இளங்குமரனார் தமிழ்வளம் 22 1. தமிழ் மலை 2. மறைமலையடிகள் ஆராய்ச்சித் திறன் ஆசிரியர் : முது முனைவர் இரா.இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் - தமிழ்வளம் 22 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : கோ. இளவழகன் பதிப்பு : 2010 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16 + 204 = 220 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140/- படிகள் : 1000 நூலாக்கம் : செவன்த்சென் கம்யூனிகேசன் அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 தமிழ் மலை பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். இப்பெருந்தமிழ் அறிஞர் எழுதிய படைப்புகளை 20 தொகுதிகளாக (1 முதல் 20 வரை) அவரின் 81-ஆம் ஆண்டு நிறைவையொட்டி கடந்த 2009 ஆம் ஆண்டில் வெளியிட்டுப் பெருமை சேர்த்தோம். பெருமைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவர் தம் அறிவு விளைச்சலை 21 முதல் 40 வரை 20 தொகுதிகளை 83-ஆம் ஆண்டு (2012) நிறைவையொட்டி தமிழுலகம் பயன்கொண்டு செழிக்கும் வகையில் வெளியிடுகிறோம். அவர் தம் அருந்தமிழ்ப் பணியை வணங்கி மகிழ்கிறோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப் பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப்பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற் குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழிநூல் கதிரவன் பாவாணரையும், தமிழ் மொழிக்காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ்நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்ச் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் எழுதிய நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். சலுகை போனால் போகட்டும் - என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒருகோடி கண்ட - என் தமிழ் விடுதலை ஆகட்டும். பாவேந்தர் வரிகளை நினைவில் கொள்வோம். - பதிப்பாளர். உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு v நூல் தமிழ் மலை 1. குலிசை 5 2. பள்ளி எழுச்சி 9 3. தமிழ்த் தேனீ 13 4. மணமலர் 19 5. பூஞ்சோலை 24 6. தென்றல் உலா 39 7. தேனருவி 68 8. உதிர்மலர் 75 9. புகழ் மாலை 78 ம மலையடிகள் ஆராய்ச்சித் திறன் 1. மறைமலையடிகள் 97 2. ஆராய்ச்சி 101 3. அடிகளார் பயின்ற நூல்களும் பயின்ற முறையும் 104 4. அடிகளார் காட்டும் ஆய்வியல் நெறிமுறைகள் 115 5. அடிகளார் இயற்றிய நூல்கள் 122 6. அடிகளார் இலக்கிய ஆராய்ச்சித் திறன் 132 7. அடிகளார் சமய ஆராய்ச்சித் திறன் 144 8. அடிகளார் அறிவியல் ஆராய்ச்சித் திறன் 162 9. அடிகளார் சமய நோக்கு 175 10. குறிப்பு 202 பெறும் பேறு வளம் எங்கே இருக்கிறது? வளம் எங்கேயும் இருக்கிறது! அஃது இல்லாத இடமே இல்லை! வளம் எங்கும் இருப்பதை எப்படி அறியலாம்? வளத்தைத் தேடும் உளம் இருந்தால், வளம் எங்கேயும் இருப்பதை அறியலாம்? வளத்தின் அளவு என்ன? வளத்தின் அளவும் உளத்தின் அளவேயாம்! உளத்தில் வளம் இல்லையானால், உள்ள வளமும் உடையவனுக்கும் உதவாது ஊருக்கும் உலகுக்கும் உதவாது! வளத்தைத் தரும் உளத்தை ஒருவர் வாய்க்கப் பெற்றால் போதும்! அவ்வளம் குன்றியளவானால் என்ன? குன்றத்தனைய வளமானால் என்ன? தினை அளவானால் என்ன? பனை அளவானால் என்ன? வளம் வளமே! தேனீ வளம்? தினைத்தனை அளவுப் பூவில், தேனீ கொள்ளும் தேன் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணரும் தேன் வளம் எவ்வளவு இருக்கும்? கோத்தும்பி கொணர்வதே வளம், தேனீ கொணர்வது வளமில்லை என எவராவது கூறுவாரா? வளம் வளமே! அவரவர் உழைப்பு, அறிவுத்திறம், உண்மையறிவு, பட்டறிவு, கால-இட-சூழல் கொடை- ஆகியவற்றைப் பொறுத்தது அது. பொருள் மட்டுமா வளம்? புலமை வளமில்லையா? ஊக்குதல் உதவுதல் உறுதுணையாதல் ஒன்றுதல் ஆயவை - வளமில்லையா? எல்லாம் வளமே! மல்லல் வளனே என்பது தொல்காப்பியம். (உரி.7) உடலாலும் வளம்; உழைப்பாலும் வளம்; உணர்வாலும் வளம்; உரையாலும் வளம்; வளம் பட வாழ வேண்டாதார் எவர்? வளம் பெற வேண்டாதார் எவர்? வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றம் என்பது சிலம்பு! வளத்தின் அளவு, அளந்து கடை அறியாவளம் என்பது (25:33-34) நாடென்ப நாடா வளத்தன என்பது நாட்டின் இலக்கணம்! எளிமை, இனிமை, இறைமை, நிறைமை என மக்கள் வாழ்ந்த நாள் இலக்கணம்! இன்றோ, நானில வளங்களையும் நாடா நாடில்லை! எந்த நாடு ஏற்றுமதி செய்யவில்லை? எந்த நாடு இறக்குமதி செய்யவில்லை? பாலைவளத்தை நாடிச்சோலை நிற்றல் வெளிப்படை என்றால், சொல்வானேன்? நாடாவளத்தில் குப்பைக்கீரை சேராதா? குறுந்தூறு சேராதா? வளத்தை வழங்குதல் தான் பிறவிக் கடனே யன்றி அளவிடும் பொறுப்பு வழங்குவார்க்கு இல்லை! பெறுவார் பொறுப்பு. ஆனால், வளம் பெற்றுப் பெற்றுப் பெருகி வாழ்ந்தவர், அவ்வளத்தைத் தமக்கு வழங்கிய மண்ணுக்கு மறித்து வழங்கிப் பெற்ற கடனைத் தீர்க்காமல் போனால் கடன்காரராகவே போவது மட்டுமன்றி, பிறவி அடையாளமே இல்லாமலும் போய்விடுவார்! பெற்றவர் வழியாகக் கருவிலே பெற்ற திரு என்ன! கற்ற கல்வியால் பெற்ற வளம் என்ன! பட்டறிவால் - ஆழ்மன ஆய்வால் - தேடிக் கொண்ட வளங்கள் என்ன என்ன! பிஞ்சுப் பருவ முதல் பெரும் பிரிவு வரை பெற்றவற்றை, அந்நிலைப்பருவத்தர்க்குப் பருவமழை போலப் பலப்பல வகையாலும் வழங்குதல் வாழ்வார் வாழ்வுச் சீர்மையாதல் வேண்டும்! புரிவு தெரிந்த நாள் முதல் புலமை பெருகிவரும் அளவுக்குத் தகத்-தகத் தொல்காப்பியர் ஆணை வழி, ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்னும் நால்நெறிக் கடன்களையும் நிறைவேற்றல் வேண்டும்! கூற்றையும் ஆடல் கொள்ளும் கொள்கை இதுவென உணர்வார் ஓயார், ஒழியார்; சாயார்; சரிந்தும் போகார்! என் இளந்தைப் பருவமே, ஆசிரியப் பருவமாகிவிட்டது. அக்காலச் சூழல் அது. பிறந்தநாள் : 30.01.1930 ஆசிரியப் பணி ஏற்ற நாள்: 08.04.1946 கால் சட்டை போடும் மாணவப்பருவத்தில் வேட்டி கட்டும் ஆசிரியனாகி விட்டேன்! மூன்றாண்டு ஆசிரியப் பணி செய்தால் போதும்! புலவர் தேர்வைத் தனியாக எழுதலாம் என்னும் வாய்ப்பு! அவ்வாய்ப்பைச் சிக்கெனப் பற்றியமையால் 1949, 1950, 1951 ஆகிய மூவாண்டுகளில் தொடர்ந்து நுழைவுத் தேர்வு, புலவர் இடைநிலைத் தேர்வு, புலவர் நிறை நிலைத் தேர்வு எனச் சிறப்புற வெற்றி வாய்ப்பு எய்தியது. உயர்பள்ளி, மேல்பள்ளி என்பவற்றிலும் பல்கலைக் கழகத் தமிழியல் ஆய்வுக் களத்திலுமாக ஏறத்தாழ 43 ஆண்டுகள் தமிழ்வாழ்வாக வாழ வாய்த்தது. தமிழ்த்தொண்டும், தமிழ்நெறித் தொண்டும் என்றும் விடுதல் அறியா விருப்பொடு செய்து கொண்டிருத்தலே இயற்கையோடு இயைந்த வாழ்வாகி விட்டது! புலமைத் தேர்வுக்குரிய பாடத்தளவிலோ, நூல்களின் அளவிலோ என் கல்வி நின்றது இல்லை! தொல்காப்பியம் முதல் இற்றைநாள் நூல்கள் வரை இயன்ற அளவால் தமிழ்வளம் பெறுதலை நோன்பாகக் கொண்டு கற்கும் பேறுபெற்றேன். பேராசிரியர் சி.இலக்குவனார், மொழிஞாயிறு பாவாணர், நாவலர் ச.சோ.பாரதியார், வரலாற்றுச் செம்மல் அரசமாணிக்கனார், பைந்தமிழ்ப் பாவலர் m.கி.guªjhkdh®, உரைவேந்தர் ஔவை சு.துரைசாமியார், மூதறிஞர் செம்மல் வ,சுப.மாணிக்கனார், தாமரைச் செல்வர் வ,சுப்பையனார், ஈரோடு வேலா, குழித்தலை மீ.சு. இளமுருகு பொற்செல்வி, பதிப்புச் செம்மல் மெய்யப்பனார், பாரதி சோ.சாமிநாதனார், தமிழ்ப்போராளி இளவழகனார், தமிழ் மீட்புக்குத் தலைநின்ற ஆனாரூனா, பாவாணர் அறக்கட்டளையர் கோவலங்கண்ணனார், மலையக மாரியப்பனார் இன்னர் நெருக்கத் தொடர்புகள் வாய்த்தன. இளந்தைப் பருவத்திலேயே பாவேந்தர், ஓகி சுத்தானந்த பாரதியார், கவிமணியார், கவிராச பண்டித செகவீர பாண்டியனார், அறிஞர் மு.வ. ஆயோர் அரிய காட்சியும் சின்முறைச் சந்திப்புகளும் என்னுள் பசுமை நல்கின. தமிழ்ப் பொழிவுகளும், ஆய்வுக் கட்டுரைகளும், குடும்பச் சடங்குகளும் என் மீட்டெடுப்புப் பணிகள் ஆயின! எம் குடும்பக் கடமைகள் எம் பணியையோ தொண்டையோ கவர்ந்து கொள்ளா வகையில் இனிய துணையும் மக்களும் அமைந்தனர். அதனால், காலமெல்லாம் கற்கவும் கற்பிக்கவும் நூல் படைக்கவும் வாய்த்த வாய்ப்புப் பெரிதாயிற்று. அன்பும் அறிவும் என்னும் நூல் தொடங்கிச் செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் எனத் தொடர்ந்து ஏறத்தாழ 400 நூல்கள் இயற்றவும் வெளியிடவும் வாய்த்தன. குழந்தை நூல்கள், நூலக நூல்கள், ஆய்வு நூல்கள், அகராதிகள், உரைநூல்கள், பதிப்பு நூல்கள், பா நூல்கள், காப்பியங்கள், கதைகள், கட்டுரைகள், தொகுப்புகள் இலக்கண நூல்கள் எனப் பலப்பல திறத்தனவாய்ப் பால் வாய்ப் பருவத்தர் முதல் பல்கலைக் கழக ஆய்வர் வரைக்கும் பயன் கொள்ளும் வகையில் அவை அமைந்தன. எதை எடுத்தாலும் பாடலாக்கல் ஒருகாலம்; கதையும் நாடகமும் ஆக்கல் ஒருகாலம்; பதிப்புப் பணியே ஒரு காலம்; உரை காணலே ஒரு காலம்; படிப்படியே சொல்லாய்வே வாழ்வென ஆகிவிட்ட காலம் என அமைந்தன. இக் கொடைகள் வழங்கியவை பாரதி பதிப்பகம், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணி பதிப்பகம், முருகன் பதிப்பகம், வேலா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், வேமன் பதிப்பகம், மூவேந்தர் பதிப்பகம், பாவாணர் அறக்கட்டளை, சாகித்திய அகாதெமி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்மண் பதிப்பகம், அமிழ்தம் பதிப்பகம், வளவன் பதிப்பகம், மாணவர் பதிப்பகம், அமிழ்தமணி பதிப்பகம், திருவள்ளுவர் தவச்சாலை அறக்கட்டளை வெளியீடுகள் என விரிந்தன. நூலுருப் பெற்று அச்சக வழியும் பதிப்பக வழியும் காணப்பெறாமலும் எதிர்பாரா மறைவுகளாலும் ஏறத்தாழச் சிறிதும் பெரிதுமாய் ஒழிந்தவை இருபதுக்கு மேல் ஆயின. செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பாவை, குறள் நெறி, குறளியம், மலர்கள், ஆய்வரங்கங்கள் எனக் கட்டுரைகள் பெருகின. அச்சுக்கு வராதவையும் ஆகின! இவை என்றும் ஒருமுகமாய்க் கிடைக்க வாய்ப்பில்லை. எம் நூல்கள் எம்மிடமே முப்பதுக்குமேல் இல்லாமல் மறைந்தன. எழுதியன எல்லாவற்றையும் ஒருமுகமாகப் பெறப் பலர் அவாவினார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் (ஆருயிர்க்கு அன்பர்) அதில் தலைப்பட்டு நின்றார். ஆயர் ஆண்டகை சூசைமாணிக்கனார் சுடரேற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மதிப்புறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. அதற்கு மகிழ்வுற்ற வகையால் பாவாணர் தமிழியக்கம் முதலாம் அமைப்புகளும், முனைவர் திருமாறனார் முதலாம் ஆர்வலர்களும் விழா ஒன்று எடுத்தனர். அவ்விழாத் தலைமையைத் திருத்தகு துணைவேந்தர் பொன்னவைக்கோ ஏற்றார். தவத்திரு ஆத்துமானந்த அடிகளார் வாழ்த்துரைத்தார். பொறிஞர் தமிழறிஞர் பாலகங்காதரனார் என் நூல்கள் சிலவற்றை ஒளிப்படியாக்கி உயரட்டைக் கட்டில் வழங்கி அவற்றை முழுதுறப் பெற மீளச்சிடுதல் வேண்டும் என்றார். தமிழாக்கப் பதிப்பே வாழ்வாக ஒன்றிய இளவழகனார் முழுதுற அச்சிட ஒப்பினார். அடிகளார் வெளியீட்டுப் பொறுப்பு ஏற்பதாகக் கூறினார். கிடைக்கும் நூல்கள் தவிர்த்துப் பிறவற்றையெல்லாம் அச்சிடும் திட்டம் கொண்டு ஏறத்தாழ இருபது, இருபது தொகுதிகளாக வெளியிடுவது என உறுதிப்படுத்தப் பட்டது. அவ்வகையில் வாய்ப்பதே, இளங்குமரனார் தமிழ்வளம் என்னும் இத் தொகை நூல்களாம்! இத் தொகையில் விடுபடும் நூல்கள் கட்டுரைகள், பாடல்கள் பலபல; தொகுக்க வாய்க்கா வகையில் கிட்டாவகையில் மறப்பு வகையில் விடுபாடுடையவை உள. எனினும் தொண்ணுறு விழுக்காடேனும் ஒரு முகமாகப் பெறும் பேறு வாய்க்கின்றது என்பது மகிழ்வூட்டுவதாம்! மக்கள் வாழ்வு வளர்நிலையது! நூல்களும் வளர் நிலையவை! ஆதலால் ஒருவாழ்வுக் கொடை மட்டுமன்று ஈது; ஒருவாழ்வு பெறத் தக்க பல்பருவக் கொடையுமாம் எனல் சாலும்! இதன் அடிப்படையாம் எத்தேடலிலும் பெரிதும் தோயாமல் தமிழ்வளத் தேடலிலேயே காலமெல்லாம் சோம்பலைச் சுட்டெரித்து, இடுக்கணுக்கு இடுக்கண் ஆக்கி வாழ்ந்த வாழ்வுக் கொடையாம் இது! இவ்வளத்தை முழுதுற எண்ணின் ஒன்று உறுதியாக வெளிப்படும். நலவாழ்வு நல்வாழ்வு கருதாத - இயற்கை இறைமைப் பொதுமை கருதாத - எப்படைப்பும் எம்படைப்பில் இரா என்பதேயாம். இவற்றைப் பயில்வார் பெறும் பேறும் அதுவாக அமையின் அப்பேறே யாம் பெறும் பேறாம். இவ்வளம் வெளிவர விரும்பினோர் உழைத்தோர் உதவினோர் ஆய அனைவர்க்கும் நன்றிக் கடப்பாடுடையேன்! வாழிய நலனே! வாழிய நிலனே! நெல்லுக்கு உமியுண்டு நீருக்கு நுரையுண்டு புல்லிதழ் பூவுக்கும் உண்டு குறைகளைந்து நிறை பெய்து கற்றல், கற்போர் கடனெனல் முந்தையர் முறை இன்ப அன்புடன், இரா.இளங்குமரன் பதிப்புரை பல்வகை வண்ணங்களைக் கொண்ட வண்ணத்துப் பூச்சி பார்வைக்கு மிக அழகாக உள்ளது. பல்வகை பண்பாடுகளைப் பின்பற்றிவரும் மக்கள் இனங்கள் ஒருசேர வாழ்வதைக் காணும்போது மகிழ்ச்சி தருகிறது. வரலாற்றுத் தொடக்க காலம் முதல் இக்காலம் வரை பல்வேறு இனமக்கள் தத்தமக்குரிய பண்பாட்டைத் தத்தமக்குரிய உணவு, உடை, உறையுள், மொழி, நாகரிகம், நாடு ஆகியவற்றைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் அடுத்துவரும் தலைமுறையினர்க்கு எடுத்துச் செல்கின்றனர். இருபதாம் நூற்றாண்டு மிக வேகமாக வளர்ந்துவரும் அறிவியல் நூற்றாண்டு. மனிதன் எல்லா எல்லைகளையும் மீறிக்கொண்டு வளர்ந்து வருகிறான். தனக்குள்ள பண்பாட்டையே மறந்து வருகிறான். நாடு என்கிற எல்லையை மீறி எல்லோரும் எல்லா நாடுகளிலும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று எந்த எசுக்கிமோக்களும் இக் குழுவில் வாழ்வதில்லை. தனிமனித இனத்தின் குறியாகத் திகழும் உணவு, உடை, உறையுள் எல்லாவற்றிலும் உலக முழுவதும் ஒத்த சீரான போக்கு வளர்ந்துள்ளது. அந்தந்த இனத்திற்குரிய பண்பாடு மட்டும் ஒரு சில இடங்களில் மீறப்படாமல் உள்ளது. மொழியைப்பற்றிய நிலையும் இதுவே. வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தம் சிறார்களுக்குத் தமிழைக் கற்பிப்பதில்லை. தமிழ் அறியாத் தமிழர்கள் தரணியெங்கும் உருவாகி வருகிறார்கள். இச் சூழலில் ஒரு மொழியைக் காப்பாற்றி வருகிற தலைமுறையினர்க்கு அளிப்பது என்பதே பெருஞ்செயலாக உள்ளது. மூவாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட முன்னைப் பழையமொழியாம் தமிழ், தமிழ் நாட்டிலேயே பல தமிழர் அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்தரும் வண்மையும் மலைக்கே என்பது நன்னூற் பாயிரம்! மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை யுடையது. மல் என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. என்பது அடிகளார் தரும் மலை விளக்கம் (சிறுவர்க்கான செந்தமிழ்-4) நீடிருங் குன்றம் நிழல்காலும் மண்டிலத்துக் கோடு கோடாய்த் தோன்றும் என்பது சிலம்பு. மலையைக் காட்டும் - முற்றாக அதே அளவில் அதே நிலையில் - படம் பிடித்துக் காட்டும் - ஆடியும் உண்டோ? அதே நிலைதான், அடிகளாரின் இவ் வரலாற்று நிலையும்! மலையின் வரலாறு, இயற்கையோடு இயைந்த தன்றோ! இத் தகுமலையின் வரலாறும் இயற்கையோடு இயைந்து செல்லும் தலைப்புகளைக் கொண்டமை பார்த்த அளவாற் புலப்படும். ஒன்பான் பகுதிகளைக் கொண்டது இவ் வரலாறு. முதற்பகுதி குயிலிசை; அடிகளார் தம் வளமாளிகையின் சூழலில் வள்ளலார் பாடலை இசைத்ததும், அவர்தம் தவமகளார் தூண்டலால் தனித்தமிழ் இயக்கம் கண்டதும் இப் பகுதி ஆகும். அடிகளார் இசை, மகளார் இசை, தனித் தமிழ் இசை, வள்ளலார் இசை எல்லாமும், குயிலிசை தழுவல் பொதுமைய. பள்ளியெழுச்சி என்பது விழிப்பு - பிறப்பு - ஒலிப்பு - படிப்பு இன்னவெல்லாம் தழுவிய வரலாற்றினது. மூன்றாம் தலைப்பாகிய தமிழ்த்தேனீ என்பது பள்ளிப் படிப்பை விடுத்த அடிகளார் தனிப்படிப்பும் பொத்தக வணிகர் நாராயணசாமியார் வழியே கற்ற கல்வியுமாம்! கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைத்த தகையது அது! மணமலர் என்பது காதல் மணமும், கல்வி மணமும் பரவிய நிலையாகும். ஐந்தாவதாகிய பூஞ்சோலை அடிகளார் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியராகக் கடனாற்றிய காலத்துச் செய்திகளாகும். மாணவர் வளாகம் என்பது பூஞ்சோலை வளாகம்தானே! அவரினும் இளவள மலர் உண்டோ? அடிகளார் கல்லூரிப் பணியை விடுத்துப் பொது நிலைக்கழக நிறுவனராய் - ஆசிரியராய் - அடிகளாராய்-த் தென்னகமும், வடவகமும், ஈழவகமும் உலாவந்த இனிய செய்திகள் தென்றல் உலா அடிகளார் இயற்றிய நூல்கள் எத்தகைய இனிமையும் வளமையும் வாய்ந்தவை! அவை தேனருவி யல்லவோ! தேனருவி வழியும் மூலையில் நாலைந்து தென்னமர உயரத்தில் வட்டமான ஒரு பெருந்தேனடை இருந்தது. அவ்வளவு பெரிய தேன் அடையை யாம் வேறு எங்குமே கண்டதில்லை. அதன் குறுக்களவு சிறிது ஏறக்குறையப் பத்து அடி இருக்கும். அதன் நிறஞ்சிறு சிவப்பாய் இருந்தமையால் அது, காலையில் எழும் பகலவன் வடிவை ஒத்திருந்தது. அத் தேனடையின் பக்கத்துள்ள மூலையில் இருந்து அருவி நீர் வீழ்தல்பற்றியே அதனைத் தேனருவி என வழங்குகின்றனர் என்றும், எக்காலத்துமே அத்தேனடை அங்கு இருக்கும் என்றும் எம்முடன் வந்தார் சொல்லக்கேட்டேம் என்பது குற்றாலமலையில் அடிகளார் கண்ட தேனருவிக் காட்சி! (சிறுவர்க்கான செந்தமிழ் 10) பழகப் பழகப் பாலும் புளிக்கும் பன்னீராண்டானால் தேனும் புளிக்கும் என்பது பழமொழி! அடிகளார் நூல் என்றும் உவட்டாமல் இனிக்கும் தேனருவியன்றோ! எட்டாம் பகதி உதிர் மலர்! அடிகளார் புகழுருவாகிய பகுதி அது. நிறைவில் உள்ள புகழ் மாலை அடிகளாரைக் குறித்த உரையும் பாட்டுமாம் நறுமலர்த் தொடையலாய் அமைந்தது. நினைவகங்களும் புகழ் மாலையைச் சேர்ந்தவையே! தமிழ் உணர்வுக்கு - தமிழின உணர்வுக்கு அடிகளார் வரலாறு வைப்பகம்! வளநிலம்! அவர் நூல்களைக் கற்றால் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வாய்க்கும். யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள் என்பது அடிகளார் எழுத்து (மறைமலை அடிகள் கடிதங்கள் பக்.1) இவ்வினிய வரலாற்றை எழுதத் தூண்டியவர்கள் கழக ஆட்சியாளர் திருமலி இரா. முத்துக்குமாரசாமி அவர்கள். நினைக்கவும் சொல்லவும் எழுதவும் இனிமை மல்கும் வரலாற்றை எழுதத் தூண்டியமைக்கு, ஒற்றைக்கு இரட்டையாய் நன்றி கூறும் கடப்பாடுடையேன். அடிகளார் வரலாறும் தொண்டும் கெழுமியதோர் பெரிய வரலாறு வருதல் வேண்டும்! தனித்தமிழ்ப் பற்றாளர்கள் ஆர்வமே அதனை வெளிக்கொணரவல்லது! நூலை வாங்குவார் வேண்டும் அல்லவோ! பாவாணர் ஆய்வு நூலகம், தமிழ்த் தொண்டன், திருநகர், மதுரை - 6. இரா. இளங்குமரன் 625006. 20-5-90 1. குயிலிசை இயற்கைச் சூழல் : அழகிய சிறிய மாளிகை; அதனைச் சுற்றி ஒரு சிறு பூங்கா; புல்வெளி, பூஞ்செடி, பழமரம், நிழல் மரம்; ஊடே செல்லும் நடைவழி; இத்தகைய மனங்கவர் சூழல்! பதின்மூன்று அகவையுடைய ஓர் இளங்குயில்; அக்குயிலைத் தமிழ் செய்த தவத்தால் தந்த தந்தையார்! இருவரும் புல்வெளியின் ஊடேயமைந்த நடைபாதையில் உலாவிக்கொண்டே நூல் ஓதுகின்றனர்; உரையாடுகின்றனர்; இடை இடையே இசைக்கின்றனர். இன்னிசை : தந்தையார் இசையில் இளங்குயில் தோய்கின்றது. தந்தையின் குரலிசை தேனில் தோய்த்தெடுத்த பலாச் சுளைபோல் இனியது அதனையும் வெல்ல வல்லது இளங்குயிலின் குரலிசை; யாழும் குழலும் குயிலும் திறை செலுத்துமாம்! பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் என்பது வள்ளுவம்; பண்ணிசையுடன் பாடற்பொருளும் உணர்ந்து ஓதினால் அன்றோ உள்ளம் தளிர்க்கும்! உயிரும் தளிர்க்கும்! அவ்வாறு தளிர்க்கப் பாடவல்ல தந்தையும் மகளும் அவர்கள். தந்தையார் வள்ளலார் பாடிய பாடலொன்றை மெல்லென இசைக்கிறார்! அம் மெல்லியல் குயிலும் மெல்லிதழ் அசைய மிழற்றுகின்றது. அப்பாடல்: பெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுதாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல்மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும் நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே. என்பது. ஒரு சொல் : ஓரியக்கம் : இசைப்பாகாக வடித்த தந்தை முதலடியை மீண்டும் இசைத்து உற்ற தேகத்தை என்று சொல்லிச் சற்றே தயங்கினார். தந்தை முகத்தை நோக்கினார் இளஞ் செல்வி குறிப்பில் குறிப்பு உணரவல்ல தந்தையார், நீலா (இளங்குயிலின் பெயர் நீலாம்பிகை) வள்ளலார் பாடிய இவ் வளமான பாடலில் தேகம் என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. இது வடசொல்; இவ்விடத்தில் யாக்கை என்னும் தென் சொல்லைப் பெய்திருந்தால் இன்னும் எத்தகு சுவையாகவும் நயமாகவும் இருந்திருக்கும் என்றார். அப்பா! வடசொல் தமிழில் புகுவதால் சுவையும் நயமும் குறையுமா அப்பா? சுவையும் நயமும் குறைவது மட்டுமில்லை. வழக்கில் உள்ள தென் சொற்களும் படிப்படியாய் வழக்கில் இருந்து நீங்கிப்போகும். அதனால் காலவெள்ளத்தில் மறைந்து வழக்கற்ற சொற்களாகவும் போய்விடும். அவ்விடத்தில் வேண்டாத வேற்றுச் சொற்கள் புகுந்துவிடும். அதனால் வேண்டியதை இழப்பதுடன் வேண்டாததை ஏற்கும்படியான இருமடங்குக் கேடும் உண்டாகும் அப்பா! அப்படியானால் நாம் வடமொழி முதலிய வேற்று மொழிச் சொற்கள் கலவாமல் பேசவும் எழுதவும் உறுதி கொள்ளலாமே! அது, நம் மொழிக்காவல் ஆகுமே! ஆம் குழந்தாய்! என்னுள் ஆழமாக அமிழ்ந்து கிடந்த செய்தி இது; உன் வழியாக வெளிப்படுகின்றது. நல்லது; இன்று முதல் நம் எழுத்திலும் பேச்சிலும் பிறமொழிக் கலப்பில்லாத கடைப்பிடி கொள்வோம். - தந்தையும் மகளும் தேர்ந்து தெளிந்து எடுத்த முடிவு இது. இதுவே தனித்தமிழ் இயக்கம் தோன்றிய வரலாறு ஆகும். உறுப்பை வெட்டி ஓட்டல் : தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுலித்த தந்தையும், மகளும் தவத்திரு மறைமலையடிகளாரும் நீலாம்பிகையும் ஆவர். தோன்றிய இடம் மறைமலையடிகள் வாழ்ந்த வளமனையாய் இருந்து, இந்நாளில் மறைமலையடிகள் கலைமன்ற மாளிகை யாய்த் திகழ்வதாகும். இது பல்லவ புரம் ஆகிய பல்லாவரத்தில் உள்ளது. இவ்வியக்கம் தோன்றிய ஆண்டு 1916. அப்பொழுது அடிகளார்க்கு அகவை நாற்பது. நாற்பத்து ஐந்தாம் அகவையிலே எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் நூலிலே. தமிழிற் பிறமொழிக் கலப்பு, தனித்தமிழ் மாட்சி என்னும் கட்டுரைகளை வரைந்தார் அடிகளார். தனித்தமிழும் கலப்புத் தமிழும் என்றொரு கட்டுரையைச் செந்தமிழ்ச் செல்வியில் எழுதினார். இளங்குயில் நீலாவோ, புலத்துறை முற்றியபோதில் தனித்தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலும், வட சொல் தமிழ் அகர வரிசை என்னும் நூலும் ஆக்கினார். தனித் தமிழ் பற்றிய அடிகளார் குறிப்புகளுள் சில : இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிற சொற்களைப் புகுத்துதல் எதுபோல் இருக்கிறது என்றால், எல்லா உறுப்புகளும் அமைந்த அழகியதோர் உடம்பில் உள்ள உறுப்புகளை வெட்டி எரித்துவிட்டு வேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ் உறுப்புகள் போற்செய்து அவற்றை அதன்கண் ஓட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாய் இருக்கின்றது. மயிர், குஞ்சி, கூந்தல் முதலிய தமிழ்ச் சொற்களை விடுத்து ரோமம், சரீரம், சிரசு. வதனம் என்பவற்றையும், கண், காது, செவி, மூக்கு என்பற்றுக்கு நயனம் கர்ணம், நாசி என்பவற்றையும், மிடறு, கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் கண்டம் என்னும் சொல்லையும், தோள், கை முதலியன இருக்க புஜம் கரம் என்பவற்றையும், வயிறு, அகடு இருக்க உகரம் குக்ஷி என்பவற்றையும், கால், அடி என்னும் சொற்களுக்குப் பதம் பாதம் என்பவற்றையும் கொண்டுவந்து நுழைத்தல் அவ்வத் தமிழ்ச் சொற்களாகிய உறுப்புகளை வெட்டி எறிந்து விட்டு அவை போன்ற ஏனைமொழிச் சொற்களைக் கொணர்ந்து அத் தமிழ் உடம்பின்கண் ஒட்டவிடுதலைப் போல்வது அன்றோ! பொருள்களை, வதுக்கள் என்று சொல்வது எதற்கு? ஒளியைப் பிரகாசம் என்றும், ஓசையைச் சப்தம் என்றும், சுவையை ருசி என்றும், மணத்தை வாசனை என்றும், தித்திப்பு, இனிப்பை மதுரம் என்றும், தொடுதல், உறுதலை பர்சம் என்றும் கல்வியை வித்தை என்றும், தண்ணீர், சோறு, உணவு என்பனவற்றை ஜலம் அந்நம் ஆகாரம் என்றும், ஆடையை வதிரம் என்றும், கட்டாயம் என்பதை அவயம் என்றும், தாய், தந்தை, மகன், மகள், உறவினரை மாதா, பிதா, புத்ரன், புத்ரி, பந்துக்கள் என்றும், துன்பம், கேடு, குடும்பம் என்பவற்றைக் கஷ்டம், நஷ்டம் சம்ஸாரம் என்றும், தலைமுழுக்கு, வழிபாடு, இளைப்பு, தூக்கம் முதலியவைகளை நாநம், பூஜை, ஆயாசம் நித்திரை என்றும், முயற்சி, ஊழ்வினை, உயிர், சிவம், கடவுள் என்பவற்றைப் பிரயத்நம், விதி, ஆத்மா, ஈசன், பிரமம் என்றும், நினைத்தல், எண்ணல், சொல்லல் என்பவற்றை ஞாபகம், பாவநை, வசனித்தல் என்றும், தூய தமிழ்ச் சொற்களை ஒழித்து வடசொற்களைக் கொண்டு வந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பதுதானா நமது அருமைச் செந்தமிழ் மொழியை வளர்ப்பது? அறிவுடையீர்! கூறுமின்கள்! தனித்தமிழ் இயக்கம் கண்ட அடிகளார் செயலைக் கலிகாலக் கொடுமை என்று வெறுத்துப் பழித்தாரும் இருந்தனர். அவர்களை நோக்கி, பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும் தம் தனித்தமிழ்த் தாயைப் பிறமொழிச் சொற்கள் என்னும் கோடரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத் தீவினைச் செயலைப் புரியும் இவர் தம்மைத் தடுத்து எம் தமிழ்த் தாயைப் பாதுகாக்க முன் நிற்கும் எம் போல்வாரது நல்வினைச் செயல் ஒரு காலும் கலிகாலக் கொடுமை ஆகாது என்று உணர்மின்கள் நடுநிலையுடையீர் என்று மறுத்தெழுதினார் அடிகள். குயிலிசை கேட்ட நாம், பள்ளியெழுச்சி பார்ப்போம். 2. பள்ளி எழுச்சி நாகைச்சிறப்பு : கற்றார் பயில் கடல் நாகை எனப்பாடு புகழ் பெற்றது நாகப்பட்டினம். அவ்வூர்க் குழந்தைகளும் அறிவாற்றல் மிக்கோராக விளங்கினர் என்பதற்கு ஒரு செய்தி கூறப்படுகின்றது : வசைபாடக் காளமேகம் என்று சொல்லப்படும் புலவர், ஒருகால் அவ்வூர்க்குச் சென்றார். அவர்க்குப் பசியாயிற்று! சோறு விற்குமிடம் எது என்று தெரிந்து கொள்ள விரும்பினார். அவர் வந்த தெருவில் சில சிறுவர்கள், பாக்கு வைத்துத் தெறித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் புலவர் சோறு எங்கே விக்கும்? என்றார். விக்கும் என்ற சொல்லின் வழுவை அறிந்து கொண்ட சிறுவர்களுள் ஒருவன் இது தெரியாதா? சோறு தொண்டைக்குள் விக்கும் என்றான்! உடனிருந்த சிறுவர்கள் அனைவரும் அவன் செய்த கேலியைப் புரிந்து கொண்டு, பெருஞ்சிரிப்புச் சிரித்தனர். பசிக்கடுமை, சிறுவன் மறுமொழி, சிறுவர்கள் நகைப்பு எல்லாம் சேர்ந்தால் வசைபாடும் காளமேகத்தை வாளா விட்டுவிடுமா? பாக்குத் தெறித்துவிளை யாடுசிறு பாலகர்க்கு நாக்கு என்ற அளவில் நினைத்து. ஆங்குக் கிடந்த கரித்துண்டு ஒன்றை எடுத்து, இவ்வடியை ஒரு சுவரில் எழுதினார். பின்னர்ப் பசியாறிக் கொண்டு வந்து வசைப்பாட்டை முடிக்கலாம் என்னும் எண்ணத்துடன் சென்றார்! கடுகடுத்த காளமேகம் கரித்துண்டால் சுவரில் எழுதியதைப் படித்துப்பார்த்த சிறுவருள் ஒருவன், அவர் வைதுதான் பாடுவார்! அதற்கு இடம்வைக்காமல் செய்து விடவேண்டும் என்று துணிந்து அக் கரித்துண்டை எடுத்து, நாக்குத் தமிழ்விளங்க நாகேசா என இரு சீர்களை எழுதிவிட்டான்! காளமேகம் அசைபோட்டுக் கொண்டு வந்தார். நாக்குத் தெறித்துவிழ நாகேசா என்று தொடர வேண்டும் என்பது அவர் வேட்கை. சுவரில் உள்ள புதுத் தொடரைக் கண்டார்! ஆசு கவி என்னும் தம்மை, ஆசு கவியாக்கி விட்ட அவ்வூர்க் குழந்தைகளை வெறுக்க மனம் வராமல் தமக்கு உண்டாகிய செருக்குக்கும் சீற்றத்துக்குமே வருந்தினார்! அக் குழந்தைகளை அழைத்து அருகே வைத்துப் பாராட்டினார். இது செவி வழியாக அறியவரும் செய்தி. பெற்றோர் : இந் நாகப்பட்டினத்தை அடுத்துள்ளதோர் ஊர் காடம்பாடி என்பது. அவ்வூரின் புகழ் வாய்ந்தஅறுவை மருத்துவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சொக்கநாதர் என்பது; அவர் நாகப்பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். அவர்தம் இனிய இயல்பாலும், மருத்துவத் தேர்ச்சியாலும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தார். அவர்தம் இனிய வாழ்க்கைத் துணைவியார் சின்னம்மை என்பார். திருக்கழுக்குன்றம் : சொக்கநாதரும் சின்னம்மையும் கருத்தொத்த வாழ்க்கைத் துணையாக இருந்தும், மகப்பேறு வாய்க்கவில்லை. அதுவும் ஓராண்டு ஈராண்டு என்றில்லாமல் நெடுங்காலம் மகப்பேறு வாய்க்கவில்லை. சொக்கநாதருக்கு, அகவை அறுபதைத் தாண்டிற்று; சின்னம்மைக்கு, அகவை நாற்பதைத் தாண்டிற்று. இனி மகப்பேறு வாய்ப்பது அரிதே என்ற நிலைக்கு ஆட்பட்ட போதில், திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று வேதாசலரையும் சொக்கம்மையையும் வழிபட்டால் மகப்பேறு வாய்க்கும் என்று கேள்விப்பட்டனர். தவப்பிறவி : திருக்கழுக்குன்றம் ஒரு வகையில் தனிச் சிறப்புடையது. மலைமேல் அமைந்த சிவன்கோயில் தமிழ் நாட்டில் அஃதொன்றே என்பது அச் சிறப்பு. அம் மலைமேல் பல்கால் ஏறி இறங்கி வழிபட்டனர். ஒரு மண்டலம் (நாற்பது நாள்) நோன்பு கொண்டு மலையேறி வழிபட்டனர். அவர்கள் நம்பியது வீண்படாமல் சின்னம்மையார் வயிறு வாய்த்தார். உரிய காலத்தில் இடரெதுவும் இல்லாத ஓர் ஆண் மகவு பிறந்தது. அம் மகவுக்கு வேதாசலம் என்னும் பெயரைச் சூட்டினர். நாகை வாழ் சொக்கநாதர் தம் மகவுக்கு வேதாசலம் என்னும் பெயரிட்ட கரணியம் இதனால் விளங்கும். வேதாசலம் பிறந்தநாள் 1876 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் 15ஆம் நாள் பரணி ஓரை மாலை 6-35 மணியாகும். வேதம் அசலம் என்னும் இரண்டு சொற்களின் சேர்ப்பே வேதாசலம் என்பதும், அவ் வட சொற்கள் இரண்டன் தென் சொற்களே மறைமலை என்பதும் இவண் அறிந்து கொள்ளத் தக்கதாம். பழுத்த புலவர் வழுவையும் திருத்தும் ஆற்றலும், ஆடித் திரியும் பருவத்திலேயே பாடிப் பழகும் திறமும் அமைந்த குழந்தையர் வாழும் அம்மண்ணின் மணம், வேதாசலக் குழந்தையின் வருங்காலத் திறத்திற்கு வைப்பு நிதியாக வாய்த்திருந்தது போலும்! இளமைக் கல்வி : தளர்நடை கொண்டு மழலை பொழிந்த வேதாசலம் பள்ளிப் பருவம் எய்திய நிலையில், நாகப்பட்டினத்தில் சிறந்து விளங்கிய வெசிலியன் மிசன் பள்ளியில் சேர்க்கப்பட்டார். விளையும் பயிர் முளையிலே; விதைக்காய்ப் பிஞ்சிலே என்பது பழமொழி. அவ்வாறே தொடக்கப் பள்ளியில் பயிலும்போதே வேதாசலத்தின் அறிவுக் கூர்மையும் பண்பு நலமும் சிறந்து விளங்கின. பெற்றோர் மகிழவும் ஆசிரியர் பாராட்டவும் பயின்றார். பள்ளியில் வகுப்புத் தலைவன் என்னும் சிறப்பும், கல்வியில் தலை மாணவன் என்னும் தகுதியும் உண்டாயின. வீட்டில் கல்வி : வேதாசலம் தமிழ்க் கல்வியில் தனிச்சிறப்புக் கொண்டிருந்தார். அதனைப் போலவே ஆங்கிலக் கல்வியிலும் கருத்து ஊன்றினார். ஆங்கிலக் கல்விக்கு ஆங்குக் கிடைத்த வாய்ப்புப் போதுமானதாக இருந்தது. ஆனால் தமிழ்ப் பாடத்தின் அளவு, வேதாசலத்தின் ஆர்வத்திற்கு ஈடுதருவதாக அமையவில்லை! யானைப் பசிக்குச் சோளப் பொரி என்பது போலவே இருந்தது. அதனால் பள்ளிக்கூடத்திற்கு வெளியே தமிழ்க்கல்வி பெறுதற்கு உரிய வாய்ப்பைத் தேடினார். தமக்குக் கிடைக்கும் நூல்களை வீட்டில் இருந்து ஓதவும் செய்தார். தந்தையார் மறைவு : வேதாசலத்தின் அகவை 12; பள்ளிக்குச் சென்று ஆறு ஆண்டுகளே ஆகியிருந்தன. உயர்நிலைப்பள்ளி முதல் வகுப்பில் கால்வைக்கும் போதே அக் குடும்பத்தில் வாழ்வாய் வளமாய் வைப்பாய் இருந்த சொக்கநாதர் என்னும் பழமரம் கால் சாய்ந்து விட்டது! அடியற்ற ஆலமரத்தை வீழ்து தாங்குவதுபோல் சின்னம்மை தாங்கினார்! அதனால், தம் ஒரே ஒரு மகனுக்குத் தந்தையோடு கல்விபோம் என்பதைப் பொய்யாக்குவதுபோல், தாய் சின்னம்மையார் தந்தை கடமையையும் சேர்த்துச் செய்தார். குடும்ப நிலையை உணர்ந்து மேலும் படிப்பிலே அழுத்தமாக ஊன்றினார் வேதாசலம். ஆயினும், குடும்பத்தின் வறுமையும் சூழலும் அழுத்திய அழுத்தத்தால் ஒன்பதாம் வகுப்புக் கல்வியுடன் பள்ளிக் கல்வி முடிந்தது! வெளியுலகில் பெறும் கல்விக்குக் காலம் என்ன: இடம் என்ன! அளவென்ன! பள்ளியெழுச்சி கண்ட நாம் வேதாசலம் தமிழ்த் தேனீ ஆதலைக் காண்போம். வேதாசலம் மறைமலையான வரலாற்றை நாம் அறிந்து கொண்டதால், இனி, மறைமலை என்றே காண்போம்! அடிகளார் எனச் சுருக்கமாகவும் உரைப்போம். 3. தமிழ்த் தேனீ தேனீ : கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்பது இறையனார் பாடிய குறுந்தொகைப் பாட்டு. தும்பி சேர்கீரனார் என்பது சங்கப்புலவர் ஒருவர் பெயர். அவர் பெயர் தும்பைச் சொகினனார் என ஆய்வுத் தும்பி ஒருவர் கூறுவார். எத்தனை எத்தனையோ கல் தொலைவு சென்றும் தேன் எடுத்து வருதல் தேனீக்கு இயற்கை; அவ்வாறு எடுத்த தேனையும், தன் இனத்துக்கும் உலகுக்கும் பயன்படுமாறு கூட்டில் சேர்த்து வைத்தலும் தேனீக்கு இயற்கை. அவ்வாறே தேர்ந்த அறிஞர்களும் நூல்களைத் தேடிக் கற்பதுடன், கற்பார்க்கு நூல்கள் ஆக்கிப் படைத்தும் அருந் தொண்டாற்றுகின்றனர். அவ் வகையில் கற்பன கற்றுப், பிறர் கற்றுத் தெளிய நற்றமிழ் நூல்கள் பலப்பல துறைகளில் ஆக்கிப் படைத்தவர் நிறை மலையாம் மறைமலையார்! பொதுநிலைக் கல்வி : பள்ளிக் கல்வி என்பது திட்டப் படுத்தப்பட்ட ஓர் அளவு உடையது. தரத்தில் குறைந்த மாணவர்களுக்கும் தரத்தில் ஒத்த மாணவர்களுக்கும் கற்கும் வகையால் ஒரு பொது அளவுத் திட்டம் கொண்டது; அப் பொது அளவு, சிறப்பு முயற்சியும் ஆர்வம் பெருக்கும் உடைய மாணவர்க்குப் போதுமான அளவினதாக அமைதல் இல்லை. அப்படி அமைந்தால் முன்னுரைத்த இருவகை மாணவரும் கல்வியை வேம்பாய் எண்ணிக் கை விட்டு விடவே செய்வர்! கல்வியின் மேல் தீராக் காதல் கொண்ட அடிகளார் போன்றவர்க்ப் பள்ளிக் கல்வி போதாது எனினும் பள்ளிக்கு வெளியே வாய்க்கும் விரிவுக் கல்வியைப் பெற்றுக் கொள்ளத் தடையில்லையே! உரிய கல்வியைக் கற்கவே வெளியேயும் தனிப்பாடம் படிக்க வேண்டிய நிலையர்க்குப் பாடச்சுமை மிகுதியானால் என் செய்வர்? படிப்புக்கே முற்றிலும் முழுக்கத்தானே போட்டு விடுவர்? நாராயணசாமி : நாகப்பட்டினத்தில் அந்நாளில், மறைமலையாரின் நற்பேற்றால் வாய்த்தவர் போல் நாராயணசாமி என்பார் ஒருவர் இருந்தார். அவர் பொத்தக வணிகர்; ஆனால் அவர் வணிகர் மட்டும் அல்லர்; வண்டமிழ்ப் புலவர்; பொருள் வாணிகத்திலும் புலமை வாணிகத்தைப் பெருக்கமாகச் செய்துவந்த பெரும் புலவர். அவரைப் பேராசிரியர் எனலும். பேராசிரியர்க்குப் பேராசிரியர் எனலும் தகும். சங்க காலத்தில் விளங்கிய கூலவாணிகர், பொன் வாணிகர், அறுவை வாணிகர் என்னும் புலமையாளர் ஒப்பத் திகழ்ந்த பொத்தக வாணிகர்! நாராயணசாமியார், அந்நாளில் நடமாடும் சுவடிச் சாலை, என்றும், பல்கலைக் குரிசில்7 என்றும், வாழும் கம்பர் என்றும் பாராட்டப்பட்ட பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனாரிடமும், ஐந்திலக்கணம் வல்ல பெரும் புலவர் உறையூர் முத்துவீர உபாத்தியாயரிடமும் கற்றுத் தெளிந்த தேர்ச்சியர். கற்ற தேர்ச்சி இத் தகையதானால் கற்பித்த தேர்ச்சி இதனையும் வெல்ல வல்லதாம். நாடக இலக்கியத் தந்தை என்று பாராட்டப்படும் மனோன்மணீயம் பெ. சுந்தரனார்க்கும் நாகூர்ப் பெரும் பாவலர் வா குலாம் காதிறு நாவலர் அவர்களுக்கும் கற்பித்தவர் இவர் என்னின் இக் கடை வணிகர் தமிழின் தலைவணிகர் என்பதற்கு ஐயமுண்டோ? இளந்தைக் கல்விப் பொழுதிலேயே நாராயண சாமியாரின் புலமைப் புகழைக் கேள்வியுற்றிருந்த மறைமலையார் அவரை அடுத்துக் கற்றார். கலை ஞாயிறு : பதினான்காம் அகவை தொட்டே பள்ளிக் கல்வி நின்றமையாலும், ஆசிரியரும் வணிகத் தொழிலொடு கற்பிப்பவராகவும் இருந்தமையாலும், அடிகளார் பெரும் பொழுதைத் தனியே கற்றலிலும் செலவிட்டார். ஐயப்பாடுகள் உற்றபோது ஆசான் துணை நாடும் அளவு போதுமானதாக இருந்தமையால் அடிகளார் தம் பதினைந்தாம் அகவை தொட்டு இருபத்தோராம் அகவைக்குள் கற்றுக்கொண்ட ஆறாண்டுக் கல்வி அவரைக் கலை ஞாயிறு என விளங்கச் செய்தது. அவர் அவ்வகவையிற் பெற்ற கல்வியைத் தாம் இயற்றிய திருவொற்றியூர் முருகர் மும்மணிக்கோவை முகப்பில் குறிப்பிடுகிறார் : எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி தொடங்கிய தமிழ்ப் பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம். கலித்தொகை, பத்துப்பாட்டு/ சிலப்பதிகாரம், நாலடி முதுலிய நூல்களிற் பெரும் பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. சிவஞானபோதம், சிவஞான சித்தியார் என்னும்நூல்கள் இரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. இவையேயன்றி நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் உரை, தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச் செ4ய்து முடிக்கப்பட்டனவாகும். கல்லாடம், சீவகசிந்தாமணி, பெரியபுராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளில் பெரிதும் மூழ்கியிருந்தும் அவற்றிலிருந்தெடுத்துப் பாடஞ் செய்த செய்யுள்கள் மிகுதியாய் இல்லை. என்றாலும், அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக விழுமிய தமிழ்ப்பழ நூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப்பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று என்பதாம் அது. அடிகளார்க்கு இருபத்தோராம் அகவை என்பது 1897 ஆம் ஆண்டாகும். அக் காலத்திற்குள் தொல்காப்பியம் (1847, 1868, 1885), சிலப்பதிகாரம் (1880), சிந்தாமணி (1887), கலித்தொகை (1887), பத்துப்பாட்டு (1889), மணிமேகலை (1894) என்பவை அச்சில் வெளி வந்திருந்தன. புறநானூறும் (1894) வெளிவந்தது. இவை பழந்தமிழ் நூல்கள். திருக்குறள் மூலம் 1812 ஆம் ஆண்டே வெளிவந்தது. உரைப்பதிப்பு 1830 இல் சரவணப் பெருமாள் கவிராயராலும், 1861 இல் ஆறுமுக நாவலராலும் வெளியிடப்பட்டன. அடிகளார் குறிப்பிடும் கல்வி நிலையையும், அக் காலத்தில் அச்சில் வெளிவந்த இந்நூல் தொகுதிகளையும் ஒப்பிட்டு நோக்கினார், அச்சில் வெளிவந்த நூல்களை யெல்லாம் அடிகளார் திறமாகக் கற்றுத் தெளிந்தார் என்பது புலப்படும். ஐங்குறுநூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல் என்பன 1903 முதல் 1918 வரை வெளிவந்தன ஆகலின் தம் இளந்தைக் கல்வியில் இவற்றைச் சுட்டினார் அல்லர் அடிகளார். இவையும் பிறவும் பின்னே கற்றவையாம். மதுரை நாயகம் : ஆசிரியர் நாராயண சாமியாரின் மாணவர்களுள் ஒருவர் மதுரை நாயகம் என்பார். அவர் ஒரு சாலை மாணவர் ஆதலின், மறைமலையார்க்குப் பேரன்பராக விளங்கினார். அவர் திரிசிரபுரம் பெரும்புலவர் மீனாட்சி சுந்தரரின் உறவினர். திருச்சியைச் சேர்ந்த அவர் நாகப்பட்டினத்தின் ஒரு பகுதியான வெளிப்பாளையத்தில் இருந்தார்; மறிப்பர் (அமீனா) என்னும் வேலை பார்த்தார். அகவையால் தந்தையனையார்! அடிகளார் அவரைத் தந்தை யுரிமையராய்க் கொண்டு பழகினார். அவர் அடிகள் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் ஊட்டி வளர்த்தார். வெளிப்பாளையத்தில் திருமாலிய (வைணவ)ப் பேரவை ஒன்று இருந்தது. அவ் வவையில் சொற்பெருக்காற்றிய ஒருவர் மாலியப் பெருமையுரைக்கும் அளவில் நில்லாமல். சிவனியப் பழியும் உரைத்தார். இதனைக் கேட்ட சிவனியப் பெரும்பற்றாளராம் மதுரை நாயகர் அப் பொழிவை மறுத்துரைக்க அவாவினார். சோமசுந்தர நாயகர் : அந்நாளில் சோமசுந்தர நாயகர் என்பார் ஒருவர் சென்னையில் இருந்தார். அவர்தம் சைவ வீறும், பிற சமயக் கொள்கைகளைச் சூறைக்காற்றில் பறக்கும் சருகெனச் சுழற்றியடிக்கும் திறமும் அறிந்து சேதுநாட்டு வேந்தர் சைவசித்தாந்த சண்டமாருதம் என விருது தந்து விழா எடுத்துப் போற்றினர். அதனால் சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் எனச் சமய உலகில் பேருலா வந்து பெரும்புகழ் கொண்டு விளங்கினார். அச்சோமசுந்தரரை மதுரை நாயகம் நாகைக்கு அழைத்துச் சிவனியப் பழியைத் துடைத்துக் கொள்ள விரும்பினார். அவ்வாறு மறுப்புக்காக அழைக்கப்பட்ட சோமசுந்தரர் மறுபடி மறுபடி நாகைக்கு வந்து பொழிந்து சிவப்பயிரை வளர்ப்பாரானார். இது மறைமலையார்க்குக் காலத்தால் வாய்ந்த மழையெனக் கவின் செய்தது. இலக்கிய இலக்கணத் தேர்ச்சி மிக்க அடிகளைச் சிவனியப் பெருந் தேர்ச்சியராகச் செய்தது இப் பொழிவாகும். அன்றியும் அவரை எழுத்துத் துறையில் புகுவித்த பேறும் அதற்கு உண்டு. முருகவேள் : சோமசுந்தர நாயகர் செய்த பொழிவைப் பசித்தவர்க்கு வாய்த்த பல்சுவையுணவென்ன, மறைமலையார் தவறாமல் கேட்டு வந்தார். அதனாற் சிவநெறிச் சீர்மை அவருள்ளத்தில் ஆழப் பதிந்தது. இந் நிலையில் நாயகர் கூறிய ஒரு கருத்தை மறுத்து அந்நாளில் வெளிவந்த சச்சனப் பத்திரிகா என்னும் கிழமைத்தாளில் ஒருவர் கட்டுரை வரைந்தார். அதனைப் படித்த மறைமலையார் மறுப்புக் கட்டுரையாளர் கொண்ட மயக்கவுணர்வையும் அவர் மறுப்புக் கட்டுரையில் அமைந்த வழுக்களையும், நாயகர் கருத்தின் நயத்தையும் உரைத்து நாகை நீலலோசனி என்னும் இதழில் முருகவேள் என்னும் புனைபெயரில் மறுப்புக்கு மறுப்பு வெளியிட்டார். நீலலோசனிக் கட்டுரையை நாயகர் படித்தார்; கட்டுரையின் நடையும் ஓட்டமும் கருத்துமாட்சியும் அவரை வயப்படுத்தின. அவர் வியப்புற்று அக் கட்டுரையாளரை அறிய அவாவினார். தம் கருத்தை மறுக்கத் துணிந்தாரைத் தாம் அறியாமலே மறுத்து நிலைநாட்டியவர் ஒருவர் உள்ளார் என்றால் அவரை அறிய அவாவுண்டாதல் இயற்கைதானே அதனால், மதுரை நாயகத்திற்கு நாயகர் எழுதினார். அதற்கு விளக்கம் வரைந்தார் நாயகம். அதனால் வேதாசலம் (மறைமலை) என்னும் வளர்பயிரின் பெயர் நாயக முகிலின் நெஞ்சில் பதிவதாயிற்று! பதிவுற்ற சூழல் இது. மீண்டும் ஒருகால் நாகைப்பொழிவுக்கு வந்த நாயகர் மறைமலையைக் காண விரும்பினார். மதுரை நாயகர் மறைமலையை நாயகர்க்கு அறிமுகப்படுத்தினார்! அறிமுகம் வியப்பாயிற்று! திகைப்பாயிற்று! விம்மிதமும் ஆயிற்று! கட்டுரையின் ஆழமென்ன! விரிவென்ன! அதனை எழுதியவர் முதுவர் அல்லாத இவ்விளைஞரா! நரைமுடியாமலே சொல்லால் முறை செய்த கரிகால் வளவனின் மறுவடிவம்தான் இவ் விளைஞரோ என எண்ணினார். தாம் போற்றி வணங்கும் மெய்கண்டாரும் ஞானசம்பந்தரும், குமரகுருபரரும் இப்படித்தான் இளந்தையில் இருந்திருப்பரோ என உள்ளுள் வியந்தார்! வினாக்கள் சிலவற்றை எழுப்பி அவர்தம் புலமை நலம் அறிந்து கொள்ளத் தலைப்பட்ட நிலையில், மறைமலை உடனுக்குடன் வழங்கிய மறுமொழிகள் அவர்தம் கல்விப் பரப்பைக் காட்டுதலால் இவ் விளைஞர் புலமைத்திறம் இந்நாட்டுக்குப் பயன்படுதற்கு வழிகாணுதல் வேண்டும் என்னும் ஓர் எண்ணம் உண்டாயிற்று! அதனால்; உன்னை விரைவிலே சென்னைக்கு வருவிப்போம். நீ அந்தப் பக்கங்களில் இருப்பதே நல்லது என்று கூறினார் நாயகர். இயற்றமிழ் வல்ல நாராயணசாமியார் அடிகளுக்கு ஓராசிரியர்! சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகர் மற்றும் ஓராசிரியர்! நுண்மாண் நுழைபுல மறைமலையார்க்குக் கூடிவரும் காலம் தேடிநின்ற வாய்ப்புகள் இவை கட்டுரை வன்மை : மறைமலையார் பள்ளியில் பயின்றுவந்த காலத்திலேயே ஒரு பெரும் வேட்கை கொண்டார். தாம் பயின்ற கிறித்தவப் பள்ளியில் வகுப்பிலும் வெளியிலும் திருக்கோயிலிலுமாக நடத்தப்பெற்று வந்த கிறித்தவ மதக் கருத்துரைகள், வெளியீடுகள் கூட்டங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினார். அவ்வழிகளில் தாமும் தொண்டு செய்தல் வேண்டுமென உட்கொண்டார். அதனால் தம் மொத்த பள்ளி மாணவர்களைச் சேர்த்துக்கொண்டு, இந்து மதாபிமான சங்கம் என ஓர் அமைம்பை ஏற்படுத்தினார் அதன் வழியாக மாணவர்களுக்குச் சமய அறிவும், மொழியறிவும், உரையாற்றும் திறமும் உண்டாக வழி கண்டார். ஒருவர் எதிர்காலம் எப்படி எப்படியெல்லாம் அமையும் என்பதற்கு முன்னோட்டம் போன்ற செய்திகளுள் ஒன்று ஈது; மற்றொன்று அவ் விளமைப் பருவத்திலேயே மறுப்புக் கட்டுரை எழுதிய அளவுடன் நில்லாமல் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதி, காரைக்காலில் இருந்து வெளிவந்த திராவிட மந்திரி என்னும் கிழமைத் தாளிலும், நாகை நீலலோசனி என்னும் கிழமைத் தாளிலும் வெளியிட்டுக் கட்டுரை வன்மையர் என்னும் பாராட்டுக்கு உரியவராக விளங்கினார். இனிக் கல்வி மணம் பரப்பிய மறைமலையாரின், காதல் மணம் குறித்துக் காண்போம். 4. மணமலர் உடல், உளம் : மறைமலையார் திருமுகம், தாமரை மலர் அன்னது; உடல் பொன்னிறம்; உயரம் 5 அடி; திரண்டதாள் - தோள்; குயில் குரல்! பெண்மையில் பிறங்கும் பண்புகள்! அவர் தம் வாழ்வியலை அவர்தம் அருமை மைந்தர் மறை திருநாவுக்கரசு வடித்தெடுத்து வழங்குகின்றார் : அடிகளின் ஒன்றுவிட்ட மாமன் மகள் சவுந்தரவல்லி. அவர் நிறம் கறுப்பு; பண்போ கரும்பு; பொருந்திய உருவம்; அடிகளுக்கு மூன்று ஆண்டுகள் இளையவர், சிறு பருவமுதல் அடிகளும் சவுந்திரமும் அன்பு நிறைந்தவர்களாய் ஆடிப்பாடி வளர்ந்தனர். ஆண்டு வளர வளர அவர்களை அறியாமலே அவர்களுக்குள் காதல் வளர்ந்து வந்தது. சவுந்திரத்திற்கு அகவை 13, அடிகளுக்கு அகவை 16. சின்னம்மையார் தம் தனி மகனார்க்குக் கடிமணம் செய்ய நினைத்தார். பெற்றோர் சிலர் தம் சிவந்த அழகான நங்கைமாரை அடிகளுக்கு மணமுடிக்க முன் வந்தனர். அவர்களில் ஒருத்தியைத் தம் மகனுக்கு மணமுடிக்க அன்னையார் முயன்றார். அடிகள் காதலில் முனைந்து நின்று தம் அன்னையின் இசைவைப் பெற்றார். அவ்வளவில் சவுந்திரம் காதல் வென்றது. திருமணம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க் காதல் : மறைமலை சவுந்திரம் காதல் வெளிப்படு முன்னர், சின்னம்மையார் தம் குடும்பநிலை கருதித் திருமண முயற்சியில் ஊன்றினார். அடிகள் திருமண முயற்சியைத் தடுத்தார்; திருமணம் செய்துகொள்ள முடியாதெனவும்மறுத்தார்; சின்னம்மையார் பல்கால் மன்றாடினார்; அதன் பின் தாம் வேண்டும் தமிழ் நூல்களை வாங்கித் தருவதாக இருந்தால் திருமணத்திற்கு இசைவதாகக் கூறினார். அம்மையார் நூல்கள் வாங்கித்தர ஒப்பினார்; தமிழ் நூல் பெரும் பட்டியல் ஒன்றை வழங்கினார் மறைமலை. அப்பட்டியலில் கண்ட நூல்களை வாங்க அந்நாளில் முந்நூறு உருபா ஆயிற்றாம்! அதனை வாங்கித் தந்த பின்னரே தம் வாக்குப்படி திருமணத்திற்கு இசைந்தாராம்! மறைமலையின் தனிக்காதல் பெரிதா? தமிழ்க் காதல் பெரிதா? ஒன்றை ஒன்று விஞ்சுவதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி இது. சிந்தாமணி : பதினாறாம் அகவையில் திருமணம் கொண்ட மறைமலை பதினெட்டாம் அகவையில் சிந்தாமணி என்னும் மகவுக்குத் தந்தையானார்! சிவநெறிச் செம்மல் மறைமலை! சைவசித்தாந்த சண்டமாருதத்தின் மாணவர் மறைமலை! நம் அருமை மகவுக்கு இட்ட பெயர் சிந்தாமணி! ஆம்! சிந்தாமணியில் மறைமலையார் தோய்ந்த தோய்வின் வெளிப்பாடு இது! இலக்கியம் சமயம் கடந்தது என்பதை மெய்ப்பிக்கும் சான்றுகளுள் ஈதொன்று! வீரசைவத் தோன்றல் சிவப்பிரகாச அடிகளார் தாம் இயற்றிய வெங்கைக் கோவையில், மந்தா கினியணி வேணிப் பிரான் வெங்கை மன்வைநீ கொந்தார் குழல்மணி மேகலை நூனுட்பம் கொள்வ தெங்ஙன் சிந்தா மணியும் திருக்கோ வையுமெழு திக் கொளினும் நந்தா உரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே எனப் பாடியுள்ள நயம், இலக்கியம் சமயங்கடந்த பார்வைக்குரியது என்பதை நன்கு விளக்கும். அரிசி ஆழாக்கு என்றாலும் அடுப்புக்கல் மூன்று என்பது பழமொழி. மறைமலை ஒரே பிள்ளை. அக்குடும்பத்திற்கு முன்னிருப்பு அன்னையார் மட்டுமே? பின் வருவாய் வேண்டுமே! குந்தித்தின்னின் குன்றும் மாளும் என்பது பழமொழியன்றோ! பேரா. சுந்தரனார் : நாராயணசாமியாரிடம் பயின்ற மாணவருள் ஒருவர் பேராசிரியர் சுந்தரனார் என்பதை முன்னரே அறிவோம்! அவர் இயற்றிய மனோன்மணீயத்தைக் கற்ற மறைமலையார், அந்நூல் நயத்தில் தோய்ந்து நூலாசிரியரைக் காண விரும்பினார். பேராசிரியர் சுந்தரனார் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் மெய்ப்பொருளியல் பேராசிரியராக விளங்கினார். அவர்க்கு, மனோன்மணீய நயம் பற்றியும், தம் ஆசிரியர் பற்றியும், தம்மைப் பற்றியும் செய்திகள் அடங்கிய அகவற்பா ஒன்று எழுதினார். அச் சீட்டுச் செய்யு ளைக் கண்ட பேராசிரியர் மகிழ்ந்தார். தம் ஆசிரியரையும் சீட்டுச் செய்யுள் விடுத்த மறைமலையாரையும் காண விரும்பியவளாய்த் திருவனந்தை வருமாறு வேண்டினார். மேனாள் மாணவர் விருப்பை நிறைவேற்றவும், இந்நாள் மாணவர் நலத்தைக் கருதியும் நாராயணசாமி யார் தம்மாணவருடன் திருவனந்தபுரம் சென்றார். 1895 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் கடைசிக் கிழமையில் ஒருநாள் இது நிகழ்ந்தது. இச் சந்திப்பைப் பற்றி அடிகளார் எழுதியுள்ளதாக அவர் திருமகனார் மறை திருநாவுக்கரசு குறிப்பது : அகவற்பாவில் எழுதிய கடிதத்தைக் கண்டு இவரை ஆண்டில் முதியவராகக் கருதியிருந்த சுந்தரம்பிள்ளை அவர்கள், இவர் மிக இளைஞராய் இருத்தலை நேரில் கண்ட அளவானே பெரிதும் வியப்புற்றுத், தாம் முன் எண்ணியதனை மொழிந்தார். ஒரு கிழமை வரையில் இவர் பிள்ளையவர்களோடு அளவளாவி இருக்கையில் இவர் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய சங்கத் தமிழ் இலக்கண இலக்கியங்களிலும் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலிய காப்பியங்களிலும் வல்லுநராயிருத்தலை ஆராய்ந்து பார்த்து இத்துணைச் சிறு பொழுதிலேயே இத்துணை உயர்ந்த நூல்களை இவர் இவ்வாறு பயின்று தெளிந்தமை அரிதரிது எனப்புகன்று அங்ஙனம் தாம் பாராட்டியதற்கு அடையாளமாக ஒரு சான்றிதழ் எழுதித் தந்தனர் என்பது. திருவனந்தபுரத்தில் வேலை : அடுத்த ஆண்டிலும் (1896) சுந்தரனார் அஞ்சல் எழுதி அடிகளைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்தார், அந் நகரில் மார்த்தாண்டன் தம்பி என்பவரால் நடாத்தப்பட்ட ஆங்கிலப் பள்ளியில் தமிழாசிரியராக அடிகளை அமரச் செய்தார். பள்ளியில் படித்த காலத்திலேயே, வெளிக்கல்வி கற்றவர் அல்லரோ அடிகள்! அவர் பள்ளிப் பணியொடும் அமைவாரா? அந் நகரில் சிறந்து விளங்கிய சைவசித்தாந்த சபைகளில் தொடர்பு கொண்டு இடை இடையே சொற் பொழி வாற்றினார். பேராசிரியர் சுந்தரனார் பணியாற்றிறய அரசர் கல்லூரியில் 12-9-86 ஆம் நாள் நாடகத் தமிழ் என்னும் பொருளில் அரியதொரு பொழிவு செய்தார். இவ்வாறு இரண்டரைத் திங்கள் திருவனந்தபுரத்தில் பணியாற்றினார் அடிகளார். அவ்வூர்ப் பருவநிலை அடிகள் உடல் நிலைக்கு ஏற்று வாராமையால் தம் பணியை விடுத்து நாகைக்கே திரும்பினார். துகளறுபோத உரை : அடிகளார் நாகைக்குத் திரும்பியது அறிந்த சோம சுந்தர நாயகர் சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் அருளிச் செய்த துகளறு போதம் என்னும் நூலை விடுத்து, அதற்கு உரை வரையுமாறு கட்டளையிட்டார். அந் நூலின் நூறு பாடல்களுக்கும் சீரிய உரையெழுதி நாயகர்க்கு அனுப்பினார் அடிகளார். அவ்வுரையின் நடை நயம், பொருட் சிறப்பு ஆகியவற்றைக் கண்ட நாயகர் மாதவச் சிவஞான முனிவர் உரையொடும் ஈதொப்பது எனப் பாராட்டி, அந் நூலைத் தம் செலவில்தாமே வெளியிட்டார். முதற்குறள் வாத நிராகரணம் : அந் நாளில் சென்னையில் வாழ்ந்த ஒருவர் திருக்குறள் முதற்குறளுக்கு மாயாவாதக் கொள்கையின்படி முதற் குறள் வாதம் என்பதொரு நூலை இயற்றி வெளியிட்டார். அதனை மறுக்க வெண்ணிய நாயகர் மறைமலையாரை எழுதத் தூண்டினார். அதன்படி, முதற்குறள் வாத நிராகரணம் என்பதொரு நூலை அடிகளார் இயற்றினார். உண்மை விளக்கம் : நாயகரிடம் கொண்முடிபு (சித்தாந்த)ப்பாடம் கேட்டவருள் ஒருவர் நல்லசாமிப்பிள்ளை என்பார். அவர் சிவஞான போதநூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டவர். அவர் சித்தூரில் மாவட்ட உரிமை மன்ற நடுவராகப் பணிசெய்து வந்தார். அவர்க்குச் சிவணியக் கொள்கைகளைத் தமிழ் ஆங்கிலம் என்னும் இரு மொழிகளின் வழியாகவும் பரப்புதல் வேண்டும் என்னும் பெருவேட்கை இருந்தது. அதனால் சித்தாந்த தீபிகை அல்லது உண்மை விளக்கம் என்னும் மாதிகை (திங்களிதழ்) தொடங்கினார். அவ்விதழைத் தம்மோடும் இருந்து நடாத்தத் தக்க புலமைச் செல்வர் ஒருவரை வேண்டி நின்றார். நல்லசாமியாரையும் மறைமலையாரையும் தம் மாணவராகக் கொண்டு இருந்த சோமசுந்தரநாயகர், இருவர்க்கும் இணைப்புப் பாலமாக விளங்கினார். சித்தாந்த தீபிகையின் தமிழ்ப் பதிப்புக்கு மறைமலையடிகள் ஆசிரியராய் முதல் இதழ் 1897 ஆம் ஆண்டு சூன் திங்கள் 21ஆம் நாள் வெளிவந்தது. அதன் முதல் ஐந்து இதழ்கள் அளவுக்கே அடிகள் ஆசிரியராக விளங்கினார். அதில் திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல், குறிஞ்சிப் பாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு என்பன வெல்லாம் தொடர் கட்டுரைகளாக வெளிப்பட்டன. காதல் மணமும் கலைமணமுமாம் இம் மணமலர், பூஞ்சோலைப் பரப்பாகிப் பொலிதலைக் காண்போம். 5. பூஞ்சோலை கிறித்துவக் கல்லூரி : உண்மை விளக்க ஆசிரியராக இருந்த அடிகள் ஒரு நாள் செய்தித் தாளில், சென்னை கிறித்தவக்கல்லூரிக்குத் தமிழாசிரியர் ஒருவர் வேண்டியிருக்கும் விளம்பரம் கண்டார். நாயகர் அதற்கு வேண்டுகை விடுக்கத் தூண்டினார். அக் கல்லூரியின் முதல்வர் பெரும்புகழ் வாய்த்தவர், புலமையாளர்களால் பாடுபுகழ் பெற்றவர்; மாணவர் ஆசிரியர் அரசினர் பெற்றோர் ஆகிய அனைவரின் ஒருமித்தபுகழுக்கும் உரிமை பூண்டவர்; வில்லியம் மில்லர் என்பார் அவர்; அக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் பரிதிமாற் கலைஞர் எனப்படும் சூரிய நாராயண சாத்திரியார்! விரிந்த நோக்கும் பரந்த கல்வியும் சிறந்த பாவன்மையும் உயர்ந்த பல்துறையறிவும் ஒருங்கே கொண்ட ஏந்தல் அவர். அக்கல்லூரியின் ஒரே ஓர் ஆசிரியப் பணிக்கு விண்ணப்பம் விடுத்தவர் அறுபதின்மராம்! அவருள் நனி இளைஞர் நம் அடிகளாராம்! அவர் புலமையே அனைவர் புலமையிலும் விஞ்சி நின்றதாம். எழுத்துத் தேர்விலே முதன்மை பெற்ற மலையைப் பரிதி நேர்முகம் காண நேர்ந்ததாம்; எப்படி? பரிதியும் மலையும் : தொல்காப்பிய இலக்கணத்தில் இருந்து எளிதில் விடையிறுக்க ஒண்ணாக் கேள்விகள் மூன்றினைக்கேட்டார். அடிகள் எளிதாக விடையளித்தார். சாத்திரியார் அடிகளின் இத் திறங்கண்டு அவரை அளவின்றிப் பாராட்டினார்! இளமை மிடுக்கும். புலமைத் துடுக்கும் உடைய அடிகள், இவரென்ன நம்மை ஆராய்வது என்று ஆணவங் கொண்டவராய் அவரை நோக்கி யான் கேட்கும் மூன்று வினாக்களுக்குத் தாங்கள் விடையிறுக்க வேண்டும் என்றார். அவ்வாறே கேட்டார். சாத்திரியார் நீடு நினைந்து இறுதியில் அடிகளை நோக்கி, நீரே இம் மூன்றிற்கும் விடையளிப்பீர் என்றார். அடிகள் அவ்வாறே செய்தார். அவையும் தொல்காப்பியம் பற்றிய நுணுக்கமான ஆய்வுக் கேள்விகளாகும். அடிகளின் ஆழ்ந்த புலமை கண்டு சாத்திரியார் வியந்தார்; பலவாறு பாராட்டினார், தம்மைக் கேள்வி கேட்டவர் என்று கருதாது, வெறாது - சாத்திரியார் அடிகள்பால் பேரன்பு கொண்டார். மில்லரிடம் அடிகளை அழைத்துச் சென்று அவர்தம் ஆழ்ந்த அரும்புலமை, கூரறிவு முதலியவற்றை எடுத்துக் கூறி அவரையே தமிழாசிரியர் ஆக்குமாறு கேட்டுக் கொண்டார். புலன் அழுக்கற்ற அந்தணாளர் ஆகிய சாத்திரியாரின் பெருந்தகை நினைதோறும் இனிமையாகின்றது. அடிகள் உருபா 25 சம்பளத்தில் மில்லரால் 9-8-1898 இல் தமிழாசிரியர் ஆக்கப்பட்டார். (ம.ம.அ. வரலாறு), ஆசிரியப் பணியேற்ற அடிகள் தம் குடும்பத்துடன் சென்னை வாழ்வை மேற்கொண்டார். அது நாயகர்க்குப் பெருமகிழ்வாயிற்று. கிறித்தவக் கல்லூரி எனினும் அது, உயர்நிலைப் பள்ளியொடும் கூடியது. அடிகள் முதற்கண் உயர்நிலைப் பள்ளி வகுப்புகளே எடுக்க நேர்ந்தது. பின்னர் அவர்தம் திறமையை அறிந்துகொண்ட மில்லர் (கல்லூரி முதல்வர்) கல்லூரி வகுப்பு களுக்கு அடிகள் கற்பிக்கும் ஏற்பாட்டைச் செய்தார். மும்மணிக்கோவை : அடிகளார் கிறித்தவக் கல்லூரியில் அமர்ந்த நான்கு திங்கள் அளவுக்குள் ஒரு கொடிய நோய்க்கு ஆட்பட்டார். அந்நாள் 27-6-1898. அந்நோயைத் தீர்த்தருளுமாறு திருவொற்றியூர் முருகனை வேண்டிக் கொண்டார். நோய் தீர்ந்தது. அம் மகிழ்வால் ஒரு நூல் ஆக்கினார். அது திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை என்பது. அது முன்னாடி முடிக்கப்பட்ட நாள் 28-9-1900. முனிமொழிப் பிரகாசிகை : அக் காலத்தில் ஈழத்து யாழ்ப்பாணத்தில் சபாபதி நாவலர் என்னும் பெரிய பெரும்புலவர் ஒருவர் இருந்தார். அவர் உரைநடை வரைதலில் தனித்திறம் வாய்ந்தவர். இவர் வரைந்த நூல்களுள் ஒன்று திராவிடப் பிரகாசிகை என்பது. அவர் நடத்திய மாதிகை (திங்களிதழ்) ஞானாமிர்தம் என்பது. அதில் தேவர் குறளும் எனத் தொடங்கும் பாடலில் வரும் முனிமொழியும் கோவை என்பதைத் திருக்கோவை எனப் பொருள் கண்டார். இக் கருத்தை ஒப்பாத சோமசுந்தர நாயகர் முனிமொழி வேதாந்த சூத்திரமே என்பதை வற்புறுத்தி முனிமொழிப் பிரகாசிகை என்னும் நூலை வரையுமாறு அடிகளை வேண்டினார்; ஆசிரியர் உரையேற்ற அடிகள், அவ்வாறே செய்தார். இந்நூலைத் தாம் படுத்த படுக்கையில் நோயாய்க் கிடந்த சபாபதி நாவலர் படிக்கக் கேட்டு, தமக்குப் பின்னும் தமிழ் உரைநடை வரையவல்லார் ஒருவர் உள்ளார் என்று பூரிப்படைந்து வாழ்த்தினர். தம் கருத்தை மறுத்துரைத்தார் என்னும் கைப்பு இல்லாமல் கன்னித்தமிழ் நடையைப் பாராட்டியமை நாவலர் சால்புக்கும் அடிகளார் உரைநடைத் திறத்திற்கும் ஓரொத்த சான்றுகளாம். நாவலர் உடல்நலம் பெற்று 19-4-1900 இல் அடிகளார் இல்லத்திற்கு வந்தார் சபாபதி நாவலர் மகன் எளிய குடிசைக்கு வந்ததார். அறச் செயல்களுக்கு வென்றன செய்வேன் என்றேன் என்று தம் நாட்குறிப்பில் அடிகளார் இதனைப் பொறித்துள்ளார். 3-12-1901 இல் சபாபதி நாவலர் என் நூலைப் பாராட்டிக் கடிதம் எழுதினார் என்றும் குறித்துள்ளார். சமயநூற்கல்வி : பாடல் பயிற்றிய அடிகளார், பாடம் பயிலவும் விரும்பினார். அவர் என்றும் ஓதுவது ஒழியாதவர்; பயிலும் காலம் தொட்டே பழகிப்போன நடைமுறை. தமிழ் இலக்கண இலக்கியம் கரைகண்ட அடிகள் சிவனிய நூல்களையும் ஆழ்ந்து கற்றிருந்தார். எனினும் குருவர் ஒருவர் வழியே மெய்ப்பொருள் நூல்களைக் கற்பதே முறைமை எனக் கருதினார். கருது குருவர் ஒருவர் முன்னமே கருத்துள் இடம்பெற்றிருந்தாரே! சோமசுந்தர நாயகர் அல்லரோ அவர்; அவர் தாமே, சென்னைக்கு அழைத்துத் தம்பால் இருக்கவும் அமைத்துக் கொண்டவர். ஆதலால், அவரை அணுகித் தம் விருப்பை உரைத்தார். அப்பன் உனக்கு ஓர் ஆசிரியர் கற்பிக்க வேண்டிய நிலை இல்லையே. நீ நன்கு கற்றுள்ளாயே என்று நாயகர் கூறினார். மெய்ப்பொருட் கல்வி சிறக்க மேதக்க குருவர் வேண்டும் என்னும் மரபு நெறிகூறி, நாயகரை இசைவித்தார் அடிகளார். அவ்வகையில் சைவசித்தாந்த நுணுக்கங்கள் பலவற்றை அடிகள் அவரிடம் அறிந்து கொண்டார். அறிவுத் துணையாக மட்டுமல்லாமல் நாயகர் குடும்பப் பிணைப்பமைந்த தந்தையார் போலவும் அமைந்தார். அவர்தம் துணைவியார் தம் மகவாகவே அடிகளைப் புரந்தார். நாயகரும் அடிகளும் ஓரிரு நாள்கள் காணாவிடினும் தாங்க ஒண்ணாராய் நான் முந்தி நீ முந்தி என இல்லந் தேடிவந்து விருந்து உண்டு விரும்புவ பேசிச் சென்றனர். கூட்டங்களுக்கும் கோயில்களுக்கும் இணைந்தே செல்வதுடன் இணைந்தே பொழிவும் ஆற்றினர். நாயகரும் அடிகளும் உருவும் நிழலுமென இயைந்து இந்நிலை நெடிது செல்ல வாய்க்கவில்லை. நாயகர் மறைவு : நாயகர் 22-2-1901 இல் இயற்கை எய்தினார். தாயாய் - தந்தையாய் - தனிப் பேராசிரியராய் - தாழா நண்பராய் - தாங்குதலாய் இருந்த நாயகர் பிரிவு அடிகளாரை அசைத்தது; உலுக்கியது; உருக்கியது. ஊனும் உளமும் உணர்வும் நெகிழ அழுது தேம்பினார் அடிகள். அழுகை வாட்டாகியது; உணர்வாளர் அழுகையும் அரற்றும் அவலமும் பாட்டாதல் புதுவன அல்லவே! பண்டுதொட்டு வரும் கையறு நிலை யும் இரங்கலும் இவைதாமே! அடிகளார் அழுங்கல் சோமசுந்தரக் காஞ்சி ஆயது. சோமசுந்தரக் காஞ்சி : காஞ்சியாவது நிலையாமை. நில்லாத்தன்மை அமைந்த உலகியலைச் சொல்லும் திறத்தால் சொல்லி, நிலைபெறு செயலைச் செய்யத் தூண்டுவது காஞ்சியின் உட்கிடை நாயகர் மறைந்த பதினாறாம் நாள் நீத்தார் கடன் நிகழ்ந்தது. அவர்தம் இல்லில் அறிஞர் பெருமக்கள் ஆற்றொணாத் துயரால் கூடிய அவையில் காஞ்சி பாடப்பட்டது. அடிகள் வாய் சொன்மழை பொழிய, கண், கண்மழை பொழிந்தது; அவையும் கண்மழை பொழிய அவலப் பெருக்காயது சார்ந்ததன் வண்ணமாதல் என்னும் சிவனியக் கொள்கை சீருற விளக்கமாகிய நிகழ்ச்சியாயிற்று அது. காஞ்சி நூல் வடிவம் பெறவேண்டும் என அன்பரும் ஆர்வலரும் அவாவினர், நூலும் ஆயிற்று. பழம் புலவர் பாவன்ன செறிவும் செப்பமும் இயற்கை நவிற்சியும் அமைந்தது காஞ்சி எனப் பெரும் பெரும் புலவர்களும் பாராட்டினர். எனினும், புலமைக் காய்ச்சல் என்பது ஒன்று உண்டே! நல்லன விடுத்து அல்லனவே தேடி அதையே முன்வைத்து அலைக் கழிப்பார் என்றுதான் இலர்? அதனால் சோமசுந்தரக் காஞ்சியில் சொல்வழு, பொருள்வழு, இலக்கண வழு இன்ன இன்ன எனக் கூறுவார் கிளர்ந்தனர். அவற்றுக்கு அஞ்சி ஒடுங்குவரோ அடிகள்! முருகவேள் பெயரால் இளந்தையிலேயே பெரும் புலவர்கள் கருத்துகளைப் பிழையென்றால் பிழையென்று வீறிநின்ற நக்கீரர் அல்லரோ அவர். அதனால் அழுக்காற்றால் சுட்டிக்காட்டிய புலவர் கூற்றுகளையெல்லாம், சூறையில் சுழலும் சருகெனச் சுழற்றி எறிந்து சோமசுந்தரக் காஞ்சி யாக்கம் என்னும் பெரியதொரு நூலை வரைந்தார். எதிர்ப்பு அமைந்தது; அடங்கியது; அப்பொழுது அடிகளார் அகவை 26; ஆண்டு 1902 ஆகும். அறிவுக் கடல் : அதே 1902 இல் ஞானசாகரம் என்னும் மாதிகையை அடிகளார் தொடங்கினார். அடிகளார் தனித்தமிழ் உணர்வு கொண்ட பின்னர் அது அறிவுக்கடல் ஆயிற்று. பெயர் ஞானசாகரம் என வைக்கப்பட்டாலும், அப்பொழுதே அடிகளார் தமிழ் வடமொழி வேறுபாட்டை அறிந்தே இருந்தார் என்பதை அதன் முதல் இதழே வெளிப் படுத்துகிறது. தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா? என்பதொரு கட்டுரையும், தமிழ் மிகப் பழையதொரு மொழி என்பதொரு கட்டுரையும் அதில் உள்ளன. சொல்லாய் விலும், தொல்காப்பிய ஆய்விலும் அடிகளார் கொண்டிருந்த ஈடுபாடு தமிழ்ச்சொல் உற்பத்தி, தொல்காப்பிய பரிசீலனம், தொல்காப்பிய முழுத் தன்மை ஆகிய கட்டுரைகளால் விளங்கும். இவ்விதழ் வழியாக வெளிவந்த நூல்களில் பெரியதும் அரியதும் ஆகியது மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்பதாகும். நமக்குப்பின் நாம் நடத்திய சைவசித்தாந்த விளக்கத்தையே நீயே நடத்துக என்று நாயகர், தம் இறுதி நாளில் அடிகளாரிடம் கூறியிருந்தார். அதனை ஒப்பிய அடிகளார் அப் பணியைக் கல்லூரி விடுமுறை நாள்களில் எல்லாம் சிறப்பாகச் செய்தார். அருட்பா - மருட்பாப் போர் : அந்நாளில் அருட்பா - மருட்பாப் போர் நிகழ்ந்தது. வள்ளலார் பாடிய பாக்கள் அருட்பாக்கள் அல்ல; மருட் பாக்களே என்பது போரின் ஊடகம். ஒருபால் வள்ளலார் கூட்டம்; மற்றொருபால் ஆறுமுக நாவலர் கூட்டம். இக்கூட்டத்துள் வள்ளலார் வழிக் கூட்டம் மறைமலையடிகளை அரணாகப் பற்றியது. நாவலர் வழிக் கூட்டத்தின் நாயகராகப் பெரும்புலவர் கதிரை வேலர் விளங்கினார். அவர் அந்நாளில் சென்னை வெசுலி கல்லூரியில் தமிழ்ப்பணி புரிந்தார். அவர்தம் மாணவராக விளங்கியவர் திரு.வி.க. அடிகளார்க்கும் கதிரைவேலர்க்கும் தனிப்பட்ட வெறுப்போ காழ்ப்போ உண்டோ? இல்லை! அடிகளார் தம் 1-8-1903 நாட்குறிப்பில், கதிரைவேற்பிள்ளை என் வீடு வந்து எனக்குத் தங்கள் கல்லூரியில் வேலை வாங்கித் தரவேண்டும் என்றார். நான் உங்கள்பால் எனக்குச் சினமில்லை. அப்படியே செய்வேன் என்றேன் என்று குறித்துள்ளமை அவர்கள் தனித் தொடர்பைக் குறிக்கும்! ஆனால் அருட்பாவைப் பற்றிய போரில் எதிர் எதிராக நின்றனர். வள்ளலார் பாடிய பாடல்கள் அருட்பாவா மருட்பாவா என்பதை முடிவு செய்வதற்கு, ஒரு பொது ஏற்பாடு செய்யப்பட்டது. அடிகளார் அருட்பாவின் பக்கலிலும், கதிரைவேலர் மருட்பாவின் பக்கலிலும் முறையுரைக்க முடிவு செய்தனர். முறைமன்ற நடுவர் ஒருவரும் அறிஞர் பெருமக்களும் பொதுமக்களும் 20-9-1903 ஆம் நாள் சிந்தாதிரிப்பேட்டையில் கூடினர். அடிகளார், வள்ளலார் பாக்கள் அருட்பாக்களே என முன்வைத்து இசைத்துப் பாடியும் கருத்துநலம் கொழிக்கப் பேசியும் அமர்ந்தார். கதிரைவேலர் கொண்டலென முழங்க வல்லார். எனினும் அப்பொழுது கொண்ட கருத்தை விடுத்து வள்ளலாரைப் பழிப்பதே குறியாகிப் பொழிந்தார். தலைவர் உரை அடிகளார் உரையைச் சார்ந்து நின்றது! அருட்பாவே என்னும் கருத்தே, அவையில் பொலிந்தும் விளங்கிற்று! ஆனால், மறுநாள் ஓர் இதழில், கதிரைவேலர் தம் பக்கமே வெற்றி என ஓர் அறிக்கை விடுத்தார். அதனால் மீண்டும் அதே மேடையில் அவரவர் கருத்தை மீண்டும் நிலைநாட்டிப் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு இடை நின்றோர் ஏற்பாடு செய்தனர். அதன்படி 27-9-1903 ஆம் நாள் அவ் ஆய்வு நிகழ அடிகளார் மட்டுமே வந்தார்; கதிரைவேலர் வந்திலர். அடிகளார் அருட்பாச் சிறப்பினை வந்தோர் மனங்கொள எடுத்துரைத்து, அருட்பாவே என உறுதிப்படுத்தினார். பின்னர் 18-10-1903இல் சென்னை வேணுகோபால் அரங்கில் வழக்குரை காதை தொடர்வதாய் இருந்தது அன்றும், அடிகள் மட்டுமே மேடைக்கு வந்தார்; பொழிந்தார். அருட்பா வென்றது என அவை பெருமுழக்கம் செய்தது! அவ் எதிராட்டு முடிந்தது எனப் பெருமக்கள் முடிவு செய்தனர். ஆயினும் அடைமழை விட்டும் செடிமழை விடவில்லை என்பது போல், ஈராண்டுகள் கழித்தும் காஞ்சியிலும் திருச்சியிலும் கதிரைவேலர் மருட்பாக் கிளர்ச்சியைத் தூண்டினார். ஆங்கும் அடிகளார் முறையே 27-2-1905, 1-7-1905 ஆகிய நாள்களில் சென்று மறுப்புரை பகர்ந்தமை பின்வரலாறாகும். சைவசித்தாந்த சமாசம் : சிவநெறிப் பரப்பலுக்கு ஓர் அமைப்பை உருவாக்க அடிகள் விரும்பினார். அவ்விருப்பம் 7-7-1905 இல் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளின் முன்னர்ச் சைவ சித்தாந்த சமாசம் என்னும் பெயரால் தோன்றியது. அடிகள், அதன் தலைமைச் செயலாளர். நாகை மதுரை நாயகம், வேலூர் அ. சிதம்பரம், கீழ்வேளூர் வி.சி. இராமலிங்கர் முதலியவர்கள் உறுப்பினர். நாட்டில் சிவநெறி சார்ந்து விளங்கிய அமைப்புகளும், புதியனவுமாகக் கிளைகள் பல தோற்றமுற்றன. சமாசத்தின் முதல் ஆண்டுவிழா 26-12-1906 ஆம் நாளிலும், இரண்டாம் ஆண்டுவிழா 1907 திசம்பர் 25, 26, 27 ஆகிய நாள்களிலும் சிதம்பரத்தில் நிகழ்ந்தன. இவ் விழாக்களுக்கு முறையே இலங்கை சர்பொன்னம்பலம் இராமநாதன் அவர்களும், மதுரைத் தமிழ்ச்சங்க நிறுவனர் பொன்.பாண்டித்துரை அவர்களும் தலைமை தாங்கினர். மூன்றாம் ஆண்டுவிழா நாகை வெளிப்பாளையத்தில் 1906 திசம்பர் 25, 26, 27 ஆம் நாள்களில் செ.எம். நல்ல சாமி அவர்கள் தலைமையில் நிகழ்ந்தது. நான்காம் ஆண்டுவிழா 1909 திசம்பரில் இலங்கை சர். ஏ. கனகசபை அவர்கள் தலைமையில் திருச்சியில் நிகழ்ந்தது. 1910 ஆம் ஆண்டு முதலே அடிகள் சமாசப் பிணைப்பில் இருந்து விலகித் தாம் விரும்பிய வண்ணம் சமயப் பணியும் பொதுப் பணியும் ஆற்றலானார். சமாசத்தில் உண்டாகிய சில உட்பூசல்கள் அடிகளாருக்குப் பிடியாமையாலேயே இந்நிலை உண்டாயிற்று. எனினும், அவ்வப்போது சமாச விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு தலைமை தாங்கிப் பேருரையாற்றியுள்ளார். கிறித்தவக் கல்லூரியில் அடிகள் 13 ஆண்டுகள் பணியாற்றினார். அக் காலத்தில் அண்ணாப்பிள்ளைத்தெரு, தண்டலம் பாலுசுந்தர முதலியார் தெரு, 26 முல்லா சாய்பு தெரு, 197, இலிங்கிச் செட்டித் தெரு, 62, அரண்மனைக்காரன் தெரு ஆகிய ஐந்திடங்களில் குடியிருந்தார். கற்பிக்கும் திறம் : அடிகளார் பாடம் கற்பிக்கும் திறம் குறித்து மறை திருநாவுக்கரசு வரைகின்றார் : அடிகள் கற்பிப்பு மிகவும் தெளிவாய் விரைந்தும் மெதுவுமான போக்கில் இல்லாமல் அளவான போக்கில் செல்லும்; விரைந்து பேசார்; இரைந்து ஒலியார்; பேச்சில் விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் கலந்தொலிக்கும்; விளக்க உரைகள் கண்ணாடியில் காணும் உருவம்போலத் தெளிவாய் இருக்கும்; அறிவு செறிந்திருக்கும்; இடை இடையே நகைச்சுவையும் உலகியல் மேற்கோளும் உண்டு; பண்டை நூல்களின் மேற்கோள் உண்டு; சீரிய ஆராய்ச்சிகளும் கூரிய நோக்குகளும் உண்டு. சுருங்கச் சொன்னால் அடிகள் ஆசிரிய இயலின் உருவம் அனையார் என்று தான் கூறவேண்டும் என்பது அது. (மறைமலையடிகள் வரலாறு 24) மாணவர்கள் : நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு. செங்கல்வராயர், திருப்புகழ்மணி டி.எம். கிருட்டிணசாமி, அமைச்சர் பி. சுப்பராயன், திவான்பகதூர் ஆர்.வி. கிருட்டிணர், இரசிகமணி டி.கே. சிதம்பர நாதர், பேராசிரியர் ச.வையாபுரியார். சி.என்.முத்துரங்கர், எசு. அனவரதவிநாயகர், சி.டி. நாயகம், கோவை இராமலிங்கம் ஆகியோர் அடிகளாரிடம் பயின்ற மாணவர்கள் ஆவர். இவர்களுள் சுப்பராயனும், முத்துரங்கரும் அடிகளாரிடம் சில ஆண்டுகள் தனிப் பாடமும் பயின்றவர் ஆவர். சிலச்சில நூல்களை மட்டும் பாடம் தனியே கேட்டுச் சென்றவரும், சில ஐயங்களை மட்டும் கேட்டுச் சென்றவரும் மிகப்பலர். ஆய்வு நூல் : கல்லூரித் தமிழ்ப் பாடத்தில் ப்ழந்தமிழ் நூல்களும் இடம் பெற்றிருந்தன. அவ் வகையில் முல்லைப்பாட்டு, பட்டினப் பாலை என்பவை குறிப்பிடத்தக்கவை இப் பாடம் பற்றியும், உரைவந்த வகைபற்றியும், வெளியீடுபற்றியும் அடிகளார் முல்லைப்பாட்டு ஆய்வுரை மூன்றாம் பதிப்பு முகவுரையில் சுட்டுகிறார் : இம் முல்லைப்பாட்டு கி.பி. 1903 ஆம் ஆண்டு கலைநூற் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பாடமாக வந்தது. சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் அப்போது யாம் தமிழாசிரியராய் இருந்து மாணாக்கர்க்குத் தமிழ்நூல் அறிவுறுத்தி வந்தமையால், இம் முல்லைப் பாட்டிற்கும் உரைவிரித்து உரைக்கலானோம். இச்செய்யுட்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரையையும் கூடவே விளக்கி வருகையில் செய்யுளியற்றிய ஆசிரியர் கொண்ட பொருண் முறை ஒரு பக்கமாகவும், உரைகாரர் கொண்ட பொருண்முறை மற்றொரு பக்கமாகவும் ஒன்றோடு ஒன்று இணங்காதாய் மாறுபட்டு நிற்றல் கண்டு மாணாக்கர் பெரிதும் இடர்ப்படுவார் ஆயினர். அதுவேயும் அன்றி, ஆக்கியோன் அமைத்த சொற்றொடர் நெறியைச் சிதைத்துச் சொற்களையும் அடைமொழிகளையும் ஒரு முறையுமின்றிப் பிரித்துக் கூட்டிப் பொருளுரைக்கும் நச்சினார்க்கினியருரை சிறிதும் ஏலா உரையேயாம் என்றும் அவர் கருதுவாராயினர். முன்னரே ஆக்கியோன் கருத்தை யொட்டி வேறோர் உரை செய்து வைத்திருந்தயாம் அதனை யெடுத்து அவர்க்கு விளக்கிக் காட்டினேமாக அது கண்டு அவரெல்லாம் தமதுரை ஆக்கியோன் கருதிய பொருளை நேர்நின்று விளக்குவதோடு பண்டைக் காலத்துத் தண்டமிழ்ச் சிறப்புகளைப் பின்றைக் காலத்துக் கேற்றபடி தெற்றென நன்கு தெரிப்பதாயும் இருத்தலின் தமது விரிந்த இவ்வாராய்ச்சி யுரையினையே பதிப்பிட்டு எமக்குத் தந்தருளல் வேண்டும் எனக்கேட்டு அது பதிப்பித்தற்காம் செலவும் ஒருங்கு சேர்ந்து முன் உதவினர். கி.பி. 1906 ஆம் ஆண்டு கலைநூல் புலமைக்குப் பயிலும் மாணாக்கர்க்குப் பத்துப் பாட்டுகளில் ஒன்றான பட்டினப் பாலை என்னும் அருந்தமிழ்ச் செய்யுள் பாடமாய் வந்தது. யாம் முல்லைப் பாட்டிற்கெழுதிய ஆராய்ச்சியுரையினைப் பற்றிக் கேள்வியுற்ற அவ்வாண்டின் மாணாக்கர்களும் தமக்குப் பாடமாய் வந்த பட்டினப்பாலைக்கும் அதனைப் போலவே ஓர் ஆராய்ச்சியுரை எழுதித் தரும்படி வேண்டி, அதனைப் மதிப்பிடுதற்காம் செலவின் பொருட்டு தாமும் ஒருங்குசேர்ந்து பொருளுதவி செய்தனர் என்கிறார். மாணவர் நலங்குறித்து வரையப்பட்ட இந் நூல்களின் உரைமாட்சி என்ன வகையில் உதவியது என்பதையும் அடிகளார் அவ்வுரையில் காட்டுகிறார்: அவ்வுரை நூலை வாங்கிக் கற்ற மாணாக்கரும் ஏனைத் தமிழறிஞரும் புதுமுறையாக எழுதப்பட்ட அவ்வுரைப் பாங்கினைப் பெரிதும் வியந்து பாராட்டி அம்முறையினைப் பின்பற்றிப் பழைய தமிழ் நூல்களை ஆராய்வதில் கிளர்ச்சி பெறலானார். இப் புதுமுறையுரை தமிழ் நூலாராயும் வகைகளை இனிது விளக்கி அறிஞர் பலர்க்கும் அகமகிழ்ச்சியினை விளைத்தமை கண்டு இனி, இத்தகைய உரைகளையே எழுதுதல் வேண்டுமென எமதுள்ளம் பெரிதும் விழைந்தது என்பது அது. அடிகளார் ஆய்வின் ஆழத்திற்கு ஒரு சான்று : இப் பாட்டினுள் இடைச் சொற்களையும் வேற்றுமை உருபுகளையும் நீக்கி எண்ணப்பட்ட சொற்கள் சிறிதேறக் குறைய ஐந்நூறு சொற்களாகும். அவற்றுள் முன்வந்த சொல்லே பின்னும் வருமாயின் பின்வந்தது எண்ணப்படவில்லை. இவ் வைந்நூறு சொற்களுள் நேமி கோவலர், படிவம், கண்டம், படம், கணம், சிந்தித்து, விசயம், அஞ்சனம் என்னும் ஒன்பதும் வட சொற்கள், யவனர் மிலேச்சர் இரண்டும் திசைச் சொற்கள். ஆக இதனுட் காணப்பட்ட பிறமொழிச் சொற்கள் பதினொன்றே யாம். எனவே இப் பாட்டினுள் நூற்றுக்கு இரண்டு விழுக்காடு பிற சொற்கள் புகுந்தன என்றறிக, ஏனைய வெல்லாம் தனிச் செந்தமிழ்ச் சொற்களாகும். இது முல்லைப்பாட்டின் சொல்லாய்வுக் கணக்கு (பக்.56) இப் பாட்டின்கண் சிறிதேறக் குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத் தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை அமரர், கங்கை, புண்ணியம்,சமம் என்பனவாம். ஞமலி என்னும் ஒருசொல் பூழி நாட்டுக்குரிய திசைச் சொல்லாகும் ஆகவே, இப் பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிறநாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற் பாற்று இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்ததென்பது புலப்படும் என்க இது பட்டினப் பாலையின் சொல்லாய்வுக் கணக்கு (பக்.77). மதுரைத் தமிழ்ச் சங்கம் : முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலாய பழைய நூல்களைத் தமிழ் மரபில் ஆய்ந்து புத்துரை காணும் அடிகளார் புலமை நலத்தை மதுரை நான்காம் தமிழ்ச் சங்க நிறுவனர். பொன். பாண்டித்துரையார் அறிந்தார். அதனால் அடிகளாரைத் தமிழ்ச்சங்க விழாக்களுக்கு அழைத்தார். மூன்றாம் ஆண்டுவிழாவில் (24-5-1904) சீரிய பொழிவாற்றி அடிகளார், அனைவரையும் கொள்ளை கொண்டார்; அவர்தம் தோற்றமும் பொழிவும் கவர்ச்சி மிக்கனவாக வயப்படுத்தின. அடுத்த ஆண்டும் நான்காம் விழாவுக்கு அடிகள் அழைக்கப்பட்டார். அது 24-5-1905 இல் நிகழ்ந்தது. தலைமை தாங்கிய வி. கனகசபையார் தொல்காப்பியர் பிராமணர்; என்று கூறி அதனால் தமிழர் ஆரியர்க்குக் கடமைப்பட்டவர் என்று வலியுறுத்தினார். மேலே அடிகளைப் பேசுமாறு பாண்டித் துரையார் அழைத்தார். அடிகளார் தமிழர் நாகரிகப் பழமை, சிறப்பு ஆகியவற்றை விரித்துரைத்து ஆரிய நாகரிகத்திற்கும் பிராமணர்க்கும் தமிழர் கடப்பட்டிருக்க வில்லை என வலியுறுத்தினார். பாண்டித்துரையாரும் அவையோரும் அடிகள் கருத்தை மிக வரவேற்றனர். (25-5-1905) அடிகள் பண்டைக்காலத் தமிழர் ஆரியர் என்பதோர் அரிய உரையை ஆற்றினார் அதனைக் கேட்ட புலவர்கள் பலர் மகிழ்வுற்று அடிகளைப் பாராட்டிப் பாமாலை சூட்டினர். ஐந்தாம் விழாவுக்கும் அடிகள் சென்றார். 26-5-1906 இல் உ.வே. சாமிநாதர் தலைமையில் நிகழ்ந்த மூன்றாம் நாள் விழாவில் பட்டினப்பாலையின் புத்துரை பற்றிப் பேசினார். தலைவர் சொற்பொழிவின்பத்தில் மூழ்கிவிட்டேன்; அவர் இனிய பேச்சொலிகள் என் இரண்டு காதுகளிலும் இன்ப முழக்கம் செய்கின்றன; என்ன பேசுவதென்று தெரியவில்லை என்று அமைந்தார். பின்னர் ஒருமுறை 24-5-1908 இல் தமிழர் நாகரிகம் பற்றியும் 25-5-1908 இல் குறிஞ்சிப் பாட்டு ஆராய்ச்சி பற்றியும் 26-5-1908 இல் தாம் இறையன்பு பற்றி ஆங்கிலத்தில் இயற்றிய பாடல்கள் குறித்தும் பொழிந்தார். எனினும் தமிழரல்லாதார் போக்கும் அவரைத் தழுவிய தமிழ்ப் புலவர் போக்கும் அடிகளார் உள்ளத்தை வருத்தின. பின்னர்த் தாம் தனித்து நின்று தமிழ் மொழி, தமிழ் நாகரிகம், தமிழர் சமயம் என்பன பற்றிச் செய்ய வேண்டியிருந்த அரும்பெருங் கடமைகளை உணர்ந்து அவற்றில் பெரிதும் கிளர்ந்தார்! சங்கத் தொடர்பு அவ்வளவில் அமைந்தது. பற்பல தொண்டுகள் : அடிகளார் சென்னைப் பகுதியிலும், திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை முதலான இடங்களிலும் நடைபெற்ற சமய விழாக்களில் பங்குகொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் திருக்கோயில் வழிபாடு செய்தலில் பேரீடுபாடு காட்டினார். அடுத்துள்ள திருத்தலங்களுக்கும் சென்று வழிபாடாற்றினார். கல்லூரியின் விடுமுறைக் காலங்கள் எல்லாம் இவ்வாறு சமயப் பணியிலும் மொழிப் பணியிலும் அடிகளார் தொண்டு இயன்றது. தூத்துக்குடிக்குச் சென்றபோது வ.உ.சி. யின் விருந்தினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1908 இல் ஆங்கிலத்தில் ஓரிதழ் தொடங்கினார் அடிகள். அதன் பெயர் ‘The Oriental mystic Myna’ என்பது. அது அமெரிக்கா, பிரான்சு, ஆத்திரியா, செருமனி இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் சென்றது. உலகோர்க்குத் தமிழ் மொழி குறித்தும் சிவநெறி குறித்தும் வெளிப்படுத்த வேண்டும் என்னும் அடிகளின் வேட்கையே இவ்விதழைத் தொடங்கச் செய்தது. திங்களிதழாகிய அது ஓராண்டுடன் அமைந்தது. இதன் பின்னரும் 1935 இல் ‘The Ocean of Wisdom’ என்னும் ஆங்கில வெளியீட்டையும் தொடங்கினார். அதனை முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் என்னும் நூலின் முன்னுரையில், செந்தமிழ் மொழியிலும் சைவ சித்தாந்தத்திலும் பொதிந்து கிடக்கும் அரும்பெரும் பொருள்களை இவ்வுலகம் எங்கணு முள்ள அறிஞர்கள் தெரிந்து நலம் பெறல்வேண்டி அவையிற்றை யாம் ஆங்கில மொழியில் எழுதி இரண்டு திங்கட்கு ஒருகால் ஒரு வெளியீடாகச் சென்ற ஒன்றரையாண்டுகளாக வெளியிட்டு வருதலால் எனக் குறிப்பிடுகிறார். பொதுநிலைக் கழகம் : தமிழகத்தில் சாதி சமயப் பிணக்கற்ற பொதுநிலைக் கழகம் ஒன்று உருவாக்கவேண்டும் என அடிகள் விரும்பினார். இயல்பாகவே வள்ளலார் கொள்கை வழியில் நின்ற வரும் வள்ளலார் பாடல்கள் அருட்பாக்களே என நிலை நாட்டியவருமாகிய அடிகளார் அவ் வள்ளலார் கண்ட சமரச சன்மார்க்க சங்கம் என்னும் சங்கத்தை 22-4-1911 இல் தோற்றுவித்தார். அச் சங்கமே பின்னர்ப் பொது நிலைக் கழகம் என்னும் பெயரைத் தாங்கிற்று. சன்மார்க்க சங்கம் தோற்றுவிக்க நேர்ந்த நிலையை அடிகள் ஞான சாகரத்தில் குறிப்பிடுகிறார். எல்லாச் சாதியார்க்கும் எல்லாச் சமயத்தார்க்கும் அங்கீகாரமான சீவகாருணிய ஒழுக்கத்தையும் சமரச சன்மார்க்கத்தையும், பிற்காலத்தில் மிக வலியுறுத்திப் போதித்த ஆசிரியர் ஸ்ரீமத் இராமலிங்க சுவாமிகளே ஆவர். அச் சுவாமிகள் வலியுறுத்திய அவ்விரண்டு கொள்கைகளையுமே எங்கும் வலியுறுத்தி விளக்கி அன்பர்களை ஒருங்குகூட்ட வேண்டி அச் சுவாமிகள் இட்ட பெயராலேயே சமரச சன்மார்க்க நிலையம் என்னும் இது தாபிக்கப்படலாயிற்று. இந் நிலையத்திற்கு முன் ஆசிரியர் திருவள்ளுவ நாயனார். பின் ஆசிரியர் இராமலிங்க சுவாமிகள் என்பது அது. வள்ளுவர் உள்ளமே வள்ளலார் உள்ளமாகப் பிறங்கியது என்பதைத் தெள்ளத் தெளிந்த தேர்ச்சியால் அடிகளார் இவ்வாறு தலைத் தலைமையையும், வழித் தலைமையையும் கொண்டார் என்க. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்னும் வள்ளுவர் வழியதுதானே வள்ளலார் வழி! அவர்தம் அருளுடைமைத் திருவடிவம்தானே வள்ளலார்! ஒருமைக்கண் தான் கற்ற கல்வி தானே வள்ளலார்க்கு வாய்த்த ஓதாக்கல்வி! சமரச சன்மார்க்க சங்க நோக்கங்கள் இவை எனவும் ஞான சாகரத்தில் குறிப்பிடுகிறார் அடிகளார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு பாராட்டும் சீவகாருண் ணியத்தை விளக்கும் முகத்தால் கொலை நிறுத்தல், புலாலுணவு விலக்கல் எல்லாம் வல்ல கடவுள் ஒருவரே என்று வலியுறுத்தி அவரை அடைதற்கு அன்பு ஒன்றே வழியெனக் காட்டுதல் ஏழைகட்கும் வலியற்றவர்கட்கும் அன்னம் இடுதல் ஏழைப் பிராணிகட்குத் தீனி கொடுத்தல், எவ்வுயிரையும் கொடுமையாக நடத்தலினிநின்றும் காத்தல் - என்பன அவை. பொதுநிலைக் கழக மாணவர்கள் : சமரச சன்மார்க்க சங்கம் என்னும் பொதுநிலைக் கழகம் இருபான் ஆண்டுகள் இயன்ற பணியாற்றியது. ஆங்காங்குச் சொற்பொழிவாற்றியதுடன், தக்க மாணவர்களைத் தெரிந்து பயிற்சி தருதலையும் மேற்கொண்டது. அவ் வகையில் பொதுநிலைக் கழக மாணவராகிப் பின்னாளிலும் தத்தம் இயலால் தொண்டு புரிந்தவர்கள் சிலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் பாலசுந்தரம் எனவந்து இளவழகனார் ஆகி அழகரடிகளாய் மதுராந்தகம் திருவள்ளுவர் குருகுலம் கண்ட பெருமகனார்; இளம் பருவத்திலேயே அருட் பெருந்தொண்டுக்கு ஆளாகி, நன்மணம் பரப்பும் காலத்திலேயே மறைந்த மணி. திருநாவுக்கரசர்; புதுக்கதைகளால் புகழுற்ற நாகை சொ. கோபாலகிருட்டிணர்; அவர் உடன்பிறப்பாகித் திருக்குறள் அறத்துப்பாலுக்கு அரியதாம் உரைவிளக்கம் கண்ட நாகை சொ. தண்டபாணியார், மகளிர் விடுதலை, சீர்திருத்தம், நாட்டுத் தொண்டு இவற்றில் அருந்தொண்டாற்றிய சிறந்த எழுத்தாளர் நாரணதுரைக்கண்ணனார்; நயன்மை (நீதி)க்கட்சியின் நாளிதழ் கனக சங்கரக்கண்ணப்பன் என்பார். இதுகாறும் குறிப்பிட்டதும் இதனினும் விரிந்ததாகக் குறிப்பிடாததுமான பொழிவுப்பணிகளும் எழுத்துப் பணிகளும் குமுகாயப் பணிகளும் கல்லூரிப் பணியின் இடை இடையே நடைபெற்றவையாம். முற்றாகப் பொதுப் பணிக்கே ஆட்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி வேலை விடுதல் : கலைப்பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலமே போதும்; தாய்மொழியைக்கட்டாயப் பாடமாக மாணவர்கள் கற்க வேண்டுவதில்லை; விருப்பமுடையவர் படிக்கலாம்; விருப்பமில்லாதார் ஆங்கிலந் தவிர வேறு மொழியை எடுத்துப் படிக்கலாம் எனச் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினர் முடிவு செய்தனர். அதனிடையேயும் மற்றொரு தீர்மானமும் வந்தது. தாய்மொழிகளை மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டியதில்லை. ஆங்கிலத்தையும் வடமொழியையும் கட்டாயமாகப் படித்தல் வேண்டும். தாய்மொழிகள் விருப்பப்பாடம் ஆகலாம் என்பது அது. அத் தீர்மானம் வரும்போது தமிழர் அனைவரும் வாளா வாய் பொத்தி இருக்கவும் ஆங்கிலவர் ஒருவர் எழுந்து சிறந்த இலக்கியங்களைக் கொண்ட தமிழ் முதலிய தாய்மொழிகள் கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்றால் ஒருவராலும் பேசப்படாது வாக்கில் இல்லா வடமொழி மட்டும் கட்டாயப் பாடமாக இருக்கலாமா? ஆதலால் அதுவும் கட்டாயங் கூடாது. விருப்பப் பாடமாகவே இருத்தல் வேண்டும் என்கிறார்! சூழ்ச்சியாளர் முகத்தில் கரி பூசினாலும் அம் மொழி தமிழுக்கு ஆக்கமாக அமையாமல் ஆங்கில நிலைப் பாட்டுக்கே உதவிற்று! அந்நாள் அப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர் கிறித்தவக் கல்லூரி முதல்வராகிய வில்லியம் மில்லரே ஆவர். (ம.ம.அ.வ. 124-6). தமிழ் விருப்பப்பாடம் என்னும் நிலைக்குத் தாழ்த்தப் பட்டமையால், தமிழ் கற்கும் மாணவர் குறைந்தனர். அதற்குத் தக ஆசிரியர் எண்ணிக்கையும் குறையத்தானே செய்யும். மெய்க்குருவர் காட்சி : இறையருள் நாட்டத்தால் தமக்கொரு மெய்க்குரு வரை அடிகளார் உள்ளம் முன்னரே நாடி நின்றது. விவேகானந்த அடிகளார் இராமகிருட்டிணரைக் கண்டடைந்தது போலவும் குமரகுருபரர் மாசிலாமணி தேசிகரைக் கண்டடைந்தது போலவும் அடிகளார் குடந்தையை அடுத்துள்ள கொட்டையூரில் திருமூலர் வழிவரு இராசானந்த அடிகள் என்பாரைக் கண்டு வழிபட்டார். அவரிடம் தவநிலை (நிட்டை) பெற்றார். (21-1-1907) மீண்டும் அவரைக் கண்டு வணங்கித் தவயோகப் பயிற்சிகளில் முற்றாக நிலைக்க வேண்டினார் (1-6-1908) ஆனால் அதற்குக் காலம் வரும் என்று கையமைத்துக் கடமையாற்றிவரக் கட்டளையிட்டார். அக் காலம் இதுவே என்பதுபோல் நிகழ்ச்சி கூடிவந்தது. அதனால் 30-4-1911 இல் வேலையை விடுத்து வெளியேறினார் அடிகளார். அவரைப் பிற கல்லூரிகள் விரும்பி அழைத்தும் ஆங்குச் சென்று பணியாற்றும் எண்ணமில்லாராய்த் தம்மை முழுமையாகத் தொண்டுக்கே ஆட்படுத்திக் கொண்டார். பின்னே இந்தி எதிர்ப்புப் பொழுதில் அவ்வெதிர்ப்பை அடிகள் விடுப்பாரானால் பெருவரு வாய்க்குரிய வேலை வாய்க்குமென்று கூறப்பெற்றும் அடிகள் அதனைக் கருதாது கடிந்துரைத்து ஒதுக்கியமையால், அவர்தம் உரிமைவேட்கையும் உண்மை உள்ளமும் ஒருங்கே புலப்படும். பூஞ்சோலை க்குள் புகுந்து அதன் அழகில் தோய்ந்த தாம்; வீசம் தென்றல் உலா வில் திளைப்போம். 6. தென்றல் உலா பல்லவபுரம் : கல்லூரிப் பணியில் இருந்து விலகிய அடிகளார் வாழ்விடம் சென்னையில் இருந்து பல்லவபுரத்திற்கு மாறியது. அங்கே ஒரு மனையிடத்தை 22-2-1911 இல் விலைக்கு வாங்கினார். 1-5-1911 இல் ஆங்கொரு வீட்டை வாடகைக்கு அமைத்துக் கொண்டு தாம் விலைக்கு வாங்கிய மனையிடத்தில் கட்டடம் கட்டத் தொடங்கினார். அக் கட்டடமே அடிகளார் கண்ட பொது நிலைக் கழக மனையாயிற்று. அடிகளார் கொண்டிருந்த சமயப் பற்றும், மெய்ப்பொருள் ஆய்வும் பண்டைத் தமிழர் மேற்கொண்டிருந்த மனையோடு வாழ்ந்து, மக்களோடு விளங்கி, சிறந்தது பயிற்றி, துறவினை மேற்கொள்ளும் நெறியைக் கடைப்பிடியாகக் கொள்ளத் தூண்டின. பேராசிரியப் பணி நீக்கம் இதற்குத் தக்க வாய்ப்பாக அமைந்தது. அடிகளார் 27-8-1911 இல் தம் முப்பத்து ஐந்தாம் அகவையில் துறவு கொண்டார் அவர் தம் பின்னால் துறவுநிலை கொண்டு முன்னரே அடிகள் என நாம் வழங்கினாலும் அவர் அடிகள் நிலைகொண்டது, இந்நாள் முதலேயாம். அடிகளார் நாகையிலிருந்து சென்னைக்கு வருமுன்னரே மணம் செய்திருந்தமையும் சிந்தாமணி என்னும் மகவு பிறந்திருந்தமையையும் அறிந்துளோம். தம் மனைவியுடனும் அம் மகவுடனும் சென்னைக்கு வத்த அடிகளார் குடும்பம் துறவு மேற்கொள்ளுதற்கு முன்னர்ப் பெரிய குடும்பம் ஆயிற்று. 1903 இல் நீலாம்பிகையும், 1904இல் திருஞான சம்பந்தரும், 1906இல் மாணிக்கவாசகரும், 1907 இல் திருநாவுக்கரசும், 1909 இல் சுந்தரமூர்த்தியும், 1911 இல் திரிபுர சுந்தரியும் பிறந்தனர். இல்வாழ்வு : அடிகளார் நடத்திய இல்வாழ்வியல் குறித்தும், சாந்தா அம்மையார் அன்பியல் குறித்தும் அவர்கள் அருமைத் திருமகனார் மறை திருநாவுக்கரசர் வரைந்துள்ளார். அடிகளார் எதனைச் சொன்னாலும் நம்பி அப்படியே ஏற்றுக்கொள்ளும் ஆமாம் சாமியாக அம்மையார் இருந்தார் என்றும், அம்மையார் உடன்பாடு இன்றி அடிகள் எதுவும் செய்யார் என்றும் கூறுகிறார். அடிகள் மனம் விட்டுப்பேசக்கூடிய ஒரே நண்பரும் சாந்தம்மாதான். சாந்தா! இன்று மாணிக்கவாசகர் காலம் எழுதினேன். தஞ்சாவூர் சீனிவாச பிள்ளை அவரைப் பத்தாம் நூற்றாண்டு என்றார். நான் மூன்றாம் நூற்றாண்டு என்று முடிவு கட்டியிருக்கிறேன். நல்ல சான்றுகள் கிடைத்துள்ளன. வெள்ளைக்கார நாட்டில் மில்டன் என்பவர் ந்ல்ல பாட்டுகள் பாடியிருக்கிறார். நிரம்ப நன்றாய் இருக்கிறது சாகுந்தல நாடகத்தில் சகுந்தலைக்குச் செடி களிடத்தும் மான் முதலிய உயிர்களிடத்தும் உள்ள அன்பைக் காளிதாசர் நன்றாகச் சொல்கின்றார். பிள்ளா! இன்று பறவைகளின் வாழ்க்கை பற்றி ஒரு வெள்ளைக்காரர் எழுதியதைப் படித்தேன். எவ்வளவு ஆராய்ந்து எழுதியிருக்கிறார் தெரியுமா? தோட்டக்காரனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம்? கொழும்பில் இருந்து என்னைப் பேசவருமாறு அழைக்கிறார்கள். போகட்டுமா? வருகிறேன் என்று எழுதட்டுமா? அறிதுயில் என்னும் நூலை எழுதிவிட்டேன். 300 பக்கம் உண்டு. மூன்று ரூபா விலை வைக்கட்டுமா? அச்சுக்கூடத்து இராசு நாலணா முன்பணம் கேட்கிறான் கொடுக்கட்டுமா? இன்று தேங்காய்ப்பால் குழம்பு வை. இன்றைக்கு நூல் விற்ற பணம் 6-ரூ வந்தது. இன்று ஐந்து வந்தது. இன்று ஒன்றும் இல்லை. இன்று சென்னைக்குச் சென்று நூற்பதிப்புக்கான பொருள்களை வாங்கிவிடட்டுமா? மாணிக்கம் புத்தகம் வாங்க எட்டணாக் கேட்கிறான் கொடுக்கட்டுமா? நீலா நன்றாகப் படிக்கிறாள். சம்பந்தனைப் பண்டங்கள் வாங்கக் கடைக்கு அனுப்பட்டுமா? திருநாவுக்குத் தமிழ் மருந்து கொடுக்கட்டுமா? இங்கிலீசு மருந்து கொடுக்கட்டுமா? வெந்நீர் கொண்டு வா. நான் தஞ்சாவூர் சென்றபோது உமாமகேசுவரம் பிள்ளை நிரம்ப அன்பும் சிறப்பும் செய்தார். பிள்ளா, அவர் வந்துள்ளார். அருமையான விருந்து செய். இளவழகன் நுட்பமான அறிவாளி. நான் சொல்வதை யெல்லாம் நன்றாக விரைவில் தெரிந்து கொள்கிறான். எம்.எல்.பிள்ளை சட்டக்கல்லூரிப் பேராசிரியராய் விட்டார். கவியாண சுந்தரம் (திரு.வி.க.) நாளை வருவார். கீதம் இனிய குயிலே என்னும் திரவாசகம் மிகவும் அழகானது. இப்படியெல்லாம் எழுதப் படிக்கத்தெரியாத சாந்தம்மாளிடம் அடிகள் பேசிக்கொண்டிருப்பார். தம் கணவர்தாம் அவருக்குத் தெய்வம். அந்தப் பேரறிஞர் இந்த எழுத்தறிவில்லாப் புலவரிடத்தில் அறிவுரைகள் கேட்பது பார்ப்பவருக்கு மிக வேடிக்கையாகத் தோன்றும். சாந்தம்மா உடன்பாடின்றி அடிகள் மாளிகையைக் கடவார். ஒருவருக்கும் கடிதம் எழுதார். கொடுக்கல் வாங்கல் செய்யார். வெளியூர் அழைப்புகளை ஏலார் சவுந்திரம் வேண்டாம் என்றால் கோடியாயினும் விரும்பார். அடிகள்பால் சில வியப்பான போக்குகள் உண்டு. அவற்றிற் சில தப்பாகவோ சரியாகவோ சாந்தம்மாள் சொல்வதை மீறாமை, அவ்வப்போது நூல்கள் விற்றுப்பணம் அனுப்பில், வரும் தொகைகளைச் சவுந்திரம் கையில் கொடுத்துப்பின் தாம் வாங்குதல்; எந்தச் சிறு செயல்களையும் சவுந்திரத்தைக் கேட்டே செய்தல் முதலியவாம் என்கிறார். (மறைமலையடிகள் வரலாறு 72-74) வாழ்வியல் மேலாய்வு : விளையாட்டுப் பருவக் குழந்தையின் செய்கைபோல் கருதத் தக்கது அன்று இது! வேடிக்கைச் செய்தியும் அறிவறியாத் தன்மையும் அன்று! அன்று! அடிகளார் ஆழ்ந்த மூளைக்கூர்ப்புக்கும், கடும் உழைப்புக்கும் ஓய்வு பெறும் மாசில் வீணை மாலைமதி, வீசுதென்றல், வீங்கிளவேனில், மூசுவண்டறைபொய்கை இவையே! இன்னும் சொன்னால் கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தரு, தருநிழல், நிழல் கனிந்த கனி, ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீர், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று இன்னவெல்லாம் தம்மை மறந்து, தாமே குழந்தையாய் மாறி நிற்கும் அடிகளார் செய்கையேயாம்! சிலர் ஆடலில் - சிலர் பாடலில் - சிலர் காட்சியில் - சிலர் உலாவலில் - சிலர் பிறபிற வழிகளில் மன அமைதி பெறுவர்; வாழ்வின் வெம்மையை மாற்றிக் கொள்வர். அடிகளாரோ இவ்வினிய வகையை மேற்கொண்டார்! இம் மேற்கோள் அவர்தம் பணிச்சீர்மைக்கு ஏந்தாக அமைந்ததென்க. அடிகளார் நாள்வழிக் கடமைகள் எப்படி? நாள்வழிக் கடமை : காலையில் எட்டு மணிக்குத் துயிலில் இருந்து எழுவார். இதனைப் படித்ததும் அடிகளாரா அப்படி! வைகறைப் போதில் எழாரா? விடிந்தும் இரண்டு மணிப் பொழுதும் நடந்த பின்னரா எழுவார்? என வினவத் தோன்றும்! நாள்வழிக்கடமைகளை முழுதுறக் கண்டு பின் எண்ணங்களை ஆய்வில் ஓடவிடுக : எட்டு மணிக்கு எழுந்த அடிகள் பாதக் குறடு இட்டவாறே சிறிது பொழுது, பொதுநிலைக் கழக மாளிகையைச் சுற்றியுள்ள பூங்காவில் உலாவுவார். பிறகு எனிமா வைத்துக்கொண்டு குடல் தூய்மை செய்வார். 11 மணிவரை காலைக் கடனும் நீராடுவதும் இறைவழிபாடும் நடைபெறும். பிறகு கஞ்சியுணவு கொள்வர். அவ்வுணவையும் ஆர அமர இருந்தும் சிறிது சிறிதாகப் பருகுவார். அதனுடன் பக்குவப்படுத்தப்பட்ட திராட்சை முதலிய பழவகைகளையும் சுவைத்துண்பார். இட்டலியும் சில நாளில் உணவாகும். காலைச் சிற்றுண்டி முடிந்ததும் அரைமணி நேரம் மறுபடியும் உலவுவார். பிறகு இருக்கையில் இருந்து நூலாய்வார், கடிதம் எழுதுவார்; நூல் எழுதுவார். அடிகளின் இருக்கையும் மேசையும் எழுதுகோலும் நூல்களும் தூயவைகளாக இருக்கு. எழுதுகோலும் நூல்களும் தமக்குரிய இடத்தைவிட்டு மாறியிருந்தது எப்போதும் இல்லை. மாளிகையின் கீழும் மேலும் தனித்தனியே மேசை நாற்காலி முதலிய படிக்கும் வசதிகள் உண்டு. ஓய்வாய் இருக்கும்போது சாய்ந்து படிக்கச் சாய்வு நாற்காலி பஞ்சணையுடன் உண்டு. பகலுணவு 21/2 மணிக்குமேல் 3 மணிக்குள்ளாக நடைபெறும். இந்துப்பையே கறி முதலியவற்றில் சேர்த்துக் கொள்வார் மிளகாயும் புளியும் சேர்க்க மாட்டார். ஆங்கிலக் காய்கறியும் பட்டாணியும் கோசுக்கீரையும் பொன்னாங் கண்ணிக் கீரையும் மிளகு நீருமே அடிகட்கு விருப்பம். எலுமிச்சம் பழமே புளிக்கு மாறாகச் சேர்க்கப்படும். எலுமிச்சம்பழத் தொக்கு அடிகளுக்கு மிகவும் விருப்பமானது. உண்ண அரைமணி நேரம் ஆகும். உணவுக்குப்பின் சிறிது உறங்குவார். பிறகு நூல்களுக்கு உறையிடுதலும், ஆங்கில நூல்களின் ஓரம் பிரித்தலும் செய்வார். 6 மணிக்கு இஞ்சிநீர் பாலுடன் கலந்து பருகுவார். மறுபடியும் உலாவுவார். இறைவழிபாடு செய்வார். 8 மணி முதல் 10 மணிவரை எழுதுதலும் நூலாய்தலும் ஒழுங்காகச் செய்வார். பதினோரு மணிக்கு எனிமா வைத்துக்கொள்வார். வேது பிடிப்பார். இரவு ஒரு மணிக்கே சிற்றுண்டியும் பாலும் உண்பார். 2 மணிக்கே படுக்கைக்குச் செல்வார். காலையில் துயிலில் இருந்து எழுந்தவுடன் கண்ணாடியிலே தம் உருவத்தை நோக்கிக் கல்வி செல்வம் நலம் என்னும் மொழியைப் பன்முறை கூறுவார். ஆடையைக் காலை மாலை இருபோதும் மாற்றுவார் எண்ணெய் கலந்த சிற்றுண்டிகளைத் தொடமாட்டார். நெய்யே யாவற்றிற்கும் பயன்படல்வேண்டும் தாளிப்பதும் நெய்யிலேதான். கடுகு சேர்க்கமாட்டார். காப்பி, தேயிலை முதலிய குடிவகைகள் அவருக்கு வெறுப்பானவை. பசும்பாலும் நெய்யுமே அவருடைய செலவில் மிகுதியான பொருளைக் கவரும். இவ்வாறு தம் உடலைப் பேணும் வகையில் மிகவும் விழிப்பாகவே இருப்பார். தாம் சொற்பொழிவு செய்யப்போகும் இடங்களிலும் இவ் வகை உணவே வேண்டுமென முன்னரே எழுதிவிடுவார். அடிகளுக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு. ஒவ்வொரு நாளும் தம் நூல்நிலையத்தில் உள்ள நூல்களில் ஒரு பகுதியை எடுத்துத் தூசி தட்டிப் பிரித்துப் பார்த்து வைப்பது வழக்கம். தம் கைப்படவே கடிதங்கள் எழுதுவார். விளக்குகளைத் தாமே துடைத்து வைப்பார். கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பார். நாட்காட்டியில் நாள்களை மாற்றுவார். வீட்டில் தூசு தும்புகள் தோட்டத்தில் உதிர்ந்த சருகுகள் யாவும் அப்போதைக்கு அப்போதே நீக்கப்பெறல் வேண்டும். வீட்டில் உள்ள பொருள்கள் தத்தமக்குரிய இடங்களிலேயே இருத்தல் வேண்டும் இவை புலவர் அரசு அவர்கள் அடிகளாரைப் படம் பிடித்துக் காட்டும் செய்திகள். இவற்றை மேலோட்டமாகப் பார்த்த அளவிலேயே அடிகள் திட்டமிட்டுத் தேர்ந்து செயலாற்ற வல்ல திருவாளர் என்பது விளங்கும். பிற்பகல் 4 மணி இருக்கும்; பல்லாவரத்தில் அடிகளார் மாளிகைத் தோட்டத்தில் மெல்ல நுழைந்தேன் நல்ல காலம் போலும்! அடிகளார் தமது மாளிகையின் முன் தாழ்வாரத்தில் கட்டைச்சுவர்மேல் எதிர்முகமாகத் தனியாய் அமர்ந்திருந்தார். ஏதோ ஓய்வாகப் படித்துக் கொண்டிருந்தார். அத்தகைய அமர்த்தலான நிலையை இறுதிவரையில் அவர்கள் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை; அடியேற்கு என்றே ஒருநாள் மட்டும் அவ்வாறு அமர்ந்திருத்தார்கள் போலும்! என்று அழகரடிகள் எழுதும் எழுத்தால் அடிகளாரின் ஒழுங்கு மாறா ஒரு சீர் நிலையை அறிந்து கொள்ளலாம். அடிகளார் செயல்நிலை இன்னதெனத் தெரிந்தால், இன்ன நேரம் இது எனத் திட்டமாகக் கூறலாம் என்பர். அத்தகு கடைப்பிடியர் அடிகள். இக் கடைப்பிடி ஒழுங்கும் தூய்மை போற்றலும் இயற்கை நாட்டமும் சுவைத் தேர்ச்சியும் உள்ளுள் ஊறிக் கிடந்து கிடந்து என்ன செய்தன! தமிழின் தனித் தன்மையை - தமிழின் தூய்மையை - தமிழின் நடையழகை - தமிழின் இயற்கை எழிலை - உலகம் கண்டுகொள்ளும் வகையில் தனித் தமிழ் இயக்கம் தோன்றப் பக்குவப்படுத்தின - பண்பட்ட இயல்வளம் ஆக்கின என்பதேயாம். ஒரு மாணவர் : பல்லவ புரத்துப் பொதுநிலைக் கழகத் திருமாளிகையில் மாணவப் பேறு எய்த ஒருவர் செல்கின்றார். அடிகளாரின் அமர்ந்த கோலம் கண்ட அவர், திருப்பெருந்துறையில் குருந்த மர நிழலில் வீற்றிருந்த குருதேவரை மாணிக்கவாசகப் பெருமான் கண்டுகொண்ட முதல் நிலையில் அவர் இப்படித்தான் உள்ளம் நிலை கொள்ளாமல் தத்தளித் திருப்பாரோ எனத் தத்தளித்தார். யார்? என்று ஒரு கீச்சொலி அடிகளிடமிருந்து எழுந்தது. கையுறையாகக் கொண்டு சென்ற இரண்டு நாரத்தைப் பழங்களையும் வைத்து வணங்கினார் சென்றவர். எங்கிருந்து வருகிறாய்? சைதாப்பேட்டையில் இருந்து என்ன செய்தி இராயப்பேட்டைப் பேரவையில் பார்த்தேன்; ஓங்கார விளக்கம் கேட்டேன். இரண்டாம் நாளும் சைவ மாட்சி கேட்டேன். தமிழும் சைவமும் பயில விருப்பம் பெருகிவிட்டது பெயர் என்ன? பாலசுந்தரம்; சைதையில் ஆசிரியர் பயிற்சியில் இருக்கிறேன். கிழமையில் இருமுறை வரக்கூடும். இது வரையில் என்னென்ன படித்திருக்கிறாய்? மதுராந்தகத்தில் பள்ளித் தமிழாசிரியர் குமரகுரு செட்டியார்; அவரிடம் பதினெண்கீழ்க் கணக்குகள் ஒவ்வோரரளவு படித்ததுண்டு; வீட்டில் நானே பெரும் பாலும் படித்துக்கொண்டேன்; சென்னையில் மயிலைசிவ. முத்துக்குமாரசாமி முதலியாரிடம் இரண்டு மாதங்கள் திருமுருகாற்றுப் படையில் ஒரு பகுதி படித்து வந்தேன்; அடிகளைப் பார்த்தது முதல் வேறு நினைவு ஓடவில்லை. அடிகள் நூல்களையே பார்த்து வருகிறேன். இலக்கணப் பயிற்சி? தனியாக எதுவும் பாடம் கேட்டதில்லை ஆங்கிலம்? சில தொடர்கள் தெரியும் உணவு எப்படி? சைதையில் உணவகத்தில் உண்கிறேன்; பயிற்சிக்குச் சிறு ஊதியம் உண்டு; தந்தையார்; ஊர்க்கணக்கர்; அவரால் என்னை இங்கே சேர்க்க மட்டும் முடிந்தது; அடிகளைக் காணும் நற்பேறும் அவரால் கிடைத்ததென்றுதான் சொல்லவேண்டும்; தாயார் மாணிக்கம்மமாள், இருவரும் சிவநேயர்கள்; திருக்கழுக்குன்றத்து இறைவரையே வழுத்துவார்கள்; எந்நேரமும் என் தந்தையார் வேதகிரிநாதா வேதகிரிநாதா என்றே சொல்லிக் கொண்டிருப்பார். எனக்குத் தமக்கை ஒருவரும் தம்பி ஒருவரும் தங்கை ஒருவரும் உண்டு. மரக்கறியே உண்டு பழக்கம். பயிற்சிப் பாடங்களில் தேர்ச்சி பெறவேண்டாமா? இங்கும் வந்துகொண்டிருந்தால் எப்படி? அவை எளிமையாய் இருக்கின்றன; வகுப்பிற் கேட்பதே போதும் ஒரு திங்கட்கிழமை மாலையில் வா; நன்னூல் தொடங்கலாம் இதற்குள் உள்ளே இருந்து அம்மையார் வந்தார்கள். யார் சாமி? பாடம் கேட்க வேண்டுமாம்; சைதையில் இருப்பதால் கிழமைதோறும் வரமுடியுமாம்; சைவப்பிள்ளை; அடக்கமாய் இருக்கிறது; அறிவும் இருக்கிறது; எளிய குடும்பம், உரைகோளாளன் என்று நன்னூலில் சொல்லுவார்கள், அந்த வகையில் அமையலாம்; நம் திருக்கழுக்குன்றத்துப் பெருமானே தெய்வமாம் அம்மையார் : நண்ணாப் படிப்பியா? நிலையா இருப்பியா? ஒன்றும் சொல்ல நாவெழாமல் ஊமைபோல் அடிகளைப் பார்த்தார். அம்மையார் பால் கொணர்ந்து தந்தார்; அருளமுது எனப் பருகினார்! இக் காட்சி பாலசுந்தரம் ஆகிய இளவழகனார் அடிகளை முதற்கண் இல்லத்தில் கண்ட காட்சி! அடிகள் வேலை என, வருவாய் என இருந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியன்று. அத்தகு காலத்தினும் ஆர்வமிக்க ஏழைக்கு எக் கட்டணமும் இல்லாமல் விட்டிலே வைத்து ஊணும் உதவி எவர் கற்பிப்பார்? அடிகள் என்ன கொழுத்த செல்வரா? ஆலையோ வாணிகமோஈட்டித் தரும் பணத்தை எண்ணிப்பார்க்கவும் இயலா நிலையில் இருக்கும் செல்வச் செழிப்பரா? கைந்நிறையத் திங்கள் ஊதியம் வாங்கும் திருவாளரா? எதுவும் இல்லையே! நூல் விற்குமா? விற்ற தொகை ஏதாவது வருமா? இன்று என்ன செய்யலாம்? குடும்பம் பெரியது ஆயிற்றே! என்று நாளும் பொழுதும் தட்டுத்தடவும் குடும்பச் சூழலில் இப்படி உரை கோளாளனுக்கு (பாடம் விரும்பிக் கேட்பவனுக்கு) உதவ எவர் முன்வருவார்? மற்றைக் கல்விக்கூடங்களையும், தனிக்கல்வி கற்பிப்பாரையும் எண்ணிப் பார்க்கவே அடிகளின் தனிப்பெருமாண்பு புலப்படும். இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் (218) வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று (955) என்னும் குறள்மணி வாழ்வு அடிகளார் வாழ்வாகும். அடிகளார் தந்த கலைவளம் என்ன செய்தது? வறியர் எனத் தள்ளாது வள்ளற்கலை வழங்கிய பேறு என்னவெல்லாம் செய்தது? மறைமலையடிகள் கல்விக் கழகம்! ஆயது! தனித்தமிழ்த் தொண்டுக்கும் சைவச் செந்நெறிக்கும் தம்மை முற்றாக ஆக்கிக்கொண்ட அழகரடிகளைத் தந்தது. கல்விக் கழகம் : 1930 இல் மறைமலையடிகள் கல்விக் கழகம் தொடங்கப் பட்டது. அதனைக் குறித்து எழுதுகின்றார் இளவழகனார் : ஓம் சிவம் திரு மறைமலையடிகள் துணை அடிகள்பால் அடியேன் கல்வி பயின்ற நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டாகவும், அடிகள் நம் தமிழ்நாட்டுக்குச் செய்துள்ள அரும்பெரும் நன்மைகளை அனைவரும் என்றும் நினைவுகூர்தற் பொருட்டாகவும் உலகமெங்கும் வல்ல அறிஞர்கட்குப் பல அரும்பெரும் சிறப்புகள் அடையாள முகத்தாற் காணப்படுதல்போல, நமதினிய தமிழ்நாட்டிலும் அங்ஙனம் ஒரு சிறப்புக் காணப்படாக் குறையை நிரப்பும் பொருட்டாகவும் இக் கல்விக் கழகம் இவைகளின் இசைவின் மேல் அடிகள் திருப்பெயரை ஏற்று மறைமலையடிகள் கல்விக் கழகம் என்னும் பெயரால் சென்னையை அடுத்த பறங்கி மலையில் 1930 இல் அடியேனால் தொடங்கப்பெற்றது. இது தொடங்கப்பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இக் கழகம் நம் தமிழ்மொழிக்கும் முக்கியத்துக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் அடிகள் நோக்கங்களைப் பின்பற்றி உறுதொண்டு செய்யும் உறுதியுடைவர் என்பது அது. இதனைக் கண்ட அடிகளார், ஓம் சிவம் பல்லாவரம் 9-7-1932 அன்புமிக்க தி.சு. பாலசுந்தரன் என்னும் இளவழகற்குத் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக எமது பெயரால் நீ ஒரு கல்விக்கழகம் வைத்து நடத்துவதைவிட தமிழன்னையின் பெயரினாலே அதனை நடத்துவதே சிறந்ததாகும். என்றாலும், எமது பெயரின் தொடர்பு அக்கழகத்திற்கு இருக்கவேண்டு மென்று நீ வற்புறுத்தி வேண்டுதலால் நின்னன்பின் பொருட்டு அவ்வாறு நீ செய்தற்கு இசைகின்றோம். இங்ஙனமாக நீ வைத்து நடத்தும் மறை மலையடிகள் கல்விக்கழகம் என்பதற்கு எமது பெயரின் தொடர்பைத் தவிர வேறு ஏதொரு தொடர்பும் எமக்கும் இல்லை என்பதை இதனால் அறிவிக்கின்றேன். அதன் பொருட்டு நீ பிறரிடமிருந்து திரட்டும் பொருளும் இதனைச் செலவிடும் பொறுப்பும் எல்லாம் நினக்கே உரியன. நலம். அன்புள்ள, மறைமலையடிகள் என மறுமொழி விடுத்தார். அழகரடிகளார் பேரன்பும், நம் அடிகளார் வாழ்வியல் தேர்ச்சியும்இவ்வஞ்சல்களால் புலப்படும். தக்கார்க்கு உதவும் உதவி எப்படியெல்லாம் நாட்டுப் பயனாம் என்பதனை நாட்டும் செய்தி ஆதலின் காட்டப் பெற்றதாம்! அடிகளார் அரவணைப்புத்தானே அழகரடிகளார் தொண்டுகள் அனைத்துக்கும் மூலவைப்பு? இவ்வாறு அடிகளார் தவமனை, தமிழ்க் கலைக்கழகமெனவும், சிவநெறி மன்றமெனவும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு ஈதொரு சான்று எனக்கொள்க. வடநாட்டுச் செலவு : அடிகளார் கட்டற்ற உரிமை வாழ்வால், கருதும் இடங்களுக்கெல்லாம் சென்று பொழிவாற்றவும், திருக்கோயில் வழிபாடாற்றவும் வாய்த்தது! தமிழகம் தழுவிய அளவில் அவர்கள் திருவுலாமுன்னரே நிகழ்ந்திருந்தாலும் வடநாட்டுச் செலவுக்குப் பேராசிரியப் பணி இடந்தந்திலது. அக்காலப் போக்குவரவு நிலையும் விரைந்து மீள்தற்கு வாய்ப்பிலதாய்த் தகைந்தது. அதனால், முழு விடுதலை பெற்ற அடிகள் நோக்கு வடபால் செலவை நாடிற்று. 21-3-1913 இல் சென்னையினின்றும் கிளர்ந்து விசயவாடா, தவளேசுவரம், பூரி, புவனேசுவரம் ஆகிய இடங்களைக் கண்டும் வழிபட்டும் 4-4-1913 இல் கல்கத்தா நகரை அடைந்தார். ஆங்குப் பேலூர் மடம், தட்சிணேசுவரம் கோயில் ஆகியவற்றை வழிபட்டார். கல்கத்தாவில், திருஞானசம்பந்தர் சாங்கியமும் சைவ சித்தாந்தமும் என்னும் பொருள்களைப்பற்றி முறையே தமிழிலும், ஆங்கிலத்திலும் சொற்பொழிவாற்றினார். அன்பர்களைக் கூட்டி அங்கே சன்மார்க்க சபை ஒன்றையும் நிறுவினார். (4-5-1913) அதன்பின் தார்சிலிங்குக்குச் சென்றார். அடிகள் சென்ற நேரம் மாலைப்பொழுது; பனிமலை அடிப்பகுதி அது; குளிர்வாடை தாக்கத் தொடங்கியது. அடிகள் எதிர்பார்த்தவர் அங்கே எய்தினார் அல்லர்! என் செய்வார் திருவருளை நினைந்து நின்றார் அடிகள் நடுங்கும் நடுக்கத்தையும் எவரும் துணையில்லா நிலையையும் கண்டு அங்கு உலாவந்த இருவர் தம் உறைவிடத்திற்கு அடிகளை அழைத்துச் சென்றனர். பெருவளமான மாளிகை நல்ல - உணவு - வெதுப்பி ஏற்பாடு - இனிய கலந்துரை பாடல் எல்லாமும் வாய்த்தன! அவ்வில்லத்தவர்களும் அவர்கள் உறவினர்களும் அடிகளின் புலமை நலம் கண்டு மகிழ்ந்து வழிபட்டும் மெய்ப்பொருள்பற்றிக் கேட்டறிந்து பெருமகிழ்வுற்றனர்! அவர்கள் செய்த தொண்டும், ஆர்வ தளிர்ப்பும் வழிபாடும் அடிகளைத் திருவருள் மாண்பு இஃது என உணருமாறு செய்தன. இரவு எய்தியது; தண்ணிலா வெண்ணிலா ஒளியை வாரி வழங்கியது; பனிமலை மேல் அவ் வெண்ணிலா அருவிப் பொழிவைக் கண்ணாடிப் பலகணி வழியே கண்டு கண்டு கழிபேருவகை எய்தினார் அடிகள். நெட்ட நெடுந்தொலைவில் திகழும் கயிலாயக் காட்சியில் தம்மை மறந்த இன்பத்தில் ஆழ்ந்தார். நான்கு நாள்கள் அவ்விடத்தே தங்கிக் காண்பன கண்டு மீண்டும் கல்கத்தா திரும்பினார். பின்னர்க் காசிக்குச் சென்று, கங்கை நீராடினார். பிரயாகைக்குச் சென்று முக்கூடலில் (கங்கை யமுனை) சரசுவதி என்னும் மூன்றாறுகளும் கூடும் திரிவேணி) நீராடினார். அரித்துவாரியில் பன்னிரு நாள்கள் தங்கினார். அதன்பின் பல்தேவ்சிங் என்பாரின் அன்பின் விருந்தாளராய்த் தேராதூனில் சில நாள்கள் தங்கினார். அங்கிருக்கும்போது உலகமதம் என்னும் சொற்பொழிவை ஆக்கி முடித்தார். 13-6-1913 இல் தில்லி மாநகர்க்கு எய்தினார். இராமச்சந்திர வர்மா என்னும் பஞ்சாபியர்அடிகளை எதிர்பாராது வரவேற்றுப் போற்றினார். அவர் அடிகளை ஆக்ராவிற்கும் அழைத்துச் சென்று தாசுமால் அழகில் தோய உதவினர். அடிகள் 20-6-1913 இல் பம்பாய்க்குச் சென்று 11-7-1913 இல் சென்னைக்கு மீண்டார். அடிகளுக்கு 20-7-1913 இல் மயிலாப்பூர் இரானடே மண்டபத்தில் இராயப்பேட்டை அவையினரால் ஒரு பாராட்டுவிழா எடுக்கப்பட்டது. அடிகள் தாம் சிவப் பணி செய்ததற்காகச் சென்ற செலவையும், கண்ட காட்சிகளையும் வடநாட்டவர் பண்புகளையும் விரிவாக மூன்று மணி நேரம் பொழிந்தார். ஈழநாட்டுச் செலவு : தூத்துக்குடியில் வழுதூர் அழகிய சுந்தரர் என்பார் ஒருவர் இருந்தார்; அவர் சிவநெறிச் செல்வர்; தூத்துக் குடி சைவ சித்தாந்த சபையின் தொடர்புடையவர்; அவர் மறைமலையடி களிடத்துப் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவர். அவர் வழியாக அடிகளார் பெருமையை அறிந்தார் இளைஞர் திருவரங்கனார். திருவரங்கனார் பாளையங்கோட்டை வயிரமுத்தர் சந்தரத்தம்மையார் மைந்தர். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைப் பின்னாளில் நிறுவியர்; தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்களுக்கு முன் தோன்றல்! அரங்கர் கொழும்பில் சிவசு என்னும் வணிகக் கூட்டு நிறுவனத்தில் பணி செய்து வந்தார். அவர்தம் இளந்தைப் பருவ நிலையை ஒரு பெரியவர் படமாகப் பிடித்துக் காட்டுகிறார்: நம் பேரன்பர் திருவரங்கம் பிள்ளை, அவர்கள் எடுத்த காரியத்தை முற்றுப்பெறச் செய்வதில் சலியா உழைப்பும் தளரா ஊக்கமும் அயரா ஆர்வமும் அஞ்சா நெஞ்சமும், தமிழ்ப்பற்றும் இறைவனிடத்தில் மாறாத அன்பும் கொண்டவர்கள். அவர்கள் நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மட்டும் தூங்கி, பாக்கி 21 மணி நேரமும் உழைத்து வந்த காலமும் உண்டு என்கிறார். அப்படி உழைத்த காலத்தில்தான் அடிகளாரை அறிந்து அவரை ஈழத்திற்கு அழைக்க ஆழத்தில் ஆழமாக மூழ்கினார். அவ்வாறே அவர் அழைப்பை ஏற்று 7-1-1914 -இல் கொழும்புத் துறையை அடைந்தார் அடிகளார். தம்மை ஈழத்திற்கு இவ்விளைஞர் தாமே அழைத்தார் என வியப்புற்றார் அடிகளார். பின்னர் அவரிடத்து ஈழத்துச் செல்வர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டை உணர்ந்து இவ்விளைஞர்பால் இங்குறையும் பொருட் செல்வர்களும் அருட்செல்வர்களும் கொண்டுள்ள ஈடுபாடு தான் என்னே! என்னே! எனக்குத் தொண்டு செய்ய என்றே இறைவன் இத்திருவரங்கரை அருளினன் போலும் எனப் பெருமித முற்றார். 11-1-1914 இல் கொழும்பு தம்பையா சத்திரத்தில் முதற்கூட்டம் நடந்தது. திருஞானசம்பந்தரைப் பற்றி அடிகள் பேசினார். 24-3-1914 வரை அடிகள் கொழும்பிலே தங்கினார்; பன்னிரு கூட்டங்களில் பொழிவு செய்தார். இச் சுற்றுலாவிலே உருபா 1883 கிடைத்தது. திங்கள் தோறும் ஒரு தொகை உதவும் வள்ளன்மையர் சிலர் வாய்த்தனர்; அடிகளார் இயற்றிய நூல்களைத் தருவித்து விற்கவும் ஏற்பாடாயிற்று அடிகளார் அச்சுக்கூடம் ஒன்று நிறுவுவதற்குத் துணிந்தார். அதற்கும் திருவரங்கர் பேருதவி புரிந்தார். அதனால் ஞானசாகரத்தில், நமது அச்சுக்கூடத்திற்காக அன்பர்களிடம் பொருள் திரட்டித் தர முன்வந்து நின்று, சென்ற ஒன்றரையாண்டுகளாக இடையறாது உழைத்து உதவி செய்து வரும்நம் அன்புருவான் ஸ்ரீமான் வ. திருவரங்கம் பிள்ளையவர்களின் பேருபகாரச் செய்கைக்குத் திருவள்ளுவ நாயனார், செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்றருளிச் செய்த வண்ணம் எவ்வகையான கைம்மாறு நான் செய்யக் கூடும்? என்றும், ஸ்ரீமான் திருவரங்கம் பிள்ளையின் வேண்டுகோட் கிணங்கிப் புண்ணியத் திருவாளரான குலசேகரன் பட்டினம் ஸ்ரீமான் ரா.ப. செந்திலாறுமுகம் பிள்ளையவர்கள் எழுநூற்றைம்பது ரூபாவும், தயாளகுணப் பிரபுவான கு.ப. பெரியநாயகம் பிள்ளையவர்கள் ஐந்நூறு ரூபாவும் நமது அச்சுக்கூடத்திற்கென்று தருமமாக உதவி, உடனே உயர்ந்த புதிய அக்சியந்திரம் வாங்கும்படி முன் முயற்சியும் காட்டிய அரும்பெருந் தகைமை எழுமை எழுபிறப்பும் மறக்கற்பாலன்று என்று எழுதினார். அச்சகம் - நூலகம் : பல்லவபுரம் சாவடித் தெருவில் மனைகட்டி வந்த அடிகளார் 19-5-1915 இல் அதில் குடி புகுந்தார். 1916 இல் அம் மாளிகையின் ஒரு பகுதியில் அச்சுக் கூடம் நிறுவினார். அதன் திறப்பு விழாவைத் திரு.வி.க. நிகழ்த்தினார். அம்பலவாணர் நூல் நிலையமும் உருக்கொண்டது. 1915, 1916 ஆகிய ஈராண்டுகளும் அடிகளார் அச்சிடல், நூலியற்றல், இதழ் வெளியிடல் ஆகியவற்றிலேயே முழுமையாக ஈடுபட்டிருந்தார். இவ்வாண்டிலேயே (1916) நாம் முதற்கண் கண்ட தனித்தமிழ் இயக்கம் தோற்றமுற்ற நிகழ்ச்சி நடந்ததாகும். இப்பொழுதுதான் ஞானசாகரத்தை அறிவுக் கடல் என்றும், சமரச சன்மார்க்க சங்கத்தைப் பொதுநிலைக் கழகம், என்றும், தம் பெயரை மறைமலையடிகள், என்றும் அடிகள் மாற்றி வைத்தார். திருஞான சம்பந்தம். அறிவுத்தொடர் பாகவும் திரிபுர சுந்தரி முந்நகரழகி யாகவும் பெயருற்றனர். இவை நீலாம்பிகை செய்ததாம்! பெயர் மாற்றத்துடன் நின்றாரா அடிகளார். முன்னே அச்சிட்ட நூல்களின் மறுமதிப்புகள் வெளிப்படுந்தோறும் பிறமொழிச் சொற்களை விலக்கித் தனித் தமிழாக்கம் செய்தார்! இதனைக் காலமெல்லாம் தொடர்ந்தும் செய்தார். அடிகளாரின் வாழ்வுக்கும் மனைகட்டுதலுக்கும் அச்சகத்திற்கும் தொடர்ந்து உதவி வந்த அரங்கனார், அடிகளாரை மீண்டும் கொழும்புக்கு அழைத்தார். 21-5-1917 இல் கொழும்புக்குப் புறப்பட்ட அடிகளார் 28-9-1917 இல் மீண்டார். இவ்வுலகில் பல்வேறு உதவிகளுடன் உருபா 1797 - உம் நன்கொடையாகத் தண்டி உதவினார் அரங்கர். ஒரு பெரிய விழாவில் நீவிர் நாயன்மார் அறுபத்து மூவரை அறிவீர்; அறுபத்து நான்காம் நாயனார் ஒருவருளர்; அவரே இத் திருவரங்கர் என அடிகள் பாராட்டினார். செந்தமிழ்க் களஞ்சியம் : திருவரங்கரின் கெழுதகை நண்பர் வி சங்கரநாராயணர் என்பார். தம் பெயரையும், அவர் பெயரையும் இணைத்துத் திரு. சங்கர் கம்பெனி என்னும் பெயரால் ஒரு புத்தக நிறுவனத்தை 1917 இல் நிறுவினார். மற்றையோர் நூல்களும் விற்கப் பெறுமாயினும் அடிகளார் நூல்களை விற்பதற்கெனவே அமைக்கப்பட்ட அமைப்பாகும் அது பின்னர் இவ்வமைப்பின் வழியாகவே வெளிப்பட்ட செந்தமிழ்க் களஞ்சியம் என்னும் திங்கள் வெளியீடு அடிகளாரின் திருவாசக விரிவுரை வெளியிடற்கென்றே எழுந்ததாகும். இவ்வாறெல்லாம் எண்ணி எண்ணி அடிகளார்க்கு உதவிய அரங்கர் ஒருநாள் பல்லவபுரத்தில் அடிகளார் இல்லத்தை எய்தினார் அவரை வரவேற்று மகிழ்வதில் எங்கள் குடும்பம் அப்பரை வரவேற்ற அப்பூதி அடிகள் குடும்பத்தையும் விஞ்சிவிட்டது என்கிறார் மறை. திருநாவுக்கரசு! ஏனெனில் அவ் வரவேற்பு உறுப்பாளர்களுள் அவரும் ஒருவர் அல்லரோ! அரங்கர் தாம் தொடங்கிய திருசங்கர் புத்தக நிறுவனத்தைச் சென்னையில் நடத்த வேண்டும் என்றும், அதனைப் பற்றிப்பேசி அடிகளார் வாழ்த்துப்பெற வேண்டும் என்றும் கருதினார். அடிகளார் மனையில் சின்னாள்கள் தங்கினார். முன்னரே அரங்கரைப் பல்காலும் கேட்டிருந்த நீலாம்பிகையார் அன்புற்றார். அரங்கர் அவரைப் பார்த்து ஆர்வப் பெருக்குற்றார். நாள்கள் செலச்செல அது காதலாகக் கனிந்தது. இருவரும் மாறிப் புக்கனர் என்னுமாறு காதலுறுதியாயிற்று! அரங்கர் சென்னை பவழக்காரத் தெருவில் திருசங்கர் குழுமத்தைத் தொடங்கினார். செந்தமிழ்க் களஞ்சியம் இதழும் தொடங்கப் பெற்றது. அடிகளாரின் திருவாசகக் கட்டுரையை அது தாங்கிற்று. உள்நாட்டுக் கையொப்பம் உருபா நான்கு வெளிநாட்டுக் கையொப்பம் உருபா ஆறு. உரைவளம் நல்கும் அடிகளார்க்கு ஓரிதழ்க்கு உருபா நூறு. இத் திட்டத்துடன் 1920 பெப்ருவரியில் முதல் இதழ் வெளிவந்தது. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்: அடிகளார்க்கு அன்பராக நெல்லையில் திரவியம் இருந்தார். அவர்க்கு அன்பர் விசுவநாதர் என்பார். அவர் சிவனெறியும் செந்தமிழும் தழைக்கவேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டவர். தாம் சிவஞ்சார் குடியில் பிறந்ததும் தோல்பதனிடும் தொழிலக மேலாண்மைப் பொறுப்பில் இருக்க நேர்ந்ததை எண்ணி வருந்துவார். நம் மக்கள் எத்தனையோ புதுப்புதுத் தொழில் முறைகளில் ஈடுபடுகின்றனர். எனினும், உயிர்க்கு ஊதியமாம் அறிவு நூல் வெளியீட்டுத் துறையில் ஈடுபடுவார் இலரே என வருந்துவார். அவ் வருத்தம் திரவியனாரை அசைக்க, அவர் அடிகளாரை அணுக, அடிகளார் அரங்கர்க்கு ஆற்றுப்படுத்தினார். அவ்வாற்றுப் படையில் பங்கு ஒன்றுக்கு உருபா பத்து விழுக்காடு 5,000 பங்குக்கு உருபா ஐம்பதாயிரத்தில் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் என்னும் பெயரால் 21-9-20 இல் திருநெல்வேலியில் பதிவு செய்யப்பெற்றது. திருவரங்கனாரும் திரவியனாரும் கூட்டமைச்சர்களாக இருந்து கழகத்தை நடத்தினர். கழகம் பதிவானபின் அரங்கனார் நெல்லையிலேயே தங்க நேர்ந்தது. அதனால் அவர் சென்னையில் நடத்தி வந்த திருசங்கர் கம்பெனி வணிகத்தைத் தொடர்ந்து நடத்தும் பொறுப்புக்கு அவர்தம் இளவல் வ.சு.வை அமர்த்தினார். அவ்விடத்திலேயே கழகக் கிளை நிலையமும் தொடங்கப் பட்டது. பின்னர்க் கழகத்தோடு திரு சங்கர் குழும்பும் இணைந்தது! ஓரிடர் : நல்லெண்ணத்தால் தொடங்கப்பட்ட நன்முயற்சிக்கும் எதிர் பாராத் தடை எதிரிடுதலும், உள்ளார்ந்த அன்பு உடையாரும் எதிரிட்டுக் கொண்டு நிற்கவும் வாழ்வில் நிகழ்தல் உண்டு. அத்தகு நிலை அடிகளார்க்கும் அரங்கர்க்கும் உண்டாயிற்று. 1920 பிப்ரவரி முதல் 1922 ஏப்பிரல் முடிய இருபத்தேழு மாதங்களில் 27 இதழ்கள் செந்தமிழ்க் களஞ்சியம் வெளிவந்திருக்க வேண்டும்! ஆனால் வெளிவர வாய்த்தவை 12 இதழ்களே! அதன் பின்னர் அறவே வெளிவரும் சூழலும் இல்லை! அரங்கரால் நிகழ்ந்ததா இது! இல்லை. அடிகளார் உரையல்லவோ இதழ்! அடிகளார் வழங்கினால் அல்லவோ களஞ்சியம் நடையிடும்! என் செய்வது; அரங்கர் ஆயிரவரிடம் உறுப்புதவி பெற்றிருந்தார்! அவர்க்கெல்லாம் என்ன சொல்வது? அடிகளார் எடுத்துக் கொண்ட உரைப்பணி அரும்பணி! புனைகதை போல்வதன்று! கருத்துக் கட்டுரையும் அன்று! உரைகாண்டலும் ஆகாது என ஓதப்பட்ட நூலுக்கு, உரைவரைய ஏற்றுக் கொண்டவர் அடிகளார்! அவர்க்கு நிறைவு தராவகையில் காலமும் இதழும் கருதி எழுதி முடிக்க இயலவில்லை! இதழ்த் தடை சிறிது சிறிதாய் உறவுத் தடையாயிற்று! அடிகள் அரங்கரைப் பொறுத்த அளவில் வணிகத்தடையும் அன்புத் தடையுமாக அமையும்! ஆனால், அரங்கர் அம்பிகையார்க்கோ அது காதல் தடையும் ஆயிற்று! கடிகையாரத்தின் ஒரு சக்கரச் சிக்கல் பிறபிற சக்கரங்களையும் சுழலாது செய்து ஓட்டத்தைத் தடுத்து நிறுத்துவது போல் ஆயிற்று! இருபாலும் நிகழக் கூடாத ஒரு பிரிவு உண்டாயிற்று. யாழ்ப்பாணத் தமிழர் மீண்டும் அடிகளார் பொழிவைக் கேட்க விரும்பினர். அழைப்பு விடுத்தனர்; அடிகளார் 21-12-1921 இல் கொழும்பு சேர்ந்தார். இச் செலவில் அடிகளார், பண்டித மயில் வாகனனார் என்னும் விபுலானந்த அடிகளார் விருந்தினராகத் தங்கினார். 16-1-1922 வரை பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றிப் பெருஞ் சிறப்புடன் மீண்டார். நீலாம்பிகையார் : நீலாம்பிகையார் உள்ளம் வீட்டில் நிலைகொள்ளவில்லை. மேலே படிக்க விரும்பினார். 1920 இல் வில்லிங்டன் பெருமாட்டி ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் முதற்படிவத்தில் சேர்ந்தார். அக் கல்லூரியொடு சார்ந்த விடுதியிலேயே உறைந்தார். நான்காம் படிவம் பயிலும்போது அவர்க்கு இளைப்பு இருமல் வருத்தியது. சின்னாள் விடுப்பும், பன்னாள் விடுப்புமாய் முற்றாகப் பள்ளியை விடுக்கும் நிலையையும் இருமல் ஆக்கிற்று. ஆங்கில மருத்துவம் சித்தமருத்துவம் எல்லாம் செய்தாயின. உடல் நோய்த் தீர்வு, உளநோய்த் தீர்வு ஆகாமல் தீராது போலும்! இந்நிலையில் பல்லவபுரத்தில் வித்தியோதயா என்றொரு கல்லூரி தொடங்கிற்று. அக் கல்லூரியின் தமிழாசிரியர் வேலை அம்பிகையைத் தேடி வந்தது. அம்பிகையார் தம் பத்தொன்பதாம் அகவையில் அப் பணி மேற்கொண்டார். ஈராண்டுகளுக்குப் பின் அக் கல்லூரி மயிலாப்பூர் சாந்தோம் பகுதிக்குச் சென்றது. அங்கும் பணி மேற்கொண்டார் நீலாம்பிகையார். முன்னே ஓரளவு விடுப்பட்டிருந்த இருமல் பெருகியது; வேலையைத் துறந்து; பணியை விடுத்து வீட்டில் அமைந்தார்! 4இல் சென்னை இராயபுரத்தில், நார்த்விக் மகளிர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழாசிரியப் பணியை ஏற்றார். ஆங்கு நான்கு ஆண்டுகள் பணி செய்தார். ஆசிரியப் பணி ஏற்ற காலம் தொட்டே தக்க அவையில் பொழிவு செய்யும் கடமையை மேற்கொண்டார் நீலாம்பிகையார். பொழிவுக்கும் பயிற்றுதற்கும் முறையாக ஆய்வு மேற்கொண்டார். அவ்வாய்வு அவரை அழியா வாழிச் செல்வியராய் ஆக்கி வைத்தது. அக் காலத்தில் அவர் செய்த ஆய்வு நுணுக்கங்கள் பின்னே தனித்தமிழ்ச் செல்வங்களாக வெளிப்பட்டு அடிகளார் வழிமரபைப் புதுப்பித்தது. அரங்கர் திருமணம் : அடிகளார் மெல்லுள்ளம் கரைந்தது அரங்கர் அம்பிகை காதல் நோன்புக்கு உருகியது. நீலா, உங்கள் மணத்தை யான் தடுக்கவில்லை; நம் வீட்டில் என் முன்னிலையில் உங்கள் திருமணம் நிகழ இயலாது. நீயும் காதலரும் வேறிடத்தில் திருமணத்தை நிகழ்த்திக் கொள்ளுங்கள்: யான் அதற்கு வரமாட்டேன்; ஆனால் தாயும் உடன் பிறந்தாரும் உங்கள் திருமணத்தில் வைத்துக்கொள்ள வேண்டுவன வெல்லாம் செய்வேன். அணிகலன்களுக்கும் திருமணச் செலவுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வேன் என்று பல்கால் வலியுறுத்தினார் இத்திட்டத்தை அறிவறிந்த அம்பிகை ஏற்பரோ? அரங்கர் ஏற்பரோ? ஆண்டுகள் ஒன்றா இரண்டா கடந்தன? ஒன்பது ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் ஓராண்டாய், ஒன்பதாண்டாக உருண்டன! கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதுபோல் அரங்கரின் உடன் பிறந்தாராகிய வ.சு. அவர்கள் அடிகளார்க்கு அணுக்கரானார்; அன்பரானார்; அரவணைப்பும் ஆனார். அடிகளார் உள்ளம், படிப்படியே மாறிவருவதை உணர்ந்து தக்க பொழுதில் தமிழ்க் காசு அவர்களுடன் பல்லவபுரம் சென்றார். தமிழ்க் காசு வலியுறுத்தினார்; திரு வி க.வும் வேண்டினார். திருமணத்திற்கு இசைவு தந்தார் அடிகளார். 2-9-1927 இல் மயிலை கபாலீசுவரர் திருக்கோயிலில் அரங்கர் அம்பிகை திருமணம் நிகழ்ந்தது. அடிகள் அம்பிகையாரைக் கொடுப்ப அரங்கர் பெண்ணின் நல்லரோடும் பெருந்தகைக் கோலம் கொண்டு திகழ்ந்தார். பேரறிஞர் கா.சு. ; பொறியியல் அறிஞர் பா. வே. மாணிக்கர்; தமிழ்த்தென்றல் திரு. வி.க. ; மணிதிருநாவுக்கரசர் : கா. நமச்சிவாயர்; ச. சச்சிதானந்தர்; பாரிப்பாக்கம் கண்ணப்பர்; இசைவல்லார் சாம்பமூர்த்தியார்; நெல்லை சுந்தர ஓதுவார்; பரலி சு. நெல்லையப்பர்; செந்தில் ஆறுமுகனார்; பெரும்புலவர் ,. மு. சுப்பிரமணியனார் இன்ன பெருமக்கள் முன்னிலையில் விழா பெருஞ்சிறப்பு உற்றது. இசையரங்கு, இசைக்காதை, வாழ்த்து, அழைப்பு இன்னவெல்லாம் சீர்சிறக்கச் செறிந்தன. அரங்கர் அம்பிகை வாழ்க்கை பாளையங்கோட்டையில் தொடங்கியது. நீலாவுக்கு அஞ்சல் : அடிகளார் உள்ளம் வன்கண்மையதா? மென் கண்மையதா? சூழலும் செயலும் காலமும் பிறவும் எவரெவரையெல்லாம் எப்படி எப்படி ஆட்டிப் படைத்து விடுகின்றன! ஒன்றாய் உருகி நின்ற உள்ளமும், வேறாய் இருவேறு துருவங்களாய்ப் பிரியும் இயல் ஏற்பட்டுவிடுகின்றதே! இதோ ஓர் அஞ்சல்; அடிகளார் தம் அருமை மகளார்க்கு வரைந்தது; அடிகளார் உள்ளத்தை உள்ளபடி காட்டுவது: ஓம் சிவம் டி.எம். அச்சுக்கூடம், பல்லாவரம். 7-12-1927 அருமை திருமிகு திருவரங்க நீலாம்பாளுக்கு அம்மையார் திருவருளால் எல்லா நலங்களும் உண்டாகுக! நீங்கள் இருவரும் அறிவும், உங்கு நலமுடன் சேர்ந்த அன்றைக்கே எழுதிய கடிதங்கள் இரண்டு பெற்றுப் பேரின்ப வெள்ளத்துள் திளைத்தேம் ஆயினேம். நீலாவும் அவள்தன் அருமை அத்தையாரும் அன்னையும் புதல்வியும் போல் அத்துணையன்புடன் அளவளாவுதலை அறிந்தெழுந்த பெருமகிழ்ச்சியால் எம்பெருமானை வாழ்த்தியும் வணங்கியும் எம் புல்லிய நன்றியைச் செலுத்தினேம். யாம் கற்ற பண்டைத் தனிச் செந்தமிழ் அகப்பொருள் இலக்கணத்திற்குக் கண்கண்ட இலக்கியமாய் நீவிர் இருவீரும் இருதலைப் புள்ளின் ஓர் உயிரினராய்த், தோகைக்கும் தோன்றற்கும் ஒன்றாய் வரும் இன்ப துன்பங்களே என்று திருச்சிற்றம்பலக் கோவையாரில் மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்தாங்கு, இன்ப துன்பங்களிலும் ஒருவரை யொருவர் இன்றியமையாக் காதல் அன்பில் தலைப்பிரியா வாழ்க்கையினில் நீவிர்நீடுவாழுமாறு அருள் புரிந்த அம்மையப்பர்தம் பேரிரக்த்திற்கு ஏழையேம் எங்ஙனம் கைம்மாறு செலுத்தவல்லேம். அவ்வருட் பெருந்திறத்தை எங்ஙனம் ஏத்திப் புகழவல்லேம். காதல் அன்பின்கண் ஈடுபட்ட நும் இல்லற இன்ப வாழ்க்கை அம்மையப்பர் தம் அருள் வாழ்க்கையில் வேறாகுவது அன்றாகலின் இவ் வாழ்க்கையிலேயே நும் வாழ்நாள் எல்லா நலங்களிலும் இனிது நீடுக என்று எம்பெருமான் பெருமாட்டியின் இணைமலர்த் திருவடிகளை இறைஞ்சி வேண்டுகின்றேம். எம்முடைய வாழ்க்கையினும் யாம் ஈன்ற எம் மக்களின் இல்வற வாழ்க்கை முற்றும் அன்பிற் பிரிதல் இல்லர் இன்பச் சுற்றத்தவரோடு இனிது நடைபெறுக என்று யாம் வேண்டிய வேண்டுகோள் உரையினை எம் இறைவன் திருச்செவி பெற்று நீலாள். கணவனுடன் அவள்தன் அருமை அத்தையாரும், அருமை மைத்துனரும், ஏவலாளரும், ஏவலாட்டியும் பிறரும் எல்லாம் அன்பிற்கெழுவிய நன்பெரு மாட்சியினை அருள் செய்தான்! அவ்வருளுக்கு எளியரேம் எழுமை எழு பிறப்பும் உழுவற்றொழும்பு ஆற்றுவதல்லது வேறென் கடவேம்! தன் மனக்கினிய காதலன்பாள் நீலாளை ஒப்படைத்து விட்டபின் யான் கவலையுறுதற்கு இடனில்லையாயினும், அவட்கு வந்த நோய் இனி வாராதென்னும் உறுதிப்பாடு பெற்ற பின்னரே என்னுள்ளம் அமைதி பெறும். நெடுந்தொலைவில் இருப்பதனாலும் அடுத்தடுத்துக் காணுதற்கு இல்லாமையாலும் அருமை மகளை நினைத்து நெஞ்சம் நிலைகலங்குகின்றது. எமது கலக்கத்தை நன்கறியும் இறைவனே, அவட்கு இனி அந்நோய் வராமல் அருள் செய்து எமது பெருங்கவலையைத் தீர்க்கற்பாலான். நீலா, தலைமுழுகும் நாள்களில், உடைத்து விதை அகற்றிய நான்கு கடுக்காய், ஏழு கசப்பில்லாத வாதுமைப் பருப்புகளின் எடையுள்ள மிளகு, இம்மிளகின் எடையில் அரைவாசி கொண்ட ஓமம் என்னும் இவற்றை நெகிழ அரைத்து வடிகஞ்சியிற் குழப்பி, இறுகக் காய்ச்சி, சூட்டோடு அதனைத் தலையிலும் உடம்பிலும் தேய்த்துக் கொண்டு அளவான வெந்நீரில் முடிக்காய் சவற்காரத்தால் நெய்ச்சிக்கும் அழுக்கும் போக முழுகுதல் வேண்டும். தேனும் இந்துப்புப் பொடி சிறிதும் கலந்த இஞ்சிச் சாற்றை அகமும் புறமும் தூயவாய்ப் பளபளப்பாக்கிய குடகு நாரத்தை நிறக் கண்ணாடிப் புட்டிலிலும் ஆழ்ந்த நீலக் கண்ணாடிப் புட்டிலிலும் அடைப்பித்து, வெயிலில் நாள் முழுதும் வைத்தபடியாகவே அதனை உட்கொண்டு வரல் வேண்டும். நோய் மிகுந்தில்லா நாள்களில் மூன்று மணி நேரத்திற்கு ஒருகால் குடகு நாரத்தை நிறப்புட்டிலின் சாற்றையும் இடையே ஒன்றல்லது இரண்டு முறை ஆழ்ந்த நீலப்புடிலின் சாற்றையும் மாற்றி மாற்றிக் காற்பலம் பருகிவரல் வேண்டும். தலை முழுகிய மறு நாளில் ஐந்து விதை நீக்கிய கடுக்காய்ச்சாறு அருந்திமலக்குடரைத் துப்புரவு செய்க. உடம்பு இடுங்கச்சுகள் முழங்கைக்கு மேல் நீளமாய் இறுகப்பிடித்திருத்தல் வேண்டும். குளிர்ச்சி மிகுந்த பண்டங்களை உட்கொள்ளல் வேண்டாம். நலம். அன்புமிக்க, மறைமலையடிகள். அடிகள், அடிகளாய், தாயாய் தந்தையாய் குருவாய் மருத்துவராய் பல்லுருக்காட்டி நிற்கும் பாங்கு இக் கடிதம் ஒன்றால் வெளிப்பட விளங்குமே! அடிகளார் எத்தனை எத்தனை தலைப்புகளில் எங்கெங்கெல்லாம் பொழிந்தார்! எவ்வெவ்வூர்களுக்கு எல்லாம் சென்றார்! எவ்வெவரோடும் எல்லாம் தொடர்பாளராய்த் துலங்கினார்! எவர்க்கெல்லாம் வழிகாட்டியாய் இலங்கினார்! எத்தகைய பல்கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்தார்! எத்தனை துறைகளைப் புதுக்கினார்! இவற்றைப் பட்டியலிட்டால் அதுவே ஒரு தனிப்பெரு நூலாதல் ஒருதலை. அவர் நடாத்திய பொதுநிலைக்கழக இருபதாம் ஆண்டு விழா ஒன்றைமட்டும் சுட்டி அமைவாம். அடிகள் தம் வருவாய் கொண்டு அரிதில் தேடித் தொகுத்த நூல்கள் நாலாயிரம் ஆகும் அவை, தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்னும் மும்மொழி சார்ந்த நூல்களாம். அந்நூல்களை நூலகமாக அமைத்து மணிமொழி நூல் நிலையம் எனப் பெயரிட விரும்பினார். பொதுநிலைக் கழக விழா : பொதுநிலைக் கழக மாளிகையின்மேல் இறைவழிபாட்டுக் கென அம்பலவாணர் திருக்கோயில் ஒன்றும் அமைத்தார். முறையே இவற்றின் திறப்பு விழாவும், குடமுழுக்கு விழாவும் பொதுநிலைக் கழக இருபதாம் ஆண்டு விழாவும் ஒருங்கே நடத்தத் திட்டப்படுத்தினார். அந்நாள் 1931 ஆம் ஆண்டு பெப்ரவரித் திங்கள் இரண்டாம் பக்கல் தைப்பூசத் திருநாள் ஆகும். அடிகள் நடாத்திய குடமுழுக்கு அவர்களாலேயே தமிழ்மறை ஓதிச் செய்யப்பட்டது ஆகும். விழாவுக்கு வந்திருந்தவர் அனைவரும் தாமே அம்பலவாணர் திருவடியில் மலரிட்டு வணங்கினர்; தாமே திருநீறு எடுத்து அணிந்து கொண்டனர். அம்பலவாணர் திருமுன் எவ்வகையான ஏற்றத்தாழ்வுமின்றி வழிபாடாற்ற அடிகள் செய்த ஏற்பாடு வள்ளலார் வழிபட்டதாகும்! வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்தபின் மணிமொழி நூல்நிலையம் திறக்கப்பெற்றது. அதன்பின் பொதுநிலைக்கழக விழாத் தொடங்கியது. தேவார திருவாசகங்கள் இன்னிசைக் கருவிகளுடன் ஓதப்பட்டன. அன்பர்கள் மகிழ்ச்சியின் இடையே அடிகள் அவைத் தலைமை பூண்டார்கள். அப்போது திருவாவடுதுறைத் திருமடத்துத் தலைவர் அடிகட்கு அனுப்பிய பொற்பட்டாடையும் பொற்பட்டுப் போர்வையும் மறைத்திரு. கருணானந்த அடிகள் சிறப்பித்துக் கொடுக்க, அடிகள் அவற்றை ஏற்றருளினார். சென்னைப் பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் மணி. திருநாவுக்கரசர் பொதுநிலைக்கழக அமைப்பும் நோக்கமும் பற்றி விளக்கியுரைத்தார். இளவழகனார் விரிவுரையாளர்களுக்கு வரவேற்பும், பொருளுதவி செய்தார்க்கு நன்றியும் கூறினார்; அடிகள் அப் பேரவையில் அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மையும் ஞானயோகமும் என்பது பற்றி உரையாற்றினார். பின்னர் இரண்டு நாள்கள் அறிஞர்கள் பலர் உரையாற்றினர். ஆக முப்பெரு விழாக்களும் மூன்று நாள் விழாக்களாகச் சிறந்தன. இவ்விழாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிகளாரின் சீர்திருத்த நாட்டத்தைச் செவ்விதின் விளக்குவனவாம். அவை : 1) மடத்துத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயச் சடங்குகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும். 2) கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியன பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடம் செய்தல் வேண்டும்; 3) பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதார்) எல்லோரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழிபாடாற்றப் பொதுமக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும். 4) கோயில்களில் பொது மாதர் திருப்பணி செய்தல் கூடாது. 5) வேண்டப்படாதனவும் பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தம் அற்றனவும் ஆகிய திருவிழாக்களையும் சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுமான சடங்குத் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும். 6) சாரதா சட்டத்தை உடனே செயன்முறைக்குக் கொணர்தல் வேண்டும். 7) கைம்பெண்ணைத் தாலியறுத்தல், மொட்டை யடித்தல், வெண்புடவையுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத் தக்க இச் செயல்களை நீக்குதல் வேண்டும். கைம் பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும் நூல்களில் ஒப்புக்கொண்டிருப்பதாலும் அதனைச் செயன் முறைக்குக் கொணர்தல் வேண்டும். 8) சாதிக் கலப்பு மணம் வரவேற்கத் தக்கது. 9) தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும். 10) தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும். இவை பொதுநிலைக் கழக விழாவில் நிறைவேற்றப் பட்டன என்றால் இவற்றைக் கொணர்ந்தவர் எவர்? அடிகளாரே அல்லரோ! இக் கொள்கைகள்தாமே பொது நிலைக் கழகம் அஃதென்பதை வெளிப்படுத்த வல்லன வல்லவோ! சீர்திருத்தம் சீர்த்திருத்தம் எனக் கொடி கட்டிப் பறந்தார் சீர்திருத்தக் கொள்கைகளையெல்லாம் அடக்கமாக-அமைவாக-காட்டிய அடிகளார் பெருநிலை சிவநெறியர்க் கெல்லாம் உண்டாகியிருந்தால், அச் சமயம் எத்தகு வழிகாட்டியாக அமைந்திருக்கும், அஃதில்லாமை. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம் என்னும் மறைமொழியைச் சொல்லுமாறே உள்ளது இவ்வாறு அமைந்ததே அடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டதும், இந்தி எதிர்ப்பில் தலைப்பட்டு நின்றதுமாம்! ஒரு சொற்போர் : தனித்தமிழ் இயக்கம் தோன்றிய சூழலை அறிந்துள்ளோம். அதனைப் பழுத்த புலமையாளர்களும் போற்றத் துணிய வில்லை. தனித்து அமிழ் என்று அத்தொடரைப் பிரித்து எள்ளியவர்களும் உண்டு. ஒரு புதுமை தோன்றும்போது, அதனை ஆய்ந்து அறிவாளர்கள் ஏற்றுப் போற்றத் தொடங்கினால், அது நாடு தழுவிய விளக்கமாய்த் திகழும். அவ் வகையில் அடிகளாரின் அருமை மகளார் நீலாம்பிகையார் தனிப்பெரும் பரப்பாளியாகத் திகழ்ந்தார். அவர்தம் அருமைத் துணைவர் திருவரங்கனார் அத் தூய தமிழ்க்காதல் தொண்டாலேயே தம்மை இழந்து பின்னே நீலாம்பிகையார் காதலில் கட்டுண்டு கடிமணம் கொண்டவர் அல்லரோ! அதனால், அவர் அடிகளார் இயக்கத்திற்கு ஊன்றுகோலாய் அமைந்தார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு களாலும், செந்தமிழ்ச் செல்வி என்னும் இதழ் வழியாலும் பெருந்தொண்டு செய்தார். அவர் ஊன்று கோலாய் இருந்தார் என்னின், அவ்வியக்கத் தூணாக இருந்தவர் அவர்தம் தம்பியார் தாமரைச் செல்வர் வ. சுப்பையா அவர்களே ஆவர். எத்தனை எத்தனை அறிக்கைகள்! துண்டு வெளியீடுகள்! ஆசிரிய உரைகள்! இவற்றின்மேல் பாவாணர் எழுத்து அடிகளார் இயக்கத்திற்கு மாளிகை எழுப்பி மணிக்கூண்டும் அமைத்தது போன்ற மாண்பினதாயிற்று. அடிகளார் காலத்தில் தனித்தமிழ்க்கு இருந்த நிலையை ஓர் எடுத்துக்காட்டால் காணலாம். 24-7-1927 இல் கரந்தை தமிழ்ச் சங்க ஆண்டுவிழா. அவ் விழாவில் அடிகளார் தலைமையுரையாற்றினார். அடிகள் தம் உரையின் இடையே ஆ என்பது சிலருக்கு விளங்காது பசு என்றால் விளங்கும் ஆ என்பது தனித்தமிழ்ச் சொல். பசு என்பது வடசொல். தண்ணீர் என்று உரையாது நம் மக்களிற் பலர் ஜலம் என்கின்றனர் ஜலம் என்பது வடமொழி ஐயகோ! மலையாளிகள்கூட வெள்ளம் எனும் தனித்தமிழை வழங்கு கின்றனரே என்றார். அவ் விழாவில் அடிகளுக்கு முன்னர்ப் பெரும் புலவர்கள் நாவலர் ந. மு. வேங்கடசாமியார், பண்டிதமணி கதிரேசனார், கரந்தைக் கவியரசு, புரவலர் உமாமகேசுவரர் ஆகியோர் இருந்தனர். அவர்களுள் பண்டிதமணியார், சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் என்று அப்பர்கூட கூறியிருக்கிறாரே என்றார். உடனே அடிகளார், சலசல; என்ற ஓசையுடன் ஓடுதலின் சலம் என்பது காரணப்பெயர். அது தமிழ்ச் செய்யுள் ஒன்றிலும் கூறப்பட்டுள்ளதே! அது வடமொழிதான் என்று உறுதியானால் அதைவிட்டு நீர் என்னும் தனித்தமிழ்ச் சொல்லை ஆளலாமே. ஆ! ஆ! என் செய்வது! தனித்தமிழை இழிவென்று நினைப்பது முறையாகுமோ? தமிழிலே கடவுளை வணங்கக்கூடாது என்று கூறும் பார்ப்பனரும் உளர். பெரியோர் தமிழைப் பகுத்துப் பாழ் செய்தால் அது குற்றமில்லையோ? இப்படிப் புலவர் பலர் தனித்தமிழ் உணர்ச்சி தகுதியற்றதென்று மொழிந்து தமிழைப் பாழாக்கினால் ஐயகோ! என் செய்வது பழம் புலவர்களால் தமிழ் பாழாகவா போய்விட்டது? இடைக் காலத்துப் புலவர் பழைய தனித்தமிழ் உணர்வை மறந்து வடசொற்களை மிகுதியும் புகுத்தித் தமிழைக் கெடுத்துத்தான்விட்டனர். அவர்களை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? வடசொற்களைக் கலத்தல் குற்றமில்லையாயின் ஆங்கிலத்தையும் தாராளமாக வழங்கித் தனித் தமிழ் உணர்ச்சியைக் கெடுத்தால் நற்றமிழ் எவ்வாறு உயிர் வாழும்? அந்தோ! குமரகுருபரர் சலாம் என்னும் சொல்லை வழங்கினார் என்று நாமும் பல கொடுந் துலுக்கச் சொற்களை வழங்கித் தமிழைப் பாழ்படுத்தலாமா? (கைதட்டல்) யானை வழுக்கி விழுந்தால் அஃது அதற்குப் பெருமையாக முடியலாம். நாங்களோ சிறியோம். எங்களுக்கு இடர் மிகுதியும் உண்டு. அதன் பின்னர்ப் பண்டிதமணியார் தொல்காப்பியத்தில் வடசொற் கலப்புப் பற்றிய செய்தி உள்ளது என்றும், திருவள்ளுவர் வேதவழக்கொடுபட்டு நூல் செய்தார் என்றும், அவர் கருத்தறிந்து பரிமேலழகர் உரை வரைந்தார் என்றும் விரியக் கூறினார். உணர்வோங்கிய அடிகளார், இப்பொழுது தமிழுக்கு பரிந்து பேசுவோர் பலர் இலர். தமிழராய்ப் பிறந்த பாவிகளே தமிழைப் பாழ்படுத்திவிட்டார்கள்; பாழ்படுத்துகிறார்கள் என்றார். அப்பொழுது பண்டிதமணியார், பழம்புலவர்களால் தமிழ் பாழாகவா போய்விட்டது? என்று மீண்டும் வினாவினார். அடிகளார், அவர்களிலும் சிலர் பாழ் செய்தற்கு இடங்காட்டி விட்டார்கள் என்றார். கதிரேசனார், தொல்காப்பியர் என்றார். அடிகளார் அம் முறையில் அவரும் ஓர் இழையளவு வழுவியே விட்டார். அஃது ஒண்டவந்த பிடாரிக்கு ஊர்ப்பிடாரி இடங்கொடுத்த கதையாகவே முடிந்தது, என்று மறுமொழியுரைத்து அவையோரை நோக்கி அன்பர்களே நாம் தமிழை உயிரோடு வைக்கப் பாடுபடவேண்டும். ஐயகோ! தமிழைக் கொல்ல மடிகட்டி நிற்கலாமா? நூற்றுக்கு எண்பது வடசொல்லும் இருபது தமிழ்ச் சொல்லுமாக எழுதினால் பேசினால், தமிழ் எப்படிப் பிழைத்தல் கூடும்? வடமொழி பயிலவேண்டாம் என்று யான் கூறவில்லை. மகிழ்வுடன் பயிலுங்கள்; யானும் பயில்கின்றேன். ஆனால் அன்பர்களே தமிழ்த் தாயைக்கொல்லாதீர்கள். தமிழ் நன்மங்கையின் அழகிய நன்மேனியில் அம்மைத் தழும்புபோல் வடசொற்களைப் புகுத்தாதீர்கள். அடியேன் உங்களைப் பெரிதும் கெஞ்சுகிறேன். ஆண்டவர்களே தமிழைக் கெடுக்காதீர்கள். தனித்தமிழுக்குப் பாடுபடுங்கள் என்றார். அவை பெரிதும் கைதட்டி வரவேற்றது. பண்டைப் புலவராயினும், இக்காலத்தவராயினும் மற்று எவராயினும் தமிழுக்குக் கேடு விளைத்தோரை, விளைப்போரை ஒரு பொருளாகக் கருதமாட்டேன். பழம் பெரும் புலவர் ஒருவர் ஒரு வடசொல் வழங்கியிருந்தால் பிற்காலத்தில் நூறு சொற்களை வழங்குகிறார். நாம் நூறாயிரம் சொற்களை வழங்குகின்றோம். பெரும் கடனாளியாகின்றோம். சங்கத் தமிழ் வழக்கை இடைக்காலத்தவர் பின்பற்றி யிருந்தால் அவர்களுக்குப் புகழ் உண்டு. இடையில் வந்து தமிழைக் கெடுத்தவர்களை நான் ஒருநாளும் பொருட்படுத்தேன். தமிழிற் பிறமொழிக் கலப்பை வெறுத்துத் தள்ளுங்கள். தமிழின் சுவையை மாற்றாதீர்கள் வல்லோசை களைப் பெருக்காதீர்கள். தமிழர் ஆரியத்திற்கு அடிமைபட்டு அச் சொற்களைத் தமிழிற் கலத்தல் தீங்கே. இவ்வடி மைத்தனத்தில் நின்றும் முதலில் விடுபடுங்கள். இது முதலிற் பெறவேண்டிய விடுதலை (சுயராச்சியம்) (நீண்ட நேரம் கைதட்டி அவை வரவேற்றது). மேலும் அடிகள் உணர்ச்சி மீக்கூரப் பேசினார். கதிரேசனார், யான் தனித் தமிழ் உணர்ச்சியைப் பற்றிக் குறைகூறவில்லை என்றார். எங்களைப் போன்ற பெருந்தமிழ்ப் புலவர்களின் உதவியில்லாமல் தனித்தமிழ் வளரமுடியுமா? தாங்கள் பெரும் புலவர். தாங்கள் அப்படிப் பேசியதனால்தான் எனக்குப் பெருவருத்தம் உண்டானது. மற்றவர்கள் தனித்தமிழுக்கு மாறாகச் சொன்னால் எனக்கு இவ்வளவு கவலை ஏற்பட்டிராது என்றார் அடிகள். பின்னர்ப் பண்டிதமணி, அடிகள் நேற்று பேசியதிலிருந்து தனித்தமிழைப் பற்றி எனக்கு இருந்த அரைகுறையான ஐயங்கள் அடியோடு அகன்று விட்டன. நம் பெரியோர்கள் வடசொற்களைத் தமிழிற் கலந்துவிட்டார்களே. நாம் அவற்றை நீக்கின் அவர்கள் செயல்குற்றமென்றுகூறப்படுமோ என்று தான் யான் அஞ்சியிருந்தேன், தனித்தமிழை எதிர்த்தேன். ஆனால் அதற்கு அடிகள் சரியான விடையளித்து விட்டீர்கள் என்று பாராட்டடித் தம் கருத்தொப்புதலை வெளிப்படுத்தினார். - மறைமலையடிகள் வரலாறு 522- 535. (செந்தமிழ்ச் செல்வி 1937 ஆக, செப்,) பெரிதும் பிறசொற் கலவாமல் எழுதியவர் எழுதத் தேர்ந்தவர் ப்ண்டிதமணியார்! எனினும் ஒரு புதிய கொள்கையை அது எவ்வளவு நல்லதாக இருப்பினும் ஏற்பதற்குள்ள இடர்ப்பாடு எத்தகையது என்பதை விளக்கும் செய்தி இது. ஆனால் விடாப்பிடியாகப். பல்கலைக் கழகம் என்பது வழக்குக்கு வந்தும் சர்வகலா சாலையை விடேன் என்றும், நூல் என்பது பழவழக்கும் பெருவழக்குமாய் இருந்தும் சாதிரம் என்பதை விடேன் என்றும் முரட்டுப் பிடியாக இருந்த அறிஞர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பண்டிதமணியின் பெருமையும் சால்பும் இனிது விளங்கும்! அதே வேளையில் அடிகளார் கொள்கையூற்றமும் செவ்விதில் புலனாம். இந்தி எதிர்ப்பு : இராசாசி அவர்கள் 14-7-1937 இல் சென்னை அரசின் முதல்வரானார். அவர்ஆட்சிக்கு வந்த சில நாள்களில் 5,6,7 ஆம் வகுப்புகளில் இந்தியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும் என்னும் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதனை எதிர்த்துத் தமிழ் அறிஞர்களும் தமிழ்சார் கட்சித் தலைவர்களும் போர்க்களத்தில் இறங்கினர். அந்தோ! வடமொழி வந்து தமிழைப்பெரிதும் வீழச் செய்துவிட்டதே! அதைக் குற்றுயிராக்கி விட்டதே ஆங்கிலம்! இனி இந்தியும் வந்தால் தமிழ் ஒழிதல் திண்ணமே என ஏங்கிய அடிகளார் இந்தி எதிர்ப்புக் கண்டு மகிழ்வுற்றார். இந்நிலையில் 1-9-1937 இல் திருவல்லிக்கேணிக் கடற்கரைக் கூட்டத்திலும் 3-6-1938 இல் சைதையில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டிலும் அடிகள் தலைமை தாங்கி இந்தியை எதிர்த்து முரசு கொட்டினார். அவ்வாறே 4-10-1937 இல் கோகலே மண்டபத்தில் கூடிய இந்தி எதிர்ப்பு மாநாட்டுத் தலைமையும் பூண்டார் அடிகள். தமிழைக் காப்பதற்காகவும் இந்தியை எதிர்ப்பதற்காகவும் நாவலர் பாரதியார் தமிழர் கழகம் என ஓர் அமைப்பைக் கண்டார். அடிகளார், இந்தி பொது மொழியா? என்னும் பெயரிய கருவிநூலை எதிர்ப்பாளர்க்குப் படைக்கலம் போலப் படைத்துத் தந்தார். இப் போராட்டத்தில் அடிகளார் ஆற்றிய தொண்டு அளவில் நில்லாமல் அடிகளார் குடும்பமே தலைப்பட்டு இருந்தது என்பது தகும். அடிகளாரின் திருமைந்தர் மறை திருநாவுக்கரசு மறியல் கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக இரண்டு குற்றங்களுக்கு, ஆறு ஆறு திங்கள் தண்டனை வழங்கப்பட்டு, ஒரே காலத்தில் அமையுமாறு சிறையுற்றார். அவர்தம் துணைவியார் ஞானம்மாள் தம் ஐந்து திங்கள் கைக் குழந்தையுடன் சிறை வாழ்வுற்றார். மாணிக்கவாசகனாரின் துணைவியாரும் தம் மூன்றாண்டுச் சிறுவனுடன் சிறையுற்றார்: நீலாம்பிகையார் இந்தி எதிர்ப்பு மகளிர் மாநாட்டுத் தலைமையைப் பங்கேற்று வீறுகாட்டினார். 1937 இல் தோன்றிய கட்டாய இந்தி, 1940 இல் மறைந்தது. நாடு விடுதலை பெற்றபின் 1948 இல் மீண்டும் அரசின் சட்டத்தால் உருவாகும் நிலை உண்டாயிற்று. அந்நிலையில் 17-7-1948 சென்னை தூயமேரி மன்றத்தில் கூடிய தமிழ் மாகாண இந்தி எதிர்ப்பு மாநாட்டில், கட்டாய இந்தியைக் கொணராதீர் என அடிகள் அறை கூவல் விடுத்தார். அம்மாநாட்டில் திரு.வி.க. பெரியார், ம. பொ.சி; அறிஞர் அண்ணா நாரண துரைக்கண்ணனார், பாவேந்தர், அருள் தங்கையா, அறிஞர் இரா. கிருட்டிணசாமி, அப்துல் மசீது ஆகியோரும் பங்கு கொண்டனர். இன்ன இன்ன வாய்ப்புகள் எல்லாம் செய்து, இவ்வளவு அடியுறை வைத்தால்தான் பொழிவுக்கு வருவோம் என்று வரம்பாய் இருந்த அடிகள், இந்தி எதிர்ப்புக் கூட்டத்திற்கு எதனையும் எதிர்நோக்குதல் இல்லாமல் உணர்வுப்பிழம்பாகச் செயல்பட்டமை. மொழிக்காப்பில் அவர்களுக்கு இருந்த உண்மை ஊற்றத்தைக் காட்டுவதேயாம். தமிழர் மத மாநாடு : தமிழர் சடங்குகள் தமிழிலேயே நடத்தப்படுதல் வேண்டும், தமிழர் கோயில் வழிபாடு தமிழிலேயே நடத்தப் படுதல் வேண்டும் என்பனவெல்லாம் அடிகளாரின் உயிர்ப்பான கொள்கைகள் ஆகும். அவ்வகைத் தொண்டில் அடிகள் ஈடுபட்டதன் சான்றாக 16-7-1939 இல் கோகலே மண்டபத்தில் நிகழ்ந்த தமிழர் திருமண மாநாட்டையும், 10-10-1940 இல் பச்சையப்பன் மண்டபத்தில் நிகழ்ந்த அனைத்து இந்தியத் தமிழர் மத மாநாட்டையும் சுட்டலாம். இரண்டு மாநாடு களிலும் அடிகள் தலைமையேற்க, தமிழ்க் காசு வரவேற்புரைத்தார். இரு மாநாடுகளிலும் நாவலர் பாரதியாரும் கலந்து கொண்டார். மேலும் உமாமகேசுவரர், முன்னாள் அமைச்சர் முத்தையா, செட்டிநாட்டு அரசர் முத்தையா ஆகியோரும் கலந்து கொண்டனர். அடிகளார் எழுதிய நூல்களில் ஒன்று தமிழர் மதம் என்பதாகும். வள்ளுவராண்டு : அடிகளார் ஆக்கச் செயல்களுள் ஒன்று திருவள்ளுவர் ஆண்டு கண்டமை ஆகும். தமிழர்க்கெனத் தனி ஆண்டு மானம் வேண்டும் என்றும், அவ்வாண்டுமானமும் உலகம் போற்றும் ஒப்பற்ற மறைநூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள்ளுவர் பெயரால் அமைதல் வேண்டும் என்றும் குறிக்கொண்டு ஆய்ந்தார். சிலம்பு மேகலை முதலாம் நூல்களுக்கு முற்பட்டதும், சங்கநூல் ஆட்சியைக் கொண்டதும், தொல்காப்பிய நெறியில் அமைவதுமாம். அந்நூலின் நடையும் பொருளமைதியும் கொண்டு அதன் காலத்தைக் கி.மு. 31 எனத் தீர்மானித்தார் அடிகள். திருவள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் பனை (அனுட) நாள் எனவும் திட்டப்படுத்தினார். அடிகளின் இத்திட்டத்தை ஏற்றுத் திருவள்ளுவர் திருநாட் கழகம் என ஓர் அமைப்பு உருவாகித் திருநாள் விழாவும் நடாத்தியது. அக் கழகத்தின் மலர் ஒன்று மிக அரியது ஆகும். mofsh® jªj ï¤ â£lnk ïªehËš â.K., தி.பி. எனப்பொது மக்கள் வழக்கிலும், அரசிலும் வழங்கத் தலைப்பட்டுள்ளதாகும். இதனை ஏற்றுப்போற்றிய நாடுகளில் ஒன்று ஈழமாகும். இதனை ஆங்கு நிலைப்படுத்தியவர் அறிஞர் கா. பொ. இரத்தினம் ஆவர். பின்னே இத் திட்டத்தை விரித்துத் தமிழ் வளமாக்கியவர் பாவாணர் என்பது சுட்டத் தக்கது. தென்றல் உலா வாம் இப் பகுதியில், அடிகளார் துறவு கொண்டு தொண்டு பூண்ட காலச் செய்திகளைக் கண்டோம். இனி, அவர் நூல்களின் வழியாகத் தேனருவியாகத் திகழ்தலைக் காணலாம். 7. தேனருவி உரையும் பாட்டும் : அடிகளார் தமிழ் தனித்தமிழ்! ஆம்! தூய அருவித் தமிழ்! தேனருவித்தமிழ்! அவர் கை தேன் தமிழ் எழுத்தைத் தீட்டியது! அவர்வாய் தேன் தமிழ்ச் சொல்லைப் பொழிந்தது! சொல்லியதை எழுதுதல், எழுதியதைச் சொல்லுதல் என்னும் இரண்டும் அடிகளார் நன்முறையும் பொழிவு முறையுமாம். அத் தேனருவி நடைக்கும் கருத்துக்கும் சிதறல் போலச் சிலச்சில சான்றுகள் : பால் கறந்த மாத்திரையே உண்பார்க்குச் சுவை பயக்குமாயினும், அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும், முற்றின கருப்பங்கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃதினிமை விளைக்குமாயினும், மேலும் அதனைப் பாகுதிரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும் உரையும் நலம் பயப்பதொன்றே ஆயினும் அதனைக் காட்டினும் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம் - பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை-7. மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும் போது. உலக இயற்கை என்னும் மலைக்குகைகளிலே, அரித்து எடுத்து வந்த அருங்கருத்துகளான பொற்றுகள், இடை இடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்தில் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப் பொற்சிதர்களையெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத், தன் மதிநுட்ப நெருப்பில் இட்டு, உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே, பாட்டு என்று அறிதல் வேண்டும். - முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை - 5. மொழித் தூய்மை : முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்ற மட்டும் தூய்தாய் வழங்குதலில் கண்ணும் கருத்தும் வைக்கவேண்டும் என்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்தி வருகுவாராயிற் பண்டைக் காலந் தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த் தாம் ஒருவர் கீழ் அடங்கிவாறாது பிறமொழி பேசவாரையும் தம்கீழ் அடக்கி வைத்துத் தமது செந்தமிழ் மொழியையே நீண்டகாலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் கால்வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணும் கருத்தும் வைக்கவேண்டும். -அறிவுரைக் கொத்து 127-8. யாம் நாயகர் அவர்களின் நூல்களைப் பயின்று அவர்களை அடுத்த இளமைக் காலத்தில் நாயகர் அவர்களின் உரைநடையைப் போல், வடசொற் கலப்பு மிகுதியும் உடைய ஓர் உரைநடை எழுத எமக்கும் ஒரு சிறு விருப்பம் உண்டாயிற்று. என்றாலும், நக்கீரர் சேனாவரையர் சிவஞான முனிவர் முதலிய உரையாசிரியன்மார் வரைந்த தனித்தமிழ்த் தீஞ்சுவை யுரைநடையிற் பெரிதும் பழகிய எமதுள்ளத்தை வடசொற் கலந்த நடைக்குத் திருப்புவது எளிதில் இயலவில்லை. - சோமசுந்தர நாயகர் வரலாறு 22. சொல்லாய்வு : பருத்துயர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டை வல்லை என்றும், சிறுமரங்கள் மிடைந்த காட்டை இறும்பு குறுங்காடு? என்றும், சிறு தூறுகள் பம்பிய காட்டை அரில் அறல் பதுக்கை என்றும், மிக முதிர்ந்து முற்றிப் போன மரங்களையுடைய காட்டை முதை என்றும், மரங்கள் கரிந்து போன காட்டைப் பொச்சை சுரம் பொதி என்றும், அரசனது காவலிலுள்ள காட்டைக் கணையம் மிளை, அரண் என்றும் பண்டு தொட்டுத் தமிழ் மக்கள் வழங்கி வந்திருக்கின்றனர். - சிறுவர்க்கான செந்தமிழ். 44. பண்டை மக்கள் விலங்குகளுக்கு அஞ்சிக் கீழே இருக்க இடம் பெறாதபோது நீண்டுயர்ந்த மரங்களின் மேற்பருத்த கிளைகளிற் குடிசைகள் கட்டி அவற்றின்கண் இருந்து உயிர் வாழ்ந்தனர். அவர்கள் அக் குடிசைகளில் இருந்து கீழ் இறங்கவும் திரும்பவும் மேலேறவும் நூலேணி அமைத்துக் கொள்ளத் தெரிந்திருந்தனர். இத்தகைய வாழ்க்கையில் இருந்த ஒருவனைக் குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் சேணோன் என நுவல்கின்றார். - இளைஞர்க்கான இன்றமிழ் -174. காட்சிப் பொருத்தம் : முருகப்பிரானுக்குக் கோழிக் கொடியொன்றுள தெனக் கூறுதல் என்னை எனின், விடியற் காலையிற் றோன்றும் ஞாயிற்றின்கண் முளைத்து விளங்கும் இறைவனே முருகன் எனப்பட்டான். அவ் விடியற் காலையில் ஞாயிறு கீழ்பால் எழுகின்ற நேரத்தில் கோழி கூவுதலை எவரும் அறிவர். இங்ஙனம் இறைவனது வருகையைப் புலரிக் காலையில் முன்னறிவிக்கும் இயைபு பற்றி அக்கோழியின் உருவானது அவன்றன் கொடிக்கண் உளதாக வைத்து இயைபுபட்டது. - கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா - 112. நம்மவர் பேச்சு : நாலுபேர் ஒன்று சேர்வார்களானால், சாதிப்பேச்சும்; பெண் கொடுக்கல் வாங்கலைப் பற்றிய பேச்சும்; அவன் சாதி கெட்டவன், அவனுக்கும் நமக்கும் உறவு கிடையாது, எங்கள் சாதி உயர்ந்தது, எங்கள் சாதியில் ஒடித்தாற் பால் வடியும், எங்களிற் பத்து வீட்டுக்காரரோடு தாம் நாங்கள் கலப்பது வழக்கம், மற்றவர் கையில் தண்ணீர்கூட வாங்கமாட்டோம் என்னும் பேச்சும்; அதைவிட்டால் பொருள்தேடும் வகைகளைப்பற்றியே பேச்சும்; அதுவும் விட்டால் தமக்குப் பொருள் சேருங்காலத்தைப்பற்றியும், நோய் தீரும் நேரத்தைப் பற்றியும், மணம் ஆகும் நாளைப்பற்றியும், எந்த இடத்திற் போனாற் குறி கேட்கலாம்? எந்தத் தெய்வத்துக்கு ஆடு கோழி அறுத்தால் இவைகூடும்? மாரியைக் கும்பிடலாமா? மதுரை வீரனைக் கும்பிடலாமா? காளியைக் கும்பிடலாமா? கறுப்பண்ணனைக் கும்பிடலாமா? எசக்கியைக் கும்பிடலாமா? சுடலைமாடனைக் கும்பிடலாமா? என்னும் சிறு தெய்வச் சிற்றுயிர்க் கொலைக் கொடும் பேச்சும்: தனக்குப் பகையானவனைப் பல வகையால் இழித்துத் தன்னைப் பல வகையால் உயர்த்திச் செருக்கிப் பேசும் பேச்சுமே எங்கும் எல்லாரும் பேசக் காண்கிறோம்! புகை வண்டிகளிலும் - இந்தப் பேச்சே! பொதுக் கூட்டங்களிலும் இந்தப் பேச்சே, கோயில்களிலும் இந்தப் பேச்சே, குளக்கரையிலும் இந்தப் பேச்சே. அறிவுரைக் கொத்து 119-120 ஒருமுகப்பாடு : ஒரு மாணாக்கன் கணக்கு நூல் பயிலும்போது அதிற் சொல்லப்பட்ட கணக்கு வகைகளிற் கருத்தை அழுந்தவையாமல், தான் விளையாடப்போம் இடத்தையும் தன் நேசரையும் தின்பண்டங்களையும் எண்ணிக் கொண்டே அதனைப் பார்ப்பானானால் அக் கணக்கின் வகைகள் அவற்குச் சிறிதும் புலப்படாமற்போகும். போக மனச் சோர்வடைந்து எத்தனைமுறை பயின்றாலும் இக் கணக்குகள் என் மண்டையில் ஏறவில்லையே என்று புத்தகத்தை வீசி எறிந்து விட்டுப் போய்விடுகிறான். அவன் அக் கணக்கு நூலைக் கையில் எடுத்தவுடனே தன் விளையாட்டுத் தொழில்கள் எல்லாவற்றையும் முற்றும் மறந்து விட்டு எடுத்த பாடத்திலே அறிவை நாட்டுவானானால் எவ்வளவு விரைவில் அவன் அதன் பொருள்களைச் செவ்வையாகத் தெரிந்து தேர்ச்சி பெறுவான் - மனிதவசியம் அல்லது மனக்கவர்ச்சி 19. மன அமைதி இன்மையைப் புத்தகங்களைப் படிப்பதால் போக்கிக் கொள்வேன் இன்று பகல் முழுதும் ஓய்வாக இருந்தேன். ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கவே விரும்புகிறேன். நாம் இன்புறுவதற்கும் மெய்யறிவு பெறுதற்கும் அல்லாமல் தம்மைச் சார்ந்த மக்கள் அறிவுபெறச் செய்தற்கும் அவர்கள் சிறப்புற வாழ்தற்கும் படியாமல் எதற்காக வறிதே ஓய்வாக இருப்பது - அடிகளார் நாட்குறிப்பு. எதனையும் நுணுகி ஊன்றி நோக்கி ஆராயும் சிந்தனைத் திறனுடையோர்க்கு இயல்பாகவே வெறும் சொல் விளையாட்டுகளில் கருத்துச் செல்வதில்லை. வேடிக்கைக் குறும்புப் பேச்சுகளும் வெறும் நகைப்பூட்டும் பயனில் உரைகளும் ஆழ்ந்த சித்தனையாளர்கள் பால் இயற்கையாகவே அமைவதில்லை. - அடிகளார் உரையாடலில் கூறியது. மறைமலையடிகளின் நூற்றொகை மருத்துவம் 1. மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை (இருதொகுதிகள்) முதற்பதிப்பு 1933 2. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 மறைபொருளியல் 3. மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி 1927 4. யோக நித்திரை : அறிதுயில் 1922 5. தொலைவில் உணர்தல் 1935 6. மரணத்தின்பின் மனிதர் நிலை 1911 இலக்கியம் 7. சாகுந்தல நாடகம் 1907 8. சாகுந்தல நாடக ஆராய்ச்சி 1934 இதழ்கள் 9. ஞான சாகரம் மாதிகை 1902 10. Oriental mystic myna Bi. Monthly 1908 -1909 11. Ocean of wisdom Bi. Monthly 1935 சங்க இலக்கிய ஆய்வு 12. Ancient Modern Tamil Poets 1937 13. முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் 1936 14. முல்லைப் பாட்டு - ஆராய்ச்சியுரை 1903 15. பட்டினப்பாலை முதற்பதிப்பு 1906 16. முதற்குறள் வாத நிராகரணம் 1898 17. திருக்குறள் ஆராய்ச்சி 1951 பாடல் 18. முனிமொழிப் பிரகாசிகை 1899 19. மறைமலையடிகள் பாமணிக் கோவை 1977 நாடகம் 20. அம்பிகாபதி அமராவதி 1954 புதினம் 21. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 22. குமுதவல்லி : நாகநாட்டரசி 1911 கடிதம் 23. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 கட்டுரை 24. அறிவுரைக் கொத்து 1921 25. அறிவுரைக் கோவை 1971 26. உரைமணிக் கோவை 1972 27. கருத்தோவியம் 1976 28. சிந்தனைக் கட்டுரைகள் 1908 29. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 30. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 சமயம் 31. திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை 1900 32. மாணிக்க வாசகர் மாட்சி முதற்பதிப்பு 1935 33. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் (இரண்டு தொகுதி) முதற்பதிப்பு 1930 34. மாணிக்கவாசகர் வரலாறு 1952 35. சோமசுந்தரக் காஞ்சியாக்கம் 1901 36. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 37. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா 1968 38. திருவாசக விரிவுரை 1940 தத்துவம் 39. சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை 1898 40. துகளறு போதம், உரை 1898 41. வேதாந்தமத விசாரம் 1899 42. வேத சிவாகமப் பிரமாண்யம் 1900 43. Saiva Siddanta as a Philosophy of Practical Knowledge 1940 44. சைவசித்தாந்த ஞானபோதம் 1906 45. சிவஞான போத ஆராய்ச்சி 1958 வரலாறு 46. Can Hindi be a lingua Franca of India 1969 47. இந்தி பொது மொழியா? 1937 சமூக இயல் 48. சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் 1913 49. Tamilian and Aryan form or Marriage முதற்பதிப்பு -1936 50. தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் 51. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1958 52. வேளாளர் நாகரிகம் 1923 53. தமிழர் மதம் 1941 54. பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும் 1906 8. உதிர்மலர் பொழிவாலும் நூலாலும் தென்றல் உலாவாகவும் தேனருவி யாகவும் திகழ்ந்த அடிகளார், பேராப்பெருநிலையற்ற செய்தியாக வருவது இவ்வுதிர் மலர். கொடியில் அரும்பிய மலர், பொழுதில் மலர்ந்து, அலர்ந்து உதிர்தல் இயற்கை அல்லது ஊழ்; ஊழ்மலர் எனலும் இணரூழ்த்தல் எனலும் பழநூல் ஆட்சிகள் கொடியில் இருந்து மலர் உதிர்வதுபோல் அரற்றல் அவலம் இன்றி உயிர் நீத்தல் வேண்டும் என்பது மெய்ப் பொருள் உணர்ந்தோர் வேட்புரை. தொடர் இடிபாடுகள் : அடிகளார் உள்ளத்தையும் அசைக்கும் சூழல்கள் அமைந்தன. ஈருயிர் ஓருடலாக அரங்கரும் அம்பிகையாரும் வாழ்வதாக எவ்வளவு மகிழ்வில் இருந்தாரோ அடிகள் அதற்கொரு பெருந்தடையுண்டாயிற்று அரங்கனார் அயரா உழைப்பர்; உழைப்பின்போது ஓய்வு அறியார்; அவர்க்கு நெஞ்சுவலி வருத்தியது; அவர் தம் அருமைச் செல்வி முதன்மகள் மங்கையர்க்கரசி பூத்துக் குலுங்கும் பூங்கொடியாய்த் திகழும் பன்னிரண்டாம் அகவையில் இயற்கை எய்தினாள் அவள்மேல் ஆராத அன்பு கொண்டிருந்த அரங்கரை அப் பிரிவு பெரிதும் வாட்டியது. இவ் வாட்டுதல் இடையே ஆரூயிர் அம்பிகையார் பெரும்பாடு என்னும் நோயால் பற்றப்பட்டார். முன்னமே பத்தாண்டுகள் இளைப்பு இருமலால் அல்லல் உற்ற அவர் - அடிக்கடி மக்களைப் பெற்ற அவர் - இந் நோய்க்கும் ஆட்பட்டமை மேலும் வாட்டுதல் ஆயிற்று. அவரைத் தோனாவூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அறுவை மருத்துவம் செய்து 27-4-44இல் அரங்கர் மீண்டார். திரும்பும்போதே சோர்ந்திருந்த அரங்கர் பாளையங்கோட்டைக்கு வந்து படுத்தார்! மீள எழுந்திருக்க வில்லை! 28-4-44 இல் உலகை விட்டுப் பிரிந்தார்! நீலாம்பிகையார் நிலைமை என்ன? தம் காதல் தலைவ ருக்காக ஒன்பான் ஆண்டுகள் காதல் தவம் கொண்டவர் அல்லரோ அவர்! எப்பாடு பட்டிருப்பார்! அவர்தம் உடல் நிலைதான் என்ன! மெலிந்தது! நலிந்தது! அவரால் ஓராண்டும் தாங்க இயலவில்லை! 5-11-45 இல் இயற்கையொடும் ஒடுங்கினார்! இவ்வொடுக்கங்கள் அம்மையையும், அப்பர் ஆகிய அடிகளையும் விட்டு வைக்குமோ? அடிகள் தம்மக்களுள் நீலாம்பிகையார்மேல் கொண்ட பேரன்பு இணையற்றது; உடன் பிறந்தாரும் பொறாமை கொள்ளும் அளவு மிக்கது! தம் தமிழ் வாழ்வே அம்மகவு எனக்கண்ட - தம் தமிழ்த் தொண்டின் வழியே அவர் எனக்கண்ட - அடிகளார்க்கு அமைதியுண்டாகுமோ? நீலாம்பிகையாரின் அன்னை சவுந்திரம் அம்மையார் நோயர் ஆனார்! படுக்கையர் ஆனார்! மூன்றாண்டுகள் அளவு நோயொடு போராடிக்கிடந்த கிடையாய் அமைந்து வாராப் பெருநடையும் கொண்டார். அந்நாள் 24-5-50! பேரன்புப் பெருந்துணை - ஒப்பற்ற துணை - என நின்ற அம்மையார் பிரிவு அடிகளைப் புண்மீதில் அம்பு பாய்ச்சிய கொடுமைக்கு ஆளாக்கிற்று! மோதும் வெள்ளத் திடையே பட்ட உப்பு மலை எத்துணைக் காலம் தாங்கும்! அம்மையார் மறைவின்பின் அடிகள் மூன்று திங்கள் அளவே மண்ணில் உலாவினார்! இறுதியாவணம் : 15-8-1950 இல் அடிகள் நோயெனப் படுத்தார். ஒரு கிழமை கஞ்சியும் பழச்சாறும் பருகினார். மருத்துவப் பேரறிஞர் குருசாமியார் வந்து பார்த்தார். அடிகளுக்கு ஈரற்பை வீங்கியுள்ளது; இனிப் பிழைப்பது அருமை என்றார். அடிகளின் இல்லமருத்துவர் ஆனந்தர் மருந்து தந்து பேணினார். அடிகள் அம்பலவாணர் திருவுருவை நோக்கிக் கொண்டு கைகுவித்தும் வாழ்த்தியும் அமைதியை நாடியே நின்றார். 9-9-50 இல் தாம் ஈட்டிய செல்வம் பயன்படுத்தப்பட வேண்டிய வகை குறித்து இறுதியாவணம் எழுதினார். தாம் தொகுத்த மணிமொழி நூல்நிலையம் பொது மக்களுக்குப் பயன்படும் வகையில் மறைமலையடிகள் நூல் நிலையம் என்னும் பெயரால் பயன்படுத்தப்படவேண்டும் என்றும், தம் நூல்களைப் பதிப்பித்து அதனால் வரும் வாரமுறை வருவாய் தம் குடும்பத்தைச் சாரவேண்டும் என்றும் இப் பணியைச் சைவசித்ததாந்த நூற்பதிப்புக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் எழுதிவைத்தார். இதனை நிறைவேற்றற் குழுவினராக மருத்துவர் ஆனந்தர் சைவசித்தாந்தக் கழக ஆட்சியாளர் வ. சுப்பையா ஆகியவர்களை உள்ளிட்ட எழுவரை அமர்த்தினர். ஒளியுடல் : இறுதியாவணம் எழுதி நிறைவேறிய பின்னர் ஐந்து நாள்கள் அடிகள் பருவுடலம் தாங்கியிருந்தார். 15-9-50 மாலை 3.30 மணிக்குத் தமிழும் சைவமும் தத்தளித்துக் கலங்க அடிகள் ஒளியுடன் உற்றார்! மறு நாட் காலையில் அடிகளின் உடல் மண நீரால் நீராட்டப்பட்டது. மலர் மாலையொடு கண்ணீர் மாலையும் சேர மக்கள் வரிசைவரிசையாய்த் திரண்டனர்! அறிவுச் செல்வர்கள் உற்ற அவலமோ சொல்லில் அடங்காது! அடிகள் உடல் பூம்பல்லக்கில் வைக்கப்பட்டு அன்பர்கள் தோள் மிதவையாக மக்கட் கடலின் ஊடே எடுத்துக் கொண்டு நன்காடு சேர்க்கப்பட்டது. அங்கே பெரும் புலவர்கள் மு.வ; இரா. பி. சேது; தருமாம்பாள்; சானப் சாபி மகமது; பாரிப்பாக்கம் கண்ணப்பர்; ஆடலரசு; ஆகியோர் கையறு நிலை கூறினர். இரவு எட்டுமணியளவில் அடிகளார் பொன்னுடல் செந்தீ நாவுக்கு இரையாயிற்று. 17-5-50 இல் அடிகளார் உடற்பொடி கடலொடு கலந்தது. மூவா யிரவாண்டு மோதும் வடமொழியால் சாவாம் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார் எனப்பட்ட அடிகளாரின் பேரூழி இவ்வாறமைந்தது. அடிகளார் மறைவுக்கு இரங்கல் மலையாய்க் குவிந்தது; அன்புள்ளங்கள் ஆறாய் ஒழுக்கின! இதழ்கள் ஓலமிட்டன! தனித்தமிழ்ப் பற்றாளர்களோ தவத்தந்தையை இழந்த தவிப்பில் அழுந்தினர். அடிகளார் உரையாலும் பாட்டாலும் பாராட்டப்பட்ட தொகை தனிப்பெருந்தொகையாம்! இந்நூலின் அளவுக்குச் சிலச் சில கீற்றுகள் மட்டும் போற்றிக் கொள்ளப்பட்டன. வரும் புகழ் மாலை அது. 9. புகழ் மாலை உரைமாலை : மறைமலை யடிகள் யார்? சுவாமி வேதாசலம் அடிகள் கிறிதுவக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக இருந்தவர். அவரது பழைய பெயர் நாகை வேதாசலம் பிள்ளை என்பது அற்றை நக்கீரனாரும் பிற்றைச்சிவஞான முனிவரனாரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராக போந்து இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யாரும் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவதுண்டு வேதாசலனார் தமிழ் - செந்தமிழ் - சங்கத்தமிழ் - என்ன அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையை தமிழ் நாட்டுக்கு ஊட்டியபெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர் ஆங்கிலத்திலும்புலமை பெற்றவர்; வடமொழியும் தெரிந்தவர். ஈழக் கதிரைவேற் பிள்ளைக்கும் நாகை வேதாசலம் பிள்ளைக்கும் அடிக்கடி நிகழ்ந்த வாதப்போர் இளமையில் இவருடன் கலந்து உறவாடிய என்னை விடாமல் தகைந்தது. பின்னே 1910 ஆம் ஆண்டில் சிந்தாதிரிப்பேட்டையில் வேதாசலனார் சொல்லமிழ்தைப் பருகும் தவமுடையவன் ஆனேன். அவர் தமிழ் உடலும் தமிழ் உரையும், குரலும், தமிழ்ப் பொருளும் என்னை அவர்தம் தோழனாக்கின; தொண்டனாக்கின. வேதாசலம், அடிகளாகிப் பல்லாவரத்தை உறைவிடமாகக் கொண்டபோது அடிகள் ஒருநாள் இராமநாதபேட்டை நண்பர் சிலரை வரவழைத்தார்; பகலில் விருந்தளித்தார்; மாலையில் திரிசூலத்தில் சிவவிருந்தளித்தார். தமிழும் சிவமும் ஒன்றிய மறைமலை அடிகளாரின் விருந்து மறக்கற்பாலதன்று. முன்னாளில் மறைமலையடிகள் அடிக்கடி இராயப் பேட்டை போதருவர்; குகானந்த நிலையத்தில் தங்குவர். அடிகட்கு எல்லாப் பணிகளையும் யானே செய்ய முந்துவன்: மற்றவரும் போட்டியிடுவர். இரவில் சங்க நூல்களில் எனக்குற்ற ஐயங்களை அடிகளிடம் வெளியிடுவன். அடிகள் படுக்கையில் கிடந்து கொண்டே ஐயங்களைக் களைவர்; வேறு பல தமிழ்ப் பேச்சுக்களும் எங்களிடை நிகழும். மறைமலையடிகளுடன் யான் தூத்துக்குடிச் சைவ சித்தாந்த சபைக்கு இரண்டு முறை சென்றேன்; நாகை முதலிய சில இடங்கட்குச் சென்றேன்; சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன்; அந்நாளில் தமிழ் வானத்தில் ஒரு திங்களென அடிகள் திகழ்ந்ததை யான் கண்டேன். வெலி தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு யான் முயன்ற வேளையில் தகுதித்தாள் ஒன்று மறைமலையடிகளால் வழங்கப்பட்டது. அஃது இன்னும் என்னிடத்தில் இருக்கிறது. அடிகளால் டி.எம். அச்சகம் என்றொன்று அமைக்கப்பட்டது. அதைத் திறக்குந் தொண்டு எனக்குக் கிடைத்தது. அத் திறப்பு விழா சுருங்கிய முறையில் செவ்வனே நடைபெற்றது. செய்வன திருந்தச் செய் என்னும் முதுமொழிக்கு அடிகளின் வாழ்க்கை ஓரிலக்கியம். யான் கல்லூரிவிடுத்து அரசியலில் தலைப்பட்டதை மறைமலையடிகள் ஆதரித்தாரில்லை. என்னைக் கடிந்தும் பேசினார். தமிழ்ப் புலவர்களில் என்னைக் கடிந்துபேசுவோர் உலகில் ஒருவர் இருக்கிறார் எனின் அவர் மறைமலை அடிகளே யாவர்........ மறைமலை அடிகள் உடல் ஓம்புவதில் கருத்தும் உடையவர்; தமது நிலையம் போதருவோரை உடலோம்பலில் மனம் செலுத்துமாறு வலியுறுத்துவர். எனக்குஞ் சொல்வர். அடிகளின் உடலோம்பு முறைகளைக் கடைப்பிடிக்க யான் முயன்றேன். அம் முயற்சி சில மாத காலமாதல் இடையீடினின்றி நிகழ்ந்ததா? .இல்லை. சில வாரக்கணக்கிலேயே அது வீழ்ந்தது. என் வாழ்க்கை வானக்கப்பலில் பறப்பது. அப் பறவைக்கு நேரம் ஏது? ஓய்வு ஏது? ஒன்றுமட்டும் நிலைத்தது அஃது எது? அஃது எனிமா அதுவும் சென்னையிலேயே! மறைமலையடிகளிடத்தில் பலவித நல்லியல்புகள் உண்டு. அவைகளுள் சிறந்த ஒன்று இரக்கம் - ஜீவகாருண்யம். அடிகளின் இரக்கப் பண்பை விளக்குவதற்கு ஈண்டொரு நிகழ்ச்சி குறித்தல் சாலும். இராமலிங்க சுவாமிகளை யொட்டிக் கதிரைவேலருக்கும் வேதாசலனார்க்கும் பலதிற வாதங்கள் நடந்தன. சிவனடியார் திருக்கூட்டங்கள் இரண்டாகப் பிரிந்தன. ஒரு கூட்டம் கதிரைவேற்பிள்ளையை ஆதரித்தது. மற்றொன்று வேதாசலத்தை ஆதரித்தது. பின்னைய கூட்டம் கதிரைவேற் பிள்ளைக்குப் பலவிதத் தீங்கு செய்ய முயன்றது. கதிரைவேலர்மீது கல்லை எறிந்தது; அவரை இழித்து இழித்துத் துண்டுகள் வெளியிட்டது; அவரைப் போன்ற உருவஞ் செய்து அதைப் பாடையில் இட்டுக் கொளுத்தியது. இவைகள் எல்லாம் போக, மற்றொரு கொடுமை நிகழ்த்த உறுதிகொண்டது. அஃது இராமலிங்க சுவாமிகள் கொள்கைக்கு முற்றும் மாறுபட்டது. அஃதென்ன? கொலை! வழக்குக் காலத்தில் கதிரைவேற்பிள்ளை இரவு பத்து மணிவரை சிந்தாதிரிப் பேட்டையில் இருப்பார். சில சமயம் பன்னிரண்டு மணிவரை இருப்பார். அதற்குமேல் புரசை நோக்குவார். ஒரு நாள் அவரை வழியிலே கொலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாம். அச் செய்தி எப்படியோ வேதாசலனார்க்கு எட்டியது. வேதாசலனார் இரக்கம் உடையவர்; இராமலிங்க அடிகளின் அருள் நெறியில் நிற்பவர். அவர் என் செய்தார்? யாழ்ப்பாணத்து மாணாக்கர் ஒருவர் வாயிலாகக் கொடுமையைக் கதிரைவேற் பிள்ளைக்கு அறிவித்தனர். அன்று கதிர்வேற் பிள்ளை தக்க காவலுடன் சென்றனர். கொலைஞர் கருத்து நிறைவேறவில்லை. இந் நிகழ்ச்சியை எனக்குச் சொன்னவர் மறைமலையடிகளே. - திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் - 163-169. தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும்முழங்கும் அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூல் ஆசிரியன்மாரை அளித்தது. அடிகளே தென்னாடு; தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது. -திரு.வி.க. மறைமலையடிகள் மாண்பு. முன்னுரை இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புலவர் - கா. சுப்பிரமணியனார். தேனும் பாலும் போன்ற தூய தீந்தமிழ்ச் சொற்களால் உரை நடையும் செய்யுளுமாகிய இருவடிவிலும் பல்துறை தழுவி ஐம்பதிற்கு மேற்பட்ட அருநூலியற்றி முதலிரு கழக நிலைக்குத் தமிழைப் புதுக்கி அதற்குப் புத்துயிர் அளித்தவர் மாநிலத்தில் மக்கள் உள்ளவரை மறையாப் புகழ்பெற்ற மறைமலை யடிகளே. -பாவாணர் : வடமொழி வரலாறு - முன்னுரை. பொதுத் தமிழ் இலக்கியம் அனைத்தும் பொருந்தக் கற்று ஆங்கிலரும் வியக்கும் அழகிய ஆங்கில நடை கை வரப்பெற்று, ஆரிய மறைகளையும் ஆழ்ந்து ஆராய்தலுற்று, கடந்த மூவாயிரம் ஆண்டாக மறைந்து கிடந்த தனித்தமிழை மீட்டு எப்பொருள் பற்றியும் செந்தமிழில் எழுதவொண்ணும் என்னும் உண்மையை நாட்டிய மறைமலை அடிகள் திருவள்ளுவர்க்கு அடுத்தபடியாக வைத்து எண்ணத் தக்க தனிப்பெரும் தகுதியுடையவர் ஆவர் - பாவாணர்; தமிழிலக்கிய வரலாறு. பக், 232 மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் தமிழ்த் தாயின் நெஞ்சு புரையோடாதும் தமிழர் அறை போகாதும் காத்த. தமிழன் வயிற்றில் இருந்து முன்பு பல திராவிட மொழியில் கிளைத்து அதன் பரப்பைச் சுருக்கியதுபோல, மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய திராவிட மொழி பிறந்து தமிழை இன்னும் குன்றிக் குலையாதவாறு தடுத்தது. இன்று பாடநூல்கள் பெரும்பாலும் தமிழ் வடிவாக வருகின்றன. ஒருசார் இளைஞர் வட்டம், எழுத்தாளர் கூட்டம் குடிநீரைத் தூயநீராகக் காத்தல் போலத் தமிழைத் தூயதாகக் காத்து வருகின்றன. கலப்பு மிகுதியிருந்தாலும் பல செய்தித்தாள்கள் தமிழ்த் தூய்மையையும் முடிந்த அளவு பேணி வருகின்றன. வாழ்த்துகள் வரவேற்புகள் அழைப்பிதழ்கள் எல்லாம் நல்ல தமிழ்ப் பைங்கூழ் வளரும் பைந்நிலங்களாக மிளிர்கின்றன. இந்நான் மாற்றங்களையெல்லாம் மறைமலையடிகளைப் பெற்றமையால் தமிழ்த்தாய் பெற்றாள். அத் தவமகள் அடிச்சுவட்டை அன்புச்சுவடாகப் போற்றிப் பாலின் தூய்மை போலத் தமிழின் தூய்மையைக் கடைப்பிடித்துவாழும் இளைய மறைமலையடிகள் இன்று பல்கி வருப. ஆதலின் தமிழ் தனித்தடத்திற் செல்லும் புகைவண்டி போலப் பழைய புதிய தன் சொற்களைக் கொண்டே விரைந்து இயங்கி முன்னேறும் என்று உறுதி கொள்வோம். தனித்தமிழ்த் தொண்டும் எழுத்தாளர் கடமையும், மறைமலையடிகள் தனித்தமிழில் வீரநெஞ்சினர் ஆயினும் வடமொழியில் ஈர நெஞ்சினர்; அதன் பெருமையை நன்கு கற்று அறிந்தவர்; சாகுந்தல நாடகத்தில் தனிப்பற்றுக் கொண்டவர்; அதனை மொழி பெயர்த்ததோடு தனி ஆய்வு எழுதியவர்; அதனால் அன்றோ தவத்திரு காஞ்சி காமகோடிப் பெருமகனார் அடிகளின் மொழிபெயர்ப்புச் சாகுந்தலத்திற்குப் பரிசுதரும் அறக்கட்டளை வகுத்தருளினார். இவ்வொப்புதல் ஒன்றே அடிகளின் வடமொழி யன்புக்குச் சாலும் கரியாகும். - வ.சுப. மாணிக்கனார். மயிலையில் ஒரு சிற்பியார். அவர்க்கு இன்ன இன்ன திருவுருவங்கள் விரைவில் வார்க்க நினைவாய் இருக்கிறது என ஓர் அட்டை எழுதினார். அடிகள். எழுதும்போது இளவழகனார் உடனிருந்தார். சிற்பியை வரும்படி இதில் எழுதவில்லையே என்றார். அடிகளார் அந்த அஞ்சல் அட்டையின் கருத்து அதுதான் என்றும், வெளிப்படையாக எழுதக்கூடாது என்றும் ஒருவர் மற்றொருவர்க்குக் கட்டளையிட வாய்ப்பில்லை என்றும் உரிமையால் ஒழுக வழி செய்ய வேண்டும் என்றும் கூறினார். அடிகளின் உரிமை மதிப்பு இதனால் புலப்படும். - இளவழகனார். விரித்தது தொகுத்தல் என்னும் உத்தி பற்றித் தமது சொற்பொழிவில் விரித்து ஓதப்பட்ட பொருள்கள் யாவற்றையும் முடிவில் தொகுத்துரைக்கும் திறம் அடிகளார்க் கென்றே அமைந்த அரும்பண்பாகும். அடிகளார் முடியைப் பற்றி முதுபெரும் புலவர் ஒருவர் எள்ளற் குறிப்புடன் பேசினர். தலைமை ஏற்றிருந்த அடிகளார் புலவர் அவர்களின் மயிராராய்ச்சி மிக நன்று என்று சொல்ல அவை மகிழ்வாரவாரம் செய்தது. ஔவை சு- துரைசாமியார் மறைமலையடிகளும் கா. சு. பிள்ளையும் என் வலக்கையும் இடத்தைப் போன்றவர்கள். - தந்தை பெரியார். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் வரலாற்றில் மானுடம் இவர்தாம் அல்லர்; நம் பெரும் தெய்வம் எனத் திகழ்ந்திருந்து அரும்பெருந் தொண்டுகள் ஆற்றியுள்ள மறைமலையடிகளுக்கு ஒரு பெரும் தனிச் சிறப்பிடம் உண்டு. தமிழுக்கும் சமயத்திற்கும் சமுதாயத்திற்குமாகப் பல்வேறு துறைகளில் அளப்பரும் தொண்டுகள் ஆற்றியவர் அப் பெருந்தகையாளர். - ந. ரா. முருகவேள். என்பும் உருகும் இசைபாடும் பண்புடையவர் இவர். இல்லறத் துறவியாகத் தம் இல்லின்கண் வீற்றிருந்து நல்லறம்புரிந்த நற்றமிழ் நாவலர் இவர். தமிழ்ப்பாலொடு எந்த நஞ்சையும் கலவாது தமிழ்க் குழவிகளுக்கு ஊட்டியவர். - அ. கனகராயர் மறைமலை அறிவூற்று ஊறிய மாமலை. பல்வகைக் கருத்துவளம் கொழித்த மாமலை; அயல் வழக்கின் களைகடுத்த மாமலை; மறைமலையடிகள் ஒரு தமிழ்நிறுவனம்; சமய இயக்கம்; அவர்தம் எழுத்தும் பேச்சும் ஒரு புதிய தலைமுறையையே தோற்றுவித்திருக்கிறது. - தவத்திரு குன்றக்குடியடிகளார். கடலின் ஆழத்தையும் அகலத்தையும்அறியமுடியாது என்பார்கள். அதுபோலவே தவக்கோலத்தில் இருந்த தமிழ்க்கடலாம் மறைமலையடிகளின் மாண்பையும்அவர் இயற்றியுள்ள நூல்களின் பெருமையையும் சொல்லிவிட முடியாது. - தொழிற்செல்வர் நா. மகாலிங்கம். தமிழ் என்றாலே தாழ்வு என்றே கொண்டு தமது மொழியின் தகுதி மறந்து தாழ்வுற்ற தமிழகத்தில் தமிழ் ஒன்றே உயர்வு அன்றியும் தனித்தமிழே நனியுயர்வு என்று உளங்கொண்டு தமது எழுத்திலும் பேச்சிலும் நாளும் தனித்தமிழின் கனிச்சுவை காட்டி, நாடெங்கும் நல்ல தமிழ் வலம் வரச் செய்த தனிப்பெருமை பூண்டவர் அடிகளார். - பேராசிரியர் க. அன்பழகனார். சாதி வேறுபாடற்ற தமிழ்ச் சமுதாயம் காணப் பாடுபட்டு ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற நெறியில் தமிழரை ஆற்றுப்படுத்திய அடிகளாரின் புகழ் என்றென்றும் வையத்து வாழும் என்பது உறுதி. - பேரா. அ. மு. பரமசிவானந்தம் ஆசிரியர் மறைமலையடிகள் தமிழ் விடுதலைக்காக தமிழ்மொழி, தமிழ்நெறி தோன்றிய தமிழ் ஞாயிறு ஆவார். மிக அமைதியாய் இவ் விடுதலைப் புரட்சியைத் தமது புலமை நலத்தால் அவர்கள் செய்து வந்தார்கள். - தவத்திரு அழகரடிகள். அடிகளார் திருச்சிக்கு ஒரு முறை பொழிவுக்கு வந்த போது அவரை அழைத்த அன்பர் தங்களைக் கொண்டே தமிழையும் சைவத்தையும் வளர்க்கவேண்டியுள்ளது. தாங்களோ ஒரு வருகைக்குப் பெருந்தொகை கேட்கின்றீர்கள். இவ்வாறு கேட்பின் எத்துணை பேர் அதற்கு ஈடு கொடுக்க முடியும். எனவே இனி இம் முறையைக் கைவிட வேண்டும் என்றார். அப்பொழுதில் அதனை மறுத்துரையாத அடிகள் அவர் தம்மைச் சென்னையில் மீண்டும் காண வந்தபோது, அன்பரே அன்று திருச்சியில் சொன்னதை நினைவு கூர்கின்றேன். என் பேச்சக்குப் பெரும் பொருள் கேட்பதைக் குறையாகக் குறித்தீர்கள். அது குறையா? அதுபற்றிச் சிறிது இப்போது நினையுங்கள். ஒரு பொது விழாவோ திருவிழாவோ நிகழின் அதற்கு ஒரு பாடகியை அழைக்கின்றீர்கள். அவளுக்கு இருநூறு முந்நூறு என்று வாங்குகின்றீர்கள். கூத்தாடும் கூத்திக்கு அதுபோல் பெருந்தொகை கொடுக்கின்றீர்கள் பெரு வங்கியக்காரனுக்குப் பெருந்தொகை வழங்கப்படுகின்றது. யான் அந்தக் கூத்தும் பாட்டும் குழலும் பயிலாமல் தமிழ் படித்த பாவம் குறையாகி விட்டது. அப்படித்தானே, என்றார். வினவிய அன்பர் கண்ணீர்வடித்தாராம். அடிகளார்க்கு இளமையில் தமிழ் கற்பித்த நாராயண சாமியார், அடிகளார் பழந்தமிழ்ப் புலமைக்கு வியந்தவராய்ச் சங்கப் புலவர் வருகிறார் சங்கப் புலவர் போகிறார் என்று கூறினார். அது பின்னர்ப் பிறர் கூறும் வழக்கும் ஆயிற்று. தமிழ் இயற்கை மொழி. இந்தியா முழுதும் வழங்கிய மொழி என நெல்லையில் பேசினார் அடிகள். இந்தியாவின் ஒரு கோடியில் வழங்கும் தமிழை இயற்கைமொழி என்பதும் இந்தியா முழுதும் வழங்கிய மொழி என்பதும் பொருந்தாது என ஒருவர் மறுத்தார். அடிகள், இந்தியா மட்டுமன்று உலகமெங்கும் தமிழே முன்பு வழங்கியது எனச் சான்றுகளுடன் விளக்கினார். அடிகளார் சைவத்தின் மேல்நிலையைப் பெறவேண்டும் என்று சூரியனார் கோயில் மடத்தில் கூறினார்; மதுரைநாயகம், தாயார்க்கு உதவியாய் இருப்பது முதன்மை எனக் கூறித் தடுத்தார். அடிகளாரை அலுவலக எழுத்தராக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மதுரை நாயகர்; அடிகள் ஆசிரியப் பணி செய்யவே ஆர்வம் என்று மறுத்து விட்டார். ஆய்வுத்திறம் சிலப்பதிகாரத்தில் சித்திரப் படத்துள் என்னும் கானல்வரியில் யாழ்கையில் தொழுது வாங்கி எனவரும் பகுதியைக் கேட்ட அடிகளார், யாழ்கையில் தொழுது வாங்கியவர் யார்? bfhL¤jt® ah®? என வினவினார். வாங்கியவர் மாதவி, கொடுத்தவள் வயந்த மாலை என்றேன். வயந்த மாலை ஏவற் பணிப்பெண்ணாகிய சேடியே அன்றோ! அவளை மாதவி எற்றுக்குத் தொழுதல் வேண்டும்? என வினவினார். வினாவை எதிர்பாராத யான் சிறிது தயங்கினேன். உடனே அடிகளார், மாதவி தொழுதது வயந்த மாலை அன்று; யாழ்க் கருவியையே மாதவி தொழுதாள். இசைத் தெய்வம் அதன்கண் தங்கி உயர்வதாகக் கலையுணர்வு மிக்க மாதவி கருதினாள் என்றார் அடிகள். ஒரு சொல்லின் மூலம் அல்லது வேர் தமிழெனக் கொள்ள இயலுமாயின் அது பிறமொழிச் சொற்போல ஐயுறக் கிடப்பினும் அதனைத் தமிழ்ச் சொல் என்றே கொள்ளுதல் கூடும். துரை என்னும் சொல் துர என்னும் மூலம் அல்லது வேரினின்று செலுத்து - ஏவு என்னும் பொருள் உடையதால் ஏனையோரைச் செலுத்துபவன் ஏவுபவன் என்னும் குறிப்பில் ஒரு தலைவனைக் குறிப்பதாயிற்று. இவ்வாற்றால் அதனைத் தமிழ்ச் சொல் என்றே கோடல் பொருந்தும் என்றார் அடிகள். - ந. ரா. முருகவேள். அடிகளார் நூல்களைத் தாம் பயன்படுத்தியபின் இதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த முறை சுவை உடைய கனி கிழங்குகளைத் திரட்டி வைத்த சபரியின் செயலையே நினைவூட்டுவதாகும். சீராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற்காகவே சபரி அவற்றைத் தொகுத்துவைத்தாள். மறைமலையடிகள் இத் தொகுப்பைத் திரட்டியதும் இதுபோலப் பொதுமக்கள் சேவையை உளத்தில் கொண்டே தான் என்பது குறிப்பிடத்தக்கது. - முனைவர் எசு. ஆர். அரங்கநாதன் நூலகத்திறப்பு விழாப்பொழிவு 24-8-58. பாமாலை : வாழ்த்தாத நாளில்லை வையகம் மறைமலையடிகள் மறையாத் திருப்பெயர் - வாழ்த் ஆழ்ந்து கடலில் முத்தெடுப் பார்போல் அகன்ற உலக இலக்கியம் அனைத்திலும் வீழ்ந்து பொருளுண்மை விளக்கும் ஆற்றலால் வெல்ல முடியாத நல்லா சிரியனை - வாழ்த். தென்னாடு சார்ந்த குமரிப் பெருநிலம் திரைகடல் மறைத்த உண்மைச் செய்திக்குப் பொன்னேடு காட்டும் புலவர்க்குப் புலவனைப் பொழுதெல்லாம் தமிழுக்குழைத்த தலைவனை - வாழ்த். மறையெனப் படுவது தமிழ்நான் மறைநூல் மற்றை மறைநூல் பின்வந்த குறைநூல் முறையாய் இவைகட்குச் சான்றுகள் காட்டி முழக்கஞ் செய்த முத்தமிழ் அறிஞனை - வாழ்த். - பாவேந்தர் பாரதிதாசனார். மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம் 1. பேராசிரியர் நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும் சாலும் இதமும் சமமாக - மேலுயர்வுப் பேரா சிரியர் பெரும்பேர் மறைமலையார் நேரார் உளரிந் நிலத்து. 2. பெரும் புலவர் தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும் புலவர் உள்ளும் பெரியார் தனியே அரும்பொன் மறைமலை யார். 3. பாவலர் உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த விரைவுடையார் சில்லோர் வியன்பார் - மறைகலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி மும்மணிக் கோவை முறை. 4. ஆராய்ச்சியாளர் நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார் பாலையும் முல்லையும் பார். 5. மும்மொழிப் புலவர் மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச் சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன் கண்டதும் கேட்டதும் இல். 6. மொழிபெயர்ப்பாளர் வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று முடிகொள்ளும் சாகுந் தலம். 7. சொற்பொழிவாளர் இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும் நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப் பகைவரும் உண்ணாது பன்னாளும் வேட்கும் வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு. 8. எழுத்தாளர் கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும் படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும் மற்றோர் உரைமறுப்பும் மன்னும் புதினவரை வுற்றார் மறைமலை யார். 9. பல்கலைச் செல்வர் தோற்றுந் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணும் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு. 10. தனித்தமிழ்த் தந்தையார் மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழ் - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலையார். - மொழிஞாயிறு பாவாணர். நம்மொழிப் புலமை எல்லாம் நடுத்தெருப் புலமை யாகும் செம்மொழி பேசி வந்த திருமறை மலையார் பெற்ற மும்மொழிப் புலமை யன்றோ முற்றிய புலமை அன்னார் தும்மலும் கல்வித் தும்மல் தூக்கமும் கல்வித் தூக்கம். - பாவலர் சுரதா. நினைவு நிலையங்கள் மறைமலையடிகள் நூல்நிலையம் சென்னை இலிங்கிச் செட்டித் தெரு 261 ஆம் எண் இல்லம் வள்ளலார்தம் ஒன்பதாம் அகவையில் முதற்பொழிவு செய்த சோமு (செட்டியார்) இல்லமாகும். அவ்விடம் தென்னிந்திய தமிழ்ச் சங்கச் சார்பில் 1958 இல் மறைமலையடிகள் நூல்நிலையமாக உருவாகியது. அடிகளார் தம் ஆய்வுக்கெனத் தொகுத்து வைத்த மும்மொழி நாலாயிர நூல்களுடன் ஐம்பதாயிரம் நூல்களைத் தன்னகத்தே கொண்டு உள்ளூர்ப் பழுத்த பயன்மரமாய் இயங்கி வருகின்றது. ஆய்வுப் பகுதி, அரங்குப் பகுதி, வழங்கு பகுதி, செய்திப் பகுதி என நாற்பகுதியினதாய் நூலகம் இயங்கி வருகின்றது. பல்வேறு பட்டங்கள் பெறுவாரும். நூல் எழுதுவாரும் பயன்கொள்ளும் வளநிலையம் இது. இதில் பழமையான இதழ்களும், புலவர்கள் படங்களும், கடிதங்களும் கையெழுத்துகளும் தொகுத்து வைக்கப்பட்டுள. மறைமலையடிகள் கலைமன்றம் சென்னை, பல்லவபுரத்தில் அடிகளார் வாழ்ந்த இல்லம், சைவசித்தாந்த சங்கத்தால் இந்திய - தமிழக - அரசு பொருளுதவியுடன் வாங்கப் பெற்று மறைமலை அடிகள் கலைமன்றமாகத் திகழ்கிறது. அடிகளாரின் கையெழுத்துப் படிகள் நூலின் முதற்பதிப்புகள் இசைத் தட்டுகள் ஆகியவை கண்ணாடிப் பேழைகளில் வைக்கப்பட்டுள. தமிழ்ப் புலவர் பெருமக்களின் உருவப்படங்கள் காட்சியாக வைக்கப்பட்டுள. பயில்வார்க்கும் பயன்படும் வகையில்நூலகமும் உண்டு. இந்திய அரசுச் சுற்றுலாத் துறை சிறந்த சுற்றுலா இடமாகத் தெரிந்துள்ளது. மறைமலையடிகள் பாலம் அடையாற்றுப் பாலம் தாண்டியே சைதையில் இருந்து பல்லவபுரத்திற்கோ, மறைமலைநகர்க்கோ செல்லுதல் வேண்டும். அப் பாலம் மர்மலாங் பாலம் எனப்பட்டது. அதற்கு மறைமலையடிகள் பாலம் எனப்பெயர் சூட்டியவர் கலைஞர் மு. கருணாநிதி ஆவர். மேலும் பல்லவபுரத்தில் அரசுப்பள்ளி, மறைமலையடிகளார் பள்ளி எனப்பெயர் வழங்குகின்றது! மதுரை மாநகராட்சிப் பள்ளியொன்றும் அடிகள் பெயர் விளக்குகின்றது. நாகையில் அடிகளார் சிலை உண்டு. மறைமலை பெயர்த்தெருக்கள், நகர்கள் ஆங்காங்கு உள. மன்றங்களும் அப்படியே. மறைமலை நகர் சென்னைக்குத் தெற்கே சென்னைக்கும் செங்கற்பட்டுக்கும் இடையே 40 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிராப்பள்ளி நோக்கிச் செல்லும் நாட்டுப் பெருஞ் சாலையருகில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் நூறாயிரம் மக்கள் தொகை வாழ வாய்ப்புடையதாய் அமைந்துள்ள நகர் மறைமலை நகர் ஆகும். தொழிற்சாலை, வணிக நிறுவனம், போக்குவரவு வாய்ப்பு, மருத்துவமனை, பள்ளிகள், பூங்கா, சிற்றுண்டிச்சாலை மனமகிழ்மன்றம், சிறிய பெரிய குடியிருப்பு ஆகியனவெல்லாம் கொண்டது. அடிகளார் பெயர் தாங்கும் நகரை அடுத்தொரு தொடர் வண்டி நிலையம். அதற்கு என்ன பெயர்? மறைமலைநகர் - தொடர்வண்டி நிலையம்! புதிய நகருக்கு அடிகளார் பெயரிட்டதும் தொடர்வண்டி நிலையத்திற்கு அடிகளார் பெயரையே நிலைக்கச் செய்ததும் கலைஞர் மு. கருணாநிதி யவர்களின் கவின் தமிழ்ச் செயலாகும். அடிகளார் புகழ் வாழ்க! தமிழ்ச் சான்றோர் பெயர் வாழ்க! அடிகளின் கடிதம் ஓம் சைவசித்தாந்த சபை, மேலூர், தூத்துக்குடி, 31-12-1913 எனது அன்பிற்றிகழும் செல்வச் சிரஞ்சீவி திருவரங்கம் பிள்ளையவர்களுக்கு. யான் முன் எழுதிய கடிதம் வந்திருக்குமென்று நம்புகின்றேன். அதன் பிறகு தாங்கள் 28-ஆந் தேதி எழுதிய அன்புள்ள கடிதம் வந்தது. நம் அன்பினிற்கினிய செல்வச் சிரஞ்சீவி தியாகராசச் செட்டியாரவர்கள் நம் சமரச சன்மார்க்க நிலையம் நிலைப்படுதற்பொருட்டுத் தங்களோடு சேர்ந்து ஒத்துழைப்பது தெரிந்து, அளவிலா மகிழ்ச்சியடைந்தேன். இக்காலத்தில் அன்புமிக்க இளைஞர்களால் நடந்தேறும் அரும்பெருங் காரியங்கள், செல்லமும் அறிவும் முதுமையும் வாய்ந்த பெரியவர்களாலும் நடந்தேறுவதில்லை. இஃது என் அனுபவத்திற் கண்டது. பதினைந்து வருடங்களுக்கு முன் யான் மிகவும் இளைஞனாயிருக்கும்போது நமது தமிழுக்குஞ் சைவசித்தாந்தத்திற்கும் உழைக்க முன் வந்தேன். அக் காலத்தில் செல்வமும் அறிவும் முதுமையும் வாய்ந்த முதியோர்கள் எனக்குச் சிறிதும் உதவிசெய்ய இசைந்திலர்; யான் செய்யத் தொடங்கின ஒவ்வொரு முயற்சியினையும் வேண்டாவென்று சொல்லித் தடை செய்தவர்களும், அவற்றிற்கு இடையூறு செய்தவர்களுமே பலர். என்றாலும், அவர்கள் துணையை ஒரு பொருட்டாக எண்ணாது, எல்லாம்வல்ல இறைவனுதவியையே நம்பி, ஞானசாகரத்தைத் தொடங்கி நடத்தியும், சைவ சித்தாந்த மகா சமாஜத்தை தாபித்து நடை பெறுவித்தும் ஆங்காங்கு இடையறாது சென்று உபந்நியாசங்கள் நிகழ்த்தியும் வந்தேன். அம் முயற்சிகளின் பயன் இப்போது தாங்கள் அறிந்ததே. தமிழ், சைவ சித்தாந்தமென்னும் இரண்டன் பெருமை இவ்விந்தியாவிலே மாத்திரமன்றி அந்நிய நாடுகளிலும் பரவி வருகின்றது. இச் சமயத்தில் நமது சமரச சன்மார்க்க நிலையத்தை நிலைபெறச் செய்து நாம் குறித்த காரியங்களை ஒழுங்குடன் நடைபெறச் செய்வமாயின் உலகமெல்லாம் அரும்பெரும் பயன் எய்துமென்றற்கு ஐயமுளதாமோ? நம் நிலையக் காரியங்கள் தங்களையொத்த நல் இளைஞர் உதவியைக் கொண்டே நடைபெறுமாறு திருவருள் செய்யும் என்னும் நம்பிக்கையும் மிகவுடையேன். ஆகையால், முதியோர் உதவியையாவது, அவர்கள் தடைப்படுத்துஞ் சொற்களையாவது கவனியாமல் முயல்வதே நம் கடமை; கூடுமானவரை அவர்களைத் தழுவிப் போவதும் நலமுடைத்தே. ஸ்ரீமான் சொக்கநாதரவர்களிடமிருந்து கடிதம் வந்தது. அதில் அவர் எனது வருகைக்காகத் தாம் மிக மகிழ்வதாகவும், என்னை அங்கேற்று அளவளாவ மிக்க விருப்பம் வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் இச் சமயம் தம்மால் குறிப்பிட்ட தர்மத்திற்குப் பொருள் திரட்டித்தர இயலாமைபற்றி வருந்துகிறதாகவும் எழுதி யிருக்கிறார். இவர்கள் போன்ற முதியவர் சொற்களினால் இளைஞர் களான நம் முயற்சி தளரா வண்ணம் அருட்கடலான நம் ஆண்டவன் துணைபுரிவானாக. நல்லறிவினும் நற்குணத்தினும் சிறந்த நம் ஆப்தர் ஸ்ரீமான் வித்துவான், தாமோதரம் பிள்ளையவர்கள் தங்கள் முயற்சிக்கு ஒரு பெருந்துணையாயிருப்பார்களெனத் திருவருளைச் சிந்திக்கின்றேன். இங்கே இடையறாது உபந்நியாசங்கள் செய்துவந்த மையால் மூளையிற் கொதிப்பேற, அச் சமயத்தினும் வாதுமைத் தைலம் தேய்த்து முழுகினதால், கடும் தோஷம் பிடித்து வருத்தியது; இப்போது சுகம். இன்று ஓர் உபந்நியாசம் இங்கே செய்ய வேண்டியிருக்கின்றது. அது முடிந்ததும் ஐந்தாறு நாளில் கொழும்புக்கு செல்ல வேண்டு மென்று கருதுகின்றேன். எல்லாம் வல்ல இறைவனை நாம் எடுத்தகாரியங்கள் இனிது நிறைவேறும். சுகத்தை விரும்பித் திருவருளை வழுத்தும், அன்புள்ள சுவாமிவேலு பொழிவாளன் புகல்வு மறைமலையடிகளாரையும் அவரது ஆராய்ச்சியையும் பிரித்துக் காணல் இயலாது. பிரிவறியாத் தற்கிழமைப் பொருளது அவர்தம் ஆராய்ச்சி! ஆராய்ச்சியே அடிகளார்; அடிகளாரே ஆராய்ச்சி என்பது அவர்தம் எந்நூலைக் கற்றாரும், எப்பொழிவைக் கேட்டாரும் கொள்ளும் உறுதியாகும்! மறைமலையடிகளின் ஆராய்ச்சித் திறன் என்னும் இப்பொழிவு நூல், எட்டுப் பகுதிகளைக் கொண்டு இயல்கின்றது. மலைமலையடிகளின் சீர்மை குறித்த உரையும் பாட்டும் பற்றியது முதற் பகுதி. தமிழ்த் தென்றல் திரு.வி.க.வும், மொழி ஞாயிறு பாவாணரும் மொழிந்ததும் அவை. ஆராய்ச்சி என்பதன் தமிழ்ச் சொல் விளக்கமும் அதன் தகவும் அடுத்து வரும் ஆராய்ச்சி. ஆராய்ச்சிக்கு மூலவைப்பும் முறைத் திறமும் காட்டுவது மூன்றாம் பகுதியாம். அடிகளார் பயின்ற நூல்களும் பயின்ற முறையும் என்பது. ஆராய்ச்சி குறித்து அடிகளாரே தம் எழுத்தில் காட்டிய குறிப்பும் விளக்கமும் கொண்டது, அடிகளார் காட்டும் ஆய்வியல் நெறிமுறைகள் என்னும் நான்காம் பகுதி. ஐந்தாம் பகுதி அடிகளார் இயற்றிய நூல்களைக் கால அடைவில் காட்டுவது. காலம் என்பது முதற்பதிப்பில் இடம் பெற்ற காலம். ஆறு, ஏழு, எட்டாம் பகுதிகள், அடிகளாரின் ஆராய்ச்சித் திறன் குறித்த விளக்கப் பகுதிகள். அடிகளாரின் நூல்கள் அனைத்தும் கொள்ளல் விரிவுப் பணியாகலின், பொழிவின் அளவுக்கு ஏற்ப இலக்கிய ஆராய்ச்சிக்கு பட்டினப்பாலையை யும், சமய ஆராய்ச்சிக்கு மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் நூலையும், அறிவியல் ஆராய்ச்சிக்கு மக்கள்நூறாண்டு உயிர் வாழ்க்கை என்னும் நூலையும் எடுத்துக் கொண்டு சுருங்கிய வகையில் ஆராய்ச்சித் திறத்தைக் காட்டியவை இம்முப் பகுதிகளுமாகும். இப்பொழிவு ஆற்றவும், நூலாகித் தமிழ்வளம் செய்யவும் கிட்டிய வாய்ப்புப் பெரிது. அதற்கு அடிப்படையாம் அறக் கட்டளை வைத்து, ஆய்வைத் துலங்கச் செய்பவர், உரையும் பாட்டும் உரைப்பாட்டும் திரைக்கலையும் வல்லவரும், தமிழாய்ந்த தமிழ்த்தலைவனே தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்னும் பாவேந்தர் விழைவை நிறைவு செய்பவரும் ஆகிய முதல்வர் கலைஞர் அவர்கள் ஆவர். தாம் பெற்ற இராசராசன் விருதுத் தொகை ஓரிலக்கத்தையும் தம்மைக் குடல் விளக்கம் செய்த பெற்றோர் முத்துவேலர் அஞ்சுகத்தம்மையர் பெயரில் ஆய்வு அறக்கட்டளை ஆக்கிய அப்பேறே, இப்பொழிவுக்கும் நூலுக்கும் வாய்த்த வான் சிறப்பாகும். மலையடிகளாரின் சமய நோக்கு என்னும் பொழிவு செய்யும் பேறு பெற்றேன், அப்பொழிவும் ஆய்வுப் பொழிவே. மறை மலையடிகளாரின் ஆராய்ச்சித் திறன் பற்றிய ஆய்வுப் பொழிவே. அப்பொழிவும் இணைக்கப் பெற்றுள்ளது. தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரின் ஆராய்ச்சித் திறன் குவித்து எளியேன் பொழிவை நூலாக்கி வழங்க விழைந்த தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கும் ஆட்சிக் குழுவுக்கும், அறக்கட்டளைக் குழுவுக்கும் பெங்களூர்த் தமிழ்ச் சங்கப் பெருமக்களுக்கும் நன்றியுடையேன். அறக்கட்டளை அடங்கிக் கிடத்தலால் ஆகும் தமிழ்ப் பயன் என்ன? அதனை நூலாக்கி உலாக் கொள்ள வைக்கும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திற்கும், அதன் அமைச்சர் பெருமகனார் முனைவர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியன். வாழிய நலனே வாழிய நிலனே! அன்புடன், இரா. இளங்குமரன் 1. மறைமலையடிகள் நாகையில் (நாகப்பட்டினத்தில்) தோன்றியவர் அடிகளார். நாவும் கையும் தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சைவத்திற்கும் பயன்படத் தோன்றிய தவப்பெருமகனார் மறைமலையடிகளார்! சொக்கலிங்கர், சின்னம்மை குடல் விளக்கப் பிறந்தவர், தமிழ்த்தாயின் குடல் விளக்கம் செய்யப் பிறந்த தமிழ்த் தோன்றலாகத் திகழ்ந்தார். தெய்வத் திருப்பெயராம் வேதாசலத்தையும், மறைமலை யாகக் கண்டும் கொண்டும் தமிழ் மண்ணுக்கு வழிகாட்டியாகவும் வழி கூட்டியாகவும் விளங்கிய ஒளிப் பிழம்பு அடிகளார்! உரையும் பாட்டும் உடையோர், விசும்பின் வலவன் ஏவாவான ஊர்தியும் பெறுவர் என்பது பழந்தமிழ்ப் பாட்டனின் பாட்டு. சான்றோரால் பாடு புகழ் பெறும் மண்ணே, மாணுறுமண் என்று பாராட்டப் பட்ட காலத்தில் கிளர்ந்த பாட்டு அது. அப் பாட்டுக்குத் தக எண்ணற்ற புகழ்மணி, உரையும் பாட்டும் கொண்டு திகழ்ந்தவர் அடிகளார். அவற்றை விரித்தல் நம் ஆய்வன்று; விடுத்தலோ தோய்வன்று. உரைக்கு ஒருவர் பாட்டுக்கு ஒருவர். இருவரும் எவர்? தென்றலும் ஞாயிறும் ஆவர். தென்றல், தமிழ்த் தென்றல் திரு.வி.க. ஞாயிறு, மொழி ஞாயிறு பாவாணர். முன்னவர் உரை, வாழ்க்கைக் குறிப்பில் கண்டதும் மறைமலையடிகள் மாண்பில் கண்டதும். பின்னவர் பாட்டு, மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலரில் கொண்டது. உரை : அற்றை நக்கீரனாரும் பிற்றைச் சிவஞான முனிவரரும் ஓருருக் கொண்டு வேதாசலனாராகப் போந்து, இற்றைத் தமிழ் வளர்க்கிறார் என்று யான் அவரைச் சொல்லாலும் எழுத்தாலும் போற்றுவ துண்டு. வேதாசலனார் தமிழ் செந்தமிழ் - சங்கத்தமிழ் என்னை அவ்வாறு சொல்லவும் எழுதவும் செய்தது. இந்நாளில் சங்க நூல்களின் சுவையைத் தமிழ் நாட்டுக்கு ஊட்டிய பெருமை வேதாசலனார்க்கு உண்டு என்று அறுதியிட்டுக் கூறுவேன். அவர் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர் வடமொழியும் தெரிந்தவர் வா.கு.பக்.163 தென்னாடு பன்னெடுங்காலம் தன்னை மறந்து உறங்கியது. அவ்வுறக்கம் போக்கிய பெருமை மறைமலையடிகட்கு உண்டு. அவர் தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் ஆராய்ச்சியும் பேச்சும் எழுத்தும் தொண்டும் தென்னாட்டை விழிக்கச் செய்தன. தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும் மரமும் முழங்கும். அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுந்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியன் மாரை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள் என்று கூறல் மிகையாகாது. மறைமலையடிகள் மாண்பு - முன்னுரை பாட்டு : மறைமலையடிகள் பல்துறையாற்றற் பதிகம் 1. பேராசிரியர் நூலும் நுவல்வும் நுணங்குரையும் நன்பதிப்பும் சாலும் இதழும் சமமாக - மேலுயர்வுப் பேராசிரியர் பெரும்பேர் மறைமலையார் நேரா ருளரிந் நிலத்து. 2. பெரும் புலவர் தொல்காப் பியமுதலாந் தொன்னூலும் பின்னூலும் பல்காற் றனிப்பாடல் பட்டயமும் - ஒல்காப் பெரும்புலவ ருள்ளும் பெரியார் தனியே அரும்பொன் மறைமலை யார். 3. பாவலர் உரைநடையும் பாவும் ஒருங்கே சிறந்த விரைவுடையார்சில்லோர் வியன்பார் - மறைமலையார் செம்மைப் பொருளணிசேர் செய்யுள் திருவொற்றி மும்மணிக் கோவை முறை. 4. ஆராய்ச்சியாளர் நுண்மதி கல்வி நுடங்காத் தறுகண்மை நண்ணிலை மன்னலம் நல்வாய்மை - திண்முயற்சி சாலுமா ராய்ச்சிச் சதுரர் மறைமலையார் பாலையும் முல்லையும் பார். 5. மும்மொழிப் புலவர் மொழியும் இலக்கியமும் முத்தமி ழும்பேச் சழியும் வடமாங் கிலமும் - கழிபுலமை கொண்ட மறைமலையார் கோன்மை தமிழ்நிலமுன் கண்டதும் கேட்டது மில். 6. மொழிபெயர்ப்பாளர் வேற்று மொழியின் விரகன் விழுப்பனுவல் ஆற்று மரபும் அரும்பொருளும் - தேற்றி அடிகள் மொழிபெயர்க்கும் ஆற்றற்குச் சான்று முடிகொள்ளுஞ் சாகுந் தலம். 7. சொற்பொழிவாளர் இன்குரலும் இன்சொல்லும் இன்னிசையும் இன்கதையும் நன்பொருளும் ஏதுவுடன் நற்காட்டும் - தென்பாய்ப் பகைவரு முண்ணாது பன்னாளும் வேட்கும் வகையடிகள் சொற்பொழிவு வாய்ப்பு 8. எழுத்தாளர் கடிதமும் கட்டுரையும் கண்டனமும் கற்கும் படியெழுதும் பாடமும் பன்னூல் - நடிகதையும் மற்றோர் உரைமறுப்பும் மன்னும் பதினவரை வற்றார்மறைமலை யார். 9. பல்கலைச் செல்வர் தோற்றும் தொலையுணர்வு தூய மனவசியம் ஆற்றும் அறிதுயில் ஆர்வாழ்வு - மாற்றும் மறுமை மறைமலையார் மாணுங் கலைகள் பொறுமை யுடன்கற்ற போக்கு. 10. தனித்தமிழ் தந்தையர் மூவா யிரமாண்டு மோதும் வடமொழியாற் சாவாந் தகைநின்ற தண்டமிழை - மேவாக் குமரித் தனிநிலைக்குக் கொண்டுவந்த அப்பர் அமரர் மறைமலை யார். (அமரர் = போர் மறவர்) - மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் - பாமாலை 1-2. பொழிவுத் தலைப்பு, மறைமலையடிகளின் ஆராய்ச்சித் திறன். ஆதலால் மறைமலையடிகளைப் பற்றிய ஆய்வும் தோய்வும் உடையவர்களும், அவரால் மதித்தும் பாராட்டியும் போற்றப் பட்டவர்களுமாகிய இவர்கள் உரையும் பாட்டும் கண்ட அளவில், ஆராய்ச்சிக்குச் செல்வோம். 2. ஆராய்ச்சி ஆய்தல் என்பதற்கு ஆராய்தல், காய் முதலியவைகளைப் பிரித்தெடுத்தல், தெரிதல், தெரிந்தெடுத்தல், நுண்மை, முன்னுள்ள தனிற் சிறிதாதல், வருந்துதல், அழகமைதல், அசைதடில், சோதனை செய்தல், கொண்டாடுதல், கொய்தல், காம்பு களைதல், நுழைந்து பார்த்தல் என்னும் பதினான்கு பொருள்களை அகர முதலிகள் தருகின்றன. ஆய்தல் என்பது, பொதுமக்களும் பெருக்கமாக வழங்கும் வழக்குச் சொல். அவர்கள்நூலாய்தலைச் சுட்டாமல், காய் ஆய்தல், கீரை ஆய்தல் என வழங்குகின்றனர். அவ்வாய்தல் பொருளைச் செவ்விதின் அறிவார், இவ்வாய்தல் பொருளையும் எளிதில் இனிதில் அறிவார். காய் ஆய்தல் : கொத்தவரை என்னும் காயை, ஒடித்தல் அறுத்தல் என்று சொல்லலாமல் ஆய்தல் என்பதே நாட்டுப்புற வழக்கு. காயில் முற்றியது, பூச்சி பிடித்தது, கெட்டுப் போனது என்பவற்றை ஒதுக்கிக், கறிக்குத் தக்க பதனமைந்த காய்களைப் பறிப்பதே ஆய்தல் என வழங்கப்படுகிறதாம். பறித்தபோது ஆய்ந்தது போலப் பின்னும் ஆய்தல் உண்டு. அவ்வாய்தல், நுனி மூக்கும் அடிக்காம்பும் அகற்றுதல், முதுகு நரம்பு எடுத்தல், அளவிட்டு ஒடித்தல் என்பனவாம். பறிக்கும் போது முற்றல் முதலியன வந்துவிடினும் இவ்விரண்டாம் ஆய்வில் விலக்கப்பட்டு விடும். கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளல் ஆய்வுப் பொருளாதல் புலப்படும். கீரை ஆய்தல் : கீரை ஆய்தல் என்பது பொதுமக்கள் வழக்கே. கீரையுள் ஒருவகை அறுகீரை; அறைக் கீரை என்பது அது. பழுத்த இலை, அழுகல் இலை, பூச்சிபட்ட இலை என்பவற்றை விலக்கி, மாசு தூசு நீக்கி, நரம்பு அகற்றி நல்லன கொள்ளலே கீரை ஆய்தலாம். நாம் கருதும் ஆய்வு, ஆய்தல், ஆராய்தல், ஆராய்ச்சி என்பன வற்றை இவ்வாய்தலொடு பொருந்தக் கண்டு இருவகை வழக்கும் கைகோத்து நடையிடும் தமிழியல் மாட்சியை அறிந்து மகிழலாம். ஆய்தல் , ஆராய்தல் : திருக்குறளில் ஓரதிகாரப் பெயர் (80). நட்பு ஆராய்தல் என்பது அதில் வரும் ஒரு குறள் (729) ஆய்தலை அடுக்குகிறது. ஆய்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும் என்பது அது. தூதிலே (69) இரண்டு குறள்கள் அன்ப அறிவு ஆராய்ந்த சொல்வன்மை (682) அறிவு உரு ஆராய்நத கல்வி (684) என்கின்றன. ஆய்தலும் ஆராய்தலும் பெருக வழங்கிய வழக்குச் சொற்கள் வெளிப்படை. நாடுதல் என்பதும் ஆய்தல் பொருளே ஆதலால் குணம் நாடிக் குற்றமும் நாடி என்றும் (திருக், 504) நோய் நாடி நோய்முதல் நாடி என்றும் (திருக், 948) பெருவழக்காயின. இனி, ஆய்தலுக்கும் வேறுபாடு உண்டோ எனின் நுண்ணிதாக உண்டு என்பதாம். ஆர் என்பது அது. ஆர் என்பது அருமைப் பொருளது. ஆய்ந்ததை மேலும் நுணுகி ஆய்தல், ஒருமுறைக்குப் பன்முறையாய் ஆய்தல் ஆராய்தலாம். ஆய்வு என்பதற்கு நுண்மைப் பொருள் உண்டோ எனின் எழுத்துகள் அனைத்தினும் நுண்ணிய ஒலியுடைய எழுத்து ஆய்த எழுத்தே என்பதை எழுத்தியல் அறிந்தார் எவரோ அறியார்? ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் என்பது தொல்காப்பியம் (சொல். உரி. 32) ஆய்தத்திற்கு ஆஃகன்னா, அஃனேம் என்பவும் பெயர்கள். அவற்றிலுள்ள அஃகு என்பது நுண்மை அல்லது நுணுக்கப் பொருள் உடையதாதலை, அஃகி அகன்ற அறிவு நுண்மாண்நுழைபுலம் என்னும் குறளாட்சிகளால் (175, 407) தெளியலாம். மாசு நீக்கி மணியாக்கல் போலக், காணுதற்கரிய நுணுக்கங் களைக் கண்டுரைத்தல் ஆராய்ச்சி என்பதன் பொருளதாதல் இச்சொல் வழியால் நாம் அறிந்து கொள்ளத் தக்கதாம். ஆய்வு என்பது எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் நம் முந்தையர் அறுதியிட்டுள்ளனர். ஆய்வுக்கு இன்றியமையாத் தலைமைப் பண்பு நடுவு நிலைமையாகும். முறை மன்றங்களில் முறைமைக்கு இலக்கணமாகக் கொள்ளப்பட்டுள்ள சமன்கோல், பழந்தமிழர் கொண்ட நடுவுநிலைச் சான்று என்பதைச், சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்னும் வாய்மொழி வழியே நாம் அறியலாம். இன்னதொரு சான்று நுகக் கோல் நடுவாணியுமாம் என்பதை நா அறிவோம். அதனைக், கொடுமேழி நசையழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் என்ற பட்டினப்பாலை பாடும் (205-7) ஒன்றை விருப்போடு பார்த்தலும், ஒன்றை வெறுப்போடு பார்த்தலும் நடுவு நிலைப் பார்வை ஆகாது என்பதை, வாரம் பட்டுழித் தீ யவும் நல்லவாம் தீ ரக் காய்ந்துழி நல்லவும் தீ யவாம் என்று சிந்தாமணி உரைக்கும் (888) செவ்விதின் ஆயும் முறை இன்னது என்பதைக் காய்தல் உவத்தல் அகற்றி ஒரு பொருட்கள் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன்கண் உற்ற குண்ம் தோன்றா தாகும் உவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும் என்று அறநெறிச் சாரம் அறிவுறுத்தும் (42) முழுதுறு வாழ்வையும் பழுதறும் ஆய்வுக்கே பயன்படுத்திய அடிகளார், அவ்வாய்வுக்கு மூலப் பொருளை இளந்தைப் பருவ முதலே தேடிக் கொண்டதையும் அவர் நூலாய்ந்த முறையையும் மேலே காணலாம். 3. அடிகளார் பயின்ற நூல்களும் பயின்ற முறையும் அடிகளார் ஒன்பதாம் வகுப்பளவே பள்ளிக் கல்வி பெற வாய்த்தது. அதன் பின் தனிக் கல்வி கற்கவே வாய்த்தது, பொத்தக வாணிகர் நாராயணசாமி என்பார் அறிவறிந்த புலமைத் தொடர்பு அடிகளார்க்குக் காலத்தால் வாய்த்த பேறு ஆயிற்று. தம் பதினைந்தாம் அகவை முதல் இருப்பத்தோராம் அகவைக்குள் கற்ற நூல்கள் இவை என்பதை அடிகளார் தாம் இயற்றிய திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியம் திருக்குறள் சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம். கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடி முதலிய நூல்களிற் பெரும் பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன. சிவஞான போதம் சிவஞான சித்தியார் என்னும் நூல்கள் இரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப் பட்டுள்ளன. இவையேயன்றி நன்னூல் விருத்தி, இறையனார் அகப்பொருள் உரை. தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப் பட்டனவாகும். கல்லாடம், சீவக சிந்தாமணி, பெரிய புராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட் சுவைகளில் பெரிதும் மூழ்கியிருந்தும் அவற்றிலிருந்து எடுத்துப் பாடஞ் செய்த செய்யுட்கள் மிகுதியாய் இல்லை, என்றாலும் அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக விழுமிய தமிழ்ப் பழநூல்களில் எமது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப் பருவத்திலேயே எமக்கு வாய்ப்பதாயிற்று என்கிறார். அடிகளார் 15.6.18876 இல் பிறந்தார், அவர்க்கு இருபத்தோராம் அகவை என்பது 1897 ஆம் ஆண்டு அந்த ஆண்டுகள் தொல்காப்பியம் (1847. 1868. 1885) சிலப்பதிகாரம் (1880) சிந்தாமணி (1887) கலித்தொகை (1887) பத்துப்பாட்டு (1889) மணிமேகலை (1894) புறநானூறு (1894) என்பவை அச்சில் வெளிப்பட்டிருந்தன, திருக்குறள் மூலம் 1812 ஆம் ஆண்டிலும். உரைப்பதிப்பு 1830 ஆம் ஆண்டிலும் வெளிப்பட்டன, இந் நூல்களையெல்லாம் அடிகளார் கற்றுத் தெளிய மனங் கொள்ளவும் வாய்ந்தன, ஐங்குறுநூறு. அகநானூறு, பதிற்றுப் பத்து, நற்றிணை, குறுந்தொகை, பரிபாடல்ஆகிய நூல்கள் 1903 முதல் 1918 ஆம் ஆண்டுகளுக்குள் வெளிவந்தவை. ஆகலின் இவை அடிகளார் தம் இளந்தைப் பருவக் கல்வி நூல்களுள் இடம் பெற்றில, இவற்றைப் பின்னே கற்றார் என்று கொள்ளுதல் முறையாம். அடிகளார் தம் ஆய்வுக்கெனத் தொகுத்து வைத்த நூல் தொகுதிகள் எத்தகையவை என்பதையும் அற்றை அடிகளார் பயன்படுத்திய வகையையும் 24.8.58 இல் சென்னை இலிங்கித் தெருவில் மறைமலையடிகள் நூலகத் திறப்பு விழாவில் நூலக இயக்குநர் முனைவர்திரு. அரங்கநாதனார் எடுத்துரைத்தார். அடிகளார் நூல்களையெல்லாம் முற்கால ஊழிகளின் காலங்கடந்த மதிப்புடைய கருத்துகளின் திருவுருக்கள் என்றே கருதினார். அவற்றை அந்நிலையிலே பயன்படுத்துவதற்கு அவர் விதிர்விதிப்புக் கொண்டார். தாம் பயன்படுத்தியதன் பின், அவர் இதனைச் சேர்த்துத் தொகுத்து வைத்த சபரியின் செயலையே நினைவூட்டுவதாகும், சீராமன் இலக்குமணன் ஆகியவர்கள் சேவையில் ஈடுபட்டு அவர்களுக்கு அளிப்பதற்காகவே சபரி அவற்றைத் தொகுப்பைத் திரட்டியதும் இதுபோலப் பொதுமக்கள் சேவையை உளத்தில் கொண்டேதான் என்பது குறிப்பிடத்தக்கது. அடிகள் ஏடுகளைத் திரட்டிச் சேர்த்தவைக் கடவுளின் திருவுணவுக்காகக் கண்ணப்பர் உணவு தேர்ந்தெடுத்துச் சேர்த்த முறையை ஒப்பதாகும். முதலில் தாம் தின்று சுவை பார்த்துக் கடவுளுக்கு ஏற்றதென்று கருதாத எதனையும் கண்ணப்பர் கடவுளுக்குப் படைக்க முன் வந்ததில்லை, மறைமலையடிகள் செயலும் இதுபோன்றதே. தொகுதியில் உள்ள நூல்களில் அவர் முற்ற முழுக்க வாசிக்காதது, வாசித்து, இது மக்களுக்கு அளிக்கும் தகுதியுடையது என்று அவர் தேர்ந்தெடுக்காதது, ஒன்று கூடக் கிடையாது, ஏடுகள் ஒவ்வொன்றுக்கும் அவர் தனித்தனியாக அட்டை உறை இட்டுத் தூசிபடாமல் உன்னிப்பாகக் காத்து வைத்த முறையையும், ஏடுகள் ஒவ்வொன்றையும் வரிவரியாக முழுதும் வாசித்துப் பயன்படுத்திய பின்னும் புத்தம் புதியன போல அவற்றைப் பேணிய வகையையும் காண்போர் வியப்படையாமல் இருக்க முடியாது, ஏடுகளை அவர் வருங்காலப் பொதுமக்கள் பயனீடு நோக்கியே பேணி வைத்திருந்தார் என்பதற்குச் சான்றுகள் தேவைப்படுமானால், அதற்கு இஃது ஒன்றே போதியது ஆகும் புத்தகங்கள் பயனீட்டுக்கே உரியவை என்னும் எனது நூலகத் துறையின் முதல் ஒழுங்கை அடிகள் தம் நோக்கத்தில் அன்றே கொண்டிருந்தார் என்பது தெளிவு என்கிறார். - மறைமலையடிகள் நூல்நிலையம் 20 ஆம் ஆண்டு விழாமலர் 1-2. தொகுப்பு : அடிகளார் தொகுத்து வைத்த நூல்கள் ஏறத்தாழ நாலாயிரம் ஆகும். அவற்றுள் ஏறத்தாழ மூவாயிரம் நூல்கள் பல்வேறு துறைப்பட்ட ஆங்கில நூல்கள். எஞ்சியவை மிக அரியவையான தமிழ் நூல்களும் வடமொழி நூல்களுமாம், வெளிநாட்டில் வெளிப்பட்ட நூல்களை அரிதின் முயன்று தொகுத்தான். பிழைதிருத்தல் ஒரு நூலை ஓதத் தொடங்குமுன் அந்நூலில் பிழைதிருத்தப்பட்டி இருக்குமானால் அதனைக் கண்டு அதில் குறித்தவாறு பிழை திருத்தம் செய்து கொண்ட பின்னரே ஓதுவதை முறையாக நூலில் இடம் பெற்றிருப்பின் அவற்றையும் குறித்தார். ஓதுதல் நாள் தவறாமல் குறித்த நேரங்களில் நூல் ஓதுதலை அடிகளார் சிக்கெனக் கடைபிடித்து வந்தார், விழுப்புண் படாத நாள் வீண் நாள் என வீரர்கள் கருதுவது போலவும் பெரியனைப் பேசாத நாளெல்லாம்பிறவா நாளே என அடிகளார் பேசுவது போலவும், ஓதா நாளெல்லாம் ஒழிந்த நாள் எனக் கொண்டு கற்றவர் அடிகளார். மன அமைதி இன்மையைப் புத்தகங்களைப் படிப்பதால் போக்கிக் கொள்வேன் படியாமல் ஒரு நாளைக் கழிப்பது பேரிழப்பாகும் இன்று பகல் முழுதும் ஓய்வாக இருந்தேன் ஆனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கவே விரும்புகிறேன். தாம் இன்றுவதற்கும் மெய்யறிவு பெறுவதற்கும் இல்லாமல் தம்மைச் சார்ந்த மக்கள் அறிவு பெறச் செய்தற்கும் அவர்கள் சிறப்புற வாழ்தற்கும் படியாமல் எதற்காக வறிதே ஓய்வாக இருப்பது? இவை அடிகளார் தம் நாட்குறிப்பில் பொறித்துள்ள சில நன்மணிகள். இவற்றால் அடிகளார் கொண்டிருந்த கல்விக் காதல் விளக்கமாகும். நூல் எடுத்தலும் முடித்தலும் : ஓதுதற்கு எடுக்கப்படும் நூல் இன்ன நாளில் எடுக்கப் பட்டது என்றும் இன்ன நாளில் முடிக்கப்பட்டது என்றும் நாட்குறிப்பிலோ நூல்களிலோ குறிப்பது அடிகளார் வழக்கம். ஏலாதி படித்து முடிக்கப்பட்டது. ஆசாரக் கோவை படிக்க எடுக்கப்பட்டது என்பது ஒருநாளில் எழுதிய குறிப்பு. ஐந்திணை ஐம்பது படிக்க எடுக்கப்பட்டது என்பது மற்றொருநாளில் எழுதிய குறிப்பு. யாழ்ப்பாணத்து வண்ணை நகர் சுவாமிநாதபண்டிதல் 1911 ஆம் ஆண்டில் தேவாரத் திருமுறையைப் பதிப்பித்தார். அப்பதிப்பில் ஒரு நூலை இது பதிப்பாசிரியாரால் சுவாமி வேதாசலம் அவர்களுக்குக் கையுறையாக அனுப்பப்பட்டது. 25.2.1912 என்று எழுதியனுப்பியுள்ளார். அதனை ஓதி முடித்த அடிகளார் அந்நூலின் இறுதியில் நீண்ட காலமாக ஓதி வந்த இத்தெய்வத் தமிழ்த் திருமறை சாலி 1849 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 3 ஆம் நாள் முடிக்கப்பட்டது. மறைமலையடிகள் 18 ஆம் நாள் டிசம்பர் 1920 ஏ.டி. எனப் பொறித்துள்ளார். கோடும் குறியும் : நினைவு கொள்ளத்தக்க சொல்லோ சொற்றொடரோ காணப்பட்டால் அவற்றின் கீழ் அடிக்கோடு இடுதலும் பக்கக் கோடு போடுதலும் அடிகளார் வழக்கமாகும். ஐயுறத் தக்க கருத்துக்களோ மறுதலையான கருத்துக்களோ காணப்பெற்றால் அவ்விடங்களில் வினாக்குறி இடுவார். அச்சுப் பிழைகள் உளவாயின் அச்சு மெய்ப்பைத் திருத்துமாறு இடப்படும் குறியீடுகளை இடுவார். ஒப்புமை சுட்டல் : பயிலும் நூல்கருத்துக்கு ஒத்த கருத்து வேறு நூலில் காணப்படுமாயின் அதனை ஆங்குக் குறித்து வைப்பது அடிகளாரின் வழக்கமாகும். இயல்பாய ஈசனை என்னும் திருக்கழிப்பாலைத் தேவாரத்தில் வரும் மயலாய மாயக் குரம்பை என்னும் தொடருக்கு மலமாக் குரம்பை திருவாசகம் எனக் குறித்துள்ளார். முன்னமிரு மூன்று சமயங்களவையாகி என்னும் திருப்பு கலித் தேவாரத்தில் இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை என்னும் திருவாசகப் பகுதியைக் காட்டியுள்ளார். இவ்வாறே அரிதாக வழங்கும் சொல்லுக்கு ஒப்புமை காட்டலும் அடிகளார் வழக்காகும். குறுந்தொகை 15 ஆம் பாடல் விளக்கவுரையில் (உ.வே.சா. பதிப்பு) கல்யாணம் என்ற சொல்லைச் சுட்டி இச்சொல் நாலடியாரில் வந்தது காண்க என்று குறிக்கிறார். வரலாறு சுட்டல் : நாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு, புலவர் வரலாறு முதலிய வரலாற்றுக் குறிப்புகள் காணும் இடங்களில் “Historical” எனக் குறிப்பிடுகிறார். இன்னும் “Historical fact” என்றும் கூறுகிறார். வெண்ணிப் பறந்தலைப் போரை (புறம். 66) “Refers to a great historical war” எனக் குறித்துள்ளார். இக்குறிப்புகள் வரலாற்றுத் தொகுப்புக்கு உதவுதல் ஒருதலை. காலம் காட்டல் : இப்பாடல் இக்காலத்துப் பாடப்பட்டது என்றும், இப்புலவர் இவர் காலத்துக்கு முற்பட்டவர் என்றும், இன்னவாறு காலநிலை சுட்டுதல் அடிகளார் படித்த நூல்களில் காணக் கிடக்கும் குறிப்புகளுள் ஒன்றாம். வடாஅது பனிபடு நெடுவரை (6) பாணர் தாமரை (12) கடுந்தேர் குழித்த (15) நல்யாழ் ஆகுளி (64) என்னும் புறப்பாடல்களில் இது குமரி நாடு கடல் கொள்ளப் படுமுன் பாடப்பட்டது என்னும், குறிப்புகள் உள்ளன. ஆவும் ஆனியல் என்னும் பாடலில் (9) இப்பாட்டு பஃறுளியாறு கடல் கொள்ளுவதற்கு முன் பாடப்பட்டது என்னும் குறிப்பு உள்ளது. இவ்வாறே மார்க்கண்டேயனார் (365) கோதமனார் (36) பாடிய புறப்பாடல்களில் “This was Composed in 3000 B.C.” என்னும் குறிப்புளது. இனி, ஒகர முதன்மொழி தொல்காப்பியர் கூறாமையின் அவர் இவர்க்கு (காரி கிழார்க்கு) முற்பட்டவர் என்றுணர்க என்று குறிப்பிடப்பட்டிருப்பதும் (புறம்.6), சகர முதன்மொழி தொல்காப்பியர் சொல்லியற்றிலர் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதும் (புறம். 365) புறாநானூற்று உரையாசிரியரை “The Commentator was Posterior to Chintamani” என்று குறிப்பிட்டிருப்பதும் அரிய கால ஆராய்ச்சிக் குறிப்புகளாம். இது பெற்றாம் எனல் : செய்யுளில் வரும் குறிப்புக் கொண்டு இதனால் இது பெற்றாம் என்று ஒரு வாய்பாட்டு நெறியில் குறிப்பிடல் அடிகளார் வழக்கமாகும். தெற்கின் கண்ணது உட்கும் திறம் பொருந்திய கன்னியாற்றின் தெற்கும் என்னும் உரைப்பகுதியில் (புறம். 6) இதனால் குமரியாறு உண்மை பெற்றாம் என்றும், பதினைந்தாம் புறப்பாடலில் பஃறுளியாறு கடல் கொள்ளப் படுமுன்னரே வேள்வி வேட்டல் உண்மை பெற்றாம் என்றும், ஐம்பத்தாறாம் புறப்பாடலில்சிவபிரான் முதற்கட் கூறப்பட்டிருத்தலின் இவனே முழுமுதற் கடவுள் என்பது பெற்றாம் என்றும், தொண்ணூற்று மூன்றாம் புறப்பாடலில், தமிழ் மறைகள் அறத்தையே கூறும் என்பது பெற்றாம் என்றும், மாணிபால் என்னும் அப்பர்தேவாரத்தில் செம் பொன்னோடு வேய்ந்தமை அப்பர் காலத்திலேயே உண்மை பெற்றாம் என்றும் இன்னவாறு குறிப்புகள் உள. இயற்கையை வியத்தல் : இயற்கை எழிலில் பெருநாட்டங் கொண்ட அடிகளார், செய்யுளில் வரும் இயற்கைப் புனைவுகளில் தோய்ந்து தோய்ந்து உள்ளூறிய சுவையை அள்ளூறி வியந்து பாராட்டுகிறார். அவ்வவ் விடங்களில் “Quite natural” என்றும், “Natural Discription” என்றும், “Fine Natural Discription” என்றும், “Observation of Nature” என்றும் வரைகிறார். வல்வில் ஓரி ஏவிய அம்பு வேழத்தையும் வேங்கையையும் மானையும் பன்றியையும் முறையே வீழ்த்தி உடும் பொடுபட்டுத் தங்கியமையை “Natural hyper bole skill in Archer” என்று நயந்து பாராட்டுகிறார். அதன் அடிக்குறிப்பில் அலையுருவ வெய்ய வாளியை ஏழு மாமரம் எனக் காட்டப் பட்டுள்ள கம்பராமாயணப் பாடல்களை “Unnatural berbole” எனக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்புகளால் இயற்கையை அடிகளார் நெறி திறம்பா முறையில் நோக்கிய நோக்குத் தெளிவாம். நலம் பாராட்டல் : புலவர்களின் பெருமித உணர்வையோ, பிறர்க்கு இல்லாத மேம்பாட்டையோ, ஒப்புயர்வில்லாப் பொருளமைந்த செய்யுளையோ, தாங்குதற்கு அரிய அல்லலையோ பயிலும் போது அவற்றில் தம்மை இழந்து வயப்பட்டு அவற்றின் நலங்களைப் பாராட்டி வரைகிறார் அடிகள். இம்முருகியல் தனிப்பெருஞ் சிறப்பினதாம். சோழன் நலங்கிள்ளி ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார் பாடினார். அப்பாட்டில், “Very bold request of a poet” என வரைகின்றார். சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனைக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தான் என்று கொல்லப் புக்குழிக் கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்ட பாட்டில், “The honesty of the gold poet” என வரைகிறார். துறையூர் ஓடைகிழார் பாட்டையும் (புறம், 139) பெருஞ்சித்திரனார் பாட்டையும் படித்து உருகி நைந்து “Extreme poverty of the pet” என வரைகின்றார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் புறப்பாட்டையும் (192) நம்பொருள் நம்மக்கள் என்னும் தேவாரப் பாட்டையும் முறையே மிக உயர்ந்த கொள்கை வாய்ந்த பாட்டு என்றும். “High Moral teaching” என்றும் வரைகின்றார். ஊர்க்குறு மாக்கள் என்னும் ஔவையார் பாடலையும், மைம்மீன் புகையினும் என்னும் கபிலர் பாடலையும் பயின்று, “Very fine Picture” என்றும் “Fine Picture” என்றும் குறிக்கிறார். இத்தகு குறிப்புகள் திறமான பாடல்களைத் தேர்ந்து தொகை செய்யப் பெருந்துணையாம். அணிநலம் பாராட்டல் : உவமை முதலிய அணிநலங்கள் செய்யுளில் இடம் பெற்றிருக்கும் எனின் அவற்றைத் தனித்தனி தரங்கண்டு தனித்தனி அடைமொழி நடையிட அடிகளார் பாராட்டுகிறார். எங்கும் பொதுவாகக் காணக் கிடைக்கும் உவமையை ‘Simile’ என்ற அளவில் குறிக்கிறார். தனிச்சிறப்புடையவற்றை அழகிய உவமை எனவும் “Apt simile”, “Fine simile”, “Vivid Simile”, “Natural simile”, “Striking simile from nature”, “High spiritual simile”, “Raresimile” என்று தக்காங்கு உரைக்கிறார். ஒருதாய் தன் இனிய மகவைக் கொஞ்சிக் கொஞ்சிப் பாராட்டி மகிழ்வதுபோல் உவமையை அடிகளார் கொஞ்சுகிறார். இலக்கணம் இயம்பல் : இலக்கண அருமை இலங்கும் இடங்களில் மிக அரிதான வற்றைச் சுருங்க வரைந்து செல்கிறார் அடிகளார். அருந்தே மாந்த என்பதில், பெயரெச்சத்துக்கு ஈற்றகரம் தொக்கது என்றும் காண்கு வந்திசின் என்பதில் ,சின் தன்மை இடத்தில் வந்தது எனவும் வெலீஇயோன் என்பதில் அளபெடை பிறவினைப் பொருள் தர வந்தது எனவும் உரைத்திசின் என்பதில் இசின் முன்னிலைக்கண் வந்தது எனவும் வரைகின்றார். மேலும் உரையில் இலக்கணக் குறிப்புள்ள இடங்களில் தக்க எடுத்துக்காட்டுக் காட்டுவதும் அடிகளுக்கு இயல்பாகும். னகர வீற்றுச் சொல் வேற்றுமைக்கண் அம்முப் பெற்று நிற்கும் என்றும் குறிப்பிற்குக் கான் என்பதை எடுத்துக் காட்டுகிறார். கானம் என ஆகுமன்றோ. சொல்லாய்வு : சொல்லாராய்ச்சியில் தலை நின்றவர் அடிகளார். தங்கத்தின் மாற்றை உராய்ந்து காண்பார் போலச் சொல்லையும் சொல்மூலத்தையும் ஆய்ந்து கண்ட ஆசிரியர் அடிகளார். தாம் ஆயும் நூல்களில் வரும் தமிழ்ச் சொல், வடசொல், திசைச் சொல் ஆகியவற்றை எண்ணிக் கணக்குப் போட்டுக் காட்டியவர் அவர். ஆதலால் அவர் பயின்ற நூல்களின் உள்ள சொல்லாய்வுக் குறிப்புகள் மிகப் பலவாம். இது தமிழ்ச் சொல், இது வடசொல் எனக் காட்டுவதை அன்றி, ஆங்கிலச் சொல் முதலியவற்றுக்குத் தக்க தமிழ்ச் சொல் உண்டாயின் அவற்றையும் சுட்டுகிறார். உருள் என்னும் சொல்லை ‘Wheel’ என்பதற்கு ஏற்றதாகக் குறிக்கிறார். வானவூர்தி என்னும் சொல்லுக்கு “Aeroplane” என்று குறிக்கிறார். சொல்வகை காட்டுவதுடன் அரிய சொற்களுக்குப் பொருளும் எழுதுகிறார். உரை இ - உலவி; சுரை - உட்டுளை; வங்க - வளைய; தொன்றி தெற்கு - இன்னவை பல. சொற்றொடர் விளக்கமும் ஆங்காங்குக் குறிப்பிடுகிறார் : வழி முடக்கு மாவின் பாய்ச்சல் என்பதற்குக் கோமுத்திரி என விளக்கம் காட்டுகிறார். நரந்தை நறும்புல் என்னும் தொடர்க்கு நறுமணம் வாய்ந்த புல்லும் நரந்தை எனப் பெயர் பெறும் என விளக்கம் தருகிறார். பிணர் - நால்வகை ஊறுகளுள் ஒன்று; இதனை ஜர்ஜ்ஜரா என்பர் வடமொழியாளர்; அது தமிழில சருச்சரை என வழங்கும், இக்காலத்தில் சுரசுரப் பென்பதும் அது என்னும் விளக்க வுரையில் (குறுந். 13) ஏன் இச் சொல்லில் (சருச்சரை) இருந்து (ஜர்ஜ்ஜரா) வந்த தாகாது? என வினாவுகிறார். இச்சொல் இவ்வாறு திரிந்தது எனக் காட்டுவதுடன் ஐயுறத் தக்கதாயின போலும் என்னும் வாய்பாடு பொருந்த அமைக்கிறார். பக்கம் - பக்கு எனத் திரிந்தது. அயங்கு - அசங்கு என்பது அயங்கு என்றாயிற்றுப் போலும் என்பவை இவ்வகைக் குறிப்புகளாம். வழக்குச் சொல், அரிய வழக்குச் சொல் என்பவற்றையும் அடிகளார் ஆங்காங்குச் சுட்டுகிறார். பெண்டாட்டி - வழக்குச் சொல். யாரளோ Rare; கொடுக்குவர் - அரிய வழக்கு, நற்கு - Rare Use என்பவ இவற்றுக்குச் சான்றாவன. பிரித்துக் காட்டலும் இயைத்துக் கூட்டலும் : சில அருஞ்சொற்களைப் பிரித்துக் காட்டி விளக்கம் புரிகிறார் அடிகளார். அவ்வாறு பிரித்துக் காட்டுதல் பொருள் விளக்கத்திற்கு இன்றியமையாமை உடையதாம். போணிலா என்பதைப் போழ் நிலா என்றும், எட்டனை என்பதை எள்தனை என்றும் பிரித்துக் காட்டுகிறார். கொட்ட முழவிட்ட வடிவட்டணைகள் கட்ட என்னும் தேவாரத் தொடரை, முழவொலிக்கு இசைய இட்ட அடிகள் தாங்கட்ட என்க என எழுதி இயைத்துக் காட்டுகிறார். வைப்பு முறை கூறல் : அடிகளார் தம் சொற்பொழிவில், பொழிவு நிறைவில் சொன்னவற்றைத் தொகுத்துக் கூறுதலை ஒரு நெறியாகக் கொண்டிருந்தார். அம்முறையைக் கட்டுரைகளிலும், நூல்களிலும் மேற்கொண்டார். அதன் சுவடு அவர் பயின்ற நூல்களிலும் காண வாய்கின்றது. திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகங்களைக் கற்ற அவர், எட்டாஞ் செய்யுட்கடோறும் இராவணனை ஒறுத்தருளினமை கூறுவர், ஒன்பதாஞ் செய்யுட்கடோறும் திருமால் நான்முகன் என்பார்க் கெட்டாத நிலை கூறுவர்: பத்தாம் பாட்டுக்கடோறும் அமணரைப் பழிப்பர் என்று கூறுவது வைப்பு முறை கூறலாம். இன்னவையே யன்றிப் பிற வகையாலும் பகுத்து ஆராயும் வகையில் அவர்தம் நூல்பயில் குறிப்புகள் உள. காலமெல்லாம் கற்றுக் கொண்டே இருத்தல் ஆசிரியர்க்கும் ஆய்வாளர்க்கும் இன்றியமையாதது. இவ் வகையில் அடிகளார் தேடிக் கொண்ட அறிவுப் பரப்பு பெரிதாம். அவர்தம் நாட்குறிப்பில் காணப்பெறும் சில குறிப்புகள் அதற்குச் சான்றாவன : 7.1.1899 குர் - ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துக்களை இந்துத்தானி முன்சி வாயிலாக அறிந்து கொண்டேன். 3.3.1900 இராமகிருட்டிணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன். 30.8.1900 பேராசிரியர் மாக்சு மூலரின் Comparative Philology படித்தேன். 25.3.1901 உபநிடதங்கள் வாடகை நூலகத்தில் இருந்து பெற்றேன். 22.12.1901 விவேகானந்தரின் பக்தியோகம் கர்மயோகம், ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன். 5.5.1905 பாலகங்காதர திலகரின் வேதம் பற்றிய நூலைப் படிக்கத் தொடங்கினேன். 27.11.1907 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்கு நம் தமிழ்ச் சைவர் கடப்பாடுடையர். 6.8.1910 விவேகானந்தரின் கர்மயோகம் என்னும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு கருத்துக் களைத் தவிர விவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன. இவை அடிகளார் தாம்பரம் கிறித்தவக் கல்லூரிப் பேராசிரியராக இருந்த காலத்தில் வரைந்த குறிப்புகளுள் சில. அடிகளார் பயின்ற நூல்களும் அவற்றைப் பயின்ற முறையும் பற்றி அவரே வரைந்த குறிப்புகளின் சிறு தொகுப்பு ஈதாம். ஆய்வியல் நெறிமுறை பற்றியும் அடிகளார் ஆங்காங்குச் சுட்டிக் காட்டியுள்ளதை அடுத்துக் காணலாம். 4. அடிகளார் காட்டும் ஆய்வியல் நெறிமுறைகள் அடிகளார் இயற்றிய அரிய பெரிய நூல் மாணிக் வாசகர் வரலாறும் காலமும் என்பது. அதில் தாம் மேற்கொண்ட ஆராய்ச்சி முறைகளை முகவுரையிலே விரிவாக வரைந்துள்ளார். இடை இடையும் இயம்புகின்றார். அவ்வாறே பட்டினப்பாலை முல்லைப்பாட்டு ஆகிய ஆய்வுரை முகப்புகளிலும் சுட்டுகிறார். அவர் தம் ஆய்வு நெறிமுறைகள் மேலை நாட்டவர் ஆய்வு நெறிகளை ஒப்பதுடன், தமிழின் தனித்தன்மை, தமிழர் தொல்பெரும் பண்பாட்டியல் நாகரிகம்என்பவற்றுடன் பின்னிப் பிணைந்து பிறங்கியவை என்பதைக் கண்டு கொள்ளல் தமிழ் ஆய்வாளர்க்கு நல்வழி காட்டியாம். ஆராய்ச்சி முறை : இந்நூல் எழுதுதற்குக் கைக் கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முறைகள் சிலவற்றைப் பற்றிச் சில கூற வேண்டுவது இன்றியமையாததாகின்றது என்று அவரே திட்டப்படுத்திக் கொண்டு எழுதுகின்றார். மாணிக்கவாசகர் வரலாற்றுக் குறிப்புகளிற் பல, அவ்வரலாறு நுவலும் நூல்களில் உள்ளபடியே இங்கு எடுத்து எழுதப்படவில்லை. ஏனென்றால், அக்குறிப்புகளிற் பல ஒரு புராணத்திற் காணப்பட்டபடியே மற்றொரு புராணத்திற் காணப்படவில்லை. ஒன்றுக் கொன்று முரணாகவே காணப்படுகின்றன; வேறுசில ஒரு புராணத்திலின்றி மற்றொரு புராணத்தில் மட்டும் காணப்படுகின்றன. அம்மாறுபாடுகளும் பிறவும் இந்நூலின்கண் ஆங்காங்கு எடுத்துக் காட்டி அவற்றுள் கொள்ளற் பாலன இவை. தள்ளற்பாலன இவையென்பதை நன்கு விளக்கிக் காட்டியிருக்கின்றேம். இவ்வாறு காட்டும் இடங்களிலெல்லாம் திருவாசகச் செந்தமிழ்ப் பாக்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சான்றுரைகள், அடிகளின் உண்மை வரலாற்றுக் குறிப்புகள் இவையென்று நாட்டுதற்கு உதவியாகக் காட்டப் பட்டிருக்கின்றன. இறைவனை வாழ்த்திப் பாடுஞ் செய்யுட்களில் அடிகள் தம் வரலாற்றுக் குறிப்புகளைத் தம் வயமின்றியே மொழிந்து விடுமாறு நேர்வித்த சிவபிரான் திருவருட்கு எங்ஙனம் நன்றி பகர வல்லேம். அடிகளின் வரலாற்றுக் குறிப்புகளைத் திருவாசகம் திருக்கோவையாரிற் காணப்படும் குறிப்புகளுடன் வைத்து ஒத்து நோக்கி அவை தம்மை எழுதியிருந்தனராயின் புராணக்காரர்கள் அங்ஙனம் தம்முள் மாறுகொண்டுரையார். புராணகாரர் உரைகளில் மாறுகோள் கண்டவழியும், அவற்றுட் காணப்படாத குறிப்புகளை ஆராய்ந்து கண்டு எழுதுகின்றுழியும், திருவாசகம் திருக்கோவையாரின் இடைமிளிரும் வரலாற்றுக் குறிப்புகளே அடிகளின் வரலாற்றுண்மையினைத் துணிதற்குக் கருவிகள் ஆயின. இவ்வாறாக ஓர் ஆசிரியரின் உண்மை நிலையைத் துணிதற்கு அவர் இயற்றிய நூல்களிலுள்ள சொற்பொருட் குறிப்புகளையே பெருந்துணையாய்க் கொள்ளும் ஆராய்ச்சி முறை இந்நூன் முழுவதும் ஊடுருவி நிற்றல் கண்டு கொள்க. அடிகளின் வரலாறு கிளக்கும் பகுதியில் இம்முறை மிக்கு நிற்றல் தெற்றெனப் புலனாம் என்கிறார். கால ஆராய்ச்சி : இனிக் கால ஆராய்ச்சியின் இன்றியமையாமையையும் அடிகளார் நன்கு விளக்குகிறார். அடிகள் இருந்த காலமும் அக்கால நிலையும் உண்மையாக விளங்கினாலன்றி, அவரது வரலாற்றின் உண்மையும், அவர் அருளிச் செய்த நூல்களின் உண்மையும், அவற்றின் வாயிலாக அறிய வேண்டி நிற்கும் முற்காலப் பிற்கால நூல்களின் உண்மையும், சைவம் வைணவம் பௌத்தம் சமணம் மாயாவாதம் முதலான சமயங்களின் உண்மையும், அவ்வச் சமயங்களில் காலங்கள் தோறும் புகுந்த புராணக் கதைகளின் உண்மையும், அவ்வக் காலங்களில் தமிழ்மொழி தனித்தமிழும் கலப்புத் தமிழுமாய் நின்ற உண்மையும், அவ்வக் காலங்களில் திரிபெய்தி வந்த ஒழுக்கங்களின் உண்மையும், பிறவும் உள்ளவாறு அறிதல் இயலாது. நூல்களின் காலவரையறை தெரியாத வரையிற் பழையது புதியதாகவும், புதியது பழையதாகவும், மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் முன்னிருந்த ஆசிரியர்பின்னிருந்த வராகவும், பின்னிருந்தவர் முன்னிருந்தவராகவும் கொள்ளப்பட்டு உண்மை சிறிதும் விளங்காமற் பெரியதொரு தலைதடுமாற்றமே தலைவிரித்தாடும். கால ஆராய்ச்சி செய்து அவ்வக் கால நிலைகளையும் அவ்வக் காலத்திருந்த ஆசிரியர் நிலைகளையும் உணராமை யினாற்றான், நம் நாட்டவர்கள் பொய்க் கதைகளிலும் பொய்த் தெய்வ வணக்கங்களிலும் போலியாசிரியர் மருளுரைகளிலும் வீழ்ந்து மயங்கி உண்மையறிவு வாயாதவர்களாய், அதனாற்றம் பிறவியைப் புனிதப்படுத்தும் வழிவகைகள் தெரியாதவர்களாய், அறிவும் ஆற்றலும் இன்றித் தம்முட் பகையும் பொறாமையும் கொண்டு நோயிலும் வறுமையிலும் உழன்று, தீவினைக்காளாகி மங்கி மடிந்து போகின்றனர். எனவே இம்மக்கட் பிறவியைத் தெய்வப் பிறவி ஆக்குதற்கு இன்றியமையாத கருவியாய் மேம்பட்டு விளங்குவது கால ஆராய்ச்சியால் உரங்கொண்டு துலங்கும் மெய்யறிவு விளக்கமேயாம். இத்துணைச் சிறந்த கால ஆராய்ச்சி முறை இத்தமிழ் நாட்டகத்திலுள்ள அறிஞர் எவராலும் ஒழுங்காகக் கடைப் பிடிக்கப்பட்டு நம் தமிழ் மொழிக்கண் உள்ள எந்த நூலிலும் இதுகாறும் விரிவாகக் காட்டப்படாமையின் மாணிக்கவாசகர் வரலாற்றினும் மாணிக்க வாசகர் காலம் எம்மால் நான்மடங்கு பெருக்கி எழுதப்படுவதாயிற்று என்கிறார். எவ்வெவ் வகையாலெல்லாம் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது என்பதையும், சான்றுகள் எல்லாம் எவ்வாறு வைக்கப் பட்டுள்ளன என்பதையும் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறார் : கால ஆய்வு முறை : புதிது புகுந்த தமிழ்ச் சொல் வடசொற்களாலும், முற்காலத்தின்றிப் பிற்பிற் காலங்களில் தோன்றிய தெய்வ வணக்கங்களாலும், முன்நூல்களில் இன்றிப் பின் நூற்களிற் புனைந்து சேர்க்கப்பட்ட புராணக் கதைகளாலும், முற்பிற் காலங்களிலும் பொருள் வேறுபட்ட சொற்களாலும், சமயக் கோட்பாடுகளாலும், காலங்கள் தோறும் புதிது தோன்றிய பாவகைகளாலும், முன்னாசிரியர்நூலிலுள்ள சொற் பொருட் குறிப்புகளைப் பின்னாசிரியர் தம் நூலுள் எடுத்தாளும் வகை களாலும், முன்னிருந்தோரைப் பின்னிருந்தோர் குறிப்பாலும் வெளிப்படையாலும் நுவலும் நுவற்சிகளாலும், அவ்வந் நூல்களில் குறிப்பிடப்பட்ட சிவபிரான் கோயில்கள் திருமால் கோயில்களைக் கணக்குச் செய்த தொகைகளாலும், கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலாயினவற்றில் புலனாம் அரசரின் காலக் குறிப்புகளாலும், வடமொழி நூல்கள் அயல் நாட்டவர் வரைந்து வைத்த வரலாற்று நூல்கள் முதலாயினவற்றில் தமிழர் ஆரியர் பற்றி நுவலும் பகுதிகளாலும் இன்னோரன்ன பிறவற்றாலும் தமிழாசிரியர் தமிழ் நூல்களின் காலவரையறைகளும், அவ்வக் கால இயல்புகளும் அவற்றிடையே படும் மாணிக்கவாசகரது காலமும் மிகவும் விழிப்பாக ஆராய்ந்து தெளிவு படுத்தப் பட்டிருக்கின்றன. சான்று : இவ்வாறு செய்கின்றுழி, ஒவ்வொன்றுக்குஞ் சான்றுகள் காட்டப்பட்டிருப்பதோடு, சான்றாக எடுக்கப்பட்ட மேற்கோள் உள்ள நூற்பெயர்களும், அவற்றின்கண் அவை உள்ள இடங்களும் சுட்டிச் சொல்லப்பட்டிருக்கின்றன. இவ்வாறு மேற்கோள்கள் உள்ள இடங்கள் கிளந்து குறிக்கப்பட்டிருத்தலால், இந்நூலைக் கற்பவர்கள் யாம் செய்து காட்டும் ஆராய்ச்சி முடிபுகட்கு உள்ள சான்றுகளைத் தாமும் எளிதிற் கண்டு, எம்முடைய முடிபுகள் பொருந்துமா பொருந்தாவா எனத் தாமே வருத்தமின்றி ஆராய்ந்து தெளிதல் கூடும். பெரும்பாலும் தமிழில் உரைநூல்களும் ஆராய்ச்சி நூல்களும் எழுதும் அறிஞர்கள் தமதுகோட்பாடுகட்குச் சான்றாகக் காட்டும் மேற்கோள்கள் உள்ள நூற்பெயர்களைக் கூட மொழியாது போவர்; ஏனென்றால், அங்ஙனங்குறித்துக் காட்டுதற்குப் பொறுமையும், பேருழைப்பும், நூல்களும் வேண்டும். யாம் எம்முடைய வருத்தத்தையும் காலக் கழிவினையும் பொருட்பட செலவினையும் பாராது, உலகத்தில் உண்மை விளங்கி எல்லாரையும் உய்வித்தல் வேண்டும் என்பதொன்றனையே கடைப்பிடியாகக் கொண்டு, ஒவ்வொன் றுக்கும் மேற்கோள்களும் இடங்களும் குறித்திருத்தலை அன்பர்கள் கருதிப்பார்த்து, இம்முறையினைத் தாமும் கையாண்டு உண்மை ஆராய்ச்சியினை ஓம்பு வாராக! இவ்வாறு தம் ஆய்வுமுறை இன்னதென்றும், இம்முறை துயர்க்கும் இழப்புக்கும் உரியது எனினும் உண்மை காண்டற்கு இன்றியமையாதது என்றும் இதனை மேற்கொள்ளல் ஆய்வார்க்கும் ஆய்வுக்கும் நலப்பாடு என்றும் கூறுதல் விளங்கும். சார்பு இன்மை : ஆய்ஞருக்கு, அவர் இவர் என்றோ, அப்பொருள் இப்பொருள் என்றோ, சார்பு சார்பின்மை என்றோ நடுநிலை பிறழ்ந்து ஆய்வு செய்தல் ஆகாது என்றும் அடிகளார் நெறிகாட்டியுள்ளார். இங்ஙனம் ஆராய்ந்து செல்லும் நெறியிற் பிழையெனக் கண்டவைகளை மறையாது, அவை பிழைபடுதலைக் கிளந்து சொல்லியிருக்கின்றேம். எல்லாராலும் தெய்வத்தன்மையுடைய வராகக் கொள்ளப்பட்ட ஆசிரியர் நூல்களிலும்பிழையெனக் கண்டவைகளை மறையாது வெளிப்படையாக எடுத்துக் காட்டியிருக்கின்றோம். கடவுளல்லாத ஏனை மக்களெல்லாரும் எத்துணைதான் சிறந்தவராயிருப்பினும் பிழைபடாதிரார். இது, தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரே, அரியகற்று ஆசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு என்று அருளிச் செய்தமையானும் தெளியப்படும். ஆகவே, அறிவில்மிகச் சிறந்த சான்றோர்களும் ஒரோ வழிப்பிழைபடுவராயின், அவர் செய்த அப்பிழைகளை உண்மை விளக்கத்தின் பொருட்டு எடுத்துக் காட்டுதல், அவர்பால்யாம் வைத்துள்ள அன்புக்கும் நன் மதிப்புக்கும் எள்ளளவும் பழுது செய்யாது, ஒரோ ஒரு காற் பேரறிவினர்பால்மெய்யல்லாத தோன்றுதலும் உலகியல் நிகழ்ச்சிகளிற் காணக் கிடத்தலின், உண்மையாராய்ச்சி செய்பவர்கள், அவ்வவர்தம் பெருமை சிறுமை பாராது அவ்வவர்பாற் புலனாவனவற்றிலுள்ள பொய்ம்மை மெய்ம்மைகளை ஆராய்ந்து கண்டெழுதுதலே உலகினை வஞ்சியாது அதற்கு நன்மைபயக்கும் விழுமிய ஒழுகலாறாம், அது தேற்றுதற்கன்றோ ஆசிரியர் திருவள்ளு வனாரும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்று அருளிச் செய்வாராயினர், இவ்வாறு உண்மையைக் கண்டெழுதுதலிற் கடைப்பிடியாய் நில்லாது இவர் தெய்வத் தன்மை வாய்ந்த ஆசிரியர், இவரியற்றிய இந்நூலிற் குற்றங் குறையாவது ஏதும்இராது என்று குருட்டுப்பிடியில் உறைத்து நின்று, தாமும் அவர் நூற்பொருளை யாராயாது, ஆராய்வார் சிலர் தம்மையும் கண்டவாறு புறம் பழித்துப் பேசி உலகினை அறியாமையில் அழுத்துவாரும் உளர். அத்தன் மையினார் உரைகளை ஒரு பொருட்டாக வையாது மெய்ம்மையா ராய்ச்சியிற் செல்லுதலே உலகினைத் தேற்றுஞ் சான்றோர் கடனாமென்க. என்று விரிவாக ஆராய்ச்சித் திறன் குறித்து எழுதியுள்ளார். இனி இலக்கிய ஆய்வு செய்வார்க்கு வேண்டும் அரிய தொரு குறிப்பினை முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை மூன்றாம் பதிப்பின் முகவுரையிலே குறிப்பிடுகிறார் அடிகளார். சொல்லாய்வு : உலக வழக்கத்திலுள்ள சொற்களைத் தவிர்த்து முல்லைப்பாட்டில் வந்த ஏனை எல்லாச் சொற்களையும்அகர வரிசைப்படுத்தி அவற்றிற்கெல்லாம் பொருள்கள் எழுதியிருக் கின்றோம். இவ்வருஞ் சொற்பொருள் வரிசையின் உதவிகொண்டு இச் செய்யுட் பொருள் உணர்ந்து கொள்வது எவர்க்கும் எளிதேயாம். இனி இவ்வருஞ் சொற்கட்குப் பொருள் வரையுங்கால் இம்முல்லைப்பாட்டு வழங்கிய காலத்தில் அதன்கண் வந்த சொற்கட்கு வழங்கிய பொருள்களையும், அக்காலத்தை அடுத்துத் தோன்றிய சான்றோர் நூல்களில் அவற்றிற்கு வழங்கிய பொருள்களையும் எடுத்துக்காட்டியிருக்கின்றேம். ஒரு செய்யுள் வழங்கிய காலத்தும் அதனை அடுத்து வந்த காலத்தும் அச்செய்யுட் சொற்கட்குப் பொருள் தெளிவது அச் செய்யுள் ஆக்கியோன் கருத்தை நன்கறிந்து கோடற்குக் கருவியாம் ஆதலின், இங்ஙனஞ் சொற்பொருள் துணிவிக்கும் முறையைத் தமிழாராய்வோர் அனைவரும் கைப்பற்றி ஒழுகுவராயின் நமதருமைச் செந்தமிழ்மொழி சாலவும் விளக்க முடையதாகித் திகழும் என்கிறார். இக்கருத்தைப் பட்டினப் பாலை இரண்டாம் பதிப்புரையிலும் எழுதுகிறார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்யுரை என்னும் இரண்டிலும் மற்றுமொரு கருத்தை ஆராய்ச்சியாளர்க்கும் நூலியற்று வார்க்கும் வற்புறுத்துகிறார், இக்கருத்து அடிகளார் நூல்கள் அனைத்திலும் கொண்டு போற்றப்பட்டதும், அவர்க்குத் தனிப்பெருமை சேர்த்ததும் ஆகிய கடைப்பிடியாகும். இவ்வாராய்ச்சி யுரையின்கண் மற்றொரு முதன்மையான சீர்திருத்தமும் செய்திருக்கின்றேம். தொன்று தொட்ட சிறப்பும், இலக்கண இலக்கிய வரம்பும், தனக்கெனப் பன்னூறாயிரம் சொற்களும் வாய்ந்து இன்றுகாறும் வழக்குவீழாது உயிரோடு உலாவிப் பன்னூறாயிரம் மக்கட்குப் பெரிது பயன்பட்டு வரும் நமது இனிய செந்தமிழ் மொழியை அயல்மொழிச் சொற்கள் விரவாமற் பாதுகாத்துத் தூயதாய் வழங்கி அதனை வளம்பெறச் செய்வது தமிழராயினார் ஒவ்வொருவர்க்கும் இன்றியமையாத கடமையாம். சில நூற்றாண்டுகளாய்த் தோன்றி இலக்கண இலக்கிய வரம்பில்லாதது தமக்கெனச் சில சொற்களேயுடைய மொழிகளையும், அவற்றிற்குரியாரும் அவற்றிற்கு உரியார் போற்றம்மை எண்ணிக் கொள்வாரும் அவற்றைத் தூயவாய் வழங்கவும் அவற்றை உயிர்ப்பிக்கவும் ஓவாது முயன்றுவர எல்லா நலங்களும் ஒருங்குடைய நமதருமைச் செந்தமிழ் மொழியை நம்மனோர் பயிலாதும் பாதுகாவாதும் கைவிட்டிருத்தல்நிரம்பவும் இரங்கற் பால தொன்றாம். இனியேனும் அவர் அங்ஙனம் மடிந்திராமைப் பொருட்டு, நம்மனோரிற் கற்றவராயிருப்போர் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமற் றனித்தமிழிற் பேசவும் எழுதவும் கடைப்பிடியாய்ப் பழகிவரல் வேண்டும். இதனை முன் நடந்து காட்டும் பொருட்டு, இதற்கு முன் யாம் எழுதிய நூல்களிற் புகுந்த சிற்சில அயன்மொழிச் சொற்களையும் அந்நூல்களைத் திரும்பப் பதிப்பிட்டு வரும். இப்போது முழுதும் களைந்து விட்டு, அவை நின்ற இடத்திற் தூய தமிழ்ச் சொற்களையே நிரப்பி வருகின்றோம் என்கிறார். இக்கொள்கை, அடிகளின் அரிய பெரிய ஆராய்ச்சித் திறனால் கண்டு ஓரியக்கப்படுத்தி வளர்க்கவும் தமிழ் வளமாக்கவும் தமிழ் உயர் தனிச் செம்மொழி என்பதை உலகுக்கு நிலைப்படுத்திக் காட்டவும் ஏந்தாக அமைந்த தாகலின் ஆய்வியல் நெறிமுறைகளுள் ஒன்றாகக் கொள்ளத்தக்கது ஆயிற்றாம். 5. அடிகளார் இயற்றிய நூல்கள் அடிகளார் இயற்றிய நூல்கள் ஐம்பத்து நான்கு. அவை வெளிவந்த கால அடைவில் வருமாறு. 1. முதற்குறள் வாத நிராகரணம் 1898 2. சித்தாந்த ஞான போதம் - சதமணிக் கோவை - குறிப்புரை 1898 3. துகளறு போதம் - உரை 1898 4. முனிமொழிப் பிரகாசிகை 1899 5. வேதாந்த மதவிசாரம் 1899 6. வேத சிவாகமப் பிராமண்யம் 1900 7. திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை 1900 8. சோம சுந்தரக் காஞ்சி யாக்கம் 1901 9. ஞான சாகரம் 1902 10. முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை 1903 11. பட்டினப் பாலை ஆராய்ச்சியுரை 1906 12. சைவ சித்தாந்த ஞானபோதம் 1906 13. பண்டைத் தமிழரும் ஆரியரும் 1906 14. சாகுந்தல நாடகம் 1907 15. Oriental Mystic Myna 1908 16. சிந்தனைக் கட்டுரைகள் 1908 17. மரணத்தின் பின் மனிதர் நிலை 1911 18. குமுதவல்லி : நாகநாட்டரசி 1911 19. சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் 1913 20. கோகிலாம்பாள் கடிதங்கள் 1921 21. பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் 1921 22. அறிவுரைக் கொத்து 1921 23. யோக நித்திரை : அறிதுயில் 1922 24. வோளாளர் நாகரிகம் 1923 25. மனிதவசியம் : மனக்கவர்ச்சி 1927 26. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1930 27. மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை 1933 28. சாகுந்தல ஆராய்ச்சி 1934 29. சிறுவர்க்கான செந்தமிழ் 1934 30. தொலைவில் உணர்தல் 1935 31. மாணிக்கவாசகர் மாட்சி 1935 32. Ocean of wisdon 1935 33. முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் 1936 34. தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும் 1936 35. Tamilian and Aryan form of and Marriage 1936 36. Ancient and Modern Tamil Poets 1937 37. இந்தி பொது மொழியா? 1937 38. பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் 1938 39. Saiva Siddanta as a Philosophyof Practical Knowledge 1940 40. திருவாசக விரிவுரை 1940 41. தமிழர் மதம் 1941 42. கடவுள் நிலைக்கு மாறான காள்கைகள் சைவம் ஆகா 1948 இந்நாற்பத்திரண்டு நூல்களும் அடிகளார் வாழ்ந்த நாளிலேயே அவரால் வெளிப்படுத்தப்பட்டவை 15.9.1950 இல் அடிகளார் புகழ் உடல் எய்தினார். அவர் எழுதி நூலுருப் பெறாதனவும் கட்டுரை வடிவில் வந்தனவும், கைப்படியாய் இருந்தனவும் கொண்டு அவர் காலத்திற்குப் பின்னர் வெளிவந்த நூல்கள் பன்னிரண்டு 43. திருக்குறள் ஆராய்ச்சி 1951 44. மாணிக்கவாசகர் வரலாறு 1952 45. அம்பிகாபதி அமராவதி 1954 46. இளைஞர்க்கான இன்றமிழ் 1957 47. சோமசுந்தர நாயகர் வரலாறு 1957 48. மறைமலையடிகளார் கடிதங்கள் 1957 49. சிவஞானபோத ஆராய்ச்சி 1958 50. Can Hindi be a Lingua Franca of India 1969 51. அறிவுரைக் கோவை 1971 52. உரைமணிக் கோவை 1972 53. கருத்தோவியம் 1976 54. பாமணிக் கோவை 1977 இவற்றின் பின்னே மறைமலையடிகளார் நாட் குறிப்புகள் என்னும் நூல் வெளிவந்தது, அது, அடிகளார் 1898 முதல் 1950 வரை ஆங்கிலத்தில் எழுதியிருந்த நாட் குறிப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகளைத் தமிழாக்கித் தந்தது. அது வெளிவந்த ஆண்டு 1988. இந்நூல்கள் அனைத்தும் அடிகளாரின் ஆராய்ச்சித் திறனை வெளிப்படுத்துவனவே என்பது பொதுக் குறிப்பு. சில நூல்களில் ஓரளவும், சில நூல்களில் பேரளவும் ஆய்வுத் திறன் வெளிப்படுதல் நூலியல். எடுத்துக் கொண்ட பொருளைப் பொறுத்தே ஆய்வுத் திறங்கள் வேறுபட, இடனுண்டு, அடிகளார் நூல்களை மருத்துவம், மறை பொருளியல், இலக்கியம், இதழ், சங்க இலக்கிய ஆய்வு, பாடல், நாடகம், புதினம், கடிதம், கட்டுரை, சமயம், தத்துவம், வரலாறு, சமுகவியல் எனப் பதினான்கு வகைப்படுத்திக் கண்டுளர். இவற்றொடு நாட்குறிப்பு இடம்பெறவில்லை எனினும், வரலாறு என்பதனுள் தம்வரலறாக அடங்கும் என்க. முல்லைப் பாட்டு ஆராய்ச்சியுரை, பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை என்பனவும், சாகுந்தல நாடக ஆராய்ச்சி, திருக்குறள் ஆராய்ச்சி, சிவஞான போத ஆராய்ச்சி என்பனவும் பெயரிலேயே ஆராய்ச்சியையும் இணைத்துப் பளிச்சிடுவன. மறுப்புக்கு மறுப்பு : அடிகளார் முதற்கண் எழுதிய (1898) முதற்குறள் வாத நிராகரணம் என்னும் நூலே ஆராய்ச்சி நூலாகும். சைவ சித்தாந்த சண்ட மாருதம் எனப்பட்ட சோம சுந்தர நாயகர் நாகையில் ஆற்றிய பொழிவை மறுத்து எழுதினார்க்கு, மறுப்புக்கு மறுப்பு எழுதி மெய்ம்மை நிலை நாட்டிய நூல். அந்நூலே நாயகரை வயப்படுத்தி வைத்தது. நலம் பல சேர்த்தது. அந்நூல் கட்டுரைகள் நாகை நீலலோசனி என்னும் இதழில் முருகவேள் என்னும் புனைபெயரில் வெளியிடப்பட்டு நூலுருப் பெற்றதாகும். அடிகளார் எழுதிய முதற் கட்டுரையே மறுப்புக் கட்டுரை என்பதையும், அறிஞர்களை யெல்லாம் வயப்படுத்தி மெய்ம்மை நாட்டியது அது என்பதையும் சிவஞான முனிவர் மறுப்பனைய மறுப்பாகத் திறத்தோடு விளங்குவது எனப் பாராட்டப் பட்டது என்பதையும் அறியுங்கால், அடிகளார் எழுத்தெல்லாம் ஆய்வுத் திறப்பாடு உடையவையே யன்றிப் பிறிதல்ல என உறுதி செய்யலாம். ஆய்வுக் குறிப்பு : அடிகளார் இயற்றிய சாகுந்தல நாடகம் 150 பக்க அளவில் ஏழு வகுப்புகளில் இயல்கின்றது. அந்நாடக விளக்க உரைக் குறிப்போ 100 பக்க அளவில் அமைகின்றது. காளிதாசர் தழுவிய உலகப் படைப்பு முறை பண்டை இருக்கு வேத வழிப்பட்டது என்று வாழ்த்துப் பகுதியிலேயே தம் ஆய்வை ஓட விடுகிறார். முதன்முதல் நீரே படைக்கப்பட்டது என்பது ஆரிய வேத நூல் வழக்கு. அந்த முதற்பொருள் நீரேயாம்; அது மூச்சு இலதாய்த் தன்னியற்கையினாலேயே மூச்சு விடுவதாயிற்று என்று இருக்கு வேதப் பத்தாம் மண்டிலத்தின் கண்ணதான 129 ஆம் பதிகம் பாடுதல் காண்க. அந்நீரில்இருந்தே தீயும், அத்தீயில் இருந்தே ஞாயிறும் உண்டாதலும் ஆண்டே நுவலப்படுகிறது. இவ்வாற்றாற் காளிதாசர் தழுவிய உலகப் படைப்பு முறை பண்டை இருக்கு வேத வழித்தாதல் காண்க. வேத காலத்திற்குப் பிற்பட்டதான தைத்திரிய உபநிடதத்தில்விசும்பில் இருந்து காற்றும், காற்றில் இருந்து தீயும், தீயில் இருந்து நீரும், நீரில் இருந்து நிலனும் உண்டாயின என்று நுவலப்படுங் கருத்து அவர்க்கு உடன்பாடன்று என்கிறார். அட்ட மூர்த்தம் என்னும் எட்டு வடிவாய் விளங்கும் சிவபெருமானையே வணங்கு முகத்தால் வாழ்த்துரை கூறினார் என்னும் அடிகளார் அதனை நிலைநிறுத்தப் பல சான்றுகளை எடுத்துரைக்கிறார். வேதங்கள் தொகுக்கப்பட்டுப் பிராமணங்களும் பழைய பன்னிரண்டு உபநிடதங்களும் வரையப்பட்ட பண்டைக் காலத்தேசிவபெருமான் ஒருவனே முழு முதற் கடவுளாக வணங்கப் பட்டனன். இவ்வுண்மை மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் எமது நூலில் கண்டு கொள்க. காளிதாசர் பிற்காலத்தெழுந்த புராண முறையைத் தழுவாது, முற்காலத்ததாகிய வேதமுறையைத் தழுவுதலிற் சிவபெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வைத்து வாழ்த்துரை கூறுவாராயினர். இங்ஙனமே இவர்தாம் இயற்றிய விக்கிரமோர் வசியம் என்னும் நாடகத்தின் முகத்தும், மாளவிகாகநிமித்திரம் என்னும் நாடகத்தின் முகத்தும், சிவபெருமான் ஒருவனையே முழுமுதற் கடவுளாக வைத்து வாழ்த்துரைத்தல் காண்க என்கிறார். சகுந்தலை, மல்லிகைக்கு நீர் சொரியும்போது ஆங்கிருந்த கருவண்டு அவள் முகத்தண்டை பறந்தது. அதுகண்டு பதறி, தோழியர்களை நோக்கிக் காக்க ஏவ, அவர்கள், தவத்தோர் கானகம் காப்பவர்காவலரே ஆகலின் துசியந்தனைக் கூப்பிடு என்று நகைக்க, தனித்திருக்கும் மகளிர்பால் செல்லுதற்குத் தக்க சூழலை நோக்கிக் காத்திருந்த துசியந்தன் ஒரு வேட்டுவன் என்ன உடனே தோன்றி உதவுகின்றான். இதனை விளக்கும் அடிகளார், மரச் செறிவில் மறைந்து நிற்கும் அரசன் தனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத இளைய மகளிர் பால் செல்லுதல் உயர்ந்தோர் ஒழுக்க மாகாமையின், தான் அவர்கள்பாற் செல்லுதற்கு ஏற்றதொரு நேரத்தை எதிர்பார்த்து நிற்க ஒரு வண்டானது, அவர்களைத் துன்புறுத்தி அவர்களே ஓர் ஆண் மகனுதவியை அவாவிக் கூவுமாறு செய்து, அவன் அவர்களைச் சென்றணுகுதற்கு ஒரு காரணங் கற்பித்தவாறு காண்க. இங்ஙனம் தலைமகன் தலைமகளைச் சென்று சேர்தலை வண்டோச்சி மருங்கணைதல் என்று தமிழ் நூலார் கூறுப, (162) என்றும், துசியந்த மன்னன் வரலாறுகளைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு அனசூயை கேட்ட வினாக்களுக்கு அவ்வரசன் உண்மையைத் தெரிவியாமல் தன்னை மறைத்து மொழியும் நுட்பம் உற்று நோக்கற்பாலது. ஒருவனுடைய வரலாறுகள் தெரியாமலே அவனைக் கண்ட அளவில் அவன்மேல் ஆராக் காதல் கொள்ளும் ஒரு மங்கையே அவன் மேல் என்றும் நெகிழாத அன்புடையளாய்க் கற்பொழுக்கத்திற் சிறந்து திகழ்வள். ஒருவன் தன் செல்வத்தையும் அதிகாரத்தையும் (தலைமையையும்) புகழையும் குடியுயர்வையும் பாராட்டி அவன்மேல் அன்பு கொள்ளும் ஒருமாது அவன்பால்பிறழாத காதலன்புடையளாய் ஒழுகுதல் அரிது. அது பற்றியே அரசன் தனக்குள்ள புறச் சிறப்புகளைத் தெரிவியாது தன்மேற் சகுந்தலையின் மனப்பதிவு எத்தன்மையதாக நிகழ்கின்றதென் ஆராய்ந்து ஓர்கின்றான் என்றாலும் தன் குடிக்கு முதல்வனான புருவின் பெயரால் தன் உணமையையும் ஒருவாற்றாற் குறிக்கின்றான் என்கிறார் (163) இரண்டாம் வகுப்பில், யவனப் பணிப் பெண்கள் வரவு கூறப்படுகின்றது. அதனைக் குறிக்கும் அடிகளார், யவனம் என்பது கிரேக்க நாட்டின் ஒரு பகுதி. ஐயோனியா என்னும் கிரேக்க மொழிச் சொல் யவனம் எனத் திரிந்தது. இந்திய நாட்டு மன்னர்கள் தம்முடைய அம்புக் கூட்டையும் வில்லையும் பாதுகாத்து வைத்துக் கொடுக்கும் தொழிலில் இவ்வயல்நாட்டு மாதர்களை அமைப்பது பழைய வழக்கம் என்பது இதனால் புலனாகின்றது. இவ் யவனர் தமது நாட்டில் இருந்து தேறல் என்ப பெயரிய இனிய பருகு நீரைக் கொணர்ந்து தமிழ்நாட்டில் அஞ்ஞான்று விலை செய்தமை யவனர் நன்கலந்தந்த தண்கமழ் தேறல் (புறநானூறு 56) என்னும் நக்கீரனார் செய்யுளாலும் அறியக் கிடக்கின்றது என்கிறார். (169) கரடிகள் மக்களின் மூக்கிறைச்சியைத் தின்பதில் மிக்க விருப்பம் உடையன என்பது தசகுமார சரிதத்திலும் கூறப்பட்டது என்று சுட்டுகிறார் (171) நுண்ணறிவு : இடக்கைக் கடகத்தின் மணி தன் நிறம் மாறியதாகக் காளிதாசர் சுட்டுவது ஏன் என்பதை எண்ணும் அடிகளார் விற்பிடிக்கும் கை இடக்கையே ஆதலால் வில்லின் நாண் உரைஇத் துசியந் தனுக்குத் தழும்பு உண்டான இடம் இடத் தோளின்கண் உளதென்பது பெற்றாம். அவ்விடத்தில் அணிந்திருந்த கடகம் அவனது உடம்பின் மெலிவால் அவ்விடத்தை விட்டு நழுவி முன் கையில் வந்து விழுதலும் பெறப்படும். அவன் தன் கையைத் தொங்கவிட்டு உலாவுகையில் மேலுள்ள கடகங்கீழ் நழுவு மென்பது உணரற்பாற்று. அவனது கையிலுள்ள கடகத்தில் குயிற்றிய மணிகள் இப்போது நிறம்மாறி இருப்பதற்குக் காரணம், அவன் இரவிற் றுயில் கொள்ளானாய்ப் படுக்கையிற் கிடந்தச் சகுந்தலையை நினைந்து ஆற்றானாந் தோறும் அவன் கண்களினின்று பொழியும் நீரின் வெம்மை படுதலேயாம், என்று அவன் இரவின்கட் பட்ட துயரத்தினையும் அறிவித்தற்கு ஒரு குறியாக அதனைக் கூறினாரெயல்லது அவன் படுத்துக் கிடக்கையிற் றோளிலுள்ள கடகங்கழன்று கீழிறிங்கியதென்று கூறப்பு குந்தா ரல்லர் என்கிறார் (183-4) தவச் சாலையில் வளர்ந்த மங்கை சூழ்ச்சி யறியாள் என்று கௌதமி கூறியபோது அரசன், கற்றுக் கொள்ளாமலே வரும் திறம் என்பதைக் குறிக்கும் வகையால் தம் குஞ்சுகள் வாளின்கட் பறக்கும் வரையிற் குயிற்பெடைகள் அவை தம்மை வேறு பறவைகளைக் கொண்டு வளர்த்து வரல் உண்மையன்றோ? என்கிறான். இதனை விளக்கும் அடிகளார், குயிற்பெடைகள் தாம் இடும் முட்டைகளை அடை காக்கத் தெரியா வாகலால், அவை தம் முட்டைகளைக் காக்கையின் கூடுகளில் இடக், காக்கைப் பெடைகள் அவற்றையும் தம்முட்டையென்றே கருதி அடைகாத்துக் குஞ்சு பொரித்துப் பொரித்த குயிற் குஞ்சுகளுக்குத் தங்குஞ்சுகளுக்கு ஒக்கச் சேர்த்து இரை கொடுத்து வளர்த்தமையும், வளர்த்தபின் அக்குயிற் பிள்ளைகள் காக்கையை விட்டுப் பறந்தோடிப் போதலையும் தோப்புகளில் இன்றும் பார்க்கலாம். அரசன் எடுத்துக் காட்டிய இவ்வுவமையின் வாயிலாக, மேனகைக்குப் பிள்ளையாகப் பிறந்தும் சகுந்தலை அவளால் வளர்க்கப்படாமல் காசியபரால் வளர்க்கப்பட்டு வளர்ந்த குறிப்பும் ஈண்டு நாடக ஆசிரியர் உய்த்துணர வைத்தல் காண்க என்கிறார். நாடக நூற் குறிப்புகளிலேயே இவ்வாறு பல பல ஆய்வுத் திறங்களைக் காட்டிக் காட்டிச் செல்கிறார். கோகிலாம்பாள் கடிதங்கள் அடிகளார் எழுதிய புனை கதை நூல். கடித வழியாகக் கதை சொல்லும் உத்தியில் வெளிவந்தது, அதன் முகப்பிலே புனை கதை அமைப்பு, பயன்பாடு எத்தகையவாக இருத்தல் வேண்டும் என்பதை ஆராய்ந்து எழுதுகிறார். உலக வழக்குக்கு மாறுபடாமை உற்றவாறே எடுத்துரைத்தல் விழுமியதாகத் தொடுத்தல் இவை புனைவாளன் கடமை எனப் புகல்கின்றார். உலக இயற்கையிலும் மக்கள் இயற்கையிலும் ஒரு சிறிதும் காணலாகாதவைகளைப் படைக்க, அவற்றை ஆய்ந்து பாராமல் அவ்வாறே எடுத்து மொழிந்தவை பெரியதோர் அருவருப்பானவை என்கிறார். ஒரு குரங்கு கடலைத் தாண்டிற்று என்றல், அஃது ஒரு மலையைப் பெயர்த்துக் கொணர்ந்தது என்றல் ஒருவன் பத்துத் தலையும் இருபது கைகளை உடையவனாய் இருந்தான் என்றல், பொருந்தாப் புனைவு ஒருத்தியை வேறொருவன் சிறையாக எடுத்துச் சென்றக் கால் அவள் இருந்தநிலத்தைப் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றல், ஒருவன் தன் கையில் இருந்த வட்டத்தைச் சுழற்றி யெறிந்து பகலவனை மறைத்தான் என்றல், இன்னவை மக்கள் இயற்கையில் எங்கும் எவரும் காணாதன. இத்தகைய புனைவுகளை ஒரு கதையிலாவது ஒரு நாடகத்திலாவது செய்வது நல்லிசைப் புலமை ஆகாது என்கிறார். புதுக் கதைகளும் நாடகங்களும் ஆக்குதலின் நோக்கம், இன்பச் சுவையினையும் அதனோடு அறிவு விளக்கத்தினையும் தந்து, அவ்வகையால் மனமாசு நீக்கி மக்கள் ஒழுக்க நெறியைத் தூய்மையாக்குவதே என்று திட்டப்படுத்துகிறார். கடுத் தின்னாதானைக் கட்டிபூசித் தின்னச் செய்தல் போலவும், நீர் வேட்கையனைக் கானல் நீர் காட்டி நன்னீர் குடிப்பித்தல் போலவும், நூலியற்றலின் நோக்கத்தைச் சிலப்பதிகாரம் கூறுதல் போலவும் புனைவு செய்தல் வேண்டும் என்று மேற்கோள் காட்டுகிறார். அந்நெறி திகழவே நூலை நடத்திச் செல்கின்றார். இனிச் சிறுவர்க்கான செந்தமிழ் என்னும் நூலிலே, மலையைப் பற்றி எழுதும் அடிகளார், மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை யுடையது, மல் என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் உயரமாக இருக்கும் மலையை ஓங்கல், பிறங்கல், பொருப்பு, வெற்பு என்றும், ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை விலங்கல் என்றும்; ஒன்றன்மேல் ஒன்று அடுக்கடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை அடுக்கல் என்றும்; மூங்கில் காடுகள் உள்ள மலையை வரை என்றும், காடுகள் அடர்ந்த மலையை இறும்பு என்றும்; சிறிய மலையைக் குன்று, குவடு, குறும்பொறை, என்றும் மண்மிகுந்த மலையைப் பொற்றை, பொச்சை என்றும், மலைப்பக்கத்தைச் சாரல் என்றும் பழைய தமிழ் நூல்கள் கூறா நிற்கும் என்கிறார். இளைஞர் உள்ளத்தே மொழி வளத்தை எளிதில் ஆக்கிவிட இயலும் என்பதன் சான்று இது. இரண்டு பண்டப் பைகள் என்பதொரு சிறுகதையைச் சிறுவர்க்கு வரைகின்றார் அடிகளார். ஒவ்வோர் ஆடவனும் தனக்கு முன்னே ஒரு பையும் தனக்குப் பின்னே ஒரு பையும் தொங்க விட்டுக் கொண்டு செல்கின்றான்; அவ்விரண்டு பைகளிலும் குற்றங்களாகிய பண்டங்களே நிறைந்திருக்கின்றன. ஆகவே, ஒவ்வொருவரும் பிறருடைய குற்றங்களை நோக்கும் கட்பார்வையுடையராயும், தம்முடைய குற்றங்களைப் பாராக் கண்ணில் குருடராகவும் இருக்கின்றனர் என்கிறார். பெரிய அறிவுரையை, எளிய காட்சிக் கதையால்விளக்கி விடுகிறார் அடிகளார். அடிகளார் இயற்றிய நூல்கள் என்னும் இப்பகுதியிலே ஒரு நாடக நூலையும், கதை நூலையும், சிறுவர் நூலையும் எடுத்துக் கொண்டு எழுதுவானேன் என்னும் வினா எழும்பலாம். சுவைமிக்கதாகவும் எளிமையானதாகவும் எழுத வேண்டிய நூல்களிலேயும் ஆராய்ச்சித் திறம் வெளிப்படச் செய்யும் அடிகளார், ஆராய்ச்சி நூல்களில் எவ்வாறு ஆழ்ந்து சென்று மூழ்கி முத்தெடுப்பார் என்பதை அறிந்து கொள்வதற்காகவே இங்கு இப்பகுதி எழுதப்பட்டதாம். அடிகளார் நூல்களை இலக்கியம்,சமயம், அறிவியல் என முப்பாலுள் ஒரு வகையாக அடைவு செய்து விடலாம். அவற்றை ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளின் அளவுப் பெருக்கமாம் என்பதால், வகைக்கு ஒரு நூலாக எடுத்துக் கொள்ளுதல் சாலும் அவ்வகையில் இலக்கிய ஆரய்ச்சி வகையில் பட்டினப் பாலை ஆராய்ச்சியைக் காண்போம். 6. இலக்கிய ஆராய்ச்சித் திறன் - பட்டினப்பாலை ஆராய்ச்சி 1906 ஆம் ஆண்டில் கலைநூற் புலமை மாணவர்க்குப் பாடமாக வைக்கப்பட்ட நூல் பட்டினப் பாலை. அது பத்துப் பாட்டுள் ஒன்பதாம் பாட்டு. பத்துப் பாட்டுக்கும் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரை உண்டு. அவர், செய்யுள் இயற்றிய ஆசிரியர் கொண்ட முறைக்கு மாறாகச் செய்யுளில் உள்ள சொற்களையும் சொற்றொடர்களையும் தமக்குத் தோன்றியவா ரெல்லாம் முன் பின்னாக மாற்றி உரை கூறியிருந்தார். நச்சினார்க்கினியர் உரையை முதற்கண் விளக்கி, அதன்பின் ஆசிரியர் கொண்ட பொருள் முறையே வைத்து அடிகள் மாணவர்க்குப் புத்துரை கூறினார். ஆங்கில நூல் உணர்ச்சியால் பகுத்தாராயும் அறிவு ஆற்றல் வாய்ந்த அம்மாணவர்கள், நச்சினார்க்கினியர் உரை செய்யுளுக்கு இசையவில்லை என்றும், அடிகள் புத்துரையே செய்யுளுக்கு மிக இசைந்து ஆக்கியோன் கருத்தை விளக்குவதாய் அமைந்தமையுடன் பயிலுதற்கு எளிதாய் இருத்தலையும் கூறினர். பதிப்புச் செலவைத் தாமே ஏற்றுக் கொண்டு பதிப்பிடவும் செய்தனர். அதற்கு முன்னர் 1903 ஆம் ஆண்டில் கலைநூற் புலமை மாணவர்க்குப் பாடமாக இருந்த முல்லைப்பாட்டு உரை அச்சீடும் பட்டினப்பாலைக்கு முன்னோடியாம். ஆராய்ச்சி உரை : தாம் எழுதிய அவ்வாராய்ச்சியுரைகளைப் போன்றது ஏதும் அதற்குமுன் தமிழில் எவராலும் எக்காலத்தும் எழுதப்பட்டதில்லை. தமிழின் அருமையை உணர்தற்கு வழி அறியாமையால் தமிழைப் புறம் பழித்து வந்த மாணவர், எமது ஆராய்ச்சியுரையினைச் சிறிது பயின்ற அளவானே அதன்கண் அவா மிகுதியும் கொண்டு, அதனை விரும்பிக் கற்கலாயினர். தமிழ்ப் புலவர்களிற் பலரும் அவ்வாராய்ச்சியுரையினைப் பார்த்து வியந்து மகிழ்ந்து அதனைச் சிறந்தெடுத்துப பாராட்டி எமக்குத் திருமுகங்களும் எழுதி விடுத்தனர் என்கிறார்அடிகள். அதே ஆண்டில் நிகழ்ந்த மதுரைத் தமிழ்ச் சங்க ஆண்டு விழாவில் அடிகளார் இப்புத்துரை ஆய்வை நிகழ்த்தினார். அவ்வவையில் இருந்த தலைவர் பாண்டித் துரையாரும், பெரும்பேராசிரியர் உ.வே. சாமிநாதையர், இலக்கணக் கடல் அரசஞ் சண்முகனார் முதலிய புலவர்களும் அவ்வாராய்ச்சி யுரையினைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினர். இரண்டாம் பதிப்பின் முகவுரையிலே யாம் எழுதுவன பலர்க்கும் உதவியாய் நின்று மேன்மேல் உண்மை நுண்பொருள் ஆராய்தற்கு வழிதிறந்து காட்டிப் பயன்டுதல் பற்றியும், அவற்றால் நம் செந்தமிழ் மொழியின் அருமை பெருமைகளைத் தமிழ் வழங்கும் நாடெங்கும் பரவுதல்பற்றியும் யாம் பெரிதும் உளம் மகிழ்ந்து எல்லாம் வல்ல இறைவற்கு நன்றி செலுத்துகின்றோம் என்று அடிகளார் மகிழ்கின்றார். இப்பட்டினப்பாலை ஆராய்ச்சியுரையைப் பாட்டின் இயல்பு, பட்டினப்பாலைச் செய்யுள், பொருட்பாகுபாடு, பாலை, வாகை, பாட்டின் வரலாறு, ஆக்கியோன் வரலாறு, பாட்டுடைத் தலைவன், பாட்டின் நலம் வியத்தல், இப்பாட்டின்கண் தோன்றிய பழைய நாள் வழக்க ஒழுக்க வரலாற்றுக் குறிப்புகள், பாவும் பாட்டின் நடையும், விளக்க உரைக் குறிப்புகள், அருஞ்சொற்பொருள் அகர வரிசை என்னும் பதின்மூன்று பாகுபாடாக வகுத்துக் கொண்டு வரைந்துள்ளார். முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையையும் பதின்மூன்று வகைப் பாகுபாட்டிலேயே எழுதினார் எனினும், அப்பாட்டுக்குத் தக்கச்சில வேறுபாடுகளும் உண்டு என்க. ஆயினும் இவ்வீருரையும் ஒரு நெறிப்படச் செல்லுதல் மேலோட்டமாக எவர்க்கும் புலப்படும். பாட்டின் இயல்பு : ஒரு நிலையின்றி ஓடும் அறிவை ஒழுங்குபடுத்துதற்காக அவ்வறிவு பற்றிச் செல்லும் உலகியற் பொருள்களில் அழகு மிக்கவற்றை விரித்துக் கூறி, விரியும்அறிவைச் சுருக்கி அகமுகப்படுத்தி உணர்வெழச் செய்வது, நல்லிசைப் புலவர் தம் பாட்டு என்று பாட்டின் இயல்புரைக்கும் அடிகள், அவ்வியலில் பட்டினப்பாலை இயலும் பான்மையை எடுத்துரைக்கிறார். ஆசிரியர் உருத்திரங்கண்ணனார், புறப்பொருளில் அளவு கடந்து செல்லும்நம்மறிவை மடக்கி நிறுத்துவதற்காக முதல் 218 அடிகள் வரை உண்மை மாறாது காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். பாகன் வயப்படாது கடிவாளத்தை அறுத்துக் கொண்டோடும் குதிரையை அப்பொழுதே பிடித்து நிறுத்தி இடர்ப்படாமல், அதன் போக்கிலே ஓடவிட்டு அயர்வுற்ற நிலையில் எளிதாகப் பாகன் அதனை வயப்படுத்துவது போலப் புறப் பொருளில் விரியச் சென்ற அறிவை அகமுகப்படுத்தி ஒடுக்கி அகப்பொருளில், வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய, வாரேன் வாழிய நெஞ்சே என இரண்டடியான் மாத்திரம் மிகச் சுருக்கிக் கூறிய ஆசிரியர் நுட்பத்தைப் பாராட்டுகிறார். 301 அடியுடைய இப்பாட்டில் 297 அடிகளில் புறப்பொருளும் 4 அடிகளில் மட்டுமே அகப்பொருட் சுருக்கமும் உள்ளமையை நயக்கிறார் (16, 17) பால் கறந்த மாத்திரையே உண்பார்க்குச் சுவை பயக்குமாயினும் அதனை வற்றக் காய்ச்சிக் கட்டியாகத் திரட்டிப் பின்னுண்பார்க்குக் கழிபெருஞ்சுவை தருதல் போலவும், முற்றின கருப்பங்கழியை நறுக்கிப் பிழிந்த மாத்திரையே அதன் சாற்றைப் பருகுவார்க்கு அஃது இனிமை விளைக்குமாயினும், மேலும் அதனைப் பாகு திரளக் காய்ச்சிச் சருக்கரைக் கட்டியாக எடுத்துண்பார்க்கு ஆற்றவும் பேரினிமை பயத்தல் போலவும், உரையும் நலம் பயப்பதொன்றே யாயினும், அதனைக் காட்டினுஞ் செய்யுளாற் பெறப்படும் பயன் சாலவும் பெரிதாம் என்கிறார். மேலும், பாட்டெல்லாம் அறிவு நிலையைப் பற்றிக் கொண்டு போய் உயிர்களின் உணர்வு நிலையை எழுப்பி விடுவதாகும். உரையெல்லாம் அறிவு நிலையைப் பற்றியே நிகழுமல்லது அதன்மேற் சென்று உணர்வு நிலையைத் தொடமாட்டாதாகும். பெரியதோர் மலை முழைஞ்சினுட் பொன்னும் மணியும் சிதறிக் கிடத்தல் வியப்பன்று; ஒரு சிறு கற்பிளவிலே அரிய பெரிய முழு மணிகள் அடுக்கடுக்காய்க் கிடந்து எடுக்குந்தோறும் குறைபடாதிருத்தலே பெரிதும் வியக்கற்பாலதாம். சிறிய வான்மீன்கள் அகன்ற அவ்வானத்திற் காணப்படுதல் ஒரு வியப்பன்று; அகன்றவானும் வேறு மாடமாளிகை கூட கோபுரங்களும் ஒரு சிறிய கண்ணாடியினுட் காணப்படுதலே மிகவும் வியக்கற்பாலதாம். எனப் பெரிய உரைக்கும், சிறிய பாவுக்கும் உள்ள இயல்பை விளக்குகிறார். பாடற் சுவையையும் சுருக்க வடிவையும் அருமையாக விளக்கும் அடிகள் அவ்வகையாலேயே இப்பாடலை ஆய்ந்து வரைகின்றார். பொருட் பாகுபாடு : பொருட் பாகுபாட்டினைக் காவிரியாற்றின் சிறப்பு, சோழ நாட்டு மருத நில வளம், பாக்கம், படப்பை முதலியன. சோறிடும் அட்டிற் சாலைகள், பள்ளிகள், காளி கோட்டம், குப்பம், புறச்சேரி, காவிரித் துறை, கடையாமம், சங்கங்கொள்வோர், பண்டக சாலை, அங்காடித் தெரு, கொடிச் சிறப்பு, பொருள் வளம், வேளாளர் குடியிருப்பு, காவிரிப்பூம் பட்டினச் சிறப்பு, கருக் கொண்ட பொருள், கரிகாலன், இளந்தை வெற்றி, மருத நிலம் பாழாதல், அம்பலங்கள் பாழ்படல், மன்றம் பாழ்படல், கரிகாலன் வெற்றித் திரு. கருப்பொருள் முடிபு எனப் பாகுபாடு செய்து வினைமுடிபு காட்டுகிறார். இம்முறையே முறையாய்ப் பொருட்பாகுபாட்டுக்குத் திரண்ட பொருள் தருவதுடன் பின்னே விளக்க உரைக் குறிப்புகளும் வரைகின்றார். அகப்பொரும் பாலையும், புறப்பொருள் வாகையும் ஒத்தியலும் வகையை அகத்தே நிகழும் அன்பை வெற்றி காணும் பாலையும் புறத்தே நிகழும் பகைவர் மறத்தை வெற்றி காணும் வாகையும் தம்முள் ஒப்புமையுடையவாதல் தெற்றெனப் புலப்படும் என்கிறார் (48) பாட்டின் வரலாறு : பாட்டின் வரலாற்றை உய்த்துணர்ந்து காட்டல் இழுக்காது எனக் கூறி, அப்பாட்டின் பொருளைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் அகவாழ்வொடு சார்த்தி அருமையாய் உரைக்கிறார். உருத்திரங்கண்ணனார் தம் ஆருயிர்க் காதலியொடு மருவியிருந்து இல்லறம் நடத்துங்கால் அவர்தம் பொருள் வளஞ்சுருங்க, வறுமை வந்து நலிய, அதனைக் களைய விரும்பிக் கரிகாற் சோழனிடத்துச் செல்லக் கருத, பிரிவுக்குப் பொருந்தாராய் மனைவியார் வருந்த, அவர் ஆற்றாமை தணித்துப் பின்னொரு கால்அவ்வேந்தனைக் கண்டு பாடிப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசிலாகப் பெற்றார்என்று வரைகின்றார். ஆக்கியோன் வரலாறு : இப்பகுதியில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் அந்தணர் என்பதையும் கடியலூர் என்னும் ஊரிற் பிறந்தவர் என்பதையும் விளக்குகிறார். இவர்தம் சமயம் குறித்து ஆய்வு நிகழ்த்தி இருபாற் கருத்துகளை உரைக்கிறார். பெரும்பாணாற்றுப் படையில் இப்புலவர் பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் என்றமையால் வைணவ சமயத்தார் எனின், தொண்டைமான் வழிபடு கடவுள் திருமால் ஆகலின் அதனை வழிபட்டுச் செல்ல அப்பாணரை நோக்கிக் கூறினாரன்றித் தாம் வழிபடு தெய்வமாகக் குறித்தார் எனல் ஆகாது என்கிறார். அவ்வாறு வைணவர் எனின், கடம்பமர் நெடுவேள் என முருகக் கடவுளைக் கூறியது கொண்டு இவர் சைவ சமயத்திற்கரியவர் என்பார்க்கு மறுத்துரைக்கலாகாமையின் இவர் சமயம் இதுவென்பது துணியப்படாது போலும் என்க என்கிறார். மேலும் இவர் பெயரால், உருத்திரனுக்குக் கண் போன்ற இளைய பிள்ளையாரான முருகக் கடவுளைக் குறிப்பதால் அப்பெயரைச் சைவ சமயம் தழுவினாரே வழங்குதல் மரபாதலால் இவர் சைவ சமயத்திற்குரியராம் போலும் எனக் கூறல் இழுக்காது என்கிறார். பாட்டின் நலம் : பாட்டின் நலம் வியத்தல் பகுதியில், உவமையின் சிறப்பை இனிதின் ஆய்கின்றார். பொருள்களைக் கிடந்தவாறே சொல்லிக் கொண்டு போம் நெறி தன்மை நவிற்சி எனவும், அங்ஙனம் சொல்லிப் போதற்கு இடை இடையே உணர்வு சலியாமைப் பொருட்டுச் சுவை வேறுபடுத்தி அப்பொருளொடு இயைந்த பிற பொருட் டோற்றத்தை எழுப்பு நெறி உவமை உருவகம் எனவும், பெயர் பெறா நிற்கும். இவற்றின் வேறாக ஆயிரம் புனைந்துரைகள் கூறினாராயினும் அவையெல்லாம் இவ்வுவமை உருவகம் என்னும் இரண்டிலே அடங்கும் என்று கூறித் தொல் காப்பியனார் உவமவியல் ஒன்றே வகுத்துக் காட்டிய உயர்வை விரிக்கிறார். உருத்திரங்கண்ணனார், இப்பட்டினப்பாலையில் இருபது உவமைகள் காட்டியுள்ளமையை வரம்பிட்டுரைக்கும் இவர் அவ்வுவமை யமைதியையும் விளக்குகிறார். உலகியற் பொருள்களில் அழகாற் சிறந்து மக்கள் மனவுணர்வை எளிதிலே கவர்தற் பயத்தவான அரிய பெரிய பொருள்களைக் கூறும் வழியெல்லாம் தன்மை நவிற்சியும், அவற்றிடையே இயற்கையழகுப் பொருளின் வேறாவன சில வந்தால், அவற்றை அழகு பெறக் கூறல் வேண்டி உவமையும் வைத்துரைக்கும் நுட்பம் பாராட்டற்பாலது என்கிறார். ஆசிரியர், உலகியற் பொருள்களைக் கிடந்தவாறே வைத்துக் கூறுவதையும், உலக இயற்கைப் பொருள் தோற்றங்களை இடையறாது திரிந்து கண்டு வியந்து கழிபெருமகிழ்ச்சி அடைந்தவர் என்பதையும், வானநூல் வல்லுநராகத் திகழ்ந்தார் என்பதையும் விரித்துரைக்கிறார். வரலாற்றுக் குறிப்புகள் : இப் பகுதியில் பௌத்த சமண சமய வளர்ச்சி, பரவியவகை என்பவற்றை அசோகர்கல்வெட்டு பாகியாள் வழிநடைக் குறிப்பு என்பவற்றாலும் சைன சூத்திரம், மணிமேகலை என்பவற்றாலும் உறுதிப்படுத்தி உருத்திரனார் உரைப் பொருத்தத்தை ஏற்கிறார். கடல் வாணிகம், பண்டையரசர் செங்கோன்மை, கந்தழி என்பவற்றை ஆய்ந்துரைக்கிறார். கரிகால் வேந்தன் போர்த்திறம் அறச் செயல் என்பவற்றையும் தொகுத்துரைக்கிறார். பாவும் பாட்டின் நடையும்: இப்பகுதியில் நால்வகைப் பாவும் அகவல், வெண்பா என இரண்டனுள் அடங்குதலைத் தொல்காப்பிய வழியில் எடுத்துரைக்கிறார். அகவலும் வஞ்சியும் கலந்த பட்டினப் பாலை நடையை, அகவலோசையும், இன்பங் குறையாமைப் பொருட்டுத் தூங்கலோசையும் கொண்டிருத்தலையும், அகவலடிகள் 138 என்றும் வஞ்சியடிகள் 163 என்றும் அவற்றின் இயைபு பாலும் தேனும் கலந்தாற்போன்றது என்றும், இஃது உருத்திரங்கண்ணனார் இசையறிவு மாட்சி என்றும் இயம்புகிறார். வஞ்சி அடிகள், அகவலடிகளை ஆங்காங்கு ஒரு சேரக் கூறுமிடத்தும் அவை ஓரோசையாய்ச் செல்ல வொட்டாமல் எதுகை மோனை முதலிய எழுத்தமைதிகளானுஞ் சிறிது சிறிது ஓசை வேறுபடுத்திப் போகின்றார் என்பதை நன்கனம் எடுத்துக் காட்டி விளக்குகிறார். தம்மாற் பாடப்படும் பொருள் வழியே தம் அறிவை வைத்து மொழிந்து போகுங்கால் இடர்ப்படாது தோன்றும் எதுகை மோனைகளையே அமைத்திடுகின்றார். பொருளுரைக் கேற்ற எதுகை மோனை எளிதிற்றோன்றா விடத்து எதுகை போல ஓசை பொருந்துஞ் சொற்களைப் பதித்திடுகின்றார் என்று எடுத்துக் காட்டுகின்றார். பொருளுக்கு இசையச் சொற்பொருத்தும் முறை இவ்வாசிரியரோடு ஒருகாலத்தினரும் இவர்க்கு முன்னோருமான பண்டைச் செந்தமிழ்த் தண்டா நல்லிசைப் புலவர் தமக்கெல்லாம் பொதுவிலக்கணமாம் என்று பாராட்டும் இவர், பிற்றை ஞான்றைத் தமிழ்ப் போலிப் புலவரோ பொருட்சிறப்புச் சிறிதுமின்றி வெறுஞ் சொல்லாரவார அமைப்பிலேயே தம் அறிவைக் கழித்துத் தெளி தமிழுக்குந் தமக்கும் இழுக்குத் தேடுவாராயினர் என்று இரங்குகின்றார். இப்பாட்டின் நடையை, இனிய தெளிதமிழ்ச் சுவையூறிய முழுமுழுச் சொற்களால் இப்பாட்டு முற்றும் அமைந்திருக்கிறது. அவற்றின்கட் டொடர்புபட்டு எழூஉம் இன்னோசை குழல் யாழ் முதலிய கருவிகளினின்று போதரும் ஒலிபோல் மிகவும் தித்தியா நின்றது என்றும், நீர்மடையிலே தெள்ளத் தெளிந்த அருவிநீர்திரண்டு ஒழுகுதல் போல் இச் செய்யுளோசையும் மெல்லென்று மொழுமொழுவெனச் செல்கின்றது என்றும், மாம்பழச் சாறு பெய்த குடுவையின் எப்பக்கத்தே பொத்திட்டு நாவை நீட்டினும் அதன் வழியே யொழுகும் அச்சாறு தித்தித்தல் போல, இவ்வரிய செய்யுள் எவ்விடத்தே அறிவு தோயினும் ஆண்டு இனிமையே விளையா நின்றது என்றும், பயன்படாது நிற்கும் சொல் ஒன்று தானும் இதன்கண் காணப்படுவதில்லை. விலை வரம்பறியாப் பட்டாடையின்கண் ஒவ்வோர் இழையும் பிணைந்து நின்று அவ்வாடையினை ஆக்குதல்போல, இதன்கண் ஒவ்வொரு சொல்லும் ஒன்றை ஒன்று கௌவிக் கொண்டு இச்செய்யுளை ஆக்குகின்றது என்றும் இப்பாட்டின் நயங்களைப் பாராட்டுகிறார். அடிகளார் ஒரு நூலை எப்படிச் சொல் சொல்லாக எண்ணிப் படித்தார் என்பதை விளக்குவதுபோல், இப்பாட்டின்கண் சிறிதேறக்குறைய ஆயிரத்து முந்நூற்று அறுபத்தொன்பது சொற்கள் இருக்கின்றன. இவற்றுட் பதினொரு சொற்கள் வடசொற்களாம். அவை மகம், அங்கி, ஆவுதி, பூதம், மது, பலி, பதாகை, அமரர், கங்கை, புண்ணியம், சமம் என்பவனாம். ஞமலி என்னும் ஒரு சொல் பூழி நாட்டிற்குரிய திசைக் சொல்லாகும். ஆகவே இப்பாட்டில் நூற்றுக்கு ஒன்று விழுக்காடு பிற நாட்டுச் சொற்கள் கலந்தன என்பது அறியற் பாற்று. இதனால் இவ்வாசிரியர் காலத்தில் தமிழ் மிகவும் தூயதாக வழங்கப்பட்டு வந்த தென்பது புலப்படும் என்க என்கிறார். எடுத்துக் கொண்ட பாட்டை ஆர்வத்தால் பாராட் டுகிறார். என்று எண்ணுவார். உண்டாயின் இம்முல்லைப் பாட்டை ஏனை ஒன்பது பாட்டுகளோடும் ஒப்ப வைத்து நோக்குங்கால் இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்படவில்லை என்றும், இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம்முல்லைப் பாட்டில் காண்டல் அரிது, இஃது ஏனையவற்றைப் போல் மிக உயர்ந்த தீஞ்சுவை நடையினதாகக் காணப்பட வில்லை என்றும், இழுமென் ஓசையுடன் தித்திப்பாக எழுதப்பட்ட ஓரடியையாவது இம்முல்லைப் பாட்டில் காண்டல் அரிது, இஃது ஏனையவற்றை நோக்கப் பெரும்பாலும் எங்கும் வல்லென்ற ஓசையுடையதாய் இருக்கின்றது என்றும், ஏனைப் பாட்டுகளிற் போலச் சொல்லின் கொழுமை இதன்கண் மிக முதிர்ந்து தோன்றாமையின் இது தன்னைக் கற்பார்க்கு ஏனைய போல் மிக்க சொல்லின்பம் பயவாது என்று கருதுகின்றாம் என்றும் எழுதுகின்றார் (முல்லைப் பாட்டு 57) அடிகளார் ஆய்வுத் திறத்தை வெளிப்படுத்தத் தக்க மற்றொரு குறிப்பும் இதன்கண் உண்மை அறியத் தக்கதாம். முல்லைப் பாட்டின் நடையினால் அதனை இயற்றிய ஆசிரியர்நப்பூதனார் துறவொழுக்கமும் வல்லென்ற இயல்பும், அறிவாழமும் மிக்க மன அமைதியும் உடையர்என்பது குறிப்பாக அறியப்படும் என்றும், காட்டிடத்தையும் மழைக் காலத்தையும் தலைவி தனிமையையும் பொருளாகக் கொண்டு இச் செய்யுள் யாத்தமையானும் துறவோர் கருவிகளை உவமை எடுத்துக் காட்டுதலானும் அவையே இவர் தன்மையாம் என்பது தெளியப்படும்என்றும் நுண்ணிதின் ஆய்ந்து கூறுவது அஃதாம். விளக்க உரைக் குறிப்புகள் :. இப்பகுதியில் மிக இன்றியமையாத மாட்டு என்பதன் இலக்கணத்தை முற்பட விரிவாக ஆய்ந்து தெளிவாக வரைதலை மேற்கொள்கிறார் அடிகளார். ஆசிரியர் நச்சினார்க்கினியர் அம் மாட்டினைக் கொண்டே நூலாசிரியர் உளப்போக்கிற்கு மாறாக உரை கண்டார் என்பதை மேலே விரிவாக எடுத்துக் காட்டி விளக்குதலால், இவ்விளக்கம் இன்றியமையாதது ஆயிற்றாம். மாட்டு : ஒரு பொருள் ஓரிடத்துச் சென்று ஒருவாற்றான் முடிந்தும் முடியாமலும் நிற்பப், பிறிதொரு பொருள் அவ்விடத்தினின்றும் தோன்றி நடந்து போய்ப் பிறிதோரிடத்து முடிந்தும் முடியாமலும் நிற்ப, இங்ஙனமே இடையில் வருவன எல்லாம் அமைய, கடைசிப் படியாக அப்பாட்டின் பொருள் முற்றுப் பெறுவதாகும். இவ்வாறு இடை இடையே முடிந்தும் முடியாமலும் நிற்கும் பொருள்கள், கடைசியாக அப்பாட்டின்கட் கருக்கொண்ட முதற்பொருளைச் சார்ந்து முடியுமாகலின் சார்பு பொருள்கள் என்று பெயர் பெறுவனவாகும். இச்சார்பு பொருள்களோடு கூடிச் சிறந்து விளங்கும் பொருள் முதற்பொருள் எனப்படும். முடியணிவேந்தன் ஒருவன் அருமணி குயிற்றிய செங்கோல் கைப்பற்றி அரியணை, வீற்றிருப்ப, அவனைச் சார்ந்து நின்று, அவன்தன் அரசியற் சுற்றமெல்லாம் விளங்கினாற்போல ஒரு பாட்டின் கட் கருக்கொண்ட முதற்பொருள் அதற்கு ஓருயிராய்ச் சிறந்து நிற்ப ஏனைச் சார்பு பொருள்களெல்லாம் அதனைச் சூழ்ந்து கொண்டு அதனைச் சிறப்பித்து அவ்வாற்றால் தாமும் விளங்கா நிற்கும் என விளக்கும் அடிகளார், நச்சினார்க்கினியர் அதனைக் கொண்டுணர்ந்த வகையை வெளிப்படுத்துகிறார். மாட்டும் நச்சினார்க்கினியரும் மாட்டு என்னும் பொருள்கோள்முறை இதுவேயாதல் அறிய மாட்டாத நச்சினார்க்கினியர், இப்பத்துப்பாட்டு கட்கும் ஒருமுறையுமின்றி ஓரிடத்து நின்ற ஒரு சொல்லையும், பிறிதோரிடத்து நின்ற பிறிதொரு சொல்லையும் எடுத்து இணைத்து உரை உரைக்கின்றார். அங்ஙன முறைகூறுதல் நூலாசிரியன் கருத்துக்கு முற்றும் முரணாதலானும், இவர்க்கு முன்னிருந்த நக்கீரனாரை உள்ளிட்ட தொல்லாசிரியர் எவரும் இவ்வாறு உரை உரைப்பக் காணாமையாலும் நச்சினார்க்கினியர் உரைமுறை கொள்ளற்பால தன்றென மறுக்க என வரைகின்றார். விளக்க உரைக் குறிப்புப் பகுதியிலே இம்மாட்டு இலக்கண விளக்கம் முதல் 18 இடங்களில் அவரை அடிகளார் மறுத்து எழுதுகிறார். அவற்றுள் ஓரிரு இடங்களைக் கண்ட அளவானே, அடிகளார் கொண்ட வரைமுறை இயல்பாக நூலாசிரியன் கருத்தொடும் இணைந்து செல்லுதல் விளக்கமாகும். அகனகர் வியன்முற்றத்துச் சுடர்நுதன் மடநோக்கி னேரிழை மகளி ருணங்குணாக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கனங் குழை பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு முக்காற் சிறுதேர் முன்வழி விலங்கும் விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் கொழும் பல்குடிச் செழும்பாக்கம் என்னும் பகுதி இப்பாடலின் 20 முதல் 27 ஆம் அடிகளாகும். இவ்வடிகளின் பொருளாக, பாக்கங்களிலே அகன்ற வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அவ்வீட்டு முற்றங்களிலே உலர வைத்திருக்கும் நெல்லுக்குக் காவலாய் இருக்கும் சிறுபெண்கள் ஒளி விளங்கு நெற்றியும் கள்ளம். அறியாத பார்வையும் திருந்திய அணிகலன்களும் உடையர். இவர்கள் அந்நெல்லைத் தின்ன வரும் கோழிகளை வெருட்டும் பொருட்டு எறிந்த சுறவுக்குழைகள் அம்முற்றத்திற் சிதறிக் கிடந்து, அங்கே சிறுபையன்கள் மூன்று உருள் உடைய சிறிய தேரைக் குதிரையின்றி இழுத்துக் கொண்டு வருகையில், அதன் உருள்களை இடறி அச்சிறு தேர் போகாமல் வழிமுன்பை விலக்குகின்றன. தாம் மனங் கலங்குவதற்குக் காரணமான பகை தமக்குச் சிறிது மில்லாமையால் மனக் கொழுமை யினையுடைய பல குடிகள் நிறையப் பெற்றிருக்கின்றன அப்பாக்கங்கள் எல்லாம். என்று அடிகளார் வரைகின்றார் (33) இவற்றுக்கும் வேண்டும் உரைவிளக்கக் குறிப்புகளையும் வழங்குகின்றார் (81-82) சுடர் நுதல் மடம் நோக்கின் (21) நேரிழை மகளிர் உணங்கு உணா கவரும் (22) கோழி எறிந்த கொடு கால் கனம் குழை (23) பொன்கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் (24) முக்கால் சிறுதேர்முன் வழி விலக்கும் (25) அகல் நகர்வியன் முற்றத்து (20) குறும்பல்லூர் (28) என்று கொண்டு இஃது இருஞ்செருவின் (72) விலங்குபகையல்லது கலங்குபகை யறியாப் பாக்கமென மேலே கூட்டிற்று என்று உரைவரைகின்றார் இனியர். பாட்டுச் சென்ற வாறே எளிதிலே பொருள கொள்ளக் கிடக்கும் இவ்வடிகட்கு இப்பொருள் காணமாட்டாத நச்சினார்க்கினியர் இவற்றை ஓரியைபுமின்றிக் கையினுங் கலத்தினும் மெய்யுறத்தீண்டிப், பெருஞ்சினத்தாற் புறக் கொடாஅ திருஞ்செருவின் என்னும் எழுபது எழுபத்திரண்டு எழுத்து மூன்றாம் அடிகளோடு சேர்த்துப் பொருளுரைத்துப் பின்பவற்றைக் கொண்டு வந்து கொழும்பல்குடிச் செழும்பாக்கம் என்பதனொடு கூட்டி முடித்து இடர்ப்படுகின்றார், இங்ஙனம் பொருளுரைத்தல் பாட்டின் வரன்முறை சிதைத்தலாமன்றிப் பிறிதென்னை? என்கிறார். இவ்வாறே 59 - 74 ஆம் அடிகளின் பொருள் முறையைக் கண்டு நச்சினார்க்கினியர் உரையை ஓரியைபுமின்றிக் கூட்டி முடித்து இடர்ப்படுகின்றார் என்றும், போலியுரை கூறினார் என்றும், பெரியதோர்இடர்விளைத்துப்பாட்டின் பொருணயஞ் சிதைத்தார், இவர்போல் இங்ஙனம் உரைக் குழப்பம் செய்வார் பிறரை வேறுயாண்டும் கண்டிலம் என்றும் வருந்தியுரைக் கின்றார். 193 - 212 ஆம் பொருளியைபைக் காணும் அடிகள், அவ்வாறு இயைத்தது தீம்பாலுணவிருப்ப அதனை உவர்த்தொதுக்கி அறிவு மயக்கும் கள்ளுண்பார் திறனோ டொப்பதாயிற்று எனத் துன்புறுகிறார். அடிகள் சால்பு நச்சினார்க்கினியரை இவ்வுரைப் போக்கால் வருந்தி யுரைக்கும் அடிகளின், செந்தண்மையுள்ளமும் புலப்படாமல் போகவில்லை. நச்சினார்க் கினியர் உரை கூறாவிடின் இப்பத்துப பாட்டுகளின் பொருள் விளங்குவது அரிதேயாதல் பற்றியும், இவர் தொல்காப்பியம், கலித்தொகை முதலிய பண்டைச் செந்தமிழ் நூல்கட்கு அரிய பெரிய தண்டமிழுரை வகுத்தது பற்றியும் இவரை நெஞ்சார வழுத்தி இவர்க்குத் தொண்டு பூண்டு ஒழுகும் கடப்பாடு மிகவுடையேமாயினம், இவர் வழுவிய இடங்களிலும் இவரைப் பின்பற்றி உலகை ஏமாற்றுதல் நடுவுநிலை யாகாதாகலின் இவர் தம் வழூஉக்களைக் களைந்து திருத்திய பின் இவரைச் செந்தமிழ் மாமுகில் வள்ளலாய்க் கொண்டு வழிபடுவோம் என்க என்று எழுதும் பகுதி இவர்தம் ஆய்வியல் அறநெஞ்சையும் செந்தண்மை சேர அந்தண்மை யையும் ஒரு சேரக் காட்டுவதாம். பட்டினப்பாலையில் அமைந்துள்ள 27 பொருத்து வாய்களையும் (மாட்டுகளையும்) அருமையாக இணைத்து நூலாய்வை நிறைவு செய்கிறார். மேலாய்வுக்குப் பயன்படும் வகையிலும் இன்னவாறு நூலில் வரும்அருஞ் சொற்பொருள் அகரவரிசைகளையெல்லாம் ஒரு சேரத் தொகுப்பின் ஓர் அரிய அகர முதலி வாய்க்கும் வகையில், அகவ முதல் வைகல் ஈறாக அருஞ்சொற்களை அடைவு செய்து, சொற்பொருளும் விளக்கமும் வரைந்து வைத்து, இவ்வகரவரிசை கொண்டே நூற்பொருளைக் கற்பார் தாமே கண்டு கொள்ள வழி காட்டியுள்ளார். இலக்கிய ஆய்வாளர் செய்தக்க செயற் பாடுகளைச் செய்து காட்டிய ஆய்வுச் சான்று இப்பட்டினப் பாலை ஆராய்ச்சியுரை என்பதைச் சொல்லி அடுத்துச் சமய ஆராய்ச்சித்திறன் என்னும் பகுதியைக் காணலாம். 7. சமய ஆராய்ச்சித் திறன் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் அடிகளார் ஆராய்ச்சி நூல்களில் மிக விரிவானது இந்நூல். இந்நூல் சமய ஆய்வா மணிவாசகர் வரலாற்று ஆய்வா, அவர்தம்கால ஆய்வா, தமிழ் இலக்கிய ஆய்வா, சமயச்சீர்திருத்த ஆய்வா, தமிழக வரலாற்றாய்வா எனின் எல்லாம்தகும் என்னுமாறு அமைந்தது. மணிவாசகர், சமய நால்வருள் ஒருவர்என்பது எவர்க்கும் ஒப்ப முடிந்த முடிவு ஆகலான், சமய ஆய்வு எனத் தலைப்புத் தரப்பட்ட தாம். ஞான சாகர முதற்பதுமத்தில் மாணிக்கவாசகர் காலநிருணயம் என்றொரு கட்டுரையை அடிகளார் எழுதினார் (1903) அதன்பின் அக்கட்டுரையை மறுத்து எழுதியவர்களின் கருத்துகளை ஆராய்ந்து அவற்றை மறுத்து 1908 ஆம் ஆண்டில் மாணிக்கவாசகர் காலம் என்னும் பெயரில் ஞானசாகர நான்காம் பதுமத்தில் எழுதினார். அதன்பின் இருபது ஆண்டுகளாய்ப் பொதுவாகத் தமிழ்நூல்களின் கால அளவை பற்றியும், மாணிக்கவாசகர் கால வரையறைப் பற்றியும் அறிஞர்கள் பலராலும் எழுதி வெளியிடப் பட்ட கட்டுரைகளையும் நூல்களையும் ஆராய்ந்தார். தொல்காப்பியம் முதல் சிவஞானபோதம் இறுதியாக வந்த தென்னூல்வடநூல்களின் காலங்களை யெல்லாம் வரையறை செய்து நிறுவி, அம்முகத்தால் மாணிக்கவாசகர் காலம் சைவ சமய சமயாசிரியர் மூவர் காலத்திற்கும் முற்பட்டது என்றும் அது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்றும் கண்டார். அதனை விரித்தெழுதி நூலாக வெளியிட்டார். மாணிக்கவாகர் வரலாறும் காலமும் ஆங்கில முகவுரை, தமிழ் முகவுரை என்னும் இருபாற் பகுதிகளையும் தனியே 48 பக்க அளவில் கொண்டுள்ளது. (24+24) பொருளடக்கம் மிக விரிந்த வகையால் பொருள் அனைத்தையும் அடைவுறக் காணுமாறு 76 பக்கங்களில் இயல்கின்றது. மாணிக்கவாசகர் வரலாறும் ஆய்வும் 164 பக்கங்களைக் கொண்டுள்ளது. பிறப்பு முதல், சிவ வொளியில் மறைந்தமை வரை பதினெண் பகுப்புகளில் அப்பகுதி அமைந்துள்ளது. பெயர் மாணிக்கவாசகர் பிறப்பு என்னும் முதற்பகுதியில் இவர் தாய் தந்தையார் பெயர் புலப்படவில்லை என்கிறார். தந்தையார் பெயர் சம்பு பாதாசிரியர் என்றும் தாயார் பெயர் சிவஞான வதியார் என்றும் சிலர் வழங்குவதை மறுக்கின்றார். இப்பெயர்களை, நம்பியார் திருவிளையாடலோ, திருவாதவூரர் புராணமோ கூறவில்லை. இத்தகைய பெயர்கள் பழைய நாளில் இருந்த தமிழர்க்குள் வழங்கப்படவில்லை என இரண்டு காரணங்களைக் காட்டுகிறார். திருஞானசம்பந்தர் தந்தையார் பெயர் சிவபாதவிருதயர், தாயார் பெயர் பகவதியார் என்பதை உளங்கொண்ட பிற்காலத்தார் எவரோ இப்பெயர்களைப் புனைந்து கட்டி விட்டனர் என்கிறார். மாணிக்கவாசகரின் பிள்ளைப் பெயர் இன்னதென்று புலனாகவில்லை என்னும் இவர், திருவாதவூரர் மாணிக்கவாசகர் என்னும் பெயர்கள் இயற் பெயர்கள் அல்ல என்கிறார். பரஞ்சோதியார் மணிவாசகர் காலம்பாண்டியன் அரிமர்த்தனன் என்று சொல்லியது சான்று அற்றது அப்பெயர் வடமொழிப் பெயராதலால் ஐயுறற் பாலது என்கிறார். இறைவன் அருள் பெற்றது வரையான வரலாறுகளை எடுத்துரைத்த அளவில் அருள் பெற்ற வரையுள்ள ஆய்வு என ஆய்கின்றார். திருப்பெருந்துறையை அடுத்த அளவில், அன்பின்மிக்கு அங்கே வைகுதல் கருதித் தம்மொடு வந்தாரிடம் ஆவணித் திங்களில் பரிகள் அடையும் என்று அரசற்கு அறிவிக்கக் கூறியதால் திரும்பினர் என நம்பி திருவிளையாடல் கூறுகிறது. திருவாதவூரர் புராணமோ, மணிவாசகர் மனமாற்றம் கண்டு உடன்வந்தார் தாமே திரும்பி வேந்தனிடம் உரைத்தனர் என்கிறது. உளவியல் : இவ்விரண்டனுள் புராண உரையே பொருத்தமானது என்கிறார் அடிகளார். திருப்பெருந்துறையை அணுகியவுடன் தமக்கு நேர்ந்த உள்ள உருக்கத்தைக் கண்டு சடுதியில் தம் பரிவாரங்களையும் பாண்டியன்பால் திருப்பி விட்டனர் என்னும் நம்பியார் கூற்று ஆராய்ந்து செய்யாக் குற்றத்தை அடிகள்பால் ஏற்றுவதாய் முடிதலானும், எதனையும் தீரத்தெளிந்து செய்யும் அமைச்சியற்றிறத்தில் தலைநின்றார் அடிகள் என்பது இருபுராணங்களுக்கும் உடன்பாடாகலின், அவரது அத்தன்மைக்கு இழுக்காகாமல் அவர் தம் ஆசிரியனால் அடிமை கொள்ளப்பட்ட பின் தாம் மேற்கொண்டு வந்த வினையை மறந்திருக்க அப்பரிவாரங்கள் தாமாகவே அவரை அகன்று பாண்டியன் பாற் சென்றன என்று மற்றத் திருவாதவூரர் புராணங் கூறுதலானும் என்பது. தம் செயலற்றுச் சிவன் செயலாய் நின்று உலகியல் நிகழ்ச்சிகளை மறந்திருப்பாரைக் குற்றங் கூறுவார் யாண்டும் இலர். பேய் பிடியுண்டாரையும் வெறிபிடித்தாரையும் தம் கடமைகளின் வழீயினார் எனக் குறைகூறுதல் எவர்க்கும் உடன்பாடன்று என்று தீரத் தெளிவாய் உறுதியுரைக்கிறார். உளவியல், சட்டத்தின்முன் மதிப்பீடு செய்யப்படுதல் உண்மையை உளங்கொள்வார் இவ்வாய்வுரையின் தெளிவு காண்பார். பரிவாரங்கள் அகன்ற பின் பெருந்துறைக் கோயிலுள் மணிவாசகர் புக ஆங்கே அடியார் புடை சூழ மெய்க் குரவனைக் கண்டார் என்கிறது நம்பி திருவிளையாடல் திருப் பெருந்துறையில் ஒரு சோலையின் பால் அறிவு நூல் ஓதும் ஒலிகேட்டு அதனை ஒற்றரை ஏவியுரைத்து அவர் வந்து உரைத்தன்பின் குரவனையும் அவனைச் சூழ்ந்த அடியார் குழாத்தையும்கண்டார் என்கிறது வாதவூரர் புராணம். இவ்கூற்றிலேயும் நம்பிதிருவிளையாடல் பிழைபடுகிறது என்கிறார் அடிகளார். குருந்து : கோயில் : திருப்பெருந்துறையில் அடிகள் சென்ற காலத்து ஆண்டுச் சிவபிரான் திருக்கோயில் இருந்ததில்லை என்பதற்கு அதன்கண் இஞ்ஞான்றும் சிவலிங்க வடிவம் இல்லாமையும், ஆண்டுச் செய்யப்படும் நாள் வழிபாடு மாணிக்கவாசகர் பெருமாற்கும் அவரை ஆண்டருளிய ஆசிரியன் வைத்துச் சென்ற திருவடிச் சுவட்டிற்குமே ஆற்றப் படுதலும் திருவிழாவென்னும் சிறப்பு வழிபாடு மாணிக்க வாசகப் பெருமாற்கே செய்யப்படுதலும் சான்றாமென்க என்கிறார். மேலும் அடிகள் இறைவன் ஆசிரிய வடிவிற்றோன்றி அடிமை கொண்டருளியமையையே சொல்வதல்லாமல் திருக்கோயில் உண்டெனக் கொண்டு திருப்பதிகங்கள் அருளிச் செய்யாமையையும் நிறைமலர்க்குருந்தம் மேவிய சீர் ஆதியே என்றமையயும், அடிகட்கு அருட்பாடு நிகழ்ந்த பின்னரே திருக்கோயில் அமைக்கப்பட்டது என்பதையும் கூறுகிறார். அடிகட்கு முன்னும் ஆங்குத்திருக்கோயில் உண்டு என்னின், அதன்கண் இந்நாள்வரை சிவலிங்கம் இல்லாமையும், அடிகட்குமுன் இருந்ததாயின் ஆங்குச் சிவலிங்கம் இருந்திருத்தல் வேண்டும் என்றும் முன்னே இருந்து பின்னே இல்லை என்பது பொருந்தாது என்றும் கூறி, திருவாதவூரர் புராணவுரையே உண்மை வரலாறாம் என உறுதிசெய்கின்றார். சிவஞானபோதம் முதலியன : குரவன் கையில் சிவஞான போதம் இருந்தது என்பது கட்டிச் சொன்னது என்றும், குரவன் பன்னாள் நிலமிசைத் தங்கினான் அல்லன் ஐந்தெழுந்துண்மை உணர்த்திய ஞான்றே மறைந்தருளினன் என்றும், அடிகள் அன்பின் வடிவாய் மனந்திரிந்து நின்ற நாளில் அரசன் செல்வத்தைத் திருப்பணிக்குச் செலவிட்டமை குற்றமாகாது என்றும் அறப்பணிக்குத் தானே அளியாது போர்ப் பகைக்குச் செலவிட இருந்த பணத்தைத் திருப்பணிக்குச் செலவிட ஏவியது இறைவர்க்கும் இழுக்காகாது என்றும், அப்பாண்டிய மன்னன் இறைமையிற்கனிந்த வரகுணன் அல்லன் என்றும் அடிகள் திருத்தொண்டில் அவர்தம் மனைவியாரும், அருமை மகளாரும் ஒன்றி நின்றனர் என்றும், திருவெம்பாவை அந்நாளில் அவர்கள் பொருட்டாகத் திருப்பெருந்துறையிலே அருளிச் செய்யப்பட்டது என்றும், நரிபரியாக்கியமை அடிகட்கே அன்றிப்பிறர்க்கன்று என்றும், அடிகளைச் சிறைப்படுத்தி வருத்தியது திருவாதவூரிலேயே என்றும், அடிகளை வருத்துங்கால் குயிற்பத்துப்பாடப்பட்டது அன்று என்றும், பரிமேல் வந்த பாகனைக் கண்டு காதல் கொண்டார் உரையாக அன்னைப்பத்து பாடப்பட்டது அன்று என்றும், பாகற்குப் பாண்டியன் நல்கிய துகிலைச் செண்டுகோலின் வாங்கினான் என்பதே சரி என்றும் குதிரைப் பாகன் மன்னனிடம் விடைபெற்றுச் செல்லும் போது பாடப்பட்டதன்று பிடித்த பத்து. இது தம் இல்லம் சென்று பாடியது என்றும், இறையருளால் வையையில் வெள்ளம் வந்தது எனக் கொள்ளாமல், அறிவில்லா மழையால் வெள்ளம் அடிகட்கு இரங்கி வந்தது ஆகாது என்றும், ஒரு கூடை மண்ணால் பேருடைப்பை அடைத்து மறைந்து இறைவனைப் பிரிந்த துயரால் செத்திலாப் பத்துப்போலும் சில பதிகங்களை அடிகள் பாடினார் என்றும், திருமுதுகுன்றம்; திருவெண்ணெய் நல்லூர் என்னும் திருப்பதிகளுக்குச் சென்று அடிகள் வழிபட்ட சான்று இன்று என்றும், ஒவ்வொரு திருக்கோயிலில் ஒவ்வொரு கால் ஒன்றும் சிலவும் பலவுமாய் அடிகளாற் பாடப்பட்ட பாட்டுகளே பின்னுள்ளோரால் தமக்குத் தோன்றியவாறு தொகுத்தும் வகுத்தும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை யெல்லாம் நுண்ணிய ஆராய்ச்சியுடையார்க்கன்றி ஏனையோர்க்கு ஒரு சிறிதும் விளங்கா என்றும் கூறுகிறார். மெய்ப்பொருள் : புத்தரொடு சொற்போர் தொடங்குதல் புத்த சமயக் கோட்பாடுகளை மறுத்தல், சைவசமயக் கோட்பாடுகளை விளக்கல், சமயக் கொள்கைகள் ஆராய்ச்சி, நால்வரே நல்லாசிரியர்கள், பொருந்தாக் கொள்கைகள், பௌத்த குருவுக்கு விளக்கிக் காட்டிய உண்மைகள் ஆகியவை முற்றிலும் மெய்ப்பொருள் ஆய்வேயாம். இவ்விரிவுப்பகுதிகள், அடிகளே திருவாசகத்தின் அகச் சான்று கொண்டு எழுதிய தாகும். இதனை திருவாதவூரர் புராணத்திற்காட்டப்படாத இதனை யாமே கூர்த்தறிந்தெழுதி, அங்ஙனம் எழுதிய சைவ சமயக் கோட்பாடுகள் முற்றும் மாணிக்கவாசகப் பெருமான் தழீஇயினவே யாம் என்பதற்குச் சான்றாக அவர் அருளிச் செய்த திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார் என்னும் இரு நூல்களிலிருந்து மேற்கோள்களும் உடனுக்குடன் எடுத்துக் காட்டலானேம் என்கிறார். 164 பக்கங்களில் மாணிக்கவாசகர் வரலாறும் ஆராய்வும் நிகழ்ந்ததாகவும், அது தொட்டு 942 பக்கம்வரை கால ஆய்வுச் செய்தியே விரிகின்றதாம், கால ஆய்வு : வாசகன் என்னும் சொல்அடிகளையே உணர்த்துதல், நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாமை, திருமுகப்பாசுரம் கல்லாடத்திற் காணப்படுதல், சிவனடியார் பலர் திருத்தொண்டத் தொகையிற் கூறப்படாமை, திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை, திருக்கோவையாரின் செய்யுட் பொருள் பழந்தமிழ்நூல்களோடு ஒத்தல், வடநாட்டில் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது, கடைச்சங்கம் இல்லையாய்ப் போன காலம், திருப்பெருந்துறை மிழலைக் கூற்றத்துள்ளமை, பௌத்தமதம் தமிழ்நாட்டில் தலையெடுத்ததும் ஒடுங்கியதும், வீடுபேற்றின் கண்ணும் உயிர்கள் உளவாதல், சமணர்கள் தமிழ் ஆகமங்களை அழித்தமை, கட்டிப்பாடும் சூதாட்டப்பாட்டும் இருக்கு வேதத்தில் காணப்படல், மந்திரம் என்னும் சொல் தூய தமிழ்ச் சொல்லாதல், மாணிக்கவாசகரும் நம்மாழ்வாரும், சைவசமயச் சான்றோர் பொய்கையாழ்வார் கருத்தொருமை, நாச்சியார் பெரியாழ்வார் முதலியவர்களைப் பற்றிய ஆராய்ச்சி, திருமங்கையாழ்வார் காலம், பழைய வடநூல்களில் சிவ பெருமான் முழுமுதன்மை, பன்னீராழ்வார் களின் காலவரையறை, மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலம், முச்சங்க வரலாறும் தொல்காப்பிய காலமும், தொல்காப்பிய காலத் தொடர்ச்சி, இறையனாரகப் பொருளுரை யாராய்ச்சித் தொடர்பு, கடைச்சங்க காலத் தொடர்ச்சி, திருத்தொண்டத் தொகையும் திருவாதவூரடிகளும், அப்பர் சம்பந்தர் இருந்த கால ஆராய்ச்சி, மாணிக்கவாசகர்காலத் திட்ட முடிவு என 28 பகுப்புகளில் மாணிக்கவாசகர் காலத்தை ஆராய்ந்து முடிவு செய்கிறார். அப்பர் தேவாரச் சான்று : தேவார மூவர்க்கு மாணிக்க வாசகர் முன்னவர் என்பதனை உறுதிப்படுத்துதற்கு வலுவான சான்றுகளாக அப்பரடிகள் தேவாரத் தொடர்களைக் காட்டுகின்றார் அவை : அப்பரடிகள் நரியைக் குதிரை செய்வானும் என்றது மாணிக்கவாசகர் பொருட்டே நிகழ்ந்த திருவிளையாட்டே என்பது ஒன்று. மணியார் வைகைத் திருக்கோட்டின் நின்றதோர் திறமும் தோன்றும் என்று அவர் கூறியது மாணிக்கவாசகர் பொருட்டாக இறைவன் மண்சுமந்த திறம் உரைப்பதே என்பது மற்றொன்று. குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டாய் என்று அவர் கூறியது அடிகள் பெயராகிய வாசகன் என்பதே என்பது இன்னொன்று. நிறைவுக் குறிப்பாகப் பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பிலிபிடவூர் பேணும் என அவர் பாடுவதில் உள்ள பெருந்துறை என்பது மாணிக்கவாசகர்க்குக் குரவனாக இறைவன் அருள் செய்த தலமே என்பது பிறிதொன்று. இவற்றால் அப்பரடிகளின் காலத்திற்கு முன்னவர் மாணிக்கவாசகர் என்பதை உறுதிப்படுத்துகின்றார். சங்க காலத்தை அடுத்தே இருந்தார் என்பதை மறுக்கிறார். அடிகளார் பாடிய விருத்தப்பா என்னும் பாவினம் சங்க காலத்தை அடுத்தே இருந்த தில்லை என்று மறுக்கிறார். இனி அப்பரடிகளின் காலத்தை ஒட்டிய ஐந்தாம் நூற்றாண்டாகவோ ஆறாம் நூற்றாண்டாகவோ இருத்தல் ஆகாது என்றும் மறுக்கிறார். அடிகளின் பாடல்களில் விருத்தப்பா அரிதாக வழங்கப்படுதலும், கலித்துள்ளலும் அகவலும் பல்கிவரலும் அப்பரடிகள் காலத்தை ஒட்டியிருந்தமைக்குப் பொருந்துவ தாகாது என்கிறார். பல்வேறு வகையாலும் உண்மைச் சான்றுகள் என்னும் மணிக்கற்கள் கொண்டு அடிப்படை கோலி, அவற்றின்மேல் எழும்பிய மாணிக்கவாசகர் காலம்என்னும் விழுமிய மெய்ம்மணிக்கோயில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி முதற்றிகழ்ந்து, சைவ மெய்ச் சமயத் தெய்வமும் செந்தமிழ்த் தெய்வத் தனிமகளும் ஒருங்குகூடி மெய்யறிவுச் செங்கோல் ஒளியரசு நடத்தும் மாப் பெரு நிலையமாய் நிலைபேறுற்று நிலவுமாம் என்க மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் இச் செந்தமிழ்த் தனிப்பேர் ஆராய்ச்சி நூல், தொண்டை நாட்டுப் பல்லவபுரத்துத் தமது பொது நிலைக் கழகத் திரு மாளிகையில் நாகைகிழார் மறைமலையடிகளால் இயற்றப்பட்டது. ஓம் சிவம் ... என நூலை நிறைவு செய்கிறார். ஆய்வு விரிவு : இத்துணை விரிவாகக் கால ஆய்வு செய்வது அடிகளார் அடித்தளத்தில் இருந்தது இல்லை என்பது முதற்கண் அவர் கட்டுரையளவாக எழுதியமை கொண்டு அறியலாம். அதன் மறுப்பே, அதனைச் சற்றே விரிக்கத்தூண்டி ஒரு கட்டுரை மேலும் எழுதச் செய்தது, அடிகளார் கொண்ட மேற்கோள்கள் சான்றுகள் ஆகியவற்றைச் சுட்டியே விரிவான மறுப்பாகத் தமிழ் ஆராய்ச்சி நூலாரும் (Tamil studies) தமிழ் வரலாறுடையாரும் எழுதியமையும், பிறர்பிறர் ஆய்வு மறுப்புகளும், தூண்டுதலாகவே இப்பேராய்வை அடிகளார் மேற்கொண்டார் என்பது ஆங்காங்கு வரும் மறுப்புரைகளால் தெளிவாகப் புலப்படுகின்றது. அவர்களை எதிர்ப்பக்கத்தவர் என்றே பல்கால் குறிப்பிடுதல், தமக்குள்ளாக ஊன்றியிருந்த உண்மையை உறுதிப்படுத்திக் காட்டுதற் குறிப்பை வெளிப்படக் காட்டும். அன்றியும் தமிழ் வரலாறுடையாரே அடிகளார் கருத்தை முழுவதாக மறுத்து எழுதினார் என்பதும், அதற்குத்தக்க விரிவான மறுப்பாக இக் கால ஆராய்ச்சியைச் செய்ததுடன் பல்வேறு இலக்கியக் கால ஆராய்ச்சியும் இதன் கண்ணே செய்தார் என்பதும் எங்கெங்கும் காணப்படுகின்றன. ஆய்வு நுணுக்கம் : இப்பெரிய ஆய்வின் இடையே பற்பல நுண்ணிய ஆய்வுக்கருத்துகைள அடிகளார் வெளியிடு கின்றார். அவற்றை முழுமையாகத் திரட்டல் பலதுறைப் பயன் விளைவாக அமையும். இவண் ஒரு சிறுபகுதி இவ்வாய்வுக்குத் தகக் குறிப்போம். புராணங்கள் எழுதினோர் மிகுந்த ஆராய்ச்சியுடையார் அல்லர்முன்னுள்ள ஒரு புராணம் ஒன்றைச் சொன்னால் பின்வருவோர் அதனை ஆராய்ந்து பாராமல் அதனை அங்ஙனே கூறிவிடுவர். முன்னாசிரியர் மொழிகட்கு ஏற்பவே பின்வந்த புராணகாரர் கூற்றுகட்கு உரைசெய்ய வேண்டும் என்று ஓராய்வு முறையைத் தெளிவிக்கிறார் (167-8) பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலான உரையாசிரியரின் உரைமுறையை ஆராய்ந்து பார்க்குங்கால் சங்கத் தமிழ் இலக்கியங்கட்குப் பிற்பட்ட காலத்தெழுந்த நூல்களில் இருந்து மேற்கோள்காட்டுதல் அவர்கள் கருத்தன்று என்பது தெற்றென விளங்கும் என்றோர் உரைமரபை வரைகின்றார் (179) ஆகுபெயருள் அணுக்கப் பொருள் ஆகுபெயர், அகல் பொருள் ஆகுபெயர் என்னும் இரண்டனை தாரம் என்னும் சொல்லாய்விடையே சுட்டுகிறார் அடிகளார். ஒரு சினைப் பொருளின் பெயர் அதன் முதலுக்காகி வருதலும் ஒரு நிறத்தின் பெயர் அந்திறத்தினையுடைய பொருட்கு ஆகி வருதலும் அணுக்கப் பொருளுடைய ஆகுபெயராம் என்னை? சினையும் அதன் முதலும், பண்பும் பண்பியும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத தற்கிழமைப் பொருள்களாய் இருத்தலின். மருக்கொழுந்து என்னும் ஓர் உறுப்பின் பெயர் அதனையுடைய நீலப்பூவுக்கும் பெயராகி வரும். இனிக் கங்கையின்கண் வேடச்சேரி, கட்டில் கூப்பிட்டது என்றாற் போல்வனவற்றுட் கங்கை என்பது கங்கைக் கரையினையும், கட்டில் என்பது கட்டிலுள்ளாரையும் உணர்த்துதற்கண் இயற்பெயர்ப் பொருட்கும் ஆகுபெயர்ப் பொருட்கும் அத்துணை நெருக்க மின்மையின் அவை அகன்ற பொருட்கண் வந்த ஆகுபெயராயின என அரிய இலக்கண ஆய்வு செய்கின்றார். இசையின் இலக்கணங்களெல்லாம் தமிழ் நூல்களிலிருந் தெடுத்தே வடமொழிக்கண் எழுதப்பட்டன என்று வடமொழிக் கண் முதன்முதல் இயற்றப்பட்ட இசையிலக்கண நூல்கள் கூறுதலை எடுத்துக்காட்டி விளக்குகின்றார் (191) தமிழில் இது காறும் அகராதி எழுதினோர் மொழிநூல் வரலாற்று நூல் என்னும் இவற்றின் உணர்வு வாய்க்கப் பெறாதவர் ஆகையால், இப்பொருளில் இச்சொல் தமிழ், மற்று இப்பொருளில் இஃது ஆரியம், இச்சொல் இன்ன காலத்து இப்பொருளில் வழங்கிற்று என்றெல்லாம் அவ்வச் சொற் பொருண்மை ஆராய்ந்து காட்டும் அறிவாற்றலுடைய ரல்லர்; மற்றுத் தமிழினும் ஆரியத்தினும் தாம் கண்ட கண்ட பொருள் களையெல்லாம் தாம் குறித்த சொற்களுக்குக் கூறி ஏட்டை நிரப்பி விடும் நீரர் என அகராதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய பணித்திறனைச் சுட்டுகிறார். (193 - 194) பாணபத்திரர் என்பாரைத் திருநீலகண்ட யாழ்ப் பாணராகப் பாணர் என்னும் பெயர் கொண்டு மயங்கியமை போலவே, சேரன் என்னும் குறிப்புக் கொண்டு பரிபுரக் கம்பலை யிரு செவியுண்ணும் குடக்கோச் சேரனைத்தம்பிரான் தோழரான சேரமான் பெருமாண்மேல் ஏற்றிப் பெரிய புராணம் உரைத்தமையும் (188). திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்ததாகக் கூறும் பெரிய புராணச் செய்யுட்கள் இரண்டும், பாண பத்திரர்க்கு இறைவன் பொற்பலகை இட்டாற்போற் றிருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கும்இட்டான் எனக் கூறவிழைந்த எவராலோ மாற்றிச் சேர்த்து விடப்பட்டனவா மல்லது, ஆராய்ச்சியில் வல்ல அருளாளரான ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டன அல்ல என்பதையும் குறிப்பிட்டுத் தம் ஆழ்ந்த ஆய்வைப் புலப்படுத்துகிறார். (200) தமிழ்ச் சொல் விழுக்காடு தமிழ்ச சொற்களின் விழுக்காடு காட்டித் திருவாசகத்தின் காலத்தை உறுதிப்படுத்தும் அடிகளார் அதனை நன்கு விளக்குகிறார். திருவாசகம் முழுதும் உள்ள சொற்களை எண்ணிப் பார்க்க முதன்மையாயுள்ளன இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பத்துச் சொற்களேயாம். இவற்றுள் முந்நூற்று எழுபத்து மூன்று வட சொற்கள். இவற்றை வகுத்துப் பார்த்தால், நூறு சொற்களில் தொண்ணூற்றிரண்டு அல்லது மூன்று தமிழ்ச் சொற்களும், மற்றைய எட்டு அல்லது ஏழு வடசொற்களுமாய் முடிகின்றன. முடியவே திருவாசகத்தில் நூற்றுக்கு ஏழு அல்லது எட்டு விழுக்காடு வடசொற்கள் வந்து விரவலாயின என்பது புலப்படும். திருச்சிற்றம்பலக் கோவையாரிற் சமயப் பொருள் மிக விரவாமல் பெரும்பாலும் தமிழ் அகப்பொருளே விரவி நிற்றலால் அதன்கண் நூற்றுக்கு 5 விழுக்காடே வட சொற்கள் கலந்து காணப்படுகின்றன என்று கூறும் அடிகளார், ஆறாம் நூற்றாண்டுக்குப் பின் எழுந்த நூல்களில்வடசொற்கள் இருபது விழுக்காடும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பின் இந்நாள் வரை எழுந்த நூல்களில் நூற்றுக்கு முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது வரையில் வடசொற்களும் நிலைபெற்று விட்டன என்கிறார். பண்டைத் தமிழ் வழக்குச் சிறிது சிறிது வீழ்ந்து, புதிய கலவை வழக்கு மெல்ல மெல்லத் தோன்றும் ஒரு காலத்தே திருவாசக நூல் இயற்றப்பட்டதால் நன்கு விளங்கும் எனச் சொல்வழியே நிறுவுகின்றார். (215). காலப்பகுப்பு : நில நூலார் நிலத்தினைத் துருவி அதன் கீழுள்ள பற்பல படைகளையும், அவ்வப் படைகளிற் புதைந்து கிடக்கும் பற்பல பொருள்களையும் ஆராய்ந்து பார்த்து, அவ்வப் படைகள் உண்டான காலத்தையும் அவற்றில் உலவிய உயிர்கள், அவ்வுயிர்கள் வழங்கிய பண்டங்கள், அப்பண்டங்களிலிருந்த மரஞ்செடி கொடிகள் முதலியவற்றையுமெல்லாம் வழுவாமல் விளக்கிக் காட்டுதல்போலத் தமிழ் நூலாராய்ச்சி செய்வோரும், தனித்தமிழ் உண்டானது முதல் இது வரையிற் போந்த காலத்தையும் துருவிப் பார்ப்பராயின், அது பல படைகளாய்ப் பிரிந்திருக்கவும், அப்படைகளிற் புதைந்து கிடக்கும் தமிழ் நூல்கள் அவ்வக் காலப் படையின் இயல்பையும், அஞ்ஞான்று உலவிய மக்கள் இயல்பையும் தெற்றெனக் காட்டவும் காண்பார்கள் என்றுகூறும் அடிகளார். எமதாராய்ச்சிக்கு விளங்கிய அளவு அக்காலத்தைத் தனித்தமிழ்க் காலம், புத்தகாலம், சமண காலம், சைவ வைணவ காலம், பார்ப்பனக் காலம், ஆங்கிலக் காலம் என ஆறு கூறாக வகுக்கின்றோம் என்கிறார். (223) பாரதப் போர் நிகழ்ந்த போது உடனிருந்த முடிநாகராயர் காலம் தொட்டுக் கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலம் - தனித்தமிழ்க் காலம்; கி.பி. முதல் நூற்றாண்டு முதல் நான்காம் நூற்றாண்டு காலம்- புத்த காலம்; கி.பி. நான்காம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை - சமண காலம்; கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை - சைவ வைணவ காலம்; கி. பி. பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை - பார்ப்பனக் காலம்; கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு முதல் இதுவரை சென்ற காலம் ஆங்கிலக் காலம் எனப் பகுத்துக் காட்டுகிறார் (223) திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருவெழு கூற்றிருக்கை என்னும் ஓர் அகவலைத் தவிர வேறு அகவல், வெண்பா, கலி, வஞ்சி என்னும் தூய பழந்தமிழ்ப் பாக்கள் முற்றும் வீழ்ந்து போக அவற்றினின்று பையப் பையத் தோன்றி வளர்ந்து வந்த புதுத் தமிழ்ப் பாக்களே முற்றும் நிலை பெற்றுப் பெருகி வழங்கினமை ஐயமின்றித்தெளியப்படும்என்று கூறித் திருவாசகம் அதற்கு முற்பட்டதா தலையாப்பியலால் உறுதிப்படுத்துகிறார். (232) கல்வெட்டு இறந்துபட்ட மறவர்க்குத் தவிர அரசர்கள் தம் பெரும் பீடும் எழுதித் தமக்கும் கல்நாட்டினரென்பது பழைய தமிழ் நூல்களில் யாம் ஆராய்ந்த பகுதிகளில் யாண்டும் கண்டிலேம் என்றும் நாளும் பொழுதும் பிறரால்அலைக் கழிவுற்ற வடநாட்டின் இயல்கல்வெட்டுத்தேவையை ஆக்கியதையும், தென்னாட்டுக்குப் பிறநாட்டார் அலைக்கழிப்புத்தமிழ் வேந்தர் ஒற்றுமையும் பேராற்றலும் கொண்டு விலக்கப் பட்டமையும் அவர்புகழெல்லாம் இலக்கியமாகித் திகழ்தலும் தென்னாட்டில் பழங்காலக் கல்வெட்டுகள் இல்லாமைக்கு ஏதுவாயிற்று என விரிவாக விளக்குகிறார் (238 - 42) வரகுணன் : பெரிய அன்பின் வரகுணன் என்பான் மாணிக்க வாசகர் கால வரகுணன் அல்லன், அவன் இவ்வரகுணன்போல் இறைவன் பால் அன்பில்லாதவனாவன். இருவரும் ஒருவராமெனக் கொள்ளல் ஆகாது என்பார் (235) கால மயக்கம் : நரியைக் குதிரை செய்வானும் என எதிர்கால நிகழ்ச்சியாகக் கூறியதை இறந்த கால நிகழ்ச்சியாகக் கொண்டு அப்பரடிகளுக்கு முற்பட்டவர் மாணிக்கவாசகர்என்பதை மறுப்பாரை, இறந்த காலத்தில் நிகழ்ந்ததொன்றனை எதிர்காலத்தின் வைத்து ஓதுதலும், எதிர்காலத்தின் நிகழற் பாலதொன்றனை இறந்த காலத்தின் வைத்து ஓதுதலும் பண்டைத் தமிழ் வழக்கின்கண் உண்மை, இறப்பே எதிர்வே ஆயிரு காலமும் சிறப்பத் தோன்றும் வழங்கு மொழிக் கிளவி என்று ஆசிரியர் தொல்காப்பியனார்கூறியமையையும் அதன் உரைகளையும் பிறர் சான்றுகளையும் கூறி, அக்கூற்றுப் பெரியதோர் இழுக்கு என மறுக்கின்றார் : (283) சமணர், பற்றிய குறிப்பு இன்மை : மாணிக்க வாசகர் வாக்கில் சமணரைப் பற்றியோ, பல்லவரைப் பற்றியோ குறிப்பு இல்லாமைஅவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பதை நிலைப்படுத்தும் என்கிறார் (288- 9) பிள்ளையார் திருமந்திரத்தில் 47 செய்யுட்கள் மூவாயிரத்தின்மேல் காணப்படுகின்றன. திருமந்திர முதற் செய்யுள் ஒன்றவன் தானே என்பது எனச் சேக்கிழார் உரைத்தாராகவும் அதற்கு முன் போற்றிசைத் தின்னுயிர், என்னும் செய்யுளும், அதற்கு முன் ஐந்து கரத்தனை என்னும் செய்யுளும் காணப்படுதல் பின்னவரால் சேர்க்கப்பட்டவையாம். மாணிக்கவாசகர் நூல் களிலும் சங்கத் தமிழ் நூல்களிலும் பிள்ளையாரைப் பற்றிய குறிப்பு எட்டுணையும் இல்லை. ஆனால்தேவாரத்தில் உள்ளதாகலான் இக்குறிப்பு ஒன்றுமே ஏனை மூவர்க்கும் மாணிக்கவாசகர்முன்னவர் என்பதை நாட்டுதற்குப் போதிய சான்றாம் என்கிறார் (352). மந்திரம்: மந்திரம் என்பது மறைத்துச் சொல்லுதல். மறைமொழி என்பதும் அது. இப்பொருளில் பழைய ஆரிய நூல்களில் வழங்குதல் யாண்டும் கண்டிலேம். இது தமிழ் நூல் வழக்கே என்பது. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப எனத் தொல்காப்பியம் கூறுதலால்புலப்படும் (385) அகத்தியரைப் பற்றிய கதைகள் எல்லாம் கட்டி வைத்த பொய்க் கதைகள். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின் வந்த நூல்களிலும்உரைகளிலும்புராணங்களிலும் மட்டுமே அக் கதைகள் காணப்படுகின்றன. இறையனார் அகப்பொருள் பாயிரத்தில் அகத்தியரைப் பற்றியுள்ள செய்தி நக்கீரனார் உரைத்ததன்று. பிற்காலத்தே சேர்க்கப்பட்டதாம். (390 - 1) அகத்தியர் : பன்னிரு படலம் அகத்தியர் மாணவர் பன்னிருவர் செய்தது என்பது கட்டுக் கதையே. இக்கதையை நம்பிக் கூறிய புறப் பொருள் வெண்பா மாலைப் பாயிரவுரை உண்மை யற்றதாம் (392) சிற்றகத்தியம் பேரகத்தியம் என்பவற்றின் போலிச் சூத்திரங்கள் பின்னையோராற் கட்டப்பட்டு அகத்தியர் பெயர் புனைந்து விடப்பட்டனவாதல் தமிழிலக்கணம் வல்லார் நன்குணர்வர் (394) இராமாயணத்தின்கட் சொல்லப்பட்ட கதையை உண்மை யென்று நம்பத் தலைப்பட்டமையால் வந்த குழறு படைகட்கு ஓர் அளவே இல்லை (396) திருவாதவூரடிகளாலும் திருமூலராலும் சொல்லப்பட்ட தமிழ் ஆகமங்களே, பின்னவர்களால் காமிகம் காரணம் என மொழி பெயர்க்ப்பட்டுள்ளன (406-7) அவை தச்சுக் கலை பற்றிய பழந்தமிழ் நூல்களே (408) சான்றுவகை : சான்றுகள் அகச்சான்றும் புறச்சான்றும் என இருபாலனவாம். அவற்றுட் புறச்சான்று என்பன பற்றும் பகைமையும் இல்லா நடுநிலையாளர் கூறும் மெய்யுரைகள். அகச்சான்று என்பன ஓர் ஆசிரியன் தான் இயற்றிய நூல்களில் தன் குறிப்பின்றியே தன் வரலாற்றினையும் தன் இயற்கை யினையும் கூறிவைப்ப, அவைதாம் அறிவுடை யோரால் ஆராய்ந்தெடுக்கப்பட்டு அவ்வாசிரியன் வரலாறும் தன்மையும் துணிதற்குச் சான்றாய் நிற்பன. இவ் வகையில் நம்மாழ்வார் பிறந்த பொழுதே பாலுண்ணாது தவத்தில் இருந்து ஓதாதுணர்ந்தமைக்குக் குறிப்பு இருவகைச் சான்றுகளிலும் இல்லை. திருஞானசம்பந்தர் பாலுண்டு பாடினார் என்றால், நம்மாழ்வார் பாலுண்ணாது பாடினாரென்பது கழிபெரு மேன்மையாமெனக் கதை கட்டிய புலவர் நினைத்தார் போலும் (410 - 2) பழந்தமிழ் நூற்பொருளும் சொல்லும் நம்மாழ்வார் பாடல்களில் காணக் கிடத்தலால்அவர் ஓதி உணர்ந்ததும், ஞானசம்பந்தர் பாடல்களில் அவ்வாறு காணக் கிடவாமையால் அவர் ஓதாதுணர்ந்தவர் என்பதும் புலப்படும், (4-20) இராவணனுக்குப் பத்துத் தலைகளும் இருபது தோள் களும் இருந்தன என்பது பழைய இராமாயணப் பகுதிகளில் பெறப்படவில்லை. கபிலரது குறிஞ்சிக் கலிப்பாட்டில் தவிர எங்கும் அவன் பத்துத் தலையுடையவனாய் இருந்தான் என்பது சொல்லப்படவில்லை, (472) முதலாழ்வார் மூவரும் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்கு முன்னும், எட்டாம் நூற்றாண்டின் நடுவுக்குப் பின்னும் இருந்திலர் என்பதே முடிந்த பொருளாம். (499) சுந்தரர் வயது : சுந்தரர் இரண்டாம் நந்திவர்மன் இறுதிக் காலம் முதல்அவன் மைந்தன் தந்திவர்மன் காலத்தின் முற்பகுதி வரை இருந்தார். இவர் காலம் கி.பி. 760 முதல் 810 வரையாம். திரு முறைகண்ட புராணம் 38000 பதிகம் அருளியதாகக் குறித்தலானும், இவற்றைத் திருக்கோயில்கள் தோறும் சென்று அருளிச் செய்தற்கு முப்பத்தைந்து ஆண்டுகளாயினும் வேண்டும் ஆதலாலும், இறையருளால் 16 ஆம் ஆண்டு முதல் பாடத் தொடங்கியிருந்தாலும் 50 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர் ஆதல் வேண்டும். இவர் 18 ஆண்டு மட்டுமே வாழ்ந்தார் என்னும் ஒரு விடுதிப் பாட்டின் கூற்றுப் பொய்க் கூற்றாம் (510-2) என்று இன்னவாறு, பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்துகிறார். ஆய்வு விரிவு : பழைய வட நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை கூறப்பட்டதையும், பன்னீராழ்வார்களின் கால வரையறையையும், மாணிக்கவாசகர் குறித்த கடைச்சங்க காலத்தையும், முச்சங்க வரலாறு, தொல்காப்பியர் காலம் என்பவற்றையும் திருத்தொண்டத் தொகை, அப்பர் சம்பந்தர் இருந்த காலம் என்பவற்றையும் விரிவாக ஆராய்ந்து மாணிக்கவாசகர் காலத்திட்ட முடிபு செய்கின்றார். கடைச்சங்க காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் முடிந்தது. அதனையே உயர்மதிற்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழின் துறை என்று மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலக் கோவை (20) யில் பாடினார். அவர் பாடிய சங்கம் பின்னர் எழுந்த சமண சங்கம் அன்று (597) தொல்காப்பியர் குறிக்கும் கொடிநிலை, கந்தழி, வள்ளி என்பன கதிரும் தீயும் திங்களுமே யாம் (656) பண்டைத் தமிழர் இவற்றை வணங்குதற் குறியாக அம்மூன்றின் வடிவு போன்ற குண்டங்கள் வெட்டுவித்து வேள்வி வேட்டனர். (663) இந்நாளைத் தமிழர் ஆங்கிலர் வழிப்பட்டமை போலவே, அந்நாளைத் தமிழருள் பலர் ஆரியர் வழிப்பட்டு அவர் ஒழுகலாறுகளைக் கொண்ட தமிழ் வழக்குக்கு முழு மாறாய் நின்றனர். (694) நூலே கரகம் என்னும் நூற்பாவில் குறிக்கப்பட்ட நூல், கலை நூலே அன்றிப் பூணூல் அன்று (707) உயிர்களை இட வகையால் (வளி, தீ, நீர், மண்) நால்வகைப் பட வகுத்துக் காட்டுதலேயன்றி, அறிவு வகையால் ஆறாகப் பகுத்துக் காட்டுதல் சமணர் கருத்தாதல் கண்டிலம் (718) விசும்பு ஒன்று உள்ளமை ஆங்குக் குறிக்கப் படவில்லை. (720) புத்த சமண ஆசிரியர்கள் தாம் இயற்றும் நூல்களின் முகப்பில் புத்தனையும் அருகனையும் வணங்காதிரார். தொல்காப்பியத்தில் அவ்வாறு வணக்கம் இல்லாமையொடு அவற்றைப் பற்றிய ஒரு சிறு குறிப்புத்தானும் காணப்படவில்லை (722) இற்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட பரிபாடலில் காணப்படும் சகடம், சடை, சண்பகம், சமம், சமழ்ப்பு, சமைப்பின் எனச் சகர முதற்றமிழ் மொழி களையும், ஞமன் என்னும் ஞகர முதற்றமிழ் மொழியினையும், தமிழில் வாரா என்ற தொல்காப்பியர் கி.மு. முப்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் ஆவர் (724) சிலப்பதிகார மணிமேகலைப் பெருந்தமிழ்ப் பாட்டுடைச் செய்யுட்கள் இயற்றப்பட்ட காலத்தை வகுத்தற்கும் கடைச்ங்க காலத்தை வகுத்தற்கும் நுறுங்காவைரவாள் போல் நின்று உதவுவது இலங்கை மன்னன் முதற்கயவாகுவின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பதாம் (802) திருமுறை கண்டபுராணம் நுண்ணிய உண்மையா ராய்ச்சியில் தலை நின்றவரும் சைவசித்தாந்த ஆசிரியரில் நாலாம் எண்ணுமுறைக்கண் நின்றவருமான உமாபதி சிவாசிரியர் செய்தது ஆகாது. அவர் பெயர் தாங்கிய வேறெவரோ ஒருவர் செய்ததாகல் வேண்டும் (818) வீரசைவம் : கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஈற்றில் வடுக நாட்டில் இருந்து தமிழ் நாட்டிற் குடிபுகுந்து வைகிய வீர சைவ மரபினர் பலருள் பாண்டிய நாட்டில் வைகிய ஒரு தெய்வப் பார்ப்பனக் குடியிலிருந்து மாணிக்கவாசகர் தோன்றினமையால் போலும் அவரை வீர சைவச் சான்றோர் முதலாசிரயராய்க் கொண்டு வழிபாடு செய்து வருவாராயினர். அதனால் சைவசமய குரவர் வரிசையில் வைத்துக் கொண்டாடிற்றிலர். இதனாலேதான் சுந்தரமூர்த்தி நாயனாரும் அவரது திருப்பெயரை விளங்கக் கூறாது பொய்யடிமை இல்லாத புலவர் எனச் சிறிது மறைத்துக் குறிப்பால் கூறினார். வீர சைவமும் சைவரும் ஒரு சமயமே என உண்மை கண்டு உறவு கலந்தபின் மாணிக்கவாசகரையும் நாலாம் சைவ சமயாசிரியராக ஒருப்பட்டுக் கொள்ளும் பெரும்பேறு பெறலாயினர் (821-22) திருவிடை மருதூர் மும்மணிக் கோவையிலே தான் முதன்முதலில் மாணிக்கவாசகப் பெருமான் ஏனை மூவரோடு சேர்த்து நாலாமவராகச் சொல்லப்பட்டிருக் கின்றார். வித்தகப் பாடல் முத்திறத் தடியரும் திருந்திய அன்பிற் பெருந்துறைப் பிள்ளையும் என்று பட்டினத்தார் கூறுவதால் அவர் காலத்திற்கு முன், முதல் மூவருமே சைவ சமய ஆசிரியராய்க் கொள்ளப்பட்டனர் என்பதும், அவரது காலத்திலேதான் மாணிக்கவாசகர் நாலாம வராக வைக்கப்பட்டார் என்பதும் விளங்கும், (823-4) ஆரிய நூல் வைப்பு முறை வேதம், உபநிடதம், ஆகமம் என நின்றாற் போலவே தேவாரத் திருப்பதிகங்கள் தமிழ் வேதங் களாகவும், திருவாசகந்திருக்கோவையார் என்பன தமிழ் உபநிடதங்களாகவும், திருமந்திரம் தமிழ் ஆகமமாகவும் ஒன்றற் குப்பின் ஒன்றாக வைத்து முறைப்படுத்தப்பட்டு நிற்கலாயின (860). அவர் வட நாட்டின்கண் இருந்து வந்த மரபினர் என்பது மகேந்திரம் என்பதைப் பயில வழங்க லாலும் சில சொல்லாட்சி களாலும் விளங்கும் (861-862) அவர் வீர சைவராய்ச் சிவலிங்க அருட்குறியைத் தம் திருமேனியில் அணிந்திருந்தார் என்பது எந்தையே ஈசா உடல் இடங் கொண்டாய் என் மெய்ந் நாடொறும் பிரியா வினைக் கேடா என விளங்கக் கூறுமாற்றால் அறியப்படும் (865) கடல் அகற்சி மாணிக்கவாசகர் காலத்தே தில்லைநகரின் அருகே கடல் நின்றது என்பதூஉம் திருஞான சம்பந்தர் காலத்தே அக்கடல் அந்நகரை விட்டு ஒருகல் வழி எட்டிப் பின்னிட அக்கடல் நீரொடு தொடர்புடைய ஒருகழி மட்டுமே. அந்நகரின் பாங்கர் நின்ற தென்பதூஉம், இஞ்ஞான்று அக்கடல் தில்லையை விட்டு ஏழு கல் விலகிப் போய்விட்டதைக் கணக்குச் செய்யச் சிறிதேறக் குறைய 225 ஆண்டுகளாவது சென்றதாகல் வேண்டும், (874) மொழி, மொழிபொருள் : சமயாசிரியர் மூவர்க்கும் திருமூலர்க்கும் மாணிக்கவாசகர் பின்னவர் எனின் அவர்தம் சொற்கள் சொற்றொடர்கள் யாப்பு ஆகியவற்றை எடுத்தாண்டு இருத்தல் வேண்டும். அவ்வாறு இன்றி மாணிக்கவாசகர் கையாண்ட சொற்கள் சொற் றொடர்கள் யாப்பு ஆகியவற்றை அவர்கள் கொண்டுள்ள சான்றுகள் மிகப் பலவாம் (875- 887) கோயில் அடியார் : சிவபிரான் திருக்கோயில்கள் பண்டை நாளில் எத்துணை இருந்தன, பின்றை நாளில் எத்துணை இருந்தன என ஆராய்ந்து பார்க்கும் முகத்தானும் ஏனை மூவர்க்கும் மாணிக்கவாசகர் முன்னவர் என்பது விளங்கும், (883) மாணிக்க வாசகராற் குறிப்பிடப்பட்ட தொண்டர்கள் எத்துணை பேர் அப்பர் சம்பந்தரால் குறிப்பிடப்பட்ட தொண்டர்கள் எத்துணைபேர் என ஆராயு முகத்தானும் அவர்க்கு மாணிக்கவாசகர் முன்னவர் என்பது புலப்படும் (892) எனப் பன்னெறி ஆய்வுகளாலும் மாணிக்கவாசகர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பதை உறுதிப் படுத்துகிறார். ஓராய்வு (குறிப்பாகக் கால ஆய்வு) எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்னும் நெறிமுறையைக் காண விரும்புவார்க்கு இலக்கண நெறிமுறை நூலாகத் திகழ்வது அடிகளார் அருளிய மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் என்னும் நூல் என்றமைதல் சாலும். 8. அடிகளாரின் அறிவியல் ஆராய்ச்சித் திறன் மக்கள் நூற்றாண்டு உயிர் வாழ்க்கை அடிகளார் இயற்றிய தொலைவில் உணர்தல், மரணத்தின் பின் மனிதர் நிலை, மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை முதலியன அவர்தம் அறிவியல் ஆராய்ச்சித் திறத்தின் சான்றுகளாக விளங்குவன. இவற்றுள் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்பதொன்றை நாம் ஆராய்வுக்கு எடுத்துக் கொண்டாலும் விரிவு மிக்கதேயாம். ஆதலால் அதனையும் சுருங்கிய அளவால் ஆய்ந்து அடிகளார் ஆராய்ச்சித் திறத்தை அறிவோம். மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்பது இரண்டு பாகங்களாய்த் தமிழ் ஆங்கில முன்னுரைகளுடன் 658 பக்க அளவில் அமைந்துள்ளது. சில நூல்களைக் கொண்ட பெருநூல் அது என்பதை அதில் வரும் 13ஆம் இயலான உணவு, 14, 15 ஆம் இயல்களான பொருந்தாவுணவு என்பவற்றைக் கொண்டு பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் என்னும் பெயரால் கிளை நூல் ஒன்று கிளைத்தமையால் அறியலாம். நெடிய ஆய்வு மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை அடிகளாரின் ஞானசாகரம் என்னும் திங்கள் வெளியீட்டின் ஐந்தாம் பதுமத்து முதல் இதழில் வெளிவரத் தொடங்கியது. நீண்ட வாழ்க்கை என்பதே முதல் இயல். நூற்பெயரோ மக்கள் நூறாண்டு உயிர் வாழ்தல் எப்படி? எனப் பெயரிய இந்நூல் என முதற் பதிப்பின் முகவுரை கூறுவதால் வெளிப்படும். இதழில்வெளிப்பட்டும் தடைப்பட்டும் 24 ஆண்டு களுக்குப் பின்னரே முடிவு பெற்றது. இக்காலமெல்லாம் இது பற்றிய தமிழ் ஆங்கில வடமொழி நூல்களைப் பயின்றும், அச் செய்திகளைத் தம்மிடத்துச் செயற்படுத்திப் பார்த்தும், அவற்றுள் எவை மிகச் சிறந்தவையாய்ச், செலவில்லனவாய் எளிதிற் செய்து பயன்தரத் தக்கனவாய் தெளியப் பட்டனவோ அவற்றையே இந்நூலில் வரைந்தார். இரக்க நூல் இத்தகையதொரு பயன் சிறந்த உரைநூல் தமிழ் மொழிக்கண் இல்லாப் பெருங்குறையால், ஆண் பெண் பாலாரிற் பெரும்பகுதியினர் தமது வாழ்க்கையில் பிழைமிக ஒழுகிப் பல்வகை நோய்களாலும் பொருட் செலவாலும் வறுமையாலும் பிடியுண்டு. தாம் ஆண்டு முதிரா முன்னரே இறந்தொழிவதல்லாமலும் தம் வயிற்றிற் பிறக்கும் பிள்ளைகளும், அவர்க்குப் பிறக்கும் பிள்ளைகளும் எல்லாம் அங்ஙனமே பெருந்துன்பங்களுக்கு வழிவழி ஆளாகி மடிந்து போகவும் செய்து விடுகின்றனர். தமிழ் மக்களின் துன்பம் மிகுந்த இக்குறுவாழ்க்கையைக் கண்டு எமதுள்ளத்தில் உண்டான இரக்கமே இந்நூலியற்ற வெளியிடுமாறு எம்மைத் தூண்ட லாயிற்று எனத் தமக்கு நேரிட்ட நூலியற்றல் தூண்டலை வரைந்துளார் அடிகள். எழுதிய முறை : இந்நூலை எழுதியுள்ள முறை பற்றியும் விளக்குகிறார் : மக்கள் வாழ்க்கையைப் பற்றிய இந்நூலில், எந்தப் பகுதியையும் மறைத்தெழுதுதல் ஆகாமையாலும், அன்றி, அங்ஙனம் மறைத்தெழுதினால் இன்றியமையாது தெரிந்து ஒழுக வேண்டிய முறைகள் விடப்பட்டு, அதனால் ஆண் பெண் பாலாரை இஃது அறியாமையினின்று எடுக்கமாட்டாதாய்ப் பயனின்றிக் கழியு மாதலாலும் ஆண் பெண் சேர்க்கை, மக்கட்பேறு, கருவிலக்கு முதலான பகுதிகளிற் சொல்ல வேண்டுவனவெல்லாம் ஒரு சிறிதும் மறையாமல் சிறப்பாகவே வரைந்திருக்கின்றேம் என்கிறார். முதற்பாகத்தில் நீண்ட வாழ்க்கை, உயிர்க்காற்று, மூச்சுப் பழக்கம், நெருப்பு, ஒளி, நிறம், நீர், நீர்நிலைகள், குடிநீர், குளிநீர், நிலம், உழவு, உணவு, பொருந்தா உணவுகள், அவற்றின் தொடர்ச்சி, உறக்கம் என்னும் 16 இயல்களும். இரண்டாம் பாகத்தில் ஆண்பெண் சேர்க்கை, இன்பமும் கருவும், மக்கட் பேறு, தாயின் மனநிலையும் கருவின் அமைப்பும், மகப்பேறும் மக வளர்ப்பும், கருவிலக்கு, நோய் இல்லா நீண்ட வாழ்க்கை, மனநிலையும் நீண்ட வாழ்க்கையும் என்னும் 8 இயல்களும் உள்ளன. ஆய்வு முறை : இந்நூற்பொருளை ஆராய்ந்த முறையைப் பற்றியும் அடிகளார் விளக்குகிறார். இதில் சொல்லப்பட்ட பொருள் களையும் முறைகளையும் பற்றி யாம் ஓயாது ஆராய்ந்த படியாகவே இருந்தேம். நோய் வரா வகைகளையும் வந்த நோய் நீக்கு முறைகளையும் பற்றித் தமிழ் ஆங்கில வடமொழிகளிற் சான்றோர் எழுதிய உயர்ந்த நூல்கள் பலவற்றை யாம் பயின்றறிந்த அளவில்நில்லாது, அவை தம்மையெல்லாம் எம்மிடத்தே செய்து பார்த்தும் எம்மைச் சார்ந்தாரிடத்தே செய்து பார்த்தும் அவற்றுள் எவை மிகச் சிறந்தனவாய்ச் செலவல்லனவாய் எளிதிற் செய்து பயன் பெறத் தக்கன வாய்த் தெளியப்பட்டனவோ அவைகளை இந்நூலின்கண் வரைந்திருக் கின்றேம் என்பது அது (முகவுரை - 10) வாழ்க்கையின் மறைபொருள் நுட்பங்கள் முற்றும், நோய் நீக்கும் இயற்கை முறைகள் முற்றும் நன்கெடுத்து விளக்கும் இந்நூல் ஆண் பெண் பாலார் இரு திறத்தினர்க்கும் பெரிதும் பயன்பட்டு அவை நீடினிது வாழ்விக்கும்என்னும் நம்பிக்கை மிகுதியும் உடையேம் என்று இந்நூற் பயனைக் கருதுகிறார் அடிகளார். நூறாண்டு வாழ்தல் : நூறாண்டு வாழ்தல் என்பது அரிதன்று; இயல்பாகக் கூடுவதே என்பதற்கு சேம்சு ஈசுதன் என்பார் ஒருவர், நூறாண்டும் அதற்கு மேலும் உயிர் வாழ்ந்த ஆயிரத்து எழுநூற்றுப் பன்னிரண்டு பெரியார் பற்றி வரைந்த வரலாற்றைச் சுட்டுகிறார். 132 ஆண்டு, 162 ஆண்டு, 150 ஆண்டு, 140 ஆண்டு, 112 ஆண்டு, 180 ஆண்டு - என வாழ்ந்த பெருமக்களை எடுத்துக் காட்டுவதுடன், நீண்ட நாள் உயிர் வாழ்வது எப்படி? என்பதைத் தம் வாழ்வியல் முறையோடு விளக்கிய பெருமக் களையும் சான்றுகளுடன் விளக்குகிறார் அடிகளார். ஆண்டு முதிர்ந்தமையால் உடம்பு தளர்ந்த நிலைக்கு வந்தாலும் அது பற்றி மனக்கிளர்ச்சி குறையாமல் இந்நூலில் நம்மாற் சொல்லப்படும் முறைகளை வழுவாது பின்பற்றி நடப்பார்களானால் திரும்பவும் தமதுடம்பை உரம்பெறச் செய்து எல்லா மக்களும் இனிது வாழ்வர் என்பது திண்ணம் என உறுதி சொல்கின்றார். இயற்கையாக உண்டாகும் இடி, மின்னல், மழை, தீ, நில அதிர்ச்சி, பாம்பு, புலி இன்னவற்றால் ஏற்படும் எதிர்பாராத் துயர்களையும் அருளொளியில் அழுந்தி நிற்கும் அறிவால் வருமுன்னே விலக்கிக் கொள்ள முடியும் என்பதைத் தம் வாழ்வியற் சான்றுகொண்டு விளக்குகிறார் அடிகளார் : வருமுன் விலக்கல் : ஒரு முறை யாம் பலமனேரி யென்னும் ஊரிற் குறுங்காட்டின் நடுவிலுள்ள மாளிகை ஒன்றில் தங்கியிருக்குமாறு நேர்ந்தது. ஒருநாள் இரவு அதில் யாம்படுத்து உறங்குகையில் ஒரு பாம்பு வந்து எமது கையிற் கௌவுவதாகக் கனவு கண்டு சடுதியில்விழித்துப் பார்க்க, உண்மையாகவே ஒரு கரும்பாம்பு எமது வலது கைம் மேற்புறத்தைக் கௌவிப் பல்லை அழுத்தும் நிலையில் இருந்தது. உடனே அதனைத் தப்பி அப்புறம் எழுந்து போய் உயிர் பிழைத்தேம். மற்றொரு முறை திருநெல்வேலியில் ஒரு வீட்டில் தக்கார் பலரொடு நல்லுரைபேசிக் கொண்டு சுவர்மேற் சாய்ந்து உட்கார்ந்திருந்தேம். அவ்வாறிருக்கையில், அந்தச் சுவரின் அடியில் ஒரு தேள் இருப்பதாக எமக்குச் சடுதியிலே ஒரு நினைவு தோன்றிற்று; உடனே பேச்சை நிறுத்தி அப்புறம் நகர்ந்து திரும்பிப் பார்க்கப் பெரிய கருந்தேள் ஒன்று எமக்குப் பின்னே இருந்தது; அதற்குத் திருவருள் உதவியால் தப்பிப் பிழைத்தேம். இங்ஙனம் யாம் தப்பிப் பிழைத்து வருகின்ற நிகழ்ச்சிகள் பல உண்டு என உள்ளொளியால் உணரப்படும் பாதுகாவலை உரைக்கிறார். மூச்சுப் பயிற்சி : பிராணவாயு என்பதை உயிர்க்காற்று என மொழியாக்கம் செய்கிறார் அடிகளார். உடம்பைப் பாதுகாத்தற்கு வேண்டி முதற்பொருள்கள் அத்தனையும் பிராண வாயுவிலேயே இருக்கின்றன என்கிறார். நாற்றக் காற்றால் நுரையீரல் சுருங்கிப் போய், அப்படியே சுருக்கமாகி நின்றுவிடும் என்பதை நுரையீரலுக்கு வந்த தீங்கு என்கிறார். சிராசு உத்தௌலா என்பவன் ஆங்கிலரொடு பகை கொண்டு அவர்களுள் நூற்று நாற்பத்தாறு பேர்களைப் பிடித்துப் பதினெட்டடி நாற்பக்க அளவுள்ள ஓர் இருட்டறையில் ஒருநாள் இரவு சிறை வைத்து, மறுநாட் காலையில் பார்க்க இருபத்து மூன்று பேர் மட்டுமே கொத்துயிரும் கொலையு யிருமாய்க் கிடந்தார்கள்; மற்ற நூற்று இருபத்து மூன்று பேரும்பிணமாகக் கிடந்தனர் என்னும் வரலாற்றுச் சான்று காட்டி மூச்சுக் காற்றின் தூய்மை இன்றியமையாமையை விளக்குகிறார் (20) மக்களின் மூச்சு ஓட்டத்தால் உண்டாகும் நச்சுக் காற்றானது பகற் பொழுதைக் காட்டிலும் இரவுப் பொழுதில் மிகுதியாகும் என்பதைப் பகலவன் வெளிச்சம் உள்ள பகற்காலத்திற் புற்பூண்டு மரஞ் செடி கொடி முதலான நிலையியற் பொருள்கள் நச்சுக் காற்றை உள்ளே இழுத்துத் தூய உயிர்க்காற்றை வெளியே விடுகின்றன; வெயில் வெளிச்சம் இல்லாத இராக்காலத்திலோ புற்பூண்டு முதலியன உயிர்க் காற்றை உள்ளிழுத்து நச்சுக் காற்றை வெளிவிடுகின்றன என விளக்குகிறார். மக்கள் உறங்கும் போது விளக்குகள் எரியுமானால் அவர்களது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தூய காற்றை அவை இழுத்துக் கொண்டு அவர்களுக்குத் தீமையை விளைக்கும் நச்சுக் காற்றை மேன்மேல் வெளிவிடுமாதலால் அதனை உள்ளிழுத்து அவர்கள் தமதுடம்பின் நலத்தை இழந்து போவார்கள். இதனாற் போலும் தலைமாட்டில் விளக்கை எரியவிடலாகாது என்று வீடுதோறும் வழங்கி வருகின்றார்கள், எனப் பழநாள் வழக்கின் நலத்தை விளக்குகிறார். தடிப்பான பொருள்களையெல்லாம் நிலமானது தன்னிடத்தே இழுக்கும் தன்மை உடைமையினால்நச்சுக் காற்றானது எப்போதும்நிலமட்டத்தில் உலவிக் கொண்டிருக்கும். உயிர்க்காற்றோ நொய்ய பொருளாகையால் நிலமட்டத்திற்கு மேல் உலவிக் கொண்டிருக்கும், இந்த ஏதுவினால் நிலத்தின்மேல் படுப்பதைக் காட்டிலும், கட்டிலின்மேற்படுப்பதே மிகவும் நல்லதாகும். மூச்சுப் பழக்கம் பற்றிச் சொல்லும் அடிகள் நூறு ஆண்டும் அதற்கு மேலும் உயிர் வாழது விரும்புகின்றவர்களுக்கு இந்த நூலிற் சொல்லப்படும் ஒவ்வொரு பொருளும் விலையிடுதற்கரிய மாணிக்கங்களாகவே தோன்றும். இந்த நூலில் எம்மால் எடுத்துச் சொல்லப்படும் பொருள்கள் எளிதிற் கிடைப்பன அல்ல; ஆகையால் நெடுங்காலம் உயிரோடு இருந்து பயன்பெற வேண்டும் நண்பர்கள் இவற்றை மனத்தின் கண் ஊன்றிப் பெறுதற்கரிய பெரும்பயனைப் பெறுவார்களாக! பின்னே சொல்லப்படும் பொருள் மிகவும் உன்னிற்கற்பால தொரு முழு மாணிக்கமாகும்; நன்றாக உற்றுணர்க என மூச்சுப் பழக்கம் பற்றி உரைக்கிறார். உயிர்க்காற்றுச் சிறிது நேரம் வலமூக்கில் ஓடிவரும்; அப்புறஞ் சிறிது நேரம் இடமூக்கில் ஓடி வரும். அப்புறம் ஒரு சிறிது நேரம் இரண்டு மூக்கிலும் ஓடி வரும். இங்ஙனம் மாறிமாறி ஓடி வருதலும், ஒப்ப ஓடி வருதலும் ஏன் என்று இதுவரையில் நீங்கள் ஆராய்ந்து பாராவிட்டாலும், இவ்வுண்மையை நாம் தெரிவித்த பிறகேனும் இஃது ஏதோ ஒரு பெரும்பயன் தருதற்காகவே இவ்வாறு ஓடி வருகின்றதென உங்கட்குத் தோன்ற வேண்டும் அல்லவா என அதனை ஆழமாக வினாவி விளக்கம் புரியும் அடிகள், அப்பயிற்சியை வாயளவில் அல்ல ஏட்டளவில் சொல்வாரல்லர்; தம் உடலையே ஆய்வுச் சாலையாகக் கொண்டு தாமே ஆய்வாளராக இருந்து நுணுகி ஆராய்ந்து அந்நுட்பங்களை உணராரும் உணர்ந்து பயன் கொள்ளும் வகையில் உயிர் வளர்க்கும் நெறியை உலகுக்கு வழங்குகிறார் என்பதை உணரலாம். மாறுதல் : மாறுதலே உயிர் வாழ்க்கையாம்; அஃது இன்மையே மாய்வாம் என்னும் கொள்கையை உணர்த்தும் போது ஆய்வின் எளிமையும் அதன் முடிவின் அருமையும் தெளிவாகின்றதாம். உடலின் வலப்பாகத்தை ஞாயிற்று மண்டிலம் என்றும், இடப்பாகத்தைத் திங்கள் மண்டிலம் என்றும், வலமூக்கில் ஓடும் காற்று பகற்கலை என்றும் இடமூக்கில் ஓடும் காற்று மதிக்கலை என்றும், முன்னது வெப்புடையது பின்னது தட்புடையது என்றும், முன்னது விந்து என்றும், பின்னது நாதம் என்றும் (மின்னொளி, நிலவொளி) உடல் சிற்றுலகு என்றும், உடலுக்கு உறைவாம் நிலம் பேருலகு என்றும் விரித்துச் செல்லும் படிமான விளக்கம் அடிகளார் மூச்சுப் பழக்கச் சான்றாம். இரவின் பிற்பாகத்தில் கண்விழித் திருப்பார்க்கும், வேறு முயற்சிகள் செய்வார்க்கும் நோய் விலை கொடுத்து வாங்கினாற் போல வந்து சேரும் என்றும், விடியற் காலத்திற்கு முன்னமே கண் விழிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அவ்வெண்ணத்தை விட்டு இருபத் தொன்பது நாழிகைக்குப் பின் துயில் ஒழிந்து எழுவதே சிறந்த நலத்தைத் தருவதாகும் என உணர வேண்டும் என்கிறார். வெப்பம் : உயிர் உடம்பில் நிலைபெறுதற்கு முதன்மை யான கருவி சூடே ஆகும் என்பதை நீராவி வண்டி, நீராவிக் கப்பல் ஆகியவை கொண்டு நிறுவுகிறார். உடம்பு நிலைபெறுவதற்குச் சூடு கருவியாவது போலவே, உடம்பு தோன்றுதற்கும், அழிதற்கும் கருவியாய் இருப்பதும் அதுவே என்கிறார். அடை கிடக்கும் கோழி, கருப்பையுள் இருக்கும் கரு, நிலத்துள் இட்டவித்து இவை வெப்பத்தால் உடம்பு கொள்வதை விளக்குகிறார். சுரம் எனப்படும் காய்ச்சல்நச்சுப்பொருள்களை அழித்து நலம் செய்வதை எடுத்துரைக்கிறார். காய்ச்சலைத் தணிக்க உணவு உட்கொள்வதை நிறுத்துவதே நன் மருத்துவம் என்றும், உடலில் நச்சுத்தன்மை சேராமல் தூயதாக்கல்அக்காய்ச்சல் வராமல் தடுக்கும் முற்காப்பு என்றும் விரிவாக விளக்குகிறார். வெயிலுக்கும் குளிருக்கும் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் பறவைகளையும் விலங்குகளையும் எடுத்து விளக்கும் வகையில் இயற்கை இறை உயிர்களைப் பாதுகாக்கும் பேரருளை விளக்குகிறார். கதிரோன் வெண்ணிறத்துள் ஊதா, அவுரி, நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு என்னும் ஏழு நிறங்களும் அடங்கி யிருத்தலை மெய்ப்பிக்க, இவ்வெழு வகைச் சாயங்களையும் அளவறிந்து சேர்த்துக் குழைத்தால் வெள்ளை நிறமே வரக்கண்டு தெளியலாம் என்கிறார். கதிரவன் ஏழு நிறங்களையே ஏழு குதிரை என மறைத்துக் கூறினார் என்கிறார். பகலவன் ஒளியும் அவ்வொளியில் அடங்கிய நிறங்களுமே உலகத்தில் உள்ள எல்லா உயிர்களின் உடம்பின் வளர்ச்சிக்கும் கொழுவிய நிறங்களுக்கும் ஏதுவாக இருக்கின்றமையை விளக்குகிறார். நீர் : நீரைப் பற்றிப் பெரிதாக ஆராயும் அடிகளார், மழை நீரைப் பயன்படுத்தின் பிறநீரால் உண்டாகும் நோய்கள் இல்லாமல் வாழ முடியும் என்றும், அதனை மேற்கொள்வார் அரியர் எனினும் ஆய்வாளர் சொல்லுதல் கடமை என்றும் வலியுறுத்துகிறார். மழைநீர் நிலத்தில் சேர்வதன் முன்னே அதனைத் துப்புரவான வெள்ளைத் துணிகட்டிப் பிடித்துப் பெரிய மண்சாடியில்நிரப்பி வைத்துக்கொண்டு அதனுள்ளே தூசி செல்லாமல் அழுத்தமாக மூடி, அச்சாடியின் கீழே அமைந்த சிறிய நீர்த்தூம்பின் வழியாக அந்நீரை வருவித்துப் புழங்கி வரல் வேண்டும் என மழை நீரைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கூறுகிறார் அடிகளார். நம் உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாததாய் உள்ள இரத்தம் அவ்வளவும் நீரேயாகும். இவ்விரத்தத்தை உண்டாக் குவது மட்டுமன்று இதனைத் தூய்மைப்படுத்துவதும் நீரேயாகும் என நீரின் சிறப்பைத் திரட்டி உரைக்கிறார் அடிகள். உடலுழைப்பு மிகுதியாய் உள்ளவர்கள் குளிர்ந்த நீரும் மூளையுழைப்பு மிகுதியாய்ச் செய்பவர்கள் வெந்நீரும் பருகுதல் வேண்டும் என்பதை விளக்குகிறார். ஒரு முறையில்அரைக்கிண்ணத்திற்கு மேல் நீர்பருகுதல் ஆகாது என்றும், அந்நீரையும் சிறிது சிறிதாக உறிஞ்சி வாய் நீரோடு கலந்து சுவை பார்த்துக் குடித்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். கதிரவன் எழும் முன்னும் மறைந்த பின்னும் நீராடுதல் நன்றென்று கூறுதல் உலக இயற்கையில் நிகழும் மாறுதல்களை அறியாமற் சொல்லுவதாகலின் ஏற்கத் தக்கதன்று என்கிறார். ஓடும் நீரில் மின்கலப்பு உண்டு ஆதலால் அந்நீரில் குளித்தலே நலமாம். கட்டுக்கிடை நீரில் குளித்தல் ஆகாது என்கிறார். உணவு : உணவு, பற்றி விரிவான ஆய்வு செய்யும் அடிகளார், அறிவியலார் பகுத்த வகையில் முதலுணா, கொழுப்புணா, இனிப்புணா, உப்புணா, நீருணா எனக் கூறுகிறார். இவை Protein, Fato, Corbo, - hydrates. salts. water என்பவற்றுக்கு அடிகளார் கொண்ட மொழியாக்கங்களாகும். அவ்வாறே Chlorids, Phosphate of lime, Vitamins என்பவற்றைப் பசுமஞ்சள், எரிகந்தச் சுண்ணம், உய்வனவு அல்லது உய்வுறை என மொழியாக்கம் செய்கின்றார். இவ்வகையால் அடிகளார் மொழியாக்கமாகச் செய்துள்ள அறிவியற் கலைச் சொற்கள் மிகப் பலவாம். மறைமலை அடிகளார் தொகுத்த வடசொல் தமிழகராதி, அறிவியற்கலைச் சொல் அகராதி என இருவகை அகராதிகளை உருவாக்கும் வகையில் சொல்லாக்கமும் மொழியாக்கமும் செய்துள்ளார் அடிகளார். உணவு உண்பது உடலைப் பாதுகாப்பதன்று. உண்ட உணவிலுள்ள சாறுகள் அத்தனையுஞ் செந்நீரிற் கலந்து உடம்பிற் சேருவதே அதனை பாதுகாப்பதாகும் என்றும் மருந்து அறியாமலேயே வெறும்பட்டினி கிடத்தலாலும், மலக்குடரை நாடோறு கழுவிவிடுதலாலும் குறிகளை நீராவியிற் காட்டி நன்றாய் வியர்க்க வைத்தலாலும் எத்துணைக் கடுமையான நோயும் விலகும்படி செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறார். கடவுளால் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இயற்கை உணவுப் பொருள்கள் மரம் செடி கொடிகளின் பயனான இலை பூ காய் கனி விதை கிழங்கு முலானவைகளேயாம். மக்களேயல்லாமல் அசையும் பொருள்களாகிய எல்லா உயிர்ப் பொருள்களுக்கும் இயற்கை உணவான அசையாப் பொருள்களாகிய பயிர்பச்சைகளேயாம் என்பதை விரிவாக விளக்குகிறார். அசைந்து திரியும் உயிர்களில் ஒன்று மற்றொன்றைப் பிடித்துத் தின்ன முயலுங்கால் மெலியது தனதுயிரைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு, மிகவும் விரைந்தோடித் தப்பிப் பிழைப்பதனைக் கண்டு அறிகின்றோம் என ஒரு சான்று காட்டுகின்றார். கிறித்தவ மறையும் மக்களுக்கும் விலங்கு பறவை முதலிய உயிர்களுக்கும் மரம் செடி கொடி புற்பூண்டுகளை இறைவன் அருளியதாகக் கூறுவதை எடுத்துக் காட்டுகிறார். புற்பூண்டு மரஞ் செடி கொடிகள் அசைந்து திரியாவாய் நிற்றலும், அவற்றின் இலை பூ காய் கனி விதை முதலியவற்றை அசைந்து திரியும் உயிரிகள் தின்னவரும் போது அவை அவற்றோடு சண்டையிடக் காணாமையாலும் இயங்கும் உயிரிகளுக்கு இயங்கா உயிரிகள் உணவாகத் தக்கவை என்பதை உணரலாம் என்கிறார். ஊன் உணவின்றி, இயங்கும் உயிர்கள் எல்லாமும் வாழலாம். ஆனால் புற்பூண்டுகளும்அவற்றின் பயனும் இன்றி மற்றை எந்த உயிரும் உயிர் வாழல் முடியாது என்பதை விளக்கப்படுத்துகிறார். ஊன் உண்ணா உயிரிகளின் தூய்மை, வலிமை முதலிய வற்றையும் ஊன் உண்ணும் உயிரிகளின் தூய்மை இன்மை, வன்மை இன்மை முதலியவற்றையும், ஊன் உண்ணாதார் நெடிய வாழ்வு நலவாழ்வு ஆகியவற்றையும் பல்வேறு சான்று களால் விளக்குகின்றார். நோயிலா நெடுவாழ்வு : நோயில்லா நீண்ட வாழ்க்கை என்னும் கட்டுரை தனிநூலாம் தன்மையது. (214-332) மலக்குடல், சிறுநீர்ப்பை, வியர்வைத்துளை, மூச்சுப்பை என்னும் நான்கு கழிகால்களின் வாயிலாக உடம்பைத் தூய்மை செய்யும் செயன்முறைகளை ஒவ்வொருவரும் தாமே செய்து நலங்கொள்ளும் வகையில் விளக்கியுள்ளார். யாமெடுத்துக் காட்டும் முறைகளைத் தழுவி, அவற்றைக் கருத்தாய்ச் செய்வார்க்கு எத்தகைய மருந்தும் உட்கொளல் வேண்டப் படாது என உறுதி கூறுகின்றார். தாம் கண்டு தெளிந்த மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்புகள் பலவற்றை இப்பகுதியில் விளக்குகிறார். குளிர்காய்ச்சல், முறைக்காய்ச்சல், நச்சுக்காய்ச்சல் முதலியவற்றுக்கு ஆட்பட்டவர்கள் மிகவும் கசப்பான நிலவேம்பை நறுக்கி உழக்குத் தண்ணீரில் இட்டு அரையாழாக்காகச் சுண்டக் காய்ச்சி வடித்துக் காலை மாலை அச்சாற்றைப் பருகிவரின் எத்தகைய காய்ச்சலும் நீங்கிவிடும் என்கிறார். தலையில் இருந்து அடிவரையில் வரும்ஒவ்வொரு நோய்களையும் தீர்க்கும் முறை காட்டுவாம் எனத் தொடங்கி கண், மூக்கு, வாய், செவி, கழுத்து, பிடர், நெஞ்சு, மூச்சுப்பை, வயிறு, குடல், விலா, சிறுநீர்ப்பை, விரை, தொடை, கால் ஆகிய உறுப்புகளில் உண்டாகும்நோய்களை நீக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்து உடல் முழுதும் வரும் சொறி சிரங்கு, படை, கட்டி, ஆகியவற்றையும் உரைக்கிறார். மண்மருத்துவம், நீர்மருத்துவம், பச்சிலை மருத்துவம் என்பவற்றுடன் ஆங்கில மருத்துவ முறைகளையும் ஆங்காங்கே எடுத்துரைக்கிறார். மனநிலையும் நீண்ட வாழ்க்கையும் என்பதையும் பெருகவே பேசுகின்றார். (333 - 413) நோய் கொண்டார் ஒருவர் அந்நோய்த் துன்பத்திலேயே தமது மனத்தைச் செலுத்தச் செலுத்த அந்நோய் மிகுதிப்படுதலும், அதனை நினையாது இனிய இசைகளைக் கேட்டலிலும் சிறந்த நாடகக் காட்சிகளைக் காண்பதிலும் கவர்ச்சிமிக்க கதைகளைப் பயில்வதிலும் கருத்தை அவர் ஈடுபடுத்தப்படுத்த அந்நோய்த் துன்பம் விலகி நலம் உண்டாகும் என்பதைத் தெளிவிக்கிறார். மனநலம் : அழகுடையாரும், அழகிலார் எனச் சொல்லிப் பழித்து மனத்தே பதிவு கொண்டாராகில் அழகில்லாராகப் படிப்படியே மாறிப்போவர் என்றும், அழகில்லாரும், அழகுடையார் எனப் பாராட்டப் பெற்று அப்பதிவு மிக்கா ராயின் அழகுடையவர் ஆதலும் காணக் கூடியன ஆகலின் மனநிலைக்கும் உடற் பொலிவுக்கும் உரிய தொடர்பு புலப்படும் என்கிறார். தம்மைப்பற்றிக் குறைவாக எண்ணும் ஒருவருக்கு அறிவும் முயற்சியும் நீடு இனிது வாழ்தலும் இயலாது. அங்ஙனமே பிறரைப் பற்றிக் குறைவாக நினைக்கும் போதும் அவரது நினைவு அக்குறைபாடுகளுள் சிக்குண்டு மேல் நிலைக்குச் செல்ல மாட்டாது கீழ்க்கிடந்து அங்ஙனம் நினைப்பாரையே அழித்து விடுகின்றது என்று இருபாலும் தீமையாம் குறைவுறு நினைவைச் சுட்டுகிறார். கோள்நூல் : இது நல்லநாள், இது நல்ல வேளை, இது தீய நாள், இது தீய வேளை என்னும் கோள்நூல் போலியறிவும், அதன் வழித்தான பொய்ந்நம்பிக்கையும் ஒருவர்க்கு ஏறிவிட்டால், அவர்வேறு வகையில் எத்துணைச் சிறந்த ஆராய்ச்சி யுடையவராயினும் கோள்நூற்பொய்ம்மை நன்குணர்ந்த வராயினும் அவரைவிட்டு அப்பொய்ந்நம்பிக்கை நீங்குவதே இல்லை என்னும் அடிகளார் அந்நம்பிக்கை உள்ளத்தில் நுழைய விடாமல் செய்தலே நன்றாகும் என்கிறார். ஐம்பதாண்டுகள் உடைய ஒருவர் கோள்நூல் பார்க்க, உம் மகன் இன்னான் இருந்தால் உங்களுக்கு ஆறு திங்களுள் இறப்பு நேரும், அவன் இறந்துவிட்டால் எழுபத்திரண்டு ஆண்டு வரையில் வாழலாம் என்று கேட்டவர் அவ்வாறே மகனைச்சாவச் செய்தார். அவரும் இரண்டு திங்களில் இறந்தும் போனார் என்றும் தாம் அறிந்த நிகழ்ச்சியைச் சுட்டும் அடிகளார், கோள் நூலிலும் கோள்நூலார் உரையிலும் வைக்கும் நம்பிக்கையினை விட்டொழித்தலே பெரிதும் வேண்டற்பாலதாகும் என்கிறார். நீள உயிர்வாழ்தலில் வேட்கை உடையவர் முதுமையைப் பற்றியும் சாவைப் பற்றியும் நிகழும் நினைவுகளையும் எண்ணங் களையும் அறவே விட்டொழித்தல் வேண்டும். இன்றியமையாது தெரிவிக்க வேண்டி இருந்தால் அல்லாமல் ஒருவர் தமது வாழ்நாள் இவ்வளவாயிற்றென்று தெரிவித்தலும் ஆகாது. அதனை நினைத்தலும் ஆகாது. அதனை யெண்ணி மனங்கலங்குதலும் ஆகாது என நீண்ட வாழ்வுக்கு வழி உரைக்கிறார். ஆராய்ச்சியின் நிறைவுரை தொன்மைக்குத் தொன்மையான மொழியும் புதுமைக்குப் புதுமையானதாகவும் திகழவேண்டும். அந்நிலையே உயிரோட்ட மமைந்த ஆற்றின் போக்குப் போல என்றும் வளம் செய்வதாய் அமையும். எம் மொழியாயினும் தன் சொற்களைப் போற்றித் தூயதாக வைத்துக் கொள்வதுடன் புதுப்புதுக் கலைச் சொற் களையும் காலந்தோறும் துறைதோறும் பெருக்கிக் கொண்டு வருதல் வேண்டும். அதற்கு அறிவு வல்லார் இடையறவு இல்லாமல் தொடர்ந்து பாடாற்றி வருதல் வேண்டும். அயற்சொற்களை அப்படி அப்படியே எடுத்தாண்டு வருவது ஒரு மொழிக்கு ஆக்கமாகிவிடாது. முயற்சியுடைய மக்கள் அந்நெறியை விலக்கி வழிகாட்டுதல் வேண்டும். கலைச் சொல்லாக்கமோ மொழிபெயர்ப்போ செய்யுங் கால் தம்மொழியின் இயல்பொடு பொருந்தியதாகவே செய்தல் வேண்டும். ஒலிவகையாலும் வடிவ வகையாலும் மொழியியலை மாற்றி அயன்மொழித் தோற்றத்தை ஆக்கிவிடுதல் ஆகாது. இவை பொதுவகையாக மொழியியலில் அடிகளார் கொண்ட குறிக்கோள்கள். அறிவியல் ஆராய்ச்சி வகையில் அடிகளார், எத்துறைக்கும் தமிழ்மொழி ஈடு தருவதே என்பதைத் தம் நூல்களாலேயே மெய்ப்பித்துக் காட்டினார். அவ்வகையில், தம்மையே ஆய்வுக் களமாகக் கொண்டு ஆராய்ந்தார். தம்மைச் சார்ந்தாரையும் அவ்வகைக்குப் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டார். அவ்வத்துறையில் ஈடுபட்ட ஆய்வாளர் செயற்பாடுகளையும் நூல்களையும் ஆழ்ந்து கற்று மெய்ம்மங்கள் ஆக்கினார். நடைமுறையொடு, கூடாத பொய்ம்மை கற்பனை புனைவு வகைகளைத் துணிந்து விலக்கினார். தம் அறிவுக்குச் சரியானது என்று தோன்றியதை எந்நிலையிலும் எச்சார்பும் கடந்த துணிவொடு எடுத்துரைத்தார். பிறர் ஆய்வைத் தம் ஆய்வாகக் கொள்ளலோ, பிறர் ஆய்வை அவர் பெயர் சுட்டாது மறைத்தலோ ஆய்வு நெறி ஆகாது என்பதைத் தம் ஆய்வுகளால் நிலை நாட்டினார். இவையெல்லாம் தம் செயற்பாட்டால் தமிழ் உலகுக்கு அடிகள் காட்டிய ஆராய்ச்சி நெறி முறைகள் ஆகும். 9. அடிகளார் சமய நோக்கு அடிகளார் சிவனியச் சார்பு : மறைமலையடிகளார் நாகப்பட்டினத்தை அடுத்த காடம்பாடியில்பிறந்தார். அவர் பிறந்த நாள் 15.7.1876. தந்தையார் சொக்கநாதர். தாயார் சின்னம்மையார். அடிகளாரின் பிள்ளைப் பெயர் வேதாசலம். குடி. வேளாண் குடி. இவையெல்லாம் அடிகளாரின் சிவனியச் சார்பைக் காட்டுவன. அடிகளார் இளந்தைப் பெயர் ஒன்று, முருகவேள். அது இதழ்களுக்கு என அடிகள் தாமே தமக்குச் சூட்டிக் கொண்ட பெயர். நீலலோசனி, பாற்கரஞானோதயம், திராவிட மந்திரி என்னும் இதழ்களில் இப்புனைபெயரால் கட்டுரைகள் வரைந்தார் அடிகள். முருகவேள் என்னும் பெயர் சிவனியச் சார்பாதல் வெளிப்படை. அடிகளாரின் இளந்தைப் பருவ வழிகாட்டிகளுள் ஒருவர் மதுரை நாயகம் என்பார். சிவனியப் பற்றில் தலைப்பட்டவர் மதுரை நாயகர். அவர்தம் சிவனியப் பற்றுமை சைவ சித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தர நாயகரை நாகை வெளிப் பாளையத்திற்குப் பல்கால் அழைத்துப் பொழிவு செய்ய வைத்தது. நாயகரின் சொற்பொழிவில் வெளிப்பட்ட ஒரு கருத்தை மறுத்து, சச்சனப்பத்திரிகா என்னும் கிழமை இதழ் எழுதியது. அவ்விதழின் கருத்தை மறுத்து, நாயகரின் உரை மெய்யுரை என்பதை நாகை நீலலோசனியில் அடிகள் முருகவேள் என்னும் பெயரால் எழுதினார். அக்கட்டுரையே நாயகர்க்கு அடிகளாரை அணுக்கர் ஆக்கியது. அதுவே அடிகளாரைச் சென்னைக்கு அழைத்தது. அதுவே அடிகளாரைத் துகளறு போதத்திற்கு உரை எழுதவும், அறிஞர் நல்ல சாமி என்பவரால் தொடங்கப் பட்ட சித்தாந்த தீபிகை (உண்மை விளக்கம்) என்னும் திங்கள் இதழுக்கு ஆசிரியராகவும் செய்வித்தது. அதில் திருமந்திரம், சிவஞான சித்தியார் தாயுமானவர் பாடல் ஆகியவற்றுக்கு உரை வரைய நேர்ந்தது. பின்னே சைவ சித்தாந்த நூல்களை முறையாகப் பாடங்கேட்க வேண்டும் என்னும் ஆர்வம் அடிகளுக்கு எழுந்த போது, நாயகரையே குருவராகக் கொள்ள வாய்ப்பாயிற்று. இவையெல்லாம் அடிகளாரின் சிவனியச் சார்பு விளக்குவன. அடிகளாரின் 22 ஆம் அகவையில், கொடிய நோய் ஒன்று வருத்தியது. அதனைத் தீர்த்தருளுமாறு திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை இயற்றினார். இன்ப துன்ப நேர்ச்சிகளில் பெற்றோரைக் கூவிக் கூவி அழைத்த அம்மா, அம்மம்மா, அம்மோ, அன்னா, அஞ்ஞை, அப்பா, அப்பப்பா, அப்பப்போ, ஐயா, ஐயோ, ஐயையோ, அச்சா, அத்தா - இன்ன விளிகளை போல, உள்ளத்தே உணர்வால் உந்தியெழும் இறைமையுணர்வே இன்ப துன்பப் போதுகளில் பாடல்களாக வெளிப்படுதல் உலகறி செய்தி, அதனால் அடிகளார் பாடிய இந்நூல் அவர்தம் சிவனிய அழுத்தம் காட்டும். அடிகளார் ஞான சாகரம் (அறிவுக் கடல்) என்னும் இதழ் தொடங்கினார். அதில் மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் வெளியாயது. அதன் முதல் இதழிலேயே சைவம், சைவநிலை என்னும் கட்டுரைகள் வெளிப்பட்டன. அடிகளார், திருப் பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் முன்னிலையில் சைவ சித்தாந்த மகாசமாசம் என்னும் அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்தார். அதன் செயலாளராக இருந்து செழுமையான பணிகளைப் பல்லாண்டுகள் புரிந்தார். அதுவே இன்று சென்னையில் மயிலைப் பகுதியில் சைவ சித்தாந்தப் பெருமன்றமாகத் திகழ்கிறது. சிவஞானபோதம் முதலிய சிவனிய நூல்களில் காணப் படும் கருத்துக்களைத் தெள்ளிதின் விளக்கும் சைவ சித்தாந்த ஞானபோதம் என்னும் நூலை அடிகள் வரைந்தார். அம்பல வாணர் திருக்கூத்தின் உண்மை. பழந்தமிழ்க் கொள்கையே சைவம், கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா. தமிழர் மதம் என்னும் நூல்களையும் வரைந்தார். சிவனியச் சீர்மையும் செம்மையும் நோக்கிச் சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், வேளாளர் நாகரிகம், தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும் முதலான நூல்களையும் கட்டுரைகளையும் வரைந்தார். சிவஞான போத ஆராய்ச்சி என்னும் நூலைத் தொடங்கி முற்றுவிக்காமல் நின்றது. நாடெல்லாம் சென்று அடிகள் செய்த பொழிவுகளுள் பெரும்பாலான சிவனியச் சார்பின. அவை எழுத்துருவிலும் வெளிப்பட்டன. அடிகளார் மக்கள் பெயர்கள் நீலாம்பிகை, திருஞான சம்பந்தன், மாணிக்கவாசகன், திருநாவுக்கரசு, சுந்தர மூர்த்தி, திரிபுர சுந்தரி என்பனவாம். இப்பெயர்களும் இவர்களின் மக்கள் பெயர்களும் சிவனியப் பெயர்களாக இருத்தல் அடிகளின் உட்கிடையை விளக்கும். அடிகளார் பொன்னினும், மேலாகப் போற்றிய நூலகத்திற்கு மணிமொழி நூலகம் என்பது பெயர். டெடில் மெசின் (T.M.) அச்சகம் என்னும் பெயருக்கு உரிமம் பெற்றிருந்தும், அதனைத் திருமுருகன் அச்சகம் என்று அமைதி கண்டவர் அடிகள். அம்மை அம்பலவாணர் வழிபாட்டை உயிர்ப்பாகக் கொண்டு ஊன்றி நின்றவர் அடிகள். தாம் வாழிடத்து மேலிடத்தை அம்மை அம்பலவாணர் வழிபாட்டுத் திருமாடம் ஆக்கியவரும் அடிகள். இவ்வெல்லாம் அடிகளாரின் சைவச் சார்பினைச் சாற்றுவன. சமயக் காழ்ப்பர் நிலை : ஒரு சமயக் குடிவழியர் - பற்றாளர் - வழிபாட்டாளர், பிற சமயச் சார்வுக்கு இடம் தருவதில்லை. பிற சமய நூல்களைக் கற்றலும் கேட்டலும் கொள்ளார்; பிற சமயச் சால்பினை மேற்கொள்ளல் அரிது. கோழியைப் பாடும் வாயால் குஞ்சினைப் பாடுவேனோ அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடுவேனோ என்று சிவ - முருக வழிபாட்டிலும் வேற்றுமை கண்டோர்களாலேயே, அறுவகைச் சமயங்கள் உருவாகின. தான் வழிபடும் இறைவன் பெயர் தவிர மற்றை இறைவன் பெயர், தன் காதில் விழுதலும் ஆகாது; பிற சமயக் கோயிலும் உருவும்கண்ணில் படுதலும் ஆகாது; அத்தெய்வப் படையலைக் கொள்ளலும் ஆகாது என்று முரட்டு வெறியராய் இருந்தாரும் உளர். உருவ வணக்கம் இழிந்த தென்றும், அதனைக் கொள்வார் அறிவிலார் என்றும் நாளெல்லாம் பழித்த சமயத்தரும், யாதொரு தெய்வம் உலகுக்கு மாதொரு பாகனை அன்றி என்று வீறு பேசியும், பொய்த் தேவு பிற எல்லாம்; எம்மதே மெய்த்தேவு என்று தருக்கியும் நின்றாரும் உளர். சமயச் சால்பர் அடிகள் : இவ்வாறு யாம் பிடித்ததே பிடி. கொண்டதே கொள்கை என்னாமல், பல்லபல சமயங்களையும் ஆய்ந்து நல்னவெல்லாம் நடைமுறைக்காவன என்று மேலேறி நின்ற சான்றோர்களும் உளர். அத்தகு சான்றோருள் ஒருவராக மறைமலையடிகளார் திகழ்ந்தார். கந்த கோட்டம், திருத்தணிகை, திருத்தில்லை என்றெல்லாம் திருக்கோயில் வழிபாட்டில் திளைத்த வள்ளலார் பெருமான், என் மார்க்கம் சன்மார்க்கம்; அதுவே உலகுக்கு நன்மார்க்கம் என்று, ஏறுதற்கு அரிய மலை முகட்டிலே ஏறி நின்று மாயா மணி விளக்கம் காட்டிய சீர்மையைச் சிந்தையில் கொண்ட மறைமலையடிகளால், பல்லவபுரத்தில் தாம் வாழ்ந்த திருமனையில், சமரச சன்மார்க்க நிலையம் என்னும் அமைப்புக் கண்டு ஆருயிர்ப் பணி செய்தமை சமயச் சார்பு கடந்து, சமயச் சார்பு மல்கி பெருந்தக்க நிலையாகும். அந்நிலையமே அடிகளார்க்குத் தனித் தமிழ் உணர்வு தோன்றிய பின்னர்ப் பொது நிலைக் கழகம் என்னும் பொருந்திய பெயர் கொண்டு அருந்திறல் செயல்கள் ஆற்றியது. காலச் சூழல் அடிகளாருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர், பல் சமய ஆய்வாளர், பல் சமய ஊடகங் கண்டு அதிலே தோய்ந்து தோய்ந்து உரையும் பாட்டும் ஆக்கிய தோன்றல். சீர்திருத்தத் தொண்டிலே சிந்தை ஒன்றியவர், அந்நிலையிலேயே சீர்திருத்தமும் சிவனியச் சால்பும் நிரம்பியவர் தமிழ்க் காசு எனப் பெற்ற கா. சுப்பிரமணியனார். அக்கால நிலையிலே, முனைப்பான சீர்திருத்தத் தொண்டிலே ஈடுபட்டதுடன் சாதி சமயங்களை ஆய்ந்து அவற்றின் குறைகளை அஞ்சாமல் பரப்பி அரிமா எனக் கிளர்ந்தவர் தந்தை பெரியார். இராசா ராம் மோகனர், அன்னி பெசண்டு அம்மையார், விவேகானந்தர் இன்னோர் தொண்டுகளும் இயக்கமும் நாட்டிலே கிளர்ந்து பரவிய காலச் சூழல். இன்னவெல்லாம், அடிகளார் சமய நோக்கின் உள்ளீடுகளாகி உந்தியெழ வாய்த்தவை. கிறித்தவக் கல்லூரிப் பேராசிரிய நிலையும், அச்சமயப் பரப்பாளர் தொடர்பும் அடிகளுக்கு வாய்த்தமையும் கருதத் தக்கதாம். ஒழுங்கியல் : அடிகளார் எந்த ஒன்றிலும் ஓர் ஒழுங்கு முறையர். நாள்வழிக் கடமைகள் ஆகட்டும், கூட்ட நிகழ்ச்சிகள் ஆகட்டும் - எல்லாம், திட்டப்படுத்திய ஒழுங்கில் இயலச் செய்பவர். இன்ன செயலில் அடிகளார் ஈடுபட்டுள்ளார் என்றால், அது இன்ன பொழுது, என்று கண்டு கொள்ளத் தக்க கால ஒழுங்கினர். இன்ன பொருள் இன்ன இடத்தே தான் இருக்க வேண்டும் என்று திட்டங் கொண்ட இட ஒழுங்கினர். விளக்குத் துடைத்தலா, புத்தகம் தூசி துடைத்தலா, எழுத்துப் பணி புரிதலா எல்லாமும் நெறிப்பட இயற்றும் செயல் ஒழுங்கினர். நுண்மாண் நுழைபுலத்தால் எதனையும் எண்ணி, எண்ணத்தின் வரைபடம் உள்ளத் தோவியமாய்த் திகழ, ஆர அமர எழுத்தோவியமாகப் படைத்து, கலப்பும் பிழையும் வாரா வண்ணம் கவினுற அச்சிட்டு எல்லாமும் எப்பொழுதும் கலை மணம் கமழும் வகையில் செய் நேர்த்திச் செம்மலாய்த் திகழ்ந்தவர் அடிகள். இவற்றின் ஒட்டு மொத்தப் பார்வையும் அவர்தம் சமய நோக்குக்கு வைப்புகளாகத் திகழ்ந்தனவாம். அடிகளார் சமய நோக்கு இன்னது எனத் திட்டப்படுத்த வாய்க்கும் சான்றுகள் பலப்பல. நாட்குறிப்பு, கடிதம், நூல், வாழ்வு என்னும் நான்குமாம். அடிகளார் தொடர்ந்து நாட்குறிப்பு வரைந்தவர். அவர் தம் சமயநோக்கு எத்தகையது என்பதைக் கையில் கனியெனக் காட்டுவது அக்குறிப்பு. கால வரிசையில் அவற்றைக் காணும் போது அவர் தம் சமய நோக்கு விரிந்த வகையும் விழுப்பமும் புலப்படுகின்றன. 5-1-1898 சித்தியாரின் ஆறாம் சூத்திரம் மனப்பாடம் செய்தேன். 7-1-1898 பகவத் கீதையைத் தமிழ்ப் பாடல் வடிவில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். 23-1-1898 குலாம் காதிறு நாவலரின் சகோதரர்க்குச் சிலப்பதிகாரப் பாடம் நடத்தினேன். 24-4-1898 தமிழ்ச் சைவ சித்தாந்த சபை தொடங்குவது குறித்துக் கலந்து பேசினோம். 7-1-1899 குர் ஆனில் கூறப்பட்டிருக்கும் இசுலாமிய மதக் கருத்துக்களை இந்துதானி முன்ஷி வாயிலாக அறிந்து கொண்டேன். 13-1-1899 கி.பி. 986 - இல் வைணவ சமயப் பெரியார் இராமாநுச ஆசாரியார் பிறந்தார். 3-3-1900 இராமகிருஷ்ணர் வரலாற்று நூலை இன்று முழுவதும் படித்தேன். 3-12-1900 வேதமோக்த சைவ சித்தாந்த சபையைத் தொடங்கு வதற்குரிய அறிக்கையைத் தயாரித்தேன். 25-3-1901 உபநிடதங்கள் வாடகை நூலகத்தில் இருந்து பெற்றேன். 22-12-1901 விவேகானந்தரின் பக்தியோகம், கர்மயோக்ம, ஆத்மா ஆகிய நூல்களை வாங்கினேன். 2-2-1903 சிவனடியார் திருக்கூட்டச் சைவப் பிரசாரகராக இருக்க இணங்கினேன் 24-6-1903 சைவ சமயமே சமயம் என்று உரையாற்றினேன். 5-6-1905 பாலகங்காதர திலகரின், வேதம் பற்றிய நூலைப் படிக்கத் தொடங்கினேன். 13-6-1905 விவேகானந்தரின் ஞானயோகம் வாங்கிப் பயின்றேன். நுண்ணியவையாகவும் அருமையாகவும் இருந்தன. 2-12-1905 ஈசோப நிடதத்திற்குத் தமிழ் விளக்கவுரை எழுதி முடித்தேன். 15-4-1906 இவ்வாண்டில் நான் செய்த அருஞ்செயல் சைவ சித்தாந்த மாநாட்டைக் கூட்டியதேயாம். 22-12-1906 பிராணாயாமம் பற்றிய உரையை எழுதினேன். 27-1-1907 தவத்திரு. இராசானந்த சுவாமிகள் எனக்கு நிட்டை அருளினார். 27-11-1907 சிவஞான போதத்துக்கு உரை எழுதத் தத்துவ நூல்கள் பல வாங்கி வருகிறேன். 10-8-1909 ஈசனும் உமையுமே என்ற கருத்தில் நம்பிக்கை இழந்து விட்டேன். கடவுளிடம் வேண்டுவதன் மூலம் மாற்றப் பட முடியாத நிலைபேறுடைய விதி பேரண்டத்தில் உள்ளது. மேன்மை பெற்ற ஆன்மாக்களான கடவுளரால் மனிதர்க்கு ஏதேனும் செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அனைத்தும் நம் முயற்சியையே சார்ந்துள்ளது. 14-1-1910 வேதாந்த சூத்திரங்களுக்குரிய நீலகண்ட பாடியத்தைக் கற்கத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பாளர் செந்திநாத அய்யர்க்குத் தமிழ்ச் சைவர் கடப்பாடு உடையர். 6-8-1910 விவேகானந்தரின் கர்ம யோகம் என்னும் அருமையான நூலைப் படித்தேன். இரண்டொரு கருத்துக்கள் தவிரவிவேகானந்தரின் பொழிவுகள் நெஞ்சை உருக்கும் தன்மையவாய்ச் சைவ சித்தாந்தக் கருத்துக்களுடன் ஒத்துள்ளன. 31-1-1911 மார்ச்சு 31 உடன் பணிக்காலம் முடியும் என்ற செய்தி, துறவறம் பெறலாம் என்ற எண்ணமுடையவனாக இருப்பினும் சிறிது கலக்கத்தைத் தந்தது. 25-6-1911 திருக்கழுக்குன்றப் பூசாரிகள் சொல்வது போல் கழுகுகள் காசியில் இருந்து வரவில்லை. அருகில் இருக்கும் குன்றுகளில் இருந்தே வருகின்றன. அவை பழக்கப்படுத்தப் பட்டவை என்று எண்ணுகிறேன். 27-8-1911 துறவிக்குரிய துவாராடை புனைந்தேன். 24-12-1911 சமரச சன்மார்க்க நிலையம் ஏற்படுத்தினேன். 2-2-1912 இராமலிங்க அடிகள் சபையில் (வடலூரில்) சன்மார்க்கம் பற்றிப் பேசினேன். அடிகள் ஏற்படுத்திய முறைகளையே மீறிச் சடங்குகளை வேண்டுமென்றே சில வைதிகர்கள் தந்நலத்துக்காக நுழைத்தனர் என்று கடிந்து பேசினேன். 26-3-1912 விவேக பாநுவில் என்னை மறைமுகமாகக் கண்டித்து எழுதிய ஒருவருக்கு மறுமொழியாகச் சாதி வேறுபாடுகளைச் சாடிக் கட்டுரை எழுதி வருகிறேன். சாதி முறையை அழித்து மனிதரிடையே சமன்மை கொண்டு வர வேண்டும் என்பதே என் விழைவு. என் எளிய முயற்சிகளுக்கு ஈசன் அருளட்டும். 3-4-1912 போலிச் சைவரும் சாதி வேறுபாடும் என்னும் கட்டுரை எழுதி முடித்தேன். 24-1-1913 மேட்டுக்குப்பம் சென்றேன். இராமலிங்க அடிகள் முன்னாளில் அமர்ந்த புனித அரங்குக்குச் சென்றதும் உளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகிற்று. என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். 16-4-1913 கல்கத்தாவில், சாங்கியமும் சித்தாந்தமும் என்னும் பொருள் பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினேன். 29-3-1914 வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங் கினேன். இசாவசியத்தைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன். 4-5-1914 பொள்ளாச்சி தாசில்தார் நெல்லையப்ப பிள்ளைக்குச் சைவ சித்தாந்தம் தெரியும் என்றாலும், பிரம்ம ஞான சபையில் அதிக ஆர்வம் கொண்டு வீணாக அதனை நம்பி வருகிறார். 13-9-1914 திராவிடன் இதழின் நேற்றைய பதிப்பில், சிறு தேவதைகட்கு உயிர்ப்பலியிடலாமா? என்னும் என் கட்டுரை வெளிவந்தது. 3-4-1918 (ஐரோப்பியப் போர்ப் பேரழிவு நோக்கக்) கிறித்துவின் சமயம் முழுத் தோல்வியடைந்துள்ளது என்றாகின்றது. 3-3-1919 சைவர் அசைவர் என்ற பிரிவைத் தவிர வேறு பிரிவுகள் கூடா என்று எண்ணுகிறேன். மரக் கறி உண்போரின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டும். 3-9-1921 பஞ்சமர்க்கும் பிறசாதி இந்துக்களுக்கும் இடையே நிலவும் பகைமையும் மலபார் மாப்பிள்ளைமாரின் சீற்றமும் வருந்தற்குரியன. 24-12-1921 யாழ்ப்பாணத்தில் கைம்பெண்களுக்கு எளிதில் திருமணம் நடக்கிறது. அவர்கள் திருமண முறிவு பெற்று மறுமணம் செய்து கொள்ளலாம். இது ஒரு நல்ல முறை. பெண்கள் விடுதலையாய் உள்ளனர். 5-6-1924 சைவம் வைணவம் ஆகியவற்றுக்கு இடையேயான அடிப்படை வேறுபாடுகளை விளக்கி எழுதினேன். 27-4-1926 கல்வியும் சமயப் பற்றும் தூய்மையும் உடைய பஞ்சம நண்பர் சிலர் என்னைக் காண வந்தனர். இரவு 8.30 மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். 2-9-1927 மயிலாப்பூர் சிவன் கோயிலில் என் மகளின் திருமணம் நடந்தது. சாதி வேறுபாடு பாராட்டாமல் அனை வருக்கும் விருந்திடப்பட்டது. 5-6-1928 திரு. இராமசாமி நாயக்கரும் அவர்தம் கட்சியினரும் செய்துவரும் கடவுள் மறுப்புப் பிரசாரத்தைத் தடுப்பது குறித்துக் கலந்துரையாடினோம். 22-7-1928 இராயப்பேட்டை பால பக்த சன சபையில் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்னும் பொருள் பற்றிப் பேசுகையில், இராமசாமி நாயக்கரின் கடவுள் மறுப்புக் கோட்பாடுகளையும் அவர் தம் சுயமரியாதை இயக் கத்தின் குறும்புகளையும் வன்மையாகக் கடிந்து கூறினேன். 4-1-1932 சாதியில் உழலும், இந்திய மக்களுக்காகக் காந்தியடிகள் அடிக்கடி சிறை செல்வதும் தியாகம் பல புரிவதும் தேவையில்லை. மூட நம்பிக்கை, பார்ப்பன வழிபாடு முதலானவற்றில் உழன்று சிதறுண்டு கிடக்கும் இந்திய மக்களுக்குத் தன்னாட்சிக்குரிய தகுதி இல்லை. 5-12-1947 சேர்ந்து வாழ விருப்ப மில்லாமல் இந்துக்களும் இசுலாமியரும் வடநாட்டிலே ஒருவர் ஒருவரைக் கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியர்க்கு நல்லறிவையும் அன்புணர்வையும் ஈசன் என்றே அருள்வானோ? இக்குறிப்புகளால் அடிகளாரின் பரந்துபட்ட பார்வையும் முற்போக்கான எண்ணங்களும் கடவுள் மறுப்புக் கொள்கையை ஒப்பாக் கடுமையும் புலப்படுகின்றன. சாதி வேற்றுமை ஒழிப்பு, பெண் விடுதலை, கைம்மை மணம், கண்மூடித் தனத்தைக் கருதாமை என்பன வெல்லாம் அடிகளாரின் உட்கிடையில் இருந்தமை வெளிப்படுகின்றன. நாட்குறிப்பில் குறிப்பாக உள்ள இச்செய்திகள் நூல்களில் விரிவாக இடம் பெற்றன. இதனாலேயே அடிகள் சைவம் வைணவம் சமணம் புத்தம், கிறித்தவம், இசுலாமியம் என்னும் பல்வேறு சமயங்களையும் ஆய்ந்த பேரறிஞர் என்கிறார் அரசு. - (ம.அ. வரலாறு 128) அடிகளார் அன்பர்களுக்கு வரைந்த கடிதங்களிலும் இத்தகு குறிப்புகள் இடம் பெற்றது உண்டு. சான்றாகக் காண்க. 6.8.43 தாங்கள் எல்லா நலங்களுடனும் இனிது நீடு வாழ நம் நாகூர் ஆண்டவரும் அருள் செய்வாராக. 19.1242 கோடி கோடியாக ஊரார் கல்வி வளர்ச்சிக் கென்று தந்த பொருளை வைப்பாட்டி மார்க்கும் தாசி வேசிகட்கும் கொலை வழக்கு கட்கும் வாரி இறைத்துக் கொண்டு, கல்விக்கும் மற்றோர்க்கும் நூல் எழுது வார்க்கும் ஏதோருதவியும் செய்யாத மடாதிபதி களாகிய துறவிகளைப் பெருத்த அவமானமாகக் கருதுவாரும் எவரும் இல்லையே. எல்லாரும் அவர் காலிற் போய் விழுந்து அவர் வீசும் எச்சிற் சோற்றை யுண்டு அவரைப் புகழ்ந்து பாடியும் வருகின்றார்களே. ஈதன்றோ கடியத் தக்க பேரவமானச் செயல். ஒழுங்கான முறையில் மனைவியோடிருந்து சிவத் தொண்டு செய்யும் முறையே ஒழுங்கான துறவு நிலையாகும். இன்னவாறான கடிதச் செய்திகள் அடிகளாரின் சமயச் சால்பையும் சீர்திருத்த நோக்கையும் மெய்த்துறவையும் சுட்டுவனவாம். சைவ சமயம் வடநாட்டில் இருந்து தென்னாடு வந்தது என்றும், வடமொழி வேத நூல்களில் இருந்து, தென்மொழிக்கு வந்தது என்றும் கூறுவார் இருந்தனர். அதன் உண்மையை ஆராய்ந்த அடிகள். ஆரியச் சிறு தெய்வ நூல்கள் சைவ சமய நூல்கள் அன்று என்கிறார். மேலும் சைவ சமயக் கொல்லா விரதம், சிவ அடையாளம், சிவமந்திரம், சிவமூர்த்தம் (சிற்றம்பலம், கூடலாலவாய்) திருக்கோயில், மும்மல இலக்கணம், தத்துவம், உயிர்ப்பாகுபாடு இன்னவை இருக்கு (வேத) நூலில் எட்டுணையும் இல்லை என்கிறார் (உரைமணிக்கோவை - சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை 147) இறை, உயிர், தளை, என்னும் முப்பொருள் கொள்கைகளும் தமிழ் வழியவே என்பதைத் தொல்காப்பியம் கொண்டு நிறுவு கிறார் அடிகளார். வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதனூல் ஆகும், என்பதால் இறையுண்மையையும், ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்பதால் உயிருண்மையையும், நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்பதால் உலகு உண்மையையும் ஆசிரியர் தொல்காப்பியனார் உரைத்தார் என்பதைக் குறிப்பிட்டுச் சிவனிய நெறி தமிழ் நெறியே என்பதை மெய்ப்பிக்கிறார். (பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்) இனிக் கடவுள் நிலை என்பது எது என்பதையும் அடிகளார் சுட்டுகிறார். 1. உலகோர் அனைவரும் கடவுள் ஒருவர் உண்டு என்னும் கொள்கையர். 2. உடல் உலகு உலகப் பொருள்கள் ஆகியவற்றை உண்டாக்கிய ஒன்று உண்டு என்னும் கொள்கையர். 3. உயர்ந்த படைப்பாளியைக் கண்டு மகிழக் கருதுவார் போலக் கடவுளைக் காணும் வேட்கையினராக உள்ளனர். 4. கடவுளை வணங்குவோருள் அச்சத்தால் வணங்குவோர், அன்பால் வணங்குவோர் என இருதிறத்தார். 5. அழியாப் பேரின் பத்தில் இருத்தவே, இறையை வணங்கக் கற்பித்தனர். 6(அ) சிவபெருமானை அன்றிச் சிற்றுயிர் வடிவங்களைச் செய்து வழிபாடு செய்தல் பெரிதும் குற்றமாகும். (ஆ) அரசனை வணங்காமல் அவனால் ஒறுக்கப்பட்ட குற்றவாளிகளை வணங்குவது போன்றது சிறு தெய்வ வழிபாடாகும். (இ) அதற்குப் பலியிடுவது, தம்மில் வலிமை குறைந்தவர் களைக் கொள்ளையிட்டு, அரசனால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளை அரசனாகக் கருதிப் படைத்து அரசன் பகையைத் தேடிக் கொள்வது போன்றதாகும். (ஈ) சைவராய்ப் பிறந்தார் சிறுதெய்வ வணக்கத்தையும் உயிர்ப்பலியையும் விடுத்துப், பிறரும் விடுக்கும் பணி செய்வாராக என்பவற்றை விளக்கி வரைகிறார் - அறிவுரைக் கொத்து; கடவுள் நிலை. கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்பதையும் வலியுறுத்தி எழுதினார் அடிகள்: உயிர்ப் பிறவி நோக்கு, அறியாமை நீக்கமும் அறிவுப் பேறு அடைதலுமாம். தவம் என்பது உயர்ந்த பொருளில் நமது கருத்தை ஒருமுகப் படுத்தி உறைத்து நிற்றல். கடவுள் என்பது உலகும் உயிரும் கடந்து நிற்பது. அது இடம் காலம் பொருட்டன்மை கடந்து நிற்பதுமாம். என்பவற்றையும் விரிவுற விளக்கும் அடிகள். விலங்கின் புணர்ச்சியைக் கண்டு வரம்பு கடந்து காமங்கொண்ட ஓரிழிஞனால் வடமொழியில் கட்டப்பட்ட கதையே யானை வடிவில் பிள்ளையார் பிறந்தார் என்னும் கதை என்று கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகளைத் துணிவுடன் கண்டிக்கிறார். இயற்கையொடு பொருந்திய புனைவே கதைநூலிலும் வேண்டும் என்பவர் அடிகள். சாகுந்தல நாடக ஆய்வால் வெளிப்படுத்துகிறார் : இயற்கைக்கு முழுமாறான நிகழ்ச்சி களை ஆசிரியன் இந் நாடகக் கதை நிகழ்ச்சியின் நடுவே புகுத்தியிருப்பது இதனைப் பயில்வார்க்கு உண்டாம் இன்ப உணர்வினைச் சிதைப்பதாயிருக்கின்றது. சகுந்தலை துசியந்த மன்னனை முறையில் மணந்து கருக் கொண்டிருக்கும் செய்தி யினை வானின்கட் டோன்றிய ஒரு தெய்வ ஒலி, அவள் தந்தை காசிபருக்கு அறிவித்ததென்னும் புனைந்துரை, பயில்வார்க்கு மகிழ்ச்சி தருவதாய் இல்லை. அவருடன் தோழிமார் வாயிலாகவே அச்செய்தி அவரது செவிக்கு எட்டியிருக்க வேண்டும். இச்சிறு நிகழ்ச்சிக்கு ஒரு தெய்வ ஒலியினைக் கொணர்ந்து மாட்டியது நாகரிக அறிவின்பாற் பட்டதாய் இல்லை என்கிறார். இத்தகைய நோக்கினராகிய அடிகளார் சிவனியப் புராணங்களையும் ஆழமாக ஆய்ந்து கருத்துக் கூறுகிறார் : புராணங்கள் என்பன, உயர்ந்த அறிவில்லாப் பொது மக்கட்கு (இறைவன் வரம்பிலா ஆற்றலையும் அடியாரைக் காக்கும் அருட்டிறங்களையும்) உணர்த்துதல் வேண்டி இரக்கமுள்ள சான்றோரால் கட்டி வைக்கப்பட்ட பழைய கதைகளையுடையனவாகும் (உரைமணிக் கோவை 147) பின்னே முழுமுதற் கடவுளை மக்கள் நிலைக்குத் தாழ்த்தியும் தாம் வணங்கத் துவங்கிய மக்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியும் கடவுள் நிலைக்கு மாறான பல கட்டுக் கதைகளைக் காலங்கள் தோறும் புதிய புதியவாய் உண்டாக்கி அவைகளையும் புராணங்கள் என்னும் பெயரால் வழங்க விட்டனர் என்கிறார் (மேற்படி 148) வீரபத்திரரும் பிட்சாடணரும் இறைவன் உருவினர் அல்லர் என்கிறார். கந்தபுராணத்திலும் பரிபாடலிலும் காணப்படும் முருகப் பெருமானைப் பற்றிய கதை முருகப் பெருமான் பற்றியதன்று; ஒரு தமிழ் மன்னன் மற்றொரு தமிழ் மன்னனைக் கொன்ற கதையாகும் என்கிறார் (மறைமலையடிகள் அரசு 131-2) அம்மி மிதித்தல் அருந்ததி காட்டல் போன்றவை இடைச் செருகல் என ஒதுக்குகிறார். பெரியபுராணத்தையும் ஆய்கின்றார் அடிகள் : 1. திருமுகப் பாசுரம் பெற்றவர் சுந்தரர் காலத்தில் இருந்த சேரமான் பெருமாள் நாயனார் அல்லர். 2. பலகை விடுத்தது திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அன்று. 3. சுந்தரர்க்கும் பரவையார்க்கும் சங்கிலியார்க்கும் நடந்த திருமணங்கள் கயிலாயப் பூங்காவில் கண்ட காட்சியின் விளைவு என்பது பொருந்தாது. 4. பெரிய புராணத்தில் பல இடைச் செருகல்கள் உண்டு என்பவை அவை (மேற்படி 130) இறைமை : கடவுள் ஒருவரே என்பதும், அவர் எவ்வாற்றானும் ஊனுடல் தாங்கி மனிதராகப் பிறவார் என்பதும் அடிகளார் கண்ட முடிந்த முடிவாகும். (மறைமலையடிகள் வரலாறு, 649) காலைக் கதிர் முருகு; மாலைக் கதிர் சிவம் எனவும் காண்கிறார் (தமிழர் மதம்). உயிரியல் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பெரு நெறியாளராகிய அடிகள் தம் நூல்கள் உரைகளிலும் பயில வழங்கியுள்ள சாதி வேறுபாட்டு ஒழிப்பு, சாதி வேறுபாட்டுத் தீமை என்பவற்றைத் தொகுத்துப் பார்ப்பின் அதுவே ஒரு பெரு நூலாகும் அளவு விரிவினதாம். சாதிப் பிரிவுக் கேடு காதற் காமம் காமத்துச் சிறந்தது என்னும் தொல்காப்பிய வாழ்வியல் வாய்மையை விளக்கும் அடிகள், இக்காதல் மாட்சி இந்நாள் இயல்கின்றதா? இல்லை! இல்லை! சிறிதுமே இல்லை! என்று விளக்குகிறார் : சாதி வேற்றுமை என்னும் தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கி விட்டது. காதல் அன்பிற் சிறந்து மறுவற்ற மதிபோல் விளங்கத் தக்கவரான நம் பெண்மணிகளின் கற்பொழுக்கத்தை நிலைகுலைத்து அதனைப் பழிபாவங்களால் மூடிவிட்டது. எந்தப் பெண்மகளாவது தான் காதலித்த இளைஞனை மணங்கூட இடம் பெறுகின்றனளா? எள்ளளவும் இல்லையே ஏன்? ஒரு சாதிக்குள்ளேதான், ஒருபது வீடுகளேயுள்ள ஓர் இனத்திலேதான் அவள் ஒருவனை மணக்க வேண்டும். அவள் கயல்மீனை ஒத்த கண்ணழகியாய் இருந்தால் என்ன! கண் குருடான ஒருவனைத் தவிர வேறு மணமகன் தன் இனத்தில் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும். அவள் முத்துக் கோத்தாலன்ன பல்லழகியாய் இருந்தால் என்ன! தன் பாழும் இனத்தில் ஒரு பொக்கை வாய்க் கிழவனைத் தவிர வேறு மணமகன் கிடைத்திலனாயின் அவள் அவனையே தான் மணந்து தீரல் வேண்டும். அவள் பலகலை கற்றுக் கல்வி அறிவிலும் இசைபாடுவதிலும் நுண்ணறிவிலும் சிவநேய அடியார் நேயங்களிலும் சிறந்த கட்டழகியாய் இருந்தால் என்ன! இறுமாப்பே குடிகொண்ட தன் சிறுமாக் குடியிற் கல்வியிருந்த மூலையே கண்டறியாதவனும் பாட்டுப்பாட வாயைத் திறந்தால் ஓட்டமாய் வண்ணானை வருவிப்பானும் அறிவை ஓட்டிவிட்ட வெறுமூளையுடையானும், கறுப்பண்ணன் மதுரைவீரன் மாரியம்மன் முதலான வெறுக்கத்தக்க பேய்கட்கு, ஊனும் கள்ளும் படைத்துக் குடித்து வெறிப்பானுமாகிய ஒருவனைத் தவிர வேறுமணமகன் கிடைத்திலனாயின் அவள் தன் சாதியை விட்டு வேறு சாதியிற் கலக்கலாகாமையின் அக்கல்லாக் கயவனையே கணவனாகக் கொள்ளல் வேண்டும். ஆ! பொருளற்ற இச் சாதி வேற்றுமைக் கொடுமையால் நம் அருமைப் பெண்மணிகள் படுந்துயர் மலையிலும் பெரிதோ! அன்றி ஞாலத்திலும் பெரிதோ! இவ்வளவுதான் என்று கூறல் எம் ஒரு நாவால் இயலாது என்கிறார் (பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (21 - 23) எல்லா மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளே யாதலால் அவரெல்லாரும் உடன்பிறப்புரிமை பாராட்டி எல்லா வற்றாலும் ஒருங்கு அளவளாவுதலே நன்றென்று ஏசுநாதரும் மகமது நபியும் கூறிய அறிவுரைகளைக் கேட்டு மேல்நாட்டு மக்களெல்லாரும் ஏதொரு வேறுபாடுமின்றி ஒன்றுபட்டு ஒழுகி உலகிற் சீரும் சிறப்பும் எய்திவருதலைக் கண்கூடாகக் கண்டு வைத்தும் நம் தெய்வ ஆசிரியர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்று முடித்துக் கூறிய அறவுரையினை நாம் கடைப்பிடியாது வாழ்நாள் எல்லையளவும் சாதியிறுமாப்புப் பேச்சைப் பேசிக் கூற்றுவனுக்கு இரையாய் ஒழிதல் பிற நாட்டவராற் பெரிதும் இழித்துரைக்கப்படுகின்றதன்றோ என்று பிற சமயங்களோடு ஒப்பிட்டு உரைக்கிறார் (மேற்படி 32) ஒருவனுக்கு ஒரு பொல்லாத நோய் வந்தால் அதனை நீக்கலுறுவோன் அந்நோயை உண்டாக்கின மூலத்தை அறிந்தாலன்றி அவன் அதனை முற்றும் நீக்கமாட்டுவன் அல்லன். ஒரு நோயின் மூலத்தை அறிந்து அதனை அடியோடு களைந்த அளவானே அந்நோய் முற்றும் ஒழிந்து போம். அதுபோலச் சாதி வேற்றுமைகளை உண்டாக்கிய மூலங்களையும் நன்கு ஆய்ந்து கண்டு பின்னரவ் வேற்றுமைகளை ஒழித்தலே இன்றியமையாத செயற்பாலதாகும். (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், 77) என்கிறார். பலகுடிக் கலப்பு இல்லாமல் ஒரு குடியிலேயே கொண்டு கொடுத்தலால் உண்டாகும் தீராக் கேடுகளையும் தெளிவாக உரைக்கின்றார் : புதுநீர் வரத்தின்றிப் பழைய கட்டுக்கிடைத் தண்ணீரேயுள்ள ஒரு குளம் நாற்றமெடுத்து நோய்ப் புழுக்களை உண்டாக்கி யார்க்கும் பயன்படாமல் வரவர வற்றி வறண்டு முடிவில் நீரற்றுப் போதல் போல அகல உள்ள குடிகளில் அறிஞராய் வலியராய் நல்லவராய்ப் பிறந்தார் தம் புதிய இரத்தமானது தமது பழங்குடிப் பிறந்தார்தம் உடம்புகளில் வந்து கலத்தற்கு இடம் கொடாத போலிச் சைவக் குடும்பத்தினரும் தமது வலிவிழந்து பழைய இரத்தம் கெட்டு அகத்தும் புறத்தும் நோய்களுக்கு இரையாகி வற்றி வறண்டு தாமும் இருந்த இடம் தெரியாமல்சில காலத்தில் மாய்ந்து போகின்றனர் என்கிறார். கடுஞ்சாதிப்பற்றால் விளையும் கொடும்பாடுகளை மூலங்கண்டு உரைக்கும் முடிவு ஈதாகும் (மேற்படி 81-82) மேலும், மேற்சாதியார் எனக் கூறிக் கொள்ளும் ஓ! இரக்கமற்ற இந்து மக்களே! நீங்கள் (உங்களுக்கு ஒப்பாகிய மக்களை) ஆடு மாடு கழுதை குதிரை பன்றி நாய் முதலான விலங்கினங்களினும் கடைப்பட்டவராக நடத்தியும், அவர்களுக்கு அரை வயிற்றுக் கூழுணவு கூடக் கிடைக்காமல் செய்தும், அவர்களில் ஆண்மக்களாயினவர் கோவணத்திற்கு மேல் ஒரு சிறு கந்தைத் துணி கூட உடுக்கவிடாமலும், அவர்களிற் பெண்மக்களாயினவர் தமது மார்பினை மறைத்து மேலாடை உடுப்பதற்குங் கூட மனம் பொறாமற் சினந்தும், அவர்கள் தூய்மையாய் இருக்கக் கல்வியறிவு தானும் புகட்டாமலும் நும்மோடொப்ப இறைவனாற் படைக்கப்பட்ட அம்மக்களைப் பெருந்துன்பத்திலும் அறியாமையிலும் இருத்தி, அவர்கள்பால் எல்லா வகையான வேலைகளையும் வாங்கி வந்தீர்கள். நுங்களுடைய அவ்வேழை மக்கட்கு உதவிபுரிதற் பொருட்டு அருட்கடலாகிய ஆண்டவன் ஆங்கில நன்மக்களையும் அவர் வழியே கிறித்துவக் குருமார்களையும் இந்நாட்டுக்கு வரும்படி அருள் புரிந்தான் என்கிறார் (மேற்படி 88), ஐயோ! இந்து மக்களே, ஓ போலிச் சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்த பாடில்லையே. நுங்களை நுங்கள் கால்வழியற்றுப் போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடறியாய்ச் சாதி வேற்றுமை இருப்ப துணராது. அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதைமை. ஊரின் நடுவே வெடிமருந்துக் கொத்தளத்தின் மேலிருந்து கொள்ளிக் கட்டையைச் சுழற்றி மகிழ்வோனுக்கும்நுங்கட்கும் யாம் வேற்றுமை காண்கிலேம். ஒரு தீப்பொறியானது அக் கொத்தளத்தை வெடிக்கச் செய்து அவனையும் அவ்வூரிலுள்ளார் அனைவரையும் சிறிது நேரத்தில் படு சாம்பராக்கி விடுவது போலப் பாழுஞ் சாதி வேற்றுமையால் இனியுண்டாவதற்கு மும்மரித்து நிற்கும் ஒரு சிறு கலகமானது நுங்களையும் நுங்கள் இறுமாப்பினையும் நுங்கள் சாதிக் கட்டுப்பாடுகளையும் எளிதில் மாய்த் தொழிக்குமேயென அஞ்சுகின்றேம். வெள்ளம் வருவதற்கு முன்னரே அணை கோலி வைத்தல் அறிவுடையார் செயலாதல் போலப் பெருந்தீமைக்கு ஏதுவான கலகம் வருவதற்கு முன்னமே அதனை வருவிக்கும் சாதி வேற்று மையினைத் தொலைத்து விடுங்கள் என்று சாதி வேற்றுமை கோடரியாய்க் குல அழிவையும் நாட்டழிவையும் செய்வதை உருகி உருகி உரைத்து உய்யும் வழியாவது அதனை ஒழிப்பதே என்று வலியுறுத்துகிறார் (மேற்படி 88-9) சைவ வேளாளர் சாதி வேற்றுமை பாராட்டலால் அவரும் தாழ்த்தப்பட்டவராக்கப் பட்டமையை எடுத்துரைக்கிறார்: தமக்கு உதவி செய்யும் தொழிலாளரைத் தாம் இழிந்த சாதியாராக நினைந்து தருக்கி அவர்கட்குப் பல கொடுமை களைச் செய்தமையால் அன்றோ சைவ வேளாளராகிய தாமும் பார்ப்பனரால் இழிவு படுத்தப்பட்டு இழிந்த சூத்திரரானார். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்னும் பொய்யாமொழி ஒருகாலும் பொய்படா தன்றோ என்பது அது (சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் - 28) ஆரியர்க்குள்ளும் முந்து வருணப் பிரிவு இருந்ததில்லை என்றும், இருக்கு முதல் ஒன்பது மண்டிலங்களில் வருணச் செய்தி இல்லை என்றும் அவர்கள் இந்திய நாட்டுள் புகுந்து தம்மை வெண்ணிறத்தர் எனவும் கருநிறத்தவரொடு போரிட்ட காலையில் வருணம் தலைகாட்டியது எனவும் விளக்குகிறார் (மேற்படி 30-32) பாணரை நம் திருஞானசம்பந்தப் பெருமானும் திருநீல நக்கரும் தம்மோடு உடன் வைத்து அளவளாவினதும் அவ்வருமையைத் தீவடிவில் இருந்த ஆண்டவன் (வலஞ்சுழித்து) ஏற்றுக் கொண்டு மகிழ்ந்ததும் போலிச் சைவர் உணரார் கொல்லோ என்றும் (மேற்படி 58) கூறுகிறார். காரைக்கால் அம்மையாரைப் பொருந்தா மணத்தில் சேர்த்தது பிழை என்கிறார் (ப.த.கொ.சை.சமயம் 24) சுந்தரர் வரலாற்றை விரித்துரைத்து இறைவனே குலமணம் தவிர்த்துக் கலைமணம் சேர்த்தார் என்கிறார் (மேற்படி 25) அப்பரடிகளும் அப்பூதியடிகளும் சாதி பாராது கலந்துண்டலைக் காட்டுகிறார். நமி நந்தியடிகள் ஆரூர்த் திருவிழாவில் கலந்து கொண்டு திரும்பிய காலை இல்லுள் நீராடிப் புகக் குளிநீர் அமைக்குமாறு கூறித் திண்ணையில் கண்ணயர, அதுகால் ஆரூர்ப் பிறந்தார் அனைவரும் அடியாராக இருக்கவும் ஆங்கே இழிகுலத் தீட்டுக் கழித்தல் எற்றுக்கு என்று இறைவன் கனவில் உரைக்கக் குளியாதே இல்லுள் சென்றதை எடுத்துரைக்கிறார் (ப.த.கொ. சை. சமயம் 59) சோமாசி மாறனார்க்கு இறைவன் பறைவடிவு கொண்டு பாலித்ததையும் உரைக்கிறார். மாலியத்திலும் சாதிப்பாகுபாடு இல்லாமையை அரங்கப் பெருமான் லோக சாரங்கர் கனவில் தோன்றிப் பாண் பெருமாளைத் தோளின் மேல் ஏற்றிக் கொண்டு வருக என அவ்வாறே தோளில் கொண்டு திருமுன் விட்டதைச் சுட்டுகிறார் (60) திருமழிசையார் திருவாளனால் வளர்க்கப் பெற்றதையும் எடுத்துரைக்கிறார் (60) இவ்வாறு பல்லபல கூறும் அடிகளார், நீ தேவாரம் ஓதி என் செய? திருவாசகம் படித்து என் செய? உன் மன அழுக்கு உன்னைவிட்டு நீங்கிற்று இல்லையே! பிறரைச் சேராமல் தாமே கூடியிருந்து சோறு தின்பாரைப் பற்றிப் பெருமை பேசிக்கொள்கிறாய். அப்படியானால் பிறவற்றைக் கிட்டே சற்றும் அணுகவிடாமல் தாமாகவே தீனி தின்னும் சில விலங்குகள் அவர்களை விடச் சிறந்தன என் றன்றோ சொல்லல் வேண்டும்? என்று கடிந்துரைக்கிறார். (65) இழிகுடியாகக் கருதப்படுவோர் தாம் செய்ய வேண்டும் செயற்பாடுகள் இவை எனவும் அடிகள் உரைக்கிறார். உயர்த்தும் வகை : இழிந்த குடி ஒன்றிற் பிறந்தோர் அதற்குரிய இழிந்த தன்மைகளை விட்டுத் தூயராய் வரும்போது, தம்மை மீண்டும் அவ்விழிந்த குடிக்குரிய பெயராற் கூறித் தம்மைத் தாமே தாழ்வு படுத்திக் கொள்ளல் ஆகாது. ஒரு தூயவர் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்ள வழி தேட வேண்டுமே யல்லாமல், பிறர் தம்மை உயர்த்துவார் என்று நம்பியிருத்தலாகாது. ஏனெனில் நம்மனோர் சக்கையைப் பிடித்துச் சாற்றை ஒழுக விடும் பன்னாடையைப் போல்வர். உயர்ந்தவர் ஒருவர் பால் உள்ள குற்றங்களை ஆராய்ந்து அவற்றையே பேசும் நீரர் அல்லாமல் அவர்பால் உள்ள உயர்ந்த நலங்களைப் பேசும் இயல்பினர் அல்லர். ஆதலால் இத்தகைய தீய மக்களிடையே தூயராய் உயர்வார் தமது இழிகுடிப் பிறப்பை யுரையாது தம்மைச் சைவர் எனவும் பார்ப்பனர் எனவும் கூறி ஒழுகுதல் வேண்டும். தம்மொடு உடனிருந்து உணவு கொள்ளாதார் வீட்டில் தாமும் உணவு எடுத்தல் ஆகாது. இம்முறையை விடாப் பிடியாய்க் கொண்டு ஒழுகினால்தான் கீழோரில் தூயராய் வருவோர் உயரக் கூடும். இவ்வாறு நாளடைவிற் செய்தே பார்ப்பனரும் சைவரும் உயர்ந்தனர் என்கிறார்(96). தமிழ் வழிபாடு : மும்மொழி வல்லராகிய அடிகளார் தமிழ்நாட்டுத் திருக்கோயில் வழிபாடுகளில் தமிழ்த் தேவார திருவாசகங்கள் ஓதப்படுதலே முறைமை என்பதைப் பேச்சிலும் எழுத்திலும் மிக மிக வலியுறுத்தியவர். தாமே அவற்றை ஓதி வழிபட்டதுடன், ஓதுவா மூர்த்திகளைக் கொண்டும் வழிபட்டவர். அதனையும் தமிழ்ச் சைவர் வலியுறுத்தி நடைமுறைப்படுத்தத் துணியாமை யைக் கண்டு வருந்தி, தமிழர்களாகிய எங்களுக்குரிய இத்திருக்கோயில்களில் தேவார திருவாசகச் செந்தமிழ் மந்திரங்களைக் கொண்டு வழிபாடு செய்யாமல் எங்களுக்குப் புறம்பான எங்களுக்குத் தெரியாத வடமொழியைக் கொண்டு ஏன் வழிபாடு செய்கின்றீர்கள் என்று கேட்ட ஆண்மையுடையவர் எவராவது நம் தமிழரில் உண்டா? என்கிறார் (அறிவுரைக் கொத்து 142) செல்வர் கடமை : நம் நாட்டுச் செல்வர்கள், தம் செல்வத்தை ஆக்கவழிக்கு உதவாமல் இழிமைக்கு இடமாக்கி வருதலை எண்ணும் அடிகள் மிக இரங்கி உரைக்கிறார். கல்வி எல்லார்க்கும் பொதுப் பொருள் என்பது தமிழ்நெறி. நம் செல்வர்கள் நம் தாய்மொழிப் பயிற்சிக்கு உதவாமல் பிறமொழிப் பயிற்சிக்குச் செலவிடுதல் ஐயகோ! கொடிது கொடிது! தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை வாங்கத் தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்! நம் தமிழ் நாட்டுக்கு ஆறாயிர நாழிகை வழி விலகிக் கிடக்கும் மேல் நாட்டிலுள்ள கிறித்தவக் குருமார்கள் இந் நாட்டுக்கு வந்து, நூறாயிரக் கணக்காக நம் நகரங்களிலும் சேரிகளிலும் பல்லாயிரக் கணக்கான கல்விச் சாலைகள் திறப்பித்தும், மாதா கோயில்கள் கட்டுவித்தும், இந்நாட்டவர் எல்லார்க்கும் ஏதொரு வேற்றுமையும் இன்றிக் கல்வி கற்பித்தும், கடவுள் உணர்ச்சி உண்டாக்கியும் பேருதவி புரிந்து வாரா நிற்க, நம் நாட்டு ஏழை மக்கள் ஒரு நாளுக்கு ஒருவேளை நல்லுணவு மின்றிப் பட்டினியும் பசியுமாய்க் கிடந்து நெற்றிக் கண்ணீர் நிலத்தில் விழப் பாடுபட்டுத் தேடிக் கொடுக்கும் பெரும் பொருளைப் பேழை பேழையாய் வைத்திருக்கும். செல்வர்கள், தமது பெருமைக்கும் தமது நலத்திற்கும் தமது மனைவி மக்களின் ஆடை அகலங் கட்கும் தம் வேடிக்கை விளையாட்டு கட்குமாகத் தமது பெரும் பொருளைச் செலவு செய்து கொண்டு, தமக்கு அப் பொருளைச் சேர்த்துக் கொடுக்கும் ஏழைகளிற் பெரும் பாலாரைத் தீண்டாதவரென ஒதுக்கி வைத்தும் அவர்க்கு நல்லுணவும் நல்வெள்ளாடையும் கூடக் கொடாதும் அவர் வணங்குதற்குத் தம் கோயில்களில் உள்வருதல் கூடத் தகாதென விலக்கியும் அவர் தம்மக்களொடு ஒப்ப இருந்து கல்வி பயிலுதலும் ஆகாதென அவரைத் துரத்தியும் அவ்வேழை மக்கட்குப் பெரும் கொடுமை செய்து வரல், தெய்வத்திற்கு அடுக்குமோ? ஏழையழுத கண்ணீர் சுவடறத் தேயத்து மாய்க்கும் காலம் அணுகுதல் ஓர்மின் என்கிறார். (ப.த.கொ.சை. சமயம் (41-42) அழியாச் செல்வமாம் கல்வியைக் கைப்பொருளாகக் கொண்டவர் அப்பொருளைப் பேணிப் பயன்படுத்தாமல் கெடுதலையும் எடுத்துரைக்கிறார் அடிகள் : இரவில் திருடும் திருடர்க்கும் வழிமறித்துக் கொள்ளை யடிக்கும் வழிப்பறிக்காரர்க்கும் கல்வியை உதவியாய்க் கொண்டு உயர் நிலைகளாகிய மாறு கோலம் பூண்டு கைக்குறி வாங்கும் பகற் கொள்ளைக் காரர்க்கும் வேறுபாடு உண்டோ? ஏழைக் குடும்பங்களைக் கெடுப்பார் எவ்வளவு கற்றும் ஏன்? என்பது அது. இல்லறமே அறம் : இல்வாழ்க்கை ஒன்றுமே அறனென வைத்துச் சொல்லப் படுவதற்கு உரித்தாவதன்றித் துறவு வாழ்க்கை அறம் எனப்படுதற்கு உரிமை உடைத்தன்று என்பது அடிகளார் கொள்கை (ஷ51) அக்கருத்தொடு துறவு மடங்களைப் பற்றித் தெளிந்துரைக்கிறார். மண வாழ்க்கையில் இருந்தக்கால் தாம் செய்து போந்த முப்பத்திரண்டு அறங்களையும் தம் உரிமைச் சுற்றத்தார் செய்து போதருமாறு ஒருங்கு செய்து உலக நன்மையையும் தமது நன்மையையும் நாடி இறைவனை உளங்குழைந்து உருகி வழுத்துவதாகிய தவநிலையைக் கணவனும் மனைவியும் ஒருங்கிருந்து செயற்பாலரென நம் பேராசிரியர் தொல் காப்பியனார் உரைத்தபடி நம்மனோர் செய்து வந்தனராயின் (நிலை இழுகி வழுகி ஒழுகும் இற்றைத் துறவு மடக்) கேட்டுக்கு இடமிராது என்கிறார் (ஷ50) நாட்குறிப்பு கடிதம் நூல் என்பவற்றின் வழி அடிகளார் கொண்ட சமய நோக்குகள் இவை எனக் கண்டோம். இனி இவற்றின் பிழிவு எனத் தக்கதாகவும் இவற்றில் கூறாதனவாம் குறிப்புகள் சில கொண்டனவாகவும் உள்ள சீர்திருத்தக் குறிப்புகள், தீர்மானங்கள் என்னும் இரண்டனைக் காணலாம். அவ்விரண்டும் அடிகளார் சமய நோக்கின் வைப்பகங்களாக விளங்குதல் மிகவுண்மையாம். சீர்திருத்தக் குறிப்புகள் 1. எந்தச் சமயத்தாரேனும் எந்தச் சாதியாரேனும் சிவலிங்கத்தை வணங்குதற்கு விரும்பிக் கோயிலுள் வருவார்களாயின் அவர்களைத் தடை செய்யாமல் வந்து வணங்குதற்கு இடம் கொடுத்தல் வேண்டும். 2. வழிபாடு முழுவதும் நடை பெறுமாறு ஒவ்வொரு கோயிலிலும் ஏற்பாடு செய்ய வேண்டும். 3. திருவிழாக்கள் செவ்வையாக நடைபெறுமாறு செய்வ துடன் திருவிழாவின் உண்மையையும் பயனையும் எடுத்துச் சொல்லல் வேண்டும். 4. பொதுப் பெண்டிர் தொண்டு, பொட்டுக்கட்டல் ஆகியவை அடியோடு விலக்கப்பட வேண்டும். 5. குருக்கள்மார், தமிழ்மொழிப்பயிற்சி சைவசித்தாந்தம் உணர்தல் தேவார திருவாசகம் ஓதல் வல்லவராய் இருக்கும்படி செய்தல் வேண்டும். 6. வரும்படி மிக்க கோயில்களில் இருந்து வரும்படி இல்லாக் கோயில் குருக்களுக்குத் தக்க சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். 7. இறைவன் திருவுருவத்திற்குக் குருக்கள்மாரே வழிபாடு செய்ய வேண்டுமல்லாமல் வணங்கப் போகிறவர் களெல்லாம் தொட்டுப்பூசித்தல் வேண்டுமென்பது நல்ல முறையன்று. 8. வணங்கச் செல்வோர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று காட்டும் வேறுபாடு அடியோடு நீக்கப்படல் வேண்டும். 9. கோயில் செலவு போக மிச்சத்தைத் தேவாரப் பாடசாலைக்கும் தனித்தமிழ்ப் பாடசாலைக்கும் சைவ சித்தாந்த சபைக்கும் தமிழ்நூல் எழுதுவார்க்கும் சைவசித்தாந்த விரிவுரையாளர்க்கும் வழங்கல் வேண்டும். 10. கோயில் வரும்படி கொண்டு பார்ப்பனர்கட்கு மட்டும் உணவு கொடுத்தலும் ஆரியவேத பாட சாலை அமைத்தலும் ஆங்கிலப் பள்ளிக் கூடங்கட்குப் பொரு ளுதவி செய்தலும் அடியோடு நீக்கப்பட வேண்டும். 11. சிறுபருவமணத்தை ஒழித்தல் வேண்டும். பெண் மக்களுக்கு 20 ஆண்டும் ஆண்மக்களுக்கு 25 ஆண்டும் நிரம்பு முன் மணஞ் செய்தல் ஆகாது. 12. ஆணையாவது பெண்ணையாவது விலை கொடுத்து வாங்கும் கொடிய பழக்கத்தை வேரொடு களைவதற்கு எல்லாரும் மடிகட்டி நிற்றல் வேண்டும். 13. முப்பதாண்டுகட் குட்பட்ட பெண்கள் கணவனை இழந்து விடுவார்களானால் அவர்களைத் திருமணம் செய்து கொடுத்தல் வேண்டும். 14. ஆண்மக்களில் 40 ஆண்டுக்கு மேற்பட்டவர்கள் இளம் பெண்களை மணம் செய்தல் ஆகாது. 15. நாற்பதாண்டுக்கு மேற்பட்ட ஆண் மணஞ் செய்வாராயின் அவர் வயதொத்த கைம் பெண்ணையே மணஞ் செய்து கொள்ளும்படி தூண்டுதல் வேண்டும். - இவை அடிகளார், சீர்திருத்தம் என்னும் பகுதியில் எழுதிய கொள்கை விளக்கங்களாகும். பொது நிலைக் கழகம் தோன்றி இருபதாண்டுகள் பணியாற்றிய பின்னே இருபதாம் ஆண்டுப் பெருவிழா ஒன்று நிகழ்ந்தது. அவ்விழாவின் நிறைவில் (12.9.1930) பொது நிலைக் கழகச் சீர்திருத்த முடிவுகள் எனப் பத்துத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு ஆய்வும் நிகழ்த்தப்பட்டன. அத்தீர் மானங்கள் : 1. மடத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும். 2. கோயில்களில் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும். 3. பழந்தமிழ்க் குடிமக்கள் தீண்டாதோர் எல்லாரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழி பாடாற்றப் பொதுமக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும். 4. கோயில்களில் பொதுமாதர் திருப்பணி செய்தல் ஆகாது. 5. வேண்டப்படாதனவும் பொருட் செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தமற்றனவுமான திருவிழாக்களையும் சடங்கு களையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுமான சடங்கும் திருவிழாவும் குறைந்த செலவிலேயே செய்தல் வேண்டும். 6. சாரதா சட்டத்தை உடனே செயன்முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும். 7. கைம்பெண்மணம் முதல்நூல் முடிவுக்கு ஒத்ததே. மற்றவை முதனூல் முடிவுக்கு ஒத்தவைகள் எனினும் தாலியறுத்தல் மொட்டையடித்தல் வெள்ளைப் புடைவை யுடுத்தல் பட்டினி கிடத்தல் முதலிய வெறுக்கத்தக்க செயல்களாற் பெண்களைத் துன்புறுத்தல் ஒவ்வாது. எனவே கைம்பெண்மணம் செயல் முறைக்கு வர அறிஞர்கள் நன்முயற்சி செய்தல் வேண்டும். 8. சாதிக் கலப்பு மணம் வரவேற்கத் தக்கது. 9. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும். 10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. சிறப்பு வகுப்பு (பி.ஏ. ஆனர்சு) ஏற்படுத்தல் வேண்டும். தமிழர்மதம் அடிகளாரின் சமய நோக்கு இன்னது என்பதை ஆற்றொழுக்கெனச் சொல்லிச் செல்வதொரு நூல் தமிழர் மதம். அதன் பெயரே தமிழர் என்னும் ஒருமைப் பெயர் கொண்டு விளங்கும் உயர்வை வெளிப்படுத்தும். மற்றவற்றுள் சைவம் என்ற அடிகள் தமிழர் மதம் என்னும் பெருநிலையில் கண்ட மாட்சி அது. அதில் உள்ளவற்றை அவர்தம் மாணவர் தவத்திரு அழகரடிகள் மறைமலையடிகளார் வரலாற்று மாட்சியில் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இங்குச் சுட்டப் பெற்றவற்றுடன் வேறு சிலவும் கொண்ட அத் தொகுப்புரை காண்க : 1. தமிழர்கள் தமது பழம் பெருமையை யுணர்ந்து அதற்கேற்ப நடத்தல் வேண்டும். 2. தமிழ்மொழியைத் தூய்தாய் வளனுற வளர்த்து வருதல் வேண்டும். 3. தமிழ் கற்பார் சிலரும் அடிமை வாழ்க்கையையே தமக்கொரு பெருமை வாழ்க்கையாகவும் பிழைபட நினைந்து.. ஒழுகுகின்றார் (இதனை அகற்றல் வேண்டும்) 4. பண்டுபோல் தமக்கும் தம் இல்லங்களுக்கும் தம் ஊர்களுக்கும் பிறவற்றிற்கும் எல்லாம் தூய தமிழ்ப் பெயர்களையே அமைத்தல் வேண்டும். 5. தமிழரெல்லாரும் தம்மைத் தமிழரென்றே வழங்கக் கடமைப்பட்டிருக்கின்றனர். தம்மை எவரும் சூத்திரர் என்னும் இழிசொல்லால் அழைக்க இடந்தரலாகாது. தாழ்ந்த வகுப்பினராய் இருப்பவரை இழித்துப் பேசுதலும் அழைத்தலும் ஒரு சிறிதும் கூடாது. 6. தொழில் வேற்றுமையால் உண்டான குலவேற்று மையையே பெரிது பாராட்டித் தமிழ்மக்கள் தம்முள் உண்ணல் கலத்தல்களைச் செய்யாமல், தனித்தனி வெவ்வேறினங்களாய்ப் பிரிந்து வலிவிழந்த துன்ப வாழ்க்கையில் கிடந்துழல்வது நிரம்ப வருந்தத்தக்கதாய் இருக்கின்றது. 7. ஊனுண்ணாச் சைவ ஒழுக்கத்தினின்றும் தாம் சிறிதும் வழுவுதல் ஆகாது. 8. காதலன்பைக் கருதாமல் செய்யும் போலி மணத்தை அறவே ஒழித்து விடல்வேண்டும். 9. (மக்களுக்குச்) செல்வப் பொருளைத் தேடித் தொகுத்து வைக்கும் பெற்றோர், அவர்க்குத் தீமையே செய்பவர் ஆவர். 10. செலவுக்கு மேற்பட்ட பொருளைத் தனித்தமிழ்க் கல்லூரி வைத்துக் கற்பித்தற்குக் கொடுத்தல் வேண்டும். 11. வரை துறையின்றி உணவளிக்கும் அறம் பயன் தரா. 12. உறுப்பறைகட்கும், பிணிப்பட்ட ஏழைகட்கும், கல்வி பயிலும் எளிய மாணவர்க்கும் நூல் ஓதுவிக்கும் வறிய ஆசிரியர்க்கும், புதியன பழையன ஆராய்ந்து பல துறைகளிற் பயன்படும் நூல்கள் இயற்றும் நூலாசிரியர் கட்கும், சொற்பொழிவு நிகழ்த்தும் நாவலர்க்கும், தவவொழுக்கத்தில் நிற்கும் துறவிகட்கும் உணவும் பொருளும் வேண்டுமட்டும் உவந்து நல்குதலே உண்மையான அறமாகும். 13. முழுமுதற் கடவுள் ஒன்றேயன்றிப் பல இல்லை என்னும் உறுதியில் ஒரு சிறிதும் நெகிழலாகாது. 14. பிறப்பு இறப்புகளிற் கிடந்துழன்ற சிறு தெய்வங் களையும் கண்ணன் இராமன் முதலான அரசர்களையும் கடவுள் நிலையில் வழிபடுதல் மன்னிக்கப்படாத பெருங் குற்றமாய் முடியும். 15. திருக்கோயில்களை விட மக்களுக்கு உறுதிபயக்கக் கூடியது வேறெதும் இல்லை. 16. வழிபடும் முறைகளும் வடநாட்டைவிடத் தென்னாட்டின் கண்ணேதான் சிறந்தனவாய் நடைபெறுகின்றன. 17. வடநாட்டுக் கோயில்களில் மக்கள் தாமே நீரும் பூவும் இட்டு வணங் குகிறார்கள். தென்னாட்டு முறை எவ்வளவோ நலந்தருவதாய்க் காணப்படுகின்றது. சிறிதும் மாற்றாமல் நடப்பித்தலே வேண்டற்பாலது. 18. கோயிலுக்கு வழங்குவது உண்மையில் வீணாகுமா? 19. இல்லறத்தார் வேறு துறவறத்தார்வேறு என்னும் தவறான கருத்தை நம் தமிழ்மக்கள் அறவே ஒழித்து விடல் வேண்டும். (தமிழர் மதம் 260-76) என்பவை அவை.மேலும் தாய் தந்தையரையே தெய்வமாக நினைந்து வணங்கி வருதல் வேண்டும் என்பது தமிழர்தம் முதற்றெய்வக் கொள்கை என்கிறார் அடிகள் (த.ம. 73) அதிலிருந்து முளைத்துக் கிளைத்தவையே அம்மை அம்பலவாணர் வழிபாடு என்று விரித்துரைக்கிறார் அடிகள். பன்மனைவியர் மணம் சமயச் சால்புக்கும் ஆடவர்மகளிர் நலத்திற்கும் தக்கதே என்றும், அது பெண்ணிழிமையாகாது என்றும் விரித்துரைத்தல் காலத்தொடும் கருத்தொடும் இயைவதன்றாம். வள்ளுவ நெறியும் ஆகாதாம் (த.ம. 56 - 63க) வேண்டாத அளவுக்கு மக்களுக்குச் செல்வம் சேர்த்து வைத்தலின் தீய விளைவுகள், மாப்பிள்ளையை விலை கொடுத்து வாங்குதல் ஆகியவற்றைக் கடிதல் கருதிப் போற்றத் தக்கவையாம் (த.ம. 67-8) அகப்பாடல்கள் உரைக்குமாறு தம்மவருள் தாய்மாரே முன்னின்று மணச்சடங்கு செய்ததே தொல்காப்பியரால் கரணம் எனப்பட்டது என்பதும், கரணம் என்பது தமிழ்ச் சொல்லே என நிறுவுவதும் இனிய செய்திகள் (த.ம. 188 - 40) அந்நெறியில் தம் குலத்தவரைக் கொண்டாவது கடைப்பிடிக்கத் தக்கதாம். (த.ம. 193) தனித்துறவில் புகுந்தவர் அதில் உறுதியாய் நிற்றல் தம்மால் இயலாதெனக் கண்டால் மீண்டும் மணம் செய்து கொண்டு தவஞ்செய்தலையே மேற்கொள்வாராக என்றும் துறவொழுக்கத்தை மேற்கொண்டார் எவரும் எவரையும் இரந்து உணவும் உடையும் பொருளும் பிறவும் பெறுதல் சிறிதும் ஆகாது என்றும் தவச் சீர்திருத்தமாகக் கூறித் தமிழர் மத ஆய்வை நிறைவிக்கிறார் அடிகள். அடிகளார் கொண்ட சமய நோக்குகளை விரித்தும் விளக்கியும் கூறாமல் தொகுத்தும் சுருக்கியும் கூறியவை இவை. சான்றுகளும் சிலவாகவே உடையவை. சீர்திருத்தம் என்னும் கட்டுரையில் காட்டிய குறிப்புகள், பொது நிலைக்கழகத் தீர்மானங்கள், மறைமலையடிகளார் வரலாற்று மாட்சியில் குறிக்கப்பட்ட தொகுப்புக் குறிப்பு என்னும் மூன்றாலும் பிறவற்றாலும் மறைமலையடிகளாரின் சமய நோக்கள் இவை என்பது தெளிவாக விளங்கும். சமயம் என்பது பண்படுத்தும் கருவி; பாதுகாப்பு அரண்; குமுகாய (சமுதாய) வளர்ச்சிக் கல்வி நிலையம்; ஒட்டுமொத்த உயிர்களின் இறைமை உறையள் - என்னும் முடிவில் அடிகளார் விரிபார்வை அமைந்தது என்பது இவற்றால் புரியும் செய்தியாம்! சமயம் கண்மூடித்தனத்தின் வைப்பகம் அன்று; சீர்திருத்தத்தின் வைப்பகம் - பரப்பகம் என்பதை அடிகளார் நோக்கிலே புரிந்து செயலாக்கம் பெற்றிருப்பின், எத்துணையோ நலங்களைத் தமிழுலகம் கண்டிருக்கும். அந்நிலை இனிமே முன்புலேனும் எய்துமாக! முன் வெளிவந்த நூல்கள் விவர பட்டியல் 1 தொகுதி - 1 1. வழக்குச் சொல் அகராதி 2. வட்டார வழக்குச் சொல் அகராதி 2 தொகுதி - 2 1. இணைச் சொல் அகராதி 2. இலக்கிய வகை அகராதி 3 தொகுதி - 3 1. சொற் பொருள் நுண்மை விளக்கம் 4 தொகுதி - 4 1, இலக்கண அகராதி (ஐந்திலக்கணம்) புறநானூற் று கதைகள் 5 தொகுதி - 5 1.. புறநானூற் றுக் கதை 1 2. புறநானூற் றுக் கதை 2 3. புறநானூற் றுக் கதை 3 4. புறநானூற் றுக் கதை 4 5. புறநானூற் றுக் கதை 5 6. புறநானூற் றுக் கதை 6 7. புறநானூற் றுக் கதை 7 8. புறநானூற் றுக் கதை 8 9. புறநானூற் றுக் கதை 9 10. புறநானூற் றுக் கதை 10 11. அந்த உணர்வு எங்கே 12. பண்டைட் தமிழ் மன் றங்கள் 13. பெரும்புலவர் மூவர் 6 தொகுதி - 6 திருக்குறள் ஆராய்ச்சி - 1 1. வள்ளுவர் வழியில் நல்ல மாணவராக 2. வள்ளுவர் வழியில் நல்ல ஆசிரியராக 3. வள்ளுவர் வழியில் நல்ல கணவனாக 4. வள்ளுவர் வழியில் நல்ல மனைவியாக 5. வள்ளுவர் வழியில் நல்ல பெற் றோராக 6. வள்ளுவர் வழியில் நல்ல மக்களாக 7. வள்ளுவர் வழியில் நல்ல இல்லறட்தராக 8. வள்ளுவர் வழியில் நல்ல துறவராக 9. வள்ளுவர் வழியில் நல்ல ஊழ் 10. வள்ளுவர் வழியில் குறளாயட் திருமண முறையும் விளக்கமும் 11. வள்ளுவர் வழியில் நல்ல தோழராக 12. வள்ளுவர் வழியில் நல்ல தொழிலராக 13. வள்ளுவர் வழியில் நல்ல ஆட்சியாராக 7 தொகுதி - 7 திருக்குறள் ஆராய்ச்சி - 2 14. வள்ளுவர் வழியில் நல்ல அலுவலராக 15. வள்ளுவர் வழியில் நல்ல செல்வராக 16. வள்ளுவர் வழியில் நல்ல சான் றோராக 17. வள்ளுவர் வழியில் வினை 18. வள்ளுவர் வழியில் பிறப்பு 19. வள்ளுவர் வழியில் வறுமையும் வளமையே 20. வள்ளுவர் வழியில் தவம் 21. மங்கல மனையறம் 22. ஒரு குறள் ஒரு நூல் 1 23. ஒரு குறள் ஒரு நூல் 2 24. ஒரு குறள் ஒரு நூல் 3 25. ஒரு குறள் ஒரு நூல் 4 26. நினைக்கும் நெசம் 8 தொகுதி - 8 1. திருக்குறள் கதைகள் 10 9 தொகுதி - 9 1. திருக்குறள் கட்டுரைகள் 10 தனி நூல்கள் 10 தொகுதி - 10 1. காக்கைப் பாடினியம் 11 தொகுதி - 11 1. களவியற் காரிகை 12 தொகுதி - 12 1. தகடூர் யாட்திரை 13 தொகுதி - 13 1. யாப்பருங்கலம் (பழைய விருட்தியுடன் ) 14 தொகுதி - 14 1, தமிழ்க் கா.சு. கலைக்களசியம் 15 தொகுதி - 15 1. தமிழ் வளம் சொல் 16 தொகுதி - 16 1. தமிழ் வளம் - பொருள் 17 தொகுதி - 17 1. புறட்திரட்டு 18 தொகுதி - 18 1. வாழ்வியல் வளம் 19 தொகுதி - 19 1. தமிழர் வாழ்வியல் இலக்கணம் 20 தொகுதி - 20 1.கல்விச் செல்வம் 2.இருசொல் அழகு 3.தனிப்பாடல் கனிச்சுவை 4.பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி