; அவர் தமது உள்ளத்தைக் கவரத்தக்க இயற்கை அழகுப் பொருள் எதுவோ, அதன்கண் அவர் புலன்களை ஒன்றச் செய்வாராக. எவனுக்கு எதன்கண் பேரழகிருப்பதாகத் தோன்றுகிறதோ, அவன் அதை இடையறாது உன்னுவானாக. இப்பயிற்சி மகனைப் பெருநிலை யில் ஈர்த்துக் கொண்டே யேகும். ஈண்டு யான் சில அழகுப் பொருள்களைக் குறிக்கிறேன். அவை திங்கள், மலர், பறவை, குழந்தை, பெண்மை முதலியன. இவற்றின்பால் கருத்தை அடிக்கடி செலுத்தல் பரந்த ஒருமை அழகைக் காண அடிகோல்வதாகும். பெண்ணை மாயையென்றும் மலமென்றும் சில அறிஞர் பேசியிருக்க, நீவிர் அழகுக் கடவுளைக் காண்டற்குப் பெண்ணை வழிபடு பொருளாகப் புகல்வதென்னை என்று சிலர் வினவ லாம். அழகுக் கடவுளைக் காண்டற்குப் பெண்ணினுஞ் சிறந்த வழிபடுபொருள் ஒன்றில்லை என்றே வலியுறுத்துவேன். பெண்ணிலுள்ள அழகுக் கடவுளைக் காண்போனுக்குப் பிற இடங்களிலுள்ள அழகு தானே புலனாகும். பெண்மை என்பது, என்பு தோல் போர்த்த காமக்கூடு என்னும் உணர்வுடையோர் நிலைகுறித்துப் பெரிதும் இரங்கு கிறேன். அன்னார் அழகெனும் முருகை உணர்தல் அரிது. பெண்ணின் நுண்மையையே கருதல் வேண்டும். பெண்மையில் தாய்மையும் இறைமையும் பொலிதல் உன்னற்பாலது. இது குறித்துப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூற்கண் விரித்துக் கூறியுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. இவ்வுலகில் தனித்தனியாக உணர்ந்து இன்புறத்தக்க அழகெலாம் திரண்ட கடவுள் வடிவம் பெண் வடிவம் என்க. பெண்ணிடத்துள்ள கடவுள் அழகைக் கருதிக் கருதி, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கத்தை வளர்த்துவரல் வேண்டும். பெண்ணைத் தீயொழுக்கக் குறிப்போடு நோக்குவது விரைவில் அழிவதற்குக் கால்கொள்வதாகும். அழகெலாந் திரண்ட அழகுக் கடவுளாகிய பெண்ணை உளத்திருத்தி, வாயாற் பாடிக் கையால் தொழுது, வழிபடுதலால் மக்கள் வாழ்வின் நோக்கம் நிறைவேறும். பெண்ணைக் கடவுளாகக் கருதிப் போற்றுவ தினுஞ் சிறந்த தவம் பிறிதொன்றிருக்கிறது என்று எனக்குத் தோன்றவில்லை. இவ்வுண்மை தேறாது, பெண்தெய்வத்தை மாயையெனக் கருதி, விலங்கின்பம் நுகர விரும்புவதினுங் கொடிய மறம் வேறொன்றுண்டோ? தன்னால் அழகுடையதெனக் கருதப்படும் ஒன்றை ஒருமையுளங் கொண்டு வழிபாட்டுவரூஉம் ஒருவன் நாளடை வில் அழகை யாண்டுங் காணப்பெறுவன். அவனுக்கு இயற்கை யுலகமே முருகனாக விளங்கும். அந்நிலை எய்திய ஒருவனிடம் முருகன் இயல்புகளாய மணமும் இளமையும் கடவுட்டன்மை யும் அழகும் பதிதலால் அவன் முருகனாகிறான். அவனுக்கு அழிவேது? அழியாப் பேறு நல்கவல்ல சில வழிபாட்டு முறைகளைச் சிறிது விரித்துக் கூறப் புகுகிறேன். 5. பாட்டும் ஓவியமும் இசையும் பிறவும் (இயற்கை வழிபாட்டுப் படிகள் - பாட்டு, ஓவியம், இசை - இயற்கைப் படம் பாட்டு - இளங்கோ, சேக்கிழார், கம்பர் ஓவியங்கள் - தமிழ் நூல்கள் - தமிழர்க்கொரு விண்ணப்பம் - கலித்தொகையும் திருக்கோவையாரும் - திருக்கோயிலும் ஓவியமும் - ஓவியமும் காவியமும் - உருவ வழிபாட்டின் நுட்பம் - ஓவியமும் இயற்கையும் - மலையும் கோயிலும் - செயற்கை அணிகள் - இசையும் யோகமும் - அப்பரும் பதஞ்சலியாரும் - இசையும் இயற்கையும் - இசையும் இறைவனும் - வன்றொண்டர் - ஷேக்பியர் - இசையும் ஒழுங்கும் - சேக்கிழார் - எட்டுப் பொருள் வழிபாடு - ஞாயிறு வழிபாடு - உடலோம்பல். ) இயற்கை அழகை உணரும் பேறு பெறுதல் எளிதன்று. அரிதில் முயன்று அப்பேறு பெற்ற ஒருவன் எக்காரணம் பற்றியும் அதை இழத்தலாகாது. அப்பேற்றிற்கு இடர் விளைக்கப் பல திறப் பேய்களிருக்கின்றன. அப்பேய்களின் சூழ்ச்சிக்கு எளிமை யாய் இரையாகாதவாறு மகன் தன்னைக் காத்துக் கொள்வதே அறிவுடைமை. இதற்கென் செய்வது? இயற்கையை இடையறாது மகன் நினைந்த வண்ணமிருத் தல் வேண்டும். ஒன்றை இடையீடின்றி நினைந்து கொண் டிருக்கும் இயல்பு மிகச் சிலர்க்கே அமைவதுண்டு. மற்றப் பெரும்பான்மையோர்க்கு அவ்வியல்பு எளிதில் அமைவதில்லை. ஆதலால் இயற்கை நினைவினின்றும் பிரியாதவாறு தம்மைக் காக்கவல்ல முயற்சிகளில் இவர் தலைப்படுதல் சிறப்பு. இம் முயற்சியை வழிபாடு என்றுங் கூறலாம். வழிபாடுகள் பலதிறத் தன. அவரவர் தத்தம் ஆற்றலுக் கியன்றதும், இயல்பிற்குப் பொருந்தியதுமாக உள்ள ஒவ்வொருவித வழிபாட்டைக் கொள்வாராக. ஈண்டுச் சிறப்பாக முத்திற வழிபாடுகளைக் குறிக்கிறேன். ஒன்று பாட்டு; மற்றொன்று ஓவியம்; இன்னொன்று இசை. இவை மக்கள் உணர்வையும் இயற்கையையுந் தொடர்புப் படுத்தத்தக்க பாலங்கள் போன்றன. முதலாவது பாட்டை எடுத்துக் கொள்வோம். பாட்டாவ தென்னை? இயற்கையே பாட்டு. இயற்கை பாட்டெனில் அதன் உள்ளுறையாக உள்ள முருகு அல்லது அழகும் பாட்டாகும். இயற்கையை உள்ளவாறு எழுத்தால் அணிபெற வரைவதும் பாட்டே. இப்பாட்டை இயற்கையின் படம் என்று சொல்லலாம். இயற்கை எப்பொருளை உளத்தில் பதிக்கிறதோ, அப் பொருளையே அதன் படமாக உள்ள பாட்டும் பதித்தல் வேண்டும்; அங்ஙனம் பதிவியாதது பாட்டன்று. குருமணி உறைந்து உருண்டு திரண்டாலென இருள் சூழ்ந்த கொண்டல் முடியும், செஞ்ஞாயிற்றின் எழுகதி ருமிழும் இளவெயிலில் ஒன்றி அழகு காட்டும் பச்சைப் பசுங்காட்டுப் போர்வையும், மணி கொழித்து முழவார்த்துச் சங்கொலிக்கும் அருவி யணியும், வண்டு யாழ்மூரலும், குயில்பாட்டும், மஞ்ஞை யாட்டுங் கொண்ட ஒரு மால்வரை நிற்கிறது. அவ்வரையை எழுத்தால் ஓவியமாக ஒரு புலவன் வரைந்த பாட்டு மற்றோரிடத் தில் பொலிகிறது. அம்மலையைப் பாராது இப்பாட்டைக் கண்ணுற்ற வேறொரு புலவனும், இப்பாட்டைக் காணாது அம்மலையை நோக்கிய மற்றொரு புலவனும் ஒரு நிலையத்தில் சந்திக்கின்றனர். முன்னையபுலவன் பாட்டின் சிறப்பைக் கூறப் புகுந்தான். பாட்டுப் பொருளை அவன் விரித்துப் பகருங்கால், பொருளின் பத்தைச் செவிமடுத்த மற்றொருவன், இஃதென்ன பாட்டா? மலையா? வழியிடை யான் கண்ட ஒரு மலையைப்பற்றிப் பேசு கிறீரே! அம்மலையின் படமோ இப்பாட்டு? m«kiy, òw¤nj tH§»a fh£áiaí« ï‹g¤ijí«, ï¥gh£L mf¤nj tH§F»wnj! என்று மகிழ்வெய்தினான். பின்னை அவ்விரு புலவருங் குறித்த மலை போந்து, அம்மலை பாட்டாகப் பாவியுள்ள அழகை யுணர்ந்து இன்புற்றனர். இன்பத்தில் இருவரும் ஒருவராயினர். புறத்தே இயற்கையைக் காண்போன் எத்தகை இன்பத்தை நுகர்கிறானோ, அத்தகை இன்பத்தை அவ்வியற்கைப் பாட்டை ஓரிடத்திலிருந்து படிப்போனும் நுகர்தல் வேண்டும். இத்தன்மை வாய்ந்த ஒன்றே பாட்டாகும். பாட்டுக்குரிய பொருட் காட்சியையாதல், அதற்குரிய இன்பத்தையாதல் வழங்காதது பாட்டாகாது. அது வெறுஞ் சொற்கட்டேயாகும். அது விரைவில் உலுத்துப்போகும். இயற்கையை உள்ளவாறு குறிக்கும் பாட்டை அணிபெற யாக்க வல்லான் எவன்? புலன்களை இயற்கை வழிப்படுத்தித் தூய்மை செய்து, இயற்கை யழகை உளத்தால் முகர்ந்து, உணர்விற்கு இன்பவிருந்தூட்டும் ஒருவனே இயற்கையைப் பாட்டில் வடிக்கவல்லான். அப்புலவன் இயற்கையைப் பாட் டோவியமாக வரையும்போது, அவன் புலன்களிலும், உளத்தி லும், உணர்விலும், இயற்கையும், இயற்கைப் பொருளுறுப்புக் களும், கூறுபாடுகளும், இயல்புகளும், பிறவும் எவ்வாறு படிகின்றன என்று சொல்லலும் வேண்டுமோ? அவன் இயற்கை வண்ணமாகிறான். இயற்கை படியும் இடந்தொறும் அழகெனும் முருகன் எழுந்தருள்வன். ஆகவே இயற்கையைப் பாடப் புகுவதும் முருகன் வழிபாடாதல் காண்க. இயற்கையைப் பாட இயலாதார் இயற்கைப் புலவர் பாடிய பாடல்களைப் பொருளுணர்ந்து ஓதி, இயற்கை இன்பத்தில் திளைப்பாராக. இதுவும் முருகன் வழிபாடாகும். உலகில் பல இடங்களில் பல புலவர் தம் தம் மொழியில் இயற்கையைப் பாட்டோவியமாக எழுதியிருக்கிறார். நந்தமிழ்ப் புலவரும் இயற்கைப் படம் பல வரைந்து நமக்கு உதவியுள்ளனர். அப்படங்கள் பல்லாயிரக் கணக்காகக் கடலெனப் பெருகிக் கிடக்கின்றன. அக்கடலினின்றும் இரண்டொரு துளி எடுத்துச் சொட்டுகிறேன். திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள் முழுநீர் வார முழுமெயும் பனித்துத் திரைநீ ராடை யிருநில மடந்தை யரசுகெடுத் தலம்வரு மல்லற் காலை இஃது இளங்கோ வரைந்த அந்திவான் ஓவியம். நீலமா மஞ்சை ஏங்க நிரைக்கொடி புறவம் பாடக் கோலவெண் முகையேர் முல்லை கோபம்வாய் முறுவல் காட்ட ஆலுமின் னிடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலநீ டரங்கி லாடக் காரெனும் பருவ நல்லாள் இது சேக்கிழாரது கார்கால ஓவியம். தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ புவியினுக் கணியா யான்ற பொருடந்து புலத்திற் றாகி அவியகத் துறைக டாங்கி ஐந்திணை நெறிய ளாவிச் சவியுறத்தெளிந்து தண்ணென் றொழுக்கமுந்தழுவிச்சான்றோர் கவியெனத் தெளிந்த கோதா வரியினை வீரர் கண்டார் வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனும் இடையாளொடும் இளையானொடும் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ அய்யோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் போனான் வெயிலிள நிலவேபோல் விரிகதி ரிடைவீசப் பயில்மர நிழலீனப் பனிபுரை துளிமேகப் புயல்தர விளமென்கால் பூவள வியதெய்த மயிலின நடமாடும் வழியினி யனபோனார்; இவை கம்பரின் எழுத்தோவியங்கள். உலகிடை வாழ்ந்த பெரும்புலவர்கள் அழகெனும் முருகன் வழிபாட்டை இடையீடின்றி நிகழ்த்தற் பொருட்டுப் பாக்களால் காவியங்களையும், நாடகங்களையும், வாழ்த்துக்களையும், பிறவற்றையும் பாடினார்கள். இப்பாட்டுத் தொண்டால் அவர்கள் இயற்கை வடிவான இறைவனோடியைந்த இன்ப வாழ்வை இவ்வுலகிலேயே பெற்றார்கள். அவர்கள் பாடிய பாட்டுக் காவியங்கள் எழுத்துக்களல்ல; சொற்களல்ல; சீர் களல்ல; தளைகளல்ல; அடிகளல்ல; தொடைகளல்ல. அவைகள் இயற்கையின் எழுத்தோவியங்கள். உலகை நோக்கும்போது தோன்றும் மலைகளின் அணியும், காடுகளின் செறிவும், செடி கொடிகளின் நிரையும், பசும்பயிர்ப் பரவையும், கருங்கடலும், செஞ்ஞாயிறும், நிலவுத் திங்களும், நீல வானமும், பறவைகளின் துழனியும், விலங்குகளின் ஈட்டமும், மக்களின் கூட்டமும், அக்கூட்டத்தின் உழவு வாணிபம் ஆட்சி அறம் மொழி வழக்கு ஒழுக்கமும், பிறவும் காவியங்களிலுங் காணக் கிடக்கின்றன. ஒவ்வொரு காவியமும் இயற்கை உலகின் ஒவ்வொரு படமாகும். இயற்கையில் முருகு உறைகிறது. இயற்கை பாட்டாம் போது, அப்பாட்டிலும் முருகு உறைகிறது. பாட்டுக்களா லாக்கப்பெறுங் காவியமோ முருகன் வீற்றிருந்தருளுங் கோயி லாகிறது. இக்கோயில் வழிபாடு முட்டின்றி நடைபெறும் இடங் களில் மகிழ்ச்சி பொங்கிக் கொண்டிருக்கும். முன்னைத் தமிழ்ப் பெரும் புலவரும் பாட்டுக் காவியப் பெருங்கோயில் பல அமைத்திருக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, ஐம்பெருங்காப்பியம், பெரியபுராணம், கம்பராமா யணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம், தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, திருப்புகழ் முதலிய தமிழ்க்கோயில்களிருக்கின்றன. ஆனால் வழிபாடு மட்டும் அருகியிருக்கிறது. இக்காலத் தமிழ் மக்கள் கைம்மாறென்னே! என்னே! அர்ச்சனை பாட்டேயாகும் என்று தமிழ்க் கடவுள் பாட்டையே விழைந்து நிற்கிறது. பாட்டு வழிபாடோ அருகி நிற் கிறது. பாட்டுத் தொண்டில்லாத இடத்தில் அன்பேது? இன் பேது? மகிழ்ச்சியேது? இதனால் தமிழ் மக்கள்பாலும், அவர்கள் வாழ்விலும் அழகெனும் முருகன் ஆடுதலொழிந்தான். முதல் முதல் இயற்கையில் முருகெனும் அழகைக் கண்ட தமிழர்கள் நிலை இவ்வாறாயிற்று! அழகைக் கண்டவர்கள் அழகிழந்தார்கள்! தமிழர்களே! இயற்கை உங்கள் செல்வம்; அதன் அழகு உங்கள் உடைமை; அவ்வழகுப் பாட்டு உங்கள் அணி. மீண்டும் அவை களைப் பெற முயலுங்கள்; நீங்கள் பண்டை நிலை எய்துவீர்கள். உங்கள் தமிழ்ப் பெரும் இன்ப நிலையங்களுள் ஈங்குக் கலித்தொகையும் திருக்கோவையாரும் என்னுள்ளத்தைக் கவர்கின்றன. அவைகளின் எழுத்து, சொல், சீர், தளை, அடி, தொடை என்னும் ஒவ்வொன்றிலும் இயற்கையும், அழகும், பாட்டும் மருவுகின்றன. அவைகளில் யாண்டும் மணம்; யாண் டும் இளமை; யாண்டுங் கடவுள் தன்மை; யாண்டும் அழகு! என்னருமைத் தமிழ் மக்களைச் சிறப்பாகக் கலித்தொகை, திருக்கோவையார் முதலிய நூல்களோடு உறவுகொண்டு வாழுமாறு வேண்டுகிறேன். பெண்ணைப் பேயின்பப் பொரு ளெனக் கருதுந் தூர்த்தர்கட்குத் திருக்கோவையார் காம நூலாகத் தோன்றலாம். பெண்ணை முருகாகப் போற்றுவோர்க் கன்றோ திருக்கோவையார் இன்ப நூலாகத் தோன்றும்? இயற்கை அழகுப் பொருளிலும் தமிழ்ப் பாக்களிலும் முருகைக் காண இயலாத சகோதரர்பொருட்டு, ஆங்காங்கே முருகப்பெருமானுக்குத் திருக்கோயில்கள் கட்டப்பட்டிருக் கின்றன. அத்திருக்கோயில் வழிபாட்டானும் பேறு பெறலாம். திருக்கோயில் என்பது கட்டிடமன்று; அஃது அந்நினைவை யூட்டுவதுமன்று. திருக்கோயில், இயற்கையையும் இயற்கையின் உள்ளுறை பொருளையும் - நினைவூட்டுவது. நாடுகளில் எத் துணையோ கட்டிடங்களிருக்கின்றன. இக்கட்டிடங்கட்கும் கோயில் கட்டிடங்கட்கும் வேற்றுமையுண்டு. கோயில்களின் தலை, உடல், உறுப்பு, உள்ளம் எல்லாம் ஓவியங்களால் அணி செய்யப் பட்டிருத்தல் காண்கிறோம். மற்றக் கட்டிடங்களில் ஓவியங்கள் அமைக்கப்படுவதில்லை. நம் முன்னோர் கோயில் களை ஓவியமாக்கியதன் நுட்பத்தை ஓர்தல் வேண்டும். இயற்கை, அதன் உள்ளுறை என்னும் இரண்டின் சாயல்களே கோயில் களாயின. இயற்கையும், அதனை விட்டுப் பிரியாத அதன் உள்ளுறையாம் அழகும் கோயில்களில் பலதிற ஓவியங்களாகக் காட்சியளிக்கின்றன. ஓவியங்கள் என்பன காவியங்கள் போன்றவை. காவியன் இயற்கையைக் கவியாக எழுதுகிறான். ஓவியன் இயற்கையை ஓவியமாக வரைகிறான். காவியமும் ஓவியமும் ஒரு நோக்குடை யனவே. கருத்தில் இரண்டும் இயற்கை யழகையே பதிக்கின்றன. காவியன் கண்ணுங் கருத்தும் எங்ஙனம் இயற்கைக் கூறு களில் படிகின்றனவோ, அங்ஙனே ஒவியன் கண்ணுங் கருத்தும் அவைகளில் படிகின்றன. ஓவியன் இயற்கையுடன் இயற்கையாய் நின்றே ஓவியமெழுதல் கருதற்பாலது. இயற்கை வடிவங்களைப் புலன்கள் வழி உளத்தில் நிறுத்தி, உணர்விற்கொண்டு, அவைகளைக் கையால் படமாகவும் வடிவ மாகவும் முறையே எழுதலும் அமைத்தலும் எவ்வளவு அருமை? கல்லாகவும் பளிங்காகவும் பிறவாகவும் கிடக்கும் பிண்டப் பொருளிலே, சிற்பன் உணர்விலுள்ள இயற்கையழகின் நுண்மை வடிவம், அவன் கையின்வழி யிறங்கி உருக்கொள்கிறது. இவ்வுரு, தான் திகழுந் கல்லையும் பிறவற்றையும் மறைத்து இயற்கை யழகைப் பொருத்துகிறது. இத்தகைய ஓவியத்தை என்னென்று கூறுவது? என் னென்று கொள்வது? ஓவியம் கல்லா? பளிங்கா? நிறமா? ஓவி யம் முகிழ்த்ததும் கல்லும் மரமும் பளிங்கும் மறைகின்றன. இயற்கை நுட்பமுணராத செயற்கை மாக்கட்குப் புலனாகும் பொருளைப்பற்றிய ஆராய்ச்சியே ஈண்டு வேண்டுவதில்லை. அன்னார் செயற்கையில் தொடக்குண்டு கிடப்போர். இயற்கை நுட்ப முணர்ந்தோர்க்கே ஓவியத்தின் பெற்றி புலனாகும். ஓவியத்தைக் கண்டு மகிழ்ந்து மகிழ்ந்து கருதக் கருத அது புலன் களுக்கு இன்பூட்டி இயற்கை அழகாம் முருகை உணர்த்துகிறது. ஓவியம் மகனைக் கவர்ந்துகொண்டே இயற்கையழகில் அவனைக் கூட்டுகிறது. இவ்வோவியத்தை என்னென்று கொள் வது? இதை இயற்கை யழகின் சாயல் என்று கூறலாம்; அல்லது இயற்கையழகின் குழவி என்று கொள்ளலாம். கையால் செய்யப்படுவது செயற்கை யென்றும், கையால் செய்யப்படாதது இயற்கையென்றும் முன்னர் ஓரிடத்தில் குறிப்பிட்டதை ஈண்டு அன்பர்கட்கு நினைவூட்டுகிறேன். அதைக்கொண்டு, ஓவியமும் கைபுனைந்தியற்றும் ஒன்றாகலான், அதை ஈண்டு ஏற்பதென்னை என்று சில அன்பர்கள் ஐயுறலாம். ஓவியம் இயற்கையழகின் பெற்றியை நினைவூட்டி உணர்த்த லானும், அஃது இயற்கையுடன் புலன்களை ஆற்றுப்படுத்த லானும், இயற்கை வழிபாட்டிற்கு அஃது ஏற்றற்குரியதே. ஓவிய உருப்பெறாத கீறல்களும் பிற கோரங்களும் புலன்களை இயற்கையுடன் ஆற்றுப்படுத்தாமையான், அவை செயற்கையின் பாற் படுவனவாம். ஓவியமோ புலன்களை இயற்கையுடன் தொடர்புப்படுத்துகிறது. இதுபற்றியே ஓவியத்தை இயற்கை யழகின் சாயல் என்றும், குழவி என்றுங் கிளந்து கூறலானேன். அழகுறையும் இயற்கை நிலையத்தைத் திறக்கவல்ல திறவு என்று வேறு வழிபடுத்தியும் ஓவியத்தைக் கூறலாம். கருத்தை இயற்கை யுடன் தொடர்புப்படுத்தும் செயற்கைக்கும், மற்றச் செயற் கைக்கும் வேற்றுமையுண்டென்க. ஓவிய வழிபாடு, இயற்கை வழிபாட்டின் தொடக்க நிலையிலிருப்போர்க் குரியதென்று மேலே சொற்றதும் ஈண்டுக் கருதற்பாற்று. ஓவியங்களின் பெருக்கே கோயிலென்பது. கோயிலி னுள்ளே ஒளிரும் ஒவ்வொரு வடிவமும் இயற்கையழகின் குழவியெனும் ஓவியத்தின்பாற்பட்டதே. எனவே ஓவியக்கூட மாக விளங்குங் கோயில், இயற்கையின் தன்மையையும், அதனுட்பொருளின் இயல்பையும் மக்கட்கு உணர்த்துவதென்க. இந்நோக்குடன் அமைக்கப்பெற்ற ஓவிய நிலையமாந் திருக்கோயில் செல்வோர் ஆண்டெழுந்தருளி யுள்ள பொருளை எவ்வுணர்வுடன் வழிபடல்வேண்டும்? திருக்கோயில் உள்ளிருக்கும் முருகப் பெருமான் திருவுரு வம், மணம் இளமை கடவுட்டன்மை அழகு என்னும் இவை கட்கு அறிகுறி என்னும் உணர்வோடு (முருகனை) வழிபாடு செய்தல்வேண்டும். இவ்வுணர்வோடு செய்யப்படாதது கல் செம்பு வழிபாடாக முடியும். இதனால் அறியாமை நீங்காது; அழகின்ப அன்புந் தோன்றாது. திருக்கோயி லுள்ளிருக்குந் திருமேனி தன்னைச் சிவனெனவே கண்டவர்க்குச் சிவனுறைவ னங்கே எனவரூஉம் அருணந்திசிவத்தின் திருவாக்கையோர்க. நம் முன்னோர் முருகப்பெருமானுக்குப் பெரிதும் மலை களினும் மலையின் பாங்கரினுமே திருக்கோயில் கட்டினர்; ஒவ்வொரு குன்றும் முருகன் திருக்கோயிலென நம் முன்னோர் அறிவுறுத்தியுள்ளனர். நக்கீரனார் தமது திருமுருகாற்றுப் படையுள் குன்றுதோறாடலைக் கொண்டதும் உன்னத்தக்கது. முருகன் வழிபாட்டைச் செயற்கைக் கோயிலளவோடு நம்மவர் நிறுத்திவிடப் போகிறாரென்று அஞ்சி, நந்தமிழ்ச் சான்றோர் இயற்கைக் கோயிலாகிய மலையையுங் கோயிலெனக் கொள்ளு மாறு நமக்கு அறிவுறுத்தினர். முருகனை மலையாக வழிபடின், பின்னை அம்மலை பெரு உலகமாகி முருகன் உண்மை வடிவைப் புலப்படுத்தும். முருகன், இயற்கையழகுக் கடவுள் என்ற உணர்விலாச் சிலர், முருகன் திருவுருவைச் செயற்கை அணிகளால் அழகு செய் கிறார். இயற்கை அழகனைச் செயற்கை அணியா அழகு செய் யும்? திருவிழா திருவிழாவெனச் செயற்கைத் தீநெறி பற்றித் திரிபவர்க்குப் பெரிதும் இரங்குகிறேன். முருகன் விழாக்க ளெல்லாம் இயற்கை அழகுணர்வையூட்டுமாறு கொண்டாடப் பெறல்வேண்டும். இல்லையேல் விழாக்களின் பொருள் இறந்து படும். இனி இசை வழிபாட்டின்மீது கருத்தைச் செலுத்துவோம். இசை வழிபாட்டை யோக வழிபாடென்றுங் கூறலாம். இசை யின் பயன் எதுவோ அதுவே யோகத்தின் பயனும். யோக மாவது, புலன்கள் ஒருமைப்பட்டுக் கருவி கரணக் குறும்புகளை ஒடுக்கிக் கூட்டும் அமைதியில் இருமை உணர்வுகெட, அறிஞர் அகமுகத்தில் நிகழ்த்தும் ஒரு வழிபாடு. ஒன்றியிருந்து நினை மின்கள் உந்தமக்கு ஊனமில்லை என்றார் அப்பெரம்பெரு மானாரும். யோக; சித்த வ்ருத்தி நிரோத: எனப் பதஞ்சலியார் யோகம் என்னுஞ் சொற்குப் பொருள் விரித்திருத்தலை நோக்குக. இந்நிலையை இசையுங் கூட்டுதலால், இசையின் பயனையும் யோகத்தின் பயனையும் ஒன்றென உரைக்கிறேன். இசைஞானியைச் சிறந்த யோகி என்று யான் சொல்வேன். ஈண்டு யோகம் யோகம் என்று சொல்வது, பிறவற்றில் கடவுள் இல்லையென்றும், தம்பால் மட்டுங் கடவுளுண்டு என்றுங் கருதி, எல்லாவற்றையுந் துறந்து, வழி துறையின்றி, மூச்சைப் பிடித்துப் புலன்களைக் கெடுத்து, உடல் நலனுக்குக் கேடுசூழச் சிலர் கொள்ளும் போலி யோகத்தை யன்றென்க. பொருளில்லாத யோகமுறைகள் பல இடைக்காலத்தில் புகுந்து விட்டன. புலன்களின் திருவிளையாடல்கள் வழியுழலாது, நெஞ்சை நிலைபெறுத்தி, அமைதியில் நின்று, ஒன்றில் ஒன்றி, இருமையற அதை (அவ்வொன்றை) உன்னுவது யோகம். இந்நிலையை ஒவ்வொருவரும் அவரவர் இயல்பிற்குரிய முறையில் அடைதல் கூடும். புலன்களும் கருவி கரணங்களும் ஒன்றும்நிலை கூட்டும் இயல்பு இசைக்குமுண்டு. ஆகவே இசைவழிபாடுஞ் சிறந்த ஒன்றென்க. திரையற்ற நீர்போல் நெஞ்சினைத் தெளிவுபடுத்திக் கொண்டு, அமைதி கெழுமிய ஓரிடத்தமர்ந்து, இப்பரந்த வையகத்தை உற்றுநோக்கும் ஒருவனுக்கு எல்லாம் இசைமய மாகப் புலனாகும். அந்நோக்கில் நிலைத்துத் திளைப்பத் திளைப்ப, அவன் தன்னில் அவ்விசை முழங்குவதுணர்வன்; மேலும் மேலும் அவன் அந்நிலையில் படியப்படிய, எல்லா வற்றிற்கும் முதலாகவுள்ள அழகுப்பொருள் இசைமயமா யிருத்தலையும் உணர்வன். எல்லாம் வல்ல மெய்ப்பொருள் உலகு உயிர்களில் பொருந்தியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. எங்ஙனம் அப்பொருள் பொருந்தி யிருக்கிறதெனில், அஃது அவற்றுள் இசைபடப் பொருந்தியிருக்கிறதென்க. உலகு உயிர் கடவுள் மூன் றும் இசையில் பிணிக்கப்பட்டுக் கலந்து நிற்கின்றன. இக்கலப்பே அத்துவித நிலையென்று அறிஞர் கூறுப. அத்துவித நிலையும் இசை பரந்த ஒன்றாகும். எல்லாவற்றிற்கும் அடிப்படையாயுள்ள அழகுப்பொருள் இசைமயமா யிருக்கிறதெனில், மற்றவைகளை இசை மயமென்று சொல்லவேண்டுவதில்லை. ஆண்டவன் இசைமயத்தன் என்னும் உண்மையை நந் தமிழ்ப் பெரியோர்கள் உணர்ந்து உலகிற்கு அறிவுறுத்தி யிருக்கிறார்கள். ஏழிசையாய் இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய் என்று வன்றொண்டர் தமது தோழராங் கடவுளை வழுத்தி யிருத்தல் காண்க. இசையா யிருப்பவனும் இறைவன்; இசைப்பயனா யிருப்பவனும் அவன். என்னே இசையின் மாண்பு! இசை வண்ணமாயுள்ள ஒன்றை இசையால் எளிதில் பெறலாமன்றோ? ஆகவே இசை வழிபாடும் இறைவனுக்கு இனியதொன்றாகும். இசையின் இயல்புகள் பலப்பல. அவைகளுள் ஒன்று அதாவது தலையாயது பன்மையை ஒருமைப் படுத்துவது. இசையில் இன்பம் மருவுதற்குங் காரணமிதுவே. புலன்கள் ஒருமையுற்றுக் கருவி கரணங்களின் கொட்டத்தைக் குலைக்கு மிடத்தில் எழுவது இசை. மற்ற இடத்தில் எழுவது வசை. இசை பாடப் புகுவோனுடைய புலன்கள் பன்மையுணர் விழந்து ஒருமையுணர்வு பெறுகின்றன. இசையைச் செவிமடுப்போனும் அந்நிலை எய்துகிறான். பொறிபுலன் கருவி கரணச் சேட்டை களினின்றும் மகனை இசை விடுதலை செய்கிறது. அவைகளி னின்றும் விடுதலையடையும் ஒருவன் பின்னை எதனுடன் இசைவன்? அவன் இன்ப அன்புப் பொருளாம் அழகுடன் இசைவன். உயிர் சார்ந்ததன் வண்ணமா யிருப்பதொன்றாகலின், அஃது ஒன்றை விடுத்ததும் மற்றொன்றைப் பற்றல்வேண்டு மன்றோ? இவ்வாறு இசைஞானி சேட்டைகளினின்றும் விடுதலை யடைந்து, இன்ப அன்பில் இசைதலால், அன்பை அவன் எவ்வுயிரினுங் காண்கிறான். இந்நிலை எய்தும் ஒருவன் எவ் வுயிர்க்காதல் தீங்கு செய்வனோ? செய்யான். எவ்வுயிரிடத்தும் இரக்கங்கொள்ளும் ஒரு பெருந் தன்மையை இசை கூட்டுகிறது. ஒருவன் உலகில் இசைப் புலவனா யிருத்தல் வேண்டும். அல்லது இசைகேட்டு உருகும் உளத்தனா யிருத்தல் வேண்டும். இரண்டும் பெறாத ஒருவன் மக்கள் இனத்தில் சேர்ந்தவனல்லன். அவனால் இசை வண்ணமாயுள்ள மன்பதைக்கே கேடு உண் டாகும். இசை இனிமை உணராதவன் கொலைஞனே யாவன். இவ்வாறே ஷேக்பியர் என்னுங் கவிமன்னர் கருதுகிறார். ஆதலால், மக்கள் இன்ப வாழ்விற்கு இசை இன்றியமையாத தென்க. இசை இயற்கையில் பரந்து நிற்கிறது. எல்லாம் இசைமய மென்று மேலே சொல்லப்பட்டது. முனிவரர் போல அடங்கித் தலைசாய்த்து நிற்குஞ் செஞ்சாலிகள் மென்காற்றில் ஒன்றோ டொன்று கொஞ்சிக் கொஞ்சி இசை பாடுகின்றன. வானுற வோங்கி வளம்பெற வளர்ந்து மழை தவழும் மூங்கில்கள் ஒன்றோடொன்று அளவளாவி இசை பாடுகின்றன. வண்டுகள் பாண் மிழற்றுகின்றன. வலம்புரிகள் சங்கீதம் முழக்குகின்றன. பறவைகளின் பாட்டொலியை என்னென்று பகர்வேன்! அழகிய வானம்பாடி! உன்பாட்டை என்னென்பேன்! வானத்தில் நீ இவரும்போதும், இழியும் போதும் உன்னிசையும், முறையே இவர்ந்தும் (ஆரோகணம்) இழிந்தும் (அவரோகணம்) உலகிற் கூட்ட உனக்கு எவரே கற்பித்தார்? கீதமினிய குயிலே உன்பால் இனிமையை எவரே அமைத்தார்? குழந்தைகளின் மழலை இசைக்கு நிகருண்டோ? ஆ! ஆ! பெண் தெய்வங்களின் மொழியோ பண்மயம்! பண்மயம்! இவ்வாறு இசை இயற்கையுடன் படர்ந்து நிற்கிறது. இவ்விசையுடன் இசைவதே பாணன் இசையும். மக்கள் அனைவரும் பாணராகார். மக்கள் ஒலி யெல்லாம் இசையாகா. என்னை? இயற்கையில் இசை ஒழுங்குபட்டே நிற் கிறது. இயற்கையின் ஒழுங்கும், அதனுடன் மருவும் இசையின் ஒழுங்குங் கருதற்பாலன. ஒழுங்குபட்ட வாழ்வுடையான் இயற்கைவழி நிற்பவனாகிறான். அவன் வாழ்வு இசையுடைய தென்க. ஒழுங்குபட்ட வாழ்வில், ஒழுங்குபட்ட நடையில், ஒழுங்குபட்ட பேச்சில் இசை சுவைக்கும். ஒழுங்கு பற்றி, நிரை நிரையே, ஒரேவிதமாக நடக்கும் போர் வீரர் அணியில் இசைமணக்கும். ஒழுங்குபட்ட இடங்களிலெல்லாம் இசை யுண்டு என்று சுருங்கச் சொல்லலாம். ஒழுங்கை விடுத்து நீங்காத இசை, ஒவ்வொன்றிலுங் கொண்டுள்ள உறவும் அழகின்பாற் பட்டதென்க. இயற்கை ஒழுங்கில் ஒளிரும் இசை வண்ணமாயுள்ள அழகை அல்லது முருகை உணர உலகில் ஒழுங்கிசை வேண்டற் பாலது. இயற்கை ஒழுங்கு பற்றியே நம் முன்னோர் இசை ஒழுங்கு வகுத்தனர். அதுவே இசையியல் என்பது. முத்தமிழுள் இசையும் ஒன்றாய் அழகு செய்தல் ஈண்டுக் கருதற்பாலது. ஒழுங்கிசை மிடற்றின் வாயிலாகவும், நரப்புக் கருவிகள் வாயி லாகவும் வெளிப்போந்து, இன்பம் பயக்கும் முறைகள் அறிஞ ரால் காணப்பட்டன. ஒழுங்கிலா இசை வசையேயாகும். ஒழுங்குக்கு உட் பட்டதே இசையாகும். புலன்களும் கருவி கரணங்களும் ஒழுங்கு பட்டவழி எழுவது இசை என்று மேலே கூறப்பட்டதும் ஈண்டு உன்னத்தக்கது. ஒழுங்குபட்ட இசை தன்னைப் பாடுவோரையுஞ் செவி மடுப்போரையும் இன்பப் பேற்றிற்குரிய ஒருமை நிலை எய்தச் செய்தலான், அவ்விசைப்பாடும் இறை வழிபாடென்று கொள் வது பொருத்தமேயாகும். உலகில் இசை வழிபாடு பெருகப் பெருக (உலகில்) அன்பும் இன்பும் பெருகும். இசைவழி ஆண்டவனை வழுத்திப் பேறுபெற்றோர் பலர். அவருள் தமிழ் நாட்டுப் பெரியோர் ஒருவரை ஈண்டு நினைக்கி றேன். அவ்வன்பர் குழலில் இசை பாடி இறைமைப் பேறு பெற்ற வர். அவரது இசை, எவ்வெவ் வழியில் படர்ந்து, உலகிலும் உயிரிலும் ஊடுருவிப் பாய்ந்து, முடிவில் எல்லாவற்றையுங் கடந்த முழு முதற் பொருளைக் கவர்ந்தது என்பதைச் சேக்கிழார் பெருமான் செவ்விய தமிழ்ப் பாடல்களாக இசைத்துள்ளார். அப்பாடல்களில் சில வருமாறு :- வள்ளலார் வாசிக்கு மணித்துளைவாய் வேய்ங்குழலின் உள்ளுறையஞ் செழுத்தாக ஒழுகியெழு மதுரவொலி வெள்ளநிறைந் தெவ்வுயிர்க்கு மேலேமரர் தருவிளைதேன் தெள்ளமுதி னுடன்கலந்து செவிவார்ப்ப தெனத்தேக்க ஆனிரைக ளறுகருந்தி அசைவிடா தணைந்தயரப் பானுரைவாய்த் தாய்முலையிற் பற்றுமிளங் கன்றினமும் தானுணவு மறந்தொழியத் தடமருப்பின் விடைக்குலமும் மான்முதலாங் கான்விலங்கு மயிர்முகிழ்த்து வந்தணைய ஆடுமயி லினங்களுமங் கசைவயர்ந்து மருங்கணுக ஊடுசெவி யிசைநிறைந்த உள்ளமொடு புள்ளினமும் மாடுபடிந் துணர்வொழிய மருங்குதொழில் புரிந்தொழுகுங் கூடியவண் கோவலருங் குறைவினையின் றுறைநின்றார் நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினான் மலிவாய்வெள் ளெயிற்றரவ மயின்மீது மருண்டுவிழும் சலியாத நிலையரியுந் தடங்கரியு முடன்சாரும் புலிவாயின் மருங்கணையும் புல்வாய புல்வாயும் மருவியகால் லிசைத்தசையா மரங்கண்மலர்ச் சினைசலியா கருவரைவீ ழருவிகளுங் கான்யாறுங் கலித்தோடா பெருமுகிலின் குலங்கள்புடை பெயர்வொழியப் புனல்சோரா இருவிசும்பி னிடைமுழங்கா எழுகடலு மிடைதுளும்பா இவ்வாறு நிற்பனவுஞ் சரிப்பனவு மிசைமயமாய் மெய்வாழும் புலன்கரண மேவியவொன் றாயினவான் மொய்வாச நறுங்கொன்றை முடிச்சடையா ரடித்தொண்டர் செவ்வாயின் மிசைவைத்த திருக்குழல்வா சனையுருக்க மெய்யன்பர் மனத்தன்பின் விளைத்தலிசைக் குழலோசை வையந்தன் னையுநிறைத்து வானந்தன் மயமாக்கிப் பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவில் நடம்புரியும் ஐயன்றன் திருச்செவியின் அருகணையப் பெருகியதால் அன்பர்களே! இசைவழிபாட்டின் பெருமையை நோக்குங் கள்; இப்பாடல்களைப் பார்த்துப் பார்த்து மகிழுங்கள். நிலை யியற் பொருளையும் இயங்கியற் பொருளையும் ஒன்றுபடுத்திப் பின்னைத் தன்மயமாயுள்ள ஆண்டவன்பால் இசை அணை கிறது. இதன் நுட்ப மென்னை? இசையாளனுக்கு எல்லாத் தத்துவங்களும் மறைந்து, அவையெல்லாஞ் சிவமாகப் பொலிவ தென்க. இப்பெருநிலை கூட்டும் இசைப்பாட்டையும் ஒருவித வழிபாடாகக் கொள்ளலாமன்றோ? இவ்வழிபாடுகளல்லாத வேறு வழிபாடுகளும் இருக் கின்றன. வழிபாடு என்பது அவரவர் அன்புநிலை அறிவாற்றல் முதலியவற்றைப் பொறுத்து அமைவது. அவரவர் தத்தம் நிலைக் கேற்றவாறு ஒவ்வொருவித வழிபாட்டைக் கொள்ளலாம். எல்லா வழிபாடுகளின் முடிவும் ஒன்றே என்பதை மட்டும் எவரும் மறத்தலாகாது. இன்னும் ஒரு வழிபாட்டைக் குறிப்பிட விரும்புகிறேன். இயற்கை வழிபாடுகளுள் அது சிறந்த ஒன்றாகலின், அதை இறுதியில் குறிப்பிடுகிறேன். ஏறக்குறைய எல்லா வழிபாடுகளும் அதன்கண் அடங்கும். அவ்வழிபாடாவது இறைவனை எட்டு வடிவமாகப் போற்றுவது. அவ்வெட்டாவன; நிலம் நீர் நெருப்பு காற்று வெளி திங்கள் ஞாயிறு உயிர் என்பன. இவை ஒவ்வொன் றையுங் தனித்தனி வழிபடலுமுண்டு. இவற்றை இரண்டாகவோ மூன்றாகவோ நான்காகவோ பிரித்து வழிபடலுமுண்டு. எல்லா வற்றையுஞ் சேரவைத்து வழிபடலுமுண்டு. இவ்வெட்டுக்கும் அடிப்படையாக நிற்கும் அறிவுப் பிழம்பான அழகுப் பொரு ளொன்றே. நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ - மாணிக்கவாசகனார் உளத்தை இப்பரந்த அண்டத்தின்மீது நிறுத்தினால், பசும்புற்களும், தூறுகளும், பொழில்களும், காடுகளும், மலை களும் - கேணிகளும், ஆறுகளும், கடல்களும் - நெருப்பும் - காற் றும் -இவை யெல்லாவற்றிற்கும் நிலைக்களனாயுள்ள வெளியும் - கொண்ட உலகமும், மேலும் உள்ளின் திங்களும் - ஞாயிறும் - அவ்வுள்ளத்தில் புகுந்து நிலவுதல் பெறலாம். இவ்வேழும், இவற்றை உள்ளும் தானும் (உயிரும்) சேர்ந்து எட்டாதல் காண்க. இவ்வாறு நாடோறும் இவற்றை உள்ளும் பயிற்சியில் தலைப் படுவோர் நாளடைவில் முதலில், முதல் ஐந்தையும், பின்னை யொன்றையும் நெஞ்சம் தொட்டு விரைந்தோடுமாறும், ஞாயிற் றில் மட்டுஞ் சிறிது நேரம் நெஞ்சம் நிலைபெறுமாறும் பயிலல் வேண்டும். இப்பயிற்சி முதிர முதிர வழிபாட்டில் மகன் அமர்ந் ததும் முதலாறும் நெஞ்சில் நுழைவதருகி, ஞாயிறு புகுவது மட் டும் பெருகும். முடிவில் ஞாயிறு வழிபாடொன்றே நிலைக்கும். இவ்வழிபாட்டில் ஏனைய வழிபாடுகள் ஒடுங்கிவிடும். ஞாயிறு வழிபாடு வளர வளர உள்ளத்துள் ஒளிரும் ஒரு பேரொளி கிளர்ந்தெழுதற்கு வழி ஏற்படும். ஞாயிற்றொளியும் உள்ளொளியும் ஒன்றுபடப்பட, மகன் தன்னொளி என்னும் ஒன்றில் மூழ்கும் பேறு பெறுகிறான். இதுவே தன்வழிபாடு அல்லது உயிர் வழிபாடு என்பது. இவ்வழிபாடு கைவரப்பெற்ற ஒருவன் மேற்போந்த பொருளெலாம் தன்னில் விளங்குவ துணர்வன். இதன் முதிர்ச்சி, அவை எல்லாவற்றிற்கும் அடிப் படையாக உள்ள பேரழகை யுணரும் பெருநிலை கூட்டும். இப் பெரு நிலையை வாதவூரடிகள், இன்றெனக் கருளி யிருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் றன்மை நினைப்பற நினைந்தேன் நீ யலாற் பிரிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை யன்றியொன் றில்லை யாருன்னை யறியகிற் பாரே என்று விளக்கி யிருக்குமாற்றா னறிக. இந்நிலை எய்தினோர்க்கு நரை திரை மூப்பு சாக்காடுண்டோ? எளிதில் சிறிதுநேரங் கொள்ளக்கூடியதாய், விரைவில் தன் வழிபாடெனும் உயிர் வழிபாட்டைக் கூட்டக் கூடியதாயிருப் பது ஞாயிறு வழிபாடே யாகும். இவ்வழிபாட்டைப் பற்றிப் பேசாத நமது நாட்டுக் கலைகளில்லை. உடலோம்பல் முறை யிலும் ஞாயிற்றொளியில் மூழ்குமாறும், அதை அகத்தில் எண்ணுமாறும் சொல்லப்பட்டிருக்கின்றன. மேல்நாட்டு இயற்கை ஆராய்ச்சியாளரும் ஞாயிற்றின் ஒளியிலுள்ள நுட்பங் களைப் புதிது புதிதாகக் கண்டு வருகின்றனர். ஆதலால், நாடோ றும் ஞாயிறு வழிபாடு நிகழ்த்துவது சிறப்பு. KUf‹ moahuh»a e¡Ñudh®, ‘cyf« ct¥g ty nd®ò âÇjU - gy®òfœ PhÆW fl‰f© lh§F..., என்று திருமுருகாற்றுப்படையைத் தொடங்குகிறார். ஞாயிறு முரு கனுக்கும், நீலக்கடல் மயிலுக்கும் உவமை. நீலக்கடலோரத்தில் நின்று, அந்நீலக்கடன்மீது தவழ்ந்தெழும் இளஞாயிற்றொளி யில் புறம் மூழ்க, அகத்தே அதைநினைந்து நினைந்து வரின், பெறற்கரிய பேறு பெறலாம். இளஞாயிறு திரட்டி வரும் உயிர்ப் புக்கு (Ozone) ஓர் அளவில்லை. அவ்வுயிர்ப்பன்றோ மக்களை நோய்வாயினின்றுங் காப்பது? இளமை, அழகு முதலியவற்றை ஞாயிற்றொளியும் உயிர்ப்பும் நல்குவது போல வேறெவை நல்கும்? எம்பெருமான் முருகனோ குணங்குறியில்லாதவன். அவன் செஞ்ஞாயிற்றின் வாயிலாக உலகிற்கு அருள் சுரக்கிறான். காலையில் முருகன் செஞ்ஞாயிறு வடிவாக நீலக்கடலெனும் நீலமயிலில் காட்சி அளிக்கிறான். அக்காட்சி என் புலன்களை - புந்தியை - உயிரை - எல்லாவற்றையுங் கவர்கிறது. அதை என் னென்று ஏழையேன் எண்ணி எழுதுவேன்! ஞாயிற்றின் புறநுட்பமுணர்ந்து, அதை வழிபடுவோர் வழிபடுக; அதன் அகப்புற நுட்பமுணர்ந்து அதைப் போற்று வோர் போற்றுக. உலக முவப்ப வலனேர்பு திரிதரு - பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு என்னும் உரையின் பொருளில் முருகன் பொலிதலை யுணர்ந்து, அவனை உலகம் போற்றுவ தாக. முருகன் உடலாக உள்ள இயற்கையின் வழிபாட்டைப் பெற, அவ்வியற்கைக் கூறுகளில் எதையேனும், அல்லது இயற்கையுடன் ஆற்றுப்படுத்த வல்ல வேறு ஒன்றையேனும் துவக்கத்தில் கொள்ளலாம். முடிவு இயற்கை வழிபாடாதல் வேண்டும். அவ்வழிபாடு, இளமை - மணம் - கடவுட்டன்மை - அழகு - ஆகிய வற்றையுடைய முருகையுணர்த்தும். 6. முருகைக் காண முனைப்பையறுத்தல் (முனைப்புக்கூடாது - சூரன் போர் - புராண நுட்பம் - உருவக நுட்பம் - பிற்காலப் பௌராணிகம் - போர்க்களம் - சூரன், முருகு இவைகளின் உட்பொருள் - முனைப்புள்ளவரை முருகை உணரல் இயலாது - இரக்கமும் முருகனும் - ஞானசக்தியே முருகன் வேல் - முருகனது அருள் விரைவு.) முருகனை வழிபடப் புகுவோரிடம் முனைப்புறுதல் கூடாது. இயற்கையி லுறையும் முருகு முனைப்புடையோர்க்குப் புலனாதலரிது. முனைப்பும், அதன் கான்முளைகளாகிய அழுக் காறு அவா வெகுளி முதலியனவும், மகனை நரை திரை மூப்புக் காளாக்கி, முடிவில் அவனைச் சாக்காட்டுக் கிரையாக்குகின்றன. பெறுதற்கரிய மக்கட் பிறவியைப் பெற்றும், அதைப் பிணிமூப்பு சாக்காட்டுக் கிரையாக்குதல் அறிவுடைமை யாகாது. முனைப்பு மக்களைக் கொல்லும் பெருங்காலன். முனைப்புடையார் முருகனை எங்ஙனம் உணர்தல்கூடும்? கந்தபுராணத்துள்ளே சூரபன்மன் போர் சொல்லப் பட்டிருக்கிறது. அஃது இங்கே நினைவிற்கு வருகிறது. சூரன் முனைப்பால் பல வடிவந் தாங்கி எந்தையுடன் பெரும்போர் புரிந் தான். முடிவில் ஒன்றுமியலாது எல்லாமிழந்து, அவன் தன்னந் தனியனாய் நின்ற வேளை, அவனது முனைப்புச் சிறிது நேரம் ஒடுங்கி ஒதுங்கி நின்றது. அந்நேரத்தில் யாண்டுமுள முருகு அவ னுக்குப் புலனாயிற்று. மீண்டும் முனைப்பு மானமெனும் வடி வுற்று அடர்ந்ததும், முருகைக் காணாது, பகைமை யுளங் கொண்டு, அவன் போர் புரிந்தான். அண்ணலார் குமரன் மேனி அடிமுதன் முடிவின் காறும் எண்ணிலா ஊழி காலம் எத்திற நோக்கி னாலும் கண்ணினா லடங்கா துன்னிற் கருத்தினா லடங்கா தென்பால் நண்ணினா னமருக் கென்கை அருளென நாட்ட லாமே போயின அகந்தை போதம் புகுந்தன வலத்த தான தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கு மேயின பொருள்கண் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணோர் நாயகன் வடிவங் கண்டேன் நற்றவப் பயனீ தன்றோ சூழுதல் வேண்டுந் தாள்கள் தொழுதிடல் வேண்டு மங்கை தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு ஆழுதல் வேண்டுந் தீமை அகன்றுநான் இவற்கா ளாகி வாழுதல் வேண்டும் நெஞ்சம் தடுத்தது மான மொன்றே ஒன்னலர் பொருட்டா லேகி உறுசம ரிழைத்த செம்மல் தன்னுரு வதனைக் காண்கின் முனிவதே தகுதி யாகும் வன்னிகொள் வெண்ணெ யேபோல் வலியழிந் துருகிற் றென்றால் என்னுடை வயத்த வன்றோ உணர்ச்சியு மியாக்கை முற்றும் என வரூஉங் கந்தபுராணப் பாடல்களை நோக்குக இப்புராண நுட்பத்தை ஈண்டுச் சிறிது ஆராய்வோமாக. புராணத்தில் போர் முழக்கம் பெருமிதமாகப் பேசப்படுகிறது; வீரச்சுவையும் ஆங்காங்கே பொங்கி வழிகிறது. பலதிறப் போர்க் கருவிகள் மின்னுகின்றன. என்னே போரின் காட்சி! இவை யாவும் உருவகங்கள்! உருவகங்கட்குரிய பொருளை நூற்கண் யாண்டாயினும் ஆசிரியர் புகுத்தியிருப்பர். அணிகளின் (அலங்கார) இன்பத்தை நுகரும் அறிஞர், அவைகட்குரிய பொருளையுணர்ந்தும் இன் புறுவர். அணியியல் அளவோடு நின்று பயன் பெறுவோரைப் பற்றி ஈண்டுக் கருத வேண்டுவதில்லை. முன்னைநாள் காவியர் உவமமென்னும் உடலில், பொருளென்னும் உயிரையும் புகுத் தும் முறையைக் கடைப்பிடித்து நின்றனர். பின்னை நாளில் தோன்றிய பௌராணிகம் வெறும் உருவகங்களில் (அவையுஞ் சுவையற்ற போலிகளில்) கருத்தைச் செலுத்திக் காவிய உலகிற்கே கேடு சூழ்ந்தது. அம்முன்னை நூல்களையும், இப்பின்னை நூல் களையும் பகுத்தறியவேண்டுவது ஆராய்ச்சித்துறை நண்ணு வோர்கடன். சூரன் போரில் அறியக் கிடப்பதென்னை? சூரன் போர் நுட்பம் புராணத்திலேயே அடங்கிக் கிடக்கிறது. ஒவ்வோர் உள்ளமும் போர்க்களம். அக்களத்தில் நாடோறும் சூரனுக்கும் முருகனுக்கும் போர் நடந்தவண்ணமிருக்கிறது. சூரன் முனைப்பு; முருகன் அருட்கடவுள். ஒவ்வோர் உயிரிடத்தும் முனைப்பு உண்டு. இதை நிகழ்ச்சியில் உணர்கிறோம். முனைப்பால் விளைவது நன் மையா? தீமையா? தீமை என்பது வெள்ளிடைமலை. தீமைக்கு முதலாகவுள்ள முனைப்பைக் களையவேண்டுவது உயிரின் கடமையன்றோ? உயிர் கொடிய முனைப்பால் விழுங்கப்பட் டுண்மையான், அஃது அக்கடனாற்ற இயலாதுகிடக்கிறது. ஆனால் உயிருக் குயிராயுள்ள அருட்கடவுள் அக்கடனாற்றி வருகிறது. உயிருக் குயிராய்க் கடவுள் யாண்டிருக்கிறது என்று சிலர் நினைக்கலாம். பிறர்க்குக் கேடு சூழ முனைப்பெழுவதுபோலப் பிறர்க்கு நலன் செய்ய ஏதாவதொன் றுறுகிறதா இல்லையா என்பதை உன்னுவோமாக. ஒன்றுறுவதை உணர்கிறோம். அஃதென்னை? அதுவே இரக்கம் என்பது. இரக்க நிகழ்ச்சி இல்லை என்று எவருஞ் சொல்லார். இரக்கம், உறுவதாய் நிகழ்வதாய் உணர்வ தாயிருப்பது, இரக்கம் பண்பு. இப்பண்பின் பண்பியாயிருப்பது கடவுள். பண்பியின்றிப் பண்பில்லை யென்பது இயற்கை அறம். பண்பையுடைய பொருள் பண்பி. பண்பாகிய இரக்கம் பெருகப் பெருகப் பண்பியாகிய இறையுண்மையை யுணரலாம். முனைப்பு, உயிரைத் தன்பக்கம் இருத்திவைக்கிறது. உயிரை முனைப்பினின்றும் மீட்க ஆண்டவன் அருள் புகுகிறது. இரண்டிற்கும் போர் நிகழ்கிறது. இப்போரே சூரன் - முருகன் போரென்க. முனைப்பு எப்பொழுது அழிந்துபடும்? திருவருள் பதியப் பதிய அறிவாற்றல் அதாவது ஞானசக்தி எழும். அஃதெழுந்து பாயும்போது முனைப்பு அழிந்துபடும். ஞானசக்தியே முருகன் வேலென்பது. சூரன் முனைப்பால், முனைந்து போர் புரிந்தபோது, யாண் டும் முருகனைக் கண்டானில்லை. அம்முனைப் பொடுங்கிய போது அவன் யாண்டும் முருகனைக் காணும் பேறு பெற்றான். மீண்டும் அம்முனைப்புச் சிறிது தலை காட்டியதும், அவன் அப்பேற்றை இழந்தான். முனைப்பு, கடவுளைப்பற்றிய உணர் வையும் எண்ணத்தையுந் தகைந்து மறைக்கும் நீர்மையது. அதுவே இறப்பைத் தந்து, பிறப்பென்னும் பேதைமைக்கு வித் தாக நிற்பது. ஆதலால் முனைப்பாம் அரக்கனைக் கொன்று, பிணிமூப்பு சாக்காடொழித்து, இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும், அழியா அழகுமுடைய முருகனைப் பெற முயலல்வேண்டும். உதறில் எனதெனு மலமறில் அறிவினில், எளிது பெற லென மறைபறை யறைவதொர், உதய மரணமில் பொருளினை அருளுவ - தொருநாளே இரவு பகலற எனதற நினதற - அநுபூதி யான்எனதற் றிடுபோதம் யானறிதற் கருள்வாயே எனது யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவ னாதீதம் - அருள்வாயே இருவினையு மலமுமற இறவியொடு பிறவியற ஏகபோக மாய் நீயுநானுமாய் - இறுகும்வகை பரமசுகம் அதனையருள் இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய இடர்கூட்ட இன்னல் - கொடுபோகி - இடுகாட்டி லென்னை எரியூட்டு முன் னுன் இருதாட்கள் தம்மை - உணர்வேனோ பேரவாவ றாவாய்மை பேசற் - கறியாமே - பேதைமாத ராரோடு கூடிப் -பிணிமேவா - ஆரவார மாறாத நூல்கற்றடி நாயேன் - ஆவிசாவி யாகாமல் நீசற் - றருள்வாயே வீதிவழியின் உயிர்கவர வருகொடிய யமபடரை வெட்டித் துணித்தாண்மை - கொண்டுநீபம் - விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற வெட்சித் திருத்தாள் வணங்குவேனோ உயிர் - அலையாமுன் - கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல், கூட்டிச் சற்றருள் - புரிவாயே இளமகி ழும்படு முன்ப தம்பெற உணர்வேனோ கொக்காக நரைகள் வருமுன மிக்காய இளமையு டன் முயல், குற்றேவல் அடிமைசெ யும்வகை - அருளாதோ எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி - அவதாரம் - இனியுன தபயம் எனதுயிர் உடலும் இனியுடல் விடுக - முடியாது இருமலும் ரோக முயலதன் வாதம் எரிகுண நாசி - விடமேநீர் - இழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை - இவையோட -பெருவயி றீளை எரிகுலை சூலை பெருவலி வேறு - முளநோய்கள் - பிறவிகள் njhW.ம் எனைநலி யாத படியுன தாள்கள் - அருள்வாயே ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மானந்தத்தே தேங்கார் நினைப்பு மறப்பும்அ றார்தினைப் போதளவும் ஓங்கா ரத்துள் ளொளிக்குள் ளேமுருக னுருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய் யாரென்செய் வார்யம தூதருக்கே கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே கிரிவாய் விடுவிக் ரமவே லிறையோன் பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோ டுமகந் தையையே - அருணகிரியார் காலன் செங்கட் கடாவினி லேறியே கயிறு வீசிப் பிடியா முனமெனை வேலுஞ் செங்கையி லேந்தி மயில்மிசை விரைவில் வந்துவந் தஞ்சலென் றாளுவாய் ஆல முண்ட களத்த ரிடத்துறை அரிவை கொஞ்சுறக் கொஞ்சுபைங் கிள்ளையே தாலம் பாளை மதுக்குட மேந்திய சமர மாபுரிச் சண்முக வேலனே உயிர்ப்பிணி தவிர்க்கு மருத்துவ னென்கோ உடற்பிணிக் கொருமருந் தென்கோ மயக்குறு மனத்தி னினைவெனும் பனியை மாற்றிய கதிரவ னென்கோ வியப்புறு புரண சொரூபநின் னருளை வினையனே னேதெனப் புகல்கேன் கயத்துரி தரித்தோன் புதல்வனே போரூர்க் காங்கெயா தேங்கொளி மணியே - சிதம்பர சுவாமிகள் பிறந்திறந் துழலும் பெருவியா தியையும் பெரும்பசி நோய்ச்சுடத் தளர்ந்து நிறங்குலைந் தொருவர் பின்றிரிந் துழலு நிரப்பெனுங் குறுவியா தியையுந் திறந்தருள் கடைக்கட் பார்வையா மருந்தால் தீர்த்தருள் புரியுநா ளுளதோ அறம்பொரு ளின்பம் வீடருள் தணிகை ஆறுமா முகதயா நிதியே - கந்தப்ப தேசிகர் உருகா மனமுஞ் சிவஞான முணரா வறிவு முனதுபுகழ் ஓதா நாவு மோதக்கேட் டுவந்தே யினிய நதிபோலப் பெருகா விழியு முடையேனைப் பிறவிக் கடலில் வீழாமற் பேணியெடுத்திங் கெனதுள்ளம் பிரியா விரிஞ்சைப் பதிவாழு முருகா வருக சதுர்வேத முதல்வா வருக வினைதீர்க்கு முனைவா வருக மலராறு முகவா வருக திருமாலின் மருகா வருக மயிலேறு மன்னா வருக அடியார்கள் வாழ்வே வருக தெய்வசிகா மணியே வருக வருகவே - மார்க்கசகாயதேவர் என்று அடியார்கள், தங்கள் முனைப்பொழியுமாறும், பிறவித் துன்பம் நீங்குமாறும் அருள் புரியுமாறு முருகனை நோக்கி வேண்டுதல் காண்க. யான் எனது என்னுஞ் செருக்கறுத்தல் வேண்டும் என்னும் ஓர் எண்ணம் எழுதலே சாலும். அவ்வெண்ணஞ் செம்மைசேர் உள்ளத்தினின்றும் எழுவதாயிருத்தல் வேண்டும். அது முருக னருளெனுங் காந்தத்தால் ஈர்க்கப்படும். அச்சீரிய எண்ணமுடை யாரை ஆட்கொள்ள முருகன் அருளா விரைந்து நின்றுகொண் டிருக்கிறது. உய்வுபெறல் வேண்டுமெனும் வேட்கையுடன் முருகா! ஆட்கொள்க என்று ஒருமுறை இரந்து வேண்டினும், முருகனருள் பெறலாம். முனைப்பு வளரும் நெஞ்சுகொண்டு முருகா முருகா என்று பல்கோடி முறை கூவிக் கூவிக் கூத்தாடி னாலும் முருகனருள் கூடல் அரிது. முருகனுக்கு வேண்டுவது முனைப்பிலா அன்புஉள்ளம். அன்புக்கு முருகன் மிக எளியன். என்றும் அழியாதவாறு இளமை காத்து அழகு பெற உலகியல் முறைகள் பல கொள்ளப்படுகின்றன. அவற்றுடன் யான் எனது என்னுஞ் செருக்கைச் செகுத்து, இயற்கை மணமும், மாறா இளமையும் கடவுட்டன்மையும், அழியா அழகுமுடைய முருகனை இடையீடின்றிப் போற்றிப் பாடி நினைந்துவரின், அவன் அருளை எளிதிற் பெறலாம். பழகிய வினைகள் பொடிபட அருளில், படிபவர் இத யம் - உறுகோவே செம்மனத்தர் மிகுத்த மாதவர், நன்மைபெற்ற உளத்திலே மலர், செல்வசிக்கல் நகர்க்குள் மேவிய - பெருமாளே திருப்பழனி வாழ்வுக் குகந்தடிய ராவிக்குள் நின்றுலவி வரு - பெருமாளே அடியவ ரிச்சையி லெவை யெவை யுற்றன அவைதரு வித்தருள் - பெருமாளே நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தி லஞ்சலென்ற - பெருமாளே கருதுவார் மனம் புகுந்த - பெருமாளே கழலிணை யணியும் அவருடன் முனிவு கனவிலு மறியாப் - பெருமாளே காதலுட னோதுமடி யார்களுட னாடியொரு கால்முருக வேளெனவும் - அருள்தாராய் குற்றமற்றவ ருளத்தில் உறைவோனே முருகா எனவோர் தரமோ தடியார் முடிமேல் இணைதாள் - அருள்வோனே ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா எனவோ - தருள்தாராய் ஒருக்கால் நினைந்திட் டிருக்கால் மிகுத்திட் டுரைப்பார்கள் சித்தத் - துறைவோனே இத்திருப்புகழ்களை ஓதிய அருணகிரிநாதர் தமது பின்னை வாழ்வில் முருக னருட்செல்வத்தால் பெற்றபேறுகள் பலப்பல. அவைகளை உலகுய்ய அவ்வன்பர் பல தமிழ்ப் பாக்களாகத் திரு வாய்மலர்ந்தருளினர். அவர், தாம் சாக்காடெய்து நிலையில் முருகனருள் பெற்று உய்யுநெறி கண்டனர். அம் முருகனடி யாரை ஈண்டு நினைந்து வாழ்த்துவோம். 7. அருணகிரியாரும் பெண்ணுலகும் (அருணகிரியார் - மக்களும் பிழைபாடும் - பிழை பாட்டை உணர்வோர் பெறுவது - விடுதலைக்குத் திறவு - கிறிது - மாணிக்க வாசகர் - துறவொழுக்கமும் அருணகிரியாரும் - அருணகிரியாரும் அழகும் - அருணகிரியாரும் பெண்ணுலகும் - விலைமாதரையே அருணகிரியார் தூற்றியது - அருணகிரியார் பெண்ணுலகைத் தூற்றவில்லை - பெண்ணாசையைக் கடிதல் பெண்ணைக் கடித லாகாது - அருணகிரியார் பெண்ணுலகைப்பற்றிக் கொண்ட கருத்து - அருணகிரியார் நோய் போக்கிக்கொண்ட முறை அருணகிரியார் முன்னிலை பின்னிலை - அருணகிரியாரும் முருகனும் -பெண் மக்களுங் கடவுளும் - பெண்ணை வெறுத்தல் துறவாகாது - பெண்மை தாய்மை இறைமை - திருப்புகழ்ச் சிறப்பு.) அருணகிரிநாதர் இளமையில் பெண்ணுலகின் பெருமை அறியாது, அதை இழிந்த காம உலகமாகக் கொண்டு, அந் நெருப்பில் வீழ்ந்தார். பெண்ணின்பாலுள்ள இறைமை கரு தாது, பெண்ணைக் காமக்கூடாகக் கருதி வீழ்வோர் பின்னை அடையும் பேறென்னை? சொல்லலும் வேண்டுமோ? அன்னார் வெம்மை மேலீட்டான் பலதிறக் கொடுங் கொடும் நோய்களால் பீடிக்கப்பட்டு இடர்ப்படுவர். அவர் உறுப்புக்களை யெல்லாம் வெம்மை எரிக்கும். தம்மை விட்டு நீங்கா எரியிடை நின்று அவர் தவிப்போராவர். அவர்க்கு உணவுண்டோ? உறக்கம் உண்டோ? என்ன இன்பம் உண்டு? நிரையத் துன்பமன்றோ அவர் அடை வது? பெண்ணைக் காமக் கூடாகக் கருதிய பயன் இஃதேயாகும். நம் அருணகிரிநாதரின் முன்னைய வாழ்வு இவ்வாறாக முடிந்தது. ஆனால் அருணகிரிநாதர் இறுதிவரை காம எரியால் எரிந்து கரிந்து நீறானாரில்லை. காம எரி தணிக்கும் தண்புனல் அவர்க்குப் புலனாயிற்று. அதனால் அவர் உய்ந்தார். அருணகிரிநாதர் தமது இளமையைச் செயற்கை வெம்மைக்கு இரையாக்கித் தொழுநோய் (குட்டம்) முதலிய நோய்களால் பீடிக்கப்பெற்றுச் சாக்காடடையும் நிலையெய்திய ஞான்று, முருகனை வழிபடும் இயற்கைச் செம்மைநெறி பற்றும்பேறு அவர்க்குக் கிடைத்தது. அப்பேறு, பிணிமூப்பு சாக்காடெய்தா அநுபூதி நிலையை அவர்க்குக் கூட்டிற்று. அப்பெரியார் தம்பாலுற்ற நிகழ்ச்சிகளைக் கல்லையும் மண்ணையும் உருக்கத் தக்க செந்தமிழ் வண்ணப் பாக்களால் பாடி நமக்குதவி யுள்ளார். தம்மை யடைந்த தொழுநோய் அதாவது குட்டம் முதலிய நோய் கட்கு அவர் மருந்துண்டாரில்லை. இயற்கை வடிவாய முரு கனைப் போற்றியே அவர் அந்நோய்களைப் போக்கினர். நோயிலா ஒன்றைக் கருதும் நெஞ்சம், நோயை யழித்து, நோயிலா வாழ்வையே யளிக்கும். அருணகிரிநாதர், தாம் காம வெம்மைக் குழியில் வீழ்ந்து, பலதிற நோய்களால் பீடிக்கப்பட்டதை முன்னிட்டு, முருகனை நோக்கி நிகழ்த்திய முறையீடுகள் பலப்பல. அவைகளில் இரண்டொன்று வருமாறு :- . . . . . . மங்கையோரால் துன்பமு டங்கவழி நோய்சி ரங்கொடு சீபுழு வுஞ்சல மோடி றங்கிய புண்குட வன்கடி யோடி ளஞ்சனி சூலைமி குந்திட வேப றந்துடல் துஞ்சிய மன்பதி யேபு குந்துயர் ஆவி விடும்படி சீர்ப தம்பெறு விஞ்சை தாராய் வாதமொடு சூலை கண்ட மாலைகுலை நோவு சந்து மாவலிவி யாதி குன்ம மொடுகாசம் வாயுட னேப ரந்த தாமரைகள் பீன சம்பின் மாதர்தரு பூஷ ணங்க ளெனவாகும் பாதகவி யாதி புண்க ளானதுட னேதொ டர்ந்து பாயலைவி டாது மங்க இவையால்நின் பாதமல ரான திண்க ணேயமற வேம றந்து பாவமது பான முண்டு வெறிமூடி ஏதமுறு பாச பந்த மானவலை யோடு ழன்று ஈனமிகு சாதி யின்க ணதிலேயான் ஈடழிதலான தின்பின் மூடனென வோது முன்புன் ஈரஅருள் கூர வந்து எனையாள்வாய் அருணகிரியார் குட்டம் முதலிய நோய்களானும் பீடிக்கப் பட்டார் என்று தெரிகிறது . இதனை, எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்தம் எரிவ ழங்கு வெப்பு வலிபேசா இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ டிரும லென்று ரைக்கும் இவையோடே மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த மதிம யங்கி விட்டு மடியாதே மருவி யின்றெ னக்கு மாக தஞ்சி றக்கு மயிலில் வந்து முத்தி தரவேணும் எனவரூஉந் திருத்தணிகைத் திருப்புகழான் அறிக. அருணகிரி அடிகள், தாம் பெண்ணைக் காமப் பொரு ளாகக் கருதி, நிகழ்த்திய பிழைபாட்டை உணர்ந்து, கழிவிரக்கங் கொண்டு, அதைப் பொறுத்தருளுமாறு முருகனை நோக்கி, --- பரத்தையர் மோகம் * * * பொறுத்தருளிச் சடக்கெனஅப் புறத்திலழைத் திருத்தியளித் திடுவாயே என்று வேண்டியிருத்தல் காண்க. மற்றோரிடத்தில் அருணகிரிநாதர் ஐயன் பொறையை வியந்து பாராட்டுகிறார். கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும் பழனியுந் தெற்குச் சற்குரு வெற்புங் கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் திலும்வேலும் கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங் கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங் களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் சுழல்வேனைப் புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம் பழையகங் கைக்குற் றப்புது முத்தம் புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் றுருகாஎப் பொழுதும் வந்திக்கைக் கற்ற எனைப்பின் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் றுளதோதான் மக்கள் என்றும் ஏதாயினும் பிழை நிகழ்த்தும் பான்மை யினர்கள். பிழை ஒவ்வொருவரிடத்தில் ஒவ்வொரு விதமாக நிக ழும். பிழைபாட்டினின்றும் மக்கள் முற்றும் விடுதலை யடைதல் அரிது. பிழைபாடு வளர்ந்து கொண்டே சென்றால் முடிவு என்ன ஆகும்? ஆண்டவன் திருவருள் மக்கள் உள்ளத்தில் பதியுமட்டும் மக்கள் தவறிழைத்தல் நில்லாது. அதனால் துன்பமும் வளர்ந்து கொண்டே போகும். துன்ப வளர்ச்சியை மறிக்க வழியுண்டு. மறவினை நிகழ்த்தி வழுக்கி வீழ்ந்து வீழ்ந்து, அதன் பயனாகத் துன்பத்தில் இடர்ப்படுதலினின்றும், விடுதலை யடைய விரும்பாத மக்களில்லை. ஆனால் விருப்பத்தை வினையி லாற்றி முடிவுகாண மக்கள் பெரிதும் முயல்கிறார்களில்லை. துன்பம் மிக மிக, மக்கள் முயற்சியில் தலைப்படுவார்கள். அந்தோ! அறியாமையால் இவ்வினை புரிந்தோம்! அதன் பய னாக இத்துன்பம் நிகழ்ந்தது; நாம் ஏன் மறவினை நிகழ்த்தல் வேண்டும்? V‹ ïa‰if¡F khWg£L elh¤jš nt©L«? என்று கடந்த நிகழ்ச்சிகள்மீது மக்கட்குக் கழிவிரக்கந் தோன்றும். இத்தோற்றுவாயே விடுதலைக்குத் திறவு தேடுவதாகும். முன்னே நிகழ்த்திய பிழைகுறித்து வருந்த வருந்த மகனுக்கு அழுகை பெருகும். உண்மையாக வருந்தி அழும் ஒருவன், மீண்டும் பழம் பிழையைப் புதுக்க எண்ணுவனோ? மகனது உண்மை அழு கையைக் கண்டு, அன்னையினுஞ் சிறந்த ஆண்டவன் வாளா கிடப்பனோ? ஆண்டவன் திருவருள், மகன் துன்பந் தீர்க்கும் மருந்தாகும். துன்பத்தில் வீழ்ந்து இடர்ப்பட்ட மகன், ஆண்ட வன் திருவருளை எப்படிப் பற்றிக்கொள்வான் என்று சொல்ல வேண்டுவதில்லை. கடலில் அமிழும் ஒருவனுக்குத் தோணி கிட்டினால், அவன் எத்தகை மகிழ்வெய்துவன்? அதனினும் பன்மடங்கு மகிழ்ச்சி, பிறவிக்கடலில் அமிழும் மகனுக்குத் திருவருள் தெப்பங் கிடைக்கும்போது உண்டாகுமன்றோ? பின்னை மகன் அப்புணை பிடித்து இன்பக்கரை நண்ணுவன். ஆதலால், தாங்கள் நிகழ்த்திய பிழையைப் பொறுத்தருளு மாறும், இனிக் குற்றம் தங்கள்பால் நிகழாதவாறு தங்களைக் காத்துக்கொள்ளும் ஆற்றல் தங்கட்கு அருளுமாறும், மக்கள் அருட்கடவுளை நோக்கி, வருந்தி வருந்திக் கசிந்து கசிந்துருகிக் கண்ணீர்விட்டழும் அழுகை, அவர்கட்கு உய்யுநெறி காட்டு மென்க. இத்திருவருண் நெறியை உலகுக்கு அறிவுறுத்திய கிறிது, மாணிக்கவாசகனார் முதலிய பெரியோர்களை ஈண்டு வணங்குகிறேன். அருணகிரிநாதர் கடவுளை மறந்து பற்பல கொடுஞ் செயல் நிகழ்த்தினார்; பின்னை அவர் அச்செயல்குறித்து வருந்தி முருகனை நோக்கி முறையிட்டுக் கசிந்து கசிந்துருகினார்; முருகன் அருள் பெற்றார். ஆண்டவன் இருப்பது எற்றுக்கு? மக் கள், தங்கள் பிழைபாடுணர்ந்து வருந்தித் தன்னைக் கூவி யழைக்கும்போது ஓடிவந்து அவர்களைக் காக்கவன்றோ ஆண்டவனிருக்கிறான்? மக்கள் தங்கள் பிழைபாடு குறித்துக் கசிந்துருகுவது மட்டும் உண்மையதா யிருத்தல்வேண்டும். கசிவு உண்மையா போலியா என்பது ஆண்டவனுக்குத் தெரியும். எங்குமுள்ள ஆண்டவனை ஏமாற்றல் எவராலும் முடியாது. அருணகிரியார், தங்குறையுணர்ந்து, அதை மன்னித்தருளு மாறு குறையிலா நிறைவாக உள்ள முருகனை நோக்கி, அழுது முறையிட்ட பாக்கள் ஆயிரம்! ஆயிரம்! அவைகளுள் சிலவருமாறு :- புரைபடுஞ் செற்றக் குற்ற மனத்தன் தவமிலன் சுத்தச் சத்ய அசத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குங் துரிசாளன்... பொறையிலன் கொத்துத் தத்வ விகற்பஞ் சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின்... கரையறுஞ் சித்ரச் சொற்றமிழ் கற்குங் கலையிலன் கட்டைப் புத்தியன் மட்டன் கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலுங்... கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும் பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத் திற்கரு திக்கொண் டடைவேனோ... புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாவி பொறையி லாத கோபீகன் முழுமூடன்... புகழி லாத மாமூகன் அறிவி லாத காபோதி பொறிக ளோடு போய்வீழு மதிசூதன்... நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி நெறியி லாத வேமாளி குலபாதன்... நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல் நினையு மாறு நீமேவி யருள்வாயே... அவகுண விரகனை வேதாள ரூபனை அசடனை மசடனை ஆசார ஈனனை அகதியை மறவனை ஆதாளி வாயனை அஞ்சுபூதம்... அடைசிய சடவனை மோடாதி மோடனை அழிகரு வழிவரு வீணாதி வீணனை அழுகலை யவிசலை ஆறான வூணனை அன்பிலாத... கவடனை விகடனை நானா விகாரனை வெகுளியை வெகுவித மூதேவி மூடிய கலியனை அலியனை ஆதேச வாழ்வனை வெம்பிவீழுங்... களியனை யறிவுரை பேணாத மாநுட கசனியை யசனியை மாபாத னாகிய கதியிலி தனையடி நாயேனை யாளுவ தெந்தநாளோ... அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ் சன்பிலன் துன்பவன் புகழ்வாரா... அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந் தங்குமிங் குந்திரிந் திரைதேடுஞ்... சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ் சஞ்சலன் கிஞ்சுகந் தருவாயார்... தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின் தண்டையம் பங்கயம் புகழ்வேனோ... ஆசார வீன னறிவிலி கோபா பராதி யவகுணன் ஆகாத நீச னநுசிதன் விபரீதன்... ஆசாவி சார வெகுவித மோகாச ரீத பரவசன் ஆகாச நீர்ம ணனல்வளி யுருமாறி... மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம் வாயாத பாவி யிவனென நினையாமல்... மாதாபி தாவி னருணல மாறாம காரி லெனையினி மாஞான போத மருள்செய நினைவாயே... மதியணுவி லாத கோபி குருநெறியி லாத பாவி மனநிலை நிலாத பேயன் அவமாயை... வகையதுவி டாத பேடி தவநினைவி லாத மோடி வரும்வகையி தேது காய மெனநாடும்... விதியிலிபொ லாத லோபி சபைதனில் வராத கோழை வினையிகல் விடாத கூள னெனைநீயும்... மிகுபர மதான ஞான நெறிதனை விசார மாக மிகுமுன துரூப தான மருள்வாயே:... எருவாய் கருவாய் தனிலே யுருவா யிதுவே பயிராய் விளைவாகி... இவர்போ யவரா யவர்போ யிவரா யிதுவே தொடர்பாய் வெறிபோல... ஒருதா யிருதாய் பலகோ டியதா யுடனே யவமா யழியாதே... ஒருகால் முருகா பரமா குமரா உயிர்கா வெனவோ தருள்தாராய்... முருகா வெனவோர் தரமோ தடியார் முடிமே லிருதா ளருள்வோனே... தமது வேண்டுகோளுக்கிரங்கி முருகன் ஆண்டருளியதை, ஏகாப்பழி பூணு மருளற நீதோற்றிமு னாளு மடிமையை ஈடேற்றுத லாலுன் வலிமையை மறவேனே... அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னை, அருள் போற்றும் வண்மை - தரும் வாழ்வே ... விலைமாதர் ... கண்ணழிவு வைத்த புத்தி, ஷண்முக நினைக்க வைத்த, - கன்மவச மெப்ப டிக்கு - மறவேனே கருணை யடியரொ டருணையி லொருவிசை, சுருதி புடைதர வருமிரு பரிபுர, கமல மலரடி கனவிலு நனவிலு - மறவேனே வயிலி நகரில் அருள்பெற மயில்மிசை, உதவு பரிமள மதுகர வெகுவித, வனச மலரடி கனவிலு நனவிலு - மறவேனே அருணை நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமு மிருபெரு சரணமும் - மறவேனே கதிபெற்றிட நோக்கிய பார்வையும் - மறவேனே எனது தலையிற் பதங்கள் - அருள்வோனே என்று அடியவர் பெருமான் நன்றியோடு போற்றல் காண்க. அருணகிரிநாதர் திருப்புகழை நன்கு ஆராய்ந்தால், முருகனைப்பற்றிய பல உண்மைகள் பெறலாம். பேதபேதமொ டுலகாய் வளர்வது என்று அவர் உலகிற்கு அறிவுறுத்திய ஒரு மெய்யுரையை ஈண்டுக் குறித்தல் சாலும். உலகாய் அதாவது இயற்கையாய் வளரும் பொருளை உணர முயலாது, இயற்கை இன்பங்களைத் துறந்து, யோகிகள் என்றும், சந்நியாசிகள் என்றுஞ் சிலர் திரிவதை அருணகிரியார் பல இடங்களில் மறுத்து வெறுக்கிறார். அனித்த மான ஊனாளு மிருப்ப தாக வேநாசி யடைத்து வாயு ஓடாத வகைசாதித் ... தவத்தி லேகு வால்மூலி புசித்து வாடு மாயாச அசட்டு யோகி யாகாமல் எனவும், காவி யுடுத்துந் தாழ்சடை வைத்துங் காடுகள் புக்குந் தடுமாறிக்... காய்கனி துய்த்துங் காயமொ றுத்துங் காசினி முற்றுந் திரியாதே... எனவும் வருந் திருமொழிகளை ஓர்க. அருணகிரிநாதர் இத்தகைப் போலித் துறவொழுக்கம் பூண்டாரில்லை. அவர் உலகைவிடுத்து ஓடினாரில்லை. ஆனால் அவர் உண்மைத் துறவொழுக்கம் பூண்டார். உண்மைத் துறவா வது, உளத்திலுள்ள அழுக்காறு அவா வெகுளி முதலிய பேய் களையோட்டி, அவ்விடத்தில் அன்புக் கடவுளை எழுந்தருளச் செய்து, உலகை முருகெனக் கொண்டு, அருள் வாழ்வு நடாத்து வது. அருணகிரியார் அருள் வாழ்வு பெற்று, இயற்கையின் உள் ளுறையாக உள்ள முருகெனும் அழகை உணரும் பேறுபெற்றார். அவர் இப்பேறு பெற்றது, பலவிடங்களில் முருகனை அழகெனப் போற்றியதால் தெரிகிறது. அழகான மேனிதாங்கிய வேளே திருக்கைவேல் அழகிய பெருமாளே முதுமலை அழக குருநாதா புதுமாமயில் மீதணை யாவரும் அழகோனே சிவஞானப் பொருளூட்டு முண்டக அழகோனே கனகமயிலின் அழகுபொழிய கருணைமருவி வரவேணும் மணிமுதிராடக வெயில்வீசிய அழகா தமிழ் பெருமாளே ஐந்திந்த்ரியங்கள் வென்றொன்று மன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே அயிலு மயிலு மறமு நிறமு மழகு முடைய பெருமாளே - திருப்புகழ் அருணகிரிநாதர் உலகையே முருகாக்கொண்டு, இயற்கை அழகுணர்ந்தவரெனில், அழகுப் பெண்மக்களை ஏறக்குறைய ஒவ்வொரு திருப்புகழிலும் இழித்துக் கூறியதென்னை என்று சிலர் வினவலாம். அருணகிரியார் பெண்ணை வெறுத்துக் கூறி யதுபோல, எவருங் கூறவில்லை என்று பேசுவோர் பலர் என் பதை யான் அறிவேன். யான் மேலே பெண்களைத் தெய்வமென் றும், அவர்கள் மாட்டு முருகைக் காண்டலே பேரின்பமென்றும் விரித்தோதியுள்ளேன். எனது உள்ளக்கிடக்கை அருணகிரியார் கருத்துக்கு அரண்செய்வதாகாது என்று அன்பர் சிலர் கருதல் கூடும். ஆதலால், அருணகிரியார் பெண்மக்களைப்பற்றிக் கொண்ட கருத்தை, அவர் மொழிகொண்டு ஆராய்வோமாக. அருணகிரியார் பெண்மக்களை இழித்துக் கூறியுள்ளது உண்மையே. எப்பெண்களை அவர் இழித்துக் கூறினார்? அவர் பொதுவாக பெண்ணுலகை இழித்துக் கூறினார் என்று கோடலாகாது. ஒருவரைத் தனிமனைச் சயனமெத் தையினில்வைத் தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட் டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட்டினிதாக ஒருவரைத் தமதணைக் கருகுற ... ஒருவரைப் பரவசப் பட ... உயிர்பிழைப் பதுகருத் தளவுமுப் பசமெனச் செயுமானார் ஒருவ ரொடு கண்கள் ... ஒருவ ரொடு செங்கை யுறவாடி ஒருவ ரொடு சிந்தை ஒருவ ரொடு நிந்தை ஒருவரொ டிரண்டு முரையாரை விரகுடன் நூறாயிர மனமுடை பாவிகள் முப்பதுகோடி மனத்தியர் எனவரும் உரைகளாலும், வேறு உரைகளாலும் அருணகிரியார் இழித்துக் கூறிய பெண்கள் யாவர் என்பது ஆராயற்பாலது. அவர் இழித்துக் கூறிய பெண்மக்கள் வேசையர்களேயாவர். இவ்வுண்மை, மிக மன மருள்கொடு பதியிலவர், பண் பிலாடம்பரப்பொது மாதர், பொருட்பறி மாதர், பொன்பறி விலைமாதர், பிடித்த இடைப் பொதுமாதர், பொன்தரப் பற்றும் பொதுமாதர் எனவரூஉந் திருப்புகழ்க் கருத்துக்களான் வெள்ளிடைமலைபோல் விளங்குதல் காண்க. மானம்விற்ற லுக்கே பெண்ணாகப் பிறந்தோம் என்று கருதி வாழ்ந்துவரும் பொருட் பெண்டிர்கள் பெண் தெய்வங்களல்ல. அவைகள் பேய்கள். தெய்வப் பெண் வடிவு தாங்கிய உயிர்களை அவைகள் என்றும், பேய்கள் என்றும் எழுதும் மறத்துக்குள்ளானது குறித்து வருந்துகிறேன். அவர்களைப் பேயாக்கிய கொடுமை தீயொழுக்க முடைய ஆண் மக்களுடைய தாகும். ஆணுலகு தூய்மை யடையு மட்டும் வேசையருலகமென்று ஒன்றிருந்தே தீரும். வேசையர் கூடா ஒழுக்கத்தைத் தம் மரபுத் தொழிலாகக் கொண்டு வாழ் கின்றனர். அவர் சேர்க்கையால் பேய் வாழ்வும் நோய் வாழ்வுங் கூடுமேயன்றித் தெய்வ இன்ப வாழ்வு மலராது. அவர்பால் முரு கெனுந் தெய்வமணமும் கமழாது. அவரால் தீயொழுக்கமும், அதனால் பல கேடுகளும் பரவலால், அவரை அறிஞர் இழித்துக் கூறுகிறார். முருகெனும் அழகு, நல்லொழுக்கமுடைய நங்கையர் மாட்டே ஒளிர்வது. அவ்வழகே பாட்டாகப் பரவி நிற்பது. அவ் வியற்கை யழகில் தோயும் உளமுடைய பாவலர்க்குப் பெண் ணின் கடவுட்டன்மை விளங்கும். பெண்ணைச் சிற்றின்பப் பொருள் என்று நினைந்து கொண்டிருக்கு மட்டும் மெய்யுணர்வு பிறத்தலரிது. அருண கிரியார் உலகோரை நோக்கி பெண்ணைச் சிற்றின்பப் பொரு ளாகக் கருதி இடர்ப்படாதேயுங்கள் என்னும் பொருளை அறிவுறுத்தும்வழித் தமது உள்ளத்தை நொந்தவாறு காண்க. பெண்ணைச் சிற்றின்பப் பொருளாகக் கருதுவதும் பேரின்பத் தெய்வமாகக் கருதுவதும் இந்நெஞ்ச மன்றோ? பெண் பெண்ணாகவே யிருக்கிறாள். அவளைப் பேயாக்குவதும் தெய்வமாக்குவதும் ஆடவர் உளமேயாகும். ஆதலால் ஆடவர் உளத்தைத் திருத்துவதே அருணகிரியாரின் அன்புமொழி யென்க. அருணகிரியார் அருளிய பெண்களைப்பற்றிய பாடல் களைத் துருவித் துருவி ஆராய்ந்தால், அப்பாடல்கள் தோறும் இந்நுட்பம் புலனாகும். திருப்புகழ்ப் பாக்களை உற்றுநோக்குக. அருணகிரியார் பெண்ணாசையைக் கடிந்து கூறியிருத்தல் உண்மை. பெண்ணைக் கடிதலுக்கும் பெண்ணாசையைக் கடித லுக்கும் வேற்றுமையுண்டு. பெண்ணைக் காமமெனும் ஆசைப் பொருளாகக் கொள்வதொன்று; பெண்ணைத் தெய்வமாகக் கோடல் இன்னொன்று. பெண்ணை ஆசைப் பொருளாகக் கருது வது அறியாமை. அவ்வழகைக் கடவுளாகக் கருதுவது அறிவு. கீழோர் பெண்ணைக் காமப் பொருளென்று கொண்டு இடர்ப் படுவர்; மேலோர் பெண்ணைத் தெய்வமென்று கொண்டு இன்புறுவர். மக்கள் நல்லறிவு பெறும்போது, பெண்ணை ஆசைப் பொருளாக எண்ணும் நெஞ்சைக் கடிதல் இயல்பு. அருணகிரிநாதரும் பெண்ணின்மாட்டெழும் காமவேட் கையைக் கடிந்தாரே யன்றிப் பெண்ணைக் கடிந்தாரில்லை. அவர், மடவாரொடு - உருகியே வருபெற்றி மதனநா டகபித்து, ஒழியுமா றொருமுத்தி தரவேணும் கலவியை நிந்தித் திலகிய நின்பொற், கழல் தொழும் அன்பைத் தருவாயே விரகினி லெனதுறு மனம துருகிய, பிரமையு மறவுன தருள் கைவர மயல் கவலைபட்டு, திருடனென வெட்கி - அலை வேனோ அரிவையர்கள் ஆசைப் பாட்டிலே - கொடியேன்யான் விளையு மோக மாமாயை கழலுமாறு நாயேனும், விழலனாய் விடாதேநின் - அருள்தாராய் காமுக னகப்பட்ட ஆசையை மறப்பித்த, கால்களை மறக்கைக்கும் - வருமோதான் மாதர் - இருகண் மாயையி லேமூழ் காதே, உனது காவிய நூலா ராய்வேன், இடர்படா தருள் வாழ்வே நீயே - தரவேணும் என்று பெண்ணாசையைக் கடிந்து, அவ்வாசை வலையில் சிக்குறுவதால் விளையுங் கேட்டை, மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள் போய்த் தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு கால்கள்தடு மாறி செவி மாறிபசு பாசபதி சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளி சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு சோகைகள மாலைசுர மோடுபிணி தூறிருமல் சூழலுற மூலகசு மாலமென நாறியுட லழிவேனோ என்று விளக்கியிருக்குமாற்றானுணர்க. இவ்வாறு பெண்ணாசையைக் கடிந்து கூறிய அருணகிரி யார் பெண்ணைப் போற்றி யிருக்கிறாரோ வெனில், போற்றி யிருக்கிறார் என்று தியங்காது சொல்க. பெண்ணில் முருகை யுணர்ந்த பின்றை அருணகிரியார், அரிய பெண்களைக் காமப் பொருளாகக் கொண்டு கெட்டேனே என்று வருந்துகிறார். அரிய பெண்கள் நட்டைப் புணர்ந்து, பிணியுழன்று சுற்றித் திரிந்த... எனவரூஉந் திருப்புகழில் அருணகிரியார் பெண்ணைப் பற்றிக் கொண்ட கருத்துப் புலனாகிறது. பெண்களை அரிய என்னும் அடையால் அவர் சிறப்பித்திருத்தல் அறிக. அருண கிரியார், பெண்ணாசையைக் கடிந்து முருகனை வேண்டும் போது, பல இடங்களில், பெண்ணுடன் கூடியுள்ள முருகன் என்னுங் கருத்தமையப் பாடிக் குறிப்பாகப் பெண்ணின் பெரு மையை விளக்குகிறார். எடுத்துக் காட்டாக இரண்டொன்று வருமாறு: அக்குறிப்பு, குரவநறுமளககுழல் கோதிக் காட்டியே... அரிவையர்கள் ஆசைப் பாட்டிலே- கொடியன் யான் என வரூஉந்திருப்புகழில், கரிய குழல் குறமகளை வேலைக் கரத்தணை பெருமாளே என்றும், விடமும் அமுதமும் மிளிர்வன இணைவிழி... மகளிர் மகளிரு மலபல வினைகொடு எனவரூஉந் திருப்புகழில் புனமதி லினிதுறை - தனிமானும், அமரர் அரிவையும் இருபுடையினும் வர... சரவண சுரபதி பெருமாளே என்றும் வருதல் காண்க. அருணகிரிநாதர் வேறு ஒரு வழியாகவும் பெண்ணின் பெருமை பேசுதல் நோக்கற்பாலது. நீலச் சிகண்டியில் ஏறும் பிரான்எந்த நேரத்தினுங் கோலக் குறத்தியுடன் வருவான் - அலங்காரம் குறநற் பாவை தாட்பணி, கருணை தமிழிற் பாடல் கேட்டருள் - பெருமாளே பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய - மணவாளா - திருப்புகழ் மன்றற் பைம்புனத் தாள்ப தாம்புயம் வந்திக் குந்தணிக் காம வாஞ்சையன் வனசரி பதயுக கஞ்சம் வணங்கும் பாக்ய கதம்பன் - திருவகுப்பு பணியா வெனவள் ளிபதம் பணியும் தணியா அதிமோ கதயா பரனே பாளைக் குழல்வள் ளிபதம் பணியும் வேளைச் சுரபூ பதிமே ருவையே மதிவா ணுதல்வள் ளியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே - அநுபூதி மேலும் நம் பெரியார், மங்கையர் சுகத்தை வெகு, இங்கிதமெ னுற்ற மனம்,உன்றனை நினைத் தமைய - அருள்வாயே வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள், மாயம தொழிந்து - தெளியேனே - மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து, மாபத மணிந்து, - பணியேனே - ஆதியொடு மந்தமாகிய நலங்கள், ஆறு முகமென்று - தெரியேனே என்று பெண்ணைப் பேயென்று நினைப்பதினின்றும் நீங்கி, அவளைத் தெய்வமென்று போற்றுவதை யோர்க. மற்றுமோரிடத்தில் அடிகள், ஒரு பாட்டின் ஒரு பாதியில் பெண்ணை மாயையாகக் கருதி இடர்ப்பட லாகாதென்றும், மற்றொரு பாதியில் அப்பெண்ணை முருகாகப் போற்றுதல் வேண்டுமென்றுங் குறிப்பாக அறிவுறுத்தியுள்ள நுட்பத்தை உணர்வது அறிவுடைமை. பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண் சேலென் பதாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக் காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே எனவரூஉங் கந்தரலங்காரச் செய்யுளால், மெய்யடியார் உண்மையை நன்கு தெருட்டிக் காட்டல் உணர்க. அருணகிரிநாதர் பெண்ணாசையைக் கடியப் புகுமிடங் களில் பெண்ணின் அழகை அதாவது முருகை வியந்து வியந்து பாடுகிறார். அப் பாமலர்களில் இயற்கை மணங் கமழ்கிறது. தேனுலாவிய மாமொழி இனி தாங்கனி வாயமு தூறல்கள் அளிபுறா மயிலென்று சொலுங்குரல் அமுத மொழி பதறியெழ ஆலுமயி லொத்த தோகையர்கள் நெய்த்த கரிகுழல் அறலோ முகிலோ முகிலாமெனும் அளகம் மதிபோ லுயர் நுதலும் முகிழாகிய நகையும் முருகு செறிகுழல் முகி லென நகில்நறு முளரி முகையென இயலென மயிலென, முறுவல் தளவென நடைமடை வனமென வேலையு நீலமும் வழுவாங் கிருவாள் விழி சோதிம மதிபோல் முகம் மாந்தளிர் போல் வடிவம் மயில் குயிலெனும்புட்குரற் பகர இரசபா கொத்தமொழி யமுர்தமா ணிக்கநகை யிணையிலாச் சத்திவிழி யார்பசும் பொனிறர் எழிலிநே ரொத்தஇரு ளளகபா ரச்செயல்க ளெழுதொணா தப்பிறையி னாரரும் புருவர் எழுதுதோ டிட்ட செவி பவளநீ லக்கொடிக ளிகலியா டப்படிக மோட்டும் பொனுறு திங்கள்மேவும் இலவுதா வித்தஇதழ் குமிழைநே ரொத்தஎழி லிலகுநா சிக்கமுகு மாலசங் கினொளி யிணைசொல்க்ரீ வத்தரள வினவொள்தா லப்பனையி னியல்கலா புத்தகமொ டேர்சிறந் தவடி யிணையிலா னைக்குவடெ னொளிநிலா துத்திபட எனவரூஉந் திருவாக்குகளில் இயற்கைப் பொருள் செறிதல் காண்க. இவ்வியற்கை வனப்பை முருகெனக் கண்டு தொழாது, இதை இழிவெனக் கருதிக் கெடும் பாழும் மனக்கொடுமையை என்னென்று சொல்வது? அருணகிரியார் பெண்களைச் சிறுமை யாகக் கருதி, அவர்கள் உறவு கொண்டபோது, பிணி மூப்படைந்து வருந்தியதும், பின்னை அவர்களை முருகாகக் கொண்ட போது, இளமை அழகெய்தி, அநுபூதி நிலை பெற்றதும் உன்னற்பாலன. பெண்ணைத் தெய்வமாகப் போற்றும் ஒருவன் எக்குற்றத்துக்கும் ஆளாகான் என்பது ஒருதலை. அருணகிரிநாதர் பெண்ணை மாயையென்று கருதியபோது விளைந்ததென்னை? அவர் அவ்வெண்ணத்தை மாற்றிக்கொண்ட பின்னை நேர்ந்ததென்னை? முன்னே முதுமையும் நோயும் உற் றார்; பின்னே இளமையும் இன்பமும் பெற்றார். முன்னர்ப் பெற்ற முதுமைநோய் போக்க அவர் காய கற்பங்களுண்டனரோ? இல்லை. இல்லை. பின்னை என் செய்தார்? இயற்கையின் அடிப் படையாயுள்ள முருகெனும் இளமையை யுணர்ந்து, அவ்விள மையை உன்னி உன்னி, இளமைப்பேறு பெற்றார். சார்ந்ததன் வண்ணமாகும் இயல்பு உயிர்க்கு உண்டு. என்றும் மாறா இளமையுடைய முருகனைப் போற்றுவோர் என்றும் இளையரா யிருத்தல் இயல்பு. அருணகிரியார் முன்னை வாழ்வில் பெற்ற முதுமை நோய் நிகழ்ச்சிகளை நினைந்து, அம்முதுமை நோய் வேண்டாவென் றும், நோயிலா வாழ்வும் இளமையும் வேண்டுமென்றும், இப்பேற்றை அருளவல்ல ஆண்டவன் இளையோன் என்றும் உலகிற்கறிவுறுத்திய பாக்கள் பலப்பல. அவைகளில் சிலவருமாறு :- நிலையாப் பொருளை யுடலாக் கருதி நெடுநாட் பொழுது மவமேபோய் நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள் நிறைவாய்ப் பொறிகள் தடுமாறி மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல மருள்வாயே எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேற்பிடித்து இடர்முளைக ளேமுளைத்து வளர்மாயை எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து இருளிலைக ளேதழைத்து மிகநீளும் இழவுகளை யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியுமுடல் மாமரத்தின் அருநீழல் இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு இனியதொரு போதகத்தை யருள்வாயே பசையற்ற வுடல்வற்ற வினைமுற்றி நடைநெட்டி பறியக்கை சொறியப்பல் வெளியாகிப் படலைக்கு விழிகெட்ட குருடுற்று மிகநெக்க பழமுற்று நரைகொக்கி னிறமாகி விசைபெற்று வருபித்தம் வளியைக்க ணிலைகெட்டு மெலிவுற்று விரல்பற்று தடியோடே வெளிநிற்கும் விதமுற்ற இடர்பெற்ற ஜனனத்தை விடுவித்து னருள்வைப்ப தொருநாளே இனியதொ ரின்பம்வி ளைந்த ளைந்துபொய் வனிதையர் தங்கள் மருங்கி ணங்கிய இளமை கிழம்படு முன்ப தம்பெற வுணர்வேனோ கொக்காக நரைகள் வருமுன மிக்காய விளமை யுடன்முயல் குற்றவேல் அடிமை செயும்வகை யருளாதோ நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி நாரி யென்பி லாகு மாக மதனூடே நாதமொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடி நாட றிந்தி டாமலேக வளராமுன் நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரை நூறு செஞ்சொல் கூறிமாறி விளைதீமை நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞான நூல டங்க வோத வாழ்வு தருவாயே நின்பங்கொன் றுங்குற மின்சர ணங்கண்டுந் தஞ்ச மெனும்படி நின்றன்பின் றன்படி கும்பிடு மிளையோனே பங்க நீறெழ வேல்விடு இளையோனே அசுரர் தூள்பட அயில்தொடும் அறுமுக இளையோனே கோ தாட்டிய வாமி யெனவரும் இளையோனே இனியகனி மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த இறை வகுக கந்த என்றும் இளையோனே மரகத நாரா யணன் மருமக சோணாசல மகிப சதாகாலமும் இளையோனே இளமையுமு னழகுபுனை ஈராறு தோணிரையும் இருபதமும் அறுமுகமும் யானோத ஞானமதை யருள்வாயே யாண்டுமுள இறைவன் பெண் மக்களிடத்து உறைதலை மட்டும் ஈண்டுச் சிறப்பாகக் குறிப்பதன் உட்கிடக்கை என்னை என்று சிலர் ஐயுறலாம். இறைவன் யாண்டுமிருப்பது உண்மை. அவன் யாண்டு முள்ளதை உணரும் ஒருவன் எத்தகைக் கேடும் நிகழ்த்த ஒருப்படான். கேடு நிகழ்த்துவோர் பெரிதும் ஆண்ட வன் உண்மையை யாண்டுங் காணாதவரேயாவர். இவ்வுண்மை யுணர்வெனும் விளக்கை மறைத்துக் கொண்டிருக்கும் மனமாசு கள் பல. அவைகளுள் சிறந்தது பெண்ணைக் காமப் பொரு ளாகக் கருதுவது. இம்மாசுள்ள ஒருவன் எல்லாக் கொடுமை கட்கும் உறையுளாவன். ஆதலால் எல்லாக் கொடுமைகட்குந் தாயகமாயுள்ள இம்மாசு ஒன்றினைக் கழுவ முயல்வது மக்க ளின் தலையாய கடமையாகும். காம உணர்வின்றி உலகில் வாழ முடியுங்கொல் என்றும், உலகில் படைப்பு எங்ஙனம் நிகழும் என்றும் சிலர் கருதலாம். பெண்ணை வெறுத்துக் காட்டுக்கோடும் போலியறத்தை யான் முற்றும் வெறுப்பவன். ஆண் பெண்ணுடனும் பெண் ஆணுட னும் வாழ்ந்து, உலக வளர்ச்சிக்குத் துணைபுரிவது, இயற்கை யறமென்பது எனது கொள்கை. இயற்கை யறமாவது, ஒருத்தியும் ஒருவனும் காதல் வழி நின்று, இரண்டோர் உயிர்களை யீன்று, பின்னைக் கூடல் நீத்து, உள்ளொளி காண முயல்வதாகும். காதல்நெறி விடுத்துக் காமவெறியில் புகுவோன் சாமளவும் அந்நெருப்பில் வீழ்ந்து வெந்தொழிவன். பெண் ஆணுடன் கூடலும், ஆண் பெண்ணுடன் கூடலும் எற்றுக்கு? பிள்ளைப் பேற்றிற்கென்று சொல்ல வேண்டுவ தில்லை. பிள்ளைப் பேறு நோக்கின்றி, ஆண் பெண்ணுடன் கூடுவது, பெண்ணைக் காமப் பொருளாகக் கருதுவதாகும். ஒருவன் ஒருத்தியுடன் கூடி வாழ்ந்து பிள்ளைப் பேறு பெற்ற பின்னர் அவ்வொருத்திபால் தாய்மை மலர்கிறது. தாய்மை மலர்ந்த ஒருத்தியைத் தாயாகவே கருதல் அறி வுடைமை. தாய்மைக் கருத்து நுழையப்பெற்ற ஒருவனுக்கு நாளடைவில் அவள் மாட்டு இறைமை காய்த்துக் கனிதல் புல னாகும். அவ்வுணர்வு யாண்டுமுள்ள இறையைப் புலப்படுத்தும். பெண்ணின்பால் பெண்மை தாய்மை இறைமை என்னும் மூன்று நீர்மைகள் விளங்குதல் கருதற்பாலது. பெண்ணைக் காமப்பொருளென்று கருதிக் கொண்டிருக்குமட்டும் இறைமை உணர்விற்கு இடமேது? ஆதலால் இறைமை யுணர்விற்குப் பெருந்தடையாயுள்ள காம எரி, தங்கள் மனத்தி லுறாவண்ணம், ஆண் மக்கள் இளமைதொட்டுப் பயின்று வரல்வேண்டும். பெண்ணைக் காமப் பொருளெனக் கருதும் மனமாசு, பெருந் துன்பத்துக்கு ஊற்றா யிருத்தலான், பெண்ணைக் கடவுளெனக் கருதுமாறு ஆணுலகை நோக்கி வேண்டுகிறேன். இங்கே சுருங் கிய உரைகளால் எனது உட்கிடக்கையை வெளியிட நேர்ந்தமை யால், இதைப்பற்றி விரிந்த விளக்கம் விரும்புவோர், யான் எழுதியுள்ள பெண்ணின் பெருமை என்னும் நூலை முற்றும் படித்துப் பார்ப்பாராக. ஆண்டவனை இயற்கை வாயிலாகவும், பாட்டு ஓவியம் இசை வாயிலாகவும் வழிபடலாம் என்று மேலே சொல்லி யிருக் கிறேன். காமத்துக்குக் கசிந்துருகும் பாழ்நெஞ்சம் மாறப் பெற்றோரது புலன்கட்குப் பெண்ணின்பாலுள்ள இயற்கை வடிவும், பாட்டும், ஓவியமும், இசையும் விருந்தாகும். இவ்வழி பாட்டை நிகழ்த்த நிகழ்த்தப் பெண்ணின்மாட்டுத் திகழும் இறைமை புலனாகும். இத்தகைய இறைமைப் பொலிவிற்கு நிலைக்களனாக நிற்கும் பெண் யாண்டில்லை? எவ்வீட்டில் இல்லை? பெண் தெய்வம் யாண்டும் எழுந்தருளி யிருக்கிறது. இத்தெய்வத்தைக் கண்டு பேறு பெறுங் கருத்துப் பெறாது, காசிக்குங் காட்டுக்கும் ஓடுவது அறியாமையா? அறிவுடைமையா? அன்பர்களே! உன் னுங்கள்! இறைமைக்கு உறையுளாக நிலவும் பெண்ணைக் காமப்பொருளெனக் கருதிப் பாழ்படும் நெஞ்சைப் பிளந்தெறிய வேண்டுமன்றோ? காமக்கண்ணாடியைக் கழற்றி நோக்கினால், கடவுளைப் பெண்ணில் காணலாம்; பின்னை அக்கடவுளை எங்குங் காணலாம். காமப்பொருளென்று பெண்ணைக் கருதுவது, கடவுள் காட்சிக்கு இடையூறு நிகழ்த்தலான், அவ் விழிந்த கருத்தை மாற்றுமாறு ஆணுலகிற்கு விண்ணப்பஞ் செய்து கொள்கிறேன். ஆகவே பெண்ணைக் காமப் பொரு ளென்று கருதுவது வாழ்விற்கு நலந்தருவதா அல்லது பெண்ணைக் கடவுளென்று கருதுவது வாழ்விற்கு நலந்தருவதா என்பதை அன்பர்கள் ஆய்ந்து ஓர்ந்து உண்மை யுணர்வார்களாக. சில போலி வேதாந்திகள் பெண்ணாசையை வெறுத்துக் கூறாது பெண்ணையே வெறுக்கிறார்கள். யாண்டுமுள்ள இறை வன் பெண்ணின்பால் இல்லை என்பது அவர்கள் கொள்கை போலும்! இக்கொள்கை, உண்மை வேதாந்தத்துக்கு அரண் செய்வதன்று. பெண்ணைக் காமப் பொருளாகக் கருதலாகாது என்னுங் கொள்கைக்கு அருணகிரியாரின் பின்னைய வாழ்வு பேரிலக்கிய மாக நிற்கிறது. அவர்தம் வாழ்வுநுட்பம் உணராதார், அருண கிரிநாதர் பெண்ணை வெறுத்தவர் என்று பொதுப்படப் பருமையாகக் கூறுவர். அருணகிரியார் மறை மொழிகளை நுணுகி ஆராய்வோர்க்கு அவரது உள்ளக்கிடக்கை நனி விளங்கும். முருகன் அருள்பெற்ற மெய்யடியாராகிய அருணகிரியார், எல்லாவிடத்தும் முருகைக்கண்டு, குழைந்து குழைந்துருகு முளத்தில் பெருக்கெடுத்தோடும் இன்ப வெள்ளத்திற் றோய்ந்து, பாடிய திருப்புகழை என்னென்பேன்! என்னென்பேன்! திருப் புகழ், சந்த அலைவீசுஞ் செந்தமிழ்க் கடலன்றோ? சிவபெரு மானை வழிபட்டு நால்வர் தமிழ்வேதம் பாடினர். திருமாலை வழிபட்டுப் பன்னிருவர் தமிழ்வேத மோதினர். முருகனை வழி பட்டு அருணகிரிநாதர் தமிழ்வேதமருளினர். அருணகிரியாரின் திருப்புகழும், ஏனைய பாடல்களும் தமிழ் மறையேயாகும். செம் மொழியிற் சிறந்த அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை ஓதும் போதும், பிறர் ஓதக் கேட்கும் போதும், முருகக் கடவுளின் நுண்ணிய வடிவம் அகத்தில் புலனாவது போன்ற ஒரு தோற்ற மும், ஒரு வித அன்பும், இன்ப எழுச்சி மேலீடும் நிகழ்வதைப் பெறலாம். குமரகுருபர சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், இக்காலத்துப் பாவலராக இலங் கிய நம் சுப்பிரமணிய பாரதியார் முதலியோர் முருகக் கடவுளைப்பற்றிப் பாடிய பாடல்களிலும் முருகைக் காணலாம். 8. உறுதியும் நோன்பும் (முருகன் வழிபாட்டுக்கு உறுதி இன்றியமையாதது - ஏட்டுக் கல்வி - உறுதியும் அன்பும் - உறுதியின் பெற்றி - உறுதியின் முற்கால தற்கால நிலை - உறுதியும் ஆண்டவனும் - தமிழ் மக்களும் உறுதியும் - உறுதி யுடையார்க்கு மருந்து இயற்கை - மருத்துவன் முருகன் - திருக்கோயில் வழிபாட்டில் உறுதி - இவ்வழிபாட்டின் நுட்பம் - கிறிது - கடவுள் ஒருவரே - உடலோம்பல் - நோன்பு - நோன்பு கொள்ளும் முறைப்பாடு - நோன்பால் விளையும் நலன்கள் - வழிபாடு.) முருகனை வழிபடுவோர்க்கு முருகனிடத்து இடையறாத உறுதியிருத்தல் வேண்டும். உறுதியின்றிச் செய்யப்படும் வழி பாடுகள் போலியாகவே முடியும். கடல் பொங்கி வரினும், மலை குலைந்து சாயினும், வானிடிந்து வீழினும் முருகன் காப்பான் என்னும் உறுதி முருகன் வழிபாட்டிற்கு அடிப்படையானது. இவ்வுறுதியுடையார் விரும்பும் எல்லா நலங்களையும் பெறுவர். இன்றியமையாத அருட்செல்வம் முதலிய எல்லாச் செல்வங் களையும் முருகன் அவர்க்கு அளிப்பன். முருகப்பெருமான் தன்னை வழிபடும் அன்பர்க்குத் தோன்றாத் துணையாய் நின்று செய்துவரும் பேருதவி, அவன் அடியவர்க்குத் தெரியும். உறுதி யால் முருகனிடத்து எல்லாம் பெறலாம். ஒன்றனிடத்தில் உறுதி எல்லார்க்கும் உறாது; உறுதி சிலர்க்கு எளிதிலும் சிலர்க்கு அரிதிலும் உறும்; சிலர்க்கோ எளிதிலாதல் அரிதிலாதல் உறுதி உறுவதில்லை. உறுதிப் பேற்றிற்கு ஏட்டுக்கல்வி ஆராய்ச்சி வேண்டும் என்னும் நியதியில்லை. சில வேளைகளில் ஏட்டுக் கல்வி ஆராய்ச்சி முதலியன உறுதிக்கு இடையூறு நிகழ்த்துவனவாகவும் முடி கின்றன. சிலபோழ்து அவை உறுதிக்கு ஒரோவழித் துணை புரிதலுமுண்டு. ஏட்டுக் கல்வி ஆராய்ச்சி முதலியன இல்லாதா ரிடத்து உறுதி எளிதில் விரைவில் கால்கொள்வது இயல்பா யிருக்கிறது. ஏட்டுக் கல்வி ஆராய்ச்சி முதலியவற்றிற்கும் உறு திக்குந் தொடர்பில்லை என்பதொன்றே ஈண்டுக் கொள்ளற் பாற்று. உறுதிக்கு இன்றியமையாதது ஒன்றுளது. அஃது அன்பு அன்பாகும். எவனுக்கு எப்பொருளிடத்து அன்பு நிலைத்து முருகு எழுகிறதோ, அவனுக்கு அப்பொருளினிடத்து உறுதியும் படிந்து நிலைத்து நிற்கும். ஆகவே உறுதி, அன்புடன் தொடர்புடையதெனக் கொள்க. உறுதி, தன்னைக் கொள்வோரையும், தன்னால் கொள்ளப் படுவோரையும் அல்லது கொள்ளப்படுவதையும் ஒருமைப் படுத்தும் பண்பு வாய்ந்தது. உறுதி இரட்டை யுணர்வை அழிப் பது. இரண்டற்ற உறுதியில் என்ன நிகழாது? நினைந்த எல்லாம் நிகழும். இல்லா ஒன்றை உண்டு என்னும் உறுதிகொண்டு ஒருவன் நோக்கினால், அதன் உண்மை அவனுக்குப் புலனாகும். உள்ள ஒன்றை இல்லை என்னும் உறுதி கொண்டு அவன் நோக்கினால், அஃது அவனுக்குப் புலனாகாது. உள்ள ஒன்றை இன்மைப்படுத்தும் அல்லது இல்லா ஒன்றை உண்மைப்படுத் தும் ஆற்றல் உறுதிக்கு உண்டு. இத்தகைய உறுதியில் ஒன்றி நிற்கும் ஒருவனால் என்ன ஆற்றல் இயலாது? ஓரன்பன், தன் வழிபடுங் கடவுளிடத்தில் குலையாத நிலைத்த நிறைந்த உறுதிகொண்டு பழகுவனேல், அவ்வுறுதி, கடவுள் திருவருளை அவனுடன் இரண்டறக் கலக்குமாறு செய்யும். அவன் கடவுளாவன் என்றுஞ் சொல்லலாம். அவன் என்ன நினைந்து வேண்டினும் பெறுவன். செயற்கருஞ் செயல் களும் அவனால் நிகழ்த்தல் இயலும். அவன் மனங்கொள்ளின் எல்லாம் வல்ல சித்தனும் ஆதல் கூடும். உறுதிக்குள்ள அளவில் லாத வல்லமையைச் சொல்லால் சொல்லுந் தகையதன்று. மிகப்பழைய காலத்தில் மக்களிடை உறுதி நிலைத்திருந் தது. அதனால் அவர்கள் பல அருவினைகளும் ஆற்றினார்கள். நாளடைவில் மன்பதைக்கண் உறுதி குலையலாயிற்று. இந் நாளிலோ உறுதி பெரிதுங் குலைந்து பட்டதென்று கூறல் மிகை யாகாது. உறுதி குலைந்து விட்டாலென்னை? அதனால் என்ன கேடு விளைந்தது என்று கடாவுவோர் இருக்கிறார். இக்கடா விற்குப் பலபட விடையிறுக்க வேண்டுவதில்லை. உறுதிக் குலை வால் உலகம் உள்ளொளி (ஆத்ம சக்தி) இழந்து, புறக்கருவிகட்கு அடிமையாகியது என்றும், அதனால் வாழ்வின் துறைகளில் இசை படர்ந்து நிற்பது ஒழிந்தது என்றும் சுருங்கிய முறையில் விடையிறுக்கலாம். இருவர் நோய்வாய்ப்படுவதாக வைத்துக் கொள்வோம். இவருள் ஒருவன் ஏட்டுக்கல்வி ஆராய்ச்சி யுடையவன்; ஆனால் கடவுளிடத்து உறுதியில்லாதவன். மற்றொருவன் ஏட்டுக்கல்வி ஆராய்ச்சி யில்லாதவன்; ஆனால் கடவுளிடத்து உறுதியுடைய வன். முன்னவன் தான் நோயுற்ற காரணத்தை ஆய்ந்து ஆய்ந்து, அவர் சொல்லும் மருந்தையும் இவர் கொடுக்கும் மருந்தையும் உண்டு திண்டாடிக் கொண்டிருப்பன். பின்னவனோ ஆண்டவ னிடத்தில் உறுதியுடைய னாதலான், இவன் இறைவனே! நோய் தீர்க்க என்று வேண்டுதல் செய்யும் வாயிலாக நலம் பெறு கிறான். இவன் நோய் போக்கியது கடவுளா உறுதியா எனில், கடவுள் என்று யான்கழறேன்; உறுதியென்றே உரைப்பேன். உறுதி இல்லாவிடத்துக் கடவுள் திருவருள் இன்மையானும், உறுதியினூடே திருவருள் கலந்து நிற்றலானும் ஈண்டு உறுதிக்கு உயர்வளிக்கப்பட்டதென்க. கடவுள் திருவருள் உறுதியள வாகவே தன் வினைபுரியும் என்பதும் ஈண்டுக் கருதற்பாலது. உறுதி, நம்பிக்கை அல்லது விசுவாசம் எல்லாஞ் செய்யும். பண்டைத் தமிழ் மக்கள் முருகன்பால் மிக உறுதி கொண்டு வாழ்வு நடாத்தினார்கள். அவர்கள் கொண்ட முருகன் எவன் என்று ஈண்டு மீண்டுங் கூறவேண்டுவதில்லை. பழந்தமிழர் போற்றிய முருகன் இயற்கையை உடலாக்கொண்டு, அதை இயக்கும் செம்பொருள் என்பது முன்னர் விளக்கப் பட்டது. அம் முருகனிடத்து உறுதிகொண்ட மக்கள், இளமை மணம் கடவுட்டன்மை அழகு முதலிய இயற்கை யருட்செல்வம் பெற்றுச் சிறந்து வாழ்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வாழ்வுடையார் நோய்வாய்ப்படல் அரிது. ஒரு வேளை படநேரின், அவர் மருந்தையும் மருத்துவனையும் நாடி ஓட மாட்டார். அவர்க்கு மருந்து இயற்கை; மருத்துவன் முருகன். அவர், ஞாயிற்றொளி காற்று புனல் முதலிய இயற்கைப் பொருண்மாட்டுக் கொண்டுள்ள உறுதியாலோ, அல்லது இயற்கை நினைவூட்டும் இயற்கைச் சாயலாக நிலவும் (முன்னர் வழிபாட்டில் குறிப்பிட்ட) பொருண்மாட்டுக் கொண்டுள்ள உறுதியாலோ, வேண்டுதல் வாயிலாக நோய் போக்கி வந்தனர். வேண்டுதல் பழக்கம் இன்னுஞ் சிலவிடங்களில் ஆட்சியிலிருக் கிறது. பழந்தமிழ் மக்கள் வழி வழி வந்த இக்காலத் தமிழ் மக்களிற் சிலர் நோயால் பீடிக்கப்படும்போதும், வேறு பல குறைகளால் வருந்தும்போதும், முருகனை நோக்கி வேண்டுதல் செய்து, அவன் திருக்கோயில் சென்று, தொண்டு புரிந்து, நோயும் குறைகளும் நீங்கப் பெறுகின்றனர். இவர்மாட்டும் இயற்கை முருகன் உறுதிப்பாடு குறைவு பட்டிருத்தல் வெள்ளிடைமலை. ஆனால் இவர்பால் இயற்கையின் சாயலாகவுள்ள திருக்கோயில் உறுதிப்பாடு நிறைந்து நிற்கிறது. எதன் மீதோ உறுதிப்பாடிருத் தல் நன்று. முருகக்கடவுள் எழுந்தருளியுள்ள திருத்தணிகை, திருப் போரூர், திருமயிலம், திருவாவினன்குடி (பழனி), திருப்பரங் குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்) முதலிய திருப்பதி களில் மக்கள் உறுதி மேலீட்டான் நிகழ்த்துஞ் செயல்களை இன்றுங் காணலாம். இச்செயல்கள் இக்கால ஆராய்ச்சி யுடையார்க்கு மிக இழிவாகத் தோன்றும். உறுதியுலகம் வேறு; ஆராய்ச்சி யுலகம் வேறு. திருப்பதிகளிலுள்ள கோயில்களும், கோயில்களிலுள்ள வடிவங்களும், உறுதியில் ஒன்றித் திளைத்து நிற்போர்க்குக் கல் மண் செம்பாகத் தோன்றா. அவை அவர்க்கு முருகாகவே தோன் றும். மரத்தால் ஆக்கப்பட்ட ஓர் அழகிய புரவியை மரம் என்னுங் கருத்துடன் நோக்கும்போது ஆண்டுப் புரவியில்லை. அதைப் புரவி என்னும் நினைவுடன் பார்க்கும்போது ஆங்கு மரமில்லை. கோயில் வழிபாடும் இத்தன்மைத்தே. இது குறித்துச் சைவத் தின் சமரசம் என்னும் நூலிலும் எனது கருத்தைத் தெரிவித் துள்ளேன். ஏட்டுக்கல்வி அறிவால் இது கல்தானே - மண்தானே - செம்புதானே என்று ஆராய்வோர்க்கு வடிவம் கல் - மண் - செம் பாகவே காட்சியளிக்கும். கல் - மண் - செம்பு - என் செய்யும் பாவம்! உறுதியுடையார் ஒரு பொருளினிடத்து எவ்வெவ்வியல்பு களிருக்கின்றன என்று எண்ணுகிறாரோ, அவ்வவ் வியல்புகள னனைத்தும் அப்பொருளில் பிறங்கும். இஃது உறுதியினின் றெழும் எண்ணத்தின் ஆற்றலாகும். மக்கள் உறுதிகொண்டு அப் பொருளை நோக்கி, வேண்டுதல் செய்யும்போது, அவ்வியல்பு களை அவர்கள் பெறுகின்றார்கள். அகப்புற ஒருமைப்பாடு கூட்டவல்ல உறுதியால் பலதிற அற்புதங்களும் நிகழ்த்தல் கூடும். திருக்கோயிலில் உறுதியுடையார் அத்திருக்கோயில் வாயிலாக எல்லாம் பெறலாம். காரணம் உறுதி உறுதி என்பதை எவரும் மறத்தலாகாது. உறுதியால் எல்லாம் ஆற்றலாம்; எல்லாம் பெறலாம். இதுபற்றிக் கிறிதுநாதர் மிகத் திறம்பட உலகிற்கு அறிவுறுத்தி யிருக்கிறார். இந்நாளில் பல காரணங்களால் நம்பிக்கை இறந்து பட்டு வருகிறது. நம்பிக்கை மாய்ந்து வருவதால் வேண்டுதல் களுங் கைகூடுவதில்லை. கிறிதுவத் திருச்சபையில் சேர்ந்த சிலர், அமெரிக்கா முதலிய இடங்களில், கடவுளை வழுத்தி, நோய் தீர்த்து வருவதைச் சஞ்சிகைகளில் நாம் படித்து மகிழ் வெய்துகிறோம். நோயாளரிடத்தும், நோய் போக்க ஆண்டவனை வேண்டுவோரிடத்தும், நம்பிக்கை என்பது நிரம்பி முற்றி நிற்றல்வேண்டும். இல்லையேல் விரும்பியது நிறைவேறாது. நம்பிக்கையால் மக்கள் கடவுளாகலாம். ஆண்டவன் ஒருவனே. அவனுக்குரிய நெறியும் ஒன்றே. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றார் திருமூலனார். ஓர் ஆண்டவன் உலகில் பல மொழியில் பல பெயரால் போற்றப் படுகிறான். ஒரு நெறி பன்னெறிகளாகப் பிரிந்து நிற்கிறது. எல்லாம் வல்ல அன்புப் பொருளை எவர் எப்பெயரால் எந்நெறி நின்றேனும் வழிபடலாம். பல பெயர்களும் பலநெறிகளும் பய னளிக்க மாட்டா. வேண்டுவது உறுதி. உறுதி கொண்டு கட வுளை எப்பெயரால் வேண்டினாலென்ன? பெயரால் விளை வது ஒன்றுமில்லை. விளைவது உறுதியால் என்க. சமயத்தவர், உன் கடவுள் என் கடவுள் என்று பூசலிட்டுப் பொன்றுவதினும், அவரவர் தாம் தாம் விரும்புங் கடவுள்மீது உறுதிகொள்வாராக. உறுதி உய்வளிக்கும். பண்டைத் தமிழ்மக்கள் மனோ உறுதியால் முருகனை வழிபட்டு, இளமையையும் மணத்தையும் கடவுட்டன்மையை யும் அழகையும்பெற்றுச் செயற்கருஞ் செயல்களை நிகழ்த்தி னார்கள். அந்நாளில் முருகனை உறுதியால் வழிபட்டுச் செயற் கருஞ் செயல்களாற்றிப் பெறற்கரும் பேறுபெற்றோர் வரலாறு களை வாசித்து உண்மை உணர்வோமாக. அம்மக்கள் கொண்ட உறுதிப்பாட்டை நாட்டில் மீண்டும் உயிர்ப்பிக்க ஆங்காங்குள்ள திருநெறிக் கழகத்தார் உழைப்பாராக. நமது நாட்டுத் தற்கால மூதறிஞர், முருகனை வழிபடும் அடியார்களின் உறுதியைக் கெடுக்க முயற்சி செய்யாதிருப்பாராக. முருகப் பெருமானை நம்பிக்கையால் வழிபட்டு நலனடைந் தோர் வரலாறுகள் எண்ணிறந்து கிடக்கின்றன. இன்றும் நம்பிக்கையுடையார் குறைகளை முருகன் களைந்து வருகிறான். உறுதிக்கேற்ற அளவாகவே குறைகள் களையப்படும். உறுதி யின்றி, முருகா முருகா என்று பல்லாண்டு போற்றினுங் குறைகள் களையப்பட மாட்டா. ஆதலால் வேண்டற்பாலது உறுதி உறுதியே. உறுதி நிலைபெறுதற்குப் பலதிற முறைகளுண்டு. அவைகளுள் எவரும் எளிதில் ஆற்றக்கூடியன இரண்டு. ஒன்று நோன்பு; மற்றொன்று வழிபாடு. இவ்விரண்டனுள் பிற முறைகள் யாவும் அடங்கும். நோன்பு அல்லது விரதத்தால் உடல் வளம் பெறும். உடல் வளன் உயிர்நலனுக்குத் துணைபுரியும். மனோ உறுதிக்கு உடல் நலன் இன்றியமையாதது. உடல்நலமிலா ஒருவன் நிலைத்த நெஞ்சம் பெறல் அரிது. நிலைத்த நெஞ்சத்துக்கு நல்லுடல் தேவை. நிலைத்த நெஞ்சிலேயே உறுதி கால்கொள்ளும். உறுதி நிலைக்கும் நெஞ்சம் பெறாத மகன், அந்தோ! ஏன் பிறந்தான்? அவன் எல்லாச் சிறுமைகட்குங் களியாடல்களுக்கும் எளிய னாய்ப் பிறவிப் பேற்றை இழக்கிறான்! உடல் வளனுக்குக் கேடு சூழுந் தீயொழுக்கங்கட்குக் காரணம் நெஞ்சில் உறுதியின்மை யாகும். யாண்டுமுள்ள அழகை உணர்தற்கு முன்னர்த் தன்பால் அவ்வழகை எழுந்தருளச் செய்வது அறிஞன் கடமை. ஆதலால் அழகொழுகும் நல்லுடல் பெற முயல்வதே அறிவுடைமை. நல்லுடல் நோன்பால் அமையும். பொருந்தா உணவு உண்டும், பெருந்திண்டி தின்றும், இயற்கைக்கு மாறுபட்ட பலவேறு வினைகளாற்றியும் மக்கள், தங்கள் உடலில் அழகுக் கடவுள் அமரவொண்ணாவண்ணம், உடல் நலனுக்குக் கேடு சூழ்ந்து கொள்கிறார்கள். உடலுக்கு உறுங் கேடுகளைப் போக்கிக் கொள்ளப் பல முறைகள் கையாளப்படுகின்றன. அவைகளுள் சிறந்த ஒன்று நோன்பு. நோன்பு இயற்கையின் பாற்பட்டது. அளவோடு உணவு கொண்டு, நல்வழியில் வாழ்வு நடாத்துவோரும் உடல்நலன் பெருக நோன்புகொள்ளலாம். நோன்பு, உள்ளுறுப்புக்களில் சேர்ந்துள்ள பழைய அழுக்குகளைத் தள்ளி, அவ்வழுக்குகளால் குவிந்த நச்சுப் பொதிகளை நீறுபடுத்தி, வெம்மையைத் தணித்து, இயற்கை வழிக் குருதியையோட்டி, நரப்புக் குலைவை ஒழுங்கு படுத்தி, உரமூட்டி, உறுதி நிலைக்கத்தக்க உள்ளம்பெறும் உடலை நல்கும். நல்லுடல்வழி மனோ உறுதியையும், உறுதிவழி அழகெனும் முருகையும் பெறலாம். நோன்பு வாரத்துக்கொருமுறையும், திங்கட்கொரு முறையும், ஆண்டுக்கு ஆறுநாளுங் கொள்வது தகுதி. உடல் நிலைக்கேற்றவாறு நாட்களைக் கூட்டல் குறைத்தல் செய்து கொள்ளலாம். வாரத்துக்கொருமுறை செவ்வாய்க்கிழமை தோறும் நோன்பிருக்கலாம். திங்கட் கொருமுறை கார்த்திகை தோறும் நோன்பு கொள்ளலாம். ஆண்டுக்கொருமுறை ஐப்பசி சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம். இம் மூன்றும் முருகனுக்குரிய சிறந்த நோன்புகள். வேறு பல நோன்புகளையும் முறையாகக் கொண்டொழுகுவோர் ஒழுக. நோன்பு நோன்பு என்று ஒருவேளை பலதிறக் காய்கறி வடைபாயசங்களோடு விலாப்புடைக்கச் சோறு உண்டு, மற்றிருவேளை, பலகாரம் பலகாரம் என்று பலதிற உணவு களை வயிறுகிழியத் தின்பது நோன்பாகுமோ? நோன்பென்ப தற்கு மற்றைய நாளினும் நன்றாக விலாப்புடைக்க உண்டு கழிப்பதென்பதோ பொருள்? இந்நாளில் நோன்புமுறை இவ் வாறாயிற்று! நோன்பு முறையாக நிகழ்த்தப்பெறல் வேண்டும். நோன்புக் கெனச் சில முறைகளுண்டு. விரிவு நோன்பைப்பற்றிய தனி நூல்களிற் காண்க; அல்லது நோன்பினர்பால் கேட்டுத் தெளிக. நோன்புநாளுக்கு முன்னாளிரவே ஒன்றும் உண்ணாது நீரருந்தல் வேண்டும். அதுமுதல் மற்றைநாள் பகல் முழுவதும், தொடர்ந்தே இரவு முழுவதும், எவ்வித உணவுங் கொள்ளலா காது. வறட்சி தோன்றும் போது அடிக்கடி தூய தீம்புனல் சிறுகச் சிறுக அருந்திக்கொண்டிருத்தல் நல்லது. இல்லையேல் உள்ளுறுப்புக்களில் வெம்மை மதர்த்தெழுந்து உடலுக்குக் கேடு நிகழ்த்தும். நீர் அருந்துவதால் அடிக்கடி சிறுநீர் இழி தரும். சிறு நீரில் வெம்மையுறுமேல் நீர் அருந்தலைச் சிறிது பெருக்கல் வேண்டும். சிறுநீர் பெய்யும்போது எரிவின்றித் தண்மை நிலவு தல் செவ்விய நோன்புக்கு அறிகுறி. இம்முறையால் உறுப்புக் களைத் தண்மைப் படுத்துவது பொருத்தம். மூன்றாம் நாள் வழக்கம் போலக் காலைக்கடன்களை முடித்து உணவுகொள்ள முற்படுவது ஒழுங்கு. உணவென்று திண்ணிய பொருளை அடைத்தல் கூடாது. அவ்வாறடைப்பதால் உடலுக்கு நோய் நேரும். முதலில் நீர் அருந்திச் சிறிதுநேரங் கடந்து நீர் மோரோ பழச்சாறோ பருகி, இன்னுஞ் சிறுபொழுது கழித்துப் பாலோ கஞ்சியோ குடித்துப் பின்னை வழக்கம்போல உணவுகொள்வது நலன். நோன்பு வேளையில் எக்காரணம் பற்றியும், பகைமை, பொறாமை, சீற்றம் முதலியன உளத்தில் எழலாகாது. அவை எழும் முயற்சிகளில் நோன்பிகள் தலைப்படலாகாது. அவை எழின், அவை குருதியைக் கருக்கி நரப்புக்களை அரிக்கும். நோன்பு வேளையில் நெஞ்சம் அன்பில் தோய்ந்து நிற்றல் வேண்டும். முருகனை நினைத்தல், அவன் திருப்புகழை ஓதல் - கேட்டல், அவனருள் பெற்ற மெய்யடியார் வரலாறுகளைச் செவிமடுத்தல் முதலிய நல்வழிகளில் நோன்புநாட்களைக் கழித்தல் சிறப்பு. சீட்டாடல் முதலிய களியாடல்களில் காலங் கழிப்பது தவறு. அவரவர் தத்தம் உடல்நிலைக் கேற்றவண்ணம் இரண்டு நாள் மூன்றுநாள் முதல் சின்னாள் நோன்பிருக்கலாம். அளவுக்கு மீறி நோன்பிருத்தல் கூடாது. இத்துணை நாள் என்பதை உட லின் இயற்கை அறிவுறுத்துமாறு கணித்துக்கொள்ளல் பொருத் தம். வார நோன்பு, திங்கள் நோன்பு, ஆண்டு நோன்பு ஆகிய மூன்றையுங் குறைவற நிறைவேற்றும் மக்கள், நல்லுடல் வாழ்வும் உயிர் வாழ்வும் பெறுவார்கள். அவர்களை நோய் அணுகவே அணுகாது. நோன்பின் மாண்பை விளக்கப் பண்டைநூல் கதைகள் வேண்டுவதில்லை. இப்பொழுது நம்மிடை வாழுங் காந்தியடிகள், நோன்பின் மாண்பிற்கே ஓர் இலக்கியமாக விளங்குதல் காண்க. நோன்பில் தலைப்பட்டு, உள்ளொளி பெருக்கிய தலைவர் தலைவியர்க்குப் பிறந்தவரே நமது நாட்டு முனிவரர்; சமயாச் சாரியர்; கவிராயர்; வீரர் முதலியோர். நோன்பு மிகுந்த நாளில் குமரர்களுங் குமரிகளுந் தெருக்களில் மயில் குயிலென ஆடிக் கொண்டிந்தார்கள்; பாடிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுதோ கட்டழகுக் காளையரையுங் கன்னியரையுங் காண்டல் அரிதா யிருக்கிறது. காரணம் நோன்புக் குறைபாடேயாகும். என்றும் அழியா அழகுநிலை எய்துதற்கு முதற்படி நோன்பு என்னலாம். இது நிற்க. வழிபாட்டைப் பற்றி விரித்துக்கூற வேண்டுவதில்லை. வழிபாட்டு முறைகள் சில மேலே சொல்லப்பட்டன. வழி பாடாவது இயற்கையாயுள்ள எந்நெறிக்கும் மாறுபடாது வினையாற்றுவது. இயற்கைச் செந்நெறியாவது எவ்வுயிரையும் முருகெனக் கொண்டு வழிபடுவது. நோன்பு, வழிபாடு முதலிய நல்லொழுக்க முறைகள் மக்கள் வாழ்வு குலையாதவாறு காத்துவருவன. மக்கள் உடலை வளர்க்கும் வல்லமை (சக்தி) யொன்றுண்டு; தேய்க்கும் வல்லமை (சக்தி) யொன்றுண்டு. வளர்வு தேய்வு இல்லையேல் உயிரோடு கூடி வாழும் உடல் வாழ்வு அற்றுப்போகும். வளர்வும் தேய்வும் இயற்கை நிகழ்ச்சி. வளர்ச்சியும் தேய்வும் ஏற்றக் குறைவின்றி, ஒரு பெற்றியாய் நிகழுமாறு மக்கள் தங்கள் வழக்க ஒழுக்கங்களை ஒழுங்கு படுத்திக் கொள்ளல் வேண்டும். அவ்வாறு ஒழுகுபடுத்திக் கொள்வோர் நீண்டநாள் உலகில் வாழ்வர். மகன் இயற்கைக்கு மாறுபட்ட வினைகளில் தலைப்பட்டு வாழ்வானாயின், அவன் வளர்ச்சி குன்றித் தேய்வுமிக்கு, நரை திரை மூப்புக்களால் தொடக்குண்டு இடர்படுவன். நோன்பு வழிபாடு முதலிய நல் லொழுக்க முறைகள் வளர்ச்சி தேய்வு முறையை ஒழுங்கு படுத்தும். இத்துணைச் சிறப்பு வாய்ந்த நோன்பு, வழிபாடு முத லிய ஒழுக்க முறைகளால் உறுதி நிலைபெறல் எளிது. இம் முறைகளை மீண்டும் புதுக்கல் தமிழ்நாட்டார் கடமை. 9. பொதுநெறியும் தமிழும் (தமிழ்நாட்டுக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பு - பழந் தமிழ்நாட்டைக் காண வழி - இல்லறம் - சமரச நோக்கு- அருணகிரி நாதரும் சமரசமும் - தமிழர் கண்டது பொதுநெறி - முருகன் எல் லார்க்கும் உரிய கடவுள் - உலக குரு வருகை - இயற்கை வழிபாட்டின் பெருக்கம் - முருகனும் தமிழனும் - தமிழ்ப் பொருள் - அருணகிரி யாரும் தமிழும்.) தமிழ் நாட்டாரென்று சிறப்பாகக் கூறுதற்குப் பல காரணங்களுண்டு. அவைகளுள் ஈண்டு இரண்டொன்று குறிக்கிறேன். இயற்கையிலுள்ள முருகை முதல் முதல் கண்டவர் தமிழ் நாட்டார். முருகனுக்குரிய செவ்வாய்க் கோளுக்குந் தமிழ் நாட்டுக்குந் தொடர்பு உண்டு. முருகனுண்மை கண்டு, இயற்கை வாழ்வு செலுத்தி, நோன்பு காத்து, அழியாப் பேறு பெற்ற சித்தர்கள் வாழ்ந்த நாடு நமது தமிழ்நாடு. முருகன் நோன்பும், வழிபாடும், பிறவும் இன்னும் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவைகளின் முறைப்பாடுகள் இந்நாளில் குலைந்துவிட்டன. நோன்பையும் வழிபாட்டையும் ஒழுங்குபட நிகழ்த்தினால், மீண்டும் பழந் தமிழ்நாட்டைக் காணலாம்; சித்தர்களைக் காணலாம். பண்டைநாளில் தமிழ் நாட்டி னின்றும் மக்கள் வாழ்வுக்குரிய அன்புத் துறைகள் உலகில் பரவியதுபோல இந்நாளிலும் பரவும். இப்பொழுது உலகிற்கு வேண்டற்பாலன நோன்பும் இயற்கை வழிபாடும். இவைகளை மீண்டும் உலகில் உயிர்ப்பிக்கும் பொறுப்பைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளல் வேண்டும். ஆதலின், தமிழ்நாட்டிற் பிறந்த ஒவ்வோர் ஆண்மகனும் பெண்மகளும் இல்லறமேற்று, முருகனை வழிபட்டு, சான்றோரை ஈன்று, உலகை உய்விக்கக் கடமைப் படல் வேண்டும். பிள்ளைகள் என்று, என்பு தோல் போர்த்த கூடுகளைப் பெறுவதால் என்ன பயன்? பிள்ளைகள்பால் முருகெனும் அழகு ஒழுகல் வேண்டும். முருகன் வழிபாட்டிற்கு இல்லறம் இன்றியமையாதது. இல்லறம் என்பது இயற்கையறம். இவ்வறம் இழிவான சிற்றின்ப நிறைவேற்றலுக்கு ஏற்பட்டது என்று நினைப்பது அறியாமை. இல்லறம், இளமை அழகு முதலியவற்றைக் காத்து, மக்கட்பேறு நல்கி, கடவுட்டன்மை எய்துதற்கு, இயற்கையில் இயல்பாக அமைந்துகிடக்கும் நல்லறம். இவ்வறத்துக்குரிய பெண்தெய் வத்தைப் பேயாகக் கருதுவது கொடுமை கொடுமை என்று மேலே சொன்னதை மீண்டுஞ் சொல்லி வலி யுறுத்துகிறேன். பெண்ணோடு கூடி வாழ்ந்து, முருகனுக்குரிய நோன்பு வழிபாடு களை முறைப்படி நிகழ்த்தி, முருகனிடத்து உறுதியை வளர்த்துப் பிணி மூப்புச் சாக்காட்டைத் தொலைக்க முயல்வது அறி வுடைமை. எம்பெருமான் முருகன், தமிழ் நாட்டவரால் முதல் முதல் காணப்பட்ட இறைவனாயினும், அவன் எல்லா உலகங்களையும் நடாத்தும் ஆண்டவனா யிருக்கிறான். அவனது நோன்பும் வழி பாடும் எல்லார்க்குமுரியன. அவனை அவ்வந்நாட்டார் அவ்வந் நாட்டு மொழியில் பலபெயரிட்டு வழிபடுகிறார். அப்பெயர்ப் பொருளை ஆய்ந்து பார்த்தால், அது தமிழில் முருகன் என்னுஞ் சொல்லுக்குரிய பொருளாகவே பெரிதும் முடியும். சமரச உணர்வில்லாச் சமயபேத நாட்டமுடையார் முருக னுண்மை காண்டலரிது. முருகனைத் தொழுவோர், முருகன் எல்லாச் சமயத்தவர்க்கும் உரிய கடவுள் என்னும் பொது உணர்வு பெற்றவரா யிருத்தல்வேண்டும். கடவுளர் பலர்; சம யங்கள் பல என்னும் வேற்றுமை உணர்வு அவர்க்கு இருத்தல் கூடாது. வேற்றுமை உணர்வு உள்ளமட்டும் முருகனை அறிதல் இயலாது. வாதங்களையும் பேதங்களையும் கடந்து நிற்பது முரு கெனுஞ் செம்பொருள். சமயப் போரிடுதல், பொறாமை பகைமை காழ்ப்பு முதலிய பேய்களை வழிபடுவதாகும். இவ் வழிபாடு, அன்புக் கடவுள் உண்மையை விளங்கச் செய்யாது. கடவுளுண்மை விளங்கப் பெற்றோர் ஒருசமய உணர்வு அதா வது அன்பு நெறி உணர்வு விளங்கப்பெறுவர். இப்பேறு பெற்ற வர்க்குச் சமய வாதமும் சமய பேதமும் கடவுள் உண்மையை மறுப்பதுபோலத் தோன்றும். உலகிலுள்ள பலதிறச் சிறுமை களில் தலையாயது பல சமய உணர்வுகொண்டு, சமயப் போரிடு வது என்று தெளிக. பன்முகச் சமயநெறி படைத்தவரும் யாங் களே கடவுள் என்றிடும் பாதகத்தவரும் வாத தர்க்கமிடு படி றரும் என்றார் தாயுமான சுவாமிகள். ஆதலால், முருகன் அடியார்க்குச் சமய வாதமாதல் சமய பேதமாதல் இல்லை என்க. முருகன் அருள் பெற்று உண்மை கண்ட அருணகிரியார் சமயவாதபேதங்களை மறுத்து உலகிற்கு உய்யுநெறி காட்டு கிறார். அவர்தந் திருவருண் மொழிகளுட் சிலவருமாறு :- சமய பேதத்தவர்க் கணுகொணா மெய்ப்பொருள் கலகலென மிக்க நூல்க - ளதனாலே - சிலுகிஎதிர் குத்தி வாது செய்யுமொரு வர்க்குநீதி, தெரிவரிய சித்தியான - உப தேசம் - தெரிதர விளக்கிஞான தரிசன மளித்து வீறு, திருவடி எனக்கு நேர்வ தொருநாளே சமய விரோத சாங்கலை வாரிதியை குவலயங் கற்றுக் கத்தி யிளைக்கும், சமயசங் கத்தைத் தப்பி யிருக்கும் குணமடைந் துட்பட் டொக்க இருக்கும் - படிபா ராய் தத்வம், பலவையுங் கற்றுத் தர்க்கமதத்வம் பழியாதே கலைமேவு ஞானப் பிரகாசக் - கடலாடி - ஆசைக் கட லேறி, பலமாய வாதிற் பிறழாதே - பதிஞான வாழ்வைத் தருவாயே அருணகிரிநாதர் மற்றுமோரிடத்தில், கும்பகோணமோ டாரூர் சிதம்பரம் என்னுந் திருப்புகழின் இறுதியில், உல கெங்கு மேவிய தேவாலயந் தொறு பெருமாளே என்று திருவாய்மலர்ந்திருக்கிறார். இச்சமரசமுடையாரே முருகனடி யாராவர். பழந்தமிழர் கடைப்பிடித்த நெறி உலகிலுள்ள எல் லார்க்கும் உரியது; பொதுவானது. அந்நெறி மீண்டுந் தமிழ் நாட்டில் உயிர்பெறல் வேண்டும். இப்பொழுது ஆன்றோர் அருளிய நூல்களில் அந்நெறி திகழ்கிறதன்றி, மக்கள் வாழ்வில் அஃது ஊடுருவி நிற்கவில்லை. உலகிற்குத் தமிழ்நாடு வழி காட்ட வேண்டுமேல், பழைய பொதுநெறியுணர்வை, முதலில் தான் பெறல் வேண்டும். இடையிடையே பலதிறச் சிறுமைக் கொள்கைகளும் பிற இழிவுகளும் தமிழ்நாட்டில் புகுந்து, அதன் இயற்கைப் பொதுநெறிக்குக் கேடுவிளைத்தன; விளைக்கின்றன. இளமையும் மணமும் கடவுட்டன்மையும் அழகும் உடையதாய் இயற்கையை உடலாக்கொண்டதாயுள்ள ஒரு பொருள் எவர்க்கு உரியது? எவர்க்கு உரியதாகாது? அஃது எல்லார்க்கும் உரியது. அப்பொருளை உணர்த்தும் இயற்கை வழிபாடும் எல்லாருங் கொள்ளத்தக்கது. தமிழ் மக்கள் கண்ட பொதுநெறி இதுவே. முருகன் என்பது கடவுளைக் குறிக்குந் தமிழ்ச்சொல். இயற்கை என்பதுந் தமிழ்ச் சொல். இவ்விரண்டும் அவ்வந் நாட்டு மொழிகளால் பல பெயர் பெற்றிருக்கின்றன. மொழி வேற்றுமைகொண்டு போரிடுவது அறிவன்று. மொழி வேற் றுமை கருதாது, மொழிப் பொருளைக் கருதுவது அறிவுக்கழகு. தமிழ்மக்கள் கண்ட அழகுப் பொருளும், அதை அடைதற்குரிய இயற்கைச் செந்நெறியும் எம்மொழிப் பெயரால் வழங்கப்பட்டா லென்ன? ஆண்டவன் ஒருவன் என்பதும், அவன் இளமை மணம் இறைமை அழகு உடையவனா யிருக்கிறான் என்பதும், அவ் வாண்டவனை அடைதற்குரிய நெறி இயற்கைச் செந்நெறி என்ப துமே கொள்ளற்பாலன. இப் பொதுக்கொள்கையைப் பரப்ப வேண்டுவது தமிழ் மக்கள் கடமை. தமிழ் மக்கள் தங்கள் கடனை யாற்றினும் ஆற்றுக; ஆற்றாதொழியினும் ஒழிக. உலகில் பல விடங்களில் பொதுநெறி பரவ, ஆண்டவன் அருளெனும் இயற்கை துணைபுரிந்து வருகிறது. பொதுநெறியில் நீண்ட நாளாக நின்று ஒழுகிவந்த தமிழ்மக்களது வழித்தோன்றல்களின் முயற்சியும் கூட்டுறவும் இயற்கையுடன் கலப்பின், அந்நெறி விரைவில் ஆக்கமுறும். இக்கருத்துக் கொண்டே தமிழ்மக்கள் கடமை கடமை என்று அடிக்கடி வலியுறுத்துகிறேன். முருகனைப் பின்னே வந்த ஆசிரியரும் ஏற்று வழி பட லாயினர். அவர்தம் வடமொழி மறை முடிவு சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் சுப்ரமண்யோம் என்று முருகனை மும்முறை போற்றியிருத்தல் காண்க. இடைக் காலத்தில் தமிழ் மக்கள் முருகனைச் சிவமாக்கொண்டு போற்றும், ஒரு நெறி பற்றி னார்கள். அற்றைஞான் றெழுந்த தமிழ்மறையும் சமர சூரபன் மாவைத் தடிந்தவேல் - குமரன் என்றும், நஞ்செந்தில் மேய வள்ளி மணாளன் என்றும், நன்கடம்பனை என்றும் முருகனைச் சிறப்பித்திருக்கிறது. எம்பெருமான் அருள்பெற்ற மெய்யடியார் கால தேச வர்த்தமானத்துக்கேற்றபடி ஆங்காங்கே குருமாராகத் தோன்றி அறநெறி வளர்த்துவந்தனர்; வருகின்றனர். முருகன் கூறெனச் சொல்லப்படும் சனத்குமாரரை ஒரு பெருங் குருவாகத் தியோசா பிகல் சங்கத்தார் கொண்டிருப்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது. எம்பெருமான் அருள்பெற்ற மெய்யடியார் ஒருவர் எல்லாச் சமயத்தவரும் போற்றுஞ் சமரசஞான குருவாகத் தோன்றப் போவதுண்மை. அவர் தமிழ்நாட்டிலேயே தோன்றப்போகிறார். உலக குருவாகக் கடவுளே வாரார். அவர் அருள்பெற்ற மெய் யடியவரே குருமாராக வருவது வழக்கம். அக்குருமாரை முழு முதற் பொருளாகவுஞ் சிலர் கொள்கிறார். பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்பது கந்தரநுபூதி. முருகை முறைப்படி போற்றி முருகரான சித்தர் பலருளர். சித்தரைக் கடவுளரென் றும் பலர் போற்றுகிறார். உலகுய்யப் பலவிடங்களில் தோன்றி யவர் அச்சித்தர் கூட்டத்தவரே யாவர். முருகனுக்குரிய இயற்கை வழிபாடும் யாண்டும் பெருகி வருகிறது. இப்பொழுது மேல்நாட்டறிஞரிடை ஒரு புத்துணர்வு பிறந்திருக்கிறது. நோயிலா வாழ்வு பெறல்வேண்டு மென்றும், உடலில் இளமை அழகு நெகிழா வண்ணங் காத்து வரல் வேண்டுமென்றும், அதற்கு இயற்கையோடியைந்த வாழ்வு நடாத்தல் வேண்டுமென்றும், கவலையீனத்தால் நோய் நேரினும் மருந்துண்ணாது இயற்கைவழி நின்று நோய் போக்கல் வேண்டு மென்றும் ஆங்கு ஓருணர்வு தோன்றியிருக்கிறது. இவ்வுணர்வு, பழந்தமிழர் கொண்ட இயற்கை வழிபாட்டை ஒருவாறு குறிப்ப தாகும். ஆதலின், இந்நாளில் சிறப்பாக முருகனுக்குரிய இயற்கை வழிபாட்டிலும் நோன்பு முதலியவற்றிலும் தமிழ்மக்கள் மெய் யன்பு செலுத்தி வருவார்களாக. முருகன் எல்லா மொழிகட்குமுரிய இறைவன். ஆயினும், அவனது வடிவாகிய இயற்கையின் இனிமையே தமிழ் என்னும் ஒரு மொழியாக நிலவுகிறது. இம்மொழியால் அவனைப் போற்றுவதும் பாடுவதுஞ் சிறப்புடைமையாகும். பண்டைத் தமிழர் இயற்கைவாழ்விலேயே தோய்ந்து கிடந்தவர். அவர் கண்டு கேட்டு உண்டு உற்று உயிர்த்தவெல்லாம் இயற்கையே. இயற்கை நடுவண் அவர்தம் வாழ்வு தழைத்துநின்றது. இவ் வாழ்வுடையார்க்கு இனிமையூட்டுவது எதுவாயிருக்கும்? இயற்கை அவர்க்கு இனிமையூட்டியிருக்கும். அந்நாளில் இனிமை என்பது தமிழ் தமிழ் என்று வழங்கப்பட்டு வந்தது. இயற்கை இனிமையைத் தமிழ் என்று கொண்ட அப்பழைய மக்களிடை, இயற்கைப் பொருள் வேற்றுமை குறிக்கவும், வேறு பல வாழ்வுத் துறை குறிக்கவுஞ் சொற்கள் அரும்பியபோது, அவர்கள் அச்சொற்கட்கும், அச்சொற்களாலாகிய மொழிக் கும், இயற்கை இனிமையைத் தமிழ் என்று தாங்கள் வழங்கி வந்த வழக்கை யொட்டியே தமிழ் என்னும் பெயர் சூட்டியிருப் பார்கள். தமிழ் தழீஇய சாயலவர் என வரூஉஞ் சிந்தாமணிப் பாட்டுக்கு, இனிமை தழுவிய சாயலுடையார் என்று நச்சி னார்க்கினியர் தமிழுக்கு இனிமைப் பொருள் கண்டிருத்தலை யோர்க. தேனுறைதமிழும்... என்று கம்பரும் தமிழ் என்பதை இனிமைப் பொருளில் அமைத்தோதியிருத்தல் காண்க. இயற்கை, முருகன் உடல். இயற்கைத் தமிழை (இனி மையை) என்னென்று சொல்வது? இயற்கை முருகனைத் தமிழ் முருகன் என்று கூறல் பொருந்தும். ஆகவே, முருகனுக்குந் தமிழுக்குமுள்ள தொடர்பு கூர்த்த மதியால் உன்னத்தக்கது. தமிழ் முருகனைத் தமிழாலன்றோ போற்றுதல் வேண்டும்? ஏத்துதல் வேண்டும்? பாடுதல்வேண்டும்? முருகனடியார் பலர் முருகனைத் தமிழ்ப் பாமாலையால் அணி செய்து செய்து அன்பால் குழைந்து குழைந்துருகினர். இரும்பு நெஞ்சைக் குழைக்குந் தன்மையும், வெம்மையுளத்தைத் தணிக்குந் தண்மையும் இன்பத் தமிழுக்கு உண்டு. முருகனடியாராகிய அருணகிரியார் வடமொழிப் புலமை யுமுடையார். அவர் திருப்பாக்களில் வடமொழி மலியாத இட மில்லை. அவர் திருப்பாட்டைத் தென்மொழியும் வடமொழி யும் பாலும் பழமும் போல் இனிமை செய்கின்றன. வடமொழி மணிகள் ஏராளமாகக் கொழிக்கத் தமிழ்மழை பொழிந்த அருணகிரிப் புயலும், ஆங்காங்கே தமிழைப் பற்பல விதமாகச் சிறப்பித்துப் போற்றி யிருத்தலின், அன்னார் உட்கிடக்கையைத் தேர்வோமாக. அம்புவி தனக்குள்வளர் செந்தமிழ் வழுத்தியுனை அன்பொடு துதிக்க மனம் - அருள்வாயே செந்தமிழ்சொல் மாலைக் கார செந்தில்வாழ் செந்தமிழ்ப் - பெருமாளே வாய்ப்புற் றத்தமிழ் மார்க்கத் திட்பொருள் வாய்க்குச் சித்திர - முருகோனே பலபல பைம்பொற் பதக்க மாரமும், அடிமை சொலுஞ் சொற் றமிழ்ப் பனீரொடு, பரிமள மிஞ்சக் கடப்பமாலையும் - அணிவோனே காவி யத்துறைக ளுணர்வோர் படித்ததமிழ், செவியார வைத்தருளு - முருகோனே உலகில் - பலபாஷை - திக்கித்திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபோய்ச், செற்றைச் சட்டைக் குடிலைச் - சுமை பேணும் - சிக்கற்றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத் திட்டத்துக்குப் புகலப் - பெறுவேனோ “முதிய khதமிழிira தாகt,மொழிbசய்தேநினைந் -திடுkWதண்டÄழிš மிகுநேய - முருகேசா சரணாரவிந்தமதுபாட, வண்டமிழ்விநோதம் - அருள்வாயே தமிழிற்பாடல் கேட்டருள் - பெருமாளே முத்தமிழ் வாணரோது, சித்திர ஞானபாதம் - அருள் வாயே முத்தமிழ் வித்வ விநோதா தூயவர் கதித்த முத்தமிழ் மாலா nயாதிய,bசழிப்பை- eத்தியÓலா‘brŠbrhšnr® áத்ரத்- jமிழாலுன்- bசம்பொனார்tத்தைப்- bபறுவேனோ‘fd¤j செந்தமி ழால்நினை யேதின, நினைக்க வுந்தரு thíனதாuருள் எʉ மலத் திணைக்கழலைத், தமிழ்ச்சுவையிட் டிறப் பறஎய்த், திடக்கருணைத் திறத்தெனைவைத் - தருள்வாயே செகதல மீதிற் பகர்தமிழ் பாடற், செழுமறை சேர்பொற் - புயநாதா தமிழால் உன் நாமத்தைக் கற்றுப் புகழ்கைக்குப் - புரிவாயே சித்ரத் தமிழ்கொடு, கவி மெத்தச் செப்பிப் பழுதற, எழுதிக்கற் பித்துத் திரிபவர் - பெருவாழ்வே செந்தமிழ் நூலோன் குமரன்குகன் மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமி Hல்,iவதாiரயும்mங்குtழவைப்போன்v‹W அருணகிரியார் தமது தமிழ்மறைக்கண் ஓதியிருக்கு மாற்றானறிக. முத்தமிழால், வைதாரையும் அங்கு வாழவைப் போன் என்னுந் திருவாக்கால் தமிழுக்கும் முருகனுக்குமுள்ள இயைபு நன்கு விளங்குதல் காண்க. தமிழ்மொழி பேசும் அன்பர்களே! உங்களுக்கும் முரு கனுக்குமுள்ள தொடர்பை உன்னுங்கள்; உங்கள் மொழியின் மாண்பை உணருங்கள்; இவ்வினிய மொழியால் முருகனைப் பாட்டால் பாடி மகிழ எழுங்கள்; இயற்கையில் முருகு தமி ழாய்ப் பொலிவதைப் பாருங்கள்; இன்பம் நுகருங்கள். 10. பின்னைத் திரிபுகள் (முருகனைப்பற்றிப் பின்னை எழுந்த கொள்கைகள் கதைகள் முதலியன - சமயப் பிணக்குகள் - புராண உலகம் - கடவுளை மறந்த செயல்கள் - திரிபுகளும் புரட்டுகளும் - புராண ஆராய்ச்சி - புராணங் களின் முக்கூறு. புராணத்தில் முருகன் தோற்றம் - முருகன் பிறப் பில்லாதவன் - புராணங்கூறுந் தோற்றத்தின் உள்ளுறை - முருகன் இயற்கைமுதல்வன் - சத் சித் ஆனந்தம் முறையே தந்தை தாய் சேய் - ஆறுமுகம் முதலியன.) இதுகாறும், இளமையும் மணமும் கடவுட்டன்மையும் அழகுமுடைய ஒன்றை - இயற்கையை உடலாக்கொண்ட இறை வனை - தமிழ் முருகனை - நினைந்து நினைந்து மகிழ்ச்சியுடன் எழுதிக்கொண்டு வந்தேன். இனி அம்முருகனைப் பற்றிப் பின்னே எழுந்த கதைகள், கொள்கைகள் முதலியவற்றைக் குறித்து மிக வருத்தத்துடன் சிலவுரை பகரப் புகுகிறேன். இயற்கையைப் போர்வையாக் கொண்ட முருகனைப்பற்றிய அழகுக் கொள்கை இடைநாளில் பலவழியில் திரிக்கப்பட்டது. திரிவால் நாட்டுக்கு என்ன விளைந்தது? நாட்டு நலத்துக்கும் மக்கள் ஒழுக்கத்துக்குங் கேடு விளைந்தது. மக்கள் மனக்கோட்ட மன்றோ நாட்டைக் குலைப்பது? மொழி வளர்ந்து ஆக்கம் பெறப்பெற முருகனைப் பற்றிய பாடல்கள் பல எழுந்தன. புலவோர் நேரே இயற்கையில் நாட் டங்கொண்டு பாடிவந்த நாட்களில் முருகன் திருநெறி செம்மை யாகவே யிருந்தது. பிற்றை நாட் புலவோர் இயற்கையை நாடாது, இயற்கையின் சாயலாக வரையப்பெற்ற ஓவியங்களின் நுட்பந்தேறாது, ஓவிய எடுப்புக்களையே பொருளாக்கருதிப் பாடியபோதே, முருகன் செந்நெறியில் மாசு படரலாயிற்று. மேலுந் தொடர்ந்து போந்த தந்திர மந்திர புராணங்கள் முதலியன, குப்பைகளைக் கொணர்ந்து மலைமலையாகச் செந்நெறியில் குவித்தன. முன்னே, முருகன் என்றதும், அவனது உடலாகிய இயற்கைமீது எல்லார் கருத்தும் படியும். இப் பொழுது முருகன் என்றதும், பலர் கருத்து இயற்கைமீது படிவ தில்லை. இவர் கருத்தை அழுக்குத் தொடக்குகள் ஈர்த்துக் கொள்கின்றன. மக்கள் கருத்தில் மாறுபாடு உற்றதேயன்றி, முருகன்பால் எவ்வித மாறுபாடும் உறவில்லை. முருகன் என்றும் இயற்கை வடிவா யிலங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்குத் திரிபுமில்லை; மாசுமில்லை. அவனை உணர மக்கள் கொண்ட நெறியிலேயே அழுக்குப் படர்ந்தது. சரித்திர உலகில் நுழைந்து, அதைச் சிறிது நோக்கினால், நமது நாட்டில் எத்துணைக் கொள்கை யுடையார் புகுந்தனர் என்பது தெரியவரும். அவரவர் விரும்பியவாறு செம்மை நெறியைத் திரித்துவிட்டனர். ஆண்டவனை அவரவர் விழையும் வண்ணம் வழிபட அவரவர்க்கு உரிமையுண்டு. ஆனால் அவ்வுரிமையை நெறியல்லா நெறியில் பயன்படுத்தி, ஆண்டவன் அழகு நெறியைச் செகுத்தலாகாதன்றோ? நமது நாட்டில் இடைநாளில் இயற்கைச் செந்நெறி பலதிறக் கவட்டைகளாகப் பிரிக்கப்பட்டது. அவை, சைவம், வைணவம் சமணம் பௌத்தம் முதலியன. இப்பெயர் வேற்று மையைப்பற்றிக் கவலையுறவேண்டுவதில்லை. இவை யாவும் இயற்கைச் செந்நெறியையே குறிக்கோளாகக் கொண்டு உலகில் நிலவி யிருப்பின், மக்கள் வாழ்வுநிலை கெட்டிராது. அவ்வச் சமயங்கண்ட அறிஞரோ இயற்கைக்குரிய வழிகளாகவே அவை களைக் கோலினர். அவர்தம் வழிவழி வந்ததாகச் சொல்லிக் கொள்ளுஞ் சழக்கர் கூட்டங்கள், ஒரே சமயம் பலவாகப் பிரிந்த உட்கிடக்கையை உணராது, இயற்கைக்குரிய செம்மை நெறியைச் செயற்கைக்குரிய வெம்மை நெறிகளாக்கின. செயற்கை வெம்மையால் உலகம் வெந்து கொண்டிருக்கிறது. சைவ வைணவ சமண பௌத்தர்கள் பின்னாளில் அறநெறி பிறழ்ந்து, ஒருவரோடொருவர் மலைந்து, போரிட்டு, ஒருவரை ஒருவர் தூற்றி எழுதிய ஏட்டுச் சுவடிகள் பலப்பல. அவைகளுள் சில, இன்னுஞ் சமய ஒழுக்க நூல்களாகப் பிடிவாதத்தாலும், கண்மூடி வழக்கத்தாலும், துரபிமானத்தாலும் கொள்ளப்பட்டு வருகின்றன. சமயவாதிகள் - இளமையும், மணமும், கடவுட் டன்மையும், அழகுமுடையதாய் இயற்கையினூடே இரண்டற விராவிநிற்கும் முருகை, மனம் போனவாறு தூற்றியும், வைதும், இழித்தும் ஏடுகளில் கீறிவிட்டார்கள். முருகன் என்னும் தமிழ்ப் பெயரைச் சமய வெறியர் விரும்பாதொழியினும், இயற்கை முதற்குத் தாம் விரும்பும் வேறு பெயரைச் சூட்டியாவது, செந் நெறி நின்று, அம்முதலை வழிபட்டிருக்கலாம். இயற்கையின் உட்பொருளை எப்பெயரால் வழுத்தினாலென்ன? இயற்கைக் கடவுள், முருகன் என்னும் பெயர் தாங்கினாலென்ன? அரி அரன் என்னும் பெயர் பெற்றாலென்ன? அல்லா ஜோஹோவா முதலிய எப்பெயரால் அழைக்கப்பட்டாலென்ன? உள்ளம் மட் டும் இயற்கை முதல்மீது படிந்து கிடத்தல்வேண்டும். இயற்கை அன்புக் கடவுளை மறந்து, பகைமை பொறாமை முதலிய பேய் களை உளங்கொண்டு, எரிந்து, பிறரையும் பிறர் கொள்கையையுந் தூற்றுவது, இறைவனை உணர்த்தவல்ல இயற்கைச் செந்நெறி யில் நிற்பதாகுங்கொல்! தமிழர் வழிபட்டு வந்த முருகன், இயற்கை முதல்வன் என்ற உண்மையைப் பகைமை பொறாமை மேலீட்டான் உணர முய லாது, அவனைத் தாங்கள் வணங்குங்கடவுளினின்றும் வேறு படுத்தி, இழிதுறையில் தாக்கிச் சிறுமைச் சுவடிகள் பல மாக்க ளால் எழுதப்பட்டன. அவ்வேடுகளைக் கண்ணுற்ற தமிழ் மக்க ளிற் சிலர், சீறி எழுந்து, நெறிபிறழ்ந்து, மறுப்பெழுது மிடுக்கில், எல்லார்க்கும் ஒரே கடவுள் என்னும் உண்மையையும் மறந்து, மற்றவர் போற்றுங் கடவுளரை இழித்துக் கூறலாயினர். இழித் தலும், பழித்தலும், தூற்றலும், போற்றலும் செல்லுமிடம் ஒன்றே என்பதை அன்பர்கட்கு நினைவூட்டி மேற்செல்கிறேன். சமயப் பூசல்களும் மறுப்புக்களும் மலிந்து, நாட்டை எரித்த வேளை யில், ஒவ்வொரு சார்பிலுஞ் சிலர் எழுந்து ஒன்றுபட்டுக் கட வுளர்க்குள் உறவு கற்பித்துக் கொண்டனர். புராணக் குப்பை களைக் கிளறினால், தும்பு தூசுகள் பறத்தல் காணலாம். தும்பு தூசுகள் அறிவுக் கண்ணைக் கெடுக்குமாகலான், குப்பைகளை ஈண்டுக் கிளறாது, ஒரு நொடிப்பொழுது அவைகளை மேற் பார்வையிடலாம். வடமொழிப் பாரதத்தில் சொல்லப்படும் முருகன் தோற் றத்துக்கும், அம்மொழி காந்தத்தில் சொல்லப்படும் முருகன் தோற்றத்துக்கும் வேற்றுமையிருக்கிறது. முருகன் தோற்றம் மற்றுமுள்ள புராணங்களில் இன்னும் பலவாறு பேசப்பட்டிருக் கிறது. பரிபாடல் முருகனைப் பற்றிப் பழிப்புரை பகர்ந்திருக் கிறது. சிவாகமங்களிற் சில பரிவார தேவருள் முருகன் ஒருவன் என்று செப்புகின்றன. சில சிவபுராணங்கள் முருகனைச் சபித் திருக்கின்றன. மற்றச் சமய நூல்கள் முருகனைப் பற்றி வெளியிட் டுள்ள கருத்துக்களை ஈண்டுக் குறிக்க வேண்டுவதேயில்லை. இவ்வசைகளைக் கண்ட முருகன் மாட்டுப் பற்றுடையார் சிலர், இகல்கொண்டு, மறுப்புக் கூறி, அவ்வச்சமயக் கடவுளரையும் இழித்துத் தூற்றிப் பழிக்குப் பழி வாங்கினர். விரிவு கௌமார நூல்களிற் காண்க. இப்போராட்டத்தால் நாட்டின் சீரே குலைந்தது. மறுப்பு நூல்களை நமது நாட்டைக் கொலை செய்யவல்ல காலன் கருவிகள் என்று யான் கூறுவேன். மறுப்பு நூல்களிலுள்ள கயமை உரைகளை என்னென்று சொல்வேன்? பொறாமையால் பகைத்துக் கனன்று சீறித் தம்மை மறந்து போரிடுங் கயவர் வாயினின்றும் எத்தகைச் செவ்விய மலர்கள் உதிருமென்று சொல்லலும் வேண்டுமோ? தொடக்கத்தில் ஒருவரோடொரு வர் பிணங்கிப் போரிட்டபோது, ஒருவரையொருவர் இழி மொழிகளால் ஏசிக்கொண்டு, பின்னை ஒற்றுமை விளைந்த வேளையில், அவரவர் தத்தங் கடவுளர்க்குள் மாமன் மருகன் தந்தை பிள்ளை முதலிய உறவுமுறை வகுத்து, அளவளவின ரென்று ஊகித்துணர இடனிருக்கிறது. பிணங்கியபோது ஏசிய மொழிகளும், இணங்கியபோது உறவுகொண்ட மொழிகளும் அவ்வந்நாளைய நூல்களில் விரவிக் கிடக்கின்றன. இந்நிலை நேர்ந்த காலத்தை நாட்டின் குழப்பக் காலம் என்றுரைக்கலாம். இக்குழப்பத்துக்குப் பின் தோன்றிய அறிஞர் சிலர் எல்லாப் பொய்கட்கும் புரட்டுகட்கும் நியாயங்கூறப் புறப் பட்டனர். இப்பொய்ப் புரட்டுகட்கும் அவர் உட்பொருள் (தத்துவார்த்தம்) உரைக்கத் துவங்கினர். அதையும் இதையுஞ் சேர்த்துக் குழம்புங் கூழுமாக்கினவருஞ் சிலருளர். எத்தனையோ கூறு கூறாக நமது நாட்டுப் பழங்கொள்கை சிதறிச் சிதறிப் பாழ் பட்டது. அப்பாழுங் காலத்தையுங் கோலத்தையும் நினைக்கவும் நெஞ்சமெழவில்லை. இருபதாவது நூற்றாண்டில் வாழும் நாம் - ஆராய்ச்சி யுலகில் வதியும் நாம் - பிறநாட்டுக் கூட்டுறவு பெற்றுள்ள நாம் - என் செய்வது? என் செய்வது என்று வாளா கிடத்தலாகாது. ஆண்டவன் நமக்கு அறிவை வழங்கி யிருக்கிறான். கண்ணுக் கெதிரே உண்மை நூலாகிய இயற்கை யுலகம் காட்சியளிக்கிறது. அறிவுகொண்டு, இயற்கை யுலகமெனும் உண்மை நூல் பயின்று, உண்மை காண உழைக்க வேண்டுவது நமது கடன். பகைமை பொறாமை இகல் முதலிய தீக்குணங்களின்றி, உண்மை காணவேண்டுமென்னும் வேட்கை மீக்கூர்ந்து, ஆராய்ச்சித்துறை நண்ணினால், முருகெனும் நம் தந்தையைக் கொழுகொம்பாக் கொண்டுள்ள நமது இயற்கைத் தாய் வழிகாட்டுவாள். எந்தை முருகனிருக்கும்போது, அன்னை இயற்கை யிருக்கும்போது நமக்கென்ன குறை? செயற்கையுடன் நமக்கென்ன வேலை? என்ன விளையாட்டு? இயற்கைக் கடவுள் ஆணை வழி நின்று, நமது கடனாற்றுவோமாக. முருகனைப் பற்றிப் பின்னை நாளில் நமது நாட்டில் குவிந்த குப்பைகள்மீது நாட்டஞ் செலுத்த வேண்டுவதில்லை. குப்பை என்றைக்காதல் விலக்கப்படும்; அல்லது மண் அதைத் தின்று மறைக்கும். அழுக்கு உலகைக் கனவிலுங் கருதாதிருக்குமாறு அன்பர்களை வேண்டுகிறேன். என்றுமுள்ள இயற்கையின்பால் நாம் அணைவோம்; அதன் உட்பொருளாகிய முருகை யுணர முயல்வோம். முருகன் இயற்கையை உடலாக்கொண்ட உயிர் என்னும் பழங்கொள்கையில் நெஞ்சம் நிலைக்க. முருகன் என்னும் பெயருக்குப் பதிலாக வேறு எப்பெயர்கொள்ளினுங் கொள்க. முருகன் என்னும் பெயர் மிகத் தொன்மையது. நாம் பற்றுக் கோடாகக் கொண்ட பொருள் இயற்கையின் உள்ளுறையா யிலங்குஞ் செழும்பொருள் என்னுங் கருத்தினின்றும் மட்டும் பிறழலாகாது. இவ்வுறுதிக்கண் திளைத்து நின்று, முருகன் இயற்கை வடிவினன் என்னுங் கொள்கைக்கு அரண் செய்யும் நூல்களையுங் கதைகளையும் முற்றுமோ, ஒரோ வழியோ ஏற்பது நலன். குப்பை என்று வழங்கப்படும் ஏட்டுச் சுவடிகளில் பேர் பெற்று விளங்குவன புராணங்கள். புராணங்கள் தமிழ் நாட்டின் முதல் நூல்களல்ல. புராணங்கள் வேறு உலகினின்றும் நந்தமிழ் நாட்டிலே குடியேறினவை. புராணமென்னுஞ் சொல்லே தமிழ்ச் சொல்லன்று. புராணம் தமிழ் நாட்டில் புகுந்த பின்னர்த் தமிழரும், புராணம் என்னுஞ் சொல்லை ஆட்சியில் கொணர்ந் தனர். பெரிய புராணம் என்பது தமிழ்நாட்டில் தோன்றிய ஒரு தனி நூல். இப்புராணம் பதினெண் புராணக் கூட்டத்திலாதல், பிற புராண இனத்திலாதல் சேர்ந்ததன்று. இத்தகைப் புரா ணங்கள் இரண்டொன்று போகத் தமிழிலுள்ள ஏனைய புராணங்கள் யாவும் வடமொழியினின்றுந் தமிழில் பெயர்த்துப் புலவர்களால் எழுதப் பட்டனவே. புராணங்கள் முதல் முதல் நன்னோக்கத்துடன் எழுதப் பட்டன. நன்னோக்கத்துடன் எழுதப்பட்ட புராணங்களில் இயற்கை உண்டு; பாட்டு உண்டு; இறை உண்டு; வாழ்வு உண்டு; அறம் உண்டு; ஒழுக்கம் உண்டு; அன்பு உண்டு; எல்லாம் உண்டு. புராணங்களின் உட்கிடக்கையை யோராது, பின்னே பாட்டுப் பாடப் பயின்றோ ரெல்லாரும் புராண நாடகத்தில் புத்தி செலுத்தி நடிக்கத் தொடங்கினர். அவரால் புராணம் பெருங் கூத்தாக முடிந்தது. சமயவெறியர் பலர், பிற சமயக் கடவுளர் நிந்தனையொன்றையே குறிக்கொண்டு, போலிக்கதைகள் புனைந்து, புராணம் பாடத் தொடங்கினர். காமுகர் சிலரும் புரா ணம் பாடியுள்ளனர். இப்புராணங்களிலுள்ள வருணனைகள், மொழி அன்னையின் எழின் முகத்தில் அம்மைப்புள்ளி வார்த்து, இயற்கையை மறைப்பனவாயின; கதைகளோ, விலங்கும் வெறுக்கத் தக்கன. இப்போலிப் புராணங்களால் மொழிக்கும், கடவுள் நெறிக்கும், வழக்க ஒழுக்கங்கட்குங் கேடு விளைந்தது என்று சுருங்கச் சொல்லலாம். புராணம் என்னுஞ் சொல்லைக் கேட்டதும் கண்டதும் கடவுள் நூல் என்று ஏழை மக்கள் ஏமாந்து போகிறார்கள். பலர் புராணமா? குப்பை என்று பொதுவாகப் புராண உலகையே கடிகிறார். உண்மை நூலாராய்ச்சியுடைய அறிஞருள் ஒருசிலர் புராண உலகிலுள்ள நன்மை தீமைகளைப் பகுத்துணர்கிறார். பொதுவாகப் புராண உலகம் மதிப்பிழந்துவிட்டது. இந்நிலையில் இந்நாளில் புராண உலகில் நுழையிலோ அந்தோ! இருண்மயம் இருண்மயம்! புராண உலகில் இருள் கொண்டல் கொண்டலாகத் திரண்டு உருள்கிறது. இருட்டில் என் செய்வது? ஆனால் இடையிடையே மின்னொளி தோன்றித் தோன்றி மறைகிறது. ஒளி தோன்றும்போது உற்று நோக்கினால் நச்சுக் கடலுள்ள இடமும், பாலாழியுள்ள இடமும் புலனாகும். பாலாழியின் பக்கல் அணையவேண்டுவது அறிஞர் கடமை. உண்மை நூல்கள் பல ஆராய்ந்து, ஆராய்ச்சியால் தெளியும் அறிவுத் துணைகொண்டு, புராணங்களைப் பகுத்துணர்வது அறிஞர்க்கழகு. யான் புராணங்களை முத்திறமாகப் பிரிப்பது வழக்கம். ஒன்று மெய்வரலாறுகளைத் தெரிப்பது; இன்னொன்று தத்துவ நுட்பத்தை உலகோர் பொருட்டுக் கதைகளாகப் புனைந்துரைப் பது; வேறொன்று பொய்யே புகல்வது. முதலினத்திற் சேர்ந்த புராணங்கள் மிகச் சில. கடைக் கூட்டத்திற் சேர்ந்த புராணங்கள் பல. இவை, இயற்கை நுட்பமும் தத்துவ ஆராய்ச்சியுங் குன்றிய காலத்துப் பொழுதுபோக்குக்கெனச் சொற்புலவராலும், சமயவெறியராலும், காமுகராலும் யாக்கப்பட்டன. இடை வகுப்பைச் சேர்ந்த புராணங்களே ஆராய்ச்சிக்குரியன. புத்தர் ஜாதகக் கதைகள் தோன்றிய நாள்தொட்டு நமது நாட்டில் புராணங்களுந் தோன்றலாயின. தத்துவ நுட்பங்களை மக்கள் எளிதில் உணருமாறு கதை வடிவாக எழுதப்பட்ட நூல் களே இப்புராணங்கள். ஆண்டவன்பால் பிரிவின்றி அவனது அருள் பொலிகிறது. ஆண்டவனை ஆணாகவும், அவனது அருளைப் பெண்ணாகவும் கொள்வது நமது நாட்டு வழக்கம். இவ்வழக்கையொட்டிப் புல வர் உமைநங்கையோர் பங்குடையாய் என்று பாடுவர். இதன் கருத்தென்னை? அருளோடு கூடிய ஆண்டவனே என்பது கருத்து. அருளது சத்தியாகும் என்று ஞானசாத்திரம் நவில் கிறது. ஆண்டவனையும், அவனது அருளையும் புராணம் வேறு முறையில் கூறும். முறையில் வேறுபாடிருக்கிறதேயன்றிக் கருத் தில் வேறுபாடில்லை. ஆண்டவனையும் அருளையும் முறையே தலைவன் தலைவியாகக் கொண்டு, புராணம், திருமணம் - விளையாட்டு - முதலிய படலங்கள் வகுத்துக் கதைகளாக உருவகஞ்செய்து, அணிபெறக் கூறும். ஆகவே புராணங் கூறு வதை அங்ஙனே பருமையாகக் கோடலாகாது. அங்ஙனங் கொள் வோருமுளர். அவர் மதமே பௌராணிகம் என்பது. புராணங்கள் புனைந்துகூறுங் கதைகளின் உட்பொருள் உணர்வோர்க்கு அவைகளின் நுட்பம் விளங்கும். இன்னும் புராணங்கட்கெனப் பரிந்து பேசுமிடம் இந்நூலன்று. இந் நூலின் போக்கிற்கேற்பப் புராண உலகைப்பற்றிச் சிறிது கூறல் இன்றியமையாததாயிற்று. இனிப் புராண உலகுக்கும் முருகக்கடவுளுக்கு முள்ள தொடர்பு குறித்துச் சிலவுரை பகர விரும்புகிறேன். முருகன், இயற்கை முதல்வனாக நின்று, இயற்கையை இயக்கி, அதன் வாயிலாக உயிர்கட்கு நலஞ் செய்து வருவதைப் புராணங்கள் பல திருவிளையாடல்களாகப் புகல்கின்றன. புராணங்களின் உட்கிடக்கையை உணர்தல் வேண்டும். உட்கிடக்கையை உண ராது வெறுங் கதைகளை மட்டும் கோடல் முருகன் இயல்பைத் தெளிவதாகாது. முருகன் இயற்கையின் உள்ளுறை என்னுங் கொள்கைக்குப் புராணக் கதைகள் அரண் செய்யும். அரண் செய்யுமாறே இனிய நறும் புராணங்கள் யாக்கப்பட்டுள்ளன. முருகனைப்பற்றிக் கூறும் புராணங்கள் பல. அவைகளுள் தலையாயது மஹா காந்தம். இப்புராணத்தின் ஒருகூறு கச்சியப்ப சிவாச்சாரியரால் தமிழில் பாடப்பட்டிருக்கிறது. இதுவே தமிழ்க் கந்தபுராணமென்பது. இப்புராணத்துக்கு வழி சார்புகளாகச் சில நூல்கள் செய்யப்பட்டன. ஈண்டு எடுத்துக் காட்டிற்குத் தமிழ்க் கந்தபுராணத்தையே கொள்கிறேன். தமிழ்க் கந்தபுராணத்துக்கும் முற்றும் உட்பொருள் கூற யான் புகுகிறேனில்லை. பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் பார்த்தல் என்னும் முறை (தாலிபுலாக நியாயம்) பற்றி இரண் டொன்று எடுத்துக் காட்டல் சாலும். முதலாவது முருகன் தோற்றத்தை மட்டுஞ் சிறிது ஆராய்வோம். இதை ஆராய்ந்தாலும் முருகன் இயற்கை முதல்வன் என்பது புலப்படும். புராணக் கதையின் உள்ளுறையை ஓராது, வாயில் வந்தவாறு பிதற்றுவது அறியாமை. உலகில் ஒருவ னுக்கும் ஒருத்திக்கும் பிறக்கும் குழந்தைபோல் சிவனுக்கும் உமைக்கும் முருகன் பிறந்தான் என்று கருதுவோர் மிகக் கீழ்நிலையிலிருப்போர். இவர் புராணக் கதைகளை உள்ளவாறே நம்புவோர். எங்கும் நிறைந்துள்ள முருகு யாண்டுத் தோன்றும்? யாண்டு ஒடுங்கும்? கந்தரநு பூதிபெற்றுக் கந்தரநு பூதிசொற்ற எந்தை அருணாடி யிருக்குநாள் எந்நாளோ என்று வேதாந்த சித்தாந்த சமரச ஞானச் செல்வராகிய தாயுமானார் வழுத்திய அருணகிரிநாதர், காணொ ணாதது உருவோ டருவது, பேசொ ணாதது உரையே தருவது, காணு நான்மறை முடிவாய் நிறைவது - பஞ்சபூதக் - காய பாசம தனிலே யுறைவது, மாய மாயுடலறியா வகையது* * சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞான சிவ, சமய வடி வாய்வந்த அத்துவித மானபர, சுடரொளிய தாய்நின்ற நிட்கள சொரூபமுத - லொருவாழ்வே - துரியநிலை யேகண்ட முத்தரித யாகமலம், அதனில்விளை யாநின்ற அற்புத சுபோதசுக, சுயபடிக மாவின்ப பத்ம பதமே அடைய - உணராதே போத நிர்க்குண போதா நமோநம, நாத நிஷ்களநாதா நமோநம சுருதி யூடு கேளாது, சரியை யாளர் காணாது, துரிய மீது சாராது - எவராலுந் - தொடரொ ணாது மாமாயை, யிடைபு காது ஆனாத, சுகம கோத தீயாகி - யொழியாது - பருதி காயில் வாடாது, வடவை மூளில் வேகாது, பவனம் வீசில் வீழாது - சலியாது - பரவை சூழி லாழாது, படைகள் மோதில் மாயாது வாசித்துக் காணொணாதது,பூசித்துக் கூடொணாதது, வாய்விட்டுப் பேசொணாதது - நெஞ்சினாலே - மாசர்க்குத் தோணொணாதது, நேசர்க்குப் பேரொணாதது, மாயைக்குச் சூழொணாதது ஒல மறைக ளறைகின்ற வொன்றது, மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர், ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ - ரெவராலும் - ஓத வரிய துரியங் கடந்தது, போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும், ஊனு முயிரு முழுதுங் கலந்தது - சிவஞானம் - சால வுடைய தவர்கண்டு கொண்டது, மூல நிறைவு குறைவின்றி நின்றது, சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ - னவியோமஞ் - சாரு மநுப வரமைந்த மைந்தமெய், வீடு பரம சுகசிந்து இந்த்ரிய, தாப சபல மறவந்து நின்கழல் - பெறுவேனோ பாணிக்குட் படாது சாதகர், காணச்சற் றொணாது வாதிகள், பாஷிக்கத் தகாது பாதக - பஞ்சபூத - பாசத்திற் படாது வேறொரு, பாயத்திற் புகாது பாவனை, பாவிக்கப் பெறாது வாதனை - நெஞ்சமான - ஏணிக்கெட் டொணாது மீதுயர், சேணுக்குச் சமான நூல்வழி, யேறிப்பற் றொணாது நாடினர் - தங்களாலும் - எதுச்செப் பொணாத தோர்பொருள் என்று போற்றிய ஒரு பொருளோ தோற்றக்கேடுடையதாகும்? இயற்கை மணமுடையான், மாறா இளமை யுடையான், கட வுட்டன்மை யுடையான், அழியா அழகுடையான், எம்பெரு மான் முருகனே எல்லாம்; அவனே சிவன்; அவனே திருமால்; அவனே யெல்லாம். ஐந்து பூதமு மாறு சமயமு, மந்த்ர வேதபு ராண கலைகளும், ஐம்ப தோர்வித மான லிபிகளும் - வெகுரூப - அண்ட ராதிச ராச ரமுமுயர், புண்ட ரீகனு மேக நிறவனும், அந்தி போலுரு வானும் நிலவொடு - வெயில்காலும் - சந்த்ர சூரியர் தாமு மசபையும், விந்து நாதமு மேக வடிவம, தன்சொ ரூபம தாக வுறைவது - சிவயோகம் சுருதி யாயிய லாயியல் நீடிய, தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள், தொடர்பு மாயடி யாய்நடு வாய் மிகு - துணையாய்மேல் - துறவு மாயற மாய்நெறி யாய்மிகு, விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள், சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு - சுடர் வீசும் - பருதி யாய்மதி யாய்நிறை தாரகை, பலவு மாய்வெளி யாயொளி யாயெழு, பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு - பரமாகும் எனவரூஉந் திருப்புகழ்ப் பாக்களை ஆராய்க. எல்லாமாய் விளங்குஞ் செம்பொருட்குப் பிறப்பேது? இறப்பேது? புராணத்தில் முருகன் தோற்றம் கூறப்பட்டிருக்கிறதே. அஃதென்னை? என்று சிலர் ஐயுறலாம். புராணம் கூறும் முருகன் தோற்ற வரலாறும், அவன் இயற்கை முதல்வன் என்பதை வலியுறுத்தவே எழுந்ததென்க. இதை ஆராயின் உண்மை காணலாம். முருகன், சிவபெருமான் திருக்கண்களி னின்றுந் தோன்றி, காற்றாலும் (வாயுவாலும்) நெருப்பாலும் (அக்னியாலும்) தாங்கப் பெற்று, நாணற் (சரவணப்) பொய்கையில் குழந்தையாய், மண்ணில் (பூமியில்) திருவிளையாடல் புரிந்தான் என்று புராணங் கூறுகிறது, இதனை ஆராய்ந்தால் முருகன், மண் புனல் தீ வளி வெளி என்னும் ஐந்து பூதங்கட்குங் காரணன் என்பது புலனாகும். சிவம் - வெளி; வாயுவும் அக்கினியும் - முறையே காற்றுந் தீயும்; சரவணப் பொய்கை - புனல்; பூமி - மண். இவ் வுண்மை கண்ட கச்சியப்ப முனிவர் தமது தணிகைப் புராணத் தில், ஓங்கொளியாய் விசும்பாதி தொறுமியலுந் தனதியல்பை உருவின் மாட்டும் பாங்குபெறத் தெரித்ததுபோற் பலபொறியாய்ப் பரமர்விழி பயந்த ஞான்று தேங்கொளியாய் வெளியடர்ந்து வளிதொடர்ந்தொள் ளொளிபடர்ந்து தெளிநீர்ப் புக்கு நீங்கிவிளை யாட்டயர்ந்து தணிகையமர் பெருவாழ்வை நினைந்து வாழ்வாம் என்று முருகனைப் போற்றியிருப்பது ஈண்டு உன்னற்பாலது. இச்செய்யுட்கணுள்ள உள்ளுறை அறிஞர் கருத்தைக் கவரும். முருகப்பெருமான் இயற்கை முதல்வன் என்பதைக் கதை வாயி லாகப் புராணம் அறிவுறுத்தும் நுட்பத்தை ஞான நூல் துணை கொண்டு ஆராய்ந்து உணரவேண்டுவது அறிஞர் கடமை. சிவபெருமானைத் தந்தையென்றும், உமையம்மையைத் தாயென்றும், முருகனைப் புதல்வனென்றுஞ் சொல்லப்படு வதும் புராண முறை. இம்முறைபற்றி அன்பர்கள் பரம்பொருளைப் போற்றி வருவது நமது நாட்டு வழக்கத்தை யொட்டியது. நாட்டுக் கல்வி அருகியுள்ள இந்நாளில் இவ்வழக்கின் பொருள் முதலியன மறைந்து கிடக்கின்றன. என் செய்வது? தந்தை தாய் புதல்வன் என்று புராணம் கூறும் முறையின் உட்பொருளை விரித்துக் கூறவேண்டுவதில்லை. பரம்பொருள் சச்சிதானந்த (சத் சித் ஆனந்தம் - உண்மை அறிவு இன்பம்) மயமா யிருப்பது என்பதைத் தந்தை தாய் சேய் என்று புராணங் கூறு கிறது. சத் - உண்மை-சிவம்; சித் - அறிவு - சக்தி; ஆனந்தம் - இன்பம் - குகன். இவ்வுண்மையை உலகோர்க்கு உணர்த்துவதே சோமாகந்த மூர்த்தம் என்பது. (உமையோடு கூடிய ஒருவனும் கந்தனும் என்றபடி.) சத் சித் ஆனந்தமென்னும் மூன்றும் சொல் லால் வேறு பட்டிருப்பது போலத் தோன்றினும், அவை பொருளால் ஒன்றையே குறிப்பனவாம். அகல நீள உயரங்கொண்ட ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். அகலம் நீளம் உயரம் என்னும் மூன்றும் தனித் தனி பிரிந்து நிற்பனவா என்றும், இவை தம்மைக் கொண்டுள்ள பொருளை விடுத்தாதல் நீங்கி நிற்பனவா என்றும் கூர்ந்து நோக்குவோமாக. நோக்கின், மூன்றும், ஒன்றை விடுத்தொன்று பிரிந்து நில்லா என்பதும், தம்மைக்கொண்டுள்ள பொருளையும் விடுத்து நீங்கி நில்லா என்பதும் செவ்வனே விளங்கும். அகல நீள உயரம் போன்றன சத் சித் ஆனந்தம். இம் மூன்றையுமுடைய பொருள் போன்றது பரம்பொருள். இதனைப் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தமது திருவலங்கற்றிரட்டு என்னும் நூற்கண், எதிலே நீளமோ அதிலே அகலமும் - எதிலே அகலமோ அதிலே நீளமும் - எதிலே கனமோ அதிலே நீளமும் - எதிலே நீளமோ அதிலே கனமும் - எதிலே அகலமோ அதிலே கனமும் - எதிலோ கனமோ அதிலே அகலமும் - உண்டன் னணமே யுணரின் முறையே - எங்கே அறிவோ அங்கே உண்மையும் -எங்கே உண்மையோ அங்கே அறிவும் - எங்கே இன்பமோ அங்கே அறிவும் - எங்கே அறிவோ அங்கே இன்பமும் - எங்கே இன்பமோ அங்கே உண்மையும் - எங்கே உண்மையோ அங்கே இன்பமும் - எங்கே சிவையோ அங்கே சிவமும் -எங்கே சிவமோ அங்கே சிவையும் - எங்கே சேயோ அங்கே சிவையும் - எங்கே சிவையோ அங்கே சேயும் - எங்கே சேயோ அங்கே சிவமும் - எங்கே சிவமோ அங்கே சேயும் - ஆமென் றறிபவர் தாமே அறிஞர் - போமுன் றெரிவீர் பூமியு ளீரே என்று விளங்க ஓதியிருத்தல் காண்க. செம்பொருள் என்பது உண்மை (சத்) அறிவு (சித்) இன்ப (ஆனந்த) வண்ணமாயிருப்பது. உயிர்கள் பெறவேண்டுவது இன்பம். இன்பப்பேற்றிற்கு மெய்யறிவு இன்றியமையாதது. மெய்யறிவிற்கு வேண்டற்பாலது உண்மை. உண்மையும் மெய்யறிவும் விளங்கிய போதே ( இவைகளுடன்) பிறப்பது இன்பம். இவ்வாறு பிறக்கும் இன்பத்தைச் சேயென்றும், உண்மையைத் தந்தையென்றும், அறிவைத் தாயென்றும் உவமித்துப் புலவர் பாடுகின்றனர். புராணங்களோ இன்ப மெனுஞ் சேய்க்குத் திருவவதாரப் படலங்கள் வகுக்கின்றன. புலவர் பாக்களின் உள்ளுறையையும் திருவவதாரப் படலங் களின் உள்ளுறையையும் உயிராகக் கொண்டு, மற்ற அணி களையும் வருணனைகளையும் அழகிய உடலாகக் கற்றவர் கொள்வர். உருவக அலங்காரக் கதைகளைப் பொருளாக மற்றவர் கொள்வர். இன்ப (ஆனந்த) மயமாயிருக்கும் ஆண்டவனே என்னை யாளுடைய முருகன். இன்பத்தில் (ஆனந்தத்தில்) ஏனைய இரண்டுமிருத்தல் இயல்பு. (சத் சித் தெனும்) சிவஞ் சத்திக்குக் (ஆனந்தமெனுங்) குகன் பிறந்த வரலாறு கூறும் புராணத்தின் நுட்பந்தேர்க. சிவனே குகன் குகனே சிவன் என்பதை, சிவ குமாரன் முருகன் என்று கூறப் போந்த புராணமும் புகலாமற் போக வில்லை. அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள் பன் னிரண்டுங் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய ஈச னேயவ னாடலான் மதலையா யினன்காண் ஆசி லாவவ னறுமுகத் துண்மையா லறிநீ பேசி லாங்கவன் பரனொடு பேதக னல்லன் தேசு லாவகன் மணியிடைக் கதிர்வரு திறம்போல் ஆதலி னமது சத்தி அறுமுக னவனும் யாமும் பேதக மன்றா னம்போல் பிரிவிலன் யாண்டு நின்றான் ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும் போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான் என்று கந்தபுராணங் கூறுதல் காண்க. இப்புராணமே, ஊரி லான்குணங் குறியிலான் செயலிலா னுரைக்கும் பேரி லானொரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரி லான்வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரி லானுயிர்க் கடவுளா என்னுளே நின்றான் என்று முருகனை வழுத்துதலுணர்க. கந்தபுராணம் மற்றுமோ ரிடத்தில், உலைப்படு மெழுக தென்ன உருகியே ஒருத்தி காதல் வலைப்படு கின்றான் போல வருந்தியே யிரங்கா நின்றான் கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலிற் றோன்றி அலைப்படு தன்மைத் தன்றோ அறுமுக னாட லெல்லாம் என்று புகல்கிறது. புராணத்தின் திருவிளையாடல் நுட்பங்களைச் சிறிது முயன்று பார்த்தல்வேண்டும். ஞானநூலாராய்ச்சியிலார்க்குப் புராணக் கதைகள் பொய்போலத் தோன்றும். அந்நூலாராய்ச்சி உடையார் கதைகளின் உள்ளுறையை உணர்ந்து இன்ப நுகர்வர். உள்ளுறைக்கு (தத்துவார்த்தத்துக்கு) அடங்காத புராணங்களு முண்டு. புராணம் சிவனே முருகன் என்று கூறுவது ஒருபால் கிடக்க. சிவனே முருகன் - முருகனே சிவன் என்று அநுபூதி மானாகிய அருணகிரிநாதருங் கூறியுள்ளனர். மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர - மன்றுளாடும் சிவசிவ ஹரஹர தேவா நமோநம, தெரிசன பரகதி யானாய் நமோநம, திசையினு மிசையினும் வாழ்வே நமோநம - செஞ்சொல் சேருந் - தினைபுன வனிதை மணாளா நமோநம, திரிபுர மெரிசெய்த கோவே நமோநம, ஜெயஜெய ஹரஹர தேவா சுராதிபர் - தம்பிரானே இவ்வாறு வேறு பலவிடங்களிலும் நம் பெரியார் அருளிச் செய்துள்ள பாக்கள் பல உண்டு. இயற்கை முதல்வனாகிய முருகன் ஆறுமுகங் கொண்டது, வேல் தாங்கியது, சூரரைத் தடிந்தது, இருமாதரை மணந்தது முதலிய வரலாறுகளிலுள்ள உண்மைகளைக் குமார தந்திரம், கந்தபுராணம், திருப்புகழ், சுப்ரமண்ய பராக்கிரமம், பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் பிரபந்தங்கள் முதலியவற்றிற் காண்க. ஆறுமுகம் - பிரணவத்தோடுகூடிய அஞ்செழுத்தின் (பஞ்சாக்கரத்தின்) அறிகுறியென்றும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மேல், கீழ் என்னும் ஆறினும் நிறைந்து நிற்கும் சிதாகாச வடிவத்தை அறிவுறுத்துவதென்றும், அறுசமயப் பொருளை விளக்குவதென்றும், வேறு பல நுட்பங்களை உளங்கொண்ட தென்றும் சொல்லப்படுதல் காணலாம். சிவஞ் சக்தி யிரண்டும் ஒன்றுபடும் சுத்த பிரமநிலையே சுப்பிரமணியம் என்று சொல்லப் படுவதிலும் அறுமுக உண்மை உண்டு. (சிவ பெருமானுக்கு ஐம்முகம். சக்திக்கு ஒருமுகம். இரண்டுஞ் சேர்ந்த ஒன்றற்கு ஆறு முகம்.) ஆறாவது முகம் அதோமுகம் என்றுஞ் சொல்லப்படு கிறது. ஐம்புலனும் ஒன்றப்பெறும் சான்றோர்பால் விளங்கும் (சித்சக்தி) ஆறாவதறிவுக்குப் பொருளாவது அதோமுகம் என்பது. அஞ்சுமுகந் தோன்றில் ஆறுமுகந் தோன்றும் என்றார் நம் நக்கீரனார். அவரே திருமுருகாற்றுப்படையுள் ஆறுமுகங் களைப் பற்றி, மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுகம் ஆர்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக் காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுகம் எஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக் கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட்டன்றே யொரு முகம் குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்கம் மூவிரு முகனு முறைநவின் றொழுகலின் என்று கூறியிருத்தல் காண்க. சூரர் - ஆணவம் கன்மம் மாயை. (சூரபன்மன் - ஆணவம்; சிங்கமுகன் - கன்மம்; தாரகன் - மாயை.) (சூரபன்மனொடு முரு கன் பொருத நுட்பம் மேலே ஓரிடத்தில் விளக்கப்பட்டிருக்கிறது) வள்ளி - இச்சாசக்தி, தெய்வயானை - கிரியா சக்தி, வேல் - ஞான சக்தி. முருகனுடைய இச்சையால், கிரியையால், ஞானத்தால் மக்களிடத்துள்ள இச்சையும், கிரியையும், ஞானமும் கூர்ந்து விளங்கவேண்டுமாதலால், அவன் முறையே மூன்றற்கும் அறி குறியாக வள்ளி தெய்வயானை வேல் என்னும் மூன்று சக்தி களையுந் தாங்கியுள்ளான். முருகனை வழிபடுவோர் மூன்றும் விளங்கப்பெறுவர். முருகன் வழிபாடு இப்பொழுது குறைவுற் றுள்ளமையால், மக்கள், இச்சை கிரியை ஞானம் விளங்கப் பெறாது, வறுமை முதலிய சிறுமைகளுக்கு அடிமைப்பட்டு இடர்ப்படுகிறார்கள். வள்ளியைக் கிரியையாகவும் தெய்வ யானையை ஞானமாகவுங் கூறும் முறை வேறொன்றுளது. இதனை, கல்லகங் குடைந்த செவ்வேல் கந்தனோர் தருவ தாகி - வல்லியர் கிரியை ஞான வல்லியின் கிளையாய்ச் சூழப் - பல்லுயிர்க் கருளைப் பூத்துப் பவநெறி காய்த்திட் டன்பர் - எல்லவர் தமக்கு முத்தி யிருங்கனி யுதவு மென்றும் எனவருங் கந்த புராணச் செய்யுளால் உணர்க. இம்முறை ஐந்தொழிலிலும், சரியையாதி பாதங்களிலும் உறுஞ் சக்தி பேதங்களைக் கொண்டது. இவ்வேற்றுமைகளைக் குறித்து ஈண்டு மல்லாட வேண்டுவதில்லை. இயற்கை மணமுடையான், மாறா இளமையுடையான், கடவுட்டன்மை யுடையான், அழியா அழகுடையான் முருகன் என்பதைப் புராணங்கள் ஒரு விதமாகவும், ஆகமங்கள் மற்றொரு விதமாகவும் மக்கள் அறிவு நிலைக்கேற்ற வண்ணங் கூறியிருக் கின்றன. எல்லாமாயுள்ள பொருளை எப்படிக் கூறினாலென்ன? நுட்பத்தை யுணரவேண்டுவது அறிஞர் கடன். முருகன் உண் மையைக் கதைகளாக உருவகப்படுத்தி உலகோர்க்கு அறிவுறுத் தும் புராணங்களின் உட்பொருள் தேறாது, கதைகளை மட்டும் பொருளாக் கொள்வது சில வேளைகளில் இடர் விளைப்ப தாகும். 11. இயற்கையும் முருகனும் (புராண முருகன் இயற்கை முருகன் - உருவ வழிபாடு - இயற்கையோ டியைந்த வாழ்வு - மலைவாழ்வு - எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யாமை - திருஞானசம்பந்தரும் நக்கீரனாரும் இயற்கையைப் போற்றல்.) புராண முருகன் என்றும் இயற்கை முருகன் என்றும் முருகனைப் பலபடக் கூறினால், முருகனை எப்படி எங்கே எம்முறையில் வழிபடுவது என்னும் ஐயம் சிலர்க்கு நிகழலாம். புராணத்திற் சொல்லப்படும் முருகன், இயற்கை முருகன் இயல்புகளை வடிவ மாத்திரையான் அறிவிக்கும் முருகன். புராணத்திற் சொல்லப்படும் முருகன் உருவினை முறையாக வழிபட வழிபட இயற்கை வடிவாயுள்ள முருகன் காட்சி யளிப்பன். ஓர் எல்லைக்குட்பட்ட உருவமே முருகன் என்னும் உணர்வோடு வழிபாடு செய்வோர் இயற்கையின் அழகு தெரியாதவராய், முருகனியல்பை உணராதவராய் வாழ்வோ ராவர். எங்கும் நிறைந்த அழகுப் பொருளை இவ்வுருவாக வழிபடுகிறேன் என்னும் எண்ணம் வழிபடுவோன் உள்ளத் தில் பதிந்து கிடத்தல் வேண்டும். எங்கும் நிறைந்த அழகுப் பொருளே முருகன் என்று அறிவு கூறினாலும், வடிவத்தை நினைந்து நினைந்து பழகியுள்ள நெஞ்சில் அப்பொருள் அடங்குவ தில்லை. ஒன்றையும் பற்றி நில்லாது அலையும் நெஞ்சை ஒன்றிற் பொருத்தி நிறுத்தும் ஆற்றல் உருவ வழிபாட்டிற்குண்டு. உருவம் முருகனியல்பை உணர்த்துவதாயிருத்தல் வேண்டுமென்பதை மட்டும் மறத்தலாகாது. பொறாமை பூசல் சீற்றம் முதலிய திரைகளை யெழுப்பி, இடர்ப்படும் மனத்தை ஒன்று படுத்துதற்கு உருவ வழிபாடு உறுகருவியாய் நிற்பது. ஆனால் ஓர் எல்லைக் குட்பட்ட உருவமே எல்லாம் என்று கொள்வோர் குறுகிய அறிவுடையோரே யாவர். அன்னார் அவ்வுருவமில்லா மற்ற இடங்களில் பழிபாவங்களைச் செய்யினும் செய்வர். என்னை? அவர்க்கு ஏனைய இடங்களில் முருகன் இல்லை என்னும் உணர்வுண்மையான் என்க. முருகன் இயற்கை வடிவாய் யாண்டு மிருப்பவன் என்னும் உணர்வோடு செய்யப்படும் உருவ வழிபாடு, நாளடை வில் மனக்கோட்டை அழித்து, இயற்கையிலுள்ள முருகைப் புலப்படுத்தாமற் போகாது. இப்புலப்பாடு அகப்புற வேற்று மையைக் களைவதாகும். இந்நிலை கைவரப்பெற்றோர் இயற்கை மணமுடையராய், மாறா இளமையுடையராய், கடவுட்டன்மை யுடையராய், அழியா அழகுடையராய்ப் பிறப்பிறப்புத் துன்ப மின்றி இன்ப வாழ்வில் திளைத்திருப்பர். முருகனை வழிபடல் வேண்டும் என்பதனை, உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை, உரைத்திலன் பல மலர்கொடுன் னடியினை - உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன - தருள்மாறா - உளத்து ளன்பின ருறைவிட மறிகிலன், விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன், உவப்பொடுன்புகழ் துதிசெய விழைகிலன் என்றும், உருவ வழிபாட்டையே பெரிதும் பொருளாகக் கோடலாகா தென்பதனை, சுருதி புராணங்களாக மம்பகர், சரியை க்ரியா அண்டர் பூசைவந்தனை, துதியொடு நாடுந் தியான மொன்றையும் - முயலாதே-... துரிசற ஆநந்த வீடு கண்டிட - அருள்வாயே அறிவுமறி யாமையுங் கடந்த, அறிவுதிரு மேனியென் றுணர்ந்துன், அருண சரணார விந்தமென்று - அடைவேனோ அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சு, மடியா ரிடைஞ்சல் - களைவோனே அறிவையறி வாலறிந்து - நிறைவாகி - அகிலபுவ னாதி யெங்கும், வெளியுறமெய்ஞ் ஞானஇன்ப, அமுதை யொழி யாதருந்த அருள்வாயே எங்கு நினைப்போர்கள் நேச சரவண என்றும், அகப்புற வேற்றுமையின்றி வாழ்தல் வேண்டுமென்ப தனை, நீவே றெனா திருக்க நான்வே றெனா திருக்க, நேராக வாழ்வதற்குள் - அருள்கூர நானென்ப தற்றுயிரோ டூனென்ப தற்றுவெளி, நாதம் பரப்பிரம - ஒளிமீதே - ஞானஞ் சுரப்பமகி ழாநந்த சித்தி யொடெ, நாளுங் களிக்கபதம் - அருள்வாயே என்றும், இயற்கை வழிபாட்டான் சாக்காடு ஒழிதலை, இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதோர் இயற்கை யருள்வதும் என்றும் வருந் திருமொழிகளான் உணர்க. இயற்கைவழி முருகனை வழிபடுவோர், கையால் கட்டப் படுங் கட்டடங்கள் எவ்வளவு பெரியனவாயினும், அவை கண்ணைக் கவரத்தக்கனவாயினும், அவற்றில் வாழ்தலாகாது. ஒருவேளை அவற்றில் வாழ நேரின், பெரும்பொழுது ஆண்டுக் கழியாதவாறு காத்துக் கொளல் வேண்டும், மீனுக்கு நீர் எத்தன்மைத்தோ அத்தன்மைத்து மக்களுக்குக் காற்று, காற்று மாசு கலவாததாயிருத்தல் வேண்டும். தூநறுங் காற்றை நகரங்களில் பெறுதல் அரிது. நஞ்சு கலந்த காற்று உள்ளே நுழைந்தால் மக்கள் வாணாள் சுருங்குமென்பது திண் ணம். தூநறுங் காற்றை விரும்புநர் காடடர்ந்த மலைவாழ்வை நாடிச் செல்வது நலம். மலைவாழ்வு மக்களை எவ்வாறு ஓம்பி வரும் என்பதைப் பற்றி ஈண்டு விரித்துக் கூறவேண்டுவதில்லை. மலைக்கண் வாழ்ந்து, மலைநிலக் கடவுளென்று சொல்லப் படும் இயற்கை முருகனை வழிபடுதல், இயற்கையோடியைந்து வாழ்வு நடாத்துவதாகும். மலையில் முறைப்படி வாழ்வு நடாத்து வோன் முருகைக் காணும் பேறுபெறுவன் என்பது உறுதி. மலையில் ஓடும் அருவி நீராடி, காலையில் செங்கதிர் பரப்பி எழும் இளஞாயிற் றொளியில் மூழ்கி, தூநறுங் காற்றில் படிந்து, உதிர்சருகு கனிகளுண்டு, மயில் குயில் மான் ஆன் இனங்களைக் கண்டுமகிழ்ந்து, ஒருத்தியொடு வாழ்ந்து, முருகனை வழிபட்டு வரும் ஒருவன் மாட்டு, எம்பெருமானது இயற்கை மணமும், மாறா இளமையும், கடவுட்டன்மையும், அழியா அழகும் மலர்ந்து, அவனுக்குப் பெருவாழ்வு நல்கும், பலகுன் றிலும மர்ந்த - பெருமாளே பலமலை யுடைய - பெருமாளே வடிவ தாமலை யாவையு மேவிய - தம்பிரானே குன்றுதோ றாடல்மேவு - பெருமாளே - திருப்புகழ் இயற்கை வாழ்வை நேர்பட நடாத்துவோன், கடவுள் ஆணையெனும் நியதிக்கு மாறுபடாது வாழும் இயற்கை மகன் ஆகிறான். இயற்கை வடிவாய முருகனை இயற்கை வழி வழிபடும் ஒருவன், எவ்வியற்கை வடிவிற்குந் தீங்கு செய்ய நெஞ் சிலும் நினையான். இயற்கையழகின் நுட்பமுணர்ந்த அன்னான், அழகு வடிவந் தாங்கித் துள்ளியோடும் மான் கன்றின்மீது அன்பு எய்ய ஒருப்படுவனோ? பசியமரத்தில் முருகன் அழகை மலராகப் புலப்படுத்தும் பூக்களைக் கூரிய நகத்தாற் கிள்ளத் துணிவனோ? இயற்கை இசைப்பாட்டைக் கூறுபடுத்த அவன் உள்ளம் இசை யுமோ? திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பெரியோரும் ஆண்ட வனைப் பாடும்போது, அவன் வடிவாய இயற்கையையும் உட னமைத்துப் பாடியிருப்பது நோக்கற்பாலது. சில திருப்பாடல்கள் வருமாறு :- பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமத் தாகப்புத் தேளிர் கூடி மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட கண்டத்தோன் மன்னுங் கோயில் செறியிதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கும் இலைக்குடைக்கீழ்ச் செய்யார் செந்நெல் வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம் வீற்றிருக்கு மிழலை யாமே எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கள்தம் புரமூன்று மெழிற்க ணாடி உழுந்துருளு மளவையுனொள் ளெரிகொளவெஞ் சிலைவளர்த்தோ னுறையுங் கோயில் கொழுந்தரள நகைகாட்டக் கோகநக முகங்காட்டக் குதித்து நீர்மேல் விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம் வழிகாட்டு மிழலை யாமே உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான் கோயில் வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டு பாட விரைசேர்பொன் னிழிதர மென்காந்தள் கையேற்கு மிழலை யாமே இயற்கைப் புலவராய நக்கீரனாரும் பழமுதிர்சோலையி லுள்ள நம் மலைகிழவோனைப் பாடும்போது, அவனது இயற்கை வடிவை, பலவுடன் வேறு பஃறுகிலி னுடங்கி யகில்சுமந் தார முழுமுத லுருட்டி வேரற் பூவுடை யலங்குசினை புலம்ப வேர்கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த தண்கம ழலரிறால் சிதைய நன்பல ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமல ருதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீ இக் கோழி வயப்பெடை இரியக் கேழலோ டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம் பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட் டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் றிழுமென விழிதரு மருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே என்று, அருவி - சோலை - மலையாகப் பாடியிருத்தல் காண்க. இயற்கை, இறைவன் வடிவாதலால், அதைத் தெய்வப் புலவர் பாடிப்பாடி மகிழ்வர். இவ்வுண்மை தெளியாதார் வெறும் பாழை வெற்றுரையால் கூறுவர். இறைவன் வடிவாய இயற் கையைச் சிதைப்பது இறைவனைச் சிதைப்பதாகும். ஆதலால், இயற்கைவழி முருகனை வழிபடல் என்பதனை, எவ்வுயிர்க்கும் எக்காரணம் பற்றியுந் தீங்கு செய்யாமை என்று சுருங்கக் கூறலாம். இயற்கை வனப்பையும், அதனால் விளையும் இன்பத்தையும் முறையே உணர்ந்து நுகர்வோர் எவ்வியற்கை வடிவிற்குத் தீங்குசெய்ய உடன்படுவர்? தீங்கு நினைவு தோன்றும் உள்ளத் தில் இயற்கை வனப்புணர்வாதல், இயற்கை இன்ப நுகர்ச்சி யாதல் உறுதல் அரிது. இயற்கை வனப்புணர்வும், அதனால் இயற்கை இன்ப நுகர்ச்சியும் உறும் உள்ளத்தில், என்றும் அன்பு அலர்ந்து அருட்டேன் பிலிற்றிக்கொண்டே யிருக்கும். இவ் வுள்ளத்தார் என்றும் இளையராய் அழகுடையராய் வாழ்வர். 12. வேண்டுகோள் (அருள் - அஞ்சாமை - இயற்கை வாழ்வினரை நாள்கோள் ஒன்றுஞ் செய்யாமை - திருப்புகழ் மாண்பு - அருணகிரியார் வீரமொழிகளாற் சில வேண்டுகோள்.) இயற்கைச் செந்நெறி விடுத்துத் தன்னலக் கருத்தால் பிறரைத் துன்புறுத்துவோன் உள்ளத்தில் அச்சமன்றோ குடி கொள்கிறது? அச்சமின்றி அன்னார் எங்ஙனம் வாழ்தல் கூடும்? அச்சத்தால் நிகழும் நடுக்கம், நரப்புக் கட்டுக்களைக் குலைத்து, செந்நீரை நஞ்சாக்கி எரித்து, இளமையையும் அழகையுங் கல்லிக்கல்லி அரிக்குமன்றோ? அச்சத்தின் பருமையே (பரி ணாமமே) உலகிலுள்ள கொலைக் கருவிகளென்று கூறுவது மிகையாகாது. அச்சமே முடிவில் வருங் காலன். அச்சமுள்ள வனே பெரிதுங் கருவி தாங்குகிறான். ஏன்? தான் பிறர்க்கு ஊறு செய்தமையால், பிறர் தனக்கு ஊறு செய்வரென்று அஞ்சித் தன்னைக் காத்துக்கொள்ள அவன் கருவி தாங்குகிறான். பிறர்க் கேன் ஊறு செய்தல் வேண்டும்? பின்னை ஏன் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, அது காலனாக வருங் காட்சி கண்டு நடுக்குறல் வேண்டும்? எவ்வுயிர்க்குந் தீங்குசெய்யா இயற்கைச் செந்நெறியில் வாழ்வு நடாத்துவோர்க்கு நாளுங் கோளும் பிறவும் துணை நின்று நலமே செய்யும். செந்நெறி விடுத்து வேறு வெந்நெறி பற்றி உழல்வோர், தாம் இடர்ப்படும் வேளையில், நாளையுங் கோளை யும் பிறவற்றையும் பழிப்பது வழக்கம். இவர் நன்னெறிபற்றி யொழுகியிருந்தால் இவரை நாளென் செய்யும்? கோளென் செய்யும்? பிற என் செய்யும்? நாளுங் கோளும் பிறவும் ஆண்ட வனால் படைக்கப்பட்டன. அவனடியாரை அவைகள் என் செய் யும்? வேயுறு தோளிபங்கன் என்னும் பதிகத்தில் திருஞான சம்பந்தர், ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன் வியாழம் வெள்ளி சனி பாம்பிரண்டு முடனே, ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே என்றும், ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறு முடனாய நாள்க ளவைதாம் - அன்பொடு நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே என்றும் அருளிச் செய்திருத்தல் காண்க. இயற்கைவழி முருகைக் கண்டு, இன்பத்திற் றோய்ந்து, அழியா வாழ்வுபெற்ற அருளாளர் எதற்கும் எவர்க்கும் அஞ் சாத ஞானவீரராவர். முருகனருள் பெற்ற அருணகிரியார் திருப் பாடல்களைப் பயின்றால், அன்பும் மகிழ்வும் அஞ்சாமையும் வீரமும் பொங்கித் ததும்பி வழிவது காணலாம். அவரருளிய திருப்புகழைப் பாடும்போதும், பிறர்பாடக் கேட்கும்போதும் எழும் உணர்வின் மிடுக்கை ஈண்டு எழுத்தால் எழுதல் முடிய வில்லை. மயிர் தோல் குருதி நிணம் நரம்பு எலும்பு முதலிய எல் லாம் குலுங்கிக் குலுங்கிப் புத்துயிர் பெறுகின்றன; அன்பு ஊற்றெடுத்தோடுகிறது; மகிழ்ச்சி பொங்குகிறது; அச்சம் பறக் கிறது; வீரம் வீறிட்டெழுகிறது. அவ்வேளை கிளம்பும் அஞ் சாமைக்கு ஓரளவுமுண்டோ? எமக்கார் நிகர் என்னும் எண்ண மும் எழுகிறது. திருப்புகழ் படிக்குமவர் சிந்தை வலுவாலே, ஒருத்தரை மதிப்பதிலை உன்றனருளாலே என்னும் வீரமொழி யும் நோக்கற்பாலது. மணமும், -இளமையும்- கடவுட்டன்மையும் - அழகுஞ் செறிந்து, பாட்டா யமைந்துள்ள முருகல்லவோ திருப்புகழ், அலங்காரம், அநுபூதி முதலியன? திருப்புகழ் அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும் மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே. அலங்காரம் தண்டா யுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாஅந்த காவந்து பார்சற்றென் கைக்கெட்டவே. நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் rhªJiz¥ nghJ kwth jt®¡bfhU jhœÉšiyna., படிக்கின் றிலைபழ னித்திரு நாமம் படிப்பவர் தாள் முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு மிடிக்கின் றிலைபர மானந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே. அநுபூதி முருகன் தனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின் றதுவே. உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. இன்னோரன்ன திருப்பாக்களைப் பொருளுணர்ந்து பாடுவோர் முன்னிலையில் கல்லுருவுஞ் செம்புருவமுமா தோன் றும்? எம்பெருமான் கூர்வேல் தாங்கி, ஆடும் மயில்மீது ஆடி வருங் கோலமன்றோ தோன்றும்? அத்திருக்கோலத்தில் நெஞ் சம் பதிந்து விரிய விரிய, அதன் பொருளாய இயற்கை மணமும், இளமையும், கடவுட்டன்மையும், அழகும் பெறலாம். எனதுயிர்க்கு அமிழ்தாயுள்ள அருணகிரியின் அருண் மொழியை ஏழையேன் என்னென்று போற்றுவேன்! திருப் புகழில் தோயும் மனமுடையோரை அச்சம் என் செய்யும்? பிற என் செய்யும்? தமிழ் நாட்டுச் செல்வத்துட் பெருஞ் செல்வ மன்றோ திருப்புகழ்? இச் செல்வம் பெற்ற தமிழ்நாடு இந்நாளில் வறுமையால் பீடிக்கப்படுகிறது; அச்சத்தால் அலைக்கப்படு கிறது. தமிழ் நாட்டின் கல்வி காணோம்; வழக்க ஒழுக்கங் காணோம்; வீரங் காணோம். தமிழ்நாட்டின் இக்கால நிலை என்னே! என்னே! கண்ணீர் பெருகுகிறது! முருகா! நினது உண்மையை முதல் முதல் கண்டவர் தமிழரல்லரோ? தொன்மை வாய்ந்த மக்கள் தங்கள் நிலை திரிந்து இடர்ப்படுகிறார்கள்; இயற்கை வழி விடுத்து வேறு வேறு வழிகளில் புகுந்து புகுந்து வருந்து கிறார்கள். அவர்கள்மீது திருவருள் பொழிக. முருகா! நினக் குரிய நாட்டை நின்னையன்றி எவரே காப்பர்? தமிழ் முருகா! முருகா! நண்ணினர்க் கினியா யோலம் ஞானநா யகனே யோலம் பண்ணவர்க் கிறையே யோலம் பரஞ்சுடர் முதலே யோலம் எண்ணுதற் கரியா யோலம் யாவையும் படைத்தா யோலம் கண்ணுதற் பெருமா னல்குங் கடவுளே யோல மோலம். தேவர்கள் தேவே யோலம் சிறந்தசிற் பரனே யோலம் மேவலர்க் கிடியே யோலம் வேற்படை விமலா வோலம் பாவலர்க் கெளியா யோலம் பன்னிரு புயத்தா யோலம் மூவருமா கிநின்ற மூர்த்தியே யோல மோலம் (கந்தபுராணம்) என்று ஓலமிடுகிறேன்; முறையிடுகிறேன். முருகா! நின் தமிழ் நாட்டைக் காக்க; நின் கன்னி நாட்டைக் காக்க. தமிழ் மக்களே! முருகன் எல்லாப் பொருள்களிலும் நீக்க மற நின்று, அவைகளை அழகு செய்வதை உங்கள் முன் னோர்கள் கண்டு இன்ப நுகர்ந்தார்கள். அவ்வின்பத்தை இப் பொழுது நீங்கள் நுகர்கிறீர்களா? இயற்கை, முருகன் வடிவா யிருப்பது உங்கட்குப் புலனாகிறதா? முருகனைக் காண முயல் கிறீர்களா? அவன் செந்நெறியை ஓம்பினால் அவனைக் காணலாமன்றோ? முருகனுக்கு ஏராளமான கோயில்களிருக் கின்றன. அவனுக்கு இனிப் புதிய கோயில்கள் கட்டுதல் வேண்டா; எங்கும் நிறைந்துள்ள அவனுக்கு எக்கோயிலும் வேண்டா. அவன் செந்நெறியை வளர்க்கக் கழகங்கள் காணுங்கள்; கல்லூரி அமையுங்கள்; அறநிலையம் நிறுவுங்கள்; திருப்புகழைப் பொரு ளுணர்ந்து ஓதுங்கள்; இயற்கையிலுள்ள அவனழகை நூல் களாக எழுதுங்கள்; பாட்டாகப் பாடுங்கள்; போலி ஞானம் பேசி முருகனிடத்துள்ள அன்பை - நம்பிக்கையை - மன உறு தியைக் கெடுத்துக் கொள்ளாதேயுங்கள்; முருகன் பெயரால் பிணியை ஓட்ட முயலுங்கள்; உறுதிக் கொள்கையை வளருங்கள்; நோன்பிருங்கள்; பெண்ணைப் போற்றி இல்லற நடத்துங்கள்; முருகன் திருவருளால் பிணி மூப்பு சாக்காடெனுங் கட்டுகளை அறுத்துக்கொள்ளுங்கள்; கொள்ளின் இயற்கை மணமும், மாறா இளமையும், அழியா அழகும், கடவுட்டன்மையும் உங்கள் பால் பொலியும்; பொலியும்; இயற்கையும் அழகும் என்றும் வாழ்க! கச்சியப்பர் துய்யதாம் மறைக ளாலுந் துதித்திடற் கரிய செவ்வேள் செய்யபே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க வெய்யசூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான் பொய்யில்சீ ரடியார் வாழ்க வாழ்கஇப் புவன மெல்லாம். ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் னணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீ ரடிய ரெல்லாம். புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலா நன்னெறி யொழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி  1. இது குறித்துத் தமிழ் நூல்களில் பௌத்தம் என்னும் நூலிலும் எனது கருத்தைத் தெரிவித்துள்ளேன். அது வருமாறு :- பழந்தமிழர் இயற்கை அழகையே உயர்ந்த பொருளாக - அதாவது கடவுளாகக் கொண்டு வாழ்ந்தனர். அவர் மலைமீது வாழ்ந்தபோது அவர் உள்ளத்தைக் காலையிலும் மாலையிலும் ஞாயிற்றின் செம்மையும், வானத்திற் படருஞ் செம்மையும், பிற செம்மைகளுங் கவர்ந்தன. அச்செவ்விய இயற்கை யழகை அவர் சேய் என்று போற்றினர். அம்மக்கள் தங்கள் கண்ணுக்குப் பச்சைப் பசேலெனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கையழகை மால் என்று வழுத்தினர். அவர் மருத நிலத்தில் குடி புகுந்தபோது, அங்கே பெரிதும் தம் இனமாகிய மக்கள் கூட்டத்துடன் நெருங்கி நெருங்கிப் பழக நேர்ந்தமையான், மக்கள்மாட் டொளிரும் இறைமை என்னும் இயற்கை அழகைக் கண்டு, அதை வேந்து என்று கொண்டனர். அவர் கடற்கரை நண்ணியபோது, கடலின் இயற்கையழகை வண்ணம் என்றனர். பழந்தமிழ் மக்கள் அவ்வந்நில இயற்கை அழகுக்கிட்ட பெயர்கள் சேய் மால் வேந்து வண்ணம் என்பன. இவ்வியற்கை அழகுப் பெயர்கள் தொல்காப்பியனார் காலத்திலேயே அன் (வண்ணம்-வர்ணம்- வருணம்- வருணன்) விகுதி பெறலாயின. பின்னை நாளடைவில் இப்பெயர்கள் பிரிவுபட்ட கடவுளராகச் சமயவாதிகளால் கொள்ளப்பட்டன. பழந்தமிழ் மக்கள் கொண்ட கடவுள் இயற்கை அழகு என்பதை மட்டும் நாம் மறத்தலாகாது.