திரு.வி.க. தமிழ்க்கொடை 7 ஆசிரியர் திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் இரா. இளங்குமரனார் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற் குறிப்பு நூற்பெயர் : திரு.வி.க. தமிழ்க்கொடை - 7 ஆசிரியர் : திருவாரூர்-வி. கலியாணசுந்தரனார் தொகுப்பாசிரியர் : இரா. இளங்குமரனார் பதிப்பாளர் : கோ. இளவழகன் முதல் பதிப்பு : 2006 தாள் : 18.6 கி வெள்ளைத் தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 20+260=280 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை வடிவமைப்பு : இ. இனியன் அச்சிட்டோர் : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் ஆயிரம் விளக்கு, சென்னை - 6. வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம் 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர்நகர், சென்னை - 600 017. தொ.பே. 2433 9030 நுழைவுரை தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டு பல்வேறு நிலைகளில் சிறப்பிடம் பெறத்தக்க குறிப்புகளை உடையது. பன்னூறு ஆண்டுகளுக்குப் பின் மொழியுணர்ச்சியும், கலை யுணர்ச்சியும் வீறுகொண்டெழுந்த நூற்றாண்டு. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் வரலாற்றை - பண்பாட்டை வளப்படுத்திய பெருமக்களுள் தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் ஒருவர். இவர் உரைநடையை வாளாக ஏந்தித் தமிழ்மண்ணில் இந்தியப் பெருநிலத்தின் விடுதலைக்கு உன்னதமான பங்களிப்பைச் செய்தவர்; வணங்கத் தக்கவர். நினைவு தெரிந்த நாள்முதல் பொதுவாழ்வில் ஈடுபாடுடை யவன் நான். உலகை இனம் காணத் தொடங்கிய இளமை தொட்டு இன்றுவரை தொடரும் என் தமிழ் மீட்புப் பணியும், தமிழர் நலம் நாடும் பணியும் என் குருதியில் இரண்டறக் கலந்தவை. நாட்டின் மொழி, இன மேன்மைக்கு விதைவிதைத்த தமிழ்ச் சான்றோர்களின் அருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழருக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் எனும் தளராத் தமிழ் உணர்வோடு தமிழ்மண் பதிப்பகத்தைத் தொடங்கினேன். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தமிழ் வாழ்வு வாழ்ந்தவர். 54 நூல்களைப் பன்முகப்பார்வையுடன் எழுதித் தமிழர்களுக்கு அருந்தமிழ்க் கருவூலமாக வைத்துச்சென்றவர். இவற்றைக் காலவரிசைப்படுத்தி, பொருள்வழியாகப் பிரித்து வெளியிட் டுள்ளோம். தமிழறிஞர் ஒருவர், தம் அரும்பெரும் முயற்சியால் பல்வேறு துறைகளில் எப்படிக் கால்பதித்து அருஞ்செயல் ஆற்ற முடிந்தது என்பதை உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனும் பெருவிருப்பத்தால் இத்தொகுப்பு களை வெளியிட்டுள்ளோம். திரு.வி.க. வின் வாழ்க்கைச் சுவடுகளும், அறவாழ்க்கை நெறியும், குமுகாய நெறியும், இலக்கிய நெறியும் , சமய நெறியும், அரசியல் நெறியும், இதழியல் நெறியும், தொழிலாளர் நலனும், மகளிர் மேன்மையும் பொன்மணிகளாக இத் தொகுப்பு களுக்குப் பெருமை சேர்க்கின்றன. இவர்தம் உணர்வின் வலிமை யும், பொருளாதார விடுதலையும், தமிழ் மொழியின் வளமையும் இந் நூல்களில் மேலோங்கி நிற்கின்றன. இந்நூல்களைத் தமிழ் கற்கப் புகுவார்க்கும், தமிழ் உரைநடையைப் பயில விரும்பு வார்க்கும் ஊட்டம் நிறைந்த தமிழ் உணவாகத் தந்துள்ளோம். திரு.வி.கலியாணசுந்தரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலவர்; தமிழ் உரைநடையின் தந்தை; தமிழ் நிலத்தில் தொழிற்சங்க இயக்கத்துக்கு முதன்முதலில் வித்தூன்றிய வித்தகர்; தமிழர்கள் விரும்பியதைக் கூறாது, வேண்டியதைக் கூறிய பேராசான்; தந்தை பெரியார்க்கு வைக்கம் வீரர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமையர்; தமிழ்ச் சிந்தனை மரபிற்கு அவர் விட்டுச்சென்ற சிந்தனைகள் எண்ணி எண்ணிப் போற்றத் தக்கவை. இன்றும், என்றும் உயிர்ப்பும் உணர்வும் தரத்தக்கவை. சமயத்தமிழை வளர்த்தவர்; தூய்மைக்கும், எளிமைக்கும், பொதுமைக்கும் உயிர் ஓவியமாக வாழ்ந்தவர்; அன்பையும், பண்பையும், ஒழுங்கையும் அணிகலனாய்க் கொண்டவர்; தன்மதிப்பு இயக்கத்துக்குத் தாயாக விளங்கியவர்; பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக இருந்தவர்; எல்லாரையும் கவர்ந்து இழுத்த காந்தமலையாகவும்; படிப்பால் உயர்ந்த இமயமலை யாகவும்; பண்பால் குளிர் தென்றலாகவும், தமிழகம் கண்ணாரக் கண்ட காந்தியாகவும், அவர் காலத்தில் வாழ்ந்த சான்றோர் களால் மதிக்கப்பெற்றவர். . சாதிப்பித்தும், கட்சிப்பித்தும், மதப்பித்தும், தலைக்கு ஏறி, தமிழர்கள் தட்டுத் தடுமாறி நிற்கும் இக்காலத்தில் வாழ்நாள் முழுதும் தமிழர் உய்ய உழைத்த ஒரு தமிழ்ப் பெருமகனின் அறிவுச் செல்வங்களை வெளியிடுகிறோம். தமிழர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. தமிழரின் வாழ்வை மேம்படுத்தும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் இடம்பெற வேண்டும் எனும் தொலை நோக்குப் பார்வையோடு எம் பதிப்புச் சுவடுகளை ஆழமாகப் பதித்து வருகிறோம். தமிழர்கள் அறியாமையிலும், அடிமைத் தனத்திலும் கிடந்து உழல்வதிலிருந்து கிளர்ந்தெழுவதற்கும், தீயவற்றை வேரோடு சாய்ப்பதற்கும், நல்லவற்றைத் தூக்கி நிறுத்துவதற்கும் திரு.வி.க.வின் தமிழ்க்கொடை எனும் செந்தமிழ்க் களஞ்சியங்களைத் தமிழர்களின் கைகளில் தவழ விடுகிறோம். கூனிக்குறுகிக் கிடக்கும் தமிழர்களை நிமிர்த்த முனையும் நெம்புகோலாகவும், தமிழர்தம் வறண்ட நாவில் இனிமை தர வரும் செந்தமிழ்த்தேன் அருவியாகவும் இத் தமிழ்க் கொடை திகழும் என்று நம்புகிறோம். இதோ! பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், தமிழ்ப் பதிப்புலக மேதையும் செந்தமிழைச் செழுமைப்படுத்திய செம்மலைப் பற்றிக் கூறிய வரிகளைப் பார்ப்போம். தனக்கென வாழ்பவர்கள் ஒவ்வொருவரும் கலியாண சுந்தரனார் அவர்களைப் படிப்பினையாகக் கொள்வார்களாக - தந்தை பெரியார். திரு.வி.க. தோன்றியதால் புலவர் நடை மறைந்தது; எளிய நடை பிறந்தது. தொய்வு நடை அகன்றது; துள்ளு தமிழ் நடை தோன்றியது. கதைகள் மறைந்தன; கருத்துக்கள் தோன்றின. சாதிகள் கருகின; சமரசம் தோன்றியது. - ச. மெய்யப்பன். தமிழர் அனைவரும் உளம்கொள்ளத்தக்கவை இவை. தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளப்பரிய காதல் கொண்டவர் திரு.வி.க. இவர் பேச்சும் எழுத்தும் தமிழ் மூச்சாக இருந்தன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் ஆங்கிலமே பேச்சுமொழியாக மதிக்கப்பட்ட காலத்தில் தமிழுக்குத் தென்ற லாக வந்து மகுடம் சூட்டிய பெருமையாளர். தமிழின் - தமிழனின் எழுச்சியை அழகுதமிழில் எழுதி உரைநடைக்குப் புதுப்பொலி வும், மேடைத் தமிழுக்கு மேன்மையும் தந்த புரட்சியாளர். கலப்பு மணத்துக்கும், கைம்மை மணத்துக்கும் ஊக்கம் தந்தவர்; வழுக்கி விழுந்த மகளிர் நலனுக்காக உழைத்தவர்; பெண்களின் சொத்துரிமைக்காகப் பேசியவர்; ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை என்று வாதிட்டவர்; பெண்ணின எழுச்சிக்குத் திறவு கோலாய் இருந்தவர்; கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமன்று ஆண்களுக்கும் உண்டு என்று வலியுறுத்தியவர்; மாந்த வாழ்வியலுக்கு ஓர் இலக்கியமாக வாழ்ந்து காட்டியவர்; இளமை மணத்தை எதிர்த்தவர்; அரசியல் வானில் துருவ மீனாகத் திகழ்ந்தவர்; தமிழர்களுக்கு அரசியலில் விழிப்புணர்வை ஊட்டியவர்; சமுதாயச் சிந்தனையை விதைத்தவர்; ஒழுக்க நெறிகளைக் காட்டியவர். சங்கநூல் புலமையும், தமிழ் இலக்கண இலக்கிய மரபும் நன்குணர்ந்த நல்லறிஞர், ஓய்வறியாப் படிப்பாளி, சோர்வறியா உழைப்பாளி, நம்மிடையே வாழ்ந்துவரும் செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரனார் அவர்கள், தீந்தமிழ் அந்தணர் திரு.வி.க.வின் நூல் தொகுப்புகளில் அடங்கியுள்ள பன்முக மாட்சிகளை - நுண்ணாய்வு நெறிகளை ஆய்வு செய்து, அவர்தம் பெருமையினை மதிப்பீடு செய்து நகருக்குத் தோரணவாயில் போன்று இத்தொகுப்புகளுக்கு ஒரு கொடையுரையை அளித்துள்ளார். அவர்க்கு எம் நெஞ்சார்ந்த நன்றி. தமிழர் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கை நெறிகளைத் தாம் படைத்தளித்த நூல்களின்வழிக் கூறியது மட்டுமின்றி, அவ்வரிய நெறிகளைத் தம் சொந்த வாழ்வில் கடைப்பிடித்துத் தமிழர்க்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார் திரு.வி.க. என்பதை வாழும் தலைமுறையும், வருங்காலத் தலைமுறையும் அறிந்துகொள்ள வேண்டும் - பயன்கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தோடு இந்நூல்களை வெளியிட்டுள்ளோம். தமிழ்த்தென்றல் திரு.வி.க. நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து , உவந்து உவந்து எழுதிய படைப்புகளைத் தொகுத்து ஒருசேர வெளியிட்டுத், தமிழ்நூல் பதிப்பில் மணிமகுடம் சூட்டி உள்ளோம். விரவியிருக்கும் தமிழ் நூல்களுக்கிடையில் இத் தொகுப்புகள் தமிழ் மணம் கமழும் ஒரு பூந்தோட்டம்; ஒரு பழத்தோட்டம். பூக்களை நுகர்வோம்; பழங்களின் பயனைத் துய்ப்போம். தமிழ்மண்ணில் புதிய வரலாறு படைப்போம். வாரீர்! இந்நூல் உருவாக்கத்திற்கு துணை நின்றோர் அனை வருக்கும் எம் நன்றியும் பாராட்டும். திரு.வி.க. வெனும் பெயரில் திருவிருக்கும்; தமிழிருக்கும்! இனமிருக்கும்! திரு.வி.க. வெனும் பெயரில் திருவாரூர்ப் பெயரிருக்கும்! இந்தநாட்டில்! திரு.வி.க. வெனும் பெயரால் தொழிலாளர் இயக்கங்கள் செறிவுற்றோங்கும்! திரு.வி.க. வெனும் பெயரால் பொதுச்சமயம் சீர்திருத்தம் திகழுமிங்கே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார் - கோ. இளவழகன் பதிப்பாளர் கொடையுரை மாக்கதை என்றும், திருத்தொண்டர்தம்சீர் என்றும் பாயிரத்து வரும் தொடர்களாலும், திருத்தொண்டர் புராணம் என்பாம் என்னும் நூற்பெயர்ச் சுட்டாலும் இருபெயர் கொள்ளும் ஒரு நூல் இந்நூல் என அறியலாம். மாக்கதை - பெரியபுராணம். அவை அடக்கப் பாடலில், அளவு இலாத பெருமையர் தெரிவு அரும் பெருமைத் திருத்தொண்டர் என்பவற்றையும் செயற்கரிய செய்வா பெரியார் என்னும் குறளையும் எண்ணின் பெரியபுராணப் பெயரீடு விளங்கும். செயற்கரும் செய்கை செய்த தீரனே ஓலம் என வரும் இயற்பகை நாயனார் புராணத் தொடர் திருக்குறளை ஒன்றி நிற்றலையும், அதனைத் திரு. வி. க. சுட்டுதலையும் (432)கருதுக. இனிப் பெரிய புராணம் சிந்தாமணிக் காவியத்தின் வழக்கை ஒழிக்க எழுதப்பட்ட நூல் என்னும் பின்னவர் கருத்தைத் திரு. வி. க. அருமையாய்த் தம் முன்னுரைக்கண் உரைப்பதை ஏற்றுப் போற்றல் சிவனியர்க்குச் சால்பாம். திரு.வி.க. எடுத்துக்காட்டும் சிந்தாமணிப்பாடல்களை உரையில் கண்டு தெளிக. அளவிலாத பெருமை அடியார் புகழை அளவிலா ஆசை உந்தித்தள்ள இயற்றினேன் என்று சேக்கிழாரடிகளே கூறும் போது (5) பிறர் வேறு காரணம் தேடிக்காட்ட வேண்டுவது இல்லையாம். சமணச் சான்றோர் சால்புநெறி விடுத்துப் பின்னாளில் அதனை வேட நெறியாகக் கொண்டவர் தம்மையே சேக்கிழார் கடிந்தார் என்னும் தகவுரை திரு. வி. க. வுக்கே உரிமை பூண்டதாம். மெய்ம்மையும் அதுவாம்! பொய்ம்மை எங்கே புகினும் அதனை நெறிகாட்டித் திருத்துதல் பெரிய ஓர் அன்புக்கடல். சேக்கிழார் அன்பர்: அவன் அன்பை நினைந்து நினைந்து அன்பானவர்; அவரிடமிருந்து பிறந்த காவியம் எத்தகையதாய் இருக்கும்? என்பது காப்பிய ஆசிரியர் தகவும், காப்பியத்தகவும் ஒருங்கே வெளிப்படுத்தும் உரையாம். பெரிய புராணப் பதிப்புகளைச் சுட்டுதல் பதிப்பு வரலாற்றுப் பயன்மிக்கது. அச்சு நூலுக்கு உரையும் உரைக்குறிப்பும் எழுதி அமையாமல் ஏட்டுச் சுவடிகளைத் தேடி ஒப்பிட்டுப் பாடங்கண்ட அருமை, பிற்பதிப்புகளுக்குப் பெருநலம் செய்ததாம். இப்பதிப்பு 1934 இல் வெளிப்பட்டது. உரைகாணப் பெறாத அரும்பதம் இல்லை என்று கூறலாம் என்றும், பதவுரை இன்றியும் ஆசிரியர் இன்றியும் பெரிய புராணத்தைப் பயிலுதற்குரிய துறைகளில் இப்பதிப்புச் செப்பம் செய்யப்பட்டிருத்தல் சிறப்பாகக் குறிக்கத்தக்கது என்றும் வருவனவற்றால் முழுதுறும் உரைவிளக்கம் பெற்ற நூலே இஃது என்பது விளங்கும். நாயன்மார் திறம் என்றொரு நூலும், நாயன்மார் வரலாறும் இவற்றின் பொருள் சார்ந்த சில நூல்களும் இயற்றியவர் திரு.வி.க. பெரியபுராண முதற்பதிப்பு நூல்வடிவில் வரவில்லை. இதழ் இதழாகத் உமாபதி குருப்பிரகாச அச்சுக் கூடத்தின் வழி வெளி வந்தது. அதன் மீள் பதிப்பு, முதற்பதிப்பைப் பல்வழியிலும் திரித்துத் திருத்தி விரித்துச் செப்பம் செய்யப்பட்டு வந்தது. முற்பதிப்புக்கும் இப்பதிப்புக்கும் உள்ள வேற்றுமை பெரிது என்கிறார். மேலும் சமண சமயச் சான்றோரிடம் ஆய்ந்த ஆய்வும் பிற்பதிப்புக்குப் பெரும் பயன் செய்ததையும் குறிப்பிடுகிறார் (19. 5. 1934) இரண்டாம் பதிப்பில் எழுதப்பட்ட வசனத்தை மட்டும் கொண்டு, நூலின் உள்ளுறைக் கேற்ப நயன்மார் வரலாறு என்னும் தலைப்புடன் தனிநூல் 1937 இல் வெளிவந்தது. முதல்நூலில், பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராண வசனம் என்னும் பெயரீடு இருந்தது. உலகெலாம் எனத் தொடங்கும் பாடலுக்கு எழுதியுள்ள உரை - விளக்கம் - தொடர்பு - சான்று என்பவை போல எல்லாப் பாடல்களுக்கும் எழுதியிருந்தால் எத்தனை ஆயிரம் பக்கங் களாக விரிந்திருக்கும் என்பதை அளவிட்டு உரைத்தல் அரிது. குறிப்புரை எனப்பட்டாலும் ஏறத்தாழ உரைத்தொடர்ச்சி பொழிப்புரை போலவே அமைந்து விடுகின்றது. மேற்கோளும் விளக்கமும் விளக்கவுரை எனத் தோற்றம் தருகின்றன. குறிப்புரை, பொழிப்புரை, விளக்கவுரை என மூவுரையும் உடையதே எனத் தோன்றும் பாடல்கள் மிகப்பலவாம். அன்புடன் இரா. இளங்குமரன் முன்னுரை (1934) வள்ளுவர்நூல் அன்பர்மொழி வாசகம்தொல் காப்பியமே தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை - ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந் தரம் -உமாபதி சிவனார். எல்லாவற்றிற்கும் முதலாயிருப்பது ஓங்காரம். ஓங்காரத் தினின்றும் எல்லாம் தோன்றும்; எல்லாம் ஒடுங்கும்; ஓங்காரத் துள்ளே உதித்த ஐம்பூதங்கள் - ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் - ஓங்காரா தீதத் துயிர் மூன்றும் உற்றன - ஓங்கார சீவன் பரசிவரூபமே - திருமூலர். தமிழில் பன்னிரு திருமுறைகள் அமைந்துள்ளன. முதல் மூன்றும், திருஞான சம்பந்தர் அருளியவை. நான்கும் - ஐந்தும் - ஆறும் - அப்பர் திருவாக்கு. ஏழாந் திருமுறை வன்தொண்ட ருடையது. எட்டாந் திருமுறை மாணிக்கவாசகர் வாய்மலர்ந்த திருவாசகமும் திருக்கோவையுமாகும். திருமாளிகைத் தேவர் உள்ளிட்ட ஒன்பதின்மர் அருளிய திருவிசைப்பாவும், சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டும் ஒன்பதாந் திருமுறை. திருமூலர் திருமந்திரம் பத்தாந் திருமுறை. திருவாலவாயார் உள்ளிட்ட பன்னிருவர் அருளிய நாற்பது பிரபந்தங்களைக் கொண்டது பதினொராந் திருமுறை. சேக்கிழார் அருளிய பெரியபுராணம் பன்னிரண்டாந் திருமுறை. இத்திருமுறை பன்னிரண்டும் ஓங்காரத்தின் பரிணாமம் என்பது தொன்றுதொட்ட வழக்கு. திருஞான சம்பந்தர், முதல் திருமுறையைத் தோடுடைய செவியன் என்று தொடங்கினர். சேக்கிழார், பன்னிரண்டாந் திருமுறையை நிறைதெங்கு நிலவி உலகெலாம் என்று முடித்தார். தோ என்பது தகர வித்தையோடு கூடிய ஓங்காரம். தகர வித்தையுடன் ஓ என்று திருஞான சம்பந்தர் தொடங் கியதைச் சேக்கிழார் ம் என்று முடித்தது கருதற்பாலது. இந்நுட்பங் கண்ட ஆன்றோர், பன்னிரு திருமுறையும் ஓங்காரத்தின் பரிணாமம் என்று உலகுக்கு உணர்த்தினர் போலும். சேக்கிழார் அருளிய பன்னிரண்டாந் திருமுறை, பெரிய புராணமென்றும், திருத்தொண்டர் புராணமென்றும், திருத் தொண்டர் புராணமென்னும் பெரிய புராணமென்றும் வழங்கப் பட்டு வருகிறது. நூற்பெயர் ஆசிரியராலேயே பாயிரத்தில் ஓதப் பட்டிருக்கிறது. அப்பெயரைப் பற்றி எழுதப்பெற்ற குறிப்புரை களையும் நோக்குக. பெரிய புராணம், சீவகசிந்தாமணியின் பொருட்டுப் பாடப் பெற்றதென்று சேக்கிழார் புராணத்தார் கூறுகிறார். இக்கூற்றுக்குச் சேக்கிழார் மொழியாகிய பெரிய புராணத்தில் சான்றில்லை. இடைக்காலத்தில் சமணரென்று நடித்தவர்களின் புன்மைச் செயல்களைச் சேக்கிழார் கடிந்திருத்தலைக் கண்டு, சீவக சிந்தாமணி மீது காழ்ப்புக் கொண்டு சேக்கிழார் பெரிய புராணம் பாடினார் என்ற கதை, பின் வந்தவரால் புனையப் பட்டிருக்கலாம். பண்டை அறநெறி விடுத்து, இடையில் மறநெறி பற்றி ஒழுகிய சமண வேடக்காரரின் புன்மைச் செயல்களைச் சேக்கிழார் கடிந்திருத்தல் உண்மை. அதைக்கொண்டு சமண நெறியையே தூற்றுதற்குச் சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாடினார் என்று சொல்வது அறமாகாது. சமணர்களின் பண்டைக்கால நிலையும், இடைக்கால நிலையும் விளங்குமாறு, சேக்கிழார், திருஞானசம்பந்த சுவாமிகள் புராணத்தில், 634ஆம் பாட்டில், முந்தைய உரையிற் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச் - சிந்தையிற் செற்றம் முன்னாந் தீக்குணத் தலை நின்றார்கள் என்று அருளியிருத்தல் காண்க. இத்திருவாக்கின் உள்ளக் கிடக்கையை ஓர்ந்து உணர் வோர்க்குச் சேக்கிழாரது செம்மை நிலை இனிது புலனாகும். பெரிய புராணத்தையும், சீவகசிந்தாமணியையும் நடுநிலை நின்று ஆராய்வோர், சேக்கிழார் சீவகசிந்தாமணிச் செம் மொழியை முன்னோர் மொழி பொருளாகக் கொண்டவர் என்னும் முடிவுக்கு வருதல் ஒருதலை. ஆகவே, சேக்கிழார் சீவகசிந்தாமணிக்கு மாறாகப் பெரியபுராணம் பாடப் புகுந்தவ ரல்லர் என்று கொள்க. சேக்கிழாரின் தமிழ் அன்பும், திருமுறை நேயமும், அடியவர் பத்தியும், இன்ன பிறவும் அவரைப் பெரிய புராணம் பாடச்செய்தன என்று சொல்வது சிறப்பு. சேக்கிழார் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளருள் கருத்து வேற்றுமையுண்டு. சிலர் பதினோராம் நூற்றாண்டின் இறுதி என்றும், வேறு சிலர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்றும், இன்னுஞ் சிலர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் நடு என்றும் கூறுப. இதுகாறும் வெளிப்போந்துள்ள ஆராய்ச்சி களான், சேக்கிழார் காலத்தை அறுதியிட்டுக் கூறுதற்குரிய சான்றுகள் போதிய அளவு கிடைக்கவில்லை என்பது விளங்கு கிறது. பெரிய புராணத்துக்கு முதல்நூல் வன்தொண்டப் பெருமான் அருளிய திருத்தொண்டத் தொகை; வழிநூல் நம்பியாண்டார்நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி; பெரிய புராணம் திருமலைச் சிறப்பு - பாட்டு - 38, 39 - வெள்ளானைச் சருக்கம் பாட்டு -1 பார்க்க. காவியங்கள் பல திறத்தன. அவைகளுள் சிலவற்றில் உலகைக் காணலாம்; சிலவற்றில் உயிரைக் காணலாம்; சிலவற்றில் கடவுளைக் காணலாம். மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியங்கள் மிகச் சில. அச்சிலவற்றுள் பெரிய புராணமும் ஒன்று. உலகு உயிர் கடவுள் என்னும் மூன்றும் சேர்ந்த இடத்திலேயே இன்ப அன்பு வாழ்வு நிகழும். இன்ப அன்பு அற்ற வாழ்வு வாழ் வாகாது. அது, வற்றல் மரம் போன்றது. பெரிய புராணத்தில் தமிழ் இன்ப, அன்பு வாழ்வு யாண்டும் பொலிதல் வெள்ளிடைமலை. காவியங்களின் உள்ளுறை எதுவாயினும் ஆக. ஒவ்வொரு காவியத்தில் ஒவ்வொரு வித சுவையுண்டு. உலகம் பலவிதம் அவரவர் பண்புக் கேற்றவாறு, அவரவர் விருப்பம் எழுதல் இயல்பு. எல்லாரும் ஒரேவித உணவு கொள்வதில்லை. எல்லாரும் ஒரேவித உடை அணிவதில்லை. சிலருக்குக் கடற்காற்றுப் பொருந்தும். சிலருக்கு மலைக்காற்றுப் பொருந்தும். சிலரைப் பெருமரச் செறிவு கவரும். சிலரைச் சிறு பசும்பயிர் கவரும். இயற்கை ஒன்றே. அது மக்கள் பண்புக்கேற்றவாறு பல முகமாகப் பயன்படுகிறது. காவிய உலகமும் இத்தன்மையதே. காவியக் கண்ணர்கள், காவிய உலகில் நுழைந்து பார்த்தால், அவர்கட்கு ஒவ்வொன்று ஒவ்வொன்றை அடியாக் கொண்டு பொலிதல் புலனாகும். காதல், வண்மை, தியாகம், வீரம் முதலிய வற்றுள் ஒவ்வொன்று சிறப்பாகவும், பிற பொது வாகவும் காவியங்களில் அமைதல் இயல்பு. பெரிய புராணத்தில் பொதுவாகப் பலதிறச் சுவையும். சிறப்பாகப் பத்திச் சுவையும் அமைந்துள்ளன. பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ என்று சேக்கிழாரை மகாவித்வான் - மீனாட்சிசுந்தரம் பிள்ளை போற்றியது காண்க. பெரிய புராணம் ஓர் அன்புக்கடல். சேக்கிழார் அன்பர். அவர் அன்பை நினைந்து நினைந்து, அன்பானவர். அவர்தங் கருவி கரணங்கௌல்லாம் அன்பே ஆயின. அத்தகைய ஒருவரிடமிருந்து பிறக்கும் காவியம் எத்தகையதா யிருக்கும்? சேக்கிழாரின் உள்ளமாகிய ஊற்றி னிடத்துத் தேங்கிய அன்புநீர், பொங்கி எழுந்து, அருவிகளாக வழிந்து வழிந்து, ஆறுகளாகப் பெருகிப் பெருகி ஓடிப் பெரிய புராணக் கடலாயிற்று. அவ்வன்பு நீரால் வளர்ந்து செழித்த தமிழ்ச் சோலைகள் பல. பெரியபுராணம் பத்தியை உயிராக் கொண்டு, பிறவற்றை உடலுறுப்புகளாகக் கொண்ட காவியம் என்று சுருங்கச் சொல்லலாம். பெரிய புராணம், பௌராணிகத்தை வித்தாகக் கொண்டு எழுந்த நூல் அன்று. அது சரித்திரத்தை வித்தாகக் கொண்டு எழுந்த காவியம். காவிய இயலுக்கு ஏற்பச் சிலச்சில விடங்களில் பௌராணிகமும் அதனிடை நுழைந்திருக்கிறது. நாயன்மார் பலர், சரித்திரத் தொடர்புடையார் என்பதைச் சரித்திர உலகம் ஏற்றுக் கொண்டது. கல்வெட்டுகளையும், வேறு பல சான்று களையும் ஆராய ஆராயப் பெரிய புராணம் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நூல் என்பது நனி விளங்கும். காவியங்களைப் பெரிதும் வருணனை நூலாகக் கொள்வது சாதாரண உலக வழக்கு. வருணனை, காவியத்துக்கு வேண்டற்பாலது. அது காவிய இயல்களுள் ஒன்று. ஆனால் வருணனை யொன்றே காவிய இயல் ஆகாது. பெரிய புராணத்தில் வருணனை இல்லாமலில்லை. மிக அழகிய வருணனை பெரிய புராணத்தில் உண்டு. அவ்வருணனை, பொருந்திய இடங்களில் அமைந்திருக்கிறது. இதனைப் பெரிய புராணத்துக்குரிய சிறப்புகளுள் ஒன்றெனக் குறிக்கலாம். பெரிய புராண வருணனை இயற்கையில் முகிழ்த்தது. சிலர் வருணனை ஒன்றன்மீது சிறப்பாகக் கருத்துச் செலுத்தி, அதற்கெனச் சொற்களைப் பலபடப் பெய்து பெருக்குவர். முயன்று வலிந்து வருணனையிற் புகுந்து, அதை வேண்டுமென்றே வளர்த்துச் செல்வது இயற்கையாகாது. கவியின் முயற்சியின்றி இயற்கையில் அவர்பால் வருணனை முகிழ்த்தல் வேண்டும். இத்திறம் இப் புராணத்தில் சிறந்து விளங்குகிறது. சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தில் வருணனை யுடன் வேறு பல பொருளும் உண்டு. அதன்கண், பாட்டு, ஓவியம், கலை, அரசியல், வாணிபம், தொழில், உழவு, பெண்மை, ஆண்மை, காதல், வண்மை, வீரம், தியாகம், ஆத்மசத்தி, தத்துவம், பொதுமை, சீர்திருத்தம், புரட்சி, சரித்திரம், பௌராணிகம் முதலியன திகழ்கின்றன. பொருளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலுக்குப் பெரிய புராணத்தை ஒரு வைப்பு என்று கூறல் மிகையாகாது. பனித்துளி, தனதகத்தே நீண்ட மரங்களைக் காட்டுவதுபோலப் பெரிய புராணம், உலகு உயிர் கடவுளைத் தன்னகத்தே காட்டி நிற்கிறது. இன்னோரன்ன நுட்பங்கள் பெரிய புராணத்தில் பல உண்டு. அவைகளை ஒரு தனி ஆராய்ச்சி நூலில் விளக்க எண்ணியிருக் கிறேன். பெரிய புராணம் உலகெலாம் என்றெழுந்து, உலகெலாம் என்று முடிகிறது. இது, பெரிய புராணம் எல்லா உலகுக்கும் உரியது என்பதைக் காட்டுங் குறிப்பாகும். இவ்வுண்மையைப் பெரிய புராணத்தின் உள்ளுறை, உள்ளங் கை நெல்லிக்கனிபோலப் புலப்படுத்தும். திருநாவுக்கரசு நாயனார் புராணம், அப்பூதியடிகள் புராணம், சாக்கிய நாயனார் புராணம், பூசலார் நாயனார் புராணம், அப்பாலும் அடிச் சார்ந்தார் புராணம் முதலியவற்றைப் பார்க்க. பெரிய புராணத்தின் ஒரு பகுதியை முதல்முதல் அச்சில் பதிப்பித்தவர், மழவை - வீரசைவப் புலவர் - மகாலிங்க ஐயர், அப்பதிப்பு வெளிவந்த ஆண்டு 1843. காஞ்சிபுரம் - மகா வித்வான் சபாபதி முதலியார் பெரிய புராணப் பதிப்பில் இரு முறை ஈடுபட்டனர். அவை முறையே 1859ஆம் ஆண்டிலும், 1870ஆம் ஆண்டிலும் நிகழ்ந்தன. சிதம்பரம் - உபாத்தியாயர் - பே. இராம லிங்கம் பிள்ளைப் பதிப்பு 1879ஆம் ஆண்டில் வெளியாயிற்று. ஆறுமுக நாவலர் முதற்பதிப்பு 1884ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது. இவர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது தனித்தனியே ஓலை ஏடுகளை ஆய்ந்து புராணத்தைப் பதிப்பித்தனர். இவர்கள் பதிப்புகளைத் தழுவிப் பின்னே வேறு சில பதிப்புகள் வெளிவந்தன. பெரிய புராணத்துக்கு முதல் முதல் பொழிப்புரை எழுதியவர் மழவை - வீரசைவப்புலவர் - மகாலிங்க ஐயர். அவ்வுரை முற்றுப் பெறவில்லை. திருவண்ணாமலை ஆதீனம் - ஆறுமுகத் தம்பிரானார், ஏறக்குறைய பெரிய புராணம் முக்காற் பகுதிக்குப் பதவுரை இயற்றினார். அவ்வுரையைப் பொம்மபுரம் சிவஞானபாலைய தேசிக சுவாமிகள் ஆதீனம் - இராமலிங்கம் சுவாமிகள் முற்றுவித்தார்கள். சென்னைப் புலவர் - சுப்பராய நாயகர் என்பவர் பெரிய புராணத்துக்கு ஒரு சிறந்த பொழிப்புரை வரைந்துள்ளார். உரையாசிரியர் - ஆலாலசுந்தரம் பிள்ளை எழுதிய விரிவுரை இப்பொழுது வெளிவந்துகொண்டிருக்கிறது. பெரிய புராணம் அரும்பத விளக்கம் என்றொரு பழைய குறிப்புரை யாழ்ப்பாணத்திலுண்டு. அது, செந்தமிழில் வெளிவந்துள்ளது. பெரிய புராணம் ஆராய்ச்சிக்கு வேண்டப்படுங் கருவிகள் பல. அவைகளுள் ஒன்று சமண சமய நூலாராய்ச்சி. சமயப் பெரியோர் சிலரிடம் அணுகிச் சமண சித்தாந்தத்தை ஒருவாறு தெளியும் பேறு எனக்கு வாய்த்தது. அஃது இப்பதிப்புக்குப் பெருந்துணையாக நின்றது. மத வாதங்கள் தொலைந்து, சமரச சன்மார்க்கம் பரவுதல் வேண்டும் என்னுங் கருத்துடன் யான் தொண்டாற்றி வரும் இந் நாளில், தொண்டர் புராணத்துக்கு அரும்பத ஆராய்ச்சி விசேடக் குறிப்புரை எழுத என்னை ஆளாக்கிய திருவருளை வழுத்துகிறேன். பெரிய புராணத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் சில வெளி வந்திருக்கின்றன. அவை, பெரிய புராணம் மூலத்தில் சில விடங் களில் ஐயப்பாடுகளை எழுப்பியுள்ளன. அதனால், மூலத்தைப் பழைய ஓலைப் பிரதிகளுடன் ஒப்புநோக்கிப் பதிப்பித்தல் நல்லது என்று எண்ணலானேன். எதையும் எண்ணுதல் எளிது. அதைச் செயலில் கொணர்வது அவ்வளவு எளிதன்று. ஓலைப் பிரதிகளைத் தேடிப் பெறும் அருமைப்பாடு, அம்முயற்சியில் தலைப்பட்டார்க்கே தெரியும். ஓலைப்பிரதிகளைப் பற்றிச் சிலரிடம் பேசினேன். அவருள் ஒருவர், தாம் ஒல்லும் வகை முயன்று ஓலைச்சுவடிகளைத் திரட்டித் தருவதாக வாக்களித்தனர். அவர், தமிழ்ப்பேரறிஞரும், ஒப்புரவிற்கு ஒல்காதவரும், தமிழ் லெக்ஸிகன் பதிப்பாசிரி யரும் ஆகிய திருவாளர் - எ. வையாபுரிப் பிள்ளையாவர். இவ்வன்பர், திருவாளர்கள் - புத்தேரி - எ. தேசிகவிநாயகம் பிள்ளை, திருநெல் வேலி - ஹிந்து கல்லூரித் தமிழாசிரியர் - வி. சிதம்பர ராமலிங்கம் பிள்ளை, பெருங்குளம் - செங்கோல் மடத்துப் பண்டார சந்நிதிகள், ஆழ்வார்குறிச்சி எம்.பி.எ. துரை சாமி முதலியார். வெள்ளகால் - திருமலையப்ப முதலியார், திருநெல்வேலி - சுந்தரமூர்த்தி ஓதுவார், எ. அநவரதவிநயாகம் பிள்ளை, மயிலை - பாலசுப்பிரமணிய முதலியார் ஆகிய இவர்களிடமிருந்து ஓலைப் பிரதிகளைப் பெற்று. அவைகளை அன்புடன் என்னிடஞ் சேர்த்தனர். இவ்வாறு கிடைக்கப் பெற்ற பழைய ஓலை ஏடுகளுடன் மூலம் ஒப்புநோக்கப்பட்டது. பொருந்திய பாடபேதங்கள் ஆங் காங்கே பொறிக்கப்பெற்றன. இயற்கை வருணனை, விழுமிய கருத்து முதலியன தடித்த எழுத்தால் விளக்கஞ் செய்யப்பட்டன. படிப்பவர்க்குப் பல வழியிலும் எளிதில் பயன்படும் முறையில் இப்பதிப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. அரும்பதவுரை, பழைய சங்க இலக்கியங்களைத் தழுவி வரையப்பட்டது. வாசகர்கள், பதவுரைத் துணையை நாடாத முறையில், அரும்பதங்கள் விளக்கஞ் செய்யப்பட்டுள்ளன. உரை காணப்பெறாத அரும்பதமில்லை என்று கூறலாம். விசேடங்கள், தமிழ் பயில்வோர்க்குப் பெருந்துணை செய்யும். அவை, சில விடங்களில் தற்கால விஞ்ஞான நுட்பங்களால் தெளிவு செய்யப் பட்டள்ளன. ஆராய்ச்சிக் குறிப்புகள், ஆராய்ச்சியாளர்க்குப் பல வழியிலும் பயன்படுவனவாம். இன்றியமையாத இடங்களில் தேவார அகச் சான்றுகள் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. பதவுரை யின்றியும் ஆசிரியரின்றியும் பெரிய புராணத்தைப் பயிலுதற்குரிய துறைகளில் இப்பதிப்புச் செப்பஞ் செய்யப் பட்டிருத்தல் சிறப்பாகக் குறிக்கத்தக்கது. பெரிய புராணத்துக்கு வசனம் பலர் எழுதியுள்ளார். அவ்வசனப் போக்குகள் அவ்வக் காலதேச வர்த்தமானங்களைப் பற்றியன. இம்முறை, இக்காலப் போக்குக்கு உரியதாக வசனம் என்னால் எழுதப்பெற்றது. அஃது எல்லார்க்கும் பயன்படுமுறையில் எளிய நடையில் எழுதப்பட்டது. இப்பதிப்பு மூலத்தை மட்டும் அடக்க விலைப் பதிப்பாக வெளியிடச் சைவ சித்தாந்த சமாஜத்தார் விரும்பிக் கேட்டனர். அவர்கட்கு அவ்வுரிமை வழங்கப்பட்டது. எனது முயற்சி சிறிதுமின்றி, ஓலைப் பிரதிகளை எளிதிற் பெறச் செய்த நண்பர் - எ. வையாபுரிப் பிள்ளைக்கும், தங்கள் தங்கள் பாலுள்ள ஓலைப் பிரதிகளை அன்பு கூர்ந்து உதவிய பெரியார் கட்கும், அச்சுப் பிரதி கொண்டு, மூலத்தைக் கூர்ந்து கூர்ந்து, ஊன்றி ஊன்றி நோக்கி, அச்சுப் பிழை களைவதில் ஊக்கஞ் செலுத்திய அன்பர் - மாங்காடு - துரைசாமி முதலியார்க்கும், பெரிதுஞ் சந்திப் பிரிவுமீது கருத்துச் செலுத்தி, அச்சுப்பிழை திருத்திய அன்பர் - அ. சோமசுந்தரம் செட்டியார்க்கும், பாட்டகராதியை ஒழுங்குசெய்து கொடுத்த நண்பர் கிழக்குமருதூர் - நிலக்கிழார் - திருச்சிற்றம்பல இல்லம் - கி. நாராயணசாமி நாயடுவுக்கும், பலதிறச் சிக்கல்களைக் கண்டுஞ் சலிப்புறாது உழைத்த சாது அச்சுக்கூடத் தொழிலாளர் கட்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைச் செலுத்துகிறேன். சென்னை: பவ வருடம் வைகாசி மீ பூச நாள் 19-5- 1934. திருவாரூர் - வி. கலியாணசுந்தரன் பொருளடக்கம் நுழைவுரை v கொடையுரை ix முன்னுரை xi நூல் பாயிரம் 1 முதற்காண்டம் திருமலைச் சருக்கம் - 1 1. திருமலைச் சிறப்பு 29 2. திரு நாட்டுச் சிறப்பு 43 3. திருநகரச் சிறப்பு 57 4. திருக்கூட்டச் சிறப்பு 76 5. சுந்தர மூர்த்தி நாயனார் 82 தில்லை வாழந்தணர் சருக்கம் - 2 6. தில்லை வாழ் அந்தணர் 197 7. திருநீலகண்ட நாயனார் 202 8. இயற்பகை நாயனார் 219 9. இளையான் குடிமாற நாயனார் 235 10. மெய்ப்பொருள் நாயனார் 245 11. விறன்மிண்ட நாயனார் 255 சிவமயம் திருச்சிற்றம்பலம் பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் பாயிரம் கடவுள் வாழ்த்து கலி விருத்தம் நடராசர் 1. உலகுஎலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்; நிலவு உலாவிய நீர்மலி வேணியன்; அலகுஇல் சோதியன் அம்பலத்து ஆடுவான்; மலர்சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம். உலகு எல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் - (சிவஞானங் கைவரப் பெற்ற) அறிஞர்கள் யாவரும் (இவ்வியல்பினனென்று) அறிந்து (அவ்வியல்பை எடுத்துச்) செல்லுதற்கரியவனும், நிலவு உலாவிய நீர்மலி வேணியன் - சந்திரன் தவழுங் கங்கை தங்கும் சடையினை யுடையவனும், அலகு இல் சோதியன் - அளவில்லாத பேரொளிப் பிழம்பானவனும் ஆகிய, அம்பலத்து அடுவான் - திருச் சிற்றம்பலத்தின்கண் ஆனந்தத் தாண்டவம் புரியும் திரு நடராசப் பெருமானது, மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் - மலர் சிலம் பணிந்த திருவடிகளை (யாம்) துதித்து வணங்குவாம் (என்றவாறு). அமிழ்தினுமினிய தமிழ்க்கல்வி நிரம்பப் பெற்ற அருட் புலவர்கள் அருளிய காப்பியங்களிற் காப்புச் செய்யுள்களின் முதற்கண் மங்கலமொழி மிளிர்வது மான, எந்நூலினுஞ் சிறந்த நன்னூலாய இந்நூலினும் உலகு என்னும் மங்கல மொழி முதற்கண் மிளிர்கிறது. தமிழ்த் தெய்வத்திற்குத் தொண்டு பூண்டொழுகும் உத்தமப் புலவர்கள் தாங்கள் பாடுங் காப்பியங்கள் முட்டின்றியினிது முற்றுப்பெறுவான், வழிபடு தெய்வ வணக்கஞ் செய்து, மங்கல மொழியை முதலில் அமைக்கும் வழக்கு இழுக்குறாது என்றும் நிலவவும், மாணாக்கர் உய்யும் பொருட்டும் எல்லாம் வல்ல இறைவரும் மங்கலப் பொருத்தமும், பிற பொருத்தங்களுந் தேங்க உலகெலாம் என்று திரு சேக்கிழார் சுவாமிகட்கு அடியெடுத்துக் கொடுத்தருளினார். வழிபடு தெய்வ வணக்கமும், மங்கலமொழியும் முதலில் வேண்டற் பாலன என்பதனை: வழிபடு தெய்வ வணக்கங்கூறி, மங்கல மொழி முதல் வகுத்தெடுத்துக் கொண்ட, இலக்கண இலக்கியம் இடுக்கணின்றி, இனிது முடியும் என்மனார் புலவர் என்னுஞ் சூத்திரத்தானுணர்க. தில்லை வாழந்தணர்த மடியார்க்கும் அடியேன் என்று வன்றொண்டப் பெருந்தகைகு அடியெடுத்துக் கொடுத்த அடியார்க் கெளியவரே, பசு கரணங்கள் நீங்கிச் சிவகரணமுற்ற திருவருட் பெருங்கடலாகிய திருசேக்கிழார் பெருமானார்க்கு உலகெலாம் என்றோரடி யெடுத்துதவ, அருண்மொழித் தேவர் பாடி முற்றுப் பெறுவித்தமையால், பெரிய புராணம் பதி வாக்கோ பசு வாக்கோ என மலைவாருமுளர். பெரிய புராணம் பதிவாக்கே என்பது பதிஞானிகளின் துணிபு. என்னை? உலகெலாம் என்றருளடி யெடுத்தீந்த முழுமுதற் கடவுளே குன்றை முனிவரை அதிட்டித்துத் திருத்தொண்டர் புராணத்தைத் திருவாய் மலர்ந்தருளினமையால் என்க. விசேடணம் விசேடியத்தை யடையுமென்னும் முறையால் அரியவன், வேணியன், சோதியன் என்னும் விசேடணங்கள் ஆடுவா னென்னும் விசேடியத்தை ஏற்றன. சிவபிரான் ஓதற்கரியவன் என்பதனை: பாதாள மேழினுங் கீழ்ச் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியுமெல்லாப் பொருண் முடிவே - பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணுந்துதித்தாலும் - ஓத வுலவா ஒரு தோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப் பிள்ளைகாள் - ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய் (திருவாசகம்) என்பதானும், மறையினா லயனான் மாலான் மனத்தினால் வாக்கான் மற்றுங் குறைவிலா வளவி னாலுங் கூறொணாதாகி நின்ற இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை - நிறையினார் குணத்தோர்க்கெல்லா நகையினை நிறுத்து மன்றே (சிவஞான சித்தியார்) என்பதானு முணர்க. உணர்ந்தோதற்கரியவன் என்னுங் கருத்தை உணர்ந்தார்க் குணர்வரி யோன்றில்லைச் சிற்றம்பலத் தொருத்தன் குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ் வாயிக் கொடியிடை தோள் - புணர்ந்தாற் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும்புதிதாய் - மணந்தாழ் புரிகுழலாளல்குல் போல வளர்கின்றதே (திருக்கோவையார்) என்பதனா லறிக. சிவபெருமான் அலகில் சோதியனாயினும், ஆன்மாக்கள்மீது வைத்த கைம்மாறற்ற பெருங் கருணையினாலே திருவருளையே திருமேனியாகக் கொண்டு திருச்சிற்றம்பலத் தாடுகின்றார் என்பது தோன்ற, அம்பலத்தாடுவான் என்றார். அம்பலம் என்றது விராட புருடனது இதய கமலத்துள்ள பரமாகாசத்தில் வியாபகமான சிதாகாசத்தை; அதுவே கோயிலெனவும்படும். இறைவர் அச்சிற் சபையில் பஞ்சகிருத்தியங்கட்குங் காரணமான ஆனந்த நிருத்தம் புரிகின்றனர். சிவபெருமான் பஞ்ச கிருத்திய நடம்புரிகின்றனர் என்பதனை: தோற்றந் துடியதனிற் றோயுந் திதியமைப்பிற் - சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய் - ஊன்று மலர்ப் பதத்திலுற்ற திரோதமுத்தி - நான்ற மலர்ப்பதத்தே நாடு என்னும் மனவாசகங்கடந்தார் திருவாக்கானும், பூமலி கற்பகப் புத்தேள் வைப்பும் - நாமநீர் வரைப்பினானிலே வளாகமும் - ஏனைய புவனமும் எண்ணீங்குயிருந் - தானே வகுத்ததுன் தமருகக் கரமே - தனித்தனி வகுத்த சராசரப் பகுதி - அனைத்தையும் காப்பதுன் அமைத்தகைத் தலமே - தோற்றுபு நின்றவத் தொல்லுல கடங்கலும் - ஆற்றுவ தாரழல் அமைத்ததோர் கரமே - ஈட்டிய வினைப் பயன் எவற்றையு மறைத்துநின் - றூட்டுவ தாகுநின் ஊன்றிய பதமே - அடுத்தவின் னுயிர் கட்களவில்பே ரின்பங் - கொடுப்பது முதல்வநின் குஞ்சித பதமே என்னுங் குமரகுருபர சுவாமிகள் திருவாக்கானு முணர்க. புண்ணியனே யுன்னடிக்கே போதுகின்றேன் என்றும், திருவடிச் சிறப்பிற்கே ஒரு திருத்தாண்டகம் அருளியும் ஆன் றோர்கள் திருவடியையே சிறப்பித்தமையால் ஆசிரியரும் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்றார். சிலம்பென்றது வேதங்களை. மறைச் சிலம் பார்ப்ப என்று பின்னர் விளக்கியதைக் காண்க. அறுபான் மும்மை நாயன்மார்களும் ஞானம், யோகம், கிரியை, சரியை என்னும் நாற்பாதங்களையும் அனுட்டித்தவ ரென்பது தோன்ற, திருசேக்கிழார் சுவாமிகளும், உலகெலா முணர்ந்தோதற் கரியவன் என்றதனால் ஞான தரிசனத்தையும், அலகில் சோதியன் என்றதனால் யோக தரிசனத்தையும், அம்பலத் தாடுவான் என்றதனால் கிரியா பூசையையும், வாழ்த்தி வணங்குவாம் என்றதனால் சரியைத் தொண்டையும் விளக்கி னார்கள். இத் திருவருட்பாசுரத்திற்குப் பலர் விருத்தியுரை செய்துள் ளமையால், அவ்வுரைகளையும் வாசித்து உண்மையுணர்க. வானிழல் சேக்கிழார் பெருமானுக்குத் தெய்வப்புலமை, ஆண்டவன் திருவருளாலேயே விளங்கலாயிற்று. சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தைப் பாட எண்ணியதும் பாடப் புகுந்தாரில்லை. அவர் சிதம்பரம் போந்து ஆண்டவன் அருள்வேட்டு நின்றார். அவர்தம் பக்குவம் உணர்ந்து ஆண்டவனே உலகெலாம் என்று அடி யெடுத்துக் கொடுத்தான். ஆண்டவன் அருள்நாத ஒலி, சேக்கிழார் பெருமானைத் தெய்வப் புலவராக்கிப் பெரிய புராணத்தைப் பாடுவித்தது. பெரிய புராணத்திற்கு முதலாக நின்ற திருத்தொண்டத் தொகைக்கும் ஆண்டவன் அடியெடுத்துக் கொடுத்தது ஈண்டுக் கருதற்பாலது. பூதங்கள் ஐந்து. அவை: மண் புனல் தீ காற்று வான் என்பன. மண்ணில் மண்ணோடு மற்ற நான்கும் உண்டு. புனலில் புனலொடு மற்ற மூன்றும் உண்டு. தீயில் தீயொடு இரண்டும் உண்டு. காற்றில் காற்றொடு மற்ற ஒன்றும் உண்டு. வான் மட்டுந் தன்னந் தனியதாய், ஏனைய பூதங்களுடன் கலந்து, அவை இயங்கத் தாரகமாக நிற்பது. இப்பூதங்கட்குத் தன்மைகளுண்டு. அவை தன்மாத்திரைகள் எனப்படும். ஐம்பூதம் தோன்றுதற்குத் தன்மாத்திரைகள் நிலைக்கள னாயிருத்தலால், அவை நுண்பூத மென்றும் மா பூதமென்றுஞ் சொல்லப்படும். அத்தன் மாத்திரைகள்: சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. மண்ணின் இயற்கைத் தன்மை (கந்தம்) நாற்றம். புனலின் இயற்கைத் தன்மை (ரசம்) சுவை. தீயின் இயற்கைத் தன்மை (ரூபம்) ஒளி. காற்றின் இயற்கைத் தன்மை (பரிசம்) ஊறு. வானின் இயற்கைத் தன்மை (சப்தம்) ஓசை. மண்ணின் இயற்கைத் தன்மை நாற்றமாயினும் அதன்கண் மற்றப் பூதங்கள் கலந்திருத்தலான், அவைகளின் தன்மைகளாகிய சுவை ஒளி ஊறு ஓசைகளும், அதன் மாட்டு (மண்ணின் மாட்டு) விரவியிருக்கின்றன. இவ்வாறே புனலுடன் அதன் சுவையும் மற்ற மூன்றும், தீயுடன் அதன் ஒளியும் மற்ற இரண்டும், காற்றுடன் அதன் ஊறும் மற்ற ஒன்றும், வானில் தனித்த ஓசையும் நிலவுகின்றன. இவைகளை, பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி - நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி - தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி - வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி - வெளியிடையொன்றாய் விளைந்தாய் போற்றி என்றும், திண்டிறல் - தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர் - வானிற் கலப்பு வைத்தோன் மேதகு - காலில் ஊக்கங் கண்டோன் நிழல் திகழ் - நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன் என்றும் மாணிக்கவாசகர் விளக்கியிருத்தல் காண்க. சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தின் - வகைதெரிவான் கட்டேயுலகு என்னுந் திருக்குறளின் பொருளையும் ஈண்டு ஓர்க. வான் தனித்தும் மற்றப் பூதங்களுடன் கலந்து மிருப்பதால், அதன் ஓசையும் தனித்தும் மற்றவைகளுடன் கலந்தும் நிற்கிறது. ஆகவே, வானோசை எல்லாப் பூதங்களிலுங் கலந்திருத்தலை இன்னும் விரித்துக் கூறவேண்டுவதில்லை. வானின் தனித்த ஓசைக்கும், மற்றப் பூதங்களொடு கலந்த அதன் ஓசைக்கும் வேறுபாடு உண்டு. அவ்வப் பூதத்தின் திண்மை நுண்மைக்கேற்ற வளவில் ஆங்காங்கே வான் ஒலிக்கும். தனித்த வானொலி கட்டுப் பட்டதன்று. ஏனைய பூதங்களில் கலந்த வானொலி கட்டுப்பட்டதாகும். கட்டுப்படாத தூய வானொலியில் தனித்துத் தொடர்பு பூண்டோர் உள்ளத்தில் ஒலி மயமான உலகெலாம் மிளிரும். அவர்தம் புலன்கள் உலக நிகழ்ச்சிகளை யெல்லாம் ஓரிடத்திருந்தே ஒரே காலத்தில் உணருந்தன்மையைப் பெறும். அப் புலன்களுடையார் வானிழல் துணை பெறுதல் எளிது. வானிழல் பண்டைப் பெரியோர்கட்கு மட்டும் துணை நின்றது என்று எவருங் கருத வேண்டுவதில்லை. என்றும் அது தக்கார்க்குத் துணை செய்வதென்பதில் ஐயமில்லை. உழைப்பால் எல்லோரும் தம்மை எல்லாவற்றிற்குந் தகுதி யுடையராய்ச் செய்து கொள்ளலாம். வேண்டுவது உழைப்பே. உழைப்பின் வாரா உறுதிகளுளவோ என்றார் பட்டினத்தார். வானிழல் துணை பெறுவோர் இன்றுமிருக்கிறார்; இனியு மிருப்பார்.1 சேக்கிழார் பெருமான், அயரா அன்பில் அரன் கழல் போற்றித் தத்துவக் குறும்புகளினின்றும் விடுதலையடைந்து மெய்யுணர்வு பெற்றவர்; சிவமே பார்த்துப் பார்த்துத் தெளிவுபெற்ற சித்தர்; சிதாகாசத் தொடர்புடையவர். அவர் சிதாகாசத் தொடர்புடையார் என்பதற்கு வேறு சான்று வேண்டுவதில்லை. சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் பாடுதற்கு மற்றத் தலங்கள் நோக்காது, சிதா காசத்தின் அறிகுறியாக இம்மண்ணுலகிற் பிறங்குஞ் சிதம்பரத் தலம் நோக்கிய தொன்றே சாலும். சேக்கிழார் பெருமானின் சிவபத்தியும், சிவனடியார் பத்தியும் பெரியபுராணத்தைப் பாடுதல் வேண்டுமென்னும் வேட்கையில் அவரை உந்தின. அவ்வேட்கை அவரை விழுங்கி நின்றது. அவர்தம் அகக்கரண புறக்கரணங்களெல்லாம் பெரியபுராண மயமாயின. அவர்தம் நெஞ்சம் சிதாகாசமாயிற்று. அவர் சிதாகாசத்தில் நடம் புரியும் அண்ணலை நோக்கிப் பெருமானே! திருத்தொண்டர் புராணம் பாடும் வேட்கையுடையேன்; சிவஞானச் செல்வர்களாகிய திருத்தொண்டர்களின் திறங்களை யுணர்ந்து பாடுதற்கு அடியேன் அருகனாவனோ? திருவருட்டுணை வேண்டும். ஐயனே என்று முறையிட்டார். அவர்தம் உண்மை முறையீடு, பொய்யன்புக் கெட்டாத பொற் பொதுவில் நடம்புரியும் ஐயன்தன் திருச்செவிக் கெட்டியது. எட்டியதும், ஐயன் அருளால் உலகெலாம் என்னும் மெய்ம்மொழியை வானிழல் வழங்கிற்று. வழங்கியதும் சேக் கிழாருக்கும் திருவருளுக்கும் பழமைத் தொடர்பு ஏற்பட்டது. எல்லா மெய்ம்மொழிப் பதிவுகட்கும் நிலைக்களனாகவுள்ள அருள்நாதம் சேக்கிழாரிடம் ஒலிக்கலாயிற்று. அவ்வருணாதம், சேக்கிழார்க்கு எல்லாம் விளங்கத் துணைநின்று, அவரைத் தெய்வப் புலவராக்கிற்று. இன்னோரன்ன பல காரணங்களால் சேக்கிழாரைத் தெய்வத் திருவருட் சேக்கிழாரென்று உலகங் கொண்டது. சேக்கிழார் பெருமான் சிவபத்திச் சிவனடியார் பத்தியான் சீவகரணங்களெல்லாஞ் சிவகரணங்களாகப் பெற்ற திருவருட் செல்வரானமையான், ஆண்டவனருள், வானிற் பதிந்திருந்த மெய்ம்மையை உலகெலாம் என்னும் மெய்ம் மொழியால் அவருக்கு வழங்கிற்றென்க. இம்மெய்ம் மொழியைப் பற்றி இராம லிங்க சுவாமிகள், மணிமொழிகள் பல வழங்கியுள்ளார்கள். சுவாமிகளியற்றிய மெய்ம்மொழி விளக்கத்தைப் பார்க்க. உலகெலாம் என்னுந் திருப்பாட்டுக்குக் கலைப்புலவர் பலர் பொருள் விரித்துள்ளார். அப்பொருள்கள் ஒன்றோடொன்று பூசல் விளைத்து வருகின்றன. ஆண்டவன் மெய்ம்மொழிக்குக் கலைப் புலமையால் என்ன பொருள் கூறுவது? அதற்குப் பொருள் அவனே. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரிய ஒன்று எச்சொல்லில் எப் பொருளில் அடங்கும்? பலர் இருளில் உழன்று பொருள் தேடினார்; தேடுகிறார். யானும் இருளிலிருப்பவன். இருளில் உழன்று உழன்று பொருள் தேடுகிறேன். இருளில் வாளா கிடப்பதினும் முயன்றாதல் பொருள் தேடுதல் நலந்தருமன்றோ? முயற்சி திருவினையாக்கும் என்பது பொய்யா மொழி. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் - உலகமெல்லாம் உணர்ந்து கூறுதற்கு அருமையானவனும், நிலவு உலாவிய நீர்மலி வேணியன் சந்திரன் தவழ்கின்ற நீர்நிறைந்த சடையை யுடையவனும், அலகு இல் சோதியன் - அளவில்லாத பேரொளியனுமாய், அம்பலத்து ஆடுவான் - திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடும் இறைவன்றன், மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் மலர்கின்ற சிலம்பணிந்த திருவடியை வாழ்த்தி வணங்குவோம். உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் உலகு என்பது மங்கல மொழிகளுள் சிறந்தது. உலகில் எல்லாம் அடங்கலான் அது சிறந்ததாகிறது. உலகில் தாய்மைப் பொலி விருத்தல் தனிச் சிறப்பாகும். ஆதி பகவன் முதற்றே யுலகு என்னும் மெய்ம்மொழியிலும் உலகுக்கு முதன்மை வழங்கப்பட்டிருக்கிறது. முழுமுதலின் உண்மை உணர்தற்கும் உலகங் கருவியாக நிற்கிறது. உலகு என்னுஞ் சொல்லிற் பொலிதரும் மங்கலப் பொருளின் பெற்றிமை யுணர்ந்தே, ஆன்றோர்கள் அதனைக் காப்பியங்களில் முதற்கண் அமைக்கும் வழக்கைக் கொண்டார்கள் போலும்! உலக முவப்ப - திருமுருகாற்றுப்படை; உலக மூன்றும் - வளையாபதி; மூவா முதலா உலகம் - சிந்தாமணி. உலகம் யாவையும் - கம்ப இராமாயணம். உலகு என்பதற்குப் பல பொருள் கூறலாம் உலகு என்பதே பல பொருள் ஒரு சொல். உலகம் என்பது பல பொருள் ஒரு சொல்லாய் * * * * * * என்பது நச்சினார்க்கினியம். உலகெலாம், உணர்ந்து ஓதற்கு என்றமையான், உலகு என்பதற்கு உயிர்கள் என்று பொருள் கோடல் பொருந்தும், என்னை? உயிர்கள் மாட்டே உணர்தல் ஓதல் நிகழ்தலான் என்க. ஈண்டு உலகு என்பது உயிர்த் தொகுதியினையும், நல்லுயிர்த் தொகுதியினையும் உணர்த்தும் ஒரு சொல்லாக நிற்கிறது. உலகு என்பது நல்லுயிர்த் தொகுதியென்னும் பொருள் படுதலை, பொய் தீர் உலகம் (கலித்தொகை) உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் (திருமுருகாற்றுப்படை) என வரூஉம் ஆன்றோர் மொழிகளிற் போந்துள்ள உலகு என்பதற்கு நச்சினார்க்கினியர், நன் மக்கள் என்று பொருள் கூறியவாற்றானுணர்க. நன் மக்களாவார் உண்மை ஞானந்தெளியப் பெற்றவர். உலகு என்பது, உயிர்கள் நல்லுயிர்கள் என்னும் இரு பொருள் குறித்து நிற்றல் ஈண்டுக் கருதற்பாலது. உயிர்கள் உணர்ந் தோதற் கரியவன் என்றும், நல்லுயிர்கள் உணர்ந்தோதற் கரியவன் என்றுங் கொண்டு பார்க்க இரண்டுக்குமுள்ள வேற்றுமை என்னை? ஓதல் இருவகைத்து ஒன்று ஆண்டவனை உணராது ஓதல்; மற்றொன்று அவனை உணர்ந்து ஓதல். இவ்விரண்டனுள் எது எளிது? எது அரிது? முன்னையது எளிதென்றும், பின்னையது அரிதென்றும் எவருங் கூறுவர். உயிர்கள் உணர்ந்து ஓதலின் அருமையும், நல்லுயிர்கள் உணர்ந்தும் ஓதலின் அருமையும் ஈண்டு ஒருசேரக் குறிக்கப்பட்டன. நல்லுயிர்கள் ஆண்டவனை யுணரும். ஆனால் உணர்ந்ததை ஓதல் அவ்வுயிர்களாலும் இயலாது. இப்பொருள் பட, நல்லுயிர்கள் உணர்ந்தும் ஓதற்கரியவன் என்று கொள்க. உணர்ந்தார்க் குணர் வரியோன் என்னுந் திருக்கோவைப் பாட்டுரையில் பேராசிரியர் உணர்ந்தார்க் குணர்வரியோன் என்பதற்குத் தவத்தானும் தியானத்தானும் எல்லாப் பொருள்களையும் உணர்ந்தவர்க்கும், உம்மை வருவித்துரைக்கப் பட்டது என்று கூறியிருத்தல் காண்க. உலகு என்பது உயிர்களை யுர்ணத்தும்போது, உணர்ந்தோ தற்கு அரியவன் என்றும், அது நல்லுயிர்களை யுணர்த்தும் போது, உணர்ந்தும் ஓதற்கு அரியவன் என்றுங் கொள்க. உலகு இங்கே உயர்திணை, உலகெலாம் என்றது உயிர்களெல் லாவற்றையும், உணர்தல் - அறிவில் தெளிதல்; ஓதல் - கூறுதல்; ஒழுங்கு பட உரைத்தல். அரியவன் - அருமையன்; அடங்காதவன்; இல்லாதவன். ஓதற்கு அரியவன் - அடங்காதவன், இல்லாதவன் என்று கொள்க. இறைவன் இல்லாதவன் என்று கோடற்க. என்னை? பின்னே தொடர்ந்து நிலவுவிய நீர்மலி வேணியன் என்றும். அலகில் சோதியன் என்றும், மலர்சிலம்படி என்றும் இறைவனுண் மையைக் குறிகளுடன் நிறுவிக் காட்டியிருத்தலின் என்க. இறைவன் எப்படியிருப்பன் என்று கூர்ந்து கூர்ந்து, ஆழ்ந்து ஆழ்ந்து, சிந்திக்கச் சிந்திக்க, அல்லையீது அல்லையீது என்று மேலும் மேலும் கடந்து கடந்து சிந்தனைக் கெட்டாச் சேண்மை யனாக அவன் சென்று சென்று கொண்டிருத்தலின், அத் தன்மையனை அரியவன் என்றார். மெய்யுணர்வு பெறாத உயிர்கள், ஆண்டவனை யுணர்ந்து ஓதல் அரிது. கரணங்கடந்த மெய்யுணர்வு பெற்றோர் ஆண்டவ னுண்மையை உணர்தல் இயலும்; ஆனால் அவர்களாலும் அதனை ஓதல் இயலாது. ஓதலில் அடங்குவது எல்லையுடையது. ஆண்டவனோ எல்லையில்லாதவன். அவன் இன்பமும் எல்லை யில்லாதது. எல்லையிலா ஒன்றை எங்ஙனம் எல்லைப்படுத்தி ஓதுவது? அதனால் அவ்வொன்று ஓதற்கரியதாகிறது. இதனை அநுபூதிமான்களின் மெய்ம்மொழிகளால் உணரலாம். ஓத உலவா ஒரு தோழன், ஏதவனைப் பாடும் பரிசு, ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே, மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே, நோக் கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுர்வே, சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க, சித்தமுஞ் போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே, சொல்லற் கரியானை, சொற்கழிவு பாதமலர், ஒன்றுநீ யல்லை அன்றி யொன்றில்லை யாருன்னை அறிய கிற்பாரே, உணர்ந்தாற் குணர்வரியோன் - மாணிக்கவாசகர்; நற் பதத்தார் நற்பதமே ஞானமூர்த்தி நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற - சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை திருநாவுக்கரசர்; ஆட்பா லவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் - கேட்பான் புகில் அள வில்லை திருஞானசம்பந்தர்; யார் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை யார் அறிவார் அந்த அகலமும் நீளமும் - பேரறியாத பெருஞ் சுடர் ஒன்றதின் - வேரறியாமல் விளம்பு கின்றேனே திருமூலர். இறைவன் உண்மைப் பொருளாகலான், அவ்விறைவன், பொய்யறிவினின்றும் விழித்தெழுந்து மெய்யுணர்வு பெற்றோரால் மட்டும் உணருந்தகைமையன் என்பது தோன்ற உணர்ந்து என்றார். ஆண்டவனுண்மை விளங்கியதும், வேறு பொருளொன்று மின்மையானும், அங்கே ஓதல் இன்மையானும் ஓதற்கரியவன் என்றார். செம்மான் மகளைத் திருடுந்திருடன் - பெம்மான் முருகன் பிறவான் இறவான் - சும்மாவிரு சொல்லற என்றலுமே - அம்மா பொருளொன்றும் அறிந்திலனே அருணகிரிநாதர். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் - என்பது ஆண்டவன் சொரூபநிலை. சொரூபநிலையாவது உருவம் அருவம் அருவுருவம் முதலிய எல்லாவற்றையுங் கடந்து நிற்பது. இஃது உலகெலாமுள்ள அனைவராலும் கொள்ளப்படுவது. சொரூபநிலை எல்லாச் சமயத்தார்க்கும் பொது உடைமை. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்பது வாதங் கடந்த ஒன்று. நாம ரூபமற்ற விடத்தில் வாதம் ஏது? வழக்கு ஏது? நிலவுலாவிய நீர்மலி வேணியன் நிலவு உலாவிய வேணியன் என்றும், நீர்மலி வேணியன் என்றும் இயைக்க. நிலவும் உலாவிய நீரும்மலி வேணியன் என்று இயைப்போரு முளர். ஈண்டு நிலவை ஆகு பெயராகவுங் கொள்ளலாம்; இயற் பெயராகவுங் கொள்ளலாம். நிலவு ஆகு பெயரில் நிற்கும்போது ஆசரியர் கருத்து, திங்கள் மீது படிந்ததெனக் கொள்க. நிலவு இயற் பெயரில் நிற்கும்போது ஆசிரியர் நெஞ்சம் திங்கள் உமிழும் நிலவின் மீது படர்ந்ததெனக் கொள்க. நிலவு - தண்ணொளி. வெவ்வொளி - வெயில் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்றருளிய ஆசிரியர் தொடர்ந்து நிலவுலாவிய நீர்மலி வேணியன் என்று அருளியிருத்தல் உன்னற்பாலது. இவ்விரண்டும் ஒருவர் திருவாக்கி னின்றும் பிறந்திருத்தலான் இரண்டுக்கும் தொடர்பிருத்தல் வேண்டும். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் வாக்கு மனங் கடந்து அகண்டமாக நிற்பவன். அவனுண்மையை எப்படி யுணர்வது? உயிருண்மையை நாம் எப்படி யுணர்கிறோம்? உடல் வாயிலாகவன்றோ உயிருண்மையை உணர்கிறோம்? அதே போல ஆண்டவன் உண்மையையும் அவன் உடல் வாயிலாக உணர்தல் கூடும். ஆண்டவன் உடல் எது? இயற்கை. உலகமே உருவமாக என்று அருணந்தி சிவமும், நில நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் - புலனாய மைந்தனோடெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் - உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ என்று மாணிக்கவாசகரும், இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியுங்காற்றுமாகி- அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி என்று திருநாவுக்கரசரும் ஆண்டவன் திரு மேனி இயற்கை என்பதை இயற்கைக் கூறுகளுடன் விளக்கி யிருத்தலை நோக்குக. (உலகு மண்ணையும், சோதி - தீயையும் (ஞாயிற்றையும்) அம்பலம் - வானையும், ஆடுதல் - காற்றையும், வாழ்த்தி வணங்கல் உயிரையும் நினைவூட்டுஞ் சொற் குறிகள் என்றுங் கொள்ளலாம்.) உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன், நிலவுலாவிய நீர்மலி வேணியனாக நிற்றலின் உள்ளுறை, இறைவன் இயற்கை வடிவினனாக இருக்கிறான் என்பதாகும். நிலவுலாவிய நீர்மலி வேணியனை நினைந்து, வழிபட வழிபட இறைவன் இயற்கை வடிவினன் என்பது நன்கு புலனாகும். வேணி முகிற்கூட்டமாகவும், கங்கை அம்முகிலில் மலியும் நீராகவும், பிறை நிலவு ஒளியாகவும் பெருகி நிற்பதைச் சிவயோகாநுபவத்தால் பெறுதல் கூடும். முடிவில் அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம் என்பதன் நுட்பம் தெளிதல் கூடும். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்று நினைக்கும் போது, உள்ளத்தில் ஒன்றுந் தோன்றாது. நிலவுலாவிய நீர்மலி வேணியன் என்று நினைக்கும் போது உள்ளத்தில் ஒன்று தோன்றும். அத் தோற்றம் வழிபாட்டிற்கு இன்றியமையாதது. மனம் உள்ளவரை தோற்றமும் உண்டு. மனமிறந்தால் தோற்றமும் மறையும் தோற் றத்தைக் கொண்டே தோற்றாமையை உணர்தல் வேண்டும். ஆதலால் நிலவுலாவிய நீர்மலி வேணியனைக் கொண்டே உலகெலாம் உணர்ந்தோதற் கரியவனை உணர்தல் வேண்டும். இதனால் உல கெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்பதற்கும் நிலவுலாவிய நீர்மலி வேணியன் என்பதற்கும் தொடர்பிருத்தல் காண்க. அத் தொடர்பு இயற்கை வழி இறைவனை யுணர்த்துவது. நிலவு, கங்கை, சடை முதலியவற்றைச் சிவபெருமான் அணிந் திருத்தலைப் பற்றி உலகம் பலவிதங் கூறும். எங்கும் எல்லாவற் றிலும் நீக்கமற நிறைந்துள்ள சிவத்தினியலை ஒவ்வோர் உலகும் ஒவ்வொரு விதமாகப் பேசுவதில் வியப்பொன்றுமில்லை. பலபடப் பேசிப் பேசியே தெளிவடைதல் வேண்டும். எல்லாக் கூற்றுகளையுந் திரட்டிப் பார்த்தால், அவை ஆண்டவன் அண்ட பிண்டங்களை வடிவாக்கொண்டு அவைகளையுங் கடந்து நிற்பவன் என்னும் ஒன்றில் அடங்கிவிடும். மாற்ற மனங்கடந்து நிற்கும் உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன், உயிர்கள் பொருட்டே, நிலவுலாவிய நீர்மலி வேணிய னாகிறானெனில், அவன்றன் கருணைத் திறத்தை என்னென்று கூறுவது? கருணையே அவன்; அவனே கருணை. கற்பனை கடந்த சோதி கருணையே வடிவமாகி என்பது ஆசிரியர் க்கிழார் மொழி. கருணை, நிலவு லாவிய நீர்மலி வேணியனாக மலர்ந்து நிற்கிறது. நிலவும் நீரும் புலன்களுக்கு எவ்வாறு விருந்தாகுமென்று சொல்லவும் வேண்டுமோ? நிலவும் நீரும் தண்ணளியைப் பொழிந்து வழங்குகின்றன. நிலவுலாவிய நீர்மலி வேணியனை நினைக்க நினைக்க உள்ளங் குளிரும். நிலவுலாவிய நீர்மலி வேணியனில் யாண்டும் வல்லோசை யையே காணோம். எல்லார்க்கும் பயன்படும் எளிய கருணை வடிவம், நிலவுலாவிய நீர்மலி வேணியனாதலின், அதன்கண் வன்மை அமையுங்கொல்! உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன், தன்னை யுணர்த் துதற்குத் தானே கருணையால் நிலவுலாவிய நீர்மலிவேணியனாய்க் கொண்ட திருவுருவம் வழிபாட்டிற்குக் கொழுக்கொம்பு போன்ற தாதலின், அத்திருவுருவை உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் என்பதற்கு அணித்தே வைத்தோதியது பொருத்தமாகும். உலகமே! ஆண்டவன்; உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் என்று அலம ராதே அவன் நிலவுலாவிய நீர்மலி வேணியனாகக் காட்சி யளிக்கிறான். வழிபடுக என்று அறிவு கொளுத்தியவாறாம். அலகில் சோதியன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாதல் மேலே காட்டப்பட்டது. நிலவுலாவிய நீர்மலி வேணியன் எங்ஙனம் உலகெலாம் உணர்ந்தோதற்கரியவ னாகிறான் என்பது அலகில் சோதியனில் மிளிர்கிறது: உல கெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனை, நிலவுலாவிய நீர்மலி வேணியனாக்கொண்டு, நினைந்து நினைந்து, வழிபட வழிபட, இயற்கையின் உயிராகவுள்ள வேணியனாஞ் சிவம், சோதி மயமாகக் காட்சியளிக்கும், சிவசோதி ஓர் எல்லைக்கு உட்படாத அகண்ட மாதலின், அதனை அலகில் சோதி என்றார். சிவபரஞ்சோதி எல்லாச் சோதிகட்குஞ் சோதி வழங்கும் ஒன்றாதலின், அஃது அலகில் சோதியாயிற்று. மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல்- திருவாசகம். தேச விளக்கெலாம் ஆனாய் நீயே - தேவாரம். எல்லா உலகங்கட்கும் ஒளிவழங்குவது ஞாயிறு. அஞ் ஞாயிற்றுக்கு ஒளி வழங்குவது சிவம். ஆதலின் சிவம் எல்லா ஒளிகட்கும் உயிரொளியாயிருப்பது. இதனை மாணிக்கவாசகர் அருக்கனில் சோதி அமைத்தோன் என்று சிறப்பித்தவாறு காண்க. சிவம் ஞாயிற்றின் வாயிலாக எல்லாவற்றிற்கும் ஒளி வழங்குத லான், ஞாயிறு வழிபாடு ஆன்றோர்களால் சிறப்பாகக் கொள்ளப் பட்டது. காயத்திரி மந்திர வழிபாட்டின் உள்ளக்கிடக்கை யென்னை? ஞாயிற்றின் வழி ஒளிவழங்கி உலகுயிர்களையெல்லாம் இயக்கும் சிவ ஞாயிற்றின் வழிபாட்டையன்றோ அப் பெருமந்திரம் அறிவுறுத்துகிறது? இக் காரணம் பற்றியே இருக்கு வேதம் சிவத்தைச் சோதி என்றும், நெருப்பு என்றும், நெருப்புக் கடவுள் என்றும் போற்றா நிற்கிறது. இருக்கு முழுவதும் நெருப்பு, நெருப்புக் கடவுள் மயமாயிருத்தல் கருதத்தக்கது. எரி பெருக்குவர் அவ்வெரி ஈசன் - துருவருக்கம தாவ துணர்கிலார், அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் - அருக்கன் ஆவான் அரனுருவல்லனோ திருநாவுக்கரசர். நிலவுலாவிய நீர்மலி வேணியனை நினைந்து நினைந்து வழிபட வழிபட அவன் அலகில் சோதியனாதல் உலகெலாம் உணர்ந்தோதற்கு அரியவனாதல் ஈண்டுக் காட்டப்பட்டது. அலகில் சோதியன் உலகு உயிர்களை யெல்லாம் இயக்கி இயக்கியே உலகெலாம் உணர்ந்தோதற் கரியவனாகிறான். அவ்வியக்கம் இங்கே அம்பலத் தாடுவான் எனப்பட்டது. அம்பலத்தாடுவான் அலகில் சோதியன் உலகு உயிர்கள் எல்லாவற்றிலும் ஆங்காங்கே நின்று நின்று, அதற்கு அதற்கு ஒளி வழங்கி, அதனை அதனை இயக்கலான் அம்பலத் தாடுவான் என்றார். அம்பலமாவது உலகெலாம் என்க. எங்கும் அம்பலம்; எல்லாம் அம்பல மென்க. இதனை, அம்பலமாவது அகில சராசரம் - அம்பல மாவது ஆதிப் பிரானடி - அம்பலமாவது அப்புத்தீ மண்டலம் - அம்பலமாவது அஞ்செழுத் தாமே, அண்டம் எழுகோடி பிண்டம் எழுகோடி - தெண்டிரை சூழ்ந்த திரை எழுகோடி - எண்திசை சூழ்ந்த இலிங்கம் எழுகோடி - அண்டன் நடஞ்செய்யும் ஆலயந் தானே, காளியோ டாடிக் கனகா சலத்தாடிக் - கூளியோ டாடிக் குவலயத் தேயாடி - நீடியநீர் தீகால் நீள்வானிடையா - நாளுற அம்பலத் தேயாடும் நாதனே, எங்குந் திருமேனி எங்குஞ் சிவஞ்சத்தி - எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் - எங்குஞ் சிவமாயிருத்தலால் எங்கெங்குந் - தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே, ஆனந்த மாடரங் கானந்தம் பாடல்கள் - ஆனந்தம் பல்லியம் ஆனந்த வாச்சியம். ஆனந்தமாக அகில சராசரம் - ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே, அண்டங்களோரேழும் அம்பொற் பதியாகப் பண்டை யாகாசங்களைந்தும் பதியாகத் - தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக் கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே, இடங்கொண்ட சத்தியும் எந்தை பிரானும் - நடங்கொண்டு நின்றமை நானும் அறிந் தேன் - படங்கொடு நின்றவிப் பல்லுயிர்க் கெல்லாம் - அடங்கலுந் தாமாய் நின்றாடுகின்றாரே. இருதயந் தன்னில் எழுந்த பிராணன் - கரசர ணகதி கலக்கும் படியே அரதன மன்றினின் மாணிக்கக் கூத்தன் - குரவனாய் எங்கணுங் கூத்துகந் தானே என வரூஉந் திருமூலர் திருவாக்குகளால் தெளிக. இத்திருமொழிகளான், ஆண்டவன் அண்ட பிண்டங் ளெல்லா வற்றிலும் ஆடுகிறான் என்பது பெறப்படுகிறது. அண்ட பிண்டங் களில் ஆண்டவன் ஓவாது அருள்நடம் புரிவதைச் சிவ யோகிகள் நன்குணர்வார்கள். அப்பெரு நிலையை ஆன்றோர்கள், நூல்கள் வாயிலாகவும் தலங்கள் வாயிலாகவும் பிற வாயிலாகவும் நன்கு விளக்கிச் சென்றார்கள். அண்ட பிண்ட அம்பலத்தின் அறிகுறியாகச் சிதம்பரத் தலம் அமைந்துள்ளது. சிதம்பர இரகசியத்தைச் சிந்தித்தால் உண்மை விளங்கும். உடம்பினுள் ஓடும் நாடிகள் மூன்று. அவை இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்பன. சுழுமுனை நடுவே ஓடுவது. சுழுமுனையின் நடுவண் ஒளிர்வது உள்ளமலர் (இருதய கமலம் - ழநயசவ). உள்ள மலரிடை ஆண்டவன் திருக்கூத்து நிகழ்கிறது. இஃது அகச் சிற்றம்பலம். புற உலகத்தும் மூன்று நாடிகள் ஓடுகின்றன. அவைகளுள் சுழுமுனை, தில்லையம்பதி நேரே ஓடுகிறது. அத்தில்லை மூதூரி லுள்ள திருச்சிற்றம்பலத்திலே ஆண்டவன் இன்பக் கூத்தாடுகிறான். இது புறச் சிற்றம்பலம். இந்நுட்பங்கள் திருமூலர் அருளிய திருமந்திரத்துட் பலவிடங் களில் காணப்படுகின்றன. சில திருமந்திரங்கள் வருமாறு: மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ் சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ - டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே, பூதல மேருப் புறத்தான தெக்கணம் - ஓதும் இடைபிங் கலையொண் சுழுனையாம் - பாதி மதியோன் பயில்திரு அம்பலம் - ஏதமில் பூதாண்டத் தெல்லையி னீறே, இடைபிங் கலையிம வானோடிலங்கை - நடுநின்ற மேரு நடுவாஞ் கழுனை - கடவுந் திலைவனங் கைகண்ட மூலம் - படர்வொன்றி என்னும் பரமாம் பரமே, ஆனத்தி யாடிப் பின்னவக் கூத்தாடிக் - கானத்தி யாடிக் கருத்தில் தரித்தாடி மூனச் சுழுனையுளாடி முடிவில்லா- ஞானத்துளாடி முடித்தானென் னாதனே, நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி - உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம் - பற்றுக்குப் பற்றாய் பரமனிருந்திடஞ் சிற்றம் பலமென்று சேர்ந்து கொண்டேனே, நீடுஞ் சிரசிடைப் பன்னிரண்டங்குலம் - ஓடு முயிரெழுந்தோங்கி யுதித்திட - நாடுமின்னாதாந்த நம்பெரு மானுகந் - தாடு மிடந்திரு வம்பலந் தானே. இவ்வுலகத்துள்ள திருப்பதிகள் பல. அவைகளுள் தத்துவ முறைப் படி அமைந்தன சில. அச் சிலவற்றுள் சிறந்தன ஐந்து. ஐந்தும் ஐம்பூதங்கட்கு அறிகுறியாக விளங்குவன. திருக்காஞ்சி - மண்; திருவானைக்கா - நீர்; நெருப்பு - திருவண்ணாமலை; காற்று - திருக்காளத்தி; வெளி - தில்லையம்பதி, வெளியென்னும் ஆகாயம், பூதங்கட்கு உயிர் போன்றது. அதன் கூட்டுறவின்றி மற்றப் பூதங்கள் இயங்க மாட்டா. அவ்வெளியில் அறிகுறியாகச் சிதம்பரத் தலம் திகழ்தலான் அது சிறந்ததாயிற்று. அம்பலங்கள் ஐந்து. அவை இரத்தின அம்பலம் (திருவாலங் காடு); பொன்னம்பலம் (தில்லை); வெள்ளியம்பலம் (திருவாலவாய்); தாமிரசபை (திருநெல்வேலி); சித்திரசபை (திருக்குற்றாலம்); இவை களுள் பொன்னம்பலமே சிறந்தது. பொன்னம்பலத்தில் அகப்புற இயல்கள் அமைந்திருக்கின்றன. பொன், தீ நிறத்தது. சிவத்தின் நிறமும் அதுவே. தன்னைச் சார்வையுந் தன் மயமாக்குவது தீ. ஆண்டவன் ஆடும் சிற்றம்பலம். அகத்துக்கு அறிகுறியாய், விராட புருடனுக்கு இருதய தானமாய், வெளியை அறிவிப்பதாய், பொன்மயமாயிருத்தலான் சிறப்புடையதாகிறது. சேக்கிழார் பெருமான் இந்நூலை யாத்தற்குத் தில்லையம்பதி நண்ணியதும், நூலுள் தில்லையைப் புகழ நேரும்போதெல்லாம் அதற்கொரு தனிப்பெருமை அவர் வழங்கியிருப்பதும் ஈண்டுக் கருதற் பாலன. மூவர் முதலிகள் தில்லை நோக்கியபோது, அவர்கள் பெற்ற ஆர்வத்தைச் சேக்கிழாரும் பெற்றுப் பாடியிருப்பதைப் பார்க்கப் பார்க்க நமக்கும் ஆர்வம் பொங்கும். வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப மன்றுளே மாலயன் தேட ஐயர்தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்திமுன் குவித்த கைகளோ திளைத்த கண்களோ அந்தக் கரணமோ கலந்தவன் புந்தச் செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந்த தெழுந்தான் திருக்களிற் றுப்படி மருங்கு. ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள அளப்பருஞ் கரணங்கள் நான்குஞ் சிந்தையே யாகக் குணமொரு மூன்றுந் திருந்து சாத்து விகமே யாக இந்து வாழ் சடையான் ஆடுமா னந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துட் டிளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்தன் திருநடங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று கண்ணிலா னந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் (251, 252, 253) நீடுந் திருவுடன் நிகழும் பெருகொளி நிறையம் பவநினை வுறநேரே கூடும் படிவரும் அன்பால் இன்புறு குணமுன் பெறவரு நிலைகூடத் தேடும் பிரமனும் மாலுந் தேவரு முதலாம் யோனிகள் தெளிவொன்றா ஆடுங் கழல்புரி அமுதத் திருநட மாரா வகைதொழு தார்கின்றார். கையுந் தலைமிசை புனையஞ் சலியன கண்ணும் பொழிமழை யொழியாதே பெய்யுந் தகையன கரணங் களுமுட னுருகும் பரிவின பேறெய்து மெய்யுந் தரைமிசை விழுமுன் பெழுதரு மின்தாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம் எதிர்கும் பிடுமவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால். இத்தன் மையர் பல முறையுந் தொழுதெழ என்றெய் தினையென மன்றாடும் அத்தன் திருவருள் பொழியுங் கருணையின் அருள்பெற் றிடவரும் ஆனந்த மெய்த்தன் மையினில்வி ருத்தத் திருமொழி பாடிப் பின்னையு மேன்மேலுஞ் சித்தம் பெருகிய பரிவா லின்புறு திருநே ரிசைமொழி பகர்கின்றார் (1436, 1437, 1438) நந்தி யெம்பிரான் முதற்கண நாதர்க ணலங்கொள்பன் முறைகூட அந்தம் இல்லவரணுகிமுன் தொழுதிரு வணுக்கனாந் திருவாயில் சிந்தை யார்வமும் பெருகிடச் சென்னியிற் சிறுச்செய்ய கையேற உய்ந்து வாழ்திரு நயனங்கள் களிகொள்ள உருகுமன் பொடுபுக்கார். அண்ண லார்தமக் களித்தமெய்ஞ் ஞானமே யானவம் பலமுந்தம் உண்ணிறைந்தஞா னத்தெழு மானந்த ஒருபெருந் தனிக்கூத்தும் கண்ணின் முன்புறக் கண்டுகும் பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப் புண்ணி யக்கொழுந் தனையவர் போற்றுவார் புனிதரா டியபொற்பு. உணர்வி னேர்பெற வருஞ்சிவ போகத்தை யொழிவின்றி யுருவின்கண் அணையு மைம்பொறி யளவினு மெளிவர வருளினை யெனப்போற்றி இணையில் வண்பெருங் கருணையே யேத்திமுன் னெடுத்தசொற் பதிகத்திற் புணரு மின்னிசை பாடின ராடினர் பொழிந்தனர் விழிமாரி. (2062, 2063, 2064) ஐயன் திருக்கூத்தையும் உன்னுக; இத்திருப்பாக்களையும் நோக்குக; சேக்கிழாரின் ஆர்வம் புலனாகும். பலதிறப் பெற்றி கருதியே அன்பர்கள் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச் சிற்றம்பலம் என்று ஓதி ஓதி இன்புறுகிறார்கள். அத்து - ஏழாம் உருபின்கண் வந்த சாரியை. ஆடுவான் - என்றும் ஓவாது ஆடுவான். ஆண்டவன் திருக் கூத்து, உயிரையும் உடலையும் உலகையும் இயக்குகிறது. ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்து ஒவ்வொரு நுண்ணிய நுண்ணிய நுண்மை யையும் அம்பலமாக் கொண்டு கூத்தாடுகிறான். அக்கூத்தின் திறத்தை என்னென்று கூறுவது? அத்திருக்கூத்தின் திறத்தைத் திரு மூலர், வேதங்களாட மிகுவா கமமாடக் கீதங்களாடக் கிளரண்ட மேழாடப் பூதங்களாடப் புவன முழுதாட - நாதங்கொண் டாடினான் ஞானானந்தக் கூத்தே, மேதினி மூவேழ் மிகுமண்ட மோரேழு - சாதக மாகுஞ் சமயங்கணூற்றெட்டு - நாதமொடந்த நடானந்த நாற்பதப் - பாதியோடாடிப் பரனிரு பாதமே, தீமுதலைந்துந் திசையெட்டுங் கீழ்மேலும் - ஆயு மறிவினுக் கப்புற மானந்தமாயைமா மாயை கடந்துநின்றார் காண நாயகனின்று நடஞ் செய்யுமாறே, நாதத் தினிலாடி நாற்பதத் தேயாடி - வேதத்தி லாடித் தழலந்த மீதாடி போதத்தி லாடிப் புவன முழுதாடுந் - தீதற்ற தேவாதி தேவர் பிரானே, தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர் - மூவர் களாதியின் முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயஞ் சராசரம் - யாவையு மாடிடும் எம்மிறை யாடவே, ஒன்பது மாடம் ஒருபதி னாறாட - அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட - இன்புறும் ஏழினும் ஏழைம்பத் தாறாட வன்பது மாடினான் ஆனந்தக் கூத்தே, தத்துவ மாடச் சதாசிவந் தானாடச் சித்தமு மாடச் சிவசத்தி தானாட - வைத்த சராசர மாட மறையாட அத்தனு மாடினா னானந்தக் கூத்தே, சிவமாடச் சத்தியு மாடச் சகத்தில் - அவமாட வாடாத வம்பர மாட - நவமான தத்துவ நாதாந்த மாடச் சிவமாடும் வேதாந்தச் சித்தாந்தத் துள்ளே, புளிக்கண்டவர்க்குப் புனலூறு மாபோற் - களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க்கெல்லாம் - அளிக்கு மருட் கண்ணீர் சோர்நெஞ் சுருக்கும் - ஒளிக்குளானந்தத் தமுதூறு முள்ளத்தே, விம்மும் வெருவும் விழுமெழும் மெய் சோரும் - தம்மையுந் தாமறி யார்கள் சதுர்கெடுஞ் செம்மை சிறந்த திருவம் பலக்கூத்துள் - அம்மலர்ப் பொற்பாதத் தன்புவைப் பார்கட்கே, அண்டத்தில் தேவர்களப்பாலைத் தேவர்கள் - எண்டிசை சூழ்புவிக் குள்ளுள்ள தேவர்கள் - புண்டரி கப்பதப் பொன்னம் பலக்கூத்துக் - கண்டுசே வித்துக் கதிபெறுவார்களே, ஆனந்த மானந்த மென்ப ரறிவிலர் - ஆனந்த மாநட மாரு மறிகிலர் - ஆனந்த மாநட மாரு மறிந்தபின் - தானந்த மற்றிட மானந்த மாமே என்று வருணித் திருத்தல் காண்க. ஆண்டவன் திருக்கூத்தில் ஐந்தொழில் நிகழ்கின்றன. ஆக்கல் அளித்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்பன ஐந்தொழில். அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் - அரனங்கி தன்னில் அறையிற்சங் காரம் அரனுற் றணைப்பில் அமருந் திரோதாயி - அரனடியென்றும் அனுக்கிரகமென்னே திருமூலர். மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் மலர் சிலம்பு - வினைத்தொகை சிலம்பு - ஓங்கார ஒலிப்பிரிவு. புலனடங்கி அமைதியில் திளைத்திருப்போர்க்கு ஒலி கேட்டல் இயல்பு. திருச் சிலம்போசை ஒலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிடென் றுந்தீ பற - நேர்பட அங்கேநின் றுந்தீ பற - திருவுந்தியார். ஆடிய காலும் அதிற்சிலம் போசையும் - பாடிய பாட்டும் பலவான நட்டமுங் கூடிய கோலங் குருபரன் கொண்டாடத் - தேடியுளேகண்டு தீர்ந்தற்றவாறே - திருமூலர். அடி திருவடி: திருவருள், ஒரு காலால் உயிர்களின் முனைப்பை மிதித்தொடுக்கி, மற்றொரு காலால் திருவருள் புரிவது கூத்தினியல். வாழ்த்தலும் வணங்கலும் நினைவினின்றும் நிகழ்தலான், நினைத்தலையும் உடன் சேர்த்துக் கொள்க. எங்கெங்கும் எவ்வுயிரிலும் நீக்கமற நிறைந்து நடம்புரியுந் திருவடியை வாழ்த்தி வணங்கலாவது, எவ்வுயிர்க்கும் அன்பு செய்தலாகும். எவ்வுயிரும் நீங்காதுறையும் இறை சிவன் என்று - எவ்வுயிர்க்கும் அன்பாயிரு சைவ சமய நெறி. எங்கெங்கே பார்த்தாலும் எவ்வுயிர்க்கும் அவ்வுயிராய் அங்கங்கிருப்பது நீயன்றோ பராபமே, எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும்நின் - தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே தாயுமானார். உலகு கண்கூடாக விளங்குவது. கடவுள் கண்கூடாக விளங்காதது. கண்கூடாக விளங்காத ஒன்றைக் கண்கூடாக விளங்கும் ஒன்றைக் கொண்டே உணர்தல் வேண்டும். அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்னுந் திருக்குறளில் திருவள்ளுவர் முதற்றே உலகு என்று கூறியதன் நுட்பத்தை யோர்க. உலகு சுட்டியுணரப்படுவது. சுட்டி யுணரப்படுதற்கு நாம ரூபங்களுண்டு. நாமரூபமுடையது தோற்றம் நிலை இறுதி என்னும் மூவினை யுடைதாகும். தோற்ற நிலையிறுதியுடைய ஒன்று தானே தோன்றி நின்று அழியாது. அது, மூவினைவாய்ப் படுதற்கு மூவினைவாய்ப் படாத ஒன்று வேண்டற்பாலது. மூவினை ஏன் நடைபெறுதல் வேண்டும்? உயிரின் பொருட்டு மூவினை நிகழும் அவசியம் நேர்கிறது. உலகைப்போல் உயிர் அறிவற்றது மன்று; கடவுளைப் போல அது முற்றறிவுடையது மன்று. அஃது இரண்டுக்கும் இடைப்பட்டது. அஃது அறியாமையால் சிற்றறிவுடையதா யிருப்பது. அச்சிறுமை நீங்கினால் உயிர் சிவ மாகும். சிற்றறிவுடைய உயிரின் பொருட்டு முற்றறிவாகிய சிவம் அருட்டொழில் புரிவதாகிறது. சிவத்தின் இரக்கமே இதற்குக் காரணம். இரக்கம் சிவத்தின் இயல்பு. சிவம், உயிரின் அறியாமைச் சிறுமையைப் போக்க அதற்குத் தனு கரண புவன போகங்களைக் கொடுக்கிறது. சிவத்தின் துணையால் உலக வாழ்வைப் பெற்ற உயிர், தான் பெற்ற துணையை மறவாது நினைந்து வாழின், வினைகளின் வாய்ப்படாது, அறியாமைச் சிறுமை நீங்கப்பெற்றுச் சிவமாந் தன்மை எய்தும். இல்லையேல் உயிர், பிறவி வாய்ப்பாட்டு உழலா நிற்கும். இவை யாவும் உலகெலாம் என்னுந் திருப்பாட்டில் பொதிந்து கிடக்கின்றன. உலகெலாம் என்னுந் திருப்பாட்டு வாழ்த்தி வணங்குவாம் என்று முடிகிறது. வாழ்த்தி வணங்குவது யார்? யாம் என்பது சொல்லாமலே அமையும். யாம் என்பது உயிர்களை; உயிர்கள் எதை வாழ்த்தி வணங்குவது? ஆண்டவன் மலரடியையென்க. உயிர்கள் ஏன் ஆண்டவன் மலரடியை வாழ்த்தி வணங்கல் வேண்டும்? அறியாமை யால் நேரும் சிறுமையினின்றும் விடுதலையடையும் பொருட்டு உயிர் ஆண்டவன் மலரடியை வாழ்த்தி வணங்கல் வேண்டும். ஆகவே, வாழ்த்தி வணங்குவாம் என்பதில் முப்பொருளுண்மை விளங்கல் தேர்க. மூன்றனுள், எல்லாவற்றிற்குந் தாரகமாயுள்ள ஆண்டவன் திறத்தைப் போற்றும் வழிப் பிற உள்ளுர்ந்து புலப்படுமாறு ஆசிரியர் உலகெலாம் என்னும் முதற்றிருப்பாட்டை அருளியிருத்தல் காண்க. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்னும் முதலடியி லேயே முப்பொருளின் இயல்கள் குறிப்பாக விளங்குகின்றன. உலகெலாம் என்றது உயிர்களை. உயிர்கள் இறைவனை உணர்ந்து ஓதற்கு இயலாமை அவைகளின் அறியாமையைக் காட்டுகிறது. அரியவன் என்பது ஆண்டவனை உணர்த்துகிறது. ஆண்டவன், அரியவனாயினும், எல்லாவற்றையும் கடந்து நிற்கும் அகண்ட சொரூபனாயினும், அவன் உலகு உயிர்களுடன் கலவாது பிரிந்து நிற்கின்றானில்லை. உலகெலா மாகி வேறாய் உடனுமாய் என்பது சிவஞான சித்தியார். உடனுள்ள ஒன்றை உணர இயலாதிருக்கும் உயிரின் சிறுமை என்னே! என்னே! அச்சிறுமை போக்க வல்லார் யார்? குருடனுக்குக் குருடன் வழி காட்டுதல் எங்ஙனம்? குறைவிலா நிறைவாயுள்ள ஒருவனே உயிர்களின் சிறுமையைப் போக்க வல்லவனாவன். குறைவிலா நிறைவாயிருப்பவன் இறைவன் ஒருவனே. அவனோ உணர்ந்து ஓதற்கு அரியனாயிருப்பவன். அவன் எப்படி உயிர்களின் சிறுமை போக்குவன்? அறியாமையுள்ள உயிர்களாலும் தஞ் சிறுமையைப் போக்கிக் கொள்ளல் இயலாது. வேறு வழியென்னை? ஆண்டவனே வழிகாட்டல் வேண்டும். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்பது ஆண்ட வனது சொரூபம். சொரூபமாவது உருவம் அருவம் அருவுருவம் முதலியவற்றைக் கடந்து நிற்பது. இவ்வரிய ஆண்டவன் உயிர்கள் மீது கொண்ட இரக்கத்தால் தடத்தனாகிறான். தடத்தம் மூன்று நிலைகளையுடைது. அவை, உருவம் அருவம் அருவுருவம் என்பன. உருவம் - சகளம்; அருவம் - நிஷ்களம் அருவுருவம் - நிஷ்களசகளம். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் சொரூபம். நிலவுலாவிய நீர்மலி வேணியன் சகளம். அலகில் சோதியன் - நிஷ்களம். அம்பலத்தாடுவான் - நிஷ்கள சகளம். இவ்வடிவங்க ளெல்லாம் ஆண்டவன் உயிர்கள் பொருட்டுக் கருணையால் தாங்குவன. இக் கருணையே ஆண்டவன் உயிர்கட்குப் புரியும் பெருந்துணையென்க. சிவனுரு வருவுமல்லன் சித்தினோ டசித்துமல்லன் - பலமுதற் றொழில்க ளொன்றும் பண்ணிடு வானுமல்லன் - தவமுத லியோக போகந் தரிப்பவ னல்லன் தானே - இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே; உருமேனி தரித்துக்கொண்ட தென்றலும் உருவிறந்த அருமேனி யதுவுங்கண்டோம் அருவுரு வானபோது - திருமேனி யுபயம் பெற்றோஞ் செப்பிய மூன்றும் நந்தங் கருமேனி கழிக்கவந்த கருணையின் விளைவுகாணே, உருவருள் குணங்களோடும் உணர்வருள் உருவிற்றோற்றுங் - கருமமும் அருள் அரன்றன் கரசர ணாதிசாங்கந் - தரும் அருள் உபாங்கமெல்லாந் தானருள் தனக்கொன்றின்றி. அருளுருவுயிருக்கென்றே ஆக்குவன் அமலனன்றே; அருவமோ ரூபாரூப மானதோ வன்றி நின்ற உருவமோவுரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னில் ஒருவனுக்குள்ளதாமே; ஒருவனேயிராவணாதி பாவ முற்றாற் போலத் தருவனிவ் வுருவமெல்லாந் தன்மையுந் திரியானாகும் வரும்வடி வெல்லாஞ்சத்தி சத்திதான் மரமுங்காழ்ப்பம் - இருமையும் போலமன்னிச் சிவத்தினோடியைந்து நிற்கும் சிவஞானசித்தியார். ஒருவனே இவ்வடிவங்களையெல்லாந் தாங்கலான், எவரெ வர்க்கு எவ்வெவ் வடிவத்தின் மீது விருப்பஞ் செல்கிறதோ, அவரவர் அவ்வவ்வடிவத்தை வழிபடலாம். உலகம் பலவிதம், உலகில் ஆண்டவனை வேறாகவும், தன்னை வேறாகவும் கொண்டு புற வழிபாடு செய்வோரு மிருக்கிறார். அக வழிபாட்டில் மட்டுங் கருத்தைச் செலுத்துவோரு மிருக்கிறார். அகம்புறம் என்னும் இரண்டு வழி நின்று ஆண்டவனைப் போற்று வோரு மிருக்கிறார். இவைகளை யெல்லாம் வேண்டாது ஞான நாட்டம் ஒன்றிலே ஒன்றுவோரு மிருக்கிறார். இத்திறப் பாகுபாடு களுடன் மக்கள் உலகில் வதிதலால், அவரவர் பக்குவத்துக்கேற்ற வண்ணம் ஆண்டவன் வடிவங்கொண்டு அருள்செய்கிறான். அப்பனை நந்தியை ஆரா அமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் - அப்பரி சீசன் அருள்பெறலாமே என்றார் திருமூலர். புறவழிபாடு சரியை - இதற்குரிய வடிவம் நிலவுலாவிய நீர்மலி வேணியன் என்பது. அகவழிபாடு யோகம் - இதற்குரியது அலகில் சோதியன் என்பது. அகப்புற வழிபாடு கிரியை - இதற்குரியது அம்பலத்தாடுவான் என்பது. இவை எல்லாவற்றையும் கடந்தது ஞானம். ஞானத்துக்குரியது உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்பது. இந்நான்கில் உலகெலாம் அடங்கும்; சமயமெலாம் அடங்கும். இவைகளில் அடங்காத உலகமுமில்லை; சமயமுமில்லை. இவை களில் எல்லாம் அடங்கும் சமய நிலைகளை ஆய்ந்தால், அவை சரியா சமயம், கிரியா சமயம், யோக சமயம், ஞான சமயம் என்னும் நான்கில் அடங்காமற் போகா. சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நான்கும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிந்து நிற்பன அல்ல. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. அத்தொடர்பு வழியே மக்களின் சமய வாழ்வும் அரும்பி மலர்ந்து காய்த்துக்கனியும். விரும்புஞ் சரியை முதல் மெய்ஞ்ஞான நான்கும் - அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே என்பது தாயுமானார் திருவாக்கு. இவை மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்பதிலும் விளங்குகின்றன. மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்பதை நான்கிலும் பொருத்திக் கொள்க. நிலவுலாவிய நீர்மலி வேணியன்றன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கலாவது, மனமொழி மெய்களால் திருவடி தொழுதல். அம்பலத்தாடுவான்றன் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கலாவது, திருவடியைத் திருவருளாக வேண்டி நிற்பது. அலகில் சோதியனது மலர் சிலம்படி வாழ்த்தி வணங்க லாவது, புறமறைந்து ஓசை ஒலியால் ஒளி தோன்ற அகமலர, அம்மலரில் வண்டெனப் படிந்திருத்தல். உலகெலாம் உணர்ந் தோதற்கரியவனது மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கலாவது, அகப்புற வேற்றுமையின்றிக் காண்டல் கேட்டல் முதலிய வுணர் வின்றித் தான் வேறு. சிவம் வேறு என்னும் எண்ணமின்றி, இரண்டற்ற நிலையில் நிரதி சயானந்தத்தில் தேங்கிக் கிடப்பது. மலரடி என்பதை ஞானத்துக்கும், சிலம்படி என்பதை யோகத்துக்கும், அடி வாழ்த்தலைக் கிரியைக்கும், அடி வணங்குவாம் என்பதைச் சரியைக்கும் கொள்ளுமுறையில் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்பது அமைந்திருக்கிறது. வழிபாட்டுக்கென உலகெலாம் உணர்ந்தோதற் கரிய ஆண்டவன், நம் பொருட்டு அழகிய திருமுடியும், அழகிய திரு வடியுந் தாங்கி, நம் முள்ளத்தில் கோயில் கொண்டு திருவருள் செய்தலை உன்னுவோமாக. ஆண்டவன் அடிமுடி இல்லாதவன். அவ்வடியையும் முடியையுந் தேடிச் செல்லச் செல்ல அவை நீண்டுகொண்டே போகும். அவைகட்கு எல்லை இல்லை. கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான் - பாதம் இரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால் - சோதி மணிமுடி சொல்லில் சொல்லிறந்து நின்றதொன்மை - ஆதிகுணம் ஒன்றும் இல்லான் அந்தமிலான் வரக்கூவாய், ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை என்றார் மாணிக்கவாசகர். முடியில்லா ஒன்று - அடியில்லா ஒன்று - மலமும் மனமு முடைய உயிர்களின் பொருட்டு நிலவுலாவிய நீர்மலிவேணியாம் முடியையும், மலர் சிலம்படியையும் தாங்கி, உயிர்களின் மலம் நீங்க மனத்தில் நிற்குங் காட்சியைக் காண்க. அழகிய முடியை - அழகிய அடியை நோக்குக; நோக்குக. திருமுடியுந் திருவடியுந் கொண்ட ஒருவனுக்குரிய திருமேனி எது? அலகில் சோதி என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார். அலகில் சோதியன் திருமுடியும் திருவடியும் மாயையால் கொள்ளப்பட்டன அல்ல என்பது குறிப்பு. காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால், சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும் சிவஞானசித்தியார். இவ்வொளி வடிவம், உயிர்கள் மீது கொண்ட கைம்மாறற்ற பெருங்கருணையால் தாங்கப்படுவதென்பதை அம்பலத்தாடுவான் என்பதனால் ஆசிரியர் தெளிவு செய்கிறார். ஆண்டவன் அம்பலத் தாடுதலால் நிகழும் தொழில் ஐந்தும் உயிர்கள் பொருட்டாதலின், அவன் உருவம் செயல் முதலிய யாவும் கருணை மயம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டுவதில்லை. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்று ஆண்டவனைக் கூறிய ஆசிரியர், ஆண்டவன் தலையையும் உடலையுங் காலையுங் காட்டுவதன் அழகை உள்க. உலகெலாம் என்னுஞ் சீரிய திருப்பாட்டுப் பலதிற விழுப் பங்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கிறது. அவைகளுள் சில மேலே காட்டப்பட்டன. அக்காட்டினின்றும் பெறத்தக்க ஒன்றை ஈண்டுச் சிறப்பாகக் குறிக்க விரும்புகிறேன். ஆண்டவன், உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரிய அவன், உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியனாகவே கிடக்கிறானா? அல்லது நான் உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் என்னும் இறுமாப்பில் வீழ்ந்து கிடக்கிறானா? என்பது சிந்திக்கற்பாலது. ஆண்டவன் வாளாவாதல் இறுமாந்தாதல் கிடக்கிறானில்லை. உலகெலாம் உணர்ந்தோதற்கரிய ஆண்டவன், உயிர்கள் பொருட்டு இரங்கி இரங்கி இரங்கி இரங்கி நிலவுலாவிய நீர்மலி வேணியனாய், அலகில் சோதியனாய், அம்பலத்தாடுவானாய், மலர்சிலம் படியனாய் வருகிறான். சிவம் கட்டில்லா முற்றறிவா யிருப்பது. அறிவே சிவம் என்றார் திருமூலர். அறிவின் நீர்மை என்ன? அன்பன்றோ? அன்பு, கட்டுடைய உயிர்களிடத்தும் ஒவ்வொருபோது நிகழ்தல் காண் கிறோம். அன்பு நிகழும் போது கட்டு என்னும் அறியாமை யினின்றும் உயிர் சிறிது விடுதலையடைகிறது. மீண்டும் அறியாமை சூழும்போது அன்பு மறைய, எரி பகை வீறிட்டெழுகின்றன. உயிர், அறியாமையினின்றும் முழுவிடுதலையடையும் போது, அதன் மாட்டுள்ள அழுக்காறு முதலியன நீங்க, அது முழு அன்பில் முழுகி நிற்கும். அந்நிலை பெற்றோர் எக்காரணம் பற்றியும் எவ்வுயிர்க்குந் தீங்கு செய்யார். அவர் எவ்வுயிரையுந் தம்மைப்போல் பார்ப்பார். உற்ற வேளையில் அவர் தம்முயிரையும் பிறர்க்கு உதவுவார். அவர்தம் இயல் தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்தல் என்று சுருங்கச் சொல்லலாம். அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான் எனவும்; அன்பிலார் எல்லாந் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு எனவும் வரூஉந் திருவள்ளுவர் திருவாக்கை நோக்குக. ஆண்டவன் அறியாமைக் கட்டில்லா முற்றறிவினன் ஆதலின், அவன் முழு அறிவினனாகவே என்றும் பொலிகிறான். அப்பேரறிவு என்றும் நீங்காத அன்பு மயமாயிருக்கிறது. இதனால் அறிவே சிவம் என்றருளிய திருமூலர் அன்பே சிவம் என்றும் அருளலானார். முழு அன்பில் முனைப் பேது? அவ் அன்பு உயிர்களின் துன்பத்தை நீக்க இரங்குகிறது. உலகெலாம் உணர்ந்தோதற் கரியதாயுள்ள அறிவு. அன்பால் எப் பயனுங் கருதாது, உயிர்களின் பொருட்டு, இரக்கங்கொண்டு, நீர்மலி வேணியனாய், அலகில் சோதியனாய், அம்பலத் தாடுவானாய், மலர்சிலம் படியனாய் எளிவந்தருளுஞ் சிறப்பை எம்மொழியால் இயம்புவது? உலகெலாம் உணர்ந்தோதற்கரிய ஆண்டவன், அன்பால் இரங்கி உயிர்கட்கு உபகரித்தலை உன்னிப் பார்க்க. இத்திருப் பாட்டின் தனக்கென வாழாமையும் பிறர்க்கு இறங்கி வருதலும் அருளலும் பிறவும் விளங்குதல் காண்க. தனக்கென வாழப் பிறர்க்குரி யாளன் - சாத்தனார். கிழமைப் பட வாழ் - ஔவையார். உலகெலாம் என்னும் முதற் றிருப்பாட்டில் உலகு உயிர் கடவுளுண்மையும், அதனதன் இயலும் உயிர்கள் பொருட்டு ஆண்டவன் இரங்கி எளிவரலும் எளி வந்து தாங்கும் அருட்டிரு மேனிகளும் அவ்வத்திருமேனியின் திறங்களும் அவ்வத் திறத்துக் கேற்ற வழிபாட்டின் வகைகளும். தனக்கென வாழாமையும் பிறர்க்குக் கிழமைப்படுதலும் இன்னோரன்ன பிறவுங் கருக்கொண் டிருத்தல் வெள்ளிடைமலை. நூற்கண் போந்துள்ள பொருள்கள் உலகெலாம் என்னும் ஒன்றில் நுண்மையாக ஒன்றியிருத்தலை யுணர்க. உல கெலாம் என்னும் வானிழல் மெய்ம்மொழி; அறிவுவிதை. அத னின்றும் எழுந்த அன்புமரம்; பெரிய புராணம். பெரிய புராணம், நாயன்மார்கள் வரலாற்றைக் கூறும் ஓர் அருணூல். நாயன்மார்கள் முழுமுதற் பொருளாகிய சிவ பெருமானை உலகெலாம் உணர்ந்தோதற்கரியவனாகவும், நிலவு லாவிய நீர்மலி வேணியனாகவும் அலகில் சோதியனாகவும் அம்பலத் தாடுவானாகவுங் கொண்டு, அவர் தம் மலர் சிலம்படியை நினைந்து வாழ்த்தி வணங்கிப் பலதிற வழிபாடுகள் நிகழ்த்திப் பேறு பெற்றதும்; அவரவர் தொண்டின் திறத்துக்கேற்ற வண்ணம் ஆண்டவன் அவரவர்க்கருள் புரிந்ததும்; இவைகளை யொட்டிய மற்ற அன்புக் கூறுபாடுகளும் பெரியபுராணத்தில் ஒளிர்கின்றன. இவைகளெல்லாம் உலகெலாம் என்னும் முதற்றிருப் பாட்டில் உறைந்து நிற்குமாறு பாடிய பெருமை ஆசிரியருடையது. அப்பெரியாரின் பரந்த நோக்கும், விரிந்து மனமும் கடவுளிடத் தன்பும், உயிர்களிடத்தன்பும், சொல் நயமும், பொருளாழமும், கல்லையுங் கரைக்கும் பா வளமும், பிறவும் நூன் முழுவதும் பொலிந்து கொண்டிருக்கின்றன. இத்தகை நூல் யாவர்க்கு உரியது? உலகில் உள்ள அன்பர்கட் கெல்லாம் உரியதென்பது அதன் உள்ளுறையால் நன்கு புலனாகும். உலகெலாம் என்று ஒலித்தெழுங்குறிப்பே, உலகில் உள்ள அன்பர்கட்கெல்லாம் இந்நூல் உரியதென்பதை அறிவிப்பதாகிறது. அப்பாலும் அடிசார்ந்தார் புராணமும், பிறவும் இக்கூற்றை வலியுறுத்தல் காண்க. உலகெலாம் என்னும் மெய்யறிவு விதையி னின்றும் எழுந்த பெரிய புராணம் என்னும் அன்பு மரம் தனது அருள் நிழலை எல்லார்க்கும் வழங்கும் பெற்றியதென்க. உலகெலாம் என்னும் மெய்ம்மொழிப் பாட்டின் ஒவ்வொரு சொல்லையும் பொருளையும் தனித்தனியே ஓதி ஓதி உன்னிப் பார்க்க ஒவ்வொன்றிலும் மங்கலமும், இனிமையும், அழகும் அமைதியும், ஆறுதலும், இன்ன பிறவும் இயற்கையில் அமைந்திருத்தல் நனி விளங்கும். உலகெலாம் என்று ஒலித்தெழும் இம்மெய்ம் மொழி நூலை உலகெலாம் உணர்ந்து ஓதுவதாக! இதன் அருமைப்பாடு யாண்டும் நிலவி உலவுவதாக! இதன் நீர்மை யாண்டும் மலிவதாக! இவ்வறிவு நூல் எல்லார் முடியிலும் ஏறி அ லகில் ஒளியை வீசுவதாக! இவ்வன்பு நூல் எல்லா அம்பலங்களிலும் ஆடுவதாக! இவ்வருணூல் எல்லார் நெஞ்சிலும் மலர்வதாக. இப்பெரு நூலை உலகுக்களித்த ஆசிரியர் திருவடியை வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன். உலகெலாம் ஓங்கிவாழ்க. 1 2 ஊன் அடைந்த உடம்பின் பிறவியே தான் அடைந்த உறுதியைச் சாருமால் தேன் அடைந்த மலர்ப்பொழில் தில்லையுள் மா நடம்செய் வரதர்பொன் தாள்தொழ ஊன் - தசை. பிறவியே - (மானுடப்) பிறப்பே. ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம். உறுதியை - பயனை; பேற்றை ஆல் - அசை. எல்லா நடங்களுக்கும் உயிராயுள்ள நடமாதலின் மா நடம் என்றார். வரதர் - வரத்தைக் கொடுப்பார்; நடராசர். பிறவி சாரும் ஊன் அடைந்த உடம்பு, விலங்கு, பறவை முதலிய உயிர்கட்கும் உண்டு. அவ்வூனுடலால் அமையும் கருவி கரணங்கள் முதலியன வீடுபேற்றைக் காதலிக்கும். ஆறாவதறிவு விளக்கத்துக்குத் துணை நிற்பதில்லை. மனித உடலின் கருவி கரணங்கள் முதலியன அவ்வறிவு விளக்கத்துக்குத் துணைநிற்றலான். ஈண்டுப் பிறவியென்றது மானுடப் பிறப்பின் மேற்றென்க. இது பொற்றாள் தொழ என்ப தால் நன்கு விளங்கும். மக்கட் பிறவி, தில்லைக் கூத்தன் திருவடி தெழும்பேறு பெறின் விழுமியதாகு மென்க. ஊனிலாவி உயிர்க்கும் பொழுதெலாம் - நானிலாவி இருப்பன் என்நாதனை அப்பர் மாநடத்தின் இனிமையைத் தேனடைந்த மலர்ப்பொழில் என்றும் குறிப்பால் உணர்த்தியவாறாம். புளிக் கண்டவர்க்குப் புனலூறுமா போல் - களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் காங்கே - திருமூலர். 2 விநாயகர் 3. எடுக்கும் மாக்கதை, இன்தமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை - நமக்குஅருள் செய்திடத் தடக்கை ஐந்து உடைத்தாழ்செவி - நீள்முடிக் கடக் களிற்றைக் கருத்துள் இருத்துவாம். மாக்கதை - பெரிய புராணமென்ப. தடம் - பெரிய; விசால மான. கை நான்கு, துதிக்கை ஒன்று ஆக ஐந்து. கடம் - மதம் பொருந்திய. களிற்றை - யானைமுகக் கடவுளை. களிறு - ஆண் யானை. பிடி - பெண் யானை. ஈண்டு இனம்பற்றிப் பிடியையுங் கொள்க. என்னை? விநாயகக் கடவுளின் யானை முகத்தில் ஒருபால் கொம்புண்மையானும், மற்றொருபால் கொம்பின்மையானுமென்க. கொம்புண்மை ஆணையும், அஃதின்மை பெண்ணையுங் குறிப்பன. ஆண் பெண் முறையே சிவஞ்சத்தி யெனப்படும். உலகங்களெல்லாம் வெம்மை தண்மையென்னும் இரண்டு சக்திகளான் இயங்குகின்றன. வெம்மையும் தண்மையும் முறையே ஆண் பெண் என்னுஞ் சிவம் சத்தியென்று சொல்லப்படும். ஆணெலாம் இறைவன் பெண் ணெலாந் தேவி. சைவ புராணம். சிவஞ் சத்தியாய பரம்பொருள், கொண்ட மூர்த்தங்கள் பலவற்றுள் விநாயக மூர்த்தமும் ஒன்று. பெண்ணொரு பாகம் வைத்த பிஞ்ஞகன் வடிவு காட்டும் - அண்ணலங் களிநல் யானை கூர்ம புராணம். யானை முகம் பிரணவத்துக்கு அறிகுறி. முறைப்பட்ட பிராணாயாமத்தில் அமரும் ஒருவனது நுரைஈரல் துதிக்கைபோல எழும்பி நிற்றலும் வீணா தண்டம் பிடரியில் நிமிர்ந்து நிற்றலும், இன்னோரன்ன பிறவும் பெறுதல் கண்கூடு. இந்நுட்பங்களை விநாயக மூர்த்தம் உணர்த்து கிறதெனக் கணபதி உபநிடதங் கூறுகிறது. இயம நியமங் கடந்து யோகத்திலமர்வோர், முதல்முதல் பயில்வது பிராணாயாமம். அதற் குரிய விநாயகரும் எவ்வினைக்கும் முதல்முதல் தொழப் படுகிறார். திருக்கூட்டம் 4. மதிவளர் சடைமுடி மன்றுளாரை, முன் துதுதிசெயும் நாயன்மார் தூயசொல் மலர் பொதி, நலன்,நுகர்தரும் புனிதர் பேரவை, விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே. மதி - இளம்பிறை. மன்றுளாரை - சபாநாதரை. முன் - முன்னாளில். திருமுன்னே எனினுமாம். சொன்மலர் - சொல்லாகிய மலரில்; பா மாலையில்; திருத்தொண்டத் தொகையை முதலாக் கொண்டு பிறந்த நாயன்மார் வரலாற்றில்; நாயன்மார் திருவாக்கி னின்றும் பிறந்த தூய சொன்மலரில் (தமிழ் மறைகளில்) எனக் கொள்ளினுமாம். பொதி நலம் - நிறைந்த தேனை (பத்திச் சுவையை). நுகர்தரு புனிதர்பேர் அவை - உண்ணும் தூயமக்களுடைய பெருமை பொருந்திய அவைக்களம். விதிமுறை - இறைவன் இயற்கை விதி வழி இயங்கும். வெல்க - சிறக்க. நாயன்மார்களின் புகழை ஓதும் - கேட்கும் அல்லது அவர்களருளிய பாமாலையை ஓதும் - கேட்கும் அடியவர்கள் உள்ளத்தை ஆண்டவன் திருக்கோயில் கொள்வதால், கடவுள் வாழ்த் தினைத் தொடர்ந்து திருக்கூட்டத்தை வாழ்த்தியவாறு காண்க. 4. அவை அடக்கம் 5. அளவு இலாத பெருமையர் ஆகிய, அளவு இலாஅடியார்புகழ் கூறுகேன், அளவுகூட, உரைப்பு அரிது ஆயினும், அளவு இல்ஆசை துரப்ப, அறைகுவேன் கூறுகேன் - வினையாலணையும் பெயர். அளவு கூட - விசேடமின்றிச் சாமான்யத் தன்மையைக்கூட என்பர் மகாலிங்க ஐயர். துரப்ப - உந்த; செலுத்த. 5 6. தெரிவுஅ ரும்பெருமைத் திருத்தொண்டர் தம் பொருஅ ரும்சீர், புகலல் உற்றேன் முற்றப் பெருகு தெண்கடல் உற்றுஉண் பெருநசை ஒருசு ணங்கனை ஒக்கும் தகைமையேன். தெரிவரும் - அறிதற்கரிய; பொருவருஞ்சீர் - ஒப்பற்ற சிறப்பை; வரலாற்றை. தெண் கடல் உற்றுண் பெருநசை - தெளிந்த கடலை அடைந்து அதனை முழுவதும் உண்ணுதல் வேண்டும் என்னும் பேராசையை யுடைய. (தண்கடல் ஊற்றும் - குளிர்ந்த கடலை வாயாலெடுத்துக் கவிழ்க்கும்). சுணங்கனை - நாயை. 6 7. செப்பல் உற்ற பொருளின் சிறப்பினால் அப்பொருட்கு உரை, யாவரும் கொள்வரால் இப்பொருட்கு, என் உரைசிறிது; ஆயினும் மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர்; மேன்மையால். சொல்லப்பட்ட பொருளின் சிறப்பினாலே, அப்பொருட்குப் போர்வையாக அமைந்த சொல்லைப் பலரும் ஏற்பர் (அதுபோல). மேன்மையால் - பொருளின் சிறப்பினால். மெய்ப்பொருட்கு உரியார் - உண்மைப் பொருளை உணர்தற்குரிய அறிஞர்கள். 7 8. மேய இவ்உரை கொண்டு, விரும்புமாம் - சேயவன் திருப்பேரம் பலம், செய்ய - தூய பொன் அணி சோழன், நீடு ஊழிபார் ஆய சீர் அநபாயன் அரசவை. சேயவன் - சிவந்த திருமேனியுடைய தில்லைக் கூத்தன்; அன்பரல்லாதார்க்குத் தூரத்திலிருப்பவன் என்று கொள்ளினுமாம். அம்பலம் - சபையை. செய்ய - சிவந்த. அணி - வேய்ந்த. நீடூழி பார் ஆய சீர் - நீண்ட காலம் உலகில் நிறைந்த புகழினையுடைய. மேய இவ்வுரை - (திருவருளால்) பொருந்திய இப்புராணத்தை. அவை விரும்பும் அரசு அவை - இராச சபை; வேந்துரிமை பெற்ற தலைமையவை. அநபாயன் - அபாயரகிதன் என்பர் பழைய குறிப்புரைக்காரர். இம்மன்னனைச் சேக்கிழார் பெருமான் பலவிடங்களில் பலவாறு புகழ்ந்து கூறுகிறார். இவனைக் கங்கை கொண்ட சோழன் (இராசேந்திர சோழன்) என்றும், முதலாவது குலோத்துங்கன் என்றும், இரண்டாவது குலோத்துங்கன் என்றும் ஆராய்சிக்காரர் கூறுப. 8 9. அருளின் நீர்மைத் திருத்தொண்டு அறிவரும் தெருள்இல் நீர்இது செப்புதற்கு ஆம்? எனின், வெருள்இல் மெய்ம்மொழி வான் நிழல் கூறிய பொருளின், ஆகும் எனப்புகல்வாம் அன்றே. அறிவரும் அருளின் நீர்மைத் திருத்தொண்டு - அறிதற்கியலாத அருட்டன்மையுடைய நாயன்மார்களின் திருத்தொண்டினை. தெருள்இல் நீர் - தெளிவு அதாவது மெய்யுணர்வு இல்லாத நீர். ஆம் எனில் - ஆகுமோ என்றால். வெருளில் - மயக்கமில்லாத மெய்ம்மொழி. உலகெலாம் என்னும் மெய்ம்மொழியை. வானிழல் இயலும் பிறவும் மேலே கூறப்பட்டுள்ளன. பொருளின் ஆகும் - முதலால் ஆகும். மெய்ம்மொழியையுடைய வானிழல் எனக் கொண்டு, அது கூறிய உலகெலாம் என்னும் பொருளாலாகு மென்று கூறுதலு மொன்று. மெய்ம்மொழிவான் நிழல் என்று கொண்டு வேதாகமங்களை அருளிய ஆண்டவன் அசரீரி என்று பொருளுரைப்போரு முளர். அவர் பொருள் என்பதற்குத் திருத் தொண்டத் தொகையைக் கூறுவர். 9 நூற் பெயர் 10. இங்குஇதன் நாமம் கூறின், இவ்உலகத்து முன்னாள் தங்குஇருள் இரண்டில், மாக் கள் சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருளை, ஏனைப் புறஇருள் போக்கு கின்ற செங்கதிரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்பாம். திருத்தொண்டர் புராணமென்னும் இந்நூற்குப் பெரிய புராணம் என்னும் மற்றுமொரு திருப்பெயருண்டு. அதனை எடுக்கு மாக்கதை என்னுந் திருப்பாட்டிற் போந்துள்ள மாக்கதை யுணர்த்துமென்ப. பெரியபுராணம் - பெருமையையுடைய புராணம். எவர் பெருமையை? திருத்தொண்டர் பெருமையை யென்க. பெரியர் புராணமெனக் கொள்வோருமுளர். பெரியர் - திருத்தொண்டர். பெரிய புராணமென்னும், திருத்தொண்டர் புராணமென்றும், திருத்தொண்டர் புராணமென்னும் பெரியபுராண மென்றும் இக்காவியம் வழங்கப்படுகிறது. புராணம் - பழைய வரலாறு. முன்னாள் - தொன்று தொட்டு. இருள் இரண்டில் - அகஇருள் புறஇருள் என்னும் இரண்டில். மாக்கள் . . . . . இருளை - அக இருளை; அஞ்ஞானத்தை. அஞ்ஞானமுடையார் மாக்கள். இவர் ஐயறிவினர். அஞ்ஞானத்தை அழிக்கும் ஆறாவது அறிவு விளங்கப் பெற்றோர் மக்கள். இவ்வேற்றுமை தோன்ற மாக்கள் என்றார். ஏனைப் புறஇருள் - மற்றைப் பூதஇருள். செங்கதிரவன் - சிவந்த கிரணங்களை யுடைய சூரியன். பொங்கிய இருளை நீக்கும் திருத்தொண்டர் புராணம் என்று இயைக்க. புறவிருளைச் சூரியன் நீக்குவது போல அகவிருளை இத்திருத்தொண்டர் புராணம் நீக்கும் என்றவாறு. திருத்தொண்டர் புராணம் அகஞாயிறு ஆதல் காண்க. 10 முதற்காண்டம் திருமலைச் சருக்கம் - 1 1. திருமலைச் சிறப்பு கலிவிருத்தம் 11. பொன்னின் வெண் திரு நீறுபுனைந்துஎனப் பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது தன்னை யார்க்கும் அறிவுஅரியான் என்றும் மன்னி, வாழ், கயிலைத் திரு மாமலை. பொன்னின் - செம்பொன்னிலே. பனிமால்வரை பாலது - இமயமலையின் இடத்தது. உலகிலுள்ள மலைகளிலெல்லாம் இமயம் உயர்ந்ததாகலானும் அதன் அகலமும் நீளமும் உயரமும் காண்போரை மயங்கச் செய்தலானும் மால்வரை என்றார். மால் - மயக்கம். இமயக் குவட்டை ஞாயிற்றின் ஒளி தாக்கி அதைப் பொன்னிறமாகச் செய்தலின் பொன்னின் என்றார். பொற்கோட் டிமயம் புறநானூறு. தன்னை யார்க்கும் அறிவரியான் - சிவபெருமான். பொன்னிலே வெண்ணீறு அணிந்தாற்போல இமயத்தில் கயிலை பொலிகிறதென்க. பொற்கோட் டிமயம் செம்மேனிச் சிவத்தையும், வெண்கயிலை சிவத்தின்மீது பூக்கும் வெண்ணீற்றையும் உணர்த்தல் குறிப்பு. செம்பொன் வரைமேல் பசும்பொன் னெழுத்திட்டதே போல் சிந்தாமணி. 1. 12. அண்ணல் வீற்றிருக்கப் பெற்றது ஆதலின் நண்ணும் மூன்று உலகும் நான் மறைகளும் எண்இல் மாதவம் செய்ய, வந்துஎய்திய புண்ணியம், திரண்டு உள்ளது போல்வது. அண்ணல் - பெருமையிற் சிறந்தவன்; தைத்திரியம். மூன்று உலகம் - சுவர்க்க மத்திய பாதலம். நான்மறைகள் - தைத்திரியம், பௌடியம், தலவகாரம், சாமம்; இவை பின்னே இருக்கு யசுர் சாமம் அதர்வணம் என்று வகுக்குப்பட்டன. புண்ணியம் - வெண்மையைக் குறிப்பது; தூய்மைக்கு அறிகுறி. 2. 13. நிலவும் எண்இல் தலங்களும், நீடுஒளி இலகு தண்தளிர் ஆக, எழுந்ததோர் உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல் மலரும் வெண்மலர் போல்வது; அம் மால்வரை. நிலவும் - விளங்கும். உலகம், தலங்கள், கயிலை - இவை முறையே கொடியாகவும் தளிராகவும் வெண்மலராகவும் உருவகிக்கப் பட்டன. அம்மால் வரை அப்பெருமை பொருந்திய மலை. 3. 14. மேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர் கான வீணையின் ஓசையும் கார்எதிர் தான மாக்கள் முழக்கமும் தாஇல்சீர் வான துந்துபி ஆர்ப்பும் மருங்குஎலாம். மருங்கெலாம் - பக்கங்களிலெல்லாம். நாதமும் - ஒலியும். விஞ்ஞையர் - வித்தியாதரர் கானம் - பாட்டு; வீணாகானம் என்க. கார் எதிர் தான மாக்கள் - மேகத்துக்கு மாறாக மதம் பொழிகின்ற யானைகள்; காரைத் தமது இனமெனக் கருதி அதற்கு எதிரிலே . . . . . . . . ; காருக்கு ஒப்பாக . . . . . . . . . எனினும் அமையும். தாவில் - சீர்கெடாத சிறப்பு; குறைவற்றது. வான துந்துபி - தேவ துந்துபி; தெய்வ வாச்சியம். ஆர்ப்பும் - ஆரவாரமும். 4. 15. பனிவி சும்பில் அமரர் பணிந்து சூழ், அனித கோடி அணிமுடி மாலையும் புனித கற்பகப் பொன்அரி மாலையும் முனிவர் அஞ்சலி மாலையும் முன் எலாம். பனி விசும்பில் அமரர் - குளிர்ச்சி பொருந்திய விண்ணிலே வாழுந் தேவர்கள். அனிதம் - எண்ணிறந்த. அளவில்லாத கோடி கோடி என்றபடி. முடிமாலையும் - முடிவரிசையும். அத்தேவர்கள் அணிந்த பென்னரி மாலையும். பொன்னரி மாலை - வாடா மாலை. அஞ்சலி மாலையும் - குவித்த கைகளின் ஒழுங்கும். 5. 16. நீடு தேவர் நிலைகளும் வேண்டிடின் நாடும் ஐம்பெரும் பூதமும் நாட்டுவ கோடி கோடி குறள் சிறு பூதங்கள் பாடி ஆடும் பரப்பது பாங்கு எலாம். நிலைகளும் - பதங்களும். நாட்டுவன - படைக்க வல்லனவாகிய. கோடி கோடி - எண்ணில் கோடி. குறள் - குள்ளம். பரப்பது - பரந்த இடைத்தையுடையது. குறட் சிறு பூதகணங்கள் விரும்பினால் வேறு வேறு நிலைகளையும், ஐம்பெரு பூதங்களையும் படைக்கும் ஆற்றல் வாய்ந்தன என்க. 6. 17. நாயகன் கழல் சேவிக்க நான்முகன், மேய காலம் அலாமையின் மீண்டவன், தூய மால்வரைச் சோதியின் மூழ்கிஒன்று ஆய அன்னமும் காணாது அயர்க்குமால் மேயகாலம் - இயைந்த சமயம். அயர்க்கும் - மனந்தளர்வான். உம்மை - இறந்தது தழீயது; சிவபெருமானைக் காணாமையையும் தழீஇ நிற்றலின். கயிலையும் வெண்மை; அவ்வெள்ளொளியில் மூழ்கிய அன்னமும் வெண்மை. தூய வெண்மைக் குறிப்பு. 7. எழுசீர் விருத்தம் 18. காதில் வெண் குழையோன் கழல்தொழ நெடியோன் காலம் பார்த்து இருந்ததும் அறியான், சோதிவெண் கயிலைத் தாழ்வரை முழையில் துதிக் கையோன் ஊர்தியைக் கண்டு, மீதுஎழு பண்டைச் செஞ்சுடர் இன்று வெண்சுடர் ஆனதுஎன்று, அதன்கீழ் ஆதி ஏனமதாய் இடக்கல் உற்றான் என்று, அதனை வந்து அணைதரும் கலுழன். வெண்குழையோன் - சிவபெருமான். நெடியோன் - திருமால். முழையில் - குகையில். துதிக்கையோன் ஊர்தியை - யானைமுகக் கடவுளின் வாகனமாகிய பெருச்சாளியை. பண்டைச் செஞ்சுடர் என்றது முன்னாளில் முகுந்தனும் முண்டகனும் முனிந்து போர்புரிந்த காலத்தில் அவர்களை ஆட்கொள்ளும் பொருட்டுச் சிவபெருமான் கொண்ட செஞ்சுட ருருவாம் அக்கினி மலையை. வெண்சுடர் என்றது கயிலாய மலையை. ஏனம் - பன்றி; இடக்க லுற்றான் - பூமியைத் தோண்டச் செல்கிறான். கலுழன் - கருடன். கலுழன், பெருச்சாளியைப் பன்றியெனக் கொண்டு மயங்கி அணை தரும் என்க. 8. 19. அரம்பையர் ஆடல் முழவுடன், மருங்கில் அருவிகள் எதிர்எதிர் முழங்க, வரம்பெறும் காதல் மனத்துடன் தெய்வ மதுமலர், இருகையும் ஏந்தி, நிரந்தரம் மிடைந்த விமான சோபான நீடுஉயர் வழியினால் ஏறிப் - புரந்தரன் முதலாம் கடவுளர் போற்றப் பொலிவது அத் திருமலைப் புறம்பு. அரம்மையர் - தெய்வப் பெண்கள். முழவு - ஆடற்குரிய ஒரு வகைத் தோற்கருவி; மத்தளம். தெய்வ மது மலர் - கற்பகத்தின் தேன்பொருந்திய பூக்களை. நிரந்தரம் மிடைந்த - எப்பொழுதும் இடையீடின்றி நெருங்கிய. விமான சோபானம் - விமானங்களின் கீழுள்ள படிகளின். புரந்தரன் - தேவேந்திரன். 9. 20. வேதநான் முகன், மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும் காதலால் மிடைந்த முதல்பெருந் தடையாம் கதிர்மணிக் கோபுரத்து உள்ளான் - பூத வேதாளம் பெருங்கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும் நாதனார், ஆதி தேவனார், கோயில் நாயகன்; நந்தி எம் பெருமான். பொதுவில் சிற்சபையில் நந்தியெம்பெருமான் முதற்றடை யாகிய கோபுரத்துள்ளார். 10. 21. நெற்றியின் கண்ணர்; நால்பெருந் தோளர்; நீறுஅணி மேனியர்; அனேகர் பெற்றம்மேல் கொண்ட தம்பிரான் அடியார்; பிஞ்ஞகன் தன்அருள் பெறுவார் மற்றவர்க்கு எல்லாம் தலைமைஆம் பணியும் மலர்க்கையில் சுரிகையும் பிரம்பும் கற்றைவார் சடையான் அருளினால் பெற்றான் காப்பது அக் கயிலை மால்வரை தான். பெற்ற மேல்கொண்ட தம்பிரான் - இடபத்தை வாகனமாக் கொண்ட சிவபெருமான். பிஞ்ஞகன் - தலைக்கோலமுடையவன்; சிவபெருமான். சுரிகையும் - உடைவாளையும் சுரிகையும் . . . . . பெற்றான் நந்தி தேவர். 11. 22. கையில் மான் மழுவர், கங்கைசூழ் சடையில் கதிஇளம் பிறைநறுங் கண்ணி, ஐயர், வீற்றிருக்கும் தன்மையி னாலும், அளப்பஅரும் பெருமையி னாலும், மெய்ஒளி தழைக்கும் தூய்மையி னாலும், வென்றி வெண்குடை அநபாயன் செய்யகோல் அபயன் திருமனத்து ஓங்கும் - திருக்கயி லாயநீள் சிலம்பு. கண்ணி - கொண்டைமாலை; கொன்றைமாலை யென்ப; பிறையாகிய நறுங்கண்ணி எனினுமாம். செய்யகோல் - செங்கோல். அபயன் - பயமில்லாதவன். திருமனத்து - திருவுள்ளம்போல. அத்து உவமையுணர்த்துஞ் சொல்லாய் வருதற்குத் துணைமல ரெழுநீலத் தேந்தெழின் மலருண்கண் என்பதை (கலித்தொகை) ஆசிரியர் இளம்பூரணர் தொல்காப்பிய உவம இயலில் காட்டியுள்ளார். சிலம்பு - மலை. 12. கலிவிருத்தம் 23. அன்னதன் திருத் தாழ்வரையின் இடத்து, இன்ன தன்மையன் என்று அறியாச்சிவன் தன்னையே, உணர்ந்து ஆர்வம் தழைக்கின்றான் உன்ன அருஞ்சீர் உபமன்னியமுனி. ஆர்வம் - அன்பு (கருதியதொன்றன்மீது தோன்றும் பற் றுள்ளம்). ஆண்டவன் உணரக்கூடியவனாய் ஓதற் கரியவனாயுள்ள வனாதலின், உணர்ந்து ஆர்வந் தழைக்கின்றான் என்றார். முனிவர் ஆண்டவனுண்மையுணர்ந்து, அதனாலெழும் அன்பு பெருகப் பெருக அதனிடை மூழ்கி நிற்பவரென்க. இன்ன தன்மைய னென்றறி யொண்ணா எம்மானை -சுந்தரர். 13. 24. யாதவன், துவரைக்குஇறை ஆகிய மாதவன் முடிமேல் அடிவைத்தவன்; பூத நாதன் பொரு அரும்தொண்டினுக்கு, ஆதி அந்தம் இலாமை அடைந்தவன். யாதவன் - இடையன், துவரைக்கு இறையாகிய மாதவன் - துவாரகைக்கு அரசனாகிய கண்ணபிரான். முடிமேல் அடி வைத்தவன் - திருவடி தீக்ஷைசெய்தவன். பூத நாதன் - சர்வ பூதங்கட்கும் (எல்லா உயிர்கட்கும்) இறைவன். ஆதி - முதல்; வைப்பு. அந்தம் - முடிவு; இறப்பு. தொண்டினுக்குத் தோற்றமும் இறுதியும் இல்லாமை தெளிந்து அதனை எப்பொழுதும் ஆற்றும் பேறு பெற்றவர் என்றுங் கொள்ளலாம். 14. 25. அத்தர் தந்த அருள்பால் கடல் உண்டு சித்தம் ஆர்ந்து தெவிட்டி வளர்ந்தவன்; பத்தர் ஆயமுனிவர் பல் ஆயிரர் சுத்த யோகிகள் சூழ இருந்துழி. அத்தர் - சிவபெருமான். உபமன்னிய முனிவர் குழவியாய் அழுத ஞான்று சிவபெருமான் திருப்பாற்கடல் தந்தருளியது புராணக் கதை. ஆண்டவன் அளித்தது திருவருளாகிய பாற்கடல் என்பது உட்பொருள். முனிவர் உண்டது திருவருட்பாலாதலினால் சித்தம் ஆர்ந்து என்றார். ஆர்ந்து - மகிழ்ந்து; நிறைந்து; நுகர்ந்து. பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான் தன்னை -தேவாரம். பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் -திருப் பல்லாண்டு. சுத்த யோகிகள் - அமல யோகிகள். இருந்துழி - இருந்த சமயம். 15. 26. அங்கண் ஓர்ஒளி ஆயிர ஞாயிறு பொங்கு பேர்ஒளி போன்றுமுன் தோன்றிடத் துங்க மாதவர், சூழ்ந்து இருந்தார், எலாம் இங்கு இது என்கொல் அதிசயம் என்றலும், ஆயிர ஞாயிறு - பல்லாயிரஞ் சூரியர்கள். ஞானவுடல் ஒளியாய்த் தோன்றல் இயல்பு. 16 27. அந்தி வான்மதி சூடிய அண்ணல் தாள் சிந்தியா உணர்ந்து அம்முனி, தென்திசை வந்த நாவலர்கோன், புகழ் வன்தொண்டன், எந்தையார் அருளால் அணைவான் என. சிந்தியா உணர்ந்து - சிந்தித்துத் தெளிந்து; தியான முதிர்ச்சியால் கூடிய சமாதியாலுணர்ந்து. நாவலர்கோன் - வன்றொண்டர்; சுந்தர மூர்த்தி சுவாமிகள். எந்தையார் - சிவபெருமான். 17. 28. கைகள் கூப்பித் தொழுது எழுந்து அத்திசை மெய்யில் ஆனந்த வாரி விரவிடச் செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி, ஐயம் நீங்க வினவு வோர் அந்தணர். அத்திசை - தென்திசை. விரவிய - பெருக; கலக்க. செய்ய - சிவந்த. மாமுனி - உபமன்னிய மாமுனிவர். அந்தணர் - (அங்கே சூழவிருந்த) முனிவார்கள்; அந்தண ரென்போர் அறவோர் மற்றெவ் வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான் -திருவள்ளுவர். அழகிய தட்பத்தை யுடையவர் பரிமேலழகர். அந்தத்தை அணவு வார் அந்தணர் என்றது வேதாந்தத்தையே நோக்குவார் என்றவாறு வேதாந்த்தை எக்காலமும் பார்ப்பார் -நச்சினார்க்கினியார். 18. 29. சம்புவின்அடித் தாமரைப் போதுஅலால், எம்பிரான்! ïiwŠrhŒ; ï~Jv‹?எனத் தம்பிரானைத் தன் உள்ளம் தழீஇயவன்; நம்பி ஆரூரன்; நாம் தொழும் தன்மையான் சம்புவின் - சிவபிரானுடைய. தாமரைப் போது அலால் - தாமரை மலர் போன்ற திருவடியை அல்லாமல். எம்பிரான் - எம்பிரானே! (உபமன்னிய முனியே இறைஞ்சாய் - (பிறவற்றை வணங்க மாட்டாய். தம்பிரானை - சிவ பெருமானை. தழீஇயவனாகி நம்பியாரூரன். நாம் - உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. தம்பிரானை உள்ளந் தழீஇ நிற்பவரைத் தம்பிரான் என்றே கொண்டு வந்தனை வழிபாடுகள் செய்வது மரபு. 19. 30. என்று கூற இறைஞ்சி இயம்புவார், வென்ற பேர்ஒளியார் செய் விழுத் தவம் நன்று கேட்க விரும்பும் நசையினோம் இன்று எமக்கு உரை செய்துஅருள் என்றலும், பேரொளியார் - சுந்தரமூர்த்தி சுவாமிகள்; ஐம்புலன்களை வென்று பேரொளியானவர்; ஒளிகளெல்லாவற்றையும் வென்ற பேரொளியார் எனினுமாம். செய்விழுத்தவம் - செய்த சீரிய தவம். நசையினோம் - வேட்கை யுடையோம். 20. 31. உள்ள வண்ணம் முனிவன் உரைசெய்வான்; வெள்ள நீர்ச்சடை மெய்ப்பொருள் ஆகிய வள்ளல் சாத்தும் மதுமலர் மாலையும் அள்ளும் நீறும்எடுத்து அணைவான் உளன்; வள்ளல் - சிவபெருமான். எடுத்து அணைவான் ஒருவன் உளன். 21. 32. அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் முன்னம் ஆங்குஒரு நாள் முதல் வன்தனக்கு, இன்ன ஆம்எனும் நாள்மலர் கொய்திடத் துன்னினான் நந்தன வனச் சூழலில், முதல்வன் தனக்கு - சிவபெருமானுக்கு. இன்ன ஆம் என்னும் - இன்ன மலர்கள் ஆகும் என்னும் படியான. நாண்மலர் - அன்றலர்ந்த புதிய மலர்கள். துன்னினான் - சென்றான். சூழலில் - சோலையில்; சுற்றுப் பக்கத்தில். 22. 33. அங்கு, முன்எமை ஆளுடை நாயகி கொங்கு சேர்குழற்கு ஆம்மலர் கொய்திடத் திங்கள் வாள்முகச் சேடியர் எய்தினார் - பொங்குகின்ற கவினுடைப் பூவைமார்; ஆளுடை நாயகி - பார்வதிதேவியார். கொங்குசேர்குழற்கு ஆம் - இயற்கை மணம் வீசும் கூந்தலுக்கு ஆகும். உமா தேவியார்க்கு ஞானப் பூங்கோதை என்றொரு பெயருண்டு. திங்கள் வாள்முகச் சேடியர் - முழுமதி போன்று ஒளி காலும் முகத்தினையுடைய தோழிப் பெண்கள். கவினுடை - அழகுடைய. பூவைமார் - நாகணவாய்ப் பறவையின் மொழி யொத்தவர்கள். பூவைமாராகிய சேடியர். 23. 34. அந்தம் இல்சீர் அனிந்திதை, ஆய்குழல் கந்த மாலைக் கமலினி என்பவர் கொந்து கொண்ட திருமலர் கொய்வுழி, வந்து வானவர் ஈசர் அருள்என, அந்தம் இல் - அழிவில்லாத, சீர் - அழகு. ஆய் குழல் - அழகிய கூந்தல்; ஆய்ந்து சிக்கெடுக்கப்பட்ட கூந்தல். கந்தம் - மணம். கொந்து - கொத்துகள். கொய்வுழி - கொய்யும்போது. வானவர் - ஈசர் தேவர் நாயகராகிய சிவபெருமான். ஈசர் அருள் என்பதன் விளக்கம் தடுத்தாட்கொண்ட புராணத்துட் காண்க. ஈசனாரருள் எவ்வழிச் சென்றதே முதலிய பல வாசகங்களை நோக்குக. * * * என்பவர் * * * ஈசர் அருளென வந்து* . . . . . . கொய்வுழி என்றியைத்தல் ஒருவிதம். வருஞ் செய்யுளுடன் தொடர்பு கொண்டு இயைத்தல் மற்றொரு விதம். அது * * * போதுவான் வந்து ஈசர் அருளென அவர் (சேடியர்) மேல் மனம் போக்கிட என்றியைப்பது. 24. 35. மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திடத் தீது இலாத் திருத்தொண்டத் தொகை தரப் போதுவான், அவர் மேல்மனம் போக்கிடக் காதல் மாதரும் - காட்சியில் கண்ணினார். போதுவான் - போவராகிய ஆலால சுந்தரர். அவர் - சேடியர். காட்சியில் கண்ணினார் - காட்சியில் கண்ணுடையரானார். ஆலால சுந்தரர் காட்சியே அவர்கள் கண்ணின்கண் நின்றது; பிற நிற்க வில்லை என்க. 25. 36. முன்னம் ஆங்குஅவன் மொய்ம்முகை நாள்மலர், என்னை ஆட்கொண்ட ஈசனுக்கு ஏய்வன பல்மலர், கொய்து செல்லப், பனிமலர் அன்னம் அன்னவரும் கொண்டு அகன்றபின், மொய்ம்முகை நாண்மலர் - நெருங்கிய அரும்புகளாயிருந்து அன்றலர்ந்த மலர்களில்; ஏய்வன - பொருந்துவனவாகிய பனிமலர் . . . . . . கொண்டு அகன்ற பின். ஆலால சுந்தரர் உள்ளங்கவர அன்னம் போல் நடந்தனரென்பது குறிப்பு. 26. 37. ஆதி மூர்த்தி அவன் திறம் நோக்கியே, மாதர் மேல்மனம் வைத்தனை, தென்புவி மீது தோன்றி, அம் மெல்லிய லாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய் என, ஆதிமூர்த்தி - சிவபெருமான்; அவன் திறம் - ஆலால சுந்தரர் கொண்ட எண்ணத்தை; கொள்கையை நோக்கியே - கருதியே. அணைவாய் - (இங்கே) சேர்வாயாக. கயிலாயம் - சுத்த புவனமாத லானும், சுந்தரரும் மகளிரிருவரும் ஆண்டுத் தாங்கியுள்ள உடலங்கள் எண்ண நிகழ்ச்சிக்கேயன்றிச் செயல் நிகழ்ச்சிக்கு இடந்தாராமை யானும், பிரகிருதி யுலகில் பிரகிருதி யுடல் தாங்கி, எண்ணத்தைச் செயலில் நிறைவேற்றுமாறு ஆணை பிறந்தது. எண்ணம் பிறவிக்கு வித்து என்பது ஈண்டு உன்னற்பாலது. 27. 38. கைகள் அஞ்சலி கூப்பிக் கலங்கினான்; செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன் மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே! தடுத்து ஆண்டு அருள்செய் என, செய்ய - அழகிய. மையல் - அறியாமை; மயக்கம். எண்ணம் பிறவிக்கு வித்து என்பதையுணர்ந்து கலங்கி, அதனால் பிறவி தாங்கத் திருவருளாணை பிறந்தது நியதியென்று தெளிந்து, ஆணையை மறாது ஏற்று, ஆண்டவன் அருட்கடலாகலான் அவனை வேண்டுதல். செய்யத்துணிந்து, தாம் மானுடமாய் மயங்கும் வேளையில் தம்மைத் தடுத்தாட்கொள்ளுமாறு ஆலால சுந்தரர் ஆண்டவனிடம் விண்ணப்பஞ் செய்துகொண்டனர்; பிராரத்த வினையை அனுபவிக்கும் போது ஆகாமியமேறாது இருப்பதற்குத் திருவருட்டுணையை நாடுதல் மெய்யுணர்வு பெறுதற்குரிய வழியாகும். 28. 39. அங்கணாளன் அதற்கு அருள் செய்தபின், நங்கைமாருடன் நம்பி, மற்று அத்திசை தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாரும் என்று, அங்கு அவன்செயல் எல்லாம் அறைந்தனன். அங்கணாளன் - அழகிய கண்ணையுடைய அதாவது கண்ணோட்டமுடைய சிவபெருமான். நங்கைமாருடன் - அனிந்திதை கமலினி என்பவருடன். நம்பி - சுந்தரமூர்த்தி. நங்கை - மகளிரிற் சிறந்தவள். நம்பி - ஆடவரிற் சிறந்தவன். அத்திசை - தென்திசை. தோற்றத்தில் மானுட உடலில். இம்மண்ணுலகில் நானாக வகுத்தனை சுந்தரர் சாரும். இப்பொழுது திரும்பி வருகிறார். அவன் செயலெலாம் வன்றொண்டர் வரலாறுக ளெல்லாம். 29. 40. அந்தணாளரும், ஆங்கு அது கேட்டவர்; பந்த மானுடப் பால்படு தென்திசை இந்த வான்திசை எட்டினும் மேற்பட tªj ò©Âa« ahJ? என, மாதவன்; அந்தணாளரும் - முனிவர்களும். மாதவன் - உபமன்னிய முனிவர். 30. 41. பொரு அருந்தவத்தான் புலிக் காலனாம் அருமுனி எந்தை, அர்ச்சித்தும் உள்ளது; பெருமை சேர்பெரும் பற்றப்புலியூர் என்று ஒருமையாளர் வைப்புஆம் பதி ஓங்குமால்; பொருவரும் - ஒப்பற்ற. புலிக்காலனாம் அருமுனி எந்தை - வியாக்கிர பாதரென்னும் என் தந்தை. பெரும்பற்றப் புலியூர் - தன்னை நோக்கும் உயிர்கட்குத் தன்னிடத்தே பெரும்பற்றை விளைக்கும் புலியூர்; சிதம்பரம். ஒருமையாளர் - புலன்களை ஒரு வழியில் நிறுத்தி மனத்தை ஒருமையில் நிறுத்துஞ் சீவன் முத்தர்கள். வைப்பு - இருப்பிடம். 31. 42. அத்திருப் பதியில் நன்மை ஆளுடை மெய்த்தவக்கொடி காண, விருப்புடன் அத்தன், நீடிய அம்பலத்து ஆடும்; மற்று இத்திறம் பெறலாம் திசை எத்திசை? மெய்த்தவக் கொடி - சிவகாமவல்லி. அத்தன் - சிவபெருமான். இத்திறம் - இத்தன்மை; இம்மேன்மை. 32. 43. பூதம் யாவையின் உள் அலர் போதுஎன, வேத மூலம் வெளிப்படு மேதினிக் காதல் மங்கை இதயம் கமலம்ஆம் மாது ஓர் பாகனார் ஆரூர், மலர்ந்ததால். பூதம் யாவையின் உள் அலர் போது என - எல்லா உயிர்க ளிடத்தும் அலர்கின்ற நெஞ்சத்தாமரை (இருதய கமலம்) போல. வேத மூலம் - வேத வித்தாகிய சிவம்; பிரணவமுமாம். மேதினிக் காதல் மங்கை - பூமிதேவி, இதய கமலமாம் ஆருர் மலர்ந்தது. 33. 44. எம்பிராட்டி, இவ்ஏழ் உலகு ஈன்றவள், தம் பிரானைத் தனித் தவத்தால் எய்திக் - கம்பை ஆற்றில் - வழிபடு காஞ்சி என்று உம்பர் போற்றும் பதியும் உடையது. தம்பிரானை - சிவபெருமானை. உம்பர் - தேவர்கள். 34. 45. நங்கள் நாதன்ஆம் நந்தி தவம்செய்து, பொங்கு நீடுஅருள் எய்திய பொற்பது; கங்கை, வேணி மலரக் கனல் மலர் செங்கையாளர், ஐயாறும் திகழ்வது. நந்தி குருமூர்த்தியாதலான் நங்கள் நாதனாம் நந்தி என்றார். பொற்பது - பொலிவினையுடையது. வேணி - சடை. கனல்மலர் செங்கையாளர் - நெருப்பு மலர்கின்ற அழகிய கையையுடைய சிவபெருமான். 35. 46. தேசம் எல்லாம் விளக்கிய தென்திசை ஈசர் தோணி புரத்துடன் எங்கணும் பூசனைக்குப் பொருந்தும் இடம் பல; பேசில் அத்திசை ஒவ்வா பிறதிசை. தென்திசையில். தோணிபுரம் - சீகாழி. 36. 47. என்று மாமுனி வன்தொண்டர் செய்கையை, அன்று சொன்ன படியால், அடியவர் தொன்று சீர்த் திருத் தொண்டத் தொகை விரி, இன்று என் ஆதரவால் இங்கு இயம்புகேன். தொன்று - பழைய. என் ஆதரவால் - என் வேட்கையால். 37. 48. மற்று இதற்குப் பதிகம் வன்தொண்டர்தாம் புற்றி டத்து எம் புராணர் அருளினால் சொற்ற, மெய்த் திருத்தொண்டத் தொகை எனப் பெற்ற - நற்பதிகம் தொழப் பெற்றதாம். புற்றிடத்து - திருவாரூரிற் புற்றிடங் கொண்ட. புராணர் - பழையவர்; தியாகேசர். சிவபெருமான் திருவாரூரைக் கோயில் கொண்ட நாள் காலங்கடந்தது. திருநாவுக்கரசர் திருவாரூர்த் திருத்தாண்டகம் நோக்குக. பெரிய புராணத்துக்குப் பதிகம் திருத்தொண்டத் தொகை என்றவாறு. 38. 49. அந்த மெய்ப்ப திகத்து - அடியார்களை நந்தம் நாதன் ஆம் நம்பியாண்டார் நம்பி புந்தி ஆரப் புகன்ற வகையினால், வந்த வாறு வழாமல் இயம்புவாம். திருத்தொண்டத்தொகை - தொகை. நம்பியாண்டார் நம்பி அந்தாதி வகை பெரிய புராணம் - விரி. புந்தியார - மனமார. நம்பியாண்டார் நம்பி திருவருளால் திருத்தொண்டத் தொகைக்கு வகைநூல் அருளி வழிகாட்டியவராதலான், அவரை நந்தம் நாதனாம் என்றார். 39. 50. உலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும் - அலகுஇல் சீர் நம்பி ஆருரர் பாடிய நிலவு தொண்டர்தம் கூட்டம் நிறைந்து உறை குலவு தண்புனல் நாட்டுஅணி கூறுவாம். சைவம் ஓங்கினால் உலகு உய்யும். அலகில் - அளவில்லாத. நம்பி ஆரூரர் - சுந்தரமூர்த்தி சுவாமிகள். புனல்நாடு - சோழநாடு. பல நாட்டில் தோன்றிய நாயன்மார்கள் வரலாற்றைக் கொண்ட பெரிய புராணம், நாட்டுச் சிறப்பில் சோழநாட்டைக் கொண்டமைக்குக் காரணம் இங்கே சொல்லப்பட்டது. பதிகமாகிய திருத்தொண்டத் தொகை பிறந்ததும், அதையருளிய சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் போதருமாறு திருவருளால் குறிக்கப் பெற்றதும், திருவருள் வழி நின்று பாட்டுடைத் தலைவராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரவையாரை மணந்து உறைவிடமாக் கொண்டு ஆரூரராதற்கு முதலாக நின்றதும், திருக்கூட்டம் வீற்றிருந்தருளும் பெரும் பேறுடையதுமாகிய திருவாரூர் சோழ நாட்டிலிருத்தலால் நாட்டுச் சிறப்பில் சோழ நாட்டை ஆசிரியர் கொண்டாரென்க. 40. திருமலைச் சிறப்பு உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியர் சிவபெருமான்; அவர் உயிர்கள்மீது வைத்த கைம்மாறற்ற பெருங்கருணையால், திரு வருளையே திருமேனியாக் கொண்டு, நங்கைபங்கராய் வீற்றிந் தருளும் பேறு பெற்றிருப்பது திருக்கயிலாயமலை. அத்திருமலை இமயப் பொற்கோட்டின் ஒருபாங்கர் உள்ளது; அது தூய வெண்ணிறமுடையது; அஃது அறனே ஓருருக்கொண்டு நிற்பது போன்று விளங்குவது. அதன் பக்கங்களில் முனிவர்களின் மறை யோசையும், விஞ்சையர்களின் வீணா கானமும், பூதர்களின் பல்லிய முழக்கமும் என்றும் இன்பமூட்டிக் கொண்டிருக்கும். முனிவர்களும், கணநாதர்களும், மற்றவர்களும் சிவபெருமான் திரு முன்னர் வரிசை வரிசையாக நின்று, தலைமேற் கைகளைக் குவித்து, இன்பக் கண்ணீர் பெருக்கெடுப்பச் சேவை செய்வார்கள். வாயிற்படியில் நந்தியெம் பெருமான், பிரம்பு தாங்கித் தம் ஆணை செலுத்துவார். பெரும்பெருந்தேவர்கள் தங்கள் தங்கள் குறைகளை முறையிட வேளை பார்த்திருப்பார்கள். இத்துணைச் சிறப்பு வாய்ந்த திருமலையின் அடியிலே உப மன்னிய முனிவரின் அழகிய ஆசிரம மொன்றிருக்கிறது. அம்முனிவர் புலிமுனிவரின் புதல்வர்; சிவபத்தி சிவனடியார் பத்தியிற் சிறந்தவர்; சிவபெருமான் திருவருளாற் பெற்ற பாற்கடலையுண்டு வளர்ந்தவர். அவரைச் சுற்றி எண்ணிறந்த முனிவர்களும் சிவயோகிகளும் அமர்ந்து வேத வேதாந்த ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது வழக்கம். ஒருபோது, ஆங்கே திடீரென ஆயிரம் ஞாயிறு ஓருருக் கொண்டு ஒளி உமிழ்ந்தாலெனப் பேரொளி ஒன்று தோன்ற லாயிற்று. அப்பேரொளி கண்ட முனிவர்களும் மற்றவர்களும், இஃதென்ன! என்ன! என்று வியப்புற்றார்கள். அப்போது உப மன்னிய முனிவர். அந்திவான் பிறைசூடிய அண்ணலை நினைந்து, ஆண்டவனருளால் தென்னாட்டில் தோன்றிய வன்றொண்டப் பெருந்தகையார் திருக்கயிலைக் கெழுந்தருள்கிறார் என்று தெளிந்து, எழுந்து, கைகள் தலைமேலேறக் கண்கள் நீர்பொழிய அத்திசை நோக்கினார். அக்காட்சி கண்ட முனிவர்கள், தங்களுக் குற்ற ஐயத்தைக் களைந்து கொள்ள வேண்டிப் பாற்கடலையுண்ட பரமஞானியைப் பார்த்து, மா முனிவரே! பிறப்பிறப்பில்லாச் சிவபெருமானை அன்றி எவரையும் - எதையும் தொழாத தங்கள் கைகள், இன்று இப்பேரொளியைக் கண்டதும் குவிந்ததென்ன? என்று வினவினார்கள். அதற்கு உபமன்னிய முனிவர், இப் பேரொளிப் பிழம்பாய் எழுந்தருள்வோர் நம்பியாரூரரென்னுந் திருப்பெயருடையவர். அவர்தஞ் சிந்தை என்றுஞ் சிவத்தில் அழுந்திக் கிடக்கும். அவரே இறைவர்; இறைவரே அவர். அவர் நாம் வணங்குந் தகுதி வாய்ந்தவர் என்று திருவாய் மலர்ந்தருளினார். முனிவர்களும் மற்றவர்களும், புலி முனிவரின் புதல்வரைப் பணிந்து, பேரொளிப் பிழம்பாயெழுந்தருளிவரும் நம்பியாரூரரின் தவப் பெருமையைக் கேட்க விரும்புகிறோம். அருள் செய்க என்று வேண்டினார்கள். உபமன்னிய முனிவர் மகிழ்வெய்தி, பேரொளிப்பிழம்பென எழுந்தருளி வருவோர், திருக்கயிலையில் சிவபெருமானுக்குப் பூமாலைத் தொண்டும் திருநீற்றுத் தொண்டுஞ்செய்து கொண்டி ருந்தவர், அவர்தம் அருமைத் திருப்பெயர் ஆலாலசுந்தரர் என்பது, அவர் ஒரு நாள் வழக்கம் போல, அம்மையப்பருக்கு மலர் கொய்யத் திருநந்தனவனம் போந்தார். அவருக்கு முன்னே, அம்மையாருக்குப் பூக்கொய்ய அநிந்திதை, கமலினி என்னும் இரண்டு தோழி மார்களும் அவ்வனமே போனார்கள். அங்கே அழகர் மனம் பூங் கொடிகள் மீதும், பூங்கொடிகள் மனம் அழகர்மீதும் நடந்தன. பின்னர் ஒருவாறு தெளிவுற்றுப் பூப்பறித்து, அவரவர் தத்தம் இருக்கை சேர்ந்தனர். எங்களுக்குள் எண்ணெய்போல் எங்குஞ் சக்தியுடன் வீற்றிருந் தருளும் எம்பொருமான், ஆலாலசுந்தரரை அருள் விழியால் திருநோக்கஞ்செய்து நீபெண்கள் மீது வேட்கை கொண்டமையான், தென்னாடு போந்து மானுடனாகப் பிறந்து, அப்பெண்களுடன் இன்பம் நுகர்ந்து, வேட்கை தணித்து, மீண்டும் இங்கு வரக்கடவை என்று கட்டளையிட்டார். அதுகேட்ட ஆலாலசுந்தரர், நடுநடுங்கிச் சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி சிவமே! மானுடனாய்ப் பிறந்து மாயவலையிற் சிக்கி மயங்கும் போழ்து, அடியேனைத் தடுத்தாட் கொள்ளல் வேண்டும் என்று வேண்டி நின்றார். தடங்கருணைப் பெருங் கடலாகிய சங்கரர், அவ்வேண்டு தலுக்கு இரங்கி அருளினார். பின்னர் ஆண்டவன் ஆணைப்படியே ஆலாலசுந்தரர், அநிந்திதை, கமலினி என்னும் இரு பெருமாட்டி களுடன் தென்னாட்டிற் பிறந்து, இன்பந்துய்த்து, இப்பொழுது பேரொளிப் பிழம்பாக எழுந்தருளி வருகிறார் என்று சுந்தரர் தவப்பெருமையைச் சொன்னார். அருமறைவல்ல முனிவர்கள் உபமன்னிய முனிவரைப் பணிந்து அலாலசுந்தரர் தோன்றிய தென்னாடு, ஏட்டுத் திசை களினுஞ் சிறந்து மேம்பட்டு விளங்குதற்கு அது செய்த புண்ணியம் யாது? என்று கேட்டார்கள். உபமன்னிய முனிவர், கண்டாலும், சொன்னாலும், நினைந்தாலும், வீடுபேறளிக்கவல்ல பெருமை வாய்ந்ததில்லை, திருவாரூர், காஞ்சி, திருவையாறு, சீகாழி முதலிய திருப்பதிகளை உடைமையான், தென்னாடு பிறநாடுகளினுஞ் சிறந்தது என்றார். இங்ஙனம் உபமன்னிய முனிவர், வன்தொண்டர்தந் தவப் பெருமையை முனிவர்களுக்கு அன்று சொன்னபடியால், எனக் குண்டாகிய பேரவாவினால், யானும் (சேக்கிழார்) திருத்தொண்டத் தொகையின் விரிவைச் சொல்லத் தொடங்கினேன். அத்திருத் தொண்டத் தொகையே இப்புரணத்துக்குப் பதிகம் அத்திருத் தொண்டத் தொகையை முதலாக் கொண்டு பிறந்த வழிநூலாகிய நம்பியாண்டார் நம்பி திருவந்தாதியைத் தழுவி, அடியார்கள் வரலாற்றை விரித்துக் கூறப்புகுகிறேன். 2. திரு நாட்டுச் சிறப்பு 51. பாட்டுஇயல் தமிழ்உரை பயின்ற எல்லையுள், கோட்டுஉயர் பனிவரைக் குன்றின் உச்சியில், சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி நாட்டு இயல் பதனை யான் நவிலல் உற்றனன். பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள் - தமிழகத்துள், பாட்டு இயல் - பாட்டுத் தன்மை. தமிழ் உரை - தமிழ் மொழி. பயின்ற - பன்னெடு நாள் பழகிய. தமிழ்: இயல் இசை நாடகமென மூன்று வகை; மூன்றும் பாட்டியல்பு வாய்ந்தன. பாட்டியல் தமிழ் உரை - புகழினையுடைய இயற்றமிழ்மொழி என்றுரைப் போருமுளர். தமிழக எல்லை ஒருபோது நாவலந் தீவு (பரத கண்டம்) முழுவதும், இன்னொருபோது விந்தியத்திருந்து குமரிவரையும், பின்னே வடவேங்கடத்திருந்து குமரிவரையும் பரவியிருந்தது. கோடு - சிகரங்கள், பனிவரை குன்றின் - இமயமலையிலுள்ள ஒரு குன்றின். புலிச் சோழர் - புலிக் கொடியையுடைய சோழ மன்னர்கள். புலி ஆகுபெயர்; அஃது அம்மன்னரால் இமயத்துச்சியில் பொறிக்கப் பட்டது. இது சோழ மன்னர் வீரத்தையும் அவர்தம் எல்லைப் பரப்பையுங் காட்டுவது. கரிகாற்சோழன் வரலாற்றைப் பார்க்க. காவிரி நாடு - சோழ நாடு. காவிரி பாய்ந்து வளஞ்செய்தலான் சோழநாடு காவிரி நாடாயிற்று. 1. 52. ஆதி மாதவமுனி அகத்தியன் தரு பூதநீர்க் கமண்டலம் பொழிந்த, காவிரி, மாதர்மண் மடந்தை பொன்மார்பில் தாழ்ந்ததோர் ஓதநீர் நித்திலத் தாமம் ஒக்குமால். பூதநீர் - தூயநீர்; வெகு நாளாயிருக்கின்ற நீர் என்பர் மகாலிங்க ஐயர். அமர முனிவன் அகத்தியன் தனாது - கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை மணிமேகலை; பதிகம் 11 - 12, மாதர் - அழகு. ஓதநீர் நித்திலத் தாமம் - கடல் நீரில் பிறக்கும் முத்தாலாகிய மாலை (ஓதம் - கடல்வாய் வெள்ளம்.) 2. 53. சையமால் வரைபயில் தலைமை சான்றது; செய்ய பூமகட்குநல் செவிலி போன்றது; வையகம் பல்உயிர் வளர்த்து, நாள்தொறும் உய்யவே சுரந்துஅளித்து ஊட்டும் நீரது. சைய மால்வரை பயில் - சையகிரியில் தோன்றும். செவிலி - வளர்க்குந்தாய். நீரது - தன்மையுடையது. 3. 54. மாலின் உந்திச் சுழி மலர்தன் மேல்வரும் சால்பினால், பல்உயிர் தருதல் மாண்பினால், கோலநல் குண்டிகை தாங்கும் கொள்கையால், போலும் நான்முகனையும்; பொன்னி மாநதி. பொன்னி மாநதி - காவிரி. மலைத்தலைய கடற்காவிரி - புனல் பரந்து பொன் கொழிக்கும் பட்டினப்பாலை 6 - 7, நான்முகன் - பிரமதேவன். பொன்னிமாநதி நான்முகனையும் போலும், மிகப் பெருகி நீர்ச்சுழியும் மலரும் தன்மேல் வருஞ் சிறப்பினாலும். பல்லுயிர்களை ஓம்பும் மாண்பினாலும், அழகிய நல்ல கமண்டலம் தன்னைத் தாங்கிய தன்மையினாலும் காவிரி, திருமாலின் உந்திக் கமலத்தில் தோன்றின சிறப்பினாலும், பல்லுயிர்களைப் படைக்கும் மாண்பினாலும், அழகிய நல்ல கமண்டலத்தை ஏந்துந் தன்மையி னாலும் - நான்முகன். 4. 55. திங்கள் சூடிய முடிச் சிகரத்து உச்சியில் பொங்குவெண் தலைநுரை பொருது போதலால், எங்கள் நாயகன் முடிமிசை நின்றே இழி கங்கையாம்; பொன்னியாம் கன்னி நீத்தமே. கன்னி நீத்தம் - அழியாத வெள்ளம்; இடையறாது ஓடுவது. திங்கள் சூடல் மலைக்கும் சிவபிரானுக்கும் பொது. சிகரத்து உச்சியில் - சையகிரி என்னும் மலையுச்சியில்; சடை முடியின் உச்சியில். வெண்தலை - வெள்ளிடம்; வெள்ளிய தலைபோலும் சிவ பிரானைக் குறிக்கும்போது நகு வெண்டலை அல்லது பிரம கபாலம் என்று கொள்க. பொருது - மோதி. 5. 56. வண்ணநீள் வரைதர வந்த மேன்மையால், எண்ணில்பேர் அறங்களும் வளர்க்கும் ஈகையால், அண்ணல் பாகத்தை ஆளுடைய நாயகி உள்நெகிழ் கருணையின் ஒழுக்கம் போன்றது. வண்ணம் நீள்வரை - அழகிய நீண்டமலை. காவிரியும் மலையில் (சைய மலையில்) தோன்றியது; உமாதேவியாரும் மலையில் (இமயத்தில்) வந்தவர். நதியால் அறங்கள் வளர்தல் வெளிப்படை. உமையம்மையார் காஞ்சியில் வளர்த்த அறங்கள் இங்கே குறிக்கப்பட்டன. 6. 57. வம்பு உலாமலர், நீரால் வழிபட்டுச் செம்பொன் வார்கரை எண்இல் சிவாலயத்து எம்பிரானை இறைஞ்சலின், ஈர்ம் பொன்னி உம்பர் நாயகர்க்கு அன்பரும் ஒக்குமால். ஈர்ம் பொன்னி - குளிர்ச்சி பொருந்திய காவிரி. வம்பு உலா - மணங்கமழும். செம்பொன் - சொம்பொற் பொடிகள் நிறைந்த. வார் - நீண்ட. இறைஞ்சலின் வணங்குதலால். உம்பர் நாயகர்க்கு அன்பரும் - தேவர்கள் தலைவராகிய சிவபிரானுடைய அன்பர்களையும். 7. 58. வாச நீர்குடை மங்கையர் கொங்கையில் பூசு குங்குமமும் புனை சாந்தமும் வீசு தெண்திரை மீது இழிந்து ஓடும் நீர், தேசு உடைத்து எனினும் - தெளிவு இல்லதே. நீர்குடை - நீராடும் சாந்தமும் சந்தனமும். தெண்திரைமீது இழிந்து - தெள்ளிய அலைகள்மீது கலந்து. தேசு உடைத்து எனினும் - வெள்ளொளித் தெளிவு உடையதாயினும், குங்குமக் குழம்பும் சந்தனக் குழம்பும் நீரின் தெளிவைப் போக்கின என்க. (குங்குமத்தையும் சாந்தத்தையும் தெண்திரைகளால் தன்னிடம் அழித்து ஓடும் நீர்). நீர் - காவிரிநீர். 8. 59. மாஇரைத்துஎழுந்து ஆர்ப்ப வரைதரு பூவிரித்த புதுமதுப் பொங்கிட, வாவியின் பொலி நாடுவளம் தரக், காவிரிப் புனல்கால் பரந்து ஓங்குமால். மா விரைத்து - வண்டுகள் விரைந்து. ஆர்ப்ப - ஆரவாரிக்க. வரைதருபூ - மலைப்பூக்கள். புதுமது - மிகப் புதியதேன். வாவிகளால் (தடாகங்களால்). பொலி தரும் நாடு இயற்கையிலேயே வளமுடைய தாயிருப்பது. காவிரியில் நீர்க்கால்களால் அவ்வளம் மேலும் மேலும் செழித்துக் கொழிப்பதாகும். சோழநாடு சோறுடைத்து என்பது பழமொழி. 9. 60. ஒண் துறைத் தலை மாமதகு ஊடுபோய், மண்டு நீர், வயலுள் புக, வந்துஎதிர் கொண்ட மள்ளர், குரைத்தகை ஓசைபோய், அண்டர் வானத்தின் அப்புறம் சாருமால். மண்டுநீர் - மிகுந்து விரைந்து செல்லும் நீர். ஒண்துறைத்தலை - ஒள்ளிய கரையினிடத்துள்ள. மதகு ஊடு - மதகு வழியே. மள்ளர் - உழவர். குரைத்த - (மகிழ்ச்சியால்) தட்டிய. 10. 61. மாதர் நாறு பறிப்பவர் மாட்சியும், சீத நீர்முடி சேர்ப்பவர் செய்கையும், ஓதை ஆர்செய் உழுநர் ஒழுக்கமும், காதல் செய்வதோர் காட்சி மலிந்தவே. மாதர் நாறு - அழகிய நாற்றை. சீத நீர் முடி - குளிர்ச்சித் தன்மை வாய்ந்த நாற்றுமுடி. ஓதை ஆர்செய் உழுநர் ஒழுக்கமும் - ஓசை நிறைந்த வயல்களை உழும் மள்ளர்களின் வரிசையும் (ஒழுங்கு - ஒழுக்கு - ஒழுக்கம்). பார்ப்போர் கருத்தைப் பற்றி ஈர்த்துப் படிவிக்கும் விருப்ப மூட்டுங் காட்சியாக. 11. 62. உழுத சால்மிக ஊறித் தெளிந்தசேறு இழுது செய்யினுள் இந்திரத் தெய்வதம் தொழுது நாறு நடுவார் தொகுதியே; பழுதுஇல் காவிரி நாட்டின் பரப்பு எலாம். சால் - படைச்சால். இழுது - நெய்; குழம்பு (சேறு குழம்பிய). செய்யினுள் - வயல்களில். இந்திரத் தெய்வதம் - மருதநிலத் தெய்வம். காவிரி நாடு - சோழ நாடு. 12. கொச்சகக் கலி 63. மண்டு புனல் பரந்த வயல் வளர் முதலின் சுருள் விரியக் கண்டு உழவர் பதம் காட்டக் களைகளையும் கடைசியர்கள், தண் தரளம் சொரி பணிலம் இடறி இடை தளர்ந்து அசைவார்; வண்டு அலையும் குழல் அலைய மடநடையின் வரம்பு அணைவார். மண்டு புனல் - மிகுந்து விரைந்து செல்லும் நீர். முதலின் - நெற்பயிர்களின். உழவர் பதம் காட்ட மள்ளர்கள் (களைகளையும்) காலம் இஃது என்று காட்ட. கடைசியர்கள் - மள்ளப் பெண்கள். தண் தரளம் - குளிர்ந்த முத்துகளை. பணிலம் - சங்குகள். காலில் இடறுதலால் . . . . . . . . . அசைவாராய். மடநடையில் - மெல்லிய நடையால். 13. 64. செங்குவளை பறித்து அணிவார்; கருங்குழல்மேல் சிறை வண்டை அங்கை மலர்களைக் கொடு உகைத்து அயல் வண்டும் வரவழைப்பார் திங்கள் நுதல் வெயர்வு அரும்பச் சிறுமுறுவல் தளவு அரும்பப் பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவாய் மடுத்து அயர்வார். செங்குவளை - ஒருவகை நீர்ப்பூ; சிவந்த நிறமுடையது; செங்கழு நீர்ப்பூ (நெடுநல்வாடை 81 - 5 உரை காண்க). அம் கை மலர்களைக் கொடு உகைத்து - அழகிய கையாகிய தாமரை மலர் களைக் கொண்டு ஓட்டி. அயல் வண்டும் - பின்னர்ப் பக்கத்துள்ள வண்டுகளையும். திங்கள் நுதல் - பிறைச் சந்திரனை யொத்த நெற்றி; சிறு முறுவல் - புன்முறுவல்; சிறிய பற்கள். தளவு - முல்லை முகை. தளவள முகை கொல் பல்லாள் - சீவகசிந்தாமணி 75. பொங்குமலர் கமலத்தின் புதுமது வாய் மடுத்து அயர்வார் - பொலிந்த தாமரைப் பூவிலுள்ள புதிய தேனைக் குடித்து மயங்குவார். 14. 65. கரும்பு அல்ல நெல் என்னக் கமுகு அல்ல கரும்பு என்னச், சுரும்பு அல்ல குடைநீலத் துகள் அல்ல; பகல் எல்லாம்; அரும்பு அல்ல முலை என்ன, அமுது அல்ல மொழி என்ன, வரும்பல் ஆயிரம் கடைசி மடந்தையர்கள்; வயல்எல்லாம். பகலெல்லாம் வருவார் போவார், இவை கரும்புகளல்ல நெற்பயிர்கள் என்றும், இவை கமுகுகளல்ல கரும்புகள் என்றும், இவை நீலப் பூவின் துகள்களல்ல, அப்பூவின் அக இதழைக் குடையும் வண்டுகள் என்றும், இவை அரும்புகளல்ல (கடைசியர்) முலைகள் என்றும், இவை அமுதல்ல (கடைசியர்) மொழி என்றும் பேச, வரும் பல்லாயிரம் கடைசியர்கள் வயல்களிலெல்லாம் நிரம்பி இருக்கிறார்கள். சுரும்பு அல்ல அல்லிகுடை நீலத்துகள் என்று கொள்ளலுமொன்று; பகலெல்லாம் துகள் அல்ல (அல்ல - இரவினைச் செய்யும்) என்று கொள்ளலுமாம். கரும்பல்ல நெல்லென்ன கமுகல்ல. கரும்பென்ன, அரும்பல்ல முலை என்ன, அமுதல்ல மொழியென்னக் காட்சி தரும் வயலெல்லாம். சுரும்பு அல்லி குடை நீலத்துகள் அல்ல (துகளாலாகிய இருளையுடைய) பகலெல்லாம் பல்லாயிரங் கடைசியர் உளர் என்று கொள்ளினும் அமையும், அல்லி - அக இதழ். 15. 66. கயல் பாய் பைந்தடம் நந்து ஊன் கழிந்து பெருங்கருங் குழிசி, வியல்வாய் வெள் வளைத் தரள, மலர்வேரி உலைப்பெய்து அங்கு அயல் ஆமை அடுப்பு ஏற்றி, அரக்கு ஆம்பல் நெருப்பு ஊதும், வயல் மாதர் சிறுமகளிர் விளையாட்டு; வரம்பு எல்லாம். கயல்பாய் பைந்தடம் - கெண்டை மீன்கள் பாய்கின்ற பசிய தடாகத்தில். ஊன் கழிந்த நந்து - தசை கழிந்த சங்கு. கருங்குழிசி - கரிய பானையாக. வியல் வாய் வெள்வளை தரளம் - அகன்ற வாயினையுடைய வெண் சங்க மீன்ற முத்துகள். மலர் வேரி உலை பெய்து - பூந் தேனை உலைபெய்து. அங்கு அயல் ஆமை - அங்கே பக்கத்துள்ள ஆமை ஓடுகள். அரக்கு ஆம்பல் - செவ்வாம்பல். வயல் மாதர் வயல்களிலுள்ள மள்ளப் பெண்களின். சிறு மகளிர் - சிறுமியர்கள். வரம்பெல்லாம் இவ்விளையாட்டு. ஊன் கழிந்த சங்கு - பானை. முத்துகள் - அரிசி. பூந்தேன் - உலைநீர். ஆமை ஓடுகள் - அடுப்பு. செவ்வாம்பற் பூ - நெருப்பு. 16. 67. காடு எல்லாம் கழைக்கரும்பு; கா எல்லாம் இழைக்கு அரும்பு; மாடு எல்லாம் கருங்குவளை; வயல் எல்லாம் நெருங்குவளை; கோடு எல்லாம் மடஅன்னம்; குளம் எல்லாம் கடல் அன்ன; நாடு எல்லாம் நீர் நாடு தனைஒவ்வா நலம் எல்லாம். காடெல்லாம் - காடாகத் தோன்றுவன எல்லாம். கழைக் கரும்பு - இருபெயரொட்டுப் பண்புத் தொகை; மூங்கிலின் வளர்ச்சி போன்ற கரும்பு எனலுமாம். கா எல்லாம் - சோலைகளெல்லாம். குழைக்கு அரும்பு - தளிர்கின்ற அரும்புகள்; கு - சாரியை. குழை கரும்பு - குண்டலமணிந்த கரும்பையொத்த பெண்கள் என்றும், குழைக்கு அரும்பு - கூந்தலுக்கு அணியத் தக்க அரும்பு என்றுங் கொள்ளலுமாம். மாடெல்லாம் - பக்கங்களிலெல்லாம். கருங் குவளை - நீலோற்பல மலர்கள். நெருங்கு வளை - நெருங்குகின்ற சங்குகள். கோடெல்லாம் - நீர் நிலைகளின் கரைகளிலெல்லாம். மட அன்னம் - இளமை அன்னங்கள். கடல் அன்ன - கடலைப் போன்றன. நலம் எல்லாம் - நலங்கள் எல்லாவற்றிலும். நீர் நாட்டினை (சோழ நாட்டினை) நாடுகளெல்லாம் ஒவ்வா. 17. கலி விருத்தம் 68. ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஓலமும் சோலைவாய் வண்டு இரைத்து எழு சும்மையும் ஞாலம் ஓங்கிய நான்மறை ஓதையும் வேலை ஓசையின் மிக்கு விரவுமால். ஆலை பாய்பவர் - ஆலையில் கரும்பினைப் பாய்ப்பவர். ஆர்ப்புறும் ஓலமும் - ஆரவாரிக்கும் ஒலியும். சும்மையும் - ஒலியும். ஓதையும் - ஓசையும். வேலை ஓசையின் - கடலின் ஓசையைப் பார்க்கிலும். விரவும் - கலந்து முழங்கும். 18. 69. அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில் துன்னும் மேதி படியத், துதைந்து எழும் கன்னி வாளை, கமுகின்மேல் பாய்வன; மன்னு வான்மிசை வானவில் போலுமால். துன்னு மேதி படிய - அங்கே விரும்பி அணைந்த எருமைகள் மூழ்க. துதைந்து - நெருங்கி. கன்னி வாளை - இளமை வாளை மீன்கள். பாய்வன - தொழிற்பெயர். பாயுந் தோற்றங்கள்; பாய்வன வாகிய கன்னி வாளை எனக் கொள்ளினுமாம். வானவில் - இந்திர தனுசு. 19. 70. காவினில் பயிலும் களி வண்டுஇனம், வாவியில் படிந்து உண்ணும் மலர்மது; மேவி அத்தடம் மீது எழப் பாய்கயல், தாவி அப்பொழிலின் கனி சாடுமால். காவினில் பயிலும் - சோலைகளில் வாழும். களி - தேனுண்டு மயங்கும்; சோலைகளிலுள்ள களி வண்டினங்கள் தடாகத்தில் விழுந்து ஆங்குப் பூக்களின் தேன் உண்ணும்; அவ்வாவியிலுள்ள கெண்டை மீன்கள் (மாறுபட்டு) மேலே பாய்ந்து வண்டுகளின் அச் சோலைகளைத் தாவிக் கனிகளைச் சாடும். 20. அறுசீர் விருத்தம் 71. சாலி, நீள் வயலின் ஓங்கித் தந்நிகர் இன்றி மிக்கு வாலிதாம் வெண்மை உண்மைக் கருவின்ஆம் வளத்த ஆகிச் சூல் முதிர் பசலை கொண்டு சுருள் விரித்து அரனுக்கு அன்பர் ஆலின சிந்தைபோல அலர்ந்தன; கதிர்கள் எல்லாம். சாலி - நெற்பயிர். தந்நிகரின்றி - தங்களுக்கு ஒப்பு இல்லாமல். வாலி தாம் வெண்மை உண்மை கருவினாம் வளத்த ஆகி - இயற்கை யினாலமைந்த தூய்மையதாம் வெள்ளிய இயற்கைக் கருவினால் ஆகின்ற வளத்தையுடையனவாய். சூல் முதிர் பசலைகொண்டு - அக்கரு முதிர்தலால் பசப்பு நிறங் கொண்டு. சுருள் - கதிர்ச்சுருள். ஆலின சிந்தை - மலர்ந்த சிந்தை. சாலிக் கதிர்கள் - கருவுற்று முதிர்ந்து பசலைகொண்டு சுருள் விரித்து அலர்வது. பல காவியங்களில் பலவிதமாக அணிபெற வருணிக்கப்பட்டிருக்கிறது. காவிய நோக்கிற் கேற்ப வருணிப்பதே அறிவுடைமை. ஈண்டு ஆசிரியர் தாம் எடுத்த அன்பு நூலுக்கேற்பக் கதிர்கள் சிவனடியார் சிந்தைபோல அலர்ந்தன என்று கூறியிருத்தல் கருதற்பாலது. பிறாண்டும் ஆசிரியர் இவ்வாறே பொருந்தக்கூறிச் செல்லுதலும் உணரற்பாற்று. சொல்லருஞ் சூல்பசும் பாம்பின் தோற்றம் போல் - மெல்லவே கருவிருந் தீன்று மேலலார் - செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் - கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே சிந்தாமணி. 53. 21. 72. பத்தியின் பாலர் ஆகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தத்தமில் கூடினார்கள் தலையினால் வணங்குமா போல், மொய்த்தநீள் பத்தியின்பால் முதிர்தலை, வணங்கி மற்றை வித்தகர் தன்மை போல, விளைந்தன; சாலி எல்லாம். பாலராகி - வயத்தராகி. மொய்த்த நீள் பத்தியின் - நெருங்கிக் கூடிய நீண்ட வரிசையினையுடையனவாய். பால் முதிர் தலை - பால் முதிர்ந்த கதிர்த் தலைகள். வணங்கி - எதிரெதிர் வணங்கி. வித்தகர் - மேற்கூறிய பரமனுக்கு ஆளாம் அன்பர். பரமனுக்காளாகி அன்பராத லாவது, நான் என்னும் முனைப்பை யொழிப்பதாகும். முனைப்பற்ற விடத்தில் வணக்கமிருத்தல் இயல்பு. அம் முனைப்பற்ற வணக்கத்தை ஈண்டு ஆசிரியர் குறிப்பாராயினார். இவ்வணக்கம் இந்நூற் பொருளாக உள்ள நாயன்மார்களிடத்திருத்தலை ஈண்டுக் குறிப் பித்தவாறாம். ஞானசம்பந்தர் அப்பர் மற்றவர் சந்திப்பு, சேரமான் பெருமாள் நாயனார் வண்ணான் சந்திப்பு முதலியவற்றை உன்னுக. வித்தகர் தன்மைகள் பல. அவை முனைப்பறல், திருவருளமுதம் பெறல், அதனை மற்றவர்க்குதவல், தன்னலம் நாடாமை முதலியன. செஞ்சாலியின் மாட்டும் முனைப்பற்று அடங்கி வீழ்தல், உணவ மிழ்தம் பெறல், அதனைத் தன்னலத்துக்குப் பயன்படுத்தாது மற்றவர்க் குதவல் முதலிய தன்மைகளிருத்தல் வெள்ளிடைமலை. 22. 73. அரிதரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்; பரிவுஉறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்; சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு உயர்ப்பார்; விரிமலர்க் கற்றை வேரி பொழிந்து இழி வெற்பு வைப்பார். அரிதரு - அரியப்பட்ட. சூட்டின் - அரிகளால். அடுக்கல் - மலை. நெல்லரிந்து சூடு கோடாகப் பிறக்கி - பொருநராற்றுப் படை 242 - 43. பரிவுற தடிந்த - விருப்புடன் பிடித்த. சுரிவளை - சுரி சங்கு. பொருப்பு - மலை. விரி மலர்க்கற்றை - மலர்ந்தபூக் கூட் டங்களை. வேரி பொழிந்து இழி - தேனருவி பொழிந்து இழிதர. வெற்பு - மலை. 23. 74. சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக் கால்இரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம், ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல் மேல்வலம் கொண்டு சூழும் காட்சியின் மிக்கதுஅன்றே. சாலியின் கற்றை துற்ற - நெல்லரியின் கற்றைகள் நெருங்கிய. தடவரை முகடு சாய்த்து - பெரிய மலை போன்ற நெற்போர்களை உச்சியிலிருந்து சரித்து. காலிரும் பகடு போக்குங் கரும்பெரும் பாண்டில் ஈட்டம் - வலிய கால்களை யுடைய பெரிய எருமைகள் விரைந்து போகும் சுழலால் உண்டாகும் கரிய பெரிய வட்டத்தின் கூட்டமானது; வலிய கால்களையுடைய பெரிய எருமைகளுடன் பொருந்தி நடாத்துங் கரிய பெரிய வட நாட்டு எருதுகளின் கூட்டமானது என்னலுமொன்று. ஆலிய - அசைகின்ற. அருவரைச் சிமயச் சாரல் - அரிய மலையுச்சியின் சாரலில். காட்சியின் - காட்சியைப் பார்க்கிலும். 24. 75. வைதெரிந்து அகற்றி ஆற்றி மழைப்பெயல் மானத்தூற்றிச் செய்யபொன் குன்றும் வேறு நவமணிச் சிலம்பும் என்னக் கைவினை மள்ளர், வானம் கரக்க ஆக்கிய நெல் குன்றால் மொய்வரை உலகம் போலும்; முளரி நீர் மருத வைப்பு. வைதெரிந்து அகற்றி ஆற்றி - (எருமைகள் மிதித்தவுடன்) வைக்கோலை ஆராய்ந்து நீக்கி உதறி; வைக்கோலை ஆராய்ந்து எடுத்துக் கட்டி அகற்றி என்னலுமாம். மழை பெயல் மான தூற்றி - (பதர்போக) மழைத்துளிகள் தூற்றுவது போலத் தூற்றி. செய்ய - சிவந்த. சிலம்பு - மலை. கைவினை மள்ளர் - கைத் தொழில்வல்ல உழவர்கள். கரக்க - மறையும்படி. முளரி நீர் மருத வைப்பு - தாமரை நீர் நிலைகளையுடைய மருதநிலம். மொய்வரை உலகம் போலும் - நெருங்கிய மலைகளையுடைய குறிஞ்சி நிலத்தை ஒக்கும். செந்நெல் - பொற்குன்று; வெண்ணெல் கருநெல் முதலியன - நவமணிக்குன்று. ஈடுசால் போரழித் தெருமைப் போத்தினால் - மாடுறத் தெழித்துவை களைந்து காலுறீஇச்-சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள் - கோடுயர் கொழும்பொனின் குன்ற மொத்தவே சிந்தாமணி. 25. 76. அரசுகொள் கடன்கள் ஆற்றி, மிகுதி கொண்டு அறங்கள் பேணி, பரவு அரும் கடவுள் போற்றி, குரவரும் விருந்தும் பண்பின் விரவிய கிளையும் தாங்கி, விளங்கிய குடிகள் ஓங்கி வரைபுரை மாடம் நீடி மலர்ந்துஉள; பதிகள் எங்கும். அரசுகொள் கடன்களாற்றல் - ஆறிலொரு பங்கு அரசனுக்குத் தருதல். கடவுள் - கடவுளை. குரவரும் - பெரியோரையும். பண்பின் விரவிய - குணத்தாலமைந்த; உண்மையில் ஒழுகிய கிளையும் - சுற்றத்தையும். இவ்வற வினைகளால் குடிகள் ஓங்கி. வரைபுரை மலையையொத்த. பதிகள் - ஊர்கள். 26. 77. கரும்புஅடு களமர் ஆலைக் கமழ்நறும் புகையோ மாதர் சுரும்புஎழ அகிலால் இட்ட தூபமோ, யூப வேள்விப் பெரும்பெயர்ச் சாலை தோறும் பிறங்கிய புகையோ, வானின் வரும் கரு முகிலோ? சூழ்வ; மாடமும் காவும் எங்கும். களமர் கரும்பு அடு ஆலை - மள்ளர்கள் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுகின்ற ஆலையுள்ளவிடத்தில். சுரும்பு - வண்டுகள். அகிலால் - அகிற்றுண்டுகளால். யூபம் - யூபதம்பங்களை நிறுத்திச் செய்யப் படும். வேள்வி - அறவேள்வி. மாடமுங்காவுஞ் (சோலைகளிலும்) சூழ்வன. 27. 78. நாளி கேரம், செருந்தி, நறுமலர் நரந்தம் எங்கும் கோளி சாலம், தமாலம், குளிர் மலர்க் குரவம் எங்கும் தாள் இரும்போந்து சந்து தண்மலர் நாகம், எங்கும் நீள் இலை வஞ்சி, காஞ்சி, நிறைமலர்க் கோங்கம் எங்கும். நாளிகேரம் - தென்னை. செருந்தி - ஒருவகை மரம்; வாட் கோரைக்கும் பெயர்; மணித்தக்காளிக்கும் இப்பெயர் வழங்குவ துண்டு. நரந்தம் - நாரத்தை. கோளி - அரசு; பூவாமற் காய்க்கும் மரமென்று நச்சினார்க்கினியர் கூறுப. கோளியுள்ளும் - பெரும் பாணாற்றுப்படை 407. (பூவாமற் காய்க்கும் மரங்களில் விசே டித்தும் என்பது உரை.) சாலம் - ஆச்சா. தமாலம் - பச்சிலை மரங்கள். குரவம் - குரா மரங்கள். தாளிரும் போந்து - அடி பெருத்த பனை. சந்து - சந்தன மரங்கள். நாகம் - நாகமாம். 28. 79. சூத பாடலங்கள் எங்கும்; சூழ் வழை ஞாழல் எங்கும் சாதி மாலதிகள் எங்கும்; தண் தளிர் நறவம் எங்கும்; மாதவி, சரளம் எங்கும்; வகுள, சண்பகங்கள் எங்கும்; போது அவிழ் கைதை எங்கும்; பூக, புன்னாகம் எங்கும். சூதம் - மா. பாடலம் - பாதிரி. வழை - சுரபுன்னை. ஞாழல் - குங்கும மரங்கள்; புலிநகக் கொன்றைக்கும் பெயர்; கோங்கு எனினுமாம். சாதி - செம்மல்; சிறு சண்பகம். மாலதி - மல்லிகை; முல்லை. நறவம் - அனிச்சம்; நறைக்கொடி. மாதவி - குருக்கத்தி. வகுளம் - மகிழ மரங்கள். போது - மலர். கைதை - தாழை. பூகம் - கமுகம். புன்னாகம் - புன்னை. 29. 80. மங்கல வினைகள் எங்கும்; மணம் செய் கம்பலைகள் எங்கும் பங்கய வதனம் எங்கும்; பண்களின் மழலை எங்கும்; பொங்கு ஒளிக் கலன்கள் எங்கும்; புதுமலர்ப் பந்தர் எங்கும்; செங்கயல் பழனம் எங்கும்; திருமகள் உறையுள் எங்கும். மங்கல வினைகள் - மணம் பின்னே கூறுதலான் அஃதல்லாத மற்ற மங்கள வினைகளைக் கொள்க. கம்பலைகள் - முழக்கங்கள். பங்கயவதனம் - (பெண்மணிகளின்) தாமரை முகங்கள். பெண்மக்களின் இளஞ்சொற்கள் பண்போன்றிருத்தலானும் எல்லாப் பண்ணிசையும் அவர்கள் மழலையிலிருத்தலானும் பண் களின் மழலை என்றார். குழலும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழலை. . . . . என்றார். -சிலப்பதிகாரம்: மனையறம் 58 - 59. வீணையுங் குழலும் பாலும் அமிழ்துங் குழலும் பாலும் அமுதமுங் கரும்புந் தேனும் - பாணி யாழ் கனியும் வென்ற பைங்கிளி மழலைத் தீஞ்சொல் சிந்தாமணி 1500. கலன்கள் - ஆபரணங்கள். பழனம் - வயல்கள். உறையுள் வாழுமிடம்; இருப்பிடம். 30. 81. மேகமும் களிறும் எங்கும்; வேதமும் கிடையும் எங்கும்; யாகமும் சடங்கும் எங்கும்; இன்பமும் மகிழ்வும் எங்கும்; யோகமும் தவமும் எங்கும்; ஊசலும் மறுகும் எங்கும்; போகமும் பொலிவும் எங்கும்; புண்ணிய முனிவர் எங்கும். களிறும் - யானைகளும். கிடையும் - வேதமோதுமிடமும். மறுகும் - தெருக்களும். இப்பாட்டில் ஒன்றற்கொன்று தொடர் பிருத்தல் காண்க. யோகத்தின் பயன் தவமென்க. போகத்தால் உட் பொலிவும் புறப்பொலிவும் இயைதல் இயல்பு. 31. 82. பண்தரு விபஞ்சி எங்கும்; பாத செம்பஞ்சி எங்கும்; வண்டுஅறை குழல்கள் எங்கும்; வளர்இசைக் குழல்கள் எங்கும், தொண்டர்தம் இருக்கை எங்கும் சொல்லுவது இருக்கை எங்கும்; தண்டலை பலவும் எங்கும்; தாதகி பலவும் எங்கும். விபஞ்சி - ஒருவித யாழ். பாதசெம்பஞ்சு - கால்களிலூட்டிய செம்பஞ்சுக் குழம்பு. (பெண்மக்கள் நடக்கும்போது அவர்கள் காலில் பூசியுள்ள செம்பஞ்சுக் குழம்பு படியும் அடையாளங்கள்). குழல்கள் - கூந்தல்கள். குழல்கள் - புல்லாங் குழல்கள். இருக்கை - இருப்பிடம். இருக்கை - இருக்கு வேதத்தை. தண்டலை பலவும் - சோலைகள் பலவும். தாதகி பலவும் -ஆத்தியும் பலாவும். 32. 83. மாடு போதகங்கள் எங்கும்; வண்டு போது அகங்கள் எங்கும்; பாடும் அம்மனைகள் எங்கும் பயிலும் அம் மனைகள் எங்கும்; நீடு கேதனங்கள் எங்கும் நிதி நிகேதனங்கள் எங்கும்; தோடு சூழ்மாலை எங்கும் துணைவர் சூழ்மாலை எங்கும். மாடு - பக்கங்களில். போதகங்கள் - யானைக் கன்றுகள். போது அகங்கள் - மலரிடங்கள். பாடும் அழகிய வீடுகள். சிறுமியர் பயிலும் அம்மானை விளையாட்டுகள். கேதனங்கள் - கொடிகள். நிகேத னங்கள் - பொக்கிஷ சாலைகள். தோடுசூழ் மாலை - இதழ்கள் சூழ்ந்த பூ மாலைகள். துணைவர் சூழ் மாலை - நாயக நாயகிகள் சூழ்ந்து வரும் வரிசைகள். 33. 84. வீதிகள் விழவின் ஆர்ப்பும் விரும்பினர் விருந்தின் ஆர்ப்பும் சாதிகள் நெறியில் தப்பா; தனயரு மனையில் தப்பா; நீதிய புள்ளும் மாவும்; நிலத் திருப்புள்ளும் ஆவும் ஓதிய எழுத்துஆம் அஞ்சும் உறுபிணி வரத் தாம் அஞ்சும்; ஆர்ப்பும் - ஆரவாரமும். ஆசிரியர் காலத்தில் சாதி வேற்றுமை களிருந்தன. அவை தத்தம் நெறியில் வழாமல் நிலவி வந்தன. கண்டதைக் கூறுவது கவிகள் வழக்கு. தமக்கு மாறுபட்ட ஒன்றையும் மறைத்துக் கூறுவது அவர்கள் வழக்கன்று. சாதிகளைப் பற்றி ஆசிரியர் கொண்ட கருத்துப் பின்னே நூலுள் வருதல் காண்க. தனயரும் அனையில் தப்பா - பிள்ளைகள் அன்னை சொற்குத் தவற மாட்டார்கள். மனையெனக் கொண்டு - மனைவி என்றலுமொன்று. தனயர் - போகப்பருவமுடைய ஆடவர்கள். ஆடவர் கற்புக் கூறியவாறு. தப்பா - ஓசையால் ஈறு தொக்கது. புள்ளும் மாவும் நீதிய (பகைமையுடைய) பறவைகளும் விலங்குகளும் (அப்பகைமை நீங்கி) நீதியுடையனவா யிருக்கின்றன. மாவும் நிலத்து இருப்பு உள்ளும் - இலக்குமியும் அந்நாட்டின் வசித்தலை விரும்புவாள். உள்ளும் ஆவும் எனப் பிரித்துக் காமதேனு என்று பொருள் கூறுவோருமுளர். சிவாயநம என்னும் அஞ்செழுத்தினால் புறப்பிணியும் அகப் பிணியும் வர அஞ்சும். 34. 85. நல்தமிழ் வரைப்பின் ஓங்கும் நாம்புகழ் திருநாடு, என்றும் பொன்தடந் தோளால் வையம் பொதுக் கடிந்து இனிது காக்கும் கொற்றவன் அநபாயன் பொன் குடைநிழல் குளிர்வது என்றால் மற்றுஅதன் பெருமைநம்மால் வரம்புஉற விளம்பல் ஆமோ? தமிழ் வரைப்பில் - தமிழ் எல்லையுள், தமிழகத்துள். திருநாடு - சோழநாடு. பொதுகடிந்து - பொதுமையை நீக்கி; பிற அரசர்க்கு உரியது என்னும் பொதுமையை நீக்கி. ஓகாரம் - எதிர்மறை. 35. திரு நாட்டுச் சிறப்பு தமிழகத்துள்ள மூன்று நாடுகளுள் மிகவுஞ் செழியது சோழ நாடு. அந்நாட்டைக் காவிரி என்றும் வளஞ்செய்த வண்ணமா யிருக்கிறது. காவிரி பலமுகங்கொண்டு கால்வாய்கள் வழியே ஓடிப் பாய்ந்து சோழநாட்டை நீரால் நிரப்பலால் அந்நாட்டிற்கு நீர்நாடு (புனல் நாடு) என்றொரு பெயருமுண்டு. காவிரியால் அந்நாட்டு மருத நிலங்கள் நலம் பெறுதலால், அந்நாட்டில் எங்கணும் மருத நிலப் பொருள்கள் கொழுமையாக விளைகின்றன. அந்நாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும், பிறவற்றிலும் பேர்பெற்றவர்கள். அவர்கள் புலிக்கொடி இமயத்தில் பொறிக்கப் பெற்றதென்றால், அவர்கள் தம் ஆட்சித் திறங்களை விரித்துக்கூற வேண்டுவதில்லை. இத்துணைச் சிறப்புவாய்ந்த சோழநாட்டில் பழமையிற் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னுந் திருநகரம். அத்திருநகரில் திருமகள் என்றும் வீற்றிருப்பாள். அங்கே அறவோர்களும் துறவோர்களும் நீங்காலிருப்பார்கள். அவ்வூரில், திருப்பதிகங்களைக் கிள்ளைகள் பாடும்; பூவைகள் கேட்கும். 3. திருநகரச் சிறப்பு கலி விருத்தம் 86. சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது, மன்னும் மா மலராள் வழிபட்டது; வன்னி ஆறுமதிபொதி செஞ்சடைச் சென்னியார் திருவாரூர்த் திருநகர். சொன்ன நாட்டிடை - மேலே கூறிய சோழநாட்டில். தொன்மையில் - பழமையில். திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே என்னும் இறுதியைப் பாட்டு தோறுமுடைய திருத் தாண்டகத்தைப் பார்க்க. மாமலராள் - பெருமையுடைய பூமகள்; திருமகள். திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ - திருவாருர்க் கோயிலாக் கொண்ட நாளே - அப்பர். வன்னி - வன்னிப்பத்திரம் திரு + ஆர் + ஊர் - திருவாரூர். 1. 87. வேத ஓசையும் வீணையின் ஓசையும் சோதி வானவர் தோத்திர ஓசையும் மாதர் ஆடல் மணிமுழவு ஓசையும் கீத ஓசையுமாய்க் கிளர்வு உற்றவே. மணி - அழகிய; மணிச்சிலம்புமாம். முழவு - மத்தளம். எல்லா ஓசைளும் ஒன்றிய ஒருமை இன்ப ஓசை கிளர்வுற்ற தென்க. கிளர்வுற்றது - எழுந்தது. கீதம் - இசைப்பாட்டு. 2. 88. பல்இ யங்கள் பரந்த ஒலியுடன் செல்வ வீதிச் செழுமணித் தேர் ஒலி, மல்லல் யானை ஒலியுண்ட மா ஒலி, எல்லை இன்றி எழுந்து உள; எங்கணும். பல்லியங்கள் - பலவகை வாத்தியங்கள். மல்லல் - வளப்ப முடைய. மா - குதிரைகள். 3. 89. மாட மாளிகை, சூளிகை மண்டபம், கூட சாலைகள், கோபுரம், தெற்றிகள், நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும் ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன. சூளிகை - செய்குன்றுகள். சூளிகைமண்டபம் எனக் கொண்டு உயர்வாகக் கட்டப்பெற்ற சிகரத்தையுடைய மண்டபங்கள் என்னலும் ஒன்று. தெற்றிகள் - திண்ணைகள். நீடு சாளரம் - நீண்ட பலகணி களையுடைய. நீடு அரங்கம் - பெரிய சபைகள். ஆர்ப்பன - முழங்குவன. 4. 90. அங்கு உரைக்கு என் அளவு? அப் பதியிலார் தங்கள் மாளிகையின் ஒன்று, சம்புவின் பங்கினாள் திருச் சேடி பரவையாம் மங்கையார் அவதாரம் செய் மாளிகை. அப்பதியிலார் தங்கள் மாளிகையில் - மேற்கூறிய ஆடல் மாதர் களாகிய பதியிலாருடைய மாளிகைகளுள். சம்புவின் பங்கினாள் - சிவபிரான் இடப்பாகத்துள்ள உமையம்மையாரின். திருச்சேடி அழகிய தோழியாகிய கமலினி. கமலினியார் பரவையாராகப் பிறந்தவர். அங்கு உரைக்கு அளவு என் - அத் திருவாரூரின் மாண்பைக் கூறுதற்கு அளவை என்னை; என்னளவில் ஆகாது என்றபடி. பதியிலார் என்பதைப் பற்றிப் பின்னே கூறுவல். 5. 91. படர்ந்த பேர்ஒளிப் பல்மணி வீதி, பார் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார் தொடர்ந்து கொண்ட வன்தொண்டர்க்குத் தூதுபோய் நடந்த செந்தாமரை அடி நாறுமால். பார் இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார். நிலத்தைத் தோண்டிச் சென்ற பன்றியும் (விண்ணை நோக்கிச் சென்ற) அன்னமும் (அடி முடி தேடிய) செய்தி. சிவபெருமான், வன்தொண்டரைத் தொடர்ந்து அன்பாற் கொண்ட பெருமான் அவர் பொருட்டுத் தூது போன வரலாற்றைச் சொல்லிய இடத்திலும் ஆசிரியர் அடி முடி தேடியதைக் குறிப்பிட்டிருக்கிறார். 6. 92. செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங் குங்குமத்தின் குழம்பை, அவர் குழல் பொங்கு கோதையின் பூந்துகள் வீழ்ந்துஉடன் அங்கண் மேவி அளறு புலர்த்துமால். அவர் குழல் - அம்மாதர்களின் கூந்தலில். கோதையின் பூந்துகள் - பூமாலையின் மகரந்தப் பொடிகள். உடன் அங்கண்மேவி - உடனே அவ்விடத்திற் கலந்து. அளறு புலர்த்தும் - சேற்றை உலரச் செய்யும். 7. 93. உள்ளம் ஆர் உருகாதவர்? ஊர்விடை வள்ளலார் திருவாரூர் மருங்கு எலாம் தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள், பைங் கிள்ளை பாடுவ; கேட்பன - பூவைகள் ஊர் விடை வள்ளலார் - தியாகேசப் பெருமான். தெள்ளும் - இனிய. பூவைகள் - நாகணவாய்ப் பறவைகள். உள்ளம் உருகாதவர் யார்? 8. 94. விளக்கம் மிக்க கலன்கள் விரவலால் துளக்குஇல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள் வளத்தொடும் பல ஆறு மடுத்தலால் அளக்கர் போன்றன. ஆவண வீதிகள். கலன்கள் - ஆபரணங்கள். விரவலால் - கலத்தலாலும். துளக்கில் - அசைவில்லாத; நீங்காத. துன்னு - நெருங்கிய. ஆறு மடுத்தலால் - வழியாக வந்து நிறைதலாலும். ஆவண வீதிகள் - கடைத்தெருக்கள். அளக்கர் - கடல் அளத்தையுடைமையான் கடல் அளக்கராயிற்று. கடலுக்கு ஆம்போது. கலன்கள் - கப்பல்கள்; ஆறு - நதி. 9. 95. ஆரணங்களே அல்ல; மறுகிடை வாரணங்களும் மாறி முழங்குமால்; சீர் அணங்கிய தேவர்களேஅலால், தோரணங்களில் தாமமும் சூழுமால் மறுகிடை - தெருவினிடத்து. ஆரணங்களே அல்ல - வேதங் களே அல்லாமல். வாரணங்களும் - யானைகளும். சீர் அணங்கிய - அழகாகப் பின்னிக்கூடிய. முழு நெறி அணங்கிய நுண்கோல் வேரலோடு -மலைபடுகடாம் 223. சீர் கனமுமாம். “ne®Ó®” RU¡»¡ fhafy« igÆ® “kiygLflh« 13., சீரணங்கிய என்பதற்குச் சிறந்த அழகினையுடைய எனினுமாம். தாமமும் - மாலைகளும். ஆகாயத்திலே நெருங்கிய தேவர்களும் தோரணங்களின் தாமமும் என்று கொள்க. 10. 96. தாழ்ந்த வேணியர், சைவர், தபோதனர், வாழ்ந்த சிந்தை முனிவர், மறையவர், வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார் சூழ்ந்த பல்வேறு இடத்தது அத்தொல் நகர். அத் தொல்நகர் - அப்பழம்பதி; திருவாரூர். வேணியர் - சடையினர். அறநெறியில் வாழ்ந்த. வீழ்ந்த - விரும்பிய. 11. 97. நிலமகட்கு அழகு ஆர்திரு நீள் நுதல் திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி மலர்மகட்கு வண்தாமரை போல் மலர்ந்து அலகுஇல் சீர்த்திருவாரூர் விளங்குமால். நுதல் - நெற்றி. திலகம் - பொருட்டு. செம்பியர் - சோழர்கள். மலர் மகட்கு - இலக்குமிக்கு. அலகில்சீர் - அளவில்லாத சிறப்பினை யுடைய. 12. 98. அன்ன தொல்நக ருக்கு அரசு ஆயினான்; துன்னு செங்கதி ரோன் வழித் தோன்றினான்; மன்னுசீர் அநபாயன் வழிமுதல்; மின்னு மாமணிப் பூண் மனுவேந்தனே. செங்கதிரோன் வழி - சூரியன் மரபில். (சோழ வமிசம் சூரிய வமிசமாதலின்) முதல் - முதல்வன். 13. 99. மண்ணில் வாழ்தரு மன்உயிர் கட்குஎலாம் கண்ணும் ஆவியும் ஆம் பெருங் காவலான்; விண் உளார் மகிழ்வ எய்திட வேள்விகள் எண் இலாதன மாண இயற்றினான். நெல்லும் உயிரன்றே - நீரும் உயிரன்றே - மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் - புறம். 186. நெல்லுயிர் மாந்தர்க்கெல்லாம் நீருயிர் இரண்டுஞ் செப்பில் - புல்லுயிர் புகைந்து பொங்கு முழங்கழ விலங்கு வாட்கை - மல்லலங் களிற்றுமாலை வெண்குடை மன்னர் கண்டாய் - நல்லுயிர் ஞாலந் தன்னுள் நாமவேல் நம்பி என்றான் சிந்தாமணி 2908. வேள்விகள் - அறவேள்விகள். ஊனமில் வேள்வி யென்று ஆசிரியர் பல விடங்களில் கூறியுள்ளார். மாண - மாட்சிமை பொருந்த. 14. 100. கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திடச் சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திடச் செற்றம் நீக்கிய செம்மையின மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான். கொற்ற ஆழி - வெற்றி பொருந்திய ஆஞ்ஞா சக்கரம். குவலயம் - உலகம். சுற்று மன்னர் திறை - தன் ஆட்சிக்கு உட்பட்டுத் தன்வழி நிற்கும் சுற்றரசர்கள் (செலுத்தும்) கப்பம். கடை - வாயிலில். செற்றம் - பகைமையை; நீண்ட காலம் நிகழும் கோபத்தை. செம்மையின் - நடுவு நிலைமையுடைய. மனுபெற்ற நீதியையும் தன் பெயரா லாக்கினான் என்க. மனுநீதி சோழன் என்னும் பெயர் பெற்றான் என்பது. மற்ற நலன்களுடன் இவனே மனு என்று சொல்லுமாறு பழைய மனுநீதியைக் கடைப்பிடித்தொழுகுவதிலும் மனு என்றே தன் பெயரை ஆக்கிக் கொண்டான் என்க. ஈண்டுக் கூறிய மனுநீதி பழைய காலத்தது. இடைக்காலத்தில் மனுநீதி இடத்துக்கேற்றவாறு திரிக்கப்பட்டது. நாளடைவில் அதன் உருக்குலைக்கப்பட்டது. இப்பொழுது மனுவின் பெயரால் வழங்கப்படுவது. மிருதி. பண்டை மனுதர்மம் இறந்துபட்டது. மனுநீதிச் சோழன் பண்டை மனுநீதி வழி நின்று அரசு புரிந்தான் என்பதுபின்னே வரூஉம் வரலாற்றால் நனி விளங்கும். 15. 101. பொங்கு மாமறைப் புற்றுஇடம் கொண்டவர் எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு அங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான் துங்க ஆகமம் சொன்ன முறைமையால். மறையாகிய புற்று. புற்றிடங் கொண்டவர் - திருவாரூர்த் தியாகேசப் பெருமான். வரம்பில் காலத்தை (அநாதியை)க் காட்டுதற் பொருட்டு இருந்தவர் என்றார். புற்றிடங் கொண்டவர் எங்கு முள்ளவரென்க. நிபந்தம் - படித்தரங்களை; கட்டளைகளை. (நிரந்தரம் - எப்பொழுதும்) மனுச்சோழன் ஆகம வழி நின்றவன் என்பது கருதத்தக்கது. 16. அறுசீர் விருத்தம் 102. அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமல் புல்லி, மறம் கடிந்து அரசர் போற்ற, வையகம் காக்கும் நாளில், சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன் பிறந்தனன்; உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான். புல்லி - தழுவி. மறங்கடிந்து - பகைமையை யழித்து. போற்ற - வணங்க. போற்ற - விரும்ப. அரிக்குருளை - சிங்கக்குட்டி . 17. 103. தவம்முயன்று அரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளும் சிவம் முயன்று அடையும் தெய்வக் கலை பல திருந்த ஓதிக் கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்றுப் பவ முயன்றதுவும் பேறே என வரும் பண்பின் மிக்கான். சிவ முயன்று அடைந்து - சிவ நெறியில் அதாவது நன்னெறியில் பழகிப் பயன் பெற்று. கவன வாம்புரவி - விரை கதியும் தாவிப் பாய்தலுமுடைய குதிரை. பவம் முயன்றதுவும் - பிறவி தாங்கியதும். பேறே - பாக்கியமே. பண்பில் - குணங்களால். 18. 104. அளவு இல் தொல் கலைகள் முற்றி, அரும் பெறல் தந்தை மிக்க உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி, இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி, வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒரு நாள் மைந்தன். முற்றி - ஓதிமுடித்து. அணியனாகி - சமீபத்தவனாகி. பரிதி - சூரியன். இவ்விளங்கோவின் பெயர் வீதிவிடங்கள் என்றும், பின்னே இவன் சுந்தரச் சோழன் என்ற பெயரால் அழைக்கப்பட்டான் என்றுஞ் சொல்லப்படுகின்றன. 19. 105. திங்கள் வெண் கவிகை மன்னன் திருவளர் கோயில் நின்று மங்குல் தோய் மாட வீதி மன் இளங்குமரர் சூழக் கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவுத் தோளான்; பொங்கிய தானை சூழத் தேர்மிசைப் பொலிந்து போந்தான். கவிகை - குடை. மங்குல் - இருண்ட மேகம். கொங்கு - வாசனை. குவவு - திரண்ட. தானை - சேனை. பொலிந்து - அழகுடன் விளங்கி. 20. 106. பரசு வந்தியர் முன், சூதர் மாகதர் ஒருபால், பாங்கர் விரைநறுங் குழலார் சிந்தும் வெள்வளை ஒருபால், மிக்க முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒருபால், வென்றி அரசுஇளங் குமரன் போதும் அணிமணி மாட வீதி. பரசுவந்தியர் - மங்கலப் பாடல்களால் துதிக்கும் பாணர்கள். சூதர் - நின்றேத்துவோர். மாகதர் - இருந்தேத்துவோர் ( இவர்கள் உலாவில் கலந்து போந்தார்கள்) ஒருபால் - ஒரு பக்கம். பாங்கர் அருகே. விரைநறுங் குழலார் - மணங் கமழும் நறிய கூந்தலையுடைய பெண்மணிகள். வெள்வளை - வெள்ளிய வளையல். நடையால் நேரும் மெலிவானும் பிறவாற்றானும் மகளிர் வளை நெகிழ்தல் இயல்பு. சங்கம் - சங்கு. 21. 107. தனிப்பெருந் தருமம் தானோர் தயா இன்றித் தானை மன்னன் பனிப்புஇல் சிந்தையினின் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன, மனித்தர்தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன் புனிற்று இளங் கன்று துள்ளிப் போந்தது - அம் மறுகின் ஊடே. ஓர் - ஒரு; சிறிதும்; எவ்வளவும். பனிப்பில் - நடுக்கமில்லாத; சலியாத. பான்மை - தன்மையை. மனித்தர் - மனிதர். மனித்தப் பிறவியும் அப்பர்; கோயில் 4. அக் கூட்டத்தில் மனிதர் ஒருவரும் தன் வரவைக் காணாதவாறு கன்று போந்தது. ஓர் வண்ணம் - ஓரழகிய நல் வண்ணம் எனக் கொண்டு வெண்ணிறம் எனினும் அமையும். புனிறு - ஈன்றணிமை. புனிற்றிளமை - மிக இளமை. அம் மறுகினூடே - அத் தெருவினூடே. 22. 108. அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகிச் செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே உம்பரின் அடையக் கண்டு அங்கு உருகுதாய் அலமந்து ஓடி வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும். அம் - அழகிய; எதுகைக்காக அப்புனிறு அம்புனிறு என்றாயிற்றெனினுமாம். ஓர் அபாயத்தின் ஊடு போகி - ஓர் ஆபத்திடை ஓடி. விசையினால் செல்லப்பட்டு - வேகத்தினால் உருட்டப்பட்டு. உம்பரின் அடைய - விண்ணேக; இறக்க. கண்டு - சகிக்க முடியாத அக் காட்சியைக் கண்டு. அலமந்து - நெஞ்சம் சுழன்று. மெய் - உடல். 23. 109. மற்றுஅது கண்டு மைந்தன் வந்தது இங்கு அபாயம் என்று சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து, பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச் br‰w, v‹ brŒnf‹? என்று தேரில் நின்று இழிந்து வீழ்ந்தான். மற்றும் - அங்கே ஆன் உற்ற துன்பக் காட்சியைக் கண்டு. துயருழந்து - துயரிலே அழுந்தி. பெற்றமும் - பசுவும், செற்ற - செற்றன; சாய்த்தன. உணர்வு உயிரணி. அதுவே பெருமையுடைத்து. 24. 110. அலறுபேர் ஆவை நோக்கி ஆர் உயிர் பதைத்துச் சோரும்; நிலமிசைக் கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும்; மலர்தலை உலகம் காக்கும் மனு எனும் என் கோமானுக்கு உலகில் இப்பழி வந்து எய்தப் பிறந்தவா! ஒருவன் என்பான். ஆர் உயிர் - அரிய உயிர். நெடிது உயிர்த்து - நெட்டுயிர்த்து; பெருமூச்சு விட்டு. உலகம் வளருந் தன்மையதாகலான் மலர்தலை உலகம் என்றார். இதன்கண், உள்ளது சிறத்தல் (நுஎடிடரவடி) என்னும் அறமிருத்தல் உணரற்பாற்று. பிறந்தவாறு என்னே! 25. 111. வந்தஇப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில், எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன், சிந்தை வெந்துயரம் தீர்ப்பான் திருமறையவர்முன் சென்றான். வந்த - அறியாது வந்த. விதித்த ஆற்றால் - விதித்த வழியால். ஆற்றுவது - செய்வது. கழுவாய் அதாவது பிராயச்சித்தம் நாடி மைந்தன் வேதம் வல்லாரிடம் போனான். மைந்தன் - இளங்கோ. மாண்டது அஃறிணைப் பசுங்கன்று. நிகழ்ச்சியும் அபுத்தி பூர்வக மானது. ஆயினும் இளங்கோ கழுவாய் தேட முயன்றது அக்கால நிலையைக் காட்டுவதாகும். 26. 112. தன் உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத், தரியாது ஆகி முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார மன்உயிர் காக்கும் செங்கோல் மனுவின்பொன் கோயில் வாயில் பொன்அணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே. வீய - இறக்க. ஆ தரியாதாகி. நெருப்பு உயிர்த்து - நெருப் பெழப் பெருமூச்சு விட்டு. கோட்டினால் புடைத்தது - கொம்பினால் அடித்தது. அஃறிணையாயினும் உணர்வுடன் சென்று வினை நிகழ்த்தியது கருதற்பாலது. இத்தகை உணர்வு கிளி, புறா, நாய், யானை முதலிய சிலவற்றிற்குண்டு. குறையுடையார் தங் குறையை மணியடித்தலால் தெரிவித்தற் பொருட்டு வாயிலில் மணிகட்டி வைப்பது பண்டை அரசர் வழக்கு. 27. 113. பழிப்பறை முழக்கோ? ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ? வேந்தன் வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக் கழுத்துஅணி மணியின் ஆர்ப்போ? என்னத்தன் கடைமுன் கேளாத் தெழித்துஎழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது. பழிப்பறை - பழிச்சொல்; பறையுமாம். பாவம் ஒருருக் கொண்டு ஆரவாரிக்கும் ஒலியோ. வேந்தன் வழித் தோன்றிய திரு மைந்தன். மறலி ஊர்தி - யமனுடைய வாகனமாகிய எருமைக் கடாவின். கடைவாயிலில் முன் எப்பொழுதுங் கேளாத. தெழித்து - உரப்பி; அதட்டி; இரைந்து செவிப்புலம் - காதினிடம். 28. 114. ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்து பூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி, ஈங்குஇதுஓர் பசுவந்து எய்தி, இறைவ! நின் கொற்றவாயில் தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது என்று சொன்னார். அரியணை இழிந்து போந்து - சிம்மாசனம் விட்டுக் குதித்து ஓடி. கொற்ற வாயிலில் தூங்கிய - வெற்றியுடைய வாயிலில் தொங்கக் கட்டியிருந்த. கோட்டால் துளக்கியது - கொம்பினால் அசைத்தது. இதுகாறும் தூங்கிய மணி என்பது குறிப்பு. 29. 115. மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி, என் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி, முன்உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் - முதிர்ந்த கேள்வித் தொல்நெறி அமைச்சன், மன்னன் தாள்இணை தொழுது சொல்வான். கேளா - கேட்டு. என்பானாய் . . . . . . . நோக்க. அறிந்துளான் - அறிந்துளானாகிய அமைச்சன். முதிர்ந்த கேள்வியுடையவனும் பழைய அமைச்ச வழியை நன்குணர்ந்தவனுமாகிய அமைச்சன். 30. 116. வளவ! நின் புதல்வன் ஆங்குஓர் மணிநெடுந் தேர்மேல் ஏறி, அறவுஇல் தேர்ச் சேனை சூழ அரசுஉலாந் தெருவில் போங்கால் இளையஆன் கன்று தேர்க்கால் இடைப்புகுந்து இறந்தது ஆகத் தளர்வுஉறும் இத்தாய் வந்து விளைத்தது இத்தன்மை என்றான். வளவ - சோழ! தானை - சேனை. அரசு உலாந் தெருவில் - இராச வீதியில்; அரசு இல்லாத தெருவன்று; அரசு உலாவுந் தெரு என்று குறிப்பிட்டவாறு. காவலரும் பிறரும் ஆங்கே இருந்தமையும், கவலையீனமிம்மையும், எச்சரிக்கையாக இருந்தமையும், இன்னோ ரன்ன பிறவும் தொனித்தல் காண்க. இறந்ததாக என்பது, இன்னும் வழக்கு உறுதிப்படவில்லை என்னுங் குறிப்புடையது. 31. 117. அவ்உரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம், வெவ்விடம் தலைக் கொண்டாற்போல் வேதனை ஆகத்து மிக்கு, இங்கு ï›Éid ÉisªjthW? என்று இடர் உறும்; இரங்கும்; ஏங்கும்; செவ்விது என் செங்கோல் என்னும்; தெருமரும்; தெளியும்; தேறான். எல்லாம் வெவ்விடமாகி. இங்கு இவ் வினை விளைந்தவாறு என்! என்றபடி. செவ்விது - அழகாயிருக்கிறது! செங்கோல் ஈண்டு இகழ்ச்சியின்மேற்று. தெருமரும் - நெஞ்சஞ் சுழல்வான். சுழலுதலும் தெளிதலும் உற்று உற்றுப் பின்னர் ஒன்றுந் தெளியாதவனா (தேறான்) னான். 32. 118. மன்உயிர் புரத்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும் என்நெறி நன்றால் என்னும்; என் செய்தால் தீரும் என்னும்; தன் இளங் கன்று காணாத் தாய்முகம் கண்டு சோரும்; அந்நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால். புரந்து - காத்து. பொதுக்கடிந்து - பொதுமை நீக்கித் தன தாக்கி, பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வாக்கு கலித்தொகை. 68. வையங் காவலர் வழிமொழிந் தொழுக - போகம் வேண்டிப் பொதுச் சொல் பொறா அது, வழுதி தண்டமிழ் பொதுவெனப் பொறான் புறம். 8 : 51. 33. கொச்சகக் கலி 119. மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கிச் சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்குத் தீர்வு அன்றால்; கொந்து அலர் தார் மைந்தனைமுன் கோவதை செய்தார்க்கு மறை அந்தணர்கள் விதித்த முறை வழிநிறுத்தல் அறம் என்றார். கொந்தலர்த்தார் - கொத்தாக அலர்ந்த மாலையை மார்பில ணிந்துள்ள. மைந்தனை . . . . . . .நிறுத்தல். மந்திரிகள் மிருதி முறைப் படி கழுவாய் தேடுமாறு அரசனுக்கு அறிவுறுத்தினார்கள். 34. 120. வழக்கு என்று நீர்மொழிந்தால் மற்று அதுதான் வலிப்பட்டுக் குழக் கன்றை இழந்து அலறும் கோஉறு நோய் மருந்து ஆமோ? இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இச் சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம்தான் சலியாதோ? அதுதான் - அத்தீர்வுதான்; அப்பிராயச்சித்தந்தான். வலிப் பட்டு - பலாத்காரப்பட்டு; வருத்தமுற்று. குழக்கன்றை - இளங் கன்றை. மழவுங் குழவும் இளமைப் பொருள் தொல்காப்பியம் சொல். உரி. 15. இச்சழக்கு - இப்பொய்யினுக்கு. மந்திரிகள் கூற்றைச் சழக்கென்றமையான், அரசன் நிலை நன்கு புலனாகும். மந்திரிகள் மிருதி வழி நிற்கிறார்கள். அரசன் அற வழி நிற்கிறான். இதனை, எல்லீருஞ் சொல்லிய இச் சழக்கு என்பதனாலும் தருமந்தான் சலியாதோ என்பதனாலுந் தெளிக. 35. 121. மாநிலம் காவலன் ஆவான் மன்உயிர் காக்கும் காலைத் தான் அதனுக்கு இடையூறு தன்னால், தன் பரிதனத்தால், ஊனம் மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர்கள் தம்மால், ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ? காவலனாவான் - காக்கும் அரசனாவான். அதனுக்கு - அம் மன்னுயிர்க்கு (1) தன்னால். (2) தன் பரிசனத்தால் (பரிவாரங்களால்) (3) பகைத்திறத்தால் (பகைவகைகளால்) (4) கள்வரால் (5) உயிர் தம்மால் (விலங்கு முதலிய உயிர்களால்) 36. 122. என்மகன் செய் பாதகத்துக்கு இரும் தவங்கள் செய இசைந்தே அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால், தொல் மனுநூல் தொடை மனுவால் துடைப்புண்டது எனும் வார்த்தை மன்உலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு! என்றான். தொன்மை மனுநூல் தொடை - பழைய மனுதர்ம சாத்திர ஒழுங்கு முறை. (தற்போது வழங்கும் மனு மிருதி யன்று) மனுவால் மனுநீதிச் சோழனால். துடைப்புண்டது - அழிந்தது. அரசர் மகிழு மாறு பொருளைத் திரித்துக் கூறுவது மந்திரிகள் வழக்கு. 37. 123. என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர் நின்றநெறி உலகின்கண் இதுபோல் முன் நிகழ்ந்ததால்; பொன்றுவித்தல் மரபன்று; மறைமொழிந்த அறம்புரிதல் தொன்றுதொடும் நெறி அன்றோ? bjhš Ãy« fhty! என்றார். மதி அமைச்சர் - அன்பு அருள் நீதி முதலியனவின்றி அறிவால் மட்டும் நிலைமை ஒழுங்குபடுத்த வல்ல மந்திரிகள் என்றவாறு. பொன்று வித்தல் - புதல்வனை இறக்கச் செய்தல். தொன்று தொட்டு வரும். 38. 124. அவ்வண்ணம் தொழுதுஉரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி, மெய்வண்ணம் தெரிந்துஉணர்ந்த மனு என்னும் விறல்வேந்தன், இவ்வண்ணம் பழுது உரைத்தீர் என்று எரியின் இடைத் தோய்ந்த செவ்வண்ணக் கமலம்போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான். மெய் வண்ணம் - (அற நூலின்) உண்மைத் தன்மையை. விறல் - வெற்றி. செவ்வண்ணக் கமலம் போல் - சிவந்த நிறத்தையுடைய தாமரை மலர் போல. புலர்ந்து - வாடி; உலர்ந்து. செயிர்த்து -வருத்தத்தால் கோபித்து. 39. 125. அவ்உரையில் வரும் நெறிகள் அவை நிற்க; அறநெறியின் செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்; எவ்உலகில் எப்பெற்றம் இப் பெற்றித்தாம் இடரால் வெவ்உயிர்த்துக் கதறி மணி v¿ªJ ÉGªjJ? விளம்பீர்! அவ்வுரையில் வருநெறிகளவை நிற்க - நீவிர் கூறும் மறை மொழிகளிலுள்ள பிராயச்சித்த முறைகள் கிடக்க. நிற்க என்பது மந்திரிகளின் கூற்றை மறுக்கப் புகுந்தமை காட்டுகிறது. செவ்விய நேர்மையான. எப்பெற்றம் - எப்பசு. இப்பெற்றித் தாம் - இத்தன்மை யதாகிய. வெவ்வுயிர்த்து - பெருமூச்சு விட்டு. எறிந்து - அடித்து. 40. 126. போற்றி இசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச வீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர்த் தோற்றம் உடை உயிர்கொன்றான் ஆதலினால், துணி பொருள் தான் ஆற்றவும் மற்று அவற் கொல்லும் அதுவே ஆம் என நினைமின் புரந்தரன் - இந்திரன். பொதுவாக யாண்டும் உயிர்க்கொலை நிகழ்தல் ஆகாது; திருவாரூரில் கொலை நிகழ்வது பெரும்பாவம் என்றபடி. திருவாரூரில் பிறந்த உயிர்கள் சிவ கணமாதலினாலும், அவை பிறவா நெறி பெறுவன ஆதலினாலும், அவைகளை அகால மரணத்திற் படுத்துவது அறமன்று என்பது கருத்து. திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் - சுந்தரர். விரிவு நமிநந்தி யடிகள் புராணத்திற் காண்க. ஆற்றவும் துணி பொருள்தான் - மிகவும் துணிந்து நிகழ்த்துவதுதான். அவற் கொல்லும் அதுவே யாம் - அவனைக் கொல்லுதலேயாகும். ஆற்றவும் அற்று என்று கோடலும் பொருந்தும். நிகழ்த்த வேறொன்றின்றி என்றபடி. 41. 127. என மொழிந்து மற்று இதனுக்கு இனி இதுவே செயல்; இவ் ஆன் மனம் அழியும் துயர் அகற்ற மாட்டா தேன் வருந்தும் இது தனது உறு பேர்இடர் யானும் தாங்குவதே கருமம் என அனகன் அரும் பொருள் துணிந்தான்; அமைச்சரும் அஞ்சினர், அகன்றார். இதனுக்கு இனி இதுவே செயல் - இப்பழிக்கு இனிச் செய்வ தாவது கன்றைக் கொன்றவனைக் கொல்லுதலே பொருந்திய செயல். மாட்டாதேன் - மாட்டாதவானகிய யான். இது தனது - இப் பசு வினது. அநகன் - பாவமில்லாதவன். அரும்பொருள் - செயற்கரும் பொருள். 42. 128. மன்னவன் தன் மைந்தனைஅங்கு அழைத்து ஒரு மந்திரி தன்னை, முன் இவனை அவ்வீதி முரண் தேர்க் கால் ஊர்க என அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆர் உயிர் துறப்பத் தன்னுடைய குலமகனைத் தான்கொண்டு மறுகு அணைந்தான். முன் -- முன்னே; விரைவில். முரண் - வலிய. ஊர்க - கிளத்திச் செலுத்துக. அன்னவனும் - அம் மந்திரியும். தன் ஆர் உயிர் துறப்ப - தன்னுடைய அரிய உயிரைப் போக்க. தான் - தானே (அரசனே). மறுகு - தெரு. 43. 129. ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்; தருமம், தன்வழிச் செல்கை கடன் என்று தன் மைந்தன் மருமம், தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் - மனுவேந்தன்; அருமந்த அரசு ஆட்சி அரிதோ? மற்று எளிதோதான்? தருமந் தன் வழிச் செல்கை - அறத்தின் வழியே நடப்பது. மருமம் - மார்பில். தன் தேர் ஆழி உற - தன்னுடைய தேர்ச்சக்கரம் பொருந்த. அருமந்த - அருமருந்தன்ன; அரிய அமிர்தம் போன்ற; நல்ல. 44. 130. தண் அளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாது மண்ணவர் கண் மழை பொழிந்தார்; வானவர்பூ மழை சொரிந்தார் அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழவிடை மேல் விண்ணவர்கள் தொழ நின்றான் விதி விடங்கப் பெருமான். அளி - அருள். கண் மழை - கண்ணீரை மழையாக. அண்ணலவன் - பெருமையிற் சிறந்தவனாகிய மனுநீதிச் சோழன். மழவிடை - இளமை எருது. விடங்கப் பெருமான் - உளிபடாத கடவுள் (டங்கம் - உளி; வி - இன்மை.) 45. 131. சடைமருங்கில் இளம்பிறையும் தனி விழிக்கும் திருநுதலும் இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூத கணம் புடைநெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றிசைப்ப விடைமருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான். இடமருங்கில் - இடப் பக்கத்தில். விழிக்குந் திருநுதலும் - இமையா நாட்டமுடைய நெற்றியும் (கண்ணுதல்); இதற்கு அருட்கண் என்று பெயர். இக்கண் நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளியிலிருப்பது. ஆண்டவன் இத்திருக் கண்ணால் உயிர்களை நோக்கும்போது உயிர்களும் இக்கண் விளங்கப் பெறுதல் ஒருதலை. உயிர்கட்கு இக்கண்ணிருத்தலை உடற்கூற்று நூல்களிற் காண்க (ஞயேட ழுடயனே). இது புருவத்தின் இடைநேரே மூளையின் நடுவிலிருப்பது. இதனை, நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி - உற்றுற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் எனவரூஉந் திருமூலம் திருவாக்கானுணர்க. மனுநீதிச் சோழன்றன் நீதியையும் உண்மையையும் நிராசையையும் உணர்ந்த ஆண்டவன் முக்கண் காட்டி அருள் புரிந்தான். அடியார்க் கருள் புரியும்போதெல்லாம் முக்கண் காட்டுங் குறிப்பைப் பலப்பல விதமாக ஆசிரியர் நூன் முற்றுங் குறித்துச் செல்லுதல் கருதற்பாலது. சடை இளம் பிறை இவைகளின் நுட்பங்கள் மேலே சொல்லப் பட்டன. உமை - திருவருள். அருளது சத்தியாகும் - சிவஞான சித்தியார். விடை - அறவிடை. மருவும் - வீற்றிருந்தருளும். 46. 132. அந்நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன் மன்உரிமைத் தனிக் கன்றும் மந்திரியும் உடன்எழலும் இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும்; யார்க்கும் முன்னவனே முன்நின்றால் முடியாத பொருள் உளதோ? அந்நிலையே - காட்சி கொடுத்த அப்பொழுதே. தனிக் கன்றும் - ஒப்பற்ற இளங்குமரனும். வேந்தனும் தான் இன்ன பரிசு (தன்மை) ஆனான் என்று அறிந்திலன். 47. 133. அடிபணிந்த திருமகனை ஆகம்உற எடுத்து அணைத்து நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நிலவேந்தன் மடிசுரந்து பொழிதீம்பால், வரும் கன்று மகிழ்ந்து உண்டு படிநனைய வரும்பசுவும் பருவரல் நீங்கியது அன்றே. ஆகம் உற - மார்பிற் பொருந்த. படி - பூமி. பருவரல் - துன்பம். 48. 134. பொன் தயங்கு மதில் ஆரூர்ப் பூங்கோயில் அமர்ந்த பிரான், வென்றி மனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துச் சென்றருளும் பெருங்கருணைத் திறம் கண்டு, தன் அடியார்க்கு என்றும் எளி வரும் பெருமை ஏழ் உலகும் எடுத்து ஏத்தும். பூங்கோயில் - கமலாலயம்; திருவாரூர் ஆலயத்தின் பெயர். 49. 135. இனையவகை அறநெறியில் எண் இறந்தோர்க்கு அருள்புரிந்து முனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல் புனையும் உரை நம் அளவில் புகலல் ஆம் தகைமையதோ? அனையதனுக்கு அகமலர்ஆம் அறவனார் பூங்கோயில். இனைய வகை - இப்படி. முனைவரவர் - சிவபெருமான். மூதூர் - பழைய திருவாரூர். அனையதனுக்கு - அத்திருவாரூக்கு. அகமலர் - நெஞ்சத் தாமரை. அறவனார் - அற வடிவினராகிய சிவபெரு மான்றன். அறவனாராகச் சிவபெருமானிருத்தலினால் அவ்வூரில் அறக்கோல் நடைபெற்றதென்க. வாயிற்கடைமணி நடுநா நடுங்க - ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சு சுடத்தான்தன் - அரும்பெறற் புதல்வனை ஆழியில் மடித்தே - பெரும் பெயர்ப் புகார் என்பதியே சிலப்பதிகாரம்: 20 வழக்கு 53 - 56 (இதுகண்ணகியின் கூற்று கண்ணகியின் பதி, புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம். காவிரிப்பூம்பட்டினம் - சோழ மன்னர் தலை நகரங்களுள் ஒன்று. புதல்வனை ஆழியில் மடித்த இடம் திருவாரூர். திருவாரூரும் சோழமன்னர் தலைநகரங்களுள் ஒன்று. திருவாரூரையும் புகாரையும் ஆண்ட மன்னர் சோழராதலின் சோழர்தம் மாண்பு கூறப் புகுந்த கண்ணகி, புதல்வனை ஆழியில் மடித்த அருஞ் செயலையுங் குறிப்பிடலானாள்.) குறைவிலுடம் பரிந்த கொற்றவன் முன்வந்த கறவை முறைசெய்த காவலன் காண் அம்மானை - சிலப்பதிகாரம் : 29 - வாழ்த்து -அம்மானைவரி. மகனை முறை செய்த மன்னவன் - மணிமேகலை : 22 - சிறை 210. கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் - பழமொழி 93. 50. திருநகரச் சிறப்பு திருவாரூரில் பரவையார் திருவவதாரஞ் செய்த திருமாளிகை ஒன்றிருக்கிறது. அவ்வம்மையார் வன்தொண்டரை மணந்து இல் வாழ்க்கை நடாத்திய பெருமையுந் திருவாரூருக்குண்டு. அவ் விருவர்க்கும் நேர்ந்த புலவி தீர்க்கவேண்டித் தியாகேசப்பெருமானே திருவாரூர்த் திருவீதியில் தூது சென்றிருக்கிறார். இப்பெற்றிவாய்ந்த திருவாரூரில் என்றுந் தெய்வமணமுஞ் சைவமணமுங் கமழ்ந்து கொண்டேயிருக்கும். இத்திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர் என்பவர். அவர் அநபாய சோழரின் குல முதல்வர்; எல்லா உயிர்கட்குங் கண்ணும் உயிரும் போன்றவர்; ஊனமில் வேள்வி பல செய்தவர்; புற்றிடங் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர். அம்மன்னர் ஆட்சி, அறம் பொருள் இன்பம் என்னும் பேற்றிற்கு அடிப்படையாக நிலவி யிருந்தது. அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். அவனுக்கு இளமையில் பல கலைகளும், குதிரை யேற்றம், யானை யேற்றம், தேரூர்தல்,விற் பயிற்சி முதலியனவும் பயிற்றுவிக்கப்பட்டன. அவன் பிறையென வளர்ந்து இளங்கோவாகும் பருவத்தை அடைந்தான். அப்பருவத்தில் அவன் தேரிலேறி அரசிளங்குமரர் களும் சேனைகளும் மற்றவர்களும் புடைசூழ்ந்து வரத் திருவீதி உலா வருவது வழக்கம். வழக்கம்போல ஒருநாள் அவன் உலாவரலானான். அன்று வழியில் ஓரிடத்திருந்த பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து தேருருளையில் அகப்பட்டு இன்னுயிர் துறந்தது. அக்காட்சிகண்ட தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, கதறிக் கதறித் துடித்துத் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும் துடிப்பும் வீழ்ச்சியும் இளங்கோவின் நெஞ்சைப் பிளந்து, அவனைத் தேரினின்றுஞ் சாய்த்துத்தள்ளின. தள்ளுண்ட இளங்கோ, மெய் விதிர்விதிர்ப்ப, வாய் குழற, நாவறளத் தாய்ப் பசுவைப் பார்க்கிறான்; கன்றைப் பார்க்கிறான்; கண்ணீர் உகுக்கிறான்; அலமருகிறான்; பெருமூச்சு விடுகிறான்; அந்தோ! அறக்கோலோச்சும் என் தந்தைக்கு நான் ஏன் பிள்ளையாய்ப் பிறந்தேன் என்கிறான்; மனுவென்னும் பெரும்பேர் தாங்கும் அவருக்கு இப்பெரும்பழி சுமத்தவோ நான் பிறந்தேன். என்கிறான்; அழுகிறான். அழுது அழுது, இப்பெரும் பாவத்திற்குக் கழுவா யுளதோ? உளதாயின் இக்கொலையை என் தந்தை அறியா முன்னரே அக்கழுவாய் தேடுவது நலன் என்று சொல்லிக் கொண்டே, அவன் அந்தணரிருக்கை நோக்கிச் சென்றான். வாயில்லாப் பசு என்ன செய்தது? பசு, மனங்கலங்க, முகத்தில் கண்ணீர் தாரைதாரையாய்ப் பெருக, நெருப்புயிர்த்து, மன்னுயிர்களைத் தன்னுயிர்போற் காக்கும் மனுச்சோழமன்னரின் அரண்மனை நோக்கி விரைந்து நடந்தது; நடந்து அரண்மனை அடைந்தது. அடைந்து மனைவாயிலில் தூங்கிக்கொண்டிருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது. அம்மணியோசை அரசர் பெருமான் செவியில் விழுந்தது. விழுந்ததும், அவர் திடுக்கிட்டு அரியாசனத்தினின்றுங் குதித்து வாயிலை அடைந்தார். வாயில் காப்போர், மன்னர்பிரானை வணங்கி, இப்பசு தன் கோட்டினால் இம்மணியை அடித்தது என்றார். மன்னர் பெருமான் சினந்து அமைச்சர்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன். நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் ஆவுறு துயரம் எய்தினார்; நஞ்சு தலைக்கேறினாலென மயக் குற்றார்; விழுந்தார்; எழுந்தார்; பசுவைப் பார்க்கிறார்; என்னர சாட்சி நன்று! நன்று!! என்று ஏங்குகிறார், இரங்குகிறார். இவ்வாறு துயருறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, அரசே! சிந்தை தளரற்க. இப்பழிக்குக் கழுவாயுண்டு. அதைச் செய்வதே முறை என்று சொன்னார்கள். அதற்கு அரசர், அமைச்சர்களே! நீங்கள் கூறுங் கழுவாய்க்கு யான் இசையேன். அக்கழுவாய் கன்றை இழந்தலறும் பசுவின் நோய்க்கு மருந் தாகுமோ? மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால் அறக்கடவுள் சலிப்புறதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, பரிசனங்களாலாவது, பகைவர் களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து பயத்தையுந் தீர்த்து அறத்தைக் காப்பவனல்லனோ அரசன்? இன்று உங்கள் உரைக்கு யான் இசைந்து, நாளை வேறொருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? பண்டை மனுவின் நீதி, பாவி மனுவால் தொலைந்தது என்னும் பழிமொழி உலிகில் நிலவாதோ? நீங்கள் மந்திரிகள்! வழக்கப்படி மொழிந்தீர்கள்! என்று இயம்பினார். மன்னரின் மனோநிலையையுணர்ந்த மந்திரிகள் அவரைப் பார்த்து, இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறையாகாது. கழுவாய் தேடுவதே முறை என்று வேண்டி நின்றார்கள். சோழர் பெருமான் இத்தகைய நிகழ்ச்சி எங்கே நடைபெற்றது? எங்கே எந்தப் பசு துன்பத்தால் மணியடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை யானும் உறுதல்வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை யன்றோ என் மைந்தன் கொன்றான்? அவனைக் கொல்வதே தகுதி என்று கூறி அவ்வாறு செய்ய உறுதிகொண்டார். அவ்வுறுதிகண்ட அமைச்சர்கள் நடுக்குற்று அகன்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, இவனைக் கன்றிறந்த இடத்தில் கிடத்தித் தேரைச் செலுத்தக் கடவை என்று ஆணை யிட்டார். அவ்வமைச்சர் அவ்வாணை வழிநின்று கடனாற்ற ஒருப்படாது, அவ்விடத்தினின்றும் அகன்று, தம் உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான் தம்முடைய குல மகனைத் தாமே அழைத்துச் சென்று எண்ணியவாறு செய்து முடித்தார். கருணை வேந்தரின் செயற்கருஞ் செயல்கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள்; விண்ணவர்கள் பூமழை சொரிந்தார் கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளிச் சோழர் பெருமானுக்குக் காட்சி வழங்கினார். சோழர் பெருமான் ஆண்டவனைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில் பசுவின் கன்று எழுந்தது; அரசிளங்குமரனும் விழித் தெழுந்தான்; அமைச்சரும் உயிர் பெற்றெழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் வரம்பிலா மகிழ் வெய்தினார். பாலூட்டிய கன்றைக் கண்டு பசு துன்பம் நீத்தது. தியாகேசப் பெருமான், வெற்றிவேந்தர்க்கு வீதியிலே திருவருள் புரிந்த கருணைத் திறத்தை ஏழுலகமும் வியந்தோதின. இங்ஙனம் அறவழி நின்று ஒழுகும் மெய்யன்பர்கட்கு ஆண்டவன் அருள் புரியும் பெருமை வாய்ந்த திருவாரூரின் சிறப்பு எம்மொழியில் எவ்வளவில் அடங்குவதாகும்? அத்திருநகரினுக்குப் புற்றிடங் கொண்டவர்தம் பூங்கோயில் அகமலராகப் பொலிகிறது. 4. திருக்கூட்டச் சிறப்பு கலிவிருத்தம் 136. பூத நாயகர் புற்று இடம் கொண்டவர் ஆதி தேவர் அமர்ந்த பூங் கோயிலில் சோதி மாமணி நீள்சுடர் முன்றில்சூழ் மூது எயில் திரு வாயில்முன் ஆயது; பூதநாயகர் - உயிர்கட்குத் தலைவர். பூங்கோயிலில் - கமலால யத்தில். முன்றில் - முற்றத்தை. முதுமை எயில் - பழைய மதில்களின் (தேவாசிரிய மண்டபம்) முன்னாயது. 1. 137. பூஆர் திசைமுகன் இந்திரன் பூமிசை மாவாழ் அகலத்து மால்முதல் வானவர் ஓவாது எவரும் நிறைந்து உறைந்துள்ளது தேவா சிரியன் எனும் திருக் காவணம். பூவார் திசைமுகன் - பூமியைப் படைக்கும் நான்முகன். பூமிசை மாவாழ் அகலத்துமால் - செந்தாமரைப் பூவில் வீற்றிருக்கும் இலக்குமி வாழும் மார்பினையுடைய திருமால். எவரும் ஓவாது - எவரும் நீங்காது. நிறைந்து உறைந்து உள்ளது - நிறைந்து இருக்க இடமாயிருப்பது; உறைந்து என்பதற்குக் கூட்டம் இறுகிப் படிந்து எனினுமாம். தேவாசிரியன் என்னுந் திருக்காவணம் - தேவாசிரியன் என்னும் திருப்பெயருடைய திருமண்டபம்; தெய்வத்தன்மை வாய்ந்த ஆசிரியன்மார் எழுத்தருளியுள்ள மண்டபம். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் அருளால் இவ்வுலகை நடாத்துகின்றவர் ஆசிரியன்மாராவர். அவர்கள் நுண்ணிய ஒளி வடிவினர்களாய் இமயம், மேரு முதலிய இடங்களிலிருப்பவர்கள். ஆண்டவன் அருள் வழி நின்று, உயிர்கட்கு நலஞ்செய்வது அவர்கள் திருத்தொண்டு. சமயம் நேரும்போது அவர்களிற் பலர் பருவுடல் தாங்கி உலகில் தோன்றிக் காலம் விழையும் திருப்பணி செய்வர். உலகில் நானா பக்கங்களிலும் சமயக் குரவர்கள் என்று போற்றப்படுபவர்க ளெல்லாரும் இத்திருக்கூட்டத்திற் சேர்ந்தவரேயாவர். அப்பாலும் அடிசார்ந்தார் புராணம் பார்க்க. தமிழ்நாட்டிலும் அவர்களிற் சிலர் தோன்றி ஆண்டவன் அருள்நெறி வளர்த்தனர். அவ்வாசிரியன்மார் வீற்றிருந்தருளும் திருமண்டபமே தேவாசிரிய மண்டபமென்பது அவர்களைப் பற்றி விரித்துக்கூறும் நூல் இஃதாகலான், அவர்கள் சிறப்பை ஈண்டு ஆசிரியர் கூறுலானார். 2. 138. அரந்தை தீர்க்கும் அடியவர் மேனிமேல் நிரந்த நீற்று ஒளியால், நிறை தூய்மையால் புரந்த அஞ்செழுத்து ஓசை பொலிதலால் பரந்த ஆயிரம் பாற்கடல் போல்வது; தேவாசிரிய மண்டபம் ஆயிரம் பாற்கடல் போல்வது. அரந்தை - உலகத் துன்பத்தை. நிரந்த - ஒழுங்குபட்ட. விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப்பெறின் -குறள் 648. நிரந்த பாய்மாமண்ணக மலிர -சிந்தாமணி 1859. பரந்த - காத்தற்குரிய. நீற்றொளியும் தூய்மையும் வெண்மைப் பாலையும் அஞ்செழுத்தோசை அலை ஓசையையுங் குறிப்பன. நிறைந்த தூய்மை யுடையார்பால் ஒளி வீசுதல் இயல்பு. அவ்வொளி ஒழுங்குபட்ட அருளொளி யாதலின் நிரந்த நீற்றொளி என்றார். பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள் என்பதை 6-ஆம் பாட்டிற் பார்க்க. அஞ் செழுத்து - சி - வ - ய - ந - ம. சி - சிவம்; வ - அருள்; ய - உயிர்; ந - திரோதானம் ( மலத்தால் மறைப்பது); ம - மலம். இவ் வைந்தில் எல்லாம் அடங்கி நிற்றலை நோக்குக. யகரமாகிய உயிர் மலத்தி னின்றும் நீங்கி மறைப்பைத் தவிர்த்துத் திருவருளால் சிவமாதல் வேண்டும். இவ்வுணர்வை இடையாறாது நினைப்பூட்டி நிகழ்ச்சியில் கொணர்தற்குக் கருவியாக நிற்பது ஐந்தெழுத்து. நினைவின் திண்மையே செயலாகும். மலத்தினின்றும் விடுதலை பெற யகர மாகிய உயிர், சிவத்தை நினைந்து நினைந்து உருக உருக வகரமாகிய அருட்டுணை நேரும். நேர்ந்ததும் யகரத்துக்கு ந.ம. வின் தொடர்பு அறும். அப்பொழுது சிவயநம என்பது சிவயவசி ஆகும். யகரமாகிய உயிர் வகரமாகிய திருவருளில் திளைத்துச் சிகரமாகிய சிவ ஆகும். இத்துணைச் சிறப்பு வாய்ந்து, உயிர்களைக் காக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பது அஞ்செழுத்தாதலின், அதனை, புரந்த அஞ்செழுத்து என்றார். அவ்வஞ்செழுத்து, குறைவிலா நிறைவாகிய சிவமாந் தன்மை யென்னும் நிறை தூய்மையையும், அத் தூய்மை தன்னிறத்த தாகிய நீற்றொளியையும், அவ்வொளி அரந்தை இருளைப் போக் கலையும், பிறவற்றையும் கூட்டுதல் தெளிக. 3. 139. அகில காரணர் தாள் பணிவார்கள் தாம் அகில லோகமும் ஆளற்கு உயிர்என்று அகில லோகத்து உளார்கள் அடைதலின் அகில லோகமும் போல்வது; அதன்இடை. உலக ஆசிரியத் திருக்கூட்டத்தார்கள் அகில காரணனாகிய ஆண்டவன் திருவடித் தொண்டர்களாதலான், அவர்களே அகில லோகங்களையும் ஆளுதற்கு உரியவர்களென்க. அவர்கள் திருவருள் பெறின், ஆண்டவன் திருவருள் எளிதில் கூடும். அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் - இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே, தொண்டரொடு கூட்டு கண்டாய் -தாயு மானார். வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்த வைத்து - இணங்கத் தன் சீரடியார் கூட்டமும் வைத்து - மாணிக்கவாசகர். தேவாசிரிய மண்டபம் எல்லார்க்கும் உரியதென்பதும், குறிப்பிட்ட சிலர்க்கு மட்டும் உரியதன்றென்பதும் பின்னிரண்டடிகளான் விளங்குதல் காண்க. 4. 140. அத்தர் வேண்டிமுன் ஆண்டவர்; அன்பினால் மெய்த் தழைந்து விதிர்ப்பு உறுசிந்தையார்; கைத்திருத் தொண்டு செய்கடப் பாட்டினார்; இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார்; அத்தர் - சிவபெருமான். முன் - முன்னாளில்; எல்லையிட்டுக் கூற முடியாத காலம். பக்குவநிலை யுணர்ந்து ஆண்டவனே வேண்டி ஆட்கொள்ளப் பெற்றவர் ஆசிரியன்மார் என்க. அவர் அன்பே வடிவினர். முழு அன்பு நிலையாவது தனக்கென்று வாழாது மற்றவர்கட்கென்றே வாழ்வது. உலகிற்குத் தொண்டு புரிதல் வேண்டு மென்னும் ஆர்வமே அவர்தஞ் சிந்தையில் நிலவிக் கொண்டிருக்கும். அவ்வார்வத்தின் எழுச்சியால் மெய் தழைத்தல், விதிர்ப்புறல் முதலியன நிகழும். அவர்கள் செயலாளர்கள் என்பதை, கைத் திருத்தொண்டு செய்கடப் பாட்டினார் என்று ஆசிரியர் விளக்கி யிருத்தல் காண்க. கைத்திருத்தொண்டு - சரியை. இத்திறத்தவர் அன்றியும் எண்ணிலார் - இவ்வகையினரல்லாமல் வெவ்வேறு வகையில் ஈடுபட்டவர் பலர்; வேறு முறையில் தொண்டாற்றுபவர்; வேறு முறைகள் கிரியை, யோகம், ஞானம் என்பன. சரியை முதலிய நான்குந் தொண்டின் கூறுபாடுகள். ஆசிரியன்மார்கள் உலகின் பொருட்டு ஒவ்வொருவிதத் தொண்டாற்றிக் காட்டுவார்கள். இக் காரணத்தால் அவர்கள் மாட்டு உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. 5. 141. மாசு இல்லாத மணிதிகழ் மேனிமேல் பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்; தேசினால் எத்திசையும் விளக்கினார்; பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்; மணி - உருத்திராக்க மணி; சீவகாருண்யத்தைக் காட்டுவது. உருத்திராக்கம் சிவபெருமான் திருக்கண்ணினின்றும் பிறந்தது என்று புராணங் கூறும். அருள்வடிவினனாகிய ஆண்டவன் திருக் கண்ணினின்றும் என்ன பிறக்கும்? கண்ணுக்கணிகலங் கண்ணோட் டமன்றோ? உயிர்களின் பாசத்தை நீறுபடுத்துவது நீறு. பாசம் நீறாயினதும் உள்ளத்தில் தூய்மையன்றோ நிலவும்? ஆகவே. உளத் தூய்மைக்கு அறிகுறி திருநீறென்க. வெளிவேடத்திற்காகத் தரிப்பது நீறாகாது. திருநீற்றின் நுட்பத்தை மெய்ப்பொருள் நாயனார், ஏனாதி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் முதலியவர்கள் வரலாற்றிற் காண்க. நீற்றைப் புனைந்தென்ன முதலிய மெய்யுரைகள் வெளி வேடக்காரர்கள் நோக்கி யெழுந்தன வென்க. தேசினால் - ஒளியால். பெருமை பிறங்கினார் - பெருமையில் விளங்கினார். 6. 142. பூதம் ஐந்தும் நிலையில் கலங்கினும் மாதுஓர் பாகர் மலர்த்தாள் மறப்புஇலார்; ஓது காதல் உறைப்பின் நெறி நின்றார்; கோது இலாத குணப்பெருங் குன்று அனார்; மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற் றேழுலகும் - விண் பால் திசை கெட்டிருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே - திண்பால் நமக்கொன்று கண்டோந்திருப்பா திரிப்புலியூர்க் - கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே. வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும் - தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும் - மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலை நஞ்சுண் - டூனமொன்றில்லா ஒருவனுக் காட்பட்ட உத்தமர்க்கே -அப்பர். காதல் உறைப்பின் - அன்புறைப்பின். 7. 143. கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்; ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்; கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்; கேடும் - இலாமையும்; வறுமையும் ஆக்கமும் - பொருட் செல்வமும். கெட்ட - அழிந்த. திருவினார் - அருட்செல்வ முடையவர்; ஓட்டில் வெறுப்பும் செம்பொனில் விரும்பும் இல்லாதவர். இவ் வியல்பினர்தம் வேலை என்ன? கூடும் அன்பினால் இறைவனையும் உயிர்களையும் தொழுது பயன்கருதாப் பணி செய்வது. பயன்கருதாத் தொண்டு வீட்டினுஞ் சிறந்ததாதலின் வீடும் வேண்டா விறலின் விளங்கினார் என்றார். வீட்டில் இன்பம் உண்டு என்று எண்ணித் தொண்டு செய்வதும் பயன் கருதுவதாய் முடிதலின், அதனையும் அன்பர்கள் வேண்டார்கள். ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் -திருமூலர். வீடும் வேண்டாது பயன் கருதாத் தொண்டில் உறைந்து நிற்பது சிறந்த வலிமை யாதலாலும், வெற்றியாதலாலும் விறலின் என்றார். 8. 144. ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணிஅலது ஒன்று இலார்; ஈர அன்பினர்; யாதும் குறைவு இலார் வீரம் என்னால் விளம்பும் தகையதோ? கண்டிகை - உருத்திராக்கமலை. ஈசன்பணி - ஈசன் பணியும் ஈசன் எழுந்தருளியுள்ள நடமாடுங் கோயில்களின் பணியும். எவ் வுயிரும் நீங்காது உறையும் இறை சிவன் என்று எவ்வுயிர்க்கும் அன்பாயிரு -சைவசமயநெறி. ஈசனுக்கன்பில்லார் அடியவர்க்கன் பில்லார் எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார் -சிவஞானசித்தியார். இஃது ஈர அன்பினர் என்பதில் விளங்குகிறது. ஈர அன்பினராதலால் அவர் யாதுங் குறைவிலார். முன்னே விறல் என்றார். இங்கே வீரம் என்கிறார். வீரம் எது என்பது கருதற் பாலது. இப்பாட்டிலும் இதற்கு முன்னுள்ள பாட்டுகளிலும் போந்துள்ள இயல்புகளின் அடைவே வீரமாகும். எல்லா உயிர் களிலும் தன்னிலும் வீற்றிருப்பது ஒருபொருள் என்பதை யுணர்ந்து, எல்லா உயிரையுந் தன்னைப்போல் கருதிப் பணிபுரிவதும், எவ்வு யிர்க்குந் தீங்கு செய்யாமையும், அந்நிலை மாறாதார் அறியாமையால் தீங்கு செய்யினும் அதனை அன்புடன் பொறுத்தலும், இன்னோரன்ன பிறவும் வீரமாகும். அப்பர், மெய்ப்பொருள் நாயனார், ஏனாதி நாயனார் முதலியோர் வரலாற்றைப் பார்க்க. இவ்வீரர்க்கு ஆரம் எது? ஆடை எது? பாரம் எது? பாட்டை நோக்குக. 9. 145. வேண்டுமாறு விருப்பு உறும் வேடத்தர்; தாண்டவப் பெருமான் தனித் தொண்டர்கள்; நீண்ட தொல்புகழார்தம் நிலைமையை ஈண்டு வாழ்த்துகேன்; என் அறிந்து ஏத்துகேன்; இவர்கள் காலதேச வர்த்தமானங்களுக் கேற்றவாறு கோலங் கொள்வார்கள்; பல தேசங்களில் பல வேடங்கொண்டு உலகைக் காப்பார்கள். மேலே கூறிய சில, இந்நாட்டுக்குரியன. ஆண்டவனும் வேண்டுமாறு விருப்புறும் வேடத்தனாதலின், இதனைத் தாண்டவப் பெருமானுடன் சேர்த்துக் கோடலுமென்று. தாண்டவப் பெருமான் - நடராசப் பெருமான். பயன் கருதாது உயிர்கள் பொருட்டு நிகழ்த்தும் ஐந்தொழிற்றாண்டவம். வாழ்த்தப் புகுந்த யான், என்ன அறிந்து ஏத்துவேன் என்றபடி தொண்டர் புகழ் நீண்ட தொன்மை யுடைய தாதலின் என்க. 10. 146. இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் அந்தம் இல்புகழ் ஆலால சுந்தரன் சுந்தரத் திருத்தொண்டத் தொகைத்தமிழ் வந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம். சுந்தரன் சொற்றது சுந்தரமுடையது. எம்பிரான் . . . . . . . . . உரை செய்வாம் என்பது ஆசிரியரின் முனைப்பின்மையையும் அடியாரிடத்து அவர்க்குள்ள அன்பையுங் காட்டுகிறது. மாதவர் கூட்டத்தில் ஆலாலசுந்தரரும் ஒருவரே. அவர் வாயிலாக மாதவக் கூட்டத்தின் மாண்பு வெளிவருதல் வேண்டுமென்பது திருவருள் நோக்கு. திருத் தொண்டத்தொகையே இந்நூற்குப் பதிகம் என்று ஆசிரியர் மேலே திருமலைச் சிறப்பில் கூறியதையும் நோக்குக. 11. திருக்கூட்டச் சிறப்பு பூதநாயகரும், புற்றிடங்கொண்டவருமாகிய தியாகேசப் பெருமான் வீற்றிருந்தருளுந் திருவாரூர்ப் பூங்கோயிலிலே, தேவா சிரியனென்னுந் திருப்பெயருடைய மண்டபம் ஒன்று உளது. அம்மண்டபத்திலே தேவர்கள் என்றும் நிறைந்திருப்பார்கள். கண்டிகை விளங்குகின்ற திருமேனியின்மீது பூசுந்திருநீற்றைப் போல உள்ளத்தினும் புனிதமுடையவர்களும், சிவஞான ஒளியால் எல்லாத் திசைகளையும் விளக்கினவர்களும், ஐந்து பூதங்களும் தத்தம் நிலையில் கலங்கினும் அம்மை அப்பரது திருவடிகளை மறவாத வர்களும், அன்புருவாய் நின்றவர்களும், குணத்தில் மலையை ஒத்தவர்களும், இன்ப துன்பக்ளை ஒழித்தவர்களும், ஓட்டையும் பொன்னையும் ஒக்கவே நோக்குவோர்களும், பேரன்பினால் சிவ பெருமானை வணங்குதலையன்றி வீட்டின்பத்தையுங் கருதாத வர்களும், கண்டிகையையே ஆரமாகவும், கந்தையையே உடை யாகவும், இறைபணி நிற்றலையே பெரும்பணியாகவுங் கொண்டுள் ளவர்களும் அத்திருக்காவணத்தில் வீற்றிருப்பார்கள். அவர்கள் அருட்டன்மையை எங்ஙனம் எடுத்துப் போற்றுவேன்! ஆயினும் என்னை அடிமையாகவுடைய ஆலால சுந்தரர், திருக்கயிலையி னின்றுந் தென்திசையில் திருவவதாரஞ் செய்து, இம்மாதவர் திருக் கூட்டத்தைத் தொழுது திருத்தொண்டத் தொகையைத் திருவாய் மலர்ந்தருளிய வண்ணம் உரை செய்வேன். 5. சுந்தர மூர்த்தி நாயனார் அறுசீர் விருத்தம் 147. கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடிமேல் வைத்த அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு, மங்கையர் வதன சீத மதிஇரு மருங்கும் ஓடிச் செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடி நாடு. பாயிர முதலிலே உலகும்; இங்கே பாட்டுடைத்தலைவர் புராண முதலிலே கங்கை. முதற்றே உலகு என்ற திருவள்ளுவர், அவ்வதிகாரத்தைத் தொடர்ந்து வான் சிறப்புக் கூறியதும். நீரின் றமையாது உலகு என்று அவரே உலகுக்கும் நீருக்குமுள்ள தொடர்பு உணர்த்தியதும் ஈண்டு உன்னற்பாலன. உலகு உயிர்களை உணர்த்துவது; கங்கை அவ்வுயிர்கட்கு இன்றியமையாத ஈரம் என்னும் அன்பை உணர்த்துவது. உலகுக்கு இன்றியமையாதது அன்பு என்பதும்அவ்வன்பே அன்புக் கடவுளை உணர்த்துவது என்பதும் இந்நூலின் உள்ளக்கிடக்கை. கங்கை போலக் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமையூட்டுவது இந்நூலென்க. கங்கை தெய்வத் தன்மை வாய்ந்தது; தாய்மைக்குரிய பெண்ணீர்மையுடையது. கங்கையும் மதியும் பாம்பும் கடுக்கையும் முடிமேல் வைத்த அங்கணர் என்பது, நிலவுலாவிய நீர்மலிவேணியன் என்பதன் விளக்கம். உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன், நிலவுலாவிய நீர்மலிவேணியனாய் உலகுக்குத் துணைபுரிதல் மேலே சொல்லப் பட்டது. கங்கை மதி இவைகளின் உட்பொருள்களும் மேலே விளக்கப்பட்டன. குண்டலினி எழுந்து வளைந்து பாம்பின் படம் போல் நிற்றலான், அதனை இறைவன் முடி மீதுள்ள பாம்பெனக் கூறுவது பௌராணிகம். கடுக்கையும் - கொன்றைப் பூமாலை யையும். கொன்றை, பிரணவத்துக்கு அறிகுறி. அங்கணர் - அழகிய கண்ணுடையவர்; சிவபெருமான்; திருநகரச் சிறப்பு; பாட்டு 46 குறிப்புப் பார்க்க. ஓலை காட்டி ஆண்டது புராணத்தின் உயிர் போன்றதாதலின், அதனை முதற்பாட்டிற் குறிப்பிட்டவாறு காண்க. ஆண்டவன் தமக்கு - சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு. வதனசீதமதி - முகமாகிய குளிர்ச்சி பொருந்திய சந்திரனுடைய. இருமருங்கும் - இரண்டு பக்கங்களிலும். செங்கயல் ஓடி - கண்களாகிய அழகிய கயல் மீன்கள் ஓடி. குழைகள் நாடும் - காதுகளைத் தாவும். காதள வோடிய கண்களையுடைய பெண்மணிகள் கற்பிக்குரிய அழகு டையவர்களென்க. செங்கயல் நெடுங்கண் செவிமருங் கோடி - மணிமேகலை : 4 பளிக்கறை 101. கயற்கண் செவியுறப் போந்த கன்றனவே - சிந்தாமணி 167. ஒரு நாட்டின் சிறப்பு அந்நாட்டின் பெண்மக்களின் சிறப்பைப் பொறுத்து நிற்றலான், ஈண்டுப் பெண்மக்கள் நிறைவைச் சுருங்கக் கூறும் வழி, நாட்டுச் சிறப்பைக் கூறியவாறு காண்க. பெண்ணின் பெருமை பேசுவது இப்புராண நோக்கங்களுள் ஒன்றாதலானும் பாட்டுடைத் தலைவர் பெண் ணுடன் வாழ்ந்து பேறு பெற்றவராதலானும் அவர், பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றாரை யுடையேன் என்று பெண்ணின் தெய்வக் காதற்றன்மையை உலகுக்கு அறிவுறுத்தியவராதலானும், அவர்தம் வரலாற்றைக் கூறும் தடுத்தாட்கொண்ட புராணத்தின் முதற்றிருப்பாட்டில் பெண்ணின் பெருமை பேசப்பட்டது. வதனம் - சீதம் மதி கயல் இவை வளத்தைக் குறிப்பால் உணர்த்துவன. 1. 148. பெருகிய நலத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில் அரு மறைச் சைவம் ஓங்க அருளினால் அவதரித்த மருவிய தவத்தால் மிக்க வளம் பதி, வாய்மை குன்றாத் திரு மறையவர்கள் நீடும் திருநாவலூ ராம் அன்றே. மங்கையர் நிறைவைக் கூறும் வழி, நாட்டு நலன் கூறப்பட்டதென்பது பெருகிய நலத்தால் என்பதால் நன்கு விளங்குகிறது. பெண் மக்கள் நலன் பெற்றுள்ள நாட்டில் பிற நலன்கள் கெழுமியிருத்தல் இயல்பு. பல வளங்கள் நிரம்பிய நாடாதலின் பெருந் திருநாடு என்றார். திருநாடு - திருமுனைப்பாடி நாட்டில். திரு - கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் (பேராசிரியர்: திருக்கோவை 1. உரை) ஆகிய அழகு; அமைதியுமாம். (திருமுகத்து சிறுபாணாற்றுப்படை 157; அமைதியினையுடைய முகம் உரை) மறைச் சைவம் - வேதசாரமாகிய சைவம். வேதாந்தத் தெளிவாஞ் சைவ சித்தாந்தத் திறன் -சிவப்பிரகாசம்; பாயிரம் 7. ஓரும் வேதாந்தம் என்னும் உச்சியில் பழுத்த ஆரா இன்ப அருங்கனி பிழிந்த - சாரங்கொண்ட சைவ சித்தாந்தத் தேன் -குமரகுருபரர்; பண்டார 10. அருளினால் அவதரித்த - திருவருளினால் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறங்குதற்கு. இறங்கிய எனினுமாம். மருவிய - பொருந்திய; கலந்த. வாய்மை குன்றாத்திருவுடைய மறையவர்கள். நீடும் - பெருகியுள்ள. தென்னாவலூர்கோன், திருநாவலூரனவன், நாவலர்கோன் சுந்தரர் தேவாரம். 2. 149. மாது ஒரு பாகனார்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி மேம்படு சடையனாருக்கு ஏதம்இல் கற்பின் வாழ்க்கை மனை இசை ஞானியார்பால் தீது அகன்று உலகம் உய்யத் திரு அவதாரம் செய்தார். வழி வழி அடிமை செய்தல்; எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமை ஆண்ட பெம்மான் சுந்தரர் : திருவாலங்காடு 9. என்னைப் பெற்ற முற்றவை தம்மனை தந்தைக்குந் தவ்வைக்குந் தம்பிரானார் மூப்பது மில்லை 7. எந்தையை எந்தை தந்தை பிரானை திருவாழ்கொளிபுத்தூர் 7. வேதியர் ஆதிசைவர். ஏதம் இல் - குற்றமில்லாத. ஆலால சுந்தரர் திருவவதாரஞ் செய்தார். அன்னவன் பெயர் ஆலால சுந்தரன் இந்நூல்; திருமலைச் சிறப்பு 22. அறந்தருநாவுக்கரசும் ஆலால சுந்தரரும் இந்நூல். திருநாவுக்கரசு நாயனார் புராணம் 11. சடையனவன் சிறுவன், நன்சடையன் இசைஞானி சிறுவன், இசைஞானி சிறுவன் சுந்தரர்; தேவாரம். 3. 150. தம்பிரான் அருளினாலே தவத்தினால் மிக்கோர் போற்றும் நம்பியாரூரர் என்றே நாமமும் சாற்றி, மிக்க ஐம்படை சதங்கை சாத்தி, அணி மணிச் சுட்டி சாத்தி, செம்பொன் நாண் அரையில் மின்னத் தெருவில் தேர் உருட்டும் நாளில், தம்பிரான் - சிவபெருமான். நம்பியாரூரர் என்னும் பெயர். பெற்றோர்களால் இடப்பட்டது சுந்தரர். ஆரூரர் ஆதற்கு முன்னர் இப்பெயர் பெற்றமை குறித்துச் சிலர் ஐயுறலாம். சுந்தரரால் முதல் முதல் பாடப்பெற்ற பித்தா பிறைசூடி என்னுந் திருப்பதிகத்தின் இறுதியில், அவர் தம்மை ஆரூரன் என்று குறித்திருத்தல் கருதற்பாற்று. நம்பியாரூரரின் பாட்டனார் பெயரும் ஆரூரர் என்பது, இப்புராணம் 59-ம் பாட்டால் விளங்குகிறது. இச் சான்றுகளான் சுந்தரர் மரபினர். திருவாரூர்ப் பெருமானார்க்கு வழி வழித் தொண்டரென்பதும், ஆரூரர் என்னுங் கடவுள் பெயரும், ஆரூரர் என்னும் பாட்டனார் பெயரும் விரவி வருமாறு சுந்தரர்க்கு அப்பெயர் சூட்டப்பட்டது என்பதும் செவ்வனே விளங்குதல் காண்க. பின்னே சுந்தரர் வாழ்வில் ஆரூரராதலும் ஈண்டு உன்னற் பாலது. ஆகவே ஐயத்துக்கிடமில்லை என்க. நம்பி ஆடவரிற் சிறந்தவர். நம்பி என்பது ஆதி சைவரின் பட்டப் பெயர் என்றுரைப் போரு முளர். ஆரூரன் நம்பி, நம்பியூரன், திருவாரூர்ச் சிவன் பேர் சென்னியில் வைத்த ஆரூரன் என வரூஉஞ் சுந்தரர் திரு வாக்குகளை நோக்குக. ஐம்படை - ஐம்படைத்தாலி; பஞ்சாயுதம்; திருமாலின் சங்கம் சக்கரம் கதை கட்கம் சார்ங்கம் என்னும் ஐந்து ஆயுதங்களின் வடிவாய்ச் செய்து ஐந்தாம் நாளில் குழந்தைகளின் மார்பில் அணியும் ஓர் ஆபரணம்; இஃது அச்சம் முதலியவற்றைத் தடுக்கும் என்பது நம்பிக்கை. அமளித்துஞ்சும் ஐம்படைத்தாலிக் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு மணிமேகலை : 7-துயில். 56 - 57 ஐம்படையும் சதங்கையும் அரை நாண் - அரை ஞாண். 151. நரசிங்க முனையர் என்னும் நாடு வாழ் அரசர் கண்டு, பரவு அருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று, விரவிய நண் பினாலே வேண்டினர் பெற்று, தங்கள் அரசு இளங்குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார். (நம்பியாரூரரைக் கண்டு) பரவரும் - சொல்லுதற்கரிய. கூர - உளது சிறப்ப. கூர்ப்புங் கழிவும் உள்ளது சிறக்கும் தொல் : சொல் உரி. 18. பயந்தவர் தம்பால் - ஈன்றவரிடத்தில். விரவிய நண்பினாலே - முன்னே கலந்த நட்புரிமையினாலே, நம்பியாரூரரை வளர்க்க வேண்டினர். ஏற்ப - இசைய. ஒப்ப மகன்மை - மகனாந்தன்மை. நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனை அரையன் ஆதரித்த ஈசனுக்கு ஆட்செய்யும் ஊர் அணி நாவலூர் -சுந்தரர்; திருநாவலூர்-11. 5. 152. பெருமைசால் அரசர் காதல் பிள்ளையாய்ப் பின்னும் தங்கள் வருமுறை மரபில் வைகி, வளர்ந்து, மங்கலம் செய் கோலத்து அருமறை முந்நூல் சாத்தி, அளவுஇல் தொல்கலைகள் ஆய்ந்து, திருமலி சிறப்பின் ஓங்கிச் சீர் மணப் பருவம் சேர்ந்தார். சால் - அமைந்த; மிக்க நம்பியாரூரர் அரசர்தங் காதற் பிள்ளை யாயினும், அவர் தமது ஆதிசைவ மரபு முறை வழாது ஒழுகி வளர்ந்து வந்தார் என்க. மங்கலத்தைச் செய்கின்ற அழகு வாய்ந்த அரிய வேதமுறைப்படி முப்புரி நூல் அணிந்து. மலி - நிறைந்த; மிகுந்த. 6. 153. தந்தையார் சடையனார் தம் தனித்திரு மகற்குச் சைவ அந்தணர் குலத்துள் தங்கள் அரும் பெரும் மரபுக்கு ஏற்ப வந்ததொல் சிறப்பின் புத்தூர்ச் சடங்கவி மறையோன் தன்பால் செந்திரு அனைய கன்னி மணத்திறம் செப்பி விட்டார். மணஞ் செய்தற்குச் செய்தி செப்பிவிட்டார். 7. 154. குலமுதல் அறிவின் மிக்கார், கோத்திர முறையும் தேர்ந்தார் நலம்மிகு முதியோர் சொல்லச் சடங்கவி நன்மை ஏற்று, மலர்தரு முகத்தன் ஆகி, மணம்புரி செயலின் வாய்மை பலவுடன் பேசி, ஒத்த பண்பினால் அன்பு நேர்ந்தான். குல முதல் - குலம் முதலாகச் சொல்லப்பட்ட பலவற்றில். அறிவின் மிக்கோரும் - தேர்ந்தோரும் (தெளிந்தோரும்) ஆகிய நலமிகு முதியோர். நன்மை என்று ஏற்று. செயலொடு வாய்மை. வாய்மை - உண்மை; தப்பாத மொழி என்பர் நச்சினார்க்கினியர்; (பொருப்பன் வாய்மை பாண்டியனுடைய தப்பில் மொழியை கலித்தொகை : 35 - 24 உரை) ஒத்த பண்பும் ஒத்த நலனும் ஒத்த அன்பும் ஒத்த செல்வமும் ஒத்த கல்வியும் உடையாராய் - இறைய னார் அகப்பொருளுரை : 1. அன்பு நேர்ந்தான் - (பெண்ணைத் தருதற்கு) அன்போடு உடன்பட்டார். 8. 155. மற்று அவன் இசைந்த வார்த்தை கேட்டவர் வள்ளல் தன்னைப் பெற்றவர் தம்பால் சென்று சொன்னபின், பெருகு சிந்தை உற்றதோர் மகிழ்ச்சி எய்தி மணவினை உவந்து சாற்றிக் கொற்றவர் திருவுக்கு ஏற்பக் குறித்து நாள் ஓலை விட்டார். வள்ளல் தன்னை - வள்ளலாகிய நம்பியாரூரரை. முன்னரே. மகிழ்ச்சி பெருகு சிந்தையிலே உற்ற ஓர் - ஒப்பற்ற. சாற்ற - வெளிப் படுத்த. கொற்றவர் திருவுக்கு ஏற்ப நாள் குறித்து - அரசராகிய நரசிங்க முனையர் தமது செல்வம் முதலியவற்றிக்கு இசைய நாள் குறித்து. நம்பியாரூரர் நரசிங்கமுனையரிடம் வளர்ந்து வருதலால் கொற்றவர் திருவிற்கு ஏற்ப என்றார். மிகச் சிறப்பாக என்றபடி சாற்றி என்பது பாடமாயின் பெற்றவர் . . . . ஏற்ப . . . ஓலைவிட்டார் என்று கொள்க. 9. 156. மங்கலம் பொலியச் செய்த மணவினை ஓலை ஏந்தி அம்கயல் கண்ணினாரும் ஆடவர் பலரும் ஈண்டிக் கொங்கு அலர்ச் சோலை மூதூர் குறுகினார்; எதிரே வந்து பங்கய வதனி மாரும் மைந்தரும் பணிந்து கொண்டார். மங்கலம் பொலியத் தீட்டிய. அம் கயல் கண்ணினாரும் - அழகிய கயல் போன்ற கண்களையுடைய மகளிரும். ஈண்டி - ஒருங்கு சேர்ந்து. கொங்கு அலர் - வாசனை மலர்; தாது பரக்கும் எனினுமாம். மூதூர் - பழைமை பொருந்திய புத்தூர். பங்கயவதனிமாரும் - தாமரை போன்று முகத்தையுடைய பெண்மக்களும் கொண்டார் - வரவேற்றார். ஏந்தி - வாங்கி வாசித்துப் பார்த்து என்றும். மூதூர் - திருநாவலூ ரென்று கூறுவோருமுளர். 10. 157. மகிழ்ச்சியால் மணம் மீக் கூறி, மங்கல வினைகள் எல்லாம் புகழ்ச்சியால் பொலிந்து தோன்றப் போற்றிய தொழிலர் ஆகி, இகழ்ச்சி ஒன்றானும் இன்றி, ஏந்து பூ மாலைப் பந்தர் நிகழ்ச்சியின் மைந்தர் ஈண்டி, நீள் முளை சாத்தினார்கள். மணம் மீக்கூறி - திருமணம் திருமணம் என்று மேலும் மேலும் பலர் அறியச் சொல்லி. போற்றிய - விருப்பொடு செய்த. பந்தரில். நிகழ்ச்சியில் - உள்ளக் கிளர்ச்சியால். 11. 158. மணவினைக்கு அமைந்த செய்கை மாதினைப் பயந்தோர் செய்யத் துணர்மலர்க் கோதைத் தாமச் சுரும்பு அணை தோளினானைப் புணர்மணத் திருநாள் முன்னாள் பொருந்திய விதியினாலே பணை முரசு இயம்ப வாழ்த்திப் பைம்பொன் நாண் காப்புச் சேர்த்தார். துணைமலர் - ஒத்தமலர். துணை தோள் எனக் கொண்டு இரண்டு புயங்கள் என்னலுமாம் (துணர் பூங்கொத்து). சுரும்பு அணை - வண்டுகள் மொய்க்கின்ற. கோதையாகிய தாமம்; கோதை - ஒழுங்கு; தாமம் மாலையுமாம்; கோதை - மாலை; தாமம் - ஒழுங்கு மாம், கோதைத் தாமம் குழலொடு களைந்து சிலப்பதிகாரம் : 27- நீர்ப்படை 107. சுரும்பணை துணைமலர்க் கோதைத் தாமம் என்று இயைக்க. கோதைத் தாமம் என்பதை முடி அல்லது மார்பு மலையாக் கொண்டு, அம் மாலையினின்றும் சுரும்பு அணை தோளினானை என்று கோடலுமொன்று. தோளினானை - நம்பியாரூரரை. பணை முரசு - பருத்தமுரசு; முரசின் விசேடமுமாம்; இங்கே மணமுரசு. பைம்பொன் நாண் - பசும்பொன் கயிற்றால். 12. 159. மாமறை விதி வழாமல் மணத்துறைக் கடன்கள் ஆற்றித் தூமறை மூதூர்க் கங்குல் மங்கலம் துவன்றி ஆர்ப்பத் தேமரு தொடையல் மார்பன் திருமணக் கோலம் காணக் காமுறு மனத்தான் போலக் கதிரவன் உதயம் செய்தான். பின்னேயுள்ள மறை, மறையவரைக் குறிப்பது என்பது பழைய குறிப்புரை. கங்குல் - முன்னாளிரவில். மங்கல வாத்தியங்கள் சேர்ந்து முழங்க. தேமரு தொடையல் மார்பன் - தேன் பொருந்திய மாலையையணிந்த மார்பினையுடைய நம்பியாரூரர். காமுறு - விருப்பங் கொண்ட. கதிரவன் - சூரியன். 13. 160. காலைசெய் வினைகள் முற்றிக் கணித நூல் புலவர் சொன்ன வேலைவந்து அணையும் முன்னர் விதிமணக் கோலம் கொள்வான் நூல்அசைந்து இலங்கும் மார்பின் நுணங்கிய கேள்வி மேலோன் மாலையும் தாரும் பொங்க மஞ்சனச் சாலை புக்கான். காலைக் கடன்களை முடித்து, வேலை - முகூர்த்த வேளை. மார்பின் நுணங்கிய - நெஞ்சில் நுட்பமான. மார்பினையும் கேள்வி யையுமுடைய மேலோன் என்னலுமாம். மாலை, தார் என்பன மாலையின் விகற்பங்கள். தார் விடுபூவுமாம் என்பது பழைய குறிப்புரை. இரத்தின மாலையும் பூமாலையும் என்பர் மகாலிங்க ஐயர். தார் - மார்பு மாலை; ஆடவர் அணிவது; மகளிர் மாலைக்கும் அருகி வருதல் உண்டு. (ஒருவரை ஓரிடத்தில் ஒருமைப் பெயரானும் மற்றோரிடத்தில் பன்மைப் பெயரானும், மயங்கக் கூறுதல் காவிய மரபு. இதற்கு ஆண்டாண்டமையும் சொல்லோசைகளும், அன்பு நிகழ்ச்சியும், இன்னபிறவும் காரணமாகும். ஒருமை சுட்டிய என வரூஉந் தொல்காப்பிய எச்சவியற் சூத்திரத்துக்குப் புலவர்கள் கண்ட உரைத் திறங்களை நோக்குக. 14. 161. வாசநெய் ஊட்டி மிக்க மலர்விரை அடுத்த தூநீர்ப் பாசனத்து அமைந்த பாங்கர்ப் பருமணிப் பைம்பொன் திண்கால் ஆசனத்து அணிநீர் ஆட்டி அரிசனம் சாத்தி அன்பால் ஈசனுக்கு இனியான் மேனி எழில் பெற விளக்கினார்கள். வாச நெய் ஊட்டி - வாசனையுடைய எண்ணெய் தேய்த்து. விரை அடுத்த - மணங்கலந்த. தூ நீர்ப் பாசனத்து - தூய நீர்ப் பாத்திரத்தின். பாங்கர் அமைத்த - பக்கத்தே அமைத்த. பருத்த மணிகளிழைத்துப் பசும் பொன்னால் செய்யப்பட்ட வலிய கால்களையுடைய பீடத்திலே இருத்தி. அணி - அழகு. அரிசனம் - மஞ்சள் சேர்ந்த கலவைப்பொடி. ஈசனுக்கு இனியான் - நம்பியாரூரர் எழில் - அழகு. 15. 162. அகில்விரைத் தூபம் ஏய்ந்த அணி கொள் பட்டாடை சாத்தி, முகில்நுழை மதியம் போலக் கைவலான் முன்கை சூழ்ந்த துகில்கொடு குஞ்சி ஈரம் புலர்த்தித் தன் தூய செங்கை உகிர்நுதி முறையில் போக்கி, ஒளிர் நறும் சிகழி ஆர்த்தான். அகில் விரை தூப மேய்ந்த - அகிற்றுண்டுகளால் வாசனைப் புகை ஊட்டப்பட்ட. கைவலான் - ஒப்பனை செய்வதில் கை தேர்ந்தவன். தனது முன்கையில் சுற்றிய ஆடையைக் கொண்டு. குஞ்சி - குடுமி. உகிர் நுதி - நக நுனி. நகநுனியை முறையால் போக்கலாவது வகிர்ந்து சிக்கறுப்பது. சிகழி ஆர்த்தான் - குடுமியை முடித்தான். குடுமியின் கருமையையும் துகிலின் வெண்மையையும் முகில் நுழை மதியம் போல என்றார். 16. 163. தூநறும் பசுங் கர்ப்பூரச் சுண்ணத்தால் வண்ணப் போதில் ஆனதண் பனிநீர் கூட்டி அமைத்த சந்தனச் சேறு ஆட்டி மான்மதச் சாந்து தோய்ந்த மங்கலக் கலவை சாத்திப் பால்மறை முந்நூல் மின்னப் பவித்திரம் சிறந்த கையான். சுண்ணத்தால் - பொடியால். வண்ணப்போதில் - அழகிய மலர் களால். ஆன - ஆகிய. மான்மதச் சாந்து - கதூரிக் குழம்பு. மங்கலக் கலவை - மற்ற மணத்துக்குரிய வாசனைக் கலவைகள். பால் மறை பாலும் வெள்கி மறையும் படியான; அதிக வெண்மை என்றபடி. 17. 164. தூமலர்ப் பிணையல், மாலை, துணர் இணர்க் கண்ணி, கோதை, தாமம் என்று இனைய வேறு தகுதியால் அமையச் சாத்தி. மாமணி அணிந்த தூய வளர்ஒளி இருள்கால் சீக்கும் நாமநீள் கலன்கள் சாத்தி நன்மணக் கோலம் கொண்டார். பிணையல் மாலை - மலர்களின் தாளிரண்டையும் ஒன்றன் மேல் ஒன்று வைத்துக்காட்டப்படுஞ் சரம். துணர் இணர் - பூங்கொத்துக்களாலமைந்த. கண்ணி - கொண்டை மாலை; நாரின் வழியாகப் பூக்களையடுக்கிச் சிறிய இழையினால் வளைவாகக் கட்டப்படும் மாலை. தாமம் - பூக்களை வெவ்வேறு பத்தியாக வைத்து வளைவின்றி நீளமாகக் கட்டப்படும் மாலை. கோதை - பொதுவாக நீளமாகக் கட்டப்படும் மாலை. கண்ணிக் கோதை என்றும், கோதைத் தாமம் என்றும் கொள்ளின், கோதையைத் தனியாகக் கொள்ள வேண்டுவதில்லை. கண்ணி, கொண்டையில் சூட்டப்படுவது. மற்ற மாலைகள் தோள் மார்பு முதலிய விடங்களில் சூட்டப்படுவன. இருள் கால் சீக்கும் - இருளை அறவே ஒதுக்கும். அணிந்த - அழுத்திய. நாமம் - பேர் பெற்ற. கலன்கள் - ஆபரணங்கள். மாமணி அணிந்த கலன்கள். 18. 165. மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க நல்நகர் விழவு கொள்ள நம்பியாரூரர், நாதன் தன்அடி மனத்துள் கொண்டு தகும் திருநீறு சாத்திப் பொன்அணி மணிஆர் யோகப் புரவி மேற்கொண்டு போந்தார். மன்னவர் திரு - தேர், யானை, குதிரை, காலாள், குடை, முரசு முதலிய சிறப்புகள். வைதிகத் திரு - வைதிக உடை, அணி மறை முழக்கம் முதலியன. பொன் அணி மணி ஆர் - பொன்னால் அலங்கரிக்கப்பெற்ற அழகு பொருந்திய; மணி ஆர் பொன் அணி எனக் கொண்டு மணிகளிழைத்த பொன்னணிகள் புனைந்த என்னலு மொன்று. யோகப் புரவி - நல்ல சுழிகள் அமைந்த குதிரை. யோகம் உயர்ச்சியுமாம். இனி நம்பி அடையப் போவது ஞான நிலையாதலின் அவர் யோகப் புரவி ஏறினார் என்பது குறிப்பு. யோக உலகம் புரவியை உவமையாகக் கோடல் மரபு. புள்ளினுமிக்க புரவியை மேற்கண்டால் - கள்ளுண்ண வேண்டாம் தானே களிதரும் - துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும் - உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே திருமந்திரம். 19. 166. இயம்பல துவைப்ப எங்கும், ஏத்துஒலி எடுப்ப, மாதர் நயந்து பல்லாண்டு போற்ற, நான்மறை ஒலியின் ஓங்க வியந்து பார் விரும்ப வந்து, விரவினர்க்கு இன்பம் செய்தே உயர்ந்த வாகன யானங்கள் மிசைக் கொண்டார் உழையரானார். இயம் - வாத்தியங்கள். துவைப்ப - முழங்க. ஏத்து ஒலி - வாழ்த்தித் தோத்திரிக்கும் ஒலி. நயந்து - விரும்பி. ஒலியின் - ஒலியுடன். தத்தம் உயிர் திருமணத்தை வியந்து விரும்ப வந்து. உயிர் கலந்த விருப்பம் என்றபடி (பார் உலகம்) விரவினர்க்குத் திரண்டு கூடியவர் கட்கு. யானங்கள் - சிவிகைகள் உழையரானார் பக்கத்திலுள்ள வர்கள்; சுற்றத்தார்கள்; பரிசனங்கள் முதலியவர்கள். 20. 167. மங்கல கீத நாத மறையவர் குழாங்க ளோடு தொங்கலும் விரையும் சூழ்ந்த மைந்தரும் துவன்றிச் சூதும் பங்கய முகையும் சாய்த்துப் பணைத்து எழுந்து அணியில் மிக்க குங்கும முலையினாரும் பரந்து எழு கொள்கைத்து ஆகி. தொங்கலும் விரையும் - மாலையும் மணமும். துவன்றி நெருங்கி. சூதும் - குதாடு கருவியையும். பங்கய முகையும் - தாமரை அரும்பையும். சாய்த்து - தோற்கச் செய்து. பணைத்து - பருத்து. அணியில் - அழகில். கொள்கை - சிறப்பு. கொள்கைத்தாகி என்னும் வினைக்கு, கூட்டம் தோன்றா எழுவாயாக நின்றது என்பர் மகாலிங்க ஐயர். கீழ்வரும் அருங்கடி கொள்கைத்தாகி என்று கொள்ளலு மொன்று. 21. 168. அரும்கடி எழுந்த போழ்தின் ஆர்த்த வெள் வளைகளாலும் இருங்குழை மகரத்தாலும், இலங்கு ஒளி மணிகளாலும் நெருங்கிய பீலிச் சோலை நீல நீர்த் தரங்கத்தாலும் கருங்கடல் கிளர்ந்தது என்ன, காட்சியின் பொலிந்தது அன்றே. அரும் கடி எழுந்த போழ்தின் - திருமணக் கூட்டம் எழுந்த போது; திருமண வேளை நெருங்கியபோது என்போருமுளர். ஆர்த்த வெள்வளைகளாலும் - ஒலிக்கும் வெள்ளை வளையல்களாலும் (சிலேடை) முழங்கும். வெண் சங்குகளாலும், இருங்குழை மகரத் தாலும் - பெரிய மகர குண்டலங்களாலும் (சிலேடை) துளையுடைய பெரிய மகர மீன்களாலும். மணிகளாலும் இரத்தினாபரணங்க ளாலும் (சிலேடை) முத்துகளாலும். அரங்கத்தாலும் - வரிசை களாலும் (சிலேடை) தரங்கத்தாலும், அலைகளாலும், பீலிச்சோலை - மயிற்பீலியொத்த சோலை. தரங்கம் - சோலையொத்த நிறத்தது. கிளர்ந்தது என்ன - எழுந்தாற் போன்ற. அருங்கடி கொள்கைத்தாகி - எழுந்த போதின். 22. 169. நெருங்கு தூரியங்கள் ஏங்க நிரைத்த சாமரைகள் ஓங்கப் பெருங்குடை மிடைந்து செல்லப் பிணங்கு பூங்கொடிகள் ஆட அருங்கடி மணம் வந்து எய்த, அன்றுதொட்டு என்றும் அன்பில் வரும்குல மறையோர் புத்தூர் மணம்வந்த புத்தூர் ஆமால். தூரியங்கள் - வாத்தியங்கள். ஏங்க - ஒலிக்க. நிரைத்த சாமரைகள் - வீச வரிசையாகப் பிடித்த சாமரங்கள். ஓங்க - மேலே எழும்ப. (தோரை மயிலிறகாற் செய்த விசிறி. தோரையைப் பெருங் குடையுடன் சேர்த்துக் கோடலுமொன்று). மிடைந்து - நெருங்கி. பிணங்கு - நெருங்கிய. கடிமணம் - திருமணம்; புதுமணம் எனினுமாம் மணம் வந்த புத்தூரேயன்றி மணம் நிகழ்ந்த புத்தூரன்று. 23. 170. நிறைகுடம், தூபம், தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி நறைமலர், அறுகு, சுண்ணம் நறும் பொரி பலவும் வீசி உறை மலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்து வீதி மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார். நறை - வாசனை. சுண்ணம் - வாசனைப் பொடி. உறை மலி கலவைச் சாந்தின் உறுபுனல் - துளி மிகுந்த பனிநீர் கலந்த சந்தனத்தினின்றுந் தெளிந்த நீரையும். உறை - உறைதலுமாம். வள்ளல் - நம்பியாரூரர். 24. 171. கண்கள் எண்இலாத வேண்டும் காளையைக் காண என்பார்; பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்; மண் களிகூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் பண்களில் நிறைந்த கீதம் பாடுவார் ஆடுவார்கள் 25. 172. ஆண்தகை அருளின் நோக்கின் வெள்ளத்துள் அலைந்தோம் என்பார்; தாண்டிய பரியும் நம்பால் தகுதியின் நடந்தது என்பார்; பூண்தயங்கு இவனே காணும் புண்ணிய மூர்த்தி என்பார் ஈண்டிய மடவார் கூட்டம் இன்னன இசைப்ப, சென்றார். நம்பியாரூரர் அடியவராதலால் அருளின் நோக்கின் (கருணை நோக்கு) வெள்ளத்துள் என்றார். தாண்டிச் செல்லுங் குதிரையும் (நமது எண்ணத்துக் கேற்ப) நம்மிடம் மெல்ல நடந்தது என்பார். பூண் தயங்கு. ஆபரணம் அசையும். பூணுக்கும் அழகு வழங்கும் இயற்கையழகுடையான். ஈண்டிய - நெருங்கியுள்ள. 26. 173. வருமணக் கோலத்து எங்கள் வள்ளலார் தெள்ளும் வாசத் திருமணப் பந்தர் முன்பு சென்று வெண் சங்கம் எங்கும் பெருமழைக் குலத்தின் ஆர்ப்பப் பரிமிசை இழிந்து பேணும் ஒருமணத் திறத்தின் ஆங்கு நிகழ்ந்தது மொழிவேன், உய்ந்தேன். தெள்ளும் - இனிய. சங்கம் - மணச்சங்கு. பெருமழைக் குலத்தின் ஆர்ப்ப - பெரிய மேகக் கூட்டத்தைப் போல முழங்க. பரி மீதிருந்து இறங்கி. பேணும் - செய்ய உட்கொள்ளும்; விரும்பும் ஒரு மணத்திறத்தின் ஒப்பற்ற திருமணத்தினிடத்தே. 27. கலி விருத்தம் 174. ஆலும் மறை சூழ் கயிலையின்கண் அருள் செய்த சாலும் மொழியால் வழி தடுத்து அடிமைகொள்வான், மேல் உற எழுந்து, மிகு கீழ்உற அகழ்ந்து, மாலும் அயனுக்கும் அரியார் ஒருவர் வந்தார். ஆலும் - ஒலிக்கும். மறை - கயிலையில் ஒலி வடிவாயிருப்பது. ஈண்டு மறை என்றது உலகில் தோன்றிய எல்லா மறைகளையும். பின்னே, முந்தை மறை ஆயிரம் மொழிந்தான் என்று வருதல் காண்க. சாலுமொழியால் - அமைந்த மொழியால்; மேன்மை மொழியால். முன்னே அருள் செய்த சாலு மொழியைத் திருமலைச் சிறப்பில் 27, 28, 29-ஆம் பாக்களிற் பார்க்க. வழி - முறையே. கொள்வான் - கொள்ளும் பொருட்டு. அகழ்ந்து - தோண்டி. ஒருவர் கயிலாயத்துள்ள சீகண்டர். புவனங்கள் பலப்பல. அவை முக்கூறு படுத்தப்பட்டிருக்கின்றன. அம் முக்கூறு பிரகிருதி மாயா புவனம், அசுத்த மாயாபுவனம், சுத்த மாயாபுவனம் என்பன. இம் மூன்று மாயையையுங் கடந்து நிற்பது தற்பரசிவம். தற்பரசிவம் ஊர்பெயர் இடம் முதலியன இல்லாதது. அஃது அறிவாய் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்பது. பதிபரமே அதுதான் - நிலவும் அரு உருவின்றிக் குணங்குறிகளின்றி நின்மலமாய் ஏகமாய் சித்த மாகி - அலகில் உயிர்க் குணர்வாகி அசலமாகி அகண்டிதமாய் ஆனந்த உருவாய் அன்றிச் - செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வது தற்சிவம் என்பர் தெளிந்துளோரே சிவப்பிரகாசம் - 1. தற்பரசிவம் அதிட்டிக்க முத்திறப் புவனங்களையும் முறையே நடாத்துவோர் சீகண்டர், அநந்தேசுரர், சதாசிவர் ஆவர். இவருள் கயிலையில் வீற்றிருப்பவர் சீகண்டர். இவரைச் சம்பு பக்கத்தில் தற்பர சிவ மாகவும் அனுபக்கத்தில் குருவாகவுங் கோடல் மரபு. விரிவு சைவ சித்தாந்த நூல்களினும், சிவாகமங்களினும் பார்க்க. 28. 175. கண் இடை கரந்த கதிர் வேண்படம் எனச் சூழ் புண்ணிய நுதல் புனித நீறு பொலிவு எய்தத் தண்மதி முதிர்ந்து கதிர் சாய்வது என மீதே வெண்நரை முடித்தது விழுந்து இடை சழங்க. கதிர் கண்ணிடை கரந்த - ஒளி பொருந்திய நெற்றிக் கண்ணை இடையில் மறைத்த. வெண்படம் என - வெள்ளிய வதிரம் போல. கதிர் வெண் எனவுங் கொள்ளலாம். நுதல் - நெற்றி. சூழ் நீறு என்றியைக்க. குளிர்ச்சி பொருந்திய பிறைச்சந்திரன் பூரணச் சந்திரனாகி வெண்ணிலவு பொழிவது போன்ற வெண்ணரையை மேலே முடித்தது. சழங்க சப்பளிப்ப. தளர; துவள. 29. 176. காதில் அணி கண்டிகை வடிந்தகுழை தாழச் சோதிமணி மார்பின்மிசை நூலினொடு தோளின் மீதுபுனை உத்தரிய வெண்துகில் நுடங்க ஆதபம் மறைக்குடை அணிக்கரம் விளங்க. கண்டிகை - கண்டிகைபோன்று வளைந்த. மணி - உருத்திராக்க மணி மாலை. நூலினோடு - பூணூலுடன். உத்தரியமாகிய வெள் ளாடை. நுடங்க - அசைய. ஆதபம் - வெயில். 30. 177. பண்டிசரி கோவண உடைப்பழமை கூரக் கொண்டதுஒர் சழங்கல் உடை ஆர்ந்துஅழகு கொள்ள வெண்துகி லுடன்குசை முடிந்துவிடு வேணுத் தண்டு ஒருகை கொண்டுகழல் தள்ளுநடை கொள்ள. பண்டி - வயிற்றினின்றும். கூர - மிக. கொண்டதொர் - உடுத்திய ஒரு. சழங்கல் உடை - நழுவும் உடை. ஆர்ந்து - நிறைந்து. குசை - தருப்பை முடிந்து விட்டிருக்கிற. வேணு - மூங்கில். கழல் - கால். 31. 178. மொய்த்துவளர் பேர்அழகு மூத்த வடிவேயோ? அத்தகைய மூப்புஎனும் அதன்படிவ மேயோ? மெய்த்தநெறி வைதிகம் விளைந்த முதலேயோ? இத்தகைய வேடம் என ஐயம் உற எய்தி. படிவம் - வடிவம். முதல் - முதற் குரு (எல்லாருக்கும் பெருங் குரு சீகண்டராதலின்). 32. 179. வந்து, திரு மாமறை மணத்தொழில் தொடங்கும் பந்தர் இடை நம்பிஎதிர் பன்னுசபை முன்நின்று இந்த மொழி கேண்மின்எதிர் யாவர்களும் என்றான் முந்தைமறை ஆயிரம் மொழிந்ததிரு வாயான். நம்பி - நம்பியாரூரர். பல்லாயிரம் மறைகள் (பல சமய மறைகள்) வெளிவருதற்கு முதற்குருவாக நின்றவர் சீகண்டர். நம்பி எதிர் - நம்பிக்கு எதிரிலே; நம்பிக்கு மாறாக என்னலுமாம். பன்னு - நெருங்கிய. கண்ணால் காண்டல், வாயால் பேசல், கையால் தொடுதல் முதலியன நிகழ்தல் வேண்டும். இவை ஞானதீக்கை முறைகள். தொடக்கத்தில் முதலிரண்டும் நிகழ்கின்றன. பின்னே மற்றொன்றும் நிகழ்தலை நோக்குக. 33. 180. என்றுஉரைசெய் அந்தணனை எண்இல்மறை யோரும் மன்றல்வினை மங்கல மடங்கல் அனையானும் நன்றுஉமது நல்வரவு நங்கள் தவம் என்றே, நின்றதுஇவண் நீர்மொழிமின் நீர்மொழிவது என்றார் மன்றல் - திருமணம். மடங்கல் அனையானும் - சிங்கம் போன்ற நம்பியாரூரரும்; நம்பியாரூரர் அரசர்பால் வளர்ந்தவ ராதலின், அவர்மாட்டு வீரக்கூறும் உடைமை கூறியவாறாம். நன்று மது நல்வரவு நங்கள் தவம் என்று சொல்லி. நங்கள் தவம் என்றே இவண் நின்றது என்று கொண்டு பொருளுரைப்பினும் பொருந்தும். இவண் - இங்கு. இவண் நீர்மொழிவது என்றும், இவண் நின்றது என்றுங் கொள்ளலாம். 34. 181. பிஞ்ஞகனும் நாவலர் பெருந்தகையை நோக்கி, என்னிடையும் நின்னிடையும் நின்றஇசை வால்யான் முன்உடையது ஓர்பெரு வழக்கினை முடித்தே நின்னுடைய வேள்வியினை நீமுயல்தி என்றான். பிஞ்ஞகனும் - சடைக்கோலமுடைய கயிலாய பதியும். நாவலர் - திருநாவலூரில் வந்தவர். ஆண்டான் தன்மை ஐயரிடத்தும், அடிமை என்பது நம்பியாரூரரிடத்தும் தொன்றுதொட்டே ஏற்பட்டனவாதலின் முன்னுடையது என்றார். யான் முன்னு டையது - யான் முன்னமே உடைத்தாயுள்ளது. வேள்வியினை - திருமணத்தை. முயல்தி - நடத்துவாய். என்னை விட்டுப் பிரிந்த வழக்கு என்பது குறிப்பு. இதனை இசைவால் என்பது உணர்த்தும். 35. 182. நெற்றி விழியான் மொழிய, நின்றநிகர் இல்லான், உற்றதுஓர் வழக்கு என்இடை நீ உடையது உண்டேல், மற்றுஅது முடித்து அலது யான் வதுவை செய்யேன்; முற்றஇது சொல்லுகஎன, எல்லைமுடிவு இல்லான். நெற்றி விழியான் - கண்ணுதலோன் (திருநகரச் சிறப்பு: பாட்டு 46 குறிப்பை நோக்குக). நிகர் இல்லான் - ஒப்பற்ற நம்பியாரூரர். வதுவை - கலியாணம். முற்ற - முழுவதும்; முடிய. அது - அவ் வழக்கு எல்லை முடிவு இல்லான். ஆதியந்த மில்லாத ஆண்டவன். இவ்வாறு நம்பியாரூரரைப் பேசச் செய்தது, அவரை அறியாது அவர்பால் மறைந்துள்ள பழையஉணர்வென்க. 36. 183. ஆவது இது கேண்மின் மறையோர்! என் அடியான் இந் நாவல் நகர் ஊரன்; இது நான் மொழிவது என்றான் தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர் யாவரையும் வேறு அடிமையா உடைய எம்மான். மறையோர் - மறையோர்களே. யான் சொல்வதாவது இது என்ற படி. சுந்தரர் அணுக்கத் தொண்டராதலின் அவர்க்குள்ள சிறப்பை ஈண்டு விளக்கியவாறு காண்க. 37. கலித்துறை 184. என்றான் இறையோன்; அது கேட்டவர், எம் மருங்கும் நின்றார், இருந்தார் இவன் என் நினைந்தான் கொல் என்று சென்றார், வெகுண்டார், சிரித்தார்; திரு நாவலூரர் நன்றால் மறையோன் மொழி என்று எதிர்நோக்கி நக்கார். கேட்டவர் - கேட்டவராய். எம்மருங்கும் - எப்பக்கத்திலும். நின்றாரும் இருந்தாரும் நக்கார் - சிரித்தார். 38. 185. நக்கான் முகம் நோக்கி நடுங்கி நுடங்கி யார்க்கும் மிக்கான், மிசை உத்தரியத் துகில் தாங்கி மேற்சென்று, அக்காலம் உன் தந்தை தன் தந்தை ஆள் ஓலை ஈதால், இக் காரியத்தை நீ இன்று சிரித்தது என்? Vl! என்ன. நுடங்கி - தள்ளாட; நுணுகி எனினுமாம். தாங்கி - விழாமல் தாங்கி. மேற்சென்று - மேலே சென்று; எதிர்த்து. ஆள் ஓலை - (எழுதிக் கொடுத்த) அடிமை ஓலை. ஏடா என்பது அடிமையை அழைக்கும் முறை. 39. அறுசீர் விருத்தம் 186. மாசுஇலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி நேசம்முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சியால் சிரிப்பு நீங்கி ஆசுஇல் அந்தணர்கள் வேறுஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல் - பேசஇன்று உன்னைக் கேட்டோம் ã¤jndh kiwnahŒ? என்றார். வள்ளல் - நம்பியாரூரர். நேசமானது பண்டே கிடந்த சிந்தைக் கசிவால். பண்டையுணர்வைக் குறிப்பால் உணர்த்தியவாறாம். ஆசுஇல் - குற்றமில்லாத. உன்னை - உன்னிடம். சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தில் சாதிகள் நிலைத்திருந்தன. அவைகட்கென வரம்புகளுங் கோலப்பட்டிருந்தன. அவ்வரம்புகளின்படி அந்தணர்க்கு அந்தணர் அடிமையாதல் இல்லை. சாதிவரம்புகளை அழிக்க வேண்டுமென்பது ஆண்டவன் திருவுள்ளம் போலும். 40. 187. பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக, நீ இன்று எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன்; அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று வித்தகம் பேச வேண்டா; பணிசெய வேண்டும்என்றார். சொன்னால் - சொன்னாலும். யாதும் - சிறிதும். வித்தகம் - விளையாட்டு மொழி; சாமர்த்திய மொழியுமாம். எதிரிலே நின்று என்னை அறிகிலை; அறியின் பணி செய்வாய், என்பது குறிப்பு. பணியை நினைப்பூட்டியவாறாம். 41. 188. கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகாநிற்கும் கொண்டதுஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்; உண்டுஓர் ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன்; என்று தொண்டனார் ஓலை காட்டு என்றனர் துணைவனாரை. முதலிரண்டடியைத் தன்மை வாய்ப்படுத்தியும் படர்க்கை வாய்ப்படுத்தியும் பொருள் கூறலாம். என்னாற் காணப்படுவதாகிய. . . . இவர் கொண்டதாகிய . . . . . ஓர் ஆளோலை உண்டு என்னும் அதன் இது தன்மை வழி. படர்க்கை வழி வெளிப்படை. தொண் டனார் - நம்பியாரூரர். முன்னே நேசமுன் கிடந்த சிந்தை நெகிழ்ச் சியால் என்றார். பண்பில் மிக்க விழைவுறு மனமும் பொங்க - பாட்டு 48 பார்க்க. ஆசிரியர், நம்பியாரூரர் தம் பழைய உணர்வைக் குறித்துக் கொண்டே போதல் கருதற்பாலது. தமது உயிர்த் துணைவனாரை; தமது உயிர்க்குத் துணைபுரிய வந்தவரை. 42. 189. ஓலை காட்டு என்று நம்பி உரைக்க, நீ ஓலை காணற் பாலையோ? அவை முன் காட்டப் பணி செயற் பாலை என்ற வேலையில், நாவலூரர் வெகுண்டு மேல்விரைந்து சென்று மால் அயன் தொடராதானை வலிந்து பின் தொடரல் உற்றார். காணற்பாலையோ - கண்டு உணர்தற்கு வல்லையோ. அவை முன் காட்ட - சபை முன் காட்டப்பட்ட பின். வேலையில் - வேளையில். வெகுண்டு - கோபித்து. நாவலூரர் ஆண்டவனருளால் இன்னும் மெய்யுணர்வு பெறாமையால் வெகுண்டெழுந்து தொடரலுற்றா ரென்க. இவ்வெகுளி கதிரவன் எழுமுன்னர்த் தோன்றுங் குமரி இருள் போன்றது என்பர் கா. சுப்பிரமணியம் பிள்ளை. 43. 190. ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன் காவணத் திடையே ஓடக் கடிதுபின் தொடர்ந்து நம்பி பூவணத் தவரை உற்றார்; அவர் அலால் புரங்கள் செற்ற ஏவணச் சிலையினாரை யார் தொடர்ந்து எட்ட வல்லார்? ஆவணம் - அடிமை ஓலை. காவணத்திடையே - பந்தரினூடே. பூவணத்தவரை - அழகிய நிறத்தையுடையவரை (சார்ந்ததனைத் தன் வண்ணமாக்கும் நெருப்புருவினரை என்பது குறிப்பு); திருப்பூவணத்தி லெழுந்தருளியுள்ள பெருமானை என்றலுமொன்று. உற்றார் - அடைந்தார். அவர் அலால் - நம்பியாரூரரை அல்லாமல். ஏவணச் சிலையினாரை - அம்பு பூட்டிய மேரு என்னும் வில்லையுடையவரை. ஏ - அம்பு. வெகுளிக்கு அடிப்படையாயுள்ள தத்துவக் காரியங் களைக் குருநாதன் குலைத்தல் புரங்கள் செற்ற ஏவணச் சிலையினார் என்பதால் உணரற்பாற்று. வெகுளியற்றதும், ஆண்டவனைத் தொடரவல்லாராவர் என்க. ஆண்டவன் அடியார் கட்கு அருள்புரியும் போது, முப்புரம் எரித்த கதையை ஆசிரியர் குறிப்பது வழக்கம். முப்புரம் எரித்தது என்பது புராணக் கதை. அதன் நுட்பம் மும்மலத்தை எரிப்பது என்பது. அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் - முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமையார் அறிவாரே திருமூலர். 44. 191. மறைகள் ஆயின முன் போற்றி மலர்ப்பதம் பற்றி நின்ற இறைவனைத் தொடர்ந்து பற்றி எழுதும் ஆள் ஓலை வாங்கி, அறை கழல் அண்ணல் ஆளாய் அந்தணர் செய்தல் என்ன முறை எனக் கீறியிட்டார்; முறையிட்டான் - முடிவு இலாதான். முன் - முற்படுத்தி; முன்னாளில் எனினுமாம். எழுதும் - எழுதப் பட்டிருக்கும். அறைகழல் அண்ணல் - ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த பெருமையிற் சிறந்த நம்பியாரூரர். கீறி இட்டார் கிழித் தெறிந்தார். வெகுளிளயைக் கீறியது என்க. 45. 192. அருமறை முறையிட்டு இன்னும் அறிவதற்கு அரியான் பற்றி, ‘xU Kiw Kiwnah? என்ன உழை நின்றார் விலக்கி இந்தப் பெரு முறை உலகில் இல்லா நெறி கொண்டு பிணங்குகின்ற திருமறை முனிவரே! நீர் v§Fcç® br¥ò«? என்றார். அரியான் - இறைவன். பற்றி - நம்பியாரூரரைப் பிடித்து. உழை நின்றார் - அருகில் நின்றவர்கள். பிணக்குகின்ற சண்டையிடுகின்ற முறையோ என்று கூவியது வன்றொண்டர் வெகுளியை ஒதுக்கிய தாகும். 46. 193. என்றலும் நின்ற ஐயர் இங்கு உளேன் இருப்பும் சேயது அன்று; இந்த வெண்ணெய்நல்லூர், அது நிற்க, அறத்து ஆறுஇன்றி வன்திறல் செய்து என் கையில் ஆவணம் வலியவாங்கி நின்று இவன் கிழித்துத் தானே நிரப்பினான் அடிமை என்றான். இங்குளேன் - தற்போது இங்கேயிருக்கிறேன். இருப்பும் சேயது அன்று - இருப்பிடமும் தூரமன்று. அறத்து ஆறு -.தரும வழி, வன் திறல் - பலாத்காரம். ஆவணம் - அடிமை ஓலை. அடிமை என்பதை உறுதிப்படுத்தினான் என்றபடி. 47. 194. குழைமறை காதினானைக் கோதுஇல் ஆரூரர் நோக்கிப் பழைய மன்றாடி போலும் இவன் என்று பண்பின் மிக்க விழைவு உறு மனமும் பொங்க வெண்ணெய் நல்லூராயேல் உன் பிழைநெறி வழக்கை ஆங்கே பேச நீ போதாய் என்றார். குழை மறை காதினானை - குண்டலத்தை மறைத்து வந்த ஆண்டவனை. கோது இல் - குற்றமில்லாத. பழைய மன்றாடி - வழக்கில் கை தேர்ந்தவன். பழைய திருடன் என்பது போன்றது. மன்றாடி - நியாயசபையில் வழக்காடி; அம்பலத்தாடி; சிவபிரான் என்பது குறிப்பு. பிறவி வழக்கு என்பது நுட்பம்; மன்றுள் நிறைந்து பிறவி வழக்கறுக்க - நின்ற நிருத்த நிலைபோற்றி -போற்றிப் பஃறொடை 7 - 8. மறையவர் தோற்றமும் பிறவும் நம்பியாரூரர்க்கு அவர் தம் வழிபடு தெய்வமாகிய மன்றாடியின் நினைவூட்டின போலும். மன்று - சபை. இது மரத்தடியினின்றும் பிறந்தது. மன்று- மரத்தடி. பண்டை நாளில் மரத்தடியில் பஞ்சாயத்துக் கூடி வழக்கு முதலியவற்றைப் பேசுவது வழக்கம். அதனால் மன்று மன்றம் என்பது சபைக்குப் பெயராக நாளடைவில் வழங்கலாயிற்று. மன்றமும் பொதியிலும் -திருமுருகாற்றுப்படை 226. மன்றில் வதியுநகர் சேட்புலப் பரிசிலர் -மலைபடுகடாம் 492. மன்றமும் ஊருக்கு நடுவாய் எல்லாருமிருக்கும் மரத்தடியினும். மன்றில் வதியுநர் - அம்பலங்களிலே தங்குவார் -நச்சினார்க்கினியம். அன்புத் தன்மை யில் - மிக்க விருப்புப் கொண்ட நன்மனமும் கோபத்தால் பொங்க; இயல் புக்கு மாறாக என்றபடி; . . . . . மனம்மட்டும் காதலால் பொங்க என்று கொள்ளின், அது பழைய உணர்ச்சியைக் குறிப்பிதாகுமென்க. 48. 195. வேதியன் அதனைக் கேட்டு வெண்ணெய் நல்லூரிலே நீ போதினும் நன்று; மற்று அப் புனித நான்மறையோர் முன்னர் ஆதியில் மூல ஓலை காட்டி, நீ அடிமை ஆதல் சாதிப்பன் என்று முன்னே தண்டுமுன் தாங்கிச் சென்றான். ஆதியில் - ஆதியிலே எழுதிக்கொடுத்த. ஆதியில் மூல ஓலை - பிரணவம் என்பது குறிப்பு. முன்னே - நம்பியாரூரர்க்கு முன்னே. முன் - விரைவில். 49. 196. செல்லும்மா மறையோன் தன்பின் திரிமுகக் காந்தம் சேர்ந்த வல்இரும்பு அணையுமாபோல், வள்ளலும் கடிது சென்றார்; எல்லைஇல் சுற்றத் தாரும் இது என் ஆம் என்று செல்ல, நல்ல அந்தணர்கள் வாழும் வெண்ணெய் நல்லூரை நண்ணி. திரிமுகம் - ஈர்க்கின்ற முகமுடைய (திரிதல் மாறுபடுதல்; அத னின்றும் ஈண்டு ஈர்த்தல்). வள்ளல் - நம்பியாரூரர். சுற்ற மென்னுந் தொல்பசுக் குழாங்கள் -திருவாசகம் : போற்றி 48. சுற்றம் என்னும் வினையுளே. -அப்பர் நாகை திருநேரிசை - 1. 50. 197. வேத பாரகரின் மிக்கார் விளங்கு பேர்அவை முன்சென்று நாதன் ஆம் மறையோன் சொல்லும் நாவலூர் ஆரூரன் தான் காதல்என் அடியான் என்னக் காட்டிய ஓலைகீறி, மூது அறிவீர்! முன் போந்தான்; இது என்றன் முறைப்பாடு என்றான். மறையவர்களில் மிக்கார். உங்கள் முன் அவனே போந்தான். 51. 198. அந்தணர் அவையில் மிக்கார் மறையவர் அடிமை ஆதல் இந்த மாநிலத்தில் இல்லை; என் சொன்னாய்? ஐயா! என்றார் வந்தவாறு இசைவே அன்றோ? வழக்கு இவன் கிழித்த ஓலை தந்தைதன் தந்தை நேர்ந்தது என்றனன் தனியாய் நின்றான். வழக்கு - வழக்குக்கு யான் வந்தவாறு பொருத்தமுடைய தல்லவோ. நேர்ந்தது - எழுதிக் கொடுத்தது. ஆண்டவன் தத்துவக் கட்டில்லாதவன் ஆதலின் தனியாய் என்றார். 52. 199. இசைவினால் எழுதும் ஓலை காட்டினான் ஆகில், இன்று விசையினால் வலிய வாங்கிக் கிழிப்பது வெற்றி ஆமோ? தசை எலாம் ஒடுங்க மூத்தான் வழக்கினைச் சாரச் சொன்னான்; அசைவு இல் ஆரூரர் எண்ணம் என்? என்றார் அவையின் மிக்கார். இசைவினால் எழுதும் - உடன்பாட்டின்மீது எழுதப்பட்ட. விசையினால் - வேகத்தால். சார - பொருந்துமாறு; ஏற்குமாறு. அசைவில் - மனக்கவலையற்ற; அரசரால் வளர்க்கப் பெற்றவ ராதலின் கவலையற்றிருந்தவர் என்றபடி; என்ன நேருமோ என்று அசைவற்று நின்றார் என்னலுமாம். தசையெலாம் ஒடுங்க என்பது நம்போலப் பிறப்பு இறப்புக்குரிய மாயா காரிய தசை தாங்கினவனல்லன் என்பதை உணர்த்துவது. மூத்தான் - முற்றறிவுடையான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி -திருவாசகம்; பிடித்த. 53. 200. அனைத்துநூல் உணர்ந்தீர்! ஆதி சைவன் என்று அறிவீர் என்னைத் தனக்கு வேறு அடிமை என்றுஇவ் அந்தணன் சாதித்தானேல் மனத்தினால் உணர்தற்கு எட்டா மாயை; என் சொல்லுகேன் யான்? எனக்கு இது தெளிய ஒண்ணாது என்றனன் எண்ணம் மிக்கான் அந்தணர்க்கு அந்தணர் அடிமையாதலும், அதற்கென ஓலை யும் - உலகில் நேராத வழக்கை விசாரிக்க மறையோர் இசைந்ததும். பிறவும் உணர்விற்கெட்டா மாயை என்றபடி; ஆண்டவன் அருளாடல், பசுபாச உணர்விற்கெட்டாதது என்பது கருத்து . தெளிய ஒண்ணாது என்பதும், எண்ணமிக்கான் என்பதும் நம்பியாரூரர் தம் பசுபாச கரணங்களைச் சிவகரணமாக மாற்றிவரூஉங் குறிகளென்க. 54. 201. அவ்உரை அவையின் முன்பு நம்பியாரூரர் சொல்லச் செவ்விய மறையோர், நின்ற திருமுறை முனியை நோக்கி, இவ்உலகின் கண் நீர் இன்று இவரை நும் அடிமை என்ற வெவ்உரை எம்முன்பு ஏற்ற வேண்டும் என்று உரைத்து, மீண்டும் செவ்விய - நடுநிலையுடைய. வெவ்வுரை - (அந்தணர்க்கு அந்தணர் அடிமை என்னும்) தீ மொழியை; வழக்கத்திலில்லாத உரை வெவ்வுரை என்னப்பட்டது. ஏற்ற வேண்டும் ஏற்றி உறுதிப்படுத்தல் வேண்டும். 55. 202. ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய் என்ன, முன்னே மூட்சியில் கிழித்த ஓலை படிஓலை, மூல ஓலை மாட்சியில் காட்ட வைத்தேன் என்றனன் மாயை வல்லான். ஆட்சியில் - அநுபவத்தில். ஆவணத்தில் - இலிகிதத்தில். அயலார் தங்கள் காட்சியில் - சாட்சியில். மூட்சியில் - மூண்டெழுந்த கோபத்தால். கிழித்தது கோபம்; நம்பியாரூரர் இயல்பு அன்று என்பது நுட்பம். படியோலை - மூல ஓலையைப் பார்த்து எழுதிய ஓலை. மாட்சியில் - பெருமையுடன்; வழக்கு விளக்கத்தில். 56. 203. வல்லையேல் காட்டு இங்கு என்ன, மறையவன் வலி செய்யாமல் சொல்ல நீர் வல்லீர் ஆகில் காட்டுவேன் என்று சொல்லச் செல்வ நான்மறையோய்! நாங்கள் தீங்குற ஒட்டோம் என்றார்; அல்லல் தீர்த்து ஆளநின்றான் ஆவணம் கொண்டு சென்றார். (காட்ட) வல்லையேல். மறையவன் - இறைவன். ஆரூரன் முன்புபோல் வலிசெய்யாமல். நம்பியாரூரர்தம் அல்லல் தீர்த்து அவரை ஆளநின்ற இறைவன். 57. 204. இருள்மறை மிடற்றோன் கையில் ஓலைகண்டு அவையோர் ஏவ அருள்பெறு கரணத் தானும் ஆவணம் தொழுது வாங்கிச் சுருள்பெறு மடியை நீக்கி விரித்தனன்; தொன்மை நோக்கித் தெருள்பெறு அவையோர் கேட்ப வாசகம் செப்புகின்றான். இருள்மறை மிடற்றோன் - கரிய நஞ்சை மறைத்த கண்டத்தை யுடைய சிவபிரான். அன்பர்தம் இருளை மறைத்து அருள் வழங்குவோன் என்பது குறப்பு. சிற்றுயிர்க் கிரங்கிக் காய்சின ஆல முண்டாய் அமுதுண்ணக் கடையவனே -திருவாசகம் : நீத்தல் 50 கரணத்தானும் - கணக்கனும். ஆவணம் ஆண்டவனுடையதாதலின் அதை வாங்கிப் படிப்போனது கரணம் அருள் பெறும் புண்ணிய முடையதாயிற்று என்பது குறிப்பு. தொன்மை - பழமை. பழமையா யிருந்தமையால் உற்று நோக்கி. தெருள் - தெளிவு. 58. 205. அருமறை நாவல் ஆதி சைவன் ஆரூரன் செய்கை பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கு யானும் என் பால் வருமுறை மரபு உளோரும் வழித்தொண்டு செய்தற்கு ஓலை இருமையால் எழுதி நேர்ந்தேன்; இதற்குஇவை என் எழுத்து! செய்கை - எழுதிக் கொடுப்பது; செய்கைப் பெருமுனி என்று கொண்டு ஒழுக்கமும் பெருமையுமுடைய முனி என்று கூறினும் பொருந்தும். இருமையால் - உள்ளும் புறமும் ஒத்து. நேர்ந்தேன் - கொடுத்தேன். என் எழுத்து - என் கையெழுத்து. 59. 206. வாசகம் கேட்ட பின்னர் மற்று மேல் எழுத்து இட்டார்கள் ஆசுஇலா எழுத்தை நோக்கி அவை ஒக்கும் என்ற பின்னர் மாசு இலா மறையோர் ஐயா! மற்று உங்கள் பேரனார் தம் தேசுடை எழுத்தே ஆகில் தெளியப் பார்த்து அறிமின் என்றார். மேலெழுத்து இட்டார் - சாட்சிக் கையெழுத்திட்டவர்கள். ஆசிலா - குற்றமில்லாத. ஐயா! நம்பியாரூரரே. பேரனார் - பாட்ட னார். தேசு - அழகு; ஒலி; இங்கே மெய்ம்மையின் மேற்று. பொருந்தா வழக்காயினும் மறையவர்கள் நடுநிலை பிறழாது அதனை விசாரித் தலான், அவர் மேலே செவ்விய மறையோர் என்றும், இங்கே மாசிலா மறையோர் என்றுஞ் சொல்லப்பட்டார். 60. 207. அந்தணர் கூற இன்னும் ஆள் ஓலை இவனே காண்பான் தந்தைதன் தந்தை தான் வேறு எழுது கைச் சாத்து உண்டாகில், இந்த ஆவணத்தினோடும் எழுத்து நீர் ஒப்பு நோக்கி வந்தது மொழிமின் என்றான் வலிய ஆட்கொள்ளும் அண்ணல். சபையிலுள்ள அந்தணர்கள் இவ்வாறு கூற, நம்பியாரூரரை வலிய ஆட்கொள்ளவந்த வள்ளல், ஆளோலை இவனோ காண வல்லான். . . . என்றார். இவன் சிறுவனாதலின் பாட்டன் கையெழுத்தை அறிய வல்லான் அல்லன் என்றபடி. கைச்சாத்து - கையெழுத்து. வந்தது - உங்கள் மனத்தில் தோன்றியதை. ஆரூரர் இனி உறவினர்க்கு உரியர் அல்லர் என்பது குறிப்பு. 61. 208. திரண்ட மாமறையோர் தாமும் திருநாவலூரர் கோமுன் மருண்டது தெளிய மற்ற மறையவன் எழுத்தால் ஓலை, அரண்தரு காப்பில் வேறுஒன்று அழைத்து உடன் ஒப்பு நோக்கி, இரண்டும் ஒத்து இருந்தது என்னே இனிச்செயல் இல்லை என்றார். திருநாவலூரர் கோமுன் - நம்பியாரூரர் முன்னிலையில். மருண்டது தெளிய - (மயக்கம்) சந்தேகம் தெளிய. முன்னே மருண்டது தெளிய என்னலுமாம். மறையவன் எழுத்தால் ஓலை - நம்பியா ரூரரின் பாட்டனார் கையெழுத்தாலாகிய ஓலை. அரண்தரு காப்பில் - (அவர்தம் வீட்டில்) பாதுகாப்பிலுள்ள. என்னே - அந்தணர்க்கு அந்தணர் அடிமை ஓலை எழுதிக் கொடுத்தது என்னும் வியப்பு. 62. 209. நான் மறை முனிவனார்க்கு நம்பியாரூரர்; தோற்றீர்; பான்மையின் ஏவல் செய்தல் கடன் என்று பண்பின் மிக்க மேன்மையோர் விளம்ப, நம்பி விதிமுறை இதுவே ஆகில் யான் இதற்கு இசையேன் என்ன இசையுமோ என்று நின்றார். பான்மையின் - விதியால். இன்புடன் என்றலுமொன்று. குலவிய புலுவத்தாட்கு வந்தடை பான்மை. . . . . ; கனிபடு கிளிவியர்தங் காதலர் கவானில் துஞ்சில் - பனியிரு விசும்பில் தேவர் பான்மையிற்று -சிந்தாமணி 539, 553 பண்பில் - குணத்தில்; நீதியில். தங்கள் மரபுக்குப் பொருந்தா வழக்கென்பதையுணர்ந்தும் மறை யவர்கள் அநியாயத் தீர்ப்பு அளித்தார்களில்லை. மரபு நூல் வழக்கம் முதலியவற்றைப் பொருட்படுத்தாது அவர்கள் நீதி வழியே நின்று கடனாற்றியது கருதற்பாலது. அவர் அல்லரோ அந்தணர்? நம்பி யாரூரரும் மறையவர்கள் அளித்த தீர்ப்பை மீறத் துணிந்தாரில்லை. அவர் தம் பெருந்தகைமையும் போற்றற்பாலதே. அந்தணர்க்கு அந்தணர் அடிமையாதல் இல்லை என்னும் ஆட்சி வீழ்ந்துபட்டதை உன்னுக. 63. 210. திருமிகு மறையோர் நின்ற செழுமறை முனியை நோக்கி, அருமுனி! நீ முன் காட்டும் ஆவணம் அதனில் எங்கள் பெருமைசேர் பதியே ஆகப் பேசியது உமக்கு இவ் ஊரில் வருமுறை மனையும் நீடு வாழ்க்கையும் காட்டுக என்றார். அவையோர் தீர்ப்புக் கூறிய பின்னும் தமது மனச்சான்றை நடுநிலையில் நிறுத்திக்கொள்ளச் சிந்தித்து, முனிவரை நோக்கி அவர்தம் இருப்பிடம் முதலியவற்றைக் கேட்டனர். வருமுறை - தலை முறை தலைமுறையாக வந்து கொண்டிருக்கும். நீடு - நீண்ட கால. வாழ்க்கையும் வாழ்க்கைக்குரிய நிலபுலம் பொருள் முதலியனவும். 64. 211. பொருஅரும் வழக்கால் வென்ற புண்ணிய முனிவர் என்னை ஒருவரும் அறியீர் ஆகில் போதும் என்று உரைத்துச் சூழ்ந்து பெரு மறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத் திருஅருள் துறையே புக்கார், கண்டிலர் திகைத்து நின்றார். பொருவரும் - ஒப்பற்ற. உலகிடை நடைபெறா வழக்காதலின் பொருவரும் வழக்கு என்றார். அந்தணர்க்கு அந்தணர் அடிமை யாதல் இல்லை என்பதை உடைத்தது சிறந்த வெற்றியேயாகும். போதும் - என்னுடன் வாருங்கள். குழாமும் - கூட்டமும். திருவருட் டுறை. திருவெண்ணெய் நல்லூர் கோயிலின் பெயர், தத்துவங்கள் ஒடுங்குமிடத்தில் அருட்டுறை விளங்குதல் இயல்பு. உடன் சென்றவர் கண்டிலர். 65. 212. எம்பிரான் கோயில் நண்ண இலங்குநூல் மார்பர் எங்கள் நம்பர்தம் கோயில் புக்கது v‹bfhnyh? என்று நம்பி தம்பெரு விருப்பினோடு தனித் தொடர்ந்து அழைப்ப, மாதோடு உம்பரின் விடைமேல் தோன்றி அவர் தமக்கு உணர்த்தல் உற்றார். மார்பர் - நம்பியாரூரர். மார்பின் என்ற பாடங் கொள்ளின் மார்பினராகிய எங்கள் நம்பர் (சிவபெருமான்) என்று பொருள் கூறுக. தனித் தொடரலாவது தத்துவக் குறும்புகளினின்றும் விடுதலை யடைந்து சிவத்தைத் தொடர்வது. ஆன்மா சார்ந்தன் வண்ணமாவது, நம்பியாரூரர் முன்னே கூட்டங்களுடன் அதாவது தத்துவங்களுடன் கூடி வழக்கிட்ட போது ஆண்டவன் வெளிப்பட்டானில்லை. இப்பொழுது அவர் தனியே அதாவது தத்துவங்களினின்று விடுதலை யடைந்து அழைக்க, ஆண்டவன் வெளிப்பட்டான் என்க. ஆறொடு முப்பதும் அங்கே அடங்கிடில் கூறக் - குருபரன் கும்பிடு தந்திடும் -திருமூலர். உம்பரில் - விண்ணில். 66. 213. முன்பு நீ நமக்குத் தொண்டன், முன்னிய வேட்கை கூரப் பின்பு நம் ஏவலாலே பிறந்தனை; மண்ணின் மீது துன்புஉறு வாழ்க்கை நின்னைத் தொடர்வுஅறத் தொடர்ந்துவந்து நன்புல மறையோர் முன்னர் நாம் தடுத்து ஆண்டோம் என்றார். சுந்தரர் கயிலையில் அணுக்கத் தொண்டர் என்பது திருமலைச் சிறப்பால் தெரிகிறது. இது சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார் என வரூஉம் அப்பர் திருவாக்கானும் (தனித் திருத் தாண்டகம் 5) தெளிவு பெறுகிறது. முன்னிய - மனதாற் கருதிய. வேட்கை கூரலாவது சேடிமார் மீது காதல் கூர்ந்தது; திருமலைச் சிறப்பு: 27, 28, 29 பாக்களைப் பார்க்க. இம்மண்மேல் நானாக வகுத்தனை சுந்தரர்; திருநெல்வாயில் -திருவரத்துறை 2. கயிலையில் கொண்ட வேட்கை முறைப்படி நிகழ வேண்டுவது. அதற்கு மாறு பட்டதொன்று துன்பந் தருவதாதலின் துன்புறு வாழ்க்கை என்றார். முன்னையது திருவருள்வழி நிகழப்போகிறது என்பது குறிப்பு. நன்புலம் - நல்லறிவுடைய. 67. 214. என்று எழும் ஓசை கேளா ஈன்ற ஆண் கனைப்புக் கேட்ட கன்றுபோல் கதறி, நம்பி கர சரணாதி அங்கம் துன்றிய புளகம் ஆகத் தொழுதகை தலைமேல் ஆக, மன்றுளீர் செயலோ வந்து வலிய ஆட்கொண்டது? என்றார். கரம் சரண் ஆதி அங்கம் - கைகால் முதலிய உறுப்புகளில். துன்றிய புளகம் ஆக - நெருங்கியெழுந்த மயிர்சிலிர்ப்பு உண்டாக. முன்னே பழைய மன்றாடி என்றது இங்கே நம்பியாரூரருக்கு விளங்கலாயிற்று. 68. 215. எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பு இடை நிறைய, எங்கும் விண்ணவர் பொழிபூ மாரி மேதினி நிறைந்து விம்ம, மண்ணவர் மகிழ்ச்சி பொங்க, மறைகளும் முழங்கி ஆர்ப்ப, அண்ணலை ஓலை காட்டி ஆண்டவர் அருளிச் செய்வார். எண்ணிய - எல்லாரும் அறியுமாறு. ஓசை ஐந்தும் - தோற் கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, மிடற்றுக்கருவி, கஞ்சக்கருவி ஆகிய ஐந்து வாத்தியங்களின் ஓசை. விசும்பிடை - விண்ணிடை. மேதினி - மண்ணுலகில். விம்ம - நெருங்கிப் பொலிய; கமழ. ஆர்ப்ப - ஆரவாரிக்க. அண்ணலை - பெருமையிற் சிறந்த நம்பியாரூரரை. ஆண்டவர் - சிவபெருமான். 69. 216. மற்று நீ வன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை; நமக்கும் அன்பின் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டே ஆகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொல் தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார். தன்மையினா லடியேனைத் தாமாட் கொண்ட நாட்சபை முன் - வன்மைகள் பேசிட வன்தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார் சுந்தரர் : திருநாவலூர் 2. திருக்கடைக் காப்பில் பல விடங்களில் வன்தொண்டன் என்று சுந்தரர் தம்மைக் குறித்தி ருத்தலையும் நோக்குக. நமக்கும் என்பது விருப்பு வெறுப்பற்ற இயல்பை உணர்த்துவது பலதிற அர்ச்சனைகளுள் பாட்டே சிறந்ததென்க. சொல் தமிழ் - இன்சொற்றமிழ்; புகழ்த் தமிழ். தூய மறைபாடும் வாயார் தமிழ்ப் பாடலைத் தம் அன்பர் வாயிலாகக் கேட்க வேட்டது. தமிழின் மாண்பையும் இனிமையையும் பிறவற்றையும் தெரிவிப்பதாகும். 70. 217. தேடிய அயனும் மாலும் தெளிவுறா, ஐந்தெழுத்தும் பாடிய பொருளாய் உள்ளான் பாடுவாய் நம்மை என்ன நாடிய மனத்தர் ஆகி நம்பியாரூரர், மன்றுள் ஆடிய செய்ய தாளை அஞ்சலி கூப்பி நின்று. தெளிவுறா - தெளியாத. பாடிய - போற்றிய; சொல்லிய. செய்ய - சிவந்த; அழகிய. 71. 218. வேதியன் ஆகி என்னை வழக்கினால் வெல்ல வந்த ஊதியம் அறியாதேனுக்கு உணர்வு தந்து உய்யக் கொண்ட கோதுஇலா அமுதே! இன்றுஉன் குணப் பெருங்கடலை நாயேன் யாதினை அறிந்துஎன் சொல்லிப் பாடுகேன்? என மொழிந்தார். ஊதியம் - இலாபம்; பயன். கோதிலா அமுதே -சுந்தரர்; திரு வாவடுதுறை 8; திருவாசகம்: கோயில் 5. அறிந்து என் சொல்லி. 72. 219. அன்பனை அருளின் நோக்கி அங்கணர் அருளிச் செய்வார், முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே என் பெயர் பித்தன் என்றே பாடுவாய் என்றார்; நின்ற வன்பெருந் தொண்டர் ஆண்ட வள்ளலைப் பாடல் உற்றார். அருளால் நோக்கி அங்கணர் - அழகிய கண்ணையுடைய சிவ பெருமான். ஆண்டவன் பித்தன் என்னும் பெயர் பெற்றான். அடியவர் வன்றொண்டர் என்னும் பெயர் பெற்றார். ஆண்டவன் அருள் நாதம் வன்றொண்டரிடம் பதிந்தது. 73. சந்தக் கலி விருத்தம் 220. கொத்துஆர்மலர்க் குழலாள் ஒரு கூறுஆய் அடியவர்பால் மெய்த்தாயினும் இனியானை அவ் வியன் நாவலர் பெருமான் பித்தாபிறை சூடி எனப் பெரிதுஆம் திருப் பதிகம் இத்தாரணி முதல் ஆம்உலகு எல்லாம்உய எடுத்தார். கொத்தார் மலர் குழலாள் - பூங்கொத்து நிறைந்த மலரணிந்த கூந்தலையுடைய உமையம்மையார். பாயிரம்: பாட்டு 3 குறிப்புப் பார்க்க. உமையம்மையார் - திருவருள்; அத்திருவருள் தாய்மையைக் குறிப்பது. அத்தாய்மை உலகிலுள்ள உயிர்த்தாய்மை கட்கெல்லாம் வற்றா ஊற்றாயிருத்தலானும், அதற்கு ஒத்ததும் மிக்கதுமாய தாய்மை யாண்டு மின்மையானும், மெய்த்தாயினும் இனியாள் என்றார். தாயினும் நல்ல சங்கரன் -அப்பர்; ஆதி புராணம் 9. பால் நினைந்தூட்டும் தாயினுஞ் சாலப்பரிந்து நீ -திருவாசகம் பிடித்த பத்து 9. வியன் - பெருமை 74. 221. முறையால் வரு மதுரத்துடன் மொழிஇந்தளம் முதலில் குறையாநிலை மும்மைப்படி கூடும் கிழமையினால் நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகழ் வகையால் இறையான் மகிழ் இசைபாடினன் எல்லாம் நிகர் இல்லான். முறையால் வரு மதுரத்துடன். படிப்படியாய் உயர்ந்து வருகிற வரவின்னியாஸ விசேஷங்களால் உண்டாகிற நயப்புடன் என்பர் மகாலிங்கையர்; முறைமையால் வரும் இனிமையுடன். இந்தளம் - இந்தளம் என்னும் பண்ணை. மும்மைப்படி - நலிதல் படுத்தல் எடுத்தல்; துரிதம் விளம்பிதம் மத்தியம் என்னும் முறைமைப்படி. கூடும் கிழமையினால் - பொருந்தும் உரிமையோடு. பாணியில் நிறை இசைகோள் புணர் - கையால் மேற்கூறிய பண்ணுடன் இயையத் தாளம் பொருத்தி. நீடும் புகழ் - மிகவும் புகழ்கின்ற. இறையான் - சிவபெருமான். எல்லாம் நிகரில்லான் - எல்லாவற்றாலும் நிகரில்லாத வராகிய நம்பியாரூரர். 75. 222. சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன்தனை இன்னும் பல்ஆறு உலகினில் நம்புகழ் பாடுஎன்றுஉறு பரிவில் நல்லார் வெண்ணெய் நல்லூர்அருள் துறைமேவிய நம்பன் எல்லாஉலகு உய்யப்புரம் எய்தான் அருள் செய்தான். சொல்லார் - இன் சொல் நிறைந்த. மொழிக்கு மொழி தித்திப் பாக மூவர் சொல்லுந் தமிழ் -தாயுமானார்: கல்லாலின் 14. பல்லாறு - பல வழியில். உறுபரிவில் - மிக்க அன்பால். நல்லார் - நன்மக்கள். புரம் எய்தான் - முப்புரங்களையும் அழித்த சிவபெருமான். 76. 223. அயல்ஓர்தவம் முயல்வார்பிறர் அன்றே? மணம் அழியும் செயலால் நிகழ் புத்தூர்வரு சிவவேதியின் மகளும் உயர்நாவலர் தனி நாதனை ஒழியாதுஉணர் வழியில் பெயராதுஉயர் சிவலோகமும் எளிதுஆம்வகை பெற்றாள். மணம் அழியும் செயலால் - மணந் தவறிய செயலால். நிகழ்-நிகழ்ச்சியையுடைய. சிவவேதியன் - சடங்கவி சிவாசாரியார். உணர் வழியில் பெயராது - தியானிக்கும் வழியினின்றும் பிறழாது. இதற்கு அயலோர் தவ முயல்வர். அவர் பிறர் (அன்னியரே) ஆவர். பிறர் அயலில் சென்று ஒரு தவம் முயல்வார் என்று கூறுவோருமுளர். நம்பியாரூரரைத் தியானிப்பதால் சிவலோகத்தை எளிதில் பெறக் கூடும் என்பது உணரத்தக்கது. அதில் முதன்மைப் பேறு பெற்றவர் புத்தூர்ச் சடங்கவி சிவாசாரியர் அருமைப் புதல்வியார் என்க. 77. 224. நாவலார்கோன் ஆரூரன் தனைவெண்ணெய் நல்லூரில் மேவும் அருள் துறை அமர்ந்த வேதியர் ஆட்கொண்டதற்பின் பூஅலரும் தடம்பொய்கைத் திருநாவலூர் புகுந்துதேவர் பிரான்தனைப் பணிந்து திருப்பதிகம் பாடினார். நாவலர் கோனாகிய ஆரூரன் தன்னை. வேதியர் - சிவருமான் ஆண்டவன் தம்மைத் தடுத்தாட்கொண்ட திறத்தைப் பல விடங் களில் பலவாறு நம்பியாரூரரே திருப்பதிகங்களில் விதந்தோதி யுள்ளார். அவ்வகச் சான்றுகளிற் சில வருமாறு: ஓண காந்தன் தளியுளார் தாம் ஆவணஞ் செய்து ஆளுங்கொண்டு திருவோண காந்தன்றளி 10; வெண்ணெய்நல்லூரில் வைத்து என்னை ஆளுங்கொண்ட நாவலனார், தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள் சபைமுன் வன்மைகள் பேசிட வன்தொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார், ஓர் ஆவணத்தால் எம்பிரானார் வெண்ணெய் நல்லூரில் வைத்தென்னை ஆளுங்கொண்ட நம்பி ரானார், அடக்கங் கொண்டு ஆவணங் காட்டி நல்வெண்ணெயூர் ஆளுங் கொண்டார், திருநாவலூர் : 1, 2, 5, 10 நேசத்தினால் என்னை ஆளுங்கொண்டார் திருநின்றியூர் மெய்யேவந்து இங்கு எனை ஆண்ட மெய்யா திரு வாலங்காடு 2 அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆளதாக என்று ஆவணங்காட்டி, நின்று வெண்ணெய் நல்லூர் மிசை ஒளித்த நித்தி லத்திரள் தொத்தினை -திருக்கோலக்கா 5. வெண்ணெய் நல்லூரில், அற்புதப்பழ ஆவணங் காட்டி அடியனாய் என்னை ஆளது கொண்ட நற்பதத்தை -திருநள்ளாறு 6. மண்ணின் மேல் மயங்கிக் கிடப்பேனை வலிய வந்தெனை ஆண்டு கொண்டானே -திரு வாவடுதுறை 1. தடம் - விசாலமான. மத்தம் மதயானையின்வெண் மருப்புந்தி முத்தங் கொணர்ந்தெற்றியோர் பெண்ணை வடபால் பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர் அத்தா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே -தேவாரம் 225. சிவன் உறையும் திருத் துறையூர் சென்று அணைந்து தீவினையால் அவநெறியில் செல்லாமே தடுத்து ஆண்டாய் அடியேற்குத் தவ நெறி தந்து அருள் என்று தம்பிரான் முன் பவநெறிக்கு விலக்கு ஆகும் திருப்பதிகம் பாடினார். 78. 225. சிவன் உறையும் திருத்துறையூர் சென்றுஅணைந்து தீவினையால் அவநெறியில் செல்லாமே தடுத்துஆண்டாய் அடியேற்குத் தவநெறிதந்து அருள்என்று தம்பிரான் முன்நின்று பவநெறிக்கு விலக்குஆகும் திருப்பதிகம் பாடினார். அவம் - பாவம். பவம் - பிறப்பு. 79. 226. புலன்ஒன்றும்படி தவத்தில் புரிந்தநெறி கொடுத்தருள அலர்கொண்ட நறுஞ்சோலைத் திருத்துறையூர் அமர்ந்துஅருளும் நிலவும் தண் புனலும்ஒளிர் நீள் சடையோன் திருப்பாதம் மலர்கொண்டு போற்றிசைத்து வந்தித்தார் வன்தொண்டர். புலன் ஒன்றும்படி - புலன்கள் ஒருமையிற் பொருந்தும்படி. தவத்தில் புரிந்த நெறி - தவத்திலே வன்தொண்டர் விரும்பிய நெறியை. அலர் - பூக்கள். புறம்பேயும் அரன் கழல்கள் பூசிக்க வேண்டில் பூ மரத்தின் கீழ் உதிர்ந்த போதுகளுங் கொண்டு. சிறந் தாருஞ் சீர்ச்சிவனை ஞானத்தால் அங்குச் சிந்திக்கும்படி இங்கும் சிந்தித்துப் போற்றி -சிவஞான சித்தியார்: சுபக்கம் சூத்திரம் 8 - 38. 80. 227. திருத்துறையூர்தனைப் பணிந்து, சிவபெருமான் அமர்ந்தருளும் பொருத்தம்ஆம் இடம்பலவும் புக்குஇறைஞ்சிப் பொன்புலியூர் நிருத்தனார் திருக்கூத்துத் தொழுவதற்கு நினைவுஉற்று வருத்தம்மிகு காதலினால் வழிக்கொள்வான் மனம்கொண்டார். பொற்புலியூர் - சிதம்பரத்தில். நிருத்தனார் - ஆடல் புரிவோர். வருத்தமிகு - ஆற்றாமை மிகும். வழிக் கொள்ளுதற்கு. 81. 228. மலைவளர் சந்து, அகில், பீலி, மலர்பரப்பி மணிகொழிக்கும், அலைதரு தண்புனல் பெண்ணை ஆறு கடந்து ஏறியபின் நிலவு பசும் புரவிநெடுந் தேர்இரவி மேல்கடலில் செலஅணையும் பொழுதுஅணையத் திருஅதிகைப் புறத்து அணைந்தார். மலையில் வளர்ந்த சந்து - சந்தன மரம். பீலி - மயிற் பீலி. மணி - முத்துகளை. தண்புனல் - குளிர்ந்த நீர். நிலவு - விளங்குகின்ற. இரவி - சூரியன். பொழுது அணைய - மாலைக்காலம் வர. ஏழு நிறத்தை ஏழு புரவியாகச் சொல்வது கவிகள் வழக்கு. புறத்து - பக்கத்தில். 82. 229. உடைய அரசு உலகு ஏத்தும் உழவாரப் படைஆளி விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியை மிதித்து அடையும் அதற்கு அஞ்சுவன் என்று அந்நகரில் புகுதாதே, மடைவளர்தண் புறம் பணையில் சித்தவட மடம்புகுந்தார். ஆளுடை திருநாவுக்கரசராகிய உழவாரப் படையாளி. உழவாரப் படை - புல் செதுக்குங் கருவி. விடையவர்க்கு - விடை யூருஞ் சிவபெருமானுக்கு. கைத்தொண்டு - திருக்கோயில் திருவீதி முதலியவிடங்களில் புல் செதுக்கல் முதலிய கைத்தொண்டுகள். பதியை - திருவதிகையை. மடை - நீர்மடை. மடைவளர் - வரம்பு உயர்ந்த எனினுமாம். புறம்பணை - புறத்துள்ள வயல்கள் சூழ்ந்த. 83. 230. வரிவளர்பூஞ் சோலைசூழ் மடத்தின்கண் வன்தொண்டர் விரிதிரை நீர்க்கெடிலவட வீரட்டா னத்துஇறைதாள் புரிவுடைய மனத்தினராய்ப் புடைஎங்கும் மிடைகின்ற பரிசனமும் துயில் கொள்ளப் பள்ளி அமர்ந் தருளினார். வரி வளர் - வண்டுகளின் ரீங்கார ஓசை மிகும். விரி திரை - விரிந்த அலைகளையுடைய. கெடிலம் - கெடில நதி. திருவதிகைத் திருவீரட்டானத் திறைதாளில். புரிவுடைய - விருப்பமுடைய. புடை எங்கும் மிடைகின்ற பரிசனமும் - தம்மைச் சுற்றி நானா பக்கங் களிலும் நெருங்கிய பரிவாரங்களும். 84. 231. அதுகண்டு வீரட்டத்து அமர்ந்தருளும் அங்கணரும் முது வடிவின் மறையவராய் முன்ஒருவர் அறியாமே பொதுமடத்தின் உள்புகுந்து பூந்தாரான் திருமுடிமேல் பதுமமலர்த் தாள்வைத்துப் பள்ளிகொள்வார் போல்பயின்றார். அங்கணரும் - அழகிய கண்ணுடைய சிவபெருமானும். பூந் தாரான் - மலர்மாலையணிந்த வன்தொண்டரின். பதுமமலர் - தாமரைமலர். பயின்றார் - நடித்தார். 85. 232. அந்நிலை ஆரூரன் உணர்ந்து அருமறையோய்! உன்அடிஎன் சென்னியில் வைத்தனை என்னத் திசைஅறியா வகைசெய்தது என்னுடைய மூப்புக்காண் என்றருள, அதற்கு இசைந்து தன்முடி அப்பால் வைத்தே துயில் அமர்ந்தான் தமிழ்நாதன். தமிழ் நாதன் - நம்பியாரூரர். 86. 233. அங்கும் அவன் திருமுடிமேல் மீட்டும் அவர் தாள் நீட்டச் செங்கயல் பாய் தடம்புடைசூழ் திருநாவலூர் ஆளி, இங்கு என்னைப் பலகாலும் Äâ¤jid Ú ah®? என்னக் கங்கைசடைக் கரந்தபிரான் அறிந்திலையோ? எனக் கரந்தான். தடம் புடை - வாவிகள் புறத்தே. கரந்த - மறைத்த. வலிந்து தடுத்தாட்கொள்ளப் பெற்றவர்க்கு வலிந்தே திருவடி தீக்கையுஞ் செய்யப்பட்டதென்க. திருநாவுக்கரசர் திருவடி தீக்கை பெற்றது போல அவர்பால் அன்பு கொண்ட சுந்தரரும் அத்தீக்கை பெற்றா ரென்க. 87. 234. செம்மாந்துஇங்கு யான்அறியாது என் செய்தேன்? எனத் தெளிந்து தம்மானை அறியாத சாதியார் உளரே என்று அம்மானைத் திருஅதிகை வீரட்டானத் துஅமர்ந்த கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார். செம்மாந்து - இறுமாந்து. அம்மானை - பெருமை யுடையவனை. கைம்மாவின் உரியானை - யானைத் தோலைப் போர்வையாக உடைய சிவபிரானை. 88. 235. பொன்திரளும் மணித்திரளும் பொருகரிவெண் கோடுகளும் மின்திரண்ட வெண்முத்தும் விரைமலரும் நறுங்குறடும் வன்திரைகளால் கொணர்ந்து திரு அதிகை வழிபடலால் தென்திசையில் கங்கை எனும் திருக்கெடிலம் திளைத்து ஆடி. பொருகரி வெண்கோடுகளும் - போர்புரியும் யானைகளின் வெள்ளிய தந்தங்களையும். விரைமலரும் - வாசனைப் பூக்களையும். நறுங்குறடும் - மணம் கமழும் சந்தனக் கட்டைகளையும். வன் திரைகளால் - வலிய அலைகளால். வழிபடலால் - வணங்குதலால்; வழியே போதலால். திளைத்து ஆடி - நன்றாகப் படிந்து மூழ்கி. 89. 236. அங்கணரை அடிபோற்றி அங்குஅகன்று மற்றுஅந்தப் பொங்குநதித் தென்கரைபோய்ப் போர்வலித்தோள் மாவலிதன் மங்கலவேள் வியில்பண்டு வாமனன் ஆய் மண்இரந்த செங்கண் அவன் வழிபட்ட திருமாணிக் குழி அணைந்தார். மங்கலவேள்வியில் - யாக சாலையில். பண்டு - முன்னே. வாமனாவதாரம் ஐந்தாவது. செங்கணவன் - சிவந்த கண்ணையுடைய திருமால். (மாணி - பிரமசாரி; வாமனன்.) 90. 237. பரம்பொருளைப் பணிந்துதாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு வரம்தருவான் தினைநகரை வணங்கினர்வண் தமிழ்பாடி, நரம்புடையாழ் ஒலிமுழவின் நாதஒலி வேதஒலி அரம்பையர்தம் கீதஒலி அறாத் தில்லை மருங்கு அணைந்தார். வரந்தருவான் - சிவபெருமான் எழுந்தருளியுள்ள. தினை நகரை - திருத்தினை நகரை. முழவின் - மத்தளத்தின். அறா - நீங்காத. மருங்கு - புறத்தே. தில்லையில் நடமும், அதற்குரிய ஆரவாரமும் கிளர்ந்த வண்ணமாயிருத்தலான் தொடக்கத்திலேயே உள்ள எழுச்சியும் வீறும் உண்டாக ஆசிரியர், நரம்புடை . . . . . . தில்லை என்றார். கீழ்வரும் பாக்களின் சந்தமேதில்லையின் நிலையை உணர்த்துதல் காண்க. 91. எண்சீர் விருத்தம் 238. தேமஅலங்கல் அணி மாமணி மார்பின் செம்மல், அம்கயல்கள் செங்கமலத் தண் பூமலங்க எதிர் பாய்வன மாடே புள்அலம்பு திரை வெள்வளை வாவித் தாமலங்குகள் தடம்பணை சூழும் தண்ம ருங்குதொழு வார்கள் தம்மும்மை மாமலங்கள் அறவீடு அருள் தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி. தேமலங்கல் மாமணி அணி மார்பின் - வாசனை பொருந்திய பூ மாலையையும் உயர்ந்த இரத்தின மாலையையும் அணிந்த மார்பினையுடைய; தேம் தேன் எனினுமாம். செம்மல்- வன்தொண்டர். புள்ளலம்பு திரைவெள்வளை வாலி மாடு - பறவைகள் ஒலிக்கின்ற வெண் சங்குகள் நிறைந்த தடாகங்களினிடத்திலே. அம்கயல்கள் தண் செம்கமலம் பூ மலங்க - அழகிய கெண்டை மீன்கள் குளிர்ந்த செந்தாமரைப் பூக்கள் அசைய. எதிர்பாய்வன - எதிர் எதிராகப் பாய்தலால். தாமலங்குகள் தாவுகின்ற மலங்கு மீன்கள் (மலங்குக தா - மலங்கு மீன்கள் தாவுகின்ற அல்லது தாவி விழுகின்ற எனினுமாம். தடம்பணை சூழும் - விசாலமாகிய வயல்களைச் சூழும். தண் மருங்கு தொழுவார்கள். தம் - குளிர்ந்ததன் (தில்லையின்) பக்கத்து வணங்கும் அன்பர்களுடைய. மும்மை மாமலங்கள் அற - ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்று மலங்களும் நீங்க. வீடு அருள்-முத்தி கொடுத்தருளும். தில்லை - சிதம்பரமென்னும். மல்லல் - வளத்தை யுடைய. அம்பதியின் அழகிய பதியின். 92. 239. நாக, சூத, வகுளம், சரளம், சூழ் நாளிகேரம், இலவங்கம், நரந்தம், பூகம், ஞாழல், குளிர்வாழை, மதூகம், பொதுளும் வஞ்சி, பல எங்கும் நெருங்கி, மேக சாலம்மலி சோலைகள் ஆகி மீது கோகிலம் மிடைந்து மிழற்றப் போக பூமியினும் மிக்கு விளங்கும் பூம்புறம் பணை கடந்து புகுந்தார். நாகம் - நாகமரங்கள். சூதம் - மா. வகுளம் - மகிழ மரங்கள். நாளிகேரம் - தென்னை. நரந்தம் - நாரத்தை. பூகம் - கமுகம். ஞாழல் - குங்கும மரங்கள். மதூகம் - இலுப்பை. பொதுளும் - தழைத்த. மேகசாலம் மலி - மேகக் கூட்டங்கள் நிறைந்த (சோலைகள் மீது). கோகிலம் மிடைந்து மிழற்ற - குயில்கள் நெருங்கிக் கூவ. போக பூமியினும் - தெய்வலோகத்தைப் பார்க்கினும். பூம்புறம்பனை - பொலிவினையுடைய புறத்துள்ள வயல்களை. 93. 240. வன்னி, கொன்றை, வழை, சண்பகம், அறம், மலர்ப்ப லாசொடு செருந்தி, மந்தாரம், கன்னி காரங், குரவம், கமழ் புன்னை, கற்பு பாடலம், கூவிளம் ஓங்கித் துன்னு சாதி, மரு, மாலதி, மௌவல், துதைந்த நந்தி, கர வீரம், மிடைந்த பல்மலர்ப் புனித நந்த வனங்கள் பணிந்து சென்றனன் மணம் கமழ் தாரான். வழை - சுரபுன்னை. ஆரம் - சந்தனமரங்கள்; ஆத்தியுமாம். பலாசு - முருக்க மரங்கள். செருந்தி - ஒருவகை மரம்; வாட் கோரைக்கும் மணித்தக்காளிக்கும் இப்பெயர் வழங்குவதுண்டு. கன்னிகாரம் - கோங்கு. குரவம் - குரா மரங்கள். கற்பு - கொடி மல்லிகை. பாடலம் - பாதிரி. கூவிளம் - வில்வம். சாதி - சிறு சண்பகம். மரு - ஒருவகைப்புல்; வாசனையுமாம். மாலதி - மல்லிகை. மௌவல் - முல்லை துதைந்த நந்தி - இதழ் நெருங்கிய நந்தியாவர்த்தம். கலவீரம் - அலரி. மிடைந்த - நிறைந்து. மொய்த்ததாரான் - பூமாலை யணிந்த நம்பியாரூரர். 94. 241. இடம் மருங்குதனி நாயகி காண ஏழ்பெரும் புவனம் உய்ய எடுத்து, நடம் நவின்றருள் சிலம்பு ஒலி போற்றும் நான்மறைப் பதியை நாளும் வணங்கக் கடல்வலம் கொள்வது போல்புடை சூழும் காட்சி மேவி மிகு சேண் செல ஓங்கும், தட மருங்கு வளர் மஞ்சு இவர் இஞ்சித் தண் கிடங்கை எதிர் கண்டு மகிழ்ந்தார். இடமருங்கு தனியாகி - பக்கத்துள்ள ஒப்பற்ற சிவகாமவல்லி. எடுத்து - தூக்கி. நான்மறைப் பதியை - நான்கு மறைகளும் இடையறாது பயிலப்படும் சிதம்பரத்தை. நாளும் - நாடோறும். புடைசூழும் - பக்கத்திலே சூழுகின்ற. மேவி - பொருந்தி. சேண்செல- தூரஞ் செல்ல; வானத்தை அளாவ. ஓங்கும் தடம் மருங்கு வளர் - உயர்ந்திருக்கும் விசாலம் பொருந்திய பக்கத்தில் தங்கும். மஞ்சு இவர் இஞ்சி - மேகங்கள் ஏறுகின்ற மதில்களையுடைய. தண்கிடங்கை - குளிர்ந்த அகழியை. 95. 242. மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே மறைச் சுரும்பு அறை புறத்தின் மருங்கே, குன்று போலும் மணி மாமதில் சூழும் குண்டு அகழ்க் கமல வண்டு, அலர் கைதைத் துன்று நீறு புனை மேனிய ஆகித் தூயநீறு புனை தொண்டர்கள் என்னச் சென்று சென்று முரல்கின்றது கண்டு, சிந்தை அன்பொடு திளைத்துஎதிர் சென்றார். மன்றுள் ஆடும் மதுவின் நசையாலே - சிற்சபையில் ஆடும் (தூக்கிய திருவடியாகிய தாமரை மலர்த்) தேன்மீது கொண்ட விருப்பத்தினால். தேனை நுகர்தல்வேண்டும் என்னும் நசையால் என்க. மறைசுரும்பு அறை - வேதங்களாகிய வண்டுகள் முழங்குகின்ற. புறத்தின் மருங்கே - புற இடத்தே; சுற்றுப் பக்கத்தே. குண்டு அகழ் கமலவண்டு - ஆழமாகிய அகழிகளிலிருக்கும் தாமரை மலர்களி லுள்ள வண்டுகள். அலர் கைதை - அருகே மலர்ந்திருக்கிற தாழம் பூக்களில். துன்று நீறு - நிறைந்துள்ள வெண்பொடியை (மகரந்தப் பொடியை). மலர்கள் தோறும் சென்று சென்று. முரல்கின்றது - பாடுவதை. திளைத்து - மூழ்கி. சிவனடியார் போன்ற காட்சியை இயற்கை நம்பியாரூரருக்கு நல்குவ துணர்க. இயற்கை இறையுடல் என்பது நூலில் முதற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கிறது. எல்லா வற்றையும் சிவமாகக் காணும் பேற்றை நம்பியாரூரர் பெற்றார் என்பது கருத்து. 96. 243. பார் விளங்க வளர் நான்மறை நாதம் பயின்ற பண்புமிக வெண்கொடி ஆடும் சீர் விளங்கு மணி நாஒலி யாலும் திசைகள் நான்கு எதிர்புறப் படலாலும் தார் விளங்குவரை மார்பின் அயன் பொன் சதுர் முகங்கள் என ஆயின தில்லை ஊர் விளங்கு திருவாயில்கள் நான்கின் உத்தரத் திருவாயில்முன் எய்தி. பார் - உலகம். பயின்ற பண்பு - ஓதுகின்ற இயல்பு (ஆலும் - ஆடும்). திசைகள் நான்கு எதிர் புறப்படலாலும் - திசைகள் நான்கும் எதிர் தோன்றுதலாலும்; நான்கு திசையிலும் நேரே புறப்பட்டுப் போதற்கு வழிகளையுடைமையானும்; நான்கு திசைகட்கும் எதிர்ப் பட்டு நான்கு வழிகளிலும் (மணியொலி) புறப்படுதலானும் என்றலுமொன்று. தார் விளங்கு வரைமார்பின் அயன் - பூமாலை விளங்குகின்ற மலை போன்ற மார்பினையுடைய பிரமதேவனின். பொன் சதுர் முகங்கள் என - பொன் மயமான நான்கு முகங்களைப் போல அமைந்த. உத்தரம் - வடதிசையின். பிரமனுக்கு ஆம்போது வெண்கொடி என்பதற்குக் கலைமகள் என்று பொருள் கொள்ளு தல் வேண்டும் பிறவெளிப்படை. 97. 244. அன்பின் வந்து எதிர்கொண்ட சீர் அடியார் அவர்களோ? நம்பி ஆரூரர் தாமோ? முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து, பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும், பொன் பிறங்கு மணி மாளிகை நீடும் பொரு இருந்த திரு வீதி புகுந்தார். இறைஞ்சினர் - வணங்கினவர். கும்பிடும் - நடராசப் பெருமானைத் தொழும் நாவல் நகரார். பெருமானும் - திருநாவலூர்த் தலைவராகிய வன்தொண்டப் பெருமானும். பொன்பிறக்கும் - பொன் வண்ணமாக விளங்கும். நீடும் - பெருகியுள்ள. பொருவு இறந்த - ஒப்பற்ற. பொன்னம்பலமுள்ள பதியாதலின், முன்னும் இங்கும் பின்னும் அடிக்கடி பொன் பொய்யப்பட்டதென்க. 98. 245. அங்கண் மாமறை முழங்கும் மருங்கே, ஆடு அரம்மையர் அரங்கு முழங்கும்; மங்குல் வானின் மிசை ஐந்தும் முழங்கும்; வாச மாலைகளில் வண்டு முழங்கும்; பொங்கும் அன்பு அருவி கண்பொழி தொண்டர் போற்று இசைக்கும் ஒலி எங்கும் முழங்கும்; திங்கள் தங்கு சடை கங்கை முழங்கும் தேவ தேவர் புரியும் திரு வீதி. மருங்கே - பக்கத்தே. ஆடும் அரம்பையர் அரங்கு - நடம் புரியும் தெய்வப் பெண்களின் சபை. மங்குல் - மேகம் தவழும். ஐந்தும் - ஐவகை வாத்தியங்களும்; 69ஆம் பாட்டுக் குறிப்புப் பார்க்க. பொங்கும் - இயல்பாகப் பொங்கும், அன்பு அருவி போல, அன்பால் - இன்ப அருவி. அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் -குறள் : 71. புரியும் - விரும்பும் (திருவீதியாகிய) அங்கண் - அழகியவிடத்தில்; அங்கண் மாமறை எனக் கொண்டு அழகிய சாகைகளையுடைய பெரிய வேதங்கள் என்னலுமாம். பல வழியில் ஆண்டவன் நினைவு தோன்றத் தக்க எண்ணமுஞ் செயலுமுடைய அன்பர்கள் வாழ் வீதியாதலின், அதனைத் தேவதேவர் புரியும் திருவீதி என்றார். 99. 246. போகம் நீடு நிதி மன்னவன் மன்னும் புரங்கள் ஒப்பன வரம்பு இலஓங்கி, மாகம் முன் பருகுகின்றன போலும் மாளிகைக் குலம் மிடைந்த பதாகை, யோக சிந்தை மறையோர்கள் வளர்க்கும் ஓமதூமம் உயர்வானில் அடுப்ப, மேக பந்திகளின் மீதுஇடை எங்கும் மின் நுடங்குவன என்ன விளங்கும். போக நீடுநிதி மன்னவன் - குபேரன் மாகம் முன் பருகுகின்றன போலும். ஆகாயத்தை முன்னே உண்கின்றன போலும். மாளிகைக் குலம் மிடைந்த பதாகை - மாளிகைக் கூட்டங்களில் நெருங்கிய கொடிகள். பருகுதலைக் கொடிகள் மீது ஏற்றுவோருமுளர்; மாளிகைகள்மீது ஏற்றுவோருமுளர். பருகுதல் என்பது நெருங்கி முட்டுதலின் மேற்று. முகில் நீரைப் பருகுதல் எனினுமாம். ஓம தூமம் - ஓமப்புகை. அடுப்ப - அடைய. மேகபந்திகளின் மீதிடை - மேக வரிசைகளின் இடையிடை. மின் நுடங்குவன என்ன - மின்னல் தோன்றி மறைவது (அசைவது) போல. யோகசிந்தைபோல எல்லாம் ஓங்கியிருக்கின்றன என்பது குறிப்பு. 100. 247. ஆடு தோகை, புடை நாசிகள் தோறும்; அரணி தந்த சுடர், ஆகுதி தோறும்; மாடு தாமம், அணி வாயில்கள் தோறும்; மங்கலக் கலசம், வேதிகை தோறும்; சேடு கொண்ட ஒளி, தேர் நிரை தோறும்; செந்நெல் அன்ன மலை, சாலைகள் தோறும்; நீடு தண் புனல்கள், பந்தர்கள் தோறும்; நிறைந்த - தேவர்கணம், நீள் இடைதோறும். நாசிகள் புடைதோறும் - ஆடுதோகை கோபுர நாசிகளின் பக்கந்தோறும் ஆடும் மயில்கள். ஆகுதிதோறும் அரணிதந்த சுடர் - ஆகுதி செய்தற்கு இடமாக உள்ள யாக குண்டங்கள் தோறும் தீக்கடைக்கோல் தந்த நெருப்பு. மணிவாயில்கள்தோறும் மாடு தாமம். மாடுதாமம் - பக்கங்களில் கட்டப்பட்டட மலர் மாலைகள். மாடு மணித்தாமம் எனக் கொண்டு பொன்னாலும் முத்து இரத்தினம் முதலியவற்றாலுஞ் செய்யப்பட்ட மாலைகள் என்னினு மாம். வேதிகை தோறும் - திண்ணைகள் தோறும். நிரை - வரிசை. சேடு - பெருமை. சாலைகள் - சத்திரங்கள். நீடு தண்புனல்கள் - மிகக் குளிர்ந்த நீர் வகைகள். நீளிடை - நீண்டவீதிகள். கணம் - கூட்டம்.101. 248. எண்இல் பேர்உலகு அனைத்திலும் உள்ள எல்லை இல்அழகு சொல்லிய எல்லாம் மண்ணில் இப்பதியில் வந்தன என்ன மங்கலம் பொலி வளத்தன ஆகிப் புண்ணியப் புனித அன்பர்கள், முன்பு புகழ்ந்து பாடல் புரி பொற்பின் விளங்கும், அண்ணல் ஆடுதிரு அம்பலம் சூழ்ந்த அம்பொன் வீதியினை நம்பி வணங்கி. முன்பு பாடல்புரி பொற்பின் - முன்னாளில் பாடல்கள் செய்த அழகினால், (திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர் பாடல்களைப் பெற்ற பதியாதலின்.) அண்ணல் நடராசன். 102. 249. மால், அயன், சதமகன், பெருந்தேவர், மற்றும் உள்ளவர்கள் முற்றும் நெருங்கிச் சீல மாமுனிவர் சென்று முன்துன்னித் திருப்பிரம்பின் அடிகொண்டு திளைத்துக் காலம் நேர் படுதல் பார்த்து அயல் நிற்பக் காதல் அன்பர் கணநாதர் புகும் பொன் கோலம் நீடு திரு வாயில் இறைஞ்சிக் குவித்த செங்கை தலைமேல் கொடுபுக்கார். சதமகன் - இந்திரன் (முதலிய பெருந்தேவர்கள்). சீலமா முனிவர் முதலியோர். துன்னி - நெருங்கி. திளைத்து - வருத்தத்தில் அழுந்தி. காதலன்பர்களும், சிவகணநாதர்களும் தடையின்றிப்புகும். பொற் கோலங்கள் நிரம்பிய. 103. எழுசீர் விருத்தம் 250. பெருமதில் சிறந்த செம்பொன் மாளிகை மின் பிறங்கு பேரம்பலம் மேரு வருமுறை வலம்கொண்டு இறைஞ்சிய பின்னர் வணங்கிய மகிழ்வொடும் புகுந்தார்; அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தம் சிந்தையில் அலர்ந்த திருவளர் ஒளிசூழ் திருச் சிற்றம்பலம் முன் திரு அணுக்கன் திருவாயில். மின் பிறங்கும் - ஒளி விளங்கும்; மின்னலிடும் பேரம்பலமாகிய மேரு. அந்த வணங்கிய மகிழ்வோடும். திரு - அருட்டிரு. திருவணுக்கன் திருவாயில் - ஆண்டவன் அருகேயுள்ள திருவாயில். இங்கே பேரம் பலம் சிற்றம்பலம் என இரண்டும் அம்பலங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. அம்பலங்களின் விளக்கத்தை முதற்றிருப் பாட்டில் அம்பலத்தாடுவான் என்னுந் தலைப்பின் கீழ் வரையப் பட்டுள்ள விரிவுரையிற் காண்க. பேரம்பலம் அண்டத்தைக் குறிப்பது; சிற்றம்பலம் பிண்டத்தைக் குறிப்பது. பெரியதற்கெல்லாம் பெரியதாயிருப்பது பேரம்பலம்; சிறியதற்கெல்லாம் சிறியதா யிருப்பது சிற்றம்பலம். இதன் நுட்பம் இறைவன் பருமைக்குப் பருமையார், நுண்மைக்கு நுண்மையாயிருப்பவன் என்பது. அணுத் தருந் தன்மையில் ஐயோன் காண்க - இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க - அரியதில் அரிய அரியோன் காண்க - மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க -திருவாசகம் : திருவண்டப் பகுதி 45 - 48. நிறத்தானும், சிவத்தையுடைமையைனும், முடியிற் பொற்குடங்களைக் கொண்டுண்மையானும், இன்ன பிறவாற் றானும் பேரம்பலம் மேருவை ஒத்திருத்தலையோர்க. இடகலை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளுள் சுழுமுனை நடுநாடி எனப்படும். அந்நடுநாடி மேரு எனப்படும். அம்மேருவுக்கு அறிகுறி பேரம்பல மென்க. திருச்சிற்றம்பலம் பிரணவமாதலின் அருமறை முதலில் நடுவினில் கடையில் அன்பர்தஞ் சிந்தையில் அலர்ந்த திருவளர் ஒளிசூழ் திருச்சிற்றம்பலம் என்றார். பிரணவம் ஓம் என்பது. அஃது அ உம் என்று பிரிகிறது. இம்மூன்றும் முதல் மூன்று மறைகளின் முதலிடைகடையே முறையே நிற்கின்றன. அகரம் - இருக்கின் முதல்; உகரம் - யோநி சமுத்திரோ பந்து - எசுரின் இடை; மகரம் - சமாநம்வரம் - சாமத்தின் கடை. இது நீலகண்டர் குறித்த முறை புறத்தே பேரம்பலத்தைக் கண்டு தொழுது. அது பிரணவ வடிவமாக அமைந்திருத்தலை யுணர்ந்து, அதன் தூல சூக்கும காரண நிலைகளை உன்னி, அவைகளில் அழுந்த அழுந்த அகத்தே ஓங்காரமாக அமைந் துள்ள நெஞ்சமலரை (இருதய கமலத்தை)க் கண்டு தெளிவுறும் பேறு கூடும். உய்ய என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா திருவாசகம் : சிவபுராணம் 33, 34. மறையின் முதலிடை கடையி லுள்ள பிரணவம் புற அம்பலமாகவும் அக அம்பலமாகவும் பொலிதலான், இரண்டிற்கும் இடையில், அருமறை முதலில் நடுவில் கடையில். . . . . என்று கூறினார். அருமறை முதலில் அலர்ந்த திருச்சிற்றம்பலம். நடுவில் அலர்ந்த திருச்சிற்றம்பலம். கடையில் அலர்ந்த திருச்சிற்றம்பலம். சிந்தையில் அலர்ந்த திருச்சிற்றம்பலம் என்பது தகராகாசத்தை என்க. சிறைவான் புனற்றில்லைச் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான் -திருக் கோவையார் : 20. இறுதிப்பேறு, உள்ளக் கமலமாகிய திருச்சிற்றம் பலத்தில் ஆண்டவன் அருட்சுகத்தைக் காண்பது என்பதை விரிக்கிற் பெருகும். நம்பியாரூரர் ஆண்டவ னால் தடுத்தாட்கொள்ளப் பெற்றவர்; திருவருட்செல்வர். அவருக்கு உலகம் சிவமாகத் தோன்றுதல் இயல்பு. அவர் சிதம்பரத்தின் புற எல்லைக் கண்ணுள்ள இயற்கையை இறையாகக் கண்டு தொழுது வந்தது மேலே சொல்லப்பட்டது. அத்திருவருள் நிலையில் நின்ற நம்பியாரூரருக்குப் பிரண வத்தின் தூல சூக்குமம் காரணமாக விளங்கும் அம்பலக் கூறுகள் புலனாயின என்க. இனிச் சிந்தையில் அலர்ந்த திருச்சிற்றம்பலத்தில் ஆண்டவன் புரியும் இன்பக் கூத்துக் காட்சியும் அக்காட்சியான் உறும் நிகழ்ச்சியும், பிறவும் கீழ் வருதல் காண்க. ஓங்கார மூலமாக வுள்ள விந்து, ஒலிக்கும் ஒளிக்குங் காரணமாகநிற்றலின், ஒளிசூழ் என்றார். அது திருவளர் ஒளி என்க. 104. 251. வையகம் பொலிய மறைச்சிலம்பு ஆர்ப்ப மன்றுளே மால் அயன் தேட ஐயர்தாம் வெளியே ஆடுகின்றாரை அஞ்சலி மலர்த்திமுன் குவித்த கைகளோ! திளைத்த கண்களோ! அந்தக் கரணமோ! கலந்த அன்பு உந்தச் செய்தவப் பெரியோன் சென்றுதாழ்ந்து எழுந்தான்; திருக் களிற்றுப்படி மருங்கு. ஐயர் ஆட ஆதனின்றெழும் சிலம்பொலியால் உலகம் பொலித லால் ஈண்டு, வையகம் பொலிய என்றார். பொலிய - அழகுற விளங்கு. மறையாகிய சிலம்பு. சிலம்பு ஒலிக்கும் அறிகுறி அவ் வொலியால் மந்திரமும் அமைகிறது; வையகமும் அமைகிறது. அதனால் மறை என்றும், வையகம் என்றுங் கூறலானார். ஆர்ப்ப - ஒலிக்க. வெளியே - சிதாகாசத்திலே முன்னரே மஞ்சலி விரித்துத் தலைமேல் குவித்த கைகளையோ, அசையாது நின்ற கண்களையோ, அந்தக் கரணங்களையோ கலந்து அன்பானது செலுத்த உள்ளத் தெழுந்த அன்பு அந்தக் கரணத்தை இயக்க, அதனால் கண் காண, அதனால் கைகள் குவிதல் பெறுகின்றன. இவ்வொவ்வொன்றுந் தொடர்ந்து மிக விரைந்து நிகழ்வது. அவ்விரைவு மனத்துக்கும் எட்டாதது. இங்கே அன்பின் விரைவைப் பற்றிக் கையோ கண்ணோ கரணமோ என்றார். மருங்கே - பக்கத்தே. திருக்களிற்றுப்படி - ஸ்ரீ பஞ்சாக்ஷரப்படி; களிறு தாங்கி நிற்றலான் களிற்றுப்படியாயிற்று; திருக்களிற்றுப்படி, ஒரு சைவ சித்தாந்த நூலைத் தன்னிடத்துள்ள களிற்றுக் கை நிமிர்ந்தெடுத்து நடராஜரது திருவடியிற் கொடுக்கப் பெற்ற கனகசபையின் திருவாயிற்படி என்பது பழைய குறிப்புரை. ஓகாரங்களை எண்ணென் போருமுளர்; ஐயமென் போருமுளர். 105. 252. ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள அளப்பு அரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக, இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லைஇல் தனிப்பெரும் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து மாறுஇலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். ஐந்துபேர் அறிவு: சுவை (ரசம்), ஒளி (ரூபம்), ஊறு (பரிசம்), ஓசை (சப்தம்), நாற்றம் (கந்தம்) என்பன. இவ்வைந்தும் முறையே, வாய், கண், மெய், செவி, மூக்கு என்னும் ஐம்பொறி வாயிலாகத் தன் தன் கடனை ஆற்றா நிற்கின்றன. இவை எல்லாம் ஒருமைப்பட்டுக் கட்புலனில் ஒன்றிநிற்றல் ஈண்டுச் சொல்லப்பட்டது. இதனை ஐந்துபேர் அறிவுங் கண்களே கொள்ள என்றார். ஐந்துபேர் அறிவு - ஐந்தாகப் பெயர்ந்த அறிவு; ஐந்து பெரிய அறிவு எனினுமாம். கரணங்கள் நான்கு; மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்பன. இவை மனமெனும் ஒன்றில் படிதல் குறிக்கப்பட்டது. இதனைக் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக என்றார். கரணங்களின் நிகழ்ச்சிகள் அளவைக்கு அகப்படாதன ஆதலான் அளப்பரும் என்றார். குணம் மூன்று : இராசதம் தாமதம் சாத்விகம் என்பன. இம்மூன்றும் சாத்விகம் என்னும் ஒன்றில் உறைவது. இங்கே உணர்த்தப்பட்டது. இதனை குணமொரு மூன்றுந் திருந்து சாத்துவிகமேயாக என்றார். சாத்விகம் சிறந்ததாகலானும் தூயதாகலானும் திருந்து சாத்துவிகம் என்றார். இந்து - சந்திரன். கூத்தின் வந்த - கூத்தால் விளைந்த. திளைத்து - மூழ்கி. மலர்ந்தார் - உள்ளக் கமலம் மலரப் பெற்றார். புலன்கள் கண்ணிலும், கரணங்கள் சித்தத்திலும், குணங்கள் சாத்விகத்திலும் ஒன்றும் நிலை அமல யோகத்தின் பாற்பட்டது. இந்து - மதிமண்டலம்; அமிர்தகலசம் சடை - அமிர்த ஒழுக்கு விளக்கம் முதற்பாட்டின் விரிவுரையிற் காண்க. யோக உலகின் பொருட்டு இவைகளை ஆண்டவன் தாங்கி நிற்றலும் அவ்வுரைக்கண் சொல்லப்பட்டிருக்கிறது. இக்காட்சியை மேற்போந்த ஒன்றிய நிலை பெற்றோர் கண்டதும் அவர்பாலும் மதிமண்டலத் திறப்பு. அமிர்த ஒழுக்கெனும் வாயூறுல் முதலியன நிகழ்தல் இயல்பு. அவ்வமிர்தத் தேக்கால் விளையும் இன்பமும் மகிழ்ச்சியும் மாறிலாதன என்க. மாறிலா இன்பமும் மகிழ்ச்சியும் உள்ளக் கமலக் கட்டை அவிழ்த்து மலர்த்தல் இயல்பு. 106. 253. தெள்நிலா மலர்ந்த வேணியாய்! உன்தன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிது ஆம் இன்பம் ஆம் என்று கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சி மேல் குவித்துப் பண்ணினால் நீடி அறிவு அரும் பதிகம் பாடினார், பரவினார், பணிந்தார். தெள்நிலா - தெள்ளியநிலா. வேணியாய் - சடையை யுடையவனே. வாலிதாம் - நன்றுடையதாகிய; மேலான. பரவினார் - வாழ்த்தினார். 107. 254. தடுத்துமுன் ஆண்ட தொண்டனார் முன்பு தனிப்பெரும் தாண்டவம் புரிய எடுத்த சேவடியார் அருளினால் தரளம் எறிபுனல் மறிதிரைப் பொன்னி மடுத்த நீள் வண்ணப் பண்ணை ஆரூரில் வருக நம்பால் என வானில் அடுத்த போதினில் வந்து எழுந்தது ஓர் நாதம் கேட்டலும் அது உணர்ந்து எழுந்தார். தடுத்தாட்கொள்ளப்பெற்ற வன்தொண்டர்தம் முன்பு தரளம் எறிமறிதிரை புனல் பொன்னி - முகத்தினை எறிந்து மீளும் அலை நீரையுடைய காவிரி. மடுத்த - பாய்ந்து நிறைந்த. நீள்வண்ணம் - நீளும் அழகுடைய. பண்ணை ஆரூரில் - வயல்கள் சூழ்ந்த திருவாரூரில். நம்பால் வருக என்னும் அருள் ஒலி வானில் அடுத்தபோதினில் - ஆகாயத்தில் சேர்ந்தபொழுதில். வந்து எழுந்ததோர் நாதம் கேட்டலும் - உடனே வந்து எழுந்ததாகிய ஒப்பற்ற ஒலி கேட்டதும். வானில் அடுத்த போதினில் என்றது விந்துவை. அது காரியப்படுதற்கு முன்னர் நம்மனோர்க்குப் புலனாதல் அரிது. அதினின்றும் பிறக்கும் நாதம் நமக்குப் புலனாகும். விந்து ஆகாயத்தை ஒரு பற்றுக் கோடாகக் கொண்டு நாதத்தைத் தோற்றுவித்தலால் வானில் அடுத்த போதினில் வந்து எழுந்ததோர் நாதம் என்றார். 108. 255. ஆடுகின்றவர்பேர் அருளினால் நிகழ்ந்த அப்பணி சென்னிமேல் கொண்டு, சூடுதம் கரங்கள் அஞ்சலி கொண்டு, தொழும்தொறும் புறவிடை கொண்டு, மாடுபேர் ஒளியின் வளரும் அம்பலத்தை வலம்கொண்டு வணங்கினர் போந்து, நீடுவான் பணிய உயர்ந்தபொன் வரைபோல் நிலைஎழு கோபுரம் கடந்து. ஆடுகின்றவர் - நடராசர். அப்பணி - (திருவாரூர்க்குப் போதல் வேண்டும் என்னும்) அக்கட்டளையை. புறவிடை - புறப்படுதற்கு விடை. மாடு - தன்னிடத்தே; பொன் என்பர் பழைய குறிப்புரைக் காரர். போந்து - புறம் போந்து. வான் பணிய - வான் தாழ. வான் அளாவ பொன்வரை - மேரு இவ்வாறு மேலேயுங் கூறப்பட்டிருத்தல் காண்க. எழுநிலைக் கோபுரம். 109. 256. நின்று கோபுரத்தை நிலம்உறப் பணிந்து நெடுந்திரு வீதியை வணங்கி, மன்றல் ஆர் செல்வமறுகின் ஊடு ஏகி, மன்னிய திருப்பதி அதனில், தென்திருவாயில் கடந்து முன் போந்து சேண்படும் திருஎல்லை இறைஞ்சிக் கொன்றைவார் சடையான் அருளையே நினைவார் கொள்ளிடத் திருநதி கடந்தார். மன்றல் ஆர் - மங்கலம் நிறைந்த; வாசனை நிறைந்த எனினுமாம். மறுகினூடு - வீதி வழியே. திருப்பதி அதனில் - சிதம்பரத்தில். சேண்படு - தூரத்திலுள்ள. வார் - நீண்ட. 110. கொச்சகக் கலி 257. புறந்தருவார் போற்று இசைப்பப் புரிமுந்நூல் அணிமார்பர் அறம்பயந்தாள் திருமுலைப்பால் அமுதுஉண்டு வளர்ந்தவர்தாம் பிறந்துஅருளும் பெரும்பேறு பெற்றதுஎன முற்றுஉலகில் சிறந்தபுகழ்க் கழுமலம்ஆம் திருப்பதியைச் சென்று அணைந்தார். புறந்தருவார் - தம்மைச் சூழ்ந்து வரும் அடியவர்கள். அறம் பயந்தாள் - (முப்பத்திரண்டு) தருமங்களை வளர்த்த உமாதேவியார். வளர்த்தவர் - திருஞானசம்பந்தர். முற்றுலகில் - உலகமுழுவதும். கழுமலம் - சீகாழி. 111. 258. பிள்ளையார் திருஅவதாரம் செய்த பெரும் புகலி உள்ளும் நான் மிதியேன் என்று ஊர் எல்லைப் புறம் வணங்கி வள்ளலார் வலம் ஆக வரும் பொழுது மங்கை இடம் கொள்ளு மால் விடையானும் எதிர்காட்சி கொடுத்தருள. பிள்ளையார் - ஆளுடை பிள்ளையார்; திருஞான சம்பந்தர். புகலி - சீகாழியின். உள்ளும் - எல்லையையும்; உள்ளிடத்தையும். ஊரின் எல்லைப் புறம்; புற எல்லை. வள்ளலார் - நம்பியாரூரர். எதிர் - எதிராக. 112. 259. மண்டியபேர் அன்பினால் வன்தொண்டர் நின்று இறைஞ்சித் தெண் திரை வேலையில் மிதந்த திருத்தோணி புரத்தாரைக் கண்டு கொண்டேன் கயிலையினில் வீற்றிருந்த படி என்று பண்தரும் இன்னிசை பயின்ற திருப்பதிகம் பாடினார். மண்டிய - நிறைந்த. தெண்திரை வேலையில் - தெள்ளிய அலைகளையுடைய கடலில். பிரளய காலத்திலும் சீகாழி அழியாமல் தோணிபோல் மிதத்தலால் அதற்குத் தோணிபுரம் என்றொரு பெயர் வழங்கப்படுகிறது. தோணி புரத்தாரை - தோணி புரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை. பயின்ற - செறிந்த. 113. 260. இருக்கோலம் இடும் பெருமான் எதிர் நின்றும் எழுந்தருள வெருக்கோள் உற்றுஅது நீங்க ஆரூர்மேல் செலவிரும்பிப் பெருக்குஓதம் சூழ்புறவப் பெரும் பதியை வணங்கிப் போய்த் திருக்கோலக் காஇறைஞ்சிச் செந்தமிழ் மாலைகள்படி. இருக்கு ஓலம் இடும் - வேதம் இன்ன தன்மையின் என்று உணராது முறையிடும். பெருமான் - கயிலைக் கோலங் காட்டிய தோணி யப்பர். எதிர் நின்றும் எழுந்தருள - நம்பியாரூரர் எதிரிலிருந்து மறைந் தருள. வெருவுதல் என்பது அச்சம்போல நீடு நில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதொரு குறிப்பு; அதனைத் துணுக்கென்றலுமாம் இளம்பூரணம். வெருக்கோளுற்றுப் பின்னே அது நீங்க. பெருக்கு ஓதம் - பெருக்குடைய கடல்வாய் வெள்ளம். புறவம் - சீகாழி. 114. 261. தேன் ஆர்க்கும் மலர்ச்சோலைத் திருப்புன்கூர் நம்பர்பால் ஆனாப் பேர் அன்பு மிக, அடி பணிந்து தமிழ் பாடி மான் ஆர்க்கும் கரதலத்தார். மகிழ்ந்த இடம் பல வணங்கிக் கான் ஆர்க்கும் மலர்த்தடம்சூழ் காவிரியின் கரைஅணைந்தார். தேன் ஆர்க்கும் - வண்டுகள் பாடும். திருப்புன்கூரில் எழுந் தருளியுள்ள சிவபிரானிடம். ஆனா - அடங்காத; கெடாத. மான் ஆர்க்கும் - மான் ஒலிக்கும். கான் ஆர்க்கும் - மணம் நிறைந்து. 115. 262. வம்புஉலா மலர்அலைய மணி கொழித்து வந்து இழியும் பைம்பொன்வார் கரைப் பொன்னிப் பயில் தீர்த்தம் படிந்துஆடித் தம்பிரான் மயிலாடு துறை வணங்கித் தாஇல்சீர் அம்பர்மா காளத்தின் அமர்ந்தபிரான் அடி பணிந்தார். வம்பு உலா - வாசனை வீசும். இழியும் - பாயும். பைம்பொன் வார்கரை - பசிய பொன்துகள்கள் படர்ந்த நீண்ட கரைகளை யுடைய. பொன்னி - காவிரி. மலைத்தலைய கடற்காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் பட்டினப்பாலை 5 - 6. புலங்களை வளம்படப் போக்கறப் பெருக்கிப் பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய்தார்ப்ப - இலங்குமா முத்தினோடினமணி இடறி இருகரைப் பெருமரம் பீழ்ந்து கொண்டேற்றிக் - கலங்குமா காவிரி சுந்தரர். திருத் துருத்தியும் - திருவேள்விக் குடியும். பயில் - நிரம்பிய. மயிலாடு துறை - மயூரம் (மாயவரம்). தாவில் - கெடாத. 116. 263. மின் ஆர் செஞ்சடை அண்ணல் விரும்புதிருப் புகலூரை முன் ஆகப் பணிந்துஏத்தி முதல்வன் தன் அருள்நினைந்து பொன் ஆரும் உத்தரியம் புரிமுந்நூல் அணிமார்பர் தென்நாவலூர் ஆளி, திரு ஆரூர் சென்று அணைந்தார். பொன் ஆரும் உத்தரியம் - பீதாம்பர மார்பராகிய, முப்புரி நூல் - பூணூல். 117 264. தேர்ஆரும் நெடுவீதித் திருஆரூர் வாழ்வார்க்கு ஆராத காதலின் நம் ஆரூரன் நாம் அழைக்க வாரா நின்றான்; அவனை மகிழ்ந்து எதிர் கொள்வீர்! என்று நீர்ஆரும் சடை முடிமேல் நிலவு அணிந்தார் அருள்செய்தார். திருவாரூர்த் தேர் மிகச் சிறப்புடையது. அஃது அணித்தே எரிக்கு இரையாயிற்று. தேரூரு நெடுவீதி -அப்பர்; திருவாரூர்த் திருத்தாண்டகம் 9. காதலுடைய நம்பியாரூரர். நம்பியாரூரர் திருப்பதிகட்கு ஏகும் போதெல்லாம் அவர்தம் வரவு கேட்டு ஆங் காங்குள்ள அடியவர்கள் தாங்களே எதிர்சென்று அவரை ஏற்பது வழக்கம். திருவாரூரில் நம்பியாரூரரை எதிர்கொள்ளுமாறு அடியவர்கட்கு ஆண்டவனே அருள் செய்தது கருதற்பாலது. நம்பியாரூரரைத் திருவாரூர்க்குப் போதருமாறு கட்டளையிட்டவர் சிவபெருமானே யாவர். அவரே வரவேற்புக்கும் அடியார்களை ஏவுதல் முறைமையாகும். பின்நிகழ்ச்சிக்கு நம்பியாரூரர் மாண்பு. திருவாரூர் அன்பர்கட்குத் தெரிதல் வேண்டுமென்பது ஆண்டவன் திருவுள்ளம் போலும். நம்பியாரூரரின் முதன் மணத்தைச் சிதைவு செய்த ஒருவர், அவருக்கு மற்றுமொருமணத்தைத் திருவாரூரில் செய்விக்க, அவரை அவ்வூருக்குப் போகுமாறு தில்லையில் திருவருள் சுரந்தமையான், அவரை (மணப்பிள்ளையை) எதிர் கொண்டழைக்க அடியார்களை ஏவினார் என்க. 118. 265. தம்பிரான் அருள்செய்யத் திருத்தொண்டர் அதுசாற்றி எம்பிரானார் அருள்தான் இருந்தபரிசு இதுஆனால், நம்பிரானார் ஆவார் அவர்அன்றே எனும்நலத்தால் உம்பர்நாடு இழிந்ததுஎன எதிர்கொள்ள உடன்எழுந்தார். சாற்றி - மற்றவர்க்குந் தெரிவித்து. பரிசு - தன்மை. அவரன்றே நம்பிரானார் - அவரல்லவோ நம் தலைவர். எனுநலத்தால் - என் றெழுந்த அன்பால். உம்பர் நாடு - விண்ணவருலகம். இழிந்ததென - இறங்கி வந்தாற்போல. 119. 266. மாளிகைகள் மண்டபங்கள் மருங்குபெருங் கொடிநெருங்கத் தாளின் நெடுந் தோரணமும் தழைக்கமுகும் குழைத்தொடையும் நீள்இலைய கதலிகளும் நிறைந்த பசும்பொன் தசும்பும் ஒளிநெடு மணிவிளக்கும் உயர்வாயில் தொறும் நிரைத்தார். மருங்கு - பக்கத்தே. தாளில் - கால்களில் நாட்டப்பெற்ற; பனை, தென்னை முதலிய குருத்துக்களாலாகிய என்பதுமொன்று. குழைத் தொடையும் தழைகளால் கட்டப்பெற்ற மாலைகளும் (மாவிலைத் தோரணங்கள் முதலியன) தழைஇ கொய்குழைய கைகாஞ்சி -கலித்தொகை 74 : 5. கதலிகளும் வாழை மரங்களும் தசும்பும் - குடங்களும். ஒளி - ஒழுங்காக; ஒளியின் நீட்டலாகக் கொள் ளலுமொன்று. நிரைத்தார் - வரிசை வரிசையாக வைத்தார்கள். 120. 267. சோதிமணி வேதிகைகள் தூநறுஞ் சாந்து அணி நீவிக் கோது இல் பொரி, பொன் சுண்ணம், குளிர்தரள மணிபரப்பித் தாதுதவிழ் பூந்தொடை மாலைத் தண்பந்தர்களும் சமைத்து வீதிகள் நுண்துகள் அடங்க விரைப்பனிநீர் மிகத்தெளித்தார். வேதிகைகள் - திண்ணைகளை. தூநறும் சாந்து அணி நீவி - தூய நல்ல சந்தனக் குழம்பால் அழகுபெற மெழுகி. கோதில் - குற்ற மில்லாத. பொற் சுண்ணம் - பொன் பொடி. தரள மணி - முத்து மணிகள். தாது அவிழ் பூந்தொடைமாலை - இதழ்விரிந்த மலர் களால் தொடுக்கப்பட்ட மாலைகளால். பூம்பந்தரிட்டு என்றபடி நுண் துகள் - புழுதி. விரை - வாசனையுடைய. 121. 268. மங்கல கீதம்பாட, மழைநிகர் தூரியம் முழங்கச் செங்கயல்கண் முற்றுஇழையார் தெற்றிதொறும் நடம்பயில நங்கள் பிரான் திருஆரூர் நகர்வாழ்வார் நம்பியைமுன் பொங்குஎயில் நீள் திருவாயில் புறம்உறவந்து எதிர்கொண்டார். மழைநிகர் - முகிலையொத்த. தூரியம் - பேரிகை; வாத்தியங்கள் எனினுமாம். முற்றிழையார் - தொழில் முடிவுபெற்ற ஆபரணங்களை யணிந்த பெண்மணிகள். தெற்றி - திண்ணை. பொங்கு எயில் - பொலிவினையுடைய மதிலின். நீள் திருவாயிலின் வெளியே. உற வந்து - சேரவந்து. 122. அறுசீர் விருத்தம் 269. வந்து எதிர்கொண்டு வணங்குவார்முன் வன்தொண்டர் அஞ்சலி கூப்பி நின்று சிந்தை களிப்புஉற வீதி ஊடு செல்வார், திருத்தொண்டர் தம்மை நோக்கி, எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்! என்னும் சந்த இசைப் பதிகங்கள் பாடித் தம் பெருமான் திருவாயில் சார்ந்தார். செல்வாராய் - திருக்கோயிலின் திருவாயிலை தம்மையே பிரான் என்று தம்மை எதிர்கொண்ட அடியவர்கள் கருதாதவாறு தாம் அடியவர் என்பதையும், திருவாரூர்ப் பெருமான் ஆண்டவன் என்பதையும் அவர்க்கும், அவர் வழி உலகிற்கும் உணர்த்தவேண்டி வன்தொண்டப் பெருமான், எந்தையிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர் என்று அருளினாரென்க. 123. 270. வான்உற நீள்திரு வாயில் நோக்கி மண்உற ஐந்து உறுப்பால் வணங்கித் தேன்உறை கற்பக வாச மாலைத் தேவாசிரியன் தொழுது இறைஞ்சி ஊனும் உயிரும் உருக்கும் அன்பால் உச்சி குவித்தசெங் கைகளோடும் தூநறுங் கொன்றையன் மூலட்டானம் சூழ்திரு மாளிகை வாயில் புக்கார் நோக்கி - கண்டு (தொழுது). மண்ணுற - நிலத்திற்படிய ஐந்துறுப்பால் - பஞ்சாங்கத்தால். மாலைகள் தூங்கும் தேவாசிரிய மண்டபத்தை. தொழுது - கும்பிட்டு; வணங்கி. இறைஞ்சி - (நீண்ட நேரம் தம்மை மறந்து) விழுந்து கிடந்து. புல்லுவிட்டு இறைஞ்சிய பூங்கொடி -கலித்தொகை 3 : 15 சேரு தலைக்கைவிட்டு வீழ்ந்து கிடந்த பூங்கொடிகள் நச்சினார்க்கினியம். கொன்றையான் - தியாகேசப் பெருமான் வீற்றிருந்தருளும். 124. 271. புற்றுஇடம் கொண்ட புராதனனைப் பூங்கோயில் மேய பிரானை யார்க்கும் பற்று இடம் ஆயபரம் பொருளைப் பார்ப்பதி பாகனைப் பங்கயத்தாள் அற்சனை செய்ய அருள்புரிந்த அண்ணலை மண்மிசை வீழ்ந்துஇறைஞ்சி, நல்தமிழ் நாவலர் கோன் உடம்பால் நன்மையின் தன்மையை மெய்ம்மைபெற்றார். புராதனனை - பழையவனை. பூங்கோயில் - கமலாலயம். பங்கயத்தாள் - திருமகள். திருநகரச் சிறப்பு முதற்பாட்டைப் பார்க்க. பங்கயத்தாளை என்போருமுளர். மனிதப் பிறவி தாங்கியதால் பெற வேண்டும் நன்மையின் பயனை மெய்ம்மையாகப் பெற்றார். 125. 272. அன்புபெருக உருகிஉள்ளம் அலைய அட் டாங்க பஞ்சாங்கம் ஆக முன்பு முறைமையினால் வணங்கி, முடிவு இலாக் காதல் முதிரஓங்கி, நன்புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி, நாயகன் சேவடி எய்தப் பெற்ற இன்ப வெள்ளத்திடை மூழ்கி நின்றே இன்இசை வண்தமிழ் மாலைபாட. உள்ளம் பெருகிய - அன்பில் உருகி அலைய. அட்டாங்கம் - எட்டுறுப்பு (தலை, கையிரண்டு, தாளிரண்டு, காதிரண்டு, நெற்றி) பஞ்சாங்கம் - ஐந்துறுப்பு (தலை, கையிரண்டு, தாளிரண்டு) ஐம்புலன் : சுவை (ரசம்) ஒளி (ரூபம்) ஆறு (பரிசம்) ஓசை (சப்தம்) நாற்றம் (கந்தம்) இவ்வைம்புலனடக்கம் நூல்களில் பேசப்படுகிறது. அடக்கம் என்பது நல்வழியில் அடங்கி நடப்பதைக் குறிப்பது. அஃது அழிவைக் குறிப்பதன்று. அடக்கத்தை அழிவெனக்கொண்டு புலன்கட்கு ஊறு செய்து கொள்ளுதல் அறியாமை. அறியாமையால் புலன்களுக்கு ஊறுசெய்வோரை நோக்கி, அஞ்சும் அடக்கு அடக்கு என்பர் அறிவிலார் - அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை -அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம் என்றிட்டு - அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே என்று திருமூலர் அறிவு கொளுத்தினார். ஐந்து புலன்கள் நல்வழியில் இயங்க வாழ்வு நடாத்தல் வேண்டுமென்பது கருத்து. வாயடக்கம் கையடக்கம் என்பன தீயவற்றைப் பேசாமை திருடாமை என்னும் பொருள் தருதலையும் வாயை யழித்தல் கையைக் கெடுத்தல் என்னும் பொருள் தாராமையையும் ஓர்க. இப்புலனடக்க நுட்பத்தை, முருகன் அல்லது அழகு பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூல்களில் விரித்துக் கூறியுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. நல்வழியில் புலனியங்கலே புலனடக்கமாகும் என்பது தோன்ற, நன்புலன் என்றார். முன்னே ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள என்றார். இங்கே நன்புலனைந்தும் நாயகன் சேவடியில் ஒன்றுதலைக் குறித்தனர். ஒன்றி - ஒருமைப்பட்டு, ஒருமையில் பொருந்தி. 126. 273. வாழிய மாமறைப் புற்று இடம்கொள் மன்னவன் ஆர்அருளால் ஓர் வாக்குத், தோழமை ஆக உனக்கு நம்மைத் தந்தனம்; நாம்முன்பு தொண்டுகொண்டு வேள்வியில் அன்றுநீ கொண்டகோலம் என்றும் புனைந்துநின் வேட்கைதீர வாழி! மண் மேல் விளையாடுவாய் என்று ஆரூரர் கேட்க எழுந்தது அன்றே. மன்னவன் - தியாகேசப் பெருமான். வேள்வியில் - கலியாணத்தில். கொண்டகோலம் - வேந்தர் (திருமணக்) கோலத்தை. கயிலையில் மலர்வனத்தில் கொண்ட வேட்கை தீர என்றபடி. வாழி - வாழ்வாயாக. விளையாடுவாயாக. முதற்கணுள்ள வாழிய என்பது பலபொருள் பட நிற்பது. அதை அசையாகக் கோடல் ஒன்று. குவளை ஏய்ந்த கொடுங்குழை கூந்தலுள், திவளும் வாழிய செம்பொறி வண்டுகாள். . . . . சிந்தாமணி 1331. இங்கே வாழிய என்பதை அசை என்றார் நச்சினார்க்கினியர். வாழிய என்பதை வாழ்வாயாக என்றுங் கொள்ளலுமாம். நம்பியாரூரரை இருமுறை வாழ்வாயாக என்று கூறியவாறாம். வாழிய என்பதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று கூறினும் அமையும். தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம் இதற்கு அகச்சான்று : தன்னைத் தோழமை அருளி -சுந்தரர் திருநள்ளாறு 8. என்றனை ஆள்தோழனை திருக்கானப் பேர் 9. என் னுடைய தோழனுமாய் திருவாரூர் - 10. 127. 274. கேட்க விரும்பி வன்தொண்டர் என்றும் கேடு இலாதானை இறைஞ்சி நின்றே, ஆட்கொள வந்த மறையவனே! ஆரூர் அமர்ந்த அருமணியே! வாள்கயல் கொண்டகண் மங்கைபங்கா! மற்றுஉன் பெரியகருணை அன்றே! நாள்கமலப் பதம் தந்தது இன்று. நாயினேனைப் பொருள் ஆக என்றார். ஒலிகேட்க, கேடிலாதானை - அழிவே இல்லாத தியாகேசப் பெருமானை. தடுத்தாட்கொள்ள வந்த மாணிக்கத் தியாகனே. ஒளியையும் கெண்டையையும் ஒத்த கண்களையுடைய உமா தேவியாரைப் பக்கத்திலுடையவனே. இன்று நாயினேனைப் பொருளாக எண்ணி நாள்கமலப் பதம் (அன்றலர்ந்த தாமரை போன்ற திருடியை - திருவருளை) தந்தது உன் பெரியகருணை யல்லவோ. 128. 275. என்று பலமுறையால் வணங்கி எய்திய உள்ளக் களிப்பினோடும், வென்றி அடல்விடைபோல் நடந்து வீதிவிடங்கப் பெருமான் முன்பு சென்று தொழுது துதித்து வாழ்ந்து திருமாளி கைவலம் செய்துபோந்தார்; அன்றுமுதல் அடியார்கள் எல்லாம் தம்பிரான் தோழர் என்றே அறைந்தார். வெற்றிக்குரிய போரேறுபோல் நடந்து ஆண்டவன் தோழமை பெறல் எளிதன்று; அதைப்பெற்ற மகிழ்ச்சியினாலுண்டாகிய மெய்ப்பாடு, போரேற்றுக் குறிப்பு. அடல் - வலிமையுமாம். விடங்கப் பெருமான் திருநகரச் சிறப்பு: பாட்டு 45 பார்க்க. வாழ்ந்து என்பது ஆண்டவன் அருளால் பெற்ற புத்துயிர் வாழ்வைக் குறிப்பது. இவ்வாழ்வே திருவருள் வாழ்வென்பது. மருள் வாழ்வு மரணத்தைக் கொடுப்பது. அருள்வாழ்வு மரணத்தைத் தவிர்த்துப் பேரின்பத்தை நல்குவது. அவ்வருட்பெரும் வாழ்வை நம்பியாரூரர் உறுதியாகப் பெற்றதை வாழ்ந்து என்பதால் ஆசிரியர் உணர்த்துகிறார். 129. 276. மைவளர் கண்டர் அருளினாலே வண்தமிழ் நாவலர்தம் பெருமான் சைவ விடங்கின் அணிபுனைந்து, சந்தமும் மாலையும் தாரும் ஆகி, மெய்வளர் கோலம் எல்லாம் பொலிய, மிக்கவிழுத் தவவேந்தர் என்ன, தெய்வமணிப் புற்று உளாரைப் பாடித் திளைத்து மகிழ்வொடும் செல்லாநின்றார். மைவளர்கண்டர் - நீலகண்டத்தையுடைய சிவபெருமான். சைவ விடங்கு - சைவப் பொலிவுக்கு அல்லது அழகுக்குரிய அணி விபூதி ருத்திராக்கங்களை. சாந்தமும் - சந்தனமும். மாலையும் -மணிமாலையும். தாரும் - பூமாலையும் (இவைகளை அணிந்தவராகி) மெய்வளர் கோலம் எல்லாம் - திருமேனியில் மேலும் மேலும் அழகை வளர்க்கும் அலங்காரங்களெல்லாம். விழுத்தவ வேந்தர் - சீர் தவமன்னர். அகத்தே தவமும், புறத்தே வேந்தர் கோலமுமுடையா ரென்க. தவத்தில் வேந்தர் என்னலுமாம். தெய்வ மணிப்புற்றுளாரை திருமூலட்டான நாதரை; தியாகேசப் பெருமானை. திளைத்து - இன்பத்தில் மூழ்கி. 130. அறுசீர் விருத்தம் 277. இதற்குமுன் எல்லை இல்லாத் திருநகர் இதனுள் வந்து முதல்பெருங் கயிலை ஆதி முதல்வர்தம் பங்கி னாட்குப் பொதுக்கடிந்து உரிமை செய்யும் பூங்குழல் சேடிமாரில் கதிர்த்தபூண் ஏந்து கொங்கைக் கமலினி அவதரித்தாள். காலத்தானும் பெருமையானும். எல்லையில்லாத திருவாரூரிலே; . . . . திருவாரூர்க் கோயிலாக்கொண்ட நானே என வரூஉந் திருத்தாண்டகத்தை நோக்குக. முதல் -முதன்மைத் தன்மை வாய்ந்த. முதல் பங்கினாட்கு - உமாதேவியார்க்கு. பொதுக்கடிந்து - பல சேடியர்க்குள்ள பொதுமை நீக்கி; சிறப்பாகத் தாங்களே உரிமைத் தொண்டு செய்த சேடிமார் இருவர்; அவர் அனிந்திதையும் கமலினியும்; திருமலைச் சிறப்பு 24ஆம் பாட்டைப் பார்க்க. பூங்குழல் கயிலைப் பூந்தோட்டத்தை உணர்த்துங் குறிப்பு. கதித்த பூண் - சிறந்த ஆபரணம்; கிளர்ந்த ஆபரணமுமாம். கதிர்த்த என்பது பாடமாயின் ஒளியையுடைய என்று கொள்க. கதிர்த்த என்பது எதுகையின் பொருட்டுக் கதித்த என்றாயிற்று என்றலுமொன்று.131. 278. கதிர்மணி பிறந்தது என்ன, உருத்திர கணிகை மாராம் பதியிலார் குலத்துள் தோன்றிப் பரவையார் என்னும் நாமம் விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோர் ஆன்ற மதிஅணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி. கதிர்மணி - ஒளியையுடைய மாணிக்கம் மணி என்பதற்கு முத்தெனப் பொருள் கொண்டு சிப்பியினின்றும் முத்துப் பிறந்தாற் போல என்று கூறுவோருமுளர். இஃது இக்காலக் கணிகையர் நிலையை உளங்கொண்டு கூறுங் கூற்றாகும். பரவையார் காலத்துக் கணிகையர் ஒழுக்கம் பேணிக் கடவுளன்பில் கருத்திருத்தியவர். அவர்தம் மரபை இழிவாகக் கருதிச் சிப்பியில் மணி தோன்றியவாறு என்று கொள்வது இழுக்காகும். மாணிக்கம் பிறந்தாற்போல என்று கொள்வது ஒழுங்கு. உருத்திர கணிகைமார் சிவபெருமானையே பதியாக்கொண்டு சிவபணி செய்ய உறுதிகொண்ட பெண்மணிகள். பண்டை நாளில் இவர்கட்கு மரபு வளர்ச்சி கிடையாது. உலக வாழ்விற்குத் தகுதியற்ற பெண்மணிகள் ஆண்டவனையே பதியாக் கொண்டு அவன் பணி செய்து பேறு பெற்று வந்தார்கள். வேறு பதியின்மையால் அவர் பதியிலார் என்றழைக்கப்பட்டனர். பின்னே மற்றுஞ் சிலரும் அவர்களொடு கலக்கலாயினர். அவருள் சிலர் உலக இன்பந் துய்த்துக்கொண்டு இறைபணி செய்ய எண்ணினர். இது தவறுதலாகாது. ஒழுக்கத்திற் சிறந்த ஒருவனுடன் ஒருத்தி வாழும் இயற்கை அறம் அவர்களால் பேணப்பட்டது. அன்னார் இவ்வறம் பேணியமையால், மரபு வளர்ச்சிக்கு இடந் தந்தது. பண்டைப் பதியிலார் என்ற பெயரே இடைக் காலத்திலும். இவர்கட்கு வழங்கி வரலாயிற்று.இச்சீரிய பதியிலார் குலத்தில் தோன்றியவரே பரவையார் என்னும் பாவையார். பின்னாளில் கோயில் தலைவர்களின் அடக்குமுறையால் பதியிலாப் பெண் மணிகள் ஒழுக்கந் தவறுங் கொடுமைக்கு ஆளானார்கள். நாளடைவில் அவர் பலரிடங் கூடும் வேசையராயினர். இந்நாளில் பதியிலார் என்பது விலைமாதர்கட்கு வழங்கிவருகிறது. விதியுளி முறைமையால்; விதிப்படி மேதகு சான்றோர் கல்வி கேள்வி ஒழுக்கம் முதலியவற்றில் மேம்பட்ட பெரியோர்கள். ஆன்று - அமைந்து. மதி அணி புனிதன் - சிவபெருமான். அவன் நாள் திருவாதிரை. சாற்றி என்பது பாடமாயின் (சான்றோரால்) சாற்றப்பட்டு என்று கொள்க. சாற்றிப் பரவினர் என்று கீழ்வரும்பாட்டுடன் இயைப்போருமுளர். 132. 279. பரவினர் காப்புப் போற்றிப் பயில் பெருஞ் சுற்றம், திங்கள் விரவிய பருவம் தோறும் விழா அணி எடுப்ப, மிக்கோர் வரமலர் மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தை தர வருமகிழ்ச்சி பொங்கத் தளர் நடைப் பருவம் சேர்ந்தார். சுற்றத்தார், குழந்தை சுகமாக வாழவேண்டித் தெய்வம் பரவினராய்க் காப்பிட்டு (காவல்பேணி). திங்கள் விரவிய - மாதங்கள் சேர்ந்த. தால் (ஐந்தாம் மாதம்), செங்கீரை (ஏழாம் மாதம்), சப்பாணி (ஒன்பதாம் மாதம்) முதலிய பருவங்கள் தோறும் மங்கலச் சிறப்புகளை முறைப்படி செய்ய. சுற்றத்தார் இவைகளைச் செய்யக் கல்வியறிவு ஒழுக்கத்தில் மிக்கோர் வார மலர்மங்கை இங்கு வந்தனள் என்று சிந்தைதர வருமகிழ்ச்சி பொங்கினாராம். இவர் பொங்க அம்மையார் தளர்நடைப் பருவம் அழகுடன் செய்தன ரென்க. வரமலர் மங்கை - திருமகள். வாரம் - வரம்; மேன்மை; விருப்பம். 133. 280. மான் இளம் பிணையோ? தெய்வ வளர்இள முகையோ? வாசத் தேன்இளம் பதமோ? வேலைத் திரைஇளம் பவள வல்லிக் கான்இளம் கொடியோ? திங்கள் கதிர்இளங் கொழுந்தோ? காமன் தான் இளம்பருவம் கற்கும் தனிஇளந் தனுவோ? என்ன. அம்மையார்பால் தெய்வ இளநலம் அரும்பா நிற்கிறது. இங்கே இளம் பிணை காட்சியளிக்கிறது; இளமுகையின் மணங் கமழ்கிறது; தேனிளம் பதம் இனிமையூட்டுகிறது; இளங்கொடியி னின்றும் இனிய ஓசை பிறக்கிறது; கதிரிளங் கொழுந்து தண்மை பொழிகிறது. பிணையின் இளமையும் முகையின் இளமையும் தேனின் இளமையும் கொடியின் இளமையும் கதிரின் இளமையும் ஒருமைத் தெய்வ இளநலத்தினின்றும் முகிழ்ந்து அழகு செய்கின்றன. ஒருமைத் தெய்வ இளநலம், பிணை, முகை தேன், கொடி திங்கள் ஆகிய இவைகளினூடே கிளர்ந்து நின்று, முறையே ஒளி, நாற்றம், சுவை, ஓசை, ஊறாய்ப் புலன்களுக்கு விருந்தளிக்கிறது. இவ் வைந்துக்கும் அடிப்படையாயுள்ள தெய்வ இளநலம், காமன் இளம் பருவங்கற்கும் தனி இளம் தனுவாக நிற்கிறது. இதன் சிறப்பு ணர்த்துதற்குத் தனி இளம் என்றார். இத்தெய்வத் தனி இளமை அஞ்சையுங் கவர்ந்து நெஞ்சையுங் கவர்ந்து ஒருமை இன்பத்தில் நிறுத்தவல்லது. இளமைப் பயன் காதலாதலின் அதனைக் காமன் என்று இங்கே உணர்த்துகிறார். ஈண்டுக் குறிப்பது தெய்வக் குழவி இளமை; முதிரிளமையன்று. இளமையை ஒரு பாட்டில் புலன்கவரப் புலன்வழிப் புந்தி கவர அழகுற வடித்துள்ள ஆசிரியர் வாழ்க. இளம்பிணை நோக்கு, இளமுகைப் பல், இளந் தேன் மொழி (ஊறல்) இளம்பவள இளங்கொடி இதழ், திங்கட் கதிரிளங்கொழுந்து நுதல், தனி இளந்தனுப் புருவம் ஆகிய இவை பரவையாரிடைப் பொலி வுற்றுக் கிளர்ந்து தெய்வ இள நலமாகத் திரண்டு நிற்றல் காண்க மான் பிணையன்ன மகிழ்மட நோக்கே -புறநானூறு 354. முகைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல் -அகநானூறு 162. தேனூறு தீஞ்சொல் -சிந்தாமணி 15. (பவளத்தை இதழுக்கும், கொடியைச் சாயலுக்கும் பிரித்துக் கூறுவோரு முளர். அப்பிரிவு ஈண்டைக் கேற்புடைத் தன்று. ஈண்டு ஆசிரியர் கொண்டது இளம் பவள வல்லிக் கானிளங் கொடியை என்பது வெள்ளிடைமலை. ஆசிரியர் இளமைக் கூறுகளை உறுப்பு உறுப்பாகக் கூறிக்கொண்டு போதலும் ஈண்டுக் கருதற் பாலது. இளம்பவள இளங்கொடியின் துண்டம் இதழுக்கு நிற்கிற தென்க). பவளக் கடிகையில் தவளவாண் நகையும் -மணிமேகலை : 20, -உதயகு - 75 (கடிகை - துண்டம் - உதடு) பவளச் செவ்வாய் தவளவாண் நகை -மணி : 3 மலர் 117 (பவளமென்றுங் கொடியென்றும் பிரியாது பவளக் கொடி யனையாள் என்றலுமொன்று.) குழவித் திங்கள் இமயவரேத்த - அழகொடு முடித்த அருமைத்தாயினும் உரிதினின்னோடுடன் பிறப் புண்மையின் - பெரியோன் தருக திருநுதல் ஆகென -சிலப்பதிகாரம் 2. மனையறம் 38 - 41. . . . . . . உருவிவாளன் ஒருபெருங் கருப்புவில் - இரு கரும்புருவாமாக ஈக்க -சிலப் : 2. மனையறம் 44 - 43. தேனார் பூங்கோதாய் நினக்குக் காமன் சிலை இரண்டும் செவ்வனே கோலித் தந்தான் -சிந்தாமணி 2065. இள நலத்தின் விளைவு காதல் இளங் காதல். இங்கே காமன் . . . . தனி இளந்தனுவோ என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதனால் இளங்கூறுகட் கெல்லாம் அடிப்படை. காமன் . . . . . . இளந்தனு என்று மேலே கொள்ளப்பட்டது. விற் புருவம் வாணுதலுக்கும் வேற்கண்ணுக்கும் இடையில் அமைந்து அழகு செய்து நெஞ்சைக் கவர்கிறது. புருவ வில், கண் வேல் பூட்டப்படுதற்குத் துணை நிற்றலானும். நின்று நெஞ்சைத் தன்வயப்படுத்தும் ஆற்றலுடைத்தாயிருத்தலானும், இன்பக் காமன் வில்லாக உவமிக்கப்படும் பெருமை கொண்டுள்ளமையானும், இன்ன பிறவானும் அதன் மாண்பு புலனாதல் காண்க. பவளக் கொடியை ஓசைக்குக் கொண்டதை வேலைத்திரையும் கானும் விளக்குதல் காண்க. திங்கட் கதிரிளங்கொழுந்து ஊறுதலுக்குக் கொண்டது அதன் பொழிவால் என்க. திங்களைத் தெளித்திட் டன்னை பாற்கடற்றிரை செய் தண்ணீர் -சிந்தாமணி 469. பிணையோ - பெண் மானோ. தெய்வவளரிள முகையோ - கற்பகத்தின் அரும்போ. வாசம் - வாசனையுடைய. வேலை - கடல். திரை - அலை. பவள. . . . கொடியோ - பவளக்கொடிகளாகிய காட்டிலுள்ள ஓரிளங் கொடியோ. திங்கள் கதிர் இளங்கொழுந்து - பிறைக்கொழுந்து. தனுவோ - வில்லோ என்ன என்று சொல்ல. 134. 281. நாடும்இன் பொற்பு வாய்ப்பு நாளும் நாள் வளர்ந்து பொங்க ஆடும்மென் கழங்கும் பந்தும் அம்மனை ஊசல் இன்ன பாடும்இன் இசையும் தங்கள் பனிமலை வல்லி பாதம் கூடும்அன் புஉருகப் பாடும் கொள்கைஓர் குறிப்புத் தோன்ற. என்ன நாடும் என்றியைக்க. இன்பொற்பு - இனிய அழகின். மின்பொற்பு என்று கொண்டு, மின்னல்போலக் கண் வழுக்குறச் செய்யும் அழகு என்பர் மகாலிங்க ஐயர். அழகு மென்மேலும் பொங்குதற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது. (உடற்பயிற்சிக்காகக்) கழங்கு பந்து அம்மனை ஊசல் இன்ன ஆடும்; இன்னிசையும் பாடும். மென் கழங்கு - மெல்லிய கழற்சிக்காய். இன்ன - முதலியன. இசையும் உடற்பயிற்சியின் பாற்பட்டது. தங்கள் என்றது அனிந்திதையையுஞ் சேர்த்து. பனிமலை வல்லி - இமயக்கொடி என்னும் உமாதேவி யாரின். கொள்கையாகிய ஒரு குறிப்பு - பழைய உணர்வு தோன்றுங் குறிப்பு என்க. அம்மையார் உடற்பயிற்சியுடன் உயிர்க்குரிய அன்புப் பயிற்சியுஞ் செய்துவந்தாரென்க. இரண்டும் வாழ்விற்கு வேண்டற் பாலன. 135. 282. பிள்ளைமைப் பருவம் மீதுஆம் பேதைமைப் பருவம் நீங்கி, அள்ளுதற்கு அமைந்த பொற்பால் அநங்கன் மெய்த் தனங்கள் ஈட்டம் கொள்ளமிக் குஉயர்வ போன்ற கொங்கை கோங்கு அரும்பை வீழ்ப்ப உள்ளமெய்த் தன்மை முன்னை உண்மையும் தோன்ற உய்ப்பார். பிள்ளைமைப் பருவம் மீதாம் - குழந்தைப் பருவத்துக்கு (ஐந்து வயது) மேலே ஆகிய. பேதைமைப் பருவம் - பேதைமைப் பருவத்தினின்றும் நீங்கி (ஏழு வயதையுங் கடந்து) அதற்கு மேல் மலரும் பொற்பை (அழகை) ஆசிரியர் அள்ளுதற் கமைந்த என்றார். அள்ளும் அழகு எத்தகைத்து? உன்னுக. அநங்கன் மெய்தனங்கள் ஈட்டம் - மன்மதனது மெய்ம்மையான பொருட்குவியல். கோங்கின் அரும்பையும் தோற்கச் செய்ய. உள்ளத்திலே மெய்த் தன்மையும் முன்னை உண்மையும்; உள்ள மெய்த்தன்மையாகிய பழைய உண்மையும் என்றலுமொன்று. முன்னை உண்மையாவது உமாதேவி யார்க்குத் தோழியாயிருந்தமை. ஞான உணர்வில் பழைய நினைவு தோன்றுதல் இயல்பு; அது குறிப்பால் தோன்ற வாழ்வு நடாத்தினா ரென்க. 136. 283. பாங்கியர் மருங்கு சூழப் படர்ஒளி மறுகு சூழத் தேன்கமழ் குழலின் வாசம் திசைஎலாம் சென்று சூழ ஓங்குபூங் கோயில் உள்ளார் ஒருவரை, அன்பி னோடும் பூங்கழல் வணங்க என்றும் போதுவார் ஒருநாள் போந்தார். பாங்கியர் - தோழிமார். மருங்கே - பக்கத்தே. மறுகு - தெருவிலே. தேன் மணக்கும் கூந்தலின் வாசனை, பூங்கழல் - பொலிவினை யுடைய; திருவடிகளை. போதுவார் - போவாராகிய பரவையார். 137. 284. அணிசிலம்பு அடிகள், பார் வென்று அடிப் படுத்தனம் என்று ஆர்ப்ப மணி கிளர் காஞ்சி அல்குல், வரி அரவு உலகை வென்ற துணிவு கொண்டு ஆர்ப்ப, மஞ்சு சுரிகுழற்கு அழிய, விண்ணும் பணியும் என்று இனவண்டு ஆர்ப்பப் பரவையார் போதும் போதில். சிலம் பணிந்த அடிகள் (பாதங்கள்). பார் - மண்ணுலகை. அடிப்படுத்தனம் - கீழ்ப்படுத்தினோம். ஆர்ப்ப - ஆரவாரிக்க. மணி கிளர் காஞ்சி - முத்து முதலிய மணிகள் ஒளிருஞ் காஞ்சி என்னும் அணி அணிந்த. எண் கோவை காஞ்சி எழுகோவை மேகலை. . . . (எண் கோவை மேகலை காஞ்சி இரு கோவை. என்னும் பாடம்) வரி அரவு அல்குல் - புள்ளிகளையுடைய பாம்பாகிய நிதம்பம். ஈண்டு உலகை என்றது காமப்பேயை என்க. காமப்பேயை அம்மையார் வென்றனர் என்க. சுரி குழற்கு மஞ்சு அழிய சுருண்ட கூந்தலுக்கு மேகம் தோற்றமையால். வண்டினம் பாரைப் பெண்ணுலக மென்றும், உலகை ஆணுலகமென்றுங் கொள்வோரு முளர். பரவையர் பூங்கோயிலுக்குப் போம்போது மண்ணுலகம் காமப்பேய் (காதல் அல்லாதது), விண்ணுலகம் எல்லாம் வெல்லப்பட்டன என்பதன் குறிப்பு, அவர் மற்றும் ஒன்றை வெல்லவில்லை என்பது; அது பின்னே வருவது. 138. 285. புற்றுஇடம் விரும்பி னாரைப் போற்றினர் தொழுது செல்வார் சுற்றிய பரிச னங்கள் சூழஆ ளுடைய நம்பி நல்பெரும் பான்மை கூட்ட நகை பொதிந்து இலகு செவ்வாய் வில்புரை நுதலின் வேல் கண் விளங்கு இழையவரைக் கண்டார். (காட்சி) நெருங்கியுள்ள பரிவரங்கள் சூழ நம்பியாரூரர், புற்றிடங்கொண்ட தியாகேசப் பெருமானைப் போற்றித் தொழுது செல்வாராய். . . பரவையாரைக் கண்டார். நற்பெரும்பான்மை - நல்வினை. நகை பொதிந்திலங்கு செவ்வாய் விற்புரை நுதலின் வேற்கண் விளங்கிழை - இஃது இங்கே எழுத்தன்று; சொல்லன்று; படமுமன்று; பரவையார் வடிவக் காட்சி என்க. நம்பியாரூரர் கண்கள் பரவையாரைக் காண்கின்றன. பொதிந்து - குவிந்து. இலங்கும் - விளங்கும். வில்புரை நுதலின் வேற்கண் - வில்லொத்த நெற்றியையும் வேலொத்த கண்ணையுமுடைய. விளங்கிழைய வரை - ஒளிரும் ஆபரணங்களைப் பூண்ட பரவையாரை. 139. கொச்சகக் கலி 286. கற்பகத்தின் பூங்கொம்போ? காமன்தன்பெரு வாழ்வோ? பொற்புஉடைய புண்ணியத்தின் புண்ணியமோ? புயல்சுமந்து வில்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ? அற்புதமோ? சிவன்அருளோ? அறியேன் என்று அதிசயித்தார். (ஐயம்) பரவையாரைக் கண்டதும் நம்பியாரூரருக்கு ஓர் அதிசயம் உண்டாயிற்று. காணாததைக் கண்டதும் அதிசயம் உண்டாதல் இயல்பே. அவர் அதிசயித்து இவ்வாறு கருதுகிறார்: கற்பகத்தின் . . . . சிவனருளோ நம்பியாரூரரின் புலன்களும் புந்தியும் என்னென்ன விழைகின்றனவோ அவைகளையெல்லாம் பரவையார் வடிவம் வரையாதளிக்கிறது. இத்தகைய ஒன்றை என்னென்று நினைப்பது? வரையாதளிக்கும் ஒன்றாக நினைத்தல் வேண்டும். இல்லையேல் உள்ளத்தில் ஒன்றுந் தோன்றாதொழியும் விரும்பின வற்றை வரையாதளிப்பது எது? கற்பகமென்று சொல்ல வேண்டுவ தில்லை. அஃதெப்படி விரும்பியவற்றை அளிக்கிறது? அது மலர்ந்த கொம்பாகிய கையால் எதையும் அளிக்கிறது. இங்கே விரும்புவதை வரையாது வழங்கும் ஒன்றை என்னென்று நினைப்பது? ஆகவே, கற்பகத்தின் பூங்கொம்போ என்கிறார். அணிபூத்துள்ள அக் கொம்மைப் பார்க்கப்பார்க்க அதன்கண் பொலிந்துள்ள அழகு புலனாகிறது. அவ்வழகை என்னென்று கருதுவது? கருத்துக்கு ஓரழகு வடிவம் வேண்டுமன்றோ? அழகுக்குக் காமனைக் கொள்வது வழக்கம். காமன் நினைவு அரும்பும்போது அவ்வழகிடைப் பெண்மைத் தெய்வ ஒளி எழ காமன் தன் பெருவாழ்வோ என்கிறார். தெய்வ ஒளி எளிதிற் கூடுங்கொல்! அதற்குப் புண்ணியம் வேண்டும். அப்புண்ணியத் தெய்வ ஒளிகள் பல இருக்கின்றன. அவைகளுள் இது தலைமையாகக் காணப்படுகிறது. ஆதலால் இது புண்ணியத்தின் புண்ணியமாயிருத்தல் வேண்டும் என்று புண்ணி யத்தின் புண்ணியமோ என்கிறார். புண்ணியத்தில் புண்ணியம் என்னும் மட்டும் நெஞ்சம் செல்கிறது. புண்ணியத்தின் புண்ணியத்தை ஊன்றி உன்ன உன்ன, அது புலனுக்கும் புந்திக்கும் விருந்தளிக்கும் புயலும் வில்லும் குவளையும் பவளமும் மலரும் மதியுங் கொண்ட ஒன்றாய்த் திகழ்தல் கண்டு, புயல் சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ என்கிறார். இப்பெற்றி வாய்ந்த ஒன்று இயற்கை முயற்சியிலடங்காததாகவே இருத்தல் வேண்டுமென்று அற்புதமோ என்கிறார். அதற்கு மேலுங் கடந்து எண்ணும்போது, அற்புதமன்று; சிவனருளோ என்கிறார். நொடிப்பொழுது நம்பியாரூரர் நெஞ்சம் வெவ்வேறிடஞ் சென்றதேனும், மீண்டும் அது நீண்ட காலம் பயின்று பண்பட்ட ஒன்றிலேயே சென்று நிற்கலாயிற்று. நம்பியாரூரருஞ் சிவனருட் செல்வர்; பரவையாருஞ் சிவனருட் செல்வர். அவர் அகத்தில் அருள் ஒளி திகழ்கிறது; இவர் அகத்திலும் அவ்வொளி திகழ்கிறது. இவ் வொளி அவ்வொளியிலும் அவ்வொளி இவ்வொளியிலும் புகுந்து உண்மையுணர்தல் இயல்பு. அம்மையார் அருள் ஒளி ஆரூரர் அருள் நெஞ்சில் நுழைந்து சிவனருளோ என்று நினைக்கச் செய்தது. திருவருள் வழி நிற்போர் தமக்கென ஒன்றும் இல்லாதவராதலானும், திருவருள் வழி நிற்றல் அவர்தங்கடனாதலானும் அறியேன் என்கிறார். காணாத காட்சி அதிசயம் ஊட்டுதல் இயல்பு. அம்மையாரின் புயற் கூந்தலும், விற் புருவமும், குவளைக்கண்ணும், பவளவாயும், மலர்முகமும், மதிநுதலும், கொடியிடையும் கொண்ட அழகிய அமைதிப் புண்ணிய அற்புதத் தெய்வ அருள் வடிவம், ஒரு பாட்டின் ஒன்றே கால் அடியில் விளங்குதல் காண்க. புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடி இஃதன்றோ சொல்லோவியம்? ஈண்டுள்ள முறைப்பாடுங் கருதற்பாலது. மலர் முகம் என்றும் மதி நுதல் என்றுங் கொள்ளப்பட்டன. முகத்தையும் நெற்றியையும் ஒரே இடத்தில் வெவ்வேறு உவமைகளால் கூறுவதும் மரபு. இவ்வாசிரியராதல் முகத்துக்கு மலரையும் நுதலுக்கு மதியையுங் கூறினார். சீவக சிந்தாமணி ஆசிரியர் ஒரே இடத்தில் முகத்துக்கு முழுமதியையும் நுதலுக்குப் பிறைமதியையும் உவமை கூறியுள்ளார். குழவிக்கோட்டிளம் பிறையும் குளிர்மதியும் கூடினபோல் அழகுகொள் சிறுநுதலும் அணிவட்ட மதிமுகமும் -சிந்தாமணி 165. மலரை மேனிக்கும் மதியை முகத்துக்குங் கொள்வோருமுளர். சண்பகப் பூ மேனி என்பர் மகாலிங்க ஐயர். இவர் கொடியை உடலென்பர். மலரையும் மதியையும் வெவ்வேறாகப் பிரியாது மலர் மதி எனக் கொண்டு பூரண சந்திரன் என்று கூறுவது பழைய குறிப்புரை. மலரை முகத்துக்கும் மதியை நுதலுக்குங் கொள்ளும்போது மதியைப் பிறை மதியாக் கொள்க. நுதல் ஒரு சிறப்புறுப்பாதலின் அஃது இறுதியில் கூறப்பட்ட தென்க. அப்பகையைப் பேணும் நுதலெனவு மென்றது. சிறப்புறுப்பாய் அழகு கொடுத்தற்கு உரியது பகையாயிற்றென்னுங் குறிப்பிற்று. மெய்யெல்லாங் கோலஞ் செய்தாலும் நுதற்குத் திலகம் முதலியன தீட்டாக்கால் அவை கோலமாய்த் தோன்றாத தன்மை நுதற்கு உளகாதலின், அது சிறப்புறுப்பாயிற்று. -கலித்தொகை 2: உரைக் குறிப்பு. காமன்தன் பெருவாழ்வு. இரதி குவளை - கருங்குவளை; நீலோற்பலம். மலர் - தாமரை மலர். விரை - வாசனை. 140. 287. ஓவியநான் முகன்எழுத ஒண்ணாமை உள்ளத்தால் மேவியதன் வருத்தம்உற விதித்ததுஒரு மணிவிளக்கோ? மூஉலகின் பயன் ஆகி முன்நின்றது எனநினைந்து நாவலர்கா வலர்நின்றார்; நடுநின்றார் படைமதனார். சிவனருளோ அறியேன் என்று அதிசயித்த நம்பியாரூரர், அம்மையார் தம் சிவவொளிகாலுஞ் செம்மைத் திருமேனியைக் கண்டு மணிவிளக்கோ என்கிறார். மணிவிளக்கின் அருமைப்பாடு மிகத் திறம்படச் சொல்லப்பட்டிருக்கிறது. இப்பேரழகு வடிவு எவரால் படைக்கப்படும்? நான்முகனாலும் இதைப் படைத்தல் இயலுமோ? படைத்தற்றொழிலைச் செய்வோர் அவனை யன்றிப் பிறரில்லை. ஆதலால் அவனே இதைப் படைத்திருத்தல் வேண்டும். ஆனால் மற்ற வடிவங்களைப் போல அவன் இவ்வடிவத்தை எளிதில் படைத்திருக்க மாட்டான். படைக்க அவன் கைகள் போதா. கைகளால் இவ்வடிவை அமைத்தலும் இயலாது. ஓவியமாக (சித்திர மாக) வாதல் அவன் இவ்வடிவை எழுதியிருப்பனோ? அஃதும் அவனால் இயலாது. அவன் மனத்தால், அதுவும் வருத்தமுற இம்மணி விளக்கை விதித்திருத்தல் வேண்டும் என்று ஓவிய . . . . விளக்கோ என்கிறார். ஓவியத்தில் நான்முகனால் எழுதவொண்ணா மணிவிளக்கு, சேக்கிழார் ஓவியத்தில் திறம்பட அமைந்திருத்தல் காண்க. கையால் படைக்க இயலாமையான், வருத்தமுற என்று கோடலுமொன்று. மூன்று உலகிலுள்ள பேறுகளின் பயனாகி என்க. நாவலர் காவலர் திருநாவலூர் கோனாகிய நம்பியாரூரர். நின்றார் - பெயராது நின்றார்; ஓவியமானார் என்றபடி. இனிப் போர் தொடுக்கப் படை தாங்கும் காமன் நம்பியாரூரர்க்கும் பரவையார்க்கும் நடுவில் நின்றான் என்க. 141. 288. தண் தரள மணித்தோடும் தகைத்து ஓடும் கடைபிறழும் கெண்டைநெடுங் கண்வியப்பக் கிளர்ஒளிப்பூண் உரவோனை அண்டர்பிரான் திருஅருளால் அயல்அறியா மனம்விரும்பப் பண்டைவிதி கடைக்கூட்டப் பரவையாரும் கண்டார். (காட்சி) தண்தரள மணித்தோடும் - குளிர்ச்சி பொருந்திய முத்தாலும் மணியாலும் அமைந்த காதணியையும். தகைத்து - தடுத்து கடை கண் கடை; தோட்டையும் தடுத்து அதற்கு மேலும் போகும் கண்ணின் நீட்சியையும் சிறப்பையும் கூறியவாறு. கிளர் - எழும்; விளங்கும். உரவோனை - அறிஞராகிய நம்பியாரூரரை. கிளர் ஒளிப் பூண், வேந்தர் கோலத்தைக் குறிப்பது. உரன் (அறிவு) தவத்தைக் குறிப்பது (அறிவு தவத்தால் விளங்கப் பெறுவதாகலின்). இரண்டுஞ் சேர்ந்த தவவேந்தர் நம் நம்பியாரூரர்; 130ஆம் பாட்டைப் பார்க்க. பெருமையும் உரனும் தலைவன் குணங்கள். பெருமையும் உரனும் ஆடூஉமேன -தொல்காப்பியம் - களவியல் 7. அயலறியா மனம் - களவு. 142. 289. கண்கொள்ளாக் கவின் பொழிந்த திருமேனி கதிர்விரிப்ப விண்கொள்ளாப் பேர்ஒளியான் எதிநோக்கும் மேல்இயலுக்கு எண்கொள்ளாக் காதலின் முன்பு எய்தாதது ஒருவேட்கை மண்கொள்ளா நாண்மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்துஎழலும் நம்பியாரூரர் அழகை உள்ளத்தால் ஊன்றி நோக்குக. கவின் - அழகு. கதிர் - கிரணம். பேரொளியான் - நம்பியாரூரர். மெல்லியலுக்கு - பரவையாருக்கு. எண்கொள்ளாக் காதலின் - எண்ணத்தில் அடங்காத காதலினால். வேட்கை என்பது என்னோவெனின், ஒருவரொருவரை இன்றியமையாமை. அவ்வின்றியமையாது நின்ற வேட்கை எல்லா உணர்வினையும் நீக்கித் தானேயாய் நாண வழிக் காசு போலவும், நீர் வழி மிதவைபோலவும் பான்மை வழி கூடி இருவருயிரையும் புணர்விக்கும் என்பது. . . . . -களவியலுரை 2. மண்கொள்ளா என்ன. நாணம் முதலிய நான்கு குணங்களும் மகளிர்பால் இயல்பாய்ப் பிரிவின்றிக் கிடப்பன. இவைகளையும், முன்பு எப்பொழுதும் உண்டாகாத வேட்கை கீழ்ப்படுத்தித் தான் முனைந்து எழுதலும் நாண், மடம், அச்சம், பயிர்ப்பு தலைவியின் குணங்கள். அச்சமும் நாணமும் மடனும் முந்துறுத்த - நிச்சமும் பெண்பாற்குரிய என்ப -தொல் - கள - 8. நாண் என்பது பெண்டிர்க்கு இயல்பாகவே உள்ளதொரு தன்மை. மடமென்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. அச்சமென்பது காணப்படாததொரு பொருள் கண்டவிடத்து அஞ்சுவது. பயிர்ப்பென்பது பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை. இந்நான்மை, புனல் ஓடும் வழியில் புல் சாய்ந்தாற்போல வேட்கையான் மீதூரப் பட்டுச் சாய்ந்து கிடப்பது -களவியல் உரை2. வேட்கை எழுச்சியின் முன்னே நாண் முதலியன ஒடுங்கும் என்பது. 143. 290. முன்னே வந்து எதிர்தோன்றும் முருகனோ? பெருகுஒளியால் தன் நேரில் மாரனோ? தார்மார்பின் விஞ்சையனோ? மின்நேர்செஞ் சடைஅண்ணல் மெய்அருள் பெற்று உடையவனோ? என்னே! என் மனம் திரித்த ït‹ahnuh? என நினைந்தர். (ஐயம்) தமக்கு முன்பு எப்பொழுதும் எய்தாத ஒரு வேட்கை எழுதலும் அதற்குக் காரணமாக நிற்கும் உருவைப் பரவையார் முன்னே. . . . என்று நினைக்கலானார். நம்பியாரூரர் கண் கொள்ளாக் கவின்பொழிந்த திருமேனி கதிர் விரிப்ப - விண் கொள்ளாப் பேராளியாராதலின், அவர்தம் இளமைச் செறிவும் மணக் கமழ்வும் கடவுட்டன்மையும் கட்டழகும் பொங்கிப் பொங்கிப் பொழிகின்றன. அப்பொழிவு அம்மையார் கருத்தைக் கவர்கிறது. அப்பொழிவுடை உருவை என்னென்று கருதுவது? கருத்தில் இளமையும் மணமும் கடவுட்டன்மையும் அழகும் ஒருங்கே திரண்ட முருகையுடைய முருகன் நினைவே தோன்றும். ஆகவே, முன்னே. . . முருகனோ என்கிறார். பதியிலார்க்கு வழிபடு தெய்வம் முருகன். அம்முருகன் நினைவு முதற்கண் தோன்றுதல் இயல்பு. முருகன் பன்முறை நினைவில் வந்ததுண்டு. அவன் இத்தகைய கிளர்ச்சியை நிகழ்த்துவ தில்லை. இவன் மன்மதன் போலும் என்று எண்ணிப் பொருகொளி . . . . மாரனோ என்கிறார். மாரன் உருவில் ஒருவன் இவனுக்கு உருவிருக்கிறது. ஆதலால் இவன் மந்திரசால அற்புதம் புரியும் வித்தியாதரனோ என்று தார் விஞ்சையனோ? என்கிறார். இவன் மந்திரசாலங்கள் என் மனத்தைத் திரிக்குங்கொல்! என் மனத்தைத் திரிக்கவல்லான் சிவனருட் செல்வனாகவேயிருத்தல் வேண்டும் என்று மின் . . . . உடையவனோ என்கிறார். என்னே என்பது திரியாத மனத்தையும் திரித்த வியப்பு திரியாத மனத்தையும் திரித்த இவன் யாரோ என்கிறார். இவ்வுலகில் இல்லாதவன் என்றபடி இருவர்க்கும் ஐயப்பாட்டில் ஒருமை நயமிருத்தல் ஈண்டு உன்னற்பாலது. நம்பியாரூரர் நினைவில் கற்பகத்தின் பூங்கொம்போ (இந்திரன் மகள் தெய்வயானையோ) என்பது பரவையார் நினைவில் முருகனோ என்பது நம்பியாரூரர் கருத்தில் காமன்தன் பெருவாழ்வோ (காமன் மனைவியோ) என்பது பரவையார் கருத்தில் மாரனோ (காமனோ) என்பது நம்பியாரூரர் எண்ணத்தில் அற்புதமோ! என்பது பரவையார் எண்ணத்தில் விஞ்சையனோ (மந்திரவித்தை அற்புதனோ) என்பது நம்பியாரூரர் நெஞ்சில் சிவனருளோ என்பது பரவையார் நெஞ்சில் மின்னேர்செஞ் சடையண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ என்பது இவ்வொற்றுமையுணர்வு புலவர்களால் காட்டப்படுவது. தன்னேரில் - தனக்கு ஒப்பில்லாத. தார்மார்பன் - மாலை யணிந்த மார் பினையுடைய; மாலை மந்திர வித்தைக் குறிப்பு. ஆரூரர் ஒளி. மின்னேர் செஞ்சடையை நினைக்கச் செய்தது. 144. 291. அண்ணல் அவன் தன்மருங்கே அளவு இறந்த காதலினால் உள்நிறையும் குணம் நான்கும் ஒருபுடை சாய்ந்தன எனினும் வண்ணமலர்க் கருஞ்கூந்தல் மடக்கொடியை வலிதுஆக்கிக் கண்ணுதலைத் தொழும் அன்பே கைக்கொண்டு செலஉய்ப்ப. அண்ணலவன் தன்மருங்கே - பெருமையிற் சிறந்த நம்பியா ரூரரிடத்திலே உள்நிறைந்த குணநான்கும் என்றும். உள் நிறையும் குணநான்கும் என்றும் கொள்ளலாம். நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் -களவியலுரை: 2. குணநான்கு - நாண் அச்சம் மடம் பயிர்ப்பு. ஒரு புடை - ஒரு புறம். வண்ணம் - அழகுடைய. மடக்கொடியை - பரவையாரை. வேட்கை வயப்பட்ட பரவையார் சிவநேயத்திற் சிறந்தவராதலின் அந்நேயம் வலிந்து அம்மையாரைத் தன் வயப்படுத்தித் தன் வழி நிறுத்திக் கோயிலுக்குப் போகச் செலுத்தியது. 145. 292. பாங்குஓடிச் சிலைவளைத்துப் படைஅ நங்கன் விடுபாணம் தாம்கோலி எம்மருங்கும் தடைசெய்ய மடவரலும் தேன்கோதை மலர்க்குழல்மேல் சிறைவண்டு கலந்துஆர்ப்பப் பூங்கோயில் அமர்ந்த பிரான் பொன்கோயில் போய்ப் புகுந்தார். பாங்கு ஓடி - அருகருகே ஓடி. சிலை - கரும்புவில். அநங்கன் - காமன். பாணம் ஐந்து - தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, குவளை. கோலி - வளைந்து. எம்மருங்கும் - எப்பக்கத்தும். மட வரலும் - மடப்பம் வருதலை உடையவளும்; பரவையாரும். தேன் பொருந்திய மலர் மாலையணிந்த கூந்தல்மீது. சிறை - சிறகுகளை யுடைய. ஆர்ப்ப - ஆரவாரிக்க. வண்டின் ஆரவாரம் வேட்கையை அதிகப்படுத்துவது. எந்நிலையில் அம்மையார் கோயில் போந்தார் என்பது கருதற்பாலது. 146. 293. வன்தொண்டர் அதுகண்டு என் மனம் கொண்ட மயில்இயலின் இன் தொண்டைச் செங்கனிவாய் இளங்கொடிதான் யார் என்ன, அன்றுஅங்கு முன்நின்றார் அவர் நங்கை பரவையார் சென்றுஉம்பர் தரத்தார்க்கும் சேர்வு அரியார் எனச் செப்ப. (தெளிவு) மயில் இயலின் - மயில்போலுஞ் சாயலினையுடைய (சாயல் - ஐம்பொறியால் நுகரும் மென்மை). தொண்டைச் செங்கனி - கொவ்வைக் கனி. நங்கை - பெண்பால்; மகளிரிற் சிறந்தவள். நம்பி - ஆண்பால் : ஆடவரிற் சிறந்தவன். நம்பிக்குரிய நங்கை என்றபடி. உம்பர் தரத்தார்க்கும் - தேவர்கட்கும். அம்மையார் பெருமை கூறியவாறு, மிக்கோர் வரமலர் மங்கை இங்கு வந்தனள் எனக் கொண்டாராதலின் என்க; 133ஆம் பாட்டைப் பார்க்க. 147. 294. பேர்பரவை; பெண்மையினில் பெரும்பரவை விரும்பு அல்குல் ஆர்பரவை; அணிதிகழும் மணி முறுவல் அரும்பர்அவை சீர்பரவை ஆயினாள் திருஉருவின் மென்சாயல் ஏர்பரவை இடைப்பட்ட என் ஆசை எழுபரவை. பெயரைக் கேட்டதும் ஆரூரர், பரவை பரவை என்று பிதற்றத் தொடங்குகிறார். பேர் பரவை - இவள் பெயரோ பரவை; பெண்மை யினில் - பெண்மை, அழகு முதலியவற்றில்; பெரு உம்பர் அவை விரும்பு அல்குலார் பரவு ஐ - பெரிய தேவர் கூட்டம் விரும்புகின்ற திலோத்தமை முதலிய தெய்வப் பெண்களும் (இவரே சிறந்தா ரென்று) வாழ்த்தும் தெய்வமாம்; அணி திகழும் மணி முறுவல் - அரும்பர் அவை ஒழுங்காக விளங்கும் நல்ல பற்கள் முல்லை யரும்புகளாம்; சீர் பரவை ஆயினாள் - சிறந்த பரவை என்னுங் கூத்தையுடைய இலக்குமியைப் போன்றவளது; திருவுருவின் மென் சாயல் - அழகிய உருவின் மென்சாயலாகிய; ஏர் பரவை இடைப் பட்ட - அழகிய பரப்பில் அகப்பட்ட; என் ஆசை - என் வேட்கை; எழு பரவை - ஏழு கடல்களாம். மற்றும் ஒரு வழி : பேர் பரவை - பெயரில் பரவை; பெரு உம்பர் அவ்வை (அவை விகாரம்) பெரிய தேவர்கட்குந் தாய்; விரும்பு அல்குல் ஆர்பு அரவு ஐ - விரும்புகின்ற நிதம்பத்தின் நிறைவில் பாம்புகளுக்கு இறை (ஆதிசேடன்); சீர்பரவு ஐ ஆயினாள் - திருமகளும் பரவும் அழகு வாய்ந்த இவள்தன். (மணி முறுவல் - நல்ல முறுவல் - சிலப்பதிகார அரும்பதவுரை; 7. கானல்வரி 8. மணியை முத்தெனலும் அழகெனலும் பொருந்தும்). 148. 295. என்றுஇனைய பலவும் நினைந்து எம்பெருமான் அருள் வகையால், முன்தொடர்ந்து வரும்காதல் முறைமையினால் தொடக்குண்டு, நன்றுஎனைஆட் கொண்டவர்பால் நண்ணுவன் என்று உள் மகிழ்ந்து சென்றுஉடைய நம்பியும் போய்த் தேவர்பிரான் கோயில் புக. சிவபெருமான் அருள்வழி பிறக்கும் ஆணைவகையால். முன் தொடர்ந்து - முன்னை நாள் தொட்டு (கயிலாயத்தில்). முறைமை யினால் அம்முறைமைப்படி (வேறுமுறைமைப்படியன்று என்பது). தொடக்குண்டு கட்டுப்பட்டு; பந்திக்கப்பட்டு. எல்லாஞ் சிவன் செயல் என்று வாழ்வோராதலின் உண்மகிழ்ந்து என்றார். மகிழ்ச்சி, ஆண்டவன் அருளின்கணுள்ள உறுதியையும் அவ்வருள் அடியவர்க்கு எளி வரலையுங் குறிப்பது. உடைய - என்னை (ஆசிரியரை) ஆளாக உடைய; ஆண்டவன் அருள் உடைய நம்பி என்னலுமாம். 149. 296. பரவையார் வலம்கொண்டு பணிந்து ஏத்தி முன்னரே புரவலனார் கோயிலில் நின்று ஒரு மருங்கு புறப்பட்டார் விரவுபெருங் காதலினால் மெல்லியலார் தமை வேண்டி, அரவின் ஆரம் புனைந்தார் அடிபணிந்தார் ஆரூரர். புரவலனார் - சிவபெருமான் எழுந்தருளியுள்ள. ஒருமருங்கு - ஒருபக்கமாக. விரவு - ஊடுருவிப் பாய்ந்த. மெல்லியலார்தமை வேண்டி - பரவையாரை அடைய விரும்பி. அரவின் ஆரம் புனைந்தார் - பாம்பணிந்த பரமசிவனது. ஆரூரர் உடல் பொருள் ஆவி மூன்றையும் ஆண்டவனுக்கு அர்ப்பணஞ் செய்தவர்; தமக்கென ஒன்றும் இல்லாதவர். அவர் தாம் விரும்புவதை ஆண்டவனைக் கேட்டே பெறுதல்வேண்டும். திருவருள் வழி நிற்பவர் என்பது கருத்து. 150. 297. அவ்வாறு பணிந்து ஏத்தி அணி ஆரூர் மணிப்புற்றின் மை வாழும் திரு மிடற்று வானவர்பால் நின்றும் போந்து எவ்வாறு சென்றாள் என் இன்உயிர் ஆம் அன்னம் எனச் செவ்வாய்வெண் நகைக்கொடியைத் தேடுவார் ஆயினார். அணி . . . . . . . போந்து - திருநீல கண்டத்தையுடைய தியாகேசப் பெருமானிடத்திருந்தும் போந்து. அன்ன நடையாள். செவ்வாயும் வெண்ணகையும் கொண்ட கொடியின் இயல் உள்ளத்தில் படிந்து வேட்கை எழுப்புவது. 151. கலிவிருத்தம் 298. பாசம்ஆம் வினைப் பற்றுஅறுப் பான்மிகும் ஆசைமேலும், ஓர் ஆசை அளிப்பதுஓர் தேசு மன்ன என்சிந்தை மயக்குற ஈசனார் அருள் எந்நெறிச் சென்றதே? பாசமாம் வினைப்பற்று - பாசத்தால் வரும் வினையின் தொடர்பை; பாசமாகிய வினையின் தொடர்பை என்றலுமொன்று. வினைக்கு மூலமாயிருப்பது பாசம். ஈண்டுப் பாசம் ஆணவத்தின் மேற்று. அறுப்பான் - நீக்கும் பொருட்டு. அறுப்பான் என்பதற்குச் சிவபிரானிடத்து என்பர் ஆறுமுகத் தம்பிரானார். தேசுமன்ன - அழகு பொருந்த. (அதனால்) வன்தொண்டர் சிந்தையை மயக்குற. தம்மை மயக்குறச் செய்யும் ஆற்றல் ஈசனருளொன்றற்கே உண்டா தலின் ஈசனார் அருள் என்றார். ஈசனருள்வழி நேர்ந்த ஒன்றை ஈசனருள் என்று சொல்வது மரபு. ஈண்டு அருள் என்றது பரவையாரை. 152. 299. உம்பர் நாயகர் தம்கழல் அல்லது நம்பு மாறுஅறி யேனை நடுக்குஉற வம்புமால் செய்து வல்லியின் ஒல்கிஇன்று, எம்பி ரான்அருள் எந்நெறிச் சென்றதே? உம்பர் நாயகர் - தேவர்கள் நாயகராகிய சிவபெருமான். வம்புமால் - புதிய மயக்கம்; நிலையில்லாத மயக்கம் என்போருமுளர். வம்பப் பரத்தர் என்பதற்குப் புதிய காம நுகர்ச்சியை விரும்புங் காமுகர் என்று அடியார்க்கு நல்லார் பொருள் கண்டிருத்தலை நோக்குக -சிலப்பதிகாரம் : 16 கொலை. 63. வல்லியின் ஒல்கி - கொடி போலத் துவண்டு. 153. 300. பந்தம் வீடுத ரும்பர மன்கழல் சிந்தை ஆரவும் உன்னும்என் சிந்தையை வந்துமால் செய்து மான்எனவே விழித்து, எந்தை யார்அருள் எந்நெறிச் சென்றதே?! உயிர்கட்குப் பந்தத்தையும் வீட்டையுந் தரும் பரமன், அறிவு விளக்கமின்றிக் கிடக்கும் உயிர்கட்குப் பரமன் தனு கரண புவன போகங்களைக் கொடுத்துச் சிறிது அறிவு விளக்கஞ் செய்வது ஈண்டுப் பந்தம் எனப்பட்டது. அப்பந்தத்தினின்றும் பரமன் உயிர் கட்கு முற்றறிவு விளக்கஞ் செய்வது ஈண்டு வீடு எனப்பட்டது. ஆரவும் - நிரம்பவும்; தெவிட்டவும் (ஆர்வுற - விருப்பமுற). உன்னும் - நினைக்கும். மால் - மயக்கம். 154. 301. என்று சாலவும் ஆற்றலர் என் உயிர் நின்றது எங்குஎன, நித்திலப் பூண்முலை மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான் சென்று தேவாசி ரியனைச் சேர்ந்தபின். என்று - இவ்வாறு கூறி. சாலவும் ஆற்றலர் - மிகவும் பொறாத வராய். ஈண்டு உயிர் என்றது பரவையாரை; நித்திலப் பூண் - முத்தாபரணம் பூண்ட. மன்றல் வார்குழல் - வாசனை வீசும் நீண்ட கூந்தலையுமுடைய. வஞ்சியை - வஞ்சிக்கொடி போன்ற பரவையாரை. தேவாசிரிய மண்டபம். 155. 302. காவி நேர்வரும் கண்ணியை நண்ணுவான் யாவ ரோடும் உரைஇயம் பாதுஇருந்து, ஆவி நல்குவர் ஆரூரை ஆண்டவர் பூவின் மங்கையைத் தந்துஎனும் போழ்தினில். நீலோற்பல மலரை யொத்த கண்களையுடைய பரவையாரை அடையும் பொருட்டு ஆரூரை ஆண்டவர் (தியாகேசப் பெருமான்) பூவின் மங்கையை (அழகுடைய பரவையாரை)த் தந்து (என்) ஆவி நல்குவர் என்னும் போழ்தினில். நம்பியாரூரர் ஆண்டவனிடங் கொண்டுள்ள உறுதி கருதத்தக்கது. மங்கையையும் அருள்வழி நின்றுபெறுதல் வேண்டுமென்னும் கருத்துடையார் நம்பியாரூர ரென்க. 156. 303. நாட்டு நல்இசை நாவலூரன் சிந்தை வேட்ட மின்இடை இன்அமு தத்தினைக் காட்டுவன் கடலைக் கடைந்து என்பபோல் பூட்டும் ஏழ்பரித் தேரோன் கடல்புக. நல்லிசை - நல்ல புகழுடைய. வேட்ட - விரும்பிய. அமுதத்தை அளிப்பது கடலாதலின், அதனைக் கடந்து அமுதத்தைக் காட்டுவன் என்பது போல. தேரோன் - சூரியன். ஏழ் நிறத்தை ஏழு குதிரையாகச் சொல்வது மரபு. சூரியன் அத்தமிக்க. 157. 304. எய்து மென்பெடை யோடுஇரை தேர்ந்துஉண்டு பொய்கை யில்பகல் போக்கிய புள்ளினம் வைகு சேக்கைகண் மேல்செல வந்தது பையுள் மாலை; தமியோர் பனிப்பு உற. எய்தும் மென்பெடையோடு - பிரியாது உடனுள்ள மெல்லிய பறவைகளுடன். புள்ளினம் - பறவைக் கூட்டம். வைகு சேக்கைகண் மேற்செல - தங்கும் கூடுகளிற் செல்ல. தமியோர் பனிப்பு உற - பிரிவுற்ற நாயகனும் நாயகியும் (காம) நோய் அடைய. பையுள் மாலை வந்தது - துன்பத்தைக் கொடுக்கும் மாலைக் காலம் வந்தது. 158. 305. பஞ்சின் மெல்அடிப் பாவையர் உள்ளமும் வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன் அஞ்சு எழுத்தும் உணரா, அறிவிலோர் நெஞ்சும் என்ன இருண்டது நீண்ட வான். ஈண்டுப் பஞ்சின் மெல்லடிப் பாவையர் என்றது விலைமகளிரை யென்க. இதற்குப் பொதுப்படப் பெண்ணுலகெனக் கூறுவோருமுளர். அது தவறு. நூற்றறுபத்தோராம் பாட்டில் குலமாதர் என்று ஆசிரியர் குறித்துள்ளமையால் ஈண்டுப் பாவையர் என்பது விலைமகளிரைக் குறிப்பதாகு மென்க. ஆசிரியர் பெண்ணின் பெருமை பேசிய பெரியார். அவர் இருட்டுக்குப் பாவையருள்ளத்தை எங்ஙனங் கொள்வர்? பின்னே. மங்கையர்க் கரசியார் புராணத்தில் மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம். . . . என்று பெண்ணின் பெருமை பேசியிருத்தல் காண்க. பத்தொதன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த பெரும் புலவருள் ஒருவராகிய மகாலிங்க ஐயர் பஞ்சுபோல் மிருதுவா யிருக்கின்ற அடிகளையுடைய விலை மாதர்கள் மனதும் என்று பொருள் கொண்டிருத்தலை யோர்க. பொய்யொழுக்க முடையார் மக்களல்லராதலின் மாக்கள் என்றார். மக்கள் - ஆறறிவுடையார். மாக்கள் - ஐயறிவுடையார். அஞ்செழுத்து அக விளக்காதலின், அஃதில்லா அகம் இருள் செறிந்த தென்க. இல்லக விளக்கது இருள் கெடுப்பது . . . . . .நல்லக விளக்கது நமச்சிவாயவே -அப்பர்; நமச்சிவாயத் திருப்பதிகம். 159. 306. மறுஇல் சிந்தைவன் தொண்டர் வருந்தினால் இறுமருங்குலார்க்கு யார்பிழைப் பார்என்று, நறுமலர்க் கங்குல் நங்கை, முன் கொண்டபுன் முறுவல் என்ன முகிழ்த்தது வெண்நிலா. மறுவில் - குற்றமற்ற. இறுமருங்குலார்க்கு - வளையும் இடுப்பினை யுடைய பெண்களுக்கு. இடை கொடிபோல் நுடங் கலான், அஃது இறுமருங்குல் எனப்பட்டது. இறு நுசுப்பு அலச -மணிமேகலை; 6. பீடிகை -7 முலையின் சுமையால் இடை வளைவுறு மென்ப. வாசனை மலர்களை யணிந்த இரவாகிய பெண். புன்முறுவல் - புன்சிரிப்பு. முகிழ்ந்தது - உதயமாயிற்று. 160. 307. அரந்தை செய்வார்க்கு அழுங்கித் தம்ஆர் உயிர் வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல், பரந்த வெம்பகற்கு ஒல்கிப் பனிமதிக் கரங்கள் தீண்ட அலர்ந்த கயிரவம். அரந்தை செய்வார்க்கு அழுங்கி - தம்மைக் காமுற்று வலிந்து துன்புறுத்தும் அந்நியர்கட்கு உடன்படாது வருந்தி. வரன் நாயகன் அகம்மலருங் குலமாதர் பகற்கு - சூரியனுக்கு. ஒல்கி - மலராமற் சுருங்கி; ஒதுங்கி. குளிர்ச்சி பொருந்திய சந்திரன் கதிர்கள். அலர்ந்த கயிரவம் - ஆம்பல்கள்; அல்லிகள் மலர்ந்தன. 161. 308. தோற்றும் மன்உயிர் கட்குஎலாம் தூய்மையே சாற்றும் இன்பமும் தண்மையும் தந்துபோய், ஆற்ற அண்டம்எலாம் பரந்து, அண்ணல்வெண் நீற்றின் பேர்ஒளி போன்றதுநீள்நிலா. ஆற்ற - மிகவும். அண்ணல் - சிவபெருமான். தூய்மையும் இன்பமும் தண்மையும் நீற்றினிடத்திலு முண்டு. 162. 309. வாவி புள்ஒலி மாறிய மாலையில், நாவலூரரும் நங்கை பரவையாம் பாவை தந்த படர்பெருங் காதலும் ஆவி சூழ்ந்த தனிமையும் ஆயினார். தடாகங்களில் பறவையொலி நீங்கிய மாலை நேரத்தில். தனிமையெனக் கூறாது ஆவி சூழ்ந்த என்றமையான், ஈண்டுத் தனிமை திருவருளை உணர்த்துவதாகக் கொள்க. பரவையின் காதலும் அதைக் கூட்டி முடிக்கவல்ல ஆவி சூழ்ந்த திருவருளும் அன்றிப் பிறவொன்றும் உறவில்லை. பிறர்பால் உரையாடுதல் முதலிய ஒன்றும் நிகழவில்லை என்றபடி. 163. 310. தம்திருக் கண்எரி தழலில் பட்டு வெந்த காமன் வெளியே உருச்செய்து வந்துஎன் முன்நின்று வாளி தொடுப்பதே! vªijah® mUŸï› t©znkh? என்பார். என் ஆண்டவரால் எரிக்கப்பெற்ற காமன், அவர் அடியா ராகிய என் முன் உருக்கொண்டு வாளி தொடுப்பதோ? அவ் வாண்மை அவனுக்கு எப்படிப் பிறந்ததோ தெரியவில்லை என்றபடி. 164. 311. ஆர்த்தி கண்டுஎன் மேல்நின்று அழல்கதிர் தூர்ப்பதே! எனைத் தொண்டு கொண்டு ஆண்டவர் நீர்த்தரங்க நெடுங் கங்கை நீள்முடிச் rh¤J« bt©kâ ngh‹Wïiy; j©kâ! ஆர்த்தி கண்டும் - பரவையார்மீது கொண்ட வேட்கை காரண மாக யான் படுந் துன்பங் கண்டும். என்மேல் (வானில்) நின்று. அழற்கதிர் - நெருப்புக் கதிரை. தூர்ப்பதே - நிரப்பலாமோ. நீர்த்தரங்கம் - நீர்மயமான அலைகளையுடைய. என்னை ஆண்டவர் தங் கங்கை கொண்ட திருமுடியிலுள்ள வெண்மதியாயின், எனக்குத் தண்ணளி செய்வாய்; அங்ஙனஞ் செய்யாது வெம்மை சொரிதலால் நீர் வேறுமதி போலும் என்றபடி. 165. 312. அடுத்து மேல் மேல் அலைத்துஎழும் ஆழியே! தடுத்து முன்எனை ஆண்டவர் தாம் உணக் கடுத்த நஞ்சு,உன் தரங்கக் கரங்களால் எடுத்து நீட்டுநீ! v‹idï‹W v‹brahŒ? அடுத்து அடுத்து. ஆழியே - கடலே. நஞ்சு உன். தரங்கம் - அலை. என்னை ஆண்டவருக்கே நஞ்சை நீட்டிய நீ என்னை என் செய்யமாட்டாய் என்றபடி. 166. 313. பிறந்தது எங்கள் பிரான்மல யத்துஇடை, சிறந்து அணைந்தது தெய்வநீர் நாட்டினில், புறம்பணைத் தடம்பொங்குஅழல் வீசிட மறம்பயின்றது எங்கோ? jÄœ khUj«! தமிழ் மாருதம் - இனிய தென்றலே; தமிழுடன் பழகிய தென்றலே எனினுமாம். நீ பிறந்தது எங்கள் சிவபெருமான் எழுந்தரு ளியுள்ள பொதிகையிலே, நீ சிறப்பாக வந்து சேர்ந்தது தெய்வச் சோழ நாட்டிலே புறத்தேயுள்ள வயல்கள் சூழ்ந்து தடாகங்களில். இங்ஙன மாகக் கொதிக்கும் வெம்மை வீசுதற்குரிய பாவச் செயலை நீ எங்கே பழகினாய்? 167. 314. இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னு காதலன் ஆகிய வள்ளல் பால் தன்அ ரும்பெறல் நெஞ்சு தயங்கப்போம் அன்னம் அன்னவள் செய்கை அறைகுவாம். பின்னும் என்றது குயில் முதலியவற்றைப் பழித்துக் கூறுவதை யுணர்த்துவது. இயம்பும் பொருட்டு; இயம்புவானாய் என்னலு மொன்று. மன்னு - நிலைபெற்ற. வள்ளல்பால் - நம்பியாரூரரிடத்து. பிறரிடம் புகாத நெஞ்சமாதலின் அரும்பெறல் நெஞ்சம் என்றார். தயங்கப்போம் - சென்று மீளாது திகைத்துப் போகும். அன்னம் அன்னவள் - பரவையார். 168. அறுசீர் விருத்தம் 315. கனம்கொண்ட மணிகண்டர் கழல்வணங்கிக் கணவனைமுன் பெறுவாள் போல இனம்கொண்ட சேடியர்கள் புடைசூழ எய்துபெருங் காதலோடும் தனம்கொண்டு தளர் மருங்குல் பரவையும் வன் தொண்டர்பால் தனித்துச் சென்ற மனம்கொண்டு வரும்பெரிய மயல்கொண்டு தன்மணிமாளி கையைச் சார்ந்தாள். கனம் - உயர்வு; மாட்சி. மணிகண்டர் - திருநீலகடண்டராகிய தியாகேசப் பெருமான். கணவனை - தாங் காதலித்த நம்பியாரூரரை. இனம் - கூட்டம். தனங்களைத் தாங்கி அதனால் தளர்வுறும் இடையையுடைய மனங்கொண்டு அதனால்வரும். 169. 316. சீறடிமேல் நூபுரங்கள் அறிந்தனபோல் சிறிதளவே ஒலிப்ப முன்னர், வேறுஒருவர் உடன்பேசாள் மெல்லஅடி ஒதுங்கி மாளிகையின் மேலால் ஏறி, மரகதத் தூணத்து இலங்கு மணி வேதிகையில் நலம்கொள் பொன்கால் மாறுஇல் மலர்ச் சேக்கைமிசை மணிநிலா முன்றில் மருங்கு இருந்தாள் வந்து. சீறடிமேல் - சிறிய பாதங்களில். நூபுரங்கள் - சிலம்புகள். முன்னர் - முன்னே நிற்கும். பாதங்களைமெல்ல வைத்து நடந்து, மாளிகையின் மேல்வீட்டிலேறி மரகதத் தூண் விளங்கும் அழகிய வேதிகையில் - திண்ணையில். மாறில் - வாடாத. சேக்கை - படுக்கை. நிலா முற்றத்தில் வந்து இருந்தார். 170 317. அவ்அளவில், அருகுஇருந்த சேடிமுக நேர்நோக்கா, ஆரூர் ஆண்ட மைவிரவு கண்டரை நாம் வணங்கப்போம் kWFvâ® tªjt®M®? என்ன, இவ்உலகில் அந்தணராய் இருவர் தேடு ஒருவர் தாம் எதிர்நின்று ஆண்ட, சைவமுதல் திருத்தொண்டர்; தம்பிரான் தோழனார்; நம்பி என்றாள். நோக்கா - நோக்கி. மறுகு - வீதிவழியே. இருவர் - பிரம விஷ்ணுக்கள். ஒருவர் - சிவபெருமான். எதிர்நின்று - அந்தணராகி ஆண்ட சைவமுதல் (சைவமுதல்வர் - ஆதி சைவர்; நம்பியாரூரர்). 171. 318. என்றஉரை கேட்டலுமே எம்பிரான் jknunah! என்னாமுன்னம் வன்தொண்டர் பால்வைத்த மனக்காதல் அளவுஇன்றி வளர்ந்து பொங்க, நின்றநிறை, நாண்முதல்ஆம் குணங்கள் உடன் நீங்கஉயிர் ஒன்றும் தாங்கி, மின் தயங்கு நுண்இடையாள் வெவ்உயிர்த்து மெல்அணை மேல்வீழ்ந்த போது. தமரேயோ - அடியவரோ. என்னா - என்று. நிறை காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் மணக்குடவர்; மனத்து அடக்கற்பாலனவற்றை அடக்குதல் பரிமேலழகர். மறை பிறர் அறியாமை - நச்சினார்க்கினியர் நாண் முதலாங் குணங்கள்; 143ஆம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. உடன் - உடனே. தயங்கும் - விளங்கும். வெவ்வுயிர்த்து - பெருமூச்செறிந்து. 172 319. ஆர நறுஞ் சேறுஆட்டி அரும்பனிநீர் நறுந்திவலை அருகு வீசி, ஈர இளந் தளிர்க்குளிரி படுத்துமடவார் செய்த இவையும் எல்லாம், பேர் அழலின் நெய்சொரிந்தால் ஒத்தன; மற்று அதன்மீது சமிதை என்ன, மாரனும் தன் பெருஞ் சிலையின் வலிகாட்டி மலர் வாளி சொரிந்தான், வந்து. ஆரநறுஞ் சேறு ஆட்டி - வாசனையுடைய சந்தனக் குழம்பை மிகப் பூசி. திவலை - துளி. ஈரமும் இளமையுமுடைய தளிர். குளிரி - நீர்க்குளிரி என்னும் ஒருவகைக் கொடி. படுத்து - பரப்பி. மடவார் - சேடிமார். சமிதை - ஓம விறகு. மாரன் - காமன். சிலை - கரும்புவில். மலர்வாளி - புஷ்பபாணம் (தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, குவளை. இவைகளின் செயல்; பெருமயக்கு, சிந்தாகுலம், மோகனம், சந்தாபம், வசீகரணம். இவைகளின் அவத்தை; சுப்பிர யோகம் (பேசாது ஒழியா நினைவு), விப்பிர யோகம் (பெருமூச்செறிந்து வருந்துதல்), சோகம் (வெதும்பி உணவு வெறுத்தல்? மோகம் (அழுதலும் பிதற்றலும்), மரணம் (உயிர் சோர்தலும் மயங்குதலும்) பிங்கலந்தை. 173. 320. மலர்அமளித் துயில் ஆற்றாள்; வரும்தென்றல் மருங்கு ஆற்றாள்; மங்குல் வானில், நிலவு உமிழும் தழல் ஆற்றாள்; நிறைஆற்றும் பொறைஆற்றா நீர்மை யோடும், கலவமயில் எனஎழுந்து கருங்குழலின் பரம் ஆற்றாக் கையள் ஆகி, இலவஇதழிச் செந்துவர்வாய் நெகிழ்ந்து ஆற்றாமையின் வறிதே இன்ன சொன்னான் மருங்கு வருந்தென்றல். தென்றற் காற்று மோதலால் இடையொடிபவ ரானார் என்பர் மகாலிங்க ஐயர். மங்குல் - இராக் காலம்; மேகமுமாம். நிறையாற்றும் பொறையாற்றா நீர்மையோடும் - நிறை முதலிய குணங்களைத் தாங்கச் சகியாத தன்மையோடும். கலவம் - தோகையுடைய கருங்கூந்தலின் பாரமாற்றாத. கை - கை; குணமுமாம். இலவம் - இலவம்பூ. செந்துவர் வாய் - இயல்பான சிவப்பால் சிவந்த வாய். இலவவிதழ்ச் செவ்வாய் காணாயோ நீ - மணி மேகலை 20 உதயகு : 51. இலவவிதழ்ச் செவ்வாய் இளமுத்தரும்ப சிலப்பதிகாரம் 14. ஊர்காண் : 136 தேமொழித்துவர்ச் செவ்வாய் நன்னுதால் -கலித்தொகை 55 : 4. தோளால் தழுவித் துவர்த் தொண்டையஞ் செவ்வாய் -சிந்தாமணி 1074. நெகிழ்ந்து - திறந்து. ஆற்றாமையால். 174. எண்சீர் விருத்தம் 321. கந்தம்கமழ்மென் குழலீர்! இதுஎன்? கலைவாள் மதியம் கனல் வான் எனை; இச் சந்தின் தழலைப் பணிநீர் அளவித் தடவும் கொடியீர்! தவிரீர்! தவிரீர்! வந்துஇங்கு உலவும் நிலவும் விரைஆர் மலயாநிலமும் எரியாய் வருமால், அம்தண் புனலும் அரவும் விரவும் சடையான் அருள் பெற்று உடையார் அருளார் மணங்கமழும் மெல்லிய கூந்தலையுடைய பெண்களே! கலைநிரம்பிய ஒளியுடைய சந்திரன் என்னைச் சுடுகிறான். இஃது என்ன? இச்சந்தனக் குழம்பாம் நெருப்பைப் பனிநீரோடு கலந்து தடவுங் கொடியவர்களே! விரையார் - வாசனை பொருந்திய. மலையானிலமும் - தென்றற் காற்றும். அந்தண் புனலும் - கங்கையும். விரவும் - சேர்ந்துள்ள. அருள் பெற்றுடையார் - நம்பியாரூரர். 175. 322. புலரும் படிஅன்று இரவு என்னளவும்; பொறையும் நிறையும் இறையும் தரியா; உலரும் தனமும் மனமும்; வினையேன் ஒருவேன் அளவோ? பெருவாழ்வு உரையீர்! பலரும் புரியும் துயர்தான் இதுவோ? படை மன்மதனார் புடைநின்று அகலார்; அலரும் நிலவும் மலரும் முடியார் அருள் பெற்று உடையார் அவரோ அறியார் என்னளவில் இரவு விடியுந்தன்மைய தன்று. நிறை 172ஆம் பாட்டுக் குறிப்புப் பார்க்க பொறையென் வரைத்தன்றிப் பூநுதலீத்த - நிறை பழி காமநோய் - கலித்தொகை 138. 14, 15. நிறையும் உண்டோ காமங் காழ்கொளின் -மணிமேகலை 5. மணிமே: 20. இறை - சிறிதும். தீவினையுடைய யான் உலரும் தனமனங்களினின்றும் விடுதலை யடைதல் என் அளவிலில்லை என்றபடி. இத்துணைத் துன்பத்தில் மூழ்கியிருத்தலோ பெருவாழ்வு! பெருவாழ்வு உரையீர் என்பதற்கு உயிர் பிழைக்கும் வழியை உரையாதிருக்கின்றீர் என்று கொள்வோரு முளர். நீவிர் பலரும் பலரும் விரும்பும் என்னலுமாம். புடை - என்னரு கினின்றும். அலரும் கொன்றை மலரும். மலரும் - விளங்கும் (இத் துயரிலும் வன்தொண்டர் குறித்திரங்கும் பொருளும் பரவையார் குறித்திரங்கும் பொருளும் பெரிதும் ஒன்றுபட்டிருத்தலை ஈண்டுப் போதரும் பாக்களால் உணர்க). 176. 323. தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருஆ ரூரீர்! நீரே அல்லால் ஆர்என் துயரம் அறிவார்? அடிகேள்! அடியேன் அயரும் படியோ? இதுதான். நீரும்பிறையும் பொறி வாள் அரவின் நிரையும் நிரை வெண் தலையின் புடையே ஊரும் சடையீர்! விடை மேல் வருவீர் உமது அன்பிலர் போல் யானோ உறுவேன்? மிடையும் மறுகில் - நெருங்கியுள்ள திருவீதியையுடைய இத்துன்பத்திடையும் பரவையார்க்கு ஆண்டவன் நினைவு தோன்றுதல் கருதத்தக்கது. அடிகேள் - பெருமானே. அடியேன் அயரும்படியோ - அடியேன் துன்புறுதல் திருவுள்ளமோ? பொறிவாள் அரவின் நிரையும் - புள்ளியையும் ஒளியையும் உடைய பாம்பின் வரிசையும் மாலையாகத் தரித்த வெண்டலையின் பக்கத்தே செல்லும் சடையை யுடையவரே. இதுதான் யானோ உறுவேன். இது அடியேன் அயரும்படியோ என்று கூட்டிக்கோடலு மான்று. 177. 324. என்று இன்னனவே பலவும் புகலும் இருள்ஆர் அளகச் சுருள் ஒதியையும் வன்தொண் டரையும் படிமேல்வர, முன்பு அருள்வான் அருளும் வகை யார் நினைவார்? சென்று உம்பர்களும் பணியும் செல்வத் திருஆரூர் வாழ் பெருமான் அடிகள், அன்றுஅங்கு அவர்மன் றலைநீர் செயும் என்று அடியார் அறியும் படியால் அருளி. அளகம் - ஐம்பாலுள் ஒன்று; ஐம்பால்: குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை (சுருள், குரல், அளகம், துஞ்சு குழல், கொண்டை - நச்சினார்க்கினியர்). ஓதியையும் - தலை மயிரையுடைய பரவையாரையும். படிமேல் வர - பூமியின்மீது தோன்ற. முன்னர் (கயிலையில்) கட்டளை யிட்டருளிய சிவபெருமான் இப்பொழுது அருளும் வகை யார் அறிவார்? உம்பர்களும் - தேவர்களும். பெருமான் அடிகள் - தியாகேசப் பெருமான். அவர் மன்றலை - பரவையார் நம்பியாரூரர் திருமணத்தை. 178. 325. மன்னும் புகழ்நா வலர்கோன் மகிழ மங்கை பரவை தன்னைத் தந்தோம்; இன்ன(வ்) வகைநம் அடியார் அறியும் படியே உரை செய்தனம் என்றருளிப் பொன்னின் புரிபுன் சடையன்; விடையன்; பொருமா கரியின் உரிவை புனைவான், அன்ன(ந்) நடையாள் பரவைக்கு அணியது ஆரூரன்பால் மணம் என்றருள. பொன்னின் - பொன் போலும். பொருமாகரியின் உரிவை - போருக்குரிய பெரிய யானையின் தோலை அணியது - சமீபத்தது பரவைக்கும். ஆரூரன்பால் உனக்கு மணம் அணியது என்று அருள. 179. 326. காமத் துயரில் கவல்வார் நெஞ்சில் கரைஇல் இருளும் கங்குல் கழிபோம் யாமத்து இருளும் புலரக் கதிரோன் எழுகா லையில்வந்து அடியார் கூடிச் சேமத் துணையாம் அவர்பேர் அருளைத் தொழுதே திருநா வலர்கோன் மகிழத் தாமக் குழலாள் பரவை வதுவை தகும்நீர் மையினால் நிகழச்செய்தார். கரையில் - அளவில்லாத; கரைதலில்லாத எனலுமாம். கங்குல் கழி போம் யாமத்து இருளும் புலர - (இருவர்க்கும்) மிக நீடித்திருந்த இரவின் இருளும் விடிய. கழிந்துபோகும் யாமம் கடையாமம். சேமத்துணையாம் அவர் - சேம நிதிபோன்று துணைபுரியும் தியாகேசப் பெருமான். தாமக்குழலான் - பரவை மாலை யணிந்த கூந்தையுடையவராகிய பரவையார். வதுவை திருமணம் தகுநீர்மை யினால் - முறைப்படி. 180. கொச்சகக் கலி 327. தென் நாவலூர் மன்னன் தேவர்பிரான் திரு அருளாள், மின்ஆரும் கொடி மருங்குல் பரவைஎனும் மெல் இயல்தன் பொன்ஆரும் முலை ஓங்கல் புணர்குவடே சார்வுஆகப் பல்நாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார். மருங்குல் - இடையையுடைய. பொன்னாரும் - பொன் போலுந்தேமல் படர்ந்த. ஓங்கல் - மலை. குவடே - உச்சியே. யோகம் - புணர்ச்சி. பரம்பரையில். நாளுக்கு நாள்; யோகிகள் யோகத்தைப். பரம்பரை - பரம்பரையாக விரும்புவது போல்; நம்பியாரூரரும் யோக பரம்பரையினராதலின் அதை விரும்பினாரென்க. மலைக் குவடு யோகத்துக்குப் பொருந்தியவிடம். நம்பியும் சிவயோகி; நங்கையுஞ் சிவயோகி. இருவர் போகமும் யோகத்தின் பாற்பட்டதே. சிவத்தில் ஒன்றி - அதை நினைந்து நினைந்து சிவமாய இருவர் சேர்க்கையை யோகம் எனக் கூறியது மிகப் பொருத்தம். போக மெனப் பாடங் கொள்ளினும் பொருள் ஒன்றே. இந்நுட்பம் பண் மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே என்று நம்பியாரூரர் திருவாக்கிலேயே விளங்குதல் காண்க. (திரு நாகைக் காரோணம் : 11.) 181. 328. தன்னை ஆள் உடையபிரான் சரணாரவிந்த மலர் சென்னியிலும் சிந்தையிலும் மலர்வித்துத் திருப்பதிகம் பன்னு தமிழ்த் தொடைமாலை பல சாத்திப் பரவையெனும் மின் இடையாளுடன் கூடி விளையாடிச் செல்கின்றார். அரவிந்த மலர் - தாமரைப் பூ. 182. அறுசீர் விருத்தம் 329. மாதுடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலை போது அலர் வாவி மாடு செய் குன்றின் புடைஓர் தெற்றிச் சீதளத் தரளப் பந்தர்ச் செழும் தவிசு இழிந்து தங்கள் நாதர் பூங்கோயில் நண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி. மாளிகையிலும் - அருகிலுள்ள சோலையிலும், தாமரைப் பூ மலரும் தடாகத்தின் பக்கத்திலும், செய்குன்றிலும், அதன் பக்கத் துள்ள திண்ணையிலும், குளிர்ந்த முத்துப் பந்தர்க் கீழிட்டுள்ள அழகிய ஆசனத்திலும் மாதுடன் கூட வைகி, ஆங்காங்கிருந்து இழிந்து (இறங்கி). பூங்கோயில் - கமலாலயம். 183. 330. அந்தரத்து அமரர் போற்றும் அணிகிளர் ஆடை சாத்திச் சந்தனத்து அளறு தோய்ந்த குங்குமக் கலவை சாத்திச் சுந்தரச் சுழியம் சாத்திச் சுடர் மணிக் கலன்கள் சாத்தி, இந்திரத் திருவின்மேல் ஆம் எழில்மிக விளங்கித் தோன்ற. அந்தரத்து அமரர் - வானத்துள்ள தேவர்கள். அணிகிளர் அழகு விளங்கும். அளறு - குழம்பு. சுழியம் - கிரீடம்; சூளியம் என்னும் வடசொற் சிதைவு; சூழியம்; சுழியம் மணிக்கலன்கள். இரத்தினா பரணங்கள். தேவேந்திரச் செல்வ அழகினும். எழில் - அழகு. 184. 331. கையினில் புனை பொன் கோலும் காதினில் இலங்குதோடும் மெய்யினில் துவளும் நூலும் நெற்றியில் விளங்கும் நீறும் ஐயனுக்கு அழகிது ஆம் என்று ஆய் இழைமகளிர் போற்றச் சைவ மெய்த் திருவின் கோலம் தழைப்ப வீதியினைச் சார்ந்தார். புனை - அலங்கரித்த. ஆயிழை - திருந்தின ஆபரணங்களை யணிந்த. 185. 332. நாவலூர் வந்த சைவ நல் தவக் களிறே என்றும் மேவலர் புரங்கள் செற்ற Éilat®¡F m‹g! என்றும் தாஇல் சீர்ப் பெருமை ஆரூர் மறையவர் தலைவ என்றும் மேவினர் இரண்டு பாலும் வேறுவேறு ஆயம் போற்ற. களிறே - ஆண் யானையே. மேவலர் - பகைவர். புரங்கள் செற்ற - முப்புரங்களையும் அழித்த. தாவில் - கெடாத ஆரூரர் என்பது பிள்ளைத் திருநாமம். இங்கே அப்பெயர் சிறப்புப் பெறுகிறது. பாட்டு 4; குறிப்புப் பார்க்க. இருபாலும் - இரண்டு பக்கமும். ஆயம் - கூட்டம். 186. 333. கைக் கிடா, குரங்கு, கோழி, சிவல், கவுதாரி, பற்றிப் பக்கம் முன் போதுவார்கள் பயில் மொழி பயிற்றிச் செல்ல, மிக்க பூம்பிடகை கொள்வோர் விரை அடைப் பையோர்சூழ, மைக் கருங் கண்ணினார்கள் மறுக, நீள்மறுகில் வந்தார். கை - கையிலே. கிடா - ஆட்டுக்கிடாவும். சிவல் - காடையும். பயில் மொழி - குறிப்பு மொழி; போருக்கும் விளையாட்டுக்கும் வழங்கும் மொழி. பயிற்றி - கற்பித்து. பிடகை - பூங்கூடை. விரை - வாசனைப் பொருள்கள். அடைப்பை - வெற்றிலை பாக்கு முதலியன வைக்கும் பை. மைத்தடம் - கரிய விசாலமான. மறுக - திரிய. மறுகில் - திருவீதியில் மாட மறுகின்மனைதொறு மறுகி -சிலப்பதிகாரம் 15. அடைக்கல; 61. மறுகிடை மறுகும் கவலையிற் கவலும் - 22 அழற்படு: 153. 187. 334. பொலம் கலப் புரவி பண்ணிப் போதுவார் பின்பு போத, இலங்குஒளி வலயப்பொன்தோள் இடைஇடை மிடைந்துதொங்கல் நலம்கிளர் நீழல் சூழ நான்மறை முனிவரோடும் அலங்கல அம்தோளினான் வந்து அணைந்தனன் அண்ணல் கோயில். பொலம் கலம் - பொற்கலங்கள் பூட்டிய. பண்ணி - சீர்படுத்தி. வலயம் - வாகுவலய மணிந்த தோளின். மிடைந்து - நெருங்கி. தொங்கல் - மாலைகளின். நலங்கிளர் - அழகு பொலியும்; குளிர்ச்சி யுள்ள. அலங்கலம் தோளினான் - அசைதலையுடைய கையினராகிய நம்பியாரூரர். அலங்கலம் - மாலையுமாம். தோளிற்றிருகுவான் போன்ம் -கலித்தொகை 101; 32; நாளுற்று நம்பி பிறந்தான் திசைபத்து நந்தத் - தோளுற்றோர் தெய்வம் துணையாய்த் துயர்தீர்த்த வாறும் -சிந்தாமணி 10. (தோள் கை - நச்சினார்க்கினியம்.) 188. 335. கண்ணுதல் கோயில் தேவா சிரியன் ஆம் காவணத்து விண்ணவர் ஒழிய, மண் மேல் மிக்க சீர் அடியார்கூடி எண் இலார் இருந்தபோதில், இவர்க்கு யான் அடியேன் ஆகப் g©Q« ehŸ vª ehŸ? என்று பரமர் தாள் பரவிச்சென்றார். கண்ணுதல் - திருநகரச் சிறப்பு; பாட்டு 46. குறிப்புப் பார்க்க. தேவாசிரியனாம் காவணத்துள் - தேவாசிரிய மண்டபத்தில். ஒழிய - நீங்கலாக. 189. 336. அடியவர்க்கு அடியன் ஆவேன் என்னும் ஆதரவு கூரக், கொடி நெடுங் கொற்ற வாயில் பணிந்து கைகுவித்துப் புக்கார் கடி கொள் பூங்கொன்றை வேய்ந்தார், அவர்க்கு எதிர்காணக் காட்டும் படிஎதிர் தோன்றி நிற்கப் பாதங்கள் பணிந்து பூண்டு. ஆதரவுகூர - அன்புவளர (கூர்தல் - உள்ளது சிறத்தல்). கொற்றம் - வெற்றி. கடி - வாசனை. வேய்ந்தார் - அணிந்த தியாகேசப் பெருமான். அவர்க்கு - நம்பியாரூரர்க்கு. எதிர்காணக் - காட்சி யளிக்க; நம்பியாரூரர் முன்னே தோன்றி நிற்க. இப்பாட்டினைத் தொடர்ந்து, திருநெல்வேலிச் செங்கோல் மடத்து ஏட்டுப் பிரதியில் கீழ்வரும் பாக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. (1) வன் தொண்டர் காதல் கண்டு மழவிடை உடையார் தாமும் - முன் தொண்டராக ஆண்ட முதல் நம்பியாரூரர்க்குச் - சென்றங்கு போற்று மிக்க திருத்தொண்டர் தம்பாற் சேர - ஒன்றும் பண்பருள வேண்டி ஒருதொண்டர் வெகுளச் செய்தார் - (2) பெருந்தவத் தொண்டரான பெருவிறன் மிண்டரென்பார் - இருந்தவக் குழாத்தி னின்றும். எதிர்செயிர்த் தெழுந்து நின்று - அருந்தவப் பெரியோர் தம்மைப் பணிந்தணை யாது போன - வருந்தவற்றுடைய வேட மற்றிவனார்கொல் என்று - (3) பக்கமேவரு வார்கள் பலருடன் - புக்கபோது பெருவிறன் மிண்டர் தாம் - மிக்கெழுந்த வெகுளியால் நம்பிபால் தக்க வல்லன சாலவுஞ் சொல்லினார் - (4) சொன்ன தொண்டரை நோக்கிமெய்த் தொண்டரால் - மன்னி நீடு வளர் பெருங்கூட்டத்து - முன்னிருந்தார் ஒருவர் மொழிகின்றார் - இன்னல் சொல்லல் இயல்பல்ல வாமென்று - (5) ஓலை காட்டி உடையவர் முன்னின்று - ஞால மேற்க ஆட் கொண்டருள் நம்பியைச் சீல - முன்பறியாதிவை செப்பினீர் - கோலமே கண்டு கூறலாமே! என்றார் (6) என்று கூற இகழ்ந்து விறன்மிண்டர் - நன்று சாலவு நம்பெரு மக்கள் வந் - தொன்று கூட்டம் உணரா ஒருவனை - அன்று தம்பிரான் ஆள்வ தழகிதால் - (7) கருந்தடங் கண்ணி பாகர்தங் காதல்சூழ் - அருந்தவத் தடியாரை அணைவின்றிப் - புரிந்த பண்பினில் தூர்த்தன் புறகெனா - இருந்த தொண்டர் திருக்கைசாத் தும்மென - (8) வெம்பி நீர்மொழி யீர்விறன் மிண்டரே - நம்பியாரூரர் காணும் அந்நாயனார் - அம்பொன் மாளிகை ஆரூர் அமர்ந்தருள் - தம்பிரான் தோழனார் அவர் தாமென் - (9) தோழ ராகிலும் தொண்டரே யாகிலும் - ஆழி மாலயன் காணா அருட்கழல் - சூழும் மெய்யடி யாரைத் தொடர்வின்றி - வாழு மூரன் பிரானாதல் வைத்திலம் - (10) இன்ன வாறடி யார்புற கென்றபின் - நன்ன வாறறிந் தஞ்சி ஆரூரர்தாம் மின்னு வார்சடை வேதியன் தாள் தொழப் - பொன்ன வாமணிப் பூங்கோயில் சார்தலும் - (11) பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர் - அங்குக் காட்சி கொடுத்தருளாமையில் - இங்கும் பேறெனக் கிவ்வண்ணமோ என்பார் - எங்குந் தேடி அழிவுற்றியம்புவார் - (12) என்னை ஆட்கொண்ட ஈசனு மாய் எனக் கன்னை யாய்அமு தாய்அறி வாயினாய் - பொன்னை ஆர்ந்த புரிசடைப் புண்ணியா! - உன்னை யான் இங்குக் காணேன் ஒளித்தியோ - (13) வெள்ள நீர்பரந் தோங்கும் விரிசடை வள்ளலே மலை யாள்மண வாளனே - தெள்ளு மாமறை யின்தெளிவாகிஎன் - உள்ள மேபுகுந்தாய் இங் கொளித்தியோ - (14) ஈச னேஎனக் கெய்ப்பினில் வைப்பெனப் - பேசலாகும் பெரும்பொருளாயினாய் - தேச னேசிவ னேசிவ லோகனே - ஓசையே உனை யான்உணர்வேன் என்று - (15) தோழ ராகிநற் சுற்றமுமாய் அடி - நீழல் தந்தளிப் பார்எதிர் நீங்கவும் - ஆழி போன்ற அடியார் முனியவும் - வாழி வன்தொண்டர் சால வருந்தினார் - (16) வேண்டி ஆட்கொண்ட வீறுடைத் தொண்டரை - ஆண்ட நாயகர் அவர்வென்றருள் செய்து - காண்ட கும்படி காட்சி கொடுத்தலும் - பூண்டு கொண்டவர் பொன்னடி போற்றுவார். இப்பாக்கள், தமது வீட்டு ஏட்டுப் பிரதியில் காணப்பட்டன என்று இலக்கண விளக்கப் பரம்பரை திருவாரூர் - சோமசுந்தர தேசிகரவர்கள், அவைகளைச் செந்தமிழ்த் தொகுதி 17-ல் வெளியிட்டுள்ளார்கள். இப்பிரதியிலுள்ள பாடல் களுக்கும் அப்பிரதியிலுள்ள பாடல்களுக்கும் மிகச் சில விடங்களில் வேற்றுமைகளிருக்கின்றன. 190 - பாட்டைத் தொடர்ந்து வேண்டி . . . . .போற்றுவார் என்னும் பாட்டும், 202 - ம் பாட்டைத் தொடர்ந்து அப்பெரியோர் சிவனருளால் அளவிறந்த கருணையால் - ஒப்பரிய ஆரூரன் பிரானாதல் உளதாமென் - றிப்பரிசுக் கினத் திருக்கை சாத்துமென எழுந்தனவால் - முப்புவனங்களும் உய்ய எழுந்த ஒலி திருக்கை ஒலி என்னும் பாட்டும் நாகர்கோயில் தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் வீட்டுப் பிரதியில் காணப்படுகின்றன. 190. கலி விருத்தம் 337. மன்பெருந்திரு மாமறை வண்டுசூழ்ந்து, அன்பர் சிந்தை அலர்ந்தசெந் தாமரை நன்பெரும் பரமானந்த நல்மது என்த ரத்தும்அ ளித்து, எதிர் நின்றன. மறை வண்டு - வேதமாகிய வண்டு. என் தரத்தும் - எனக்கும் (இழிவுக்குறிப்பு). ஆண்டவன் பாதங்களை (செந்தாமரையை) மறை வண்டு சூழ்ந்து கிடக்கும்; அவை அன்பர் சிந்தையில் அலர்வன; பர மானந்தம் என்னும் தேனைப் பிலிற்றுவன. 191. 338. ஞாலம் உய்ய நடம்மன்றுள் ஆடின; காலன் ஆர்உயிர் மாளக் கறுத்தன; மாலை தாழ்குழல் மாமலை யாள்செங்கை சீலம் ஆக வருடச் சிவந்தன. கறுத்தன - கோபித்தன. கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள -தொல்காப்பியம் : சொல். 76. மலையாள் - உமையம்மையார். சீலமாக - மிருதுவாக. வருட - தடவ. சிவந்தன - செந்நிறமடைந்தன. 192. 339. நீதி மாதவர் நெஞ்சில் பொலிந்தன; வேதி யாதவர் தம்மை வேதிப்பன; சோதியாய் எழும் சோதியுள் சோதிய; ஆதி மால் அயன் காணா அளவின. வேதியாதவர்தம்மை - மலத்தினின்றும் நீங்காதவர்களை; தம்மை உணராதவர்களை. வேதிப்பன - அவர்தம் மலத்தை நீக்குவன. திருவடிகளை உணராமைக்குக் காரணம் அறியாமை. அவ் வறியாமையை (மலத்தை)த் திருவருள் (திருவடி) நீக்குமென்க. (களிம்புடைய செம்பை வேதித்துக் களிம்பைப் போக்கிப் பொன்னாக்குவது போல). சோதிய - சோதியாய் விளங்குவன. 193. 340. வேத ஆரணம் மேல்கொண்டு இருந்தன; பேதை யேன்செய் பிழைபொறுத்து ஆண்டன; ஏதம் ஆனவை தீர்க்க இசைந்தன; பூத நாத! நின் புண்டரீகப் பதம்! வேத ஆரணம் மேற்கொண்டிருந்தன - வேதத்தின் ஞான பாகத்தின் (உபநிடதங்களின்) மேலேறுவன. ஏதமானவை குற்றமான வைகளை. பூதம் - உயிர்கள். புண்டரீகம் - தாமரை. 194. அறுசீர் விருத்தம் 341. இன்ன வாறுஏத்தும் நம்பிக்கு ஏறு சேவகனார் தாமும் அந்நிலை அவர்தாம் வேண்டும் அதனையே அருளவேண்டி, மன்னுசீர் அடியார் தங்கள் வழித் தொண்டை உணர நல்கிப் பின்னையும் அவர்கள் தங்கள் பெருமையை அருளிச் செய்வார். ஏறு சேவகனார் - எருதேறும் வீரர்; எவரினு முயர்ந்த வீரர் என்பது பழைய குறிப்புரை. அவர் - நம்பியாரூரர். வழிவழியாக வருந் தொண்டை உணர நல்கி - அறியத் திருவருள் செய்து. 195. 342. பெருமை யால் தம்மை ஒப்பார்; பேணலால் எம்மைப் பெற்றார்; ஒருமையால் உலகை வெல்வார்; ஊனம்மேல் ஒன்றும் இல்லார்; அருமைஆம் நிலையில் நின்றார்; அன்பினால் இன்பம் ஆர்வார்; இருமையும் கடந்து நின்றார்; இவரைநீ அடைவாய் என்று. பேணலால் - இடையறாது தியானித்தலால். ஒருமையால் - ஒருமையுணர்வால். உலகம் பன்மை யுணர்வால் பாதிக்கப்படுதலின் ஒருமையால் உலகை வெல்வார் என்றார். ஒருமை யுணர்வு பெற்றோர்க்கு எவ்வித ஊனமும் (பிறவி முதலிய துன்பங்களும்) நேர்வதில்லை. ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக்கு ஊனம் இல்லை - கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்கா அப்பர்: -கோயில் திருவிருத்தம் 2. ஊனமில்லா அருமையாம் நிலை. ஆர்வார் - நுகர்வார். தத்துவக் காரியங்கள் தாக்காத விடத்தில் எழுவது உண்மை அன்பு. அவ்வன்பால் நுகர்வது உண்மை இன்பம் என்க. அவ்வன்பே இன்பமுமாம். ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடைய அன்பே -திருவாசகம்; அனுபோக இலக்கணம். இருமை - இறப்புப் பிறப்புக்களை. 196. 343. நாதனார் அருளிச் செய்ய நம்பி ஆரூரர் நான் இங்கு ஏதம் தீர் நெறியைப் பெற்றேன் என்று எதிர் வணங்கிப் போற்ற, நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்துநீ நிறைசொல் மாலை கோது இலா வாய்மை யாலே பாடு என அண்ணல் கூற. ஏதம் தீர் - குற்றம் ஒழிந்த. அவர்கள் தம்மை - அடியார்களை. அண்ணல் - சிவபெருமான். 197. 344. தன்னை ஆள்உடைய நாதன் தான் அருள்செய்யக் கேட்டுச் சென்னியால் வணங்கி நின்ற திருமுனைப் பாடி நாடர், இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன்? அதற்கு யான் ஆர்? பன்னு பாமாலை பாடும் பரிசு எனக்கு அருள் செய் என்ன. திருமுனைப்பாடி நாடர் - நம்பியாரூரர். இன்னவாறு இன்ன பண்பு என்று ஏத்துகேன் - அடியார்கள் வரலாறு இன்ன தென்றும் அவர்கள் தன்மை இத்தகைய தென்றும் தெரியாத யான் அவர்களை எங்ஙனம் ஏத்துவேன்? பன்னு - அவர்தம் புகழைச் சொல்லும். பரிசு - இயல்பு; சக்தி. 198. 345. தொல்லை மால் வரைபயந்த தூயாள்தன் திருப் பாகன் அல்லல் தீர்ந்து உலகுஉய்ய மறைஅளித்த திருவாக்கால் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று எல்லைஇல் வண் புகழாரை எடுத்துஇசைப்பா மொழி என்றார். பழைய பெரிய இமயமலை ஈன்ற தூய்மையுடைய உமாதேவி யாரை இடப்பக்கத்தில கொண்ட சிவபெருமான் என்று - என்று அடி யெடுத்துக் கொடுத்து. புகழாரை - அடியவர்களை இசைப் பாவால். 199. 346. மன்னுசீர் வயல் ஆரூர் மன்னவரை வன் தொண்டர் சென்னி உற அடிவணங்கித் திருவருள்மேல் கொள் பொழுதில், முன்னம் மால் அயன் அறியா முதல்வர்தாம் எழுந்து அருள, அந்நிலை கண்டு அடியவர்பால் சார்வதனுக்கு அணைகின்றார். மன்னவரை - தியாகராஜரை. திருவருள் படிகின்றபோது. எழுந் தருள - மறைந்தருள; காட்சி கொடுத்தருள என்பதுமொன்று. 200. 347. தூரத்தே திருக்கூட்டம் பலமுறையால் தொழுது, அன்பு சேரத் தாழ்ந்து, எழுந்துஅருகு சென்றுஎய்தி, நின்று, அழியா வீரத்தார் எல்லார்க்கும் தனித் தனி வேறு அடியயேன் என்று ஆர்வத்தால் திருத் தொண்டத் தொகைப் பதிகம் அருள்செய்வார். என்றும் நிலைபேறாக உள்ள வீரமாதலின் நின்றழியா வீரத்தார் என்றார். திருக்கூட்டச் சிறப்பு 9-ம் பாட்டையும் குறிப்பையும் பார்க்க. 201. 348. தம்பெருமான் கொடுத்த மொழி முதல் ஆகத் தமிழ் மாலைச் செம்பொருளால் திருத்தொண்டத் தொகையானதிருப்பதிகம், உம்பர் பிரான் தான்அருளும் உணர்வுபெற உலகுஏத்த எம்பெருமான் வன்தொண்டர் பாடிஅவர் எதிர்பணிந்தார். மொழி முதலாக என்றது தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதை. ஆன்ற - அமைந்த. உம்பர் பிரான் - தெய்வநாயகராகிய சிவபெருமான். அருளும் உணர்வுபெற - அருளிய உணர்வு உண்டாக; அருளும் உணர்வும் பெற என்னலு மாம். ஆண்டவனருட்டுணையால் பெற்ற உணர்வால் திருப்பதிகம் பாடினாரென்க. அவர் - அவ்வடியவர்கள். எதிர் - திருமுன்னே. 202. 349. உம்பர் நாயகர் அடியார் பேர்உவகை தாம்எய்த நம்பிஆ ரூரர் திருக் கூட்டத்தின் நடுவு அணைந்தார்; தம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே எம்பிரான் தமர்கள் திருத் தொண்டு ஏத்தல் உறுகின்றேன். தமிழ் முறையே - திருத்தொண்டத் தொகை முறைப்படியே. எம்பிரான் தமர்கள் - சிவனடியார்கள்; நாயன்மார்கள். இந்நூலுக்குப் பதிகம் திருத்தொண்டத் தொகை என்பது திருமலைச் சிறப்பில் விளக்கப்பட்டது. விளக்கம் ஆண்டுக் காண்க. 203. சுந்தர மூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டிலே, திருநாவலூரிலே, ஆதி சைவ மரபிலே சடையனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், இசை ஞானியார் என்னும் பெண்மணியை மணந்து இல்லறம் நடாத்தி வந்தார். வருநாளில், அவருக்கு ஒரு புதல்வர் பிறந்தார். அப் புதல்வருக்கு நம்பியாரூரர் என்னுந் திருநாமம் சூட்டப்பட்டது. நம்பியாரூரர் பிறையென வளர்ந்து வரலானார். நம்பியாரூரர் தமது குழந்தைப் பருவத்துக்கேற்பச் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்தார். ஒருநாள், அவ் விளை யாட்டின்போது, அந் நாட்டு மன்னராகிய நரசிங்கமுனையர், குழந்தைப்பெருமானைக் கண்டார்; காதல் கூர்ந்தார்; சடையனா ரிடஞ் சென்றார்; நம்பியாரூரைத் தருமாறு வேண்டினார். சடையனார் மன்னர் வேண்டு தலுக்கு இணங்கினார். நரசிங்க முனையர் நம்பியாரூரை அன்பினால் மகன்மை கொண்டார். நம்பியாரூரர், அரசிளங்குமரர்போல் அந்தணர் நெறியில் வளர்க்கப்பட்டார். உரிய காலத்தில் அவருக்கு உபநயனம் செய்யப் பட்டது. நம்பியாரூரர் அளவிலாக் கலைகளை ஆய்ந்து வல்லவ ரானார். அவருக்குத் திருமணப் பருவம் உற்றது. புத்தூரிலே சடங்கவி சிவாச்சாரியார் என்பவர் ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு பெண் மகவு உண்டு. அப் பெண் மணியை நம்பியாரூரருக்கு மணஞ் செய்விக்கச் சடையனார் விரும்பினார்; விரும்பிச் சில பெரியோர்களைப் புத்தூருக்கு அனுப்பினார். அவர்கள், புத்தூருக்குப்போய்ச் சடங்கவி சிவாச்சாரியாரைக் கண்டார்கள்; சடையனார் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். சடங்கவி சிவாச்சாரியார், சடையனார் விருப்பத்துக்கு உடன் பட்டார். பெரியோர்கள் திரும்பிவந்து, சடங்கவி சிவாச்சாரியார் உடன்பட்டதைச் சடையனார்க்கு அறிவித்தார்கள். சடையனார் மகிழ்வெய்தினார்; திருமணத் திருநாள் குறிப்பிட்டார். நானா பக்கமும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. சடங்கவி சிவாச் சாரியாரும் புத்தூரில் திருமண வினைகளைக் குறைவறச் செய்து முடித்தார். திருமணத்துக்கு முன்னாளில் நம்பியாரூரருக்குக் காப்பணிதல் முதலிய சடங்குகள் செய்யப்பட்டன. அவர், அடுத்த நாள் காலைக் கடன்களை முடித்துத் திருமணக் கோலங்கொண்டார்; குதிரைமேல் ஏறினார்; புத்தூரை அடைந்தார். பெண்மணிகள் நம்பியாரூரை எதிர் கொண்டார்கள். திருமணப் பொலிவை விரித்துக் கூறுதல் இயலாது. அது வருணனைக்கு எட்டாதது. புத்தூர், மணம் வந்த புத்தூர் ஆயிற்று. நம்பியாரூரர் குதிரைவிட்டிறங்கித் திருமணப் பந்தருள் நுழைந்தார்; அங்கே இடப்பட்டிருந்த ஒரு பீடத்தில் அமர்ந்தார். அவ் வேளையில் திருக்கயிலாயத்திலே சுந்தரமூர்த்தி சுவாமி களுக்கு வாக்களித்தவாறு, அவரைத் தடுத்தாட் கொள்ளும் பொருட்டுச் சிவபெருமான் புறப்பட்டார். அவர், ஒரு முதிய அந்தணக் கோலந் தாங்கினார்; தண்டூன்றிக் கொண்டே வந்தார்; திருமணப் பந்தருள் நுழைந்தார்; சபை யாரை உற்று நோக்கினார்; நோக்கிச், சபையாரே! என் மொழியைக் கேளுங்கள் என்றார். சபையாரும் நம்பியா ரூரரும் அந்தணரைப் பார்த்து, அடிகள் இங்கே எழுந்த ருளியது எங்கள் தவம்; சொல்வதைச் சொல்லும் என்றனர். அப்பொழுது அந்தணர், நாவலூரரைக் கருணை நோக்கஞ் செய்தார்; செய்து, ஏ நம்பி! எனக்கும் உனக்கும் ஒருபெரும் வழக்கு உண்டு. அதைத் தீர்த்த பின்னரே நீ மணஞ்செய்தல் வேண்டும் என்று சொன்னார். நாவலர் பெருமான், என்ன! வழக்கா? வழக்காயின், அதைத் தீர்த்தே மணஞ் செய்வேன். வழக்கைச் சொல்லும் என்றார். உடனே அந்தணர், சபையாரைப் பார்த்து, கேளுங்கள்! இந் நம்பி யாரூரன் எனக்குப் பரம்பரை அடிமை இதுவே யான் சொல்ல வந்தது என்று கூறினார். இக் கூற்று, அங்கிருந்தவர்களைத் திடுக்கிடச் செய்தது. சிலர், இவன் யாவன்? என்றார்; சிலர் அந்தணர் அருகே சென்றார்; சிலர் வெகுண்டார்; சிலர் சிரித்தார்; நம்பியாரூரர், இவ் வந்தணர் மொழி நன்றாயிருக்கிறது! என்று நகைத்தார். அச் சமயத்தில் அந்தணர், ஆரூரர் அருகே போனார்; போய், அடே! அந்தக் காலத்தில் உன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்த அடிமை ஓலை இருக்கிறது. நீ ஏன் என்னை இகழ்ந்து நகையாடுகிறாய்? என்று கேட்டார். நாவலர் பெருமானது நகைப்பு ஒழிந்தது. அவர், அந்தணரை நோக்கி, அந்தணர்க்கு அந்தணர் அடிமை யாதல் உண்டோ! அதை இன்று நீர் சொல்லவே கேட்டேன்; நீர் பித்தரோ! என்று மொழிந்தார். அதற்கு அந்தணர், யான் பித்தனாயினும் ஆக; பேயனாயினும் ஆக; நீ என்ன கூறினுங் கூறுக. யான் நாணமுறேன், நீ என்னை அறிந்தாயில்லை. வித்தகம் பேசாதே; பணி செய்ய வா என்றார். நம்பியாரூரர், இஃதென்ன! அடிமை ஓலை ஒன்றி ருப்பதாக இவர் கூறுகிறாரே; அதன் உண்மையை அறிதல் வேண்டும் என்று சிந்திக்கலானார்; சிந்தித்து, அந்தணரைப் பார்த்து, அடிமை ஓலை எங்கே? காட்டும்! என்று கேட்டார். அந்தணர், நம்பி! ஓலையைக் காண்டற்கு நீ அருக னல்லன். அதை இச்சபை முன்னே காட்டுவேன். உண்மை உறுதிப்பட்ட பின்னர், எனக்கு அடிமைத் தொழில் செய்யவே நீ அருகன் என்று உரைத்தார். அவ்வுரை நாவலர் பெருமானுக்குக் கோபமூட்டிற்று. அவர் வெகுண்டார்; எழுந்தார். அந்தணர் ஓடினார். ஆரூரர், அவரைத் தொடர்ந்து ஓடினார்; பிடித்தார்; ஓலையைப் பிடுங்கினார்; அந்தணர்க்கு அந்தணர் அடிமையாவது என்ன முறை? என்று அதைக் கிழித்தெறிந்தார். அந்தணர், நாவலர் பெருமானைப் பற்றி, இது முறையோ! என்று கூக்குரலிட்டார். அருகிலிருந்தவர்கள் இருவரையும் விலக்கினார்கள். அவர்கள், அந்தணரைப் பார்த்து, என்ன ஐயரே! உலகத்தில் இல்லாத வழக்கைக் கொண்டுவந்தீர்! நீர் இருப்பது எங்கே? என்று கேட்டார்கள். அதற்கு அந்தணர் யான் இருப்பது இத் திரு வெண்ணெய் நல்லூர், இவன் என் ஓலையை வலிந்து பிடுங்கிக் கிழித்தான். அதனாலேயே இவன் என் அடிமை என்பது உறுதி யாயிற்று என்று சொன்னார். அது கேட்ட நாவலூரர், இவன் பழைய மன்றாடி போலும்! என்று நினைந்து அந்தணரே! உமது ஊர் இத்திருவெண்ணைய் நல்லூர் என்று சொல்கிறீர். அங்கே போய் இவ் வழக்கைப் பேசலாம் என்றார். அதற்கு அந்தணரும், அப்படியே செய்வோம்; என்னிடத்தில் மூல ஓலை இருக்கிறது. அதைக் கொண்டு என் கட்சியை நிலைபெறுத்தல் கூடும் என்று சொல்லிக் கொண்டே தண்டூன்றிப் புறப்பட்டார். எல்லோரும் திருவெண்ணெய் நல்லூரை அடைந் தனர்; அங்கே வேதியர்கள் நிறைந்த சபைக்குச் சென்றனர். அந்தணர், சபையாரை நோக்கி, மூதறிஞரே! இந்த நம்பி யாரூரன் எனக்கு அடிமை. அதை உறுதிப்படுத்த ஓலை காட்டினேன். இவன் அதை வலிந்து பிடுங்கிக் கிழித்தெறிந்தான். அது குறித்து இருவேமும் இங்கே வந்தி ருக்கிறோம் என்று முறையிட்டார். சபையார் அந்தணரைப் பார்த்து, அந்தணர் அடிமையாகும் வழக்கம் எங்கும் இல்லையே! என்றார். தன்னந் தனியராய் நின்ற அந்தணர், என் வழக்கு நியாயமானது. இவன் வலிந்து கிழித்த ஓலை, இவன் பாட்டன் எழுதிக் கொடுத்தது என்றார். சபையார், நம்பியாரூரைப் பார்த்து, ஓலையை வலிந்து கிழிக்கலாமா? அது வெற்றியாகுமா? இம் முதியோர் தமது வழக்கைச் சொன்னார். உமது எதிர்ப்பு என்ன? என்று கேட்டார். நம்பியாரூரர், சபை யாரை நோக்கி, நூலறி புலவீர்! யான் ஆதி சைவன் என்பதை நீர் அறிவீர். இவர் என்னைத் தம் அடிமை என்கிறார். எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. இது மாயையாய் இருக்கிறது என்று சொன்னார். அது கேட்ட சபையார், அந்தணரைப் பார்த்து, உமது வழக்குக்குச் சான்று வேண்டும். ஆட்சி, எழுத்து, அயலார் கூற்று என்று மூன்றுவிதச் சான்றுகள் உண்டு. அவற்றுள் ஒன்றையாவது காட்டுக என்று கேட்டார். அந்தணர், சபையாரைப் பார்த்து, முன்னே இவன் கிழித்தது படி ஓலை. மூல ஓலை என்னிடத்தில் இருக்கிறது என்றார். அதைக் காட்டுக என்று சபையார் கூறினார். அந்தணர், மூல ஓலையைக் காட்டுவேன். அதையும் இவன் கிழித்தால் என் செய்வது? என்றார். சபையார், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்; அஞ்சாது காட்டுக என்று உறுதி கூறினார். அந்தணர், மூல ஓலையை எடுத்தார். சபையார் ஏவுதல்படி ஒரு கணக்கன் அவ்வோலையை வாங்கிப் படித்தான். அதில், திருநாவலூரில் வாழும் ஆதி சைவ னாகிய ஆரூரன், திருவெண்ணெய்நல்லூர்ப் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது; யானும் என் மரபினரும் திரு வெண்ணெய் நல்லூர்ப் பித்தனக்கு வழித்தொண்டு செய்ய அகமும் புறமும் ஒத்து உடன்படுகிறோம். இங்ஙனம்; ஆரூரன் என்ற வாசகம் இருந்தது. அதில் கையெழுத்திட்டவர்கள், தங்கள் கையெழுத்தென்றே ஒத்துக் கொண்டார்கள். அதற்குமேல் சபையார், நம்பியாரூரைப் பார்த்து, இஃது உமது பாட்டன் கையெழுத்தா? பாரும் என்றார். அப்பொழுது அந்தணர், இவன் பாட்டன் கையெழுத்தை இவனா பார்க்க வல்லான்! இவன்றன் பாட்டனுடைய வேறு கையெழுத்துகளை வரவழைத்து, நீங்கள் பாருங்கள்; பார்த்து உண்மையை வெளி யிடுங்கள் என்றார். அவர்கள் அப்படியே செய்தார்கள். இரண்டு கையெழுத்தும் ஒத்திருந்தன. சபையார் நம்பியாரூரை நோக்க லாயினார்; நம்பி யாரூரே! என்ன செய்தி? இவ்வந்தணருக்கு நீர் தோற்றீர். அவருக்கு அடிமையாயிருப்பது உமது கடன் என்று முடிவு கூறினர். நம்பியாரூரர் என் செய்வார்! இஃது என் தலை எழுத்து. உங்கள் தீர்ப்புக்கு இசையாது யான் வேறு என் செய்தல் கூடும்? என்று ஏக்குற்றார். அவ் வேளையில், சபையார் அந்தணரைப் பார்த்து, முதியவரே! ஓலையில் உமது ஊர் இவ்வூர் என்று குறிக்கப் பட்டி ருந்தது. இவ்வூரில் நீர் எங்கே வதிகிறீர்? என்று கேட்டனர். அந்தணர், இங்குள்ள ஒருவரும் என்னை அறியீரா? என் வீட்டைக் காட்டு கிறேன்; வாரும் என்று சொல்லி நடந்தார். நம்பியாரூரரும் மற்றவரும் அவரைத் தொடர்ந்து சென்றனர். அந்தணர், அவ்வூரிலுள்ள திரு அருட்டுறை என்னுந் திருக்கோயிலி னுள்ளே நுழைந்தார்; மறைந்தார். தொடர்ந்து சென்றவர்கள் எல்லோரும் மயங்குகிறார்; திகைக்கிறார். நம்பியாரூரர், என்னை ஆட்கொண்ட அந்தணர் திருக்கோயிலுள்ளே நுழைந்தார். இஃதென்ன? என்று வியப்படைகிறார். அவர் தனியேபோய் அழைத்துப் பார்த்தார். அப்போது, சிவபெருமான் உமாதேவியாருடன் மழ விடை மேல் தோன்றினார்; தோன்றி, நாவலூரா! முன்பு நீ நமக்குத் தொண்டன்; வேட்கை கூர்ந்தாய்; அதனால் நமது ஏவற்படி இம் மண்ணில் பிறந்தாய். இவ்வுலக பாசம் உன்னைப் பிடியாதபடி நாமே தடுத்தாட்கொண்டோம் என்று திருவாய் மலர்ந்தருளினார். அவ்வருளொலி கேட்ட நம்பியாரூரர், ஆனந்த பரவசரானார்; ஆகி; அடியேன் நாயினும் கடையேன். என்னை ஒரு பொருளாகக் கொண்டு தடுத்தாட் கொண்டீர். உமது கருணையே கருணை என்று போற்றி நின்றார். சிவபெருமான், நாவலூரரைப் பார்த்து, நீ நம்மோடு வன்மை பேசினாய். அதனால் உனக்கு வன்தொண்டன் என்னும் பெயர் வழங்குவதாக. நமக்குரிய அர்ச்சனை பாட்டேயாரும். நீ அவ் வர்ச்சனை செய்யக் கடவாய் என்றார். அதற்கு நம்பியாரூரர், யான் சிறியேன்; ஒன்றும் அறியேன்; பெருமான் அருட்குணங்கள் எனக்கு என்ன தெரியும்? எப்படிப் பாடுவேன்? என்று முறையிட்டார். சிவபெருமான், என்னைப் பித்தன் என்று முன்னே நீ பேசினாய்; என்னைப் பித்தன் என்றே பாடு என்று அருளிச்செய்தார். வன்தொண்டப் பெருமான், பித்தா பிறைசூடி என்று அருளிச் செய்தார். வன்தொண்டப் பெருமான், பித்தா பிறைசூடி என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். அதைக் கேட்ட சிவபெருமான், வன் தொண்டரைப் பார்த்து, இன்னும் நமது புகழைப் பாடிக்கொண்டு இருப்பாயாக என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார். புத்தூரிலே திருமணம் குலைந்தது சடங்கவி சிவாச்சாரி யாருடைய புதல்வியார், வன்தொண்டப் பெருமான் திருவடியி லேயே நெஞ்சைப் பதிய வைத்தார்; அவரையே நினைந்து நினைந்து சிவலோக மடைந்தார். வன்தொண்டர் திருவண்ணெய் நல்லூரினின்றும் திருநாவ லூருக்குச் சென்றார்; ஆண்டவனைத் தொழுதார்; திருத்துறை யூருக்குப் போனார்; அங்கே இறைவனை நோக்கித் தவநெறி வேண்டினார். அவருக்குத் தில்லையைக் கண்டு தொழுதல் வேண்டும் என்னும் வேட்கை எழுந்தது. அவ்வேட்கையுடன் அவர் புறப் பட்டார். நாவலர் பெருமான் பெண்ணையாற்றைக் கடந்தார். மாலைக் காலம் வந்தது. அவர் திருவதிகைப் புறத்தே அணைந்தார். திருவதிகை, திருநாவுக்கரசு சுவாமிகள் உழவாரத் திருத்தொண்டு செய்த திருப்பதி. அதனால், அதனை மிதிக்க வன்தொண்டர் அஞ்சினார்; பக்கத்திலே இருந்த சித்தவட மடத்தில் தங்கினார்; திரு வதிகைப் பெருமானை நினைந்து கொண்டே துயின்றார். திரு வதிகைப் பெருமான் ஒரு கிழ வேதியராய் அம்மடம் போந்தார்; போந்து, வன்தொண்டப் பெருமானுடைய தலையின்மீது காலை வைத்துத் துயில்வார்போல் இருந்தார். வன்தொண்டர் விழித்துப் பார்த்தார்; ஐயரே! உமதடியை என் முடிமீது வைத்தீர் என்று சொன்னார். ஐயர் என் மூப்பு, திசையறியாமற் செய்து விட்டது! என்றார். வன்தொண்டர் வேறொரு திசையில் தலை வைத்து உறங்கினார். அவ்வேதியர் மீண்டும் வன்தொண்டர் மடிமீது அடியை வைத்தார். வன்தொண்டர், ஐயரே! நீர்யார்? பலகாலும் என்னை மிதிக்கிறீர்? என்று கேட்டார். வேதியர், என்னை அறியாயோ! என்று கூறி மறைந்தருளினார். உடனே நாவலர் பெருமான், வந்தவர் சிவபெருமான் என்று உணர்ந்தார்; இறுமாப்பால் கெட்டேன் என்று வருந்தினார்; தம்மானை அறியாத சாதியா ருளரோ? என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். பின்னர்த் திருநாவலூரர் திருக்கெடில நதியிலே நீராடினார்; திருமாணிக்குழியையுந் திருத்தினை நகரையுந் தொழுதார்; தில்லை சேர்ந்தார்; தில்லைக் கூத்தனைக் கண்டார்; வணங்கினார்; புலன்கள் ஒன்றப் போற்றினார்; தம்மை மறந்தார்; இன்புருவரானார். அவ் வேளையில் வன்தொண்ட! திருவாரூருக்கு வா என்றொரு வானொலி எழுந்தது. அது கேட்ட வன்தொண்டர், தில்லையைத் தொழுது புறப்பட்டார்; கொள்ளிடத்தைக் கடந்தார்; சீர்காழியை அணுகினார்; சீர்காழி ஆளுடையபிள்ளையார் பிறந்த திருப்பதி என்று அதனை மிதியாது, அதன் எல்லைப் புறத்தை வலம் வந்தார். அப்பொழுது சிவபெருமான் காட்சி கொடுத்தருளினார். வன் தொண்டர் கழுமல வளநகர் கண்டுகொண்டேனே என்று பாடி இன்புற்றார். பின்னே, வன்தொண்டர் திருக்கோலக்கா தொழுது, திருப்புன் கூரை வணங்கிக் காவிரிக் கரையைச் சேர்ந்தார்; காவிரியில் நீராடித் திருமயிலாடு துறை, திருஅம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய திருப்பதிகளைக் கண்டு தொழுது, தமிழ் பாடித் திருவாரூர் அணைந்தார். தியாகேசப் பெருமான் கட்டளைப்படி, திருவாரூர் வாசிகள் நம்பியாரூரரைச் சிறப்புடன் வரவேற்றார்கள். நம்பியாரூரரும் அவர்களோடு கலந்து, எந்தை இருப்பதும் ஆரூர், அவர் என்னையும் ஆள்வரோ கேளீர்? என்று பாடிக் கொண்டே சென்றார்; திருக் கோயிலுள் நுழைந்தார்; தேவாசிரிய மண்டபத்தைத் தொழுதார்; திருமூலட்டானத்தை அடைந்தார்; ஆண்டவனை வணங்கி, அன்பால் அகங் குழைந்து குழைந்து உருகினார். அப்பொழுது திருவருளால் நமது தோழமையை உனக்குத் தந்தோம்; நாம் உன்னைத் தடுத்தாட் கொண்டபோது, நீ பூண்டிருந்த திருமணக் கோலத்தை என்றும் பூண்டு கொண் டிருப்பாயாக; வேட்கை தீர வாழ்வாயாக என்ற வாக்கு எழுந்தது வன்தொண்டர் இறைவனை வணங்கிப் போற்றினார் அன்று தொட்டு அடியவர்கள் நாவலூரரைத் தம்பிரான் தோழர் என்று அழைக்கலானார்கள். தம்பிரான் தோழர், இறைவன் ஆணைப்படி திருமணக் கோலத்தைத் தாங்கலானார். அவர், திருவாரூரில் தங்கி நாடோறுஞ் சிவ பெருமானை வழிபட்டு வந்தார். திருக்கயிலாயத்திலே உமாதேவியாரின் தோழிமார் இருவர் இருந்தனர். அவருள் ஒருவர் கமலினியார் என்பவர். அவர் திரு வாரூரிலே, உருத்திர கணிகையர் மரபிலே பிறந்தார், அவருக்குப் பரவையார் என்னும் பெயர் அணியப்பட்டது. பரவையார் உற்ற வயதடைந்தார். நாள்தோறும் திருவாரூர்ப் பெருமானை வழிபடுவது அவர்தம் வழக்கம். ஒரு நாள், வழக்கம்போலப் பரவையார் திருக்கோயிலுக்குப் போனார். அவ்வேளையில் தம்பிரான் தோழரும் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். இருவரையும் பண்டைவிதி கூட்டிற்று. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவர் மனத்துள் அவர் நின்றார். அவர் மனத்துள் இவர் நின்றார். பரவையார் திருக் கோயிலுட் புகுந்தார். வன்தொண்டர் அங்கிருந்தவர்களைப் பார்த்து, இவள் யார்? என் மனத்தைக் கவர்ந்தாள் என்று கேட்டார். அவர்கள், பரவையார் என்றார்கள். தம்பிரான் தோழர், என்னை ஆண்ட பெருமானிடஞ் செல்கிறேன் என்று திருக்கோயிலுக்குப் போனார். ஆரூரர் போவதற்கு முன்னரே, பரவையார் இறைவனைத் தொழுது வெளியே சென்றார். நம்பியாரூரர் பரவையாரை விரும்பி, ஆண்டவனை வேண்டினார்; வேண்டி, எம்பிரான் திருவருள் எந்நெறிச் சென்றது என்று தமக்குள் வினவிக் கொண்டே பெருமான் எனக்குப் பரவையாரைத் தந்தருள்வார் என்று நினைந்து கொண்டி ருந்தார். மாலைக்காலம் உற்றது. பரவையார், நம்பியாரூரை நினைந்துகொண்டே வீடு சேர்ந்தார். வேட்கை கிளர்ந்து கிளர்ந்து முடுக்கலாயிற்று. பரவையார் மலரணையில் அமர்ந்தார்; தோழியைப் பார்த்தார்; நாம் கோயி லுக்குப் போனபோது நமக்கு எதிரே வந்தவர் யாவர்? என்று கேட்டார். தோழி, நம்பியாரூரர்; தம்பிரான் தோழர்; சிவ பெருமானால் தடுத்தாட்கொள்ளப்பெற்றவர் என்று கூறினாள். சிவனடியார் என்று கேட்டதும் பரவையார்க்கு மேலும் மேலும் காதல் பெருகலாயிற்று. காதல் பெருக்கு அவரைப் புலம்பவுஞ் செய்தது. அன்பர்கள் வேண்டியவற்றை வேண்டியாங் களிக்குஞ் சிவபெருமான், பரவை நாயகியாரை நம்பியாரூரக்குத் திருமணஞ் செய்து கொடுங்கள் என்று திருவாரூர் நேயர்களுக்குக் கட்டளை யிட்டார்; அதனை வன்தொண்டருக்கம் பரவையாருக்கும் தெரிவித்தார். அடுத்த நாள் காலையில், சிவநேயர்கள் எல்லோரும் ஒருங்கு சேர்ந்து திருவருளை வழுத்தினார்கள்; வழுத்திப் பரவை யாரைத் தம்பிரான் தோழருக்குத் திருமணஞ் செய்து கொடுத் தார்கள். இருவரும் இன்ப வாழ்வு நடாத்தி வந்தனர். வழக்கம்போல நம்யிரூரர் ஒருநாள் திருக்கோயிலுக்குச் சென்றார்; தேவாசிரிய மண்டபத்திலே கூடியிருந்த திருத் தொண்டர்களைக் கண்டார்; இவர்களுக்கு யான் அடியன் ஆகும் நாள் எந்நாள்? என்று கருதிக் கொண்டே சிவசந்நிதியடைந்தார். அதை அறிந்த தியாகேசப் பெருமான், வன்தொண்டர் முன்னே தோன்றினார்; அடியவருடைய வழித்தொண்டை அவருக்கு உணர்த் தினார்; அவர்கள் மீது பதிகம் பாடும்படி நாவலூரருக்குக் கட்டளை யிட்டார். தம்பிரான் தோழர், யான் சிறியேன்; அடியவர்கள் இயல்பை அறியேன்; அவர்கள் திறத்தை என்னென்று பாடுவேன்; திருவருள் துணை வேண்டும் என்று முறையிட்டார். சிவபெருமான் தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுத்தருளினார். உடனே நாவலர்பெருமான், தேவாசிரிய மண்டபத்தை அடைந்தார்; திருக்கூட்டத்தை வணங்கினார்; திருத் தொண்டத் தொகையை அருளிச் செய்தார்; மீண்டும் திருக் கூட்டத்தைத் தொழுதார்; ஆனந்த வெள்ளத்துள் அழுந்தினார்; பின்னே வீடு சேர்ந்தார். குண்டையூரிலே ஒரு கிழிவர் இருந்தார். அவர் வேளாளர். அக்குண்டையூர்க் கிழவர், தம்பிரான் தோழரின் சிறப்புகளைக் கேள்வியுற்று அவருக்கு அன்பராயினார். குண்டையூரர், தம்பிரான் தோழருக்குத் திருவமுதாகும்படி, செந்நெல், பருப்பு முதலியவற்றைப் பரவையார் திருமாளிகைக்கு அனுப்பி வந்தார். வருநாளில், மழைவளஞ் சுருங்கிற்று. ஒரு நாள் கிழவருக்குப் போதிய நெல் கிடைக்கவில்லை. கிழவர் வருந்தினார்; உணவுங்கொண்டாரில்லை; நேர்ந்த குறையை நினைந்து கொண்டே துயின்றார். அவர் தங்கனவிலே சிவபிரான் தோன்றி, ஆரூரனுக்காக உனக்குப் போதிய நெல் அளித்தோம் என்றார்; உடனே குபேரனை ஏவினார். குபேரன் குண்டையூர் முழுவதும் மலைமலையாக நெல்லைக்குவியச் செய்தான். நெற்குவியல்களால் விண்ணும் மறைந்தது. எங்கும் நெல் மயமாகவே இருந்தது. பொழுது விடிந்தது. குண்டையூர்க் கிழவர் விழித்து எழுந்தார்; நெல் மலைகளைக் கண்டார்; திருவருளை வியந்தார்; வன்தொண்டரை நினைந்தார்; இந்நெல்லை யாரால் எடுத்தல் கூடும்! இதனை வன்தொண்டர்க்குத் தெரிவிப்பேன் என்று திருவாரூர் நோக்கினார். இந்நிகழ்ச்சியைச் சிவபிரான் நம்பியாரூரர்க்குத் தெரிவித்தார், நம்பியாரூரர் குண்டையூர் நோக்கி வந்தார். குண்டையூர்க் கிழவர் ஆரூரரைக் கண்டார்; வணங்கினார்; ஆண்டவன் அருட் செய லையும், நெல்லெடுத்தனுப்புதல் இயலாமையையும் விளக்கினார். இருவருங் குண்டையூர் சேர்ந்தனர். நாவலர் பெருமான் நெல் மலைகளைக் கண்டார்; சிவபிரானைப் போற்றினார்; இவைகளை எடுத்துச் செல்லச் சிவபிரான் அருளால் ஆள்கள் பெறுதல் வேண்டும் என்று எண்ணினார்; எண்ணி, அருகேயுள்ள திருக் கோளிலி என்னும் திருப்பதிக்குப் போனார்; கோயிலுக்குள் நுழைந்தார்; நீள நினைந்தடியேன் என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார்; அதன் வாயிலாக ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே என்று வேண்டினார். அப்பொழுது சிவ பிரான் திருவருளால், இன்று இரவு பூதகணங்கள் நெல் மலை களைத் தூக்கிவரும் என்று ஓர் ஒலி வானில் எழுந்தது. தம்பிரான் தோழர் திருவாரூரை அடைந்தார்; இறைவனைத் தொழுது, பரவையாரிடம் நிகழ்ந்ததைச் சொன்னார். அன்றிரவு, பூதகணங்கள் நெல் மலைகளைத் திருவாரூரில் சேர்த்தன. பொழுது புலர்ந்தது. திருவாரூர் வாசிகள், எங்கணும் நெல் மலைகளைக் கண்டார்கள்; இவை பரவையாரூக்கு நம்பியா ரூரரால் அளிக்கப்பட்டவை என்றும், நடப்பதற்கும் வழி யில்லையே என்றும், இவ்வளவு நெல்லைப் பரவையார் எங்கே வைப்பார் என்று பேசினார்கள். பலர் வீட்டைவிட்டு வெளியே வந்தாரில்லை. சிறிது நேரத்திற்குள் பரவையார், அவரவர் வீட்டின் எல்லையில் உள்ள நெல்லை அவரவர் எடுத்துக்கொள்ளலாம் என்று பறையறைவித்தார். மக்கள் அவ்வாறே செய்து மகிழ் வெய்தினார்கள். திருநாட்டியத்தான் குடியிலே கோட்புலியர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர், திருவாரூரை அடைந்து, வன்தொண்டரைக் கண்டு தொழுதார்; தம் ஊருக்கு வருமாறு ஆரூரரை வேண்டினார். ஆரூரர், அவர்தம் வேண்டுகோளுக்கு இணங்கினார். கோட்புலியார் மகிழ்ச்சியுடன் தம் ஊருக்குத் திரும்பினார். பின்னர்த் தம்பிரான் தோழர் திருநாட்டியத்தான்குடி நோக்கினார். கோட்புலியார் நம்பி யாரூரை முறைப்படி எதிர்கொண்டார். நம்பியாரூரர் கோட்புலியார் வீடுசேர்ந்து, அவ்வன்பர் விருந்தினராய் இருந்தார். கோட்புலியார், தம் புதல்விகளாகிய சிங்கடியாரையும், வனப் பகையாரையும் அழைத்து வந்தார். அவர்கள், வன் தொண்டரைப் பணிந்து நின்றார்கள். அப்பொழுது, கோட்புலியார், நாவலர் பெருந்தகையைப் பார்த்து, அடிகளே! இவ்விருவரையும் ஆட் கொண் டருளல் வேண்டும் என்று முறையிட்டார். அதற்குப் பரவையர் கணவர், இவ்விருவரும் எனக்குப் புத்திரிகள் என்று கூறினார்; அம்முறையில் அவர்களை உச்சி மோந்தார்; திருக் கோயிலுக்குப் போனார்; பதிகம் பாடினார். அன்றுமுதல் நாவலூரர் தம்மைச் சிங்கடியப்பன் என்றும், வனப்பகையப்பன் என்றும் தாம் பாடும் பதிகங்களில் அமைத்துப் பாடலானார். வன்தொண்டப் பெருமான், அங்கிருந்து திருவலிவலம் போய்த் தமிழ் பாடித் திருவாரூரைச் சேர்ந்தார். பங்குனி உத்திரத் திருநாள் நெருங்கிற்று. பரவையாருக்குச் செலவுக்குப் பொன் தேவையாயிருந்தது. அதன் பொருட்டு நாவலர்பெருமான் திருப்புகலூருக்குச் சென்றார்; திருப்பதிகம் பாடித் தங்கருத்தைச் சிவசந்நிதியில் குறிப்பாக முறையிட்டார்; முறையிட்டு, அருகேயுள்ள திருமடத்துக்குச் சென்றாரில்லை; கோயில் முற்றத்தின் ஒரு பக்கத்தில் அமர்ந்திருந்தார். அப்பொழுது சிவபிரான் திரு வருளால் வன்தொண்டருக்கு உறக்கம் வந்தது. அவர், கோயில் திருப்பணிக்கென அங்கே இருந்த செங்கற்களை எடுத்தார்; தலை யணையாக வைத்துக் கொண்டார்; வெண்பட்டாடையை விரித்தார்; பள்ளி கொண்டார். உடனிருந்த அடியார்களும் உறங்கினார்கள். வன்தொண்டர் சிறிது நேரம் உறங்கி விழித்தெழுந்தார்; செங்கற்ளெல்லாம் பொன்கற்களாக மாறி இருப்பதைக் கண்டார்; சிவனருளை வியந்தார்; திருக்கோயிலுள்ளே நுழைந்தார்; தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் என்னுந் திருப்பதிகம் பாடினார்; பாடிப் பொன்னை எடுத்துக் கொண்டு திருப்பனையூரைச் சேர்ந்தார். அங்கே சிவபெருமான் திருக்கூத்துக் காட்சி வழங்கினார். நாவலர் பெருமான், அரங்கில் ஆடவல்லால் அவரே அழகியரே என்று பாடித் திருவாரூருக் கேகினார். நம்பியாரூரர் சிலநாள் திருவாரூரில் இருந்தார். பின்னே அவர், திருநன்னிலம், திருவீழிமிழலை, திருவாஞ்சியம், திருநறையூர், அரிசிற்கரைப் புத்தூர், திருவாவடுதுறை, திருவிடைமருதூர், திருநாகேச்சுரம், சிவபுரம், திருக்கலைய நல்லூர், கும்பகோணம், திருவலஞ்சுழி, திருநல்லூர், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவையாறு, திருப்பூந்துருத்தி முதலிய திருப்பதிகளுக்குச் சென்றார்; ஆங்காங்கே, சிவபெருமானை வழிபட்டுத் திருப்பதிகம் பாடினார். தம்பிரான் தோழர், திருவாலம்பொழிலைத் தொழுது, அன்றிரவு அங்கே தங்கிப் பள்ளிகொண்டார். சிவபெருமான் அவர்தங்கனவிலே தோன்றி, மழபாடியை மறந்தாயோ என்று கேட்டருளினார். தோழர் விழித்து எழுந்தார்; திருமழபாடிக்குச் சென்றார்; பொன்னார் மேனியனே என்னுந் திருப்பதிகம் பாடினார்; அவ்விடத்தில் சிலநாள் தங்கினார்; பின்னர் அங்கிருந்து, திருவானைக்கா அணைந்து, மறைகளாயின நான்கும் என்று பாடினார்; அதில், சோழ மன்னருக்குச் சிவபெருமான் அருளிய பெருமையைச் சிறப்பித்தார். அத்திருப்பதியை விடுத்துத் திருப்பாச் சிலாச்சிராமஞ் சேர்ந்தார். அங்கே சிவபெருமான் வன் தொண் டருக்குப் பொன் அளிக்கவில்லை. தம்பிரான் தோழர், இவரல்லா தில்லையோ பிரானார் என்று பாடிப்பொன் பெற்றார்; சிலநாள் அங்கே வதிந்தார்; பின்னர்த் திருப்பைஞ்ஞீலி, திருஈங்கோய்மலை முதலிய திருப்பதிகளைத் தொழுது கொங்குநாடு நோக்கினார். வன்தொண்டப் பெருமான் திருப்பாண்டிக்கொடுமுடிக்குச் சென்றார்; மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்பாதமே மனம் பாவித்தேன் என்னும் பஞ்சாக்கரப் பதிகத்தைப் பாடியருளினார்; பல திருப்பதிகளைத் தொழுது கொண்டே திருப்பேரூரைச் சேர்ந்தார். அங்கே சிவபெருமான், தாம் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடும் திருக்கூத்தைக் காட்டியருளினார். வன்தொண்டர் அக்காட்சி கண்டு ஆனந்தமுற்றார் தில்லைக்கு ஏகுதல் வேண்டும் என்னும் வேட்கை அவர்பால் பெருகி எழுந்தது. அவ்வேட்கையுடன், அவர், திருவெஞ்சமாக்கூடலை அடைந்தா; இறைவனை வழிபட்டார்; அங்கிருந்து சோழநாடு போந்து, திருக்கற்குடி, திருவாறை, மேற்றளி, திருஇன்னம்பர், திருப்புறம்பயம் முதலிய திருப்பதிகளைத் தொழுது கொண்டு, திருக்கூடலையாற்றூரை அணுகினார். வன்தொண்டர், திருக்கூடலை யாற்றூருக்குப் போகாது. திருமுது குன்றை நோக்கி நடந்தார். வழியிலே சிவபெருமான் ஒரு கிழ வேதியராய் வீற்றிருந்தார். வன்தொண்டர் அவரைப் பார்த்து, திருமுதுகுன்றுக்கு வழி கேட்டார். கூடலை யாற்றூருக்குப் போகும் வழி இது என்று சொல்லி, வேதியர் வன்தொண்டருடன் சென்று திடீரென மறைந்தார். வன்தொண்டர், அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே என்று பாடினார்; திருக்கூடலையாற் றூருக்குச் சென்றார்; இறைவனைத் தொழுதார்; அங்கிருந்து திரு முதுகுன்றை அடைந்தார்; சிவபெருமானை வழிபட்டுத் தமிழ் மாலை சாத்தினார். முதுகுன்றப் பெருமான், தந்தோழர்க்குப் பன்னீராயிரம் பொன் கொடுத்தார். நம்பியாரூரர், சிவபெருமானை வணங்கி, இப்பொன் முழுவதும் திருவாரூருக்கு வருதல் வேண்டும். அதனால் திருவாரூர் மக்களுக்கு ஒரு வியப்புத் தோன்றுதல் வேண்டும் என்று வேண்டினார். அப்பொழுது ஆரூர! இப்பொன்எல்லாவற்றையும் இம்மணிமுத்தா நதியிலே இடுவாயாக; திருவாரூர்த் திருக்குளத்திலே எடுத்துக் கொள்வாயாக என்று ஒரு வாக்கு எழுந்தது. அது கேட்ட வன்தொண்டர் மகிழ் வெய்தினார்; மச்சம் வெட்டி எடுத்துக் கொண்டார்; திருவருள் ஆணைப்படி பொன் எல்லாவற்றையும் மணிமுத்தா நதியில் இட்டார்; இட்டு, என்னை வலிந்து ஆண்ட ருளிய இறைவன் திருவருளை இதில் பார்ப்பேன் என்று நினைக் கலானார். வன்தொண்டர், திருமுதுகுன்றை விடுத்தார்; தில்லையை நோக்கினார்; வழியில் திருக்கடம்பூர் முதலிய திருப்பதிகளுக்குச் சென்றார்; ஆங்காங்கே பதிகம் பாடித்தில்லை சேர்ந்தார்; தில்லைக் கூத்தனைக் கண்டு வணங்கினார்; மடித்தாடும் அடிமைக்கண் என்னுந் திருப்பதிகத்தை ஓதினார்; அதிலே, தாம் திருப்பேரூரில் கண்ட காட்சியை அமைத்துச் சிறப்பித்தார்; பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருக்கருப்பறியலூர், திருமண்ணிப் படிக்கரை, திவாழ்கொளிபுத்தூர், திருக்கானாட்டுமுள்ளூர், திருஎதிர்கொள் பாடி, திருவேள்விக்குடி முதலிய திருப்பதிகளைத் தொழுது கொண்டே திருவாரூரை நண்ணினார். தம்பிரான் தோழர், திருமுதுகுன்ற நிகழ்ச்சியைப் பரவையாருக்கு விளக்கிச் சொன்னார். பரவையார் வியப்புற்று, இஃதென்ன அதிசயம்! என்று புன்னகை செய்தார். வன்தொண்டர், பரவையே! திருக்குளத்தில் பொன்னை எடுக்கலாம் வா என்றார். இருவரும் திருக்கோயிலுக்குச் சென்றார்கள்; திருவாரூர்ப் பெருமானை வணங்கினார்கள்; திருக்குளத்தை அடைந்தார்கள். தம்பிரான் தோழர், பரவையாரைக் கரையிலே நிறுத்தி விட்டுத் தாம் குளத்திலே இறங்கினார்; பொன்னைத் தடவினார். அவரது பாட்டின் பயனாக உள்ள சிவபெருமான் அவரைப் பாடுவிக்க விரும்பினார். அதனால் ஆரூரருக்குப் பொன் கிடைக்கவில்லை. கரையில் உள்ள பரவையார், இஃதென்ன! ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடுவதா? இதுதான் அருள் போலும்! என்று நகைத்தார். ஆரூரர், பொன் செய்த மேனியினீர் என்னுந்திருப்பதிகத்தை எடுத்துப், பரவைஇவள் தன்முகப்பே என்செய்தவாறடிகேள் என்று பாடியருளினார்; ஒன்பதாம் பாட்டில், ஏத்தா திருந்தறியேன் என்று இரங்கினார். உடனே பொன்திரள் புலனாயிற்று. வன்தொண்டர் அதை எடுத்துக் கரை ஏறினார்; அப்பொன்னையும் தாம் கொண்டு வந்த மச்சத்தையும் உரைத்துப் பார்த்தார். பார்க்கவே, குளத்தினின்றும் எடுக்கப்பட்ட பொன்னின் உரை தாழ்ந்திருந்தது. நம்பியாரூரர் வருந்திச் சிவ பெருமானைப் பாடினார். பின்னே உரை ஒத்தது. நம்பியாரூரர் மகிழ்வெய்தினார். பொன்னெல்லாம் பரவையார் வீட்டிற்கு அனுப்பப்பட்டன. வன்தொண்டரும் பரவையாரும் திருக் கோயிலுக்குப் போய் இறைவனைத் தொழுது வீடு சேர்ந்தனர். சில நாள்கள் கழிந்தன. நம்பியாரூரர்க்கு இன்னும் பல திருப்பதிகளைக் கண்டு தொழுதல் வேண்டும் என்னும் வேட்கை எழுந்தது. எழவே, அவர் திருவாரூரை விடுத்துத் திருநள்ளாறு, திருக்கடவூர் மயானம், திருக்கடவூர் வீரட்டம், திருவலம்புரம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருநனிபள்ளி, திருச்செம்பொன் பள்ளி, திருநின்றியூர், திருநீடூர், திருப்புன்கூர் முதலிய திருப் பதிகளுக்குச் சென்றார்; ஆங்காங்கே ஆண்டவனை வழிபட்டுப் பதிகம் பாடினார்; அதில், ஞானசம்பந்தப் பெருமான் தாளம் பெற்றதைச் சிறப்பித்தார்; அங்கிருந்து சீர்காழி சேர்ந்தார்; எல்லையை வலம் வந்து ஆண்டவனை வணங்கினார்; ஞான சம்பந்தரையும் வழுத்தினார்; வழுத்தித் திருக்குருகாவூருக்குப் புறப்பட்டார். வழியில் பசியும் தாகமும் நம்பியாரூரரை வருத்தின. சிவ பெருமான் அதை யுணர்ந்து, ஒரு வேதியராய், வழியில் ஓரிடத்தில் பந்தர் அமைத்துத் தண்ணீர், பொதிசோறு முதயின வைத்திருந்தார். தம்பிரான் தோழர் திருக்கூட்டத்தோடு அவ்விடத்திற்கு வந்தார்; பந்தரைக் கண்டார்; பந்தரின் கீழே போய், சிவாயநம சிவாயநம என்று ஓதிக் கொண்டிருந்தார். அருகே இருந்தவேதியர், வன் தொண்டரைப் பார்த்து; நீர் மிகப் பசித்திருக்கிறீர் போலும், என்னிடத்தில் பொதிசோறு இருக்கிறது. அதை உண்டு தண்ணீர் அருந்தும்; இளைப்பாறும் என்றார். நம்பியாரூரர் அதற்கு இசைந்தார். வேதியர் பொதிசோற்றைத் தந்தார். நம்பியாரூரரும், அவர்தம் அடியவர்களும் அச்சோற்றை உண்டனர். அஃது எல்லார்க்கும் பயன்படு முறையில் வளர்ந்தது. எல்லாரும் தண்ணீர் அருந்தினர். நம்பியாரூரர் வேதியருடன் பேசிக் கொண்டே உறங்கினர் மற்றவர்களும் உறங்கினார்கள். நம்பியாரூரர் விழித்து எழுந்தார். வேதியரையுங் காணோம்; பந்தரையுங் காணோம். இத்தனை யாமாற்றை அறிந்திலேன் என்று பாடித் தம்பிரான் தோழர் திருக்குருகாவூரைச் சேர்ந்தார்; அங்கே சிலநாள் தங்கினார்; பின்னே திருக்கழிப்பாலை, தில்லை, திருத்தினைநகர் முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டே திருநாவலூர் போந்தார். அன்பர்கள் எதிர் கொண்டார்கள். வன்தொண்டர் அவர்களுடன் கலந்து இறைவனைத் தொழுதார்; அங்கே சிலநாள் இருந்தார். அப்பொழுது நம்பியாரூரர்க்குத் தொண்டை நாட்டின் மீது எண்ணஞ் சென்றது. செல்லவே, அவர் தொண்டை நாட்டை நோக்கிப் புறப்பட்டார். வன்தொண்டர் தொண்டைநாடு புகுந்து, திருக்கழுக்குன்றம் சேர்ந்தார்; சிவபெருமானைத் தொழுதார்; பதிகம் பாடினார்; அங்கிருந்து திருக்கச்சூர் ஆலக்கோயிலுக்கு எழுந்தருளினார்; அங்கே சிவபெருமானை வழிபட்டு வெளியே வந்தார். சாப்பாட்டு வேளை வந்தது. சமையல் செய்வோர் வரவில்லை. நம்பியாரூரர்க்குப் பசி மேலிட்டது. அவர் மதிலின் ஒரு புறத்தே தங்கினார். அப்பொழுது சிவபிரான், ஒரு மறையவராய் நம்பியாரூரரை அணைந்தார்; நீர் பசித்திருக்கிறீர் போலும். யான் இரந்து சோறு கொண்டு வருகிறேன். இங்கே இரும் என்று அருளிச்செய்தார்; அப்படியே அவர் சோறும் கறியும் இரந்து வந்தார்; வன் தொண்டருக்குக் கொடுத்தார். வன் தொண்டர் அடியவர்களுடன் சோறு உண்டார். உண்டதும், மறையவர் மறைந்தார். வந்தவர் சிவபெருமான் என்று அறிந்து, நாவலர் பெருமான், முதுவாய் ஓரி கதற என்னுந் திருப்பதிகத்தை அருளினார். பின்னர்த் தம்பிரான் தோழர், திருக்கச்சூரை விடுத்துத் திருக்காஞ்சியை அடைந்தார்; திருஏகம்பத்தைத் தொழுது பதிகம் பாடினார்; காமக்கோட்டத்தையுங் கண்டு தொழுதார்; அங்கிருந்து, திருமேற்றளி, திருஓணகாந்தன்றளி, திருஅநேகதங்காவதம், திருப் பனங்காட்டூர், திருமாற்பேறு, திருவல்லம் முதலிய திருப்பதி களுக்குச் சென்று, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டே திருக் காளத்தி சேர்ந்தார்; காளத்தியப்பரை வணங்கினார்; தமிழ் பாடினார்; கண்ணப்பரைக் கண்டு தொழுதார்; அத்திருப்பதியில் இருந்து கொண்டே, வடதிசையிலுள்ள ஸ்ரீபருப்பதம், ஸ்ரீகேதார மலை முதலிய திருத்தலங்களைப் பணிந்து பதிகம் பாடினார்; திருக் காளத்தியினின்றும் புறப்பட்டுத் திருவொற்றியூரை அடைந்தார்; அடைந்து, மூன்று வேளையும் எழுத்தறியும் பெருமானை வழி பட்டுக் கொண்டிருந்தார். ஞாயிறு என்னும் ஊரிலே வேளாளர் ஒருவர் இருந்தார். அவர், ஞாயிறு கிழவர் என்பவர். திருக்கயிலையிலே நம்பியாரூரரைக் காதலித்த இருவருள் அனிந்திதையார் என்பவர், ஞாயிறு கிழவர்க்குப் புதல்வியராகப் பிறந்தார். அப்புதல்வியார் சங்கிலியார் என்னும் பெயர் சூட்டப் பெற்றார். சங்கிலியார், உமையம்மை யாரிடத்து இயற்கையன்புடையராய் வளர்ந்தார்; வளர்ந்து, திருமணப் பருவம் எய்தினார். தாய்தந்தையர், சங்கிலியாரைத் தக்க ஒருவர்க்குத் திருமணஞ் செய்து கொடுத்தல் வேண்டும் என்று பேசிக்கொண்டனர். அப்பேச்சு, சங்கிலியார் காதில் விழுந்தது. சங்கிலியார், யான் ஒரு சிவனடியாருக்கு உரியவள்: இவர்கள் என் செய்வார்களோ! என்று உள்ளங் கலங்கி மயங்கி விழுந்தார். தாய்தந்தையர் சங்கிலியாரை எடுத்தனர்; பனி நீர்தெளித்தனர். சங்கிலியார் தெளிவடைந்தார். பெற்றோர் சங்கிலியாரைப் பார்த்து, உனக்கு உற்றது என்ன? என்று கேட்டார். சங்கிலியார், தாய் தந்தையரை உற்றுநோக்கி, நீங்கள் பேசிய வார்த்தை எனக்குப் பிடிக்கவில்லை; யான் சிவனடியார் ஒருவருக்கு உரியவள்; இனி, யான் திருவொற்றியூரை அடைந்து திருவருள்வழி நடப்பேன் என்றார். பெற்றோர்க்கு நடுக்கமும் அச்சமும் உண்டாயின. சங்கிலியார் சொன்னதை வெளியிடாமல் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஞாயிறு கிழவரது மரபில் தோன்றிய ஒருவன் இருந்தான். அவன், சங்கிலியாரை மணம்பேச ஞாயறு கிழவர்பால் சில முதியோரை அனுப்பினான். அவனுக்குச் சங்கிலியார் நிலை தெரியாது. அம்முதியோர்கள் ஞாயிறு கிழவரிடம் போந்து, தங்களை அனுப்பினவன் கருத்தைத் தெரிவித்தார்கள். ஞாயிறு கிழவர் என் செய்வார்! அவர், முதியோர்களிடம் ஒருவாறு இனிய மொழிகள் பேசி அவர்களை அனுப்பினார். முதியோர்கள் வீடு சேர்வதற்கு முன். அவர்களை அனுப்பினவன், ஏதோ ஒரு தீங்கு செய்து மாண்டவனைப் போல் மாண்டான். அச்செய்தி, ஞாயிறு கிழவருக்கு எட்டிற்று. அவரும் அவர்தம் மனைவியாரும், சங்கிலியார் பால் பேசத் தகாத மொழிகளைப் பேசலாமா? இனிச் சங்கிலியார் வழி நடப்பதே நல்லது என்று கருதலாயினர். உண்மையை உறவினர்க்கு உணர்த்தினர். பின்னே, பெற்றவரும் மற்றவரும் ஒன்று சேர்ந்து, சங்கிலியாரைத் திருவொற்றியூருக்கு அழைத்துச் சென்றனர்; ஆண்டவனை வழிபட்டனர்; ஒரு கன்னிமாடங் கட்டுவித்தனர்; அதிலே சங்கிலியாரை இருக்கும்படி செய்து, அவரை வணங்கி, விடைபெற்று வருத்தத்தோடு ஊருக்குத் திரும்பினர். சங்கிலியார் கன்னிமாடத்தில் இருந்து கொண்டு ஆண்டவனை வழிபட்டு வந்தார். அவருக்குப் பழைய திருக்கயிலாயத் திருத் தொண்டின் உணர்ச்சி முகிழ்க்கலாயிற்று. அதனால் சங்கிலியார், பூமண்டபத்தில் திரைசூழ்ந்த ஓரிடத்தில் இருந்து பூமாலை கட்டித் திருக்கோயிலுக்கு அனுப்பிவந்தார். நம்பியாரூரர் வழக்கம்போல ஒருநாள் திருக்கோயிலுக்குச் சென்றார்; இறைவனைத் தொழுதார்; அடியவர்கள் செய்யுந் திருத் தொண்டுகளைத் தனித்தனியே கண்டு வணங்கிச் செல்வாரானார். அவர், பூமண்டபத்தின் உள்ளே சென்றபோது, சங்கிலியார் திரையை நீக்கி, ஆண்டவனுக்கு அணிதற் பொருட்டுப் பூமாலையைத் தோழிகளிடங் கொடுத்தார்; மின்போல் மறைந்தார். நம்பியாரூரர் அவரைக் கண்டார். இருவரையும் பண்டைவிதி கூட்டலாயிற்று. வன்தொண்டர் வெளியே வந்தார்; அங்கிருந்த சிலரைப் பார்த்து பூமண்டபத்திலே, திரைக்குள்ளே ஒரு நங்கையைக் கண்டேன். அவள் என் மனத்தைக் கவர்ந்தாள். அவள் யார்? என்று வினவினார். அவர்கள், அவள் சங்கிலியார் என்போர்; கன்னிகை யார்; சிவபெருமானுக்குத் தொண்டு செய்வோர் என்றார்கள். அது கேட்ட வன்தொண்டர், இப்பிறவி இருவர் பொருட்டு அளிக்கப் பட்டது. அவருள் ஒருத்தி பரவை; மற்றொருத்தி இவள்தான் என்று மருண்டார்; உடனே திருக்கோயிலுக்குச் சென்றார்; சிவ பெரு மானைக் கண்டார்; சங்கிலியாரைத் தந்தருளுமாறு வேண்டினார்; வேண்டி, வெளியே வந்து, திருக்கோயிலின் ஒருபுறத்திலே இருந்து, சிவபெருமானை நினைந்து நினைந்து உருகலானார். மாலைக் காலம் வந்தது. சிவபெருமான் தம் தோழர்பால் அணைந்தார்; ஆரூர! சங்கிலியை உனக்குக் கொடுக்கின்றோம்; கவலையை ஒழி என்று அருளிச்செய்தார். வன்தொண்டர், பெருமானே! அன்று என்னைத் தடுத்தாட்கொண்டீர்; இன்று என் விருப்பத்துக்கு இணங்கி வந்தீர்; அருள் செய்தீர் என்று வியந்து வணங்கி மகிழ்வெய்தினார். பின்னர்ச் சிவபெருமான், சங்கிலியார் கனவிலே தோன்றினார், சங்கிலியார் எழுந்தார்; தொழுதார்; ஆனந்த பரவசரானார்; என் தவமே தவம்! பெருமான் எழுந்தருளினார் என்று மீண்டும் வணங்கினார். சிவபெருமான், அம்மையாரைப் பார்த்து, சங்கிலி! நம்பியாரூரன் என்பவன், நம்மாட்டுப் பேரன்புடையவன்; நம்மால் தடுத்தாட்கொள்ளப் பெற்றவன்; அவன் உன்னை மணஞ் செய்ய விரும்பி என்னை வேண்டினான். அவன் விருப்பத்துக்கு நீ உடன்படுவாயாக என்று திருவாய் மலர்ந்தருளினார். சங்கிலியார், பெருமான் ஆணைப்படி இசைகிறேன்; ஆனால் திருமுன்னே முறையிட்டுக் கொள்ள வேண்டுவது ஒன்றுண்டு என்று தொழுதார்; தொழுது, நாணத்துடன், வன்தொண்டர், திருவாரூரில் மகிழ்ச்சி யுடன் வாழ்பவர்! இதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். சிவ பெருமான், வன்தொண்டர் நிலையை உணர்ந்து, சங்கிலி! அவன் உன்னைப் பிரிந்து போகாதவாறு ஒரு சபதஞ் செய்து கொடுப்பான் என்று கூறியருளினார். சிவபெருமான் மீண்டும் நம்பியாரூரரிடம் எழுந்தருளினார்; எழுந்தருளி, நம்பி! சங்கிலியைக் கண்டோம்; உன் கருத்தைத் தெரிவித்தோம். ஒரு குறையுண்டு. அக்குறையைத் தீர்த்தல் வேண்டும் என்றார். வன்தொண்டர், அஃதென்ன? என்று கேட்டார். சிவ பெருமான், அவன் முன்னிலையில், உன்னைப் பிரிந்து போகேன் என்று ஒரு சபதம் இன்றிரவே செய்து கொடு என்றார். நம்பியாரூரர், எதைச் செய்தல் வேண்டுமோ அதைச் செய்வேன்; உமது அருள் வேண்டும் என்றார். சிவபெருமான், இன்னும் என்ன வேண்டும்? என்று கேட்டார். தம்பிரான் தோழர், இச்சபதம், பிற பதிகளை வணங்குதற்கு இடையூறு செய்யுமே! என்று எண்ணலானார்; எண்ணிப் பெருமானை வணங்கிப் பெருமானே! சபதம் செய்து கொடுக்கச் சங்கிலியோடு திருச்சந்நிதிக்கு வருவேன். அப்போது அடிகள், திருமகிழின் கீழ் எழுந்தருளல் வேண்டும் என்று வேண்டி னார். சிவபெருமான் அதற்கு இசைந்தார்; இசைந்து, மீண்டுஞ் சங்கிலியாரிடஞ் சென்றார்; சென்று, சங்கிலி! ஆரூரன் சபதஞ் செய்து கொடுக்க இசைந்தான்; அதன் பொருட்டு உன்னுடன் கோயிலுக்கு வருவான். அப்பொழுது மகிழின் கீழ் சபதஞ் செய்து கொடுக்குமாறு அவனை நீ கேட்பாயாக என்று அருளிச்செய்தார். சங்கிலியார் சிவபெருமான் கருணையைப் போற்றி நின்றார். சிவபெருமான் திருஉருக் கரந்தார். சங்கலியார், திருவருளை நினைந்து நினைந்து துயிலாதவ ரானார்; தோழிமார்களை எழுப்பினார்; நிகழ்ந்ததைக் கூறினார். அவர்கள் மகிழ்வெய்தி, அம்மையாரைத் தொழுதார்கள். திருப் பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் பொழுதாயிற்று. சங்கிலியார் தோழிமார்களுடன் திருக்கோயிலுக்குப் புறப்பட்டார். தம்பிரான் தோழர் முன்னரே எழுந்து சங்கிலியார் வரவை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அவர் சங்கிலியாரைக் கண்டார்; அருகே சென்றார்; சிவபெருமான் அருளிச் செய்ததைச் சொன்னார். சங்கிலியார், நாணத்தால் ஒன்றுங் கூறாது, திருகோயிலை நோக்கி நடந்தார். அவரைத் தோழிமார்கள் சூழ்ந்து சென்றார்கள்; நம்பியாரூரர் தொடர்ந்து போனார். எல்லாரும் சிவசந்நிதி சேர்ந்தனர். நம்பியாரூரர், சங்கிலியாரைப் பார்த்து, நான் உன்னைப் பிரியேன் என்று சபதஞ் செய்து கொடுத்தல் வேண்டும். முன்னே வா என்று கூறினார். சங்கிலியார் வாயிலாக எல்லாவற்றையும் உணர்ந் துள்ள தோழிமார்கள், அடிகள் இதற்காக இறைவன் முன் சபதஞ் செய்தல் தகாது என்றார்கள். நம்பியாரூரர் சிவபெருமானின் திருவிளையாடலை அறியாதவராய்ப், பின்னை எங்கே சபதஞ் செய்து கொடுத்தல் வேண்டும்? என்று கேட்டார்.அவர்கள், மகிழின் கீழ் என்றார்கள். வன்தொண்டர் மருள்வாரானார்; வேறு வழியில்லை; என்செய்வார்! அப்படியே செய்கிறேன் வாருங்கள் என்றார். எல்லாரும் மகிழின் கீழ்ச் சென்றனர். சங்கிலியார் காணுமாறு தம்பிரான் தோழர் மகிழை மும்முறை வலம் வந்தார்; வந்து, யான் சங்கிலியைப் பிரியேன் என்று சபதஞ்செய்து கொடுத்தார். அதைக் கண்ட சங்கிலியார் கலங்கினார்; சிவ பெருமான் ஆணையால் பாவியேன் இக்காட்சி கண்டேன் என்று நைந்து, ஒரு பக்கத்திலே மறைந்து வருந்தினார். நம்பியாரூரர் திருக்கோயிலுள் நுழைந்து, ஆண்டவனை வாழ்த்திச் சென்றார். சங்கிலியார், வழக்கம்போலத் தமது திருத்தொண்டைச் செய்து கன்னிமாடத்துக் கேகினார். சிவபெருமான், அன்றிரவு திருவொற்றியூரிலுள்ள தொண் டர்கள் கனவில் தோன்றி, வன்தொண்டருக்குச் சங்கிலியாரைத் திருமணஞ் செய்து கொடுக்குமாறு கட்டளையிட்டார். தொண் டர்கள் சிவபணியை அடுத்த நாளே நிறைவேற்றினார்கள். தம்பிரான் தோழர், சங்கிலியாரோடு இன்பம் நுகழ்ந்து திருவொற்றியூரில் வாழ்ந்து வந்தார். தென்றற் காலம் வந்தது. தென்றல் காற்று நம்பியாரூரருக்குத் திருவாரூர் வசந்த விழா நினைவையூட்டிற்று. எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே என்று ஆரூரர் பாடினார். நாளுக்கு நாள் திருவாரூர் வேட்கை அவர்பால் முறுகி எழலாயிற்று. ஒருநாள், நாவலர் பெருமான், திருக்கோயிலுக்குப் போய், ஆண்டவனைத் தொழுது, திருவொற்றியூரை விட்டு நீங்கினார்; நீங்கினதும், அவர்தம் இரு விழிகளும் மறைந்தன. நம்பியாரூரர் மூர்ச்சித்தார்; திகைத்தார்; பெருமூச்சு விட்டார்; சபதம் தவறினமையால் இத் துன்பம் நேர்ந்தது என்பதை உணரலானார். சிவநாதனைப் பாடியே இத் துன்பத்தைப் போக்கிக் கொள்வேன் என்று உறுதி கொண்டார்; அழுக்கு மெய்கொடுன் திருவடி அடைந்தேன் என்னுந் திருப்பதிகத்தை அருளிச்செய்தார். அதில், ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் என்றும், ஊன்றுகோல் எனக்காவ தொன்றருளாய் என்றும், உற்றநோய் உறுபிணி தவிர்த் தருளாய் என்றும் வேண்டுதல் செய்தார். ஊறு நீங்க வில்லை. திருவாரூக்குப் போதல் வேண்டும் என்னும் உறிதியினின்றும் நம்பியாரூரர் பிறழவில்லை. சிலர் வழிகாட்ட அவர் திருமுல்லை வாயிலுக்குச் சென்றார்; சங்கிலிக்காக என் கண் கொண்ட பண்ப! என்று பாடினார்; அங்கிருந்து திருவெண்பாக்கம் சேர்ந்தார்; திருக்கோயில் உள்ளீரோ என்று சிவபெருமானைக் கேட்டார். சிவபெருமான், அவர்க்கு ஊன்றுகோல் தந்து உளோம் போகீர் என்றார். நம்பியாரூரர். பிழையுளன பொறுத்திடுவர் என்னுந் திருப்பதிக்தை ஓதி, பழையனூர்த் திருவாலங்காட்டை அடைந்தார். திருவாலங்காடு, காரைக்கால் அம்மையார் தலையாலே வலஞ் செய்த பெருமையுடையது. அதனால் நம்பியாரூரர், அதன் அகத்தேநுழையாது புறத்தே நின்று, முத்தா முத்தி தரவல்ல என்னுந் திருப்பதிகத்தை அருளினார்; அங்கிருந்து புறப்பட்டுத் திருவூறலைத் தொழுது, திருக்காஞ்சியை அணைந்தார்; திருக்காமக் கோட்டத்தை வணங்கித் திரு ஏகம்பத்தை நோக்கினார்; ஏகம்பர் திருமுன் நின்று, பெருமானே! கண்ணளித்தருளும் என்று வேண்டினார். இடக்கண்மட்டும் ஒளிபெற்றுது. ஏகாம் பரநாதர் தமது காட்சியை வழங்கினார். வன்தொண்டர் மகிழ்வெய்தி, எம்மானைக் காணக் கண்ணடியேன் பெற்றவாறே என்று வழுத்தினார்; அங்கே சிலநாள் தங்கி இருந்தார். பின்னர் நம்பியாரூரர் திருக்காஞ்சியை விடுத்தார்; திருவாரூர் புக்கு எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே? என்று பாடிக்கொண்டே திருஆமாத்தூர் சேர்ந்தார்; அங்கே பதிகம்பாடித் திருஅரத்துறை நண்ணினார்; எற்றேஒரு கண்ணிலன் நின்னை யல்லால் நெல்வாயில் அரத்துறை நின் மலனே மற்றேல் ஒரு பற்றிலன் என்றுருகி ஓதினார்; ஓதித் திருவாவடுதுறை நோக்கினார்; ஆரெனக் குறவு அமரர்க ளேறே என்றும், கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன் என்றும் பரவித் , திருத்துருத்திக்குப் போனார்; சிவபெருமானைத் தொழுதார்; அடி யேன் மீதுள்ள பிணியை ஒழித்தருளல் வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான், நம்பியாரூரைப் பார்த்து நம்பி, இக்கோயிலுக்கு வடபுறத்திலே ஒருதீர்த்தம் உண்டு. அதில் மூழ்குவாயாக என்று அருளிச் செய்தார். நம்பியாரூரர் அப்படியே செய்தார். பிணி நீங்கிற்று. பொலிவு தோன்றிற்று. நாவலர் பெருமான், என்னுடம் படும் பிணிஇடர் கெடுத்தானை என்று ஆண்டவனை வாழ்த்தினார்; பிறகு பல திருப்பதிகளைக் கண்டு வணங்கிக் கொண்டே திருவாரூர் அணைந்தார்; ஒற்றைக் கண்ணால் திருவாரூரைக் கண்டார்; மாலைக் காலத்திலே ஊருக்குள் நுழைந்தார்; முன்னே தூவா யாரை வணங்க விரும்பிப், பரவையுண் மண்டளி என்னுந் திருக்கோயிலுக்குச் சென்றார்; ஆண்டவனை வணங்கி மற்றும் ஒருகண் தந்தருளுமாறு வேண்டினார்; தூவாயா என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார்; அங்கிருந்து, அர்த்த சாமத்திலே திருமூலட்டானத்துக்குப் போனார். அடியவர்கள் எதிரே வந்தார்கள். தம்பிரான் தோழர் அவர்களைக் கண்டு, குரு குபாய என்னுங் கைக்கிளைப் பதிகத்தை அருளினார்; தியாகேசப் பெருமானைக் கண்டார்; தொழுதார்; வலக்கண்ணை அருளுமாறு கேட்டார், மீ ளா அடிமை உமக்கே ஆளாய் என்னுந் தமிழ்மாலை சாத்தினார்; அதில், எற்றுக்கடிகேள் என்கண் கொண்டீர் நீரே பழிபட்டீர், மற்றைக் கண்தான்தாரா தொழிந்தால் வாழ்ந்து போதீரே என்பதை அமைத்து ஓதினார். தியாகேசப்பெருமான், தந் தோழருக்கு வலக் கண்ணைக் கொடுத்தருளினார். நம்பியாரூரர், ஆண்டவனை இரு கண்ணாரக் கண்டார்; இன்ப வெள்ளத்தில் அழுந்தினார்; பின்னே, புறத்தே வந்து, தேவாசிரிய மண்டபம் போந்து அங்கே வீற்றிருந்தார். பரவையார் தம்மை நீண்ட காலமாக நம்பியாரூரர் பிரிந் திருந்தமையால், அவர்தம் நிலையைத் தெரிந்துவரச் சிலரை விடுத்தார்; அவர் வாயிலாக நம்பியாரூரர் திருவொற்றியூரிலே சங்கிலியாரைத் திருமணஞ் செய்து கொண்டதை உணர்ந்து கொண்டார். அதனால் பரவையார் துயரக் கடலில் அழுந்திக் கிடந்தார். நம்பியாரூரர் திருக்கோயிலுக்குப் போனபோது, அவர் தம் பரிசனங்களில் சிலர், பரவையார் வீட்டுக்குச் சென்றனர். அவர்கள் உள்ளே நுழையாதவாறு தடுக்கப்பட்டார்கள். அவர்கள் திரும்பி வந்து, தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருந்த வன்தொண்டரைக் கண்டு, அடிகளே! நாங்கள் பரவையார் வீட்டுற்குச் சென்றோம்; உள்ளே நுழையாதவாறு தடுக்கப் பட்டோம்; திருவொற்றியூர்ச் செய்கை முற்றும் பரவையார் உணர்ந்திருக்கிறார் என்று கூறினார்கள். வன்தொண்டர் வருந்திப் பரவையார் செற்றந் தீர்க்கக் கற்ற மாந்தர் சிலரை அனுப்பினார். அவர்கள் சென்று பரவையாரைக் கண்டார்கள்; பல நியாய உரைகளால் பரவையார் செற்றந் தீர்க்க முயன்றார்கள். பரவையார் அவர்களைப் பார்த்து, நம்பியாரூரர் குற்றம் பொருந்தியவர்; அவர் சார்பில் ஒன்றும் பேசாதேயுங்கள்; இனிப் பேசின், என் உயிர் போய் விடும் என்றார். அவர்கள் நடுங்கி, வெளியே வந்து, தம்பிரான் தோழரிடஞ் சென்று நிகழ்ந்ததைக் கூறினார்கள். வன்தொண்டருக்குத் துயரம் பெருகிவிட்டது. பக்கத்துள்ள எல்லாரும் உறங்கினர்; நள்ளிரவு உற்றது. நம்பியாரூரர் சிவ பெருமானைச் சிந்தித்தார்; பெருமானே! இஃதென்ன வினை? இதற்கு மூலமாயிருப்பவள் பரவை. இந்த நள்ளிரவில் நீர் அவளிடஞ் சென்று, அவள்தன் புலவி தீர்த்தல் வேண்டும். இல்லையேல் யான் பிழையேன் என்று முறையிட்டார். அப்பொழுது அங்கே சிவ பெருமான் எழுந்தருளினார். பெருமான், வன்தொண்டரைப் பார்த்துத் தோழனே! உனக்கு உற்றது என்ன? என்று கேட்டார். வன் தொண்டர், சிவபெருமானை வணங்கி, உமது அருளால் சங்கிலியைப் பெற்றேன். அதைப் பரவை கேள்வியுற்றாள். இப் பொழுது யான் அவளிடஞ் சென்றால், உயிர் விடுவேன் என்கிறாள். யான் அடியன் என்பதும், நீர் தோழர் என்பதும் உண்மை யானால், இன்றிரவே நீர் பரவை பால் சென்று அவள் புலவியைத் தீர்த்தருளல் வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமான், நம்பி! இப் பொழுதே பரவை வீட்டுக்குத் தூதாகச் செல்வோம் என்று சொல்லிப் புறப்பட்டார். தேவர்களும், முனிவர்களும், அன்பர்களும் சிவபெருமானைச் சூழ்ந்து சென்றார்கள். சிவபெருமான், பரவையார் மாளிகையை அடைந்தார்; உடன் போந்தவர்கள் அனைவரும் புறத்தே நின்றனர். சிவபெருமான், தம்மை அர்ச்சிக்கும் மறை முனிவராய்க் கோலங்கொண்டு கதவைத் தட்டினார். துயிலின்றிக் கிடந்த பரவையார், என்ன! அர்ச்சகர் குரல்போல் இருக்கிறது! இந் நள்ளிரவில் அவர் இங்கு வருவானேன்! என்று விரைந்து வந்து கதவைத் திறந்தார்; குருக்களைப் பார்த்தார்; சிவபெருமானைப் போல இங்கே நீர் எழுந்தருளினீர். என்ன செய்தி? என்று கேட்டார். மறையவர் என் சொல்படி நடப்பதாயின், நான் வந்ததைச் சொல்வேன் என்றார். நீர் அதை அருளிச் செய்யும்; அது கூடுமான தாயின், அதன்படி நடப்பேன் என்று பரவையார் கூறினார். அது கேட்ட பெருமான் நம்பியாரூரர் உன்னிடம் வர நீ இசைதல் வேண்டும் என்றார் பரவையார். முனிவரே! உமது கூற்று நன்றா யிருக்கிறது! அவர் என்னைப் பிரிந்தார்; திருவொற்றியூரிலே சங்கிலியின் தொடக்குண்டார். அவருக்கு இங்கே என்ன சார்பு? என்று சொன்னார். அர்ச்சகர். நம்பியின் குற்றங்களை மனத்திற் கொள்ளாதே, உன் கோபத்தைத் தணிக்கவே யான் இங்கே வந்தேன்; மாறாதே என்று வேண்டினார். பரவையார். இது குறித்து நீர் ஏன் வந்தீர்? இஃது உமது பெருமைக்குத் தகாது; போம் என்றார். பெருமான், சிரித்துத் தமது உண்மைக் கோலத்தைக் காட்டாது நம்பியாரூரரிடம் திரும்பினார். நம்பியாரூரர், சிவபெருமானைத் தூதாக அனுப்பினேனே! என்பார்; சிவபெருமான் என் செய்தாரோ! என்பார்; பரவையின் புலவியைத் தீர்த்தே சிவபெருமான் மீள்வர் என்பார்; இவ்வாறு பலபல பேசிப், பலபல நினைந்து சிவபெருமான் வரவை எதிர் நோக்குவார்; அவரைக் காணாது திரும்புவார்; வருந்துவார். அச்சமயத்தில், சிவபெருமான் வந்தார். நம்பியாரூரருக்கு மகிழ்ச்சி பொங்கிற்று. அவர், அன்று அடியேனைத் தடுத்தாட்கொண்டீர்; இன்று பரவையின் புலவி தீர்த்து வந்தீர் என்று சொன்னார். சிவபெருமான், வன்தொண்டரைப் பார்த்துத் தோழனே! நீ விரும்பியவாறு பரவை வீட்டுக்குச் சென்றோம்; உன் விருப்பத்தைத் தெரிவித்தோம். அவள் நம்மையும் நிந்தித்து மறுப்புரை கூறினாள் என்றார். நம்பியாரூரர் நடுக்குற்று. உமது ஆணையைப் பரவையோ மறுக்க வல்லாள்! நஞ்சை உண்டீர்; தேவர்களை ஆண்டீர்; முப்புரம் எரித்தீர்; மூவர்க்கு அருள் செய்தீர்; காலனைக் காய்ந்தீர்; மார்க் கண்டர்க்குக் கிருபைசெய்தீர். அவர்கள் அன்பு எனக்கு ஏது? நீர் திரும்பி வந்தீர். என்னடிமை வேண்டாத நீர், அன்று ஏன் என்னைத் தடுத்தாட் கொண்டீர்? என் துன்பந் தீர்க்க மீண்டும் நீர் பரவை யிடஞ் செல்லுதல் வேண்டும். இல்லையேல் என் உயிர் போய் விடும் என்று முறையிட்டு விழுந்தார். உடனே சிவபெருமான், நாம் பரவை பால் செல்வோம்; அவளை நீ அடையுமாறு இப்பொழுதே செய்வோம்; வருந்தாதே என்று தேறுதல் கூறினார். வன்தொண்டர், சிவபெருமானைப் பணிந்து, அடியேன் பயங் கெடுத்து இவ்வாறு பணிகொள்வதன்றோ கருணை என்று போற்றினார். சிவபெருமான் மீண்டும் பரவை வீடு நோக்கிப் புறப்பட்டார். முன்னர் அவருடன் சூழ்ந்து செல்லாத தேவர்களும் மற்றவர்களும், இப்பொழுது அவரைச் சூழ்ந்து சென்றார்கள். மறையவர் திரும்பிய பின்னர், பரவையார் நெஞ்சில் வந்தவர் சிவபெருமான் என்று விளங்கத் தக்க சில அறிகுறிகளும் அதிசயங்களும் தோன்றின. பரவையார் நெஞ்சம் சுழன்றது. அவர், யான் பாவி; எம்பிரான் முன் எதிர் மொழி கூறினேன். தோழர் பொருட்டுப் பெருமான் குருக்கள் கோலந்தாங்கி வந்தார். மறுப்புரை வழங்கிவிட்டேன் என்று வருந்தி வருந்தி வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது சிவ பெருமான் எழுந்தருளினார். தேவர், முனிவர், யோகர், சித்தர் முதலிய எல்லாருஞ் சூழ்ந்திருந்தனர். பரவையார் மாளிகை, திருக்கயிலை யாயிற்று. பரவையார் சிவபெருமானைக் கண்டார்; நடுக்குற்றார்; வணங்கினார். சிவபெருமான், பரவையே! நம்மை நம்பி ஏவினான். மீண்டும் உன்பால் வந்தோம் முன்போல் மாறாதே; ஆரூரனுக்கு இசைதல் வேண்டும் என்றார். பரவையார், முன் எழுந்தருளிவந்த மறையவர் நீவிரோ! என் தவமே தவம்! அன்பர் பொருட்டு அங்கும் இங்கும் உழன்றீர். யான் இசையாது என் செய்வேன்! என்றார். அப்பொழுது சிவபெருமான், பரவையாரைப் பார்த்து, பரவையே! நீ உன் தன்மைக்கேற்ப நன்மையே மொழிந்தாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். பரவையார் வணங்கி நின்றார். சிவபெருமான் உடனே புறப்பட்டார்; கங்கை ததும்ப விரைந்து நடந்தார். நம்பி யாரூரர், என்ன பதில் வருமோ? என்று ஏங்கிக்கொண்டிருந்தார்; சிவபெருமான் வருதலைக் கண்டார்; என்ன பதில்? என்று கேட்டார். சிவபெருமான், பரவையின் கோபத்தைத் தணித்து விட்டோம்; நீ அவளிடம் செல்லலாம் என்று திருவாய்மலர்ந்தருளினார். அச்சொல் கேட்டதும், நம்பியாரூரர் கழி பேருவகையுற்றார்; பெருமானே! போகமும் நீர்; மோட்சமும் நீர் என்பது விளங்கலாயிற்று; இனி எனக்குத் துன்பம் ஏது? என்று சிவபெருமானை வணங்கினார். சிவபெருமான் தோழருக்கு அருள் புரிந்து மறைந்தருளினார். வன் தொண்டர், பரவையார் வீடுநோக்கிச் சென்றார். உறங்கிக் கொண்டிருந்த அடியவர் எல்லாரும் விழித்து எழுந்து அவருடன் கலந்து கொண்டனர். பரவையார். மாளிகையை அலங்கரித்தார்; வாயிலிலே நின்று, ஆரூரர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்; பரவையார், நம்பியாரூரைக் கண்டார்; கண்டதும் அவரைத் தொழுதார்; ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார். அப்பொழுது நம்பியார். நங்கையாரின் கையைப்பற்றி உள்ளே புகுந்தார். முன் போல இருவரும் இன்பம் நுகர்ந்து ஆண்டவனை வழிபட்டு வந்தனர். நம்பியாரூரர், சிவபெருமானைத் தூது கொண்ட செய்தி ஏயர் கோன் கலிக்காமருக்கு எட்டிற்று. அவர் நம்பியாரூரை வெறுக்க லானார். அது காரணமாக நாயனார்க்கு இடர் நேர்ந்தது. நம்பி யாரூரர், கலிக்காமருக்கு உற்ற இடரைச் சிவபிரான் திருவருளால் போக்கினார். இருவரும் நண்பராகித் திருப்புன்கூர் சென்றனர். அந்தணாளன் உன் அடைக்கலம் என்னும் திருப்பதிகத்தை நாவலர் பெருமான் அருளிச்செய்தார். இருவரும் திருவாரூருக் கேகினர். கலிக்காமர், சிலநாள் திருவாரூரில் வன்தொண்டரோடு தங்கி இருந்தார். பின்னே அவர், வன்தொண்டரிடம் விடைபெற்றுத் தம் பதியை நோக்கினார். நம்பியாரூரர் திருநாகைக் காரோணத்துக்குப் போய்த் தமிழ் பாடினார்; சிவபெருமான் திருவருளால், பொன், மணி, உடை, சாந்தம், குதிரை, சுரிகை முதலியன பெற்றுத் திருவாரூருக்குத் திரும்பினார். கழறிற்றறிவார் என்னும் சேரமான்பெருமான், சிவபிரான் திருவருளால் செங்கோல் தாங்கி, மலைநாட்டைப் புரந்து வந்தார். அவர், வன்தொண்டர் பெருமையை இறைவனால் அறியப்பெற்றார். வன்தொண்டரைக் காணுதல் வேண்டும் என்னும் வேட்கை அவருள்ளத்துக் கிளர்ந்து எழுந்தது. அவ் வேட் கையைத் தணித்துக் கொள்ள அவர் மலைநாட்டினின்றும் புறப்பட்டார்; தில்லை, சீர்காழி முதலிய திருப்பதிகளைத் தொழுது கொண்டே திருவா ரூரை அணுகினார். சேரமான் வருகையைக் கேள்வியுற்ற வன்தொணடர், அவரை எதிர்கொண்டார்; ஒருவரை ஒருவர் வணங்கி இன்புற்றனர். இருவரும் ஓருயிராயினர். அதனால் நம்பியாரூரருக்குச் சேரமான் தோழர் என்னும் பெயரும் வழங்கலாயிற்று. தம்பிரான் தோழரும் சேரமானும் திருவாரூரில் ஆண்டவனை வழிபட்டுக் கொண்டி ருந்தனர். அச் சமயத்தில் பாண்டிநாடு போந்து. மதுரை முதலிய திருப்பதிகளை வணங்க வன்தொண்டர் விரும்பினார். அவருடன் செல்லச் சேரமான் பெருமாளும் விழைந்தார். இருவரும் திரு வாரூரை விடுத்தனர்; கீழ்வேளுரையும், திருநாகைக் காரோ ணத்தையும் வணங்கித் திருமறைக்காட்டைச் சேர்ந்தனர். திரு நாவுக்கரசு சுவாமிகளாலும், திருஞானசம்பந்த சுவாமிகளாலும் முறையே திறக்கவும் மூடவும் பெற்ற திருவாயிலை இரண்டு பெரியாருங் கண்டு இன்புற்றனர். நாவலர் பெருமான் தமிழ் பாடினார்; இருவரும் அங்கே சிலநாள் தங்கி மறைக்காட்டு மணியை வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து வன்தொண்டப் பெருமான், சேரமான் பெருமாளுடன் அகத்தியான்பள்ளிக்குப் போய்க் கோடிக் குழகரைத் தொழுது பதிகம் பாடிப் பாண்டிநாடு புகுந்தார். இருவரும் திருப்புத் தூருக்குச் சென்று ஆண்டவனை வாழ்த்தி மதுரை சேர்ந்தனர். பாண்டியனும் அவன் மகளை மணந்து அங் கிருந்த சோழனும், ஆரூரரையும் சேரமானையும் அன்புடன் எதிர் கொண்டனர். எல்லோருஞ் சேர்ந்து திருக்கோயிலுக்குப் போய்ச் சொக்கநாதரை வணங்கினர். தம்பிரான் தோழர் ஆண்டவனுக்குத் தமிழ் மாலை சாத்தினர். நாவலர் பெருமான், மூவேந்தருடன் மதுரையில் தங்கி அளவளாவி இறைவனை வழிபட்டு வந்தார். நம்பியாரூரர் திருப்பூவணந் தொழப் புறப்பட்டார். மூவேந் தரும் உடன் சென்றனர். அடியவர்கள் திருக்கோயிலைக் காட்ட, வன்தொண்டர், பூவணம் ஈதோ என்று பாடி, இறைவனை வழி பட்டு மதுரைக்கு வந்தார், பின்னர் அவர், அரசர்களுடன் திருவாப் பனூர், திருவேடகம் முதலிய திருப்பதிகளுக்குச் சென்று திரும்பினார். வன்தொண்டப் பெருமானும், மூன்று மன்னரும் திருப்பரங் குன்றத்துக்குப் போயினர். சிவபெருமானுக்கு ஆட்செய்தலின் அருமைப் பாட்டை வன்தொண்டர் நினைந்து. கோத்திட்டையும் கோவலும் என்றெடுத்து, உமக்கு ஆட்செய அஞ்சுதுமே என்று பாடினார். அத் திருப்பதிகத்தைக் கேட்ட வேந்தர் மூவரும், வன் தொண்டரை வணங்கிப் போற்றினர். வன்தொண்டர், சேரமான் பெருமாளுடன் பிற தலங்களை வணங்க எழுந்தருளினார். பாண்டியனும் சோழனும், இரு பெரியார்க்கும் வேண்டுவன செய்யச் சிலரை விடுத்து, விடைபெற்று மதுரை நோக்கினர். தம்பிரான்தோழர், சேரமான் பெருமாளுடன், திருக்குற்றாலம், திருக்குறும்பலா, திருநெல்வேலி முதலிய திருப்பதிகளைத் தொழுது, இராமேச்சுரத்தை அடைந்தார்; அங்கிருந்து கொண்டே ஈழ நாட்டிலுள்ள மாதோட்டத் திருக்கேதீச்சுரத்தை வணங்கித் தமிழ் பாடினார்; பிறகு இராமேச்சுரத்தை விடுத்துத் திருச்சுழியலைச் சேர்ந்தார்; சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஒரு நாள் சிவபெருமான், காளையாய், திருக்கையிலே பொற் செண்டு திகழ, திருமுடியில் சுழியம் பொலிய, வன்தொண்டர் கனவிலே தோன்றி, நாம் இருப்பது கானப்பேர் என்று அருளி மறைந்தார். வன்தொண்டர் விழித்தெழுந்தார்; தாம் கனவில் கண்டதைச் சேரருக்குத் தெரிவித்தார்; உடனே புறப்பட்டார்; கண்டு தொழப்பெறுவ தென்றுகொலோ அடியேன் கார்வயல்சூழ் கானப்பேருறை காளையையே என்று பாடிக் கொண்டே திருக் கானப் பேரூருக்குப் போனார்; அங்கே ஆண்டவனை வழிபட்டுச் சில நாள் தங்கினார்; அங்கிருந்து திருப்புனவாயிலுக்குச் சென்றார்; பதிகம் பாடினார்; பாண்டி நாடு விடுத்துச் சோழநாட்டை யடைந்து பாதாளீச்சரத்தை வணங்கித் திருவாரூர் சேர்ந்தார். இருவரும் திருவாரூர்ப் பெருமானை வழிபட்டுக் கொண்டி ருந்தனர். சேரமான்பெருமாள் நாயனார். தமது நாட்டுக்கு எழுந் தருளுமாறு வன்தொண்டரைப் பன்முறை வேண்டினார். வன் தொண்டர் அவ் வேண்டுதலுக்கு இணங்கினார். வன்தொண்டர் சேரருடன் திருவாரூரை விடுத்துக் காவிரியின் தென்கரையே நடந்தார்; திருக்கண்டியூரைக் கண்டார்; ஆண்டவனை வணங்கி னார். அப்பொழுது வடகரையிலுள்ள திருவையாறு புலப்பட்டது. சேரமான் அத் திருப்பதியைக் கண்டு தொழ விரும்பினார். அந் நாளில் காவிரி, பெருக்கெடுத்து ஓடிற்று. அப் பெருக்கிடை ஓடங்களுஞ் செல்லா. அக் காட்சி கண்ட நம்பியாரூரர் ஆண் டவனை நினைந்து, எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே - விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி அதிர்க்குந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ என்று பாடினார். ஆண்டவன் அருளால் காவிரி பிரிந்து வழிவிட்டது. அடியார்கள் ஆரவாரஞ் செய்தார்கள். சேரர்பெருமான் வன்தொண்டரை வணங்கி வாழ்த்தினார். வன் தொண்டர் சேரமான் பெருமாளை வணங்கி, இஃது ஆண்டவன் உமக்கு அருளியதன்றோ என்று அருளினார். பின்னே எல்லாருங் காவிரியைக் கடந்து திருவையாற்றுக்குப் போய் இறைவனை வழிபட்டுத் திரும்பினர். காவிரி பெருக்கெடுத்து ஓடலாயிற்று. இருவரும் திருவருளை வியந்து கொங்கு நாடு போர்ந்தனர்; அங் கிருந்து மலை நாடு சேர்ந்தனர். அடியவர்கள், இருவரையும் எதிர் கொண்டு வாழ்த்தினார்கள். சேரமான் பெருமாள், வன்தொண்டப் பெருமானைத் திருவஞ்சைக் களத்துக்கு அழைத்துச் சென்றார். நாவலர் பெருமான், முகப்பது கங்கை என்னுந் தமிழ்ப் பதிகம் ஓதினார். சேரமான் பெருமாள், தம்பிரான் தோழரை யானைமீ தேற்றினார்; தாம் பின்னே அமர்ந்து வெண்சாமரம் வீசினார் யானை, திருமாளிகை வாயிலை அடைந்தது. சேரமான் பெருமாள், தாம் யானையினின்றும் இறங்கி, ஆரூரரையும் இறக்கினார்; இறக்கித் தந்தோழரை அரியாசனத்தில் அமர்த்தினார். பெண்மணிகள் கரகநீர் வார்த்தார்கள். சேரமான் பெருமாள், வன்தொண்டர் திருவடிகளை விளக்கப் புகுந்தார். இஃது என்ன! தகாதசெயல் என்று வன்தொண்டர் தமது திருவடிகளை வாங்கிக் கொண்டார். கழறிற்ற றிவார், தம்பிரான் தோழரைப் பணிந்து. நாங்கள் அன்பால் செய்யும் வழிபாடுகளை மறாது ஏற்றருளல் வேண்டும் என்று முறையிட்டார். ஆரூரர், அரசர் பெருமான் அன்புக்கு எளியரானார். இருவரும் அஞ்சைக்களத்தப்பனை வழிபட்டு இன்புற்று வந்தனர். சில நாள்கள் கழிந்தன. வன்தொண்டருக்குத் திருவாரூர் நினைவு தோன்றிற்று. அவர். ஆரூரானை மறக்கலுமாமே என்று பாடித் திருவாரூருக்குப் புறப்பட முயன்றார். அதுகண்ட சேரமான் பெருமாள், அடிகளைப் பிரிந்து யான் எங்ஙனம் வாழ்வேன். என்று வன்தொண்டரை வணங்கினார். வன்தொண்டர், இன்மொழியால் தேறுதல் கூறி. மலை நாட்டில் ஆட்சி புரிந்திருக்குமாறு மன்னருக்குக் கூறினார். மன்னர் பெருமான், நம்பியாரூரரைப் பார்த்து. அடிகள் திருவடியே எனக்குரிய ஆட்சி என்று வணங்கினார். வன்தொண்டர், திருவாரூர்ப் பெருமானை மறந்திரேன் என்று சொல்லி, மன்னரை வணங்கினார். சேரமான் பெருமாள், வன்தொண்டரின் மனோ நிலையை உணர்ந்து. அமைச்சர்களைப் பார்த்து, அரண்மனை யிலுள்ள பண்டாரம் எல்லாவற்றையும் பொதி செய்யுங்கள்; அவைகளைச் சுமந்து, ஆரூரர் பரிசனங்கள் முன்னே போமாறு ஆள்களை ஏவுங்கள் என்றார். உடனே, அமைச்சர்கள் அரசர் கட்டளையைச் செய்து முடித்தார்கள். வன்தொண்டர். சேரர் பெருமானைத் தழுவி விடை பெற்றார். நம்பியாரூரர் மலைநாட்டை விடுத்தார். கொங்கு நாட்டிற் புகுந்தார்; திருமுருகன் பூண்டி வழியே வரலானார். சிவபெருமான், ஆரூரருக்குப் பிறர் பொன் கொடுத்தலாகாதென்றோ, சேரமான் பெருமாள் அளித்த பொருளைத் தாம் பறித்து மீண்டுந் தாமே கொடுத்தருளல் வேண்டுமென்றோ திருவுளங்கொண்டார்; கொண்டு, பூதகணங்களைப் பார்த்தார்; நீங்கள் வேடர்களாகி, வன் தொண்டன் கொண்டு போகும் பொருள்களைப் பறித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். பூத கணங்கள், இறைவன் ஆணைப்படி வேடுவர்களாகி, நம்பியாரூரர் பரிசனங்களுக்கு முன் சென்ற சுமை யாட்களை மறித்தன; வில்லைக் காட்டி மருட்டின; பொருள்களைப் பறித்தன; நம்பியாரூரரிடஞ் செல்லா தொழிந்தன. சுமையாட்கள் நம்பியாரூரரிடம் ஓடிவந்தார்கள். இக்காட்சி கண்ட வன்தொண்டர். திருமுருகன் பூண்டித் திருக்கோயிலினுள் நுழைந்து. கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர் என்றெடுத்து. எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரான் நீரே என்று பாடியருளினார். உடனே, இறைவனருளால் பூத கணங்கள் தாங்கள் பறித்த பொருள்கள் எல்லாவற்றையும் திரு வாயிலின் முன்னே கொண்டு வந்து வைத்தன. நம்பியாரூரர் அவைகளைப் பெற்றுத் திருவாரூரைச் சேர்ந்தார். வன்தொண்டப் பெருமான் திருவாரூர்ப் பெருமானை வழி பட்டு வந்தார். வருநாளில். அவருக்குச் சேரமான் பெருமாள் நினைவு தோன்றலாயிற்று. நம்பியாரூரர் திருவாரூரை விடுத்துப் பல திருப் பதிகளைத் தொழுது கொண்டே கொங்கு நாட்டைச் சேர்ந்தார்; திருப்புக்கொளியூரை அடைந்தார்; மாடவீதி வழியே நடந்தார். அப்பொழுது அங்கே. ஒரு வீட்டில் மங்கல ஒலியும் மற்றொரு வீட்டில் அழுகை ஒலியும் எழுந்தன. நாவலர் பெருமான். அது, குறித்துப் பக்கத்தில் இருந்தவர்களைக் கேட்டார். அவர்கள் அடிகளே! இரண்டு சிறுவர்கள் - ஐந்து வயதுடையவர்கள் - மடுவிலே குளிக்கப் போனார்கள். அவர்களில் ஒருவனை முதலை விழுங்கிற்று. பிழைத்தவனுக்கு இவ்வீட்டில் உபநயனம் நடை பெறுகிறது. இம்மங்கல ஒலி, இறந்தவன் நினைப்பைப் பெற் றோருக்கு எழுப்பி இருக்கிறது என்றார்கள் அவ்வுரை கேட்ட நம்பியாரூரர்க்கு இரக்கம் மேலிட்டது. அவர் அங்கேயே நின்று விட்டார். மகனை இழந்த தாய் தந்தையர், நின்றவர் வன்தொண்டர் என்று உணர்ந்து ஓடி வந்தனர்; வன்தொண்டரை வணங்கினர், வன் தொண்டர் அவர்களைப் பார்த்து, மகனை இழந்தவர்கள் நீங்களா? என்று கேட்டார். அவர்கள், அடிகளைக் கண்டு வணங்கல் வேண்டும் என்னும் எண்ணம் எங்களுக்கு நீண்ட நாள்களாக உண்டு. அது திருவருளால் இன்று கூடிற்று! என்று கூறி மகிழ்வெய்தினார்கள். அம்மகிழ்ச்சி கண்ட ஆரூரர். இவர்கள் புத்திர சோகத்தை மறந்து எனது வரவு குறித்து மகிழ்கிறார்கள். இவர்கள் அன்பே அன்பு! இறைவனருளால் யான் இவர்கள் புதல்வனை முதலை வாயினின்றும் அழைத்துக் கொடுத்தே அவிநாசி அப்பனைத் தொழுவேன் என்று உளங்கொண்டார்; கொண்டு பக்கத்தே நின்றவர்களைப் பார்த்து, மடு எங்கே இருக்கிறது? என்று கேட்டார்; அவர்கள் வாயிலாக மடுவுள்ள இடத்தைத் தெரிந்து அங்கே போனார்; திருப்பதிகம் பாடினார்; கரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே என்று வேண்டினார். உடனே காலன், பிள்ளை பூமியில் வளர்ந்தால் எவ்வயது உற்றிருப்பானோ, அவ்வயதுடன் பிள்ளையை முதலை வாயில் சேர்த்தான். முதலை பிள்ளையைக் கரையிலே கொண்டு வந்து உமிழ்ந்தது. தாயார் விரைந்து ஓடிப் பிள்ளையை எடுத்தார். எடுத்துத் தாயாரும் தந்தையாரும் நம்பி யாரூரரை வணங்கினர். செயற்கருஞ் செய்கையைக் கண்ட வானும் மண்ணும் வியப்பெய்தின. வன்தொண்டர், புதல்வனை அழைத்துக் கொண்டு அவிநாசிக்குப் போய் ஆண்டவனைத் தொழுதார்; பின்னே, அப்பிள்ளையின் வீட்டுக்குப் போனார்; அவனுக்கு உப நயனம் செய்வித்தார். அங்கும் மங்கல ஒலி எழுந்தது. பின்னர், நம்பி யாரூரர் அவிநாசி விடுத்து மலைநாடு நோக்கினார். அவிநாசியில் ஆரூரர் நிகழ்த்திய அற்புதச் செய்தி எங்கும் பரவிற்று; மலை நாட்டிலும் பரவிற்று. அங்குள்ள அன்பர்கள் சேரர் பெருமானை அணைந்து, அவிநாசியில் ஆரூரர் முதலை வாயி னின்றும் பிள்ளையை வருவித்துத் தந்து, நமது நாடு நோக்கி வருகிறார் என்று தெரிவித்தார்கள். அச்செய்தி சொன்ன அன்பர் களுக்குச் சேரர்பெருமான், பவவகைப் பொருள் கொடுத்தார்; இன்பக் கடலுள் தோய்ந்தார்; யானை ஏறிப் புறப்பட்டார். அமைச்சர் முதலிய அனைவரும் புடைசூழ்ந்து சென்றனர். சேரர், பலப்பல சிறப்புடன் வன்தொண்டரை எதிர்கொண்டார். ஒருவரை ஒருவர் தழுவினர்; வணங்கினர். இரு சார்பினருஞ் சிவநாம முழக்கஞ் செய்தனர். அன்பு அலை எங்கணும் வீசிற்று. சேரர்பெருமான் தம்பிரான் தோழரை யானைமேல் ஏற்றினார்; தாமே வெண்கொற்றக் குடை பிடித்தார். யானை ஊர்வலம் வந்து திருமாளிகையை அடைந்தது. சேரர் பெருமான், வன்தொண்டப் பெருமானை யானையினின்றும் இறக்கி அழைத்துச் சென்று அரியாசனத்தில் அமர்த்தினார்; வணங்கினார்; அன்பர்கள் மகிழப் பொன்னயும் மணியையும் வாரி வாரி மழைபோலப் பொழிந்தார். வன்தொண்டப் பெருமானும் சேரர் பெருமானும் பல திருப்பதிகளை வணங்கி, ஆண்டவனை வழிபட்டு, மகோதையில் தங்கி இருந்தனர். ஒரு நாள், சேரமான்பெருமாள் நாயனார் தலை முழுகிக் கொண்டிருந்த வேளையில், நம்கியாரூரர் திருவஞ்சைக்களம் என்னுந் திருக்கோயிலுக்குச் சென்றார்; ஆண்டவன் திருமுன்னே நின்றார்; குழைந்து குழைந்து உருகினார்; பிறவிப் பெருங் கடலினின்றும் கரை ஏற்றுமாறு ஆண்டவனை வேண்டினார்; தலைக்குத் தலை என்னுந் திருப்பதிகத்தைப் பாடினார். சிவ பெருமான் கட்டளைப்படி வன்தொண்டரைத் திருக்கயிலா யத்துக்கு அழைத்துச் செல்லத் திருமால் பிரமன் முதலிய தேவர்கள் வெள்ளை யானையைக் கொண்டு வந்தார்கள். தேவர்கள், வன் தொண்டரைக் கண்டு, சிவாஞ்ஞையைத் தெரிவித்தார்கள். வன் தொண்டர், சிவபெருமானை நினைந்து தம்மை மறந்து நின்றார். தேவர்கள் வன்தொண்டரை யானைமீது ஏற்றினார்கள். வன் தொண்டர், தந் தோழராகிய சேரமான் பெருமாள் நாயனாரை நினைந்துகொண்டே ஏகினார். கழறிற்றறிவார், தம்பிரான் தோழர் நிலையை உணர்ந்தார்; பக்கத்தில் இருந்த ஒரு குதிரைமீது ஏறினார்; திருவஞ்சைக் களத்துக்குச் சென்றார். நம்பியாரூரர் வெள்ளையானை மீது வான்வழிச் செல்வதைப் பார்த்தார்; குதிரையின் செவியிலே சிவ மந்திரத்தை ஓதினார். குதிரை மேலே எழும்பி, வெள்ளை யானையைக் கிட்டி, அதனை வலஞ்செய்து, முன்னே சென்றது. சேரமான் பெருமாள் குதிரைமீது வான்வழிச் செல்வதை அவருடைய படைவீரர்கள் கண்டார்கள்; நீண்டநேரம் உற்று உற்றுப் பார்த்தார்கள். அதற்குமேல் குதிரை புலப்படவில்லை. மன்னரைப் பிரிந்து நிற்க அவர்கள் மனம் இடந்தரவில்லை. அவர்கள், தங்களை வாளால் சிதைத்துக் கொண்டார்கள். அவர்கள் நுண்ணுடல்பெற்று மன்னர்க்கு முன்னே தொழுது சென்றார்கள். வன்தொண்டர், தானெனை முன்படைத்தான் என்னுந் திருப்பதிகத்தை எடுத்து, மத்தயானை அருள் புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் என்றும். இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவ ரெல்லாம் வந்தெதிர் கொள்ள என்னை மத்தயானை அருள் புரிந்து என்றும் பாடிக்கொண்டே திருக் கயிலையை அடைந்தார். சேரர் பெருமான் குதிரையை விட்டிறங்கினார். நம்பியாரூரர் யானை யினின்றும் இறங்கினார். இருவரும் பலப்பல படிகளைக் கடந்து சென்றனர். திருஅணுக்கன் திருவாயிலிலே சேரர்பெருமானுக்குத் தடை நேர்ந்தது. வன்தொண்டர், உள்ளே சென்றார்; சிவபிரானைக் கண்டு வணங்கினார். சிவபெருமான், ஆரூரனே வந்தனையோ ! என்றார். வன்தொண்டர். அடியேனுடைய பிழையைப் பொறுத் தருளினீர்; தடுத்தாட் கொண்டீர்: கயிலைப் பேற்றையும் அருளினீர். பெருமான் கருணையே கருணை! என்று போற்றினார். பின்னர், வன்தொண்டர், திருவணுக்கன் திருவாயிலிலே சேரர் பெருமான், தடைப்பட்டு நின்றதைச் சிவபிரானிடம் முறையிட்டார். சிவபெருமான், சேரமான் பெருமாளை அழைத்துவருமாறு நந்தியெம் பெரு மானுக்குக் கட்டளையிட்டார். நந்தியெம் பெருமான் அக் கட்டளையை உடனே நிறைவேற்றினார். சேரமான் பெருமாள் போந்து சிவபெருமானைக் கண்டார்; தொழுதார்; இன்ப வெள்ளத்துள் மூழ்கி நின்றார். அப்பொழுது சிவபெருமான். புன்முறுவல் புரிந்து, சேரனே! நாம் உன்னை அழைக்கவில்லை; நீ வந்தது என்னை? என்று கேட்டார். சேரர் பெருமான் சிவபெருமானைத் தொழுது, வெள்ளை யானைக்கு முன்னே ஆரூரரை வணங்கிக் கொண்டே வந்தேன். பெருமான் கருணை வெள்ளம் இங்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தியது. திருமுன் ஒரு விண்ணப்பஞ் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். சிவபெருமான். அஃதென்ன? என்று கேட்டார். பெருமான் மீது ஞான உலா ஒன்று பாடியுள்ளேன். அதைக் கேட்டருளல் வேண்டும் என்று சேரர் பணிந்தார். சிவபெருமான் அன்பர் வேண்டு தலுக்கு இசைந்தார். சேரமான் பெருமாள் திருவுலாவைச் சொன்னார். சிவபெருமான் திருவருள் செய்து, ஆரூரனாகிய ஆலால சுந்தரனும், நீயும் நங் கணங்களுக்குக் தலைமை பூண்டு இருங்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார். இருவரும் சிவபெருமானை வணங்கினர். வன்தொண்டர், பழையபடி ஆலால சுந்தரராகித் தந் திருத் தொண்டை நிகழ்த்தி வரலானார். சேரமான் பெருமாள் கணத்தலை வராய்த் தொண்டாற்றி வரலானார். உமையம்மையார் திருவருளால் பரவையார் கமலினியா ரானார்; சங்கிலியார் அநிந்திதையாரானார். இருவரும் திருக் கயிலையில் தமது பழமைத் திருத்தொண்டில் ஈடுபட்டனர். வன்தொண்டர். தாம் வழியில் அருளிய திருப்பதிகத்தை வருணனிடங் கொடுத்தருளினார். அவன் அதை ஏற்றுத் திரு வஞ்சைக் களத்திலே கொண்டு வந்து வெளியிட்டான். சேரர் பெருமான் அருளிய திருவுலாவைத் திருக் கயிலாயத்திலே கேட்ட மாசாத்தாவானவர், அதைத் திருப்பிடவூரிலே வெளிப்படுத்தினார். வையம் நீடுக; மாமழை மன்னுக; மெய் விரும்பிய அன்பர் விளங்குக; சைவ நன்னெறி தாம்தழைத் தோங்குக; தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே! தில்லை வாழந்தணர் சருக்கம் - 2 6. தில்லை வாழ் அந்தணர் அறுசீர் விருத்தம் 350. ஆதிஆய் நடுவும் ஆகி அளவுஇலா அளவும் ஆகிச் சோதிஆய் உணர்வும் ஆகித் தோன்றிய பொருளும் ஆகிப் பேதியா ஏகம் ஆகிப் பெண்ணும் ஆய் ஆணும் ஆகிப் போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி! போற்றி! இங்கே முதலிரண்டு பாக்களான் தில்லைக் கூத்தன் வணக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. பதிகமாகிய திருத்தொண்டத் தொகையைப் பீடிகையாக் கொண்டு அடியார்கள் வரலாறு கூறப்புகுந்த இவ் விடத்தில், அப்பதிகத்துக்கும், இந்நூலுக்கும் முதலடி எடுத்துதவிய ஆண்டவன் அருளை நினைந்து வணக்கங் கூறியவாறு காண்க. பரம்பொருள் அநாதி. அஃது ஆதியும் அந்தமும் இல்லாதது. அவ்வொன்றை ஈண்டு ஆதியாய் என்றது என்னை? பரம்பொருள் தோற்றக் கேடில்லாதது. தோற்றக் கேடில்லா ஒன்றனிடத்துத் தோற்றக் கேடுடைய எல்லாம் ஒடுங்குதல் இயல்பு. ஒடுங்கிய எல்லாம் மீண்டுந் தோன்றுதற்கும் நிலைக்களனாயிருப்பது தோற்றக் கேடில் லாத அவ்வொன்றே யாகும். ஒடுங்கிய எல்லாம் மீண்டுந் தோன்று தற்குப் பரம்பொருள் துணை நிற்றலான, அஃது ஆதியை (தோற் றத்தை - படைப்பை)ச் செய்வதாகிறது. இதனால் அஃது ஆதியாகிற தென்க. ஈண்டு நடு என்பது காப்பதைக் குறிப்பது. படைத்தற்கு முதலாக உள்ள ஒன்றே அப்படை நிலைக்கச் செய்தலான், நடுவாகி என்றார். ஆதி நடு இவைகளின் இனமாகிய இறுதியையும் ஈண்டுச் சேர்த்துக் கொள்க. அவன் அவள் அது எனும் அவை மூவினை மையின் தோற்றிய திதியை ஒடுங்கி மலத்துளதாம் - அந்தம் ஆதி என்மனார் புலவர் - சிவஞானபோதம் 1. படைத்தளித் தழிப்ப மும்மூர்த்திகளாயினை -திருஞான சம்பந்தர்; திருவெழு கூற்றிருக்கை 4. ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் பிறவாற்றா லும் அளக்க முடியா அளவினது என்பார் அளவிலா அளவுமாகி என்றார். யார் அறிவார்கள் எங்கள் அண்ணல் பெருமையை - யார் அறிவார் அந்த அகலமும் நீளமும். பேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் - வேர் அறியாமை விளம்புகின்றேனே -திருமந்திரம்: அவையடக்கம் 1. பசு ஞானத்தாலும் பாச ஞானத்தாலும் அளந்து உணர முடியாத ஒன்றாயினும், அது பதி ஞானத்தில் சோதியாய் விளங்கலான். சோதியாய் என்றார். பதிஞானம் பெற்றவர்க்கு உணர்வாக ஒளிர்தலான். உணர்வுமாகி என்றார். கடவுள், தன்னால் தோற்றுவிக்கப்படும் பொருள்களினின்றும் பிரிந்து வேறே நில்லாது, அவைகளுடன் கலந்து நிற்றலான், தோன்றிய பொருளுமாகி என்றார். காணப்பட்ட பொருளுமாகி என்று கொள்க. பரம் பொருள் பல வற்றிலுங் கலந்து நிற்பினும், அது மாறுதலின்றி ஒன்றாகவே நிற்பது என்பார் பேதியா ஏகமாகி என்றார்; வேகமாகி எனக் கொள்வோரு முளர். பரம்பொருள் ஒன்றாயினும் அதன் இயல் இரண்டு. ஒன்று தண்மை; மற்றொன்று வெம்மை. தண்மை கூட்டுவது; வெம்மை பிரிப்பது. தண்மையும் வெம்மையும் முறையே பெண் ஆணாகச் சொல்லப்படுவது மரபு. இது பற்றிப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலின் முதல் அதிகாரத்தில் விரித்துக் கூறியுள்ளேன். விளக்கம் ஆண்டுக் காண்க. ஆணெலாம் இறைவன் பெண்ணெலாந் தேவி -சைவ புராணம். போதியாநிற்கும் - ஆதியாய் . . . . . . . . . . ஆணுமா யிருத்தல் முதலியவற்றைக் கற்பியா நிற்கும் பொது அம்பலம்; சபை; எல்லா விடங்களிலும் வேற்றுமையின்றிப் பொதுவாகச் செய்யப் படும் நடம் எனினுமாம். நடம் போற்றி திருநடத்துக்கு வணக்கம். 1. 351. கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி, அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேல்ஆம் சிற்பர வியோமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று, பொற்பு உற நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி! போற்றி! உரு அருள். . . . . . - சிவஞான சித்தியார். உயிர்கள் பொருட்டு ஆண்டவன் தாங்குங் கோலங்கள். மாயை கடந்தனவாதலான் அற்புதக் கோலம் என்றார். பலரால் எளிதில் நிகழ்த்த முடியாத ஒன்று அற்புதம் எனப்படும். வியக்கத்தக்க அழகு மிகுந்து எனி னுமாம். நீடி - பெருகி; சிறந்து. அருமறைச் சிரத்தின் மேலாம் - வேதாந்தத்தின் - (உபநிடதங்களின்) மேலும் ஒளிரும். சித்பர வியோம மாகும் - சிதாகாச சொரூபமாய்த் திகழும். திருச்சிற்றம்பலம் - பாயிரம் பாட்டு; 1. தடுத்தாட்கொண்ட புராணம்; பாட்டு: 104. குறிப்புகளைப் பார்க்க. பொற்புடன் - அழகுடன். 2. 352. போற்றிநீள் தில்லைவாழ் அந் தணர் திறம் புகலல் உற்றேன்; நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டுஆம் பேற்றினார்; பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும் ஆற்றினார்; பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார். தில்லைக் கூத்தனைப் போற்றி. தொண்டு செய்யும் பேற்றினை யுடையவர்கள். பெருமைக்கு எல்லை யென்றதனால், வேறு பெருமை இல்லை என்றபடி. தொண்டால் நேரும் பெருமையின் சிறப்புக் கூறியவாறு. நன்மையைப் பேணிவாழும் நெறியில் நிற்பவர் கள். திருவடியை அடைதல் வேண்டுமென்று செய்யப்படுந் தவம். 3. 353. பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி, மங்கலத் தொழில்கள் செய்து, மறைகளால் துதித்து, மற்றும் தங்களுக்கு ஏற்ற பண்பில் தகும் பணித் தலைநின்று உய்த்தே, அங்கணர் கோயில் உள்ளார் அகம்படித் தொண்டு செய்வார். ஓங்கி வளர்கின்ற திருவருட் செல்வம் போல. ஓங்கி வளரும் அழகுடைய திருத்தொண்டுகளைத் தாங்கி. பொற்புடைப் பணிகள் - பொன்னாபரணங்கள் என்னலுமாம். தொழில்கள் - கிரியைகள். பண்பமைந்த - (தன்மை வாய்ந்த) அணுக்கத் தொண்டு முதலிய வற்றையும் சிறப்பாகச் செய்து. அகம்படித் தொண்டு - அகத் தொண்டு என்பது பழைய குறிப்புரை. 4. 354. வருமுறை எரிமூன்று ஓம்பி, மன் உயிர் அருளால் மல்கத் தருமமே பொருளாக் கொண்டு, தத்துவ நெறியில் செல்லும் அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று, வல்லார்; திருநடம் புரிவார்க்கு ஆள்ஆம் திருவினால் சிறந்த நீரார். எரி மூன்று - ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி. மல்க - நலம் பெற்று வளர. தத்துவ நெறியில் - உண்மை வழியில். ஆறு - அங்கம்; சிக்ஷை, வியாகரணம், சந்தோவிசிதி, நிருத்தம், சோதிடம், கற்பம். ஆளாகும் திருவருட் செல்வத்தினால். நீரார் - குணமுடையவர்கள். 5. 355. மறு இலா மரபின் வந்து மாறு இலா ஒழுக்கம் பூண்டார்; அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கியுள்ளார்; உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார்; பெறுவது சிவன்பால் அன்பாம் பேறுஎனப் பெருகி வாழ்வார். ஆறு தொழில்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றம். கலி - துன்பம். உறுவது - வாழ்வில் அடைவது. 6. 356. ஞானமே முதலா நான்கும் நவைஅறத் தெரிந்து மிக்கார்; தானமும் தவமும் வல்லார்; தகுதியின் பகுதி சார்ந்தார்; ஊனம் மேல் ஒன்றும் இல்லார்; உலகு எலாம் புகழ்ந்துபோற்றும் மானமும் பொறையும் தாங்கி மனை அறம்புரிந்து வாழ்வார். நான்கு - சரியை, கிரியை, யோகம், ஞானம். நவை அற - ஐயந் திரிபு மயக்கம் நீங்க. தகாத பகுதியில் சாராதவர்கள். ஊனம் - குற்றம். மனைஅறம் - இல்லறம். 7. 357. செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார் மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றி முதல்வனாரை இம்மையே பெற்று வாழ்வார்; இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார் தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார். செம்மை . . . . . . . . ஆனார் - அந்தணர்; செந்தண்மையாளர்; (நம்பியாரூரர் காலத்துத் தில்லைவாழ் அந்தணர்தம் நிலை). தில்லை மூவாயிரவர் முதல்வனாரை - நடராசரை. இம்மையே இப்பிறவியி லேயே. 8. 358. இன்றுஇவர் பெருமை எம்மால் இயம்பல் ஆம் எல்லைத்து ஆமோ? தென்தமிழ்ப் பயனாய் உள்ள திருத்தொண்டத் தொகை முன்பாட அன்றுவன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல் முன் திருவாக்கால் கோத்த முதல்பொருள் ஆனார் என்றார். முன் - முன்னர். அன்று - அந்நாளில். வன் தொண்டர் தமக்கு ஆரூர் அண்ணல் - திருவாரூர்த் தியாகேசப் பெருமானே. முன் (முதல் முதல்) தருவாக்கால் - தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என்று எடுத்துக் கொடுத்த. 9. 359. அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம் புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ! நிகழ்திரு நீல கண்டக் குயவனார், நீடு வாய்மை திகழும் அன்பு உடைய தொண்டர் செய்தவம் கூறல் உற்றாம். அகலிடத்து - பூமியில் தவம் - தொண்டு. 10. தில்லை வாழ் அந்தணர் தில்லைவாழ் அந்தணர்கள், நடராஜப் பெருமான் திருவடித் தொண்டர்கள். அத்திருத்தொண்டே அவ்வந்தணர்களுக்குரிய பெருந்தவம். முறைப்படி எரிமூன்றோம்பி உலகுக்கு நலஞ்செய்வதில் அவர்கள்தங் கண்ணுங் கருத்தும் படிந்து கிடக்கும். அறத்தைப் பொருளாக்கொண்டு வேதங்களையும் வேதாங்கங்களையும் பயில்வதில் அவர்கள் பொழுது போகும். அவர்கள் மரபு மாசில்லாதது. அவர்கள் ஒழுக்கம் மாறில்லாதது. அவர்களது அறுதொழில் ஆட்சியால் அருங்கலி நீங்கும். திருநீறு அவர்களது செல்வம். ஞானம் முதலிய நான்கு பாதங்களில் அவர்களது உழைப்புச் செல்லும். அவர்கள் மானமும் பொறையுந் தாங்கும் இல்லறம் பூண்டு, இப்பிறவியிலேயே இறைவனை வணங்கும் பேறு பெற்றமையால், இனிப்பெறும்பேறு ஒன்றுமில்லாதவர்கள். அவர்கள் பெருமையிற் சிறந்தவர்கள்; தங்களுக்குத் தாங்களே ஒப்பானவர்கள். தியாகேசப் பெருமானே, சுந்தரமூர்த்தி சுவாமிகட்குத் தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடியெடுத்துச் சிறப்பித்த முதன்மை வாய்ந்தவர்கள் அவர்கள். என்றும், அவர்கள்தம் அருட்பெருந்தன்மை அளவிட்டுரைக்கற் பாலதாமோ? 7. திருநீலகண்ட நாயனார் 360. வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்; மாது ஒரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்து ஆடும் நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கார். வேட்கோவர் - குயவர். என்றும் உள்ளதாதலின் மன்னு என்றார். எல்லாக் கூத்துகட்கும் முதலும் முடிவும் உண்டு. ஆண்டவன் திருக்கூத்துக்கு முதலும் முடிவு மில்லையாதலின் அஃது அற்புதத்தனிக் கூத்தாயிற்று. கூத்தின் விளக்கத்தைப் பாயிரம் முதற் பாட்டின் விரிவுரையிற் காண்க. 1. 361. பொய்கடிந்து அறத்தின் வாழ்வார்; புனல்சடை முடியார்க்கு அன்பர்; மெய் அடியார்க்கட்கு ஆன பணிசெயும் விருப்பில் நின்றார்; வையகம் போற்றும் செய்கை மனைஅறம் புரிந்து வாழ்வார்; சைவமெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரும் நீரார். கடந்து - நீக்கி. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற - செய்யாமை செய்யாமை நன்று - திருக்குறள் 307. புனல் - கங்கை. மெய் - உண்மையை யுணர்ந்த. அறம் என்பது மனையற மாதலின் வையகம் போற்றும் செய்கை என்றார். அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை - திருக்குறள் 49. சைவ உண்மைத் திருவருட் செல்வத்தின் சார்பே. நீரார் - குணத்தையுடையவர். 2. 362. அளவு இலா மரபின் வாழ்க்கை மண்கலம் அமுதுக்கு ஆக்கி, வளர்இளந் திங்கள் கண்ணி மன்று உளார் அடியார்க்கு, என்றும் உளம் மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில் இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார். மரபின் வாழ்க்கை - தங்குல வாழ்க்கைக்குரிய அளவிலா மட்கலம் என்றியைக்க; அளவிலா மரபின் எனக் கொள்ளினுமாம். அமுதுக்கு - சீவனத்துக்கு. திங்கள் கண்ணி - பிறையைக் கொண்டை மாலையாயணிந்து. மன்றுள்ளார் - சபையில் நடம் புரியும் பெருமானின். மல்க - பெருக. இளமைச் செவ்வி முதிர; காளைப் பருவம் வர. எளியர் ஆனார் - வயப்பட்டார்; விருப்ப முடையவ ரானார். இளமைக்கும் இன்பத்துக்கும் தொடர்பு உண்டு. இளமையிற் சிறந்த வளமையும் இல்லை - இளமை கழிந்த பின்றை வளமை - காமம் தருதலும் இன்றே - நற்றிணை 126 : 7 - 10. 3. 363. அவர் தங்கண் மனைவி யாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்; புவனங்கள் உய்ய ஐயர் பொங்குநஞ்சு உண்ண யாம்செய் தவம்நின்று தடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று சிவன் எந்தை கண்ட தன்னைத் திரு நீலகண்டம் என்பார். ஐயர் - சிவபெருமான். தகைந்து - தடுத்து. தான் - கண்டம். 4. 364. ஆனதம் கேள்வர் அங்குஓர் பரத்தை பால் அணைந்து நண்ண மானமும் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை ஏனைய எல்லாம் செய்தே உடன்உறைவு இசையார் ஆனார்; தேன்அலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார். ஆனதங்கேள்வர் - திருநீல கண்டம் என்று சொல்பவராகிய தம் கணவர்; பிரியமுள்ள தம் கணவர் எனினுமாம். ஓர் பரத்தை பால் அணைந்து நண்ண - ஒரு விலைமாதினிடம் கூடி (வீட்டிற்கு) வர. ஊடலால் - பிணக்கால். உடன் உறைவ - புணர்ச்சியை மட்டும். தேன் ததும்பும் தாமரை மலரிலுள்ள இலக்குமியைப் பார்க்கிலும் அழகிற் சிறந்தவர். இளமை, போகத்துக்கு உரியது. அதை நீத்திருத்தல் அருமை. அவ்வருமையை ஆசிரியர், அம்மையாரின் அழகைத் தேனலர் . . . . . . மிக்கார் என்று சிறப்பிக்கும் வாயிலாக விளக்கி யிருத்தலை யோர்க. இத்தகை அழகு வாய்ந்த அம்மையாரிருப்ப நாயனார் பரத்தையை விரும்பியது தவறு என்பது குறிப்பு. 5. 365. மூண்ட அப்புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று பூண்தயங்கு இளமென் சாயல் பொன்கொடிஅ னையார் தம்மை வேண்டுவ இரந்து கூறி மெய்உற அணையும் போதில், தீண்டுவீர் ஆயின் எம்மைத் திருநீல கண்டம் என்றார். மூண்ட - உதித்தெழுந்த. அப்புலவி - அப்பிணக்கை. அன் பனார் - திருநீலகண்ட நாயனார். பூண் தயங்கு - ஆபரணங்கள் விளங்கும். இளமை - மென்மை சாயல் (சாயல் - ஐம்பொறியால் நுகரும் மென்மை) . . . . . . . . அனையார் தம்மை - மனைவியாரை. மெய்யுற - உடலுற (அம்மையார்) என்றார். 6. 366. ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி ஏதிலார் போல நோக்கி, எம்மை என்றதனால் மற்றை மாதரார் தமையும் என்தன் மனத்தினும் தீண்டேன் என்றார். ஆதியார் - சிவபிரானது நீலகண்டத்தளவு. திருநீலகண்ட மொன்றனிடத்தில். ஆர்வம் - விருப்பம். ஆர்வ அளவு என்று இயைப் பினுமாம். பேதியா - வேறுபடாமல். பெரியவர் - திருநீலகண்ட நாயனார். பெயர்ந்து நீங்கி - அம்மையாரைத் தீண்டாது விட்டகன்று. ஏதிலார்போல - (அம்மையாரை) அயலாரைப் போல. என்னை எனக் கூறாது எம்மை எனப் பன்மையாற் கூறினமையால், (உன்னை யும் உன்னினமாகிய) மற்றப் பெண்களையும் (திருநீலகண்ட நாயனார் சிவநேயர் அந்நேயத்துடன் பரத்தையர் நேயமும் அவர்பால் இருந்தது. இரண்டில் சிவநேயமே அவர்பால் மிக்கிருந்தது. நாளடைவில் சிவநேயம் அருகாதவாறு நாயகியார் நாயனாரைக் காத்தனர். அம்மையார் திருநீலகண்டத்தின்மீது ஆணை கூறியது நாயனாரை நல்வழிப்படுத்தற்கேயாகும். திருநீலகண்டத்திடத்து நாயனார்க்குள்ள ஆர்வம் பெண்ணினத்தையே மறக்கச் செய்தது. இதனால் நாயனார் பெரியரானாரென்க இப்பெருமைக்குத் துணை நின்ற பெருமை நாயனார் மனைவியாருடையது. உற்ற வேளையில் நாயகன் வாழ்க்கைக்கு உறுதுணை செய்யவேண்டுவது நாயகியின் கடமை. இப்புராணத்தில் பெண்ணின் பெருமையும் உரிமையும் விளங்குதல் காண்க. 7. 367. கற்பு உறு மனைவி யாரும் கணவனார்க்கு ஆன எல்லாம் பொற்பு உற மெய்உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய, இல்புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு வைகி, அற்பு உறு புணர்ச்சி இன்மை அயல் அறியாமை வாழ்ந்தார். அழகு மிக்க உடல் நாயகனிடம் படாமல் மற்றப் பொருந்திய பணிகளை அன்புடன் செய்து. இற்புறம்பு ஒழியாது - வீட்டை விடுத்துப் புறம்பே செல்லாது. அற்புறு - அன்பு பொருந்திய. 8. 368. இளமையின் மிக்கு உளார்கள் இருவரும், அறிய நின்ற அளவஇல் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல, வளம்மலி இளமை நீங்கி வடிவுஉறு மூப்பு வந்து தளர்வோடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார். வடிவுறு மூப்பு - உடலிலே யுற்ற மூப்பு; உடலிலே மிக்க ஒப்பு; திரைத்தலையுண்டாக்கும் மூப்பு. தம்பிரான் திறத்து சிவ பிரானிடத்தில். 9. 369. இந்நெறி ஒழுகும் நாளில், எரி தளிர்த்து என்ன நீண்ட மின் ஒளிர் சடையோன் தானும் தொண்டரை விளக்கம் காண நல்நெறி இதுஆம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும் அந்நெறி காட்டும் ஆற்றால் அருள் சிவயோகி ஆகி. எரி தளிர்த்தென்ன - நெருப்புக் கொழுந்து விட்டாற்போல. சடையான் - சிவபெருமான். விளக்கங்காண - சோதிக்க; இத்தன்மையரென்று யாவருக்கும் விளக்கஞ் செய்ய என்றலு மொன்று. இது என்றது பக்தி வைராக்கியத்தை; பெண்ணை ஆணும் ஆணைப் பெண்ணும் நீத்து வாழ்வதையன்று; இஃது ஆண்டவன் திருவுளமன்று என்பது, பின்னை மீண்டும் ஆண்டவன் இருவர்க்கும் இளமை வழங்குதலால் நன்கு விளங்கும். ஞாலத்தார் - உலகோர். அந்நெறி - அந்தப் பக்தி வைராக்கிய மார்க்கத்தை. காட்டும் - ஆற்றல் காட்டும் வகையால். 10. கலி விருத்தம் 370. கீளொடு கோவணம் சாத்திக் கேடுஇலா வாள்விடு நீற்றுஒளி மலர்ந்த மேனிமேல் தோனொடு மார்பிடைத் துவளும் நூலுடன் நீள் ஒளி வளர்திரு முண்ட நெற்றியும். கிளொடு கோவணம் - அரைஞாணோடு கூடிய கௌபீனம். வாள் விடு நீற்றொளி - ஒளி வீசும் திருநீற்றின் தெய்வத்தன்மை. திருமுண்டம் - திரிபுண்டரம் அணிந்த. 11. 371. நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும் விடும் கதிர் முறுவல்வெண் நிலவும் மேம்பட இடும்பலிப் பாத்திரம் ஏந்து கையராய் நடந்துவேட் கோவர்தம் மனையில் நண்ணினார். கரந்திட - மறையும்படி நெறித்த. பம்பையும் - சிலிர்த்துச் சுருண்டு கீழ் விழாமல் நூறாயிருக்கிற தலைமயிரும். ஒளி வீசும் பற்களினின்றும் தோன்றும் வெண்ணிலவும்; புன்சிரிப்புடன் என்றபடி. பலி இடும் பாத்திரம் - பிச்சை யிடுதற்குரிய திருவோட்டை. வேட்கோவர் - திருநீலகண்ட நாயனார். 12. 372. நண்ணிய தவச்சிவ யோக நாதரைக் கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம் புண்ணியத் தொண்டர் ஆம் என்று போற்றிசெய்து எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார். அன்பர் - திருநீலகண்ட நாயனார். மனம் எண்ணிய வகைப்படி. 13. 373. பிறைவளர் சடைமுடிப் பிரானைத் தொண்டர் என்று உறையுளில் அணைந்துபேர் உவகை கூர்ந்திட முறைமையின் வழிபட மொழிந்த பூசைகள் நிறைபெரு விருப்பொடு செய்து நின்றபின். பிரானை - சிவபிரானை. உறையுளில் அணைந்து - தமது வீட்டுக்கு அழைத்துச் சென்று. பேர்உவகை கூர்ந்திட - பெருமகிழ்ச்சி பொங்க. அறிஞர்கள் மொழிந்த. 14. 374. ‘v«ãuh‹ ah‹brí« gÂvJ? என்றனர் வம்புஉலா மலர்ச்சடை வள்ளல் தொண்டனார்; உம்பர் நாயகனும் இவ்ஓடுஉன் பால்வைத்து நம்பி! நீ தருக நாம்வேண்டும் போது என்று. எம்பிரானே. வம்பு உலா - வாசனை வீசும். வள்ளல் தொண்டனார் - சிவபெருமானின் தொண்டராகிய திருநீலகண்ட நாயனார். தொண்டனார் செயும் பணி எது என்றனர் எனக் கூட்டுக. உம்பர் நாயகனும் - தேவர்கள் நாயகராகிய சிவபெருமானும். நம்பி - ஆடவரிற் சிறந்த திருநீல கண்டனே. நம்பி வைத்தும் - நம்பி வைப்பேம் என்பது பழைய குறிப்புரை. 15. 375. தன்னைஒப்பு அரியது; தலத்துத் தன்உழைத் துன்னிய யாவையும் தூய்மை செய்வது; பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது; இன்ன தன்மையது இது; வாங்கு நீ என. தன்னை - தனக்குத்தான். தலத்துத் தன்னுழை துன்னிய யாவையும் - இவ்வுலகில் தன்னிடம் பொருந்தும் எல்லாவற்றையும். இது - இவ்வோடு. இதை வாங்கு. 16 376. தொல்லைவேட் கோவர்தம் குலத்துள் தேமான்றிய மல்குசீர்த் தொண்டனார் வணங்கிவாங் கிக்கொண்டு ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்பு உறும் எல்லையில் வைத்துவந்து இறையை எய்தினார். தொல்லை - பழமை நிறைந்த. மல்குசீர் - நிறைந்த புகழினை யுடைய. ஒல்லையில் - விரைவில். ஓர் மருங்கு - ஒரு பக்கத்தில் காப்புறும் எல்லையில் - காவல் மிகுந்த இடத்தில். 17 377. வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் நித்தனார் நீங்கிட, நின்ற தொண்டரும் உய்த்து, உடன் போய் விடை கொண்டு மீண்டனர்; அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் உய்த்து - அவரைச் செலுத்தித் தாமும். அத்தர் - நடராசர். 18. அறுசீர் விருத்தம் 378. சாலநாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த கோலம் ஆர் ஒடு தன்னைக் குறிஇடத்து அகலப் போக்கிச் சீலம்ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால் வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார். சாலநாள் - பன்னெடுநாள். தலைவனார் - சிவபெருமான். முன் வைத்த - முன்னே வைக்கத் தந்த. கோலம் ஆர் - அழகு பொருந்திய. குறியிடத்து - (வைக்கப்பட்ட) குறித்த விடத்தினின்றும். சீலம் நிறைந்த விரதத்தால் என்றும் திருந்திய வேட்கோவர் தம்பாலுள்ள. வாலிதாம் நிலை காட்ட - தூய்மையாகிய உறுதி நிலையை உலகுக்கு உணர்த்த. 19. 379. வந்தபின் தொண்ட னாரும் எதிர் வழிபாடு செய்து சிந்தை செய் தருளிற்று எங்கள் செய்தவம் என்று நிற்ப, முந்தை நாள் உன்பால் வைத்த மொய் ஒளி விளங்கும் ஓடு தந்து நில் என்றான்; - எல்லாம் தான்வைத்து வாங்க வல்லான். சிந்தைசெய்து அருளிற்று - திருவுளங் கொண்டு இங்கே எழுந்தருளியது. மொய் - மொய்த்த; மிக்க ஓட்டைத் தந்துநில் என்றபடி; விரைவிற் கொடு என்றவாறு. எல்லாவற்றையும் ஆக்கவும் அழிக்கவும் ஆற்றலுடைய சிவபெருமான். விச்சதின்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் - வைச்சு வாங்குவாய் - திருவாசகம் ஆனந்தாதீதம். 20. 380. என்று அவர்விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு சென்றுமுன் கொணர்வான் புக்கார்; கண்டிலர்; திகைத்து நோக்கி, நின்றவர் தம்மைக் கேட்டார். தேடியும் காணார்; மாயை ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார். இருந்தவர் - பெருந்தவத்தையுடைய சிவயோகியார். அவர் - அச் சிவயோகியார். நேடியும் - தேடியும். 21. 381. மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும் உறையுளில் புக்கு நின்ற ஒருபெருந் தொண்டர் கேட்ப இறையில் இங்கு எய்தப் புக்காய்! jhœ¤jJ V‹? என்ன வந்து கறைமறை மிடற்றி னானைக் கைதொழுது உரைக்கல் உற்றார். மலைமகள் கேள்வன் - சிவபிரான். இறையில் - நொடிப் போதில். திருநீலகண்டர் ஓடிவந்து, கறைமறை மிடற்றினானை - திருநீலகண்டத்தை மறைத்து வந்த சிவநாதனை. 22. 382. இழை அணி முந்நூல் மார்பின் எந்தை! நீர் தந்து போன, விழை தரும் ஓடு வைத்த, வேறு இடம் தேடிக் காணேன்; பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப் பிழையினைப் பொறுக்க வேண்டும்; bgUk! என்று இறைஞ்சி நின்றார். விழைதரும் - விருப்பூட்டும். வைத்த இடத்தினும் வேறிடங் களினும் பழையதைப் பார்க்கினும். 23. 383. சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி, என்இது மொழிந்தவா நீ? யான் வைத்த மண்ஓடு அன்றிப் பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினும் கொள்ளேன்; போற்ற, முன்னை நான் வைத்த ஓடே கொண்டுவா என்றான் முன்னோன். செயிர்த்து - கோபித்து. மொழிந்தவாறு. போற்ற - பாதுகாக்க. 24. 384. கேடு இலாப் பெரியோய்! என்பால் வைத்தது கெடுதலாலே நாடியும் காணேன்;வேறு நல்லது ஓர் ஓடு சால நீடு செல்வது தான் ஒன்று தருகின்றேன் எனவும் கொள்ளாது ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன. கெடுதலாதல் - காணாது போனபடியால். நாடியும் கவலை யுடன் தேடியும். சாலநீடு செல்வது - மிக நெடுங்காலம் பயன்படத் தக்கது. ஊடி - கோபித்து. 25. 385. ஆவதுஎன்? உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப் பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்! யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப், போவதும் செய்யேன் என்றான்: புண்ணியப் பொருளாய் நின்றான். இனி ஆவதென்ன, வௌவி - கவர்ந்து. பாவகம் - வஞ்சக நடிப்பு; பாவமுமாம் ஒன்றும் - சிறிதும்; எவ்வளவும். வளைத்து பிடித்து. யான் என் பாத்திரத்தை வாங்கிக் கொண்டேயன்றி. 26. 386. வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன்; ஒல்லை உளத்தினும் களவு இலாமைக்கு என் செய்கேன்? உரையும் என்னக் களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக் குளத்தினில் மூழ்கிப் போ என்று அருளினான் கொடுமை இல்லான். ஒல்லை - சிறிதும். உள்ளத்திலும் களவில்லாமையைத் தெரி விக்க என்ன செய்வேன்; என்ன செய்ய வேண்டும் என்றபடி. களத்து - கண்டத்தில். 27. 387. ஐயர்! நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப் பொய்இல் சீர்ப் புதல்வன் இல்லை; என் செய்கேன்? புகலும் என்ன மைஅறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார். மைஅறு - குற்றமற்ற. மொய்யலர் வாவி - நெருங்கிய தாமரைகள் நிறைந்த தடாகத்தில். 28. கொச்சகக் கலி 388. கங்கைநதி கரந்தசடை கரந்தருளி எதிர்நின்ற வெங்கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்; எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை; பொங்குபுனல் யான் மூழ்கித் தருகின்றேன்; போதும் என. கரந்த - அடங்கிய. கரந்தருளி - மறைந்தருளி. விடையவர் - சிவபெருமான். அருள - இவ்வாறு சொல்ல. புனல் - நீரில் சத்தியஞ் செய்து தருகிறேன். 29. 389. தந்ததுமுன் தாராதே, கொள்ளாமைக்கு உன் மனைவி அம்தளிர்ச் செங்கைபற்றி அலைபுனலில் மூழ்காதே சிந்தை வலித்து இருக்கின்றாய்! தில்லைவாழ் அந்தணர்கள் வந்து இரந்த பேர்அவையில் மன்னுவன் யான் எனச் சென்றார். கொள்ளாமைக்கு - நீர் கவர்ந்து கொள்ளமைக்கு; கவர வில்லை என்பதற்கு. அந்தளிர் - அழகிய தளிர்போன்ற மனதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறாய். மன்னுவன் - போய்ச் சொல்வேன். 30. 390. நல்ஒழுக்கம் தலைநின்றார்; நான்மறையின் துறைபோனார் தில்லைவாழ் அந்தணர்கள் வந்துஇருந்த திருந்து அவையில் எல்லைஇலான் முன்செல்ல, இரும்தொண்டர் அவர்தாமும் மல்குபெரும் காதலினால் வழக்குமேல் இட்டுஅணைந்தார். நான்கு வேதத் துறைகளின் கரை கண்டவர்கள். திருந்தவையில் - நல்ல சபையில்; நடுநிலை பிறழாத செம்மைச் சபையில். எல்லை யிலான் - சிவபெருமான். இருந்தொண்டர் - பெருமை பொருந்திய திருநீலகண்ட நாயனார். மல்கு - நிறைந்த. வழக்கின் பொருட்டு. 31. 391. அந்தணனாம் எந்தை பிரான் அருமறையோர் முன் பகர்வான் இந்த வேட் கோவன் பால் நான் வைத்த பாத்திரத்தைத் தந்தொழியான்; கெடுத்தானேல் தன்மனைவி கைப்பற்றி வந்து மூழ்கியும் தாரான்; வலி செய்கின் றான் என்றார். தந்தொழியான் - கொடுத்துவிடான். கெடுத்தானேல் இழந்து விட்டானாயின். வலி செய்கின்றான் - சத்தியஞ் செய்ய இசையாது துணிந்து நிற்கிறான்; சத்தியஞ் செய்ய ஒருப்படாது எனக்கு வேண்டு மென்றே துன்பஞ் செய்கிறான் எனினுமாம். 32. 392. நறைகமழும் சடைமுடியும் நால்தோளும் முக்கண்ணும் கறைமருவும் திருமிடறும் கரந்துஅருளி எழுந்துஅருளும் மறையவன் இத்திறம் மொழிய மாமறையோர் உரைசெய்வார் நிறைஉடைய வேட்கோவர்! நீர்மொழியும் புகுந்தது என. நறை - மணம். கறைமருவும் திருமிடறும் - நீலம் விளங்கும் அழகிய கண்டத்தையும். மறையவவன் - சிவபெருமான். நிறை - சால்பு. திருநீலகண்டரின் சால்பினை முன்னரே யுணர்ந்திருந்தா ராதலின் நிறையுடைய வேட்கோவர் என்றார். வேட்கோவரே புகுந்தது - நிகழ்ந்தது. 33. 393. நீள் நிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு பேணி நான் வைத்தஇடம் பெயர்ந்து கரந் ததுகாணேன்; பூண் அணிநூல் மணி மார்பீர்! புகுந்தபரிசு இது என்று சேண் இடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார். இது - ஓடு. பெயர்ந்து கரந்தது - இடம் விட்டு மறைந்தது. சேணிடையும் - நெடுந்தூரத்தும். 34. அறுசீர் விருத்தம் 394. திருஉடை அந்த ணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் உருவுடை இவர்தாம் வைத்த ஓட்டினைக் கெடுத்தீ ரானால் தரும் இவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தா ராகில் மருவிய மனைவி யோடு மூழ்குதல் வழக்கே என்றார். ஒட்டினைத்தந்த இவர். மருவிய - அமைந்த; உள்ளங் கலந்த. வழக்கு - ஒழுங்கு; நியாயம். 35. 395. அரும் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத் திருந்திய மனைவி யாரைத் தீண்டாமை செப்ப மாட்டார் பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன்; போதும் என்று பெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார் திருந்திய - செந்நெறியினின்றும் வழுவாத. 36. 396. மனைவியார் தம்மைக் கொண்டு, மறைச் சிவ யோகியார் முன் சினவிடைப் பாகர் மேவும் திருப் பூலீச் சுரத்துமுன்னர் நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார், புனை மணி வேணுத் தண்டின் ïUjiy ão¤J¥ ò¡fh®., திருப்புலீச்சுரம் - சிதம்பரத்திலுள்ள ஒரு கோயில் மணிபுனை, வேணுத்தண்டின் - மூங்கிற்றண்டின். இருதலை - ஒருபுறம் தாமும் மற்றொரு புறம் மனைவியாருமாக. 37. 397. தண்டு இரு தலையும் பற்றிப் புகும்அவர் தம்மை நோக்கி, வெண்திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக் கொண்டு உடன் மூழ்கீர்! என்னக் கூடாமை பாரோர் கேட்கப் பண்டுதம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார். முண்டம் - திரிபுண்டர மணிந்த நெற்றியையுடைய. மூழ்கும் பண்டு - பழைய. நாயனாரின் உண்மை நிலையைப் பலர் அறிய லானார். ஆண்டவன் விரும்பி வந்ததும் இதன்பொருட்டே யாகும். 38. 398. வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும் மேவிய மூப்பு நீங்கி விருப்பு உறும் இளமை பெற்றுத் தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியும் தெய்வப் பூவின்மா மழையின், மீள மூழ்குவார் போன்று தோன்ற. இளமையைப் பொருட்படுத்தாது ஆணை காத்தமையான், இன்பத்துக்குரிய இளமை மீண்டும் ஆண்டவ னருளால் கிடைத்தது என்க. இல்லற இன்பம் ஆண்டவன் அருள் வழியதென்பது கருதத் தக்கது. இது குறித்துப் பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். விளக்கம் ஆண்டுக் காண்க. 39. 399. அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம் முன்னிலை நின்ற வேத முதல்வரைக் கண்டார் இல்லை; இந்நிலை இருந்த வண்ணம் V‹? என மருண்டு நின்றார், துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடைமேல் கண்டார். நின்றார் - நின்றவர். விசும்பினூடு - ஆகாய வழியே. துன்னிய- அணைய. துணையுடன் - மாதேவியாருடன். விடைமேல் - இடப வாகனத்தின்மீது. 40. 400. கண்டனர்; கைகள் ஆரத் தொழுதனர்; கலந்த காதல் அண்டரும் ஏத்தினார்கள்; அன்பர்தம் பெருமை நோக்கி விண்தரும் பொலிவு காட்டி விடையின்மேல் வருவார் தம்மைத் தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார். அண்டரும் - தேவர்களும். அன்பர் தம் - திருநீலகண்ட நாயனாருடைய. விண்டு அரும் - ஆகாயத்தில் அரிய. 41. 401. மன்றுளே திருக் கூத்து ஆடி, அடியவர் மனைகள் தோறும் சென்று அவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும் வென்ற ஐம்புலனால் மிக்கீர்! விருப்புடன் இருக்க நம்பால்; என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்தருளினாரே. அவர் - அடியவர்களின். தேவர்கள் தேவர் தாமும் சிவ பெருமானும். வெல்லப்பட்ட ஐம்புலன்களுடன் கூடி வாழ்ந்து மேன்மை யுற்றவர்களே. ஐம்புலனை அழியாது, அவைகளை நல் வழியில் நிறுத்தி ஆள்வது அறிவுடைமை. திருநீலகண்ட நாயனாரும் அவர் தம் மனைவியாரும் ஐம்புலன்களை ஒடுக்க எம் முயற்சியிலுந் தலைப்பட்டாரில்லை. அவர்கள்; தம் புலன்கள் இயங்கிக் கொண்டி ருந்தன. புலன்கள் வழி அவர்கள் உழலாமல், அவர்கள் வழிப் புலன்கள் நின்றமையால் வென்ற ஐம்புலனால் என்றார். தடுத்தாட் கொண்ட புராணம் 126-ம் பாட்டுக் குறிப்பைப் பார்க்க. இருக்க - இருக்கக்கடவீராக. 42. 402. விறல்உடைத் தொண்ட னாரும் வெண்நகைச் செவ்வாய் மென்தோள் அறல்இயல் கூந்தலாள் ஆம் மனைவியும் அருளின் ஆர்ந்த திறல்உடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப் பெறல் அரும் இளமை பெற்றுப் பேரின்பம் உற்றார் அன்றே. விறல் - பத்தி வைராக்கிய வலிமை. அறல் இயல் - கருமணல் போன்ற. வெண். . . . . . . . . ளாம் என்பது ஆண்டவனருளால் அம்மையார் பெற்ற அழகொழுகும் இளமையைக் குறிப்பதென்க. திறல் உண்ட- திருவருளால் நிறைந்த ஒளி அல்லது வலிமையுடைய. பெறுதற்கரிய இளமை. 43. 403. அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த மயல்இல் சீர்த் தொண்டனாரை யான் அறி வகையால் வாழ்த்திப் புயல்வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில், செயல் இயற்பகையார் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன் அண்ணலார் ஆணை உய்த்த - சிவபெருமான் திருநீல கண்டத்தின் மீது இடப்பட்ட ஆணை காத்த. மயல்இல் - மயக்கமில்லாத. பூம்புகார் - காவிரிப்பூம்பட்டினத்தில். பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் -சிலப்பதிகாரம்; மங்கல வாழ்த்து. 44. திருநீலகண்ட நாயனார் தில்லை என்னும் பழம்பெரும்பதியிலே குயவர் குலத்திலே தோன்றியவர் ஒருவர் இருந்தார். அவர் அறவழியிலே நின்றவர்; சிவ பத்தி சிவனடியார்பத்திகளிற் சிறந்தவர். அப்பெரியார் மட்கலம் வனையுந் தொழில் செய்து வாழ்வு நடாத்திவந்தார். அடியவர் களுக்குத் திருவோடு கொடுப்பது அவர்தந் திருத்தொண்டு. சிவ பெருமான்றன் திருநீலகண்டத்தினிடத்துப் பேரன்புகொண்டு திரு நீலகண்டம் திரு நீலகண்டம் என்று அவர் சொல்லி வந்தமையான், அவருக்குத் திருநீலகண்ட நாயனார் என்னுந் திருப்பெயர் வழங்க லாயிற்று. அந்நாயனார் அருந்ததியனைய ஒரு மங்கை நல்லாரைத் திருமணஞ் செய்து இல்லறத்தில் வாழ்ந்துவந்தார். வருநாளில் ஒரு நாள் அவர் இன்பத்துறையில் எளியராய் ஒரு பரத்தைபாலணைந்து வீடுசேர்ந்தார். அதை யுணர்ந்த இல்லக் கிழத்தியார், ஊடல் கொண்டு வீட்டுப் பணிகளெல்லாவற்றையுங் குறைவறச் செய்து, கூடலுக்குமட்டும் இசையா திருந்தார். அவ்வூடலைத் தீர்க்கவேண்டி, நாயனார் ஒருபோது, இரப்புரைகள் பல கூறி, மனைவியாரைத் தழுவ முயன்றார். அவ்வேளையில் அம்மையார் வெகுண்டு, நீர் எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம் என்றார். அடியவரோ திருநீல கண்டத்தினிடத்தில் பெரும் பற்றுடையவர். அப்பற்று மாறுபடா வண்ணம் நாயனார், தம் மனைவியாரைத் தீண்டாதகன்று, அவரை அயலாரைப் போல் பார்த்து, இவள் எம்மை எனப் பன்மையாகக் கூறினமையால் இவளையும், இவளினமாகிய மற்ற மாதர்களையும் யான் மனத்திலுந் தீண்டேன் என்று சூளுரை பகர்ந்தார். இக் கொள்கையுடன் இருவரும் வீட்டை விட்டுத் துறவாது, புணர்ச்சி யின்மையை அயலறியாதவாறு மற்ற இல்லப் பணிகளை இயற்றிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். இவ்வாறு பல ஆண்டுகள் கழிந்தன. இளமைச் செவ்வி மறைந்து முதுமை எய்தலாயிற்று. எய்தியும் சிவபத்தி சிவனடியார்பத்தி மட்டும் அவரிடந்தளர்ச்சியுறவில்லை. திருநீலகண்டநாயனாரது திருத்தொண்டின் பெருமையை உலகுக்குணர்த்த வேண்டி, நடராஜப் பெருமான், ஒரு சிவயோகி யாகிக் குயவர் பெருமான் வீட்டிற்கு எழுந்தருளினார். நாயனார் அவரை முறைப்படி வழிபட்டு, அடியேன் செய்ய வேண்டிய பணி யாது? என்று கேட்டார். சிவயோகியார், அன்பனே! இத் திருவோட்டைச் சேமித்து வைத்திருந்துயான் கேட்கும்போது கொடுப்பாயாக. இத்திருவோடு, தனக்குத் தானே ஒப்பானது; தன்னிடஞ் சேரும் எல்லாப் பொருளையும் தூய்மை செய்யும் ஆற்றலுடையது; பொன்னினும் மணியினும் போற்றுந்தகையது. இத்துணைச் சிறப்பு வாய்ந்த இத்திருவோட்டினை வாங்கி வை என்று அதை நீட்டினார். நாயனார் அதை அன்புடன் வாங்கி இல்லத்தின் ஒரு பக்கத்தில் காப்புடைய ஓரிடத்தில் வைத்துத் திரும்பினார். சிவயோகியார் அவ்விடத்தினின்றும் புறப்பட்டார். நாயனார் அவருடன் சிறிது தூரஞ் சென்று விடைபெற்றனர். சிவயோகி யாக வந்த நடராஜ வள்ளல் பொற்சபைக் கெழுந்தருளினார். பன்னெடு நாள்கள் கடந்தன. ஒருநாள், திருவோடு, வைக்கப் பெற்ற இடத்தினின்றும் மறைந்தொழியச் சிவபெருமான் திருவருள் செய்து, முன்போலச் சிவயோகி வடிவந்தாங்கி நாயனார் இல்லம் போந்தார். நாயனார் அவரை வழிபட்டு நின்றார். சிவயோகியார் அவரைப் பார்த்து முன்னே உன்னிடந் தந்த ஓட்டைக் கொண்டுவா என்றார். நாயனார், திருவோடு கொண்டுவரச் சென்றார். திரு வோட்டைக் கண்டாரில்லை. என் செய்வார் பாவம்! மனைவி யாரைக் கேட்கிறார்; மற்றவரைக் கேட்கிறார்; பிற விடங்களில் தேடுகிறார், திகைக்கிறார். யோகியார்க்கு என் சொல்வேன்; என் செய்கேன் என்று அலமருகிறார். நாயனார் ஒன்றுந் தோன்றாது நிற்கிறார். இந்நிலையில் சிவயோகியார், என்ன இவ்வளவு நேரம்? என்று கூவுகிறார். நாயனார் ஓடிவந்து, எந்தையே! திருவோட்டை வைத்த இடத்திலுந் தேடினேன்; வேறிடங்களிலுந் தேடினேன். அதைக் கண்டிலேன். அப்பழைய ஓட்டினுஞ் சிறந்த புதிய ஓடு ஒன்று வனைந்து தருகிறேன். ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன். பிழை பொறுத்தருளல் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிவயோகியார்க்குச் சினம் மூண்டெழுகிறது. அவர், நாயனாரை உற்று நோக்கி, என்ன சொன்னாய்! புது ஓடா கொடுக்கப் போகிறாய்; யான் கொடுத்த மண்ணோடே வேண்டும்; மற்றது பொன்னோடே யாயினுமாக; அஃதெனக்கு வேண்டா. என் ஓட்டைக் கொண்டு வா என்றார். அடியவர் நடுக்குற்றுப் பெரியவரைப் பணிந்து ஐயரே! தங்கள் திருவோடு கெட்டுவிட்டது. வேறொரு நல்ல ஓடு கொடுக்கிறேனென்றாலும் அதை ஏற்க மறுக்கிறீர். தங்கள் மறுப்புரை என் உணர்வு முழுவதையும் ஒழித்து விட்டது. என்ன செய்வேன்! என்று ஏக்குற்று நின்றார். புண்ணியப் பொருளாக நின்ற பெருமான், என்ன இது! உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிக்கொண்டாய்; பழி பாவங்கட்கு அஞ்சுகிறா யில்லை; யான் உன்னை விடேன்; விடேன். என் ஓட்டை வாங்கிக் கொண்டே போவேன் என்றார். நாயனார், திரு வோட்டை நான் வௌவினேனில்லை; உன் உள்ளத்தினுங் களவின்மையை எங்ஙனம் விளக்க வல்வேன் என்று இரங்கிக் கூறினார். அங்கனமாயின், உன் மகனைப் பற்றிக் குளத்தில் மூழ்கித் திருவோடு கெட்டது, என்று சொல்லிப்போ என்று சிவயோகியார் உரைத்தார். அதற்கு நாயனார், எனக்குப் புதல்வனில்லையே என்றார். சிவயோகியார், உன் மனைவியைப் பற்றிச் சொல் என்று கூறினார். அதற்கும் நாயனார், எனக்கும் என் மனைவிக்கும் ஒரு சூள் உண்டு. அதனால் அவள் கையைப் பிடித்து மூழ்க இயலாமை குறித்து வருந்துகிறேன். யானே மூழ்கி உண்மை சொல்கிறேன் என்று மொழிந்தார். உடனே, சிவ யோகியார் கனன்று, என் ஓட்டையுங் கொடாமல், மனைவியைப் பற்றிக் குளத்தில் மூழ்கவும் இசையாமல் சிந்தை வலித்திருக்கிறாய். தில்லைவாழந்தணர்கள் கூடியுள்ள பேரவையில் என் வழக்கை உரைக்கப் போகிறேன் என்று சொல்லி விரைந்து நடந்தார். நாயனாரும் அவரைத் தொடர்ந்து நடந்தார். சிவயோகியார் அந்தணர் அவைக்களம் புகுந்து நிகழ்ந்ததைக் கூறினார். வேதியர்கள் வேட்கோவரைப் பார்த்தார்கள். வேட்கோவரும் விளைந்ததை விளம்பினார். இருவர் கூற்றையுங் கேட்ட அந்தணர்கள், வேட் கோவரை நோக்கி இவர்தம் ஓட்டை நீரிழந்தீராயின் இவர் விரும்பிய வண்ணம் செய்வது நியாயம் என்று தீர்ப்புக் கூறினார்கள். தமக்கும் மனைவிக்குமுள்ள தீண்டாமையை நாயனார் வெளியிட மாட்டாராய் பொருந்திய வகையால் குளத்தில் மூழ்குகிறேன் என்று சொல்லி, சிவயோகியாருடன் தமதில்லத்திற்கேகி, மனைவியார் அழைத்துக் கொண்டு, திருப்புலீச்சுரத்திற்கு முன்னுள்ள திருக்குளத்தை யடைந்து, ஒரு மூங்கிற்றண்டின் ஒரு முனையை மனைவியல் பற்ற, மற்றொரு முனையைத் தாம் பற்றி மூழ்கலானார். அப்போது சிவயோகியார், உன் மனைவி கையைப் பற்றி மூழ்கு என்றார். திருநீலகண்ட நேயர் அப்படிச் செய்யக் கூடாமையை யாவரும் அறிய விளக்கி மூழ்கிக் கரையேறினார். ஏறிய இருவரிடமும் முதுமை ஒழிந்து இளமைச் செவ்வி மலர்ந்தது. அக்காட்சி கண்டவர்கள், அங்கிருந்த சிவயோகியாரைக் கண்டார்க ளில்லை. இஃதென்ன மாயம்! என்று அவர்கள் மருண்டு நின்றார்கள். அந்நேரத்தில் சிவ யோகியாக வந்த சிவபெருமான் உமையம்மையாருடன் விடைமீது காட்சி வழங்கினார். திரு நீலகண்ட நாயனாரும் அவர்தம் அருமை மனைவியாரும் சிவபெருமானை வணங்கிப் போற்றி இன்பக் கடலில் மூழ்கினர். எல்லாம் வல்ல இறைவர், ஐம்புலனை வென்ற விழுமிய அன்பர்களே! இவ்விளமை என்றும் நீங்காமல் நம்மிடத்து இருங்கள் என்று திருவருள் சுரந்து எழுந்தருளினார். திருநீலகண்ட நாயனாரும் அவர் தம் மனைவியாரும் சிவலோகமடைந்து பெறுதற் கரிய இளமை பெற்றுப் பேரின்ப முற்றனர். 8. இயற்பகை நாயனார் எண் சீர் விருத்தம் 404. சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக்குலம் புகழ் பெருக்கிய சிறப்பின் மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப் பொன்னி நல்நதி மிக்கநீர் பாய்ந்து புணரி தன்னையும் புனிதம் ஆக்குவது ஓர் நல்நெடும் பெரும் தீர்த்தம் முன் உடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம். சென்னி - சோழ ( குலத்தில் தோன்றிய); தலை மீதுமாம். மன்னு தொல் புகல் - நிலைபெற்ற பழைய புகழ் பொருந்திய. மருத நீர் நாட்டு - மருத நிலங்களைப் பெரிதும் கொண்ட சோழ நாட்டில். இயல் புடன் நீரை அளித்து. பொன்னி நன்னதி - காவிரி. மிக்க நீர் - எஞ்சிய நீர். புணரி தன்னையும் - கடல் தன்னையும். தீர்த்தம் காவிரி சங்கமம்; காவிரி கடலுடன் கூடுவது. புகார் நகரம் காவிரிப் பூம்பட்டினம். புகழால் அமைந்த புகார் சிலப்பதிகாரம்; புகார்க் காண்ட இறுதிச் செய்யுள். காவிரிப்பூம்பட்டினம் - சோழ மன்னர் தலை நகரங்களுள் தலையாயது; சரித்திர சம்பந்தமுடையது. 1. 405. அக்குலப்பதிக் குடிமுதல் வணிகர்; அளவுஇல் செல்வத்து வளமையின் அமைந்தார்; செக்கர் வெண்பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர்; மறைச் சிலம்பு அடியார் மிக்கசீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே இக்கடல்படி நிகழமுன் கொடுக்கும் இயல்பின் நின்றவர்; உலகு இயற் பகையார். அக்குலப்பதி - அம்மேன்மை பொருந்திய நகரத்தில். அந்தி வான் வெண்பிறையைச் சூடிய. செக்கரைச் சடையுடன் கூட்டிக் கொள்ளினுமாம். செக்கர் - சிவந்த. சடையவர் - சிவபெருமான். மறைச்சிலம்பு அடியார் - நடராசர் தம். கடல்படி - கடல் சூழ்ந்த உலகம். நிகழ - விளங்க; இயங்க. முன் - உடனே. உலகு இயலுக்குப் பகை யானவர். கேட்டதை இல்லை யென்னாது ஈதலை உலகியற்பகை என்றார். . . . இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் (திருத் தொண்டத் தொகை) 1. இவ்வுண்மை பின்வரும் நிகழ்ச்சி ஒன்றால் உறுதிப்படுதல் காண்க. 2. 406. ஆறுசூடிய ஐயர்மெய் அடிமை அளவு இலாதது ஓர் உளம்நிறை அருளால் நீறுசேர்த்திரு மேனியர் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து மாறு இலாத நல் நெறியினில் விளங்கும் மனை அறம்புரி மகிழ்ச்சியின் வந்த பேறு எலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணிவாழ் நாளில். ஆறு - கங்கை. ஐயர் - சிவபெருமானது. உள்ளத் தூய்மைக்கு அறிகுறி நீறாதலான், அதனை அணிந்தோர் மெய்மையுடையவ ராகவும் அருளுடையவராகவும் இருத்தல் வேண்டுமாதலின், மெய்யடிமை என்றும், அருளால் என்றும் கூறினார். பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள் -திருக்கூட்டச் சிறப்பு 6. நீறு சேர் திருமேனியர் - விபூதியணிந்த அடியார்கள். வினைப்பட - செயலில் வர இக்கொடைக்குக் காரணமாக நிற்பது இல்லறம் என்க. அவர் - அச் சிவனடியார்கள். பேணி - ஈகைத் தொண்டினைப் பாதுகாத்து. 3. 407. ஆயும் நுண்பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர் நாயகிக்கும் அஃது அறியவோ? பிரியா நங்கை தான் அறியாமையோ? அறியோம்; தூய நீறுபொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியர்ஆய் மாய வண்ணமே கொண்டுதம் தொண்டர் மறாத வண்ணமும் காட்டுவான் வந்தார். ஆய - அறிஞர்கள் ஆராய ஆராய. அறிவால் ஆய ஆய நுண்மைக்கு நுண்மையாய்ச் செல்வதால் நுண்பொருள் என்றார். அந்நுண்மையாயிருந்தும் உயிர்கள் பொருட்டுக் கனகசபையில் ஆடுகிறார் என்க. ஆடுவார் - சிவபெருமான். உம்பர் நாயகிக்கும் - தேவர்களுள் முதல்வியாகிய உமையம்மையார்க்கும். உம்பர் என்ப தற்கு மேன்மை பொருந்திய எனக் கொள்ளினுமாம். அஃது அறி யவோ - (பின்னிகழ்ச்சியாகிய) அது தெரியவோ. பிரியாத அந் நங்கைக்கு (உமையம்மையார்க்கு)த் தெரியாமையோ. தூர்த்த வேடமும் - காமுகர்க்குரிய வேடமும். மாயையின்படியே. தமது தொண்டராகிய இயற்பகையாரின் (எதையும்) மறாது கொடுக்குந் திறத்தையும் உலகிற்றுக் காட்டும் பொருட்டு. 4. 408. வந்து தண்புகார் வணிகர்தம் மறுகின் மருங்கு இயற்பகையார் மனை புகுத, எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றது ஓர் இன்ப ஆதரவால் சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து முந்தை எம்பெரும் தவத்தினால் என்கோ? முனிவர் இங்கு எழுந்தருளியது என்றார். தண் - குளிர்ச்சி பொருந்திய. மறுகின் மருங்குவந்து - வீதியி னிடத்து வந்து. ஆதரவால் - விருப்பத்தால். என்கோ - என்பேனோ.5. 409. என்று கூறிய இயற்பகை யார் முன் எய்தி நின்றஅக் கைதவ மறையோர் கொன்றை வார் சடையார் அடியார்கள் குறித்து வேண்டிய குணம் எனக் கொண்ட ஒன்றும் நீர்எதிர் மறாதுஉவந்து அளிக்கும் உண்மை கேட்டுநும் பால்ஒன்று வேண்டி, இன்று நான்இங்கு வந்தனன் அதனுக்கு இசையல் ஆம்எனில் இயம்பல் ஆம் என்றான். அக் கைதவமறையோர் - அந்த வஞ்சனை யொழுக்குடைய பிராமணர். மறாது உவந்து அதற்கு இசைவீரேல் அதனை இன்ன தென இயம்புதல் கூடும். 6. 410. என்ன, அவ்உரை கேட்டு இயற் பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை; ஐயம் இல்லை, நீர் அருள்செயும் என்ன, மன்னு காதல்உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அந்தணர் எதிரே சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுதுஉரை செய்வார். மனைவியைக் கொடு என்று நாயகன் எதிரிலே கேட்டல் தகாதாதலின் சொன்ன போதிலும் என்றார். உம்மை எதிர்மறை. கேட்டவர் தீய எண்ணத்துடன் கேட்கவில்லை என்பார் அந்தணர் என்றார். அங்கணர் என்பது பாடமாயினும் பொருந்தும்; திருநகரச் சிறப்பு 46-ஆம் பாட்டுக் குறிப்புப் பார்க்க. கேட்கத் தகாத உரையைக் கேட்டும் இயற்பகையார்க்குச் சீற்றம் பிறக்கவில்லை. அவர்தம் விரதம் எதையும் இல்லை என்னாது கொடுப்பது. தம்மிடத் தில்லாத ஒன்றை எங்கே அன்பர் கேட்டு விடுகிறாரோ என்பதிலேயே இயற்பகையார் மனம் ஏக்குற்றுக்கிடந்தது. உள்ள பொருளை அன்பர் கேட்டதும் நாயனாரின் மனம் மகிழ்ச்சியடைந்தது. பொருள் மனைவியாயினுமாக; மற்றை எதுவாயினுமாக. யாதும் ஒன்று என் பக்கல் உண்டாகில் அன்னது எம்பிரான் அடியவர் உடைமை என்று கூறிய உறுதியினிறும் நாயனார் பிறழாமையே ஈண்டுக் கருதற்பாலது. நாயனார் சிவநேயம் ஒன்றிலே பெரும் பற்றுடையாரா யிருந்தாரென்பதும், பிறவற்றில் தாமரை நீர்போல் பற்றின்றி வாழ்ந்தார் என்பதும் நனி விளங்குகின்றன. 7. 411. இது எனக்குமுன்பு உள்ளதே, வேண்டி எம்பிரான்செய்த பேறுஎனக்கு என்னாக் கதும் எனச் சென்று தம் மனை வாழ்க்கைக் கற்பின் மேப்டு காதலி யாரை, விதி மணக்குல மடந்தை! இன்று உனை இம் மெய்த் தவர்க்குநான் கொடுத்தனன் என்ன மது மலர்க் குழல் மனைவியார் கலங்கி மனம் தெளிந்தபின், மற்றுஇது மொழிவார். கதுமென - விரைவாக. மடந்தையே. முதலில் அம்மையார் கலக்குற்றார்; பின்னே தெளிந்து நாயனார் விரும்பிய வழிநிற்க ஒருப் பட்டார். இஃதென்ன உலகிலில்லாச் செயல் என்ற வண்ணந் தோன்றிய போது அம்மையார்க்குக் கலக்க முண்டாயிற்று. நமது நாயகர் சிவநேயர்; இல்லையே என்னாத நோன்புடையவர்; உலக வழிநின்று நாம் ஒன்றும் இங்கே கருதலாகாது. இது திருவருள் நிகழ்ச்சியாகவே இருத்தல் வேண்டும். மேலே விளைவதைப் பார்ப்போம் என்று அம்மையார் தெளிவுற்று இசையலானார். உலக வழியில் கலங்கி என்றும் திருவருள் வழியில் தெளிந்து என்றுங் கொள்க. அம்மையாருஞ் சிவத்தை நினைந்து நினைந்து சிவ நேயத்தில் மூழ்கினவராதலான், நேர்ந்துள்ளது திருவருள் நிகழ்ச்சி என்று தெளிவடைந்தாரென்க. 8. 412. இன்று நீர்எனக்கு அருள் செய்தது இதுவேல் என் உயிர்க்கு ஒரு நாத! நீர் உரைத்தது ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் cÇik ntWcsnjh vd¡F? என்று தன் தனிப்பெரும் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்கச் சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள்; திருவினும் பெரியாள். அம்மையார் அன்று நாயனார் வேண்டுகோளை மறுத்து, ஒதுக்கியிருப்பரேல், நாயனாரின் இல்லையே என்னாத நோன்புக்கு இடையூறு நேர்ந்திருக்கும். நாயனார் மாண்பு நாயகியாரை யொட்டியே நிலவியதென்க. நாயனார் பெருமையினும் நாயகியார் பெருமையே சாலச் சிறந்தது. நாயனார் நாயகியாரை வணங்கி யதனால் அவர்தம் மனோநிலை நன்கு புலனாகிறது. மற்றுமொன்று இங்கே குறிக்கத்தக்கது. அந்நாளில் காம நூல்கள் பரவியிருக்கும். பெண்மக்களிடத்துள்ள தாய்மையும் இறைமையும் விளங்கப் பெறாது. அவர்களை வெறுங் காமப் பொருளாக் கருதி ஆடவர் உலகம் துன்புற்றிருக்கும். பெண்மக்கள் காமப் பொருளல்லர் என்பதையும் நாயனார் மற்றவர்போல் பெண்ணை வெறுங் காமப் பொருளாகக் கருதி வாழ்வு நடாத்தவில்லை என்பதையும், காமப்பொருளுக்கும் மேற்பட்ட தாய்மை இறைமைப் பொருளி னிடத்து நாயனார் மனம் படிந்து கிடந்ததென்பதையும், இன்ன பிறவற்றையும் நாயனார் வாயிலாக உலகுக்குணர்த்தவேண்டுவது திருவருள் நோக்கம் போலும். நாயனார், நாயகியாரை வெறுங் காமக்கிழத்தியாரெனக் கருதியிருப்பரேல், அடியவர் வேண்டுதலுக்கு உடன்பட்டிரார். அக்கால தேச வர்த்தமானங்களைக் கொண்டே இவ்வரலாற்றை ஆய்ந்து பார்த்தல் வேண்டும். கனியினுங்கட்டி பட்ட கரும்பினும் - பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும் - தனிமுடி கவித்தாளும் அரசினும் - இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே -அப்பர் : திருவிடை மருதூர். 1. 9. 413. மாது தன்னைமுன் கொடுத்த மாதவர்தாம் மனம் மகிழ்ந்துபேர் உவகையின் மலர்ந்தே ‘ahJ eh‹ïÅ¢ brŒgÂ? என்றே இறைஞ்சி நின்றவர் தம்எதிர் நோக்கிச் சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக்கொடு போகக் காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார். மனைவியை மனமுவந்து கொடுத்தலாகிய அருஞ்செய லாற்றினமையால் நாயனார் மாதவராயினா ரென்க. இல்லை என்னாது அடியார் விரும்பியதை ஈய நேர்ந்தது நாயனார்க்கு மகிழ்ச்சி யூட்டிற்று. ஈத்துவக்கு இன்பம் அறியார்கொல் தாமுடையமை - வைத்திழக்கும் வன்கண வர் - திருக்குறள் : 228. நின்றவர் - நாயனார். வேதியர் இருவகையினர்; பிறப்பு வேதியர்; சிறப்பு வேதியர். கல்வி அறிவு ஒழுக்கத்தால் வேதியராதலே சிறப்பு. பண்டை நாள் முறையிதுவே. பின்னரே பிறப்பு வேதியரினம் தோன்றலாயிற்று. நாயனார் காலத்தில் பிறப்பு வேதியரினம் இருந்தமையான் சாதி வேதியர் என்றார். உங்களிடத்து ஆசை வைத்துள்ள சுற்றத்தாரையும் ஊராரையும் கடந்து போக அடியவர், நாயனார் மனோநிலையை உலகுக்குணர்த்த வேண்டி வந்தவரே யன்றி, அவர்தம் மனைவியாரைக் கவர்ந்து செல்ல வந்தவரல்ல ராதலினால், அம்மையாருடன் நாயனாரையும் அழைத்துச் செல்லத் திருவுளங் கொண்டார் என்க. இது துணை போதுக என்பதால் விளங்குகிறது. இடையில் நாயனார் பிரிந்த போதும் சிவபெருமான் அவரை அழைத்தது பின்னே வருதல் காண்க. 10. அறுசீர் விருத்தம் 414. என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்று ஏவல் ஒன்று இது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய நின்றது பிழை ஆம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப் பொன் திகழ் அறுவை சாத்திப் பூங்கச்சுப் பொலிய வீக்கி. என்னையுடையவர் என்றமையான். நாயனாரிடம் உடல் ஆவி எல்லாம் அடியாருடையன என்பது விளங்குதல் காண்க. அறுவை - பீதாம்பரம். பூங்கச்சு - அழகிய அரைக்கச்சு. வீக்கி - விளங்கும்படி கட்டி. 11. 415. வாளொடு பலகை ஏந்தி வந்து, எதிர் வணங்கி, மிக்க ஆள் அரிஏறு போல்வார், அவரை முன் போக்கிப் பின்னே தோள் இணை துணையே ஆகப் போயினார்; துன்னினாரை நீள் இடைப் பட முன் கூடி நிலத்துஇடை வீழ்த்த நேர்வார். பலகை - கேடகத்தையும். ஆள் அரியேறு - ஆண்சிங்கம். அவனடி - சிவடியாரையும் மனைவியாரையும். வீரனுக்குத் தோளே சிறந்த துணையாதலால் தோள் இணை துணையேயாக என்றார். தோளிணை - தோளிரண்டும். மனைவியின் அருகே நெருங்கி வரு வோரை, நெடுந்தூரத்தில் காணும்போதே எதிர்த்து மண்ணின்மீது வெட்டிச் சாய்க்க உளங்கொண்டவராய்ச் சென்றார். 12. 416. மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும் ‘ïidaJ x‹W ahnu brŒjh®? இயற்பகை பித்தன் ஆனால் புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார். வள்ளலார் - இயற்பகை நாயனார். (இயற்பகையின்) மனை வியை ஒருவன் கொண்டு போகலாமா? துனை - விரைந்து பற்றும். சுற்றத்தாரும் மற்றவரும் உலகியல் நெறி நிற்பவராதலான், அவர் மானமேற்கொண்டு எழுந்தது தவறுதலன்று. இயற்பகையாரின் செயல் பல கொண்டு அவரை முன்னரே பித்தரெனச் சுற்றத்தாரும் மற்றவரும் கருதியிருந்தனரென்பது ஈண்டுப் பித்தன் என்றமை யால் தெரிகிறது. 13. 417. வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து, மிக்க கால் என விசையின் சென்று, கடிநகர்ப் புறத்துப் போகிப் பால் இரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்ப்பு அரவம் பொங்க, மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து, எதிர் வளைத்துக் கொண்டார். சுரிகையும் - உடைவாளையும். கால் என - காற்றைப் போல. கடிநகர் - காவலையுடைய பட்டினம். இருபால் - இருமருங்கும். ஈண்டி - வலம் இடம் முன் பின்னாக நெருங்கி. ஆர்ப்பு அரவம் - மிக்க ஆரவாரம். மால் கடல் கிளர்ந்தது என்ன - பெரிய கடல் எழுந்தாற்போல. 14. 418. வழிவிடும் துணைபின் போத, வழித்துணை ஆகி உள்ளார் கழிபெருங் காதல் காட்டிக் காரிகையுடன் போம் போதில் அழி தகன்! போகேல்; ஈண்டு அவ் அரும் குலக் கொடியை விட்டுப் பழி விட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார். வழிவிடுதற்கு நாயனார் பின்னே செல்ல, எல்லார்க்கும் வழித் துணையாக உள்ள சிவபெருமான். இயற்பகைக்கும், அவர்தம் மனைவியார்க்கும், மற்றவர்க்கும் முத்தி வழிக்குத் துணை நிற்பவர் என்பது குறிப்பு. வழித்துணையாம் மழபாடி வளிரத்தூணே -திருத் தாண்டகம். கழி - மிகவும். தம்மைச் சிவபிரான் என்று காட்டிக் கொள்ளாது என்பார் காதல் காட்ட என்றார். தாங்கிய கோலத்துக் கேற்ற நடையென்க. அழிதகனே - தகுதி கெட்டவனே; மிகுந்த பாவத்தை யுடையவனே. போகேல் - போகாதே. ஈண்ட - இங்கே. நிரந்து - எங்கும் பரந்து. 15. 419. மறைமுனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும் இறைவனே! அஞ்ச வேண்டாம்; இயற்பகை வெல்லும் என்ன அறைகழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம் தறை இடைப் படுத்துகின்றேன்; தளர்ந்தருள் செய்யேல் என்று. அறைகழல் அண்ணல் - ஒலிக்கின்ற வீரகண்டையை அணிந்த பெருமையிற் சிறந்த இயற்பகையார். கேளா - அம்மையார் சொற்றதைக் கேட்டு. 16. 420. பெருவிறல் ஆளி என்னப் பிறங்குஎரி சிதற நோக்கிப் பரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத்தாரை ஒருவரும் எதிர்நில்லாமே ஓடிப்போய்ப் பிழையும்; அன்றேல் எரிசுடர் வாளின் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார். விறல் ஆளி - வெற்றியுடைய சிங்கம். பிறங்கு எரி சிதற - பெருகுங் கோபாக்கினியினின்றும் பொறிகள் பறக்க. பரிபவப்பட்டு - அவமான மடைந்து. துடிக்கின்றீர் - துணிவு பற்றி எதிர்காலம் நிகழ்கால மாயிற்று. 17. 421. ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்புகின்றாய்; நாடுஉறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய்; இன்று பாடவம் உரைப்பது உன்தன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ? கூடவே மடிவது அன்றிக் கொடுக்கயாம் ஓட்டோம் என்றார். ஒன்னார் - பகைவர்தம். பாடவம் - சாமர்த்தியம். பனவற்கு - பிராமணனுக்கு. 18. 422. மற்றுஅவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த செற்றமுன் பொங்கஉங்கள் உடல்துணி எங்கும் சிந்தி முற்றும் நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு நல்தவர் தம்மைப் போக விடுவன் என்று எழுந்தார் நல்லோர். மாற்றம் - உரை. செற்றம் - கோபம். விசும்பு - விண்ணில். 19. 423. நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்தஅச் சுற்றத் தாரும் சார்ந்தவர் தம்முன் செல்லார்; தையலைக் கொண்டு பெற்றம் ஊர்ந்தவர் படிமேல் செல்ல, உற்று எதிர் உடன்று பொங்கி ஆர்ந்தவெஞ் சினத்தால் மேல்சென்று அடர்ந்துஎதிர் தடுத்தார் அன்றே. தம்மைச் சார்ந்து எதிர்த்த நாயனார் எதிரிலே செல்லாதவராய். பெற்றம் ஊர்ந்தவர் - இடபாரூடாராகிய சிவபெருமான். படிமேல் செல்ல - பூமிமீது செல்ல. உடன்று - பகைத்து. ஆர்ந்த - நிறைந்த. அடர்ந்து - நெருங்கி. 20. 424. சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி வன்துணை வாளே ஆகச் சாரிகை மாறி வந்து, துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து வென்றுஅடு புலிஏறு என்ன அமர் விளையாட்டில் மிக்கார். சாரிகை மாறிவந்து - வலம் இடமாகச் சுற்றிவந்து. துன்றினர் - நெருங்கி வந்தவர்களுடைய. வென்று அடுபுலி ஏறு என்ன - மற்ற விலங்குகளை வென்று கொல்லும் ஆண்புலியைப்போல போர்க் களத்தில் வீரம் சாதுக்களுக்கும் இருத்தல் வேண்டுமென்பது விளங்குதல் காண்க. 21. 425. மூண்டுமுன் பலராய் வந்தார் தனிவந்து முட்டினார்கள் வேண்டிய திசைகள் தோறும் வேறுவேறு அமர்செய் போழ்தில் ஆண்தகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக் காண்தகு விசையின் பாய்ந்து கலந்துமுன் துணித்து வீழ்த்தார். முட்டல் - மோதல் விசை - வேகம். 22. 426. சொரிந்தன குடல்கள் எங்கும்; துணிந்தன உடல்கள் எங்கும்; விரிந்தன தலைகள் எங்கும்; மிடைந்தன கழுகும் எங்கும்; எரிந்தன விழிகள் எங்கும்; எதிர்ப்பவர் ஒருவர் இன்றித் திரிந்தனர் களனில் எங்கும் - சிவன்கழல் புனைந்த வீரர் தலைகள் வெட்டுண்டு எங்கும் விரிந்து கிடந்தன. மிடைந்தன - நெருங்கின. எரிந்தன - தீக்கனன்று கொண்டிருந்தன. களனில் - போர்க் களத்தில். 23. 427. மாடுஅலை குருதி பொங்க மடிந்தசெங் களத்தின் நின்றும் ஆடுஉறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில் ஓடினார் உள்ளார் உய்ந்தார்; ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்; நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார். மாடு அலை குருதி பொங்க - பக்கங்களில் அலையைவீசி இரத்தவெள்ளம் பெருகியோட. ஆடுறு செயலின் - போராடும் அல்லது வெற்றி பெறுஞ்செயல்மேற் கொண்டு. கிளைஞரோடு - சுற்றத்தாருடன். ஒழிந்தவர் - ஓடாது எதிர்த்துப் போர் புரிந்தவர்கள். இயற்பகையார் ஒருவரே நின்றார். 24. 428. திருஉடை மனைவி யாரைக் கொடுத்து இடைச் செறுத்துமுன்பு வருபெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணிந்து மாட்டி, அருமறை முனியை நோக்கி, அடிகள் நீர் அஞ்சா வண்ணம் பொருஅரும் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார். இடை செறுத்து - இடையிலே கோபித்து. மாட்டி - மாளச் செய்து அடிகளே. ஒப்பற்ற இக்காட்டைக் கடக்கத் துணைபோந்து வழிவிடுவன். 25. 429. இருவரால் அறிய ஒண்ணா ஒருவர்பின் செல்லும் ஏழை பொருதிறல் வீரர் பின்பு போகமுன் போகும் போதில், அருமறை முனிவன் சாய்க்காடு அதன்மருங்கு அணைய மேவித் திருமலி தோளி னானை மீள் எனச் செப்பினானே. இருவரால் - இயற்பகையாராலும் அவர்தம் மனைவியராலும்; பிரம விஷ்ணுக்களால் என்றலுமொன்று. ஒருவர் - சிவபெருமான். ஏழை - அம்மையார். ஏழை முன்போகும் போதில். பொருதிறல் - போர் செய்தற்குரிய வல்லமை வாய்ந்த. வீரர் - இயற்பகை நாயனார். அருமறை முனிவன் - சிவபெருமான். வீரத்திருநிறைந்த தோளினை யுடைய நாயனாரை. 26. 430. தவமுனி தன்னை மீளச் சொன்னபின், தலையால் ஆர அவன்மலர்ப் பதங்கள் சூடி, அஞ்சலி கூப்பி நின்று, புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி, இவன் அருள் பெறப்பெற் றேன்என்று இயற்பகை யாரும் மீண்டார். தன்னை - இயற்பகையை. பூசுரன் தன்னை - பிராமணனை. 27. 431. செய்வதற்கு அரிய செய்கை செய்தநல் தொண்டர் போக மைதிகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப் பொய்தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று மெய்தரு சிந்தை யானை மீளவும் அழைக்கல் உற்றான். திரும்பியும் பார்க்கிலன். மெய்தரு சிந்தையாரை - இயற்பகை நாயனாரை அன்பு அழைக்கச் செய்கிறது. இயற்பகையையும் உடன் அழைத்துச் செல்லவேண்டுமென்பது ஆண்டவன் திருவுள்ளம். 28. 432. இயற்பகை முனிவா ஓலம்! ஈண்டு நீ வருவாய் ஓலம்! அயர்ப்பு இலாதானே ஓலம்! அன்பனே ஓலம்! ஓலம்! செயற்கு அருஞ் செய்கை செய்த Ôund Xy«! என்றான் மயக்குஅறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான். இயற்பகையார் சோதனையில் முழுவெற்றி பெற்றதைக் கண்டு சிவபிரானே அவரை முனிவர் என்கிறார். இயற்பகையார், செயலால் முனிவராயினார் என்க. ஓலம் - அபயம்; அச்சம் உற்ற விடத்து அதனின்றும் விடுதலையடைய விளிப்பது. அயர்ப்பு இலாதானே - மறப்பு இல்லாதவனே. சிவத்தை என்றும் மறவாதவரே அன்பராதலின் அன்பனே என்றார். செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் - செயற்கரிய செய்கலா தார் திருக்குறள். 29. 433. அழைத்தபேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன்! வந்தேன்! பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலித் தடக்கை வாளின் இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக் குழைப்பொலி காதினானும் மறைந்தனன்; கோலம் கொள்வான். தடம் - அகன்ற. வாளின் இழைத்தவராகின்றார் - வாளுக்கு இரையாகின்றார். குழை (குண்டலம்) பொலிகாதினானும் - சிவபெருமானும். கோலம் - தமது உண்மைக் கோலம். கோலங் கொள்வான் மறைந்தனன். 30. 434. சென்றவர் முனியைக் காணார்; சேயிழை தன்னைக் கண்டார்; பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின்மேல் பொலிந்தது என்னத் தன்துணை யுடனே வானில் தலைவனை விடைமேல் கண்டார்; நின்றிலர்; தொழுது வீழ்ந்தார்; நிலத்தின்நின்று எழுந்தார்; நேர்ந்தார். பொருப்பு - மலை. தலைவனை, தன் துணையுடனே - சிவபெருமானை உமாதேவியாருடன். நேர்ந்தார் - வழிபட்டார்; நெருங்கினாரெனினுமாம். 31. 435. சொல்லுவது அறியேன் வாழி! தோற்றிய தோற்றம் போற்றி! வல்லைவந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி! எல்லைஇல் இன்ப வெள்ளம் எனக்குஅருள் செய்தாய் போற்றி! தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி! என்ன. தோற்றிய தோற்றம் - காட்டிய காட்சி. வல்லை - விரைவாக. வழி வழி வருந்தொண்டு. 32. 436. விண்இடை நின்ற வெள்ளை விடையவர், அடியார் தம்மை எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம்; பழுது இலாதாய்; நண்ணிய மனைவியோடு நம்முடன் போதுக. எண்ணிய - மதிக்க. பரிவு - (அன்புத்) திறம். 33. 437. திருவளர் சிறப்பின் மிக்க திருத்தொண்டர் தமக்கும் தேற்றம் மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்கும் தக்க பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப் பொருவிடைப் பாகர் மன்னும் பொன்பொது அதனுள் புக்கார். தோற்றம் - தெளிவு; திருவருள் நிலை இன்னதென்னுந் தெளிவு; 8-ம் பாட்டையும் குறிப்பையும் பார்க்க. அருளின் நீடு பேறு - அருளால் நிலையாகவுள்ள வீடுபேற்றை. இமையோர் - தேவர்கள் பொரு - போர். பொற்பொது - கனகசபை. 34. 438. வானவர் பூவின் மாரி பொழிய, மா மறைகள் ஆர்ப்ப, ஞானமா முனிவர் போற்ற, நலம்மிக சிவ லோகத்தில் ஊனம் இல் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார். ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார். ஊனமில் தொண்டர் - இயற்பகை நாயனார். உடன் உறை - சிவபிரானுடன் வாழும். 35. 439. இன்புஉறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே துன்பு உறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி அன்புஉறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன். தாரம் - மனைவி. மன் - நிலைபெற்ற. இளைசை - இளையான் குடி. மரூஉ. 36. இயற்பகை நாயனார் சோழ நாட்டிலே, காவிரிப்பூம்பட்டினத்திலே, வணிகர் குலத்திலே பிறந்த அடியவர் ஒருவர் இருந்தார். அவர், இயற்பகை என்ற பெயரை உடையவர். அவர் இல்லற ஞானியார். அவர்பால் அடியவராய் அணைவோர் எவராயினும், அவர் விரும்புவது எது வாயினும், அவருக்கு அதை இல்லை என்னாது அளித்து வருவது அவர்தந் திருத்தொண்டாகும். ஒருநாள் சிவபெருமான், இயற்பகை நாயனாரின் திருத் தொண்டின் திறத்தை உலகுக் குணர்த்தும்பொருட்டு, வேதியராய்த் திருநீற்று மேனியராய்க் காமுகராய்க் கோலங்கொண்டு நாயனாரிடம் போந்தார். நாயனார் அடியவரைக் கண்டதும் முறைப் படி வழிபட்டு நின்றார். நின்ற அன்பரை அந்தணர் நோக்கி, உமது திருத் தொண்டின் திறத்தைக் கேள்வியுற்று ஒரு பொருள் நாடி இங்கு வந்தோம். அதனை அளிப்ப நீர் இசைவீராயின், அதை இன்ன தென்று இயம்புவோம் என்றார். அன்பிற் சிறந்த நாயனார், எப்பொருளாயினும் ஆக, அஃதென்பால் இருப்பின், அஃதடியவ ருடைமை அதை அருளிச் செய்க என்று கூறினார். மறையோர், முன்பின் சிந்தியாது, உம் மனைவியை நாடி இங்கு வந்தோம் என்றார். என்றதும், இயற்பகையார், அடிகள் என்னிடம் உள்ள பொருளை நாடியது எனது புண்ணியப் பயன் என்று அதிக மகிழ்வெய்தி, உள்ளே விரைந்து நுழைந்து இல்லக் கிழத்தியார்க்கு அடிகள் விருப்பத்தையும் தங்கருத்தையும் தெரிவித்தார். மனைவியார் சிறிது மனங் கலங்கி, உடனே தெளிந்து, நாயனார் கருத்துக்கு இணங்கி, அவரை வணங்கினார். நாயனாருங் காதலி யாரைத் தொழுதார். மாதரசியார் மறையவரிடஞ் சென்று, அவரைப் பணிந்து எழுந்து திகைத்து நின்றார். அக்காட்சி கண்டு மகிழ் வெய்திய இயற்பகையார், வேதியரை நோக்கி, இன்னும் யான் என் செய்தல் வேண்டும்? என்று கேட்டார். சுவாமியார், இத் தையலை யான் தனியே அழைத்துக்கொண்டு போதல் வேண்டும். உங்கள் உறவினரையும் இவ்வூரையுங் கடந்து போக நீர் எமக்குத் துணை வரல் வேண்டும் என்று வாய்மலர்ந்தார். நாயனார், இப்பணியை யானே செய்ய முற்பட்டிருத்தல் வேண்டும். இவர் அருளும் வரை தாழ்த்தது பிழை என்று வருந்தி, வேறோரிடஞ் சென்று போர்க் கோலம் பூண்டு திரும்பி, வேதியரையும் அருந்ததி யனையாரையும் தமக்கு முன்னே போகவிடுத்துத் தாம் அவர்களுக்குப் பின்னே சென்றார். இச்செய்தி ஊர் முழுவதும் பரவலாயிற்று. பரவியதும், சுற்றத் தவர்கள், ஒருங்கே திரண்டு என்ன அநியாயம்! இத்தகைய அடாத செயலை இதுகாறும் எவரே செய்தார்! இயற்பகை பித்தனாயினும் நாம் வாளா கிடத்தல் வேண்டுமோ? அவன் மனைவியை ஒரு மறையவன் கொண்டுபோவது தகுதியா? என்று கூறிக் கொண்டு தங்கள் குலத்துக்கு நேரும் பழியை ஒழிக்கப் போர்க்கருவிகளைத் தாங்கி ஐயரை வளைத்துக் கொண்டார்கள். ஐயர் அம்மையாரை நோக்கினார். அம்மையார், எம்பிரானே! அஞ்சற்க. இவர்களை இயற்பகை வெல்லும் என்றார். உடனே இயற்பகை நாயனார், வேதியருக்குத் தேறுதல் கூறி, உறவினர்கட்கு நல்லுரை பகர்ந்து, ஓடிப் பிழைக்குமாறு சொற்றனர். சுற்றத்தார்கள், அட! நீ என்ன செய்தாய்? ஊரார்கள் பழிப்பார்கள்; பகைவர்கள் நகைப்பார்கள். உனக்கு நாணமில்லை. மனைவியை மறையவனுக்குக் கொடுத்தோ நீ வீரம் பேசுகிறாய்? நாங்கள் ஒருங்கே செத்தாலுஞ் சாவோம். இப் பெண்ணை மறையவன் கொண்டு போக விடோம் என்று வீர மொழி பகர்ந்தார்கள். இயற்பகையார் சினந்து, உங்கள் உயிரை விண்ணுக்கேற்றி இப்பெரியாரைப் போகவிடுவேன் என்று விளம்பி, அவர்களை எதிர்த்தார். அவர்கள் இயற்பகையாரை விடுத்து, அந்தணரைத் தாக்கினார்கள். இல்லையே என்னாத இயற்பகையார், சீறித் தாக்கிய அனைவரையும் வாளினால் துண்டம் துண்டமாக வெட்டி வீழ்த்தி, எதிர்ப்பவர் ஒருவருமின்றி ஏறுபோல் உலவினார். பின்னர்ப் பிறவிவேரை வெட்டி வீழ்த்திய பெருந்தகையார் அந்த ணரைப் பார்த்து, இக்காட்டை அடிகள் கடக்கும் வரை உடன் வருகிறேன் என மொழிந்து, திருச்சாய்க்காடு என்னுந் திருப்பதிவரை உடன் சென்றார். அங்கே, அந்தணர், அன்பரைத் திருக்கண் ணோக்கஞ்செய்து, நீர் வீட்டிற்குத் திரும்பலாம் என்றருளினார். செயற்கருஞ் செய்கை செய்த இயற்பகை நாயனார், அந்தணரைத் தொழுது வாழ்த்தித் திரும்பினார். சிவபெருமான், இவள் மனைவியை விடுத்துத் திரும்பிப் பாராது போகிறான். இவன்றன் அன்பு நிலை என்னே! என்னே!! என்று வியந்து, இயற்பகை முனிவா ஓலம்! ஓலம்! இவ்விடம் விரைந்து வருக என்று ஓலமிட்டார். திருத்தொண்டர் அவ்வோலங் கேட்டு, வந்தேன்; வந்தேன். இன்னுந் துன்பஞ் செய்பவர்க ளிருக்கிறார்களா? அவர்களைத் தொலைத்து விடுகிறேன் என்று முழங்கிக்கொண்டு விரைந்து ஓடிவந்தார். வந்தவர், மறையவரைக் கண்டாரில்லை; மங்கையை மட்டுங் கண்டார். அந்நிலையில், சிவ பிரான் உமாதேவியாரோடு விடைமேற் காட்சியளிப்பதை இயற் பகையார் கண்டார். நாயனார், விழுந்து விழுந்து, வணங்கி வணங்கி, வாழ்த்தி வாழ்த்தி ஆனந்த வடிவினராயினார். அப்பொழுது சிவபெருமான், அன்பனே! உன் தொண்டின் திறம் எமக்குப் பெருமகிழ் வளித்தது. நீ உன் மனைவியுடன் நம்மோடு வரக்கடவாய் என்று திருவாய் மலர்ந்தருளித் திருவுருக்கரந்தனர். இயற்பகை நாயனாரும் அவர்தம் மனைவியாரும் சிவலோக மெய்தி இன்ப வாழ்வைப் பெற்றனர். இறந்துபட்ட உறவினர்களும் விண்ணடைந்து பிறவாத இன்பம் நுகர்ந்தார்கள். 9. இளையான் குடிமாற நாயனார் எழுசீர் விருத்தம் 440. அம்பொன் நீடிய அம்பலத் தினில் ஆடுவார் அடி சூடுவார்; தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துஉளார்; நம்பு வாய்மையில் நீடு சூத்திர நல்கு லம்செய்த வத்தினால் இம்பர் ஞாலம் விளக்கினார்; இளையான் குடிப்பதி மாறனார். அம்பொன் நீடிய அம்பலத்தினில் - அழகிய பொன்னால் சிறப்பாக வேயப்பெற்ற சபையில்; பொன்னம்பலத்தில். தம்பிரான் - அந்நடேசரது. திறத்து - தன்மையில். சால்வின் - தகுதியில். தரித்துளர் - வாய்ந்துளார். சூத்திரர் என்னுஞ் சொல் இடைச்செருக லென்றும், அங்கே மேழியர் என்னுஞ் சொல் இருத்தல் வேண்டுமென்றுஞ் சிலர் கூறுகிறார். இம்பர் ஞாலம் - இவ்வுலகத்தை. 1. 441. ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லது ஓர் செல்வமும் நீரின் மல்கிய வேணியார் அடி யார் திறத்து நிறைந்தது ஓர் சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும் பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடுப யன்கொள்வார். மல்கும் - நிரம்பும். மல்கிய - நிறைந்த. வேணியார் - சடை யுடைய சிவபெருமானின். அடியார் திறத்து - அடியவர்களிடத்தில் மல்கிய - பெருகிய. திருந்த மன்னிய - பண்பட்டு நிலை பெற்ற. பாரில் மல்க - உலகில் மிகா நிற்க அவை - செல்வமும் சிந்தையும். 2. 442. ஆரம் என்பு புனைந்த ஐயர்தம் அன்பர் என்பது ஓர் தன்மையால் நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன் கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்றுசெ விப்புலத்து ஈரம் மென்மது ரப்ப தம் பரிவு எய்த முன்உரை செய்தபின். என்பு ஆரம் புனைந்த ஐயர் தம் - சிவபெருமானுடைய. நித்தம் ஆகிய - எப்பொழுதும் உள்ள. முன்கூர - அதிகரிக்க. செவிப்புலத்து - காதில். ஈரம்மென் மதுரப் பதம் - குளிர்ந்த மிருதுவான இனிய சொற்களை. பரிவு எய்த - அன்பு உண்டாக. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் - செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் திருக்குறள் 91. 3. 443. கொண்டு வந்து மனைப் புகுந்து, குலாவு பாதம் விளக்கியே, மண்டு காதலின் ஆதனத்து இடை வைத்து அருச்சனை செய்தபின், உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்புஇலா அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்து உளார். குலாவு - பிரகாசமுடைய; வியக்குமெனினுமாம். மண்டு காதலின் - மிகுந்த அன்பால். ஆசனத்திடை - பீடத்திலே. உண்டி நாலு - உண்ணல், தின்னல், நக்கல், பருகல் என்பன. ஆறு சுவை - கைப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்பன. திறத்தினில் - வகையினில். இச்சையில் - விருப்பப்படி. 4. 444. ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால் நீளும் மாநிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி, எண் தோளினார் அள கைக்கு இருத்திய தோழ னார்என வாழும் நாள். ஆளு நாயகர் - சிவபிரான். உண்டி கொடுத்தல் நன்மை என்றபடி அதனால் செல்வம் திரண்டது என்றவாறு. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தாரே புறநானூறு 18 : 19. மணிமேகலை: 11 பாத்திரம் 96. அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என் - சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என் - பகரு ஞானி பகல் உண்பலத்துக்கு - நிகரில்லை என்பது நிச்சயம் தானே - திருமந்திரம் : மாகேசுர பூசை 4. நிலாவி - விளங்கி; பெருகி. எட்டுத் தோள்களையுடைய சிவ பெருமான் அளகாபுரியில் அமர்த்திய தோழனாகிய குபேரனைப் போல. 5. 445. செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால் அல்லல் நல்குரவு ஆனபோதினும் வல்லர் என்று அறிவிக்கவே மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து ஒல்லை இல்வறு மைப்ப தம்புக உன்னி னார்தில்லை மன்னினார். அல்லல் நல்குரவு ஆனபோதிலும் - துன்பத்தைக் கொடுக்கும் தரித்திரம் நேர்ந்த காலத்திலும். மெய்யினால் - உண்மை அன்பால். மெய்யாகத் தரித்திரம் நேர்ந்த காலத்திலும் எனக் கொள்ளினும் பொருந்தும். வல்லர் - தமது தொண்டை ஆற்றுதற்கு வல்லவர். மல்லல் - வளப்பம். ஒல்லையில் வறுமைப் பதம்புக - விரைவாகக் கொடிய வறுமை நிலை அடையுமாறு. நடராஜப் பெருமான் திரு வுளங் கொண்டார். 6. 446. இன்னஆறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான்குடி மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும் தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டுபின் முன்னை மாறு இல் திருப் பணிக்கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார். எம்பிரானாகிய, உள்ளன மாறியும் - உள்ள பொருள்களை விற்றும். பின் தன்னைமாறி இறுக்க உள்ள - பின்பு தம்மையும் விற்றுக் கொடுக்கத்தக்க அளவு. முன்னை மாறில் - முன்னைப் போலவே மாறுதலில்லாமல். (முதிர்ந்த - முன்னையிலும் மேலாக). 7. 447. மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக, மால் அயன் ஆன அக் கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினார், பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாள் உடன் இன்றிஓர் நல் தவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார். கொற்றஏனமும் - வெற்றியுடைய பன்றியும் . . . . ஆயினார். சிவபெருமான். பெற்றம். . . . . இன்றி விடையேறி வருதலும் இல்லாமலும், உமையம்மையாரும் உடன் இல்லாமலும். 8. கலிவிருத்தம் 448. மாரிக் கலத்து இரவினில் வைகியோர் தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது பாரித்து இல்லம் அடைத்தபின், பண்பு உற வேரித் தாரான் விருந்து எதிர் கொண்டனன். வைகி - தனியே கண் விழித்திருந்து. ஓர் தாரிப்பு இன்றி - ஓர் உதவியும் இல்லாமல். தலைக்கொள்வது - மேற்படுவது. பாரித்து - அதிகரித்து; சகித்துக் கொண்டு என்பர் ஆறுமுகத்தம்பிரானார்; பரித்து என்பது பாரித்தென்றாயிற்று என்பது அவர் தங் கருத்து; (பலநாள் பட்டினியைக் குறிப்பது). வேரித்தாரன் - வாசனை பொருந்திய மாலையையுடைய இளையான் குடிமாறனார். மாலை மாறனாரின் இரக்கமுடைமையைக் குறிப்பது. காலம் மாரிக்காலம். நேரம் நள்ளிரவு. நிலையோ பலநாள் பட்டினி கதவும் அடைக்கப் பட்டது. இவ்வேளையில் ஒரு விருந்தினர் போந்து தமது வீட்டுக் கதவைத் தட்டக் கதவைத் திறந்து அவ்விருந்தை மாறனார் எதிர்கொண்டார். தமது நிலையையுன்னி வருத்தத்துடன் உள் ளொன்று கொண்டு புறமொன்று பேசி விருந்தினரை மாறனார் எதிர் கொண்டாரில்லை. அகங்கலந்த அன்புடன் அவர் விருதினரை எதிர் கொண்டார் என்பார் விளங்கப் பண்புற, என்றும் வேரித்தாரன் என்றுங் கூறினார். விருந்தினார் எந்நிலையுடன் வந்தார் என்பதையும் அவரை மாறனார் எங்ஙனம் ஏற்றார் என்ப தையும் கீழ்க் காண்க. 9. 449. ஈர மேனியை நீக்கி இடம் கொடுத்து ஆர இன் அமுது ஊட்டுதற்கு ஆசையால் தார மாதரை நோக்கித் தபோதனர் Ôunt gá¤jh® brŒtJ v‹? என்று. வந்தவர் பசியார, தமது மனமார; தபோதனர் - அடியவர்; விருந்தினர். தீரவே - மிகவும்; அறவே. 10. 450. நமக்கு முன்பு இங்கு உணவு இலை ஆயினும் இமக்கு லக்கொடி பாகர்க்கு இனியவர் தமக்கு நாம் இன் அடிசில் தகவு உற அமைக்கு மாறுஎங்ங னே? mz§ nf! என. பார்வதி பாகராகிய பரமசிவனுடைய தொண்டருக்கு இன்ன டிசில் - இனிய அமுதை. அணங்கே - பெண் தெய்வமே. அணங்கே என்னும் விளி நாயனாரது வருத்தத்தைப் புலப்படுத்துவது. 11. 451. மாது கூறுவள் மற்றுஒன்றும் காண்கிலேன்; ஏதிலாரும் இனித் தருவார் இல்லை; போதும் வைகிற்றுப் போம் இடம் வேறுஇலை; ÔJ brŒÉid na‰Fv‹ braš? என்று. எதிலாரும் - அயலாரும். போதும் வைகிற்று - நெடுநேர மாயிற்று (வைகல் - கழிதல்). 12. 452. செல்லல் நீங்கப்பகல் வித்திய செந்நெல் மல்லல் நீர்முளை வாரிக்கொ டுவந்தால் வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும்; மற்று அல்லது ஒன்று அறி யேன் என்று அயர்வு உற. செல்லல் - வறுமை; துன்பம். செல்வம் பாடமாயின் செல்வமெல்லாம் நீங்கினமையால் என்று கொள்க. வித்திய - விதைக்கப்பட்ட. எத்தகைக் கொடிய வறுமை நேரினும் வேளாளர் விதைநெல்லை விதைக்கே பயன்படுத்துவது வழக்கம். மல்லல் - வளமையுடைய. வல்லவாறு - கூடியவரை. செல்லல் நீங்க ஆக்கலு மாகும் என்று இயைத்துப் பொருள் கூறுலுமொன்று. 13. 453. மற்று,அம் மாற்றம் மனைவியார் கூற முன் பெற்ற செல்வம் எனப்பெரிது உள்மகிழ்ந்து உற்ற காதலினால் ஒருப்பட்டனர் சுற்று நீர்வயல் செல்லத் தொடங்குவார். அம்மாற்றம் - அவ்வார்த்தையை. ஒருப்பட்டனர் - உடன் பட்டனர். 14. 454. பெருகு வானம் பிறங்க மழைபொழிந்து அருகு நாப்பண் அறிவு அரும் கங்குல்தான் கருகு மைஇரு ளின்கணம் கட்டுவிட்டு உருகுகின்றது போன்றது உலகு எலாம். பிறங்க - அதிகமாக. அருகு நாப்பண் அறிவரும் கங்குல்தான் - வழியின் பக்கம் இது, நடு இஃது என்று அறியக்கூடாத இராக் காலமானது. கணம் - கூட்டம். கட்டுவிட்டு - நெகிழ்ந்து. 15. 455. எண்ணும் இவ்உலகத்தவர் யாவரும் துண் எனும்படி தோன்றமுன் தோய்ந்திடில் வண்ணம் நீடிய மைக்குழம்பு ஆம் என்று நண்ணல் செய்யா நடுஇருள் யாமத்து. துண்ணெனும்படி - அஞ்சும்படி விரைவாக. தோன்ற - (இருள்) புலப்பட. முன் தோன்றிடில் - அதற்குமுன் செல்ல நேர்ந்தால். வண்ணம் - கருநிறம். மைக்குழம்பால் பூசப்படுவோம் என்று வெளியே வாராத. 16. 456. உள்ளம் அன்புகொண்டு ஊக்க, ஓர் பேர்இடாக் கொள்ள முன்கவித்துக் குறியின் வழிப் புள் உறங்கும் வயல் புகப் போயினார்; வள்ள லார் இளை யான்குடி மாறனார். இடா - கூடையை. கொள்ள - தலைகொள்ள; அல்லது நெல்லைக் கொள்ள. அநுபவப்பட்ட குறியின் வழி. புள் - பறவைகள். 17. 457. காலினால் தடவிச் சென்று கைகளால் சாலி வெண்முளை நீர்வழிச் சார்ந்தன கோலி வாரி, இடாநிறையக் கொண்டு, மேல்எ டுத்துச்சு மந்து, ஒல்லை மீண்டனர். சாலிவெண் முளைகளில் நீர்வழி யொதுங்கி அல்லது மிதந் திருந்தனவற்றை. கோலி - சேர்ந்து. ஒல்லை - விரைவில். 18. அறுசீர் விருத்தம் 458. வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கி, சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி, வெம்தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன, மேலோர் அந்தம்இல் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார். அந்தமில் - அழகில்லாத; கிலமுற்ற. அலக்கினை - வரிச்சுக் கொம்புகளை. 19. 459. முறித்துஅவை அடுப்பின் மாட்டி முளைவித்துப் பதம்முன் கொள்ள வறுத்தபின் அரிசி ஆக்கி, வாக்கிய உலையில் பெய்து வெறுப்புஇல்இன் அடிசில் ஆக்கி, மேம்படு கற்பின் மிக்கார் கறிக்குஇனி என்செய் கோம் என்று இறைஞ் சினர் கணவ னாரை. வாக்கிய - முன்னரே நீர்வாத்திருந்த. அடிசில் - சோறு. 20. 460. வழிவரும் இளைப்பி னோடும் வருத்திய பசியி னாலே அழிவு உறும் ஐயன் என்னும் அன்பினின் பொலிந்து சென்று, குழிநிரம் பாத புன்செய்க் குறும் பயிர் தடவிப் பாசப் பழிமுதல் பறிப்பார் போலப் பறித்து, அவை கறிக்கு நல்க. ஐயன் - சிவனடியார். குழி. . . . . . பயிர் - பூசினி சுரை முதலியன. தம் பாசவேரை. 21. 461. மனைவியர் கொழுநர் தந்த மனம்மகிழ் கறிகள் ஆய்ந்து, புனல்இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை வினையினால் வேறு வேறு கறிஅமுது ஆக்கிப் பண்டை நினைவினால் குறையை நொந்து திருஅமுது அமைத்து நின்று. கொழுநர் - கணவர். கைம்மை வினையினால் - கைத் திறத்தினால். 22. 462. கணவனார் தம்மை நோக்கிக் கறிஅமுது ஆன காட்டி, இணை இலாதாரை ஈண்டு அமுது செய்விப்போம் என்ன உணர்வினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி அணையமுன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார். இணையிலாதாரை - சிவனடியாரை. ஈண்ட - திருத்தியாக; நன்றாக; விரைவாக எனினுமாம். ஒருவரை - சிவபிரானை. 23. 463. அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால் எழுந்தருள் பெரியோய்! ஈண்டு அமுது செய்தருள்க என்று தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்து தோன்றச் செழுந்திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார். தொழும்பனார் - அடியவராகிய இளையான்குடிமாற நாயனார். 24. 464. மால் அயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச் சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே ஏலவார் குழலாள் தன்னோடு இடபவா கனன் ஆய்த் தோன்றிச் சீலம்ஆர் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை நோக்கி. சாலவே - மிகவும். ஏலவார் குலாள் தன்னோடு - மயிர்ச் சாந்தணிந்த நீண்ட கூந்தலையுடைய உமாதேவியாருடன். 25. 465. அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும் என்பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே முன்பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள் செய்தான் எவர்க்கும் மிக்கான். அணங்கினோடும் - மனைவியோடும். இருநிதிக்கிழவன் தானே - குபேரனே. உன் சொற்படி ஏவல் செய்ய. 26. 466. இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி, முப்புரம் செற்றார், அன்பர் முன்பு எழுந்தருளிப் போனார் அப்பெரியவர் தம் தூய அடிஇணை தலைமேல் கொண்டு மெய்ப்பொருள் சேதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன். பரிசு - தன்மை. சேதி வேந்தன் - மெய்ப்பொருள் நாயனார். 27. இளையான் குடிமாற நாயனார் இளையான் குடிப்பதியிலே வேளாளர் மரபிலே பிறந்தவர் ஒருவர் இருந்தார். அவர் மாறனார் என்னும் பெயருடையவர். அவருக்கு வேளாண்மையில் ஏராளமான வருவாயுண்டு. அவர் சிவ பத்தி சிவனடியார் பத்தியிற் சிறந்தவர். தமது இல்லம் போதரும் அடியவர் எவராயினும் அவருக்குச் சோறிடுவதை ஒரு பெருந் தொண்டாகக் கொண்டு அவர் வாழ்ந்துவந்தார். இத்திருத்தொண்டின் பயனாக மாறனார்க்குச் செல்வம் பெருகலாயிற்று. இளையான் குடியில் அவர் அளகேசனைப் போல வாழலானார். அவர் வறியராய் வருந்தினுஞ் சோறிடுந் திருத் தொண்டைத் தளராது செய்யும் உறுதி உடையார் என்பதை உலகத் தவர்க்கு உணர்த்தச் சிவபெருமான் திருவுளங்கொண்டனர். அதனால் மாறனார்க்கு வறுமை எய்திற்று. எய்தியும் தொண்டில் அவர் சிறிதும் சலிப்புற்றுத் தளர்ச்சி யுற்றாரில்லை. அவர், தம் பொருள்களை விற்றுவிற்றுத் திருத்தொண்டு செய்து வந்தார். பின்னே, தம்மை விற்றுக் கொடுக்கத்தக்க கடன் வாங்கியும் தமது தொண்டை நெகிழவிடாது செய்தே வந்தார். வருநாளில் மழைக்காலத்தில் ஒரு நாளிரவில் இளையான் குடிமாற நாயனார் உணவின்றி நீண்ட நேரந்தனியே விழித்திருந்தார். எவ்வித உதவியும் அவருக்குக் கிடைக்கவில்லை; பசியோ, முறுகி எழுந்து குடைகிறது. அவர் பசியைப் பொறுத்துக் கொண்டு வீட்டுக் கதவை அடைத்துச் சென்றார். சிறிது நேரத்திற்குள் அம்மையப்பர் அடியவர் வேடந்தாங்கிக் கதவைத் தட்டினார். உடனே நாயனார், கதவைத் திறந்து, அன்பரை அழைத்துச் சென்று திருமேனியைத் துடைத்து ஈரம் போக்கி, இருக்கும்படி செய்தார். அடியவர்க்கு அமுதளிக்க விரும்பி மாறனார் மனைவியாரைப் பார்த்தார் அம்மையார் என் செய்வார்; கணவரை நோக்கி, வீட்டில் ஒரு பொருளுமில்லை. அயலாரும் இனிக் கடன் கொடுத்தல் அரிது. பொழுதும் போயிற்று. போகும் இடம் வேறில்லை. என் செய்வேன் என்று வருந்திக் கூறிப் பின்பு, இன்று வயலிலே நெல் விதைக்கப் பட்டது. அந்நெல்லை வாரிக்கொண்டு வந்தால் கூடியவரை முயன்று அமுதாக்கலாம். இஃதன்றி வேறொன்றும் எனக்குத் தோன்ற வில்லை என்றார். அவ்வுரை கேட்டதும் பெருஞ் செல்வம் பெற்றது போன்ற தொரு மகிழ்ச்சி மாறனார்க்குப் பொங்கி வழிந்தது. மழை பொழியும் நள்ளிரவிலே ஒரு கூடையைக் கவிழ்த்துக் கொண்டு மாறனார் புறப்பட்டார். கால்களினால் தடவித் தடவிச் சென்று மாறனார் தம் வயலை அடைந்து, மழை நீரிலே மிதந்திருந்த நெல்முளைகளைக் கோலி வாரி, அவைகளால் கூடையை நிரப்பித் தூக்கிச் சுமந்துவந்தார். நாயனார் வரவைப் பேராவலோடு எதிர்பார்த்து, வாயிலில் நின்று கொண்டிருந்த நாயகியார், கூடையை அன்புடன் வாங்கி, நென்முளைகளைக் கழுவி, நாயனாரைப் பார்த்து விறகில்லையே! என்றார். அன்பிற் பெரியவர், கிலமாய்க் கிடந்த தம் இல்லத்தில் வரிச்சுகளை அறுத்துத் தள்ளினார். மனைவியார் அவைகளை அடுப்பில் வைத்து நென்முளைகளை வறுத்து அரிசிகொண்டு சோறாக்கிக் கறியமுதுக்கு என்செய்வது என்று துணைவனாரைக் கேட்டார். தொண்டர்பெருமான் புறக்கடை போந்து புன்செய்க் குறும்பயிர்களைத் தடவிப்பிடுங்கிக் கொணர்ந்தார். இல்லக் கிழத்தியார் அவைகளைக் கழுவித் தூய்மைசெய்து, கைத் திறமையால் பலதிறக் கறியமுதாக்கி நாயனார்க்குத் தெரிவித்தார். நாயனார், கண்துயிலும் அடியவரிடஞ் சென்று, பெரியீர்! திருவமுது செய்ய எழுந்தருள்க என்று அழைத்தார். அவ் வேளையில் அடியவர், சோதியாய் எழுந்து தோன்ற, நாயனாரும் அவர்தம் நாயகியாருந் திகைத்து நின்றனர். சிவபெருமான் உமாதேவியாருடன் விடை மீது எழுந்தருளி, அன்பனே! அறுசுவை உண்டியை அன்பர்களுக்கு நாடோறும் ஊட்டிய ஐயனே! நீ உன் மனைவியுடன் நமது உலகை அடைந்து. குபேரன் உன் ஏவல் கேட்ப, இன்பநுகர்ந்து கொண்டிருப்பாயாக என்று திருவாய் மலர்ந் தருளித் தமது அருளுருவை மறைத்தருளினார். 10. மெய்ப்பொருள் நாயனார் 467. சேதிநல் நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி மாதுஒரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்; வேதநல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்துஅறிந்து ஏவல் செய்வார். நத்தமான் சுருதிமான் மலையமான் என்னும் இம் மூவரும் பார்க்கவ குலத்தவர். இவருள் மெய்ப்பொருள் நாயனார் மலைய மான்வழி வந்தவர். mt® irt gu«giuÆd uhjÈ‹ . . . . . அன்பின் வழி வரும் . . . . . என்றார். 1. 468. அரசியல் நெறியின் வந்த அற நெறி வழாமல் காத்து வரைநெடுந் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி உரைதிறம் பாத நீதி ஓங்குநீர் மையினின் மிக்கார்; திரைசெய்நீர்ச் சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார். அறத்திற்குப் பிறப்பிடம் அரசியல் என்க. மெய்ப்பொருள் நாயனாரின் அரசியல், பரம்பரையாக அறநெறியில் இயங்குவ தாதலின் அரசியல் நெறியில் வந்த என்றார். வரை - மலையை யொத்த. மாற்றலர் முனைகள் மாற்றி - பகைவர்களின் சேனைகளை அழித்து. உரை திறம்பாத - சொல் தவறாத. நீர்மையினில் - குணத்தில்; திரைசெய் நீர் - அலை வீசுங் கங்கை. 2. 469. மங்கையைப் பாகம் ஆக உடையவர் மன்னும் கோயில் எங்கணும் பூசை நீடி ஏழ்இசைப் பாடல் ஆடல் பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்; தங்கள் நாயகருக்கு அன்பர் தாள் அலால் சார்பு ஒன்று இல்லார். உடையவர் - ஒப்பற்ற சிவபெருமான். நீடி - நெடிது நடைபெற. 3. 470. தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று நாடிய மனத்தி னோடு நாயன்மார் அணைந்த போது கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து உவந்தார். மாடும் - பொன்னும். நீடு செல்வமும் - பெருகியுள்ளமற்றச் செல்வங்களும். 4. 471. இன்னஆறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்துஓர் மன்னன் அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர்மேல் கொண்டு பொன் அணி ஓடை யானைப் பொருபரி காலாள் மற்றும் பல்முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான். இகல்திறம் புரிந்து - பகைமை பூண்டு. அன்னவர்தம்மை - மெய்ப்பொருள் நாயனாரை. ஓடை - நெற்றிப்பட்டம். பொரு பரி - போர் செய்யுங் குதிரைகளையும். பரிபவம் - அவமானம். 5. 472. இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான் மெய்ப்பொருள் வேந்தன் சீலம் அறிந்துவெண் நீறு சாத்தும் அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச் செப்பு அரு நிலைமை எண்ணித் திருக்கோவ லூரில் சேர்வான். அற்றத்தில் - பொய்யால்; வஞ்சனையால். 6 473. மெய்எலாம் நீறு பூசி, வேணிகள் முடித்துக் கட்டிக் கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி, மைபொதி விளக்கே என்ன மனத்தின்உள் கறுப்பு வைத்துப் பொய்தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன். வேணிகள் - சடைகளை. படைகரந்த-ஆயுதத்தை மறைத்து வைத்துள்ள. புத்தகக் கவளி-புத்தகப் பை: மூட்டை. கறுப்பு - களங்கம் முத்தநாதனென்றது அவன் பெயரன்று. அவனுக்கு அது பெயராயின் முன்னர் அவ்வாறு கூறாது ஒரு மன்னனெனக் கூறுதலின் முக்தன் என்னும் வடசொல் தமிழில் முத்தனெனவரும் முறைப்பற்றி மூடனெனத் தானே ஒருபெயர் கொடுத்துக் கூறினாரென்பது போதலின் முத்தநாதனென்ற பாடமே கொள்ளப் பட்டது. புத்திநாதனென்றும் பாடபேதமும் உண்டு- ஆறுமுகத் தம்பிரானார். 7. 474. மாதவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும் கோதைசூழ் அளகபாரக் குழைக்கொடி ஆட மீது சோதிவெண் கொடிகள் ஆடும் சுடர்நெடு மறுகில் போகிச் சேதியர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான். வன்கணான் - கொடிய முத்தநாதன். கோதை - மாலை. கொடி ஆட - மகளிர்கள் நடம்புரிய. மறுகில் - வீதியில். சேதியர் பெருமான் - மெய்ப்பொருள் நாயனாரின். 8. 475. கடையுடைக் காவலாளர் கைதொழுது ஏற நின்றே உடையவர் தாமே வந்தார்; உள் எழுந்து அருளும் என்னத் தடைபல புக்க பின்பு தனித்தடை நின்ற தத்தன் இடைதெரிந்து அருள வேண்டும் துயில்கொளும் இறைவன் என்றான். கடைவாயிற் காவலர். ஏற நின்றே - தூரத்தில் நின்று. உடையவர் - சிவனடியார். தாமே - தாமாகவே. தடைபல - அடுத்தடுத்துள்ள பல வாயில்கள். தனித்தடை - நாயனாருள்ள இடத்தின் ஒப்பற்ற வாயிலில். இடைதெரிந்து அருளல் வேண்டும் - சமயம் அறிந்து எழுந்தருளல் (உள்ளே போதல்) வேண்டும். 9. 476. என் றுஅவன் கூறக் கேட்டே யான் அவற்கு உறுதி கூற நின் றிடு நீயும் என்றே அவனையும் நீக்கிப் புக்குப் பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே மன் றல் அம் குழல்மென் சாயல் மாதேவி இருப்பக் கண்டான். யான் அவனுக்கு (மெய்ப்பொருள் நாயனார்க்கு வீடுபேற்றிற் குரிய) உறுதிமொழியைக் கூறுதற்கு நீ தடைசெய்யாது நின்றுவிடு என்று. புரவலன் - மன்னராகிய மெய்ப்பொருள் நாயனார். மாடே - பக்கத்தே. மன்றலங்குழல் - வாசனைபொருந்திய கூந்தல். 10. 477. கண்டுசென் று அணையும் போது கதும்என இழிந்து தேவி வண்டுஅலர் மாலை யானை எழுப்பிட, உணர்ந்து மன்னன் அண்டர் நாயகனார் தொண்டர் ஆம் எனக் குவித்த செங்கை கொண்டு இழிந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று. கதுமென - விரைவாக. இழிந்து - கட்டிலினின்றுங் குதித்து. கொள்கையின் விதிமுறைப்படி. 11. 478. மங்கலம் பெருக மற்றுஎன் வாழ்வு வந்து அணைந்தது என்ன இங்கு எழுந்தருளப் பெற்றது என்கொலோஎன்று கூற, உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகமநூல் மண்மேல் எங்கும் இல்லாதது ஒன்று கொடுவந்தேன்; இயம்ப என்றான். உங்கள் என்றமையால் அவன் சிவ வழிபாட்டுக்குப் புறம் பானவன் என்பது குறிப்பு. 12. 479. பேறு எனக்கு இதன் மேல் உண்டோ? பிரான் அருள் செய்த இந்த மாறுஇல் ஆகமத்தை வாசித்து அருள் செய வேண்டும் என்ன, நாறுபூங் கோதை மாது தவிரவே நானும் நீயும் வேறுஇடத்து இருத்தல் வேண்டும் என்றுஅவன் விளம்ப, வேந்தன். 13. 480. திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப் புரிவுடன் விரைய அந்தப் புரத்திடைப் போக ஏவித் தரு தவ வேடத் தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும் இருநிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றார். புரிவுடன் - விருப்பத்துடன். போலியாகத் தரித்த தவவேடம். தவிசின்மேல் - பீடத்தின் மீது. 14. 481. கைத்தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடிமேல் வைத்துப் புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்துஅவர் வணங்கும் போதில், பத்திரம் வாங்கித் தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய, மெய்த் தவ வேடமே மெய்ப் பொருள் எனத் தொழுது வென்றார். புரிந்து - திது - விரும்பி. பத்திரம் வாங்கி - உடைவாளை எடுத்து. கொலையைச் சொல்லாமலும் சொல்ல ஆசிரியர் மனங் கொள்ளாது. நீனைந்த அப்பரிசே (அவ்விதமே) செய்ய என்றது கருதற்பாலது. தன் கருத்தே முற்றுவித்தான் -ஏனாதி நாயனார் புராணம் 40. அன்பர் வேடமே சிந்தை செய்வார் என்று 2 - ம் பாட்டில் கூறியிருத்தல் காண்க. கொலையுண்ட இவ்வேலையிலும் நாயனார் சிவவேடத்தின்மீது கொண்ட அன்பினின்றுஞ் சிறிதும் பிறழாதவராய்த் தம்மைக் குத்தினவனை மாற்றானெனக் கருதாது, அவன் வேடத்தின்மீதே கருத்துக்கொண்டு மெய்த்தவ வேடமே மெய்ப்பொரு ளெனத் தொழுதது நாயனாரின் உண்மைநிலையைப் புலப்படுத்துகிறது. வென்றார் என்பது உன்னத்தக்கது. முத்த நாதன் நாயனாரை வென்றதாகக் கருதினான். உண்மையில் வென்றவர் மெய்ப்பொருள் நாயனாரேயாவார். முத்த நாதனை நாயனார் எதிர்த்து வீழ்த்தியிருப்பின், அவர் வென்றவராகார். இதுவே அஹிம்சா தர்மம் என்பது. அகிம்சை என்பது பிறர்க்குத் தீங்கு செய்யாம லிருப்பது மட்டுமன்று. அதனுடன் தமக்குப் பிறர் தீங்கு செய்யும் போது திருப்பித் தீங்கு செய்யாது, அத் தீங்கைப் பொறுமையுடன் ஏற்றுத் தீங்கு செய்தோரிடமும் இரக்கங் காட்டி நலஞ் செய்வது அகிம்சா தர்மமாகும். இதுபற்றியே அகிம்சா பரமோ தர்மா என்னும் அருள் மொழி எழுந்தது. இவ் விழுமிய பேரறத்தைத் திருவள்ளுவர், அருளுடைமை, தவம், இன்னா செய்யாமை, கொல்லாமை முதலிய அதிகாரங்களில் அருளி யிருத்தலைக் காண்க. கிறிது பெருமானும் இச்சீரிய அறத்தை மலைப்பொழிவில் வலியுறுத்திச் செயலிலும் நிகழ்த்திக் காட்டியதை யோர்க. இவ் வறத்தைக் குறித்துக் காந்தியடிகளும் மனிதவாழ்க்கை யும் என்னும் நூலில் விரித்துக் கூறியுள்ளேன். விரிவு ஆண்டுக் காண்க. மெய்ப் பொருள் நாயனார் பெற்றது சிறந்த வெற்றியாதலின், அதை வெல்லு மாமிக வல்ல மெய்ப் பொருளுக்கடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் நம்பியாரூரர் சிறப்பிக்கலானார். நாயனாரின் அகிம்சா தர்ம உறுதி நிலை கீழ்வரும் பாக்களால் இனிது விளங்கும். 15 482. மறைத்து அவன் புகுத்த போதே மனம் அங்கு வைத்த தத்தன் இறைப் பொழுதின் கண் கூடி வாளினாள் எறியல் உற்றான்; நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால் தறைப்படும் அளவில் தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார். இறைப்பொழுதின்கண் கூடி - ஒரு நொடிப் பொழுதில் உள்ளே போய். முத்தநாதனை வாளினால். . . . குருதி - இரத்தம். வீழ்கின்றார் - வீழ்ப் போகிறவராகிய மெய்ப்பொருள் நாயனார். தறைபடும் அளவில் - மண்ணில் சாயும்போது. நமர் - நம்மவர்; நமது இனமாகிய சிவனடியார். 16 483. வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட தாதனாம் தத்தன் தானும் தலையினால் வணங்கித் தாங்கி, யாதுநான் செய்கேன் என்ன, எம்பிரான் அடியார் போக மீதுஇடை விலக்கா வண்ணம் கொண்டுபோய் விடு நீ என்றார். 17. 484. அத்திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த பொய்த் தவன் தன்னைக் கொல்வோம் எனப்புடை சூழ்ந்தபோது, தத்தனும் அவரையெல் லாம் தடுத்து உடன்கொண்டு போவான், இத்தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை என்றான். தாதனாம் - ஊழியனாகிய. நாயனாரைத் தாங்கி. முத்தநாதன் வேடத்தையே பொருளாகக்கொண்டு, அவரை எம்பிரான் அடியார் என்று நாயனார் கூறுதல் காண்க. இச்செய்தி கேட்போர் இவரைத் தடுத்துத் தீங்கு செய்யாதவாறு காத்து, இவர் போதற்குத் துணை, நின்று, இவரைக்கொண்டு போய்விடு. 18. 485. அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகல நீங்கச் செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து, கைவடி நெடுவாள் ஏந்தி, ஆள் உறாக் கானம் சேர, வெவ்வினைக் கொடியோன் தன்னை விட்டபின் மீண்டு போந்தான். அரசன் ஆணையென்று அஞ்சி நீங்கி. முத்தநாதனுக்குத் தீங்கு செய்ய வாளேந்தி ஆள்கள் வாராத காடு சேர. 19. 486. மற்றுஅவன் கொண்டுபோன வஞ்சனை வேடத்தான் மேல் செற்றவர் தம்மை நீக்கித் தீதுஇலா நெறியில் விட்ட சொல்திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும் கொற்றவன் முன்பு சென் றான்; கோமகன் குறிப்பில் நின்றான். செற்றவர் தம்மை - கோபித்துத் தாக்க வந்தவர்களை. கொற்றவன் - மெய்ப்பொருள் நாயனார். நின்றான் என்பது தத்தனை. 20 487. சென்றுஅடி வணங்கி நின்று செய்தவ வேடம் கொண்டு வென்றவர்க்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற, இன்று எனக்கு ஐயன் செய்தது யார்செய்ய வல்லார் என்று, நின்றவன் தன்னை நோக்கி, நிறைபெரும் கருணை கூர்ந்தார். செய்தவ வேடத்தால் வென்றானன்றி வீரத்தால் வெல்ல வில்லை என்பது. ஐயன் - தத்தன். 21 488. அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும் விரவிய செய்கை எல்லாம் விளம்புவார், விதியினாலே பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என்று புரவலர் மன்றுள் ஆடும் பூங்கழல் சிந்தை செய்தார். தமக்குப்பின்னர் அரசியலை யேற்று நடாத்தற்குரிய புதல் வர்க்கும், மனம் வருந்தும் உறவினர் அமைச்சர் முதலிய வர்க்கும். விரவிய செய்கை - தம்முள்ளத்துள்ள கொள்கை. உய்ப்பீர் - அரசை நடத்துங்கள். புரவலன் - மெய்ப்பொருள் நாயனார். உயிர் போம் போது இறைவன் நினைவு தோன்றுமாறு வாழ்வு நடாத்துவது அறிவுடைமை. சங்கொத்தமேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை - எங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என் கண்டாயே - அப்பர் : தனித் திருநேரிசை. 22. 489. தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார், அவர்முன் தம்மைக் கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க அண்ட வானவர் கட்கு எட்டா அருட்கழல் நீழல் சேரக் கொண்டு அவர் இடையறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார். இமயப்பாவை துணைவனார் - உமாதேவியாரின் நாயகராகிய சிவபெருமான். தியானத்தில் கண்டவாறு. 23. 490. இன் உயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே நல்நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில் என் உரை செய்தேனாக, இகல்விறன் மிண்டர் பொன் தாள் சென்னிவைத்து அவர்முன் செய்த திருத்தொண்டு செப்பல் உற்றேன். செகுக்க - வாளால் குத்த. நன்னெறி - அகிம்சா தர்மத்தை. இகல் - நம்பியாரூரடன் மாறுபாடு கொண்ட; வலிமையுடைய என்போரு முளர். 24. மெய்ப்பொருள் நாயனார் மெய்ப்பொருள் நாயனார் சேதி நன்னாட்டில் திருக் கோவலூரில் வாழ்ந்த வேந்தர் பெருமான். அடியவர் திரு வேடத்தையே மெய்ப்பொருளெனக் கொண்டமையால், அவர் மெய்ப்பொருள் நாயனார் என்று அழைக்கப்பட்டார். அவர், மலையமான் வழியில் தோன்றியவர்; பகைவர்களை வென்று நாட்டுக்கு நலஞ் செய்வதில் பேர்பெற்றவர்; அடியவர்கள் கருத் தறிந்து ஏவல் செய்து தமது உடைமை எல்லாம் அவர்களது உடைமை என்னுங் கருத்துடையவர். திருக்கோயில்களில் பூசை, விழா முதலியன செய்வதும் அவர்தம் திருத்தொண்டுகளில் ஒன்றாம். முத்தநாதன் என்னும் ஓர் அரசன் மெய்ப்பொருள் நாயனா ரிடம் பகைமை பூண்டிருந்தான். அவனுக்கும் நாயனார்க்கும் பலமுறை போர்கள் நிகழ்ந்தன. ஒரு முறையாவது முத்தநாதன் வெற்றி பெற்றானில்லை. நேரிய முறையில் போர் புரிந்தால் இந்நாயனாரை வெல்லுதல் இயலாது என்று அவன் எண்ணி, நாயனாரின் திரு நீற்றன்பையுஞ் சிவனடியார் நேயத்தையும் உணர்ந்து. வஞ்சனையால் அவரை வெல்லக் கருதினான். அக் கருத்துக் கொண்ட முத்தநாதன் என்ன செய்தான்? ஒருநாள், உடல் முழுமையுந் திருநீறு பூசி, சடைகளைச் சுருட்டிக் கட்டி, உடைவாளை மறைத்து வைத்துள்ள புத்தகக் கவளியொன்று ஏந்தி, மனத்தில் மட்டுங் கறுப்புக்கொண்டு, மெய்யடியார் அரண்மனை நோக்கினான். வாயில் காப்போர் அவனைச் சிவனடியார் எனக் கருதி, அரண்மனையுள் நுழைந்து போமாறு அவனை விடுத்தனர். அவன் பல வாயில்களையுங் கடந்து பள்ளிவாயிலை அடைந்தான். அங்கிருந்த தத்தன் என்ற வாயில் காப்போன், வஞ்சகனை நோக்கி, இது மன்னர் உறங்கும் நேரம்; சமயமறிந்து போதல் வேண்டும் என்று எச்சரிக்கை செய்தான். விரைந்து நுழையும் வஞ்சகன், மன்னர்க்கு யான் உறுதிப்பொருள் கூறப்போகிறேன்; தடை செய்யாதே என்று தத்தனை விலக்கிக் கொண்டே உள் நுழைந்தான். அப்பாவி, அரசர் பெருமான் துயில் வதையும், பெருமாட்டியார் பக்கத்திலிருப்பதையுங் கண்டுங் கட்டிலின் அருகணைந்தான். உடனே அம்மையார், நாயனாரை எழுப்பினார். நாயனார் விழித்து விரைந்திழிந்து, கயவனைச் சிவனடியா ரெனக் கருதிப் பணிந்து, அடியவரே! இங்கு எழுந் தருளிய நோக்கம் என்னை? என்று கேட்டார். முத்தநாதன் உங்கள் இறைவன் முன்னர் அருளிச்செய்த ஆகமங்களுள் ஒன்று என்னிட மிருக்கிறது. அஃது எங்கணும் காணப்படாதது. அதை உமக்கு அறிவுறுத்த வந்தேன் என்று சென்னான். அச்சொல், அடியவர் பெருமானை ஆனந்த வாரிதியில் தோய்த்துவிட்டது. இதைவிட எனக்கு என்ன பேறு! அவ்வருளாக மத்தை வாசித்தருள்க என்று வேண்டினார். பாதகன் உன் மனைவி இங்கே இருத்தலாகாது. நாம் இருவேமும் தனித்திருத்தல் வேண்டும் என்று இயம்பினான். உடனே மன்னர் பெருமான், தம் நாயகியாரை அந்தப்புரம் போம்படி கட்டளையிட்டுக் கரவாடும் வன் னெஞ்சனைப் பீடத்திலிருத்தித் தாம் கீழேயிருந்து, மெய்யன்பரே! அருள்செய்க என்று பணிந்தபோது, இரக்கமில்லா அரக்கன் கவளியை எடுத்துப் புத்தகம் அவிழ்ப்பவனைப்போல நடித்து, கவளியில் மறைத்துக் கொணர்ந்த உடைவாளை எடுத்து நினைந்தவாறே செய்தான். அந் நிலையில், நாயனார்பெருமான், மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள் என்று கொடியனைத் தொழுதார். முத்தநாதன் உள் நுழைந்தபோதே அங்கு மனம் வைத்த தத்தன், நொடிப்பொழுதில் அரசர் பெருமானிடம் அணுகி, அங்கிருந்த பாவியை வாளினால் வீழ்த்தப் போனான். அப்பொழுது செங்குருதி பொங்க விழப்போகும் வேந்தர், தத்தனே! இவர் நம்மவர்; சிவனடியார் என்று தடுத்துச் சாய்ந்தார். சாய்ந்த மெய் யன்பரைத் தத்தன் தாங்கி, அரசே! vd¡FŸs g ahJ? என்று வினவினான். மெய்ப்பொருள் நாயனார், இவ்வடியார்க்கு எவராலும், வழியில் தீங்கு நேராதவாறு காத்து இவரைக் கொண்டு போய் விடு என்று சொன்னார். ஆணைப்படியே தத்தன் அவ் வஞ்சகனை அழைத்துச் சென்றான். அரண்மனையில் நிகழ்ந்ததை அறிந்தவர்கள் எல்லாரும் ஆங்காங்கே முத்தநாதனை வளைத்துக் கொண்டனர். அவர்கட் கெல்லாம். அரசர் பெருமானின் அருள் மொழியைத் தத்தன் தெரிவித்துத் தடுத்து, நகரத்தைக் கடந்து, காட்டை அடைந்து, வாளேந்தி மக்கள் வாராத இடத்தில் பாவியை விடுத்து, அரண்மனைக்குத் திரும்பி, நாயனார்க்குச் செய்தி தெரிவித்தான். அந் நற்செய்தியைக் கேட்கும்வரை உயிர் தாங்கிக்கொண்டிருந்த நாயனார், தத்தனைப் புகழ்ந்து, அரசியலுக்குரிய புதல்வர்களையும் மற்ற அன்பர்களையும் பார்த்துத் திருநீற்று நெறியை அன்புடன் பாதுகாக்குமாறு அறிவுறுத்தித் தில்லைக் கூத்தன் சேவடியைச் சிந்தை செய்தார். அப்பொழுது சிவபெருமான், மெய்ப்பொருள் நாயனார் எண்ணியவாறு அவர்க்குக் காட்சி கொடுத்து, அவரைத் தமது அருட்கழல் நீழலில் சேர்த்தருளினார். 11. விறன்மிண்ட நாயனார் 491. விரைசெய் நறும்பூந் தொடைஇதழி வேணியார் தம்கழல் பரவிப் பரசு பெறு மாதவ முனிவன் பரசுராமன் பெறு நாடு, திரைசெய் கடலின் பெருவளனும் திருந்து நிலனின் செழுவளனும் வரையின் வளனும் உடன் பெருகி மல்கும் நாடு மலைநாடு. வாசனை வீசும் நல்ல அழகு பொருந்திய கொன்றைப்பூ மாலையை யணிந்த சடையையுடைய சிவபிரான். பரசு - மழு. பரசு ராமன் சமதக்கின முனிவரின் புதல்வன். தன் தந்தையாகிய சமதக் கினியைக் கார்த்தவீரியன் கொன்றதை முற்கொண்டு, அவனையும், அவன் மரபினரையுங் கருவறுக்கப் பரசுராமன் விரதம் பூண்டு, சிவ பூசை புரிந்து, பரசு பெற்று, நினைந்தபடியே செய்து, அவர்கள் இரத் தத்தால். பிதிர் தர்ப்பணஞ் செய்தனன். இதனால் பரசுராமனுக்குப் பழி சூழ்ந்தது. அப்பழி போக்கச் சிவபெருமானை வழிப்பட்டு. ஒரு நாடு மறையவர்க்கு உதவுதல் வேண்டுமென்று எண்ணி, அவன் வருணனை வேண்டித் தென்திசைக் கடலில் மழுவை வீசினான். அம் மழு விழுந்த இடம் மறையவர்க்கு அளிக்கப்பட்டது. அதுவே மலை நாடு என்பது. இது புராணக்கதை. இக்கதைக்குறிப்பு இப் பாட்டி லிருத்தல் காண்க. மல்கும் - நிறைந்திருக்கும். கடலின் வளம்: முத்து பவளம் சங்கு முதலியன; மலையின் வளம்: அகில் சந்தனம் தந்தம் முதலியன. 1. 492. வாரி சொரியும் கதிர்முத்தும் வயல்மென் கரும்பில் படுமுத்தும் வேரல் விளையும் குளிர்முத்தும் வேழ மருப்பின் ஒளிர்முத்தும் மூரல் முறுவல் வெண்முத்த நகையார் தெரிந்து முறைகோக்கும் சேரர் திருநாட்டு ஊர்களின் முன் சிறந்த முதூர் செங்குன்றூர். வாரி - கடல். வேரல் - மூங்கிலில். வேழமருப்பின் - யானைக் கொம்பில். மூரல். . . . முத்த நகையார் - பல்லென்று சொல்லப் படுகின்ற வெள்ளிய முத்துக்களை நகைப்பினிடத்துடைய பெண் மக்கள். தெரிந்து - ஆராய்ந்து. 2. 493. என்னும் பெயரின் விளங்கி உலகு ஏறும் பெருமை உடையதுதான் அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை சொன்ன நெறியின் வழிஒழுகும் தூய குடிமைத் தலைநின்றார். மன்னும் குலத்தின் மாமறைநூல் மரபில் பெரியோர் வாழ்பதியாம். ஏறும் - பரம்பும்; மதிக்கத்தக்க. வயல். . . . . . நின்றார் - வேளா ளர்களும். மன்னும். . . . . பெரியயோர் - மறையவர்களும். 3. 494. அப்பொன் பதியினிடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்; செப்பற்கு அரிய பெருஞ்சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி எப் பற்றினையும் அறஎறிவார்; எல்லை தெரிய ஒண்ணாதார்; மெய்ப் பத்தர்கள் பால் பரிவு உடையார்; எம்பிரானார் விறன் மிண்டர். கரைகாணா மெய்யன்புடையவரும்; எல்லை தெரிய ஒண்ணாதவராகிய சிவபெருமானின் என்னலு மொன்று. பரிவு டையார் - அன்புடையவரும். 4. 495. நதியும் மதியும் புணைந்தசடை நம்பர் விரும்பி நலம் சிறந்த பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார் முதிரும் அன்பின் பெருந்தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து எதிர்முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப்பெற்றார். நம்பர் - சிவபெருமான். முறைமை நீடு - ஒழுங்காகப் பரவி யுள்ள; ஒழுக்கம் மிகுந்த எனினுமாம். அடியவர் திருக்கூட்டத்தை முன்னே தொழும் அருள் பெற்றுப் பின்னே சிவபெருமான் திரு வடிகளைத் தொழும் நியதியுடையவர். 5. 496. பொன் தாழ் அருவி மலை நாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும் சென்று ஆளுடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடைசெலுத்தி, வன் தாள் மேருச் சிலைவளைத்துப் புரங்கள் செற்று வைதிகத்தேர் நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார்; நிகர்ஒன்று இல்லாதார். பொன் தாழ் அருவி - பொற் பொடிகளுடன் கலந்து விழும் அருவி. ஆள் உடையார் அடியவர் - நம்மை ஆளாக உடைய சிவனடி யார்களின். திண்மை - உறுதியான. வன்தாள் - வலிய அடியையுடைய. வைதிகத் தேர் நின்றார் - வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் தடுத்தாட்கொண்ட புராணம்: பாட்டு 44 பார்க்க. 6 497. திரு ஆர் பெருமை திகழ்கின்ற தேவாசிரியனிடைப் பொலிந்து மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது ஒருவாறு ஒதுங்கும் வன்தொண்டன் புறகு என்று உரைப்பச் சிவன் அருளால் பெருகா நின்ற பெறும் பேறு பெற்றார்; மற்றும் பெறநின் றார். திருமகள் வாழும் தேவாசிரிய மண்டபம். புறகு - அடியார் கூட் டத்துக்குப் புறம்பு. மற்றுமுள்ள பேறுகளையும் பெற நின்றார். 7 498. சேண் ஆர் மேருச் சிலைவளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம் பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரான் ஆம் தன்மைப் பிறைசூடிப் பூண் ஆர் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க, மற்று அவர்பால் கோணா அருளைப் பெற்றார்; மற்று இனியார் பெருமை கூறுவார். சேண் ஆர் - ஆகாயத்தை அளாவிய. பேணாது ஏகும் ஊர னுக்கும் - வணங்காது செல்லும் நம்பியாரூரருக்கும். அவர்பால் - சிவபெருமானிடத்தில்; சிவபெருமானிடத்திலும் வன்தொண்டை ரிடத்திலும் எனினுமாம். இனியார் அவர் (விறன் மிண்டர்) பெருமை கூறுவார். 8. 499. ஞாலம் உய்ய, நாம் உய்ய, நம்பி சைவ நல் நெறியின் சீலம் உய்ய, திருத்தொண்டத் தொகைமுன் பாட, செழுமறைகள் ஓலம் இடவும் உணர்வு அரியார் அடியாருடனாம் உளது என்றால், ஆலம் அமுது செய்தபிரான் அடியார் பெருமை அறிந்தார் ஆர்? உணர்வறியார் - சிவபெருமான். அடியவர் திருக்கூட்டத்துடன் இருப்பதாகும் தன்மை இவருக்கு உண்டு என்றால். நம்பியாரூரர் திருத்தொண்டத் தொகை பாடுதற்கு முன்னர் அவரையும், சிவபெரு மானையும் அடியார்க்குப் புறம்பு என்று சொல்லவும், அத்திருப் பாட்டை நம்பியாரூரர் பாடிய பின்னை அவரையும் சிவபெரு மானையும் அடியாருடன் என்று சொல்லவும் உரிமை அன்பு வாய்க்கப்பெற்றவர் விறன்மிண்டர் என்றபடி. 9. 500. ஒக்க நெடுநாள் இவ் உலகின் உயர்ந்த சைவப் பெருந்தன்மை தொக்க நிலைமை நெறிபோற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர் தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார். ஒக்க - பொருந்த. 10. 501. வேறு பிறிது ஏன்? திருத்தொண்டத் தொகையால் உலகு விளங்கவரும் பேறு தனக்குக் காரணர் ஆம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை, கூறும் அளவு என் அளவிற்றே? அவர் தாள் சென்னி மேல் கொண்டே ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம். வேறு பிறிது என் - இதைவிட வேறாகச் சொல்லும் பிற பெருமை அவருக்கு ஏன்? திருத்தொண்டத் தொகையைப் பாடுவித்த பெருமை ஒன்றே சாலும் என்றபடி. அளவிற்றோ. ஆறை - பழையாறை. 11. தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல் கீழ் மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார். ஒக்க - பொருந்த. 10. 501. வேறு பிறிது ஏன்? திருத்தொண்டத் தொகையால் உலகு விளங்கவரும் பேறு தனக்குக் காரணர் ஆம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை, கூறும் அளவு என் அளவிற்றே? அவர் தாள் சென்னி மேல் கொண்டே ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத்தொண்டு அறைகுவாம். வேறு பிறிது என் - இதைவிட வேறாகச் சொல்லும் பிற பெருமை அவருக்கு ஏன்? திருத்தொண்டத் தொகையைப் பாடுவித்த பெருமை ஒன்றே சாலும் என்றபடி. அளவிற்றோ. ஆறை - பழையாறை. 11. விறன்மிண்ட நாயனார் சேர நாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாளர் குலத்திலே பிறந்தவர் விறன்மிண்ட நாயனார் என்பவர். முன்னே திருத் தொண்டர்களை வணங்கிப் பின்னே சிவபெருமானைப் பணிவது அவரது வழக்கமாகும். அவர், பல திருப்பதிகளைத் தொழுது திருவாரூரை அடைந்த போது, அங்கே ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அடியார் களை வணங்காது ஒருவாறு ஒதுங்கிச் சென்றதைக் கண்டு, திருத் தொண்டர்களுக்கு வன்றொன்டனும் புறம்பு; அவனை ஆண்ட சிவனும் புறம்பு என்றார். விறன் மிண்ட நாயனார் அடியவரிடத்துக் கொண்டுள்ள அன்புறுதியைக் கண்டு, நம்பியாரூரர் தங்கருத்து முற்றுப் பெறவும், உலகுய்யவுந் திருத் தொண்டத் தொகையைத் திருவாய் மலர்ந்தருளினார். அத்திருத் தொண்டத் தொகை விறன் மிண்ட நாயனாருக்குப் பெருமகிழ்ச்சி யூட்டிற்று. சிவபெருமான், தம், கணங்களுக்குத் தலைவராயிருக்கும் பெருவாழ்வை விறன்மிண்ட நாயனார்க்கு அளித்தருளினார். 