இளங்குமரனார் தமிழ்வளம் 8 திருக்குறள் கதைகள் இரா. இளங்குமரன் வளவன் பதிப்பகம் சென்னை - 600 017. நூற் குறிப்பு நூற்பெயர் : இளங்குமரனார் தமிழ்வளம் - 8 ஆசிரியர் : இரா. இளங்குமரன் பதிப்பாளர் : இ. இனியன் பதிப்பு : 2009 தாள் : 16 கி வெள்ளைத்தாள் அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 16+ 208 = 224 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 140/- படிகள் : 1000 நூலாக்கம் : பாவாணர் கணினி தி.நகர், சென்னை - 17. அட்டை ஓவியம் : ஓவியர் மருது அட்டை வடிவமைப்பு : வ. மலர் அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு இராயப்பேட்டை, சென்னை - 14. வெளியீடு வளவன் பதிப்பகம் எண் : 2 சிங்கார வேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24339030 பதிப்புரை இலக்கிய இலக்கணச் செம்மல் முதுமுனைவர் அய்யா இளங்குமரனார் அவர்கள் எழுபத்தைந்து ஆண்டு நிறைவு எய்தியதைப் போற்றும் வகையில் தமிழ் இளையர்க்கென்று அவர் எழுதிய நூல்களையெல்லாம் சேர்த்து எழுபத்தைந்து நூல்கள் கடந்த 2005 - ஆம் ஆண்டு திருச்சித் திருநகரில் வெளியிட்டு எம் பதிப்புப் பணிக்குப் பெருமை சேர்த்துக் கொண்டோம். அந்த வகையில் 2010 - ஆம் ஆண்டு இப்பெருந் தமிழாசான் 81 - ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் தமிழ்மொழி - இன - நாட்டின் காப்பிற்காகவும், மீட்பிற்காகவும், மேன்மைக்காகவும் இவர் எழுதிய அனைத்து அறிவுச் செல்வங்களையும் தொகுத்துப் பொருள் வழிப் பிரித்து 20 தொகுதிகளாக வெளியிட்டுள்ளோம்.மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழுக்கும், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திவரும் செந்தமிழ்ச் செல்வி, குறளியம் மற்றும் பிற இதழ்களுக்கும், மலர்களுக்கும் இவர் எழுதிய அறிவின் ஆக்கங்களைத் தொகுத்துத் தமிழ்கூறும் நல்லுலகிற்கு வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளோம். இப்பெருமகன் வாழும் காலத்திலேயே இவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது என்பது தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் போற்றி மகிழ்வதற்கான, அனைவரும் பின்பற்றுவதற்கான அரும்பெரும் தமிழ்ப் பணியாகும். இவர் தந்நலம் கருதாமல் தமிழ் நலம் காத்து வருபவர். தம்மைமுன்னிறுத்தாது தமிழை முன்னிறுத்தும் பெருந்தமிழறிஞர். தமக்கென வாழாது தமிழ்க்கென வாழ்பவர். ஒருநாளின் முழுப்பொழுதும் தமிழாகவே வாழும் தமிழ்ப் போராளி. சங்கச் சான்றோர் வரிசையில் வைத்து எண்ணத்தக்க அருந்தமிழறிஞர். தமிழ் இலக்கண - இலக்கிய மரபைக் காத்து வரும் மரபு வழி அறிஞர். ஆரவாரம் மிகுந்த இன்றைய சூழ்நிலையில் படாடோபம் இன்றியும், விளம்பரப் போலிமை இன்றியும், தமிழ் மொழியின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் தொல்தமிழறிஞர். மொழிநூல் கதிரவன் பாவாணரின் வேர்ச்சொல் ஆய்வில் அவர் காட்டிய வழியில் தம் தமிழாய்வைத் தொடர்பவர். இவர் எழுதிக் குவித்த தமிழ் அறிவுச் செல்வங்களை அவரிடமே வேண்டிப் பெற்று 20 தொகுதிகளாக இளங்குமரனார் தமிழ் வளம் எனும் தலைப்பில் பொருள்வழிப் பிரித்து வெளியிடுகிறோம். தமிழாய்வுக் களத்தில் தம் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கும் தமிழ் ஆய்வாளர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் தங்கத் தட்டில் வைத்துப் பொற்குவியலாகத் தந்துள்ளோம். எம் தமிழ் நூல் பதிப்புப் பயணத்தில், தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளையும், மொழி நூல் கதிரவன் பாவாணரையும், தமிழ்க் மொழிக் காவலர் இலக்குவனாரையும் வழிகாட்டியாகக் கொண்டு தமிழ் நூல் பரப்பின் எல்லையைக் கண்டு காட்டும் சங்கத்தமிழ்த் சான்றோராக விளங்கும் ஐயா இளங்குமரனார் வாழும் காலத்திலேயே அவர் நூல்களை வெளியிடுவதை யாம் பெற்ற பேறாகக் கருதுகிறோம். தமிழர் இல்லம்தோறும் இருக்கத்தக்க இவ்வருந்தமிழ்ச் செல்வங்களைத் தமிழ் இளம் தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன்முன் னேற்றம்! .......... ..... இதுதான்நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே. எனும் பாவேந்தரின் தமிழியக்க உணர்வுகளை நெஞ்சில் ஏந்தி வாழ முற்படுவோம். - பதிப்பாளர். உள்ளடக்கம் பதிப்புரை iii பெறும் பேறு vi நூல் திருக்குறள் கதைகள் 1. மனக்கவலை மாற்றும் மருந்து 1 2. அன்பின் வழியது உயர்நிலை 8 3. முற்பகலும் பிற்பகலும் 15 4. உருவும் நிழலும் 24 5. நொண்டித் தாத்தா 32 6. மேதை மாதவன் 38 7. கல்விப் பயன் கொண்ட கண்ணப்பர் 44 8. யாருக்குப் பாராட்டு! 48 9. ஒரே ஒரு தூண் 57 10. மானமுள்ள பிச்சைக்காரன் 62 11. தமிழ் முழக்கம் 74 12. கண் கொடுத்த கவிதை 79 13. குழலும் யாழும் 84 14. வகுத்தலும் தொகுத்தலும் 92 15. உள்ளதும் இல்லதும் 97 16. கப்பலோட்டிய தமிழன் 106 17. காந்தியண்ணல் 109 18. அருளாளன் ஆபிரகாம் 112 19. பாவலன் பாரதி 115 20. வள்ளல் நள்ளி 118 21. கடல் தரா முத்துக்கள் 121 22. இரண்டு கடிதங்கள் 124 23. அழுகைச் சிரிப்பு 148 24. மெய்மைப் பொய் 176 25. தொண்டனாகுக 186 26. கல்யானை மீதிருக்கும் களிற்றியானை 195 27. நிறுத்து போரை! 199 28. வாழ வைப்போரே வாழ்வோர் 202 29. எப்படி வாழ்வது? 206 திருக்குறள் கதைகள் 1. மனக்கவலை மாற்றும் மருந்து கோவில் மணி டாண் டாண் என்று ஒலித்துக் கொண்டு இருந்தது. முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே திருப்பரங்குன்றத்து மக்கள் திரள் திரளாகக் கோவிலுக்குள் போய்க்கொண்டிருந்தனர். தேங்காய், பழம், பூ, சூடன், குங்குமம், திருநீறு ஆகியவை நிரம்பிய தட்டு கைகளிலே விளங்க. முருகா முருகா என்று வாய் முழங்க அமைந்த நடையுடன் முருகன் திருமுன்பு அடைந்தனர். அவர்களுடன் தேங்காய்க்கடைக் குமரவேலும் இருந்தார். எவர் வராவிட்டாலும் சரி, குமரவேல் மாலைக் கால வழிபாட்டுக்கு வரத் தவறுவதே இல்லை கோவிலுக்குள் புகுந்துவிட்டால் சிலை சிலையாக உற்றுப் பார்த்துக்கொண்டு சிற்பக் கலைஞராகி விடுவார். நுழைவாயிலில் பொறித்திருக்கும் திருஞானசம்பந்தர் திருப்பரங்குன்றத் தேவாரத்தைப் பன்முறை உணர்ச்சியோடு பாடிப்பாடி கவிஞராகி விடுவார். அவர் பாடுவதை அருகில் நின்றுகேட்கும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைத்துவிட்டால் உளங்கனிந்து இறையன்பராகி விடுவார் என்பதற்கு ஐயமில்லை. குமரவேல் முருகன் திருமுன்பு நின்று அவன் தெய்வத் திருக்கோலத்தில் உள்ளம் பறி கொடுப்பார். ஊன் கலந்து, உயிர் கலந்து, உணர்வுகலந்து கற்சிலையாய் நிற்பார். பக்கத்தே எவர் இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறியாது பாடிக் கொண்டே இருப்பார். அதிலும், பன்னிய பாடல் ஆடலன் பரங்குன்றை உன்னிய சிந்தை உடையவர்க் கில்லை உறுநோயே என்னும் ஞானசம்பந்தர் வரிகளை மாறி மாறி நூறு முறைகளாவது சொல்லாமல் ஓயமாட்டார். பாடும்போதே கண்ணீர்த் துளிகள் கன்னத்தை நனைத்துத் தரையையும் மெழுகிவிடும். வழக்கம்போல் குமரவேல் அன்றும் பூசை முறைகளைச் செய்தார். ஆனால் முடித்துவிட்டு உடனே வந்துவிடவில்லை. தூண் ஒன்றிலே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினார். பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக மின்னலிட்டுக் கொண்டு வந்தன. குமரவேல் பெருஞ் செல்வர். அவர் பெயரால் ஐந்தாறு கடைகள் நடந்துவந்தன. பண்ணை விவசாயம் வேறு இருந்தது. மாடு, மனை, வீடு மோட்டார் ஆகிய எதற்கும் குறைவில்லாத வாழ்க்கை. பொருட்செல்வம் போலவே அருட்செல்வமும் நிரம்பக் கொண்டிருந்தார். குமரவேல் குணக்குன்றம் என்று மக்கள் பாராட்டும் படி வாழ்ந்தார். அவரைக்கண்டு தங்கள் நிலைமையைச் சொல்லிய எவரும் தகுந்த பயனடையாமல் போனது இல்லை. அதனால் நாள்தோறும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தேடி வருவதும் போவதுமாகவே இருந்தனர். தேடிவந்தவர்களுக் கெல்லாம் விருந்துக்கு, எத்தகைய குறைவும் இருக்காது. குமரவேல் ஊரில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கமாகச் செய்யவேண்டிய கடமை அது. குமரவேலின் பொழுதைப் பொதுக் காரியங்கள் இழுத்துப் பிடித்துக்கொண்டன. கடையையோ, நிலத்தையோ நேரில் சென்று பார்க்க அவரால் முடியவில்லை. உள்ளூரிலே தங்க முடியாமல் வெளியூர் வெளியூர் என்று அலைந்து திரிந்த அவர் வீட்டுக் காரியங்களை எப்படிக் கவனிப்பார்! பாவம்! மற்றவர்களை நம்பினார் நன்றாக நம்பினார்! ஆனால் நம்பிக்கைக்குக் கேடு செய்யக்கூடாது என்று எத்தனை பேர்தான் எண்ணுகிறார்கள். பணம் கிடைத்தால் போதும் அது எந்த வழியால் வந்தால் என்ன என்று எண்ணுபவர்கள் இருக்கத் தானே செய்கின்றார்கள். வாணிகத்தையும், உழவையும் தமக்கு உறவினனான கந்தப்பனிடம் ஒப்படைத்திருந்தார். குமரவேல் கந்தப்பனும் அன்பனாகவும் தொண்டனாகவும் நடந்து வரத்தான் செய்தான் அவனும் பத்தாண்டுகள் தன் பொருள் போல் நன்முறையில் பேணி வளர்த்து வந்தான். ஆனால் உள்ளம் ஒரு நிலையிலே இருப்பது இல்லையே! எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் ஒருசில வேளைகளில் கெட்டுப்போய் விடுகின்றானே! பணத்தாசைதானே குணத்தைக் கெடுத்துவிடுகின்றது. கந்தப்பனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு வாய்த்த கணவன் பணம்பிடுங்கி. பணம் பணம் என்று அரித்துக் கொண்டே இருப்பான். மணமேடையிலேயே, நூறு பவுன் கழுத்தில் இருக்கிறதா என்பதை நிறுத்து அளவிட்டுப் பார்த்துத் தாலிகட்டிய செயலே அவன் பணத்தாசையை எடுத்துக் காட்டப் போதுமானதாகும். திருமணத்தின் பின்னும் விட்டானா? எப்படி எப்படியோ சொத்துகளைத் தொலைத்தான். தொலைத்ததைப் பெற ஒரே வழி மாமன் கந்தப்பனை வாட்டுவது என்று கருதி விட்டான். அதனால் கந்தப்பனிடம் பணம் கறந்து கொண்டே இருந்தான். மகள் எப்படியாவது வாழவேண்டுமே என்ற ஆசையால் கேட்டதை எல்லாம் கொடுத்துக்கொண்டே இருந்தான் கந்தப்பன். கேட்ட கேட்ட பொழுதுகளிலெல்லாம் ஆயிரம் ஆயிரமாய் எப்படிக் கொடுக்க முடியும்? கந்தப்பன் சம்பளமே மாதம் எண்பது ரூபாதானே! ஆம்! முதலாளி பணத்தைச் சுரண்டியே கொடுத்தான். மகள் வாழவேண்டுமென்ற ஆசை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யுமாறு தூண்டிவிட்டது. சுருட்டினான்; சுருட்டினான்: சுருட்டிக்கொண்டே இருந்தான். இவன் எழுதிய கள்ளக் கணக்குக்கு எல்லை இல்லை. பொய்யான இரசீதுகள் பத்திரங்கள் கட்டுக்கட்டாகக் குவிந்தன. ஒன்றுக்குப் பத்தாகச் செலவு ஏறியது. நூற்றுக்குப் பத்தாக வருமானம் குறைந்தது. கடன் நாள் தவறாமல் ஆயிரம் ஆயிரமாக இலட்சக் கணக்கில் ஏறிவிட்டது. குமரவேலுக்கு உண்மை நிலைமை அவ்வளவு எளிதில் தெரிந்துவிடவில்லை. கந்தப்பன் தான் கண்ணில் பொடியைத் தூவி மறைத்துக் கொண்டிருக்கின்றானே! ஆனாலும் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைத்துவிட முடியும்? ஒரு நாள் பத்துப் பதினைந்துபேர் இவ்வளவு தர வேண்டும். அவ்வளவு தரவேண்டும் என்று குமரவேலைத் தேடிவந்தனர். உதவி வேண்டி வந்தவர்களை அல்லாமல் இப்படிக் கடன் கேட்டு வந்தவர்களைக் கண்டறியாத குமரவேல் மனம் ஒடிந்துவிட்டார். கந்தப்பனை அழைத்து விவரம் கேட்டார்.. களவு கை வந்தவன் கணக்குக் காட்டவா மாட்டான்? கணக்கைப் புள்ளி விவரமாகக் காட்டிவிட்டான். முதலாளி! நீங்கள் அறிந்து வருந்தாதபடி, கடனை எப்படியும் அடைத்துவிடலாம் என்ற எண்ணத்தால்தான் இதுவரை சொல்லவில்லை. உங்கள் மேல் வைத்த நல்லெண்ணந்தான் இவ்வாறு செய்யவைத்தது என்று நன்றாக நடித்தான் கந்தப்பன். குமரவேலுக்கு ஒன்றும் ஓடவில்லை. இனிப் பழையதை நினைத்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்று எண்ணினார். கடன் என்று யாரும் தலைவாசல் மிதித்து வரக்கூடாது என்ற நோக்கத்தால் இருக்கும் கடை. வீடு, நிலம் எல்லா வற்றையும் விற்றுச் சேர்த்து ஒரு வாரத்திற்குள் கணக்கை முடித்து விட்டார். கணக்கை முடித்தார் குமரவேல். ஆனால் முறிந்த மனத்தை நிமிர்த்த அவரால் முடியவில்லை: ஊர் போற்ற, வட்டாரம் புகழ, உயர்ந்த வாழ்வு வாழ்ந்த குமரவேல் இருந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டில் வாழ வேண்டுமானால் தாங்கமுடியுமா? எத்தனை எத்தனை வேலையாட்கள்! எவ்வளவு உயர்ந்த வாழ்வு! எல்லாம் போய்விட்டது. பித்துப் பிடித்தவர் போல ஆகிவிட்டார். குமரவேல் சில ஆண்டுகளுக்கு முன்னாகவே தம் மனைவியை இழந்துவிட்டார். அந்தக் கவலையைப் பொதுத் தொண்டு புரிவதிலும், ஒரே மைந்தன் வளவனை வளர்ப்பதிலும் மறந்தார். ஆனால் இப்பொழுது எல்லாக் கவலைகளும் ஒன்றுசேர்ந்து விட்டன. மனைவி இழப்பு, மகன் வறுமை, நம்பிக்கை மோசம், செல்வக் கேடு, ஏழ்மை வாழ்வு - இவ்வளவும் சேர்ந்தால் உள்ளம் கல்லாக இருந்தாலும் கரைந்துவிடுமல்லவா! குமரவேல் மட்டும் இதற்கு எப்படி விலக்காக முடியும்? குமரவேல் பெருந்தன்மை படைத்தவர் அல்லவா! அதனால் பலர் முன்வந்து தேற்றினர். உதவி செய்வதாகவும் வாக்களித்தனர். தங்கள் இல்லங்களில் வந்து இருக்குமாறும் வேண்டினர். ஆனால் குமரவேல் உள்ளம் எதற்கும் இடம் தரவில்லை, வாழ்ந்தவர் தாழ்ந்துவிட்டால் ஏற்படும் அல்லல் இதுதான்! பிறர் உதவியை நாடி நிற்கும் மனம் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. பழைய நினைவுகளே வந்து துன்புறுத்தும். பழைய செல்வம் என்ன, சீர் என்ன என்ற எண்ணங்கள் வரும் பொழுது வாழ்க்கை வெறுக்குமே ஒழிய, எப்படியாவது பிறர் உதவியால் வயிறு வளர்ப்போம் என்ற நினைவு வராது. அப்படித்தான் இருந்தார் குமாரவேலும். குமரவேலின் நிலைமையை அவர் நண்பரான அழகப்பர் அறிந்தார். அழகப்பர் மதுரையிலே ஒரு துணிக் கடைக்காரர்; குமாரவேல் தந்த முதலைப்போட்டுக் கடை தொடங்கி இன்று நல்வாழ்வு வாழ்பவர். பழைய நன்றியை மறக்காத உள்ளம் உடையவர். அதனால் குமரவேலை வற்புறுத்தி மதுரைக்கு அழைத்துக் கொண்டு வந்தார். குமரவேலும் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் அழகப்பர் விடவில்லை. இறுதியில் வேற்றூர் வாழ்க்கை இச் சமயத்திற்கு நல்லதே என்று கருதிய குமரவேல் வளவனுடன் மதுரைக்கு வந்தார். அழகப்பர் குமரவேலை நன்றாகப் பேணினார். உங்கள் செல்வம்தான் இது: உங்களால் தான் முன்னுக்கு வந்தேன்: நீங்கள் வேறொன்றும் நினைக்க வேண்டாம்: இங்கேயே தங்கியிருக்கலாம். உங்களுக்கென வீட்டில் தனியறை ஒன்றை ஒதுக்கி வைக்கிறேன். எல்லா வசதிகளும் நான் கவனித்துக் கொள்கிறேன். வளவனுக்கும் கடையில் வேலை தருகின்றேன் என்று கூறினார். குமரவேல் அழகப்பருடைய வீட்டிலும், கடையிலுமாகப் பொழுது போக்கினார். ஆனாலும் அவரால் பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்க முடியவில்லை. வீட்டிற்குள் போகும் போதெல்லாம் தன் வீடு முன்னின்று வேதனை எழுப்பியது. மோட்டாரில் உட்கார்ந்த பொழு தெல்லாம் பழைய நினைவுபற்றி எரிந்தது. கடைக்குப் போகும் பொழுதெல்லாம் இடியால் தாக்கப்படுவது போல் அல்லல் அடைந்தார். அழகப்பரைக் கண்டுபேச ஆட்கள் வரும்போதும் போகும் போதும் பழுத்துக் காய்ச்சிய இரும்பை உடம்பில் செலுத்துவது போன்ற துயருக்கு ஆளானார். துன்பத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று எந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டாரோ அந்த இடமே கொடுந் துன்பக்களமாக மாறிவிட்டது. குமரவேலின் இடிந்த வாழ்க்கை மடிந்த வாழ்க்கையாக மாறிவிடக் கூடாதே என்று அழகப்பர் எவ்வளவோ தேற்றினார். தேற்றியது தான் மீதம், மனக்கவலையை மாற்ற முடியவில்லை. மாறவும் வழியில்லை. அதனால் வளவனை அவர் கடையில் இருக்கச் செய்து விட்டு வெளியேறி விட்டார் குமரவேல். குமரவேல் நடந்துகொண்டே இருந்தார். ஒரு பக்கத்தி லிருந்து டாண் டாண் என்று ஒலிக்கும் மணியோசை கேட்டது. ஒசை கேட்ட இடத்திற்குச் சென்று குமரவேலின் கால்கள் நின்றன. முருகா முருகா என்று ஒலிகேட்ட பின்னரே தான் வந்திருக்கும் இடம் பரங்குன்றத்து அறுமுகன் கோவில் என்று தெரிந்து கொண்டார். உள்ளே நுழைந்தார்! உள்ளம் ஒன்றி நின்றார்! மனக்கவலையை மறந்தார்; மணிக்கணக்காக உட்கார்ந்துவிட்டு வெளியே வந்தார். பழைய கவலை மீண்டும் பற்றிக் கொண்டது. மீண்டும் உள்ளேபோய் முருகன் திருமுன்பு அமைதிதோய நின்றார். மனக்கவலை மாறக்கண்டார். சற்று நேரம் கழித்து வெளியே வந்தார். கவலையை மாற்றிக்கொள்ள வழிகண்டுவிட்ட மகிழ்ச்சியால் தள்ளப்பெற்றுத் தெருவில் நடந்தார். கவலை அவரைத் தொடர்ந்து வந்தது! அப்பொழுது அருகில் இருந்த தேங்காய்க் கடையில் நின்று கொண்டிருந்த ஒரு கிழவியின் குரல் காதில் விழுந்தது. அநியாய விலை! கோவில் தேங்காயின் பேரால் கொள்ளையா அடிப்பது? இரண்டு பங்கு மூன்று பங்கா விலை? இக்குரலை கேட்டபின் வயிற்றுக் கவலையைப் போக்கவும் வழி கண்டுவிட்டார் குமரவேல். கணக்கர்களையும், ஏவலர்களையும் வைத்து வாணிகம் செய்த செல்வர் குமரவேல் தேங்காய், பழம், பத்தி, சூடன் ஆகியவற்றை இரண்டு மூன்று ரூபாய்களுக்கு வாங்கி வைத்துக் கொண்டு நடுத்தெருவில் உட்கார்ந்துவிட்டார். குறைந்த லாபம் வைத்து விற்றார். தம் வயிற்றுத்தொல்லையைத் தீர்க்கும் அளவு வருமானம் கிடைத்தால்போதும் என்பதே அவர் எண்ணம். ஆனால் ஒரு மாதத்துள் குமரவேல் தெருவைவிட்டு ஒரு கடைபோட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. சுருக்க இலாபம்! பெருத்த விற்பனை! நல்ல வருமானம். வளவனையும் அழைத்துத் தேங்காய்க் கடையில் வைத்துக் கொண்டார். தந்தையும் மகனுமாகக் கடையைக் கவனித்துக் கொண்டனர். வேலையாள் மட்டும் வைக்கவில்லை; மாலை ஐந்து மணி வரை குமரவேல் வளவனுடன் தேய்காய்க் கடையில் இருப்பார். அதற்குப்பின் வளவனே கடைக்குப் பொறுப்பாளி. ஐந்து மணி எப்பொழுது வரும் என்று குழந்தைகள் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பர். நேரம் வந்துவிட்டால் போதும்: தேங்காய்க் கடைமுன் கூடிவிடுவார். குமரவேல் பெரிய பால் தவலையுடன் வருவார். குழந்தைகள் கொண்டாட்டத்தைப் பார்க்க வேண்டுமே! சிறுவர்களின் குவளைகள் நிரம்பி வழியும்! மகிழ்ச்சியும் நிரம்பி வழியும்! அவர்கள் ஆசையுடன் பால் குடிப்பதைக் கண்டு குமரவேலின் உள்ளமும் பொங்கி வழியும்! தேங்காய்க் கடை ஊதியம் எல்லாம் குழந்தைகளுக்கு பாலாக மாறியது. குமரவேலின் செயலைப் பாராட்டாதவர் இல்லை. ஆனால் தேங்காய்க் கடைக்காரர்களுக்கு மட்டும் முணு முணுப்பு உண்டு. அது இயற்கைதானே! தாம் நல்லது செய்ய முடியாவிட்டாலும், பிறர் செய்யும் நல்லதையும் பலரால் பொறுத்துக்கொள்ள முடிவது இல்லையே! என்ன செய்வது? மனக்கவலையை மாற்றும் வழி கண்ட குமரவேல் இதற்குச் சளைத்துவிடுவாரா? பள்ளிப் பிள்ளைகள் பத்துப் பதினைந்து பேருக்கு இரவுப் பாடம் சொல்லி வந்தார் குமரவேல். படிக்க இடவசதியோ, விளக்கு வசதியோ இல்லாத பிள்ளைகள் அவர்கள். அப் பிள்ளைகளோடு பிள்ளையாகத் தாமும் சேர்ந்து குமரவேல் பாடம் சொல்லித்தரும் அழகே தனி. பிறவி ஆசிரியர், இவர் தானோ என்று தோன்றும். காரணம் ஏனோ தானோ என்று வேலை செய்பவரா அவர்? தெய்வத் தொண்டாகவே கருதிவிட்டார் அல்லவா? இப்பொழுதுதான் அவரது வாழ்க்கை கவலையற்ற வாழ்க்கையாக இன்ப - வாழ்க்கையாக - ஆகிவிட்டது. ஒன்றன்பின் ஒன்றாக இக்காட்சிகள் நினைவுக்கு வரவே இன்பம் இன்பம் என்று கூச்சலிட்டுக்கொண்டு எழுந்தார். தாம் தூணில் சாய்ந்து உறங்கிவிட்டது நினைவுக்கு வந்தது. அவரைக் காணவில்லையே என்று தேடி வந்த அரசப்பன் முன் நின்றான். ஐயா! படிப்பதற்கு எல்லோரும் வந்து விட்டார்கள்! உங்களை நெடுநேரமாய்க் காணவில்லையே என்று தேடி வந்தேன் என்றான். விரைவாக நடந்தார் குமரவேல். இன்று என்ன பாடம் பார்க்கவேண்டும் என்று மாணவர் களிடம் கேட்டார் குமரவேல் தனக்குவமை இல்லாதான் தான்சேர்தார்க் அல்லான். மனக்கவலை மாற்றல் அரிது என்னும் திருக்குறள் என்றான் அரசப்பன். இப்பாடலுக்கு விளக்கம்கூற எங்கேயோ தேடிச் செல்ல வேண்டுமா? குமரவேல் வரலாறே இதுதானே. தனக்கு உவமை இல்லான் தாளைச் சேர்ந்தார்! மனக்கவலை மாற்றிக்கொண்டார். அழகப்பர் அன்பால் மாற்றமுடியாத கவலை அறுமுகன் பற்றால் மாறிவிட்டதல்லவா!  2. அன்பின் வழியது உயர்நிலை வயலூர் அவரைக் கொல்லைப் பொம்மை நினைவில் இருக்கிறதா? அதை மறக்கவா முடியும்? என்று வேலப்பன் கண்ணுசாமியைப் பார்த்துக் கேட்டான். நீதான் அதை மறக்கமாட்டாயே! எனக்குக் கேட்டுக் கேட்டுக் கசந்து போய்விட்டது என்று சலிப்போடு கூறினார் கண்ணுசாமி. என்ன இருந்தாலும் சாதாரணமாகக் குச்சி, வைக்கோல், கந்தல் துணி, இவற்றைக்கொண்டே செய்திருந்த அந்தப் பொம்மை எவ்வளவு அழகாக இருந்தது. நானும், பார்த்ததும் பார்த்தேன் வயலூர் அவரைக் கொல்லைப் பொம்மை போலக் கண்டது இல்லை என்று ஒரு முடிவுக்கு வந்தவன் போலத் தனக்குத் தானே உறுதி செய்து கொண்டான் வேலப்பன். எதையும் கூர்ந்து கவனிக்கக்கூடியவன் வேலப்பன். எளிதில் விடமாட்டான். முற்ற முடியத் தெளிவாகத் தெரிந்த பின்னரே ஓய்வான். பின்பு அதனை மறக்கவும் மாட்டான். நாள் ஒன்றுக்குப் பத்துத் தரமாவது சொன்னால் தான் அவன் வாய் சும்மா இருக்கும். அவரைத் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த துணிப் பொம்மையைக் கண்ணுசாமி வேலப்பன் இரண்டு பேருமே ஒரே சமயத்தில் காணத்தான் செய்தார்கள். கண்ணேறு பட்டுவிடக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டது துணிப்பொம்மை என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இரவுப் பொழுதில் யாரோ ஒருவர் காவலுக்கு நிற்பதுபோல் தோன்றிக் கள்வர்களைக் கதிகலங்கச் செய்துவிடும் என்பதும் ஓர் உள்ளெண்ணம். எது எவ்வாறாயினும் வயலூர்ப் பொம்மை நன்றாக வாய்த்துவிட்டது. கலையழகு தவழ அமைந்துவிட்டது! பாதை வழி போய் வருபவர்கள் எவரும் உள்ளத்தைப் பறிகொடுத்து நின்று பார்க்காது போனது இல்லை! இவ்வாறிருக்கும் அழகுப் பொம்மையை வேலப்பன் கண்டால் விடவா செய்வான்? உற்றுப் பார்த்து உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டான்! அதன் அழகுக்காக - கலைக்காக! ஆனால் கண்ணுசாமியோ ஆராய்ச்சியாளர்; எதையும் சிந்திப்பார். வேலப்பனைப்போல் அழகு, கலை என்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கமாட்டார். பொம்மையைக் கண்டது பழைய நாட்கதை: ஆனால் இப்பொழுது தெருவில் வந்த ஒருவனைக் கண்டதாலேதான் வேலப்பன் முன்பு கண்ட பொம்மையை நினைத்துக் கொண்டான். நல்ல உயரம்; விரிந்த மார்பு; சரிந்த தொந்தி; ஏறிய தோள்; உப்பிய கன்னம்; யானை நடை; பொது நிறம்; திருக்கு மீசை; உடற்புறத்தையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மெல்லிய ஆடை; அடர்ந்து சுருண்ட மயிர்; கடுகடுத்த முகம் இவையனைத்தும் கூடிய ஓருருவம் தான் வந்த உருவம்! இதனைக் கண்டவுடன் பொம்மை ஏன் நினைவுக்கு வரவேண்டும் என்றால், அந்தப் பொம்மைக்கு உயிரில்லை: இந்த உருவத்திற்கு உயிர் உண்டு: அவ்வளவே வேற்றுமை! இவ்வுருமைக் கண்டுதான் அப்பொம்மையைச் செய்தானோ என்னவோ? இதோ அவரைக் கொல்லைப் பொம்மை என்று வந்த உருவத்தைக் காட்டிக்கொண்டே கூறினான் வேலப்பன். சும்மா இரு! போய்த் தொலையட்டும் என்று சொல்லிக்கொண்டே வேலப்பனுக்குப் பின்னால் போய் மறைந்து கொண்டார் கண்ணுசாமி. அந்தப் பொம்மை உருவம் அடியடியாகப் போய்க்கொண்டிருந்தது: நல்ல இளமைதான்! இருந்தாலும் உருவத்தில் சுறுசுறுப்புக்கு இடம் இல்லாமல் போய்விட்டது! என்ன செய்வது? வேலப்பன் ஒரு செல்வன்; அவனது கடைக் கணக்குப் பிள்ளைதான் கண்ணுசாமி! வேலப்பனது தந்தையின் வயதை ஒத்த வயது கண்ணுசாமிக்கு இருக்குமாதலால் கணக்கையா என்று அழைப்பதே வழக்கம். அதனால் கணக்கையா! அவனைக் கண்டவுடன் ஏன் என் பின்னால் மறைந்துகொள்ள வேண்டும்! அந்தப் பொம்மை உங்களுக்குத் தெரியுமா? என்றான் வேலப்பன். பொம்மை என்று சொல்லாதே! பொம்மை பாவம் உணர்ச்சி இல்லாதது! யாருக்கும் கெடுதல் செய்யாது; நன்மையும் செய்யாது; அன்பும் கிடையாது; வன்பும் கிடையாது. ஆனால் இதோ பொம்மை அன்று! எலும்பும் தோலும் போர்த்த உடம்பு! இவ்வுடம்பில் உயிர் உண்டு! ஆனால் உயிர் இருப்பதை வெளிக்காட்டக்கூடிய அன்பு மட்டும் இல்லை. மாறாக வன்பு உண்டு! பிறர் துன்பத்தை அறியாது; அழிவுக்கு அஞ்சாது. அறத்திற்குப் பணியாது இந்தப்பொம்மை சே சே! வயிற்றுப் பாட்டுக்காக வாள் தூக்கிக் கொல்லவும் துணியும் இக் கொடுமைப் பிண்டம் பஞ்சுப் பொம்மையா? வஞ்ச மூட்டை! என்று பொங்கிக் குமுறினார் கண்ணுசாமி! வேலப்பன் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான். வேலப்பன் கேள் என்று மேலும் தொடர்ந்தார் கண்ணுசாமி! இப்பொழுது போனானே இவன் பெயர் சிதம்பரம்! இவனுக்கு வயது ஐந்தாக இருக்கும்போது முரடனான இவனது அப்பன் சிறைச்சாலைக்குப் போய்விட்டான். தியாகியாகவா? அந்தக் கதையே வேறு! இந்தப் பயலுக்கு இவனது அம்மாதான், அப்பா, சொந்தம், சொத்து எல்லாம். அந்த அம்மா தங்க மானவள்! பேரும் தங்கம்தான்! பாவம், கணவன் சிறைக்கூடம் போன குறை அவளைவிட்டு நீங்கவில்லை! அதிலும் கெட்ட பெயரெடுத்து அதனால் சிறைச்சாலை போன கேவலத்திற்கு மிகவும் அஞ்சினாள். மானமே பெரிதென வாழ்ந்த அந்த அம்மாளுக்குக் கணவனே தெய்வம் என்றால் கதையல்ல! அவளுக்கு உண்மையாகவே கோவில்கட்டிவைத்துக் கும்பிடலாம்! அவ்வளவு நல்ல குணம். கணவன் நிலைமையை எண்ணி எண்ணிப் பார்த்து ஏக்கத்தோடே வாழ்ந்த தங்கம் நாளாசாரியாக இளைத்துக் கொண்டே வந்தாள்! சிதம்பரத்திற்காகவே ஏதோ ஒருவாறு உயிரை தாங்கிக்கொண்டு இருந்தாள் என்று சொல்லலாம்! சிதம்பரத்திற்குத் தங்கம் போன்ற அன்புத்தாய் நிச்சயம் கிடைக்கக் கூடவே கூடாது. அதுபோலத் தங்கத்திற்கும் சிதம்பரம் போன்ற பிள்ளையும் பிறந்திருக்கக்கூடாது. தங்கம், நான்குபேர் போலச் சிதம்பரமும் இருக்க வேண்டும் என்று கருதினாள். பள்ளி கூடத்திற்கு அனுப்பி வைத்தாள். அப்பன் தேடி வைத்த செல்வம் துளியும் இல்லை. ஆனால் சிறைக்குப் போகுமுன் ஏற்றிவைத்த கடன்சுமையோ மிகுதி. தங்கம் நான்கு வீடுகளை பெருக்கித் தெளித்து, மாவாட்டிப் பெற்ற காசால் மானத்தோடு வயிறு வளர்த்துக் கொண்டு இவனையும் படிக்க வைத்தாள். வாயைக்கட்டி வயிற்றைக் கட்டித் துளிதுளியாகச் சேர்த்து கொண்டு இவனைப் பத்தாம் வகுப்புவரை படிக்க வைத்திருக்கிறாள். இதற்குள் அவள் பட்டபாட்டை அவளே அறிவாள். வேறு யார்தான் அறியுமாறு இருந்தார்கள்! பயல், தங்கம் இல்லாத நேரம் பார்த்து அவள் சேர்த்து வைத்திருந்த காசிலே திருடி தின்பதற்கும் ஆரம்பித்தான்; அரிசியை அள்ளி அவள் அறியாமலே விற்றுவிட்டு ஊர் சுற்றினான் தாயையும் கண்டபடி ஏசினான், பேசினான். அந்த அன்புத்தாய் அத்தனையையும் பொறுத்துக் கொண்டாள். திருடிய பொழுதெல்லாம், ஐயோ! போகிறான் எனச் சமாதானமாக இருந்தாள். திட்டும் பொழுது மகன் என்பதனால் பொறுத்துக் கொண்டாள். பள்ளிக் கூடம் போகிறேன் என்று பொய் சொல்லி விட்டுப் போய்விடுவான். அடுத்த ஊர்களுக்கு, அதைத் தெரிந்து கண்ணீர் வடித்துக் கொண்டே, இப்படிச் செய்யாதேடா! நீ நல்லபிள்ளை என்று பெயரெடுக்காவிட்டால் நான் செத்தே போவேன் உன்னைத் திட்ட வாய் வருகிறது! ஆனால் நாக்கையாவது பிடுங்கிக் கொண்டு சாகலாமே ஒழியத் திட்டக்கூடாது என்கிறது மனம்! என்னடா செய்வேன். உனக்காகவே உயிரோடு இருக்கிறேன். என்னை அழவைக்காதே! உன்னை ஆளாக்கி ஒருத்தியைக் கொண்டுவந்து வைத்து விட்டால் என் பாடு முடிந்தது என்று பொறுமிப் பொறுமிப் புழுங்கிப் புழுங்கித் துடிக்குமாறு செய்துவிட்டான்! தங்கம் வேலைபார்த்து வந்த வீட்டிலே தைப் பொங்கலுக் காக ஏழெட்டு ரூபாய்களும், ஒரு சேலைத் துணியும் இனாம் கிடைத்ததாம். ஒற்றைத் துணியன்றி வேறில்லாத அந்த தங்கம், புதுச் சேலையையும் பாதி விலைக்கு எவளோ ஒருத்தியினிடம் விற்று. இரண்டொன்றாக இருந்த வெண்கலப் பாத்திரங்களையும் விற்றுத் துட்டாக்கினாள்; ஏன் சேர்த்து வைக்கவா? அதுதான் தங்கம் அறியாததாயிற்றே. யாரோ ஒருவர் காலில் விழுந்து பத்து முடித்து மகனுக்கு வேலை ஒன்று வாங்கித் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டாளாம் இவள் வற்புறுத்தலையும், குணத்தையும் அறிந்த அந்த நல்லவர் எப்படியோ முயற்சி செய்து தாலூகா அலுவலகத்தில் எழுத்தர் வேலை வாங்கித் தந்திருக்கிறார்! வேலைக்கு, நாலுபேரைப் போல் தன் மகனும் போகவேண்டாமா? இதற்காகத்தான் விற்கத் தகாததையும் விற்றுச் சேர்த்து அவனுக்கு முழுக்கால் சட்டையும் கோட்டும் இன்னும் என்னென்னவோ தைத்துப் போட்டு முன்னழகும் பின்னழகும் பார்த்து அனுப்பிவைத்திருக்கிறாள் அலுவலகத்திற்கு நன்றியறிதல் இல்லாத இந்தப் பயல் விளங்குவானா? வேலைக்குப்போன ஒரு மாதத்துள் தாய்க்கும் சொல்லிக் கொள்ளாமலே தன்னோடு வேலை பார்த்த ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு அவள் கைப் பொம்மையாகி விட்டான் இவன். திருமணத்திற்குப் பின்னால் தாயைப் பார்க்கவே இல்லை. இவன் செய்திகளையெல்லாம் கேள்விப் பட்டு மகனைப்போய் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றாள். உள்ளே இருந்து கொண்டே சேவகன் வழியாக இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டான். இந்த நிலைமையை அறிந்துகொண்ட சேவகன் எப்பொழுது தங்கம் வந்தாலும் சரி இல்லை என்றே சொல்லியனுப்பி வந்தான்! ஒடுங்கிப் போயிருந்த தங்கத்தின் உயிர் ஊசலாடத் தொடங்கியது. வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. வேலைக்குச் சென்று வயிற்றுப்பாட்டைப் போக்கவும் முடிய வில்லை. உள்ளம் இருண்டுவிட்டது. அப்பொழுதுதான் உலகத்தின் பயங்கரமான நிலைமை அவளுக்குத் தெளிவாகப் புலனாயிற்று. அன்பு, அன்பு என்றே வாழ்ந்த அந்த அன்புப் பிழம்பின் கண்கள் கலங்கின: ஆனால் கண்ணீர் சொட்டக்கூட முடியாத அளவு கண்களில் வறட்சியிருந்தது. மகனைக் கடைசி முறையாகவாவது பாத்துவிட வேண்டும் என்று கருதிப் பக்கத்து வீட்டுக்காரர் வழி சொல்லியனுப்பினாள். போனவர்களும் சிதம்பரத்தின் மனைவியைக் கண்டு பேசவே முடிந்தது. அவளென்ன பெண் தன்மை சிறிதாவது பெற்றிருந்தால் அல்லவா இரக்கம் காட்டுவாள்! அவள் அவனுக்குச் சொல்லவும் இல்லை. சொன்னாலும்கூட மரத்துப்போன அவன் வந்திருக்கவும் மாட்டான். கட்டிலோடு கட்டிலாகத் தங்கம் கிடந்தாள். ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை. கயவனான மகன் நினைவு ஒரு பக்கம்; பெற்ற மனத்தின் பெருங்கவலை ஒரு பக்கம்! தாய் திட்டினால் நெஞ்சம் நைந்தால். பிள்ளை வாழ்க்கை நாசமாகி விடும் என்று அடக்கிக் கொண்டு தன் வினையையே நொந்து கொண்டாள்! அந்தோ! அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டது எலும்புருக்கி நோய்! எத்தனை நாளைக்குத்தான் அதனோடு போரிடுவாள்? எலும்பும் தோலுமாகவே காட்சியளித்தாள்! ஆனால் உள்ளே இருந்த அன்புக்கு மட்டும் குறைவில்லை. சிதம்பரனோ பஞ்சுப் பொதியாக விளங்கினான். ஆனால் உள்ளே அன்புக்குச் சிறிதும் இடமில்லை! தங்கம் தள்ளாடித் தள்ளாடி மகன் இருக்கும் வீட்டுக்கு -மருமகள் வீட்டுக்குச் சென்றாள். ஐயோ! பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாதுகாத்தத் தாய்-வீடு பெருக்கி வீதி தெளித்துச் சம்பாதித்துப் படிக்க வைத்தத் அன்னை - சேலையையும், விற்றுச் சட்டை தைத்துத் தந்த உபகாரி-ஓடி ஒடிச் சின்னஞ் சிறு சிட்டுக் குருவிபோலப் பார்க்க வந்து ஏமாந்து சென்ற எழிலோவியம்- இக்கயவனைக் கல்நெஞ்சனைக் காணாமல் உயிரைவிடச் சம்மதிக்கவில்லையாம்! வீட்டுக்கு வந்தவள் மருமகளைக் கண்டிருக்கிறாள்! அருமை மகன் அயலூருக்குப் போயிருந்தானாம்! வந்ததென்ன? என்று அகங்காரத்தோடு கேட்டாளாம் மருமகள். பதில் பேசுவதற்கு வாயெடுக்கும் முன்னரே தள்ளாடிக் கீழே விழும் நிலைக்கு ஆளான தங்கம் இருமிக் கோழையை துப்பியிருக்கிறாள்? கடுமையான காய்ச்சலும் இருந்திருக்கிறது. சே! சே! தொற்று நோய்! அறிவு கெட்டவள்! புத்தியில்லை! ஒதுக்குப் புறத்திலே கிடந்து சாகவேண்டியதை விட்டு ஊருக்குள்ளே வந்து தொலைகின்றது! மானம் கெட்டு, மதிகெட்டுப் பிச்சையெடுத்து வாழவேண்டுமோ? இன்னும் இருந்து யாரைக் காப்பாற்றப் போகிறது? வெட்கம் கெட்ட கழுதை! என்று திட்டிக் கொண்டே விரைப்போடு வீட்டுக்குள் போய்விட்டாள் மருமகள். தன்னை யார் என்று தெரிந்துகொள்ளாமலே தெரிய விரும்பாமலே பிச்சைக்காரியாக முடிவு கட்டிக்கொண்டு சென்ற அவளே மருமகள் என்பதைத் தங்கம் அறிவாள். மாமிதான் வந்தவள் என்பதை அறியாமலே மருமகள் திட்டியதில் வியப்பு இல்லை! தெரிந்திருந்தாலும் கிடைக்கும் பெருமை இதுதான்! தங்கம் தன் வலிமையனைத்தையும் ஒன்றுகூட்டி எழுந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள். இந்த இடியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வந்து கட்டிலில் படுத்தவள்தான்! விடியற்காலையில் பார்க்கும் பொழுது அன்புத்தெய்வம் உறைந்த கூடுமட்டுமே கட்டில்மேல் கிடந்தது! தங்கத்தின் முடிவை ஊர் அறிந்தது! இப்பொழுதுபோன எலும்பு தோல் பிணமும் அறிந்தது! இதனைச் சேர்ந்த மனைவியான எலும்பு தோல் பிணமும் அறிந்தது! அறிந்து என்ன செய்ய? ஊரறிய ஒப்புக்கு அழுது. ஒருபிடி சாம்பலாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள்! இப்பொழுது என்னவோ நினைத்து நினைத்து இவன் உருகுகின்றானாம்! ஊர் சொல்லுகிறது; ஆனால் உடல் சொல்லுகிறதா? இவனா வஞ்சம் சூதறியாத பொம்மை! சே! சே! தகுமா? இவனும் இன்னும் வாழத்தான் செய்கின்றான். இவனது மனைவியும் வாழத்தான் செய்கிறாள். ஆனால் இவர்களிடம் அன்பு வாழவில்லை. நடைப்பிணமாக வாழுகின்றார்கள். இது வாழ்க்கையா என்று சொல்லிமுடித்தார் கண்ணுசாமி. வேலப்பன் மூக்கிலே வைத்த விரலை எடுக்காமல் கேட்டுக் கொண்டே இருந்தான். சே! இவன் விளங்குவானா? எப்படி எப்படிப் பொல்லாதவர்களெல்லாம் பூமியில் உண்டு. ஆனால் இந்தப் பொல்லாதவனைப்போல் ஒருவனையும் நான் பார்த்ததில்லை. உயிர் ஊட்டிய தாயின் உயிரோட்டிய பாவி உருப்படுவானா? அப்பன் காலிப்பயல்! அவன் மகன் சின்னப்பயல்! நல்லகுடும்பம்! இவர்கள் தலையிலே இடிவிழாதா? எங்கெங்கோ குண்டைப் போடுகிறார்கள் இவர்கள் தலையில் பார்த்துப் போடக் கூடாதா? கட்டிலிலே கிடந்து துடித்த தங்கம் மனம் என்ன பாடுபட்டதோ? இந்தப் பாவிகள் உணர்வார்களா? என்று புண்பட்டுக்கூறினான் வேலப்பன். இதுதான் சந்தர்ப்பம்: தாராளமாகத் திட்டு. நல்லதை வரவேற்கவும் தெரியவேண்டும்: கெட்டதைத் தூற்றவும் தெரியவேண்டும். நீ இப்போது கூறியவாறு இடியோ, குண்டோ அல்ல. இரண்டும் சேர்த்தே விழலாம் இவர்கள் தலையில்! ஆனால் சிதம்பரம் தலையில் விழுந்தால் உனக்கு ஆபத்து இல்லை. அவன் அப்பன் தலையில் விழுந்தால் உனக்கும் ஆபத்து என்றார் கண்ணுசாமி! வேலப்பனுக்குப் புரியவில்லை. ஏன்? அந்தப் படுபாதக அப்பன் வேறா இன்னும் இருக்கிறான் என்றான். ஆம் இருக்கின்றான்! உயிரோடே இருக்கின்றான்! சாகாமல் தான் இருக்கின்றான்! அவனை யார் என்று கேட்கின்றாய்! அவன் வடிகட்டிய தீயவனான இந்தக் கண்ணுசாமி என்றார் கண்ணுசாமி! வேலப்பன் தலை சுற்றியது. கண்ணையா நீர் தங்கத்தின்... என்று இழுத்தான். ஆம்! கணவன்தான். ஆனால் அன்பே உயிரெனக் கொண்ட அந்தத் தெய்வத்தின் பெயரையே உச்சரிக்கத் தகுதியற்றவன்! என்றார் கண்ணுசாமி கண்ணீர் விட்டுக்கொண்டே! வேலப்பன் கண்ணை மூடிக்கொண்டே கண்ணு சாமியைப் பிடித்துக் கொண்டான்! இதற்குள் பொம்மை இல்லை இல்லை என்புதோல் போர்த்த உடம்பு எவ்வளவோ தொலை தூரம் போய்விட்டது. அன்பின் வழிய(து) உயிர்நிலை அஃதிலார்க்(கு) என்புதோல் போர்த்த உடம்பு  3. முற்பகலும் பிற்பகலும் ஏ! கொண்டுவா மகனை! ஏ! கொண்டுவா என் மகனை! கொன்றா போட்டாய்! என்னும் கூச்சல் சிறைக் கம்பிகளைத் தகர்த்துக்கொண்டு வருவதுபோல் வந்தது. உறக்கத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த சிறைக் காவலன் காளையைத் தட்டி எழுப்பிவிட்டது குரல். கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து இந்த பெண்மணி இங்கே வந்ததுமுதல் கொண்டுவா மகனை: கொண்டுவா மகனை என்று கத்திக் கொண்டே இருக்கிறது. இரவு பகல் எப்பொழுதும் ஓய்வதே இல்லை. கிறுக்குப் பிடித்துப்போய் உளறுகிறது. என்ன அநியாயம் செய்து தொலைத்ததோ? என்ற உறக்கம்போன முணுமுணுப்போடு பேசினான். அவரவர் செய்த காரியங்கள்தான் வினை. அவர்கள் நல்லது செய்ததையும், பொல்லது செய்ததையும் அனுப விக்காமல் முடியாது. மறு பிறப்புப் பிறந்தோ-வேறு எந்த உலகத்துக்கும் போயோ இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டியது இல்லை. இந்த உலகத்திலேயே அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்றான் சிறைக்காவலன் சின்னச்சாமி. நல்ல வினைப்பயன்! நாம் என்னென்ன கொடுமைகள் செய்தோமோ? இந்தச் சிறைக் கூடக் காவலாளியாகி அழுகை, ஒப்பாரி, கண்ணீர், கலங்கல் இவற்றுக்கு இடையிலேயே நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது. சே! சே! நல்ல வேலை இது. அதிலும் இந்தக் கிறுக்குப் பெண்மணி வந்ததுமுதல் உறக்கமே கிடையாது. உறக்கமில்லாத் துயர் நம்மையும் கிறுக்கர்களாக்கிவிடுமோ என்னவோ? என்று அவள் மேல் இருந்த வெறுப்பையெல்லாம் ஒன்றுசேர்த்துக் கூறினான். காளை! இவள் எப்படியும் பெருங் கொடுமைக்காரியாகத் தான் இருந்திருக்க வேண்டும். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா. பிற்பகல் தாமே வரும் என்பது குறள் உரை. பிறர்க்குக் கேடு முற்பகலில் செய்திருப்பாள்; அதன் பயனைப் பிற்பகலில் அனுபவிக்கிறாள். யாரென்ன செய்வது? என்று எதனையோ சிந்தித்துக்கொண்டே கூறினான் சின்னச் சாமி. சின்னச்சாமி! உன் அளவுக்கு எனக்குப் படிப்பு இல்லை. பேசவும் தெரியாது. ஆனால் எனக்கு ஓர் எண்ணம் வருகின்றது. நீ சொன்ன எனக்கு ஓர் எண்ணம் வருகின்றது. நீ சொன்ன பாட்டை இன்னொரு முறை சொல்லு என்றான். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் அருமையான பாட்டு; நேர்முகமாகவும், மக்களுக்கு நல்வழி காட்டுகின்றது; பிறர்க்கினிது முற்பகல் செய்யின் தமக்கினிது பிற்பகல் தாமே வரும் என்றும் பொருள்படு மல்லவா! என்றான் காளை. ஆமாம்! ஒன்று சொன்னாலும் நன்று சொன்னாய் என்று காளையின் கையைக் குலுக்கினான் சின்னச்சாமி. பொழுது போனது தெரியாமல் காளையும் சின்னச் சாமியும் பேசிக் கொண்டிருந்தனர் கிறுக்கியின் கத்துதல் படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்றது. பொழுதும் கிளம்பி நெடுநேரமாயிற்று. சிறையில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளைச் செய்துகொள்ளுமாறு கதவுகளைத் திறந்து வெளியே அனுப்பவேண்டிய நேரமும் ஆயிற்று. கைதிகள் வெளியேறிக்கொண்டிருந்தனர். 103 ஆம் எண் கைதி மட்டும் வெளியேறவில்லை. ஏய்! 103, என்ன செய்கிறாய்? வெளியே வா என்றான் சின்னசாமி. அவன் வெளியே வரவில்லை: குப்புறப் படுத்துக்கிடந்தான். அவனை இழுத்துத் தூக்கி உட்காரவைத்தான் சின்னசாமி. கண்கள் இரத்தம் ஒழுக்குவதுபோல் சிவந்து கிடந்தன. ஏக்கத்தோடு பேசினான். மார்ச்சு மாதம் பதினைந்தாம் தேதிக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? ஏன்? அன்றுதான் எனக்கு நிம்மதி. என்னைத் தூக்கிலே போடும் நாள். தூக்கிலே போடுவதற்கு மகிழ்கின்றேன். இன்னும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றனவே என்று எண்ணி எண்ணித்தான் நொடி நொடிதோறும் சாகின்றேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன ஐயா! நாட்கள் இருக்கட்டும்: உனக்கேன் தூக்குத் தண்டனை தந்தார்கள்? எவர் எவருக்குத் தீர்ப்பிலே நியாயம் உண்டோ. அநியாயம் உண்டோ; ஆனால் எனக்கு வழங்கிய தீர்ப்பு நேர்மை தவறாதது. கொலைகாரன் நான். எத்தகைய கொடிய கொலைகாரனும் அஞ்சும் கொடுங் கொலைகாரன் நான். அதன் பயனை அனுபவிக்க வேண்டாமா? உறக்கமே எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் கேட்டேன். என் வினையை அனுபவித்துத் தீர்த்துவிட்டால் அதன் தொல்லை அடுத்த பிறவியிலாவது இருக்காது அல்லவா! அதனால்தான் சாக அஞ்சிக் கிடந்த நான்கூட நீங்கள் அதிகாலையில் சொல்லிக்கொண்டிருந்த குறள் பாட்டைக் கேட்டுத் தெளிவுகொண்டேன். பிறர்க்கின்னா செய்யின் இல்லை - பிறர்க்கின்னா செய்யும் போதே எனக்கின்னா அடைந்துகொண்டேன் நான். நம்புகிறீர்களா? தொண்டை அடைத்துக்கொள்ளக் கூறினான் 103 ஆம் எண் கைதி மலையப்பன். மிகச் சோர்வுடன் தலையை அசைத்துக்கொண்டான் சின்னச்சாமி. மலையப்பன் பேசினான்: கேளுங்கள்; என் கொடுஞ் செயலை இப்படி உள்ளம் உருக எவரிடமும் இதுவரை சொன்னது இல்லை. இனி ஒளித்து வைத்துத்தான் ஆக வேண்டியது என்ன இருக்கிறது? இன்று இல்லாவிடில் நாளை - தூக்கு! அதற்குள் ஒருவரிடம் மனம் விட்டுக் குற்றத்தைக் கூறுவதாவது, கடைசியாக எனக்குக் கொஞ்சம் அறிவு வந்தது என்பதைக் காட்டும். சொல்கிறேன். நான் ஒரு மாட்டுத் தரகன், என்னைப் பொறுத்த அளவிலும் வாங்குபவன் விற்பவன் ஆகிய இருவரிடமும் எவ்வளவு அதிகமாகப் பணம் சுருட்ட முடியுமோ அவ்வளவு பணம் சுரண்டிவிடுவேன். இருந்தாலும் எனக்குக் கிராக்கி எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருந்தது. காரணம், மாடுகளின் இலக்கணம் தெரிந்து அவரவர் மனம்போல் பிடித்துத் தருவதிலும், வாங்குபவர் விற்பவர் ஆகிய இருவரையும் எப்படியேனும் இழுத்துப் பிடித்து ஒப்புக் கொண்டு விடுமாறு செய்வதிலும் எனக்கிருந்த திறமைதான். பொதுவாக, என்னைப் போல மாட்டுத் தரகர்களாக இருந்த பலர் என்னைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு என் வேலை சிறப்பாக நடைபெற்று வந்தது. என்னை இல்லாமல் மாடு வாங்காதவனும், நூற்றுக் கணக்கான தடவைகளாவது என்னைத் தேடிக்கொண்டு வந்து என் வீட்டிலேயே தங்கி மாடு வாங்கிச் சென்றவனும் ஒருவன் இருந்தான். அவன் பெயர் மருதப்பன். மருதப்பன் வழக்கம்போல் என்னைத்தேடி வந்தான். அவன் பையிலே இருந்த ரூ. 700ஐயும் என்னிடம் தந்து, மாடுகள் அவசரமாக வாங்கவேண்டும், வாழைத்தோட்டம் காய்கின்றது. பழைய மாடுகளை ஆதாயமான விலைக்குக் கேட்டபடியால் விற்றுவிட்டேன். எந்த வேலை இருந்தாலும் இருக்கட்டும். நாளையே போய் மாடு பிடித்துவிட வேண்டும். உள்ளூரிலேயே கூட மாடுகள் விற்பனைக்கு இருந்தன. இருந்தாலும் உன்னை இல்லாமல் மாடுபிடிக்க மனம் வரவில்லை. உனக்கும் எனக்கும் உள்ள பொருத்தம் வேறு எவரிடத்தும் ஏற்படமாட்டேன் என்கிறது என்றான். நாம் என்ன இன்று நேற்றுப் பழகியவர்களா? என்று சொல்லிக்கொண்டே அவன் தந்த ரூ. 700ஐயும் என் மனைவி பண பெட்டியினிடம் பத்திரமாக வைக்குமாறு தந்தேன். மாலைப்பொழுது ஆனதால் நானும் மருதப்பனும் வெளியே போனோம். தோட்டத்துக் கிணற்றிலே மருதப்பன் குளித்தான். வீட்டுக்குத் திரும்பினோம். எனக்கு மருதப்பனைப் பார்க்கிலும் அவன் தந்த ரூ. 700 பெரிதாகத் தென்பட்டது. அதன்மீதே என் உள்ளம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அந்த - அறிவு கெட்ட நேரத்தே ஏழு நூறு ரூபாய்களும் 7 கோடி ரூபாய்களாகத் தெரிந்தன என்றாலும் உண்மைதான் என்று நிறுத்தினான் மலையப்பன். பிறகு என்று தூண்டினான் சின்னச்சாமி பிறகென்ன? எனக்குப் பெண் என்று வாய்த்திருந்தாளே ஒரு பேய்! அவள் என்னைத் தனியே அழைத்து வைத்து நாலைந்து நாட்களுக்கு நாயாக அலைந்தாலும் நாலைந்து ரூபாய் தான் கிடைக்கப்போகின்றது. நாம் நான்கு பேரைப் போல் நான்கைந்து காசு வைத்துப் பிழைத்தோம் என்று எப்பொழுதுதான் ஆகப் போகின்றோமோ? என்று புலம்பினாள். நல்ல துணிமணி வசதி உண்டா? என்று ஏழ்மை நிலைமையை இடித்துக் காட்டினாள். நானும் வெறுப்போடு இப்பொழுது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? புதையலா கிடக்கிறது. வீட்டைவிட்டு எங்கேனும் போய்த் தொலைவது தவிர்த்து வேறு வழியே இல்லை! அப்பப்பா! இந்தத் துன்பமா? என்று எரிச்சலோடு பேசினேன். பாவம்! பிழைக்கத் தெரியாத அப்பாவி! புதையலே நம்மைத் தேடிக்கொண்டு வந்திருக்கும்போது. தோண்டி எடுக்கும் புதையல் நமக்கு எதற்கு? என்று மருதப்பன் கொண்டு வந்திருக்கும் பணத்தைச் சுட்டிக்காட்டி இரவோடு இரவாக அவனைத் தீர்த்துக்கட்டிவிட ஏவினாள். சிறிது நேரம் திகைத்தேன். அவன் பணத்தைக் கண்டு அறிவு சிதைந்துபோய் இருந்த எனக்கு, அதற்குமேலும் சிந்திக்கும் அறிவு செத்துப் போய்விட்டது. எளிதில் ஏழு நூறு ரூபா சம்பாதிக்க எண்ணிவிட்டேன். அவளைச் சொல்ல என்ன இருக்கிறது? மனம்விட்டு ஆண்டாண்டு காலமாகப் பழகியவனை நானே கொல்ல ஆயத்தமாகும் போது அவள் ஏவிய சூழ்நிலை என்று சூழ்நிலை மேல் பாரம் போடுவது தவறு. நான் பணவெறி கொண்ட மிருகமாகிவிட்டேன். சோலையூர் என்பது எங்கள் ஊருக்குப் பெயர் இல்லை எங்கள் வீட்டுக்குப் பெயர் ஏனெனில் என் வீடு அன்றி இரண்டு கல் தொலைவுக்கு வேறு வீடே கிடையாது. இருட்டி விட்டால் மனித நடமாட்டமே இருக்காது. என்னைத் தேடிவந்தவர்களுக் கெல்லாம் சாப்பாடு என் வீட்டில்தான். மாட்டுத் தரகு பார்க்கும் நான் நாள்தோறும் தேடி வருபவர்களுக்கெல்லாம் விருந்தளிக்க முடியுமா? அளித்தேன்; ஆனால் எங்கள் வீட்டுக்கு ஆகும் செலவையெல்லாம் சேர்த்து வந்தவர்களிடம் வாங்கிக் கொண்டு விடுவாள் பணப்பெட்டி என் மனைவி அது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. எனக்கும் தான் என்ன பழக்கமாகிவிட்டது. பழக்கமாகப் போகிவிட்ட ஒன்று பிழை யென்று தெரியாதே! மருதப்பன் இரவுச் சாப்பாட்டை முடித்தான். அன்று பணப்பெட்டி சிரித்துச் சிரித்துப் பேசி, சோறு கறிகளை அள்ளிக்கொட்டி மருதப்பனால் முடியாத அளவுக்கு உண்ணச் செய்துவிட்டாள். தனக்கென்று வைத்திருந்த வெற்றிலை பாக்கையும் எடுத்துத் தந்தாள். எல்லாம் முடிந்த பின் தாழ்வாரத்திலே கிடந்த கட்டிலிலே படுத்துக்கொண்டான் மருதப்பன். சிறிது நேரம்தான் சென்றது. குறட்டை ஒலி எழுந்துவிட்டது. அடுத்த திட்டத்தை முடித்துவிட நான் ஆயத்தமானேன். இரண்டுகல் தொலைவுக்கு அப்பால் இருந்த ஊரில் என் மனைவிக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்கள் இருந்தனர். நல்ல முரடர்கள், கொலை களவுக்கு அஞ்சாதவர்கள். அப்படிப் பட்டவர்கள் உதவிதானே என் திருப்பணிக்குப் பயன்படும்! ஓடிப்போய் அவர்களை எழுப்பிக் காதோடு காதாகச் செய்தியைச் சொன்னேன். வேட்டை கிடைக்கிறது என்று விருப்பத்துடன் அரிவாள். மண்வெட்டி, கம்பி இவற்றோடு ஊர் அறியாமல் புறப்பட்டு வந்தார்கள். வீட்டு முற்றத்தே அவர்களை நிறுத்தித் தாழ்வாரக் கட்டிலிலே படுத்திருக்கிறானே அவன்தான் என்று சுட்டிக் காட்டினேன். அதற்குமேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. என்ன இருந்தாலும் நெருங்கிப் பழகியவன் இல்லையா மருதப்பன்: அவனை என் கண் முன் வெட்டிக் கொல்ல சம்மதிக்குமா? இருட்டறையில் பொல்லாததெல்லாம் எண்ணும் நெஞ்சம் வெளிச்சத்திற்கு வந்தவுடனே அப்படி எண்ண மறுக்கிறதே. அது எனக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா? எப்படியோ விரைவில் 700 ரூபாய்க்கு உரிமையாளனாக வழி கண்டுவிட்டேன். என் மைத்துணர்கள் சிறிது தொலைவு சென்று குழி தோண்டினார்கள். ஒரே இருட்டாக இருந்தது. சிறு வெளிச்சம் இருந்தால் சிறிது துணையாகும்போல் இருந்தது. விளக்கு மருதப்பன் பக்கத்தில்தான் எரிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது? நானே பூனைபோல் நடந்துபோய் விளக்கை எடுத்துக்கொண்டு குழி தோண்டும் இடத்திற்குச் சென்றேன். அதன் பின் குழிக்குப் பக்கத்தில்கூட என்னால் நிற்க முடிய வில்லை. நெஞ்சம் படபடத்தது. இரத்தம் குபு குபு என்று ஒடத் தொடங்கியது. மயிர்க் கால்கள் நிமிர்ந்து. உடல் ஆடத்தொடங்கியது. வேறோர் இடத்திற்குப் போய்க் குப்புற விழுந்து கொண்டேன். கொஞ்ச நேரம் சென்றது. சே! கோழை! வீட்டுக்குப்போ! எங்கள் வேலை முடிந்தது! ஒரே வெட்டிலே தீர்ந்தான் என்று பரணிபாடிவிட்டுப் போயினர் என் மைத்துணர்கள். என்னால் தலையை நிமிர்த்தி நிற்க முடியவில்லை. மருதப்பன் என் முன்னால் நின்று மலையப்பா நல்ல காரியம் செய்தாய்! அட பாவி! பணமா பெரிது! இந்தப் பணம் எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட விட்டிருப்பேனே. இதற்காக என்னைக் கொல்லவா வேண்டும். நீ மக்களோடு பிறந்திருக்கிறாயா? மக்களைப் பெற்றெடுத்திருக்கிறாயா? உன்னையும் ஒரு பெண்தானே பெற்றெடுத்தாள்? நீ ஒரு மனிதன் தானா? என்று இடைவிடாது இடித்துக் கேட்பதாக இருந்தது. ஐயோ! ஐயோ என்று கதறிக்கொண்டே வீட்டு முற்றத்தை அடைந்தேன். முற்றத்து வேப்பமரம் அசைந்தது: காற்று தாழ்வார ஒலையைச் சுழற்றி ஆட்டியது. அது எனக்குப் பேய்க் குரலாகத் தெரிந்தது. அஞ்சாத நான் அஞ்சி அஞ்சிச் செத்தேன்: தாழ்வாரக் கட்டிலைக் கண்டதுதான்! ஐயகோ! கண்ணைத் திருப்பாது வீட்டுக்குள் ஓடிப்போய், படுக்கையில் விழுந்து கொண்டேன். என் உடையை வியர்வை நனைத்தது! மூடிய இமை திறக்கவில்லை: உறக்கமும் வரவில்லை! பொழுது மட்டும் விடிந்தது என்று வாய் தளதளத்துப் போய்க் கண்ணீர் கன்னங்களை நனைக்கக் கூறினான் மலையப்பன். கொடுமைதான்! அழிவு வரும்போது அறிவு போய்விடுகிறது. கெடுங்காலம் வரும் போது என்ன செய்வது? என்று தொண்டை கப்பிய குரலிலே பேசினான் சின்னச்சாமி அதன்பின் என்னவாயிற்று என்றான். முகத்தைத் துடைத்து அழுகையை ஒருவாறு சமாளித்துக்கொண்டு பேசினான் மலையப்பன். விடிந்தது: என் இதயம் இடிந்துவிடும் போல் இருந்தது. வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன். போலீசு வண்டி வீட்டின் முன் நின்று கொண்டிருந்தது. போலீசுக்காரர்கள், இன்சுபெக்டர் ஆகியோர் கைத்துப்பாக்கி, பெருந்துப்பாக்கி, தடி, இவற்றுடன் வீட்டை வளைத்துக்கொண்டு நின்றனர்: அவர்களைக் கண்டு பதை பதைத்தேன். இரவிலே வந்த படபடப்பைப் பார்க்கிலும். அதிகமாகப் படபடப்பு ஏற்பட்டது. என்னை நானே நம்ப முடியவில்லை. எப்படி இந்த நடுக்காட்டில் நள்ளிரவில் நடந்த கொலைச் செய்தி இதற்குள் நகருக்குப் பரவி அங்கிருந்து அதிகாரிகள் வந்து விட்டார்கள் என்ற திகைப்பிலிருந்து மீள நெடும் பொழுது ஆகிவிட்டது. அதுவரைப் பொறுத்திருப்பார்களா? கைகளிலே விலங்குமாட்டப் பெற்றது. என் மனைவி பணப்பெட்டிக்கும் விலங்கு மாட்டினார்கள். உம், நட என்று கையை வெளியே காட்டினார் அதிகாரி. அவருடன் நடந்தேன். ஐயையோ! பேயா? பூதமா? பிசாசா? ஒன்றும் இல்லை. இரவு எங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட மருதப்பன் போலீசு வண்டியிலே இருந்தான். நம்பமுடியுமா? என்ன உளறுகிறாயா? இதுவரை சொன்னவை சரி. இரவிலே வெட்டிப் புதைக்கப்பட்ட மருதப்பன் விடியற்காலையில் உயிரோடு போலீசு வண்டியில் எப்படி வரமுடியும்? என்றான் சின்னச்சாமி. அதுதான் வினை என்று தொடர்ந்தான் மலையப்பன். குழி தோண்டிக்கொண்டிருக்கும்போது நான் வீட்டுக்கு வந்து விளக்கு எடுத்துக் கொண்டு போனேன் இல்லையா? அதற்குச் சிறிது முன்னாகவே விழித்துக் கொண்டிருக்கிறான் மருதப்பன். முதலாவது என் மைத்துனர்கள் கொண்டு வந்த கம்பியும் மண் வெட்டியும் ஒன்றோடு ஒன்று தட்டி. டங்ங் என்னும் ஓர் ஒலி உண்டாகியிருக்கிறது. அதிலேயே மருதப்பன் விழித்துக்கொண்டானாம் அதன்பின் கட்டிலிலே படுத்திருக்கிறானே அவன்தான் என்று அறிமுகம் செய்து வைத்தேன் அல்லவா! அது அவனுக்குத் திகைப்பு ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்படுத்தாமல் என்ன செய்யமுடியும்? அந்த மையிருட்டு? அதற்கு மேலும் வெளிச்சம் போட்டுவிட்டது நான் விளக்கு எடுத்துக் கொண்டு போனது. கட்டிலிலிருந்து எழுந்து வீட்டு முற்றத்திற்கு வந்திருக்கிறான் மருதப்பன். குழி வெட்டுவது தெரிந்திருக்கிறது. தனக்குத் தான் அது என்பதைச் சிறிதும் ஐயம் இல்லாமல் துணிந்திருக்கிறான். அதனால் வேப்ப மரத்தின் மீது ஏறி, செறிவான கிளைகளுக்கிடையே அமைதியாக உட்கார்ந்திருக்கிறான் என்றான் மலையப்பன். அப்படியானால், வெட்டிவிட்டோம்; வேலை முடிந்து விட்டது என்று பொய் சொல்லிவிட்டு உன் மைத்துனர்கள் போய்விட்டார்களா? என்றான் சின்னச்சாமி. அவ்வாறானால், குற்றமில்லையே! காலையிலேயே நகருக்குச் சென்ற என் மகன் இரவு, முதல் காட்சி சினிமா பார்த்துவிட்டு நடந்து வந்திருக்கிறான். உறக்கமும் களைப்பும் உருத்துத்தள்ள ஓய்ந்துபோய்க் கட்டிலிலே சாய்ந்திருக்கிறான். ஐயையோ! உன் மகனையே கொன்று விட்டார்களா? என்று ஓங்கிக் கத்தினான் சின்னச்சாமி. யாருக்கோ கேடு நினைத்தேன். அது எனக்கே விடிந்தது. முன்னிரவு அடுத்தவனுக்குக் கேடு நினைத்தேன். பின்னிரவு வரவில்லை. எனக்குக் கேடு வந்துவிட்டது. இனி அழுது அழுது புண்ணானாலும் பயன்படுமா? என்று பெருமூச்சுடன் கூறிமுடித்தான் மலையப்பன். ஏ! கொண்டுவா மகனை! ஏ! கொண்டுவா மகனை! கொன்றா போட்டாய் என்னும் கூச்சல் மீண்டும் சிறைக் கம்பியைத் தகர்ப்பதுபோல் வெளிக்கிளம்பியது. அவள்தான் என் மனைவி பணப்பெட்டி என்று கூறினான் மலையப்பன். உன் மனைவியா? என்று வாயை மூடிக்கொண்டான் சின்னச்சாமி. பேச்சு ஒடவில்லை. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்று பாடிக்கொண்டு சிறைக்காவலன் காளை சின்னச்சாமி பக்கம் வந்துகொண்டிருந்தான்.  4. உருவும் நிழலும் யாழ்ப்பாணத்திலே அறிவானந்த நிலையம் தோன்றியது பெருவியப்பாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த கட்டிடம் மூன்றடுக்கு மாளிகையாகிவிட்டது என்றால் வியப்புத்தானே! அதற்கு முன் செல்வங்கொழித்துக் கொண்டு இருந்த துணிக்கடைகள் எல்லாம் அறிவானந்த நிலையம் தோன்றியபின் படுத்து விட்டன. அவர்களுக்கெல்லாம் அறிவானந்த நிலைய எழிலையும், விற்பனையையும் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருந்தது. அறிவானந்த நிலைய வளர்ச்சிக்குக் காரணம் அறிவானந் தரின் பணம் மட்டும் அன்று, குணமுந்தான் என்று கூறாதவர் இல்லை. அறிவானந்தர் பெரும்பாலும் கல்லாவிலேதான் உட்கார்ந்திருப்பார். ஐயா, வாருங்கள்; வாருங்கள், ஏ! பையா! ஐயாவை உட்காரச் சொல்; என்னய்யா, ஐயாவைச் சீக்கிரம் கவனித்து அனுப்பும் என்று வந்தும் வராதும் இருக்கும்போதே தடபுடலாக மரியாதைச் சொற்களை அள்ளி வழங்குவார். என்னங்க அம்மா! வாங்க, வாங்க! என்ன நெடு நாட்களாக இந்தப்பக்கம் காணவே இல்லையே! பையா! ஏண்டா நிற்கிறாய்; அம்மாவைக் கவனி என்று எத்தனையோ ஆண்டுகள் வாடிக்கைக்காரர் போன்று பேசுவார். அவர் அன்பு மொழிகளிலும், அமைந்த விழிகளிலும், புன் சிரிப்பிலும் அமையாது இருக்க எவரும் முடியாது. அறிவானந்த நிலையத்திற்குள் நுழைந்து துணி எதுவும் எடுக்காமல் போகவேண்டுமானால் நான் இந்தக் கடையில் எதுவும் எடுக்கப் போவதே இல்லை; சும்மா சுற்றிப்பார்க்கவே வந்தேன் என்னும் நோக்கம் உடையவராகவே இருக்கவேண்டும். அறிவானந்த நிலையம் தோன்றி ஐந்தாண்டுகள் நிறைந்து விட்டன. அன்று புதுக் கணக்குப் போடும் நாள். கடையில் இருந்த பரபரப்பையும் வரவேற்பையும் சொல்லிமுடியாது. வாடிக்கைக்காரர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். புதுக்கணக்குக்குக் கொண்டு வந்திருந்த ரூபாய்களை எண்ணிப் பார்த்து எழுதிக்கொள்ளவே கணக்கரால் முடியவில்லை. அன்று அறிவானந்தர் கல்லாவிலேயா உட்கார்ந்திருந்தார்? ஐம்பது வயதைத் தொடும் அவர் பதினைந்து வயதுக் குமரனாக அல்லவோ கடை முழுவதும் ஓடியாடித் திரிந்தார். அன்று நிலையத்திற்கும் பெருஞ் செலவு; கூட்டமும் பெருத்த கூட்டம். புதுக்கணக்குக்கு வந்தவர்களுள் சந்நியாசியும் ஒருவர் இருந்தார். எடுப்பான தோற்றமும், காவியுடையும், உருத்திராக்க மாலையும், திருநீற்றுப் பூச்சும் எல்லோரையும் கவர்ந்தது. அவரும் புதுக்கணக்குப் போட வந்தவர்களுள் ஒருவராக இருந்தபடியால் அடிகளே முதல் கணக்கை எழுதட்டும் என்று கூறி அவரைப் பெருமைப் படுத்தினர். ரூபாய் 100 என்று எழுதிப் புத்தம் புதிய நோட்டு ஒன்றினை அறிவானந்தரிடம் தந்தார். கூட்டம் வியப்படைந்தது. ஆமாம்! தெருவெங்கும் அரிசியும் காசும் வாங்கித் திரிந்த திருவோட்டுச் சந்நியாகி, புதுக்கணக்குக்கு ரூபாய் 100 எழுதுகிறார் என்றால் நடக்கும் செயலா? அறிவானந்தர் மெய் மறந்து போய்ச் சந்நியாசியையே நோக்கிக் கொண்டிருந்தார். பணத்தைப் பெட்டியினுள் வைப்ப தற்குக்கூட நினைவு இன்றி இருந்தார். அவர் முகத்தில் இருந்த வியப்புப் போய்த் திகைப்பு ஏற்பட்டதை அங்கிருந்த பலர் அறியமுடியாமல் போய்விடவில்லை. சந்நியாசி போட்டிருந்த கையெழுத்தைப் பார்க்கப் பார்க்க என்னவோபோல் இருந்தது. உள்ளம் ஊசலாடியது; பேரதிர்ச்சி ஒன்று உருவாகியது. இருப்பினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு காரியங்களைக் கவனித்தார். உணர்ச்சியற்ற பொம்மையின் நடமாட்டமாக அவர் நிலை இருந்ததே அல்லாமல் உணர்வுடைய அறிவானந்தராக அவர் இருக்கவில்லை. புதுக்கணக்கு முடிந்தது. அறிவானந்தரின் அமைதியும் தொலைந்தது. எப்பொழுதும் சந்நியாசியின் உருவம் கண்முன் நின்றுகொண்டே இருந்தது. ஓரொரு வேளை மறந்தாலும், கல்லாவுக்கு வந்தவுடன் கையெழுத்து சந்நியாசியை நினை வூட்டத் தவறுவது இல்லை. ஐயா, புதுக்கணக்குக்குப் பின் உங்கள் நிலைமை ஏதோ ஒருவாறு இருக்கிறது. முன்னைப்போல் மகிழ்ச்சியாக நீங்கள் இருக்கவே இல்லை. உண்பது உறங்குவதுபற்றிச் சிறிதும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை; எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார் கணக்கர். ஒன்றும் இல்லை; ஒன்றும் இல்லை என்று மழுப்பினார் அறிவானந்தர். ஏதோ இருக்கிறது, மறைக்கிறீர்கள் என்றார் கணக்கர். உலகமே இப்படித்தான் இன்பமும் துன்பமும் பேச்சை முடிக்காமலே பெருமூச்சுவிட்டார் அறிவானந்தர். உங்களைப் பல நாட்களாகப் பார்த்து வருகிறேன். எனக்கு மிகுந்த வேதனையாகவே இருக்கிறது. என்ன காரணம் என்று கண்டுபிடிக்கவும் முயன்றேன். யாரும் என் அறைக்கு வரக்கூடாது என ஆணை பிறப்பித்திருந்தாலும் உண்மையை அறியவேண்டும் என்பதற்காகப் பல நாட்கள் இரவுப் பொழுதுகளில் தங்கள் அறைப்பக்கம் ஒளிந்து இருந்திருக்கிறேன். சந்நியாசி சந்நியாசி என்றும், கோவிந்த தேவ் என்றும் உளறினீர்கள். அந்தச் சந்நியாசியைக் கண்டது முதல் தான் உங்கள் வாழ்வில் கலக்கத்தைக் காணுகின்றேன். அவனைக் காணும் போதெல்லாம் புலியைக் கண்ட புள்ளி மான்போல் அஞ்சி ஒடுங்குகிறீர்கள். என்று இரக்கமும் அழுத்தமும் சேரக்கூறினார் கணக்கர். கணக்கர் வேலைக்கு வந்து ஐந்தாறு மாதங்கள் கூட ஆகாவிட்டாலும் கடைச் சிப்பந்திகளில் எவருக்கும் இல்லாத அளவு அறிவானந்தரிடம் சலுகையும் உரிமையும் உண்டு. முதலாளியினிடத்துத் தொழிலாளி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்க எங்கோ அலையவேண்டாம். அறிவானந்தர் கடையில் இருக்கும்போது கணக்கர் நல்லுசாமி நடந்து கொள்ளும் முறையை ஒருநாள் இருந்து பார்த்தால் போதும்; இத்தகைய கணக்கரைப் பிடிக்காமல் போகுமா? கணக்கரே! எனக்கும் சந்நியாசிக்கும் என்ன இருக்க முடியும்? அவனைக் கண்டு அஞ்ச வேண்டியது என்ன இருக்கிறது? என் மேலுள்ள அன்பால் கேட்கிறீர்; நான் என்ன அதனை அறியமாட்டேனா? நம் கடைக்கு வந்து போகும் சந்நியாசி, உண்மை சந்நியாசியல்லன்; பெரிய கொள்ளைக் காரன்; அவனைப் பகைப்பதும் கேடு; அவனை உறவாக்கிக் கொள்வதும் கேடு. அவனைப் பார்க்கும்போதெல்லாம் என்னை அறியாமலே ஒரு படபடப்பு உண்டாகத்தான் செய்கின்றது. என்ன செய்வது என்று பேச்சைச் சுருக்கிக்கொண்டார் அறிவானந்தர். அறிவானந்தர் பேச்சுக்குக் கணக்கர் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாரே ஒழிய, உண்மை என்று அவருள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும், மேலும் கேட்பது தவறு என்று விட்டுவிட்டார். சில நாட்களாகச் சந்நியாசி கடைக்கு வரவில்லை. அறிவானந்தர் சற்று அமைதியாகக் கூட இருந்தார். ஆனால் அவ்வமைதி நீடிக்கவில்லை. ஒருநாள் காலையில், அறிவானந்தரின் குளிப்பறைக்கு முன்னால் வந்து நின்றார் சந்நியாசி. இதனை ஆனந்தர் எதிர்பார்த்திருக்கமாட்டார்! என்ன இங்கே? என்று படபடப்புடன் கேட்டார். சந்நியாசியைக் கோபத்துடன் கேட்ட முதல் கேள்வியே இதுதான். சந்நியாசி சிறிதும் பொருட்டாக நினைக்கவில்லை. புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே அவசரம் இல்லாமல் இல்லை; உங்களைச் சில நாட்களாகப் பார்க்க முடியவில்லை. பார்க்க வேண்டும்போல் இருந்தது; வந்தேன்; தொல்லைக்கு மன்னிக்க வேண்டும்; நலம்தானே என்றார். நலத்திற்கு ஒன்றும் வந்துவிடவில்லை என்று சிறிய துண்டால் பெரிய தொப்பையை மறைத்துக் கொண்டு தம் அறைக்கு விரைந்தார். சிறிய துண்டு தொப்பையில் பரவிக்கிடந்த அகன்ற மச்சத்தை மறைத்து விடவில்லை. சந்நியாசியின் முகத்திலே அதற்குமுன் இல்லாத தெளிவு ஒன்று நடனமாடியது. காணாததைக் கண்டவர்போல் களிப்புடன் நடந்தார். அறிவானந்தர் உடல் ஆட்டம் கண்டுவிட்டது. அச்சத்தினால் காய்ச்சலும் நோவும் தலைதூக்கி விட்டன. பல நாட்கள் படுத்துவிட்டார். தனியறையை விட்டு வெளியேறுவதே இல்லை. உலகம் ஒரே இருள் மயமாகவே தோன்றியது. எத்தனை எத்தனையோ வாடிக்கைகாரர்களோடு முகமலர்ந்து பேசி இன்புற்ற வாழ்வு மூலையிலே முடங்கிவிட்டது. என்னென்னவோ பழைய நினைவுகள் கிளம்பிச் சாக்காட்டுப்பறை அடித்தன. இன்னும் இங்கிருக்க வேண்டாம்; இருந்தால் சந்நியாசி விட மாட்டான். உயிர் பெரிதா? பொருள் பெரிதா? என்று சிந்தித்தார். ஒரே முடிவு - ஓடினால் அன்றித் தப்பிப் பிழைக்க முடியாது. என்று மாடியிலிருந்த தனி அறையிலிருந்து உள் வாசல் வழியாகக் கடைக்கு வந்தார். எப்பொழுதும் கடைக்குள் திடுமென நுழையமாட்டார். கடைமுழுமையையும் வெளியே யிருந்து உற்றுநோக்கியறிந்து கொண்டுதான் நுழைவார். அதற்கு உதவியாக இருந்தது கதவு இடுக்கு ஒன்று. வழக்கம்போல் கடையை உற்று நோக்கினார். மயிர்க் கூச்செறிய நின்றார். காரணம் கணக்கரோடு சந்நியாசி நின்று கொண்டிருந்தார். அறிவானந்தர் துளைவழி நோக்குவதைக் கணக்கரின் பூனைக் கண்கள் நொடிப்பொழுதில் கண்டுவிட்டன. சந்நியாசியினிடம் ஏதோ கூறிவிரைவாய் அனுப்பிவிட்டார் கணக்கர். அனுப்பும்போது ஒரு காலோடு மற்றொரு காலைச் சேர்த்து டக் என்று அடித்து வலக்கையை நெற்றிக்கு நேராகத் தூக்கி விரைப்பாகச் செலுத்திய வணக்கம் அறிவானந்தரை அசைத்தது. என்னைத் துயர் சூழந்துகொண்டு விட்டது. எவன் ஒருவனுக்குச் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்று எண்ணினேனோ, அவனே சந்நியாசிக்குத் துணையாளனாகவும் இருக்கிறான்; எவரிடமும் சொல்லாமல் ஓடிவிடுவதே வழி என்று துணிவு கொண்டார். கல்லாவுக்குப் போகாமலே பின்பக்க வழியாகக் கடையை விட்டு வெளியேறினார். ஈழத்திலிருந்து புறப்பட்ட கப்பல் தனுக்கோடியை அடைந்தது; கப்பலிலிருந்து இறங்கியவர்கள் சுங்கச் சாவடிக்கு நடந்தனர். அறிவானந்தரும் நடந்தார். வேறு வழியாகவும் போய்விடலாம் என்றும் எண்ணினார். வழி யொன்றும் தெரியவும் இல்லை. மாற்று வழியில் போனால் எவரேனும் சந்தேகப் படக்கூடும் என்னும் எண்ணமும் தலை தூக்கியது. சுங்கச்சாவடியின் வாயிலிலே சந்நியாசி நிற்பார் என்று எண்ணியிருப்பாரேயானால் கப்பலில் வரும்பொழுதே கடலில் வீழ்ந்து தப்பியிருப்பார் அல்லது செத்திருப்பார். சந்நியாசியும் கணக்கரும் தான் வந்த கப்பலின் அடித்தளத்திலே தான் இருந்திருக்கிறார்கள் என்பதை அவர் அறியமாட்டாரே! சந்நியாசியைக் கண்டவுடன் ஓடித் தப்புவதற்குத்தான் உணர்ச்சி ஏற்பட்டது. அதற்குள் மன்னிக்க வேண்டும்; இந்த நாட்டின் சட்டப்படி உங்களைக் கைது செய்கிறேன் என்று கொண்டு சீட்டியடித்தார். கைவிலங்குடன் வந்தார் கணக்கர். அறிவானந்தர் அமைதியாகிவிட்டார். ஆரவாரித்துக் கிடந்த உள்ளக்கடல் அமைதியாயிற்று. இனி தப்பமுடியாது என்பதே அமைதிக்குக் காரணம். என் கடமையை நிறைவேற்றுவதற்காகவே உங்கள் கடைக் கணக்கனாக வந்தேன். மன்னிக்கவேண்டும். நான் துப்பறியும் துறையில் பணிபுரிபவன். இவர் எங்கள் அதிகாரி என்று சந்நியாசியைச் சுட்டிக் காட்டினார் கணக்கர். எல்லாம் விளங்குகின்றது என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் அறிவானந்தர். எங்களுக்கு இதயமும் இருக்கின்றது அதே பொழுதில் கடமையும் இருக்கின்றது. என்றார் சந்நியாசிக் கோலத்தைக் களைந்து கொண்டிருந்த அதிகாரி. பின் உரையாடல் தொடங்கியது. சாரதேவ் உங்கள் பெயர்தானே? ஆமாம் காசிப்பூரில் கடை வைத்திருந்தீர்கள் அல்லவா! ஆமாம் கூட்டு வியாபாரம்தானே? ஆமாம் கூட்டாளியின் பெயர்? பெயர்... கோவிந்த தேவ் இல்லையா? ஆமாம் ஆயிரம் முதல் போட்ட நீங்கள் எட்டாண்டுகளிலே ஐந்தாறு லட்சம் தேடினீர்கள் இல்லையா? ஆமாம் கோவிந்த தேவ் வியாபாரம் காரணமாக வெளி நாடு சென்றிருந்த நேரம் கடையை மூடிவிட்டு இருந்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டீர் உண்மை வங்கத்திலே அரவிந் என்னும் பெயரோடும். சென்னையிலே குணசேகர் என்னும் பெயரோடும், கண்டியிலே குணதிலகா என்னும் பெயரோடும் இருந்தது நீர்தானே. முற்றிலும் உண்மை என்னை இன்னார் என்று முன்னரே அறிவீரா? இதோ என்று இரண்டு தாள்களை நீட்டினார் சாரதேவ் என்னும் அறிவானந்தர். அவற்றில் சாரதேவ் தலைமறைவாகி விட்டார்; கூட்டு வாணிகத்தில் கொள்ளை; போலீசார் தேடுகின்றனர் என்னும் செய்தி ஒரு தாளிலே இருந்தது. மற்றொன்றில் துப்பறியும் அதிகாரியின் புகைப்படம் இருந்தது. அதிகாரி திகைத்துப் போனார் தம் படத்தினைப் பார்த்தவுடன். இதனை எப்படிச் சம்பாதித்தீர்? என்றார். நான் குற்றவாளி; பல வகைகளில் குற்றவாளி. ஒவ் வொன்றையும் விளக்கிக்கூறும் நிலைமையில் இல்லை. குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். சரி, கோவிந்த தேவ் என்ன ஆனார் என்று தெரியுமா? தெரியாது இதோ பாரும் என்று ஒரு படத்தினைக் காட்டினார் அறிவானந்தர் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்போல் ஆனது. கோவிந்ததேவ் தலைவேறாக, கால் கைகள் வேறாகத் துண்டிக்கப்பட்டுப் புகைவண்டிப் பாதையிலே கிடக்கும் நிலையைக் காட்டும் படம் அது. இக்கடிதத்தைப் படியும் என்று அதிகாரி அறிவானந்தரிடம் நீட்டினார். சாரதேவ்! என் உயிர் நண்ப! கூட்டுவணிகத் தோழமை கருதி என் பொருளையெல்லாம் கொள்ளை கொண்டாய். என் பொருள் மட்டும் போதுமா? என் உயிரையும் கொண்டு போக மறந்துவிட்டாயே. அன்பா கேள்; நன்றாகக் கேள். என் உயிர் ஒரு நொடியில் போகிவிடும், அதற்கு ஆயத்தமாகிவிட்டேன். நொடி நொடிதோறும் செத்துப் பிழைக்க இருக்கும் உன்னை நினைக்கத் தான் வேதனையாக இருக்கிறது. உன், கோவிந்த தேவ். பித்துக்கொண்டவர் போலானார் அறிவானந்தர். கோவிந்ததேவ், கோவிந்ததேவ் கொடுமை, கொடுமை என்று கத்தினார். வாயைப் பொத்திக்கொண்டு விம்மினார். அதிகாரியால் அறிவானந்தர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. கணக்கர் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். கடமை குறுக்கிடாவிட்டால் ஓவென்று கதறியிருப்பார். கரும்புகையைக் கக்கிக்கொண்டு புகை வண்டி வந்தது. மன்னிக்க வேண்டும்; எங்கள் கடமையை ஆற்றுவதில் இனிக் கருணையை எதிர்பார்க்க இயலாது. இவ்வண்டியிலே நாம் புறப்படவேண்டும் என்றார் துப்பறியும் அதிகாரி. நல்லது-அறிவானந்தர் வாய் பேசியது. பார்வை எங்கோ இருந்தது. வண்டி இன்னும் நிற்கவில்லை. எந்தப் பெட்டியில் ஏறுவது என்று அதிகாரியும் பணியாளும் நோக்கினர். அந்தச் சந்தடியிலே சாரதேவ் வேறொன்றை நோக்கினார். ஆம்! ஒரு கணப்பொழுதில் சாரதேவ் தலையும் உடலும் வெவ்வேறாகத் துண்டிக்கப்பட்டு விட்டன. ஓ வென்று கதறினார் அதிகாரி. கன்னத்திலே கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார் கணக்கராக இருந்த துப்பறியும் பணியாள். கோவிந்ததேவ் படத்தை எடுத்துப் பார்த்தார் அதிகாரி. துண்டிக்கப்பட்டுத் தண்டவாளத்தருகே கிடந்த சாரதேவ் உடலையும் பார்த்தார். மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தார். தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று.  5. நொண்டித் தாத்தா நொண்டி, நொண்டி என்று சொல்லிக்கொண்டே சில சிறுவர்கள் ஓடினர். நொண்டித் தாத்தா! பாரும். எங்கள் நடை எப்படி? என்று சிலர் நடந்து காட்டி ஏளனம் செய்தனர். நாலைந்தாகப்போன பற்களோடு முகமலர்ந்து சிரித்துக் கொண்டு நடந்தார் கிழவர். முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டுக் காலுக்குப் பதில் மரத்தினால் கால் செய்து வைத்துத் தண்டூன்றிக்கொண்டு திண்டாடித் திண்டாடி நடக்கும் அவரைக் கண்டு இரக்கம் காட்டுவதற்குப் பதில் ஏளனம் காட்டுவது சிறுவர்களின் அறியாமையால்தான். இருந்தாலும் அதைப் பற்றிப் பொருட் படுத்தா உள்ளம் கிழவருக்கு உண்டு-நாள்தோறும் நடை பெற்று வந்த நிகழ்ச்சிகள் அதை உண்டாக்கிவிட்டன என்பதும் பொருந்தும். எத்தனை நாட்கள்தான் கேலி செய்பவர்களை விரட்டித் திரியமுடியும்? துள்ளித் திரியும் சிட்டுப்போன்ற அவர்களை வெருட்டி வெருட்டிக் கீழே விழுந்து கேவலப் படவும் வேண்டுமா? கேலிச் சிரிப்புக்கு ஏற்பப் பதிலுக்கும் சிரித்துவிட்டால் போகிறது. வேறென்ன செய்வது? சிறுவர்கள் கேலி, அடிபோல் வலிக்கவா செய்கிறது? என்று எண்ணிக் கொண்டு சிறுவர்களோடு சிறுவராகச் சேர்ந்து சிரித்துக் கொள்வார். ஆம்! புன்முறுவலும் இன்சொல்லும் அவர் சொத்துக்கள் ஆகிவிட்டன. நாகையா என்பது நொண்டிக்கிழவர் பெயர். அவர் தலையிலே ஒரு பெரிய சுமையை வைத்துக்கொண்டு நடந்தார். ஏதேனும் வேலை செய்து கூலி பெற்றுக்கொண்டு வயிற்றை வளர்ப்பதுதான் அவர் தொழில். அவருக்கு வீடும் இல்லை; உற்றார் உறவினரும் இல்லை. பகலிலே ஆலமரத்தடி-இரவிலே மடம். இவையே நாகையாவின் வீடு. நாகையா நினைத்திருந்தால் உயரிய வாழ்வு நடத்தியிருக்கலாம். ஆனால் நாகையாவின் மான உணர்ச்சி விடவில்லை. தள்ளாடித் தள்ளாடி நடக்கும் அவர் தலையிலே பெருஞ் சுமையும் இருந்தால்? பெருந்திண்டாட்டம் தானே! ஆனால் கிழவருக்கு வழக்கமான புன்முறுவல் அன்றிச் சுமைத்துயர் இல்லை. நெஞ்சச் சுமை இருந்தால்தானே தலைச்சுமை கடுக்கும்? நடந்துகொண்டிருந்தார். வழக்கமாகத் தொடரும் சிறுவர்கள் தொடர்ந்தனர். நொண்டித்தாத்தா! நொண்டித்தாத்தா! என்று கத்திக்கொண்டும், நையாண்டி நடை நடந்துகொண்டும் பின் தொடர்ந்தனர். ஒரு சிறுவன் கிழவரை மிக நெருங்கிச் சென்று நொண்டி நொண்டி நடந்தான். எப்படித் தாத்தா, என் நடை? என்று கேட்டான். ஓ ஓ! நாகப்பனா? வாடா வா! நீயும் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாயா? அழகு அழகு! என்று சிரித்துக் கொண்டு நடந்தார். ஆமாம், நொண்டித் தாத்தா! என் நடை எப்படி? என்று மேலும் கேட்டான் நாகப்பன். மெதுவாக வந்துகொண்டிருந்த (இன்னியங்கி) மகிழ்வுந்து ஒன்று நாகையா, நாகப்பன் இவர்களுக்கு முன் வந்து நின்றது. நாகப்பன் இன்னியங்கியின் எண்ணைக் கண்டவுடனே திகைத்துப் போனான். அவனுடைய தந்தையார், டாக்டர் அரசுவின் இன்னியங்கி அது. தன்னை என்ன செய்வாரோ? என்னும் எண்ணத்தால் முகத்தில் கவலைக் கோடுகள் படர்ந்தன. தலையைத் தாழப் போட்டுக்கொண்டு கால் விரலால் தரையில் கோடு போட்டுக்கொண்டிருந்தான். டாக்டர் அரசு பொறுமையாளர், அருள் மிக்கவர் என்று வட்டாரமே அறியும். இருப்பினும் நாகப்பன் செயலைக்கண்டு உணர்ச்சிவயப்பட்டு விட்டார். இயங்கியைவிட்டுக் கீழே இறங்கினார். பளார் பளார் என்று கன்னங்களிலே ஐந்தாறு போடு போட்டார். நாகப்பன் கையைப் பிடித்துப் பர பர வென இழுத்துக்கொண்டு போய் இயங்கியினுள் தள்ளிக் கதவைச் சாத்தினார். வேண்டாம், வேண்டாம்; விளையாட்டுப் பையன். அவனுக்கு என்ன தெரியும்? என்று நாகையா தடுத்துப் பார்த்தார். அவர் சொற்களை டாக்டர் பொருட்படுத்தவில்லை. நாகையாவை ஏறிட்டுப் பார்க்கக்கூட இல்லை. விர்ரென்று இயங்கியை அழுத்தினார். நாகப்பனுக்கு வயது பதின்மூன்று ஆகிவிட்டது. நான்காம் படிவம் படித்துக்கொண்டிருந்த அவனை அரசு கை நீட்டி அடித்த நாளே கிடையாது. இப்படி அடிக்கும் வேளை ஒன்று வரும் என்று கனவில்கூட நினைத்திருக்க முடியாது! நாகப்பனை அடித்த அடியை அவராலேயே பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. நாகப்பன் அழுது கண்ணீர் வடித்ததற்கு மேலாகவே அவர் கண்ணிர் வடித்தார். இயங்கியை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்று இடியுண்ட மரம்போலப் படுக்கையிலே சாய்ந்தார். அழுது அழுது முகமும் வீங்கிவிட்டது. நாகப்பன் அரசுமீது பெருங்கோபம் கொண்டுதான் இருந்தான். இப்படியா அடிப்பது? அவருக்குக் கையில் வலிமை இருக்கிறது என்பதை என்னிடம்தானா காட்டவேண்டும் என்று எண்ணி ஏங்கினான். எதுவுமே பேசாமல் ஒரு மூலையில் போய் முடங்கிக்கொண்டான். இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்; இவருக்கு நாம் என்ன இளைப்பு என்று அடம்பிடித்துக்கொண்டு எழுந்திருக்கவே இல்லை. நேரம் சென்றது; மாலைப் பொழுது போகி இருளும் கப்பியது; மணி, அணு அணுவாக நகர்ந்து பன்னிரண்டு ஆகியது. நாகப்பன் அசையவில்லை. பசி பிடுங்கியது. நரம்புகள் இழுத்தன. ஆனாலும் வைராக்கியம் விட்டு வைக்குமா? எதுவும் வேண்டாம் எனக்கு? இப்படி அடிவாங்கிக்கொண்டு மானமில்லாமல் எழுந்திருக்கவா? என்று எண்ணிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டான். ஆனாலும் நாகப்பனையும் அசைத்துவிட்டது. அரசுவின் நிலைமை. படுத்ததிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. தேம்பித் தேம்பிச் சிறுபிள்ளைபோல அழுது அழுது கண்ணீரை ஒழுக விட்டுக்கொண்டு இருந்தார். அடித்துவிட்ட தவறுக்காகவே அரசு அழுகின்றார் என்பதை நாகப்பன் உணர்ந்து கொண்டான். அடி, சிறிது சிறிதாக மறையலாயிற்று. தந்தை என்னும் பற்று அரும்பலாயிற்று. அப்பொழுது தன் உடல், வலியைப் பார்க் கிலும் தந்தையரின் உள்ள வலியே மிகுதியான கொடுமையாகத் தெரிந்தது. இரவெல்லாம் கழிந்து விடியும் நேரமும் வந்துவிட்டது. நாகப்பனை இளக்கவுள்ளம் வாட்டத் தொடங்கியது. தந்தையாரின் கட்டில் அருகே சென்றான். அப்பா, மன்னித்துவிடுங்கள் அப்பா! அறியாமல் செய்துவிட்டேன். இனி ஒருநாளும் இப்படிச் செய்யமாட்டேன் என்று கசிந்து கண்ணீர் வழியக் கூறினான். நாகு! நாகு! கொடியவன் நான்; ஆத்திரத்தில் அறிவு கெட்டுவிட்டேன். உன் பிஞ்சுக் கன்னத்தில் எத்தனை அறைபோட்டேன்; ஐயோ! என்று தன் கன்னங்களில் படார் படார் என்று இரண்டு மூன்று போடு போட்டார். தாவிப்பிடித்து அணைத்துக் கொண்டான் நாகப்பன். நாகப்பா! உனக்கு ஏன் நாகப்பன் என்று பெயர் வைத்தேன் தெரியுமா? உன் நொண்டித் தாத்தாவின் பெயரடா, உன் பெயர்! நாகையா செய்த செயற்கரிய செயல் ஒன்றுக்காகவே அவர் பெயரை உனக்கு வைத்தேன் என்றார் டாக்டர் அரசு. என் பெயர் நாகையாவின் நினைவுப் பெயரா? என்று வியப்போடு கேட்டான் நாகப்பன். இதோ பார்! என்று சொல்லிக்கொண்டு அரசு எழுந்து சென்றார். ஒரு படத்துடன் திரும்பினார். இந்தப்படம் வாயிலின் முகப்பில்தான் இருந்தது. ஆனால் இதனைக் காணக் காண என்னால் வேதனை தாங்க முடியவில்லை. இதனைப் பெட்டியினுள் போட்டு மறைத்து விட்டேன். வெளியே எடுப்பதே இல்லை. இது யார் படம் என்று நினைக்கிறாய்? உன் நொண்டித் தாத்தா படம். நொண்டித் தாத்தா படமா? அவரா இப்படி இருக்கிறார்? ஆம், நல்ல காளைப் பருவத்தில் அவர் இப்படித் தான் இருந்தார். என்ன உடல் வாய்ப்பு! இவர் நொண்டியானது ஏன்? ஏனா? இந்தப் பாவியால்தான்! எனக்கு அப்பொழுது வயது ஏழு. குறுக்குச்சாலையைக் கடந்து கடைக்கு ஓடினேன். சாலையைச் சிறிதும் பார்க்கவில்லை. கொடுமையான விரைவில் மோட்டார் ஒன்று ஓடி வருவதைக் கண்டு கலங்கினேன். திக்குமுக்காடி நெளிந்தேன். காரோட்டியும் எவ்வளவோ முயன்றான். ஆனால் அவன் வளைத்துத் திருப்பிய பக்கமே நானும் ஓடினேன். ஆம்! நான் மோட்டார் சக்கரங்களுக்கு இடையே மாட்டிக்கொள்வது தவிர்த்து வேறு வழியே இல்லை. அப்போழுது அவ்வழியே வந்திருக்கிறார் நாகையா! தன்னுயிரைப் பொருட்படுத்தாது உள்ளே பாய்ந்து என்னைத் தூக்கித் தூர எறிந்தார்! பாவம், அவர் காலுக்குக் கீழ்க் கிடந்த வாழைப்பழத்தோல் ஒன்று வழுக்கிவிட நாகையாவின் கால் ஒன்று மோட்டார் சக்கரத்திற்கு இடையே மாட்டிக்கொண்டு நைந்துவிட்டது. எனக்கு உயிர் தந்த அந்த உத்தமர் இந்தப் பாவி யாலே காலை இழந்தார்; நொண்டியும் ஆனார் என்று பெருமூச்சுகளுக்கிடையே பழங்கதையைச் சொன்னார் டாக்டர் அரசு. அமைதி நிலவியது சிறிது நேரம். ஆண்டுகள் சில கடந்தன. நான் கல்லூரியில் படித்தேன்; மருத்துவத் தொழில் தொடங்கினேன். நல்ல வருவாயும் வரத் தொடங்கியது நாகையாவை மன்றாடி அழைத்து, என்னுடன் வந்து இருக்குமாறு வேண்டினேன். உங்களுக்குத் துணையாக வேறு எவரும் இல்லையே பின் ஏன் வரத் தயங்கவேண்டும் என்று வற்புறுத்தினேன். அறவே வர மறுத்துவிட்டார் நாகையா. நான் செய்த உதவிக்குப் பதில் உதவியா? உண்மையான தொண்டு பயனை ஒரு நாளும் எதிர்பார்க்காது. எதிர் பார்த்திருந்தால் உண்மையான தொண்டாகவும் இருக்க முடியாது. என்று மறுத்துவிட்டார். என்ன செய்வது? அவர் முதுமைத் துயரையும், வயிற்றுப்பாட்டுக்காகப் படும் பாட்டையும் நினைத்து நெஞ்சம் வேகின்றது. எதுவும் செய்தற்கு முடியவில்லை என்று உள்ளம் நைந்து கூறினார் டாக்டர். தாத்தாவை நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். என்னோடு வருகிறாரா? இல்லையா? அதைப் பார்த்து விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, பதிலை எதிர்பாராது நடந்தான் நாகப்பன். இமைகொட்டாது நோக்கினார் அரசு; உள்ளுக்குள் மகிழ்ச்சியும் தோன்றியது. நேற்றைக்கும் இன்றைக்கும் உள்ள மாற்றம் பெரிதல்லவா! உறங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்த நாகையா, நாகப்பா, என்னடா! இந்நேரம் இங்கே! உன் அப்பா பாவம், உன்னை நையப் புடைத்துவிட்டார். என்று கன்னத்தைத் தம் கையால் தடவினார். அந்த அன்புக்கரங்கள் தடவியவுடனே கண்ணீர் பெருக்கெடுத்தது நாகப்பனுக்கு. விம்மி விம்மி அழுதான். தாத்தா! என்னை அடித்துவிட்ட கவலையிலே அப்பா எழுந்திருக்கவே இல்லை; சாப்பிடவும் மறுத்து விட்டார். நானும் படுத்துவிட்டேன். உங்களைப் பார்த்து அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றுதான் இங்கு வந்தேன். தாத்தா, நான் அறிவில்லாதவன்; என்னை மன்னிக்க மாட்டீர்களா? என்றான். நாகப்பா என்றார். நாகையாவின் நா தளதளத்தது. நீங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும்; மறுக்கவே கூடாது. நீங்கள் வராவிட்டால் நான் வீட்டுக்குப் போகப் போவதே இல்லை. தலையைத் தாழப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் நாகப்பன். பெரு மூச்சுகளுக்கிடையே நடந்தார் நாகையா. நாகப்பன் பின் தொடர்ந்தான். நாகப்பா! வீட்டுக்கு வருவேன். ஆனால் அங்கேயே இருக்கமாட்டேன். இருக்குமாறு வற்புறுத்தவும் கூடாது என்று சொன்னார். வீடும் நெருங்கிவிட்டது. இரண்டு நாட்கள் கழிந்தன. நாகையா சொன்னார்; உழைப்பு இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. உழையாமல் உணவுக்குக் கேடாய் இருக்கும் வாழ்வு இழிவானது, வெறுக்கத் தக்கது; நான் இங்கிருக்கவேண்டுமானால் உழைப்பு வேண்டும் உங்களை வேலை வாங்கும் அளவுக்கு அழுத்த மான மனம்வர மறுக்கிறதே என்றார் அரசு. உழைப்பு இல்லாமல் உண்டுகொண்டிருக்கும் புழுத்த மனம் எனக்கு வர மறுக்கின்றது என்றார் நாகையா. பெருஞ்சிக்கலாக இருந்தது; உங்களுக்கு அழுத்தமான மனமும் வரவேண்டாம்; புழுத்த மனமும் வர வேண்டாம். நான் செய்கிறேன் வழி; இந்தத் தலைப்பாகையையும், சட்டையையும் மாட்டிக்கொள்ளுங்கள். இன்று முதல் நோயாளர் விடுதி மேற்பார்வையாளர் நீங்கள். உழைக்கு மட்டும் உழைத்துக் கொண்டிருங்கள்; போதுமா? என்றான் நாகப்பன். அரசு நாகப்பனை அணைத்துக்கொண்டார். நாகையா தலைப்பாகை, சட்டையை வாங்கிக் கொண்டு நோயாளர் விடுதிக்கு நடந்தார். அன்று விடுதியின் முகப்பிலே நாகப்பன் ஒரு பலகையை மாட்டினான், அதில் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்னும் குறள்மணி பொறிக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து நாணத்தால் தலை கவிழ்ந்தார் நாகையா!  6. மேதை மாதவன் இவன் யார்? இவன் என் மகன் ஐயா! இவனை அழைத்துக்கொண்டு வந்தது? இவனுக்கு என் வேலையைத் தந்துதவ வேண்டும் என்று தங்களுக்கு மனுச் செய்திருந்தேன். உன் மகனை நேரில் கூட்டிக் கொண்டு வா என்று கட்டளை வந்தது. அதனால் அழைத்துக் கொண்டு வந்தேன். எனக்கு வயதாகிவிட்டது. என் கண்ணுள்ள போதே என் மகனுக்கு வேலைகிடைக்க உத்தரவு ஆகவேண்டும். சரி, இவன் என்ன படித்திருக்கிறான்? இரண்டு மூன்று ஆண்டுகள்தான் பள்ளிக்கூடம் போனான். என்னோடு பழகிக்கொண்டே வருவதால் வேலையில் அனுபவம் உண்டு. இவன் பெயர்? மாதவன் மாதவா! பதினேழு பைசா, எத்தனையணா, எத்தனை பைசா? பதினேழு பைசாவா; ஒரு அணா ஒன்பது பைசா. முட்டாள்; பதினேழு பைசாவுக்கு இத்தனை அணா இத்தனை பைசா என்றுகூடத் தெரியவில்லை. இவனுக்குக் கிராம அதிகாரி வேலை வேண்டுமாம். இந்த முட்டாளுக்கு நீர் வேண்டுமானால் வேலை தருமாறு கேட்கலாம்; ஊர், உலகம் ஒப்பவேண்டாமா? இரண்டு மாடுகளை வாங்கிவிடும்; மேய்த்துத் திரியட்டும் ஐயா எனக்கு ஒரே மகன். இவனுக்கு வேலை இல்லை என்றால் என் பரம்பரை வேலை போய்விடுமே என்ன செய்வேன்? அதற்காக அணாப்பைசாத் தெரியாதவனைக் கட்டிக் கொண்டு அரசாங்கம் அழ வேண்டுமா? இவனுக்கு வேலைதர முடியாது. இவனுக்குப் பிறக்கும் பிள்ளைக்குத்தான் வேலை. இந்த மண்டுக்குப் பிறக்கும் பிள்ளை எப்படித்தான் இருக்கும்? வேலை என்று இங்கு வர வேண்டாம். எவனுக்காவது ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இரும். தன் மகனுக்குக் கிராம அதிகாரி வேலை வேண்டும் என்று தாசில்தாரிடம் கேட்டுவந்த கிராம அதிகாரி ஐயப்பன் நிலைமை இவ்வாறானது. இந்த மண்ணைப் பெற்ற எனக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும்; என் பரம்பரையைக் கேவலப்படுத்தத் தானே என் வயிற்றில் பிறந்தாய் என்று தலையில் தலையில் அடித்துக் கொண்டார் கிராம அதிகாரி. தாசில்தார் உரை அவரைக் குத்திக் குடைந்தது. மாதவனையும், அவனுக்கு வேலையில்லை என்று ஆனதையும் நினைத்து நினைத்து நெஞ்சம் வெதும்பினார். வெதும்பல் கொடு நோயாக உருவாகியது. சாதாரண முட்டாளாக இருந்தால்கூடக் குற்ற மில்லை; சர்வ முட்டாளை என்ன செய்வது? என்று நோய்ப் படுக்கையில் கிடந்துகொண்டும் புலம்பினார். பல நாட்கள் அவர் இருக்கவில்லை. மாதவனுக்கு முட்டாள் பட்டம் நிலைத்துப்போனது. ஊரிலுள்ளவர்கள் எல்லாரும் தன்னை முட்டாள் என்றும், அறிவிலி என்றும் பேசிக்கொள்வதும் கேலி செய்வதும் மாதவனுக்குக் குழிப் புண்ணிலே கொள்ளிக்கட்டை செருகுவது போல் இருந்தது யார் என்ன சொன்னாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்; நான் ஒன்றும் முட்டாள் இல்லை. இதனை உறுதிப் படுத்திக் காட்டியே தீர்வேன். அப்படிக் காட்டவில்லை என்றால் நான் ஐயப்பன் மகன் இல்லை-மாடு-இருகால் எருமை மாடு! என்று வஞ்சினங் கூறினான். அவ்வளவு தூரம் அவனுக்கு கேவலமாகி விட்டது வாழ்க்கை! அப்பா! உங்கள் புதைக்குழிக்கு முன்னின்று கூறு கின்றேன். உங்கள் மகனை நீங்கள் என்னென்ன எண்ணிக் கொண்டும், சொல்லிக்கொண்டும் இறந்தாலும் சரி, அந்த முட்டாள் மகன் செத்துவிட்டான். இவன் புதியவன்; நினைத்ததை முடிக்கத் தவறாதவன் என்று ஐயப்பன் புதைக்குழிக்கு முன்னின்று கூறினான். மாதவன் புதியவன் ஆனான்; புதிய உணர்ச்சி; புதிய முயற்சி; வராத கணக்குப் பாடத்தை வரப்படுத்துவேன் என்னும் உறுதிப்பாடு; இவை போதாதா முன்னேற்றத்திற்கு? மாதவன் வீட்டில் இருந்துகொண்டே படிக்க எண்ணினான். உள்ளூரில் இருந்த ஆசிரியர் அழகுமுத்துவினிடம் சென்றான். தன் நிலைமையை எடுத்துக்கூறி மன்றாடினான். மாதவா! இனிமேல் நீ படிக்கவா? என்று அழகுமுத்து நகைத்தார். இனி உனக்குப் படிப்பு வரவே வராது என மறுத்தார். மாதவன் விடவில்லை. நீங்கள் ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிடுங்கள்; நான் அதனை மறுபடி செய்து காட்டாவிட்டாலோ, ஒப்பிக்கா விட்டாலோ, என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள். நான் பழைய மாதவன் இல்லை; மாட்டேன் என்று மறுத்து விடாமல் சொல்லித் தரவேண்டும் என்று அழாக்குறையாய் மன்றாடினான். ஆசிரியர் அழகு முத்துவுக்கு மாதவன் படிப்பான் என்னும் நம்பிக்கை சிறிதும் இல்லை. இருந்தாலும் பெரியவர் வீட்டுப் பிள்ளை என்னும் ஒரே ஒரு காரணத்தால் வேண்டா வெறுப்புடன் ஏற்றுக்கொண்டார். முன்பு பள்ளிக்கு வரும்போது ஏடு தொடங்கி வைத்தவர் அவர்தானே! மாதவனை அறியமாட்டரா என்ன? வீடு வேலை இவற்றையெல்லாம் மறந்து படிப்பே அடைக்கலமானான் மாதவன். தன்னை முட்டாள் ஆக்கிய கணக்குப்பாடத்தில் பெரிதும் கருத்துச் செலுத்தினான். எறும்பு ஊரிக் கல்லும் தேயும் என்பது பழமொழியல்லவா? அவன் முயற்சிக்குப் பயன்இல்லாமல் போய்விடவில்லை. கணக்கு நன்றாக வந்தது. பற்று ஏற்பட்டுவிட்டால் பாடம் சுமை யாகுமா? ஐந்தாறு ஆண்டுகளிலே கற்கவேண்டிய பாடங்களை ஓராண்டிலே படித்து முடித்தான். மேலும் ஊக்கம் வலுத்தது. பத்தம் வகுப்புத் தேர்வை வீட்டிலிருந்தே எழுத முடிவு கொண்டான். ஆசிரியரும் துணை நின்றார். அடுத்த ஆண்டிலேயே மாதவன் பத்தாம் வகுப்புத் தேர்வைச் சிறப்புடன் முடித்து விட்டான். என்ன இருந்தாலும் பெரிய மனிதர் பிள்ளை யல்லவா! ஏதோ சிறுபிள்ளையில் இருந்த அறிவு அப்படியேயா இருக்கும்! மாதவன் கெட்டிக்காரப் பிள்ளைதான் என்று பேசிக்கொண்டனர். சிலர் இனிக் கிராம அதிகாரி வேலைகூட எளிதில் கிடைத்துவிடும் என்றும் பேசிக்கொண்டனர். மாதவன் எண்ணம் மேற்படிப்பில் இருந்தது அல்லாமல் வேலையில் இல்லை. இதற்குள் மாதவனுக்கு இருந்த நிலத்தில் பெரும் பாலானவை விற்கப்பட்டு விட்டன. வீட்டுச் செலவுக்குத்தக்க வருமானம் இல்லை. வீட்டில் செலவழிக்க நிறையப் பேர் இருந்தனர். தேடுவதற்கு யாரும் இல்லை. உட்கார்ந்து சாப்பிட்டால் ஊர் சொத்தே காணாதே! ஒருவர் சொத்துக் கட்டி வருமா? நிலம் போனாலும் போகட்டும்; வீடு போனாலும் போகட்டும்; என் எண்ணத்தை முடிக்காமல் இருக்கவே மாட்டேன் என்னும் உறுதியுடன் மாதவன் கல்லூரியில் சேர்ந்தான். இரண்டு ஆண்டுகள் இராப் பகலாகச் சலியாது உழைத்து நுழைவுத் தேர்வுக்குச் சென்றான். அதில் மாநில முதல்மாணவனாக வரவேண்டும் என்பது அவன் ஆசை. ஆனால் இரண்டாவதாகவே வரமுடிந்தது. இருந்தாலும் தளர்ந்து போகவில்லை. இளங்கலைத் தேர்விலாவது முதல்வனாக வந்துவிடவேண்டும் என்று திட்டங்கட்டினான். இருந்த நிலமும் இதற்குள் விற்கப்பட்டுவிட்டது. வீடும் ஒத்திக்குப் போய்விட்டது. பிறர் உதவியை நாடுவதற்கும் முடியவில்லை. இந்நிலைமையிலே அரசாங்க உதவி தேடி வந்தது. மாதவன் மாநிலத்தில் இரண்டாவதாகத் தேர்ச்சி அடைந்ததைப் பாராட்டு முகத்தான் அவன் படிப்பு முடியும்வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று உத்தரவாகியிருந்தது. மாதவன் கவலையெதுவுமற்றுப் படிப்பிலே ஆழ்ந்தான். இவ்வளவு கூர்மையான அறிவாளியும் உண்டா? இவனே நன் மாணாக்கன் என்று பாராட்டாத பேராசிரியர் இல்லை. அந்த அளவுக்குப் பாடங்களில் தேர்ச்சியும், பண்பில் உயர்வும் கொண்டிருந்தான் மாதவன். அவன் எதிர்பார்த்தபடியே இளங்கலைத் தேர்வில் மாநில முதல்மாணவனாகத் தேர்ச்சி யடைந்தான். அதற்காக, அவனைப் பார்க்கிலும் அவன் பயின்ற கல்லூரியே பெருமிதம் கொண்டது. ஒருநாள். கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும் கூடி, மாதவனைப் பாராட்டியுரைத்துப் பரிசுகள் வழங்கினர். மாதவனை மாணவனாகப் பெற்றதால் இக்கல்லூரி பேறுபெற்றது என்று வியந்துரைத்தனர். இவ்வளவுக்கும் காரணம் பல்கலைக் கழகத் தலைவரே மாதவனைப் பாராட்டி எழுதி யிருந்ததுதான். கணக்குப் பாடத்தில் நம் மாநிலமே அன்றி இந்தியக் கண்டத்திலேயே மாதவன் முதல்மாணவனாகத் தேறியுள்ளான். அவனால் நம் பல்கலைக்கழகம் சிறப்படைந்தது. அவன் கற்று வந்த உங்கள் கல்லூரியை வாழ்த்துகின்றோம் என்று எழுதி இருந்தனர். மாதவன் புகழ் மேலும் ஓங்கியது. மாதவனுக்கு ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் வந்தது. வீடு அந்நிலைமையில் இருந்தது. அரசாங்கத்திற்கு மனுச் செய்தார். எடுத்த எடுப்பிலேயே தாசில்தார் வேலை தேடிவந்தது. வேலை கிடைத்துவிட்டது என்று இறுமாந்து விடவில்லை. மேலும் மேலும் முன்னேறுவ தற்குத் தக்க வழிகளைத் தேடிக்கொண்டு வந்தார். கடமைகளைச் சிறிதும் தவறாது உடனுக்குடன் கவனித்தார். இரண்டோர் ஆண்டுகளிலே அவர் செயலாற்றலை அறிந்த அரசினர் துணைக் கலெக்டர் வேலைக்குத் உயர்த்தினர். மாதவன் போய் வேலைபார்த்த மாவட்டத்திலே அவ் வாண்டு பெருத்த மழை பெய்து ஒரே வெள்ளக்காடாகியது; பல ஊர்களும், தோப்புகளும், தோட்டங்களும் வெள்ளத்தால் இழுக்கப்பட்டு அழிந்தன. மக்கள் தப்பிப் பிழைக்கும் வழி அறியாது திண்டாடினர். வெள்ளத்தின் இடையே சிக்கிப் பல்லாயிர மக்கள் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் இருக்கும் இடம் ஒருவர் அறியாமல் உற்றார் உறவினர் அலறித்தவித்தனர். வெள்ளப் பகுதிக்கு மாதவன் ஓடோடிச் சென்றார். உதவிச் செயல்களை உடனுக்குடன் செய்தார். உணவு, உடை, உறைவிடம் முதலானவற்றுக்குச் சங்கடப்படாதவாறு என் னென்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் குறைவின்றிச் செய்தார். வெள்ளம் சில நாட்களில் வடிந்தது. ஆனால் மக்கள் உள்ளங்களிலே மாதவன் நிறைந்தார். அரசாங்கம் மாதவன் பணியைப் பாராட்டியது. உடன் அதிகாரிகளும் வியந்தனர். மாதவன் உடனடியாகக் கலெக்டர் பதவிக்கு உயர்த்தப் பட்டார்; வேறு மாவட்டத்திற்கு மாற்றவும் பட்டார். அவர் பதவி வகித்து வந்த மாவட்டத்தினர் பாராட்டு விழா ஒன்று நடத்திப் பிரியாவிடை தந்தனுப்பினர். புதிதாகப் பதவி ஏற்கப்போகும் மாவட்டத்தில் இருந்த அதிகாரிகளும் மாதவன் செயல் திறனையும், நல்லுள்ளத்தையும் அறிந்து சிறப்பான வரவேற்புத்தர எண்ணினர். மாதவன் கலெக்டர் பதவி ஏற்றுக்கொண்ட அன்று வரவேற்பு விழா நடந்தது. மாதவனைப் பாராட்டி வரவேற்பு இதழ் ஒன்றும் தாயரித்திருந்தனர். மிகக் கிழவரான ஒருவர் ஓர் இளைஞரைப் போல் மிடுக்குடன் மேடைக்கு வந்தார். அவர் கையிலே வரவேற்பிதழ் இருந்தது. துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலேயே கொள்ளை கொள்ளையான அறிவு கைவரப் பெற்றவர் என்றும், கணித மேதை என்றும், குணக்கடல் என்றும் வியந்து வியந்து பாராட்டிப் பேசினார். இவற்றைக் கேட்க கேட்க மாதவனுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது; நா தழு தழுத்தது; கண்களில் நீர் மல்கியது; நாடியும் விரைந்து துடித்தது; வரவேற்பிதழ் வாசித்து முடித்தவுடன், அவரைப் பார்த்து ஐயா, நீங்கள் நன்னகர் வட்டத்திலே சில ஆண்டுகளுக்கு முன் தாசில்தாராக இருந்தீர்களா? என்றார் மாதவன். ஆமாம் என்றார் வரவேற்பிதழ் படித்த முதியவர். என்னைத் தெரிகிறதா? தாங்கள் மறந்திருக்கக் கூடும். நான் மறந்துவிடவில்லை. இந்த நிலைமைக்கு நான் வரக்காரணமாக இருந்தவர்களே நீங்கள்தான் என்று உளமுவந்து பாராட்டினார் மாதவன். கிழத் தாசில்தாருக்குக் கலெக்டர் புகழ்ச்சொல் கேட்டு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஐயா! எனக்கு ஒன்றும் புரியவில்லை! என்னை முன்னாகப் பார்த்திருக்கிறீர்களா? மறந்துவிட்டேன். மன்னிக்கவேண்டும் என்று கையெடுத்து வணங்கினார். கிராம அதிகரி ஐயப்பன் மகன், மாதவன் நான் என்றார் கலெக்டர் மாதவன். முதியவர் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. அவரால் நிற்கக் கூட முடியவில்லை. அருகில் இருந்த நாற்காலியில் போய்த் தொப்பென்று விழுந்துகொண்டார். தாழப்போட்ட தலையை நிமிர்த்தக்கூட அவரால் முடிய வில்லை. முட்டாள் மாதவன் நினைவில் நின்றான். மேதை மாதவன் மேடையில் நின்றான்! இடையே தத்தளித்துக் கொண்டிருந்தார் முதிய தாசில்தார்! எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியாந் திண்ணியர் ஆகப் பெறின் 7. கல்விப் பயன் கொண்ட கண்ணப்பர் தமிழ்ப் புலவர் கண்ணப்பரைக் குளத்தூர் வட்டாரத்தினரே அன்றித் தொலை தூரத்தில் இருந்தவர்களும் நன்றாக அறிந்திருந்தனர். படித்தவர்களில் எவரேனும் அவரைப் பாராமலோ கேள்விப்படாமலோ இருந்திருக்க முடியாது. அவ்வளவு பெருமைக்குரியவராகக் கண்ணப்பர் விளங்கினார். கண்ணப்பர் பிறந்தது குளத்தூர் என்னும் சிற்றூர்தான். இருப்பினும் பேரூருக்கு இல்லாத பெருமை பெற்றுவிட்டது அவ்வூர். படித்தவர்களில் நான்கு பேர்களாவது நாள்தோறும் குளத்தூருக்கு வந்து போகாமல் இருப்பது இல்லை. அதனால் குளத்தூர் அன்றி அதன் வட்டாரமும் பெயர் பெற்றது. அதனால் அவ்வட்டாரத்தினருக்குக் கண்ணப்பர் மீது தனிப் பற்றுதலும் மதிப்பும் உண்டாயிற்று. கண்ணப்பரைக் கண்டு மகிழவேண்டும் என்று ஒரு நாள் குப்பத்து எல்லப்பன் வந்தான். குப்பத்திற்கும் குளத்தூருக்கும் நெடுந்தொலைவுண்டு. இருப்பினும் கண்ணப்பர் புலமையும் புகழும் தூரத்தையும் நடையையும் பொருட்டாக நினைக்காதவாறு செய்தது. எல்லப்பன் குளத்தூரை நெருங்கி வரவரக் கண்ணப்பர் சிறப்புகளை நன்றாகக் கேள்விப்பட்டான். அண்டி வந்தவர் களுக்கு உண்டியும் உதவிக் கல்வி தருகிறார் கண்ணப்பர் என்று எல்லப்பன் கேள்விப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. எப்படியும் கண்ணப்பரை ஆசிரியராக அடைந்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே குளத்தூரை அடைந்தான். புலவர் கண்ணப்பர், அடுத்திருந்த அரசியூர் அரசர் அழைப்பினை ஏற்றுச் சிறிது நேரத்திற்கு முன்தான் குளத் தூரிலிருந்து புறப்பட்டிருந்தார். அவர் வரும் வரைக்கும் குளத்தூரிலேயே காத்திருக்க எல்லப்பனுக்கு மனம் வரவில்லை. அரசியூர் நோக்கி நடந்தான். நடுவழியிலே புலவரைக் கண்டு களிப்புக் கொண்டான். எல்லப்பன் வரலாற்றைக் கேட்டுக் கொண்டே புலவர் நடந்தார். அரசியூர் எல்லையும் அணுகிற்று. புலவர் வருகையை அறிந்தார் அரசர். அலங்கரிக்கப் பட்ட குதிரை வண்டி ஒன்றினை அனுப்பிவைத்து சிறப்பாக அழைத்துவரச் செய்தார்; புலவர் அரண்மனையை அடுத்து வரும்போது எதிரே சென்று இருகையும் கூப்பி, இன்னுரை கூறி நன்முறையில் வரவேற்றார். அரியணையை அடுத்திருந்த ஆசனம் ஒன்றில் அமரச்செய்துஅளவளாவிப் பேசினார். பொன்னும், பொருளும் தந்து பெருமைப்படுத்தினார். புலவர்கள் இடையே, புலவர் கண்ணப்பர் கல்விச் சிறப்பு, பண்பு நலம் ஆகியனப் பற்றி எடுத்துரைத்தார். எனக்கு இளம் பருவந்தொட்டே ஆசிரியராய் அருமைத் தந்தையாய் இருந்து வருபவர் புலவர் கண்ணப்பர். அவர் பொன்னடிகளை நினைத்துப் போற்றாத நாள் இல்லை. என்று வியந்துரைத்தார். இவற்றையெல்லாம் அருகில் இருந்து அறிந்த எல்லப்பனுக்குப் புலவர் கண்ணப்பர் புகழ் முன்னையிலும் பன்னூறு மடங்கு மிகுதியாகப் புலப்பட்டது. இவரை ஆசிரியராக அடையும் பேறு பெற்றேன் என்று தனக்குள் மகிழ்ந்துகொண்டான். நாட்கள் சில சென்றன. கண்ணப்பர் ஊருக்குப் புறப் பட்டார். அரசர் தேரொன்றை அனுப்பிவைத்துப் புலவரைக் கொண்டுபோய் ஊரில் விட்டு வருமாறு ஏற்பாடு செய்தார். எல்லப்பனுக்கு இருந்த கொண்டாட்டம் இவ்வளவு அவ்வளவா? அவனும் கண்ணப்பரோடு தேரில் ஏறிக்கொண்டான் இல்லையா? நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்! கண்ணப்பர் வீட்டுக்கு வந்தபின் தனியறை ஒன்றுக்குச் சென்றார். அமர்ந்து இறைவனைப் பற்றி இரண்டு மூன்று இசைப்பாடல்கள் பாடினார்; யாழினை மீட்டி உள்ளம் உருகினார்; சிறு பொழுது கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார். தலை தரையிலே படக் கீழே வீழ்ந்து இறைவனை வணங்கினார். இவற்றையெல்லாம் எல்லப்பன் காணத்தவற வில்லை. அவனுக்குப் புலவரை அரசர் வரவேற்று வணக்கம் செய்ததும், புலவர் கடவுளைத் தாழ்ந்து வணங்குவதும் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் மனக்கண் முன் நின்றன. பெரும் புலவரான கண்ணப்பர் இறையன்பிலே ஊன்றிப்போய் நின்றான் எல்லப்பன். என்னப்பா! இப்படி ஒரே பார்வையாய் எதனைப் பார்க்கிறாய்? என்று கண்ணப்பர் கேட்டபோதுதான் எல்லப்பன் தன்னினைவுக்கு வந்தான். வேறு ஒன்றும் இல்லை ஐயா; தாங்கள் செய்த இறை வழிபாட்டை நினைத்துத்தான்... என்று அமைதியாகக் கூறினான் எல்லப்பன். கல்வியறிவு தந்த ஒரு செயலுக்காகச் செல்வ வளமிக்க அரசர் எவ்வளவு மரியாதை காட்டினார்? நீ அதை நேரில் கண்டாய் அல்லவா! சிற்றுதவிக்கே அவ்வளவு மரியாதை என்றால் வற்றாத வளமும், வளமான பேரறிவும் தந்த கடவுளை வாழ்த்த வேண்டாமா? உள்ளம் ஒன்றி வணங்கவேண்டாமா? அருட்கடலாகவும், அறிவுக் கடலாகவும் இருக்கும் இறைவனை வாழ்த்தி வணங்காத உயிர்கள் உயிர்களா? என்றார். எல்லாவுயிர்களும் இறைவனை வணங்கி நன்மை பெற வேண்டும். ஆனால் அறிவுணர்ச்சி குறைந்த உயிர்கள் என்ன செய்யக்கூடும் ஐயா என்றான் எல்லப்பன். எல்லப்பா! நல்லதே கேட்டாய். அற்பமான உயிர்கள் என்று நாம் நினைப்பவை கூட இறைவனை ஒவ்வொரு வழியில் வணங்கவே செய்கின்றன. அவை வணங்க அறியாமலோ, தெரியாமலோ இருந்தாலும் குற்றமில்லை. ஆனால் அறிவது அறிந்து, பகுத்துணரும் ஆற்றல் பெற்ற மனிதர்கள் கடவுளை வணங்கத் தவறலாமா? அவர்களினும் கற்றறிந்தவர்கள் கடவுளை வணங்கத் தவறலாமா? வணங்கத் தவறினால் கற்றதால் ஏற்படும் பயன்தான் என்ன? அறிவுடையவன் அறிஞனைப் போற்றுதல் முறைமை; அறிஞன் பேரறிவனாம் இறைவனை வழிபடுதலும் முறைமை; இதனைத் தவறவிடலாமா? என்றார் புலவர் கண்ணப்பர். ஐயா, மன்னிக்க வேண்டும்; தாங்கள் கூறும் மொழிகள் எனக்கு ஒரு பாடலை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. உங்கள் முன்னால் அதனைச் சொல்வதற்கு வெட்கமாகவும் அச்சமாகவும் இருக்கிறது என்று தயங்கினான் எல்லப்பன். இதில் என்னப்பா, அச்சத்திற்கும் வெட்கத்திற்கும் இட மிருக்கிறது; தயக்கமில்லாமல் சொல்லு என்றார் கண்ணப்பர். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்றான் எல்லப்பன். அழகு! அழகு! திருக்குறளில் உனக்குப் பயிற்சியுண்டா? என்றார் புலவர். ஏதோ கொஞ்சம் பயிற்சி உண்டு ஐயா! அவ்வப்போது சில பாடல்களை வரப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் தெளிவு காண முடியவில்லை என்று தலை தாழ்த்திக் கொண்டு கூறினான் எல்லப்பன். பரவாயில்லை! திருக்குறளை வரப்படுத்தியிருக்கிறேன் என்று கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருக்குறள் வாழ்க்கை நூல். இப்பொழுது வரப்படுத்திக்கொண்டால் அப் பாடல்கள் வாழ்நாளெல்லாம் புதுப்புதுப் பொருள்களைத் தந்துகொண்டே இருக்கத் தவறாது. தெளிவு எங்கிருந்து வருகிறது? உற்று நோக்கிச் சிந்திக்க வேண்டும். உலகத்தை உற்று நோக்கிச் சிந்திப்பது ஒன்றுதான் திருக்குறளைத் தெளிவு ஆக்கிக் கொள்வதற்குச் சரியான வழி. வாழ்க்கை நூலாம் திருக்குறளை வாழவேண்டியவர்களெல்லாம் கற்பது அவசியம். நாமும் இன்று தொட்டுக் கற்போம் என்றார் கண்ணப்பர். அருமையான புதையல் ஒன்று கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான் எல்லப்பன்.  8. யாருக்குப் பாராட்டு! டிரிங்ங்... டிரிங்ங்.... டிரிங்ங்.... என்று மேசை மணியைப் பண்முறை அழுத்தி அழுத்திப் பார்த்தார் துணைப்பதிவாளர் (சப் ரெஜிட்ரார்) பெரியசாமி. பங்கா இழுக்கும் பரமன் என்னவென்று கேட்கவில்லை. என்ன? எங்கேனும் தொலைந்து போய்விட்டானா? அந்தத் தடியனுக்கு இப்பொழுது தலைக் கனம் ஏறிவிட்டது. அலுவலகம் என்னும் எண்ணமே கிடையாது. சீ! வேலையா பார்க்கிறான்?.... ஏய்! பரமா! பரமா! டிரிங்ங்... டிரிங்ங்... டிரிங்ங்... பரமா! மடையன் முட்டாள்... டிரிங்ங் பெரிய சாமியின் வசை மொழியும், மணிமொழியும் உயர்ந்துகொண்டே சென்றன. தன்னை மறந்து உறங்கிவிட்ட பரமன் மெதுவாக எழுந்த ஏதோவொரு குரல் அதிர்ச்சி கேட்டு ஓடிவந்தான். டிரிங்... டிரிங் என்று தொடர்ந்து மேசை மணியை அழுத்திக்கொண்டிருந்த பெரியசாமிக்குப் பரமனைக் கண்டவுடன் கோபம் அதிகம் ஆயிற்று. அலுவலகம் என்ற காரணத்தால் ஓரளவு கோபத்தை அடக்கிக் கொண்டார். ஏ! பரமா! இது என்ன அலுவலகமா? சத்திரமா? நானும் பார்க்கிறேன் நீ திமிர்பிடித்துப் போய் அலைகிறாய். வீட்டிலிருந்து வர, இங்கே படுத்து உறங்க, மணியைப் பார்த்து வீட்டுக்கு ஓட! இப்படி இருந்தால் உருப்படுமா? இப்பொழுது உறங்கத்தானே செய்தாய்? என்று பொரிந்தார். - பரமன் பேசவில்லை. தலைகுனிந்து நின்றான். நீ உறங்கத்தானே செய்தாய்? ஐயா - பரமன் நா தழுதழுத்தது. இரவெல்லாம் எங்கெங்கோ சுற்றித் திரிவது; பகலிலே உறங்கித் தொலைப்பது வயதுதான் ஏறிவிட்டது. அறிவு இல்லை! ஒருவனுக்கு ஒருமுறை சொல்லலாம். இரு முறை சொல்லலாம். சூடு சொரணை இல்லாதவனுக்கு எத்தனை தடவைகள் சொன்னால்தான் என்ன? பரமா? இன்று சொல்கிறேன்; இன்னும் இப்படியே நீ நடந்துகொண்டால், என்னிடம் ஈவு இரக்கத்தை ஒரு சிறிதும் எதிர்பார்க்க முடியாது. ஏதோ வொன்று நடந்துவிட்ட பின்பு அலறியழுது பயன் இல்லை. முன்னாகவே அறிவோடு நடந்துகொள்; போ! - பெரியசாமியின் கோபத்தில் அலுவலகத்தில் கீச்சு மூச்சுக்கூட இல்லை ஒரே அமைதியாக இருந்தது. பெரியசாமி இவ்வளவு கோபப்படுவார் என்று பரமன் நினைத்ததே இல்லை. கொடிய தாக்குதல் மொழிகளைக் கேட்ட பரமன் தலையைத் தாழப்போட்டுக்கொண்டு நிமிர்ந்து பாராமலே நடந்தான். அவனுக்கு என்னென்னவோ போல் இருந்தது. எத்தனையோ சேவகர்கள் இடையே, எழுத்தர்கள் இடையே, பொதுமக்கள் இடையே, இவ்வளவு மானக்கேடான உரையைக் கேட்குமாறு ஆகிவிட்டதே என்று எண்ணி எண்ணி நெஞ்சம் ஏங்கியது. ஒரு பெரிய பாறையே தலையில் மோதித் தாக்கியது; போல் இருந்தது. என்ன ஆனாலும்தான் என்ன? ஏங்கிக்கொண்டே சன்னல் அருகில் உட்கார்ந்து கயிற்றை இழுத்துவிட்டான். பங்கா நகர்ந்தது. அலுவலகத்தில் மெல் லென்று காற்று வீசியது; ஆனால் பரமன் உள்ளம் வெந்து கொட்டியது! நான்கு நாட்கள் கடந்தன; பரமன் அலுவலகத்திற்கு வந்திருந்தான். பெரியசாமி வரவேண்டிய நேரம். அவன் வருகையை எதிர் நோக்கிக்கொண்டு வாயிலிலே காத்திருந்தான் பரமன். அதிகாரி வந்தார்; வாய் பொத்திக் கைகட்டி நின்று கடிதம் ஒன்றை அவரிடம் நீட்டினான் பரமன்! அவ்வளவுதான்! பரமன்! நீ சேவகன் வேலை பார்ப்பதாக எண்ணமா? கலெக்டர் வேலை பார்ப்பதாக எண்ணமா? விரும்பிய நேரங்களி லெல்லாம் விடுமுறை எடுத்துக்கொண்டு விருந்துக்கும் வேற்றூருக்கும் போய்வர முடியாது. ஒழுங்காக வேலை பார்க்க முடியுமானால் பார்! இல்லாவிடில் - உனக்கும் தொல்லை யில்லை - எங்களுக்கும் அல்லல் இல்லை - வேலையை விட்டுவிடு! பொல்லாத வேலை பார்க்கிறான் வேலை; இதில் நினைத்த பொழுதெல்லாம் விடுமுறை! எவரைக் கேட்டு விடுமுறைத்தாள் எழுதிக்கொண்டு வந்தாய்? நேற்றே கேட்டிருக்கக்கூடாதோ? நீ வைத்த ஆள் யாரிருக்கிறார்கள்?... இவ்வாறு வெடி கோபத்திலே பேசி விரைந்துகொண்டு போய்விட்டார். பாவம்! சேவகன் பரமன் அதிகாரியை என்ன செய்துவிட முடியும்? புதிதாக மாற்றுதலாகி அவ்வூருக்கு வந்த அதிகாரிக்குப் பரமன் மேல் வெறுப்பு ஏற்படும்படி மற்றுமுள்ள சேவகர்கள் செயலாற்றிவிட்டனர். எல்லாம் பொறாமையால்தான்! ஒருவன் நன்றாக இருக்க, அவனிலையிலே இருப்பவர்களுக்குத் தாங்கமுடிவதில்லையல்லவா! இதற்குப் பதிவு அலுவலகம் விதிவிலக்கா? கோள்மூட்டும் சேவகர்கள் சொல்லால் அதிகாரி பரமன் மேல் எப்பொழுதும் கடுகடுப்பாகவே இருந்தார். இதற்குத் துணை செய்துவிட்டது பரமன் உறங்கியதும்; விடுமுறை கேட்கச் சென்றதும்! பரமன் தன்னைத்தானே நொந்துகொண்டான். எல்லாம் என் போதாத காலம்! எவரைச் சொல்ல என்ன இருக்கிறது? என்று கலங்கினான். சிறிது நேரம் சென்றது. சின்னஞ் சிறு சிட்டுப்போன்று ஒரு சிறுவன் அலுவலகத்திற்குள் ஓடிவந்தான். அவன் பெரியசாமியின் சிறுவன் மதியழகன்தான். மூன்றாம் வகுப்புப் படிப்பவன். அலுவலகம் என்பதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாது. அப்பா! புத்தகம் வாங்கிக்கொடு; புத்தகம் இன்றைக்குக் கொண்டு வராவிட்டால் வெளியே போகச் சொல்வார்களாம் என்று கவலையுடன் மழலை மொழியில் கூறினான். மதி! இங்கே வா என்று எழுத்தர் ஒருவர் அவனை அழைத்தார். ஒரு சேவகனுடன்அனுப்பிவைத்து புத்தகம் வாங்கித்தர ஏற்பாடு செய்தார். மதி நுழைந்தவுடன் அலுவலகமே கடமையை மறந்து புன்முறுவல் பூத்துக் குலுங்கிற்று. ஆனால் பரமன் உள்ளம் எங்கெங்கோ வட்டமிட்டது. மதியைக் கண்டவுடன் - அந்தச் சின்னஞ்சிறு மழலைச் சிட்டைக் கண்டவுடன் - மகிழ்ந்து புன்முறுவல் பூத்துக் குழைய வேண்டிய உள்ளம் ஏங்கி ஏங்கித் துடித்தது? பொறாமையாலா? வெறுப்பாலா? இவற்றைச் சிறிதும் அறியாதவன் அல்லவா பரமன்! இந்நிகழ்ச்சி நடந்து வாரம் ஒன்று கடக்கவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து உறக்கமின்றி இருந்த பரமனால் உறக்கத்தைச் சமாளிக்க முடியவில்லை. கொடிய வெப்பமும், வியர்வையும் சேர்ந்து கொண்டபடியால் ஓய்வு ஒழிவு இல்லாமல் பங்கா இழுக்க நேரிட்டது. அந்தச் சோர்வு உறக்கத்தை அதிகமாக்கிற்று. எவ்வளவோ முயன்று பார்த்தான். அதிகாரியின் நிலைமையை நினைத்துக் கண்ணை மூடாமல் பொட்டு பொட்டென விழித்துக்கொண்டே இழுத்தான். எவ்வளவு நேரம்தான் இயற்கையுடன் போராடமுடியும்? ஒருநாள் உறக்கமில்லாமையே ஒன்பது நாள் அல்லல் ஆகும்போது மூன்று நாட்கள் இராப்பகல் உறங்கவில்லை என்றால்? அதிகாரி நெருப்பாகி விட்டார். பரமனை உடனடியாக என்னென்னவோ செய்துவிட வேண்டும்போல் அவருக்கு இருந்தது. எதுவும் பேசாமல், குனிந்த தலை நிமிராமல் ஏதோ எழுதினார். மறு உத்தரவு வரும்வரை நீ வேலைக்கு வர வேண்டாம்; நிம்மதியாக உறங்கு என்று கூறி, தாளைப் பரமனிடம் எறிந்துவிட்டுத் தம் தனியறைக்குள் போய்விட்டார். பரமன் உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின; பேச வாயெடுத்தான! திடுமென ஏற்பட்ட உணர்ச்சியும், அதிகாரியின் முகக்கடுப்பும் பரமனைப் பேசவிடவில்லை. அடங்கிக் கிடக்கும் எரிமலைபோல் வீட்டுக்கு நடந்தான். வீடு சென்றும் பரமனால் அமைதியாக இருக்க முடிய வில்லை! அவன் எண்ணக் கோட்டைகள் என்ன ஆவது? பெரியசாமியின் வீட்டுக்குச் சென்று தன் நிலைமையைக் கூறிவிடுவது எனக் கருதினான். அவன் மானம் குறுக்கிட்டுத் தடுத்தது. வேலையில்லை, போ! என்முன் நிற்காதே! என்று சொன்னவர் முன் இந்தப் பெரிய பதவிக்காகப் பல்லைக்காட்டிக் கெஞ்ச வேண்டுமா? என்று தோன்றியது. ஆனால் அவர் வீட்டு வேலையா இது? நான் ஒரு சிப்பந்தி என்றால் அவரும் ஒரு சிப்பந்திதான்! வேண்டுமானால் கொஞ்சம் மதிப்பான சிப்பந்தி; இவ்வளவுதான் வேற்றுமை! நான், அதிகாரி அவர் என்னும் எண்ணத்துடன் அவரைப் பார்க்கப் போவது இல்லை. அவர் ஒரு மனிதர்; நானும் ஒரு மனிதன். மனிதரை மனிதன் சந்திப்பதிலே பேசுவதிலே - என்னக் குற்றம் இருக்கமுடியும்? வஞ்சமும் திருட்டும் செய்வதற்குத்தான் மானக்குறையுண்டு. உண்மையை, உரிமையைக் கேட்பதற்கு என்ன மானக்குறை? என்று தன் நெஞ்சத்தைத் தேற்றிக்கொண்டு அதிகாரி வீட்டுக்கு நடந்தான் பரமன். ஏன் இங்கு வந்தாய்? வெளியே போ! அலுவலகத்தில் தான் உன் தொல்லை என்றால் - வீட்டிலுமா? செய்வதெல்லாம் செய்து விட்டுப் பல்லைக் காட்டுவது பழக்கமாகிவிட்டது! என்று பரமன் வீட்டு வாயிலுள் நுழைந்தும் நுழையாமலும் இருக்கும்போதே எரிந்து விழுந்தார் பெரியசாமி. ஐயா, நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களிடம் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறேன். உங்கள் மனம் போல் செய்யுங்கள். மேல் அதிகாரி என்ற முறையிலே உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நானும் மனிதன், நீங்களும் மனிதர் என்னும் பொது நிலையிலே என் நிலைமையைச் சொல்லியாக வேண்டுமென்று வீடுதேடி வந்திருக்கிறேன். இங்கும் அதிகாரி என்னும் முறையிலே நடந்துகொள்வது உறுதியாக உங்களுக்கே ஏற்காது. என் மேல் தவறுகள் உண்டு; இல்லை என்று கூறவில்லை. வீடுதேடி வந்துவிட்டேன். என் கருத்தைச் சொல்வதற்குக்கூடத் தாங்கள் அனுமதிக்கவில்லை என்றால், கேட்க மறுப்பீர்கள் என்றால் என்னைப் போன்ற ஏழைகள் நிலைமை என்னவாகும்? ஐயா, மன்றாடிக் கேட் கின்றேன். உங்கள் பரிவை எதிர்பார்த்துச் சொல்வதாக எண்ணவேண்டும்; சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிவிட்டேன் என்னும் மன நிறைவு ஒன்றுக்காக வேனும் சொல்லவிடுங்கள் என்றான். அதிகாரி அமைதி யானார். பரமன் பேசினான். ஐயா, சட்டப்படி அலுவலகத்தில் நான் உறங்கியது தவறுதான். முன்னரே கேட்டுக்கொள்ளாது விடுமுறை விண்ணப்பம் கொண்டு வந்ததும் தவறுதான். ஆனால் இவற்றுக்குக் காரணம் என்ன என்பதையும் நினைக்க வேண்டும் அல்லவா? ஒருநாள் உறக்கமின்மையைச் சமாளிக்கலாம்; இரண்டு நாட்களும் சமாளிக்கலாம். தொடர்ந்து பல நாட்களாக உறங்கவில்லையென்றால் சமாளிப்பது எப்படி? ஐயா, நீங்கள் என் வயதுக்குக் குறைந்தவர்களே ஆனாலும் என்னைப் பெற்றெடுத்த அன்னையினிடம் கூறுவதுபோல் கூறுகின்றேன், எத்தனை நாட்களுக்குத்தான் உறங்காமல் இருக்கமுடியும்? இரவு வேளைகளிலே, சூதாட்டம் ஆடுகிறேனா? ஊர்சுற்றித் திரிகிறேனா? சினிமா நாடகம் என்று போகிறேனா? அரட்டைக் கச்சேரியிலே கலந்துகொள்கிறேனா? ஐயோ, இவற்றுள் எந்த ஒன்றையும் நினைக்கக்கூட நேரம் இல்லையே! எனக்கு இவை ஒரு கேடா? இங்கு வாங்கும் சம்பளம் கட்டவில்லை கொஞ்சமும் காணவில்லை. ஏன்? நான் சுகவாசியாக வாழ்பவனா? பட்டாடை வேண்டுபவனா? பால் பழத்தைத் தேடித் திரிபவனா? கஞ்சி கிடைத்தால் போதும்! கந்தைத் துணி கிடைத்தால் போதும்! பிறகும் ஏன் சம்பளம் கட்டி வரவில்லை! திருடுவது தீது; பொய் பேசி, வஞ்சம் செய்து வாழ்வது தீது. ஆனால் உழைப்பது தவறா? இங்கு வேலைமுடிந்து வீடு போவதற்கே இரவு மணி எட்டு ஆகிவிடும். பத்து மணிக்கு ஒரு வேலைக்குப் போகவேண்டும். உட்கார்ந்திருக்கும் வேலையா? மேற்பார்வை வேலையா? செங்கல், கல், மண், சுண்ணாம்பு சுமக்கும் வேலை. கட்டடக் கூலி வேலை! இரவெல்லாம் வேலை செய்தால் சம்பளம் இரண்டு ரூபா. இரவு பகல் இன்றி வேலை பார்ப்பவனுக்கு உட்கார்ந்த இடத்திலே உறக்கம் வராதோ? அலுவலகத்திலே உறங்கக்கூடாது என்பதை உணர்கின்றேன். ஆனால் இயற்கை உணர்ச்சியைத் தடுப்பது எப்படி? எனக்கு எத்தனையோ சங்கடங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் ஒப்பித்து உதவி எதிர்பார்த்து நான் வரவில்லை; நான் தவறு உடையவன்தானா? இந்தச் சேவகன் வேலைக்கும் தகுதியற்றவன்தானா? என்று என்னை நானே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டாமா? விருந்துக்குப் போகவா விடுமுறை கேட்டேன்! அன்று விடுமுறை கிடைக்காததால் என்னுள்ளம் பட்டபாட்டை என்னவென்று சொல்வது? ஐயா, உங்கள் பையன் மதியைப் புத்தகம் இல்லாமல் வகுப்புக்கு வராதே என்று சொல்லி அனுப்பிவிட்டார்களே. ஏழையான என் மகன் படிக்கப் புத்தகம் இல்லாமல் வகுப்பில் இருக்க விடுவார்களா? தங்கு விடுதிச் சம்பளம், சாப்பாட்டுச் சம்பளம், பள்ளிச் சம்பளம் இவ்வளவும் கட்டாமல் இருக்கவிடுவார்களா? முப்பத்தொன்றாம் தேதிக்குள் பணம் கட்டாவிட்டால் வடிவேலு கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவான் என்று கடிதம் வந்தது. அரசாங்க உதவிப்பணம் கிடைத்துவிடும் கிடைத்துவிடும் என்று நாள் தோறும், வேளைதோறும் எதிர்பார்த்து எதிர்பார்த்துச் செத்துக் கொண்டிருந்தேன். இந்நிலைமையிலேதான் இத்தனாம் நாள் சம்பளம் கட்டாவிட்டால் வெளியேற்றப்படுவான் என்று கடிதம் வந்து சேர்ந்தது. எப்படி ஐயா, இதயம் வெடிக்காமல் இருக்கமுடியும்? நான் என்ன இரும்புப் பெட்டியில் பணம் வைத்து வைத்து, எண்ணி எண்ணி அடிக்கிக் கொண்டிருப்பவனா? எடுத்து உடனே அனுப்பி வைத்துவிட. உழைப்பினால் சிறிது சேர்த்து வைத்திருந்த பணத்தையும் முப்பத்தொன்றாம் தேதி கொண்டுபோய்ச் சேர்க்க விடாதவாறு செய்துவிட்டது தங்கள் கடமை உரை கட்டளைக்குப் பணிந்தேன். ஆனால் என் மகன் நிலைமை? உங்களுக்கு நான் ஏவல் செய்பவன்; உத்தரவுக்குப் பணிகின்றேன். என் மகனுக்கு நான் தந்தை. அவனுக்குக் செய்யவேண்டிய கடமையில் தவறுகின்றேன். அவன் என்ன நினைப்பான்! கல்லூரியைவிட்டு வெளியேற்றப் படும்போது என்னென்ன நினைத்துக்கொண்டு வெளியேறுவான். அறிவில்லாதவனாக மட்டும் அவன் இருந்தால் என்னை என்னவென்று எண்ணுவான்? ஐயோ, அந்தப் பிஞ்சுள்ளம் அன்று எப்படித்தான் ஏங்கி ஏங்கி நொந்ததோ? பெற்றமனம் இங்கு துடிக்கிறது. பேதை மனம் அங்கு துடிக்கிறது. இடையே கடமை, கட்டளை என்னும் சக்கடி போடுகிறது. ஐயா, சாவதா? வாழ்வதா? ஐயா, நான் வேலைபார்க்கத் தகுதி உடையவனா, இல்லாதவனா? நீங்களும் பிள்ளை பெற்றவர்கள்தானே! நீங்கள் என்னைப்போல் ஏழைச்சேவகனாக இருந்து உங்கள் பிள்ளைக்கு இப்படி நேர்ந்தால் எப்படி இருப்பீர்கள்? மன்னிக்க வேண்டும்; ஆத்திரத்தில் உளறிவிட்டேன் நான் வருகிறேன். - திரும்பிப் பாராமலே நடந்துவிட்டான் பரமன். பெரிய சாமி கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தார். பரமன் நிற்கவில்லை; பெரியசாமியின் குரலும் அவன் காதில் விழவில்லை. பெரியசாமியால் வீட்டில் அமைதியாக உட்கார்ந் திருக்க முடியவில்லை. கடமை கடமை என்று இருந்த அவர் மனம் கரைந்தது. தோண்டிய மணற் கேணிபோல் கண்களி லிருந்து நீர் ஒழுகிற்று. பரமனைப் பின்தொடர்ந்து நடந்தார். சந்து பொந்துகளிலே நுழைந்து உடைந்துபோன பாலம் ஒன்றின் பக்கத்தேயிருந்த ஓலைக்குடிசையினுள் புகுந்தான் பரமன். அதுதான் அவன் குடியிருப்பு. வீட்டின் வெளியே நின்றார் பெரியசாமி. பரமன் அவன் மனைவியிடம் பேசும் குரல் கேட்டது; கட்டட வேலையாவது தொடர்ந்து கிடைக்கும் என்று எண்ணினேன். இனி ஒரு வாரத்திற்கு வேலையில்லையாம். அலுவலக வேலையிருந்த வரையிலே இரவு பகலாக இருந்தது வேலை. நாளைமுதல் அலுவலக வேலை இல்லை. இங்கும் வேலை இல்லை. நல்ல சோதனை? யாரைச் சொல்வது? நாம் படவேண்டிய அல்லல்கள் மலை மலையாக இருக்கும்போது குறையவா செய்யும்? ஐம்பது வயது வரை பார்த்து வந்த வேலையே போய் விட்டது. நேற்று வந்த வேலை நிலைக்குமா? வேலையில்லை என்று அதிகாரியை நொந்து கொள்ளலாமா? அவரவருக்கு எத்தனையோ அல்லல்கள் அவசியங்கள் இருக்கலாம். அதற்காக அலவலகத்தில் எல்லோரும் உறங்குவதும், ஓய்வதுமாக இருந்தால் முடியுமா? பரமன் உள்ளத் தூய்மையும், பெருமையும் பெரிய சாமியைப் பிசைந்து எடுத்தன. பரமா! பரமா! என்று ஓங்கிக் கூச்சலிட்டு விட்டார் பெரியசாமி. ஐயா, நீங்களா? இந்த இருட்டு வேளையிலா? துன்பத்தை ஒரு பக்கத்தே அடக்கி வைத்துவிட்டு பேசினான் பரமன். பரமா! உன் நிலைமையை நன்றாக உணர்ந்தேன். நீ உணரச் செய்துவிட்டாய். மனித இதயத்தோடு நெருங்குவதை அறவே விட்டுவிட்டேன். அது என்னை வாட்டித் தின்கின்றது. என்னை மன்னித்துவிடு. நடந்தவற்றை மனத்தில் போட்டுக் கொள்ளாதே! நாளை வேலைக்கு வந்துவிடு என்று விரைந்து போய்விட்டார் பெரியசாமி. அவரால் அங்கு நிற்க முடிய வில்லை! பரமனுக்கு தன்னுணர்ச்சி வர நெடு நேரமாயிற்று. என்ன இருந்தாலும் பெரியவர் பெரியவர்தான் என்று அவன் வாய் வாழ்த்தியது. ஆண்டுகள் இரண்டு உருண்டன. வடிவேல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான். அவன் இளங்கலை வகுப்பிலே முதல்தரமாகத் தேர்ச்சியடைந்திருந்தான். அவன் நண்பர்கள் பாராட்டு விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து விழாவுக்குத் தலைவர் பதிவு அதிகாரி பெரியசாமிதான்! அவர் கூறினார்: வடிவேலைப் பாராட்டுகின்றோம்; வீட்டின் நிலைமை தெரிந்து, கண்ணும் கருத்துமாகக் கற்றுச் சிறந்த முறையிலே வெற்றியடைந்திருப்பதற்காக! ஆனால் இதற்கும் மேலாகப் பாராட்டப்படவேண்டியவர் எவர் தெரியுமா? இதோ... இவரே... என்று பரமனைச் சுட்டிக்காட்டினார். தாம் ஏற்பாடு செய்துகொண்டு வந்திருந்த மாலையை மகிழ்ச்சி ஆரவாரத்திடையே பரமனுக்கு சூட்டினார். நான் படித்தவன்; பட்டப் படிப்பும் பெற்றவன்; ஓரளவு வருவாய் உடைய பதவியும் உடையவன்; என் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் எனக்கு எத்தகைய சிக்கலும் இல்லை. ஆனால் இப்பரமனோ ஏழைச் சேவகர். எழுதப்படிக்க அறியாதவர். வாய்ப்பு வசதி எதுவும் அற்றவர்; இருந்தும் என் பிள்ளைகளுக்கு நான் செய்துவைக்க முடியாத காரியங்களையும் தம் மகனுக்குச் செய்துள்ளார். தம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித் தம் மகனை அறிவுடையோர் இடையே பெரியவனாக்கி விட்டார். வடிவேலைப் படிக்க வைப்பதற்காக இவர் பட்டிருக்கும் பாடுகளை இவ்வளவு அவ்வளவென்று கூற முடியாது. இவர் குறுகிய அறிவுடையவராக இருந்திருந்தால் படித்தது போதும் கூலி வேலை பார் என்று கூறியிருப்பார். கோழையுள்ளம் படைத்தவராக இருந்திருந்தால் தற்கொலை கூடச் செய்துகொண்டிருப்பார். பரமனோ ஓர் உயரிய தந்தை - பண்புள்ள தந்தை - செய்விக்க வேண்டிய கடமைகளிலே ஒரு சிறிதும் தவறாமல் செய்துள்ளார். தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்பது பொய்யாமொழி என்றால், அதற்கு மெய்யான ஒரு சான்று இப்பரமன்தான். அதனால் வடிவேலைப் பாராட்டும் இவ்விழாவிலே தந்தையின் கடமையைத் தவறாது செய்து முடித்துள்ள பரமனைப் பாராட்டுவது நம் கடமையாகின்றது என்று தம் பாராட்டுரையை முடித்தார் பெரியசாமி. கூட்டத் தினரின் கையொலி அடங்க நெடுநேரமாயிற்று. பரமன் தன்னை மறந்து அனைவருக்கும் கைகூப்பிக் கொண்டு நின்றார்.  9. ஒரே ஒரு தூண் பங்குனி மாதம்; கொடுமையான வெயில்; கால்களைத் தரையில் ஊன்ற முடியாத வெப்பம்; காற்றின் அசைவு சிறிதும் இல்லை; ஒரே புழுக்கம் வியர்வைக் காடு; ஒரு சிறுவன் எவற்றையும் பொருட்படுத்தாதவனாய் நடந்து வந்தான். அவன் இடுப்பிலே ஒரு வேட்டி; தலையிலே ஒரு துண்டு; தோளிலே ஒரு முடிச்சு - சோற்றுப் பொட்டலம்! பதினைந்து கடந்திருக்காது வயது; அவன் முகத்தில் அழகுக் கோடுகள் சில கிடக்கின்றன. ஆனால் வறுமைச்சாயல் தன்னால் இயன்ற மட்டும் அழகுக் கோடுகளை மறைக்காமலும் விடவில்லை. ஒல்லியான உருவம்; பொது நிறம்; கனிவுடைய கண்கள்; ஆனால் எவற்றையும் ஊடுருவி நோக்கும் நுண்மை; சிந்தனையை வெளிக்காட்டும் முகம்; நீர்ப்பசையற்ற உதடுகள்; குவிந்து நீண்ட மூக்கு; நீண்டு தொங்கும் கைகள்; தளராத நடை! அச்சிறுவன் - குமரவேல் - மதுரை அங்கயற்கண் அம்மை கோயில் வாயிலில் நுழைந்தான். நுழை வாயிலிலே மெல்லென்று வீசிய காற்று அவனைப் பேரின்பத்தில் ஆழ்த்தியது; நடைத்துயர் நொடிப் பொழுதில் பறந்தது. காலில் வெப்புக் கொப்புளங்கள் கூட இருந்தன. இருப்பினும் தண்ணென்ற காற்று அவற்றையும் மறக்கச் செய்தது. தன்னை மறந்து உறக்கம் தொடர ஆரம்பித்தது. ஓர் பக்கமாக இருந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்த வாறே உறங்கிவிட்டான். புரண்டு படுத்ததைக்கூட அவன் அறியமாட்டான். பிற்பகல் மணி நான்கு இருக்கும். உறக்கம் சிறிது கலைந்தது. என்றாலும்; கண்ணை உடனே திறந்துவிட முடியவில்லை. லொட் லட் லொட் லட் என்று பலவாக எழுந்த ஒலிகளும்; தள்ளு தூக்கு, எடு, புரட்டு என்று எழுந்த குரல்களும் அரைகுறையாய் அவன் செவியில் விழுந்து கண்ணை திறக்கச் செய்தன. உற்று நோக்கினான். பெரிய வேலைத் திட்டம் ஒன்று நடைபெற்று வருவது புலனாயிற்று. எழுந்திருந்து ஒவ்வொரு தூணாகப் பார்த்தான். ஒரே ஒரு தூண்மட்டும் அவனை நெடுநேரம் நிற்கவைத்து விட்டது. மிக உன்னிப்பாக நோக்கினான். கழுத்து வலி பற்றிக்கூடக் கவலைப்படாமல் வரிவரியாகப் பார்த்தான். அருகில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சிற்பிக்கு சிறுவன் கலைத்திறன் வியப்பாக இருந்தது. சிறுவனை நெருங்கி வந்து பையா! நெடுநேரமாக இத்தூணைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றாயே; காரணம் என்ன? என்று வினவினான். தூணில் வைத்த பார்வையை வாங்காமலே சிறுவன், இத்தூணை நிறுத்தியவர் யார்? என்று கேட்டான். இத்தூணை நிறுத்தக்கூடாதா? என்று பதில் வினா விடுத்தான் சிற்பி. சிற்பக்கலையின் முதற்பாடம் படித்திருந்தால் கூட இத்தூணை நிறுத்தியிருக்கமாட்டான் - சிறுவன் இவ்வாறு சொல்வான் என்பதை எண்ணாத சிற்பி திகைத்துப் போனான். இதற்குள் இவர்கள் உரையாடலை அடுத்திருந்து கேட்ட திருமலை மன்னன் நெருங்கி வந்தான். இளைஞனே! ஏதோ சொல்கிறாயே! அதை அறிந்து கொள்ளலாமோ? என்று வினவினான். சிறுவன், மன்னவன் என்பதை அறிந்து கொண்டபடியால் மன்னவ! இத்தூணை இவ்வாயிரக்கால் மண்டபத்தைவிட்டு அப்புறப்படுத்தியாக வேண்டும். குற்றமற்ற வேலைப்பாடுடைய இம்மண்டபத்தில் குறையுள்ள தூண் நிற்கத் தகாது என்றான். இளைஞனே! தூணில் என்ன குற்றம் கண்டாய்? - மன்னன் மொழி இது. இதனை நிறுத்திய சிற்பி எவ்வளவோ வேலைத் திறமும், நுட்ப அறிவும் உடையவன்தான் எனினும் யானைக்கும் அடிசறுக்கும் என்னும் முதுமொழிக்கு இணங்க அவன் செயல் ஆயிற்று. தண்ணீர் கொண்டு வந்தால் இத் தூணிலுள்ள குறையை எடுத்துக் காட்டுகின்றேன் - சிறுவன் அமைதியும், பணிவும் கலைத்தெளிவும் தோன்றுமாறு பேசினான். தண்ணீர் குடம் குடமாக வந்தது. குமர வேல் கூறியவாறு நீர்க்குடத்தைத் தூண் முழுவதும் நனையுமாறு கவிழ்த்தான் ஒருவன். மேலும் மேலும் பல குடங்கள் கொட்டிக்கொண் டிருந்தான். ஒரே ஓர் இடத்தில் மட்டும் வட்டமான ஒரு பகுதி விரைவில் காய்ந்து கொண்டு வந்தது. நொடிப் பொழுதில் அப்பகுதியில் நீர்ப் பசை அற்றுப்போவதைக் கண்டவர்கள் திகைத்தனர். இது என்னே விந்தை? என்றனர். தூணை நிறுத்திய சிற்பி சேந்தன் சிறுவன் குமரவேல் முன் மண்டி யிட்டான். இளைஞனே! உன் கலையுணர்வுக்கு என் கலையுணர்வு கால் பங்கும் ஆகாது. இந்த இளம் வயதிலேயே பேரறிவு கைவரப்பெற்ற உனக்கு உயரிய எதிர்காலம் உண்டு. உன்னைப் பெற்றவர்கள் உண்மையில் பேறு செய்தவர்களே என்று வாழ்த்தினான். குமரவேலால் சிறிதும் பேச முடியவில்லை. தலைதாழ்ந்து நாணத்தால் நின்றான். பலருக்குத் தூணிலுள்ள குற்றம் புலப்படவில்லை. குமரவேல் கூறினான். அரசே! தூணில் நீர்ப்பசையின்றிக் காணும் பகுதி யிலே தேரையிருக்கின்றது. காற்றும் நீரும் புகும் அளவுக்கு மென்மை இருந்தாலன்றிக் கல்லில் தேரை பிறந்து உயிர் வாழ முடியாதல்லவா! இத்தகைய வலுவற்ற கல்லை நிறுத்துவது தகுமா? என்று கூறிக்கொண்டே சுத்தியல் ஒன்றால் அப் பகுதியில் தட்டினான் தேரை துள்ளி வீழ்ந்து தத்திச் சென்றது. கூடியிருந்தோர் குமரவேலைத் தூக்கியும் தழுவியும் இன்புற்றனர். மன்னவன் அவன் முதுகை அன்பால் தடவித் தந்தான். சிறுவ! நீ யார்? இளைஞனான நீ எதிர்காலத்தில் சிற்பிகள் போற்றும் சிற்பியாவாய் என்பதில் ஐயமில்லை. உன் பெற்றோர் யாவர்? என்றான். குமரவேல், தாய் மட்டுமே தனக்கு உள்ளார் என்றும், தான் பிறப்பதற்கு முன்னரே தந்தையார் இறந்துவிட்டார் என்றும் சொன்னான். இளம்பெருஞ் சிற்பியே! நீ உன் தாயை இங்கு அழைத்துவர இயலுமோ? உன்னைப் பெற்றெடுத்த அந்தப் பேரன்னையைக் காணப்பெற்று எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவேண்டும் என்றான் அருங்கலை மன்னனாம் திருமலை மன்னன். மன்னன் நன்மொழி கேட்ட குமரவேலால் நம்ப முடியவில்லை. பஞ்சைச் சிறுவனைப் பாராள் வேந்தன் பாராட்டிப் பேசிப் புகழ்வது என்ன எளிதில் கிடைக்கக் கூடியதா? எல்லோர் வாழ்விலும் நிகழக்கூடியதா? நமக்கா இவ்வளவு பெருமை? என்று உள்ளம் விம்மினான். அரசன் அளித்த கொடைகளைப் பெற்றுக்கொண்டு சிறப்புடன் ஊரையடைந்தான். சிற்பிகள் போற்றும் சிற்பியல்லவா அவன்! பழைய குமரவேலா? குமரவேல் தன் தாயினிடம் நடந்தது எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறினான். அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவும் உண்டோ? உச்சி முகர்ந்து உள்ளூற வாழ்த்தி அணைத்துக் கொண்டாள். அவள் அதற்கு முன் பட்டிருந்த அல்லல்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் இருந்த இடம் தெரியாமல் அகன்று போவதாயிற்று. அன்று குமரவேல் சாதாரணக் குமரவேலாகத் தெரியவில்லை தாய்க்கு - தெய்வக் கலைஞனாக எண்ணி உவகை கொண்டாள். குமரவேல் மன்னன் கட்டளையை மறந்தான் அல்லன். தன் தாயை அழைத்துக் கொண்டு மாட மதுரைக்கு வந்தான். மன்னன் ஆயிரக்கால் மண்டபத்திலே தான் நின்று கொண்டிருந்தான். பலப்பல இடங்களில் சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். கலை மண்டபத்தைக் கண்டு கண்டு புன்னகை தவழும் முகத்துடன் அரசன் அங்கும் இங்கும் உலவிக்கொண்டும், ஏவிக்கொண்டும், ஏவல் செய்துகொண்டும் இருந்தான். குமரவேல் தலை தாழ்ந்து அரசனை வணங்கினான். கீழே மண்டியிட்டு வணங்க முனைந்த அவனை அரசன் அன்புக் கைகள் தடுத்து நிறுத்திவிட்டன. இளைஞன் குமரவேலுக்கு தந்த சிறப்பா? கலைக்குத் தந்த மதிப்பு? என் அன்னையை அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன். தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றான் குமரவேல். உடனே அழைத்துக்கொண்டு வருமாறு ஏவினான் மன்னன். குமரவேலைத் தொடர்ந்து நடந்தாள் அவன் தாய். திருமலை மன்னன் எதிரே சென்று கையெடுத்து வணங்கி சிற்பியைப் பெற்றெடுத்த செல்வமே! நீ வாழ்க! என்று வாழ்த்தினான். மன்னவன் நிலைமைகண்டு சிற்பிகள் அனைவரும் கையெடுத்து வணங்கினர். அவள் நாணத்தால் நடுங்கினாள். தலை தாழ்ந்து வணங்கினாள். அடியற்ற மரம்போல நிலத்திடை வீழ்ந்தாள் உவகைக் கண்ணீர் பெருகி நனைக்கலாயிற்று. அரசன் தாயே எழுந்திரு; எழுந்திரு என்று பன்முறை கூறி அவளை எழச்செய்தான். அவளுக்குக் கண்ணீர் நின்றபாடில்லை. கூந்தலையும் முகத்தையும் சரிபடுத்திக்கொண்டு நின்றாள். அவளை உற்றுக் கவனித்தான் சிற்பி சேந்தன். அவன் உடல் நடுங்கியது; உள்ளம் துடித்தது; மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன; துயரம் தொண்டையை அடைத்துக் கொண்டது. மன்னன் முன்னிலை என்றும் பாராமல் கோதை! கோதை! என்று கூச்சலிட்டான். குமரவேலின் தாய் கூச்சலிட்ட சேந்தனை உற்று நோக்கினாள். ஆ! நீங்களா? என்ன... கனவா?... நனவா? குமரவேல் இவர்தான் உன் அப்பா! என்றாள் குமரவேலின் தாய் கோதை. அப்பாவா!... இவரா?... என்று குமரவேல் சேந் தனைத் தழுவிக்கொண்டான். கலைப்பித்தும் வறுமைத் துன்பமும் வாழ்க்கை வெறுப்பும் என்னை ஊரைவிட்டுத் துரத்தியடித்தன. கல்லைச் செதுக்கும் கலையாளனான என் உள்ளம் கல்லே ஆயது. கருக்கொண்டிருந்த மனைவி கோதையைத் துறந்து வெளியேறும் அளவுக்கும் - சேந்தன் இறந்து போனான் என்னும் செய்தியை நானே பரப்பும் அளவுக்கும் கல்லாகிவிட்டது. ஆனால் குமரவேல் கலைமாண்பு என்னை கூட்டி வைத்து, உயிருடையவனும் ஆக்கியது என்றான் சேந்தன். அவன் உரையைக் கூட்டத்தினர் வியப்புடன் கேட்டனர். பிரிந்த குடும்பம் ஒன்று பட்டது கண்டு மன்னன் உவந்தான். குமரவேல் சேந்தன் முகத்தை உற்றுநோக்கிய வண்ணம் காலடியிலே வீழ்ந்து என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா என்றான். மார்புறத் தழுவிக்கொண்டான் சேந்தன் தன் மகனை! கோதை குமரவேலை நினைத்து நினைத்துப் பெருமிதம் கொண்டாள். கணவனைப் பிரிந்து வறுமையின் இடையே தனித்து வாழ்ந்தபோது குமரவேலைப் பெற்றெடுத்தது ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும் அவள் பட்ட அல்லல்களோ கணக்கில் அடங்கா! இப்பொழுது அவையனைத்தும் துகள் துகளாகப் போய்த் தொலைந்தன. பேரறிவாளர்கள் தன் மகனைச் சான்றோன் என்று பாராட்டியுரைக்கும் பேறு பெற்று விட்டாள் இல்லையா? ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்  10. மானமுள்ள பிச்சைக்காரன் பிச்சைக்காரப் பயலுக்கு எவ்வளவு மமதை பார்! அப்பன் தான் குருட்டுப் பயல்; மகனும் அப்படியா ஆகவேண்டும்; தடியன் - இப்படிப் பொழிந்து தள்ளினான் பூவண்ணன். குழந்தைவேலால் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. டே! என்ன சொன்னாய்? என்னை ஆயிரம் வேண்டுமானாலும் ஏசு! என் அப்பாவைச் சொல்ல நீயார்? என்று குமுறினான். கையைத் தூக்கிக் கன்னத்தில் ஓங்கி அறையவும் தொடங்கினான். ஆனால் சட்டென்று கையைச் சுருக்கித் தன் கன்னங்களிலே இரண்டு போட்டுக்கொண்டு, அமைதியாகப் போய் உட்கார்ந்தான். அன்று முழுவதும் அவன் முகத்தில் களையே இல்லை. அழுகையும் கண்ணீருமாகவே வேளையைக் கழித்தான். அவன் உள்ளக் கொதிப்பைக் காட்டுவது போன்று கண்களும் சிவந்துவிட்டன; கன்னங்கள் வீங்கிவிட்டன. குழந்தையின் நண்பன்தான் பூவண்ணன். அவனுடன் ஒரே பலகையில் இருப்பவர்களுள் பூவண்ணனும் ஒருவன். ஐந்தாறு பேர்கள் இருக்கும் நெடும் பலகையில் நடுவே இருப்பவன் மற்றவர்களைத் தாண்டிக்கொண்டு போகும் பொழுது கால் பட்டுவிட்டதா, என்ன? இப்படிக் கால் பட்டதற்காகத்தான் குழந்தையை வசைமாரி பொழிந்தான் பூவண்ணன். குழந்தை மிகுந்த பொறுமைக்காரன். இருந்தாலும் அவன் தன் தந்தையைத் திட்டியதைச் சிறிதும் பொறுக்க முடியவில்லை; அஃது இயற்கைதானே! மாலையில் பள்ளிக்கூடம் முடிந்தது. சோர்ந்து தளர்ந்த நடையுடன் குழந்தை நடந்தான். பூவண்ணன் அவனைத் தொடர்ந்தான். குழந்தை! நான் அறியாமல் சொல்லிவிட்டேன். நான் சொல்லியது தவறுதான்; அதை உணர்ந்து கொண்டேன். பொறுத்துக்கொள்ள மாட்டாயா? என்றான். என்னைத் திட்டியது பற்றிக் கவலையில்லை. நான் மிதித்தது உனக்குத் தவறென்று தோன்றினால் என்னைத்தானே திட்ட வேண்டும். நீ செய்த தவறுக்கு உன் அப்பா, அம்மாவைத் திட்டினால் நீ பொறுத்துக் கொள்வாயா? நான் உன்னை மிதிக்க வேண்டும் என்றா மிதித்தேன். நீ இதற்கு முன்பு என்னை எத்தனை முறை மிதித்திருப்பாய்? அதற்கெல்லாம் நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? என்றான் குழந்தை. நான் செய்தது தவறு. அறிவில்லாமல் செய்து விட்டேன். நீ இன்று வகுப்பில் கவலைவயுடன் இருந்தது என்னை வாட்டி வதைத்தது. என்னை அடிக்க ஓங்கிய கையால் உன்னை அடித்துக் கொண்டு உட்கார்ந்ததை இப்பொழுது நினைத் தாலும் என்னால் பொறுக்க முடியவில்லை என்றான் பூவண்ணன். பரவாயில்லை! நடந்தது நடந்துவிட்டது. ஆத்திரப்பட்டு விட்டால் அறிவு இல்லாமல் போய்விடுகின்றது. என்ன செய்வது? கவலைப்படாதே! என்று பூவண்ணனை அனுப்பிவிட்டுக் குழந்தை தனியே நடந்து சென்றான். பூவண்ணனைத் தேறுதல் கூறி அனுப்பி விட்டாலும், அவன் கூறிய சொற்களை மட்டும் குழந்தையால் மறக்க முடிய வில்லை. பிச்சைக்காரன் குருட்டுப்பயல் என்னும் சொற்கள் மாறி மாறி மனத்தில் தோன்றித் துன்புறுத்தின. என்ண னென்னவோ நினைத்துக் கொண்டு அவன் தந்தை நல்லையா இருந்த பாழ் மண்டபத்தை அடைந்தான் குழந்தை. என்னடா! பேச்ச மூச்சு இல்லாமல் இருக்கிறாய்? பள்ளிக் கூடத்தில் ஏதாவது நடந்ததா? என்று வழக்கத்திற்கு மாறானபடி அமைதியாக இருந்த குழந்தையைக் கேட்டான் நல்லையா. குழந்தை தயங்கித் தயங்கிக் கூறினான். அப்பா! பிச்சைத் தொழிலை விடமுடியுமா? முடியாதா? திடுமெனக் கேட்ட இக்கேள்வி நல்லையாவை அசைத்தது. திக்கு முக்காடச் செய்தது. ஏனடா அப்படி? என்றும் இல்லாத படி இன்று என்ன வந்தது? கேள்வி ஆத்திரத்துடன் அடுக்கினார் நல்லையா! காரணம் இருக்கிறது அல்லது இல்லை. நாம் பிச்சை எடுக்காமல் பிழைக்க முடியுமா? முடியாதா? அப்படி முடியவே முடியாது என்றால், இரண்டு பேருமே சேர்ந்து குளத்திலோ, கிணத்திலோ விழுந்து செத்துத் தொலைவோமே! மானமற்ற வாழ்வு வாழ்வதைப் பார்க்கிலும் மாண்டு தொலைவது குற்றமா? கேடா? - உயர்ந்த உணர்ச்சியிலே பேசினான் குழந்தை. குழந்தையின் பேச்சு நல்லையாவின் ஒளியற்ற கண்களி லிருந்தும் நீர் வழியச் செய்தது. மனத்தைத் தாக்கும்படியான நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கின்றது என்பதை நல்லையா அறிந்து கொண்ட அவர் நெருப்பிடை பட்டு நெளியும் புழுப்போல் துன்புற்றார். நாளை முதல் நான் பள்ளிக்கூடம் போகப்போவது இல்லை. என்னைப் படிக்க வைப்பதால் தானே நீங்கள் பிச்சை எடுக்க வேண்டியது இருக்கிறது. சுமை தூக்கியாவது, நான்கு தெருக்களைப் பெருக்கியாவது நான்கு காசு தேடி உங்களைக் காப்பாற்றுவேன். அதற்காகப் பிச்சை எடுக்க விடமாட்டேன்; வேண்டாம் இந்த மானங்கெட்ட பிழைப்பு. எங்கள் ஆசிரியர் ஒரு நாள் சொன்னார். அதனை இன்னும் நான் மறக்கவில்லை. பொய்-வஞ்சம்-திருடு இவற்றைச் செய்து உயிர் வாழ்வதைப் பார்க்கிலும் பிச்சை எடுப்பது மேல்; ஆனால் பிச்சை எடுத்து உயிர் வாழ்வதைப் பார்க்கிலும் சாவதே மேல் குழந்தையின் உரையில் கொதிப்பு இருந்தது. குழந்தை உன்னை நல்ல நிலைமையிலே பார்ப்பதற்காக அல்லவோ எத்தனை எத்தனையோ துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டும் உயிர் வாழ்கிறேன். உன்னை மட்டும் நினையாவிட்டால் உறுதியாகச் செத்தே இருப்பேன். பிச்சை எடுப்பது என்ன எனக்குப் பெருமை என்றா எண்ணுகின்றேன். அதன் இழிவை எண்ணி எண்ணிப் புண்ணாகிப் புண்ணாகி நெஞ்சம் மரத்துப் போய்விட்டது. ஏச்சும் பேச்சும் கேட்டு இதயம் இரும்பாகி விட்டது. என்ன ஆனாலும் உன்னை நல்ல நிலைமையிலே கண்டு விடுவேன் என்று எண்ணினேன்... நல்லயாவைக் குழந்தை பேசவிடவில்லை இடை மறித்தான். அப்பா! நீங்கள் சிறுமையான வாழ்வு வாழ்வது என்னைப் பெருமைப் படுத்துவதற்காகவா? நீங்கள் கண்ணிழந்தும்கூட மகனுக்குச் செய்ய ண்டிய கடமைகளை மறவாது செய்ய - நான் கண்ணொளி பெற்றும் கண்கெட்ட மாடாக இருந்து தந்தையை வாட்ட! இது எவ்வளவு பெருமை! - குழந்தை பேசியதை நல்லை யாவால் பொறுக்க முடியவில்லை. டே! குழந்தை பேச்சை விடுகிறாயா இல்லையா? என்றார். சட்டியில் இருந்த சோற்றைப் பற்றி யாரும் கவலைப்பட வில்லை. பாழ் மண்டபத்தின் ஒரு மூலையிலே முடங்கிப் படுத்தான் குழந்தை. ஒரு பக்கத்தில் நல்லையா படுத்தார். பழம் புண்ணிலே பழுக்கக் காய்ச்சிய இரும்பு புகுந்தது போல் துன்புற்றார். நல்லையா நடு வயதுவரை ஒளியுடைய கண்களுடன்தான் இருந்தார். அம்மை நோய் கண்டு வாட்டியெடுத்து கண்களின் ஒளியையும் வாங்கிக்கொண்டு விட்டது. உழைத்துச் சம்பாதிக்கும் வயதிலே ஒளி இழந்துவிட்டால் என்ன செய்வது? பழைய சொத்து நல்லையாவுக்கு அதிகமாக இருக்கவில்லை. ஒரு வீடும், நன்செய் புன்செய்களாக இரண்டு ஏக்கர் நிலமும் இருந்தன. அவருக்கு மனைவியாக வந்த காளியம்மாள் பெருங் கைகாரி. வரவு, குடும்ப நிலைமை இவற்றைப் பற்றிக் கவலைப் படாமல் செலவழிக்கக் கூடியவள். அவள் பிறவிக் குணமே அதுவாக இருந்தது. பின்னும் என்ன? நல்லையாவின் நிலங்கள் விறக்கப்பட்டு விட்டன. கண்ணொளியும் இழந்தார். பாழும் வறுமைக்கும் ஆட்பட்ட குடும்பத்திலே குருட்டுக் கணவனோடு கூடி வாழ்வதற்கு காளியம்மாள் மனம் இடந்தரவில்லை போல் இருக்கிறது; வெளியேறி விட்டாள். அப்பொழுதெல்லாம் குழந்தைக்கு வயது ஐந்தேதான். அவள் தன் மகன், குழந்தையைத் தன்னோடு கொண்டுபோகத்தான் முயன்றாள். ஆனால், பிச்சை எடுத்தாவது குழந்தையை நான் காப்பாற்றுவேனே ஒழிய உன்னிடம் கொடுக்கமாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்துவிட்டார். வருமானம் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் சாப்பிட முடியும்? கடன் தொல்லை அதிகமாயிற்று. வீட்டையும் விரைவில் விற்றார். இன்னும் கடன் கிடைக்குமா? கடனைத் தீர்க்க வழியிருக்கிறதா? என்று எண்ணிப் பாராமல் எவராவது கடன் கொடுப்பாரா? நல்லையாவுக்குப் பிச்சையெடுப்பது அன்றி வேறு வழியின்றிப் போய் விட்டது. நல்லையாவுக்குத் தெரியாமலே வந்து காளியம்மாள் குழந்தையைப் பலமுறை பார்க்க விரும்பினாள். தன்னோடு அழைத்துப் போகவும் முயன்றாள். வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட கணவனையே வெறுத்து வெளியேறிய ஈவு இரக்க மற்றவளுக்கு மகன் ஒரு கேடா? கணவன் ஆகாதபோது அவன் மகன் மட்டும் ஆகுமோ? மானம் இருந்தால் நாங்கள் செத்தாலும் இப்பக்கம் எட்டிப் பார்க்காதே? நீ செத்தாலும் நாங்கள் உன்னைப் பார்க்க போவது இல்லை. நீ தாயும் இல்லை; நான் மகனும் இல்லை என்று திட்டியனுப்பினான். அதற்குப் பின்னும் அவள் தலைகாட்டவில்லை. அன்றன்று கிடைத்ததைக் கொண்டு பசியும் பட்டினியுமாக நாட்களை ஓட்டினர். குழந்தைக்கும் வயது பதினான்கு கடந்துவிட்டது. இவ்வளவு எண்ணங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நல்லையாவைத் தின்றன. நெருப்பினுள் படுத்து உறங்க முடியுமா? உறங்காமலே விடிந்தது. குழந்தை தெரு வழியே நடந்தான். நெடு நேரம் சுற்றிச் சுற்றி அலுத்தான். மோட்டார் நிலையத்தில் காத்துக்கிடந்தான். சுமை தூக்கிக் கொண்டு சென்றாவது கூலி பெறவேண்டும் என்பது அவன் நோக்கம். அதற்கு ஒரு சிறு வாய்ப்பும் நடுப்பகல் வரை கிடைக்கவில்லை. கூலிகூலி என்று கத்திக்கொண்டு பெருஞ்சுமையுடன் வந்த ஒருவரை அணுகினான். கூலி என்ன கேட்கிறாய்? நக்கீரர் தெருவுக்குப் போக வேண்டும் என்றார். கொடுப்பதைக் கொடுங்கள் ஐயா. எவ்வளவு கொடுத்தாலும் சரி என்று குழந்தை சொல்லி வாய் மூடுமுன், வாடிக்கையான சுமை தூக்கிகள் ஓடி வந்து ஐயா, இவன் புதுப்பயல்; மூட்டை அடிப்பவன், நம்பாதீர்கள், சுமையைக் கொடுத்தீர்களோ மூலை முடுக்குகளில் ஓடித் தப்பிவிடுவான் என்று கூச்சல் இட்டனர். ஊருக்குப் புதியவரான அவர் அப்பாவி! குழந்தை எடுத்துக் கொண்டு போய்க் கூலி வாங்கவேண்டிய சுமை எவன் தலையிலோ ஏறியது. குழந்தைக்குக் கோபம் அதிகமாயிற்று. கனல் கக்கும் பார்வையில் பார்த்தான் அவர்களை. அஞ்சுபவர்களா அவர்கள்? ஐயோ! தேடி வைத்த சொத்து பறி போய்விட்டது இல்லையா? பின் என்ன கோபம் வராதா? என்று கேலி செய்தனர். என்னடா உலகம் இது? என்று ஏங்கிக்கொண்டு இரயிலடிக்கு நடந்தான். அப்பா எப்படி இருக்கிறாரோ என்னும் எண்ணம் சிறிதும் பொருட்டாய் எண்ணாத வலிய உள்ளம் ஏற்பட்டு விட்டது. எதனையும் தாங்கி உழைப்பு ஒன்றாலேதான் முன்னேறித் தீரவேண்டும்; அதற்கும் இடையில் எத்தனை எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும் சரி, கவலையில்லை, என்னும் உறுதியுடன் இரயில் நிலையத்தைவிட்டு நகரவில்லை. மாலை ஐந்து மணி இருக்கும். இரயிலில் இருந்து நடுத்தர வயதுள்ள ஒருவர் ஒரு தோற்பையுடன் நடந்து வந்தார். கூலி கூலி என்று சொல்லிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தான் குழந்தை. பையா! சுமை சிறிதுதான். கூலி வேண்டாம். என்றார். ஐயா, நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் ஐயா; நான் தூக்கிக் கொண்டு வருகிறேன். இன்று நீங்கள் கூலி தந்தால் ஒரு குடும் பத்தைப் பிச்சைக்காரர் ஆக விடாது தடுத்த பெருமை உங்களைச் சேரும் என்றான். குழந்தையின் கண்களிலே நீர் சுரந்து நின்றது. இரக்கமுடைய வழிப்போக்கர் குழந்தைவேலை நோக்கினார். அவருக்கும் சிறுவன் சொல்லைக் கேட்டு உதவவேண்டும் போல் இருந்தது. அவர் பையா, இதனை எடுத்துக்கொண்டு வந்தால் உனக்கு என்ன கூலிதான் கிடைத்துவிடும். உன் குடும்பத்தைக் காப்பாற்றிவிடுவாய்? என்றார். ஐயா எவ்வளவு கிடைத்தாலும் சரி; கவலையில்லை. என் தந்தை குருடர். பிச்சையெடுத்துப் பிழைத்துக் கொண்டு என்னையும் வளர்த்தார். அது மானக்கேடான வாழ்வு என்று அவரைப் பிச்சை எடுக்க விடாமல் தடுத்துச் சுமை தூக்கிச் சம்பாதித்தாவது பிழைப்போம் என்று உறதி சொல்லிவிட்டு இன்றுதான் வந்தேன். இதுவரை சல்லிக் காசு கூடக் கிடைக்க வில்லை. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்து ஒரு ரூபாய் சேர்த்துவிட்டால் போதும்! பிழைத்துக்கொள்வோம். என்னை வேண்டி இந்தச் சுமையைத் தூக்குவதற்கு அனுமதியுங்கள் என்றான் குழந்தை. சரி! ஒரு ரூபாய் கிடைத்தாலும் போதும்; பிழைத்துக் கொள்வாய்; பிச்சை எடுக்கமாட்டாய்! அப்படித்தானே - பெரியவர் கூறினார். ஐயா! என்னை நம்புங்கள். உண்மையாகச் சொல்கிறேன். திருக்குறள் மேல் ஆணையிட்டு சொல்கிறேன். ஒரு ரூபாய் சம்பாதித்துவிட்டால் போதும்! பிச்சை எடுக்கமாட்டோம்; கூலியும் சுமக்கமாட்டேன். என்றான் - அவன் கண்ணில் சுரந்து நின்ற நீர் கன்னத்தின் வழியே வழிந்தன. அருள் கனிய ஒரு பார்வை பார்த்தார் வழிப்போக்கர். புன்முறுவலுடன் இந்தா ஒரு ரூபாய்; நன்றாகப் பிழைத்தால் போதும்; உன் முன்னேற்றத்தை முகம் காட்டுகின்றது என்றார்! ஒரு ரூபாயா ஐயா, எனக்கா? வியப்புடன் கேட்டான் குழந்தைவேல். ஆம்; போய் வா என்று நடந்தார் பெருந்தன்மை மிக்க வழிப்போக்கர். ஐயா, மன்னிக்க வேண்டும். யான் இச் சுமையைத் தூக்கிக்கொண்டு வரவேண்டும். இந்தப் பணம் இரவலாகப் பெற்றதாக இருக்கக் கூடாது. ஒன்றுக்கு நான்கு பங்காகப் பயன் கிடைத்தது தங்கள் பெருந்தன்மையால் என்று வேண்டுமானால் நெஞ்சாரப் பாராட்டிப் பெற்றுக்கொள்வேன். அவ்வாறின்றி நாகரிகப் பிச்சைக்காரனாக உங்களிடம் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு போகமாட்டேன். என்றான். குழந்தையின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்த இந்தச் சொற்கள் வழிப்போக்கருக்கு இன்பமாக இருந்தன. தோற்பையை அவனிடம் தந்தார். மகிழ்ச்சியுடன் பின் தொடர்ந்து நடந்தான். அழகாக இருந்த தோற்பையைப் பன்முறை பார்த்துக் கொண்டான். நிலக்கடலைப் பருப்பு, மிட்டாய், பொரிகடலை இவை களுள்ள ஒரு சிறிய தட்டு இருந்தது; அதன் முன்னே குழந்தை உட்கார்ந்திருந்தான். அவன் படித்து வந்த பள்ளிக்கூடத்தின் தலைவாயில் பக்கம் அது. குழந்தையின் தட்டு. பள்ளி தொடங்கு முன்னரே காலியாயிற்று. பள்ளி மாணவர்கள் அனைவரும் அவனுக்குத் தெரிந்தவர்கள் அல்லவா! குழந்தையைத் தட்டுடன் கண்ட பூவண்ணன் தலை கிறுகிறுத்தது. அவன் தலையை வெளியே காட்டவே இல்லை. குழந்தை எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. குட்டி வியாபாரி ஆகிவிட்டான் அல்லவா! நாள் தோறும் வேண்டிய மட்டும் காசு கிடைத்தது. நான்கு தடவைகளாவது தட்டுகளை நிரப்பிக் கொண்டு பள்ளிக்குச் சென்றான். ஒவ்வொரு தடவையும் எட்டணாக்களுக்குக் குறையாமல் ஊதியம் இருந்தது. சிக்கனமாகச் செலவழித்துக் கொண்டு மீதத்தைப் பத்திரமாகத் தந்தையிடம் தந்தான். இப்பொழுது நல்லையாவும் குழந்தையும் பாழ் மண்டபத்தில் குடியிருக்கவில்லை. மாதம் மூன்று ரூபா வாடகையிலே ஒரு குடிசையைப் பிடித்துக்கொண்டு இருந்தனர். ஓராண்டு கடக்குமுன் நானூறு ஐந்நூறு ரூபாய்கள் கை முதலாகிவிட்டன. சிறுவன் குழந்தையைப் பலரும் பாராட்டினார்கள். பிச்சைக்காரர்கள் சிலருக்கு மட்டும் இவர்கள் மேல் கோபம் உண்டு. முன்பு கூட்டு வாணிகனாக இருந்த நல்லையா வீட்டிலிருந்து காலந்தள்ளுகிறான் இல்லையா! குழந்தை ஒரு தள்ளுவண்டி வாங்கிவிட்டான். அதில் மிட்டாய் வகைகள், பருப்பு வகைகள் - இனிப்பு வகைகள் - இப்படி எத்தனை எத்தனையோ உண்டு. மணியடித்துக் கொண்டு வந்தால் போதும். மாணவர்களுக்குக் குழந்தையின் தள்ளுவண்டி நினைவுக்கு வந்துவிடும். இனிப்பை நாடும் எறும்புகள் போன்று சிறுவர்கள் கூடிவிடுவர். வருமானம் வரவர மிகுதியாயிற்று. நாளொன்று, எப்படிப் போனாலும் ஐந்து ரூபாய்க்குக் குறையாத வருவாய் தந்தது. மணியடித்துக்கொண்டு வண்டியுடன் வந்தான் குழந்தை. சிறுவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறும் நேரம். பள்ளியின் பக்கத்திலிருந்த கிணற்றிலிருந்து டுமீல் என்னும் பெருஞ்சத்தம் ஒன்று கேட்டது. என்னவோ என்று திகைப்புடன் வண்டியைப் பற்றியும் கவலைப்படாது கிணற்றருகே ஓடோடிச் சென்றான். ஆண்களும் பெண்களும் ஐந்தாறு பேர்கள் கூடினர். ஐயோ! ஐயோ!! விழுந்து விட்டான்! விழுந்துவிட்டான்! என்று கூக்குரலிட்டனர். ஆனால் எவரும் கிணற்றுள் வீழ்ந்தவனைக் காப்பாற்றத் துணியவில்லை. குழந்தை ஒரே தாவாகக் கிணற்றுள் தாவி வீழ்ந்தான். நீந்தத் தெரியாமல் மூழ்கித் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்த சிறுவனை அணைத்துத் தூக்கினான். தன் தோள்மீது போட்டுக் கொண்டான். படிக்கட்டோ, திட்டையோ எதுவும் இல்லாத கிணறு அது. பத்துப் பதினைந்து அடி தண்ணீருக்கு எப் பொழுதும் குறைவாய் இருக்காது. சிறுவனை அணைத்துக் கொண்டு நிலைநீத்தில் நின்றான். அதற்குள் மேலே நின்றவர்கள் கயிறொன்றைத் தொடங்கவிட்டனர். அதன் வழியே சிறுவனுடன் மேலே வந்தான் குழந்தை. செத்தவனுக்கு உயிர் தந்தது போன்ற இந்த அருஞ் செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குழந்தை என்னும் பெயர் எல்லோர் வாயிலிருந்தும் வெளியேறியது. பள்ளிக்கூடம் குழந்தைவேலின் துணிவான செயலைப் பாராட்டிப் புகழ்ந்தது. கிணற்றில் வீழ்ந்த சிறுவனின் பெற்றோர்கள் உயிர் காத்த உபகாரி என்று செய்தித்தாளுக்கு எழுதியனுப்பித் தம் நன்றி அறிதலைப் புலப்படுத்தினர். இவற்றையெல்லாம் கேட்டறிந்த நல்லையா இன்பக் கண்ணீர் சொரிந்தார். நான் கண் கெட்டவன், ஆனாலும் பெரும் பேறு செய்தவன் தான் என்று தம்மைத் தாமே வியந்து கொண்டார். ஐந்தாறு ஆண்டுகள் சென்றன. குழந்தையினிடம் பத்தாயிர ரூபாய்க்குமேல் சேர்ந்து விட்டன. ஊரின் நடுவே இருந்த கடை யொன்றைப் பிடிக்க நினைத்தான். அந்த இடம் வாடகைக்கு விடப் படப்போகிறது என்பது எவருக்கும் தெரியாது. குழந்தையின் நண்பன் ஒருவன் தெரிந்து கூறினான். எவரும் அறியாமல் அதனை வாடகைக்குப் பேசுவதற்குச் சென்ற இடத்திலே, விலை பேசியே முடித்துவிட்டான். எல்லாம், மூவாயிரம் ரூபாய்தான். முடித்த பின்பு அதனை வாடகைக்கு விட்டால் கூட ஐயாயிரம் ரூபாய் முன்பணம் தர ஆட்கள் காத்திருந்தனர். அந்த இடத்தின் மதிப்பிற்கு வேறென்ன வேண்டும். குறிப்பிட்ட நாள் ஒன்றில் மிட்டாய்க் கடை தொடங்க இருந்தது. படிக்கராமர் மிட்டாய்க் கடை என்னும் பெரியதோர் பலகையைக் கடை முன் தொங்க விட்டான். தொடக்க விழா இதழும் அச்சடித்தான். கோலாகலமாக விழாத் தொடக்கமாக இருந்தது. ஒரு வெள்ளித்தட்டு நிறைய இலை, பாக்கு, தேங்காய், பழம், சந்தனம் இவற்றுடன் குழந்தை ஒரு வண்டியிலே புறப்பட்டான். நிறுத்து என்று சொல்லிவிட்டுத் தட்டுடன் கீழே இறங்கி ஒரு வீட்டின் முன்கட்டினை அடைந்து நின்றான். அங்கே ஒரு பெரியவர் இருந்தார். அவரைப் பணிவோடு வணங்கி வெள்ளித் தட்டை நீட்டினான். இது என்ன? இவன் யார்? என்னும் திகைப்புடன் வீட்டுக்காரப் பெரியவர் மெய்மறந்து போய் நின்றார். எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை மட்டும் எடுத்துக்கொண்டார். இல்லை ஐயா, எல்லாம் தங்களுக்குத்தான் என்று அவர் அருகில் இருந்த பலகையிலே தட்டினை வைத்தான். என்னை யார் என்று தெரிகின்றதா ஐயா; நீங்கள் மறந்திருப்பீர்கள்; இரயில் நிலையத்தில் ஒருநாள் தங்கள் சுமையைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரு ரூபா வாங்கிக்கொண்டு போகவில்லையா? அவன்தான் நான்; என் பெயர் குழந்தைவேல். தாங்கள் தந்த ரூபா ஒன்றை முதலாகக் கொண்டு இந்நிலைமைக்கு வந்தேன் என்று வரலாறு அனைத்தையும் கூறினான். அழைப்பிதழை எடுத்து நீட்டினான். என்னப்பா இது! என் பெயரையா கடைக்கு வைத்தாய்? என்று கேட்டார் பெரியவர். இதனைப் பார்க்கிலும் நல்ல பெயருக்கு எங்கே போவது? இன்று நான் ஒரு மனிதனாகத் தெரிகின்றேன் என்றால் தாங்கள் காலத்தினால் செய்த உதவியால்தான், அந்த நன்றியை மறக்கலாமா? நன்றி மறந்தவன் நாயினும் கடையன் அல்லனோ? - குழந்தை நாக்கு தழுதழுத்தது; பெரியவர் உள்ளம் படபடத்தது. ஏதோவோர் புதிய உலகுக்குப் போய்க்கொண்டு இருப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. இத்தகையவர்களும் உலகில் இருக்கிறார்களா? என்று நினைக்கும்போது அவர் கண்களில் மகிழ்ச்சி நீர் சுரந்தது. ஐயா, உங்கள் தோற் பையிலே இருந்த பெயரை அன்று பார்த்தேன். அதனை என் உள்ளத்தில் அழியா எழுத்தில் எழுதிக் கொண்டேன். என்னை வாழவைத்த அந்தப் பெயரே வாணிக நிலையத்திற்கு ஏற்றது என்று கொண்டேன் என்றான். படிக்கராமர் குழந்தைவேலைத் தம் குழந்தையாகவே தழுவிக்கொண்டார். தன் அன்பெல்லாம் கூட்டிச் சேர்த்து வாழ்த்தினார். தேநீர் கொண்டு வந்தான் சிறுவன் ஒருவன். இருவரும் பருகினர். சிறுவன், குழந்தைவேல் முகத்தை உற்றுக் கவனித்தான். ஒரே தாவாகத் தாவி அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தழுவினான். அப்பா! இவர்தான் என்னைக் கிணற்றி லிருந்து தூக்கியவர் என்றான். உயிர் காத்த உபகாரியா? என்றது படிக்கராமர் வாய். அதற்கு மேல் பேச்சு ஓடவில்லை. கையெடுத்து வணங்கி விடை தந்தனுப்பினார். அவன் வண்டி நகர்ந்தது - இமை கொட்டாமல் அது மறையும்வரை பார்த்துக் கொண்டு நின்றார். இவனைப் பெற்றவனே பெற்றவன்; மற்றவர்களெல்லாம் பெற்றவர்களா? என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். குழந்தைவேல்- குழந்தைவேல் என்னும் சொற்களை மந்திர மொழிபோல் சொல்லிச் சொல்லி இன்புற்றார். மிட்டாய்க் கடை நன்றாக நடந்தது; பெருத்த வருவாயும் வந்தது. இனிமேல் கவலையில்லை என்னும் நிலை ஏற்பட்டது. ஆனால் குழந்தைக்கு ஒரே ஒரு கவலை மட்டும் பெருக இருந்தது. குருடரான தன் தந்தை தம் பொழுதை இன்பமாகக் கழிப்பதற்குரிய வழி வகைகள் எவையுமின்றி மூலைக்குள் கிடக்கிறாரே என்னும் கவலைதான் அது. அவருக்குக் கண் ணொளி தந்துவிட வேண்டும் என்பதே அவனது ஆசை. அதற்காக இயற்கையை வென்றுவிட முடியுமா? முடியா விட்டாலும் மாற்றுத் திட்டங்கள் உண்டல்லவா! புறக் கண்களுக்குப் பதில் அகக் கண்களை ஒளியிடச் செய்து விடுவது எளிது - இன்பமானது எனத் தெளிந்தான். குருடர் களுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர் ஒருவரை அழைத்துக் கொண்டுவந்து, நல்லையாவிற்கு எண்ணும் எழுத்தும் கற்க ஏற்பாடு செய்தான். முயற்சி வீணாகி விடவில்லை. குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் ஆவலுடைய நலலையாவுக்குக் கல்வி கனிச்சாறு ஆயிற்று. தமிழ் தேன் ஆயிற்று! முயன்று விருப்புடன் கற்றார். முதுமையிலும் தளராது மனனம் பண்ணினார் இரண்டோர் ஆண்டுகளிலே திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களையும் கற்றுத் தெளியும் அளவுக்கு உயர்ந்தார்.,இப்பொழுதெல்லாம் அவருக்குப் பொழுதுகள் இன்பப் பொழுதுகள் ஆகிவிட்டன. திருவள்ளுவர் இளங்கோ, சாத்தனார், கம்பர் இவர்களோடு பழகுவது என்ன எளிதில் கிடைக்கக் கூடியதா? நல்லையாவுக்குக் கிடைத்தது. தாம் பெற்ற இன்பம் பிறரும் அடையுமாறு நாடினார். குழந்தை முன்னின்று வழி செய்தான். நல்லையா குருடர் பள்ளிக்கூடம் என்னும் பெயரால் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பமாயிற்று. கண்ணொளியற்றவர் களுக்குக் கல்விக் கண்கள் தரும் மருத்துவராக நல்லையா பணியாற்றினார். அவர்தானே கண்கெட்டவர்களின் மன நிலையை உள்ளவாறு அறிவார்! குருடர் பள்ளியை ஒட்டி இருபது ஏக்கர் நிலம் இருந்தது குழந்தைக்கு. அங்கு ஒரு கூட்டுப்பண்ணை நடைபெற்று வந்தது. அப்பண்ணை முகப்பிலே ஒரு பலகை தொங்கியது. அதில் இருந்த செய்தி:- அறிவிப்பு மானமுள்ள பிச்சைக்காரர்களுக்கு பிச்சை எடுத்து உயிர் வாழ்வது மானக்கேடு என்று எண்ணும் பிச்சைக்காரர்கள் இந்தப் பண்ணையின் உதவியை நாடி வரலாம். அவரவர் விருப்பம். உடல்நிலை இவற்றுக்கு ஏற்ப உழைப்பு இங்கு தரப்படும். உணவு உடைகள் வழங்குவதுடன் உழைப்பைப் பொறுத்து ஊதியமும் பெறுவர். கைத்தொழில்கள் செய்யும் பழக்கமும் விருப்பமும் உடையவர்களையும் உரிய முறையில் கவனித்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பண்ணை அலுவலகத்தை அணுகிக் கேட்கவும். பரம்பரைச் செல்வர்கள் வந்த வந்து மூக்கிலே விரலை வைத்துக்கொண்டு பலகையைப் பார்த்தனர். உள்ளே என்ன என்ன எண்ணிக் கொண்டாலும் வெளிப்படையாகப் புகழ்ந்தனர். செய்தித்தாள்கள் பக்கம் பக்கமாகக் குழந்தையின் செயற்கரிய செயலைப் பாராட்டி எழுதின. நாடு நலமடைய குழந்தை வேலைப் போலும் நல்லறிவாளர்களும், செல்வர்களும் நிறையத் தேவை என்று வேண்டுகோள்கள் விடுத்தன. நாள் தவறாமல் குழந்தையின் செயலைப் பாராட்டிக் கடிதங்கள் வந்து குவிந்தன. அதைப்பற்றிக் கவலைப் படாத குழந்தைவேல் விருப்பு வெறுப்பு இல்லாமல் தொடர்ந்து நற்பணியாற்றி வந்தான். ஆனால், ஒருநாள் அவனை நாடிவந்த வாழ்த்துரை ஒன்று உள்ளத்தை அசைத்து நெகிழ வைத்தது. அதனை அனுப்பியிருந்தவன் அவன் பழைய நண்பன் பூவண்ணன்தான். அவன் எழுதி யிருந்தான்; மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல் என்னும் பொய்யா மொழியைக் கற்றேன்; அதன் பக்கத்தே குழந்தைவேல் என்று குறித்து வைத்துக்கொண்டேன். இதனைப் படித்துப்பார்த்த குழந்தை பூவண்ணா, நீ வாழ்க! பொய்யாமொழியும் வாழ்க! என்று வாழ்த்தினான்.  11. தமிழ் முழக்கம் விண்ணிலிருந்து வெண்மதி போல்வதான பறக்கும் தட்டொன்று கீழே இறங்குகிறது. வீட்டின் மேல் மாடியிலே இருந்த நான் அதனை உற்று நோக்கினேன். என் நண்பர்கள் சிலர் அதில் இருந்தனர். அவர்கள் என்னையும் அதில் ஏறிக் கொள்ளுமாறு வற்புறுத்தினர். யான் ஏறிக் கொள்ளக்கூடிய அளவிலே மாடியின் பக்கம் வருமாறு தட்டினை இயக்கினர். நான் உவகையுடன் ஏறிக்கொண்டேன். உலகைவலம் வரலா மல்லவா! பறக்கும் தட்டு காற்று மண்டலத்தைக் கிழித்துக் கொண்டு விர் என்னும் ஒலியுடன் மேலே பறந்தது. எத்தனை எத்தனையோ மலைகள் - தொடர்கள் - ஆறுகள் - அணைகள் - குளங்கள் - புல்வெளிகள் - தோப்புகள் - வயல்கள் - கடல்கள் - நாடுகள் - அம்மம்மா! ஒரே வனப்புக் கொள்ளை. எதன் அழகைத்தான் கூறுவது? உலகத்தின், எழில், உற்றுக் கவனித்த என்னை ஊமையாக்கி விட்டதை அன்றி உரைக்கவிட வில்லை. அவ்வளவு கொள்கை அழகு! இதோ... ஒரு வெள்ளை மாளிகை. ஆம்! ஆம்! செல்வங் கொழிக்கும் அமெரிக்க நாட்டின் தலைவர் வாழும் வெள்ளை மாளிகை தான் அது. அதனை விண்ணிலேயிருந்து கண்ட வுடனே அந்த வெள்ளை மாளிகையிலே இருந்த வள்ளல் - நிற வேற்றுமையை ஒழித்துக்கட்டிய நல்லோன் - ஆபிரகாம்லிங்கன் எண்ணம் என் நெஞ்சிடைப் புகுந்தது. வெள்ளை மாளிகை வாழ்க என்று வாழ்த்தினேன். அதற்குள் பறக்கும் தட்டு அடுக் கடுக்காக உயர்ந்து அகன்று தோன்றும் ஒரு பேரிடத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. அங்கு ஒரே ஆரவாரமாக இருந்த குரல் கேட்டது. உலகத் தலைவர்கள் அனைவரும் உலக அமைதிக்கு வழிகள் என்பது பற்றி உரையாடுவதற்கும், சிக்கல்களை அமைதியான முறையில் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கும் கூடியுள்ளார்களாம். இதோ... தலைவர் தம் பேச்சைத் தொடங்கி விட்டார். என்ன விந்தை! நம்ப முடிய வில்லையே! ஆ! ஆ! தலைவர் தமிழ் மொழியிலே பேசினார். சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்னும் நன்னெறியை முதற்கண் நினைவில் நிறுத்திக் கொண்டு நம் அமைதிப் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும். முன்னே தான் சமமாக இருந்து பின்பு பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக் கோல்போல் அமைந்து ஒருபக்கமாகச் சாயாமல் நடுவு நிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும் என்று எவ்வளவு அழகாகக் கூறுகின்றது இப்பாட்டு! இதன்படியே எந்தவொரு காரியத்தை எந்தவொரு நாடு செய்தாலும் நல்லதாயின் நல்லது என்றும் அல்லது ஆயின் அல்லது என்றும் உறுதியாகச் சொல்வோம். வேண்டியவர் வேண்டாதவர் என்று நடுவுநிலை தவறிப் பேசோம் ........ என்று தொடர்ந்து பேசினார். ஒலிக்கருவிகள் நன்றாக வேலை செய்து கொண்டிருந்தன. இல்லாவிடில் எவ்வளவோ தொலைதூரம் வந்துவிட்ட நாங்கள் இவ்வினிய குரலைத் தெளிவாகக் கேட்டிருக்க இயலாது. நாங்கள் ஆபிரிக்கா மீது பறக்கிறோம். பார்க்கப் பார்க்க என்னவோ போல் இருந்தது. எங்கள் எல்லோருக்கும் எரிச்சல் தாங்க முடியவில்லை - மன எரிச்சல்தான்! வெள்யைர்கள் ஒரு பக்கம்; கறுப்பர்கள் ஒரு பக்கம் வெள்ளையர்கள். தெரு ஒரு பக்கம். கறுப்பர்கள் தெரு ஒரு பக்கம். வெள்ளையர்கள் பள்ளி ஒரு பக்கம்; கறுப்பர்கள் பள்ளி ஒரு பக்கம். இப்படி இப்படியே உணவு விடுதி, நீச்சல் குளம், பூங்கா, பொழுது போக்கு அரங்கம் விளையாட்டிடம் எல்லாம் எல்லாம்! சே! சே! இதென்னடா கொடுமை! ஊருக்குளே திரியும் நாய்களிலே வெள்ளைநாய் கறுப்பு நாய் என்று இல்லை. எல்லா நாய்களையும் வீட்டிலே வைத்து பாலும் ரொட்டியும் போட்டு, மெத்தையிலே உறங்கப் பண்ணிக் கொஞ்சி குலாவி மகிழும் இந்த வெள்ளையர்கள், கறுப்பர்களை மட்டும் இப்படி வெறுக்கிறார்களே, இது கொடுமை இல்லையா? இந்த இருபதாம் நூற்றாண்டிலுமா இந்த அநியாயம்? என்று ஏங்கினோம். இதற்குள் எங்கோ பறந்துவிட்டது தட்டு. ஆனால் ஒரு மூலையிலேயிருந்து கிளம்பிய ஒரு சிறு குரலைக்கூட இழுத்துவிட்டது ஒலி வாங்கி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்னும் குறளை ஓங்கிய குரலிலே அழுத்தி அழுத்திப் பன்முறை கூறினார் ஒரு சொற்பொழிவாளர். ஓங்கட்டும் உம் குரல்; இப்பாலைவனக் காட்சிகளிலே உம் குரலாவது பசுஞ்சோலையாக இருக்கட்டும், இன்னும் ஓங்கிக் கூறும் என்று பறக்கும் தட்டில் இருந்தவாறே கத்தினோம். எங்கள் வாழ்த்தையும் உரைத்தோம். எங்கள் அவசரத்திலும் ஆத்திரத்திலும் இறங்கிப்போய்க் கைகுலுக்கிக் கொண்டு அன்பைத் தெரிவிக்கவா முடியும்? இங்கிலாந்து இங்கிலாந்து என்று கத்தினார் நண்பர் ஒருவர். ஆம்; நாலைந்து நூற்றாண்டுகள் நம்மை அடக்கி ஆட்சி செய்துவந்த நாடு அல்லவா! நரியாக இருந்துகொண்டு, சிங்கம், புலி, யானைகளையும் மண்டியிட வைத்து அடக்கி ஒடுக்கி விலங்கு விளையாட்டு (சர்க்கசு) நடத்திவந்த நாடு அல்லவா! அதனை நேரில் பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழாது இருக்க முடியுமா? வியப்படையாமல் இருக்க முடியுமா? இங்குதானே இருபத்து மூன்று ஆண்டுகள் தமிழ்ப் பணி செய்தார் தமிழ்ப் போப். தாழ்மையுள்ள தமிழ் மாணவன் என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் செய்தவர் அவர் அல்லவா! இந்த நாட்டில் பறக்கும்போது அத் தமிழ் அன்பரை நினைக்காது இருக்க முடியுமா? என்றேன். என் நண்பர் ஒருவர் சொன்னார்; அதோ போப் பரப்பி வைத்த தமிழ் முழக்கம் கேளுங்கள் ஆற்று மணல்போல் மேலே இருந்து பார்க்கத் தெரிந்தது கூட்டம். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து என்று கூறி விளக்கம் பேசினார் சொற்பொழிவாளர். பொறுத் திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும். சமயம் வாய்த்தபோது அதன் குத்துப்போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் எந்தக் காரியத்யும் சாதிக்க முடியாது. உலகம் விழித்துக் கொண்டது. இன்னும் பழைய முறையில் நாம் வாழ முடியாது. புதிய புதிய முறைகள்; புதிய புதிய முயற்சிகள்; புதிய புதிய கண்டுபிடிப்புகள் இப்படி இப்படி...! இன்று வாய்ப்பு இல்லையென்றல் பொறுமையாக இருப்போம். இப் பொறுமை தோல்விப் பொறுமையன்று. வெற்றிப் பொறுமை. நாளைச் செம்மாந்து கிளம்புவோம். பழைய வாடையும் புதிய வாடையும் கலந் தடித்தன. இது என்ன? ஒரே பண்ணைமயமாக இருக்கிறது? எங் கெங்கு நோக்கினும் ஆலைகள் பெரும் பெரும் வயல் வெளிகள்! வியப்புடன் பார்த்தோம். இதற்கு முன்னமும் பறந்திருந்த ஒருவர் இதுதான் உருசியா என்றார். இதோ மாசுகோ வந்து விட்டது என்றார். உற்றுப் பார்த்தோம். உருசியா கூட்டமைப்பின் பாராளுமன்றம் கூடியிருந்த நாள் அது. உணவைப் பெருக்குவது எப்படி? உழைப்பின் தரத்தைப் பெருக்குவதுடன் ஓய்வு, பொழுதுபோக்கு இவற்றின் அளவை அதிகரிப்பது எப்படி? என்பது பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஒரு சொற்பொழிவாளர் பேசினார்: உலகத்திலுள்ள அனைவரும் தத்தம் உழைப்பால் உறுதியாக வாழ முடியும். பிறரைச் சுரண்டியோ பிச்சையெடுத்தோ வாழ வேண்டும் என்ற நிலைமை இல்லவே இல்லை. அப்படியிருந்தால் அரசாங்கமே காரணம். அத்தகைய அரசு இருந்தால் என்ன. அல்லது அழிந்தால் தான் என்ன? இக்கருத்தை. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் என்னும் குறள்மணி கூறுவது காண்க என்றார். நாங்கள் அனைவரும் அழகு! அழகு!! என்று கத்தினோம். கத்திக் கொண்டு கீழே பார்த்தோம்; அதுகடலாக இருந்தது. கருங் கடலாம் அது. கொஞ்ச நேரந்தான் சென்றது. மதுரை வந்துவிட்டது; இறங்குங்கள்! இறங்குங்கள்!! என்றார்கள். முடியாது; முடியவே முடியாது என் வீட்டு மாடியில் போய் இறக்கிவிடுங்கள்; இங்கு இறங்கமாட்டேன் என்று கூச்ச லிட்டேன். பறக்கும் தட்டில் சென்றவன் மோட்டாரில் எறியோ, காலால் நடந்தோ போகலாமா? விரைவாக இறங்குங்கள்; விளையாட்டைப் பின்னால் வைத்துக்கொள்வோம். அவசரம் என்று கடுகடுப்போடு சொன்னார் ஒருவர். இது என்ன தொல்லை? அழைக்கும்போது இருந்த பெருமை, அனுப் பும்போது இல்லையே என்னும் ஏக்கத்திற்கு ஆட்பட்டேன். தூக்கம் கலைந்தது. உறங்கிக் கொண்டிருந்த நான் விழிகளைத் திறந்தேன். பறக்கும் தட்டில் போனது கனவென்று அறிந்தேன். பறக்கும் தட்டில் போனது கனவானாலும் ஆகட்டும்; நனவானாலும் ஆகட்டும். கவலையில்லை! அனால் அமெரிக்கா, ஆபிரிக்கா, இங்கிலாந்து, உருசியா ஆகிய நாடுகளில் தமிழ் முழக்கம் கேட்டபோது நனவாகக் கூடாதா? என்னும் நினைவுடன் திருக்குறளைப் புரட்டினேன். அருவினை என்ப உளவோ கருவியால் காலம் அறிந்து செயின் என்னும் குறள்மணி முன்னின்றது. ஆம்! செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பவை உண்டா? இதனை அறிவறிந்த தமிழர் - உலக வலம்வரும் தமிழர் - ஆளும் தமிழர் இளந்தமிழர் நினைக்க வேண்டுமே! என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன்.  12. கண் கொடுத்த கவிதை மலங்காடு மாயாண்டி என்றால் அழுத பிள்ளையும் வாய்மூடும். அஞ்சாதவனும் அஞ்சிச் சோர்ந்து விடுவான். சிறுவர்கள் முதியவர்கள் - இன்னார் என்று இல்லை. எல்லோருக்கும் மாயாண்டி அணுகுண்டாக இருந்தான். இந்த இடத்திலே இத்தனை ஆயிரம் ரூபா கொள்ளை; இந்த இடத்திலே இன்னின்ன கொள்ளைகள்; இத்தனை பேர் இங்கே கொலை - இப்படி எத்தனை எத்தனையோ பேச்சுகள் எழும்; எல்லாம் மாயாண்டியின் திருவிளையாடலாகத்தான் உலாவும். பார்த்தவர், பறிகொடுத்தவர், பக்கம் நின்றவர் எவராவது உண்டா என்று தேடினால் உமிகுத்திக் கையோய்ந்த கதையாகத்தான் இருக்கும். மாயாண்டிப் புலிக்கு மணிகட்ட முடியுமா? அதிகாரிகள் பட்டாளங்கள் எல்லாம் எலிகள்! என்ன செய்ய முடியும்? அவனவனுக்கு மனைவி மக்கள் உண்டல்லவா! என்று மார் தட்டிப் பேசிக் கொள்வதும் மாயாண்டியைப் பிடித்துக் கைவேறு கால்வேறு ஆக்கிக் கழுவிலே போட்டு விட்டார்கள் என்று கயிறு திரிப்பதும் சாதாரணமான நிகழ்ச்சிகள். மாயாண்டி திருடர் கூட்டத் தலைவன்தான். இருந்தாலும் மக்கள் கட்டிவிட்ட கதைகளுக்கெல்லாம் பொறுப்பாளி யானவன் அல்லன். சாதாரணமாக அவன் திருடுவது இல்லை. சிறிய திருட்டு எதுவும் செய்வதும் இல்லை. ஆண்டுக்கு நான்கைந்து இடங்களிலே கணிசமாகத் திருடுவான். அதனோடு சரி. கண்ணுழையாக் காட்டிலும் நுழைவான் மாயாண்டி. கதிர் நுழையா வீட்டிலும் நுழைவான். பத்துப் பதினைந்து பேர்கள் சேர்ந்து பாலா கம்பு, வேல், வாள் இவற்றோடு சுற்றி வளைத்துக் கொண்டு நின்றாலும் ஒரு சுற்றிலே அவர்களை உருட்டி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்தவிடுவான். உண்மையாகவே உரமிக்கவன் அவன். ஒரு வீட்டின் மாடியிலே படுத்திருந்தான் மாயாண்டி. அவன் அங்கு இருப்பதை அறிந்து நள்ளிரவிலே சூழ்ந்து கொண்டனர் காவலர். (போலீசார்). ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வரிசையாக நின்றனர். விடிந்த பின் மாயாண்டியை மாடிக்குச் சென்று பிடித்துவிட வேண்டும் என்பது அவர்கள் திட்டம். இருட்டிலே நுழைந்தால் அந்த வேதாளம் என்ன செய்யுமோ என்ற அச்சம் இருக்காதா? மாயாண்டி இருட்டாக இருக்கும்போதே எழுந்து விட்டான். கீழே பார்த்தான். சிவப்புத் தொப்பிகளாகத் தெரிந்தன. சரி! இப்படியா வேலை நடக்கிறது; நடக்கட்டும் என்று நினைத்து மெத்தை தலையணை இவற்றைப் பெருங் கட்டாகக் கட்டினான். வீட்டை அடுத்திருந்த சோளக் கொல்லையுள் வீசி எறிந்தான். மெத்தை தொப் என்று விழுந்ததுதான். மாயாண்டி தப்பிவிட்டான், மாயாண்டி தப்பிவிட்டான்; என்று கூச்சலிட்டுக் கொண்டு சோளக் கொல்லைக்குள் ஓடினர். மாயாண்டி தலைவாயில் வழியே சிங்கம் போல நடந்து போய் விட்டான். இப்படி எத்தனையோ, நிகழ்ச்சிகள். அவனைப் பிடிப்பதற்கும் எத்தனையோ முயற்சிகள். மேலைக்கால், முனியாண்டி வீட்டிலே சில பேர்கள் கூடிச் சேர்ந்து மாயாண்டியைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டும். அவனைப் பிடித்தால் ஒழிய நாம் அமைதியாக வாழமுடியாது - இப்படிப் பேசிக் கொண்டார்கள். நான் என் காதுகளினாலேயே கேட்டேன் என்று மாயாண்டியிடம் திருடன் மகாலிங்கம் கூறினான். ஒரு வெடிச் சிரிப்புச் சிரித்தான் மாயாண்டி. சரி சரி! நம் குணம் தெரியாதவன்; தேடிப்போய் ஒருவனைப் பழி வாங்குவது இல்லை. நம்மை வழிய இழுத்தவனை வாட்டாமல் விடுவதும் இல்லை. என்றான். அவ்வளவுதான். இரவு பன்னிரண்டு மணிக்கு முனியாண்டியை அவன் படுத்திருந்த கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்து விட்டனர். கால், கை, இடுப்பு தலை இவற்றையெல்லாம் கட்டிலோடு வரிந்து கட்டியிருந்தனர். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வ தெல்லாம் மாயாண்டியின் கூட்டத்தார்க்கு இன்ப விளையாட்டு. பாவம்! முனியாண்டி மாட்டிக் கொண்டான். முனியாண்டி அப்பாவி! மாயாண்டியைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது வேண்டாம் என்பதில் எது பற்றியும் கவலைப்படாதவன். ஆனால், அவன் வீட்டி லிருந்து சில பேர்கள் மாயாண்டி பற்றிப் பேசியது உண்மைதான். அதன் விளைவு இப்படியாகும் என்று சிறிதும் நினைக்க வில்லை. நினைத்திருந்தால் பேசவிட்டிருக்க மாட்டான். இனி என்ன செய்வது? உரலுக்குள் தலை போய்விட்டது. உலக்கைக்குத் தப்ப முடியுமா? முனியாண்டி! முனியாண்டி!! என்னைக் காட்டிக் கொடுப்பாய் அல்லவா! கக்கக்கா... கக்கக்கா... ஆம்! காட்டிக் கொடுத்து விடுவாய். வீரன் அல்லவா! முனியாண்டியின் முதுகிலே தட்டிக் கொண்டு மாயாண்டி சொன்னான். அந்தச் சிரிப்பிலே அயர்ந்து போனான் முனியாண்டி. அவனுக்கு வழக்கமாக வரும் நோயொன்று உண்டு. அது, காக்கை வலிப்பு. சிறிது பயந்து விட்டால் போதும். வந்து விடும். இப்பொழுது ஏற்பட்டது சிறிது பயமா? பேய், பூதம், பிசாசு, குட்டிச் சாத்தான் எல்லாம் சேர்ந்து அடித்த பயம்! வெட்டு வெட்டென்று அரை மணி நேரம் வெட்டியது. வாய் நுரை தள்ளியது. உட லெல்லாம் இரத்தம் கசிந்தது, நேரம் செல்லச் செல்ல வலி விட்டது. காட்டிக் கொடுப்பேன் என்பவனுக்குக் கருணை காட்டுவது மாயாண்டியோ அவன் கூட்டமோ அறியாத ஒன்று. காலை ஏழு மணிக்குக் கண்களை வாங்கிவிட வேண்டும் - ஒரே முடிவுடன் அனைவரும் அவரவர் இடத்திற்குச் சென்றனர். முனியாண்டி கட்டிவைக்கப்பட்டான். நாலைந்து தடவைக ளாவது காக்கை வலி வந்திருக்கும். அஞ்சி நடுங்குவான்; அதனை அடுத்து வலிப்பு வரும். வலிப்பு இருக்கும் போது தான் அவனும் அஞ்சாமல் இருந்தான். மாயாண்டிக்கு முனியாண்டியை நினைக்க என்னவோ போல் இருந்தது. அவனுக்குள்ள காக்கை வலிப்பை நினைத்து வருந்தினான். அதே பொழுதில் காட்டிக் கொடுப்பேன் என்று அவன் வீட்டில் பேசியதை எண்ணிப் பொறுமினான். கண்ணைத் தோண்டியெடுக்கும் தண்டனையையும் நினைத்தான். அவனால் உறங்க முடியவில்லை. பையா! வெற்றிலை என்றான். வெற்றிலையை மாறிமாறி மென்று கொண்டும், உதப்பித் துப்பிக் கொண்டும் பொழுதைக் கழித்தான்; வெற்றிலையும் தீர்ந்தது; படுத்தான்; உறக்கம் வரவில்லை; எழுந்தான்; இன்னும் காய்ந்த சருகாவது கிடக்காதா என்று வெற்றிலை பையைத் துருவினான். ஒரே ஒரு பாக்குச் சில் மட்டும் இருந்தது. அதை எடுத்து வாயிலே போட்டுக் கொண்டான். பாக்குச் சில் இருந்த தாளில் ஏதோ அச் சடித்திருந்தது. அது ஒரு புத்தகத்தின் தாள். எண்ணெய்ப் பந்தம் எரிந்து கொண்டிருந்தபடியால் வெளிச்சம் தெரிந்தது. தாளின் மடிப்பு சுருக்கங்களையெல்லாம் நிமிர்த்தி வைத்துப் படித்தான். ஒருமுறை இருமுறைகளல்ல - பன்முறைகள் படித்தான். படிக்கப் படிக்க அவனுக்கு அதற்குமுன் இருந்த ஊக்கம், உறுதியெல்லாம் பறந்தன. அவனால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. மீண்டும் படுக்கைக்குச் சென்றான். உறங்காமல் உறங்கினான். மாயாண்டிக்கு வயது பதினைந்து ஆக இருக்கும்போது, அவன் அப்பா குதிருள் இறங்கி நெல் அள்ளித் தருமாறு சொன்னார். அள்ளித் தந்துவிட்டுக் குதிரின் மேலிருந்தவாறே கீழே குதித்தான் மாயாண்டி. விளக்குத் தூக்குவதற்காக மாட்டி வைத்திருந்த கம்பியில் அவன் வலக்கண் மாட்டிக் கொண்டு கிழிந்து விட்டது. இமை நெடுந்தொலை வாராகக் கிழிந்து போயிற்று. அப்பப்பா! அப்பொழுது அவன் பட்ட துன்பத்தை இப்பொழுது நினைத்தாலும் கொடுமையாக இருந்தது. அஞ்சாத எனக்கே கண்ணிமை இழந்த அந்நிகழ்ச்சி அவ்வளவு அல்லல் தந்தது என்றால் இந்தப் பயங்கொள்ளிக் காக்கை வலி முனியாண்டிக்குக் கண்ணைத் தோண்டி விடுவது எப்படி இருக்கும்? விடியும் வரை உயிரோடு இருப்பானோ? செத்துத் தொலைந்து விடுவானோ... இப்படி மனம் விட்டுக் கலங்கினான். எப்படிக் கண்ணயர்ந்தான் என்பது தெரியாமல் உறங்கி விட்டான். விடிந்து மணி ஆறேமுக்கால் ஆகிவிட்டது. முனியாண்டியை ஒரு குகைக்குக் கொண்டு போயினர்; ஒரு தூணிலே கட்டி வைத்தனர். குத்துக்கம்பி உலையிலே காய்ந்துகொண்டு இருந்தது. மாயாண்டி வரவேண்டும்; மணி ஏழும் ஆக வேண்டும். இதற்காகக் காத்திருந்தினர். மாயாண்டி குகைக்கு வந்தான். இருந்தவர்கள் ஆரவாரத்துடன் வர வேற்றனர். எனக்காக முனியாண்டியை மன்னித்துப் போகச் சொல்லி விடுங்கள்; தவறாக இருந்தாலும் இருக்கட்டும்; இது குற்றம் என்றால் அக்குற்றம் என்னையே சாரும் என்றான் மாயாண்டி. ஏதோ காரணம் இருக்கும் என்று எவரும் மறுக்கவில்லை. மாயாண்டி பேசினான். இந்த விடுதலை நான் தந்த விடுதலையன்று; இது வள்ளுவர் தந்த விடுதலை இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் என்பது வள்ளுவர் உரை. என் கண்ணிமை கிழிந்தபோது நான் பட்ட அல்லலுடன், இவனை நினைத்துப் பார்த்தால் நெக் குருகுகின்றது. இது கொடியது என்பதை உணர்ந்திருக்கிறேன். உணர்ந்தவன், பிறனுக்கு அதனையே செய்யும்படி மரத்துப் போகலாமா? வெற்றிலை பாக்குச் சுருட்டி வைத்திருந்த தாள் எனக்குத் தந்த நல்லுரை இது என்று அங்கிருந்தோரிடம் நீட்டினான். கூட்டம் அமைதியாயிற்று. முனியாண்டி இழந்த கண்ணை மீண்டும் பெற்றது போல் மகிழ்ந்தான். இந்த நன்றியை எந்த நாளும் மறக்க மாட்டேன் என்று விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். எச்சிச் கையால் காக்கை வெருட்டாத முனியாண்டி என்ன, திருக்குறளை பத்தாயிரம் புத்தகம் அச்சடித்து இனாமாக எல்லோருக்கும் வழங்குகின்றானாமே! பரவாயில்லை. நல்ல குணம் வந்தவிட்டதுபோல் இருக்கிறது என்று ஊரார் பேசிக் கொண்டனர். உண்மைக் காரணம் முனியாண்டிக்குத்தானே தெரியும்!  13. குழலும் யாழும் கோவிந்த பாகவதரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லை. துளசிராம் பாகவதர், கடோற்கச பாகவதர் ஆகிய பெரும் பெருந்தலைகளையெல்லாம் உருளச் செய்த முத்துக் கறுப்ப பாகவதரின் மாணவர்களுள் முதன்மையானவர் கோவிந்த பாகவதர் என்னும் பெருமை ஒன்றே போதுமானதாக இருந்தது. இதனோடு கணீர் என்று ஒலிக்கும் கண்டமும், குழல், யாழ் முதலான கருவித் திறமும் பெற்றிருந்த அவரை நினைத்துப் பார்க்கவே மற்றை மற்றைப் பாகவதர்களுக்குச் சிம்மக் கனவாக இருந்தது. அவருடன் என்ன காரணம் கொண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அஞ்சினர். ஒரே மேடையில் அவருடன் பங்கெடுக்க வேண்டுமென்றால் அதிர்ச்சி வேட்டுத் தான் பலருக்கு. உண்மைத் திறமைக்கு முன் மண்டியிட்டுத் தானே ஆகவேண்டும். இசை பயிலத் தொடங்கிய காலத்திலிருந்தே கோவிந்த பாகவதருக்கு இசையைப் போல் இனிமை தரும் ஒன்று உலகில் இல்லவே இல்லை. என்னும் அழுத்தமான எண்ணம் உண்டு. இசை எவரையும் இசைவிக்கும்; மக்களுடன் மட்டுமென்ன, கடவுளுடனும் இசைவிக்கும் என்று அடிக்கடி கூறுவார். இசையுலகில் நிகரற்று விளங்கிய பாகவதருக்குத் திரு வள்ளுவர் மேல் கடுத்த கோபம் உண்டு என்ன இருந்தாலும் திருவள்ளுவர் குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று சொல்லியிருக்கக் கூடாது. மழலைச் சொல் கேட்காதவர்களுக்குத் தான் இசை, இன்பம் தருமாம். கேட்டவர்களுக்கு இனிக்காதாம். எவராக இருந்தால்தான் என்ன? எல்லோருக்கும் இன்பம் தருவது இசைதான். மழலை மொழியைச் சில முறைகள் கேட்டு விட்டால் புளித்துப் போகத்தான் செய்யும்! இசை என்றாவது புளிக்குமா? ஆ! தெய்வக் கலை யல்லவா இசை. என்று அழாக் குறையாகப் பேசுவார். அவர் பேசும்போது, இசையே அவருக்கென்று பிறந்தது போலவும், இசையை வளர்க்கவே அவர் பிறந்தது போலவும் அவர் நினைத்துக் கொண்டிருப்பது வெளிப்படாமல் போகாது. பாகவதருக்கு முப்பதாவது வயதும் வந்துவிட்டது. அது வரை அவருக்குத் திருமணம் முடியவில்லை. இசைப் பயிற்சியும், மேடைக் கச்சேரியுமாக இரவு பகல் ஒழியாது இருந்த அவருக்குத் திருமணத்தைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாது போயிற்று. ஆனாலும் பெற்றவர்கள் பெரியவர்கள் இப்படியே இருக்க விடுவார்களா? புதுமங்கலம் புலிக்குட்டிப் பாகவதருக்கு ஒரே மகளாகப் பிறந்தாள் வள்ளியம்மை. அவளுக்கு முன்னும் பின்னும் ஆணோ பெண்ணோ எதுவும் கிடையாது. பாகவதரும் நன்றாகக் கஞ்சம் பிடித்துச் சொத்து நிறையச் சேர்த்து வைத்திருந்தார். மகளுக்கு இசைப் பயிற்சி உண்டாக்கியதுடன், நாரையூர் நட்டுவனாரைக் கொண்டு நடனமும் கற்றுக் கொடுத்திருந்தார். வள்ளி யம்மையின் லாகவத்திற்கும் செல்வச் சிறப்பிற்கும் எவன் தான் கிடைக்கப் போகிறானோ! அவன் நல்ல பேறுதான் செய்திருக்கவேண்டும் என்று தமக்குள்ளே நினைந்து பெருமைப்பட்டுக்கொள்வார். அவருக்கு, கோவிந்த பாகவதருக் காகப் பெண் பார்ப்பதற்கு வந்த ஒன்றே சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்த இன்பமாயிற்று. திருமணத்திற்குக் குறைவு ஏதாவது உண்டா? ஒரே தடபுடலாகத் திருமணம் நடந்தேறியது. மகள் திருமணத்திற்குப்பின் ஒரேயடியாக ஊதிப் போய் விட்டார் புலிக்குட்டிப் பாகவதர். என்ன இருந்தாலும் இசை வேந்தர் கோவிந்த பாகவதர் மாமனார் இல்லையா அவர்? சாதாரணப் பெருமையா? திருமணத்திற்கு முன்பு, ‘மனைவி வந்துவிட்டால் இசை என்னாகுமோ? *------------------------------*-*-என்னும் எண்ணமும் கலக்கமும் கூட கோவிந்த பாகவதருக்கு இருந்ததுண்டு. ஆனால் வள்ளியம்மை - பாகவதர் மகள் - மனைவியாக வாய்த்த பின்பு இரட்டிப்பு இன்பமாக வளர்ந்தது. முப்பது வயதுக்கு மேல் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். நடன ஆசிரியர் வள்ளியம்மைதான்! வீட்டில் ஆடல் பாடல் முழக்கங்களுக்குக் குறைவு இல்லை. உள்ளூரில் இருந்தாலும் இசை; வெளியூரில் இருந்தாலும் இசை. போன போன இடங்களிலெல்லாம் புகழ்மாலை; பணமுடிப்பு; கொள்ளை மகிழ்ச்சியாக இருந்தது பாகவதருக்கு. பாகவதர் தேடிய பணத்தை யெல்லாம் பத்திரமாக வைத்திருந்தார். இன்னும் பணமாக வைத்துக் கொண்டிருக்க அவர் விரும்பவில்லை. அழகான இரட்டை மாடி வீடொன்று கட்டினார். அதன் பக்கமெல்லாம் பூஞ்செடிகளும், வாழை, கமுகு, தென்னை ஆகிய மரங்களும் நட்டு வீட்டைப் பூஞ் சோலை மாளிகை ஆக்கி விட்டார். தோட்டத்தின் நடுவே அகன்ற புல்வெளி சூழக் கொண்ட பூம்பொய்கை ஒன்றை உண்டாக்கினார். கோடைக்கானல் அழகும், குற்றால எழிலும், பிருந்தாவனக் காட்சியும் ஒன்று கூடும் குட்டிக்கலையுலகமாகக் கண்டவர்களுக்குக்காட்சியளித்தது பாகவதர் வீடும் அதன் சூழலும்! இசை மேதை, இசைத் துணையோடு, எழில்மிக்க சூழலிடை இன்ப மாளிகையில் இருந்தால்? ஐயோ! அந்த இன்ப வாழ்வு எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதா? பாகவதருக்குத் திருமணம் நடந்து பத்தாண்டுகள் கடந்து விட்டன. எங்கே இருந்தாலும் சென்றாலும் அவரையும், அவர் மனைவியையும் ஒன்றாகவே காணலாம். அவர்களை இரட்டைப் புறா என்றால் எல்லா வழிகளாலும் பொருந்தக் கூடியதேதான். ஓர் இசை மேடையில் இரட்டைப் புறாக்களும் இருந்தனர். கூட்டம் பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்றிருக்கக் கூடும். பனங்காய்களை அடுக்கி வைத்தால் போலத் தலைகள் தெரிந்தன. தலைகள் என்ன மரத்துப் போயா இருந்தன? ஆடின; அசைந்தன; சுழன்றன; என்னென்னவோ விதவிதமான நாட்டியங்கள ஆடின. தம்மை மறந்துபோய் ஆலாபனத்திலே இருந்தார் பாகவதர். நெடுநேரமாயிற்று. இடைவிடாத மழை முழக்கம் போன்று கூட்டம் கையொலி செய்தது! அதன் ஆர வாரத்திலே உள்ளம் இழந்து ஆடாமல் அசையாமல் இருந்தார் பாகவதர். அவருக்கு முன்னாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் ஓர் அம்மையார். அவரின் மடியில் அழகான - தங்க நிறக் குழந்தை ஒன்று இருந்தது. அது தன் மலர்க் கைகளை ஓயாமல் ஆட்டிக் கொண்டு ஆ! ஆ! என்று ஆரவாரித்தது. அதனைக் கண்டார் பாகவதர். ம்மா! ம்மா! ப்பா! ப்பா! என்று தன் பவழ வாயைத் திறந்து, முத்து நகை நகைத்து, தேன் மழைபோல் மழலை பொழிந்து பூப்போன்ற கன்னங்களிலே சுருக்கங்கள் ஏற, தாமரைக் கையை ஆட்டி அசைத்து நீட்டி வளைத்து இருந்தது குழந்தை. இதனை உளந் தோய்ந்து கண்ட பாகவதர் சிலை யாகிவிட்டார். மேடை என்ற உணர்ச்சி ஏற்படவே நெடு நேரமாயிற்று. அடுத்த பாட்டு என்ன? என்ன? என்று பின்னணி இசைக்காரர்கள் திணற - பிறகு அவர்கள் தூண்ட - அடுத்த பாட்டைத் தொடங்கினார். உள்ளத்தில் ஓர் உணர்ச்சி புகுந்த பின், மற்றொன்றைச் சரியாகச் செய்ய முடியுமா? எப்படியோ கச்சேரி முடிந்தது! இதற்கு முன் குழந்தைகளைப் பாராதவரா பாக வதர்; அதன் அழகிலே தோயாதவரா? மின்வெட்டுப் போன்று சில வேளைகளில் சில உணர்ச்சிகள் அரும்பி விடுகின்றன அல்லவா! பாகவதர் கச்சேரியை முடித்துக் கொண்டு மேடையை விட்டுக் கீழே இறங்கினார். மழலைத் தேன் பொழியும் மலர்க் குழந்தையைத் தம் மெல்லிய கைகளால் எடுத்து மார்புற அணைத்துக் கொண்டார். ம்மா... ம்மா... ப்பா... ப்பா... என்று சொல்லிச் சொல்லிக் கூத்தாடினார். கன்னத்தைக் கிள்ளி விட்டார். கள்வெறி கொண்டவர் போல் களிப்புற்றார். குழந்தை தன் தாயிடம் போவதற்காகத் தன் பிஞ்சுக் கைகளை நீட்டி நீட்டிக் கால்களை உதைத்துத் துள்ளிய பின்னும் தர மன மில்லாமல் தாயினிடம் தந்தார். பிறகும் என்ன? ஊருக்கு வண்டியில் புறப்பட்டாலும், பாகவதரின் வெற்றுடல்தான் சென்றது. வள்ளிக்கு என்ன, காரணம் தெரியாதா? நமக்கொரு குழந்தை இருந்தால்...? என்னும் ஏக்கம் புகுந்துவிட்டது பாகவதர் குடும்பத்திற்கு! ஆரவார மிக்க பாகவதர் வீடு அடங்கிப் போயிற்று. உண்பதிலோ உடுப்பதிலோ உறங்குவதிலோ உலாவுவதிலோ அவருக்குக் கருத்து இல்லை. தித்திக்கும் முக்கனிக்கும் இனியதாம் இசையும் நடனமும் வெறுத்து விட்டன. இது என்ன வாழ்வு? சுவை கெட்ட வாழ்வு? குழந்தையில்லாத வாழ்வு வாழ்வா? மழலை இன்பம் நுகராத செவி செவியா? என்று புண்பட்டார். பொன்னுடையவராக இருக்கலாம், புகழ் உடையவராக இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உடைய வர்களா? மழலைத் தேன் பொழியும் மக்களை உடையவர்கள் அல்லரோ உடையவர்கள். பொறுமையில்லாத அறிவு, இறங்குதுறை இல்லாத பூம்பொய்கை, ஆடையில்லாத அழகு, மணமில்லாத மலர், வெண்மதியில்லாத விண் இவை போல்வது அல்லவா மழலைச் செல்வர் இல்லாத மனை இப்படி எத்தனையோ எண்ணங்கள் பாகவதரைத் தின்றன. அதற்கு முன் இன்பக் கேணியாக இருந்தவை அனைத்தும் துன்பக் கடலாகத் தோன்றித் துன்புறுத்தின. மேடையில் ஏறிப்பாடிய நேரங்களில் மட்டும் அவரால் அமைதியாக இருக்க முடிந்ததே அன்றி, மற்றெங்கும் அமைதியாக இருக்க முடியவில்லை. ஆண்டுகளும் இப்படியே உருண்டு கொண்டுதான் இருந்தன! பாகவதர் இன்ப துன்பம் பற்றி அதற்குக் கவலையுண்டா? அவசியம் நீங்கள் மலேயாவுக்கு வரவேண்டும். உங்கள் இசையைக் கேட்க ஏங்கிக் கிடக்கின்றது மலேயா நாடு; இதற்கு முன் மூன்று நான்கு தடவைகள் முயன்றும் நீங்கள் தட்டிக் கழித்து விட்டீர்கள். எப்படியும் இம்முறை வந்தே தீரவேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். மலேயாவிலிருந்து தமிழ் நாட்டைச் சுற்றிக் காண வந்திருந்த ஒரு கூட்டத்தினர். அன்பர்கள் வேண்டுகோளை எத்தனை முறைகள்தான் மறுக்க முடியும்? சரி! ஒருமுறை வருகின்றேன் என்று ஏற்றுக் கொண்டார் பாகவதர். மாதங்கள் சில சென்றன. பாகவதரும் அவர் குழுவினரும் மலேயா வருவதற்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்து கொண்டு, நேரடியாகவே அழைத்துப் போவதற்கு ஒருவர் வந்து விட்டார். பாகவதர்க்குப் பெருஞ் சங்கடமாக இருந்தது. வற்புறுத்தலுக்காக ஒப்புக் கொண்டிருந்தவர் அவர், இவ்வளவு விரைவில் போக வேண்டியது வரும் என்றோ - அதுவும் தற்பொழுது போக வேண்டியது வரும் என்றோ அவர் நினைக்கவில்லை. பிள்ளை யில்லை என்னும் பெருந்துன்பத்திலே இருந்த பாகவதருக்கு வயிற்றிலே பால் வார்த்தது போல அவர் மனைவி வள்ளியம்மை கருக்கொண்டு ஐந்தாறு மாதங்கள் ஆகியிருந்தன. இந்நிலைமை யில் மலேயா போக மனம் வருமா பாகவதருக்கு? மனிதன் சொல்லைக் காப்பாற்ற வேண்டும்! பாகவதர் விமானத்தில் பறந்தார். மலேயா நாட்டில் இசை மழை பொழிந்தார். அந்த இன்பத்திலே நாடெல்லாம் மூழ்கித் திளைத்தது. இங்கு வரவேண்டும். இங்கு வரவேண்டும் என்று முன்பு திட்டமிடப் படாத புதுப்புது இடங்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. பாராட்டு விழாக்களுக்கும் விருந்துகளுக்கும் குறைவில்லை. என்ன இருந்தால்தான் என்ன? மற்றவர்களை யெல்லாம் கொண்டாட்டத்தில் ஆழ்த்திய பாகவதர் மட்டும் திண்டாட் டத்தில் தத்தளித்தார். வாரம் தவறாமல் வள்ளியம்மைக்கும், பிள்ளை பிறந்து விட்டதா? சுகமாக இருக்கிறதா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கடிதம் வந்த அன்று அவர் இசை மேடையே தனி முழக்கம் தான்! அன்று ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கிலே இசைவிருந்துடன், சுவை விருந்தும் பாகவதர் தம் செலவிலே வந்தவர்களுக்கெல்லாம் செய்தார் என்றால் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கு ஒன்று தானே காரணம்? பாகவதருக்கு இரவுப் பொழுதில் தூக்கம் வருவதே இல்லை! பகலிலும் கற்பனைதான். பையன் இப்படி இருப்பான் இப்படி இருப்பான் என்று அவராகவே கற்பனை செய்து கொண்டார். அவசியம் புகைப்படம் ஒன்று எடுத்து அனுப்பி வை என்று வள்ளியம்மைக்குக் கடிதம் எழுதினார், அதெல்லாம் முடியாது; இங்கு வரும் வரை பொறுத்திருக்க முடியாதோ? என்று கேலிச் சிரிப்புடன் வந்தது வள்ளியம்மை கடிதம். என்னடா! தொல்லை! திரும்ப முடியவில்லையே என்று ஏங்கினார். திட்டங்கள் முடியவேண்டுமே! மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. கனவிலெல்லாம் குழந்தையின் மழலை மொழியாகவே கூறினார். உடனிருந்தவர்க ளெல்லாம் பாகவதர் ஐயா உங்கள் மழலைப் பேச்சே தனியழகு! ஆ ஆ! இப்படியா இரவெல்லாம் உளறுவது? ப்பா ப்பா! ம்மா ம்மா! என்று கேலி செய்தனர். சும்மா! என் பையன் நினைவு! என்று சமாளித்தார். என்ன இந்த வள்ளியம்மாள், பையன் சுகத்தினை அடிக்கடி எழுத வேண்டாமோ? அதைப் பார்க்கிலும் என்னதான் வேலையாம்! என்று வருந்தினார். அவளுக்கென்ன மகனோடே இருக்கிறாள் இல்லையா? அந்த மகிழ்ச்சியிலே இப்பொழுதெல்லாம் என்னை நினைக்க முடியுமா? என் தலைவிதி - நாற்பது கடந்த பின்பு பிறந்தும் அவனை இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை என்று தலையில் தலையில் அடித்துக் கொண்டார். எங்கெங்கு கச்சேரி இருந்தாலும் சரி, இனி ஒருநாளும் இருக்கவே முடியாது! அடுத்த கச்சேரி என் வீட்டில்தான் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டார் பாகவதர். நீங்களெல்லாம் குழந்தை பெற்றவர்கள் தானா? நான் குழந்தையைப் பாராமல் வரமுடியாது என்று எவ்வளவோ சொல்லியும் கண்டிப்பாய் வரவேண்டும் விரைவில் அனுப்பி விடுகிறோம். உங்கள் ஆவலைத் தடைபோட்டுக் கெடுத்து விடவா செய்வோம். என்று ஒழுங்காகப் பேசிவிட்டு ஊர் ஊராய்ச் சுற்றியலையச் செய்து கொண்டிருக்கிறீர்களே, உங்களுக்கு உணர்ச்சி இல்லையா? உங்கள் உடம்பில் உதிரம் ஓடவில்லை! உங்களுக்குப் பிள்ளை பிறந்தால் அதனை எத்தனை மாதங்கள் கழித்துத்தான் பார்ப்பீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமோ! என்ன வேண்டு மானாலும் திட்டுங்கள் கவலையில்லை. ஒழுங்கு முறை அறிந்த வர்கள், உணர்ச்சியுள்ளவர்கள் திட்டுவதைப் பற்றித்தான் எனக்குக் கவலை! நீங்கள் பிறர் நலத்தை நினைப்பவர்களா? எனக்கு வரவேண்டிய பணம் ஏழெட்டு ஆயிரங்களுக்கு மேல் இருக்கும். அதனைப் பொருட்டாக நினைத்துக் கொண்டு உங்கள் தஞ்சமாக மலேயாவில் கிடக்கப் போவதில்லை. ‘என் மகன் மலர் முகத்தைக் காண்பது நூறாயிரம் ரூபா! அவன் மழலைச்சொல் ஒன்று கேட்பது நூறு நூறாயிரம் ரூபா! தொண்டை வறளக் கத்தின காசைத் தரவேண்டுமானால் அனுப்புங்கள்! இல்லாவிட்டால் நன்றாக இருங்கள்! என்னை விட்டாலே போதும் அதுதான் செய்ய மாட்டீர்களே! என்மேல் அன்பா செலுத்துகிறீர்கள்! ஐயோ, அன்பின் பெயரால் கொன்று தின்னுகிறீர்கள்! உங்களுக்கு வணக்கம். என்று கடிதம் ஒன்றைத் தம்மை அழைத்துச் சென்ற கூட்டத்தினருக்கு எழுதிவைத்து விட்டு, விமானத்தில் பறந்தார் பாகவதர். விமானத்தில் கூட அவருக்கு நடக்க ஆசை! விரைவாக ஊருக்குப் போக வேண்டும் என்றுதான்! ஆனால், எழவிடாது கட்டி வைத்து உட்காரச் செய்திருந்தது, நடக்க விடாது செய்துவிட்டது. ஆனால் புகைவண்டியில் வரும் போது மட்டும் நடந்து கொண்டார்! கொஞ்சும் மழலையைக் குளிரப் பருக வேண்டுமல்லவா! பாகவதர், வீட்டுக்கு நடந்தா வந்தார்! ஒரே ஓட்டம்! வள்ளி! வள்ளி!! பயலை எங்கே! எங்கே பயலை! பொங்கிப் போய்க் கேட்டார். அத்தான் என்று தயங்கினாள் வள்ளி. என்ன இப்படி அசடாக இருக்கிறாய்! மண்ணா? மரமா? பயலை எங்கே? பார்க்க ஆசை இருக்காதா? விளையாடவா செய்கிறாய்? - சிரிப்பு கோபமாக மாறிற்று. அத்தான் பையன் பிறக்கு முன்னாகவே பிறந்து விட்டானா? பிறந்து விட்டானா? என்று நீங்கள் எழுதி எழுதிக் குவித்த கடிதங்களையும், அவனுக்கு இன்னின்ன மாதிரி உணவு தா, துணி மணி போடு, பேசப் பழக்கு என்று ஒவ்வொன்றாக எழுதிக் காட்டியதையும் பார்த் பார்த்துவிட்டு...ஆவலால் இடைமறித்தார் பாகவதர். ஆண்குழந்தை பிறந்ததாக எழுதினேன். ஆனால் அது பிறக்கும் போதே செத்துப்பிறந்தது. அதை எழுதி உங்களை அயல் நாட்டிலே அழப்படுத்த வேண்டுமா?... வள்ளியம்மை வாய் அமைதியாயிற்று. பிறந்ததாக எழுதினேன். அது செத்துப் பிறந்தது - ஒரே ஒரு முறை வாயால் கூறினார் பாகவதர். கற்சிலையாய் உட்கார்ந்து விட்டார். அவர் உள்ளக் குமுறலை இதழ்கள் பறையடித்துக் காட்டின. மூக்கு, வெதும்பும் மூச்சால் காட்டியது; கண்கள், பாவையை முழுக்காட்டிக் காட்டின. கன்னங்கள், கோட்டுப் படம் வரைந்து தெளிவித்தன. உள்ளம், எரிமலை யாகிக் காட்டிற்று. ஆம்! அவர் வாயினின்று பேச்சுவரத் திங்கள் சில ஆயின. இந்தத் துன்பப் பொழுதின் இடையே ஒரு மின்னொளி தோன்றியது. அது இதுதான். எங்கும் தேடிக் கிடைக்க முடியாத இன்பம் குழந்தையினிடம் அமைந்து கிடக்கிறது. இதனை உணர்ந்து தெளிவாக எழுதி வைத்தவர் திரு வள்ளுவர். அவர் உரையே பொய்யாவுரை. gகவதர் மனநிலை பலருக்குக் கவலையளித்தது. வȪJ மேடைக்கு அழைத்தனர். ஆனால் பாகவதரோ அசையவில்லை. மழலை இசை கேட்டால் அன்றிக், குழல் யாழ் இசை செய்யேன் என்று உறுதியாக இருந்தார். இதனை வெளியே சொல்லிக் காட்டலாமா? பாகவதர் எண்ணம் பழுதுபட்டு விடவில்லை. அடுத்த ஆண்டே அவர் வீட்டில் ஒரு கச்சேரி நடந்தது! ஏன்? அவருக்குக் குழந்தை பிறந்து விட்டது அல்லவா! கோவிந்த பாகவதர் இப்பொழுதெல்லாம் திருவள்ளுவரைத் திட்டுவது இல்லை. திருவள்ளுவர் பெரும் இசைப்புலவர்; இல்லை யென்றால், பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் என்று கூற முடியுமா? இசைப்புலவனே இசை நுணுக்கம் அறிவான் என்று கூறி மகிழ்வார். எந்த மேடைக்குச் சென்றாலும். குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்னும் குறளைப் பாடிவிட்டுத்தான் கச்சேரி தொடங்குவார். பாகவதர் வெளியிடங்களிலும் நிறைய நிறையக் கச்சேரி செய்தார்! வீட்டிலும் தான் நிறையக் கச்சேரி செய்தார்! குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்  14. வகுத்தலும் தொகுத்தலும் முதலாளி என்றால் ஆண்மறை நாட்டு வட்டாரத்தில் முத்தப்பர் ஒருவரைத்தான் குறிக்கும். முத்தப்பர் பெருஞ் செல்வர்; எப்பக்கம் நோக்கினாலும் முத்தப்பருடைய நன் செய், புன்செய், தோட்டம் துரவுகளே காணப்பெறும். வேறொருவருக்கு உரியனவாக அவை காணப்பெற மாட்டா. முத்தப்பர் பரம்பரையினர் இன்று நேற்றைச் செல்வர்கள் அல்லர். பத்துப் பதினைந்து தலைமுறைகளாகவே பணக்கார ராக இருந்த பெருமை அவர்கட்கு உண்டு. குணக்குன்றம் என்றால் முத்தப்பருக்குத் தான் தகும் என்று சில குழந்தைகள் முதல் அனைவரும் கூறுவர். அவரைப் பற்றியும் அவர் கொடைச்சிறப்பு, குணமேம்பாடு பற்றியும் பாட்டிகளும் தாத்தாக்களும் தங்கள் பேரன் பேத்திகளுக்குக் கதை கதையாகக் கூறுவர். இன்னும் கூறுவானேன்; ஆண்மறை நாட்டில் ஒரு புலவர் மட்டும் இருந்திருந்தால் ஒரு புராணமே பாடியிருப்பார். அப்படிப் பாடியிருந்தாலும் கற்பனையாக அவர் பாட வேண்டியது இல்லை. உண்மையை உண்மையாகக் கூறினாலே போதும்! அவர் செயலிலே அவ்வளவு சிறப்பு உண்டு. முத்தப்பர் செல்வச் செருக்கு அணுவளவும் இல்லாதவர். அவர் உடல் சட்டை கண்டு அறியாது. மழையோ வெயிலோ அவரைத் துன்புறுத்தி அறியா. காலிலே செருப்போ கையிலே குடையோ இல்லாமல் பகற் பொழுதெல்லாம் காட்டிலும் கரையிலும் சுற்றியலைவார். எங்கு நிழல் கண்டாலும் படுத்து விடுவார். பிறகு எத்தனையோ மணி நேரம் ஓடித்தான் இந்த உலகத்தை ஏறிட்டுப் பார்ப்பார். அவ்வளவு உறக்க சீலர். வீட்டிலே முத்தப்பர் இருந்தால் போதும்; குழந்தைகள் பாடு கொண்டாட்டம் தான். ஒன்று தோளிலே ஏறும்; மற்றொன்று மடியிலே குந்தும்; வேறொன்று தொந்தியிலே சாயும்; இன்னொன்று முதுகிலே தொங்கும்; பிறிதொன்று தலையைப் பிடித்துக் கொண்டு கையாகிய ஏணிப்படி வழி ஏறும்; சுட்டித்தனமான ஒன்று அவர்மேல் சறுக்கு விளையாட்டு விளையாடும். ஆமாம்; ஆரம்பப் பள்ளி ஒன்று வைத்து நடத்துவதற்குத் தக்கபடி அவர்கள் வீட்டிலே பிள்ளைகள் உண்டு. பாகப்பிரிவினை என்றும் செய்யக் கூடாது என்று உறுதிப்பத்திரம் (உயில்) எழுதிவைத்திருந்த அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் எட்டுப்பேர் பத்துப் பேர்களா? அடுப்பு மட்டும் பதின்மூன்று உண்டு! மிடாப்பானை, தாழிப்பானை, சட்டி, உலைமூடி இவற்றைப் பார்த்தாலே ஒரு குயவருக்கு நாள் தவறாமல் வேலை தந்திருக்க வேண்டும் என்று தோன்றும். அது போலவே வெண்கலப் பாத்திரங்களுக்கு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்ட குடும்பம் என்றே தோன்றும்; அதனைப் பெருங்குடும்பம் என்று சொல்வதைப் பார்க்கிலும் பெருங் குணம் படைத்த பெருங்குடும்பம் என்பதே மிகப் பொருந்தும். வைதாலும் சரி, வாழ்த்தினாலும் சரி முத்தப்பருக்கு ஒன்றுதான். எதற்கும் சிரிப்பதுதான் அவர் பதில். சிரிப்பும் வெடிச் சிரிப்பாக இருக்கும். பெரிய உரலொன்றைக் கட கட வென்று ஆட்டினால் என்ன கிடு கிடுப்பு ஏற்படுமோ அவ்வளவு கிடு கிடுப்புண்டு சிரிப்பில். உடல் குலுங்கச் சிரிக்கும் அவர் சிரிப்பிலே தொப்பை ஏறி இறங்கித் திருவிளையாடல் புரிவது பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கத் தவறாது. அவரைச் சூழவும் பத்துப்பேர்களாவது இல்லாவிட்டால் அவருக்கு என்னவோபோல் இருக்கும் அவனே இவனே என்று அழைத்து வைத்தாவது பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். உட்காருபவர்களுக்கும் கொள்ளை ஆசையாக இருக்குமே அன்றித் துன்பமாக இருக்காது. முத்தப்பர் அதிகமாகப் பேசமாட்டார்; படிப்பும் அரை குறைதான்; ஏதோ, கையெழுத்துப் போடும் அளவுடன் அவர் படிப்புச்சரி என்று சொல்லலாம். ஆனால் பக்கத்திலிருந்து எவராவது பேசினால் போதும்; சலிப்புச் சிறிதும் இன்றிக் கேட்பார். உளறுவாயனுக்குக் கூட இன்னும் கொஞ்ச நேரம் இவரிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்னும் ஆவல் எழும்பாமல் இருக்காது. கதை சொல்லுபவன் கிடைத்து விட்டானா - அதிலும் புராண இதிகாசக் கதை சொல்லுபவன் கிடைத்து விட்டானா - விடவேமாட்டார். வேறென்ன நல்லதங்காள் கதையை மட்டும் நாலாயிரம் தடவைகளாவது கேட்டிருப்பார் என்றால் ஐந்து பத்துத் தடவைகள் கூடலாம் குறையலாம் அவ்வளவுதான். முத்தப்பர் எந்த வேலைக்கும் போக மாட்டார். வேலைக் காரர்களை மேற்பார்க்கவும் மாட்டார். அதற்கெல்லாம் யார் யாரோ இருந்தார்கள். அது தானாக நடந்து வந்தது. விளைவுக்கும் குறைவு இல்லை. வசதிக்கும் குறைச்சல் இல்லை. சாதாரணமாக வெயில் பொழுதில் மரத்தடியில் படுத்திருப்பார் முத்தப்பர். அந்த வழியாகப் பத்துப்பேர் இல்லை. இருபது முப்பது பேர்கள் போனாலும் சரி, வாங்க வாங்க என்று வரவேற்பார். ஆமாம் என்று சொல்லி விட்டு அவர்கள் போகவும் விடமாட்டார். வாங்க; உட்காருங்க என்பர். அவசரமாகப் போகவேண்டும் என்று வந்தவர்கள் சொன்னாலும் நல்ல அவசரம்; பிறக்கும்போது கூடவா பிறந்தது அவசரம்? வாங்கய்யா! எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? இப்படிக் கேள்விமேல் கேள்வி கேட்பார். வழிப்போக்கர்கள் என்ன செய்ய முடியும்? நாடறிந்த முத்தப்பர் அல்லவா வலிய அழைத்துப் பேசுகிறார்; போக முடியுமா? நின்று பேசுவர்; உட்காருவர்; அதற்குள் ஏதேதோ பண்டங்கள் இட்டிலி - தோசை - வடை - முறுக்கு எல்லாம் குவியும் - எல்லார் வாயும் மெல்லும். முத்தப்பர் வாய்மட்டும் சிறிதும் அசை போடாது. அடுத்தவர்கள் தின்பதைக் காண்பதிலே முத்தப்பருக்குக் கொள்ளை மகிழ்ச்சி! இப்படியும் ஆட்கள் உலகில் உண்டா? என்று முத்தப்பரை ஒரு முறை பார்த்தவர்கள் கூடப் பேசாமல் போவது இல்லை. எத்தனை முறைகள் வந்து போனாலும் அவர்களை அடையாளமாவது அறிந்து கொள்வாரா முத்தப்பர்? நினைவாவது ஒன்றாவது? பெயர் பெற்ற மறதிக்காரர் அவர். உம் பெயர் என்ன? என்று திடுமென்று அவரை எவரேனும் கேட்டுவிட்டால் என் பெயர் என் பெயர் என்று திண்டாடித் திணறிக்கொண்டு இருப்பாரே அன்றி உடனே சொல்லிவிட மாட்டார். அவ்வளவு மறதி. வைத்தது வைத்ததுதான்; எடுத்தது எடுத்ததுதான். மறதிக்கு உலகப் பரிசு ஒன்று தருவதாக இருந்தால் அது முத்தப்பருக்கே உரியது என்று சொல்லி விடலாம். இரவுப் பொழுதில் பத்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புவார் முத்தப்பர்; சத்திரம், சாவடி, மடம் எங்கெங்கு உண்டோ அங்கங்கெல்லாம் ஏறி இறங்குவார். ஏய், எழுந் திருய்யா எந்த ஊருய்யா? என்று விசாரிப்பார். ஏய்யா, சாப்பிட்டாயா ஐயா? என்பார். சாப்பிட்டேன் என்றால்தான் விட்டார். இல்லை என்றால், ஏன்யா, நீ ஒரு மனிதன் தானா? இந்த ஊரில் எவனாவது மனிதன் இருக்கிறான் என்றாவது நினைத்தாயா ஐயா? ஏய்யா, பட்டினி பசியாகவா படுப்பார்கள்; வாய்யா எழுந்து என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே வீட்டிற்கு வந்துவிடுவார். இந்த இருபதாம் நூற்றாண்டிலே - காசு வாங்கிக் கொண்டு சோறு போடு வதிலேகூடப் பாதிக் கல்லையும் மண்ணையும் கலந்து போடும் சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் காலத்திலே - ஏழைக் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கட்டும். பசித் துயர் போகட்டும் என்று இனாமாக அரசாங்கமும் அயல்நாடுகளும் வழங்கும் உணவையும் - பால் பொடியையும் - பண்டங்களையும் ஒழுங்காகக் கொடுக்காமல் வயிற்றில் அடித்துச் சுரண்டித் தின்னும் கயவர்கள் மலிந்துள்ள காலத்திலே - முத்தப்பர் செயல் ஆ ஆ! தெய்வச் செயல் என்று வாழ்த்துவதற்கு என்ன ஐயம்! வள்ளலாம் முத்தப்பரைத் தேடி வந்தவர்கள் பத்து வகைக் கறியும் பாங்காய்ச் சமைத்துத் - தாழிட்டு இறக்கிப் பாயச பண்டங்களுடன் சாப்பிடுவார்கள். உடனிருந்து ஒருநாளும் உண்டறியார் முத்தப்பர். இந்த விருந்துப் பண்டங்கள் - வீட்டுப் பண்டங்கள் எதனையும் கை தொட்டு அறியார். ஐம்பது நூறுபேர்கள் இருந்து இனிப்பு, காரம், காபி சாப்பிடுவார்கள் - முத்தப்பர் செலவிலே! ஆனாலும் ஒரு சிறு பங்கும் அதில் அவர் எடுத்துக்கொள்வது இல்லை. பக்கத்திலிருந்து பரிமாறியதுடன் சரி. முத்தப்பர் செயல் விருந்தாளிகளுக் கெல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஏன்? வேதனையாகக் கூட இருக்கும். முத்தப்பருக்கு மட்டும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவரும் வேதனைப்பட்ட காலம் உண்டு. மற்றவர்களெல்லாம் அறுசுவையுணவும் பெரு விருப்புடன் அருந்த, நமக்கு மட்டும் எல்லா வாய்ப்புக்களும் இருந்தும் உடனிருந்து உண்ணமுடியவில்லையே என்று ஆனால் வேதனைப் பட்டுப்பட்டு உள்ளம் மரத்துப் போய் விட்டது. அதன் பயன் உவகையாக மாறியது. அடுத்தவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்லச் சாப்பாட்டைச் சரித்துக்கொண்டு இன்பமுறும் அவரை நினைத்துத்தான் திருவள்ளுவர் பிறருக்கு ஈவதை ஈத்துவக்கும் இன்பம் என்று கூறினாரோ என்று குறள் கற்றவர்கள் எண்ணிக் கொள்வது உண்டு. ஆனால் முத்தப்பர் எண்ணுவதோ அதனை அன்று. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. என்பதையே எண்ணிக் கொள்வார். கோடிக்கணக்கான செல்வங்களைக் குவித்து வைத்திருந்தாலும் இறைவன் வகுத்த விதிமுறைமை இருந்தால் அன்றி எதனையும் அனுபவிக்க இயலாது என்னும் பொருளுடைய இக்குறளைக் கேட்டறிந்த நாள் தொட்டே தானுண்டு இன்பம் அடையாவிட்டாலும். பிறருக்கு ஈத்து உவக்கும் இன்பமாவது அடைய உறுதி கொண்டார். அப்படியே நடத்திக் காட்டினார். அவர் வேறு என்னதான் செய்ய முடியும்? கோடி கோடியாகச் சேர்த்து வைத்திருந்த செல்வர் முத்தப்பர் கேப்பைக் கூழ் கோதுமைக் கஞ்சி அல்லாமல் வேறெதுவும் சாப்பிட முடியாத நிலைமையில் இருந்தார். ஏனென்றால் அவர் ஓர் நீரிழிவு நோய்க்காரர். வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.  15. உள்ளதும் இல்லதும் ஊருக்குப் போனவர் இங்கு இருக்கிறேன் இப்படி இருக்கிறேன் என்றாவது எழுத வேண்டாமா? இருக்கும் இடம் கூடத் தெரியவில்லையே என்று நம்பியின் திருமணத்தின் போது எண்ணினேன். நீங்கள்தான் எங்களையெல்லாம் மறந்து விட்டீர்களே என்று அன்பும் கவலையும் இணையக் கூறினார் சிந்துபட்டிச் சிவசாமி. என்ன செய்வது? புதிய இடம்; வேலையும் அதிகம்; எழுத மறந்துவிட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று புன்முறுவலுடன் பேசினார் சிவசாமியின் அன்பர் அம்பலவாணர். அம்பலவாணரும் சிந்துபட்டிக்காரர்தான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார். அங்குப் போனபின் அவருக்கு நல்ல வாய்ப்பு. சிந்துபட்டியில் நிலபுலம் தோட்டம் துரவு எதுவுமில்லாது இருந்த அவர் சென்னைக்குப் போனபின்பு, நல்ல துட்டுக்காரர் ஆகிவிட்டார். மதுரைக்கு வணிக காரியமாக வந்த அவர் சிந்துபட்டிக்கு - பிறந்து வளர்ந்த ஊர் அல்லவா - வந்தார். சிந்துபட்டியிலே இருக்கும்போது அம்பலவாணர் ஏழையாக இருந்தாலும்கூட ஊரார் மதிக்க, பெரிய மனிதர் என்று போற்ற வாழ்ந்தவர். அவர் பல ஆண்டுக்காலம் கழித்து வந்திருந்தது ஊராருக்குப் பேரின்பமாக இருந்தது. சிவசாமி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. என் வீட்டிலே விருந்து முடித்துக் கொண்டுதான் வேறெங்கும் போகவேண்டும் என்று அம்பல வாணரைத் தடுத்து நிறுத்திவிட்டார் சிவசாமி. விருந்து முடித்துக்கொண்டு வெற்றிலை பாக்கு மென்றுகொண்டு பேசினர். மூத்தது மோளை; இளையது காளை என்பார்கள். ஆனால் எங்கள் வீட்டைப் பொறுத்த அளவில் மூத்ததுதான் காளை; இளையது மோளை. பிள்ளையொன்று இருந்தால் நம்பியைப்போல இருக்கவேண்டும். அப்பன் வாக்கு அருள் வாக்கு என்று நினைப்பவன் - மகிழ்ச்சி பெருக்கெடுக்கப் பேசினார் சிவசாமி. நதிக்குடி நாராயணன் மகளை உனக்குப் பார்த்திருக்கிறேன். ஒரே பெண்-நிலபுலம், பொன் பொருள், பட்டப் படிப்பு ஆகியவை எதற்கும் குறைவு இல்லை என்றேன். போங்கப்பா போங்கள்; இவற்றையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இவள் தான் பெண்; கட்டு தாலியை என்றால் மாட்டேன் என்று மறுத்து விடுவேனா? நீங்கள் என்ன உங்கள் மகனுக்குக் கேடா செய்துவிடுவீர்கள்? என்று சொல்லி, மங்கலமாக மணமுடித்துக் கொண்டான். அவனுக்கு என்ன அரசபோகம்தான். என்ன குறை? தகப்பன் வீட்டிலே சில நாள்; மாமன் வீட்டிலே சிலநாள்; எங்கும் விருந்து, கொண்டாட்டம். பெண்ணாக வாய்த்தாளே நாகம்மாள் அவள் கையிலே கரிப்பட்டிருக்குமா? காபியாவது போடத் தெரியுமா? செல்வத்திலே வளர்ந்தபிள்ளை. பாலிலே பல் தேய்த்து பன்னீரிலே குளிப்பார்கள் என்று பேச்சுக்குத்தான் சொல்லிக் கொள்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையாக இருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை என்பதை இவள் வந்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இவள் படிப்பிற்கும் பணத்திற்கும் வேலையுமா பார்க்க வேண்டும்? வீட்டிலே இருந்தால் போதாதா? அவளை மருமகளாகப் பெற நான் உண்மையாகவே புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சு அவருக்கு இருந்த மகிழ்ச்சியைக் காட்டத் தவறவில்லை. பேச்சின் இடையே தம்பித் துரைக்கு ஏதாவது ஏற்பாடு- என்று கேட்டு வைத்தார் அம்பலவாணர். அந்தக் கழுதை பேச்சு வேண்டாம்; தகப்பன் சொல் கேளாத தடிக் கழுதை; நான் எழுபது ரூபா (எழுபதாயிரம்) வரக்கூடிய ஒருத்தியை அவனுக்குப் பார்த்திருந்தேன். பணம், படிப்பு, பதவி, பகட்டு இவையெல்லாம் பண்புக்குப் பின்பு தானாம். பண்பு இல்லாத ஒருத்தி கோடி கோடியாகக் கொண்டு வந்தாலும் எனக்கு வேண்டாம்; பணத்திற்காக அவளைக் கட்டிக் கொண்டு மாரடிக்க முடியாது. படிப்புக்காகக் கட்டிக் கொண்டு ஒப்பாரிவைக்க முடியாது. இப்படிக் கொழுத்துப் போய்ப் பேசினான்:- என்னிடமே பேசினான். அறிவு கெட்ட நாயே, மானம் கொஞ்சமாவது இருந்தால் என் முகத்தில் விழிக்காதே. எந்த நாயையும் கட்டிக்கொண்டு நாசமாகப் போ. என்று அனுப்பி விட்டேன். அன்று அவன் முகத்திலே விழித்ததுதான். என் சொத்தில் அவனுக்குச் சல்லிக் காசும் தரமுடியாது என்று சொல்லி விட்டேன். நான் வேண்டாதவன் ஆகும்போது என் சொத்து மட்டும் வேண்டியது ஆகிவிடுமா? - சிவசாமி துடிதுடிப்புடன் பேசினார். உலகத்தில் எல்லாரும் ஒன்று போலவா இருக்கிறார்கள். உலகம் பலவிதம் தானே. காலம் வரும்போது எல்லாம் சரியாகிவிடும். தம்பி காரியத்தில் நீங்கள் சொல்லியது உங்களுக்குச் சரியானது என்று பட்டாலும் தம்பி மீதும் குற்றமில்லை. நல்ல பிள்ளைதான் அவனும். ஏதோ இந்தவொரு காரணம் கொண்டு வெருட்டியடிப்பது சரியானதா? என்ன இருந்தாலும் தந்தை மகன் உரிமை மாறக்கூடியதா? என்று சமாதானம் கூறினார். ஆனால் சிவசாமியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர் சொல்லும் வேத மொழியே பணம், பணம் என்பதுதானே. ஏழ்மைச் சூறாவளிக்கு ஆட் பட்டுத் தத்தளித்த அவர் பணத் தென்றலில் இன்புறுகிறார் என்றால் பேசமாட்டாரா? நம்பி நாகம்மைமீது மட்டற்ற அன்பு கொண்டிருந்தான். இப்படி ஒரு மனைவி கிடைப்பாளா எனக்கு என்னும் எண்ணம் ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால் மனைவியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடமாட்டானா? வீட்டில் நாகம்மை இட்டதுதான் சட்டம். வைத்ததுதான் வழி. தட்டிக் கேட்க யாரும் இல்லை. தட்டிக் கேட்டிருக்கவும் முடியாது. நாகம்மை சிவசாமியின் வீட்டில் ஒரு தனி ராணி யாகவே ஆட்சி நடத்தினாள். சிவசாமியும் நம்பியும் எடு பிடியாள்களாக ஆக்கப்பட்டார்களே அன்றி அரசராகவோ அமைச்சராகவோ இருக்கவில்லை. அதுவும் வரவரப் பழக்கமாகிவிட்டது. நாகம்மாள் பணத்தை வாரி இறைத்தாள்; அவள் கொண்டு வந்தது அல்லவா! வீட்டு வேலைக்கு இரண்டு மூன்று ஆட்களை வைத்துக் கொண்டாள். ஆக்கி வைத்தால் கூடப் போதாது. அதனை எடுத்து இலையில் போடுவதற்கும் ஆள்வேண்டும். நாள் ஒன்றுக்கு மூன்று தடவைகளாவது உடை மாற்றுவாள். ஒரு தரம் வெளியே போய்வந்த கோலத்தோடு நவநாகரிகப் பெண்மணி திரும்பவும் தெருவில் போகலாமா? செலவினங்கள் ஏறிச் சென்றன. புதிதாகக் கடைக்கு வந்து சேர்ந்த பொருள்கள் எவையாக இருந்தாலும் நாகம்மை வீட்டில் இருக்கத் தவறாது. நாள்தோறும் அலைந்து தேடிப் புதிய சரக்குகளைச் சேர்ப்பதிலே பெரும்பொழுதைத் தொலைத்தாள். ஒருநாள் சென்று விட்டால் பழைய பொருள் ஆகிவிடாதா? மற்றவர்கள் வியப்புடன் பார்ப்பார்களா? அவளுக்கு அடுத்தவர்கள் வியந்து பார்த்துப் புகழவேண்டும் என்பது நோக்கமாக இருந்ததன்றி அது பயன்படவேண்டும் என்பது பற்றிச் சிறிதும் கவலை இல்லையே! அம்மா, பொழுது போக்குக் கழகத்திற்குப் போக நேரமாகவில்லையா? என்று ஒருநாள் நாகம்மையின் உயிர்த் தோழிகள் சிலர் அழைத்தனர். நாகம்மையின் மாமி உள்ளே இருமிக் கொண்டு படுத்திருந்தாள். வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது என்றுதான் பெயர். இராத்திரியெல்லாம் ஒரே புகைச்சல்; காறிக் காறித் தொண்டையும் புண்ணாகி விட்டது. வெந்நீர் வேண்டுமா என்று கேட்பதற்குக்கூட நாதியில்லை என்று நோய்த் தொல்லைக்கும் முதுமைத் தளர்வுக்கும் ஆட்பட்ட அவள் புலம்பினாள். நாலுபேர் முன்னால் தன்னைப் பற்றி உரைத்ததை நாகம்மையால் பொறுத்துக் கொள்ள முடியுமா? உனக்குத் தொண்டை வலி இருந்தால் அந்த வேதனையிலே மற்றவர்களுக்கு மண்டை வலி வரவைத்து விடுவாய். நான் என்ன உன்வீட்டு வேலைக்காரியா? அல்லது மருத்துவத் தாதியா? ஒழுங்காக இருக்க முடியுமானால் இரு; இல்லாவிடில் உனக்கு வருவதுபோல் பார்த்துக் கொள். இங்கே ஏசிப் பேசிக்கொண்டு இருக்க முடியாது - நாகம்மை விரைத்துக்கொண்டு போய் விட்டாள். மாமிக்கும் மருமகளுக்கும் அதுமுதல் பேச்சே இல்லை. மாமன் சிவசாமியும் இதனைக் கேட்டார். அதற்கு முன்பே சிலசில காரியங்களிலும், நடத்தையிலும் பேச்சிலும் நாகம்மை மேல் வெறுப்புக் கொண்டிருந்த அவருக்கு வேதனை மிகச் செய்தது இந்த நிகழ்ச்சி. நம்பிக்குச் சூடு வருமாறு நாகம்மை பற்றிச் சொல்லிப் பார்த்தார். நம்பிக்கு சிறிய அசைவும் இல்லை. சிறிது அசைந்து கொடுத்தாலும் அங்கு குடியிருக்க முடியாது. இன்னும் என்ன, சிறிது முணுமுணுக்கத் தொடங்கினாலும் உனக்கு நான் மனைவி இல்லை என்று கூறவும் தவறமாட்டாள் நாகம்மை என்பதை நம்பி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். பிறகும் அவனால் மாட்டிக் கொள்ள முடியுமா? நாகம்மை கொண்டு வந்த சொத்துகள் கரைந்தன. கையிருப்புப் போனவுடன் கழுத்தில் கிடந்தவையும் கடையை எட்டிப் பார்த்தன. எவ்வளவு நாட்களுக்குத் தான் தாய் வீட்டி லிருந்து வண்டிச் சரக்குகள் வந்து கொண்டிருக்கும்? செல்வத்தை வளர்த்துக் கொண்டு, மேலும் மேலும் முன்னேறிக் கொண்டு நல்ல குடித்தனமாக நடத்திக் கொண்டு இருந்தால் உதவி தொடர்ந்து கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். நாகம்மை தான் பெயருக்குச் சரியான குணம் உடையவளாக இருந்தாளே! பெற்ற வர்கள் வண்டி வண்டியாக அனுப்பி வைக்கவில்லை என்றவுடன் அவள் தந்த வசைமாரிக்கு அளவில்லை; வண்டி வண்டியாக அனுப்பிக் கொண்டிருந்தாள் என்று சொல்லலாம். அவர்களும் விடுவார்களா? இவளைப் பெற்றெடுத்தவர்களல்லவா? பதிலுக்குப் பதில் ஏச்சுத்தான்; பேச்சுத்தான். எந்தவொரு வேலைக்காரனும், வேலைக்காரியும் நாகம்மை வீட்டில் ஒருவார அளவுக்குமேல் இருக்க முடியவில்லை. துட்டு இருக்கும்போதே எரிந்து விழுவதை இயல்பாகக் கொண்ட அவள் துட்டும் போனபின் எப்படி இருப்பாள். யார் தான் அவள் அதிகாரத்திற்குப் பயந்து பணிந்து வாலாட்டிக் கொண்டிருப்பார்கள். எப்படியும் தொலைகிறாள், அவள் இயல்பு அது என்று இருந்தவர்களும் மாதாமாதாம் சம்பளம் வரவில்லை, வரவழியும் இல்லை என்று அறிந்தபின் சொல்லிக் கொள்ளாமல் கூட வரவேண்டிய சம்பள அளவுக்குமேல் துணிமணி பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு போய்விட்டனர். இந்த நிகழ்ச்சிகள் நாகம்மைக்குப் பேயறைந்தால் போல் இருந்தன. வேலைக்காரர்கள் எவரும் இல்லாதபடியால் வீடு சுற்றுப் புறங்களெல்லாம் ஒரே அலங்கோலமாகிக் கிடந்தன. வீட்டைக் குப்பைத் தொட்டி என்று சொன்னால் எல்லா வழிகளிலும் பொருந்தக் கூடியதுதான். என்ன இது? பெண்ணொருத்தி இருக்கும் வீடா இது? வேலையாள் இல்லாவிட்டாலும், தன்னால் முடிந்த மட்டுமாவது துப்புரவு செய்து இருக்கக் கூடாதா? இது என்ன நாகரிகமோ? என்று முணுமுணுத்தார் சிவசாமி. பொறுமைக்காரர் - அதிலும் பேர் பெற்ற மருமகள் என்று வந்தவர் போனவர்களிடமெல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த அவர் தம் வாயால் எப்படிப் பழிப்பது? வராதது வந்துவிட்டால் அடக்கிக் கொண்டு வாழ்வது தான் அழகு என்று இருந்தார். அவரையும் கொதிக்கக் கொதிக்க வைத்தது நாகம்மை செயல்கள். இரப்புச் சாப்பாட்டிலே இருந்துகொண்டு இடித்துக் கூறுவது வேறா? இந்த வீட்டைப் பெருக்கி மெழுகிக் காலம் தள்ள வேண்டும் என்பது என் தலைவிதி இல்லை. இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லையானால் மரியாதையுடன் வெளியேறிக் கொள்ள வேண்டியதுதான். இதற்கென்ன பேச்சு வேண்டியது இருக்கிறது என்று பொரிந்து தள்ளினாள். இதன் விளைவு என்ன? சிவசாமி வீட்டை விட்டு வெளியேறினார். நம்பிக்கு, அப்பா வீட்டை விட்டுச் செல்வது வேதனையாக இருந்தது. ஆனால் அவரை வீட்டில் இருக்கச் சொல்லவும் முடியவில்லை. வெளியேறுவதைக் கல்லாக இருந்து பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் என்பது பொய்யா மொழி அல்லவா! சிவசாமியின் நிலைமையை நாள்தோறும் கேட்டு அறிந்து கொண்டுதான் இருந்தான் தம்பி. நாகம்மையினிடம் அவரும் தன் தாய் கண்ணம்மையும் சிக்கிச் சீரழிவதை நன்றாக அறிந்திருந்தான். செந்தாமரையும் அறிந்திருந்தாள். ஆனால் ஏதாவது பேசி ஏச்சு வாங்கிக் கொள்ளக்கூடாதே என்று பயந்துபோய்ப் பேசாமல் இருந்தனர். இருந்தாலும் சிவசாமி வீட்டை விட்டு வெளியேறிய பின்னும் தம்பியால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முகத்தில் விழிக்காதே என்று கூறிவிட்ட அவர் முகத்தில் விழிப்பது எப்படி? அவர் பிடிவாதக்காரர் ஆயிற்றே என்று தனக்குள் நொந்து கொண்டான். எனினும் வழக்கம்போல் கணக்கெழுதும் கடைக்குச் சென்றான். காலை பத்து மணி முதல் இரவு பத்துமணி வரைக்கும் கணக்கு எழுதினால்தான் மாதச் சம்பளம் ரூபா ஐம்பது. தம்பி கடைக்குப் போன பின்பு, செந்தாமரை சிவசாமி இருக்கும் இடத்திற்குச் சென்றாள். தன் வீட்டிற்கு வருமாறு மன்றாடினாள். தலையை நிமிர்த்துப் பாராமலே பேசினார்: வைராக்கியம் தான் பெரிதே ஒழிய வயிற்றுப்பாடு பெரிதில்லை. நீ போ! நான் வரப்போவது இல்லை. உங்கள் மகனோ, நானோ தவறு செய்துவிட்டோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பெரியவர்கள் எங்களை மன்னிப்பதுதானே பெருமை. நான் என் தாய் தந்தைக்குச் செய்யவேண்டியதை செய்யக் கொடுத்து வைக்காத பாவி என்று உங்கள் மகன் சொல்லிச் சொல்லி வருந்துவதை நீங்கள் அறிந்தால் இப்படி மறுக்கமாட்டீர்கள். என்னை வேண்டியாவது நீங்கள் வீட்டுக்கு வரவேண்டும். உங்களை அழைத்துக் கொள்ளாமல் நான் போகப்போவது இல்லை. உங்கள் கால்களில் வீழ்ந்து கேட்கிறேன்; எங்களை மன்னிக்கக் கூடாதா? என்று கீழே வீழ்ந்தாள். அதற்கு மேலும் சிவசாமியால் மறுக்க முடியவில்லை. செந்தாமரையின் பின் நடந்தார். வீட்டுக்குள் போனார் சிவசாமி. வாயிலைக் கடந்ததும் இரண்டு பெரிய படங்களைக் கண்டார். அவை ஓர் உயர்ந்த ஓவியனிடம் சொல்லி எழுதப் பெற்றவை. அந்த மண் வீட்டுக்குத் தனியழகைத் தந்து கொண்டிருந்தன. சிவசாமி கண்ணம்மை படங்கள்தாம் அவை. அவற்றைக் காணச் சிவசாமியின் கண்களில் நீர் மல்கியது. ஆடாமல் அசையாமல் கட்டிலில் உட்கார்ந்தார். படங்களின் கீழே எழுதியிருந்த, தடித்தவோர் மகனைத் தந்தையீண்டு அடித்தால் தாயுடன் அணைப்பள் தாயடித்தால் பிடித்தொரு தந்தையணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித் திருமேனி அம்பலத்தாடும், புனிதநீ ஆதலால் என்னை அடித்ததுபோதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா இனி ஆற்றேன் என்னும் இராமலிங்க அடிகள் பாட்டு நெஞ்சை நைந்து உருகச் செய்தது. தம்பித் துரையின் உள்ளன்பைக் காட்ட வேறென்ன வேண்டும். நாள்தோறும் உள்ளம் உருகி இப்பாடலைப் பாடாமல் அவர் உண்ணுவது இல்லை என்றாள் செந்தாமரை. ஏங்கி அழுதார் சிவசாமி. தேற்றிக் கூறினாள் செந்தாமரை. வீட்டுத் தலைவாயில் அருகே தண்ணீர்ச் செம்பு இருந்தது மிகத் தளர்வுடன் வந்த தம்பித்துரை வெளித் திண்ணையில் சோர்வுடன் உட்கார்ந்தான். இடைவேளைச் சாப்பாட்டு நேரம் அது. கைகாலைக் கழுவுங்கள்; சாப்பிட்டுவிட்டு உட்காரலாம் என்றாள் செந்தாமரை. நோய்ப் படுக்கையுடன், பேய்ப் படுத்துதலுக்கும் ஆட்பட்டுக் கிடக்கிறாள் தாய்; பேய்த் துயருக்கு ஆற்றாமல் வீட்டைவிட்டு வெளியேறிப் போய்விட்டார் தந்தை. இங்கே வாயையும் வயிற்றையும் நிரப்பிக் கொண்டே இருக்கின்றோம். எந்தப் பாவத்திற்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் இந்தப் பாவத்தினை அள்ளிக் கட்டிக் கொள்ளாமல் முடியவே முடியாது. என்று கொந்தளிப்புடன் பேசினான். மெதுவாக வந்து அவன் காதருகே இப்பொழுது நீங்கள் உங்கள் அப்பாவுடன்தான் சாப்பிடப்போகிறீர்கள் என்றாள் செந்தாமரை. என்ன விளையாடுகிறாயா? அவராவது, இங்கு வருவதாவது; இந்தப் பிறவியில் நடக்கப் போவது இல்லை என்றான். சிவசாமி இதனைக் கேட்டுக் கதறிவிடுவார் போல் இருந்தது. ஆனால் துண்டைப் போட்டு வாயை அடைத்துக் கொண்டார். உங்கள் அப்பா உள்ளே இருக்கிறார்; வரமாட் டேன் என்றார். என்றாலும் பெரியவர் பெரியவர்தான்; உள்ளே படுத்திருக்கிறார் என்றாள் செந்தாமரை. அப்பா வந்திருக்கிறாரா? என்று ஆவலுடன் உள்ளே ஓடினான் தம்பி. சிவசாமியால் பேசமுடியவில்லை. தம்பியைத் தழுவிக் கொண்டார். பிரிந்தவர் கூடினர் - பேச வேண்டுமா மகிழ்ச்சியை? செந்தாமரை சிவசாமியை வற்புறுத்தினாள், மாமியை இங்கே வருமாறு சொல்லியனுப்புங்கள் என்று. தம்பிதுரையும் ஒத்துப் பேசினான். கண்ணம்மையும் இப்பொழுது தம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அரை வயிற்றுச் சோறாக இருந்தாலும், கூழாக இருந்தாலும் கூடியிருந்து உண்பது கொள்ளையின்பம் அல்லவா! ஐம்பது ரூபாதான் தம்பியின் சம்பளம். இரண்டு பேருக்கு நான்கு பேர்கள் ஆகிவிட்டார்கள் குடும்பத்தில், எத்தனை பேர்கள் ஆனால் தான் என்ன? செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய முறையோடும் செயலாற்றும் பண்பு இருந்தால் எதுதான் முடியாது? அது அந்த செயலாற்றும் பண்பு இருந்தால் தூணும் துரும்பு ஆகும்; மலையும் மடுவாகும். புன்முறுவலும் பூத்த முகமும் இனிய சொல்லும் எளிமையும் தூய்மையும் செல்வங்களாகக் கொண்டிருந்த செந்தாமரையைப் பொருட் செல்வம் இல்லாமை துன்புறுத்தி விடவில்லை. வருவாயைக் கொண்டு பிறர் வியக்குமாறு குடும்பத்தைக் காத்து வந்தாள். வருவாய்க்கு ஏற்பச் செலவு செய்பவளே வாழ்க்கைத் துணை என்பதற்குச் செந்தாமரை சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினாள். நிழலருமை வெயிலில்தானே தெரியும்? நாகம்மையினிடம் பிடுங்கு பட்ட சிவசாமி கண்ணம்மைக்குச் செந்தாமரையின் சிறப்பு நன்கு புலப்பட்டிருக்குமல்லவா! அம்பலவாணர் ஏழாண்டுகள் கழித்து மீண்டும் சிந்து பட்டிக்கு ஒரு முறை வந்தார். அப்பொழுது அவர் சிவசாமியைக் காணத் தவறவில்லை. தம்பியின் வீட்டிலே சிவசாமியைக் கண்டபோது திகைப்படைந்தாலும், விரைவில் உண்மையை உணர்ந்து கொண்டார் உலகத்தில் எவ்வெச் செல்வங்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கவலையில்லை. மாண்புடைய மனைவிதான் உயர்ந்த செல்வம். மனைவி மட்டும் மாண்புடைய குணம் உடையவளாக இருந்தால் ஒருவனுக்கு இல்லாதது ஒன்றும் இல்லை. ஆனால் அவள் பண்பற்றவளாக இருப்பாளேயானால் எவ்வளவு செல்வங்கள்தான் இருந்தாலும் இருப்பது ஒன்றும் இல்லை. இதனை இல்லதென் இலல்வள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை என்றார் திருவள்ளுவர் என்றார் அம்பலவாணர். சிவசாமி இப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார். மறுநாள் காலையில் அம்பலவாணர் சென்னைக்குப் புறப்பட்டார். தம்பி வீட்டு வழி வந்தவர் முன்பக்கச் சுவரிலே இல்லதென் இல்லவள் மாண்பானால் என்று எழுதியிருக்கக் கண்டார். அக்காட்சி கால்களை நம்பியின் வீட்டுப் பக்கம் நடத்திச் சென்றது. அங்கே உள்ளதென் இல்லவள் மாணாக் கடை என்னும் எழுத்துக்கள் எழுதப் பெற்றிருந்தமையைக் கண்டார். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார்.  16. கப்பலோட்டிய தமிழன் ஐயா, இங்கே வாருங்கள் என்று ஒளி படைத்த கண்ணும் உறுதிகொண்ட நெஞ்சும் உடைய தமிழ்ப் பெருமகன் ஒருவரை, ஒருவர் அழைத்துச் சென்றார். தன்னந் தனியான ஓரிடத்தை அடைந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் பேசினார் அழைத்துச் சென்றவர்: ஐயா இந்த இலச்சம் ரூபாக்களையும் அன்பளிப்பாகத் தருகின்றோம்; நீங்கள் வேறொன்றும் நினைக்க வேண்டாம்; இதை வாங்கிக்கொண்டு, நீங்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் இயக்கத்தை மட்டும் விட்டுவிட்டால் போதும், மேலும்மேலும் உங்களுக்கு எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கின்றோம். பணத்தைக் கண்டால் பிணமும் வாய்திறக்கும் ஈட்டி எட்டு மட்டும், பணம் பாதாள மட்டும் பணம் பத்தும் செய்யும் என்பனவெல்லாம் வழக்கிடைக்காணும் பழமொழிகள்! ஆனால் பணம் என்றவுடனே தலையசைத்து விட்டாரா? தமிழ்ப் பெருமகன் கூறினார்: இந்த ஓர் இலட்சம் ரூபாக்களும் எனக்குக் கைக்கூலியா? (இலஞ்சமா?) உயிரோடு உயிராக ஒன்றிவிட்ட உணர்ச்சியால் தொடங்கிய இயக்கத்தை உன் பிச்சைக் காசு கருதி விட்டுவிட வேண்டுமா? பணத்திற்காக வாயைத் திறக்கும் பண்பில்லாதவன் எவனாவது இருந்தால் அவனிடம் போய்ச் சொல் உன் காரியத்தை; சேசே! மானமற்ற பிழைப்பும் ஒரு பிழைப்பா? கண்களில் கனற்பொறி பறக்கக் கூறிவிட்டு கடுகடுத்த நடையிலே புறப்பட்டார் திருக்கு மீசைக்காரத் தீந்தமிழர். என்ன இது? இப்படியும் உண்டா? ஓர் இலட்சம் ரூபா வலிய வந்தும், போ - பழிவழிப் பணமே போ - என்று எற்றித் தள்ளிவிட்டு ஏறு நடையிட்ட அந்த ஏந்தல் யாவர்? அவரே வ.உ. சிதம்பரனார். சொந்த நாட்டினை வந்த நாட்டினர் ஆளவோ? நாம் ஆண் பிள்ளைகள் அல்லமோ? உயிர் வெல்லமோ? என்று பறையறைந்து, வெள்ளையனே வெளியேறு என்று முழங்கிச் சுதந்திர நாட்டத்தை மூட்டிய வ.உ.சி. கப்பற் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார்! அப்பொழுது தான் இலச்ச ரூபா தேடிவந்து, பழியோடு திரும்பியது. எதிர்ப்பின் இடையே - உலககெலாம் பரவி ஒரு கோலோச்சிய ஆங்கில ஆட்சியின் நேரடி எதிர்ப்பின் இடையே- தொடங்கப் பெற்றது சுதேசிக் கப்பல் இயக்கம் கப்பல் வேண்டுமே? பம்பாயிலே, ஒரு கப்பல் வாங்க ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. எல்லாம் சூழ்ச்சிக்காரர்களின் ஏற்பாடுகளால்தான்! கப்பல் கிடைக்கவில்லையே என்று தளர்ந்துவிட்டாரா? மலையே புரண்டு வந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர் அல்லவா சிதம்பரனார்! ஊக்கமாகக் கிளம்பினார். கொழும்பிலே போய், கப்பல் ஒன்றை ஒப்பந்தம் செய்தார். வாடகைக்கு! அப்படியாவது கிடைத்ததே என்னும் மகிழ்ச்சியிலே, தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மிதக்க விட்டார் கப்பலை! அது வியாபாரக் கப்பலாகவா காட்சியளித்தது? - விடுதலைக் கப்பலாகக் காட்சியளித்தது. ஆனால் வாடகைக் கப்பல்தானே, சொந்தக் கப்பலாகி விடுமா? மீண்டும் புறப்பட்டார். கப்பல் வாங்க பணம் திரட்ட. மனைவி நிறை கருப்பமாக இருந்தார்; மகன் உலகநாதன் நோய்ப் படுக்கையிலே கிடந்து உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தான். ஒரு முறையாவது வந்துவிட்டுச் செல்லுங்கள் என்று நண்பர்கள் முறையிட்டுக் கடிதம் எழுதினர். இறைவன் பெரியவன்; அவன் காப்பாற்றுவான்; நான் கப்பலுடன் திரும்புவேன்; இல்லையேல் கடலில் விழுந்து சாவேன் என்று கும்பிடு போட்டுக் கடிதம் எழுதிவிட்டு கருமமே கண்ணாக இருந்தார். வாராது வந்த மாமணி வ.உ.சி. என்று உணர்ந்த வர்கள் ஓடி ஓடி வந்து ஆயிர ஆயிரமாகக் குவித்தனர். மீண்டும் பம்பாய் சென்றார் வீரர் - அங்கொரு கப்பல்; பிரான்சிலே யிருந்து ஒரு கப்பல்; ஆக இரண்டு கப்பல்களுடன் தூத்துக்குடி வந்தடைந்தார்! கங்கையும் கடாரமும் கொண்டு வாழ்ந்த சோழன் இராசேந்திரனே புதுப் பிறப்புப் பிறந்து தூத்துக்குடித் துறைமுகம் வந்தடைந்தது போன்று நாட்டுப் பற்றுடையோர் மகிழ்ந்தனர்; நாடாள்வோர் எரிந்து விழுந்தனர் - எழுச்சி வலுத்துவிட்டது அன்னிய ஆட்சிக்கும் தலைமுழுக்குத்தான் என்று அறிந்துகொண்டு விட்டார்கள்! எதிரிகள் இயலாதவர்களா? நயவழிகள் பயவழிகள் என்னென்ன உண்டோ அவ்வளவும் செய்து பார்த்தனர். பய வழிகள் வீரர் முன் மண்டியிட்டன; நயவழிகள் பண்புமலைமுன் நாடியொடுங்கின! வஞ்சக வழிகளையே, தஞ்சமாகக் கொண்டு ஒடுக்க முன்வந்தனர் அன்னியர்! சுதேசிக் கப்பலில் ஏறுவதும், சரக்கு ஏற்றுவதும் குற்றங்கள் ஆக்கப்பட்டன; கப்பற் கம்பெனிக்குப் பணம் தருவோரும், பணிபுரிவோரும் பழிவாங்கப் பட்டனர்; ஆள்வோர் நினைத்தால் காரணங்களா கிடைக்கா? உறுப்பினர்களுக்கே இவ்வளவு இக்கட்டு என்றால், தலைவருக்கு? அந்தோ! நாட்டுப் பற்றுக் கொண்டு செய்யும் செயல்களுக்குப் பரிசும் பதவியும் தந்து பாராட்ட வேண்டிய அரசு பழிப்பட்டம் சூட்டியது; குற்றக் கூண்டிலே நிறுத்தியது. துரோகி என்று பட்டயம் தீட்டித் தந்து சிறைக்குள் தள்ளியது. உள்ளேயாவது ஓய்ந்திருக்க விட்டதா? கல்லுடைக்க வைத்தது; செக்கிழுக்கச் செய்தது. எல்லாவற்றையும் இன்ப மாகக் கருதினார் வ.உ.சி. தாம் படும் துன்பங்கள் அனைத்தும் உரிமைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் அமைந்த மைல் கற்களே என்று மகிழ்ந்தார்! உரிமைக் கொடி சிறிது சிறிது ஆக உயர்த்தப்படுவதாக உவந்தார். அது வீணாகி விட்டதா? இன்று, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பள்ளுப் பாடிவிட்டோம்! விடுதலை விடுதலை விடுதலை என்று முழங்கிவிட்டோம். அன்று வ.உ.சி. இலட்ச ரூபாக்களைப் பொருட்டாய் எண்ணியிருந்தால் - தூ என்று காறித் துப்பாமல் இருந்தால் - அவர் வாழ்நாளெல்லாம் பொன்னாலும் பொருளாலும் பொலிந்திருப்பார்! ஆனால் என்றென்றும் அழியாப் புகழ், அவரை உரிமையாக்கிக் கொண்டிருக்குமா? நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (நன்மையே தந்தாலும், நடுவு நிலைமை கடந்து உண்டாகும் செல்வத்தை அப்பொழுதே ஒழித்து விடு) என்பது அன்றோ தமிழ் மறை. 17. காந்தியண்ணல் அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் இளைஞர் ஒருவர். அவர் பெயர் கரம் சந்திரர். அரிச்சந்திரன் எத்தனை எத்தனை இன்னல்கள் அடைந்தும் பொய்யே சொல்லாது வாழ்ந்த உயர்வு இளைஞர் உள்ளத்தைத் தொட்டு நன்றாகப் பதிந்தது. இன்று முதல் நான் பொய் சொல்லவே மாட்டேன் என்று உறுதி செய்துகொண்டார். நாடகம், படக்காட்சி இவற்றைக் கண்டு எத்தனைப் பேர் இப்படி உறுதி செய்துகொண்டு இறுதிவரை காப்பாற்றுவார்கள். கரம் சந்திரர் சிறுவராக இருக்கும்போது கெட்டவன் ஒருவனது உறவு ஏற்பட்டது. அவன் வலைக்குள் நன்றாக மாட்டிக்கொண்ட கரம்சந்திரர், யாருக்கும் தெரியாமல் மறைவான இடங்களில் சென்று புலால் உண்டார். வீட்டுக்குப் போய் வழக்கம்போல் சாப்பிட முடியாது அல்லவா! அதனால் வயிற்றுக்கு நன்றாக இல்லை; பசிக்கவில்லை இப்படி யெல்லாம் காரணம் - பொய்க்காரணம் - காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் சொல்லி முடித்தவுடன் மனச்சாட்சி- அரிச்சந்திரன் கதை ஆகிய இரண்டும் கூடிச் சேர்ந்து பெற்று வளர்த்துப் பேரன்புடையவராய் இருக்கும் தாயினிடமா பொய் சொல்லுவது? என்று வாட்டும்! எத்தனை நாட்களுக்குத்தான் உன் பொய் வெளிப்படாமல் இருக்கும்? என்று இடித்துக் காட்டும். ஆம்! கரம்சந்திரர் மேலும் உறுதி செய்து கொண்டார். புலால் உண்பதும் புகை குடிப்பதும் ஆகிய தீய வழக்கங்கள் செலவினை உண்டாக்கிப் பொய்யும் பேசவைக்கின்றன. ஆதலால் இவற்றை இன்று முதல் தொடேன். இளைஞர் கரம்சந்திரர் ஒரு தொடக்கப் பள்ளியிலே படித்து வந்தார். அப்பள்ளியை மேற்பார்வையிடுவதற்காக அதிகாரி வந்திருந்தார். அவர் சில ஆங்கிலச் சொற்களைச் சொல்லி மாணவர்களை எழுதச் செய்தார். அவர் சொல்லிய ஆங்கிலச் சொற்களிலே கெட்டில் (Kettle) என்பதும் ஒன்று. இச்சொல்லை கரம்சந்திரர் சரியாக எழுதவில்லை. அவர் சரியாக எழுதவில்லை என்பதை ஆசிரியர் பார்த்தார். வருந்தினார். அதிகாரி என்ன சொல்லுவாரோ என்பது அவர் கவலையாக இருந்தது. அதனால் கரம்சந்திரரின் காலை மிதித்து, அடுத்த பையனைப் பார்த்து எழுதுமாறு குறிப்பாகக் கூறினார். ஆனால், தெரியாத ஒன்றைத் தெரியும் என்று பொய்யாக நடிக்க விரும்பவில்லை இளைஞர் கரம்சந்திரர். அதனால் ஆசிரியர் குறிப்புப்படி அடுத்தவனைப் பார்த்து எழுதாமல் நின்றார். ஆசிரியர் மேலும் ஓரிரு தடவைகள் வற்புறுத்தியும் இளைஞர் எழுதாதது கண்டு வருந்திச் சோர்வு கொண்டார். ஆசிரியரே பார்த்து எழுதச் சொல்லும்பொழுது எழுத மாட்டேன் என்னும் வலிய உள்ளம் மாணவருக்கு ஏற்படுவது எல்லோரிடமும் எதிர்பார்க்கக் கூடிய நிகழ்ச்சியா? இக்குணம் இளமையிலே வாய்த்துவிட்ட படியால்தான் அஃது உலகப் புகழ் வாங்கித் தந்தது. இந்த கரம்சந்திரர் யார்? அவரே நம் காந்தியடிகள்! காந்தியடிகள் தொடக்கத்தில் வழக்கறிஞர் தொழில் புரிந்தார். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டவர்கள் பொய் சொல்லாமல் முடியாது என்பார்கள். ஆனால், காந்தியடிகளோ அந்த உரையையே பொய்யுரையாக்கி விட்டார்! அவர் பொய்மை கலவாத வழக்குகளையே தேர்ந்து எடுத்துக் கொண்டார். தாம் எடுத்துக் கொண்ட வழக்கில் பொய்யும் கலந்திருக்கிறது என்று எப்பொழுதாவது உணர்ந்து விடுவாரானால் எதிரியினிடமே உண்மையை உரைத்து வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்வார். ஒரு சமயம் தன் கட்சிக்காரன் ஒருவன் தம்மிடம் பொய் சொல்லியிருப்பதாக வழக்கு விசாரணையின் போது அறிந்தார். உடனே நீதிபதியினிடமே வழக்கினைத் தள்ளி விடுமாறு வேண்டினார். இப் பண்பு வழக்கறிஞர்கள் அனைவரிடமும் வந்துவிடுமானால் நாட்டிலே நடைபெறும் வழக்குகளில் நாலில் ஒரு பங்குகூட நடைபெறுமா? ஆனால், வழக்கறிஞர்கள் ஆயிரமாயிரம் பேர்களில் ஒரே ஒரு காந்திதானே தோன்ற முடிந்தது! அடிகளுக்கு நண்பர் ஒருவர் இருந்தார்; அவர் அரசாங்கத் திற்குக் கட்டவேண்டிய வரிப்பணம் கட்டவில்லை. அரசினர் வழக்குத் தொடுத்தனர். காந்தியடிகளோ, தம் நண்பருக்காகப் பொய்யாக வழக்காடாது அவர் செய்திருக்கும் தவறான வழக்குகள் அத்துணையையும் வெளிப்படையாகக் கூறினார். அந்த மெய்யுரை ஒன்றாலே - சிறைத் தண்டனை, பொருள் தண்டனை என்னும் அளவில் நின்றது. காந்தியடிகள், பொய்யாமை போலும் புகழில்லை. அறமில்லை, இன்பமில்லை என்பதை தெளிந்து அறிந்தவர் அல்லவா! 1919-ஆம் ஆண்டில் ஆங்கில அரசை எதிர்த்து அறப்போர் தொடங்கத் திட்டமிட்டார் அடிகள். திட்டமிட்டபடியே நாடெங்கும் போராட்டம் நடைபெற்றது. அறப் போராட்டம் என்றால் தங்கள் எதிர்ப்பினைக் காட்டுவது ஒன்றே வேண்டுவது அல்லாமல் உயிருக்கோ, பொருளுக்கோ சேதம் ஏற்படுத்தும் வன்முறைகள் எவையும் கூடா! ஆனால் உணர்ச்சிக்கு ஆட்பட்ட போராட்டக்காரர்களில் சிலர் வன்முறைகளைக் கையாண்டனர். இதனை அறிந்தவுடன் வருந்தினார் அடிகள். அறப்போருக்குரிய பக்குவம் அடையாத மக்களை அறப்போரில் இறங்குமாறு ஏவியது இமயமலை போல்வதான பெருந்தவறு; போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டார். போராட்டத்தை நிறுத்தி விடுமாறும் ஆணையிட்டார். தாம் செய்தது தவறு என்று மன்னிப்புக் கேட்கும் உலகத் தலைவர்கள் எத்தனை பேர்? பொய்யா நோன்பினை வாழ்நாளெல்லாம் போற்றி, ஒழுகினார்அடிகள். அதனால் புவியிலுள்ளோர் உள்ளத் தெல்லாம் புகழ் வடிவிலே சுடர்விட்டு விளங்குகின்றார்! உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெள்ளாம் உளன். (ஒருவன் தன் மனச் சான்றுக்கு ஏற்ப, பொய்யின்றி வாழ்வானாயின் அவன் உலக மக்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைபெற்றவன் ஆவான்.)  18. அருளாளன் ஆபிரகாம் ஒரு சாலை வழியே இரண்டு குதிரைகள் ஓடிக் கொண்டிருந்தன. அக் குதிரைகளின் மீது இரண்டு பேர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த திசைக்கு எதிரேயிருந்து ஒருவன் நடந்து வந்தான். அவன் குதிரையில் வந்தவர்களுள் ஒருவரை இன்னார் என்று தெரிந்து கொண்ட படியால் சட்டென்று ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்று தன் தொப்பியை எடுத்துக் கையிலே வைத்துக்கொண்டு தலை தாழ்ந்து பணிவோடு வணக்கம் செய்தான். குதிரையில் இருந்த அவர் உடனே பதில் வணக்கம் செலுத்தி விடாது கீழே இறங்கி வந்து, வழிப்போக்கனைப் போலவே பணிவோடு நின்று தொப்பியைக் கையிலே எடுத்து வைத்துக் கொண்டு வணங்கினார். இவ்வாறு நடக்கும் என்பதைக் குதிரையில் உடன் வந்தவனும் நினைக்கவில்லை; வழிப்போக்கனும் நினைக்க வில்லை. வியப்படைந்தனர். குதிரையில் வந்த இருவரும் மீண்டும் தம் பயணத்தைத் தொடங்கினர். உடன் வந்தவன் போகும் பொழுதே கேட்டான்: அந்த ஏழையை நீங்கள் இவ்வளவு பணிவுடன் வணங்க வேண்டுமா? குதிரையில் இருந்து கொண்டே வணங்கியிருக்கக் கூடாதா? - ஏழை, செல்வன் என்ற வேற்றுமை பணிவுக்கு இல்லை; இருக்கவும் கூடாது. ஒரு நாட்டின் தலைவன் பணிவுடைமையிலும் தலைவனாக இருக்க வேண்டுமே அன்றித் தாழ்ந்து விடக் கூடாது. எந்தக் காரணம் கொண்டும் எந்த ஓர் ஏழையும் பணிவில் என்னை வெற்றி கொண்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை. என்றார் தாழ்ந்து வணங்கிய பெரியவர். வாயடைத்துப் போனான் உடன் வந்தவன். குதிரையிலிருந்து கீழே இறங்கி வணக்கம் செலுத்தியவர் எளிய பதவியில் இருந்தவரா? அரிதினும் அரிய பதவி - அமெரிக்க நாட்டின் தலைவர் பதவி! அவர் பெயர், ஆபிரகாம் லிங்கன். அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது பழமொழி. ஆனால் நல்லவன் கையில் நாட்டாட்சி இருக்கும் பொழுது நாடெய்தும் நலங்களுக்கு அளவும் உண்டா? பணிவுமிக்க ஆபிரகாம் ஒருநாள் ஒரு தெரு பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தார். அங்கே ஒரு குதிரை வண்டிக்காரன் நின்றான். அவன் லிங்கனைக் கண்டதும் புன்முறுவலுடன் நெருங்கினான்; வணக்கமிட்டான். ஐயா, உங்கள் பொருள் ஒன்று என்னிடம் நெடுநாட்களாகக் காத்திருக்கின்றது. இதுவரை தங்களைக் கண்டுபிடித்து அதனைக் கொடுக்க முடியவில்லை. இன்றுதான் கண்டுபிடித்தேன்; மகிழ்ச்சி என்றான். லிங்கனுக்குத் திகைப்பாக இருந்தது. ஏனெனில், லிங்கன் அந்தக் குதிரை வண்டிக்காரனை இதற்கு முன் கண்டதில்லை. லிங்கன் கேட்டார்: என்னுடைய பொருள், உன்னிடம் என்ன இருக்கிறது? இதோ என்று மழுங்கிப் போயிருந்த கத்தி ஒன்றை நீட்டினான் குதிரை வண்டிக்காரன். லிங்கனது திகைப்பு வியப்பாக மாறியது. என் னுடையதா இது? என்று கேட்டார். ஆம்; உங்கள் பொருள்தான். எப்படி என்றால், நெடு நாட்களுக்கு முன்பு ஒரு பெரியவர் என்னிடம் இந்தக் கத்தியை தந்து நீ பார்க்கும் ஆட்களிலே எவர் அழகற்றவராக (அவ லச்சணமாக) இருக்கிறாரோ அவரிடம் இதனை ஒப்படைத்து விடு என்றார். நானும் அப்படிப்பட்ட ஒருவரைத் தேடித்தேடி அலுத்தேன். இன்றுதான், தாங்கள்தான் அந்தப் பொருளுக் குரிய உடைமைக்காரர் என்பதைக் கண்டுபிடித்தேன் என்றான் வண்டிக்காரன். இச் சொற்களை உணர்ச்சிமிக்க ஒருவன் - முன் கோபமுடைய ஒருவன் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான்? குதிரை வண்டிக்காரன் தன் பற்களைப் பொறுக்கி எடுக்க வேண்டிய நிலைமை ஆகாது இருக்குமா? ஆனால் ஆபிரகாம் என்ன செய்தார்? நண்பனே! மகிழ்ச்சி! என் பொருளை இதுவரை நீ பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய பொழுதில் ஒப்படைத்தும் விட்டாயல்லவா! என் பொருளைப் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி எனக்கு மிகவுண்டு. உனக்கு நன்றி என்று கூறினார். ஆபிரகாம் நீர் மனிதரல்லர்; மனித உருவிலே நின்ற தெய்வவுரு என்று நமக்கு வாழ்த்தத் தோன்றுகிறது அல்லவா! நெடு நெட்டையாகவும், மிகு ஒல்லியாகவும், படியாத் தலையராகவும் குழிவிழுந்த கன்னத்தராகவும் இருந்த ஆபிரகாம் அழகில்லாதவர்தான். உடல் உடை பற்றியோ, குளித்தல் தலைகோதுதல் பற்றியோ அவ்வளவாக அக்கறை கொள்ளாதவர் தான். காலிலே அணிந்து கொண்ட அடிபுதை அரணங்களை (பூட்சுகளை)யும் கால் உறைகளையும் எத்தனையோ நாட் களுக்கு ஒருமுறை கழற்றித் துடைப்பவர்தான். ஆனால், இந்த உடலழகினும் பல்லாயிரம் பங்கு சிறந்ததான உள்ளத்தழகு ஆபிரகாமிடம் நிரம்பிக் கிடந்ததே! உள்ளழகு இருக்கும் பொழுது புற அழகு இல்லாவிட்டால்தான் என்ன? உலக அழகுப் போட்டியிலே பங்கு எடுத்துக் கொண்டு முதற் பரிசு பெற்றவன் என்ன உலகத்தார் நெஞ்சத்தை விட்டு அகலாது இடம் பெற்று விடுவானா? அன்றி அவனென்ன அழியாத அழகனா? அவனுக்கும் இருபதில் எழுச்சி, முப்பதில் முறுக்கு, நாற்பதில் நழுவல், ஐம்பதில் அசதி, அறுபதில் ஆட்டம், எழுபதில் ஏக்கம் எண்பதில் தூக்கம் என்னும் நிலைகள் ஏற்படாது ஒழியுமா? எச்சிலும் மூக்கும் கோழையும் குன்னலும் நோயும் நொம்பலும் உலக அழகனுக்கு விதிவிலக்காகிட முடியுமா? அழியா உடலா அவன் உடல்? பண்புடல் ஒன்றே அழியாவுடல்; அழகுமிக்க உடல்; அதனைப் பெற்றார் லிங்கன். உலகத்தார் உள்ளத்தே அழியா எழுத்தில் எழுதப் பெற்று விட்டார். பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி; அல்ல மற்றுப் பிற (ஒருவனுக்கு அணிகலன் பணிவு உடைமையும், இன்சொல் உரைத்தலும் ஆகும். இவையன்றி வேறு அணிகலங்கள் உண்மையான அணிகலன்கள் ஆகா.)  19. பாவலன் பாரதி அம்மா! பைத்தியம்; பைத்தியம்! என்று சொல்லிக் கொண்டே வெளியேயிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தாள் சிறுமி ஒருத்தி. உட்புறத்தில் இருந்த தாய், குழந்தையின் கூக்குரலைக் கேட்டுத் துடிப்புடன் முன்புறம் வந்தார். மெலிந்த உடலும், கிழிந்த உடையும், தாடிமீசையுமாக இருந்த ஒருவரைக் கண்டார். தம்மை மறந்து போய்த் தம் குழந்தையினிடம் பாப்பா, பாரதி மாமா இல்லையா! அவர்தான்; வணக்கம் செலுத்து என்றார். அம்மையாரும் வணக்கம் செலுத்தி வரவேற்று இருக்கச் செய்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞராக வேலைபார்த்து வந்தார் பாரதியாரின் அன்பரும், தோழரும், உள்ளூர்க்காரருமான சோமசுந்தர பாரதியார். புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பின் தம் நண்பரைப் பார்ப்பதற்காகத் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் வந்த பொழுதிலே சோமசுந்தர பாரதியார் வெளியே சென்றிருந்தார். அவர் மனைவியும் குழந்தையும் வீட்டில் இருந்தனர். குழந்தைதான் பாரதியாரின் தாடி மீசை உடைகளைக் கண்டு பைத்தியம், பைத்தியம் என்று அலறிக் கொண்டு ஓடி வந்தது. சற்று நேரம் கழிந்தது. கவிஞர் காக்கை குருவி எங்கள் சாதி என்ற பாடலை முழங்கினார். வேறு சில பாடல்களும் பாடினார். ஆ, ஆ! அந்த இசை வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி இன்புற்றனர். உடையில் அழுக்கு கிழிசல் உண்டு; உடலில் மெலிவும் களைப்பும் உண்டு. ஆனால் உள்ளத்தில் இருந்த ஊக்கமும் உணர்ச்சியும்? அது பாரதியாருக்கே உரிமையானது. சோமசுந்தர பாரதியார் வீட்டுக்குள் கால் வைக்கு முன்னமே பாரதியார் தம் விட்டுக்கு வந்திருப்பதை அறிந்து கொண்டார். அவர் என்ன பாரதியாரின் மணிக்குரலை அறியாதவரா? பாரதி என்று சொல்லிக் கொண்டு உணர்ச்சி மிக்கவராகக் கட்டித் தழுவினார். இன்பக் கண்ணீர் சொரிந்தார். பின், பாரதியார் கட்டியிருந்த கந்தலாடையை நோக்கினார். அடுத்த நொடியிலே - அந்தோ! சோமசுந்தரரின் எஃகு போன்ற வலிய உள்ளமும் நெகிழ்ச்சியடைந்தது; கண்ணீர்த் துளியும் வழிந்தது. நாட்டுப் பணிக்காகத் தன்னை ஒப்படைத்து விட்ட இந்த நல்லோன் நிலைமை இப்படியா இருக்க வேண்டும்? கோடி கோடியாக வெகுமதி பெற வேண்டிய பாடல்களைப் பாடும் இப்பாவலன் ஒரு பஞ்சையாகவா இருக்க வேண்டும்? அன்னைத் தமிழகமே, நீ உன்னை அழகு செய்ய வந்த புலமை மகனை இந்நிலைமையிலா விட வேண்டும்? என்று உருகினார். உடனே, பட்டு வேட்டியும், பட்டுத் துண்டும் கொண்டு வந்து உரிமையாக ஏற்பட்ட உள்ளன்பால் தந்தார். எல்லோரும் பாரதியாருக்கு உடை தந்து விட முடியுமா? உன்னிடம் உடை வேண்டும் என்று எவன் கேட்டான்? இரப்பு வாங்கிக் கட்டும் இந்தப் பட்டாடைக்கு என் கிழிசலாடை கோடி கோடி கோடி தரம் மேல்; சே! இந்தா உன் உடை! என்று முகத்திலேயே வீசி எறிந்துவிட்டாலும் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. பாரதியாரின் உணர்ச்சி அத்தகையது. சோமசுந்தரருடன் சற்று நேரம் அளவளாவிப் பேசி விட்டு, பாரதியார் உலாவி வரச் சென்றார். உலாவி விட்டு வீட்டுக்குத் திரும்பினார். அவர் தோளிலே கிடந்த சரிகைக் கரைத்துண்டைக் காணவில்லை. என்ன பாரதி! துண்டு எங்கே? என்று கேட்டார் சோமசுந்தர பாரதியார். ஓ, அதுவா! இங்கே வா என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே சாலை வழியே சென்றார். அங்கே படுத்துக் கிடந்த பிச்சைக்காரன் ஒருவன் மேல் தாம் தந்த துண்டு போர்த்தப்பட்டிருக்கக் கண்டார். சோம சுந்தரர் ஒன்றும் சொல்லவில்லை. பாரதியை நோக்கினார்; பாரதியார் சொன்னார்: மானத்தை மறைப்பதற்கு வேண்டிய கந்தலாடையும் இன்றி எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்க, நான் மட்டும் பட்டாடை கட்ட வேண்டுமா? பாரதியாரின் இச் சொல் முழு ஆடை கட்டிய முனிவர் காந்தியாரை நினைவூட்ட வில்லையா? சற்று நேரத்திற்கு முன் பாரதியார் நிலைமை எவ்வாறு இருந்தது? அந்தக் கந்தலாடைதானே அவருக்கும் உரிமை? பேரன்பால் பெற்ற பட்டாடையைப் பேணிக் காத்துக் கொள்ள எண்ணம் இருந்ததா? ஈவும் இரக்கமும் உள்ள உள்ளம் அடுத்த பொழுதைப் பற்றியோ தன்னைப் பற்றியோ எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றது அன்றோ! சோமசுந்தரர் நெக்குருக எண்ணினார் அஃது இதுதான்; பாரதி நன்றாக இருக்க வேண்டுமானால் இப்பாருலகம் முழுமையும் நன்றாக இருந்தாக வேண்டும். எந்த மூலையில் வெந்துயர் இருந்தாலும் பாரதியாரால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! துயரற்ற உலகம் வருமா? இடனில் பருவத்தும் ஒப்புரவிற்(கு) ஒல்கார் கடனறி காட்சி யவர் (பிறர்க்கு உதவுதலைத் தம் கடமை என்று அறியக் கூடிய அறிவினை உடையவர் உதவுவதற்கு முடியாத நிலையிலும் உதவி செய்வதில் தளர்ச்சி யடையார்)  20. வள்ளல் நள்ளி ஒரு பெருங்காடு. அக்காட்டிலே ஒரு புலவர் நடந்து சென்றார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் சிலர் சென்றனர். வழியோ கரடு முரடான காட்டுப் பகுதி; மலையடிவாரம்; மலையுச்சி; தொலைவும் மிக அதிகம். நடந்தவர்கள் அனைவரும் களைத்துப் போயினர். உட்கார்ந்து ஓய்வெடுத்தாக வேண்டும் என்று சோர்ந்து விட்டனர். பெரிய பலாமரம் ஒன்றைக் கண்ட புலவர்கள் அதன் தண்ணிய நிழலிலே உட்கார்ந்தனர். வழிநடைக் களைப்பும் வயிற்றுப் பசியும் சோர்வினை உண்டாக்கி அயர்ந்து விடச் செய்தன. உட்கார்ந்து சாய்ந்த வண்ணமே கண்ணுறக்கமும் கொண்டு விட்டனர். வீரன் ஒருவன் ஓடி வந்தான். அவன் வலக் கையிலே வில் இருந்தது; இடக்கையிலே கூரிய அம்பு இருந்தது. தோளிலே அம்புக்கூடு தொங்கியது. காலிலே வீரர்கள் அணியும் கழலும், கையிலே கடகமும், மார்பிலே முத்தாரமும் கிடந்து அழகு செய்தன. அவனது வீரத் திறத்தையும், அஞ்சா உள்ளத்தையும் அவன் கண்களும், தோள்களும், மார்பும், ஏறு நடையும் வெளிக்காட்டின. அயர்ந்திருந்த புலவர்கள் வீரன் வந்த ஒலி கேட்டு அரைகுறையான பார்வையுடன் விழித்து நோக்கினர். அந்த வீரனைக் கண்ட பின்னரும் அவர்களால் உட்கார்ந்திருக்க இயலவில்லை. விரைந்து எழுந்திருப்பதற்குக் களைப்பு இடம் தரவில்லை. காலைப் பிடித்துக் கொண்டு மெதுவாக எழ முயன்றனர். வீரனோ புலவர்கள் களைப்பாக இருப்பதையும், எழுந்திருக்கவும் முடியாத சோர்வுடன் இருப்பதையும் அறிந்து கொண்டு உட்காருங்கள், உட்காருங்கள் என்று கையமர்த்தி விட்டு விரைந்து காட்டுக்குள் சென்றான். வீரன் எங்கே போகிறான் என்று புலவர்களுக்குத் தெரியாது. அவனது எழுச்சி மிக்க நடையினை நோக்கிக் கொண்டிருந்தனர். அந்த அழகனது உருவம் மறையும் வரை இமை கொட்டாமல் பார்த்து நின்றனர். சென்ற, சிறிது நேரத்துள் வீரன் திரும்பினான். வாளா திரும்பினானா? - கையிலே மான் தசை இருந்தது. புலவர்கள் பசியினைப் போக்குவதற்காகக் காட்டிலே புகுந்து வேட்டையாடினான். உடன் வந்த இளைஞர்களைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் தானே வேட்டையாடி, தன் கையாலே தீமூட்டி, ஊனைப் பக்குவமாக வாட்டி, நல்ல ஊனாகத் தேர்ந்து கையிலே எடுத்துக் கொண்டு வந்து புலவர்களுக்கு அளித்தான். அவன் இவ்வாறு காலத்தால் உதவுவான் என்பதை அறியாத புலவர்கள் களிப்பும் வியப்பும் ஒருங்கே யடைந்தனர். பசி மிகுதியால் அவசரம் அவசரமாக உண்டனர்; பசி போனது - ஆனால் நீர் வேட்கை உண்டாயிற்று. புலவர்களே, இங்கே வாருங்கள் என்று அழைத்துப் போய் ஒரு நீரூற்றைக் காட்டினான். உவப்புடன் நீரருந்திக் களைப்பு நீங்கினர். புலவர்களின் தலைவர் பெயர் வன்பரணர். அவர் கூறினார்: வீர! நன்றி. நீ காலத்தாற் செய்த இந்த உதவிக்கு என்ன கைமாறு செய்ய வல்லோம்? ‘Ú ah®? என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை; அதனை அறிவிக்கலாமா? எங்களுக்கு அதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. ஐயா, காட்டிலே இருக்கும் யான் தங்களுக்கு என்ன உதவியைச் செய்ய முடியும்? இந்த மாலையையும் கடகங் களையும் மறுக்காமல் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றான் வீரன். மாலை, கடகங்களைக் கழற்றி, புலவர்களிடம் தந்தான். வியப்புத் தாங்காத புலவர்கள் நாத் தழுதழுக்க நன்றி கூறினர். அவன் பெயரை அறிந்து கொள்ளுவதற்குத் துடித்தனர். அன்ப, உன்னைக் காணும் போது ஒரு வேந்தனாகவே தோன்றுகிறது. உன் நாடு யாது? உன் பேர் யாது? - இது புலவர்களின் ஆவலுரை. புலவர் பெரும, இதோ வருகிறேன்; நீங்கள் செல்ல வேண்டுமல்லவா. நானும் செல்ல வேண்டும். என்னுடன் வந்தவர்கள் தேடிக் கொண்டு வந்தாலும் வந்து விடுவார்கள். தாங்கள் இப்பாதை வழியே செல்லலாம் என்று வழி காட்டிவிட்டு வீரன் விரைந்து காட்டுக்குள் சென்றான். அவனுடன் வந்த வீரர்களுள் எவரையாவது கண்டாலும் வீரன் பெயரைக் கேட்டறியலாமே என்று தேடினர். ஆனால் அவர்களைக் காணவில்லை. அவர்களுள் எவரும் புலவர்களைக் கண்டுபிடித்துப் பேசி விடாதவாறு தந்திரமாக வீரன் அழைத்துக் கொண்டு போய் விட்டானே! பிறகு கண்டுபிடிப்பது எப்படி? பேரையும் ஊரையும் கேட்டும் சொல்லாத அவ்வள்ளலின் அருங்குணம் புலவர்களைக் கவர்ந்தது. எப்படியும் தெரிந்துவிட ஆசை கொண்டனர். நமக்கு மட்டும் அவ்வாசை இல்லையா? நான்கு அணாக்கள் கொடுத்துவிட்டு அதனை நான்கு இடங்களிலே எழுதிவைக்கும் வள்ளல்கள் மிகுந்த இக் காலத்திலே, பேரும் ஊரும் சொல்லாமல் பெருங் கொடை புரிந்த செயல் வியப்புக்குரியதல்லவா! கேட்டும் கொடுக்காதோர் பலர்; கேட்டுக் கொடுப்போர் சிலர்; கேளாமல் கொடுப்போர் மிகச்சிலர். பேரும் ஊரும் சொல்லாமலும், கேளாமலும் கொடுப்போர் அரியர் - மிக அரியர்! அரிய செயல் செய்த அவ்வள்ளலின் பெயரை அறிய, புலவர் பெரிதும் முயன்றனர். தாங்கள் சென்ற வழிகளிலெல்லாம் கேட்டுக் கெட்டுச் சலித்தனர்; வாயும் அலுத்தனர். ஒருவன் சொன்னான்: தோட்டி மலைத் தலைவனான கண்டீரக்கோப் பெரு நள்ளி அவன். வள்ளல் நள்ளி! நீ வாழ்க என்று புலவர்கள், வாழ்த்திக் கொண்டு அவன் தந்த பொருளால் இன்பமாக வாழ்ந்தனர். நள்ளியின் கொடை? பயன் கருதாக் கொடை! மழை போன்ற கொடை. கைமாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றுங் கொல்லோ உலகு  21. கடல் தரா முத்துக்கள் பன்னிரண்டு வயது கூட ஆகாத ஓர் இளைஞர் இருந்தார். அவர் ஒரு கணக்கரிடம் எழுத்து வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாதச் சம்பளம் - முப்பது நாட்களும் முயன்று எழுதினால் சம்பளம் - ரூபாய் ஒன்று! சம்பளம் குறைவு என்றாலும் இளைஞர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். எதனையும் ஆழ்ந்து கவனித்துச் செய்யும் இளைஞரது வேலைத் திறம் கணக்கரைக் கவர்ந்தது. இளைஞர்மேல் அன்பு கொள்ளுமாறும் செய்தது. அனால் வேலைத் திறமோ அன்போ சம்பளத்தை ஒன்றும் கூட்டி விடவில்லை! இளைஞர் கணக்கரிடம் வேலைபார்த்து வரும்போது, ஒரு தாசில்தாருடைய உறவு ஏற்பட்டது. அவர் திருவாரூரில் இருந்தார். அவரை நம் இளைஞர் அடிக்கடி சென்று கண்டு பேசியும், அவர் மகிழுமாறு பணிகள் செய்தும் வந்தார். அதனால் இளைஞர் தாசில்தாரது அன்பரானார். ஒருநாள் தாசில்தாரைப் பார்ப்பதற்காகச் செல்வர் ஒருவர் வந்தார். ஐயா, யான் வெளியூருக்குச் சென்று வரவேண்டிய அவசியம் உள்ளது. வரவும் நாட்கள் பிடிக்கும், நிலத் தீர்வைப் பணம் கட்ட வேண்டியதுள்ளது. கணக்கர் ஊரில் இல்லை. தாங்கள் பணத்தை வாங்கிக் கொண்டால் உதவியாக இருக்கும் என்றார். தாசில்தார் அவர் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! எவ்வளவு பெற்றுக் கொள்வது? தாசில்தாருக்கு இவ்வளவு ரூபா என்று தெரியாது; செல்வருக்கும் தெரியாது. கணக்கர் ஊரில் இல்லை. ஆனால், அக்கணக்கரிடம் வேலை பார்க்கும் இளைஞர் - நம் இளைஞர் - தாசில்தாரின் அருகில் இருந்தார். எவ்வளவு தொகை என்று உனக்குத் தெரியுமா? என்னும் குறிப்புடன் இளைஞரைப் பார்த்தார் தாசில்தார். ஐம்பது அறுபது இடங்களில் நிலம் வைத்திருந்த அச் செல்வரது கணக்கை இளைஞர் எப்படி மனத்தில் வைத்திருக்க முடியும்? என்ற திகைப்பும் தாசில்தாருக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இளைஞர் முகமோ அதனைக் கூற முடியும் என்பதுபோல் மலர்ந்து விளங்கியது. சிறிதுநேரம் கணக்கினை மனத்துள் கூட்டிச் சேர்த்து இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்தைந்து ரூபா, எட்டணா, ஒன்பதுகாசு என்று கூறினார். செல்வருக்கு வியப்புத் தாழவில்லை. ஏனென்றால், இதற்கு முன்னும் ஏறக்குறைய இவ்வளவு கட்டி வந்ததாக அவர் நினைவு! தமக்குரிய வரிப்பணம் இவ்வளவு என்று தாமே அறியக் கூடாத நிலைமையில் இருக்கும்போது ஒரு ரூபாச் சம்பள இளைஞர் தெளிவும் திருத்தமுமாகக் கூறியது வியப்பாக இருக்காதா? தாசில்தார் இளைஞரைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். இவ்வளவு நினைவாற்றலும், நுண்ணறிவும் உடைய இச்சிறுவன் எதிர்காலத்தில் முன்னுக்கு வரத் தக்கவனே என்று எண்ணினார். அவர் சிந்தனை கலையுமாறு செல்வர் கூறினார். ஐயா, கணக்கு ஏறக்குறையச் சரியாகவே இருக்குமென்று கருதுகிறேன். இப்பொழுது இவன் சொல்லிய தொகையைத் தங்களிடம் கட்டிவிடுகிறேன். கூடுதல் குறைதல் இருக்குமானால் சரிபார்த்துக் கொள்வோம் என்று பணத்தைக் கட்டிவிட்டுப் புறப்பட்டார். தாசில்தாருக்கு, இளைஞர் முன்னேற்றத்திற்கு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அரும்பியது. இவ்வேளையிலே மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. அடுத்திருந்த ஓர் ஊர்க் குளம் உடைந்து பெருஞ் சேதமாகி விட்டது. ஊரார், தாசில்தாரிடம் உதவி வேண்டி ஓடி வந்தனர். சேதம் எவ்வளவு என்று கணக்கு பார்க்க வேண்டியதுடன், உடைப்பினை அடைக்க எவ்வளவு செலவு ஆகும் என்றும் கணக்கு எடுக்க வேண்டியது அவசியம் ஆகிவிட்டது. அதற்காகத் தம் அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி எவரேனும் எழுத்தர் இருந்தால் அழைத்து வருமாறு ஏற்பாடு செய்தார். அது காலைப் பொழுதாக இருந்த காரணத்தால் அங்கு எவரும் வந்திருக்க வில்லை. ஆனால், தற்செயலாக ஒரு விளம்பரத்தினைப் படித்துக் கொண்டு அங்கு நின்றார் நம் இளைஞர். அவர், அலுவலகத்திற்கு வந்த ஆள் வழியாகச் செய்தியினை அறிந்து கொண்டு தாசில்தாரிடம் சென்றார். தாம் கணக்கு எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறி, உடைந்த குளத்திற்குச் சென்று கணக்கெடுத்துக் கொண்டு வந்தார். தாசில்தாரின் அனுபவம் இளைஞர் கணக்குச் சரியாக இருக்கக்கூடும் என்பதை உறுதி செய்தது. இருந்தாலும் தெளிவாக்க விரும்பினார். அலுவலகத் தலைமை எழுத்தர் வந்தவுடன் அவரை அனுப்பிக் கணக்கு எடுத்து வருமாறு பணித்தார். அவர் கணித்து வந்த கணக்கும் இளைஞர் குறித் திருந்த கணக்கும் சரியாக இருந்தமையைக் கண்ட தாசில்தார் காலம் நீடிக்காது இப்பையன் முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு கொண்டார். ஆரம்பப் படிப்புடன் இருந்த இளைஞர் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றார். முதல் மாணவராகவே எல்லா வகுப்புகளும் தேறினார். மாநிலம் முழுவதற்கும் ஏற்படுத்தியிருந்த கட்டுரைப் போட்டி ஒன்றிலே முதன்மை யாக வெற்றியடைந்து ஐந்நூறு ரூபா பரிசு பெற்றார். இவர் படித்து வந்த பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், மேல் அதிகாரிகளும் பெரிதும் பாராட்டிச் சிறப்பித்தனர். இளைஞர் முதலில் மாகாணக் கல்லூரியில் ஓர் ஆசிரியராகச் சென்றார்; விரைவில் கல்வி அதிகாரியானார். பின் வழக்கறிஞர் களுக்கென இருந்த தேர்வில் முதல்வராக வெற்றியடைந்தார். அதனால் மாவட்ட முன்சீப், துணை கலெக்டர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்னும் உயர் பதவிகளைச் சிறப்புடன் நிர்வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த முதல் இந்தியர் நம் இளைஞரே என்றால் நம் இளைஞரின் சிறப்புத்தான் என்னே! ஒரு ரூபாய் எழுத்து வேலை பார்த்த இளைஞர், இடையறாத முயற்சியால் உயர் நீதிமன்ற நீதிபதியாக வருவது எளிய காரியமா? எல்லோர் வாழ்விலும் நடக்கக் கூடியதா? கொழுந்து விட்டெரியும் முயற்சி நம் இளைஞரிடம் இருந்தது. அது வறுமை. பிணி, எதிர்ப்பு ஆகிய இருட் படலங்களை இருந்த இடம் தெரியாமல் ஓட்டியது. இல்லையேல் உயர்நீதிமன்றத்தின் முகப்பில் இவ்விளைஞருக்கு பளிங்குச் சிலை நிறுத்தி வைப்பார்களா? ஓஓ! இளைஞர் பெயரைச் சொல்ல வில்லையோ? அவர் தாம் வீட்டிலே விளக்கு வெளிச்சம் இல்லாது தெரு விளக்கிலே படித்து முயற்சியால் முன்னுக்கு வந்த சர்.தி. முத்துசாமி ஐயர்! கடல் தந்த முத்தா இளைஞர் முத்து? கடல் தரா முத்து அல்லவா! ஆமாம்; மறந்து விட்டோமே, முத்துசாமியைக் கடல் தரா முத்து ஆக்கிய தாசில்தார். பெயர் என்ன? நன்றி மறக்கலாமா? அவரும் உண்டு? அவர் பெயர் முத்து சபாநாயகர்! வாழ்க கடல் தரா முத்துகள் என்று வாழ்த்த தோன்றவில்லை முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி வரும் 22. இரண்டு கடிதங்கள் அன்பும் அறச் சிந்தையும் உடைய ஐயா, தாங்கள் காலத்தால் செய்த உதவியால் இதுவரை உயிர் வைத்திருக்கும் யான், என் உள்ளங் கனிந்த நன்றியறிதலுடன் எழுதும் கடிதங்கள் இவை. இவையே முதற்கடிதங்கள்; இறுதிக் கடிதங்களும் இவையே. யான் யார்? என் வரலாறு என்ன? என்பன போன்ற செய்திகள் தங்கள் நினைவில் இருக்க முடியாது; இருக்கக் காரணமும் இல்லை. என்னைப் பற்றி நானே தங்களுக்கு நினைவுபடுத்தினால் கூட நினைவுக்கு வருவது அரிதுதான். ஏனெனில் காலங் கடந்துபோன செய்தி அது. என்னை நினைவுபடுத்திக் கொள்ளுமாறான அருமை பெருமைகள் எதுவும் என்னிடம் இல்லை என்பதை யான் அறிவேன். எனினும் தங்களிடம் அரிய உதவிகளை வேண்டி நிற்கும் இவ்வேளையில் ஏதேனும் தொடர்பு காட்டி ஆக வேண்டுமே என்னும் அவசியத்தால் குறிப்பிட நேர்கின்றது. எனக்கு என்னென்ன பேறுகள் இல்லையாயினும் சரி - தங்களை நெஞ்சத்தே நிறுத்திக் கொண்டு இறுதி மூச்சையும் விடக்கூடிய பேறு எனக்குண்டு என்று பெருமைப்படுகின்றேன். இப்பொழுது பதினைந்து ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. எனக்கு ஏற்ற அளவிலே ஓரிடத்தில் பெண்பார்த்துத் திருமணம் செய்து கொண்டேன். பெண் வீட்டாரைப் பற்றி என்ன சொல்வது? ஐம்பது நூறுக்குக்கூட வழியில்லாத நான், அவர்களை நினைக்கும்போது பணக்காரன்! அவர்களுக்கோ எனக்கோ பணம் இல்லாமை ஒரு குறையாகப் போய்விடவில்லை. அவர்களுக்குக் குழந்தை என்னும் பெயரால், எனக்கு மனைவி என்னும் பெயரால் - வாய்த்தாள் நிறைமதி. அவளை எங்கள் செல்வம் என்று சொல்லிக் கொள்வதிலே இப்பொழுதும் என்னை அறியாமலே ஒரு பெருமை, உண்டாகாமல் இல்லை. எனக்கும் நிறைமதிக்கும் திருமணமாகி, எங்கள் வீட்டுக்கு அவளை அழைத்துக்கொண்டு புறப்பட இருக்கின்றேன். அப் பொழுது என்னை அறியாமலே எனக்கு ஓர் அச்சம் இருந்தது. பெண் தன் தாய் வீட்டை விட்டுக் கணவன் வீட்டுக்குக் கிளம்ப நேரும்போது அவளை அறியாமலே கண்ணீர் விட்டுவிடுவாள். அது தாய் வீட்டுப் பற்றாலும், வளர்த்துவிட்ட வாஞ்சையாலும் ஏற்படுவது. நிறைமதி மட்டும் இதற்கு விலக்காகிவிட முடியுமா? என்று எண்ணினேன். பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட வேண்டிய பொழுதும் வந்துவிட்டது. முறைப்படி நானும் நிறைமதியும் சென்றோம். என் நினை வெல்லாம் நிறைமதியின் முகத்தைப் பார்ப்பதிலே தான் இருந்தது. நான் நினைத்தது போல் எதுவும் நடந்துவிடவில்லை. நிறைமதியின் தந்தையார் கந்தப்பர்தான் ஓவென்று அலறி விட்டார். இப்படித்தானா? பச்சைப் பிள்ளைபோல் அழுவது? இன்றைக்குப் போனால் நாளைக்கு வேண்டுமானாலும் இங்கே திரும்பலாமே. வேலம்பட்டி என்ன வீராணத்திற்குத் தொலை யூரா? என்று அங்கிருந்த பலர் தேற்றிக் கூறினர். என்ன சொல்லியும் அவர் சஞ்சலம் மாறவில்லை. எங்களுடன் வேலம்பட்டிக்கு மாமாவும் வந்தார். என்னைத் தனியாக அழைத்து, அறியாப் பிள்ளைபோல் நைந்து நைந்து கூறினார்: என் மகள் கண் கலங்க நான் பார்த்தது இல்லை. பார்த்துக் கொண்டிருக்கவும் என்னால் இயலாது. அவளுக்குக் கண்ணீர் வருமுன், என் கண்களில் இரத்தமே பெருகிவிடும். உங்களை நம்பித்தான் ஒப்படைத்திருக்கிறேன். நீங்கள் தான் அவளுக்குத் தந்தை, தாய் எல்லாம்...! என்னென்னவோ தயங்கித் தயங்கிக் கூறினார். அவர் கண்கள் பன்முறை நீரைச் சொரிந்தன. என் இதயம் என்ன இரும்பா கல்லா? மாமனார் வீட்டு வாழ்வு மரியாதை அற்ற வாழ்வு என்னும் எண்ணம் படைத்த நான் மாமனார் வீட்டிலே குடியேறினேன் என்றால் என் மாமாவின் அன்புள்ளம் ஒன்று தான் காரணம். எத்தகைய குறைவுமில்லாது இன்பமாக வாழ்ந்தோம். வறுமை எங்களை வாட்டவில்லை. வறுமை எண்ணம் இருப்பதுதானே கொடிய வறுமை. எங்களுக்குத்தான் அத்தகைய ஒன்றே இல்லையே. சிரித்த அளவுக்கு அழவேண்டியதும் உலக இயற்கைதானே! இரவையும் பகலையும் அளந்து வைத்த இயற்கை இன்ப துன்பங்களை எடை போட்டு வைக்காமலா விடும்? இரண்டு ஆண்டுகள் கடந்தன. நிறைமதி ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகின்றாள் என்னும் பெருமிதத்திலே எங்கள் வீடு மிதந்தது அப்பொழுதினை நொடி நொடிதோறும் எதிர்பார்த்துக் கிடந்தேதாம். ஆனால் எங்கள் தலையிலே பேரிடி விழுந்து விட்டது! பிறந்த குழந்தை நிறைமதியின் உயிரையும் சேர்த்து வாங்கிக்காண்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டது. அழுது அழுது புலம்பினேன். என் மாமனார் நிறை மதி என்று கதறியடித்துக் கீழே விழுந்தார். அதன்பின் பேச்சில்லை. பேச்சு மட்டுமா இல்லை - மூச்சும் இல்லை. எங்கள் வீடு சுடுகாடு ஆகிவிட்டது. மறுநாள் இரண்டு உடல்களுக்கு - கொடுத்துவைக்காத பாவியான யான்-தீ மூட்டினேன். அங்குப் பற்றிய தீ என்னைச் சுற்றிக் கொண்டது. சுற்றாமல் விடுமா? உடலில் தீப்பற்றப் பட்டவர்கள் ஓய்ந்து ஒரே உறக்கம் உறங்க முடிந்தது. உள்ளத் தீ பற்றப்பட்ட என்னால் ஒரு கணமும் நிற்க முடியவில்லை. நடந்தேன்; எப்படியோ நடந்தேன்; என் கால்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தன; பொறி புலன்கள் தடுமாறிப் போய்விட்டன, சில நாட்கள் சென்றிருக்க வேண்டும்; ஒரு நாள் தங்கள் அன்பு இல்லத்தின் கட்டிலிலே கிடத்தப்பட்டிருந்தேன். அதுதான் என் நினைவுக்கு வந்த முதல் காட்சி. என் நெற்றியில் கட்டுப் போட்டிருந்ததும், அது வேதனை தந்து கொண்டிருந்ததும் அடுத்தடுத்து நினைவுக்கு வந்த காட்சிகள். விறகுப் பாரம் ஏற்றிக் கொண்டு வந்த வண்டியிலே முட்டிக் கீழே விழுந்து விட்டாய்; காயம் அவ்வளவு பலமாக இல்லை; இழை மூட்டி யிருக்கிறார் வைத்தியர்; எல்லாம் சரியாகிவிடும் என்று அப்போது தாங்கள் உரைத்த அமுதமொழிகள் என் காதுகளில் இப்பொழுதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளிவந்த சொற்கள் அல்லவா அவை? அவற்றுக்கு வலிமை மிகுதிதானே! உள்ளக் கொதிப்பாலும், வெட்டுக்காயத்தாலும் என் உடல் வெதும்பி உச்ச நிலைக்குச் சென்றது. அன்றுதான் தங்கள் உயருள்ளத்தின் உச்சக்கட்டத்தையும் காணமுடிந்தது. என் படுக்கைக்கும், சமையற்கட்டுக்கும், வைத்தியர் வீட்டுக்கும் அன்று தாங்கள் அலைந்தது எத்தனை ஆயிரம் முறைகளோ? மருத்துவர் வந்து உடனடியாக ஊசி மருந்து போட்டாக வேண்டும்; இல்லையேல் காய்ச்சல் குறைவது கடினம்தான் என்று சொல்லி, ஏதோவொரு மருந்து வாங்கி வருமாறு சீட்டும் எழுதித் தந்து விட்டுச் சென்றார். அய்யோ! உங்களைத் துன் புறுத்துவதற்காகத்தான் நான் பிறந்தேன் போலும் என்று ஏங்கிக் கண்ணீர் வடித்தேன். என் படுக்கையின் ஒரு பகுதியே நனைந்திருந்ததைத் தாங்கள் அறியக்கூடாதவாறும் நடித்தேன். தாங்கள் மருந்து வாங்க என்ன செய்வது என்னும் ஏக்கத்திலே தங்கள் மனைவியார் முகத்தைப் பார்த்தீர்கள். அவர்களோ தங்களுக்குக் குறையாத ஏக்கத்திலே தங்களைப் பார்த்தார்கள். யான் அந்தக் கொடுமையைப் பார்க்க மாட்டாதவனாகப் புரண்டு படுத்துக்கொண்டேன். சிறிது நேரம் வீடு அமைதியாகக் கிடந்தது. அம்மையார், செல்வி! செல்வி! என்று அழைத்தார்கள். அந்த மழலைத் தேன்குடம் கலீர்கலீர் என்று ஒலிக்கும் கரும்புக் கால்களுடன் ஓடிவந்தது. வாடா, செல்வி என்று உச்சிமுகர்ந்து தூக்கி, மார்பிலே அணைத்துக் கொண்டு, செல்வி, இந்தக் கொலுசில் அழுக்கு இருக்கிறது; போக்கித் தருகிறேன் என்று கழற்றினார்கள். அந்தோ! கண் கொண்டு பார்க்கப் பொறுக்கவில்லை. காதுகொண்டு கேட்கப் பொறுக்கவில்லை. திரும்பி ஒருச்சாய்த்துப் படுத்திருந்த நான் குப்புறப் படுத்துக்கொண்டு விம்மினேன். அழுக்குப் போக்கு வதற்காகவா செல்வி கொலுசை வாங்கினார்கள்? (கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தின் கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது. இரண்டு மூன்று துளிகள் கடிதத்திற்குப் பொட்டு வைத்தன. ஆறுமுகம் மனைவி மங்கலம் அம்மாள் படிக்கப் பொறுக்காது சமையற்கட்டுக்குச் சென்றுவிட்டார். ஆறுமுகம் தொடர்ந்து படித்தார்.) நீங்கள் வீட்டில் இல்லை. அருமைச் செல்வி என் அருகில் துள்ளுநடையில் வந்தாள். அந்த மூன்று வயதுச் சிட்டுக்கு அவ்வயதுக்குரிய அறிவும் பண்புமா அமைந்து இருந்தன? மாமா, காபிகுடி என்று என் வாயருகே கொண்டு வந்து காபி வட்டையை நீட்டியது. வேண்டாம் செல்வி, நீ குடி என்று அதன் வாயருகே வட்டையைக் கொண்டு சென்றேன். ஙுஙும்; மாட்டேன்; நீ குடி; நீ குடித்தால்தான் நான் குடிப்பேன் என்று அடம் பிடித்தது. செல்வி, இப்படிச் செய்யலாமா? எச்சில் காபியையா மாமாவுக்குக் குடிக்கக் கொடுப்பது? இதோ... இந்தக் காபியை மாமாவுக்குக் கொடு என்று அன்புறக் கூறினார்கள் அன்னையார். ஆனால் செல்விக்கு அமைதி ஏற்படவில்லை. முகத்தில் கவலைக் கோடுகளே தோன்றின. தோல்வியால் ஏற்பட்ட நாணத்தையும் கூர்ந்து கவனித்தேன். என் அறிவீனத் திற்காக நான் வெட்கப்பட்டேன். கொடு செல்வி, கொடு; நீ இப்பொழுது கொடுப்பது காபி இல்லே! தேன் என்று கூறிக் கொண்டே அவள் கையில் இருந்த காபி வட்டையை வாங்கி என் உதட்டுக்குக் கொண்டு சென்றேன். சிரித்துக் கைகொட்டிக் கொண்டே, அம்மா முகத்தை நோக்கியது செல்வி! வெற்றிப் பெருமிதம் உண்டல்லவா! எச்சில் படுத்தியதைக் கொடுக்கலாமா? என்ன பிள்ளை என்றார்கள் அம்மையார். அவர்கள் சொல்லில் கண்டிப்பும் கனிவும் சம அளவில் இருந்தன. நான் சொன்னேன்: செல்வி தெய்வக் கொடை; அவள் எச்சில் தெய்வப் படையல்; வாழ்வே வெறுத்துப்போய் இருந்தது எனக்கு. வாழவேண்டும் - உலகுக்காக வாழ வேண்டும் - என்னும் படிப்பினையை இப்பொழுது பெற்றுக்கொண்ட புதியவனாகி விட்டேன். அதனைச் செயலுக்குக் கொண்டு வருவதற்குத் தெம்பு வேண்டுமல்லவா! அதற்குத் தெய்வப் படையல் அளிக்கிறாள் செல்வி; அவள் எச்சில் தேன் என்றேன். எளிதில் கிடைக்கும் தேன் அன்று; பன்னீராண்டுகளுக்கு ஒரு முறையே மலரும் குறிஞ்சிப் பூக்களிலே எடுத்து, சந்தன மரத்திலே சேர்த்துவைத்த தேன் என்றேன். செல்வியின் தாமரைக் கைகளைப் பிடித்து என் கன்னங்களில் அழுத்திக் கொண்டேன். (ஆறுமுகத்தின் வீட்டிலே நடந்ததாக இருந்தும் அவருக்குப் புதிய செய்தியாகவே இருந்தது. மங்கலம் என்று அழைத்து அவரிடமும் வாசித்துக் காட்டி, இப்படி நடந்ததா? என்றார். நினைத்து நினைத்து அழுவதற்காக இந்த ஒரு காரியத்தைத் தானா செல்வி செய்தாள். இவற்றை யெல்லாம் நினைவுபடுத்தி நெஞ்சைப் புண்ணாக்க வேண்டுமா? ஏதோ நடந்தது. கடிதம் எழுதியுள்ள செல்லப்பன் நல்ல மனிதன்; நன்றியுடையவன்; இன்னும் மறக்காமல் இருக்கிறான் என்றார் மங்கலம். ஆ ஆ! பேர்கூட நினைவிருக்கிறதா? செல்லப்பனா பெயர் என்று கடைசிப் பக்கத்தைத் திருப்பிப் பார்த்தார் ஆறுமுகம். ஆமாம், ஆமாம்! செல்லப்பன்தான்! ஊர்பேர்தான் எனக்கு நிற்பதே இல்லையே! உனக்கு இருக்கும் நினைவாற்றலுக்கு உங்கள் அப்பா மட்டும் படிக்க வைத்திருந்தால்... அடேயப்பா! என்று செல்வி மீது ஏற்பட்ட துயரை மாற்றினார் ஆறுமுகம். வெட்கத்தால் தலைகுனிந்து வெளித் திண்ணைக்குச் சென்றார் மங்கலம் அம்மாள். செல்லப்பன் வரைந்த கடிதத்தைத் தொடர்ந்து படித்தார் ஆறுமுகம்.) என்னால் தங்கள் வீட்டிலே தங்கியிருக்க முடியவில்லை. தங்களிடம் இருந்த அருளின் அளவுக்குப் பொருள் இல்லை என்பதை அறியாதவனா நான்? தங்கள் உயர்ந்த குணத்தினால் அறச்சாலை நடத்தினீர்களே ஒழிய, பணத்தினால் இல்லை என்பதை ஊரே அறியுமே! கையில் காசு இல்லாவிட்டாலும், செய்யும் திருப்பணிகளை மட்டும் தவறாது செய்துகொண்டு வந்தீர்கள். உங்களைப் பாராட்டுவதற்காக இதனை நான் எழுத வில்லை. பாராட்டு, வாக்கிலே நின்றால் யாருக்குப் பயன்? சுருங்கச் சொன்னால் என்னால் தங்கள் வீட்டில் மேலும் தங்கியிருக்க முடியவில்லை. தங்கள் அன்பும், தொண்டும் என்னை வெளியே போ என்று விரட்டியடித்தன. தங்களிடம் விடைபெற்றுக் கொண்டு நன்றியறிதலுடையவ னாக நான் வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அது என் தவறு என்று எண்ணக்கூடும். ஆனால் என் சூழ்நிலையை நோக்கும்போது, அன்று மட்டுமன்று இன்றும் கூட நான் செய்ததே சரி என்றே தோன்றுகிறது. நான் போய்வருகிறேன் என்று கேட்டால் தாங்கள் விடை தந்து அனுப்பி வைத்திருப் பீர்களா? அம்மையார்தான் அனுமதிப்பார்களா? உடல் சரியாகட்டும் போகலாம் என்று கூறித் தடுத்திருப்பீர்கள். என் உடல் நலமாகும் அளவும் நான் அங்கிருந்தால் எவ்வளவு அல்லல்கள் தந்திருப்பேன்! அது எனக்குப் பிடிக்கவில்லை. தங்கள் இல்லத்திலிருந்து வந்து சேர்ந்த யான் அறிவேன். அது போல் தங்கள் இல்லத்திலிருந்து யான் வெளியேறியதைத் தாங்கள் அறியமாட்டீர்கள். நான் மயங்கிக் கிடந்த பொழுதிலே வீட்டுக்கு வந்தேன். நீங்கள் உறங்கிக் கிடந்த பொழுதிலே வெளியேறினேன். இது தவறாயின் தாங்களும், அருமை அன்னையும், அன்புச் செல்வியும் என்னை மன்னிப்பீர்களாக! என்நெடும் பயணத்தைத் தொடங்கினேன். வழிபோன பக்கமெல்லாம் போனேன். எத்தனை எத்தனையோ காடுகள், சிறுமலைகள், தொடர் மலைகள் கடந்தேன். வெளித் திண்ணையில் படுத்திருந்தாலும், எழுப்பி வைத்துச் சாப்பிடச் சொல்லும் ஏழைகள் வாழும் பட்டிகள் தமிழகத்தில் இன்னும் இருக்கின்ற காரணத்தால் உயிருடன் ஓரூரை அடைந்தேன். நோக்கும் திசை யெல்லாம் தொடர் மலையாகக் காட்சியளித்த அவ்வூருக்குக் கடமலைக்குண்டு என்பது பெயரென அறிந்தேன். அங்கேயே தங்கி விட்டேன். தாங்கள் இருக்கும் கரிவலம் வந்த நல்லூர் எங்கே, இந்தக் கடமலைக் குண்டு எங்கே? கனவு உலகில் திரிபவனுக்குக் காதம் காலடி தூரம்தானே! கடமலைக்குண்டு போய்ச்சேர்ந்த தொடக்க காலத்திலே நான்பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. அவற்றை நினைத்தோ எழுதியோ ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால் ஒருவன்படும் துன்பத்தின் அளவுக்கு இன்பமும் தொடரும் போல் இருக்கிறது. காலணாக் காசுக்கும் வழி கெட்டிருந்த நான் இரண்டு ஆண்டுகளுக்குள் இருபது ஏக்கர் நிலத்திற்கு உரியவனாகிவிட்டேன்; இது எளிதில் ஆகக் கூடியதா? ஆனால் உண்மை! நான் இவ்வூருக்கு வந்த நாளிலே மலைப்பகுதியில் அவரவர் முயற்சிக்குத் தக்க அளவு பாடுபட்டுக் கொள்ளலாம் என்னும் முறை இருந்தது. ஏதோ குறைந்த அளவு தீர்வைப் பணம் மட்டும் செலுத்தினால் போதும்; சில ஆண்டுகள் பாடுபட்ட பின் நிலம் அவர்களுக்குச் சொந்தம் இதனைப் பயன்படுத்திக் கொண்டு முழு முயற்சியுடன் பாடுபட்டேன். என் கையிலே வெள்ளிப் பணம் திரண்டது. ஊக்கம் அதிகமாயிற்று. என் நோக்கமும் விரிவதாயிற்று. தேடுவதைப் பற்றிய சிந்தனையைப் பார்க்கிலும், அதனை நல்வழியில் எப்படிச் செலவழிப்பது என்பதே என் சிந்தனையாக இருந்தது. அப்பொழுது தங்கள் செயல்கள் எனக்கு வழிகாட்டியாக முன்னின்றன. அவற்றைச் சிக்கெனப் பற்றிச் செயலாற்றத் தொடங்கினேன். என் அறச் செயல்களைத் தொடங்குமுன் எனக்கென இரட்டை மாடிவீடு ஒன்றினைக் கட்டிக் கொண்டேன். என் உள்ளத்தில் உயிரோவியமாக விளங்கி, அழகொழுக வீற்றிருக்கும் நிறைமதியின் பெயரால் நிறைமதி இல்லம் என்னும் பெயர் சூட்டினேன். என் பண்ணையை, மாமாவின் பெயரால் கந்தப்பர் பண்ணை என்று அழைத்தேன். அவரைப்போல் மகள்மேல் அன்பு செலுத்தி வாழ்பவர் எத்தனை பேர்? இப்படி மாமா பெயராலும், நிறைமதி பெயராலும் இவற்றைச் செய்தும் என் மனத்தில் ஒரு குறை இருந்து அழுத்திக் கொண்டே நின்றது. பசியர், பிணியர், ஆதரவு அற்றோர் ஆகியவர்களை ஆதரிப்ப தற்காகத் தங்கள் பெயரால் ஆறுமுகம் அறச்சாலையை - என்னை அந்நிலைமைக்கு ஆளாக்கிய பெருமை தங்களுக்குத் தானே உண்டு - ஏற்படுத்தினேன். நான் மனிதன்; மனிதனுக்குரிய ஒப்பற்ற அடையாளமாக இருப்பது நன்றியுணர்வு; அவ்வுணர்வு பெருக இல்லாவிடினும், சிற்றளவிலேனும் இருக்கிறது. அதற்குரிய அடையாளங்களே இச்செயல்கள் என்று எண்ணி எனக்குள்ளே மகிழ்கின்றேன். இவற்றாலெல்லாம் நான் மகிழ்ந்தாலும் என் மகிழ்ச்சிகள் எல்லாம் தாமாக உருவானவையாக இல்லை. நானே முயன்று உண்டாக்கிக் கொண்டாலொழிய மகிழ்ச்சி வருவதாக இல்லை. உண்மை மகிழ்ச்சிக்கும், வலிந்து வரவழைத்துப் பொய்யாக நடிக்கும் மகிழ்ச்சிக்கும் வேறுபாடு இல்லையா? நான் மகிழ்ந்த பொழுதுகளை அடுத்தெல்லாம் கண்ணீர் வடித்தேன். கண்ணீர் வடிக்கச் செய்தவள் என் நிறைமதிதான்! ஊனோடு உயிரோடு பிணைந்துவிட்ட அவளை நான் மறக்க நினைத்தாலும், முடியவில்லை. மறந்துவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று எவ்வளவு முயன்றேனோ அவ்வளவு முயற்சிகளும் மேலும் மேலும் நினைந்து நெஞ்சம் நையச் செய்தனவே அல்லாமல் குறைத்த பாடில்லை. நெருப்பினுள் ஒருவன் உறங்கினாலும் உறங்க முடியும். ஆனால் நெஞ்சத் துயருக்கு ஆட்பட்டு உறங்க முடியுமா? நிறைமதியை நினைத்துத் துன்பப்பட்ட வேளைகளி லெல்லாம், இதனை எவ்வழி கொண்டேனும் மாற்றியமைக்க முடியாதா? என்று ஏங்கினேன். வழிவகைகளையும் ஆராய்ந்து அலசி அலசி மண்டையை உடைத்தேன். மாற்று வழிகள் அனைத்தும், ஏமாற்று வழிகளாக இருக்குமே அன்றி, ஏக்கத்தை மாற்றும் வழிகளாக இருக்கா எனத் துணிந்தேன். ஆனால், என்னுடன் அன்புறப் பழகிய நண்பர்கள் சிலர்கூட, என்னை வற்புறுத்தினர். என்னப்பா இருபத்தேழு வயதுக்குள் மனைவியை இழந்து விட்டு இப்படியேயா இருந்து விடுவது? நீயும் மனிதன் தானே! மனைவி இல்லாத வீடு மனை யாகுமா? இல்லாள் இல்லாத வீடு இல்லம் ஆகுமா? மனைவியொருத்தி இருக்கும்பொழுதே இரண்டு மூன்று என்று கட்டிக்கொண்டு திரிபவர்களும் இருக்கிறார்களே! மனைவியை இழந்து துன்புறும் நீ திருமணம் செய்து கொள்வது என்ன தவறா? நீ பிடிவாதம் காட்டுவதுதான் தவறு! உனக்கிருக்கும் பணத்திற்கு நான் நீ என்று எத்தனை பேர் போட்டி போட்டுக் கொண்டு பெண் தருவார்கள் என்றெல்லாம் அவர்கள் திறமையை வெளிப்படுத்தியுரைத்தனர். ஆனால் நிறைமதி வாழ்ந்த நெஞ்சத்திலே - அந்த நிறைமதி ஒருத்திக்குத்தான் இடம் உண்டே ஒழிய இன்னொருத்திக்கு இடம் இல்லை. இடம் இல்லாத ஒருத்திக்கு இடம் தந்து இன்னல் அடையவேண்டுமா? என்று உறுதியாகக் கூறிவிட்டேன். உறுதிக்கும் சிறிதும் அசைவு ஆட்டம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று நொடி நொடி தோறும் விழிப்பாக இருந்தேன். இல்லையேல் சூறைக் காற்றிலே துரும்பாகச் சுழலத்தானே வேண்டும். இதற்கு ஐயம் உண்டா? பகல் பொழுதிலே என் உறுதிக்குச் சிறிதும் அசைவு ஏற்படுவது இல்லை. இரவுப் பொழுதிலே - தனிமையாக முடங்கிக் கிடக்கும் இரவுப் பொழுதிலே - நெஞ்சக் குமுறல் அடக்குவார் அற்று உயரவே கண்டேன். தலையணையிலே முகத்தை அழுத்திக் கொண்டு திணறுவேன். என்னை அறியாமல் கண்னை மூடினால் அந்த நொடியில் என் கனவில் நிற்பது நிறைமதிதான். பின்னும் உறங்க முடியுமா? இரவென்று ஓர் பொழுதே இல்லாமல் பகலாகவே இருக்கக் கூடாதா என்று எத்தனை பொழுதுகள் ஏங்கியிருப்பேன்! ஆனால் பகலென்று ஒரு பொழுதே இல்லாமல் இருக்கக்கூடாதா என்று எண்ணிய நாளும் உண்டே என்றும், என் எண்ணத்திற்கு நானே தடை போட்டுக் கொள்வேன். எல்லாம் நிறைமதி இருந்ததும் இல்லாமையும்தான் காரணங்கள்! உணர்ச்சி உள்ள நேரத்தே அறிவு பெரும்பாலும் உறங்கி விடத்தானே செய்கின்றது, இதற்கு மேலுமா அறிவோடு நினைக்க முடியும்? என்னை எப்படி எப்படியோ அடக்கி வைத்தேன். பயன் இல்லை. இயற்கை என்னை ஒடுக்கிவிட்டது. நிறைமதியின் கவலை என்னை அணு அணுவாகத் தின்னத் தொடங்கிற்று. குருதி, தசை, எலும்பு, நரம்பு நாடி - எல்லாம் குறைக்க உருக்க ஆரம்பித்து விட்டது. ஆம்! எனக்கு எலும்புருக்கி நோய் வந்து விட்டது. அற்ப வாழ்வுடைய மாந்தன் இயற்கையுணர்வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி காண இயலுமா? தோற்றேன் அம்மவோ தோற்றேன். என் ஒருவனைப் பொறுத்த அளவில் நான் இருந்திருப்பேன் ஆனால் கவலையில்லை. சாவே வா; விரைந்துவா; என் நிறைமதி போன வழியிலே என்னையும் கூட்டிச் செல் என்று என் நெடுங்கரங்களை நீட்டியிருப்பேன். ஆனால் நான் மட்டுமா இருக்கின்றேன்? என் வீட்டில் என்னையே நம்பியிருக்கும், ஓர் அன்புப் பிழம்புமல்லவா இருக்கின்றாள். என் வாழ்வில் மின்வெட்டுப்போல் ஒளியும் சிலவேளைகளில் உண்டென்றால் அதற்கு அந்த ஒளி விளக்குத்தானே காரணம். அவள் வாழ வேண்டும் என்பதற்காகவே இதுவரை வாழ்ந்தேன். இன்னும் வாழ முடியுமா என்றும் நினைத்தேன். ஆனால் என் நோய் இனியும் என்னை வாழவிடாது. எல்லைக்கோடு என்னவோ அது வரைக்கும் என்னை இழுத்துக் கொண்டு போகிவிட்டது. முடிவினை எதிர்பார்த்து அமைந்து கிடப்பது அன்றி வேறொன்றும் என்னால் கூடுவது இல்லை. இந்நிலைமையில் தான் தங்களுக்குக் கடிதம் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. உங்கள் உதவியைப் பெறுவதற்கு என்றே பிறந்த நான் என்னால் இயன்ற மட்டும் தங்களுக்கு அல்லல் தராது இருப்பேனா? இறப்பேனா? முன்னமே என் சொத்தினை இரு கூறுகளாகப் பிரித்து, ஒரு கூறினை ஆறுமுகம் அறச் சாலைக்கு எழுதிவைத்து விட்டேன். அதன் பொறுப்பாளராகத் தங்களைக் குறித்து இப்பொழுது இறுதி முரியும் (உயில்) எழுதியுள்ளேன். தங்கள் மீது பாரமேற்றும் இச்செயலைத் தங்கள் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் செய்திருக்க வேண்டும். உண்மை! ஆனால் தங்களைப் பற்றி எனக்குள்ள அன்புப் பிணைப்பாலும், தங்களையன்றி இப் பொறுப்பிற்குத் தக்க வேறொருவர் இல்லை என்று என் இதயம் வற்புறுத்தியதாலும் இம்முடிவினை நான் செய்தேன். என் நிலைமையை நோக்கினால் இவ்வேளையில் இம்முடிவினை அன்றி வேறெதுவும் செய்ய முடியாது என் பதைத் தாங்களும் உணர்வீர்கள். மாறாகத் தோன்றினால் மன்னித்துதவ வேண்டுகின்றேன். எப்படியும், இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். என்னும் நன்னெறிப்படி செய்தேன் என்று அமைதியாக மூச்சு விடுவேன். அதுபோதும். இந்தக் கடிதத்துடன் மற்றொரு கடிதமும் இருக்கும். அதன் தலைப்பிலே எழுதியுள்ள குறிப்பினைப் படித்துப் பார்த்து, அதன் பின்னர் தங்கள் விருப்பம்போல் செய்ய மன்றாடுகின்றேன். வணக்கம். ஆறுமுகம் அறச்சாலை, கடமலைக் குண்டு தங்கள் உயிரன்பன், செல்லப்பன் (கடிதத்தைப் படித்து முடித்தபின் பெருமூச்சுவிட்டார் ஆறுமுகம் என்றோ நடந்த ஒரு காரியம் எத்தனையோ ஆண்டுகள் கழித்து நாடகம் நடத்துவதைக் கண்டு சிந்தித்தார். அடுத்த கடிதத்தையும் உடனே படித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனை எடுத்தார். தலைப்பிலே, ஐயா, இக்கடிதத்தைப் பிரிக்குமுன், இக்கடிதம் அன்பன் செல்லப்பன் எழுதியது. அவன் எனக்கு எத்தகைய கேடும் செய்யான். அவன் எழுதியுள்ளது என்னவாயினும் நிறைவேற்றி வைப்பதே என்கடமை; அவன் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்கமாட்டேன்; இஃது உறுதி என்று நெஞ்சுக்கு நேராக உறுதி செய்துகொண்டு படியுங்கள். செல்லப்பன் சொல்வது யாதோ? அதைச் செய்ய முடியுமோ? முடியாதோ? என்னும் ஐயம் இருக்குமானால் அருள்கூர்ந்து கடிதத்தைப் பிரிக்க வேண்டாம். நெருப்பிலே போட்டு எரித்து விடுங்கள். இவ்வுடல் எரி நெருப்புக்கு ஆளாகவேண்டிய நேரத்திலே - என் ஒரே ஓர் எண்ணம் தாங்கிய இக்கடிதமும் அதற்கு இரையாகட்டும். என்னும் எழுத்துக்களைப் படித்துத் திகைப்படைந்தார், வருவது வரட்டும்; வாக்குத் தவறேன் என்னும் உறுதியுடன் கடிதத்தைப் பிரித்தார். மங்கலம் அம்மாள் இன்னும் ஒரு கடிதமா என்று ஆறுமுகத்தின் பக்கத்திலே உட்கார்ந்தார். கடிதத்தை உரக்கப் படித்தார்.) அன்புள்ள ஐயா, நான் கடமலைக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைந்து ஆறாம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது கழையாடும். கலைக்கூட்டம் ஒன்று இங்கு வந்து சேர்ந்தது. இக்கூட்டத்தினர் கோவிந்த நகரில் ஆடிவிட்டு இங்கு வந்தனர். கடமலையில் ஆடியபின், மந்திச்சுனை, மயிலாடும் பாறை, ஆலந்தளி வரைக்கும் சென்று திரும்பக்கூடிய கூட்டம். அக்கூட்டத்திலே ஒன்பது அல்லது பத்தே வயதுள்ள சிறுமி ஒருத்தியும் இருந்தாள். அவள் முகவாக்கும் பொலிவும் அக்கூட்டத்தில் இருந்தவர்களுக்குப் பெரிதும் வறுபட்டிருந்தது. பொதுவாக அன்று அந்தச் சிறுமியை - அவள் பெயர் பொம்மி என்பது - பார்த்தவர்கள் அனைவரும் அவள்மீது இரக்கம் காட்டவே செய்தனர். ஆட்டப் பயிற்சி மிக்க ஒருத்தி தரையில் பலவகை ஆட்டங்கள் நிகழ்த்தினாள். இரண்டு கழைகளை ஊன்றி அவற்றின் உச்சியிலே கயிற்றைக் கட்டி வைத்து நடந்தாள்; கால்களை மடித்துக் கயிற்றின்மேல் வைத்துக் கொண்டு நகர்ந்தாள்; ஒரு வட்டிலைக் கயிற்றின்மேல் வைத்து நின்றுகொண்டு நகர்ந்தாள். அதன்பின் வட்டிலில் தலையை வைத்து கால்களை மேலே உயர்த்தித் தலைகீழாக நின்று கொண்டு தலையாலே தள்ளிக் கொண்டு சென்றாள். கொடுமையான உயிர்ப் போராட்ட விளையாட்டையும் விளையாட்டாகவே செய்து முடித்தாள். அவள் ஒவ்வொன்றைச் செய்து முடித்து ஓய்வு கொண்டபோதும் பொம்மி அந்த ஆட்டத்தைச் செய்து வந்தாள். பொம்மி வட்டிலில் நடக்கும் வித்தைவரை விந்தையாகச் செய்து முடித்தாள். முதியவளுக்கு இல்லாத பாராட்டும், கையொலியும், ஆரவாரமும் சிறுமி பொம்மிக்குச் சேருமளவு சிறப்பாக ஆடினாள். ஆனால் வட்டிலில் நடக்கும்போது ஏறக்குறைய முடியுந்தறுவாயில் கழைக் கயிற்றிலிருந்து தவறி வீழ்ந்துவிட்டாள். உயரம் எப்படியும் இருபது அடிகளாவது இருக்கும். ஆனால், அவள்மீது உயிரை வைத்துக்கொண்டு கீழே நடந்து வந்த இரண்டு பேர்கள் இவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. இரண்டோர் இடங்களிலே தோல் வழிந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. நல்லவேளை! பொம்மி பிழைத்தது தெய்வச் செயல் என்று கூட்டத்தினர் மனமார வாழ்த்தினர். ஆட்டம் முடியும் அளவும் பொம்மி முகத்தில் களையில்லை. தோல்வி கண்ட அவள் அழாக் குறையுடன் ஒருபக்கம் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் சிந்தனை எங்கெல்லாமோ வட்டமிட்டுக் கொண்டிருந்தது புலப் படாமல் இல்லை. ஆட்டம் முடிந்தபின், ஆட்டக் கூட்டத்தினர் தாங்கள் அடித்து வைத்திருந்த கூடாரத்திற்குச் சென்றனர். நான் வீடு சென்றேன். ஆனால் எனக்குச் சிறிதும் அமைதி இல்லை. பொம்மியை விசாரித்து வரவேண்டும்போல் இருந்தது. கூடாரத்திற்குச் சென்றேன். ஐயோ, ஐயோ, அம்மா! என்னும் அழுகையொலி மிகுந்து கேட்டது. பளார், பளார் என்னும் அடி ஒலியும் மீறிக்கொண்டு சென்றது. அருகில் இருந்த எவராவது தடுப்பதாகவோ, இரக்கம் காட்டுவதாகவோ தெரியவில்லை. செருக்குச் சிறுக்கி; ஆடமுடியாமலா விழுந்தாள்; எல்லாம் தலைக்கனம்; வரத்துக்காரிகளே இப்படித் தான் என்று பேசிக்காட்டி அடியைத்தான் மிகுதிப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் பதைக்க, மற்றப் பெண்கள் இந்தத் தொண்டினையா செய்யவேண்டும்? என்று வருந்தினேன். என்ன ஐயா இது? விடு; காயம்பட்ட பிள்ளையைத் தேற்றுவதை விட்டுவிட்டு அடிக்கிறாயே; விடுய்யா; பாவம், சின்னப்பிள்ளை என்றேன். அடிப்பவன் என்னை ஏற இறங்கப் பார்த்து உங்களுக்கு என்ன தெரியும்? இந்தத் தடிக்கழுதை வந்த பிறகு எங்களுக்கு ஒவ்வோர் இடத்திலும் இடைஞ்சல்தான் செய்கிறது. எந்தப் பொல்லாத வேளையில் இந்தச் சனியன் பிறந்ததோ? எங்கள் உயிரை வாங்குகின்றது. ஆதரவில்லாது அழுதுகொண்டு இருந்த நேரத்தில்தான் எங்கள் கூட்டத்தில் சேர்த்து ஆதரவு தந்தோம். அதன் பயன், அன்று முதல் எங்கள் கூட்டமே அழுகின்றது. என்றுதான் எங்களை விட்டுத் தொலையுமோ? என்றான். அவன் பேச்சிலே துடிப்பு மிக இருந்தது. ஆனால் வரவர, இறங்கிக்கொண்டு வந்தது. அவன் பேச்சினைக் கேட்டுச் சிக்கலான சிந்தனைக்கு ஆளானேன். கூத்தர் தலைவனான அவனையும், பொம்மியையும் பலமுறை பார்த்துப் பார்த்துச் சிந்தித்தேன். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன். அவனுடன் பேசினேன். என்னப்பா, இவள் இருப்பதால்தானே உனக்குத் தொல்லை; இவளை என்னிடம் கொடுத்து விடு; நான் காப்பாற்றிக் கொள்கிறேன். நன்றாக நினைத்துப் பார்த்துச் சொல். வேறு எவரிடமும் கேட்க வேண்டுமானாலும் கேட்டுச் சொல் என்றேன். அவனோ, ஏன் சாமி, எங்களிடமே வழிக்கு வராத இவள் உங்களிடம் சரிக்கு வந்துவிடுவாளா? ஏன் தொல்லைப் படுகிறீர்கள் என்று கூறி பாவம் இளக்க மனம் போல் இருக்கிறது! என்று தனக்குள் கூறிக் கொண்டான். எனக்கு ஒன்றும் தொல்லையில்லை. நீ விரும்பினால் என்னிடம் இவளை ஒப்படைத்து விடு என்று கூறினேன். பொம்மியைப் பார்த்து, பொம்மி என்னுடன் வர உனக்குச் சம்மதமா? என்றேன். அவள் வாயால் பதில் சொல்லவில்லை. அந்தக் கூட்டத்தை விட்டுப் போனால் போதும்போல் இருந்திருக்கிறது. ஆகட்டும் என்று முகத்தை அசைத்துக் காட்டினாள். சரி சாமி, இந்தப் பிள்ளை எங்களிடம் ஐம்பத்தேழு மாதம் இருந்திருக்கிறது. நாங்கள் தான் தண்டச்சோறு துணி கொடுத்திருக்கிறோம். மாதத்திற்கு ஒரு ரூபாயாவது கொடுத் தால்தான் தேறும் என்றான். சரி, வா என்று என்னுடன் அவனையும் பொம்மியையும் அழைத்துக்கொண்டு சென்றேன். அதற்குமுன் அடியுதை தந்தும், ஈவு இரக்கமில்லாது பேசியும் இருந்த கூட்டமாக இருந்தும் பொம்மி அவர்களைப் பிரிய நேர்ந்தபோது கண்ணீர் வடித்தாள். ஒவ்வொருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வந்ததை நினைக்கும்போது பேயோடு ஆயினும் பிரிவு அரிது என்னும் பழமொழி என்நெஞ்சில் நின்றது. வீட்டுக்குப் போனவுடன் ஒரு நூறு ரூபா நோட்டை அவனிடம் தந்தேன். என்னிடம் ஏது சாமி மீதம்? நீங்கள் சில்லரை நோட்டாகவே கொடுங்கள் என்றான். எனக்கு ஒன்றும் சில்லரை தரவேண்டாம்; நூறையும் எடுத்துக்கொள் என்றேன். நூறுமா சாமி என்று மகிழ்ச்சியால் பலமுறை கும்பிட்டுக் கொண்டே, நோட்டைக் கண்களில் ஒற்றி வேட்டியின் முன்தானையிலே முடிந்து இடுப்போடு செருகிக் கொண்டான். பொம்மி! சுகமாக இரும் மா நான் என்னவோ சில வேளைகளிலே கண்டித்திருப்பேன்; அடித்திருப்பேன்; எல்லாம் வயிற்றுப் பாட்டால் தான்மா! இரக்கமில்லாமல் ஏசிப்பேசி இருந்தாலும் அதை எல்லாம் மனத்தில் போட்டுக்கொள்ளாதே அம்மா! ஐயா மனம் கோணாமல் நடந்து நல்லா இரும்மா என்றான். வரத்துப் பிள்ளையாக இருந்தாலும் பிரிவதற்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை சாமி, வருகிறேன் என்று கண்ணீருடன் பிரிந்தான். அப்பொழுதும் பொம்மி அழுதாள். அன்பு நடத்தக் கூடிய அந்தக் கூத்திலே நான் பங்கு பெறாது இருக்க முடியுமா? நானும் கண்ணீரை என் துண்டால் துடைத்துக் கொண்டேன். பொம்மி வந்தவுடன் நான் செய்த முதற் காரியம், அவள் பெயரை மாற்றியதுதான். எப்படி மாற்றினேன்? அழகுக்காகப் பெயர் மாற்றம் செய்யவில்லை. எந்த நன்றியை மறந்தாலும் உய்வுண்டு; ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உய்வே கிடையாது அல்லவா! அதனால் என்னவென் றறியாப் பருவத்திலே, ஊசி மருந்துக்காகக் காலணிகலத்தைத் தந்து என்னை அன்பால் அடிமையாக்கிக்கொண்ட தங்கள் அருமைச் செல்வியின் பெயரைப் பொம்மிக்குச் சூட்டினேன். இன்று பொம்மியைச் செல்வி என்று அழைக்கும் பொழுதெல்லாம் செல்வியின் திருமுகமும் திருச்செயலும் இன்ப மழலையும் என் கண்முன் நிற்கின்றன. இன்று அவள் தங்கள் இல்லத்தில் இருக்கிறாளோ? அல்லது புத்தகத்தில் இருக்கிறாளோ? அவள் எங்கிருப்பினும் இனிது வாழ்வாளாக! அவள் பெயர் கொண்டமையால் இவளும் வாழ்வாளாக (ஒன்றும் சொல்லாமல் முகத்தைப் பொத்திக் கொண்டு மங்கலம் அம்மையார் வீட்டுக்குள் சென்றார். சிறிது பொழுது ஆறுமுகத்தாலும் படிக்க இயலவில்லை. செல்லப்பன் வேண்டி யுள்ளது என்ன என்பதை விரைவாகத் தெரிந்து விடத் துடிப்பு இருந்தது. அதனால் ஆறுமுகம் தொடர்ந்து படித்தார்.) கரடு முரடான வழிகளில் வாழ்ந்து பழகிவிட்ட பொம்மிச் செல்வியை, இளகிய நயமான வழிக்குக் கொண்டுவர ஆரம்பத்தில் சங்கடமாகவே இருந்தது. என்றாலும் அவளிடம் இயற்கையறிவும், பண்பும் இருந்த காரணத்தால் எளிதில் மாற்றியமைக்க முடிந்தது. எழுத்தறிவு பெறுவதற்கும் நான் வழி செய்தேன். ஓரளவு நிம்மதியாகவே வளர்ந்தாள். வீட்டிலே செல்வமாக அவள் வளர்க்கப்பட்டதால் நல்ல பொலிவுடனே வளர்ந்தாள். செல்வியைப் பற்றிப் பலரும் புகழ்வது கண்டு மகிழ்ந்தேன். காலத்தால் செய்யப்பட்ட என் செயலையும், செல்வியைப் பேணுகின்ற முறையையும் பலபடியாகப் பலர்பலர் பாராட்டி யதையும் என் காதாரக் கேட்டு மகிழ்ந்தேன். ஊரார் பாராட்டுக்காக நான் இக்காரியத்தில் இறங்காவிட்டாலும்கூட ஊரார் புகழ்ச்சி செல்வியை உயிராகப் போற்றிக் காக்கத் துணைசெய்தது. அவளும் ஒருநாள் மலர்ந்து பூங்கொடி யானாள். அதற்குமுன் இல்லாத அளவு, அப்பொழுது எனக்கு மகிழ்ச்சியாயிற்று. ஆனால் அம்மகிழ்ச்சிக் கோடுகள் தோன்றி மறையு முன்னமே கவலைக் கோடுகள் படர்வதையும் மகிழ்ச்சிக் கோடுகள் தோன்றியதைக்கூட மறைத்து விட்டதையும் கண்டேன். செல்வியும் என்னதான் எண்ணிக்கொள்வாளோ? ஏதோ என் முன்னிலையில் மலர்ந்த முகத்துடன் நடித்தாள். நான் வீட்டில் இல்லாத வேளைகளிலும் சரி, வீட்டிலே தனித்து இருந்து ஏதாவது காரியம் செய்யும் போதும் சரி, செல்வி தனித்திருந்து கண்ணீர் வடிப்பதே வழக்கமாகிவிட்டது. என்ன இருந்தாலும் மற்ற மற்றவர்களைப்போல எனக்கும் தாய் இல்லையே; எவ்வளவு அன்பு உடையவராக இருந்தாலும் தந்தை தந்தைதானே; தாய் ஆகமாட்டாரே என்னும் சிக்கலான சிந்தைக்கு அவள் ஆட்பட்டிருப்பதைக் குறிப்பாலும் பிறரிடம் அவள் சொல்லிய சொல்லாலும் அறிய முடிந்தது. இவ்வேளையில் ஊர்ப்பெண்கள் வந்து வந்து உள்ளன்புடன் சொல்லுவதாகச் சொல்லும் சொற்கள் பெருந் தொல்லை தந்தன. எனக்கும் செல்விக்கும் உள்ள அன்பில் சற்றும் மாற்றமில்லாமல் வளர்ந்துகொண்டு வந்தாலும் கூட, ஏதோ வொரு பெருத்த இடைவெளி ஏற்பட்டுக் கொண்டு வருவது தெளிவாயிற்று. என் முன்னால் நிற்பதையும், மலர்ந்த முகத்துடன் பார்த்துப் பேசுவதையும், கலகலவென்று களங்கமற்றுச் சிரிப்பதையும் ஏற்று இன்புறும் நிலைமை தொலைந்து போய்விட்டது. எங்கிருந்து கொண்டோ குரல் கொடுப்பாள். ஆம் இல்லை இவ்விரண்டு பதில்களுடன் பேச்சைச் சுருக்கிவிடுவாள். அவளாக வந்து எந்த வொன்றையும் பேசுவது இல்லை. இந்த நிலைமையும் வாழ்வும் என் நெஞ்சைக் குடைந்தது. இது பூங்கொம்புப் பருவம் செய்யும் பொலிவு விளையாட்டு என்பதை நான் உணராது செல்வியைப் பற்றி உள்ளுக்குள்ளாக என்னென்னவோ நினைத்து என்னை வருத்திக்கொண்டேன். காலம் எத்தனை நாடகங்களைத்தான் என் ஒருவன் வாழ்வில் நடத்திக் காட்டுவது? முன்னெல்லாம் பண்ணைக்குப் போன பொழுதுகளில் நான் செல்வியை அழைத்துக் கொண்டு போனது உண்டு. வீட்டினுள்ளே அடைபட்டுக் கிடப்பது அவளுக்குப் பிடிப்பது இல்லை. மாலைப் பொழுது வருவதை எதிர்பார்த்திருந்து அவளே புள்ளிமான் போல் துள்ளி வந்துவிடுவாள் தோட்டத் திற்கு. அவள் ஓட்டத்தையும் நடையையும் கண்டு என் நெஞ்சம் படபடக்கும். கால் முழுமையும் தரையில் படிய நடப்பதைக் காணமுடியாது. இளங் கன்று பயம் அறியுமா? ஆனால், அவளோ இப்பொழுது தோட்டத்தைப் பற்றிய நினைவை அறவே விட்டுவிட்டாள். வீட்டைவிட்டு வெளியேறும் நினைவே அவளுக்கு இல்லை. நானும் வலியுறுத்தவும் இல்லை. என் தோட்டத்திற்கு அடுத்த தோட்டம் பாலப்பன் என்பவருக்குரியது. அவர் பொதுவாக நல்ல மனிதர்; நன்றாகப் பழகும் பண்புடையவர். அவருக்குச் செழியன் என்னும் பெயருடைய மகன் ஒருவன் உண்டு. அந்த மலைக்காட்டிலே மருத்துவக் கல்லூரி அளவுக்குப் படிக்க வைத்த ஒரே ஒருவர் அந்த பாலப்பர்தான் என்றால் அவர் துணிவும், அறிவு வேட்கையும் புலனாகும் என்றே நினைக்கின்றேன். அவர் இயல்புக்குத் தகவே செழியனும் சிறந்தவனாகவும், அறிவாளி யாகவும் விளங்கினான். அவன் விடுமுறையாக ஊருக்கு வந்த பொழுதுகளில் தோட்டத்திற்கு வரவும், வந்து என்னோடு பழகவும் தவறுவது இல்லை. இவ்வேளைகளில் செல்வியும் இருப்பாளாயின் எங்கள் உரையாடல் இடையே அவள் கலந்துகொள்வதும் உண்டு. எல்லாரும் மகிழ்ச்சியாகப் பேசி இன்புறுவோம். ஒருநாள் நான் தோட்டத்தில் இருந்தேன். செழியன் என்னிடம் வந்தான். அதற்கு முன் காணாத அளவு தயக் கத்துடன் பேசினான்: ஒரு வாரத்திற்கு முன்னாகப் படிப்பு முடிந்துவிட்டது. இனி எங்காவது என் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். தேர்வில் உறுதியாக வெற்றி கிடைக்கும்; தொழிலைத் தொடங்கவேண்டிய இந்த வேளையிலே, திருமணமும் நடத்திவிட வேண்டும் என்று அப்பா அம்மா சொல்கிறார்கள் என்று எங்கேயோ பார்த்துக்கொண்டு பேசினான். நல்லது தம்பி; அப்படித்தான் செய்யவேண்டும். எந்த எந்தக் காலத்தில் எந்த எந்தக் காரியத்தைச் செய்யவேண்டுமோ அந்த அந்தக் காலத்தில் அந்த அந்தக் காரியத்தைச் செய்துவிடுவது தான் நல்லது. இதனைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி யடைகின்றேன். அப்படியே செய்ய வேண்டியதுதான் என்றேன். செழியன் சொன்னான் : என் தந்தையாரைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே அறிவீர்கள். என் விருப்பத்திற்கு அவர் தடையாக இருக்கமாட்டார். ஆலந் தளியிலே முதல் முதல் படித்த பெண் எங்கள் அம்மாதான். அவரும் ஆரம்பத்தில் ஆயாவாகத் தொண்டு செய்திருக்கிறார். இன்றும் உள்ளூர் மருத்துவர் அவர்தான். அவர் விருப்பத்தாலும் தூண்டுதலாலும் தான் நான் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடிந்தது. அவருக்கு நான் என்றால் உயிர். நல்ல குடும்பம்; இப்படித்தான் ஒரு குடும்பம் இருக்க வேண்டும். வேறு என்னதான் கடைசியில் அள்ளிக் கட்டிக் கொண்டு போகப் போகிறோம் என்றேன் நான். எனக்கு ஓர் எண்ணம் இருக்கிறது. அது இரண்டு ஆண்டு களுக்கு முன் இத் தோட்டத்தில்தான் ஏற்பட்டது. தாங்கள் ஒத்துக்கொள்வதாயின் தங்கள் செல்வியைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது என் கருத்து. எனக்குச் செல்வியை மணந்துகொள்வதில் முழு நிறைவு இருக்கிறது. தாங்கள் அனுமதிப்பதாயின் உடனே பெற்றோர்களிடம் சொல்லி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிடலாம். இதனால் அவர்கள் திட்டம் நிறைவேறுவதுடன், என் ஆவலும் நிறைவேறும் என்று செழியன் நிறுத்தினான். படித்த நாகரிகம் வாய்ந்த வாலிபன் அல்லவா செழியன். தொடக்கத்தில் தயக்கத்தோடு பேசினாலும் அவன் குரலில் தெளிவு இருந்தது. எனக்குள் அவனைப் பாராட்டினேன். இதைப் பார்க்கிலும் நான் கேட்க வேண்டிய நல்ல செய்தியும் உண்டா? என்று எனக்குள் மகிழ்ந்தேன். உன் பெற்றோர்களிடம் கலந்து கொள்; மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். நானும் செல்வியின் காதில் போட்டு வைக்கிறேன் என்றேன். எனக்கு முழு நிறைவு இருக்கிறது என்பதை என் முகத்திலிருந்து அவன் அறிந்துகொண்டிருக்க வேண்டும். அவன் முகம் அவ்வளவு பொலிவுடன் விளங்கியது. மறுநாளே செழியன் வந்தான். அப்பா ஏற்றுக் கொண்டு விட்டார். அம்மா அடுத்த வாரத்தில் தங்கள் வீட்டுக்கு வர இருக்கிறார். என்று சொல்லி, நான் செல்வியிடம் கேட்டிருப்பேன், அவள் கூறியதைக் கூறுவேன் என்று எதிர்பார்த்து நின்றான். நான், நல்லது ஆகட்டும் என்று விடை தந்து அனுப்பினேன். செல்வியினிடம் கேட்கவில்லை என்பதைச் செழியனிடம் சொல்லிக் கொள்ள வேண்டுமா? எனக்கோர் எண்ணம்; திட்டப் படியே நடந்து விட்டால் கவலையில்லை. ஏதேனும் ஏற்ற மாற்றம் ஏற்படுமானால் மெல்லிய உள்ளம் தாங்க மாட்டாமல் எவ்வளவு அல்லல்கள் அடையும்? எல்லாம் செயல் முறைக்கு வரும் போது சொல்லிக் கொள்ளலாம். பெண்ணைப் பார்க்காமலா மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொள்வார்கள்; அப்பொழுது தெரிந்து கொள்ளட்டுமே என்றிருந்தேன். அடுத்த நாள் நான் தோட்டத்தில் இருக்கும்போது பாலப்பர் என்னைத் தேடி வந்தார். தோட்டத்திற்கு வந்தேன். அப்படியே... என்று சொல்லிவிட்டு செழியன் சொன்னான். அவன் அம்மாவும் வர இருக்கிறாள். இப்படி அடுத்து அடுத்து இருக்கும் தோட்டக்காரர்களான நமக்குள் சம்பந்தம் ஏற்படுவது எவ்வளவு பொருத்தமான காரியம் என்றார். என்மகிழ்ச்சியைப் புன்முறுவலால் தெரிவித்து வணக்கத்துடன் அனுப்பி வைத்தேன். செழியன் கூறியவாறு, அவன் தாய் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் மூன்று முதிய பெண்களும் வந்திருந் தார்கள். நெடு நேரம் என்னிடமும், செல்வியிடமும் பேசிக் கொண்டிருந்தார்கள். உடன் வந்தவர்கள் தான் என்ன என்னவோ விவரங்களைக் கேட்டனர். அவர்கள் கேளாமலே என் சொத்தில் ஒரு பாகத்தை ஆறுமுகம் அறச் சாலைக்கு எழுதி வைத்துவிட்டேன். இன்னொரு பாகம் செல்விக்கு என்று ஒதுக்கி வைத்துள்ளேன். இப்பொழுது இருக்கும் கையிருப்புப் பணமும் செல்விக்கு உரியதுதான். அவளுக்கு எவ்வளவு என்னால் கூடுமோ அவ்வளவும் செய்வேன். எனக்கு இனி என்ன வேண்டும்? ஏதோ இருக்கும் வரை கொஞ்சம்... என நானே சொன்னேன். விருந்துக்கும் ஏற்பாடாகி இருந்தது. வேறோர் உறவினர் வீட்டுக்குப் போய் வருவதாகக் கூறிப் போயினர். அவர்களை நெடுநேரம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா? நாங்கள் அங்கே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்து விட்டோம். இங்கே சாப்பிட வேண்டும் என்று எவ்வளவோ சொன்னோம்; விட மாட்டேன் என்று இலை போட்டு விட்டார்கள். என்று உடன் வந்தவர்களுள் ஒருத்தி சொன்னாள். சரி, அதனால் என்ன? வேண்டியவர்கள் வற்புறுத்தும் போது எப்படித் தட்டுவது? என்று என் வாய் சொல்லியது. ஆனால் உள்ளுக்குள் வேதனையாக இருந்தது. வீட்டை விட்டு அவர்கள் போகுமுன் இருந்த பேச்சும் முகமலர்ச்சியும், போய் வந்த பின் இல்லாது இருந்தது எனக்குத் தெளிவாயிற்று. போன இடத்திலே ஏதோவோர் மாற்ற நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்று மட்டும் உறுதி செய்தேன். அதனைத் தெளிவாக்குவது போல, பெண்ணைப் பிடித்திருக்கிறது; குடும்பத்திற்கு ஏற்றவள்தான். எல்லாம் போய்ச் சொல்லி அனுப்புகிறோம். திருமணம் வாழ்நாள் காரியம் அல்லவா? வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு விடை பெற்றுச் சென்றனர். என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு துயர் ஏற்பட்டது. என் எண்ணக் கோட்டை துகள் துகளாக நொறுங்கப் போகின்றது என்பதை உணர்ந்தேன். ஆனால் கள்ளம் கபடம் அற்ற செல்வியிடம் எத்தகைய மாற்றமும் காணவில்லை. நான், செழியன் விருப்பத்தைச் சொல்லி அவள் கருத்தைக் கேளாது இருந்தது எவ்வளவு நன்மையாகப் போய் விட்டது என எண்ணினேன். ஆனால் அதற்காக இன்பப் படவோ, சிரித்து மகிழவோ, முடியாத அளவு துயரம் அழுத்திக் கொண்டிருந்தது. செழியனிடமிருந்தோ, அவன் பெற்றோரிடமிருந்தோ செய்தி வரும் என்னும் நம்பிக்கை எனக்கு அறவே இல்லை. “ஏதோ ஒரு வழியில் ‘தடைப்பட்டு’ விட்டது; இனி என்ன செய்வது? என்று அமைதியாக இருக்கவும் முடியவில்லை. பெண் பார்க்க வந்தவர்கள், உறவினர் வீட்டுக்குப் போயிருந்த பொழுதிலே செல்வியின் தொடக்க வரலாற்றை அறிந்திருக்கக் கூடும்; தாய், தந்தையர், ஊர், குலம் எதுவும் அறிய முடியாத ஆட்டக்காரியான ஓர் அநாதைப் பெண் அவள் என்று அறிந் திருக்கவும் கூடும்; பணமும் பண்பும், படிப்பும் நிறைந்த எத்தனையோ பேர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க செழியனுக்குப் போயும் போயும் இந்த அநாதையையா பார்த்தோம் என்னும் முடிவுக்கு வந்திருக்கக் கூடும் என்று பலவாறாக எண்ணிக் கொண்டேன். வேறென்ன காரணம் சொல்ல இருக்கிறது? செழியன் என்னிடம் திருமணப் பேச்சை எடுக்கும் வேளையிலேயே வெளிப்படையாகச் செல்வியின் வரலாற்றைச் சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறி விட்டேன். இப்பொழுது நினைக்கிறேன். என்ன பயன்? நான் சொல்லவும் தான் எப்படி முடியும்? செல்வியை அநாதை என்று எண்ணியிருந்தால் அல்லவோ என் பேச்சில் வந்திருக்கும். என் செல்வ மகள் அல்லவா? அவளை எப்படி அநாதை என்று சொல்லியிருப்பேன்? பெண் பார்த்துச் சென்று பத்து நாட்கள் பறந்து விட்டன. அடுத்த நாள், ஒருவன் செழியன் தந்தார் என்று ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து நீட்டினான். என் பதிலுக்கோ பதில் கடிதத்திற்கோ எதிர்பாராதவனாகக் கடிதம் கொண்டு வந்தவன் சொல்லியும் கொள்ளாமல் நழுவி விட்டான். அதுவே கடிதத்தில் என்ன செய்தியிருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டியது. எனினும் பிரித்துப் படித்தேன். அதில் இருந்த வரிகள் சில என்னைக் கொல்லாமல் கொன்றன. செழியன் நல்லவன்; என்பால் அன்பன்; அன்பு காரணமாகவே தன் உள்ளத்துள்ள வற்றைக் களங்க மில்லாது எழுதியிருக்கிறான். ஆனால் எனக்கு அதுவே சாக்காடு வேதனையாக இருக்கும் என்பதை மருத்துவக் கல்லூரியில் படித்திருந்தும் உணரத் தவறி விட்டான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்; விளக்கிக் காட்டினேன்; பயனில்லை; பல ஆண்டுகள் ஆயாவாகவும் மருத்துவராகவும் பணியாற்றி வரும் என் அம்மா உங்களை நினைத்துத் திருமணத்தை ஒத்துக் கொள்ள மறுத்து விட்டார். எனக்கு நேரிட்டுள்ளது தாங்கமுடியாத ஏமாற்றம். எதுவும் துணிந்து செய்ய முடியாத இக்கட்டான நிலைமைக்கு ஆட்பட்டு விட்டேன். என்று செழியன் எழுதியனுப்பிய வரிகளைப் படிக்கும் வேளையில் என்னால் நிற்க முடியவில்லை; உட்கார்ந்தேன்; என் தலையை நேராக நிறுத்தி வைக்கவும் ஆற்றல் இழந்தேன். நான் நினைக்காத காரணம் ஒன்று குறுக்கிடக் கண்டேன். என் நோய் எனக்குக் குற்றமானதாகத் தெரியவில்லை. மற்றவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியுமா? நான் இருப்பது செல்வி திருமணத்திற்குத் தடையாக இருக்கும் என்பதை அதுவரை உணரவில்லை. உணரச் செய்தது செழியன் கடிதம். அன்று வீட்டுக்கு வந்து படுத்தேன்; அதற்கு மேல் வெளியேறவே இல்லை. ஏன்? வீட்டுக்குள் நடந்து திரியவும் இல்லை. நோய்ப்பூச்சிகளுக்கு என் படுக்கை கொண்டாட்டமாகிவிட்டது. நன்றாக விளையாடட்டும் என்று மருந்து சாப்பிடுவதையும் விடுத்தேன். எப்படியோ வாழ்வை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும். என் வாழ்வு எவ்வளவு விரைவில் முடிகின்றதோ அவ்வளவு விரைவில் செல்விக்கு நல்ல காலம் ஏற்பட முடியும் என்னும் முடிவுக்கு வந்துவிட்டேன். என்னால் வேறென்ன செய்ய முடியும்? மருத்துவத் தொழிலிலே ஊறிப்போன ஒரு குடும்பமே எனக்குள்ள நோய் கருதி, என் வளர்ப்புப் பிள்ளையைத் திருமணம் செய்ய மறுத்தது என்றால் மற்ற குடும்பங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நான் எப்படி என் பிள்ளையின் நல் வாழ்க்கைக்காகத் துடிக்கின்றேனோ அவ்வளவு துடிப்பும் தம் பிள்ளையின் நல்வாழ்வுக்காக அவர்களுக்கு இருக்கத்தானே செய்யும். தொற்று நோயாளி பிள்ளையை மணந்து தொல்லைப்பட நேரிட்டு விட்டால்? என்ற கவலை இருக்கத்தானே செய்யும்! நான் ஆத்திரப் படுவதற்கும் அன்புதான் காரணம்; அவர்கள் மறுப்பதற்கும் அந்த அன்புதான் காரணம். அவரவர் பக்கம் நீதி இருக்கிறது. அடுத்தவர்களைப் பற்றிக் குறை கூறுவது தான் நீதியற்றது என்னும் விதிக்கு வந்துவிட்டேன். என் வளர்ப்புப் பிள்ளை எனச் செல்வியை எண்ணி யிருக்க மாட்டார்களோ, என் சொந்த மகள் என்றே எண்ணி, பரம்பரை நோய் இவளுக்கும் பற்றிவிடும் என்று எண்ணி யிருப்பார்களோ என்றும் எண்ணினேன். ஆனால், என் அம்மா, தாய் தகப்பன் இன்னார் என்று அறியாக்கழைக் கூத்துப் பிள்ளை என்றார். அது பழைய குப்பை; அதைப்பற்றி நமக்கென்ன - பிள்ளை எப்படி? என்று கேட்டார் அப்பா. என்று செழியன் கடிதத்தில் எழுதியிருந்தது என் சந்தேகத்தைத் துடைத்தது. என் உயிர் மேல் வாஞ்சை கொண்டு வேண்டு மானால் வேறு வேறு காரணங்கள் காட்டி மழுப்பலாம். ஆனால் என் சாவு அன்றிச் செல்விக்கு நன்மை எதுவும் தராது! இந்நேரத்தே என் வரலாறு முழுமையும் ஒரு முறை சிந்திக்கிறேன், திருப்பிப் பார்க்கிறேன். அதன் முடிவு இதுதான். அறியாமையால் யான் என்னைப் பலமுறை துன்புறுத்திக் கொண்டேன். அது என் தெளிவில்லாமை ஒன்றால்தான் என்பதை இப்பொழுதே உணர்கின்றேன். உணரவும் இப் பொழுதுதான் முடிந்தது. என் வாழ்வில் நடந்தவை அனைத்தும் நன்மையானவையே. இயற்கை நடத்தும் எதுவும் தவறானதாக இருக்கமுடியாது. அதனை எதிர்க்கவோ மாற்றவோ நினைத்து மனிதன் வாடுவது தான் அறியாமையாகத் தோன்றுகின்றது. நிறைமதியை என் முன்னே நிறுத்தியது இயற்கை, எளிமை வாழ்விலே அன்பும் இன்பமும் அனுபவிக்க இயலும் என்பதைத் தெள்ளிதின் எடுத்துக் காட்டியது. அதே நிறைமதியைப் பறித்தும் கொண்டது. அவ்வாறு ஆகியிருக்கா விட்டால் - ஒருவேளை - அவளோடு என் இல் வாழ்க்கையைச் செவ்வையாக நடத்தி யிருப்பேன். எனக்காகவும் அவளுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவுமே வாழ்ந்துவிட்டிருப்பேன். அதனை மாற்றிச் சற்று விரிந்த பார்வையை அடையச் செய்ய வேண்டியது அவசியமாயிற்று. அதற்காகவே, மயங்கி விழுந்து தங்கள் முற்றத்திலே கிடக்கவும், தங்கள் அன்பிலே எழும்பவும் ஏற் பட்டது. அதன் பயன் முயற்சியாளனாகிப் பொருள் தேடவும், அதனை நன்முறையில் பயன் படுத்தவும் நேரிட்டது. எல்லாவூரும் எம்மூர்; எல்லாரும் நம்மவர் என்னும் உயரிய எண்ணமும் வலுத்தது. இதற்கோர் முத்திரையாக அமைந்தது கழைக்கூத்து. பொம்மி என்னிடம் வளர்ந்தாள். என்னிடம் அவள் வளர வேண்டிய கால எல்லை முடிந்தது. வேறொருவர் அன்பும் அர வணைப்பும் அவளுக்குத் தேவை. அதற்கு நான் இருப்பது தடையாக இருக்கிறது. அத்தடை இனி நீக்கப்பட்டுத் தான் தீரவேண்டும். இயற்கை நியதி அது. அவளுக்குரிய இடத்தைக் கண்டடையும் வரை இடைத் தாங்குதல் வேண்டும் அல்லவா! அவ்வாறு தாங்குபவர் யார்? அதற்காகவே தாங்கள் பொறுப் பேற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்தப்படுகின்றீர்கள். இன்னும் என்ன சொல்வது? உடனடியாக நீங்கள் இங்கு வரவேண்டும். வரும்வரை இருப்பேனோ? இருக்க மாட்டேனோ? என் கையில் அது இல்லை. யான் இருந்தாலும் சரி, இல்லை யானாலும் சரி. இக்கடிதத்துடன் நான் செல்விக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்து விட்டேன். இனி என்னால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை. தாயும் நீங்களே; தந்தையும் நீங்களே; எல்லாமும் நீங்களே, நான் என் இதய முழுமையையும் ஒன்று கூட்டி உங்களைத் தவிர்த்து யாரும் எதுவும் செல்விக்கு இல்லை என்று உறுதி மொழிகின்றேன். அவள் வாழ்வும் தாழ்வும் தங்களைச் சேர்ந்தது அன்றி வேறில்லை. இக்கடிதம் எழுதியபின் எனக்குச் சற்று அமைதி யுள்ளது. நல்லவர் ஒருவர் கையிலே ஒப்படைக்கும் படியான பேற்றைக் காலம் எனக்குச் சுட்டிக் காட்டியதே என்பதுதான் அமைதிக்குக் காரணம். அந்த அமைதியிலே என் மூச்சும் அமைதியாக ஊசலாடுவதும் எனக்குத் தெரியாமல் இல்லை. தங்களை நெஞ்சார நினைக்கும் அன்பன், செல்லப்பன். நிறைமதி இல்லம் கடமலைக்குண்டு மங்கலம் அம்மையாரும் ஆறுமுகமும் உடனே கடமலைக் குண்டு வந்து சேர்ந்தனர். செல்லப்பன் படுக்கையில் கிடந்து கொண்டே கைதூக்கி வணங்கினான். தன் நெற்றியிலே கூப்பி வைத்த கையை எடுக்கவும் முடியாதவனாகக் கிடந்தான். ஆறுமுகம் தான் கையையெடுத்து மார்பின் மீது கிடத்தினார். அவன் நிலைமை கண்டு ஆறுமுகம் கண்ணீர் பெருக்கினார். கண்ணீர்த் துளிகள் சில செல்லப்பன் மீதும் பட்டன. அதனை உணரச் செல்லப்பனால் முடியவில்லை. செல்லப்பனை நினைத்து அழுது கொண்டிருந்த செல்வியின் பக்கத்தில் மங்கலம் அம்மையார் உட்கார்ந்திருந்தார். இது யார்? என்று சுவரைச் சுட்டிக் காட்டினார் அவர். நான்தான் இந்த ஊருக்கு வந்த புதிதில் எடுத்த படம்; எனக்கு அப்பொழுது எட்டு ஒன்பது வயதிருக்கும் என்று அழுகை கண்ணீருக் கிடையே கூறினாள் செல்வி. உன் படம் தானா? ஆவலோடு கேட்டார் மங்கல அம்மை. செல்லப்பன் மூடியிருந்த கண்களைத் திறந்து ஆம் என்றான். என் செல்வி இவள்தான்; என்றார் மங்கலம். செல்வியா? என்றார் ஆறுமுகம். ஆம்; இந்தப் படத்தைப் பாருங்கள் என்று சுவரைக் காட்டினார் அம்மையார். செல்வி என்று கத்திக் கொண்டு, ஓடிப் போய்த் தழுவிக் கொண்டார் ஆறுமுகம். மதுரை எங்கே? கடமலைக் குண்டு எங்கே? திருவிழாவில் காணாமல் போன செல்வி, என் செல்லப்பனிடம் வளர்ந்திருக்கிறாள் வியப்பின் உச்ச நிலையிலே நின்று பேசினார். நம் செல்வியா இவள்? நான் பேறு பெற்றவன் என்று கண்ணைத் திறந்து பார்த்தான் செல்லப்பன். அடுத்த நொடியில் அவன் கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன. ஆம்! நல்லவனுக்காகக் கண்ணீர் வடிக்க வேண்டிய நாட்களுள் ஒன்றாயிற்று அந்நாள். (செய்ந்நன்றி மறவாச் செல்லப்பனை நினைக்கும் பொழுது ஒன்றிரண்டு குறள்களா நினைவுக்கு வருகின்றன? செய்ந்நன்றி அறிதல் அதிகாரக் குறள்களில் பெரும்பாலும் நினைவில் நிற்கின்றன) செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 101 காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 102 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. 103 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 104 உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு 106 எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு 107 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றறே மறப்பது நன்று 108 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு 110  23. அழுகைச் சிரிப்பு கடகட என்னும் ஒலியுடன் இரண்டு பேர்கள் கட்டை வண்டிகளை இழுத்துக் கொண்டு வந்தனர். காலைத் தரையில் ஊன்ற முடியாத அளவு, கடுமையான வெயில் இருந்தது. வெப்பம் தாங்கமாட்டாமல் துண்டால் தலையைச் சுற்றிக் கட்டிப் பிடர்க் கழுத்தையும் மறைத்திருந்தனர். ஒருவன் வெயிலையோ வண்டிப் பாரத்தையோ பொருட்டாய் நினைத்ததாகத் தெரியவில்லை. அவன் குழந்தைப் பருவம் முதற் கொண்டே வெயில், மழை, பனி, காற்று, பசி இவற்றுக்குச் சோதனைச் சாலையாகிக் கிடந்து கிடந்து மரத்துப் போனவன். இனி இவையெல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது என்னும் அளவுக்கு உடலையும் உள்ளத்தையும் உரமாக்கிக் கொண்டவன். குண்டும் குழியுமாகக் கிடந்த சாலையிலே வண்டியை இழுத்துச் செல்லச் சங்கடப்பட்டான் மற்றொருவன். அவனுக்கு வண்டியிழுப்பது புதிய தொழில் - ஆரம்பத் தொழில். வெயில் மழை இவற்றின் தாக்குதலுக்கு அவ்வளவாக ஆட்படாது வளர்ந்துவிட்டவன். அவனுக்குத் தான் தாங்கமுடியாத் தொல்லையாக இருந்தது. முன்னவன் அளவுக்கு மிகுதியான சுமை ஏற்றியிருந்தாலும் கூட, கரடு முரடான அந்தப் பாதையிலே எளிதாக இழுத்துச் செல்வதையும், பின்னவன் குறைந்த அளவுப் பாரத்தையும் இழுத்துப்போகத் திண்டாடுவதையும் பார்த்தவர்கள் பழக்கத்தின் சிறப்பினை உணராமல் போக முடியாது. மிதிவண்டி விடக் கற்றுக்கொண்டவன் எளிதாக வண்டியை விடுகின்றான். வண்டி விடுவது விளையாட்டாக இருக்கிறது. வண்டியைத் தள்ளிக்கொண்டு போவதும் எளிதாக இருக்கிறது. வண்டியைத் தள்ளும் நினைவே இல்லாமல் ஒரே ஒரு விரலால் பிடித்து உருட்டுகின்றான். வண்டியும் அவன் நினைவுப்படியெல்லாம் எளிதில் வளைந்தும், திரும்பியும் செல்கின்றது. புதியவன் வண்டிவிடுவதும் தொல்லையான வேலை யாகிவிடுகின்றது. அதை உருட்டிச் செல்வதும் சங்கடமான வேலையாகிவிடுகின்றது. இரு கைகளாலும் எவ்வளவு அழுத்திப் பிடித்தாலும் தன்மீது சாய்த்துக் கொள்கிறான்; அல்லது அதன் மீது சாய்ந்து மோதிக்கொள்கிறான்; இல்லையேல் இளைத்து அலுத்துத் தள்ளுகின்றான். இவ்வளவு ஏன்? நடை கற்கத் தொடங்கும் குழந்தை, நடை வண்டியைத் தள்ள என்ன பாடு படுகின்றது. நாட்கள் செல்லச் செல்ல நடைவண்டி அலறிச் சக்கரங்களும் தூள் ஆகுமாறு கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு ஓடுவது இல்லையா? பழக்கம் தானே காரணம்! இப்பழக்கம் முன்னவனிடம் இருந்தது. அவனுக்கு வேலைத் தொல்லையும் இல்லை; வெயில் தொல்லையும் இல்லை. பின்னவனுக்குப் பழக்கம் இல்லை. அதனால் வேலைத் தொல்லையும் உண்டு; வெயில் தொல்லையும் உண்டு. முன்னவனும் வண்டி தள்ள வந்த தொடக்கத்தில் தொல்லைப்பட்டது உண்டு. எவ்வளவோ கசப்பான வேப்பிலை யும் தின்று தின்று, பழக்கப்பட பழக்கப்பட, கசப்பே இல்லாத தாகித் தீனியும் ஆகிவிடுவதுபோல் தான் - பழக்கமாகி விட்டது. பின்னவன் புதிதாக வேப்பிலை தின்னத் தொடங்கியிருக்கிறான். வரவரப் பழக்கமாகிவிடும். அவன் பழக்கமாக்கிக் கொள்வதற்கு ஏற்ற உறுதி இல்லாதவனாக இருந்தால் பழக்கத்தையே விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியும் நேரலாம். நல்ல நண்பன் ஒருவன் கிடைத்தால் உள்ளத்தில் உறுதிப்பாடு இல்லாதவனையும் உறுதியுடையவனாகச் செய்துவிடலாம். போட்டியும் பொறாமையும் குடிகொண்ட ஒருவனாக இருந்தால் புதியவனைத் தொழிலை விட்டு ஓடவும் படுத்திவிடலாம். இருளாண்டி. புதுப் பழக்கம் இல்லையா உனக்கு! கொஞ்சம் நாட்கள் சென்றால் சரியாகி விடும். நானும் ஆரம்பத்தில் இப்படித்தான் பெரும்பாடு பட்டேன். உனக்காவது வயிற்றுப் பாட்டுக்கு வழி இருக்கிறது. எனக்கு அதுவும் இல்லாமல் நடுப்பகல் வரை வண்டி இழுத்து ஏதோ காசு கிடைத்தால் கஞ்சி வைத்துச் சாப்பிட்டதும், அதற்கு வழியில்லாமல் உண்ணா விரதம் இருந்ததும் உண்டு. இன்று கவலையற்ற சாப்பாடு சாப்பிட முடிகிறது. நான் கட்டை வண்டி இழுக்கும் இத் தொழிலை விட முடியாவிட்டாலும் என் பிள்ளைகளாவது ஒரு கும்பிடு போட்டுவிட்டு விடலாம் என்னும் நிலைமை ஆகிவிட்டது. எப்படியோ நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சம் மீதம் வைத்துச் சின்னதுகளைப் படிக்க வைக்க முடிகின்றது. இன்னும் இரண்டொரு வருடத்துப்பாடு. பிறகு இந்தத் தொழிலுக்கு நானும் ஒருவேளை முழுக்குப் போட்டாலும் போட்டு விடலாம் என்று புதிதாக வண்டி இழுக்க வந்த இருளாண்டியினிடம், பழக்கப்பட்ட வண்டிக்காரன் தலைமலை சொன்னான். நீ முயற்சியாளன்; மனிதனாகப் பிறந்தால் இவ்வள வாவது வைராக்கியம் வேண்டும். நீ ஒருவன் எவ்வளவோ காரியங்களைச் சாதித்திருக்கிறாய். முயற்சியாளி, முயற்சியாளி என்று எவரெவரையோ உதாரணத்திற்குப் பேசுகிறார்கள். உன்னை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாதாரணமான கட்டை வண்டிக்காரன் தானே நீ! உன் முயற்சியை உயர்வாக எத்தனை பேர் நினைப்பார்கள் என்று உள்ளத்தைத் திறந்து இருளாண்டி பேசினான். தலைமலை சிரித்தான். தம்பி, என்னவோ பெரிய முயற்சியாளன் என்று என்னைச் சொல்கிறாயே; நீ பைத்தியக் காரன்! புதியவன்தானே! நம் வண்டிப்பேட்டை முதலாளி இருக்கிறாரே - மணிக்காளை - அவரைப் பற்றித் தெரியுமா? தெரிந்திருந்தால் என்னை இவ்வளவு பெரிது பண்ணிப் பேசியிருக்கமாட்டாய்! அண்ணே, இப்பொழுது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் முதலாளியினிடம் அழைத்துக் கொண்டுபோய் இவன் புதியவன்; நல்லவன்; வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்; இவனைக் கவனித்துக் கொள்கிறேன் என்று என்னை வேலையில் சேர்த்துவிட்டாய் அல்லவா! அன்று முதலாளி உட்கார்ந்திருந்த இடத்தில் அவர் தலைக்கு மேலே சுவரில் இரண்டு படங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று கட்டை வண்டிப் படம். என்னால் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. நம் முதலாளியைப் போல் முகவாக்குள்ள ஒருவர் - ஆனால் நல்ல வாலிபர் - வண்டி இழுத்துப் போவதுபோல் இருந்தது. அது பற்றி உன்னிடம் கேட்க நினைத்தேன். மறந்து போனேன். அதைத்தான் நானும் சொல்லப்போகிறேன். நீயும் சரியான சமயத்தில் நினைவுக்கு கொண்டு வந்தாய். வண்டியை நம் முதலாளியைப் போல் முகவாக்குடைய ஒருவர் இழுக்க வில்லை; நம் முதலாளியேதான்! அப்படி வண்டியிழுத்துப் பிழைத்தவர்தான் இவ்வளவுக்கு முன்னேறியிருக்கிறார். இருளாண்டி வண்டி இழுப்பதை மறந்துவிட்டான். எளிதில் நம்பமுடியாத செய்தியாக இருந்தது அவனுக்கு! என்ன இருளாண்டி, பேச்சம் நடக்கவேண்டும்; காரியமும் நடக்க வேண்டும். நின்றால் கட்டி வருமா? நீ இதை இவ்வளவு பொருட்டாக எண்ணுகிறாய். இதற்கே இவ்வளவு ஆச்சரியப் படும் நீ, துன்பமோ இன்பமோ எதிலும் இப்படித்தானே நின்று விடுவாய். மணிக்காளை அடிக்கடி சொல்வான் - எனக்கு அவன் இவன் என்று சொல்லிப் பழக்கமாகி விட்டது. இப்பொழுது நாம் பழகுவது போலத்தானே நானும் அவனும் பழகினோம். பழக்கம் எளிதில் மாறுமா? நானும் அவனும் தனித்துச் சந்தித்தால் அவன் இவன் என்று குடும்பச் செய்திகளையும் அளவளாவிப் பேசிக்கொள்வோம். வேறு எவரும் இருந்தாலும் கூட என்னை நண்பனாக எண்ணித்தான் பேசுவான். ஆனால் நான்தான் கொஞ்சம் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்வேன். மரியாதையாகவும் பேசிக்கொள்வேன். நீ செய்வதுதான் சரி; இவ்வளவு செல்வன் ஆன பின்னும் உன்னை முன்பு போலவே நண்பனாக நினைக்கிறார் என்பதை விந்தைதான். தம்பி, அவன் தன்னை முதலாயி என்று நினைப்பதே இல்லை. இன்னும் தன்னை கை வண்டிக்காரனாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரே ஒருகாரணத்தால்தான் அப்படி இருக்கிறான். பிறவியிலேயே முயற்சியும், முன்னேற்றமும், பண்பும் அறிவும் பெற்றவன் மணிக்காளை, தன் நிலைமை என்றைக்கேனும் மாறிவிடக் கூடாதே என்றுதான் அந்தக் கட்டை வண்டியை விற்காமல் பத்திரமாக வைத்திருக்கிறான். படம் எழுதியும் தொங்கவிட்டிருக்கிறான். அதிசயமான மனிதர்தான் மணிக்காளை. ஆமாம்; அதிசயமானவன்தான். பேச்சோடு காரியமும் நடக்கட்டும்; கொஞ்சம் தண்டி ... வா. கைவண்டி! ஒரு மூடை இருக்கிறது. கொண்டு போகிறாயா? என்ற ஒரு குரல் கேட்டது. ஒரு மூடையா? சரி; எங்கே இருக்கிறது? என்றான் தலைமலை. கடையொன்றைச் சுட்டிக் காட்டினான் மூடைக்காரன். மூடையைச் சந்தைப் பேட்டைக்கு கொண்டு செல்ல வேண்டும்; கூலி எவ்வளவு? எட்டணாக் கொடுங்கள். எட்டணாவா? என்னசாமி! மூடையைத் தூக்கணும்; பிறகு பேட்டை வரை இழுக்கணும்; நீங்கள் சொல்லுகிற இடத்தில் இறங்கணும்; எட்டணா வாங்கிறீக. சரி! சரி! அவசரமாகப் போகவேண்டும்; மூடையைப் பிடிவா! இருளாண்டி. வண்டியை ஓரமாக நிறுத்து. போக்குவரத்து நெருக்கடியான இடம். தலைமலை மூடையைக் கொண்டு வந்தான். அண்ணே! உன் வண்டியில் இருக்கும் சுமையை இரண்டு வண்டிகளில் கூட ஏற்ற முடியாதே, நீ இன்னும் மூடை ஏற்றுகிறாயே! தம்பி, கொஞ்சம் சங்கடந்தான். ஆனால் எட்டணா வருமானம். வெற்று வண்டியாக - குறை பாரமாக - இருக்கும் போதுதான் கூலி கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? நம் வசதியை நோக்கிக் கொண்டிருந்தால் கூலி கட்டவே கட்டாது. ஏதோ சமயங்களிலேதான் சாதிக்கவேண்டும். வெயில், மழை, இரவு, பசி இப்படியெல்லாம் பார்த்தோம் என்றால் வயிற்றுப் பாட்டுக்குக் கூட வழி வராது. நீயே பாரேன், சைகிள் சிக்சாக்காரன் மழை நேரத்தில் என்ன சுற்றுச் சுற்றுகிறான்? அவன் எத்தனை நாள் வெயிற் பொழுதுகளில் தேட முடியாத துட்டைச் சிறிது நேர மழையில் தேடி விடுகின்றான் இல்லையா? உலகத்தைக் கண்டு படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. உன்னைக் கண்டு படித்தாலே உலகத்தில் பாதி படித்த மாதிரிதான். நீ சொல்கிறாய்; நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டேன் மணிக்காளை சொற்களைக் கேட்டுக்கேட்டு. அவன் தந்த பிச்சை தான் என்னுடைய அறிவு ஆலோசனைகள் எல்லாம் பள்ளியிலே ஐந்தாறு வகுப்புகள் கூடப் படிக்காதவன் அவன். இருந்தாலும் நுட்பமான அறிவாளி! பள்ளிக்கூடத்தில் ஏற்படுவதுதான் அறிவு என்பது இல்லையே! ஒவ்வொரு நிகழ்ச்சியும் காட்சியும் அநுபவமும் ஆசியர்கள் அல்லவா! என்று இருளாண்டியின் முகத்தை நோக்கினான் தலைமலை. ஆமாம்! மணிக்காளைக்கு இவ்வளவு பணம் எப்படிச் சேர்ந்தது? கைவண்டி தள்ளி இவ்வளவு பணம் சம்பாதித்து விட முடியுமா? பருத்தி வியாபாரம், பருத்தி விதைக்கடை, பருத்திக் கமிசன்கடை, வண்டிப்பேட்டை இவ்வளவும் பார்த்துப் பரம்பரைச் செல்வர்களும் பெரிய பெரிய வியாபாரிகளும் கூட ஆச்சரியப்படுகிறார்கள். தம்பி, நூற்றுக்கு மேல் ஊற்று என்பது பழமொழி. ஆரம்பத்தில் பணம் சேர்வதுதான்அரிது. சேர்ந்து விட்டால் வெள்ளப் பெருக்குத்தான். கூத்தாட்டம் நடந்தால் நொடிப்பொழுதில் எப்படியும் கூட்டம் திரண்டு விடுகின்றது இல்லையா? இதுபோல் செல்வம் சேரும் என்று வாழ்க்கை நுட்பம் தெரிந்த திருவள்ளுவர் கூறுகிறார். இப்படித்தான் மணிக்காளைக்குப் பணம் சேர்ந்தது. யோ, கைவண்டி; இந்தச் சுமையைக் கொண்டு போகிறாயா? என்ற ஒரு குரல் எதிரிட்டது. நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் நான் கொண்டு போகின்றேன் என்று சுமை தூக்கி ஒருவன் கேட்டான். போ, போ நீ கேட்கும் காசு சுமைக்காக இல்லை, விலைக்குக் கேட்பதுபோல் இருக்கிறது. இதற்கு பத்தணாவா? போ! நான் வண்டியில் போட்டுப் போகிறேன் என்றான் சுமைக்குரியவன். எங்களுக்கு பாரம் நிரம்பிக் கிடக்கிறது; என்று சொல்லிப் பற்றற்றவன் போலாகத் தலையை நிமிர்த்திக் கூடப் பார்க்காமல் வண்டியை இழுத்தான் தலைமலை. சின்ன சுமைதான்; பெரிய பாரம் இல்லையே என்று மீண்டும் சொன்னான் சுமைக்குரியவன். சரி ஒரு ரூபா கொடுங்கள். ஒரு ரூபாயா? பரவாயில்லையே! நல்ல ஆளையா நீ என்று சுமை தூக்கி மீது கண்பார்வையைச் செலுத்தினான் சுமைக்குரியவன். தம்பி இருளாண்டி, காசு தேட ஆசை வேண்டும்; முயற்சியும் வேண்டும். ஆனால் எப்படிக் கிடைத்தாலும் சரி என்ற மனம்கூடாது. இந்த ஒரு சுமையில்லை. இதைப் போல் ஏழு சுமைகளை ஏற்றி வைத்தாலும் இழுக்க முடியும். இருந்தாலும் நான் இச்சுமையைத் தூக்கிக் கொள்வதால் ஏழைக் குடும்பம் ஒன்றின் வயிற்றில் அடிப்பதாக எண்ணுகிறேன். சுமை தூக்கும் ஏழைப் பையனுக்கு நான் எதிராளியாக விரும்பவில்லை. ஏதோ ஓரணா, இரண்டணா அதிகம் கேட்டிருப்பான். இவனுக்கு அவ்வளவு தர மனம் வரவில்லை. பேய், பூதம், நாய், காக்கை என்று பயம் காட்டிச் சிறு குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் பெற்றோர்களைப்போல் இவனும் நம் வண்டியைக் காட்டி அவன் கூலியைக் குறைக்கவும், தூக்கச் செய்யவும் பார்க்கிறான். நான் இச் சுமையைத் தூக்காததினால் ஒன்றும் கெட்டுப்போகப் போவது இல்லை. ஆனால் அந்தப் பையன் நிலைமை அப்படிப் பட்டது அன்று. ஒரு குருட்டுக் கிழத்தாயைக் காப்பாற்ற வேண்டிய சுமை அவனுக்கு உண்டு. அவனுக்குப் போடும் காசு, கோயிலுக்குத் தருமம் போடும் காசைப் பார்க்கிலும் புண்ணிய மான காசு. அதனைக் கிடைக்கச் செய்வதும் புண்ணியம்தான். அதிலும் கூடக் கொஞ்சம் கிடைத்துப் போகட்டுமே! மனிதப் பண்பாடு உள்ளவர்கள் எந்தமூலை முடுக்கிலும் இருக்கத்தான் செய்கின்றார்கள். உலகம் என்ன போக்கில் போனாலும் அவர்கள் தங்கள் தொண்டினை விடாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், உலகம் எப்படி எப்படி மாறினாலும், புழு பூச்சிகள் அரித்துத் தொல்லை தந்தாலும் தான் செய்யும் தொண்டினை மண் புழுவிடுகின்றதா? இருளாண்டி தனக்குள் எண்ணினான். இருளாண்டி ஓரமாக இழுத்துப் போ! நான் சந்தைப் பேட்டையில் இந்த மூடையை இறக்கி விட்டு வந்துவிடுகிறேன். அதோ பார்! லாரி என்ன வேகமாக வருகின்றது ஊரே மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமே என்று நினைக்கிறானா பார். உலகம் முன்னேற வேண்டியது தான் ஆனால் இந்தக் கோலத்தில் முன்னேற வேண்டாம்; இது ஊரில் இருப்பவர்களுக்குத் தெரியாமலா இருக்கிறது. தெரியத்தான் செய்கின்றது. தெரிந்தாலும் கண்டித்துக்கூற குரலெழுப்ப - ஆள் இல்லை. எப் படியோ போகிறது என்று நினைத்து நினைத்து ஒதுங்கு கின்றார்கள். வேகக் கட்டுப்பாடு விதி இருக்கத்தான் செய்கின்றது. குற்றாலம் என்றால் குளுமை ஏற்பட்டு விடுமா? போய் அனுபவித்தால்தானே! நல்ல திட்டங்கள் இருந்து பயனில்லை. நடைமுறைக்கு வந்தால்தான் நன்மை. நடைமுறைக்கு வராத திட்டங்கள் இருந்தென்ன? போயென்ன? வேறொன்றும் இல்லை; அவரவருக்கு வந்தால்தான் அதைப்பற்றிக் கவலைப்படுவது என்ற நிலையில் மக்கள் இருக்கும்வரை திட்டமும் அப்படித்தான் இருக்கும்; நடைமுறையும் அப்படித்தான் இருக்கும்; என்றான் இருளாண்டி. சரி, ஒதுக்கமாக நிறுத்து, தலைமலை மூடையைத் தூக்கிச் சென்றான். இருளாண்டி வண்டியைச் சாலையின் பக்கமாக நிறுத்தி வியர்வையைத் துடைத்தான். புதுப் பழக்கம் ஆனமையால் கையில் வலி இருந்தது. இரு கைகளையும் தேய்த்துச் சிறிது வெதுப்பமாக்கினான். கை வலிக்கிறது இல்லையா! கொஞ்சம் இழு; தோப்புக்குப் போய் ஓய்வெடுக்கலாம் என்று வண்டியைப் பிடித்தான் தலைமலை. போக்குவரத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறேனே; காரணம் என்ன? என்று நினைக்கிறாயா. அவ்வளவு விரிந்த உள்ளம் இன்னும் ஏற்பட்டுவிடவில்லை. நான் போக்குவரத்துப் பற்றிக் கவலைப்படத் தொடங்கியதே ஒரு கொடுமையான நிகழ்ச்சியால்தான். மணிக்காளையைப் பற்றிய பேச்சு இப்படித் திரும்பிவிட்டதே என்று நினைக்கிறாயா? இந்த வண்டிப் பேட்டையில் வாடகை வண்டியும் கிடைக்கிறது அல்லவா! சொந்தவண்டி இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்தும் இழுப்பது உண்டு. இப்படி வாடகை வண்டி எடுத்துச் சம்பாதித்த ஒருவரைத்தான் சொல்கின்றேன். மிக மிகச் சிக்கனக்காரர் அவர். ஒரு சல்லி செலவழிப்பது ஆனாலும் பத்துத்தடவைகளாவது எண்ணிப் பாராமல் செலவழிக்கமாட்டார். எப்படியாவது அந்தச் சல்லியையும் செலவழிக்காது இருக்க முடியுமானால் அவ்வழியைத்தான் பின் பற்றுவார். வீட்டிலும் அவர், மனைவி, ஒரேமகன் இவ்வளவு பேர்கள்தான். அந்த அம்மாள் கணவனுக்கு ஏற்றவள். அவர் எவ்வளவு தந்தாலும் அதற்குள் குடும்பத்தை நடத்திவிடுவாள். துட்டு முடிவது அவள் அறியாத பழக்கம். அவள் உதவியாலும் கணவன் சமர்த்தாலும் குடும்பம் நன்றாக நடந்து வந்தது. எப்படியும் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாயாவது முடிபோட்டு வைத்துவிடுவார் அவர். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர் என்றான் இருளாண்டி. எல்லாம் வறுமை சொல்லி வைத்த பாடம் தான். சிறிது சிறிதாகப் பொருள் சேர்ந்தது. இருந்தாலும் இன்பமாக இல்வாழ்வு நடத்த அவரால் முடியவில்லை. பொருளால் மட்டும் வாழ்வு இல்லை. மனைவி, மக்கள், ஒட்டு, உறவு, எல்லாவற்றையும் பொறுத்தல்லவா உள்ளது. அவர் பேறு பெற்றவர் என்று சொல்லிவிடலாம்-அவருக்கு வாய்த்த மனைவியை நினைத்து. ஆனால் மகனை நினைக்கும்போது அப்படிச் சொல்லிவிட முடியாது. என் னென்னவோ பெரும்பாவங்களெல்லாம் பண்ணிய பயன்தான் இப்படி மகன் பிறந்தது என்று கூறாதவர் இல்லை. அவ்வளவு கெட்டவன். தந்தை முடிபோட்டு வைத்த காசையும் ஏதாவது காரணம் காட்டித் தட்டிப் பறிக்கப் பார்ப்பான். வழி கிடைக்காவிடில் அயர்ந்த நேரம் பார்த்து அவிழ்த்துக் கொண்டு போய்விடுவான். வீட்டில் வைத்தால், எந்த ஒளிவுமறைவு ஆனாலும் எடுத்து விடுவான். தாயாரிடம் இருந்தால் வாய் வரிசை அன்றிக் கைவரிசை காட்டியும் பறிப்பான். இத்தகையவன் காலடி பட்ட இடத்திலாவது காசு சேருமா? மணிக்காளைமேல், கைவண்டிக் கிழவருக்கு ஒரு நம்பிக்கை. அவரென்ன - கைவண்டி இழுப்போருக்குச் சங்கம் என ஒன்று இல்லை என்றாலும்கூட, சங்கம் அதன் தலைவர் - காப்பாளர் எல்லலாமே மணிக்காளை என்றால் தகும். அவ்வளவு நம்பிக்கையும் பெருமையும் வைத்திருந்தனர். நான் சொல்லிய கிழவர் பொன்னுத்தாத்தாவும், மீதப்பட்டதை மணிக்காளையி னிடமே தந்தார். மணிக்காளைக்குக் கிழவர் குடும்பநிலை நன்றாகத் தெரியும். இருந்தாலும் ஆரம்பத்தில் கிழவர் தந்த மீதப் பணத்தை வாங்கி வைக்க அவனுக்குச் சம்மதமில்லை. நான் பணம் வாங்கி வைப்பதில் எனக்குத் தயக்கம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் அச்செயல் தங்கள் குடும்பத்தைப் பிளவு பண்ணிவிடக் கூடாதே என்று தடுத்தான். குடும்பம் பிளவு பட்டுவிடவேண்டும் என்று நான் நினைக்கிறேனா? அப்படி ஆகக் கூடாது என்று என்னால் ஆனமட்டும் பார்க்கிறேன். வெற்றி பெற முடியவில்லை. அந்த முயற்சியை மீண்டும் செய்து கொண்டே நான் பிச்சைக்காரனாகிவிட வேண்டுமா? இனி என்னால் ஒன்றும் முடியாது. எனக்காக இல்லாவிடினும், என்னையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் மனைவிக்காகவாவது உன்னிடம் இந்த மீதத்தைச் சேர்த்து வைக்க வேண்டும் என்னும் நிலைமை உண்டாகி விட்டது. என்று கிழவர் மன்றாடினார். மணிக்காளையும் பொன்னுத்தாத்தா குடும்பத்தில் ஒருவனாகப் பழகிக் கொண்டும் கிழவர் மகனைத் திருத்த முயன்றான். முடியவில்லை. அதற்குப் பின் அவர் பெயரால் குறித்துக் கொண்டு பணத்தை இருப்பு வைத்தான். இது கிழவர் மகனுக்கு எவ்வளவு வெறுப்பாக இருந்தது என்பதை நான் அறிவேன். இதில் என்ன இருக்கிறது. தாத்தா என்ன தலையிலா கொண்டுபோகப் போகிறார். வீட்டிலே வைத்திருக்க உள் பயம் இருக்கிறது; வெளிப்பயமும் இருக்கிறது. வங்கியிலே போட்டு வைப்பது போலப் போட்டு வைக்கிறார். நாணயமும் நம்பிக்கையும் உடைய மணிக்காளையிடம் போட்டுவைப்பது வங்கியில் போட்டு வைப்பது போன்றதுதானே என்றான் இருளாண்டி. தோப்பில் வண்டியை நிறுத்திவைத்து, இரண்டு வடை களைத் தெருக் கடையில் வாங்கித் தின்று, தண்ணீர் குடித்தனர். இருளாண்டிக்கு அயர்ச்சி மிகுதியாக இருந்தது. தலையைக் கீழே போட்டால் உறங்கி விடுவான். ஆனால் தலைமலை சொன்னான்: எடுத்த சுமையைக் கொண்டு சேர்க்காமலோ, ஏற்றிய பாரத்தை உரியவரிடம் ஒப்படைக்காமலோ உறங்கி விடபவன் ஒருவேளை இல்லாவிட்டாலும் ஒருவேளை இழந்து போவான். மூட்டையடிப்பவனை வலியக் கைந் நீட்டி அழைத்து எடுத்துக்கொண்டு போ என்று கொடுப்பது போன்றது என்று மணிக் காளையிடமும், என்னிடமும் பொன்னுத் தாத்தா பல தடவைகள் சொன்னது உண்டு என்றான் தலைமலை. தாக்குதலைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான் இருளாண்டி. கைகளைத் தேய்த்துக் கண்களைச் சூடாக்கினான். மேலே சொல் என்று பேசத் தூண்டினான். கிழவருக்கும் மகனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சச்சரவு வளர்ந்தது. ஏச்சுப் பேச்சுக் கூட முற்றியது. தந்தை மகனுக்கு இடையே தாயும் மணிக்காளையும் பலப்பல அல்லல்கள் பட்டனர். திட்டும் வசையும் வாங்கினர். என்ன இருந்தாலும் கிழவர் பெயரால் பணம் ஏறிக்கொண்டு வந்தது. பணத்தை எந்த வழி கொண்டாவது பறித்து விட வேண்டும் என்று முனைந்து நின்ற மகன், அவனுக்குப் பிடித்தமான சிலரை ஏவி வைத்து வியாபாரம் செய்ய, தொழில் செய்ய என் றெல்லாம் கேட்டனுப்பினான். உள்ளதை வைத்துக் காப்பாற்றத் தெரியாதவன் வளர்த்து விடுவானோ என்று மறுத்து விட்டார் கிழவர். இச் சமயம்தான் குடும்பம் கலகலக்கத் தொடங்கியது. ஓயாச் சண்டையைக் கண்டு நொந்த தாய்க்கு மணிக் காளையிடம் இருக்கும் பொருளை வாங்கி இந்தக் கிழவர் இவனிடம் எறிந்து விட்டால் என்ன? என்னும் எண்ணம்கூட ஏற்பட்டது. வரிந்து கட்டும் சண்டைக்கு ஆளாகியும் கிழவர் உறுதியாகவே இருந்தார். என் காலம் எவ்வளவு நாளோ? கிழவிக்காக வேண்டும். என் மகனை நம்புவதற்குப் பதில் ஆற்றையோ குளத்தையோ நம்புவது மேல் என்று கூறிவிட்டார். நெடு நாட்கள் ஆகவில்லை. ஒருநாள் பகல் மூன்று மணி இருக்கும். வண்டியை நிறுத்தி வைத்து, அதன் கீழே உட்கார்ந்தார் கிழவர். அதிகக் களைப்பு ஏற்பட்டிருக்கிறது. உறங்கி விட்டார். ஏதாவது பாரம் இருந்ததா? என்று இடைமறித் தான் இருளாண்டி. ஓ ஓ! நான் சொன்னதை நினைத்துக் கொண்டாயா? உள்ளொன்று உதட்டிலொன்று என்பது அவர் அறியாதவை. பாரம் எதுவும் இல்லை. நல்ல உறக்கம். அந்நேரம் லாரி ஒன்று வந்திருக்கிறது. வண்டி மீது மோதி - வண்டி உருண்டு - ஐயோ! அதன் கீழே கிடந்த கிழவர் தலையும் உருண்டு விட்டது. ஐயோ! செத்தே போனாரா? அட அநியாயமே என்றான் இருளாண்டி. இப்பொழுதுதான் நீ லாரிக்காரனைக் கண்டபோது காட்டிய கடுகடுப்பின் காரணம் புலனாகின்றது என்றான். சற்று நேரம் அமைதியாக இருந்த இருளாண்டி கிழவர் போன பின்னாவது மகனுக்கு அறிவு வந்ததா? பழைய கதைதானா? என்றான். கிழவர் அமைதியாக வாழ்வை முடித்துக் கொண்டார். அவருக்கு மைந்தன் என்ற முறையில் மணிக்காளை இருந்தான் என்று சொல்வது ஒழிய வேறொன்றும் சொல்ல இல்லை. லாரிக்காரனை வெருட்டி வெருட்டிப் பணம் பிடுங்கித் தின்பதுதான் மகன் தொழிலாயிற்று. பணம் பறிப்பதற்காகப் போலீசுத் தரப்பில் இருந்த நேர்மையைக் கூட மாற்றியடித்தான். எப்படியோ அவன் கதை நடந்து கொண்டுதான் இருந்தது. தள்ளாத வயதில் கணவனை இழந்த கிழவிக்கு மணிக்காளை தேறுதலாக இருந்தான். என்னைப் பெற்ற அம்மா இல்லை. அந்தக் குறையை நீங்கள் நிறைத்தீர்கள் என்று பேணி வந்தான் மணிக் காளை. அவளும் கொஞ்சம் தேறியிருந்தாள். பல வேளைகளில் மகன் வந்து அப்பா கொடுத்த பணத்தை வாங்கித் தருகிறாயா இல்லையா? என்று தாயை வற்புறுத்தினான். நாலுபேர் கூடிய இடங்களிளெல்லாம், மணிக்காளையைப் பற்றி வசை பொழிந்தான். ‘இது என்ன கேவலம்! என்று கிழவர் கணக்குகளையெல்லாம் காட்டி, சல்லியும்பாக்கி வைக்காமல் தீர்த்தான். அவன் தாய்க்குப் பணம் தருவதில் சம்மதமில்லை என்பதை அறிந்து, அவள் அறியாமலே தான் கணக்குத் தீர்த்தான். உட்கார்ந்து தின்றால் ஊரளவு சொத்தே நிற்காதே! ஓட்டம் பிடித்தது ஓராண்டுக்குள் - எண்ணூறு ரூபா எந்த மட்டுக்கும்? இதற்குள் மணிக் காளைக்கு நல்ல காலம் போல் இருக்கிறது. தேடிச் சேர்ந்திருந்த பணத்தைக் கொண்டு இரண்டு கை வண்டிகள் வாங்கினான். வந்த இலாபத்தை அழிக்காது மேலும் ஒன்றிரண்டாக வண்டிகள் தொடுத்து வாங்கினான். பொன்னுத் தாத்தா மண்டை உடைந்தாலும் ஒருவேளை கூடிக் கொள்ளும்; ஆனால் ரூபா நோட்டை உடைத்தால் (சில்லறை யாக்கினால்) ஒரு நாளும் கூடவே கூடாது என்பார். அது மெய்யாயிற்று. மணிக் காளைக்கு வேண்டிய லாரி புரோக்கர் ஒருவர் இருந்தார். அவர்மணிக் காளையுடன் நெடுங்காலம் பழகியவர். நன்றாக அறிந்தவர். அவருக்கு அவர் தொழில் வழியாக நல்ல வருவாய் இருந்தும்கூட வெளியூருக்குக் குடியேற வேண்டியவராக இருந்தார். ஒரே மகளை நல்ல இடத்திற்குத் திருமணம் செய்து, அவளுடன் குடும்பத்துடன் போக வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இவ் வேளையிலே அவர்கண்ணோட்டம் மணிக்காளை மேல் விழுந்தது. இடத்திற்காகவும், வாடிக்கைப் பெயருக்காகவும் இரண்டாயிரத்து இருநூறு ரூபா வாங்கிக் கொண்டு மணிக் காளைக்கே விற்று விட்டார். மணிக்காளைக்கு எதிர்பாராத வாய்ப்பு இது. இருந்த இடத்திலேயே வருபவர்களிடம் பேசிப் பேசிப் பணம் வாங்க வேண்டிய வாய்ப்பு அல்லவா! என்றான் தலைமலை. ஆமாம்! மனம் போல் வாழ்வு என்பது சரியாகி விட்டது. இப்படிப் பட்டவர்கள் முன்னுக்கு வந்தால் தான் நீதி, நேர்மை, கடவுள் இவற்றின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட முடியும் என்றான் இருளாண்டி. கேள்; புரோக்கர் வேலை ஒப்பந்தமானதற்கு நாங்கள் கொண்ட மகிழ்ச்சி அளவு கூட மணிக்காளை கொள்ளவில்லை. இது சூதாட்டம் இப்பொழுது இப்பக்கம் சாய்ந்திருக்கிறது. அடுத்த வேளை எப்பக்கமோ? என்று சொன்னான். அவன் அவ்வாறு சொல்வது கண்டு பைத்தியம் என்று நாங்கள் திட்டினோம். எங்கள் வாடிக்கை நண்பன் அல்லவா! மணிக்காளை சொல்லியதில் உண்மையும் உண்டு என்பது அந்த வார இறுதியிலே வெளிப்பட்டது. பொன்னுத் தாத்தா மனைவி மணிக்காளை பொறுப்பில் தானே இருந்தாள்! அவள் ஒரு வாரம் கழித்து ஒரே படுக்கையாகி விட்டாள். எழுந்திருக்க வில்லை. சோறு தண்ணீர் மருந்து எதுவுமே ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள். நோய் நோய் என்று தத்தளித்தான் மணிக்காளை. கிழவி பேச்சையும் நிறுத்திக் கொண்டாள். யாரிடம்? அவளை உயிராக எண்ணிக் கொண்டிருக்கும் மணிக்காளையினிடம். என் முன்னாக எத்தனையோ முறை மணிக்காளை கண்ணீர் வடித்திருக்கிறான்; என்ன இருந்தாலும் பெற்ற மகனாக இருந்தால் அவனிடம் இப்படிக் காரணமில்லாது பேச மறுப்பாளா? பார்க்கப் போகும் போது முகத்தைத் திருப்பிக் கொள்வாளா? ஏதாவது வேண்டுமா? மருந்து தரட்டுமா? வைத்தியரைக் கூட்டி வரட்டுமா? என்றால் ஏதேனும் அன்பான சொல் சொல்லாது, மானமில்லாமல் வாழ விரும்பும் எவளுக்காவது மருந்து கொடு; சோறு கொடு. எனக்கு வேண்டாம் என்பாளா? நான் என்ன தவறு செய்தேன் என்பது எனக்குப் புரியவில்லையே என்று பல முறைகள் அழுதான். கிழவியின் காலில் விழுந்தும் மன்றாடிக் கேட்டான். கிழவியின் நிலைமையில் எந்தவொரு மாற்றமும் ஏற்பட வில்லை. அப்பாடா! இது என்ன அநியாயம்; கிழவிக்கு ஏன் இவ்வளவு கெட்ட பிடிவாதம் நன்றாகத் தானே இருந் தாள் என்றான் இருளாண்டி. மணிக்காளை உன் வீட்டில் தங்குவதே பாவம்; தண்ணீர் குடிப்பது துரோகம்; வேறெங்கும் போய்ச் செத்தாலும் சாவேனே ஒழிய இங்கிருக்க மாட்டேன் என்று சொன்னாள். மானம் பெரிதா? உயிர் பெரிதா? என்றால் நான் உயிரை விட மானம்தான் பெரிது என்பேன். சிலருக்கு மானத்தைப் பார்க்கிலும் உயிர் சிறந்ததாக இருக்கலாம். அவர்கள் போகட்டும். என்னைப்பற்றித்தான் பேச்சு. உயிரை விட்டாவது மானத்தைத் தான் காப்பேன். உன் வீட்டில் இன்னும் இருந்து மானம் இழக்க மாட்டேன் என்றாள். அம்மா! நீ தானே என் தாய். நீ பெற்று எடுக்காத ஒன்று தவிர்த்து வேறு ஒன்றும் இல்லையே! நானும் உன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் பெற்றெடுத்த தாயைப் போன்று தானே பேணினேன். ஏதாவது தவறு இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாமே! அதற்காக இப்படியா என்னைத் துயருக்கு ஆளாக்க வேண்டும் என்று கண்ணீர் கசியக் கேட்டான். மணிக்காளை உன்னைச் சொல்ல வாயில்லை; காலக் கோளாறு; என் தலைவிதி. எத்தனை இருந்தாலும் என் வயிற்றில் பிறந்த மகனாக இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்திருக்க மாட்டாய் என்றாள். எதையோ உள்ளே வைத்துக் கிழவி புண்பட்டிருக்கிறாள். இல்லாவிடில் வெள்ளையுள்ளம் படைத்த அக்கிழவி இப்படிப் பேசி யிருப்பாளா? ஆமாம் பிறகு! பிறகென்ன! கிழவி சொல்ல மறுத்துவிட்டாள். கிழவியின் சொந்த வாழ்க்கைச் சம்பந்தப்பட்டது. வெளிப்படையாகச் சொன்னால் அவள் மானம் சம்பந்தப்பட்டது. அதற்கும் நமக்கும் தொடர்பு இல்லையென்றாலும் நாம் அறிந்தோ அறியாமலோ தொடர்பு கற்பித்துக் கொள்ளத்தக்க ஒன்றுநடந்து விட்டிருக் கிறது. அதைக் கிழவி சொல்ல விரும்பவில்லை. சொல்ல முடி யாததாக இருக்கும் போது சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நாம் வற்புறுத்த நமக்கு என்ன உரிமை உண்டு? உண்மை வெளிப்படும் வரை நாம் ஊமையாக இருக்க வேண்டியது தவிர்த்து வழியென்ன? அல்லது பேசிப் பயனுண்டா? எத்தனையோ குற்ற மற்றவர்கள் உலகுக்கு உண்மை புலப்படும் வரை குற்றவாளிகளாகக் கருதப்பட்டுக் கடுந்துயரம் அடைந்ததும், அத்துயரிலே மாண்டு மறைந்ததும் கூட இல்லையா? எல்லாம் பட்டு முடிந்த பின்னும் ஓரிருவர் ஆராய்ந்து உண்மை கூறிய பின் உலக மன்றத்தில் அசையாத ஓரிடம் கொண்டு கொலு வீற்றிருக்க வில்லையா? கடமையைச் செய்ய வேண்டுவது நம் பொறுப்பு. பயனைப் பற்றி நமக்கென்ன கவலை என்று மணிக் காளை சொன்னான். நானும் வேறு வழியின்றி ஒப்பினேன். கிழவி அவள் வீட்டுக்குச் சென்றாள். கிழவர் இருக்கும் பொழுதே கட்டுப்பாடற்று வாழ்ந்த மகன் பாவம்! கிழத்தாயைப் பொருட்டாக எண்ணுவானா? சிலருக்கு இத்தகைய வேளைகளில் தான் நல்லறிவு வந்து புதுப் பிறவி எடுத்தது போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் பாராட்டலாம். ஆனால் கிழவி மகன் அத்தகையவன் இல்லையே. மணிக்காளை தந்த பணம் போன போக்குத் தெரிய வில்லை. வயிற்றுப் பாட்டுக்கு ஏதேனும் வேண்டுமே! உழைக்க உரம் இருந்தது. ஆனால் பின்பற்றிச் செல்லும் நல்லறிவு இல்லை. ஆதரிப்பதற்கு ஆள் இருந்தது. ஆனால் அவர்களையும் பகையாக்கும் பண்பு இருந்தது. என்ன செய்வது? ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பையே பிழைப்பாகக் கொண்டவன் - உருட்டல் புரட்டலே தொழிலாகக் கொண்டவன் வாழ்வு எப்படி இருக்கும். இதில் கிழவி சுமையும் சேர்ந்து கொண்டால்? இதற்கு யார் என்ன செய்ய முடியும்! நான் கெட்டே தீர்வேன் என்பவர்களை யாராலும் திருத்த முடியுமா? என்றான் இருளாண்டி. நேரமாகி விட்டது! வண்டியைப் பிடி புறப்படலாம். என்று தலைமலை எழுந்தான். இருளாண்டி வண்டியைப் பிடித்தான். அன்று வேலை முடிந்தது. இருளாண்டியும் தலை மலையும்பிரிந்து சென்றனர். இருளாண்டிக்குப் பலப்பல நினைவுகள் எழுந்தன. அவை கனவாகவும் அரும்பின. மணிக் காளையைப் பற்றிய சிந்தனையிலே மூழ்கிக் கிடந்தான். தலை மலையின் கூரிய மூளையைப் பற்றி எண்ணினான். பொன்னுத் தாத்தாவின் சிக்கன வாழ்வைச் சிந்தித்தான். அவர் மணிக் காளையைப் பற்றிப் பிடித்துக் கொண்ட மதியுடைமையை மனமாரப் போற்றினான். கிழவியின் பிடிவாதத்தையும், அவள் மகனின் மாசுபடிந்த வாழ்வையும் மனத்திற்கு கொண்டு வந்தான். முழுவதும் இன்று தெரிந்து விட வேண்டும் என்னும் ஆவலில் கை வண்டியுடன் புறப்பட்டான் இருளாண்டி. அன்று காலையிலே கூலி ஒன்றும் கிடைப்பதாக இல்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு வண்டி மேல் உட்கார்ந்தனர், இருளாண்டியும் தலைமலையும், என்ன காலைப் பொழுதே இப்படி இருக்கிறதே என்றான் இருளாண்டி. இக்கால இளைஞர்கள் கீரைத் தண்டுகள் போல் எளிதில் வாடி விடுகின்றார்கள். அதுபோல் எளிதில் பொங்கிப் பூரித்தும் போகின்றார்கள். அதனால் இன்ப துன்பங்களைத் தாங்கும் வலிமை அவ்வளவாக இருப்பது இல்லை. இப்பொழுது என்ன ஏற்பட்டு விட்டது. கப்பல் கவிழக் கொடுத்தவன் போல் முகத்தைத் தொங்கப் போட்டுவிட்டாய். இன்னும் பொழுது இல்லையா? கூலி கிடைக்காதா? அப்படியே கிடைக்கா விட்டாலும் நாம் கவலைப்படுவதால் பயன் உண்டா? இதற் கெல்லாம் இவ்வளவு சோர்ந்தால் எந்தவொரு காரியத்தையும் சாதிக்க இயலவே இயலாது என்றான் தலைமலை. அனுபவப்பட்டுப் பட்டுத் தெளிவு கண்டவன் நீ. ஆரம்பப் பாடந்தானே எனக்கு. அது இருக்கட்டும், மணிக்காளையைப் பற்றி ஏதாவது கேட்க ஆசை என்றான் இருளாண்டி. மணிக்காளையை விட்டு வெளியேறியதிலும் கிழவிக்கு மன நிறைவு இல்லை. ஆனால் மணிக்காளையுடன் வந்து இருக்கவும் வைராக்கியம் இடம் தரவில்லை. நான் அவளை பார்க்கப்போன நேரங்களிலெல்லாம் தான் பெற்றெடுத்த மகனைப் பற்றி ஒரு தாய் கேட்பது போலவே கேட்பாள். அவனது நலத்தைப் பற்றிக் குறைந்தது பத்து முறைகளாவது கேட்பாள். அவனது பண்புகளை மணிக் கணக்காகப் பாராட்டுவாள். அவனைப் பிரிந்து மனத்தோடா வந்தேன். எனக்கென்ன குறை வைத்தான். அவனை ஏதாவது குறைவாக நான் எண்ணினால் நான் மனிதப் பிறவி இல்லை. நன்றியறிதலுடைய பொன்னுத் தாத்தாவின் மனைவியும் இல்லை. ஆனால் மானமற்ற வாழ்வு வாழ்பவள் பெண்ணாக இருக்க முடியாதே. அதைக் காக்க வேண்டுமல்லவா! என்று கூறுவாள். கிழவி உண்மையைச் சொல்லாது புதிர் போட்டுக் கொண்டே இருக்கிறாளே. இந்த விடுகதைக்கு விடை இல்லையா? என்று ஏங்கி ஏங்கித் திரும்புவேன். இன்று சொல்லிவிட மாட்டாளா? நாளை சொல்லி விடமாட்டாளா? என்று தொடர்ந்து போனேன். எனக்கு மேல் மணிக்காளைக்கு உண்மையை அறிய ஆவல் இருந்தது. எனினும் கிழவி மூட்டையை அவிழ்க்க வில்லை. மறைக்கப்படும் ஒன்று ஆவலைக் கிளப்பு மல்லவா! உங்களுக்கு இருந்த ஆவலில் எனக்கும் ஒரு பங்காவது வேண்டும் என்றுதானே கதையின் கருவைச் சொல்லாது வளர்த்துகின்றாய்? என்றான் இருளாண்டி. மணிக்காளைக்குத் திருமண ஏற்பாடும் இடை இடையே நடந்து வந்தது. எப்படியும் சில பெரியவர்கள் பெண் பிள்ளை வீட்டுக்காகவோ, ஆண் பிள்ளை வீட்டுக்காகவோ முன் வந்து தூண்டுவார்கள் அல்லவா! அப்படித்தான் மணிக்காளைக்கும் ஏற்பாடு ஆயிற்று. பெண் வீட்டார் பெருஞ் செல்வர் என்றும், நல்ல சுற்றஞ் சூழல் உடையவர் என்றும், பெண்ணுடன் ஆணும் பெண்ணுமாகப் பலர் பிறந்து நல்ல நிலைமையில் இருக்கின்றார்கள் என்றும், எல்லாருக்கும் கடைசிப் பிள்ளையே பெண் என்றும், அவளுக்குத் தாய்வழிச் சொத்து 20 ரூபாய்க்குத் தேறும் என்றும், தந்தையார் எத்தகைய குறைவும் இல்லாது சீர்வரிசை செய்வார் என்றும், மாப்பிள்ளையின் குணம், செல்வம், சீர் இவற்றைக் கேள்விப் பட்ட அளவிலே பெண் வீட்டார்க்குப் பிடித்திருக்கிறது என்றும், செய்திகள் பறந்தன. இங்கிருந்தும் அங்கிருந்தும் சில பெரியவர்கள் போய் வந்து கருத்துக்களைப் பரிமாறினர். மணமகன் வீட்டார் மணமகள் விட்டுக்குச் சென்று மணஉறுதி செய்வதற்காக ஒரு நாள் குறிக்கப் பெற்றது. மணிக்காளை மணம் குறித்து மகிழ அவன் பெற்றோர் இல்லையாயினும், சுற்றத்தார்க்கும் நண்பர்க்கும் குறைவு இல்லை. நாளை எதிர்நோக்கி யிருந்தோம். ஒவ்வொரு நாளும் ஏதாவது புதுப் புதுச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. நம் ஊரிலிருந்து அவ்வூருக்குப் போய் வந்த அனைவர் வாயும் மணிக்காளை திருமணம் பற்றியே பேசின. அங்கிருந்து இங்கு வந்தவர்களும் அதுபற்றியே பேசினர். இங்குள்ள சிறப்புப் பற்றியும், அங்குள்ள வாய்ப்புப் பற்றியும் பேசுவது பலருக்குப் பொழுது போக்கு ஆகிவிட்டது. சிலர் இதனைப் பற்றிய செய்தியைச் சேகரம் செய்வதிலும் பிறருக்குக் கூறுவதிலும் பெருமகிழ்ச்சி கொண்டனர். பொதுவாக மக்கள் பேச்சிலே மணமகள் வீட்டாரின் பணச் சிறப்பே புலப்பட்டது. மணிக்காளை பற்றி, குணமே முதலிடம் பெற்றது. நான் மகிழ்ந்தேன். மணிக்காளை இன்னும் பழைய கைவண்டிக்காரன் நிலைமையிலேயே வாழ்கின்றானே என்று வாழ்த்தினேன். ஒரு நாள் ஒரு பெரியவர் மணமகள் வீட்டிலிருந்து வந்தார். நாங்கள் நினைத்துக் கொண்டோம் திருமணத்திற்கு உறுதி செய்வது பற்றிக் கலந்து பேச வந்துள்ளார் என்று. எனக்கு எவ்வளவோ வேலையிருந்துங்கூட அவையெல்லாம் பொருட்டாக இல்லை. நான் ஏதோ வேறு வேலை காரணமாகச் சந்திப்பது போன்று காட்டி, மண உறுதிக்குப் போகும் நாளைத் தெரிந்து கொள்ள நின்றேன். அப்பொழுது வேறு யாரும் இல்லை. நான், மணிக்காளை, மணமகள் வீட்டிலிருந்து வந்த பெரியவர், பெரிய கணக்குப்பிள்ளை ஆகிய நான்கு பேருந்தான் இருந்தோம். தம்பி! உங்களிடம் தனித்துப் பேச வேண்டிய செய்தியாக இருக்கிறது. இவர்கள்... என்றார் வந்த பெரியவர். உடனே கணக்கரைப் போகச் சொன்னான் மணிக்காளை. இந்தத் தம்பியும் என்று என்னைச் சுட்டிக்காட்டினார். தவறு செய்து விட்டோம் நாமே குறிப்பறிந்து சென்றிருக்க வேண்டும் என்று சென்றிருக்க வேண்டு எண்ணினேன். அவனுக்குத் தெரியாமல் பேச வேண்டிய மறைவுச் செய்தி ஒன்றுமில்லை என்றான் மணிக்காளை. இல்லை; இல்லை; நீங்கள் பேசுங்கள். நான் பிறகு வருகிறேன் என்று நடந்தேன். கொஞ்ச நேரங்கழித்து மணிக்காளை எனக்கு ஆளனுப்பினான். நான் போனேன். பெண் வீட்டிலிருந்து பெரியவர் வந்தாரே என்ன சொன்னார் என்பது தெரியுமா? வேடிக்கையான உலகமப்பா! இந்த உலகத்திற்கு உண்மை அறிவோ, நிலையான அறிவோ இல்லை போல் இருக்கிறது என்றான். இடை யிடையே பல தடவைகள் சிரித்தான். ஏதோ ஓர் அதிர்ச்சியான ஒரு செய்தியைப் பெரியவர் சொல்லிப் போயிருக்கிறார் என்றும், அதனைப்பற்றி மணிக் காளையின் முகக்குறி காட்டவில்லை என்றாலும் சொல் காட்டுகின்றது என்றும் எண்ணினேன். வந்தவர் இப்பொழுது திருமணம் செய்ய வசதி இல்லை என்றும். கொஞ்ச காலம் செல்ல வேண்டும் என்றும், அது வரை எதிர்பார்த்திராமல் வேறு எங்கேனும் பெண் பார்த்துக் கொள்வது நலம் என்றும் சொல்லிப் போனார் - அதாவது பெண் தரமுடியாது என்பதுதான் முடிவு என்றான் மணிக் காளை. இந்தச் சொற்களை என்னால் தாங்க முடியவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது. மணிக்காளை ஆவது ஆகும்; போவது போகும்; வருந்த முடியுமா? என்று என்னை தேற்றினான். ஏன் உன்னைப் பார்க்கிலும் பணக்காரன் எவனும் வந்துவிட்டானா? அப்படி யிருந்தால் தான் இத்தகைய ஏற்ற மாற்றங்கள் நடக்கும். பெரியவர் என்ன சொன்னார்? என்று வற்புறுத்தினேன். எவனோ ஒருவன் நம்மைப் பற்றி ஏதோ சொல்லி யிருக்கிறான். இந்தச் சொத்து எவனோ ஓர் அப்பாவியினிடம் பறித்துக் கொண்டதாம்! புரோக்கர் வேலை வஞ்சகத்தால் எவனிடமிருந்தோ கவர்ந்துகொண்டதாம்! எனக்கு ஊரோ, உறவோ, ஒட்டோ எதுவும் இல்லையாம்! அநாதையாம்! என் பரம்பரைக்குச் சிறப்பு ஏதும் இல்லையாம்! ஒழுங்கற்ற வாழ்வு உடையேனாம். இன்னும் கொஞ்ச நாட்களில் சொத்து எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்பேனாம்! என்னை நம்பிப் பெண் தருவதற்குப் பதில் பெண்ணைக் கிணற்றிலே தள்ளினாலும் கவலை யில்லையாம்! ஏதோ சொன்னார். பெண் கொடுக்குமுன் அவர்கள் சிந்திக்க வேண்டியது அவசியம் தானே என்று என் ஒப்புதலையும் எதிர்பார்த்தான். என்னால் நிற்க முடியவில்லை. ஒன்றும் சொல்லாமல் வந்தேன். எப்படியோ நாட்கள் கடந்தன. நானும் ஓய்வு வந்த வேளைகளிலெல்லாம் மணிக்காளையையும் கிழவியையும் பார்த்து வந்தேன் அவ்வப்போது நடைமுறையிலுள்ள செய்தி களைக் கலந்து பேசிக்கொண்டோம். ஒரு சமயம் மணிக்காளை என்னைத் தேடி வந்தான். அப்பொழுதுதான் வண்டியை வீட்டில் கொண்டுபோய் நிறுத்தினேன். அப்படியே என்னைத்தனியே அழைத்துக் கொண்டு சென்றான். ஏதோ அவசியமான செய்தி இருக் கிறது. என்று எண்ணிக் கொண்டு அவனைத் தொடர்ந்து நடந்தேன். ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தை அடைந்து உட்கார்ந்தோம். தலைமலை. தக்கார் தகவிலர் என்பது அவரவர், எச்சத்தால் காணப்படும் என்னும் குறளிலுள்ள எச்சத்தால் என்னும் சொல்லை மக்களால் என்று ஒருவர் மாற்றினாராமே! அது பற்றி உன் கருத்தென்ன? என்றான் மணிக்காளை. என் கருத்து என்ன? உலகமெல்லாம் பாராட்டும் தாஜ் மகாலில் ஒரு கல்லைப் பெயர்த்துப் பெயர்த்த இடம் தெரியாதவாறு மற்றொரு கல்லை வைத்தாலும் வைத்து விடலாம். ஆனால், திருக்குறளில் அப்படி ஒரு சொல்லைப் பெயர்த்து மற்றொரு சொல்லைப் போட்டுக் காட்ட முடியாது என்பது என் அசையாத நம்பிக்கை என்றேன். நீ இப்படிச்சொல்வாய் என்பது தெரியும். எச்சம் என்பது விரிந்து பரந்த பல பொருள்களைக் காட்டும் நுட்பமான ஓர் சொல். இதனைப் பல தடவைகள் நாம் பேசியிருப்பது நினை விருக்கும். தெளிவு செய்து கொள்வதற்காக எத்தனையோ பேர்களின் வாழ்க்கைகளையும் அலசிப் பார்த்திருக்கிறோம். கைவண்டி இழுப்பவன் கையிலே திருக்குறளும், வாயிலே வாய்மையும், நெஞ்சிலே அறமும் இருந்தால் வாழமுடியுமா? என்று நம்மை எத்தனைபேர் கேலி செய்தார்கள். வாழத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடினார்கள். அதை நினைக்க நினைக்க எனக்கு இன்றும் வேடிக்கையாக இருக்கிறது என்றான். மக்களைக் கொண்டு பெற்றோர் தகுதியை முடிவு கட்டினால் பொன்னுத் தாத்தா நிலைமை என்னவாக இருக்கும்? சிறிதளவாவது மதிக்க முடியுமா? அவர் விட்டுச் சென்ற செல்வம், செயல், தொண்டு, அறிவு, பண்பு, புகழ் என வைத்துச் சென்ற எல்லாவற்றையும் (எச்சத்தை யெல்லாம்) எண்ணிப் பார்ப்பதல்லவா சரியாகும் என்றேன். ஆம்; நான் சொல்லப் போவதற்கு ஏற்ற முகவுரையைத் தான் நீ கூறினாய்; பெரும்பாலும் நான் எண்ணுவதையே நீயும் எண்ணுகிறாய்; நான் பேசப்போவதையே நீயும் பேசுகிறாய். இது நம் ஒன்றுபட்ட உள்ளத்தைக் காட்டுகிறது என்று பேசினான். தாத்தா வீட்டிற்குப் போயிருந்தாயா? ஏதாவது செய்தி உண்டா? அவர் மகனைப் பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா? என்றான். எனக்குப் பல செய்திகள் தெரிந்திருக்கின்றன என்றும், அவற்றைப் பற்றி நான் அவனிடம் கலந்து பேசவில்லை என்றும் அவன் கேள்விகளால் அறிய முடிந்தது. பின்பு, அவன் எதையோ சொல்ல விரும்புகிறான் என்றும், அதில் ஏதாவது எனக்குத் தெரியுமா என்றும் மேலோட்டம் பார்க்கிறான் எனத் தெளிந்தேன். பெண் வீட்டார் என்னைப் பற்றித் தவறான கருத்துக் கொள்ளுமாறு செய்தவன் தாத்தாவின் மகன்தானாம். அதை நேற்றுத்தான் அறிந்தேன் என்றான். என்ன இது உண்மையா? நம்பிக்கையானவன் சொன்னானா? என்றேன். தெளிவில்லாத ஒன்றைச் சொல்வதால் யாருக்கு என்ன நன்மை? பொழுத வீணாவது அன்றி வேறென்ன உண்டு என்றான். நான் ஏன் இப்படிக் கேட்டேன் என்று வெட்கப் பட்டேன். மணிக்காளை பேசினான்: அவன் சொத்தை நான் பறித்துக் கொண்டதாகவும், அவன் சொத்தால்தான் நான் இந்த நிலைமையில் இருப்பதாகவும், இவ்வாறு இருந்தும் அவன் தாயை நான் சரிவரப் பேணாமை யினால் தான் வெறுத்து வெளியேறிவிட்டாள் என்றும் எண்ணி யிருக்கிறான். அவ்வெண்ணத்தால் பெண் வீட்டில் சொல்லித் திருமணத்தை நிறுத்திவிட்டான். திருமணம் நின்றது பற்றிக் கவலையில்லை. இவன் பெயராலே நின்றிருக்க வேண்டுமா? என்பதுதான் கவலை. ஆமாம்! தலைமலை. எவனாவது பிறக்கும்போது பொருளைக் கொண்டு வந்தானா? கொண்டு போகத்தான் போகின்றானா? இது என்ன நாம் அறியாததா? அவன் மட்டும் சரியானவனாக இருந்தால் இந்தச் செல்வத்தில் பாதியைப் பிரித்துத் தரவும் எனக்குச் சம்மதந்தான். இந் நிலைமையில் அவனிடம் சொத்தைத் தந்தேன் என்றால் அவன் கெடுவதற்குத் துணை செய்வதாக இருக்குமே அல்லாமல் திருந்த வழி செய்தது ஆகுமா? நான் சொல்வதில் தவறோ சந்தேகமோ இருந்தால் சொல் என்றான். ஒரு நாள் நான் படுக்கும் அறையின் சன்னலண்டை அவன் வந்தான். அவன் நண்பன் இருக்கிறானே க அவனும் வந்தான். நான் படுக்கும் கட்டிலைச் சுட்டிக் காட்டிப் போனான். தற்செயலாக நான் கண்டு விட்டேன். அது பற்றி எவ்வளவோ எண்ணினேன். ஏதோ நடக்க இருக்கின்றது; எச்சரிக்கை தேவை என்னும் முடிவுக்கு வந்தேன். நான் நினைத்தது போலவே நள்ளிரவில் கறுப்புடையுடன் இரண்டு உருவங்கள் வந்தன. எனக்குத்தான் உறக்கமே இல்லையே. ஓர் உருவம் அறைக்குள் வந்தது, நல்ல இருள்; மெதுவாக வந்து போர்வைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பைக் குறி பார்த்து ஒரு குத்துக் குத்தியது. நான் கத்தினேன். குத்திய கத்தியை எடுக்காமல் ஓடினான். ஆட்கள் வளைத்துக் கொள்ளும் என்ற அச்சம் தான்! வெறி கொண்டு ஓடியிருக்கிறான். நம் நாய் அவனை வெருட்டி வெருட்டி கடித்தது. எனினும் அவன் தப்பி விட்டான். நாயின் தாக்குதலிலிருந்து - மறைந்திருந்தானே அவன் - தப்ப முடியவில்லை. அலறினான்; விழுந்தான்; புரண்டான்; நாய் கடித்து நன்றாக வெருட்டியது; அந்த அதிர்ச்சியிலே மதி மயங்கி விட்டான். என்ன செய்வதென்றே தெரியாமல் சாக்கடையில் தவறி விழுந்தான். என்னால் மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாயை விலக்கினேன். தாத்தாவின் மகன்தான் அவன் என்பதை அறிந்து வருந்தினேன். நாடி நரம்புகள் துடிக்கத் தள்ளாடித் தள்ளாடிச் சென்றான். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவனும் நிற்கவில்லை என்றான். உன் மீது குத்துப் படவில்லை; நல்ல காலம் என்றேன். நான் எச்சரிக்கை தவறியிருந்தால் உன்னிடம் இதனைச் சொல்லுமாறு இருந்திருக்க மாட்டேன். வா! என்று அழைத்துச் சென்றான். அவன் படுத்திருந்த அறைக்கே போனோம். இதோ பார்! என்று பஞ்சும் துணியும் கொண்டு செய்த துணிப் பொம்மையைத் தூக்கி என்முன் போட்டான். அதன் மார்புப் பகுதி இரண்டாகப் பிளந்து கிடந்தது. ஐயோ, உன் மீது பட்டிருந்தால் என்றேன். மனத்திற்காவது அமைதியுண்டு! தலைமலை அவ்வாறு தான் ஆகவேண்டுமென்றால் அதைத் தடுக்க முடியுமா? இதை உனக்குமா நான் சொல்லியாக வேண்டும் என்று என் வாய்க்குப் பூட்டுப் போட்டான். சரி பிறகு என்ன ஆனான் என்றேன். அவன், வீடு போய்ப் படுத்திருக்கிறான். காய்ச்சல் மிகுதியாகி யிருக்கிறது. குளிரும் வெதுப்பும் மாற்றி மாற்றி மாட்டியிருக்கின்றன. நான் வைத்தியரை அனுப்பி வைத்தேன். அவன் போக்கே மாறியிருக்கிறது என வைத்தியர் சொல்லுகிறார். அளவுக்கு மிஞ்சின அந்தப் பயம் அவன் மூளையைக் குழப்பி விட்டிருக்கிறது. உளறுகிறான், சிரிக்கிறான் என்கிறார். என்ன செய்வது? நானும் போய்ப் பார்க்க வேண்டும் என்றுதான் துடிக்கிறேன். ஆனால் கிழவியை நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது. உண்மையாக என் தாயாக இருந்தால் என்ன காரணம் கொண்டும் என்னை இப்படி ஏங்க விடுவாளா? என்று சொன்னான். அவள் என்னவோ உள்ளே வைத்திருக்கிறாள். அதைச் சொல்லி விட்டால் சரியாகிவிடும். உன்மீது அவளுக்கு வாஞ்சை இல்லை என்றா எண்ணுகிறாய். ஏன் அவள் சொல்வது போல நீயும் மானம் போவதாக எண்ணுகிறாயா? என்றேன். இல்லை; இல்லை; இப்படி நினைத்து நினைத்து நம் முன்னோரும் நாமும் கெட்டது போதும்; இன்னும் அந்தப் போலி மானத்தை எண்ணிக் கெட வேண்டாம்; இருவரும் போவோம் என்றான். இருவரும் போனோம்; கிழவி வீட்டின் முன்னால் நின்றாள். எங்களைக் கண்டபோது வலுவாகச் சிரிப்பு வரவழைத்துக் கொண்டாள். அது நடிப்பே அன்றி உண்மையன்று என்பது தெளிவாக தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியாதா? வீட்டின் உள்ளே யிருந்து புலம்பல் பலவாறாகக் கேட்டது. அவன் நிலைமை எப்படியாகுமோ? நம் கையில் இல்லை என்றாள் கிழவி. அவளது சுருக்கம் விழுந்த கன்னங்களைக் கண்ணீர் துளிகள் நனைத்தன. மணிக்காளை எதுவும் பேச வில்லை. அமைதியாக உள்ளே சென்றான். நானும் அவனை தொடர்ந்தேன். எங்களைக் கண்டதும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித் தான் தாத்தாவின் மகன். நாங்கள் தடுத்து நிறுத்தினோம். நாய் கடித்த இடங்களிலிருந்து இரத்தமும் சீழும் வடிந்து கொண்டிருந்தன. யாரையும் நெருங்கவிடாமல் செய்திருக்கிறான். அவன் ஐயோ! நான் குத்தவில்லை; கொல்லவில்லை; என்னை அடிக்க வேண்டாம்; கொல்ல வேண்டாம் என்று கத்தினான். தெரு முழுதும் கேட்குமாறு அலறினான். உனக்கு ஒன்றும் இல்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பயப்படாதே என்றோம். அவனைக் கொன்றதற்கு என்னைப் பிடிக்கவா? போ. வெளியே போ! என்று விழுந்து புரண்டான். இப்படித்தான் யார் வந்தாலும் சொல்கிறான். ஒன்றும் புரியவில்லை. என் தலைவிதி இன்னும் என்ன வெல்லாம் பார்க்க வைத்திருக்கிறதோ என்று நொந்தாள். உன்னைக் காப்பாற்றாமல் மணிக்காளை அனுப்பி விட்டான் என்னும் கோபத்தால் இவ்வளவு காரியங்கள் செய்திருக்கிறான் என்று நடந்ததை விவரமாகக் கூறினேன். நெடுநேரம் அவள் பேசவில்லை; எல்லாம் என்னால் ஏற்பட்டது. எந்தப் போராட்டத்தையும் சமாளிக்கலாம்; ஆனால் மனப் போராட்டத்தைச் சமாளிப்பதுதான் அரிது. அந்த மனப்போராட்டம் செய்த சீரழிவுதான் இது என்று உண்மையாக உணர்ந்து சொன்னாள் கிழவி. கிழவி தன் மனப் போரைச் சொல்வாள் போல் இருந்தது. அது அப்படிப்பட்ட வேளையல்லவா! ஆனால் மணிக்காளையை வைத்துக் கொண்டு சொல்ல மாட்டாள் என்பதும் உணர்ந்தேன். சரி நேரம் வரட்டும் என்னும் எண்ணத்துடன் இவனுக்கு என்ன ஏற்பாடு செய்வது? என்றேன். அதைப் பற்றித்தான் நானும் எண்ணுகிறேன்; இங்கு வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. வைத்தியர்களால் தீர்க்க முடியாத மூளைக் கோளாறையும் குற்றால அருவி தீர்த்து விடும்படி வாய்ப்புப் பெற்றிருக்கிறது. அங்கு அனுப்பி வைக்க வேண்டியது தவிர்த்து வேறு வழியில்லை என்றான் மணிக்காளை. குற்றாலமா? விழுந்து சாவார்களே! அங்கேயா? நான் மாட்டேன் என்று கத்தினான் மகன். பெற்றெடுத்த வயிற்றைப் பிசைந்து கொண்டு கண்ணீருடன் வெளியே போனாள் கிழவி. நோய் தீர்ந்தாலும் சரி; தீரா விட்டாலும் சரி; குற்றாலம் வேண்டாம்; வேறெங்காவது அனுப்பு என்று கூறியது தாங்க மாட்டாத அந்தத் தாய்மனம். சரி, அப்படியானால் கீழ்பாக்கத்திற்குத் தான் அனுப்பி வைக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தோம். மணிக் காளையை அழைத்துக் கொண்டு வீட்டில் சேர்த்து விட்டு, நான் கிழவியினிடம் போனேன். அப்பொழுதுதான் உண்மையைச் சொன்னாள் என்று சற்றுத் தயக்கத்துடன் பேச்சை நிறுத்தினான். சுற்றுமுற்றும் பார்த்தான். இச்செய்தி அடுத்தவர்கள் காதில் விழுந்து விடக்கூடாது அல்லவா! வண்டிகளும், சைக்கிள்களும், மோட்டார்களும் தெருவின் அப்பக்கமும் இப்பக்கமும் போய்க் கொண்டிருந்தன. மக்களும் அங்கொருவரும் இங்கொருவருமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். காலைச் சுறுசுறுப்பைக் கதிரவன் உயிர்களுக்கு ஏற்றத் தொடங்கி விட்டான். வண்டி நிறுத்தி யிருந்த, ஆலமரத்தில் பழுக்கும் காலமாக இருந்த காரணத்தால் பறவைகளின் ஆரவாரம் நன்றாக இருந்தன. காக்கைகள் சில கரைந்தன. அக் கரைதலைக் கேட்டுக் காக்கைகளே வந்தன; மற்றைப் பறவைகள் வட்டமிட்டும் பறந்தும் வேறிடங்களுக்குச் சென்றனவே ஒழிய, காக்கையின் கரைதலுக்குச் செவி சாய்க்கவில்லை. ஒருவன் தீப்பெட்டி இருக்கிறதா? என்று கேட்டு வந்தான். அவன் வாயால் கேட்கு முன்னமே அவன் வைத்திருந்த பீடியைப் பார்த்து விட்டு இல்லை என்று கைகாட்டி அனுப்பினான் தலைமலை. அயலூரார் ஒருவர் ஒரு தெருவுக்குப் போக வழி கேட்டார். கை வண்டிகள் இரண்டு மூன்று நத்தைகள் போல் ஊர்ந்து கொண்டிருந்தன. சரக்குகள் இல்லையாதலால் சுறுசுறுப்பு இல்லை. யாரும் தம் பக்கத்தில் இல்லாமையால் தலைமலை இருளாண்டியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான். தலை மலையின் திகைப்பு இருளாண்டிக்கு என்னவோ போல் இருந்தது. கிழவி சொல்லிய காரணம் ஒரு வேளை சொல்லக் கூடாததாக இருந்தால் வேண்டாம்; குற்றமில்லை என்றால் சொல்லு என்றான். உன்னிடம் சொல்வதால் நன்மை இல்லை என்றால் அவள் கதையை இவ்வளவு சொல்லியிருக்கவே மாட்டேன். நீ வேறு நான் வேறு இல்லை என்று கதையைச் சொன்னான். கிழவி குமரியாக இருந்தாளாம். அப்பொழுது அவளுக்கு ஒருவன் மேல் காதல் ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து அந்த அன்பை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார்களாம். திருமணம் செய்துகொள்வது உறுதி என்று தலையில் அடித்து ஆணையும் சொல்லியிருக்கிறான். ஆணை சொல்லிய அளவுடன் சரியாகி விட்டது போல் இருக்கிறது. ஆளையே பல மாதங்கள் காண வில்லையாம். அந்தக் காலத்திற்குள் இவளுக்கும் திருமண முயற்சிகள் பலமாக நடந்திருக்கின்றன. வந்தவர்களை யெல்லாம் அவனை நினைத்து நினைத்துப் பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டிருக்கிறாள். பெற்றோர்களும் மகள் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்காது சரி; வரட்டும்; பொறுத்துச் செய்யலாம்; என்று அமைதியடைந் திருக்கிறார்கள். இத்தகைய வேளையில் காதலன் எவளோ ஒருத்தியை - நல்ல பணக்காரியாம் - மணம் செய்து கொண்டு ஊருக்கு வந்து விட்டானாம். இதைப் பார்க்கப்பார்க்க எரிச்சலாக இருந்திருக்கிறது அவளுக்கு. இப்படிப்பட்ட கயவன் என்பதை முன்னமே அறிந்து கொள்ளாதது தன் குற்றம் என்று நொந்து திருமணமே வேண்டாம் என்று வெறுத்திருக்கிறாள். பெற்றோர்கள் விடுவார்களா? எப்படியோ வற்புறுத்தல் செய்து பொன்னுத் தாத்தாவுக்குத் திரு மணம் செய்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் வாழ்வில் தோல்வி இல்லையா? ஆமாம்! இதற்கும் மணிக்காளைக்கும் என்ன தொடர்பு! முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிச்சாக அல்லவா உள்ளது என்றான் இருளாண்டி. கேள்; மணிக்காளை புரோக்கர் ஆனான் அல்லவா! அவனுக்கு அந்த வேலையைத் தந்தானே அவன் தான் வேலையைத் தந்தானே அவன் தான் கிழவியின் பழைய காதலனாம். கிழவிக்கு எத்தனையோ முறைகளில் உதவி செய்யப் பார்த்தானாம். கிழவி வாயிற்படி ஏற விடவில்லையாம். தாத்தா இறந்த போது வீட்டுக்கு வந்தவனையே மானம் போகக் கேட்டு அனுப்பினாளாம். என்ன இருந்தாலும் தான் செய்தது தவறு என்று அவன் உணர்ந்து கொண்டதாலும், எப்படியும் அவளுக்கு உதவ வேண்டுவது தன் கடமை எனத் தெளிந்ததாலும், அவள் எந்த உதவியையும் ஏற்கமாட்டாள் ஆதலால் அவளை ஆதரிக்கும் மணிக்காளைக்குத் தன் வேலையைக் கொடுத் திருக்கிறான். இல்லையேல் அவன் தரவே மாட்டான் என்று கிழவி காரணம் காட்டுகிறாள் என்றான் தலைமலை. நல்ல காரணம்! கிழவி உள்ளம் வெள்ளையானது என்று என்னிடம் ஒருமுறை சொன்னாய். அவள் உள்ளம் வெள்ளையாவது கறுப்பாவது? வைராக்கிய நெருப்பு என்று சொல்லு. பாவம்! மணிக்காளைக்குத்தான் அல்லல் என்று சோர்வுடன் உரைத்தான் இருளாண்டி. அதுதான் இல்லை! மணிக்காளை தவிர்த்து வேறு யாருமாக இருந்தால் அப்படித்தான் நிலைமை ஆகும். ஆனால் அவன் என்ன சொன்னான் தெரியுமா? தங்கம் தன் ஒளி உடையது. அதனை மேலுமேலும் ஒளியுடையதாக்க வேண்டுமானால் தீயிலே வெந்து வெந்து உருக வேண்டும். மனிதனும் உயர்ந்தோனாக, நல்லோனாக, புகழாளனாக விளங்க வேண்டுமானால் துன்ப நெருப்பிலே காய்ந்து காய்ந்துதான் ஆக வேண்டும். சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்பதில் எவ்வளவு வாழ்க்கைத் தெளிவு உள்ளது என்பதை இன்னும் உனக்கு விளக்கிக் கூற வேண்டியது இல்லையே என்பான். அவனே சொல்வான் மரங்களிலே ஒன்று பூவரசு. அதனை வெட்டிவிட வெட்டிவிடத்தான் காழுமையாகவும், பக்கம் விரிந்தும் நன்றாக வளரும் வெட்டாவிட்டால் கொழுமையோ வளமான வளர்ச்சியோ இருக்காது. ஆனால் வேம்பு அப்படிப் பட்டது இல்லை. வெட்டி விட்டால் வளமும் கொழுமையும் தொலைந்துவிடும். மனிதர்களிலும் பூவரசாக வாழ்பவர்கள் துன்பம் நேர நேர வளம் பெறுகிறார்கள்; உரம் பெறுகிறார்கள். வேம்பாக வாழ்பவர்கள் வளம் இழக்கிறார்கள்; உரம் இழக்கிறார்கள். என் உள்ளத்தை உர மூட்டுவதற்காகத் தான் இளமையிலே தாய் தந்தையரைப் பறித்த இயற்கை, வறுமையைத் தந்து, வண்டியிழுக்கச் செய்து, பொன்னுத் தாத்தாவை உறவாக்கி, அவரையும் நடுவில் கொள்ளையிட்டு, அவர் மகனைப் பகையாக்கி, அவர் மனைவியை என்னிடம் ஒப்படைத்து, அவளும் என்னைவிட்டு வெளியேறினால் சரி, இல்லையேல் சாவு என்னுமாறு ஆக்கிவிட்டிருக்கிறது. திடுதிப்பென்று ஒருவனுக்கு இப்படி ஏற்பட்டிருந்தால் வந்த துயரங்களையெல்லாம் வரவேற்றுக் கொண்டு புன்முறுவல் பூப்பானா? எனக்குப் பழக்கமாகி விட்டது. மருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பழக்கமானவன் - மருந்தையே உணவாக ஆக்கிக் கொண்டவன் - புதிதாக மருந்து சாப்பிடுபவனைப் போன்று முகத்தைச் சுழித்து, நாவைப் பிதுக்கி, குடலைப் பிடுங்கிக் கொண்டு இருப்பானா? எனக்குத் துன்பம் பழக்கமாகிவிட்டது; சிரித்துக் கொண்டு அனுபவிக்கின்றேன்; நீயும் அப்படித் தானே என்பான். மணிக்காளை நெருப்பின் இடையே கூட வாழப் பழகி விட்டவன் இல்லையா, இருளாண்டி! என்றான் தலைமலை. ஆம்! நெருப்பிலே பிறந்து, நெருப்பிலே வளர்ந்து, நெருப்பிலே வாழ்பவர்களுக்கு அது ஒருவேளை பழக்கம் என்று சொல்லி விடலாம். ஆனால் நெருப்பிலே பிறந்து வளர்ந்தாலும் நீரிலே வாழப் பழகி விட்டவர்களுக்குப் பின்னும் நெருப்பிலே வாழ்வது சங்கடமில்லையா! என்றான் இருளாண்டி. செயற்குரிய செய்வதிலே என்ன சிறப்பு! செயற்கு அரிய செய்வதிலே தானே சிறப்பு! என்று தங்களை நோக்கி ஒருவன் வருவது கண்டு நிறுத்தினான் தலைமலை. வந்தவன் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு ஏதோ உளறினான். அரைபோல் இருக்கிறது என்றான் இருளாண்டி. ஆமாம்; கிழவி மகனுக்கு என்ன ஏற்பாடு செய்தீர்கள்? என்று வழியில் நடந்தவனைப் பார்த்துக் கொண்டு கேட்டான் இருளாண்டி. கீழ்பாக்கத்திற்குத்தான் அவனை அனுப்பினோம். அவனை மணிக்காளையுடன் அனுப்ப முயன்றேன். மாட் டேன் என்று பிடிவாதம் செய்து விட்டான். பின்பு நானும் உடன் போனேன். இரயில் ஏறியதிலிருந்து அவன் சிரிப்பு உச்சமாயது. மணிக்காளையும் சிரித்தான்! இரண்டிற்கும் இருந்த இடை வெளி எனக்கு எத்தனையோ வாழ்க்கைக் காட்சிகளை முன் னிறுத்திக் காட்டின என்று பேச்சை நிறுத்தினான் தலைமலை. இடுக்கண் அழியாமை 1. இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில். 2. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். 3. இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர். 4. மடுத்தவா யெல்லாம் பகட ன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து. 5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். 6. அற்றேமென் றெல்லல் படுபவோ பெற்றோமென் றோம்புதல் தேற்றா தவர். 7. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். 8. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். 9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். 10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு.  24. மெய்மைப் பொய் மணிமுத்து! வெள்ளை வாங்கிக் கொண்டு வா. போனேன் வந்தேன் என்று இருக்க வேண்டும்! தெரிந்ததா? என்று சீசாவையும் சில்லரையையும் தந்து அனுப்பினான் மூக்கன். சேவல் சண்டை பார்க்காமல் விட்டுச் செல்ல மணிமுத்துக்கு மனமில்லை. ஆனாலும், அப்பன் சொல்லைக் கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் அறியாதவன் அல்லன் அவன். வேண்டா வெறுப்புடன் விரைந்து கடைக்குச் சென்றான் மணிமுத்து. மூக்கன் குடும்பம் செல்வமான குடும்பமாகத்தான் இருந்தது. மூக்கன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டானோ இல்லையோ - தெருவில் நிற்க வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டான். அவனது பாட்டனார், தந்தையார் அரும்பாடு பட்டுத் தேடிவைத்திருந்த சொத்தையெல்லாம் குடி, சூது ஆகியவற்றிலே தொலைத்தான். பொருளைத் தொலைத்ததுடன் உடலையும் கெடுத்துக் கொண்டான். நோய் நொம்பலம் இல்லாமல் வளர்ந்த மூக்கன், மெலிந்து எலும்புக் கூடாக மாறிவிட்டான். உடல் கெட்டபின் உள்ளம் கெடாமல் இருக்குமா? கண்ட கண்ட போக்குகளிலெல்லாம் போய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தேய்ந்து கொண்டு வந்தான். வறுமைத் துன்பமும், நோய்த் துயரும் அதிகரிக்க அதிகரிக்க இன்பவழி ஏதாவது கிடைக்காதா என்று தேடித் தேடித் திரிந்தான். இவ்வளவு கெட்டுப் போன உள்ளம் உடையவனுக்கு எது இன்பமாக இருக்கும்? நல்லவர்களைப் பார்ப்பதோ, அவர்களோடு பேசுவதோ இன்பமாக இல்லை. இயற்கை வளம் வாய்ந்த இடங்களைப் பார்ப்பதோ இயற்கைக் காட்சிகளைக் காண்பதோ இன்பமாக இல்லை, புத்தகங்களையோ செய்தித் தாள்களையோ படிப்பது இன்பமாக இல்லை. எப்படி இருக்க முடியும்? காக்கைக்கு விருப்பமானது பிணம்தானே! தீயவர்கள் சேர்க்கை, சூது, கள், சாராயக் குடிவகைகள் இவையே அவனுக்கு இன்பமாயின. எப்பொழுது பார்த்தாலும் இவற்றுள் ஒன்றில் ஈடுபடாமல் இருக்க அவனால் முடியாது. அப்படிப் பழகி விட்டான். இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு என்னும் குறள் நெறி அவன் செவியில் விழ வாய்ப்பே இல்லை. அப்படியே விழுந்தாலும் அதனைச் சொல்லியவனைச் சும்மா விடப்போவதுமில்லை. அவன் பரம்பரையையே சந்திக்கு இழுத்து விடுவான். ஒரு நாள் மணிமுத்து, ஒரு தோட்டத்திற்குப் போய்த் தேங்காய்கள் சில பறித்தான். பறிக்கும் போது தோட்டக்காரன் கண்டுவிட்டான். அவனுக்குக் கோபம் மிகுதியாயிற்று. தூரத்திலிருந்து வரும்போதே கத்தினான். பக்கத்தில் வந்தபோது மணிமுத்தைப் பார்த்ததும் ஏன் திட்டினோம் என்று பதறிப் போனான். மெதுவான குரலில் மணிமுத்து, இறங்கு கீழே! இப்படியா செய்வது? ஆளில்லாத வேளையில் இப்படிக் காயை வெட்டுவது உனக்கே நன்றாக இருக்கிறதா? வா, உன் அப்பா வினிடமே கேட்கலாம் என்று அழைத்துச் சென்றான். தோட்டக்காரன் நடந்து கொண்ட அளவு ஒருவன் பொறுமையாக நடந்திருக்க முடியாது. இத்தோட்டக்காரனும் மூக்கன் மகன் மணிமுத்து தவிர்த்து இன்னொருவனிடம் இப்படி நடந் திருப்பான் என்றும் எதிர்பார்க்க முடியாது. மூக்கன் தோட்டக்காரனுக்கு என்ன பரிசு தந்தான்? நீ திருட்டுப்பயல்; உன் அப்பன் திருட்டுப்பயல்; உன் பாட்டன் திருட்டுப்பயல்; உன் பரம்பரையே கொள்ளைக் கூட்டம். ஒரு பயலிடம் யோக்கியதை உண்டா? தோட்டம் வைத்திருக்கி றானாம் தோட்டம். இவன் ஒருவனுக்குத்தான் அதிசயமாகத் தோட்டம் இருப்பது போல! ஏய், நீ பிச்சைக்காரப் பயல்; இந்தப் சின்னப்பயல் தெரியாமல் தேங்காயைப் பறித்ததற்குக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு வந்து விட்டாயே - நீ செய்வதைச் செய்! அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித் தான் என்றான். கூட்டம் திரண்டு விட்டது. கூடியவர்களும் தோட்டக்காரன் இதனை இவ்வளவு பெரிது பண்ணியிருக்க வேண்டாம் என்று ஒத்த முடிவு கூறினர். தோட்டக்காரன் என்ன செய்வான்? வாயை மூடிக்கொண்டு போனான். இத்தகைய மூக்கனின் இல்லறம் எப்படி நயமாக நடந்திருக்கக் கூடும் என்று கற்பனை செய்து கண்டு கொண்டிருக்கலாம். புலிக் குகையிலே புள்ளிமான் குடியிருந்தது போலக் குடியிருந்தாள் காத்தாயி. புலி, சிங்கங்களுக்குக் கூட, - கழுகு, பருந்துகளுக்குக் கூட தன் பெட்டை குட்டி குஞ்சு என்ற பாசம் உண்டு. ஆனாலும் கூட மூக்கனைப் பொறுத்த அளவில் அது இல்லை என்றால் அந்த வாழ்வினை எப்படி யுரைப்பது? ஏதோ உயிரைப் போக்கிக் கொள்ளாமல் வாழ்ந்தாள். மணிமுத்தையும் பெற்றெடுத்தாள். மூக்கன் என்றோ ஒருநாள் அயலூர் ஒன்றிலே சேவற் சண்டை நடப்பதைக் கண்டான். அது அவனை மிகவும் கவர்ந்து விட்டது. இரண்டு இரண்டு பேர்கள் எதிரெதிராக இருந்து, சேவல்களைப் போருக்கு அனுப்புவதும், அவற்றின் கால்களிலே கத்தியைக் கட்டிவிடுவதும், ஒவ்வொரு முறையும் ஏவி வெறியூட்டி விட்டுக் குத்துமாறு செய்வதும், தோற்று ஓடினால் கூட விடாது பிடித்து வைத்து மேலும் தாக்க விடுவதும், அது சிந்தக்கூடிய இரத்தத்தைக் காண்பதிலே களிப்புக் கொள்வதும், எதிரியின் சேவலை அடித்து வெற்றி கொள்வதிலே இன்பம் கொள்வதும் மூக்கனைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. இக் காரியத்தைத் தன் ஊரிலேயும் நடத்த வேண்டும் என்று எற்பாடு செய்தான். மூக்கன் நினைத்தால் அவன் ஊரில் நடத்த முடியாது போய்விடுமா? எத்தனை மூக்கர்கள் முன் வரமாட்டார்கள்? ஊர்ப்புறத்திருந்த ஆலந்தோப்பிலே சேவற் போர் நடந்தது. எவ்வளவோ நல்ல காரியங்களுக்கெல்லாம் பயன்பட்டு வந்த அந்த ஆலந்தோப்பு கோழிச் சண்டைக்கும் பயன்பட்டது. அது தொடங்கியபின் தோப்பின் களை கெட்டதும் அன்றி, ஊரின் களையும் கெட்டது. ஊரிலுள்ள மக்களின் மனங்களிலும் எத்தனை எத்தனையோ பகைமையும், வேற்றுமையும் பிணக்கும் ஏற்பட்டன. இவ்வளவையும் தலைமை நின்று நடத்தி யவன் மூக்கன்தான். சேவற்போர் வெற்றி தராது என்றால் வலுச்சண்டை செய்தாவது வெற்றி தேடிவிடுவது அவன் வழக்கம். கைச் சண்டையோ, வாய்ச் சண்டையோ அதனைப் பற்றி அவனுக்குக் கவலையே இல்லை. இப்படியே எவ்வளவு நாட்கள்தான் காட்டு ராசாவாக ஆட்சி செய்ய முடியும்? மூக்கனுக்கும் எதிரி முளைத்தான். கடுவன் என்பவன் அவன். கடுவன், மூக்கன் சேவலை அடிக்கக் கூடிய அளவுக்கு வித விதச் சேவல்களைக் கொண்டு வந்தான். இனி மூக்கன் என்ன செய்வது? மூக்கன் கடுவனை வெற்றி கொள்ள என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவும் செய்தான். சேவலை ஊக்கப்படுத்தி ஏவினான். தன்னையும் ஊக்கப் படுத்த விரும்பிச் சீழ்க்கை அடித்தான்; புகை பிடித்தான். ஏதாவது குடித்தால் தான் ஊக்கம் ஏற்படும் போல் அவனுக்கு இருந்தது. அதற்காகத்தான் மணிமுத்தைச் சீசாவுடன் கள்ளுக் கடைக்கு அனுப்பி வைத்தான். மணிமுத்து சீசாவுடன் விரைந்து ஓடி வந்தான். கொஞ்சம் பொறுக்கக் கூடாதா? டே ஓடிவா; போனது எந்நேரம்! வருவது எந்நேரம்! வா இங்கே! என்று கத்தினான். இனி என்ன கிடைக்குமோ? என்ற பயத்தில் ஓடிவந்த மணிமுத்து கல் காலை இடற, கள்ளிருந்த சீசாவையும் போட்டு விழுந்தான். சீசாவும் உடைந்தது. கள்ளும் கொட்டித் தொலைந்தது. சேவற் போர்த் தோல்வியால் கடுப்புக் கொண்டிருந்த மூக்கனை இது கிளறி விட்டது. கோபம் கொந்தளித்துக் கிளம்பிற்று. இடுப்பில் இருந்த கத்தியினை எடுத்துக் கொண்டு மணிமுத்தினை நோக்கி ஓடினான். கூட்டமெல்லாம் சேவற்போரை விட்டுத் திகைத்தது. மூக்கனைத் தடுக்க எவருக்குத் துணிவுண்டு? மணிமுத்து மருண்டோடும் மான்போல ஓடினான். வேங்கைப் புலிபோல விரட்டிச் சென்றான் மூக்கன். ஓடும் விரைவில் எத்தனையோ இடங்களில் இடறியும் எழுந்தும் தாவியும் சென்றான் மணிமுத்து. ஆனால், மூக்கன் ஓரிடத்தில் உருண்டு விட்டான். உருண்டாலும் தொடர்ந்து செல்வதை விட்டானா? மணிமுத்துக்கு என்ன நேருமோ என்று அவனைப் பெற்றெடுத்த காத்தாயியும் ஓடிவந்தாள். ஐயோ ஐயோ! வேண்டாம்; வேண்டாம் என்னும் அவள் குரல் மூக்கன் செவியில் படவா செய்யும்? மணிமுத்து இளைஞன் அல்லவா! சிட்டுப் போலப் பறந்து விட்டான். முடுக்கு, சந்து, பொந்து ஆகிய இடங்களிலெல்லாம் ஓடினான். பயல் தப்பி விடுவான், என்னும் எண்ணம் தாய்க்கு ஏற்பட்டாலும் பின் தொடர்ந்து ஓடினாள். மணிமுத்து ஒரு வீட்டில் நுழைந்தான். அவ்வீடு மெய்யப்பனுடையது என்பதைக் காத்தாயி அறிவாள். ஆனால் மணிமுத்து, இன்னார் வீடு என்பதையும், வீட்டுக்காரன் குணம் இன்னது என்றும் அறியமாட்டானே! டே பையா! என்னடா ஓட்டம்? இங்கென்ன? என்றான் மெய்யப்பன். நடுக்கத்துடன் நிலைமையைச் சொன்னான் மணிமுத்து. டே, மெய்யப்பன் என்ற என் பெயரை நீ அறியமாட்டாயா? என்ன ஆனாலும் நான் பொய் சொல்லேன். உன் அப்பன் வந்து கேட்டால், நீ இங்கே மறைந்து இருக்கும் உண்மையைச் சொல்லி விடுவேன். வேண்டுமானால் நான் அவனைத் தேடிப் போய்ச் சொல்ல மாட்டேன். அவ்வளவுதான் உனக்காக நான் செய்ய முடியும்! அப்பப்பா! உண்மையை மறைக்க என்கால் தடம் பட்டவனுக்கும் மனம் வராது; எப்படியோ உன் விருப்பம்போல் பார்த்துக்கொள் என்றான். மணிமுத்துக்கு, மெய்யப்பன் சொல்லைத் தாங்க முடிய வில்லை. சண்டாளன் துரோகி விளங்காதவன் என்று திட்டிக்கொண்டே ஓடினான். காத்தாயி, மணிமுத்து மெய்யப்பன் வீட்டிலிருந்து ஓடுவதைக் கண்டாள். இப்படித்தான் நடந் திருக்கும் என்று உணர்ந்து கொண்டாள். மெய்யப்பன் மனிதன்தானா? அவன் மெய்யும் ஒரு மெய்யா? கொலைப் பாதகன் என்று ஏசிக்கொண்டு அவன் வீட்டிற்குப் பின்புறத்தில் நின்றாள். மணிமுத்து அடுத்த வீட்டுக்குள் ஒளிந்து கொண்டது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நல்லவேளை, மணிமுத்து அடுத்த வீட்டில் ஒளிந்ததை மெய்யப்பன் பார்க்கவில்லை. பார்த்துத் தொலைத்தால் அதனையும் சொன்னாலும் சொல்லுவான். அவ்வளவு மெய்மைப்பித்தன் அவன் என்று காத்தாயி இன்பமடைந்தாள். மூக்கன் ஓடிவந்தான். மெய்யப்பனிடம் கேட்டான்: என் பயல் வந்தானா? ஆ ஆ! உன் பயலா? இங்கு வந்து ஒளிந்தான். நான் உண்மையைச் சொல்லிவிடுவேன் என்றேன். இந்தப் பக்கமாக ஓடினான். ஒருவேளை அடுத்த வீட்டில் ஒளிந்திருந்தாலும் ஒளிந்திருப்பான் என்றான் மெய்யப்பன். அடுத்த வீட்டில் ஒளிந்திருந்தாலும் இருப்பான் என்னும் ஒலி காத்தாயிக்கும் கேட்டது. அடுத்த வீட்டுக்காரனுக்கும், மணிமுத்துக்கும் கேட்டது. ஐயோ! இந்தச் சனியன் இங்கிருப்பதையும் காட்டிக் கொடுத்துவிடுவான் போல் இருக்கிறதே என்று ஒரே வேளையில் அனைவரும் வருந்தினர், அதற்குள் மூக்கனும் வீட்டுக்குள் புகுந்து விட்டான். என் பயல் இங்கு இருக்கிறானா? என்றான் மூக் கன், ஓர் ஒல்லிப் பயல்; மாநிறம்; கால் சட்டை மட்டும் போட்டவன்; காதில் கடுக்கன் அவன்தானே! என்றான் வீட்டுக்காரன். ஆம்; அவனேதான்! எங்கே இருக்கிறான்? என்று துடிப்புடன் கேட்டான் மூக்கன். இதோ பார் இந்தத் தெரு வழியே ஓடி, அந்தச் சந்திலே திரும்பினான். ஓடு; ஓடு; இப்பொழுதுதான் போனான். விரைந்து போனால் பிடித்து விடலாம் என்றான் வீட்டுக்காரன். மூக்கன் ஓடினான். நெடுநேரம் தேடியலைந்தும் காணாத வனாகச் சோர்ந்து போய் வீட்டைச் சேர்ந்தான். இதற்குள் கோபமும் சிறிது சிறிதாகக் குறைந்துவிட்டது. கோபம் போன பின்தான் செய்தது என்னவோ போல் இருந்தது. கட்டிலில் குப்புற விழுந்து புரண்டான். உறங்கவா முடியும்? என்னென்னவோ உளறினான். மணிமுத்துவினிடம் நடந்ததை விவரமாகக் கேட்டறிந் தான் வீட்டுக்காரன். காலத்தால் உதவியதற்காகப் பெரிதும் மகிழ்ந்தான். நீ இப்பொழுது வீட்டுக்குப் போகவேண்டாம்; இங்கேயே இரு. நானே மாலையில் உங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். அதற்குள் உன் அப்பா கோபம் தீர்ந்து விடும் என்று கவலையை ஆற்றி, பசியையும் மாற்றிவைத்திருந்தான். மணிமுத்து பயந்து கொண்டு வேறெங்கும் போய்விடக் கூடாதே என்னும் கவலையில் நின்றிருந்த காத்தாயிக்கு வீட்டுக்காரன் சொல் தேன் போல் இருந்தது. இனிக் கவலையில்லை என்று வீட்டுக்குப் போகத் தொடங்கினாள். ஆனால், போகவிடாதவாறு ஒருவன் வந்தான். அவன், ஐயா இருக்கிறாரா? என்று மெய்யப்பன் மகனிடம் கேட்டான். மெய்யப்பன் அவன் வருவதைத் தொலைவிலே கண்டு ஒளிந்து கொண்டான். அப்பா, வெளியில் போயிருக்கிறார் என்று சொல்லிவிடுமாறும் மகனிடம் சொல்லியிருந்தான். அப்படியே அவன் மகனும் சொல்லிவிட்டான். மெய்யப்பன் மைந்தன் அல்லவா! அவன் சொல்லில் சந்தேகம் கொள்ளலாமா? தேடிவந்தவன் புறப்பட்டான். கடன் வாங்கி நெடுநாள் ஆகின்றது; வந்த நேரமும் பார்க்க முடிவதில்லை; அவராகப் பணம் அனுப்புவதும் இல்லை; கடிதம் போட்டாலும் பதில் போடுவது இல்லை; எப்படித்தான் பணத்தை வாங்கப் போகின்றேனோ? முதலாளியிடம் நல்ல பெயர் எடுக்கப் போகின்றேனோ? என்று சொல்லிக் கொண்டு நடந்தான். அவன் சொற்கள் காத்தாயி காதிலும் விழுந்தன. அவளால் தாங்கமுடியவில்லை! அரிச்சந்திரன் போல நடிக்கும் அவன் நடிப்பை நினைத்து ஆவேசம் கொண்டாள். அவள் மகனைப் பொய் சொல்லமாட்டேன் என்று வெருட்டிவிட்டான் அல்லவா! மெய்யப்பா! வெளியே வா; ஊரை ஏமாற்றுவது எத்தனை நாட்களுக்கு? என்னும் வாழ்த்துரையுடன் உள்ளே வந்தாள் காத்தாயி. மெய்யப்பன் துரை, கணக்குப்பிள்ளை இருக்கிறாரா? என்று மெதுவாக மகனிடம் கேட்டான். அவர் போய் விட்டார் என்று சொல்லிய சொல்லை அடக்கிக் கொண்டு கணக்கப் பிள்ளை போய் விட்டார்; ஆனால் காத்தாயி போக வில்லை வெளியே வா; இதுவும் ஒரு பிழைப்பா? நீ கெட்ட கேட்டுக்கு மெய்யப்பன் என்னும் பெயர் ஒரு கேடா? ஒருவனை ஒருவன் குத்திக் கொல்ல வரும்போது, உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கூடப் பொய் சொல்ல மாட்டேன் என்ற வாய், கடன்காரனைக் கண்டவுடன் ஒளிந்து கொண்டு பொய் சொல்லலாமோ? சோறுண்ட வாய்தானா இது? இரு; இந்தச் செய்தியைக் கணக்கப் பிள்ளைக்கும் ஊருக்கும் பரப்புகிறேன் பார். உன் ஒழுங்கு புலப்பட வேண்டாம்? என்று துடிப்புடன் பேசினாள். மெய்யப்பன் வெட்கிப் போய், காத்தாயி இந்த ஒரு வேளைக்கும் காப்பாற்று. நான் மெய்யன்தான். என் போதாக் காலம் இப்படிப் பொருள் முடை ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது! என்றான். பொருள் முடை உனக்குப் போதாக் காலம்! உயிரழிவு எங்கள் போதாக் காலம். எது பெரிது? உனக்காக - உன் கடன் தொல்லைக்காக - நீ பொய் சொல்லலாம். மற்றவர்கள் நன்மைக்காகப் பொய்யே சொல்ல மாட்டாய். இல்லையா? நீ உண்மையான மெய்யப்பன் என்றால், இந்தச் சிறுவனைக் காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்லி, கடன்காரனிடம் பொய் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்; நீ தான் தன்னல மெய்யப்பன் ஆயிற்றே! அய்யோ, உன்னிடம் மெய்கிடந்து படும்பாடு உனக்குத் தான் வெளிச்சம்! என்றாள். அழாக்குறையுடன் நின்றான் மெய்யப்பன். காத்தாயி வெளி யேறினாள். இவனைத் தண்டோராப் போட்டுத் திரியத் தலை விதியா? போய்த் தொலைகிறான்; என்றைக்காவது ஒரு நாள் உணர்வான் என்று அமைதியாக வீட்டுக்குப் போனாள் காத்தாயி. வழியில் கணக்கனைக் கண்டாள். பேசிக் கொண்டே வீட்டுக்குப் போனாள். மூக்கன் புரண்டு புரண்டு படுத்தான். காத்தாயி அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. ஏதாவது கேட்பாள் என்று பலமுறை நினைத்தான் மூக்கன். காத்தாயிக்குத் தான் நடந்ததெல்லாம் தெரியுமே! அவனாகச் சொல்லட்டுமே என்று வாய் திறக்க வில்லை. நெடுநேரம் கழித்து மூக்கன் பேசினான். காத்தாயி, பயல் இன்னும் வரவில்லையே! எங்கே போனானோ? அறிவில்லாமல் விரட்டிச் சென்றேன் என்று தலையில் அடித்துக் கொண்டான். இப்படி வெறிபிடித்த தகப்பனுக்குப் பிள்ளை என்று இருப்பதைப் பார்க்கிலும் ஆற்றிலோ குளத்திலோ விழுந்து செத்திருந்தாலும் நல்லதுதான். அந்தச் சின்னஞ் சிறியது செய்த காரியத்திற்கு வெட்டவும் குத்தவும் போவதுதான் பெரியவன் செய்யும் காரியமா? என்ன கேடும் கெடுகிறான் என்று மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு பேசினாள் காத்தாயி. காத்தாயி, நீதானா இப்படிச் சொல்கிறாய்? நீ வெருட்டிக்கொண்டு போன நேரத்திலே பயல் அகப்பட்டிருந்தால் விட்டு வைத்திருப்பாயா? நீ குத்திக் கொல்வதற்குப் பதில் ஆறோ குளமோ கொன்றிருந்தால் புண்ணியம் அல்லவா! கொஞ்ச நேரம் வரவில்லை என்று இந்தத் துடி துடிக்கிறாயே, அவன் உன் கத்தியால் குத்தப்பட்டு இங்கு சவமாகக் கிடந்தால் எப்படி இருக்கும் உனக்கு? ஒருகாலம் இல்லையானாலும் ஒருகாலமாவது அறிவு வர வேண்டாமா? மூக்கன் கைகளால் தலையில் இடித்துக் கொண்டு கதறினான். காத்தாயி, இப்பொழுது அறிவு வருகின்றது; வந்து என்ன செய்வது? பயலைக் காணோமே! நீயாவது தேடிப்பார்த்து வாயேன் என்று கசிந்து அழுதான். கோபத்தின் விளைவு எப்படி ஆகும் என்பதை நினைத்து ஏங்கினான். இதற்கு முன் அவன் கோபத்தால் ஏற்பட்ட பொருள் கேடு, சிறை வாழ்வு, சீரழிவு ஆகிய எல்லாமும் கண்முன் நின்றன. தலையைச் சுவரில் மோதிக் கொண்டு விம்மினான். ஏறிச் சென்ற உணர்ச்சி இறங்கும்போது இப்படித்தான் கூத்து நடக்கின்றது! உணர்ச்சி ஏறும் போதுதானே அறிவு வேண்டும்? இறங்கியபின் இருந்தா லென்ன இல்லையானால்தான் என்ன? இப்பொழுது வரும் நல்லறிவாவது மறக்காமல் இருக்குமா? என்றாள் காத்தாயி. இனி இப்படிக் கெட்டுப் போகமாட்டேன் என்றான் மூக்கன். அந்நேரம் மணிமுத்தைக் கூட்டிக் கொண்டு வந்தான் சென்னிமலை. மணிமுத்து என்று சொல்லி ஓடிப்போய் அணைத்துத் தழுவினான் மூக்கன். அறிவில்லாமல் செய்து விட்டேனடா! புத்தி கெட்டவன் நான். நல்ல வேளை ஓடி ஒளிந்து பிழைத்துக் கொண்டாய் என்றான். இவன் உயிரைத் தந்தவன் சென்னி மலைதான் என்று நடந்ததைக் கூறினாள் காத்தாயி. சென்னி மலையை நன்றியறிதலுடன் நோக்கினான் மூக்கன். குடிகெட வேண்டிய நேரம்; நல்ல வேளை; அப்படியாகி விட வில்லை; இனிமேலாவது இந்த வெறி வேண்டாம் என்றான் சென்னிமலை. காத்தாயி கையெடுத்துக் கும்பிட்டாள். பெற்றவள் அல்லவா! சென்னிமலை! கோபம் குடியைக் கெடுக்கும் என்பதை அறிந்து கொண்டேன். இனி ஒரு நாளும் கோபப்பட மாட்டேன்; குடிக்க மாட்டேன்; சேவற் சண்டைக்குப் போக மாட்டேன்; சூதாட மாட்டேன் - மூக்கன் உணர்ச்சியுடன் பேசினான். ஆரம்பத்தில் இவற்றைக் கடைப்பிடிக்கச் சங்கடமாகக் கூட இருக்கும். ஆனால் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் எளிதாகி விடும்; நன்மையும் ஆகிவிடும் என்று கூறிப் புறப்பட்டான் சென்னிமலை. ஐயா, பால் குடித்துப் போங்கள் என்று ஒரு குவளையை நீட்டினாள் காத்தாயி. எனக்கா பால் என்றான் சென்னிமலை. ஆம்; நீங்கள் என் வயிற்றில் பால் வார்த்தீர்கள். இந்தப் பாலையாவது சாப்பிட்டுப் போக வேண்டாமா? என்று காத்தாயி சொல்லும் போது ஆம் ஆம்! குடியுங்கள் என்று வற்புறுத்தினான் மூக்கன். அப்பொழுது மெய்யப்பன் மிகவிரைந்து வந்து சேர்ந்தான். காத்தாயி, நீ கணக்கப் பிள்ளையினிடம் சொல்லி ஊரெல்லாம் தூற்றி விடுவாய் என்று கடைக்கு ஓடினேன். அவன் நான் இப்பொழுதுதான் உங்களைத் தேடி வந்தேன். வீட்டில் இல்லை என்று கேள்விப் பட்டுத் திரும்பினேன். வரும் வழியிலே காத்தாயி சொன்னாள். விரைவில் உங்கள் கணக்கை மெய்யப்பன் கொடுத்து விடுவார், நீங்கள் கவலைப்பட வேண்டாம். இனி தேடிவர வேண்டியிராது என்றாள். அதற்குள் நீங்கள் பணத்துடன் வந்து விட்டீர்கள்; உங்கள் பையன் நான் வந்ததைச் சொன்னானா? என்று கேட்டான். உன்னை எப்படி வாழ்த்துவது என்று எனக்குத் தெரியவில்லை. நீ அவனிடம் சொல்லியது பொய்தான். இருந்தாலும் அப்பொய்யால் கணக்கப்பிள்ளையும் முதலாளியும் எவ்வளவு மதித்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். எனக்கும் இவ்வளவு நேர்மை தோன்றிவிட்டது என்பதை எப்படிச் சொல்வது? நல்ல உள்ளத்துடன் பிறர் நன்மை ஒன்றே எண்ணிச் சொல்லும் பொய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை அறிந்து கொண்டேன் என்றான். காத்தாயி புன்முறுவலுடன் சொன்னாள். உங்களைத் தூற்றுவதால் எனக்குக் கிடைப்பது என்ன? தூற்றிவிட்டால் அத்தூற்றுதல் மறைய எவ்வளவு காலம் ஆகும்? ஒருவன் வாழ்வில் எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது. கூடவேகூடாது. சொல்லக் கூடாத பொய்யைக்கூடப் பிறருக்குப் பெருநலம் வாய்க்குமானால் சொல்லலாம். தன் நலம் நாடிச் சொல்வதாக இருந்தால் எச்சிறு பொய்யையும் மன்னிக்கவே கூடாது. ஆம்; காத்தாயி சொல்வது பெரிய உண்மை. உயர்ந்த அறமுங்கூட! அறத்தினை அறுதியிட்டு அரிய நூல் செய்த திருவள்ளுவரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார் : பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் குற்றமற்ற நன்மையைப் பிறருக்குத் தருமானால் பொய் சொல்லுவதும் மெய்மைக்கு ஒப்பாகும். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்று கூறிய திருவள்ளுவரே இப்படிக் கூறினார் என்றால், காரணத்தோடுதானே இருக்க வேண்டும். என்றான் சென்னி மலை. உண்மை உண்மை! நான் சொல்லிய மெய், பொய்யாயிற்று! நீ சொல்லிய பொய், மெய்யாயிற்று என்றான் மெய்யப்பன். மெய்யப்பா, உன் பேச்சு மெய்யப்பா! என்றான் மூக்கன். வீடு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.  25. தொண்டனாகுக காட்சி - 1 வடிவேல் - பொன்னப்பன் வடிவேல் : அண்ணே! வாங்க வாங்க. பொன்னப்பன் : ஆமாம் தம்பி! என்ன நலந்தானா? வடி : நலமாக இருக்கிறேன் அண்ணே. பொன் : நல்லது; நம் வடக்கு வீட்டுப் பெரியவரைப் பார்க்க வந்தேன்; வரும் வழியில் உங்கள் நினைவு ஏற்பட்டது; பார்த்துப் போகலாமே என வந்தேன். வடி : நிரம்ப மகிழ்ச்சி! பொன் : என்ன தம்பி, உங்களைப் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறது! வடி : அப்படி என்னண்ணே! பொன் : பெரியவர்களெல்லாம் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்கிறார்கள்; நீங்கள் சாலையைச் சுத்தமாக வைக்கச் சொல்கிறீர்களாம். வடி : ஓகோ! அதைப் பற்றிச் சொல்கிறீர்களா? வேறு ஏதாவது சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன். பொன் : இப்படிச் சாலை சுத்தம் பற்றிச் சொல்வது எதற்காக, தம்பி! வடி : சொல்கிறேன். பொன் : இதென்ன தம்பி கண்ணாடிப் புட்டிக்குள்? வடி : பாருங்கள் வாழைப் பழத்தோல்... பொன் : ஓகோ, சரிதாங்க! சாலையில் போடக் கூடாதென்று கண்ணாடிப் புட்டிக்குள் போட்டு வைத் திருக்கிறீர்கள் போல் தெரிகிறது முடியுமா? எல்லாராலும் முடியுமா? வடி : அப்படி இல்லை அண்ணே! நான் கண் ணாடிப் புட்டிக்குள் தோலைப் போட்டு வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு. பொன் : என்ன தம்பி, அப்படியானால் நான் சொல்கிற படி இல்லை. வடி : இல்லை; நான் ஒருநாள் சாலை வழியே போய்க்கொண்டு இருந்தேன்; அவசரமான வேலை; ஓட்டமாகப் போனேன் மருத்துவரை அழைத்து வரவேண்டிய அவசியம்... பொன் : அப்பா நோயில் இருந்தார்களே... அப்பொழுதா? வடி : ஆமாம் ஆமாம்! அப்பொழுதுதான். பொன் : சரி தம்பி, விரைவாக ஓடினீர்கள்... வடி : அந்த நேரத்தில் பாருங்கள். ( காட்சி மாற்றம்) காட்சி - 2 (வடிவேல் ஓடிவந்து வாழைப்பழத் தோலால் வழுக் குண்டு கீழே விழுகின்றான்.) வடி : ஆ! ஐயோ! என்ன தொல்லை! சே! சே! இப்படியா வழுக்கும்? ஐயையோ... அவசரம் அல்லவா! கால் வரமாட்டேன் என்கிறதே! அப்பாவுக்கு நோய்... மருந்து வாங்கவும் மருத்துவரை அழைக்கவும் வந்த எனக்கு இப்பாடு... அப்பா!... அப்பா!... ஐயோ!... (எழுந்திருக்க முயல்கிறான்; முடியவில்லை) தேள் கடிக்கு மருந்து தேடப்போன இடத்திலே பாம்புக் கடிக்கு ஆளானதுபோல அல்லவா இருக்கிறது. ஐயோ! இடுப்புப் போய்விட்டதா? எந்தப் பாவிப்பயல் எனக்கு என்று இந்த வாழைப்பழத் தோலைப் போட்டானோ? அவன் விளங்குவானா? ஆ! ஐயோ! வலிக்கிறதே! சாலை என்றால் அவன் சொந்த நிலமா? எத்தனை பேர் போவார்கள் வருவார்கள்? சே... சே! இந்த நாட்டில் இருக்கிறவர்களுக்கு பொதுநலம் கிடையவே கிடையாது; பொது அறிவுங் கிடையாது. ஐயோ! நான் என்ன செய்வேன். (பலர் கூடிவிடுகின்றனர்) ஒருவன் : டே! டே! இவனைப் பாரடா! இன்னொருவன் : ஆ! ஆ! என்ன அழகு! வேறொருவன் : விழு! விழு! விழவேண்டியது தான்! இடுப்பு ஒடியவில்லை! மற்றொருவன் : பாரடா துடிக்கிற துடிப்பை. பிறிதொருவன் : அதோ பார்! பல்லைக் கடிக்கிற கடிப்பை! இன்னொருவன் : ஏன் பார்த்து நடந்தால்... வேறொருவன் : அழமட்டும் தெரிகிறது, அறிவு இல்லை. இரங்கும் ஒருவன் : அய்யோ பாவம்! பலமான அடி போல் இருக்கிறது. மற்றொருவன் : இரக்கம் மடைபிடுங்கிப் போகிறதைப் பாரு! அப்பாவி (அற்ப ஆவி) ஒருவன் : பட வேண்டிய நேரம்; யாரென்ன செய்வது; நடக்கிறபடிதான் நடக்கும். ஒருவன் : ஓ! அவன் நடக்க வழி செய்ய முடியு மானால் பாரும், வீணாய் ஏன் மூக்கைச் சிந்துகிறீர்! அற்ப ஆவி ஒருவன் : பாருய்யா! பேசத் தெரிந்தவனை.... வடிவேல் : அட இரக்கம் கெட்டவர்களே! விழுந்து கிடக்கிறேன்; விலா வெடிக்கச் சிரித்து வேடிக்கை பார்க்கிறார்கள்? என்னடா உலகம்? இந்த வாழைப்பழத்தோல் இவர்கள் காலில் பட்டிருந்தால்... அப்பா... அம்மா... பட்டுச் சீரழிய வேண்டிய நேரம்... அய்யோ... (சாரணச் சிறுவர் இருவர் வருகின்றனர்) ஒருவன் : ஏ! ஏ! அந்தச் சாலையில் பார்... இன்னொருவன் : ஐயோ! ஓடு ஓடு... எவனோ விழுந்து விட்டான். ஒருவன் : என்ன கிடந்ததோ.... இன்னொருவன் : ஓடி வாப்பா! வா வா! சீக்கிரம்... (இருவரும் வடிவேலைப் பிடிக்கின்றனர்) வடி : ஐயையோ! எழுந்திருக்க முடியாது போலிருக்கிறதே! சாரணர் இருவரும் : ஐயா... இருங்க... எல்லாம் சரியாகி விடும். ஒருவன் : சரி, மருத்துவ நிலையத்திற்குக் கொண்டு போகலாம். (தூக்கிப் போகின்றனர்) வடி : தம்பி, உங்களுக்குப் புண்ணியம்! சமயத்தில் காப்பாற்றினீர்கள். வடக்குத் தெரு வைரவன் வீடு எங்கள் வீடு! அங்கு என் அப்பா நோயோடு கிடக்கிறார்! அவரைத் தயை செய்து கவனித்தால் நல்லது; நான் அவருக்கு மருந்து வாங்க வந்தேன். சாரணர் : கவலைப்படாதீர்கள்! உடனே நாங் கள் அவரைக் கவனிக்கிறோம். வடி : நல்லது தம்பி. (சாரணர் வைரவன் வீட்டுக்குச் சென்று திரும்பி வருகின்றனர்) சாரணர் : அப்பா உடல் நன்றாக இருக்கிறது ஐயா. வடி : நலமாகி விட்டதா! என்னைக் காப் பாற்றினீர்கள், என் தந்தைக்கும் உதவினீர்கள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும். உங்களுக்கு என் வணக்கம். சாரணர் : வருகிறோம் அண்ணே! வந்து பார்க்கிறோம். (இருவரும் செல்கின்றனர்.) காட்சி - 3 மருத்துவமனை வடிவேல் - முருகன். வடி : உங்களுக்கு என்னையா? காலில் கட்டு... முரு : அதை ஏன் கேட்கிறீர்கள்... நான் இந்த ஊருக்குப் புதியவன். இந்த ஊரில் நடுத்தெரு இருக்கிறதே, அது வெளிச்சம் கண்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்றோ! அடேயப்பா! நெருக்கம்... நெருக்கம்! வீட்டு நெருக்கத்திற்குமேல் ஆட்கள் நெருக்கம்! ஒரே கொடுமை. அந்தத் தெருவில் வைரவன் வீடு என ஒன்று இருக்கிறது. அந்த வீட்டுப் பக்கம் தெரியாமல் போய்விட்டேன்... வீட்டுச் சந்தில் கண்ணாடித் துண்டு களைக் கண்டபடி கொட்டித் தொலைத்திருக்கிறான்... பாவிப் பயல்... ஐயையோ! காலை வெட்டி வெட்டிப் பாளம் பாளமாகச் செய்துவிட்டது. வடி : பாவம்! முரு : அவன் விளங்குவானா? அவன் தலையில் இடிவிழ! அவன் காலில் வெட்டித் தவழ்ந்து நடக்க வைத்தால் அல்லவா அவனுக்கு அறிவு வரும். புத்திகெட்ட பயல் போட்டிருக்கிறான் பாருங்கள் பாதையில். குப்பையைக் கொட்டித் தொலைப்பதுகூடக் குற்றமில்லை போலிருக்கிறதே! இந்த அழகில் அவன் குடும்பம் படித்த குடும்பமாம்! வடி : ஆமாம் ஆமாம்! படித்தவன் குடும்பந்தான்... இன்னும் சொல்லுங்கள். முரு : புத்தி கெட்ட பயலை என்ன சொல்வது! நான் காலைக் கட்டிக் கட்டிலில் கிடந்து தவிக்கிறேன். அவன் எங்கே சுற்றித் திரிகிறானோ? (வடிவேல் சிரிக்கிறான்.) முரு : ஏனையா சிரிக்கிறீர்? வடி : சிரிக்க வேண்டிய இடம் வந்தால் சிரிக்க வேண்டாமா? முரு : என்னையா அப்படி இடம்? வடி : இன்னும் ஏச்சு இல்லையே என்றுதான். முரு : நான் வேதனையில் ஏசுவது உமக்கு இனிக்கிறது போல் இருக்கிறது. வடி : அப்படியில்லை. அந்த ஏச்செல்லாம் எனக்குத்தானே? முரு : என்ன! என்ன! என்ன சொன்னீர்கள்? வடி : நான்தான் வைரவன் மகன். முரு : வடிவேலா நீங்கள்... ஐயையோ! வடி : வடிவேல்தான் நான். கவலைப்படாதீர்கள். நீங்கள் திட்டியது காணாது. நான் செய்த கேட்டினால் நீங்கள் தொல்லைப்படுகிறீர்கள். எவனோ போட்ட வாழைப்பழத் தோலை மிதித்து வழுக்கிக் காலை ஒடித்துக் கொண்டேன் நான். அண்ணே பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா, பிற்பகல் தாமே வரும் என்று திருக்குறள் உரைப்பது சரியாகத்தான் இருக்கிறது. நீங்கள் வருத்தப்பட்டுக் கொள்ள மாட்டீர்களே... நீங்கள் தான் வாழைப்பழத் தோலைச் சாலையில் போட்டிருப்பீர்களோ?...... (இருவரும் சிரிக்கின்றனர்.) முரு : நான் சாலையில் தாராளமாக வாழைப் பழத்தோல் போடுவதுண்டு: ஆனால், நான் போட்ட பழத் தோல்தான் உங்களை வழுக்கி விட்டதென்று சொல்ல முடியுமா? வடி : இல்லை! இல்லை! நான் வேடிக்கையாகச் சொன்னேன்! நீங்களும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது இல்லை என்று சொல்லுகிறீர்கள். முரு : ஆமாம் தம்பி! நான் தெரியாமல் உங்களைத் திட்டியதை மனத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள். வடி : ஐயையோ! இதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் என்னைத் தெரியாமல் எதிரில் பேசிவிட்டீர்கள். எத்தனையோ பேர்கள் மறைமுகமாகத் திட்டியிருப்பார்கள். இனி மேலாவது நான் புத்தியோடு நடந்துகொள்ள வேண்டுமே தவிர, திட்டியதற்குக் கவலைப் படலாமா? ஆமாம் அண்ணே, எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் இனிமேல் நம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் சாலையும் சுத்தமாக இருக்கப் பார்க்க வேண்டும். முரு : ஆமாம் தம்பி. அதைத்தான் எழுதிப் போட்டிருக்கிறார்களே. வடி : என்ன எழுதிப் போட்டிருக்கிறார்கள்? முரு : சாலையைச் சுத்தமாக வையுங்கள்; தபால் நிலையத்தைச் சுத்தமாக வையுங்கள் - இப்படியெல்லாம்! வடி : அண்ணே! வைவதிலேயும் சுத்தமாக வைய வேண்டுமோ? என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது வைவதில். அது பெரும் தவறு அண்ணே! தபால் நிலையத்தைச் சுத்தமாக வைக்கவும்; சுத்தமாக வைத்திருக்கவும்; தூய்மையாக வைக்கவும் என்று எழுதவேண்டும்! அதைப் பற்றிக் கவலைப் படாமல் வையுங்கள் திட்டுங்கள் என்றெழுதுகிறார்கள். முரு : சரிதான்! தெருவைத் துப்புரவு செய்வதற்குள் தெருப்பலகைகளையும், விளம்பரங்களையும், சுவர் ஒட்டி களையும் துப்புரவு செய்யவேண்டும்போல் இருக்கிறதே. வடி : அதனால்தானே பாரதியார், ஒட்டகத்திற்கு ஒரு பக்கமா கோணல்; தமிழகத்திற்கு ஒரு பக்கமா அழிவு என்ற பொருளில் சொன்னார். பெரிய பெரிய காரியங்கள் செய்வதுதான் அறம், நல்வினை என்று சொல்கிறார்கள். எந்தக் காரியத்தை நல்ல எண்ணத்துடன் செய்தாலும் அது அறம்தான்! முரு : நல்ல திட்டம் தம்பி! நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டுமே! வடி : இப்பொழுது வந்தார்களே; சாரணர்கள். எப்படித் தொண்டு செய்கிறார்கள்! நாம் இவர்களுக்கு உதவுவது நல்லதொண்டு இல்லையா? முரு : சரிதான் தம்பி; பணம்? வடி : பணம் எதற்காக? மனத்தில் தொண்டு எண்ணம் வேண்டும்; கையில் பணம் இல்லாவிட்டாலும் குற்றம் இல்லை. நாட்டில் நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டதோ பிறகு பணத்திற்குப் பஞ்சம் இல்லை. முரு : சரி தம்பி, நான் உங்களுடன் ஒத்துழைக் கிறேன். வடி : மிகச் சரி. (மருத்துவ நிலையப் பணியாள் சிங்கப்பன் வருகிறான்.) சிங் : ஐயா நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டிய நாள். உங்களுக்குக் குணமாகிவிட்டது. முரு : சிங்கனா! சரி சரி! இன்றுதான் உடல் குண மானதுடன் உள்ளமும் குணமாயிற்று. நல்ல நேரம் பார்த்துப் போகச் சொன்னாய். முரு : வருகிறோம் அப்பா! சிங் : ஐயையோ! மருத்துவ நிலையம் ஐயா! வராமலே இருங்க! இது என்ன விருந்து வீடா? மருந்து விடு இல்லை! வடி : ஓ ஓ! நல்லவனாவான் சிங்கன்! உன் எண்ணப்படியே ஆகட்டும்! வணக்கம். சிங் : வணக்கம்! காட்சி - 4 (வழியில் ஒருவன் மிதிவண்டியொன்றைத் தூக்கிக் கொண்டு வருகிறான்.) முரு : என்னையா? வண்டி... மிதி : என்னவா? எந்தப் பயலோ சாலையிலே முள்ளைப் போட்டிருக்கிறான்! முரு : அடுப்பில் வைக்க... வடி : வையவேண்டாம் அண்ணே! மிதி : அவசரப்படாதீங்க தம்பி. அடுப்பில் வைக்கக் கொண்டு போனதைச் சாலையில் போட்டிருக்கிறான். எந்தச் சனியன் செய்தானோ; தூக்கிச் சுமக்க வேண்டியது ஆயிற்று; தோளும் புண்ணாகி விட்டது. (போகிறான்.) முரு : தம்பி நீங்கள் சொல்லியதுதான் சரி. நம் எண்ணத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் சொன்னால் போதும்; வெற்றிதான். வடி : ஆமாம்! அப்படியே செய்வோம். காட்சி - 5 வடிவேல் - பொன்னப்பன் வடி : இந்த மாதிரி முடிவு கட்டினோம். அன்றி லிருந்து ஓயாத உழைப்புத்தான். என்னவோ ஒரு கவலையும் இல்லாமல் தொண்டு செய்ததுடன், வயிற்றுப் பாட்டுக்கும் தொழில் செய்து கொள்கிறோம். இதைத்தான் ஊரில் பேசிக்கொள்கிறார்கள்போல் இருக்கிறது. ஏதோ நம்மால் முடிந்தது. பொன் : எவ்வளவு நல்ல காரியம்! நம்மால் முடிந்தது என்று சாதாரணமாகச் சொல்லுகிறீர்கள். தம்பி, இது என்ன அட்டை? எச்சரிக்கையாயிரு; தொண்டனாயிரு என்று எழுதி வைத்திருக்கிறீர்கள். வடி : இது வாழைப்பழத்தோல் தந்த பாடம்! பொன் : அது என்ன தம்பி? ஒல்லும் வகையால் அறிவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் திருக்குறளா? வடி : ஆமாம்! வாழ்க்கை தந்த பாடம் அது. நான் எச்சரிக்கையாகப் போயிருந்தால் விழுந்திருக்க மாட்டேன்; அதனால் எச்சரிக்கையாக இருத்தல் தேவை என அறிகிறேன். விழுந்து நான் பட்ட தொல்லைதானே மற்றவர்களும் படுவார்கள் என்ற எண்ணம் தொண்டு புரியத் தூண்டியது. எவ்வாறு தொண்டு புரிவது என்று நினைத்த வேளையிலே இன்ன வழி, இன்ன வகை, இன்ன நேரம் என்று இல்லை. எப் பொழுதும் எவ்வழியிலும் எவருக்கும் நல்வினை செய் என ஏவியது குறள் மணி. அதனால் இவைகளை நினைவாகப் பொறித்து வைத்துள்ளேன். பொன் : நல்ல காரியம் தம்பி! நான் உங்களுக்கு வேண்டியதைச் செய்கிறேன். வடி : மிக்க நன்றி. பொன் : அப்பா வெளியில் போயிருக்கிறார் போல் இருக்கிறது. வடி : ஆமாம்! அவர்தானே பெரிய தொண்டர்! பொன் : சரி சரி! நல்ல குடும்பம்! வருகிறேன் தம்பி. வடி : வணக்கம்.  26. கல்யானை மீதிருக்கும் களிற்றியானை வான் வறண்டாலும் தான் வறளாத நீர் வளம் உடையது காவிரி. சோலைகளைப் பெருக்கிச் செல்வதால் காவிரி என்றும், தெனொழுகும் சோலைகளை மிகக் கொண்டுள்ள படியால் காவேரி என்றும் (வேரி=தேன்) பெயர் பெற்ற பெருமை காவிரிக்கு உண்டு. ஆற்றுப் பெருக்கால், வரப்பு உயர்வதும், வரப்பு உயர்வதால் நீருயர்வதும், நீருயர்வதால் நெல்லுயர்வதும், நெலுயர்வதால் குடி உயர்வதும், குடி உயர்வதால் கோல் உயர்வதும் இயற்கை அல்லவா! சோழ நாட்டின் வளங் கண்டு, அதனை அண்டை நாட்டினரும், அயல் நாட்டினரும் பண்முறை கைப்பற்ற எண்ணியது உண்டு! படை கொண்டு வந்ததும் உண்டு! ஆற்றாமல் தோற்று ஓடியதும் உண்டு; ஆட்சி நிலைக்க விட்டதும் உண்டு! வேற்றவர்களை அல்லாமல் வேந்தர் பரம்பரை யினருள்ளும் யான் ஆள வேண்டும்; அவன் என்ன ஆள்வது? என்னளவு அவனுக்கு உரிமை உண்டா? உரம் உண்டா? உயர்வு உண்டா? என்று கிளர்ந்து எழுந்தவர்களும் கேடு சூழ்ந்த வர்களும் பலர்ப் பலர். இத்தகைய பிணக்குமிக்க ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த, ஆண்மையால் பிறரை அடக்கி வைத்திருந்த வேந்தன் திடுமென இறந்து விட்டான் என்றால், அவன் இறப்பை எப்பொழுது எப்பொழுது என்று உற்றார் உறவினர் எதிர் நோக்கியிருந்து ஆட்சியைக் கவர்ந்து கொள்ளத் திட்ட மிட்டிருந்தனர் என்றால், இவ்வேளையிலே பச்சிளம் குழந்தை யொன்று பாராளும் உரிமையில் இருக்கிறது என்றால், அதன் நிலைமை யாதாகும்? எங்கு நோக்கினும் பகைமை; எங்கு நோக்கினும் எதிர்ப்பு; எங்கு நோக்கினும் தீமை; ஏச்சு பேச்சு; ஆனாலும் இளைஞன் ஊக்கம் இழந்துவிட வில்லை; ஒரே ஒருவராகத் துணைநின்ற மாமனும் கைவிடவில்லை! இளைஞன் இருக்கின்றான் கோட்டைக்குள்; எதிரிகள் இருக்கின்றனர் கோட்டையின் உள்ளும் புறமும்; கட்டுக்காவல் இவ்வளவென்று இல்லை; அழிவு வேலை எவ்வளவு செய்தாலும் முளையிலே கிள்ளி எறிகின்றான் சூழ்ச்சித் திறமும் ஊக்கமும் படைத்த மாமன்! சுற்றப் பகைவர் வஞ்சம் என்னாம்? பகைவர் உள்ளம் வெதும்பியது; மூக்கில் புகை கப்பியது; கண்கள் நெருப்பாயின; இளைஞனை இன்று அழித்தே தீர்வோம்; ஆட்சியைப் பற்றியே ஆவோம்; என்று முனைந்தனர்; எரி நெருப்பு எடுத்தனர்; இளைஞன் இருக்கும் கோட்டைக்குள் மூட்டினர். பற்றிய தீ சுற்றிப் படர்ந்தது; பண்புடையோர் உள்ளம் பதைத்தது; பகைவர் உள்ளம் மகிழ்ந்தது; தாய்மார் உள்ளம் தவித்தது; குழந்தைகள் உள்ளம் திகைத்தது; மாமன் உள்ளம் மருகியது; உற்றதுணைவர் உள்ளம் உருகியது. நம் இளைஞன் உள்ளமோ எழுச்சி கொண்டது. சிந்திக்கப் பொழுது இன்றிச் செயலாற்றத் தொடங் கினான் இளைய வீரன். மீனுக்கு நீத்தும், புலிக்குப் பாய்ச்சலும், சிங்கத்திற்கு முழக்கும், யானைக்கு பீடு நடையும் பயிற்று வித்தவர் எவர்? பழக்குவித்தவர் எவர்? இவை இயற்கை என்றால் எனக்கும் கோட்டையைத் தாவுவதும், கேட்டைத் தகர்ப்பதும், நாட்டைக் காப்பதும் இயற்கை! கோட்டை என்ன கோட்டை! எனக்கு எளிய வேட்டையே என நொடிப்போது எண்ணி, மீன்போல் கிளர்ந்து, சிங்கம்போல் செம்மாந்து, புலிபோல் பாய்ந்து, யானைபோல் நடந்து கோட்டையை விட்டு வெளி யேறினான்! இளைஞன் இறந்தான் என இன்புற்று மங்கலப் பறை முழக்கும் பகைவர் இடையே, இளைஞன் வெளியேறி முடிசூடிக் கொண்டுள்ளான் என்ற சொல் சாப்பறை கொட்டிய தாயிற்று. சாவாமல் சவம் ஆயினார் போல ஆயினர் சுற்றப்பகைவர்கள்! இளையனுக்கு ஆற்றல் மிகுதி; அதனினும் மிகுதி அவனுக்கு வாய்த்த அரிய துணை; ஆற்றலும் அரியதுணையும் இருந்தால் போதுமா? பகைவரும் புகழ, வசை கூறுவோரும் வாழ்த்தி வணங்க செயல்திறம் அல்லது வினையாண்மை வேண்டு மல்லவா! நம் இளைஞனிடம் மிகுதியாக அமைந்திருந்தது வினைநலம்! இளைஞன் காளையானான்; ஆற்றல் பேராற்றல் ஆயிற்று; வினைத்திறம் விஞ்சியது; காவிரிக்கரையிலே உலவிய அவனுக்கு, கரை புரண்டு செல்லும் வெள்ளத்தைக் கண்ட அவனுக்கு வாய்க்கால், வரப்பு, வயல் அழிக்கப்பட்டு வெள்ளத்தால் கெடுவதையும், துளிநீரும் இன்றி வறண்டு வானோக்கி ஒருபால் காடு கிடப்பதையும் நோக்கிய அவனுக்கு, நூலொடு நுண்ணறிவும் வாய்த்த அவனுக்கு ஓரெண்ணம் உண்டாயிற்று! காவிரிக்குக் கல்லால் அணைகட்ட வேண்டும் என்பதே அது. சொல்லால் அணைகட்டினான் சோழன்! கல்லால் அணைகட்டினர் தொழிலாளர்; நெல்லால் அணைகட்டினர் உழவர்; அல்லல் பறந்தது. அமைதி நிறைந்தது; சோழநாடு சோழவள நாடு ஆயிற்று; சோழன் வளவன் ஆனான்; காவிரி பொன்னி யாயிற்று! சோழவளநாடு சோறுடைத்து என உண்மை உரைக்கவும், யானை வயலுள் புகுந்தால் நெற்பயிர் அதனை மறைக்கும் என உயர்வு உரைக்கவும், ஒரு பெண்யானை படுக்கும் இடம் ஏழு ஆண் யானைகளுக்கு உணவு தந்து காக்கும் எனப் புனைந்துரைக்கவும் ஆயிற்று சோழநாடு. வாழ்க சோழன் என்று வாழ்த்துவோர்களின் ஓங்கிய குரலுக்கு இடையே, ஒழிக என்போர் உதட்டு அசைவும் இல்லையாயிற்று. பற்றியெரிக்கும் பசியுண்டானால் அன்றோ சுற்றியிருப்போர் தூண்டுதலுக்கு மக்கள் செவிசாய்ப்பர்? பொன்மலையாய் நென்மலை காட்சி தரக்கண்டோர் பொய்ப் பழியோர் மொழிக்கு இசைவாரோ? சோழநாட்டில் ஆணை செலுத்திய வேந்தன் இமயம் வரை தன் கொடி பறக்க விரும்பினான். தீர எண்ணித் தெளிந்த முடிவு கொண்டு, எண்ணிய வண்ணமே செய்து முடிக்கும் திண்மை பெற்றவனுக்கு முடியாத செயலென ஒன்றுண்டா? இமயப் பெருமலையில் சோழன் புலிக்கொடி வீறுடன் பறந்தது; வெற்றிக் களிப்போடு மீண்டான் வேந்தன். குறுநில மன்னரும், பெருநில வேந்தரும் சோழன் அடிக் கீழ்ப் பணிந்து நின்றனர்; அடிபட்டதற்கு அடையாளமாக அரும்பொருள்கள் குவித்தனர்; கலைஞர்கள் ஆடிப்பாடி இன்புறுத்தினர்; கவிஞர்கள் இறவா உடலாம் எழிற் கவிகள் பாடிப் பெருமை செய்தனர்; வடநாட்டு வெற்றியால் பெற்ற உவப்பினும், தன்னாட்டுப் பாராட்டுக்கு மகிழ்ந்தான் சோழன்; பொன்னி நதிபோல் பொருள் வழங்கினான். ஒரே ஒரு புலவன் 301 அடிகளைக் கொண்ட பட்டினப்பாலை பாடிய புலவன் - கடியலூர் உருத்திரங்கண்ணன் அந் நூலுக்காகப் பெற்ற பரிசில் பதினாறு நூறாயிரம் பொன்! ஏனையோர் பெற்ற பரிசு? எவர் கண்டார்? இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த அவன், மக்கள் வாழ வாழ்ந்த அவன், இன்றும் வாழ்கின்றான் நல்லோர் இதயத்தும், காவிரிக் கல்லணையில் நிற்கும் கல்யானை மீதும்! கல்யானை மீதிருக்கும் அக் காவல் யானை யாவன்? அவனே கரிகாலன்! வாய்த்த துணை நலமும், வளர்ந்த வினைநலமும் ஒருங்கெய்திய சோழன் கரிகாலன் புகழ் வாழ்க! துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.  27. நிறுத்து போரை! மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க நிற்கின்றார்கள்; யார்? யார்? தந்தையும், மைந்தரும்! ஏன்? தாய் நெஞ்சிற்குக் காரணம் உண்டு; பேய் நெஞ்சிற்குக் காரணம் உண்டோ? தீய பழக்கம், தீயோர் உறவு, தெளிந்த அறிவின்மை, தூண்டுதலைக் கேட்கும் மனம், துடிக்கும் உணர்வு - இவை போதாவா பகைத்து நின்று பழி செய்ய! நல்லவன் தந்தை - வல்லமையும் அவனுக்கு மிகவுண்டு; அறநெறிக்கு அஞ்சுபவன் அவன் - மறப்போருக்கு அஞ்சாமையும் அவனுக்கு இயல்பு; அமைதி வாழ்வை விரும்புபவன் அவன் - அடக்குமுறைக்கோ அழிசெயலுக்கோ உடன்பட் டறியான்; உடன்படுவோரையும் விடான்; கொற்றவன்தான் அவன் - என்றாலும் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகக் காப்பான் - குறை கண்டானோ கொதிப்படைவான்! இத்தகைய நற்பண்புத் தந்தையும், தீமையே வடிவான மைந்தரும் போர்க்களத்தில் நிற்கின்றனர். யானையும், குதிரையும், தேரும் காலாளும் தத்தம் கடமைகளை ஆற்றுதற்குக் காத்திருக்கின்றன. ஏவிவிட்டோர் இறுமாந்திருக்க ஏனையோர் ஏங்கியிருக்க, ஆணையை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கின்றன இருதிறப் படைகளும். வயலிலே நெல்லைப் பயிரிட வேண்டாம். கட்டிக் காவல் புரிய வேண்டாம்; களை எடுக்கவும் வேண்டாம்; நீர் பாய்ச்சவும் வேண்டாம்; புல்லைப் பயிரிட வேண்டும்; பொருந்தும் உரம் இட வேண்டும்; பொழுதும் சென்று போற்றிக் காத்தல் வேண்டும் என்று கூறுவது புன்மை யல்லவா! இத்தகு புல்லியர்களும் உள்ளனரே நாட்டில்; அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் இருக்கின்றனரே என்று அறிவுடையோர் வருந்துகின்றனர். மலருள் புகுந்து இசைபாடித் தேனெடுக்கும் ஈயும் உண்டு; மலத்துள் புகுந்து பண்ணிசைத்து உண்ணும் ஈயும் உண்டு; மக்களுக்கு ஊட்டந்தரும் தேன் தருவது முன்னதன் பணி; தீராப் பிணி தந்து மக்களை அழிப்பது பின்னதன் வேலை; இத்தகைய இருவகை ஈக்களையும் போல்பவர்கள் உலகில் உளர் அல்லவா! முதல் வகையைச் சேர்ந்தவன் முன்னவனாம் தந்தை; இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் பின்னவராம் மக்கள்! பன்றியின் முன் மணியைப் போட்டால் பயன்படுமா? என்பது பழமொழி. நல்லுரை கேட்டு நடப்பது நன்னெஞ்சிற்கு இயலும்; ஆயின் புன்னெஞ்சிற்குப் பொருந்துமா? தந்தை நிற்கும் இடம் நாடிச் சென்றார் அருள் மிக்க புலவர் ஒருவர்; புல்லாற்றூரில் பிறந்தவர்; எயிற்றியனார் என்னும் பெயரினர். வேந்தே என்றார் விரைந்து சென்ற புலவர். புலமை யாளர்களை வரவேற்றுப் போற்றுதலில் இணையற்ற அவ் வேந்தனாம் தந்தை போர்ச்சினத்தை ஒரு பக்கம் போக்கிப் புன்முறுவல் மிகுந்து நல்லுரை கூறி வரவேற்றான். கைவேலைக் கடிதில் எறிந்து மெய் தழுவி இன்புற்றான். புலவர் பேசினார்: அரசே! அன்புகனிய அகம் குழைய நீ எடுத்து மகிழ்ந்த மக்கள் இவர்: ஆசைப் பெருக்கால் உச்சி முகர்ந்து உவகை உரைக்க வளர்ந்தவர் இவர்; கன்னல் பாகோ, கனிச்சாறோ, கவின் தேனோ, களி மதுவோ என்று மயங்க மழலை பொழிந்தவர் இவர்; மலரிலாச் சோலையும், மதியிலா வானமும், நீராடுந் துறையிலாக் குளமும், மணமிலா மாலையும் போன்றது புதல்வரைப் பெறாத வாழ்வு எனத் தேர்ந்த உன்னால் அன்பே! ஆருயிரே! கண்ணே! கண்ணின் மணியே! என்றெல்லாம் போற்றப் பெற்றவர் இவர்! ஆனால் இன்றோ எதிர் எதிர் நின்று போரிட உள்ளீர்! தந்தை உரிமையை அணுவும் நினைத்தாரல்லர் இவர்; நீயும் மக்களென உளங் கொண்டாயில்லை. உன்னை எதிர்த்து நிற்குமாறு அவர்களது பண்பும் உறவும் பட்டறிவும் துணைபோகலாம்; உன் பண்பும் உறவும் பட்டறிவும் அவர்களை எதிர்க்கத் துணைபோகலாமா? சோழர் குடியில் வந்த உங்களுக்கு ஓரொரு கால் பாண்டியரும் சேரரும் பகைவராயிருந்துளர். ஆனால் இன்று நீ போரிட முனைந்து நிற்பது சேரரிடமோ பாண்டியரிடமோ இல்லை; சோழரிடமும் - இல்லை - உன் மக்களிடம்? வெற்றியும் தோல்வியும் இப்பொழுதே தெரியுமா? நீ வெற்றி பெறுவாய் என்றே முடிவு கொள்வோம்; வென்று, ஆண்டு பின் யாருக்கு இவ்வாட்சியைக் கொடுப்பாய்! பிறந்தவர் யாவரும் நிலையாய் இருந்துவிட முடியாதே! அப்படிச் சமயத்தில் வேறொருவரிடம் நாட்டை ஒப்படைப்பாயா? அது அறம் ஆகுமா? அன்றி உன் குடிக்கு ஏற்ற தகுதிக்குத்தான் பொருந்துமா? உன் மக்களோ, மற்றவர்களோ ஏற்றுக் கொண்டு அமைதியாக இருப்பார்களா? இது நிற்க. நீ ஒரு வேளை இவர்களிடம் தோற்றுவிட்டால்... அய்யோ... அவ்விழிவை - பழிநிலையை - என்னால் நினைக்கவும் முடியவில்லை. தலைகாட்டாது திரியும் பகைவர்களும் நிமிர்ந்து நடப்பார்களே! எள்ளி நகையாடுவார்களே! இகழ்ந்து உரைப்பார்களே! இவற்றை எண்ணினால் உனக்கு என்ன தோன்றுகிறது? போரை விடுவது அன்றிப் புகழ்வழி யாதேனும் உண்டோ? மண்ணுலகப் புகழும் விண்ணுலகப் புகழும் எய்த ஒரே ஒரு வழி போர் விடுப்பதே! என்றார். சோழன் நல்லதே நினைத்து, நல்லதே செய்பவன் அல்லவா! உணர்ச்சியால் வழிதவறிச் சென்றாலும் உயர்ந்த பெரியோர் உரையை முடிமேற் கொண்டு ஒழுகுபவன். ஆதலால் பெருமையும் நன்மையும் தாராத போரை நிறுத்தினான். இன்னும் புகழுடன் வாழ்கிறான். அச்சோழன் பெயரென்ன? கோப்பெருஞ் சோழன் என்பது அவன் பெயர்! ஆனால் மக்களென அறிகிறோமே அன்றி அவர்கள் பெயரும் அறியோம்! என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை (புகழும் நன்மையும் தராத செயல்களை எக்காலத்தும் நீக்கி விடுதல் வேண்டும்)  28. வாழ வைப்போரே வாழ்வோர் கோபம் மிக்க தந்தை தன் மகனைத் தூக்கிக் கீழே போட்டு மிதிக்கிறான்; நையப் புடைக்கிறான்; கண்கள் சிவக்க, நெஞ்சம் கொதிக்க, நாடி துடிக்கத் திட்டுகிறான்; கண்டவர்கள் மைந்தன் நிலைமைக்காகப் பரிவு காட்டுகின்றனர்; தந்தையின் கொடுஞ் செயலுக்காக வருந்துகின்றனர்; வாய்விட்டுப் பேசித் திட்டு கின்றனர்; ஓடிப் போய்ப் பிடிக்கின்றனர்; நிறுத்துகின்றனர்! ஆனால் ஒரு காவல் நிலையத்துள் (போலீசு நிலையம்) இம்மாதிரி ஒரு செயல் நடந்தால் பொதுமக்கள் சென்று தடுக்க முனைவது இல்லை; முனைவதும் குற்றமாகி விடும்! விட்டிலைச் சிறுவர்கள் பிடித்து, சிறகினைப் பிடுங்கி, வாலிலே நூல் கட்டி இழுத்து வதைப்பதைக் கண்டால் இரக்கமுடைய எவரும் தம்பி இந்த விளையாட்டு வேண்டா மடா! என்று சொல்லத் தவறார்; சிறுவனோடு விளையாடும் ஓர் இளைய சிறுவனும் கூடச் சிறிய அளவில் இரக்கம் படைத்திருப்பின் தடுப்பான்! ஆனால் ஒரு வேந்தன் ஒருவனைக் காரணம் இருந்தோ இல்லாமலோ - அறியாமல் கூடச் செய்யலாம் அல்லவா! - கழுவேற்றுகிறான்; தூக்கில் போடுகிறான்; கைகால்களை வாங்குகிறான்; தலையை வெட்டுகிறான்; அங்கே போய் அரசே! அமைச்சே! இச்செயல் இழிவுடையது; பழியுடையது; இத்தகு கொடுஞ் செயலை விடுக என்று உரத்தோடு உரைக்க முன் வருவோர் அரியர். பாஞ்சாலி சபதம் என்னும் காவிய நூலில் பாரதியார் புலம்புவார் மாந்தர் நிலைமையை நினைத்து! பாஞ்சாலியைத் துச்சாதனன் அரச அவைக்கு, இழுத்துச் செல்கிறான் தெருவழியே! வழி நெடுக மக்கள் திரள்கின்றனர். ஆ! என்ன கொடுமை! என்று வாயோடு வாயாக முணு முணுக்கின்றனர். வாய்விட்டு உரத்துப் பேசி, ஒன்று கூடி, கூந்தலைப் பிடித்து நீசன் இழுத்துச் செல்வதைத் தடுத்து, அவளை அந்தப்புரத்திற்கு அனுப்பி, அவனைத் தரையோடு தரையாக மிதிக்க வலிமையற்ற இவர்கள் கதறி அழுதும், கண்ணிர் சிந்தியும் என்ன பயன்? வீரமிலா நாய்கள்! பேடிப் பதர்கள்! என்று வருந்துகின்றார். அரசவையில் நிறுத்தி இழிவு செய்ய முனைந்த போதும், அரசர், அமைச்சர், அறிவோர், வீரர் எவரெவரோ இருக்கின்றார்; இருந்தும் தீங்கு தடுக்கும் திறமிலேம் என்று தலைதாழ்ந்து இருக்கின்றனர். பாரதியார் பெண்மை வாயால் - பாஞ்சாலி வாயால் - கேட்கின்றார்; மங்கியஓர் புன்மதியார் மன்னர் சபைதனிலே என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய் நின்னை எவரும் நிறுத்தடா என்பதிலர் என்செய்கேன் சிறியவர் செய்யும் சிறு பிழைகளைத் தடுக்க ஓடி ஓடி வரும் மக்கள், பெரியவர் செய்யும் தவறுகளைத் தடுக்க முன்வர அஞ்சுகின்றனர் அல்லவா! தவறு செய்தவர் எவராயினும் தட்டிக் கேட்கும் உரிமை, உரம், உறுதி எந் நாட்டில் ஏற் படுகிறதோ அந் நாடுதான் உரிமை நாடு; நாகரிக நாடு; உயர்ந்த நாடு! திருந்தி வாழுதற்கும் வழிவகை செய்யும் நாடு! இத்தகைய சீரிய நாடுகளுள் தலையாய ஒன்றாகத் திகழ்ந்தது தமிழகம், சங்க காலத்தில்! அதற்குச் சான்றுகள் மிகவுள; ஒன்று காண்போம்! ஆடி வரும் மணி; அசைந்து வரும் யானை; கூடி வரும் கூட்டம்; குமைந்து வரும் உள்ளம்; தேடி வரும் சிறுவர்; திகைத்து நிற்கும் நெஞ்சம்; வீர மிகு வேந்தன்; வெற்றி மிகு படைகள்; அழுது நிற்கும் மாதர்; அமைந்து நிற்கும் ஏவலர்! - ஒரு கொலைக் களத்தின் சிலச் சில பக்கங்களில் காணப் பெறும் காட்சிகள்! ஏவு யானையை - அரசன் குரல்! எங்கே அப்பாவி மக்கள் சிலர் குரல்! ஐயோ ஐயையோ - பொறுக்க மாட்டா இளமனத்தின் கதறல்! இந்தப் பிள்ளைகளை மிதித்துக் கொல்லவா? - ஏக்க மிக்கோர் உரை! இந்தச் சிறுவர்கள் என்ன கொடுமை செய்தார்கள்; பாவம் ஏதும் அறியாதவர்கள் அல்லவா! பெருங் கொடுமை - அழுகையால் நீதிபெற எண்ணினோர் அவல உரை! யாராவது துணிந்து தடுக்க மாட்டார்களா? இப்படிக் கொடுமை நடக்க விடலாமா? - தாம் மனிதர் என்பதைத் தாமே நம்பாமல் எவருக்காவது மனிதப் பதவி தர முயல்வோர் இரங்கல் உரை! ஐயையோ! காரியின் மைந்தர் அல்லவா! வள்ளல் காரியின் மக்களுக்கா இக் கதி நேர வேண்டும்? - எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் விரிவு இல்லாமல் ‘காரி’க்காகத்தான் கண்ணீர் வடிப்பவர் - இரக்கத்தை ஒரு பாதை வழியே போக விட்டவர்கள் - அதிலும் துணிவு இல்லாதவர்கள்; நைவுரை!- களத்தில் எழுந்த ஒலிகள் இவை! இவர்கள் ஒலி வேந்தனுக்குக் கேட்க வில்லை; கேட்க வேண்டுமென்று இவர்கள் கூறவும் இல்லை; கேட்டுவிட்டால் வேந்தன் என்ன நினைப்பானோ என்று ஏங்கிக் கொண்டிருந்த வர்களும் இல்லாமல் இல்லை! மனத்தை அடக்க மாட்டாமல் ஏதோ புலம்பிவிட்டார்கள்; அவ்வளவே! அரசன் துணிந்து தன் செயலை ஆற்றத் தொடங்கினான். பாகனே! யானையைச் செலுத்து; இச் சிறுவர்களை மிதித்துக் கொல்லச் செய் என்று ஆணை பிறப்பித்தான். என்ன காரணம் என்று அறியாமல் திகைத்து நின்ற சிறுவர் இருவரும், யானையின் மணியோசை கேட்டு, அதன் மலை போன்ற நடைகண்டு, தங்களை நோக்கி வரும் நிலை கண்டு, மருண்டு மயங்கினர்! பாகன் யானையை விரைந்து செலுத்துகிறான்; பாராள்வோன் ஏவுகிறான்; கூட்டத்தை ஊடுருவிக்கொண்டு ஒரு புலவர் வந்தார். நிலைமை அவருக்கு வேதனை தந்தது; அதனை நினைத்துப் பார்க்கவே கொடிதாக இருந்தது. அதனால் வேந்தனே நிறுத்து என்று கட்டளையிட்டார்! கட்டளைதான், அது! யான் கூறுவதைக் கேள்! அதன் பின்னும் யானையை ஏவ வேண்டு மாயின்... அதுவே உன் விருப்பு ஆயின் ஏவு! அதுவரை நிறுத்து என்றார். கூட்டத்தினர் பார்வையெலாம் ஒரு முகமாகப் புலவர் மேலும், புவியாள்வோன் மேலும் மாறி மாறிப் பாய்ந்து நின்றன! அமைதி குடிகொண்டது! யானை தன் தலையசைப்பை விடவில்லை! அதன் காற் கீழ்ப்பட இருந்த சிறுவர்களும் மயக்கம் நீங்கினர் இல்லை! அரசே! புறா ஒன்றைக் காப்பதற்காகத் தன்னுடலை அரிந்து தந்த பெருமைக்குரிய செம்பியன் என்னும் சிபி உன் முன்னோன்! அவன் பரம்பரையில் வந்த உன்னை அருளாளன் என்பேன். ஆனால் உன் செயல் உன் பரம்பரைக்கோ, உனக்கோ பொருந்துவதா? பெருமை தருவதா? இல்லவே இல்லை என்பதை நீ அறிவாய்? இவர்கள்தான் கொடியவர்களா? தீமை செய் வதையே தொழிலாகக் கொண்ட குடிவழி வந்தவர்களா? இரப்பவர்க்கு இல்லை என்று கூறாமல், இருப்பது அனைத்தும் தந்து புலவர் தோழனாய், இரவலர் புரவலனாய், கலைஞர் காவலனாய், பாணர் புதையலாய் விளங்கிய வள்ளல் காரியின் மைந்தர்கள் அல்லரோ! இவர்கள் மேல் உனக்கு உண்டான சினந்தான் என்ன? உன் புலமைக்கும், புகழுக்கும் இது தகும் என்றால் உன் விருப்பம்போல் செய் என்றார்! புலவர் துணிவை மக்கள் பாராட்டினர். மன்னன் மதித்தான்; அறம் உணர்ந்தான்; அருள் கொண்டான்; இளைஞர்களோ உயிர் கொண்டார்; புலவரோ புகழ் கொண்டார்! தமிழகம் தனக்கு நேர இருந்த களங்கம் ஒன்றைத் துடைத்துக் கொண்டது! இலக்கியம் - புறநானூறு - அருமையான பாமணி ஒன்றைப் பெற்றுப் பொலிவு கொண்டது! குறள் வாழ்வு ஓர் இலக்கியம் கொண்டது. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். (மேலும் மேலும் உயர்வோம் என்று விரும்பி முயலுகின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடுதல் வேண்டும்.)  29. எப்படி வாழ்வது? 250 பவுண்டுக்குக் குறையாமல் 300 பவுண்டைத் தொடும் அளவில் உடல்; ஏந்தித் திரியும் கை; இரந்து கூறும் வாய்; இல்லையென்றால் ஏசும் நா; வாங்கிய பின் நன்றி பாராட்டாத நெஞ்சம் - இப்படி எத்தனை எத்தனை பேர்களைத் தெருக்களிலே காண்கிறோம்! அதே பொழுதில்; ஒட்டிய வயிறு; ஒடுங்கிய கன்னம்; இளைத்த உடல்; ஏங்கிய மூச்சு; உலர்ந்த நா; மயங்கிய கண்; தள்ளாடும் கால்; தவித்த நடை; கடிய பாரம்; கொடிய வெயில் - கரடு முரடான பாதை - வயிற்றுத் தீப்பிணியை மானத்தோடு தணிக்க வேண்டி வண்டியிழுத்துத் திரியும் வறிய - ஆனால் மானம் பேணும் - ஒரு கூட்டத்தையும் தெருக்களிலே காண்கிறோம்! இன்னொரு பக்கம்; இடிந்த வீடு மடிந்த உள்ளம்; கால் போகி, நார் கழன்ற கட்டிலாகக் காட்சியளிக்கும் கூரை; பழைய சாக்கு விரிப்பு; கந்தல் தலையணை; மூச்சு விடவும் முணக்கம்; எலும்புருக்கி நோயின் இளைப்பு; இடிந்த அடுப்பு; முரிந்து போன பானை; குப்பைக் கீரை; உப்பில்லா அவியல் - இவ்வளவும் காட்சிப் பொருளாய் இலங்க மானத்தைப் போற்றி - பிச்சைக் காரராகித் தெருவில் நடை பிணமாகத் திரிவதினும் உண்மைப் பிணம் ஆவது மேல் எனக் கருதி கதவு இல்லாக் குடிசைக்குள் கிடக்கும் வெம்பிய உள்ளங்கள்! வாழ வழியிருந்தும் - தோட்டம் துரவு, நன்செய் புன்செய்; ஆடு மாடு; செல்வம் சீர்; பட்டம் பதவி; வாழ்வு வளம்; வெற்றி விருது; ஒட்டு உறவு; சுற்றம் சூழல் எல்லாம் இருந்தும் - உள்ள செல்வத்தைக் கணக்கெடுக்க ஒரு நூறு பேர் சேர்ந்தாலும் ஓராண்டு முயன்றாலும் இவ்வளவென்று தெளியமுடியாத சொத்து - இருந்தாலும் ஊர் ஊராக, நாடு நாடாக இருந்தாலும் மேலும் மேலும் வஞ்சத்தாலும், கள்ள வணிகத்தாலும் கையூட்டாலும் (இலஞ்சம்) பொருளைப் பெருக்கித் திரட்டித் திரியும் நெஞ்சமிலார்! இவற்றை எண்ணிப் பார்க்கும் நெஞ்சத்தே மானம் எது என்பது புலனாகாமல் போகாது. உயிருக்காக மானத்தை விடுவதா? மானத்திற்காக உயிரை விடுவதா? என்னும் இரு வேறு வினாக்களுக்குக் கிடைக்கும் விடையைக் கொண்டதே மானத்தின் வாழ்வும்; தாழ்வும். மானம் அழிந்தபின் வாழாமை இனிது என்பார் மொழியும், மானத்தை விட்டும் உயிர் வாழ நினைவார் நினைவும் எண்ணிப் பார்க்கத் தக்கதேயாம். மானம் என்பது என்ன? தன் நிலைமையில் தாழாமையும், தாழ்வு வந்தால் உயிர் வாழாமையுமே மானம்! இம் மானம் போற்றி ஒழுகப் பெறுகிறதா? போற்றுவோர் என்றும் போற்றித்தான் வாழ் கின்றனர். போற்றாதோர் என்றும் போற்றாதுதான் இழி கின்றனர். பசுவொன்று நீர் வேட்கையால் நடக்கமாட்டாமல் நடக்கின்றது; வழியிலே கிணற்றில் ஒருவர் நீரெடுக் கின்றார்; அவரிடைச் சென்று இப் பசுவிற்கு நிர் வேட்கை யுளது; அருள்கூர்ந்து நீர் தருக என்று கேட்டிரந்து நீர் ஏற்றுப் பசுவைப் காப்பதிலும், தன்முயற்சியால், நிர்கோலி, பசுவிற்கு அளிப்பது பெருமையானது: முயற்சி சிறப்பைக் காட்டுவது; அன்றி நீர் இரந்து நிற்பது நாவிற்கு இழிவு தருவது. ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் என்பது வள்ளுவம். இதனை வாழ்வில் கொள்வோர் எத் துணையர்? நீர் வேட்கை மிகக் கொண்டுள்ளான் வேந்தன்; பகைவன் சிறைக் கோட்டத்துள் விலங்கு பூட்டப் பெற்று அடைக்கப் பெற்றுள்ளான்; வற்றா வளம் பெருகு ஆறுகள் அவன் நாட்டில் மிகவுண்டு; ஆனால் பகைவன் சிறையானபின் அவ்வாற்று நீர்ப் பெருக்கு கிட்டுமா? பகைவன் தந்த உணவை வெறுத்தான்; நீரையும் மறுத்தான்; நாட்கள் சில சென்றன; தாங்க முடியா வேட்கை; தன்னை அறியாமலே கேட்டுவிட்டான்:- ஏவல! தண்ணிர் தா ஏவலன், சிறைக்குள்ளிருக்கும் காவலன் சிறப்பினை அறிந்தவன் அல்லன். மற்றையோரைப் போலவே, தப்பாகக் கணக்குப் போட்டுவிட்டான். பணிவும் இன்சொலும் இன்றி, எக்களித்த நடையோடு நீர் கொணர்ந்து தந்தான். ஏவலன் நிலைமையை எண்ணிப் பார்த்த காவலனுக்குத் தாங்க முடியா இழிவாகத் தெரிந்தது. மானங்கெட வாழ்ந்து பழகியவர்களுக்கு இயல்பாகிப் போகி யிருக்கும்; சிறிதும் தவறாது வாழ்ந்த அந்த அரசச் செம்மலுக்குப் பொறுக்க முடியவில்லை. முன்னமே உயிரைப் போக்கிக் கொள்ளாது, நாய் போல விலங்கிடப் பெற்றுப் பகைவன் சிறைக் கோட்டத்துள் இருக்க நேர்ந்த இழிவை நினைத்தான்; இவ்விழிவினையும் தாங்கி நீர் வேண்டும் என்று கேட்ட நீங்காப் பழியை நினைத்தான்; மரியாதையின்றித் தந்த தண்ணீரைப் பெற்ற மாபெருந் தவற்றை நினைத்தான் - ஆ! ஆ! மானம் இழந்தேன்! என மயங்கினான்; மருண்டான்; இனியும் வாழ்வது இழிவு என முடிவு செய்தான்! என்ன செய்தான்? மானம் என்னும் வாள், உயிராம் மரத்தை வெட்ட வீழ்ந்தான்! இப்படி மானம் பேணுபவர் யார்? மானம் போற்றிய மன்னவன் என்று இந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளாகச் சேரன் கணைக்காலிரும்பொறையைச் சொல்லி வருகின்றோம்! மானத்தின் சிறப்பையும் அருமையையும் இது காட்டாதா? இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்.  1. மனக்கவலை மாற்றும் மருந்து கோவில் மணி டாண் டாண் என்று ஒலித்துக் கொண்டு இருந்தது. முருகா முருகா என்று சொல்லிக் கொண்டே திருப்பரங்குன்றத்து மக்கள் திரள் திரளாகக் கோவிலுக்குள் போய்க்கொண்டிருந்தனர். தேங்காய், பழம், பூ, சூடன், குங்குமம், திருநீறு ஆகியவை நிரம்பிய தட்டு கைகளிலே விளங்க. முருகா முருகா என்று வாய் முழங்க அமைந்த நடையுடன் முருகன் திருமுன்பு அடைந்தனர். அவர்களுடன் தேங்காய்க்கடைக் குமரவேலும் இருந்தார். எவர் வராவிட்டாலும் சரி, குமரவேல் மாலைக் கால வழிபாட்டுக்கு வரத் தவறுவதே இல்லை கோவிலுக்குள் புகுந்துவிட்டால் சிலை சிலையாக உற்றுப் பார்த்துக்கொண்டு சிற்பக் கலைஞராகி விடுவார். நுழைவாயிலில் பொறித்திருக்கும் திருஞானசம்பந்தர் திருப்பரங்குன்றத் தேவாரத்தைப் பன்முறை உணர்ச்சியோடு பாடிப்பாடி கவிஞராகி விடுவார். அவர் பாடுவதை அருகில் நின்றுகேட்கும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைத்துவிட்டால் உளங்கனிந்து இறையன்பராகி விடுவார் என்பதற்கு ஐயமில்லை. குமரவேல் முருகன் திருமுன்பு நின்று அவன் தெய்வத் திருக்கோலத்தில் உள்ளம் பறி கொடுப்பார். ஊன் கலந்து, உயிர் கலந்து, உணர்வுகலந்து கற்சிலையாய் நிற்பார். பக்கத்தே எவர் இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதை அறியாது பாடிக் கொண்டே இருப்பார். அதிலும், பன்னிய பாடல் ஆடலன் பரங்குன்றை உன்னிய சிந்தை உடையவர்க் கில்லை உறுநோயே என்னும் ஞானசம்பந்தர் வரிகளை மாறி மாறி நூறு முறைகளாவது சொல்லாமல் ஓயமாட்டார். பாடும்போதே கண்ணீர்த் துளிகள் கன்னத்தை நனைத்துத் தரையையும் மெழுகிவிடும். வழக்கம்போல் குமரவேல் அன்றும் பூசை முறைகளைச் செய்தார். ஆனால் முடித்துவிட்டு உடனே வந்துவிடவில்லை. தூண் ஒன்றிலே சாய்ந்து உட்கார்ந்துகொண்டு அமைதியாகச் சிந்திக்கத் தொடங்கினார். பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக மின்னலிட்டுக் கொண்டு வந்தன. குமரவேல் பெருஞ் செல்வர். அவர் பெயரால் ஐந்தாறு கடைகள் நடந்துவந்தன. பண்ணை விவசாயம் வேறு இருந்தது. மாடு, மனை, வீடு மோட்டார் ஆகிய எதற்கும் குறைவில்லாத வாழ்க்கை. பொருட்செல்வம் போலவே அருட்செல்வமும் நிரம்பக் கொண்டிருந்தார். குமரவேல் குணக்குன்றம் என்று மக்கள் பாராட்டும் படி வாழ்ந்தார். அவரைக்கண்டு தங்கள் நிலைமையைச் சொல்லிய எவரும் தகுந்த பயனடையாமல் போனது இல்லை. அதனால் நாள்தோறும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தேடி வருவதும் போவதுமாகவே இருந்தனர். தேடிவந்தவர்களுக் கெல்லாம் விருந்துக்கு, எத்தகைய குறைவும் இருக்காது. குமரவேல் ஊரில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் வழக்கமாகச் செய்யவேண்டிய கடமை அது. குமரவேலின் பொழுதைப் பொதுக் காரியங்கள் இழுத்துப் பிடித்துக்கொண்டன. கடையையோ, நிலத்தையோ நேரில் சென்று பார்க்க அவரால் முடியவில்லை. உள்ளூரிலே தங்க முடியாமல் வெளியூர் வெளியூர் என்று அலைந்து திரிந்த அவர் வீட்டுக் காரியங்களை எப்படிக் கவனிப்பார்! பாவம்! மற்றவர்களை நம்பினார் நன்றாக நம்பினார்! ஆனால் நம்பிக்கைக்குக் கேடு செய்யக்கூடாது என்று எத்தனை பேர்தான் எண்ணுகிறார்கள். பணம் கிடைத்தால் போதும் அது எந்த வழியால் வந்தால் என்ன என்று எண்ணுபவர்கள் இருக்கத் தானே செய்கின்றார்கள். வாணிகத்தையும், உழவையும் தமக்கு உறவினனான கந்தப்பனிடம் ஒப்படைத்திருந்தார். குமரவேல் கந்தப்பனும் அன்பனாகவும் தொண்டனாகவும் நடந்து வரத்தான் செய்தான் அவனும் பத்தாண்டுகள் தன் பொருள் போல் நன்முறையில் பேணி வளர்த்து வந்தான். ஆனால் உள்ளம் ஒரு நிலையிலே இருப்பது இல்லையே! எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் ஒருசில வேளைகளில் கெட்டுப்போய் விடுகின்றானே! பணத்தாசைதானே குணத்தைக் கெடுத்துவிடுகின்றது. கந்தப்பனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்கு வாய்த்த கணவன் பணம்பிடுங்கி. பணம் பணம் என்று அரித்துக் கொண்டே இருப்பான். மணமேடையிலேயே, நூறு பவுன் கழுத்தில் இருக்கிறதா என்பதை நிறுத்து அளவிட்டுப் பார்த்துத் தாலிகட்டிய செயலே அவன் பணத்தாசையை எடுத்துக் காட்டப் போதுமானதாகும். திருமணத்தின் பின்னும் விட்டானா? எப்படி எப்படியோ சொத்துகளைத் தொலைத்தான். தொலைத்ததைப் பெற ஒரே வழி மாமன் கந்தப்பனை வாட்டுவது என்று கருதி விட்டான். அதனால் கந்தப்பனிடம் பணம் கறந்து கொண்டே இருந்தான். மகள் எப்படியாவது வாழவேண்டுமே என்ற ஆசையால் கேட்டதை எல்லாம் கொடுத்துக்கொண்டே இருந்தான் கந்தப்பன். கேட்ட கேட்ட பொழுதுகளிலெல்லாம் ஆயிரம் ஆயிரமாய் எப்படிக் கொடுக்க முடியும்? கந்தப்பன் சம்பளமே மாதம் எண்பது ரூபாதானே! ஆம்! முதலாளி பணத்தைச் சுரண்டியே கொடுத்தான். மகள் வாழவேண்டுமென்ற ஆசை. உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யுமாறு தூண்டிவிட்டது. சுருட்டினான்; சுருட்டினான்: சுருட்டிக்கொண்டே இருந்தான். இவன் எழுதிய கள்ளக் கணக்குக்கு எல்லை இல்லை. பொய்யான இரசீதுகள் பத்திரங்கள் கட்டுக்கட்டாகக் குவிந்தன. ஒன்றுக்குப் பத்தாகச் செலவு ஏறியது. நூற்றுக்குப் பத்தாக வருமானம் குறைந்தது. கடன் நாள் தவறாமல் ஆயிரம் ஆயிரமாக இலட்சக் கணக்கில் ஏறிவிட்டது. குமரவேலுக்கு உண்மை நிலைமை அவ்வளவு எளிதில் தெரிந்துவிடவில்லை. கந்தப்பன் தான் கண்ணில் பொடியைத் தூவி மறைத்துக் கொண்டிருக்கின்றானே! ஆனாலும் எவ்வளவு நாட்களுக்குத்தான் மறைத்துவிட முடியும்? ஒரு நாள் பத்துப் பதினைந்துபேர் இவ்வளவு தர வேண்டும். அவ்வளவு தரவேண்டும் என்று குமரவேலைத் தேடிவந்தனர். உதவி வேண்டி வந்தவர்களை அல்லாமல் இப்படிக் கடன் கேட்டு வந்தவர்களைக் கண்டறியாத குமரவேல் மனம் ஒடிந்துவிட்டார். கந்தப்பனை அழைத்து விவரம் கேட்டார்.. களவு கை வந்தவன் கணக்குக் காட்டவா மாட்டான்? கணக்கைப் புள்ளி விவரமாகக் காட்டிவிட்டான். முதலாளி! நீங்கள் அறிந்து வருந்தாதபடி, கடனை எப்படியும் அடைத்துவிடலாம் என்ற எண்ணத்தால்தான் இதுவரை சொல்லவில்லை. உங்கள் மேல் வைத்த நல்லெண்ணந்தான் இவ்வாறு செய்யவைத்தது என்று நன்றாக நடித்தான் கந்தப்பன். குமரவேலுக்கு ஒன்றும் ஓடவில்லை. இனிப் பழையதை நினைத்து ஆகப்போவது ஒன்றுமில்லை என்று எண்ணினார். கடன் என்று யாரும் தலைவாசல் மிதித்து வரக்கூடாது என்ற நோக்கத்தால் இருக்கும் கடை. வீடு, நிலம் எல்லா வற்றையும் விற்றுச் சேர்த்து ஒரு வாரத்திற்குள் கணக்கை முடித்து விட்டார். கணக்கை முடித்தார் குமரவேல். ஆனால் முறிந்த மனத்தை நிமிர்த்த அவரால் முடியவில்லை: ஊர் போற்ற, வட்டாரம் புகழ, உயர்ந்த வாழ்வு வாழ்ந்த குமரவேல் இருந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டில் வாழ வேண்டுமானால் தாங்கமுடியுமா? எத்தனை எத்தனை வேலையாட்கள்! எவ்வளவு உயர்ந்த வாழ்வு! எல்லாம் போய்விட்டது. பித்துப் பிடித்தவர் போல ஆகிவிட்டார். குமரவேல் சில ஆண்டுகளுக்கு முன்னாகவே தம் மனைவியை இழந்துவிட்டார். அந்தக் கவலையைப் பொதுத் தொண்டு புரிவதிலும், ஒரே மைந்தன் வளவனை வளர்ப்பதிலும் மறந்தார். ஆனால் இப்பொழுது எல்லாக் கவலைகளும் ஒன்றுசேர்ந்து விட்டன. மனைவி இழப்பு, மகன் வறுமை, நம்பிக்கை மோசம், செல்வக் கேடு, ஏழ்மை வாழ்வு - இவ்வளவும் சேர்ந்தால் உள்ளம் கல்லாக இருந்தாலும் கரைந்துவிடுமல்லவா! குமரவேல் மட்டும் இதற்கு எப்படி விலக்காக முடியும்? குமரவேல் பெருந்தன்மை படைத்தவர் அல்லவா! அதனால் பலர் முன்வந்து தேற்றினர். உதவி செய்வதாகவும் வாக்களித்தனர். தங்கள் இல்லங்களில் வந்து இருக்குமாறும் வேண்டினர். ஆனால் குமரவேல் உள்ளம் எதற்கும் இடம் தரவில்லை, வாழ்ந்தவர் தாழ்ந்துவிட்டால் ஏற்படும் அல்லல் இதுதான்! பிறர் உதவியை நாடி நிற்கும் மனம் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. பழைய நினைவுகளே வந்து துன்புறுத்தும். பழைய செல்வம் என்ன, சீர் என்ன என்ற எண்ணங்கள் வரும் பொழுது வாழ்க்கை வெறுக்குமே ஒழிய, எப்படியாவது பிறர் உதவியால் வயிறு வளர்ப்போம் என்ற நினைவு வராது. அப்படித்தான் இருந்தார் குமாரவேலும். குமரவேலின் நிலைமையை அவர் நண்பரான அழகப்பர் அறிந்தார். அழகப்பர் மதுரையிலே ஒரு துணிக் கடைக்காரர்; குமாரவேல் தந்த முதலைப்போட்டுக் கடை தொடங்கி இன்று நல்வாழ்வு வாழ்பவர். பழைய நன்றியை மறக்காத உள்ளம் உடையவர். அதனால் குமரவேலை வற்புறுத்தி மதுரைக்கு அழைத்துக் கொண்டு வந்தார். குமரவேலும் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும் அழகப்பர் விடவில்லை. இறுதியில் வேற்றூர் வாழ்க்கை இச் சமயத்திற்கு நல்லதே என்று கருதிய குமரவேல் வளவனுடன் மதுரைக்கு வந்தார். அழகப்பர் குமரவேலை நன்றாகப் பேணினார். உங்கள் செல்வம்தான் இது: உங்களால் தான் முன்னுக்கு வந்தேன்: நீங்கள் வேறொன்றும் நினைக்க வேண்டாம்: இங்கேயே தங்கியிருக்கலாம். உங்களுக்கென வீட்டில் தனியறை ஒன்றை ஒதுக்கி வைக்கிறேன். எல்லா வசதிகளும் நான் கவனித்துக் கொள்கிறேன். வளவனுக்கும் கடையில் வேலை தருகின்றேன் என்று கூறினார். குமரவேல் அழகப்பருடைய வீட்டிலும், கடையிலுமாகப் பொழுது போக்கினார். ஆனாலும் அவரால் பத்துப் பதினைந்து நாட்களுக்கு மேல் அங்கு தங்கியிருக்க முடியவில்லை. வீட்டிற்குள் போகும் போதெல்லாம் தன் வீடு முன்னின்று வேதனை எழுப்பியது. மோட்டாரில் உட்கார்ந்த பொழு தெல்லாம் பழைய நினைவுபற்றி எரிந்தது. கடைக்குப் போகும் பொழுதெல்லாம் இடியால் தாக்கப்படுவது போல் அல்லல் அடைந்தார். அழகப்பரைக் கண்டுபேச ஆட்கள் வரும்போதும் போகும் போதும் பழுத்துக் காய்ச்சிய இரும்பை உடம்பில் செலுத்துவது போன்ற துயருக்கு ஆளானார். துன்பத்தை மாற்றிக்கொள்ளலாம் என்று எந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டாரோ அந்த இடமே கொடுந் துன்பக்களமாக மாறிவிட்டது. குமரவேலின் இடிந்த வாழ்க்கை மடிந்த வாழ்க்கையாக மாறிவிடக் கூடாதே என்று அழகப்பர் எவ்வளவோ தேற்றினார். தேற்றியது தான் மீதம், மனக்கவலையை மாற்ற முடியவில்லை. மாறவும் வழியில்லை. அதனால் வளவனை அவர் கடையில் இருக்கச் செய்து விட்டு வெளியேறி விட்டார் குமரவேல். குமரவேல் நடந்துகொண்டே இருந்தார். ஒரு பக்கத்தி லிருந்து டாண் டாண் என்று ஒலிக்கும் மணியோசை கேட்டது. ஒசை கேட்ட இடத்திற்குச் சென்று குமரவேலின் கால்கள் நின்றன. முருகா முருகா என்று ஒலிகேட்ட பின்னரே தான் வந்திருக்கும் இடம் பரங்குன்றத்து அறுமுகன் கோவில் என்று தெரிந்து கொண்டார். உள்ளே நுழைந்தார்! உள்ளம் ஒன்றி நின்றார்! மனக்கவலையை மறந்தார்; மணிக்கணக்காக உட்கார்ந்துவிட்டு வெளியே வந்தார். பழைய கவலை மீண்டும் பற்றிக் கொண்டது. மீண்டும் உள்ளேபோய் முருகன் திருமுன்பு அமைதிதோய நின்றார். மனக்கவலை மாறக்கண்டார். சற்று நேரம் கழித்து வெளியே வந்தார். கவலையை மாற்றிக்கொள்ள வழிகண்டுவிட்ட மகிழ்ச்சியால் தள்ளப்பெற்றுத் தெருவில் நடந்தார். கவலை அவரைத் தொடர்ந்து வந்தது! அப்பொழுது அருகில் இருந்த தேங்காய்க் கடையில் நின்று கொண்டிருந்த ஒரு கிழவியின் குரல் காதில் விழுந்தது. அநியாய விலை! கோவில் தேங்காயின் பேரால் கொள்ளையா அடிப்பது? இரண்டு பங்கு மூன்று பங்கா விலை? இக்குரலை கேட்டபின் வயிற்றுக் கவலையைப் போக்கவும் வழி கண்டுவிட்டார் குமரவேல். கணக்கர்களையும், ஏவலர்களையும் வைத்து வாணிகம் செய்த செல்வர் குமரவேல் தேங்காய், பழம், பத்தி, சூடன் ஆகியவற்றை இரண்டு மூன்று ரூபாய்களுக்கு வாங்கி வைத்துக் கொண்டு நடுத்தெருவில் உட்கார்ந்துவிட்டார். குறைந்த லாபம் வைத்து விற்றார். தம் வயிற்றுத்தொல்லையைத் தீர்க்கும் அளவு வருமானம் கிடைத்தால்போதும் என்பதே அவர் எண்ணம். ஆனால் ஒரு மாதத்துள் குமரவேல் தெருவைவிட்டு ஒரு கடைபோட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. சுருக்க இலாபம்! பெருத்த விற்பனை! நல்ல வருமானம். வளவனையும் அழைத்துத் தேங்காய்க் கடையில் வைத்துக் கொண்டார். தந்தையும் மகனுமாகக் கடையைக் கவனித்துக் கொண்டனர். வேலையாள் மட்டும் வைக்கவில்லை; மாலை ஐந்து மணி வரை குமரவேல் வளவனுடன் தேய்காய்க் கடையில் இருப்பார். அதற்குப்பின் வளவனே கடைக்குப் பொறுப்பாளி. ஐந்து மணி எப்பொழுது வரும் என்று குழந்தைகள் எதிர்பார்த்துக் கொண்டே இருப்பர். நேரம் வந்துவிட்டால் போதும்: தேங்காய்க் கடைமுன் கூடிவிடுவார். குமரவேல் பெரிய பால் தவலையுடன் வருவார். குழந்தைகள் கொண்டாட்டத்தைப் பார்க்க வேண்டுமே! சிறுவர்களின் குவளைகள் நிரம்பி வழியும்! மகிழ்ச்சியும் நிரம்பி வழியும்! அவர்கள் ஆசையுடன் பால் குடிப்பதைக் கண்டு குமரவேலின் உள்ளமும் பொங்கி வழியும்! தேங்காய்க் கடை ஊதியம் எல்லாம் குழந்தைகளுக்கு பாலாக மாறியது. குமரவேலின் செயலைப் பாராட்டாதவர் இல்லை. ஆனால் தேங்காய்க் கடைக்காரர்களுக்கு மட்டும் முணு முணுப்பு உண்டு. அது இயற்கைதானே! தாம் நல்லது செய்ய முடியாவிட்டாலும், பிறர் செய்யும் நல்லதையும் பலரால் பொறுத்துக்கொள்ள முடிவது இல்லையே! என்ன செய்வது? மனக்கவலையை மாற்றும் வழி கண்ட குமரவேல் இதற்குச் சளைத்துவிடுவாரா? பள்ளிப் பிள்ளைகள் பத்துப் பதினைந்து பேருக்கு இரவுப் பாடம் சொல்லி வந்தார் குமரவேல். படிக்க இடவசதியோ, விளக்கு வசதியோ இல்லாத பிள்ளைகள் அவர்கள். அப் பிள்ளைகளோடு பிள்ளையாகத் தாமும் சேர்ந்து குமரவேல் பாடம் சொல்லித்தரும் அழகே தனி. பிறவி ஆசிரியர், இவர் தானோ என்று தோன்றும். காரணம் ஏனோ தானோ என்று வேலை செய்பவரா அவர்? தெய்வத் தொண்டாகவே கருதிவிட்டார் அல்லவா? இப்பொழுதுதான் அவரது வாழ்க்கை கவலையற்ற வாழ்க்கையாக இன்ப - வாழ்க்கையாக - ஆகிவிட்டது. ஒன்றன்பின் ஒன்றாக இக்காட்சிகள் நினைவுக்கு வரவே இன்பம் இன்பம் என்று கூச்சலிட்டுக்கொண்டு எழுந்தார். தாம் தூணில் சாய்ந்து உறங்கிவிட்டது நினைவுக்கு வந்தது. அவரைக் காணவில்லையே என்று தேடி வந்த அரசப்பன் முன் நின்றான். ஐயா! படிப்பதற்கு எல்லோரும் வந்து விட்டார்கள்! உங்களை நெடுநேரமாய்க் காணவில்லையே என்று தேடி வந்தேன் என்றான். விரைவாக நடந்தார் குமரவேல். இன்று என்ன பாடம் பார்க்கவேண்டும் என்று மாணவர் களிடம் கேட்டார் குமரவேல் தனக்குவமை இல்லாதான் தான்சேர்தார்க் அல்லான். மனக்கவலை மாற்றல் அரிது என்னும் திருக்குறள் என்றான் அரசப்பன். இப்பாடலுக்கு விளக்கம்கூற எங்கேயோ தேடிச் செல்ல வேண்டுமா? குமரவேல் வரலாறே இதுதானே. தனக்கு உவமை இல்லான் தாளைச் சேர்ந்தார்! மனக்கவலை மாற்றிக்கொண்டார். அழகப்பர் அன்பால் மாற்றமுடியாத கவலை அறுமுகன் பற்றால் மாறிவிட்டதல்லவா!  2. அன்பின் வழியது உயர்நிலை வயலூர் அவரைக் கொல்லைப் பொம்மை நினைவில் இருக்கிறதா? அதை மறக்கவா முடியும்? என்று வேலப்பன் கண்ணுசாமியைப் பார்த்துக் கேட்டான். நீதான் அதை மறக்கமாட்டாயே! எனக்குக் கேட்டுக் கேட்டுக் கசந்து போய்விட்டது என்று சலிப்போடு கூறினார் கண்ணுசாமி. என்ன இருந்தாலும் சாதாரணமாகக் குச்சி, வைக்கோல், கந்தல் துணி, இவற்றைக்கொண்டே செய்திருந்த அந்தப் பொம்மை எவ்வளவு அழகாக இருந்தது. நானும், பார்த்ததும் பார்த்தேன் வயலூர் அவரைக் கொல்லைப் பொம்மை போலக் கண்டது இல்லை என்று ஒரு முடிவுக்கு வந்தவன் போலத் தனக்குத் தானே உறுதி செய்து கொண்டான் வேலப்பன். எதையும் கூர்ந்து கவனிக்கக்கூடியவன் வேலப்பன். எளிதில் விடமாட்டான். முற்ற முடியத் தெளிவாகத் தெரிந்த பின்னரே ஓய்வான். பின்பு அதனை மறக்கவும் மாட்டான். நாள் ஒன்றுக்குப் பத்துத் தரமாவது சொன்னால் தான் அவன் வாய் சும்மா இருக்கும். அவரைத் தோட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த துணிப் பொம்மையைக் கண்ணுசாமி வேலப்பன் இரண்டு பேருமே ஒரே சமயத்தில் காணத்தான் செய்தார்கள். கண்ணேறு பட்டுவிடக்கூடாது என்பதற்காக வைக்கப்பட்டது துணிப்பொம்மை என்று சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இரவுப் பொழுதில் யாரோ ஒருவர் காவலுக்கு நிற்பதுபோல் தோன்றிக் கள்வர்களைக் கதிகலங்கச் செய்துவிடும் என்பதும் ஓர் உள்ளெண்ணம். எது எவ்வாறாயினும் வயலூர்ப் பொம்மை நன்றாக வாய்த்துவிட்டது. கலையழகு தவழ அமைந்துவிட்டது! பாதை வழி போய் வருபவர்கள் எவரும் உள்ளத்தைப் பறிகொடுத்து நின்று பார்க்காது போனது இல்லை! இவ்வாறிருக்கும் அழகுப் பொம்மையை வேலப்பன் கண்டால் விடவா செய்வான்? உற்றுப் பார்த்து உள்ளத்தைப் பறிகொடுத்து விட்டான்! அதன் அழகுக்காக - கலைக்காக! ஆனால் கண்ணுசாமியோ ஆராய்ச்சியாளர்; எதையும் சிந்திப்பார். வேலப்பனைப்போல் அழகு, கலை என்று உளறிக் கொட்டிக் கொண்டிருக்கமாட்டார். பொம்மையைக் கண்டது பழைய நாட்கதை: ஆனால் இப்பொழுது தெருவில் வந்த ஒருவனைக் கண்டதாலேதான் வேலப்பன் முன்பு கண்ட பொம்மையை நினைத்துக் கொண்டான். நல்ல உயரம்; விரிந்த மார்பு; சரிந்த தொந்தி; ஏறிய தோள்; உப்பிய கன்னம்; யானை நடை; பொது நிறம்; திருக்கு மீசை; உடற்புறத்தையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் மெல்லிய ஆடை; அடர்ந்து சுருண்ட மயிர்; கடுகடுத்த முகம் இவையனைத்தும் கூடிய ஓருருவம் தான் வந்த உருவம்! இதனைக் கண்டவுடன் பொம்மை ஏன் நினைவுக்கு வரவேண்டும் என்றால், அந்தப் பொம்மைக்கு உயிரில்லை: இந்த உருவத்திற்கு உயிர் உண்டு: அவ்வளவே வேற்றுமை! இவ்வுருமைக் கண்டுதான் அப்பொம்மையைச் செய்தானோ என்னவோ? இதோ அவரைக் கொல்லைப் பொம்மை என்று வந்த உருவத்தைக் காட்டிக்கொண்டே கூறினான் வேலப்பன். சும்மா இரு! போய்த் தொலையட்டும் என்று சொல்லிக்கொண்டே வேலப்பனுக்குப் பின்னால் போய் மறைந்து கொண்டார் கண்ணுசாமி. அந்தப் பொம்மை உருவம் அடியடியாகப் போய்க்கொண்டிருந்தது: நல்ல இளமைதான்! இருந்தாலும் உருவத்தில் சுறுசுறுப்புக்கு இடம் இல்லாமல் போய்விட்டது! என்ன செய்வது? வேலப்பன் ஒரு செல்வன்; அவனது கடைக் கணக்குப் பிள்ளைதான் கண்ணுசாமி! வேலப்பனது தந்தையின் வயதை ஒத்த வயது கண்ணுசாமிக்கு இருக்குமாதலால் கணக்கையா என்று அழைப்பதே வழக்கம். அதனால் கணக்கையா! அவனைக் கண்டவுடன் ஏன் என் பின்னால் மறைந்துகொள்ள வேண்டும்! அந்தப் பொம்மை உங்களுக்குத் தெரியுமா? என்றான் வேலப்பன். பொம்மை என்று சொல்லாதே! பொம்மை பாவம் உணர்ச்சி இல்லாதது! யாருக்கும் கெடுதல் செய்யாது; நன்மையும் செய்யாது; அன்பும் கிடையாது; வன்பும் கிடையாது. ஆனால் இதோ பொம்மை அன்று! எலும்பும் தோலும் போர்த்த உடம்பு! இவ்வுடம்பில் உயிர் உண்டு! ஆனால் உயிர் இருப்பதை வெளிக்காட்டக்கூடிய அன்பு மட்டும் இல்லை. மாறாக வன்பு உண்டு! பிறர் துன்பத்தை அறியாது; அழிவுக்கு அஞ்சாது. அறத்திற்குப் பணியாது இந்தப்பொம்மை சே சே! வயிற்றுப் பாட்டுக்காக வாள் தூக்கிக் கொல்லவும் துணியும் இக் கொடுமைப் பிண்டம் பஞ்சுப் பொம்மையா? வஞ்ச மூட்டை! என்று பொங்கிக் குமுறினார் கண்ணுசாமி! வேலப்பன் வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தான். வேலப்பன் கேள் என்று மேலும் தொடர்ந்தார் கண்ணுசாமி! இப்பொழுது போனானே இவன் பெயர் சிதம்பரம்! இவனுக்கு வயது ஐந்தாக இருக்கும்போது முரடனான இவனது அப்பன் சிறைச்சாலைக்குப் போய்விட்டான். தியாகியாகவா? அந்தக் கதையே வேறு! இந்தப் பயலுக்கு இவனது அம்மாதான், அப்பா, சொந்தம், சொத்து எல்லாம். அந்த அம்மா தங்க மானவள்! பேரும் தங்கம்தான்! பாவம், கணவன் சிறைக்கூடம் போன குறை அவளைவிட்டு நீங்கவில்லை! அதிலும் கெட்ட பெயரெடுத்து அதனால் சிறைச்சாலை போன கேவலத்திற்கு மிகவும் அஞ்சினாள். மானமே பெரிதென வாழ்ந்த அந்த அம்மாளுக்குக் கணவனே தெய்வம் என்றால் கதையல்ல! அவளுக்கு உண்மையாகவே கோவில்கட்டிவைத்துக் கும்பிடலாம்! அவ்வளவு நல்ல குணம். கணவன் நிலைமையை எண்ணி எண்ணிப் பார்த்து ஏக்கத்தோடே வாழ்ந்த தங்கம் நாளாசாரியாக இளைத்துக் கொண்டே வந்தாள்! சிதம்பரத்திற்காகவே ஏதோ ஒருவாறு உயிரை தாங்கிக்கொண்டு இருந்தாள் என்று சொல்லலாம்! சிதம்பரத்திற்குத் தங்கம் போன்ற அன்புத்தாய் நிச்சயம் கிடைக்கக் கூடவே கூடாது. அதுபோலத் தங்கத்திற்கும் சிதம்பரம் போன்ற பிள்ளையும் பிறந்திருக்கக்கூடாது. தங்கம், நான்குபேர் போலச் சிதம்பரமும் இருக்க வேண்டும் என்று கருதினாள். பள்ளி கூடத்திற்கு அனுப்பி வைத்தாள். அப்பன் தேடி வைத்த செல்வம் துளியும் இல்லை. ஆனால் சிறைக்குப் போகுமுன் ஏற்றிவைத்த கடன்சுமையோ மிகுதி. தங்கம் நான்கு வீடுகளை பெருக்கித் தெளித்து, மாவாட்டிப் பெற்ற காசால் மானத்தோடு வயிறு வளர்த்துக் கொண்டு இவனையும் படிக்க வைத்தாள். வாயைக்கட்டி வயிற்றைக் கட்டித் துளிதுளியாகச் சேர்த்து கொண்டு இவனைப் பத்தாம் வகுப்புவரை படிக்க வைத்திருக்கிறாள். இதற்குள் அவள் பட்டபாட்டை அவளே அறிவாள். வேறு யார்தான் அறியுமாறு இருந்தார்கள்! பயல், தங்கம் இல்லாத நேரம் பார்த்து அவள் சேர்த்து வைத்திருந்த காசிலே திருடி தின்பதற்கும் ஆரம்பித்தான்; அரிசியை அள்ளி அவள் அறியாமலே விற்றுவிட்டு ஊர் சுற்றினான் தாயையும் கண்டபடி ஏசினான், பேசினான். அந்த அன்புத்தாய் அத்தனையையும் பொறுத்துக் கொண்டாள். திருடிய பொழுதெல்லாம், ஐயோ! போகிறான் எனச் சமாதானமாக இருந்தாள். திட்டும் பொழுது மகன் என்பதனால் பொறுத்துக் கொண்டாள். பள்ளிக் கூடம் போகிறேன் என்று பொய் சொல்லி விட்டுப் போய்விடுவான். அடுத்த ஊர்களுக்கு, அதைத் தெரிந்து கண்ணீர் வடித்துக் கொண்டே, இப்படிச் செய்யாதேடா! நீ நல்லபிள்ளை என்று பெயரெடுக்காவிட்டால் நான் செத்தே போவேன் உன்னைத் திட்ட வாய் வருகிறது! ஆனால் நாக்கையாவது பிடுங்கிக் கொண்டு சாகலாமே ஒழியத் திட்டக்கூடாது என்கிறது மனம்! என்னடா செய்வேன். உனக்காகவே உயிரோடு இருக்கிறேன். என்னை அழவைக்காதே! உன்னை ஆளாக்கி ஒருத்தியைக் கொண்டுவந்து வைத்து விட்டால் என் பாடு முடிந்தது என்று பொறுமிப் பொறுமிப் புழுங்கிப் புழுங்கித் துடிக்குமாறு செய்துவிட்டான்! தங்கம் வேலைபார்த்து வந்த வீட்டிலே தைப் பொங்கலுக் காக ஏழெட்டு ரூபாய்களும், ஒரு சேலைத் துணியும் இனாம் கிடைத்ததாம். ஒற்றைத் துணியன்றி வேறில்லாத அந்த தங்கம், புதுச் சேலையையும் பாதி விலைக்கு எவளோ ஒருத்தி யினிடம் விற்று. இரண்டொன்றாக இருந்த வெண்கலப் பாத்திரங்களையும் விற்றுத் துட்டாக்கினாள்; ஏன் சேர்த்து வைக்கவா? அதுதான் தங்கம் அறியாததாயிற்றே. யாரோ ஒருவர் காலில் விழுந்து பத்து முடித்து மகனுக்கு வேலை ஒன்று வாங்கித் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டாளாம் இவள் வற்புறுத்தலையும், குணத்தையும் அறிந்த அந்த நல்லவர் எப்படியோ முயற்சி செய்து தாலூகா அலுவலகத்தில் எழுத்தர் வேலை வாங்கித் தந்திருக்கிறார்! வேலைக்கு, நாலுபேரைப் போல் தன் மகனும் போகவேண்டாமா? இதற்காகத்தான் விற்கத் தகாததையும் விற்றுச் சேர்த்து அவனுக்கு முழுக்கால் சட்டையும் கோட்டும் இன்னும் என்னென்னவோ தைத்துப் போட்டு முன்னழகும் பின்னழகும் பார்த்து அனுப்பிவைத்திருக்கிறாள் அலுவலகத்திற்கு நன்றியறிதல் இல்லாத இந்தப் பயல் விளங்குவானா? வேலைக்குப்போன ஒரு மாதத்துள் தாய்க்கும் சொல்லிக் கொள்ளாமலே தன்னோடு வேலை பார்த்த ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு அவள் கைப் பொம்மையாகி விட்டான் இவன். திருமணத்திற்குப் பின்னால் தாயைப் பார்க்கவே இல்லை. இவன் செய்திகளையெல்லாம் கேள்விப் பட்டு மகனைப்போய் அலுவலகத்தில் சந்திக்கச் சென்றாள். உள்ளே இருந்து கொண்டே சேவகன் வழியாக இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டான். இந்த நிலைமையை அறிந்துகொண்ட சேவகன் எப்பொழுது தங்கம் வந்தாலும் சரி இல்லை என்றே சொல்லியனுப்பி வந்தான்! ஒடுங்கிப் போயிருந்த தங்கத்தின் உயிர் ஊசலாடத் தொடங்கியது. வீட்டைவிட்டு வெளியேற முடியவில்லை. வேலைக்குச் சென்று வயிற்றுப்பாட்டைப் போக்கவும் முடிய வில்லை. உள்ளம் இருண்டுவிட்டது. அப்பொழுதுதான் உலகத்தின் பயங்கரமான நிலைமை அவளுக்குத் தெளிவாகப் புலனாயிற்று. அன்பு, அன்பு என்றே வாழ்ந்த அந்த அன்புப் பிழம்பின் கண்கள் கலங்கின: ஆனால் கண்ணீர் சொட்டக்கூட முடியாத அளவு கண்களில் வறட்சியிருந்தது. மகனைக் கடைசி முறையாகவாவது பாத்துவிட வேண்டும் என்று கருதிப் பக்கத்து வீட்டுக்காரர் வழி சொல்லியனுப்பினாள். போனவர்களும் சிதம்பரத்தின் மனைவியைக் கண்டு பேசவே முடிந்தது. அவளென்ன பெண் தன்மை சிறிதாவது பெற்றிருந்தால் அல்லவா இரக்கம் காட்டுவாள்! அவள் அவனுக்குச் சொல்லவும் இல்லை. சொன்னாலும்கூட மரத்துப்போன அவன் வந்திருக்கவும் மாட்டான். கட்டிலோடு கட்டிலாகத் தங்கம் கிடந்தாள். ஊணும் இல்லை; உறக்கமும் இல்லை. கயவனான மகன் நினைவு ஒரு பக்கம்; பெற்ற மனத்தின் பெருங்கவலை ஒரு பக்கம்! தாய் திட்டினால் நெஞ்சம் நைந்தால். பிள்ளை வாழ்க்கை நாசமாகி விடும் என்று அடக்கிக் கொண்டு தன் வினையையே நொந்து கொண்டாள்! அந்தோ! அவளைச் சுற்றி வளைத்துக் கொண்டது எலும்புருக்கி நோய்! எத்தனை நாளைக்குத்தான் அதனோடு போரிடுவாள்? எலும்பும் தோலுமாகவே காட்சியளித்தாள்! ஆனால் உள்ளே இருந்த அன்புக்கு மட்டும் குறைவில்லை. சிதம்பரனோ பஞ்சுப் பொதியாக விளங்கினான். ஆனால் உள்ளே அன்புக்குச் சிறிதும் இடமில்லை! தங்கம் தள்ளாடித் தள்ளாடி மகன் இருக்கும் வீட்டுக்கு -மருமகள் வீட்டுக்குச் சென்றாள். ஐயோ! பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாதுகாத்தத் தாய்-வீடு பெருக்கி வீதி தெளித்துச் சம்பாதித்துப் படிக்க வைத்தத் அன்னை - சேலையையும், விற்றுச் சட்டை தைத்துத் தந்த உபகாரி-ஓடி ஒடிச் சின்னஞ் சிறு சிட்டுக் குருவிபோலப் பார்க்க வந்து ஏமாந்து சென்ற எழிலோவியம்- இக்கயவனைக் கல்நெஞ்சனைக் காணாமல் உயிரைவிடச் சம்மதிக்கவில்லையாம்! வீட்டுக்கு வந்தவள் மருமகளைக் கண்டிருக்கிறாள்! அருமை மகன் அயலூருக்குப் போயிருந்தானாம்! வந்ததென்ன? என்று அகங்காரத்தோடு கேட்டாளாம் மருமகள். பதில் பேசுவதற்கு வாயெடுக்கும் முன்னரே தள்ளாடிக் கீழே விழும் நிலைக்கு ஆளான தங்கம் இருமிக் கோழையை துப்பியிருக்கிறாள்? கடுமையான காய்ச்சலும் இருந்திருக்கிறது. சே! சே! தொற்று நோய்! அறிவு கெட்டவள்! புத்தியில்லை! ஒதுக்குப் புறத்திலே கிடந்து சாகவேண்டியதை விட்டு ஊருக்குள்ளே வந்து தொலைகின்றது! மானம் கெட்டு, மதிகெட்டுப் பிச்சையெடுத்து வாழவேண்டுமோ? இன்னும் இருந்து யாரைக் காப்பாற்றப் போகிறது? வெட்கம் கெட்ட கழுதை! என்று திட்டிக் கொண்டே விரைப்போடு வீட்டுக்குள் போய்விட்டாள் மருமகள். தன்னை யார் என்று தெரிந்துகொள்ளாமலே தெரிய விரும்பாமலே பிச்சைக்காரியாக முடிவு கட்டிக்கொண்டு சென்ற அவளே மருமகள் என்பதைத் தங்கம் அறிவாள். மாமிதான் வந்தவள் என்பதை அறியாமலே மருமகள் திட்டியதில் வியப்பு இல்லை! தெரிந்திருந்தாலும் கிடைக்கும் பெருமை இதுதான்! தங்கம் தன் வலிமையனைத்தையும் ஒன்றுகூட்டி எழுந்து தன் வீட்டை நோக்கி நடந்தாள். இந்த இடியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வந்து கட்டிலில் படுத்தவள்தான்! விடியற்காலையில் பார்க்கும் பொழுது அன்புத்தெய்வம் உறைந்த கூடுமட்டுமே கட்டில்மேல் கிடந்தது! தங்கத்தின் முடிவை ஊர் அறிந்தது! இப்பொழுதுபோன எலும்பு தோல் பிணமும் அறிந்தது! இதனைச் சேர்ந்த மனைவியான எலும்பு தோல் பிணமும் அறிந்தது! அறிந்து என்ன செய்ய? ஊரறிய ஒப்புக்கு அழுது. ஒருபிடி சாம்பலாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள்! இப்பொழுது என்னவோ நினைத்து நினைத்து இவன் உருகுகின்றானாம்! ஊர் சொல்லுகிறது; ஆனால் உடல் சொல்லுகிறதா? இவனா வஞ்சம் சூதறியாத பொம்மை! சே! சே! தகுமா? இவனும் இன்னும் வாழத்தான் செய்கின்றான். இவனது மனைவியும் வாழத்தான் செய்கிறாள். ஆனால் இவர்களிடம் அன்பு வாழவில்லை. நடைப்பிணமாக வாழுகின்றார்கள். இது வாழ்க்கையா என்று சொல்லிமுடித்தார் கண்ணுசாமி. வேலப்பன் மூக்கிலே வைத்த விரலை எடுக்காமல் கேட்டுக் கொண்டே இருந்தான். சே! இவன் விளங்குவானா? எப்படி எப்படிப் பொல்லாதவர்களெல்லாம் பூமியில் உண்டு. ஆனால் இந்தப் பொல்லாதவனைப்போல் ஒருவனையும் நான் பார்த்ததில்லை. உயிர் ஊட்டிய தாயின் உயிரோட்டிய பாவி உருப்படுவானா? அப்பன் காலிப்பயல்! அவன் மகன் சின்னப்பயல்! நல்லகுடும்பம்! இவர்கள் தலையிலே இடிவிழாதா? எங்கெங்கோ குண்டைப் போடுகிறார்கள் இவர்கள் தலையில் பார்த்துப் போடக் கூடாதா? கட்டிலிலே கிடந்து துடித்த தங்கம் மனம் என்ன பாடுபட்டதோ? இந்தப் பாவிகள் உணர்வார்களா? என்று புண்பட்டுக்கூறினான் வேலப்பன். இதுதான் சந்தர்ப்பம்: தாராளமாகத் திட்டு. நல்லதை வரவேற்கவும் தெரியவேண்டும்: கெட்டதைத் தூற்றவும் தெரியவேண்டும். நீ இப்போது கூறியவாறு இடியோ, குண்டோ அல்ல. இரண்டும் சேர்த்தே விழலாம் இவர்கள் தலையில்! ஆனால் சிதம்பரம் தலையில் விழுந்தால் உனக்கு ஆபத்து இல்லை. அவன் அப்பன் தலையில் விழுந்தால் உனக்கும் ஆபத்து என்றார் கண்ணுசாமி! வேலப்பனுக்குப் புரியவில்லை. ஏன்? அந்தப் படுபாதக அப்பன் வேறா இன்னும் இருக்கிறான் என்றான். ஆம் இருக்கின்றான்! உயிரோடே இருக்கின்றான்! சாகாமல் தான் இருக்கின்றான்! அவனை யார் என்று கேட்கின்றாய்! அவன் வடிகட்டிய தீயவனான இந்தக் கண்ணுசாமி என்றார் கண்ணுசாமி! வேலப்பன் தலை சுற்றியது. கண்ணையா நீர் தங்கத்தின்... என்று இழுத்தான். ஆம்! கணவன்தான். ஆனால் அன்பே உயிரெனக் கொண்ட அந்தத் தெய்வத்தின் பெயரையே உச்சரிக்கத் தகுதியற்றவன்! என்றார் கண்ணுசாமி கண்ணீர் விட்டுக்கொண்டே! வேலப்பன் கண்ணை மூடிக்கொண்டே கண்ணு சாமியைப் பிடித்துக் கொண்டான்! இதற்குள் பொம்மை இல்லை இல்லை என்புதோல் போர்த்த உடம்பு எவ்வளவோ தொலை தூரம் போய்விட்டது. அன்பின் வழிய(து) உயிர்நிலை அஃதிலார்க்(கு) என்புதோல் போர்த்த உடம்பு  3. முற்பகலும் பிற்பகலும் ஏ! கொண்டுவா மகனை! ஏ! கொண்டுவா என் மகனை! கொன்றா போட்டாய்! என்னும் கூச்சல் சிறைக் கம்பிகளைத் தகர்த்துக்கொண்டு வருவதுபோல் வந்தது. உறக்கத்தின் உச்சக்கட்டத்தில் இருந்த சிறைக் காவலன் காளையைத் தட்டி எழுப்பிவிட்டது குரல். கொட்டாவி விட்டுக் கொண்டே எழுந்து இந்த பெண்மணி இங்கே வந்ததுமுதல் கொண்டுவா மகனை: கொண்டுவா மகனை என்று கத்திக் கொண்டே இருக்கிறது. இரவு பகல் எப்பொழுதும் ஓய்வதே இல்லை. கிறுக்குப் பிடித்துப்போய் உளறுகிறது. என்ன அநியாயம் செய்து தொலைத்ததோ? என்ற உறக்கம்போன முணுமுணுப்போடு பேசினான். அவரவர் செய்த காரியங்கள்தான் வினை. அவர்கள் நல்லது செய்ததையும், பொல்லது செய்ததையும் அனுப விக்காமல் முடியாது. மறு பிறப்புப் பிறந்தோ-வேறு எந்த உலகத்துக்கும் போயோ இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டியது இல்லை. இந்த உலகத்திலேயே அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்றான் சிறைக்காவலன் சின்னச்சாமி. நல்ல வினைப்பயன்! நாம் என்னென்ன கொடுமைகள் செய்தோமோ? இந்தச் சிறைக் கூடக் காவலாளியாகி அழுகை, ஒப்பாரி, கண்ணீர், கலங்கல் இவற்றுக்கு இடையிலேயே நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது. சே! சே! நல்ல வேலை இது. அதிலும் இந்தக் கிறுக்குப் பெண்மணி வந்ததுமுதல் உறக்கமே கிடையாது. உறக்கமில்லாத் துயர் நம்மையும் கிறுக்கர்களாக்கிவிடுமோ என்னவோ? என்று அவள் மேல் இருந்த வெறுப்பையெல்லாம் ஒன்றுசேர்த்துக் கூறினான். காளை! இவள் எப்படியும் பெருங் கொடுமைக்காரியாகத் தான் இருந்திருக்க வேண்டும். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா. பிற்பகல் தாமே வரும் என்பது குறள் உரை. பிறர்க்குக் கேடு முற்பகலில் செய்திருப்பாள்; அதன் பயனைப் பிற்பகலில் அனுபவிக்கிறாள். யாரென்ன செய்வது? என்று எதனையோ சிந்தித்துக்கொண்டே கூறினான் சின்னச் சாமி. சின்னச்சாமி! உன் அளவுக்கு எனக்குப் படிப்பு இல்லை. பேசவும் தெரியாது. ஆனால் எனக்கு ஓர் எண்ணம் வருகின்றது. நீ சொன்ன எனக்கு ஓர் எண்ணம் வருகின்றது. நீ சொன்ன பாட்டை இன்னொரு முறை சொல்லு என்றான். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் அருமையான பாட்டு; நேர்முகமாகவும், மக்களுக்கு நல்வழி காட்டுகின்றது; பிறர்க்கினிது முற்பகல் செய்யின் தமக்கினிது பிற்பகல் தாமே வரும் என்றும் பொருள்படு மல்லவா! என்றான் காளை. ஆமாம்! ஒன்று சொன்னாலும் நன்று சொன்னாய் என்று காளையின் கையைக் குலுக்கினான் சின்னச்சாமி. பொழுது போனது தெரியாமல் காளையும் சின்னச் சாமியும் பேசிக் கொண்டிருந்தனர் கிறுக்கியின் கத்துதல் படிப்படியாக உயர்ந்து கொண்டே சென்றது. பொழுதும் கிளம்பி நெடுநேரமாயிற்று. சிறையில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளைச் செய்துகொள்ளுமாறு கதவுகளைத் திறந்து வெளியே அனுப்பவேண்டிய நேரமும் ஆயிற்று. கைதிகள் வெளியேறிக்கொண்டிருந்தனர். 103 ஆம் எண் கைதி மட்டும் வெளியேறவில்லை. ஏய்! 103, என்ன செய்கிறாய்? வெளியே வா என்றான் சின்னசாமி. அவன் வெளியே வரவில்லை: குப்புறப் படுத்துக்கிடந்தான். அவனை இழுத்துத் தூக்கி உட்காரவைத்தான் சின்னசாமி. கண்கள் இரத்தம் ஒழுக்குவதுபோல் சிவந்து கிடந்தன. ஏக்கத்தோடு பேசினான். மார்ச்சு மாதம் பதினைந்தாம் தேதிக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன? ஏன்? அன்றுதான் எனக்கு நிம்மதி. என்னைத் தூக்கிலே போடும் நாள். தூக்கிலே போடுவதற்கு மகிழ்கின்றேன். இன்னும் எத்தனையோ நாட்கள் இருக்கின்றனவே என்று எண்ணி எண்ணித்தான் நொடி நொடிதோறும் சாகின்றேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன ஐயா! நாட்கள் இருக்கட்டும்: உனக்கேன் தூக்குத் தண்டனை தந்தார்கள்? எவர் எவருக்குத் தீர்ப்பிலே நியாயம் உண்டோ. அநியாயம் உண்டோ; ஆனால் எனக்கு வழங்கிய தீர்ப்பு நேர்மை தவறாதது. கொலைகாரன் நான். எத்தகைய கொடிய கொலைகாரனும் அஞ்சும் கொடுங் கொலைகாரன் நான். அதன் பயனை அனுபவிக்க வேண்டாமா? உறக்கமே எனக்குப் பிடிக்கவில்லை. நீங்கள் பேசிக்கொண்டிருந்ததையெல்லாம் கேட்டேன். என் வினையை அனுபவித்துத் தீர்த்துவிட்டால் அதன் தொல்லை அடுத்த பிறவியிலாவது இருக்காது அல்லவா! அதனால்தான் சாக அஞ்சிக் கிடந்த நான்கூட நீங்கள் அதிகாலையில் சொல்லிக்கொண்டிருந்த குறள் பாட்டைக் கேட்டுத் தெளிவுகொண்டேன். பிறர்க்கின்னா செய்யின் இல்லை - பிறர்க்கின்னா செய்யும் போதே எனக்கின்னா அடைந்துகொண்டேன் நான். நம்புகிறீர்களா? தொண்டை அடைத்துக்கொள்ளக் கூறினான் 103 ஆம் எண் கைதி மலையப்பன். மிகச் சோர்வுடன் தலையை அசைத்துக்கொண்டான் சின்னச்சாமி. மலையப்பன் பேசினான்: கேளுங்கள்; என் கொடுஞ் செயலை இப்படி உள்ளம் உருக எவரிடமும் இதுவரை சொன்னது இல்லை. இனி ஒளித்து வைத்துத்தான் ஆக வேண்டியது என்ன இருக்கிறது? இன்று இல்லாவிடில் நாளை - தூக்கு! அதற்குள் ஒருவரிடம் மனம் விட்டுக் குற்றத்தைக் கூறுவதாவது, கடைசியாக எனக்குக் கொஞ்சம் அறிவு வந்தது என்பதைக் காட்டும். சொல்கிறேன். நான் ஒரு மாட்டுத் தரகன், என்னைப் பொறுத்த அளவிலும் வாங்குபவன் விற்பவன் ஆகிய இருவரிடமும் எவ்வளவு அதிகமாகப் பணம் சுருட்ட முடியுமோ அவ்வளவு பணம் சுரண்டிவிடுவேன். இருந்தாலும் எனக்குக் கிராக்கி எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருந்தது. காரணம், மாடுகளின் இலக்கணம் தெரிந்து அவரவர் மனம்போல் பிடித்துத் தருவதிலும், வாங்குபவர் விற்பவர் ஆகிய இருவரையும் எப்படியேனும் இழுத்துப் பிடித்து ஒப்புக் கொண்டு விடுமாறு செய்வதிலும் எனக்கிருந்த திறமைதான். பொதுவாக, என்னைப் போல மாட்டுத் தரகர்களாக இருந்த பலர் என்னைக் கண்டு பொறாமைப்படும் அளவுக்கு என் வேலை சிறப்பாக நடைபெற்று வந்தது. என்னை இல்லாமல் மாடு வாங்காதவனும், நூற்றுக் கணக்கான தடவைகளாவது என்னைத் தேடிக்கொண்டு வந்து என் வீட்டிலேயே தங்கி மாடு வாங்கிச் சென்றவனும் ஒருவன் இருந்தான். அவன் பெயர் மருதப்பன். மருதப்பன் வழக்கம்போல் என்னைத்தேடி வந்தான். அவன் பையிலே இருந்த ரூ. 700ஐயும் என்னிடம் தந்து, மாடுகள் அவசரமாக வாங்கவேண்டும், வாழைத்தோட்டம் காய்கின்றது. பழைய மாடுகளை ஆதாயமான விலைக்குக் கேட்டபடியால் விற்றுவிட்டேன். எந்த வேலை இருந்தாலும் இருக்கட்டும். நாளையே போய் மாடு பிடித்துவிட வேண்டும். உள்ளூரிலேயே கூட மாடுகள் விற்பனைக்கு இருந்தன. இருந்தாலும் உன்னை இல்லாமல் மாடுபிடிக்க மனம் வரவில்லை. உனக்கும் எனக்கும் உள்ள பொருத்தம் வேறு எவரிடத்தும் ஏற்படமாட்டேன் என்கிறது என்றான். நாம் என்ன இன்று நேற்றுப் பழகியவர்களா? என்று சொல்லிக்கொண்டே அவன் தந்த ரூ. 700ஐயும் என் மனைவி பண பெட்டியினிடம் பத்திரமாக வைக்குமாறு தந்தேன். மாலைப்பொழுது ஆனதால் நானும் மருதப்பனும் வெளியே போனோம். தோட்டத்துக் கிணற்றிலே மருதப்பன் குளித்தான். வீட்டுக்குத் திரும்பினோம். எனக்கு மருதப்பனைப் பார்க்கிலும் அவன் தந்த ரூ. 700 பெரிதாகத் தென்பட்டது. அதன்மீதே என் உள்ளம் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அந்த - அறிவு கெட்ட நேரத்தே ஏழு நூறு ரூபாய்களும் 7 கோடி ரூபாய்களாகத் தெரிந்தன என்றாலும் உண்மைதான் என்று நிறுத்தினான் மலையப்பன். பிறகு என்று தூண்டினான் சின்னச்சாமி பிறகென்ன? எனக்குப் பெண் என்று வாய்த்திருந்தாளே ஒரு பேய்! அவள் என்னைத் தனியே அழைத்து வைத்து நாலைந்து நாட்களுக்கு நாயாக அலைந்தாலும் நாலைந்து ரூபாய் தான் கிடைக்கப்போகின்றது. நாம் நான்கு பேரைப் போல் நான்கைந்து காசு வைத்துப் பிழைத்தோம் என்று எப்பொழுதுதான் ஆகப் போகின்றோமோ? என்று புலம்பினாள். நல்ல துணிமணி வசதி உண்டா? என்று ஏழ்மை நிலைமையை இடித்துக் காட்டினாள். நானும் வெறுப்போடு இப்பொழுது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? புதையலா கிடக்கிறது. வீட்டைவிட்டு எங்கேனும் போய்த் தொலைவது தவிர்த்து வேறு வழியே இல்லை! அப்பப்பா! இந்தத் துன்பமா? என்று எரிச்சலோடு பேசினேன். பாவம்! பிழைக்கத் தெரியாத அப்பாவி! புதையலே நம்மைத் தேடிக்கொண்டு வந்திருக்கும்போது. தோண்டி எடுக்கும் புதையல் நமக்கு எதற்கு? என்று மருதப்பன் கொண்டு வந்திருக்கும் பணத்தைச் சுட்டிக்காட்டி இரவோடு இரவாக அவனைத் தீர்த்துக்கட்டிவிட ஏவினாள். சிறிது நேரம் திகைத்தேன். அவன் பணத்தைக் கண்டு அறிவு சிதைந்துபோய் இருந்த எனக்கு, அதற்குமேலும் சிந்திக்கும் அறிவு செத்துப் போய்விட்டது. எளிதில் ஏழு நூறு ரூபா சம்பாதிக்க எண்ணிவிட்டேன். அவளைச் சொல்ல என்ன இருக்கிறது? மனம்விட்டு ஆண்டாண்டு காலமாகப் பழகியவனை நானே கொல்ல ஆயத்தமாகும் போது அவள் ஏவிய சூழ்நிலை என்று சூழ்நிலை மேல் பாரம் போடுவது தவறு. நான் பணவெறி கொண்ட மிருகமாகிவிட்டேன். சோலையூர் என்பது எங்கள் ஊருக்குப் பெயர் இல்லை எங்கள் வீட்டுக்குப் பெயர் ஏனெனில் என் வீடு அன்றி இரண்டு கல் தொலைவுக்கு வேறு வீடே கிடையாது. இருட்டி விட்டால் மனித நடமாட்டமே இருக்காது. என்னைத் தேடிவந்தவர்களுக் கெல்லாம் சாப்பாடு என் வீட்டில்தான். மாட்டுத் தரகு பார்க்கும் நான் நாள்தோறும் தேடி வருபவர்களுக்கெல்லாம் விருந்தளிக்க முடியுமா? அளித்தேன்; ஆனால் எங்கள் வீட்டுக்கு ஆகும் செலவையெல்லாம் சேர்த்து வந்தவர்களிடம் வாங்கிக் கொண்டு விடுவாள் பணப்பெட்டி என் மனைவி அது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. எனக்கும் தான் என்ன பழக்கமாகிவிட்டது. பழக்கமாகப் போகிவிட்ட ஒன்று பிழை யென்று தெரியாதே! மருதப்பன் இரவுச் சாப்பாட்டை முடித்தான். அன்று பணப்பெட்டி சிரித்துச் சிரித்துப் பேசி, சோறு கறிகளை அள்ளிக்கொட்டி மருதப்பனால் முடியாத அளவுக்கு உண்ணச் செய்துவிட்டாள். தனக்கென்று வைத்திருந்த வெற்றிலை பாக்கையும் எடுத்துத் தந்தாள். எல்லாம் முடிந்த பின் தாழ்வாரத்திலே கிடந்த கட்டிலிலே படுத்துக்கொண்டான் மருதப்பன். சிறிது நேரம்தான் சென்றது. குறட்டை ஒலி எழுந்துவிட்டது. அடுத்த திட்டத்தை முடித்துவிட நான் ஆயத்தமானேன். இரண்டுகல் தொலைவுக்கு அப்பால் இருந்த ஊரில் என் மனைவிக்கு உடன் பிறந்தவர்கள் மூன்று பேர்கள் இருந்தனர். நல்ல முரடர்கள், கொலை களவுக்கு அஞ்சாதவர்கள். அப்படிப் பட்டவர்கள் உதவிதானே என் திருப்பணிக்குப் பயன்படும்! ஓடிப்போய் அவர்களை எழுப்பிக் காதோடு காதாகச் செய்தியைச் சொன்னேன். வேட்டை கிடைக்கிறது என்று விருப்பத்துடன் அரிவாள். மண்வெட்டி, கம்பி இவற்றோடு ஊர் அறியாமல் புறப்பட்டு வந்தார்கள். வீட்டு முற்றத்தே அவர்களை நிறுத்தித் தாழ்வாரக் கட்டிலிலே படுத்திருக்கிறானே அவன்தான் என்று சுட்டிக் காட்டினேன். அதற்குமேல் என்னால் அங்கு நிற்க முடியவில்லை. என்ன இருந்தாலும் நெருங்கிப் பழகியவன் இல்லையா மருதப்பன்: அவனை என் கண் முன் வெட்டிக் கொல்ல சம்மதிக்குமா? இருட்டறையில் பொல்லாததெல்லாம் எண்ணும் நெஞ்சம் வெளிச்சத்திற்கு வந்தவுடனே அப்படி எண்ண மறுக்கிறதே. அது எனக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா? எப்படியோ விரைவில் 700 ரூபாய்க்கு உரிமையாளனாக வழி கண்டுவிட்டேன். என் மைத்துணர்கள் சிறிது தொலைவு சென்று குழி தோண்டினார்கள். ஒரே இருட்டாக இருந்தது. சிறு வெளிச்சம் இருந்தால் சிறிது துணையாகும்போல் இருந்தது. விளக்கு மருதப்பன் பக்கத்தில்தான் எரிந்து கொண்டிருந்தது. என்ன செய்வது? நானே பூனைபோல் நடந்துபோய் விளக்கை எடுத்துக்கொண்டு குழி தோண்டும் இடத்திற்குச் சென்றேன். அதன் பின் குழிக்குப் பக்கத்தில்கூட என்னால் நிற்க முடிய வில்லை. நெஞ்சம் படபடத்தது. இரத்தம் குபு குபு என்று ஒடத் தொடங்கியது. மயிர்க் கால்கள் நிமிர்ந்து. உடல் ஆடத் தொடங்கியது. வேறோர் இடத்திற்குப் போய்க் குப்புற விழுந்து கொண்டேன். கொஞ்ச நேரம் சென்றது. சே! கோழை! வீட்டுக்குப்போ! எங்கள் வேலை முடிந்தது! ஒரே வெட்டிலே தீர்ந்தான் என்று பரணிபாடிவிட்டுப் போயினர் என் மைத்துணர்கள். என்னால் தலையை நிமிர்த்தி நிற்க முடியவில்லை. மருதப்பன் என் முன்னால் நின்று மலையப்பா நல்ல காரியம் செய்தாய்! அட பாவி! பணமா பெரிது! இந்தப் பணம் எல்லாம் எனக்கு வேண்டும் என்று சொல்லியிருந்தால் கூட விட்டிருப்பேனே. இதற்காக என்னைக் கொல்லவா வேண்டும். நீ மக்களோடு பிறந்திருக்கிறாயா? மக்களைப் பெற்றெடுத்திருக்கிறாயா? உன்னையும் ஒரு பெண்தானே பெற்றெடுத்தாள்? நீ ஒரு மனிதன் தானா? என்று இடைவிடாது இடித்துக் கேட்பதாக இருந்தது. ஐயோ! ஐயோ என்று கதறிக்கொண்டே வீட்டு முற்றத்தை அடைந்தேன். முற்றத்து வேப்பமரம் அசைந்தது: காற்று தாழ்வார ஒலையைச் சுழற்றி ஆட்டியது. அது எனக்குப் பேய்க் குரலாகத் தெரிந்தது. அஞ்சாத நான் அஞ்சி அஞ்சிச் செத்தேன்: தாழ்வாரக் கட்டிலைக் கண்டதுதான்! ஐயகோ! கண்ணைத் திருப்பாது வீட்டுக்குள் ஓடிப்போய், படுக்கையில் விழுந்து கொண்டேன். என் உடையை வியர்வை நனைத்தது! மூடிய இமை திறக்கவில்லை: உறக்கமும் வரவில்லை! பொழுது மட்டும் விடிந்தது என்று வாய் தளதளத்துப் போய்க் கண்ணீர் கன்னங்களை நனைக்கக் கூறினான் மலையப்பன். கொடுமைதான்! அழிவு வரும்போது அறிவு போய் விடுகிறது. கெடுங்காலம் வரும் போது என்ன செய்வது? என்று தொண்டை கப்பிய குரலிலே பேசினான் சின்னச்சாமி அதன்பின் என்னவாயிற்று என்றான். முகத்தைத் துடைத்து அழுகையை ஒருவாறு சமாளித்துக் கொண்டு பேசினான் மலையப்பன். விடிந்தது: என் இதயம் இடிந்துவிடும் போல் இருந்தது. வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன். போலீசு வண்டி வீட்டின் முன் நின்று கொண்டிருந்தது. போலீசுக்காரர்கள், இன்சுபெக்டர் ஆகியோர் கைத்துப்பாக்கி, பெருந்துப்பாக்கி, தடி, இவற்றுடன் வீட்டை வளைத்துக் கொண்டு நின்றனர்: அவர்களைக் கண்டு பதை பதைத்தேன். இரவிலே வந்த படபடப்பைப் பார்க்கிலும். அதிகமாகப் படபடப்பு ஏற்பட்டது. என்னை நானே நம்ப முடியவில்லை. எப்படி இந்த நடுக்காட்டில் நள்ளிரவில் நடந்த கொலைச் செய்தி இதற்குள் நகருக்குப் பரவி அங்கிருந்து அதிகாரிகள் வந்து விட்டார்கள் என்ற திகைப்பிலிருந்து மீள நெடும் பொழுது ஆகிவிட்டது. அதுவரைப் பொறுத்திருப்பார்களா? கைகளிலே விலங்குமாட்டப் பெற்றது. என் மனைவி பணப்பெட்டிக்கும் விலங்கு மாட்டினார்கள். உம், நட என்று கையை வெளியே காட்டினார் அதிகாரி. அவருடன் நடந்தேன். ஐயையோ! பேயா? பூதமா? பிசாசா? ஒன்றும் இல்லை. இரவு எங்களால் வெட்டிக் கொல்லப்பட்ட மருதப்பன் போலீசு வண்டியிலே இருந்தான். நம்பமுடியுமா? என்ன உளறுகிறாயா? இதுவரை சொன்னவை சரி. இரவிலே வெட்டிப் புதைக்கப்பட்ட மருதப்பன் விடியற் காலையில் உயிரோடு போலீசு வண்டியில் எப்படி வரமுடியும்? என்றான் சின்னச்சாமி. அதுதான் வினை என்று தொடர்ந்தான் மலையப்பன். குழி தோண்டிக்கொண்டிருக்கும்போது நான் வீட்டுக்கு வந்து விளக்கு எடுத்துக் கொண்டு போனேன் இல்லையா? அதற்குச் சிறிது முன்னாகவே விழித்துக் கொண்டிருக்கிறான் மருதப்பன். முதலாவது என் மைத்துனர்கள் கொண்டு வந்த கம்பியும் மண் வெட்டியும் ஒன்றோடு ஒன்று தட்டி. டங்ங் என்னும் ஓர் ஒலி உண்டாகியிருக்கிறது. அதிலேயே மருதப்பன் விழித்துக்கொண்டானாம் அதன்பின் கட்டிலிலே படுத்திருக்கிறானே அவன்தான் என்று அறிமுகம் செய்து வைத்தேன் அல்லவா! அது அவனுக்குத் திகைப்பு ஏற்படுத்தி யிருக்கிறது. ஏற்படுத்தாமல் என்ன செய்யமுடியும்? அந்த மையிருட்டு? அதற்கு மேலும் வெளிச்சம் போட்டுவிட்டது நான் விளக்கு எடுத்துக் கொண்டு போனது. கட்டிலிலிருந்து எழுந்து வீட்டு முற்றத்திற்கு வந்திருக்கிறான் மருதப்பன். குழி வெட்டுவது தெரிந்திருக்கிறது. தனக்குத் தான் அது என்பதைச் சிறிதும் ஐயம் இல்லாமல் துணிந்திருக்கிறான். அதனால் வேப்ப மரத்தின் மீது ஏறி, செறிவான கிளைகளுக்கிடையே அமைதியாக உட்கார்ந்திருக்கிறான் என்றான் மலையப்பன். அப்படியானால், வெட்டிவிட்டோம்; வேலை முடிந்து விட்டது என்று பொய் சொல்லிவிட்டு உன் மைத்துனர்கள் போய்விட்டார்களா? என்றான் சின்னச்சாமி. அவ்வாறானால், குற்றமில்லையே! காலையிலேயே நகருக்குச் சென்ற என் மகன் இரவு, முதல் காட்சி சினிமா பார்த்துவிட்டு நடந்து வந்திருக்கிறான். உறக்கமும் களைப்பும் உருத்துத்தள்ள ஓய்ந்துபோய்க் கட்டிலிலே சாய்ந்திருக்கிறான். ஐயையோ! உன் மகனையே கொன்று விட்டார்களா? என்று ஓங்கிக் கத்தினான் சின்னச்சாமி. யாருக்கோ கேடு நினைத்தேன். அது எனக்கே விடிந்தது. முன்னிரவு அடுத்தவனுக்குக் கேடு நினைத்தேன். பின்னிரவு வரவில்லை. எனக்குக் கேடு வந்துவிட்டது. இனி அழுது அழுது புண்ணானாலும் பயன்படுமா? என்று பெருமூச்சுடன் கூறிமுடித்தான் மலையப்பன். ஏ! கொண்டுவா மகனை! ஏ! கொண்டுவா மகனை! கொன்றா போட்டாய் என்னும் கூச்சல் மீண்டும் சிறைக் கம்பியைத் தகர்ப்பதுபோல் வெளிக்கிளம்பியது. அவள்தான் என் மனைவி பணப்பெட்டி என்று கூறினான் மலையப்பன். உன் மனைவியா? என்று வாயை மூடிக்கொண்டான் சின்னச்சாமி. பேச்சு ஒடவில்லை. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்று பாடிக்கொண்டு சிறைக்காவலன் காளை சின்னச்சாமி பக்கம் வந்துகொண்டிருந்தான்.  4. உருவும் நிழலும் யாழ்ப்பாணத்திலே அறிவானந்த நிலையம் தோன்றியது பெருவியப்பாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்னர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த கட்டிடம் மூன்றடுக்கு மாளிகையாகிவிட்டது என்றால் வியப்புத்தானே! அதற்கு முன் செல்வங்கொழித்துக் கொண்டு இருந்த துணிக்கடைகள் எல்லாம் அறிவானந்த நிலையம் தோன்றியபின் படுத்து விட்டன. அவர்களுக்கெல்லாம் அறிவானந்த நிலைய எழிலையும், விற்பனையையும் பார்க்கப் பார்க்க வயிற்றெரிச்சலாக இருந்தது. அறிவானந்த நிலைய வளர்ச்சிக்குக் காரணம் அறிவானந் தரின் பணம் மட்டும் அன்று, குணமுந்தான் என்று கூறாதவர் இல்லை. அறிவானந்தர் பெரும்பாலும் கல்லாவிலேதான் உட்கார்ந்திருப்பார். ஐயா, வாருங்கள்; வாருங்கள், ஏ! பையா! ஐயாவை உட்காரச் சொல்; என்னய்யா, ஐயாவைச் சீக்கிரம் கவனித்து அனுப்பும் என்று வந்தும் வராதும் இருக்கும்போதே தடபுடலாக மரியாதைச் சொற்களை அள்ளி வழங்குவார். என்னங்க அம்மா! வாங்க, வாங்க! என்ன நெடு நாட்களாக இந்தப்பக்கம் காணவே இல்லையே! பையா! ஏண்டா நிற்கிறாய்; அம்மாவைக் கவனி என்று எத்தனையோ ஆண்டுகள் வாடிக்கைக்காரர் போன்று பேசுவார். அவர் அன்பு மொழிகளிலும், அமைந்த விழிகளிலும், புன் சிரிப்பிலும் அமையாது இருக்க எவரும் முடியாது. அறிவானந்த நிலையத்திற்குள் நுழைந்து துணி எதுவும் எடுக்காமல் போகவேண்டுமானால் நான் இந்தக் கடையில் எதுவும் எடுக்கப் போவதே இல்லை; சும்மா சுற்றிப்பார்க்கவே வந்தேன் என்னும் நோக்கம் உடையவராகவே இருக்கவேண்டும். அறிவானந்த நிலையம் தோன்றி ஐந்தாண்டுகள் நிறைந்து விட்டன. அன்று புதுக் கணக்குப் போடும் நாள். கடையில் இருந்த பரபரப்பையும் வரவேற்பையும் சொல்லிமுடியாது. வாடிக்கைக்காரர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். புதுக்கணக்குக்குக் கொண்டு வந்திருந்த ரூபாய்களை எண்ணிப் பார்த்து எழுதிக்கொள்ளவே கணக்கரால் முடியவில்லை. அன்று அறிவானந்தர் கல்லாவிலேயா உட்கார்ந்திருந்தார்? ஐம்பது வயதைத் தொடும் அவர் பதினைந்து வயதுக் குமரனாக அல்லவோ கடை முழுவதும் ஓடியாடித் திரிந்தார். அன்று நிலையத்திற்கும் பெருஞ் செலவு; கூட்டமும் பெருத்த கூட்டம். புதுக்கணக்குக்கு வந்தவர்களுள் சந்நியாசியும் ஒருவர் இருந்தார். எடுப்பான தோற்றமும், காவியுடையும், உருத்திராக்க மாலையும், திருநீற்றுப் பூச்சும் எல்லோரையும் கவர்ந்தது. அவரும் புதுக்கணக்குப் போட வந்தவர்களுள் ஒருவராக இருந்தபடியால் அடிகளே முதல் கணக்கை எழுதட்டும் என்று கூறி அவரைப் பெருமைப் படுத்தினர். ரூபாய் 100 என்று எழுதிப் புத்தம் புதிய நோட்டு ஒன்றினை அறிவானந்தரிடம் தந்தார். கூட்டம் வியப்படைந்தது. ஆமாம்! தெருவெங்கும் அரிசியும் காசும் வாங்கித் திரிந்த திருவோட்டுச் சந்நியாகி, புதுக்கணக்குக்கு ரூபாய் 100 எழுதுகிறார் என்றால் நடக்கும் செயலா? அறிவானந்தர் மெய் மறந்து போய்ச் சந்நியாசியையே நோக்கிக் கொண்டிருந்தார். பணத்தைப் பெட்டியினுள் வைப்ப தற்குக்கூட நினைவு இன்றி இருந்தார். அவர் முகத்தில் இருந்த வியப்புப் போய்த் திகைப்பு ஏற்பட்டதை அங்கிருந்த பலர் அறியமுடியாமல் போய்விடவில்லை. சந்நியாசி போட்டிருந்த கையெழுத்தைப் பார்க்கப் பார்க்க என்னவோபோல் இருந்தது. உள்ளம் ஊசலாடியது; பேரதிர்ச்சி ஒன்று உருவாகியது. இருப்பினும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு காரியங்களைக் கவனித்தார். உணர்ச்சியற்ற பொம்மையின் நடமாட்டமாக அவர் நிலை இருந்ததே அல்லாமல் உணர்வுடைய அறிவானந்தராக அவர் இருக்க வில்லை. புதுக்கணக்கு முடிந்தது. அறிவானந்தரின் அமைதியும் தொலைந்தது. எப்பொழுதும் சந்நியாசியின் உருவம் கண்முன் நின்றுகொண்டே இருந்தது. ஓரொரு வேளை மறந்தாலும், கல்லாவுக்கு வந்தவுடன் கையெழுத்து சந்நியாசியை நினை வூட்டத் தவறுவது இல்லை. ஐயா, புதுக்கணக்குக்குப் பின் உங்கள் நிலைமை ஏதோ ஒருவாறு இருக்கிறது. முன்னைப்போல் மகிழ்ச்சியாக நீங்கள் இருக்கவே இல்லை. உண்பது உறங்குவதுபற்றிச் சிறிதும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை; எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார் கணக்கர். ஒன்றும் இல்லை; ஒன்றும் இல்லை என்று மழுப்பினார் அறிவானந்தர். ஏதோ இருக்கிறது, மறைக்கிறீர்கள் என்றார் கணக்கர். உலகமே இப்படித்தான் இன்பமும் துன்பமும் பேச்சை முடிக்காமலே பெருமூச்சுவிட்டார் அறிவானந்தர். உங்களைப் பல நாட்களாகப் பார்த்து வருகிறேன். எனக்கு மிகுந்த வேதனையாகவே இருக்கிறது. என்ன காரணம் என்று கண்டுபிடிக்கவும் முயன்றேன். யாரும் என் அறைக்கு வரக்கூடாது என ஆணை பிறப்பித்திருந்தாலும் உண்மையை அறியவேண்டும் என்பதற்காகப் பல நாட்கள் இரவுப் பொழுதுகளில் தங்கள் அறைப்பக்கம் ஒளிந்து இருந்திருக்கிறேன். சந்நியாசி சந்நியாசி என்றும், கோவிந்த தேவ் என்றும் உளறினீர்கள். அந்தச் சந்நியாசியைக் கண்டது முதல் தான் உங்கள் வாழ்வில் கலக்கத்தைக் காணுகின்றேன். அவனைக் காணும் போதெல்லாம் புலியைக் கண்ட புள்ளி மான்போல் அஞ்சி ஒடுங்குகிறீர்கள். என்று இரக்கமும் அழுத்தமும் சேரக்கூறினார் கணக்கர். கணக்கர் வேலைக்கு வந்து ஐந்தாறு மாதங்கள் கூட ஆகாவிட்டாலும் கடைச் சிப்பந்திகளில் எவருக்கும் இல்லாத அளவு அறிவானந்தரிடம் சலுகையும் உரிமையும் உண்டு. முதலாளியினிடத்துத் தொழிலாளி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கற்க எங்கோ அலையவேண்டாம். அறிவானந்தர் கடையில் இருக்கும்போது கணக்கர் நல்லுசாமி நடந்து கொள்ளும் முறையை ஒருநாள் இருந்து பார்த்தால் போதும்; இத்தகைய கணக்கரைப் பிடிக்காமல் போகுமா? கணக்கரே! எனக்கும் சந்நியாசிக்கும் என்ன இருக்க முடியும்? அவனைக் கண்டு அஞ்ச வேண்டியது என்ன இருக்கிறது? என் மேலுள்ள அன்பால் கேட்கிறீர்; நான் என்ன அதனை அறியமாட்டேனா? நம் கடைக்கு வந்து போகும் சந்நியாசி, உண்மை சந்நியாசியல்லன்; பெரிய கொள்ளைக் காரன்; அவனைப் பகைப்பதும் கேடு; அவனை உறவாக்கிக் கொள்வதும் கேடு. அவனைப் பார்க்கும்போதெல்லாம் என்னை அறியாமலே ஒரு படபடப்பு உண்டாகத்தான் செய்கின்றது. என்ன செய்வது என்று பேச்சைச் சுருக்கிக்கொண்டார் அறிவானந்தர். அறிவானந்தர் பேச்சுக்குக் கணக்கர் தலையை ஆட்டிக் கொண்டிருந்தாரே ஒழிய, உண்மை என்று அவருள்ளம் ஒப்புக்கொள்ளவில்லை. இருந்தாலும், மேலும் கேட்பது தவறு என்று விட்டுவிட்டார். சில நாட்களாகச் சந்நியாசி கடைக்கு வரவில்லை. அறிவானந்தர் சற்று அமைதியாகக் கூட இருந்தார். ஆனால் அவ்வமைதி நீடிக்கவில்லை. ஒருநாள் காலையில், அறிவானந்தரின் குளிப்பறைக்கு முன்னால் வந்து நின்றார் சந்நியாசி. இதனை ஆனந்தர் எதிர்பார்த்திருக்கமாட்டார்! என்ன இங்கே? என்று படபடப்புடன் கேட்டார். சந்நியாசியைக் கோபத்துடன் கேட்ட முதல் கேள்வியே இதுதான். சந்நியாசி சிறிதும் பொருட்டாக நினைக்கவில்லை. புன்சிரிப்புச் சிரித்துக்கொண்டே அவசரம் இல்லாமல் இல்லை; உங்களைச் சில நாட்களாகப் பார்க்க முடியவில்லை. பார்க்க வேண்டும்போல் இருந்தது; வந்தேன்; தொல்லைக்கு மன்னிக்க வேண்டும்; நலம்தானே என்றார். நலத்திற்கு ஒன்றும் வந்துவிடவில்லை என்று சிறிய துண்டால் பெரிய தொப்பையை மறைத்துக் கொண்டு தம் அறைக்கு விரைந்தார். சிறிய துண்டு தொப்பையில் பரவிக்கிடந்த அகன்ற மச்சத்தை மறைத்து விடவில்லை. சந்நியாசியின் முகத்திலே அதற்குமுன் இல்லாத தெளிவு ஒன்று நடனமாடியது. காணாததைக் கண்டவர்போல் களிப்புடன் நடந்தார். அறிவானந்தர் உடல் ஆட்டம் கண்டுவிட்டது. அச்சத்தினால் காய்ச்சலும் நோவும் தலைதூக்கி விட்டன. பல நாட்கள் படுத்துவிட்டார். தனியறையை விட்டு வெளியேறுவதே இல்லை. உலகம் ஒரே இருள் மயமாகவே தோன்றியது. எத்தனை எத்தனையோ வாடிக்கைகாரர்களோடு முகமலர்ந்து பேசி இன்புற்ற வாழ்வு மூலையிலே முடங்கிவிட்டது. என்னென்னவோ பழைய நினைவுகள் கிளம்பிச் சாக்காட்டுப்பறை அடித்தன. இன்னும் இங்கிருக்க வேண்டாம்; இருந்தால் சந்நியாசி விட மாட்டான். உயிர் பெரிதா? பொருள் பெரிதா? என்று சிந்தித்தார். ஒரே முடிவு - ஓடினால் அன்றித் தப்பிப் பிழைக்க முடியாது. என்று மாடியிலிருந்த தனி அறையிலிருந்து உள் வாசல் வழியாகக் கடைக்கு வந்தார். எப்பொழுதும் கடைக்குள் திடுமென நுழையமாட்டார். கடைமுழுமையையும் வெளியே யிருந்து உற்றுநோக்கியறிந்து கொண்டுதான் நுழைவார். அதற்கு உதவியாக இருந்தது கதவு இடுக்கு ஒன்று. வழக்கம்போல் கடையை உற்று நோக்கினார். மயிர்க் கூச்செறிய நின்றார். காரணம் கணக்கரோடு சந்நியாசி நின்று கொண்டிருந்தார். அறிவானந்தர் துளைவழி நோக்குவதைக் கணக்கரின் பூனைக் கண்கள் நொடிப்பொழுதில் கண்டுவிட்டன. சந்நியாசியினிடம் ஏதோ கூறிவிரைவாய் அனுப்பிவிட்டார் கணக்கர். அனுப்பும்போது ஒரு காலோடு மற்றொரு காலைச் சேர்த்து டக் என்று அடித்து வலக்கையை நெற்றிக்கு நேராகத் தூக்கி விரைப்பாகச் செலுத்திய வணக்கம் அறிவானந்தரை அசைத்தது. என்னைத் துயர் சூழந்துகொண்டு விட்டது. எவன் ஒருவனுக்குச் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்று எண்ணினேனோ, அவனே சந்நியாசிக்குத் துணையாளனாகவும் இருக்கிறான்; எவரிடமும் சொல்லாமல் ஓடிவிடுவதே வழி என்று துணிவு கொண்டார். கல்லாவுக்குப் போகாமலே பின்பக்க வழியாகக் கடையை விட்டு வெளியேறினார். ஈழத்திலிருந்து புறப்பட்ட கப்பல் தனுக்கோடியை அடைந்தது; கப்பலிலிருந்து இறங்கியவர்கள் சுங்கச் சாவடிக்கு நடந்தனர். அறிவானந்தரும் நடந்தார். வேறு வழியாகவும் போய்விடலாம் என்றும் எண்ணினார். வழி யொன்றும் தெரியவும் இல்லை. மாற்று வழியில் போனால் எவரேனும் சந்தேகப் படக்கூடும் என்னும் எண்ணமும் தலை தூக்கியது. சுங்கச்சாவடியின் வாயிலிலே சந்நியாசி நிற்பார் என்று எண்ணியிருப்பாரேயானால் கப்பலில் வரும்பொழுதே கடலில் வீழ்ந்து தப்பியிருப்பார் அல்லது செத்திருப்பார். சந்நியாசியும் கணக்கரும் தான் வந்த கப்பலின் அடித்தளத்திலே தான் இருந்திருக்கிறார்கள் என்பதை அவர் அறியமாட்டாரே! சந்நியாசியைக் கண்டவுடன் ஓடித் தப்புவதற்குத்தான் உணர்ச்சி ஏற்பட்டது. அதற்குள் மன்னிக்க வேண்டும்; இந்த நாட்டின் சட்டப்படி உங்களைக் கைது செய்கிறேன் என்று கொண்டு சீட்டியடித்தார். கைவிலங்குடன் வந்தார் கணக்கர். அறிவானந்தர் அமைதியாகிவிட்டார். ஆரவாரித்துக் கிடந்த உள்ளக்கடல் அமைதியாயிற்று. இனி தப்பமுடியாது என்பதே அமைதிக்குக் காரணம். என் கடமையை நிறைவேற்றுவதற்காகவே உங்கள் கடைக் கணக்கனாக வந்தேன். மன்னிக்கவேண்டும். நான் துப்பறியும் துறையில் பணிபுரிபவன். இவர் எங்கள் அதிகாரி என்று சந்நியாசியைச் சுட்டிக் காட்டினார் கணக்கர். எல்லாம் விளங்குகின்றது என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் அறிவானந்தர். எங்களுக்கு இதயமும் இருக்கின்றது அதே பொழுதில் கடமையும் இருக்கின்றது. என்றார் சந்நியாசிக் கோலத்தைக் களைந்து கொண்டிருந்த அதிகாரி. பின் உரையாடல் தொடங்கியது. சாரதேவ் உங்கள் பெயர்தானே? ஆமாம் காசிப்பூரில் கடை வைத்திருந்தீர்கள் அல்லவா! ஆமாம் கூட்டு வியாபாரம்தானே? ஆமாம் கூட்டாளியின் பெயர்? பெயர்... கோவிந்த தேவ் இல்லையா? ஆமாம் ஆயிரம் முதல் போட்ட நீங்கள் எட்டாண்டுகளிலே ஐந்தாறு லட்சம் தேடினீர்கள் இல்லையா? ஆமாம் கோவிந்த தேவ் வியாபாரம் காரணமாக வெளி நாடு சென்றிருந்த நேரம் கடையை மூடிவிட்டு இருந்த பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டீர் உண்மை வங்கத்திலே அரவிந் என்னும் பெயரோடும். சென்னையிலே குணசேகர் என்னும் பெயரோடும், கண்டியிலே குணதிலகா என்னும் பெயரோடும் இருந்தது நீர்தானே. முற்றிலும் உண்மை என்னை இன்னார் என்று முன்னரே அறிவீரா? இதோ என்று இரண்டு தாள்களை நீட்டினார் சாரதேவ் என்னும் அறிவானந்தர். அவற்றில் சாரதேவ் தலைமறைவாகி விட்டார்; கூட்டு வாணிகத்தில் கொள்ளை; போலீசார் தேடுகின்றனர் என்னும் செய்தி ஒரு தாளிலே இருந்தது. மற்றொன்றில் துப்பறியும் அதிகாரியின் புகைப்படம் இருந்தது. அதிகாரி திகைத்துப் போனார் தம் படத்தினைப் பார்த்தவுடன். இதனை எப்படிச் சம்பாதித்தீர்? என்றார். நான் குற்றவாளி; பல வகைகளில் குற்றவாளி. ஒவ் வொன்றையும் விளக்கிக்கூறும் நிலைமையில் இல்லை. குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். சரி, கோவிந்த தேவ் என்ன ஆனார் என்று தெரியுமா? தெரியாது இதோ பாரும் என்று ஒரு படத்தினைக் காட்டினார் அறிவானந்தர் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும்போல் ஆனது. கோவிந்ததேவ் தலைவேறாக, கால் கைகள் வேறாகத் துண்டிக்கப்பட்டுப் புகைவண்டிப் பாதையிலே கிடக்கும் நிலையைக் காட்டும் படம் அது. இக்கடிதத்தைப் படியும் என்று அதிகாரி அறிவானந்தரிடம் நீட்டினார். சாரதேவ்! என் உயிர் நண்ப! கூட்டுவணிகத் தோழமை கருதி என் பொருளையெல்லாம் கொள்ளை கொண்டாய். என் பொருள் மட்டும் போதுமா? என் உயிரையும் கொண்டு போக மறந்துவிட்டாயே. அன்பா கேள்; நன்றாகக் கேள். என் உயிர் ஒரு நொடியில் போகிவிடும், அதற்கு ஆயத்தமாகிவிட்டேன். நொடி நொடிதோறும் செத்துப் பிழைக்க இருக்கும் உன்னை நினைக்கத் தான் வேதனையாக இருக்கிறது. உன், கோவிந்த தேவ். பித்துக்கொண்டவர் போலானார் அறிவானந்தர். கோவிந்ததேவ், கோவிந்ததேவ் கொடுமை, கொடுமை என்று கத்தினார். வாயைப் பொத்திக்கொண்டு விம்மினார். அதிகாரியால் அறிவானந்தர் முகத்தைப் பார்க்க முடியவில்லை. கணக்கர் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார். கடமை குறுக்கிடாவிட்டால் ஓவென்று கதறியிருப்பார். கரும்புகையைக் கக்கிக்கொண்டு புகை வண்டி வந்தது. மன்னிக்க வேண்டும்; எங்கள் கடமையை ஆற்றுவதில் இனிக் கருணையை எதிர்பார்க்க இயலாது. இவ்வண்டியிலே நாம் புறப்படவேண்டும் என்றார் துப்பறியும் அதிகாரி. நல்லது-அறிவானந்தர் வாய் பேசியது. பார்வை எங்கோ இருந்தது. வண்டி இன்னும் நிற்கவில்லை. எந்தப் பெட்டியில் ஏறுவது என்று அதிகாரியும் பணியாளும் நோக்கினர். அந்தச் சந்தடியிலே சாரதேவ் வேறொன்றை நோக்கினார். ஆம்! ஒரு கணப்பொழுதில் சாரதேவ் தலையும் உடலும் வெவ்வேறாகத் துண்டிக்கப்பட்டு விட்டன. ஓ வென்று கதறினார் அதிகாரி. கன்னத்திலே கை வைத்துக்கொண்டு உட்கார்ந்தார் கணக்கராக இருந்த துப்பறியும் பணியாள். கோவிந்ததேவ் படத்தை எடுத்துப் பார்த்தார் அதிகாரி. துண்டிக்கப்பட்டுத் தண்டவாளத்தருகே கிடந்த சாரதேவ் உடலையும் பார்த்தார். மாறி மாறிப் பார்த்துக்கொண்டு இருந்தார். தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று.  5. நொண்டித் தாத்தா நொண்டி, நொண்டி என்று சொல்லிக்கொண்டே சில சிறுவர்கள் ஓடினர். நொண்டித் தாத்தா! பாரும். எங்கள் நடை எப்படி? என்று சிலர் நடந்து காட்டி ஏளனம் செய்தனர். நாலைந்தாகப்போன பற்களோடு முகமலர்ந்து சிரித்துக் கொண்டு நடந்தார் கிழவர். முழங்காலுக்குக் கீழே துண்டிக்கப்பட்டுக் காலுக்குப் பதில் மரத்தினால் கால் செய்து வைத்துத் தண்டூன்றிக்கொண்டு திண்டாடித் திண்டாடி நடக்கும் அவரைக் கண்டு இரக்கம் காட்டுவதற்குப் பதில் ஏளனம் காட்டுவது சிறுவர்களின் அறியாமையால்தான். இருந்தாலும் அதைப் பற்றிப் பொருட் படுத்தா உள்ளம் கிழவருக்கு உண்டு-நாள்தோறும் நடை பெற்று வந்த நிகழ்ச்சிகள் அதை உண்டாக்கிவிட்டன என்பதும் பொருந்தும். எத்தனை நாட்கள்தான் கேலி செய்பவர்களை விரட்டித் திரியமுடியும்? துள்ளித் திரியும் சிட்டுப்போன்ற அவர்களை வெருட்டி வெருட்டிக் கீழே விழுந்து கேவலப் படவும் வேண்டுமா? கேலிச் சிரிப்புக்கு ஏற்பப் பதிலுக்கும் சிரித்துவிட்டால் போகிறது. வேறென்ன செய்வது? சிறுவர்கள் கேலி, அடிபோல் வலிக்கவா செய்கிறது? என்று எண்ணிக் கொண்டு சிறுவர்களோடு சிறுவராகச் சேர்ந்து சிரித்துக் கொள்வார். ஆம்! புன்முறுவலும் இன்சொல்லும் அவர் சொத்துக்கள் ஆகிவிட்டன. நாகையா என்பது நொண்டிக்கிழவர் பெயர். அவர் தலையிலே ஒரு பெரிய சுமையை வைத்துக்கொண்டு நடந்தார். ஏதேனும் வேலை செய்து கூலி பெற்றுக்கொண்டு வயிற்றை வளர்ப்பதுதான் அவர் தொழில். அவருக்கு வீடும் இல்லை; உற்றார் உறவினரும் இல்லை. பகலிலே ஆலமரத்தடி-இரவிலே மடம். இவையே நாகையாவின் வீடு. நாகையா நினைத்திருந்தால் உயரிய வாழ்வு நடத்தியிருக்கலாம். ஆனால் நாகையாவின் மான உணர்ச்சி விடவில்லை. தள்ளாடித் தள்ளாடி நடக்கும் அவர் தலையிலே பெருஞ் சுமையும் இருந்தால்? பெருந்திண்டாட்டம் தானே! ஆனால் கிழவருக்கு வழக்கமான புன்முறுவல் அன்றிச் சுமைத்துயர் இல்லை. நெஞ்சச் சுமை இருந்தால்தானே தலைச்சுமை கடுக்கும்? நடந்துகொண்டிருந்தார். வழக்கமாகத் தொடரும் சிறுவர்கள் தொடர்ந்தனர். நொண்டித்தாத்தா! நொண்டித்தாத்தா! என்று கத்திக்கொண்டும், நையாண்டி நடை நடந்துகொண்டும் பின் தொடர்ந்தனர். ஒரு சிறுவன் கிழவரை மிக நெருங்கிச் சென்று நொண்டி நொண்டி நடந்தான். எப்படித் தாத்தா, என் நடை? என்று கேட்டான். ஓ ஓ! நாகப்பனா? வாடா வா! நீயும் இந்தக் கூட்டத்தில் இருக்கிறாயா? அழகு அழகு! என்று சிரித்துக் கொண்டு நடந்தார். ஆமாம், நொண்டித் தாத்தா! என் நடை எப்படி? என்று மேலும் கேட்டான் நாகப்பன். மெதுவாக வந்துகொண்டிருந்த (இன்னியங்கி) மகிழ்வுந்து ஒன்று நாகையா, நாகப்பன் இவர்களுக்கு முன் வந்து நின்றது. நாகப்பன் இன்னியங்கியின் எண்ணைக் கண்டவுடனே திகைத்துப் போனான். அவனுடைய தந்தையார், டாக்டர் அரசுவின் இன்னியங்கி அது. தன்னை என்ன செய்வாரோ? என்னும் எண்ணத்தால் முகத்தில் கவலைக் கோடுகள் படர்ந்தன. தலையைத் தாழப் போட்டுக்கொண்டு கால் விரலால் தரையில் கோடு போட்டுக்கொண்டிருந்தான். டாக்டர் அரசு பொறுமையாளர், அருள் மிக்கவர் என்று வட்டாரமே அறியும். இருப்பினும் நாகப்பன் செயலைக் கண்டு உணர்ச்சிவயப்பட்டு விட்டார். இயங்கியைவிட்டுக் கீழே இறங்கினார். பளார் பளார் என்று கன்னங்களிலே ஐந்தாறு போடு போட்டார். நாகப்பன் கையைப் பிடித்துப் பர பர வென இழுத்துக்கொண்டு போய் இயங்கியினுள் தள்ளிக் கதவைச் சாத்தினார். வேண்டாம், வேண்டாம்; விளையாட்டுப் பையன். அவனுக்கு என்ன தெரியும்? என்று நாகையா தடுத்துப் பார்த்தார். அவர் சொற்களை டாக்டர் பொருட்படுத்தவில்லை. நாகையாவை ஏறிட்டுப் பார்க்கக்கூட இல்லை. விர்ரென்று இயங்கியை அழுத்தினார். நாகப்பனுக்கு வயது பதின்மூன்று ஆகிவிட்டது. நான்காம் படிவம் படித்துக்கொண்டிருந்த அவனை அரசு கை நீட்டி அடித்த நாளே கிடையாது. இப்படி அடிக்கும் வேளை ஒன்று வரும் என்று கனவில்கூட நினைத்திருக்க முடியாது! நாகப்பனை அடித்த அடியை அவராலேயே பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. நாகப்பன் அழுது கண்ணீர் வடித்ததற்கு மேலாகவே அவர் கண்ணிர் வடித்தார். இயங்கியை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்று இடியுண்ட மரம்போலப் படுக்கையிலே சாய்ந்தார். அழுது அழுது முகமும் வீங்கிவிட்டது. நாகப்பன் அரசுமீது பெருங்கோபம் கொண்டுதான் இருந்தான். இப்படியா அடிப்பது? அவருக்குக் கையில் வலிமை இருக்கிறது என்பதை என்னிடம்தானா காட்டவேண்டும் என்று எண்ணி ஏங்கினான். எதுவுமே பேசாமல் ஒரு மூலையில் போய் முடங்கிக்கொண்டான். இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்; இவருக்கு நாம் என்ன இளைப்பு என்று அடம்பிடித்துக்கொண்டு எழுந்திருக்கவே இல்லை. நேரம் சென்றது; மாலைப் பொழுது போகி இருளும் கப்பியது; மணி, அணு அணுவாக நகர்ந்து பன்னிரண்டு ஆகியது. நாகப்பன் அசையவில்லை. பசி பிடுங்கியது. நரம்புகள் இழுத்தன. ஆனாலும் வைராக்கியம் விட்டு வைக்குமா? எதுவும் வேண்டாம் எனக்கு? இப்படி அடிவாங்கிக்கொண்டு மான மில்லாமல் எழுந்திருக்கவா? என்று எண்ணிக்கொண்டே புரண்டு புரண்டு படுத்துக்கொண்டான். ஆனாலும் நாகப்பனையும் அசைத்துவிட்டது. அரசுவின் நிலைமை. படுத்ததிலிருந்து எழுந்திருக்கவே இல்லை. தேம்பித் தேம்பிச் சிறுபிள்ளைபோல அழுது அழுது கண்ணீரை ஒழுக விட்டுக்கொண்டு இருந்தார். அடித்துவிட்ட தவறுக்காகவே அரசு அழுகின்றார் என்பதை நாகப்பன் உணர்ந்து கொண்டான். அடி, சிறிது சிறிதாக மறையலாயிற்று. தந்தை என்னும் பற்று அரும்பலாயிற்று. அப்பொழுது தன் உடல், வலியைப் பார்க் கிலும் தந்தையரின் உள்ள வலியே மிகுதியான கொடுமையாகத் தெரிந்தது. இரவெல்லாம் கழிந்து விடியும் நேரமும் வந்து விட்டது. நாகப்பனை இளக்கவுள்ளம் வாட்டத் தொடங்கியது. தந்தையாரின் கட்டில் அருகே சென்றான். அப்பா, மன்னித்துவிடுங்கள் அப்பா! அறியாமல் செய்துவிட்டேன். இனி ஒருநாளும் இப்படிச் செய்ய மாட்டேன் என்று கசிந்து கண்ணீர் வழியக் கூறினான். நாகு! நாகு! கொடியவன் நான்; ஆத்திரத்தில் அறிவு கெட்டுவிட்டேன். உன் பிஞ்சுக் கன்னத்தில் எத்தனை அறைபோட்டேன்; ஐயோ! என்று தன் கன்னங்களில் படார் படார் என்று இரண்டு மூன்று போடு போட்டார். தாவிப்பிடித்து அணைத்துக் கொண்டான் நாகப்பன். நாகப்பா! உனக்கு ஏன் நாகப்பன் என்று பெயர் வைத்தேன் தெரியுமா? உன் நொண்டித் தாத்தாவின் பெயரடா, உன் பெயர்! நாகையா செய்த செயற்கரிய செயல் ஒன்றுக்காகவே அவர் பெயரை உனக்கு வைத்தேன் என்றார் டாக்டர் அரசு. என் பெயர் நாகையாவின் நினைவுப் பெயரா? என்று வியப்போடு கேட்டான் நாகப்பன். இதோ பார்! என்று சொல்லிக்கொண்டு அரசு எழுந்து சென்றார். ஒரு படத்துடன் திரும்பினார். இந்தப்படம் வாயிலின் முகப்பில்தான் இருந்தது. ஆனால் இதனைக் காணக் காண என்னால் வேதனை தாங்க முடியவில்லை. இதனைப் பெட்டியினுள் போட்டு மறைத்து விட்டேன். வெளியே எடுப்பதே இல்லை. இது யார் படம் என்று நினைக்கிறாய்? உன் நொண்டித் தாத்தா படம். நொண்டித் தாத்தா படமா? அவரா இப்படி இருக்கிறார்? ஆம், நல்ல காளைப் பருவத்தில் அவர் இப்படித் தான் இருந்தார். என்ன உடல் வாய்ப்பு! இவர் நொண்டியானது ஏன்? ஏனா? இந்தப் பாவியால்தான்! எனக்கு அப்பொழுது வயது ஏழு. குறுக்குச்சாலையைக் கடந்து கடைக்கு ஓடினேன். சாலையைச் சிறிதும் பார்க்கவில்லை. கொடுமையான விரைவில் மோட்டார் ஒன்று ஓடி வருவதைக் கண்டு கலங்கினேன். திக்குமுக்காடி நெளிந்தேன். காரோட்டியும் எவ்வளவோ முயன்றான். ஆனால் அவன் வளைத்துத் திருப்பிய பக்கமே நானும் ஓடினேன். ஆம்! நான் மோட்டார் சக்கரங்களுக்கு இடையே மாட்டிக்கொள்வது தவிர்த்து வேறு வழியே இல்லை. அப்போழுது அவ்வழியே வந்திருக்கிறார் நாகையா! தன்னுயிரைப் பொருட்படுத்தாது உள்ளே பாய்ந்து என்னைத் தூக்கித் தூர எறிந்தார்! பாவம், அவர் காலுக்குக் கீழ்க் கிடந்த வாழைப்பழத்தோல் ஒன்று வழுக்கிவிட நாகையாவின் கால் ஒன்று மோட்டார் சக்கரத்திற்கு இடையே மாட்டிக்கொண்டு நைந்துவிட்டது. எனக்கு உயிர் தந்த அந்த உத்தமர் இந்தப் பாவி யாலே காலை இழந்தார்; நொண்டியும் ஆனார் என்று பெருமூச்சுகளுக்கிடையே பழங்கதையைச் சொன்னார் டாக்டர் அரசு. அமைதி நிலவியது சிறிது நேரம். ஆண்டுகள் சில கடந்தன. நான் கல்லூரியில் படித்தேன்; மருத்துவத் தொழில் தொடங்கினேன். நல்ல வருவாயும் வரத் தொடங்கியது நாகையாவை மன்றாடி அழைத்து, என்னுடன் வந்து இருக்குமாறு வேண்டினேன். உங்களுக்குத் துணையாக வேறு எவரும் இல்லையே பின் ஏன் வரத் தயங்கவேண்டும் என்று வற்புறுத்தினேன். அறவே வர மறுத்துவிட்டார் நாகையா. நான் செய்த உதவிக்குப் பதில் உதவியா? உண்மையான தொண்டு பயனை ஒரு நாளும் எதிர்பார்க்காது. எதிர் பார்த்திருந்தால் உண்மையான தொண்டாகவும் இருக்க முடியாது. என்று மறுத்துவிட்டார். என்ன செய்வது? அவர் முதுமைத் துயரையும், வயிற்றுப்பாட்டுக்காகப் படும் பாட்டையும் நினைத்து நெஞ்சம் வேகின்றது. எதுவும் செய்தற்கு முடியவில்லை என்று உள்ளம் நைந்து கூறினார் டாக்டர். தாத்தாவை நான் போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். என்னோடு வருகிறாரா? இல்லையா? அதைப் பார்த்து விடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு, பதிலை எதிர்பாராது நடந்தான் நாகப்பன். இமைகொட்டாது நோக்கினார் அரசு; உள்ளுக்குள் மகிழ்ச்சியும் தோன்றியது. நேற்றைக்கும் இன்றைக்கும் உள்ள மாற்றம் பெரிதல்லவா! உறங்கி முகத்தைத் துடைத்துக்கொண்டு எழுந்த நாகையா, நாகப்பா, என்னடா! இந்நேரம் இங்கே! உன் அப்பா பாவம், உன்னை நையப் புடைத்துவிட்டார். என்று கன்னத்தைத் தம் கையால் தடவினார். அந்த அன்புக்கரங்கள் தடவியவுடனே கண்ணீர் பெருக்கெடுத்தது நாகப்பனுக்கு. விம்மி விம்மி அழுதான். தாத்தா! என்னை அடித்துவிட்ட கவலையிலே அப்பா எழுந்திருக்கவே இல்லை; சாப்பிடவும் மறுத்து விட்டார். நானும் படுத்துவிட்டேன். உங்களைப் பார்த்து அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றுதான் இங்கு வந்தேன். தாத்தா, நான் அறிவில்லாதவன்; என்னை மன்னிக்க மாட்டீர்களா? என்றான். நாகப்பா என்றார். நாகையாவின் நா தளதளத்தது. நீங்கள் கண்டிப்பாக வீட்டுக்கு வரவேண்டும்; மறுக்கவே கூடாது. நீங்கள் வராவிட்டால் நான் வீட்டுக்குப் போகப் போவதே இல்லை. தலையைத் தாழப்போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் நாகப்பன். பெரு மூச்சுகளுக்கிடையே நடந்தார் நாகையா. நாகப்பன் பின் தொடர்ந்தான். நாகப்பா! வீட்டுக்கு வருவேன். ஆனால் அங்கேயே இருக்கமாட்டேன். இருக்குமாறு வற்புறுத்தவும் கூடாது என்று சொன்னார். வீடும் நெருங்கிவிட்டது. இரண்டு நாட்கள் கழிந்தன. நாகையா சொன்னார்; உழைப்பு இல்லாமல் என்னால் இருக்கமுடியாது. உழையாமல் உணவுக்குக் கேடாய் இருக்கும் வாழ்வு இழிவானது, வெறுக்கத் தக்கது; நான் இங்கிருக்கவேண்டுமானால் உழைப்பு வேண்டும் உங்களை வேலை வாங்கும் அளவுக்கு அழுத்த மான மனம்வர மறுக்கிறதே என்றார் அரசு. உழைப்பு இல்லாமல் உண்டுகொண்டிருக்கும் புழுத்த மனம் எனக்கு வர மறுக்கின்றது என்றார் நாகையா. பெருஞ்சிக்கலாக இருந்தது; உங்களுக்கு அழுத்தமான மனமும் வரவேண்டாம்; புழுத்த மனமும் வர வேண்டாம். நான் செய்கிறேன் வழி; இந்தத் தலைப்பாகையையும், சட்டையையும் மாட்டிக்கொள்ளுங்கள். இன்று முதல் நோயாளர் விடுதி மேற்பார்வையாளர் நீங்கள். உழைக்கு மட்டும் உழைத்துக் கொண்டிருங்கள்; போதுமா? என்றான் நாகப்பன். அரசு நாகப்பனை அணைத்துக்கொண்டார். நாகையா தலைப்பாகை, சட்டையை வாங்கிக் கொண்டு நோயாளர் விடுதிக்கு நடந்தார். அன்று விடுதியின் முகப்பிலே நாகப்பன் ஒரு பலகையை மாட்டினான், அதில் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்னும் குறள்மணி பொறிக்கப்பட்டிருந்தது. அதனைப் பார்த்து நாணத்தால் தலை கவிழ்ந்தார் நாகையா!  6. மேதை மாதவன் இவன் யார்? இவன் என் மகன் ஐயா! இவனை அழைத்துக்கொண்டு வந்தது? இவனுக்கு என் வேலையைத் தந்துதவ வேண்டும் என்று தங்களுக்கு மனுச் செய்திருந்தேன். உன் மகனை நேரில் கூட்டிக் கொண்டு வா என்று கட்டளை வந்தது. அதனால் அழைத்துக் கொண்டு வந்தேன். எனக்கு வயதாகிவிட்டது. என் கண்ணுள்ள போதே என் மகனுக்கு வேலைகிடைக்க உத்தரவு ஆகவேண்டும். சரி, இவன் என்ன படித்திருக்கிறான்? இரண்டு மூன்று ஆண்டுகள்தான் பள்ளிக்கூடம் போனான். என்னோடு பழகிக்கொண்டே வருவதால் வேலையில் அனுபவம் உண்டு. இவன் பெயர்? மாதவன் மாதவா! பதினேழு பைசா, எத்தனையணா, எத்தனை பைசா? பதினேழு பைசாவா; ஒரு அணா ஒன்பது பைசா. முட்டாள்; பதினேழு பைசாவுக்கு இத்தனை அணா இத்தனை பைசா என்றுகூடத் தெரியவில்லை. இவனுக்குக் கிராம அதிகாரி வேலை வேண்டுமாம். இந்த முட்டாளுக்கு நீர் வேண்டுமானால் வேலை தருமாறு கேட்கலாம்; ஊர், உலகம் ஒப்பவேண்டாமா? இரண்டு மாடுகளை வாங்கிவிடும்; மேய்த்துத் திரியட்டும் ஐயா எனக்கு ஒரே மகன். இவனுக்கு வேலை இல்லை என்றால் என் பரம்பரை வேலை போய்விடுமே என்ன செய்வேன்? அதற்காக அணாப்பைசாத் தெரியாதவனைக் கட்டிக் கொண்டு அரசாங்கம் அழ வேண்டுமா? இவனுக்கு வேலைதர முடியாது. இவனுக்குப் பிறக்கும் பிள்ளைக்குத்தான் வேலை. இந்த மண்டுக்குப் பிறக்கும் பிள்ளை எப்படித்தான் இருக்கும்? வேலை என்று இங்கு வர வேண்டாம். எவனுக்காவது ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இரும். தன் மகனுக்குக் கிராம அதிகாரி வேலை வேண்டும் என்று தாசில்தாரிடம் கேட்டுவந்த கிராம அதிகாரி ஐயப்பன் நிலைமை இவ்வாறானது. இந்த மண்ணைப் பெற்ற எனக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும்; என் பரம்பரையைக் கேவலப்படுத்தத் தானே என் வயிற்றில் பிறந்தாய் என்று தலையில் தலையில் அடித்துக் கொண்டார் கிராம அதிகாரி. தாசில்தார் உரை அவரைக் குத்திக் குடைந்தது. மாதவனையும், அவனுக்கு வேலையில்லை என்று ஆனதையும் நினைத்து நினைத்து நெஞ்சம் வெதும்பினார். வெதும்பல் கொடு நோயாக உருவாகியது. சாதாரண முட்டாளாக இருந்தால்கூடக் குற்ற மில்லை; சர்வ முட்டாளை என்ன செய்வது? என்று நோய்ப் படுக்கையில் கிடந்துகொண்டும் புலம்பினார். பல நாட்கள் அவர் இருக்கவில்லை. மாதவனுக்கு முட்டாள் பட்டம் நிலைத்துப்போனது. ஊரிலுள்ளவர்கள் எல்லாரும் தன்னை முட்டாள் என்றும், அறிவிலி என்றும் பேசிக்கொள்வதும் கேலி செய்வதும் மாதவனுக்குக் குழிப் புண்ணிலே கொள்ளிக்கட்டை செருகுவது போல் இருந்தது யார் என்ன சொன்னாலும் சொல்லிவிட்டுப் போகட்டும்; நான் ஒன்றும் முட்டாள் இல்லை. இதனை உறுதிப் படுத்திக் காட்டியே தீர்வேன். அப்படிக் காட்டவில்லை என்றால் நான் ஐயப்பன் மகன் இல்லை-மாடு-இருகால் எருமை மாடு! என்று வஞ்சினங் கூறினான். அவ்வளவு தூரம் அவனுக்கு கேவலமாகி விட்டது வாழ்க்கை! அப்பா! உங்கள் புதைக்குழிக்கு முன்னின்று கூறு கின்றேன். உங்கள் மகனை நீங்கள் என்னென்ன எண்ணிக் கொண்டும், சொல்லிக்கொண்டும் இறந்தாலும் சரி, அந்த முட்டாள் மகன் செத்துவிட்டான். இவன் புதியவன்; நினைத்ததை முடிக்கத் தவறாதவன் என்று ஐயப்பன் புதைக்குழிக்கு முன்னின்று கூறினான். மாதவன் புதியவன் ஆனான்; புதிய உணர்ச்சி; புதிய முயற்சி; வராத கணக்குப் பாடத்தை வரப்படுத்துவேன் என்னும் உறுதிப்பாடு; இவை போதாதா முன்னேற்றத்திற்கு? மாதவன் வீட்டில் இருந்துகொண்டே படிக்க எண்ணினான். உள்ளூரில் இருந்த ஆசிரியர் அழகுமுத்துவினிடம் சென்றான். தன் நிலைமையை எடுத்துக்கூறி மன்றாடினான். மாதவா! இனிமேல் நீ படிக்கவா? என்று அழகுமுத்து நகைத்தார். இனி உனக்குப் படிப்பு வரவே வராது என மறுத்தார். மாதவன் விடவில்லை. நீங்கள் ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிடுங்கள்; நான் அதனை மறுபடி செய்து காட்டாவிட்டாலோ, ஒப்பிக்கா விட்டாலோ, என்ன தண்டனை வேண்டுமானாலும் தாருங்கள். நான் பழைய மாதவன் இல்லை; மாட்டேன் என்று மறுத்து விடாமல் சொல்லித் தரவேண்டும் என்று அழாக்குறையாய் மன்றாடினான். ஆசிரியர் அழகு முத்துவுக்கு மாதவன் படிப்பான் என்னும் நம்பிக்கை சிறிதும் இல்லை. இருந்தாலும் பெரியவர் வீட்டுப் பிள்ளை என்னும் ஒரே ஒரு காரணத்தால் வேண்டா வெறுப்புடன் ஏற்றுக்கொண்டார். முன்பு பள்ளிக்கு வரும்போது ஏடு தொடங்கி வைத்தவர் அவர்தானே! மாதவனை அறியமாட்டரா என்ன? வீடு வேலை இவற்றையெல்லாம் மறந்து படிப்பே அடைக்கலமானான் மாதவன். தன்னை முட்டாள் ஆக்கிய கணக்குப்பாடத்தில் பெரிதும் கருத்துச் செலுத்தினான். எறும்பு ஊரிக் கல்லும் தேயும் என்பது பழமொழியல்லவா? அவன் முயற்சிக்குப் பயன்இல்லாமல் போய்விடவில்லை. கணக்கு நன்றாக வந்தது. பற்று ஏற்பட்டுவிட்டால் பாடம் சுமை யாகுமா? ஐந்தாறு ஆண்டுகளிலே கற்கவேண்டிய பாடங்களை ஓராண்டிலே படித்து முடித்தான். மேலும் ஊக்கம் வலுத்தது. பத்தம் வகுப்புத் தேர்வை வீட்டிலிருந்தே எழுத முடிவு கொண்டான். ஆசிரியரும் துணை நின்றார். அடுத்த ஆண்டிலேயே மாதவன் பத்தாம் வகுப்புத் தேர்வைச் சிறப்புடன் முடித்து விட்டான். என்ன இருந்தாலும் பெரிய மனிதர் பிள்ளை யல்லவா! ஏதோ சிறுபிள்ளையில் இருந்த அறிவு அப்படியேயா இருக்கும்! மாதவன் கெட்டிக்காரப் பிள்ளைதான் என்று பேசிக்கொண்டனர். சிலர் இனிக் கிராம அதிகாரி வேலைகூட எளிதில் கிடைத்துவிடும் என்றும் பேசிக்கொண்டனர். மாதவன் எண்ணம் மேற்படிப்பில் இருந்தது அல்லாமல் வேலையில் இல்லை. இதற்குள் மாதவனுக்கு இருந்த நிலத்தில் பெரும் பாலானவை விற்கப்பட்டு விட்டன. வீட்டுச் செலவுக்குத் தக்க வருமானம் இல்லை. வீட்டில் செலவழிக்க நிறையப் பேர் இருந்தனர். தேடுவதற்கு யாரும் இல்லை. உட்கார்ந்து சாப்பிட்டால் ஊர் சொத்தே காணாதே! ஒருவர் சொத்துக் கட்டி வருமா? நிலம் போனாலும் போகட்டும்; வீடு போனாலும் போகட்டும்; என் எண்ணத்தை முடிக்காமல் இருக்கவே மாட்டேன் என்னும் உறுதியுடன் மாதவன் கல்லூரியில் சேர்ந்தான். இரண்டு ஆண்டுகள் இராப் பகலாகச் சலியாது உழைத்து நுழைவுத் தேர்வுக்குச் சென்றான். அதில் மாநில முதல்மாணவனாக வரவேண்டும் என்பது அவன் ஆசை. ஆனால் இரண்டாவதாகவே வரமுடிந்தது. இருந்தாலும் தளர்ந்து போகவில்லை. இளங்கலைத் தேர்விலாவது முதல்வனாக வந்துவிடவேண்டும் என்று திட்டங்கட்டினான். இருந்த நிலமும் இதற்குள் விற்கப்பட்டுவிட்டது. வீடும் ஒத்திக்குப் போய்விட்டது. பிறர் உதவியை நாடுவதற்கும் முடியவில்லை. இந்நிலைமையிலே அரசாங்க உதவி தேடி வந்தது. மாதவன் மாநிலத்தில் இரண்டாவதாகத் தேர்ச்சி அடைந்ததைப் பாராட்டு முகத்தான் அவன் படிப்பு முடியும்வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று உத்தரவாகியிருந்தது. மாதவன் கவலையெதுவுமற்றுப் படிப்பிலே ஆழ்ந்தான். இவ்வளவு கூர்மையான அறிவாளியும் உண்டா? இவனே நன் மாணாக்கன் என்று பாராட்டாத பேராசிரியர் இல்லை. அந்த அளவுக்குப் பாடங்களில் தேர்ச்சியும், பண்பில் உயர்வும் கொண்டிருந்தான் மாதவன். அவன் எதிர்பார்த்தபடியே இளங்கலைத் தேர்வில் மாநில முதல்மாணவனாகத் தேர்ச்சி யடைந்தான். அதற்காக, அவனைப் பார்க்கிலும் அவன் பயின்ற கல்லூரியே பெருமிதம் கொண்டது. ஒருநாள். கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவர்களும் கூடி, மாதவனைப் பாராட்டியுரைத்துப் பரிசுகள் வழங்கினர். மாதவனை மாணவனாகப் பெற்றதால் இக்கல்லூரி பேறு பெற்றது என்று வியந்துரைத்தனர். இவ்வளவுக்கும் காரணம் பல்கலைக் கழகத் தலைவரே மாதவனைப் பாராட்டி எழுதி யிருந்ததுதான். கணக்குப் பாடத்தில் நம் மாநிலமே அன்றி இந்தியக் கண்டத்திலேயே மாதவன் முதல்மாணவனாகத் தேறியுள்ளான். அவனால் நம் பல்கலைக்கழகம் சிறப்படைந்தது. அவன் கற்று வந்த உங்கள் கல்லூரியை வாழ்த்துகின்றோம் என்று எழுதி இருந்தனர். மாதவன் புகழ் மேலும் ஓங்கியது. மாதவனுக்கு ஏதாவது வேலை பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் வந்தது. வீடு அந்நிலைமையில் இருந்தது. அரசாங்கத்திற்கு மனுச் செய்தார். எடுத்த எடுப்பிலேயே தாசில்தார் வேலை தேடிவந்தது. வேலை கிடைத்துவிட்டது என்று இறுமாந்து விடவில்லை. மேலும் மேலும் முன்னேறுவ தற்குத் தக்க வழிகளைத் தேடிக்கொண்டு வந்தார். கடமைகளைச் சிறிதும் தவறாது உடனுக்குடன் கவனித்தார். இரண்டோர் ஆண்டுகளிலே அவர் செயலாற்றலை அறிந்த அரசினர் துணைக் கலெக்டர் வேலைக்குத் உயர்த்தினர். மாதவன் போய் வேலைபார்த்த மாவட்டத்திலே அவ் வாண்டு பெருத்த மழை பெய்து ஒரே வெள்ளக்காடாகியது; பல ஊர்களும், தோப்புகளும், தோட்டங்களும் வெள்ளத்தால் இழுக்கப்பட்டு அழிந்தன. மக்கள் தப்பிப் பிழைக்கும் வழி அறியாது திண்டாடினர். வெள்ளத்தின் இடையே சிக்கிப் பல்லாயிர மக்கள் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருந்தனர். ஒருவர் இருக்கும் இடம் ஒருவர் அறியாமல் உற்றார் உறவினர் அலறித்தவித்தனர். வெள்ளப் பகுதிக்கு மாதவன் ஓடோடிச் சென்றார். உதவிச் செயல்களை உடனுக்குடன் செய்தார். உணவு, உடை, உறைவிடம் முதலானவற்றுக்குச் சங்கடப்படாதவாறு என் னென்ன செய்யவேண்டுமோ அவற்றையெல்லாம் குறைவின்றிச் செய்தார். வெள்ளம் சில நாட்களில் வடிந்தது. ஆனால் மக்கள் உள்ளங்களிலே மாதவன் நிறைந்தார். அரசாங்கம் மாதவன் பணியைப் பாராட்டியது. உடன் அதிகாரிகளும் வியந்தனர். மாதவன் உடனடியாகக் கலெக்டர் பதவிக்கு உயர்த்தப் பட்டார்; வேறு மாவட்டத்திற்கு மாற்றவும் பட்டார். அவர் பதவி வகித்து வந்த மாவட்டத்தினர் பாராட்டு விழா ஒன்று நடத்திப் பிரியாவிடை தந்தனுப்பினர். புதிதாகப் பதவி ஏற்கப்போகும் மாவட்டத்தில் இருந்த அதிகாரிகளும் மாதவன் செயல் திறனையும், நல்லுள்ளத்தையும் அறிந்து சிறப்பான வரவேற்புத்தர எண்ணினர். மாதவன் கலெக்டர் பதவி ஏற்றுக்கொண்ட அன்று வரவேற்பு விழா நடந்தது. மாதவனைப் பாராட்டி வரவேற்பு இதழ் ஒன்றும் தாயரித்திருந்தனர். மிகக் கிழவரான ஒருவர் ஓர் இளைஞரைப் போல் மிடுக்குடன் மேடைக்கு வந்தார். அவர் கையிலே வரவேற்பிதழ் இருந்தது. துள்ளித் திரியும் பிள்ளைப் பருவத்திலேயே கொள்ளை கொள்ளையான அறிவு கைவரப் பெற்றவர் என்றும், கணித மேதை என்றும், குணக்கடல் என்றும் வியந்து வியந்து பாராட்டிப் பேசினார். இவற்றைக் கேட்க கேட்க மாதவனுக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது; நா தழு தழுத்தது; கண்களில் நீர் மல்கியது; நாடியும் விரைந்து துடித்தது; வரவேற்பிதழ் வாசித்து முடித்தவுடன், அவரைப் பார்த்து ஐயா, நீங்கள் நன்னகர் வட்டத்திலே சில ஆண்டுகளுக்கு முன் தாசில்தாராக இருந்தீர்களா? என்றார் மாதவன். ஆமாம் என்றார் வரவேற்பிதழ் படித்த முதியவர். என்னைத் தெரிகிறதா? தாங்கள் மறந்திருக்கக் கூடும். நான் மறந்துவிடவில்லை. இந்த நிலைமைக்கு நான் வரக்காரணமாக இருந்தவர்களே நீங்கள்தான் என்று உளமுவந்து பாராட்டினார் மாதவன். கிழத் தாசில்தாருக்குக் கலெக்டர் புகழ்ச்சொல் கேட்டு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஐயா! எனக்கு ஒன்றும் புரியவில்லை! என்னை முன்னாகப் பார்த்திருக்கிறீர்களா? மறந்துவிட்டேன். மன்னிக்கவேண்டும் என்று கையெடுத்து வணங்கினார். கிராம அதிகரி ஐயப்பன் மகன், மாதவன் நான் என்றார் கலெக்டர் மாதவன். முதியவர் தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது. அவரால் நிற்கக் கூட முடியவில்லை. அருகில் இருந்த நாற்காலியில் போய்த் தொப்பென்று விழுந்துகொண்டார். தாழப்போட்ட தலையை நிமிர்த்தக்கூட அவரால் முடிய வில்லை. முட்டாள் மாதவன் நினைவில் நின்றான். மேதை மாதவன் மேடையில் நின்றான்! இடையே தத்தளித்துக் கொண்டிருந்தார் முதிய தாசில்தார்! எண்ணிய எண்ணியாங்(கு) எய்துப எண்ணியாந் திண்ணியர் ஆகப் பெறின் 7. கல்விப் பயன் கொண்ட கண்ணப்பர் தமிழ்ப் புலவர் கண்ணப்பரைக் குளத்தூர் வட்டாரத்தினரே அன்றித் தொலை தூரத்தில் இருந்தவர்களும் நன்றாக அறிந்திருந்தனர். படித்தவர்களில் எவரேனும் அவரைப் பாராமலோ கேள்விப்படாமலோ இருந்திருக்க முடியாது. அவ்வளவு பெருமைக்குரியவராகக் கண்ணப்பர் விளங்கினார். கண்ணப்பர் பிறந்தது குளத்தூர் என்னும் சிற்றூர்தான். இருப்பினும் பேரூருக்கு இல்லாத பெருமை பெற்றுவிட்டது அவ்வூர். படித்தவர்களில் நான்கு பேர்களாவது நாள்தோறும் குளத்தூருக்கு வந்து போகாமல் இருப்பது இல்லை. அதனால் குளத்தூர் அன்றி அதன் வட்டாரமும் பெயர் பெற்றது. அதனால் அவ்வட்டாரத்தினருக்குக் கண்ணப்பர் மீது தனிப் பற்றுதலும் மதிப்பும் உண்டாயிற்று. கண்ணப்பரைக் கண்டு மகிழவேண்டும் என்று ஒரு நாள் குப்பத்து எல்லப்பன் வந்தான். குப்பத்திற்கும் குளத்தூருக்கும் நெடுந்தொலைவுண்டு. இருப்பினும் கண்ணப்பர் புலமையும் புகழும் தூரத்தையும் நடையையும் பொருட்டாக நினைக்காதவாறு செய்தது. எல்லப்பன் குளத்தூரை நெருங்கி வரவரக் கண்ணப்பர் சிறப்புகளை நன்றாகக் கேள்விப்பட்டான். அண்டி வந்தவர் களுக்கு உண்டியும் உதவிக் கல்வி தருகிறார் கண்ணப்பர் என்று எல்லப்பன் கேள்விப்பட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. எப்படியும் கண்ணப்பரை ஆசிரியராக அடைந்துவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே குளத்தூரை அடைந்தான். புலவர் கண்ணப்பர், அடுத்திருந்த அரசியூர் அரசர் அழைப்பினை ஏற்றுச் சிறிது நேரத்திற்கு முன்தான் குளத் தூரிலிருந்து புறப்பட்டிருந்தார். அவர் வரும் வரைக்கும் குளத்தூரிலேயே காத்திருக்க எல்லப்பனுக்கு மனம் வரவில்லை. அரசியூர் நோக்கி நடந்தான். நடுவழியிலே புலவரைக் கண்டு களிப்புக் கொண்டான். எல்லப்பன் வரலாற்றைக் கேட்டுக் கொண்டே புலவர் நடந்தார். அரசியூர் எல்லையும் அணுகிற்று. புலவர் வருகையை அறிந்தார் அரசர். அலங்கரிக்கப் பட்ட குதிரை வண்டி ஒன்றினை அனுப்பிவைத்து சிறப்பாக அழைத்துவரச் செய்தார்; புலவர் அரண்மனையை அடுத்து வரும்போது எதிரே சென்று இருகையும் கூப்பி, இன்னுரை கூறி நன்முறையில் வரவேற்றார். அரியணையை அடுத்திருந்த ஆசனம் ஒன்றில் அமரச்செய்துஅளவளாவிப் பேசினார். பொன்னும், பொருளும் தந்து பெருமைப்படுத்தினார். புலவர்கள் இடையே, புலவர் கண்ணப்பர் கல்விச் சிறப்பு, பண்பு நலம் ஆகியனப் பற்றி எடுத்துரைத்தார். எனக்கு இளம் பருவந்தொட்டே ஆசிரியராய் அருமைத் தந்தையாய் இருந்து வருபவர் புலவர் கண்ணப்பர். அவர் பொன்னடிகளை நினைத்துப் போற்றாத நாள் இல்லை. என்று வியந்துரைத்தார். இவற்றையெல்லாம் அருகில் இருந்து அறிந்த எல்லப்பனுக்குப் புலவர் கண்ணப்பர் புகழ் முன்னையிலும் பன்னூறு மடங்கு மிகுதியாகப் புலப்பட்டது. இவரை ஆசிரியராக அடையும் பேறு பெற்றேன் என்று தனக்குள் மகிழ்ந்துகொண்டான். நாட்கள் சில சென்றன. கண்ணப்பர் ஊருக்குப் புறப் பட்டார். அரசர் தேரொன்றை அனுப்பிவைத்துப் புலவரைக் கொண்டுபோய் ஊரில் விட்டு வருமாறு ஏற்பாடு செய்தார். எல்லப்பனுக்கு இருந்த கொண்டாட்டம் இவ்வளவு அவ்வளவா? அவனும் கண்ணப்பரோடு தேரில் ஏறிக்கொண்டான் இல்லையா? நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்! கண்ணப்பர் வீட்டுக்கு வந்தபின் தனியறை ஒன்றுக்குச் சென்றார். அமர்ந்து இறைவனைப் பற்றி இரண்டு மூன்று இசைப்பாடல்கள் பாடினார்; யாழினை மீட்டி உள்ளம் உருகினார்; சிறு பொழுது கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார். தலை தரையிலே படக் கீழே வீழ்ந்து இறைவனை வணங்கினார். இவற்றையெல்லாம் எல்லப்பன் காணத்தவற வில்லை. அவனுக்குப் புலவரை அரசர் வரவேற்று வணக்கம் செய்ததும், புலவர் கடவுளைத் தாழ்ந்து வணங்குவதும் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் மனக்கண் முன் நின்றன. பெரும் புலவரான கண்ணப்பர் இறையன்பிலே ஊன்றிப்போய் நின்றான் எல்லப்பன். என்னப்பா! இப்படி ஒரே பார்வையாய் எதனைப் பார்க்கிறாய்? என்று கண்ணப்பர் கேட்டபோதுதான் எல்லப்பன் தன்னினைவுக்கு வந்தான். வேறு ஒன்றும் இல்லை ஐயா; தாங்கள் செய்த இறை வழிபாட்டை நினைத்துத்தான்... என்று அமைதியாகக் கூறினான் எல்லப்பன். கல்வியறிவு தந்த ஒரு செயலுக்காகச் செல்வ வளமிக்க அரசர் எவ்வளவு மரியாதை காட்டினார்? நீ அதை நேரில் கண்டாய் அல்லவா! சிற்றுதவிக்கே அவ்வளவு மரியாதை என்றால் வற்றாத வளமும், வளமான பேரறிவும் தந்த கடவுளை வாழ்த்த வேண்டாமா? உள்ளம் ஒன்றி வணங்கவேண்டாமா? அருட்கடலாகவும், அறிவுக் கடலாகவும் இருக்கும் இறைவனை வாழ்த்தி வணங்காத உயிர்கள் உயிர்களா? என்றார். எல்லாவுயிர்களும் இறைவனை வணங்கி நன்மை பெற வேண்டும். ஆனால் அறிவுணர்ச்சி குறைந்த உயிர்கள் என்ன செய்யக்கூடும் ஐயா என்றான் எல்லப்பன். எல்லப்பா! நல்லதே கேட்டாய். அற்பமான உயிர்கள் என்று நாம் நினைப்பவை கூட இறைவனை ஒவ்வொரு வழியில் வணங்கவே செய்கின்றன. அவை வணங்க அறியாமலோ, தெரியாமலோ இருந்தாலும் குற்றமில்லை. ஆனால் அறிவது அறிந்து, பகுத்துணரும் ஆற்றல் பெற்ற மனிதர்கள் கடவுளை வணங்கத் தவறலாமா? அவர்களினும் கற்றறிந்தவர்கள் கடவுளை வணங்கத் தவறலாமா? வணங்கத் தவறினால் கற்றதால் ஏற்படும் பயன்தான் என்ன? அறிவுடையவன் அறிஞனைப் போற்றுதல் முறைமை; அறிஞன் பேரறிவனாம் இறைவனை வழிபடுதலும் முறைமை; இதனைத் தவறவிடலாமா? என்றார் புலவர் கண்ணப்பர். ஐயா, மன்னிக்க வேண்டும்; தாங்கள் கூறும் மொழிகள் எனக்கு ஒரு பாடலை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. உங்கள் முன்னால் அதனைச் சொல்வதற்கு வெட்கமாகவும் அச்சமாகவும் இருக்கிறது என்று தயங்கினான் எல்லப்பன். இதில் என்னப்பா, அச்சத்திற்கும் வெட்கத்திற்கும் இட மிருக்கிறது; தயக்கமில்லாமல் சொல்லு என்றார் கண்ணப்பர். கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்றான் எல்லப்பன். அழகு! அழகு! திருக்குறளில் உனக்குப் பயிற்சியுண்டா? என்றார் புலவர். ஏதோ கொஞ்சம் பயிற்சி உண்டு ஐயா! அவ்வப்போது சில பாடல்களை வரப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் தெளிவு காண முடியவில்லை என்று தலை தாழ்த்திக் கொண்டு கூறினான் எல்லப்பன். பரவாயில்லை! திருக்குறளை வரப்படுத்தியிருக்கிறேன் என்று கூறியது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருக்குறள் வாழ்க்கை நூல். இப்பொழுது வரப்படுத்திக்கொண்டால் அப் பாடல்கள் வாழ்நாளெல்லாம் புதுப்புதுப் பொருள்களைத் தந்துகொண்டே இருக்கத் தவறாது. தெளிவு எங்கிருந்து வருகிறது? உற்று நோக்கிச் சிந்திக்க வேண்டும். உலகத்தை உற்று நோக்கிச் சிந்திப்பது ஒன்றுதான் திருக்குறளைத் தெளிவு ஆக்கிக் கொள்வதற்குச் சரியான வழி. வாழ்க்கை நூலாம் திருக்குறளை வாழவேண்டியவர்களெல்லாம் கற்பது அவசியம். நாமும் இன்று தொட்டுக் கற்போம் என்றார் கண்ணப்பர். அருமையான புதையல் ஒன்று கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தான் எல்லப்பன்.  8. யாருக்குப் பாராட்டு! டிரிங்ங்... டிரிங்ங்.... டிரிங்ங்.... என்று மேசை மணியைப் பண்முறை அழுத்தி அழுத்திப் பார்த்தார் துணைப்பதிவாளர் (சப் ரெஜிட்ரார்) பெரியசாமி. பங்கா இழுக்கும் பரமன் என்னவென்று கேட்கவில்லை. என்ன? எங்கேனும் தொலைந்து போய்விட்டானா? அந்தத் தடியனுக்கு இப்பொழுது தலைக் கனம் ஏறிவிட்டது. அலுவலகம் என்னும் எண்ணமே கிடையாது. சீ! வேலையா பார்க்கிறான்?.... ஏய்! பரமா! பரமா! டிரிங்ங்... டிரிங்ங்... டிரிங்ங்... பரமா! மடையன் முட்டாள்... டிரிங்ங் பெரிய சாமியின் வசை மொழியும், மணிமொழியும் உயர்ந்துகொண்டே சென்றன. தன்னை மறந்து உறங்கிவிட்ட பரமன் மெதுவாக எழுந்த ஏதோவொரு குரல் அதிர்ச்சி கேட்டு ஓடிவந்தான். டிரிங்... டிரிங் என்று தொடர்ந்து மேசை மணியை அழுத்திக்கொண்டிருந்த பெரியசாமிக்குப் பரமனைக் கண்டவுடன் கோபம் அதிகம் ஆயிற்று. அலுவலகம் என்ற காரணத்தால் ஓரளவு கோபத்தை அடக்கிக் கொண்டார். ஏ! பரமா! இது என்ன அலுவலகமா? சத்திரமா? நானும் பார்க்கிறேன் நீ திமிர்பிடித்துப் போய் அலைகிறாய். வீட்டிலிருந்து வர, இங்கே படுத்து உறங்க, மணியைப் பார்த்து வீட்டுக்கு ஓட! இப்படி இருந்தால் உருப்படுமா? இப்பொழுது உறங்கத்தானே செய்தாய்? என்று பொரிந்தார். - பரமன் பேசவில்லை. தலைகுனிந்து நின்றான். நீ உறங்கத்தானே செய்தாய்? ஐயா - பரமன் நா தழுதழுத்தது. இரவெல்லாம் எங்கெங்கோ சுற்றித் திரிவது; பகலிலே உறங்கித் தொலைப்பது வயதுதான் ஏறிவிட்டது. அறிவு இல்லை! ஒருவனுக்கு ஒருமுறை சொல்லலாம். இரு முறை சொல்லலாம். சூடு சொரணை இல்லாதவனுக்கு எத்தனை தடவைகள் சொன்னால்தான் என்ன? பரமா? இன்று சொல்கிறேன்; இன்னும் இப்படியே நீ நடந்துகொண்டால், என்னிடம் ஈவு இரக்கத்தை ஒரு சிறிதும் எதிர்பார்க்க முடியாது. ஏதோ வொன்று நடந்துவிட்ட பின்பு அலறியழுது பயன் இல்லை. முன்னாகவே அறிவோடு நடந்துகொள்; போ! - பெரியசாமியின் கோபத்தில் அலுவலகத்தில் கீச்சு மூச்சுக்கூட இல்லை ஒரே அமைதியாக இருந்தது. பெரியசாமி இவ்வளவு கோபப்படுவார் என்று பரமன் நினைத்ததே இல்லை. கொடிய தாக்குதல் மொழிகளைக் கேட்ட பரமன் தலையைத் தாழப்போட்டுக்கொண்டு நிமிர்ந்து பாராமலே நடந்தான். அவனுக்கு என்னென்னவோ போல் இருந்தது. எத்தனையோ சேவகர்கள் இடையே, எழுத்தர்கள் இடையே, பொதுமக்கள் இடையே, இவ்வளவு மானக்கேடான உரையைக் கேட்குமாறு ஆகிவிட்டதே என்று எண்ணி எண்ணி நெஞ்சம் ஏங்கியது. ஒரு பெரிய பாறையே தலையில் மோதித் தாக்கியது; போல் இருந்தது. என்ன ஆனாலும்தான் என்ன? ஏங்கிக்கொண்டே சன்னல் அருகில் உட்கார்ந்து கயிற்றை இழுத்துவிட்டான். பங்கா நகர்ந்தது. அலுவலகத்தில் மெல் லென்று காற்று வீசியது; ஆனால் பரமன் உள்ளம் வெந்து கொட்டியது! நான்கு நாட்கள் கடந்தன; பரமன் அலுவலகத்திற்கு வந்திருந்தான். பெரியசாமி வரவேண்டிய நேரம். அவன் வருகையை எதிர் நோக்கிக்கொண்டு வாயிலிலே காத்திருந்தான் பரமன். அதிகாரி வந்தார்; வாய் பொத்திக் கைகட்டி நின்று கடிதம் ஒன்றை அவரிடம் நீட்டினான் பரமன்! அவ்வளவுதான்! பரமன்! நீ சேவகன் வேலை பார்ப்பதாக எண்ணமா? கலெக்டர் வேலை பார்ப்பதாக எண்ணமா? விரும்பிய நேரங்களி லெல்லாம் விடுமுறை எடுத்துக்கொண்டு விருந்துக்கும் வேற்றூருக்கும் போய்வர முடியாது. ஒழுங்காக வேலை பார்க்க முடியுமானால் பார்! இல்லாவிடில் - உனக்கும் தொல்லை யில்லை - எங்களுக்கும் அல்லல் இல்லை - வேலையை விட்டுவிடு! பொல்லாத வேலை பார்க்கிறான் வேலை; இதில் நினைத்த பொழுதெல்லாம் விடுமுறை! எவரைக் கேட்டு விடுமுறைத்தாள் எழுதிக்கொண்டு வந்தாய்? நேற்றே கேட்டிருக்கக்கூடாதோ? நீ வைத்த ஆள் யாரிருக்கிறார்கள்?... இவ்வாறு வெடி கோபத்திலே பேசி விரைந்துகொண்டு போய்விட்டார். பாவம்! சேவகன் பரமன் அதிகாரியை என்ன செய்துவிட முடியும்? புதிதாக மாற்றுதலாகி அவ்வூருக்கு வந்த அதிகாரிக்குப் பரமன் மேல் வெறுப்பு ஏற்படும்படி மற்றுமுள்ள சேவகர்கள் செயலாற்றிவிட்டனர். எல்லாம் பொறாமையால்தான்! ஒருவன் நன்றாக இருக்க, அவனிலையிலே இருப்பவர்களுக்குத் தாங்கமுடிவதில்லையல்லவா! இதற்குப் பதிவு அலுவலகம் விதிவிலக்கா? கோள்மூட்டும் சேவகர்கள் சொல்லால் அதிகாரி பரமன் மேல் எப்பொழுதும் கடுகடுப்பாகவே இருந்தார். இதற்குத் துணை செய்துவிட்டது பரமன் உறங்கியதும்; விடுமுறை கேட்கச் சென்றதும்! பரமன் தன்னைத்தானே நொந்துகொண்டான். எல்லாம் என் போதாத காலம்! எவரைச் சொல்ல என்ன இருக்கிறது? என்று கலங்கினான். சிறிது நேரம் சென்றது. சின்னஞ் சிறு சிட்டுப்போன்று ஒரு சிறுவன் அலுவலகத்திற்குள் ஓடிவந்தான். அவன் பெரியசாமியின் சிறுவன் மதியழகன்தான். மூன்றாம் வகுப்புப் படிப்பவன். அலுவலகம் என்பதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாது. அப்பா! புத்தகம் வாங்கிக்கொடு; புத்தகம் இன்றைக்குக் கொண்டு வராவிட்டால் வெளியே போகச் சொல்வார்களாம் என்று கவலையுடன் மழலை மொழியில் கூறினான். மதி! இங்கே வா என்று எழுத்தர் ஒருவர் அவனை அழைத்தார். ஒரு சேவகனுடன்அனுப்பிவைத்து புத்தகம் வாங்கித்தர ஏற்பாடு செய்தார். மதி நுழைந்தவுடன் அலுவலகமே கடமையை மறந்து புன்முறுவல் பூத்துக் குலுங்கிற்று. ஆனால் பரமன் உள்ளம் எங்கெங்கோ வட்டமிட்டது. மதியைக் கண்டவுடன் - அந்தச் சின்னஞ்சிறு மழலைச் சிட்டைக் கண்டவுடன் - மகிழ்ந்து புன்முறுவல் பூத்துக் குழைய வேண்டிய உள்ளம் ஏங்கி ஏங்கித் துடித்தது? பொறாமையாலா? வெறுப்பாலா? இவற்றைச் சிறிதும் அறியாதவன் அல்லவா பரமன்! இந்நிகழ்ச்சி நடந்து வாரம் ஒன்று கடக்கவில்லை. இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து உறக்கமின்றி இருந்த பரமனால் உறக்கத்தைச் சமாளிக்க முடியவில்லை. கொடிய வெப்பமும், வியர்வையும் சேர்ந்து கொண்டபடியால் ஓய்வு ஒழிவு இல்லாமல் பங்கா இழுக்க நேரிட்டது. அந்தச் சோர்வு உறக்கத்தை அதிகமாக்கிற்று. எவ்வளவோ முயன்று பார்த்தான். அதிகாரியின் நிலைமையை நினைத்துக் கண்ணை மூடாமல் பொட்டு பொட்டென விழித்துக்கொண்டே இழுத்தான். எவ்வளவு நேரம்தான் இயற்கையுடன் போராடமுடியும்? ஒருநாள் உறக்கமில்லாமையே ஒன்பது நாள் அல்லல் ஆகும்போது மூன்று நாட்கள் இராப்பகல் உறங்கவில்லை என்றால்? அதிகாரி நெருப்பாகி விட்டார். பரமனை உடனடியாக என்னென்னவோ செய்துவிட வேண்டும்போல் அவருக்கு இருந்தது. எதுவும் பேசாமல், குனிந்த தலை நிமிராமல் ஏதோ எழுதினார். மறு உத்தரவு வரும்வரை நீ வேலைக்கு வர வேண்டாம்; நிம்மதியாக உறங்கு என்று கூறி, தாளைப் பரமனிடம் எறிந்துவிட்டுத் தம் தனியறைக்குள் போய்விட்டார். பரமன் உதடுகள் துடித்தன. கண்கள் கலங்கின; பேச வாயெடுத்தான! திடுமென ஏற்பட்ட உணர்ச்சியும், அதிகாரியின் முகக்கடுப்பும் பரமனைப் பேசவிடவில்லை. அடங்கிக் கிடக்கும் எரிமலைபோல் வீட்டுக்கு நடந்தான். வீடு சென்றும் பரமனால் அமைதியாக இருக்க முடிய வில்லை! அவன் எண்ணக் கோட்டைகள் என்ன ஆவது? பெரியசாமியின் வீட்டுக்குச் சென்று தன் நிலைமையைக் கூறிவிடுவது எனக் கருதினான். அவன் மானம் குறுக்கிட்டுத் தடுத்தது. வேலையில்லை, போ! என்முன் நிற்காதே! என்று சொன்னவர் முன் இந்தப் பெரிய பதவிக்காகப் பல்லைக்காட்டிக் கெஞ்ச வேண்டுமா? என்று தோன்றியது. ஆனால் அவர் வீட்டு வேலையா இது? நான் ஒரு சிப்பந்தி என்றால் அவரும் ஒரு சிப்பந்திதான்! வேண்டுமானால் கொஞ்சம் மதிப்பான சிப்பந்தி; இவ்வளவுதான் வேற்றுமை! நான், அதிகாரி அவர் என்னும் எண்ணத்துடன் அவரைப் பார்க்கப் போவது இல்லை. அவர் ஒரு மனிதர்; நானும் ஒரு மனிதன். மனிதரை மனிதன் சந்திப்பதிலே பேசுவதிலே - என்னக் குற்றம் இருக்கமுடியும்? வஞ்சமும் திருட்டும் செய்வதற்குத்தான் மானக்குறையுண்டு. உண்மையை, உரிமையைக் கேட்பதற்கு என்ன மானக்குறை? என்று தன் நெஞ்சத்தைத் தேற்றிக்கொண்டு அதிகாரி வீட்டுக்கு நடந்தான் பரமன். ஏன் இங்கு வந்தாய்? வெளியே போ! அலுவலகத்தில் தான் உன் தொல்லை என்றால் - வீட்டிலுமா? செய்வதெல்லாம் செய்து விட்டுப் பல்லைக் காட்டுவது பழக்கமாகிவிட்டது! என்று பரமன் வீட்டு வாயிலுள் நுழைந்தும் நுழையாமலும் இருக்கும்போதே எரிந்து விழுந்தார் பெரியசாமி. ஐயா, நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். உங்களிடம் சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறேன். உங்கள் மனம் போல் செய்யுங்கள். மேல் அதிகாரி என்ற முறையிலே உங்கள் கடமையைச் செய்கிறீர்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் நானும் மனிதன், நீங்களும் மனிதர் என்னும் பொது நிலையிலே என் நிலைமையைச் சொல்லியாக வேண்டுமென்று வீடுதேடி வந்திருக்கிறேன். இங்கும் அதிகாரி என்னும் முறையிலே நடந்துகொள்வது உறுதியாக உங்களுக்கே ஏற்காது. என் மேல் தவறுகள் உண்டு; இல்லை என்று கூறவில்லை. வீடுதேடி வந்துவிட்டேன். என் கருத்தைச் சொல்வதற்குக்கூடத் தாங்கள் அனுமதிக்கவில்லை என்றால், கேட்க மறுப்பீர்கள் என்றால் என்னைப் போன்ற ஏழைகள் நிலைமை என்னவாகும்? ஐயா, மன்றாடிக் கேட் கின்றேன். உங்கள் பரிவை எதிர்பார்த்துச் சொல்வதாக எண்ணவேண்டும்; சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிவிட்டேன் என்னும் மன நிறைவு ஒன்றுக்காக வேனும் சொல்லவிடுங்கள் என்றான். அதிகாரி அமைதி யானார். பரமன் பேசினான். ஐயா, சட்டப்படி அலுவலகத்தில் நான் உறங்கியது தவறுதான். முன்னரே கேட்டுக்கொள்ளாது விடுமுறை விண்ணப்பம் கொண்டு வந்ததும் தவறுதான். ஆனால் இவற்றுக்குக் காரணம் என்ன என்பதையும் நினைக்க வேண்டும் அல்லவா? ஒருநாள் உறக்கமின்மையைச் சமாளிக்கலாம்; இரண்டு நாட்களும் சமாளிக்கலாம். தொடர்ந்து பல நாட்களாக உறங்கவில்லையென்றால் சமாளிப்பது எப்படி? ஐயா, நீங்கள் என் வயதுக்குக் குறைந்தவர்களே ஆனாலும் என்னைப் பெற்றெடுத்த அன்னையினிடம் கூறுவதுபோல் கூறுகின்றேன், எத்தனை நாட்களுக்குத்தான் உறங்காமல் இருக்கமுடியும்? இரவு வேளைகளிலே, சூதாட்டம் ஆடுகிறேனா? ஊர்சுற்றித் திரிகிறேனா? சினிமா நாடகம் என்று போகிறேனா? அரட்டைக் கச்சேரியிலே கலந்துகொள்கிறேனா? ஐயோ, இவற்றுள் எந்த ஒன்றையும் நினைக்கக்கூட நேரம் இல்லையே! எனக்கு இவை ஒரு கேடா? இங்கு வாங்கும் சம்பளம் கட்டவில்லை கொஞ்சமும் காணவில்லை. ஏன்? நான் சுகவாசியாக வாழ்பவனா? பட்டாடை வேண்டுபவனா? பால் பழத்தைத் தேடித் திரிபவனா? கஞ்சி கிடைத்தால் போதும்! கந்தைத் துணி கிடைத்தால் போதும்! பிறகும் ஏன் சம்பளம் கட்டி வரவில்லை! திருடுவது தீது; பொய் பேசி, வஞ்சம் செய்து வாழ்வது தீது. ஆனால் உழைப்பது தவறா? இங்கு வேலைமுடிந்து வீடு போவதற்கே இரவு மணி எட்டு ஆகிவிடும். பத்து மணிக்கு ஒரு வேலைக்குப் போகவேண்டும். உட்கார்ந்திருக்கும் வேலையா? மேற்பார்வை வேலையா? செங்கல், கல், மண், சுண்ணாம்பு சுமக்கும் வேலை. கட்டடக் கூலி வேலை! இரவெல்லாம் வேலை செய்தால் சம்பளம் இரண்டு ரூபா. இரவு பகல் இன்றி வேலை பார்ப்பவனுக்கு உட்கார்ந்த இடத்திலே உறக்கம் வராதோ? அலுவலகத்திலே உறங்கக்கூடாது என்பதை உணர்கின்றேன். ஆனால் இயற்கை உணர்ச்சியைத் தடுப்பது எப்படி? எனக்கு எத்தனையோ சங்கடங்கள் இருக்கலாம். அவற்றையெல்லாம் ஒப்பித்து உதவி எதிர்பார்த்து நான் வரவில்லை; நான் தவறு உடையவன்தானா? இந்தச் சேவகன் வேலைக்கும் தகுதியற்றவன்தானா? என்று என்னை நானே எடைபோட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டாமா? விருந்துக்குப் போகவா விடுமுறை கேட்டேன்! அன்று விடுமுறை கிடைக்காததால் என்னுள்ளம் பட்டபாட்டை என்னவென்று சொல்வது? ஐயா, உங்கள் பையன் மதியைப் புத்தகம் இல்லாமல் வகுப்புக்கு வராதே என்று சொல்லி அனுப்பிவிட்டார்களே. ஏழையான என் மகன் படிக்கப் புத்தகம் இல்லாமல் வகுப்பில் இருக்க விடுவார்களா? தங்கு விடுதிச் சம்பளம், சாப்பாட்டுச் சம்பளம், பள்ளிச் சம்பளம் இவ்வளவும் கட்டாமல் இருக்கவிடுவார்களா? முப்பத்தொன்றாம் தேதிக்குள் பணம் கட்டாவிட்டால் வடிவேலு கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவான் என்று கடிதம் வந்தது. அரசாங்க உதவிப்பணம் கிடைத்துவிடும் கிடைத்துவிடும் என்று நாள் தோறும், வேளைதோறும் எதிர்பார்த்து எதிர்பார்த்துச் செத்துக் கொண்டிருந்தேன். இந்நிலைமையிலேதான் இத்தனாம் நாள் சம்பளம் கட்டாவிட்டால் வெளியேற்றப்படுவான் என்று கடிதம் வந்து சேர்ந்தது. எப்படி ஐயா, இதயம் வெடிக்காமல் இருக்கமுடியும்? நான் என்ன இரும்புப் பெட்டியில் பணம் வைத்து வைத்து, எண்ணி எண்ணி அடிக்கிக் கொண்டிருப்பவனா? எடுத்து உடனே அனுப்பி வைத்துவிட. உழைப்பினால் சிறிது சேர்த்து வைத்திருந்த பணத்தையும் முப்பத்தொன்றாம் தேதி கொண்டுபோய்ச் சேர்க்க விடாதவாறு செய்துவிட்டது தங்கள் கடமை உரை கட்டளைக்குப் பணிந்தேன். ஆனால் என் மகன் நிலைமை? உங்களுக்கு நான் ஏவல் செய்பவன்; உத்தரவுக்குப் பணிகின்றேன். என் மகனுக்கு நான் தந்தை. அவனுக்குக் செய்யவேண்டிய கடமையில் தவறுகின்றேன். அவன் என்ன நினைப்பான்! கல்லூரியைவிட்டு வெளியேற்றப் படும்போது என்னென்ன நினைத்துக்கொண்டு வெளியேறுவான். அறிவில்லாதவனாக மட்டும் அவன் இருந்தால் என்னை என்னவென்று எண்ணுவான்? ஐயோ, அந்தப் பிஞ்சுள்ளம் அன்று எப்படித்தான் ஏங்கி ஏங்கி நொந்ததோ? பெற்றமனம் இங்கு துடிக்கிறது. பேதை மனம் அங்கு துடிக்கிறது. இடையே கடமை, கட்டளை என்னும் சக்கடி போடுகிறது. ஐயா, சாவதா? வாழ்வதா? ஐயா, நான் வேலைபார்க்கத் தகுதி உடையவனா, இல்லாதவனா? நீங்களும் பிள்ளை பெற்றவர்கள்தானே! நீங்கள் என்னைப்போல் ஏழைச்சேவகனாக இருந்து உங்கள் பிள்ளைக்கு இப்படி நேர்ந்தால் எப்படி இருப்பீர்கள்? மன்னிக்க வேண்டும்; ஆத்திரத்தில் உளறிவிட்டேன் நான் வருகிறேன். - திரும்பிப் பாராமலே நடந்துவிட்டான் பரமன். பெரிய சாமி கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தார். பரமன் நிற்கவில்லை; பெரியசாமியின் குரலும் அவன் காதில் விழவில்லை. பெரியசாமியால் வீட்டில் அமைதியாக உட்கார்ந் திருக்க முடியவில்லை. கடமை கடமை என்று இருந்த அவர் மனம் கரைந்தது. தோண்டிய மணற் கேணிபோல் கண்களி லிருந்து நீர் ஒழுகிற்று. பரமனைப் பின்தொடர்ந்து நடந்தார். சந்து பொந்துகளிலே நுழைந்து உடைந்துபோன பாலம் ஒன்றின் பக்கத்தேயிருந்த ஓலைக்குடிசையினுள் புகுந்தான் பரமன். அதுதான் அவன் குடியிருப்பு. வீட்டின் வெளியே நின்றார் பெரியசாமி. பரமன் அவன் மனைவியிடம் பேசும் குரல் கேட்டது; கட்டட வேலையாவது தொடர்ந்து கிடைக்கும் என்று எண்ணினேன். இனி ஒரு வாரத்திற்கு வேலையில்லையாம். அலுவலக வேலையிருந்த வரையிலே இரவு பகலாக இருந்தது வேலை. நாளைமுதல் அலுவலக வேலை இல்லை. இங்கும் வேலை இல்லை. நல்ல சோதனை? யாரைச் சொல்வது? நாம் படவேண்டிய அல்லல்கள் மலை மலையாக இருக்கும்போது குறையவா செய்யும்? ஐம்பது வயது வரை பார்த்து வந்த வேலையே போய் விட்டது. நேற்று வந்த வேலை நிலைக்குமா? வேலையில்லை என்று அதிகாரியை நொந்து கொள்ளலாமா? அவரவருக்கு எத்தனையோ அல்லல்கள் அவசியங்கள் இருக்கலாம். அதற்காக அலவலகத்தில் எல்லோரும் உறங்குவதும், ஓய்வதுமாக இருந்தால் முடியுமா? பரமன் உள்ளத் தூய்மையும், பெருமையும் பெரிய சாமியைப் பிசைந்து எடுத்தன. பரமா! பரமா! என்று ஓங்கிக் கூச்சலிட்டு விட்டார் பெரியசாமி. ஐயா, நீங்களா? இந்த இருட்டு வேளையிலா? துன்பத்தை ஒரு பக்கத்தே அடக்கி வைத்துவிட்டு பேசினான் பரமன். பரமா! உன் நிலைமையை நன்றாக உணர்ந்தேன். நீ உணரச் செய்துவிட்டாய். மனித இதயத்தோடு நெருங்குவதை அறவே விட்டுவிட்டேன். அது என்னை வாட்டித் தின்கின்றது. என்னை மன்னித்துவிடு. நடந்தவற்றை மனத்தில் போட்டுக் கொள்ளாதே! நாளை வேலைக்கு வந்துவிடு என்று விரைந்து போய்விட்டார் பெரியசாமி. அவரால் அங்கு நிற்க முடிய வில்லை! பரமனுக்கு தன்னுணர்ச்சி வர நெடு நேரமாயிற்று. என்ன இருந்தாலும் பெரியவர் பெரியவர்தான் என்று அவன் வாய் வாழ்த்தியது. ஆண்டுகள் இரண்டு உருண்டன. வடிவேல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டான். அவன் இளங்கலை வகுப்பிலே முதல்தரமாகத் தேர்ச்சியடைந்திருந்தான். அவன் நண்பர்கள் பாராட்டு விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து விழாவுக்குத் தலைவர் பதிவு அதிகாரி பெரியசாமிதான்! அவர் கூறினார்: வடிவேலைப் பாராட்டுகின்றோம்; வீட்டின் நிலைமை தெரிந்து, கண்ணும் கருத்துமாகக் கற்றுச் சிறந்த முறையிலே வெற்றியடைந்திருப்பதற்காக! ஆனால் இதற்கும் மேலாகப் பாராட்டப்படவேண்டியவர் எவர் தெரியுமா? இதோ... இவரே... என்று பரமனைச் சுட்டிக்காட்டினார். தாம் ஏற்பாடு செய்துகொண்டு வந்திருந்த மாலையை மகிழ்ச்சி ஆரவாரத்திடையே பரமனுக்கு சூட்டினார். நான் படித்தவன்; பட்டப் படிப்பும் பெற்றவன்; ஓரளவு வருவாய் உடைய பதவியும் உடையவன்; என் மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் எனக்கு எத்தகைய சிக்கலும் இல்லை. ஆனால் இப்பரமனோ ஏழைச் சேவகர். எழுதப்படிக்க அறியாதவர். வாய்ப்பு வசதி எதுவும் அற்றவர்; இருந்தும் என் பிள்ளைகளுக்கு நான் செய்துவைக்க முடியாத காரியங்களையும் தம் மகனுக்குச் செய்துள்ளார். தம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டித் தம் மகனை அறிவுடையோர் இடையே பெரியவனாக்கி விட்டார். வடிவேலைப் படிக்க வைப்பதற்காக இவர் பட்டிருக்கும் பாடுகளை இவ்வளவு அவ்வளவென்று கூற முடியாது. இவர் குறுகிய அறிவுடையவராக இருந்திருந்தால் படித்தது போதும் கூலி வேலை பார் என்று கூறியிருப்பார். கோழையுள்ளம் படைத்தவராக இருந்திருந்தால் தற்கொலை கூடச் செய்துகொண்டிருப்பார். பரமனோ ஓர் உயரிய தந்தை - பண்புள்ள தந்தை - செய்விக்க வேண்டிய கடமைகளிலே ஒரு சிறிதும் தவறாமல் செய்துள்ளார். தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் என்பது பொய்யாமொழி என்றால், அதற்கு மெய்யான ஒரு சான்று இப்பரமன்தான். அதனால் வடிவேலைப் பாராட்டும் இவ்விழாவிலே தந்தையின் கடமையைத் தவறாது செய்து முடித்துள்ள பரமனைப் பாராட்டுவது நம் கடமையாகின்றது என்று தம் பாராட்டுரையை முடித்தார் பெரியசாமி. கூட்டத் தினரின் கையொலி அடங்க நெடுநேரமாயிற்று. பரமன் தன்னை மறந்து அனைவருக்கும் கைகூப்பிக் கொண்டு நின்றார்.  9. ஒரே ஒரு தூண் பங்குனி மாதம்; கொடுமையான வெயில்; கால்களைத் தரையில் ஊன்ற முடியாத வெப்பம்; காற்றின் அசைவு சிறிதும் இல்லை; ஒரே புழுக்கம் வியர்வைக் காடு; ஒரு சிறுவன் எவற்றையும் பொருட்படுத்தாதவனாய் நடந்து வந்தான். அவன் இடுப்பிலே ஒரு வேட்டி; தலையிலே ஒரு துண்டு; தோளிலே ஒரு முடிச்சு - சோற்றுப் பொட்டலம்! பதினைந்து கடந்திருக்காது வயது; அவன் முகத்தில் அழகுக் கோடுகள் சில கிடக்கின்றன. ஆனால் வறுமைச்சாயல் தன்னால் இயன்ற மட்டும் அழகுக் கோடுகளை மறைக்காமலும் விடவில்லை. ஒல்லியான உருவம்; பொது நிறம்; கனிவுடைய கண்கள்; ஆனால் எவற்றையும் ஊடுருவி நோக்கும் நுண்மை; சிந்தனையை வெளிக்காட்டும் முகம்; நீர்ப்பசையற்ற உதடுகள்; குவிந்து நீண்ட மூக்கு; நீண்டு தொங்கும் கைகள்; தளராத நடை! அச்சிறுவன் - குமரவேல் - மதுரை அங்கயற்கண் அம்மை கோயில் வாயிலில் நுழைந்தான். நுழை வாயிலிலே மெல்லென்று வீசிய காற்று அவனைப் பேரின்பத்தில் ஆழ்த்தியது; நடைத்துயர் நொடிப் பொழுதில் பறந்தது. காலில் வெப்புக் கொப்புளங்கள் கூட இருந்தன. இருப்பினும் தண்ணென்ற காற்று அவற்றையும் மறக்கச் செய்தது. தன்னை மறந்து உறக்கம் தொடர ஆரம்பித்தது. ஓர் பக்கமாக இருந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்த வாறே உறங்கிவிட்டான். புரண்டு படுத்ததைக்கூட அவன் அறியமாட்டான். பிற்பகல் மணி நான்கு இருக்கும். உறக்கம் சிறிது கலைந்தது. என்றாலும்; கண்ணை உடனே திறந்துவிட முடியவில்லை. லொட் லட் லொட் லட் என்று பலவாக எழுந்த ஒலிகளும்; தள்ளு தூக்கு, எடு, புரட்டு என்று எழுந்த குரல்களும் அரைகுறையாய் அவன் செவியில் விழுந்து கண்ணை திறக்கச் செய்தன. உற்று நோக்கினான். பெரிய வேலைத் திட்டம் ஒன்று நடைபெற்று வருவது புலனாயிற்று. எழுந்திருந்து ஒவ்வொரு தூணாகப் பார்த்தான். ஒரே ஒரு தூண்மட்டும் அவனை நெடுநேரம் நிற்கவைத்து விட்டது. மிக உன்னிப்பாக நோக்கினான். கழுத்து வலி பற்றிக்கூடக் கவலைப்படாமல் வரிவரியாகப் பார்த்தான். அருகில் வேலைபார்த்துக் கொண்டிருந்த சிற்பிக்கு சிறுவன் கலைத்திறன் வியப்பாக இருந்தது. சிறுவனை நெருங்கி வந்து பையா! நெடுநேரமாக இத்தூணைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றாயே; காரணம் என்ன? என்று வினவினான். தூணில் வைத்த பார்வையை வாங்காமலே சிறுவன், இத்தூணை நிறுத்தியவர் யார்? என்று கேட்டான். இத்தூணை நிறுத்தக்கூடாதா? என்று பதில் வினா விடுத்தான் சிற்பி. சிற்பக்கலையின் முதற்பாடம் படித்திருந்தால் கூட இத்தூணை நிறுத்தியிருக்கமாட்டான் - சிறுவன் இவ்வாறு சொல்வான் என்பதை எண்ணாத சிற்பி திகைத்துப் போனான். இதற்குள் இவர்கள் உரையாடலை அடுத்திருந்து கேட்ட திருமலை மன்னன் நெருங்கி வந்தான். இளைஞனே! ஏதோ சொல்கிறாயே! அதை அறிந்து கொள்ளலாமோ? என்று வினவினான். சிறுவன், மன்னவன் என்பதை அறிந்து கொண்டபடியால் மன்னவ! இத்தூணை இவ்வாயிரக்கால் மண்டபத்தைவிட்டு அப்புறப்படுத்தியாக வேண்டும். குற்றமற்ற வேலைப்பாடுடைய இம்மண்டபத்தில் குறையுள்ள தூண் நிற்கத் தகாது என்றான். இளைஞனே! தூணில் என்ன குற்றம் கண்டாய்? - மன்னன் மொழி இது. இதனை நிறுத்திய சிற்பி எவ்வளவோ வேலைத் திறமும், நுட்ப அறிவும் உடையவன்தான் எனினும் யானைக்கும் அடிசறுக்கும் என்னும் முதுமொழிக்கு இணங்க அவன் செயல் ஆயிற்று. தண்ணீர் கொண்டு வந்தால் இத் தூணிலுள்ள குறையை எடுத்துக் காட்டுகின்றேன் - சிறுவன் அமைதியும், பணிவும் கலைத்தெளிவும் தோன்றுமாறு பேசினான். தண்ணீர் குடம் குடமாக வந்தது. குமர வேல் கூறியவாறு நீர்க்குடத்தைத் தூண் முழுவதும் நனையுமாறு கவிழ்த்தான் ஒருவன். மேலும் மேலும் பல குடங்கள் கொட்டிக்கொண் டிருந்தான். ஒரே ஓர் இடத்தில் மட்டும் வட்டமான ஒரு பகுதி விரைவில் காய்ந்து கொண்டு வந்தது. நொடிப் பொழுதில் அப்பகுதியில் நீர்ப் பசை அற்றுப்போவதைக் கண்டவர்கள் திகைத்தனர். இது என்னே விந்தை? என்றனர். தூணை நிறுத்திய சிற்பி சேந்தன் சிறுவன் குமரவேல் முன் மண்டி யிட்டான். இளைஞனே! உன் கலையுணர்வுக்கு என் கலையுணர்வு கால் பங்கும் ஆகாது. இந்த இளம் வயதிலேயே பேரறிவு கைவரப்பெற்ற உனக்கு உயரிய எதிர்காலம் உண்டு. உன்னைப் பெற்றவர்கள் உண்மையில் பேறு செய்தவர்களே என்று வாழ்த்தினான். குமரவேலால் சிறிதும் பேச முடியவில்லை. தலைதாழ்ந்து நாணத்தால் நின்றான். பலருக்குத் தூணிலுள்ள குற்றம் புலப்படவில்லை. குமரவேல் கூறினான். அரசே! தூணில் நீர்ப்பசையின்றிக் காணும் பகுதி யிலே தேரையிருக்கின்றது. காற்றும் நீரும் புகும் அளவுக்கு மென்மை இருந்தாலன்றிக் கல்லில் தேரை பிறந்து உயிர் வாழ முடியாதல்லவா! இத்தகைய வலுவற்ற கல்லை நிறுத்துவது தகுமா? என்று கூறிக்கொண்டே சுத்தியல் ஒன்றால் அப் பகுதியில் தட்டினான் தேரை துள்ளி வீழ்ந்து தத்திச் சென்றது. கூடியிருந்தோர் குமரவேலைத் தூக்கியும் தழுவியும் இன்புற்றனர். மன்னவன் அவன் முதுகை அன்பால் தடவித் தந்தான். சிறுவ! நீ யார்? இளைஞனான நீ எதிர்காலத்தில் சிற்பிகள் போற்றும் சிற்பியாவாய் என்பதில் ஐயமில்லை. உன் பெற்றோர் யாவர்? என்றான். குமரவேல், தாய் மட்டுமே தனக்கு உள்ளார் என்றும், தான் பிறப்பதற்கு முன்னரே தந்தையார் இறந்துவிட்டார் என்றும் சொன்னான். இளம்பெருஞ் சிற்பியே! நீ உன் தாயை இங்கு அழைத்துவர இயலுமோ? உன்னைப் பெற்றெடுத்த அந்தப் பேரன்னையைக் காணப்பெற்று எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவேண்டும் என்றான் அருங்கலை மன்னனாம் திருமலை மன்னன். மன்னன் நன்மொழி கேட்ட குமரவேலால் நம்ப முடியவில்லை. பஞ்சைச் சிறுவனைப் பாராள் வேந்தன் பாராட்டிப் பேசிப் புகழ்வது என்ன எளிதில் கிடைக்கக் கூடியதா? எல்லோர் வாழ்விலும் நிகழக்கூடியதா? நமக்கா இவ்வளவு பெருமை? என்று உள்ளம் விம்மினான். அரசன் அளித்த கொடைகளைப் பெற்றுக்கொண்டு சிறப்புடன் ஊரையடைந்தான். சிற்பிகள் போற்றும் சிற்பியல்லவா அவன்! பழைய குமரவேலா? குமரவேல் தன் தாயினிடம் நடந்தது எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கூறினான். அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவும் உண்டோ? உச்சி முகர்ந்து உள்ளூற வாழ்த்தி அணைத்துக் கொண்டாள். அவள் அதற்கு முன் பட்டிருந்த அல்லல்கள் அனைத்தும் நொடிப் பொழுதில் இருந்த இடம் தெரியாமல் அகன்று போவதாயிற்று. அன்று குமரவேல் சாதாரணக் குமரவேலாகத் தெரியவில்லை தாய்க்கு - தெய்வக் கலைஞனாக எண்ணி உவகை கொண்டாள். குமரவேல் மன்னன் கட்டளையை மறந்தான் அல்லன். தன் தாயை அழைத்துக் கொண்டு மாட மதுரைக்கு வந்தான். மன்னன் ஆயிரக்கால் மண்டபத்திலே தான் நின்று கொண்டிருந்தான். பலப்பல இடங்களில் சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். கலை மண்டபத்தைக் கண்டு கண்டு புன்னகை தவழும் முகத்துடன் அரசன் அங்கும் இங்கும் உலவிக்கொண்டும், ஏவிக்கொண்டும், ஏவல் செய்துகொண்டும் இருந்தான். குமரவேல் தலை தாழ்ந்து அரசனை வணங்கினான். கீழே மண்டியிட்டு வணங்க முனைந்த அவனை அரசன் அன்புக் கைகள் தடுத்து நிறுத்திவிட்டன. இளைஞன் குமரவேலுக்கு தந்த சிறப்பா? கலைக்குத் தந்த மதிப்பு? என் அன்னையை அழைத்துக்கொண்டு இங்கு வந்தேன். தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள் என்றான் குமரவேல். உடனே அழைத்துக்கொண்டு வருமாறு ஏவினான் மன்னன். குமரவேலைத் தொடர்ந்து நடந்தாள் அவன் தாய். திருமலை மன்னன் எதிரே சென்று கையெடுத்து வணங்கி சிற்பியைப் பெற்றெடுத்த செல்வமே! நீ வாழ்க! என்று வாழ்த்தினான். மன்னவன் நிலைமைகண்டு சிற்பிகள் அனைவரும் கையெடுத்து வணங்கினர். அவள் நாணத்தால் நடுங்கினாள். தலை தாழ்ந்து வணங்கினாள். அடியற்ற மரம்போல நிலத்திடை வீழ்ந்தாள் உவகைக் கண்ணீர் பெருகி நனைக்கலாயிற்று. அரசன் தாயே எழுந்திரு; எழுந்திரு என்று பன்முறை கூறி அவளை எழச்செய்தான். அவளுக்குக் கண்ணீர் நின்றபாடில்லை. கூந்தலையும் முகத்தையும் சரிபடுத்திக்கொண்டு நின்றாள். அவளை உற்றுக் கவனித்தான் சிற்பி சேந்தன். அவன் உடல் நடுங்கியது; உள்ளம் துடித்தது; மயிர்க் கால்கள் குத்திட்டு நின்றன; துயரம் தொண்டையை அடைத்துக் கொண்டது. மன்னன் முன்னிலை என்றும் பாராமல் கோதை! கோதை! என்று கூச்சலிட்டான். குமரவேலின் தாய் கூச்சலிட்ட சேந்தனை உற்று நோக்கினாள். ஆ! நீங்களா? என்ன... கனவா?... நனவா? குமரவேல் இவர்தான் உன் அப்பா! என்றாள் குமரவேலின் தாய் கோதை. அப்பாவா!... இவரா?... என்று குமரவேல் சேந் தனைத் தழுவிக்கொண்டான். கலைப்பித்தும் வறுமைத் துன்பமும் வாழ்க்கை வெறுப்பும் என்னை ஊரைவிட்டுத் துரத்தியடித்தன. கல்லைச் செதுக்கும் கலையாளனான என் உள்ளம் கல்லே ஆயது. கருக்கொண்டிருந்த மனைவி கோதையைத் துறந்து வெளியேறும் அளவுக்கும் - சேந்தன் இறந்து போனான் என்னும் செய்தியை நானே பரப்பும் அளவுக்கும் கல்லாகிவிட்டது. ஆனால் குமரவேல் கலைமாண்பு என்னை கூட்டி வைத்து, உயிருடையவனும் ஆக்கியது என்றான் சேந்தன். அவன் உரையைக் கூட்டத்தினர் வியப்புடன் கேட்டனர். பிரிந்த குடும்பம் ஒன்று பட்டது கண்டு மன்னன் உவந்தான். குமரவேல் சேந்தன் முகத்தை உற்றுநோக்கிய வண்ணம் காலடியிலே வீழ்ந்து என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா என்றான். மார்புறத் தழுவிக்கொண்டான் சேந்தன் தன் மகனை! கோதை குமரவேலை நினைத்து நினைத்துப் பெருமிதம் கொண்டாள். கணவனைப் பிரிந்து வறுமையின் இடையே தனித்து வாழ்ந்தபோது குமரவேலைப் பெற்றெடுத்தது ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தது. இருப்பினும் அவள் பட்ட அல்லல்களோ கணக்கில் அடங்கா! இப்பொழுது அவையனைத்தும் துகள் துகளாகப் போய்த் தொலைந்தன. பேரறிவாளர்கள் தன் மகனைச் சான்றோன் என்று பாராட்டியுரைக்கும் பேறு பெற்று விட்டாள் இல்லையா? ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்  10. மானமுள்ள பிச்சைக்காரன் பிச்சைக்காரப் பயலுக்கு எவ்வளவு மமதை பார்! அப்பன் தான் குருட்டுப் பயல்; மகனும் அப்படியா ஆகவேண்டும்; தடியன் - இப்படிப் பொழிந்து தள்ளினான் பூவண்ணன். குழந்தைவேலால் இதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. டே! என்ன சொன்னாய்? என்னை ஆயிரம் வேண்டுமானாலும் ஏசு! என் அப்பாவைச் சொல்ல நீயார்? என்று குமுறினான். கையைத் தூக்கிக் கன்னத்தில் ஓங்கி அறையவும் தொடங்கினான். ஆனால் சட்டென்று கையைச் சுருக்கித் தன் கன்னங்களிலே இரண்டு போட்டுக்கொண்டு, அமைதியாகப் போய் உட்கார்ந்தான். அன்று முழுவதும் அவன் முகத்தில் களையே இல்லை. அழுகையும் கண்ணீருமாகவே வேளையைக் கழித்தான். அவன் உள்ளக் கொதிப்பைக் காட்டுவது போன்று கண்களும் சிவந்துவிட்டன; கன்னங்கள் வீங்கிவிட்டன. குழந்தையின் நண்பன்தான் பூவண்ணன். அவனுடன் ஒரே பலகையில் இருப்பவர்களுள் பூவண்ணனும் ஒருவன். ஐந்தாறு பேர்கள் இருக்கும் நெடும் பலகையில் நடுவே இருப்பவன் மற்றவர்களைத் தாண்டிக்கொண்டு போகும் பொழுது கால் பட்டுவிட்டதா, என்ன? இப்படிக் கால் பட்டதற்காகத்தான் குழந்தையை வசைமாரி பொழிந்தான் பூவண்ணன். குழந்தை மிகுந்த பொறுமைக்காரன். இருந்தாலும் அவன் தன் தந்தையைத் திட்டியதைச் சிறிதும் பொறுக்க முடியவில்லை; அஃது இயற்கைதானே! மாலையில் பள்ளிக்கூடம் முடிந்தது. சோர்ந்து தளர்ந்த நடையுடன் குழந்தை நடந்தான். பூவண்ணன் அவனைத் தொடர்ந்தான். குழந்தை! நான் அறியாமல் சொல்லிவிட்டேன். நான் சொல்லியது தவறுதான்; அதை உணர்ந்து கொண்டேன். பொறுத்துக்கொள்ள மாட்டாயா? என்றான். என்னைத் திட்டியது பற்றிக் கவலையில்லை. நான் மிதித்தது உனக்குத் தவறென்று தோன்றினால் என்னைத்தானே திட்ட வேண்டும். நீ செய்த தவறுக்கு உன் அப்பா, அம்மாவைத் திட்டினால் நீ பொறுத்துக் கொள்வாயா? நான் உன்னை மிதிக்க வேண்டும் என்றா மிதித்தேன். நீ இதற்கு முன்பு என்னை எத்தனை முறை மிதித்திருப்பாய்? அதற்கெல்லாம் நான் ஏதாவது சொல்லியிருக்கிறேனா? என்றான் குழந்தை. நான் செய்தது தவறு. அறிவில்லாமல் செய்து விட்டேன். நீ இன்று வகுப்பில் கவலைவயுடன் இருந்தது என்னை வாட்டி வதைத்தது. என்னை அடிக்க ஓங்கிய கையால் உன்னை அடித்துக் கொண்டு உட்கார்ந்ததை இப்பொழுது நினைத் தாலும் என்னால் பொறுக்க முடியவில்லை என்றான் பூவண்ணன். பரவாயில்லை! நடந்தது நடந்துவிட்டது. ஆத்திரப்பட்டு விட்டால் அறிவு இல்லாமல் போய்விடுகின்றது. என்ன செய்வது? கவலைப்படாதே! என்று பூவண்ணனை அனுப்பிவிட்டுக் குழந்தை தனியே நடந்து சென்றான். பூவண்ணனைத் தேறுதல் கூறி அனுப்பி விட்டாலும், அவன் கூறிய சொற்களை மட்டும் குழந்தையால் மறக்க முடிய வில்லை. பிச்சைக்காரன் குருட்டுப்பயல் என்னும் சொற்கள் மாறி மாறி மனத்தில் தோன்றித் துன்புறுத்தின. என்ண னென்னவோ நினைத்துக் கொண்டு அவன் தந்தை நல்லையா இருந்த பாழ் மண்டபத்தை அடைந்தான் குழந்தை. என்னடா! பேச்ச மூச்சு இல்லாமல் இருக்கிறாய்? பள்ளிக் கூடத்தில் ஏதாவது நடந்ததா? என்று வழக்கத்திற்கு மாறானபடி அமைதியாக இருந்த குழந்தையைக் கேட்டான் நல்லையா. குழந்தை தயங்கித் தயங்கிக் கூறினான். அப்பா! பிச்சைத் தொழிலை விடமுடியுமா? முடியாதா? திடுமெனக் கேட்ட இக்கேள்வி நல்லையாவை அசைத்தது. திக்கு முக்காடச் செய்தது. ஏனடா அப்படி? என்றும் இல்லாத படி இன்று என்ன வந்தது? கேள்வி ஆத்திரத்துடன் அடுக்கினார் நல்லையா! காரணம் இருக்கிறது அல்லது இல்லை. நாம் பிச்சை எடுக்காமல் பிழைக்க முடியுமா? முடியாதா? அப்படி முடியவே முடியாது என்றால், இரண்டு பேருமே சேர்ந்து குளத்திலோ, கிணத்திலோ விழுந்து செத்துத் தொலைவோமே! மானமற்ற வாழ்வு வாழ்வதைப் பார்க்கிலும் மாண்டு தொலைவது குற்றமா? கேடா? - உயர்ந்த உணர்ச்சியிலே பேசினான் குழந்தை. குழந்தையின் பேச்சு நல்லையாவின் ஒளியற்ற கண்களி லிருந்தும் நீர் வழியச் செய்தது. மனத்தைத் தாக்கும்படியான நிகழ்ச்சி ஒன்று நடந்திருக்கின்றது என்பதை நல்லையா அறிந்து கொண்ட அவர் நெருப்பிடை பட்டு நெளியும் புழுப்போல் துன்புற்றார். நாளை முதல் நான் பள்ளிக்கூடம் போகப்போவது இல்லை. என்னைப் படிக்க வைப்பதால் தானே நீங்கள் பிச்சை எடுக்க வேண்டியது இருக்கிறது. சுமை தூக்கியாவது, நான்கு தெருக்களைப் பெருக்கியாவது நான்கு காசு தேடி உங்களைக் காப்பாற்றுவேன். அதற்காகப் பிச்சை எடுக்க விடமாட்டேன்; வேண்டாம் இந்த மானங்கெட்ட பிழைப்பு. எங்கள் ஆசிரியர் ஒரு நாள் சொன்னார். அதனை இன்னும் நான் மறக்கவில்லை. பொய்-வஞ்சம்-திருடு இவற்றைச் செய்து உயிர் வாழ்வதைப் பார்க்கிலும் பிச்சை எடுப்பது மேல்; ஆனால் பிச்சை எடுத்து உயிர் வாழ்வதைப் பார்க்கிலும் சாவதே மேல் குழந்தையின் உரையில் கொதிப்பு இருந்தது. குழந்தை உன்னை நல்ல நிலைமையிலே பார்ப்பதற்காக அல்லவோ எத்தனை எத்தனையோ துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டும் உயிர் வாழ்கிறேன். உன்னை மட்டும் நினையாவிட்டால் உறுதியாகச் செத்தே இருப்பேன். பிச்சை எடுப்பது என்ன எனக்குப் பெருமை என்றா எண்ணுகின்றேன். அதன் இழிவை எண்ணி எண்ணிப் புண்ணாகிப் புண்ணாகி நெஞ்சம் மரத்துப் போய்விட்டது. ஏச்சும் பேச்சும் கேட்டு இதயம் இரும்பாகி விட்டது. என்ன ஆனாலும் உன்னை நல்ல நிலைமையிலே கண்டு விடுவேன் என்று எண்ணினேன்... நல்லயாவைக் குழந்தை பேசவிடவில்லை இடை மறித்தான். அப்பா! நீங்கள் சிறுமையான வாழ்வு வாழ்வது என்னைப் பெருமைப் படுத்துவதற்காகவா? நீங்கள் கண்ணிழந்தும்கூட மகனுக்குச் செய்ய ண்டிய கடமைகளை மறவாது செய்ய - நான் கண்ணொளி பெற்றும் கண்கெட்ட மாடாக இருந்து தந்தையை வாட்ட! இது எவ்வளவு பெருமை! - குழந்தை பேசியதை நல்லை யாவால் பொறுக்க முடியவில்லை. டே! குழந்தை பேச்சை விடுகிறாயா இல்லையா? என்றார். சட்டியில் இருந்த சோற்றைப் பற்றி யாரும் கவலைப்பட வில்லை. பாழ் மண்டபத்தின் ஒரு மூலையிலே முடங்கிப் படுத்தான் குழந்தை. ஒரு பக்கத்தில் நல்லையா படுத்தார். பழம் புண்ணிலே பழுக்கக் காய்ச்சிய இரும்பு புகுந்தது போல் துன்புற்றார். நல்லையா நடு வயதுவரை ஒளியுடைய கண்களுடன்தான் இருந்தார். அம்மை நோய் கண்டு வாட்டியெடுத்து கண்களின் ஒளியையும் வாங்கிக்கொண்டு விட்டது. உழைத்துச் சம்பாதிக்கும் வயதிலே ஒளி இழந்துவிட்டால் என்ன செய்வது? பழைய சொத்து நல்லையாவுக்கு அதிகமாக இருக்கவில்லை. ஒரு வீடும், நன்செய் புன்செய்களாக இரண்டு ஏக்கர் நிலமும் இருந்தன. அவருக்கு மனைவியாக வந்த காளியம்மாள் பெருங் கைகாரி. வரவு, குடும்ப நிலைமை இவற்றைப் பற்றிக் கவலைப் படாமல் செலவழிக்கக் கூடியவள். அவள் பிறவிக் குணமே அதுவாக இருந்தது. பின்னும் என்ன? நல்லையாவின் நிலங்கள் விறக்கப்பட்டு விட்டன. கண்ணொளியும் இழந்தார். பாழும் வறுமைக்கும் ஆட்பட்ட குடும்பத்திலே குருட்டுக் கணவனோடு கூடி வாழ்வதற்கு காளியம்மாள் மனம் இடந்தரவில்லை போல் இருக்கிறது; வெளியேறி விட்டாள். அப்பொழுதெல்லாம் குழந்தைக்கு வயது ஐந்தேதான். அவள் தன் மகன், குழந்தையைத் தன்னோடு கொண்டுபோகத்தான் முயன்றாள். ஆனால், பிச்சை எடுத்தாவது குழந்தையை நான் காப்பாற்றுவேனே ஒழிய உன்னிடம் கொடுக்கமாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்துவிட்டார். வருமானம் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் சாப்பிட முடியும்? கடன் தொல்லை அதிகமாயிற்று. வீட்டையும் விரைவில் விற்றார். இன்னும் கடன் கிடைக்குமா? கடனைத் தீர்க்க வழியிருக்கிறதா? என்று எண்ணிப் பாராமல் எவராவது கடன் கொடுப்பாரா? நல்லையாவுக்குப் பிச்சையெடுப்பது அன்றி வேறு வழியின்றிப் போய் விட்டது. நல்லையாவுக்குத் தெரியாமலே வந்து காளியம்மாள் குழந்தையைப் பலமுறை பார்க்க விரும்பினாள். தன்னோடு அழைத்துப் போகவும் முயன்றாள். வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட கணவனையே வெறுத்து வெளியேறிய ஈவு இரக்க மற்றவளுக்கு மகன் ஒரு கேடா? கணவன் ஆகாதபோது அவன் மகன் மட்டும் ஆகுமோ? மானம் இருந்தால் நாங்கள் செத்தாலும் இப்பக்கம் எட்டிப் பார்க்காதே? நீ செத்தாலும் நாங்கள் உன்னைப் பார்க்க போவது இல்லை. நீ தாயும் இல்லை; நான் மகனும் இல்லை என்று திட்டியனுப்பினான். அதற்குப் பின்னும் அவள் தலைகாட்டவில்லை. அன்றன்று கிடைத்ததைக் கொண்டு பசியும் பட்டினியுமாக நாட்களை ஓட்டினர். குழந்தைக்கும் வயது பதினான்கு கடந்துவிட்டது. இவ்வளவு எண்ணங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நல்லையாவைத் தின்றன. நெருப்பினுள் படுத்து உறங்க முடியுமா? உறங்காமலே விடிந்தது. குழந்தை தெரு வழியே நடந்தான். நெடு நேரம் சுற்றிச் சுற்றி அலுத்தான். மோட்டார் நிலையத்தில் காத்துக்கிடந்தான். சுமை தூக்கிக் கொண்டு சென்றாவது கூலி பெறவேண்டும் என்பது அவன் நோக்கம். அதற்கு ஒரு சிறு வாய்ப்பும் நடுப்பகல் வரை கிடைக்கவில்லை. கூலிகூலி என்று கத்திக்கொண்டு பெருஞ்சுமையுடன் வந்த ஒருவரை அணுகினான். கூலி என்ன கேட்கிறாய்? நக்கீரர் தெருவுக்குப் போக வேண்டும் என்றார். கொடுப்பதைக் கொடுங்கள் ஐயா. எவ்வளவு கொடுத்தாலும் சரி என்று குழந்தை சொல்லி வாய் மூடுமுன், வாடிக்கையான சுமை தூக்கிகள் ஓடி வந்து ஐயா, இவன் புதுப்பயல்; மூட்டை அடிப்பவன், நம்பாதீர்கள், சுமையைக் கொடுத்தீர்களோ மூலை முடுக்குகளில் ஓடித் தப்பிவிடுவான் என்று கூச்சல் இட்டனர். ஊருக்குப் புதியவரான அவர் அப்பாவி! குழந்தை எடுத்துக் கொண்டு போய்க் கூலி வாங்கவேண்டிய சுமை எவன் தலையிலோ ஏறியது. குழந்தைக்குக் கோபம் அதிகமாயிற்று. கனல் கக்கும் பார்வையில் பார்த்தான் அவர்களை. அஞ்சுபவர்களா அவர்கள்? ஐயோ! தேடி வைத்த சொத்து பறி போய்விட்டது இல்லையா? பின் என்ன கோபம் வராதா? என்று கேலி செய்தனர். என்னடா உலகம் இது? என்று ஏங்கிக்கொண்டு இரயிலடிக்கு நடந்தான். அப்பா எப்படி இருக்கிறாரோ என்னும் எண்ணம் சிறிதும் பொருட்டாய் எண்ணாத வலிய உள்ளம் ஏற்பட்டு விட்டது. எதனையும் தாங்கி உழைப்பு ஒன்றாலேதான் முன்னேறித் தீரவேண்டும்; அதற்கும் இடையில் எத்தனை எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும் சரி, கவலையில்லை, என்னும் உறுதியுடன் இரயில் நிலையத்தைவிட்டு நகரவில்லை. மாலை ஐந்து மணி இருக்கும். இரயிலில் இருந்து நடுத்தர வயதுள்ள ஒருவர் ஒரு தோற்பையுடன் நடந்து வந்தார். கூலி கூலி என்று சொல்லிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தான் குழந்தை. பையா! சுமை சிறிதுதான். கூலி வேண்டாம். என்றார். ஐயா, நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் ஐயா; நான் தூக்கிக் கொண்டு வருகிறேன். இன்று நீங்கள் கூலி தந்தால் ஒரு குடும் பத்தைப் பிச்சைக்காரர் ஆக விடாது தடுத்த பெருமை உங்களைச் சேரும் என்றான். குழந்தையின் கண்களிலே நீர் சுரந்து நின்றது. இரக்கமுடைய வழிப்போக்கர் குழந்தைவேலை நோக்கினார். அவருக்கும் சிறுவன் சொல்லைக் கேட்டு உதவவேண்டும் போல் இருந்தது. அவர் பையா, இதனை எடுத்துக்கொண்டு வந்தால் உனக்கு என்ன கூலிதான் கிடைத்துவிடும். உன் குடும்பத்தைக் காப்பாற்றிவிடுவாய்? என்றார். ஐயா எவ்வளவு கிடைத்தாலும் சரி; கவலையில்லை. என் தந்தை குருடர். பிச்சையெடுத்துப் பிழைத்துக் கொண்டு என்னையும் வளர்த்தார். அது மானக்கேடான வாழ்வு என்று அவரைப் பிச்சை எடுக்க விடாமல் தடுத்துச் சுமை தூக்கிச் சம்பாதித்தாவது பிழைப்போம் என்று உறதி சொல்லிவிட்டு இன்றுதான் வந்தேன். இதுவரை சல்லிக் காசு கூடக் கிடைக்க வில்லை. வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்த்து ஒரு ரூபாய் சேர்த்துவிட்டால் போதும்! பிழைத்துக்கொள்வோம். என்னை வேண்டி இந்தச் சுமையைத் தூக்குவதற்கு அனுமதியுங்கள் என்றான் குழந்தை. சரி! ஒரு ரூபாய் கிடைத்தாலும் போதும்; பிழைத்துக் கொள்வாய்; பிச்சை எடுக்கமாட்டாய்! அப்படித்தானே - பெரியவர் கூறினார். ஐயா! என்னை நம்புங்கள். உண்மையாகச் சொல்கிறேன். திருக்குறள் மேல் ஆணையிட்டு சொல்கிறேன். ஒரு ரூபாய் சம்பாதித்துவிட்டால் போதும்! பிச்சை எடுக்கமாட்டோம்; கூலியும் சுமக்கமாட்டேன். என்றான் - அவன் கண்ணில் சுரந்து நின்ற நீர் கன்னத்தின் வழியே வழிந்தன. அருள் கனிய ஒரு பார்வை பார்த்தார் வழிப்போக்கர். புன்முறுவலுடன் இந்தா ஒரு ரூபாய்; நன்றாகப் பிழைத்தால் போதும்; உன் முன்னேற்றத்தை முகம் காட்டுகின்றது என்றார்! ஒரு ரூபாயா ஐயா, எனக்கா? வியப்புடன் கேட்டான் குழந்தைவேல். ஆம்; போய் வா என்று நடந்தார் பெருந்தன்மை மிக்க வழிப்போக்கர். ஐயா, மன்னிக்க வேண்டும். யான் இச் சுமையைத் தூக்கிக்கொண்டு வரவேண்டும். இந்தப் பணம் இரவலாகப் பெற்றதாக இருக்கக் கூடாது. ஒன்றுக்கு நான்கு பங்காகப் பயன் கிடைத்தது தங்கள் பெருந்தன்மையால் என்று வேண்டுமானால் நெஞ்சாரப் பாராட்டிப் பெற்றுக்கொள்வேன். அவ்வாறின்றி நாகரிகப் பிச்சைக்காரனாக உங்களிடம் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு போகமாட்டேன். என்றான். குழந்தையின் உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வந்த இந்தச் சொற்கள் வழிப்போக்கருக்கு இன்பமாக இருந்தன. தோற்பையை அவனிடம் தந்தார். மகிழ்ச்சியுடன் பின் தொடர்ந்து நடந்தான். அழகாக இருந்த தோற்பையைப் பன்முறை பார்த்துக் கொண்டான். நிலக்கடலைப் பருப்பு, மிட்டாய், பொரிகடலை இவை களுள்ள ஒரு சிறிய தட்டு இருந்தது; அதன் முன்னே குழந்தை உட்கார்ந்திருந்தான். அவன் படித்து வந்த பள்ளிக்கூடத்தின் தலைவாயில் பக்கம் அது. குழந்தையின் தட்டு. பள்ளி தொடங்கு முன்னரே காலியாயிற்று. பள்ளி மாணவர்கள் அனைவரும் அவனுக்குத் தெரிந்தவர்கள் அல்லவா! குழந்தையைத் தட்டுடன் கண்ட பூவண்ணன் தலை கிறுகிறுத்தது. அவன் தலையை வெளியே காட்டவே இல்லை. குழந்தை எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. குட்டி வியாபாரி ஆகிவிட்டான் அல்லவா! நாள் தோறும் வேண்டிய மட்டும் காசு கிடைத்தது. நான்கு தடவைகளாவது தட்டுகளை நிரப்பிக் கொண்டு பள்ளிக்குச் சென்றான். ஒவ்வொரு தடவையும் எட்டணாக்களுக்குக் குறையாமல் ஊதியம் இருந்தது. சிக்கனமாகச் செலவழித்துக் கொண்டு மீதத்தைப் பத்திரமாகத் தந்தையிடம் தந்தான். இப்பொழுது நல்லையாவும் குழந்தையும் பாழ் மண்டபத்தில் குடியிருக்கவில்லை. மாதம் மூன்று ரூபா வாடகையிலே ஒரு குடிசையைப் பிடித்துக்கொண்டு இருந்தனர். ஓராண்டு கடக்குமுன் நானூறு ஐந்நூறு ரூபாய்கள் கை முதலாகிவிட்டன. சிறுவன் குழந்தையைப் பலரும் பாராட்டினார்கள். பிச்சைக்காரர்கள் சிலருக்கு மட்டும் இவர்கள் மேல் கோபம் உண்டு. முன்பு கூட்டு வாணிகனாக இருந்த நல்லையா வீட்டிலிருந்து காலந்தள்ளுகிறான் இல்லையா! குழந்தை ஒரு தள்ளுவண்டி வாங்கிவிட்டான். அதில் மிட்டாய் வகைகள், பருப்பு வகைகள் - இனிப்பு வகைகள் - இப்படி எத்தனை எத்தனையோ உண்டு. மணியடித்துக் கொண்டு வந்தால் போதும். மாணவர்களுக்குக் குழந்தையின் தள்ளுவண்டி நினைவுக்கு வந்துவிடும். இனிப்பை நாடும் எறும்புகள் போன்று சிறுவர்கள் கூடிவிடுவர். வருமானம் வரவர மிகுதியாயிற்று. நாளொன்று, எப்படிப் போனாலும் ஐந்து ரூபாய்க்குக் குறையாத வருவாய் தந்தது. மணியடித்துக்கொண்டு வண்டியுடன் வந்தான் குழந்தை. சிறுவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறும் நேரம். பள்ளியின் பக்கத்திலிருந்த கிணற்றிலிருந்து டுமீல் என்னும் பெருஞ்சத்தம் ஒன்று கேட்டது. என்னவோ என்று திகைப்புடன் வண்டியைப் பற்றியும் கவலைப்படாது கிணற்றருகே ஓடோடிச் சென்றான். ஆண்களும் பெண்களும் ஐந்தாறு பேர்கள் கூடினர். ஐயோ! ஐயோ!! விழுந்து விட்டான்! விழுந்துவிட்டான்! என்று கூக்குரலிட்டனர். ஆனால் எவரும் கிணற்றுள் வீழ்ந்தவனைக் காப்பாற்றத் துணியவில்லை. குழந்தை ஒரே தாவாகக் கிணற்றுள் தாவி வீழ்ந்தான். நீந்தத் தெரியாமல் மூழ்கித் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்த சிறுவனை அணைத்துத் தூக்கினான். தன் தோள்மீது போட்டுக் கொண்டான். படிக்கட்டோ, திட்டையோ எதுவும் இல்லாத கிணறு அது. பத்துப் பதினைந்து அடி தண்ணீருக்கு எப் பொழுதும் குறைவாய் இருக்காது. சிறுவனை அணைத்துக் கொண்டு நிலைநீத்தில் நின்றான். அதற்குள் மேலே நின்றவர்கள் கயிறொன்றைத் தொடங்கவிட்டனர். அதன் வழியே சிறுவனுடன் மேலே வந்தான் குழந்தை. செத்தவனுக்கு உயிர் தந்தது போன்ற இந்த அருஞ் செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. குழந்தை என்னும் பெயர் எல்லோர் வாயிலிருந்தும் வெளியேறியது. பள்ளிக்கூடம் குழந்தைவேலின் துணிவான செயலைப் பாராட்டிப் புகழ்ந்தது. கிணற்றில் வீழ்ந்த சிறுவனின் பெற்றோர்கள் உயிர் காத்த உபகாரி என்று செய்தித்தாளுக்கு எழுதியனுப்பித் தம் நன்றி அறிதலைப் புலப்படுத்தினர். இவற்றையெல்லாம் கேட்டறிந்த நல்லையா இன்பக் கண்ணீர் சொரிந்தார். நான் கண் கெட்டவன், ஆனாலும் பெரும் பேறு செய்தவன் தான் என்று தம்மைத் தாமே வியந்து கொண்டார். ஐந்தாறு ஆண்டுகள் சென்றன. குழந்தையினிடம் பத்தாயிர ரூபாய்க்குமேல் சேர்ந்து விட்டன. ஊரின் நடுவே இருந்த கடை யொன்றைப் பிடிக்க நினைத்தான். அந்த இடம் வாடகைக்கு விடப் படப்போகிறது என்பது எவருக்கும் தெரியாது. குழந்தையின் நண்பன் ஒருவன் தெரிந்து கூறினான். எவரும் அறியாமல் அதனை வாடகைக்குப் பேசுவதற்குச் சென்ற இடத்திலே, விலை பேசியே முடித்துவிட்டான். எல்லாம், மூவாயிரம் ரூபாய்தான். முடித்த பின்பு அதனை வாடகைக்கு விட்டால் கூட ஐயாயிரம் ரூபாய் முன்பணம் தர ஆட்கள் காத்திருந்தனர். அந்த இடத்தின் மதிப்பிற்கு வேறென்ன வேண்டும். குறிப்பிட்ட நாள் ஒன்றில் மிட்டாய்க் கடை தொடங்க இருந்தது. படிக்கராமர் மிட்டாய்க் கடை என்னும் பெரியதோர் பலகையைக் கடை முன் தொங்க விட்டான். தொடக்க விழா இதழும் அச்சடித்தான். கோலாகலமாக விழாத் தொடக்கமாக இருந்தது. ஒரு வெள்ளித்தட்டு நிறைய இலை, பாக்கு, தேங்காய், பழம், சந்தனம் இவற்றுடன் குழந்தை ஒரு வண்டியிலே புறப்பட்டான். நிறுத்து என்று சொல்லிவிட்டுத் தட்டுடன் கீழே இறங்கி ஒரு வீட்டின் முன்கட்டினை அடைந்து நின்றான். அங்கே ஒரு பெரியவர் இருந்தார். அவரைப் பணிவோடு வணங்கி வெள்ளித் தட்டை நீட்டினான். இது என்ன? இவன் யார்? என்னும் திகைப்புடன் வீட்டுக்காரப் பெரியவர் மெய்மறந்து போய் நின்றார். எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை மட்டும் எடுத்துக்கொண்டார். இல்லை ஐயா, எல்லாம் தங்களுக்குத்தான் என்று அவர் அருகில் இருந்த பலகையிலே தட்டினை வைத்தான். என்னை யார் என்று தெரிகின்றதா ஐயா; நீங்கள் மறந்திருப்பீர்கள்; இரயில் நிலையத்தில் ஒருநாள் தங்கள் சுமையைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரு ரூபா வாங்கிக்கொண்டு போகவில்லையா? அவன்தான் நான்; என் பெயர் குழந்தைவேல். தாங்கள் தந்த ரூபா ஒன்றை முதலாகக் கொண்டு இந்நிலைமைக்கு வந்தேன் என்று வரலாறு அனைத்தையும் கூறினான். அழைப்பிதழை எடுத்து நீட்டினான். என்னப்பா இது! என் பெயரையா கடைக்கு வைத்தாய்? என்று கேட்டார் பெரியவர். இதனைப் பார்க்கிலும் நல்ல பெயருக்கு எங்கே போவது? இன்று நான் ஒரு மனிதனாகத் தெரிகின்றேன் என்றால் தாங்கள் காலத்தினால் செய்த உதவியால்தான், அந்த நன்றியை மறக்கலாமா? நன்றி மறந்தவன் நாயினும் கடையன் அல்லனோ? - குழந்தை நாக்கு தழுதழுத்தது; பெரியவர் உள்ளம் படபடத்தது. ஏதோவோர் புதிய உலகுக்குப் போய்க்கொண்டு இருப்பது போன்ற உணர்ச்சி அவருக்கு ஏற்பட்டது. இத்தகையவர்களும் உலகில் இருக்கிறார்களா? என்று நினைக்கும்போது அவர் கண்களில் மகிழ்ச்சி நீர் சுரந்தது. ஐயா, உங்கள் தோற் பையிலே இருந்த பெயரை அன்று பார்த்தேன். அதனை என் உள்ளத்தில் அழியா எழுத்தில் எழுதிக் கொண்டேன். என்னை வாழவைத்த அந்தப் பெயரே வாணிக நிலையத்திற்கு ஏற்றது என்று கொண்டேன் என்றான். படிக்கராமர் குழந்தைவேலைத் தம் குழந்தையாகவே தழுவிக்கொண்டார். தன் அன்பெல்லாம் கூட்டிச் சேர்த்து வாழ்த்தினார். தேநீர் கொண்டு வந்தான் சிறுவன் ஒருவன். இருவரும் பருகினர். சிறுவன், குழந்தைவேல் முகத்தை உற்றுக் கவனித்தான். ஒரே தாவாகத் தாவி அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தழுவினான். அப்பா! இவர்தான் என்னைக் கிணற்றி லிருந்து தூக்கியவர் என்றான். உயிர் காத்த உபகாரியா? என்றது படிக்கராமர் வாய். அதற்கு மேல் பேச்சு ஓடவில்லை. கையெடுத்து வணங்கி விடை தந்தனுப்பினார். அவன் வண்டி நகர்ந்தது - இமை கொட்டாமல் அது மறையும்வரை பார்த்துக் கொண்டு நின்றார். இவனைப் பெற்றவனே பெற்றவன்; மற்றவர்களெல்லாம் பெற்றவர்களா? என்று தமக்குள் சொல்லிக் கொண்டார். குழந்தைவேல்- குழந்தைவேல் என்னும் சொற்களை மந்திர மொழிபோல் சொல்லிச் சொல்லி இன்புற்றார். மிட்டாய்க் கடை நன்றாக நடந்தது; பெருத்த வருவாயும் வந்தது. இனிமேல் கவலையில்லை என்னும் நிலை ஏற்பட்டது. ஆனால் குழந்தைக்கு ஒரே ஒரு கவலை மட்டும் பெருக இருந்தது. குருடரான தன் தந்தை தம் பொழுதை இன்பமாகக் கழிப்பதற்குரிய வழி வகைகள் எவையுமின்றி மூலைக்குள் கிடக்கிறாரே என்னும் கவலைதான் அது. அவருக்குக் கண் ணொளி தந்துவிட வேண்டும் என்பதே அவனது ஆசை. அதற்காக இயற்கையை வென்றுவிட முடியுமா? முடியா விட்டாலும் மாற்றுத் திட்டங்கள் உண்டல்லவா! புறக் கண்களுக்குப் பதில் அகக் கண்களை ஒளியிடச் செய்து விடுவது எளிது - இன்பமானது எனத் தெளிந்தான். குருடர் களுக்குக் கற்றுத் தரும் ஆசிரியர் ஒருவரை அழைத்துக் கொண்டுவந்து, நல்லையாவிற்கு எண்ணும் எழுத்தும் கற்க ஏற்பாடு செய்தான். முயற்சி வீணாகி விடவில்லை. குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் ஆவலுடைய நலலையாவுக்குக் கல்வி கனிச்சாறு ஆயிற்று. தமிழ் தேன் ஆயிற்று! முயன்று விருப்புடன் கற்றார். முதுமையிலும் தளராது மனனம் பண்ணினார் இரண்டோர் ஆண்டுகளிலே திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களையும் கற்றுத் தெளியும் அளவுக்கு உயர்ந்தார்.,இப்பொழுதெல்லாம் அவருக்குப் பொழுதுகள் இன்பப் பொழுதுகள் ஆகிவிட்டன. திருவள்ளுவர் இளங்கோ, சாத்தனார், கம்பர் இவர்களோடு பழகுவது என்ன எளிதில் கிடைக்கக் கூடியதா? நல்லையாவுக்குக் கிடைத்தது. தாம் பெற்ற இன்பம் பிறரும் அடையுமாறு நாடினார். குழந்தை முன்னின்று வழி செய்தான். நல்லையா குருடர் பள்ளிக்கூடம் என்னும் பெயரால் பள்ளிக்கூடம் ஒன்று ஆரம்பமாயிற்று. கண்ணொளியற்றவர் களுக்குக் கல்விக் கண்கள் தரும் மருத்துவராக நல்லையா பணியாற்றினார். அவர்தானே கண்கெட்டவர்களின் மன நிலையை உள்ளவாறு அறிவார்! குருடர் பள்ளியை ஒட்டி இருபது ஏக்கர் நிலம் இருந்தது குழந்தைக்கு. அங்கு ஒரு கூட்டுப்பண்ணை நடைபெற்று வந்தது. அப்பண்ணை முகப்பிலே ஒரு பலகை தொங்கியது. அதில் இருந்த செய்தி:- அறிவிப்பு மானமுள்ள பிச்சைக்காரர்களுக்கு பிச்சை எடுத்து உயிர் வாழ்வது மானக்கேடு என்று எண்ணும் பிச்சைக்காரர்கள் இந்தப் பண்ணையின் உதவியை நாடி வரலாம். அவரவர் விருப்பம். உடல்நிலை இவற்றுக்கு ஏற்ப உழைப்பு இங்கு தரப்படும். உணவு உடைகள் வழங்குவதுடன் உழைப்பைப் பொறுத்து ஊதியமும் பெறுவர். கைத்தொழில்கள் செய்யும் பழக்கமும் விருப்பமும் உடையவர்களையும் உரிய முறையில் கவனித்து அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். பண்ணை அலுவலகத்தை அணுகிக் கேட்கவும். பரம்பரைச் செல்வர்கள் வந்த வந்து மூக்கிலே விரலை வைத்துக்கொண்டு பலகையைப் பார்த்தனர். உள்ளே என்ன என்ன எண்ணிக் கொண்டாலும் வெளிப்படையாகப் புகழ்ந்தனர். செய்தித்தாள்கள் பக்கம் பக்கமாகக் குழந்தையின் செயற்கரிய செயலைப் பாராட்டி எழுதின. நாடு நலமடைய குழந்தை வேலைப் போலும் நல்லறிவாளர்களும், செல்வர்களும் நிறையத் தேவை என்று வேண்டுகோள்கள் விடுத்தன. நாள் தவறாமல் குழந்தையின் செயலைப் பாராட்டிக் கடிதங்கள் வந்து குவிந்தன. அதைப்பற்றிக் கவலைப் படாத குழந்தைவேல் விருப்பு வெறுப்பு இல்லாமல் தொடர்ந்து நற்பணியாற்றி வந்தான். ஆனால், ஒருநாள் அவனை நாடிவந்த வாழ்த்துரை ஒன்று உள்ளத்தை அசைத்து நெகிழ வைத்தது. அதனை அனுப்பியிருந்தவன் அவன் பழைய நண்பன் பூவண்ணன்தான். அவன் எழுதி யிருந்தான்; மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல் என்னும் பொய்யா மொழியைக் கற்றேன்; அதன் பக்கத்தே குழந்தைவேல் என்று குறித்து வைத்துக்கொண்டேன். இதனைப் படித்துப்பார்த்த குழந்தை பூவண்ணா, நீ வாழ்க! பொய்யாமொழியும் வாழ்க! என்று வாழ்த்தினான்.  11. தமிழ் முழக்கம் விண்ணிலிருந்து வெண்மதி போல்வதான பறக்கும் தட்டொன்று கீழே இறங்குகிறது. வீட்டின் மேல் மாடியிலே இருந்த நான் அதனை உற்று நோக்கினேன். என் நண்பர்கள் சிலர் அதில் இருந்தனர். அவர்கள் என்னையும் அதில் ஏறிக் கொள்ளுமாறு வற்புறுத்தினர். யான் ஏறிக் கொள்ளக்கூடிய அளவிலே மாடியின் பக்கம் வருமாறு தட்டினை இயக்கினர். நான் உவகையுடன் ஏறிக்கொண்டேன். உலகைவலம் வரலா மல்லவா! பறக்கும் தட்டு காற்று மண்டலத்தைக் கிழித்துக் கொண்டு விர் என்னும் ஒலியுடன் மேலே பறந்தது. எத்தனை எத்தனையோ மலைகள் - தொடர்கள் - ஆறுகள் - அணைகள் - குளங்கள் - புல்வெளிகள் - தோப்புகள் - வயல்கள் - கடல்கள் - நாடுகள் - அம்மம்மா! ஒரே வனப்புக் கொள்ளை. எதன் அழகைத்தான் கூறுவது? உலகத்தின், எழில், உற்றுக் கவனித்த என்னை ஊமையாக்கி விட்டதை அன்றி உரைக்கவிட வில்லை. அவ்வளவு கொள்கை அழகு! இதோ... ஒரு வெள்ளை மாளிகை. ஆம்! ஆம்! செல்வங் கொழிக்கும் அமெரிக்க நாட்டின் தலைவர் வாழும் வெள்ளை மாளிகை தான் அது. அதனை விண்ணிலேயிருந்து கண்ட வுடனே அந்த வெள்ளை மாளிகையிலே இருந்த வள்ளல் - நிற வேற்றுமையை ஒழித்துக்கட்டிய நல்லோன் - ஆபிரகாம்லிங்கன் எண்ணம் என் நெஞ்சிடைப் புகுந்தது. வெள்ளை மாளிகை வாழ்க என்று வாழ்த்தினேன். அதற்குள் பறக்கும் தட்டு அடுக் கடுக்காக உயர்ந்து அகன்று தோன்றும் ஒரு பேரிடத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. அங்கு ஒரே ஆரவாரமாக இருந்த குரல் கேட்டது. உலகத் தலைவர்கள் அனைவரும் உலக அமைதிக்கு வழிகள் என்பது பற்றி உரையாடுவதற்கும், சிக்கல்களை அமைதியான முறையில் மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதற்கும் கூடியுள்ளார்களாம். இதோ... தலைவர் தம் பேச்சைத் தொடங்கி விட்டார். என்ன விந்தை! நம்ப முடிய வில்லையே! ஆ! ஆ! தலைவர் தமிழ் மொழியிலே பேசினார். சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி என்னும் நன்னெறியை முதற்கண் நினைவில் நிறுத்திக் கொண்டு நம் அமைதிப் பேச்சுக்களைத் தொடங்க வேண்டும். முன்னே தான் சமமாக இருந்து பின்பு பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக் கோல்போல் அமைந்து ஒருபக்கமாகச் சாயாமல் நடுவு நிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும் என்று எவ்வளவு அழகாகக் கூறுகின்றது இப்பாட்டு! இதன்படியே எந்தவொரு காரியத்தை எந்தவொரு நாடு செய்தாலும் நல்லதாயின் நல்லது என்றும் அல்லது ஆயின் அல்லது என்றும் உறுதியாகச் சொல்வோம். வேண்டியவர் வேண்டாதவர் என்று நடுவுநிலை தவறிப் பேசோம் ........ என்று தொடர்ந்து பேசினார். ஒலிக்கருவிகள் நன்றாக வேலை செய்து கொண்டிருந்தன. இல்லாவிடில் எவ்வளவோ தொலைதூரம் வந்துவிட்ட நாங்கள் இவ்வினிய குரலைத் தெளிவாகக் கேட்டிருக்க இயலாது. நாங்கள் ஆபிரிக்கா மீது பறக்கிறோம். பார்க்கப் பார்க்க என்னவோ போல் இருந்தது. எங்கள் எல்லோருக்கும் எரிச்சல் தாங்க முடியவில்லை - மன எரிச்சல்தான்! வெள்யைர்கள் ஒரு பக்கம்; கறுப்பர்கள் ஒரு பக்கம் வெள்ளையர்கள். தெரு ஒரு பக்கம். கறுப்பர்கள் தெரு ஒரு பக்கம். வெள்ளையர்கள் பள்ளி ஒரு பக்கம்; கறுப்பர்கள் பள்ளி ஒரு பக்கம். இப்படி இப்படியே உணவு விடுதி, நீச்சல் குளம், பூங்கா, பொழுது போக்கு அரங்கம் விளையாட்டிடம் எல்லாம் எல்லாம்! சே! சே! இதென்னடா கொடுமை! ஊருக்குளே திரியும் நாய்களிலே வெள்ளைநாய் கறுப்பு நாய் என்று இல்லை. எல்லா நாய்களையும் வீட்டிலே வைத்து பாலும் ரொட்டியும் போட்டு, மெத்தையிலே உறங்கப் பண்ணிக் கொஞ்சி குலாவி மகிழும் இந்த வெள்ளையர்கள், கறுப்பர்களை மட்டும் இப்படி வெறுக்கிறார்களே, இது கொடுமை இல்லையா? இந்த இருபதாம் நூற்றாண்டிலுமா இந்த அநியாயம்? என்று ஏங்கினோம். இதற்குள் எங்கோ பறந்துவிட்டது தட்டு. ஆனால் ஒரு மூலையிலேயிருந்து கிளம்பிய ஒரு சிறு குரலைக்கூட இழுத்துவிட்டது ஒலி வாங்கி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்னும் குறளை ஓங்கிய குரலிலே அழுத்தி அழுத்திப் பன்முறை கூறினார் ஒரு சொற்பொழிவாளர். ஓங்கட்டும் உம் குரல்; இப்பாலைவனக் காட்சிகளிலே உம் குரலாவது பசுஞ்சோலையாக இருக்கட்டும், இன்னும் ஓங்கிக் கூறும் என்று பறக்கும் தட்டில் இருந்தவாறே கத்தினோம். எங்கள் வாழ்த்தையும் உரைத்தோம். எங்கள் அவசரத்திலும் ஆத்திரத்திலும் இறங்கிப்போய்க் கைகுலுக்கிக் கொண்டு அன்பைத் தெரிவிக்கவா முடியும்? இங்கிலாந்து இங்கிலாந்து என்று கத்தினார் நண்பர் ஒருவர். ஆம்; நாலைந்து நூற்றாண்டுகள் நம்மை அடக்கி ஆட்சி செய்துவந்த நாடு அல்லவா! நரியாக இருந்துகொண்டு, சிங்கம், புலி, யானைகளையும் மண்டியிட வைத்து அடக்கி ஒடுக்கி விலங்கு விளையாட்டு (சர்க்கசு) நடத்திவந்த நாடு அல்லவா! அதனை நேரில் பார்க்கவும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழாது இருக்க முடியுமா? வியப்படையாமல் இருக்க முடியுமா? இங்குதானே இருபத்து மூன்று ஆண்டுகள் தமிழ்ப் பணி செய்தார் தமிழ்ப் போப். தாழ்மையுள்ள தமிழ் மாணவன் என்று தம் கல்லறையில் எழுதிவைக்கச் செய்தவர் அவர் அல்லவா! இந்த நாட்டில் பறக்கும்போது அத் தமிழ் அன்பரை நினைக்காது இருக்க முடியுமா? என்றேன். என் நண்பர் ஒருவர் சொன்னார்; அதோ போப் பரப்பி வைத்த தமிழ் முழக்கம் கேளுங்கள் ஆற்று மணல்போல் மேலே இருந்து பார்க்கத் தெரிந்தது கூட்டம். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து என்று கூறி விளக்கம் பேசினார் சொற்பொழிவாளர். பொறுத் திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும். சமயம் வாய்த்தபோது அதன் குத்துப்போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் எந்தக் காரியத்யும் சாதிக்க முடியாது. உலகம் விழித்துக் கொண்டது. இன்னும் பழைய முறையில் நாம் வாழ முடியாது. புதிய புதிய முறைகள்; புதிய புதிய முயற்சிகள்; புதிய புதிய கண்டுபிடிப்புகள் இப்படி இப்படி...! இன்று வாய்ப்பு இல்லையென்றல் பொறுமையாக இருப்போம். இப் பொறுமை தோல்விப் பொறுமையன்று. வெற்றிப் பொறுமை. நாளைச் செம்மாந்து கிளம்புவோம். பழைய வாடையும் புதிய வாடையும் கலந் தடித்தன. இது என்ன? ஒரே பண்ணைமயமாக இருக்கிறது? எங் கெங்கு நோக்கினும் ஆலைகள் பெரும் பெரும் வயல் வெளிகள்! வியப்புடன் பார்த்தோம். இதற்கு முன்னமும் பறந்திருந்த ஒருவர் இதுதான் உருசியா என்றார். இதோ மாசுகோ வந்து விட்டது என்றார். உற்றுப் பார்த்தோம். உருசியா கூட்டமைப்பின் பாராளுமன்றம் கூடியிருந்த நாள் அது. உணவைப் பெருக்குவது எப்படி? உழைப்பின் தரத்தைப் பெருக்குவதுடன் ஓய்வு, பொழுதுபோக்கு இவற்றின் அளவை அதிகரிப்பது எப்படி? என்பது பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. ஒரு சொற்பொழிவாளர் பேசினார்: உலகத்திலுள்ள அனைவரும் தத்தம் உழைப்பால் உறுதியாக வாழ முடியும். பிறரைச் சுரண்டியோ பிச்சையெடுத்தோ வாழ வேண்டும் என்ற நிலைமை இல்லவே இல்லை. அப்படியிருந்தால் அரசாங்கமே காரணம். அத்தகைய அரசு இருந்தால் என்ன. அல்லது அழிந்தால் தான் என்ன? இக்கருத்தை. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான் என்னும் குறள்மணி கூறுவது காண்க என்றார். நாங்கள் அனைவரும் அழகு! அழகு!! என்று கத்தினோம். கத்திக் கொண்டு கீழே பார்த்தோம்; அதுகடலாக இருந்தது. கருங் கடலாம் அது. கொஞ்ச நேரந்தான் சென்றது. மதுரை வந்துவிட்டது; இறங்குங்கள்! இறங்குங்கள்!! என்றார்கள். முடியாது; முடியவே முடியாது என் வீட்டு மாடியில் போய் இறக்கிவிடுங்கள்; இங்கு இறங்கமாட்டேன் என்று கூச்ச லிட்டேன். பறக்கும் தட்டில் சென்றவன் மோட்டாரில் எறியோ, காலால் நடந்தோ போகலாமா? விரைவாக இறங்குங்கள்; விளையாட்டைப் பின்னால் வைத்துக்கொள்வோம். அவசரம் என்று கடுகடுப்போடு சொன்னார் ஒருவர். இது என்ன தொல்லை? அழைக்கும்போது இருந்த பெருமை, அனுப் பும்போது இல்லையே என்னும் ஏக்கத்திற்கு ஆட்பட்டேன். தூக்கம் கலைந்தது. உறங்கிக் கொண்டிருந்த நான் விழிகளைத் திறந்தேன். பறக்கும் தட்டில் போனது கனவென்று அறிந்தேன். பறக்கும் தட்டில் போனது கனவானாலும் ஆகட்டும்; நனவானாலும் ஆகட்டும். கவலையில்லை! அனால் அமெரிக்கா, ஆபிரிக்கா, இங்கிலாந்து, உருசியா ஆகிய நாடுகளில் தமிழ் முழக்கம் கேட்டபோது நனவாகக் கூடாதா? என்னும் நினைவுடன் திருக்குறளைப் புரட்டினேன். அருவினை என்ப உளவோ கருவியால் காலம் அறிந்து செயின் என்னும் குறள்மணி முன்னின்றது. ஆம்! செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பவை உண்டா? இதனை அறிவறிந்த தமிழர் - உலக வலம்வரும் தமிழர் - ஆளும் தமிழர் இளந்தமிழர் நினைக்க வேண்டுமே! என்று எனக்குள் எண்ணிக் கொண்டேன்.  12. கண் கொடுத்த கவிதை மலங்காடு மாயாண்டி என்றால் அழுத பிள்ளையும் வாய்மூடும். அஞ்சாதவனும் அஞ்சிச் சோர்ந்து விடுவான். சிறுவர்கள் முதியவர்கள் - இன்னார் என்று இல்லை. எல்லோருக்கும் மாயாண்டி அணுகுண்டாக இருந்தான். இந்த இடத்திலே இத்தனை ஆயிரம் ரூபா கொள்ளை; இந்த இடத்திலே இன்னின்ன கொள்ளைகள்; இத்தனை பேர் இங்கே கொலை - இப்படி எத்தனை எத்தனையோ பேச்சுகள் எழும்; எல்லாம் மாயாண்டியின் திருவிளையாடலாகத்தான் உலாவும். பார்த்தவர், பறிகொடுத்தவர், பக்கம் நின்றவர் எவராவது உண்டா என்று தேடினால் உமிகுத்திக் கையோய்ந்த கதையாகத்தான் இருக்கும். மாயாண்டிப் புலிக்கு மணிகட்ட முடியுமா? அதிகாரிகள் பட்டாளங்கள் எல்லாம் எலிகள்! என்ன செய்ய முடியும்? அவனவனுக்கு மனைவி மக்கள் உண்டல்லவா! என்று மார் தட்டிப் பேசிக் கொள்வதும் மாயாண்டியைப் பிடித்துக் கைவேறு கால்வேறு ஆக்கிக் கழுவிலே போட்டு விட்டார்கள் என்று கயிறு திரிப்பதும் சாதாரணமான நிகழ்ச்சிகள். மாயாண்டி திருடர் கூட்டத் தலைவன்தான். இருந்தாலும் மக்கள் கட்டிவிட்ட கதைகளுக்கெல்லாம் பொறுப்பாளி யானவன் அல்லன். சாதாரணமாக அவன் திருடுவது இல்லை. சிறிய திருட்டு எதுவும் செய்வதும் இல்லை. ஆண்டுக்கு நான்கைந்து இடங்களிலே கணிசமாகத் திருடுவான். அதனோடு சரி. கண்ணுழையாக் காட்டிலும் நுழைவான் மாயாண்டி. கதிர் நுழையா வீட்டிலும் நுழைவான். பத்துப் பதினைந்து பேர்கள் சேர்ந்து பாலா கம்பு, வேல், வாள் இவற்றோடு சுற்றி வளைத்துக் கொண்டு நின்றாலும் ஒரு சுற்றிலே அவர்களை உருட்டி விட்டு மின்னல் வேகத்தில் மறைந்தவிடுவான். உண்மையாகவே உரமிக்கவன் அவன். ஒரு வீட்டின் மாடியிலே படுத்திருந்தான் மாயாண்டி. அவன் அங்கு இருப்பதை அறிந்து நள்ளிரவிலே சூழ்ந்து கொண்டனர் காவலர். (போலீசார்). ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு வீட்டைச் சுற்றி வரிசையாக நின்றனர். விடிந்த பின் மாயாண்டியை மாடிக்குச் சென்று பிடித்துவிட வேண்டும் என்பது அவர்கள் திட்டம். இருட்டிலே நுழைந்தால் அந்த வேதாளம் என்ன செய்யுமோ என்ற அச்சம் இருக்காதா? மாயாண்டி இருட்டாக இருக்கும்போதே எழுந்து விட்டான். கீழே பார்த்தான். சிவப்புத் தொப்பிகளாகத் தெரிந்தன. சரி! இப்படியா வேலை நடக்கிறது; நடக்கட்டும் என்று நினைத்து மெத்தை தலையணை இவற்றைப் பெருங் கட்டாகக் கட்டினான். வீட்டை அடுத்திருந்த சோளக் கொல்லையுள் வீசி எறிந்தான். மெத்தை தொப் என்று விழுந்ததுதான். மாயாண்டி தப்பிவிட்டான், மாயாண்டி தப்பிவிட்டான்; என்று கூச்சலிட்டுக் கொண்டு சோளக் கொல்லைக்குள் ஓடினர். மாயாண்டி தலைவாயில் வழியே சிங்கம் போல நடந்து போய் விட்டான். இப்படி எத்தனையோ, நிகழ்ச்சிகள். அவனைப் பிடிப்பதற்கும் எத்தனையோ முயற்சிகள். மேலைக்கால், முனியாண்டி வீட்டிலே சில பேர்கள் கூடிச் சேர்ந்து மாயாண்டியைக் காட்டிக் கொடுத்துவிட வேண்டும். அவனைப் பிடித்தால் ஒழிய நாம் அமைதியாக வாழமுடியாது - இப்படிப் பேசிக் கொண்டார்கள். நான் என் காதுகளினாலேயே கேட்டேன் என்று மாயாண்டியிடம் திருடன் மகாலிங்கம் கூறினான். ஒரு வெடிச் சிரிப்புச் சிரித்தான் மாயாண்டி. சரி சரி! நம் குணம் தெரியாதவன்; தேடிப்போய் ஒருவனைப் பழி வாங்குவது இல்லை. நம்மை வழிய இழுத்தவனை வாட்டாமல் விடுவதும் இல்லை. என்றான். அவ்வளவுதான். இரவு பன்னிரண்டு மணிக்கு முனியாண்டியை அவன் படுத்திருந்த கட்டிலோடு தூக்கிக் கொண்டு வந்து விட்டனர். கால், கை, இடுப்பு தலை இவற்றையெல்லாம் கட்டிலோடு வரிந்து கட்டியிருந்தனர். இப்படிப்பட்ட வேலைகளைச் செய்வ தெல்லாம் மாயாண்டியின் கூட்டத்தார்க்கு இன்ப விளையாட்டு. பாவம்! முனியாண்டி மாட்டிக் கொண்டான். முனியாண்டி அப்பாவி! மாயாண்டியைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது வேண்டாம் என்பதில் எது பற்றியும் கவலைப்படாதவன். ஆனால், அவன் வீட்டி லிருந்து சில பேர்கள் மாயாண்டி பற்றிப் பேசியது உண்மைதான். அதன் விளைவு இப்படியாகும் என்று சிறிதும் நினைக்க வில்லை. நினைத்திருந்தால் பேசவிட்டிருக்க மாட்டான். இனி என்ன செய்வது? உரலுக்குள் தலை போய்விட்டது. உலக்கைக்குத் தப்ப முடியுமா? முனியாண்டி! முனியாண்டி!! என்னைக் காட்டிக் கொடுப்பாய் அல்லவா! கக்கக்கா... கக்கக்கா... ஆம்! காட்டிக் கொடுத்து விடுவாய். வீரன் அல்லவா! முனியாண்டியின் முதுகிலே தட்டிக் கொண்டு மாயாண்டி சொன்னான். அந்தச் சிரிப்பிலே அயர்ந்து போனான் முனியாண்டி. அவனுக்கு வழக்கமாக வரும் நோயொன்று உண்டு. அது, காக்கை வலிப்பு. சிறிது பயந்து விட்டால் போதும். வந்து விடும். இப்பொழுது ஏற்பட்டது சிறிது பயமா? பேய், பூதம், பிசாசு, குட்டிச் சாத்தான் எல்லாம் சேர்ந்து அடித்த பயம்! வெட்டு வெட்டென்று அரை மணி நேரம் வெட்டியது. வாய் நுரை தள்ளியது. உட லெல்லாம் இரத்தம் கசிந்தது, நேரம் செல்லச் செல்ல வலி விட்டது. காட்டிக் கொடுப்பேன் என்பவனுக்குக் கருணை காட்டுவது மாயாண்டியோ அவன் கூட்டமோ அறியாத ஒன்று. காலை ஏழு மணிக்குக் கண்களை வாங்கிவிட வேண்டும் - ஒரே முடிவுடன் அனைவரும் அவரவர் இடத்திற்குச் சென்றனர். முனியாண்டி கட்டிவைக்கப்பட்டான். நாலைந்து தடவைக ளாவது காக்கை வலி வந்திருக்கும். அஞ்சி நடுங்குவான்; அதனை அடுத்து வலிப்பு வரும். வலிப்பு இருக்கும் போது தான் அவனும் அஞ்சாமல் இருந்தான். மாயாண்டிக்கு முனியாண்டியை நினைக்க என்னவோ போல் இருந்தது. அவனுக்குள்ள காக்கை வலிப்பை நினைத்து வருந்தினான். அதே பொழுதில் காட்டிக் கொடுப்பேன் என்று அவன் வீட்டில் பேசியதை எண்ணிப் பொறுமினான். கண்ணைத் தோண்டியெடுக்கும் தண்டனையையும் நினைத்தான். அவனால் உறங்க முடியவில்லை. பையா! வெற்றிலை என்றான். வெற்றிலையை மாறிமாறி மென்று கொண்டும், உதப்பித் துப்பிக் கொண்டும் பொழுதைக் கழித்தான்; வெற்றிலையும் தீர்ந்தது; படுத்தான்; உறக்கம் வரவில்லை; எழுந்தான்; இன்னும் காய்ந்த சருகாவது கிடக்காதா என்று வெற்றிலை பையைத் துருவினான். ஒரே ஒரு பாக்குச் சில் மட்டும் இருந்தது. அதை எடுத்து வாயிலே போட்டுக் கொண்டான். பாக்குச் சில் இருந்த தாளில் ஏதோ அச் சடித்திருந்தது. அது ஒரு புத்தகத்தின் தாள். எண்ணெய்ப் பந்தம் எரிந்து கொண்டிருந்தபடியால் வெளிச்சம் தெரிந்தது. தாளின் மடிப்பு சுருக்கங்களையெல்லாம் நிமிர்த்தி வைத்துப் படித்தான். ஒருமுறை இருமுறைகளல்ல - பன்முறைகள் படித்தான். படிக்கப் படிக்க அவனுக்கு அதற்குமுன் இருந்த ஊக்கம், உறுதியெல்லாம் பறந்தன. அவனால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. மீண்டும் படுக்கைக்குச் சென்றான். உறங்காமல் உறங்கினான். மாயாண்டிக்கு வயது பதினைந்து ஆக இருக்கும்போது, அவன் அப்பா குதிருள் இறங்கி நெல் அள்ளித் தருமாறு சொன்னார். அள்ளித் தந்துவிட்டுக் குதிரின் மேலிருந்தவாறே கீழே குதித்தான் மாயாண்டி. விளக்குத் தூக்குவதற்காக மாட்டி வைத்திருந்த கம்பியில் அவன் வலக்கண் மாட்டிக் கொண்டு கிழிந்து விட்டது. இமை நெடுந்தொலை வாராகக் கிழிந்து போயிற்று. அப்பப்பா! அப்பொழுது அவன் பட்ட துன்பத்தை இப்பொழுது நினைத்தாலும் கொடுமையாக இருந்தது. அஞ்சாத எனக்கே கண்ணிமை இழந்த அந்நிகழ்ச்சி அவ்வளவு அல்லல் தந்தது என்றால் இந்தப் பயங்கொள்ளிக் காக்கை வலி முனியாண்டிக்குக் கண்ணைத் தோண்டி விடுவது எப்படி இருக்கும்? விடியும் வரை உயிரோடு இருப்பானோ? செத்துத் தொலைந்து விடுவானோ... இப்படி மனம் விட்டுக் கலங்கினான். எப்படிக் கண்ணயர்ந்தான் என்பது தெரியாமல் உறங்கி விட்டான். விடிந்து மணி ஆறேமுக்கால் ஆகிவிட்டது. முனியாண்டியை ஒரு குகைக்குக் கொண்டு போயினர்; ஒரு தூணிலே கட்டி வைத்தனர். குத்துக்கம்பி உலையிலே காய்ந்துகொண்டு இருந்தது. மாயாண்டி வரவேண்டும்; மணி ஏழும் ஆக வேண்டும். இதற்காகக் காத்திருந்தினர். மாயாண்டி குகைக்கு வந்தான். இருந்தவர்கள் ஆரவாரத்துடன் வர வேற்றனர். எனக்காக முனியாண்டியை மன்னித்துப் போகச் சொல்லி விடுங்கள்; தவறாக இருந்தாலும் இருக்கட்டும்; இது குற்றம் என்றால் அக்குற்றம் என்னையே சாரும் என்றான் மாயாண்டி. ஏதோ காரணம் இருக்கும் என்று எவரும் மறுக்கவில்லை. மாயாண்டி பேசினான். இந்த விடுதலை நான் தந்த விடுதலையன்று; இது வள்ளுவர் தந்த விடுதலை இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல் என்பது வள்ளுவர் உரை. என் கண்ணிமை கிழிந்தபோது நான் பட்ட அல்லலுடன், இவனை நினைத்துப் பார்த்தால் நெக் குருகுகின்றது. இது கொடியது என்பதை உணர்ந்திருக்கிறேன். உணர்ந்தவன், பிறனுக்கு அதனையே செய்யும்படி மரத்துப் போகலாமா? வெற்றிலை பாக்குச் சுருட்டி வைத்திருந்த தாள் எனக்குத் தந்த நல்லுரை இது என்று அங்கிருந்தோரிடம் நீட்டினான். கூட்டம் அமைதியாயிற்று. முனியாண்டி இழந்த கண்ணை மீண்டும் பெற்றது போல் மகிழ்ந்தான். இந்த நன்றியை எந்த நாளும் மறக்க மாட்டேன் என்று விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டான். எச்சிச் கையால் காக்கை வெருட்டாத முனியாண்டி என்ன, திருக்குறளை பத்தாயிரம் புத்தகம் அச்சடித்து இனாமாக எல்லோருக்கும் வழங்குகின்றானாமே! பரவாயில்லை. நல்ல குணம் வந்தவிட்டதுபோல் இருக்கிறது என்று ஊரார் பேசிக் கொண்டனர். உண்மைக் காரணம் முனியாண்டிக்குத்தானே தெரியும்!  13. குழலும் யாழும் கோவிந்த பாகவதரைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லை. துளசிராம் பாகவதர், கடோற்கச பாகவதர் ஆகிய பெரும் பெருந்தலைகளையெல்லாம் உருளச் செய்த முத்துக் கறுப்ப பாகவதரின் மாணவர்களுள் முதன்மையானவர் கோவிந்த பாகவதர் என்னும் பெருமை ஒன்றே போதுமானதாக இருந்தது. இதனோடு கணீர் என்று ஒலிக்கும் கண்டமும், குழல், யாழ் முதலான கருவித் திறமும் பெற்றிருந்த அவரை நினைத்துப் பார்க்கவே மற்றை மற்றைப் பாகவதர்களுக்குச் சிம்மக் கனவாக இருந்தது. அவருடன் என்ன காரணம் கொண்டும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அஞ்சினர். ஒரே மேடையில் அவருடன் பங்கெடுக்க வேண்டுமென்றால் அதிர்ச்சி வேட்டுத் தான் பலருக்கு. உண்மைத் திறமைக்கு முன் மண்டியிட்டுத் தானே ஆகவேண்டும். இசை பயிலத் தொடங்கிய காலத்திலிருந்தே கோவிந்த பாகவதருக்கு இசையைப் போல் இனிமை தரும் ஒன்று உலகில் இல்லவே இல்லை. என்னும் அழுத்தமான எண்ணம் உண்டு. இசை எவரையும் இசைவிக்கும்; மக்களுடன் மட்டுமென்ன, கடவுளுடனும் இசைவிக்கும் என்று அடிக்கடி கூறுவார். இசையுலகில் நிகரற்று விளங்கிய பாகவதருக்குத் திரு வள்ளுவர் மேல் கடுத்த கோபம் உண்டு என்ன இருந்தாலும் திருவள்ளுவர் குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்று சொல்லியிருக்கக் கூடாது. மழலைச் சொல் கேட்காதவர்களுக்குத் தான் இசை, இன்பம் தருமாம். கேட்டவர்களுக்கு இனிக்காதாம். எவராக இருந்தால்தான் என்ன? எல்லோருக்கும் இன்பம் தருவது இசைதான். மழலை மொழியைச் சில முறைகள் கேட்டு விட்டால் புளித்துப் போகத்தான் செய்யும்! இசை என்றாவது புளிக்குமா? ஆ! தெய்வக் கலை யல்லவா இசை. என்று அழாக் குறையாகப் பேசுவார். அவர் பேசும்போது, இசையே அவருக்கென்று பிறந்தது போலவும், இசையை வளர்க்கவே அவர் பிறந்தது போலவும் அவர் நினைத்துக் கொண்டிருப்பது வெளிப்படாமல் போகாது. பாகவதருக்கு முப்பதாவது வயதும் வந்துவிட்டது. அது வரை அவருக்குத் திருமணம் முடியவில்லை. இசைப் பயிற்சியும், மேடைக் கச்சேரியுமாக இரவு பகல் ஒழியாது இருந்த அவருக்குத் திருமணத்தைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லாது போயிற்று. ஆனாலும் பெற்றவர்கள் பெரியவர்கள் இப்படியே இருக்க விடுவார்களா? புதுமங்கலம் புலிக்குட்டிப் பாகவதருக்கு ஒரே மகளாகப் பிறந்தாள் வள்ளியம்மை. அவளுக்கு முன்னும் பின்னும் ஆணோ பெண்ணோ எதுவும் கிடையாது. பாகவதரும் நன்றாகக் கஞ்சம் பிடித்துச் சொத்து நிறையச் சேர்த்து வைத்திருந்தார். மகளுக்கு இசைப் பயிற்சி உண்டாக்கியதுடன், நாரையூர் நட்டுவனாரைக் கொண்டு நடனமும் கற்றுக் கொடுத்திருந்தார். வள்ளி யம்மையின் லாகவத்திற்கும் செல்வச் சிறப்பிற்கும் எவன் தான் கிடைக்கப் போகிறானோ! அவன் நல்ல பேறுதான் செய்திருக்கவேண்டும் என்று தமக்குள்ளே நினைந்து பெருமைப்பட்டுக்கொள்வார். அவருக்கு, கோவிந்த பாகவதருக் காகப் பெண் பார்ப்பதற்கு வந்த ஒன்றே சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்த இன்பமாயிற்று. திருமணத்திற்குக் குறைவு ஏதாவது உண்டா? ஒரே தடபுடலாகத் திருமணம் நடந்தேறியது. மகள் திருமணத்திற்குப்பின் ஒரேயடியாக ஊதிப் போய் விட்டார் புலிக்குட்டிப் பாகவதர். என்ன இருந்தாலும் இசை வேந்தர் கோவிந்த பாகவதர் மாமனார் இல்லையா அவர்? சாதாரணப் பெருமையா? திருமணத்திற்கு முன்பு, ‘மனைவி வந்துவிட்டால் இசை என்னாகுமோ? என்னும் எண்ணமும் கலக்கமும் கூட கோவிந்த பாகவதருக்கு இருந்ததுண்டு. ஆனால் வள்ளியம்மை - பாகவதர் மகள் - மனைவியாக வாய்த்த பின்பு இரட்டிப்பு இன்பமாக வளர்ந்தது. முப்பது வயதுக்கு மேல் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். நடன ஆசிரியர் வள்ளியம்மைதான்! வீட்டில் ஆடல் பாடல் முழக்கங்களுக்குக் குறைவு இல்லை. உள்ளூரில் இருந்தாலும் இசை; வெளியூரில் இருந்தாலும் இசை. போன போன இடங்களிலெல்லாம் புகழ்மாலை; பணமுடிப்பு; கொள்ளை மகிழ்ச்சியாக இருந்தது பாகவதருக்கு. பாகவதர் தேடிய பணத்தை யெல்லாம் பத்திரமாக வைத்திருந்தார். இன்னும் பணமாக வைத்துக் கொண்டிருக்க அவர் விரும்பவில்லை. அழகான இரட்டை மாடி வீடொன்று கட்டினார். அதன் பக்கமெல்லாம் பூஞ்செடிகளும், வாழை, கமுகு, தென்னை ஆகிய மரங்களும் நட்டு வீட்டைப் பூஞ் சோலை மாளிகை ஆக்கி விட்டார். தோட்டத்தின் நடுவே அகன்ற புல்வெளி சூழக் கொண்ட பூம்பொய்கை ஒன்றை உண்டாக்கினார். கோடைக்கானல் அழகும், குற்றால எழிலும், பிருந்தாவனக் காட்சியும் ஒன்று கூடும் குட்டிக்கலையுலகமாகக் கண்டவர்களுக்குக்காட்சியளித்தது பாகவதர் வீடும் அதன் சூழலும்! இசை மேதை, இசைத் துணையோடு, எழில்மிக்க சூழலிடை இன்ப மாளிகையில் இருந்தால்? ஐயோ! அந்த இன்ப வாழ்வு எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதா? பாகவதருக்குத் திருமணம் நடந்து பத்தாண்டுகள் கடந்து விட்டன. எங்கே இருந்தாலும் சென்றாலும் அவரையும், அவர் மனைவியையும் ஒன்றாகவே காணலாம். அவர்களை இரட்டைப் புறா என்றால் எல்லா வழிகளாலும் பொருந்தக் கூடியதேதான். ஓர் இசை மேடையில் இரட்டைப் புறாக்களும் இருந்தனர். கூட்டம் பத்தாயிரம் பதினைந்தாயிரம் என்றிருக்கக் கூடும். பனங்காய்களை அடுக்கி வைத்தால் போலத் தலைகள் தெரிந்தன. தலைகள் என்ன மரத்துப் போயா இருந்தன? ஆடின; அசைந்தன; சுழன்றன; என்னென்னவோ விதவிதமான நாட்டியங்கள ஆடின. தம்மை மறந்துபோய் ஆலாபனத்திலே இருந்தார் பாகவதர். நெடுநேரமாயிற்று. இடைவிடாத மழை முழக்கம் போன்று கூட்டம் கையொலி செய்தது! அதன் ஆர வாரத்திலே உள்ளம் இழந்து ஆடாமல் அசையாமல் இருந்தார் பாகவதர். அவருக்கு முன்னாக நாற்காலியில் உட்கார்ந்திருந்தார் ஓர் அம்மையார். அவரின் மடியில் அழகான - தங்க நிறக் குழந்தை ஒன்று இருந்தது. அது தன் மலர்க் கைகளை ஓயாமல் ஆட்டிக் கொண்டு ஆ! ஆ! என்று ஆரவாரித்தது. அதனைக் கண்டார் பாகவதர். ம்மா! ம்மா! ப்பா! ப்பா! என்று தன் பவழ வாயைத் திறந்து, முத்து நகை நகைத்து, தேன் மழைபோல் மழலை பொழிந்து பூப்போன்ற கன்னங்களிலே சுருக்கங்கள் ஏற, தாமரைக் கையை ஆட்டி அசைத்து நீட்டி வளைத்து இருந்தது குழந்தை. இதனை உளந் தோய்ந்து கண்ட பாகவதர் சிலை யாகிவிட்டார். மேடை என்ற உணர்ச்சி ஏற்படவே நெடு நேரமாயிற்று. அடுத்த பாட்டு என்ன? என்ன? என்று பின்னணி இசைக்காரர்கள் திணற - பிறகு அவர்கள் தூண்ட - அடுத்த பாட்டைத் தொடங்கினார். உள்ளத்தில் ஓர் உணர்ச்சி புகுந்த பின், மற்றொன்றைச் சரியாகச் செய்ய முடியுமா? எப்படியோ கச்சேரி முடிந்தது! இதற்கு முன் குழந்தைகளைப் பாராதவரா பாக வதர்; அதன் அழகிலே தோயாதவரா? மின்வெட்டுப் போன்று சில வேளைகளில் சில உணர்ச்சிகள் அரும்பி விடுகின்றன அல்லவா! பாகவதர் கச்சேரியை முடித்துக் கொண்டு மேடையை விட்டுக் கீழே இறங்கினார். மழலைத் தேன் பொழியும் மலர்க் குழந்தையைத் தம் மெல்லிய கைகளால் எடுத்து மார்புற அணைத்துக் கொண்டார். ம்மா... ம்மா... ப்பா... ப்பா... என்று சொல்லிச் சொல்லிக் கூத்தாடினார். கன்னத்தைக் கிள்ளி விட்டார். கள்வெறி கொண்டவர் போல் களிப்புற்றார். குழந்தை தன் தாயிடம் போவதற்காகத் தன் பிஞ்சுக் கைகளை நீட்டி நீட்டிக் கால்களை உதைத்துத் துள்ளிய பின்னும் தர மன மில்லாமல் தாயினிடம் தந்தார். பிறகும் என்ன? ஊருக்கு வண்டியில் புறப்பட்டாலும், பாகவதரின் வெற்றுடல்தான் சென்றது. வள்ளிக்கு என்ன, காரணம் தெரியாதா? நமக்கொரு குழந்தை இருந்தால்...? என்னும் ஏக்கம் புகுந்துவிட்டது பாகவதர் குடும்பத்திற்கு! ஆரவார மிக்க பாகவதர் வீடு அடங்கிப் போயிற்று. உண்பதிலோ உடுப்பதிலோ உறங்குவதிலோ உலாவுவதிலோ அவருக்குக் கருத்து இல்லை. தித்திக்கும் முக்கனிக்கும் இனியதாம் இசையும் நடனமும் வெறுத்து விட்டன. இது என்ன வாழ்வு? சுவை கெட்ட வாழ்வு? குழந்தையில்லாத வாழ்வு வாழ்வா? மழலை இன்பம் நுகராத செவி செவியா? என்று புண்பட்டார். பொன்னுடையவராக இருக்கலாம், புகழ் உடையவராக இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உடைய வர்களா? மழலைத் தேன் பொழியும் மக்களை உடையவர்கள் அல்லரோ உடையவர்கள். பொறுமையில்லாத அறிவு, இறங்குதுறை இல்லாத பூம்பொய்கை, ஆடையில்லாத அழகு, மணமில்லாத மலர், வெண்மதியில்லாத விண் இவை போல்வது அல்லவா மழலைச் செல்வர் இல்லாத மனை இப்படி எத்தனையோ எண்ணங்கள் பாகவதரைத் தின்றன. அதற்கு முன் இன்பக் கேணியாக இருந்தவை அனைத்தும் துன்பக் கடலாகத் தோன்றித் துன்புறுத்தின. மேடையில் ஏறிப்பாடிய நேரங்களில் மட்டும் அவரால் அமைதியாக இருக்க முடிந்ததே அன்றி, மற்றெங்கும் அமைதியாக இருக்க முடியவில்லை. ஆண்டுகளும் இப்படியே உருண்டு கொண்டுதான் இருந்தன! பாகவதர் இன்ப துன்பம் பற்றி அதற்குக் கவலையுண்டா? அவசியம் நீங்கள் மலேயாவுக்கு வரவேண்டும். உங்கள் இசையைக் கேட்க ஏங்கிக் கிடக்கின்றது மலேயா நாடு; இதற்கு முன் மூன்று நான்கு தடவைகள் முயன்றும் நீங்கள் தட்டிக் கழித்து விட்டீர்கள். எப்படியும் இம்முறை வந்தே தீரவேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். மலேயாவிலிருந்து தமிழ் நாட்டைச் சுற்றிக் காண வந்திருந்த ஒரு கூட்டத்தினர். அன்பர்கள் வேண்டுகோளை எத்தனை முறைகள்தான் மறுக்க முடியும்? சரி! ஒருமுறை வருகின்றேன் என்று ஏற்றுக் கொண்டார் பாகவதர். மாதங்கள் சில சென்றன. பாகவதரும் அவர் குழுவினரும் மலேயா வருவதற்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் அனைத்தும் செய்து கொண்டு, நேரடியாகவே அழைத்துப் போவதற்கு ஒருவர் வந்து விட்டார். பாகவதர்க்குப் பெருஞ் சங்கடமாக இருந்தது. வற்புறுத்தலுக்காக ஒப்புக் கொண்டிருந்தவர் அவர், இவ்வளவு விரைவில் போக வேண்டியது வரும் என்றோ - அதுவும் தற்பொழுது போக வேண்டியது வரும் என்றோ அவர் நினைக்கவில்லை. பிள்ளை யில்லை என்னும் பெருந்துன்பத்திலே இருந்த பாகவதருக்கு வயிற்றிலே பால் வார்த்தது போல அவர் மனைவி வள்ளியம்மை கருக்கொண்டு ஐந்தாறு மாதங்கள் ஆகியிருந்தன. இந்நிலைமை யில் மலேயா போக மனம் வருமா பாகவதருக்கு? மனிதன் சொல்லைக் காப்பாற்ற வேண்டும்! பாகவதர் விமானத்தில் பறந்தார். மலேயா நாட்டில் இசை மழை பொழிந்தார். அந்த இன்பத்திலே நாடெல்லாம் மூழ்கித் திளைத்தது. இங்கு வரவேண்டும். இங்கு வரவேண்டும் என்று முன்பு திட்டமிடப் படாத புதுப்புது இடங்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. பாராட்டு விழாக்களுக்கும் விருந்துகளுக்கும் குறைவில்லை. என்ன இருந்தால்தான் என்ன? மற்றவர்களை யெல்லாம் கொண்டாட்டத்தில் ஆழ்த்திய பாகவதர் மட்டும் திண்டாட் டத்தில் தத்தளித்தார். வாரம் தவறாமல் வள்ளியம்மைக்கும், பிள்ளை பிறந்து விட்டதா? சுகமாக இருக்கிறதா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று கடிதம் வந்த அன்று அவர் இசை மேடையே தனி முழக்கம் தான்! அன்று ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கிலே இசைவிருந்துடன், சுவை விருந்தும் பாகவதர் தம் செலவிலே வந்தவர்களுக்கெல்லாம் செய்தார் என்றால் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருக்கு ஒன்று தானே காரணம்? பாகவதருக்கு இரவுப் பொழுதில் தூக்கம் வருவதே இல்லை! பகலிலும் கற்பனைதான். பையன் இப்படி இருப்பான் இப்படி இருப்பான் என்று அவராகவே கற்பனை செய்து கொண்டார். அவசியம் புகைப்படம் ஒன்று எடுத்து அனுப்பி வை என்று வள்ளியம்மைக்குக் கடிதம் எழுதினார், அதெல்லாம் முடியாது; இங்கு வரும் வரை பொறுத்திருக்க முடியாதோ? என்று கேலிச் சிரிப்புடன் வந்தது வள்ளியம்மை கடிதம். என்னடா! தொல்லை! திரும்ப முடியவில்லையே என்று ஏங்கினார். திட்டங்கள் முடியவேண்டுமே! மூன்று நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. கனவிலெல்லாம் குழந்தையின் மழலை மொழியாகவே கூறினார். உடனிருந்தவர்க ளெல்லாம் பாகவதர் ஐயா உங்கள் மழலைப் பேச்சே தனியழகு! ஆ ஆ! இப்படியா இரவெல்லாம் உளறுவது? ப்பா ப்பா! ம்மா ம்மா! என்று கேலி செய்தனர். சும்மா! என் பையன் நினைவு! என்று சமாளித்தார். என்ன இந்த வள்ளியம்மாள், பையன் சுகத்தினை அடிக்கடி எழுத வேண்டாமோ? அதைப் பார்க்கிலும் என்னதான் வேலையாம்! என்று வருந்தினார். அவளுக்கென்ன மகனோடே இருக்கிறாள் இல்லையா? அந்த மகிழ்ச்சியிலே இப்பொழுதெல்லாம் என்னை நினைக்க முடியுமா? என் தலைவிதி - நாற்பது கடந்த பின்பு பிறந்தும் அவனை இருந்து பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை என்று தலையில் தலையில் அடித்துக் கொண்டார். எங்கெங்கு கச்சேரி இருந்தாலும் சரி, இனி ஒருநாளும் இருக்கவே முடியாது! அடுத்த கச்சேரி என் வீட்டில்தான் என்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டார் பாகவதர். நீங்களெல்லாம் குழந்தை பெற்றவர்கள் தானா? நான் குழந்தையைப் பாராமல் வரமுடியாது என்று எவ்வளவோ சொல்லியும் கண்டிப்பாய் வரவேண்டும் விரைவில் அனுப்பி விடுகிறோம். உங்கள் ஆவலைத் தடைபோட்டுக் கெடுத்து விடவா செய்வோம். என்று ஒழுங்காகப் பேசிவிட்டு ஊர் ஊராய்ச் சுற்றியலையச் செய்து கொண்டிருக்கிறீர்களே, உங்களுக்கு உணர்ச்சி இல்லையா? உங்கள் உடம்பில் உதிரம் ஓடவில்லை! உங்களுக்குப் பிள்ளை பிறந்தால் அதனை எத்தனை மாதங்கள் கழித்துத்தான் பார்ப்பீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமோ! என்ன வேண்டு மானாலும் திட்டுங்கள் கவலையில்லை. ஒழுங்கு முறை அறிந்த வர்கள், உணர்ச்சியுள்ளவர்கள் திட்டுவதைப் பற்றித்தான் எனக்குக் கவலை! நீங்கள் பிறர் நலத்தை நினைப்பவர்களா? எனக்கு வரவேண்டிய பணம் ஏழெட்டு ஆயிரங்களுக்கு மேல் இருக்கும். அதனைப் பொருட்டாக நினைத்துக் கொண்டு உங்கள் தஞ்சமாக மலேயாவில் கிடக்கப் போவதில்லை. ‘v‹ kf‹ ky® Kf¤ij¡ காண்பது நூறாயிரம் ரூபா! அவன் மழலைச்சொல் ஒன்று கேட்பது நூறு நூறாயிரம் ரூபா! தொண்டை வறளக் கத்தின காசைத் தரவேண்டுமானால் அனுப்புங்கள்! இல்லாவிட்டால் நன்றாக இருங்கள்! என்னை விட்டாலே போதும் அதுதான் செய்ய மாட்டீர்களே! என்மேல் அன்பா செலுத்துகிறீர்கள்! ஐயோ, அன்பின் பெயரால் கொன்று தின்னுகிறீர்கள்! உங்களுக்கு வணக்கம். என்று கடிதம் ஒன்றைத் தம்மை அழைத்துச் சென்ற கூட்டத்தினருக்கு எழுதிவைத்து விட்டு, விமானத்தில் பறந்தார் பாகவதர். விமானத்தில் கூட அவருக்கு நடக்க ஆசை! விரைவாக ஊருக்குப் போக வேண்டும் என்றுதான்! ஆனால், எழவிடாது கட்டி வைத்து உட்காரச் செய்திருந்தது, நடக்க விடாது செய்துவிட்டது. ஆனால் புகைவண்டியில் வரும் போது மட்டும் நடந்து கொண்டார்! கொஞ்சும் மழலையைக் குளிரப் பருக வேண்டுமல்லவா! பாகவதர், வீட்டுக்கு நடந்தா வந்தார்! ஒரே ஓட்டம்! வள்ளி! வள்ளி!! பயலை எங்கே! எங்கே பயலை! பொங்கிப் போய்க் கேட்டார். அத்தான் என்று தயங்கினாள் வள்ளி. என்ன இப்படி அசடாக இருக்கிறாய்! மண்ணா? மரமா? பயலை எங்கே? பார்க்க ஆசை இருக்காதா? விளையாடவா செய்கிறாய்? - சிரிப்பு கோபமாக மாறிற்று. அத்தான் பையன் பிறக்கு முன்னாகவே பிறந்து விட்டானா? பிறந்து விட்டானா? என்று நீங்கள் எழுதி எழுதிக் குவித்த கடிதங்களையும், அவனுக்கு இன்னின்ன மாதிரி உணவு தா, துணி மணி போடு, பேசப் பழக்கு என்று ஒவ்வொன்றாக எழுதிக் காட்டியதையும் ’ ஆவலால் இடைமறித்தார் பாகவதர். ஆண்குழந்தை பிறந்ததாக எழுதினேன். ஆனால் அது பிறக்கும் போதே செத்துப்பிறந்தது. அதை எழுதி உங்களை அயல் நாட்டிலே அழப்படுத்த வேண்டுமா?... வள்ளியம்மை வாய் அமைதியாயிற்று. பிறந்ததாக எழுதினேன். அது செத்துப் பிறந்தது - ஒரே ஒரு முறை வாயால் கூறினார் பாகவதர். கற்சிலையாய் உட்கார்ந்து விட்டார். அவர் உள்ளக் குமுறலை இதழ்கள் பறையடித்துக் காட்டின. மூக்கு, வெதும்பும் மூச்சால் காட்டியது; கண்கள், பாவையை முழுக்காட்டிக் காட்டின. கன்னங்கள், கோட்டுப் படம் வரைந்து தெளிவித்தன. உள்ளம், எரிமலை யாகிக் காட்டிற்று. ஆம்! அவர் வாயினின்று பேச்சுவரத் திங்கள் சில ஆயின. இந்தத் துன்பப் பொழுதின் இடையே ஒரு மின்னொளி தோன்றியது. அது இதுதான். எங்கும் தேடிக் கிடைக்க முடியாத இன்பம் குழந்தையினிடம் அமைந்து கிடக்கிறது. இதனை உணர்ந்து தெளிவாக எழுதி வைத்தவர் திரு வள்ளுவர். அவர் உரையே பொய்யாவுரை. பாகவதர் மனநிலை பலருக்குக் கவலையளித்தது. வலிந்து மேடைக்கு அழைத்தனர். ஆனால் பாகவதரோ அசையவில்லை. மழலை இசை கேட்டால் அன்றிக், குழல் யாழ் இசை செய்யேன் என்று உறுதியாக இருந்தார். இதனை வெளியே சொல்லிக் காட்டலாமா? பாகவதர் எண்ணம் பழுதுபட்டு விடவில்லை. அடுத்த ஆண்டே அவர் வீட்டில் ஒரு கச்சேரி நடந்தது! ஏன்? அவருக்குக் குழந்தை பிறந்து விட்டது அல்லவா! கோவிந்த பாகவதர் இப்பொழுதெல்லாம் திருவள்ளுவரைத் திட்டுவது இல்லை. திருவள்ளுவர் பெரும் இசைப்புலவர்; இல்லை யென்றால், பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் என்று கூற முடியுமா? இசைப்புலவனே இசை நுணுக்கம் அறிவான் என்று கூறி மகிழ்வார். எந்த மேடைக்குச் சென்றாலும். குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்னும் குறளைப் பாடிவிட்டுத்தான் கச்சேரி தொடங்குவார். பாகவதர் வெளியிடங்களிலும் நிறைய நிறையக் கச்சேரி செய்தார்! வீட்டிலும் தான் நிறையக் கச்சேரி செய்தார்! குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்  14. வகுத்தலும் தொகுத்தலும் முதலாளி என்றால் ஆண்மறை நாட்டு வட்டாரத்தில் முத்தப்பர் ஒருவரைத்தான் குறிக்கும். முத்தப்பர் பெருஞ் செல்வர்; எப்பக்கம் நோக்கினாலும் முத்தப்பருடைய நன் செய், புன்செய், தோட்டம் துரவுகளே காணப்பெறும். வேறொருவருக்கு உரியனவாக அவை காணப்பெற மாட்டா. முத்தப்பர் பரம்பரையினர் இன்று நேற்றைச் செல்வர்கள் அல்லர். பத்துப் பதினைந்து தலைமுறைகளாகவே பணக்கார ராக இருந்த பெருமை அவர்கட்கு உண்டு. குணக்குன்றம் என்றால் முத்தப்பருக்குத் தான் தகும் என்று சில குழந்தைகள் முதல் அனைவரும் கூறுவர். அவரைப் பற்றியும் அவர் கொடைச்சிறப்பு, குணமேம்பாடு பற்றியும் பாட்டிகளும் தாத்தாக்களும் தங்கள் பேரன் பேத்திகளுக்குக் கதை கதையாகக் கூறுவர். இன்னும் கூறுவானேன்; ஆண்மறை நாட்டில் ஒரு புலவர் மட்டும் இருந்திருந்தால் ஒரு புராணமே பாடியிருப்பார். அப்படிப் பாடியிருந்தாலும் கற்பனையாக அவர் பாட வேண்டியது இல்லை. உண்மையை உண்மையாகக் கூறினாலே போதும்! அவர் செயலிலே அவ்வளவு சிறப்பு உண்டு. முத்தப்பர் செல்வச் செருக்கு அணுவளவும் இல்லாதவர். அவர் உடல் சட்டை கண்டு அறியாது. மழையோ வெயிலோ அவரைத் துன்புறுத்தி அறியா. காலிலே செருப்போ கையிலே குடையோ இல்லாமல் பகற் பொழுதெல்லாம் காட்டிலும் கரையிலும் சுற்றியலைவார். எங்கு நிழல் கண்டாலும் படுத்து விடுவார். பிறகு எத்தனையோ மணி நேரம் ஓடித்தான் இந்த உலகத்தை ஏறிட்டுப் பார்ப்பார். அவ்வளவு உறக்க சீலர். வீட்டிலே முத்தப்பர் இருந்தால் போதும்; குழந்தைகள் பாடு கொண்டாட்டம் தான். ஒன்று தோளிலே ஏறும்; மற்றொன்று மடியிலே குந்தும்; வேறொன்று தொந்தியிலே சாயும்; இன்னொன்று முதுகிலே தொங்கும்; பிறிதொன்று தலையைப் பிடித்துக் கொண்டு கையாகிய ஏணிப்படி வழி ஏறும்; சுட்டித்தனமான ஒன்று அவர்மேல் சறுக்கு விளையாட்டு விளையாடும். ஆமாம்; ஆரம்பப் பள்ளி ஒன்று வைத்து நடத்துவதற்குத் தக்கபடி அவர்கள் வீட்டிலே பிள்ளைகள் உண்டு. பாகப்பிரிவினை என்றும் செய்யக் கூடாது என்று உறுதிப்பத்திரம் (உயில்) எழுதிவைத்திருந்த அந்தக் குடும்பத்தில் இருந்தவர்கள் எட்டுப்பேர் பத்துப் பேர்களா? அடுப்பு மட்டும் பதின்மூன்று உண்டு! மிடாப்பானை, தாழிப்பானை, சட்டி, உலைமூடி இவற்றைப் பார்த்தாலே ஒரு குயவருக்கு நாள் தவறாமல் வேலை தந்திருக்க வேண்டும் என்று தோன்றும். அது போலவே வெண்கலப் பாத்திரங்களுக்கு மொத்தக் குத்தகை எடுத்துக் கொண்ட குடும்பம் என்றே தோன்றும்; அதனைப் பெருங்குடும்பம் என்று சொல்வதைப் பார்க்கிலும் பெருங் குணம் படைத்த பெருங்குடும்பம் என்பதே மிகப் பொருந்தும். வைதாலும் சரி, வாழ்த்தினாலும் சரி முத்தப்பருக்கு ஒன்றுதான். எதற்கும் சிரிப்பதுதான் அவர் பதில். சிரிப்பும் வெடிச் சிரிப்பாக இருக்கும். பெரிய உரலொன்றைக் கட கட வென்று ஆட்டினால் என்ன கிடு கிடுப்பு ஏற்படுமோ அவ்வளவு கிடு கிடுப்புண்டு சிரிப்பில். உடல் குலுங்கச் சிரிக்கும் அவர் சிரிப்பிலே தொப்பை ஏறி இறங்கித் திருவிளையாடல் புரிவது பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கத் தவறாது. அவரைச் சூழவும் பத்துப்பேர்களாவது இல்லாவிட்டால் அவருக்கு என்னவோபோல் இருக்கும் அவனே இவனே என்று அழைத்து வைத்தாவது பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். உட்காருபவர்களுக்கும் கொள்ளை ஆசையாக இருக்குமே அன்றித் துன்பமாக இருக்காது. முத்தப்பர் அதிகமாகப் பேசமாட்டார்; படிப்பும் அரை குறைதான்; ஏதோ, கையெழுத்துப் போடும் அளவுடன் அவர் படிப்புச்சரி என்று சொல்லலாம். ஆனால் பக்கத்திலிருந்து எவராவது பேசினால் போதும்; சலிப்புச் சிறிதும் இன்றிக் கேட்பார். உளறுவாயனுக்குக் கூட இன்னும் கொஞ்ச நேரம் இவரிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்னும் ஆவல் எழும்பாமல் இருக்காது. கதை சொல்லுபவன் கிடைத்து விட்டானா - அதிலும் புராண இதிகாசக் கதை சொல்லுபவன் கிடைத்து விட்டானா - விடவேமாட்டார். வேறென்ன நல்லதங்காள் கதையை மட்டும் நாலாயிரம் தடவைகளாவது கேட்டிருப்பார் என்றால் ஐந்து பத்துத் தடவைகள் கூடலாம் குறையலாம் அவ்வளவுதான். முத்தப்பர் எந்த வேலைக்கும் போக மாட்டார். வேலைக் காரர்களை மேற்பார்க்கவும் மாட்டார். அதற்கெல்லாம் யார் யாரோ இருந்தார்கள். அது தானாக நடந்து வந்தது. விளைவுக்கும் குறைவு இல்லை. வசதிக்கும் குறைச்சல் இல்லை. சாதாரணமாக வெயில் பொழுதில் மரத்தடியில் படுத்திருப்பார் முத்தப்பர். அந்த வழியாகப் பத்துப்பேர் இல்லை. இருபது முப்பது பேர்கள் போனாலும் சரி, வாங்க வாங்க என்று வரவேற்பார். ஆமாம் என்று சொல்லி விட்டு அவர்கள் போகவும் விடமாட்டார். வாங்க; உட்காருங்க என்பர். அவசரமாகப் போகவேண்டும் என்று வந்தவர்கள் சொன்னாலும் நல்ல அவசரம்; பிறக்கும்போது கூடவா பிறந்தது அவசரம்? வாங்கய்யா! எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கே போகிறீர்கள்? இப்படிக் கேள்விமேல் கேள்வி கேட்பார். வழிப்போக்கர்கள் என்ன செய்ய முடியும்? நாடறிந்த முத்தப்பர் அல்லவா வலிய அழைத்துப் பேசுகிறார்; போக முடியுமா? நின்று பேசுவர்; உட்காருவர்; அதற்குள் ஏதேதோ பண்டங்கள் இட்டிலி - தோசை - வடை - முறுக்கு எல்லாம் குவியும் - எல்லார் வாயும் மெல்லும். முத்தப்பர் வாய்மட்டும் சிறிதும் அசை போடாது. அடுத்தவர்கள் தின்பதைக் காண்பதிலே முத்தப்பருக்குக் கொள்ளை மகிழ்ச்சி! இப்படியும் ஆட்கள் உலகில் உண்டா? என்று முத்தப்பரை ஒரு முறை பார்த்தவர்கள் கூடப் பேசாமல் போவது இல்லை. எத்தனை முறைகள் வந்து போனாலும் அவர்களை அடையாளமாவது அறிந்து கொள்வாரா முத்தப்பர்? நினைவாவது ஒன்றாவது? பெயர் பெற்ற மறதிக்காரர் அவர். உம் பெயர் என்ன? என்று திடுமென்று அவரை எவரேனும் கேட்டுவிட்டால் என் பெயர் என் பெயர் என்று திண்டாடித் திணறிக்கொண்டு இருப்பாரே அன்றி உடனே சொல்லிவிட மாட்டார். அவ்வளவு மறதி. வைத்தது வைத்ததுதான்; எடுத்தது எடுத்ததுதான். மறதிக்கு உலகப் பரிசு ஒன்று தருவதாக இருந்தால் அது முத்தப்பருக்கே உரியது என்று சொல்லி விடலாம். இரவுப் பொழுதில் பத்து மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புவார் முத்தப்பர்; சத்திரம், சாவடி, மடம் எங்கெங்கு உண்டோ அங்கங்கெல்லாம் ஏறி இறங்குவார். ஏய், எழுந் திருய்யா எந்த ஊருய்யா? என்று விசாரிப்பார். ஏய்யா, சாப்பிட்டாயா ஐயா? என்பார். சாப்பிட்டேன் என்றால்தான் விட்டார். இல்லை என்றால், ஏன்யா, நீ ஒரு மனிதன் தானா? இந்த ஊரில் எவனாவது மனிதன் இருக்கிறான் என்றாவது நினைத்தாயா ஐயா? ஏய்யா, பட்டினி பசியாகவா படுப்பார்கள்; வாய்யா எழுந்து என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே வீட்டிற்கு வந்துவிடுவார். இந்த இருபதாம் நூற்றாண்டிலே - காசு வாங்கிக் கொண்டு சோறு போடு வதிலேகூடப் பாதிக் கல்லையும் மண்ணையும் கலந்து போடும் சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் காலத்திலே - ஏழைக் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கட்டும். பசித் துயர் போகட்டும் என்று இனாமாக அரசாங்கமும் அயல்நாடுகளும் வழங்கும் உணவையும் - பால் பொடியையும் - பண்டங்களையும் ஒழுங்காகக் கொடுக்காமல் வயிற்றில் அடித்துச் சுரண்டித் தின்னும் கயவர்கள் மலிந்துள்ள காலத்திலே - முத்தப்பர் செயல் ஆ ஆ! தெய்வச் செயல் என்று வாழ்த்துவதற்கு என்ன ஐயம்! வள்ளலாம் முத்தப்பரைத் தேடி வந்தவர்கள் பத்து வகைக் கறியும் பாங்காய்ச் சமைத்துத் - தாழிட்டு இறக்கிப் பாயச பண்டங்களுடன் சாப்பிடுவார்கள். உடனிருந்து ஒருநாளும் உண்டறியார் முத்தப்பர். இந்த விருந்துப் பண்டங்கள் - வீட்டுப் பண்டங்கள் எதனையும் கை தொட்டு அறியார். ஐம்பது நூறுபேர்கள் இருந்து இனிப்பு, காரம், காபி சாப்பிடுவார்கள் - முத்தப்பர் செலவிலே! ஆனாலும் ஒரு சிறு பங்கும் அதில் அவர் எடுத்துக்கொள்வது இல்லை. பக்கத்திலிருந்து பரிமாறியதுடன் சரி. முத்தப்பர் செயல் விருந்தாளிகளுக் கெல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஏன்? வேதனையாகக் கூட இருக்கும். முத்தப்பருக்கு மட்டும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அவரும் வேதனைப்பட்ட காலம் உண்டு. மற்றவர்களெல்லாம் அறுசுவையுணவும் பெரு விருப்புடன் அருந்த, நமக்கு மட்டும் எல்லா வாய்ப்புக்களும் இருந்தும் உடனிருந்து உண்ணமுடியவில்லையே என்று ஆனால் வேதனைப் பட்டுப்பட்டு உள்ளம் மரத்துப் போய் விட்டது. அதன் பயன் உவகையாக மாறியது. அடுத்தவர்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்லச் சாப்பாட்டைச் சரித்துக்கொண்டு இன்பமுறும் அவரை நினைத்துத்தான் திருவள்ளுவர் பிறருக்கு ஈவதை ஈத்துவக்கும் இன்பம் என்று கூறினாரோ என்று குறள் கற்றவர்கள் எண்ணிக் கொள்வது உண்டு. ஆனால் முத்தப்பர் எண்ணுவதோ அதனை அன்று. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. என்பதையே எண்ணிக் கொள்வார். கோடிக்கணக்கான செல்வங்களைக் குவித்து வைத்திருந்தாலும் இறைவன் வகுத்த விதிமுறைமை இருந்தால் அன்றி எதனையும் அனுபவிக்க இயலாது என்னும் பொருளுடைய இக்குறளைக் கேட்டறிந்த நாள் தொட்டே தானுண்டு இன்பம் அடையாவிட்டாலும். பிறருக்கு ஈத்து உவக்கும் இன்பமாவது அடைய உறுதி கொண்டார். அப்படியே நடத்திக் காட்டினார். அவர் வேறு என்னதான் செய்ய முடியும்? கோடி கோடியாகச் சேர்த்து வைத்திருந்த செல்வர் முத்தப்பர் கேப்பைக் கூழ் கோதுமைக் கஞ்சி அல்லாமல் வேறெதுவும் சாப்பிட முடியாத நிலைமையில் இருந்தார். ஏனென்றால் அவர் ஓர் நீரிழிவு நோய்க்காரர். வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.  15. உள்ளதும் இல்லதும் ஊருக்குப் போனவர் இங்கு இருக்கிறேன் இப்படி இருக்கிறேன் என்றாவது எழுத வேண்டாமா? இருக்கும் இடம் கூடத் தெரியவில்லையே என்று நம்பியின் திருமணத்தின் போது எண்ணினேன். நீங்கள்தான் எங்களையெல்லாம் மறந்து விட்டீர்களே என்று அன்பும் கவலையும் இணையக் கூறினார் சிந்துபட்டிச் சிவசாமி. என்ன செய்வது? புதிய இடம்; வேலையும் அதிகம்; எழுத மறந்துவிட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று புன்முறுவலுடன் பேசினார் சிவசாமியின் அன்பர் அம்பலவாணர். அம்பலவாணரும் சிந்துபட்டிக்காரர்தான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்னையில் குடியேறினார். அங்குப் போனபின் அவருக்கு நல்ல வாய்ப்பு. சிந்துபட்டியில் நிலபுலம் தோட்டம் துரவு எதுவுமில்லாது இருந்த அவர் சென்னைக்குப் போனபின்பு, நல்ல துட்டுக்காரர் ஆகிவிட்டார். மதுரைக்கு வணிக காரியமாக வந்த அவர் சிந்துபட்டிக்கு - பிறந்து வளர்ந்த ஊர் அல்லவா - வந்தார். சிந்துபட்டியிலே இருக்கும்போது அம்பலவாணர் ஏழையாக இருந்தாலும்கூட ஊரார் மதிக்க, பெரிய மனிதர் என்று போற்ற வாழ்ந்தவர். அவர் பல ஆண்டுக்காலம் கழித்து வந்திருந்தது ஊராருக்குப் பேரின்பமாக இருந்தது. சிவசாமி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. என் வீட்டிலே விருந்து முடித்துக் கொண்டுதான் வேறெங்கும் போகவேண்டும் என்று அம்பல வாணரைத் தடுத்து நிறுத்திவிட்டார் சிவசாமி. விருந்து முடித்துக்கொண்டு வெற்றிலை பாக்கு மென்றுகொண்டு பேசினர். மூத்தது மோளை; இளையது காளை என்பார்கள். ஆனால் எங்கள் வீட்டைப் பொறுத்த அளவில் மூத்ததுதான் காளை; இளையது மோளை. பிள்ளையொன்று இருந்தால் நம்பியைப்போல இருக்கவேண்டும். அப்பன் வாக்கு அருள் வாக்கு என்று நினைப்பவன் - மகிழ்ச்சி பெருக்கெடுக்கப் பேசினார் சிவசாமி. நதிக்குடி நாராயணன் மகளை உனக்குப் பார்த்திருக்கிறேன். ஒரே பெண்-நிலபுலம், பொன் பொருள், பட்டப் படிப்பு ஆகியவை எதற்கும் குறைவு இல்லை என்றேன். போங்கப்பா போங்கள்; இவற்றையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இவள் தான் பெண்; கட்டு தாலியை என்றால் மாட்டேன் என்று மறுத்து விடுவேனா? நீங்கள் என்ன உங்கள் மகனுக்குக் கேடா செய்துவிடுவீர்கள்? என்று சொல்லி, மங்கலமாக மணமுடித்துக் கொண்டான். அவனுக்கு என்ன அரசபோகம்தான். என்ன குறை? தகப்பன் வீட்டிலே சில நாள்; மாமன் வீட்டிலே சிலநாள்; எங்கும் விருந்து, கொண்டாட்டம். பெண்ணாக வாய்த்தாளே நாகம்மாள் அவள் கையிலே கரிப்பட்டிருக்குமா? காபியாவது போடத் தெரியுமா? செல்வத்திலே வளர்ந்தபிள்ளை. பாலிலே பல் தேய்த்து பன்னீரிலே குளிப்பார்கள் என்று பேச்சுக்குத்தான் சொல்லிக் கொள்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையாக இருந்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை என்பதை இவள் வந்த பின்புதான் தெரிந்து கொண்டேன். இவள் படிப்பிற்கும் பணத்திற்கும் வேலையுமா பார்க்க வேண்டும்? வீட்டிலே இருந்தால் போதாதா? அவளை மருமகளாகப் பெற நான் உண்மையாகவே புண்ணியம் தான் செய்திருக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சு அவருக்கு இருந்த மகிழ்ச்சியைக் காட்டத் தவறவில்லை. பேச்சின் இடையே தம்பித் துரைக்கு ஏதாவது ஏற்பாடு- என்று கேட்டு வைத்தார் அம்பலவாணர். அந்தக் கழுதை பேச்சு வேண்டாம்; தகப்பன் சொல் கேளாத தடிக் கழுதை; நான் எழுபது ரூபா (எழுபதாயிரம்) வரக்கூடிய ஒருத்தியை அவனுக்குப் பார்த்திருந்தேன். பணம், படிப்பு, பதவி, பகட்டு இவையெல்லாம் பண்புக்குப் பின்பு தானாம். பண்பு இல்லாத ஒருத்தி கோடி கோடியாகக் கொண்டு வந்தாலும் எனக்கு வேண்டாம்; பணத்திற்காக அவளைக் கட்டிக் கொண்டு மாரடிக்க முடியாது. படிப்புக்காகக் கட்டிக் கொண்டு ஒப்பாரிவைக்க முடியாது. இப்படிக் கொழுத்துப் போய்ப் பேசினான்:- என்னிடமே பேசினான். அறிவு கெட்ட நாயே, மானம் கொஞ்சமாவது இருந்தால் என் முகத்தில் விழிக்காதே. எந்த நாயையும் கட்டிக்கொண்டு நாசமாகப் போ. என்று அனுப்பி விட்டேன். அன்று அவன் முகத்திலே விழித்ததுதான். என் சொத்தில் அவனுக்குச் சல்லிக் காசும் தரமுடியாது என்று சொல்லி விட்டேன். நான் வேண்டாதவன் ஆகும்போது என் சொத்து மட்டும் வேண்டியது ஆகிவிடுமா? - சிவசாமி துடிதுடிப்புடன் பேசினார். உலகத்தில் எல்லாரும் ஒன்று போலவா இருக்கிறார்கள். உலகம் பலவிதம் தானே. காலம் வரும்போது எல்லாம் சரியாகிவிடும். தம்பி காரியத்தில் நீங்கள் சொல்லியது உங்களுக்குச் சரியானது என்று பட்டாலும் தம்பி மீதும் குற்றமில்லை. நல்ல பிள்ளைதான் அவனும். ஏதோ இந்தவொரு காரணம் கொண்டு வெருட்டியடிப்பது சரியானதா? என்ன இருந்தாலும் தந்தை மகன் உரிமை மாறக்கூடியதா? என்று சமாதானம் கூறினார். ஆனால் சிவசாமியால் அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர் சொல்லும் வேத மொழியே பணம், பணம் என்பதுதானே. ஏழ்மைச் சூறாவளிக்கு ஆட் பட்டுத் தத்தளித்த அவர் பணத் தென்றலில் இன்புறுகிறார் என்றால் பேசமாட்டாரா? நம்பி நாகம்மைமீது மட்டற்ற அன்பு கொண்டிருந்தான். இப்படி ஒரு மனைவி கிடைப்பாளா எனக்கு என்னும் எண்ணம் ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால் மனைவியைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடமாட்டானா? வீட்டில் நாகம்மை இட்டதுதான் சட்டம். வைத்ததுதான் வழி. தட்டிக் கேட்க யாரும் இல்லை. தட்டிக் கேட்டிருக்கவும் முடியாது. நாகம்மை சிவசாமியின் வீட்டில் ஒரு தனி ராணி யாகவே ஆட்சி நடத்தினாள். சிவசாமியும் நம்பியும் எடு பிடியாள்களாக ஆக்கப்பட்டார்களே அன்றி அரசராகவோ அமைச்சராகவோ இருக்கவில்லை. அதுவும் வரவரப் பழக்க மாகிவிட்டது. நாகம்மாள் பணத்தை வாரி இறைத்தாள்; அவள் கொண்டு வந்தது அல்லவா! வீட்டு வேலைக்கு இரண்டு மூன்று ஆட்களை வைத்துக் கொண்டாள். ஆக்கி வைத்தால் கூடப் போதாது. அதனை எடுத்து இலையில் போடுவதற்கும் ஆள்வேண்டும். நாள் ஒன்றுக்கு மூன்று தடவைகளாவது உடை மாற்றுவாள். ஒரு தரம் வெளியே போய்வந்த கோலத்தோடு நவநாகரிகப் பெண்மணி திரும்பவும் தெருவில் போகலாமா? செலவினங்கள் ஏறிச் சென்றன. புதிதாகக் கடைக்கு வந்து சேர்ந்த பொருள்கள் எவையாக இருந்தாலும் நாகம்மை வீட்டில் இருக்கத் தவறாது. நாள்தோறும் அலைந்து தேடிப் புதிய சரக்குகளைச் சேர்ப்பதிலே பெரும்பொழுதைத் தொலைத்தாள். ஒருநாள் சென்று விட்டால் பழைய பொருள் ஆகிவிடாதா? மற்றவர்கள் வியப்புடன் பார்ப்பார்களா? அவளுக்கு அடுத்தவர்கள் வியந்து பார்த்துப் புகழவேண்டும் என்பது நோக்கமாக இருந்ததன்றி அது பயன்படவேண்டும் என்பது பற்றிச் சிறிதும் கவலை இல்லையே! அம்மா, பொழுது போக்குக் கழகத்திற்குப் போக நேரமாகவில்லையா? என்று ஒருநாள் நாகம்மையின் உயிர்த் தோழிகள் சிலர் அழைத்தனர். நாகம்மையின் மாமி உள்ளே இருமிக் கொண்டு படுத்திருந்தாள். வீட்டில் ஒரு பெண் பிள்ளை இருக்கிறது என்றுதான் பெயர். இராத்திரியெல்லாம் ஒரே புகைச்சல்; காறிக் காறித் தொண்டையும் புண்ணாகி விட்டது. வெந்நீர் வேண்டுமா என்று கேட்பதற்குக்கூட நாதியில்லை என்று நோய்த் தொல்லைக்கும் முதுமைத் தளர்வுக்கும் ஆட்பட்ட அவள் புலம்பினாள். நாலுபேர் முன்னால் தன்னைப் பற்றி உரைத்ததை நாகம்மையால் பொறுத்துக் கொள்ள முடியுமா? உனக்குத் தொண்டை வலி இருந்தால் அந்த வேதனையிலே மற்றவர்களுக்கு மண்டை வலி வரவைத்து விடுவாய். நான் என்ன உன்வீட்டு வேலைக்காரியா? அல்லது மருத்துவத் தாதியா? ஒழுங்காக இருக்க முடியுமானால் இரு; இல்லாவிடில் உனக்கு வருவதுபோல் பார்த்துக் கொள். இங்கே ஏசிப் பேசிக்கொண்டு இருக்க முடியாது - நாகம்மை விரைத்துக்கொண்டு போய் விட்டாள். மாமிக்கும் மருமகளுக்கும் அதுமுதல் பேச்சே இல்லை. மாமன் சிவசாமியும் இதனைக் கேட்டார். அதற்கு முன்பே சிலசில காரியங்களிலும், நடத்தையிலும் பேச்சிலும் நாகம்மை மேல் வெறுப்புக் கொண்டிருந்த அவருக்கு வேதனை மிகச் செய்தது இந்த நிகழ்ச்சி. நம்பிக்குச் சூடு வருமாறு நாகம்மை பற்றிச் சொல்லிப் பார்த்தார். நம்பிக்கு சிறிய அசைவும் இல்லை. சிறிது அசைந்து கொடுத்தாலும் அங்கு குடியிருக்க முடியாது. இன்னும் என்ன, சிறிது முணுமுணுக்கத் தொடங்கினாலும் உனக்கு நான் மனைவி இல்லை என்று கூறவும் தவறமாட்டாள் நாகம்மை என்பதை நம்பி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். பிறகும் அவனால் மாட்டிக் கொள்ள முடியுமா? நாகம்மை கொண்டு வந்த சொத்துகள் கரைந்தன. கையிருப்புப் போனவுடன் கழுத்தில் கிடந்தவையும் கடையை எட்டிப் பார்த்தன. எவ்வளவு நாட்களுக்குத் தான் தாய் வீட்டி லிருந்து வண்டிச் சரக்குகள் வந்து கொண்டிருக்கும்? செல்வத்தை வளர்த்துக் கொண்டு, மேலும் மேலும் முன்னேறிக் கொண்டு நல்ல குடித்தனமாக நடத்திக் கொண்டு இருந்தால் உதவி தொடர்ந்து கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். நாகம்மை தான் பெயருக்குச் சரியான குணம் உடையவளாக இருந்தாளே! பெற்ற வர்கள் வண்டி வண்டியாக அனுப்பி வைக்கவில்லை என்றவுடன் அவள் தந்த வசைமாரிக்கு அளவில்லை; வண்டி வண்டியாக அனுப்பிக் கொண்டிருந்தாள் என்று சொல்லலாம். அவர்களும் விடுவார்களா? இவளைப் பெற்றெடுத்தவர்களல்லவா? பதிலுக்குப் பதில் ஏச்சுத்தான்; பேச்சுத்தான். எந்தவொரு வேலைக்காரனும், வேலைக்காரியும் நாகம்மை வீட்டில் ஒருவார அளவுக்குமேல் இருக்க முடியவில்லை. துட்டு இருக்கும்போதே எரிந்து விழுவதை இயல்பாகக் கொண்ட அவள் துட்டும் போனபின் எப்படி இருப்பாள். யார் தான் அவள் அதிகாரத்திற்குப் பயந்து பணிந்து வாலாட்டிக் கொண்டிருப்பார்கள். எப்படியும் தொலைகிறாள், அவள் இயல்பு அது என்று இருந்தவர்களும் மாதாமாதாம் சம்பளம் வரவில்லை, வரவழியும் இல்லை என்று அறிந்தபின் சொல்லிக் கொள்ளாமல் கூட வரவேண்டிய சம்பள அளவுக்குமேல் துணிமணி பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு போய்விட்டனர். இந்த நிகழ்ச்சிகள் நாகம்மைக்குப் பேயறைந்தால் போல் இருந்தன. வேலைக்காரர்கள் எவரும் இல்லாதபடியால் வீடு சுற்றுப் புறங்களெல்லாம் ஒரே அலங்கோலமாகிக் கிடந்தன. வீட்டைக் குப்பைத் தொட்டி என்று சொன்னால் எல்லா வழிகளிலும் பொருந்தக் கூடியதுதான். என்ன இது? பெண்ணொருத்தி இருக்கும் வீடா இது? வேலையாள் இல்லாவிட்டாலும், தன்னால் முடிந்த மட்டுமாவது துப்புரவு செய்து இருக்கக் கூடாதா? இது என்ன நாகரிகமோ? என்று முணுமுணுத்தார் சிவசாமி. பொறுமைக்காரர் - அதிலும் பேர் பெற்ற மருமகள் என்று வந்தவர் போனவர்களிடமெல்லாம் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்த அவர் தம் வாயால் எப்படிப் பழிப்பது? வராதது வந்துவிட்டால் அடக்கிக் கொண்டு வாழ்வது தான் அழகு என்று இருந்தார். அவரையும் கொதிக்கக் கொதிக்க வைத்தது நாகம்மை செயல்கள். இரப்புச் சாப்பாட்டிலே இருந்துகொண்டு இடித்துக் கூறுவது வேறா? இந்த வீட்டைப் பெருக்கி மெழுகிக் காலம் தள்ள வேண்டும் என்பது என் தலைவிதி இல்லை. இந்த வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லையானால் மரியாதையுடன் வெளியேறிக் கொள்ள வேண்டியதுதான். இதற்கென்ன பேச்சு வேண்டியது இருக்கிறது என்று பொரிந்து தள்ளினாள். இதன் விளைவு என்ன? சிவசாமி வீட்டை விட்டு வெளியேறினார். நம்பிக்கு, அப்பா வீட்டை விட்டுச் செல்வது வேதனையாக இருந்தது. ஆனால் அவரை வீட்டில் இருக்கச் சொல்லவும் முடியவில்லை. வெளியேறுவதைக் கல்லாக இருந்து பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் என்பது பொய்யா மொழி அல்லவா! சிவசாமியின் நிலைமையை நாள்தோறும் கேட்டு அறிந்து கொண்டுதான் இருந்தான் தம்பி. நாகம்மையினிடம் அவரும் தன் தாய் கண்ணம்மையும் சிக்கிச் சீரழிவதை நன்றாக அறிந்திருந்தான். செந்தாமரையும் அறிந்திருந்தாள். ஆனால் ஏதாவது பேசி ஏச்சு வாங்கிக் கொள்ளக்கூடாதே என்று பயந்துபோய்ப் பேசாமல் இருந்தனர். இருந்தாலும் சிவசாமி வீட்டை விட்டு வெளியேறிய பின்னும் தம்பியால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. முகத்தில் விழிக்காதே என்று கூறிவிட்ட அவர் முகத்தில் விழிப்பது எப்படி? அவர் பிடிவாதக்காரர் ஆயிற்றே என்று தனக்குள் நொந்து கொண்டான். எனினும் வழக்கம்போல் கணக்கெழுதும் கடைக்குச் சென்றான். காலை பத்து மணி முதல் இரவு பத்துமணி வரைக்கும் கணக்கு எழுதினால்தான் மாதச் சம்பளம் ரூபா ஐம்பது. தம்பி கடைக்குப் போன பின்பு, செந்தாமரை சிவசாமி இருக்கும் இடத்திற்குச் சென்றாள். தன் வீட்டிற்கு வருமாறு மன்றாடினாள். தலையை நிமிர்த்துப் பாராமலே பேசினார்: வைராக்கியம் தான் பெரிதே ஒழிய வயிற்றுப்பாடு பெரிதில்லை. நீ போ! நான் வரப்போவது இல்லை. உங்கள் மகனோ, நானோ தவறு செய்துவிட்டோம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற பெரியவர்கள் எங்களை மன்னிப்பதுதானே பெருமை. நான் என் தாய் தந்தைக்குச் செய்யவேண்டியதை செய்யக் கொடுத்து வைக்காத பாவி என்று உங்கள் மகன் சொல்லிச் சொல்லி வருந்துவதை நீங்கள் அறிந்தால் இப்படி மறுக்கமாட்டீர்கள். என்னை வேண்டியாவது நீங்கள் வீட்டுக்கு வரவேண்டும். உங்களை அழைத்துக் கொள்ளாமல் நான் போகப்போவது இல்லை. உங்கள் கால்களில் வீழ்ந்து கேட்கிறேன்; எங்களை மன்னிக்கக் கூடாதா? என்று கீழே வீழ்ந்தாள். அதற்கு மேலும் சிவசாமியால் மறுக்க முடியவில்லை. செந்தாமரையின் பின் நடந்தார். வீட்டுக்குள் போனார் சிவசாமி. வாயிலைக் கடந்ததும் இரண்டு பெரிய படங்களைக் கண்டார். அவை ஓர் உயர்ந்த ஓவியனிடம் சொல்லி எழுதப் பெற்றவை. அந்த மண் வீட்டுக்குத் தனியழகைத் தந்து கொண்டிருந்தன. சிவசாமி கண்ணம்மை படங்கள்தாம் அவை. அவற்றைக் காணச் சிவசாமியின் கண்களில் நீர் மல்கியது. ஆடாமல் அசையாமல் கட்டிலில் உட்கார்ந்தார். படங்களின் கீழே எழுதியிருந்த, தடித்தவோர் மகனைத் தந்தையீண்டு அடித்தால் தாயுடன் அணைப்பள் தாயடித்தால் பிடித்தொரு தந்தையணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் பொடித் திருமேனி அம்பலத்தாடும், புனிதநீ ஆதலால் என்னை அடித்ததுபோதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா இனி ஆற்றேன் என்னும் இராமலிங்க அடிகள் பாட்டு நெஞ்சை நைந்து உருகச் செய்தது. தம்பித் துரையின் உள்ளன்பைக் காட்ட வேறென்ன வேண்டும். நாள்தோறும் உள்ளம் உருகி இப்பாடலைப் பாடாமல் அவர் உண்ணுவது இல்லை என்றாள் செந்தாமரை. ஏங்கி அழுதார் சிவசாமி. தேற்றிக் கூறினாள் செந்தாமரை. வீட்டுத் தலைவாயில் அருகே தண்ணீர்ச் செம்பு இருந்தது மிகத் தளர்வுடன் வந்த தம்பித்துரை வெளித் திண்ணையில் சோர்வுடன் உட்கார்ந்தான். இடைவேளைச் சாப்பாட்டு நேரம் அது. கைகாலைக் கழுவுங்கள்; சாப்பிட்டுவிட்டு உட்காரலாம் என்றாள் செந்தாமரை. நோய்ப் படுக்கையுடன், பேய்ப் படுத்துதலுக்கும் ஆட்பட்டுக் கிடக்கிறாள் தாய்; பேய்த் துயருக்கு ஆற்றாமல் வீட்டைவிட்டு வெளியேறிப் போய்விட்டார் தந்தை. இங்கே வாயையும் வயிற்றையும் நிரப்பிக் கொண்டே இருக்கின்றோம். எந்தப் பாவத்திற்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் இந்தப் பாவத்தினை அள்ளிக் கட்டிக் கொள்ளாமல் முடியவே முடியாது. என்று கொந்தளிப்புடன் பேசினான். மெதுவாக வந்து அவன் காதருகே இப்பொழுது நீங்கள் உங்கள் அப்பாவுடன்தான் சாப்பிடப்போகிறீர்கள் என்றாள் செந்தாமரை. என்ன விளையாடுகிறாயா? அவராவது, இங்கு வருவதாவது; இந்தப் பிறவியில் நடக்கப் போவது இல்லை என்றான். சிவசாமி இதனைக் கேட்டுக் கதறிவிடுவார் போல் இருந்தது. ஆனால் துண்டைப் போட்டு வாயை அடைத்துக் கொண்டார். உங்கள் அப்பா உள்ளே இருக்கிறார்; வரமாட் டேன் என்றார். என்றாலும் பெரியவர் பெரியவர்தான்; உள்ளே படுத்திருக்கிறார் என்றாள் செந்தாமரை. அப்பா வந்திருக்கிறாரா? என்று ஆவலுடன் உள்ளே ஓடினான் தம்பி. சிவசாமியால் பேசமுடியவில்லை. தம்பியைத் தழுவிக் கொண்டார். பிரிந்தவர் கூடினர் - பேச வேண்டுமா மகிழ்ச்சியை? செந்தாமரை சிவசாமியை வற்புறுத்தினாள், மாமியை இங்கே வருமாறு சொல்லியனுப்புங்கள் என்று. தம்பிதுரையும் ஒத்துப் பேசினான். கண்ணம்மையும் இப்பொழுது தம்பி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அரை வயிற்றுச் சோறாக இருந்தாலும், கூழாக இருந்தாலும் கூடியிருந்து உண்பது கொள்ளையின்பம் அல்லவா! ஐம்பது ரூபாதான் தம்பியின் சம்பளம். இரண்டு பேருக்கு நான்கு பேர்கள் ஆகிவிட்டார்கள் குடும்பத்தில், எத்தனை பேர்கள் ஆனால் தான் என்ன? செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய முறையோடும் செயலாற்றும் பண்பு இருந்தால் எதுதான் முடியாது? அது அந்த செயலாற்றும் பண்பு இருந்தால் தூணும் துரும்பு ஆகும்; மலையும் மடுவாகும். புன்முறுவலும் பூத்த முகமும் இனிய சொல்லும் எளிமையும் தூய்மையும் செல்வங்களாகக் கொண்டிருந்த செந்தாமரையைப் பொருட் செல்வம் இல்லாமை துன்புறுத்தி விடவில்லை. வருவாயைக் கொண்டு பிறர் வியக்குமாறு குடும்பத்தைக் காத்து வந்தாள். வருவாய்க்கு ஏற்பச் செலவு செய்பவளே வாழ்க்கைத் துணை என்பதற்குச் செந்தாமரை சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கினாள். நிழலருமை வெயிலில்தானே தெரியும்? நாகம்மையினிடம் பிடுங்கு பட்ட சிவசாமி கண்ணம்மைக்குச் செந்தாமரையின் சிறப்பு நன்கு புலப்பட்டிருக்குமல்லவா! அம்பலவாணர் ஏழாண்டுகள் கழித்து மீண்டும் சிந்து பட்டிக்கு ஒரு முறை வந்தார். அப்பொழுது அவர் சிவசாமியைக் காணத் தவறவில்லை. தம்பியின் வீட்டிலே சிவசாமியைக் கண்டபோது திகைப்படைந்தாலும், விரைவில் உண்மையை உணர்ந்து கொண்டார் உலகத்தில் எவ்வெச் செல்வங்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி கவலையில்லை. மாண்புடைய மனைவிதான் உயர்ந்த செல்வம். மனைவி மட்டும் மாண்புடைய குணம் உடையவளாக இருந்தால் ஒருவனுக்கு இல்லாதது ஒன்றும் இல்லை. ஆனால் அவள் பண்பற்றவளாக இருப்பாளேயானால் எவ்வளவு செல்வங்கள்தான் இருந்தாலும் இருப்பது ஒன்றும் இல்லை. இதனை இல்லதென் இலல்வள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை என்றார் திருவள்ளுவர் என்றார் அம்பலவாணர். சிவசாமி இப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டார். மறுநாள் காலையில் அம்பலவாணர் சென்னைக்குப் புறப்பட்டார். தம்பி வீட்டு வழி வந்தவர் முன்பக்கச் சுவரிலே இல்லதென் இல்லவள் மாண்பானால் என்று எழுதியிருக்கக் கண்டார். அக்காட்சி கால்களை நம்பியின் வீட்டுப் பக்கம் நடத்திச் சென்றது. அங்கே உள்ளதென் இல்லவள் மாணாக் கடை என்னும் எழுத்துக்கள் எழுதப் பெற்றிருந்தமையைக் கண்டார். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டார்.  16. கப்பலோட்டிய தமிழன் ஐயா, இங்கே வாருங்கள் என்று ஒளி படைத்த கண்ணும் உறுதிகொண்ட நெஞ்சும் உடைய தமிழ்ப் பெருமகன் ஒருவரை, ஒருவர் அழைத்துச் சென்றார். தன்னந் தனியான ஓரிடத்தை அடைந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுப் பேசினார் அழைத்துச் சென்றவர்: ஐயா இந்த இலச்சம் ரூபாக்களையும் அன்பளிப்பாகத் தருகின்றோம்; நீங்கள் வேறொன்றும் நினைக்க வேண்டாம்; இதை வாங்கிக்கொண்டு, நீங்கள் புதிதாகத் தொடங்கியிருக்கும் இயக்கத்தை மட்டும் விட்டுவிட்டால் போதும், மேலும்மேலும் உங்களுக்கு எவ்வளவு உதவி வேண்டுமானாலும் செய்யக் காத்திருக்கின்றோம். பணத்தைக் கண்டால் பிணமும் வாய்திறக்கும் ஈட்டி எட்டு மட்டும், பணம் பாதாள மட்டும் பணம் பத்தும் செய்யும் என்பனவெல்லாம் வழக்கிடைக்காணும் பழமொழிகள்! ஆனால் பணம் என்றவுடனே தலையசைத்து விட்டாரா? தமிழ்ப் பெருமகன் கூறினார்: இந்த ஓர் இலட்சம் ரூபாக்களும் எனக்குக் கைக்கூலியா? (இலஞ்சமா?) உயிரோடு உயிராக ஒன்றிவிட்ட உணர்ச்சியால் தொடங்கிய இயக்கத்தை உன் பிச்சைக் காசு கருதி விட்டுவிட வேண்டுமா? பணத்திற்காக வாயைத் திறக்கும் பண்பில்லாதவன் எவனாவது இருந்தால் அவனிடம் போய்ச் சொல் உன் காரியத்தை; சேசே! மானமற்ற பிழைப்பும் ஒரு பிழைப்பா? கண்களில் கனற்பொறி பறக்கக் கூறிவிட்டு கடுகடுத்த நடையிலே புறப்பட்டார் திருக்கு மீசைக்காரத் தீந்தமிழர். என்ன இது? இப்படியும் உண்டா? ஓர் இலட்சம் ரூபா வலிய வந்தும், போ - பழிவழிப் பணமே போ - என்று எற்றித் தள்ளிவிட்டு ஏறு நடையிட்ட அந்த ஏந்தல் யாவர்? அவரே வ.உ. சிதம்பரனார். சொந்த நாட்டினை வந்த நாட்டினர் ஆளவோ? நாம் ஆண் பிள்ளைகள் அல்லமோ? உயிர் வெல்லமோ? என்று பறையறைந்து, வெள்ளையனே வெளியேறு என்று முழங்கிச் சுதந்திர நாட்டத்தை மூட்டிய வ.உ.சி. கப்பற் கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார்! அப்பொழுது தான் இலச்ச ரூபா தேடிவந்து, பழியோடு திரும்பியது. எதிர்ப்பின் இடையே - உலககெலாம் பரவி ஒரு கோலோச்சிய ஆங்கில ஆட்சியின் நேரடி எதிர்ப்பின் இடையே- தொடங்கப் பெற்றது சுதேசிக் கப்பல் இயக்கம் கப்பல் வேண்டுமே? பம்பாயிலே, ஒரு கப்பல் வாங்க ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தம் முறிந்துவிட்டது. எல்லாம் சூழ்ச்சிக்காரர்களின் ஏற்பாடுகளால்தான்! கப்பல் கிடைக்கவில்லையே என்று தளர்ந்துவிட்டாரா? மலையே புரண்டு வந்தாலும் நிலை குலையாத உள்ளம் படைத்தவர் அல்லவா சிதம்பரனார்! ஊக்கமாகக் கிளம்பினார். கொழும்பிலே போய், கப்பல் ஒன்றை ஒப்பந்தம் செய்தார். வாடகைக்கு! அப்படியாவது கிடைத்ததே என்னும் மகிழ்ச்சியிலே, தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு மிதக்க விட்டார் கப்பலை! அது வியாபாரக் கப்பலாகவா காட்சியளித்தது? - விடுதலைக் கப்பலாகக் காட்சியளித்தது. ஆனால் வாடகைக் கப்பல்தானே, சொந்தக் கப்பலாகி விடுமா? மீண்டும் புறப்பட்டார். கப்பல் வாங்க பணம் திரட்ட. மனைவி நிறை கருப்பமாக இருந்தார்; மகன் உலகநாதன் நோய்ப் படுக்கையிலே கிடந்து உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தான். ஒரு முறையாவது வந்துவிட்டுச் செல்லுங்கள் என்று நண்பர்கள் முறையிட்டுக் கடிதம் எழுதினர். இறைவன் பெரியவன்; அவன் காப்பாற்றுவான்; நான் கப்பலுடன் திரும்புவேன்; இல்லையேல் கடலில் விழுந்து சாவேன் என்று கும்பிடு போட்டுக் கடிதம் எழுதிவிட்டு கருமமே கண்ணாக இருந்தார். வாராது வந்த மாமணி வ.உ.சி. என்று உணர்ந்த வர்கள் ஓடி ஓடி வந்து ஆயிர ஆயிரமாகக் குவித்தனர். மீண்டும் பம்பாய் சென்றார் வீரர் - அங்கொரு கப்பல்; பிரான்சிலே யிருந்து ஒரு கப்பல்; ஆக இரண்டு கப்பல்களுடன் தூத்துக்குடி வந்தடைந்தார்! கங்கையும் கடாரமும் கொண்டு வாழ்ந்த சோழன் இராசேந்திரனே புதுப் பிறப்புப் பிறந்து தூத்துக்குடித் துறைமுகம் வந்தடைந்தது போன்று நாட்டுப் பற்றுடையோர் மகிழ்ந்தனர்; நாடாள்வோர் எரிந்து விழுந்தனர் - எழுச்சி வலுத்துவிட்டது அன்னிய ஆட்சிக்கும் தலைமுழுக்குத்தான் என்று அறிந்துகொண்டு விட்டார்கள்! எதிரிகள் இயலாதவர்களா? நயவழிகள் பயவழிகள் என்னென்ன உண்டோ அவ்வளவும் செய்து பார்த்தனர். பய வழிகள் வீரர் முன் மண்டியிட்டன; நயவழிகள் பண்புமலைமுன் நாடியொடுங்கின! வஞ்சக வழிகளையே, தஞ்சமாகக் கொண்டு ஒடுக்க முன்வந்தனர் அன்னியர்! சுதேசிக் கப்பலில் ஏறுவதும், சரக்கு ஏற்றுவதும் குற்றங்கள் ஆக்கப்பட்டன; கப்பற் கம்பெனிக்குப் பணம் தருவோரும், பணிபுரிவோரும் பழிவாங்கப் பட்டனர்; ஆள்வோர் நினைத்தால் காரணங்களா கிடைக்கா? உறுப்பினர்களுக்கே இவ்வளவு இக்கட்டு என்றால், தலைவருக்கு? அந்தோ! நாட்டுப் பற்றுக் கொண்டு செய்யும் செயல்களுக்குப் பரிசும் பதவியும் தந்து பாராட்ட வேண்டிய அரசு பழிப்பட்டம் சூட்டியது; குற்றக் கூண்டிலே நிறுத்தியது. துரோகி என்று பட்டயம் தீட்டித் தந்து சிறைக்குள் தள்ளியது. உள்ளேயாவது ஓய்ந்திருக்க விட்டதா? கல்லுடைக்க வைத்தது; செக்கிழுக்கச் செய்தது. எல்லாவற்றையும் இன்ப மாகக் கருதினார் வ.உ.சி. தாம் படும் துன்பங்கள் அனைத்தும் உரிமைக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளில் அமைந்த மைல் கற்களே என்று மகிழ்ந்தார்! உரிமைக் கொடி சிறிது சிறிது ஆக உயர்த்தப்படுவதாக உவந்தார். அது வீணாகி விட்டதா? இன்று, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பள்ளுப் பாடிவிட்டோம்! விடுதலை விடுதலை விடுதலை என்று முழங்கிவிட்டோம். அன்று வ.உ.சி. இலட்ச ரூபாக்களைப் பொருட்டாய் எண்ணியிருந்தால் - தூ என்று காறித் துப்பாமல் இருந்தால் - அவர் வாழ்நாளெல்லாம் பொன்னாலும் பொருளாலும் பொலிந்திருப்பார்! ஆனால் என்றென்றும் அழியாப் புகழ், அவரை உரிமையாக்கிக் கொண்டிருக்குமா? நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் (நன்மையே தந்தாலும், நடுவு நிலைமை கடந்து உண்டாகும் செல்வத்தை அப்பொழுதே ஒழித்து விடு) என்பது அன்றோ தமிழ் மறை. 17. காந்தியண்ணல் அரிச்சந்திரன் நாடகம் பார்த்தார் இளைஞர் ஒருவர். அவர் பெயர் கரம் சந்திரர். அரிச்சந்திரன் எத்தனை எத்தனை இன்னல்கள் அடைந்தும் பொய்யே சொல்லாது வாழ்ந்த உயர்வு இளைஞர் உள்ளத்தைத் தொட்டு நன்றாகப் பதிந்தது. இன்று முதல் நான் பொய் சொல்லவே மாட்டேன் என்று உறுதி செய்துகொண்டார். நாடகம், படக்காட்சி இவற்றைக் கண்டு எத்தனைப் பேர் இப்படி உறுதி செய்துகொண்டு இறுதிவரை காப்பாற்றுவார்கள். கரம் சந்திரர் சிறுவராக இருக்கும்போது கெட்டவன் ஒருவனது உறவு ஏற்பட்டது. அவன் வலைக்குள் நன்றாக மாட்டிக்கொண்ட கரம்சந்திரர், யாருக்கும் தெரியாமல் மறைவான இடங்களில் சென்று புலால் உண்டார். வீட்டுக்குப் போய் வழக்கம்போல் சாப்பிட முடியாது அல்லவா! அதனால் வயிற்றுக்கு நன்றாக இல்லை; பசிக்கவில்லை இப்படி யெல்லாம் காரணம் - பொய்க்காரணம் - காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் சொல்லி முடித்தவுடன் மனச்சாட்சி- அரிச்சந்திரன் கதை ஆகிய இரண்டும் கூடிச் சேர்ந்து பெற்று வளர்த்துப் பேரன்புடையவராய் இருக்கும் தாயினிடமா பொய் சொல்லுவது? என்று வாட்டும்! எத்தனை நாட்களுக்குத்தான் உன் பொய் வெளிப்படாமல் இருக்கும்? என்று இடித்துக் காட்டும். ஆம்! கரம்சந்திரர் மேலும் உறுதி செய்து கொண்டார். புலால் உண்பதும் புகை குடிப்பதும் ஆகிய தீய வழக்கங்கள் செலவினை உண்டாக்கிப் பொய்யும் பேசவைக்கின்றன. ஆதலால் இவற்றை இன்று முதல் தொடேன். இளைஞர் கரம்சந்திரர் ஒரு தொடக்கப் பள்ளியிலே படித்து வந்தார். அப்பள்ளியை மேற்பார்வையிடுவதற்காக அதிகாரி வந்திருந்தார். அவர் சில ஆங்கிலச் சொற்களைச் சொல்லி மாணவர்களை எழுதச் செய்தார். அவர் சொல்லிய ஆங்கிலச் சொற்களிலே கெட்டில் (Kettle) என்பதும் ஒன்று. இச்சொல்லை கரம்சந்திரர் சரியாக எழுதவில்லை. அவர் சரியாக எழுதவில்லை என்பதை ஆசிரியர் பார்த்தார். வருந்தினார். அதிகாரி என்ன சொல்லுவாரோ என்பது அவர் கவலையாக இருந்தது. அதனால் கரம்சந்திரரின் காலை மிதித்து, அடுத்த பையனைப் பார்த்து எழுதுமாறு குறிப்பாகக் கூறினார். ஆனால், தெரியாத ஒன்றைத் தெரியும் என்று பொய்யாக நடிக்க விரும்பவில்லை இளைஞர் கரம்சந்திரர். அதனால் ஆசிரியர் குறிப்புப்படி அடுத்தவனைப் பார்த்து எழுதாமல் நின்றார். ஆசிரியர் மேலும் ஓரிரு தடவைகள் வற்புறுத்தியும் இளைஞர் எழுதாதது கண்டு வருந்திச் சோர்வு கொண்டார். ஆசிரியரே பார்த்து எழுதச் சொல்லும்பொழுது எழுத மாட்டேன் என்னும் வலிய உள்ளம் மாணவருக்கு ஏற்படுவது எல்லோரிடமும் எதிர்பார்க்கக் கூடிய நிகழ்ச்சியா? இக்குணம் இளமையிலே வாய்த்துவிட்ட படியால்தான் அஃது உலகப் புகழ் வாங்கித் தந்தது. இந்த கரம்சந்திரர் யார்? அவரே நம் காந்தியடிகள்! காந்தியடிகள் தொடக்கத்தில் வழக்கறிஞர் தொழில் புரிந்தார். வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டவர்கள் பொய் சொல்லாமல் முடியாது என்பார்கள். ஆனால், காந்தியடிகளோ அந்த உரையையே பொய்யுரையாக்கி விட்டார்! அவர் பொய்மை கலவாத வழக்குகளையே தேர்ந்து எடுத்துக் கொண்டார். தாம் எடுத்துக் கொண்ட வழக்கில் பொய்யும் கலந்திருக்கிறது என்று எப்பொழுதாவது உணர்ந்து விடுவாரானால் எதிரியினிடமே உண்மையை உரைத்து வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொள்வார். ஒரு சமயம் தன் கட்சிக்காரன் ஒருவன் தம்மிடம் பொய் சொல்லியிருப்பதாக வழக்கு விசாரணையின் போது அறிந்தார். உடனே நீதிபதியினிடமே வழக்கினைத் தள்ளி விடுமாறு வேண்டினார். இப் பண்பு வழக்கறிஞர்கள் அனைவரிடமும் வந்துவிடுமானால் நாட்டிலே நடைபெறும் வழக்குகளில் நாலில் ஒரு பங்குகூட நடைபெறுமா? ஆனால், வழக்கறிஞர்கள் ஆயிரமாயிரம் பேர்களில் ஒரே ஒரு காந்திதானே தோன்ற முடிந்தது! அடிகளுக்கு நண்பர் ஒருவர் இருந்தார்; அவர் அரசாங்கத் திற்குக் கட்டவேண்டிய வரிப்பணம் கட்டவில்லை. அரசினர் வழக்குத் தொடுத்தனர். காந்தியடிகளோ, தம் நண்பருக்காகப் பொய்யாக வழக்காடாது அவர் செய்திருக்கும் தவறான வழக்குகள் அத்துணையையும் வெளிப்படையாகக் கூறினார். அந்த மெய்யுரை ஒன்றாலே - சிறைத் தண்டனை, பொருள் தண்டனை என்னும் அளவில் நின்றது. காந்தியடிகள், பொய்யாமை போலும் புகழில்லை. அறமில்லை, இன்பமில்லை என்பதை தெளிந்து அறிந்தவர் அல்லவா! 1919-ஆம் ஆண்டில் ஆங்கில அரசை எதிர்த்து அறப்போர் தொடங்கத் திட்டமிட்டார் அடிகள். திட்டமிட்டபடியே நாடெங்கும் போராட்டம் நடைபெற்றது. அறப் போராட்டம் என்றால் தங்கள் எதிர்ப்பினைக் காட்டுவது ஒன்றே வேண்டுவது அல்லாமல் உயிருக்கோ, பொருளுக்கோ சேதம் ஏற்படுத்தும் வன்முறைகள் எவையும் கூடா! ஆனால் உணர்ச்சிக்கு ஆட்பட்ட போராட்டக்காரர்களில் சிலர் வன்முறைகளைக் கையாண்டனர். இதனை அறிந்தவுடன் வருந்தினார் அடிகள். அறப்போருக்குரிய பக்குவம் அடையாத மக்களை அறப்போரில் இறங்குமாறு ஏவியது இமயமலை போல்வதான பெருந்தவறு; போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே அறிக்கை வெளியிட்டார். போராட்டத்தை நிறுத்தி விடுமாறும் ஆணையிட்டார். தாம் செய்தது தவறு என்று மன்னிப்புக் கேட்கும் உலகத் தலைவர்கள் எத்தனை பேர்? பொய்யா நோன்பினை வாழ்நாளெல்லாம் போற்றி, ஒழுகினார்அடிகள். அதனால் புவியிலுள்ளோர் உள்ளத் தெல்லாம் புகழ் வடிவிலே சுடர்விட்டு விளங்குகின்றார்! உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெள்ளாம் உளன். (ஒருவன் தன் மனச் சான்றுக்கு ஏற்ப, பொய்யின்றி வாழ்வானாயின் அவன் உலக மக்களின் உள்ளங்களில் எல்லாம் நிலைபெற்றவன் ஆவான்.)  18. அருளாளன் ஆபிரகாம் ஒரு சாலை வழியே இரண்டு குதிரைகள் ஓடிக் கொண்டிருந்தன. அக் குதிரைகளின் மீது இரண்டு பேர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த திசைக்கு எதிரேயிருந்து ஒருவன் நடந்து வந்தான். அவன் குதிரையில் வந்தவர்களுள் ஒருவரை இன்னார் என்று தெரிந்து கொண்ட படியால் சட்டென்று ஒரு பக்கமாய் ஒதுங்கி நின்று தன் தொப்பியை எடுத்துக் கையிலே வைத்துக்கொண்டு தலை தாழ்ந்து பணிவோடு வணக்கம் செய்தான். குதிரையில் இருந்த அவர் உடனே பதில் வணக்கம் செலுத்தி விடாது கீழே இறங்கி வந்து, வழிப்போக்கனைப் போலவே பணிவோடு நின்று தொப்பியைக் கையிலே எடுத்து வைத்துக் கொண்டு வணங்கினார். இவ்வாறு நடக்கும் என்பதைக் குதிரையில் உடன் வந்தவனும் நினைக்கவில்லை; வழிப்போக்கனும் நினைக்க வில்லை. வியப்படைந்தனர். குதிரையில் வந்த இருவரும் மீண்டும் தம் பயணத்தைத் தொடங்கினர். உடன் வந்தவன் போகும் பொழுதே கேட்டான்: அந்த ஏழையை நீங்கள் இவ்வளவு பணிவுடன் வணங்க வேண்டுமா? குதிரையில் இருந்து கொண்டே வணங்கியிருக்கக் கூடாதா? - ஏழை, செல்வன் என்ற வேற்றுமை பணிவுக்கு இல்லை; இருக்கவும் கூடாது. ஒரு நாட்டின் தலைவன் பணிவுடைமையிலும் தலைவனாக இருக்க வேண்டுமே அன்றித் தாழ்ந்து விடக் கூடாது. எந்தக் காரணம் கொண்டும் எந்த ஓர் ஏழையும் பணிவில் என்னை வெற்றி கொண்டுவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது என் கடமை. என்றார் தாழ்ந்து வணங்கிய பெரியவர். வாயடைத்துப் போனான் உடன் வந்தவன். குதிரையிலிருந்து கீழே இறங்கி வணக்கம் செலுத்தியவர் எளிய பதவியில் இருந்தவரா? அரிதினும் அரிய பதவி - அமெரிக்க நாட்டின் தலைவர் பதவி! அவர் பெயர், ஆபிரகாம் லிங்கன். அற்பனுக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது பழமொழி. ஆனால் நல்லவன் கையில் நாட்டாட்சி இருக்கும் பொழுது நாடெய்தும் நலங்களுக்கு அளவும் உண்டா? பணிவுமிக்க ஆபிரகாம் ஒருநாள் ஒரு தெரு பக்கம் நடந்து போய்க் கொண்டிருந்தார். அங்கே ஒரு குதிரை வண்டிக்காரன் நின்றான். அவன் லிங்கனைக் கண்டதும் புன்முறுவலுடன் நெருங்கினான்; வணக்கமிட்டான். ஐயா, உங்கள் பொருள் ஒன்று என்னிடம் நெடுநாட்களாகக் காத்திருக்கின்றது. இதுவரை தங்களைக் கண்டுபிடித்து அதனைக் கொடுக்க முடியவில்லை. இன்றுதான் கண்டுபிடித்தேன்; மகிழ்ச்சி என்றான். லிங்கனுக்குத் திகைப்பாக இருந்தது. ஏனெனில், லிங்கன் அந்தக் குதிரை வண்டிக்காரனை இதற்கு முன் கண்டதில்லை. லிங்கன் கேட்டார்: என்னுடைய பொருள், உன்னிடம் என்ன இருக்கிறது? இதோ என்று மழுங்கிப் போயிருந்த கத்தி ஒன்றை நீட்டினான் குதிரை வண்டிக்காரன். லிங்கனது திகைப்பு வியப்பாக மாறியது. என் னுடையதா இது? என்று கேட்டார். ஆம்; உங்கள் பொருள்தான். எப்படி என்றால், நெடு நாட்களுக்கு முன்பு ஒரு பெரியவர் என்னிடம் இந்தக் கத்தியை தந்து நீ பார்க்கும் ஆட்களிலே எவர் அழகற்றவராக (அவ லச்சணமாக) இருக்கிறாரோ அவரிடம் இதனை ஒப்படைத்து விடு என்றார். நானும் அப்படிப்பட்ட ஒருவரைத் தேடித்தேடி அலுத்தேன். இன்றுதான், தாங்கள்தான் அந்தப் பொருளுக் குரிய உடைமைக்காரர் என்பதைக் கண்டுபிடித்தேன் என்றான் வண்டிக்காரன். இச் சொற்களை உணர்ச்சிமிக்க ஒருவன் - முன் கோபமுடைய ஒருவன் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பான்? குதிரை வண்டிக்காரன் தன் பற்களைப் பொறுக்கி எடுக்க வேண்டிய நிலைமை ஆகாது இருக்குமா? ஆனால் ஆபிரகாம் என்ன செய்தார்? நண்பனே! மகிழ்ச்சி! என் பொருளை இதுவரை நீ பாதுகாப்பாக வைத்திருந்து, உரிய பொழுதில் ஒப்படைத்தும் விட்டாயல்லவா! என் பொருளைப் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சி எனக்கு மிகவுண்டு. உனக்கு நன்றி என்று கூறினார். ஆபிரகாம் நீர் மனிதரல்லர்; மனித உருவிலே நின்ற தெய்வவுரு என்று நமக்கு வாழ்த்தத் தோன்றுகிறது அல்லவா! நெடு நெட்டையாகவும், மிகு ஒல்லியாகவும், படியாத் தலையராகவும் குழிவிழுந்த கன்னத்தராகவும் இருந்த ஆபிரகாம் அழகில்லாதவர்தான். உடல் உடை பற்றியோ, குளித்தல் தலைகோதுதல் பற்றியோ அவ்வளவாக அக்கறை கொள்ளாதவர் தான். காலிலே அணிந்து கொண்ட அடிபுதை அரணங்களை (பூட்சுகளை)யும் கால் உறைகளையும் எத்தனையோ நாட் களுக்கு ஒருமுறை கழற்றித் துடைப்பவர்தான். ஆனால், இந்த உடலழகினும் பல்லாயிரம் பங்கு சிறந்ததான உள்ளத்தழகு ஆபிரகாமிடம் நிரம்பிக் கிடந்ததே! உள்ளழகு இருக்கும் பொழுது புற அழகு இல்லாவிட்டால்தான் என்ன? உலக அழகுப் போட்டியிலே பங்கு எடுத்துக் கொண்டு முதற் பரிசு பெற்றவன் என்ன உலகத்தார் நெஞ்சத்தை விட்டு அகலாது இடம் பெற்று விடுவானா? அன்றி அவனென்ன அழியாத அழகனா? அவனுக்கும் இருபதில் எழுச்சி, முப்பதில் முறுக்கு, நாற்பதில் நழுவல், ஐம்பதில் அசதி, அறுபதில் ஆட்டம், எழுபதில் ஏக்கம் எண்பதில் தூக்கம் என்னும் நிலைகள் ஏற்படாது ஒழியுமா? எச்சிலும் மூக்கும் கோழையும் குன்னலும் நோயும் நொம்பலும் உலக அழகனுக்கு விதிவிலக்காகிட முடியுமா? அழியா உடலா அவன் உடல்? பண்புடல் ஒன்றே அழியாவுடல்; அழகுமிக்க உடல்; அதனைப் பெற்றார் லிங்கன். உலகத்தார் உள்ளத்தே அழியா எழுத்தில் எழுதப் பெற்று விட்டார். பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி; அல்ல மற்றுப் பிற (ஒருவனுக்கு அணிகலன் பணிவு உடைமையும், இன்சொல் உரைத்தலும் ஆகும். இவையன்றி வேறு அணிகலங்கள் உண்மையான அணிகலன்கள் ஆகா.)  19. பாவலன் பாரதி அம்மா! பைத்தியம்; பைத்தியம்! என்று சொல்லிக் கொண்டே வெளியேயிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தாள் சிறுமி ஒருத்தி. உட்புறத்தில் இருந்த தாய், குழந்தையின் கூக்குரலைக் கேட்டுத் துடிப்புடன் முன்புறம் வந்தார். மெலிந்த உடலும், கிழிந்த உடையும், தாடிமீசையுமாக இருந்த ஒருவரைக் கண்டார். தம்மை மறந்து போய்த் தம் குழந்தையினிடம் பாப்பா, பாரதி மாமா இல்லையா! அவர்தான்; வணக்கம் செலுத்து என்றார். அம்மையாரும் வணக்கம் செலுத்தி வரவேற்று இருக்கச் செய்தார். தூத்துக்குடியில் வழக்கறிஞராக வேலைபார்த்து வந்தார் பாரதியாரின் அன்பரும், தோழரும், உள்ளூர்க்காரருமான சோமசுந்தர பாரதியார். புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பின் தம் நண்பரைப் பார்ப்பதற்காகத் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் வந்த பொழுதிலே சோமசுந்தர பாரதியார் வெளியே சென்றிருந்தார். அவர் மனைவியும் குழந்தையும் வீட்டில் இருந்தனர். குழந்தைதான் பாரதியாரின் தாடி மீசை உடைகளைக் கண்டு பைத்தியம், பைத்தியம் என்று அலறிக் கொண்டு ஓடி வந்தது. சற்று நேரம் கழிந்தது. கவிஞர் காக்கை குருவி எங்கள் சாதி என்ற பாடலை முழங்கினார். வேறு சில பாடல்களும் பாடினார். ஆ, ஆ! அந்த இசை வெள்ளத்தில் எல்லோரும் மூழ்கி இன்புற்றனர். உடையில் அழுக்கு கிழிசல் உண்டு; உடலில் மெலிவும் களைப்பும் உண்டு. ஆனால் உள்ளத்தில் இருந்த ஊக்கமும் உணர்ச்சியும்? அது பாரதியாருக்கே உரிமையானது. சோமசுந்தர பாரதியார் வீட்டுக்குள் கால் வைக்கு முன்னமே பாரதியார் தம் விட்டுக்கு வந்திருப்பதை அறிந்து கொண்டார். அவர் என்ன பாரதியாரின் மணிக்குரலை அறியாதவரா? பாரதி என்று சொல்லிக் கொண்டு உணர்ச்சி மிக்கவராகக் கட்டித் தழுவினார். இன்பக் கண்ணீர் சொரிந்தார். பின், பாரதியார் கட்டியிருந்த கந்தலாடையை நோக்கினார். அடுத்த நொடியிலே - அந்தோ! சோமசுந்தரரின் எஃகு போன்ற வலிய உள்ளமும் நெகிழ்ச்சியடைந்தது; கண்ணீர்த் துளியும் வழிந்தது. நாட்டுப் பணிக்காகத் தன்னை ஒப்படைத்து விட்ட இந்த நல்லோன் நிலைமை இப்படியா இருக்க வேண்டும்? கோடி கோடியாக வெகுமதி பெற வேண்டிய பாடல்களைப் பாடும் இப்பாவலன் ஒரு பஞ்சையாகவா இருக்க வேண்டும்? அன்னைத் தமிழகமே, நீ உன்னை அழகு செய்ய வந்த புலமை மகனை இந்நிலைமையிலா விட வேண்டும்? என்று உருகினார். உடனே, பட்டு வேட்டியும், பட்டுத் துண்டும் கொண்டு வந்து உரிமையாக ஏற்பட்ட உள்ளன்பால் தந்தார். எல்லோரும் பாரதியாருக்கு உடை தந்து விட முடியுமா? உன்னிடம் உடை வேண்டும் என்று எவன் கேட்டான்? இரப்பு வாங்கிக் கட்டும் இந்தப் பட்டாடைக்கு என் கிழிசலாடை கோடி கோடி கோடி தரம் மேல்; சே! இந்தா உன் உடை! என்று முகத்திலேயே வீசி எறிந்துவிட்டாலும் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. பாரதியாரின் உணர்ச்சி அத்தகையது. சோமசுந்தரருடன் சற்று நேரம் அளவளாவிப் பேசி விட்டு, பாரதியார் உலாவி வரச் சென்றார். உலாவி விட்டு வீட்டுக்குத் திரும்பினார். அவர் தோளிலே கிடந்த சரிகைக் கரைத்துண்டைக் காணவில்லை. என்ன பாரதி! துண்டு எங்கே? என்று கேட்டார் சோமசுந்தர பாரதியார். ஓ, அதுவா! இங்கே வா என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே சாலை வழியே சென்றார். அங்கே படுத்துக் கிடந்த பிச்சைக்காரன் ஒருவன் மேல் தாம் தந்த துண்டு போர்த்தப்பட்டிருக்கக் கண்டார். சோம சுந்தரர் ஒன்றும் சொல்லவில்லை. பாரதியை நோக்கினார்; பாரதியார் சொன்னார்: மானத்தை மறைப்பதற்கு வேண்டிய கந்தலாடையும் இன்றி எத்தனையோ பேர் வாழ்ந்து கொண்டிருக்க, நான் மட்டும் பட்டாடை கட்ட வேண்டுமா? பாரதியாரின் இச் சொல் முழு ஆடை கட்டிய முனிவர் காந்தியாரை நினைவூட்ட வில்லையா? சற்று நேரத்திற்கு முன் பாரதியார் நிலைமை எவ்வாறு இருந்தது? அந்தக் கந்தலாடைதானே அவருக்கும் உரிமை? பேரன்பால் பெற்ற பட்டாடையைப் பேணிக் காத்துக் கொள்ள எண்ணம் இருந்ததா? ஈவும் இரக்கமும் உள்ள உள்ளம் அடுத்த பொழுதைப் பற்றியோ தன்னைப் பற்றியோ எண்ணிப் பார்க்கத் தவறி விடுகின்றது அன்றோ! சோமசுந்தரர் நெக்குருக எண்ணினார் அஃது இதுதான்; பாரதி நன்றாக இருக்க வேண்டுமானால் இப்பாருலகம் முழுமையும் நன்றாக இருந்தாக வேண்டும். எந்த மூலையில் வெந்துயர் இருந்தாலும் பாரதியாரால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! துயரற்ற உலகம் வருமா? இடனில் பருவத்தும் ஒப்புரவிற்(கு) ஒல்கார் கடனறி காட்சி யவர் (பிறர்க்கு உதவுதலைத் தம் கடமை என்று அறியக் கூடிய அறிவினை உடையவர் உதவுவதற்கு முடியாத நிலையிலும் உதவி செய்வதில் தளர்ச்சி யடையார்)  20. வள்ளல் நள்ளி ஒரு பெருங்காடு. அக்காட்டிலே ஒரு புலவர் நடந்து சென்றார். அவரைத் தொடர்ந்து புலவர்கள் சிலர் சென்றனர். வழியோ கரடு முரடான காட்டுப் பகுதி; மலையடிவாரம்; மலையுச்சி; தொலைவும் மிக அதிகம். நடந்தவர்கள் அனைவரும் களைத்துப் போயினர். உட்கார்ந்து ஓய்வெடுத்தாக வேண்டும் என்று சோர்ந்து விட்டனர். பெரிய பலாமரம் ஒன்றைக் கண்ட புலவர்கள் அதன் தண்ணிய நிழலிலே உட்கார்ந்தனர். வழிநடைக் களைப்பும் வயிற்றுப் பசியும் சோர்வினை உண்டாக்கி அயர்ந்து விடச் செய்தன. உட்கார்ந்து சாய்ந்த வண்ணமே கண்ணுறக்கமும் கொண்டு விட்டனர். வீரன் ஒருவன் ஓடி வந்தான். அவன் வலக் கையிலே வில் இருந்தது; இடக்கையிலே கூரிய அம்பு இருந்தது. தோளிலே அம்புக்கூடு தொங்கியது. காலிலே வீரர்கள் அணியும் கழலும், கையிலே கடகமும், மார்பிலே முத்தாரமும் கிடந்து அழகு செய்தன. அவனது வீரத் திறத்தையும், அஞ்சா உள்ளத்தையும் அவன் கண்களும், தோள்களும், மார்பும், ஏறு நடையும் வெளிக்காட்டின. அயர்ந்திருந்த புலவர்கள் வீரன் வந்த ஒலி கேட்டு அரைகுறையான பார்வையுடன் விழித்து நோக்கினர். அந்த வீரனைக் கண்ட பின்னரும் அவர்களால் உட்கார்ந்திருக்க இயலவில்லை. விரைந்து எழுந்திருப்பதற்குக் களைப்பு இடம் தரவில்லை. காலைப் பிடித்துக் கொண்டு மெதுவாக எழ முயன்றனர். வீரனோ புலவர்கள் களைப்பாக இருப்பதையும், எழுந்திருக்கவும் முடியாத சோர்வுடன் இருப்பதையும் அறிந்து கொண்டு உட்காருங்கள், உட்காருங்கள் என்று கையமர்த்தி விட்டு விரைந்து காட்டுக்குள் சென்றான். வீரன் எங்கே போகிறான் என்று புலவர்களுக்குத் தெரியாது. அவனது எழுச்சி மிக்க நடையினை நோக்கிக் கொண்டிருந்தனர். அந்த அழகனது உருவம் மறையும் வரை இமை கொட்டாமல் பார்த்து நின்றனர். சென்ற, சிறிது நேரத்துள் வீரன் திரும்பினான். வாளா திரும்பினானா? - கையிலே மான் தசை இருந்தது. புலவர்கள் பசியினைப் போக்குவதற்காகக் காட்டிலே புகுந்து வேட்டையாடினான். உடன் வந்த இளைஞர்களைப் பற்றிக் கூடக் கவலைப்படாமல் தானே வேட்டையாடி, தன் கையாலே தீமூட்டி, ஊனைப் பக்குவமாக வாட்டி, நல்ல ஊனாகத் தேர்ந்து கையிலே எடுத்துக் கொண்டு வந்து புலவர்களுக்கு அளித்தான். அவன் இவ்வாறு காலத்தால் உதவுவான் என்பதை அறியாத புலவர்கள் களிப்பும் வியப்பும் ஒருங்கே யடைந்தனர். பசி மிகுதியால் அவசரம் அவசரமாக உண்டனர்; பசி போனது - ஆனால் நீர் வேட்கை உண்டாயிற்று. புலவர்களே, இங்கே வாருங்கள் என்று அழைத்துப் போய் ஒரு நீரூற்றைக் காட்டினான். உவப்புடன் நீரருந்திக் களைப்பு நீங்கினர். புலவர்களின் தலைவர் பெயர் வன்பரணர். அவர் கூறினார்: வீர! நன்றி. நீ காலத்தாற் செய்த இந்த உதவிக்கு என்ன கைமாறு செய்ய வல்லோம்? ‘Ú ah®? என்பதைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை; அதனை அறிவிக்கலாமா? எங்களுக்கு அதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது. ஐயா, காட்டிலே இருக்கும் யான் தங்களுக்கு என்ன உதவியைச் செய்ய முடியும்? இந்த மாலையையும் கடகங் களையும் மறுக்காமல் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். என்றான் வீரன். மாலை, கடகங்களைக் கழற்றி, புலவர்களிடம் தந்தான். வியப்புத் தாங்காத புலவர்கள் நாத் தழுதழுக்க நன்றி கூறினர். அவன் பெயரை அறிந்து கொள்ளுவதற்குத் துடித்தனர். அன்ப, உன்னைக் காணும் போது ஒரு வேந்தனாகவே தோன்றுகிறது. உன் நாடு யாது? உன் பேர் யாது? - இது புலவர்களின் ஆவலுரை. புலவர் பெரும, இதோ வருகிறேன்; நீங்கள் செல்ல வேண்டுமல்லவா. நானும் செல்ல வேண்டும். என்னுடன் வந்தவர்கள் தேடிக் கொண்டு வந்தாலும் வந்து விடுவார்கள். தாங்கள் இப்பாதை வழியே செல்லலாம் என்று வழி காட்டிவிட்டு வீரன் விரைந்து காட்டுக்குள் சென்றான். அவனுடன் வந்த வீரர்களுள் எவரையாவது கண்டாலும் வீரன் பெயரைக் கேட்டறியலாமே என்று தேடினர். ஆனால் அவர்களைக் காணவில்லை. அவர்களுள் எவரும் புலவர்களைக் கண்டுபிடித்துப் பேசி விடாதவாறு தந்திரமாக வீரன் அழைத்துக் கொண்டு போய் விட்டானே! பிறகு கண்டுபிடிப்பது எப்படி? பேரையும் ஊரையும் கேட்டும் சொல்லாத அவ்வள்ளலின் அருங்குணம் புலவர்களைக் கவர்ந்தது. எப்படியும் தெரிந்துவிட ஆசை கொண்டனர். நமக்கு மட்டும் அவ்வாசை இல்லையா? நான்கு அணாக்கள் கொடுத்துவிட்டு அதனை நான்கு இடங்களிலே எழுதிவைக்கும் வள்ளல்கள் மிகுந்த இக் காலத்திலே, பேரும் ஊரும் சொல்லாமல் பெருங் கொடை புரிந்த செயல் வியப்புக்குரியதல்லவா! கேட்டும் கொடுக்காதோர் பலர்; கேட்டுக் கொடுப்போர் சிலர்; கேளாமல் கொடுப்போர் மிகச்சிலர். பேரும் ஊரும் சொல்லாமலும், கேளாமலும் கொடுப்போர் அரியர் - மிக அரியர்! அரிய செயல் செய்த அவ்வள்ளலின் பெயரை அறிய, புலவர் பெரிதும் முயன்றனர். தாங்கள் சென்ற வழிகளிலெல்லாம் கேட்டுக் கெட்டுச் சலித்தனர்; வாயும் அலுத்தனர். ஒருவன் சொன்னான்: தோட்டி மலைத் தலைவனான கண்டீரக்கோப் பெரு நள்ளி அவன். வள்ளல் நள்ளி! நீ வாழ்க என்று புலவர்கள், வாழ்த்திக் கொண்டு அவன் தந்த பொருளால் இன்பமாக வாழ்ந்தனர். நள்ளியின் கொடை? பயன் கருதாக் கொடை! மழை போன்ற கொடை. கைமாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்(டு) என்னாற்றுங் கொல்லோ உலகு  21. கடல் தரா முத்துக்கள் பன்னிரண்டு வயது கூட ஆகாத ஓர் இளைஞர் இருந்தார். அவர் ஒரு கணக்கரிடம் எழுத்து வேலை பார்த்து வந்தார். அவருக்கு மாதச் சம்பளம் - முப்பது நாட்களும் முயன்று எழுதினால் சம்பளம் - ரூபாய் ஒன்று! சம்பளம் குறைவு என்றாலும் இளைஞர் தம் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்தார். எதனையும் ஆழ்ந்து கவனித்துச் செய்யும் இளைஞரது வேலைத் திறம் கணக்கரைக் கவர்ந்தது. இளைஞர்மேல் அன்பு கொள்ளுமாறும் செய்தது. அனால் வேலைத் திறமோ அன்போ சம்பளத்தை ஒன்றும் கூட்டி விடவில்லை! இளைஞர் கணக்கரிடம் வேலைபார்த்து வரும்போது, ஒரு தாசில்தாருடைய உறவு ஏற்பட்டது. அவர் திருவாரூரில் இருந்தார். அவரை நம் இளைஞர் அடிக்கடி சென்று கண்டு பேசியும், அவர் மகிழுமாறு பணிகள் செய்தும் வந்தார். அதனால் இளைஞர் தாசில்தாரது அன்பரானார். ஒருநாள் தாசில்தாரைப் பார்ப்பதற்காகச் செல்வர் ஒருவர் வந்தார். ஐயா, யான் வெளியூருக்குச் சென்று வரவேண்டிய அவசியம் உள்ளது. வரவும் நாட்கள் பிடிக்கும், நிலத் தீர்வைப் பணம் கட்ட வேண்டியதுள்ளது. கணக்கர் ஊரில் இல்லை. தாங்கள் பணத்தை வாங்கிக் கொண்டால் உதவியாக இருக்கும் என்றார். தாசில்தார் அவர் தரும் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்! எவ்வளவு பெற்றுக் கொள்வது? தாசில்தாருக்கு இவ்வளவு ரூபா என்று தெரியாது; செல்வருக்கும் தெரியாது. கணக்கர் ஊரில் இல்லை. ஆனால், அக்கணக்கரிடம் வேலை பார்க்கும் இளைஞர் - நம் இளைஞர் - தாசில்தாரின் அருகில் இருந்தார். எவ்வளவு தொகை என்று உனக்குத் தெரியுமா? என்னும் குறிப்புடன் இளைஞரைப் பார்த்தார் தாசில்தார். ஐம்பது அறுபது இடங்களில் நிலம் வைத்திருந்த அச் செல்வரது கணக்கை இளைஞர் எப்படி மனத்தில் வைத்திருக்க முடியும்? என்ற திகைப்பும் தாசில்தாருக்கு இல்லாமல் இல்லை. ஆனால் இளைஞர் முகமோ அதனைக் கூற முடியும் என்பதுபோல் மலர்ந்து விளங்கியது. சிறிதுநேரம் கணக்கினை மனத்துள் கூட்டிச் சேர்த்து இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்தைந்து ரூபா, எட்டணா, ஒன்பதுகாசு என்று கூறினார். செல்வருக்கு வியப்புத் தாழவில்லை. ஏனென்றால், இதற்கு முன்னும் ஏறக்குறைய இவ்வளவு கட்டி வந்ததாக அவர் நினைவு! தமக்குரிய வரிப்பணம் இவ்வளவு என்று தாமே அறியக் கூடாத நிலைமையில் இருக்கும்போது ஒரு ரூபாச் சம்பள இளைஞர் தெளிவும் திருத்தமுமாகக் கூறியது வியப்பாக இருக்காதா? தாசில்தார் இளைஞரைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். இவ்வளவு நினைவாற்றலும், நுண்ணறிவும் உடைய இச்சிறுவன் எதிர்காலத்தில் முன்னுக்கு வரத் தக்கவனே என்று எண்ணினார். அவர் சிந்தனை கலையுமாறு செல்வர் கூறினார். ஐயா, கணக்கு ஏறக்குறையச் சரியாகவே இருக்குமென்று கருதுகிறேன். இப்பொழுது இவன் சொல்லிய தொகையைத் தங்களிடம் கட்டிவிடுகிறேன். கூடுதல் குறைதல் இருக்குமானால் சரிபார்த்துக் கொள்வோம் என்று பணத்தைக் கட்டிவிட்டுப் புறப்பட்டார். தாசில்தாருக்கு, இளைஞர் முன்னேற்றத்திற்கு ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அரும்பியது. இவ்வேளையிலே மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. அடுத்திருந்த ஓர் ஊர்க் குளம் உடைந்து பெருஞ் சேதமாகி விட்டது. ஊரார், தாசில்தாரிடம் உதவி வேண்டி ஓடி வந்தனர். சேதம் எவ்வளவு என்று கணக்கு பார்க்க வேண்டியதுடன், உடைப்பினை அடைக்க எவ்வளவு செலவு ஆகும் என்றும் கணக்கு எடுக்க வேண்டியது அவசியம் ஆகிவிட்டது. அதற்காகத் தம் அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி எவரேனும் எழுத்தர் இருந்தால் அழைத்து வருமாறு ஏற்பாடு செய்தார். அது காலைப் பொழுதாக இருந்த காரணத்தால் அங்கு எவரும் வந்திருக்க வில்லை. ஆனால், தற்செயலாக ஒரு விளம்பரத்தினைப் படித்துக் கொண்டு அங்கு நின்றார் நம் இளைஞர். அவர், அலுவலகத்திற்கு வந்த ஆள் வழியாகச் செய்தியினை அறிந்து கொண்டு தாசில்தாரிடம் சென்றார். தாம் கணக்கு எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறி, உடைந்த குளத்திற்குச் சென்று கணக்கெடுத்துக் கொண்டு வந்தார். தாசில்தாரின் அனுபவம் இளைஞர் கணக்குச் சரியாக இருக்கக்கூடும் என்பதை உறுதி செய்தது. இருந்தாலும் தெளிவாக்க விரும்பினார். அலுவலகத் தலைமை எழுத்தர் வந்தவுடன் அவரை அனுப்பிக் கணக்கு எடுத்து வருமாறு பணித்தார். அவர் கணித்து வந்த கணக்கும் இளைஞர் குறித் திருந்த கணக்கும் சரியாக இருந்தமையைக் கண்ட தாசில்தார் காலம் நீடிக்காது இப்பையன் முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு கொண்டார். ஆரம்பப் படிப்புடன் இருந்த இளைஞர் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றார். முதல் மாணவராகவே எல்லா வகுப்புகளும் தேறினார். மாநிலம் முழுவதற்கும் ஏற்படுத்தியிருந்த கட்டுரைப் போட்டி ஒன்றிலே முதன்மை யாக வெற்றியடைந்து ஐந்நூறு ரூபா பரிசு பெற்றார். இவர் படித்து வந்த பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், மேல் அதிகாரிகளும் பெரிதும் பாராட்டிச் சிறப்பித்தனர். இளைஞர் முதலில் மாகாணக் கல்லூரியில் ஓர் ஆசிரியராகச் சென்றார்; விரைவில் கல்வி அதிகாரியானார். பின் வழக்கறிஞர் களுக்கென இருந்த தேர்வில் முதல்வராக வெற்றியடைந்தார். அதனால் மாவட்ட முன்சீப், துணை கலெக்டர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்னும் உயர் பதவிகளைச் சிறப்புடன் நிர்வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த முதல் இந்தியர் நம் இளைஞரே என்றால் நம் இளைஞரின் சிறப்புத்தான் என்னே! ஒரு ரூபாய் எழுத்து வேலை பார்த்த இளைஞர், இடையறாத முயற்சியால் உயர் நீதிமன்ற நீதிபதியாக வருவது எளிய காரியமா? எல்லோர் வாழ்விலும் நடக்கக் கூடியதா? கொழுந்து விட்டெரியும் முயற்சி நம் இளைஞரிடம் இருந்தது. அது வறுமை. பிணி, எதிர்ப்பு ஆகிய இருட் படலங்களை இருந்த இடம் தெரியாமல் ஓட்டியது. இல்லையேல் உயர்நீதிமன்றத்தின் முகப்பில் இவ்விளைஞருக்கு பளிங்குச் சிலை நிறுத்தி வைப்பார்களா? ஓஓ! இளைஞர் பெயரைச் சொல்ல வில்லையோ? அவர் தாம் வீட்டிலே விளக்கு வெளிச்சம் இல்லாது தெரு விளக்கிலே படித்து முயற்சியால் முன்னுக்கு வந்த சர்.தி. முத்துசாமி ஐயர்! கடல் தந்த முத்தா இளைஞர் முத்து? கடல் தரா முத்து அல்லவா! ஆமாம்; மறந்து விட்டோமே, முத்துசாமியைக் கடல் தரா முத்து ஆக்கிய தாசில்தார். பெயர் என்ன? நன்றி மறக்கலாமா? அவரும் உண்டு? அவர் பெயர் முத்து சபாநாயகர்! வாழ்க கடல் தரா முத்துகள் என்று வாழ்த்த தோன்றவில்லை முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி வரும் 22. இரண்டு கடிதங்கள் அன்பும் அறச் சிந்தையும் உடைய ஐயா, தாங்கள் காலத்தால் செய்த உதவியால் இதுவரை உயிர் வைத்திருக்கும் யான், என் உள்ளங் கனிந்த நன்றியறிதலுடன் எழுதும் கடிதங்கள் இவை. இவையே முதற்கடிதங்கள்; இறுதிக் கடிதங்களும் இவையே. யான் யார்? என் வரலாறு என்ன? என்பன போன்ற செய்திகள் தங்கள் நினைவில் இருக்க முடியாது; இருக்கக் காரணமும் இல்லை. என்னைப் பற்றி நானே தங்களுக்கு நினைவுபடுத்தினால் கூட நினைவுக்கு வருவது அரிதுதான். ஏனெனில் காலங் கடந்துபோன செய்தி அது. என்னை நினைவுபடுத்திக் கொள்ளுமாறான அருமை பெருமைகள் எதுவும் என்னிடம் இல்லை என்பதை யான் அறிவேன். எனினும் தங்களிடம் அரிய உதவிகளை வேண்டி நிற்கும் இவ்வேளையில் ஏதேனும் தொடர்பு காட்டி ஆக வேண்டுமே என்னும் அவசியத்தால் குறிப்பிட நேர்கின்றது. எனக்கு என்னென்ன பேறுகள் இல்லையாயினும் சரி - தங்களை நெஞ்சத்தே நிறுத்திக் கொண்டு இறுதி மூச்சையும் விடக்கூடிய பேறு எனக்குண்டு என்று பெருமைப்படுகின்றேன். இப்பொழுது பதினைந்து ஆண்டுகள் நகர்ந்துவிட்டன. எனக்கு ஏற்ற அளவிலே ஓரிடத்தில் பெண்பார்த்துத் திருமணம் செய்து கொண்டேன். பெண் வீட்டாரைப் பற்றி என்ன சொல்வது? ஐம்பது நூறுக்குக்கூட வழியில்லாத நான், அவர்களை நினைக்கும்போது பணக்காரன்! அவர்களுக்கோ எனக்கோ பணம் இல்லாமை ஒரு குறையாகப் போய்விடவில்லை. அவர்களுக்குக் குழந்தை என்னும் பெயரால், எனக்கு மனைவி என்னும் பெயரால் - வாய்த்தாள் நிறைமதி. அவளை எங்கள் செல்வம் என்று சொல்லிக் கொள்வதிலே இப்பொழுதும் என்னை அறியாமலே ஒரு பெருமை, உண்டாகாமல் இல்லை. எனக்கும் நிறைமதிக்கும் திருமணமாகி, எங்கள் வீட்டுக்கு அவளை அழைத்துக்கொண்டு புறப்பட இருக்கின்றேன். அப் பொழுது என்னை அறியாமலே எனக்கு ஓர் அச்சம் இருந்தது. பெண் தன் தாய் வீட்டை விட்டுக் கணவன் வீட்டுக்குக் கிளம்ப நேரும்போது அவளை அறியாமலே கண்ணீர் விட்டுவிடுவாள். அது தாய் வீட்டுப் பற்றாலும், வளர்த்துவிட்ட வாஞ்சையாலும் ஏற்படுவது. நிறைமதி மட்டும் இதற்கு விலக்காகிவிட முடியுமா? என்று எண்ணினேன். பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட வேண்டிய பொழுதும் வந்துவிட்டது. முறைப்படி நானும் நிறைமதியும் சென்றோம். என் நினை வெல்லாம் நிறைமதியின் முகத்தைப் பார்ப்பதிலே தான் இருந்தது. நான் நினைத்தது போல் எதுவும் நடந்துவிடவில்லை. நிறைமதியின் தந்தையார் கந்தப்பர்தான் ஓவென்று அலறி விட்டார். இப்படித்தானா? பச்சைப் பிள்ளைபோல் அழுவது? இன்றைக்குப் போனால் நாளைக்கு வேண்டுமானாலும் இங்கே திரும்பலாமே. வேலம்பட்டி என்ன வீராணத்திற்குத் தொலை யூரா? என்று அங்கிருந்த பலர் தேற்றிக் கூறினர். என்ன சொல்லியும் அவர் சஞ்சலம் மாறவில்லை. எங்களுடன் வேலம்பட்டிக்கு மாமாவும் வந்தார். என்னைத் தனியாக அழைத்து, அறியாப் பிள்ளைபோல் நைந்து நைந்து கூறினார்: என் மகள் கண் கலங்க நான் பார்த்தது இல்லை. பார்த்துக் கொண்டிருக்கவும் என்னால் இயலாது. அவளுக்குக் கண்ணீர் வருமுன், என் கண்களில் இரத்தமே பெருகிவிடும். உங்களை நம்பித்தான் ஒப்படைத்திருக்கிறேன். நீங்கள் தான் அவளுக்குத் தந்தை, தாய் எல்லாம்...! என்னென்னவோ தயங்கித் தயங்கிக் கூறினார். அவர் கண்கள் பன்முறை நீரைச் சொரிந்தன. என் இதயம் என்ன இரும்பா கல்லா? மாமனார் வீட்டு வாழ்வு மரியாதை அற்ற வாழ்வு என்னும் எண்ணம் படைத்த நான் மாமனார் வீட்டிலே குடியேறினேன் என்றால் என் மாமாவின் அன்புள்ளம் ஒன்று தான் காரணம். எத்தகைய குறைவுமில்லாது இன்பமாக வாழ்ந்தோம். வறுமை எங்களை வாட்டவில்லை. வறுமை எண்ணம் இருப்பதுதானே கொடிய வறுமை. எங்களுக்குத்தான் அத்தகைய ஒன்றே இல்லையே. சிரித்த அளவுக்கு அழவேண்டியதும் உலக இயற்கைதானே! இரவையும் பகலையும் அளந்து வைத்த இயற்கை இன்ப துன்பங்களை எடை போட்டு வைக்காமலா விடும்? இரண்டு ஆண்டுகள் கடந்தன. நிறைமதி ஒரு குழந்தைக்குத் தாயாகப் போகின்றாள் என்னும் பெருமிதத்திலே எங்கள் வீடு மிதந்தது அப்பொழுதினை நொடி நொடிதோறும் எதிர்பார்த்துக் கிடந்தேதாம். ஆனால் எங்கள் தலையிலே பேரிடி விழுந்து விட்டது! பிறந்த குழந்தை நிறைமதியின் உயிரையும் சேர்த்து வாங்கிக்காண்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டது. அழுது அழுது புலம்பினேன். என் மாமனார் நிறை மதி என்று கதறியடித்துக் கீழே விழுந்தார். அதன்பின் பேச்சில்லை. பேச்சு மட்டுமா இல்லை - மூச்சும் இல்லை. எங்கள் வீடு சுடுகாடு ஆகிவிட்டது. மறுநாள் இரண்டு உடல்களுக்கு - கொடுத்துவைக்காத பாவியான யான்-தீ மூட்டினேன். அங்குப் பற்றிய தீ என்னைச் சுற்றிக் கொண்டது. சுற்றாமல் விடுமா? உடலில் தீப்பற்றப் பட்டவர்கள் ஓய்ந்து ஒரே உறக்கம் உறங்க முடிந்தது. உள்ளத் தீ பற்றப்பட்ட என்னால் ஒரு கணமும் நிற்க முடியவில்லை. நடந்தேன்; எப்படியோ நடந்தேன்; என் கால்கள் மட்டுமே நடந்து கொண்டிருந்தன; பொறி புலன்கள் தடுமாறிப் போய்விட்டன, சில நாட்கள் சென்றிருக்க வேண்டும்; ஒரு நாள் தங்கள் அன்பு இல்லத்தின் கட்டிலிலே கிடத்தப்பட்டிருந்தேன். அதுதான் என் நினைவுக்கு வந்த முதல் காட்சி. என் நெற்றியில் கட்டுப் போட்டிருந்ததும், அது வேதனை தந்து கொண்டிருந்ததும் அடுத்தடுத்து நினைவுக்கு வந்த காட்சிகள். விறகுப் பாரம் ஏற்றிக் கொண்டு வந்த வண்டியிலே முட்டிக் கீழே விழுந்து விட்டாய்; காயம் அவ்வளவு பலமாக இல்லை; இழை மூட்டி யிருக்கிறார் வைத்தியர்; எல்லாம் சரியாகிவிடும் என்று அப்போது தாங்கள் உரைத்த அமுதமொழிகள் என் காதுகளில் இப்பொழுதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வெளிவந்த சொற்கள் அல்லவா அவை? அவற்றுக்கு வலிமை மிகுதிதானே! உள்ளக் கொதிப்பாலும், வெட்டுக்காயத்தாலும் என் உடல் வெதும்பி உச்ச நிலைக்குச் சென்றது. அன்றுதான் தங்கள் உயருள்ளத்தின் உச்சக்கட்டத்தையும் காணமுடிந்தது. என் படுக்கைக்கும், சமையற்கட்டுக்கும், வைத்தியர் வீட்டுக்கும் அன்று தாங்கள் அலைந்தது எத்தனை ஆயிரம் முறைகளோ? மருத்துவர் வந்து உடனடியாக ஊசி மருந்து போட்டாக வேண்டும்; இல்லையேல் காய்ச்சல் குறைவது கடினம்தான் என்று சொல்லி, ஏதோவொரு மருந்து வாங்கி வருமாறு சீட்டும் எழுதித் தந்து விட்டுச் சென்றார். அய்யோ! உங்களைத் துன் புறுத்துவதற்காகத்தான் நான் பிறந்தேன் போலும் என்று ஏங்கிக் கண்ணீர் வடித்தேன். என் படுக்கையின் ஒரு பகுதியே நனைந்திருந்ததைத் தாங்கள் அறியக்கூடாதவாறும் நடித்தேன். தாங்கள் மருந்து வாங்க என்ன செய்வது என்னும் ஏக்கத்திலே தங்கள் மனைவியார் முகத்தைப் பார்த்தீர்கள். அவர்களோ தங்களுக்குக் குறையாத ஏக்கத்திலே தங்களைப் பார்த்தார்கள். யான் அந்தக் கொடுமையைப் பார்க்க மாட்டாதவனாகப் புரண்டு படுத்துக்கொண்டேன். சிறிது நேரம் வீடு அமைதியாகக் கிடந்தது. அம்மையார், செல்வி! செல்வி! என்று அழைத்தார்கள். அந்த மழலைத் தேன்குடம் கலீர்கலீர் என்று ஒலிக்கும் கரும்புக் கால்களுடன் ஓடிவந்தது. வாடா, செல்வி என்று உச்சிமுகர்ந்து தூக்கி, மார்பிலே அணைத்துக் கொண்டு, செல்வி, இந்தக் கொலுசில் அழுக்கு இருக்கிறது; போக்கித் தருகிறேன் என்று கழற்றினார்கள். அந்தோ! கண் கொண்டு பார்க்கப் பொறுக்கவில்லை. காதுகொண்டு கேட்கப் பொறுக்கவில்லை. திரும்பி ஒருச்சாய்த்துப் படுத்திருந்த நான் குப்புறப் படுத்துக்கொண்டு விம்மினேன். அழுக்குப் போக்கு வதற்காகவா செல்வி கொலுசை வாங்கினார்கள்? (கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த ஆறுமுகத்தின் கன்னங்களைக் கண்ணீர் நனைத்தது. இரண்டு மூன்று துளிகள் கடிதத்திற்குப் பொட்டு வைத்தன. ஆறுமுகம் மனைவி மங்கலம் அம்மாள் படிக்கப் பொறுக்காது சமையற்கட்டுக்குச் சென்றுவிட்டார். ஆறுமுகம் தொடர்ந்து படித்தார்.) நீங்கள் வீட்டில் இல்லை. அருமைச் செல்வி என் அருகில் துள்ளுநடையில் வந்தாள். அந்த மூன்று வயதுச் சிட்டுக்கு அவ்வயதுக்குரிய அறிவும் பண்புமா அமைந்து இருந்தன? மாமா, காபிகுடி என்று என் வாயருகே கொண்டு வந்து காபி வட்டையை நீட்டியது. வேண்டாம் செல்வி, நீ குடி என்று அதன் வாயருகே வட்டையைக் கொண்டு சென்றேன். ஙுஙும்; மாட்டேன்; நீ குடி; நீ குடித்தால்தான் நான் குடிப்பேன் என்று அடம் பிடித்தது. செல்வி, இப்படிச் செய்யலாமா? எச்சில் காபியையா மாமாவுக்குக் குடிக்கக் கொடுப்பது? இதோ... இந்தக் காபியை மாமாவுக்குக் கொடு என்று அன்புறக் கூறினார்கள் அன்னையார். ஆனால் செல்விக்கு அமைதி ஏற்படவில்லை. முகத்தில் கவலைக் கோடுகளே தோன்றின. தோல்வியால் ஏற்பட்ட நாணத்தையும் கூர்ந்து கவனித்தேன். என் அறிவீனத் திற்காக நான் வெட்கப்பட்டேன். கொடு செல்வி, கொடு; நீ இப்பொழுது கொடுப்பது காபி இல்லே! தேன் என்று கூறிக் கொண்டே அவள் கையில் இருந்த காபி வட்டையை வாங்கி என் உதட்டுக்குக் கொண்டு சென்றேன். சிரித்துக் கைகொட்டிக் கொண்டே, அம்மா முகத்தை நோக்கியது செல்வி! வெற்றிப் பெருமிதம் உண்டல்லவா! எச்சில் படுத்தியதைக் கொடுக்கலாமா? என்ன பிள்ளை என்றார்கள் அம்மையார். அவர்கள் சொல்லில் கண்டிப்பும் கனிவும் சம அளவில் இருந்தன. நான் சொன்னேன்: செல்வி தெய்வக் கொடை; அவள் எச்சில் தெய்வப் படையல்; வாழ்வே வெறுத்துப்போய் இருந்தது எனக்கு. வாழவேண்டும் - உலகுக்காக வாழ வேண்டும் - என்னும் படிப்பினையை இப்பொழுது பெற்றுக்கொண்ட புதியவனாகி விட்டேன். அதனைச் செயலுக்குக் கொண்டு வருவதற்குத் தெம்பு வேண்டுமல்லவா! அதற்குத் தெய்வப் படையல் அளிக்கிறாள் செல்வி; அவள் எச்சில் தேன் என்றேன். எளிதில் கிடைக்கும் தேன் அன்று; பன்னீராண்டுகளுக்கு ஒரு முறையே மலரும் குறிஞ்சிப் பூக்களிலே எடுத்து, சந்தன மரத்திலே சேர்த்துவைத்த தேன் என்றேன். செல்வியின் தாமரைக் கைகளைப் பிடித்து என் கன்னங்களில் அழுத்திக் கொண்டேன். (ஆறுமுகத்தின் வீட்டிலே நடந்ததாக இருந்தும் அவருக்குப் புதிய செய்தியாகவே இருந்தது. மங்கலம் என்று அழைத்து அவரிடமும் வாசித்துக் காட்டி, இப்படி நடந்ததா? என்றார். நினைத்து நினைத்து அழுவதற்காக இந்த ஒரு காரியத்தைத் தானா செல்வி செய்தாள். இவற்றை யெல்லாம் நினைவுபடுத்தி நெஞ்சைப் புண்ணாக்க வேண்டுமா? ஏதோ நடந்தது. கடிதம் எழுதியுள்ள செல்லப்பன் நல்ல மனிதன்; நன்றியுடையவன்; இன்னும் மறக்காமல் இருக்கிறான் என்றார் மங்கலம். ஆ ஆ! பேர்கூட நினைவிருக்கிறதா? செல்லப்பனா பெயர் என்று கடைசிப் பக்கத்தைத் திருப்பிப் பார்த்தார் ஆறுமுகம். ஆமாம், ஆமாம்! செல்லப்பன்தான்! ஊர்பேர்தான் எனக்கு நிற்பதே இல்லையே! உனக்கு இருக்கும் நினைவாற்றலுக்கு உங்கள் அப்பா மட்டும் படிக்க வைத்திருந்தால்... அடேயப்பா! என்று செல்வி மீது ஏற்பட்ட துயரை மாற்றினார் ஆறுமுகம். வெட்கத்தால் தலைகுனிந்து வெளித் திண்ணைக்குச் சென்றார் மங்கலம் அம்மாள். செல்லப்பன் வரைந்த கடிதத்தைத் தொடர்ந்து படித்தார் ஆறுமுகம்.) என்னால் தங்கள் வீட்டிலே தங்கியிருக்க முடியவில்லை. தங்களிடம் இருந்த அருளின் அளவுக்குப் பொருள் இல்லை என்பதை அறியாதவனா நான்? தங்கள் உயர்ந்த குணத்தினால் அறச்சாலை நடத்தினீர்களே ஒழிய, பணத்தினால் இல்லை என்பதை ஊரே அறியுமே! கையில் காசு இல்லாவிட்டாலும், செய்யும் திருப்பணிகளை மட்டும் தவறாது செய்துகொண்டு வந்தீர்கள். உங்களைப் பாராட்டுவதற்காக இதனை நான் எழுத வில்லை. பாராட்டு, வாக்கிலே நின்றால் யாருக்குப் பயன்? சுருங்கச் சொன்னால் என்னால் தங்கள் வீட்டில் மேலும் தங்கியிருக்க முடியவில்லை. தங்கள் அன்பும், தொண்டும் என்னை வெளியே போ என்று விரட்டியடித்தன. தங்களிடம் விடைபெற்றுக் கொண்டு நன்றியறிதலுடையவ னாக நான் வந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அது என் தவறு என்று எண்ணக்கூடும். ஆனால் என் சூழ்நிலையை நோக்கும்போது, அன்று மட்டுமன்று இன்றும் கூட நான் செய்ததே சரி என்றே தோன்றுகிறது. நான் போய்வருகிறேன் என்று கேட்டால் தாங்கள் விடை தந்து அனுப்பி வைத்திருப் பீர்களா? அம்மையார்தான் அனுமதிப்பார்களா? உடல் சரியாகட்டும் போகலாம் என்று கூறித் தடுத்திருப்பீர்கள். என் உடல் நலமாகும் அளவும் நான் அங்கிருந்தால் எவ்வளவு அல்லல்கள் தந்திருப்பேன்! அது எனக்குப் பிடிக்கவில்லை. தங்கள் இல்லத்திலிருந்து வந்து சேர்ந்த யான் அறிவேன். அது போல் தங்கள் இல்லத்திலிருந்து யான் வெளியேறியதைத் தாங்கள் அறியமாட்டீர்கள். நான் மயங்கிக் கிடந்த பொழுதிலே வீட்டுக்கு வந்தேன். நீங்கள் உறங்கிக் கிடந்த பொழுதிலே வெளியேறினேன். இது தவறாயின் தாங்களும், அருமை அன்னையும், அன்புச் செல்வியும் என்னை மன்னிப்பீர்களாக! என்நெடும் பயணத்தைத் தொடங்கினேன். வழிபோன பக்கமெல்லாம் போனேன். எத்தனை எத்தனையோ காடுகள், சிறுமலைகள், தொடர் மலைகள் கடந்தேன். வெளித் திண்ணையில் படுத்திருந்தாலும், எழுப்பி வைத்துச் சாப்பிடச் சொல்லும் ஏழைகள் வாழும் பட்டிகள் தமிழகத்தில் இன்னும் இருக்கின்ற காரணத்தால் உயிருடன் ஓரூரை அடைந்தேன். நோக்கும் திசை யெல்லாம் தொடர் மலையாகக் காட்சியளித்த அவ்வூருக்குக் கடமலைக்குண்டு என்பது பெயரென அறிந்தேன். அங்கேயே தங்கி விட்டேன். தாங்கள் இருக்கும் கரிவலம் வந்த நல்லூர் எங்கே, இந்தக் கடமலைக் குண்டு எங்கே? கனவு உலகில் திரிபவனுக்குக் காதம் காலடி தூரம்தானே! கடமலைக்குண்டு போய்ச்சேர்ந்த தொடக்க காலத்திலே நான்பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. அவற்றை நினைத்தோ எழுதியோ ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனால் ஒருவன்படும் துன்பத்தின் அளவுக்கு இன்பமும் தொடரும் போல் இருக்கிறது. காலணாக் காசுக்கும் வழி கெட்டிருந்த நான் இரண்டு ஆண்டுகளுக்குள் இருபது ஏக்கர் நிலத்திற்கு உரியவனாகிவிட்டேன்; இது எளிதில் ஆகக் கூடியதா? ஆனால் உண்மை! நான் இவ்வூருக்கு வந்த நாளிலே மலைப்பகுதியில் அவரவர் முயற்சிக்குத் தக்க அளவு பாடுபட்டுக் கொள்ளலாம் என்னும் முறை இருந்தது. ஏதோ குறைந்த அளவு தீர்வைப் பணம் மட்டும் செலுத்தினால் போதும்; சில ஆண்டுகள் பாடுபட்ட பின் நிலம் அவர்களுக்குச் சொந்தம் இதனைப் பயன்படுத்திக் கொண்டு முழு முயற்சியுடன் பாடுபட்டேன். என் கையிலே வெள்ளிப் பணம் திரண்டது. ஊக்கம் அதிகமாயிற்று. என் நோக்கமும் விரிவதாயிற்று. தேடுவதைப் பற்றிய சிந்தனையைப் பார்க்கிலும், அதனை நல்வழியில் எப்படிச் செலவழிப்பது என்பதே என் சிந்தனையாக இருந்தது. அப்பொழுது தங்கள் செயல்கள் எனக்கு வழிகாட்டியாக முன்னின்றன. அவற்றைச் சிக்கெனப் பற்றிச் செயலாற்றத் தொடங்கினேன். என் அறச் செயல்களைத் தொடங்குமுன் எனக்கென இரட்டை மாடிவீடு ஒன்றினைக் கட்டிக் கொண்டேன். என் உள்ளத்தில் உயிரோவியமாக விளங்கி, அழகொழுக வீற்றிருக்கும் நிறைமதியின் பெயரால் நிறைமதி இல்லம் என்னும் பெயர் சூட்டினேன். என் பண்ணையை, மாமாவின் பெயரால் கந்தப்பர் பண்ணை என்று அழைத்தேன். அவரைப்போல் மகள்மேல் அன்பு செலுத்தி வாழ்பவர் எத்தனை பேர்? இப்படி மாமா பெயராலும், நிறைமதி பெயராலும் இவற்றைச் செய்தும் என் மனத்தில் ஒரு குறை இருந்து அழுத்திக் கொண்டே நின்றது. பசியர், பிணியர், ஆதரவு அற்றோர் ஆகியவர்களை ஆதரிப்ப தற்காகத் தங்கள் பெயரால் ஆறுமுகம் அறச்சாலையை - என்னை அந்நிலைமைக்கு ஆளாக்கிய பெருமை தங்களுக்குத் தானே உண்டு - ஏற்படுத்தினேன். நான் மனிதன்; மனிதனுக்குரிய ஒப்பற்ற அடையாளமாக இருப்பது நன்றியுணர்வு; அவ்வுணர்வு பெருக இல்லாவிடினும், சிற்றளவிலேனும் இருக்கிறது. அதற்குரிய அடையாளங்களே இச்செயல்கள் என்று எண்ணி எனக்குள்ளே மகிழ்கின்றேன். இவற்றாலெல்லாம் நான் மகிழ்ந்தாலும் என் மகிழ்ச்சிகள் எல்லாம் தாமாக உருவானவையாக இல்லை. நானே முயன்று உண்டாக்கிக் கொண்டாலொழிய மகிழ்ச்சி வருவதாக இல்லை. உண்மை மகிழ்ச்சிக்கும், வலிந்து வரவழைத்துப் பொய்யாக நடிக்கும் மகிழ்ச்சிக்கும் வேறுபாடு இல்லையா? நான் மகிழ்ந்த பொழுதுகளை அடுத்தெல்லாம் கண்ணீர் வடித்தேன். கண்ணீர் வடிக்கச் செய்தவள் என் நிறைமதிதான்! ஊனோடு உயிரோடு பிணைந்துவிட்ட அவளை நான் மறக்க நினைத்தாலும், முடியவில்லை. மறந்துவிட வேண்டும், மறந்துவிட வேண்டும் என்று எவ்வளவு முயன்றேனோ அவ்வளவு முயற்சிகளும் மேலும் மேலும் நினைந்து நெஞ்சம் நையச் செய்தனவே அல்லாமல் குறைத்த பாடில்லை. நெருப்பினுள் ஒருவன் உறங்கினாலும் உறங்க முடியும். ஆனால் நெஞ்சத் துயருக்கு ஆட்பட்டு உறங்க முடியுமா? நிறைமதியை நினைத்துத் துன்பப்பட்ட வேளைகளி லெல்லாம், இதனை எவ்வழி கொண்டேனும் மாற்றியமைக்க முடியாதா? என்று ஏங்கினேன். வழிவகைகளையும் ஆராய்ந்து அலசி அலசி மண்டையை உடைத்தேன். மாற்று வழிகள் அனைத்தும், ஏமாற்று வழிகளாக இருக்குமே அன்றி, ஏக்கத்தை மாற்றும் வழிகளாக இருக்கா எனத் துணிந்தேன். ஆனால், என்னுடன் அன்புறப் பழகிய நண்பர்கள் சிலர்கூட, என்னை வற்புறுத்தினர். என்னப்பா இருபத்தேழு வயதுக்குள் மனைவியை இழந்து விட்டு இப்படியேயா இருந்து விடுவது? நீயும் மனிதன் தானே! மனைவி இல்லாத வீடு மனை யாகுமா? இல்லாள் இல்லாத வீடு இல்லம் ஆகுமா? மனைவியொருத்தி இருக்கும்பொழுதே இரண்டு மூன்று என்று கட்டிக்கொண்டு திரிபவர்களும் இருக்கிறார்களே! மனைவியை இழந்து துன்புறும் நீ திருமணம் செய்து கொள்வது என்ன தவறா? நீ பிடிவாதம் காட்டுவதுதான் தவறு! உனக்கிருக்கும் பணத்திற்கு நான் நீ என்று எத்தனை பேர் போட்டி போட்டுக் கொண்டு பெண் தருவார்கள் என்றெல்லாம் அவர்கள் திறமையை வெளிப்படுத்தியுரைத்தனர். ஆனால் நிறைமதி வாழ்ந்த நெஞ்சத்திலே - அந்த நிறைமதி ஒருத்திக்குத்தான் இடம் உண்டே ஒழிய இன்னொருத்திக்கு இடம் இல்லை. இடம் இல்லாத ஒருத்திக்கு இடம் தந்து இன்னல் அடையவேண்டுமா? என்று உறுதியாகக் கூறிவிட்டேன். உறுதிக்கும் சிறிதும் அசைவு ஆட்டம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று நொடி நொடி தோறும் விழிப்பாக இருந்தேன். இல்லையேல் சூறைக் காற்றிலே துரும்பாகச் சுழலத்தானே வேண்டும். இதற்கு ஐயம் உண்டா? பகல் பொழுதிலே என் உறுதிக்குச் சிறிதும் அசைவு ஏற்படுவது இல்லை. இரவுப் பொழுதிலே - தனிமையாக முடங்கிக் கிடக்கும் இரவுப் பொழுதிலே - நெஞ்சக் குமுறல் அடக்குவார் அற்று உயரவே கண்டேன். தலையணையிலே முகத்தை அழுத்திக் கொண்டு திணறுவேன். என்னை அறியாமல் கண்னை மூடினால் அந்த நொடியில் என் கனவில் நிற்பது நிறைமதிதான். பின்னும் உறங்க முடியுமா? இரவென்று ஓர் பொழுதே இல்லாமல் பகலாகவே இருக்கக் கூடாதா என்று எத்தனை பொழுதுகள் ஏங்கியிருப்பேன்! ஆனால் பகலென்று ஒரு பொழுதே இல்லாமல் இருக்கக்கூடாதா என்று எண்ணிய நாளும் உண்டே என்றும், என் எண்ணத்திற்கு நானே தடை போட்டுக் கொள்வேன். எல்லாம் நிறைமதி இருந்ததும் இல்லாமையும்தான் காரணங்கள்! உணர்ச்சி உள்ள நேரத்தே அறிவு பெரும்பாலும் உறங்கி விடத்தானே செய்கின்றது, இதற்கு மேலுமா அறிவோடு நினைக்க முடியும்? என்னை எப்படி எப்படியோ அடக்கி வைத்தேன். பயன் இல்லை. இயற்கை என்னை ஒடுக்கிவிட்டது. நிறைமதியின் கவலை என்னை அணு அணுவாகத் தின்னத் தொடங்கிற்று. குருதி, தசை, எலும்பு, நரம்பு நாடி - எல்லாம் குறைக்க உருக்க ஆரம்பித்து விட்டது. ஆம்! எனக்கு எலும்புருக்கி நோய் வந்து விட்டது. அற்ப வாழ்வுடைய மாந்தன் இயற்கையுணர்வை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி காண இயலுமா? தோற்றேன் அம்மவோ தோற்றேன். என் ஒருவனைப் பொறுத்த அளவில் நான் இருந்திருப்பேன் ஆனால் கவலையில்லை. சாவே வா; விரைந்துவா; என் நிறைமதி போன வழியிலே என்னையும் கூட்டிச் செல் என்று என் நெடுங்கரங்களை நீட்டியிருப்பேன். ஆனால் நான் மட்டுமா இருக்கின்றேன்? என் வீட்டில் என்னையே நம்பியிருக்கும், ஓர் அன்புப் பிழம்புமல்லவா இருக்கின்றாள். என் வாழ்வில் மின்வெட்டுப்போல் ஒளியும் சிலவேளைகளில் உண்டென்றால் அதற்கு அந்த ஒளி விளக்குத்தானே காரணம். அவள் வாழ வேண்டும் என்பதற்காகவே இதுவரை வாழ்ந்தேன். இன்னும் வாழ முடியுமா என்றும் நினைத்தேன். ஆனால் என் நோய் இனியும் என்னை வாழவிடாது. எல்லைக்கோடு என்னவோ அது வரைக்கும் என்னை இழுத்துக் கொண்டு போகிவிட்டது. முடிவினை எதிர்பார்த்து அமைந்து கிடப்பது அன்றி வேறொன்றும் என்னால் கூடுவது இல்லை. இந்நிலைமையில் தான் தங்களுக்குக் கடிதம் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. உங்கள் உதவியைப் பெறுவதற்கு என்றே பிறந்த நான் என்னால் இயன்ற மட்டும் தங்களுக்கு அல்லல் தராது இருப்பேனா? இறப்பேனா? முன்னமே என் சொத்தினை இரு கூறுகளாகப் பிரித்து, ஒரு கூறினை ஆறுமுகம் அறச் சாலைக்கு எழுதிவைத்து விட்டேன். அதன் பொறுப்பாளராகத் தங்களைக் குறித்து இப்பொழுது இறுதி முரியும் (உயில்) எழுதியுள்ளேன். தங்கள் மீது பாரமேற்றும் இச்செயலைத் தங்கள் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் செய்திருக்க வேண்டும். உண்மை! ஆனால் தங்களைப் பற்றி எனக்குள்ள அன்புப் பிணைப்பாலும், தங்களையன்றி இப் பொறுப்பிற்குத் தக்க வேறொருவர் இல்லை என்று என் இதயம் வற்புறுத்தியதாலும் இம்முடிவினை நான் செய்தேன். என் நிலைமையை நோக்கினால் இவ்வேளையில் இம்முடிவினை அன்றி வேறெதுவும் செய்ய முடியாது என் பதைத் தாங்களும் உணர்வீர்கள். மாறாகத் தோன்றினால் மன்னித்துதவ வேண்டுகின்றேன். எப்படியும், இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். என்னும் நன்னெறிப்படி செய்தேன் என்று அமைதியாக மூச்சு விடுவேன். அதுபோதும். இந்தக் கடிதத்துடன் மற்றொரு கடிதமும் இருக்கும். அதன் தலைப்பிலே எழுதியுள்ள குறிப்பினைப் படித்துப் பார்த்து, அதன் பின்னர் தங்கள் விருப்பம்போல் செய்ய மன்றாடுகின்றேன். வணக்கம். ஆறுமுகம் அறச்சாலை, கடமலைக் குண்டு தங்கள் உயிரன்பன், செல்லப்பன் (கடிதத்தைப் படித்து முடித்தபின் பெருமூச்சுவிட்டார் ஆறுமுகம் என்றோ நடந்த ஒரு காரியம் எத்தனையோ ஆண்டுகள் கழித்து நாடகம் நடத்துவதைக் கண்டு சிந்தித்தார். அடுத்த கடிதத்தையும் உடனே படித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனை எடுத்தார். தலைப்பிலே, ஐயா, இக்கடிதத்தைப் பிரிக்குமுன், இக்கடிதம் அன்பன் செல்லப்பன் எழுதியது. அவன் எனக்கு எத்தகைய கேடும் செய்யான். அவன் எழுதியுள்ளது என்னவாயினும் நிறைவேற்றி வைப்பதே என்கடமை; அவன் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்கமாட்டேன்; இஃது உறுதி என்று நெஞ்சுக்கு நேராக உறுதி செய்துகொண்டு படியுங்கள். செல்லப்பன் சொல்வது யாதோ? அதைச் செய்ய முடியுமோ? முடியாதோ? என்னும் ஐயம் இருக்குமானால் அருள்கூர்ந்து கடிதத்தைப் பிரிக்க வேண்டாம். நெருப்பிலே போட்டு எரித்து விடுங்கள். இவ்வுடல் எரி நெருப்புக்கு ஆளாகவேண்டிய நேரத்திலே - என் ஒரே ஓர் எண்ணம் தாங்கிய இக்கடிதமும் அதற்கு இரையாகட்டும். என்னும் எழுத்துக்களைப் படித்துத் திகைப்படைந்தார், வருவது வரட்டும்; வாக்குத் தவறேன் என்னும் உறுதியுடன் கடிதத்தைப் பிரித்தார். மங்கலம் அம்மாள் இன்னும் ஒரு கடிதமா என்று ஆறுமுகத்தின் பக்கத்திலே உட்கார்ந்தார். கடிதத்தை உரக்கப் படித்தார்.) அன்புள்ள ஐயா, நான் கடமலைக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைந்து ஆறாம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது கழையாடும். கலைக்கூட்டம் ஒன்று இங்கு வந்து சேர்ந்தது. இக்கூட்டத்தினர் கோவிந்த நகரில் ஆடிவிட்டு இங்கு வந்தனர். கடமலையில் ஆடியபின், மந்திச்சுனை, மயிலாடும் பாறை, ஆலந்தளி வரைக்கும் சென்று திரும்பக்கூடிய கூட்டம். அக்கூட்டத்திலே ஒன்பது அல்லது பத்தே வயதுள்ள சிறுமி ஒருத்தியும் இருந்தாள். அவள் முகவாக்கும் பொலிவும் அக்கூட்டத்தில் இருந்தவர்களுக்குப் பெரிதும் வறுபட்டிருந்தது. பொதுவாக அன்று அந்தச் சிறுமியை - அவள் பெயர் பொம்மி என்பது - பார்த்தவர்கள் அனைவரும் அவள்மீது இரக்கம் காட்டவே செய்தனர். ஆட்டப் பயிற்சி மிக்க ஒருத்தி தரையில் பலவகை ஆட்டங்கள் நிகழ்த்தினாள். இரண்டு கழைகளை ஊன்றி அவற்றின் உச்சியிலே கயிற்றைக் கட்டி வைத்து நடந்தாள்; கால்களை மடித்துக் கயிற்றின்மேல் வைத்துக் கொண்டு நகர்ந்தாள்; ஒரு வட்டிலைக் கயிற்றின்மேல் வைத்து நின்றுகொண்டு நகர்ந்தாள். அதன்பின் வட்டிலில் தலையை வைத்து கால்களை மேலே உயர்த்தித் தலைகீழாக நின்று கொண்டு தலையாலே தள்ளிக் கொண்டு சென்றாள். கொடுமையான உயிர்ப் போராட்ட விளையாட்டையும் விளையாட்டாகவே செய்து முடித்தாள். அவள் ஒவ்வொன்றைச் செய்து முடித்து ஓய்வு கொண்டபோதும் பொம்மி அந்த ஆட்டத்தைச் செய்து வந்தாள். பொம்மி வட்டிலில் நடக்கும் வித்தைவரை விந்தையாகச் செய்து முடித்தாள். முதியவளுக்கு இல்லாத பாராட்டும், கையொலியும், ஆரவாரமும் சிறுமி பொம்மிக்குச் சேருமளவு சிறப்பாக ஆடினாள். ஆனால் வட்டிலில் நடக்கும்போது ஏறக்குறைய முடியுந்தறுவாயில் கழைக் கயிற்றிலிருந்து தவறி வீழ்ந்துவிட்டாள். உயரம் எப்படியும் இருபது அடிகளாவது இருக்கும். ஆனால், அவள்மீது உயிரை வைத்துக்கொண்டு கீழே நடந்து வந்த இரண்டு பேர்கள் இவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டனர். பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. இரண்டோர் இடங்களிலே தோல் வழிந்து இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. நல்லவேளை! பொம்மி பிழைத்தது தெய்வச் செயல் என்று கூட்டத்தினர் மனமார வாழ்த்தினர். ஆட்டம் முடியும் அளவும் பொம்மி முகத்தில் களையில்லை. தோல்வி கண்ட அவள் அழாக் குறையுடன் ஒருபக்கம் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் சிந்தனை எங்கெல்லாமோ வட்டமிட்டுக் கொண்டிருந்தது புலப் படாமல் இல்லை. ஆட்டம் முடிந்தபின், ஆட்டக் கூட்டத்தினர் தாங்கள் அடித்து வைத்திருந்த கூடாரத்திற்குச் சென்றனர். நான் வீடு சென்றேன். ஆனால் எனக்குச் சிறிதும் அமைதி இல்லை. பொம்மியை விசாரித்து வரவேண்டும்போல் இருந்தது. கூடாரத்திற்குச் சென்றேன். ஐயோ, ஐயோ, அம்மா! என்னும் அழுகையொலி மிகுந்து கேட்டது. பளார், பளார் என்னும் அடி ஒலியும் மீறிக்கொண்டு சென்றது. அருகில் இருந்த எவராவது தடுப்பதாகவோ, இரக்கம் காட்டுவதாகவோ தெரியவில்லை. செருக்குச் சிறுக்கி; ஆடமுடியாமலா விழுந்தாள்; எல்லாம் தலைக்கனம்; வரத்துக்காரிகளே இப்படித் தான் என்று பேசிக்காட்டி அடியைத்தான் மிகுதிப் படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் பதைக்க, மற்றப் பெண்கள் இந்தத் தொண்டினையா செய்யவேண்டும்? என்று வருந்தினேன். என்ன ஐயா இது? விடு; காயம்பட்ட பிள்ளையைத் தேற்றுவதை விட்டுவிட்டு அடிக்கிறாயே; விடுய்யா; பாவம், சின்னப்பிள்ளை என்றேன். அடிப்பவன் என்னை ஏற இறங்கப் பார்த்து உங்களுக்கு என்ன தெரியும்? இந்தத் தடிக்கழுதை வந்த பிறகு எங்களுக்கு ஒவ்வோர் இடத்திலும் இடைஞ்சல்தான் செய்கிறது. எந்தப் பொல்லாத வேளையில் இந்தச் சனியன் பிறந்ததோ? எங்கள் உயிரை வாங்குகின்றது. ஆதரவில்லாது அழுதுகொண்டு இருந்த நேரத்தில்தான் எங்கள் கூட்டத்தில் சேர்த்து ஆதரவு தந்தோம். அதன் பயன், அன்று முதல் எங்கள் கூட்டமே அழுகின்றது. என்றுதான் எங்களை விட்டுத் தொலையுமோ? என்றான். அவன் பேச்சிலே துடிப்பு மிக இருந்தது. ஆனால் வரவர, இறங்கிக்கொண்டு வந்தது. அவன் பேச்சினைக் கேட்டுச் சிக்கலான சிந்தனைக்கு ஆளானேன். கூத்தர் தலைவனான அவனையும், பொம்மியையும் பலமுறை பார்த்துப் பார்த்துச் சிந்தித்தேன். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தேன். அவனுடன் பேசினேன். என்னப்பா, இவள் இருப்பதால்தானே உனக்குத் தொல்லை; இவளை என்னிடம் கொடுத்து விடு; நான் காப்பாற்றிக் கொள்கிறேன். நன்றாக நினைத்துப் பார்த்துச் சொல். வேறு எவரிடமும் கேட்க வேண்டுமானாலும் கேட்டுச் சொல் என்றேன். அவனோ, ஏன் சாமி, எங்களிடமே வழிக்கு வராத இவள் உங்களிடம் சரிக்கு வந்துவிடுவாளா? ஏன் தொல்லைப் படுகிறீர்கள் என்று கூறி பாவம் இளக்க மனம் போல் இருக்கிறது! என்று தனக்குள் கூறிக் கொண்டான். எனக்கு ஒன்றும் தொல்லையில்லை. நீ விரும்பினால் என்னிடம் இவளை ஒப்படைத்து விடு என்று கூறினேன். பொம்மியைப் பார்த்து, பொம்மி என்னுடன் வர உனக்குச் சம்மதமா? என்றேன். அவள் வாயால் பதில் சொல்லவில்லை. அந்தக் கூட்டத்தை விட்டுப் போனால் போதும்போல் இருந்திருக்கிறது. ஆகட்டும் என்று முகத்தை அசைத்துக் காட்டினாள். சரி சாமி, இந்தப் பிள்ளை எங்களிடம் ஐம்பத்தேழு மாதம் இருந்திருக்கிறது. நாங்கள் தான் தண்டச்சோறு துணி கொடுத்திருக்கிறோம். மாதத்திற்கு ஒரு ரூபாயாவது கொடுத் தால்தான் தேறும் என்றான். சரி, வா என்று என்னுடன் அவனையும் பொம்மியையும் அழைத்துக்கொண்டு சென்றேன். அதற்குமுன் அடியுதை தந்தும், ஈவு இரக்கமில்லாது பேசியும் இருந்த கூட்டமாக இருந்தும் பொம்மி அவர்களைப் பிரிய நேர்ந்தபோது கண்ணீர் வடித்தாள். ஒவ்வொருவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வந்ததை நினைக்கும்போது பேயோடு ஆயினும் பிரிவு அரிது என்னும் பழமொழி என்நெஞ்சில் நின்றது. வீட்டுக்குப் போனவுடன் ஒரு நூறு ரூபா நோட்டை அவனிடம் தந்தேன். என்னிடம் ஏது சாமி மீதம்? நீங்கள் சில்லரை நோட்டாகவே கொடுங்கள் என்றான். எனக்கு ஒன்றும் சில்லரை தரவேண்டாம்; நூறையும் எடுத்துக்கொள் என்றேன். நூறுமா சாமி என்று மகிழ்ச்சியால் பலமுறை கும்பிட்டுக் கொண்டே, நோட்டைக் கண்களில் ஒற்றி வேட்டியின் முன்தானையிலே முடிந்து இடுப்போடு செருகிக் கொண்டான். பொம்மி! சுகமாக இரும் மா நான் என்னவோ சில வேளைகளிலே கண்டித்திருப்பேன்; அடித்திருப்பேன்; எல்லாம் வயிற்றுப் பாட்டால் தான்மா! இரக்கமில்லாமல் ஏசிப்பேசி இருந்தாலும் அதை எல்லாம் மனத்தில் போட்டுக்கொள்ளாதே அம்மா! ஐயா மனம் கோணாமல் நடந்து நல்லா இரும்மா என்றான். வரத்துப் பிள்ளையாக இருந்தாலும் பிரிவதற்கு வயிற்றெரிச்சல் தாங்க முடியவில்லை சாமி, வருகிறேன் என்று கண்ணீருடன் பிரிந்தான். அப்பொழுதும் பொம்மி அழுதாள். அன்பு நடத்தக் கூடிய அந்தக் கூத்திலே நான் பங்கு பெறாது இருக்க முடியுமா? நானும் கண்ணீரை என் துண்டால் துடைத்துக் கொண்டேன். பொம்மி வந்தவுடன் நான் செய்த முதற் காரியம், அவள் பெயரை மாற்றியதுதான். எப்படி மாற்றினேன்? அழகுக்காகப் பெயர் மாற்றம் செய்யவில்லை. எந்த நன்றியை மறந்தாலும் உய்வுண்டு; ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்க்கு உய்வே கிடையாது அல்லவா! அதனால் என்னவென் றறியாப் பருவத்திலே, ஊசி மருந்துக்காகக் காலணிகலத்தைத் தந்து என்னை அன்பால் அடிமையாக்கிக்கொண்ட தங்கள் அருமைச் செல்வியின் பெயரைப் பொம்மிக்குச் சூட்டினேன். இன்று பொம்மியைச் செல்வி என்று அழைக்கும் பொழுதெல்லாம் செல்வியின் திருமுகமும் திருச்செயலும் இன்ப மழலையும் என் கண்முன் நிற்கின்றன. இன்று அவள் தங்கள் இல்லத்தில் இருக்கிறாளோ? அல்லது புத்தகத்தில் இருக்கிறாளோ? அவள் எங்கிருப்பினும் இனிது வாழ்வாளாக! அவள் பெயர் கொண்டமையால் இவளும் வாழ்வாளாக (ஒன்றும் சொல்லாமல் முகத்தைப் பொத்திக் கொண்டு மங்கலம் அம்மையார் வீட்டுக்குள் சென்றார். சிறிது பொழுது ஆறுமுகத்தாலும் படிக்க இயலவில்லை. செல்லப்பன் வேண்டி யுள்ளது என்ன என்பதை விரைவாகத் தெரிந்து விடத் துடிப்பு இருந்தது. அதனால் ஆறுமுகம் தொடர்ந்து படித்தார்.) கரடு முரடான வழிகளில் வாழ்ந்து பழகிவிட்ட பொம்மிச் செல்வியை, இளகிய நயமான வழிக்குக் கொண்டுவர ஆரம்பத்தில் சங்கடமாகவே இருந்தது. என்றாலும் அவளிடம் இயற்கையறிவும், பண்பும் இருந்த காரணத்தால் எளிதில் மாற்றியமைக்க முடிந்தது. எழுத்தறிவு பெறுவதற்கும் நான் வழி செய்தேன். ஓரளவு நிம்மதியாகவே வளர்ந்தாள். வீட்டிலே செல்வமாக அவள் வளர்க்கப்பட்டதால் நல்ல பொலிவுடனே வளர்ந்தாள். செல்வியைப் பற்றிப் பலரும் புகழ்வது கண்டு மகிழ்ந்தேன். காலத்தால் செய்யப்பட்ட என் செயலையும், செல்வியைப் பேணுகின்ற முறையையும் பலபடியாகப் பலர்பலர் பாராட்டி யதையும் என் காதாரக் கேட்டு மகிழ்ந்தேன். ஊரார் பாராட்டுக்காக நான் இக்காரியத்தில் இறங்காவிட்டாலும்கூட ஊரார் புகழ்ச்சி செல்வியை உயிராகப் போற்றிக் காக்கத் துணைசெய்தது. அவளும் ஒருநாள் மலர்ந்து பூங்கொடி யானாள். அதற்குமுன் இல்லாத அளவு, அப்பொழுது எனக்கு மகிழ்ச்சியாயிற்று. ஆனால் அம்மகிழ்ச்சிக் கோடுகள் தோன்றி மறையு முன்னமே கவலைக் கோடுகள் படர்வதையும் மகிழ்ச்சிக் கோடுகள் தோன்றியதைக்கூட மறைத்து விட்டதையும் கண்டேன். செல்வியும் என்னதான் எண்ணிக்கொள்வாளோ? ஏதோ என் முன்னிலையில் மலர்ந்த முகத்துடன் நடித்தாள். நான் வீட்டில் இல்லாத வேளைகளிலும் சரி, வீட்டிலே தனித்து இருந்து ஏதாவது காரியம் செய்யும் போதும் சரி, செல்வி தனித்திருந்து கண்ணீர் வடிப்பதே வழக்கமாகிவிட்டது. என்ன இருந்தாலும் மற்ற மற்றவர்களைப்போல எனக்கும் தாய் இல்லையே; எவ்வளவு அன்பு உடையவராக இருந்தாலும் தந்தை தந்தைதானே; தாய் ஆகமாட்டாரே என்னும் சிக்கலான சிந்தைக்கு அவள் ஆட்பட்டிருப்பதைக் குறிப்பாலும் பிறரிடம் அவள் சொல்லிய சொல்லாலும் அறிய முடிந்தது. இவ்வேளையில் ஊர்ப்பெண்கள் வந்து வந்து உள்ளன்புடன் சொல்லுவதாகச் சொல்லும் சொற்கள் பெருந் தொல்லை தந்தன. எனக்கும் செல்விக்கும் உள்ள அன்பில் சற்றும் மாற்றமில்லாமல் வளர்ந்துகொண்டு வந்தாலும் கூட, ஏதோ வொரு பெருத்த இடைவெளி ஏற்பட்டுக் கொண்டு வருவது தெளிவாயிற்று. என் முன்னால் நிற்பதையும், மலர்ந்த முகத்துடன் பார்த்துப் பேசுவதையும், கலகலவென்று களங்கமற்றுச் சிரிப்பதையும் ஏற்று இன்புறும் நிலைமை தொலைந்து போய்விட்டது. எங்கிருந்து கொண்டோ குரல் கொடுப்பாள். ஆம் இல்லை இவ்விரண்டு பதில்களுடன் பேச்சைச் சுருக்கிவிடுவாள். அவளாக வந்து எந்த வொன்றையும் பேசுவது இல்லை. இந்த நிலைமையும் வாழ்வும் என் நெஞ்சைக் குடைந்தது. இது பூங்கொம்புப் பருவம் செய்யும் பொலிவு விளையாட்டு என்பதை நான் உணராது செல்வியைப் பற்றி உள்ளுக்குள்ளாக என்னென்னவோ நினைத்து என்னை வருத்திக்கொண்டேன். காலம் எத்தனை நாடகங்களைத்தான் என் ஒருவன் வாழ்வில் நடத்திக் காட்டுவது? முன்னெல்லாம் பண்ணைக்குப் போன பொழுதுகளில் நான் செல்வியை அழைத்துக் கொண்டு போனது உண்டு. வீட்டினுள்ளே அடைபட்டுக் கிடப்பது அவளுக்குப் பிடிப்பது இல்லை. மாலைப் பொழுது வருவதை எதிர்பார்த்திருந்து அவளே புள்ளிமான் போல் துள்ளி வந்துவிடுவாள் தோட்டத் திற்கு. அவள் ஓட்டத்தையும் நடையையும் கண்டு என் நெஞ்சம் படபடக்கும். கால் முழுமையும் தரையில் படிய நடப்பதைக் காணமுடியாது. இளங் கன்று பயம் அறியுமா? ஆனால், அவளோ இப்பொழுது தோட்டத்தைப் பற்றிய நினைவை அறவே விட்டுவிட்டாள். வீட்டைவிட்டு வெளியேறும் நினைவே அவளுக்கு இல்லை. நானும் வலியுறுத்தவும் இல்லை. என் தோட்டத்திற்கு அடுத்த தோட்டம் பாலப்பன் என்பவருக்குரியது. அவர் பொதுவாக நல்ல மனிதர்; நன்றாகப் பழகும் பண்புடையவர். அவருக்குச் செழியன் என்னும் பெயருடைய மகன் ஒருவன் உண்டு. அந்த மலைக்காட்டிலே மருத்துவக் கல்லூரி அளவுக்குப் படிக்க வைத்த ஒரே ஒருவர் அந்த பாலப்பர்தான் என்றால் அவர் துணிவும், அறிவு வேட்கையும் புலனாகும் என்றே நினைக்கின்றேன். அவர் இயல்புக்குத் தகவே செழியனும் சிறந்தவனாகவும், அறிவாளி யாகவும் விளங்கினான். அவன் விடுமுறையாக ஊருக்கு வந்த பொழுதுகளில் தோட்டத்திற்கு வரவும், வந்து என்னோடு பழகவும் தவறுவது இல்லை. இவ்வேளைகளில் செல்வியும் இருப்பாளாயின் எங்கள் உரையாடல் இடையே அவள் கலந்துகொள்வதும் உண்டு. எல்லாரும் மகிழ்ச்சியாகப் பேசி இன்புறுவோம். ஒருநாள் நான் தோட்டத்தில் இருந்தேன். செழியன் என்னிடம் வந்தான். அதற்கு முன் காணாத அளவு தயக் கத்துடன் பேசினான்: ஒரு வாரத்திற்கு முன்னாகப் படிப்பு முடிந்துவிட்டது. இனி எங்காவது என் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். தேர்வில் உறுதியாக வெற்றி கிடைக்கும்; தொழிலைத் தொடங்கவேண்டிய இந்த வேளையிலே, திருமணமும் நடத்திவிட வேண்டும் என்று அப்பா அம்மா சொல்கிறார்கள் என்று எங்கேயோ பார்த்துக்கொண்டு பேசினான். நல்லது தம்பி; அப்படித்தான் செய்யவேண்டும். எந்த எந்தக் காலத்தில் எந்த எந்தக் காரியத்தைச் செய்யவேண்டுமோ அந்த அந்தக் காலத்தில் அந்த அந்தக் காரியத்தைச் செய்துவிடுவது தான் நல்லது. இதனைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி யடைகின்றேன். அப்படியே செய்ய வேண்டியதுதான் என்றேன். செழியன் சொன்னான் : என் தந்தையாரைப் பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. நீங்களே அறிவீர்கள். என் விருப்பத்திற்கு அவர் தடையாக இருக்கமாட்டார். ஆலந் தளியிலே முதல் முதல் படித்த பெண் எங்கள் அம்மாதான். அவரும் ஆரம்பத்தில் ஆயாவாகத் தொண்டு செய்திருக்கிறார். இன்றும் உள்ளூர் மருத்துவர் அவர்தான். அவர் விருப்பத்தாலும் தூண்டுதலாலும் தான் நான் மருத்துவக் கல்லூரியில் படிக்க முடிந்தது. அவருக்கு நான் என்றால் உயிர். நல்ல குடும்பம்; இப்படித்தான் ஒரு குடும்பம் இருக்க வேண்டும். வேறு என்னதான் கடைசியில் அள்ளிக் கட்டிக் கொண்டு போகப் போகிறோம் என்றேன் நான். எனக்கு ஓர் எண்ணம் இருக்கிறது. அது இரண்டு ஆண்டு களுக்கு முன் இத் தோட்டத்தில்தான் ஏற்பட்டது. தாங்கள் ஒத்துக்கொள்வதாயின் தங்கள் செல்வியைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது என் கருத்து. எனக்குச் செல்வியை மணந்துகொள்வதில் முழு நிறைவு இருக்கிறது. தாங்கள் அனுமதிப்பதாயின் உடனே பெற்றோர்களிடம் சொல்லி வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிடலாம். இதனால் அவர்கள் திட்டம் நிறைவேறுவதுடன், என் ஆவலும் நிறைவேறும் என்று செழியன் நிறுத்தினான். படித்த நாகரிகம் வாய்ந்த வாலிபன் அல்லவா செழியன். தொடக்கத்தில் தயக்கத்தோடு பேசினாலும் அவன் குரலில் தெளிவு இருந்தது. எனக்குள் அவனைப் பாராட்டினேன். இதைப் பார்க்கிலும் நான் கேட்க வேண்டிய நல்ல செய்தியும் உண்டா? என்று எனக்குள் மகிழ்ந்தேன். உன் பெற்றோர்களிடம் கலந்து கொள்; மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். நானும் செல்வியின் காதில் போட்டு வைக்கிறேன் என்றேன். எனக்கு முழு நிறைவு இருக்கிறது என்பதை என் முகத்திலிருந்து அவன் அறிந்துகொண்டிருக்க வேண்டும். அவன் முகம் அவ்வளவு பொலிவுடன் விளங்கியது. மறுநாளே செழியன் வந்தான். அப்பா ஏற்றுக் கொண்டு விட்டார். அம்மா அடுத்த வாரத்தில் தங்கள் வீட்டுக்கு வர இருக்கிறார். என்று சொல்லி, நான் செல்வியிடம் கேட்டிருப்பேன், அவள் கூறியதைக் கூறுவேன் என்று எதிர்பார்த்து நின்றான். நான், நல்லது ஆகட்டும் என்று விடை தந்து அனுப்பினேன். செல்வியினிடம் கேட்கவில்லை என்பதைச் செழியனிடம் சொல்லிக் கொள்ள வேண்டுமா? எனக்கோர் எண்ணம்; திட்டப் படியே நடந்து விட்டால் கவலையில்லை. ஏதேனும் ஏற்ற மாற்றம் ஏற்படுமானால் மெல்லிய உள்ளம் தாங்க மாட்டாமல் எவ்வளவு அல்லல்கள் அடையும்? எல்லாம் செயல் முறைக்கு வரும் போது சொல்லிக் கொள்ளலாம். பெண்ணைப் பார்க்காமலா மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக் கொள்வார்கள்; அப்பொழுது தெரிந்து கொள்ளட்டுமே என்றிருந்தேன். அடுத்த நாள் நான் தோட்டத்தில் இருக்கும்போது பாலப்பர் என்னைத் தேடி வந்தார். தோட்டத்திற்கு வந்தேன். அப்படியே... என்று சொல்லிவிட்டு செழியன் சொன்னான். அவன் அம்மாவும் வர இருக்கிறாள். இப்படி அடுத்து அடுத்து இருக்கும் தோட்டக்காரர்களான நமக்குள் சம்பந்தம் ஏற்படுவது எவ்வளவு பொருத்தமான காரியம் என்றார். என்மகிழ்ச்சியைப் புன்முறுவலால் தெரிவித்து வணக்கத்துடன் அனுப்பி வைத்தேன். செழியன் கூறியவாறு, அவன் தாய் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் மூன்று முதிய பெண்களும் வந்திருந் தார்கள். நெடு நேரம் என்னிடமும், செல்வியிடமும் பேசிக் கொண்டிருந்தார்கள். உடன் வந்தவர்கள் தான் என்ன என்னவோ விவரங்களைக் கேட்டனர். அவர்கள் கேளாமலே என் சொத்தில் ஒரு பாகத்தை ஆறுமுகம் அறச் சாலைக்கு எழுதி வைத்துவிட்டேன். இன்னொரு பாகம் செல்விக்கு என்று ஒதுக்கி வைத்துள்ளேன். இப்பொழுது இருக்கும் கையிருப்புப் பணமும் செல்விக்கு உரியதுதான். அவளுக்கு எவ்வளவு என்னால் கூடுமோ அவ்வளவும் செய்வேன். எனக்கு இனி என்ன வேண்டும்? ஏதோ இருக்கும் வரை கொஞ்சம்... என நானே சொன்னேன். விருந்துக்கும் ஏற்பாடாகி இருந்தது. வேறோர் உறவினர் வீட்டுக்குப் போய் வருவதாகக் கூறிப் போயினர். அவர்களை நெடுநேரம் எதிர்பார்த்திருந்தோம். ஆனால் நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா? நாங்கள் அங்கே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்து விட்டோம். இங்கே சாப்பிட வேண்டும் என்று எவ்வளவோ சொன்னோம்; விட மாட்டேன் என்று இலை போட்டு விட்டார்கள். என்று உடன் வந்தவர்களுள் ஒருத்தி சொன்னாள். சரி, அதனால் என்ன? வேண்டியவர்கள் வற்புறுத்தும் போது எப்படித் தட்டுவது? என்று என் வாய் சொல்லியது. ஆனால் உள்ளுக்குள் வேதனையாக இருந்தது. வீட்டை விட்டு அவர்கள் போகுமுன் இருந்த பேச்சும் முகமலர்ச்சியும், போய் வந்த பின் இல்லாது இருந்தது எனக்குத் தெளிவாயிற்று. போன இடத்திலே ஏதோவோர் மாற்ற நிகழ்ச்சி நடந்திருக்கிறது என்று மட்டும் உறுதி செய்தேன். அதனைத் தெளிவாக்குவது போல, பெண்ணைப் பிடித்திருக்கிறது; குடும்பத்திற்கு ஏற்றவள்தான். எல்லாம் போய்ச் சொல்லி அனுப்புகிறோம். திருமணம் வாழ்நாள் காரியம் அல்லவா? வருகிறோம் என்று சொல்லிக் கொண்டு விடை பெற்றுச் சென்றனர். என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு துயர் ஏற்பட்டது. என் எண்ணக் கோட்டை துகள் துகளாக நொறுங்கப் போகின்றது என்பதை உணர்ந்தேன். ஆனால் கள்ளம் கபடம் அற்ற செல்வியிடம் எத்தகைய மாற்றமும் காணவில்லை. நான், செழியன் விருப்பத்தைச் சொல்லி அவள் கருத்தைக் கேளாது இருந்தது எவ்வளவு நன்மையாகப் போய் விட்டது என எண்ணினேன். ஆனால் அதற்காக இன்பப் படவோ, சிரித்து மகிழவோ, முடியாத அளவு துயரம் அழுத்திக் கொண்டிருந்தது. செழியனிடமிருந்தோ, அவன் பெற்றோரிடமிருந்தோ செய்தி வரும் என்னும் நம்பிக்கை எனக்கு அறவே இல்லை. “ஏதோ ஒரு வழியில் ‘தடைப்பட்டு’ விட்டது; இனி என்ன செய்வது? என்று அமைதியாக இருக்கவும் முடியவில்லை. பெண் பார்க்க வந்தவர்கள், உறவினர் வீட்டுக்குப் போயிருந்த பொழுதிலே செல்வியின் தொடக்க வரலாற்றை அறிந்திருக்கக் கூடும்; தாய், தந்தையர், ஊர், குலம் எதுவும் அறிய முடியாத ஆட்டக்காரியான ஓர் அநாதைப் பெண் அவள் என்று அறிந் திருக்கவும் கூடும்; பணமும் பண்பும், படிப்பும் நிறைந்த எத்தனையோ பேர் எதிர்பார்த்துக் கொண்டிருக்க செழியனுக்குப் போயும் போயும் இந்த அநாதையையா பார்த்தோம் என்னும் முடிவுக்கு வந்திருக்கக் கூடும் என்று பலவாறாக எண்ணிக் கொண்டேன். வேறென்ன காரணம் சொல்ல இருக்கிறது? செழியன் என்னிடம் திருமணப் பேச்சை எடுக்கும் வேளையிலேயே வெளிப்படையாகச் செல்வியின் வரலாற்றைச் சொல்லியிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறி விட்டேன். இப்பொழுது நினைக்கிறேன். என்ன பயன்? நான் சொல்லவும் தான் எப்படி முடியும்? செல்வியை அநாதை என்று எண்ணியிருந்தால் அல்லவோ என் பேச்சில் வந்திருக்கும். என் செல்வ மகள் அல்லவா? அவளை எப்படி அநாதை என்று சொல்லியிருப்பேன்? பெண் பார்த்துச் சென்று பத்து நாட்கள் பறந்து விட்டன. அடுத்த நாள், ஒருவன் செழியன் தந்தார் என்று ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து நீட்டினான். என் பதிலுக்கோ பதில் கடிதத்திற்கோ எதிர்பாராதவனாகக் கடிதம் கொண்டு வந்தவன் சொல்லியும் கொள்ளாமல் நழுவி விட்டான். அதுவே கடிதத்தில் என்ன செய்தியிருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டியது. எனினும் பிரித்துப் படித்தேன். அதில் இருந்த வரிகள் சில என்னைக் கொல்லாமல் கொன்றன. செழியன் நல்லவன்; என்பால் அன்பன்; அன்பு காரணமாகவே தன் உள்ளத்துள்ள வற்றைக் களங்க மில்லாது எழுதியிருக்கிறான். ஆனால் எனக்கு அதுவே சாக்காடு வேதனையாக இருக்கும் என்பதை மருத்துவக் கல்லூரியில் படித்திருந்தும் உணரத் தவறி விட்டான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்; விளக்கிக் காட்டினேன்; பயனில்லை; பல ஆண்டுகள் ஆயாவாகவும் மருத்துவராகவும் பணியாற்றி வரும் என் அம்மா உங்களை நினைத்துத் திருமணத்தை ஒத்துக் கொள்ள மறுத்து விட்டார். எனக்கு நேரிட்டுள்ளது தாங்கமுடியாத ஏமாற்றம். எதுவும் துணிந்து செய்ய முடியாத இக்கட்டான நிலைமைக்கு ஆட்பட்டு விட்டேன். என்று செழியன் எழுதியனுப்பிய வரிகளைப் படிக்கும் வேளையில் என்னால் நிற்க முடியவில்லை; உட்கார்ந்தேன்; என் தலையை நேராக நிறுத்தி வைக்கவும் ஆற்றல் இழந்தேன். நான் நினைக்காத காரணம் ஒன்று குறுக்கிடக் கண்டேன். என் நோய் எனக்குக் குற்றமானதாகத் தெரியவில்லை. மற்றவர்களுக்கும் அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியுமா? நான் இருப்பது செல்வி திருமணத்திற்குத் தடையாக இருக்கும் என்பதை அதுவரை உணரவில்லை. உணரச் செய்தது செழியன் கடிதம். அன்று வீட்டுக்கு வந்து படுத்தேன்; அதற்கு மேல் வெளியேறவே இல்லை. ஏன்? வீட்டுக்குள் நடந்து திரியவும் இல்லை. நோய்ப்பூச்சிகளுக்கு என் படுக்கை கொண்டாட்டமாகிவிட்டது. நன்றாக விளையாடட்டும் என்று மருந்து சாப்பிடுவதையும் விடுத்தேன். எப்படியோ வாழ்வை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும். என் வாழ்வு எவ்வளவு விரைவில் முடிகின்றதோ அவ்வளவு விரைவில் செல்விக்கு நல்ல காலம் ஏற்பட முடியும் என்னும் முடிவுக்கு வந்துவிட்டேன். என்னால் வேறென்ன செய்ய முடியும்? மருத்துவத் தொழிலிலே ஊறிப்போன ஒரு குடும்பமே எனக்குள்ள நோய் கருதி, என் வளர்ப்புப் பிள்ளையைத் திருமணம் செய்ய மறுத்தது என்றால் மற்ற குடும்பங்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? நான் எப்படி என் பிள்ளையின் நல் வாழ்க்கைக்காகத் துடிக்கின்றேனோ அவ்வளவு துடிப்பும் தம் பிள்ளையின் நல்வாழ்வுக்காக அவர்களுக்கு இருக்கத்தானே செய்யும். தொற்று நோயாளி பிள்ளையை மணந்து தொல்லைப்பட நேரிட்டு விட்டால்? என்ற கவலை இருக்கத்தானே செய்யும்! நான் ஆத்திரப் படுவதற்கும் அன்புதான் காரணம்; அவர்கள் மறுப்பதற்கும் அந்த அன்புதான் காரணம். அவரவர் பக்கம் நீதி இருக்கிறது. அடுத்தவர்களைப் பற்றிக் குறை கூறுவது தான் நீதியற்றது என்னும் விதிக்கு வந்துவிட்டேன். என் வளர்ப்புப் பிள்ளை எனச் செல்வியை எண்ணி யிருக்க மாட்டார்களோ, என் சொந்த மகள் என்றே எண்ணி, பரம்பரை நோய் இவளுக்கும் பற்றிவிடும் என்று எண்ணி யிருப்பார்களோ என்றும் எண்ணினேன். ஆனால், என் அம்மா, தாய் தகப்பன் இன்னார் என்று அறியாக்கழைக் கூத்துப் பிள்ளை என்றார். அது பழைய குப்பை; அதைப்பற்றி நமக்கென்ன - பிள்ளை எப்படி? என்று கேட்டார் அப்பா. என்று செழியன் கடிதத்தில் எழுதியிருந்தது என் சந்தேகத்தைத் துடைத்தது. என் உயிர் மேல் வாஞ்சை கொண்டு வேண்டு மானால் வேறு வேறு காரணங்கள் காட்டி மழுப்பலாம். ஆனால் என் சாவு அன்றிச் செல்விக்கு நன்மை எதுவும் தராது! இந்நேரத்தே என் வரலாறு முழுமையும் ஒரு முறை சிந்திக்கிறேன், திருப்பிப் பார்க்கிறேன். அதன் முடிவு இதுதான். அறியாமையால் யான் என்னைப் பலமுறை துன்புறுத்திக் கொண்டேன். அது என் தெளிவில்லாமை ஒன்றால்தான் என்பதை இப்பொழுதே உணர்கின்றேன். உணரவும் இப் பொழுதுதான் முடிந்தது. என் வாழ்வில் நடந்தவை அனைத்தும் நன்மையானவையே. இயற்கை நடத்தும் எதுவும் தவறானதாக இருக்கமுடியாது. அதனை எதிர்க்கவோ மாற்றவோ நினைத்து மனிதன் வாடுவது தான் அறியாமையாகத் தோன்றுகின்றது. நிறைமதியை என் முன்னே நிறுத்தியது இயற்கை, எளிமை வாழ்விலே அன்பும் இன்பமும் அனுபவிக்க இயலும் என்பதைத் தெள்ளிதின் எடுத்துக் காட்டியது. அதே நிறைமதியைப் பறித்தும் கொண்டது. அவ்வாறு ஆகியிருக்கா விட்டால் - ஒருவேளை - அவளோடு என் இல் வாழ்க்கையைச் செவ்வையாக நடத்தி யிருப்பேன். எனக்காகவும் அவளுக்காகவும் எங்கள் குடும்பத்திற்காகவுமே வாழ்ந்துவிட்டிருப்பேன். அதனை மாற்றிச் சற்று விரிந்த பார்வையை அடையச் செய்ய வேண்டியது அவசியமாயிற்று. அதற்காகவே, மயங்கி விழுந்து தங்கள் முற்றத்திலே கிடக்கவும், தங்கள் அன்பிலே எழும்பவும் ஏற் பட்டது. அதன் பயன் முயற்சியாளனாகிப் பொருள் தேடவும், அதனை நன்முறையில் பயன் படுத்தவும் நேரிட்டது. எல்லாவூரும் எம்மூர்; எல்லாரும் நம்மவர் என்னும் உயரிய எண்ணமும் வலுத்தது. இதற்கோர் முத்திரையாக அமைந்தது கழைக்கூத்து. பொம்மி என்னிடம் வளர்ந்தாள். என்னிடம் அவள் வளர வேண்டிய கால எல்லை முடிந்தது. வேறொருவர் அன்பும் அர வணைப்பும் அவளுக்குத் தேவை. அதற்கு நான் இருப்பது தடையாக இருக்கிறது. அத்தடை இனி நீக்கப்பட்டுத் தான் தீரவேண்டும். இயற்கை நியதி அது. அவளுக்குரிய இடத்தைக் கண்டடையும் வரை இடைத் தாங்குதல் வேண்டும் அல்லவா! அவ்வாறு தாங்குபவர் யார்? அதற்காகவே தாங்கள் பொறுப் பேற்றுக் கொள்ளக் கட்டாயப் படுத்தப்படுகின்றீர்கள். இன்னும் என்ன சொல்வது? உடனடியாக நீங்கள் இங்கு வரவேண்டும். வரும்வரை இருப்பேனோ? இருக்க மாட்டேனோ? என் கையில் அது இல்லை. யான் இருந்தாலும் சரி, இல்லை யானாலும் சரி. இக்கடிதத்துடன் நான் செல்விக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடித்து விட்டேன். இனி என்னால் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை. தாயும் நீங்களே; தந்தையும் நீங்களே; எல்லாமும் நீங்களே, நான் என் இதய முழுமையையும் ஒன்று கூட்டி உங்களைத் தவிர்த்து யாரும் எதுவும் செல்விக்கு இல்லை என்று உறுதி மொழிகின்றேன். அவள் வாழ்வும் தாழ்வும் தங்களைச் சேர்ந்தது அன்றி வேறில்லை. இக்கடிதம் எழுதியபின் எனக்குச் சற்று அமைதி யுள்ளது. நல்லவர் ஒருவர் கையிலே ஒப்படைக்கும் படியான பேற்றைக் காலம் எனக்குச் சுட்டிக் காட்டியதே என்பதுதான் அமைதிக்குக் காரணம். அந்த அமைதியிலே என் மூச்சும் அமைதியாக ஊசலாடுவதும் எனக்குத் தெரியாமல் இல்லை. தங்களை நெஞ்சார நினைக்கும் அன்பன், செல்லப்பன். நிறைமதி இல்லம் கடமலைக்குண்டு மங்கலம் அம்மையாரும் ஆறுமுகமும் உடனே கடமலைக் குண்டு வந்து சேர்ந்தனர். செல்லப்பன் படுக்கையில் கிடந்து கொண்டே கைதூக்கி வணங்கினான். தன் நெற்றியிலே கூப்பி வைத்த கையை எடுக்கவும் முடியாதவனாகக் கிடந்தான். ஆறுமுகம் தான் கையையெடுத்து மார்பின் மீது கிடத்தினார். அவன் நிலைமை கண்டு ஆறுமுகம் கண்ணீர் பெருக்கினார். கண்ணீர்த் துளிகள் சில செல்லப்பன் மீதும் பட்டன. அதனை உணரச் செல்லப்பனால் முடியவில்லை. செல்லப்பனை நினைத்து அழுது கொண்டிருந்த செல்வியின் பக்கத்தில் மங்கலம் அம்மையார் உட்கார்ந்திருந்தார். இது யார்? என்று சுவரைச் சுட்டிக் காட்டினார் அவர். நான்தான் இந்த ஊருக்கு வந்த புதிதில் எடுத்த படம்; எனக்கு அப்பொழுது எட்டு ஒன்பது வயதிருக்கும் என்று அழுகை கண்ணீருக் கிடையே கூறினாள் செல்வி. உன் படம் தானா? ஆவலோடு கேட்டார் மங்கல அம்மை. செல்லப்பன் மூடியிருந்த கண்களைத் திறந்து ஆம் என்றான். என் செல்வி இவள்தான்; என்றார் மங்கலம். செல்வியா? என்றார் ஆறுமுகம். ஆம்; இந்தப் படத்தைப் பாருங்கள் என்று சுவரைக் காட்டினார் அம்மையார். செல்வி என்று கத்திக் கொண்டு, ஓடிப் போய்த் தழுவிக் கொண்டார் ஆறுமுகம். மதுரை எங்கே? கடமலைக் குண்டு எங்கே? திருவிழாவில் காணாமல் போன செல்வி, என் செல்லப்பனிடம் வளர்ந்திருக்கிறாள் வியப்பின் உச்ச நிலையிலே நின்று பேசினார். நம் செல்வியா இவள்? நான் பேறு பெற்றவன் என்று கண்ணைத் திறந்து பார்த்தான் செல்லப்பன். அடுத்த நொடியில் அவன் கண்கள் தாமாகவே மூடிக் கொண்டன. ஆம்! நல்லவனுக்காகக் கண்ணீர் வடிக்க வேண்டிய நாட்களுள் ஒன்றாயிற்று அந்நாள். (செய்ந்நன்றி மறவாச் செல்லப்பனை நினைக்கும் பொழுது ஒன்றிரண்டு குறள்களா நினைவுக்கு வருகின்றன? செய்ந்நன்றி அறிதல் அதிகாரக் குறள்களில் பெரும்பாலும் நினைவில் நிற்கின்றன) செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 101 காலத்தி னால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. 102 பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது. 103 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். 104 உதவி வரைத்தன்று உதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு 106 எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு 107 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றறே மறப்பது நன்று 108 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு 110  23. அழுகைச் சிரிப்பு கடகட என்னும் ஒலியுடன் இரண்டு பேர்கள் கட்டை வண்டிகளை இழுத்துக் கொண்டு வந்தனர். காலைத் தரையில் ஊன்ற முடியாத அளவு, கடுமையான வெயில் இருந்தது. வெப்பம் தாங்கமாட்டாமல் துண்டால் தலையைச் சுற்றிக் கட்டிப் பிடர்க் கழுத்தையும் மறைத்திருந்தனர். ஒருவன் வெயிலையோ வண்டிப் பாரத்தையோ பொருட்டாய் நினைத்ததாகத் தெரியவில்லை. அவன் குழந்தைப் பருவம் முதற் கொண்டே வெயில், மழை, பனி, காற்று, பசி இவற்றுக்குச் சோதனைச் சாலையாகிக் கிடந்து கிடந்து மரத்துப் போனவன். இனி இவையெல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது என்னும் அளவுக்கு உடலையும் உள்ளத்தையும் உரமாக்கிக் கொண்டவன். குண்டும் குழியுமாகக் கிடந்த சாலையிலே வண்டியை இழுத்துச் செல்லச் சங்கடப்பட்டான் மற்றொருவன். அவனுக்கு வண்டியிழுப்பது புதிய தொழில் - ஆரம்பத் தொழில். வெயில் மழை இவற்றின் தாக்குதலுக்கு அவ்வளவாக ஆட்படாது வளர்ந்துவிட்டவன். அவனுக்குத் தான் தாங்கமுடியாத் தொல்லையாக இருந்தது. முன்னவன் அளவுக்கு மிகுதியான சுமை ஏற்றியிருந்தாலும் கூட, கரடு முரடான அந்தப் பாதையிலே எளிதாக இழுத்துச் செல்வதையும், பின்னவன் குறைந்த அளவுப் பாரத்தையும் இழுத்துப்போகத் திண்டாடுவதையும் பார்த்தவர்கள் பழக்கத்தின் சிறப்பினை உணராமல் போக முடியாது. மிதிவண்டி விடக் கற்றுக்கொண்டவன் எளிதாக வண்டியை விடுகின்றான். வண்டி விடுவது விளையாட்டாக இருக்கிறது. வண்டியைத் தள்ளிக்கொண்டு போவதும் எளிதாக இருக்கிறது. வண்டியைத் தள்ளும் நினைவே இல்லாமல் ஒரே ஒரு விரலால் பிடித்து உருட்டுகின்றான். வண்டியும் அவன் நினைவுப்படியெல்லாம் எளிதில் வளைந்தும், திரும்பியும் செல்கின்றது. புதியவன் வண்டிவிடுவதும் தொல்லையான வேலை யாகிவிடுகின்றது. அதை உருட்டிச் செல்வதும் சங்கடமான வேலையாகிவிடுகின்றது. இரு கைகளாலும் எவ்வளவு அழுத்திப் பிடித்தாலும் தன்மீது சாய்த்துக் கொள்கிறான்; அல்லது அதன் மீது சாய்ந்து மோதிக்கொள்கிறான்; இல்லையேல் இளைத்து அலுத்துத் தள்ளுகின்றான். இவ்வளவு ஏன்? நடை கற்கத் தொடங்கும் குழந்தை, நடை வண்டியைத் தள்ள என்ன பாடு படுகின்றது. நாட்கள் செல்லச் செல்ல நடைவண்டி அலறிச் சக்கரங்களும் தூள் ஆகுமாறு கயிற்றால் கட்டி இழுத்துக் கொண்டு ஓடுவது இல்லையா? பழக்கம் தானே காரணம்! இப்பழக்கம் முன்னவனிடம் இருந்தது. அவனுக்கு வேலைத் தொல்லையும் இல்லை; வெயில் தொல்லையும் இல்லை. பின்னவனுக்குப் பழக்கம் இல்லை. அதனால் வேலைத் தொல்லையும் உண்டு; வெயில் தொல்லையும் உண்டு. முன்னவனும் வண்டி தள்ள வந்த தொடக்கத்தில் தொல்லைப்பட்டது உண்டு. எவ்வளவோ கசப்பான வேப்பிலை யும் தின்று தின்று, பழக்கப்பட பழக்கப்பட, கசப்பே இல்லாத தாகித் தீனியும் ஆகிவிடுவதுபோல் தான் - பழக்கமாகி விட்டது. பின்னவன் புதிதாக வேப்பிலை தின்னத் தொடங்கியிருக்கிறான். வரவரப் பழக்கமாகிவிடும். அவன் பழக்கமாக்கிக் கொள்வதற்கு ஏற்ற உறுதி இல்லாதவனாக இருந்தால் பழக்கத்தையே விட்டு ஓட்டம் எடுக்க வேண்டியும் நேரலாம். நல்ல நண்பன் ஒருவன் கிடைத்தால் உள்ளத்தில் உறுதிப்பாடு இல்லாதவனையும் உறுதியுடையவனாகச் செய்துவிடலாம். போட்டியும் பொறாமையும் குடிகொண்ட ஒருவனாக இருந்தால் புதியவனைத் தொழிலை விட்டு ஓடவும் படுத்திவிடலாம். இருளாண்டி. புதுப் பழக்கம் இல்லையா உனக்கு! கொஞ்சம் நாட்கள் சென்றால் சரியாகி விடும். நானும் ஆரம்பத்தில் இப்படித்தான் பெரும்பாடு பட்டேன். உனக்காவது வயிற்றுப் பாட்டுக்கு வழி இருக்கிறது. எனக்கு அதுவும் இல்லாமல் நடுப்பகல் வரை வண்டி இழுத்து ஏதோ காசு கிடைத்தால் கஞ்சி வைத்துச் சாப்பிட்டதும், அதற்கு வழியில்லாமல் உண்ணா விரதம் இருந்ததும் உண்டு. இன்று கவலையற்ற சாப்பாடு சாப்பிட முடிகிறது. நான் கட்டை வண்டி இழுக்கும் இத் தொழிலை விட முடியாவிட்டாலும் என் பிள்ளைகளாவது ஒரு கும்பிடு போட்டுவிட்டு விடலாம் என்னும் நிலைமை ஆகிவிட்டது. எப்படியோ நாள்தோறும் கொஞ்சம் கொஞ்சம் மீதம் வைத்துச் சின்னதுகளைப் படிக்க வைக்க முடிகின்றது. இன்னும் இரண்டொரு வருடத்துப்பாடு. பிறகு இந்தத் தொழிலுக்கு நானும் ஒருவேளை முழுக்குப் போட்டாலும் போட்டு விடலாம் என்று புதிதாக வண்டி இழுக்க வந்த இருளாண்டியினிடம், பழக்கப்பட்ட வண்டிக்காரன் தலைமலை சொன்னான். நீ முயற்சியாளன்; மனிதனாகப் பிறந்தால் இவ்வள வாவது வைராக்கியம் வேண்டும். நீ ஒருவன் எவ்வளவோ காரியங்களைச் சாதித்திருக்கிறாய். முயற்சியாளி, முயற்சியாளி என்று எவரெவரையோ உதாரணத்திற்குப் பேசுகிறார்கள். உன்னை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சாதாரணமான கட்டை வண்டிக்காரன் தானே நீ! உன் முயற்சியை உயர்வாக எத்தனை பேர் நினைப்பார்கள் என்று உள்ளத்தைத் திறந்து இருளாண்டி பேசினான். தலைமலை சிரித்தான். தம்பி, என்னவோ பெரிய முயற்சியாளன் என்று என்னைச் சொல்கிறாயே; நீ பைத்தியக் காரன்! புதியவன்தானே! நம் வண்டிப்பேட்டை முதலாளி இருக்கிறாரே - மணிக்காளை - அவரைப் பற்றித் தெரியுமா? தெரிந்திருந்தால் என்னை இவ்வளவு பெரிது பண்ணிப் பேசியிருக்கமாட்டாய்! அண்ணே, இப்பொழுது எனக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. நம் முதலாளியினிடம் அழைத்துக் கொண்டுபோய் இவன் புதியவன்; நல்லவன்; வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்; இவனைக் கவனித்துக் கொள்கிறேன் என்று என்னை வேலையில் சேர்த்துவிட்டாய் அல்லவா! அன்று முதலாளி உட்கார்ந்திருந்த இடத்தில் அவர் தலைக்கு மேலே சுவரில் இரண்டு படங்கள் இருந்தன. அவற்றுள் ஒன்று கட்டை வண்டிப் படம். என்னால் தெளிவாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. நம் முதலாளியைப் போல் முகவாக்குள்ள ஒருவர் - ஆனால் நல்ல வாலிபர் - வண்டி இழுத்துப் போவதுபோல் இருந்தது. அது பற்றி உன்னிடம் கேட்க நினைத்தேன். மறந்து போனேன். அதைத்தான் நானும் சொல்லப்போகிறேன். நீயும் சரியான சமயத்தில் நினைவுக்கு கொண்டு வந்தாய். வண்டியை நம் முதலாளியைப் போல் முகவாக்குடைய ஒருவர் இழுக்க வில்லை; நம் முதலாளியேதான்! அப்படி வண்டியிழுத்துப் பிழைத்தவர்தான் இவ்வளவுக்கு முன்னேறியிருக்கிறார். இருளாண்டி வண்டி இழுப்பதை மறந்துவிட்டான். எளிதில் நம்பமுடியாத செய்தியாக இருந்தது அவனுக்கு! என்ன இருளாண்டி, பேச்சம் நடக்கவேண்டும்; காரியமும் நடக்க வேண்டும். நின்றால் கட்டி வருமா? நீ இதை இவ்வளவு பொருட்டாக எண்ணுகிறாய். இதற்கே இவ்வளவு ஆச்சரியப் படும் நீ, துன்பமோ இன்பமோ எதிலும் இப்படித்தானே நின்று விடுவாய். மணிக்காளை அடிக்கடி சொல்வான் - எனக்கு அவன் இவன் என்று சொல்லிப் பழக்கமாகி விட்டது. இப்பொழுது நாம் பழகுவது போலத்தானே நானும் அவனும் பழகினோம். பழக்கம் எளிதில் மாறுமா? நானும் அவனும் தனித்துச் சந்தித்தால் அவன் இவன் என்று குடும்பச் செய்திகளையும் அளவளாவிப் பேசிக்கொள்வோம். வேறு எவரும் இருந்தாலும் கூட என்னை நண்பனாக எண்ணித்தான் பேசுவான். ஆனால் நான்தான் கொஞ்சம் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்வேன். மரியாதையாகவும் பேசிக்கொள்வேன். நீ செய்வதுதான் சரி; இவ்வளவு செல்வன் ஆன பின்னும் உன்னை முன்பு போலவே நண்பனாக நினைக்கிறார் என்பதை விந்தைதான். தம்பி, அவன் தன்னை முதலாயி என்று நினைப்பதே இல்லை. இன்னும் தன்னை கை வண்டிக்காரனாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரே ஒருகாரணத்தால்தான் அப்படி இருக்கிறான். பிறவியிலேயே முயற்சியும், முன்னேற்றமும், பண்பும் அறிவும் பெற்றவன் மணிக்காளை, தன் நிலைமை என்றைக்கேனும் மாறிவிடக் கூடாதே என்றுதான் அந்தக் கட்டை வண்டியை விற்காமல் பத்திரமாக வைத்திருக்கிறான். படம் எழுதியும் தொங்கவிட்டிருக்கிறான். அதிசயமான மனிதர்தான் மணிக்காளை. ஆமாம்; அதிசயமானவன்தான். பேச்சோடு காரியமும் நடக்கட்டும்; கொஞ்சம் தண்டி ... வா. கைவண்டி! ஒரு மூடை இருக்கிறது. கொண்டு போகிறாயா? என்ற ஒரு குரல் கேட்டது. ஒரு மூடையா? சரி; எங்கே இருக்கிறது? என்றான் தலைமலை. கடையொன்றைச் சுட்டிக் காட்டினான் மூடைக்காரன். மூடையைச் சந்தைப் பேட்டைக்கு கொண்டு செல்ல வேண்டும்; கூலி எவ்வளவு? எட்டணாக் கொடுங்கள். எட்டணாவா? என்னசாமி! மூடையைத் தூக்கணும்; பிறகு பேட்டை வரை இழுக்கணும்; நீங்கள் சொல்லுகிற இடத்தில் இறங்கணும்; எட்டணா வாங்கிறீக. சரி! சரி! அவசரமாகப் போகவேண்டும்; மூடையைப் பிடிவா! இருளாண்டி. வண்டியை ஓரமாக நிறுத்து. போக்குவரத்து நெருக்கடியான இடம். தலைமலை மூடையைக் கொண்டு வந்தான். அண்ணே! உன் வண்டியில் இருக்கும் சுமையை இரண்டு வண்டிகளில் கூட ஏற்ற முடியாதே, நீ இன்னும் மூடை ஏற்றுகிறாயே! தம்பி, கொஞ்சம் சங்கடந்தான். ஆனால் எட்டணா வருமானம். வெற்று வண்டியாக - குறை பாரமாக - இருக்கும் போதுதான் கூலி கிடைக்கும் என்று சொல்ல முடியுமா? நம் வசதியை நோக்கிக் கொண்டிருந்தால் கூலி கட்டவே கட்டாது. ஏதோ சமயங்களிலேதான் சாதிக்கவேண்டும். வெயில், மழை, இரவு, பசி இப்படியெல்லாம் பார்த்தோம் என்றால் வயிற்றுப் பாட்டுக்குக் கூட வழி வராது. நீயே பாரேன், சைகிள் சிக்சாக்காரன் மழை நேரத்தில் என்ன சுற்றுச் சுற்றுகிறான்? அவன் எத்தனை நாள் வெயிற் பொழுதுகளில் தேட முடியாத துட்டைச் சிறிது நேர மழையில் தேடி விடுகின்றான் இல்லையா? உலகத்தைக் கண்டு படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. உன்னைக் கண்டு படித்தாலே உலகத்தில் பாதி படித்த மாதிரிதான். நீ சொல்கிறாய்; நானும் இப்படித்தான் நினைத்துக் கொண்டேன் மணிக்காளை சொற்களைக் கேட்டுக்கேட்டு. அவன் தந்த பிச்சை தான் என்னுடைய அறிவு ஆலோசனைகள் எல்லாம் பள்ளியிலே ஐந்தாறு வகுப்புகள் கூடப் படிக்காதவன் அவன். இருந்தாலும் நுட்பமான அறிவாளி! பள்ளிக்கூடத்தில் ஏற்படுவதுதான் அறிவு என்பது இல்லையே! ஒவ்வொரு நிகழ்ச்சியும் காட்சியும் அநுபவமும் ஆசியர்கள் அல்லவா! என்று இருளாண்டியின் முகத்தை நோக்கினான் தலைமலை. ஆமாம்! மணிக்காளைக்கு இவ்வளவு பணம் எப்படிச் சேர்ந்தது? கைவண்டி தள்ளி இவ்வளவு பணம் சம்பாதித்து விட முடியுமா? பருத்தி வியாபாரம், பருத்தி விதைக்கடை, பருத்திக் கமிசன்கடை, வண்டிப்பேட்டை இவ்வளவும் பார்த்துப் பரம்பரைச் செல்வர்களும் பெரிய பெரிய வியாபாரிகளும் கூட ஆச்சரியப்படுகிறார்கள். தம்பி, நூற்றுக்கு மேல் ஊற்று என்பது பழமொழி. ஆரம்பத்தில் பணம் சேர்வதுதான்அரிது. சேர்ந்து விட்டால் வெள்ளப் பெருக்குத்தான். கூத்தாட்டம் நடந்தால் நொடிப்பொழுதில் எப்படியும் கூட்டம் திரண்டு விடுகின்றது இல்லையா? இதுபோல் செல்வம் சேரும் என்று வாழ்க்கை நுட்பம் தெரிந்த திருவள்ளுவர் கூறுகிறார். இப்படித்தான் மணிக்காளைக்குப் பணம் சேர்ந்தது. யோ, கைவண்டி; இந்தச் சுமையைக் கொண்டு போகிறாயா? என்ற ஒரு குரல் எதிரிட்டது. நீங்கள் கொடுப்பதைக் கொடுங்கள் நான் கொண்டு போகின்றேன் என்று சுமை தூக்கி ஒருவன் கேட்டான். போ, போ நீ கேட்கும் காசு சுமைக்காக இல்லை, விலைக்குக் கேட்பதுபோல் இருக்கிறது. இதற்கு பத்தணாவா? போ! நான் வண்டியில் போட்டுப் போகிறேன் என்றான் சுமைக்குரியவன். எங்களுக்கு பாரம் நிரம்பிக் கிடக்கிறது; என்று சொல்லிப் பற்றற்றவன் போலாகத் தலையை நிமிர்த்திக் கூடப் பார்க்காமல் வண்டியை இழுத்தான் தலைமலை. சின்ன சுமைதான்; பெரிய பாரம் இல்லையே என்று மீண்டும் சொன்னான் சுமைக்குரியவன். சரி ஒரு ரூபா கொடுங்கள். ஒரு ரூபாயா? பரவாயில்லையே! நல்ல ஆளையா நீ என்று சுமை தூக்கி மீது கண்பார்வையைச் செலுத்தினான் சுமைக்குரியவன். தம்பி இருளாண்டி, காசு தேட ஆசை வேண்டும்; முயற்சியும் வேண்டும். ஆனால் எப்படிக் கிடைத்தாலும் சரி என்ற மனம்கூடாது. இந்த ஒரு சுமையில்லை. இதைப் போல் ஏழு சுமைகளை ஏற்றி வைத்தாலும் இழுக்க முடியும். இருந்தாலும் நான் இச்சுமையைத் தூக்கிக் கொள்வதால் ஏழைக் குடும்பம் ஒன்றின் வயிற்றில் அடிப்பதாக எண்ணுகிறேன். சுமை தூக்கும் ஏழைப் பையனுக்கு நான் எதிராளியாக விரும்பவில்லை. ஏதோ ஓரணா, இரண்டணா அதிகம் கேட்டிருப்பான். இவனுக்கு அவ்வளவு தர மனம் வரவில்லை. பேய், பூதம், நாய், காக்கை என்று பயம் காட்டிச் சிறு குழந்தைகளைச் சாப்பிட வைக்கும் பெற்றோர்களைப்போல் இவனும் நம் வண்டியைக் காட்டி அவன் கூலியைக் குறைக்கவும், தூக்கச் செய்யவும் பார்க்கிறான். நான் இச் சுமையைத் தூக்காததினால் ஒன்றும் கெட்டுப்போகப் போவது இல்லை. ஆனால் அந்தப் பையன் நிலைமை அப்படிப் பட்டது அன்று. ஒரு குருட்டுக் கிழத்தாயைக் காப்பாற்ற வேண்டிய சுமை அவனுக்கு உண்டு. அவனுக்குப் போடும் காசு, கோயிலுக்குத் தருமம் போடும் காசைப் பார்க்கிலும் புண்ணிய மான காசு. அதனைக் கிடைக்கச் செய்வதும் புண்ணியம்தான். அதிலும் கூடக் கொஞ்சம் கிடைத்துப் போகட்டுமே! மனிதப் பண்பாடு உள்ளவர்கள் எந்தமூலை முடுக்கிலும் இருக்கத்தான் செய்கின்றார்கள். உலகம் என்ன போக்கில் போனாலும் அவர்கள் தங்கள் தொண்டினை விடாமல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள், உலகம் எப்படி எப்படி மாறினாலும், புழு பூச்சிகள் அரித்துத் தொல்லை தந்தாலும் தான் செய்யும் தொண்டினை மண் புழுவிடுகின்றதா? இருளாண்டி தனக்குள் எண்ணினான். இருளாண்டி ஓரமாக இழுத்துப் போ! நான் சந்தைப் பேட்டையில் இந்த மூடையை இறக்கி விட்டு வந்துவிடுகிறேன். அதோ பார்! லாரி என்ன வேகமாக வருகின்றது ஊரே மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமே என்று நினைக்கிறானா பார். உலகம் முன்னேற வேண்டியது தான் ஆனால் இந்தக் கோலத்தில் முன்னேற வேண்டாம்; இது ஊரில் இருப்பவர்களுக்குத் தெரியாமலா இருக்கிறது. தெரியத்தான் செய்கின்றது. தெரிந்தாலும் கண்டித்துக்கூற குரலெழுப்ப - ஆள் இல்லை. எப் படியோ போகிறது என்று நினைத்து நினைத்து ஒதுங்கு கின்றார்கள். வேகக் கட்டுப்பாடு விதி இருக்கத்தான் செய்கின்றது. குற்றாலம் என்றால் குளுமை ஏற்பட்டு விடுமா? போய் அனுபவித்தால்தானே! நல்ல திட்டங்கள் இருந்து பயனில்லை. நடைமுறைக்கு வந்தால்தான் நன்மை. நடைமுறைக்கு வராத திட்டங்கள் இருந்தென்ன? போயென்ன? வேறொன்றும் இல்லை; அவரவருக்கு வந்தால்தான் அதைப்பற்றிக் கவலைப்படுவது என்ற நிலையில் மக்கள் இருக்கும்வரை திட்டமும் அப்படித்தான் இருக்கும்; நடைமுறையும் அப்படித்தான் இருக்கும்; என்றான் இருளாண்டி. சரி, ஒதுக்கமாக நிறுத்து, தலைமலை மூடையைத் தூக்கிச் சென்றான். இருளாண்டி வண்டியைச் சாலையின் பக்கமாக நிறுத்தி வியர்வையைத் துடைத்தான். புதுப் பழக்கம் ஆனமையால் கையில் வலி இருந்தது. இரு கைகளையும் தேய்த்துச் சிறிது வெதுப்பமாக்கினான். கை வலிக்கிறது இல்லையா! கொஞ்சம் இழு; தோப்புக்குப் போய் ஓய்வெடுக்கலாம் என்று வண்டியைப் பிடித்தான் தலைமலை. போக்குவரத்தைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறேனே; காரணம் என்ன? என்று நினைக்கிறாயா. அவ்வளவு விரிந்த உள்ளம் இன்னும் ஏற்பட்டுவிடவில்லை. நான் போக்குவரத்துப் பற்றிக் கவலைப்படத் தொடங்கியதே ஒரு கொடுமையான நிகழ்ச்சியால்தான். மணிக்காளையைப் பற்றிய பேச்சு இப்படித் திரும்பிவிட்டதே என்று நினைக்கிறாயா? இந்த வண்டிப் பேட்டையில் வாடகை வண்டியும் கிடைக்கிறது அல்லவா! சொந்தவண்டி இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்தும் இழுப்பது உண்டு. இப்படி வாடகை வண்டி எடுத்துச் சம்பாதித்த ஒருவரைத்தான் சொல்கின்றேன். மிக மிகச் சிக்கனக்காரர் அவர். ஒரு சல்லி செலவழிப்பது ஆனாலும் பத்துத்தடவைகளாவது எண்ணிப் பாராமல் செலவழிக்கமாட்டார். எப்படியாவது அந்தச் சல்லியையும் செலவழிக்காது இருக்க முடியுமானால் அவ்வழியைத்தான் பின் பற்றுவார். வீட்டிலும் அவர், மனைவி, ஒரேமகன் இவ்வளவு பேர்கள்தான். அந்த அம்மாள் கணவனுக்கு ஏற்றவள். அவர் எவ்வளவு தந்தாலும் அதற்குள் குடும்பத்தை நடத்திவிடுவாள். துட்டு முடிவது அவள் அறியாத பழக்கம். அவள் உதவியாலும் கணவன் சமர்த்தாலும் குடும்பம் நன்றாக நடந்து வந்தது. எப்படியும் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாயாவது முடிபோட்டு வைத்துவிடுவார் அவர். பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டவர் என்றான் இருளாண்டி. எல்லாம் வறுமை சொல்லி வைத்த பாடம் தான். சிறிது சிறிதாகப் பொருள் சேர்ந்தது. இருந்தாலும் இன்பமாக இல்வாழ்வு நடத்த அவரால் முடியவில்லை. பொருளால் மட்டும் வாழ்வு இல்லை. மனைவி, மக்கள், ஒட்டு, உறவு, எல்லாவற்றையும் பொறுத்தல்லவா உள்ளது. அவர் பேறு பெற்றவர் என்று சொல்லிவிடலாம்-அவருக்கு வாய்த்த மனைவியை நினைத்து. ஆனால் மகனை நினைக்கும்போது அப்படிச் சொல்லிவிட முடியாது. என் னென்னவோ பெரும்பாவங்களெல்லாம் பண்ணிய பயன்தான் இப்படி மகன் பிறந்தது என்று கூறாதவர் இல்லை. அவ்வளவு கெட்டவன். தந்தை முடிபோட்டு வைத்த காசையும் ஏதாவது காரணம் காட்டித் தட்டிப் பறிக்கப் பார்ப்பான். வழி கிடைக்காவிடில் அயர்ந்த நேரம் பார்த்து அவிழ்த்துக் கொண்டு போய்விடுவான். வீட்டில் வைத்தால், எந்த ஒளிவுமறைவு ஆனாலும் எடுத்து விடுவான். தாயாரிடம் இருந்தால் வாய் வரிசை அன்றிக் கைவரிசை காட்டியும் பறிப்பான். இத்தகையவன் காலடி பட்ட இடத்திலாவது காசு சேருமா? மணிக்காளைமேல், கைவண்டிக் கிழவருக்கு ஒரு நம்பிக்கை. அவரென்ன - கைவண்டி இழுப்போருக்குச் சங்கம் என ஒன்று இல்லை என்றாலும்கூட, சங்கம் அதன் தலைவர் - காப்பாளர் எல்லலாமே மணிக்காளை என்றால் தகும். அவ்வளவு நம்பிக்கையும் பெருமையும் வைத்திருந்தனர். நான் சொல்லிய கிழவர் பொன்னுத்தாத்தாவும், மீதப்பட்டதை மணிக்காளையி னிடமே தந்தார். மணிக்காளைக்குக் கிழவர் குடும்பநிலை நன்றாகத் தெரியும். இருந்தாலும் ஆரம்பத்தில் கிழவர் தந்த மீதப் பணத்தை வாங்கி வைக்க அவனுக்குச் சம்மதமில்லை. நான் பணம் வாங்கி வைப்பதில் எனக்குத் தயக்கம் ஒன்றும் இல்லை. இருந்தாலும் அச்செயல் தங்கள் குடும்பத்தைப் பிளவு பண்ணிவிடக் கூடாதே என்று தடுத்தான். குடும்பம் பிளவு பட்டுவிடவேண்டும் என்று நான் நினைக்கிறேனா? அப்படி ஆகக் கூடாது என்று என்னால் ஆனமட்டும் பார்க்கிறேன். வெற்றி பெற முடியவில்லை. அந்த முயற்சியை மீண்டும் செய்து கொண்டே நான் பிச்சைக்காரனாகிவிட வேண்டுமா? இனி என்னால் ஒன்றும் முடியாது. எனக்காக இல்லாவிடினும், என்னையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் மனைவிக்காகவாவது உன்னிடம் இந்த மீதத்தைச் சேர்த்து வைக்க வேண்டும் என்னும் நிலைமை உண்டாகி விட்டது. என்று கிழவர் மன்றாடினார். மணிக்காளையும் பொன்னுத்தாத்தா குடும்பத்தில் ஒருவனாகப் பழகிக் கொண்டும் கிழவர் மகனைத் திருத்த முயன்றான். முடியவில்லை. அதற்குப் பின் அவர் பெயரால் குறித்துக் கொண்டு பணத்தை இருப்பு வைத்தான். இது கிழவர் மகனுக்கு எவ்வளவு வெறுப்பாக இருந்தது என்பதை நான் அறிவேன். இதில் என்ன இருக்கிறது. தாத்தா என்ன தலையிலா கொண்டுபோகப் போகிறார். வீட்டிலே வைத்திருக்க உள் பயம் இருக்கிறது; வெளிப்பயமும் இருக்கிறது. வங்கியிலே போட்டு வைப்பது போலப் போட்டு வைக்கிறார். நாணயமும் நம்பிக்கையும் உடைய மணிக்காளையிடம் போட்டுவைப்பது வங்கியில் போட்டு வைப்பது போன்றதுதானே என்றான் இருளாண்டி. தோப்பில் வண்டியை நிறுத்திவைத்து, இரண்டு வடை களைத் தெருக் கடையில் வாங்கித் தின்று, தண்ணீர் குடித்தனர். இருளாண்டிக்கு அயர்ச்சி மிகுதியாக இருந்தது. தலையைக் கீழே போட்டால் உறங்கி விடுவான். ஆனால் தலைமலை சொன்னான்: எடுத்த சுமையைக் கொண்டு சேர்க்காமலோ, ஏற்றிய பாரத்தை உரியவரிடம் ஒப்படைக்காமலோ உறங்கி விடபவன் ஒருவேளை இல்லாவிட்டாலும் ஒருவேளை இழந்து போவான். மூட்டையடிப்பவனை வலியக் கைந் நீட்டி அழைத்து எடுத்துக்கொண்டு போ என்று கொடுப்பது போன்றது என்று மணிக் காளையிடமும், என்னிடமும் பொன்னுத் தாத்தா பல தடவைகள் சொன்னது உண்டு என்றான் தலைமலை. தாக்குதலைச் சமாளித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தான் இருளாண்டி. கைகளைத் தேய்த்துக் கண்களைச் சூடாக்கினான். மேலே சொல் என்று பேசத் தூண்டினான். கிழவருக்கும் மகனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகச் சச்சரவு வளர்ந்தது. ஏச்சுப் பேச்சுக் கூட முற்றியது. தந்தை மகனுக்கு இடையே தாயும் மணிக்காளையும் பலப்பல அல்லல்கள் பட்டனர். திட்டும் வசையும் வாங்கினர். என்ன இருந்தாலும் கிழவர் பெயரால் பணம் ஏறிக்கொண்டு வந்தது. பணத்தை எந்த வழி கொண்டாவது பறித்து விட வேண்டும் என்று முனைந்து நின்ற மகன், அவனுக்குப் பிடித்தமான சிலரை ஏவி வைத்து வியாபாரம் செய்ய, தொழில் செய்ய என் றெல்லாம் கேட்டனுப்பினான். உள்ளதை வைத்துக் காப்பாற்றத் தெரியாதவன் வளர்த்து விடுவானோ என்று மறுத்து விட்டார் கிழவர். இச் சமயம்தான் குடும்பம் கலகலக்கத் தொடங்கியது. ஓயாச் சண்டையைக் கண்டு நொந்த தாய்க்கு மணிக் காளையிடம் இருக்கும் பொருளை வாங்கி இந்தக் கிழவர் இவனிடம் எறிந்து விட்டால் என்ன? என்னும் எண்ணம்கூட ஏற்பட்டது. வரிந்து கட்டும் சண்டைக்கு ஆளாகியும் கிழவர் உறுதியாகவே இருந்தார். என் காலம் எவ்வளவு நாளோ? கிழவிக்காக வேண்டும். என் மகனை நம்புவதற்குப் பதில் ஆற்றையோ குளத்தையோ நம்புவது மேல் என்று கூறிவிட்டார். நெடு நாட்கள் ஆகவில்லை. ஒருநாள் பகல் மூன்று மணி இருக்கும். வண்டியை நிறுத்தி வைத்து, அதன் கீழே உட்கார்ந்தார் கிழவர். அதிகக் களைப்பு ஏற்பட்டிருக்கிறது. உறங்கி விட்டார். ஏதாவது பாரம் இருந்ததா? என்று இடைமறித் தான் இருளாண்டி. ஓ ஓ! நான் சொன்னதை நினைத்துக் கொண்டாயா? உள்ளொன்று உதட்டிலொன்று என்பது அவர் அறியாதவை. பாரம் எதுவும் இல்லை. நல்ல உறக்கம். அந்நேரம் லாரி ஒன்று வந்திருக்கிறது. வண்டி மீது மோதி - வண்டி உருண்டு - ஐயோ! அதன் கீழே கிடந்த கிழவர் தலையும் உருண்டு விட்டது. ஐயோ! செத்தே போனாரா? அட அநியாயமே என்றான் இருளாண்டி. இப்பொழுதுதான் நீ லாரிக்காரனைக் கண்டபோது காட்டிய கடுகடுப்பின் காரணம் புலனாகின்றது என்றான். சற்று நேரம் அமைதியாக இருந்த இருளாண்டி கிழவர் போன பின்னாவது மகனுக்கு அறிவு வந்ததா? பழைய கதைதானா? என்றான். கிழவர் அமைதியாக வாழ்வை முடித்துக் கொண்டார். அவருக்கு மைந்தன் என்ற முறையில் மணிக்காளை இருந்தான் என்று சொல்வது ஒழிய வேறொன்றும் சொல்ல இல்லை. லாரிக்காரனை வெருட்டி வெருட்டிப் பணம் பிடுங்கித் தின்பதுதான் மகன் தொழிலாயிற்று. பணம் பறிப்பதற்காகப் போலீசுத் தரப்பில் இருந்த நேர்மையைக் கூட மாற்றியடித்தான். எப்படியோ அவன் கதை நடந்து கொண்டுதான் இருந்தது. தள்ளாத வயதில் கணவனை இழந்த கிழவிக்கு மணிக்காளை தேறுதலாக இருந்தான். என்னைப் பெற்ற அம்மா இல்லை. அந்தக் குறையை நீங்கள் நிறைத்தீர்கள் என்று பேணி வந்தான் மணிக் காளை. அவளும் கொஞ்சம் தேறியிருந்தாள். பல வேளைகளில் மகன் வந்து அப்பா கொடுத்த பணத்தை வாங்கித் தருகிறாயா இல்லையா? என்று தாயை வற்புறுத்தினான். நாலுபேர் கூடிய இடங்களிளெல்லாம், மணிக்காளையைப் பற்றி வசை பொழிந்தான். ‘ïJ v‹d nfty«! என்று கிழவர் கணக்குகளையெல்லாம் காட்டி, சல்லியும்பாக்கி வைக்காமல் தீர்த்தான். அவன் தாய்க்குப் பணம் தருவதில் சம்மதமில்லை என்பதை அறிந்து, அவள் அறியாமலே தான் கணக்குத் தீர்த்தான். உட்கார்ந்து தின்றால் ஊரளவு சொத்தே நிற்காதே! ஓட்டம் பிடித்தது ஓராண்டுக்குள் - எண்ணூறு ரூபா எந்த மட்டுக்கும்? இதற்குள் மணிக் காளைக்கு நல்ல காலம் போல் இருக்கிறது. தேடிச் சேர்ந்திருந்த பணத்தைக் கொண்டு இரண்டு கை வண்டிகள் வாங்கினான். வந்த இலாபத்தை அழிக்காது மேலும் ஒன்றிரண்டாக வண்டிகள் தொடுத்து வாங்கினான். பொன்னுத் தாத்தா மண்டை உடைந்தாலும் ஒருவேளை கூடிக் கொள்ளும்; ஆனால் ரூபா நோட்டை உடைத்தால் (சில்லறை யாக்கினால்) ஒரு நாளும் கூடவே கூடாது என்பார். அது மெய்யாயிற்று. மணிக் காளைக்கு வேண்டிய லாரி புரோக்கர் ஒருவர் இருந்தார். அவர்மணிக் காளையுடன் நெடுங்காலம் பழகியவர். நன்றாக அறிந்தவர். அவருக்கு அவர் தொழில் வழியாக நல்ல வருவாய் இருந்தும்கூட வெளியூருக்குக் குடியேற வேண்டியவராக இருந்தார். ஒரே மகளை நல்ல இடத்திற்குத் திருமணம் செய்து, அவளுடன் குடும்பத்துடன் போக வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. இவ் வேளையிலே அவர்கண்ணோட்டம் மணிக்காளை மேல் விழுந்தது. இடத்திற்காகவும், வாடிக்கைப் பெயருக்காகவும் இரண்டாயிரத்து இருநூறு ரூபா வாங்கிக் கொண்டு மணிக் காளைக்கே விற்று விட்டார். மணிக்காளைக்கு எதிர்பாராத வாய்ப்பு இது. இருந்த இடத்திலேயே வருபவர்களிடம் பேசிப் பேசிப் பணம் வாங்க வேண்டிய வாய்ப்பு அல்லவா! என்றான் தலைமலை. ஆமாம்! மனம் போல் வாழ்வு என்பது சரியாகி விட்டது. இப்படிப் பட்டவர்கள் முன்னுக்கு வந்தால் தான் நீதி, நேர்மை, கடவுள் இவற்றின் மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட முடியும் என்றான் இருளாண்டி. கேள்; புரோக்கர் வேலை ஒப்பந்தமானதற்கு நாங்கள் கொண்ட மகிழ்ச்சி அளவு கூட மணிக்காளை கொள்ளவில்லை. இது சூதாட்டம் இப்பொழுது இப்பக்கம் சாய்ந்திருக்கிறது. அடுத்த வேளை எப்பக்கமோ? என்று சொன்னான். அவன் அவ்வாறு சொல்வது கண்டு பைத்தியம் என்று நாங்கள் திட்டினோம். எங்கள் வாடிக்கை நண்பன் அல்லவா! மணிக்காளை சொல்லியதில் உண்மையும் உண்டு என்பது அந்த வார இறுதியிலே வெளிப்பட்டது. பொன்னுத் தாத்தா மனைவி மணிக்காளை பொறுப்பில் தானே இருந்தாள்! அவள் ஒரு வாரம் கழித்து ஒரே படுக்கையாகி விட்டாள். எழுந்திருக்க வில்லை. சோறு தண்ணீர் மருந்து எதுவுமே ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டாள். நோய் நோய் என்று தத்தளித்தான் மணிக்காளை. கிழவி பேச்சையும் நிறுத்திக் கொண்டாள். யாரிடம்? அவளை உயிராக எண்ணிக் கொண்டிருக்கும் மணிக்காளையினிடம். என் முன்னாக எத்தனையோ முறை மணிக்காளை கண்ணீர் வடித்திருக்கிறான்; என்ன இருந்தாலும் பெற்ற மகனாக இருந்தால் அவனிடம் இப்படிக் காரணமில்லாது பேச மறுப்பாளா? பார்க்கப் போகும் போது முகத்தைத் திருப்பிக் கொள்வாளா? ஏதாவது வேண்டுமா? மருந்து தரட்டுமா? வைத்தியரைக் கூட்டி வரட்டுமா? என்றால் ஏதேனும் அன்பான சொல் சொல்லாது, மானமில்லாமல் வாழ விரும்பும் எவளுக்காவது மருந்து கொடு; சோறு கொடு. எனக்கு வேண்டாம் என்பாளா? நான் என்ன தவறு செய்தேன் என்பது எனக்குப் புரியவில்லையே என்று பல முறைகள் அழுதான். கிழவியின் காலில் விழுந்தும் மன்றாடிக் கேட்டான். கிழவியின் நிலைமையில் எந்தவொரு மாற்றமும் ஏற்பட வில்லை. அப்பாடா! இது என்ன அநியாயம்; கிழவிக்கு ஏன் இவ்வளவு கெட்ட பிடிவாதம் நன்றாகத் தானே இருந் தாள் என்றான் இருளாண்டி. மணிக்காளை உன் வீட்டில் தங்குவதே பாவம்; தண்ணீர் குடிப்பது துரோகம்; வேறெங்கும் போய்ச் செத்தாலும் சாவேனே ஒழிய இங்கிருக்க மாட்டேன் என்று சொன்னாள். மானம் பெரிதா? உயிர் பெரிதா? என்றால் நான் உயிரை விட மானம்தான் பெரிது என்பேன். சிலருக்கு மானத்தைப் பார்க்கிலும் உயிர் சிறந்ததாக இருக்கலாம். அவர்கள் போகட்டும். என்னைப்பற்றித்தான் பேச்சு. உயிரை விட்டாவது மானத்தைத் தான் காப்பேன். உன் வீட்டில் இன்னும் இருந்து மானம் இழக்க மாட்டேன் என்றாள். அம்மா! நீ தானே என் தாய். நீ பெற்று எடுக்காத ஒன்று தவிர்த்து வேறு ஒன்றும் இல்லையே! நானும் உன் வயிற்றில் பிறக்காவிட்டாலும் பெற்றெடுத்த தாயைப் போன்று தானே பேணினேன். ஏதாவது தவறு இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லலாமே! அதற்காக இப்படியா என்னைத் துயருக்கு ஆளாக்க வேண்டும் என்று கண்ணீர் கசியக் கேட்டான். மணிக்காளை உன்னைச் சொல்ல வாயில்லை; காலக் கோளாறு; என் தலைவிதி. எத்தனை இருந்தாலும் என் வயிற்றில் பிறந்த மகனாக இருந்தால் இப்படி ஒரு காரியம் செய்திருக்க மாட்டாய் என்றாள். எதையோ உள்ளே வைத்துக் கிழவி புண்பட்டிருக்கிறாள். இல்லாவிடில் வெள்ளையுள்ளம் படைத்த அக்கிழவி இப்படிப் பேசி யிருப்பாளா? ஆமாம் பிறகு! பிறகென்ன! கிழவி சொல்ல மறுத்துவிட்டாள். கிழவியின் சொந்த வாழ்க்கைச் சம்பந்தப்பட்டது. வெளிப்படையாகச் சொன்னால் அவள் மானம் சம்பந்தப்பட்டது. அதற்கும் நமக்கும் தொடர்பு இல்லையென்றாலும் நாம் அறிந்தோ அறியாமலோ தொடர்பு கற்பித்துக் கொள்ளத்தக்க ஒன்றுநடந்து விட்டிருக் கிறது. அதைக் கிழவி சொல்ல விரும்பவில்லை. சொல்ல முடி யாததாக இருக்கும் போது சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நாம் வற்புறுத்த நமக்கு என்ன உரிமை உண்டு? உண்மை வெளிப்படும் வரை நாம் ஊமையாக இருக்க வேண்டியது தவிர்த்து வழியென்ன? அல்லது பேசிப் பயனுண்டா? எத்தனையோ குற்ற மற்றவர்கள் உலகுக்கு உண்மை புலப்படும் வரை குற்றவாளிகளாகக் கருதப்பட்டுக் கடுந்துயரம் அடைந்ததும், அத்துயரிலே மாண்டு மறைந்ததும் கூட இல்லையா? எல்லாம் பட்டு முடிந்த பின்னும் ஓரிருவர் ஆராய்ந்து உண்மை கூறிய பின் உலக மன்றத்தில் அசையாத ஓரிடம் கொண்டு கொலு வீற்றிருக்க வில்லையா? கடமையைச் செய்ய வேண்டுவது நம் பொறுப்பு. பயனைப் பற்றி நமக்கென்ன கவலை என்று மணிக் காளை சொன்னான். நானும் வேறு வழியின்றி ஒப்பினேன். கிழவி அவள் வீட்டுக்குச் சென்றாள். கிழவர் இருக்கும் பொழுதே கட்டுப்பாடற்று வாழ்ந்த மகன் பாவம்! கிழத்தாயைப் பொருட்டாக எண்ணுவானா? சிலருக்கு இத்தகைய வேளைகளில் தான் நல்லறிவு வந்து புதுப் பிறவி எடுத்தது போல் நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் பாராட்டலாம். ஆனால் கிழவி மகன் அத்தகையவன் இல்லையே. மணிக்காளை தந்த பணம் போன போக்குத் தெரிய வில்லை. வயிற்றுப் பாட்டுக்கு ஏதேனும் வேண்டுமே! உழைக்க உரம் இருந்தது. ஆனால் பின்பற்றிச் செல்லும் நல்லறிவு இல்லை. ஆதரிப்பதற்கு ஆள் இருந்தது. ஆனால் அவர்களையும் பகையாக்கும் பண்பு இருந்தது. என்ன செய்வது? ஏமாற்றிப் பிழைக்கும் பிழைப்பையே பிழைப்பாகக் கொண்டவன் - உருட்டல் புரட்டலே தொழிலாகக் கொண்டவன் வாழ்வு எப்படி இருக்கும். இதில் கிழவி சுமையும் சேர்ந்து கொண்டால்? இதற்கு யார் என்ன செய்ய முடியும்! நான் கெட்டே தீர்வேன் என்பவர்களை யாராலும் திருத்த முடியுமா? என்றான் இருளாண்டி. நேரமாகி விட்டது! வண்டியைப் பிடி புறப்படலாம். என்று தலைமலை எழுந்தான். இருளாண்டி வண்டியைப் பிடித்தான். அன்று வேலை முடிந்தது. இருளாண்டியும் தலை மலையும்பிரிந்து சென்றனர். இருளாண்டிக்குப் பலப்பல நினைவுகள் எழுந்தன. அவை கனவாகவும் அரும்பின. மணிக் காளையைப் பற்றிய சிந்தனையிலே மூழ்கிக் கிடந்தான். தலை மலையின் கூரிய மூளையைப் பற்றி எண்ணினான். பொன்னுத் தாத்தாவின் சிக்கன வாழ்வைச் சிந்தித்தான். அவர் மணிக் காளையைப் பற்றிப் பிடித்துக் கொண்ட மதியுடைமையை மனமாரப் போற்றினான். கிழவியின் பிடிவாதத்தையும், அவள் மகனின் மாசுபடிந்த வாழ்வையும் மனத்திற்கு கொண்டு வந்தான். முழுவதும் இன்று தெரிந்து விட வேண்டும் என்னும் ஆவலில் கை வண்டியுடன் புறப்பட்டான் இருளாண்டி. அன்று காலையிலே கூலி ஒன்றும் கிடைப்பதாக இல்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு வண்டி மேல் உட்கார்ந்தனர், இருளாண்டியும் தலைமலையும், என்ன காலைப் பொழுதே இப்படி இருக்கிறதே என்றான் இருளாண்டி. இக்கால இளைஞர்கள் கீரைத் தண்டுகள் போல் எளிதில் வாடி விடுகின்றார்கள். அதுபோல் எளிதில் பொங்கிப் பூரித்தும் போகின்றார்கள். அதனால் இன்ப துன்பங்களைத் தாங்கும் வலிமை அவ்வளவாக இருப்பது இல்லை. இப்பொழுது என்ன ஏற்பட்டு விட்டது. கப்பல் கவிழக் கொடுத்தவன் போல் முகத்தைத் தொங்கப் போட்டுவிட்டாய். இன்னும் பொழுது இல்லையா? கூலி கிடைக்காதா? அப்படியே கிடைக்கா விட்டாலும் நாம் கவலைப்படுவதால் பயன் உண்டா? இதற் கெல்லாம் இவ்வளவு சோர்ந்தால் எந்தவொரு காரியத்தையும் சாதிக்க இயலவே இயலாது என்றான் தலைமலை. அனுபவப்பட்டுப் பட்டுத் தெளிவு கண்டவன் நீ. ஆரம்பப் பாடந்தானே எனக்கு. அது இருக்கட்டும், மணிக்காளையைப் பற்றி ஏதாவது கேட்க ஆசை என்றான் இருளாண்டி. மணிக்காளையை விட்டு வெளியேறியதிலும் கிழவிக்கு மன நிறைவு இல்லை. ஆனால் மணிக்காளையுடன் வந்து இருக்கவும் வைராக்கியம் இடம் தரவில்லை. நான் அவளை பார்க்கப்போன நேரங்களிலெல்லாம் தான் பெற்றெடுத்த மகனைப் பற்றி ஒரு தாய் கேட்பது போலவே கேட்பாள். அவனது நலத்தைப் பற்றிக் குறைந்தது பத்து முறைகளாவது கேட்பாள். அவனது பண்புகளை மணிக் கணக்காகப் பாராட்டுவாள். அவனைப் பிரிந்து மனத்தோடா வந்தேன். எனக்கென்ன குறை வைத்தான். அவனை ஏதாவது குறைவாக நான் எண்ணினால் நான் மனிதப் பிறவி இல்லை. நன்றியறிதலுடைய பொன்னுத் தாத்தாவின் மனைவியும் இல்லை. ஆனால் மானமற்ற வாழ்வு வாழ்பவள் பெண்ணாக இருக்க முடியாதே. அதைக் காக்க வேண்டுமல்லவா! என்று கூறுவாள். கிழவி உண்மையைச் சொல்லாது புதிர் போட்டுக் கொண்டே இருக்கிறாளே. இந்த விடுகதைக்கு விடை இல்லையா? என்று ஏங்கி ஏங்கித் திரும்புவேன். இன்று சொல்லிவிட மாட்டாளா? நாளை சொல்லி விடமாட்டாளா? என்று தொடர்ந்து போனேன். எனக்கு மேல் மணிக்காளைக்கு உண்மையை அறிய ஆவல் இருந்தது. எனினும் கிழவி மூட்டையை அவிழ்க்க வில்லை. மறைக்கப்படும் ஒன்று ஆவலைக் கிளப்பு மல்லவா! உங்களுக்கு இருந்த ஆவலில் எனக்கும் ஒரு பங்காவது வேண்டும் என்றுதானே கதையின் கருவைச் சொல்லாது வளர்த்துகின்றாய்? என்றான் இருளாண்டி. மணிக்காளைக்குத் திருமண ஏற்பாடும் இடை இடையே நடந்து வந்தது. எப்படியும் சில பெரியவர்கள் பெண் பிள்ளை வீட்டுக்காகவோ, ஆண் பிள்ளை வீட்டுக்காகவோ முன் வந்து தூண்டுவார்கள் அல்லவா! அப்படித்தான் மணிக்காளைக்கும் ஏற்பாடு ஆயிற்று. பெண் வீட்டார் பெருஞ் செல்வர் என்றும், நல்ல சுற்றஞ் சூழல் உடையவர் என்றும், பெண்ணுடன் ஆணும் பெண்ணுமாகப் பலர் பிறந்து நல்ல நிலைமையில் இருக்கின்றார்கள் என்றும், எல்லாருக்கும் கடைசிப் பிள்ளையே பெண் என்றும், அவளுக்குத் தாய்வழிச் சொத்து 20 ரூபாய்க்குத் தேறும் என்றும், தந்தையார் எத்தகைய குறைவும் இல்லாது சீர்வரிசை செய்வார் என்றும், மாப்பிள்ளையின் குணம், செல்வம், சீர் இவற்றைக் கேள்விப் பட்ட அளவிலே பெண் வீட்டார்க்குப் பிடித்திருக்கிறது என்றும், செய்திகள் பறந்தன. இங்கிருந்தும் அங்கிருந்தும் சில பெரியவர்கள் போய் வந்து கருத்துக்களைப் பரிமாறினர். மணமகன் வீட்டார் மணமகள் விட்டுக்குச் சென்று மணஉறுதி செய்வதற்காக ஒரு நாள் குறிக்கப் பெற்றது. மணிக்காளை மணம் குறித்து மகிழ அவன் பெற்றோர் இல்லையாயினும், சுற்றத்தார்க்கும் நண்பர்க்கும் குறைவு இல்லை. நாளை எதிர்நோக்கி யிருந்தோம். ஒவ்வொரு நாளும் ஏதாவது புதுப் புதுச் செய்திகள் வந்த வண்ணமிருந்தன. நம் ஊரிலிருந்து அவ்வூருக்குப் போய் வந்த அனைவர் வாயும் மணிக்காளை திருமணம் பற்றியே பேசின. அங்கிருந்து இங்கு வந்தவர்களும் அதுபற்றியே பேசினர். இங்குள்ள சிறப்புப் பற்றியும், அங்குள்ள வாய்ப்புப் பற்றியும் பேசுவது பலருக்குப் பொழுது போக்கு ஆகிவிட்டது. சிலர் இதனைப் பற்றிய செய்தியைச் சேகரம் செய்வதிலும் பிறருக்குக் கூறுவதிலும் பெருமகிழ்ச்சி கொண்டனர். பொதுவாக மக்கள் பேச்சிலே மணமகள் வீட்டாரின் பணச் சிறப்பே புலப்பட்டது. மணிக்காளை பற்றி, குணமே முதலிடம் பெற்றது. நான் மகிழ்ந்தேன். மணிக்காளை இன்னும் பழைய கைவண்டிக்காரன் நிலைமையிலேயே வாழ்கின்றானே என்று வாழ்த்தினேன். ஒரு நாள் ஒரு பெரியவர் மணமகள் வீட்டிலிருந்து வந்தார். நாங்கள் நினைத்துக் கொண்டோம் திருமணத்திற்கு உறுதி செய்வது பற்றிக் கலந்து பேச வந்துள்ளார் என்று. எனக்கு எவ்வளவோ வேலையிருந்துங்கூட அவையெல்லாம் பொருட்டாக இல்லை. நான் ஏதோ வேறு வேலை காரணமாகச் சந்திப்பது போன்று காட்டி, மண உறுதிக்குப் போகும் நாளைத் தெரிந்து கொள்ள நின்றேன். அப்பொழுது வேறு யாரும் இல்லை. நான், மணிக்காளை, மணமகள் வீட்டிலிருந்து வந்த பெரியவர், பெரிய கணக்குப்பிள்ளை ஆகிய நான்கு பேருந்தான் இருந்தோம். தம்பி! உங்களிடம் தனித்துப் பேச வேண்டிய செய்தியாக இருக்கிறது. இவர்கள்... என்றார் வந்த பெரியவர். உடனே கணக்கரைப் போகச் சொன்னான் மணிக்காளை. இந்தத் தம்பியும் என்று என்னைச் சுட்டிக்காட்டினார். தவறு செய்து விட்டோம் நாமே குறிப்பறிந்து சென்றிருக்க வேண்டும் என்று சென்றிருக்க வேண்டு எண்ணினேன். அவனுக்குத் தெரியாமல் பேச வேண்டிய மறைவுச் செய்தி ஒன்றுமில்லை என்றான் மணிக்காளை. இல்லை; இல்லை; நீங்கள் பேசுங்கள். நான் பிறகு வருகிறேன் என்று நடந்தேன். கொஞ்ச நேரங்கழித்து மணிக்காளை எனக்கு ஆளனுப்பினான். நான் போனேன். பெண் வீட்டிலிருந்து பெரியவர் வந்தாரே என்ன சொன்னார் என்பது தெரியுமா? வேடிக்கையான உலகமப்பா! இந்த உலகத்திற்கு உண்மை அறிவோ, நிலையான அறிவோ இல்லை போல் இருக்கிறது என்றான். இடை யிடையே பல தடவைகள் சிரித்தான். ஏதோ ஓர் அதிர்ச்சியான ஒரு செய்தியைப் பெரியவர் சொல்லிப் போயிருக்கிறார் என்றும், அதனைப்பற்றி மணிக் காளையின் முகக்குறி காட்டவில்லை என்றாலும் சொல் காட்டுகின்றது என்றும் எண்ணினேன். வந்தவர் இப்பொழுது திருமணம் செய்ய வசதி இல்லை என்றும். கொஞ்ச காலம் செல்ல வேண்டும் என்றும், அது வரை எதிர்பார்த்திராமல் வேறு எங்கேனும் பெண் பார்த்துக் கொள்வது நலம் என்றும் சொல்லிப் போனார் - அதாவது பெண் தரமுடியாது என்பதுதான் முடிவு என்றான் மணிக் காளை. இந்தச் சொற்களை என்னால் தாங்க முடியவில்லை. தலை சுற்றுவது போல் இருந்தது. மணிக்காளை ஆவது ஆகும்; போவது போகும்; வருந்த முடியுமா? என்று என்னை தேற்றினான். ஏன் உன்னைப் பார்க்கிலும் பணக்காரன் எவனும் வந்துவிட்டானா? அப்படி யிருந்தால் தான் இத்தகைய ஏற்ற மாற்றங்கள் நடக்கும். பெரியவர் என்ன சொன்னார்? என்று வற்புறுத்தினேன். எவனோ ஒருவன் நம்மைப் பற்றி ஏதோ சொல்லி யிருக்கிறான். இந்தச் சொத்து எவனோ ஓர் அப்பாவியினிடம் பறித்துக் கொண்டதாம்! புரோக்கர் வேலை வஞ்சகத்தால் எவனிடமிருந்தோ கவர்ந்துகொண்டதாம்! எனக்கு ஊரோ, உறவோ, ஒட்டோ எதுவும் இல்லையாம்! அநாதையாம்! என் பரம்பரைக்குச் சிறப்பு ஏதும் இல்லையாம்! ஒழுங்கற்ற வாழ்வு உடையேனாம். இன்னும் கொஞ்ச நாட்களில் சொத்து எல்லாம் இழந்து நடுத் தெருவில் நிற்பேனாம்! என்னை நம்பிப் பெண் தருவதற்குப் பதில் பெண்ணைக் கிணற்றிலே தள்ளினாலும் கவலை யில்லையாம்! ஏதோ சொன்னார். பெண் கொடுக்குமுன் அவர்கள் சிந்திக்க வேண்டியது அவசியம் தானே என்று என் ஒப்புதலையும் எதிர்பார்த்தான். என்னால் நிற்க முடியவில்லை. ஒன்றும் சொல்லாமல் வந்தேன். எப்படியோ நாட்கள் கடந்தன. நானும் ஓய்வு வந்த வேளைகளிலெல்லாம் மணிக்காளையையும் கிழவியையும் பார்த்து வந்தேன் அவ்வப்போது நடைமுறையிலுள்ள செய்தி களைக் கலந்து பேசிக்கொண்டோம். ஒரு சமயம் மணிக்காளை என்னைத் தேடி வந்தான். அப்பொழுதுதான் வண்டியை வீட்டில் கொண்டுபோய் நிறுத்தினேன். அப்படியே என்னைத்தனியே அழைத்துக் கொண்டு சென்றான். ஏதோ அவசியமான செய்தி இருக் கிறது. என்று எண்ணிக் கொண்டு அவனைத் தொடர்ந்து நடந்தேன். ஆள் நடமாட்டம் இல்லாத ஓரிடத்தை அடைந்து உட்கார்ந்தோம். தலைமலை. தக்கார் தகவிலர் என்பது அவரவர், எச்சத்தால் காணப்படும் என்னும் குறளிலுள்ள எச்சத்தால் என்னும் சொல்லை மக்களால் என்று ஒருவர் மாற்றினாராமே! அது பற்றி உன் கருத்தென்ன? என்றான் மணிக்காளை. என் கருத்து என்ன? உலகமெல்லாம் பாராட்டும் தாஜ் மகாலில் ஒரு கல்லைப் பெயர்த்துப் பெயர்த்த இடம் தெரியாதவாறு மற்றொரு கல்லை வைத்தாலும் வைத்து விடலாம். ஆனால், திருக்குறளில் அப்படி ஒரு சொல்லைப் பெயர்த்து மற்றொரு சொல்லைப் போட்டுக் காட்ட முடியாது என்பது என் அசையாத நம்பிக்கை என்றேன். நீ இப்படிச்சொல்வாய் என்பது தெரியும். எச்சம் என்பது விரிந்து பரந்த பல பொருள்களைக் காட்டும் நுட்பமான ஓர் சொல். இதனைப் பல தடவைகள் நாம் பேசியிருப்பது நினை விருக்கும். தெளிவு செய்து கொள்வதற்காக எத்தனையோ பேர்களின் வாழ்க்கைகளையும் அலசிப் பார்த்திருக்கிறோம். கைவண்டி இழுப்பவன் கையிலே திருக்குறளும், வாயிலே வாய்மையும், நெஞ்சிலே அறமும் இருந்தால் வாழமுடியுமா? என்று நம்மை எத்தனைபேர் கேலி செய்தார்கள். வாழத் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடினார்கள். அதை நினைக்க நினைக்க எனக்கு இன்றும் வேடிக்கையாக இருக்கிறது என்றான். மக்களைக் கொண்டு பெற்றோர் தகுதியை முடிவு கட்டினால் பொன்னுத் தாத்தா நிலைமை என்னவாக இருக்கும்? சிறிதளவாவது மதிக்க முடியுமா? அவர் விட்டுச் சென்ற செல்வம், செயல், தொண்டு, அறிவு, பண்பு, புகழ் என வைத்துச் சென்ற எல்லாவற்றையும் (எச்சத்தை யெல்லாம்) எண்ணிப் பார்ப்பதல்லவா சரியாகும் என்றேன். ஆம்; நான் சொல்லப் போவதற்கு ஏற்ற முகவுரையைத் தான் நீ கூறினாய்; பெரும்பாலும் நான் எண்ணுவதையே நீயும் எண்ணுகிறாய்; நான் பேசப்போவதையே நீயும் பேசுகிறாய். இது நம் ஒன்றுபட்ட உள்ளத்தைக் காட்டுகிறது என்று பேசினான். தாத்தா வீட்டிற்குப் போயிருந்தாயா? ஏதாவது செய்தி உண்டா? அவர் மகனைப் பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா? என்றான். எனக்குப் பல செய்திகள் தெரிந்திருக்கின்றன என்றும், அவற்றைப் பற்றி நான் அவனிடம் கலந்து பேசவில்லை என்றும் அவன் கேள்விகளால் அறிய முடிந்தது. பின்பு, அவன் எதையோ சொல்ல விரும்புகிறான் என்றும், அதில் ஏதாவது எனக்குத் தெரியுமா என்றும் மேலோட்டம் பார்க்கிறான் எனத் தெளிந்தேன். பெண் வீட்டார் என்னைப் பற்றித் தவறான கருத்துக் கொள்ளுமாறு செய்தவன் தாத்தாவின் மகன்தானாம். அதை நேற்றுத்தான் அறிந்தேன் என்றான். என்ன இது உண்மையா? நம்பிக்கையானவன் சொன்னானா? என்றேன். தெளிவில்லாத ஒன்றைச் சொல்வதால் யாருக்கு என்ன நன்மை? பொழுத வீணாவது அன்றி வேறென்ன உண்டு என்றான். நான் ஏன் இப்படிக் கேட்டேன் என்று வெட்கப் பட்டேன். மணிக்காளை பேசினான்: அவன் சொத்தை நான் பறித்துக் கொண்டதாகவும், அவன் சொத்தால்தான் நான் இந்த நிலைமையில் இருப்பதாகவும், இவ்வாறு இருந்தும் அவன் தாயை நான் சரிவரப் பேணாமை யினால் தான் வெறுத்து வெளியேறிவிட்டாள் என்றும் எண்ணி யிருக்கிறான். அவ்வெண்ணத்தால் பெண் வீட்டில் சொல்லித் திருமணத்தை நிறுத்திவிட்டான். திருமணம் நின்றது பற்றிக் கவலையில்லை. இவன் பெயராலே நின்றிருக்க வேண்டுமா? என்பதுதான் கவலை. ஆமாம்! தலைமலை. எவனாவது பிறக்கும்போது பொருளைக் கொண்டு வந்தானா? கொண்டு போகத்தான் போகின்றானா? இது என்ன நாம் அறியாததா? அவன் மட்டும் சரியானவனாக இருந்தால் இந்தச் செல்வத்தில் பாதியைப் பிரித்துத் தரவும் எனக்குச் சம்மதந்தான். இந் நிலைமையில் அவனிடம் சொத்தைத் தந்தேன் என்றால் அவன் கெடுவதற்குத் துணை செய்வதாக இருக்குமே அல்லாமல் திருந்த வழி செய்தது ஆகுமா? நான் சொல்வதில் தவறோ சந்தேகமோ இருந்தால் சொல் என்றான். ஒரு நாள் நான் படுக்கும் அறையின் சன்னலண்டை அவன் வந்தான். அவன் நண்பன் இருக்கிறானே க அவனும் வந்தான். நான் படுக்கும் கட்டிலைச் சுட்டிக் காட்டிப் போனான். தற்செயலாக நான் கண்டு விட்டேன். அது பற்றி எவ்வளவோ எண்ணினேன். ஏதோ நடக்க இருக்கின்றது; எச்சரிக்கை தேவை என்னும் முடிவுக்கு வந்தேன். நான் நினைத்தது போலவே நள்ளிரவில் கறுப்புடையுடன் இரண்டு உருவங்கள் வந்தன. எனக்குத்தான் உறக்கமே இல்லையே. ஓர் உருவம் அறைக்குள் வந்தது, நல்ல இருள்; மெதுவாக வந்து போர்வைக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பைக் குறி பார்த்து ஒரு குத்துக் குத்தியது. நான் கத்தினேன். குத்திய கத்தியை எடுக்காமல் ஓடினான். ஆட்கள் வளைத்துக் கொள்ளும் என்ற அச்சம் தான்! வெறி கொண்டு ஓடியிருக்கிறான். நம் நாய் அவனை வெருட்டி வெருட்டி கடித்தது. எனினும் அவன் தப்பி விட்டான். நாயின் தாக்குதலிலிருந்து - மறைந்திருந்தானே அவன் - தப்ப முடியவில்லை. அலறினான்; விழுந்தான்; புரண்டான்; நாய் கடித்து நன்றாக வெருட்டியது; அந்த அதிர்ச்சியிலே மதி மயங்கி விட்டான். என்ன செய்வதென்றே தெரியாமல் சாக்கடையில் தவறி விழுந்தான். என்னால் மேலும் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நாயை விலக்கினேன். தாத்தாவின் மகன்தான் அவன் என்பதை அறிந்து வருந்தினேன். நாடி நரம்புகள் துடிக்கத் தள்ளாடித் தள்ளாடிச் சென்றான். என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவனும் நிற்கவில்லை என்றான். உன் மீது குத்துப் படவில்லை; நல்ல காலம் என்றேன். நான் எச்சரிக்கை தவறியிருந்தால் உன்னிடம் இதனைச் சொல்லுமாறு இருந்திருக்க மாட்டேன். வா! என்று அழைத்துச் சென்றான். அவன் படுத்திருந்த அறைக்கே போனோம். இதோ பார்! என்று பஞ்சும் துணியும் கொண்டு செய்த துணிப் பொம்மையைத் தூக்கி என்முன் போட்டான். அதன் மார்புப் பகுதி இரண்டாகப் பிளந்து கிடந்தது. ஐயோ, உன் மீது பட்டிருந்தால் என்றேன். மனத்திற்காவது அமைதியுண்டு! தலைமலை அவ்வாறு தான் ஆகவேண்டுமென்றால் அதைத் தடுக்க முடியுமா? இதை உனக்குமா நான் சொல்லியாக வேண்டும் என்று என் வாய்க்குப் பூட்டுப் போட்டான். சரி பிறகு என்ன ஆனான் என்றேன். அவன், வீடு போய்ப் படுத்திருக்கிறான். காய்ச்சல் மிகுதியாகி யிருக்கிறது. குளிரும் வெதுப்பும் மாற்றி மாற்றி மாட்டியிருக்கின்றன. நான் வைத்தியரை அனுப்பி வைத்தேன். அவன் போக்கே மாறியிருக்கிறது என வைத்தியர் சொல்லுகிறார். அளவுக்கு மிஞ்சின அந்தப் பயம் அவன் மூளையைக் குழப்பி விட்டிருக்கிறது. உளறுகிறான், சிரிக்கிறான் என்கிறார். என்ன செய்வது? நானும் போய்ப் பார்க்க வேண்டும் என்றுதான் துடிக்கிறேன். ஆனால் கிழவியை நினைக்கும்போது சங்கடமாக இருக்கிறது. உண்மையாக என் தாயாக இருந்தால் என்ன காரணம் கொண்டும் என்னை இப்படி ஏங்க விடுவாளா? என்று சொன்னான். அவள் என்னவோ உள்ளே வைத்திருக்கிறாள். அதைச் சொல்லி விட்டால் சரியாகிவிடும். உன்மீது அவளுக்கு வாஞ்சை இல்லை என்றா எண்ணுகிறாய். ஏன் அவள் சொல்வது போல நீயும் மானம் போவதாக எண்ணுகிறாயா? என்றேன். இல்லை; இல்லை; இப்படி நினைத்து நினைத்து நம் முன்னோரும் நாமும் கெட்டது போதும்; இன்னும் அந்தப் போலி மானத்தை எண்ணிக் கெட வேண்டாம்; இருவரும் போவோம் என்றான். இருவரும் போனோம்; கிழவி வீட்டின் முன்னால் நின்றாள். எங்களைக் கண்டபோது வலுவாகச் சிரிப்பு வரவழைத்துக் கொண்டாள். அது நடிப்பே அன்றி உண்மையன்று என்பது தெளிவாக தெரிந்தது. அகத்தின் அழகு முகத்தில் தெரியாதா? வீட்டின் உள்ளே யிருந்து புலம்பல் பலவாறாகக் கேட்டது. அவன் நிலைமை எப்படியாகுமோ? நம் கையில் இல்லை என்றாள் கிழவி. அவளது சுருக்கம் விழுந்த கன்னங்களைக் கண்ணீர் துளிகள் நனைத்தன. மணிக்காளை எதுவும் பேச வில்லை. அமைதியாக உள்ளே சென்றான். நானும் அவனை தொடர்ந்தேன். எங்களைக் கண்டதும் ஓட்டம் பிடிக்க ஆரம்பித் தான் தாத்தாவின் மகன். நாங்கள் தடுத்து நிறுத்தினோம். நாய் கடித்த இடங்களிலிருந்து இரத்தமும் சீழும் வடிந்து கொண்டிருந்தன. யாரையும் நெருங்கவிடாமல் செய்திருக்கிறான். அவன் ஐயோ! நான் குத்தவில்லை; கொல்லவில்லை; என்னை அடிக்க வேண்டாம்; கொல்ல வேண்டாம் என்று கத்தினான். தெரு முழுதும் கேட்குமாறு அலறினான். உனக்கு ஒன்றும் இல்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; பயப்படாதே என்றோம். அவனைக் கொன்றதற்கு என்னைப் பிடிக்கவா? போ. வெளியே போ! என்று விழுந்து புரண்டான். இப்படித்தான் யார் வந்தாலும் சொல்கிறான். ஒன்றும் புரியவில்லை. என் தலைவிதி இன்னும் என்ன வெல்லாம் பார்க்க வைத்திருக்கிறதோ என்று நொந்தாள். உன்னைக் காப்பாற்றாமல் மணிக்காளை அனுப்பி விட்டான் என்னும் கோபத்தால் இவ்வளவு காரியங்கள் செய்திருக்கிறான் என்று நடந்ததை விவரமாகக் கூறினேன். நெடுநேரம் அவள் பேசவில்லை; எல்லாம் என்னால் ஏற்பட்டது. எந்தப் போராட்டத்தையும் சமாளிக்கலாம்; ஆனால் மனப் போராட்டத்தைச் சமாளிப்பதுதான் அரிது. அந்த மனப்போராட்டம் செய்த சீரழிவுதான் இது என்று உண்மையாக உணர்ந்து சொன்னாள் கிழவி. கிழவி தன் மனப் போரைச் சொல்வாள் போல் இருந்தது. அது அப்படிப்பட்ட வேளையல்லவா! ஆனால் மணிக்காளையை வைத்துக் கொண்டு சொல்ல மாட்டாள் என்பதும் உணர்ந்தேன். சரி நேரம் வரட்டும் என்னும் எண்ணத்துடன் இவனுக்கு என்ன ஏற்பாடு செய்வது? என்றேன். அதைப் பற்றித்தான் நானும் எண்ணுகிறேன்; இங்கு வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. வைத்தியர்களால் தீர்க்க முடியாத மூளைக் கோளாறையும் குற்றால அருவி தீர்த்து விடும்படி வாய்ப்புப் பெற்றிருக்கிறது. அங்கு அனுப்பி வைக்க வேண்டியது தவிர்த்து வேறு வழியில்லை என்றான் மணிக்காளை. குற்றாலமா? விழுந்து சாவார்களே! அங்கேயா? நான் மாட்டேன் என்று கத்தினான் மகன். பெற்றெடுத்த வயிற்றைப் பிசைந்து கொண்டு கண்ணீருடன் வெளியே போனாள் கிழவி. நோய் தீர்ந்தாலும் சரி; தீரா விட்டாலும் சரி; குற்றாலம் வேண்டாம்; வேறெங்காவது அனுப்பு என்று கூறியது தாங்க மாட்டாத அந்தத் தாய்மனம். சரி, அப்படியானால் கீழ்பாக்கத்திற்குத் தான் அனுப்பி வைக்க வேண்டும் என்னும் முடிவுக்கு வந்தோம். மணிக் காளையை அழைத்துக் கொண்டு வீட்டில் சேர்த்து விட்டு, நான் கிழவியினிடம் போனேன். அப்பொழுதுதான் உண்மையைச் சொன்னாள் என்று சற்றுத் தயக்கத்துடன் பேச்சை நிறுத்தினான். சுற்றுமுற்றும் பார்த்தான். இச்செய்தி அடுத்தவர்கள் காதில் விழுந்து விடக்கூடாது அல்லவா! வண்டிகளும், சைக்கிள்களும், மோட்டார்களும் தெருவின் அப்பக்கமும் இப்பக்கமும் போய்க் கொண்டிருந்தன. மக்களும் அங்கொருவரும் இங்கொருவருமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். காலைச் சுறுசுறுப்பைக் கதிரவன் உயிர்களுக்கு ஏற்றத் தொடங்கி விட்டான். வண்டி நிறுத்தி யிருந்த, ஆலமரத்தில் பழுக்கும் காலமாக இருந்த காரணத்தால் பறவைகளின் ஆரவாரம் நன்றாக இருந்தன. காக்கைகள் சில கரைந்தன. அக் கரைதலைக் கேட்டுக் காக்கைகளே வந்தன; மற்றைப் பறவைகள் வட்டமிட்டும் பறந்தும் வேறிடங்களுக்குச் சென்றனவே ஒழிய, காக்கையின் கரைதலுக்குச் செவி சாய்க்கவில்லை. ஒருவன் தீப்பெட்டி இருக்கிறதா? என்று கேட்டு வந்தான். அவன் வாயால் கேட்கு முன்னமே அவன் வைத்திருந்த பீடியைப் பார்த்து விட்டு இல்லை என்று கைகாட்டி அனுப்பினான் தலைமலை. அயலூரார் ஒருவர் ஒரு தெருவுக்குப் போக வழி கேட்டார். கை வண்டிகள் இரண்டு மூன்று நத்தைகள் போல் ஊர்ந்து கொண்டிருந்தன. சரக்குகள் இல்லையாதலால் சுறுசுறுப்பு இல்லை. யாரும் தம் பக்கத்தில் இல்லாமையால் தலைமலை இருளாண்டியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான். தலை மலையின் திகைப்பு இருளாண்டிக்கு என்னவோ போல் இருந்தது. கிழவி சொல்லிய காரணம் ஒரு வேளை சொல்லக் கூடாததாக இருந்தால் வேண்டாம்; குற்றமில்லை என்றால் சொல்லு என்றான். உன்னிடம் சொல்வதால் நன்மை இல்லை என்றால் அவள் கதையை இவ்வளவு சொல்லியிருக்கவே மாட்டேன். நீ வேறு நான் வேறு இல்லை என்று கதையைச் சொன்னான். கிழவி குமரியாக இருந்தாளாம். அப்பொழுது அவளுக்கு ஒருவன் மேல் காதல் ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் அடிக்கடி சந்தித்து அந்த அன்பை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டார்களாம். திருமணம் செய்துகொள்வது உறுதி என்று தலையில் அடித்து ஆணையும் சொல்லியிருக்கிறான். ஆணை சொல்லிய அளவுடன் சரியாகி விட்டது போல் இருக்கிறது. ஆளையே பல மாதங்கள் காண வில்லையாம். அந்தக் காலத்திற்குள் இவளுக்கும் திருமண முயற்சிகள் பலமாக நடந்திருக்கின்றன. வந்தவர்களை யெல்லாம் அவனை நினைத்து நினைத்துப் பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டிருக்கிறாள். பெற்றோர்களும் மகள் விருப்பத்திற்குக் குறுக்கே நிற்காது சரி; வரட்டும்; பொறுத்துச் செய்யலாம்; என்று அமைதியடைந் திருக்கிறார்கள். இத்தகைய வேளையில் காதலன் எவளோ ஒருத்தியை - நல்ல பணக்காரியாம் - மணம் செய்து கொண்டு ஊருக்கு வந்து விட்டானாம். இதைப் பார்க்கப்பார்க்க எரிச்சலாக இருந்திருக்கிறது அவளுக்கு. இப்படிப்பட்ட கயவன் என்பதை முன்னமே அறிந்து கொள்ளாதது தன் குற்றம் என்று நொந்து திருமணமே வேண்டாம் என்று வெறுத்திருக்கிறாள். பெற்றோர்கள் விடுவார்களா? எப்படியோ வற்புறுத்தல் செய்து பொன்னுத் தாத்தாவுக்குத் திரு மணம் செய்திருக்கிறார்கள். என்ன இருந்தாலும் வாழ்வில் தோல்வி இல்லையா? ஆமாம்! இதற்கும் மணிக்காளைக்கும் என்ன தொடர்பு! முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிச்சாக அல்லவா உள்ளது என்றான் இருளாண்டி. கேள்; மணிக்காளை புரோக்கர் ஆனான் அல்லவா! அவனுக்கு அந்த வேலையைத் தந்தானே அவன் தான் வேலையைத் தந்தானே அவன் தான் கிழவியின் பழைய காதலனாம். கிழவிக்கு எத்தனையோ முறைகளில் உதவி செய்யப் பார்த்தானாம். கிழவி வாயிற்படி ஏற விடவில்லையாம். தாத்தா இறந்த போது வீட்டுக்கு வந்தவனையே மானம் போகக் கேட்டு அனுப்பினாளாம். என்ன இருந்தாலும் தான் செய்தது தவறு என்று அவன் உணர்ந்து கொண்டதாலும், எப்படியும் அவளுக்கு உதவ வேண்டுவது தன் கடமை எனத் தெளிந்ததாலும், அவள் எந்த உதவியையும் ஏற்கமாட்டாள் ஆதலால் அவளை ஆதரிக்கும் மணிக்காளைக்குத் தன் வேலையைக் கொடுத் திருக்கிறான். இல்லையேல் அவன் தரவே மாட்டான் என்று கிழவி காரணம் காட்டுகிறாள் என்றான் தலைமலை. நல்ல காரணம்! கிழவி உள்ளம் வெள்ளையானது என்று என்னிடம் ஒருமுறை சொன்னாய். அவள் உள்ளம் வெள்ளையாவது கறுப்பாவது? வைராக்கிய நெருப்பு என்று சொல்லு. பாவம்! மணிக்காளைக்குத்தான் அல்லல் என்று சோர்வுடன் உரைத்தான் இருளாண்டி. அதுதான் இல்லை! மணிக்காளை தவிர்த்து வேறு யாருமாக இருந்தால் அப்படித்தான் நிலைமை ஆகும். ஆனால் அவன் என்ன சொன்னான் தெரியுமா? தங்கம் தன் ஒளி உடையது. அதனை மேலுமேலும் ஒளியுடையதாக்க வேண்டுமானால் தீயிலே வெந்து வெந்து உருக வேண்டும். மனிதனும் உயர்ந்தோனாக, நல்லோனாக, புகழாளனாக விளங்க வேண்டுமானால் துன்ப நெருப்பிலே காய்ந்து காய்ந்துதான் ஆக வேண்டும். சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு என்பதில் எவ்வளவு வாழ்க்கைத் தெளிவு உள்ளது என்பதை இன்னும் உனக்கு விளக்கிக் கூற வேண்டியது இல்லையே என்பான். அவனே சொல்வான் மரங்களிலே ஒன்று பூவரசு. அதனை வெட்டிவிட வெட்டிவிடத்தான் காழுமையாகவும், பக்கம் விரிந்தும் நன்றாக வளரும் வெட்டாவிட்டால் கொழுமையோ வளமான வளர்ச்சியோ இருக்காது. ஆனால் வேம்பு அப்படிப் பட்டது இல்லை. வெட்டி விட்டால் வளமும் கொழுமையும் தொலைந்துவிடும். மனிதர்களிலும் பூவரசாக வாழ்பவர்கள் துன்பம் நேர நேர வளம் பெறுகிறார்கள்; உரம் பெறுகிறார்கள். வேம்பாக வாழ்பவர்கள் வளம் இழக்கிறார்கள்; உரம் இழக்கிறார்கள். என் உள்ளத்தை உர மூட்டுவதற்காகத் தான் இளமையிலே தாய் தந்தையரைப் பறித்த இயற்கை, வறுமையைத் தந்து, வண்டியிழுக்கச் செய்து, பொன்னுத் தாத்தாவை உறவாக்கி, அவரையும் நடுவில் கொள்ளையிட்டு, அவர் மகனைப் பகையாக்கி, அவர் மனைவியை என்னிடம் ஒப்படைத்து, அவளும் என்னைவிட்டு வெளியேறினால் சரி, இல்லையேல் சாவு என்னுமாறு ஆக்கிவிட்டிருக்கிறது. திடுதிப்பென்று ஒருவனுக்கு இப்படி ஏற்பட்டிருந்தால் வந்த துயரங்களையெல்லாம் வரவேற்றுக் கொண்டு புன்முறுவல் பூப்பானா? எனக்குப் பழக்கமாகி விட்டது. மருந்து சாப்பிட்டுச் சாப்பிட்டுப் பழக்கமானவன் - மருந்தையே உணவாக ஆக்கிக் கொண்டவன் - புதிதாக மருந்து சாப்பிடுபவனைப் போன்று முகத்தைச் சுழித்து, நாவைப் பிதுக்கி, குடலைப் பிடுங்கிக் கொண்டு இருப்பானா? எனக்குத் துன்பம் பழக்கமாகிவிட்டது; சிரித்துக் கொண்டு அனுபவிக்கின்றேன்; நீயும் அப்படித் தானே என்பான். மணிக்காளை நெருப்பின் இடையே கூட வாழப் பழகி விட்டவன் இல்லையா, இருளாண்டி! என்றான் தலைமலை. ஆம்! நெருப்பிலே பிறந்து, நெருப்பிலே வளர்ந்து, நெருப்பிலே வாழ்பவர்களுக்கு அது ஒருவேளை பழக்கம் என்று சொல்லி விடலாம். ஆனால் நெருப்பிலே பிறந்து வளர்ந்தாலும் நீரிலே வாழப் பழகி விட்டவர்களுக்குப் பின்னும் நெருப்பிலே வாழ்வது சங்கடமில்லையா! என்றான் இருளாண்டி. செயற்குரிய செய்வதிலே என்ன சிறப்பு! செயற்கு அரிய செய்வதிலே தானே சிறப்பு! என்று தங்களை நோக்கி ஒருவன் வருவது கண்டு நிறுத்தினான் தலைமலை. வந்தவன் கையையும் காலையும் ஆட்டிக்கொண்டு ஏதோ உளறினான். அரைபோல் இருக்கிறது என்றான் இருளாண்டி. ஆமாம்; கிழவி மகனுக்கு என்ன ஏற்பாடு செய்தீர்கள்? என்று வழியில் நடந்தவனைப் பார்த்துக் கொண்டு கேட்டான் இருளாண்டி. கீழ்பாக்கத்திற்குத்தான் அவனை அனுப்பினோம். அவனை மணிக்காளையுடன் அனுப்ப முயன்றேன். மாட் டேன் என்று பிடிவாதம் செய்து விட்டான். பின்பு நானும் உடன் போனேன். இரயில் ஏறியதிலிருந்து அவன் சிரிப்பு உச்சமாயது. மணிக்காளையும் சிரித்தான்! இரண்டிற்கும் இருந்த இடை வெளி எனக்கு எத்தனையோ வாழ்க்கைக் காட்சிகளை முன் னிறுத்திக் காட்டின என்று பேச்சை நிறுத்தினான் தலைமலை. இடுக்கண் அழியாமை 1. இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்தூர்வ தஃதொப்ப தில். 2. வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். 3. இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக் கிடும்பை படாஅ தவர். 4. மடுத்தவா யெல்லாம் பகட ன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து. 5. அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். 6. அற்றேமென் றெல்லல் படுபவோ பெற்றோமென் றோம்புதல் தேற்றா தவர். 7. இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். 8. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். 9. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். 10. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு.  24. மெய்மைப் பொய் மணிமுத்து! வெள்ளை வாங்கிக் கொண்டு வா. போனேன் வந்தேன் என்று இருக்க வேண்டும்! தெரிந்ததா? என்று சீசாவையும் சில்லரையையும் தந்து அனுப்பினான் மூக்கன். சேவல் சண்டை பார்க்காமல் விட்டுச் செல்ல மணிமுத்துக்கு மனமில்லை. ஆனாலும், அப்பன் சொல்லைக் கேட்காவிட்டால் என்ன நடக்கும் என்பதையும் அறியாதவன் அல்லன் அவன். வேண்டா வெறுப்புடன் விரைந்து கடைக்குச் சென்றான் மணிமுத்து. மூக்கன் குடும்பம் செல்வமான குடும்பமாகத்தான் இருந்தது. மூக்கன் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டானோ இல்லையோ - தெருவில் நிற்க வேண்டிய நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டான். அவனது பாட்டனார், தந்தையார் அரும்பாடு பட்டுத் தேடிவைத்திருந்த சொத்தையெல்லாம் குடி, சூது ஆகியவற்றிலே தொலைத்தான். பொருளைத் தொலைத்ததுடன் உடலையும் கெடுத்துக் கொண்டான். நோய் நொம்பலம் இல்லாமல் வளர்ந்த மூக்கன், மெலிந்து எலும்புக் கூடாக மாறிவிட்டான். உடல் கெட்டபின் உள்ளம் கெடாமல் இருக்குமா? கண்ட கண்ட போக்குகளிலெல்லாம் போய் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தேய்ந்து கொண்டு வந்தான். வறுமைத் துன்பமும், நோய்த் துயரும் அதிகரிக்க அதிகரிக்க இன்பவழி ஏதாவது கிடைக்காதா என்று தேடித் தேடித் திரிந்தான். இவ்வளவு கெட்டுப் போன உள்ளம் உடையவனுக்கு எது இன்பமாக இருக்கும்? நல்லவர்களைப் பார்ப்பதோ, அவர்களோடு பேசுவதோ இன்பமாக இல்லை. இயற்கை வளம் வாய்ந்த இடங்களைப் பார்ப்பதோ இயற்கைக் காட்சிகளைக் காண்பதோ இன்பமாக இல்லை, புத்தகங்களையோ செய்தித் தாள்களையோ படிப்பது இன்பமாக இல்லை. எப்படி இருக்க முடியும்? காக்கைக்கு விருப்பமானது பிணம்தானே! தீயவர்கள் சேர்க்கை, சூது, கள், சாராயக் குடிவகைகள் இவையே அவனுக்கு இன்பமாயின. எப்பொழுது பார்த்தாலும் இவற்றுள் ஒன்றில் ஈடுபடாமல் இருக்க அவனால் முடியாது. அப்படிப் பழகி விட்டான். இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு என்னும் குறள் நெறி அவன் செவியில் விழ வாய்ப்பே இல்லை. அப்படியே விழுந்தாலும் அதனைச் சொல்லியவனைச் சும்மா விடப்போவதுமில்லை. அவன் பரம்பரையையே சந்திக்கு இழுத்து விடுவான். ஒரு நாள் மணிமுத்து, ஒரு தோட்டத்திற்குப் போய்த் தேங்காய்கள் சில பறித்தான். பறிக்கும் போது தோட்டக்காரன் கண்டுவிட்டான். அவனுக்குக் கோபம் மிகுதியாயிற்று. தூரத்திலிருந்து வரும்போதே கத்தினான். பக்கத்தில் வந்தபோது மணிமுத்தைப் பார்த்ததும் ஏன் திட்டினோம் என்று பதறிப் போனான். மெதுவான குரலில் மணிமுத்து, இறங்கு கீழே! இப்படியா செய்வது? ஆளில்லாத வேளையில் இப்படிக் காயை வெட்டுவது உனக்கே நன்றாக இருக்கிறதா? வா, உன் அப்பா வினிடமே கேட்கலாம் என்று அழைத்துச் சென்றான். தோட்டக்காரன் நடந்து கொண்ட அளவு ஒருவன் பொறுமையாக நடந்திருக்க முடியாது. இத்தோட்டக்காரனும் மூக்கன் மகன் மணிமுத்து தவிர்த்து இன்னொருவனிடம் இப்படி நடந் திருப்பான் என்றும் எதிர்பார்க்க முடியாது. மூக்கன் தோட்டக்காரனுக்கு என்ன பரிசு தந்தான்? நீ திருட்டுப்பயல்; உன் அப்பன் திருட்டுப்பயல்; உன் பாட்டன் திருட்டுப்பயல்; உன் பரம்பரையே கொள்ளைக் கூட்டம். ஒரு பயலிடம் யோக்கியதை உண்டா? தோட்டம் வைத்திருக்கி றானாம் தோட்டம். இவன் ஒருவனுக்குத்தான் அதிசயமாகத் தோட்டம் இருப்பது போல! ஏய், நீ பிச்சைக்காரப் பயல்; இந்தப் சின்னப்பயல் தெரியாமல் தேங்காயைப் பறித்ததற்குக் கையும் களவுமாகப் பிடித்துக் கொண்டு வந்து விட்டாயே - நீ செய்வதைச் செய்! அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித் தான் என்றான். கூட்டம் திரண்டு விட்டது. கூடியவர்களும் தோட்டக்காரன் இதனை இவ்வளவு பெரிது பண்ணியிருக்க வேண்டாம் என்று ஒத்த முடிவு கூறினர். தோட்டக்காரன் என்ன செய்வான்? வாயை மூடிக்கொண்டு போனான். இத்தகைய மூக்கனின் இல்லறம் எப்படி நயமாக நடந்திருக்கக் கூடும் என்று கற்பனை செய்து கண்டு கொண்டிருக்கலாம். புலிக் குகையிலே புள்ளிமான் குடியிருந்தது போலக் குடியிருந்தாள் காத்தாயி. புலி, சிங்கங்களுக்குக் கூட, - கழுகு, பருந்துகளுக்குக் கூட தன் பெட்டை குட்டி குஞ்சு என்ற பாசம் உண்டு. ஆனாலும் கூட மூக்கனைப் பொறுத்த அளவில் அது இல்லை என்றால் அந்த வாழ்வினை எப்படி யுரைப்பது? ஏதோ உயிரைப் போக்கிக் கொள்ளாமல் வாழ்ந்தாள். மணிமுத்தையும் பெற்றெடுத்தாள். மூக்கன் என்றோ ஒருநாள் அயலூர் ஒன்றிலே சேவற் சண்டை நடப்பதைக் கண்டான். அது அவனை மிகவும் கவர்ந்து விட்டது. இரண்டு இரண்டு பேர்கள் எதிரெதிராக இருந்து, சேவல்களைப் போருக்கு அனுப்புவதும், அவற்றின் கால்களிலே கத்தியைக் கட்டிவிடுவதும், ஒவ்வொரு முறையும் ஏவி வெறியூட்டி விட்டுக் குத்துமாறு செய்வதும், தோற்று ஓடினால் கூட விடாது பிடித்து வைத்து மேலும் தாக்க விடுவதும், அது சிந்தக்கூடிய இரத்தத்தைக் காண்பதிலே களிப்புக் கொள்வதும், எதிரியின் சேவலை அடித்து வெற்றி கொள்வதிலே இன்பம் கொள்வதும் மூக்கனைப் பெரிதும் கவர்ந்துவிட்டன. இக் காரியத்தைத் தன் ஊரிலேயும் நடத்த வேண்டும் என்று எற்பாடு செய்தான். மூக்கன் நினைத்தால் அவன் ஊரில் நடத்த முடியாது போய்விடுமா? எத்தனை மூக்கர்கள் முன் வரமாட்டார்கள்? ஊர்ப்புறத்திருந்த ஆலந்தோப்பிலே சேவற் போர் நடந்தது. எவ்வளவோ நல்ல காரியங்களுக்கெல்லாம் பயன்பட்டு வந்த அந்த ஆலந்தோப்பு கோழிச் சண்டைக்கும் பயன்பட்டது. அது தொடங்கியபின் தோப்பின் களை கெட்டதும் அன்றி, ஊரின் களையும் கெட்டது. ஊரிலுள்ள மக்களின் மனங்களிலும் எத்தனை எத்தனையோ பகைமையும், வேற்றுமையும் பிணக்கும் ஏற்பட்டன. இவ்வளவையும் தலைமை நின்று நடத்தி யவன் மூக்கன்தான். சேவற்போர் வெற்றி தராது என்றால் வலுச்சண்டை செய்தாவது வெற்றி தேடிவிடுவது அவன் வழக்கம். கைச் சண்டையோ, வாய்ச் சண்டையோ அதனைப் பற்றி அவனுக்குக் கவலையே இல்லை. இப்படியே எவ்வளவு நாட்கள்தான் காட்டு ராசாவாக ஆட்சி செய்ய முடியும்? மூக்கனுக்கும் எதிரி முளைத்தான். கடுவன் என்பவன் அவன். கடுவன், மூக்கன் சேவலை அடிக்கக் கூடிய அளவுக்கு வித விதச் சேவல்களைக் கொண்டு வந்தான். இனி மூக்கன் என்ன செய்வது? மூக்கன் கடுவனை வெற்றி கொள்ள என்னென்ன வழிகள் உண்டோ அவ்வளவும் செய்தான். சேவலை ஊக்கப்படுத்தி ஏவினான். தன்னையும் ஊக்கப் படுத்த விரும்பிச் சீழ்க்கை அடித்தான்; புகை பிடித்தான். ஏதாவது குடித்தால் தான் ஊக்கம் ஏற்படும் போல் அவனுக்கு இருந்தது. அதற்காகத்தான் மணிமுத்தைச் சீசாவுடன் கள்ளுக் கடைக்கு அனுப்பி வைத்தான். மணிமுத்து சீசாவுடன் விரைந்து ஓடி வந்தான். கொஞ்சம் பொறுக்கக் கூடாதா? டே ஓடிவா; போனது எந்நேரம்! வருவது எந்நேரம்! வா இங்கே! என்று கத்தினான். இனி என்ன கிடைக்குமோ? என்ற பயத்தில் ஓடிவந்த மணிமுத்து கல் காலை இடற, கள்ளிருந்த சீசாவையும் போட்டு விழுந்தான். சீசாவும் உடைந்தது. கள்ளும் கொட்டித் தொலைந்தது. சேவற் போர்த் தோல்வியால் கடுப்புக் கொண்டிருந்த மூக்கனை இது கிளறி விட்டது. கோபம் கொந்தளித்துக் கிளம்பிற்று. இடுப்பில் இருந்த கத்தியினை எடுத்துக் கொண்டு மணிமுத்தினை நோக்கி ஓடினான். கூட்டமெல்லாம் சேவற்போரை விட்டுத் திகைத்தது. மூக்கனைத் தடுக்க எவருக்குத் துணிவுண்டு? மணிமுத்து மருண்டோடும் மான்போல ஓடினான். வேங்கைப் புலிபோல விரட்டிச் சென்றான் மூக்கன். ஓடும் விரைவில் எத்தனையோ இடங்களில் இடறியும் எழுந்தும் தாவியும் சென்றான் மணிமுத்து. ஆனால், மூக்கன் ஓரிடத்தில் உருண்டு விட்டான். உருண்டாலும் தொடர்ந்து செல்வதை விட்டானா? மணிமுத்துக்கு என்ன நேருமோ என்று அவனைப் பெற்றெடுத்த காத்தாயியும் ஓடிவந்தாள். ஐயோ ஐயோ! வேண்டாம்; வேண்டாம் என்னும் அவள் குரல் மூக்கன் செவியில் படவா செய்யும்? மணிமுத்து இளைஞன் அல்லவா! சிட்டுப் போலப் பறந்து விட்டான். முடுக்கு, சந்து, பொந்து ஆகிய இடங்களிலெல்லாம் ஓடினான். பயல் தப்பி விடுவான், என்னும் எண்ணம் தாய்க்கு ஏற்பட்டாலும் பின் தொடர்ந்து ஓடினாள். மணிமுத்து ஒரு வீட்டில் நுழைந்தான். அவ்வீடு மெய்யப்பனுடையது என்பதைக் காத்தாயி அறிவாள். ஆனால் மணிமுத்து, இன்னார் வீடு என்பதையும், வீட்டுக்காரன் குணம் இன்னது என்றும் அறியமாட்டானே! டே பையா! என்னடா ஓட்டம்? இங்கென்ன? என்றான் மெய்யப்பன். நடுக்கத்துடன் நிலைமையைச் சொன்னான் மணிமுத்து. டே, மெய்யப்பன் என்ற என் பெயரை நீ அறியமாட்டாயா? என்ன ஆனாலும் நான் பொய் சொல்லேன். உன் அப்பன் வந்து கேட்டால், நீ இங்கே மறைந்து இருக்கும் உண்மையைச் சொல்லி விடுவேன். வேண்டுமானால் நான் அவனைத் தேடிப் போய்ச் சொல்ல மாட்டேன். அவ்வளவுதான் உனக்காக நான் செய்ய முடியும்! அப்பப்பா! உண்மையை மறைக்க என்கால் தடம் பட்டவனுக்கும் மனம் வராது; எப்படியோ உன் விருப்பம்போல் பார்த்துக்கொள் என்றான். மணிமுத்துக்கு, மெய்யப்பன் சொல்லைத் தாங்க முடிய வில்லை. சண்டாளன் துரோகி விளங்காதவன் என்று திட்டிக்கொண்டே ஓடினான். காத்தாயி, மணிமுத்து மெய்யப்பன் வீட்டிலிருந்து ஓடுவதைக் கண்டாள். இப்படித்தான் நடந் திருக்கும் என்று உணர்ந்து கொண்டாள். மெய்யப்பன் மனிதன்தானா? அவன் மெய்யும் ஒரு மெய்யா? கொலைப் பாதகன் என்று ஏசிக்கொண்டு அவன் வீட்டிற்குப் பின்புறத்தில் நின்றாள். மணிமுத்து அடுத்த வீட்டுக்குள் ஒளிந்து கொண்டது அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நல்லவேளை, மணிமுத்து அடுத்த வீட்டில் ஒளிந்ததை மெய்யப்பன் பார்க்கவில்லை. பார்த்துத் தொலைத்தால் அதனையும் சொன்னாலும் சொல்லுவான். அவ்வளவு மெய்மைப்பித்தன் அவன் என்று காத்தாயி இன்பமடைந்தாள். மூக்கன் ஓடிவந்தான். மெய்யப்பனிடம் கேட்டான்: என் பயல் வந்தானா? ஆ ஆ! உன் பயலா? இங்கு வந்து ஒளிந்தான். நான் உண்மையைச் சொல்லிவிடுவேன் என்றேன். இந்தப் பக்கமாக ஓடினான். ஒருவேளை அடுத்த வீட்டில் ஒளிந்திருந்தாலும் ஒளிந்திருப்பான் என்றான் மெய்யப்பன். அடுத்த வீட்டில் ஒளிந்திருந்தாலும் இருப்பான் என்னும் ஒலி காத்தாயிக்கும் கேட்டது. அடுத்த வீட்டுக்காரனுக்கும், மணிமுத்துக்கும் கேட்டது. ஐயோ! இந்தச் சனியன் இங்கிருப்பதையும் காட்டிக் கொடுத்துவிடுவான் போல் இருக்கிறதே என்று ஒரே வேளையில் அனைவரும் வருந்தினர், அதற்குள் மூக்கனும் வீட்டுக்குள் புகுந்து விட்டான். என் பயல் இங்கு இருக்கிறானா? என்றான் மூக் கன், ஓர் ஒல்லிப் பயல்; மாநிறம்; கால் சட்டை மட்டும் போட்டவன்; காதில் கடுக்கன் அவன்தானே! என்றான் வீட்டுக்காரன். ஆம்; அவனேதான்! எங்கே இருக்கிறான்? என்று துடிப்புடன் கேட்டான் மூக்கன். இதோ பார் இந்தத் தெரு வழியே ஓடி, அந்தச் சந்திலே திரும்பினான். ஓடு; ஓடு; இப்பொழுதுதான் போனான். விரைந்து போனால் பிடித்து விடலாம் என்றான் வீட்டுக்காரன். மூக்கன் ஓடினான். நெடுநேரம் தேடியலைந்தும் காணாத வனாகச் சோர்ந்து போய் வீட்டைச் சேர்ந்தான். இதற்குள் கோபமும் சிறிது சிறிதாகக் குறைந்துவிட்டது. கோபம் போன பின்தான் செய்தது என்னவோ போல் இருந்தது. கட்டிலில் குப்புற விழுந்து புரண்டான். உறங்கவா முடியும்? என்னென்னவோ உளறினான். மணிமுத்துவினிடம் நடந்ததை விவரமாகக் கேட்டறிந் தான் வீட்டுக்காரன். காலத்தால் உதவியதற்காகப் பெரிதும் மகிழ்ந்தான். நீ இப்பொழுது வீட்டுக்குப் போகவேண்டாம்; இங்கேயே இரு. நானே மாலையில் உங்கள் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன். அதற்குள் உன் அப்பா கோபம் தீர்ந்து விடும் என்று கவலையை ஆற்றி, பசியையும் மாற்றிவைத்திருந்தான். மணிமுத்து பயந்து கொண்டு வேறெங்கும் போய்விடக் கூடாதே என்னும் கவலையில் நின்றிருந்த காத்தாயிக்கு வீட்டுக்காரன் சொல் தேன் போல் இருந்தது. இனிக் கவலையில்லை என்று வீட்டுக்குப் போகத் தொடங்கினாள். ஆனால், போகவிடாதவாறு ஒருவன் வந்தான். அவன், ஐயா இருக்கிறாரா? என்று மெய்யப்பன் மகனிடம் கேட்டான். மெய்யப்பன் அவன் வருவதைத் தொலைவிலே கண்டு ஒளிந்து கொண்டான். அப்பா, வெளியில் போயிருக்கிறார் என்று சொல்லிவிடுமாறும் மகனிடம் சொல்லியிருந்தான். அப்படியே அவன் மகனும் சொல்லிவிட்டான். மெய்யப்பன் மைந்தன் அல்லவா! அவன் சொல்லில் சந்தேகம் கொள்ளலாமா? தேடிவந்தவன் புறப்பட்டான். கடன் வாங்கி நெடுநாள் ஆகின்றது; வந்த நேரமும் பார்க்க முடிவதில்லை; அவராகப் பணம் அனுப்புவதும் இல்லை; கடிதம் போட்டாலும் பதில் போடுவது இல்லை; எப்படித்தான் பணத்தை வாங்கப் போகின்றேனோ? முதலாளியிடம் நல்ல பெயர் எடுக்கப் போகின்றேனோ? என்று சொல்லிக் கொண்டு நடந்தான். அவன் சொற்கள் காத்தாயி காதிலும் விழுந்தன. அவளால் தாங்கமுடியவில்லை! அரிச்சந்திரன் போல நடிக்கும் அவன் நடிப்பை நினைத்து ஆவேசம் கொண்டாள். அவள் மகனைப் பொய் சொல்லமாட்டேன் என்று வெருட்டிவிட்டான் அல்லவா! மெய்யப்பா! வெளியே வா; ஊரை ஏமாற்றுவது எத்தனை நாட்களுக்கு? என்னும் வாழ்த்துரையுடன் உள்ளே வந்தாள் காத்தாயி. மெய்யப்பன் துரை, கணக்குப்பிள்ளை இருக்கிறாரா? என்று மெதுவாக மகனிடம் கேட்டான். அவர் போய் விட்டார் என்று சொல்லிய சொல்லை அடக்கிக் கொண்டு கணக்கப் பிள்ளை போய் விட்டார்; ஆனால் காத்தாயி போக வில்லை வெளியே வா; இதுவும் ஒரு பிழைப்பா? நீ கெட்ட கேட்டுக்கு மெய்யப்பன் என்னும் பெயர் ஒரு கேடா? ஒருவனை ஒருவன் குத்திக் கொல்ல வரும்போது, உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கூடப் பொய் சொல்ல மாட்டேன் என்ற வாய், கடன்காரனைக் கண்டவுடன் ஒளிந்து கொண்டு பொய் சொல்லலாமோ? சோறுண்ட வாய்தானா இது? இரு; இந்தச் செய்தியைக் கணக்கப் பிள்ளைக்கும் ஊருக்கும் பரப்புகிறேன் பார். உன் ஒழுங்கு புலப்பட வேண்டாம்? என்று துடிப்புடன் பேசினாள். மெய்யப்பன் வெட்கிப் போய், காத்தாயி இந்த ஒரு வேளைக்கும் காப்பாற்று. நான் மெய்யன்தான். என் போதாக் காலம் இப்படிப் பொருள் முடை ஏற்பட்டு விட்டது. என்ன செய்வது! என்றான். பொருள் முடை உனக்குப் போதாக் காலம்! உயிரழிவு எங்கள் போதாக் காலம். எது பெரிது? உனக்காக - உன் கடன் தொல்லைக்காக - நீ பொய் சொல்லலாம். மற்றவர்கள் நன்மைக்காகப் பொய்யே சொல்ல மாட்டாய். இல்லையா? நீ உண்மையான மெய்யப்பன் என்றால், இந்தச் சிறுவனைக் காப்பாற்றுவதற்காகப் பொய் சொல்லி, கடன்காரனிடம் பொய் சொல்லாமல் இருந்திருக்க வேண்டும்; நீ தான் தன்னல மெய்யப்பன் ஆயிற்றே! அய்யோ, உன்னிடம் மெய்கிடந்து படும்பாடு உனக்குத் தான் வெளிச்சம்! என்றாள். அழாக்குறையுடன் நின்றான் மெய்யப்பன். காத்தாயி வெளி யேறினாள். இவனைத் தண்டோராப் போட்டுத் திரியத் தலை விதியா? போய்த் தொலைகிறான்; என்றைக்காவது ஒரு நாள் உணர்வான் என்று அமைதியாக வீட்டுக்குப் போனாள் காத்தாயி. வழியில் கணக்கனைக் கண்டாள். பேசிக் கொண்டே வீட்டுக்குப் போனாள். மூக்கன் புரண்டு புரண்டு படுத்தான். காத்தாயி அவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. ஏதாவது கேட்பாள் என்று பலமுறை நினைத்தான் மூக்கன். காத்தாயிக்குத் தான் நடந்ததெல்லாம் தெரியுமே! அவனாகச் சொல்லட்டுமே என்று வாய் திறக்க வில்லை. நெடுநேரம் கழித்து மூக்கன் பேசினான். காத்தாயி, பயல் இன்னும் வரவில்லையே! எங்கே போனானோ? அறிவில்லாமல் விரட்டிச் சென்றேன் என்று தலையில் அடித்துக் கொண்டான். இப்படி வெறிபிடித்த தகப்பனுக்குப் பிள்ளை என்று இருப்பதைப் பார்க்கிலும் ஆற்றிலோ குளத்திலோ விழுந்து செத்திருந்தாலும் நல்லதுதான். அந்தச் சின்னஞ் சிறியது செய்த காரியத்திற்கு வெட்டவும் குத்தவும் போவதுதான் பெரியவன் செய்யும் காரியமா? என்ன கேடும் கெடுகிறான் என்று மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு பேசினாள் காத்தாயி. காத்தாயி, நீதானா இப்படிச் சொல்கிறாய்? நீ வெருட்டிக்கொண்டு போன நேரத்திலே பயல் அகப்பட்டிருந்தால் விட்டு வைத்திருப்பாயா? நீ குத்திக் கொல்வதற்குப் பதில் ஆறோ குளமோ கொன்றிருந்தால் புண்ணியம் அல்லவா! கொஞ்ச நேரம் வரவில்லை என்று இந்தத் துடி துடிக்கிறாயே, அவன் உன் கத்தியால் குத்தப்பட்டு இங்கு சவமாகக் கிடந்தால் எப்படி இருக்கும் உனக்கு? ஒருகாலம் இல்லையானாலும் ஒருகாலமாவது அறிவு வர வேண்டாமா? மூக்கன் கைகளால் தலையில் இடித்துக் கொண்டு கதறினான். காத்தாயி, இப்பொழுது அறிவு வருகின்றது; வந்து என்ன செய்வது? பயலைக் காணோமே! நீயாவது தேடிப்பார்த்து வாயேன் என்று கசிந்து அழுதான். கோபத்தின் விளைவு எப்படி ஆகும் என்பதை நினைத்து ஏங்கினான். இதற்கு முன் அவன் கோபத்தால் ஏற்பட்ட பொருள் கேடு, சிறை வாழ்வு, சீரழிவு ஆகிய எல்லாமும் கண்முன் நின்றன. தலையைச் சுவரில் மோதிக் கொண்டு விம்மினான். ஏறிச் சென்ற உணர்ச்சி இறங்கும்போது இப்படித்தான் கூத்து நடக்கின்றது! உணர்ச்சி ஏறும் போதுதானே அறிவு வேண்டும்? இறங்கியபின் இருந்தா லென்ன இல்லையானால்தான் என்ன? இப்பொழுது வரும் நல்லறிவாவது மறக்காமல் இருக்குமா? என்றாள் காத்தாயி. இனி இப்படிக் கெட்டுப் போகமாட்டேன் என்றான் மூக்கன். அந்நேரம் மணிமுத்தைக் கூட்டிக் கொண்டு வந்தான் சென்னிமலை. மணிமுத்து என்று சொல்லி ஓடிப்போய் அணைத்துத் தழுவினான் மூக்கன். அறிவில்லாமல் செய்து விட்டேனடா! புத்தி கெட்டவன் நான். நல்ல வேளை ஓடி ஒளிந்து பிழைத்துக் கொண்டாய் என்றான். இவன் உயிரைத் தந்தவன் சென்னி மலைதான் என்று நடந்ததைக் கூறினாள் காத்தாயி. சென்னி மலையை நன்றியறிதலுடன் நோக்கினான் மூக்கன். குடிகெட வேண்டிய நேரம்; நல்ல வேளை; அப்படியாகி விட வில்லை; இனிமேலாவது இந்த வெறி வேண்டாம் என்றான் சென்னிமலை. காத்தாயி கையெடுத்துக் கும்பிட்டாள். பெற்றவள் அல்லவா! சென்னிமலை! கோபம் குடியைக் கெடுக்கும் என்பதை அறிந்து கொண்டேன். இனி ஒரு நாளும் கோபப்பட மாட்டேன்; குடிக்க மாட்டேன்; சேவற் சண்டைக்குப் போக மாட்டேன்; சூதாட மாட்டேன் - மூக்கன் உணர்ச்சியுடன் பேசினான். ஆரம்பத்தில் இவற்றைக் கடைப்பிடிக்கச் சங்கடமாகக் கூட இருக்கும். ஆனால் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் எளிதாகி விடும்; நன்மையும் ஆகிவிடும் என்று கூறிப் புறப்பட்டான் சென்னிமலை. ஐயா, பால் குடித்துப் போங்கள் என்று ஒரு குவளையை நீட்டினாள் காத்தாயி. எனக்கா பால் என்றான் சென்னிமலை. ஆம்; நீங்கள் என் வயிற்றில் பால் வார்த்தீர்கள். இந்தப் பாலையாவது சாப்பிட்டுப் போக வேண்டாமா? என்று காத்தாயி சொல்லும் போது ஆம் ஆம்! குடியுங்கள் என்று வற்புறுத்தினான் மூக்கன். அப்பொழுது மெய்யப்பன் மிகவிரைந்து வந்து சேர்ந்தான். காத்தாயி, நீ கணக்கப் பிள்ளையினிடம் சொல்லி ஊரெல்லாம் தூற்றி விடுவாய் என்று கடைக்கு ஓடினேன். அவன் நான் இப்பொழுதுதான் உங்களைத் தேடி வந்தேன். வீட்டில் இல்லை என்று கேள்விப் பட்டுத் திரும்பினேன். வரும் வழியிலே காத்தாயி சொன்னாள். விரைவில் உங்கள் கணக்கை மெய்யப்பன் கொடுத்து விடுவார், நீங்கள் கவலைப்பட வேண்டாம். இனி தேடிவர வேண்டியிராது என்றாள். அதற்குள் நீங்கள் பணத்துடன் வந்து விட்டீர்கள்; உங்கள் பையன் நான் வந்ததைச் சொன்னானா? என்று கேட்டான். உன்னை எப்படி வாழ்த்துவது என்று எனக்குத் தெரியவில்லை. நீ அவனிடம் சொல்லியது பொய்தான். இருந்தாலும் அப்பொய்யால் கணக்கப்பிள்ளையும் முதலாளியும் எவ்வளவு மதித்தார்கள் என்பதை அறிந்து கொண்டேன். எனக்கும் இவ்வளவு நேர்மை தோன்றிவிட்டது என்பதை எப்படிச் சொல்வது? நல்ல உள்ளத்துடன் பிறர் நன்மை ஒன்றே எண்ணிச் சொல்லும் பொய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை அறிந்து கொண்டேன் என்றான். காத்தாயி புன்முறுவலுடன் சொன்னாள். உங்களைத் தூற்றுவதால் எனக்குக் கிடைப்பது என்ன? தூற்றிவிட்டால் அத்தூற்றுதல் மறைய எவ்வளவு காலம் ஆகும்? ஒருவன் வாழ்வில் எக்காரணம் கொண்டும் பொய் சொல்லக்கூடாது. கூடவேகூடாது. சொல்லக் கூடாத பொய்யைக்கூடப் பிறருக்குப் பெருநலம் வாய்க்குமானால் சொல்லலாம். தன் நலம் நாடிச் சொல்வதாக இருந்தால் எச்சிறு பொய்யையும் மன்னிக்கவே கூடாது. ஆம்; காத்தாயி சொல்வது பெரிய உண்மை. உயர்ந்த அறமுங்கூட! அறத்தினை அறுதியிட்டு அரிய நூல் செய்த திருவள்ளுவரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார் : பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் குற்றமற்ற நன்மையைப் பிறருக்குத் தருமானால் பொய் சொல்லுவதும் மெய்மைக்கு ஒப்பாகும். பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்று கூறிய திருவள்ளுவரே இப்படிக் கூறினார் என்றால், காரணத்தோடுதானே இருக்க வேண்டும். என்றான் சென்னி மலை. உண்மை உண்மை! நான் சொல்லிய மெய், பொய்யாயிற்று! நீ சொல்லிய பொய், மெய்யாயிற்று என்றான் மெய்யப்பன். மெய்யப்பா, உன் பேச்சு மெய்யப்பா! என்றான் மூக்கன். வீடு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.  25. தொண்டனாகுக காட்சி - 1 வடிவேல் - பொன்னப்பன் வடிவேல் : அண்ணே! வாங்க வாங்க. பொன்னப்பன் : ஆமாம் தம்பி! என்ன நலந்தானா? வடி : நலமாக இருக்கிறேன் அண்ணே. பொன் : நல்லது; நம் வடக்கு வீட்டுப் பெரியவரைப் பார்க்க வந்தேன்; வரும் வழியில் உங்கள் நினைவு ஏற்பட்டது; பார்த்துப் போகலாமே என வந்தேன். வடி : நிரம்ப மகிழ்ச்சி! பொன் : என்ன தம்பி, உங்களைப் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாக இருக்கிறது! வடி : அப்படி என்னண்ணே! பொன் : பெரியவர்களெல்லாம் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கச் சொல்கிறார்கள்; நீங்கள் சாலையைச் சுத்தமாக வைக்கச் சொல்கிறீர்களாம். வடி : ஓகோ! அதைப் பற்றிச் சொல்கிறீர்களா? வேறு ஏதாவது சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்தேன். பொன் : இப்படிச் சாலை சுத்தம் பற்றிச் சொல்வது எதற்காக, தம்பி! வடி : சொல்கிறேன். பொன் : இதென்ன தம்பி கண்ணாடிப் புட்டிக்குள்? வடி : பாருங்கள் வாழைப் பழத்தோல்... பொன் : ஓகோ, சரிதாங்க! சாலையில் போடக் கூடாதென்று கண்ணாடிப் புட்டிக்குள் போட்டு வைத் திருக்கிறீர்கள் போல் தெரிகிறது முடியுமா? எல்லாராலும் முடியுமா? வடி : அப்படி இல்லை அண்ணே! நான் கண் ணாடிப் புட்டிக்குள் தோலைப் போட்டு வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு. பொன் : என்ன தம்பி, அப்படியானால் நான் சொல்கிற படி இல்லை. வடி : இல்லை; நான் ஒருநாள் சாலை வழியே போய்க்கொண்டு இருந்தேன்; அவசரமான வேலை; ஓட்டமாகப் போனேன் மருத்துவரை அழைத்து வரவேண்டிய அவசியம்... பொன் : அப்பா நோயில் இருந்தார்களே... அப்பொழுதா? வடி : ஆமாம் ஆமாம்! அப்பொழுதுதான். பொன் : சரி தம்பி, விரைவாக ஓடினீர்கள்... வடி : அந்த நேரத்தில் பாருங்கள். ( காட்சி மாற்றம்) காட்சி - 2 (வடிவேல் ஓடிவந்து வாழைப்பழத் தோலால் வழுக் குண்டு கீழே விழுகின்றான்.) வடி : ஆ! ஐயோ! என்ன தொல்லை! சே! சே! இப்படியா வழுக்கும்? ஐயையோ... அவசரம் அல்லவா! கால் வரமாட்டேன் என்கிறதே! அப்பாவுக்கு நோய்... மருந்து வாங்கவும் மருத்துவரை அழைக்கவும் வந்த எனக்கு இப்பாடு... அப்பா!... அப்பா!... ஐயோ!... (எழுந்திருக்க முயல்கிறான்; முடியவில்லை) தேள் கடிக்கு மருந்து தேடப்போன இடத்திலே பாம்புக் கடிக்கு ஆளானதுபோல அல்லவா இருக்கிறது. ஐயோ! இடுப்புப் போய்விட்டதா? எந்தப் பாவிப்பயல் எனக்கு என்று இந்த வாழைப்பழத் தோலைப் போட்டானோ? அவன் விளங்குவானா? ஆ! ஐயோ! வலிக்கிறதே! சாலை என்றால் அவன் சொந்த நிலமா? எத்தனை பேர் போவார்கள் வருவார்கள்? சே... சே! இந்த நாட்டில் இருக்கிறவர்களுக்கு பொதுநலம் கிடையவே கிடையாது; பொது அறிவுங் கிடையாது. ஐயோ! நான் என்ன செய்வேன். (பலர் கூடிவிடுகின்றனர்) ஒருவன் : டே! டே! இவனைப் பாரடா! இன்னொருவன் : ஆ! ஆ! என்ன அழகு! வேறொருவன் : விழு! விழு! விழவேண்டியது தான்! இடுப்பு ஒடியவில்லை! மற்றொருவன் : பாரடா துடிக்கிற துடிப்பை. பிறிதொருவன் : அதோ பார்! பல்லைக் கடிக்கிற கடிப்பை! இன்னொருவன் : ஏன் பார்த்து நடந்தால்... வேறொருவன் : அழமட்டும் தெரிகிறது, அறிவு இல்லை. இரங்கும் ஒருவன் : அய்யோ பாவம்! பலமான அடி போல் இருக்கிறது. மற்றொருவன் : இரக்கம் மடைபிடுங்கிப் போகிறதைப் பாரு! அப்பாவி (அற்ப ஆவி) ஒருவன் : பட வேண்டிய நேரம்; யாரென்ன செய்வது; நடக்கிறபடிதான் நடக்கும். ஒருவன் : ஓ! அவன் நடக்க வழி செய்ய முடியு மானால் பாரும், வீணாய் ஏன் மூக்கைச் சிந்துகிறீர்! அற்ப ஆவி ஒருவன் : பாருய்யா! பேசத் தெரிந்தவனை.... வடிவேல் : அட இரக்கம் கெட்டவர்களே! விழுந்து கிடக்கிறேன்; விலா வெடிக்கச் சிரித்து வேடிக்கை பார்க்கிறார்கள்? என்னடா உலகம்? இந்த வாழைப்பழத்தோல் இவர்கள் காலில் பட்டிருந்தால்... அப்பா... அம்மா... பட்டுச் சீரழிய வேண்டிய நேரம்... அய்யோ... (சாரணச் சிறுவர் இருவர் வருகின்றனர்) ஒருவன் : ஏ! ஏ! அந்தச் சாலையில் பார்... இன்னொருவன் : ஐயோ! ஓடு ஓடு... எவனோ விழுந்து விட்டான். ஒருவன் : என்ன கிடந்ததோ.... இன்னொருவன் : ஓடி வாப்பா! வா வா! சீக்கிரம்... (இருவரும் வடிவேலைப் பிடிக்கின்றனர்) வடி : ஐயையோ! எழுந்திருக்க முடியாது போலிருக்கிறதே! சாரணர் இருவரும் : ஐயா... இருங்க... எல்லாம் சரியாகி விடும். ஒருவன் : சரி, மருத்துவ நிலையத்திற்குக் கொண்டு போகலாம். (தூக்கிப் போகின்றனர்) வடி : தம்பி, உங்களுக்குப் புண்ணியம்! சமயத்தில் காப்பாற்றினீர்கள். வடக்குத் தெரு வைரவன் வீடு எங்கள் வீடு! அங்கு என் அப்பா நோயோடு கிடக்கிறார்! அவரைத் தயை செய்து கவனித்தால் நல்லது; நான் அவருக்கு மருந்து வாங்க வந்தேன். சாரணர் : கவலைப்படாதீர்கள்! உடனே நாங் கள் அவரைக் கவனிக்கிறோம். வடி : நல்லது தம்பி. (சாரணர் வைரவன் வீட்டுக்குச் சென்று திரும்பி வருகின்றனர்) சாரணர் : அப்பா உடல் நன்றாக இருக்கிறது ஐயா. வடி : நலமாகி விட்டதா! என்னைக் காப் பாற்றினீர்கள், என் தந்தைக்கும் உதவினீர்கள். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும். உங்களுக்கு என் வணக்கம். சாரணர் : வருகிறோம் அண்ணே! வந்து பார்க்கிறோம். (இருவரும் செல்கின்றனர்.) காட்சி - 3 மருத்துவமனை வடிவேல் - முருகன். வடி : உங்களுக்கு என்னையா? காலில் கட்டு... முரு : அதை ஏன் கேட்கிறீர்கள்... நான் இந்த ஊருக்குப் புதியவன். இந்த ஊரில் நடுத்தெரு இருக்கிறதே, அது வெளிச்சம் கண்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்றோ! அடேயப்பா! நெருக்கம்... நெருக்கம்! வீட்டு நெருக்கத்திற்குமேல் ஆட்கள் நெருக்கம்! ஒரே கொடுமை. அந்தத் தெருவில் வைரவன் வீடு என ஒன்று இருக்கிறது. அந்த வீட்டுப் பக்கம் தெரியாமல் போய்விட்டேன்... வீட்டுச் சந்தில் கண்ணாடித் துண்டு களைக் கண்டபடி கொட்டித் தொலைத்திருக்கிறான்... பாவிப் பயல்... ஐயையோ! காலை வெட்டி வெட்டிப் பாளம் பாளமாகச் செய்துவிட்டது. வடி : பாவம்! முரு : அவன் விளங்குவானா? அவன் தலையில் இடிவிழ! அவன் காலில் வெட்டித் தவழ்ந்து நடக்க வைத்தால் அல்லவா அவனுக்கு அறிவு வரும். புத்திகெட்ட பயல் போட்டிருக்கிறான் பாருங்கள் பாதையில். குப்பையைக் கொட்டித் தொலைப்பதுகூடக் குற்றமில்லை போலிருக்கிறதே! இந்த அழகில் அவன் குடும்பம் படித்த குடும்பமாம்! வடி : ஆமாம் ஆமாம்! படித்தவன் குடும்பந்தான்... இன்னும் சொல்லுங்கள். முரு : புத்தி கெட்ட பயலை என்ன சொல்வது! நான் காலைக் கட்டிக் கட்டிலில் கிடந்து தவிக்கிறேன். அவன் எங்கே சுற்றித் திரிகிறானோ? (வடிவேல் சிரிக்கிறான்.) முரு : ஏனையா சிரிக்கிறீர்? வடி : சிரிக்க வேண்டிய இடம் வந்தால் சிரிக்க வேண்டாமா? முரு : என்னையா அப்படி இடம்? வடி : இன்னும் ஏச்சு இல்லையே என்றுதான். முரு : நான் வேதனையில் ஏசுவது உமக்கு இனிக்கிறது போல் இருக்கிறது. வடி : அப்படியில்லை. அந்த ஏச்செல்லாம் எனக்குத்தானே? முரு : என்ன! என்ன! என்ன சொன்னீர்கள்? வடி : நான்தான் வைரவன் மகன். முரு : வடிவேலா நீங்கள்... ஐயையோ! வடி : வடிவேல்தான் நான். கவலைப்படாதீர்கள். நீங்கள் திட்டியது காணாது. நான் செய்த கேட்டினால் நீங்கள் தொல்லைப்படுகிறீர்கள். எவனோ போட்ட வாழைப்பழத் தோலை மிதித்து வழுக்கிக் காலை ஒடித்துக் கொண்டேன் நான். அண்ணே பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா, பிற்பகல் தாமே வரும் என்று திருக்குறள் உரைப்பது சரியாகத்தான் இருக்கிறது. நீங்கள் வருத்தப்பட்டுக் கொள்ள மாட்டீர்களே... நீங்கள் தான் வாழைப்பழத் தோலைச் சாலையில் போட்டிருப்பீர்களோ?...... (இருவரும் சிரிக்கின்றனர்.) முரு : நான் சாலையில் தாராளமாக வாழைப் பழத்தோல் போடுவதுண்டு: ஆனால், நான் போட்ட பழத் தோல்தான் உங்களை வழுக்கி விட்டதென்று சொல்ல முடியுமா? வடி : இல்லை! இல்லை! நான் வேடிக்கையாகச் சொன்னேன்! நீங்களும் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது இல்லை என்று சொல்லுகிறீர்கள். முரு : ஆமாம் தம்பி! நான் தெரியாமல் உங்களைத் திட்டியதை மனத்தில் போட்டுக் கொள்ளாதீர்கள். வடி : ஐயையோ! இதில் என்ன தவறு இருக்கிறது. நீங்கள் என்னைத் தெரியாமல் எதிரில் பேசிவிட்டீர்கள். எத்தனையோ பேர்கள் மறைமுகமாகத் திட்டியிருப்பார்கள். இனி மேலாவது நான் புத்தியோடு நடந்துகொள்ள வேண்டுமே தவிர, திட்டியதற்குக் கவலைப் படலாமா? ஆமாம் அண்ணே, எனக்கு ஒன்று தோன்றுகிறது. நாம் இனிமேல் நம் வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதுடன் சாலையும் சுத்தமாக இருக்கப் பார்க்க வேண்டும். முரு : ஆமாம் தம்பி. அதைத்தான் எழுதிப் போட்டிருக்கிறார்களே. வடி : என்ன எழுதிப் போட்டிருக்கிறார்கள்? முரு : சாலையைச் சுத்தமாக வையுங்கள்; தபால் நிலையத்தைச் சுத்தமாக வையுங்கள் - இப்படியெல்லாம்! வடி : அண்ணே! வைவதிலேயும் சுத்தமாக வைய வேண்டுமோ? என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது வைவதில். அது பெரும் தவறு அண்ணே! தபால் நிலையத்தைச் சுத்தமாக வைக்கவும்; சுத்தமாக வைத்திருக்கவும்; தூய்மையாக வைக்கவும் என்று எழுதவேண்டும்! அதைப் பற்றிக் கவலைப் படாமல் வையுங்கள் திட்டுங்கள் என்றெழுதுகிறார்கள். முரு : சரிதான்! தெருவைத் துப்புரவு செய்வதற்குள் தெருப்பலகைகளையும், விளம்பரங்களையும், சுவர் ஒட்டி களையும் துப்புரவு செய்யவேண்டும்போல் இருக்கிறதே. வடி : அதனால்தானே பாரதியார், ஒட்டகத்திற்கு ஒரு பக்கமா கோணல்; தமிழகத்திற்கு ஒரு பக்கமா அழிவு என்ற பொருளில் சொன்னார். பெரிய பெரிய காரியங்கள் செய்வதுதான் அறம், நல்வினை என்று சொல்கிறார்கள். எந்தக் காரியத்தை நல்ல எண்ணத்துடன் செய்தாலும் அது அறம்தான்! முரு : நல்ல திட்டம் தம்பி! நல்ல திட்டங்கள் நடைமுறைக்கு வரவேண்டுமே! வடி : இப்பொழுது வந்தார்களே; சாரணர்கள். எப்படித் தொண்டு செய்கிறார்கள்! நாம் இவர்களுக்கு உதவுவது நல்லதொண்டு இல்லையா? முரு : சரிதான் தம்பி; பணம்? வடி : பணம் எதற்காக? மனத்தில் தொண்டு எண்ணம் வேண்டும்; கையில் பணம் இல்லாவிட்டாலும் குற்றம் இல்லை. நாட்டில் நல்லெண்ணம் ஏற்பட்டு விட்டதோ பிறகு பணத்திற்குப் பஞ்சம் இல்லை. முரு : சரி தம்பி, நான் உங்களுடன் ஒத்துழைக் கிறேன். வடி : மிகச் சரி. (மருத்துவ நிலையப் பணியாள் சிங்கப்பன் வருகிறான்.) சிங் : ஐயா நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டிய நாள். உங்களுக்குக் குணமாகிவிட்டது. முரு : சிங்கனா! சரி சரி! இன்றுதான் உடல் குண மானதுடன் உள்ளமும் குணமாயிற்று. நல்ல நேரம் பார்த்துப் போகச் சொன்னாய். முரு : வருகிறோம் அப்பா! சிங் : ஐயையோ! மருத்துவ நிலையம் ஐயா! வராமலே இருங்க! இது என்ன விருந்து வீடா? மருந்து விடு இல்லை! வடி : ஓ ஓ! நல்லவனாவான் சிங்கன்! உன் எண்ணப்படியே ஆகட்டும்! வணக்கம். சிங் : வணக்கம்! காட்சி - 4 (வழியில் ஒருவன் மிதிவண்டியொன்றைத் தூக்கிக் கொண்டு வருகிறான்.) முரு : என்னையா? வண்டி... மிதி : என்னவா? எந்தப் பயலோ சாலையிலே முள்ளைப் போட்டிருக்கிறான்! முரு : அடுப்பில் வைக்க... வடி : வையவேண்டாம் அண்ணே! மிதி : அவசரப்படாதீங்க தம்பி. அடுப்பில் வைக்கக் கொண்டு போனதைச் சாலையில் போட்டிருக்கிறான். எந்தச் சனியன் செய்தானோ; தூக்கிச் சுமக்க வேண்டியது ஆயிற்று; தோளும் புண்ணாகி விட்டது. (போகிறான்.) முரு : தம்பி நீங்கள் சொல்லியதுதான் சரி. நம் எண்ணத்தை பொதுமக்களுக்கு எடுத்துச் சொன்னால் போதும்; வெற்றிதான். வடி : ஆமாம்! அப்படியே செய்வோம். காட்சி - 5 வடிவேல் - பொன்னப்பன் வடி : இந்த மாதிரி முடிவு கட்டினோம். அன்றி லிருந்து ஓயாத உழைப்புத்தான். என்னவோ ஒரு கவலையும் இல்லாமல் தொண்டு செய்ததுடன், வயிற்றுப் பாட்டுக்கும் தொழில் செய்து கொள்கிறோம். இதைத்தான் ஊரில் பேசிக்கொள்கிறார்கள்போல் இருக்கிறது. ஏதோ நம்மால் முடிந்தது. பொன் : எவ்வளவு நல்ல காரியம்! நம்மால் முடிந்தது என்று சாதாரணமாகச் சொல்லுகிறீர்கள். தம்பி, இது என்ன அட்டை? எச்சரிக்கையாயிரு; தொண்டனாயிரு என்று எழுதி வைத்திருக்கிறீர்கள். வடி : இது வாழைப்பழத்தோல் தந்த பாடம்! பொன் : அது என்ன தம்பி? ஒல்லும் வகையால் அறிவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல் திருக்குறளா? வடி : ஆமாம்! வாழ்க்கை தந்த பாடம் அது. நான் எச்சரிக்கையாகப் போயிருந்தால் விழுந்திருக்க மாட்டேன்; அதனால் எச்சரிக்கையாக இருத்தல் தேவை என அறிகிறேன். விழுந்து நான் பட்ட தொல்லைதானே மற்றவர்களும் படுவார்கள் என்ற எண்ணம் தொண்டு புரியத் தூண்டியது. எவ்வாறு தொண்டு புரிவது என்று நினைத்த வேளையிலே இன்ன வழி, இன்ன வகை, இன்ன நேரம் என்று இல்லை. எப் பொழுதும் எவ்வழியிலும் எவருக்கும் நல்வினை செய் என ஏவியது குறள் மணி. அதனால் இவைகளை நினைவாகப் பொறித்து வைத்துள்ளேன். பொன் : நல்ல காரியம் தம்பி! நான் உங்களுக்கு வேண்டியதைச் செய்கிறேன். வடி : மிக்க நன்றி. பொன் : அப்பா வெளியில் போயிருக்கிறார் போல் இருக்கிறது. வடி : ஆமாம்! அவர்தானே பெரிய தொண்டர்! பொன் : சரி சரி! நல்ல குடும்பம்! வருகிறேன் தம்பி. வடி : வணக்கம்.  26. கல்யானை மீதிருக்கும் களிற்றியானை வான் வறண்டாலும் தான் வறளாத நீர் வளம் உடையது காவிரி. சோலைகளைப் பெருக்கிச் செல்வதால் காவிரி என்றும், தெனொழுகும் சோலைகளை மிகக் கொண்டுள்ள படியால் காவேரி என்றும் (வேரி=தேன்) பெயர் பெற்ற பெருமை காவிரிக்கு உண்டு. ஆற்றுப் பெருக்கால், வரப்பு உயர்வதும், வரப்பு உயர்வதால் நீருயர்வதும், நீருயர்வதால் நெல்லுயர்வதும், நெலுயர்வதால் குடி உயர்வதும், குடி உயர்வதால் கோல் உயர்வதும் இயற்கை அல்லவா! சோழ நாட்டின் வளங் கண்டு, அதனை அண்டை நாட்டினரும், அயல் நாட்டினரும் பண்முறை கைப்பற்ற எண்ணியது உண்டு! படை கொண்டு வந்ததும் உண்டு! ஆற்றாமல் தோற்று ஓடியதும் உண்டு; ஆட்சி நிலைக்க விட்டதும் உண்டு! வேற்றவர்களை அல்லாமல் வேந்தர் பரம்பரை யினருள்ளும் யான் ஆள வேண்டும்; அவன் என்ன ஆள்வது? என்னளவு அவனுக்கு உரிமை உண்டா? உரம் உண்டா? உயர்வு உண்டா? என்று கிளர்ந்து எழுந்தவர்களும் கேடு சூழ்ந்த வர்களும் பலர்ப் பலர். இத்தகைய பிணக்குமிக்க ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த, ஆண்மையால் பிறரை அடக்கி வைத்திருந்த வேந்தன் திடுமென இறந்து விட்டான் என்றால், அவன் இறப்பை எப்பொழுது எப்பொழுது என்று உற்றார் உறவினர் எதிர் நோக்கியிருந்து ஆட்சியைக் கவர்ந்து கொள்ளத் திட்ட மிட்டிருந்தனர் என்றால், இவ்வேளையிலே பச்சிளம் குழந்தை யொன்று பாராளும் உரிமையில் இருக்கிறது என்றால், அதன் நிலைமை யாதாகும்? எங்கு நோக்கினும் பகைமை; எங்கு நோக்கினும் எதிர்ப்பு; எங்கு நோக்கினும் தீமை; ஏச்சு பேச்சு; ஆனாலும் இளைஞன் ஊக்கம் இழந்துவிட வில்லை; ஒரே ஒருவராகத் துணைநின்ற மாமனும் கைவிடவில்லை! இளைஞன் இருக்கின்றான் கோட்டைக்குள்; எதிரிகள் இருக்கின்றனர் கோட்டையின் உள்ளும் புறமும்; கட்டுக்காவல் இவ்வளவென்று இல்லை; அழிவு வேலை எவ்வளவு செய்தாலும் முளையிலே கிள்ளி எறிகின்றான் சூழ்ச்சித் திறமும் ஊக்கமும் படைத்த மாமன்! சுற்றப் பகைவர் வஞ்சம் என்னாம்? பகைவர் உள்ளம் வெதும்பியது; மூக்கில் புகை கப்பியது; கண்கள் நெருப்பாயின; இளைஞனை இன்று அழித்தே தீர்வோம்; ஆட்சியைப் பற்றியே ஆவோம்; என்று முனைந்தனர்; எரி நெருப்பு எடுத்தனர்; இளைஞன் இருக்கும் கோட்டைக்குள் மூட்டினர். பற்றிய தீ சுற்றிப் படர்ந்தது; பண்புடையோர் உள்ளம் பதைத்தது; பகைவர் உள்ளம் மகிழ்ந்தது; தாய்மார் உள்ளம் தவித்தது; குழந்தைகள் உள்ளம் திகைத்தது; மாமன் உள்ளம் மருகியது; உற்றதுணைவர் உள்ளம் உருகியது. நம் இளைஞன் உள்ளமோ எழுச்சி கொண்டது. சிந்திக்கப் பொழுது இன்றிச் செயலாற்றத் தொடங் கினான் இளைய வீரன். மீனுக்கு நீத்தும், புலிக்குப் பாய்ச்சலும், சிங்கத்திற்கு முழக்கும், யானைக்கு பீடு நடையும் பயிற்று வித்தவர் எவர்? பழக்குவித்தவர் எவர்? இவை இயற்கை என்றால் எனக்கும் கோட்டையைத் தாவுவதும், கேட்டைத் தகர்ப்பதும், நாட்டைக் காப்பதும் இயற்கை! கோட்டை என்ன கோட்டை! எனக்கு எளிய வேட்டையே என நொடிப்போது எண்ணி, மீன்போல் கிளர்ந்து, சிங்கம்போல் செம்மாந்து, புலிபோல் பாய்ந்து, யானைபோல் நடந்து கோட்டையை விட்டு வெளி யேறினான்! இளைஞன் இறந்தான் என இன்புற்று மங்கலப் பறை முழக்கும் பகைவர் இடையே, இளைஞன் வெளியேறி முடிசூடிக் கொண்டுள்ளான் என்ற சொல் சாப்பறை கொட்டிய தாயிற்று. சாவாமல் சவம் ஆயினார் போல ஆயினர் சுற்றப்பகைவர்கள்! இளையனுக்கு ஆற்றல் மிகுதி; அதனினும் மிகுதி அவனுக்கு வாய்த்த அரிய துணை; ஆற்றலும் அரியதுணையும் இருந்தால் போதுமா? பகைவரும் புகழ, வசை கூறுவோரும் வாழ்த்தி வணங்க செயல்திறம் அல்லது வினையாண்மை வேண்டு மல்லவா! நம் இளைஞனிடம் மிகுதியாக அமைந்திருந்தது வினைநலம்! இளைஞன் காளையானான்; ஆற்றல் பேராற்றல் ஆயிற்று; வினைத்திறம் விஞ்சியது; காவிரிக்கரையிலே உலவிய அவனுக்கு, கரை புரண்டு செல்லும் வெள்ளத்தைக் கண்ட அவனுக்கு வாய்க்கால், வரப்பு, வயல் அழிக்கப்பட்டு வெள்ளத்தால் கெடுவதையும், துளிநீரும் இன்றி வறண்டு வானோக்கி ஒருபால் காடு கிடப்பதையும் நோக்கிய அவனுக்கு, நூலொடு நுண்ணறிவும் வாய்த்த அவனுக்கு ஓரெண்ணம் உண்டாயிற்று! காவிரிக்குக் கல்லால் அணைகட்ட வேண்டும் என்பதே அது. சொல்லால் அணைகட்டினான் சோழன்! கல்லால் அணைகட்டினர் தொழிலாளர்; நெல்லால் அணைகட்டினர் உழவர்; அல்லல் பறந்தது. அமைதி நிறைந்தது; சோழநாடு சோழவள நாடு ஆயிற்று; சோழன் வளவன் ஆனான்; காவிரி பொன்னி யாயிற்று! சோழவளநாடு சோறுடைத்து என உண்மை உரைக்கவும், யானை வயலுள் புகுந்தால் நெற்பயிர் அதனை மறைக்கும் என உயர்வு உரைக்கவும், ஒரு பெண்யானை படுக்கும் இடம் ஏழு ஆண் யானைகளுக்கு உணவு தந்து காக்கும் எனப் புனைந்துரைக்கவும் ஆயிற்று சோழநாடு. வாழ்க சோழன் என்று வாழ்த்துவோர்களின் ஓங்கிய குரலுக்கு இடையே, ஒழிக என்போர் உதட்டு அசைவும் இல்லையாயிற்று. பற்றியெரிக்கும் பசியுண்டானால் அன்றோ சுற்றியிருப்போர் தூண்டுதலுக்கு மக்கள் செவிசாய்ப்பர்? பொன்மலையாய் நென்மலை காட்சி தரக்கண்டோர் பொய்ப் பழியோர் மொழிக்கு இசைவாரோ? சோழநாட்டில் ஆணை செலுத்திய வேந்தன் இமயம் வரை தன் கொடி பறக்க விரும்பினான். தீர எண்ணித் தெளிந்த முடிவு கொண்டு, எண்ணிய வண்ணமே செய்து முடிக்கும் திண்மை பெற்றவனுக்கு முடியாத செயலென ஒன்றுண்டா? இமயப் பெருமலையில் சோழன் புலிக்கொடி வீறுடன் பறந்தது; வெற்றிக் களிப்போடு மீண்டான் வேந்தன். குறுநில மன்னரும், பெருநில வேந்தரும் சோழன் அடிக் கீழ்ப் பணிந்து நின்றனர்; அடிபட்டதற்கு அடையாளமாக அரும்பொருள்கள் குவித்தனர்; கலைஞர்கள் ஆடிப்பாடி இன்புறுத்தினர்; கவிஞர்கள் இறவா உடலாம் எழிற் கவிகள் பாடிப் பெருமை செய்தனர்; வடநாட்டு வெற்றியால் பெற்ற உவப்பினும், தன்னாட்டுப் பாராட்டுக்கு மகிழ்ந்தான் சோழன்; பொன்னி நதிபோல் பொருள் வழங்கினான். ஒரே ஒரு புலவன் 301 அடிகளைக் கொண்ட பட்டினப்பாலை பாடிய புலவன் - கடியலூர் உருத்திரங்கண்ணன் அந் நூலுக்காகப் பெற்ற பரிசில் பதினாறு நூறாயிரம் பொன்! ஏனையோர் பெற்ற பரிசு? எவர் கண்டார்? இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் வாழ்ந்த அவன், மக்கள் வாழ வாழ்ந்த அவன், இன்றும் வாழ்கின்றான் நல்லோர் இதயத்தும், காவிரிக் கல்லணையில் நிற்கும் கல்யானை மீதும்! கல்யானை மீதிருக்கும் அக் காவல் யானை யாவன்? அவனே கரிகாலன்! வாய்த்த துணை நலமும், வளர்ந்த வினைநலமும் ஒருங்கெய்திய சோழன் கரிகாலன் புகழ் வாழ்க! துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாம் தரும்.  27. நிறுத்து போரை! மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்க நிற்கின்றார்கள்; யார்? யார்? தந்தையும், மைந்தரும்! ஏன்? தாய் நெஞ்சிற்குக் காரணம் உண்டு; பேய் நெஞ்சிற்குக் காரணம் உண்டோ? தீய பழக்கம், தீயோர் உறவு, தெளிந்த அறிவின்மை, தூண்டுதலைக் கேட்கும் மனம், துடிக்கும் உணர்வு - இவை போதாவா பகைத்து நின்று பழி செய்ய! நல்லவன் தந்தை - வல்லமையும் அவனுக்கு மிகவுண்டு; அறநெறிக்கு அஞ்சுபவன் அவன் - மறப்போருக்கு அஞ்சாமையும் அவனுக்கு இயல்பு; அமைதி வாழ்வை விரும்புபவன் அவன் - அடக்குமுறைக்கோ அழிசெயலுக்கோ உடன்பட் டறியான்; உடன்படுவோரையும் விடான்; கொற்றவன்தான் அவன் - என்றாலும் குடும்பத்தைக் கண்ணும் கருத்துமாகக் காப்பான் - குறை கண்டானோ கொதிப்படைவான்! இத்தகைய நற்பண்புத் தந்தையும், தீமையே வடிவான மைந்தரும் போர்க்களத்தில் நிற்கின்றனர். யானையும், குதிரையும், தேரும் காலாளும் தத்தம் கடமைகளை ஆற்றுதற்குக் காத்திருக்கின்றன. ஏவிவிட்டோர் இறுமாந்திருக்க ஏனையோர் ஏங்கியிருக்க, ஆணையை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கின்றன இருதிறப் படைகளும். வயலிலே நெல்லைப் பயிரிட வேண்டாம். கட்டிக் காவல் புரிய வேண்டாம்; களை எடுக்கவும் வேண்டாம்; நீர் பாய்ச்சவும் வேண்டாம்; புல்லைப் பயிரிட வேண்டும்; பொருந்தும் உரம் இட வேண்டும்; பொழுதும் சென்று போற்றிக் காத்தல் வேண்டும் என்று கூறுவது புன்மை யல்லவா! இத்தகு புல்லியர்களும் உள்ளனரே நாட்டில்; அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் இருக்கின்றனரே என்று அறிவுடையோர் வருந்துகின்றனர். மலருள் புகுந்து இசைபாடித் தேனெடுக்கும் ஈயும் உண்டு; மலத்துள் புகுந்து பண்ணிசைத்து உண்ணும் ஈயும் உண்டு; மக்களுக்கு ஊட்டந்தரும் தேன் தருவது முன்னதன் பணி; தீராப் பிணி தந்து மக்களை அழிப்பது பின்னதன் வேலை; இத்தகைய இருவகை ஈக்களையும் போல்பவர்கள் உலகில் உளர் அல்லவா! முதல் வகையைச் சேர்ந்தவன் முன்னவனாம் தந்தை; இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் பின்னவராம் மக்கள்! பன்றியின் முன் மணியைப் போட்டால் பயன்படுமா? என்பது பழமொழி. நல்லுரை கேட்டு நடப்பது நன்னெஞ்சிற்கு இயலும்; ஆயின் புன்னெஞ்சிற்குப் பொருந்துமா? தந்தை நிற்கும் இடம் நாடிச் சென்றார் அருள் மிக்க புலவர் ஒருவர்; புல்லாற்றூரில் பிறந்தவர்; எயிற்றியனார் என்னும் பெயரினர். வேந்தே என்றார் விரைந்து சென்ற புலவர். புலமை யாளர்களை வரவேற்றுப் போற்றுதலில் இணையற்ற அவ் வேந்தனாம் தந்தை போர்ச்சினத்தை ஒரு பக்கம் போக்கிப் புன்முறுவல் மிகுந்து நல்லுரை கூறி வரவேற்றான். கைவேலைக் கடிதில் எறிந்து மெய் தழுவி இன்புற்றான். புலவர் பேசினார்: அரசே! அன்புகனிய அகம் குழைய நீ எடுத்து மகிழ்ந்த மக்கள் இவர்: ஆசைப் பெருக்கால் உச்சி முகர்ந்து உவகை உரைக்க வளர்ந்தவர் இவர்; கன்னல் பாகோ, கனிச்சாறோ, கவின் தேனோ, களி மதுவோ என்று மயங்க மழலை பொழிந்தவர் இவர்; மலரிலாச் சோலையும், மதியிலா வானமும், நீராடுந் துறையிலாக் குளமும், மணமிலா மாலையும் போன்றது புதல்வரைப் பெறாத வாழ்வு எனத் தேர்ந்த உன்னால் அன்பே! ஆருயிரே! கண்ணே! கண்ணின் மணியே! என்றெல்லாம் போற்றப் பெற்றவர் இவர்! ஆனால் இன்றோ எதிர் எதிர் நின்று போரிட உள்ளீர்! தந்தை உரிமையை அணுவும் நினைத்தாரல்லர் இவர்; நீயும் மக்களென உளங் கொண்டாயில்லை. உன்னை எதிர்த்து நிற்குமாறு அவர்களது பண்பும் உறவும் பட்டறிவும் துணைபோகலாம்; உன் பண்பும் உறவும் பட்டறிவும் அவர்களை எதிர்க்கத் துணைபோகலாமா? சோழர் குடியில் வந்த உங்களுக்கு ஓரொரு கால் பாண்டியரும் சேரரும் பகைவராயிருந்துளர். ஆனால் இன்று நீ போரிட முனைந்து நிற்பது சேரரிடமோ பாண்டியரிடமோ இல்லை; சோழரிடமும் - இல்லை - உன் மக்களிடம்? வெற்றியும் தோல்வியும் இப்பொழுதே தெரியுமா? நீ வெற்றி பெறுவாய் என்றே முடிவு கொள்வோம்; வென்று, ஆண்டு பின் யாருக்கு இவ்வாட்சியைக் கொடுப்பாய்! பிறந்தவர் யாவரும் நிலையாய் இருந்துவிட முடியாதே! அப்படிச் சமயத்தில் வேறொருவரிடம் நாட்டை ஒப்படைப்பாயா? அது அறம் ஆகுமா? அன்றி உன் குடிக்கு ஏற்ற தகுதிக்குத்தான் பொருந்துமா? உன் மக்களோ, மற்றவர்களோ ஏற்றுக் கொண்டு அமைதியாக இருப்பார்களா? இது நிற்க. நீ ஒரு வேளை இவர்களிடம் தோற்றுவிட்டால்... அய்யோ... அவ்விழிவை - பழிநிலையை - என்னால் நினைக்கவும் முடியவில்லை. தலைகாட்டாது திரியும் பகைவர்களும் நிமிர்ந்து நடப்பார்களே! எள்ளி நகையாடுவார்களே! இகழ்ந்து உரைப்பார்களே! இவற்றை எண்ணினால் உனக்கு என்ன தோன்றுகிறது? போரை விடுவது அன்றிப் புகழ்வழி யாதேனும் உண்டோ? மண்ணுலகப் புகழும் விண்ணுலகப் புகழும் எய்த ஒரே ஒரு வழி போர் விடுப்பதே! என்றார். சோழன் நல்லதே நினைத்து, நல்லதே செய்பவன் அல்லவா! உணர்ச்சியால் வழிதவறிச் சென்றாலும் உயர்ந்த பெரியோர் உரையை முடிமேற் கொண்டு ஒழுகுபவன். ஆதலால் பெருமையும் நன்மையும் தாராத போரை நிறுத்தினான். இன்னும் புகழுடன் வாழ்கிறான். அச்சோழன் பெயரென்ன? கோப்பெருஞ் சோழன் என்பது அவன் பெயர்! ஆனால் மக்களென அறிகிறோமே அன்றி அவர்கள் பெயரும் அறியோம்! என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை (புகழும் நன்மையும் தராத செயல்களை எக்காலத்தும் நீக்கி விடுதல் வேண்டும்)  28. வாழ வைப்போரே வாழ்வோர் கோபம் மிக்க தந்தை தன் மகனைத் தூக்கிக் கீழே போட்டு மிதிக்கிறான்; நையப் புடைக்கிறான்; கண்கள் சிவக்க, நெஞ்சம் கொதிக்க, நாடி துடிக்கத் திட்டுகிறான்; கண்டவர்கள் மைந்தன் நிலைமைக்காகப் பரிவு காட்டுகின்றனர்; தந்தையின் கொடுஞ் செயலுக்காக வருந்துகின்றனர்; வாய்விட்டுப் பேசித் திட்டு கின்றனர்; ஓடிப் போய்ப் பிடிக்கின்றனர்; நிறுத்துகின்றனர்! ஆனால் ஒரு காவல் நிலையத்துள் (போலீசு நிலையம்) இம்மாதிரி ஒரு செயல் நடந்தால் பொதுமக்கள் சென்று தடுக்க முனைவது இல்லை; முனைவதும் குற்றமாகி விடும்! விட்டிலைச் சிறுவர்கள் பிடித்து, சிறகினைப் பிடுங்கி, வாலிலே நூல் கட்டி இழுத்து வதைப்பதைக் கண்டால் இரக்கமுடைய எவரும் தம்பி இந்த விளையாட்டு வேண்டா மடா! என்று சொல்லத் தவறார்; சிறுவனோடு விளையாடும் ஓர் இளைய சிறுவனும் கூடச் சிறிய அளவில் இரக்கம் படைத்திருப்பின் தடுப்பான்! ஆனால் ஒரு வேந்தன் ஒருவனைக் காரணம் இருந்தோ இல்லாமலோ - அறியாமல் கூடச் செய்யலாம் அல்லவா! - கழுவேற்றுகிறான்; தூக்கில் போடுகிறான்; கைகால்களை வாங்குகிறான்; தலையை வெட்டுகிறான்; அங்கே போய் அரசே! அமைச்சே! இச்செயல் இழிவுடையது; பழியுடையது; இத்தகு கொடுஞ் செயலை விடுக என்று உரத்தோடு உரைக்க முன் வருவோர் அரியர். பாஞ்சாலி சபதம் என்னும் காவிய நூலில் பாரதியார் புலம்புவார் மாந்தர் நிலைமையை நினைத்து! பாஞ்சாலியைத் துச்சாதனன் அரச அவைக்கு, இழுத்துச் செல்கிறான் தெருவழியே! வழி நெடுக மக்கள் திரள்கின்றனர். ஆ! என்ன கொடுமை! என்று வாயோடு வாயாக முணு முணுக்கின்றனர். வாய்விட்டு உரத்துப் பேசி, ஒன்று கூடி, கூந்தலைப் பிடித்து நீசன் இழுத்துச் செல்வதைத் தடுத்து, அவளை அந்தப்புரத்திற்கு அனுப்பி, அவனைத் தரையோடு தரையாக மிதிக்க வலிமையற்ற இவர்கள் கதறி அழுதும், கண்ணிர் சிந்தியும் என்ன பயன்? வீரமிலா நாய்கள்! பேடிப் பதர்கள்! என்று வருந்துகின்றார். அரசவையில் நிறுத்தி இழிவு செய்ய முனைந்த போதும், அரசர், அமைச்சர், அறிவோர், வீரர் எவரெவரோ இருக்கின்றார்; இருந்தும் தீங்கு தடுக்கும் திறமிலேம் என்று தலைதாழ்ந்து இருக்கின்றனர். பாரதியார் பெண்மை வாயால் - பாஞ்சாலி வாயால் - கேட்கின்றார்; மங்கியஓர் புன்மதியார் மன்னர் சபைதனிலே என்னைப் பிடித்திழுத்தே ஏச்சுக்கள் சொல்லுகிறாய் நின்னை எவரும் நிறுத்தடா என்பதிலர் என்செய்கேன் சிறியவர் செய்யும் சிறு பிழைகளைத் தடுக்க ஓடி ஓடி வரும் மக்கள், பெரியவர் செய்யும் தவறுகளைத் தடுக்க முன்வர அஞ்சுகின்றனர் அல்லவா! தவறு செய்தவர் எவராயினும் தட்டிக் கேட்கும் உரிமை, உரம், உறுதி எந் நாட்டில் ஏற் படுகிறதோ அந் நாடுதான் உரிமை நாடு; நாகரிக நாடு; உயர்ந்த நாடு! திருந்தி வாழுதற்கும் வழிவகை செய்யும் நாடு! இத்தகைய சீரிய நாடுகளுள் தலையாய ஒன்றாகத் திகழ்ந்தது தமிழகம், சங்க காலத்தில்! அதற்குச் சான்றுகள் மிகவுள; ஒன்று காண்போம்! ஆடி வரும் மணி; அசைந்து வரும் யானை; கூடி வரும் கூட்டம்; குமைந்து வரும் உள்ளம்; தேடி வரும் சிறுவர்; திகைத்து நிற்கும் நெஞ்சம்; வீர மிகு வேந்தன்; வெற்றி மிகு படைகள்; அழுது நிற்கும் மாதர்; அமைந்து நிற்கும் ஏவலர்! - ஒரு கொலைக் களத்தின் சிலச் சில பக்கங்களில் காணப் பெறும் காட்சிகள்! ஏவு யானையை - அரசன் குரல்! எங்கே அப்பாவி மக்கள் சிலர் குரல்! ஐயோ ஐயையோ - பொறுக்க மாட்டா இளமனத்தின் கதறல்! இந்தப் பிள்ளைகளை மிதித்துக் கொல்லவா? - ஏக்க மிக்கோர் உரை! இந்தச் சிறுவர்கள் என்ன கொடுமை செய்தார்கள்; பாவம் ஏதும் அறியாதவர்கள் அல்லவா! பெருங் கொடுமை - அழுகையால் நீதிபெற எண்ணினோர் அவல உரை! யாராவது துணிந்து தடுக்க மாட்டார்களா? இப்படிக் கொடுமை நடக்க விடலாமா? - தாம் மனிதர் என்பதைத் தாமே நம்பாமல் எவருக்காவது மனிதப் பதவி தர முயல்வோர் இரங்கல் உரை! ஐயையோ! காரியின் மைந்தர் அல்லவா! வள்ளல் காரியின் மக்களுக்கா இக் கதி நேர வேண்டும்? - எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணும் விரிவு இல்லாமல் ‘காரி’க்காகத்தான் கண்ணீர் வடிப்பவர் - இரக்கத்தை ஒரு பாதை வழியே போக விட்டவர்கள் - அதிலும் துணிவு இல்லாதவர்கள்; நைவுரை!- களத்தில் எழுந்த ஒலிகள் இவை! இவர்கள் ஒலி வேந்தனுக்குக் கேட்க வில்லை; கேட்க வேண்டுமென்று இவர்கள் கூறவும் இல்லை; கேட்டுவிட்டால் வேந்தன் என்ன நினைப்பானோ என்று ஏங்கிக் கொண்டிருந்த வர்களும் இல்லாமல் இல்லை! மனத்தை அடக்க மாட்டாமல் ஏதோ புலம்பிவிட்டார்கள்; அவ்வளவே! அரசன் துணிந்து தன் செயலை ஆற்றத் தொடங்கினான். பாகனே! யானையைச் செலுத்து; இச் சிறுவர்களை மிதித்துக் கொல்லச் செய் என்று ஆணை பிறப்பித்தான். என்ன காரணம் என்று அறியாமல் திகைத்து நின்ற சிறுவர் இருவரும், யானையின் மணியோசை கேட்டு, அதன் மலை போன்ற நடைகண்டு, தங்களை நோக்கி வரும் நிலை கண்டு, மருண்டு மயங்கினர்! பாகன் யானையை விரைந்து செலுத்துகிறான்; பாராள்வோன் ஏவுகிறான்; கூட்டத்தை ஊடுருவிக்கொண்டு ஒரு புலவர் வந்தார். நிலைமை அவருக்கு வேதனை தந்தது; அதனை நினைத்துப் பார்க்கவே கொடிதாக இருந்தது. அதனால் வேந்தனே நிறுத்து என்று கட்டளையிட்டார்! கட்டளைதான், அது! யான் கூறுவதைக் கேள்! அதன் பின்னும் யானையை ஏவ வேண்டு மாயின்... அதுவே உன் விருப்பு ஆயின் ஏவு! அதுவரை நிறுத்து என்றார். கூட்டத்தினர் பார்வையெலாம் ஒரு முகமாகப் புலவர் மேலும், புவியாள்வோன் மேலும் மாறி மாறிப் பாய்ந்து நின்றன! அமைதி குடிகொண்டது! யானை தன் தலையசைப்பை விடவில்லை! அதன் காற் கீழ்ப்பட இருந்த சிறுவர்களும் மயக்கம் நீங்கினர் இல்லை! அரசே! புறா ஒன்றைக் காப்பதற்காகத் தன்னுடலை அரிந்து தந்த பெருமைக்குரிய செம்பியன் என்னும் சிபி உன் முன்னோன்! அவன் பரம்பரையில் வந்த உன்னை அருளாளன் என்பேன். ஆனால் உன் செயல் உன் பரம்பரைக்கோ, உனக்கோ பொருந்துவதா? பெருமை தருவதா? இல்லவே இல்லை என்பதை நீ அறிவாய்? இவர்கள்தான் கொடியவர்களா? தீமை செய் வதையே தொழிலாகக் கொண்ட குடிவழி வந்தவர்களா? இரப்பவர்க்கு இல்லை என்று கூறாமல், இருப்பது அனைத்தும் தந்து புலவர் தோழனாய், இரவலர் புரவலனாய், கலைஞர் காவலனாய், பாணர் புதையலாய் விளங்கிய வள்ளல் காரியின் மைந்தர்கள் அல்லரோ! இவர்கள் மேல் உனக்கு உண்டான சினந்தான் என்ன? உன் புலமைக்கும், புகழுக்கும் இது தகும் என்றால் உன் விருப்பம்போல் செய் என்றார்! புலவர் துணிவை மக்கள் பாராட்டினர். மன்னன் மதித்தான்; அறம் உணர்ந்தான்; அருள் கொண்டான்; இளைஞர்களோ உயிர் கொண்டார்; புலவரோ புகழ் கொண்டார்! தமிழகம் தனக்கு நேர இருந்த களங்கம் ஒன்றைத் துடைத்துக் கொண்டது! இலக்கியம் - புறநானூறு - அருமையான பாமணி ஒன்றைப் பெற்றுப் பொலிவு கொண்டது! குறள் வாழ்வு ஓர் இலக்கியம் கொண்டது. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். (மேலும் மேலும் உயர்வோம் என்று விரும்பி முயலுகின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடுதல் வேண்டும்.)  29. எப்படி வாழ்வது? 250 பவுண்டுக்குக் குறையாமல் 300 பவுண்டைத் தொடும் அளவில் உடல்; ஏந்தித் திரியும் கை; இரந்து கூறும் வாய்; இல்லையென்றால் ஏசும் நா; வாங்கிய பின் நன்றி பாராட்டாத நெஞ்சம் - இப்படி எத்தனை எத்தனை பேர்களைத் தெருக்களிலே காண்கிறோம்! அதே பொழுதில்; ஒட்டிய வயிறு; ஒடுங்கிய கன்னம்; இளைத்த உடல்; ஏங்கிய மூச்சு; உலர்ந்த நா; மயங்கிய கண்; தள்ளாடும் கால்; தவித்த நடை; கடிய பாரம்; கொடிய வெயில் - கரடு முரடான பாதை - வயிற்றுத் தீப்பிணியை மானத்தோடு தணிக்க வேண்டி வண்டியிழுத்துத் திரியும் வறிய - ஆனால் மானம் பேணும் - ஒரு கூட்டத்தையும் தெருக்களிலே காண்கிறோம்! இன்னொரு பக்கம்; இடிந்த வீடு மடிந்த உள்ளம்; கால் போகி, நார் கழன்ற கட்டிலாகக் காட்சியளிக்கும் கூரை; பழைய சாக்கு விரிப்பு; கந்தல் தலையணை; மூச்சு விடவும் முணக்கம்; எலும்புருக்கி நோயின் இளைப்பு; இடிந்த அடுப்பு; முரிந்து போன பானை; குப்பைக் கீரை; உப்பில்லா அவியல் - இவ்வளவும் காட்சிப் பொருளாய் இலங்க மானத்தைப் போற்றி - பிச்சைக் காரராகித் தெருவில் நடை பிணமாகத் திரிவதினும் உண்மைப் பிணம் ஆவது மேல் எனக் கருதி கதவு இல்லாக் குடிசைக்குள் கிடக்கும் வெம்பிய உள்ளங்கள்! வாழ வழியிருந்தும் - தோட்டம் துரவு, நன்செய் புன்செய்; ஆடு மாடு; செல்வம் சீர்; பட்டம் பதவி; வாழ்வு வளம்; வெற்றி விருது; ஒட்டு உறவு; சுற்றம் சூழல் எல்லாம் இருந்தும் - உள்ள செல்வத்தைக் கணக்கெடுக்க ஒரு நூறு பேர் சேர்ந்தாலும் ஓராண்டு முயன்றாலும் இவ்வளவென்று தெளியமுடியாத சொத்து - இருந்தாலும் ஊர் ஊராக, நாடு நாடாக இருந்தாலும் மேலும் மேலும் வஞ்சத்தாலும், கள்ள வணிகத்தாலும் கையூட்டாலும் (இலஞ்சம்) பொருளைப் பெருக்கித் திரட்டித் திரியும் நெஞ்சமிலார்! இவற்றை எண்ணிப் பார்க்கும் நெஞ்சத்தே மானம் எது என்பது புலனாகாமல் போகாது. உயிருக்காக மானத்தை விடுவதா? மானத்திற்காக உயிரை விடுவதா? என்னும் இரு வேறு வினாக்களுக்குக் கிடைக்கும் விடையைக் கொண்டதே மானத்தின் வாழ்வும்; தாழ்வும். மானம் அழிந்தபின் வாழாமை இனிது என்பார் மொழியும், மானத்தை விட்டும் உயிர் வாழ நினைவார் நினைவும் எண்ணிப் பார்க்கத் தக்கதேயாம். மானம் என்பது என்ன? தன் நிலைமையில் தாழாமையும், தாழ்வு வந்தால் உயிர் வாழாமையுமே மானம்! இம் மானம் போற்றி ஒழுகப் பெறுகிறதா? போற்றுவோர் என்றும் போற்றித்தான் வாழ் கின்றனர். போற்றாதோர் என்றும் போற்றாதுதான் இழி கின்றனர். பசுவொன்று நீர் வேட்கையால் நடக்கமாட்டாமல் நடக்கின்றது; வழியிலே கிணற்றில் ஒருவர் நீரெடுக் கின்றார்; அவரிடைச் சென்று இப் பசுவிற்கு நிர் வேட்கை யுளது; அருள்கூர்ந்து நீர் தருக என்று கேட்டிரந்து நீர் ஏற்றுப் பசுவைப் காப்பதிலும், தன்முயற்சியால், நிர்கோலி, பசுவிற்கு அளிப்பது பெருமையானது: முயற்சி சிறப்பைக் காட்டுவது; அன்றி நீர் இரந்து நிற்பது நாவிற்கு இழிவு தருவது. ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல் என்பது வள்ளுவம். இதனை வாழ்வில் கொள்வோர் எத் துணையர்? நீர் வேட்கை மிகக் கொண்டுள்ளான் வேந்தன்; பகைவன் சிறைக் கோட்டத்துள் விலங்கு பூட்டப் பெற்று அடைக்கப் பெற்றுள்ளான்; வற்றா வளம் பெருகு ஆறுகள் அவன் நாட்டில் மிகவுண்டு; ஆனால் பகைவன் சிறையானபின் அவ்வாற்று நீர்ப் பெருக்கு கிட்டுமா? பகைவன் தந்த உணவை வெறுத்தான்; நீரையும் மறுத்தான்; நாட்கள் சில சென்றன; தாங்க முடியா வேட்கை; தன்னை அறியாமலே கேட்டுவிட்டான்:- ஏவல! தண்ணிர் தா ஏவலன், சிறைக்குள்ளிருக்கும் காவலன் சிறப்பினை அறிந்தவன் அல்லன். மற்றையோரைப் போலவே, தப்பாகக் கணக்குப் போட்டுவிட்டான். பணிவும் இன்சொலும் இன்றி, எக்களித்த நடையோடு நீர் கொணர்ந்து தந்தான். ஏவலன் நிலைமையை எண்ணிப் பார்த்த காவலனுக்குத் தாங்க முடியா இழிவாகத் தெரிந்தது. மானங்கெட வாழ்ந்து பழகியவர்களுக்கு இயல்பாகிப் போகி யிருக்கும்; சிறிதும் தவறாது வாழ்ந்த அந்த அரசச் செம்மலுக்குப் பொறுக்க முடியவில்லை. முன்னமே உயிரைப் போக்கிக் கொள்ளாது, நாய் போல விலங்கிடப் பெற்றுப் பகைவன் சிறைக் கோட்டத்துள் இருக்க நேர்ந்த இழிவை நினைத்தான்; இவ்விழிவினையும் தாங்கி நீர் வேண்டும் என்று கேட்ட நீங்காப் பழியை நினைத்தான்; மரியாதையின்றித் தந்த தண்ணீரைப் பெற்ற மாபெருந் தவற்றை நினைத்தான் - ஆ! ஆ! மானம் இழந்தேன்! என மயங்கினான்; மருண்டான்; இனியும் வாழ்வது இழிவு என முடிவு செய்தான்! என்ன செய்தான்? மானம் என்னும் வாள், உயிராம் மரத்தை வெட்ட வீழ்ந்தான்! இப்படி மானம் பேணுபவர் யார்? மானம் போற்றிய மன்னவன் என்று இந்த இரண்டு ஆயிரம் ஆண்டுகளாகச் சேரன் கணைக்காலிரும்பொறையைச் சொல்லி வருகின்றோம்! மானத்தின் சிறப்பையும் அருமையையும் இது காட்டாதா? இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். 