இளங்குமரனார் தமிழ்வளம் 30 1. அண்ணல் ஆபிரகாம் 2. அறவோர் அமைதிப் பணிகள் 3. உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம் ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 30 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2013 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 240 = 256 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 160/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் அண்ணல் ஆபிரகாம் 1. அவன் யார்? 7 2. பிழைப்புக்கு வழி உழைப்பே 15 3. ஆதரவு வளர்ந்தது ஆபிரகாமும் வளர்ந்தார் 22 4. ஒழுங்குள்ள ஆபே 32 5. மேரிக்கு எக்களிப்பு மேதைக்குத் தத்தளிப்பு 43 6. வெள்ளை மாளிகையில் அமைதி 51 7. வாழ்க வில்கி பூத் 61 8. பொற்சிலைப் புனிதன் 66 அறவோர் அமைதிப் பணிகள் 1. அமைதிப் பணி 81 2. அறவோர் உள்ளம் 89 3. வள்ளுவர் வழி 95 4. சங்கச் சான்றோர் I 103 5. சங்கச் சான்றோர் II 111 6. சமயச் சான்றோர் I புத்தர் பெருமான் 120 7. சமயச் சான்றோர் II இயேசு பெருமான் 129 8. சமயச் சான்றோர் III நபிகள் நாயகம் 137 9. அருட் பெரு மக்கள் 147 10. அரசியல் அறிஞர்கள் 154 உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம் முன்னுரை 165 ஓர் அன்பின் உறவு 167 சுற்றுலா 172 அண்ணல் ஆபிரகாம் பதிப்புரை பண்டை நாட்களில் வாழ்ந்த அருந்தவச் செல்வர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிந்துகொள்வது தனிப் பட்டவர்களின் வாழ்க்கை நெறிகளைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கும் உயர்ந்ததொரு குறிக்கோளை மனத்திற் கொண்டு எண்ணத்தில் திண்மை பெற்று எண்ணியாங் கெய்துவதற்கும் பயன்படும் என்பது உண்மை. உற்றோர், மற்றோர் என்று வேறுபாடு கருதாது வீட்டினர், நாட்டினர் என்று மாறுபாடு பாராது நாட்டுக்கு உழைத்திட்ட நல்லவர்கள் பலர். அவர்கள் வாழ்ந்த முறையை வகைப்படுத்திக் கூறும் வாழ்க்கை வரலாற்று நூல்களைக் கழகம் பல்லாண்டுகளாக வெளியிட்டு வருகின்றது. அவ்வரிசையில் அடிமைத்தளையகற்றிய அண்ணல் ஆபிரகாம் லிங்கனைப் பற்றிய இந்நூல் வெளியாகின்றது. லிங்கன் குடிசையில் பிறந்தவர். குடியரசுத்தலைவராக இறந்தவர். அடிமை களுக்குக் கண்கண்ட தெய்வம். அமெரிக்கருக்கு அவர் ஒரு காந்தி. மக்களை மாக்களாக்கிய மாக்களை, மக்களாக்கிய மனிதகுலத் தோன்றல். மக்களால், மக்களைக் கொண்டு மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசாட்சி என்றுமே அழியாது என்றுரைத்த அரசியலறிஞர். அடியவர்க் கெளியராய் விளங்கிய அவர்க்குக் கொடியவன் அளித்த பரிசு குண்டு. அதுவே நன்மைக்குத் தீமையளித்த பரிசு. அத்தகையோரின் வாழ்க்கையை அறிந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு வருடைய கடமையாகும். இந் நூலைச் செம்மையாகவும், சுருக்கமாகவும் எழுதித் தந்த திரு. இரா. இளங்குமரன் அவர்கட்குக் கழகம் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. இதுபோன்ற நூற்களைச் சிறியோரும் பெரியோரும் நன்கு கற்றுப் பயனடைவார்களென நம்புகிறோம். முன்னுரை நல்வாழ்வு வாழ விரும்புவார்க்கு வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த பெருமக்கள் வரலாறுபோல் அமையும் வழிகாட்டி எதுவும் இல்லை. இக்கருத்தால் அனைத்துஅதிகாரங்களும் தம் கையகத்தே குவிந்திருந்தும் அவற்றை அறவழிக்கு அன்றிப் பிற வழிக்குப் பயன்படுத்தாத அமெரிக்கப் பெருந்தலைவர் அண்ணல் ஆபிரகாம் லிங்கன் வரலாற்றை எழுதினேன். இவ்வரலாறு கற்பவர் நெஞ்சினில் நிலைத்து நற்பயன் விளைக்கும் என்பது என் கருத்து. என் பிஞ்சு நெஞ்சின் ஊற்றமும் உணர்வும் கொண்டு முகிழ்த்த முதல் வரலாற்று நூலாம் இதனை, ஆயிரத்தின் மேலும் அருந்தமிழ் நூல்கள் வெளியிட்டுச் சீரிய பணிபுரிந்து வரும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிடுவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி. கழக உறுப்பினர் கட்கும், ஒல்லும் வகையால் உயர் கடனாற்றும் கழக ஆட்சிப் பொறுப்பாளர் உயர்திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கும் என் உழுவலன்புடன் கூடிய கெழுதகை நன்றி உரித்தாகுக. தமிழ் வெல்க! மதுரை 15-2-1965 இரா. இளங்குமரன் 1. அவன் யார்? 10 டாலர் 20 டாலர் 40 டாலர் உடல் கொழு கொழு வென்றிருக்கிறது. நன்றாக உழைக்கத் தக்க பருவம். எங்கெங்கே தேடினாலும் இப்படியொன்று கிடைக்கவே கிடைக்காது. கூட்டிக் கேள் 75 டாலர் ஒரு தரம்; கேட்பவர் இல்லையா? இரண்டுதரம் 80 டாலர் ஐயோ! என்னிடம் எழுபத்தைந்து டாலர்கள் தாமே இருக்கின்றன. கூட்டிக் கேட்டு விட்டானே அவன். கெடுத்துக் கொண்டாய் நீ! இப்படி யொரு நல்ல கூலி கிடைக்குமென்ற நம்பிக்கை எனக்கில்லை. இரண்டு ஆண்களுக்குப் பதில் இவள் ஒருத்தியே போதும். இப்படி முறுக்கேறிய நீக்ரோக் கூலி நிச்சயம் கிடைக்கமாட்டாள். பணத்தைக் குறைத்துக் கொண்டுவந்து பாழ்படுத்திக் கொண்டேன். இவ்வாறு கூட்டத்தினர் பேசிக் கொள்வதற்குள் ஏலம் போடுபவன் மூன்றுதரம் என்றான். முடித்து விட்டான்! ஆடு மாடுகளை ஏலம் போடுவது போல - அங்காடிகளிலே துணி மணிகளை ஏலம்போடுவது போல - அடிமையாக்கப்பட்ட நீக்ரோப் பெண் ஏலம் போடப்பட்டாள், அமெரிக்க நியூயார்லி யன்சிலே! சுதந்திர மக்கட் பிறப்பெய்திய அவள் சாகுமட்டும் அடிமை! விலைக்கு வாங்கியவன் விலங்கிடுகின்றான்; மாட்டுக் கொட்டிலுக்கு மட மட வென இழுத்துச் செல்கின்றான். இதனைக் கண்டு கொண்டு நிற்கின்றான் ஓர் அருளாளன். மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கமா? என்று தன்முகத்திலே சப்பிக்கொண்டு கண்ணீர்த் துளிகளைச் சொரிகின்றான். அக் கண்ணீர்த் துளிகளையே கறுப்பு மையாகக் கொண்டு இதய ஏட்டிலே எழுதிக் கொள்கின்றான். என்றேனும் ஒருநாள் இந்த அடிமை முறையை ஒழித்துக் கட்டியே தீருவேன். அடிமைமுறை தகர்க்கப்படாவிடில் யான் பிறந்ததால் இவ்வையகத்திற்குத் துளியளவாவது பயனுண்டா? அடிமை முறையை அகற்றுவதே என் இலட்சியம்! என்று முழங்கிக் கொண்டே அடிமை விற்பனைக் கிடங்கை விட்டு அகல்கின்றான் அந்த இளைஞன்! அடிமை வேட்டை ஆப்பிரிக்கக் காடுகளிலே சதந்திரமாகச் சுற்றியலைந்து கொண்டிருந்த நீக்ரோக்களை விலங்குகள் போலாக வேட்டையாடி, கைக்கும் காலுக்கும் விலங்கிட்டுப் பண்ணைகளிலே பணிபுரியும் நிரந்தர அடிமைகளாக ஆக்கி வந்தனர் அமெரிக்கர். நீக்ரோக் களைப் பிடிப்பதற்காகவே எத்தனையோ சங்கங்கள் ஏற்பட்டன! அடிமை விற்பனைக் காகவே வியாபாரக் கிடங்குகள் அநகேம் கிளைத்தன! வளைத்துப் பிடித்துவரும் வலியவனுக்குப் பரிசும் பாராட்டும் வழங்கினர் பண்ணையாளர்! அரசாங்கமோ அடிமைப் பண்டங்களைக் குவிப்பதற்கு வழிவகைகள் செய்து கொண்டிருந்தது. வெள்ளையர் கூட்டம் ஒன்று வெளிப்படுகின்றது என்றால் குலைபதறித் தப்பியோட முயல்வான் நீக்ரோ! துப்பாக்கிக்குத் தப்பிச் செல்ல வழியின்றித் தலைகுனிவான்! மானம் உண்டு; வீரமும் உண்டு, நீக்ரோவினிடம்! ஆனால் கனல் கக்கும் குண்டுக்கு முன் அவன் என்ன செய்யமுடியும்? அடிமை முறை அமெரிக்கா முழுவதிலும் கைக்கொள்ளப் படவில்லை. தென்னாட்டிலே அடிமையர் கட்டுப்பாடு; வடநாட்டிலே அடிமையர்க்குச் சுதந்திரம். ஒரே நாட்டிலேயே இரு வேறு கொள்கைகள்! தென்னாட்டிலேயிருந்து நாள்தோறும் அடிமையர் வடநாட்டிற்கு ஓடிய வண்ணமாக இருந்தனர். இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் பண்ணைகள் என்னாவது? பண்ணையையே நம்பி வாழும் பண்ணையாளர் என்னாவது? பண்ணையாளர் வாழ வழி வகுக்கும் அரசாங்கம் தான் என்னாவது? தன் வயிற்றில் தானே மண்ணடித்துக் கொள்ள விரும்புமா அரசு! அதற்கும் ஒரு சட்டம் செய்து கொண்டது! வடநாட்டில் அடிமை முறை இல்லாதது குறித்து மகிழ்ச்சி! ஆனால், தென்னாட்டிலிருந்து அடிமையர் வடநாட்டிற்குள் ஓடிவந்தால் அனுமதிக்கக் கூடாது, வடநாட்டு அரசாங்கம். எந்த அடிமையாவது வடநாட்டிற்குள் திரிவதாகத் தெரிந்தால் அந்த அடிமையைப் பிடித்துக் கொடுக்க வேண்டியது வடநாட்டின் கடமை. பிடித்துத் தந்தவருக்குப் பரிசு வழங்கிப் பாராட்டுவது தென்னாட்டின் கடமை என்று ஒப்பந்தம் செய்துகொண்டது. வடநாட்டில் அடிமை முறை வழக்கில் இல்லாதிருந்தபோதிலும் அடிமையரால் வந்துகொண்டிருந்த வருமானத்திற்கு மட்டும் குறைவில்லை. தென்னாட்டினின்று தப்பி வந்த அடிமையாயினும் சரி, ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து புதிதாக வந்தவராயினும் சரி, அவர்களைப் பிடித்துத் தந்து பரிசு பெற வேண்டியதே வடவர் குறிக்கோளாகப் போய் விட்டது. நான் எவருக்கும் அடிமையாக இருந்ததில்லை என்று எந்த நீக்ரோவேனும் சொல்வானேயானால் அதை விசாரித்து முடிவு கட்ட வேண்டிய உரிமையும் தென்னாட்டவர்க்கே இருந்தது. அந்தோ! திருடுபவனே தீர்ப்பளிப்பவனாகவும் இருந்தால் நீதி கிடைக்குமா? நீக்ரோவரில் பழையவராயினும் சரி, புதியவராயினும் சரி, அடிமைப் படுகுழியிலே வீழ்ந்து பரிதவித்துக் கொண்டிருந்தனர். தென் நாட்டினரோ வயலும் வளமும் பெருக்கி உடலும் உரமும் பெற்றுத்தலைநிமிர்ந்தனர். விளைவு தந்தவன் விலங்குக் கொட்டிலிலே கிடக்கின்றான்; விலாநிமிர உண்பவன் பஞ்சுக் கட்டிலிலே புரள்கின்றான். கொடுமைக் காட்சிகள்! தென்னாடும் வடநாடும் தென்னாட்டவர் கொண்டிருந்த அடிமைக்கட்டுப் பாட்டை வடநாட்டவர் ஏன் கொண்டிருக்கவில்லை? ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமமே என்னும் அருள்வழி கண்டனரா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் அறவழி நின்றனரா? கருணைப் பிழம்பாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அடாத செயல் என்று ஒதுக்கினரா? ஆடு மாடா இந்த அடிமைகள் என்று அறிவொளி குத்திக் காட்டியதா? சே! சே! உழைக்க ஒருவன் அதைக்கொண்டு பிழைக்க ஒருவன்; கூடாது கூடாது! என்ற கொள்கைச் சுடர் கொப்புளித்து எழுந்ததா? தன்கையே தனக்குதவி என்னும் தறுகண்மை தலைதூக்கியதா? இல்லை! இல்லை! இவையெல்லாம் காரணங்களாக அமையவில்லை. காரணமாக இருந்ததெல்லாம் வடநாட்டின் குளிர். கொடும் வெப்பத்திலே வளர்ந்து திரிந்த நீக்ரோவருக்கு வடநாட்டின் குளிர் ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் புண்ணும் பொரிச்சலும் கிளம்பும்; இரத்தமும் நீரும் ஒழுகும்; உடனடியாகவே உலக வாழ்வை நீத்து ஒழிவார். அரும்பாடுபட்டுப் பிடித்த அடிமை - பொன்னும் பொருளும் கொடுத்து வாங்கிய அடிமை - செத்துக்கொண்டே இருந்தார் இழப்பு யாருக்கு? வடநாட்ட வருக்குத் தானே! இந்த இழப்பை அகற்றி வருமானத்தைப் பெருக்க வாய்ப்பாக இருந்த ஒரே ஒரு வழி அடிமைக் கட்டுப்பாடு நீக்கம்! அடிமைத் துயர் பருத்தி எடுப்பவன் நீக்ரோ; பாறையுடைப்பவன் நீக்ரோ; குளம் தொட்டு வளம் பெருக்குபவன் நீக்ரோ; கல்லையும் முள்ளையும் அகற்றி, கணக்கிலா வளம் தரும் நிலமாக்குபவன் நீக்ரோ; பாலையைச் சோலையாக்கினான். பகலெல்லாம் உழைத்ததன்றி இரவும் உழைத்தான். உடலிலே களைப்பிருக்கும்; உள்ளத்திலே சோர்விருக்கும் - வெளிக்குக் காட்டிக் கொள்ளக் கூடாது. நோயிருக்கும்; நொம்பலமிருக்கும் - வாய் விட்டுரைக்க உரிமையில்லை. கண்ணிருந்தும் குருடன்; காதிருந்தும் செவிடன்; வாயிருந்தும் ஊமை; மனிதனாய்ப் பிறந்தும் அடிமை; ஆறறிவு பெற்றிருந்தும் அறிவிலாப் பிண்டம்; விலையிடற் கேற்ற பண்டம்! அடிமையின் வேலைக்குக் காலஎல்லை கிடையாது; அவனை ஆட்டிப் படைக்கும் ஆண்டைக்கோ இரக்கத் தன்மை கிடையாது. உழைத்து உழைத்து ஓடாய் ஒடுங்குவான். தப்பித்தவறி ஓய்ந்து நிற்பதைக் கண்காணியோ முதலாளியோ கண்டால் போதும்! கசையடிக்குக் கணக்கில்லை; உதிரம் சொட்டச் சொட்ட அடி கிடைக்கும். உதிரத்தை நக்கிச் சுவைக்க நாய்களும் தயாராக இருப்பதுண்டு. கம்பத்திலே கட்டி வைத்து அடிப்பர்! உதிரம் கொட்டும்! உயிர் போகாதவாறு பார்த்துக் கொள்ள மருத்துவரையும் உடன் வைத்திருப்பர். ஏன்? கருணையாலா? கட்டிவைத்து அடிக்கும்போது உடலில் ஒரு பக்கம்தானே அடி பட்டிருக்கும்? மீண்டும் உயிர் இருந்தால் திருப்பிக் கட்டி வைத்தும் அடிக்கலாமல்லவா! அந்தக் கருணையால் தான்! நீக்ரோ ஒருவன் அலறுவதைக் காணுவதிலே பண்ணை யாளர்களுக்கு அகமகிழ்ச்சி; கண்ணீர்த் துளி கொட்டுவதிலே களிப்பு; இரத்தம் சொட்டுவதிலே கொக்கரிப்பு. பற்பல சமயங்களில் நீக்ரோவை அடிப்பவன் நீக்ரோவாகவே இருப்ப துண்டு; தன்னைப் போல் அடிமையாகவிருக்கும் அவனை அடிமை ஒருவனே அடிப்பான் பண்ணையாளரின் கண்டிப்புக்காக! அடிக்க முன்வராவிட்டால் தன்னைப் பலியிட்டு விட்டுத்தான் அவன் அடிக்கப்படுவான் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் அவன் கண்ணீர் விட்டுக் கொண்டே அடிப்பான்; கதறிக்கொண்டும் அடிப்பான். அடிக்கும்போது அவனுக்கே தெரியும், அடிமையர் மீது அடிமையர் இரக்கம் காட்டுவதோ அன்பு. பாராட்டுவதோ மன்னிக்க முடியாத குற்றம் - கொலைத் தண்டனைக்குக் கூட வழிகாட்டிச் செல்லும் குற்றம் - என்பது. கருணை ஒருபக்கம் வாட்டும்; கண்டிப்பு ஒருபக்கம் ஓட்டும். இரண்டுக்கும் இடையே கண்காணி நீக்ரோ தத்தளித்துத் தன்னையே பலியிட்டுக் கொள்வதும் உண்டு. பரம்பரை அடிமை நீக்ரோவன் ஒருவனை அடிமையாக்கிவிட்டால் போதும்! அவனுக்கு உரிமை எதுவும் இல்லை என்ற உறுதி முதலாவதாக நடை முறைக்கு வரும். இரண்டாவதாக, அவனை உணர்ச்சியற்ற வனாக்கவும் கட்டளை பிறப்பிக்கப்படும். ஆணடிமை பெண்ணடி மையினிடம் உறவாடக்கூடாது. அப்படியே உறவாடினாலும் திருமணம் செய்து கொள்ளவே கூடாது. ஒருவேளை அடிமை நீக்ரோவுக்குக் குழந்தை பிறந்து விட்டாலும் அவர்கள் அடிமையாக இருக்கும் பண்ணைக்கு அக்குழந்தையும் அடிமை! பண்ணை யாளர்க்கு எதிர்பாராது கிடைக்கும் சொத்து! ஆம்! அடிமையரே அடிமையரை மறைமுகமாக உண்டாக்கிக் கொண்டிருந்தனர். தங்கள் பரம்பரைக்குத் தாங்களே அடிமைத் தளை பூட்டிக் கொண்டிருந்தனர். பண்ட மாற்றல் நீக்ரோ ஒருவன், ஒருவனிடம் அடிமையாக்கப்பட்டு விட்டான் என்றால் அவன் அவனிடமே சாகுமளவிற்கும் இருக்கப் போவ தில்லை. எந்த விநாடியும் மாற்றம் வரலாம், எவனாவது விலை கூட்டிக் கேட்டு விட்டால். தாய் அடிமை ஒருவனுக்கு விற்கப் படலாம்; பிள்ளையடிமை பிறிதொரு வனுக்கு விற்கப்படலாம். இந்தஅவலக் காட்சியைக் கண்கொண்டு பார்க்க முடியாது. குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டு குழந்தையைத் தரமறுக்கும், அந்தப் பெற்ற மனம். அதற்காக விட்டுவிடுவார்களா? பால்மணம்மாறாப் பச்சிளம் குழந்தை பறித்தெடுக்கப்பட்டு விலைக்கிடங்கிற்குக் கொண்டு போகப்படும். அம்மா! அம்மா!! என்று கதறும் குழந்தை! அலறியடித்துக் கொண்டு புரளும். மணிவயிற்றிலே அணைத்துக் காத்துவந்த மாசில்லாக் குழந்தைக்கு மாதாவின் முன்னிலையிலே விலங்கிடப்படும். ஐயோ! மகனே, உலகுக்கு வந்ததும் வராதது மாய் என்னடா தீங்கு புரிந்துவிட்டாய், என்னைப் பிரிந்து செல்ல! பிள்ளைக் கனியமுதே! நீ என்னடா பிழை செய்திருக்க முடியும், இக் கொடுமைக்கு ஆளாக! கள்ளம் கபடம் அறியாப் பருவத்துச் செல்வமே, உள்ளத்தைப் பிரித்தாரடா; உறவைப் பிரித்தாரடா; உயிரைப் பிரித்தாரடா உறவைப் பிரித்தாரடா; உயிரைப் பிரித்தாரடா என்று ஓல மிடுவாள் தாய். என் குல விளக்கைக் கெடுத்தவள் நான்தான், நான் தான் என்று பெற்ற வயிற்றிலே அறைபோட்டுக் கொள்வாள். முட்டி மோதிக் கொள்வாள். விலங்கேந்திய கரத்தோடு குழந்தை வீரிட்டழும். இந் நிலைமையிலே குழந்தை இழுத்துச் செல்லப்படும். மற்றொரு பக்கத்தே கலங்கிய கண்ணோடும், நடுங்கிய நெஞ்சோடும் நின்று கொண்டிருப்பான் நீக்ரோ ஆண் மகன். கண்ணீர் விடக் கருணை இருக்கிறது அவனிடம்; கண்டித்துக் கேட்க உரிமை இல்லை. நீதிக்குச் சிறை பண்ணையாளரைக் கண்டித்துக் கேட்கவே உரிமையற்ற அவன் நீதி மன்றம்செல்வது முடியாத காரியம். நீதி மன்றம் செல்லும் எண்ணமே நீக்ரோவுக்கு வருவது இல்லை. அப்படியே எண்ணம் வந்து விட்டாலும்அவன் எழுத்து மூலமாக முறையிட்டுக் கொள்ள, எழுதப் படிக்கத் தெரியாது. எழுதவும் படிக்கவும் எப்படியோ அறிந்து கொண்டிருந்தாலும் கூட வழக்காடப் பணம் கிடையாது. இவ்வளவும் எவருதவியாலோ கிடைத்து விட்டது என்றாலும்கூட, கொடுத்த மனு கொடுத்த போதே தள்ளுபடியாக் கப்பட்டுக் குப்பைத் தொட்டிக்குப் போய்ச் சேரும். அடிமையின் சுதந்திர வேட்கையை அவன் பண்ணையாளர் அறிந்துவிட்டாலோ கடும் வேலை; கசையடி; ஏச்சு பழிப்பு எல்லாம் கிடைக்கும். விற்று விடுவதும்உண்டு வேறொருவருக்கு. அடிமையை விலை கூறி விட்டால் போதும்; தோளில் குத்திப் பார்ப்பார்கள் பலம்இருக்கிறதா என்றறிய; சுமை ஏற்றிப் பார்ப்பார்கள் உரம் இருக்கிறதா என்று தெளிய; ஓடச்சொல்லி விரட்டியடிப்பார்கள் கால் கதியை அளவிட; பல்லைப் பிடித்துப் பார்ப்பார்கள் பாடுபடுவானா பல காலம், மாடு போலாக என்பதைத் தெரிந்து கொள்ள; உற்றுப் பார்ப்பார்; உறுத்துப் பார்ப்பார்; உதைத்துப் பார்ப்பார் - பொறுமையாக இருக்கிறானா என்று முடிவுகட்ட; இவ்வளவு சோதனை களிலும்வெற்றியுற்ற பின்னரே விலைப் பேச்சு; ஏல ஏற்பாடு! அந்தோ அடிமையே! அருளாளர் தோன்றுதல் அடிமை வாழ்வை எண்ணி ஏங்கும் அருளாளர் அங்கொரு வரும் இங்கொருவருமாகத் தலை காட்டாமலும் இல்லை. அவர்கள் அடிமையாக்குவது அடாதது என்று அருட்பாணியிலே குரலெடுத்தனர். அந்த அந்த இடங்களிலே அவர்களுக்கு வாயாப்புக் கிடைத்தது; பொல்லாங்கு ஏற்றப்பட்டது. போன போன பக்க மெல்லாம் வசைமாரி பொழியப் பட்டது. அடிமை கூடாது என்கிறான் அறிவற்றவன்! அனைவரும் சமம் என்கிறான் அகம்பாவி! அறம் பார்க்கிறானாம் அறம்! ஆழக் குழி தோண்டிப் புதைக்கப் படவேண்டியவன் ஆடியலைந்து இன்னும் நடமாடித் திரிகின்றான்! தனக்குத் தான் எழுதுவதற்குத் தெரியும் என்று கிறுக்குகின்றான்; பேசுவதற்குத் தெரியும் என்று பொரிகின்றான். படைவெள்ளம் திரண்டு விட்டால் அவன் பாடு என்னாகும்? எச்சரிக்கை! என்று எக்காளமிட்டனர். அதற்கும் மிஞ்சினால் நையப் புடைத்தனர்; மேலும் கிளர்ச்சி ஏற்பட்டால் நரம்பு நரம்பாகப் பிரித்து எடுத்தனர்; தோலை உரித்துத் தொங்கப் போட்டனர்; எழுதிய கையை நறுக்கினர்; எழுதப்பட்ட தாளை எரித்தனர்; அலுவலகங்களைச் சூறையிட்டு எரி நெருப்புக் கிரையாக்கினர். இவ்வளவும் இடைவிடாது ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும், இடையிடையே அருளாளர் உள்ளத்தே அடிமை நீக்க வெள்ளம் பெருக்கெடுத்துக் கொண்டே இருந்தது. அணு அணுவாகச் சிதைத்தாலும் தவற்றைத்தவறென்றே கூறுவேன் என்று தலைதூக்கிக் கொண்டிருந்தனர். ஏட்டை எரிக்கலாம்; எழுத்தை எரிக்கலாம்; இதயத்தே படிந்துள்ள கருத்தை எரிக்க முடியுமா? என்ற எழுச்சியுள்ளம் வலுத்துக் கொண்டிருந்தது. வல்லாளர் பலரிடம். அவர்கள் வழிவழி வந்து, அமெரிக்காவிலே கப்பிக் கொண்டிருந்த அடிமைக் காரிருளை அகற்ற எழுந்த விடிவெள்ளி தான் நாம் முன்னர்க் கூறிய இளைஞன்! இளம் வயதிலேயே எண்ணத் தொடங்கி விட்டான்; இன்னல் வாழ்வையும் ஏற்கத் தொடங்கி விட்டான். புனித அமெரிக்காவிலே பொல்லாத கறை படிந்து விடக் கூடாது என்று புத்துணச்ச்சியோடு எண்ணினான். அவன் யார்? அவனா? அந்தச் சிறுவயதுப் பெரியவர் - அண்ணல் ஆபிரகாம் லிங்கன்! 2. பிழைப்புக்கு வழி உழைப்பே பிறப்பும் வளர்ப்பும் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்த ஹார்டின் பிரதேசத்து நான்கிரீக் என்னும் ஊரில் அண்ணல் ஆபிரகாம் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 12ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று தோன்றினார். தந்தை தாம லிங்கன்! தாய் நான்ஸி கேங். அமெரிக்க நாட்டு அடிமை முறையை ஒழித்துக் கட்டு வதற்காகவே பிறந்தஅருளின் செல்வர் ஆபிரகாம் காட்டுக் குடிசை ஒன்றிலே பிறந்தார்; கரடித் தோலே அவர் படுக்கை; காட்டு வெளியே கலையரங்கம்! தாய் தந்தையர் தந்தை தாம லிங்கன் எழுத்தறி வற்றவர். தாய் மட்டும் சிறிது படித்திருந்தாள். கணவனைப் படிக்கவைத்துவிட வேண்டும் என்ற ஆசை நான்ஸிக்கு இருந்தது. அதனால் தாம சிறிதளவு படிப்பறிவு பெற்றுக்கொண்டார். தாம லிங்கன் தச்சு வேலை செய்வதிலே திறம் பெற்று இருந்தார். மரம் வெட்டுவார்; அறுப்பார்; பலகை யாக்குவார்; பெட்டி செய்வார். அவர் செய்த பெட்டி என்றால் அந்த வட்டாரத்திலே பெருங்கிராக்கியோடு செல்லும். பெட்டி என்ன பெட்டி? சவப் பெட்டி! ஆம்! உலகத்தவர் உடலை அடக்கம் செய்யப்பெட்டி செய்து கொண்டிருந்த ஏழைத் தச்சன் குடிசையிலே, உலகினர் உள்ளத்தை யெல்லாம் அடக்கம் செய்ய இருக்கும் அருளாளர் வளர்ந்து வந்தார்! தாம லிங்கனுக்கு மீன் பிடிப்பதிலே பற்று அதிகம். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் தூண்டிலும் கையுமாகச் சென்று மீன் பிடித்து வருவார். சிற்சில சமயங்களில் துப்பாக்கி கொண்டு விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி வருவதும் உண்டு. இத்தகைய பொழுதுகளில் இளைஞர் ஆபிரகாம் தந்தையோடு சேர்ந்து காட்டுக்குச் சென்று தந்தையின் வேலையைக் கவனித்துக் கொண்டிருப்பார். ஐந்து ஆறு வயது ஆகக் கூடிய காலத்தில் தந்தைக்கு வேண்டிய சிற்று தவிகளைச் செய்யவும் முன்வந்தார். வேலை முடித்து வீட்டுக்கு வந்தவுடனே தாம லிங்கன் ஆபிரகாமையும் அவர் உடன்பிறந்த சாராவையும் அழைத்துப் பக்கத்தே வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பிப்பார். குழந்தை களுக்கு மகிழ்ச்சி அதிகமாகும். விளையாட்டு முடிந்த வுடனே தந்தையைக் கதை சொல்லும்படி வற்புறுத்துவர். தந்தையும் வேட்டையாடல், மீன் பிடித்தல், மரம் வெட்டல் ஆகிய வேலை களிடையே தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துரைப்பார். சுவையான கதைகளாகவும் கூறிக் கொள்வ துண்டு. வீட்டுவேலை முடிந்து விட்டது என்றால்தந்தை மக்கள் விளையாட்டிலே தாயும் கலந்து கொண்டு பாட்டுப் பாடுவாள்; பைபிள் (திருமறை) கதை கூறுவாள். பிள்ளைகளின் படிப்பறிவு இவ்வாறு கேள்வி வழியாகத் தொடங்க லாயிற்று. பழங்கதை ஒன்று செவ்விந்தியர்கள் வெள்ளையர்களைத் தாக்கி, பொருள் களைச் சூறையாடிக் கொண்டு போவதோடு எதிர்த்தவர்களைக் கொன்றுவிட்டு அவர்கள் குழந்தைகளையும் கூடத் தூக்கிக் கொண்டு ஓடி விடுவது உண்டு என்று ஒருநாள் தாம விவரித்துக் கொண்டிருந்தார். அந்நேரம் அவர் தம்மை அறியாதே உணர்ச்சி வயப்பட்டுக் கண்ணீர் விட்டுக் கொண்டே, ஆபிரகாம்! வர்சீனியாவிலே ஒரு தந்தை தம் குழந்தைகளோடு உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டு இருந்தார். அவர் இருந்த இடம் காட்டுப் பகுதி. திடீரென்று சலசலப்புச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்க்கும்போது ஒன்றும் தெரியவில்லை. ஆனால் ஒரு கண நேரத்துக் குள்ளாக டப் என்று குண்டுச் சத்தம் ஒன்று கேட்டது. அந்தக் குண்டும் எங்கேயோ தாக்கிவிட வில்லை. அருமைக் குழந்தைகளுடன், அன்பாகப் பேசிக் கொண்டிருந்த தந்தையின் மார்பிலே பாய்ந்தது. மண்ணிலே உருண்டு விட்டார் தந்தை! இந்நேரம் துப்பாக்கிக் கையோடு வந்த செவ்விந்தியன், அழுது கொண்டு நின்ற சிறுவனைத் தூக்கிக் கொண்டு செல்லத் தொடங்கினான். தந்தையைச் சுட்டுக் கொன்ற கொடியவனைப் பழிவாங்க வேண்டும் என்ற படபடப்பிலே ஓடிவந்த மூத்த குமாரன் ஒரே குண்டால் செவ்விந்தியனை உருட்டி விட்டான். பழிக்குப்பழி வாங்கி விட்டாலும்கூட, அப்பா மறைந்த இழப்பை ஈடுசெய்ய முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தனர் ஆதரவற்ற அந்தப் பிள்ளைகள்! அதற்குப் பின்னரும் செவ்விந்தியர் தொல்லை அடிக்கடி தோன்றிக் கொண்டிருப்பதை அறிந்து வர்சீனியாப் பகுதியில் இருந்த தங்கள் குடிசையை இந்தக் கெண்டகிப்பகுதிக்கு மாற்றிக் கொண்டு விட்டனர், என்று கதறிக்கொண்டே கன்னத்தே கோடிட்டுக் கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் தாம. அழுதே விட்டார் ஆபிரகாம்! அத் தந்தைதான் தம் தந்தை என்றும், தூக்கிச் செல்ல விருந்த பையனே தாம் என்றும் தாம கூறக் கூடிய நேரம் துயரத்தின் உச்சத்தை அடைந்து விட்டார் லிங்கன். தம் தந்தைக்கும் அவர் தந்தைக்கும் ஏற்பட்ட ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற ஏக்கம் வேறு கப்பிக் கொள்ளத் தொடங்கி விட்டது. காலம் மாறி விட்டது; இனிமேல் செவ்விந்தியர் காலடி வைக்க முடியாது என்று உரமூட்டினார் தாம! ஆனாலும் லிங்கன் உள்ளத்தே இந்த நிகழ்ச்சி நிலையான வடு வொன்றை ஏற்படுத்திவிட்டது. இளமைக் கல்வி லிங்கன் நான்கிரீக்கில் இருந்த பள்ளிக்குச் சில நாட்கள் சென்றார். அங்குச் சரியான கல்வி கிடைக்காத காரணத்தால் தாம் குடியிருந்த இடத்திலிருந்து நான்கு கல் தூரம் சென்று கல்வி கற்க ஆரம்பித்தார். படிப்பின் மேல் தீராப்பசி லிங்கனுக்கு இருந்ததால் அவர் எத்தனை கல் தூரமானாலும் போய்வர அலுத்துக் கொண்ட தில்லை. படித்துவிட்டு வீட்டுக்கு வந்தபின் ஓய்ந்து ஒழிந்து இருக்க மாட்டார். படித்துக் கொண்டிருப்பார்; படித்ததைத் தரையிலோ மரப்பலகையிலோ எழுதிக் கொண்டி ருப்பார். படிக்கும் நூல் களிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள அவர் தவறுவது இல்லை. கல்லறையில் கண்ணீர் தாம லிங்கன் வருமானக் குறைவின் காரணமாக வேறோர் ஊருக்குச் செல்ல எண்ணினார். தம் குடும்பத்தோடு சென்றார். அங்குப்போய்ச் சேர்ந்த சிறிது காலத்திற்குள்ளாக இவர்கள் வாழ்க்கையில் புயல் ஒன்று கொடிய உருவில் கிளம்பலாயிற்று. பெற்றெடுத்த அன்னை, பேரறிவுடைய ஆசிரியை, கண்ணாகக் குடும்பத்தைக் காத்து வந்த கருணைப் பிழம்பு - நான்ஸி - நோய்வாய்ப் பட்டாள். நோயை நீக்குதற்குத் தாம தம்மாலானவரை முயன்றார்! ஆனால், மருத்துவர் கைவிட்டார்! நான்ஸியின் மலர் விழி மூடியது. மூடிய விழி மீண்டும் திறக்கப் படாமலே போய் விட்டது. இல்லாளாக வந்து, கற்பிக்கும் நல்லாளாகவும் இருந்த நான்ஸியின் மறைவால்தாம கொண்ட துயரத்திற்கு அளவில்லை. இளைஞர் ஆபிரகாம் புத்தகத்தை எவ்வளவு சிக்கெனப் பிடித்துக் கொண்டிருந்தாரோ அவ்வளவுக்கு அதிகமாகத் தாயின் கல்லறையைப் பிடித்துக் கொண்டிருந்தார். கல்லறைக்குச் சென்று சென்று கண்ணீர் சொரிந்து வந்த நாட்களோ ஏராளம். நான்ஸியை அடக்கம் செய்தற்கான பெட்டியைத் தாம லிங்கனே அளவிட்டுச் செய்தார். உடனிருந்து பணியாற்றினார் லிங்கன். பன்னீர் தெளிக்க வேண்டிய சவப் பெட்டியில் ஏழை லிங்கனால் கண்ணீர் தெளித்துக் கொண்டிருக்கவே முடிந்தது. கிறித்தவச் சடங்கு முறைமையின்படி பாதிரியார் ஒருவரை அழைத்து அன்னையின் இறுதிக்கடனை முடித்தற்குக்கூட முடியாத வறுமை நிலைமையில் லிங்கன் இருந்தார். தாய்க்குரிய கடப்பாடு இதனால், தம் அன்னைக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஒன்றைச் செய்யத் தாம் தவறி விட்டதாகக் கருதினார். தாம் அறிந்திருந்த பாதிரியார் ஒருவருக்கு, அன்னைக்குச் செய்ய வேண்டிய இறுதிச் கடன்களைச் செய்து உதவுமாறு மன்றாடிக் கடிதம் எழுதினார். பாதிரியார், லிங்கனுக்கத்தாய்மேல் இருந்த பற்றையும், எழுத்து வன்மையையும் பாராட்டி இறுதிக் கடன் களை நன்முறையில் செய்துதவினார். அவ்வளவோடு நில்லாது லிங்கன் மீது அவர் கொண்ட அன்பினால் இவர் படிப்புக்குத் தம்மாலான உதவிகளைச் செய்யவும் முன்வந்தார். அன்னையால் தொடங்கப்பட்ட கல்வி, அன்னையின் கடிதம் காரணமாகவே வளர்க்கப்பட்டது விந்தையே! வளருங் கல்வி லிங்கனுக்கு ஈசாப்புக் கதைகளிலே ஈடுபாடு பெருகியது. இடைவிடாது படித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்காவின் பெருமைக்குரிய முதல் மகன் வாசிங்டன் வரலாற்றை இராம்சே என்பவர் எழுதியிருந்தார். அந்நூல் லிங்கன் கைக்குக் கிடைத்தது. சிக்கெனப் பிடித்துக் கொண்டார். தமக்கு முன்மாதிரியாகக் கொண்டிருந்த பெரியவர்களுள் ஒருவராக வாசிங்டனைக் கொண்டார். வயல் வெளிக்குத் தந்தையோடு செல்லும் லிங்கன், வேலை பார்த்துக் கொண்டே படிப்பார்; வேலையின் இடையேயும் படிப்பார். தரையிலே எழுதிக் கொண்டிருப்பார். தம்மை நெருங்கி வந்தவர்களிடமெல்லாம் படித்ததை எடுத்துக் கூறத் தயங்க மாட்டார். தாம லிங்கன், ஆபிரகாம் இவ்வாறு படிப்பையே முழு மூச்சாகக் கொண்டிருப்பதை வெறுத்தார். எத்தனையோ முறைகளாக அரற்றியும் வெருட்டியும் பார்த்தார். படிப்பாவலைப் பறித்தெடுக்க முடியாது என்ற காரணத்தால் தான் கண்டிப்பதை விட்டு ஒதுங்கினார். ஆபிரகாமின் கொழுந்து விட்டெரியும் ஆசைக்கு இந்த நூல்கள் இரையாகப் போதவில்லை. படிப்பறிவுள்ள கொல்லர் ஒருவரின் உலைக் கூடத்திற்குப் போய்த் துருத்தி ஊதிக் கொண்டும் துணை வேலைகள் புரிந்து கொண்டும் கொல்லர் கூறக் கூடிய கதைகளைக் கேட்டுவந்தார். அறிவு கிடைக்க ஏதேனும் வழிவகை இருந்ததென்றால் எந்தத் தொல்லைப் படவும் ஆபிரகாம் தயங்க மாட்டார். தாம லிங்கன் ஒரு வாரம் வேறோரிடம் போயிருந்தார். லிங்கனும் சாராவும் வீட்டில் இருந்தனர். தன்னந் தனியாக இருக்கும் இவ்வேளையில் தாயின் நினைப்பு வந்து இவர்களுக்குத் தத்தளிப் பூட்டியது. லிங்கன் சாராவினிடம், தாய் இல்லாமையால் தந்தையாருக்கும், தங்களுக்கும் ஏற்பட்ட சங்கட வாழ்க்கையை விவரித்துக் கொண்டிருந்தார். இந்நேரம் லிங்கனுக்குப் பேரிடி வீழ்வது போன்ற உணர்ச்சி ஒன்று ஏற்பட்டது. தந்தை மறுமணம் முடித்துக் கொண்டால் தங்கள் நிலைமை..................................? சிற்றன்னை சிற்றன்னையர் கொடுமையைக் கேள்விப்பட்டிருந்த லிங்கன் ஆறாத் துயரத்திற்கு ஆட்பட்டார். இரவெல்லாம் தூக்கம் பிடிக்க வில்லை; பகல் வந்தது; குதிரை வண்டியொன்று வீட்டின் பக்கத்தே வந்து நின்றது. தாம லிங்கன் முதலாவதாக இறங்கினார். அதற்குப் பின் ஒரு பெண்மணியும் இறங்கினார். ஆபிரகாம் கண்கள் சுழல ஆரம்பித்தன. சிற்றன்னையின் கொடுமைக் காட்சிகள் மாறிமாறி வந்து கொண்டிருந்தன. இந்நேரம், அந்தப் பெண்மணிதான் சிற்றன்னை என்று லிங்கனுக்குத் தந்தையார் அறிமுகப்படுத்தி வைத்தார். மீண்டும் பள்ளி வாழ்வு இப்பொழுது ஆபிரகாம் கிராபோர்டு பள்ளியில் படித்து வருகின்றார். இதுகால், கையெழுத்துத் திறத்தைப் பாராட்டிய ஆசிரியர்கள் பலர்; கட்டுரை வன்மையைப் புகழ்ந்தவர்கள் சிலர்; பேச்சின் பெருமையைப் புரிந்து கொண்டிருந்தவர்கள் ஒரு சிலர்; இவ்வாறாக ஆசிரியர்களின் சீராட்டும் பாராட்டும் ஆபிரகாமை வெகுவாக வழி நடத்திச் சென்றன. தமக்கு நல்லதோர் எதிர்காலம் நாடிவர இருக்கின்றது என்ற நம்பிக்கைச் சுடர், நாடி நரம்பு களிலெல்லாம் ஓட ஆரம்பித்தது. அந்த எழுச்சியால், தாம் அமெரிக்க நாட்டின் வருங்காலத் தலைவர் என்று தோழர்களிடம் துணிவுடன் கூற ஆரம்பித்தார். அவ்வளவு நம்பிக்கை அப்பொழுதே ஏற்பட்டிருந்தது. இரவல் புத்தகம் வீம் என்னும் பெரியார் வாசிங்டன் வரலாற்றைச் சிறப்பாக எழுதியிருப்பதாகவும், அது ஜோசியா என்பவரிடம் இருப்பதாகவும் நண்பர்கள் பேசிக் கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட லிங்கன் ஜோசியாவைக் கண்டு சில நாட்களில் திருப்பித் தருவதாக வாக்களித்து வாசிங்டன் வரலாற்றை வாங்கிக் கொண்டுவந்தார். லிங்கன் குடியிருந்த இடத்திற்கும் ஜோசியா குடியிருந்த இடத்திற்கும் வண்டி வாகன வாய்ப்புக்கள் இல்லை. இருந்தாலும், ஆபிரகாம் கையில் பணம் இல்லை. நடந்தே போய் வாங்கி வந்தார் - நாற்பத்து நான்கு கல்! ஒரு தண்டனை வாசிங்டன் வரலாறு வரி வரியாக வாசிக்கப் பட்டது லிங்கனால். மீண்டும் மீண்டும் படித்தார். மனப்பாடமும் செய்தார். ஒரு நாள், வீட்டுச் சுவர்மேல் புத்தகத்தை வைத்து விட்டு வேலைக்குப் போய்விட்டார். அன்றடித்த மழையிலே புத்தகம் நனைந்து பல பக்கங்கள் சேதமாயின. இந்தத் துயரமான நிகழ்ச்சியைத் தாங்க மாட்டாத லிங்கன் ஜோசியாவினிடம் மன்னிப்புக் கேட்டதுடன் அவர் தரும் தண்டனையை அனுபவிக்கவும் ஒப்புக் கொண்டார். ஜோசியாவின் காட்டிலே சில நாட்கள் வேலை செய்யவேண்டும் என்ற தண்டனை லிங்கனுக்குக் கிடைத்தது. ஆயினும் வேலைத் துயரத்தைப் பார்க்கிலும் லிங்கனுக்கு வேறொரு மகிழ்ச்சி இருந்தது. குறிப்பிட்ட வேலையை முடித்துவிட்டுச் சிதைந்த புத்தகத்தை லிங்கனே எடுத்துக் கொள்ளலாம் என்றும், தம்நூலகத்தில் இருந்த புத்தகங்களில் வேண்டியதை வேலை செய்யும் வரைக்கும் எடுத்துப் படித்துக் கொள்ளலாம் என்றும் ஜோசியா கூறியிருந்தார். ஜோசியாவின் மனைவி உயர் பண்பினர். லிங்கனைப் பிள்ளை போலாகக் கருதி வந்தார். ஓய்ந்திருக்கும் வேளைகளில் லிங்கனை உடனழைத்து வைத்துக் கொண்டு உரை யாடுவார். தகுதியுணர்ந்த தாய் ஒருநாள் லிங்கன் உரத்துச் சத்தம்போட்டுப் பேச, திருவாட்டி ஜோசியா ஏன் இவ்வளவு கத்திப் பேசுகின்றாய்? என்றார். லிங்கனோ தயங்காது நான் அமெரிக்க நாட்டின் தலைவனாகக் கூடியகாலத்து, பெரும் பெருங் கூட்டங்களிலே பேசவேண்டு மல்லவா! அதற்காக இப்பொழுதிருந்தே தயாரிக்கின்றேன் என்றார். புத்தகம் ஒன்றுக்காகப்புல்வெட்டிக் காடு திருத்தும் இவன் போகப் போகின்றானாம் அமெரிக்கத் தலைவனாக என்று பொரிந்து வெடிக்க வில்லை, திருவாட்டி ஜோசியா! அதற்குப் பதிலாக ஆபிரகாம் பண்பையும் அறிவையும் அறிந்திருந்த அந்த அம்மையார், தங்களுக்குக் கிடைத்த பெரும் பேற்றையே நினைந்து பெருமிதம் கொண்டார். இந்த நிலைமையிலே லிங்கன் படிப்பு நடந்து கொண்டிருந் தாலும் வறுமை ஒருபக்கம் வாட்டிக் கொண்டிருந்தது. தந்தையார் உழைப்பால் மட்டும் பிழைப்பு நடத்த முடியாதென்று அறிந்த பதினாறு வயது லிங்கன் தாமும் உழைப்பிலே புக முன்வந்தார். 3. ஆதரவு வளர்ந்தது; ஆபிரகாமும் வளர்ந்தார் எந்தத் தொழில் செய்வதும் இழுக்கல்ல என்ற எண்ணம் இளமைமுதலே ஆபிரகாமினிடம் அரும்பியிருந்தது. ஒரு தொழில் இல்லாவிட்டாலும் ஒரு தொழில் செய்து பிழைக்கும் படியாகப் பற்பல தொழில்களில் பயிற்சி பெற்றிருந்தார். எந்தப் புது வேலையையும் எளிதில் அறிந்து கொள்ளும் திறமை இருந்ததனால் அவருக்கு எப்படியாவது வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. படகோட்டி முதலாவதாகக் கூலிக்குப் படகோட்டும் தொழிலைத் தொடங்கினார். பின்னர்ப் பண்ணை ஒன்றிலே பணியாளாக அமர்ந்தார். செல்வர் ஒருவரின் வீட்டிலே ஏவல்கேட்கும் எடுபிடி யாளாகப் பணிபுரிந்தார். எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் லிங்கன் மனம்இருந்தது புத்தகத்தில் தான். படுத்துக் காலாட்டிக் கொண்டே மணிக் கணக்காகப் படிப்பார்; நடந்து கொண்டும் படிப்பார்; வயல் வெளிகளிலும் மரத்தடிகளிலும் உட்கார்ந்து பலபேரைக் கூட்டி வைத்து விகடங்கள் கூறுவார்; தருக்கம் செய்வார். இவற்றை நயந்தவர்கள் பலர்; பொறாமையும் போட்டியும் கொண்ட வர்கள் சிலர்; அடுத்தவர் புகழ்வதைப் பற்றியோ பழிப்பதைப் பற்றியோ நினைக்காத நெஞ்சம் லிங்கனிடம் இருந்ததால் பாடுபடவும் செய்தார்; பாடுபட்டுக் கொண்டே படிக்கவும் செய்தார். வணிகக் கூலி ஜோன் என்பவர் ஒரு வணிகர். அவருக்குப் பலதுறை வணிகங்கள் உண்டு. புத்தக வணிகமும் புரிந்து வந்தார். இதனை அறிந்திருந்த லிங்கன் ஜோன் கடையிலே சிப்பந்தியாகச் சேர்ந்து கொண்டார். பலதொழில் அனுபவம் உடைய லிங்கனை வேலைக்கு வைத்துக் கொள்வதிலே ஜோன் மகிழ்ச்சியுற்றார். லிங்கன், கடைக்கு வருபவர்களிடம் புன் முறுவலோடு பேசுவார்; பணிவோடு நடந்து கொள்வார். இதனால் வாடிக்கைக்காரருக்கு லிங்கன் மேல் பற்று ஏற்பட்டுக் கொண்டு வந்தது. கடையில் இருந்துகொண்டே லிங்கன் பிராங்ளின் சரிதம், ஹென்றிகிளேர் வரலாறு, முதலானவற்றைப் படித்துக் கொண்டதுடன் செய்தித் தாளும் படித்து அரசியல் விவகாரங்களைத் தெரியவும் விவாதிக்கவும் திறம் பெற்றார். இதனால் ஜோன் கடையிலே வாடிக்கைக்காரர் பெருகிக் கொண்டு வந்தனர். அவர்கள் ஆபிரகாமுடன் விவாதித்து அறிவைப் பெருக்கிக் கொள்ள ஆசைப்பட்டனர். வியாபார நிலையம்விரிவுரை நிலையமாக மாறிவிட்டது. வியாபார வருமானமும் பெருகி, ஜோன் புகழும் பெருகிக் கொண்டு வந்ததால் ஆபிரகாம் காரியத்தில் ஜோன் தலையிட வில்லை. அதனாலேதான் கடையிலிருந்து விலகிய பின்னருங் கூடத் தம் நண்பர்களைச் சந்தித்துத் தருக்கம் செய்யும் இடமாக ஜோன் மளிகைக் கடையைப் பயன்படுத்தி வந்தார்லிங்கன். *யானையால் யானையைப் பிடித்துக் கொள்ளும் சாதுரியம்போல ஒரு செயலைச் செய்யும் போதே அச் செயலால் மற்றொரு செயலைச் செய்து முடித்துக் கொள்ளும் திறம் லிங்கனிடம் இருந்தது. இதுவே அவர்வாழ்க்கையின் முன்னேற்றத்திற்குத் தலையாய காரணமாக இருந்தது என்பதற்கு ஐயமில்லை. காலநிலைக்கேற்ற கட்டுரை செய்தித்தாள் படித்து வந்த லிங்கனுக்குச் செய்தித் தாளுக்குக் கட்டுரை எழுத வேண்டுமென்ற ஆவல் கிளம்பியது. அதனால் அந்த வட்டாரத்திலே தொற்று நோய் போல் பெருகிக் கிடந்த குடிப்பழக்கத்தை வெறுத்துக் கட்டுரை எழுதத் தொடங்கினார். தம் தாய் நான்ஸி குடியைக் கெட்டபழக்கமாகக் கருதியிருந்தாள் என்பதைத் தெளிவாக அறிந்திருந்த லிங்கன், குடிவழக்கத்தை ஒழிப்பதைப்பற்றி எழுதுவதும் பேசவதும் அன்னைக்குச் செய்யும் காணிக்கையாகக் கருதினார். அதனால் செய்தித் தாளில் குடிப்ப தன் குறைவைத் தெள்ளத் தெளிய எடுத்துக்காட்டினார். மதியை மயக்கி மானத்தைப் போக்கி வரும் குடியைக் கொண்டவர் குடியே கெடும் என்று எச்சரித்தார். *பொன்னையும் பொருளையும் அள்ளி வீசி, பேதையையும் புத்தியின்மையையுமா வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இவர் எழுத்தைப் பாராட்டிக் கூறுவோர் பலர் இருந்த படியால் மக்களுக்கு அரசியலறிவையும் பெருக்கும் ஆர்வம் கொண்டு அரசியல் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதிவர ஆரம்பித்தார். புதிய படகு இந்தச் சூழலிலேதான் பொருள் வருவாய்க்காகத் தம் கையாலேயே சிறியபடகு ஒன்றைக் கட்டினார்; ஆற்றிலே மிதக்க விட்டார். ஆற்றிலே மிதந்த அந்தச் சின்னஞ் சிறுபடகு மரக்கட்டைப் படகாக லிங்கனுக்குத் தெரியவில்லை. வானக் கடலிலே வாலொளி வீசிச் செல்லும் வெள்ளி யோடமாகக் காட்சிவழங்கியது. அழகுக்காகவோ செய்தார் படகை? அரிக்கும் வறுமை நோயை அழிக்கும் கருவியாக அல்லவா செய்தார்! நெடுநேரம் வரைக்கும் எவரும் தம்படகை நாடி வரவில்லை. இமை கொட்டாது பார்த்துக் கொண்டும் ஏங்கிக் கொண்டும் இருந்தார். இரண்டு சீமான்கள் பெட்டியும் சுமையுமாய் ஓடி வந்தனர். அவர்கள் விரைவாகச் சென்று கப்பலைப் பிடிக்க வேண்டும்! உன்னால் முடியுமா? என்றனர். முடியும் என்ற தலையசைப்போடு கூலியும் பேசாது படகைச் செலுத்தினார் விடுதலைப்படகு செலுத்த வந்த வெற்றி வீரர்! கப்பல் கிடைத்தது கனவான்களுக்கு! கண்களிலே ஒற்றி ஒற்றிக் களியாட்டம் ஆடும்படி லிங்கனுக்குக் கிடைத்தது ஒரு டாலர்! அப்பப்பா! வாழ்விலே முதல் வருவாய்; பெருத்த வருவாய்! இப்படியேகிடைத்துக் கொண்டிருந் திருந்தால்? அகிலம் அருளாளர் ஒருவரை இழந்திருக்கும்! வாழ்க வறுமை! முதல் முதல் சம்பாதித்த அந்த வெண் பொற்காசு தந்த மகிழ்ச்சியை இந்த வெள்ளை மாளிகையால் தரமுடியவில்லை என்று தலைவரான பின்னும் ஆபிரகாம் கூறிக் கொண்டார் என்றால் அந்தப் பஞ்சை நிலையிலே அவர் பாடிய பாடல்கள் எத்தனையோ? சட்டப் படிப்பு எதிர்பாரா முறையில் லிங்கனுக்குச் செல்வர் ஒருவரின் உறவு கிடைத்தது. அவரிடம் சட்டப் புத்தகம் ஒன்று இருப்பதாக அறிந்தார். லிங்கனுக்கு அன்றிர வெல்லாம் தூக்கம் வரவில்லை. சட்டப் புத்தகம் திருப்பப் படுகின்றது; மன்றத்திலே வாதம் தொடங்கப் படுகின்றது; பொருளும் புகழும் வானளாவப் பெருகு கின்றது. எல்லாம் எண்ணக் குவியலிலே! சட்டப் புத்தகத்தை வாங்கிப் பார்க்கு முன் ஒவ்வொரு கணமும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. அசைந்து செல்லும் இவ்விரவு அழிந்து தொலையாதா என்று அலுத்துக் கொண்டார். விடிந்தது; சட்டப் புத்தகத்திலிருந்து என்றும் அகற்ற முடியாது என்று இறுமாந் திருந்த சில எழுத்துக் களை இருந்த இடம் தெரியாமல் நெடுங் கோடிட்டழிக்க வந்த நீதியாளன் கரங்களிடையே தவழ்கின்றது இரவல் சட்டப் புத்தகம். செல்வருக்கு நன்றி கூறுமுன்னரே சட்டப் புத்தகத்திற்குக் கிடைத்தது முத்தம். இனிப் படகுக்கு என்னவேலை? ஆற்றின் கரையிலே கிடந்தது அது. ஆபிரகாம் சிந்தையும் செயலும் சட்டப் புத்தகத்தின் அடித்தளத்தில் பதிந்து விட்டன. தணியாத ஆவல் ஒருநாள் செய்தித்தாள் புரட்டிக் கொண்டு இருந்தார் லிங்கன். அத்தாளிலே இருந்த சில வரிகள் அவரைக் கவர்ந்தன. அவர் இருக்கும் இடத்திற்கு 32 ஆவது கல்லில் இருந்த பூனவல்லியில் ஒரு கொலை வழக்கு விசாரிக்கப்பட இருப்ப தாகவும், அந்நாளில் பெயர் பெற்றிருந்த வழக்கறிஞர் பிரெக்கன்ரிட்ஜ் வாதாடப் போவதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது. சட்டத்தைப் படித்தால் மட்டும் போதாது; முறையோடு வாதாடுவதையும் அறிய வேண்டும் என்ற ஆசை உந்தியதால் ஆபிரகாம், மறுநாளே விசாரிக்க இருந்த அந்த வழக்கிற்குக் கால்நடையில் பயணப்பட்டார். பிரெக்கன் ரிட்ஜ், கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த குற்றவாளியைத் தமது வாதத்திறமையால் எப்படி வேறுவிதமாக மாற்றிக் கொண்டு விட்டார் என்ற வியப்புக்கடலிலே நீந்தினார் லிங்கன். ஒவ்வொரு சொல்லையும், அது சொல்லப்பட்ட பாணியையும், அதன் பொருத்தத்தையும் அறிந்த லிங்கன் பிரெக் கனுக்கு நன்றி பாராட்டும்உள்ளத்தோடு நெருங்கி, கைகுலுக்க முயன்றார். அழுக்கு ஆடையும் அசங்கியமும் கொண்டிருந்த ஆபிரகாமை ஏற இறங்க ஒருபார்வை பார்த்து விட்டு அலட்சியமாக நடந்தார் வாதாட்ட வல்லுநர். ஏமாற்றமுற்ற ஆபிரகாம் உங்கள் வாதத்திறமையைப் பாராட்டு கின்றேன் என்று தலை தாழ்த்திக் கூறினார். அந்த ஏழையின் நல்லுரையை ஏற்கக் கூடிய அளவில் அவர் செவி இல்லை! அவ்வளவு தூரம்மரத்துப் போயிருந்தது, அந்த மேதை நீதியாளனின் செவி. ஆபிரகாம் வாதத்தைக் கேட்டுப் பயன் பெற்றார். அதற்கு நன்றி செலுத்தினார். நன்றியுரையை ஏற்றுக் கொள்ளாததைப் பற்றித் தமக்குக் கவலை இல்லை என்று எண்ணிக் கொண்டார். நினைவு இருக்கிறதா? பிரெக்கன் ரிட்ஜை மீண்டும் ஒருமுறை ஆபிரகாம் சந்திக் கின்றார் - வெள்ளை மாளிகையிலே! இதற்கு முன் என்னை எங்கேனும் சந்தித்ததாக நினைவிருக்கிறதா? என்ற வினா எழுப்பு கின்றார் லிங்கன். நினைவில்லை என்கிறார் நெஞ்சழுத்த நீதிபதி. நீங்கள் பூனவல்லியில் வாதாடும்போது கேட்டுக் கிறுகிறுத்து நன்றி தெரிவித்தவர்களில் நானும் ஒருவன். நான் முன்னுக்குவரக் காரணமாக இருந்தவர்களுள் தாங்களும் ஒருவர் என்கின்றார் பதவிப்பெருமை இல்லாத பண்புப் பெருந்தகை! இப்பொழுதாவது அவர் கேட்டுக் கிறுகிறுத் திருக்கத் தானே வேண்டும்! சொற் போர்க் கழகம் பூனவல்லி நீதி மன்றத்திலிருந்து புறப்பட்ட லிங்கனுக்குச் சொற் போர்க் கழகம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. காலம் கரை கடந்த வெள்ளம் போல் செல்வது; கருத்தின்றி வீண் பொழுது போக்குபவன் கைக்குக் காலம் எட்டக் கூடியதன்று என்பதை ஆழ்ந்தறிந் திருந்த ஆபிரகாம் ஊர்போய்ச் சேர்ந்தவுடனே சொற்போர்க் கழகத்தைத் தொடங்கி விட்டார். நண்பர்களிடம் வாதங்களும் எதிர்வாதங்களும் தொடங்கின. அனைவரும் பேச்சத் திறமையை வளர்த்தனர். வாதத்தில் வளர்ந்தனர்! ஆபிரகாம் வழக்கறிஞராக முடியும் என்பதைச் சொற்போர்க் கழகம் தெளிவாக எடுத்துக் காட்டிற்று. ஆயினும் பேச்சில் மட்டும் போய்க் கொண்டிருந்தால் பிழைப்புக்கு வழி? நியூஆர்லியன்சுக்குப் பயணம் நியூ ஆர்லியன்சில் வியாபார வாடிக்கை வைத்திருந்த உள்ளூர் வணிகர் ஒருவர் ஆபிரகாமை அறிந்திருந்தார். உடல் உரமும் உள்ள ஒழுங்கும் உடைய ஆபிரகாமை வெகுவாக அவருக்குப் பிடித்திருந்தது. லிங்கன் ஏழை யென்றாலும் கூட அவர் உயர்பண்பிலே ஆட்பட்டவணிகர் நெருங்கிப் பழகினார். தம் குமாரனும் ஆபிரகாமுடன் நெருங்கிப் பழக வாய்ப்புத் தந்தார். லிங்கன் வழியாகத் தம்குமாரனுக்கு அன்பும் அறிவும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை வணிகருக்கு ஏற்பட்டிருந்தது. ஒரு சமயம் ஆர்லியன்சிற்கு லிங்கனும் வணிகர் மைந்தனும் சரக்குகளோடு கப்பலில் பயணமாயினர். படகோட்டித் திரிந்த பஞ்சை லிங்கனுக்குக் கடற் பயணம் அளவிறந்த களிப்பூட்டியது. அந்தக் களிப்பிலே சிக்கிக் கூத்தாடாது கப்பல் இயங்கும் முறை, கருவி அமைப்பு ஆகியனவற்றை ஆராய்ந்து கொண்டே போனார். ஒருவாறு தம் மனத்தே கப்பலின் அமைப்பு முறையைப் படமாகப் பிடித்து வைத்துக் கொண்டார். கொள்ளைக் கூட்டம் கப்பலோட்டி கப்பலை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தினார். அத்துறையிலே போய்த் தங்கள் காரியங்களைக் கவனித்து வர வேண்டிய சிலர் இறங்கிச் சென்றார்கள். அந்நேரம்; கரிய நிறம்; கனத்த உதடு; உப்பிய கன்னம்; ஓங்கார ஒலி; சுருண்ட மயிர்; மிரண்ட விழி - இவற்றை யுடைய கொள்ளைக் கூட்ட மொன்று திடுமெனக் கப்பலுக்குள் புகுந்தது. கப்பலோட்டியைத் தாக்கினர் சிலர்; பயணக் காரரைப் பதம் பார்த்தனர் சிலர். ஆற்றலுடையவர் குபீரென எழுந்தனர்; அச்சம் உடையவர் பதுங்கினர்; இரண்டும் கெட்டவர் படபடத்தனர்! ஆபிரகாம் எதிர்ப்பு அணித் தலைமை ஏற்றார். கொள்ளைக் கூட்டம்லிங்கனின் கொடிய தாக்குதலைச் சமாளிக்க முடியாது திணறியது. வெற்றிகரமாகப் பின்வாங்கத் தொடங்கியது கொள்ளைக் கூட்டம்! லிங்கனின் மென்மை யுள்ளத்திலே அமைந்து கிடந்த வன்மையைக் கண்டு ஆச்சரியம் கொண்டான் வணிகர் மைந்தன். உயிரைக் காத்த உத்தமன் என்று மற்றவர்கள் புகழ்ந்து கொண்டார்கள். அதுவேறு; இதுவேறு தந்தையின் துப்பாக்கியால் படபடத்து விழுந்த பறவையைக் கண்டு பரிதாபப்பட்ட லிங்கன் - ஆயிரமாயிரம் பேர் அடிமையாக இருப்பதா? அந்தோ கொடுமையே! என்று கண்ணீர்விட இருந்த லிங்கன் - எந்த நீக்ரோவருக்கு விடுதலை தர இருந்தாரோ அவர்களில் சிலரைக் கடலுக்கு இரையாக்கி விட்டார்! உரிமை வேறு; உருட்டுத்தனம் வேறு; என்பதை நீக்ரோவர் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்குப் பாடம் கற்பித்தார் ஆபிரகாம். அனைவரும் ஆர்லியன்சு போய்ச் சேர்ந்தனர். ஆபிரகாம் வணிகக் காரியங்களைக் கவனித்து விட்டு, கடைத் தெரு வழியே ஒரு நாள் மாலைப் பொழுதில் உலாவி வந்தார். அங்கேதான் ஆறாகக் கண்ணீர் வடித்து அடிமைச் சந்தையைக் கண்டார். அன்று ஏற்பட்ட கொதிக்கும் உள்ளத்தின் குறிக்கோளே நீக்ரோ அடிமையர்க்கு விடுதலைதந்ததும், லிங்கனுக்கு அருளாளர் என்ற பெருமை தந்ததும் ஆகும்! தோற்றுவாய் காட்டும் ஏலக்குரல், ஆர்லியன்சு தந்த அவலக் குரல். நியூசேலம் செல்லல் தாம லிங்கனுக்குத் தம் குடியிருப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் அவர் இருந்த இடத்திலிருந்து 200 கல்களுக்கு அப்பால் உள்ள நியூ சேலம் செல்ல நினைந்தார். இப்பயணத்திற்குச் சாலைவசதியோ போக்கு வரவு வசதியோ இல்லாத நிலைமையில் இருந்தது. காட்டாறுகள் பல குறுக்கிட்டன. திடீர்த் திடீர் என்று வெள்ளம் வரவும் செய்தது. காட்டாற்று வெள்ளம் ஒன்றைக் கடந்து அனைவரும் எதிர்க்கரை அடைந்தனர். அப்பொழுது வண்டிக்குப் பின்னாக ஓடிவந்த தங்கள் நாய் காணப்பட வில்லை. அது மறுகரையில் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. மீண்டும் வெள்ளத்தில் இறங்கி, மறு கரைக்குப் போய் அந்த நாயைக் கொண்டுவர மற்றவர்கள் விரும்பவில்லை. ஆபிரகாமோ அடியெடுத்து வைக்க ஒரு சிறிதும் மனமில்லாதவராய் ஆற்று வெள்ளத்தைத் தாண்டினார். தம் வருகைக்காக வாலாட்டிக் கொண்டிருந்த நாயைத் தோள்மீது போட்டுக் கொண்டு வண்டிக்குப் போய்ச் சேர்ந்தார். நியூ சேலத்தில் ஆபட் என்னும் வணிகர் கடை ஒன்று இருந்தது. அதில் லிங்கனுக்கு வேலை கிடைத்தது. நீக்ரோ வருக்கும் லிங்கனுக்கும் ஏற்பட்ட போராட்டச் செயலைக் கேள்விப் பட்டிருந்த ஆபட், நியூ சேலத்திலே தமக்கும் மற்றவர்களுக்கும் ஓயாத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த தருக்கர் கூட்டத்திற்கு வகையான பாடம் கற்பிக்க லிங்கனைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார். அதனால் அத்தருக்கர் கூட்டத்தினிடம் ஆபிரகாமைப் பற்றி ஆபட் ஒரு நாள் எடுத்துக்கூறினார். அவர்களோ ஆபிரகாமைப் பழித்ததோடு, தங்களுடன் மற்போருக்கு வருமாறும் மார் தட்டி அழைத்தனர். வலுச் சண்டைக்கு இழுக்கும் இக்கூட்டத்தை அடக்கிவிட எண்ணிய லிங்கன் காலமும் இடமும் குறித்து, மற்போர் செய்ய முன்வந்தார். தருக்கர் கூட்டத் தலைவன் தளராது போர் செய்தாலும் இறுதி வெற்றி லிங்கனுக்கே இருந்தது. தருக்கர் தலைவன் தலை வணங்கினான். மான வீரத்திற்கு முன் மண்டியிட்டான். ஆபிரகாம் இவ் வெற்றியிலே இறுமாந்து விடாது தருக்கர் தலைவனையும், தருக்கர்களையும் அன்பினால் அணைத்துக் கொண்டார். இப்பொழுது ஆபிரகாமே அக்கூட்டத்தின் ஒப்புயர்வற்ற தலைவர். தலைவர் ஆபிரகாம் உத்தரவிடும் தலைவர் ஆபிரகாம்; உடனே முடித்து வைக்கும் தொண்டர்கள் தருக்கர்கள்! குதிரைப் பந்தயமும் சேவற் போரும் நடத்துபவர்கள் தொண்டர்கள். தலைமையாக இருந்து நீதி வழங்குபவர் லிங்கன். இத்தலைமையும், நீதி வழங்கும் செயலும் லிங்கனின் எதிர்கால வாழ்வைத்தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன. லிங்கனுடைய வீரமும் புகழும் நியூ சேலமெல்லாம் பரவியது. தொண்டர்கள் தம் தலைவன் பெருமைக்காக அரும்பாடுபட்டனர். இந்தச் சூழலுக்கிடையேயும் லிங்கன் ஆபட் கடையில் சிப்பந்தியாக இருந்து கொண்டுதான் வந்தார். நேர்மைக்காகப் பாடுபட்டுக் கொண்டுதான் இருந்தார். *சரக்கு வாங்குவோரின் பொருளை அதிகமாக எடுத்துக் கொள்ளாது தாம் கொடுக்க வேண்டிய அளவிலும் குறைத்துக் கொடுக்காது வாணிகச் செம்மையைக் காத்து வந்தார் லிங்கன். வாங்க வேண்டிய அளவினும் எவரிடமேனும் பொருள் அதிகமாகப் பெற்றிருந்தால் மீண்டும் கொண்டுபோய்க் கொடுத்திருக் கின்றார். எவருக் கேனும் கொடுக்க வேண்டிய அளவில் குறைத்துக் கொடுத்திருந்தால் அந்தக் குறைவைத் தாமே போய் நிறைவு செய்து வந்திருக்கிறார். இவ்வளவு காரியங்களிலும் ஆபட் தடையாக இருந்ததில்லை. நீராவிப்படகு செய்தல் நியூ ஆர்லியன் கடற் பயணத்தின் போது ஆராய்ந்தறிந்த கப்பலாராய்ச்சியை வைத்து ஆபிரகாம் தாமே நீராவிப் படகொன்றை உண்டாக்கிக் கொண்டார். அந்தப் படகின் மூலம் வருமானம் வரத்தொடங்கியது. அன்பர்கள் பலர் பெருகியதால் அவர் தொழில் வருமானமும் பெருகலாயிற்று. போர் வீரர் இந்நிலைமையில் அமெரிக்காவில் பயங்கரமான போராட்டம் ஒன்று தொடங்கியது. மக்கள் அல்லல் பட்டு ஆற்றாது அலறினார். ஆனால் ஆபிரகாமோ அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார். ஆறுதல் மொழியோடு மட்டும் நில்லாது தம் குழுவினர் அனைவரையும் கூட்டி ஆயுதம் தாங்கச் செய்து அவர்கள் விருப்பத்தின்படி தாமே படைத்தலைமையும் ஏற்றார். வீரர்களுக்கு அரிய பயிற்சி தந்தார். எழுச்சியை ஏற்படுத்தினார். இடை இடையே விகடமும் பேசிக் கொண்டார். ஆபிரகாம் தலைமையில் அமர்ந்து பணியாற்றும் பெருமை கிடைத்தற்காக வீரர்கள் மகிழ்ந்தனர். அச்சமூட்டும் போராட் டத்தைத் துச்சமாக மதித்து மகிழ்ச்சியோடு பொழுது போக்கினர். போராட்டக் கலையில் பேராற்றல் லிங்கனுக்கு இருந்ததால் எத்தகைய பெருஞ்சேதமும் இன்றிச் சமாளித்தார். அதனால், துப்பாக்கியைத் தோளிலே தாங்கிக் கொண்டிருக்கும் பதவி கிடைத்திருந்தாலும் தமக்குச் சுடவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படாது போனதற்காக லிங்கன் பிற்காலத்தே பெருமகிழ்ச்சி அடைந்திருக் கின்றார். நில அளவையாளர் போர் வெறியகன்று நாட்டில் அமைதி ஏற்பட்டவுடனே நில அளவையாளராகப் (சர்வேயராகப்) பணியாற்றத் தொடங் கினார். வியாபாரத்தில் லிங்கன் கொண்டிருந்த நேர்மைக்கு மதிப்புக் கொடுத்து வந்த மக்கள், நில அளவையிலே அவர் கடைப்பிடித்த செம்மையைக் கண்டு பெரிதும் பாராட்டினர். அதனால் பொய்மை நீங்கிய புனிதன் கள்ளம் அகன்ற கண்ணியன் என்ற பெருமைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடரலாயின. அஞ்சலகத் தலைவர் ஊருக்கு வெளிப்பகுதிகளிலே நிலமளந்து வந்த லிங்கன் ஊருக்குள்ளே இருந்த அஞ்சலகத் தலைவராக (போட் மாடர்) மாறினார். தம் அறிவைப் பெருக்கிக் கொள்வதற் காகவே வலியக் கிடைத்த வாய்ப்பாக இத்தொழிலைக் கருதிய லிங்கன் தொப்பியையே அஞ்சல் பையாக வைத்துக் கொண்டு நடைபாதை யெல்லாம் படிக்க ஆரம்பித்தார். பத்திரிகைகளில் பலப் பல வகையானவை அவ்வூருக்கு வந்து கொண்டிருந்ததால், அவற்றை யெல்லாம் படிப்பார். படித்த பின்னர்த்தான் கொண்டு போய்ச் சேர்ப்பார்: இதனால் உலகியல் அறிவு உச்சமடைந்தது. அமெரிக்கச் செய்தித் துறையொன்று நியூசேலம் அஞ்சலகத் திலே 6 அடி 4 அங்குல உயரமுடைய ஒரு மனிதரின் மண்டை யோட்டுக்குள்ளே நிறுவனம் செய்யப்பட்டுச் செம்மையாக நடந்து வந்தது என்று சுருங்கக் கூறிவிடலாம். நடமாடும் சுவடிச் சாலையாம் லிங்கனால்நியூசேல மக்களின் அரசியலறிவு வளர்ந்தது; வளர்த்தார் ஆபிரகாம். மக்கள் ஆதரவும் வளர்ந்தது; ஆபிரகாமும் வளர்ந்தார். அதன் விளைவுதான் லிங்கனைச் சட்ட சபைக்குப் பிடித்துத் தள்ளியது. 4. ஒழுங்குள்ள ஆபே சட்டசபைத் தேர்வு போர்க்களத்தலைமை ஏற்றபோது லிங்கனது புகழ் நியூசேலத்திற்கு அப்பாலும் படர்ந்திருந்தது. அதனால் போர் முடிந்தவுடனே மக்கள் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கும்படி வற்புறுத்தினர். லிங்கனுக்கு அப்பொழுது சட்ட சபைக்கு நிற்க விருப்பமில்லை. ஆயினும் நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவே நின்றார். அத்தேர்தலில் லிங்கனுக்குத் தோல்வியே கிடைத்தது. அதனால் சோர்வுற்றார். நண்பர்களும் மக்களும் விட்டுவிட வில்லை. மீண்டும் வற்புறுத்தி இல்லினாய் பகுதிக்குச் சட்ட சபை உறுப்பினராக நிறுத்தி வைத்தனர். அன்பர்கள் எதிர் பார்த்தது வீண் போகவில்லை. ஆபிரகாம் வெற்றி பெற்றார். சட்டசபை உறுப்பினரான ஆண்டு 1834-லிங்கனின் அப்போதைய வயது 25. சட்ட சபைக்குச் செல்ல விருந்த லிங்கனுக்குக் கிழிந்த கோட்டும், அழுக்கேறிய உடையும் நைந்தும் நசிந்தும் இருந்த பட்டுத் தொப்பியுமே சொத்தாக இருந்தன. அதனால் இதுவரை உள்ளத்தையும் உணர்வையுமே கவனித்து வந்த லிங்கனுக்கு உடையையும் கவனிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தலையைக் கோதுவதற்குள்ளாகவும், காலணியைச் சீராக்குவதற் குள்ளாகவும் எவ்வளவோ படித்து விடலாம் என்னும் கற்பனையுலக லிங்கன் இதனை விரும்பவில்லையாயினும் புத்துடையும், புதுச்சோடும் தேவைப்பட்டன; தேவையைச் சட்டமன்றம் தந்தது; வழிவகையை அது தரவில்லை! பன்முறை தேர்வு லிங்கன், பழக்கப்பட்டிருந்த நண்பர் ஒருவரிடம் 200 டாலர் கடன் பெற்றுத் தமக்கு வேண்டிய உடைகளையும் உபயோகப் பொருள்களையும் வாங்கிக் கொண்டார். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இவை இல்லாதிருந்தால் கூட உள்ளச் செம்மையும், உரையில் தூய்மையும், உழைப்பில் நேர்மையும் இருந்தால் போதும், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்னும் அமெரிக்காவின் தேர்தல் சிறப்புக்கு ஆபிரகாம் எடுத்துக் காட்டாகத் துலங்கினார். அங்கு, தேர்தலுக்குப் பணம்வேண்டாம்; பதவி வேண்டாம்; வேண்டுவது பண்பு! இது ஆபிரகாமினிடம் அளவிறந்திருந்தது. அதனால் சட்ட மன்ற உறுப்பினராகப் பன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். செயல் வீரர் சட்ட சபைக்குச் சென்ற தொடக்கத்திலே ஆபிரகாம் அவ்வளவாக எந்த வாதத்திலும் கலந்து கொண்டதாகத் தெரிய வில்லை. சட்ட சபையின் சமாதானத்திற்காகவும் நற்செயலுக் காகவும் பாடுபட்டார். பிணக்குக் கொண்டு இருப்பவர்களை நன்னெறி காட்டி ஒன்று சேர்த்தார். அரசியல் காரியங்களைக் கவனிப்பதற்காக ஏற்பட்ட குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக அமைந்து செயல் வீரராகப் பணியாற்றினார். நல்லார் ஒருவர் துணை இந்த அளவோடு நிற்க விரும்பாத லிங்கன் வழக்கறிஞர் டூவர்ட் என்பவருடைய உறவைத் தேடிக் கொண்டார். டூவர்ட் தம்மைப் போல் பிறரும் முன்னேற வேண்டும் என்ற பெருங் குணம் கொண்டவர். அதனால் ஆபிரகாமைச் சந்திக்கக் கூடிய நேரங்களிலெல்லாம் சட்டத்துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள் பலவற்றை எடுத்துக் கூறியதோடு தம்மிடம் இருந்த சட்டப் புத்தகங்களை லிங்கன் விரும்பும் போதெல்லாம் எடுத்துப் படித்துக் கொள்ள உரிமை தந்தார். டூவர்ட் லிங்கனுக்கு உயிர் நண்பராகவும், உயர்ந்த ஆசானாகவும் திகழ்ந்தார். அதனால் சட்டசபை அலுவல் இல்லாத நேரமெல்லாம் சட்டப் படிப்பில் ஈடுபட்டார் லிங்கன். அவர் கனவு வீணாகி விடவில்லை. இதற்குள்ளாக மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். ஆயினும் வழக்குத் துறையிலே நாட்டம் மிகுந்திருந்தது. அதன் காரணத்தால் 1837 ஆம் ஆண்டு பிரிங் பீல்டு சென்று தம்மை ஒரு வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். இப்பொழுது லிங்கனுக்கு இரண்டு பதவிகள். ஒன்று, சட்டமன்ற உறுப்பினர்; இரண்டு வழக்கறிஞர். வழக்கறிஞர் வழக்கறிஞராக லிங்கன் பிரிங் பீல்டு செல்லக் கூடிய காலத்தில் கையில் இருந்தது ஏழே ஏழு டாலர்கள் தாம். வாடகைக்கு அறை எடுத்துத் தங்கிக் கொள்வதற்கான பணம்கூடக் கையில் இல்லை. லிங்கனின் ஏழ்மை நிலையைக் கண்ட நண்பர் ஒருவர் இனாமாகத் தங்குவதற்கு இடம் தந்ததுடன், தம் படுக்கையின் ஒரு பகுதியில் படுத்துக் கொள்ளவும் உரிமை தந்தார். அதேபடுக்கையில் லிங்கன் மாதக்கணக்காகப் படுத்திருந்திருக்கிறார்; உணவுக்கும் அந்த நண்பரும் பிறிதொருவரும் வகை செய்தார்கள். லிங்கனுக்கு ஏதேனும் பணம் கிடைக்குமானால் கிடைத்ததைக் கொண்டு போய் நண்பர்களிடம் கொடுத்து விடுவார். அலைந்த பிழைப்பு இப்போதைய நீதிமன்றங்கள் போல் அக்காலம் அமெரிக்காவில் நீதிமன்றங்கள் இல்லை. ஊர் ஊராக வழக்கறிஞர்கள் சென்று அங்கங்கே உள்ள சத்திரம் சாவடிகளில் தங்கி நீதி வழங்கி வந்தனர். அதனால் வழக்கறிஞர்லிங்கன் பிழைப்பு, அலைந்த பிழைப்பாகப் போய்விட்டது. வழக்கறிஞர்களில் பலர் குதிரைகளிலும் வண்டிகளிலும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று வந்தனர். ஆனால் லிங்கனோ எத்தனை கல்களானாலும்நடந்தே போனார். சக்தியும் சேறும் நிறைந்த சாலைகளிலும், அளறு படிந்த ஆறுகளிலும் நடந்து நடந்து உடையெல்லாம்அழுக்கேறிப் போய்விடும். புகை போக்கி போன்று நீண்டு அழுக்கேறிய கால்சட்டை என்று வழக்காள நண்பர்கள் நையாண்டி செய்யும் பொருளாக நம் லிங்கன் விளங்கியிருக்கிறார். ஆனால், அதனையும் மகிழ்வாக ஏற்றிருக்கிறார் பிறர் மகிழ்வுக்காக! தொண்டர் ஆபிரகாம் வண்டியில் நண்பர்களோடு சென்றாலும் ஒழுங்கற்ற பாதைகளில் வண்டிக்கு வழிகாட்டுவதும், வழியிலே ஏதேனும் தடையிருந்தால் நீக்கி வைப்பதும் லிங்கன்தான். தாம் எவ்விதக் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாலும் குற்றமில்லை. மற்றவர்களாவது அதைக் கொண்டு மகிழ்ச்சியடையட்டும் என்ற பேரெண்ணப் பெரியராக லிங்கன் இருந்தார் அல்லவா? ஆ! ஆ!! அருள்தான் உருவம்! பன்றியொன்று சேற்றுள் மாட்டிக் கொண்டு திண்டாடியது. காலுறையைக் கழற்றிச் சென்று உதவி செய்ய முடியாதபடி அவசரவேலை இருந்ததால் லிங்கன் பன்றி நின்ற இடத்தினின்று நெடுந்தொலைவு நடந்து சென்றுவிட்டார். அதற்குப் பின்னும் அவர் மனம் விட்டு வைக்கவில்லை. அழியப் போகும் உயிரைக் காப்பதினும் என்ன அவசரம் இருக்கமுடியும் என்று இதயம் இடித்துக் கேட்டது. மீண்டும் திரும்பினார். சோடுகளையும், உறையையும்கழற்றிவிட்டு, சேற்றுள் இறங்கிப் பன்றிக்கு விடுதலை தந்தார். இப்பரிவுடைமையைப் போற்ற முன் வரவில்லை பிற வழக்கறிஞர்கள்! கிண்டலுக்கு மேலுமொரு வாய்ப்புக் கிடைத்து விட்டதாகக் கொக்கரித்தார்கள். இப்படியும் பொறுமையுண்டா? லிங்கன் ஓரிடத்தே நின்று கொண்டிருந்தார். கையிலே சட்டப் புத்தகம் இருக்கின்றது. சரேலென முன்வந்த ஒருவன் தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டே, ஐயா, தங்கள் உடைமை ஒன்று என்னிடம் நெடுங்காலமாக இருக்கின்றது. அதைச் சேர்ப்பிக்கவே வந்தேன் என்று கத்தி யொன்றை நீட்டினான். லிங்கனும் வாங்கிக் கொண்டே காரணம் கேட்டார். வணக்க மிட்ட அவன், ஒரு பெரியவர் பல ஆண்டுகளுக்கு முன்னாக என்னிடம் இக் கத்தியைத் தந்து நீ பார்ப்பவர்களில் எவன் அசங்கிய மானவனாக இருக்கின்றானோ அவனிடம் இக் கத்தியைக் கொடுத்து விடு என்றார். அதற்கு உரிமைப் பட்டவர்களை இது வரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தாங்கள் தாம் கத்தியின் உடைமைக்காரர் என்பதை இப்பொழுது தான் கண்டு பிடித்தேன் என்று பேசிவிட்டு நடக்க ஆரம்பித்தான். கோபப்படுவதற்குப் பதிலாகக் குறுஞ் சிரிப்புச் சிரித்துக் கொண்டே என் பொருளை இதுவரை காத்துத் தந்ததற்காக நன்றி செலுத்திக் கொள்கின்றேன் என்றார் ஆபிரகாம். இவ்வாறு வண்டியோட்டும் ஒருவனே நையாண்டி பண்ணும் அளவுக்கு லிங்கன் நடையுடை இருந்தது. ஆயினும் வாதத் திறமையிலே சிக்கி வயமிழந்தவர் பலராவர். வழக்காடுவதற்கோர் துணைவர் தம்மைச் சட்டத் துறையில் புகுத்திய டூவர்ட் டோடு சேர்ந்து வழக்கு நடத்திக் கொண்டு வந்தார்லிங்கன். டூவர்ட் பெரும்பாலும் தம் காரியாலயத்திற்கு வருவதோ வழக்குகளைப் பற்றி ஆராய்வதோ கிடையா. அவர் அப்பொழுது அரசியலிலே தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதனால் காரியாலயப்பணியும் வழக்காடும் பொறுப்பும் லிங்கனுக்கே இருந்தன. நன்றியுடைமை காரணமாக லிங்கனே அத்தனை தொழில்களையும் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் கென்டன் என்பவரையும் பங்காளியாகச் சேர்த்துக் கொண்டு வழக்காடினார். தாம் வெள்ளைமாளிகைக்குப் போகுமளவும் லிங்கன் கென்டனுடன் சேர்ந்துதான் வழக்காடி வந்தார். வழக்குக்கு வழக்கு லிங்கன் எந்த வழக்கையும் எளிதில் எடுத்துக் கொள்ள மாட்டார். நன்றாக விசாரித்தறிந்து நீதிக்கு முரண்படாததாய் வெற்றி தருவதாய் இருக்கும் வழக்குகளையே எடுத்துக் கொள்வார். எத்தனையோ நீதியான வழக்குகளை, எவரும் தம்மை நாடிவராத நிலைமையில்கூடப் பயன்எதிர்பாராது எடுத்து நடத்தி வெற்றி தந்திருக்கிறார். லிங்கன் தம்மிடம் வரும் வழக்கின் பெறுமானத்தைக் கொண்டு பணம் வாங்க மாட்டார். வாதாடுவதற்கு ஆகும் நேரத்தைக் கொண்டே தொகை வாங்குவார். அவர் வாங்கிய தொகை உடன் வழக்கறிஞருக்கும், மற்ற வழக்கறிஞர்களுக்கும், வெறுப்பூட்டுவதாக இருந்தது. லிங்கன் தம் தரத்தைக் குறைத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். நிறமன்று; நீதி நீக்ரோவர் ஏதேனும் வழக்குக் கொண்டுவரின் அவ்வழக்கை ஏற்று நடத்துவது இழுக்கு என்பது. வழக்கறிஞர்களின் ஒருமித்த கோட்பாடாக இருந்தது. லிங்கனோ, நீதி எவன் பக்கம் இருந்தாலும் அவன் பக்கத்தே நின்றுவாதாடுவதே வழக்கறிஞன் தொழில். நம் கண்களுக்கு ஆண்டானும் அடிமையுமாகத் தோன்றுவது போல நீதியின் கண்களுக்கும் தோன்றுவதில்லை. எனக்குத் தேவையான தெல்லாம் வழக்குக் கொண்டு வருபவனின் நிறமன்று; நீதி என்று துணிந்து வாதாடப் புறப்பட்டார். வழக்கறிஞர்களெல்லாம் லிங்கன் ஆபத்திலே மாட்டிக் கொண்டு அல்லல்படுவார் என்று தீர்க்க தரிசனம் கூறிக்கொண்டிருந்தனர். அன்றைக் காலம் அப்படி இருந்தது. ஆனால் அம் முடிவுக்கு அசைபவரா ஆபிரகாம்! ஒரு வழக்கு காட் என்னும் நீக்ரோ ஒருவன் வடநாட்டைச் சேர்ந்தவன். சுதந்திரமாகத் திரிந்துவந்தவன். அவனைத் தென்னாட்டடிமை என்று கூறி வளைத்துப் பிடித்தனர். காட்டோ தான் அடிமையாக இருந்ததில்லை என்றும், வடநாட்டில் எவரடிமையுமின்றிப் பல்லாண்டுகள் வாழ்ந்து வந்ததற்கு ஆதாரம் உண்டென்றும், வாதாடும் உரிமை தனக்கு வேண்டுமென்றும் நீதிமன்றத்திற்கு ஒரு விண்ணப்பமனுப்பி யிருந்தான். நீக்ரோ ஒருவன் வெள்ளையர்களை எதிர்த்து நீதி கேட்பதா? அடிமையாகவே படைக்கப்பட்ட அவனுக்கு ஆகுமா இத்துணிவு? அடிமையர் விடுதலைக்கு ஆரம்பம் செய்கிறான் அற்பன்! என்று பொங்கி எழுந்தார் நீதிபதி! நீதி மன்றமும் கொதித்தெழுந்தது. நீ தரும்விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள முடியாது; நீ அடிமையாக இருந்தாலும்இல்லாவிட்டாலும் பிறவி அடிமை; அதை மாற்ற முடியாது என்று விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்தது. இத்தள்ளுபடி நிகழ்ச்சியைச் செய்தித் தாளிலே கண்டு, வெள்ளையனுக்கு ஒரு சட்டம் கறுப்பனுக்கு ஒரு சட்டமா? என்றெழுந்த கொதிப்பே லிங்கனைச் சட்டம் பயிலத் தூண்டியது; வழக்கறிஞராக ஆக்கியது. நீக்ரோவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகச் சட்டம் படித்தலிங்கனுமா நீக்ரோவர் வழக்கை ஒதுக்குவார்? லிங்கனை உணர்ந்து கொள்ள நாடு இன்னும் தவறுகின்றது! அறநெஞ்சம் நீதிமன்றத்திற்கு வராமலே வழக்குகளைத் தீர்த்துவைக்க வழக்கறிஞர்கள் முயலவேண்டும். அப்படித் தீர்த்துவைக்க முடியாத வழக்குகள் இருந்தால் தான் நீதிமன்றத்திற்குக் கொண்டுவர வேண்டும். இம்மாதிரி செய்வது நாட்டின் நலம் நாடக்கூடிய ஒவ்வொரு வழக்கறிஞரின் கடமையுமாகும் என்பார் லிங்கன். எதைப்பற்றியும் எமக்குக் கவலை இல்லை; எமக்கு வேண்டுவது பணமே என்ற குறிக்கோளாளர்க்கு இது பிடிக்கவில்லை. பிறருக்குப் பிடிக்காமைக்காக லிங்கன் எந்தச் செயலையும் விட்டுவிடமாட்டார். அதனால், அவர் உடலமைப் பையும், விடாப்பிடியையும் கொண்டு கொரில்லா என்ற பட்டப்பெயரால் அழைக்க ஆரம்பித்தனர். இல்லாள் விருப்பம் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது சட்டசபைக்கு 1836 முதல் 1846 முடிய ஆறுமுறை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். தமக்கு 33 ஆம் வயதான 1842 ஆம் ஆண்டில் மேரி என்னும் மங்கையை மணந்து கொள்கின்றார். வழக்கறிஞர் தொழிலிலே பெரும் பாலும் நாட்டம் செலுத்திக் கொண்டிருந்த லிங்கன் அரசியலிலே பெரிதும் ஈடுபட்டார் என்றால் அதற்குக் காரணமாக இருந்தவள் மேரியேதான். ஆபிரகாம் நல்ல உடையோடு திரியவேண்டும் நாகரிக நடையோடு வாழவேண்டும் என்பதிலே பெரிதும் அக்கறை காட்டினாள் மேரி. அவ் அக்கறை தன் பெருமைக்காகவே இருந்தாலும்கூட அது ஆபிரகாம் முன்னேற்றத்திற்குத் துணையாக இருந்தது என்பதற்குச் சந்தேகம் இல்லை. லிங்கன் தலைவர் தேர்தலுக்கு நிற்க விரும்பாத போது நான் அமெரிக்கத் தலைவரின் மனைவி என்று சிறப்படை வதற்காகவாவது தலைவர் தேர்தலுக்கு நில்லுங்கள் என்று வற்புறுத்தினாள் மேரி. கோபக் குணமும் கொடுமைச் செயலும் குடி கொண்டவளாக அவள் இருந்தாலுங்கூட தாம் தலைவரான தற்குக் காரணமாக இருந்தவள் மேரியே என்று கூறிக்கொள்ள லிங்கன் தவறியதில்லை. இல்லற வாழ்க்கை மேரிக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. அவர்களைக் கட்டுப்படுத்தி லிங்கன் வளர்க்கக் கருதியது இல்லை. காரியா லயத்தில் அத்தனை குழந்தைகளும் கூடிச்சேர்ந்து கூத்தடிக்கும். வைத்த எந்தச் சாமானும் வைத்த இடத்திலே மீண்டும் இருக்காது. லிங்கனை வேலை செய்வதற்கும் விட்டு வைப்பதில்லை. லிங்கன் படுத்திருந்தாலும், உட்கார்ந்திருந்தாலும் மேலே ஏறி விளையாடு வார்கள்; அடிப்பார்கள்; மிதிப்பார்கள். தங்கள் விளையாட்டிலே கலந்து கொள்ளக் கட்டளை இடுவார்கள். லிங்கன் வேலைக் கவனிப்பிலே இருந்து விட்டால் எட்டி யுதைத்துவிட்டுப் பொங்கிக் கொழிப்பார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டு புன்முறுவலோடு காட்சியளிப்பார் அந்தப் பண்புப் பெருந்தகை! அவர் கொண்டிருந்ததெல்லாம் அளவிறந்த அல்லல் தாம் அனுபவித்தாலும் அடுத்தவர்களாவது அகமகிழ்ச்சி கொண்டிருக் கட்டும் என்பதுதான். வாய்ப்பு வரும்போதெல்லாம் லிங்கன் நீக்ரோவர் விடுதலை பற்றிப் பேசினார்; எழுதினார்; விவாதித்தார். சட்ட மன்றத்தில் தம் கொள்கைகளை ஆதரிக்கக் கூடியவர்களை ஒன்று திரட்டினார். வடநாட்டிலே ஆதரவுவளர்ந்தது; தென்னாட்டிலே பகை பெருகியது. எப்பொழுதும் விடுதலை விடுதலை என்றே முழங்கிக் கொண்டிருந்தார். அதனால் என்ன நேரும் என்பதையும் லிங்கன் உணராது போய்விடவில்லை. நன்றாக அறிந்திருந்தார்; நாளும் நினைவிலே கொண்டிருந்தார். காரிசான் நீக்ரோவருக்கு விடுதலை வேண்டும் என்று எழுதிய காரிசான் என்ன ஆனார்; லிபரேடர் பத்திரிகை என்ன ஆனது; காரியாலயம் தான் என்ன ஆனது, என்பதை லிங்கன் மறந்து விடவில்லை. உணர்ச்சியை வெளிக்காட்டத் தொடங்கினார் காரிசான். அடிமை வழக்கம் அமெரிக்க நாட்டை விட்டு அகல வேண்டும்; ஆண்டவன் படைப்பில் ஏற்றத்தாழ்வு இல்லாதபோது ஏனிந்தக்கெடுமதி என்று கேட்டார் தம் லிபரேடர் பத்திரிகையிலே. உள்ளத்தே ஒடுக்கி வைத்திருக்காது உணர்ச்சியை உரைக்க ஆரம்பித்தார் காரிசான். அவ்வளவுதான், கொதித்தெழுந்தது கூட்டம்! காரிசானைச் சூழ்ந்து கொண்டு கண்டபடி வாட்டி வதைத்தது. உயிரைப் போக்கி விட்டிருக்கும் காரிசான் மட்டும் இன்னும் ஒருநொடி நேரம் தப்பிச் செல்லாது இருந்திருந்தால்! காரிசான் தப்பிவிட்டார் என்றறிந்தது கூட்டம். காரியாலயத்தின் மேல் படையெடுத்தது. அந்தோ! காரிசான் உயர்வை வெளிப்படுத்த ஒரே ஒரு கருவியாக இருந்த காரியாலயம் சிதைக்கப்பட்டது. கருவிகள் உடைக்கப்பட்டன. கனலுக்கு இடையே காரியாலயம். கலங்கலுக்கிடையே காரிசான்! இவ்வளவோடு விட்டதா கூட்டம்! காரிசானுக்கு ஆதரவாக இருப்பவர்களைத் தேடிப்பிடித்து இரத்தக் கொடை வாங்கிக் கொண்டது; கொன்று தீர்த்துங் கொண்டது. இவற்றை யெல்லாம் அறியாதவரல்லர் லிங்கன். எதற்கும் துணிவாக இருந்தார். உயிரைக் கொடுத்துத்தான் நீக்ரோவருக்கு விடுதலை தரவேண்டும் என்பது இறைவன் விருப்பமாக இருந்தால்அதைச் செய்யத் தயார் என்ற முடிவினால் தான் விடுதலைக்காக முயன்றார். நடுத்தர வாழ்வு சுதந்திர நீக்ரோவை அடிமை நீக்ரோ என்று விற்க ஆரம்பித்தால் வழக்குத் தொடுத்து அவர்களுக்கு விடுதலை தந்தார். ஏழை எளியவர்களிடம் எவ்விதப் பணமும் வாங்காது நேர்மைக் காகவே வாதாடினார். இந்தக் காரியங்களால் நாளாவட்டத்தில் மேலும் மேலும் பேரும்புகழும் பெருக ஆரம்பித்தன. வழக்குகளும் அதிகமாக வரலாயின. இப்பொழுது லிங்கன் குதிரை ஒன்றை விலைக்கு வாங்கிக் கொண்டு அதில் ஏறிப்போய் வழக்குகளை விசாரித்து வந்தார். கிடைத்த வருமானத்தைக் கொண்டு வீட்டைச் சிறிது விரிவுபடுத்திக் கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியது. லிங்கனது வாழ்வு இப்பொழுது நடுத்தர வாழ்வாக இருந்தது எனலாம். சொல்லாற்றல் லிங்கன் வாதம் செய்வதில் வல்லுநராக இருந்தார். தம்மை இளமையிலே ஆதரித்து வந்த சீமாட்டி ஒருத்தியின் மைந்தன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்குமேடைக்குச் செல்லக் கூடிய நிலைமையில் இருப்பதைச் செய்தித்தாள் வழியாக லிங்கன் அறிந்தார். அவர்கள் வேண்டுதலை எதிர்பார்க்காமல் தாமே முன்வந்து சீமாட்டியின் மகன் சார்பிலே வழக்காடினார். அதற்கு முன்பு இவனே குற்றவாளி என்று முடிவு கட்டப் பட்டிருந்தது. மேல் விசாரணை யாக லிங்கன் எடுத்துக்கொண்டு, இவன்தான் கொலை செய்தான் என்பது உமக்குத் தெரியுமா? என்று எதிரியின் சாட்சியினிடம் வினவினார். ஆம். நான் நேராக என் கண்ணால் கண்டேன் என்றார் அவர். அப்பொழுது நேரம் என்னவாக இருக்கலாம் என்று மீண்டும் லிங்கன் வினவினார். சாட்சியோ இரவு 10 முதல் 11 மணியளவுக்குள் இருக்கும் என்றார். இரவு 10 முதல் 11 மணி என்பதில் திருத்தம் ஒன்றும் இல்லை என்று எண்ணுகின்றேன். அந்த இரவில் இவன்தான் கொலை செய்தான் என்பதை நீர் எப்படித் தெளிவாகக் கண்டிருக்க முடியும்? என்று மேலும் கேட்டார்லிங்கன். அப்பொழுது நிலா பகல் போல் ஒளி வீசிக் கொண்டிருந்தது. அதனால் இவர்தாம் கொலையாளி என்பது தெளிவாகத் தெரியும்! சந்தேகம் இல்லை என்றார் சாட்சி. நீர் இவன் கொலை செய்ததை இரவு 10 முதல் 11 மணிக்குள் பார்த்தீர். அப்பொழுது நிலா ஒளி வீசிக் கொண்டிருந்ததால் இவன் தான் என்பது தெளிவாகத் தெரிந்தது; அப்படித்தானே? என்று சாட்சியளித்த பதிலெல்லாம் சேர்த்துக் கூறினார் லிங்கன். நீதிபதியைப் பார்த்து நீதிபதியவர்களே, கொலை நடந்தது இரவு 10 முதல் 11 மணிக்குள் என்றும், அந் நேரத்தில் நிலவொளி தெளிவாக இருந்ததென்றும் சாட்சியார் கூறுகின்றார். ஆனால் பஞ்சாங்கமோஅன்று 12 மணிக்கு மேல் தான் நிலவுகால் வீசலாயிற்று என்பதைக் காட்டுகின்றது. அப்படி யானால் இவர்கூறிய வாக்கை உண்மையென ஒப்புக்கொள்ள வழியில்லாது போகின்றது, என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தார். லிங்கன் சாதுரியத்தால் பொய்க்குற்றம் சாட்டப் பட்டவன் விடுதலையடைந்தான். சீமாட்டி எவ்வளவோ வற்புறுத்தியும் கூடச் சிறிதும் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் லிங்கன். மறுத்ததோடு நில்லாமல் எப்பொழுது எப்பொழுது என்னுதவி தேவைப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் வாருங்கள் என்று ஆறுதல் மொழி கூறினார். அவ்வளவு நன்றியறிதல் லிங்கனிடம் இருந்தது. நன்னெஞ்சம் விதவை ஒருத்தியின்மீது சீமான் ஒருவர் வழக்குத் தொடர்ந் திருந்தார். அச்சீமான் தம்வழக்கை லிங்கன் எடுத்து நடத்தும்படி வேண்டிக் கொண்டார். உண்மையில் சட்டம் சீமான் பக்கம்தான் சாதகமாக இருந்தது. உறுதியாக வெற்றி பெற்றுத் தரலாம்; சிக்கலான வழக்குமில்லை. ஆயினும் லிங்கன் அந்த வழக்கை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார். சீமானிடம் உங்கள் பக்கம் சட்டம் சாதகமாக இருந்தாலுங்கூட, இதனை நடைமுறைக்குக் கொண்டு வரும்போது ஒரு விதவைப் பெண்ணும் அவள் குழந்தை களும் அல்லலுற வேண்டிய திருக்கின்றது. இந்த இடத்தில் எனக்குச் சட்டத்தைப் பார்க்கிலும் கூட ஒழுங்கு, சக்தி வாய்ந்ததாகத் தெரிகின்றது என்று கூறி, வாதாட மறுத்து விட்டார். வருமானத்தைப் பற்றிக் கவலை. இல்லை; அதனால் அடுத்தவர் வாழ்க்கைத் தரம் பாதிக்கக் கூடாது என்பது லிங்கனின் கொள்கை. நாய்க்கடி வழக்கு ஒரு சமயம் ஒரு வேடிக்கையான வழக்கு வந்தது. வழியே சென்று கொண்டிருந்த ஒருவன் தன்னைக் கடிக்க வந்த நாயைச் சமாளிப்பதற்காக அவன் வைத்திருந்த கம்பை வீசினான். அந்தக் கம்பு கத்தி செருகப் பட்டதாக இருந்ததால் அது நாயின் வாயைக் கிழித்து விட்டது. நாய் இறந்தது. வழிப்போக்கன் தற்காப்புக்காகச் செய்திருந்தால் கத்தியில்லாப் பின்புறத்தால் நாயை வீசியிருக்கலாம். அவ்வாறு செய்யாததால் வஞ்சம் தீர்ப்பதற்காகவே செய்யப்பட்ட காரியமாகும் என்று குற்றம் சாட்டப் பட்டான். எதிர்த் தரப்பில் லிங்கன் வாதாடினார். அதுகால், இவர்தடியின் பின்புறத்தால் நாயைத் தாக்கியிருக்கலாம்தான். ஆனால், அத்ந நாயும் பின் புறமாகவே ஓடிவந்து இப்படிப் பின்புறத்தால் கடித்திருக்கலா மல்லவா? என்று சொல்லிக் கொண்டே பின்புறமாக ஓடிவந்தார். மன்றத்தில்சிரிப்பொலி அடங்கவில்லை. வெற்றி லிங்கன் பக்கம் தான். ஒழுங்குள்ள ஆபே இப்பொழுது லிங்கன் வாழ்க்கைத் தரத்தை இன்னும் சிறிது உயர்த்திக் கொண்டார். அதே நேரம் தம் தந்தைக்கும், எதிர்பார்த்ததற்கு மாறாக அன்னையினும் பன்மடங்கு அன்பு செலுத்தி வந்த சிற்றன்னைக்கும் உதவி செய்ய எண்ணினார். அவர்எண்ணப்படி செய்யப் பெரும் தடைக்கல்லாக மேரி இருந்து வந்தாள். ஆனாலும் அவ்வப்போது தம்மால் இயலுமட்டும் பண உதவி செய்தார். சிற்றன்னை பெயரால் நிலம் வாங்கிவைத்து நிலையானவருமானமும் உண்டாக்கினார். இவ்வளவு காரியங் களும் செய்ததன் பின்னர் ஒழுங்குள்ள ஆபே என்ற உயர்ந்த பெயர் அனைவர் உரையிலும் உள்ளத்திலும் இடம் பெறலாயிற்று. இந்தப் பாராட்டைக் கேட்டுக் கொண்டிருக்க லிங்கனுக்குப் பொழுது இல்லை. தம் இலட்சியம்நிறைவேற்றப்பட வேண்டுமே என்ற ஏக்கமே எப்பொழுதும் வெதும்பிக் கொண்டிருந்தது. 5. மேரிக்கு எக்களிப்பு மேதைக்குத் தத்தளிப்பு ஆபிரகாம் சட்ட சபைக்குள் நுழைந்த பின்னர்ச் சிலருள்ளத்தே விடுதலை எழுச்சி ஏற்பட்டது. அதன் முன்பெல்லாம் நீக்ரோவருக்கு விடுதலைகூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தவர்கள் கூட லிங்கனது கட்சியிலே சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தனர். அடிமை முறை அவசியம் இருக்க வேண்டுமென்று அன்று எண்ணிக் கொண்டி ருந்தவர்கள்கூட வாய்விட்டுரைக்க வெட்கினர். அவ்வளவு தூரம் ஆபிரகாம் கொள்கைக்கு ஆதரவு தலைகாட்டலாயிற்று. ஆயினும் அரசியலில் பெரும் பங்கெடுத்துக் கொண்டிருந்த தலைவர்களுள் எண்ண வேற்றுமை மிகுந்திருந்தது. டக்ள இந்நிலைமையிலே லிங்கனின் நேரடியான எதிரி என எல்லோராலும் கருதப்பட்ட டக்ள என்பவர்அடிமை முறையின் அவசியத்தைப்பற்றிக் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். வடநாட்டில் அடிமை ஒழிப்புக்காகத் திரளும் புரட்சியை அளவு கடந்து தாக்கினார். குறிப்பாக ஆபிரகாமைக் கூட்டங்களிலெல்லாம் நேரடியாகத் தாக்கிப் பேசவும் ஆரம்பித்தார். அதனால் ஆபிரகாம் டக்ள சென்ற இடங்களுக்கெல்லாம் சென்ற அடிமை ஒழிப்பு முறையின் அவசியத்தை எடுத்துக் கூற வேண்டிய நிலைமைக்கு ஆட்படலானார். ஆபிரகாமையும் நீக்ரோ இனத்தவரெனக் கேலி பண்ணினர். அவர் போகும் இடங்களிலும்பேசும் கூட்டங்களிலும் நீக்ரோப் பொம்மைகளை எடுத்து வீசினர். எதனையும் பொறுத்துக் கொள்ளும் இதயம் படைத்த லிங்கன் மனிதன் தன்னலம் தான் அடிமை முறையை வேண்டு கின்றது; ஆனால், மனிதனது சுதந்திர உள்ளமே விடுதலையைத் தூண்டுகின்றது என்று போனபோன இடங்களிலெல்லாம் வற்புறுத்தி வந்தார். தீ வளர்ப்பு! தென்னாட்டிலே டக்ளஸின் புகழ் விண்மதி போல் ஒளிவிடத் தொடங்கியது. அதனால் அடிமை முறையை ஒழித்திருந்த வடநாடுகளில் சிலவற்றைத் தென்னாட்டுடன் சேர்த்துக்கொள்ள முயற்சி நடந்து கொண்டிருந்தது. அதற்கு முதல் முயற்சியாக மிசௌரி ஒப்பந்தம் தகர்த் தெறியப் பட்டது. அதற்குக் காரணமாக இருந்தவர் டக்ளதாம். 1820 ஆம் ஆண்டிலே மிசௌரி ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தப்படி சில மாகாணங்களில் அடிமை முறை நீக்கப் பட்டிருந்தது. அதை எதிர்த்து அடிமை முறை நீக்கப்பட்டிருந்த அந்த மாகாணங் களிலும் மீண்டும் அடிமை முறையை ஆக்கும் தீர்மானம் ஒன்றை டக்ள செனட்டிலே கொண்டு வந்தார். இஃது அணையப்போகும் தீயை ஆத்திரத்துடன் வளர்ப்பது போலாக இருந்தது. அமெரிக்காவின் சரிதத்தை மேலும் களங்கப்படுத்தி, மனிதர் சுதந்திரத்தைப் பறிக்கும் இத் தீர்மானம் செனட்டிலே நிறை வேறியவுடனே வட நாட்டவர் கொதிப்பு மிகுந்தது. அதன் விளைவுதான் ஆபிரகாமைச் செனட்டின் உறுப்பினராக நிற்க வைத்தது. செனட் தேர்தல் குடியரசுக் கட்சியின் அங்கத்தினராகச் செனட் தேர்தலுக்கு ஆபிரகாம் நின்றார். அவரை எதிர்த்து டிரம்பல் என்பவர் நின்றார். லிங்கனுக்கு வெற்றியே கிட்டும் என எதிர்பார்க்கப் பட்டாலும் கூட, தோல்வியையே அணைத்துக் கொள்ள வேண்டியவரானார். லிங்கன் பட்ட துயரத்தைப் பார்க்கிலும் மேரி பட்ட துயரமே பெருகியது. ஆயினும் சோர்வடைந்த லிங்கனைத் தட்டி யெழுப்பினாள்; சுய உணர்வுக்குக் கொண்டு வந்தாள். மீண்டும் செனட் தேர்தல் ஆரம்பமானது. இப்பொழுது எதிர்ப்பவரோ நெடுநாள் அரசியல் விரோதி: சண்ட மாருதப் பேச்சாளி; அரசியல் சக்கரங்களை ஆட்டிவிட்டு அசையாது நிற்கும் வீரர் - டக்ளதாம். அவருக்குச் சாதகமாகத் தென்னாட்டுப் பண்ணையாளர்கள்; தென்காலனி அரசுகள்! பணத்தைச் சூறையாடிப் பவனிவரும் டக்ள எங்கே? பஞ்சையர்க்காகவே உழைத்துவரும் பஞ்சை லிங்கன் எங்கே? என்று பன்முறை தம்மைத்தாமே கேட்டுக் கொண்டே லிங்கன் தேர்தல் காரியங் களைக் கவனித்தார். பிரிவுபட்ட கூரை இந்நிலைமையிலே ஒட்டாவா நகரில் டக்ள லிங்கன் ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றி, தங்கள் தங்கள் கருத்துக்களை வாக்குவாதம் பண்ணுவதாக ஒருமுடிவுக்கு வந்தனர். டக்ளஸினிடம் பேச்சாற்றல் பெரிதும் இருந்தாலும் கூட நீதி தம்மிடமே இருக்கிறது என்ற துணிவு லிங்கனைத் தேற்றுதல் செய்து கொண்டிருந்தது. லிங்கன் பேசுவதற்குரிய ஆதாரங்களை யெல்லாம் சேகரித்துக் கொண்டு மேடைக்குச் சென்றார். பிரிவுபட்ட கூரை நெடுநாளைக்கு நில்லாது. அதுபோலப் பிளவுபட்ட அரசும் நெடுநாளைக்கு நிலைக்காது என்று குரலெழுப்பினார். அதே நேரம், விடுதலை என்பது எந் நாட்டவர்க்கும் எவ்வினத்தவர்க்கும் ஏற்பட்ட பிறப்புரிமை. நீக்ரோவின்மேல் வெறுப்பு ஏற்படுகின்றது என்றால் விட்டு விடுங்கள் அவன் போக்குப்படி. இறைவன் அவனுக்களித்த அருட்கொடை அணுவளவேயாயினும் அதனைக் கொண்டு வாழட்டும். விடுதலை மனித குலத்தின் பொது உரிமை! ஆனால், அடக்கு முறையோ ஆள்வோரின் சுயநலம்! ஒருவர் தேட ஒருவர் உண்பது என்னும் கொடுஞ்செயல் நம்மால் ஒழிக்கப்பட்டே தீர வேண்டும். தனிப்பட்ட ஒருவர் பெறவேண்டிய வெற்றி தோல்வி பற்றியதன்று நம்கவலை. எத்தகைய இன்னல்களுக்கிடையே நம்முன்னோர் நம் தாயகத்திற்குச் சுதந்திரம் வாங்கினர்? அவர்கள் உணவையேனும் உடையையேனும் காலுறைகளை யேனும் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டு வாளா இருந்திருப் பார்களே யானால் சுதந்திரக் குடிகளாக மாறி இருப்பரா? அந்தச் சுதந்திரத் தாயகத்தை ஒன்றாகக் கட்டிக்காக்க வேண்டியதே நம் கடமையாகும் என்று முழங்கினார். முடிவு என்ன? தோல்வி செனட் தேர்தலிலே ஆபிரகாம் தோல்வி! பிரிவு கொண்ட கூரை நில்லாது என்ற ஐக்கிய உரையே அவருக்குத் தோல்வி தந்ததெனத் தம் கட்சிக்காரர்களுக்குள்ளேயே கலகலப்பு ஏற்பட்டது. லிங்கனோ எனக்கு நீதி எனப்பட்டதை எத்தனை எத்தனை ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும் சொல்லியே தீர்வேன் என்று பதில் மொழிந்தார். லிங்கன் தலையிலே பேரிடி விழுந்தது போலாக செனட் தோல்வி இருந்தது. வாழ்க்கையே பெரு வெறுப்புக்குரியதாகப் போய்விட்டது. சே! சே! இந்தஅரசியல் அளற்றிலே உழல்வதைப் பார்க்கிலும் அரசியலுக்கு மூடுவிழா முடித்துவிட்டு நிம்மதியாக இருந்த விடலாம் என்று ஒருபக்கத்தே எண்ணம் எழும்பிக் கொண்டிருந்தது. நாம் வாழவே தகுதி இல்லை; வெற்றி நிச்சயம் கிடைக்கு மென்றல்லவா எண்ணினோம்; அதனால் தானே நம்மையே தேர்ந்தெடுத்தனர் நம் கட்சியினர். இப்பொழுது அவர்கள் கூறிக் கொள்வது என்ன? நீயே வேண்டாததைப் பேசிக் கெடுத்துக் கொண்டாய் என்றல்லவா குறை கூறுகின்றனர்? தொட்ட தெல்லாம் கெட்டது. வாணிகத்திலே தோல்வி! வழக்கறிஞராகப் பணியாற்று வதிலே வருமானக் கட்டை. போன போன இடங்களிலெல்லாம் பழி! அரசியலை விட்டு விட்டு வழக்காடத் தொடங்கிவிட வேண்டியதுதான். நம்மவர்களே நமக்குத் தடையாக இருக்கும் போது மற்றவர்கள் உதவிக்கு வருவார்களா? என்ற ஏக்கத்திலே சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்தார் லிங்கன். அரசியல் ஆசிரியை வெற்றி எளிதில் கிட்டிவிடாது; மேலும் மேலும் எவர் விடாப்பிடியாக இருக்கின்றனரோ அவரே வெற்றிக்குரியவர்! தோல்வியே வெற்றிக்குத் துணை செய்யும் கருவி; மற்றவர்கள் தம் வெற்றிக்காக எப்படி எப்படிப் பாடுபடுகின்றார்களோ அதுபோல நாமும் பாடுபடாது விசாரப் பட்டுக் கொண்டிருந்தால் வெற்றி நம் வீட்டு வாசலுக்கு வந்து நிற்கவா செய்யும்? என்று லிங்கனது ஏங்கிய மனத்தில் எழுச்சியூட்டினாள் லிங்கனது அரசியல் ஆசிரியை மேரி. வாணிகமோ வழக்கறிஞர் துறையோ வேண்டுமானால் வருமானத்தைத் தரலாம். வருமானம் என்ன வருமானம்! *கூத்துக்குக் கூடி அது முடிந்தவுடனே பிரியும் மக்கள் போலாகக் கையை யடைந்து காலியாகும் செல்வத்தைச், செல்வம் என்று எண்ணிக் கொண்டு வாழ்வைப் போக்க ஆரம்பித்தால் நம் வைர எண்ணம் என்னாவது? அடிமையர் குடி வாழ்வது எப்போது? என்ற சிந்தனைச் சுடர் பற்றிக் கொண்டது லிங்கனை. வில்லியம் வில்பர் சிந்தனைச் சுடர் ஒளிவிடும் லிங்கன் முன்னாக வீரரொருவர் வருகின்றார்! அவர் யார்? வில்லியம் வில்பர் போர். பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த இப்பெருந்தகை பட்டம் பவிசு பெற்றிருந்தாலும் ஏழையர் தோழனாய் விளங்கினார். தம் 21 ஆம் வயதிலே பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினராகும் பெரும் பேறு பெற்ற இவர் அடிமையர் அவல நிலைமையைக் கண்டு அதை ஒழித்தே தீர்வது என உறுதி பூண்டிருந்தார். அதனால் 1791 ஆம் ஆண்டிலே அடிமை ஒழிப்புத் தீர்மானத்தை, அடிமை வியாபாரத்தையே முதன்முதல் தொடங்கி, ஆண் டொன்றுக்கு 36,000 அடிமையரை உண்டாக்கிக் கொண்டிருந்த பிரிட்டன் பாராளுமன்றத்திலே கொண்டு வந்தார். தோல்வி மேல் தோல்வி; தூற்றுதல்மேல் தூற்றுதல். வெறுங்கனவு என வெகுண்டெழுந்தது பாராளுமன்றம். விட்டாரில்லை வில்பர் போர். ஒருமுறை இருமுறையல்ல ஒன்பது முறை, அத் தீர்மானத்தை விடாது கொண்டுவந்து கொண்டே இருந்தார். கிடைத்தது தோல்வியேயாயினும் கிடுகிடுத்து விடவில்லை. நெஞ்சில் உரமிருந்தது; நேர்மைத் திறம் இருந்தது வெற்றிமேடைக்கு ஏறவேண்டிய படிக்கற்கள் ஏராளம். அவற்றுள் ஒன்பது படிகள் ஏறியிருக்கின்றோம் என்ற துணிவுடன் மேலும் மேலும் செயலாற்றிக்கொண்டு வந்தார். சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் பாராளுமன்ற உறுப்பினர் உதவியை நாடினார்; உதறியடித்தனர். நண்பர்களிடம் நயமாக வேண்டினார்; நடக்கக் கூடிய செயலன்று என்று நகர்ந்து விட்டனர். பத்திரிகைகளோ பகற்களவு என்று பழி புராணம் பாடிக் கொண்டிருந்தன. தளரவில்லை தன்னம்பிக்கையாளர். வெற்றியாயினும் சரி! தோல்வியாயினும் சரி! பத்தாம் முறையும் பார்த்துவிடுவது என்று முனைந்தார். வெற்றி! வெற்றி! வெற்றி முழக்கம் விண்ணைப்பிளக்க வீறுநடையிட்டார் வில்பர் போர். 1791 இல் தொடங்கிய தீர்மானம் 1807 இல் நிறை வேற்றப்பட்டது. விடுதலை வீரர் வில்பர் போர் எப்படி வெற்றி கண்டார்? முயற்சி! முயற்சி!! அம் முயற்சி என்ன, அவரோடு மடிந்து மண்ணோடு மண்ணாகி விட்டதா? அவர் அடிச்சுவட்டைப் பற்றுவோம்; வெற்றி நமதே என்று எழுச்சிப் பண் பாடினார் லிங்கன். மேரியின் இடிப்புரை, வில்பரின் புரட்சிச் செயல் இரண்டும் தட்டியெழுப்பி விட்டன லிங்கனை. புதுப்பிறப்பு; வெற்றி தோல்விக்கு அணுவும் அயரா ஆபிரகாம்; விடுதலை வீரர்; ஆமாம்! அவரே விடுதலை வீரர். 1860 ஆம் ஆண்டிலே குடியரசுக் கட்சி சிகாகோ நகரிலே கூடியது. ஏன்? பிரவுன் பிரவுன் என்பவர் நீக்ரோ! விடுதலைக்காகத் தீவிரப் புரட்சி செய்தவர். படைவீரர் பலரைச் சேர்த்துக் கொண்டு, அடிமை முறையைக் கொண்டிருக்கும் அரசை எதிர்த்துத் தீருவதென வீறிட்டெழுந்தார். அதனால் அரசினரின் ஆயுதச் சாலையைத் தாக்கி வீரர் பலரை வீழ்த்தினார். நீக்ரோவர் உதவியும் உரிய சமயங்களில் பிரவுனுக்குக் கிடைத்துவந்தது. இக்கிளர்ச்சியை ஒழிக்க அரசாங்கமும், படைவீரர்களையும் ஆயுதங்களையும் ஏராளமாகக் குவித்துக் கொண்டிருந்தது. பிரவுன் பிடிபட்டார். அவர் மைந்தர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அரசாங் கத்தைக் கவிழ்க்கத் துணிந்த துரோகி என்று குற்றம் சாட்டி, சார்லடவுன் நீதிமன்றம் பிரவுனுக்குத் தூக்குத்தண்டனை விதித்தது. மாந்தராய்ப் பிறந்தவர் மற்றவர்க்கு அடிமையில்லை என்று அமெரிக்காவின் உரிமைக்குரல் இருக்கும்போது, அதனையே செயலில் காட்ட முனைந்த என்னை வீரனென்றல்லவா விருது தந்து பாராட்டவேண்டும்; அதற்குமாறாகப் பழிப்பதோடு என் உயிர் குடிக்கவும் நீதியின் பெயரால் துடிக்கின்றீர்கள். நீதி சொல்பவனை நிர்மூலமாக்க வந்த நீதிபதிகளே! உங்களைக் காலம் பழித்தே தீரும் என்று வீரக்கணை தொடுத்துவிட்டு இறுதி மூச்சையும் விட்டுவிட்டார். இக் கொடுஞ் செயலால் வடநாட்டிலே கொந்தளிப்பு மிகுந்தது; துக்கக் கொண்டாட்டம் கொண்டாடினர். தென்னாட்டு நீதிபதிகள் போலவும், நிலக்கிழார் போலவும் பொம்மை செய்து தெருவழியே இழுத்து நெருப்பிட்டனர். உள்ளத்தே எரிந்து கொண்டிருந்த தீ, வீதிகளிலும் தெருக்களிலும் பற்றிக் கொள்ள லாயிற்று! அவ்வளவு எரிச்சல். சிகாகோவில் கூட்டம் பிரவுனுக்கு நேர்ந்த துரோகச் செயலைக் கண்டித்துப் பேசி, தங்கள் குடியரசுக் கட்சியின் சார்பாக அமெரிக்கத் தலைவர் பதவிக்குத் தகுந்த ஒருவரை நிறுத்திவைக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான் சிகாகோ நகரில் குடியரசுக் கட்சியின் மாநாடு தொடங்கியது. அம்மாநாட்டிலே குடியரசுக் கட்சியின் சார்பாகத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிடுவதெனத் தேர்ந்தெடுக் கப்பட்டார் அருளாளர் ஆபிரகாம். அடிமை நீக்ரோவருக்கு விடுதலை தரவேண்டும் என்ற ஒரே ஒரு கொள்கையின் மேலாகத் தான் குடியரசுக்கட்சி போட்டியிடப் போவதாகக் கூறிக் கொண்டது. கட்சித் தேர்தலிலும் லிங்கனுக்கு எதிர்ப்பில்லாமல் போய்விடவில்லை. சிவர்ட் என்பவர் லிங்கனை எதிர்த்துப் போட்டியிட்டார். எதிர்பாராதவிதமாக சிவர்ட்டுக்கு விரோதி யான ஒருவர் உதவி லிங்கனுக்குக் கிடைத்தமையால் சிவர்ட்டுக்குப் பாதகமாக மாறி விட்டது. லிங்கன் வெற்றியுற்றார். கட்சி, லிங்கனைத் தேர்ந்தெடுத்துவிட்டது. இனிமேலல்லவா தலைவர் தேர்தல் இருக்கின்றது! கட்சித் தேர்தல் முடிவு கட்சித் தேர்தல் முடிவைத் தெரிவிக்க லிங்கனிடம் நண்பர் சிலர் ஓடோடியும் வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் இருந்த லிங்கன் செய்தியை அறிந்துகொண்டு, நண்பர்களே, இந்த மகிழ்ச்சியான செய்தியை என்னைப் பார்க்கிலும் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மேரியினிடம் தெரிவியுங்கள் என்று வேண்டிக் கொண்டார். அவ்வளவு பதவிப்பற்று இருந்தது மேரிக்கு. லிங்கன் வெற்றியைப் பாராட்டியும், அவரைப் பாராட்ட வருபவர்க்கு விருந்தளிக்க வேண்டியும் அன்பர்கள் சாராயப் புட்டிகள் பலவற்றை அனுப்பி வைத்திருந்தனர். லிங்கனோ அவற்றை யெல்லாம் தமக்கு அனுப்பி வைத்தவர்களுக்கே மீண்டும் அனுப்பிவைத்து, இறைவனால் எல்லோருக்கும் இலவசமாக அளிக்கப்பட்டுள்ள நீர் இருக்கும்போது வெறியூட்டும் இந்தச் சாராயத்தைக் குடிக்கவோ மற்றவர்களுக்குக் கொடுக்கவோ விரும்பாதவனாக இருக்கின்றேன். தங்கள் உதவிக்கு நன்றி; மன்னிக்க என்று சீட்டும் எழுதியிருந்தார். இதே உறுதியை இறுதிவரை கடைப்பிடித்து வந்த பெருமை லிங்கனுக்கு உண்டு. லிங்கன் குடியரசுக் கட்சியின் சார்பாகத் தலைவர் தேர்தலுக்கு நிற்கப் போவதை அறிந்த தென்னாட்டுக் காலனிகள் தங்கள் வைரியான லிங்கனைத் தலைவராக வரவிடுவதில்லை என்று எதிர்க்கலாயினர். லிங்கன் தலைவராக வருவாரே யானால் ஐக்கியம் நில்லாது; அடக்குமுறை செல்லாது என்று கண்டனம் விடுத்தனர். அடிமை முறையை அகற்றவந்த அருளாளரே! அமர்க் களத்தே சந்தியும் என்று செய்தித்தாள்கள் எச்சரித்தன. பதவிகளிலிருந்து விலகிவிட்டுத் தெற்குக் காலனிகளுடன் சேர்ந்து கொள்வோம் பாருங்கள் என்று பெரும் பெரும் பதவி களில் இருந்தவர்கள் பயம் காட்டினர். எதையும் பொருட்படுத்தாத நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தலைவர் தேர்தலும் முன்னின்றது. வெற்றி! தேர்தல் என்னாகுமோ என்ற ஏக்கத்திலே பிரிங் பீல்டில் புரண்டு கொண்டிருக்கிறார் லிங்கன். மேரியோ விநாடிதோறும் செய்தியை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றாள். போதாக் குறைக்கு நண்பர்களும் குழந்தைகளும் தேர்தல் நிலைமை என்னாகும் என லிங்கனைப் பிய்த்தெடுத்துக் கொண்டிருக் கின்றனர். தேர்தல் காய்ச்சலிலே முணகிக் கொண்டிருக்கின்றது வீடு. செய்தி வந்தது; ஆம்! வெற்றிச் செய்தி வந்தது. விறகு வெட்டியின் மைந்தன் வெள்ளைமாளிகையிலே ஏறுவதற்குரிய பொன்னான செய்தியைக் கொண்டு வந்தனர் நண்பர். மேரி மகிழ்ச்சிப் பெருக்கிலே எக்களித்துக் கொண்டிருந்தாள். மேதை லிங்கன் ஒரு மூலையிலே உட்கார்ந்து என்னென்னவோ எண்ணித் தத்தளித்துக் கொண்டிருந்தார். 6. வெள்ளை மாளிகையில் அமைதி நாட்டிலே குழப்பம் மிகுந்து விட்டது. தெற்குக் காலனிகள் ஐக்கிய அமைப்பினின்றும் விலகிக் கொண்டு விட்டதாக முழக்கிக் கொண்டிருந்தன. தென்னாட்டின் உளவாளிகள் பலர் வடநாட்டிலே உலாவித்திரியலாயினர். தலைவர் பதவி ஏற்புக்கு முன்னரே ஆபிரகாம் தலையைத் தரையிலே உருட்டி விட வேண்டுமெனச் சதிக் கூட்டம் தயாராகிக் கொண்டிருந்தது. இந்நிலைமைக் கிடையேயும் கல்லறை ஒன்றின் முன் அமைதியாக மண்டியிட்டுக் கசிந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் ஆபிரகாம்! நீக்ரோவர் விடுதலைக்காக ஆபிரகாம் அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர் தந்தை தாம லிங்கன் விடுதலையடைந்து விட்டார். அவர் ஆன்மா அமைதியுறும் படி செய்ய ஆண்டவனிடம் முறையிட்டுக் கொண்டார். இறுதி நேரம் தம் தந்தைக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளைச் செய்யாது தவிர்ந்ததற்காக இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பின்னர்ச் சிற்றன்னையையும் அவர் குமாரர்களையும் இறுதி முறையாகச் சந்தித்து விடை பெற்றுக் கொண்டு பிரிங் பீல்டு வந்து சேர்ந்தார். விடைபெறுதல் ஆபிரகாம் பிரிங் பீல்டு வந்து சேர்ந்தவுடனே வாசிங்டன் செல்லுவதற்கு வேண்டிய ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார். பொருள்களையெல்லாம் கட்டிவைத்து ஆ. லிங்கன், வெள்ளை மாளிகை, வாசிங்டன். என்ற முகவரியையும் தம் கையாலே எழுதினார். ஆயத்தம் அனைத்தும் செய்யப்பட்டது. அவருக்கு என ஏற்பாடு செய்யப்ட்ட இரயில் அவரை ஏற்றிச் செல்லக் காத்திருந்தது. ஆபிரகாமை, செல்லும் வழியிலேயே கொல்லுவதற்குத் தக்க சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும், குண்டுகள் இடைஇடையே பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டி ருந்தன. தம் உயிரைத் தத்தம் செய்வதற்காகவே வாசிங்டன் செல்வதாக எண்ணிக்கொண்டே நண்பர்களிடம் லிங்கன் விடை பெற்றுக் கொண்டார். வண்டிவரை வந்து வழியனுப்பியவர்கள் ஏராளம் பேர்களாவர். அவர்களிடம், எனது வாலிபப் பருவம் முதல் இந்த வயோதிகப் பருவம் வரை கால் நூற்றாண்டாக உங்களோடு இந்த பிரிங் பில்டிலே வாழ்ந்து வந்தேன். இங்கே தான் என் குழந்தைகள் அனைவரும் பிறந்தனர். அவர்களுள் ஒருவன் இங்கேதான் அடக்கம் செய்யப் பட்டிருக்கின்றான். நான் இப்பொழுது ஏற்றுக் கொண்டிருக்கும் பொறுப்பு தலைவர் வாசிங்டன் ஏற்றுக் கொண்டிருந்த பொறுப்பினும் பெரிதாக இருக்கின்றது. வாசிங்டனுக்கு உதவிய கடவுளின் உதவியின்றி என்னால் எதுவும் நிருவகிக்க முடியாது, என்பது தெளிவு. நீங்கள் கடவுளிடம் உங்களுக்காக வேண்டுவதுடன் எனக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். இறைவன் கைகளிலே உங்கள் அனைவரையும் ஒப்படைக்கின்றேன். நான் இப்பொழுது இச்சில சொற்களோடு விடைபெற்றுக் கொள்ள வேண்டியவனாக இருக்கின்றேன். இனி எப்பொழுது கூடுவோம் என்பது அறியக் கூடாததாக இருக்கின்றது என்று கூறி வணக்கமிட்டுப் பிரிந்து சென்றார். வழிகளிலெல்லாம் வம்பர் குழு மறைந்து இருப்பதாகச் செய்திவந்தது. ஆயினும் வலிய உள்ளம் கொண்ட லிங்கன் எதற்கும் அஞ்சாது, இன்னார் என எவரும் அடையாளம் கண்டு கொள்ளா வகையில் வெள்ளை மாளிகைக்குள் புகுந்துவிட்டார். இடை இடையே எத்தனையோ இடங்களில் நின்று நண்பர்களைச் சந்திப்பதையும், வரவேற்புப் பெற்றுக் கொள்வதையும் லிங்கன் தவிர்த்துவிடவில்லை. லிங்கன் வாழ்க! லிங்கன் வாழ்க!! என்ற குரல் வெள்ளை மாளிகையிலிருந்து வெளிக்கிளம்பிய பின்னர்ச் சதித் திட்டக்காரர் தங்கள் முகத்தில் சாம்பல் பூசப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டு வெட்கினர். தங்கள் அருமையான திட்டம் தகர்த்தெறியப் பட்டதல்லவா; அதனால்! வெள்ளை மாளிகையில் ஆபிரகாம் ஆபிரகாம் 1861 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் நான்காம் நாள் தலைவர் பதவியேற்று வெள்ளை மாளிகைக்குள் கால் வைத்தார். அதற்கு முன்பே, தென்கரோலினா ஜார்ஜியா முதலான ஆறு காலனி நாடுகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஐக்கிய அமைப்பினின்று விலகிக் கொள்வதாக மாகாண அமைப்பினின்று தகவல் விடுத்தன. இதனை ஒட்டிய இரண்டு வார எல்லைக்குள் டெக்ஸா என்னும் காலனியும் பிரிந்துவிட்டது. இவ்வாறு பிரிந்து சென்ற காலனிகளனைத்தும் ஒன்றுகூடி, தலைவர் தேர்தலில் லிங்கனுடன் போட்டியிட்டுத் தோல்வியுற்ற டேவி என்பவரைத் தலைவராகக் கொண்டு ஐக்கியமாக இயங்குவது என்னும் முடிவுக்கு வந்துவிட்டன. எங்கள் உரிமைகளில் வடநாட்டவர் தலையிடு கின்றார்கள். இதை ஐக்கிய அமைப்பு, கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்டிப்பதற்கு மாறாக வடநாட்டவர்க்கு அனுசரணையாகவும் இருந்து வருகின்றது. இனிமேல் வரும் தலைவரும் எங்களுக்கு நீதி வழங்குவார் என்பதை எங்களால் நம்பிக்கொள்ள முடியவில்லை என்று குரலெழுப்பிவிட்டு 1861 பிப்ரவரித் திங்களிலேயே போட்டி அமைப்பை ஏற்படுத்தி விட்டன. சிவர்ட் - அமைச்சர் தம்முடன் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிட்டுத் தோல்வியுற்ற சிவர்ட் என்பவர், தமக்கு எதிரியாக இருந்தாலும் கூட திறமையும் அனுபவமும் கருதி லிங்கன், உள்நாட்டமைச் சராக நியமித்திருந்தார். பொறுப்பேற்றுப் பணியாற்றி வந்த சிவர்ட் தம்முடைய பதவியினின்று தம்மை விலக்கிவிட வேண்டு மென்று தலைவருக்கு இப்பொழுது விண்ணப்பம் அனுப்பி வைத்திருந்தார். அனுபவமிக்க சிவர்ட் பதவியினின்று விலகிச் செல்வதை விரும்பாத லிங்கன் மன்றாடி வேண்டிக் கொண்டு மீண்டும் பதவியில் நிறுத்திவைத்தார். மேலும் மேலும் சிவர்ட் தலைவரை மதிக்கக்கூடிய அளவில்நடந்து கொள்ளா திருந்தும் வட நாட்டின் நலமொன்றே விரும்பிச் சுயமதிப்பையும் பாராட்டாது அவரைப் பதவியில் வைத்துக் கொண்டு இருந்தது லிங்கனது பெருந்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. பலர் சிவர்ட்டே தலைமைப் பதவிக்குத் தக்கவர் என்று பறையறைந்து கொண்டனர். சிவர்ட் இல்லையேல் அரசியல் செவ்வையாக நில்லாது; அதற்காகவே வேலைநீக்கத்தைத் தலைவர் ஒப்புக்கொள்ள வில்லை என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி விட்டனர். லிங்கன் எதனையும் செவியிலே போட்டுக் கொள்ளாது இருந்துவிட்டார். முதற் சொற்பொழிவு தலைமைப் பதவி ஏற்ற முதல் சொற்பொழிவிலேயே நம் முன் வந்திருக்கும் உள்நாட்டுப் போர் என் கையில் இருக்கும் பொறுப்பன்று; அது தங்கள் அனைவரிடமும் இருக்கும் பொறுப்பே தான். எந்தக் காலனியும் ஐக்கிய அமைப்பினின்று தானாகவே விலகிச் செல்லும்படியான முறைமை செல்லு படியாகாது என்று உரை நிகழ்த்தினார். அத்தகைய அவசியம் காலடிவைத்தவுடனே தேவைப்பட்டிருந்தது. எவரையும் எதிரியாகவோ வேண்டாத வராகவோ வைத்திருக்க விரும்பவில்லை, ஐக்கியத்தைச் சிதைக்கவும் விரும்பவில்லை என்ற லிங்கன் தெளிந்த கருத்து இதனால் புலப்படுகின்றது. நாட்டுப் பிரிவினை போட்டி அமைப்புடன், வர்ஜீனியா, வட கரோலினா முதலான நான்கு காலனிகள் சேர்ந்துவிடத் தீர்மானித்த செய்தியும் லிங்கனால் அறியவந்தது. இந்த அதிர்ச்சியிலே தலை சுக்கு நூறாகி விடுமோ என்று ஏங்கிக் கிடந்தார். முந்தையோர் கண்ட முழுமை நாட்டைப் பிரித்துப் பிளவாடப் பார்த்துக் கொண்டி ருப்பதா? அந்தோ! கொடுமையே; பழியைச் சுமந்து விட்டேன் என்று கதறித் கண்ணீர் சொரிந்தார். போட்டி அமைப்பினர் படையும் கருவியும் திரட்டி, பறை முழக்கிக் கொண்டு, பிற காலனிகளின் பாசறைகளையும் படைக்கலக் கொட்டில்களையும் தன்னடிப் படுத்தி விட்டனர் என்ற குரல் தலைநகரை எட்டியது. ஆபிரகாம் - அந்தத் தன்னந்தனி உருவம் - வெள்ளை மாளிகையிலே கணநேரமும் நிற்க முடியாது உலாவிக் கொண்டே திரிகின்றது. என்ன செய்வது? பேரிடி பேரிடி ஒன்று விழுந்தது! விழுந்தது சம்டர் துறை முகத்தில் தான். ஆனால் அதன் தாக்குதல் சம்டர் துறைமுகத்தைத் தாக்கிய அளவைப் பார்க்கிலும் வெள்ளை மாளிகையினுள் கண்ணீரும் - கதறலுமாய் நிற்கும் கடமைவீரர் இதயத்தைத் தாக்கியது. ஐக்கியம் அகலக் கூடாது; முன்னோர் கொண்டு வந்த ஐக்கியத்தை அன்பர்களே, அழித்து விட வேண்டாம்; அன்பு முறை ஒன்றாலே காரியங்களைச் சாதிப்போம்; வன்புமுறை கொண்டதால் மடிபவர் யார்? நம்மவரே அல்லரோ? என்று வேண்டிக் கொண்ட ஆபிரகாம் குரலுக்குத் தென்காலனியினர் தந்த மதிப்புத்தான் சம்டர் துறைமுகக் குண்டு வீச்சு! இன்னும் தாமதிக்க முடியாது. நான் தலைமைப் பதவி ஏற்கும் போது, ஐக்கிய அரசியலமைப்பைக் காத்தேதீர்வேன் என உறுதிஎடுத்துக் கொண்டேன். அவ்வுறுதியைக் காக்க ஆயுத பலத்தைக் கொள்ளத் தான் வேண்டுமென்றால் அதற்கும் தயங்கப் போவதில்லை; அதில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவும் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஆபிரகாம். போராட்டம் தொடங்கி விட்டது. சம்டர் துறைமுகத்தைக் காத்து நின்ற தளபதி ஆண்டர்சனால் இரண்டு நாட்களே எதிர்ப்பைத் தாங்க முடிந்தது. வேறு வழியின்றி மூன்றாம் நாள் அடைக்கலம் அடைந்துவிட்டார். என் செய்வார்! எதிர்பாராத தாக்குதல்; ஆட் குறைவும் ஆயுதத் தட்டுப்பாடும் அவரை வளைத்துக் கொண்டன. தோல்வி மேல் தோல்வி வேதனைப்பட்டுக் கொண்டிருக்க லிங்கனுக்கு நேரமில்லை. மெக்டவல் என்பவரைத் தளபதியாக்கி அவரோடு பெரும் படை ஒன்றையும்அனுப்பி வைத்தார். பெரும் போர்! சளைக்காத போர்! மூன்றாம் நாளிலே முறியடிப்பு. யாருக்கு வெற்றி? தென்பகுதியி னருக்கு. ஐக்கிய அமைப்பினர் கண்ட இரண்டாம் தோல்வியிது. பின்வாங்கும் நிலைமையிலே விழுந்த பிணங்கள் ஏராளம். கேவலம்; தாங்கமுடியாக் கேவலம்! இரத்தம் ஓடவில்லையா ஐக்கிய அமைப்பினரிடம்? என்று எழுதுகின்றன செய்தித் தாள்கள்: வீரர்களே எழுங்கள்! பயந்தான் கொள்ளிகள் படுத்துத் தூங்கட்டும் என்று எழுகின்றது படை. ஆயிரக் கணக்கிலே அனுப்பப்பட்ட படைகளல்ல; இலட்சக் கணக்கில்! இப்போதைய தலைவர் மெக்கல்லன். பழியோ பழி மெக்கல்லனோ தளபதி என்ற பெயர் இருந்தாலே போதும் என்பதற்காகவே பொறுப் பேற்றவராகக் காட்சி வழங்கினார்; தலைவர் உரைக்குக்கூடச் செவிசாய்க்காத தலைக்கனம் பிடித்தவராக இருந்தார்; தன் எழுச்சி இல்லாத அவர், பிறர் தூண்டுதலையும் ஏற்காது போய்க் கொண்டிருந்த காரணத்தால் தோல்வி மேல் தோல்வி வந்த வண்ணமாகவே இருந்தது. ஆயினும் தோல்விக்குக் காரணம் தாமே என்பதையும் ஒப்புக் கொள்ளாது படையனுப்ப வில்லை உணவளிக்கவில்லை ஆயுதம் இல்லை என்று தலைவர் ஆபிரகாம் மீதே பழி சுமத்திக் கொண்டிருந்தார். எதிர்ப்பணித் தளபதி லீயோ பெரும் சமர்த்தர். சமாளிக்கும் திறம் மிகப்பெற்றவர். தென்காலனிக்கு வெற்றி மேல் வெற்றி வாங்கித்தந்தவர். வந்த படைகளை யெல்லாம் வாரியடித்துப் பிணமாக்கிவிட்டு வாசிங்டனுள் புகுவதற்குச் சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். மக்கள் குரல் இந்த நிலைமையிலே தளபதிகளை நீக்கி விட வேண்டும் என்று மக்களின் ஆவேசக் குரல்எழும்பியது. மேரியும் இதற்குப் பக்கத்தாளம் இட்டுக்கொண்டு துயரப்படுத்த ஆரம்பித்து விட்டாள். லிங்கன், தளபதியை நீக்கும் செயலுக்கு அசைந்து கொடுக்கவில்லை. ஒரு பொறுப்பில் நியமிக்கப்பட்டவர்களை நீக்கிவிடுவதால் ஏற்படும் கேட்டை லிங்கன் தெளிவாக அறிந்திருந்தார். அதனால் பிறர் வற்புறுத்தலுக்கு அசைந்துவிடவில்லை. பட்டாளத்திற்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்த லிங்கனுக்குப் பட்டாளத்தவர்களில் சிலரைப் பதவியினின்று விடுதலையளித்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இளமையிலே தம்மை ஆதரித்தவர்கள், பழகியவர்கள் ஆதரவு எதுவுமற்றவர்கள் என்பவர்கள் சாரை சாரையாக வந்து தமக்கு உரிமையானவர்களைப் போர்க்களத்தினின்று அனுப்பிவைக்கும் படி வேண்டிக் கொண்டனர். பிறர் அவலத்தை அணுவும் சகிக்க முடியாத ஆபிரகாம் தளபதிகளுக்குக் கட்டளையிட்டு விடுதலை வாங்கித் தரவேண்டிய நிலைமையில் இருந்தார். வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்களல்லர்! போர்க் களத்தே துப்பாக்கியும் கையுமாய் நின்றவர்கள். அறவினை யாதெனில் கொல்லாமை இதுவேயன்றித் தளபதிகளால் மரண தண்டனைக்கு ஆட்பட்ட வீரர்கள் அநேகர். லிங்கனோ என்ன காரணம் கொண்டும் மரண தண்டனையை ஒப்புக் கொள்வதில்லை. எதிரிகள் நம் வீரர்களைக் கொன்று குவிப்பது காணாது என்று நாமுமா இத்திருவிளையாடல்புரியவேண்டும் என்று எடுத்துக் கூறி எமன் வாயிலிருந்து மீட்டுக் கொடுக்க வேண்டியது ஏற்பட்டது. அளவுக்கு மீறித் தலைவர் தலையிடும் இக் காரணத்தால் பட்டாள ஒழுங்கு பாதிக்கப்படுகின்றது என்று தளபதியர் ஆங்காங்கே எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர். இறைவனிடம் அருள்வேண்டி மண்டிக் கிடக்கும் நாம் மற்றவர்களுக்கும் அருள வேண்டுமல்லவா! உயிரை ஆக்க முடியாத நமக்கு அழிக்க என்ன உரிமை உண்டு? என்று பிறர் கூச்சலுக்கு மூடி இடுவார். உயிருக்கு உயிர் பாடி வீட்டின் வாயில் காத்து வந்த வீரன் ஒருவன் தூங்கி விட்டான். அதற்குத் தளபதி தந்த தண்டம் மரணம்! நாட்டிற் குழைக்க நிற்கும் நல்லதொரு வீரனை இழக்க மனமில்லா வீர லிங்கன் விடுதலை தந்தார். அவனோ போர்க்களம் சென்று பகைவரைச் சின்னா பின்னப் படுத்தினான். படைகளைத் திக்குமுக்காடச் செய்தான். இறுதியிலே மார்பில் குண்டு தாங்கி மலர்ந்த முகத்தோடு உயிரீந்த உத்தமர்க்கு உயிர்தந்தேன்; உரையுங்கள் அவரிடம் என்று நடந்துவிட்டான் மரணப் பாதை! இத்தகைய வீரர்களின் வதனமும் வாழ்க்கையும் லிங்கனின் மனக்கண்முன் வந்து பேய்க்கூச்சல் போட்டுக் கொண்டிருக்கும். இந்நேரத்தே லிங்கன் இருந்தது தூய வெள்ளை மாளிகையல்ல; உயிர்க் கொள்ளை மாளிகைதான்! பிரிட்டனின் அச்சுறுத்தல் பிரிட்டன் கப்பலொன்றில் அமெரிக்த் தூதர் இருவர் பயணமாகிக் கொண்டிருக்கும் செய்தி லிங்கனுக்கு அறிய வந்தது. உடனே கப்பலை நிறுத்தித் தூதர்களைக் கைது செய்து வரும்படி உத்தரவிட்டார். இச்செயல் தங்களை அவமானப் படுத்துவதாகும் என்றும், அதற்குரிய பதில் விடுத்துமன்னிப்புக் கோராவிடில் பகை ஏற்படும் என்றும் பிரிட்டன் அச்சுறுத்திக் கடிதத்தின் மேல் கடிதம் அனுப்பிக் கொண்டிருந்தது. ஐக்கிய அமைப்பின் போர்த்துறையமைச்சர் ஊழல் பலவற்றுக் கிடமானவராகப் போய்விட்டார். அவரைப் பதவியிலிருந்து நீக்கி, தக்கவர் ஒருவரை அமைச்சுத் துறையில் நிறுவ வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இவ்வளவும் காணாது என்று மைந்தன் ஒருவனின் மரணச் செய்தியும் அலைத்துக் குலைத்துக் கொண்டிருந்தது. லிங்கன் தவிர மற்றொருவர் இந்தச் சூழலிலே ஆட்பட்டு இருப்பரேயானால் செத்தே போயிருப்பர் என்று ஒருவர் வாய்விட்டு உரைத்தார் லிங்கனின் பரிதாப நிலைகண்டு. டக்ள இந்தத் தொல்லையைக் கண்டு தலைவராக வராமைக்காகத் தம்மைத் தாமே பாராட்டிக்கொண்டார் என்றால் லிங்கனின் நிலை எத்தகையதாக இருந்திருக்கக் கூடும்! ஐக்கியம் ஓங்குக எத்தனை எத்தனை பக்கங்களில் எதிர்ப்புக்கணை வந்தாலும் சரி, அதைப் பற்றிக் கவலை இல்லை. எம் பெருமை, மரியாதை காக்கப்பட வேண்டும் என்பதல்ல எம் நோக்கம். எம் தாயக ஐக்கியம் காக்கப்படவேண்டும். ஐக்கியம் காக்கத் தகுதியானவன் கிராண்டு தான். அவனே தளபதி! எனக்கு ஆகாதவன் என்பதற்காக வீரனை அலட்சியம் செய்துவிட முடியாது என்று முடிவு கட்டுகின்றார். அப்படியே கிராண்டைத் தளபதியாக்கி விடுகின்றார். இரண்டாம் தேர்தல் இந்நிலைமையிலே குறுக்கிடுகின்றது இரண்டாம் தேர்தல். அரசியலை விட்டு ஒதுங்கி விடலாம்; ஆனால் ஐக்கியம் காக்கப்பட வேண்டும் என்ற இரண்டு சிக்கல்களுக்கும் இடையேயும் தத்தளிக் கின்றார் லிங்கன். வேலையில்லை வேலையில்லை என்ற வேண்டுதல் ஒரு பக்கம்; உணவும் படையும் தேவை என ஓலம் ஒரு பக்கம்; தளபதியை நீக்கு; தட்டிக் கழிக்காதே என்ற தாக்குதல் ஒருபக்கம்; ஐக்கியம் காக்கப்பட வேண்டுமே என்ற உள்ளத்தின் அபயம் ஒருபக்கம். இத்தனைக்கும் சரி சொல்லியே தீரவேண்டும். விடுதலைக் கோரிக்கையும் நிறைவேற்றியே யாகவேண்டும். இவற்றை எண்ணி மறுமுறையும் தேர்தலில் நிற்கின்றார். தேர்தலிலே வெற்றி! ஆபிரகாம் குரங்குப் பிடியாய்க் கிராண்டை நம்பியதும் பழுது படவில்லை. தோல்வி சில இடங்களில், வெற்றி பல இடங்களில். எதிர்ப்பணியினரைப் பார்க்கிலும் ஐக்கிய அணியினர்க்குச் சேதாரம் கம்மி! ஆயினும் எதிர்ப்பணியினரும் படையைக் குவித்த வண்ணம் இருக்கின்றனர். விடுதலை முழக்கம் எளிதிலே வெற்றி பெற வேண்டுமா? எம்மிதயம் கூறுவது இவ்வழிதான்! நாளை நடத்தியே தீர்வேன். ஒரு செயல்; இரண்டு பக்கங்களில் வெற்றி என்று முடிவு கட்டிவிட்டார் லிங்கன். செயலாளரே! இதய பூர்வமாக இச் சாசனத்தில் கையெழுத் திடப் போகின்றேன். ஆனால் இன்று ஆயிரமாயிரம் பேர் என்கையைக் குலுக்கிய காரணத்தால் கை வலியெடுத்து நடுங்குகின்றது. நடுக்கத்துடன் கையெழுத்திடும் இக் காட்சியை எவரேனும் கண்டால், லிங்கன் முழுமனத்துடன் கையெழுத்திட வில்லை; அடிமையர் விடுதலையில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்று கயிறு திரிக்கவும் கூடும் என்று சொல்லிக் கொண்டே கையெழுத் திட்டார். கையெழுத்தா? பதின்மூன்று லட்சம் நீக்ரோவர்களின் விடுதலை முழக்கம்! வெற்றிச் சங்கு! ஏழையென்றும் அடிமை என்றும் எவனுமில்லை சாதியில் என்னும் மந்திரம்! ஆண்டவனே வந்து தந்த அருட்கொடை! பிறப்புரிமைப் பெருஞ்சாசனம்! ஆம்! விடுதலைப் பிரகடனம். 1863 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் நாள் கையெழுத்திடப் பட்டது. அடிமையர் தந்தை உள்ளத்தை உறுத்தியது எதுவோ, சட்டம் படிக்க வைத்தது எதுவோ, சட்டசபைக்குள் நுழைய வைத்தது எதுவோ, தலைவராக வரச் செய்தது எதுவோ, அகிலம் உள்ளளவும் அசைக்க முடியாத புகழ்ப் பட்டயத்தைத் தந்தது எதுவோ அது நிறைவேற்றப் பட்டுவிட்டது. எத்தனை எத்தனை ஆண்டுகளாக எவரெவர் முயற்சிகளாலும் முடிக்க முடியாச் செயல், வீரர் லிங்கனால் ஒரு நொடியில்நிறைவேற்றப் பட்டுவிட்டது. லிங்கன் பிறவிநோக்கம் நிறைவுற்றதாக மகிழ்ந்தார். நீக்ரோவரோ பிறப்புரிமை பெற்றதாக ஆர்த்தார். இலட்சக் கணக்கில் நீக்ரோவர் கூடி முரசும் பறையும் முழங்க ஆடலும் பாடலும் நிகழ, பிறப்புரிமை தந்த பிதாவே வாழ்க அடிமையர் தந்தையே வாழ்க என்று முழக்கமிட்டு நகரெங்கும் கொண்டாடினர். நீக்ரோவர் அனைவருக்கும் விடுதலை தந்துதான் ஐக்கியம் காக்கப்பட வேண்டுமானால் அப்படியே செய்வேன்; விடுதலை தராதுதான் ஐக்கியம் காக்கப்பட வேண்டுமானாலும் அப்படியே செய்வேன்; ஒரு சிலருக்கு விடுதலை தந்தும், ஒருசிலருக்கு விடுதலை தராதும் தான் ஐக்கியம் காக்கப்பட வேண்டுமென்றாலும் அப்படியே செய்வேன் என்று முன் பொருநாள் முழக்கிய மூன்று வழிகளிலே முதல் வழியே சரியான தென முடிவு கண்டார். செயலிலே இறங்கினார். அடிமையர் அனைவருக்கும் எப்பகுதியிலும் விடுதலை; இப்பொழுது நடக்கும் போர் அடிமை ஒழிப்புப் போர்- பறையறையப் படுகின்றது இப்படி. தென்காலனியிலிருந்து கிளம்புகின்றது அடிமையர் பட்டாளம். எங்கே? வடகாலனியில் சேர! உரிமை தந்த உத்தமனுக்குப் பெருமை தேடித்தர! வெற்றி! நீக்ரோ வீரர் குவிந்தனர் போருக்கு; கிராண்ட் கொதித் தெழுந்தான். எதிர்த்து நிற்க முடியவில்லை எதிரிகளால். எதிர்ப்பணிப் பெருங்கோட்டையான ரிச் மாண்டிலே முற்றுகை! வீரன் கிராண்டினிடம் அபயம் அடைவது அன்றி வேறு வழி அறியா லீ அப்படியே செய்தார். 1863 ஆம் ஆண்டு ஜுன் 7ஆம் நாள் வெற்றி முழக்கம் விண்ணைப் பிளந்தது. வீரன் கிராண்ட் வாழ்க லிங்கன் வாழ்க ஐக்கியம் காப்போம் என மூலைமுடுக்குகளிலெல்லாம் கிளம்புகின்றது முழக்கம். ஆயினும் வெள்ளை மாளிகை மட்டும் அமைதியாக இருந்தது. 7. வாழ்க வில்கி பூத் அருள் நெஞ்சம் வெளியே மகிழ்ச்சியும் கொண்டாட்டமுமாக இருக்கும் போது வெள்ளை மாளிகைமட்டும் ஏன் அமைதியாக இருந்தது? வெற்றிகண்டும் கவலையா? வெற்றிகண்டும் கவலைதான்! வெள்ளை மாளிகைக் கல்ல! வெள்ளை மாளிகையின் உள்ளே இருந்த வள்ளல் லிங்கனுக்கு. யாரை வென்றேன்? ஓரினம்; ஒருகுடி; ஒருநாடு - இத்தகு மக்களைக் கொன்று கூத்தாடும் ஈவிரக்கமற்ற இச் செயலுக்கு வெற்றி என்றா பெயர்? அன்புப் பலத்தையே நம்பி வாழ்ந்து வந்த நான் ஆயுதபலம் தாங்கி யாரை அழித்தேன்? ஆவிபோகும் வரை அயராது உழைத்து வாழ்வையும் வளத்தையும் ஆக்க வந்த அஞ்சா நெஞ்சக் காளை களையல்லவா அழித்தேன்? நானா அமைதி காத்தவன்? நானா அறம் காத்தவன்? நானா அருளுள்ளம் படைத்தவன்? ஐயோ! அமைதியையும் ஐக்கியத்தையும் காப்பதற்குத் தலைவனாக வந்தேனா? அழித்துக் குவித்துவிட்டு அலறிக் கிடக்கத்தான் வந்தேனா? இரத்தத்தால்தான் நம் ஐக்கியம் எழுதப்பட வேண்டுமா? அடிமையர் ஒழிப்பு அமரால்தான் ஆக வேண்டுமா? பல லட்சம் மக்களுக்கு விடுதலை தரச் செய்த முயற்சியிலே சில லட்ச மக்கள் காலனுலகில் சரணடைந்து விட்டனரே! அவர்களாகவா மடிந்தனர்? அந்த உயிர் போகும் போது எத்தனை எண்ணியதோ? என்னென்ன பாடுபட்டதோ? காலும் கையும் கண்ணும் தலையும் இழந்த முண்டம் இன்று என்னைப் பார்த்துப் பேசுவதாக இருந்தால் என்ன பேசும்? இவ்வளவு சேதாரமும் காணாது என்று பகைவனுக் கருளும் நன்னெஞ்ச மின்றிச் சரணடைந்தவர்களுக்கும் சாவுப் பாதை காட்ட வேண்டுவது பட்டாள நெறியாம்! அரசியல் தற்காப்பாம்! செத்தவர்களுக்காகச் சாகாதவர்களையும் சாகடிக்கும் இந்தக் கொடுமை நீக்ரோவரை அடிமையாக்கி அந்த ஆதிச் சுயநலக்காரர்களின் செயலைப் பார்க்கிலும் கொடுமை. என் இலட்சியம் பழிவாங்குவது அல்ல! பரிவுகாட்டுவது என்று குத்திக் குத்தித் தின்னுகிறது எண்ணம் என்னும் குடை மூக்குக் கழுகு. எங்கே அமைதி இருக்கமுடியும்? நான் செய்ய வேண்டிய இந்தக் காரியத்தில் நாழிகை தவறினாலும் நாசம்தான் - மதிப்புள்ள கிராண்ட், நீக்ரோ இனத்தவருக்கு விடுதலைப் பட்டயம் செய்து நான் முடிக்க வேண்டிய பணியை முடித்துவிட்டேன். உன்னடி பணிந்து ஊஞ்சலாடித் தவிக்கும் தென் காலனி வீரர்களுக்கு நிபந்தனை எதுவுமின்றி விடுதலை தரும் பெருமைச் செயலைச் செய்து முடிக்க உனக்கு வாய்ப்புத் தருகின்றேன். அப்படியே செய்! அதுவே ஆண்டவன் விருப்பம். அருள் கொழிக்க வேண்டிய அமெரிக்காவிலே அடிமையராக எவருமே இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார். சர்வதிகாரம் படைத்திருந்தும் அதை அமைதிக்கன்றிப் பிற வழிகளுக்குப் பயன்படுத்தாத ஒரே ஒரு மனிதன் இக் கல்லறையிலே நிம்மதியாகத் தூங்குகின்றான் என்று லிங்கன் கல்லறையிலே எழுத வேண்டும் என்று பல்லாண்டுகள் கழித்து ஒருவன் கூறியிருக்கின்றான் என்றால் அதற்குக் காரணம் பகைவனையும் மன்னிக்கும் பண்பு லிங்கனிடம் இருந்ததேதான். எதிரிகளை விடுதலை செய்த பின்னும் என்ன! பாலையைச் சோலையாக்க வேண்டுமே; மாண்டவர் குடியை மீண்டும் எழுப்ப வேண்டுமே. இடிந்த வீடு சரிந்த கோட்டை சிதைந்த நகரம் மறைந்த செல்வம் - இவற்றை யெல்லாம் பழையபடி ஆக்குவது எப்படி? மக்கள் துயரைப் போக்குவது எப்படி? அடாத செயல் செய்த ஒருவனை அடித்துவிட்டு அவனக்கு மருந்து கட்டி அனுப்பிய என் இளமைச் செயல்போலாக அல்லவா, இன்று அமெரிக்காவின் மார்பைப் பிளந்து மருத்துவமும் பார்க்கத் தொடங்கியிருக்கின்றேன் என்று செந்நீர் கொட்ட முட்டி மோதிக் கொள்கின்றது வெள்ளைமாளிகை உருவம். அன்பினர் முயன்றனர் அவலம் போக்க! மேரி முயற்சி மிக தோல்வியிலே முடிந்தது. லிங்கன் நினை வெல்லாம் நாட்டின் வருங்காலம் பற்றியே இருந்தது. கலைநாடகமா? இந்நிலையிலே வெற்றிவிழாவுக்காக நாடகம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கவலையனைத்தும் போக்கி வெற்றிக் களிப்பிலே திரிய நாடகக்கலை தக்கது என முடிவு கட்டியிருந்தனர். களப்பலி கொடுத்துவிட்டுக் களிப்பாகத் திரிதலை விரும்பாத லிங்கன் நாடகத்திற்கு வர மறுத்துவிட்டார். தலைவர் மன நிலையை மாற்றி அமைப்பதற்காகவே அன்பினரால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அந்த நாடகத்திற்கு வர ஆபிரகாம் மறுத்தாலும் விட்டுவிடவில்லை. மக்கள் தங்கள் வருகையை எதிர்பார்க் கின்றனர்; அவர்களுக்காகத் தாங்கள் வரத்தான் வேண்டும் என்று வற்புறுத்தினர். அன்புத் தொல்லைக்கு ஆட்பட்ட லிங்கன் மறுக்க முடியாதவராய் மேரியுடன் தலைவிதியே என்று நொந்து கொண்டு காட்சி மேடைக்குச் சென்றார். தலைவர் வந்துவிட்டார் என்று தாங்கா மகிழ்ச்சியுற்றனர் மக்கள். வெள்ளையர் கறுப்பர் பேதம் போக்கிய வள்ளலே, தென்னாட்டவர் வடநாட்டவர் பகை நீக்கிய தீரரே, ஐக்கிய அமைப்பைக் காத்த அண்ணலே வருக வருக என்று ஆரவாரித்தனர். காட்சி தொடக்கமாகியது. நாடகம் நடந்து கொண்டிருக்கின்றது. கொலை நாடகம் வேறொரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றது தலைவரைக் காணவேண்டுமென்று தளர் நடையோடு ஓர் உருவம். காட்சிக்கு எளியராம் லிங்கன் தடை எதுவுமின்றி உள்ளே வர விட்டார். வந்தவன் லிங்கனால் அடையாளம் தெரியப்பட்டவன் அல்லன். அமைதியாக வணங்கினான். அதற்குமேல் - டபார் என்றஒரே ஒரு பேரிரைச்சல். இடையே வரும் நாடகக் காட்சியென ஏதுமறியா மக்கள் எண்ணுகின்றனர். அரசியல் தலைவர்களுக்கு அதிர்ச்சி! ஏன் அந்தச் சத்தம்? எங்கே எங்கே?.... மக்களிலே ஏற்றத் தாழ்வு காணாத மனித மேதையின் மண்டை யோட்டைத் துளைத்த மரத்துப் போன துப்பாக்கிக் குண்டின் சத்தமே டபார் தனியொருவராய்ப் பிறந்து இலட்ச லட்சம் மக்களுக்குத் தந்தையாகச் சிறந்த அந்தப் புனிதர் தலையைப் பதம்பார்த்த குண்டொலிதான் டபார் பிறந்த பொன்னாட்டைப் பிளவுக்கு விடமாட்டேன் என்ற பெரியவருக்குக் கிடைத்த பெரும் பரிசுதான் டபார் ஊழிஊழி காலமெல்லாம் உலகத்தவர் உள்ளத்து உறையும் அருளாளர் ஆபிரகாம் கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டார். எடுத்துக்காட்டாக உலகுக்கு வந்த உத்தமர் விடை பெற்றுக் கொண்டு விட்டார். ஆண்டான் அடிமை பேதமற்று, வெள்ளையர் கறுப்பர் பேதமற்று மொய்த்து விட்டனர்; கல்லறையிலே; அழுகின்றார்; தொழுகின்றார்; அன்றி அயலொன்றறியார் அந்தோ! அருமைத் திருவுடலே, அருளின் பிறப்பிடமே அவிந்துவிட்டாயே ஏன்? அடங்கிவிட்டாயே ஏன்? கருணை வழியும் கண்ணே! கடமை தவறாக்கரமே! சுருங்கி விட்டாயே ஏன்? சோர்ந்து விட்டாயே ஏன்? நீதிக்குப் புறம்பாகா நெஞ்சமே! வாதிக்கும் திறம் படைத்த வன்மையே! வேதைக்கு ஆளானாயே விடிவுக்கு ஆளானாயே! அகிலத்தின் ஆரிருளை அகற்ற வந்த ஆதவனே! சோதிச் சுடரொளியே! எங்கள் குலத்திங்களே! அடங்கி விட்டாயே, அனைவர் வாழ்வையும் அடக்கி விட்டாயே! தொண்டுச் செயல் செய்த தூயவனே! தூய பரிசு ஏற்று விட்டாய்! தொலையாத பரிசு ஏற்றுவிட்டாய்! அன்பு முகம் காட்டி ஆர்வமது ஊட்டும் நின்னைக் கண்டும் நீட்டினானே துப்பாக்கி! அம்மவோ! நெஞ்சமென்ன இரும்பா? குற்றம் செய்து விட்டாய் குணக்கடலே குற்றம் செய்து விட்டாய். அளவு கடந்து நல்லவனாக, இவ்வகிலத்தே பிறந்து குற்றம் செய்து விட்டாய் என்று அழுதனர் அரற்றினர்; வெதும்பினர் விழுந்தனர்; புழுங்கினர் புரண்டனர்; நடுங்கினர் நைந்தனர். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட அகிலத்துத் தோன்றாத அரும் பெரும் தலைவரை ஒரு குண்டு பதம் பார்த்து விட்டது. அணுக்குண்டினும் கொடிது ஆபிரகாமைத் துளைத்த குண்டு. உலகத்தின் ஒரு கோடியிலே விழுந்தால் மறு கோடி வரைதாக்கும் அணுக்குண்டும் ஆபிரகாமைத் துளைத்த குண்டினும் இளைத்ததுதான். அணுக் குண்டின் விளைவுக்காக அனுதினமும் கோடானு கோடிப் பேர் அழுகின்றனரா? ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு அழுவரா? உலக வரலாற்றிலே நீங்காத வடுவை ஏற்படுத்தி விட்டது லிங்கனைத் துளைத்த குண்டு. எளிதில் மலராத மலர் நீக்ரோவர் உள்ளத்தே நீங்காத இருள் கப்பிக் கொண்டது. அவர்கள் குடிசையைக் கோரப்புயல் பிரிக்க ஆரம்பித்தது. எங்கெங்கும் சாக்காட்டு ஒலி! இவ்வளவும் என்ன செய்தன? அத்தனை பேர் கண்ணீரும் ஐயன் கண்களை விழிக்கச் செய்யச் சக்தியற்றதாகப் போய்விட்டது. துக்கச் செய்தி கேட்டவுடனே செந்நீர் வடித்தவர் உண்டு; செத்தவர்களும் உண்டு; இவையும் லிங்கனை மீட்டும் எழுப்பி விட்டு விடவில்லை. எளிதில் மலராத அந்த மலர் குவிந்து கொண்டுவிட்டது. இளகிய மனத்தவர் ஏக்கத்திலே இருந்தாலும் இரும்பு மனம் படைத்தவர் கவலையிலே கடமையை மறந்து விடவில்லை. காடு செடி தேடி, துப்பாக்கி தூக்கித் துணிகரச் செயல் செய்தவனைப் பிய்த்து எடுத்து விட்டனர்; நார் நாராய்ப் பிடுங்கி விட்டனர். பழிகாரன் பூத் கலையால் களிப்பூட்டி வந்தான் அவன். அருளாளர் ஆபிரகாம் பார்க்க வந்த நாடகத்தில் முக்கிய பாகம் ஏற்றிருந்தவன்தான்! வில்கிபூத் என்னும் பெயர் தாங்கியிருந்தான். கலையால் கொலை செய்தான்! கலைக்கே இழுக்குத் தேடி விட்டான்! தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்னும் தூயோரின் வாக்குக்கு இலக்காகி விட்டான். உலகுள்ளளவும் நீங்காப் பழியேற்று விட்டான். அவனை வைய எழும்புகின்றது உள்ளம்! வள்ளல் ஆபிரகாம் பண்பு வில்கிபூத்தை வாழ்த்தச் சொல்கின்றது. இன்று, வானளாவ உயர்ந்து நிற்கும் நீக்ரோவர் தந்தையின் நினைவுச் சிலையைக் கண்டு கண்ணீர் சொரிந்து, வாய்குழறி, உள்ள மொடுங்கி, ஊசலாடும் திரள் திரளான மக்களை எண்ணு வோமாயின், வாழ்க வறுமை வாழ்க்கை! வாழ்க அடிமை வாணிகம்! வாழ்க வில்கி பூத்! என்று வாழ்த்தவே தோன்றுகிறது. 8. பொற்சிலைப் புனிதன் வறுமையிலே பிறந்து வறுமையிலே வளர்ந்து வறுமையிலே வாழ்ந்த லிங்கன் சீரும் செல்வமும் கொழிக்கும் அமெரிக்க நாட்டின் தலைவராக ஒருமுறைக் கிருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குக் காரணமாக இருந்தது அவருடைய பண்புடைமை தான். உலகியல் அறிவு வாய்க்கப் பெற்ற காலம் முதல் எதைச் செய்தால் நல்லதோ அதை, எம்முறையால் செய்து முடித்தால் நல்லதோ அம்முறையால் செய்து முடிப்பதையே குறிக்கோளாகக் கொண்டி ருந்தார். அதனால் பேரும் புகழும் தாமாகவே வந்தடைந்தன. மனித குலத்துக்கொரு மாபெரும் எடுத்துக் காட்டு என்று இன்று மக்கள் குலம் பேசுகின்றது. அவர் வழி நிற்பதிலே பெருமை காண்கின்றது. இறையன்பு இறையன்பிலே ஆபிரகாமுக்கு ஈடுபாடு நிறைய இருந்தது. எண்ணும் எண்ணமும் எழுதும் எழுத்தும் பேசும் பேச்சும் இறைம யமாகவே திகழ்ந்தன. எத்தனை எத்தனை இடங்களில் திருமறைச் சொற்றொடர்களை மேற்கோள் காட்ட முடியுமோ அத்தனை அத்தனை இடங்களில் மேற்கோள் காட்டினார். பெரும் பெரும் பொறுப்பேற்றுக் கொண்ட பொழுதுகளிலெல்லாம் இறையருள் இன்றேல் என்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தெளிவாக வெளியிட்டார். எவரையேனும் பிரிய நேர்ந்தாலும் வாழ்த்த நேர்ந்தாலும்கடவுள் காக்க என்று கையருள் காட்டினார். அன்னையர் அன்பளிப்பாகத் தந்த திருமறையைப் புனிதப் பொருளாகப் போற்றி இறுதிவரை தம்மைவிட்டு அகலாதவாறு காத்து வந்தார். உலக வாழ்வை நீத்த பெற்றவர்க்கும் மற்றவர்க்கும் புனிதத் தன்மைதர இறைவனிடம் முறையிட்டுக் கொண்டார். ஒரு முறை, ஆண்டவரே! நீர் மனிதராகப் பிறந்திருந்தால் உம் ஆண்டவரிடம் எதை வேண்டிக்கொள்வீரோ அதை உம் மக்களுக்கும் தந்தருளும் என்று வேண்டினார். இவ் வேண்டுதலால் ஆபிரகாம் இறைவனை நல்லனவே செய்யும் நம்பன் என்று நம்பியமை புலப்படுகின்றது. கடவுள் தூதர் லிங்கன் பண்புடைமையைக் கண்ணாகக் காத்து வருவதை அறிந்த நல்லோர் பலர் கடவுள் தூதர் என்று எண்ணுவாரா யினர். நேரடியாகவும் மறைவாகவும் பாராட்டிப் புகழ்வதும் வழக்கில் வரலாயிற்று. எல்லாம் வல்ல இறைவனும் எங்கள் தலைவர் லிங்கனும் இந்நாட்டை இனிது காத்து வருவார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று முதியர் ஒருவர் லிங்கனை நேரடியாகப் பாராட்டினார். லிங்கன் அமைதியாக ஐயா, தாங்கள் கூறுவதிலே பாதியளவே உண்மை இருக்கின்றது. இறைவனே காத்துவருவதாகக் கூறியிருப்பின் முழுவதும் சரியாக இருந்திருக்கும் என்று மொழிந்தார். தம்மைத் தேவ தூதர் என எவரேனும் கூறினால் தமக்குள்ளாகவே வருந்திக் கொண்டார். தம்மிடம் தெய்வ ஒளி ஒன்றும் இல்லையென்று கூறிக்கொண்டே இருந்த போதிலும் இன்று அமெரிக்காவிலே திருமறைக்கு அடுத்த நிலைமையிலே வைத்து லிங்கன் பொன்னெழுத்துக்கள் போற்றப் படுகின்றன. நீக்ரோவர் அனைவரும் தமக்குக் கிட்டும் பொருள், புகழ், பட்டம், பதவி அனைத்தும் தந்த ஆண்டவன் தூதர் ஆபிரகாமே என்று பாராட்டுகின்றனர். லிங்கன் இருக்கும் பொழுது தம்மைப் பாராட்டுவதைத் தடுத்தார். இனி அவரால் என்ன செய்ய முடியும்? பணிவுடைமை இறையன்பிலே திளைத்த லிங்கனுக்கு இயற்கையாகவே பணிவுடைமை நிறைந்திருந்தது. ஏழ்மையிலே கொண்டிருந்த பணிவுடைமையினும் ஏற்றமுற்ற நேரத்தே மிகுதியாகக் கொண்டிருந்தார் * அனைவருக்கும் பணிவுடைமை அணிகல மாக இருப்பினும் பெருஞ் செல்வரிடத்தே பணிவு சேர்வதே செல்வத்துள் செல்வமாகும் என்னும் தமிழ்மறைக்கு எடுத்துக் காட்டாக இலங்கினார். தம்மிடம் பணியாற்றும் அதிகாரிகளை யும் அளவிறந்த மரியாதையோடு நடத்தினார். அவர்களிடம் அன்பு குழையப் பேசினார். அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அமைதியுடன் பார்த்துவந்தார். தாம் தலைவர் என்னும் தன்னெடுப்பு தலைதூக்கும்படி இருந்ததில்லை. தலைவரவர் களே என்று எவரேனும் அழைத்தாலும் ஆபிரகாம் என்று அழையுங்கள் என்று பணிவுடன் வேண்டிக் கொண்டார். அதிகாரிகளுக்கு அன்புடன் ஆலோசனை போலாக எதையும் கூறுவாரே யன்றி அரசியல் முறைக்கேற்ப உத்தரவிட விரும்ப மாட்டார். பிறர் வணங்கும் பொழுதெல்லாம் அவர்களினும் தாழ்ந்து வணங்கும் கடப்பாட்டையே காலமெல்லாம் கொண்டிருந்தார். லிங்கன் ஒருசமயம் குதிரையிலேறி விரைவாகச் சென்று கொண்டிருந்தார். எதிரே வந்த ஏழை ஒருவர் லிங்கனைக் கண்டவுடன் தொப்பியை எடுத்து, பணிவோடு நின்று வணக்க மிட்டார். லிங்கனும் குதிரையை விட்டுக் கீழே குதித்து, தம் தொப்பியையும் எடுத்து, தலைதாழ்த்தி ஏழை வணங்கிய வணக்கத்தினும் தாழ்ந்து வணங்கினார். உடன் வந்த செல்வருக்கு இது வெறுப் பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. அதனால் இந்த ஏழைக்காக நீங்கள் இவ்வளவு தாழ்ந்து வணங்க வேண்டுமா? என்று செருக்குடன் வினவினார். லிங்கனோ, ஐயா, என்னை இவர் பணிவுடைமையால் வென்று விடும்படி விட்டுக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று விளக்கினார் பாவம்! பதவியில் தலைமையுடையவர் பணிவுடைமையிலும் தலைவராக இருக்க வேண்டும் என்ற லிங்கன் பண்புடைமையை அவர் அறிந்திருக்க வேண்டுமல்லவா! எளிமை உணவிலும் உடையிலும் எளிமை கண்டார் உத்தமர் லிங்கன். எளிமையில் தான் இன்பம்இருக்கிறது என்பதில் எள்ளளவும் அவருக்கு ஐயம் இருந்தது இல்லை. மேரி பகட்டுடை அணிந்து கொள்ளும்போது கேலி பண்ணுவார். அவளோ, ஆபிரகாம் எளிய வாழ்வைக் கண்டு கிண்டல் பண்ணுவாள். பற்பல சமயங்களில் தன் கணவர் இப்படிப் பைத்தியக்காரராக இருக்கிறாரே என்று வாழ்க்கைப்பட்ட குற்றத்திற்காகத் தன்னையே வைதுகொண்டதும் உண்டு. விருந்து வேடிக்கை இவற்றில் லிங்கனுக்கு விருப்பு இருப்பதே இல்லை. அன்புத் தொல்லைக்கு ஆட்பட்டு எந்த வேடிக்கை நிகழ்ச்சியிலாவது கலந்து கொண்டாலும் ஒரு மூலையில் உட்கார்ந்து உலகத்தவர் அனைவரின் சிந்தனையும் உருக் கொண்டால் போல் இருப்பார். அல்லது கவலைக் கடலாய்க் காட்சியளிப்பார். எவர் தம்மைப் பார்க்க விரும்பினாலும் எளிதில் அனுமதி யளிப்பார். தாமே மாளிகையின் முன்வாயில் வரை சென்று வரவேற்று மீண்டும் வாயில்வரை போய் வழியனுப்பி வருவார். தமக்காகப் பாதுகாப்போ பரிவாரமோ வைத்துக் கொள்ள விரும்பவில்லை. கடிதங்களைத் தம் கையால் எழுது வதையே பெரிதும் விரும்பினார். நண்பர்களிடம் சமயம் வாய்க்கும் பொழுதெல்லாம் தம் வாழ்க்கையையும் வறுமையையும் எடுத்துக் கூறுவார். பழைய ஏழ்மை நிலைமையை எடுத்துக் கூறுவதில் எத்தகைய இழுக்கும் இல்லை என்று நம்பினார். தமது சோடுகளைத் தாமே சுத்தம் செய்து கொண்டார். இழிதொழில் என்று எதையேனும் கருதும் எண்ணம் லிங்கனிடம் இருந்ததே இல்லை. ஒரு சமயம் வெள்ளை மாளிகைக் குள்ளே தம் சோடுகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் லிங்கன். நண்பர் ஒருவர் நீங்களே உங்கள் சோடுகளைத் துடைத்துக் கொள்கின்றீர்களே என்று புன்முறுவலுக்கிடையே கேட்டார். அப்படியானால் நான் யாருடைய சோடுகளைத் துடைக்க வேண்டுமென்று விரும்பு கிறீர்கள் என்று பதில் மொழிந்து வாயை அடக்கினார். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும், பசுவுக்குத் தீனிவைத்திருக்கிறார்; பால் கறந்திருக்கிறார்; விறகு வெட்டியிருக்கிறார். தொழிலிலே ஏற்றத் தாழ்வு காணாத தூய வாழ்க்கை லிங்கன் வாழ்க்கையாக இருந்தது. ஒப்ப மதிக்கும் உயர்வு தொழிலில் ஏற்றத் தாழ்வு காண்பதை வெறுத்த லிங்கனிடம் நிறத்தால் ஏற்றத்தாழ்வு காண்பது கொடுமை என்னும் எண்ணமும் செறிந்திருந்தது. நிறபேதத்தை ஒழிப்பதற்காகவே தம் வாழ்வை யெல்லாம் ஒப்படைத்திருந்ததை அவர் வரலாற்றின் எந்த மூலையும் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. அவர் நினைவுச் சின்னமாக வாசிங்டனில் பளிக்கு மண்டபத்தே எழுப்பியிருக்கும் பேருருவம் முதலாக பென்னி நாணத்தின் சிற்றுருவம் ஈறாக அனைத்தும் நிறபேதம் ஒழித்த அறத்தையே அகிலத்திற்கு அறிவிப்புச் செய்த வண்ணமாக இருக்கின்றன. குறிக்கோள் லிங்கன் ஒருநாள் நெடுநேரம் வரை நண்பர் ஒருவரிடம் அடிமை ஒழிப்புப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அதற்கு மேல் நண்பர் அயர்ந்து தூங்கி விட்டார். லிங்கனோ உட்கார்ந்து விடியு மளவும் சிந்தித்துக் கொண்டே இருந்தார். நண்பர் விழித்தெழுந்தவுடன் அன்பரே! அரைவாசிப் பேருக்குச் சுதந்திரம் அளித்துவிட்டு அரைவாசிப் பேரை அடிமையாக வைத்திருக்கும் களங்கத்தை அனுமதிக்கவே முடியாது என்றார் ஆபிரகாம். நீங்கள் இரவெல்லாம் தூங்கவே இல்லையா? என்று பதில் கேள்விதான் நண்பரால் கேட்க முடிந்தது. குறிக்கோளொன்று வெற்றியுற முழு மூச்சாகப் பாடுபட்டால் மட்டும் போதாது. தன்னளவில் அணுவும் ஐயமுறாது விடாப் பிடியோடு கடைப்பிடிக்க வேண்டும். உள்ளொன்றும் புற மொன்றும் கொண்டுறைவோர் குறிக்கோள் சின்னாட்களிலே சிதைந்து போவதை உலகியல் காட்டிக் கொண்டிருக்கின்றது. உலகியலாராய்வு மிக்க லிங்கன் கொண்ட கொள்கையை நிறைவேற்ற, குரங்குப் பிடியினராக வாழ்வெல்லாம் இருந்து வந்தார். ஏழையடிமையர்க்காக வாதாடுவது இழுக்கு என்பது வழக்கறிஞர்கள் கொள்கையாக, வலிய வந்து அடிமையர்க்காக வாதாடினார். அடிமையரோடு அளவளாவிப் பழகினார். ஒருமுறை நீக்ரோவர் ஒருவரைச் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார் லிங்கன். அந் நீக்ரோவர் அளவிறந்த நேரம் பேசிக் கொண்டிருந் தாலும் நான் ஒர் அடிமை நீக்ரோ என்பதை என்னிடம் நினைவூட்டாது பேசிக்கொண்டிருந்த ஒரே ஒரு வெள்ளையர் லிங்கனே என்கின்றார். என்னே லிங்கனின் பண்புடைமை! சொல்வன்மை லிங்கனின் குறிக்கோள் வெற்றியுற்றமைக்குப் பெருங் காரணமாக இருந்தது சொல்வன்மையே. சொற்போர் வல்லாளரான டக்ளஸே எதிர் நிற்பதற்கு அஞ்சும் சொல்லாற்றல் லிங்கனிடம் இருந்தது. சொற்பொழிவால் சம்பாதித்து வாழ்க்கை நடத்தினும் நடத்தலாம் என்ற எண்ணம் கூட ஒருசமயம் எழுந்த துண்டு. சொல்வன்மையினாலே தீரா வழக்குகளையும் தீர்த்து வைத்ததை முன்னர் அறிந்துள்ளோம். லிங்கன் பேசுவதைக் கேட்க, அறியார் முதல் அறிஞர் வரை கூடுவர். நகைச்சுவை நிரம்பப் பெய்யப் பட்டிருக்கும் லிங்கன் பேச்சிலே. உங்கள் பாட்டனார் எத்தகையர் என்று லிங்கனிடம் ஒருவர்கேள்வி கேட்டார். என் பாட்டனார்எத்தகையராக இருந்தார் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் அவர் பேரன் எத்தகையனாகஇருக்க வேண்டும் என்பது பற்றியே எனக்குக் கவலையாக இருக்கின்றது என்று மடக்கினார். லிங்கன் மது விற்பனைக்காரர் என்று டக்ள தம் வாதத்தின் போது லிங்கனைக் குறை கூறினார். நண்பர் டக்ள கூறுவது உண்மையே! நான் மது விற்பனை செய்து கொண்டிருந்த போது டக்ள பன்முறை மதுக் கடைக்கு வந்து மது வருந்துவார். நான் இப்பொழுது மதுவிற்பனையை விட்டுவிட்டேன். ஆனால் நண்பரோ இன்னும் விடாப்பிடியினராக இருக்கின்றார் என்று மூச்சுத் திணறச் சொல்லடி வைத்தார். அடிமை முறையை ஒழித்துக்கட்ட இறைவன் தம்மிடம் திருவருள் செய்ததாகக் கூறிய ஒருவரிடம் இறைவன் நான் செய்யவேண்டிய காரியத்திற்கு என்னிடமே திருவருள் செய்ததாகக் கூறிய ஒருவரிடம் இறைவன் நான் செய்யவேண்டிய காரியத்திற்கு என்னிடமே திருவருள் செய்யாது தங்கள் வழியாக அனுப்பி வைக்க மாட்டான் என்று வாய் பேசாப் பதுமையாக்கினார். விடுதலைப் பிரகடனம் செய்விக்க வற்புறுத்திய சிலரிடம் விடுதலை எழுத்திலே இல்லை; நாம் விட்டுக்கொடுப்பதிலே தான் இருக்கின்றது என்று கூறிவிட்டு ஆட்டுக்குட்டியின் வாலையும் கால்களோடு சேர்த்துக் கொண்டார் என்றார். கணக்குப் புலிகளான அவர்கள் ஐந்து என்று அறுதியிட்டார்கள். லிங்கனோ, வால் வாலாகுமே யன்றிக் காலாகுமா? ஆகாதது போல எழுத்து விடுதலையும் உண்மை விடுதலையாகாது என்று விளக்கினார். சொல்வன்மையும் சோர் வின்மையும் கொண்டிருந்ததால் லிங்கனுக்கு வில்வன்மை தேவை யற்றதாகப் போய்விட்டது. லிங்கன் கொண்டிருந்த சொல்லெல்லாம் கொல்லும் சொல்லல்ல; வெல்லும் சொல். நற்பண்புகள் இவையேயன்றி நன்றி மறப்பது நன்றன்று என்னும் பொன்னெறி போற்றிக் காத்து வந்தார் லிங்கன். பாம்பின் பற்களைவிட நன்றிகெட்டவரின் நாக்கு கொடிது என்பது அவர் பொன்னுரை. தமக்குச் சிறு உபகாரம் பண்ணியவர்களையும் சமயம் ஏற்படும் பொழுதெல்லாம் பாராட்டிப் பணமும் தந்தார். செய்யும் உதவியெல்லாம் செய்தார். தாம் முன்னுக்கு வரக் காரணமாக இருந்தவர்களுக்கு இதயத்தே பெருமளவில் இடம் ஒதுக்கினார். பொறுமைக் குணத்திற்கு லிங்கன் கிடைத்தற்கரிய எடுத்துக்காட்டு. உணர்ச்சியற்ற பிண்டம் போலாக இருப்பார், பிறர்பழிக்கும் போதும் தொல்லை தரும் போதும். ஆனால் கோழை என்று கூறிவிடமட்டும் எவரையும் அனுமதிக்க மாட்டார். அடிக்கீழ் இருந்தஅதிகாரிகள் அவமதித்துக் கொண்டிருந்த போதும் பொறுத்தார். அவர்களைச் சந்திக்கவீடு தேடிப் போய், கால்கடுக்க வெளியே நின்றதுமுண்டு. பொறுத்தால் பெருமை சிறுத்து விடும் என்ற எண்ணம் லிங்கனிடம் துளியும் இருந்த தில்லை. வாழ்வெல்லாம் இன்சொல் கூறினார். *இனிய சொல்லை விரும்புபவன் ஏன் இன்னாச் சொல்லைக் கூறவேண்டும்? என்று வினயமாய்க் கேட்பார். மக்களே அன்றி மற்ற உயிர்களும் இன்னலுற லிங்கன் பொறுத்துக் கொள்ள மாட்டார். விரோதிகளென்று வேலை நீக்கம் புரிந்துவிடவில்லை. தூற்றியவர்களென்று துச்சமாக மதித்ததும் இல்லை. தம்மிடம் தவறொன்று இருக்குமாயின் உரியவரிடம் மன்னிப்புக் கேட்கத் தவற மாட்டார். கற்றதையும் கற்றபடி நிற்பதையும் காலமெல்லாம் கொண்டிருந்தார். நல்லவர்கள் எப்பொழுதும் லிங்கனைச் சுற்றியிருப்பர். நல்லவர்கள் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் நட்பினராக்கிக் கொள்வார். நல்ல புத்தகங்கள் எவ்வளவு தூரத்தே இருந்தாலும் பெற்று வந்து நெஞ்சத்தே நிறுத்திக் கொள்வார். நல்ல புத்தகங்கள் தேடித் தருபவர் எவரோ அவரே நண்பர் என்று சொல்வார். நண்பர் பலர் இருந்துங்கூட லிங்கனின் ஆசைதீர அவர்களால் புத்தகம் சேகரித்துத் தர முடியவில்லை. அவ்வளவு தூரம் படிப்பார்வம் லிங்கனை வாட்டியது. புகழ் வாழ்வு பிறக்கின்றார்கள்; பின்னர் இறக்கின்றார்கள். பிறந்தவர்கள் எவ்வழியிலாவது சிறந்திருந்தார்களா? சரித்திரத்தில் என்றும் அகலாத ஓரிடத்தைப் பெற்றார்களா? என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார் லிங்கன். இந்த அடிப்படைக் கேள்வி அகிலத்தின் கடைசி மனித வாழ்க்கை வரைக்கும் நிற்கும் பெருமை தேடித் தந்துவிட்டது. வாழ்ந்தால் போதாது; பிறர் வாழ்வதற் காகவும் வாழ வேண்டும் என்றார். பிறருக்காகவே வாழ்ந்தார். அதனால் பிறருள்ளத்தே வாழ்கின்றார்; வளரவும் செய்கின்றார். லிங்கனுடைய உயர்ந்த பண்புகளே அவரை உயர்நிலைக்கு ஆக்கிவைத்தன. எனினும் அவரது அயரா முயற்சி என்றும் துணையாக நின்று உதவி புரியத் தவறவில்லை. சின்னஞ்சிறு பதவி ஒன்றைப் பெறுவதும், அதனைத் திறம்பட நடத்துவதும் அருமையாக இருக்க, வாய்ப்பு வசதி அற்ற ஏழ்மைக் குடியிலே, கல்வியறிவு மிகுதியும் அற்ற பெற்றோர்களுக்குப் பிறந்த ஆபிரகாம் உயரிய பதவியைப் பெற்று, சீரிய முறையிலே நடத்திக் காட்டியது அவருக்கே அமைந்திருந்த இடையறா முயற்சியால் தான்! இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. அரசியல் வண்டி பிணக்கற்ற பெருவழியிலேதான் சென்று கொண்டிருக்கும் என்பது இல்லை. மேடு பள்ளங்களிலும் சேறு அளறுகளிலும் மாட்டிக் கொள்ள வேண்டி நேரிடலாம். இந்நிலை வருதல் அமெரிக்காவுக்கோ, ஆபிரகாம் லிங்கனுக்கோ விதி விலக்கு ஆகமுடியாது. ஆனால் இச்சமயங்களிலெல்லாம் லிங்கன் எவ்வளவு மதி நுட்பத்துடனும், பொறுப்புடனும் நடந்து கொண்டார் என்பதை நாம் முன்னர் அறிந்தோம். பொறுப் புடையவர்கள் தொட்டாற் சுருங்கி போல் இருக்கக் கூடாது. அதாவது, எச்சிறு நிகழ்ச்சியையும் பெரிது பண்ணிக் கொண்டு மனத்தைத் துயரத்தில் ஆழ்த்திக் கொண்டோ, சிந்தனையைக் குழப்பிச் சிதைத்துக் கொண்டோ இருக்கக்கூடாது. இக் கோட்பாட்டை ஆபிரகாம் சிக்கெனப் பிடித்தார். அமெரிக்க அரசியல் தோழர்களாலும், அமைச்சர்களாலும், போர் வீரர்களாலும், சமுதாயத்தோராலும் எதிர் பாராத எதிர்ப்புகள் அவ்வப்போது தோன்றின. புயல், பூகம்பம் போலாகவே கிளர்ச்சிகள் தோன்றின; எரிமலை நெருப்பைக் கக்குவது போல் கக்கின. எனினும் அமைதியுடன் அடியடியாகத் தமக்கென வகுத்துக் கொண்ட பாதையிலே சென்று கொண்டி ருந்தார். அதனால் எட்டிப் பிடிக்க முடியாத பதவியையும் எட்டிப் பிடித்து, அழியா எழுத்தில் தம் பெயரை எழுதிக் கொண்டு விட்டார். முன்னேறும் துடிப்புடைய ஒருவனுக்கு எத்தகைய தொழில் கிடைத்தாலும் கவலை இல்லை. ஏதேனும் ஒரு தொழில் கிடைக்க வேண்டும் என்பது தான் அவன் கவலை. அது சிறியதா பெரியதா என்பதுபற்றி அக்கறை காட்டுவதே இல்லை. எத்தகைய சிறிய கிளை கிடைத்தாலும் அதனையே துணையாகக் கொண்டு குரங்கு தாவி விடுகின்றது அல்லவா! இது போலவே உந்தும் உணர்ச்சி உடையவர்கள் நொடிக்கு நொடி முன்னேறிக் கொண்டே போவர் என்பது உறுதியாம். இவ்வுறுதி ஆபிரகாம் வாழ்வில் மிக உறுதி ஆக்கப்படுவதை அறியலாம். பள்ளிசெல்வதற்கே முடியாதநிலைமை - அப்படிப் போகும் பொழுதும் புத்தகமும் சிலேட்டுப் பலகையும் வாங்குவதற்கு வசதி இன்மை - படிப்புக்குத் தடையாக இருக்கும் தந்தை - அரித்துத் தொலைக்கும் வறுமை - வயலிலும் காட்டிலும் வேலை செய்தே பிழைக்க வேண்டிய கடமை - இவற்றுக்கிடையே இருந்த ஆபிரகாம் எப்படி நூலறிவு பெற்றார்? சொல்லாற்றலால் வெற்றி காணும் கட்டடக்கலை பயிலும் நுண்ணறிவு பெற்றார்? போட்டியும், பொறாமையும் மிக்க அரசியலிலே புகுந்து அழியா இடம் பெற்றார்? எல்லாம் அயரா உழைப்பினாலும், தொழிலில் சிறுமை பெருமை கருதாத உள்ளத்தினாலுமே அன்றோ! வயலில் வேலை செய்தார்; விறகு வெட்டினார்; கூலிப் படகு நடத்தினார்; கடைச் சிப்பந்தியாக இருந்தார்; போர்ப்பணி புரிந்தார்; அஞ்சல் நிலையப் பணியாற்றினார்; நில அளவை யாளராக இருந்தார்; வழக்கறிஞராக மாறினார்; அமெரிக்கத் தலைவராகவும் துலங்கினார். தொழில் செய்யும் முறையிலே சிறுமை, பெருமை உண்டே அன்றி, தொழிலிலே சிறுமை, பெருமை இல்லை என்பதற்கு ஆபிரகாம் செய்துவந்த தொழில்களே சான்றாதற்குப் போதுமானவையாகும். சிலர் உள்ளத்திண்மை இன்றி, எளிய துயரையும் பொறுத்துக் கொள்ளமாட்டாதவர்களாய் அல்லலுறு கின்றனர். எளிதில் சோர்வடைவதும், முயற்சியை விட்டு விடுவதுமே அவர்கள் இயல்பு. இத்தகையவர்கள் வாழ்க்கை இன்பச்சோலை என்றே கனவு காண்பவர்கள்; இன்னும் சிலரோ, வாழ்க்கை துன்பமே வடிவானது; இன்ப நிழல் சிறிதும்இல்லாதது என்று அவலப் பாட்டுப் பாடுபவர்கள். ஆனால் உண்மை அறிவினர் இன்பமும் துன்பமும் கலந்து வருவதே வாழ்வு என்று தெளிவு கொண்ட வர்கள் அவர். இத்தகையர் இன்பத்தை விரும்பி அனுபவிப்பது போலத் துன்பத்தையும் விரும்பி அனுபவிக்க வேண்டும் என்று ஆவல் கொள்வர். இன்பத்தை விரும்பும் ஒருவன் துன்பத்தை மட்டும் வெறுப்பது ஏன்? என்று கைகொட்டிச் சிரிப்பர். இடுக்கண் வருங்கால் நகவேண்டும் என்றும், இடும்பைக்கு இடும்பை ஆக்க வேண்டும் என்றும், ஓங்கிய குரலில் பேசுவர். இத்தகையரே வாழ்க்கையில் அடி சறுக்கி விழா இயல்பு கொண்டு முன்னேறிச் செல்பவர் ஆவர். இவ்வாறு அடி சறுக்காமல் சிங்கம்போல் செம்மாந்து சென்றார் லிங்கன் என்றால் புனைந்துரை அன்று; உண்மை உரை என்பது தெளிவே. அயரா முயற்சியும், அழியா வெற்றியும் கொள்வோரிடையும் அறநெஞ்சத்தைக் காண்பது அரிதாகி விட்டது. அறநெஞ்சம் இல்லாத வாழ்வு எத்தகைய உயரிய வாழ்வாயினும் சரி தூ வெனத் துப்பி ஒதுக்கத் தக்கதே. கல்வியோ, செல்வமோ வாழ்க்கை வசதிகளோ அனைத்தும் அறநெஞ்சத்தோடு பின்னிப் பிணைந்து மின்னிச் செல்வதே சிறப்புக்குரியதாம். எல்லோர் கல்வியும் உலகுக்குப் பயன்படுகின்றதா? எல்லோர் செல்வமும் பயன்படுகின்றதா? அறநெஞ்சம் உடையவர் கல்வியும் செல்வமும் உலகெல்லாம் மணம் பரப்புவதை அறிகின்றோம். நாடு, மொழி, இனம் ஆகிய வேறுபாடுகள் அற்று அனைவருக்கும் பயன்படுவதைக் காண்கின்றோம். வள்ளுவன் தன்னை உலகினுக்குத் தரவில்லையா தமிழகம்? பாரியும் ஓரியும் காரியும் வாழ்ந்து கொடை மழையால் மக்களை வாழவைக்க வில்லையா? அறநெஞ்சம் மிக்க நாவுக்கரசரும், மணிமேகலையும், காந்தியடிகளும் உலக வாழ்வே தம் வாழ்வெனக் கொண்டு வாழவில்லையா? அறநெஞ்சம் இவர்களிடை அரும்பாது இருந்திருந்தால் பிறருக்காக வாழ்ந்திருப்பரோ? பொன்னைக் கொடுப்பார் சிலருண்டு; பொருளைக் கொடுப்பார் சிலருண்டு; தன்னைக் கொடுப்பவரோ அரியர்! அரியரினும் அரியர். அவ்வாறு தம்மையே பிறருக்காக ஒப்படைத்த தொண்டர்களே உயரியவர்கள். இவர்கள் அறத்திலேயே ஊறிக் கிடக்கும் நெஞ்சம் உடையவர்கள் ஆவர். இத்தகையவர்களுள் ஒரு மாமணியாய்த் திகழ்ந்தார் ஆபிரகாம். அவர் அரசியலிலே சிக்குண்டும் அறநெஞ்சுடன் வாழ்ந்தாரே, அதனை எழுதிக் காட்ட எழுத்துப் போதா! பேசிக் காட்ட நா போதா! *மனத்துக்கண் மாசின்மையே அறம் என்று அறுதி யிட்டார் வள்ளுவர். உள்ளத்தூய்மை அமையும் போது உரையும், செயலும் தூய்மை அடைவது உறுதியே. தேன் குடத்திலிருந்து வழிவது தேனாக இருப்பதன்றி வேம்பாக இருக்குமோ? மாசின்மையால் கனிந்த உள்ளம் குளிர் தருவாய், தரு நிழலாய் அமைவது திண்ணமே. இத்தகைய அறவாழ்வு உடையவர்கள் இருப்பதால் தான் உலகம் நிலைத்திருக்கிறது. இன்றேல் மன்ணோடு மண்ணாகக் கலந்து என்றோ அழிந்திருக்கும். +பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன் என்னும் பொன்மொழி நினைவில் வைக்கத்தக்கதாம். ++ அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகிய நான்கும் நெஞ்சில் புகவிட்டால் அறத்தின் வேரையே வெட்டி எறிந்து விடும். பிறர் வாழ்வதற்குப் பொறாத, பொறாமையும், தன்னலமே குறியாம் ஆசையும், தன்னையும் கெடுத்துத் தன்னை நெருங்கிய வர்களையும் கெடுத்துத் தொலைக்கும் வெகுளியும், சுடுநெருப்பன்ன கொடுஞ்சொல்லும் பொருளாகக் கொண்டு வாழ்பவர் நன்னெஞ்சம் உடையர் ஆவரோ? * அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் துன்பம்! பெருந்துன்பம்! இவற்றால், உன்னத நோக்கமும் உலையாமுயற்சியும், உயரிய பண்பும் உடையவர் உலகில் உயரிய இடம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு இறவா வரம் பெறுகின்றனர். இசைபட வாழும் பேறு எய்துகின்றனர். மற்றையோர் தங்கள் சிறுநோக்காலும், சிதறும் முயற்சியாலும், செம்மையில்லாப் பண்பாலும் உலகத்தே தமக்கென ஓரிடத்தைப் பெறாது, நின்றான், இருந்தான், கிடந்தான், தன்கேள் அலற, புல் நுனிமேல் நீர்போல் நிலையாது சென்றான் என்னும் அளவில் வாழ்ந்து வாளா மடிந்து போகின்றனர். வரலாற்றுப் புகழ் வல்லவனுக்கே உண்டு என்பது வழங்கு மொழி. ஆனால் வல்லவனாக மட்டும் இருந்தால் போதாது; நல்லவனாகவும் இருந்தால் தான் என்றும் ஏற்ற காணாப் புகழ் அடையமுடியும் என்பதை நிலை நிறுத்திக் காட்டியவர்கள் மிகச் சிலரே ஆவர். அவர்களுள் ஒருவராக இலங்கினார் ஆபிரகாம். அவர் வாழ்வும் வழியும் என்றும் பின்பற்றி நடக்கத் தக்கதாகும். ஆபிரகாம் இளவயதிலேயே சிலரைத் தமக்கு முன்னோடி யாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர்கள் சென்ற வழியிலே நடைபோட்டார். அரசியலுக்காக வாசிங்டனையும், அடிமை ஒழிப்புக்காக வில்பர் போர், காரிசான் ஆகியவர்களையும், வழக்காடும் திறத்திற்காக பிரெக்கன் ரிட்ஜையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லையா? பேரொளியினால் வழி காட்டும் கலங்கரை விளக்கைக் கொண்டு கப்பல் தன் வழியைத் தீர்மானித்துக் கொள்ள வில்லையா? அதுபோல் உயரியவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டபின் ஐயமின்றி அவர்கள் வழியே அடியடியாக - கூடுமானால் விரைவாகக் கூடப் பின்பற்றிச் சென்ற ஆபிரகாமை நாம் நல்லதொரு வழிகாட்டியாகக் கொண்டு தொடர வேண்டும். அப்பொழுது உலகப் பிணக்குகள் எத்தனையோ இருந்த இடம் தெரியாமல் தொலையும்; நிறத்தால் வேற்றுமை காட்டிக் கொண்டிருக்கும் இழிநிலை ஒழியும்; ஆள்வோர், ஆளப்படுவோர்; ஆண்டான் அடிமை என்னும் பிணக்குகள் ஓயும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் உயர்நெறிகள் அரும்பும். இவற்றை நினைவு கூருமுகத்தான் ஆபிரகாமை ஒவ்வொருவர் உள்ளத் தேயும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அது இன்றியமையாக் கடமையாம். செல்வ வளமிக்க அமெரிக்க நாட்டினர் பளிக்கு மண்டபத்தே பொற்சிலை நிறுவிப் போற்றுகின்றனர். பளிக்கு மண்டபமே அன்றி அதன் வளாகமே தூய்மை பெற்றுவிட்டது. அமைதிக்காக வாழ்ந்த அந்த மனிதத் தெய்வத்தின் அருள் உரு ஒவ்வொருவர் உள்ளத்தும் நிறைந்து விடுமானால் உலகமே தூய்மையும் அமைதியும் பெற்றுவிடுவது உறுதி! வாழ்க அண்ணல் ஆபிரகாம் புகழ்! * வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று (குறள் 678) * கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். (குறள் 925) * வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் (குறள் 120) கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது (பட்டினப்பாலை) * கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. - குறள் 332. * எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. (குறள்) * குறள் : 34 + குறள் : 35. ++ குறள் 996. *குறள் : 39 1. குறள் : 72 2. திருவாசகம் 1. புறநானூறு : 9 1. 1. 2. குறள் : 428. 1. பெருந்தொகை: 260; 262. 1. குறள் : 996. 2. புறநானூறு : 182. 3, 4. மணிமேகலை 22 : 61. 1. குறள் : 323. 2. குறள் : 34. 1. திருமந்திரம் : 2615 2. குறள் : 306. 1. குறள் : 8. 1. குறள் : 261. 2. தாயுமானவர், 1. தாயுமானவர், 2. நாவுக்கரசர். 3 குறள் : 228. 1. குறள் : 250. 2. குறள் : 318; 316. 1. குறள் : 422. 2. குறள் : 773. 1. குறள் : 261. 2. குறள் : 156. 3. குறள் : 155. 1. குறள் : 314. 1. குறள் : 987. 1. குறள் : 151. 2. குறள் : 1040. 3. குறள் : 990. 1. திருக்குறள் : 776. 1. புறநானூறு : 192. 2. திருமந்திரம் : 2104. 3. திருக்குறள் : 972. 1. புறநானூறு : 58. 2. புறநானூறு : 367 1. புறநானூறு : 143. 2. புறநானூறு : 144, 145. 3. புறநானூறு : 146. 4. புறநானூறு : 147. 1. புறநானூறு : 195. 1. புறநானூறு : 46. 1. புறநானூறு : 95. 1. திருக்குறள் : 611. 1. புறநானூறு : 18. 2. புறநானூறு : 2. 3. குறள் 374. 1. புறநானூறு : 151. 1. ஆசிய சோதி. 1. திருக்குறள் : 151. 1. தம்மபதம். 1. திருக்குறள் : 664. 1. குர் - ஆன். 1. மணிமேகலை. 1. சர்வ சமய சமரசக் கீர்த்தனை : 171. 2. நீதிநூல் : 31 : 1. அறவோர் அமைதிப் பணிகள் 1. அமைதிப்பணி உலகம் அமைதியை விரும்புகிறது; மிக மிக விரும்புகிறது; அணுக்குண்டுகளை அடுக்கி வைத்து அணிவகுப்பு நடத்தும் அளப்பரும் அறிவியல் வளர்ச்சியுடைய நாடுமுதல், அடிப்படைத் தேவைகளுக்கும் அலமரும் நாடு இறுதியாக அனைத்து நாடுகளும் அமைதி ஒன்றையே நாடுகின்றன. vGÃiy khl¤J ïÅJ thG«