தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை - 11 தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 11 தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 16 + 296 = 312 படிகள் : 1000 விலை : உரு. 295/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 நூல் கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். பேராசிரியர் வெள்ளைவாரணனாரின் வாழ்வியல் - காலநிரல் தி. நெல்லையப்பன், எம்.ஏ., எம்.நில்., 1917- ஆம் ஆண்டு சனவரி 14-ஆம் நாள் தஞ்சை மாவட்டம் திருநாககேச்சரத்தில் வெள்ளைவாரணனார் பிறந்தார். தந்தை கந்தசாமி முதலியார், தாய் அமிர்தம் அம்மையார், செங்குந்தர் மரபு. சொர்ணம் என்னும் பெயருடைய தமக்கையார் ஒருவர். பொன்னம் பலம், நடேசன் ஆகியோர் இவருடன் பிறந்த மூத்தவர்கள். வெள்ளைவாரணனாரின் பெரிய தந்தையார் பிறந்தநாளில் பிறந்ததால் அவரின் பெயரையே வெள்ளை வாரணனார் என இவருடைய தந்தையார் இவருக்குச் சூட்டினார். தந்தையார் கந்தசாமியாரும் பாட்டனார் மெய்கண்டாரும் தமிழிலக்கியப் புலமை உடையவர்கள். குறிப்பாக, சைவ இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தனர். வெள்ளை வாரணனாரின் இளமைக்காலம் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற காலம். ஆங்கில மொழியின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. வித்துவான் தேர்வில்கூட வடமொழித் தாள்களை எழுதி வெற்றிபெற வேண்டிய நிலை இருந்தது. அத்தகைய சூழ்நிலையிலும் வெள்ளைவாரணனார் தமிழையும் தமிழிசையையும் கற்க விரும்பித் தம்மைத் தமிழில் ஆட்படுத்திக் கொண்டார். வெள்ளைவாரணனார் தொடக்கக் கல்வியைத் திருநாகேச்சரத்தில் பயின்றார். அப்பள்ளியில் மூன்றாம் வகுப்புவரை கல்வி பயின்றார். 1928-ஆம் ஆண்டு திருநாகேச்சரத்தில் அருள்மிகு நாகநாத சுவாமிகள் ஆலயத்திற்கு வருகை புரிந்தவர், அரிமழம் அ.அரு. அண்ணாமலைச் செட்டியார். ஆலயத்திற்கு வந்தவர் வெள்ளை வாரணனாரின் இல்லத்தில் தங்கினார். இவரின் வருகை வெள்ளைவாரணனாரின் வாழ்க்கை வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தது. இறைஈடுபாடு, ஒழுக்கம் இவற்றால் கவரப்பெற்ற வெள்ளைவாரணனாரைத் திருப்பெருந்துறையிலுள்ள தேவாரப் பாடசாலையில் சேர்த்தார். அங்கு இவருக்கு ஆசிரியராய் இருந்தவர் காஞ்சிபுரம் பூசை நமச்சிவாய முதலியார். அங்கு தமிழிலக்கியம், இசைப்பயிற்சி போன்ற வற்றைக் கற்று வந்தார். 1930-ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து கல்வி பயின்றார். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவ ராய் இருந்தவர். அறிஞர் கா. சுப்பிரமணியப் பிள்ளை. 1931 முதல் 1933 வரை விபுலாநந்தரும் 1933 முதல் 1938 வரை நாவலர் சோமசுந்தர பாரதியாரும் தமிழ்த்துறைத் தலைவர்களாக விளங்கினார். ச.சோ. பாரதியின் உற்ற மாணவராக வெள்ளை வாரணனார் திகழ்ந்தார். இவர்தம் பேராசிரியர்களாக இருந்தவர்களில் பொன்னோதுவார் மூர்த்திகள், சர்க்கரை இராமசாமிப்புலவர், ஆர். கந்த சாமியார், தி.பொ. பழநியப்பப் பிள்ளை, இரா. இராக வையங்கார் ந.மு. வேங்கடசாமி நாட்டார். இரா.பி. சேதுப் பிள்ளை போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களின் புலமையும் ஆற்றலும் இவர்தம் வளர்ச்சிக்கு வழியமைத்துக் கொடுத்தன எனலாம். 1935-ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக ஐந்தாண்டுகள் கல்வி பயின்று வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம் என்ற ஒப்பீட்டு நூலை 1935-1937 ஆகிய இரண்டு ஆண்டுகளில் எழுதி முடித்தார். இந்நூல் (The Journal of Annamalai University) என்ற இதழில் 1941 முதல் தொடர்ந்து வெளியிடப் பட்டது. பின்னர் 1962-இல் நூல் வடிவம் பெற்றது. 1938-ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா நடைபெற்றது. அதன் தலைவராக இருந்தவர் த.வே. உமா மகேசுவரனார். விழாவிற்குத் தலைமை தாங்கியவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் சுவாமிகள். ச.சோ. பாரதியின் சொல்லுக் கிணங்க க.வெள்ளைவாரணனார் கலந்து கொண்டு தொண்டாற்றினார். பின்னர் தலைவரால் ஈர்க்கப்பட்டார். கரந்தைத் தமிழ்ச் சங்க கல்லூரிக்கு 30-6-1938 அன்று ச.சோ. பாரதியின் பரிந்துரையினால் வெள்ளை வாரணனார் விரிவுரையாளராக நியமனம் செய்யப் பட்டார். 1943 வரையில் அக்கல்லூரியில் பணிபுரிந்தார். 1939 ஆம் ஆண்டு வெள்ளைவாரணனாரின் திருமணம்; செங்கல்பட்டு மாவட்டம் மானாம்பதி என்ற ஊரைச் சேர்ந்த ம.அ. கனகசபை முதலியாரின் இரண்டாம் மகள் பொற்றடங் கண்ணியை, சனவரித் திங்களில் திருமணம் செய்து கொண்டார். இந்தி எதிர்ப்பு நூல் இயற்றுதல்; அப்போதைய தமிழக முதல்வராக இருந்தவர் இராசகோபாலச்சாரியார், அரசுப் பள்ளிகளில் இந்தி மொழியைக் கட்டாய பாடமாக்கினார். அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் வெள்ளை வாரணனார் கலந்து கொண்டார். தம் எதிர்ப்பினை, காக்கை விடு தூது என்னும் பெயரில் நூல் இயற்றி அரசுக்கு அனுப்பி வைத்தார். அந்நூலைப் பாந்தளுர் வெண்கோழியார் என்ற புனைப் பெயரில் விடுத்துப் பெரும் பரபரப்பை உண்டு பண்ணினார். அந்நூலைத் தமிழ்ப் பொழில், விடுதலை, திராவிடநாடு ஆகிய இதழ்கள் வெளியிட்டுச் சிறப்பித்தன. 1943 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளர் பணிக்கு அமர்த்தப்படுதல். 1944 ஆம் ஆண்டு தூத்துக்குடி சைவ சித்தாந்தசபை, வெள்ளை வாரணனாருக்கு `சித்தாந்தச் செம்மல் பட்டம் வழங்கி மகிழ்தல். 1947 ஆம் ஆண்டு விபுலாநந்த சுவாமிகள் இயற்றிய யாழ் நூலுக்கு, வெள்ளைவாரணனார் சிறப்புப்பாயிரம் இயற்றி அளித்தது. 1948 ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் எழுதிய `சங்க காலத் தமிழ் மக்கள் என்னும் நூலை, சென்னை `நேஷனல் பப்ளிஷிங் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் வெளியிடப் பட்டது. 1952 ஆம் ஆண்டு பொற்றடங்கண்ணிக்குப் பெண்குழந்தை பிறப்பு. வெள்ளைவாரணனார் `மங்கையர்க்கரசி எனப் பெயர் சூட்டி மகிழ்தல். இவர் எழுதிய `குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி என்னும் நூல் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது. இந்நூல் சொற்பொழிவு நூல். 1954 ஆம் ஆண்டு அரபத்த நாவலர் இயற்றிய பரதசங்கிரகம் என்ற நாட்டிய நூலை வெள்ளைவாரணனார் பதிப்பாசிரியராக இருந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாக வெளியிட்டுள்ளார். 1957 ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் எழுதிய `தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் என்ற நூலை, அண்ணா மலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெறுதல். `தொல்காப்பியம் நன்னூல் எழுத்ததிகாரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டுச் சிறப்பித்தது. 1963 ஆம் ஆண்டு வெள்ளைவாரணனார் இயற்றிய `தேவார அருள்முறைத் திரட்டு உரை நூல், வாழ்மங்கலம் அ. மலைப் பெருமாள் முதலியார் மணிவிழா மலர் வெளியீடாக வெளியிடப் பட்டது. 1970 ஆம் ஆண்டு இவரின் `சேக்கிழார் நூல்நயம் என்னும் சொற்பொழிவு நூலைப் பெரிய புராணச் சொற்பொழிவு நூலாகக் கழகம் வெளியிட்டுள்ளது. திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் இவருக்கு `தமிழ்ப் பெரும்புலவர் என்ற பட்டத்தை வழங்கியது. `அற்புதத் திருவந்தாதியுரை என்னும் நூல் ஒரத்தூர் குஞ்சித பாதம்பிள்ளை அவர்களின் மணிவிழா மலராக வெளியிடப் பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீனம் `திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் என்ற பட்டம் வழங்கியது. தொல்காப்பியம் நன்னூல் சொல்லதிகாரம் நூல் வெளியிடப் பட்டது. (சொந்த வெளியீடு). 1972 ஆம் ஆண்டு மகளின் திருமணம். மருமகன் சென்னை சொ. முருகேசனாரின் மகன் திருநாவுக்கரசு. இவர் மருத்துவத் துறையில் பட்டம் பெற்றவர். பன்னிரு திருமுறை வரலாறு முதற்பகுதியை அண்ணா மலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. 1973 ஆம் ஆண்டுத் `திருமந்திர அருள் முறைத்திரட்டு என்னும் நூல் தில்லைத் தமிழ் மன்றம் வெளியிட்டுள்ளது. இவர் இயற்றிய `பன்னிரு திருமுறை வரலாறு இரண்டாம் பகுதிக்கு, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் முதல் பரிசு வழங்கியது. (7-4-73) 1976 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சொருணாம்பாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்த்துதல். பொருள் : `சிவஞான முனிவர். 1977 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர், இந்திய மொழிப்புல முதன்மையர் பதவி உயர்வு. 1979 வரை இப்பதவியில் இருந்தார். (ஓய்வு பெற்ற பின்பும்). 1979 ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் சிறப்பு நிலைப் பேராசிரியராக அமர்த்தப்படுதல். இப்பதவியில் இருந்தபோதுதான் தொல்காப்பியம் பொருளதிகாரம் உரைவளப் பதிப்புகளை எழுதினார். 1982 வரையில் இங்கு பணிபுரிந்தார். இவரின் `இசைத் தமிழ் நூலை இராமகிருஷ்ணா வித்தியா சாலை நிர்வாகக்குழு வெளியிட்டது. 1981 ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப் பட்டது. முதல் துணைவேந்தராக வ.அய். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். க. வெள்ளைவாரணனாரின் புலமையை நன்கு அறிந்தவர். அதனால் அவரை, தமிழ்ப் பல்கலையில் வந்து பணியாற்றும்படி அழைப்பு விடுத்தார். 1982 ஆம் ஆண்டு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியத் துறையில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றினார். துறைத்தலைவராகவும், நிகழ்நிலைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அங்கு சங்க இலக்கியப் பொருளடைவு என்ற தொகுதிகள் இவர் பொறுப்பில் முதலில் உருவாயின. சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்ற நூலையும் எழுதினார். `திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் - விளக்கவுரை என்ற நூல் காசியில் நடைபெற்ற சைவ சித்தாந்த மகாசமாசத்தின் 76ஆம் ஆண்டு விழாவில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தால் வெளியிடப் பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு தமிழக ஓதுவார் சங்கம் `சங்கநூல் பெரும் புலமைச் சான்றோர் என்ற பட்டம் அளித்துள்ளது. (30-1-83) தொல்காப்பியம் - பொருளதிகாரம் - புறத்திணையியல் உரைவளம்; நூல்கள் மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தொல். பொருள். களவியல், தொல். பொருள். கற்பியல், தொல். பொருள். பொருளியல் உரைவள நூல்கள் வெளியிடப் பட்டன. 1984 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடம் `திருமறை உரைமணி என்ற பட்டத்தை அளித்தது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் `செந்தமிழ்ச் சான்றோர் பட்டத்தை அளித்துள்ளது. 1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் `கலைமாமணி விருது வழங்கியது. (26-1-85). தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உவமையியல் உரை வளம் வெளியிடப்பட்டது. (மதுரை காமராசர் பல்கலைக் கழகம்) சு. சாமிஐயா உரை எழுதிப் பதிப்பித்த நூல் மங்கையர்க் கரசி வெண்பா. இந்நூலுக்கு அணிந்துரை அளித்தது. (நவம்பர் திங்கள்). 1987 ஆம் ஆண்டு காக்கை விடு தூது தனி நூலாக, சொந்த வெளியீடாக வெளியிட்டது. தில்லைக்கோயிலில் திருமுறை ஓதவேண்டும் என்று முழக்க மிட்ட வ.சுப. மாணிக்கத்துடன் தோளோடு தோள் நின்று போராடினார். `தில்லைப் பெருங்கோயில் வரலாறு என்னும் நூல் தில்லைத் தமிழ் மன்றம் வெளியிட்டது. நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவுச் சொற்பொழிவினை நிகழ்த்துதல், இடம்; தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், பொருள் தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு (6-7-87). 1988 ஆம் ஆண்டு வெள்ளைவாரணனாரின் `திருவருட்பாச் சிந்தனை என்ற நூலுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது. (16-1-88). சென்னை சிவநேயர் பேரவை `சிவக்கவிமணி பட்டம் அளித்துள்ளது. (15-5-88). வெள்ளைவாரணனார் 13-6-88 இல் இயற்கை எய்தினார். 1989ஆம் ஆண்டு மறைவுக்குப் பின்னர் நிகழ்ந்தவை: மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம் `தமிழ்ப் பேரவைச் செம்மல் பட்டம் அளித்தது. (5-7-89). தொல்காப்பியம் - பொருளதிகாரம் - செய்யுளியல் உரைவளம் வெளியிட்டது. (மதுரைப் பல்கலைக்கழகம்). 1994ஆம் ஆண்டு தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் உரைவள நூல் வெளியிட்டது. (மதுரைப் பல்கலைக் கழகம்.) பொருளடக்கம் முன்னுரை 1 தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் 12 நன்னூற் சிறப்புப்பாயிரம் 14 தொல்காப்பியம் - நன்னூல் 17 1. நூன்மரபு 20 2. மொழிமரபு 60 3. போலி 82 4. குற்றியலுகரப் புணரியல் 241 தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் முன்னுரை இயற்றமிழ் இலக்கணமாகிய தொல்காப்பியமும் அதனை யடிப்படையாக வைத்துக் கொண்டு அதன் வழி நூலாகச் செய்யப்பட்ட நன்னூலுமாகிய இவ்விரு நூலானும் சொல்லப் பட்ட எழுத்திலக்கணத் தொடர்பாகவுள்ள ஒற்றுமை வேற்றுமை களைக் கருதியது இவ்வுரை நூலாகும். தமிழ்நாட்டின் தென்பகுதிக்கண்ணதும் புறநானூற்றில் முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி என நெடியோ னென்ற பாண்டியனுக்கு உரிமையாக்கிக் கூறப்பட்டதுமாகிய பஃறுளி யாற்றினையும் அதனையடுத்துப் பலமலையடுக்களாற் றொடர்ந்த குமரிமலையினையும் தென்பாற்கண்ணதாகிய கடல், மேலூர்ந் தழிக்க, அக்காலத்து அந்நாட்டையாண்ட, பாண்டியன் தன் தென்னாடிழந்த பஃறுளியாற்றிற்கும் குமரிமலைக்கும் ஈடாக, வட நாட்டின் பகுதியாகிய கங்கையாற்றினையும் இமயமலை யினையும் வென்று, தன்னாட்டுக் குடிகள் வாழத் தந்து அதனால் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்ற சிறப்புப் பெயர் பெற்றான். இச்செய்தி, வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையு மிமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் (காடுகாண் - 18-22) எனவரும் சிலப்பதிகார அடிகளாலும், மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வின்னீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (முல்லைக்கலி 4) எனவரும் கலித்தொகையாலுந் துணியப் படுகின்றது. மேற்குறித்த சிறப்புப் பெயர்பெற்ற நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தே அதங்கோட்டாசிரியர் முன்னிலை யில் ஆசிரியர் தொல்காப்பியனார் தம்மாற் செய்யப்பட்டுத் தம் பெயராலேயே அமைந்த இத் தொல்காப்பியமென்னும் நூலைக் குற்றமறக் கூறினாரென அவரோடு ஒருங்கு கற்ற பனம்பாரனார் செய்த பாயிரங்கூறலால், தொல்காப்பியனாரும் அக்காலத்தவ ரென்பதும், பஃறுளியாற்றையும் குமரிமலையையும் கடல் கொண்ட பின்னரே இந்நூலைச் செய்தருளினாரென்பதும் நன்கு விளங்கும். இந்நூலாசிரியர் அகத்தியனாரின் மாணவர் பன்னிருவருள் முதன்மை பெற்றவரென்பதும், அவராற் செய்யப்பட்ட அகத்தியமென்னும் நூலினை நன்குணர்ந்தவ ரென்பதும் இவர் தமக்கு வழங்கிய பெயர் தொல்காப்பியன் என்பதும், வீங்கு கடலுடுத்த வியன்கண் ஞாலத்துத் தாங்கா நல்லிசைத் தமிழ்க்கு விளக்காகென வானோரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆனாப் பெருமை யகத்திய னென்னும் அருந்தவ முதல்வ னாக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப வுணர்ந்தோர் நல்லிசை நிறுத்த தொல்காப்பியன் எனவரும் பன்னிருபடலப் பாயிரத்தானும், மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன் முதற் பன்னிரு புலவரும். எனவரும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரத்தானும் புலனாதல் காணலாம். இவர்க்கு வழங்குந் தொல்காப்பியரென்னும் பெயர், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் எனப் பண்டைத் தமிழ்ப் புலவர்க்கு வழங்கும் குடிவகை குறிக்கும் பெயர்போலப் பழமையான காப்பியக்குடியிற் பிறந்தவர் என்பதுபட வழங்கிய தாகலாம். இவரைக் காவிய கோத்திரத்தவரெனக் கொண்டு சமதக்கினியின் புதல்வரான பரசுராமரின் உடன்பிறப் பாளரென ஒரு சிலர் கூறுதற்குப் பொருந்திய ஆதரவு கிடைக்க வில்லை. வடக்கே வேங்கடமலைக்கும் தெற்கே குமரியாற்றிற்கும் இடைப்பட்ட தமிழ்மொழி வழங்கும் நாட்டின் கண்ணே பயிலப் பெறும் உலக வழக்கையுஞ் செய்யுள் வழக்கையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றோடு (அகத்தியர் முதலியோராற் செய்யப்பட்ட) முந்திய நூலினையும் கண்டு எழுத்திலக்கணத்தினையும் சொல்லிலக் கணத்தினையும், பொரு ளிலக்கணத்தினையும் ஆராய்ந்து இவற்றின் இலக்கணங்களை ஆசிரியர் தொல்காப்பியனார் தொகுத்துக் கூறினாரென இந்நூற் பாயிரங்கூறுகின்றது. எனவே தொல்காப்பிய மென்னும் இந்நூல் தமிழ் நாட்டின் உலக வழக்கையுஞ் செய்யுள் வழக்கையும் தமிழ்த் தொன்னூல்களையும் செய்யப்பெற்ற தனித் தமிழ் இயல் நூலென்பது போதரும். இடைச் சங்க காலத்துப் பாண்டியர் தலைநகர் கபாடபுரம் என்றும், அக்காலத்தவர்க்கு இலக்கண நூல் தொல் காப்பிய மென்றும் இறையனார் களவியலுரை கூறுகின்றது. வடமொழி யில் ஆதி கவியாகிய வான்மீகியார் இராமாயண காலத்திலே பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தே பாண்டியர் தலைநகர் இருந்ததாகக் குறித்தவர், அதனைக் கபாடம் என்ற சொல்லால் அறிவித்துப் போதலின், மேற்காட்டிய இறையனார் களவிய லுரைகாரர் கூற்று மெய்ப்பிக்கப்படுகின்றது. எனவே இடைச்சங்க காலத்தார்க்கு இலக்கணமாகிய இந்நூல் இராமா யண காலத்திற்குச் சிறிது முன்னரோ ஒத்த காலத்திலேயோ இயற்றப்பட்டிருத்தல் வேண்டுமென்பது நன்கு புலனாகும். இந்நூலாசிரியர் `ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் எனப் புகழப்படுதலால் வடமொழியின் ஆதியிலக்கணமாக இந்திர னாற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணத்தை யுணர்ந்து வடமொழி யினும் வல்லராயினாரெனக் கூறுவர். ஆசிரியர் நூல் செய்கின்ற காலத்து வடநாட்டாருள் ஒருசிலர் தமிழ்நாட்டிற் குடியேறினரென்பதும், ஆதலால் வடமொழி யினின்றும் ஒரு சில சொற்கள் தமிழ் மொழியிற் கலந்தனவென்பதும், இந்நூலில் வரும் ஒருசில வடசொல்லாட்சி கொண்டும் வடமொழிச் சொற்கள் தமிழ் ஒலிக்கேற்பத் தமிழில் வந்து வழங்குதற்கெனச் சொல்லதிகாரத்தில் இந்நூலாசிரியர் கூறிய விதிகொண்டும் துணியப்படும். அவ்வாறே தமிழ் மொழிச் சொற்களுள்ளும் முத்து, மணி, ஆணி என்றற் றொடக்கத்துச் சொற்கள் பல பண்டைய வடமொழியிற் கலந்தனவென்பர் மொழி நூலாராய்ச்சியாளர். இங்ஙனந் தமிழர் ஆரியர் கலப்பால் இவ்விருமொழிச் சொற்களும் மயங்கிவரப் பெறினும், வடமொழியினின்றுந் தமிழ்மொழியி லெடுத்தாளற்குரிய சொற்கள், ஆரிய மொழிக்கேயுரிய சிறப் பெழுத்தின் நீங்கி, இருமொழிக்கும் உரிய பொதுவெழுத்தான் இயன்றனவே யென்பதனையும் வடமொழிக்கே உரிய சிறப் பெழுத்தானாய சொற்கள் சிதைந்து தமிழொலிக்கு இயையத் திரிந்து வருமாயின் அவையும் விலக்கப்படாவென்பதனையும், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே சிதைந்தன வரினு மியைந்தன வரையார் (தொல்-எச்சவியல், 5,6) என்ற சூத்திரங்களாற் குறிப்பிட்டார் ஆசிரியர் தொல் காப்பியனார். தொல்காப்பியமென்னும் இந்நூலைச் சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்றுறுப்பினையும் அடக்கிய பிண்டமாக ஆசிரியர் கொண்டுரைக்கின்றார். இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டு ஒவ்வோரதிகாரமும் ஒன்பதொன்பதியல்களாற் பிரித்துரைக்கப் படுகின்றது. இந்நூல் முழுவதற்கும் முதன் முதல் உரை செய்தவர் உரையாசிரியரெனப் புகழப்படும் இளம்பூரணர் ஆவர். இவருரையைத் தழுவி, வேறுபடுமிடங்களிற் புத்துரை கூறிச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர், கல்லாடர், தெய்வச் சிலையார் என்னும் மூவரும் வேறு வேறு உரை செய்துள்ளார். ஆசிரியர் நச்சினார்க்கினியர் இவ் விளம்பூரணருரையைத் தழுவி இந்நூன் முழுவதற்கும் உரை செய்துள்ளார். பேராசிரியர் சொல்லதி காரத்திற்கும், பொருளதிகாரத்தில் மெய்ப்பாடு, உவமம், செய்யுள், மரபு ஆகிய நான்கியலுக்கும் உரை செய்தன ரென்பர். இவற்றுள் சொல்லதிகாரத்திற்கு இவர் எழுதியவுரை கிடைக்கவில்லை. தொல்காப்பியனாராற் செய்யப்பட்ட இந்நூலின் இலக் கணங்கள் பலபடப்பரந்து கிடத்தலான் பிற்காலத்தில் மாணாக் கரானும் பிறரானும் பயிலப்படாது போகவே தமிழிலக்கண விதிகளை யாவரும் அறிதலியலாதாயிற்று. கி.பி. 1178 முதல் 1216 வரை யரசாண்ட மூன்றாங் குலோத்துங்க சோழன் காலத்தவனான அமராபரணன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற சீயகங்கனென்னும் அரசன் சனகாபுரததுச் சன்மதி முனிவரின் புதல்வராகிய பவணந்தியாரை நோக்கித், தொல்காப்பியத்திற் கூறப்பட்டுப் பரந்துகிடந்த ஐந்திலக்கண விதிகளை யாவரும் வருத்தமின்றி அறிந்துகொள்ளும்படி தொகைவகைவிரியாற் சுருக்கி ஓர் இலக்கண நூலாகச் செய்து தரும்படி வேண்டினன் என்பதும், அவ்வாறே அவன் வேண்டுகோள் கொண்டு பவணந்தியாரும் முன்னோர் நூலின் வழியே நன்னூல் என்ற பெயரால் நன்னூலாகிய இந் நூலைச் செய்தளித்தனரென்பதும், சொல்காப்பியத்தின் குணதோடந் தேர்ந்து சொலுவதற்குத் தொல்காப் பியங்கற்க நீண்ட ததனைச் சுருக்கியிசை ஒல்காப் பெரும்பவ ணந்தீயென் றோதி யுபகரித்த வல்காவலன் சீய கங்கனுந் தான்கொங்கு மண்டலமே. என்ற கொங்கு மண்டல சதகத்தாலும், `மலர் தலையுலகில் என்று தொடங்கும் இந்நூற்பாயிரத்தானும் புலனாம். எனவே பவணந் தியாராற் செய்யப்பட்ட நன்னூல் என்னும் இலக்கண நூல் தொல்காப்பியத்தின் வழிநூலாதல் பெறப்படும். நன்னூலுக்கு முதன் முதல் உரை செய்தவரான மயிலை நாதர், பழையனகழிதலும் எனவரும் அந்நூற் புறனடைச் சூத்திரத்திற்கு இந்நூலிற்சொன்ன ஐந்ததிகாரத்திற்கும் சிங்க நோக்காய் நிற்பதொரு புறனடை யுணர்த்துதல் நுதலிற்று..... இவ்வாறு மேல்வரும் அதிகாரங் களிலும் கண்டு கொள்க எனக் கருத்துரை கூறுதலானும், நுதலியபொருள் அரும்பொருளைந் தென உணர்த்தினமையின் இந்நூலிற் கூறிய பொருள் யாப்பு அணி என்னும் மூன்றதிகாரங்களும் அக்காலத்துள்ளன போலும் எனச் சங்கர நமச்சிவாயர் தங்கருத்தை வெளியிடுதலானும், `தமிழ் நன்னூற்றுறைக ளஞ்சுக் கிலக்கியம் எனவரும் பெரிய திருமொழித் தனியனுக்கு தமிழுக்கு எழுத்து முதலான அஞ்சு லக்ஷணத்தையும் வெளியிடுவதான நன்னூலென்று ஒரு சாத்திரம் உண்டு என அதன் உரையாசிரியரான ஸ்ரீ பிள்ளை லோகாரிய சீயர் உரை கூறிப்போதலானும், இந்நன்னூல் ஐந்ததி காரங்களையும் உடையதாகவே செய்யப்பட்டிருத்தல் வேண்டு மென்பது அறியப்படும். இவ்வாறன்றி, ஆசிரியர் தொல்காப்பியனார் போலப் பவணந்தியாரும் தம் நூலை எழுத்து, சொல், பொருள் என மூன்றதிகாரமாகக் கொண்டு, மூன்று கடவுளராயு முள்ளோன் அருகதேவனே யென்னுந் தம் சமயக் கொள்கைக்கேற்ப அம் மூன்றதிகாரத்தின் முன்னரும் அம்மூவர்க்கும் வணக்கங் கூறினரெனச் சமணர் சிலர் கூறுவர். இவ்விரு கொள்கைகளுள் அதிகார வேறுபாடிருப்பினும் நன்னூல் ஐந்திலக்கணத்தையு முணர்த்த வெழுந்த தென்பதில் ஐயமில்லை. எனினும் பிற்காலத்து இந்நூலின் எழுத்ததிகாரம் சொல்லதிகாரமாகிய இரண்டதிகாரந் தவிர ஏனைய பகுதி காணப்படாமையின் அது கொண்டு இந்நூலைச் சிற்றதிகார மென்று பின்னுள்ளார் வழங்குவாராயினர். உரியியலிற் பிங்கலமுதலா நல்லோர் உரிச் சொலியைந்தனர் கொளலே என உரிச்சொற்களின் விரிவைப் பிங்கல நூலிற் கண்டு கொள்கவென விதித்தலால் இவ்வாசிரியர் பிங்கலநூலார் காலத்திற்குப் பிற்பட்டவராதல் வேண்டும் பைங்கண், பைந்தார், காரா, சேதா என்றாற்போலும் பண்புத்தொகையாகிய சொற்களைப் பசுமை, கருமை, செம்மையெனப் பண்புப்பெயராக நிறுத்தி, ஈற்றுயிர் மெய்யும் ஈற்றயலுயிருங் கெட்டு வருமொழிக்கேற்ப ஒற்றுத்திரிந்துந் திரியாதும் ஆதி நின்ற அகரம் ஐகாரமாயுந் திரிந்தனவென்றும், ஈற்று உயிர் மெய்யும் ஈற்றயலுயிருங்கெட்டு ஆதி நீண்டதென்றும் ஈற்றுயிர்மெய்யும் இடையிலொற்றுங் கெட்டு ஆதி நீண்ட தென்றும் பின்னுள்ளோர் சந்தி முடிக்கின்றது பொருந்தாது என நச்சினார்க்கினியர் கூறியதனை ஈறு போதல் இடையுகர மிய்யாதல் எனவரும் இந்நூற் சூத்திரத்தின் மறுப்பாகக் கொண்டு, பவணந்தியார் நச்சினார்க்கினியர் காலத்திற்குச் சிறிது முற்பட்ட வராதல் வேண்டுமென மகாமகோபாத்தியாய ஐயரவர்கள் குறித்துள்ளார்கள். இறையனா ரகப்பொருட் பாயிரத்திலும் தொல்காப்பியப் பாயிரவுரைகள் முதலியவற்றிலும் சூத்திரங்களாகவும் உரை நடைகளாகவும் வருவனவே நன்னூலிற் பொதுப்பாயிரப் பகுதியாக எடுத்தாளப்பட்டிருத்தல் வேண்டுமென்பர் அறிஞர். மயிலைநாதர், தொல்காப்பிய உரையாசிரியர்களைப் போலவே இந்நூற் சிறப்புப் பாயிரத்திற்கும் அதனுரைக்கும் இடையே பொதுப்பாயிரப் பகுதியை அமைத்திருத்தலானும், இப்பாயிரத் தின் சூத்திரத்தொகை நன்னூற் சூத்திரத் தொகைகளைக் குறிப்பிடும் இரண்டு வெண்பாக் களிலும் சேர்க்கப்படா மையானும் இக்கொள்கை வலியுறுகின்றது. பவணந்தியார் தாம் செய்யும் நூலுள் முன்னோர் மொழி பொருளேயன்றி யவர்மொழியும் பொன்னே போற் போற்றுவம் என்பதற்கேற்பத் தொல்காப்பியம் முதலிய பழைய நூற் சூத்திரங்களைத் தானெடுத்து மொழிதலாகக் கொண்டு கூறியுள்ளார். இவராற் செய்யப்பட்ட நன்னூல் பெரும்பாலும் தொல்காப்பியத்தையே அடியொற்றிச் சேறலின் அதன் வழிநூலெனக் கொள்ளுதற் கேற்புடைய தாகும். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாராற் செய்யப்பட்ட நூலை முதனூலாக வைத்துக் கொண்டு, அதனுட் கூறிய பொருள் முடிபு முழுவதும் ஒத்துமுடியப் பவணந்தியார் பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல காலவகையினானே எனத் தாம் கூறியதற் கேற்ப ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்து வழங்கிப் பிற்காலத்து வழக்கு வீழ்ந்தனவற்றை `இறந்தது விலக்கலென்ற உத்தியால் விலக்கியும், அவர் காலத்து வழங்காது தம் காலத்துப் புதுவதாக வந்து வழங்குவதனை `எதிரது போற்றல் என்னும் உத்தியால் தழுவியும் மரபு நிலை திரியா வேறுபாட்டுடன் இந்நன்னூலைச் செய்துள்ளார். இங்ஙனந் திரிபு வேறுடைத்தாக இவராற் செய்யப் பட்ட நன்னூலும் தொல்காப்பியத்தோடு பொருளான் ஒருங்கு ஒத்தலின் வழி நூலென்றதற் கேற்புடைய தாகுமென்ப. மரபுநிலை திரியாவாறு தொல்காப்பியத்தின் வேறாக இவர் கூறிய திரிபினை, திரிபுடையவாயினும் மரபுநிலை திரியாதன யாவை யெனின்:- செய்யுளியலுள் கூறிய ஒற்றளபெடையை அளபெடை யதிகாரப்பட்டமை நோக்கி உயிரளபெடையைச் சாரவைத்துக் கூறுதலும், தனிநிலை, முதனிலை, இடைநிலை, ஈறு எனும் நால் வகையிடத்தை மூன்றிடமென அடக்குதலும், `மெல்லெழுத்து மிகுதலாவயினான என்றவாறே, தங்கை நங்கை எங்கை, செவி தலை, புறம் என மகாரங்கெட்டு இனமெல்லெழுத்து மிகுமென்னாது, மகரமே இனமெல் லெழுத்தாகத் திரியுமென்றலும், `அகமென் கிளவிக்குக் கைமுன்வரினே, முதனிலையொழிய முன்னவை கெட்டு மெல்லெழுத்து மிகுமென்னாது அங்கை யென்புழிக் ககரவகரங்கெட்டு மகரந்திரிந்து முடியுமென்றலும், முதலீரெண்ணி னொற்று ரகரமாகும் இடைநிலை ரகர மிரண்டெ னெண்ணிற்கு, நடைமருங்கின்று என்றவாறே கூறாது இரண்டனொற்றுயிரேக நின்ற ரகரவொற்றின்மேல் உகரம் வந்து செய்கைப் பட்டு முடியுமென்றலும், நாகியாதென யகரம் வருவழி உகரங்கெட்டு இகரந்தோன்றுமென்னாது உகரமே இகர மாய்த்திரியுமென்றலும், நெடுமுதல்குறுகும் மொழிகளின் முன் பொதுப்பட ஆறனுருபிற்கும் நான்கனுருபிற்கும் அகரம் நிலையுமெனக்கூறி ஆறனுருபின் அகரக்கிளவி ஈறாககர முனைக் கெடுதல் வேண்டும் என்னாது குவ்வின் அவ்வரும் என்றொழி தலும், ஆடிக்குக் கொண்டானென் புழி இக்குச்சாரியையென் னாது குச்சாரியை யென்றலும், வற்றுச் சாரியை வகரங்கெட்டு அற்றென நிற்குமென்னாது அற்றுச்சாரியை யென்றேகோடலும், இன்னென் சாரியை இற்றெனத் திரியு மென்னாது இற்றென்பது வேறு சாரியையெனக் கோடலும், அக்கென் சாரியை மெய்ம்மிசையொடுங் கெடும் என்னாது அகரச்சாரியையெனக் கோடலும், அ ஆ வ என மூன்றும் பலவறி சொல்லென்னாது உண்குவ, உறங்குவ என்புழி வகரத்தை வேறு பிரித்து இடை நிலையெனக் கொண்டு அகரவிகுதி யென்றொழிதலும்..... இன்னோன்னவை பிறவுமாம் என ஆசிரியர் சிவஞான சுவாமிகள் பாயிர விருத்தியின் கண் எடுத்துக்காட்டி யுள்ளார். மேல் எடுத்துக் காட்டிய வற்றுள் உண்குவ உறங்குவ என்புழி வகரத்தை வேறுபிரித்து அகரவிகுதியெனக் கொண்டது, நன்னூல் சொல்லதிகாரப் பகுதியின் கண்ணதாகும். ஒழிந்த திரிபெல்லாம் எழுத்ததிகாரத்துள் நன்னூலா சிரியரால் திரித்துக் காட்டிய பகுதிகளாகும். இங்ஙனந் தொல்காப்பியத்தின் முடிபுகள் மாறுபடாவாறு திரிபு கூறிய பவணந்தியார், சிலவிடத்துத் தாம் செய்யும் நூல் தொல்காப்பியத்திற்கு வழி நூலாதற்கு ஏலாவாறு மாறான சில விதிகளைத் தம் நூலிற் சேர்த்துரைத்துள்ளார் என்பதும் உற்றுணரத் தக்கது. இங்ஙனம் தொல்காப்பியத்தின் பொருண் முடிபு மாறுபட இவர் வழுவிக் கூறிய இடங்களைச் சிவஞான சுவாமிகள், இனிச் சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே எனவும், சார்ந்து வரினல்லது தமக்கியல்பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் எனவும் வரையறுத்தோதிய வாறே சார்பெழுத்து மூன்றென்னாது, சில உயிரெழுத்துக்களையும் மெய்யெழுத்துக் களையும் உடன் சேர்த்து எண்ணுதலும், தன்மைச் சொல்லை உயர் திணை யென்னாது விரவுத்திணை யெனச் சாதித்தலும் ....... இன்னுமிவை போல்வனவும் மரபுநிலை திரிதலின் வழிநூல் ஆதற்கு ஏலாவாய் இழுக்குப்படுமென்பது எனப் பாயிர விருத்தியுள் விளங்கக் கூறினார். செந்தமிழ் வழங்கும் தமிழ் நாட்டின் பகுதியாய பன்னிரு நிலத்தினுள்ளும் ஒரு பகுதியிலுள்ளார் குறித்த சிறப்புப் பொருளில் வழங்கும் சொற்கள், அவர் குறித்த அப்பொரு ளோடே தமிழ் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வந்து வழங்கு மாயின், அவை திசைச் சொற்களாம் என்பதனை, ஆசிரியர் தொல்காப்பியனார், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி. (சொல்.6) என்ற சூத்திரத்தால் விளக்கினார். இதன்கண் செந்தமிழ் என்பதற்குச் செந்தமிழ் மொழியெனப் பொருள் கொள்ளாது, செந்தமிழ் நாடு எனப்பொருள் கூறினர் உரையாசிரியர் பவணந்தி யாரும் அவர் கொள்கையினை ஏற்றுப் பன்னிரு நிலத்தின் வேறாகச் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒன்றுள்ள தென்று கொண்டு, செந்தமிழ் நிலத்தைச்சேர்ந்த பன்னிரண்டு (கொடுந்தமிழ்) நிலத்தின் கண்ணும் பதினெண் மொழிகளுள் தமிழொழிந்த ஏனைய மொழிகள் வழங்குகின்ற வேற்று நாட்டினும் உள்ளோர் குறிப்பினவாய்ச் செந்தமிழோர் குறிப்பினவன்றி அத்திசைகளினின்றும் செந்தமிழ் நிலத்து வந்து வழங்குவன திசைச் சொல்லென்பது பட, செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினிற் றமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (273) எனச் சூத்திரஞ் செய்துள்ளார். வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழ் நிலம் அனைத்தையும் தமிழ் கூறும் நல்லுலகம் எனப் பனம்பாரனார் கூறுதலானும், இந்நிலப்பகுதியுள் செந்தமிழ் நிலமெனத் தனியே ஒரு நாடு கொள்ளப்பட்டமை தொல்காப்பியர் காலத்து இன்றாகலானும், இவர்களால் பகுக்கப்பட்ட தென்பாண்டி முதலிய பன்னிரு நாடுகளும் செந்தமிழ் வழக்கினையே மேற்கொண்டன வென்பது, தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு - நன்றாய சீத மலாடு புன்னாடு செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிருநாட் டெண். என்ற பழைய வெண்பா வொன்றில் கூறிய செந்தமிழ் சேர் ஏதமில் பன்னிருநாடு என்ற தொடரால் விளங்குதலானும், இப் பாடலினும் செந்தமிழ் சேர் எனக் கூறப்பட்டதன்றிச் `செந்தமிழ் நிலஞ்சேர் எனக் கூறப்படாமையானும், செந்தமிழ் நாடெனத் தனியே ஒரு நாடிருந்த தென்பதும், அஃதொழிந்த ஏனைய பன்னிரு நாட்டுப் பகுதிகளும் கொடுந்தமிழ் நாடாம் என்பதும் பிற்காலத்தார் தம் பிழையுரையாதல் திண்ணம். அன்றியும் தென்பாண்டி நாடென்பது, தமிழ் நாட்டின் தென் பகுதியிலுள்ளதாக பாண்டிநாடு எனப் பொருள்படுமன்றிப் பாண்டி நாட்டின் தென் பகுதியெனப் பொருள் படாதாம். அங்ஙனம் பொருள்படுமெனின் வடபாண்டி நாடென அந்நாட்டின் வடபகுதி வழங்கப்படுதல் வேண்டுமென்க. தொல்காப்பியனார் நூல் செய்தற்கு முன்னர் எழுத்திலக் கணமும் மயங்கக் கூறிய நூல்கள் வழங்கியமுறை மாற்றி மக்கள் எழுத்துக்களின் தனித்த இயல்பினை யுணரவேண்டி ஆசிரியர் அதனை வேறோரதிகாரமாகக் கூறினாரென்றற்கு எழுத்துமுறை காட்டி என்றார் என நச்சினார்க்கினியர் பனம்பாரனார் பாயிரத்திற்குச் சிறப்புரை கூறுவர். எனவே தொல்காப்பியனார் எழுத்ததிகாரத்திற் சொல் முதலியவற்றின் இலக்கணங்கள் வந்து மயங்காதபடி எழுத்துக்களின் இயல்பொன்றையுமே கூறிச் செல்கின்றாரென்பது கூர்ந்து நோக்கத்தக்கது. இனி, தொல்காப்பிய வெழுத்ததிகார விதிகளும், அவற் றோடு ஒற்றுமையுடையனவும் மாறுபட்டனவுமாய் நன்னூ லெழுத்ததிகார விதிகளும் இயைத்துரைக்கப்படும். இதன்கண் தொல்காப்பியச் சூத்திரங்களெல்லாம் தமிழெண்களாலும், அவற்றின் பின்னரெடுத்துக் காட்டப்படும் நன்னூற் சூத்திரங்க ளெல்லாம் இக்காலத்துப் பழகும் ஆங்கில எண்களாலும் குறிப்பிடப்படும். தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடிச் செந்தமி ழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப் புலந்தொகுத் தோனே; போக்கறு பனுவல் நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து அறங்கறை நாவின் நான்மறை முற்றிய அதங்கோட் டாசாற்கு அரில்தபத் தெரிந்து மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப் பியன் எனத் தன்பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமை யோனே. குறிப்பு : பாயிரஞ் செய்வார் தன் ஆசிரியரும் தன்னோடு ஒருங்கு கற்ற ஒருசாலை மாணாக்கரும் தன் மாணாக்கரும் என இவர். அவருள் இந்நூற்குப் பாயிரஞ் செய்தார், தமக்கு (தொல்காப்பியனார்க்கு) ஒருசாலை மாணாக்கராகிய பனம் பாரனார். இதன் பொருள் : வடக்கின் கண் உளதாகிய வேங்கட மலைத்தொடரும் தெற்கின்கண் உளதாகிய குமரியாறும் ஆகிய அவற்றை எல்லையாகவுடைய இடமாகிய தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்கள் வாழும் தமிழ்நிலத்து வழங்கும் உலக வழக்கும் செய்யுள் வழக்குமாகிய அவ் இருகாரணத்தானும் எழுத் திலக்கணத்தினையும் சொல்லிலக்கணத்தினையும் பொருளிலக் கணத்தினையும் ஆராய்ந்து, செந்தமிழ் மொழியின் இயல்போடு பொருந்திய முன்னைத் தமிழகத்தில் தோன்றி வழங்கும் முந்து நூல்களிற்சொன்ன இலக்கணங்களைக்கண்டு, அவற்றை முறைப்பட ஆராய்ந்து அவ்விலக்கணங்களைத் தொகுத்து ஒரு நூலாகச் செய்தான்; அங்ஙனம் செய்த குற்றமற்ற நூலினை நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையின் கண்ணே, அறமே கூறும் நாவினால் நான்கு மறைகளையும் முற்றப்பயின்ற அதங் கோட்டாசான் என்னும் ஆசிரியனுக்குக் குற்றமறத்தெரிவித்து, முன்னை நூல்களிற்போல (இயலும் இசையும் நாடகமும் ஆகிய மூன்று தமிழும்) ஒன்றோடொன்று கலந்து மயங்காதபடி, இயற்றமிழை வேறு பிரித்து முறைப்பட அறிவித்து, கடல் சூழ்ந்த நிலவெல்லையிலே ஐந்திர வியாகரணத்தை முற்றவுணர்ந்த தொல்காப்பியன் எனத் தன்பெயரைத் தோற்றுவித்தலால் பல புகழையும் இவ்வுலகத்தில் நிலைபெறுத்தின தவவொழுக்கத் தினையுடையான் என்றவாறு. `வடவேங்கடந் தென்குமரி எனவே எல்லையும், `வழக்குஞ் செய்யுளும் ஆயிருமுதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி எனவே நுதலிய பொருளும் பயனும், `முந்து நூல் கண்டு எனவே வழியும், `முறைப்படஎண்ணி எனவே காரணமும், `பாண்டியன் அவையத்து எனவே காலமும் களனும், `அதங் கோட்டாசாற்கு அரில்தபத் தெரிந்து எனவே கேட்டோரும், `தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி எனவே ஆக்கியோன் பெயரும் நூற்பெரும், `புலம் தொகுத்தோன் எனவே நூலமைப்பாகிய யாப்பும் பெறப்பட்டன. இப்பாயிரம், தொல்காப்பியம் என்னும் ஒரு நூலுக்குரிய வரலாறாதலின், சிறப்புப்பாயிரம் ஆயிற்று. புலம் - இலக்கணம். போக்கு - குற்றம். பனுவல் - நூல். கரைதல் - சொல்லுதல். அதங்கோடு - ஊர்ப்பெயர். அரில் - குற்றம். தப - கெட. ஐந்திரம் - இந்திரனாற் செய்யப்பட்ட வடமொழியிலக்கண நூல்; பாணினீயத்திற்கு முற்பட்ட பழமையுடையது; படிமை - தவ வொழுக்கம். நன்னூற் சிறப்புப்பாயிரம் மலர்தலை யுலகின் மல்கிருள் அகல இலகொளி பரப்பி யாவையும் விளக்கும் பருதியின் ஒருதா னாகி முதலீ றொப்பள வாசை முனிவிகந் துயர்ந்த அற்புத மூர்த்திதன் அலர்தரு தன்மையின் மனவிருள் இரிய மாண்பொருள் முழுவதும் முனிவற அருளிய மூவறு மொழியுளும் குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனுநான் கெல்லையின் இருந்தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியிற் றருகெனத் துன்னார் இகலற நூறி இருநில முழுவதும் தனதெனக் கோலித் தன்மத வாரணம் திசைதொறும் நிறுவிய திறலுறு தொல்சீர்க் கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத் திருந்திய செங்கோற் சீய கங்கன் அருங்கலை விநோதன் அமரா பரணன் மொழிந்தன னாக, முன்னோர் நூலின் வழியே நன்னூற் பெயரின் வகுத்தனன் பொன்மதிற் சனகைச் சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பிற் பவணந்தி என்னு நாமத் திருந்தவத் தோனே. இதன் பொருள் : பரந்த இடத்தையுடைய பூமியின் கண் செறிந்த இருள் நீங்க, விளங்காநின்ற கதிரை விரித்து நிலம் நீர் முதலாகிய எல்லாப் பொருள்களையும் விளங்கக் காட்டும் சூரியனைப்போல, உலகிற்கெல்லாம் தான் ஒருவனேயாகி, பிறப்பும் இறப்பும் உவமையும் அளவும் விருப்பும் வெறுப்பும் ஆகிய அவற்றை இயல்பாகவே நீங்கி நிற்றலால் உயர்ந்த ஞானமே திரு மேனியாகவுடைய இறைவன், தனது விரிந்த கருணையாகிய தன்மையினாலே, உயிர்களின் மனத்திருளாகிய அறியாமைகெட, மாட்சிமைப்பட்ட அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கினையும் விருப்புடன் அருளிச் செய்த பதினெண்ணிலத்து மொழிகளுள்ளும் கிழக்கே கடலும், தெற்கே குமரித்துறையும், மேற்கே குடநாடும், வடக்கே வேங்கடமும் ஆகிய இந்நான்கெல்லையினையுமுடைய நிலத்தில் வழங்கும் மொழியாகிய பெரிய தமிழென்னும் கடலிலுள்ள எழுத்துச் சொற் பொருள் யாப்பு அணி என்னும் அருமை வாய்ந்த பொருள்கள் ஐந்தினையும் எல்லோரும் உணரும்படி தொகுத்தும் விரித்தும் இருதிறமும் பொருந்தத் தொகை விரியாக்கியும் விளங்கச் சொல்லுக என, பகைவரது பகைமைகெட அவரைத் துணித்துப் பெரிய நிலம் முழுவதையும் தன்னுடையதாகப் பற்றிக்கொண்டு தன் மதயானை களை எட்டுத் திசையிலும் திசைக்களிறுகள் போல் நிறுத்திய, தொன்றுதொட்டு நிலைபெற்றுவரும் புகழினையும் (பகைவரை வென்று கட்டிய) பெருமை வாய்ந்த வீரக்கழலினையும் (குடிகளின் கலிவெம்மை துரந்து நிழல் செய்யும்) வெண்கொற்றக் குடையினை யும் கைம்மாறு கருதாது மழைபோல் உதவும் வண்மை வாய்ந்த கையினையும் எக் காலத்தும் வளையாத செங் கோலினையும் உடைய சிங்கம் போல்வானாகிய கங்கன் என்பான், அரிய நூல்களை ஆராய்தலே பொழுது போக்காக உடையான், தன்மார்பகத்து விழுப் புண்படப் போர் செய்தலையே தனக்கு ஆபரணமாகக் கொண் டவன் கேட்டுக் கொண்டானாக, (அவனது வேண்டுகோட் கிணங்கித்) தொல்லாசிரியர்கள் இயற்றிய நூலின் வழியே நன்னூல் என்னும் பெயரினால் இந்நூலைச்செய்தான்; (அவன் யாரெனின்) பொன்மதிலாற் சூழப்பெற்ற சனகாபுரத்துள் இருக்கும் சொல்லுதற்கு அரியஞான ஒழுக்கச் சிறப்பினையும் பவணந்தி யென்னும் பெயரினையும் உடைய பெரிய தவத்தினை யுடையோன் என்பதாம். இதனுள், `பவணந்தி என ஆக்கியோன் பெயரும், `முன்னோர் நூலின் வழியென வழியும், `நான் கெல்லையின் என எல்லையும் ,`நன்னூல் என நூற்பெரும், `தொகை வகை விரியின் என நூல் யாய்பும், `அரும்பொருள் ஐந்து என நுதலிய பொருளும், `சீயகங்கன் தருக என மொழிந்தனன் எனக் கேட்போரும், `மாண்பொருள் முழுவதும் எனப்பயனும், சீயகங்கன் எனவே அவன் காலத்து இயற்றப்பெற்று அவனது அவைக்களத்திலே அரங்கேறியது எனக்காலமும் களமும், `யாவரும் உணர எனக் காரணமும் உணர்த்தியவாறு காண்க. தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் எழுத்ததிகாரம் என்பது எழுத்தினது அதிகாரத்தை யுடையதென அன்மொழித் தொகையாய் அப்படலத்திற்குக் காரணப்பெயராயிற்று. எழுத்தாவது கட்புலனாகாவுருவுங் கட்புலனாகிய வடிவுமுடைத்தாக வேறு வேறு வகுத்துக்கொண்டு தன்னையே யுணர்த்தியுஞ் சொற்கியைந்தும் நிற்கும் ஓசையாம். ஈண்டு எழுத்தென்றது அகரமுதல் னகரவிறுவாய்க்கிடந்த முப்பதும் குற்றியலிகரம் முதலிய மூன்றுமாம். இவற்றிற்கு எழுத்தென்னும் பெயர் எழுத்தெனப்படுப என்ற சூத்திரத்தால் எடுத்தாளப் பட்டது. இவ்வெழுத்தென்னும் பெயர் முதன் முதல் மக்கள் மொழிகளைத் தோற்றி வழங்கி வருங்காலத்து அவர்கள் தம் கருத்தைப் பிறருக்குப் பேச்சு முறையால் உணர்த்தாமல் தரையிலும், ஓலை முதலியவற்றிலும் அவ்வொலிகளை எழுதிக் காட்டத் தொடங்கிய காலத்துப் பெற்ற காரணப் பெயராதல் வேண்டு மென்பது எழுதப்படுதலினெழுத்தே என வரும் பழைய சூத்திரத் தொடராற் புலனாம். ஆசிரியர் தொல்காப்பியனார் தாம் கூற எடுத்துக் கொண்ட எழுத்திலக்கணத்தினை எட்டு வகையானும் எட்டிறந்த பல வகையானும் உணர்த்தினார் என்பர் இளம்பூரணர். எட்டுவகையாவன. எழுத்து இனைத்தென்றல் இன்ன பெயர் என்றல், இன்ன முறைமைய என்றல், இன்ன அளவின என்றல், இன்ன பிறப்பின என்றல், இன்ன புணர்ச்சிய என்றல், இன்னவடிவின என்றல், இன்ன தன்மைய என்றல். இவற்றுள் எழுத்தின் தன்மையும் வடிவும் ஆசிரியர் தாம் உணர்ந்தாராயினும் பலபட விரித்துணர்த்த லருமையின் தன்மையும் வடிவும் நீங்கலாக ஏனைய ஆறுமே இந்நூலில் விளங்கக் கூறியுள்ளார். இனி எட்டிறந்த பலவகையாவன: எழுத்தின் உண்மைத் தன்மை, குறைவு, கூட்டம், பிரிவு, மயக்கம், மொழியாக்கம், நிலை, இனம், ஒன்று பலவாதல், திரிந்ததன்திரிபு அது என்றல், பிறிதென்றல், அதுவும் பிறிது மென்றல், நிலையிற்றென்றல், நிலையாதென்றல், நிலையிற்றும் நிலையாதும் என்றல் என இன்னோரன்ன பலவாகும். இவையெல்லாம் அடங்க, எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை முதலீ றிடைநிலை போலி யென்றா பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே. (நன். 57) என எழுத்திலக்கணத்தினைப் பன்னிரு பகுதியாகப் பவணந்தி முனிவர் பகுத்துக் கூறியுள்ளார். தொல்காப்பியர் தாம் கூறும் எழுத்திலக்கணத்தின் முறையே நூன்மரபு, மொழிமரபு, பிறப்பியல், புணரியல், தொகைமரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என ஒன்பதியல்களான் உணர்த்து கின்றார். ஆசிரியர் இப்படலத்துள் விதிக்கப்படுவனவற்றைக் கருவியுஞ் செய்கையு மென இருவகையாக்கி அவற்றுட் கருவியை நூன்மரபு முதலிய நான்கியலானும் செய்கையைத் தொகைமரபு முதலிய ஐந்தியலானும் உணர்த்தினாரென்ப. பவணந்தியார் தாம் கூறும் எழுத்திலக்கணத்தினை எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதனிலை, இறுதி நிலை, இடைநிலை, போலியென எழுத்தின் அகத்திலக்கணம் பத்தாகவும், பதம், புணர்ச்சியென புறத்திலக்கணம் இரண் டாகவும் பன்னிரு பகுதியாகப் பிரித்து, அவற்றுள் அகத்திலக்கணம் பத்தையும் எழுத்தியலென ஓரியலாகவும், புறத் திலக்கணம் இரண்டனுள் பதத்தைப் பதவியலென ஓரியலாகவும், அப்பதத்தானாகும் புணர்ச்சியை உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபு புணரியல் என முறையே மூன்றியல்களாகவும் ஓத்துமுறை வைப்பென்னும் உத்தியால் வைத்துணர்த்துகின்றார். தாம் வகுத்துக் கொண்ட ஐந்தியல்களுள் தொல்காப்பியத்து வரும் நூன்மரபு, மொழிமரபு, பிறப்பிய லென்னும் மூன்றியல்களின் விதிகளை எழுத்தியலிலும், புணரியல், தொகை மரபு, உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஐந்தியல் களினும் கூறிய விதிகளை உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல் என்னும் இரண்டியல்களிலும், உருபியல் விதியை உருபு புணரியலிலும் அடக்கிக் கூறியுள்ளார். இம்முறை பவணந்தி யாரது சுருங்கச் சொல்லி விளங்கவைக்குந் திறனை வெளிப் படுத்துவதாகும். எழுத்தின் புறத்திலக்கணமாகிய மொழியியல்பு உணர்த்தப் போந்த, பவணந்தியார், முன்னைத் தமிழ் நூல்களிலில்லன வற்றைத் தாமே பகுபதம், பகாப்பதம் என முன்னர் நாட்டி அதனையுணர்த்தும் அவ்வியற்குப் பதவியலெனப் பெயர் தந்து அதன்கண் பொது வெழுத்தானும் சிறப்பெழுத்தானுமாகிய ஆரிய மொழிகள் திரிந்து தமிழ் மொழியுள் வடசொல்லாமாறு வடமொழி யாக்கத்தினையும் உடன் கூறிச் செல்கின்றார். இவ்வியலில் பவணந்தியார் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனப் பகுபத உறுப்பினை ஆறாகப் பிரித்து ஒரு மொழியிலக்கணங் கூறியுள்ளார். இங்ஙனம் இவர் வடமொழியிலக்கணத்தினை ஆதரவாக வைத்துக் கொண்டு பதவியல் விதி கூறியதற்கு இவர் காலத்தும் இவர்க்கு முன்னரும் வடமொழிவாணர்கள் தமிழ் நாட்டில் புகுதலால் அவர் தம் பழக்கவொழுக்கங்களும் தமிழ் நாட்டாரால் மேற்கொள்ளப் பெற்று ஆரியச் சொற்கள் அளவு கடந்து தமிழ் நூல்களுட் புகுந்தமையே பொருந்திய காரணமாகும். 1. நூன்மரபு இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தை ஓராற்றாற் றொகுத்துணர்த்தலின் நூன்மரபு என்னும் பெயர்த்து என இளம்பூரணரும், இத்தொல்காப்பியமெனும் நூற்கு மரபாந் துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்துணர்த் தினமையின் நூன்மரபென்னும் பெயர்த்தாயிற்று என நச்சினார்க்கினியரும் இவ்வியலின் பெயர்க்காரணம் கூறினர். இவ்வதிகாரத்துட் கூறும் எழுத்திலக்கணத்தினைத் தொகுத் துணர்த்தலாற் பெற்ற பெயராயின் அதிகார மரபெனப்படுவ தன்றி நூன் மரபெனப்படாமையானும், இவ்வதிகாரத்துட் கூறப்பட்டன செய்கையோத்திற்கும் பொருளதி காரத்துள் செய்யுளிய லொன்றற்குமே கருவியாவதன்றி மூன்றதிகாரத் துக்கும் பொதுவாகாமையானும் அவை போலி யுரையாதலறிக, என இருவருரையையும் மறுத்த சிவஞான முனிவர். நூன்மரபு : அஃதாவது நூலினது மரபுபற்றிய பெயர் கூறுதல். எனவே இதுவும் இவ்வோத்துட் கூறுஞ் சூத்திரங்களுக் கெல்லாம் அதிகாரமென்பது பெறப்பட்டது. மலை, கடல், யாறு என்றற் றொடக்கத்து உலக மரபு பற்றிய பெயர்போலாது ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் என்றற்றொடக் கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற் பொருட்டு முதனூலா சிரியனாற் செய்து கொள்ளப்பட்டமையின், இவை நூன்மரபு பற்றிய பெயராயின எனக் கொள்க என இவ்வோத்தின் பெயர் இயைபு உரைத்தார். இவ்வோத்திற் கூறப்படும் எழுத்துக்களின் பெயர் முதலிய அனைத்தும் தொல்காப்பியனார்க்கு முற்காலத்தவரான பண்டைத் தமிழ்ச் சான்றோர் நூற்களிற் சொல்லப்பட்ட எழுத்தியல் மரபுகளாய் ஆசிரியர் தந்நூலின் ஆளுதற்பொருட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது, இவ்வோத்தின் இலக்கணங்களை `என்ப `புலவர் `மொழிப `என்மனார் புலவர் என்ற சொற்களான் முன்னையோர் கருத்தாக ஆசிரியர் கூறுதலான் விளங்கும். 1. எழுத்தெனப்படுப அகர முதல் னகரவிறுவாய் முப்பஃதென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங்கடையே. (தொல்.1) இஃது எழுத்துக்களின் பெயரும், முறையும் தொகையும் கூறுகின்றது. (இதன் பொருள்) எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன அகரமுதல் னகர மீறாகக் கிடந்த முப்பதென்று சொல்லுவர் ஆசிரியர்; சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றுமல்லாத விடத்து என்பதாம். சார்ந்து வருதலைத் தமக்கு இலக்கணமாகவுடைய மூன்றும் சொல்லிடை நோக்க எழுத்தாமாயினும், தனியே நிற்கும் ஆற்றல் பெற்றன அல்லவாதலின், தம்மியல் குன்றாவாறு தனியே நிற்றல் காரணமாக எழுத்தெனச் சிறப்பித்துச் சொல்லப்படும் முப்பதனோடும் சேர்த்துரைக்கப் பெறாவாயின. சார்பெழுத்தின் இயல்புணர்த்துவார், `சார்ந்துவரன் மரபின் மூன்று என்றார்; யாதாயினும் ஒன்றினைச் சார்ந்துவருதலையே தமக்குரிய இயல்பாகவுடைய மூன்று மென்றவாறு. எனவே இம்மூன்றும் ஏனையெழுத்துக்களைப் போன்று தனியே எடுத் துரைக்கப்படா நிலைமைய என்பது போதரும் இவ்வாறே நன்னூலாரும், 58. மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே. (நன். 58) என்பதனால் மொழிக்கு முதற்காரணமாய் அணுத்திரளின் காரியமாய் வரும் ஒலியாவது எழுத்து, அது முதலெழுத்தென்றும் சார்பெழுத்தென்றும் இருவகையினையுடைத்து எனக் கூறினார், எழுத்தெனச் சிறப்பித்துச் சொல்லப்படும் உயிரும் மெய்யுமாகிய முப்பதெழுத்தினையும் தனியே இசைத்தல் பற்றி, 59. உயிரும் உடம்புமாம் முப்பதும் முதலே. (நன். 59) என்பதனால் முதலெழுத்தெனப் பெயரிட்டுரைத்தார். அகரம் முதலிய முப்பதும் நெடுங்கணக்கினுட் பெறப்படுதலின், அவற்றை விதந்தோதாது, அகரமுதல் னகர விறுவாய் என முதலும் இறுதியு மெடுத்தோதினார். இங்ஙனம் கூறலான் அகர முதலாக னகர மீறாக வழங்குதலே எழுத்தினது முறையாம் என்பதும் பெறப்படும். இதனை மேற்கொண்டே. சிறப்பினு மினத்தினுஞ் செறிந்தீண் டம்முதல் நடத்தல் தானே முறையா கும்மே. (நன். 73) என நன்னூலிலும் எழுத்துக்களின் முறை கூறப்பட்டது. `முப்பஃதென்ப என்பதனால் எழுத்தின் தொகை கூறினார். அவைதாம் குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன. (தொல். 2) இது மேற்சார்ந்து வருமென்ற மூன்றிற்கும் பெயரும் முறையுங் கூறுகின்றது. (இ-ள்) மேற்சார்ந்து வருமெனப் பட்டவைதாம் குற்றியலி கரமும் குற்றியலுகரமும் ஆய்தமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவும் ஆம். அவையும் முற்கூறிய முப்பதெழுத்தினோடு ஒரு தன்மையாய் வழங்கும் என்றவாறு. முற்கூறிய விரண்டும் உம்மை தொக்கு நின்றன. ஒரு மொழியைச் சார்ந்து வருமியல்பன்றித் தனித்தியங்குமியல்பு தமக்கில வென்றலின், அவை தம்மை யெடுத்தோதிக் காட்டலா காமையின், அவற்றிற்குக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என வேறுவேறு பெயரிட்டு ஈண்டு எடுத்தோதினார். அவை தனித் தொலிக்கப் பெறாவாயினும் மொழியோடு சார்த்தி யிசைக்கப் படுதலின் எழுத்தென்றற்கு ஒருவகையான் உரிய வென்பார், எழுத்தோரன்ன என்றார். முற்றியலுகர இகரங்களோடு இவற்றினிடை வேற்றுமை தெரிதற்பொருட்டு இகரம் உகரம் என்றொழியாது குற்றியலிகரம் குற்றியலுகரம் என்றார். புணர்ச்சி வேறுபடுதலின் இகர உகரங் குறுகி நின்றன வென்றும், சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங் கோல் ஆகாதவாறு போல் உயிரது குறுக்கமும் உயிரேயாம் என்றும், இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறோ ரெழுத்தாக ஆசிரியர் வேண்டினாரென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். ஒரு மாத்திரையாய் நின்ற குற்றெழுத்துக்களே, ஈரொற் றுடன் நின்று கால்மாத்திரை பெற்ற மகரக் குறுக்கம்போல, செயற்கையான் அரை மாத்திரை பெற்றுக் குறுகி நின்றன என உலகம் மலையாமைப் பொருட்டு இவை இங்ஙனம் ஆதல் இயல்பென்பார், குற்றிகரம் குற்றுகரம் என்றொழியாது ஆசிரியர் குற்றியலிகரம் குற்றியலுகர மெனக் குறிப்பிட்டாரெனவும், `குற்றியலிகரம் நிற்றல் வேண்டும், `குற்றியலுகரம் வல் லாறூர்ந்தே நிற்றல் வேண்டும் எனவுங்கூறி, இவைபற்றி மாத்திரை குறுகுமெனக் கூறிற்றிலரெனவும், `ஆயிரு மூன்றே யுகரம் குறுகிடன், `யகரம் வரும் வழி யிகரம் குறுகும் என்புழி வரும் குறுகுமென்னுஞ் சொல் நீங்கிற்றெறூஉங் குறுகுங் காற் றண்ணென்னும் என்புழிப்போல அணுகுதற் பொருண்மைத் தெனவும் கூறிக், குற்றியலுகரமும் ஆய்தம் போல வேறெழுத்தே யாவதன்றி ஒரு மாத்திரையாய் நின்ற இகர உகரங்களே மகரக் குறுக்கம் முதலியன போல ஒரு காரணம் பற்றி அரை மாத்திரையாய் நின்றன வல்ல எனச் சிவஞான முனிவர் சூத்திர விருத்தியில் விளங்க உரைத்தார். ஆயினும் `ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன் என்புழியும் `யகரம் வரும் வழி யிகரங்குறுகும் என்புழியும் வந்த குறுகும் என்ற சொல்லிற்கு அவர், கூறியவாறு அணுகுமெனப் பொருள் கூறின், முறையே அவ்விரு தொடரும், `அவ்வறுவகைச்சொல்லும் உகரம் வருமிடம் எனவும், `யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து ஆண்டு இகரம் வரும் எனவும் பொருள்பட்டு, அவ்வாறு வருவன முற்றிகர முற்றுகரமே எனத் திரிபுணர்ச்சி தோன்றிக் குற்றியலிகரம் குற்றியலுகரம் கொள்ளப்படாவாம் ஆகலின், அவ் இகர உகரங்கள் தன் மாத்திரையிற் குறுகி அரைமாத்திரை பெறும் என்பதே பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. குற்றியலிகரம் குற்றியலுகரம் என்றே பொருள்படு மாகலின், அவை அவ் ஒலி வேற்றுமை காரணமாக வேறெழுத் தெனக் கொள்ளப்படுதலும், இகரவுகரங்களின் தொடர் புடைமை காரணமாக உயிரன்றெனத் தள்ளப்படாமையும் நன்கு விளங்கும். ஆய்தம் என்பதைப்பற்றி நச்சினார்க்கினியர் பின் வருமாறு கூறுவர் : ஆய்தமென்ற ஓசை தான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பதுணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் என்றார். அதனை இக்காலத்தார் நடுவுவாங்கி யிட்டெழுதுப. இதற்கு வரிவடிவு கூறினார்; ஏனை ஒற்றுக்கள் போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன்றாகலின். எழுத்தியல் தழா ஓசைகள் போலக் கொள்ளினும் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயாமென்றார். இதனைப் புள்ளிவடிவிற் றெனவே ஏனை யெழுத்துக்களெல்லாம் வரிவடிவினவாதல் பெற்றாம் என்பதாம். இதன்கண் ஆய்தம் மூன்று புள்ளி வடிவிற்றென்பதும், நச்சினார்க்கினியர் காலத்திலுள்ளார் சிலர் அதனை நடுவே வளைந்த கோடிட்டு வழங்கினார்கள் என்பதும், ஆய்தம் ஏனை ஒற்றுக்கள் போல உயிரேறாது நிற்பதொன் றென்பதும் புலப்படுதல் காணலாம். நடுவு வாங்கியிட்டெழுதுப என்பதற்கேற்ப 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மல்லன் காலத்ததாக அமைந்த காசாக்குடிப் பட்டயத்துள் `வெஃகா என்ற சொல்லின் ஆய்தம் `வெ கா என்று மேலும் கீழும் புள்ளியும் இடையில் வளைந்த கோடும் உடையதாக வரையப்பட்டிருப்பது ஆராயத்தக்கது. வேதத்திலே ஜிஹ்வா மூலியத்தொனி பெறுவதோ ரெழுத்துக்கு `ஆரதம் என்ற பெயரை வேத இலக்கணம் இட்டு வழங்குவ தென்றும், அத்தகைய உச்சரிப்புடன் அஃகம் முதலியனவாகத் தமிழில் வழங்கும் எழுத்துக்கும் தமிழிலக்கணம் வகுத்த ஆதியிருடிகள் அவ்வடசொல்லை ஆய்தமெனத் திரிய வழங்கினராதல் வேண்டு மெனவும் பின்வருமாறு கூறுவர்: ஆய்தம் முப்புள்ளி யென்பதற்கு ஆதரவில்லை. ஆயதம் என்ற வடசொற்கு நீண்டது என்பது பொருள் என்பவாகலின் ஈண்டு நீண்ட கோடுளதெனல் பொருந்தும். (பலவகை வடிவுகளைக் கூறுமிடத்து நன்னூற் பழைய உரைகாரர் மயிலைநாதர்;- சதுரம் ஆயதம் வட்டம், முக்கோணம் சிலை என்றிவற்றைக் குறிப்பிட்டுள்ளார்) இவற்றுள் இவ்வாயதமும் ஒன்றாய் நீண்ட வடிவினைக் குறித்தல் காண்க. இதனால் நீண்ட கோடுள்ள தாய்ப் புள்ளி பெறுதலான் அவ்வாயதமே ஆய்தமென்றும் ஆய்தப்புள்ளி என்றும் வழங்கலாயிற்றுப்போலும். பல்லவ சாசனத்துக் கண்ட இவ்வாய்த வடிவைப்போலவே வடமொழி விசர்க்கத்துக்கு மேலும் கீழுமமைந்த இரட்டைப்புள்ளி வடிவே யன்றி ( ) என இடைக்கோடு வளைவின்றியும் பின் பாண்டிய சாசனமொன்றில் காணப்படுகிறது ஈண்டு ஒப்பிடத் தக்கதாம். ஆகவே அச்சொல்லின் மூலம் ஆரதமாயினும் ஆய்தமாயினும் அவ்வெழுத்துக்கும் விசர்க்கத்துக்கும் ஒலிவடிவும் வரிவடிவும் ஒன்றாகவே ஆசிரியர் காலத்தில் அமைந்திருந்ததென்பதும், முப்பாற் புள்ளியினதாகிய அது மிகப் பிற்காலத்தேதான் எழுதப் பட்டதென்பதும் மேற்கூறியவற்றினின்றும் பெறப்படும் என அறிஞர் மு.இராகவையங்காரவர்கள் கூறுவர். முதலில் ஆய்தம் முப்பாற் புள்ளியினதாகக் கருதப்பட்டது எக்காலத்தென நோக்குவோம். `குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தமென்ற முப்பாற் புள்ளியும் என்ற தொடர்க்கு உரைகூறப் போந்த இளம்பூரணர், `குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளியும் என இவை எனக்கூறி, குற்றியலிகரமும் குற்றியலுகரமும் என்னும் எண்ணும்மை விகாரத்தாற் றொக்கன எனக் குறிப்பும் வரைந்தனர். மூன்றனுள் முன்னின்ற இரண்டிற்கு எண்ணும்மை விகாரத்தாற் றொக்கன, எனவே ஈற்றதாகிய ஒன்றன்கண் தொகாது நிற்கிற தென்பது கொள்ளப்படும். சூத்திரத்தில் அவ்வாறு உம்மை தொகாதுநிற்குமிடம் `ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்பதில் புள்ளியென்பதன் ஈற்றிடமே என்பது விளங்கும். ஆகவே முப்பாற் புள்ளி என்பது ஆய்தமாதல் வேண்டும். ஆய்த மென்ற முப்பாற் புள்ளி யென்பதில் ஆய்தமென்பதன் கண் உம்மை இல்லாதிருக்க, ஆய்தமுமென உரையிற் காணப்படுதல் ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாதல் வேண்டும். இங்கு முப்பாற் புள்ளியென்றது ஆய்தத்தின் வடிவை உணர்த்தியது என்பது உரையாசிரியர் உரையாலும் குறிப்பாலும் நன்கு தெளியப்படும். இதனைத் தழுவியே நச்சினார்க்கினியரும் உரை கூறினமைமுற் கூறப்பட்டது. இகரமும் உகரமும் என உம்மை தொக்கதாகக் கொள்ளாமல் குற்றியலிகரம், குற்றியலு கரம், ஆய்தம் என அம்மூன்றும் புள்ளி பெறுதல் பற்றிப் பொதுப் பெயராக முப்பாற் புள்ளியும் என்றார் எனச் சிவஞான முனிவர் கூறுவர் அதுகொண்டு, அவர் தமக்கு ஆய்தம் முப்புள்ளி வடிவிற்றன்றெனல் கருத்தென்பது பொருந்தாது. அன்றியும் அவர் கூறியபடி மூன்றும் புள்ளி பெறுதல் காரணமாக முப்பாற் புள்ளியெனப் பட்டன எனின் எகரவொகரம் புள்ளிபெறுதல் காரணமாகப் புள்ளியென வழங்கப் படாமையானும், குற்றியலு கரம் மொழியீற்றின்க ணல்லது புள்ளி பெறாமையானும், அறிகுறியாக வரும் புள்ளியையுடைய ஈற்றுக் குற்றியலுகரத்தின் பிற வடிவுகளிருக்க மொழி முதற் குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய இவற்றிற்குப் புள்ளியெனப் பொதுப் பெயரிடுதல் சாலாதாகலானும், ஆய்தத்திற்கு முப்பாற் புள்ளி யல்லது வேறு வடிவின்மையானும், குற்றியலிகர உகரங்களை யாண்டும் புள்ளி என்ற பெயரால் எடுத்தாளாமல் மெய்யோடியைதல் முதலாக உயிரியல்பில் வைத்துணர்த்தலானும் அக்கூற்றுப் பொருந்தாது என்பது. எனவே ஆய்தம் மூன்று புள்ளி வடிவிற்றென்பது உரையாசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளான் ஆசிரியர் தொல்காப்பியனார்க் குடன்பாடென்பது பெறப்பட்டது. பின்னரும் ஆசிரியர் ஆய்தப் புள்ளியென இதன் பெயருரைத்தலும் ஆய்தம் புள்ளி வடிவிற் றென்பதை வலியுறுத்தும். மூன்று புள்ளி வடிவிற்றாய் எழுதப்பட்டு வந்த ஆய்தம் என இடைக்காலத்தாரால் இடையே வளைத் தெழுதப் பட்ட தென்பது 8-ம் நூற்றாண்டிற் பல்லவ மன்னன் சாசனமாகிய காசாக்குடிப் பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வெ கா என எழுதப்பட்டிருத்தலானும், நச்சினார்க்கினிய ருரையானும் நன்கு விளங்கும். ஒரு சிலரால் இங்ஙனம் ஆய்தம் இடையே வளைத்தெழுதப் பட்டாலும் பெரும்பாலார் மூன்று புள்ளி வடிவினதாகவே அதனை எழுதி வருகின்றமை எல்லார்க்கும் உடன்பாடாகும். வடமொழியில் ஜிஹ்வா மூலியத்தொனி பெறுவதோரெ ழுத்து ஆர தம் என வழங்கப்படுதல் கொண்டு தமிழ்ச் சார் பெழுத்தாகி ஓரொலியின் பெயராகிய ஆய்தம் அதன் றிரிபென்று கோடற்கு யாதோரியைபும் இல்லை. வட மொழி ஆரதம் என்பதன் உருவமும், அச்சொற் பொருளும், அப்பெயருடைய எழுத்தியல்பும் வேறு. தமிழில் ஆய்தமென்ற சொல்லுருவும் அதன் பொருளும் அப்பெயருடைய எழுத்தினொலியும் வேறு. இவ்வாறு இவ்விரண்டின் உருவம், பொருள் இயல்பு என்பன வேறுபட்டனவாக எவ்வித இயைபுமில்லாமல் வடசொல்லாகிய ஆரதம் என்பது ஆய்தமாய்த் திரிந்ததென்றல் எவ்வாற்றானும் பொருந்தாததாகும். பலவகை வடிவுகளைக் கூறப்போந்த மயிலை நாதர் நீண்ட வடிவென்பதனை ஆயதம் என வட சொல்லாற் கூறியது கொண்டு, நீண்ட வடிவும் ஓசையுமின்றிப் புள்ளி வடிவிற் றாகிய ஆய்தம் அவ்வாயதமென்ற வடசொல்லின் திரிபாகு மென்றல் பொருந்தாது. நச்சினார்க்கினியர் தம் காலத்தார் இடையே வளைத்தெழுதுவார் என்றபடியே வெ கா எனப் பிறை வடிவ மாக எழுதப்பட்டதனை நீண்ட கோடுளதாய்ப் புள்ளி பெற்றதெனத் திரித்துக் கொண்டு, பாண்டிய சாசன மொன்றில் ` என மேலுங் கீழும் புள்ளியையுடைய இரு புள்ளி வடிவாகிய வடமொழி விசர்க்க எழுத்தானது எழுதுவோர் பிழையால் இடையே என்றபடி வெட்டுக்கோடு விழுந்ததனை இயற்கை யெழுத்தாக வைத்து அதனையிடையே பிறைவடிவாக வளைத் தெழுதிய கோடுள்ள ஆய்தத்தோடு ஒப்புமை காட்டி ஆயதம் என்ற வட சொல்லே ஆய்தமாகத் திரிந்ததெனவும் அவ் விசர்க்க ஒலியே ஆய்த வெழுத்தெனவும் கூறுவது எவ்வித இயைபுமின்றி முரணாதலுங் காண்க, (1) நீண்ட வடிவத்தைக் குறிக்கும் ஆய்தமென்ற பெயர் வடமொழி விசர்க்கத்துக்கு வழங்குதலும், அவ் விசர்க்கத் திடையே நீண்ட கோடிட்டு எழுதுதலும் வட மொழியாளரி டையே வழங்கப் படவில்லை. அதனால் என விசர்க்கம் இடையே கோடுபெற்றுக் காணப்படுதல் வடமொழி வழக்கத்தோடு பொருந்தாத பிழை வடிவாதல் உண்மை. (2) இடைக்காலத்துச் சாசனமொன்றில் ஆய்தம் என வரையப் பட்டிருத்தலை நீண்ட வடிவு என்ற பொருள் புலப்படும்படி ஆயுதமென்ற பெயராற் குறிப்பிடுதல் சாலாது. எனவே ஃ என எழுதப்பட்டுவரும் வடிவும் இடைக் காலத்தில்:என நடுவு வாங்கியிட் டெழுதிய வடிவும் ஆய்தம் மூன்று புள்ளியாக வேனும் இடையில் வளைந்த கோடிட் டேனும் எழுதப்பட்ட தென்பதனை விளக்குமன்றி அங்ஙனம் எழுதப்படாத இருபுள்ளியாகிய விசர்க்கமும் முப்புள்ளியாகிய ஆய்தமும் ஒன்றே என்பதனை உணர்த்தாது. (3) தமிழ்ச் சார்பெழுத்தினுள் ஒன்றாகிய ஆய்தம் உயிரேறாது ஓசை விகாரமாய்க் குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடு கூடிய வல்லெழுத்து ஆறன் மேலதாய் அவற்றிடையே வரும் இயல்பிற் றென்பது, குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி உயிரோடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே (மொழிமரபு 5) என்ற சூத்திரத்தால் விளக்கப்பட்டது, வடமொழி விசர்க்கமோ உயிரோசை யல்லது ஒலியாவியல் பிற்றாய் உயிரையடுத்து அவற்றிற் கேற்ற உயிரோசைத்தாய் நின்று மேற்கூறிய நியதியின்றி இறுதிக் கண்ணும் நின் றொலிக்கு மியல்புடையது. தமிழ்ச் சார்பெழுத்தாகிய ஆய்தம் குற்றெழுத்தின் பின்னதாய் வல்லின மெய்யின் முன்னின்று அதன் ஓசையை மென்மைப் படுத்தி நுணுகிய ஓசைத்தாய் நிற்றலும், வடமொழியில் விசர்க்கம் பெரும்பான்மையும் மெய்முன் னில்லாது உயிரையடுத்து அதன் ஓசைத்தாய் ஒலித்தலும் கடைசியில் க ப மெய் யின்மேல் நின்றும் பிறவற்றின் முன் அவ்வோசையிற் றிரிந்தும் ஒலித்தலும் இவ்விரண்டிற்குமுள்ள வேற்றுமையாதலால் ஒலியாலிரண்டும் ஒத்தன என்றல் செவி கருவியாக ஓசையை நுனித்துணரும் நுண்ணுணர் வினார்க்கு உடன்பாடன்றென்க. இதுகாறும் கூறியவாற்றால் ஆய்தமென்னும் பெயர் `ஆரதம் அல்லது `ஆயதம் என்றவற்றின் திரிபன்று என்பதும், வடமொழி விசர்க்கத்திற்கும் இதற்கும் வடிவானும் இயல்பானும் ஒலியானும் நிலையானும் வேறுபாடு மிகுதியுமுளவென்பதும் விளக்கப்பட்டன. இதனால் ஆய்தமென்ற எழுத்தொலி தமிழிற்கேயுரிய சிறப்பொலி என்பதும் விளக்கப்பட்டது. ஆய்தத்தை `ஹ எழுத் தொலியாகத் தவறாகக் கருதுவா ருளரெனினும் அது மெய்யீறாய் மொழிமுதனின்று உயிரேறி நிற்குமியல் பறிந்து மயக்கம் நீங்குவாராக. ஆய்தம் என்ற பெயர் தமிழாயின் அதன் பெயர்க் காரண மென்னவெனின், மொழிகளெலாம் காரணமுடையவாயினும் அதன் காரணம் வெளிப்படத் தோன்றா என்றார் ஆசிரியர். `ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய், ஆவயினான்கும் உள்ளதன் நுணுக்கம் என்றாராகலின் இச்சொல் ஆய்தல் என்ற உரிச்சொல்லடியாகப் பிறந்து ஆய்தமென்றாகி நுணுகிய ஓசையுடைய எழுத்தென்ற பொருளில் வழங்கியிருத்தல் கூடும் என உய்த்துணரலாம். இங்ஙனம் தொல்காப்பியனார் சார்ந்துவரும் எழுத்து மூன்றென்றாராக, பவணந்தியார் தம் நூலுள் தொல்லாசிரி யருரைத்த சார்பெழுத்தென்றதன் கண் உயிர்மெய் அளபெடை முதலியனவுஞ் சேர்த்து, உயிர்மெய் யாய்த முயிரளபொற்றள பஃகிய இஉஐஔ மஃகான் தனிநிலை பத்தும் சார்பெழுத் தாகும். (நன். 60) என்பதனாற் சார்பெழுத்துப் பத்தெனக் கூறி, உயிர்மெய் யிரட்டுநூற் றெட்டுய ராய்தம் எட்டுயி ரளபெழு முன்றொற் றளபெடை ஆறே ழஃகு மிம்முப் பானேழ் உகர மாறா றைகான் மூன்றே ஔகா னொன்றே மஃகான் மூன்றே ஆய்த மிரண்டொடு சார்பெழுத் துறுவிரி ஒன்றொழி முந்நூற் றெழுபா னென்ப. (நன். 61) என்பதனால் உயிர்மெய் 216 முற்றாய்தம் 8 உயிரளபெடை 21 ஒற்றளபெடை 42 குற்றியலிகரம் 37 குற்றியலுகரம் 36 ஐகாரக் குறுக்கம் 3 ஔகாரக் குறுக்கம் 1 மகரக் குறுக்கம் 3 ஆய்தக் குறுக்கம் 2 ஆக, சார்பு 369 என விரித்துக் கூறியுள்ளார். முதலெழுத்தாந்தன்மை அவற்றிற்கின்மையானும் சார்பிற் றோன்றுதலானும் இப்பத்துஞ் சார்பாகவே கொள்ள வேண்டு மென்பது என மயிலைநாதரும், உயிர்மெய் உயிரும் மெய்யுங் கூடிப் பிறத்தலானும், ஆய்தம் உயிர்போல அலகு பெற்றும் மெய்போலப் பெறாதும் புடையொத்து அவற்றினிடையே சார்ந்து வருதலானும், ஏனைய தத்தம் முதலெழுத்தின் திரிபு விகாரத்தாற் பிறத்தலானும் சார்பெழுத் தாயின வெனக் கொள்க எனச் சங்கர நமச்சிவாயப் புலவரும் காரணங் கூறிச் சென்றனர். ஆசிரியர் தொல்காப்பியனார், குற்றியலிகரம் குற்றி யலுகரம், ஆய்தம் என்ற மூன்றையும் சார்பெழுத்தினுள் அடக் கியது, இவை யாதானும் ஒருசொல்லைச் சார்ந்து வரினல்லது தனியே ஒலித்து நிற்கும் இயல்பின்றி முதலெழுத்துக்களைச் சார்ந்து வரும் இயல்புபற்றியேயாம். ஆசிரியர் சார்ந்து வரினல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த எனைமூன்றும் என (பிறப்-19-ல்) விளக்கிப் போதலானும் இவற்றியல்பு தனியே வர வியலாது ஒன்றனைச் சார்ந்து வருதலே யென்பது புலனாம். எனவே தன்னியல்பின் நிற்றலாற்றாதனவாய் மொழியைச் சார்ந்து வரும் இயல்புடைய எழுத்துக்களே சார்பெழுத்தாதல் தொல்லாசிரியர் துணிபென்பது தேற்றம். ஈண்டு நன்னூலாராற் சார்பில் சேர்க்கப்படும் உயிர் மெய்யெழுத்துக்கள், உயிரும் மெய்யுமென வேறு நின்ற விடத்தும் தனியே நிற்றற்குரிய முதலெழுத்தாய் நிற்றலானும், உயிருமெய்யுங் கூடி நிற்றல் பொருளுணர்த்தும் பொருட்டன்றித் தனியே நிற்றலாற்றாத் தன்மை பற்றி யன்றாகலானும், உயிருமெய்யுமாகிய முதலெழுத்துக்களிரண்டும் ஒன்றுபட்ட நிலையில் அக்கூட்டத் தினையுணர்த்திய பெயரே உயிர்மெய் என்பதன்றி, முப்பதெழுத்தினும் வேறுபட்ட எழுத்தொலிகளை அப்பெயர் குறித்ததென்றல் வழக்கன்மையானும், மெய்யும் உயிருங் கூடுதலாகிய கூட்டம்பற்றி வேறுபட்டதெனின் `மெய் யோடியையினும் உயிரியல் திரியா என்றற்றொடக்கத்து விதிகள் வேண்டப்படாமையானும் முதலெழுத்துக்களின் வேறாகவைத்து உயிர்மெய்யை (உயிரேறிய மெய்யை)ச் சார்பெழுத்தென்றல் பொருந்தாதென்க. இனி உயிரளபெடையினை மூவளபிசைக்கும் வேறெழுத்தாகக்கொண்டு சார்பெழுத்துள் அடக்குதலும் பொருத்தமற்றதாம். என்னை? ஆசிரியர் தொல்காப்பியனார் அளபெடையினைத் தனியே ஓரெழுத்தெனக் கொண்டில ரென்பது, மூவளபிசைத்த லோரெழுத்தின்றே நீட்டம் வேண்டி னவ்வளபுடைய கூட்டியெழூஉத லென்மனார் புலவர் (நன். நூன்மரபு 5,6) என வரும் சூத்திரங்களான் நன்கு புலப்படும். ஓரெழுத்து மூன்று மாத்திரையாக இசைத்தலின்று, ஒலி நீட்சி வேண்டுவோர் அதற் கேற்ற இயல்புடைய எழுத்துக்கூட்டி இசையினை எழுப்பிக்கொள்க என்பதே மேற்காட்டிய சூத்திரங்களின் பொருள். இதனால் ஓரெழுத்தின் ஒலி நீட்சியை வேண்டுவோர் அவ்வொலியைத் தருதற்குரிய ஒற்றுமையுடைய எழுத்தொலிகளைக் கூட்டிக்கோடலே அளபெடையாமெனப் பெறப் படுதலின், அளபெடை இரண்டு முதலிய எழுத்துக்களின் கூட்டொலியேயன்றித் தனியே ஓரெழுத்தன் றென்பது ஆசிரியர் கருத்தாதலுணர்க. ஒற்றளபெடைக்கும் இஃதொக்கும். எனவே முதலெழுத்துக்களில் இனமுடைய எழுத்துக்களின் வேறாகாத அளபெடைகளைச் சார்பெழுத்தினுளடக்குவது இயைபுடைத்தன்று. ஆகவே உயிரளபெடை ஒற்றளபெடையாம் இவற்றையும், எழுத்தெனப்படும் முதலெழுத்துக்கள் புணர்ச்சி யிற் பட்டவிடத்து உண்டாம் விகாரங்களாகிய ஐகாரக் குறுக்கம், மகரக் குறுக்கம் முதலியவற்றையும் பவணந்தியார் சார்பெழுத் தெனச் சார்த்தியுரைத்தல் சார்பெழுத்தின் இலக்கணத்திற்கு முற்றும் மாறாதல் ஒருதலை. இனி இம் மூன்றுமேயன்றி உயிர்மெய் முதலியவற்றையுஞ் சார்பெழுத்தென்பாரும் உளராலோ வெனின் என வினா வெழுப்பிக்கொண்டு, ஆல் என்புழி உயிர் முன்னும் மெய் பின்னும் நின்று மயங்கினாற்போல, லா என்புழி மெய்முன்னும் உயிர்பின்னும் நின்று மயங்கினவேயல்லாது, உயிரும் மெய்யுமாகிய தந்தன்மை திரிந்து வேறாகாமைக்கு மெய் யோடியையினும் உயிரியல்திரியா என்றற்றொடக்கத்துச் சூத்திரங்களே சான்றாகலான், உயிர் மெய்யாகிய காலத்தும், குறின்மை, நெடின்மை என்னும் உயிர்த் தன்மையும், வன்மை, மென்மை, இடைமை என்னும் மெய்த் தன்மையும் தன்னியல் பிற்றிரிபு படாமையானும், உடல்மேல் உயிர் வந்தொன்றுதல் பொன்மணிபோல இயல்பு புணர்ச்சி யென்பவாக லானும்....... துணங்கையென்பது மெய்முதல் உயிரீறு மெய்ம் மயக்க மெனவும், வரகு என்பது உயிர்த்தொடர் மொழிக் குற்றியலுகரமெனவும் கொள்வதன்றி, உயிர்மெய் முதல் உயிர்மெய்யீறு, உயிர்மெய்மயக்கம், உயிர்மெய்த் தொடர் மொழிக் குற்றியலுகரம் எனக் கொள்ளாமையின் ஒற்றுமை நயம்பற்றி ஒன்றென்பதனால் ஒரு பயனின்மை யானும்..... உயிரோடு கூடியவிடத்து வரிவடிவு வேறுபடுதலின் அதுபற்றி புள்ளியில்லா எல்லா மெய்யும் என மெய்ம்மேல் வைத்துச் சூத்திரஞ்செய்து வடிவெழுத்திலக்கணங் கூறினாரன்றி ஒலியெழுத்திலக்கணம் வேறுபடக் கூறாமையானும், அளபெடை சார்பெழுத்தென வேறாகாமை முன்னர்க் காட்டப்பட்டதாகலானும், ஐகாரக் குறுக்கம் முதலியன ஒரு காரணம் பற்றிக் குறுகிய வாகலிற் சிறுமரம் பெருத்துழியும், பெருமரம் சிறுத்துழியும் வேறொரு மரமாகாதவாறு போல வேறெழுத்தெனப் படாவாகலானும்....... அது பொருந்தாதென மறுக்க. வன்றொடர் மொழிக்குற்றியலுகரம் வல்லெழுத்து வருவழிக் கால் மாத்திரையாய்க் குறுகுதலின் அதுபற்றி அதனைக் குற்றியலுகரத்தின் வேறென்னாமையின் அவர்க்கும் (பவணந்தி யார்க்கும்) அது கருத்தன்று போலுமென்க, என ஆசிரியர் சிவஞான முனிவரும் சூத்திர விருத்தியுள் கூறி மறுத்தமை ஈண்டு வைத்துணரற் பா ற்று. அவற்றுள், அ இ உ எ ஒ என்னும் அப்பாலைந்தும் ஓரள பிசைக்குங் குற்றெழுத்தென்ப. (தொல். 3) இது, மேல் எழுத்தெனப்பட்டவற்றுள் ஒரு சாரனவற்றிற்குரிய மாத்திரையளவும் காரணப் பெயரும் உணர்த்துகின்றது. (இ-ள்) மேற்கூறிய முப்பதெழுத்தினுள் அ, இ, உ, எ, ஒ என்பன ஐந்தும் ஓரோவொன்று ஒரு மாத்திரையாக ஒலிக்கும் குற்றெழுத்து என்னும் பெயருடைய என்றவாறு. குற்றெழுத்து - குறிதாகிய எழுத்து எனப் பண்புத்தொகை; இஃது ஒரு மாத்திரையாகிய குறுமையோசையாற் பெற்ற காரணப்பெயர். ஓரினப்பொருள்களினுள்ளேயே குறுமை. நெடுமை கொள்ளப்படுமாகலின், இக் குற்றெழுத்தினுங் குறைந்து மெய்கள் அரை மாத்திரையாக ஒலிப்பனவாயினும் அவ்வரை மாத்திரையினும் மிக்கொலிப்பனவற்றைத் தம்முட் பெறாமையின் குற்றெழுத் தெனப்படாவாயின என்பர் நச்சினார்க்கினியர். ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் அப்பாலேழும் ஈரளபிசைக்கு நெட்டெழுத்தென்ப. (தொல். 4) இதுவுமது. (இ-ள்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்று சொல்லப்படுகின்ற அக்கூற்று ஏழும் இரண்டு மாத்திரையளவாக ஒலிக்கும் நெட்டெழுத் தென்னும் பெயரின என்று சொல்வர் ஆசிரியர். ஐகார ஔகாரங்கள் குறிய எழுத்தின் நெடியவாதற்குக் குற்றெழுத்தாகிய இனந் தமக்கில்லையெனினும் மாத்திரையொப் புமையான் அவை நெட்டெழுத்தெனப்பட்டன என்பர் உரைகாரர். இவ்விரு சூத்திரங்களிலும் ஆசிரியர் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தும் குற்றெழுத்தெனப் பெயர் பெறுமென்றும், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் ஏழும் நெட்டெழுத்தெனப் பெயர் பெறுமென்றும் கூறினார், இவற்றைப் பின்வருஞ் சூத்திரங்களில் எடுத்தாளுதற் பொருட்டு, குற்றெழுத்து, நெட்டெழுத்து என்ற இவற்றை இப்பெயர்களாற் கூறுதலேயன்றிக் குற்றெழுத்தைக் `குறியது (தொல் 38,226, 234) என்றும் நெட்டெழுத்தை `நெடியது (தொல். 060,401) என்றும் சில இடங்களில் வழங்கியுள்ளார். இனி நன்னூலார் அவற்றுள், அ, இ, உ, எ, ஒ க் குறிலைந்தே. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ நெடில். (நன். 64, 65) என்ற சூத்திரங்களாற் குற்றெழுத்து, நெட்டெழுத்து என்றவற்றை முறையே குறில், நெடில், எனத் திரித்து வழங்கியுள்ளார். இவர் குறில் நெடில் ஆகிய பெயர்களை உயிரெழுத் திற்கும், உயிர் மெய்யெழுத்திற்கும், உரியனவாகக் கொண்டு, உயிர்க்குறில். உயிர்நெடில் ஆகிய இரண்டனையும் குற்றுயிர், நெட்டுயிர் எனச் சிறப்புப்பெயரிட்டு வழங்குவர். (நன். 126) மேல் ஆசிரியர் தொல்காப்பியனார் குற்றெழுத்து நெட்டெழுத்து எனப் பெயர் கூறவந்த விடத்து அப்பெயர்க்காரணம் விளங்க ஓரளபிசைக்கும் குற்றெழுத்து, ஈரளபிசைக்கும் நெட்டெழுத்து என அவற்றின் மாத்திரைகளையும் உடம்பொடு புணர்த்துக் கூறினார். எல்லா எழுத்துக்களுக்கும் மாத்திரை கூறும் பகுதியாகிய எழுத்துக்களின் மாத்திரை இலக்கணம் கூறும்வழி நன்னூலார் இயைத்துக் கூறியுள்ளார். மூவளபிசைத்தல் ஓரெழுத்தின்றே. (தொல். 5) மேலே இரண்டு சூத்திரங்களிலும் ஒரு மாத்திரையாக இசைக்கு மெழுத்துக்கள் குற்றெழுத்தெனவும், இரண்டு மாத்திரையாக இசைக்கு மெழுத்துக்கள் நெட்டெழுத்தெனவும் கூறியவழி, மூன்று மாத்திரையளவாக ஒலிக்கும் ஓரெழுத்து முண்டோ என்று ஐய நிகழுமாகலின் அதனையகற்ற எழுந்தது இச்சூத்திரமென்க. (இ-ள்) ஓரெழுத்தே நின்று மூன்று மாத்திரையளவாக ஒலித்தலில்லை (என்றவாறு) எனவே பலவெழுத்துக் கூடியவிடத்து மூன்று மாத்திரை யும் நான்கு மாத்திரையும் இசைக்கும் என்பர் நச்சினார்க்கினியர். நீட்டம்வேண்டின் அவ்வளபுடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர். (தொல். 6) மேல் ஓரெழுத்து மூன்று மாத்திரையளவாக ஒலித்த லில்லை யெனவே இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து, ஓசையும் பொருளும் காரணமாக நீண்டொலித்தலை வேண்டின், என் செய்வதென்றார்க்கு இதனால் மாத்திரை நீளுமாறு கூறுகின்றார். (இ-ள்) இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம் மாத்திரை யின் மிக்கொலித்தலை விரும்புவராயின் அம் மாத்திரையினைத் தருதற்குரிய எழுத்துக்களைக் கூட்டியெழுப்புக என்று கூறுவர் புலவர் - என்றவாறு. இதனால் நெட்டெழுத்துக்கள் தாமே இரண்டு மாத்திரையின் மிக்கு மூன்று மாத்திரையளவாக ஓசைமிக்கு நில்லா என்பதும், அங்ஙனம் அவை மூன்று மாத்திரை முதலாக நீண்டொலித்தலை வேண்டுவோர் அவற்றிற்கு இனமொத்த மாத்திரையுடைய எழுத்துக்களைக்கூட்டி இசைத்தல் வேண்டு மென்பதும் ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். அங்ஙனம் கூட்டியெழுப்புமாறு குன்றிசை மொழிவயின் ஐ ஔ வென்னும் (மொழி மரபு 8,9) என்பனவற்றாற் கூறப்படும். அவ்வளபுடைய எனப் பன்மை கூறியவதனான் ஒத்த ஓரெழுத்தேயன்றி `செறாஅஅய் வாழிய என்றாங்கு இரண்டெழுத் தினைக் கூட்டி நான்கு மாத்திரை கோடலும் தழுவிக் கொள்ளப் பட்டது. இவ்வாறு நான்கு மாத்திரையாக ஈரளபு பெறுதல் செய்யுட்களோசை சிதையுங்கால் ஈரளபும் ஐயப்பாடின்றி யணையுமாம் என மாபுராணத்துங் கூறப்பட்டது என்பர் நச்சினார்க்கினியர். கூட்டியெழுஉதல் என்பதற்கு கூட்டியெழுப்புக என முன்னையோருரைத்த வழியே பொருள்கொள்ளாது, `கூட்டி யெழுதுக எனப் பொருள் கொள்வாருமுளர். எழு என்ற தன்வினைப்பகுதி இறுதியுகரம் நீண்டு அளபுபெற்று நின்றதாகலின், `எழுதுக என `எழுது என்பதனைப் பகுதியாய் வைத்துரைத்தல் பொருந்தாது. அன்றியும் இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து ஓசை குன்றுவதான சொற்கண் மூன்று மாத்திரையாய் நின்று ஓசை பெறவேண்டின் அதனோடு ஒத்த குற்றெழுத்து அதன் பின்னர் நின்று அதன் ஓசையை நிறைவிக்கும் என்ற அளபெடைச் சூத்திரத்தோடு இது மாறுபட்டு, வரிவடிவில் இனவெழுத்தை அறிகுறி அளவாகக் கூட்டி எழுதுத லொன்றே ஓசை நீடற்குரிய வழியாம் எனப் பொருள் தந்து ஆசிரியர் கருத்தை மயங்க வைப்பதாகும். கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே. (தொல். 7) இது, மேல் எழுத்தெனப்பட்டனவற்றுள் குற்றெழுத்து நெட்டெழுத்து எனப்பெயர் கூறியவழி உடம்பொடு புணர்த்த லான் அவற்றளபாக மாத்திரையும் கூறப்பட்டதாகலின் இயைபு பட்டமை கருதி மாத்திரை இன்னதென அதன் அளவு கூறுகின்றது. (இ-ள்) கண்ணிமைத்தலும், கைந்நொடியும், ஆகிய அவையே ஒரு மாத்திரைக்கு அளவாகும். இது நுண்ணிதாக ஓசை யியல்பினை யுணர்ந்த ஆசிரியர் கண்டநெறி என்றவாறு. ஈண்டு இமையென்றது இமைத்தற்றொழிலை யெனவும் நொடியென்றது நொடியிற் பிறந்த ஓசையை யெனவும் உரையாசிரியர் கூறுவர். கண்ணிமைத்தலும் கொடியோசையும் இங்கு இயற்றமிழா சிரியர் எழுத்தோசையின் எல்லையாக அமைத்துக் கொண்ட ஓரளபிற்கு (ஒரு மாத்திரைக்கு) அளவாதல் கூறப்பட்டது. பின்னர், மெய் முதலியவற்றிற்கு அரையளபு எனக் கூறப் படும் அளவு, இதனிற் பாதியாதலும், மகரக் குறுக்கம் முதலிய வற்றிக்குக் கூறப்படும் அளவு இப்பாதியிற் பாதியாதலுமுணர்க. சார்ந்து வருதலின்றித் தனியேவரும் அகரமுதல் னகரவிறுதி யாகவுள்ள முப்பதெழுத்தின் தொகையினை முதற் சூத்திரத்துக் கூறி, 2-ல் சார்பெழுத்தின் பெயரும் முறையுங் கூறிய ஆசிரியர் 3,4 -ல் குற்றெழுத் திவையெனவும் நெட்டெழுத் திவை யெனவும் அவற்றின் மாத்திரை யிவ்வளவெனவுங் கூறிப்போந்து, 5-ல் ஓரெழுத்தின் மாத்திரை வரையறையையும், 6-ல் ஒசை குறைந்தால் அதனை நீட்டி நிறைவிக்கும் முறையினையும் உணர்த்தி, இச் சூத்திரத்தால் அம்மாத்திரை யிலக்கணமும் கூறிப் போந்தார். இச் சூத்திரத்து வரும் `என என்பது எண்ணிற் பிரிந்து கண்ணிமையென நொடியென என்று இரண்டிடத்துங் கூடிற்று. அவ்வே என்பதன் ஏகாரம், அளவு கருவிகள் எல்லாவற்றுள்ளும் இவையே ஒரு மாத்திரை யியல்பினை விளங்க உணர்த்துவன எனப் பிரிநிலை குறித்தது. இவ்வாறே நன்னூலாரும் எழுத்தொலி யெழுச்சி பலவற்றையும் அளந்து கோடற்குரிய கால அளவினை, இயல்பெழு மாந்த ரிமை நொடி மாத்திரை (நன். 100) என்பதனால் விளங்க உரைத்தார். இயல்பாக எழும் மாந்தரது இமைப்பொழுதும் நொடிப்பொழுதும் ஒரு மாத்திரைக்கு அளவாகும் என்பது இதன் பொருள். இமைத்தற்றொழிலும் நொடியோசையுமாகிய இவை யிரண்டும் ஆகுபெயராய்க் காலத்தை யுணர்த்தி நின்றன என்பர் சங்கர நமச்சிவாயப் புலவர். எனவே இமை நொடி யென்பன வற்றிற்கு இமைப்பொழுதும் நொடிப் பொழுதும் எனப் பொருள் கொண்டு அப்பொழுதினை மாத்திரைக்கு அளவாக்கி யுரைப்பதே பொருந்துவதாம். ஔகார விறுவாய்ப் பன்னீரெழுத்தும் உயிரென மொழிப. (தொல். 8) இது முன் எடுத்துக்காட்டப்பட்ட குற்றெழுத்து நெட்டெழுத் தாகியவற்றைத் தொகுத்து வேறோர் குறியிடுகின்றது. (இ-ள்) அகர முதலாக ஔகாரமீறாகக் கிடந்த பன்னி ரெண்டெழுத்தும் உயிரென்னும் பெயரினையுடைய வென்று கூறுவர் என்றவாறு. அகர முதலானவற்றை முன்னர் எடுத்துரைத்தாராதலின் முன்னர்ப் பெறப்பட்டதனையே ஔகார விறுவாய் என ஈறொன்றே கூறி வழிமொழிந்தார். மெய் பதினெட்டனையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று என்பர் நச்சினார்க்கினியர். னகரவிறுவாய்ப் பதினெண்ணெழுத்தும் மெய்யென மொழிப. (தொல். 9) இஃது உயிரல்லனவற்றைத் தொகுத்து வேறோர் குறியீடு கூறுகின்றது. (இ-ள்) ககாரமுதல் னகாரமீறாகக் கிடந்த பதினெட் டெழுத்துக்களும் மெய்யென்னும் பெயரினையுடைய என்று கூறுவர் என்றவாறு. பன்னீருயிருக்குந் தான் இடங்கொடுத்து அவற்றான் இயங்குந் தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின் மெய்யென்பது உவம ஆகுபெயர். மேற் சூத்திரத்து ஔகார விறுவாய் எனக் கூறிப் போந்தா ராதலின் ஈண்டு `னகர விறுவாய் என்றே கூறினும் ஔகாரத்திற் கடுத்த ககரம் முதல் என்பது தானே பெறப்படுமாதலிற் கூறா தொழிந்தார். அகரமுதல் ஔகாரமீறாம் பன்னிரண்டெழுத்துக்களும் உலகத்து உடலை யியக்கும் உயிர்போல ஏனைப் பதினெட்டு எழுத்துக்களையும் இயக்கித் தாம் அவையின்றியும் இயங்கும் ஆற்றலுடைமை கண்டு, அவை பன்னிரண்டினையும் உவம ஆகுபெயரான் உயிர் எனக் குறியிட்டும், உயிரின்றி யியங்கா உலகத்து ஏனையுடல்கள்போல இவையின்றி யியங்காக் ககரமுதல் னகரவிறுவாய்ப் பதினெட்டெழுத்துக்களையும் அவ் ஆகுபெயரான் மெய்யெனக் குறியிட்டும் வழங்கிய பண்டைத் தமிழிலக்கண நூலாசிரியரின் ஒலி நூலறிவு இவ்வுலகத்து எம் மொழியினுங் காணப்படாத தனிச் சிறப்புடையதெனப் பேராசிரியர் பலர் கூறுப. இவ்வாறு தனித்தியங்கும் ஆற்றலுடையவாய் அவ்வாற்ற லில்லாத பதினெட்டெழுத்துக்களை யியக்கியும் வரும் பன்னிரண் டெழுத்தினையும் உயிரெனவும், அவ் வாற்றலில்லாது அவற்றானியக்கப்படும் பதினெட்டெழுத்தினையும் மெய்யென வும் முன்னையோர் மொழிப என ஆசிரியர் தொல்காப்பியனார் வேறுபிரித்துக் கூறுதலால் அவர்க்கு முற்பட்ட பண்டைத் தமிழாசிரியர்கள் உடலையியக்கும் ஆற்றலொன்றுண்டெனக் கொண்டு அதனை உயிரெனவும், அவ் உயிரால் இயக்கப்படும் உடலை மெய்யெனவுங் குறியிட்டு வழங்கினார்கள் என்பதும், எனவே உயிர் வேறு, உடல் வேறு என்னுங் கொள்கை அவர் தமக்கு உடன்பாடென்பதும் பெறப்படும். உயிர் ஆவி யென்பன ஒரு பொருளன. மெய் உடம்பு என்பன ஒரு பொருட் சொற்கள். அம்முத லீரா றாவி கம்முதல் மெய்ம் மூவாறென விளம்பினர் புலவர். (நன். 63) எனச் சூத்திரஞ்செய்தார். இதனால் அகர முதலிய பன்னிரண்டும் ஆவி (உயிர்) எனவும், ககர முதலிய பதினெட்டும் மெய்யெனவும் பெயர்பெறுமென விளக்கினார். இப்பெயர், யானிட்டதன்று முன்னையோரிட்ட முறைமைத்தென்பார் விளம்பினர் புலவர் என்றார். ஆவியும் மெய்யும் போறலின் இவ்விருவகை யெழுத்துக் களும் உவமவாகு பெயராய்க் காரணப் பொதுப் பெயராயின வென்பர் சங்கர நமச்சிவாயப்புலவர். மெய்யோ டியையினும் உயிரியல் திரியா. (தொல். 10) இஃது உயிர்மெய்க்கு அளவு கூறுதல் நுதலிற் றென்பர் உரை யாசிரியர். (இ-ள்) பன்னீருயிரும் பதினெட்டு மெய்யோடுங் கூடி நின்றனவாயினும் தம் அளவும், குறியும், எண்ணும் திரிந்து நில்லா என்றவாறு. உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை மெய்யோடியையினும் என உயிர்மேல் வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்கு மாத்திரையாகக் கூறு கின்றமை நோக்கிப்போலும் என்பர் இளம்பூரணர். உயிர் மெய் என்னும் பெயர், உயிரும் மெய்யும் கூடி நின்ற நிலையிற் பெற்றதாயினும் அக்கூட்டத்து, மற்றதனோடு இயைதலாகிய வினையினை உயிரின் தனி வினையாக்கிக் கூறியது, தன்னிலையில் தனித்தியங்குந் தன்மை உயிர்க்கேயன்றித் தனி மெய்க்கு இன்மையின் அவ்வாற்றலில்லா மெய்யோடு சென்று பொருந்துந் தனிச்சிறப்பு உயிர்க்கே உரித்தாதல் கருதியென்க. இங்ஙனம் மெய்யும் உயிரும் கூடிய நிலையின தாகிய உயிர்மெய் யெழுத்துக்கள், மெய்யினளபும் உயிரளபும் பெற்று ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையுமாக நிற்கவேண்டியன, ஒரு மாத்திரையாயும் இரண்டு மாத்திரையாயும் ஒலித்து நிற்றற்குரிய காரணங்கூறப் புகுந்த நச்சினார்க் கினியர், ஆயின் ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையுமுடையன ஒருமாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னையெனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாழி யுப்பிற் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாத வாறு போல்வதோர் பொருட்பெற்றி யென்று கொள்வதல்லது காரணங் கூறலாகாமையுணர்க என்று கூறினார். ஒரு நாழி நீரிலே அரைநாழி உப்பைக்கலந்தால் அஃது ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட் பெற்றியை உயிர்மெய் யளவிற்கு உவமை கூறிப்போந்த இதன்கண், நாழி நீரிற் கலக்கப்பட்ட அரை நாழியுப்பு நீரோடு கலந்து ஒன்றரை நாழியாய் மிகாது ஒரு நாழியளவுட்படுமாயினும் அவ்வரை நாழியுப்பின் பருமை, ஒரு நாழி நீரிற் கலந்து, முன் அவ்வளவு நிறையில்லாத நீர், முன்னிலும் நிறையினாற்பெருகுதல்போல, மெய்யின் மாத்திரை உயிரளவிற்பட்டு அடங்கினும், அக்கூட்டத்துப் பொருட்பெற்றியால் மெய்யினது ஓசையும் எண்ணும் அதனோடு ஒன்றுபட்டு அழியாது நிற்குமென்பது கொள்ளக்கிடக்கின்றது. உலகத்து உயிர்களின் உடம்பானது, உயிர்வழியா யடங்கி அதன் விரிவு பெற்று நிற்றல் போல, இம்மெய்யெழுத்தும் உயிரெழுத்தளவிற்றாய் அடங்கி அதன் ஒலியோடு ஒத்தொலிக்குமென்பது, உயிர்மெய் என்ற நிறையுவமப் பெயரால் நன்கு விளங்கும். மெய்யி னளபே அரையெனமொழிப. (தொல். 11) இது தனி மெய்க்கு அளபு (மாத்திரை) கூறுகின்றது. (இ-ள்) மெய்யினது அளபுஅரை மாத்திரையெனச் சொல்லுவர் புலவர் என்றவாறு. ஈண்டு அரையெனக்கூறியது முன்னர்க் கண்ணிமை கைந்நொடி யளவாகக் கூறப்பட்ட ஓரளபிற் பாதியினையே. நாச் சிறிது புடைபெயருந்தன்மையாய் நிற்றலின் அவ் வரைமாத் திரையுந் தனித்துக் கூறிக்காட்டலாகாது என்பர் நச்சினார்க் கினியர். அவ்வியனிலையும் ஏனை மூன்றே. (தொல். 12) இது சார்பிற்றேறற்றத்து மூன்றற்கும் அளபு கூறுகின்றது. (இ-ள்) ஒழிந்த சார்பிற்றோற்றத்துவரும் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்றெழுத்துக்களும் முற்கூறிய அரை மாத்திரையாகிய அவ்வியல்பின் கண்ணே நிற்பனவாம் என்றவாறு. அரையளபு குறுகல் மகரமுடைத்தே இசையிட னருகுந் தெரியுங்காலை. (தொல். 13) இது மெய்களுள் மகரம் தன் அரைமாத்திரையிற் குறைந்து சில விடத்து வருமென்கின்றது. (இ-ள்) தன் அரைமாத்திரையினுங் குறுகி வருதலை மகர மெய்யுடைத்து; ஆராயுங் காலத்து அது வேறெழுத்தினது ஓசையின் கண் சிறுபான்மையாகி வரும். என்றவாறு. ஆசிரியர் இங்ஙனம் மகரமெய் தன் அரை மாத்திரையினுங் குறுகிவருமெனப் பொதுப்படக்கூறினார். உரை யாசிரியர் இளம்பூரணர் அதன் மாத்திரைச் சுருக்கத்தினை வரையறுத்து எல்லை கூறுதல் வேண்டி அரையளபு குறுகல் மகரமுடைத்தே என்பதற்கு அரையளபாகிய எல்லையிற் குறுகிக் கால்மாத்திரை யாதலை மகரமெய் யுடைத்து என உரையிற் கோடலால் கால்மாத்திரை பெறுமென வரையறை கூறியுள்ளார். இதனைத் தழுவியே நச்சினார்க்கினியரும் நன்னூலார் முதலிய பின்னூலாரும் மகரக் குறுக்கத்திற்குக் கால் மாத்திரை யெல்லையாதலை வரையறுத்துக் கூறியுள்ளார்கள். `கால்குறண்மஃகான் (எழுத்தியல் -4) என்பது நன்னூல் சூத்திரத்தொடர். உ-ம் போன்ம், மருண்ம், தரும்வளவன், எனவரும். உட்பெறு புள்ளி யுருவாகும்மே. (தொல். 14) இது பகரத்தோடு மகரத்திடை வரிவடிவு வேற்றுமை செய்கிற தெனக்கொண்டு உரையாசிரியரும் நச்சினார்க்கினியரும் `புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவாம் எனப் பொருளுரைப்பர். இதன்கண் பகரவடிவையும், மகரவடிவையும் சேர்த்தற்குரிய இன்றியமையாமை யும், இச் சூத்திரத்தின்கண் அங்ஙனம் சேர்த்துரைத்தார் ஆசிரியர் என்பதற் குரிய சொற்கிடக் கையும் காணப்படாமையான் இச் சூத்திரத்தாற் சுட்டப்பட்ட உண்மைப்பொருள் அதுவெனக் கொள்ளற்கில்லை. ப.ம. முதலிய வற்றின் வரிவடிவு இன்னதெனக் கிளந்து கூறாமலே ஆசிரியர் அவற்றின் வரிவடிவு வேறு பாட்டைக் கூறினாரென்றல் பொருந்தாததாம். அன்றியும் ப ம இவற்றின் வேறுபாடுரைக்கப் போந்த ஆசிரியர் தாம் எவ்வெழுத்துக்களுக்கு வரிவடிவு வேற்றுமை கூறுகின்றாரோ அவ்வெழுத்துக்கள் இவையென எடுத்துரைத்தன்றிக் கூற மாட்டார். மகரம் மேலைச் சூத்திரத்தாற் பெறப்படினும், அதனோடு வேறுபாடு கூற எடுத்துக்கொண்ட பகரத்தினை இச் சூத்திரத்து எடுத்துரையாமலே அவ்விரண்டிற்கும் வேறுபாடு கூறினாரென்றால் எங்ஙனம் பொருந்தும்? இனி இச்சூத்திரவரி தனியே ஒரு சூத்திரமாக இருந்திருத் தலியலாது. என்னையெனின், இதனுட் கூறப்படும் விதி இன்னதற் கென்பது பெறப்படாத நிலையில் இதனை ஒரு சூத்திரமாக ஆசிரியர் வையார். பின் வரும் மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல் என்ற சூத்திரம் மெய்களின் பொதுவியல் புரைத்தலால் இவ்வரி அதனைத் தொடர்ந்ததாகாது. எனவே இத்தொடர், மேலைச் சூத்திரத்தினையே சேர்ந்ததாதல் வேண்டும். ஆகலின் இது மகரத்தோடு மகரக் குறுக்கத்திற்கு வரிவடிவு வேற்றுமை செய்கின்றது என்பதே பொருத்தமுடைத்து. (இ-ள்) உட்பெறு புள்ளி - புறத்துப் பெறும் புள்ளியோடு உள்ளாற் பெறும் புள்ளி, உருவாகும் - மகரக் குறுக்கத்திற்கு வடிவாம் என்றவாறு. மேலைச் சூத்திரத்து அரை மாத்திரையினின்றும் குறுகி இசையிடனருகி வருமெனப்பட்ட மகரக் குறுக்கத்தினை, அவ்வாறு குறுகாத அரை மாத்திரை பெற்று இயல்பான மகரத்தோடு பிரித்தறிந்து கொள்ளுதற்கு அறிகுறியாக வரிவடிவில் எல்லா மெய்களுக்குமுரிய புறத்துப் பெறும் புள்ளியொடு, இக்குறுகிய மகர மெய்க்கு வரிவடிவில் உள்ளே பெறும் புள்ளியே பொருந்திய வடிவாம் என்பதைக் குறிக்கவே இச்சூத்திரம் மேலைச் சூத்திரத்தோடு இயைத்துக் கூறப்பட்டது. இச் சூத்திரம் மகரக் குறுக்கத்தைப் பற்றியதாயினும் வரிவடிவு வேற்றுமை கூறுதல் காரணமாக வேறே பிரித்துக் கூறப்பட்டுள்ளது; ஒரு பொருள் நுதலியதே சூத்திரமாதலின் என்க. மெய்களுள் ஒன்றாகிய மகரத்தின் குறுகிய நிலையை அறிந்து கொள்வதற்கெனவே அக்காலத்தார், எல்லா மெய்களும் பெறுதற் குரியதாய தலைப்புள்ளியோடு குறுகிய மகரத்தின் உள்ளேயும் ஒரு புள்ளியை இட்டு வரி வடிவில் அதனைக் குறித்துப்போந்தார்கள் என்பது இச்சூத்திரத்தாற் குறிக்கப்பட்டது. ஓசை குறுகிய எழுத்தினைப் புள்ளியிட்டுக் காட்டும் முறை உண்டென்பது மெய்யீறெல்லாம் புள்ளியொடு நிலையல் என்றதன் விதியைக் குற்றியலுகரமும் அற்றென மொழிபஎன அடுத்த சூத்திரத்தில் மாட்டெறிந்து `ஈற்றுக் குற்றியலுகரமும் மெய்போலப் புள்ளியொடு நிற்கும் எனக் கூறுதலாற் பெறப்படும். இவ்வாறு தன்னியல்பாம் ஒரு மாத்திரையினின்றும் குறுகி அரை மாத்திரையியல்பில் நிற்கும் குற்றியலுகரம் ஈற்றில் புள்ளிபெறுதல் போலத் தன்னரை மாத்திரையிற் குறைந்த மகரமும் புள்ளி பெறுதல் இயல்பும் முறையும் ஆகும். இவ்வாறே மகரக் குறுக்கம் இயல்பாகிய புள்ளியொடு உள்ளேயொரு புள்ளியையும் பெறுமென்பதனை வீரசோழியம் சந்திப்படலம் 19-ம் செய்யுள் முன் வயிற் கால்வவ்வரின் வருமொழி முதலில் வகரம் வந்து புணர்ந்தால் அந்த மகரமானது குறுகிக் கால்மாத்திரையாய் உட்புள்ளிபெறும் எனப் பெருந் தேவனார் உரை கூறிப் போதலானும் நன்கறியலாம். மெய்பி னியற்கை புள்ளியொடு நிலையல் (தொல். 15) மேல் மகரத்திற்கும் மகரக் குறுக்கத்திற்கும் வரி வடிவு வேற்றுமைக்கு அறிகுறியாக மகரக் குறுக்கத்திற்கு உட்பெறு புள்ளி உருவாகும் என்றார். ஆண்டுப் புள்ளி பெறுதல் அதிகாரப் பட்டமையின், எல்லா மெய்களுக்கும் பொதுவாகிய புள்ளி பெறுதலை இதனாற் கூறுகின்றார். இஃது உயிர்மெய்யோடு தனிமெய்யிடை வரிவடிவு வேற்றுமை செய்தல் நுதலிற்று என்பர் உரையாசிரியர். (இ-ள்) மெய்களின் தன்மையாவது புள்ளிபெற்று நிற்றலாம். எகர ஒகரத் தியற்கையும் அற்றே. (தொல். 16) இதுவும் வரிவடிவு வேற்றுமை கூறுகின்றது. (இ-ள்) எகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளிபெறும் இயல்பிற்று. பண்டைக் காலத்து எ,ஏ ஆகிய குறில் நெடில் இரண் டிற்கும் எ, என்ற வடிவும் ஒ,ஓ ஆகிய குறில் நெடிலிரண்டிற்கும் ஒ என்ற வடிவும் வரிவடிவில் வழங்கப்பட்டன என்பதும், அவற்றுள் குறிலிது நெடிலிது என்ற வேறுபாடு உணர்தற்குக் குற்றெழுத்தைக் குறிக்குமிடத்து அவ்விரண்டன்மேலும் புள்ளியிட்டெழுதினார் களென்பதும் இவ்விதியாற் புலனாம். இவ்வாறு புள்ளியிடுதல் எகர ஒகரங்களுக்கேயன்றி மெய்யூர்ந்த எகர ஒகரங்களுக்கும் உண்டென்பது தந்திவர்மன் ஆட்சியில் 4-ம் ஆண்டில் (கி.பி. 800-840) திருவெள்ளறைக்கிணறொன்றில் வெட்டப்பட்ட சாசனத்து நான் காவதெடுத்து, பெருங்கிணறு, செய்து என்ற சொற்களின் மெய்யூர்ந்த எகரங்கள் புள்ளியிட்டெழுதப்பெற்றிருத்தலால் அறியப்படும். மேலையிரண்டு சூத்திரங்களிலேயும் குறிக்கப்பட்ட மெய்களும் எகர ஒகரமும் புள்ளி பெறுதலாகிய விதியை, எழுத்துக் களின் உருவம் என்ற பகுதியில் தொல்லை வடிவின வெல்லாவெழுத்துமாண் டெய்து மெகர ஒகர மெய்புள்ளி. (நன். 98) என்ற சூத்திரத்தாற் கூறிப்போந்தார் நன்னூலார். எகரமும் ஒகரமும் புள்ளி பெறுதலைப் பின் வரும் மாத் திரைச் சுருக்க அணியமைந்த செய்யுட்களாலும் நன்கறியலாம். நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம் நீர்நிலையோர் புள்ளிபெற நெருப்பாம். மயிர்நிறுவி மற்றதற்கோர் புள்ளி கொடுப்பின் செயிர்தீர்மரமாகும் சென்று (நன். சூ. 268, மேற்) இதன்கண் நேரிழையார் கூந்தல், மயிர் என்பன ஓதி என்று கொள்ளப்படும். அதன்கண் ஒதி எனப்புள்ளி கொடுத்தால் ஒதி என்ற மரத்தைக் குறிக்கும். அவ்வாறே நீர்நிலையென்பது ஏரி. அதன் ஏகாரத்தும் புள்ளியிட்டால் எரி என நெருப்பை யுணர்த்தும். எழுத்தினது உருவத்தைக் குறிக்க வந்த நன்னூலார், மகரக் குறுக்கம், குற்றியலுகரம், இவை புள்ளி பெறுமென்று தொல்லாசிரியர் கூறிய வரிவடிவை இறந்தது விலக்கல் என்னும், உத்தியால் கூறாது விலக்கினார் போலும். இக்காலத்து எகர ஒகரம் என்பன, மகரக்குறுக்கம் குற்றியலுகரம் என்பனபோலப் புள்ளி பெறுதலை யொழிந்தன. எகர ஒகரங்களோடு ஏகார ஓகாரங்கட்கு வரிவடிவு வேற்றுமை செய்ய எண்ணிய பிற்காலத்தார் குறில்களின் தலையிற் புள்ளியிடும் பழைய முறையினை மாற்றி நெடில்களின் கோட்டினைக் கீழ்விலங்குபோலச் சிறிது வளைத்தெழுதுதலை வழக்கமாகக் கொள்வாராயினர். புள்ளி யில்லா எல்லா மெய்யும் உருவுரு வாகி யகரமொ டுயிர்த்தலும் ஏனை யுருவோ டுருவுதிரிந் துயிர்த்தலும் ஆயீ ரியல வுயிர்த்த லாறே. (தொல். 17) இஃது உயிருமெய்யுங் கூடுமாறுணர்த்துகின்றது. (இ-ள்) எல்லா மெய்களும் புள்ளியில்லை யாம்படியாக, தத்தம் முன்னை வடிவே பின்னும் வடிவாகவே அகரத்தோடு கூடியொலித்தலும், ஒழிந்த உயிர்களோடு வடிவு வேறுபட்டு ஒலித்தலும் ஆகிய அவ்விரண்டு இயல்பினையுடைய; அவை யொலிக்கு முறைமைக்கண் என்றவாறு. 1. புள்ளியில்லையாதல் - தத்தம் முன்னை வடிவே வடிவாக அகரத்தோடுயிர்த்தல். க,ங,ய என வருதல். 2. ஏனையுயிரோடு உருவு திரிந்து வருதலாவது, மேலுங்கீழும், புள்ளிபெற்றும், புள்ளியுங்கோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம். கி,கீ முதலியன மேல் விலங்கு பெற்றன. கு, கூ முதலியன கீழ்விலங்கு பெற்றன. கா,ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினார். கொ, கோ, ஙொ, ஙோ என்பன புள்ளியுங் கோடும் உடன் பெற்றன என்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனந் திரிந்தொலிப்பவே உயிர்மெய் பன்னிரு பதினெட்டு இரு நூற்றொருபத்தாறு ஆயின. உயிர்மெய் என்பதனை ஒற்றுமை கொள்வழி உம்மைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகையெனவும், வேற்றுமை கொள்வழி உம்மைத் தொகையெனவுங் கொள்க என்பர் இளம்பூரணர். ஆசிரியர், உயிர்மெய்யென்பதனை வேற்றுமை நயங் கருதியே கூறுகின்றாராகலின், உம்மைத் தொகையெனக் கொண்டார் நச்சினார்க்கினியர். சூத்திரத்தில் `இல்லாக என்பது `இல்லா என நின்றது என்பர் இளம்பூரணர். இங்ஙனம் மெய் உயிரோடு கூடி ஒலிக்கும் நிலையில் உயிரளவாய் அடங்கி நிற்றல் காரணமாக மெய்யோசை ஆண்டுத் தோன்றாது என்பாருமுளர். மெய்யோடியையினும் உயிரியல் திரியா என்பதனால் உயிர்மெய்க் கூட்டத்துத் திரியா உயிரியல்பினை விளக்கிய ஆசிரியர், அக்கூட்டத்து மெய்கள் உயிரொலி நிறையப் பெற்று அதனோடு அதன் அளவாய் அதன்முன் ஒலிக்குமியல்பின என்பதனை இச்சூத்திரத்தால் தெளிவாகக் குறித்துள்ளார். மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. (தொல். 18) உயிரும் மெய்யும் கலந்து உயிரளவாய் ஒலிக்கும் பொழுது அவ்விரண்டனுள் முன்னொலிப்பதெது பின்னொலிப்பதெது என்பதனை இதனுட் கூறுகின்றார். (இ-ள்) மெய்யும் உயிருங் கலந்து உயிரளவாய் ஒலிக்கும் பொழுது மெய்யொலியின் பின்னரே உயிரொலி தோன்றி நிற்கு மென்பதாம். இதனால் உயிர்மெய்க் கூட்டத்து மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நிற்றல் கூறப்பட்டது. இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனார் வேற்றுமை நயங்கருதி உயிர்மெய்யிலக்கணங் கூறினாராக, நன்னூலாசிரியர் பவணந்தியார், உயிர்மெய்யை ஒற்றுமை நயங் கருதி ஒரெழுத்தாகக் கொண்டு இலக்கணங் கூறுவர். புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும் ஏனை யுயிரோ டுருவு திரிந்தும் உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற் பெயரொடு மொற்றுமுன் னாய்வரும் உயிர்மெய். (நன். 89) மெய் புள்ளியை விட்டு அகரத்தோடு கூடியவழி விட்டவுருவே உருவாகியும், ஒழிந்த உயிர்களோடு கூடியவழி உருவு வேறுபட்டும், தன்மாத்திரை தோன்றாது உயிர் மாத்திரையே மாத்திரையாய், அதன் வரி வடிவினது விகாரவடிவே வடிவாய் உயிர் வடிவை யொழித்து, மெய்யுயி ரென்னும் இரண்டிடத்தும் பிறந்த உயிர் மெய்யென்னும் பெயருடனே, ஒற்றொலி முன்னும் உயிரொலி பின்னுமாய் வரும் உயிர்மெய்யெழுத்து என்பது இதன் பொருள். இதன்கண் உயிர்மெய்யை ஓரெழுத்தெனக் கொண்டு விதி கூறுவதும் அதனைச் சார்பிற்றோற்றத்து ஓரெழுத்தென அடக்கியுரைப்பதும் உயிர்மெய்யை ஓரெழுத் தாகக் கொண்டனர் பவணந்தியார் என்பதனை வலியுறுத்தும். இவரே பின்னர் எழுத்துக்களின் முதலீறுரைக்கப் போந்தவிடத்து. நின்ற நெறியே உயிர்மெய் முதலீறே. (நன். 109) என வேற்றுமை நயங்கருதி விதி கூறிச் செல்லுதலும் நோக்கத் தக்கது. வல்லெழுத்தென்ப, க, ச, ட, த, ப, ற. மெல்லெழுத்தென்ப, ங ஞ ண, ந, ம, ன. இடையெழுத்தென்ப, ய, ர, ல, வ, ழ, ள. (தொல். 19,20,21) இம்மூன்று சூத்திரங்களாலும் மேற்கூறப்பட்ட மெய்களை வன்மை, மென்மை, இடைமையாகிய பிறப்பியற் பிரிவான் வேறுபடுத்து கின்றார் தொல்காப்பியனார். வல்லென்றிசைத்தலானும் வல்லென்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்தெனப்பட்டன எனவும், மெல்லென் றிசைத்தலானும், மெல்லென மூக்கு வளியாற் பிறத்தலானும் மெல்லெழுத்தெனப்பட்டன எனவும், இடை நிகரனவாகி ஒலித்தலானும் இடை நிகர்த்தாகிய மிடற்று வளியாற் பிறத்தலானும் இடையெழுத்தெனப்பட்டன எனவும் உரையாசிரியர் கூறுவர். வன்மையு மென்மையும் உணர்ந்தன்றி அவற்றின் இடைப் பட்ட நிலைமை யுணரலாகாமையின், இடை யெழுத்தெனப் பிற் கூறப்பட்டது. வல்லினத்துக் க, ச, த, ப நான்கும், மெல்லினத்து ஞ, ந, ம மூன்றும், இடையினத்து ய, வ இரண்டும் மொழிக்கு முதலாதல் நோக்கி இம்முறையே வைக்கப்பட்டனவெனவுங் கூறுவர். வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என்ற பெயரால் வகைப்படுத்திய இவற்றை வல்லினம் க, ச, ட, த, ப, ற வெனவாறே. மெல்லினம் ங, ஞ, ண, ந, ம, ன, வெனவாறே. இடையினம் ய, ர, ல, வ, ழ, ள. வெனவாறே. (நன். 68,69,70) என்ற சூத்திரங்களால் முறையே வல்லினம், மெல்லினம், இடையினம் எனப் பெயரிட்டு வழங்குவர் நன்னூலார். அம் மூவாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை. (தொல். 22) இது தனிமெய் மயக்கத்திற்குப் பெயர் கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறியவாறு மூன்று கூறாகப் பகுக்கப்பட்ட பதினெட்டு மெய்களும் தம்மை மொழிப்படுத்து வழங்குமியல் புளதாகுமிடத்து மெய்மயக்கென்றும் உடனிலையென்றும் இரு வகையாம் ஆராயுமிடத்து என்றவாறு. உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றினையும் உறழ்ச்சி வகையான் உறழ ஒன்பது உளவாமன்றே. அவற்றுள் தனிமெய்யோடு தனிமெய் மயக்கம் ஒன்றே கூறியது என்னெனில், மற்றவற்றிற்கு வரையறையின்மையின் வரையறையுடைய தனிமெய் மயக்கமே கூறி யொழிந்தாரென வுணர்க. மெய்யென்றதனால் தனிமெய்யோடு உயிர்மெய் மயக்கமன்றி, தனிமெய்யோடு தனிமெய் மயக்கமாதல் கொள்க என்பர் இளம்பூரணர். உடனிலையை உடனிலை மயக்கமெனக் கூறுவர் இளம்பூரணர். மெய்ம்மயக்குடனிலை என்ற இவர் பாடத்தை விடுத்து நச்சினார்க்கினியர் மெய்ம்மயங்குடனிலை எனப் பாடங்கொண்டு மெய்மயங்கும் நிலை, உடன் மயங்கும் நிலை என ஈரிடத்தும் மயங்குநிலை என்ற சொற்களைக்கூட்டி மெய் மயங்கு நிலை = தனிமெய்தன் முன்னர் நின்ற பிறமெய்யோடும் தன் மெய்யோடும் மயங்குநிலையும், உடன் மயங்குநிலை = அப் பதினெட்டும் உயிருடனே நின்று தன்முன்னர் நின்ற உயிர்மெய்யோடும் தனி மெய்யோடும் மயங்கும் நிலையும் என இரண்டாம், எனப் பொருள்கூறி, இச் சூத்திரம் தனிமெய் பிறமெய்யோடும் தன் மெய்யோடும் மயங்கும் மயக்கமும், உயிர்மெய் உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமும் கூறுகின்றது எனக் கருத்துரைப்பர். இவர்க்கு முன்னவராய இளம்பூரணர் கொண்ட மெய்மயக்குடனிலை என்ற பாடமே தொன்மை கருதி ஏற்றுக் கொள்ளப்படுவ தாகலானும், உயிர்மெய், உயிர்மெய்யோடும் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கத்திற்கு வரையறையின்மையின் அதற்கு விதி கூறப்படுவதன்றாகலானும் அவர் கூறியவாறு மெய்ம் மயங்கு நிலை என்பதனுள் மெய் பிறமெய்யோடும் தன் மெய்யோடும் கலந்து நிற்குநிலை என்பது விளங்காமை யானும், உயிர்மெய்யை உயிரும் மெய்யும் என ஈரெழுத்தாகப் பிரித்து விதி கூறுவார் ஈண்டு ஓரெழுத்தாகக் கொண்டு உரையாராகலானும், உடனிலை யென்பதற்கு உயிருடன் நிற்றல் எனக் கோடற்குரிய சொல்லின்மையானும் இளம்பூரணர் பாடமே ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். ஆசிரியர் தனிமெய் பிறமெய்யோடு மயங்குநிலையை மெய்ம்மயக்கு எனவும், தனிமெய் தன் மெய்யோடு மயங்கி நிற்கும் நிலையை உடனிலை யெனவும் இச் சூத்திரத்திற் பகுத்துரைத்தல் காணலாம். மொழியிடை நிற்கும் எழுத்துக்களின் மயக்கம் உணர்த்தப் போந்த நன்னூலார், உயிருடன் உயிர்க்கு மயங்குந் தன்மை யின்மையின் அதனையொழித்து மெய்யுடன் மெய் மயங்குதலும், உயிரும் மெய்யும் மாறி மயங்கலுமாகிய இவ்விரண்டினையும் இடைநிலை மயக்கத்தில் உணர்த்த எடுத்துக் கொண்டார். க, ச, த, ப, வொழிந்த ஈரேழன் கூட்டம் மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகும் இவ்விருபான் மயக்கும் மொழியிடை மேவும் உயிர்மெய் மயக்கள வின்றே. (நன். 110) (இ-ள்) மெய் பதினெட்டனுள் க, ச, த, ப, என்னும் நான்கும் ஒழித்தொழிந்த பதினான்கு மெய்யும், பிற மெய்களோடு கூடுங் கூட்டம் வேற்றுநிலை மெய்ம் மயக்கமாம். ர ழ என்னும் இரண்டு மொழித்தொழிந்த பதினாறு மெய்யும் தம்மொடு தாம் கூடுங் கூட்டம் உடனிலை மயக்கமாம். இவ்விரண்டு பகுதி மயக்கமும் மொழியிடை வரும். உயிருடன் மெய்யும் மெய்யுடனுயிரும் மாறி உயிரும் மெய்யுமாக மயங்கும் மயக்கத்திற்கு வரையறையில்லை; வேண்டியவாறே மயங்குமென்பதாம். இதன்கண் பவணந்தியார், உயிரும் மெய்யும், மெய்யும் உயிரும் மாறி மயங்கு மயக்கத்திற்கு அளவின்றெனக்கூறி, இடை நிலையாக மெய்களை ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியவாறே மெய்மயக்கு, உடனிலைமயக்கம் என இருவகைப்படுத்துப் பெயர் கூறினார். இச்சூத்திரத்தான் மெய் மயங்குங்காற் க, ச, த, ப என்னும் நான்கும் தம்மொடு தாமே மயங்கு மெனவும், ர, ழ என்னும் இரண்டும் தம்மொடு பிறவே மயங்குமெனவும், ஒழிந்த பன்னி ரண்டும் தம்மொடு தாமும் பிறவும் மயங்குமெனவும் பெற்றாம். இவ்விருவருங் கூறிய மெய்ம்மயக்கத்தினைப் பிற் காலத்து உரையாசிரியர்கள் வேற்றுநிலை மெய்ம்மயக்கெனவும், உடனிலை யினை உடனிலை மெய்ம்மயக்கமெனவும் பெயரிட்டு வழங்குவர். மெய்மயக்கு - தனிமெய் முன்னர்ப் பிறமெய் வந்து மயங்கும் (வேற்றுநிலை) மெய் மயக்கம். இதனை ஏழு சூத்திரங்களால் தொல்காப்பியனார் விரித்துக் கூறுவர். ட, ற, ல, ள, வென்னும் புள்ளி முன்னர்க் க, ச, ப வென்னு மூவெழுத் துரிய. (தொல். 23) (இ-ள்) ட, ற, ல, ள என்ற நான்கு மெய்களின் முன்னர்க் க, ச, த, ப என்னும் மூன்று எழுத்துக்களும் தனித்தனி வந்து மயங்கு வனவாம் : என்றவாறு. அவற்றுள், ல, ள, ஃகான் முன்னர் யவவுந் தோன்றும். (தொல். 24) (இ-ள்) முற்கூறிய நான்கனுள் லகார ளகாரமாகிய மெய்களின் முன்னர்க் க, ச, ப - க்களேயன்றி யகரவகரங்களும் வந்து மயங்கும். இவ்விரு சூத்திர விதியையும் நன்னூலார், ட, ற, முன் க, ச, ப, மெய்யுடன் மயங்கும். ல, ள, முன் க, ச, ப, வ, ய, வொன்றும்மே. (நன். 113, 117) என்ற இரு சூத்திரங்களால் கூறினார். ங, ஞ, ண, ந, ம, ன, வெனும் புள்ளி முன்னர்த் தத்த மிசைக ளொத்தன நிலையே. (தொல். 25) (இ-ள்) மெல்லின மெய்கள் ஆறன் முன்னரும் முறையே அவற்றவற்றிற்கு இனமொத்த வல்லின மெய்கள் வந்து மயங்கும். அவற்றுள் ண னஃகான் முன்னர்க் க, ச, ஞ, ப, ம, ய, வவ் வேழுமுரிய. (தொல். 26) (இ-ள்) ணகார னகாரமெய்களின் முன் அவற்றிற் கினமாகிய வல்லினமெய்யே யன்றிக் க, ச, ஞ, ப, ம, ய, வ ஆகிய ஏழு மெய்களும் வந்து மயங்குவனவாம். ஞ, ந, ம, வ வென்னும் புள்ளி முன்னர் யஃகா னிற்றன் மெய்பெற் றன்றே. (தொல். 27) (இ-ள்)ஞ, ந, ம, வ என்னும் நான்கு மெய்களின் முன்னர் யகரமெய் வந்து மயங்கும். மஃகான் புள்ளிமுன் வவ்வுந்தோன்றும். (தொல். 28) (இ-ள்) மகரமாகிய மெய்யின் முன்னர்ப் பகர யகரங்களே யன்றி வகரமும் வந்து மயங்கும். இந்நான்கு சூத்திர விதிகளையும் நன்னூலார், ங ம்முன்கவ்வாம் வம்முன் யவ்வே. ஞநமுன் றம்மினம் யகரமொ டாகும். ணனமுன் னினங் கச ஞபமய வவ்வரும். ம ம்முன் பயவ மயங்கு மென்ப. (நன். 111, 112, 114, 115) என்ற நான்கு சூத்திரங்களால் குறிப்பிடுவர். ய, ர, ழ வென்னும் புள்ளி முன்னர் முதலாகெழுத்து ஞகரமொடு தோன்றும். (தொல். 29) (இ-ள்) ய, ர, ழ என்னும் மெய்களின் முன்னர் மொழிக்கு முதலாகும் க, ச, த, ப, ம, வ, ய ஞ, என்னும் ஒன்பது மெய்களும், முதலாகாத ஞகர மெய்யும் வந்து மயங்கும். நன்னூலார் முதலாகாத ஙகரத்தை அவ்வையொட்டி முதலாகுமெனக் கொண்டாராதலின் இவ்விதியை, ய, ர, ழ முன்னர் மொழிமுதன் மெய்வரும். (நன். 116) என்ற சூத்திரத்தாற் சுட்டினார். ஆசிரியர் தொல்காப்பியனார் பின்னிற்கும் மெய்களைத் தொகுத்து இவை இவற்றின் முன் மயங்குமெனச் சூத்திரம் செய்தலும், நன்னூலார் முன்னிற்கு மெய்களைத் தொகுத்து அவைகளோடு இன்னின்ன மெய்கள் வந்து மயங்குமெனக் கூறலும் இவ்விருவர் செய்த சூத்திரங்களையும் நோக்கிற் புலனாம். மெய்ந்நிலைச் சுட்டி னெல்லா வெழுத்தும் தம்முன் தாம் வரூஉம் ர ழ வ ல ங் கடையே. (தொல். 30) இது நிறுத்த முறையானே உடனிலை மயக்கமாமாறு கூறுகின்றது. (இ-ள்) பொருள் நிலைமையைக் கருதின் எல்லா மெய்களும் தம்முன் தாம் வந்து மயங்கும்; ரகர ழகரங்கள் அல்லா விடத்து என்றவாறு. மெய்ந்நிலைச்சுட்டின் என்றதனால் தனிமெய்முன்னர் உயிரேறிய மெய் வருமெனக்கொள்க. எல்லாமென்றது ரகர ழகர மொழிந்தவற்றை. இவ்வுடனிலை மயக்கத்தை நன்னூலார், ர ழ வ ல் ல ன தம்முற் றாமுட னிலையும். (நன். 118) என்றதனாற் குறிப்பிட்டார். அ, இ, உ இம்மூன்றுஞ் சுட்டு (தொல். 31) இது குற்றெழுத்தென்றவற்றுள் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது. (இ-ள்) அ, இ, உ, என்று கூறிய அம்மூன்றுஞ் சுட் டென்னுங் குறியினையுடைய என்றவாறு. இதுவும் இதற்கடுத்த சூத்திரமும் எழுத்தாம் தன்மையின்றி மொழிநிலைமைப்பட்டு நிற்றலின் மொழி மரபினைச்சார வைத்தார் என்பர் உரைகாரர். சுட்டியறியப்படும் பொருளை யுணர்த்தலின் சுட்டென்பது காரணப்பெயர். அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன் எனவரும். அ, இ, உ என்ற மூன்றெழுத்தும் மொழி முதலிலே தனியே நின்று சுட்டுப் பொருளை யுணர்த்தி நிற்றல் மேற்காட்டிய உதாரணங் களாற் புலனாம். ஆசிரியர் தனியே சுட்டு என்ற பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் இம்மூன்றெழுத்தைத் தவிர வேறொன் றையுஞ் சுட்டாமையும் இதனை வலியுறுத்தும். இவ்வாறு நன்னூலாரும் அ, இ, உ, இம் மூன்றெழுத்தும் மொழிமுதற்கண் புறத்தே தனித்துச் சுட்டுப் பொருளுணர்த்த வரிற் சுட்டெழுத்தாமென்பதனை, அ, இ, உம் முதற் றனிவரிற் சுட்டே. (நன். 66) என்பதனாற் குறிப்பிட்டார். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாரும், உரைகாரரும், பவணந்தியாரும், மயிலைநாதரும் மொழிக்கு முதலில் தனித்துச் சுட்டுப் பொருளுணர்த்திவரும் அ, இ, உ என்ற இம் மூன்ற னையுமே ஈண்டுச் சுட்டெனப் பெயர் கூறினாராகப் பின்வந்த நன்னூலுரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் முதலெனப் பொதுப்படக் கூறினமையாற் புறத்தும் அகத்தும் வருதல் பெற்றாம் எனக் கொண்டு, ஆசிரியர் கூறிய `தனிவரின் என்றதனையும் நோக்காது, அவன் என்பதன்கண் அகரம், அறம் என்பதன் கண் அகரம் போலப் பின்னெழுத்துக்களோடு தொடர்ந்து நின்ற ஒரு பொருளை யுணர்த்தாது, மலையன் என்பதன்கட் பகுதிபோல வேறு நின்று சுட்டுப் பொருளுணர்த் தலின் அகத்துவரும் இதனையும் தனிவரின் என்றார் என அமைதி கூறி, அவன் இவன் உவன் என்ற பெயரையும் உதாரணங் காட்டினர். அவர்கள் அகத்து வருவதாகக் கொண்ட இவ்வுதார ணத்தின்கண் சுட்டெழுத்தும் சுட்டப்படும் பொருளும் அக் கொற்றன் என்றவிடத்துப் போல வேறு நில்லாது ஒரு பெயர்ப்பட்டு நிற்றலான் அ, இ, உ முதலிய எழுத்துக்கள் இதன் முதற்கண் மலையன் என்பதன்கட் பகுதிபோல பிளவுபட்டுத் தனியே நின்றன எனக் கொள்ளல் பொருந்தாது. ஆசிரியர் தொல்காப்பியனார் சுட்டு என்ற பெயரினை அ, இ, உ, என்ற எழுத்துக்களுக்கே இட்டு வழங்கினார். அவை யடியாகப் பிறந்த பெயர்களைச் `சுட்டுப் பெயர் (சொல் - கிளவி சூ 37, 38) எனக் குறிப்பிட்டு வழங்குவர். அவன், இவன், உவன், அவள், இவள், உவள், அவர், இவர், உவர், அது, இது, உது, அஃது, இஃது உஃது, அவை, இவை உவை, அவ், இவ், உவ். என்றாங்கு பலதிறப்படுத்துப் பெயரிலுள் (சூ 8,13) வழங்கியுள்ளார். அ, இ, உ, என்பனவற்றைக் குறிக்கும் போது சுட்டு என்ற சொல்லை வழங்கியும், அது, அவ் முதலியவற்றைக் குறிக்கும்போது சுட்டு முதலுகரம் சுட்டு முதலாகிய வகரவிறுதி, என்று கூறிச் சுட்டடியாகப் பிறந்ததெனக் குறிபிட்டும் செல்லுதல் நோக்கத்தக்கது. ஆ, ஏ, ஓ அம்மூன்றும் வினா. (தொல். 32) இது நெட்டெழுத்தென்றவற்றுட் சிலவற்றிற்கு வேறோர் குறியீடு கூறுகின்றது. (இ-ள்) ஆ, ஏ, ஓ என்ற மூன்றும் வினா என்னும் பெயரினையுடையன. என்றவாறு. வினாப்பொருளுணர்த்தலின் வினாவாயிற்று. உண்கா உண்கே, உண்கோ என வரும். ஆசிரியர் ஈண்டு ஆ, ஏ, ஓ, என எழுத்தாம் நிலையில் நின்று வினாப் பொருள் உணர்த்திவரும் மூன்றனையும் வினாவெனக் குறியிட்டுரைத்தார். சொல்லாம் நிலைமையில் நின்று யாவன், யாவள், யாவர் என உயர் திணைக் கண்ணும், யாது, யா, யாவை, யென அஃறிணைக்கண்ணும் பெயராகவும், உயர்திணைக் கண் யார் எனவும் அஃறிணைக்கண் எவன் எனவும் வினாவினைக் குறிப்பாகவும் வருவனவற்றை முறையே சொல்லதிகாரத்துப் பெயரியல் வினையியல் இவற்றிற் கூறிப்போந்தார். எவ்வயின் எதோளி என எகர முதலாக வயின் என்பதும் இகரவிகுதியும் ஒட்டி யொருசொல் நீர்மைப்பட்டு இடப்பொருணர்த்தி இங்ஙனம் வினாவாய் நிற்கும் இடைச்சொற்களை வினாவெனத் தழுவினார் (எழுத்து 159, 334). இவை சொன்னிலைமைப்பட்டு வினாப் பொருளுணர்த்தி நிற்றலின் எழுத்தாம் நிலைமையில் நின்று ஈண்டுப் புணர்ச்சிக்கப் படும் ஈற்று வினாவாகிய ஆ, ஏ, ஓ, என்றவற்றுள் இயைத் துரைக்கப்படாவாயின. ஒன்றறிசொன்முன் யாதென் வினாவிடை யாவென் வினாவுமாயியல் திரியாது யாவென் வினாவி னையெனிறுதி (தொல். 172, 175, 178.) என இவ்வதிகாரத்தும் வினாவெனக்கொண்டு, யாவன், யாவள், யாவர், யா, யாவை, எனப் பெயரியற்கண்ணும், யாஅரென்னும் வினாவின் கிளவி அத்திணை மருங்கின் முப்பாற்கு முரித்தே. அத்திணை மருங்கி னிருபாற் கிளவிக்கும் ஒக்குமென்ப எவனென் வினாவே. (தொல். 13, 22) என வினையியற்கண்ணும் எடுத்துரைத்தமையால் வினாச் சொல்லை வினாப்பெயர், வினா வினைக்குறிப்பு என இருவகைப்படுத்தினா ரென்பதறியலாம். ஈண்டுக் குறிப்பிட்ட ஆ, ஏ, ஓ மூன்றும் இருதிணையைம்பாற் பெயரிறுதிகளோடுஞ் சேர்ந்து வினாப் பொருளுணர்த்தி நிற்றலும், சொன்னிலைப் பட்டுவரும் யாவன் முதலிய பெயரும், வினாவினைக் குறிப்பும், அவ்விருதிணையுள் ஒன்றாய் ஒருபாற் பொருளின்கண் நிற்றலுங் கொண்டு, இவை பொருளானும் வேறுபாடுடைய என்பது அறியப்படும். இனி எவ்வயின் எதோளி முதலியவை எகரத்தை முதலாகக் கொண்டு வரினும் வயின் என்னும் சொல்லும் இகர விகுதியும் பெற்று ஒரு சொல்லாய் நின்று இடப்பொருளுணர்த்தி வினாவாய் வருதலின் இடைச்சொல்லாயின. இனி இளம்பூரணர் இச் சூத்திரத்திற் தன்னின முடித்தல் என்பதனால் எகரமும் யகர ஆகாரமும் வினாப் பெறுமெனக் கொள்க. எனத் தழுவிக்கொண்டார். இக்கருத்தேபற்றி நன்னூலாரும், எ, யா, முதலும் ஆ, ஓ ஈற்றும் ஏயிருவழியும் வினாவாகும்மே. (நன். 67) எனச் சூத்திரஞ் செய்தனர். (இச் சூத்திரத்தில் ஆசிரியர் பவணந்தியார் வினாவாக வருமெனக்கூறிய ஆ, ஏ, ஓ ஆகிய ஈற்று வினாவில் ஏ முதலினும் வருமெனக் குறிப்பிட்டது, ஏது என்பது முதலாக வரும் பிற்காலத்து வழக்கு நோக்கியாதல் வேண்டும்.) பவணந்தியார் கூறியவாறு எகரம் வினாவாய் வருமென் றால், அ, இ, உ என்றவற்றைச் சுட்டெனக் குறிப்பிட்ட ஆசிரியர் எகரத்தையும் வினாவென அடக்கிக் கூறியிருப்பர். உயிர் மயங்கி யலில் அ, இ, உ என்றவற்றிற்கு அவ்வவ்வீற்றின்கண் புணர்ச்சி விதி கூறிய ஆசிரியர், எகரம் தனி நின்று வினாப்பொருளுணர்த்து மாயின் அதனையும் எகர வீற்றுள் எடுத்துக் கூறிப் புணர்த் திருப்பர். அவ்வாறெடுத்தோ தாமையானும் சுட்டுமுதல் வயின் என்றாற் போல `எகர முதல் வயின் என எழுத்தே பற்றிக் கூறி எகரம் இகரம் முதலியவைகளோடு கூடி ஒரு சொல்லாகிய நிலையிலேயே, அவ்விடைச் சொல்லை வினாவெனக் குறிப்பிட்டுச் சேறலானும், எகரமொன்றே மொழி முதற்கண் தனித்து நின்று வினாப் பொருளுணர்த்திற்றென்றல் தொல் காப்பியனார்க்குடன் பாடன்று என்க. இனி அஃறிணைப்பன்மைப் பெயராய் நின்று வினாப் பொருளுணர்த்தும் யா என்னும் வினாப் பெயரினை மொழி முதலினின்றும் வினாப்பொருளுணர்த்தும் வினா எழுத்தாகக் கொண்டு, இரு திணையைம்பாற் பெயரினும் வினையினும் பின்னின்று வினாப்பொருளுணர்த்தும் எழுத்துக்களோடியைத் துரைத்தல் பொருந்தாது. அன்றியும் யாவொன்றனை வினா வெழுத்தாகக் கொண்டு அதனோடு துவ்விகுதியும் வைவிகுதியும் சேர்ந்து யாது, யாவை என ஆயிற்றெனக் கொள்ளின் யா என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராகக் கொண்ட தொல்காப்பியனார் கருத்தோடு முரணி, யா என்பது ஐம்பாற்கு முரித்தெனப் பொருள் படுதலானும், ஐம்பாற்குமுரிய யாவென்பது இலக்கியங்களிலும் வழக்கிலும், அஃறிணைப் பன்மைப் பொருளுணர்த்தி நிற்றலானும் ஆசிரியர் கருத்து அஃதன்றென்க. இனி, எ, என்பதனைத் தனியே வரும் வினாவெழுத்தாகக் கொண்டு எப்பொருள் என்றும், உயர்திணைக் கண் அன் விகுதி பெற்று எவன் என்று ஆண்பாலுணர்த்தியும் நிற்குமெனக் கொள்வர் பிற்காலத்து உரையாசிரியர். எப்பொருளாயினும் என்ற தொல்காப்பியச் சூத்திரத் தொடர்க்கு எகரத்தைத் தனியே வந்த வினாவெழுத்தாகப் பிரித்து எந்தப் பொருளாயினும் எனப் பிற்காலத்தார்போலப் பொருளுரையாது யாதானு மொரு பொருளையாயினும் எனச் சேனா வரையர் கூறிப்போதலால் யாதுபொருளாயினும் என்பதே எப்பொருளாயினுமென ஒரு மொழியாய்த் திரிந்து நின்றதென்பது அவர் கருத்தாதலறியலாம். எவன் என்ற வினா உயர்திணைக்கு உரித்தன்றென்பதை அஃதேல் நுமக்கிவன் எவனாம் என உயர் திணைக்கண்ணும் வருமாலெனின், ஆண்டு அது முறை பற்றி நிற்றலின் அஃறிணைக் கண் வந்ததெனவே படுமென்பது; அஃதேல் நுமக்கிவன் என்ன முறையனாம் என்பதல்லது, என்ன முறையாம் என்பது பொருந்தா தெனின், என்ன முறையென்பது ஆண்டு முறைமேல் நில்லாது ஒற்றுமை நயத்தான் முறையுடையோன் மேல் நிற்றலின் அமையு மென்க என வினாவிடைகளான் வற்புறுத்தினார். ஈண்டு எவன் என்பது அஃறிணையிரு பாற்குமுரிய வினாவினைக் குறிப்பாம். அஃறிணை வினாவாய் வரும் எவன் என்னும் வினைக்குறிப்புச் சொல்லே அத்திணைக் கட் பெயராகவும் ஆசிரியர் காலத்திற்குப் பின் வழங்கத் தொடங்கியது. இப் பெயர்ச்சொல் இன் சொலினி தீன்றல் காண்பானெவன்கொலோ - வன்சொல் வழங்குவது எனத் திருக்குறளிலும் வழங்குகிறது. இதைப்பற்றி எவனென்பதோர் பெயருமுண்டு; அஃதிக் காலத்து என்னென்றும் என்னை யென்றும் நிற்கும் எனச் சேனாவரையர் கூறுதலால், எவன் என்னும் அஃறிணை வினாப்பெயர் பிற்காலத்து என், என்னை, என்று திரிந்து வழங்கப் பெற்றது என்பதும் பெற்றாம். சேனா வரையர் எவன் என்பதனை ஆசிரியர் கருத்தாக வினைக் குறிப்பெனக்கொண்டு அச்சொல் உயர்திணை குறிப்பதன்று என வற்புறுத்திக் கூறினமையானும், யாவன் என்பது முதலாக உயர்திணை வினாப்பெயரைக் குறிப்பிட்டுச் சென்ற தொல்காப்பியனார், தங்காலத்து எவன் என்ற வினா உயர்திணை ஆண்பாலைச் சுட்டி நிற்குமாயின் அதனைக் கூறாதிரார் ஆகலானும் அவர்காலத்து எவன் என்ற சொல் உயர்திணை வினாப் பெயராய் நின்ற தன்றென்பது புலனாம். ஆசிரியர் காலத்துப் பின்னர் யாது யாவை யென்பன முறையே எது, எவை எனவும், யாவன், யாவள், யாவர் என்பன முறையே எவன், எவள், எவர், எனவும் திரிந்து வழங்கியதாதலால் உரையாசிரியரும் நன்னூலாரும், எகரத்தை வினாவெழுத்தாகத் தழுவிக் கொண்டனர் போலும். இங்ஙனம் யாது முதலியவற்றின் யா என்னும் உயிர்மெய் எகரமாகத்திரியும் முறைமைத் தென்பதை யான் யாம் என்பவற்றின் முதல் யகர மெய் கெட்டு ஆகாரம் எகரமாகத்திரிந்து என், எம், என நிற்கும் எனக்கிளந்த அவற்றின் இயல்பான் உணர்ந்து கொள்ள வைத்தார் ஆசிரியர். ஆதலான், அவ்வியல்பு முறைபற்றியே அச் சொற்களின் யகர ஆகாரம் எகரமாகத் திரிந்ததெனக் கொள்ளல் பொருத்த முடைத்து. அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல். 33) இஃது எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையில் நீண்டு நிற்குமிடம் இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) எழுத்துக்கள் தமக்குச் சொன்ன அளபினைக்கடந் தொலித்தலும், ஒற்றெழுத்துக்கள் அரை மாத்திரையின் நீண் டொலித்தலும் உளவென்பர் ஆசிரியர். அங்ஙனம் உளவாதலும் குரல் முதலிய ஏழிசையோடு பொருந்திய நரம்பினையுடைய யாழினிது இசை நூலிடத்தன எனச் சொல்லுவர் புலவர். என்றவாறு. ஒற்றிசை நீடலுமெனவே முன்னர் அளபிறந் துயிர்த்தலும் என்ற விதி ஒற்றல்லாத உயிரெழுத்துக்களுக்கென்பது பெறுதும். ஒற்றிசை நீடலும் `உள என்றது, அந் நீட்டிப்பு ஒருதலை யன்றென்பது விளக்கிற்று என்பர் இளம்பூரணர். இசையின் அளவிறந் திசைக்குங் கால் உயிர் பன்னிரண்டு மாத்திரை யீறாகவும், ஒற்று (மெய்) பதினொரு மாத்திரை யீறாகவும் இசைக்குமென்பர் இசை நூலார். அவர் கொள்கையை இயற்றமிழாசிரியராகிய இவர் பிறநூன் முடிந்தது தானுடம் படுதல் என்னும் உத்தியாற் றழுவினார். நன்னூலார் இசை நூலிடத்து எழுத்துக்கள் தத்தம் மாத்திரையினைக் கடந்தொலித்தலோடு விளி பண்டமாற்றுதல் முதலியவற்றின் கண்ணும் அவை அங்ஙனமிசைக்கு மெனக் கொண்டு, ஆவியு மொற்று மளவிறந் திசைத்தலும் மேவு மிசைவிளி பண்டமாற் றாதியின். (நன். 99) எனச் சூத்திரம் செய்தனர். இனி இச்சூத்திரத்து ஆதியென்றமையான் நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரக்குஞ் சொல்லாகிய `நாவல் என்பதன் கண்ணும் குறிப்பிசை முறையீடு புலம்பல் முதலியவற்றின் கண்ணும் உயிரும் ஒற்றும் அளபிறந்திசைக்கும் மெனக் கொண்டார் பின் வந்த உரைகாரர். நச்சினார்க்கினியர் `அளபிறந்துயிர்த்தலும் என்னுஞ் சூத்திரத்தில் `இசையொடு சிவணிய என்பதற்கு இசைத்தலோடு பொருந்திய நால்வகைச் செய்யுட்கண் எனப் பொருள் கூறி, உயிரும் ஒற்றும் செய்யுட்கண் அள பிறந்திசைக்குமெனக் கொண்டார். இசையொடு சிவணிய என்ற சொற்றொடர் நரம்பின் மறைய என்பதன் அடைமொழியாகலானும், தன்னூலே பற்றாகப்பிற நூற்கு வருவதோர் இலக்கணங் கூறுதற்கு எடுத்துக் காட்டாகப் பேராசிரியர் இதனைக் குறிப்பிடுதலானும் அது கருத் தன்றென்க. 2. மொழிமரபு மொழிகளுக்கு எழுத்தான் வரும் மரபு உணர்த்தினமையின் மொழி மரபெனப்பட்டது என இளம்பூரணரும், எழுத்தானால் மொழியது மரபு உணர்த்துகின்றமையின் இவ்வோத்து மொழி மரபெனக் காரணப் பெயர்த்தாயிற்றென நச்சினார்க் கினியரும் கூறுவர். எழுத்துக்களுக்கு மொழியிடையுளதாம் அடிப்பட்ட இயல்பினை ஆசிரியர் இவ்வியலான் உணர்த்து கின்றாரென்பது கொள்ளத்தகும். இவ்வியலுட் கூறுகின்ற இலக்கணம் தனி நின்ற எழுத்திற்கன்றி மொழியிடை யெழுத்திற்கென இளம்பூரணர் கூறுவர். இவ்வியலாற் கூறப்படுவன குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்னும் சார்பெழுத்திலக்கணம், உயிரளபெடை, மொழியாக்கம், மெய்களினியக்கம், ஈரொற்றுடனிலை, மகரக் குறுக்கம், போலி, ஐகாரக்குறுக்கம், மொழி முதலெழுத்துக்கள், மொழிக்கீறாமெழுத்துக்கள், ஆகிய இவைகளாம். இவை யெல்லாம் மொழியிடை வைத்துணரத்தக்கனவாதலின் ஈண்டு ணர்த்தப்பட்டன. மொழியிடைச்சார்த்தி யுணரப்படுவன ஆகலானும், ஒருவாற்றான் எழுத்தெனக் கொள்ளப்படுவன ஆகலானும் இவை நூன்மரபையடுத்து மொழிமரபின் முதற் கண் விளக்கப்பட்டன. சார்ந்து வருதலை மரபாகவுடைய மூன்றற்கும் அவைதாம், குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என முன்னருரைத்த முறையே ஈண்டு இலக்கணம் கூறுகின்றார். அம்மூன்றும் ஒருமொழி, புணர்மொழி ஆகிய இரண்டிடத்தும் வருமெனக் கொண்டு அவற்றை ஒருமொழிக் குற்றியலிகரம், புணர்மொழிக் குற்றியலிகரம், ஒருமொழிக்குற்றியலுகரம், புணர்மொழிக் குற்றியலுகரம், ஒருமொழியாய்தம், புணர்மொழியாய்தம், என ஆறாகப்பிரித்து முறையே 34 முதல் 39 வரை உள்ள சூத்திரங்களில் உணர்த்தி 40-ல் அவ்வொரு மொழியாய்தத் திற்கோர் இலக்கணங் கூறியுள்ளார். குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும் யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக் காவயின் வரூஉ மகர மூர்ந்தே. (தொல். 34) இஃது ஒருமொழிக்கண் குற்றியலிகரம் நிற்குமாறு கூறுகின்றது. (இ-ள்) ஒரு மொழிக்குற்றியலிகரம் தாம் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்கும் சொற்குப் பொருந்தவரும் உரையசைச் சொல்லாகிய `மியா என்னும் சொல்லின் சினையாகிய `யா வென்னும் உறுப்பின் மேலதாய் மகரவொற்றினை யூர்ந்து நிற்றலை வேண்டும் ஆசிரியன். என்றவாறு. (உ-ம்) கேண்மியா என வரும். மியாவென்னுஞ் சொல் இடம், மகரம் பற்றுக்கோடு, `யா என்பதும் இகரம் அரை மாத்திரையாதற்குச் சார்பு. புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே யுணரக் கூறின் முன்னர்த் தோன்றும். (தொல். 35) இது குற்றியலிகரம் புணர்மொழியகத்தும் வருமென் கின்றது. (இ-ள்) அக்குற்றியலிகரம் ஒருமொழிக்கண்ணன்றி இருமொழி தம்முட் புணர்தலியன்ற நிலைமைக்கண்ணும் குறுகலுரித்து. அதற்கு இடமும் பற்றுக்கோடும் உணரக் கூறத்தொடங்கின் அவை குற்றியலுகரப் புணரியலுள்ளே கூறப்படும். என்றவாறு. `குறுகலும் என்புழி உம்மை, புணரியல் நிலையிடையும் என மாற்றியுரைக்கப்பட்டது. யகரம் வரும்வழி யிகரங்குறுகும், உகரக் கிளவி துவரத் தோன்றாது (400) என்ற சூத்திரத்து அறுவகைக் குற்றிய லுகர வீற்றின் முன்னும் யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகரவெழுத்து முற்றத் தோன்றாது; ஆண்டோர் இகரம் வந்து அரைமாத்திரை பெற்று நிற்கும் எனக்கூறிய விதியை ஈண்டுச் சுட்டினார். (உ-ம்) நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கியாது, குரங்கியாது எனவரும். யகரம் இடம், உகரஞ்சார்ந்த வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்விருவகைக் குற்றியலிகரத்தையும் நன்னூலார், யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும் அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய. (நன். 93) என்பதனால் தொகுத்தோதினார். ஆறீற்றுக் குற்றியலுகரமும் யகரம் வரும்வழி யிகரமாகத் திரியுமென்பர் பவணந்தியார். யகரம்வரக் குறள்உ திரியிகரம் என்பது காண்க. குற்றுகரங்கெட்டு இகரந் தோன்றுமென்பதே தொல்காப்பியனார் கருத்தாகும். நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் குற்றிய லுகரம் வல்லா றூர்ந்தே. (தொல். 36) இஃது ஒருமொழிக் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடுங் கூறுகின்றது. (இ-ள்) நெட்டெழுத்தின் பின்னும் தொடர்மொழி யிறுதி யிலும் வரும் வல்லெழுத்து ஆறினையும் ஊர்ந்து குற்றியலுகரம் நிற்றலை வேண்டும் ஆசிரியன். நிற்றல் வேண்டும் என்பது ஈண்டுங் கூட்டப்பட்டது என்பர் உரைகாரர். `நெட்டெழுத்திம்பரும் தொடர்மொழியீறும் இடம். வல்லெழுத்துப் பற்றுக்கோடு. இவ்வாறு இடமும் பற்றுக்கோடும் கூறவே, மொழிக்கு ஈறாதலும் கூறியவாறாயிற்று என்பர் இளம்பூரணர். நெட்டெழுத்திம்பர்க் குற்றியலுகரத்தை ஈரெழுத்தொரு மொழியெனப் பெயர் தந்தும், தொடர்மொழி யீற்றினை உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர், வன்றொடர் மென்றொடர் என ஐவகையாக்கியும் பின்னர்க் கூறுவர் ஆசிரியர் (சூ. 406) இவ்வாறே நன்னூலாரும், நெடிலோ டாய்த முயிர்வலி மெலியிடை தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே. (நன். 94) என்பதனாற் குற்றுகரத்தை அறுவகையாக்கிக் கூறுவர். தொடர் மொழியென்பதனை ஆசிரியர் தொல்காப்பியனார் இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யெனக்கொண்டது போலன்றிப் பவணந்தியார் ஈரெழுத்து ஒரு மொழியையும் தொடர்மொழியாகக் கொண்டாராதலான் பிறமேற்றொடர்தல் நெடிலுக்கில்லை யென்பது பட நெடிலை ஒடுக்கொடுத்துப் பிரிதல் இன்றியமையாதாயிற்று. இடைப்படிற் குறுகு மிடனுமா ருண்டே கடப்பா டறிந்த புணரிய லான. (தொல். 37) இது குற்றியலுகரம் புணர்மொழியுள்ளும் வருமென்பது உணர்த்து கின்றது. (இ-ள்) அக்குற்றியலுகரம் புணர்மொழி யிடைப் படின் குறுகுமிடமும் உண்டு; அதன் புணர்ச்சி முறைமையறியும் குற்றியலுகரப் புணரியலுள் என்பதாம். இடைப்படினுங் குறுகுமென உம்மையை மாற்றி யுரைப் பார் இளம்பூரணர். இடன் என்றதனால் இக் குறுக்கம் சிறு பான்மை யென்க. இடைப்படிற் குறுகுமிடத்தைக் குற்றியலுகரப்புணரி யலுள் வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித், தொல்லையியற்கை நிலையலுமுரித்தே என்பதனாற் சுட்டினார் ஆசிரியர். இச்சூத்திரம் குற்றியலுகரம் புணர்மொழிக்கண் தன் அரைமாத்திரையிற் குறுகி வருமென்கின்றது எனக் கருத் துரைத்து, அவ்வுகரம் ஒரு மொழியுளன்றிப் புணர்மொழி யிடைப்படின் தன் அரை மாத்திரையினுங் குறுகுமிடனுமுண்டு; அதற்கு இடனும் பற்றுக்கோடும் யாண்டுப் பெறுவதெனின் அதன் புணர்ச்சி முறைமையறியுங் குற்றிலுகரப் புணரியலுள், எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். இங்ஙனங்கொண்டா லன்றி இச்சூத்திரம் புணர்மொழிக் குற்றியலுகரத்தை யுணர்த்திற் றென்றல் பொருந்தாது. உகரங் குறுகுமிடம் ஈரெழுத்தொரு மொழி முதல் அறுவகையிடம் எனக் கூறிப்போந்த ஆசிரியர், அது புணர்மொழியிடைப்படின் தன் அரைமாத்திரையினுங் குறைந்து ஒலிக்கு மிடத்தைப் புணர் மொழிக் குற்றியலுகரமாக வுரைத்துச் செல்லுதலே பொருத்த முடைத்து. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும், எல்லா விறுதியும் உகரம் நிறையும் எனப் பாடங்கொண்டு, ஆறு தொடரின் கண்ணும் குற்றியலுகரம் வருமெனப் பொருள் கொள்ளாது, ஒரு மாத்திரையில் குறுகாது நிற்குமெனப் பொருள் கொண்டு, அவ் வாற்றான் எல்லா இறுதிக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையின் மிக்கொலிக்குமெனவும் வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து முற்கூறிய அரைமாத்திரையாகிய பழைய இயல்பின்கண்ணே நிற்றலும் உரித்து எனவும் கூறி, இச்சூத்திரம் தன்னியல்பாகிய அரை மாத்திரை பெற்றுச் சிறுபான்மையாய் வருமிடத்தையே சுட்டிற்றெனவும் கொள்வர் இளம்பூரணர். ஒருமொழிக் கண்ணுந் தம் அரை மாத்திரை யியல்பினவாய் வருங் குற்றியலுகரங்களை அரைமாத்திரையின் மிக்கொலிப்பன எனக்கோடலும், வல்லொற்றுத்தொடர் மொழி வல்லெழுத்து வருமிடத்து அரை மாத்திரையிற் சிறிது குறைந்தொலிப்பனவற்றை அரை மாத்திரையியல்பாக ஒலிக்குமெனக்கோடலும் வழக்கிற்கும் விதிக்கும் பொருந்தாவாம். ஆசிரியர் `அவ்வியல் நிலையு மேனை மூன்றே என்பதனால் குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரையியல் பெனக் கூறினார். வல்லொற்றுத்தொடர் மொழி வல்லெழுத்து வருவழியல்லது அரைமாத்திரை பெறாது மிக்கொலிப்பன வாயின் ஆசிரியர் அரைமாத்திரை பெறுமென விதிப்பதற்கு இன்றியமையாமை எதுவுமில்லை. அதனால் ஆசிரியர் கருத்துப் படி ஆறீற்றுக் குற்றியலுகரமும் தன் அரை மாத்திரையின் மிகாது இசைக்கு மென்பதே பொருத்தமுடைத்து. இச்சூத்திரத்தில் இடைப்படிற் குறுகுமிடத்தைச் சிறுவரவிற்றெனச் சுட்டினமை யாலும் ஒரு மொழியிடத்தே அரை மாத்திரை பெற்று நிற்பன வல்லெழுத்து முதன்மொழி வருவழிக் குறுகுமெனக் குற்றிய லுகரப் புணரியலுள் கூறினமையான் அவ் வரைமாத்திரையிற் குறுகுமென்பதே அச்சூத்திரக் கருத்தாகலானும் நச்சினார்க் கினியர் உரைத்த உரையே பொருந்துமென்க. புணர்மொழிக் குற்றியலுகரமாகிய இதனைப்பற்றி நன்னூலாசிரியர் குறிப்பிடவில்லை. 38. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்த வல்லாறன் மிசைத்தே. (தொல். 38) இஃது ஒரு மொழியாய்தம் வருமாறு கூறுகின்றது. (இ-ள்) புள்ளி வடிவினதாகிய ஆய்தம் குற்றெழுத்தின் முன்னதாய் உயிரோடு கூடிய வல்லெழுத்தாறன் மேலதாய் வரும். (உ-ம்) எஃகு, கஃசு, கஃடு, அஃது, கஃபு, பஃறி எனவரும். குற்றெழுத்தின் முன்னரும் உயிரோடு புணர்ந்த வல்லெழுத்தின் மேலுமாக இவ்வாய்தவொலி வருமென்று தொல்காப்பியர் வரையறை கூறியதனால் அவர் காலத்து அவற்றிடையேயல்லது ஆய்தம் பயின்று வழங்காமை தெளியப்படும்; இவ்வாய்தவொலி வல்லெழுத்தாறன் மேலதாய் நின்று அவற்றின் வல்லோசையை மெலிவித்து நிற்பதாகும். இவ்வாறு வல்லெழுத்துக்களுக்கு முன்னர் நின்று அவற்றினோசையை மென்மைப்படுத்தி நிற்கும் இயல்பிற்று ஆய்தம் என்பதனையுணர்ந்த காலஞ்சென்ற உயர்திரு மாணிக்க நாயகரவர்கள் இவ்வெழுத்தின் துணையால் பிறமொழியில் வழங்கும் எல்லா வொலிகளையும் தமிழ் மொழிக் கண் குறித்து வழங்குதல் கூடுமென்று ஆராய்ந்து விளக்கியுள் ளார்கள். இவ் வெழுத்தின் துணையால் காஃபி முதலிய பிறமொழிச் சொற்களைத் தமிழ் ஒலி எழுத்துக்களால் வழங்க வழி காட்டியவரும் அவரேயாவர். இத் தொல்காப்பியச் சூத்திரத்தை நன்னூலார் முற்றாய்தம் என்ற பகுதியில் தானெடுத்து மொழிதல் என்னும் உத்தியால் எடுத்துக் கூறினார். ஈறியன் மருங்கினு மிசைமை தோன்றும். (தொல். 39) இஃது இவ்வாய்தம் புணர்மொழியகத்தும் வருமாறு கூறுகின்றது. (இ-ள்) நிலைமொழியீறு வருமொழி முதலொடு புணர்ந்து நடக்குமிடத்தும் வேறோரெழுத்தின் ஓசையின்கண் ஆய்தம் தோன்றும் என்றவாறு. ஆய்தம் தோன்றுமாறு;- லகர ளகர வீற்றுச்சொற்கள் அல்வழிக்கண் தகர முதன்மொழி வருமிடத்து ஆய்தமாகத் திரிந்து முடியும் (369, 399) எனவும் வகரவீற்றுச் சுட்டுப்பெயர் அல்வழிக்கண் வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து அவ் வகரமெய் ஆய்தமாகத் திரிந்து முடியும் (379) எனவும் புள்ளி மயங்கியலிற் கூறுகின்றார். அவ்வாறு ல, ள, வீற்று மொழிகள் அல் வழிக்கண் வல்லெழுத்து முதன்மொழியோடு புணர்தலியன்ற நிலைமைக்கண் நிலைமொழியீற்றிலுள்ள அம் மெய்கள் ஆய்தமாகத் திரிந்து முடிதலான், ஆய்தந் தோன்று மென்னாது வேறோரெழுத்தின் ஓசைக்கண் ஆய்தவொலி திரிந்து தோன்றுமென்பட இசைமை தோன்றும் என்றார். (உ-ம்) கஃறீது, முஃடீது, அஃகடிய எனவரும். உருவினு மிசையினு மருகித் தோன்று மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா ஆய்த மஃகாக் காலை யான. (தொல். 40) இஃது ஒருமொழி யாய்தத்திற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது. ஒரு பொருளினது உருவத்தின் கண்ணும் ஓசையின் கண்ணும் சிறுபான்மையாய்த் தோன்றும் குறிப்புமொழி களெல்லாம் ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டு நடவா. அவ்வாய்தம் தன் அரை மாத்திரையளவாய்ச் சுருங்கி நில்லாது நீண்டகாலத்து அந்நீட்சிக்கு எனப் பொருள் கூறிக் கஃறென்றது என்பது உருவு, சுஃறென்றது என்பது இசை என இளம்பூரணர் உதாரணங் காட்டினர். நச்சினார்க்கினியர் உரையாசிரியரை மறுத்து `இஃது எதிரது போற்றலென்னும் உத்தியால் செய்யுளியலை நோக்கி ஆய்தத்திற்கு எய்தியதோர் இலக்கண முணர்த்துகின்றது எனக் கருத்துரைத்து, `நிறத்தின் கண்ணும் ஒலியின் கண்ணும் சிறுபான்மை ஆய்தந் தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும் அவையொழிந்த எல்லா மொழிகளும் ஒற்றெழுத் துக்கள் போல அரை மாத்திரையின் கண்ணும் சிறுபான்மை மிக்கும் நடந்து ஆய்தம் சுருங்காத இடத்தான சொற்களாம் எனப் பொருள் கூறி, `கண்ண்டண்ணெனக் கண்டுங் கேட்டும் என ஒற்றளபெடுப்புழிக் கண்ண் என்பது சீர் நிலையெய் தினாற்போல கஃஃறென்னுங் கல்லதரத்தம் என நிறத்தின் கண்ணும், சுஃஃறென்னுந் தண்டோட்டுப் பெண்ணை யென இசையின் கண்ணும் வந்த ஆய்தம் ஒரு மாத்திரைபெற்றுச் சீர் நிலையெய்துங்கால் ஆண்டுப் பெறுகின்ற ஒரு மாத்திரைக்கு, ஆய்தம் அதிகாரப்பட்டமை கண்டு ஈண்டு எதிரது போற்றி விதிகூறினார் ஆசிரியர் எனச் சிறப்புரையுங் கூறினார். (இ-ள்) ஒரு பொருளினது நிறத்தின் கண்ணும் இசையின் கண்ணும் மாத்திரை பெருகித் தோன்றுங் குறிப்பு மொழி களெல்லாம் அந்நீட்சியைக் குறித்தற் கெனத் தனியே எழுத்தால் எழுதப்பட்டு நடவா; ஆய்தம் சுருங்கா இடத்தான சொற்களாம். எனவே ஆய்தம் சுருங்கின் இம்மொழிக் குறிப்புப் புலப்படா தென்பது கருத்து. (உ-ம்) `கஃறென்னுங் கல்லதரத்தம் `சுஃறென்னுந் தண்தோட்டுப் பெண்ணை என முறையே நிறத்தினும் இசையினும் ஆய்தம் நீண்டு ஒலித்த தாயினும் அந்நீட்சிக்கு மற்றுமோ ரெழுத்து வேண்டப் படாமை யறிக. இச் சூத்திரத்தில் வந்த அருகி என்னுஞ் சொல்லுக்குப் பெருகி யெனவே தக்கயாகப்பரணி யுரையாசிரியர் பொருள் கூறினார். (தாழிசை - 37) இவற்றை ஆய்தம் சுருங்காத சொற்களெனவே ஆய்த வொலி சுருங்கும் சொற்களும் உள என்பது பெறுதும். நன்னூ லாரும் லகர ளகர வீற்றுப் புணர்மொழிக் கண் வரும் ஆய்தம் தன் ; அரை மாத்திரையிற் குறுகும் என்பதனை, லளவீற் றியைபினாம் ஆய்தம் அஃகும் (நன். 97) என்ற சூத்திரத்தில் குறிப்பிட்டு எழுத்தின் எண் என்ற பகுதியில் ஆய்தக் குறுக்கம் எனத்தனியே ஓரெழுத்தாக எண்ணினார். உயிரளபெடை குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே. (தொல். 41) இது நீட்டம் வேண்டின் என மேற்கூறப்பட்ட அள பெடை, மொழியிடைவைத்துணரும் பெற்றியதாகலின் அதனை யுணர்த்துகின்றது. (இ-ள்) குன்றுவதான ஓசையையுடைய சொற்கண்ணே நின்று நெட்டெழுத்துக்களின் பின்னாகத் தமக்கு இனமொத்த குற்றெழுத்துக்கள் அவ்வோசையை நிறைவிக்கும் என்பதாம். மேல் நெட்டெழுத்துக்கள் தாமே மூன்று மாத்திரை முதலாக ஓசைமிக்கு நில்லா எனவும் இரண்டு மாத்திரையினு மிகுத்து மூன்று முதலாக நெட்டெழுத்தினை நீட்ட விரும்பு வோர், அம் மாத்திரை யினைத் தருதற்குரிய எழுத்தினைக் கூட்டி எழுப்புதல் வேண்டும் எனவுங் கூறினார். இசை குன்றுவதான மொழிக்கண் நெட்டெழுத்தின் பின்னர் ஓசையை நிறைத்து நிற்பன அவற்றின் இனமொத்த குற்றெழுத்துக்களே என்பதனை இச்சூத்திரத்தாற் கூறினார். இதனால் அளபெடைக்கண் நெட்டெழுத்திற்குரிய இரண்டு மாத்திரைக்கு மேற்பட்ட வோசையினை நிறைப்பன நெட்டெழுத்தின் பின்னர்க் கூட்டிய குற்றெழுத்துக்களே என்பது ஆசிரியர் கருத்தாதல் விளங்கும். (உ-ம்) ஆஅடை, ஈஇகை எனவரும். செய்யுட்கண் இசை குன்றின் மொழிக்கு முதலினுமிடை யினுங் கடையினும் நின்ற நெட்டெழுத் தேழும் அவ்விசை நிறைக்கத் தத்தம் மாத்திரையின் மிக்கொலிக்கும் எனவும், அவற்றின்பின் வரிவடிவிற் காணப்படும் இனமாய குற்றெழுத் துக்கள் அவ்வாறு நெடிலளபெடுத்தமை யறிதற்கென வரைந்த அறிகுறிகளே எனவும் கருதிய நன்னூலார், இசைகெடின் மொழிமுத லிடை கடை நிலைநெடில் அளபெழு மவற்றவற் றினக்குறில் குறியே. (நன். 91) எனச் சூத்திரஞ் செய்தார். இங்ஙனம் நெடிலொன்றே அளபெழுந்து மூன்று மாத்திரையாய் மிக்கிசைக்கு மெனவும் நெடில் அளபெடுத்ததை யறிதற்கு வரும் வெறும் அறிகுறியே நெடிலின்பின் நின்ற குறில் எனவும் ஒரு தலை துணிதலாக்கி இவர் கூறியது, ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தொடு மாறு படுகின்றது. நன்னூலார் கூறியவாறு நெட்டெழுத்தே யளபெடுத்து நிற்க, அதன் பின்னர் வருங் குற்றெழுத்து அறிகுறியாய் வந்ததாயின், ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை யாஅது மென்னு மவர். உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅய் வாழிய நெஞ்சு. அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. என்றற்றொடக்கத் திலக்கியங்களில் இரு மாத்திரை யுடைய நெட்டெழுத்து ஓரசையாகவும், ஒரு மாத்திரையுடைய குற்றெழுத்து ஓரசையாகவும் பிரிந்து, அசைகொள்ளப்படுதல் பொருந்தாதாம். செய்யுளில் வரும் உயிரளபெடை நெடிலோசை யும் குறிலோசையும் என வேறு பிரித்து அசைகொள்ளப் படுதலானும், நெடிலே மூன்று மாத்திரையின் மிக்கொலிக்கு மென்றல், இரண்டு மாத்திரைக்கு மேல் மூன்று மாத்திரை முதலாக ஓரெழுத்தொலித்தலில்லை என்பதுபட மூவள பிசைத்தல் ஓரெழுத்தின்றே என ஆசிரியர் கூறிய சூத்திரக் கருத்தோடு முரணுதலானும், `குன்றிசை மொழிவயின் நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்து நின்று இசை நிறைக்கும் என்புழி, இசை நிறைக்கும் என்னும் பயனிலைக்கு வினைமுதலாகிய குற்றெழுத் தினை வெறும் அறிகுறியென்றல் பொருந்தாமையானும் தொல்லாசிரியரின் விதியே அளபெடைக்கு அமையு மென்க. ஐ ஔ வென்னு மாயீ ரெழுத்திற் கிகர வுகர மிசைநிறை வாகும். (தொல். 42) இஃது ஒத்த குற்றெழுத்தில்லாதன அளபெடுக்குமாறு கூறுகின்றது. (இ-ள்) தமக்கு இனமில்லாத ஐகார ஔகார மென்று கூறப்படும் அவ்விரண்டெழுத்திற்கும் முறையே ஈகார ஊகாரங்களுக் கினமான இகர உகரங்கள் குன்றிசை மொழிக்கண் நின்று ஓசையை நிறைப்பனவாம் என்றவாறு. அளபெடைக்கண் இசைநிறைப்பன குற்றெழுத்துக்களே யென்பதை ஈண்டும் இகர வுகரம் இசை நிறைவாகும் - என்பதனால் ஆசிரியர் விளக்கியுள்ளார். `நெடில் அளபெழும் அவற்றவற் றினக்குறில் குறியே என வுரைத்த பவணந்தியாரும், தம் கொள்கைக்கு மாறாகக் குற்றுயிர் அளபின்ஈறாம் எனக் கூறிப் போந்தார். ஒசையால் மொழி முதல் மொழியீறு சொல்லும் இவ்விடத்தில் அளபெடை யிற் குற்றெழுத்து ஈறாமெனக் கூறுதல் வெறுங் குறியளவிற் கென்றே கொள்ளற்கில்லை. இதனால் அளபெடையிற் குற்றெழுத்து ஒலித்து நிற்றலை நன்னூலாரும் தம் கொள்கையினை மறந்து உடன்பட்டனரெனவே கொள்ள வேண்டியுளது. இதுவரையும் சொல்லப்பட்ட விதிகள் முன்னை இயலாகிய நூன்மரபிற் கூறியவற்றுடன் தொடர்புடையன வாதலின், இத் துணையும் நூன்மரபின் ஒழிபு என்பர் இளம் பூரணர். மொழியாக்கம் நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி. (தொல். 43) எழுத்தினான் மொழியாமாறு கூறத்தொடங்கி ஓரெழுத்தொரு மொழி யாமாறு கூறுகின்றார். (இ-ள்) நெட்டெழுத்துக்களாகிய உயிர்களேழும் ஓரெழுத் தானாகும் ஒரு மொழியாம். (உ-ம்) ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, எனவரும். ஔகாரம் உயிர்மெய்க் கண்ணல்லது வாராது. (ஊ - தசை). இவ் விதி உயிர்க்கும் உயிர் மெய்க்கும் பொது. இவை தம்மையுணர நின்றவழி எழுத்தாம். இடை நின்று பொருளுணர்த்திய வழி சொல்லாம். குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே. (தொல். 44) (இ-ள்) குற்றெழுத்தைந்தும் ஓரெழுத்தாய் நின்று ஒரு மொழியாய் நிறைதலில்லை. ஐந்தும் நிறைதலில்லை யெனவே, அவற்றுட் சில மெய்யோடு கூடி நிறைந்து நின்று மொழியாம் என உம்மை எச்சப்பட்ட தென்பார் இளம்பூரணர். (உ-ம்) து, நொ எனவரும். அ, இ, உ எனத் தனிநின்று சுட்டுப் பொருளுணர்த்துவன வற்றை மொழியென்னாதது என்னையெனின் அவை தமக்கென வேறு பொருளின்றிப் பொருளா தியாறன் பொருளையே சுட்டி நிற்றலின் மொழியாமேனும் தனியே ஓரெழுத்தாக நின்று ஒரு மொழியாக நிறைதலிலவாகலின் மொழிநிறைபு இல என்றார். மொழி நிறைபு - மொழியியல்பில் நிறைந்து முழுப்பொருள் தரல். இச் சூத்திரமும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது. ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர் மொழி யுளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே. (தொல். 45) இஃது எழுத்தினால் ஆகும் மொழிகளின் பெயரும் முறையும் தொகையும் கூறுகின்றது. (இ-ள்) ஓரெழுத்தானாகும் ஒரு மொழியும் ஈரெழுத் தானாகும் ஒரு மொழியும், இரண்டிற்கு மேற்பட்ட எழுத்துக் களால் இசைக்கும் தொடர்மொழியுடனே கூட மொழிகளில் எழுத்துக்கள் ஒலித்து நிற்கும் நிலைமை மூன்றேயாம். அவை தோன்றிய நெறிக்கண் என்றவாறு. தனியே மொழியாய் வரும் ஓரெழுத்தை ஓரெழுத்தொரு மொழி எனவும், எழுத்து இரண்டாய் இணைந்து பொருள் தருவன வற்றை ஈரெழுத்தொருமொழி எனவும், மூன்று முதலாகத் தொடர்ந் திசைத்துப் பொருள் தருவனவற்றைத் தொடர்மொழி எனவும் ஆசிரியர் கூறிப்போந்தார். ஓரெழுத் தொருமொழியும் தொடர் மொழியும் என்னாது ஈரெழுத் தொருமொழியும் ஓதினார்; சில பல என்னுந் தமிழ் வழக்கு நோக்கி என விளக்கங் கூறுவர் நச்சினார்க் கினியர். பவணந்தியாரும் எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரிற் பதமாம் (128) என எழுத்துக்கள் சொல்லாகும் நிலையை இரண்டாக அடக்கிக் கூறினார். ஈரெழுத் தொருமொழி யுயிர்த்தொட ரிடைத் தொடர் (குற்றிய -1) ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் (குற்றிய -6) என்றாங்குப் பின்னர் எடுத்தாளுதற்பொருட்டும் இரண்டி ணைந்து நிற்பனவற்றைத் தொடரென்னாது இரண்டிற்கு மேற்பட்டன வற்றைத் தொடர் என வழங்கும் தமிழ் வழக்கு நோக்கியும் மூவகைப்படுத்துக் கூறினார். இம்மொழி வகைகளைத் தாமே வகுத்துக் கூறுவதாகக் கூறாது. அவை தோன்றிய நெறியே என ஆசிரியர் கூறுதலால், மொழித்தோற்றங்கருதிப் பண்டையோர் வகுத்த வழக்கு நெறி அஃதென்பது புலப்படுத லானும், இம்மொழி வகைகளைக் கூறுமுன்னேயும் நெட் டெழுத்திம்பரும் தொடர் மொழியீற்றும் என இரண்டிறந் திசைப்பனவற்றையே தொடர் மொழியாகக் கொண்டு ஆசிரியர் விதி கூறுதலானும், பல, சில என்னும் ஈரெழுத்தொரு மொழி களைத் தொடரல் இறுதி எனக் குறித்துப் போதலால் அவை தொடர் மொழியாகா என்பது ஆசிரியர் கருத்து ஆதலானும், அங்ஙனம் ஈரெழுத்தொரு மொழியினையும் தொடர்மொழி எனக்கோடல் பண்டைத் தமிழ் நூலார் கருத்தன்றென்பது தெளிய விளங்கும். எழுத்துக்கள் மொழியாங்கால் முன் பின் தொடர்பின்றி ஒன்றாய் நின்று தனித்தொலித்தலும், அன்புடையாரிருவர் ஒருவர் ஒருவரை இன்றியமையாது நோக்கி நிற்குமாறுபோல இரண் டெழுத்துக்கள் தம்முன் இணைந்தொலித்தலும், இவ்வாறன்றி முதலெழுத்தினை இரண்டாவதும் இரண்டாமெழுத்தினை மூன்றாவதும் இங்ஙனமே பின்வரும் எழுத்துக்களும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து நின்றொலித்தலும் என இம் மூவகை ஒலி நிலையும் மொழியின் தோற்றத்துடன் ஒருங்குதோன்றிய தமிழ் நெறியாகும். ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய மூவகை மொழி நிலையினைத் தெளிய உணர்ந்த வைத்தியநாத நாவலர் தாமியற்றிய இலக்கண விளக்க நூலில், எழுத்தே தனித்தும் இணைந்துந் தொடர்ந்தும் பதமாம் பொருள்தரின் அதுபகாப் பதம்பகு பதமென ஆயிரு பகுதித் தென்ப இத்தலைச் சூத்திரம் மொழியாக்கமும் அதன் பகுதியும் உணர்த்து கின்றது. (இ-ள்) மேற்கூறிய இலக்கணங்களை எய்திநின்ற எழுத்துக்கள் தாமே தனித்து ஓரெழுத்தாகியும், இணைந்து ஈரெழுத்தாகியும், இரண்டனையிறந்து தொடர்ந்து பல எழுத்தாகியும் நின்று பொருளை விளக்குமெனின் அவ்வெழுத் துக்கள் மொழி எனப்படும் எனச் சூத்திரமுங் கருத்தும் பொருளும் கூறி விளக்கியுள்ளார். தொல்காப்பியர் ஒன்று, இரண்டு, பல என வடநூல் வழக்கினைப் பின்பற்றி இங்ஙனம் மொழிகளை மூவகைப்படுத்தினார் எனக் குற்றங் கூறினாருமுளர். ஒன்று, இரண்டு, பல என்னும் எண்ணு நிலைக்கும் தனித் தொலித்தல், இணைந்தொலித்தல், தொடர்ந் தொலித்தல் என்னும் எழுத்தின் ஒலி நிலைக்கும் வேறுபாடுண்மையை அன்னோர் அறிந்திலர். அன்றியும் தமிழ் நூலிற்போன்று வடநூல் இலக்கண மரபின் ஏகாக்ஷர பதம், துவிக்ஷரபதம் பகுவக்ஷர பதம் என வழங்கும் வழக்கின்மையும் கருதற்குரியது. ஆசிரியர் செய்யுளியலில் உயிரில் லெழுத்து மெண்ணப் படா என்பதனால் ஒற்றுமுதலியன எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறாவென ஆண்டுக்கூறிய விதியை வழக்கினி டத்தும் மேற்கொண்டு நச்சினார்க்கினியர் ஒற்று முதலியவற்றைக் கூட்டி எழுத்தாகக் கோடல் ஆசிரியர் கருத்தன்றெனக் கூறினார். நாகு முதலிய சொற்களில் குற்றியலுகரத்தையும் எழுத்தாகக் கொண்டு அவற்றை ஈரெழுத்தொரு மொழி எனவும், வண்டு, பத்து, முதலிய குற்றியலுகர வீற்றுச் சொற்களில் இடையே வரும் மெய்யெழுத்துக்களையும் எழுத்தாகவெண்ணி அவற்றை இரண்டிறந்திசைக்குந் தொடர் மொழியாகக் கொண்டு வன் றொடர் மென்றொடர் எனவும் பெயர்கூறிப்போதலால் எழுத்ததி காரத்து ஒற்றுங் குற்றுகரமுங் கூட்டி எண்ணி மொழியாகக் கோடல் ஆசிரியர்க்கு உடன்பாடாதல் பெறப்படும். (உ-ம்) ஆ, மணி, வரகு, எனவரும். மெய்யி னியக்கம் அகரமொடு சிவணும். (தொல். 46) இது தனி மெய்கள் இயங்கும் முறை கூறுகின்றது. (இ-ள்) தனி மெய்களின் நடப்பு அகரத்தோடு பொருந்தி நடக்கும் (என்றவாறு) மெய்கள் நாவால் உருவாக இயக்கும் இயக்கமே யன்றிக் கையால் வடிவாக இயக்கும் நிலைமைக் கண்ணும் அகரத்தோடு பொருந்தி நடக்குமென்பது முன்னர் அகரங் கலந்த வடிவே எழுதிப் பின்னர் மெய் நிலைமை காட்டப் புள்ளியிட்டெழுதலாற் புலனாம். இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்து நிற்குமாறு போலப் பதினோருயிர்க் கண்ணும் அகரங்கலந்து நிற்குமென்பதனைப் பிறர்க்கு உணர்த்துதலருமை கருதி, ஆசிரியர் கூறாதொழிந்தார்; `இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனி மெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாகியே நிற்கு மென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. அகரமுதல என்னுங் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்க ளெல்லாம், அதுபோல, இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும், கண்ணன் `எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற் றானும் பிற நூல்களானும் உணர்க வெனத் தெளிவுரை கூறினார் நச்சினார்க்கினியர். தன்னையுணர்த்தாது வேறு பொருளுணர்த்துஞ் சொல் போல டறலள (சூத். 23) வென்பன உயிர் மெய்யையுணர்த் தாது தனிமெய்யை யுணர்த்தலானும் ஒற்றினை யுயிர்மெய் போலச் சொல்லுகின்ற வழுவமைதியிலக்கணத்தானும், இச் சூத்திரம் மொழிமரபின் கண்ணதாயிற்று. இவ்விதி இன்றியமையாததாகவும் சுருக்க நூலாதலின் நன்னூலார் இதனைக் கூறிற்றிலர். தம்மியல் கிளப்பின் எல்லாவெழுத்தும் மெய்ந்நிலை மயக்க மான மில்லை (தொல். 47) இது மெய்மயக்கத்திற்குப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) எல்லா மெய்யெழுத்தும் மொழியிடையின்றித் தம் வடிவினியல்பைச் சொல்லுமிடத்து மெய் மயக்க நிலையில் மயங்கி வருதல் குற்றமன்று (என்றவாறு) (உ-ம்) வல்லெழுத் தியைபின் டகரமாகும். (புள்ளி மயங்கு. 7) இங்ஙனம் மயங்கிவருதல் மொழியாய்த் தொடருமிடத் தாகலான் இது மொழிமரபின்கண் வைக்கப்பட்டது. நச்சினார்க்கினியர் உரையாசிரியர் கருத்தை மறுத்து இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி, அவ்வுயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் நின்ற காலத்து அம்மெய்யாற் பெயர்பெறு மாறு கூறுகின்றது எனக் கருத்துரைத்து, `பன்னீருயிரும் வன்மை, மென்மை இடைமையாகிய மெய்யின் தன்மையிலே தம்முயிர்த் தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறின் குற்றமில்லை எனப் பொருள் கூறி, என்றது, வல்லெழுத்து மெல்லெழுத்து இடை யெழுத்து என உயிர்மெய்க்கும் பெயரிட்டாளுதல் கூறிற்று, என விளக்கமுங் கூறினர். உயிர் மெய்யை வேற்றுமை நயங்கருதி இரண்டெழுத்தாகக் கூறும் ஆசிரியர், வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே `மெல்லெழுத்தியையி னிறுதியொ டுறழும், இடையெழுத்தென்ப யரலவழள வென்றவிடத்து ஓரெழுத்தாகக் கூறினாரென்றல் பொருந்தாதாகலானும், வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே யென்புழி வல்லெழுத் தென்பதனை உயிர்மெய்யெழுத்தாகக் கொள்ளின் அவ்வெழுத்து மிகும் என்பது அவ்வுயிர்மெய்யெழுத்து மிகுமெனப் பொருள்பட்டு மாறுகொள்ளுமாதலானும், வன்மை, மென்மை, இடைமையாகிய தன்மை மெய்க்கேயன்றி உயிர்க் கில்லாமை யானும், வல்லெழுத்து மெல்லெழுத்து, இடையெழுத்து என்ற பெயர்கள் உயிர் மெய்க்கன்றி மெய்க்கே யுரியனவென்பது அவற்றைத் தொகுத்து அம்மூவாறும் எனச் சுட்டி மெய் மயக்கங் கூறுதலாற் புலனாமாதலானும் உரையாசிரியர் கூறிய வாறு இச்சூத்திரம் மெய் மயக்கத்திற்குப் புறனடை யென்பதே பொருந்துமென்க. மெய் மயக்கத்திற்கு அவற்றுள், லளஃகான் என்பதனைக் காட்டில் அஃதிருமொழிக் கண்ணதென மறுக்க என்பர் நச்சினார்க்கினியர். ஆசிரியர் இவ்வோத்தின் கண் ஒரு மொழி தொடர்மொழி யென்னும் வேறுபாடின்றிப் பொதுவாக மொழி யிடை யெழுத்துக்களின் இலக்கணங் கூறுகின்றாரென்பது, ஒருமொழி புணர்மொழிகளில் வரும் குற்றியலுகர குற்றியலிகரங் களையும் ஆய்தத்தையுந் கூறுதலாற் பெறப்படுமாதலின், நச்சினார்க்கினியர் கூற்று ஆசிரியர் கருத்தன்றென்க. இம் மெய்மயக்கப் புறனடையை நன்னூலார் முதனிலை யெழுத்துக் களின் புறனடையோடு சேர்த்துக் கூறுவர். ஈரொற்றுடனிலை யரழவென்னு மூன்று மொற்றக் க ச த ப ங ஞ ந ம ஈரொற்றாகும். (தொல். 48) மேற்கூறிய எழுத்துக்கள் மொழியாமிடத்து வேறுபட்ட மெய் களிரண்டும் ஒற்றாய் உடனிற்கும் நிலையை இச் சூத்திரத்தாற் கூறுகின்றார் ஆசிரியர். (இ-ள்) யரழ வென்று சொல்லப்படுகின்ற மூன்றனுள் ஒன்று ஒற்றாய் நிற்ப, அவற்றின் பின்னே க, ச, த, ப க்களில் ஒன்றாதல், ங, ஞ, ந, ம க்களில் ஒன்றாதல் ஒற்றாய் வர அவை ஈரொற்றாய் நிற்கும். என்றவாறு. உ-ம் க. ச. த. ப. ய----வேய்க்க, வாய்ச்சி, பாய்த்தல், வாய்ப்பு. ர----பீர்க்கு, நேர்ச்சி, வார்த்தல், ஆர்ப்பு. ழ---- வாழ்க்கை, தாழ்ச்சி தாழ்த்தல், தாழ்ப்பு. ங. ஞ. ந. ம. ய----காய்ங்கனி, தேய்ஞ்சது, சாய்ந்தது, காய்ம்புறம். ர--- நேர்ங்கல், நேர்ஞ்சிலை, நேர்ந்திலை, நேர்ம்புறம். ழ--- தாழ்ங்குலை, தாழ்ஞ்சினை, தாழ்ந்திரள், பீழ்ம்படை எனவரும். அவற்றுள், ரகார, ழகாரங் குற்றொற் றாகா. (தொல். 49) இஃது எய்தியது ஒருமருங்கு மறுத்தது. (இ-ள்) மேற் கூறப்பட்ட மூன்றனுள்ளும் ரகாரமும், ழகாரமும் குறிற்கீழ் ஒற்றாய் வாரா. என்றவாறு. எனவே அவை நெடிற்கீழ் ஒற்றாம்; குறிற்கீழ் உயிர் மெய்யாம். (உ-ம்) தார், தாழ் என நெடிற்கீழ் ஒற்றாய் நின்றன. கரு, மழு, எனக் குறிற்கீழ் உயிர்மெய்யாய் நின்றன. இவ்வாறு இரண்டையும் விலக்கினமையின் ஒழிந்த யகரம், பொய், நோய் என ஈரிடத்தும் வருமென்பதாம். `குற்றொற்று = குறிதாகிய ஒற்று எனப் பண்புத் தொகை குறிற்கீழ் நிற்றலான் குறியதெனப் பட்டது என்பர் உரையாசிரியர். கீழ் என்னும் உருபு தொகுத்துக் கூறினாரென்பர் நச்சினார்க்கினியர். எனவே அவர் குற்றொற் றென்பதனை வேற்றுமைத் தொகையாகக் கொண்டார் என்பது புலனாம். இவ்விரண்டு சூத்திரத்தாலும் கூறப்பட்ட விதியை நன்னூலார் உடனிலை மயக்கத்தின் கீழ்வரும், ய, ர, ழ, வொற்றின்முன் க, ச, த, ப, ங, ஞ, ந, ம, ஈரொற்றாம்; ஈழத்தனிக் குறிலணையா. (நன். 119) என்ற சூத்திரத்தால் தொகுத்துக் கூறினார். குறுமையும் நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லாம் நெட்டெழுத்தியல. (தொல். 50) இது மேலைச் சூத்திரத்தின் மேலெழுந்த ஐயம் அகற்றுகின்றது. (இ-ள்) உயிரெழுத்திற்குக் குறுமையும், நெடுமையும் மாத்திரையென்னும் அளவுபற்றிக் கொள்ளப்படுதலின் தொடர் மொழி யிறுதியில் நின்ற ரகார ழகார மெல்லாம் நெடிற் கீழ் நின்ற ரகார ழகாரங்களின் இயல்பை யுடையனவாம். என்றவாறு. என்றது, மேலைச் சூத்திரத்து ர, ழ, என்பன குறிற் கீழ் ஒற்றாகா என்று கூறியது கொண்டு குற்றெழுத்தின் பின்னதாய் யாண்டும் ரகார, ழகாரம் வாரா என்பது கருதிப் புகர், புகழ் என்பன யாண்டடங்கு மென்பாரை நோக்கிப் புகழ், புலவர் என்றாற்போல அக்குறில்கள் இணைந்து நிற்க அவற்றைத் தொடர்ந்துவரின் அக் குறிலிணைகளும் நெடிலின் தன்மையை யுடையன வாதலான், அவற்றின்பின் வரும் ரகர ழகரங்களும் நெட்டெழுத்தின்பின் நின்றனவாகவே கொள்ளப்படு மென்றவாறாம். இவ்வாறன்றி நச்சினார்க்கினியர், இச்சூத்திரம் அளபிறந் துயிர்த்தலும் என்னுஞ் செய்யுளியலை நோக்கிய நூன்மரபிற் சூத்திரத்திற்குப் புறனடையாய் அதன்கண் உயிரும் உயிர் மெய்யும் அளபிறந்து இசைக்குங்காற் குறிலோ நெடிலோ இசைப்பதென மாணாக்கர்க்கு நிகழ்வதோர் ஐயமகற்றுகின்ற தெனக் கருத்துரைத்து, இச்சூத்திரத்து நெட்டெழுத்தியல் என்ற தொடர்க்கு நெடிற்கீழ் நின்ற ரகார ழகாரங்களின் இயல்பை யுடையவாம் என உரையாசிரியர் உரைத்த வழியே உரையாது, `இயல என்பதனைச் செயவென்னும் வாய்பாட்டு வினையெச்ச மாகக் கொண்டு எழுத்துக்களது குறிய தன்மையும் நெடிய தன்மையும் மாத்திரை யென்னும் உறுப்பினைச் செவிகருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப் படுதலின் அம் மாத்திரை தம்முள் தொடர்ந்து நின்ற சொல் லெல்லாம் நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும் படியாகத் தொடர்ந்த சொல்லாம் - எனப் பொருள் கூறினார். அளபிறந் துயிர்த்தலும் என்ற சூத்திரம் இசை நூலில் உயிரும் ஒற்றும் தன் மாத்திரையில் நீண்டொலித்தலைக் கூறிய தாதல், அச்சூத்திரத்திற்கு இளம்பூரணரெழுதிய உரையாலும் அதனைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திக்கு எடுத்துக் காட்டாகப் பேராசிரியர் குறித்தலானும் புலனாமாதலின், இசை நூற்குக் கூறும் இவ்விலக்கணம் செய்யுளியலுக்குமுண்டெனச் சூத்திரச் சொற்றொடரைப் பிரித்துக் கூறுதல் பொருந்தாது. அன்றியும் செய்யுளியல் விதியை இதுமாட்டெறிந்ததென்பதற் குரிய சொற்றொடர் இதனுட்காணப்படாமையானும் ஆண்டுக் கூறப்படும் விதி அளபெடைக்கண் அடங்கு மாதலானும், மேலைச் சூத்திரத்தில் குற்றொற்று எனப் பொதுப்படக்கூறியத னால் வரும் ஐயமகற்றுதல் வேண்டுமாதலானும் நச்சினார்க்கினி யருரை இச் சூத்திரத்தின் கருத்தன் றென்பது பெறப்படும். அன்றியும் நெட்டெழுத்தாவது, குற்றெழுத்திரண்டு நின்று நீண்டிசைப்ப தாகலின் குற்றெழுத்துக்கள் இரண்டு முதலியன வாகத் தொடர்ந்தனவெல்லாம் நெட்டெழுத்தினியல்புடைய வென்பது பொருந்தும் நெட்டெழுத்தாவது நீரும் நீரும் சேர்ந்தாற் போலக் குற்றெழுத்து இரண்டொத்து நின்று நீண்டிசைப்ப தொன்றாகலின் எனவரும் சிவஞான முனிவர் கூற்றானும்குறலிணை முதலியனவாகத் தொடர்ந்த குற்றெழுத் துக்கள் நெட்டெழுத்தின் இயல்புடைய என்பது போதரும். இக்கருத்தே பற்றி ஆசிரியர் தொல்காப்பியனாரும் குறிற்கீழ் நின்ற ஆகாரம் குறுகுதலைக் கூற வந்தவிடத்துக் குறிற்கீழ் ஆகாரம் அகரமெனக் குறுகுமென்றுவரை யாது அவ் ஆகாரத்தின் உறுப்பாகிய ஒருமாத்திரை யளவினை யுடைய அகரம் கெடுமென்பதுபட, குறியத னிறுதிச் சினைகெட வுகரம் அறியவருதல் செய்யுளு ளுரித்தே (தொல். 156) எனச் சூத்திரஞ் செய்தலானும் - விரல்தீது என்பது முதலாக வரும் குறலிணை யொற்றை நெடிற்கீழ் ஒற்றெனக் கருதிக் கெடுத்தற் கேற்ப, பின்னர் 160-ல் நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் என விதி கூறிப்போதலானும், பின்னரும் பல இடங்களில் குறிலிணை எழுத்துக்களை நெடிலியல்பினவாகக் கொண்டு விதி கூறுதலானும் இளம்பூரண ருரையே ஆசிரியர் கருத்தோடு ஒட்டியதாதல் நன்கு துணியப்படும். செய்யு னிறுதிப் போலு மொழிவயின் னகார மகார மீரொற்றாகும். (தொல். 51) இது செய்யுட்கண் ஈரொற்றுடனிலையமாறு கூறுகின்றது. (இ-ள்) செய்யுட்கண் போலும் என்னும் சொல்லினிறுதி யில் னாகரமும், மகாரமும், வந்து ஈரொற்றுடனிலையாய் நிற்கு மென்றவாறு. (உ-ம்) `அந்நூலை - முன்னூலாகக் கொள்வானும் போன்ம் என வரும். போலி மொழிவயின் என்றபாடம் நச்சினார்க் கினியரது அன்றென்பது, `போலும் என்னுஞ் செய்யுமென்னு முற்று ஈற்றுமிசையுகரம் மெய்யொழித்துக் கெட்டு லகாரம் திரிந்து நின்றது எனவரும் அவருரையாற் புலனாம். னகாரை முன்னர் மகாரங் குறுகும். (தொல். 52) இது மேல் ஈரொற்றாய் வரும் என்ற மகரம் தன்மாத் திரையிற் குறுகுமென்கின்றது. (இ-ள்) முற்கூறிய னகரத்தின் முன்னர் வந்த மகரம் தன் அரைமாத்திரையிற் குறுகி நிற்கும். இனித் தன்னின முடித்தல் என்பதனால் ணகார வொற்றின் முன்னும் மகரங் குறுகுதல் கொள்க. `மருளினும் எல்லாம் மருண்ம் எனவரும், என நச்சினார்க்கினியர் ஒரோவழி ணகாரத் தின் முன் மகரம் ஈரொற்றாய் நின்று அரை மாத்திரையிற் குறுகி நிற்றலைத் தழீஇயினார். இவ்வாறு செய்யுளகத்து லகார ளகார வொற்றுத் திரிந்தமை காரணமாக னகார ணகாரங்களின் முன் வரும் மகரவொற்று முன்னர்க் கூறியவாறே தன் அரை மாத்திரையிற் குறுகி அவற்றுடன் ஈரொற்றுடனிலையாய் வருதலை நன்னூலார், லளமெய் திரிந்த னணமுன் மகாரம் நைந்தீ ரொற்றாம் செய்யு ளுள்ளே. (நன். 120) என்பதனாற் குறிப்பிடுவர். மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவேறிசைப்பினும் எழுத்தியல் திரியா வென்மனார் புலவர். (தொல். 53) இஃது எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஐயந் தீர்க்கின்றது. (இ-ள்) மொழிக்கண் படுத்துச் சொல்லினும் தெரிந்து கொண்டு வேறு சொல்லினும் உயிரும் மெய்யுமாகிய எழுத் துக்கள் தத்தம் மாத்திரை முதலிய இயல்பில் திரிந்து நில்லா என்றவாறு. மேல் `போலும் என்ற மொழியின் மகரம் தன் அரை யளபிற் குறைவது போன்று ஏனையெழுத்துக்கள் தம்மியல்பு வேறுபடுமியல் பினவோ என்று ஐயுறுவாரை நோக்கி, மொழிக் கண் படுத்துச் சொல்லினும் தெரிந்து கொண்டு வேறே சொல் லினும் எழுத்துக்கள் தத்தம் மாத்திரையியல்பில் திரியாவெனக் கூறித் தெளிவித்தார். ஈண்டு எழுத்தியல் திரியாவென்றது மொழிக்கட்பட்டுத் தெரிந்து வேறிசைக்கப்படும் முப்பதெழுத்துக்களையுமே. தெரிந்து வேறிசைக்கப்படு மியல்பின்றி மொழியைச் சார்ந்து வருவன மூன்றும், சார்ந்துவருதலாகிய தம்மியல்பிலன்றி வேறு வகையாற் றிரிபுபட விசைப்பன வாகாவாதலின் இவ்விதி அவற்றிற்கு வேண்டுவதன்றாம். மொழிக்கண் படுத்துச் சொல்லினும் தெரிந்து வேறு சொல்லினும் எழுத்தியல் திரியா வெனவே இவற்றாற் பொருள் திரியுமென்றாராயிற்று. வேறு இசைத்தல் என்றதனால் எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக் கண்ணும் எழுத்தியல் திரியா வென்பது கொள்க. எடுத்தல் படுத்தலால் மாத்திரை வேறுபட்டுப் பொருள் வேறுபடுமென்பதை காது, கட்டு முதலிய குற்றியலுகரங்கள் இதழ்குவித்து முற்றக்கூறியவிடத்தும் இதழ் குவியாமல் குறையக் கூறியவிடத்தும் பொருள் வேறுபடுமென நச்சினார்க்கினியர் கூறுவது கொண்டு அறியலாம், ஒற்றுங் குற்றுகரமும் ஈண்டு எழுத்தெனக் கொண்டார் ஆசிரியர் என்பது முற் கூறப்பட்ட தாதலின் நச்சினார்க்கினியருரை ஆசிரியர் கருத்தன்றாம். இவ்வாறே எழுத்துக்கள் தனித்துச் சொல்லுமிடத்துப் போல மொழியாய்த் தொடருமிடத்தும் தம்மியல்பிற் றிரியாது நிற்குமென்பதனை நன்னூலார். மொழியாய்த் தொடரினும் முன்னனைத் தெழுத்தே. (நன். 127) என்பதனாற் கூறினார். சங்கர நமச்சிவாயரும் எழுத்து, சுண்ணத் தின்கண் அரிசன முதலிய போலாது மாலையின்கண் மலர்போல் அவற்றில் நிற்றலின் முன்னனைத் தென்றார் என விளக்கி யுரைத்தார். 3. போலி அஃதாவது ஓரெழுத்தினைப் போன்று பிறவெழுத்துக்கள் நின்றொலித்தல். அகர விகரம் ஐகாரமாகும். (தொல். 54) (இ-ள்) அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம் போல் விசைக்கும். (உ-ம்) ஐவனம், அஇவனம் - எனவரும். அகர வுகரம் ஔகாரமாகும். (தொல். 55) (இ-ள்) அகரமும் உகரமுங் கூடி ஔகாரம் போல விசைக்கும். (உ-ம்) ஔவை, அஉவை எனவரும். ஆகும் என ஆக்கச் சொற்கொடுத்து ஓதியவதனால் இவ்வொலிகள் செயற்கை என்பது உணர வைத்தார். அகரத்திம்பர் யகரப் புள்ளியும் ஐயெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல். 56) (இ-ள்) அகரத்தின் பின் இகரமேயன்றி யகர மாகிய புள்ளியும் ஐயெனப்பட்ட நெட்டெழுத்தின் வடிவுபெறத் தோன்றும். (உ-ம்) ஐவனம், அய்வனம் - எனவரும். `மெய் பெறத் தோன்றும் என்றதனால் அகரத்தின் பின்னர் உகரமேயன்றியும், வகரப் புள்ளியும் ஔகாரம்போல வருமெனக் கொள்க ஔவை - அவ்வை எனக் கண்டு கொள்க என்பர் இளம்பூரணர். இவ்வெழுத்துப் போலிகளை நன்னூலார். அம்ம னிகரம் யகர மென்றிவை எய்தின் ஐயொத் திசைக்கும்; அவ்வோடு உவ்வும் வவ்வும் ஔவோ ரன்ன. (நன். 125) என்பதனாற் றொகுத்துரைத்தார். இச் சூத்திரத்திற்கு அகரத்தின் முன் இகரமும் யகரவொற்றும் வருமாயின் ஐகாரம் போன்றொலிக்கும். அகரத்தோடு உகரமும் வகர வொற்றும் வருமாயின் ஔகாரம் போன்றொலிக்கும் எனப் பொருள் கூறி, (உ-ம்) அ. இ=ஐ; அய் = ஐ; கஇ = கை; கய் - கை; அ.உ = ஔ; கஉ = கௌ; என உதாரணமுங் காட்டினர் சங்கர நமச்சிவாயர். மேலைச் சூத்திரத்தில் தொல்காப்பியனார் அகரத்தின் முன் வகரமெய் வந்து ஔகாரம் போல வொலிக்கு மெனக் கூறாதிருக்கவும் நன்னூலார் அதனை இச்சூத்திரத்திற் கூறியது, - மெய்பெறத் தோன்றும் என்றதனால் வகரப் புள்ளியும் ஔகாரம் போல வருமெனக் கொள்க என அச்சூத்திரத்திற்கு உரையா சிரியர் உரைத்த சிறப்புரை கருதியென்க. இவ்விதி தொல்காப்பியர்க் குடன்பாடாயின், அகரத் திம்பர் வகரப் புள்ளியும் ஔவெ னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என்றொரு சூத்திரம் செய்திருப்பர். அவ்வாறுரையாமை யொன்றே, இவ்விதி அவர்க்கு உடன் பாடன்றென்பதைப் புலப்படுத்தலானும், பிறப்பியலில், உ,ஊ,ஒ,ஓ ஔ வென விசைக்கும் அப்பாலைந்தும் இதழ் குவிந்தியலும் எனக் கூறுமாற்றால் இதழ் குவிதலாற் பிறக்கும் ஔகாரம் வீற்றோசைக்கும் தொழிற்பாட்டுக்கும் பல்லிதழியைய வகரம் பிறக்கும் என்றதனால் மேற்பல்லைக் கீழிதழ் இயையப் பிறக்கும் வகரத்தின் ஓசைக்கும் தொழிற் பாட்டுக்கும் பெரியதொரு வேறுபாட்டினை ஆசிரியர் விரித்துரைத்தலானும், அகரமும் வகரமுங்கூடி ஔ என ஒலித்தல் தொல்காப்பியர் காலத்து வழக்கன் றென்பது புலனாகும். அங்ஙனமாகவும் வ.உ. சிதம்பரம்பிள்ளை யவர்கள், தாம் பதிப்பித்த தொல்காப்பிய எழுத்ததிகாரம் இளம்பூரணருரையில், அகரத்திம்பர் யவகரப் புள்ளியும் ஐ ஔ நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். எனப் பாடத்தினைத் திரித்துப் புதுப்பொருள் கொள்ளுதல் முற்றும் பொருந்தாத தொன்றாம். சிவஞான முனிவர் அம்முனிகரம் என்னும் எழுத்துப் போலி யுணர்த்தும் நன்னூற் சூத்திரத்தினைச் சந்தியக்கர முணர்த் திற்றாகக்கொண்டு, அகரமும் யகர மெய்யும் இகரமுங்கூடி ஐயென்னும் எழுத்தாக வொலிக்கும் எனவும், அவ்வாறே அகரமும் வகரமெய்யும் உகரமுங் கூடி ஔவென்னும் எழுத்தாக வொலிக்கும் எனவும் பொருள்கூறி, இக் கருத்தே பற்றி ஆசிரியர், அகர விகர மைகாரமாகும் அகரவுகர மௌகாரமாகும் எனக் கூறி ஐயென்னும் நெட்டெழுத்து வடிவு புலப்படுத்தற்கு அகர இகரங்களேயன்றி அவற்றினிடையே யகரமு மொத்திசைக்கு மென்பார், அகரத்திம்பர் யகரப்புள்ளியும் - ஐயென் நெடுஞ் சினை மெய்பெறத் தோன்றும் என்றும், மெய்பெற வென்ற விலேசானே, ஔவென்னும் நெட்டெழுத்தின் வடிவு புலப் படுத்தற்கு அகர வுகரங்களேயன்றி அவற்றினிடையே வகரமும் ஒத்திசைக்கும் என்றும், இம்பர் உம்பர் என்றாற்போல்வன காலவகை இடவகை களான் மயங்கு மாகலின் முதற்கண் நிற்பது யாதோ இறுதிக்கண் நிற்பது யாதோவென்னும் ஐய நீக்குதற்கு இகர யகர மிறுதி விரவும் என்றுங் கூறினார் எனவும் சூத்திர விருத்தியுள் குறிப்பிடுவர். அகர விகரமைகாரமாகும், அகரவுகரமௌகாரமாகும் என இரு சூத்திரத்தும் அவற்றின் விதியை ஆசிரியர் முடித்துக் கூறினாராதலானும், அகரத்தின் பின்னர் இகரமேயன்றி யகரப்புள்ளி வரினும் ஐகாரம் போல விசைக்குமென்பதற்கே. அகரத்திம்பர் யகரப்புள்ளியும் ஐயென் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என ஆசிரியர் உம்மை கொடுத்துக் கூறினாராதலானும் இச் சூத்திரத்து `மெய்பெற என்றது, இலேசாய் வந்ததன்றி, அகரமும் யகரப்புள்ளியும் கூடி ஐகாரம் போல வொலிக்கும்பொழுது உயிரீறாக ஒலிக்கும் இயற்கை ஐகார வீறுபோலன்றி இப்போலியீறு மெய்யோசைபெறத் தோன்றி யிசைக்குமென்ற வேற்றுமையை விளக்குதற்கு வந்த அடைமொழியாகலானும் அவர் கூறியவாறு; அ, ய், இ என்ற மூன்றுங்கூடி ஐயெனவும் அ, வ், உ என்ற மூன்றுங்கூடி ஔவெனவும் ஒலிக்குமெனின், அவ்விடத்து ஐ, ஔ வென்ற ஒலியின் வேறாக அய்யி, அவ்வு, என மாத்திரை மிக்கு ஒலி வேறுபாட்டிசைத் தலானும், இகர யகர மிறுதிவிரவும் என்ற சூத்திரம் இகரமும் யகரமும் ஒரு மொழியின் இறுதிக்கண் `நாய் `நாஇ என விரவி இறுதிப் போலியாய் வருதலைக் குறித்த வேறு சூத்திரமாகலின் 54-ம் சூத்திரமாகிய இதற்கும் 58-ம் சூத்திரமாகிய அதற்கும் இடையே ஐகாரக் குறுக்கம்பற்றிய சூத்திரம் அமைந்திருத்தலால் சந்தியக்கரம் கொள்ளுதற்குரிய தொடர்பின்மையானும் ஐ, ஔ வென்பன வற்றைச் சந்தியக்கரமாகக் கோடல் தொல்காப்பியனார் கருத்தன்றாதல் புலப்படும். அன்றியும் இச்சூத்திரங்கள் ஐகார ஓளகாரங்களின் கூட்டொலியினை உணர்த்தினவாயின் ஆசிரியர் இயற்கைப் பொருளை இற்றெனக் கூறாது செய்கைப் பொருளுக்குரிய ஆக்கங் கொடுத்துச் சொல்லுதல் பொருந்தாது. எனவே இச் சூத்திரங்கள் செயற்கை யோசையாய்ப் போலியெழுத்துணர்த்தின எனவே படும். நன்னூலார்க்கும் இதுவே கருத்தாதல் அம்முனிகரம் என்ற சூத்திரத்திற்குச் சங்கர நமச்சிவாயர் உரைத்த உரையாற் புலனாம். ஓரளபாகு மிடனுமா ருண்டே தேருங் காலை மொழிவயி னான. (தொல். 57) இஃது உயிர்களுள் ஒன்றற்கு மாத்திரைச் சுருக்கம் கூறுகின்றது. (இ-ள்) ஐகாரம் ஆராயுங் காலை மொழிக்கண் ஒரு மாத்திரையாய் நிற்குமிடமும் உண்டு. (உ-ம்) இடையன், குவளை என வரும். மேலைச் சூத்திரத்தில் ஐகாரம் அதிகாரப்பட்டமையால் இவ்விதி ஐகாரமொன்றற்கே யுரித்தாமெனக் கொண்ட உரையாசிரியர், `தேருங்காலை யென்பதனான் முதற்கண் சுருங்காதெனக்கூறி, இக்குறுக்கஞ் சிறுபான்மையெனவுங் கூறிப் போந்தார். நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்து ஔகாரத்தையுங் சேர்த்துரைத்து ஔகாரக்குறுக்கமென ஒன்று கொண்டதோடு அமையாது, உரையிற் கோடலால் ஐகாரம் முதலிடைகடை யென்னும் மூன்றிடத்துங் குறுகுமெனவும் ஔகாரம் முதற்கண் குறுகுமெனவுங் கூறினார். இக்கருத்தேபற்றி நன்னூலாரும், தற்சுட் டளவொழி ஐம்மூ வழியும் நையும், ஔவும் முதலற் றாகும். (நன். 95) எனச் சூத்திரஞ் செய்தார். இக்கூற்றினை மறுக்கப் போந்த சிவஞானமுனிவர் இடையன், மடையன், பனை, மனையென் புழிக் குறுகுதல்போல், வைகலும் வைகல் வரக் கண்டும் என்புழி ஐகாரம் முதற்கட் குறுகாமை செவிகருவியாகப் புலப் படுமாதலானும், அன்றியும் வைகலும் வைகல் என்புழிக்குறுகு மாயின், வைகல் என்பதனைக் குறிலிணையொற்றென்றிசைத்தல் வேண்டும்; வேண்டவே வெண்டளை சிதைத்தலானும், மொழிப்படுத் திசைப்பினும் தெரிந்து வேறிசைப்பினும் எழுத்தியல் திரியா என்மனார் புலவர் என எல்லா எழுத்திற்கும் பொதுப்படக் கூறிய விதியோடு முரணி, ஐகாரம் தெரிந்து வேறிசைத்தற் கண் திரியாதெனவும் மொழிப்படுத் திசைப்பின் யாண்டு வரினுந் திரியுமெனவும் பொருள்கூறுதல் பொரு ந்தாமையானும், ஓரளபாகும் இடனுமாருண்டே என்றவும்மை யான், ஓரளபாகா இடனு முண்டென்பது தானே பெறப்படுத லானும், ஈண்டு இடமாவது மொழிமுதல் இடைகடை என மூன்றேயன்றி வேறின்மையானும், ஐகாரம் மொழிமுதற் குறுகாதெனவே கொள்க. ஈண்டுக் காட்டிய ஏதுக்களானும் ஆசிரியர் ஓதாமையானும் பிறரும் குறுகிய மூவுயிர் என்றே மொழிதலானும் ஔகாரக் குறுக்கமென வொன்றின்மை உணர்க; இஃது உரையாசிரியருரையானும் அறிக எனக் கூறுமாற்றான் நச்சினார்க்கினியர் முதலியோர் கொள்கையை மறுத்து உரையாசிரியர் உரையைத் தழுவிக் கூறினமை ஈண்டு ஒப்பு நோக்கி உணரத்தக்கது. எனவே ஔகாரக் குறுக்கம் என ஒன்று இன்றென்பதும், ஐகாரம் மொழிமுதலிற் குறுகா தென்பதும் ஆசிரியர் கருத்தாதல் விளங்கும். இகர யகரம் இறுதி விரவும். (தொல். 58) இதுவும் போலி கூறுகின்றது. (இ-ள்) இகரமும் யகர மெய்யும் ஒரு மொழியின் இறுதிக்கண் ஓசை விரவிவரும். (உ-ம்) நாய், நாஇ எனவரும். இப்போலியினை இறந்தது விலக்கலென்னும் உத்தியால் நன்னுலார் தம் நூலிற் கூறா தொழிந்தார். மொழிமுதல் எழுத்துக்கள் பன்னீரு ருயிரும் மொழி முதலாகும். உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா. க, த, ந, ப, ம வெனு மாவைந் தெழுத்தும் எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே. (தொல். 59, 60, 61) என்ற சூத்திரங்களால் மொழிக்கு முதலாமெழுத்தை உணர்த்தவந்த ஆசிரியர், பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் மொழிக்கு முதலாம் எனவும், உயிரோடு கூடிய மெய்யல் லாதனவாகிய தனி மெய்கள் மொழிக்கு முதலாகா, உயிரோடு கூடின மெய்களே முதலாவன எனவும், அங்ஙனம் உயிரோடு கூடி முதலாவனவற்றுள் க, த, ந, ப, ம என்னும் ஐந்து மெய்களும் பன்னீருயிரோடும் மொழிக்கு முதலாவனவெனவுங் கூறிப், பின்னர்வரும் 62 முதலிய நான்கு சூத்திரங்களால் ச, வ, ஞ, ய என்ற நான்கு மெய்களும் பன்னீருயிர் களில் இன்னின்ன எழுத்துக்களோடும் கூடி மொழிக்கு முதலாமென்கின்றார். நன்னூலாசிரியர், மூன்று சுட்டும் யா வினாவும் எகர வினாவுமாய் இடைச் சொற்களின்பின் அகரத்தை ஒட்டி ஙவ்வும் அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என ஒருவாற்றான் மொழிக்கு முதலாமெனக் கொண்டார். அதனால் சுட்டியா வெகர வினாவழி யவ்வை ஒட்டி ஙவ்வும் முதலா கும்மே. (நன். 106) எனத்தாம் சூத்திரஞ் செய்ததற்கேற்ப ஙகரத்தையும் தொல்காப்பி யனார் குறித்த க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ என்னும் ஒன்பதனோடுங் கூட்டி இப்பத்து மெய்யும் மொழிக்கு முதலாமெனக்கொண்டு, பன்னீரு ருயிருங் கசதந பமவய ஞங வீரைந் துயிர்மெய்யு மொழிமுதல். (நன். 102) எனச் சூத்திரஞ் செய்தனர். அங்ஙனம் முதலாய சொற்களில் ஙனமென்பது, தனியே நின்று பொருள் தராது சுட்டு வினாவாகிய எழுத்துக்களை யொட்டி நின்று ஒரு சொல்லாய்ப் பொருளுணர்த் தலின், ஆசிரியர் தொல்காப்பியனாரால் மொழிக்கு முதலா மெழுத்துக்களில் ஙகரம் சேர்க்கப்படாதாயிற்று. சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே. (நன். 62) (இ-ள்) சகரமாகிய தனி மெய்யும் அ, ஐ, ஔ, வென்னு மூன்றுயிரும் அல்லாதவிடத்து முற்கூறியவை போல அவை தவிர ஏனை உயிரோடுங் கூடி மொழிக்கு முதலாம் (என்றவாறு). எனவே அ, ஐ, ஔ, என்னும் மூன்று உயிரோடுங்கூடிச் சகரம் மொழிக்கு முதலாகாதென்பது கூறப்பட்டது. சையம் சௌரியம் என்றற் றொடக்கத்து வடசொற் களிலும், சட்டி, சமழ்ப்பு என்பனபோலத் தொல்காப்பியர் காலத்திற்குப்பின் தோன்றிக் கடிசொல்லில்லை காலத்துப் படினே என அவரால் தழுவிக்கொள்ளப்பட்ட தமிழ்ச் சொற்கள் சிலவற்றினும் சகரமெய் அ, ஐ, ஔ, என்பதனோடு முதலாய் வருதல் கருதிச் சகரம் பன்னீருயிரொடுங் கூடி மொழி முதலாமெனக் கொண்டார் நன்னூலார். உ, ஊ, ஒ, ஓ, என்னு நான்குயிர் வ என் எழுத்தொடு வருத லில்லை. (நன். 63) (இ-ள்) உ, ஊ, ஒ, ஓ, என்னும் நான்குயிரும் வகரமெய் யோடு மொழிக்கு முதலாய் வருதலில்லை என்பதாம். எனவே ஒழிந்தன வற்றோடு மொழிக்கு முதலாமென்றவாறாயிற்று. உ, ஊ, ஒ, ஓ வலவொடு வம்முதல் (நன். 103) எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். ஆ, எ, ஒ வெனு மூவுயிர் ஞகாரத்துரிய. (தொல். 64) (இ-ள்) ஆ, எ, ஒ, என்ற மூன்றுயிரும் ஞகரமெய்யொடு கூடி முதலாதற்குரிய. எனவே ஏனையீறோடு ஞகரம் முதலாகாதென்பது பெற்றாம். நன்னூலார் ஞமலி என்றற்றொடக்கத்துச் சொற்கள் பிற்காலத்துத் தோன்றினமை கண்டு ஞகரம் அகரத்தோடும் முதலாமெனக் கொண்டு, அ, ஆ, எ, ஒவ்வொடாகு ஞம்முதல் (நன். 105) என அகரத்தையுஞ் சேர்த்துக் கூறினார். ஆவோ டல்லது யகர முதலாது. (தொல். 65) (இ-ள்) யகரவொற்று ஆகாரத்தோடு கூடியல்லது மொழிக்கு முதலாகாது என்பதாம். ஆகாரவுயிரோடன்றி யகரமெய் மொழிக்கு முதலாகா தெனத் தொல்காப்பியர் வரையறுத்து விதி கூறியிருக்கவும், நன்னூலாசிரியர், யவனம், யுத்தி, யூகம், யோகம், யௌவனம், என்றற்றொடக்கத்து வடமொழிச் சொற்களில் அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ, என்பனவற்றோடு யகரம் முதலாய் வருதல் கருதி ஆகாரத்தோடு அவற்றையுஞ் சேர்த்து, அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ யம் முதல். (நன். 104) என முதனூல் விதியொடு மாறுபடச் சூத்திரம் செய் துள்ளார். தமிழிலக்கணங் கூறுமிடத்து வடமொழி இலக் கணத்தை யுங்கூட்டி உரைத்தல் `கடிசொல் இல்லைக் `காலத்துப்படினே என்னும் விதியொடு பட்டதாகும். முதலா வேன தம்பெயர் முதலும். (தொல். 66) (இ-ள்) மொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும் எழுத்துக் களாகிய தம் பெயர் கூறும் வழி மொழிக்கு முதலாம், என்றவாறு. முதலாயின மெய்கள் : க த ந ப ம வ ச ஞ ய என்பன. முதலாகாத மெய்கள் : ங ட ண ர ல ழ ள ற ன என்பன. (உ-ம்) ஙக்களைந்தார், டப்பெரிது என வரும். இப்புறனடை விதியோடு மெய்ம்மயக்கப் புறனடையுங் கூட்டி, தம் பெயர் மொழியின் முதலும் மயக்கமும் இம்முறை மாறியு மியலு மென்ப. (நன். 121) எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். (தொல். 67) இது சார்பெழுத்தினுள் ஒன்றாகிய குற்றியலுகரமும் ஒருவாற்றான் முதலாமாறு கூறுகின்றது. (இ-ள்) குற்றியலுகரமானது முன்னிலை முறைப் பெயரிடத்துத் தனிமெய்யாய் நின்ற நகரத்தின் மேலுள்ள நகரத்தோடு கூடி மொழிக்கு முதலாம், என்றவாறு. இவ்வாறு குற்றியலுகரம் மொழிக்கு முதலாதல் கூறவே அம் மொழிமுதற் குற்றியலுகரத்திற்கு இடம் நுந்தையென்னும் முறைப்பெயரென்பதும், பற்றுக்கோடு நகரவொற்றின்மேலுள்ள நகரமென்பதும் கூறியவாறாயிற்று. (உ-ம்) நுந்தை என வரும். இவ்விதி நன்னூலார்க்கு உடன்பாடன்மையின் அவர் கூறாதொழிந்தா ரென்பர் சங்கர நமச்சிவாயர். முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ தப்பெயர் மருங்கி னிலையில லான. (தொல். 68) இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) நுந்தையென்னும் முறைப் பெயரிடத்து நின்ற குற்றியலுகரம், முற்றுகரத்தோடு பிற குற்றியலுகரம் பொருள் வேறுபடுமாறு போன்று பொருள் வேறுபடாது என்றவாறு. நாகு, நகு என முறையே குறுகியும், குறுகாதும் நின்ற உகரங்கள்போல, நுந்தையென்பதன் உகரம், குறுகிய வழியும் இதழ்குவித்துத் கூறக் குறுகாதவழியும் பொருளும் இடனும் பற்றுக்கோடும்மாறுபடாதென்பதாம். அம்முறைப் பெயரிடத்தே நிற்றலிலக்கணமான குற்றியலுகரம், இதழ்குவித்துக் கூறும்வழி வரும் முற்றுகரத்தோடு அவ்விடத்துக் குற்றுகரம் பொருள் வேறுபடுமாறுபோல ஈண்டுப்பொருள் வேறுபட்டு நில்லாது எனப் பொருள் கூறி, காது, கட்டு, முருக்கு, கத்து, தெருட்டு என்பன இதழ் குவித்துக் கூறியவிடத்து முற்றுகரமாய் முன்னிலை யேவ லுணர்த்தியும், இதழ்குவியாமற் கூறியவிடத்துக் குற்றுகரமாய்ப் பெயர்ப்பொருள் தந்தும் பொருள் வேறு பட்டு நின்றாற்போல, ஈண்டு வந்த நுந்தை என்னும் முறைப் பெயரிடத்து உகரம், இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறிய விடத்தும் பொருள் வேறுபடாதென்பதனை இதனால் ஆசிரியர் கூறினாரென விளக்கியுரைத்தார் நச்சினார்க்கினியர். மொழியிறுதி எழுத்துக்கள் மொழிக்கீறாம் எழுத்துக்களையும் அவற்றது வரை யறையை யும் 69 முதல் 87 வரையுள்ள சூத்திரங்களால் தொல்காப்பியர் உணர்த்துகின்றார். உயிர் ஔ வெஞ்சிய விறுதி யாகும். (தொல். 69) இஃது, உயிர் மொழிக்கு ஈறாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) உயிர்களுள் ஔகாரம் ஒழிந்தனவெல்லாம் மொழிக்கு ஈறாம். (உ-ம்) பல, பலா, கிளி, குரீ, கடு, தூ, சேஎ, நே, பனை, ஓஒ, போ எனவரும். கவவோ டியையின் ஔவு மாகும். (தொல். 70) (இ-ள்) முன் ஈறாகாதென்ற ஔகாரமும் ககர வகரத்தோடு இயைந்தவழி ஈறாம். (உ-ம்) கௌ, வௌ எனவரும். எ, என வருமுயிர் மெய்யீ றாகாது. (தொல். 71) (இ-ள்) எ என்று கூறப்படும் உயிர் தானே ஈறாவதன்றி யாண்டும் மெய்களோடு இயைந்து ஈறாகாது. ஒவ்வு மற்றே நவ்வலங் கடையே. (தொல். 72) (இ-ள்) ஒகரமும் நகரவொற்றோ டல்லாத விடத்து முன் சொன்ன எகரம்போலத் தானே ஈறாவதன்றி மெய்களோடு இயைந்து ஈறாகாது. எனவே நகரத்தோடு ஈறாமென்பது பெற்றாம். (உ-ம்) `நொ அலையல் நின்னாட்டை நீ எனவரும். ஏ ஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை. (தொல். 73) (இ-ள்) ஏ, ஓ, என்று கூறப்பட்ட இரண்டுயிரும் தாமே நின்றும் பிற மெய்களோடு கூடிய ஈறாவதன்றி ஞகரத்தோடு ஈறாதலில்லை. உ ஊ கார நவவொடு நவிலா. (தொல். 74) உரையாசிரியர் இருவரும் `உகர ஊகாரங்களாகிய இரண்டும் நகரவகர வொற்றோடு ஈறாகா என்று கூறி நவிலா என்றதனால் வகரவொற்றோடு உகரமீறாதலைத் தழுவுவர். `நவவொடு என்பதனை `நவ்வொடு என்பதன் புள்ளி நீக்கி எழுதப்பட்டதெனக் கொண்டு, உகர ஊகார மிரண்டும் நகரமெய்யோடீறாகா எனவும், அன்றி நவவொடு என்பதற்கு நிரனிறையே உகரம் நகரத்தோடும், ஊகாரம் வகரத்தோடும் ஈறாகாவெனவும் இரு வகையாற் பொருள் கூறுவர். அரசஞ் சண்முகனார். தொல்காப்பியர் நூலிலேயே களவு என்றாற்போன்ற வகர வுகரவீற்றுச் சொற்கள் பயின்று வருதலால் அரசஞ் சண்முகனார் கூறிய பொருளே சிறப்புடையதாகும். உச்சகார மிருமொழிக் குரித்தே. (தொல். 75) (இ-ள்) உகரத்தோடு கூடிய சகரம் `உசு, `முசு, எனும் இரு மொழிக்கல்லது பல மொழிக்கு ஈறாகாது. உப்பகாரம் ஒன்றென மொழிப இருவயினிலையும் பொருட்டாகும்மே. (தொல். 76) (இ-ள்) உகரத்தோடு கூடிய பகரம் தபு எனும் ஒரு மொழிக்கு ஈறாம் என்பர். அச்சொல்தான் தன் வினை பிறவினை என்ற ஈரிடத்தும் நிலைபெறும் பொருண்மைத்தாம். (உ-ம்) தபு, எனவரும். தபு எனப் படுத்துச் சொல்ல நீசா எனத் தன்வினையாம். எடுத்துச்சொல்ல நீ ஒன்றினைச் சாவச்செய் எனப் பிறவினையாம். எஞ்சிய வெல்லாம் எஞ்சுத லிலவே. (தொல். 77) (இ-ள்) 71 முதல் 76 வரை விசேடித்துக்கூறியவற்றை யொழிந்தனவும் மொழிக்கீறாகாதென்ற உயிர் மெய்களும் தம் பெயர் கூறும்வழி ஈறாதற்கு ஒழிவில. ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள வென்னும் அப்பதி னொன்றே புள்ளி யிறுதி. (தொல். 78) இது, முன்னர் உயிர்கள் ஈறாமாறு கூறி, மெய்களுள் ஈறாவன கூறுகின்றது. (இ-ள்) மெய்களுள் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள, என்ற பதினொன்றுமே மொழிக்கு ஈறாவனவாம். (உ-ம்) உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ், வேள் எனவரும். உச்சகாரமொடு நகாரஞ் சிவணும். (தொல். 79) (இ-ள்) உச்சகாரம் இருமொழிக்கு ஈறாயின வாறு போல நகரவொற்றும், பொருந், வெரிந், என்னும் இருமொழிக்கல்லது ஈறாகாது. என்றவாறு. உப்பகாரமொடு ஞகாரையு மற்றே, அப்பொரு ளிரட்டா திவணை யான. (தொல். 80) (இ-ள்) உகரத்தோடு கூடிய பகரம் தபு என ஒரு மொழிக்கு ஈறாதல்போல, ஞகார வொற்றும் உரிஞ் என்னும் ஒரு மொழிக்கே ஈறாகும். இவ்விடத்து அச்சொல்லின் பொருள் தன்வினை பிறவினையாய் இரு பொருள்படாது, தன்வினையொன்றற்கே உரியதாகும். என்றவாறு. நெடுங்கணக்கு முறைப்படி, நகரத்தின் முன் ஞகரத்தைக் கூறுதல் முறையாயினும், நகரம் இருமொழிக் கீறாதல்பற்றி ஒருமொழிக்கீறாகும் ஞகரத்தினை அதன் பின்னர்க் கூறினார். வகரக்கிளவி நான்மொழி யீற்றது. (தொல். 81) (இ-ள்) வகரமாகிய மெய்யெழுத்து நான்கு மொழியின்கண் ஈறாகும். என்றவாறு. (உ-ம்) அவ், இவ், உவ், தெவ் எனவரும். 69 முதல் 81 வரையுள்ள சூத்திரங்களால் மொழிக்கீறாம் எழுத்துக்களைத் தொல்காப்பியனார் விரித்துரைத்தாராக, நன்னூலாசிரியர் பவணந்தியார், ஆவி ஞணநமன யரல வழளமெய் சாயு முகரம் நாலாறும் ஈறே. (நன். 107) என ஒரு சூத்திரத்தால் அவற்றைத் தொகுத்து உரைத்தார். மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப புகரறக் கிளந்த அஃறிணை மேன. (தொல். 82) (இ-ள்) மகரவீற்றுச் சொல்லுடன் மயங்காவென்று வரை யறுக்கப்பட்ட னகர வீற்றுச் சொற்கள் ஒன்பதென்று சொல்லு வார்கள்; அவ்வொன்பது சொற்களும் குற்றமறச் சொல்லப்பட்ட அஃறிணையிடத்தனவாம் என்றவாறு. `அஃறிணை யென்றது ஈண்டு அஃறிணைப் பெயரினை என்பர் இளம்பூரணர். அஃறிணைப் பெயரின் இறுதியில் மகரம் நின்ற நிலைக் களத்து னகரம் போலியாய் வந்து மயங்கும். அங்ஙனம் போலியாய் வந்த னகரவீற்றுச் சொற்கள் இவையென்றும், இயற்கையாகவே னகரவீறாவன இவையென்றும் வேறுபாடறிதற் பொருட்டுத் தொல்காப்பியனார்க்கு முற்பட்ட தமிழ்ச் சான்றோர் மகரத்தொடு மயங்காத னகரவீற்று அஃறிணைச் சொற்கள் ஒன்பதென வரையறை செய்தனர். மயங்காது என்னும் வரையறை னகரத்தின்மேற் செல்லும் என்பர் நச்சினார்க்கினியர். எகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின், கடான், வயான் எனவரும் இவ்வொன்பதும் மகரத் தொடர் மொழியுடன் மயங்காது இயல்பாகவே யமைந்த னகரவீற்றுச் சொற்களாம். இவ்வொன்பதும் மயங்கா எனவே மகரத்தோடு னகரம் மயங்கிய சொற்களும் உண்டென்பது பெற்றாம். நிலம் - நிலன், கலம் - கலன், என்றாற்போல்வன மகரத்தொடு னகரம் மயங்குவன. இம் மொழியிறுதிப் போலியினை, மகர விறுதி யஃறிணைப் பெயரின் னகரமோ டுறழா நடப்பன வுளவே. (நன். 122) எனவருஞ் சூத்திரத்தாற் பவணந்தியார் குறிப்பிடுவர். அஃறிணைப் பெயர்களின் இறுதி மகரமானது னகரத்தோடு ஒத்து நடக்குஞ் சொற்களுஞ் சிலவுளவாம் என்பது மேற்குறித்த நன்னூற் சூத்திரத்தின் பொருளாகும். மகரம் னகரத்தோடு ஒத்தலாவது மகரம் நின்ற இடத்தில் னகரம் வந்து நிற்பினும் பொருள் வேறுபடாதிருத்தல். ஒத்து நடப்பன சிலவுள எனவே அவ்வாறு உறழாது வருவனவே பெரும்பாலன எனக் கொள்க. வட்டம், குட்டம், மாடம், கூடம் என்றாற்போலும் மகர வீற்று அஃறிணைப் பெயர்ச் சொற்கள் னகரத்தோடு மயங்காமை யுணர்க. 3. பிறப்பியல் அகர முதல் னகர விறுதியாகவுள்ள முதலெழுத்துக்கள் முப்பதையும் நூன்மரபிலும், குற்றியலிகரம் குற்றியலுகரம், ஆய்தம் என்னும் சார்பெழுத்து மூன்றினையும் மொழிமரபிலும் வைத்துணர்த்திய ஆசிரியர், அம்முப்பத்து மூன்றெழுத்துக்களின் பிறப்பு முறையினை இவ்வியலான் உணர்த்துகின்றார். அதனால் இவ்வோத்துப் பிறப்பியலென்னும் பெயர்த்தாயிற்று. உந்தி முதலா முந்துவளி தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப் பிறப்பி னாக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியுங் காட்சி யான. (தொல். 83) இஃது எழுத்துக்களது பொதுப்பிறப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) எழுத்துக்களெல்லாம் முறைப்பட ஆராய்ந்து சொல்லுங் காலத்துக் கொப்பூழடியாக மேலே கிளர்கின்ற உதானன் என்னும் காற்றுத் தோன்றித் தலை, மிடறு, நெஞ்சு என்னும் மூன்றிடங்களிலும் நிலைபெற்று அம்மூன்றுடன் பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் என்பவை கூட எட்டாகிய முறைமையையுடைய இடங்களில் ஓருறுப்போடு ஓருறுப்புப் பொருந்தி அமைதி பெற வேறு வேறு இயல்பினவாய்ப் புலப்பட்டு வழங்குதலுடையனவாம். அறிவான் ஆராயுமிடத்து அவற்றின் இயல்பு வகைபெற விளங்கும். என்றவாறு. இதழ் - உதடு. அண்ணம் - மேல்வாய். இதழ்போறலான் இதழெனப்பட்டதென்றும், எல்லாவெழுத்தும் என்னும் எழு வாய்க்குப் `பிறப்பினாக்கம் வேறுவேறியல என்பதனை ஒருசொல் நீர்மைப்படுத்திப் பயனிலையாக்குக என்றும் கூறுவர் இளம்பூரணர். மூச்சினை வெளிவிடுங்கால் நுரையீரல் இரண்டிலிருந்தும் கிளம்பிய காற்று மிடற்றின் வழியாக மூக்கினை அடைந்து வெளியே செல்லுதலும் வாய் வழியாக வெளியே செல்லுதலு மாகிய இயல்பினை உடையதென்றும், அவ்வாறு தோன்றுங் காற்று ஒலி நரம்புகள், அண்ணம், நா முதலிய ஒலிக்கருவி களோடுங் கூடிச் செய்கை செய்யப்படின் எழுத்தொலிகளாக மாறுமென்றுங் கூறுவர் உடல் நூலார். உந்தியிலிருந்து எழுந்த காற்றே தலை, மிடறு, நெஞ்சு என்னும் இடங்களில் நின்று பல், உதடு, நா, மூக்கு, அண்ணம் ஆகிய இவ்வுறுப்புக்களின் தொழிலால் வேறு வேறு எழுத்துக்களாக மாறும் எனத் தொல்காப்பியனார் கூறுகின்றார். தொல்காப்பியனார் கூற்று இக்கால உடல் நூலார் கொள்கையோடு ஒத்து நிற்றல் காண்க. நிறையுயிர் முயற்சியின் உள்வளி துரப்ப எழு மணுத் திரளுரங் கண்ட முச்சி மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின் வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே. (நன். 74) என வரும் நன்னூற் சூத்திரம் எழுத்துக்களின் பொதுப் பிறவியினைக் கூறுவதாகும். உயிரினது முயற்சியால் உள்ளே நின்ற உதானன் என்னுங் காற்றினால் எழுப்பப்படும் ஒலி யணுக்கள், மார்பு, கண்டம், உச்சி, மூக்கு ஆகிய நான்கிடங் களையும் பொருந்தி, இதழ், நா, பல், அண்ணம் ஆகிய நான்கின் தொழிலால் வெவ்வே றெழுத்துக்களாகிய ஒலிகளாய்த் தோன்று தலே எழுத்துக்களின் பிறப்பியல்பு என்பது இச்சூத்திரத்தின் பொரு ளாகும். இதன்கண் நன்னூலார் உள்ளிருந்து எழும் காற்றால் எழுப்பப்படுகின்ற செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்கு முதற்காரணமாகக் கூறியிருத்தலைக் காணலாம். தொல்காப்பியனார் இவ்வணுத்திரளைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எழுத்துக்களை ஒலிக்கும்பொழுது சில எழுத்துக்கள் வாய் முழுதுந் திறத்தலானும் சில எழுத்துக்கள் வாய் சிறிது திறந்துஞ் சிறிது மூடியுந் தொழில் செய்தலானும், சில எழுத்துக்கள் வாய் முழுதும் மூடுதலானும் ஒலிப்பன எனவும், அவை முறையே உயிரெழுத்துக் களும் இடை யெழுத்துக்களும் வல்லின மெல்லி னங்களும் ஆமெனவும் ஆய்தவெழுத்தினை ஒலிக்குங்கால் வாய் பெரும்பாலும் மூடியேயிருக்கும் எனவும் அறிஞர் சிலர் கூறுவர். இனி அவ்வெழுத்துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றார். அவ்வழிப் பன்னீ ருயிருந் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும். (தொல். 84) இஃது உயிரெழுத்துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றது. (இ-ள்) அங்ஙனம் பிறக்குங்கால் பன்னிரண்டு உயிரெழுத் துக்களும் தத்தம் மாத்திரை வேறுபடாதனவாய் மிடற்றின்கண் பொருந்திய காற்றால் ஒலிப்பனவாம். என்றவாறு. `பன்னீருயிரும் தம் நிலை திரியா எனவே குற்றியலிகரம் குற்றியலுகரம் என்பன தந்நிலை திரியும் என்பது பெறப்பட்ட தென்பர் உரையாசிரியர். தொல்காப்பியனார் மிடற்றுவளியாற் பிறப்பனவாகப் பன்னிரண்டு உயிரெழுத்துக்களை மட்டுங் கூறியிருக்கவும் நன்னூலார் உயிரேயன்றி இடையின மெய்களையும் மிடற்றிற் பிறப்பனவாகக் கொண்டு, அவ்வழி ஆவி யிடைமை யிடமிட றாகும் மேவு மென்மைமூக் குரம்பெறும் வன்மை. (தொல். 75) எனச் சூத்திரஞ் செய்துள்ளார். உயிரெழுத்தும் இடை யெழுத்தும் ஆகிய இருவகை எழுத்துக்களுக்கும் பிறப்பிடம் கண்டமாகும். மெல்லெழுத்துக்கள் மூக்கை யிடமாகப் பொருந்தும். வல்லெழுத் துக்கள் மார்பை யிடமாகப்பெறும் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். இதன்கண் உயிரெழுத்துக்களுடன் இடையெழுத்துக் களையும் சேர்த்து அவற்றிற்கு இடம் மிடறென்றும் மெல்லினம் மூக்கையிடமாகப் பொருந்து மென்றும் பவணந்தியார் கூறியதற்கு மெல்லெழுத்தாறும் பிறப்பினாக்கஞ், சொல்லிய பள்ளி நிலையின வாயினும், மூக்கின் வளியிசை யாப்புறத்தோன்றும் எனவரும் இவ்வியல் 18-ம் நுற்பாவில் மெல்லெழுத்து மூக்குவளியான் இசைக்கும் எனத் தொல்காப்பியரும் யாப்புற என்றதனால் இடையெழுத்திற்கு மிடற்று வளியும் வல்லெழுத்திற்குத் தலை வளியும் கொள்க என இளம்பூரணரும் கூறியன பொருந்திய ஆதாரமாகும். வல்லினம் தலை வளியாற் பிறக்கும் என இளம்பூரணர் கூறியிருக்கவும் பவணந்தியார் அதற்கு மாறாக `உரம்பெறும் வன்மை யென மார்பையிடமாகக் கூறியுள்ளார். இவ்விருவர் கொள்கைகளுள் ஏற்றுக்கொள்ளத் தகுவதனைத் தேர்ந்து துணிதல் அறிஞர் கடனாகும். அவற்றுள், அஆ வாயிரண் டங்காந் தியலும். (தொல். 85) இஃது உயிரெழுத்துக்களுட் சிலவற்றிற்குச் சிறப்புப்பிறவி கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டனுள் அகர ஆகாரங்களாகிய அவ்விரண்டும் வாயைத் திறத்தலாகிய முயற்சியாற் பிறப்பனவாம். என்றவாறு. இவ்விதியினை நன்னூலார், அவற்றுள், முயற்சியுள் அஆ அங்காப்புடைய. (நன். 76) எனவரும் சூத்திரத்தால் எடுத்துரைக்கின்றார். இஈ எஏ ஐயென விசைக்கும் அப்பா லைந்து மவற்றோ ரன்ன அவைதாம் அண்பல் முதல்நா விளிம்புற லுடைய. (தொல். 86) இதுவும் அது. (இ-ள்) இ, ஈ, எ, ஏ, ஐ என்று சொல்லப்படும் ஐந்தெழுத்துக்களும் முற்கூறிய அகர ஆகாரங்களைப் போல வாயைத் திறந்து சொல்லுதலாகிய முயற்சியாற் பிறப்பனவாம். அவை அவ்வாறு பிறக்குமாயினும் மேல்வாய்ப்பல்லும் அடிநாவின் ஓரமும் பொருந்தப் பிறக்கும் வேறுபாடுடையன வாம். என்றவாறு. இவ்வேறுபாட்டினைப் பவணந்தி முனிவர், இ ஈ எ ஏ ஐ அங் காப்போ டண்பல் முதல்நா விளிம்புற வருமே. (நன். 77) எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடுவர். உ ஊ ஒ ஓ ஔவென விசைக்கும் அப்பா லைந்தும் இதழ்குவிந் தியலும். (தொல். 87) இதுவும் அது. (இ-ள்) உ, ஊ, ஒ, ஓ, ஔ என்ற ஐந்தெழுத்துக்களும் இதழ்குவித்துக்கூறும் முயற்சியாற் பிறப்பனவாம் என்றவாறு. உ ஊ ஒ ஓ ஔவிதழ் குவிவே. (நன். 78) எனவரும் நான்னூற் சூத்திரம் இவ்விதியைச் சுருங்க உரைத்தல் காண்க. தத்தந் திரிபே சிறிய வென்ப. (தொல். 88) இது முற்கூறிய உயிரெழுத்துக்களுக்கும் மேற் கூறப்படும் மெய் யெழுத்துக்களுக்கும் சிங்கநோக்காக ஓர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) உயிரெழுத்துக்களிலும் மெய்யெழுத்துக்களிலும் ஒவ்வோரிடங்களுட் பிறப்பனவாகப் பல எழுத்துக்கள் சேர்த்துக் கூறப்பட்டனவாயினும் நுண்ணுணர்வினால் ஆராயுமிடத்து அவ்வெழுத்துக்கள் தம்மிடையே சிறிய சிறிய வேறுபாடுகளை யுடையன என்பர் புலவர். (அவ்வேறுபாட்டினை நுண்ணறிவால் அறிந்து கொள்க) என்றவாறு. எடுத்தல், படுத்தல், நலிதல், விலங்கல் என்பனவற்றாலும், தலைவளி, மிடற்றுவளி, நெஞ்சுவளி, மூக்குவளி என்பனவற் றாலும் அவை தம்முள் வேறுபாடுடையனவாமெனவும், ஐ விலங்கலுடையது, வல்லினம் தலைவளியுடையது, மெல்லினம் மூக்குவளியுடையது, இடையினம் மிடற்றுவளியுடையது எனவும், பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட்ட எழுத்துக்களிடையே அமைந்த நுண்ணிய வேறு பாடுகளை அறிந்து கொள்ளுதற்கு வழி கூறுவர் நச்சினார்க்கினியர். ககார ஙகாரம் முதல்நா அண்ணம். (தொல். 89) இது முதல் 89 வரையுள்ள பதினொரு சூத்திரங்களால் மெய்யெழுத் துக்களின் சிறப்புப்பிறவி கூறுகின்றார். (இ-ள்) ககரமும் ஙகரமும் நாவின் அடிப்பகுதியும் அண்ணத்தின் அடிப்பகுதியும் பொருந்தப் பிறக்கும் என்றவாறு. முதல் நா, முதல் அண்ணம் என முதல் என்பதனை இரண்டிடத்தும் கூட்டிப் பொருள் கொள்க. சகார ஞகாரம் இடைநா அண்ணம். (தொல். 90) (இ-ள்) சகரமும் ஞகரமும் நாவின் நடுவும் அண்ணத்தின் நடுவும் பொருந்தப் பிறக்கும் என்றவாறு. இடைநா, இடை யண்ணம் என இயையும். டகார ணகார நுனிநா அண்ணம். (தொல். 91) (இ-ள்) டகரமும் ணகரமும் நாவினது நுனியும் அண்ணத்தது நுனியும் பொருந்தப் பிறக்கும். என்றவாறு. நுனிநா, நுனியண்ணம் என இயையும். அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின. (தொல். 92) 89, 90, 91 ஆகிய மூன்று சூத்திரங்களுக்கும் பொருள் கொள்ளுங்கால், ககரம் முதல் நாவிலும் ஙகரம் முதலண்ணத் திலும், சகரம் இடை நாவிலும் ஞகரம் இடை யண்ணத்திலும், டகரம் நுனிநாவிலும் ணகரம் நுனி யண்ணத்திலும் பிறக்கும் என இவ்வாறு நிரல் நிறை வகையாற்கொண்டு இவற்றை அறுவகைப் பிறப்பினவாகக் கூறலாமோ என ஐயுறுவாரை நோக்கி, அம்மூன்று சூத்திரங்களிலும் கூறப்பட்ட ஆறெழுத்துக்களும் அறுவகைப் பிறப்பினையுடையன அல்ல, அவை மூவகைப் பிறப்பினை உடையனவே என இச் சூத்திரத்தால் ஆசிரியர் ஐயமகற்றுகின்றார். (இ-ள்) மேற் கூறப்பட்ட ஆறெழுத்துக்களும் மூவகை யாகிய பிறப்பினையுடையனவே (அறுவகைப் பிறப்பின அல்ல.) என்றவாறு. க, ங இரண்டும் முதல்நா முதலண்ணத்தையும் ச, ஞ இரண்டும் இடைநா இடையண்ணத்தையும் ட, ண இரண்டும் நுனிநா நுனியண்ணத்தையும் பொருந்தப் பிறக்குமென மேற்கூறிய நான்கு சூத்திரங்களின் பொருளையும் நன்னூலாசிரியர். கஙவுஞ் சஞவும் டணவும் முதலிடை நுனிநா வண்ணமுற முறை வருமே. (நன். 79) என ஒரு சூத்திரத்தால் தொகுத்துக் கூறினார். அண்ணம் நண்ணிய பல்முதன் மருங்கின் நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத் தாமினிது பிறக்குந் தகார நகாரம். (தொல். 93) (இ-ள்) அண்ணத்தைச் சேர்ந்த பல்லினது அடியாகிய இடத்தே நாவினது நுனி பரந்து சென்ற தன் வடிவு மிகவும் பதியும்படி சேர்தலால் தகரம் நகரம் என்ற இரண்டெழுத் துக்களும் இனிதாகப் பிறக்கும் என்றவாறு. எல்லாவெழுத்துக்களும் நா முதலியன வடிவு பொருந்த மெய்யுற்றபோதே பிறப்பன என்பார், முன்னர் `உறுப்புற்றமைய என்றதனோடமையாது ஈண்டும் `மெய்யுறவொற்ற என்றார். இச்சூத்திரத்திற்குப் பல்லின் அடியில் தகாரமும் அதன் மருங்கில் நகாரமும் பிறக்கும் என நிரல் நிறை வகையாற் பொருள் கொள்ளினும் பொருந்தும். அண்பல் லடிநா முடியுறத் தந வரும். (நன். 80) என்பது நன்னூல். நாவினது நுனியை நாமுடியென இச்சூத்திரத்துப் பவணந்தி முனிவர் வழங்கியுள்ளார். அணரி நுனிநா அண்ணம் ஒற்ற றஃகா னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். (தொல். 94) மேற்சூத்திரங்களிலெல்லாம் நெடுங்கணக்கு முறை பற்றி எழுத்துக் களின் பிறப்பினைச் சொல்லி வந்த ஆசிரியர், இச்சூத்திர முதலாகப் பின்வரும் ஆறு சூத்திரங்களால் நாவும் அண்ணமு மாகியவற்றின் முதல் இடை நுனிகளிற் பிறக்கும் நாவதிகாரம் பற்றி எழுத்துக் களுக்குப் பிறப்புக் கூறுகின்றார். (இ-ள்) நாவினது நுனியானது மேல் நோக்கிச் சென்று அண்ணத்தைத்தடவ றகார னகாரமாகிய அவ்விரண்டெழுத் துக்களும் பிறப்பன என்றவாறு. அணர்தல் - மேல் நோக்குதல். அணர் என்பதன் அடியாகப் பிறந்த வினையெச்சம் அணரி என்பதாகும் அணர்ந்து பார்த்தல் என்பது மேல்நோக்கிப் பார்த்தல் என்னும் பொருளுடையதாகும். அச்சொல் இக்காலத்து அண்ணாந்து பார்த்தல் என மருவி வழங்குகிறது. அண்ணத்தின் நடுவிடத்தே நாவினது நுனி பொருந்த றகரமும், அது பிறக்குமிடத்திற்குச் சிறிது கீழே னகரமும் பிறக்கு மென்பார் றகரத்தை முன்னரும் னகரத்தை அதன்பின்னரும் வைத்துரைத்தார் ஆசிரியர். இந்நுட்பத்தை உணர்ந்த நச்சினார்க்கினியர் `றன இவற்றின் வேறுபாடுணர்க என்ற தொடரால் இதனைப் புலப்படுத்தியுள்ளார். அண்ணம் நுனிதா நனியுறிற் றனவரும். (நன். 86) என்பது நன்னூல். நுனினா வணரி யண்ணம் வருட ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (தொல். 95) (இ-ள்) நாவினது நுனியானது மேல் நோக்கிச் சென்று அண்ணத்தைத் தடவ ரகார ழகாரமாகிய அவ்விரண்டும் பிறக்கும் என்றவாறு. அண்ணம் நுனிநா வருட ரழவரும். (நன். 83) என்பது நன்னூல். நாவிளிம்பு வீங்கி யண்பல் முதலுற ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (தொல். 96) (இ-ள்) நாவினது ஓரமானது மேலுயர்ந்து தடித்து மேல்வாய்ப் பல்லினது அடியிலே பொருந்தி நின்று அவ்விடத்து அண்ணத்தைத் தொட்ட அளவில் லகரமும் அண்ணத்தைத் தடவிய நிலையில் ளகரமும் பிறப்பனவாம் என்றவாறு. விளிம்பு - ஓரம். வீங்குதல் - முன்மெல்லிய தாயிருந்த நாவின் ஓரம் மேல் நோக்கி வளைந்து நிற்கும்போது நாவின் மற்றையிடத் திலுள்ள தசைகளும் சேர்ந்து சிறிது பருத்து நிற்றல். இவ்வாறு தடித்த நாவிளிம்பு அண்ணத்திற்கும் பல்லினது அடிக்கும் அடைப்பட்டு நிற்றல் லகார ளகாரமாகிய அவ்விரண் டெழுத்துக்களுக்கும் பொதுவாக வேண்டப்படும் முதற்செயலா தலின் அவ் விரண்டற்கும் பொருந்த `நாவிளிம்பு வீங்கி அண்பல் முதலுற என அச்செயலை முதலிற் பிரித்துக் கூறினார். அவ்விரண்டற்குந் தனித்தனி வேண்டப் படும் சிறப்புத் தொழில் களாகிய ஒற்றுதலையும் வருடுதலையும் முறையே லகரத்திற்கும் ளகரத்திற்கும் உரியனவாக நிரல் நிறையாற் கூறினார். இதன் பொருளை நன்கறிந்த பவணந்தி முனிவர், அண்பல் முதலும் அண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். (நன். 84) எனச் சூத்திரஞ் செய்தார். இதனால் அண்பல் முதலை நாவிளிம்பு வீங்கி ஒற்ற லகாரம் பிறக்குமெனவும், அண்ணத்தை நாவிளிம்பு வீங்கி வருட ளகாரம் பிறக்கு மெனவும் பொருள் இனிது விளங்கு தல் காண்க. இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். (தொல். 97) (இ-ள்) மேலுதடும் கீழுதடும் தம்மிற் கூடப் பகாரமும் மகாரமும் பிறக்கும் என்றவாறு. மீகி ழிதழுறப் பம்மப் பிறக்கும். (நன். 81) என்பது நன்னூல். பகரமும் மகரமும் இரண்டு உதடும் பொருந்துதலாகிய ஒரு முயற்சியாற் பிறக்குமாயின் பகரம் உள்ளிருந்து வருங் காற்றாற் பிறத்தலும் மகரம் மூக்கு வளியாற் பிறத்தலும் என இவை தம்முள் வேற்றுமையாம். பல்லித ழியைய வகாரம் பிறக்கும். (தொல். 98) (இ-ள்) மேற்பல்லும் கீழுதடும் தம்மிற் பொருந்த வகரம் பிறக்கும். என்றவாறு. மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே. (நன். 85) என்னும் நன்னூற் சூத்திரம் இச் சூத்திரப் பொருளை விரித்துரைப் பதாகும். அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும். (தொல். 99) (இ-ள்) அண்ணத்தை நாச்சேர்ந்த விடத்து மிடற்று வளியானாகிய ஓசையானது அவ்வண்ணத்தை யணைந்து இறுகச் செறிய யகரம் பிறக்கும், என்றவாறு. இதன்கண் `அண்ணஞ் சேர்ந்த என்புழிச் சேர்தற்கு வினை முதலாக நாவென்பதனை வருவித்து அண்ணம் நாச்சேர்ந்தகண் மிடற்றெழுவளி உற்று அடைய யகாரம் பிறக்கும் எனக் கொண்டு கூட்டி உரை கூறுவர் இளம்பூரணர். சேர்ந்த என்னும் வினைக்கு நாவென்பதனை வினைமுதலாகக் கொண்டு, எழுவளிமிடற்றுச் சேர்ந்த இசை அண்ணங் கண்ணுற்று அடைய யகாரம் பிறக்குமெனக் கொண்டுகூட்டி, `உந்தியிலெழுந்த காற்று மிடற்றிடத்துச் சேர்ந்த அதனாற் பிறந்த ஓசை அண்ணத்தை யணைந்து உரலாணியிட்டாற் போலச் செறிய யகாரவொற்றுப் பிறக்கும் எனப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். இங்கெடுத்துக் காட்டிய இருவருரைகளில் முன்னவராகிய இளம்பூரணருரையினையே மேற்கொண்டு அடிநா வடியண முறயத் தோன்றும். (நன். 82) எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர். இதன் கண் அடி நாவும் அடியண்ணமும் தம்மிற் பொருந்துதலொன்றே யகரத்தின் பிறப்பியல்பாகக் கூறப்பட்டுள்ளது. யகரத் தோற்றத்திற்கு முதற் காரணமாகிய மிடற்றுவளி இதன்கண் கூறப்படவில்ல. சுருக்க நூலாதலின் கூறாது விடுத்தார்போலும். மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் சொல்லிய பள்ளி நிலையின வாயினும் மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும். (தொல். 100) இது மெல்லெழுத்திற்குச் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) மெல்லெழுத்துக்கள் ஆறும் தத்தம் பிறப்பினது ஆக்கஞ் சொல்லிய இடங்களிலே நிலைபெற்றன வாயினும் ஓசை கூறுங்கால் மூக்கின்கண் உளதாகிய காற்றின் ஓசையால் பொருந்தத் தோன்றும் என்றவாறு. `யாப்புற என்றதனான், இடையெழுத்திற்கு மிடற்று வளியும் வல்லெழுத்திற்குத் தலைவளியும் கொள்க என்பர் இளம்பூரணர். மெல்லெழுத்தாறுக்கும் மேல் தனித் தனியே கூறப்பட்ட நிலைக் களங்களே பிறப்பிடங்களாமெனவும் அவை யாறும் மூக்குவளியால் ஒலிக்குமெனவும் தொல்காப்பியனார் பிரித்துக் கூறியுள்ளார். அங்ஙனமாகவும் பவணந்தியார் தொல் காப்பியனார் கருத்துக்கு மாறாக மெல்லெழுத்தாறுக்கும் மூக்கையிடமாகக் கூறியிருப்பது ஆராயத் தக்கதாகும். சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றுந் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி ஒத்த காட்சியிற் றம்மியல் பியலும். (தொல். 101) இது சார்பெழுத்துக்களின் பிறப்புணர்த்துகின்றது. (இ-ள்) முதலெழுத்துக்களைச் சார்ந்து தோன்றினல்லது தமக்கெனத் தனி நின்றொலிக்கும் இயல்பினையுடையவல்ல வென முன்னர் ஆராய்ந்து வெளிப்படுத்தப் பட்ட சார்பெழுத் துக்கள் மூன்றும் தமக்குச் சார்பாகிய முதலெழுத்துக்களது பிறப்பிடத்தோடு பொருந்தித் தமக்கு ஒத்த இடத்தே தமக்குரிய இயல்பில் தோன்றி யொலிப்பனவாம் என்றவாறு. எழுத்துக்களின் பிறப்பிடமும் வளியும் ஆகியவற்றைக் காட்சி யென்றார். `ஒத்தகாட்சி என்றதனால், ஆய்தத்திற்குக் குற்றெழுத்துச் சார்பேயெனினும் தலை வளியாற்பிறத்தலின் உயிரொடு புணர்ந்த வல்லெழுத்துச் சார்பாகவே பிறக்குமென்பது கொள்க என விளக்கங் கூறுவர் இளம்பூரணர். எனவே சார் பெழுத்துக்கள் தமக்கென வேறிடமுடைய வல்லாதனவாய்த் தமக்குச் சார்பாய் முன்னும் பின்னும் நின்ற முதலெழுத்துக்களின் பிறப்பிடத்தோடு ஒத்த இடங்களிற் பிறக்குமென்பது பெறப்படும். இவ்வாறன்றிக் குற்றியலிகரம் குற்றியலுகரம் இரண்டும் தத்தம் சார்பிற் சிவணியியலும் எனவும் இச் சூத்திரத்திற் காட்சி யென்றது நெஞ்சு எனவும் ஏனையென்றது ஆய்தமெனவும் கொண்டு, `ஏனை ஒத்தகாட்சியின் தம்மியல்பு இயலும் என்ற தொடர்க்கு `ஒழிந்து நின்ற ஆய்தம் தனக்குப் பொருந்தின நெஞ்சுவளியாற் பிறக்கும் எனப் பொருளுரைப்பர் நச்சினார்க் கினியர் `ஏனைமூன்றும் என்னும் எழுவாய்க்கு `இயலும் என்பது பயனிலையாதலானும் ஏனையென்பது ஒழிந்த என்னும் பொருட்டாய் மூன்றென்பதனைத் தொடர்ந்த அடை மொழியாதலானும் சார்பெழுத்து மூன்றனுள் குற்றியலிகரம் குற்றியலுகரம் என்னும் இரண்டினையும் முன்னர்ப் பிரித்த பினல்லது ஏனையென்ற சொல்லால் மூன்றாவதாகிய ஆய்தத்தைப் பிரித்துரைத்தல் கூடாதாகலானும் இச்சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் கூறிய உரை ஆசிரியர் பவணந்தியாரும் இச் சூத்திரத்திற்கு இளம்பூரண அடிகள் கூறிய உரயினையே யுளங்கொண்டு, ஆய்தக் கிடந்தலை யங்கா முயற்சி சார்பெழுத் தேனவுந் தம்முத லனைய. (நன். 87) எனச் சார்பெழுத்துக்களின் பிறப்புணர்த்தினார். ஆய்த வெழுத்திற்கு இளம்பூரணர் கூறிய தலைவளியை இடமாக்கி, `ஆய்தக்கு இடம் தலை என்றும், அவர் கூறாத அங்காத்தலை முயற்சியாக்கி `அங்கா முயற்சி யென்றும் பவணந்தியார் கூறியது ஆராய்தற்குரியதாகும். எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி யெழுதரு வளியிற் பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத் தகத்தெழு வளியிசை யரில்தபநாடி யளபிற் கோட லந்தணர் மறைத்தே * அஃதிவ ணுவலா தெழுந்து புறத் திசைக்கும் மெய்தெரி வளியிசை யளவுநுவன் றிசினே. (தொல். 102) இது மேற்கூறிய எழுத்துக்களின் பிறப்பிற்குப் புறனடை கூறுகின்றது. இதனை இளம்பூரணர் சூத்திரங்களாகப் பிரித்துப் பொருள் கூறியுள்ளார். பொருளியைபு கருதி ஒரு சூத்திரமாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். (இ-ள்) எல்லா வெழுத்துக்களையும் வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே எழுகின்ற காற்றில் பிறப்போடு விட்டுச் சொல்லுமிடத்து உந்தியிலிருந்து எழுங்காற்றானது தலையளவுஞ்சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலைபெறுதலாகிய திரிதருங் கூறுபாட்டினையுடையதாக உள்ளிருந்தெழும் வளியாலாய இசையைக் குற்றமற ஆராய்ந்து மாத்திரை வரையறையால் அளந்து கொள்ளுதல் அந்தணரது மறைநூற்கண்ணதாகிய முறையாகும். அம்முறையினை இந்நூலிற் சொல்லாது எல்லார்க்கும் புலனாகப் புறத்துப்போந்து ஒலிக்கும் மெய் தெரிவளியிசையாகிய எழுத்துக் களுக்குரிய மாத்திரை யினையே ஈண்டுக் கூறினேன் என்றவாறு. உந்தியிலிருந்தெழுங் காற்று முன்னர்த் தலைக்கட் சென்று பின்னர் மிடற்றிலே வந்து அதன்பின் நெஞ்சிலே நிற்றலை உறழ்ச்சிவாரம் என்றார். உறழ்ச்சி வாரம் திரியுங் கூறுபாடு. இக்கூறுபாட்டினை ஆசிரியர் `தலையினும் மிடற்றினு நெஞ்சினு நிலைஇ என்ற தொடரால் முன்னர் விளக்குதல் காண்க. அகத்தெழு வளியிசை மூலாதாரத்திலிருந்து தோற்றும் காற்றோசை. மெய்தெரி வளியிசை - எல்லார்க்கும் எழுத்துருவம் இதுவெனப் புலனாமாறு வயின் புறத்தே வெளிப்பட் டிசைக்கும் எழுத்தோசை. உள்ளிருந் தெழுங் காற்று தலைக்கட் சென்று மிடற்றிற்கு வந்து நெஞ்சிலே நிலைபெறுமளவும் காற்றாயிருந்து, பின்னர் அது நெஞ்சிலிருந்து வெளிப்படும் பொழுதெல்லாம் காற்றின் தன்மை திரிந்து எழுத்தாந் தன்மை யடையுமென்பார். வளியென்னாது வளியிசையென்றார். அந்தணர் மறையிற் கூறுமாறு புறத்தெழுந்திசைக்கும் எழுத்துக்களுக்கு முதற்காரணமாகிய அகத்தெழு வளியிசைக்கு மாத்திரை கூறின், அதன் அளவு எல்லார்க்கும் ஒருதன்மைத்தாக விளங்காதெனக்கருதிய தொல்காப்பியனார், புறத்தெழுந்திசைக் கும் எழுத்துக்களாகிய மெய்தெரிவளியிசைக்கே தாம் அளவு கூறிய முறைமையினை இச் சூத்திரத்தால் தெளிவாக அறி வுறுத்துகின்றார். உந்தியிலெழுந்த காற்றினைக் கூறுபடுத்தி மாத்திரை கூட்டிக்கோடலும் மூலாதாரம் முதலாகக் காற்றெழுமாறு கூறலும் அந்தணர் மறைக்கு உண்டெனக் கூறிய இவ்வாசிரியர், அம்மதம் பற்றி அவர் பெறுவதோர் பயன் இன்றென இச் சூத்திரத்தால் உய்த்துணர வைத்தலின் இச் சூத்திரம் பிறன்கோட் கூறலென்னும் உத்திக்கு இனம் என்றார் நச்சினார்க்கினியர். மெய்தெரி வளியெனவே பொருள் தெரியா முற்கும் வீளையும் எழுத்தாகா என்பது புலனாம். ஆகவே சொல்லப் பிறந்து சொற்குறுப்பாம் ஓசையையே இவ்வாசிரியர் எழுத்தெனக் கொண்டார் என்பது பெறப்படும். நிலையும் வளியும் முயற்சி மூன்றும் இயல நடப்பது எழுத்தெனப் படுமே. என நச்சினார்க்கினியருரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படும் பழஞ் சூத்திரம் தொல்லாசிரியர் கூறிய எழுத்தின் இயல்பினை நன்கு விளக்குவதாகும். 4. புணரியல் மொழிகள் புணர்தற்குரிய கருவியின் இயல்புணர்த் தினமை யின் இது புணரியலென்னும் பெயர்த்தாயிற்று. மேற்கூறப்படும் புணர்மொழிச் செய்கைகளுக்கு இன்றியமையாத சிறப்புக் கருவிகள் இதன்கண் கூறப்படுகின்றன. மூன்று தலையிட்ட முப்பதிற் றெழுத்தின் இரண்டு தலையிட்ட முதலா கிருபஃ தறுநான் கீறொடு நெறிநின் றியலும் எல்லா மொழிக்கும் இறுதியு முதலும் மெய்யே யுயிரென் றாயீரியல. (தொல். 93) இது மொழி மரபில் விரித்துக்கூறிய மொழிமுதல் எழுத் துக்கள், மொழிக்கீறாம் எழுத்துக்கள் என்பவற்றைத் தொகுத்து உணர்த்து கின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட முப்பத்துமூன்று எழுத்துக்களை முதலாகக் கொண்டும் இருபத்துநான்கு எழுத்துக்களை இறுதியாகக் கொண்டும் வழக்கு நெறிக்கண் நிலைபெற்று நடக்கும் எல்லா மொழிகளுக்கும் இறுதியும் முதலுமாவன மெய்யும் உயிருமாகிய அவ்விரண்டு இயல்பினையுடையன என்றவாறு. (உ-ம்) மரம், இலை, ஆல், விள என மெய்யும் உயிரும் முதலும் ஈறும் ஆயின. பன்னிரண்டுயிரும், க த ந ப ம ச ஞ ய வ என்னும் ஒன்பது மெய்களும், நுந்தையென்புழி நகரமெய்யின்மேல் வரும் குற்றுகரமும் ஆகிய இருபத்திரண்டு எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களாகும். பன்னிரண்டுயிரும், ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் பதினொரு மெய்களும், ஈற்றுக்குற்றிய லுகரமும் ஆக இருபத்து நான் கெழுத்துக்களும் மொழிக்கு ஈறாம் எழுத்துக்களாம். அவற்றுள் மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் (தொல். 104) இது மேற்சூத்திரத்திற் கூறியவாற்றால் தனிமெய்யும் மொழிக்கு முதலில் வரும் என எய்திய கருத்தினை விலக்குதலின் `எய்தியது விலக்கல் நுதலிற்று என்பர் உரையாசிரியர். (இ-ள்) மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டனுள் மொழிக்கு ஈறாகிய மெய்யெல்லாம் புள்ளி பெற்று நிற்கும் என்றவாறு. எனவே மொழிக்கு முதலில் வரும் மெய்யெல்லாம் புள்ளியிழந்து உயிரோடு கூடி நிற்கும் என உய்த்துணர வைத்துத் தனிமெய் மொழிக்கு முதலாகாதென விலக்கி னாராயிற்று. மொழி முதல் மெய் புள்ளியொடு நில்லாதென்னாது ஈறெல்லாம் புள்ளியோடு நிலையல் என ஈற்றின்மேல் வைத்துக் கூறிய அதனால் அவ் வீற்றின்மெய் உயிர் முதன்மொழி வந்த விடத்து அஃதேற இடங்கொடுக்கு மென்பது பெறப்பட்டதென்பர் இளம்பூரணர். இக்கருத்தினை நன்னூலார், உடல்மேல் உயிர்வந் தொன்றுவ தியல்பே. (நன். 204) என்ற சூத்திரத்தால் விளங்கக் கூறியுள்ளார். மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல் (நூன் -15) என்புழித் தனிமெய் பதினெட்டும் புள்ளிபெற்று நிற்குமெனக் கூறி, உயிரேறுங்கால் அவை புள்ளி யிழந்து நிற்குமென உய்த்துணர வைத்தார். ஈண்டு மெய்முதல் மெய்யீறு என வகுத்துரைக்குங்கால், மொழி முதல் மெய்களும் புள்ளிபெறுமோ என்னும் ஐயமகற்றுதல் வேண்டி இச் சூத்திரத்தால் மொழிக்கு ஈறாய மெய்களே புள்ளி பெறுவன எனக்கூறி, மொழிக்கு முதலாயின மெய்கள் புள்ளிபெறா என்பதனை உய்த்துணர வைத்தாராதலின் இச்சூத்திரம் கூறியது கூறலன்மையுணர்க. குற்றிய லுகரமும் அற்றென மொழிப. (தொல். 105) இது, மேல் மொழியீற்றின் மெய்க்குக் கூறிய விதியினை மொழி யீற்றில் வரும் குற்றியலுகரத்திற்கும் மாட்டெறிந்து கூறுகின்றது. (இ-ள்) குற்றியலுகர வீறும் மெய்யீற்றின் தன்மையை யுடையதாமென்பர் என்றவாறு. மெய்யீற்றின் தன்மையாவன புள்ளிபெறுதலும் புள்ளி யிழந்து உயிரேற இடங்கொடுத்தலுமாம். அவ் விரண்டினுள் புள்ளி பெறுதலை விலக்கி, உயிரேற இடங்கொடுத்தலாகிய ஒன்றை மட்டும் குற்றியலுகரத்திற்கு இயைத்துக் கூறுதலின், `இம்மாட்டேறு ஒருபுடைச் சேறலென வுணர்க என்றார் இளம்பூரணர். `ஒற்றெழுத்தியற்றே குற்றியலிகரம் (செய் 8) எனவரும் செய்யுளியற் சூத்திர வுரையுள் எழுத்தோத்தினுள் `மெய்யீற் றெல்லாம் புள்ளியொடு நிலையல் எனக் கூறிக் `குற்றியலுகரமும் அற்றென மொழிப எனக் குற்றுகரத்திற்குப் புள்ளி பெறுதலுங் கூறினான் எனப் பேராசிரியர் கூறுதலால், குற்றியலுகரத்திற்குப் புள்ளி யிட்டெழுதும் வழக்கம் பேராசிரியர் காலத்தில் நிலவிய தெனத்தெரிகிறது. ஆனால் இளம்பூரணர் காலத்தில் இவ்வழக்கம் நிலைபெற்றிருந்ததாகத் தெரியவில்லை. குற்றியலுகரத்திற்குப் புள்ளியிட்டெழுதும் வழக்கம் இளம்பூரணர் காலத்தில் நிலவி யிருப்பின் `குற்றியலுகரமும் அற்ற என்னும் இம் மாட்டேற்றினை முழுவதுஞ் சேறலாகவே கொண்டு பொருள் கூறியிருப்பர். அவர் அங்ஙனம் கூறாமையின் அவர் காலத்தில் குற்றியலுகரத்திற்கும் புள்ளியிட்டெழுதும் வழக்கம் இல்லை யென்பது புலனாகும். அன்றியும் குற்றியலுகரமும் புள்ளிபெறும் என்ப தொன்றே இச்சூத்திரக் கருத்தாயின் மெய்யினளபே யரையெனமொழிப என்பதனையடுத்து `அவ்வியல் நிலையும் ஏனைமூன்றே என மாட்டெறிந்தாற்போல `மெய்யினியற்கை புள்ளியொடு நிலையல் எனவும் `எகரவொ கரத்தியற்கையும் அற்றே எனவும் வருஞ் சூத்திரங்களை யடுத்துக் `குற்றியலுகரமும் அற்றென மொழிப என இச் சூத்திரத்தையுங் கூறியிருப்பர். ஆசிரியர் அங்ஙனங் கூறாது புணரியலாகிய இவ்வியலிற் கூறுதலால் குற்றியலுகரமும் மெய்யீறு போல உயிரேற இடங் கொடுக்கும் என்பதே தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு துணியப்படும். இங்ஙனமன்றிக் குற்றியலுகர வீற்றின்முன் உயிர் முதன் மொழி வருங்கால் நிலைமொழியீற்றுக் குற்றுகரம் கெடுமெனக் கொண்டார் வீரசோழிய நூலார். `ஆவி பின்தோன்றக் கெடும் குற்றுகரம் என்பது வீரசோழியம். இக்கருத்தினை யொட்டியே. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் யவ்வரின் இய்யாம் முற்றுமற் றொரோவழி. (நன். 164) எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர், இவ்வாறு குற்றுகர வீற்றின்முன் உயிர் முதன்மொழி வருங்கால் நிலைமொழியீற்றுக் குற்றுகரங்கெட நின்ற வொற்றின்மேல் வருமொழிமுதலுயிர் ஏறிற்றென்று கொள்ளுதல் கூடாதென்றும், நாகரிது என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங்கூடி நின்றல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின் நாகு என்பதன் இறுதி யிலுள்ள குற்றியலுகரம் கெடாது நின்றே அரிது என்னும் வருமொழி முதலிலுள்ள அகரவுயிர்க்கு இடந்தந்து அவ்வுயி ரோடுங்கூடி நிற்குமென்றும் நச்சினார்க்கினியர் இச்சூத்திரவுரை யுள் தெளிவாக விளக்கி உரையாசிரியர் கொள்கையை வலியுறுத்தியுள்ளார். தொல்காப்பிய முதற்சூத்திர விருத்தியுள் `எழுத்தெனப் படுப என்னுந் தொடர்க்குப் புணர்ச்சிவிதி கூறுங்கால் இனியாசிரியர் `நூறென்கிளவியொன்று முதலொன்பாற் - கீறுசினை யொழிய வினவொற்றுமிகுமே எனவும் `ஆறன் மருங்கிற் குற்றியலுகரம் ஈறுமெய் யொழியக் கெடுதல் வேண்டும் எனவும் நூறு என்னும் எண் முன்னும் ஆறு என்னும் எண் முன்னும் முறையே ஒன்று முதலிய எண்களும் ஆயிரமும் வந்து புணரின், குற்றியலு கரங்கெட நின்ற ஒற்றின்மேல் உயிர்வந்து ஒன்றி முடியுமென்றார். எனவே ஒன்றின முடித்த லென்பதனால் ஏனைக் குற்றியலு கரவீறும் உயிர்முதன் மொழி வந்து புணர்வுழிக் குற்றியலுகரங் கெட்டு நின்ற வொற்றின் மேல் உயிர்வந்து ஒன்றி முடியுமென்பதூஉம் பெறப்பட்டதாகலின், ஈண்டும் அவ்வாறே குற்றியலுகரங்கெட நின்ற தகர வொற்றின் மேல் எகரவுயிர் வந்து ஒன்றி `எழுத்தெனப் படுப என முடிந்தது எனச் சிவஞான முனிவர் புணர்ச்சி விதி கூறியுள்ளார். நூறென்கிளவி யொன்றுமுத லொன்பாற் - கீறு சினை யொழிய இனவொற்று மிகுமே என்னுஞ் சூத்திரம் நூறென்னுங் குற்றுகரவீற் றெண்ணுப் பெயர் முன் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்ணுப் பெயர்கள் வந்து புணரின் நிலைமொழி யீற்றிலுள்ள குற்றுகரமும் அதனால் ஊரப்பட்ட றகர மெய்யும் கெடாது நிற்ப அவ்வொற்றுக்கு இனமாகிய றகரம் மிக்குமுடியும் என்னும் விதியைக் கூறுவதாகும். இதன் பொருளை உரையாசிரியர் இனிது விளக்கியுள்ளார். இச்சூத்திரத்தில் `ஈறுசினையொழிய எனவருந் தொடருக்கு `ஈற்றிலுள்ள சினையாகிய குற்றியலு கரங்கெட எனப் பொருள் கொள்வர் சிவஞான முனிவர். அங்ஙனங்கூறின், நூற்றுமூன்று நூற்றுநான்கு என ஈற்றுக் குற்றியலுகரம் கெடாது நிற்பன இச்சூத்திரத்துள் அடங்காவாம். இச்சூத்திரத்து `ஒன்றுமுதல் ஒன்பாற்கு என ஆசிரியர் வரையறுத்துக்கூறிய வருமொழிகளுள் மூன்றும் நான்கும் அடங்குமாதலின் அவை வருமிடத்தும் நூறு என்பதன் ஈற்றுக் குற்றியலுகரம் கெடுதல் வேண்டும். அங்ஙனங் கெடாமையின் இச்சூத்திரத்திற்குச் சிவஞான முனிவர் கூறும் பொருள் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணாதல் தெளியப்படும். ஆகவே இச்சூத்திரத்தில் `ஈறுசினையொழிய என்னுந் தொடரிலுள்ள ஒழிய என்னுஞ் சொல்லுக்கு, `அகமென்கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் (புள்ளி மயங்கியல் -20) என்புழிப்போல `எஞ்சிநிற்ப எனப் பொருள் கொண்டு, `ஈற்றெழுத்தாகிய குற்றியலுகரமும் அதனாலூரப் பட்ட மெய்யாகிய சினையும் விகாரமின்றி எஞ்சிநிற்ப அவ்விடத்து இனமாகிய றகர வொற்று மிக்குமுடியும் எனப் பொருளுரைப்பதே ஆசிரியர் கருத்துக்கு ஏற்புடையதாமென்க. குற்றியலுகரப் புணரியல் 32-ம் சூத்திரத்தில் ஒன்று முதல் ஒன்பதீறாகச் சொல்லப்படுகின்ற எண்ணுப்பெயர்களின்முன் பத்து என்பது வருமொழியாய்வரின், நிலை மொழிகளுள் ஆறு என்னுஞ் சொல் நீங்கலாக ஏனைய எண்ணுப்பெயர்களின் இறுதிக் குற்றியலுகரம் மெய்யொடுங்கெடுமென்றும், 35-ம் சூத்திரத்தில் மூன்று ஆறு என்பவற்றின் முதலிலுள்ள நெட்டெழுத்துக்கள் குறுகு மென்றும், கூறிய ஆசிரியர், ஒன்றுமுதல் ஒன்பான் களின்முன் ஆயிரம் வந்து புணருங்காலும் 32 முதல் 38 வரையுள்ள சூத்திரங்களால் முன்னர்க் கூறிய விதிகளை அவ்வாறே வைத்துக் கொண்டு, அவற்றின் மேலுளவாம் திரிபுகளை 58 முதல் 63 வரை யுள்ள சூத்திரங்களால் கூறுகின்றாரென்பது அச்சூத்திரங்களின் கிடக்கை முறையால் நன்கு விளங்கும். எனவே ஆறன் மருங்கிற் குற்றியலுகரம், ஈறு மெய்மொழியக் கெடுதல் வேண்டும் (குற்றியலுகர - 64) என்னும் இச் சூத்திரத்தாற் குறிக்கப்பட்ட ஆறு என்பது முன்னர் 32, 35-ம் சூத்திரங்களிற் சொல்லிய வண்ணம் `அறு எனத் திரிந்த வடிவத்தையே குறித்ததெனக் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் அறு எனத்திரிந்து நின்ற காலத்து அதன் இறுதிநின்ற உகரம் முற்றுகரமாகவும் அவ்வாறு திரிதற்கு முன்னுள்ளது. குற்றிய லுகரமேயாதலின் குற்றியலு கரந்திரிய நின்ற உகரமே அது வென்பார் `ஆறன்மருங்கிற் குற்றியலுகரம் என்றார் ஆசிரியர். இங்ஙனம் கூறியது, `திரிந்ததன் திரிபு அது என்னுங் கருத்தினா லென்பதனை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் நூன்மரபின் முதற் சூத்திர உரையில் நன்கு தெளிவுபடுத்தி யுள்ளார்கள். எனவே இச்சூத்திரத்துக் குற்றியலுகர மெனக் கூறப்பட்டது, ஆறு என்னுங் குற்றுகரவீற்றின் திரிபாகிய அறு என்பதன் இறுதி நின்றது முற்றுகரமாதலின், அவ்வுகரம் ஆயிரம் எனவரும் வருமொழி முதலிலுள்ள ஆகாரவுயிர்க்கு இடந்தந்து ஒருங்குநிற்கும் ஆற்றலின்றித் தான் ஏறிய றகர மெய்யைவிட்டுக்கெட அம் மெய்யின்மேல் வருமொழி ஆகாரவு யிரேறி அறாயிரம் என முடிவதாயிற்று. ஆகவே இச் சூத்திரத்தில் ஈறுமெய்யொழியக் கெடுமெனக் கூறிய விதி, ஆறு என்னுஞ் சொல்லில் இறுதியிலுள்ள குற்றியலுகரத்திற்கு அன்றென்பதும், அதன் திரிபாகிய அறு என்பதிலுள்ள முற்றுகரத்திற்கே யுரித்தென்பதும் பகுத்துணர்ந்து கோடல் வேண்டும். இங்ஙன மன்றி ஆயிரம் என்னும் சொல் வருமொழியாய் வர ஆறு என்னும் நிலைமொழியிறுதிக் குற்றுகரம் கெடுமென்பதே தொல்காப்பிய னார் கருத்தாயின் ஆறு என்பதன் முன் உழக்கு என்னும் உயிர்முதல்மொழி வருமிடத்தும் குற்றியலுகரம் கெடும் எனக் கூறியிருப்பர். அங்ஙனம் கூறாது `ஆறென் கிளவி முதல் நீடும்மே (குற்றியலுக - 52) என்ற அளவே கூறிப்போதலின், ஆறு என்பதன் ஈற்றுக்குற்றியலுகரம் உயிர்முதன் மொழி வருமிடத்துக் கெடா தென்பதே தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு தெளியப் படும். ஆகவே மேலெடுத்துக் காட்டிய `நூறென்கிளவி (குற் - 67) `ஆறன்மருங்கின் (குற் - 64) என்னும் இவ்விரு சூத்திரங்களுக்கும் சிவஞான முனிவர் கூறிய பொருள்கள் தொல்காப்பியனார் கருத்துக்கு முரணாவன என்பதும், இங்ஙனம் நூலாசிரியர் கருத்துக்கு முரண்படக்கூறிய இப்பொருள் களை அடிப்படையாகக் காட்டி `ஏனைக் குற்றியலுகர வீறும் உயிர் முதன் மொழி வந்து புணர்வுழிக் குற்றியலுகரங்கெட்டு நின்ற ஒற்றின்மேல் உயிர்வந்து ஒன்றி முடியுமென்பதூஉம் பெறப்பெடும் என ஒன்றின் முடித்தல் என்பதனாற் கொள்ளுதற்கு இடமில்லை யென்பதும் நன்கு தெளிவாதல் காண்க. அஃது, இஃது, உஃது எனவரும் ஆய்தத் தொடர்க் குற்றியலு கரத்தின் முன் உயிர்முதன்மொழி வருங்கால் ஆய்தங்கெடாது நிலைபெறுமெனவும் மெய்முதன் மொழி வருங்கால் ஆய்தங் கெடுமெனவும் கூறிய தொல்காப்பியனார், அச்சொற்களின் இறுதிக்கண் நின்ற குற்றியலுகரம் கெடுமெனக் கூறாமையானும், குற்றியலுகரவீற்றுச் சொற்களுக்கு அம், அக்கு, அன், இன், ஏ முதலிய சாரியைப் பேறு கூறிய ஆசிரியர், உயிர் முதலாகிய அச்சாரியைகள் வந்து புணருங்கால் நிலைமொழி யீற்றுக் குற்றுகரங் கெடுமென யாண்டுங் கூறாமையானும், குற்றுகரவீற்று எண்ணுப் பெயர்களுள் ஒன்றாகிய ஒன்பது என்னுஞ் சொல் நிலைமொழியாய் நிற்க அதன் முன் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் ஆயிரம் என்னும் எண்ணுப்பெயரும் வந்து புணருங் கால் அது தன் வடிவுநிலை திரியாது இன்சாரியை பெறும் எனக் குற்றியலுகரப் புணரியலின் 54, 65 ம் சூத்திரங்களில் ஆசிரியர் கூறுதலாலும் குற்றியலுகர வீறு உயிர்முதன்மொழி வருமிடத்துக் கெடாது நின்று மெய்யீறுபோல உயிரேற இடங்கொடுக்கு மென்பதே ஆசிரியர் தொல்காப்பியர் கருத்தென்பது இனிது புலனாகும். இனி, நாகரிது என்புழி முன்னர்க் குற்றுகர வோசையும் பின்னர் உயிரோசையும் பெற்று அவ்விரண்டுங் கூடி நின்றல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின் குற்றியலுகரத் திறுதிமுன்னும் உயிர் முதன்மொழி வந்தால் புள்ளியீறுபோல அவ்வுயிரேறி முடியுமென்பார்க்குக் கதவழகிது கனவழகிது என்புழியும் முன்னர் முற்றுகரவோசையும் பின்னர் உயிரோசையும் கூடியல்லது அப்பொருளுணர்த்தலாகாமையின் முற்றுகரத்தின் மேல் உயிரேறி முடிந்ததெனக் கூறல் வேண்டும். அவ்வாறன்றி முற்றுகரங்கெட நின்ற ஒற்றின்மேல் உயிரேறி முடியுமென்பதே எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாக லானும், குற்றியலுகரத்திற்கும் உயிரென்னுங் குறியீடு கொண்டமையின் ஒற்றின்மேலன்றி உயிரின்மேல் உயிரேறுதல் பொருந்தாமையானும், நாகரிதென் புழி இதழ் சிறிது குவிதலாகிய முயற்சி ஆண்டுப் பெறப்படாமை யிற் குற்றியலுகரவோசை ஆண்டுண்டென்றல் பொருந்தாமை யானும், `ஆறன்மருங்கின் என்றற் றொடக்கத்துச் சூத்திரங் களோடு முரணுதலானும், யகரம் வரும் வழி யிகரங்குறுகி யுகரத்தின்மேல் உயிரேறி முடியுமென்னாது `இகரங்குறுகும் - உகரக்கிளவி துவரத்தோன்றாது என்றாராகலானும் அவர் கூற்றுப் பொருந்தாது என்பர் சிவஞான முனிவர். கதவழகிது, கனவழகிது என்புழிக் கதவு கனவு எனவரும் முற்றுகரங்களை நுந்தை யென்னுஞ் சொல்லிற் போலக் குற்றுகரமாக ஒலித்தமையால் அவை குற்றியலுகரத்திற்குரிய செய்கைபெற்றுத் திரிந்தனவன்றி இயல்பு புணர்ச்சி பெற்றன வல்லவாதலானும், திரிபுடைய இவற்றைக்காட்டிக் குற்றியலுகர வீறுகள் எல்லா வற்றிற்குமுரிய உயிரேறி முடிதலாகிய சிறப்பியல் பினை விலக்குதல் பொருந்தாமையானும், கதவழகிது என்புழி வகரத்தின்கண் முற்றுகரவோசையின்மையும் நாகரிது என்புழிக் ககரத்தின்கண் குற்றுகரவோசை நுண்ணிய நிலையிலுண்மையும் இவ்விரு தொடர்களையும் ஒலித்துக் காண்போர்க்குச் செவி கருவியாகப் புலனாதலானும் குற்றியலுகரத்திற்கு உயிரென்னுங் குறியீடுண் டெனினும் அக் குறியீடொன்றேபற்றி எல்லா வகையானும் குற்றியலுகரம் உயிரியல்பே பெறுமெனக் கோடல் பொருந்தாமைக்கு அது மெய்யின் தன்மை பெறுமென விதித்த `குற்றியலுகரமும் அற்றென மொழிப என்னும் இச்சூத்திரமே சான்றாகலானும், குற்றியலுகரத்திற்கு இதழ்குவிதலாகிய முயற்சி புலப்பட்டே வருமென ஆசிரியர் கூறாமையானும், மெய்யீறு போல உயிரேற இடங்கொடுத்தலாகிய புணர்ச்சி வேறுபாடு முதலாயின கருதியே குற்றுகரவீற்று விதிகளை உயிர் மயங்கியலிற் கூறாது குற்றியலுகரப் புணரியல் எனத் தனியியல் வகுத்துக் கூறினார் ஆசிரியராதலானும், குற்றுகரவீறும் முற்றுகரவீறும் புணர்ச்சி வகையான் ஒத்தனவென்பது தொல்காப்பியர் கருத்தாயின் அவற்றை இருவேறியல்களிற் பிரித்துரைக்க வேண்டிய இன்றியமையாமை யின்மையானும், `ஆறன் மருங்கின் என்றற்றொடக்கத்துச் சூத்திரங்களோடு முரணாமை மேற்காட்டினாமாதலானும், `யகரம் வரும்வழி இகரங் குறுகும் உகரக்கிளவி துவரத் தோன்றாது எனவருஞ் சூத்திரம் குற்றியலுகர வீற்றின்முன் யகரமுதன்மொழிவரின் அவ் யகரத்தோடு குற்றியலுகரத்திற்கு மயக்கவிதியின்மையால் குற்றிய லுகரங்கெட அதுநின்ற நிலைக்களத்து இகரந்தோன்றிக் குறுகிநிற்குமெனக் கூறியதல்லது குற்றியலுகரத்தின் முன் இகரம் வரக் குற்றியலுகரம் கெடுமெனக் கூறியதன்றாகலானும் சிவஞான முனிவர் கூறுமாறு குற்றியலுகரம் உயிர் முதன்மொழி வரிற் கெடுமென்றல் தொல்காப்பியனார் கருத்தன்றென்க. இனி `குற்றியலுகரமுற்று எனவரும் புணரியல் மூன்றாஞ் சூத்திரத்தினைப் `புள்ளியீற்றுமுன் உயிர் தனித்தியலாது எனவரும் இவ்வியல் முப்பத்தாறாஞ் சூத்திரத்தோடு மாட்டெறிந்து உரையாசிரியரை யுள்ளிட்டோர் பொருள் கூறினரெனவும், `அவற்றுள், மெய் யீறெல்லாம் புள்ளியொடு நிலையல் என்னுஞ் சூத்திரத்தால் அவ்வீற்றின்மெய் உயிர்முதன்மொழி வந்தால் அஃதேற இடங்கொடுத்து நிற்குமென்பதுங் கூறினாராயிற்றேல் `புள்ளியீற்றுமுன் எனச் சூத்திரஞ் செய்தது கூறியது கூற லென்னுங் குற்றந் தங்குதற்கோவெனக் கூறி மறுக்கவெனவும் சங்கர நமச்சிவாயரும் சிவஞான முனிவரும் உரையாசிரி யருரையிற் குற்றங் கூறினர். அவர்கள் கூறியபடி இம்மூன்றாஞ் சூத்திரத்தைப் பின் வரும் முப்பத்தாறாஞ் சூத்திரத்துடன் உரையாசிரியர் மாட்டெறிந்து பொருள் கொள்ள வில்லை யென்பதும் இதன் முன்னுள்ள இரண்டாஞ் சூத்திரத்துடன்தான் மாட்டெறிந்து பொருள் கூறியுள்ளாரென்பதும் இச்சூத்திரத்திற்கு உரையாசிரியர் எழுதியவுரையினைக் கூர்ந்து நோக்குவார்க்கு இனிது புலனாகும். அன்றியும் `புள்ளியீற்று முன் உயிர் தனித்தியலாது மெய்யொடுஞ் சிவனும் அவ்வியல் கெடுத்தே என்றுவருஞ் சூத்திரத்தாற் கூறப்பட்ட பொருளும் ஒன்றா யினன்றே கூறியது கூறலென்னுங் குற்றந்தங்குவது? `மொழிக்கீறாய மெய்யெல்லாம் புள்ளியொடு நிற்கும் எனக்கூறி, அவை உயிர் முதன் மொழி வந்தவிடத்து உயிரேற இடங்கொடுக்கு மென்பதனை யுய்த்துணரவைப்பது `மெய்யீற்றின்முன் உயிர் தனித்து நடவாது; தான் தனி நின்ற இயல்பை விடுத்து நிலை மொழியீற்று மெய்யொடும் உயிர் தனித்து நடவாது; தான் தனி நின்ற இயல்பை விடுத்து நிலைமொழியீற்று மெய்யொடுங் கூடும் என்பதனைக் கூறுவது புள்ளியீற்றுமுன் எனவரும் இவ்வியல் 36-ம் சூத்திரமாகும். இது வருமொழிபற்றிய விதி. இங்ஙனம் நிலைமொழிக்கருவியும் வருமொழிக் கருவியுமாக `கூறியது கூறலென்னுங் குற்றந் தங்குதல் யாண்டையதென மறுக்க. இதுகாறுங் கூறியவாற்றால் குற்றியலுகரம் உயிர் முதன்மொழி வரிற் கெடுமென வீரசோழிய நூலாசிரியரும் நன்னூலாரும் சங்கரநமச்சிவாயர் சிவஞான முனிவர் முதலிய பிற்கால உரையாசிரியர்களும் கூறும் கொள்கை பொருந்தா தென்பதும், குற்றியலுகரம் மெய்யீறுபோலக் கெடாது நின்று உயிரேற இடங் கொடுக்குமென உரையாசிரியரை யுள்ளிட்டோர் கூறும் கொள்கையே தொல்காப்பியனார் கருத்தென்பதும், `குற்றுகரத்திற்கு முன்னர்வந்த உயிரேறிமுடிய அரை மாத்திரையாய் நிற்றலும் முற்றுகரத்திற்கு முன்னர்வந்த உயிரேறி முடியாமையுந் தம்முள் வேற்றுமை என நச்சினார்க்கினியர் காட்டிய இலக்கணமே குற்றியலுகர வீறுகளெல்லா வற்றின்கண்ணுஞ் செல்லுமென்பதும் நன்கு வலியுறுத்தப் பட்டமை காண்க. உயிர்மெய் யீறும் உயிரீற் றியற்றே. (தொல். 106) இது, மேல் `மெய்யேயுயிரென்றாயீரியல என்ற வழி நிகழ்வதோர் ஐயம் அகற்றுகின்றது. (இ-ள்) உயிர்மெய்யீற்று மொழியும்; மெய்முன்னும் உயிர் பின்னுமாக ஒலித்து நின்றவாற்றால் உயிரீற்றின் தன்மையை யுடைத்து என்றவாறு. ஈறும் என்ற உம்மையால் இடையில் நின்ற உயிர் மெய்யும் உயிரின் இயல்பை உடைத்தென்றும் ஈறும் இடையும் உயிருள் அடங்குமெனவே முதல் மெய்யுள் அடங்கு மென்பதாயிற்று என்றும் கூறுவர் இளம்பூரணர். இதனால் விள முதலிய உயிர்மெய்யீறெல்லாம் அகர வீறு முதலிய உயிரீற்றுள் அடங்கிப் புணர்ச்சி பெறுவன வாயின. வரகு என்புழி இடை நின்ற ரகர உயிர் மெய் அகரமாய் உயிர்த் தொடர் மொழி யெனப்பட்டது. எனவே ஒற்றுமை நயத்தான் ஒன்றென வழங்கும் உயிர் மெய்யெழுத்தினை வேற்றுமை நயத்தால் மொழி களின் ஈறும் இடையும் உயிரென ஓரெழுத்தாயும், முதலில் மெய்யென ஓரெழுத்தாயும் ஆசிரியர் பிரித்துரைத்தமை நன்கு பெறப்படும். முன்னர் மெய்யின் வழியதுயிர் தோன்று நிலையே (நூன் - 18) என்றது, உயிர்மெய்யாகிய தனியெழுத்திற்குக் கூறியது. ஈண்டு `உயிர்மெய்யீறும் உயிரீற்றியற்றே என்றது, மொழியிறுதி நின்ற உயிர்மெய் யெழுத்திற்குக் கூறியது. ஆதலின் கூறியது கூறலன்மை யுணர்க. `இத்துணையும் ஒரு மொழி யிலக்கணங் கூறலின் மொழி மரபின் ஒழிபாயிற்று என்பர் உரையாசிரியர். உயிரிறு சொன்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொன்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொன்முன் உயிர்வரு வழியும் மெய்யிறு சொன்முன் மெய்வரு வழியுமென் றிவ்வென வறியக் கிளக்குங் காலை நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவியென் றாயீ ரியல புணர்நிலைச் சுட்டே. (தொல். 107) இது மேற்கூறும் புணர்ச்சி, நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியு மாகிய இருமொழிப் புணர்ச்சியாமல்லது மும்மொழிப் புணர்ச்சி யாகாதென்பதும், அப்புணர்ச்சி உயிரீற்றின் முன் உயிர், உயிரீற்றின் முன் மெய், மெய்யீற்றின் முன் மெய் என எழுத்து வகையால் நான்காமென்பதும் உணர்த்துகின்றது. (இ-ள்) உயிரீற்றுச் சொல்முன் உயிர் முதன்மொழி வருமிடமும், உயிரீற்றுச் சொல்முன் மெய் முதன்மொழி வருமிடமும் மெய்யீற்றுச் சொல்முன் உயிர் முதன்மொழி வருமிடமும் மெய்யீற்றுச் சொல்முன் மெய்முதன் மொழி வருமிடமும் என அப்புணர்ச்சி இத்துணைய என்று வரையறுத்துச் சொல்லுங் காலத்து அவை ஒன்றோடொன்று புணரும் நிலைமையாகிய கருத்தின் கண், புணர்தற்கென நிறுத்த சொல்லாகிய நிலைமொழியும், அதன் பொருண்மையைக் குறித்து வருசொல்லாகிய வருமொழியும் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டியல்பினை யுடையவாம். என்றவாறு. (உ-ம்) ஆ + உண்டு = ஆவுண்டு (உயிரீற்றின் முன்உயிர்) ஆ + வலிது = ஆவலிது (உயிரீற்றின் முன் மெய்) ஆல் + இலை = ஆலிலை (மெய்யீற்றின் முன் உயிர்) ஆல் + வீழ்ந்தது = ஆல் வீழ்ந்தது (மெய்யீற்றின் முன் மெய்) நிலைமொழியை நிறுத்த சொல்லென்றும் வருமொழியைக் குறித்துவருகிளவி யென்றும் இச்சூத்திரத்துத் தொல்காப்பியனார் வழங்கியுள்ளமை காண்க. விளவினைக் குறைத்தான் என்றவழி, விள என்பதனைச் சார்ந்த இன்சாரியையும் ஐயுருபும் நிலை மொழியாயே நிற்குமென்பது நோக்கி அதனை நிறுத்த சொல் லென்றும் குறைத்தான் எனவரும் முடிக்கும் சொல்லைக் குறித்து வருகிளவி யென்றுங் கொள்ளுதல் ஆசிரியர் துணிபாம். அவற்றுள், 108. நிறுத்த சொல்லின் ஈறாகெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலுந் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே யியல்பென ஆங்கந் நான்கே மொழிபுண ரியல்பே. இது மேற்கூறும் புணர்ச்சி சொல்வகையான் நான்கா மென்பதும், புணர்ச்சி வகையான் நான்காமென்பதும், புணர்வது எழுத்தும் எழுத்துமே யாவதன்றிச் சொல்லுஞ் சொல்லு மன்றென்பதும் உணர்த்துகின்றது. (இ-ள்) நிலைமொழி வருமொழியெனப்பட்டவற்றுள் நிறுத்த சொல்லாகிய நிலைமொழியின் ஈறாகி நின்ற எழுத்தோடு குறித்து வரு சொல்லாகிய வருமொழியின் முதலெழுத்துப் பொருந்தப் பெயர்ச்சொல்லோடு பெயர்ச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் பெயர்ச்சொல்லோடு வினைச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் வினைச்சொல்லோடு பெயர்ச்சொல்லைப் புணர்க்குங் காலத்தும் வினைச்சொல்லோடு வினைச் சொல்லைப் புணர்க்குங் காலத்தும் மொழிகள் தம்மிற் புணருந் தன்மை, திரிபு மூன்றும் இயல்பு ஒன்றும் என அந்நான்கேயாம் - என்றவாறு. இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்தல்லது தாமாக நில்லாமையின் பெயர் வினைகட்கே புணர்ச்சி விதி கூறினார். அவைதாம், 109. மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென் றிவ்வென மொழிப திரியு மாறே. (தொல். 109) இது மேலைச் சூத்திரத்திற் கூறப்பட்ட மூன்று திரிபாவன இவை யெனக் கூறுகின்றது. (இ-ள்) முன்னர்த் திரிபு எனச் சொல்லப்பட்ட அவைதாம் திரியும் நெறியினை ஓரெழுத்து மற்றொன்றாய் வடிவு வேறு படுதலும், அங்கு இல்லாத எழுத்து புதிதாய்த் தோன்றுதலும், உள்ள எழுத்து கெடுதலும் ஆகிய மூன்று கூறுபாடுடைய எனச் சொல்லுவர் என்றவாறு. திரியும் நெறி மூன்றெனவே இம்மூன்று மல்லாதது இயல்பு புணர்ச்சி யெனக் கொள்க. (உ-ம்) பொன் + குடம் = பொற்குடம் (மெய்பிறிதாதல்) யானை + கோடு = யானைக்கோடு (மிகுதல்) மரம் + வேல் = மரவேர் (குன்றல்) குவளை + மலர் = குவளைமலர் (இயல்பு) மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகவுடைய பகாப் பதம் பகுபதம் என்னும் இரண்டு பதங்களும் தன்னொடுதானும் பிறிதொடு பிறிதுமாய் அல்வழிப் பொருளினாலாவது வேற்றுமைப் பொருளினாலாவது பொருந்துமிடத்து நிலைமொழியும் வரு மொழியும் இயல்போடும் விகாரத்தோடும் பொருந்துவது புணர்ச்சி யாம் என்றும், தோன்றல், திரிதல், கெடுதல் என மொழியிடத்துத் தோன்றும் விகாரம் மூன்றென்றும், அம் மூன்றும் இல்லாதது இயல்பென்றும் பவணந்தி முனிவர் கூறியுள்ளார். மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும் தன்னொடும் பிற்தொடும் அல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள் இயல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே. விகார மனைத்தும் மேவல தியல்பே. தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் மூன்று மொழிமூ விடத்து மாகும். (நன். 151, 153, 154) எனவரும் நன்னூற் சூத்திரங்கள் புணர்ச்சியின் இலக்கணத்தினை விரித்துரைப்பனவாம். ஆசிரியர் தொல்காப்பியனார் `நிறுத்தசொல்லின் ஈறா கெழுத்தொடு, குறித்து வருகிளவி முதலெழுத்தியைய என்பத னால், புணர்வன எழுத்தும் எழுத்துமே என்பதனைத் தெளிவாக அறிவுறுத்தி யுள்ளார். இங்ஙனம் தொல்காப்பியர் எழுத்தின் தனிநிலையும் மொழிக்கண் நிற்குங்கால் அதன் தன்மையும் நேர்முறையில் உணர்த்தினாராகவும், நிலைமொழியும் வருமொழியும் இயல்போடும் விகாரத்தோடும் பொருந்துவது புணர்ச்சி என மொழிமேல் வைத்துக் கூறுவர் பவணந்தி முனிவர். மொழிகள் ஒன்றோடொன்று புணர்வதே புணர்ச்சி யிலக்கணமா மெனின் புணர்ச்சியிலக்கணம் சொல்லதி காரத்திற் சேர்க்கப் பெற்றிருத்தல் வேண்டும். தொல்காப்பியனார் எழுத்திலக்கணம் சொல்லதிகாரத்திலும் சொல்லிலக்கணம் எழுத்ததிகாரத்திலும் விரவி மயங்காத படி அவற்றைத் தனித்தனியே பிரித்துணர்த்தி னாராதலின் நிலை மொழியும் வருமொழியும் தம்மிற் புணர்வதே புணர்ச்சி யென்றல் அவர் நூற்போக்கின் முறைக்கு மாறுபட்ட தாகும். சொற்கள் ஒன்றோடொன்று புணரும் புணர்ச்சியை யுணர்த்துதல் ஆசிரியர் கருத்தாயின், இச் சொல், இச் சொல்லைக்கொண்டு முடியும் என்றாற் போன்று சொல்முடிபும் பொருட்டொடர்பும் விரித்துக் கூறியிருப்பர். அவ்வாறு கூறாது நிலைமொழி வருமொழிகளை உயிரீறு, உயிர்முதல், மெய்யீறு, மெய்முதல் என எழுத்து வகையால் நான்காகப் பகுத்துக் கொண்டு, நிலைமொழி யீற்றுயிர் வருமொழி முதலிலுள்ள உயிரோடும் மெய்யோடும் இயைந்து புணரும் எழுத்துப் புணர்ச்சியை உயிர் மயங்கியல் எனப் பெயர் தந்து அவ்வியலிற் கூறுதலானும், அவ்வாறே நிலை மொழியீற்று மெய்களும் குற்றியலுகரமும் வருமொழி முதலிலுள்ள மெய்யும் உயிருமாகிய எழுத்துக்களோடு புணருமியல் பினை முறையே புள்ளி மயங் கியல், குற்றியலுகரப் புணரியல் எனப் பெயர்தந்து கூறுதலானும் மொழிகள் நிலைமொழியும் வருமொழியுமாகப் புணருங்கால் அவற்றின் ஈறும் முதலுமாகிய எழுத்துக்கள் தம்மோடு இயைதலால் உண்டாகும் நிலையினையே புணரியல் முதலிய இயல்களால் ஆசிரியர் கூறுகின்றமை புலனாம். எழுத்தாற் சொல்லாமாறு கூறும் மொழியாக்கப்பகுதி, மொழியியல் பினை நேர்முகமாய் உணர்த்தாமல் மொழிக்கு உறுப்பாகிய எழுத்துக்களின் இலக்கணத்தினைக் கூறுமுகமாக அவ் வெழுத்துக் களாலாகிய மொழியின் நிலைமையையும் உய்த்துணரவைக்கு `மியல்பிற்றாதலின் அதுவும் மயங்கா மரபின் எழுத்திலக்கண முணர்த்தியதெனவே கொள்ளப்படும். நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய. (தொல். 110) இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்) நிலைமொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக் குறித்து வருமொழியாக வருஞ் சொல்லும் தாமே புணராது ஒவ்வொரு சொல்லை அடைமொழியாகப் பெற்றுவரினும் புணர்த்தற்குரியவாம் - என்றவாறு. எனவே நிலைமொழி அடையடுத்தும் வருமொழி அடை யடுத்தும் அவ்விரு மொழியும் அடையடுத்தும் புணர்தற்குரியன என்பது பெறப்படும். அடைமொழிகளாவன உம்மைத்தொகைப் பொருள்படவும் இருபெயரொட்டுப் பண்புத்தொகைப் பொருள் படவும் நிலைமொழி வருமொழிகளை அடுத்து நிற்கும் சொற்களாம். (உ-ம்) பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத்தொன்று (நிலைமொழி அடையடுத்து வந்தது) ஆயிரம் + ஒருபஃது = ஆயிரத்தொருபஃது (வருமொழி அடையடுத்து வந்தது) பதினாயிரம் + இருபஃது = பதினாயிரத்திருபஃது (இருமொழி களும் அடையடுத்து வந்தன) மருவின் றொகுதி மயங்கியல் மொழியும் உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே. (தொல். 111) இது மரூஉ மொழிகளும் நிலைமொழி வருமொழிகளாக வைத்துப் புணர்க்கப்படு மென்கிறது. (இ-ள்) தலைதடுமாறாக மயங்கின இயல்புடைய மரூஉ வழக்கும் புணரும் நிலைமைக்கண் உரியன உள என்றவாறு. ஈண்டு மரூஉவென்றது இலக்கணத்தொடு பொருந்தின மரூஉமொழிகளை. நிலையென்றதனால் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ வழக்கல்லா மரூஉ வழக்கும் புணர்க்கப்படு மெனக் கொள்க என்பர் இளம்பூரணர். (உ-ம்) கண் + மீ = மீகண். இல் + முன் - மூன்றில் எனவரும். வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் வேற்றுமை யல்வழிப் புணர்மொழி நிலையும் எழுத்தே சாரியை யாயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காலை. (தொல். 112) இது மேற்கூறிய மொழிபுணரியல்பு நான்கனுள் மிக்குப் புணரும் புணர்ச்சி இத்தன்மைத்தென்பதும் நால்வகைப் புணர்ச்சியும் பொருள்வகையான அவ்வழி வேற்றுமையென இருவகைப் படுமென்பதும் உணர்த்துகின்றது. (இ-ள்) சொற்கள் புணருங்காலத்து வேற்றுமை பொருளைக் குறித்த புணர்மொழியினது தன்மையும், வேற்றுமை யல்லாத அவ்வழியிடத்துப் புணரும் மொழியினது தன்மையும் எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலுமாகிய அவ்விரண்டிலக் கணத்தினாலும் நடத்தலைத் தமக்கு வலியாகவுடைய என்றவாறு. (உ-ம்) விள + கோடு = விளங்கோடு (எழுத்துப் பெற்றது) மக + கை = மகவின்கை (சாரியை பெற்றது) அவ் + கோடு = அவற்றுக்கோடு (எழுத்துஞ் சாரியையும் உடன் பெற்றது) இவை வேற்றுமை. விள + குறிது = விளக்குறிது (எழுத்துப் பெற்றது) பனை + குறை = பனையின் குறை (சாரியை பெற்றது) கலம் + குறை = கலத்துக் குறை (எழுத்துஞ் சாரியையும் உடன்பெற்றது) இவை அல்வழி. பனையின் குறை - பனை குறைந்தது. கலத்துக் குறை - கலம் குறைந்தது. பனையென்பது ஓரளவு. `பனைத்துணையாக் கொள்வர் (திருக்குறள்) என்பது காண்க. வேற்றுமை யல்லாதது அவ்வழியாதலின் வேற்றுமையை முற்கூறினார். வேற்றுமையாவது ஐ முதலிய ஆறுருபும் இடையே மறைந்தும் விரிந்தும் வரச் சொற்கள் பொருந்தும் தொடர்ச்சி யாம். அவ்வேற்றுமை யுருபுகள் தொக்கும் விரிந்தும் நில்லாத நிலையிற் சொற்கள் புணருந் தொடர்ச்சி அல்வழிப் புணர்ச்சி யெனப்படும். நன்னூலாரும் மெய்யுயிர் முதலீறா மிரு பதங்களும்...... அல்வழி வேற்றுமைப் பொருளிற் பொருந்துழி (நன் 151) எனப் புணர்ச்சியைப் பொருள் வேற்றுமையால் அல்வழி வேற்றுமை என இரண்டாக அடக்கினமை முன்னர்க் கூறப்பட்டது. ஐ ஒடு கு இன் அது கண் ணென்னும் அவ்வா றென்ப வேற்றுமை யுருபே. (தொல். 113) இது மேல் வேற்றுமையென்று சொல்லப் பட்டவற்றின் பெயரும் முறையும் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்) வேற்றுமையுருபுகளாவன ஐ, ஓடு, கு இன் அது, கண் என்று சொல்லப்படும் அவ் ஆறுருபும் என்று சொல்லுவர் என்றவாறு. இவையாறும் அல்லாதனவெல்லாம் அல்வழியெனப் படும். அவை எழுவாய், விளி, உவமத்தொகை, உம்மைத் தொகை, பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத் தொகை, வினை முற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், வினையெச்சத் தொடர், இடைச்சொற் றொடர், உரிச்சொற் றொடர் என்பனவாம். வேற்றுமையும் அல்வழியும் இவையென விளக்கப் போந்த நன்னூலார், வேற்றுமை ஐம்முதலாறாம் அல்வழி தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியீ ரெச்ச முற்றிடையுரி தழுவு தொட ரடுக் கெனவீ ரேழே. (நன். 152) என்பதனால் வேற்றுமைப் புணர்ச்சியைத் தொல்காப்பியனார் கூறியவாறு ஆறாகப் பகுத்தும், அவ்வழிப்புணர்ச்சியை வினைத் தொகை, பண்புத்தொகை, உவமத்தொகை உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என ஐந்து தொகை நிலையும் எழுவாய், விளி, பெயரெச்சம், வினையெச்சம், தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று, இடைச் சொற்றொடர், உரிச் சொற்றொடர், அடுக்கு என ஒன்பது தொகாநிலையும் எனப் பதினான்காகப் பகுத்தும் கூறினார். பெயர்ப் பொருளை வேற்றுமை செய்தலால் வேற்றுமை யெட்டெனச் சொல்லதிகாரத்திற் கூறிய தொல்காப்பியனார், எழுவாய்க்கும் விளிக்கும் பெயரும் பெயரது விகாரமுமன்றி, வேறு உருபின்மையின் அவ்விரண்டினையும் நீக்கித் தமக்கென உருபுடைய இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை யீறாகவுள்ள ஆறையுமே இவ் வெழுத்ததிகாரத்து வேற்றுமை யாகக் கொண்டு `அவ்வாறென்ப வேற்றுமையுருபே யெனத் தொகுத்துரைத்தார். எனவே ஐ முதலிய ஆறுருபும் தொக்கும் விரிந்தும் இடைநிற்கச் சொற்கள் புணருந் தொடர்ச்சியே எழுத்து வகையில் வேறுபாடுடைய வேற்றுமைப் புணர்ச்சியென்பது ஆசிரியர் கருத்தாதல் நன்கு புலனாம். எழுவாயும் விளியும் எழுத்து வகையானன்றிச் சொற் பொருள் வகையான் வேறு பாடுடைய வாகலின் சொல்லதிகாரத்து அவ்விரண்டையுங் கூட்டி வேற்றுமை எட்டென்றார். எழுத்ததிகாரத்து எழுத்திலக் கணம் அமைதி யொன்றே கருதி வேற்றுமை ஆறென்றும், சொல்லதிகாரத்து, எழுத்திலக்கண அமைதியொடு சொல்லிலக் கண அமைதியும் உடன் கருதி வேற்றுமை எட்டென்றும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இயல்பினைப் பகுத் துணர்தல் வேண்டும். வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற் கொல்வழி யொற்றிடை மிகுதல் வேண்டும். (தொல். 114) இது, மேற்கூறப்பட்ட வேற்றுமையுருபுகள் ஆறும் பெயர்ப்பின் வந்து புணருங்கால் இயல்பாகப் புணர்தற்குரிய ஐ, ஓடு, இன், அது என்னும் உயிர் முதல் உருபுகளை யொழித்துத் திரியும் இயல்புடைய வல்லெழுத்தை முதலாகவுடைய கு, கண் என்னும் இரண்டுரு பிற்கும் உருபியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது. (இ-ள்) வல்லெழுத்தை முதலாகவுடைய கு என்னும் நான்காம் வேற்றுமை யுருபிற்கும் கண் என்னும் ஏழாம் வேற்றுமை யுருபிற்கும் பொருந்தியவழி வல்லொற்று இடையே மிகுதல் வேண்டும் - என்றவாறு. இன்ன ஈற்றின்முன் என நிலைமொழியை வரைந்து கூறாமையின் உயிரீறு மெய்யீறாகிய இரண்டினையுங் கொள்க. (உ-ம்) மணி + கு = மணிக்கு மணி + கண் = மணிக்கண் வேய் + கு = வேய்க்கு வேய் + கண் = வேய்க்கண் எனவரும். ஒற்று மிகுதல் வேண்டும் எனப் பொதுப்படக்கூறவே வல்லொற்றும் மெல்லொற்றும் மிகுதல் பெற்றாம் எனக் கொண்டு, தங்கண், நங்கண் என மெல்லெழுத்து மிக்கன என்று உதாரணங் காட்டினர் உரையாசிரியர். மெல்லொற்று மிகுதலையுஞ் சேர்த்துரைத்தல் ஆசிரியர் கருத்தாயின் வல்லொற்றும் கிளை யொற்றும் மிகும் எனப் பிரித்துரைப்பார். `வல்லெழுத்து வருவழி யொற்று இடைமிகுதல் வேண்டும் எனவே அவ்விடத்துமிகுவது வல்லொற்றேயாதல் தேற்றம். ஒற்றுமிகும் எனப் பொதுப்படக் கூறும் வழியெல்லாம் வந்த ஒற்று மிகுதலையே சுட்டிச்செல்லுதல் ஆசிரியர் கருத்தாகும். வந்த ஒற்றுக்குக் கிளையான் எழுத்து மிகுமாயின் அதனைக் கிளந்துரைத்தலும் அவரியல்பாம். தங்கண், நங்கண் என்புழித் தாம் நாம் என்பன தம் நம் எனக்குறுகி மகரவிறுதி வேற்றுமையாயின், துவரக்கெட்டு (புள்ளி - 15) என்றபடி மகரங்கெட்டு, படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும், தொடக்கங்குறுகும் பெயர்நிலைக் கிளவியும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும், மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான (புள்ளி - 25) என்பதனால் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கன ஆகலான், அவை ஈண்டு அடங்கா. இனி தங்கண், நங்கண் என்ற சொற்களை இடைச் சொற்சந்தி யெனக்கொண்டு வேற்றுமைக்குக் கூறிய மெல் லெழுத்து மிகுதி அதன்கண் அடங்காதெனக்கூறின், தங்கண், நங்கண் என்பன அல்வழியாயின் தம் நம் என்பவற்றின்கண் வரும் இறுதி மகரம் `அல்வழியெல்லாம் மெல்லெழுத்தாகும் (புள்ளி - 19) என்பதனால் வருமெழுத்தின் கிளையெழுத்தாகத் திரிந்து நின்றதெனக் கொள்வதன்றி `வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற்கு ஒல்வழியொற்றிடை மிகுதல் வேண்டும் என்னும் இச் சூத்திரத்தால் மெல்லெழுத்து மிக்கு நின்றதெனக் கொள்ளுதல் பொருந்தாது. உயிரீறும் இங்ஙனந்திரியுமியல்புடைய மகர வீறல்லா மெய்யீறும் ஆகியவற்றின் முன்வரும் கு கண் என்னும் உருபுகளின்முன் மெல்லெழுத்து மிகாமையும் நோக்கத்தக்கது. இனி, `ஒல்வழி யென்றதனால் நம்பிகண், நங்கை கண் என இகர ஐகார வீற்றின்கண்ணும், தாய்கண், அரசர்கண் என யகர ரகரவீற்றின்கண்ணும் ஏழா முருபு வருமிடத்து ஒற்றுமிகாமை கொள்க. ஆற னுருபின் அகரக் கிளவி யீறா ககரமுனைக் கெடுதல் வேண்டும். (தொல். 115) இஃது ஆறாவதற்குத் தொகைமரபினை நோக்கியதோர் கருவி கூறுகின்றது. (இ-ள்) அதுவென்னும் ஆறனுருபின்கண் நின்ற அகர மாகியவெழுத்தும், நெடுமுதல் குறுகு மொழிகட்கு ஈறாகுபுள்ளி அகரமொடுநிலையும் (எழுத்து - 161) என விதித்ததனா லுளதாகிய அகரத்தின் முன்னர்த் தான் கெடுதல் வேண்டும் என்றவாறு. (உ-ம்) தமது, நமது, நுமது, தனது, எனது, நினது எனவரும். நினவகூறுவல் எனவகேண்மதி என்றாற்போல ஆறாவதற் குரிய அகரவுருபின் முன்னரும் நின, என என்றாங்கு ஓர் அகர வெழுத்துப்பேறு நிலைமொழிக்கண் வருதலுளதாக ஆசிரியர் கருதினாராதலின், ஆறனுருபும், நான்கனுருபும், நெடு முதல் குறுகு மொழிகளோடு புணருமிடத்து அவ்விரண்டற்கும் பொதுவாக நிலை மொழிக்கண் அகரப்பேறு விதித்தார். அங்குப் பெற்று நின்ற அகரத்தின் முன்னர் அதுவென்னும் ஆறனுருபின் அகரம் கெடுகவென இங்கு விதித்தார். இவ்வாறு நெடுமுதல் குறுகு மொழிகள் ஈற்றில் அகரம் பெறுமென விதியாது அதுவென்னும் உருபின் அகரம் ஏறி முடியுமென நன்னூலார் கொண்டனர். நினவ, எனவ என்றற் றொடக்கத்துச் சொற்களில் ஆறாவதன் அகரவுருபின் மேல் நிலைமொழியீற்றில் வேறோர் அகரம் காணப்படுதலால் தொல்காப்பியனார் கொண்ட முறையே பொருத்தமுடைய தென்பது பெறப்படும். வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. (தொல். 116) இது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமாறு கூறு கின்றது. (இ-ள்) வேற்றுமையுருபு பெயரோடு புணரு நிலைமைக் கண் பெயர்களின் பின்னிடத்தன என்றவாறு. (உ-ம்) சாத்தன் + ஐ = சாத்தனை, சாத்தன் + ஒடு = சாத்தனொடு எனவரும். மேல் உருபுநிலை திரியாது ஈறு பெயர்க்காகும். என்கின் றாரன்றோ வெனின், பெயரோடு பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை, அல்வழியென இரண்டாக அடக் கலின், வினைவழியும் உருபு வருமென்பதுபட நின்றதாகலின், வினைவழி வேற்றுமை யுருபு வாராதென விலக்குதற்பொருட்டு ஈண்டு இது கூறப்பட்டதென்பர் உரையாசிரியர். உயர்திணைப் பெயரே யஃறிணைப் பெயரென் றாயிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. (தொல். 117) இது வேற்றுமை யுருபொடு புணரும் பெயர்கட்கும் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது. (இ-ள்) பொருளை யொருவர் கருதுதற்குக் காரணமான நிலைமையையுடைய பெயர்கள், உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் என இருவகைப்படுமென்பர் ஆசிரியர். (உ-ம்) ஆடூஉ, மகடூஉ என்பன உயர்திணைப் பெயர்கள்; ஒன்று, பல என்பன அஃறிணைப் பெயர்கள். விரவுப்பெயர், சாத்தன் வந்தான், சாத்தன் வந்தது எனப் புணர்ச்சிக்கண் பெரும்பான்மையும் ஒருதிணைப் பாற்படுதலின், அதனையும் இவ்விரண்டனுள் அடக்கிக் கூறினார். அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே. (தொல். 118) இது மேல் மிக்குவரும் புணர்ச்சியுட் சாரியை வருமிடங் கூறுகின்றது. (இ-ள்) மேற் சொல்லப்பட்ட உயர்திணை, அஃறிணை யாகிய இருவகைப் பெயர்களின் பின்னிடத்தே சாரியைச் சொற்கள் வரும் என்றவாறு. உ-ம் ஆடூஉவின்கை, மகடூஉவின்கை, பலவற்றுக்கோடு எனவரும். வேறாகிநின்ற இருமொழியும் தம்மிற் சார்தற் பொருட்டு இயைந்து நிற்பது சாரியை யெனப்படும். அவைதாம் இன்னே வற்றே யத்தே யம்மே ஒன்னே யானே யக்கே யிக்கே அன்னென் கிளவி யுளப்படப் பிறவும் அன்ன வென்ப சாரியை மொழியே. (தொல். 119) இது சாரியைகட்குப் பெயரும் முறையும் கூறுகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட சாரியைகள் தாம் இன், வற்று, அத்து, அம், ஒன், ஆன், அக்கு, இக்கு, அன் என ஒன்பதும் பிறவுமாம் என்றவாறு. ஆன், இன் என்பன சாரியையாயின் வேற்றுமை யுருபேற்று முடிதலும், வேற்றுமையுருபாயின் வேறுருபு ஏலாமையும் தம்முள் வேற்றுமையாம். பிற என்றதனால் தம், நம், நும், உம், ஞான்று, கெழு, ஏ, ஐ என்பனவுங் கொள்ளப்படும். இவற்றுள் ஞான்று ஒழிந்தன ஏழனையும் தொல்காப்பியரே எடுத்தோதலின் இவையும் அவர் காலத்துச் சாரியைகளாக வழங்கப்பெற்றன என்பது பெறப்படும். அவற்றுள் இன்னி னிகர மாவி னிறுதி முன்னர்க் கெடுத லுரித்து மாகும். (தொல். 120) இஃது, இன்சாரியை இகரம் ஆ என்னும் ஓரெழுத் தொருமொழி முன்னர் கெட்டு முடியவும் பெறும் என்றவாறு. உரித்துமாகுமெனவே கெடாது நிற்கவும் பெறும் என்றபடி. இஃது ஒப்பக்கூறலென்னும் உத்தி. இன்னின் இகரம் மாவின் இறுதி எனப் பிரித்துக் கூறுதற்கும் இச்சூத்திரம் இடந்தருதலின் மா என்னும் ஓரெழுத் தொருமொழி முன்னும் இன்சாரியையின் இகாரம் கெடுதல் கொள்க. (உ-ம்) ஆனை, ஆவினை, மானை, மாவினை எனவரும். அளவாகு மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. (தொல். 121) இன்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) அளவுப் பெயராய்ப் பின்னிற்கும் மொழிக்கு முன்னர் நின்ற எண்ணுப் பெயர்களின் ஈற்றிலுள்ள குற்றுகரத்தின் மேல்வந்த இன்சாரியையது னகரம் றகரமாய்த் திரியும் நிலைமையுடைத்து என்றவாறு. (உ-ம்) பத்து + இன் + அகல் = பதிற்றகல். பத்து + இன் + உழக்கு = பதிற்றுழக்கு. எனவரும். இவற்றைப் பத்து என நிறுத்தி `நிறையுமளவும், (குற். 31) என்னுஞ் சூத்திரத்தால் இன்சாரியை கொடுத்துக் `குற்றியலுகர மெய்யொடுங் கெடுமே (குற். 28) என்றதனால் குற்றுகரத்தை மெய்யோடுங் கெடுத்து வேண்டுஞ் செய்கைசெய்து `முற்றவின் வரும் என்பதனால் ஒற்றிரட்டித்து முடிப்பர் நச்சினார்க்கினியர். `நிலைத்து என்றதனால் பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்வர் உரையாசிரியர். (உ-ம்) பத்து + இன் + ஒன்று = பதிற்றொன்று, பத்து + இன் + ஏழு = பதிற்றேழு எனவரும். இங்ஙனம் இன்சாரியை ஈறுதிரிந்ததனை இற்றுச் சாரியை யாகக் கொண்டார் நன்னூலார். (சூ. 244) வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன் அஃகா னிற்ற லாகிய பண்பே. (தொல். 122) இது வற்றுச் சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவை, இவை, உவை என்னும் ஐகாரவீற்றுச் சொல்முன்னர் வற்றுச்சாரியை வருங்காலை அவ் வற்றுச் சாரியையினது வகரமாகிய ஒற்றுக் கெட, அவ்வொற்றின்மேல் ஏறிய அகரம் கெடாது நிற்றல் அதற்குளதாகிய பண்பாம் என்றவாறு. ஆகிய பண்பு என்றதனால் எவன் என்பதனைப் படுத்த லோசையாற் பெயராக நிறுத்தி வற்றுச்சாரியையும் உருபும் கொடுத்து வற்றுமிசை யொற்றென்று னகரங்கெடுத்து அகரவுயிர் முன்னர் வற்றின் வகரங் கெடுமெனக் கெடுத்து, எவற்றை எவற்றொடு எனப் புணர்ப்பர் நச்சினார்க்கினியர். னஃகான் றஃகா னான்க னுருபிற்கு. (தொல். 123) இது னகரவீற்றுச் சாரியைகளின் னகரம் திரியு மாறு கூறுகின்றது. (இ-ள்) இன், ஒன், ஆன், அன் என்னும் நான்கு சாரியைகளின் ஈற்றிலுள்ள னகரம் நான்காமுருபு வருமிடத்து றகரமாய்த் திரியும் என்றவாறு. (உ-ம்) விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு என வரும். ஆனி னகரமு மதனோ ரற்றே நாள்முன் வரூஉம் வன்முதற் றொழிற்கே. (தொல். 124) இஃது ஆன்சாரியையின் ஈறு பொருட் புணர்ச்சிக் கண் திரியு மென்கின்றது. (இ-ள்) நாட்பெயர் முன்னர்வரும் வல்லெழுத்தை முதலாக வுடைய தொழிற் சொற்கு இடையே வரும் ஆன் சாரியையின் னகரமும், நான்கனுருபின்கண் வரும் ஆன் சாரியையின் னகரம் போல றகரமாய்த் திரியும் என்றவாறு. (உ-ம்) பரணி + ஆன் + கொண்டான் = பரணியாற் கொண்டான் என வரும், ஆனின் னகரமும் என்ற உம்மையால் நாளல்லவற்றின் முன்வரும் வன்முதற்றொழிற்கண் இன்னின் னகரமும் றகரமாய்த் திரியுமெனக் கொண்டு பனியிற் கொண் டான், பறம்பிற்பாற் என உதாரணங் காட்டுவர் நச்சினார்க் கினியர். அத்தி னகரம் அகரமுனை யில்லை. (தொல். 125) இஃது அத்துச் சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) அத்துச் சாரியையின் அகரம் அகரவீற்றுச் சொல் முன்னர் நில்லாது கெடும் என்றவாறு. (உ-ம்) மக மூ அத்து + கை = மகத்துக்கை என வரும். (மக - குழந்தை). இக்கி னிகரம் இகரமுனை யற்றே. (தொல். 126) இஃது இக்குச் சாரியை முதல் திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) இகரவீற்றுச் சொல் முன்னர் வரும் இக்குச் சாரியையின் இகரம் முற்கூறிய அத்துச்சாரியையின் அகரம் போலக் கெடுதலாகிய அவ்வியல்பில் நிற்கும் என்றவாறு. (உ-ம்) ஆடி + இக்கு + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான் எனவரும். ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும், (தொல். 127) இதுவும் இது. (இ-ள்) மேற்கூறிய இக்குச் சாரியையின் இகரம் ஐகாரவீற்றுச் சொல்முன்னரும் முற்கூறியபடி கெடுதலாகிய நிலையை யடையும் என்றவாறு. (உ-ம்) சித்திரை + இக்கு + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் எனவரும். இவ்வாறு இக்குச் சாரியையின் இகரம் கெடுதல் கருதி இதனைக் குகரச் சாரியையாகக் கொண்டார் நன்னூலார். எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கி னிறுதிமெய்ம் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத் தோன்றாது. (தொல். 128) இஃது அக்குச்சாரியை ஈறு திரியுமாறு கூறுகின்றது. (இ-ள்) எவ்வகைப்பட்ட பெயர்முன்னும் வலலெழுத்து வருமிடத்து இடைநின்ற அக்குச்சாரியையின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்றாது; அக்குற்றுகரத்தாற் பற்றப்பட்ட வல்லெழுத் தாகிய மெய் தனக்கு மேல் நின்ற மெய்யோடும் சேரக்கெடும் என்றவாறு. (உ-ம்) குன்று + அக்கு + கூகை = குன்றக் கூகை. மன்று + அக்கு+ பெண்ணை = மன்றப் பெண்ணை என வரும். இங்ஙனம் அக்குச் சாரியையின் அகரமட்டும் நிற்கப், பின்னின்ற எல்லா வெழுத்துங் கெடுதலால் இதனை அகரச் சாரியையாகக் கொண்டார் நன்னூலார். அம்மி னிறுதி கசதக் காலைத் தன்மெய் திரிந்து ங, ஞ, ந வாகும். (தொல். 129) (இ-ள்) அம்மினிறுதியாகிய மகரவொற்று, க, ச, த என்பன வருமொழியாக வந்தவிடத்துத் தன் வடிவு திரிந்து ங, ஞ, ந க்களாகும் என்றவாறு. (உ-ம்) புளி + அம் + கோடு = புளியங்கோடு, செதிள், தோல் என வரும். தன்மெய் யென்றதனால் அம்மின் இறுதி மகரமே யன்றித் தம் நம் நும் உம் என்பவற்றின் இறுதி மகரமும் திரியும் எனக் கொண்டார் உரையாசிரியர். (உ-ம்) எல்லார்தங் கையும், எல்லாநங் கையும், எல்லீர் நுங்கையும், வானவரி வில்லுந் திங்களும் என வரும். மென்மையும் இடைமையும் வரூஉங் காலை இன்மை வேண்டு மென்மனார் புலவர். (தொல். 130) இஃது அம்மீறு இயல்புகணத்தின்முன் கெடுமென்கின்றது. (இ-ள்) மென் கணமும் இடைக்கணமும் வருமொழியாய் வருங்காலத்து அம்முச் சாரியையின் இறுதி மகரம் கெட்டு முடிதல் வேண்டுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. (உ-ம்) புளி + அம் + ஞெரி = புளியஞெரி எனவரும். இவ்வாறே நுனி, முரி, யாழ், வட்டு என்பவற்றையும் ஒட்டிக் காண்க. உரையிற் கோடலால் `புளியவிலை என உயிர்வரு வழி அம்சாரியையின் மகரம் கெடுதலும் கொள்க என்பர் உரையாசிரியர். இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் கின்னென் சாரியை யின்மை வேண்டும். (தொல். 131) (இ-ள்) இன்னென்று சொல்லவரும் வேற்றுமை யுருபிற்கு இன்னென்னும் சாரியை இன்றி முடிதல் வேண்டும் என்றவாறு. (உ-ம்) மலையின் இழிந்தான் எனவரும். பாம்பினிற் கடிது தேள் எனச் சிறுபான்மை இன்சாரியை கெடாது நிற்குமென்பர் உரையாசிரியர். பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப வேற்றுமை யுருபு நிலைபெறு வழியுந் தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச் சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்கா திடை நின்றியலுஞ் சாரியை யியற்கை உடைமையு மின்மையும் ஒடுவயி னொக்கும். (தொல். 132) இது சாரியைகட் கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்) பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும், பெயரும் வினையுமாய்ப் பிரிந்தும், பெயரும் பெயருமாய்க் கூடியும் இசைப்ப, வேற்றுமையுருபு தொகாது நிலைபெற்ற விடத்தினும், அவ்வேற்றுமை யுருபுகள் தோற்றுதல் வேண்டாது தொக்கவிடத் தும், தாந்தாம் பொருந்துதற் கேற்ப நடந்த வழக்கொடு பொருந்திச் சாரியைபெறும் புணர்மொழிகளைப் பிரித்துக் காணுமிடத்து, அவற்றின் பின்வந்து விளங்காது அவற்றிடையே நின்று நடக்கும் சாரியையின் இயல்பு. அச்சாரியைகள் உண்டாதலும் இல்லையாதலும் ஒடுவுருபினிடத்து ஒத்துவரும் என்றவாறு. சொற் சிதர் மருங்கின் வழி வந்து விளங்காது இடை நின்றியலுஞ் சாரியை இயற்கை என்றதனால், புணர்மொழியினிடையே சார்ந்து இயைந்து நிற்கு மியல்புடையது சாரியை யென அதன் பெயர்க் காரணமும் கூறினாராயிற்று, ஒட்டுதற் கொழுகிய வழக்காவது, நிலை மொழியையும் வருமொழியையும் தனித் தனியே இருவேறு மொழிகளாக நிறுத்திப் புணர்த்தற்குரிய சொல் நடை. இவ்வாறன்றி நிலாக்கதிர், நிலா முற்றம் என ஒருமொழிபோல் நடப்பன ஒட்டுதற் கொழுகிய வழக்காகா ஆதலின் சாரியை பெறாவாயின என்பர் உரையாசிரியர். பூவினொடு, பூ வொடு என ஓடுவுருபு சாரியை பெற்றும் பெறாதும் வந்தது. எல்லா நம்மையும் என்புழி உம் சாரியை ஈற்றினும் வருதலின் `இடை நின்றியலும் என்றது பெரும் பான்மைபற்றிக் கூறியதெனக் கொள்க. அத்தே வற்றே யாயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுதல் தெற்றென் றற்றே அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. (தொல். 133) இஃது அத்தும் வற்றும் வருமிடத்து நிலைமொழியினும் வருமொழி யினும் உளவாம் செய்கை கூறுகிறது. (இ-ள்) அத்தும் வற்றுமாகிய அவ்விருமொழிமேல் நின்ற ஒன்றுத் தன் வடிவு கெடுதல் தெளியப்பட்டது. அவ்விரு சாரியை முன்னும் வரும் வல்லெழுத்து மிக்கு முடியும் என்றவாறு. (உ-ம்) கலம் + அத்து + குறை = கலத்துக்குறை எனவும், அவ் + வற்று + கோடு = அவற்றுக்கோடு எனவும் வரும். புள்ளியீறல்வழி விகார வகையால் நின்றனவும் வற்றின்மிசை யொற்றென்று கெடுக்கப்படும். அவை + வற்று + கோடு = அவற்றுக்கோடு எனவரும். அத்துச் சாரியையும் வற்றுச் சாரியையும் பெற்று வரும் மகர வகர ஈறுகளுக்கு உயிரீறு போன்று ஈற்று வல்லெழுத்து மிகுதி இல்லாமையால், அச்சாரியைகளின் பின் வல்லெழுத்து விதிக்கப் பட்டது. வல்லெழுத்து மிகாது திரிந்து முடிவன ணகர னகர லகர ளகர ஈறுகளாம். அதவத்துக்கண், விளவத்துக்கண் என அத்தின் அகரங்கெடாது நிற்றல் `தெற்றென்றற்று என்றதனாற் கொள்ளப்படும். காரமுங் கரமுங் கானொடு சிவணி நேரத் தோன்று மெழுத்தின் சாரியை. (தொல். 134) இஃது எழுத்துச் சாரியைகளாமாறு கூறுகின்றது. (இ-ள்) காரம், கரம், கான் என்பன எல்லாவாசிரியரானும் உடன்படத்தோன்றும் எழுத்தின் சாரியைகளாம் என்றவாறு. நேரத்தோன்றும் என்றதனால் நேரத்தோன்றாதனவும் உள வென்பது பெற்றாம். அவை ஆனம், ஏனம், ஓனம் என இவை யென்பர் நச்சினார்க்கினியர். அவற்றுள், கரமுங் கானும் நெட்டெழுத் திலவே. (தொல். 135) இஃது அவற்றுட் சில சாரியை சில எழுத்தொடு வாரா வென விலக்குகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்டவற்றுள் கரமும் கானும் ஆகிய சாரியைகள் இரண்டும் நெட்டெழுத்திற்கு வாரா என்றவாறு. எனவே காரச் சாரியை நெட்டெழுத்திற்குண்டென்பதாம். (உ-ம்) ஆகாரம், ஈகாரம் எனவரும். வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. (தொல். 136) இஃது ஐயமகற்றுகின்றது. (இ-ள்) வரலாற்று முறைமையையுடைய மூன்று சாரியை களையும் குற்றெழுத்துடையவாம் என்றவாறு. (உ-ம்) அகாரம், அகரம், அஃகான் எனவரும். வரன்முறை என்றதனால் அஃகான் என ஆய்தம் மிக்கு முடிதலுங் கொள்க என்பர் உரையாசிரியர். ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும். (தொல். 137) இஃது `அவற்றுட் கரமுங் கானும் என்பதற்கு ஓர் புறனடை கூறுகிறது. (இ-ள்) நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஔகாரமும் முன் விலக்கப்பட்ட கான் சாரியையொடும் வரும் என்றவாறு. (உ-ம்) ஐகான் ஔகான் எனவரும். மேற்கூறிய நான்கு சூத்திரங்களாலும் எடுத்துரைக்கப் பட்ட எழுத்தின் சாரியைகளை, மெய்க ளகரமும் நெட்டுயிர் காரமும் ஐ ஔ, க்கானும் இருமைக் குறிலிவ் விரண்டொடு கரமுமாஞ் சாரியை பெறும்பிற. (நன். 126) என்ற ஒரு சூத்திரத்தால் தொகுத்துக் கூறினார் நன்னூலார். மெய்கள் அகரச்சாரியை பெறுமென்பது மெய்யினியக்கம் அகரமொடு சிவணும் என்ற சூத்திரப்பொருளைத் தழுவிய தாகும். உயிர்மெய் நெடில் சாரியைபெறாதென்பார் நெடி லெனப் பொதுப்படக்கூறாது நெட்டுயிர் காரச் சாரியை பெறுமென்றார். புள்ளி யீற்றின்முன் உயிர்தனித் தியலாது மெய்யொடுஞ் சிவணும் அவ்வியல் கெடுத்தே. (தொல். 138) இஃது உயிர்முதன் மொழி புள்ளியீற்றின் முன் வருங்காற் பிறப்பதோர் வருமொழிக் கருவி கூறுகின்றது. (இ-ள்) புள்ளியீற்றுச் சொல்முன் வரும் வருமொழி முதலில் நின்ற உயிர், தனித்து நடவாது; தான் தனித்து நின்ற அவ்வியல் பினைக் கெடுத்து நிலைமொழி யீற்றிலுள்ள அம்மெய்யோடு கூடும் என்றவாறு. (உ-ம்) பால் + அரிது = பாலரிது, பால் + ஆழி = பாலாழி எனவரும். ஒன்றின முடித்தலால் இயல்பல்லாத புள்ளிமுன் உயிர் வந்தாலும் இவ்விதிகொள்க என்பர் உரையாசிரியர். (உ-ம்) நா(ழி)ட் + உரி = நாடுரி எனவரும். இச்சூத்திரப் பொருளை, உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே. (நன். 204) என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். இவ்வியல் மூன்றாஞ் சூத்திரத்தால் குற்றியலுகர வீறும் புள்ளியீறுபோலும் என ஆசிரியர் மாட்டேற்றிக் கூறுதலின், குற்றியலுகரவீற்றின் முன்வரும் உயிர்க்கும் இவ்விதி பொருத்த முடையதாகும் என்பது அச்சூத்திரவுரையுள் விரிவாக விளக்கப் பட்டது. மெய்யுயிர் நீங்கிற் நன்னுரு வாகும். (தொல். 139) இது புணர்ச்சியிடத்து உயிர்மெய், உயிர் நீங்கியவழிப் படுவதோர் விதி கூறுகின்றது. புணர்ச்சியுள் உயிர் மெய் யெழுத்தை மெய்யும் உயிரும் என வேறுபிரித்துச் செய்கை செய்தல் இன்றியமை யாததாதலின் இவ்விதி ஈண்டுக் கூறப் பட்டது. (இ-ள்) மெய், தன்னோடு கூடிநின்ற உயிர் புணர்ச்சி யிடத்து நீங்கியவழித் தன் பழைய வடிவாகிய புள்ளியைப் பெறும் என்றவாறு. (உ-ம்) ஆலிலை - ஆல் + இலை, அதனை - அதன் + ஐ எனவரும். எல்லா மொழிக்கும் உயிர் வருவழியே உடம்படு மெய்யி னுருபுகொளல் வரையார். (தொல். 140) இஃது உயிரீறு உயிர் முதன்மொழியொடு புணரும் வழி நிகழ்வதோர் கருவி கூறுகின்றது. (இ-ள்) எவ்வகை மொழிக்கும் உயிர்முதல் மொழி வருமிடத்து உடம்படு மெய்யினது வடிவை இடையே கொள்ளு தலை விலக்கார் ஆசிரியர் (என்றவாறு.) உடம்படு மெய்யாவன யகரமும் வகரமுமென்பது உடம்படு மெய்யே யகார வகாரம், உயிர்முதன் மொழி வரூஉங் காலையான என வரும் பழைய சூத்திரத்தாற் புலனாம். இகரவீறும், ஈகாரவீறும், ஐகாரவீறும் யகர உடம்படு மெய் கொள்வன. அல்லன வெல்லாம் வகரமெய் கொள்வன என்பர் உரையாசிரியர். ஏகாரம் யகரமும் வகரமும் கொள்ளும் என்பர் நச்சினார்க்கினியர். இவ் விருவகைப் பொருளும் அடங்க. இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும் உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும். (நன். 162) எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். வரையார், என்றதனால் உடம்படுமெய்கோடல் ஒரு தலை அன்றென்பது கொள்ளப்படும். கிளி அரிது, மூங்கா இல்லை என உதாரணங் காட்டுவர் இளம்பூரணர். எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி இசையிற் றிரிதல் நிலைஇய பண்பே. (தொல். 141) இது எழுத்துக்கள் ஒன்று பலவாதல் கூறுகின்றது. (இ-ள்) எழுத்தால் ஒன்றுபோலத் தோன்றிச் சொல்லால் வேறுபட்டுப் பொருள் விளங்கி நிற்கும் புணர்மொழிகள் எடுத்தல், படுத்தல், நலிதல் என்கின்ற ஓசை வேற்றுமையாற் பிரிந்து புணர்ச்சி வேறுபடுதல் நிலைபெற்ற பண்பாம் என்றவாறு. (உ-ம்) செம்பொன்பதின்றொடி, செம்பருத்தி, நாகன் றேவன் போத்து, தாமரைக்கனியார், குன்றேறாமா என இவை இசை யிற்றிரிந்தன. இதனைச் சொல்லதிகாரத்தில் எழுத்தியல் திரியாப் பொருள்திரி புணர்மொழி இசைத் திரி பாற்றெளி வெய்து மென்ப. (நன். 139) என்ற பொதுவியற் சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயின் இன்ன வென்னு மெழுத்துக்கட னிலவே. (தொல். 142) இது மேலதற்கோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) பல பொருட்குப் பொதுவென்ற அப் புணர் மொழி கள் தாம், குறிப்பாலுணரும் பொருண்மையினையுடையன; புணர்ச்சியிடத்து இத்தன்மையவெனும் எழுத்து முறைமையை யுடையன அல்ல என்றவாறு. எனவே செம்பொன்பதின் றொடி என்ற தொடர், பொன்னாராய்ச்சி யுள்ளவழி செம்பொன் பதின்றொடி எனப்பிரிந்து நின்றும், செம்பாராய்ச்சி உள்வழி செம்பு + ஒன்பதின் றொடி எனப் பிரிந்து நின்றும் குறிப்பாற் பொருளு ணர்த்துமெனக் கூறப்பட்டது. இசையிற்றிரிதலென்பது ஒலி யெழுத்திற்கெனவும், எழுத்துக் கடனில வென்றது வரி வடிவிற்கெனவும் இளம்பூரணர் கூறுவர். 5. தொகை மரபு மேல் மூவகை மொழியும் நால்வகையாற் புணர்வுழி மூன்று திரியும் ஓர் இயல்பும் எய்தி, வேற்றுமை அல்வழியென இரு பகுதியவாகி, எழுத்தும் சாரியையும் மிக்குப் புணருமாறு இது வென்று உணர்த்தினார். அப்புணர்ச்சிக்கட்படும் இலக்கணங் களாய்த் தொன்றுதொட்டு வரும் இலக்கணமரபுகளை இவ்வியலின் கண் தொகுத்துணர்த்துதலின், இது தொகைமரபு என்னும் பெயர்த் தாயிற்று. உயிரீறும் புள்ளியீறும் மேலை அகத்தோத்தினுள் முடிக்கும் வழி ஈறுகள் தோறும் விரிந்து முடிவனவற்றை ஈண்டு ஒரோவோர் சூத்திரங்களால் தொகுத்து முடிபு கூறுவர் ஆசிரியர். கசதப முதலிய மொழிமேற் றோன்றும் மெல்லெழுத் தியற்கை சொல்லிய முறையான் ஙஞநம வென்னும் ஒற்றா கும்மே அன்ன மரபின் மொழிவயி னான. (தொல். 143) இஃது உயிர் மயங்கியலையும் புள்ளி மயங்கியலையும் நோக்கிய தோர் வருமொழிக்கருவி கூறுகின்றது. (இ-ள்) உயிரீற்றினும் புள்ளியீற்றினும் இருவழியும் கசதபக்களை முதலாகவுடைய மொழிகளின்மேல் தோன்றும் மெல்லெழுத்தினது இயல்பு கூறின், அம்மெல்லெழுத்து மேற்சொல்லு முறைமையான் கசதபக்களுக்கு முன் நிரனிறை வகையானே ஙஞநம என்னும் ஒற்றாகும்; அங்ஙனம் மெல்லெழுத்து மிகுதற் குரியனவாகிய மொழிகளிடத்து என்றவாறு. (உ-ம்) விள + கோடு = விளங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். பின்னர் உயிரீற்றினும் புள்ளியீற்றினும் வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிகும் என விதிக்கும் இடங்களில் எல்லாம் இவ் வல்லெழுத்து முன்னர் இம்மெல்லெழுத்து மிகும் என்னும் இயல்பு விளக்கப் பெறாமையின், கசதபமுன் முறையே அவற்றின் கிளை யொற்றாகிய ஙஞநம மிகும் என ஈண்டுக் கருவி செய்து கொண்டார். `தோன்றும் என்பதனால் இயல்பாய்த் தோன்றி நின்றனவும் இம்முறையே திரிந்து மெல்லெழுத்தாகும் என்பதாம். (உ-ம்) மரம் + குறிது = மரங்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். அன்ன மரபின் மொழியன்மையின் விளக்குறுமை என்புழி மெல்லெழுத்து மிகாதாயிற்றென்பர் இளம்பூரணர். ஞநம யவவெனு முதலாகு மொழியும் உயிர்முத லாகிய மொழியு முளப்பட அன்றி யனைத்தும் எல்லா வழியும் நின்ற சொன்முன் இயல்பா கும்மே. (தொல். 144) இஃது இருபத்து நான்கு ஈற்றின் முன்னும் வன்கண மொழிந்த கணங்கட்கு இருவழியும் வருமொழி முடிபு கூறுகின்றது. (இ-ள்) ஞநமயவ என்று சொல்லப்படும் எழுத்துக்கள் முதலாய் நிற்கும் சொற்களும் உயிரெழுத்து முதலாய் நிற்கும் சொற்களும் ஆக அவ்வனைத்தும், அல்வழியும் வேற்றுமையு மாகிய எல்லாவிடத்தும் இருபத்துநான்கு ஈற்றவாய் நின்ற பெயராகிய நிலைமொழி முன்னர்த் திரிபின்றி இயல்பு புணர்ச்சியாய் நிற்கும் என்பதாம். `எகர வொகரம் பெயர்க்கு ஈறாகா (272) என மேற் கூறுவாராதலின், உயிரீற்றின்கண் எகர ஓகரம் ஒழிந்தன கொள்க. இவ்வியல்பு வருமொழி நோக்கிக் கூறிய தென்று உணர்க. `எல்லாம் என்றதனால் ஒற்றிரட்டுதலும், உடம்படுமெய் கோடலும், உயிரேறி முடிதலும் என வரும் இக் கருவித்திரிபு திரிபெனப்படா வென்பர் இளம்பூரணர். எனவே இவை முற்கூறிய மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என்ற மூன்று திரிபினுள்ளும் அடங்கா என்பது அவர் கருத்தாதல் புலனாம். நன்னூலார், மெய்யீற்றின்முன் மெய்யூர்ந்தும் உயிரீற்றின்முன் உடம்படுமெய் பெற்றும் புணருமியல்பின தாய உயிர் முதன் மொழியைக் கூறாது, ஏனை மென்கணமும் இடைக்கணமும் எல்லாவற்றின் முன்னரும் இயல்பாய் வரும் என்பதனை, எண்மூ வெழுத்தீற் றெவ்வகை மொழிக்கும் முன்வரு ஞநமய வக்க ளியல்பும் குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி மிகலுமாம் ணளனல வழிநத் திரியும். (நன். 158) என்ற சூத்திரத்தின் முதல் இரண்டியாற் கூறினார். இதன்கண் குற்றெழுத்தின் பின்னர் வரும் யகரவொற்று, ஓரெழுத் தொரு மொழியான ஐகாரம், நொ, து என்பனவற்றின் முன்னர் வரும் ஞநமக்கள், பிற சொற்கள் முன் இயல்பாதலன்றி மிக்கு முடிதலும் ஆமென்பது கூறப்பட்டமை காண்க. மேற்கூறிய ணளனல என்பதன் முன் வரும் நகரமே யன்றித் தகரமும் திரியுமென்பது பின் (தொல். எழுத்து 149, 150) கூறப்படும். அவற்றுள் மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழி இறுதி யான. (தொல். 145) இது சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வருகின்றது. (இ-ள்) மேற்சொல்லப்பட்ட இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி யீற்றின்கண் மெல்லெழுத்து மிகாது இயல்பாதலே யன்றி, ஒருகால் இயல்பாயும், ஒருகால் மிகுந்தும் உறழ்ந்து முடியினும் நீக்கார் என்பதாம். உம்மை எதிர்மறை; உறழாமை வலியுடைத்து. (உ-ம்) கதிர் + ஞெரி = கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி, நுனி, முரி என வரும். வருமொழி முற்கூறியவதனால் பூஞெரி, பூஞ்ஞெரி, காய்ஞெரி, காய்ஞ்ஞெரி என ஓரெழுத்தொருமொழிகளுள்ளும் சில உறழ்ச்சி பெற்று முடியுமெனவும், `சொல்லிய என்றதனால் கைஞ்ஞெரித்தார், கைந்நீட்டினார் எனவும் மெய்ஞ்ஞானம் மெய்ம்மறந்தார் எனவும் அவ்விரு மொழிகளுள்ளுஞ் சில மிக்கு முடியுமெனவும் கூறுவர் உரையாசிரியர். இவ் வுரையினைத் தழுவியே நன்னூலாரும், குறில் வழி யத்தணி யைந்நொது முன் மெலி மிகலுமாம் (நன். சூத். 158) என விதி கூறினார். ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் வினையோ ரனைய என்மனார் புலவர். (தொல். 146) இது யகர ஞகர முதன்மொழி வந்தவிடத்து நிகழ்வதோர் கருவி கூறுகின்றது. (இ-ள்) ணகார னகாரமென்னும் புள்ளிகளின் முன்னர் யாவும் ஞாவும் வினைச்சொல்லின்கண் முதலாதற்கு ஒருதன்மைய வென்று கூறுவர் புலவர். (உ-ம்) மண் யாத்த, மண் ஞாத்த எனவும், பொன் யாத்த, பொன் ஞாத்த எனவும் யாநின்ற நிலைக்களத்து ஞா போலியாய் வரும். யாவை முற்கூறியவதனான் யா முதன்மொழிக்கண் ஞா வருமென்பர் இளம்பூரணர். இவ்வாறு ணகார னகார வீற்றுச் சொற்களின் முன்னர் வரும் வருமொழி வினைக்கு முன்னர் யா நின்ற நிலைக்களத்து ஞா நிற்பினும் ஒக்குமென ஆசிரியர் சூத்திரம் செய்தவாறு, நன்னூலார் சூத்திரம் செய்யா தொழிதல், இறந்தது விலக்கல் என்னும் உத்தி என்பர் சங்கர நமச்சிவாயர் (நன்னூல் 124-ம் சூத்திர உரை). மொழிமுத லாகும் எல்லா வெழுத்தும் வருவழி நின்ற ஆயிரு புள்ளியும் வேற்றுமை யல்வழித் திரிபிட னிலவே. (தொல். 147) இது ணகார னகார வீறுகள் அல்வழிக்கண் இயல்பாமாறு கூறுகின்றது. (இ-ள்) மொழிக்கு முதலாம் எனப்பட்ட இருபத்திரண் டெழுத்தும் வருமொழியாய் வருமிடத்து நிலைமொழியீற்றில் நின்ற ணகாரமும் னகாரமும் வேற்றுமை யல்லாத அல்வழிக்கண் திரியும் இயல்பில வென்பதாம். மண், பொன் என நிறுத்தி, கடிது, சிறிது, தீது, பெரிது என வன்கணத்தோடும் பிறகணங்களோடும் ஒட்டி இவ்வாறே இயல்பாதல் காண்க. `நின்ற சொல்முன் இயல்பாகும்மே (144) என்பது வருமொழி பற்றித் திரியாமை கூறியது. இது நிலைமொழி பற்றிய விதியாகும். வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி மேற்கூறியற்கை ஆவயி னான. (தொல். 148) (இ-ள்) அல்வழிக்கண் திரியாது நின்ற அவ்விரண் டொற்றும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் வல்லெழுத்தல்லாத விடத்து மேற்கூறிய இயல்பு முடிபைப் பெறும் என்பதாம். எனவே இவ்விரண்டும் வேற்றுமைக்கண் வல்லெழுத்து வருவழித் திரியுமென்பதாம். திரிபு பின்னர் (302, 332ம் சூத்திரங்களில்) கூறப்படும். (உ-ம்) மண், பொன் என நின்று, ஞாற்சி, நீட்சி என வன்கணம் ஒழிந்த எல்லாவற்றோடும் இயல்பாயின. இவ்விரு சூத்திர விதியையும் அறிந்த நன்னூலார், ணன வல்லினம் வரட் டறவும் பிறவரின் இயல்புமாகும் வேற்றுமைக்கு, அல்வழிக்கு அனைத்து மெய் வரினும் இயல்பா கும்மே. (நன். 209) என ஒரு சூத்திரமாக்கிக் கூறினார். 149. லன வென வருஉம் புள்ளிமுன்னர்த் தந வென வரிற் றன வாகும்மே. (தொல். 149) இது புள்ளி மயங்கியலை நோக்கியதோர் கருவி கூறுகின்றது. (இ-ள்) லகார னகாரம் என்று சொல்ல வருகின்ற புள்ளி களின் முன்னர்த் தகார நகாரமாகிய மொழி முதலாகெழுத்துக்கள் வரின், அத் தகர நகரங்கள் நிரனிறையானே றகர னகரங்களாய்த் திரியு மென்பதாம். (உ-ம்) கல் + தீது = கஃறீது ; கல் + நன்று = கன்னன்று; பொன் + தீது = பொன்றீது ; பொன் + நன்று = பொன்னன்று எனவரும். ணளவென் புள்ளிமுன் டணவெனத்தோன்றும். (தொல். 150) இதுவுமது. (இ-ள்) ணகார ளகாரங்களின் முன்னர் வரும் அத் தகார நகாரங்கள் நிரனிறையானே டகார ணகாரங்களாய்த் திரியும் என்பதாம். மண் + தீது = மண்டீது; மண் + நன்று = மண்ணன்று; முள் + தீது = முஃடீது; முள் + நன்று = முண்ணன்று எனவரும். இவ் வருமொழித் தகர நகரத் திரிபினை, னலமுன் றனவும் ணளமுன் டணவும் ஆகுந் தநக்கள் ஆயுங் காலே. (நன். 234) என்பதனால் குறிப்பிட்டார் நன்னூலார். இவற்றின் நிலைமொழித் திரிபினைத் தத்தம் ஈற்றுட் கூறுவர் தொல்காப்பியனார். உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவியும் இயல்பா குநவும் உறழாகுநவுமென் றாயீ ரியல வல்லெழுத்து வரினே. (தொல். 150) இது முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்) உயிரீறாய் வந்த முன்னிலை வினைச்சொற்களும் புள்ளியீறாய் வந்த முன்னிலை வினைச் சொற்களும் வல்லெழுத்து முதலாகிய மொழிவரின் இயல்பாய் முடிவனவும் உறழ்ந்து முடிவனவும் என அவ்விரண்டியல் பினை உடைய என்றவாறு. (உ-ம்) எறி கொற்றா, கொணா கொற்றா, உண் கொற்றா, தின் கொற்றா, சாத்தா, தேவா, பூதா இவை இயல்பு. நட கொற்றா, நடக்கொற்றா, ஈர் கொற்றா, ஈர்க்கொற்றா, சாத்தா, தேவா, பூதா, இவை உறழ்ச்சி. `ஈறு என்றமையின் வினைச் சொல்லே கொள்க என்பர் நச்சினார்க்கினியர். நட, வா, உண், தின் என உயிரீறும் புள்ளியீறுமாய் நின்று முன்னின்றானைத் தொழிற்படுத்துவனவும், உண்டி, உண்டனை, உண்டாய் என இ, ஐ, ஆய் என்னும் மூன்றீற்றவாய் நின்று முன்னின்றானது தொழில் உணர்த்துவனவும் என முன்னிலை வினைச்சொற்கள் இருவகைய. அவ்விரண்டினையும் இச் சூத்திரத்து முன்னிலைக் கிளவியென ஆசிரியர் ஒன்றாக அடக்கினார். இச்சூத்திர விதியினை நன்னூலார், ஆவியரழ இறுதி முன்னிலை வினை ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே. (நன். 161) என்ற சூத்திரத்துட் கூறிப்போந்தார். இதன்கண், முன்னின்றானது தொழில் உணர்த்துவதாய்த் தன்மைவினை படர்க்கைவினைகட்கு இனமாய முன்னிலை வினையை `முன்னிலை எனவும், முன்னின் றானைத் தொழிற் படுத்துவதாய் முன்னிலை யொன்றற்கே யுரிய வினையை `ஏவல் எனவும் பவணந்தியார் விதந்து கூறினமை நோக்கத்தக்கது. ஔவென வரூஉம் உயிரிறு சொல்லும் ஞநமவ வென்னும் புள்ளி யிறுதியும் குற்றிய லுகரத் திறுதியு முளப்பட முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. (தொல். 152) இஃது எய்தியது விலக்குகின்றது. (இ-ள்) ஔ வென வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ஞநமவ என்று சொல்லப்படும் புள்ளிகளை இறுதியாகவுடைய சொல் லும், குற்றியலுகரத்தை யிறுதியிலே உடைய சொல்லுமாகிய இவை, முன்னிலை மொழிக்குப் பொருந்தக் கூறிய இயல்பும் உறழ்ச்சியு மாகிய முடிபிற்கு முற்றத்தோன்றா என்பதாம். `முற்ற என்றதனால், ஈண்டு விலக்கப்பட்டவற்றுள் குற்றியலு கரவீறு ஒழித்து ஒழிந்தனவெல்லாம் நிலை மொழி உகரம் பெற்று வருமொழி வல்லெழுத்து உறழ்ந்து முடிதலும், குற்றியலுகரவீறு வருமொழி வல்லெழுத்துமிக்கு முடிதலும் கொள்க என்பர் இளம்பூரணர். கௌ + கொற்றா = கௌவு கொற்றா, கௌவுக்கொற்றா எனவும், உரிஞ் + கொற்றா = உரிஞுகொற்றா உரிஞுக்கொற்றா எனவும், கூட்டு + கொற்றா = கூட்டுகொற்றா, கூட்டுக்கொற்றா எனவரும். உயிரீ றாகிய உயர்திணைப் பெயரும் புள்ளி யிறுதி உயர்திணைப் பெயரும் எல்லா வழியும் இயல்பென மொழிப. (தொல். 153) இஃது உயர்திணைப் பெயர் நான்கு கணத்துக் கண்ணும் இரு வழியும் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்) உயிரீறாய் வந்த உயர்திணைப் பெயரும் புள்ளி யிறுதியை உடைய உயர்திணைப் பெயரும் நான்கு கணத்திலும் அல்வழியும் வேற்றுமையுமாகிய எல்லா விடத்தும் இயல்பாம் என்று சொல்லுவார் என்றவாறு. நம்பி எனவும் அவன் எனவும் நிறுத்தி, அல்வழிக் கண் குறியன், சிறியன், தீயன், பெரியன், ஞான்றான், நீண்டான், மாண்டான், யாவன், வலியன், அடைந்தான், எனவும், வேற்றுமைக் கண் கை, செவி, தலை, புறம், ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, அழகு எனவும் ஒட்டுக. ஒருவேன் என நிறுத்தி, குறியேன் தீயேன் என இவ்வாறே ஒட்டித் தன்மைப் பெயர்க் கண்ணும் இயல்பாமாறு கொள்க. இவற்றுள் வன்கண மொழிந்தவற்றை `ஞநமயவ (144) என்பதனால் முடிப்பாருமுளர். உயர்திணைப் பெயரையும் விரவுப் பெயரையும் எடுத்தோதியே முடித்தல் ஆசிரியர் வழக்கமாதலின், இச்சூத்திரத்தில் அடக்குதலே பொருத்த முடையதாம். உயிரீறு புள்ளியிறுதி என்றதனால், பல சான்றார், கபிலபரணர், இறைவநெடுவேட்டுவர், மருத்துவ மாணிக்கர் என ஈறுகெட்டு முடிவனவும்; கோலிகக்கருவி, வண்ணாரப்பாடி, ஆசீவகப் பள்ளி என ஈறுகெட்டு வல்லெழுத்து மிகுவனவும்; குமரகோட்டம், குமரக்கோட்டம், பிரம கோட்டம், பிரமக் கோட்டம் என ஈறுகெட்டு வல்லெழுத்து உறழ்ந்து முடிவனவு மாய் இயல்பின்றி முடிவன எல்லாம் கொள்வர் உரையாசிரியர். அவற்றுள் இகர வீற்றுப் பெயர் திரிபிடனுடைத்தே. (தொல். 154) இஃது உயர்திணைப் பெயருள் சிலவற்றிற்கு எய்தாது எய்துவித்தது. (இ-ள்) முற்கூறிய உயர்திணைப் பெயர்களுள் இகர வீற்றுப் பெயர் இருவழியுந் திரிந்து முடியும் இடனுடைத்து என்றவாறு. உரையிற் கோடலால் இதனை மிக்க திரிபாகக் கொண் டனர் இளம்பூரணர். இவ்வீற்று உயர்திணைப் பெயர்கள் எட்டிப்பூ. காவிதிப்பூ, நம்பிப்பேறு என வேற்றுமையினும், நம்பிக் கொல்லன், நம்பிச் சான்றான், நம்பிப் பிள்ளை என அல்வழியினும் மிக்கன. எட்டி, காவிதி என்பன தேய வழக்காகிய சிறப்புப்பெயர்கள் என்பர் நச்சினார்க்கினியர். அஃறிணை விரவுப் பெயர் இயல்புமா ருளவே. (தொல். 155) இது விரவுப் பொருள் இயல்பாய் முடிவனவும் உளவென்கின்றது. (இ-ள்) உயர்திணைப் பெயரோடு அஃறிணை விரவிய விரவுப் பெயர் இயல்பாய் முடிவனவும் உள என்பதாம். உம்மையான் இயல்பின்றி முடிவனவும் உள என்றவாறு. இம்மூன்று சூத்திர விதியினையும் நன்னூலார். பொதுப் பெயர் உயர்திணைப் பெயர்க ளீற்றுமெய் வலிவரின் இயல்பாம், ஆவி யரமுன் வன்மை மிகா, சில விகாரமாம் உயர்திணை. (நன். 159) என ஒரு சூத்திரத்தாற் கூறினார். இதன்கண் சில விகாரமாம் உயர்திணை என்றது, சூத்திரம் 154 இல் கூறிய இகர வீற்றுத் திரிபையும், 153ல் உயிரீறு புள்ளியீறு என்றதனால் உயர்திணைப் பெயருள் இயல்பன்றி முடிவனவெல்லாம் கொள்க என உரையாசிரியர் காட்டிய விகாரங்களையும் நோக்கியதாகும். 156. புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையால் தம்மினாகிய தொழிற் சொல் முன்வரின் மெய்ம்மை யாகலும் உறழத் தோன்றலும் அம்முறை யிரண்டும் உரியவை உளவே வேற்றுமை மருங்கிற் போற்றல் வேண்டும். (தொல். 156) இது மேல் உயிரீற்றிற்கும் புள்ளியீற்றிற்கும் வேற்றுமைக் கட் கூறும் முடிபு பெறாது நிற்கும் மூன்றாம் வேற்றுமைத் திரிபு கூறுகின்றது. (இ-ள்) புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச்சொல்லும், வல்லெழுத்தினது மிகுதிமேற்சொல்லும் முறைமையான் மூன்றாம் வேற்றுமைக்குரிய வினைமுதற் பொருளான் உளவாகிய வினைச் சொற்கள் தம் முன்னர்வரின் இயல்பாகலும் உறழத் தோன்றுதலு மாகிய அம்முறை யினையுடைய இரு செய்கையும் பெறுதற் குரியனவும் உள. அவற்றை மேலே வேற்றுமைப் பொருட் புணர்ச்சி சொல்லுமிடத்துப் போற்றியறிதல் வேண்டும் என்றவாறு. (உ-ம்) நாய் கோட்பட்டான், புலி கோட்பட்டான், சாரப் பட்டான், தீண்டப்பட்டான், இவை இயல்பு. சூர்கோட் பட்டான், சூர்க்கோட்பட்டான், வளிகோட்பட்டான், வளிக் கோட்பட்டான் இவை உறழ்ச்சி. இவற்றுள் தம்மினாகிய தொழிற் சொல் பட்டான் என்பது. கோள் என்பது முதலாக இடைப் பிற வருவன தம் தொழிலாகும். `புள்ளியிறுதி உயிரீறு என்றதனால் பேஎய் கோட் பட்டான், பேஎய்க்கோட்பட்டான் என்னும் எகரப்பேறும் `உரியவையுள என்றதனால் பாம்புகோட்பட்டான், பாப்புக் கோட்ப்பட்டான் என்னும் உறழ்ச்சியுள் நிலைமொழி யொற்றுத் திரியாமையும் திரிதலும் கொள்க. இம் மூன்றாம் வேற்றுமைத் திரிபினை, நன்னூலார். புள்ளியு முயிரு மாயிறு சொல்முன் தம்மினாகிய தொழின் மொழி வரினே வல்லினம் விகற்பமும் இயல்பு மாகும். (நன். 256) என்பதனாற் கூறினார். இதன்கண் வரும் உம்மையான் சுறாப் பாயப் பட்டான், அராத் தீண்டப்பட்டான் என வேற்றுமைப் பொதுவிதியான் மிக்கு முடிவனவே பெரும்பாலன வெண்பர் சங்கர நமச்சிவாயர். மெல்லெழுத்து மிகுவழி வலிப்பொடு தோன்றலும் வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடு தோன்றலும் இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும் உயிர்மிக வருவழி உயிர்கெட வருதலும் சாரியை உள்வழிச் சாரியை கெடுதலும் சாரியை உள்வழித் தன்னுருபு நிலையலும் சாரியை இயற்கை உறழத் தோன்றலும் உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் அஃறிணை விரவுப் பெயர்க்கு அவ்வியல் நிலையலும் மெய்பிறி தாகிடத்து இயற்கை யாதலும் அன்ன பிறவுந் தன்னியல் மருங்கின மெய்பெறக் கிளந்து பொருள்வரைந் திசைக்கும் ஐகார வேற்றுமைத் திரிபென மொழிப. (தொல். 157) இஃது இரண்டாம் வேற்றுமைத் திரிபு கூறுகின்றது. (இ-ள்) மெல்லெழுத்து மிகுமிடத்து வல்லெழுத்தும், வல்லெழுத்து மிகுமிடத்து மெல்லெழுத்தும் தோன்றுதலும், இயல்பாய் வருமிடத்து மிகுந்து தோன்றுதலும், உயிர் மிக்கு வரவேண்டிய இடத்துக் கெட்டு வருதலும், சாரியைப் பேறு உள்ளவிடத்துத் தன்னுருபு நிற்றலும், சாரியையின் இயல்பு மிக்குந் திரிந்தும் உறழ்ச்சியாகத் தோன்றுதலும், இயல்பாக வரும் உயர் திணைப் பெயரிடத்து உருபு தொகாது நிற்றலும், உயர்திணை யோடு விரவிய அஃறிணை விரவுப் பெயர்க்கு அத்தன்மையே உருபு தொகாதே நிற்றலும், மெய் பிறிதாதலாகிய திரிபின்கண் திரியாது இயற்கையாய் வருதலும், அவைபோல்வன பிறவும், தன்னையே நோக்கித் திரிபு நடக்குமிடத்துப் பொருள் பெற எடுத்தோதப்பட்டு ஏனை வேற்றுமைப் பொருட் புணர்ச்சியது பொதுமுடிவினைத் தான் நீக்கி வேறு முடிபிற்றாய் நின்று ஒலிக்கும் இரண்டாம் வேற்றுமையது வேறுபட்ட புணர்ச்சி என்று கூறுவர் ஆசிரியர். (உ-ம்) விளக்குறைத்தான் என்பது, மெல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்து மிக்கது; மரங் குறைத்தான் என்பது, வல்லெழுத்து மிகுவழி மெல்லெழுத்து மிக்கது; தாய்க்கொலை என்பது, இயல்பாய் வருமிடத்து மிக்கது; பலாக் குறைத்தான் என உயிர் மிக வருமிடத்து உயிர் கெட்டது; வண்டு கொணர்ந்தான் என்பது, சாரியை யுள்வழிச் சாரியை கெட்டது; வண்டினைக் கொணர்ந்தான் என்பது சாரியை யுள்வழித் தன் உருபு நிலையிற்று; புளி குறைத்தான், புளிக்குறைத்தான், ஆல் குறைத்தான், ஆற்குறைத்தான் என இவை, சாரியை இயற்கை உறழத் தோன்றின; நம்பியைக் கொணர்ந்தான் என்பது, உயர்திணை மருங்கின் உருபுதொகாது விரிந்துவந்தது; கொற்றனைக் கொணர்ந்தான் என்பது, அஃறிணை விரவுப் பெயர்க்கண் அவ்வாறு உருபு விரிந்து வந்தது; மண் கொணர்ந்தான் என்பது மெய் பிறிதாகிடத்து ணகரம் டகர மாய்த் திரியாது இயல்பாய் வந்தது. அன்னபிறவும் என்றதனால் கழிகுறைத்தான், பனை பிளந்தான் என இயல்பாதல் கொள்க. மெய்பெற என்றதனால், மை கொணர்ந்தான் - மைக்கொணர்ந்தான்; வில்கோள் - விற்கோள் என உறழ்ந்து முடிவனவும் கொள்க எனவும், இவ்வாறு வேறுபட முடிவது பெரும்பான்மையும் இரண்டாவது வினையொடு முடியும் வழிப்போலும் எனவும், தன்னின முடித்தல் என்பதனால் வரைபாய் வருடை, புலம்புக்கனனே என ஏழாம் வேற்றுமை வினையொடு முடியும் வழித்திரியும் கொள்க எனவும் கூறுவர் இளம்பூரணர். இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும் உயர்திணை யிடத்து விரிந்தும் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்து நின்றும் அன்ன பிறவு மாகும் ஐ உருபே. (நன். 255) என்பதனால் இத்திரிபினைக் கூறினார் நன்னூலார். வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும் ஈற்றுப் பெயர்க் கிளவி மூவகை நிலைய அவைதாம் இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் உறழா குநவும் என்மனார் புலவர். (தொல். 158) இஃது இகர ஐகார வீற்றுப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்) வேற்றுமை யல்லாதவிடத்து இ ஐ என்னும் இறுதியை யுடைய பெயர்ச் சொற்கள் மூவகையாகிய முடிபு நிலையை யுடைய; அம்முடிபுகள்தாம் இயல்பாய் முடிவனவும் வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் என இவையென்று கூறுவர் புலவர். (உ-ம்) பருத்தி, குறிது, சிறிது, தீது, பெரிது இவை இயல்பு. மாசித் திங்கள், சித்திரைத் திங்கள் அலிக்கொற்றன், புலைக் கொற்றன் இவை மிகுதி. கிளி குறிது, கிளிக் குறிது, தினை குறிது, தினைக் குறிது இவை உறழ்ச்சி. இயல்பு எழுவாய்த் தொடர் உம்மைத் தொகைகளிலும், மிகுதி பண்புத்தொகை உவமைத் தொகைகளிலும், உறழ்ச்சி சில பெயர் முன் எழுவாய்த் தொடரிலும் கொள்ளப்படும். இகர ஐகார வீற்று அவ்வழிக்கண் உண்டாம். இம் மூவகை முடிபுகளையும். அவ்வழி இஐம் முன்ன ராயின் இயல்பும் மிகலும் விகற்பமும் மாகும். (நன். 176) என்பதனாற் கூறினார் நன்னூலார். சுட்டு முதலாகிய இகர இறுதியும் எகரமுதல் வினாவின் இகர இறுதியும் சுட்டுச்சினை நீடிய ஐயென் இறுதியும் யாவென் வினாவின் ஐயென் இறுதியும் வல்லெழுத்து மிகுநவும் உறழாகுநவும் சொல்லிய மருங்கின் உளவென மொழிப. (தொல். 159) இஃது ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தி நின்ற ஐகார ஈற்று இடைச்சொன் முடிபு கூறுகின்றது. (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய இகர வீற்று இடைச்சொல்லும், எகரமாகிய மொழிமுதல் வினாவினை யுடைய இகர வீற்றிடைச் சொல்லும், சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட ஐகார வீற்று இடைச்சொல்லும், யாவென்னும் வினா வினை முதற்கண் உடைய ஐகார வீற்றிடைச் சொல்லும் வல்லெழுத்து மிக்கு முடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் மேற்சொல்லப்பட்ட இடத்தின் கண்ணே உளவென்று கூறுவர் ஆசிரியர். (உ-ம்) அதோளிக் கொண்டான், இதோளிக் கொண்டான், ஆண்டைக் கொண்டான், யாண்டைக் கொண்டான் இவை மிக்கன. அவ்வழி கொண்டான் அவ்வழிக்கொண்டான், எவ்வழி கொண்டான், எவ்வழிக் கொண்டான், யாங்கவை கொண்டான், யாங்கவைக் கொண்டான் இவை உறழ்ந்தன. சொல்லிய மருங்கு என்றதனால், பண்டைச் சான்றோர், ஒரு திங்களைக் குழவி எனப் பிற ஐகார வீறு மிக்கு முடிதல் கொள்வர் இளம்பூரணர். நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் குறியதன் முன்னர்த் தன்னுரு பிரட்டலும் அறியத் தோன்றிய நெறியிய லென்ப. (தொல். 160) இது, புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறுகின்றது. (இ-ள்) நெட்டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு கெடுதலும், குற்றெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன் வடிவு இரட்டித்தலும் அறியும்படி வந்த முறைமையியல் என்பர் ஆசிரியர். ஈண்டு `குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்தியல (தொல் - எழுத்து 50) என்றபடி குறில் இரண்டு முதலாகத் தொடர்ந்ததனையும் நெடியதென்று குறிப்பிட்டார் ஆசிரியர். இங்ஙனம் நெடியதன் முன்னர் ஒற்றுக்கெடுவன ணகாரமும், னகாரமும், மகாரமும், லகாரமும், ளகாரமும் என ஐவகையாம் என்பர் நச்சினார்க்கினியர். (உ-ம்)கோண் + நிமிர்ந்தது = கோணிமிர்ந்தது; தான் + நல்லன் = தானல்லன்; தாம் + நல்லர் = தாநல்லர்; வேல் + நன்று = வேனன்று; தோள் + நன்று = தோணன்று எனவும், கோல் +தீது = கோறீது; வேல் + தீது = வேறீது எனவும், நகரமும் தகரமும் வருமொழியாய் வருமிடத்து நெடியதன் முன்னர் ஒற்றுக் கெட்டன. மண் + அகல் = மண்ணகல்; பொன் + அகல் - பொன்னகல் எனக் குறியதன்முன்னர் ஒற்றுத் தன்னுருபு இரட்டின. அடுத்த சூத்திரத்து (161) ஆறனுருபு முற்கூறியவதனான் ஒற்றிரட்டுதல் உயிர் முதன்மொழிக் கண்ணதென்பர் உரையா சிரியர். இக்கருத்தே பற்றி நன்னூலாரும், குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. (நன். 210) எனவும், குறில்செறியாலள அல்வழி வந்த தகரந் திரிந்தபிற் கேடும் ஈரிடத்தும் வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்புந் திரிபும் ஆவன வுளபிற. (நன். 229) எனவும் வரும் இரண்டு சூத்திரங்களான் விளங்க உரைத்தார். ஆறன் உருபினும் நான்கன் உருபினுங் கூறிய குற்றொற் றிரட்ட வில்லை ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும் நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான (தொல். 161) இஃது உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக் கருவி கூறுகின்றது. (இ-ள்) நெடிதாகிய முதலெழுத்துக் குறுகிமுடியும் அறுவகைப் பட்ட மொழிகளின் முன்னர் வந்த ஆறாம் வேற்றுமை யுருபினும் நான்காம் வேற்றுமை உருபினும் முன் நிலைமொழிக்கண் இரட்டி வருமென்ற குற்றெழுத்து இரட்டுதலில்லை; நிலைமொழி யீற்றுக்கண் நின்ற ஒற்றுக்கள் அகரம் பெற்று நிற்கும் என்பதாம். அறுவகைப்பட்ட மொழிகளாவன தாம், நாம், யாம், தான், யான், நீ என்பன. இவை குவ்வும் அதுவும் ஆகிய உருபேற்குங்கால் முறையே தம், நம், எம், தன், என், நின் என நெடுமுதல் குறுகி அகரம் பெற்று நிற்பன. (உ-ம்) தமது, நமது, எமது, தனது, எனது, நினது, தமக்கு, நமக்கு, எமக்கு, தனக்கு, எனக்கு, நினக்கு, என வரும். `குவ்வின் அவ்வரும் நான்காறு இரட்டல (247) என்பது நன்னூல். நும்மெ னிறுதியும் அந்நிலை திரியாது. (தொல். 162) இதுவும் அது. (இ-ள்) நெடுமுதல் குறுகாத இயற்கைப் பெயராகிய நும்மென்னும் மகரவீறும் முற்கூறிய குற்றொற்றிரட்டாமையும் ஈறாகு புள்ளி அகரமொடு நிலையலும் ஆகிய இயல்பினைப் பெறும் என்றவாறு. (உ-ம்) நுமது, நுமக்கு எனவரும். உகரமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமும் உயிரும் வருவழி இயற்கை. (தொல். 163) இது, புள்ளி மயங்கியலை நோக்கியதோர் நிலை மொழிச் செய்கை கூறுகின்றது. (இ-ள்) உகரப் பேற்றொடு புணரும் புள்ளியீறுகள், யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பெறாது இயல்பாய் முடியுமென்பதாம். அவ்வீறுகளாவன பின் புள்ளி மயங்கியலுள் உகரம் பெறுமென்று விதிக்கும் பல ஈறுகளுமாம். (உ-ம்) உரிஞ், யானா, அனந்தா, பொருந் யானா, அனந்தா எனவும் வரும். உயிரும் புள்ளியு மிறுதி யாகி அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் தத்தங் கிளவி தம்மகப் பட்ட முத்தை வரூஉங் காலந் தோன்றின் ஒத்த வென்ப ஏயென் சாரியை. (தொல். 164) இஃது அளவு, நிறை, எண்ணுப் பெயர்கள் தம்முள் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்) உயிரும் புள்ளியுந் தமக்கு ஈறாய் அளவையும் நிறையையும் எண்ணையும் கருதி வருவன வுளவென்று கூறப்பட்ட எல்லாச் சொற்களும், தத்தமக்கு இனமாகிய சொற்களாய்த் தம்மிற் குறைந்த அளவுணர்த்துஞ் சொற்கள் தம்முன்னே வருங்காலந் தோன்றில், ஏயென் சாரியை பெற்று முடிதலைப் பொருந்து மென்பர் ஆசிரியர். முந்தை முத்தையெனத் திரிந்து நின்றது. (உ-ம்) நாழியே யாழாக்கு, கலனே பதக்கு இவை அளவுப் பெயர். தொடியே கஃசு, கொள்ளே யையவி இவை நிறைப் பெயர். ஒன்றே கால், காலே காணி இவை எண்ணுப் பெயர். `ஒத்த வென்ப ஏயென் சாரியை என்றதன்றி ஏயென் சாரியை பெற்றே வரும் எனக் கூறாமையின் குறுணி நானாழி எனச் சாரியை பெறாது வருதலுங் கொள்க. அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் புரைவ தன்றாற் சாரியை இயற்கை. (தொல். 165) இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்) அளவு, நிறை, எண் என்னும் மூவகைச் சொன் முன்னர் வரும் அரை யென்று சொல்லவரும் பொருட் கூற்றை யுணர நின்ற சொல்லிற்கு ஏயென் சாரியை பொருந்துவ தன்று. (உ-ம்) உழக்கரை, தொடியரை, ஒன்றரை எனச் சாரியை பெறாது வந்தமை காண்க. குறையென் கிளவி முன்வரு காலை நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை. (தொல். 166) இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) குறையென்னுஞ் சொல், அளவு முதலியவற்றின் முன்வருங்காலத்து, மேல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்குச் சொல்லும் இயல்பு நிறையத் தோன்றும். வேற்றுமை யியற்கை யெனவே இவை வேற்றுமை யன்றென்பது நன்கு புலனாம். (உ-ம்)உரிக்குறை, கலக்குறை, தொடிக்குறை, கொட்குறை, காணிக் குறை, காற் குறை என வரும். `முன் என்றதனால் கலப்பயறு எனப் பொருட் பெயரோடு புணரும் வழியும் வேற்றுமை முடிபெய்துமென்றும், நிறைய என்றதனால் கூறு என்ற சொல் வருமொழியாய் வருவழியும் நாழிக் கூறு என வேற்றுமை முடி பெய்துமென்றும் கொள்வர் இளம்பூரணர். குற்றிய லுகரக் கின்னே சாரியை. (தொல். 167) இது குற்றுகரவீற்று அளவுப் பெயர், நிறைப்பெயர், எண்ணுப் பெயர்கட்கு வேற்றுமை முடிபு விலக்கி இன் சாரியை வகுக்கின்றது. (இ-ள்) குற்றியலுகர வீற்று அளவுப்பெயர் முதலியவற்றிற்கு வருஞ் சாரியை இன்சாரியையேயாம் என்றவாறு. (உ-ம்) உழக்கின் குறை, கழஞ்சின் குறை, ஒன்றின் குறை, என வரும். அத்திடை வரூஉம் கலமென் னளவே. (தொல். 168) இதுவுமது. (இ-ள்) கலம் என்னும் அளவுப் பெயர் குறையொடு புணருமிடத்து இடையில் அத்துச் சாரியை வரப்பெறும் என்றவாறு. (உ-ம்) கலம் + அத்து + குறை = கலத்துக்குறை என வரும். பனையென் அளவுங் காவென் நிறையும் நினையுங் காலை இன்னொடு சிவணும். (தொல். 169) இதுவுமது. (இ-ள்) பனையென்னும் அளவுப் பெயரும் காவென்னும் நிறைப் பெயரும் குறையென்பதனொடு புணருமிடத்து ஆராயுங் காலத்து இன்சாரியையோடு பொருந்தும். (உ-ம்) பனையின் குறை, காவின் குறை என வரும். `நினையுங்காலை என்றதனால் பனைக்குறை, காக்குறை என இன்சாரியை பெறாது வல்லெழுத்து மிகுதலுங் கொள்க என்பர் உரையாசிரியர். அளவிற்கு நிறையிற்கு மொழி முதலாகி உளவெனப் பட்ட ஒன்பதிற் றெழுத்தே அவைதாம் கசதப என்றா நமவ என்றா அகர உகரமோ டவையென மொழிப. (தொல். 170) இது முற்கூறிய மூன்றனுள் அளவுப் பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் முதலாமெழுத்து இனைத் தென்கிறது. (இ-ள்) அளவுப் பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் மொழி முதலாக உளவென்று கூறப்பட்டன ஒன்பது எழுத்தாம்; அவைதாம் க ச த ப க்களும் நமவ க்களும் அகரமும் உகரமுமாகிய அவை என்று கூறுவர். (உ-ம்) கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல் உழக்கு எனவும், கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை எனவும் அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்தன. நிறைக்கு உகரமுதற் பெயர் காணப்படவில்லை. உளவெனப்பட்ட வென்றதனானே உளவெனப்படா, தனவும் உளவென்று கூறி, அவை இம்மி, ஓரடை, ஓராடை, இடா என வரையறை கூறாதனவுங்கொள்க என்பர் உரையாசிரியர். ஈறியன் மருங்கின் இவையிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே. (தொல். 171) இஃது இவ்வோத்தின் புறனடை. (இ-ள்) உயிரும் புள்ளியும் இறுதியாய சொற்கள் வருமொழியோடு கூடி நடக்குமிடத்து இம்மொழிகளின் முடிபு இவையெனக்கூறி முடிக்கப்பட்ட சொற்களினது விதியினால், முடியாது நின்ற பலவகை முடிபுகளெல்லாம் உண்மையைத் தலைப்பட்ட வழக்கோடு கூடிப் புணரும் மொழிகளின் நிலைமைக் கண் பொருந்தினவையுரியவாம் என்றவாறு. நில் கொற்றா, நிற் கொற்றா என்பதன்கண் நிலைமொழி திரிந்த உறழ்ச்சியும், துக் கொற்றா, துஞ்ஞெள்ளா என்னும் மிகுதியும், மண்ணு கொற்றா மண்ணுக் கொற்றா, மன்னு கொற்றா, மன்னுக் கொற்றா உள்ளு கொற்றா, உள்ளுக் கொற்றா, கொல்லு கொற்றா, கொல்லுக் கொற்றா எனவரும் புள்ளி யிறுதி முன்னிலைக் கிளவி உகரம் பெற்று வல்லெழுத்தோடு உறழ்தலும், பதக்கு நானாழி என அளவுப் பெயர் அக்குச் சாரியைபெறுதலும், வாட்டானை தோற்றண்டை என்பனவற்றின் நெடியதன் முன்னர் ஒற்று, தகரம் வரு வழிக்கெடாது இயல்பாதலும், சீரகம் அரை யென்பது புணருமிடத்துச் சீரகம் என்பதன்கண் மகரவொற்றும் ககர வொற்றின்மேல் நின்ற அகரஉயிரும் கெட்டுச் சீரகரை எனத்திரிதலும், ஒருமா + அரை இவ்விரண்டும் புணருங்கால் வருமொழி அகரங்கெட்டு ஒருமாரையென முடிதலும், கலம் + அரை என இருசொல்லும் புணருமிடத்துக் கலரை எனத்திரிந்து முடிதலும், நாகம் + அணை எனும் இருசொல்லும் புணரு மிடத்து நாகம் என்பதன் ஈற்று மகரமும் அகரமும் கெட்டு நாகணையென முடிதலும் பிறவும் இப்புறனடையால் அமை வனவாம். பலரறி சொன்முன் யாவர் என்னும் பெயரிடை வகரங் கெடுதலும் ஏனை ஒன்றறி சொன்முன் யாதென் வினாவிடை ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும் மருவின் பாத்தியிற் றிரியுமன் பயின்றே. (தொல். 172) இது மரூஉ முடிபு கூறுகின்றது. (இ-ள்) பலரை அறியும் சொல் முன்னர் வருகின்ற யாவர் என்னும் பெயரிடத்துள்ள வகர உயிர்மெய் கெடுதலும், ஏனை ஒன்றனையறியுஞ் சொன் முன்னர் வரும் யாது என்னும் வினா மொழியிடை வகரவுயிர்மெய் வருதலும் ஆகிய இரண்டும் மரூஉக்களது முடிபினிடத்துப் பயின்று வழங்கும் என்றவாறு. (உ-ம்) அவர் யார் எனவும், அது யாவது எனவும் வரும். `ஒன்றியவகரம் என்றதனால் இவ்வகரம் உயிர்மெய் என்பது இனிது புலனாம். பயின்று என்றதனால் இச் சொற்கள் யாரவர். யாவதது என வருமொழி நிலைமொழியாகிய ஈரிடத்தும் இம்மரூஉ முடிபினைப் பெறுமெனக் கொள்க. 6. உருபியல் வேற்றுமை உருபுகளோடு புணரும் இயல்பு உணர்த்தின மையின் இஃது உருபியல் என்னும் பெயர்த்தாயிற்று. பெயரும் அதனோடு புணரும் வேற்றுமை யுருபும் ஆகிய அவ்விரண் டிற்கும் இடையே வருஞ் சாரியைகள் இவை என்பதும், வேற்றுமை உருபினை ஏற்குங்கால் பெயர்கள் பெறும் இயல்பும் திரிபுமாவன இவை என்பதும் இவ்வியலில் வகுத்து விளக்கப் பெற்றுள்ளன. அ ஆ உ ஊ ஏ ஔ என்னும் அப்பால் ஆறன் நிலைமொழி முன்னர் வேற்றுமை யுருபிற்கு இன்னே சாரியை. (தொல். 173) இஃது அகர ஆகார ஊகார ஏகார ஔகார வீறுகள் உருபினோடு புணருமாறு கூறுகின்றது. (இ-ள்) அ, ஆ, உ, ஊ, ஏ, ஔ என்ற அப்பகுதிப்பட்ட ஆறெழுத்தினையும் ஈறாகவுடைய நிலைமொழிகளின் முன்னர் வருகின்ற வேற்றுமையுருபிற்கு இடையே வரும் சாரியை இன் சாரியையே என்றவாறு. (உ-ம்) விளவினை, பலாவினை, கடுவினை, தழூஉவினை, சேவினை, வௌவினை எனவரும். இவ்வாறே ஏனை யுருபு களையும் ஒட்டுக. பல்லவை நுதலிய அகர விறுபெயர் வற்றொடு சிவணல் எச்ச மின்றே. (தொல். 174) இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. (இ-ள்) பன்மைப் பொருளைக் கருதின பெயர்களின் இறுதி அகரம் வற்றுச் சாரியையோடு பொருந்துதலை ஒழிதல் இல்லை என்றவாறு. (உ-ம்) பலவற்றை, சிலவற்றை, உள்ளவற்றை, இல்லவற்றை எனவரும். `எச்சமின்று என்றதனால் ஈண்டும் உருபு இன்சாரியை பெற்றே முடியுமென்றும், இன்னும் இதனானே மேல் இன்பெற்றன மகத்தை, நிலாத்தை யெனப் பிற சாரியையும் பெறுமென்றும் கொள்வர் இளம்பூரணர். பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாமுருபு சிலவற்றோடு என வற்றுப்பெற்றே முடியுமென்பர் நச்சினார்க்கினியர். யாவென் வினாவும் ஆயியல் திரியாது. (தொல். 175) இதுவுமது. (இ-ள்) யாவென்று சொல்லப்படும் ஆகாரவீற்று வினாப் பெயரும் உருபொடு புணருங்கால் முற்கூறிய முறையில் திரியாது வற்றுச் சாரியை பெறும் என்றவாறு. (உ-ம்) யாவற்றை, யாவற்றொடு எனவரும். சுட்டு முதலுகரம் அன்னோடு சிவணி ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே. (தொல். 176) இதுவுமது. (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாக உடைய உகர வீற்றுச் சொல் அன்சாரியையோடு பொருந்தித் தான் பொருந்திய மெய்யை நிறுத்தி உகரம் கெடும் என்றவாறு. (உ-ம்) அதனை, இதனை, உதனை எனவரும். சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி வற்றொடு சிவணி நிற்றலும் உரித்தே. (தொல். 177) இஃது ஐகார வீற்றுள் சிலவற்றுக்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார வீற்றுச் சொல்வற்றுச் சாரியையொடு பொருந்தி நிற்றலு முரித்து என்றவாறு. (உ-ம்) அவையற்றை, இவையற்றை, உவையற்றை என வரும். இங்ஙனம் ஐகாரம் நிற்க வற்று வந்துழி வற்றின் வகாரம் கெட்டு முடிதல் `வஃகான் மெய்கெட (122) என்பதனால் கூறப்பட்டது. `நிற்றலும் உரித்தே என்ற உம்மையால், ஐகாரம் நில்லாது கெடுதலும் உரித்தென்பது பெறப்படும். ஐகாரம் கெட்டவழி நின்ற வகரத்தினை வற்றின்மிசை யொற்றென்று கெடுத்து, அவற்றை இவற்றை உவற்றை என முடிப்பர் உரையாசிரியர். இங்ஙனம் ஐகாரமும் மெய்யும் கெட்ட சுட்டுப் பெயர்களை `ஐயும் மெய்யும் கெட்ட விறுதி (எழுத்து 183) என்பர் ஆசிரியர். நிற்றலுமுரித்தே என்னும் உம்மையான் வற்றொடு சிலவுரு பின்கண் இன்சாரியை பெற்று நிற்றலு முரித்தெனக் கொண்டு, அவையற்றிற்கு அவையற்றின்கண் என நான்காவதும், ஏழாவதும் இன் பெற்று வந்தன வென்றும், வற்றும் இன்னும் உடன்பெறுதலாகிய இவ்விதி ஒன்றென முடித்தலால் பலவற்றிற்கு, பலவற்றின் கண் எனப் பல்லவை நுதலிய அகர வீற்றிற்கும் பொருந்துமென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். அவ்விதிப்படி வற்றுச் சாரியையின் முதலெழுத்து ஆகிய வகரமெய் கெட்ட நிலையில் அற்று என நிற்றல் பற்றி அதனை அற்றுச் சாரியையெனக் கொண்டார் நன்னூலார். (சூத்திரம் 244) யாவென் வினாவின் ஐயென் இறுதியும் ஆயியல் திரியாது என்மனார் புலவர் ஆவயின் வகரம் ஐயொடுங் கெடுமே. (தொல். 178) இதுவுமது. (இ-ள்) யாவென்னும் வினாவினையுடைய ஐகார வீற்றுச் சொல்லும் முற்கூறிய சுட்டு முதல் ஐகாரம் போல வற்றுப் பெறும் அவ்வியல்பில் திரியாதென்று கூறுவர், அவ்வீற்றிடத்து வகரம் ஐகாரத்தோடு கூடக் கெடும் என்றவாறு. (உ-ம்) யாவற்றை, யாவற்றொடு என வரும். வகரம் வற்றின் மிசை யொற்றென்று கெடுவதனை ஈண்டுக் கேடு ஓதியவதனால் கரியவை, செய்யவை, நெடியவை, குறியவை எனப் பண்புகொள் பெயராய் வரும் ஐகார வீற்றின் வகரம் ஐயொடுங் கெட்டு வற்றுச் சாரியை பெறுதல் தழுவப்பட்டது என்பர் உரையாசிரியர். (உ-ம்) கரியவற்றை, செய்யவற்றை, நெடியவற்றை, குறியவற்றை எனவரும். நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயின் னகரம் ஒற்றாகும்மே. (தொல். 179) இஃது ஈகார வீற்றுள் ஒருமொழிக்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) நீயென்னும் ஒருபெயர் தன்மேல் நெடியதாகிய ஈகாரங் குறுகி இகரமாம், அவ்விடத்து னகரம் ஒற்றாய் வந்து நிற்கும். நீ யென்பதே பெயர்; நின் என்பது அதன் திரிபென்பார், `நீயென ஒரு பெயர் என்றார். நீ என்பதன்கண் நகர மெய் முதலாயினும் அம்மெய்யின்மேல் ஈகாரம் ஏறி உயிர் மெய்யென ஓரெழுத்தாய் நின்று ஒற்றுமை கருதி நகரத்தின்மேல் நின்ற ஈகாரத்தை `நெடுமுதல் என்றார். பெயரொடு வேற்றுமையுருபு புணருங்கால் இடையே சாரியை பெற்று வருதலைக் கூறியவரும் ஆசிரியர், இச்சூத்திரத்தில் னகரம் பெறுதலாகிய எழுத்துப் பேற்றினைக் கூறியது, மூன்றாம் உருபின்கண் சாரியை பெற்றே வந்த அதிகாரத்தை மாற்றுதற் பொருட் டென்பர் உரையாசிரியர். (உ-ம்) நின்னை, நின்னொடு, நினக்கு என வரும். இத்திரிபினை, தான் தாம் நாம் முதல் குறுகும், யான் யாம் நீ, நீர், என், எம், நின், நும் ஆம் பிற, குவ்வின் அவ்வரும், நான்காறு இரட்டல். (நன். 247) என்ற சூத்திரத்து நெடுமுதல் குறுகும் மொழிகளோடு சேர்த்துக் கூறினார் நன்னூலார். ஓகார விறுதிக் கொன்னே சாரியை (தொல். 180) இஃது ஓகார வீறு இன்னவாறு முடியுமென்கின்றது. (இ-ள்) ஓகார வீற்றிற்கு இடைவருஞ்சாரியை ஒன்சாரியை யாகும். (உ-ம்) கோஒனை, கோஒனொடு என வரும். `ஒன்றாக வந்தகோவினை அடர்க்க வந்த எனவும் கோவினை, கோவினொடு, ஓவினை, ஓவினொடு, சோவினை சோவினொடு, எனவும் சிறுபான்மை ஓகார விறுதி இன்சாரி யையும் பெறுமென்பர் நச்சினார்க்கினியர். ஓ - மதகுநீர் தாங்கும் பலகை. சோ - மதில். அ ஆ வென்னும் மரப்பெயர்க் கிளவிக் கத்தொடுஞ் சிவணும் ஏழன் உருபே. (தொல். 181) இஃது அகர ஆகார வீற்றிற்கு எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) அ ஆ என்று சொல்லப்படும் ஈற்றினையுடைய மரத்தை உணர நின்ற பெயரோடு புணருங்கால் ஏழாமுருபு முன் கூறிய இன்சாரியையோ டன்றி அத்துச் சாரியையோடும் பொருந்தும் என்றவாறு. (உ-ம்) விளவத்துக்கண், பலாவத்துக்கண் என வரும். `வல்லெழுத்து முதலிய (எழுத்து 144) என்பதனால் கண்ணுருபின் முன்னர் வல்லெழுத்து மிக்கது. `தெற்றென்றற்றே (எழுத்து 133) என்ற மிகையால் அத்தின் அகரம் அகரமுனை (125) கெடாதாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். ஞநவென் புள்ளிக் கின்னே சாரியை. (தொல். 182) இது புள்ளியீறு சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) ஞநவென்று சொல்லப்படுகின்ற புள்ளியீறு கட்கு வருஞ் சாரியை இன் சாரியை என்றவாறு. (உ-ம்) உரிஞினை, உரிஞினொடு, பொருநினை, பொருநினொடு எனவரும். சுட்டுமுதல் வகரம் ஐயு மெய்யுங் கெட்ட விறுதி யியற்றிரி பின்றே. (தொல். 183) இது வகரவீறு நான்கனுள் சுட்டு முதல் வகரவீற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய அவ், இவ், உவ் என்னும் வகரவீற்றுச் சொல், ஐகாரமும் அதனால் பற்றப்பட்ட மெய்யும் கெட்டு வற்றுப் பெற்று முடிந்த சுட்டு முதல் ஐகார வீற்றினைப் போன்று வற்றுப் பெற்று முடியும் என்றவாறு. (உ-ம்) அவற்றை, இவற்றை, உவற்றை எனவரும். வவ்விறு சுட்டிற் கற்றுறல் வழியே. (நன். 250) என்பது நன்னூல். ஏனை வகரம் இன்னொடு சிவணும். (தொல். 184) இது தெவ் என்பதன் முடிபு கூறுகின்றது. (இ-ள்) வகரவீற்றுச் சொற்கள் நான்கனுள் சொல்லாது ஒழிந்த தெவ் என்னும் வகர வீறு இன் சாரியை பெற்று முடியும் என்றவாறு. (உ-ம்) தெவ்வினை, தெவ்வினொடு எனவரும். தெவ் என்பது உரிச்சொல் என்றும், உரிச்சொல் லாயினும் ஈண்டுப் படுத்தலோசையாற் பெயராகவைத்து உருபொடுபுணர விதி கூறப்பட்டதென்றும் விளக்கங் கூறுவர் உரையாசிரியர். மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை. (தொல். 185) இது மகரவீறு புணருமாறு கூறுகின்றது. (இ-ள்) மகரமாகிய புள்ளியீற்றுச் சொல் முன்னர் வருஞ்சாரியை அத்துச் சாரியை என்றவாறு. (உ-ம்) மரத்தை, மரத்தொடு, நுகத்தை, நுகத்தொடு எனவரும். அத்தே வற்றே (எழுத்து 133) என்பதனால் ஈற்று மகரமும், அத்தின் அகரம் அகரமுனையில்லை (எழுத்து 125) என்பதனால் சாரியையின் அகரமும் கெட்டுப் புணர்ந்தன. இன்னிடை வரூஉ மொழியுமா ருளவே. (தொல். 186) இஃது அவ்வீற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) மகரவீற்றுச் சொற்களுள் அத்துச் சாரியை யேயன்றி இன்சாரியை இடையே வந்து முடியுஞ் சொற்களும் உள என்றவாறு. (உ-ம்) உருமினை, உருமினொடு, திருமினை, திருமினொடு எனவரும். மார் - அசை. நும்மென் இறுதி இயற்கை யாகும். (தொல். 187) இது மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. (இ-ள்) நும்மென்னும் மகரவீறு மேற்கூறிய அத்தும் இன்னும் பெறாது இயல்பாக முடியும். (உ-ம்) நும்மை, நும்மொடு, நுமக்கு, நும்மின், நுமது, நுங்கண் என வரும். நும் என்பது இயற்கையாகிய மகரவீற்றுச் சொல் லென்பதும், (எழுத்து. 325) அஃது அல்வழியில் நீயிர் எனத்திரியும் என்பது (எழுத்து 326) ஆசிரியர் கருத்தாகலின், `நும்மென்னிறுதி என இதனை இயல்பீறாக வைத்து ஓதினார். தாம்நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதியும் அதனோ ரன்ன ஆ எ ஆகும் யாமென் இறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் ஏனை யிரண்டும் நெடுமுதல் குறுகும். (தொல். 188) இது மகர ஈற்றுள் முற்கூறிய முடிபு ஒவ்வாதன வற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) தாம், நாம் என்னும் மகரவீறும், யாம் என்னும் மகரவீறும் நும்மென்னும் மகரவீறு போல அத்தும் இன்னும் பெறாது முடிதலையுடைய யாமென்னும் மகரவீற்றுச் சொல்லில் ஆகாரம் எகரமாம். அவ்விடத்து யகரமாகிய மெய் கெடுதல் வேண்டும். தாம் நாம் என்னும் இரண்டும் நெடுமுதல் குறுகித் தம் நம் என நிற்கும் என்றவாறு. (உ-ம்) தம்மை, நம்மை, எம்மை எனவரும். எல்லாம் என்னும் இறுதி முன்னர் வற்றென் சாரியை முற்றத் தோன்றும் உம்மை நிலையும் இறுதி யான. (தொல். 189) இது மகரவீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. (இ-ள்) எல்லாம் என்னும் மகரவீற்றுச் சொல் முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றென்சாரியை வந்து முடியும்; ஆண்டு உம்மென்னும் சாரியை இறுதிக் கண் நிலைபெறும் என்றவாறு. எல்லாம் என்னும் மகரவீற்றுச் சொல் முன்னர் அத்தும் இன்னும் அன்றி வற்றென்சாரியை வந்து முடியும்; ஆண்டு உம்மென்னும் சாரியை இறுதிக் கண் நிலைபெறும் என்றவாறு. எல்லாம் என்பதன் மகரம் வற்றின் மிசை ஒற்றென்று கெடுக்கப்படும். (உ-ம்) எல்லாவற்றையும், எல்லாவற்றினும், எல்லா வற்றுக் கண்ணும் எனவரும். `முற்ற என்றதனால் எல்லாவற்றொடும் என மூன்றாம் உருபின்கண்ணும், எல்லாவற்றுக்கும் என நான்காம் உருபின் கண்ணும், எல்லாவற்றதும் என ஆறாம் உருபின் கண்ணும் முற்றுகரத்தின் முன் வரும் உம் என்பதன் உகரக்கேடு கொள்ளப் படும் என்பர் உரையாசிரியர். உயர்திணை யாயின் நம்மிடை வருமே. (தொல். 190) இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) எல்லாம் என நின்ற மகரவீற்று விரவுப் பெயர் உயர்திணைக்கண் வருமாயின் நம்மென்னும் சாரியை இடை வந்து புணரும் என்றவாறு. (உ-ம்) எல்லா நம்மையும், எல்லா நம்மொடும் எனவரும். இங்ஙனம் கூறவே, எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணையாய் நின்று உருபொடு புணருமிடத்து முற் கூறியபடி இடையே வற்றுச்சாரியைபெறும் என்றாராயிற்று. எல்லாம் என்னும் விரவுப்பெயர் அஃறிணைக் கண் வருமாயின் இடையே வற்றுச் சாரியையும் உயர் திணைக்கண் வருமாயின் இடையே நம்முச்சாரியையும் பெற்று அவ்வீரிடத்தும் இறுதியில் உம்முச்சாரியை பெறும் என்பதாம். நம்முச் சாரியை பெறுமிடத்து எல்லாம் என்னும் சொல்லின் ஈற்று மகரம், மேற் சூத்திரத்துச் சொல்லிய வற்றின் மிசை யொற்றென்று கெடுத்த அதிகாரத்தாற் கெடுக்கப்படு மென்பர் நச்சினார்க்கினியர். எல்லாம் என்பது இழிதிணையாயின் அற்றொ டுருபின் மேலும் முறுமே அன்றேல் நம்மிடை யடைந்தற் றாகும். (நன். 245) என்ற சூத்திரத்தால் இப்பொருளை நன்னூலார் மேற் கொண்டு கூறியுள்ளார். ஆசிரியர் வற்றுச்சாரியையெனக் கூறிய தனை நன்னூலார் அதன் வகரமெய் சிலவிடத்துக் கெட்டுவருதல் கொண்டு அற்றுச்சாரியை யாகத்திரித்துக் கூறினமை காண்க. எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் எல்லீரு மென்னும் முன்னிலை யிறுதியும் ஒற்றும் உகரமும் கெடுமென மொழிப நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி உம்மை நிலையும் இறுதி யான தம்மிடை வரூஉம் படர்க்கை மேன நும்மிடை வரூஉம் முன்னிலை மொழிக்கே. (தொல். 191) இது மகரவீற்று உயர்திணைப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) எல்லாரும் என்னும் மகரவீற்று உயர்திணைப் படர்க்கைப் பெயரும், எல்லீரும் என்னும் மகரவீற்று உயர்திணை முன்னிலைப் பெயரும் மகரவொற்றும் அதன் முன்னின்ற உகரமுங்கெட்டு முடியுமென்று சொல்லுவர் புலவர். அவ்வுகரங் கெடுவழி அதனால் ஊரப்பட்ட ரகர வொற்றுக் கெடாது முடிதல் வேண்டும். அவ்விரு மொழிக்கும் இறுதிக்கண் உம்முச் சாரியை நிலைபெறும். படர்க்கையிடத்துத் தம்முச் சாரியை நிலைபெறும். படர்க்கையிடத்துத் தம்முச் சாரியை இடைவரும். முன்னிலை மொழிக்கு நும்முச்சாரியை இடைவரும் என்றவாறு. (உ-ம்) எல்லார் தம்மையும், எல்லார் தம்மொடும், எல்லீர் நும்மையும், எல்லீர் நும்மொடும் எனவரும். `படர்க்கை `முன்னிலை என்ற மிகுதியால் கரியே நம்மையும், கரியே நம்மொடும் என மகரவீற்றுத் தன்மைப் பெயர் இடைக்கண் நம்முச் சாரியையும் இறுதியில் உம்முச் சாரியையும் பெறும் என்பர் உரையாசிரியர். இம் மகரவீற்று உயர்திணை முடிவினை, எல்லாரு மெல்லீரு மென்பவற் றும்மை தள்ளி நிரலே தம்நும் சாரப் புல்லு முருபின் பின்ன ரும்மே. (நன். 249) என்ற சூத்திரத்தாற் கூறினர் நன்னூலார். தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும் மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. (தொல். 192) இது னகரவீற்றுட் சிலவற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) தான் யான் என்று சொல்லப்பட்ட அவ்விரண்டு னகரவீறும் மேல் மகரவீற்றுட் கூறிய தாம் நாம் யாம் என்னும் மூன்று பெயரொடும் வேறுபாடின்றித் தான் என்பது `தன் எனக் குறுகியும், யான் என்பதன் கண் ஆகாரம் எகரமாகிய யகரவொற்றுக் கெட்டு `என் எனத் திரிந்தும் முடியும் என்றவாறு. (உ-ம்) தன்னை, என்னை எனவரும். இங்ஙனம் தாம், தான் நாம் முதல் குறுகுதலையும், யாம், யான் என்பதில் யகர மெய் கெட்டு ஆகாரம் எகரமாய்த் திரிதலையும், நீ நெடுமுதல் குறுகி னகர வொற்றுப் பெற்று நின் என வருதலையும், தான் தாம் நாம் முதல் குறுகும் யான் யாம் நீ நீர் என் எம் நின் நுமாம் பிற குவ்வின் அவ்வரும் நான்காறு இரட்டல். (நன். 247) என்ற சூத்திரத்தால் பவணந்தி முனிவர் தொகுத்துக் கூறினமை முன்னரும் விளக்கப்பட்டது. அழனே புழனே ஆயிரு மொழிக்கும் அத்தும் இன்னும் உறழத் தோன்றல் ஒத்த தென்ப உணரு மோரே. (தொல். 193) இதுவுமது. (இ-ள்) அழன், புழன் ஆகிய அவ்விரு மொழிக்கும் அத்துச் சாரியையும் இன் சாரியையும் மாறிவரத்தோன்றுதலைப் பொருந்திற்றென்பர் அறிவோர் என்றவாறு. அழன்+அத்து+ஐ = அழத்தை; புழன்+அத்து+ஐ = புழத்தை இன்+ஐ=அழனினை; இன்+ஐ=புழனினை எனவரும். அழன் - பிணம். புழன் என்பதன் பொருள் நன்கு விளங்க வில்லை. அத்துச் சாரியையொடு புணருமிடத்து நிலைமொழி யீற்று னகரம் `அத்தேவற்றே (எழுத்து 133) என்ற விதிப்படி அத்தின்மிசை யொற்றென்று கெட்டுமுடிந்தது. இச்சூத்திரத்துத் `தோன்றல் என்றதனால் எவன் எனவரும் னகரவீற்று வினாச்சொல்லை எவன் என்றும் என் என்றும் நிறுத்தி வற்றுக் கொடுத்து வேண்டுஞ் செய்கைசெய்து எவற்றை, எவற்றொடு எனவும், எற்றை, எற்றொடு எனவும் முடித்தல் பொருந்தும் என்றும், `ஒத்தது என்றதனால் எகின் என வரும் னகரவீற்றுச் சொல் உருபொடு புணருங்கால் அத்தும் இன்னும் பெற்று எகினத்தை, எகினினை எனவும், எகினத்தொடு எகினி னொடு எனவும் முடியுமென்றும் கொள்வர் உரையாசிரியர். அன்னென் சாரியை யேழன் இறுதி முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப. (தொல். 194) இது ழகாரவீற்று எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) அன் என்னும் சாரியை ஏழென்னும் எண்ணுப் பெயரின் முன்னே தோன்றுமியல்பினை யுடைத்தென்பர் ஆசிரியர். (உ-ம்) ஏழனை, ஏழனின், ஏழற்கு என வரும். இச்சூத்திரத்தும் `ஏழன் இறுதி என அன் சாரியை பெற்றமை காண்க. குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றத் தோன்றும் இன்னென் சாரியை. (தொல். 195) இது குற்றுகரத்திற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னர் இன் னென்னுஞ் சாரியை முடியத் தோன்றும் என்றவாறு. (உ-ம்) நாகினை, நாகினொடு, வரகினை, வரகினொடு என வரும். ஏனையவற்றொடும் இவ்வாறே இயைத்துரைக்க. `முற்ற என்றதனால் `வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான் கரியதனை என முறையே அத்தும் அன்னுமாகிய பிறசாரியை பெறுவனவுங் கொள்க என்பர் இளம்பூரணர். நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும் அப்பால் மொழிக ளல்வழி யான. (தொல். 196) இது மேற் கூறியவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்குகின்றது. (இ-ள்) நெட்டெழுத்தின் பின்னர் வருகின்ற குற்றுகரங் கட்கு இனவொற்று மிகத்தோன்றும்; அங்ஙனம் ஒற்றுமிகத் தோன்றாத கசதப்பக்கள் ஈறாகிய மொழிகள் அல்லாதவிடத்து என்றவாறு. எனவே டகார றகாரங்களை யூர்ந்த குற்றுகர மொழிகளே ஒற்று இரட்டிப்பன எனக் கொள்க. இவ்வாசிரியர் ஒத்த வொற்றை இனவொற்றென்றும் ஒத்த வொற்று இரட்டுதலை இனவொற்று மிகுதலென்றும் கூறினமை காண்க. (உ-ம்) யாட்டை, யாட்டொடு, யாற்றை, யாற்றொடு எனவரும். நாகு, காசு, போது, காபு என்றாற்போல்வன அப்பால் மொழிகள் எனவும், அவை இனவொற்று மிகாவாயின எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். அவைதாம் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப (தொல். 197) இஃது எய்தியது விலக்கியது. (இ-ள்) அங்ஙனம் இன வொற்று மிகுவனதாம் இன் சாரியை பெறாது இயல்பாக முடியுஞ் செயற்கையையுடைய வென்று கூறுவர் புலவர் என்றவாறு. முன் சூத்திரத்திற் காட்டியன சாரியை பெறாமை காண்க. `செயற்கைய என்றதனால் இனவொற்று மிக்கன யாட்டினை, யாட்டினொடு, எனச் சிறுபான்மை இன் பெறுதலும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். `செயற்கைய என்ற மிகையானே நெடிற் றொடர்க் குற்றியலுகரத்திற்கே யன்றி உயிர்த் தொடர்க் குற்றிய லுகரத் திற்கும் முயிற்றே, முயிற்றோடு என இவ்விதி கொள்ளப்படும் என்பர் நச்சினார்க்கினியர். எண்ணின் இறுதி அன்னொடு சிவணும். (தொல். 198) இது குற்றுகர வீற்று எண்ணுப் பெயர் முடிபு கூறுகின்றது. (இ-ள்) எண்ணுப் பெயர்களினது குற்றுகர வீறு அன் சாரியையொடு பொருந்தும். (உ-ம்) ஒன்றனை, ஒன்றனொடு, இரண்டனை, இரண்ட னொடு, என அவ்வீற்று எல்லா எண்ணும் எல்லா உருபொடும் கூடும். ஒன்று முதலாகப் பத்தூர்ந்து வரூஉம் எல்லா வெண்ணுஞ் சொல்லுங் காலை ஆனிடை வரினும் மான மில்லை அஃதென் கிளவி யாவயிற் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே. (தொல். 199) இதுவுமது. (இ-ள்) ஒன்று முதலாக எட்டீறாக நின்ற எண்களின் மேலே பத்தென்னும் எண்ணுப்பெயர் ஏறி வருகின்ற ஒருபது முதலான எல்லா எண்களையும் முடிபு சொல்லுங் காலத்து முற்கூறிய அன்சாரியை யன்றி ஆன் சாரியை இடையே வரினும் குற்றமில்லை. ஆன் பெற்றுழிப் பஃது என்னும் எண்ணிடத்து அஃது என்னும் சொல் கெட்டுப்போம். அவ் அகரத்தின் ஊரப் பட்ட மெய் கெடாது நிற்றல் வேண்டும் என்றவாறு. (உ-ம்) ஒரு பஃது இருபஃது முதலாகக் குற்றியலுகரப் புணரியலுள் விதித்தவாறே நின்று அஃதென்பது கெட்டுப் பகர வொற்றுக் கெடாது நின்று ஆன்சாரியை பெற்று ஒரு பஃது + ஐ = ஒருபானை. இரு பஃது + ஐ = இருபானை என எல்லாவுருபொடும் கூடி நின்றவாறு காண்க. ஆசிரியர் `ஒன்பான் முதனிலை (463) `ஒன்பாற் கொற்றிடை மிகுமே (475) என ஒன்பஃது என்பதன் கண் பகரத்துள் அகரம் பிரித்து அஃதென்பது கெடுத்து ஆன்சாரியை கொடுத்து ஒன்பது என்பதற்கும் இவ்விதி உண்டென்பதனை உடம்பொடு புணர்த்துக் கூறியுள்ளார். எனவே ஒன்பஃது என்னும் எண்ணுப் பெயர் உருபோடு புணருமிடத்தும் ஒன்பானை ஒன்பானொடு என ஆன் சாரியை பெறுமென்றாராயிற்று. இங்ஙனம் இவ்வெண்ணுப் பெயர்கள் ஆன் சாரியை பெற்று முடிதலை, ஒன்று முதல் எட்டீறாம் எண்ணூர் பத்தின் முன் ஆன்வரிற் பவ்வொற் றொழியமேல் எல்லா மோடும் ஒன்பது மிற்றே. (நன். 249) என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார் நன்னூலார். `ஆனிடை வரினும் என்ற எதிர்மறை உம்மையால், ஆன் சாரியை பெறாது ஒருபஃதனை, இருபஃதனை என இவ்வாறு வருதலுங் கொள்ளப்படும் என்பது நச்சினார்க்கினியர் கருத் தாகும். யாதென் இறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் அன்னொடு சிவணும் ஆய்தங் கெடுதல் ஆவயி னான. (தொல். 200) இஃது எண்ணுப் பெயரல்லாத குற்றுகர ஈற்றுட் சில வற்றிற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) யாது என வரும் குற்றுகர வீறும் சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர வீறும் அன்சாரியையொடு பொருந்தும்; அவ்விடத்து ஆய்தங் கெடும் என்றவாறு. சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகரம் ஆய்தங் கெட்டு அன்சாரியை பெறும் என்பதனை, சுட்டின்முன் ஆய்தம் அன்வரிற் கெடுமே. (நன். 251) என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி இயற்கையு மாகும் ஆவயின் இறுதி மெய்யொடுங் கெடுமே. (தொல். 201) இதுவும் குற்றுகர வீற்றுட் சிலவற்றிற்கு ஏழாம் உருபொடு முடிபு கூறுகின்றது. (இ-ள்) திசைப் பெயர்களின் முன்னர் வந்த கண் ணென்னுரு பிற்கு முடிபு கூறுங்கால் முற்கூறிய இன் சாரியை யாகிய சொல் நின்று முடிதலேயன்றி இயல்பாயும் முடியும். அங்ஙனம் இயல் பாயவழித் திசைப்பெயர் இறுதிக் குற்றுகரம் தன்னாலூரப்பட்ட மெய்யொடும் கெடும் என்றவாறு. (உ-ம்) வடக்கின் கண், கிழக்கின் கண், தெற்கின்கண், மேற்கின் கண், எனவும், வடக்கண், கிழக்கண், தெற்கண், மேற்கண் எனவும் வரும். இன்பெறும்வழிக் குற்றியலுகரம் கெடாது நிற்றல் `குற்றியலுகரமு மற்றென மொழிப (எழுத்து 15) என்னுஞ் சூத்திரவுரையுள் விளக்கப்பட்டது. ஆண்டுக் காண்க. கீழ் சார், கீழ்புடை, மேல் சார், மேல்புடை, தென்சார், தென்புடை, வட சார், வடபுடை, என இவ்வாறு சாரியை பெறாது முடிவன வெல்லாம் `ஆவயின் என்றதனால் இச்சூத்திரத்தில் தழுவிக் கொள்ளப்படும். புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் சொல்லிய அல்ல ஏனைய வெல்லாம் தேருங் காலை உருபொடு சிவணிச் சாரியை நிலையுங் கடப்பா டிலவே. (தொல். 202) இஃது இவ்வோத்தின் புறனடை. (இ-ள்) புள்ளியீற்றுச் சொல்லும் உயிரீற்றுச் சொல்லும் என முடிபு சொல்லியவை யல்லாத ஒழிந்தவை யெல்லாம் ஆராயுங் காலத்து உருபுகளோடு பொருந்தி சாரியை நின்று முடியும் நியதியை யுடையவல்ல என்றவாறு. `சாரியை நிலையுங் கடப்பாடில எனவே அவை யெல்லாம் சாரியை பெற்றும் பெறாதும் வரும் என்பதாம். புள்ளியீற்றுள் சொல்லாது ஒழிந்தன ணயரலள என்னும் ஐந்துமாம். உயிருள் இகரம் சொல்லாதொழிந்தது. (உ-ம்) மண் +இன்+ஐ=மண்ணினை, மண்ணை, வேய் + இன்+ஐ=வேயினை; வேயை. நார் + இன் + ஐ = நாரினை; நாரை, கல் + இன் + ஐ = கல்லினை; கல்லை. முள் + இன் + ஐ = முள்ளினை; முள்ளை; கிளி + இன் + ஐ = கிளியினை, கிளியை என வரும். இனித் தேருங்காலை என்றதனானே உருபுகள் நிலை மொழியாக நின்று தம் பொருளொடு புணரும் வழி வேறுபடும் உருபீற்றுச் செய்கையெல்லாம் ஈண்டு முடிப்பர் உரையாசிரியர். 7. உயிர் மயங்கியல் உயிரீறு நின்று வன்கணத்தோடும் சிறுபான்மை ஏனைக் கணத்தோடும் மயங்கிப் புணருமாறு கூறினமையின் உயிர் மயங்கியல் என்னும் பெயர்த்தாயிற்று. மயங்குதல் - கலத்தல். உயிரும் புள்ளியும் இறுதியாகிய உயர்திணைப் பெயர்கள் அல்வழி வேற்றுமையாகிய எல்லாவிடத்தும் இயல்பாமெனவும், ஒரோவழி அஃறிணை விரவுப்பெயர் இயல்பாவனவுளவெனவும் தொகை மரபில் விதந்து கூறிய ஆசிரியர், அவையொழிந்த உயிரீற்று அஃறிணைப் பெயர்களையும், ஏனை வினைமுற்று வினையெச்சம் பெயரெச்சங்களையும் ஈண்டு உணர்த்துவான் எடுத்துக்கொண்டு, அகரமுதல் ஔகாரம்வரை அவற்றை நெடுங்கணக்கு முறையான் வைத்துணர்த்துகின்றார். இவ்வியலில் 93- சூத்திரங்கள் உள்ளன. அவற்றுட் பல மாட்டேற்று முறையில் அமைந்தனவாகும். ஈற்றுவகையாற் கூறப்பட்ட விதிகளெல்லாம் வல்லெழுத்து மிகுவன, இயல்பாவன, மெல்லெழுத்து மிகுவன, உயிர்மிக வருவன, நீட வருவன, குறுகவருவன, சாரியை பெறுவன, பிறவாறு திரிவன என்னும் இவ்வகைப் பகுப்புக்களுள் அடங்குவனவாம். இவ் வகையால் ஒத்த விதியினவாகிய சூத்திரங்களைத் தொகுத்து நோக்குதல் இன்றியமையாததாகும். முதன் முதல் அ, இ, உ என்னுஞ் சுட்டின்முன் நாற்கணமும் புணர்தல் ஈண்டு நோக்கத்தக்கதாகும். மூன்று சுட்டின் முன்னும் நாற்கணமும் புணர்தல். அ, இ, உ என்னும் மூன்று சுட்டும் வல்லெழுத்து வருவழி வந்த வல்லெழுத்து மிக்கு முடியுமென்பதனை முறையே இவ் வதிகாரத்து 204, 235, 255 - ஆம் சூத்திரங்களிற் கூறுவர் ஆசிரியர். அகரத்தின் முன்னர் ஞ ந ம வென்னும் மெல்லெழுத்துக்களை முதலாகவுடைய மொழிகள் வருமிடத்து வந்த மெல்லொற்று மிக்குமுடிதலும், யகரமும் வகரமும் உயிர்முதன் மொழிகளும் வருமிடத்து வகர வொற்று மிக்கு முடிதலும், செய்யுளுட் சுட்டு நீண்டு முடிதலும் உளவாம். இவ்விதிகளை, சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும். யவ முன்வரினே வகர மொற்றும். உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. நீட வருதல் செய்யுளு ளுரித்தே. (தொல். 205, 206, 207, 208) என வருஞ் சூத்திரங்களால் ஆசிரியர் உணர்த்தியுள்ளார். அகரச் சுட்டிற்குக்கூறிய இவ்விதிகளை, சுட்டினியற்கை முற்கிளந் தற்றே. (தொல். 238) என்ற சூத்திரத்தால் இகரச் சுட்டிற்கும், ஏனவை வரினே மேனிலை யியல. (தொல். 256) என்ற சூத்திரத்தால் உகரச் சுட்டிற்கும் மாட்டேற்றிக் கூறியுள்ளார். என மூன்று சுட்டின் முன்னரும் உயிரும் யகரமும் வரின் வகர வொற்றும் க, ச, த, ப, ஞ, ந, ம, வ என்பன வரின் வந்த வெழுத்துக்களும் மிகுமென்பதாம். மேற்கூறிய சூத்திரங்களால் தொல்காப்பியனார் கூறிய இவ்விதிகளை, எகர வினாமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமு மெய்தின் வவ்வும் பிறவரின் அவையுந் தூக்கிற் சுட்டு நீளின் யகரமுந் தோன்றுதல் நெறியே. (நன். 163) என வரும் ஒரு சூத்திரத்தால் தொகுத்துரைத்தார் நன்னூலார். 1. வல்லெழுத்து மிகுவன அகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் தத்த மொத்த வொற்றிடை மிகுமே. (தொல். 203) இச்சூத்திரம் அகரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் வன்கணத்தோடு புணருமாறு கூறுகிறது. (இ-ள்) அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச் சொல்லின் முன் வேற்றுமையல்லாத விடத்துக் க ச த ப முதல்மொழிகள் வருமொழியாய்த் தோன்றுமாயின் தத்தமக்குப் பொருந்தின அக் க ச த ப க்களாகிய ஒற்று இடைக்கண் மிகும் என்றவாறு. (உ-ம்) விளக்குறிது, நுணக்குறிது, அதக்குறிது, சிறிது, தீது பெரிது என வரும். க ச த ப மிகுதலாகிய இவ்விதியினை, வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. ஆகார விறுதி அகர வியற்றே. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. ஈகார விறுதி ஆகார வியற்றே. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. உகர விறுதி அகர வியற்றே. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. ஊகார விறுதி ஆகார வியற்றே. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. ஏகார விறுதி ஊகார வியற்றே. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. ஓகார விறுதி ஏகார வியற்றே. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. ஓகரம் வருதல் ஆவயி னான. (தொல். 206, 221, 225, 249, 252, 254, 259, 264, 266, 274, 276, 289, 292,) என வரும் சூத்திரங்களால் முறையே அகர வீற்று வேற்றுமைப் பெயர்க்கண்ணும், ஆ ஈ உ ஊ ஓ ஈற்று அல்வழி வேற்றுமைப் பெயர்க் கண்ணும் மாட்டெறிந்து கூறினார். மேல், தொகை மரபினுள் இகர ஐகார வீற்றுப் பெயர் அல்வழிக்கண் வல்லெழுத்து வருமிடத்து மிகாது இயல்பாதலும், மிகுதலும் உறழ்தலுமாகிய மூவகை நிலையவென்று கூறினார். ஈண்டு அல்வழியை விலக்கி, இகர ஐகாரமாகிய அவ்விரு வீற்றுப் பெயர்களும் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகப் பெறு மென்பதனை, இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. ஐகார விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே. (தொல். 235, 280) என வரும் இரண்டு சூத்திரங்களாலும் உணர்த்தினார். ஔகார வீற்றுப் பெயர் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகுத லோடு அவ்விரு வழியும் உகரம் பெற்று முடியுமென்பதனை, 295. ஔகார விறுதிப் பெயர்நிலை முன்னர் அல்வழியானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே அவ்விரு வீற்றும் உகரம் வருதல் செவ்விதென்ப சிறந்தசி னோரே. என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார். எனவே இகர ஐகாரம் நீங்கலாக ஏனைய உயிரீற்றுப் பெயரெல்லாம் அல்வழி வேற்றுமையாகிய ஈரிடத்தும் வல்லெழுத்து மிகப் பெறு மென்பதும் இகர ஐகார வீற்றுப் பெயர்கள் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகப்பெறு மென்பதும் கூறினாராயிற்று. `எகர ஒகரம் பெயர்க்கீறாகா எனப் பின்னர்க் கூறுவாராகலின் அவ்வீறுகளுக்கு இவ்விதி அமையா தென்பது கொள்ளப்படும். (உ-ம்) அல்வழி வேற்றுமை நுணக்குறிது சிறிது, தீது, பெரிது. இருவிளக் கொற்றன், சாத்தன், தேவன், பூதன். மூங்காக்கடிது சிறிது, தீது, பெரிது. மூங்காக்கால், செவி, தலை, புறம். . கிளிக்கால், சிற கு, தலை, புறம். ஈக்கடிது சிறிது, தீது, பெரிது. ஈ க்கால், சிறகு, தலை, புறம். கடுக்குறிது சிறிது, தீது, பெரிது. கடுக்காய், செதிள், தோல், பூ. கொண்மூக்கடிது சிறிது, தீது, பெரிது. கொண்மூக்குழாம், செலவு, தோற்றம், பெருமை. ....................................................ahid க்கோ டு, செவி, த ஓஒக்கடிது சிறிது, தீது, பெரிது. ஓஒக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை. கௌவுக்கடிது சிறிது, தீது, பெரிது. கௌவுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை. அல்வழியில் வல்லெழுத்து மிகும் உயிரீற்றுச் சொற்கள்: வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் எனவெ னெச்சமும் சுட்டி னிறுதியும் ஆங்க வென்னும் உரையசைக் கிளவியும் ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே. (தொல். 204) என அகர வீற்றிலும், செய்யா வென்னும் வினையெஞ்சு கிளவியும் அவ்வியல் திரியா தென்மனார் புலவர். (தொல். 222) என ஆகார வீற்றிலும், இனியணியென்னும் காலையு மிடனும் வினையெஞ்சு கிளவியும் சுட்டு மன்ன. (தொல். 236) பதக்குமுன் வரினே தூணிக் கிளவி முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே. (தொல். 239) என இகர வீற்றிலும், இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் உடனிலை மொழிபு முளவென மொழிப. (தொல். 231) என ஈகார வீற்றிலும், சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும். (தொல். 255) என உகர வீற்றினும், வினையெஞ்சு கிளவிக்கு முன்னிலை மொழிக்கும் நினையுங் காலை யவ்வகை வரையார். (தொல். 265) என ஊகார வீற்றினும் அல்வழியில் வல்லெழுத்துமிகும் சொற்களை ஆசிரியர் விதந்து கூறியுள்ளார். இச் சூத்திரங்களால் அகர வீற்றுள், வினையெச்சமும் அவ்வீற்று உவமச் சொல்லும் `என வென்னும் வாய்பாட்டு எச்சமும் அகரச் சுட்டும் ஆங்கவென்னும் உரையசைச் சொல்லும், ஆகார வீற்றுள், செய்யாவென்னும் வாய்பாட்டு வினை யெச்சமும், இகரவீற்றுள், இனி அணி என்ற இரு சொற்களும், இகரவீற்று வினையெச்சமும், இகரச் சுட்டும், பதக்கென்னும் வருமொழியோடு புணரும் தூணி யென்னும் சொல்லும், ஈகாரவீற்றுள் மேலிடத்தை யுணர்த்தும் மீயென்னும் சொல்லும், உகர வீற்றுள் உகரச் சுட்டும், ஊகார வீற்றுள் வினையெச்சமும், முன்னிலை மொழியும், அல்வழிக்கண் க ச த ப முதல் மொழி வருமிடத்து வந்த வல்லெழுத்துக்கள் மிகப் பெறும் என்ற ஒரேவிதி கூறப்பட்டமை காண்க. (உ-ம்) அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன் என மூன்று சுட்டின் முன்னும் வருமொழி வல்லெழுத்துக்கள் மிக்கன. உணக் கொண்டான், உண்ணாக் கொண்டான், தேடிக் கொண்டான், உப்பின்றிப் புற்கை யுண்டான், c©û¡ கொண்டான் என அ ஆ இ ஊ என்னும் நான்கு ஈற்று வினையெச்சத்தின் முன்னும் வருமொழி வல்லெழுத்து மிக்கன. புலிபோலப் பாய்ந்தான், கொள்ளெனக் கொண்டான், ஆங்கக் குயிலும் காட்டி, என முறையே, உவமச் சொல்லும், எனவென் எச்சமும், ஆங்கவென்னும் உரையசையு மாகிய அகர வீற்றிடைச் சொல்முன்னர் வல்லெழுத்து மிக்கன. இனிக் கொண்டான், அணிக்கொண்டான், தூணிப்பதக்கு என இகர வீற்றுள் எடுத்தோதியனவற்றுள் வல்லெழுத்து மிக்கன. மீக்கோள், மீப்போர்வை என்பன வல்லெழுத்து மிக்கு உடன் நிற்கும் மொழிகளாம். உண்ணுக்கொற்றா, உண்ணுச் சாத்தா என ஊகார வீற்று முன்னிலைக்கண் வல்லெழுத்து மிக்கன. இங்ஙனம் உயிரீற்றுச் சொற்களிற் பெரும்பாலன வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலையுணர்ந்த நன்னூலார், இவ்விதி களெல்லாவற்றையும் தொகுத்து, இயல்பினும் விதியினும் நின்ற வுயிர்முன் கசதப மிகும் விதவாதன மன்னே. (நன். 165) என ஒரே சூத்திரத்திற் பொதுவிதியாக அடக்கிக் கூறினார். இனி அல்வழியில் அகரவீற்று ஈரெழுத்தொரு மொழியாகிய பல, சில என்பன தம்முள் தாம் வருமிடத்து வல்லெழுத்துப் பெற்றும் இயல்பாயும் வருவன. இவ்வுறழ்ச்சி முடிபினை, பல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும். (தொல். 215) என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார். (உ-ம்) பல பல, சில சில எனவும் பலப்பல, சிலச் சில எனவும் வரும். பல, சில என்னும் இவ்விரு சொல்லும் தம்முன் தாம் வருமாயின் இயல்பாகலும், மிகுதலும் நிலை மொழியீற்று அகரம் கெட லகரம் றகரமாதலும், இவற்றின்முன் பிற மொழிகளுள் யாதானு மொன்று வரின் அகரம் நிற்றலும் நீங்கலும் ஆகிய இவ் வேறுபாடுகள் வழக்கிலும் செய்யுளிலும் பெருகின. இவற்றை நன்னூலார். பல சில வெனுமிவை தம்முன் தாம் வரின் இயல்பு மிகலும் அகரம் ஏக லகரம் றகரமாகலும் பிற வரின் அகரம் விகற்ப மாகலு முளபிற. (நன். 170) என்ற சூத்திரத்தில் தொகுத்துக் கூறியுள்ளார். 2. இயல்பாவன அல்வழியில் வல்லெழுத்து மிகாது இயல்பாகும் உயிரீறுகளை யுணர்த்தப் போந்த தொல்காப்பியனார். அன்ன வென்னும் உவமக் கிளவியும் அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் செய்ம்மன் வென்னுந் தொழிலிறு சொல்லும் ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் செய்த வென்னும் பெயரெஞ்சு கிளவியும் செய்யிய வென்னும் வினையெஞ்சு கிளவியும் அம்ம வென்னும் உரைப்பொருட் கிளவியும் பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட அன்றி யனைத்தும் இயல்பென மொழிப. (தொல். 210) எனவரும் சூத்திரத்தால் அகரவீற்றுள் இயல்பாவன வற்றை உணர்த்தினார். (இ-ள்) அன்ன வென்று சொல்லப்படும் உவம வுருபாகிய இடைச் சொல்லும், அண்மையிலுள்ளாரை அழைக்கும் விளியாகிய நிலைமையையுடைய அகரவீற்று உயர்திணைப் பெயர்ச்சொல்லும், செய்ம்மன் என்னும் வினைச் சொல்லும், ஏவலைக் கருதிய வியங் கோளாகிய அகரவீற்று வினைச்சொல்லும், செய்த வென்னும் பெயரெச்சமாகிய வினைச் சொல்லும், செய்யிய என்னும் வினை யெச்சமாகிய வினைச் சொல்லும், உரையசைப் பொருண்மை யினையுடைய அம்மவென்னும் இடைச் சொல் லும், பன்மைப் பொருளில் வரும் அகரவீற்றுப் பலவறி சொல்லு மாகிய அவ்வனைத்தும் (வருமொழி வல்லெழுத்து மிகாது) இயல்பாய் முடியும் என்பதாம். (உ-ம்) பொன்னன்ன குதிரை, செந்நாய், தகர், பன்றி, ஊர கேள், செல், தா, போ. உண்மன் குதிரை, செந்நாய், தகர், பன்றி. செல்க குதிரை, செந்நாய், தகர், பன்றி. உண்ட குதிரை, செந்நாய், தகர், பன்றி. (எதிர்மறை) உண்ணாத குதிரை, செந்நாய், தகர், பன்றி. (குறிப்பு) நல்ல குதிரை, செந்நாய், தகர், பன்றி. உண்ணிய கொண்டான், சென்றான், தந்தான், (போயினான்.) அம்ம கொற்றா, சாத்தா, தேவா பூதா. பல குதிரை, செந்நாய், தகர், பன்றி. என வரும். பலவற்றிறுதி என்பதனால் உண்டன குதிரை; கரியன குதிரை எனவரும் அகரவீற்று வினை முற்றையும் வினைக் குறிப்பையும் தழுவினார். அகர வீற்று அல்வழி முடிபாகிய இதனை, செய்யிய வென்னும் வினையெச்சம் பல்வகைப் பெயரி னெச்சமுற் றாறனுருபே அஃறிணைப் பன்மை அம்முன் னியல்பே. (நன். 167) என்ற சூத்திரத்தாற் கூறினார் நச்சினார்க்கினியர். ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றிறுதியும் ஏவல் குறித்த வுரையசை மியாவும் தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளவியோ டன்றி யனைத்தும் இயல்பென மொழிப. (தொல். 224) எனவரும் சூத்திரத்தால் ஆகார வீற்றுச் சொற்கள் இயல்பாமாறு கூறினார் தொல்காப்பியனார். (இ-ள்) ஆ வென்னும் பெயர்ச் சொல்லும், மா வென்னும் பெயர்ச் சொல்லும் விளித்தலையுடைய பெயராகிய உயர் திணைச் சொல்லும், யா வென்னும் வினாப்பெயரும், அஃறிணைப் பன்மைப் பொருளை யுணர்த்தும் ஆகார வீற்று முற்று வினைச் சொல்லும், முன்னிலையில் ஏவல் வினைச் சொல்லைச் சார்ந்துவரும் உரையசை மியாவாகிய ஆகாரவீற்றுச் சொல்லும், தனது தொழிலினைச் சொல்லும், ஆகாரவீற்று வினாவினை யுடைய வினைச் சொல்லும் ஆகிய அவ்வனைத்தும் (வருமொழி வல்லெழுத்து மிகாது) இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர் என்பதாம். (உ-ம்) ஆ குறிது சிறிது, தீது பெரிது. மா குறிது, சிறிது, தீது, பெரிது. ஊரா கொள், செல், தா, போ. யா குறிய, சிறிய, தீய, பெரிய. உணணா குதிரை, செந்நாய், தகர், பன்றி. கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா. உண்கா கொற்றா, சாத்தா, தேவா, பூதா. எனவரும். ஆகார வீற்றியல்பாகிய இவ் வல்வழி முடிபினை, அல்வழி ஆமா மியா முன் மிகா. (நன். 171) என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். உண்ணாக் குதிரை, உண்ணாக் கிடந்தன என மிகுமேல் உண்ணாத குதிரை யெனவும் உண்டு கிடந்தன எனவும் பொருள் பட்டு, முறையே எதிர்மறைப் பெயரெச்சமும். செய்யாவென்னும் வாய்பாட்டு வினையெச்சமும் ஆம் என்பர் சங்கர நமச்சிவாயர். நீயென் பெயரும் இடக்கர்ப் பெயரும் மீயென மரீஇய இடம் வரை கிளவியும் ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். (தொல். 250) இதனால் ஈகார வீற்றுச் சொற்கள் இயல்பாமிடம் கூறுகின்றார் தொல்காப்பியனார். (இ-ள்) நீ யென்னும் பெயரும், இடக்கர்ப் பெயராகிய பகர வீகாரமும், மீ என்று மரூஉவாய் ஓரிடத்தை வரைந்துணர்ந்துஞ் சொல்லும் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்றவாறு. (உ-ம்) நீ குறியை, சிறியை, தீயை, பெரியை. பீ குறிது, சிறிது, தீது, பெரிது. மீ கண், செவி, தலை, புறம். எனவரும. இவ்வீகார வீற்றுச் சொற்கள் அல்வழிக் கண் இயல்பாய் வருமென்பதனை நன்னூலார், பவ்வீ நீமீ முன்ன ரல்வழி இயல்பாம், வலிமெலி மிகலுமா மீக்கே. (நன். 178) என்பதன்கண் இயல்பாம் என்பதனாற் கூறினார். சுட்டுமுத லிறுதி யியல்பா கும்மே. (தொல். 257) இதனால் உகர வீற்றுச் சுட்டுப்பெயர் அல்வழிக்கண் இயல்பாமாறு கூறுகின்றார். (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர வீற்றுப் பெயர் முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என்பதாம். (உ-ம்) அது குறிது, இது குறிது, உது குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். இதனோடு மூன்றாமுருபாகிய ஒடு, ஆறாமுருபாகிய அது, ஒரு, இரு, அறு, ஏழு எனத்திரிந்த உகர வீற்று எண்ணுப் பெயர்கள், உகர வீற்றுவினைத் தொகை ஆகியவைகளையுங் கூட்டி, மூன்றா றுருபெண் வினைத்தொகை சுட்டீ றாகு முகரம் முன்ன ரியல்பாம். (நன். 179) எனச் சூத்திரம் செய்தார் நன்னூலார். (உ-ம்) சாத்தனொடு கொண்டான், சாத்தனது கை, ஒரு கலம், இரு கலம்; அறு கலம், ஏழு கலம், அடு களிறு எனவரும். தேற்ற வெகரமுஞ் சிறப்பின் ஒவ்வும் மேற்கூறியற்கை வல்லெழுத்து மிகா. (தொல். 273) (இ-ள்) தேற்றப் பொருண்மையில் வரும் ஏகரமும் சிறப்புப் பொருண்மையில் வரும் ஒகரமும் வல்லெழுத்து மிக்கு முடியாது இயல்பாகும். (உ-ம்) யானேஎ கொண்டேன், நீயே எ கொண்டாய் யானோஓ கொடியன், நீயோஓ கொடியை என இயல்பாய் முடிந்தன. `யானே கொண்டேன் என்புழி அளபெடை எகரம் தேற்றம். `நீயோஓ கொடியை என்புழி அளபெடை ஒகரம் சிறப்புப் பொருளைத் தந்து நின்றது. இவ்வாறு தெளிவுப் பொருண்மையும் சிறப்புப் பொருண்மை யும் அல்லாத விடத்து எகரமும் ஒகரமும் பெயர்ச் சொற்கு ஈறாகாவென்பதும், இவை வினைச் சொல்லுள் முன்னிலை யிடத்தனவாய் வருமென்பதும், எகர வொகரம் பெயர்க்கீ றாகா முன்னிலை மொழிய என்மனார் புலவர் தேற்றமுஞ் சிறப்பும் அல்வழியான. (தொல். 272) என்பதனாற் கூறப்பட்டன. 273-ம் சூத்திரத்து `மேற்கூறியற்கை வல்லெழுத்து மிகா என ஆசிரியர் கூறுதலால், 272-ம் சூத்திர மாகிய இதன்கண் கூறப்பட்ட முன்னிலை வினையீற்றின்கண் வரும் எகர ஒகரங்கள். ஏஎக் கொற்றா, சாத்தா, தேவா, பூதா. ஓஒக்கொற்றா, சாத்தா, தேவா, பூதா. என வல்லெழுத்து மிகப்பெறும் என்று கூறினாராயிற்று. மாறுகொள் எச்சமும் வினாவு மெண்ணும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். (தொல். 275) இதனால் ஏகார வீற்று இடைச் சொற்கள் இயல்பாமாறு கூறுகின்றார். (இ-ள்) மாறுபாடு கோடலையுடைய எச்சப் பொருண் மைக்கண் வரும் ஏகார வீற்றிடைச்சொல்லும், வினாப் பொருண் மைக்கண் வரும் ஏகார வீற்றிடைச் சொல்லும், எண்ணுப் பொருண்மைக்கண் வரும் ஏகார வீற்றிடைச் சொல்லும் மேற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியுமென்பதாம். மாறு கொளெச்சமாவது எதிர்மறை யெச்சமாம். (உ-ம்) யானே கொண்டேன், சென்றேன், தந்தேன், போயினேன் என வரும். யானே கொண்டேன் என்புழி ஏகாரம் யான் கொண்டிலேன் என மாறு கொண்ட ஒழிபுபட நின்றது. நீயே கொண்டாய், சென்றாய், தந்தாய், போயினாப் என்புழி ஏகாரம் வினா. கொற்றனே சாத்தனே தேவனே பூதனே என்புழி ஏகாரம் எண்ணுப் பொருளைத் தந்து நிற்றல் காண்க. மாறுகொ ளெச்சமும் வினாவும் ஐயமும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். (தொல். 290) இதனால் ஓகார வீற்று இடைச்சொல் முடிபு கூறுகின்றார். (இ-ள்) மாறுபாட்டினைக் கொண்ட எச்சம் பொருண்மை யினையுடைய ஓகாரமும், ஐயப்பொருண்மையினையுடைய ஓகாரமும் முற்கூறிய வல்லெழுத்தும் பெறாது இயல்பாய் முடியும் என்றவாறு. (உ-ம்) யானோ கொண்டேன் (மாறுகொளெச்சம்) நீயோ கொண்டாய் (வினா) பத்தோ பதினொன்றோ (ஐயம்) எனவரும். ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே. (தொல். 291) இதனால் ஒழியிசை ஓகாரமும் மேற்கூறிய ஓகாரங்களின் இயல் பிற்றாய் வல்லெழுத்து மிகாது முடியுமென்று கூறினார். (உ-ம்) கொளலோ கொண்டான் - எனவரும். இத்தொடர், `கொண்டுய்யப் போமாறறிந்திலன் என, ஒழிந்து நின்ற சொற்பொருண்மை யுணர்த்தினமையின், இங்கு வந்த ஓகாரம் ஒழியிசைப் பொருளில் வந்ததாகும். மேற்கூறியவாறு ஏகார ஓகாரங்களாகிய இடைச் சொற்கள் வல்லெழுத்து மிகாதியல்பாமென்பது, இடைச் சொல் ஏ ஓ முன்வரி னியல்பே. (நன். 201) என நன்னூற் சூத்திரத்துங் கூறப்பட்டது. 3. மெல்லெழுத்து மிகுதல் வேற்றுமையில் வல்லெழுத்து முதன்மொழி வருமொழி யாய் வருமிடத்து மெல்லெழுத்து மிகப்பெறும் உயிரீறுகளைக் கூறவந்த தொல்காப்பியர், மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து மிகுமே. (தொல். 217) என அகரவீற்றிலும், யா மரக் கிளவியும் பிடாவுந் தளாவும் ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. மாமரக் கிளவியும் ஆவு மாவும் ஆமுப் பெயரும் அவற்றோரன்ன அகரம் வல்லெழுத் தவையவ ணிலையா னகரம் ஒற்றும் ஆவும் மாவும். (தொல். 229, 231) என ஆகார வீற்றிலும், உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே. (தொல். 243) என இகர வீற்றிலும். ஒடுமரக் கிளவி யுதிமர வியற்றே. (தொல். 262) என உகர வீற்றிலும், சேவென் மரப்பெயர் ஒடுமர வியற்றே. (தொல். 278) என ஏகார வீற்றிலும், விசை மரக்கிளவியு ஞெமையு நமையும் ஆமுப் பெயரும் சேமர வியல. (தொல். 282) என ஐகார வீற்றிலும் வரும் சூத்திரங்களால் அகர வீற்று மரப் பெயரும், ஆ, இ, உ, ஏ, ஐ, ஆகியவற்றின் ஈற்றில் எடுத்தோதிய யா, பிடா, தளா, மா, உதி, ஒடு, சே, விசை, ஞெமை, நமை என்னும் மரப் பெயர்களும் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து மெல்லெழுத்து மிக்கு முடிவன எனக் குறித்துள்ளார். (உ-ம்) விளங்கோடு, செதிள், தோல், பூ. யா அங் கோடு, செதிள், தோல், பூ. பிடாஅங் கோடுசெதிள், தோல், பூ. தளாஅங் கோடு செதிள், தோல், பூ. மாஅங்கோடு செதிள், தோல், பூ. உதிங் கோடு செதிள், தோல், பூ. ஒடுங் கோடு செதிள், தோல், பூ. சேங் கோடு செதிள், தோல், பூ. விசைங் கோடு செதிள், தோல், பூ. ஞெமைங் கோடு, செதிள், தோல், பூ. நமைங் கோடு, செதிள், தோல், பூ. எனவரும். இங்ஙனம் வேற்றுமைக்கண் உயிரீற்று மரப்பெயர்கள் வல்லெழுத்து வருமிடத்து மெல்லெழுத்து மிக்கு முடிவதனை, மரப்பெயர் முன்ன ரினமெல் லெழுத்து வரப் பெறுனவுமுள வேற்றுமை வழியே. (நன். 166) என்பதனாற் கூறினார் நன்னூலார். வல்லெழுத்து வருவழி மெல்லெழுத்து மிக்கும் வல்லெழுத்து மிக்கும் உறழ்வனவற்றை உணர்த்தக்கருதிய தொல்காப்பியர், யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும் ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே. (நன். 166) வல்லெழுத்து மிகினு மான மில்லை. (தொல். 229, 230) எனவரும் சூத்திரங்களால் ஆகார வீற்றுப் பெயராகிய யா, பிடா, தளா என்பன மெல்லெழுத்தோடு வல்லெழுத்துப் பெற்று உறழும் என்றார். (உ-ம்) யாஅங்கோடு, யா அக்கோடு பிடாஅங்கோடு, பிடாஅக்கோடு தளாஅங்கோடு, தளாஅக்கோடு என மெல்லெழுத்தும் வல்லெழுத்தும் பெற்று வந்தன. ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. வல்லெழுத்து மிகினு மான மில்லை. ஒல்வழி யறிதல் வழக்கத் தான. (தொல். 245, 246) எனவரும் இரண்டு சூத்திரங்களால் இகரவீற்றுள் புளியென்னும் சுவையையுணர்த்தும் பெயர்வல்லெழுத்து முதன்மொழி வரு மிடத்து மெல்லெழுத்தும் வல்லெழுத்தும் பெற்று முடியு மென்றார். (உ-ம்) புளிங்கூழ், சாறு, தயிர், பாளிதம் எனவும் புளிக்கூழ், சாறு, தயிர், பாளிதம் எனவும் வரும். ஒல்வழி யறிதல் என்றதனால் வல்லெழுத்து மிகுதல் புளிச்சாறு போல ஏனையவற்றிற்கு வழக்குப் பயிற்சி இல்லை யென்பர் நச்சினார்க்கினியர். இங்ஙனம் சுவைப்புளிமுன் வல்லெழுத்தோடு மெல் லெழுத்தும் மிக்கு முடிதலை, சுவைப்புளி முன்னின மென்மையுந் தோன்றும். (தொல். 175) என்பதன் உம்மையாற் றழீஇனார் நன்னூலார், ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சொற்கு மெல்லெழுத்து மிகுதலை முதன்மையாகக் கூறி, வல்லெழுத்து மிகுதலைத் தழுவியது போலன்றி, நன்னூலார் வல்லெழுத்து மிகுதலை முதன்மையாகக் கொண்டு மெல்லெழுத்து மிகுதலைச் சிறுபான்மையாகக் கூறியது பிற்கால வழக்கு நோக்கி யென்பது உணரத்தக்கது. ஊகாரவீற்றுள் `பூ என்னும் ஒரு பெயர் உகரம் பெறுத லாகிய அவ்வியல்பினைப் பெறாது மெல்லெழுத்தேனும் வல்லெழுத்தேனும் மிக்கு முடியும். இதனை, பூவெ னொருபெய ராயியல் பின்றே ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே. (தொல். 298) என்ற சூத்திரத்தாற் கூறினர் தொல்காப்பியர். (உ-ம்) பூங்கொடி, சோலை, தாமம், பந்து பூங்கொடி, செய்கை, தாமம், பந்து எனவரும். இவ்விதியை, பூப்பெயர் முன்னின மென்மையுந் தோன்றும். (நன். 200) என்ற சூத்திரத்தில் பவணந்தி முனிவர் குறித்துள்ளார். `வல் லெழுத்து மிகுதலும் என்ற உம்மையால் மெல்லெழுத்து மிகுதலைத் தொல்காப்பியனாரும் `மென்மையுந் தோன்றும் என்ற உம்மையால் வன்மை மிகுதலை நன்னூலாருந் தழுவினமை காண்க. 4. உயிர்மிக வருதல். உயிரீற்றின்முன் வல்லெழுத்து முதன் வழி வருமிடத்து உயிர்மிக வருதலைக் கூறவந்த தொல்காப்பியர், உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி மெய்ம்மையாக அகரம் மிகுமே. (தொல். 223) என்பதனால் ஆகார ஈற்று அல்வழிக்கண் அகரம் மிகுமாறு கூறினார். (இ-ள்) உம்மை தொக்குநின்ற இருபெயராகிய தொகைச் சொற்கள் மெய்யாக நிலைமொழி ஈற்றில் அகரம் மிக்கு முடியும் என்பதாம். (உ-ம்) உவாஅப் பதினான்கு, இராஅப்பகல் எனவரும். `மெய்ம்மையாக என்பதனான் `வல்லெழுத்துக் கொடுக்க எனவும், உம்மை தொக்க என்னாது உம்மை எஞ்சிய என்றதனால் அராஅப்பாம்பு எனப் பண்புத் தொகைக்கும், இராஅக்கொடிது என எழுவாய் முடிபிற்கும் இராஅக்காக்கை எனப் பெயரெச்ச மறைக்கும் அகரப்பேறு கொள்க எனவும், வருமொழி வரையாது கூறினமையால் இயல்பு கணத்துக்கண்ணும் அகரப் பேறு கொள்க எனவும் கூறுவர் நச்சினார்க்கினியர். (உ-ம்) இறாஅ வழுதுணங்காய் எனவரும். குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் அறியத்தோன்றும் அகரக்கிளவி. (தொல். 226) என்பதனால் வேற்றுமைக்கண் ஆகாரவீற்றுப் பெயர் அகர மிகுமாறு கூறுகிறார். (இ-ள்) குற்றெழுத்தின் முன்னின்ற ஆகாரவீற்றிற்கும் ஓரெழுத்தொரு மொழியாகிய ஆகாரவீற்றிற்கும் அகரமாகிய எழுத்து அறியத் தோன்றும் என்பதாம். (உ-ம்) பலாஅக்கோடு, செதிள், தோல், பூ எனவும் காஅக்குறை, செய்கை, தலை, புறம், எனவும் வரும். இதனாற் கூறிய அகரப்பேறு இரா எனக் குறியதன் முன்னர் நின்ற ஆகார வீற்றிற்கு இன்றென்பதனை, இராவென் கிளவிக்கு அகரமில்லை. (தொல். 227) என்பதனாற் கூறினாராதலின் இவ்வகரப்பேறு இரா என்பதனை யொழித்து ஒழிந்தவற்றிற்கேயுரியதாகும். இவ்வாறே வேற்றுமைக்கண் குற்றெழுத்தின் பின்னின்ற ஊகார வீற்று மொழியும், ஓரெழுத்தொருமொழி யாகிய ஊகார வீற்று மொழியும், உகரமாகிய எழுத்துப் பெறும் என்பதனை, குற்றெழுத் திம்பரு மோரெழுத்து மொழிக்கும் நிற்றல் வேண்டும் உகரக் கிளவி. (தொல். 267) என்ற சூத்திரத்தால் குறிப்பிட்டுள்ளார். (உ-ம்) உடூஉக்குறை, செய்கை, தலை, புறம் எனவும், தூஉக்குறை, செய்கை, தலை, புறம் எனவும் வரும். ஔகார வீற்றுப்பெயர் அல்வழியினும் வேற்றுமையினும் வல்லெழுத்து வருவழி உகரம் பெறுமென்பதனை, ஔகார விறுதிப் பெயர்நிலை முன்னர் அல்வழியானும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே அவ்விரு வீற்று முகரம் வருதல் செவ்வி தென்ப சிறந்திசி னோரே. (தொல். 295) என்ற சூத்திரத்திதாற் கூறினார். (உ-ம்) கௌவுக்கடிது, சிறிது, தீது, பெரிது, எனவும், கௌவுக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். ஏகார வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் எகரமிக்கு முடியு மென்பதனை, ஏயெ னிறுதிக் கெகரம் வருமே. (தொல். 277) என்பதனாற் கூறினார், (உ-ம்) ஏஎக்கொட்டில், சாலை, துளை, புழை எனவரும். ஓகார வீற்றுப் பெயர் வேற்றுமைக்கண் ஒகரம் பெறு மென்பதனை, வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே ஒகரம் வருத லாவயி னான. (தொல். 282) என்ற சூத்திரத்தாற் கூறினார். (உ-ம்) கோஒக்கடுமை, சிறுமை, தீமை, பெருமை என வரும். இல்லொடு கிளப்பி னியற்கை யாகும். (தொல். 293) என்பதனால் ஒகரப் பேறின்றிக் கோயில் என இயல்பாய் வந்தமை யுணர்க. ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய உயிர்மிகவரும் புணர்ச்சி பிற்காலத்து வழக்கொழிந்தமையால் இப் புணர்ச்சி முறையினை நன்னூலார் இறந்தது விலக்கல் என்னும் உத்தியாற் கூறாதொழிந்தார். 5. நீடவருதல் இனி, குறில் நெடிலாக நீளுதலாகிய திரிபினைப் பெற்றுப் புணர்வனவற்றை முதல் நீளல், இறுதி நீளல் என இருவகையாகப் பிரிக்கலாம். அவற்றுள் முதல் நீண்டு புணர்வது செய்யுளிடத்து வரும் அகரச் சுட்டாகும் இதனை, நீட வருதல் செய்யுளு ளுரித்தே. (தொல். 208) என்பதனால் உணரலாம். இறுதி நீண்டு புணர்வன உரைப் பொருட்கண் வரும் அம்ம என்னும் இடைச் சொல்லும், செய்யுள் கண்ணிய தொடர்மொழிக்கண் வரும் அகரவீற்றுப் பன்மைப் பொருளுணர்த்தும் பல சில என்பனவும், உகரவீற்றில் ழகர மெய்யை யூர்ந்த உகர விறுதியும் ஆம். இவற்றை, உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார். பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான ழகர வுகர நீடிட னுடைத்தே உகரம் வருத லாவயி னான. (தொல். 212, 213, 261) என வரும் சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியுள்ளார். (உ-ம்) `ஆயிருதிணையி னிசைக்குமன சொல்லே எனவும், அம்மா கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும், `பலா அஞ்சிலா அமென்மனார் புலவர் எனவும், பழூஉப் பல்லன்ன பருவுகிர்ப் பாவடி எனவும் வரும். 6. குறுகவருவன ஆன் என்பதன் முன்னர் வருமொழியாக வரும் பகர வீகாரம் தன்னொற்று மிகத் தோன்றிக் குறுகும் இதனை, ஆன்முன் வரூஉம் ஈகார பகாரம் தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. (தொல். 233) என்பதனாற் கூறினார் ஆசிரியர். (உ-ம்) ஆப்பி நீரொடு அலகுகைக் கொண்டிலர் (திருக்குறுந்தொகை) எனவரும் இக்குறுக்கத்தினை, ஆமுன் பகரவீ யனைத்தும்வரக் குறுகும் மேலன அல்வழி யியல்பா கும்மே. (நன். 177) என்ற சூத்தித்தாற் குறித்தார் நன்னூலார். குற்றெழுத்தின் பின்னின்ற ஆகார ஈற்றுச் சொற்களில் ஆகாரத்தினது சினையாகிய ஒரு மாத்திரை கெட்டுக் குறுகிநிற்க ஆண்டு உகரம் வருதல் செய்யுளிடத்து உரியதாகும். இதனை, குறியத னிறுதிச் சினைகெட வுகரம் அறிய வருதல் செய்யுளு ளுரித்தே. (தொல். 234) என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார். (உ-ம்) இறவுப் புறத்தன்ன பிணர்படு தடவுமுதல் எனவரும். இதனை நன்னூலார், குறியதன் கீழாக் குறுகலு மதனோ டுகர மேற்றலு மியல்புமாந் தூக்கின் (தொல். 172) என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார். 7. சாரியை பெறுவன முன் உருபியலில் உருபுக்கு வேண்டும் சாரியைப் பேறு கூறிய ஆசிரியர், ஈண்டு உயிரீற்றுப் பொருட் புணர்ச்சியுள் தனித்தனியே சில சொற்களை எடுத்துக் கொண்டு அவற்றிற்கு ஒன்றும் பலவுமாகச் சாரியைகளை விதித்தும் உருபியலி லெடுத்தோதிய சிலவற்றிற்கு அவ்வியல் விதியை மாட்டெறிந் தும் விதி கூறுகிறார். மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. அத்தவண் வரினும் வரைநிலை யின்றே. (தொல். 218, 219) எனவரும் இரண்டு சூத்திரத்தானும் மக என்னும் அகரவீற்றுப் பெயர் பொருட் புணர்ச்சிக்கண் இன் சாரியை பெறும் என்றும், ஒரோவழி அத்துச் சாரியை வரினும் கடியப்படாதென்றும் கூறினார். (உ-ம்) மக + கை = மகவின் கை, செவி, தலை, புறம், எனவும், மதத்துக் கை செவி, தலை, புறம், எனவரும். நிலாவென் கிளவி அத்தொடு சிவணும். (தொல். 228) என்பதனால், ஆகாவீற்றுள் நிலாவென்பது அத்துச் சாரியை பெறுமென்றார். (உ-ம்) நிலா + கொண்டான் = நிலா அத்துக் கொண்டான் சென்றான், தந்தான், போயினான் எனவரும். ஆ என்னும் சொல் முன்பெற்று னகர ஒற்று அகரத்தோடு கூடி நிற்கும் என்பதனை, ஆனொற் றகரமொடு நிலையிட னுடைத்தே. (தொல். 232) எனவரும் சூத்திரத்தாற் கூறினார் ஆசிரியர். (உ-ம்) `ஆனநெய் தெளித்து எனவரும். பனியென வரூஉங் கால வேற்றுமைக் கத்து மின்னுஞ் சாரியை யாகும். (தொல். 241) என்ற சூத்திரத்தாற் பனி என்னும் நோயன்றிப் பனிக்காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு அத்தும் இன்னும் சாரியையாக வருமெனக் கூறினார், இவ்விதியை, வளியென வரூஉம் பூதக் கிளவியும் அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப (தொல். 242) எனவும், மழையென் கிளவி வளியியல் நிலையும். (தொல். 287) எனவும் வரும் சூத்திரங்களால் முறையே வளியென்னும் சொல்லுக்கும் மழையென்னுஞ் சொல்லுக்கும் எய்துவித்தார். (உ-ம்) பனியத்துக் கொண்டான், பனியிற் கொண்டான். வளியத்துக் கொண்டான், வளியிற் கொண்டான். மழையத்துக் கொண்டான், மழையிற்கொண்டான். சென்றான் தந்தான், போயினான் எனவரும். புளிமரக் கிளவிக் கம்மே சாரியை. எருவுஞ் செருவு மம்மொடு சிவணித் திரிபிடனுடைய தெரியுங் காலை அம்மின் மகரம் செருவயிற் கெடுமே தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை. பனையு மரையும் ஆவிரைக் கிளவியும் நினையுங்காலை அம்மொடு சிவணும் ஐயெ னிறுதி யரைவரைந்து கெடுமே மெய்ய வணொழிய என்மனார் புலவர். (தொல். 244, 260, 283) எனவருஞ் சூத்திரங்களால் முறையே புளி எனவும் எரு, செரு, எனவும், பனை. அரை, ஆவிரை யெனவும் வரும் இகர உகர ஐகார வீற்றுச் சொற்கள் அம்சாரியை பெறும் என்றார். (உ-ம்) புளியங்கோடு, செதிள், தோல், பூ எருவங்குழி, சேறு, தாது, பூமி செருவக்களம் சேனை, தானை, பறை பனங்காய், செதிள், தோல், பூ அரையங்கோடு செதிள், தோல், பூ ஆவிரங்கோடு செதிள், தோல், பூ எனவரும். நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக் கானிடை வருதல் ஐய மின்றே. (தொல். 247) என்பதனால் பரணி முதலிய இகர வீற்று நாட் பெயர்களின் முன்னர்த் தோன்றும் தொழிற்சொற்கு ஆன்சாரியை யிடையே வந்து முடியுமெனவும், திங்கள் முன்வரின் இக்கே சாரியை. (தொல். 248) என்பதனால் திங்களை (மாதத்தை) யுணர நின்ற ஆடி ஆவணி முதலிய இகர வீற்றுப் பெயர்களின் முன் (தொழினிலைக் கிளவிவரின்) இக்குச்சாரியை வந்து முடியு மெனவுங் கூறினார் ஆசிரியர். இவ்விதியை, திங்களு நாளு முந்துகிளந் தன்ன. (தொல். 286) என்ற சூத்திரத்தால் ஆதிரை சித்திரை முதலிய ஐகார வீற்று நாட் பெயர்க்கும் திங்கட் பெயர்க்கும் மாட்டெறிந்து கொண்டார். (உ-ம்) பரணியாற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் ஆதிரையாற் கொண்டான்,சென்றான், தந்தான், போயினான் ஆடிக்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் தைக்குக் கொண்டான் சென்றான், தந்தான், போயினான் எனவரும். ஊ வென்னும் பெயர் னகரவொற்றோடு அக்குச்சாரியை பெற்று முடிதலுமுரித் தென்பதனை, ஊவெ னொருபெயர் ஆவொடு சிவணும். அக்கென் சாரியை பெறுதலு முரித்தே தக்கவழி யறிதல் வழக்கத் தான. (தொல். 26, 270) என்பவற்றாற் குறிப்பிட்டார். (உ-ம்) ஊ+குறை = ஊன்குறை, செய்கை, தலை, புறம் எனவும் ஊனக்குறை, செய்கை தலை, புறம், எனவும் வரும். ஆடூஉ மகடூஉ வாயிரு பெயர்க்கும் இன்னிடை வரினு மானமில்லை. பெற்றமாயின் முற்றவின் வேண்டும். (தொல். 271, 279) எனவரும் சூத்திரங்களால் ஆடூஉ, மகடூஉ, என்ற ஊகாரவீற்றுப் பெயர்களும், பெற்றத்தைக் குறிக்கும், சே என்னும் ஏகாரவீற்றுப் பெயரும் இன்சாரியை பெற்று முடியுமெனக் கூறினார். (உ-ம்) ஆடூஉ வின்கை, செவி, தலை, புறம், எனவும், சேவின், கோடு, செவி, தலை, புறம் எனவும் வரும். ஆசிரியர் உருபியல் விதியை அ, ஈ, உ, ஐ, ஓ என்பவற்றினீற்றில் முறையே, 220, 253, 243, 281, 294 ஆகிய சூத்திரங்களில் மாட்டெறிந்து கூறியுள்ளார். அகரவீறு பலவற் றிறுதி யுருபியல் நிலையும். (தொல். 220) (இ-ள்) பல்ல, பல, சில, உள்ள, இல்ல எனவரும் பலவற்றை யுணர்த்தும், அகர வீற்றுச் சொற்களின் இறுதி, உருபுபுணர்ச்சிக் கண் வற்றுப் பெற்றுப் புணர்ந்தாற்போல உருபினது பொருட் புணர்ச்சிக்கண்ணும் வற்றுச்சாரியை பெற்று முடியுமென்பதாம். (உ-ம்) பல்வற்றுக் கோடு செதிள், தோல், பூ பலவற்றுக்கோடு செதிள், தோல், பூ சிலவற்றுக்கோடு, செதிள், தோல், பூ உள்ளவற்றுக்கோடு, செதிள், தோல், பூ இல்லவற்றுக் கோடு, செதிள், தோல், பூ எனவரும். ஈகாரவீறு நீயென் ஒருபெயர் உருபியல் நிலையும் ஆவயின் வல்லெழுத் தியற்கையாகும். (தொல். 253) (இ-ள்) நீ என்னும் ஓரெழுத் தொருமொழி, உருபு புணர்ச்சிக் கண் நெடுமுதல் குறுகி னகர ஒற்றுப்பெற்று நின்றாற் போல ஈண்டுப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் முடியும். அவ்வாறு முடிவுழி இயைபு வல்லெழுத்து மிகா தென்றவாறு. (உ-ம்) நின்கை, செவி, தலை, புறம் என வரும். `இயற்கையாகுமெனவே நிலைமொழித் தொழில் அதிகார வல்லெழுத்தை விலக்காதாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். உகரவீறு சுட்டுமுத லிறுதி யுருபியல் நிலையும் ஒற்றிடை மிகா வல்லெழுத் தியற்கை. (தொல்.263) (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர வீற்றுச் சொற்கள் பொருட் புணர்ச்சிக் கண்ணும், உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பிலே நின்று அன்சாரியை பெற்று உகரம் கெட்டு முடியும்; வருமொழி வல்லொற்று இடைக்கண் மிகப்பெறா என்பதாம். (உ-ம்) அதன்கோடு, செதிள், தோல், பூ இதன்கோடு, செதிள், தோல், பூ உதன்கோடு, செதிள், தோல், பூ எனவரும். ஐகாரவீறு சுட்டுமுத லிறுதி யுருபியல் நிலையும் (தொல். 281) (இ-ள்) சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுப் பெயர் உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்பு போலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியுமென்றவாறு. (உ-ம்) அவையற்றுக்கோடு, செதிள், தோல், பூ இவையற்றுக் கோடு செதிள், தோல், பூ உவையற்றுக்கோடு, செதிள், தோல், பூ எனவரும். ஓகாரவீறு உருபியல் நிலையும் மொழியுமா ருளவே ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும். (தொல். 294) (இ-ள்) ஓகார வீற்றுட்சில பொருட்புணர்ச்சிக்கண் உருபு புணர்ச்சியது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள. அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும் என்பதாம். (உ-ம்) கோஒன்கை, செவி, தலை, புறம் எனவரும். ஏனையதிரிபுகள் உயிரீற்றுப் பொருட்புணர்ச்சிக்கண் வரும் ஏனைய திரிபுகளை இனி நோக்குவாம். அகர வீற்றுள் சாவ என்னும் செயவென் எச்சத்து இறுதியில் நின்ற வகர வுயிர்மெய்யும், நெடுங்காலம் வாழ்க என்னும் பொருளில் வரும் வாழிய என்னுஞ் சொல்லின் இறுதியில் நின்ற யகர வுயிர்மெய்யும் கெட்டு முடியும். இதனை, சாவ வென்னுஞ் செயவென்னெச்சத் திறுதி வகரங் கெடுதலு முரித்தே. (தொல். 209) எனவும், வாழிய வென்னுஞ் செயவென் கிளவி யிறுதி யகரங் கெடுதலு முரித்தே. (தொல். 211) எனவும் வரும் சூத்திரங்களாலுணர்த்தினர் தொல்காப்பியனார். இவ்விரு சொற்களிலும் இறுதி யுயிர்மெய் கெடுதலை, சாவவென் மொழியீற் றுயிர்மெய் சாதலும் விதி. (நன். 169) வாழிய வென்பத னீற்றி னுயிர்மெய் ஏகலு முரித்தஃ தேகினு மியல்பே. (நன். 168) எனவரும் சூத்திரங்களாலுணர்த்தினார் நன்னூலார். இகர வீற்றுள், நாழி என்ற அளவுப் பெயர் முன்னர் உரியென்பது வருமொழியாய் வருங்காலத்து, நாழி என்னுஞ் சொல்லிறுதி யிகரம், தான் ஏறிய ழகர மெய்யொடுங்கெட்டு அவ்விடத்து டகார ஒற்றுப் பெற்று முடியும். இதனை, உரிவரு காலை நாழிக் கிளவி இறுதி யிகரம் மெய்யொடுங் கெடுமே டகரம் ஒற்றும் ஆவயி னான. (தொல். 240) என்பதனாற் கூறினார் தொல்காப்பியனார். (உ-ம்) நாழி + உரி = நாடுரி எனவரும். மேற்கூறிய திரிபோடு உரியென்னுஞ் சொல் நிலை மொழியாய் நின்று ஏற்றபிற பெயரோடு புணருமிடத்து யகரவுயிர் மெய்யும் பெறும் என்பதனையும் உரிவரி னாழியி னீற்றுயிர் மெய் கெட மருவும் டகரம் உரியின் வழியே யகர வுயிர்மெய்யாம் ஏற்பன வரினே. (தொல். 174) என்ற சூத்திரத்தினாற் கூறினார் நன்னூலார். உகரவீற்றுள் அம்சாரியை பெறுவனவற்றுள் செரு என்பதன் முன் வரும் அம்சாரியையின் மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்குமுடியும் இதனை, எருவும் செருவும். .....................ம்Ä‹ மகரஞ் செருவயிற் கெடுமே தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை. (தொல். 290) என்ற சூத்திரத்தாற் கூறினார் தொல்காப்பியர். (உ-ம்) செரு + களம் = செருவக்களம், சேனை, தானை படை எனவரும். ஐகார வீற்றுள், பனை ஆவிரை என்ற சொற்கள் அம் சாரியை பெறுமிடத்து ஈற்றிலுள்ள ஐகாரம் கெட்டு முடியும் என்பதனை, பனையும் அரையும் ஆவிரைக்கிளவியும் நினையுங் காலை அம்மொடு சிவணும் ஐயெனிறுதி அரைவரைந்து கெடுமே மெய்யவ ணொழிய என்மனார் புலவர். (தொல். 283) என்ற சூத்திரத்தாலும், பனையென்ற சொல்முன் அட்டு என்னுஞ் சொல் வருமிடத்து ஈற்றிலுள்ள ஐகாரங்கெட்டு அவ்விடத்து ஆகாரம் வந்து அம் மெய்மேலேறி முடியும் என்பதனை, பனையின் முன்னர் அட்டுவரு காலை நிலையின்றாகும் ஐயெ னுயிரே ஆகாரம் வருதல் ஆவயினான. (தொல். 284) என்ற சூத்திரத்தாலும் கூறினார் தொல்காப்பியனார். கொடிமுன் வரினே யையவ ணிற்பக் கடிநிலையின்றே வல்லெழுத்து மிகுதி. (தொல். 285) என்பதனால் பனை என்றதன்முன் கொடியென்ற சொல்வரின் இறுதி ஐகாரங் கெடாது நிற்ப வல்லெழுத்து மிக்கு முடியுமென வற்புறுத்தினார். (உ-ம்) பனங்காய், செதிள், தோல், பூ ஆவிரங்கோடு செதிள், தோல், பூ எனவும் பனாஅட்டு எனவும் பனைக்கொடி எனவும் வரும். இவ்வைகார வீற்றுச் சொற்களின் திரிபினைப் பவணந்தி முனிவர். வேற்றுமை யாயி னைகா னிறுமொழி ஈற்றழி வோடும் அம் மேற்பவு முளவே. பனைமுன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐபோ யம்மும் திரள்வரி னுறழ்வும் அட்டுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை. (தொல். 202, 203) எனவரும் இரு சூத்திரங்களாலுந் தொகுத்துக் கூறினார். பனைமுன் அட்டுவரும் பொழுது ஈற்று ஐகாரம் கெட்டு இடையே ஓர் ஆகாரம் வரும் எனத் தொல்காப்பியர் கூறியதனை விடுத்து, அட்டு என்னும் வருமொழியின் அகரம் ஆகாரமாக நீளுமெனக் கூறினார் நன்னூலார் அவர் கருத்துப்படி, (உ-ம்) பனை + அட்டு = பனாட்டு எனவரும். பல சில என்னும் அகரவீற்றுச் சொற்கள் தம்முன் தாம் வந்து புணருமிடத்து லகரம் றகர வொற்றாகத் திரிந்து முடியு மென்பதனை, தொடர லிறுதி தம்முற் றாம்வரின் லகரம் றகர வொற்றகலு முரித்தே. (தொல். 214) என்ற சூத்திரத்தாற் கூறினார் ஆசிரியர். றகரத்தை யொற்றெனக் குறிப்பிட்டுக் கூறினமையால் முற்கூறிய லகரம் உயிர்மெய்யாதல் தெளியலாம். பற்பல, சிற்சில, எனவரும் இதனை, பலசில வெனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பு மிகலும் அகரமேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற் பமாகலும் உளபிற. (நன். 173) என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். இகரவீற்றுச் சொல்லாகிய இன்றி யென்னும் வினை யெச்சத்து இகரம் செய்யுளுள் உகரமாய்த் திரியுமென்பதனை, இன்றி யென்னும் வினையெஞ்சிறுதி நின்ற இகரம் உகரமாதல் தொன்றியன் மருங்கிற் செய்யுளு ளுரித்தே. (தொல். 237) என்ற சூத்திரத்தாற் கூறினார் தொல்காப்பியனார். (உ-ம்) உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே எனவரும். இன்றி யென்பது போல அன்றி யென்பதும் உகரமாய்த் திரிந்து வருமெனக் கொண்ட நன்னூலார், அத்திரிபினையும், அவ்வழி வருமொழி வல்லெழுத்து மிகாதியல் பாதலையும், அன்றி யின்றியென் வினையெஞ் சிகரம் தொடர்பினு ளுகர மாய்வரி னியல்பே. (நன். 173) என்பதனாற் குறிப்பிட்டார். (உ-ம்) `நாளன்று போகி எனவரும். செய்யுளிடத்துச் சுட்டுப் பெயரீற்று உகரம், அன்று என்ப தனோடு புணருமிடத்து ஆகாரமாகத் திரிதலும், ஐயென்பதனோடு புணருமிடத்துக் கெடுதலும் ஆகிய இயல்பிற்று என்பதனை, அன்று வருகாலை யாவாகுதலும் ஐவருகாலை மெய்வரைந்து கெடுதலும் செய்யுண் மருங்கி னுரித்தென மொழிப. (தொல். 258) என்பதனாற் கூறினார் தொல்காப்பியர். (உ-ம்) `அதா அன்றென்ப வெண்பாயாப்பே இதர அன்றம்ம, உதா அன்றம்ம, எனவும், அதைமற்றம்ம இதை மற்றம்ம, உதைமற்றம்ம எனவும் வரும். இங்ஙனம் அன்ற வருமிடத்துச் சுட்டுப் பெயரீற்று உகரம் ஆகாரமாகத் திரியுமெனத் தொல்காப்பியர் கூறியபடி கூறாது, அன்றென்பதன் அகரம் நீண்டு வருமென வருமொழித் திரிபு கூறினார் நன்னூலார். அது முன்வரும் அன்றான்றாந் தூக்கின். (நன். 180) என்பது நன்னூல். (உ-ம்) அதான்று, எனவரும். நன்னூலார், கருத்துப்படி அது என்பத னுகரம் முற்றுமற்றொரோ வழி என்பதனாற் கெட்டுத் தகரவொற்றின் மேல் வருமொழியுயிரேறி முடியும் என்பதாம். இனிச் செய்யுளிடத்துவரும் வேட்கை என்ற ஐகார வீற்றுச்சொல், தனக்கு முன்னர் அவா என்ற சொல் வரு மொழியாய் வரப்பெறுமாயின், அவ்வைகாரம் தான் ஊர்ந்து நின்ற மெய்யோடுங் கெட்டு டகாரம் ணகாரமாய்த் திரிந்து முடியு மென்பது, செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐயெ னிறுதி அவாமுன் வரினே மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் டகார ணகார மாதல் வேண்டும். (தொல். 288) என்ற சூத்திரத்தாற் கூறப்பட்டது. (உ-ம்) `வேணவா நலிய வெய்யவுயிரா என வரும். வேட்கை யாவது பொருள்கள் மேற்றோன்றும் பற்றுள்ளம். அவாவாவது அப்பொருள்களைப் பெறவேண்டுமென்னும் ஆசை. எனவே வேணவா என்பதற்கு வேட்கையாலுண்டாகிய அவாவென மூன்றனுருபு விரித்துப் பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். 8. புள்ளி மயங்கியல் இது, மெய்யீறு வன்கணத்தோடும் பிறகணத்தோடும் புணருமாறு கூறலின் புள்ளிமயங்கியல் எனப் பெயர்பெற்றது. மெய்கள் புள்ளி பெறுதலாற் புள்ளியென வழங்கப் பெறுவன வாயின. புள்ளியீறுகளுள் உகரம் பெறுவன, இறுதிகெட்டு வல்லெழுத்து மிகுவன, மெல்லெழுத்து மிகுவன, இறுதிகெடாது வல்லெழுத்து மிகுவன, மெல்லெழுத்து மிகுவன, இவ்விரண்டும் உறழ்ந்து முடிவன, இயல்பாய் வருவன, சாரியை பெறுவன, உருபியல் விதிகள், திரிந்து முடிவன ஆகியவற்றை இவ்வியலில் விரித்து உணர்த்துகின்றார். 1. உகரம் பெறுவன ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றமைக் கண்ணும் வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே உகரம் வருதல் ஆவயி னான. (தொல்.296) ஞநமவ இயையினும் உகரம் நிலையும். (தொல். 297) இவ்விரு சூத்திரத்தும் ஞகாரம் ஈற்றின்கண் ஒற்றாய் நின்ற தொழிற் பெயர்முன்னர் அல்வழி, வேற்றுமை ஆகிய ஈரிடத்தும் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, அவ்வல்லெழுத்து வருமொழிக் கண் மிகும்படி, நிலைமொழியீறு உகரம் பெற்று முடியும் எனவும், வருமொழிக்கண் வன்கணமன்றி ஞநமவ முதலாய் வருமிடத்தும் நிலைமொழிக்கண் ஞகரஈறு உகரம் பெற்று முடியும் எனவும் கூறினார் தொல்காப்பியனார். இவ்விதிகளை, நகர விறுதியும் அதனோ ரற்றே. தொழிற் பெயரெல்லாந் தொழிற் பெயரியல. தொழிற் பெயரெல்லாந் தொழிற் பெயரியல. தொழிற் பெயரெல்லாத் தொழிற் பெயரியல. தொழிற் பெயரெல்லாந் தொழிற் பெயரியல. (தொல். 298, 306, 327, 376, 401) எனவரும் சூத்திரங்களால் முறையே ந, ண, ம, ல, ள என்னும் ஐவகைப் புள்ளியீற்றுத் தொழிற் பெயர்க் கண்ணும் மாட் டெறிந்து முடித்தார். வேற்றுமைக் குக்கெட அகரம் நிலையும். (தொல். 299) என்பதனால், நகர வீற்றுத் தொழிற்பெயர் வேற்றுமைக்கண் உகரம் பெறாது அகரம் நிலைபெற்று முடியும் என்றார். (உ-ம்) அல்வழி உரிஞ் + கடிது = உரிஞுக்கடிது, பொருந் + கடிது = பொருநுக்கடிது, மண் + கடிது = மண்ணுக்கடிது, தும் + கடிது = தும்முக்கடிது, புல் + கடிது = புல்லுக்கடிது, துள் + கடிது = துள்ளுக்கடிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது. வேற்றுமை உரிஞ் + கடுமை = உரிஞுக்கடுமை, பொருந் + கடுமை = பொருக்கடுமை, மண் + கடுமை = மண்ணுக்கடுமை, தும் + கடுமை = தும்முக்கடுமை, புல் + கடுமை = புல்லுக்கடுமை, துள் + கடுமை = துள்ளுக்கடுமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை எனவரும். ஞணநமலள என்னும் ஈற்றுத் தொழிற் பெயர்களுக்கு ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இவ்விதிகளை இவற்றுடன் வகர னகர ஈற்றுத்தொழிற் பெயர்களுக்கும் இவ்வீறுகளின் ஏவல் வினைகளுக்கும் இயைத்துரைப்பர் நன்னூலார். ஞண நமலவளன வொற்றிறு தொழிற்பெயர் ஏவல் வினை நனி யவ்வல் மெய்வரின் உவ்வுறும், ஏவல் உறாசில சில்வழி. நவ்விறு தொழிற்பெயர்க் கவ்வுமாம் வேற்றுமை. (நன். 207, 208) எனவரும் நன்னூற் சூத்திரங்கள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கனவாகும். ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன. மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் அந்நாற் சொல்லுந் தொழிற்பெய ரியல. வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. (தொல். 328, 345, 373, 382, 403) எனவரும் தொல்காப்பியச் சூத்திரங்கள், ஈம், கம், உரும், மின், பின், பன், கன், வல், தெவ், புள், வள், எனவரும் மெய்யீற்றுச் சொற்கள் தொழிற் பெயர்போல அல்வழி வேற்றுமையாகிய இருவழியும் உகரம் பெற்று முடிவன என உணர்த்துகின்றன. இவற்றுள் கன் என்னுஞ் சொல் வேற்றுமைக்கண் வருமாயின் மரமல்லாத எகின் என்னுஞ் சொல் நிலைமொழிக்கண் அகரம் பெற்று, வல்லெழுத்து மிக்கு முடிதல் போன்று அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும். இம்முடிபு, ஏனை எகினே அகரம் வருமே வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும். வேற்றுமை யாயின் ஏனை யெகினொடு தோற்ற மொக்கும் கன்னென் கிளவி. (தொல். 337, 348) எனவரும் சூத்திரங்களாற் குறிக்கப்பட்டது. வல் என்ற சொல்லின்முன், நாய், பலகை என்பன. வருமொழியாய்வரின் அவ்விடத்து விதிக்கப்பட்ட உகரம் கெடுதலும் உண்டு எனவும், அவ்வழி அகரம் வந்து நிலைபெறும் எனவும் கூறுவர் தொல்காப்பியர். நாயும் பலகையும் வரூஉங் காலை ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே உகரங் கெடுவழி அகர நிலையும், (தொல். 374) என்பது தொல்காப்பியம். (உ-ம்) ஈம் + கடிது = ஈமுக்கடிது, கம் + கடிது = கம்முக்கடிது, உரும் + கடிது = உருமுக்கடிது, மின் + கடிது = மின்னுக்கடிது, பின் + கடிது = பின்னுக்கடிது, பன் + கடிது = பன்னுக்கடிது, கன் + கடிது = கன்னுக்கடிது, வல் + கடிது = வல்லுக்கடிது, தெவ் + கடிது = தெவ்வுக்கடிது, புள் + கடிது =புள்ளுக்கடிது, வள் + கடிது = வள்ளுக்கடிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது. என அல் வழியிலும், ஈம் + கடுமை = ஈமுக்கடுமை, கம் + கடுமை = கம்முக்கடுமை, உரும் + கடுமை = உருமுக்கடுமை, மின் + கடுமை = மின்னுக்கடுமை, பின் + கடுமை = பின்னுக்கடுமை, பன் + கடுமை = பன்னுக்கடுமை, கன் + கடுமை = கன்னுக்கடுமை, எகின் + கால் = எகினக்கால், கன் + குடம் = கன்னக்குடம், வல் +கடுமை = வல்லுக்கடுமை, வல் + நாய் = வல்லநாய், தெவ் + கடுமை = தெவ்வுக்கடுமை, புள் + கடுமை = புள்ளுக்கடுமை, வள் + கடுமை = வள்ளுக்கடுமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வன்மை. என வேற்றுமையிலும் வந்தன. இங்ஙனம் உகரம் பெற்றும் சில விடத்து அகரம் பெற்றும் வரும் புள்ளியீற்றுப் பெயர்ச் சொற்களாகிய இவற்றை ஆசிரியர் பவணந்தியார், ஈமுங் கம்மு முருமுந் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே. மரமல் லெகின்மொழி யியல்பும் அகரம் மருவ வலிமெலி மிகலுமாகும். மின் பின் பன்கன் தொழிற்பெய ரனைய கன்னவ் வேற்று மென்மையோ டுறழும். வல்லே தொழிற்பெய ரற்றிரு வழியும் பலகை நாய்வரினும் வேற்றுமைக் கவ்வுமாம். தெவ்வென் மொழியே தொழிற் பெயரற்றே மவ்வரின் வஃகான் மவ்வு மாகும். புள்ளும் வள்ளுந் தொழிற்பெயரு மானும் (நன். 223, 215, 217, 231, 236, 234) எனவரும் இச்சூத்திரங்களால் எடுத்தோதி முடித்துள்ளார். ஈண்டு ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்துப்படி ஈமக்குடம், கம்மக்குடம் என அக்குச்சாரியை பெற்றனவற்றைப் பவணந்தியார் தமது கொள்கைக் கேற்ப அகரச் சாரியை பெற்றனவாகக் கூறியதும், தெவ் என்னும் வகரவீற்றுச் சொல் மகரமுதன்மொழி வருமிடத்து, `தெவ்முனை யிடத்துச் சேயர்கொல் என மகரமாகத் திரிந்துவரும் இலக்கியம் கண்டு `மவ்வரின் வஃகான் மவ்வுமாகும் (236) என இலக்கணம் விதித்ததும் கூர்ந்து நோக்கத் தக்கனவாகும். 2. இறுதிகெட்டு முடிவன. வெரிநெ னிறுதி முழுதுங் கெடுவழி வருமிட னுடைத்தே மெல்லெழுத் தியற்கை, ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. (தொல். 300, 301) இவற்றின் பொருள் :- வெரிந் என்னும் சொல்லின் இறுதி யாகிய நகரவொற்று, தான் முன்பெற்ற அகரத்தொடும் கெட, வல்லெழுத்து வருமிடத்து அதற்கேற்ற மெல்லெழுத்தாயினும் வல்லெழுத்தாயினும் மிக்கு முடியும் என்பதாம். (உ-ம்) வெரிங்குறை, செய்கை, தலை, புறம். வெறிக்குறை, செய்கை, தலை, புறம் எனவரும். மகர விறுதி வேற்றுமை யாயின் துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே. (தொல். 310) இதன்பொருள் :- மகரவீற்றுப் பெயர் வேற்றுமைக் கண் ஆயின் ஈற்று மகரம் முற்றக் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியும் என்பதாம். (உ-ம்) மரக்கோடு, செதிள், தோல், பூ எனவரும். மெல்லழுத் துறழு மொழியுமா ருளவே செல்வழி யறிதல் வழக்கத்தான. (தொல். 312) இதன்பொருள்:-(நிலைமொழியீற்று மகரம் வேற்றுமைக்கண் கெட்டவிடத்து) வருமொழி வல்லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து மிக்குமுடியும் மொழிகளும் உள என்பதாம். (உ-ம்) குளங்கரை, சேறு, தாது, பூழி குளக்கரை, சேறு, தாது, பூழி எனவரும். `நும் என்னும் விரவுப்பெயர் பொருட் புணர்ச்சிக் கண் மகரங்கெட மெல்லெழுத்து மிக்குமுடியும் என்பது. நும்மெனொரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. (தொல். 325) என்பதனாற் கூறப்பட்டது. (உ-ம்) நுங்கை, செவி, தலை, புறம் எனவரும். இவ்வாறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் நிலை மொழியீற்று மகரம் கெட்டு முடிதலை, வேற்றுமை மப்போய் வலிமெலி யுறழ்வும் அல்வழி உயிர் இடைவரின் இயல்பும் உள. (தொல். 220) எனவருஞ் சூத்திரத்தால் எடுத்துரைத்தார் நன்னூலார். `ஆயிரம் என்னும் மகரவீற்று எண்ணுப் பெயர் முன் அளவுப் பெயரும் நிறைப் பெயரும் வந்து புணருமிடத்து, மகரவீற்று வேற்றுமையோடு ஒத்து இறுதி மகரம்கெட, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது, அளவும் நிறையும் வேற்றுமை யியல. (தொல். 319) எனவரும் சூத்திரத்தாற் குறிப்பிடப் பெற்றது. (உ-ம்) ஆயிரம் +கலம்= ஆயிரக் கலம், சாடி, தூதை, பானை எனவும் ஆயிரம் + கழஞ்சு = ஆயிரக்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். மேல் (தொல்-எழுத்து 310) `துவர என்ற இலேசினால் இயல்பு கணத்துக்கண் எய்திய மகரக்கேடு ஈண்டுங் கொள்ளப் படும் என்பர் இளம்பூரணர். (உ-ம்) ஆயிரம் + நாழி = ஆயிரநாழி, வட்டி, அகல் எனவரும். `பதினாயிரக்கலம் என்றாற்போன்று ஆயிரம் என்ற சொல் அடையடுத்து வந்துழியும் மேற்கூறிய விதி கொள்ளப்படும் என்பர் உரையாசிரியர். தொல்காப்பியத்துள் மகர வீற்றுக்குச் சொல்லப்பட்ட இச் சிறப்பு விதிகளை, மவ்வீ றொற்றழிந் துயிரீ றொப்பவும் வன்மைக் கினமாத் திரிபவு மாகும். (நன். 219) என்ற பொது விதியால் தழுவினார் நன்னூலார். `இல்லம் என்ற மரப்பெயர், ஈற்று மகரங்கெட்டு, `விசை என்னும் மரப்பெயர் போன்ற வல்லெழுத்து முதன்மொழிவரின் அதன் கிளையொற்றாகிய மெல்லெழுத்து மிக்கு முடியும் என்பது, இல்ல மரப்பெயர் விசைமர வியற்றே. (தொல். 313) என்பதனாற் கூறப்பட்டது. (உ-ம்) இல்லம் +கோடு = இல்லங்கோடு, செதிள், பூ எனவரும். இல்லம் தோற்றாமரம். மகரவீற்றுச் சொல்முன் வகர முதன்மொழி வருமிடத்து வகரத்தின் மேல் நின்ற மகரம் அதன் தொடர்பால் தன் மாத்திரையிற் குறுகும் என்பது, வகாரமிசையு மகாரங் குறுகும். (தொல்.330) என்ற சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது. `அரையளவு குறுகல் மகர முடைத்தே (நூன்மரபு 13) என முன்னர்க் கூறப்பட்ட ஒரு மொழி மகரக் குறுக்கத்துள் `போன்ம் என ஈரொற்றுடனிலையாய் னகரம் நின்று தொடர அதன் முன்உள்ள மகரம் தன் மாத்திரையிற் குறுகிக் கால்மாத்திரை யாதலை, `னகாரை முன்னர் மகாரங் குறுகும் (மொழி மரபு 52) என்பதனாற் கூறினார். அதுவேயன்றிப் புணர் மொழிக்கண் வகரம் வந்து தொடர அதன்மேல் நின்ற மகரம் குறுகுதல் உண்டென்பார், `வகாரமிசையும் மகாரங் குறுகும் என ஈண்டுக் கூறினார். (உ-ம்) தரும் வளவன் எனவும் `போன்ம் எனவும் இவ்விருவகை மகரக் குறுக்கங்களையும், ணனமுன்னும் வஃகான் மிசையுமக் குறுகும். (நன். 96) எனவரும் சூத்திரத்தால் பவணந்தியார் தொகுத்துக் கூறியுள்ளார். இனி, னகர வீற்றுள் `அழன் என்ற சொல்லின் இறுதியி லுள்ள னகரம் கெட, வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது, அழனெ னிறுதிகெட வல்லெழுத்து மிகுமே. (தொல். 354) என்பதனாற் கூறப்பட்டது. (உ-ம்) அழன்+குடம் = அழக்குடம், சாடி, தூதை, பானை எனவரும். அழன் - பிணம். 3. ஈறு கெடாது மிக்கு முடிவன : வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வரும் ய, ர, ழ மெய்யீற்றுப் பெயர்கள் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அவ்வல்லெழுத்து மிக்கு முடிவனவாகும். இம் முடிபினை, யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே. ரகார விறுதி யகார வியற்றே. ழகார விறுதி ரகார வியற்றே. (தொல். 357, 357, 362, 383) எனவரும் சூத்திரங்களால் தொல்காப்பியனார் மாட்டெறிந்து கூறியுள்ளார். (உ-ம்) நாய் + கால் = நாய்க்கால், செவி, தலை, புறம் தேர் + கால் = தேர்க்கால், செலவு, தலை, புறம் பூழ் + கால் = பூழ்க்கால், செவி, தலை, புறம் மேற்குறித்த யகாரவீற்றுள் வருமொழி வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும் என விதந்துரைக்கப்பட்ட `தாய் என்னுஞ் சொல்முன் மகனது வினையைக் கிளந்துரைக்கும் வல்லெழுத்து முதன் மொழிவரின் முற்கூறியபடி வல்லெழுத்து மிக்குமுடியும் என்பது. மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே. (தொல். 359) என்பதனாற் கூறப்பட்டது. (உ-ம்) மகன்றாய்க்கலாம், செரு, துறத்தல், பகைத்தல் எனவரும். மகன்றாய்க்கலாம் - மகன் தாயொடு நிகழ்த்திய கலகம் எனப் பொருள் விரித்துரைக்க. மகன் வினை என்றது, ஈண்டுப் பகைமேற்று என்பர் நச்சினார்க்கினியர். இனி, ரகாரவீற்றுள் ஆர், வெதிர், சார், பீர் என்ற சொற்களும், ழகாரவீற்றுள் மரப்பெயராகிய குமிழ் என்ற சொல்லும் வல்லெழுத்து வருவழி அவற்றின் கிளையெழுத்தாகிய மெல்லெழுத்து மிக்கு முடிவனவாம். இவற்றின் இயல்பினை, ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும். குமிழென் கிளவி மரப்பெய ராயிற் பீரென் கிளவியோ டோரியற் றாகும். (தொல். 363, 386) எனவரும் சூத்திரங்களால் உணர்த்துவர் தொல்காப்பியர். (உ-ம்) ஆர்+கோடு = ஆர்ங்கோடு செதிள், தோல், பூ வெதிர் +கோடு = வெதிர்ங்கோடு செதிள், தோல், பூ சார் +கோடு = சார்ங்கோடு செதிள், தோல், பூ பீர் +கோடு = பீர்ங்கோடு செதிள், தோல், பூ குமிழ் +கோடு = குமிழ்ங்கோடு செதிள், தோல், பூ எனவரும். இனி, யகரவீற்றுள் வேற்றுமைக்கண் வருமொழி வல்லெழுத்தி னோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும் மொழிகள் சில உள என்பதனை, மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே. (தொல்.360) என்பதனால் உணர்த்தினார். (உ-ம்) வேய் +குறை = வேய்க்குறை செய்கை, தலை, புறம் வேய் + குறை = வேய்ங்குறை செய்கை, தலை, புறம் ரகரவீற்றுள் மெல்லெழுத்து மிகுமெனக் குறிப்பிட்ட மொழிகளுள் `சார் என்பது நிலைமொழியாய் நின்று `காழ என்பதனோடு புணருமிடத்து முற்கூறிய வல்லெழுத்து மிக்கு முடியும் என்பது, சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். (தொல். 364) என்பதனால் உணர்த்தப்பட்டது. (உ-ம்) சார் + காழ் = சார்க்காழ் எனவரும். ழகரவீற்றுள் `பாழ் என்னுஞ் சொல்முன் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து வந்த வல்லெழுத்தினோடு அதன் கிளை யொற்றாகிய மெல்லெழுத்தும் பெற்று உறழ்ந்து முடியும் என்பது, பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே. (தொல். 387) என்பதனாற் கூறப்பட்டது. (உ-ம்) பாழ் + கிணறு = பாழ்க்கிணறு, சேரி, தோட்டம், பாடி பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு சேரி, தோட்டம், பாடி `கீழ் என்னும் ழகர வீற்றுச்சொல் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து வல்லெழுத்துப் பெற்றும் பெறாதும் உறழ்ந்து முடியும் என்பது, கீழென் கிளவியுறழத் தோன்றும். (தொல். 365) என்பதனால் விதந்து கூறப்பட்டது. (உ-ம்) கீழ் + குளம் = கீழ்க்குளம், சேரி தோட்டம், பாடி கீழ் + குளம் = கீழ்குளம், சேரி தோட்டம், பாடி ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய யரழ வீற்று வேற்றுமை முடிபுகளாக மேற்காட்டிய அனைத்தையும் நன்னூ லாசிரியராகிய பவணந்தி முனிவர், யரழ முன்னர்க் கசதப அல்வழி இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை மிகலும் இனத்தோ டுறழ்தலும் விதிமேல். கீழின்முன் வன்மை விகற்பமு மாகும். (நன். 224, 225) எனவரும் சூத்திரங்களில் தொகுத்துக் கூறியுள்ளார். 4. இயல்பாய் வருவன மூன்று திரிபும் பெறுதலின்றி இயல்பாய் முடியும் புள்ளியீற்றுச் சொற்களை ஆசிரியர் தொல்காப்பியர் பதினாறு சூத்திரங்களால் எடுத்துரைப்பர். மெய்பிறிதாதற்கு ஏற்புடைய ணளனல என்னும் நான்கீற்றுச் சொற்களுள், ணகர வீற்றுள் `ஆண் `பெண் எனவரும் விரவுப் பெயரும், ஓர் இனத்தை யுணர நின்ற `உமண் முதலிய கிளைப் பெயர்களும், `முரண் என்னும் தொழிற் பெயரும்; னகர வீற்றுள் `குயின் என்பதும், ஓர் இனத்தை யுணர நின்ற `எயின் முதலிய கிளைப் பெயர்களும்; `தான், `பேன், `கோன் எனவரும் இயற்பெயர்களும்; நெட்டெழுத்தின் பின்னர் வரும் லகார ளகார ஈற்றுட் சிலவும் திரியாது இயல்பாவனவாம். இவை இங்ஙனம் இயல்பாதலை, ஆணும் பெண்ணும் அஃறிணை யியற்கை. கிளைப்பெய ரெல்லாம் கொளத்திரி பிலவே. முரணென் றொழிற்பெயர் முதலியல் நிலையும். (தொல். 303, 307, 309) எனவும், குயினென் கிளவி இயற்கையாகும். கிளைப்பெய றெல்லாங் கிளைப்பெய ரியல. தானும் பேனும் கோனு மென்னும் ஆதிமுறை இயற்பெயர் திரிபிடன் இலவே, (தொல். 335, 338, 351) எனவும், நெடியதன் இறுதி இயல்புமா ருளவே. நெடியதன் இறுதி இயல்பா குநவும்......................................... போற்றல் வேண்டு மொழியுமா ருளவே. (தொல்.370, 400) எனவும் வரும் நூற்பாக்கள் முறையே உணர்த்தி நிற்றல் காணலாம். (உ-ம்) ஆண்கை, செவி, தலை, புறம் பெண்கை, செவி, தலை, புறம் உமண்குடி, சேரி, தோட்டம், பாடி முரண்கடிது, சிறிது, தீது, பெரிது. எனவும், குயின் குழாம், செலவு, தோற்றம், பறைவு எயின்குடி, சேரி, தோட்டம், பாடி எனவும், தான்றந்தை, பேன்றந்தை, கோன்றந்தை தான்கொற்றன், பேன்கொற்றன், கோன்கொற்றன் எனவும், பால்கடிது, சிறிது, தீது, பெரிது கோள்கடிது, சிறிது, தீது, பெரிது எனவும் வரும். ணகர, னகர, லகர, ளகர மெய்கள் வேற்றுமைக் கண் வல்லெழுத்து வருவழிச் சிலவிடங்களில் இங்ஙனம் திரியாது இயல்பாய் வருதலை, `சாதிகுழூஉப் பரண் கவண்பெய ரிறுதி இயல்பாம் வேற்றுமைக்கு (நன். 211) எனவும், குயினூன் வேற்றுமைக் கண்ணும் இயல்பே. னஃகான் கிளைப்பெயர் . ஆகும் வேற்றுமைப் பொருட்கே. தேன்மொழி மெய்வரின் இயல்பும், மரமல் எகின்மொழி இயல்பும், (நன். 216, 212, 214, 215) எனவும், குறில் செறியாலள அல்வழி. . . வலிவரின் யல்பும் .......... ......... .... ஆவன வுளபிற. (நன். 219) எனவும் வரும் சூத்திரத் தொடர்களால் ஆசிரியர் பவணந்தி முனிவர் உணர்த்தியுள்ளமை காணலாம். இனி, மிகும் எனப்பட்டவற்றுள் `தாய் என்னும் பெயரும் `அல்வழியில் வரும் யகரவீற்றுப் பெயர்களும் மிகாது இயல்பாம் என்பது தாயென்கிளவி இயற்கை யாகும். அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப. (தொல். 358, 361) எனவரும் சூத்திரங்களால் உணர்த்தப்பட்டது. (உ-ம்) தாய்கை, செவி, தலை, புறம். எனவும், நாய்கடிது, சிறிது, தீது, பெரிது. அவ், இவ், உவ், என்னும் சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம் இடைக்கணமும் உயிர்க்கணமும் வந்து புணரின் இயல்பாம் என்பது, ஏனவை புணரின் இயல்பென மொழிப (தொல். 381) என்பதனாற் புலனாம் (உ-ம்) அவ்யாழ், வட்டு, அடை, எனவரும். இனி, குறுகலுந் திரிதலும் பெறுதற்கு ஏற்புடையவற்றுள் அல்வழியில் வரும் `எல்லீரும், `தாம், `நாம், `யாம் எனவரும் மகரவீற்றுச் சொற்களும்-, `தான், `யான் எனவரும் னகரவீற்றுச் சொற்களும்-, நூறாயிரம் தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன வற்றோடும் ஏனை உயிரீற்றுச் சொற்களோடும் புணரும் `ஏழ் என்னும் ழகரவீற்று எண்ணுப் பெயரும்-, உயிர் முதன் மொழி களோடும் யகர வகர முதன்மொழிகளோடும் புணரும் வகரவீற்றுச் சுட்டுப் பெயர்களும் எவ்வகைத் திரிபுயின்றி இயல்பாய் முடிவன. இவை இயல்பாதலை, அல்லது கிளப்பின் இயற்கை யாகும். வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலும் தோற்றமில்லை யென்மனார் புலவர். (தொல். 321, 353) எனவும், நூறூர்ந்து வரூஉம் கிளவிக்குக் கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே. ஐ அம் பல் என வரூஉம் இறுதி அல்பெய ரெண்ணினும் ஆயியல் நிலையும். ஏனவை புணரின் இயல்பென மொழிப (தொல். 392, 393, 383) எனவும் வரும் சூத்திரங்கள் விரித்துரைப்பன. (உ-ம்) எல்லாரும்+குறியர் = எல்லாருங்குறியர், சிறியர், தீயர், பெரியர் (வந்தார், யாத்தார், அடைந்தார்) எல்லீரும்+குறியீர் = எல்லீருங்குறியீர், சிறியீர், தீயீர், பெரியீர் (வந்தீர், யாத்தீர், அடைந்தீர்) தாம்+குறியர் = தாங்குறியர், சிறியர், தீயர், பெரியர். (வந்தார், யாத்தார், அடைந்தார்) தாம்+குறிய = தாங்குறிய, சிறிது, தீய, பெரிய (வந்த, யாத்த, அடைந்த) நாம்+குறியம் = நாங்குறியம், சிறியம், தீயம், பெரியம் யாம்+குறியம்= யாங்குறியேம், சிறியேம், தீபேம், பெரியேம். தான்+குறியன்=தான்குறியன், சிறியன், தீயன், பெரியன் யான்+குறியேன்=யான்குறியேன், சிறியேன், தீயேன், பெரியேன். எனவும், ஏழ்நூறாயிரம், ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம், ஏழாம்பல் ஏழகல், ஏழுழக்கு, ஏழொன்று, ஏழிரண்டு எனவும் வரும். 5. சாரியை பெறுவன ஆண்மரக் கிளவி அரைமர வியற்றே. எகின்மர மாயின் ஆண்மர வியற்றே. பீரென் கிளவி அம்மொடுஞ் சிவணும். பூல்வே லென்றா ஆலென் கிளவியோ டாமுப் பெயர்க்கும் அம்மிடை வருமே. குமிழென் கிளவி மரப்பெய ராயின் பீரென் கிளவியோ டோரியற் றாகும். (தொல். 304, 336, 365, 375, 385) என வரும் சூத்திரங்களால் முறையே ஆண், எகின் பீர், பூல் வேல். ஆழ், குமிழ் என வரும் பெயர்ச்சொற்கள் அம் சாரியை பெறும் என விதித்தார். இவற்றுள் பீர் - பீர்க்கு என்னும் கொடி. பூல் - பூலா என வழங்கும் செடி. ஏனையவை மரங்களாகும். (உ-ம்) ஆண்+கோடு= ஆணங்கோடு, செதிள், தோல், பூ. எகின்+கோடு= எகினங்கோடு, செதிள், தோல், பூ. பீர்+கோடு= பீரங்கோடு, செதிள், தோல், பூ. பூல்+கோடு= பூலங்கோடு, செதிள், தோல், பூ. வேல்+கோடு= வேலங்கோடு, செதிள், தோல், பூ. ஆல்+கோடு= ஆலங்கோடு, செதிள், தோல், பூ. குமிழ்+கோடு= குமிழங்கோடு, செதிள், தோல், பூ. எனவரும். வேற்றுமைக்கண் வரும் `ஈம், `கம் என்ற மகர வீற்றுச் சொற்கள் இரண்டும், `கோல் என்பதனோடு புணரும் `தாழ் என்னும் சொல்லும், `தமிழ் என்னுஞ் சொல்லும் ஆகிய ழகரவீற்றுச் சொற்கள் இரண்டும் அக்குச்சாரியை பெற்று முடிவன. இச்சாரியைப் பேற்றினை, வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும் தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை. தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருதல் உரித்து மாகும். தமிழென் கிளவியும் அதனோ ரற்றே. (தொல். 329, 384, 385) எனவரும் சூத்திரங்களால் விதிப்பர் தொல்காப்பியர். (உ-ம்) ஈம்+குடம் = ஈமக்குடம், சாடி, தூதை, பானை கம்+குடம் = கம்மக்குடம், சாடி, தூதை, பானை தாழ்+கோல் = தாழக்கோல், சாடி, தூதை, பானை தமிழ்+கூத்து = தமிழ்க்கூத்து, சேரி, தோட்டம், பள்ளி. எனவரும். ஈம், கம், தமிழ், தாழ் எனவரும் இச்சொற்கள் சாரியை பெற்று முடிவதனை, ஈமும், கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே. (நன். 223) எனவும், தமிழவ் வுறவும் பெறும் வேற்றுமைக்கே தாழுங் கோல் வந்துறுமேல் அற்றே. (நன். 225) எனவும் வருஞ் சூத்திரங்களால் நன்னூலாசிரியர் விரித்துக் கூறியுள்ளார். தொல்காப்பியனார் கொண்ட `அக்கு என்னும் சாரியையைப் பவணந்தியார் பின்னுள்ள ஒன்றும் உயிர்மெய்யும் கெடுத்து அகரச்சாரியையாகக் கொண்டமை இங்கு நினைக்கத் தகுவதாம். வெயில், இருள் என்னும் லகர ளகரவீற்றுச் சொற்கள் இரண்டும் அத்துச் சாரியையும் இன் சாரியையும் பெற்று முடியும், இச்சாரியைப் பேற்றினை, வெயிலென் கிளவி மழையியல் நிலையும் இருளென் கிளவி வெயிலியல் நிலையும். (தொல். 377, 402) எனவரும் மாட்டேற்றுச் சூத்திரங்கள் விதித்தல் காணலாம். (உ-ம்) வெயில்+கொண்டான்=வெயிலத்துக்கொண்டான். வெயில்+கொண்டான்=வெயிலிற்கொண்டான். இருள்+கொண்டான்=இருளத்துக்கொண்டான். இருள்+கொண்டான்= இருளிற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான். என வரும். மகரவீற்று நாட்பெயர்க்கிளவி இறுதி மகரவொற்றுக் கெட்டு, இகரவீற்று நாட்பெயர் போன்று ஆன்சாரியையும் அவ் ஆன்சாரியை மேல் அத்துச் சாரியையும் பெற்று முடியும். இதனைக் கூறுவது, நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர். (தொல். 331) எனவரும் சூத்திரமாகும். (உ-ம்) மகம்+கொண்டான் = மகத்தாற்கொண்டான், சென்றான், தந்தான், போயினான். எனவரும், இதன்கண் `அத்தும் என்பதில் உம்மையை `அத்து ஆன்மிசை யும் வரைநிலையின்று என மாறிக் கூட்டி, அத்துச்சாரியை மேலும் பிறசாரியை மேலும் வருதல் நீக்கும் நிலைமையின்று எனப் பொருள் கூறி, மகம்+ஞான்றுகொண்டான் = மகத்து ஞான்று கொண்டான். சென்றான், தந்தான் போயினான், என உதாரணங் காட்டுவர் நச்சினார்க்கினியர். ஆகாயத்தை யுணர்த்தும் `விண் என்ற ணகர வீற்றுப் பெயர் செய்யுளில் வருங்கால் அதன்முன் வினைச்சொல் வருமொழியாக வருமிடத்தும், தனித்தும் அடையடுத்தும் வந்த ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர் பிற எண்களோடு புணருமிடத்தும் அத்துச் சாரியை பெற்று முடியும் என்பது, விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் உண்மையு முரித்தே அத்தென் சாரியை செய்யுள் மருங்கிற் றொழில்வரு காலை. அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி ஒத்த வெண்ணு முன்வரு காலை. அடையொடு தோன்றினும் அதனோரற்றே. (தொல். 305, 317, 318) எனவரும் சூத்திரங்களாற் புலனாம். (உ-ம்) விண்ணத்துக் கொட்கும் வண்ணத்தமரர் எனவும், ஆயிரத்தொன்று, பதினாயிரத்தொன்று, நூறாயிரத்தொன்று எனவும் வரும். 6. உருபியல் விதிகள் : மகரவீற்றுள் `எல்லாரும் என்னும் படர்க்கைப் பெயரும், `எல்லீரும் என்னும் முன்னிலைப் பெயரும், கிளைத் தொடர்ச்சிப் பொருளை யுடையனவாய் நெடுமுதல் குறுகி முடியும் தாம், நாம், யாம் என்னும் பெயரும், சாரியை பெறுவன ஈறுகெட்டு இடையிலும் இறுதியிலும் சாரியை பெற்றும், நெடுமுதல் குறுகுவன நெடுமுதல் குறுகியும் உருபு புணர்ச்சிக்கண் முடித்தவாறே முடியும் என்பதனை, படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் வேற்றுமை யாயின் உருபியல் நிலையும் மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. (தொல். 320) என்பதனால் மாட்டெறிந்து கூறினார். (உ-ம்) எல்லாரும் + கை = எல்லார் தங்கையும், எல்லீரும்+கை= எல்லீர் நுங்கையும், செவியும், தலையும், புறமும். எனவும், தம்+கை=தங்கை, செவி, தலை, புறம். நம்+கை=நங்கை செவி, தலை, புறம். எம்+கை=எங்கை செவி, தலை, புறம். எனவும் வரும். `எல்லாம் என்னும் விரவுப் பெயர், அல்வழியினும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியினும் உருபு புணர்ச்சியின் இயல்பிலே நின்று வற்றுச் சாரியையும் இறுதி `உம் என்னும் சாரியையும் பெறும். அப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சி யல்லாவிடத்துச் சாரியை பெறுதல் நில்லாததாய் முடியும். எல்லாம் என்பது அல்வழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடி யினும் குற்றமில்லை. இவ்விதிகளை, அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும் வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது. மெல்லெழுத்து மிகினும் மானமில்லை. (தொல். 322, 323) என்பவற்றால் ஆசிரியர் விதித்துள்ளார். உருபியல் நிலையும் என்ற மாட்டேறு, அல்வழிக் கண் உம்முப்பெற்று நிற்றலும், பொருட் புணர்ச்சிக்கண் வற்றும் உம்மும் பெற்று நிற்றலும் உணர்த்திற்று, என்பர் நச்சினார்க்கினியர். (உ-ம்) எல்லாம்+குறிய=எல்லாக்குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும். எனவும், எல்லாம் + கோடு = எல்லாவற்றுக்கோடும், செவியும் தலையும், புறமும் (ஈண்டுச் சாரியை பெற்றவழி, மகரம் வற்றின்மிசை ஒற்றாதலாற் கெட்டது) எல்லாம் + குறிய= எல்லாங் குறியவும், சிறியவும், தீயவும், பெரியவும் எனவும் வரும். `எல்லாம் என்னும் பெயர், உயர்திணையாய் நிற்குமிடத்து இடையே `நம் என்னும் சாரியையும் இறுதியில் `உம் என்னும் சாரியையும் பெற்று உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் முடியும் இதனை, உயர்திணையாயின் உருபியல் நிலையும். (தொல். 324) எனவரும் சூத்திரத்தால் உணர்த்தினார். அவ், இவ், உவ், என்னும் வகரவீற்றுச் சுட்டுப் பெயர்கள் உருபு புணர்ச்சியிற்போலப் பொருட் புணர்ச்சியிலும் வற்றுச் சாரியை பெற்று முடிவன. இதனைக் கூறுவது, சுட்டுமுத லாகிய வகர விறுதி முற்படக் கிளந்த உருபியல் நிலையும். (தொல். 378) எனவரும் சூத்திரமாகும். (உ-ம்) அவ்+கோடு=அவற்றுக்கோடு, செவி, தலை, புறம் இவ்+கோடு=இவற்றுக்கோடு, செவி, தலை, புறம் உவ்+கோடு=உவற்றுக்கோடு, செவி, தலை, புறம் எனவரும். ஏழென்னும் எண்ணுப்பெயர், உருபோடு புணருமிடத்து அன்சாரியை பெற்று முடிதல்போல, ஈண்டுப் பொருட் புணர்ச்சி யினும் அன்சாரியை பெற்று முடியும் என்பது, ஏழென் கிளவி யுருபியல் நிலையும். (தொல். 388) என்பதனால் உணர்த்தப்பட்டது. (உ-ம்) ஏழ்+காயம்=ஏழன்காயம், சுக்கு, தோரை, பயறு எனவரும். ஏழன்காயம் - ஏழனாற் கொண்ட காயம் என விரியும். `தான் என்னும் விரவுப்பெயரும், `யான் என்னும் உயர்திணைப் பெயரும் உருபியலிற் கூறியபடி, தான் என்பது நெடுமுதல் குறுகித் `தன் என்றும் `யான் என்பது ஆகாரம் எகரமாய் யகரங் கெட்டு `என் என்றும் திரிந்து முடியும். இத்திரிபினை யுணர்த்துவது தான்யான் எனும்பெயர் உருபியல் நிலையும். (தொல். 352) எனவரும் சூத்திரமாகும். (உ-ம்) தான்+கை=தன்கை, செவி, தலை, புறம் யான்+கை=என்கை, செவி, தலை, புறம். இவ்வாறு வேற்றுமையுருபு புணர்தற்கண் சொல்லப்பட்ட விதிகள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஒக்கும் என்பதனை, உருபின் முடிபவை ஒக்குமப் பொருளினும். (நன். 238) எனவரும் சூத்திரத்தால் நன்னூலார் தழுவிக் கொண்டார். 7. திரிந்து முடியும் ஈறுகள் ணகார ளகார வீற்றுப் பெயர்கள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து ஈற்றிலுள்ள ணகார ளகாரங்கள் டகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை, ணகார விறுதி வல்லெழுத் தியையின் டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. ளகார விறுதி ணகார வியற்றே. (தொல். 302, 396) எனவருஞ் சூத்திரங்களால் ஆசிரியர் குறித்துள்ளார். (உ-ம்) மண்+குடம்=மட்குடம், சாடி, தூதை, பானை எனவும் முள்+குறை=முட்குறை, சிறை, தலை, புறம் எனவும் வரும். இனி, னகார லகார வீற்றுப் பெயர்கள், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வல்லெழுத்து வருமொழியாய் வந்து இயைபின் றகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை உணர்த்துவன, னகார விறுதி வல்லெழுத் தியையின் றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே. லகார விறுதி னகார வியற்றே. (தொல். 331, 356) எனவரும் நூற்பாக்கள். (உ-ம்) பொன்+குடம்=பொற்குடம்,சாடி,தூதை, பானை எனவும், கல்+குறை=கற்குறை, சிறை, தலை, புறம் எனவும் வரும். மேற்குறித்த ணகர ளகர, னகர லகர வீற்றுத் திரிபினை நன்னூலாசிரியர். `ணனவல்லினம் வரட் டறவும் எனவும், லளவேற்றுமையிற் றடவும். (நன். 209, 227) எனவும் வரும் சூத்திரத் தொடர்களால் நிரனிறையே குறித்துள்ளார். `எண் எனவரும் பெயர், எண்ணாகிய வரையறைப் பொருண்மையினை யுணர்த்தாது, `எள் என்னும் உணவுப் பொருளை யுணர்த்திய நிலையில், அப்பெயரிறுதி ணகரம் வல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து அல்வழியிலும் வேற்றுமையிற் போல டகரமாய்த் திரிதலும் உண்டு. இத்திரிபினை, வேற்றுமை யல்வழி எண்ணெ னுணவுப்பெயர் வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே. (தொல். 308) என்ற சூத்திரத்தால் ஆசிரியர் குறித்துள்ளார். (உ-ம்) எண்+கடிது=எண்கடிது, சிறிது, தீது, பெரிது என இயல்பாய் வருதலேயன்றி, எட்கடிது, சிறிது, தீது, பெரிது எனத் திரிந்தும் வந்தமை காண்க. இவ்வுறழ்ச்சி முடிபினை, விளக்குவது, உணவெண்சாண்பிற டவ்வாகலுமாம் அல்வழியும்மே (நன். 211) என்ற நன்னூற் சூத்திரம். நெல், செல், கொல், சொல், என்னும் லகரவீற்றுச் சொற்கள் நான்கும் வல்லெழுத்து வருவழி அல்வழியிலும் வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடிவன. இத்திரிபினை, நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல. (தொல். 371) என்பதனாற் கூறினார். (உ-ம்) நெல்+காய்த்தது=நெற்காய்த்தது, சிறிது, தீது, பெரிது. செல்+ கடிது=செற்கடிது, சிறிது, தீது, பெரிது. கொல்+கடிது=கொற்கடிது, சிறிது, தீது, பெரிது. சொல்+கடிது=சொற்கடிது, சிறிது, தீது, பெரிது, எனவரும் இத்திரிபினை, நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் அல்வழி யானும் றகரமாகும். (நன். 232) என்ற சூத்திரத்தாற் குறித்தார் நன்னூலார். இனி, அல்வழிக்கண் வரும் லகர ளகார வீற்றுச் சொற்கள் இயல்பாயும் ஒருகால் றகர டகரமாகத் திரிந்தும் வருதலாகிய உறழ்ச்சி முடிபினைப் பெறுவன என்பது, அல்வழியெல்லாம் உறழென மொழிப. அல்வழியெல்லாம் உறழென மொழிப. (தொல். 368, 398) எனவரும் சூத்திரங்களாற் புலனாம். (உ-ம்) கல்குறிது, கற்குறிது முள்கடிது, முட்கடிது, சிறிது, தீது, பெரிது, எனவரும். இவ்வுறழ்ச்சி முடிபினை நன்னூலார். `லளவேற்றுமையிற்றடவும் அல்வழி அவற்றோடுறழ்வும் வலிவரினாம். (நன். 227) என்ற தொடராற் குறித்தார். னகரவீற்றுட் சில சொற்கள் இங்ஙனம் அல்வழியின் உறழாது வேற்றுமையிற் போன்று திரிந்து முடிவன உள என்பது, நெடியத னிறுதி இயல்பா குநவும் வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும் போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே. (தொல்.400) என்ற சூத்திரத்தின் இரண்டாமடியிற் குறிக்கப்பட்டது. (உ-ம்) `புட்டேம்பப் புயன் மாறி (பட்டினப்பாலை-5) என ளகரம் அல்வழியில் திரிந்தமை காண்க. அவ், இவ், உவ் என்ற சுட்டுப் பெயர்களின் ஈற்று வகரம் வருமொழி முதற்கண் மெல்லெழுத்து முதன்மொழி வரின் வந்த மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும். (உ-ம்) அவ்+ஞாண்=அஞ்ஞாண். னகரவீற்றுள் வரும் மன், சின், ஆன், ஈன், பின், முன் என்ற சொற்களும், செயின் என்னும் வாய்பாட்டு வினையெச்சமும், அவ்வயின் இவ்வயின் உவ்வயின் எல்வயின் என ஏழாம் வேற்றுமை யிடப்பொருளுணர்த்தி வரும் இடைச்சொற்களும் ஆகியவற்றின் இறுதி னகரம் றகரமாகத் திரியும் என்பது, மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் அன்ன இயல என்மனார் புலவர். சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப. (தொல். 333, 334) எனவரும் சூத்திரங்களால் விளக்கப்பட்டது. (உ-ம்) `அதுமற் கொண்கன் றேர் `காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை (அகம். 7) ஆன்+கொண்டான்=ஆற்கொண்டான், ஈன்+கொண்டான்=ஈற்கொண்டான், பின்+கொண்டான்=பிற்கொண்டான், முன்+கொண்டான்=முற்கொண்டான், சென்றான், தந்தான், போயினான், வரின்+கொள்ளும் = வரிற்கொள்ளும், செல்லும், தரும், போம். அவ்வயின்+கொண்டான்=அவ்வயிற்கொண்டான், இவ்வயின்+கொண்டான்=இவ்வயிற்கொண்டான், உவ்வயின்+கொண்டான்=உவ்வயிற்கொண்டான், எவ்வயின்+கொண்டான்=எவ்வயிற்கொண்டான், சென்றான், தந்தான், போயினான், எனவரும். `மீன் என்னுஞ் சொல் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும் என்பது, மீனென்கிளவி வல்லெழுத் துறழ்வே. (தொல்.339) என்பதனாற் புலனாம். (உ-ம்) மீன் கண் = சினை, தலை, புறம். மீற் கண் = சினை, தலை, புறம். எனவரும். இவ்வுறழ்ச்சி முடிபு வேற்றுமைப் புணர்ச்சிக் கண் நிகழ்வதென்பது, மீன்றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே. (நன். 213) என்னும் நன்னூற் சூத்திரத்தால் விளக்கப் பெற்றது. இனி, லகர ளகர வீற்றுச் சொற்கள், தகர முதன் மொழி வருமிடத்து ஈற்றிலுள்ள லகர ளகரங்கள் முறையே றகர டகர மாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகவும் திரிந்து முடிவன. இத்திரிபு, தகரம் வரும் வழி ஆய்தம் நிலையலும் புகரின் றென்மனார் புலமையோரே. ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே தகரம் வரூஉங் காலை யான. (நன். 369, 399) எனவரும் இவ்விரு சூத்திரங்களாலும் முறையே விரித்துரைக்கப் பெற்றமை காணலாம். (உ-ம்) கல்+தீது=கஃறிது, கற்றீது. எனவும், முள்+தீது=முஃடீது, முட்டீது. எனவும் வரும். இங்ஙனம் ஆய்தமாகத் திரிதற்குரியவை தனிக்குறிலின் பின்னின்ற லகர ளகரங்கள் என்பதும், இத்திரிபு அல்வழிப் புணர்ச்சியில் தகரமுதன் மொழி வருமிடத்து நிகழும் என்பதும், குறில்வழி லளத்தவ் வணையின் ஆய்தம் ஆகவும் பெறூஉம் அல்வழியானே. (நன். 228) எனவரும் நன்னூற் சூத்திரத்தாற் புலனாம். இனி, அல்வழிக்கண் வரும் மகரவீறு, வல்லெழுத்து வருமிடத்து அதற்கேற்ற மெல்லெழுத்தாய்த் திரியும் என்பது, அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும். (தொல். 314) என்ற சூத்திரத்தால் கூறப்பட்டது. (உ-ம்) மரங்குறிது, சிறிது, தீது, பெரிது எனவரும். லகர ளகர வீற்றுச் சொற்கள், மெல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து லகரம் னகரமாகவும், ளகரம் ணகர மாகவும் திரிந்து முடிவன. இவற்றின் திரிபினை, மெல்லெழுத் தியையின் னகார மாகும். மெல்லெழுத் தியையின் ணகாரமாகும். (தொல். 367, 397) எனவரும் இவ்விரு சூத்திரங்களாலும் நிரலே குறித்தார் தொல்காப்பியனார். (உ-ம்) கல்+ஞெரி=கண்ஞெரி, நுனி, முரி, எனவும், முள்+ஞெரி=முண்ஞெரி, நுனி, முரி எனவும் வரும். இத்திரிபுகளை இவ்வீறுகளின் வேற்றுமை இறுதிக் கண் அல்வழியது தொடக்கத்திற் சிங்க நோக்காக ஆசிரியர் வைத்ததால் இம்முடிபு அல்வழிக்கும்கொள்ளப்படும் என்பர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். (உ-ம்) கல்+ஞெரிந்தது=கன்ஞெரிந்தது, நீண்டது, மாண்டது. முள்+ஞெரிந்தது=முண்ஞெரிந்தது, மீண்டது, மாண்டது. எனவரும். வேற்றுமை அல்வழியாகிய இரு வழிகளிலும் வரும் இத்திரிபுகளை, வள (வேற்றுமையிற்றடவும் அல்வழி அவற்றோடுறழ்வும் வலிவரினாம்) மெலி மேவி னணவும் (இடைவரி னியல்பும்) ஆகும் இருவழி யானுமென்ப. (நன். 227) என்பதனால் நன்னூலார் தொகுத்துக் கூறியுள்ளார். `அகம் என்ற மகரவீற்றுச் சொல்லின் முன் `கை என்பது வருமொழியாய் வரின், நிலை மொழியில் முன்னின்ற அகரம் மட்டும் கெடாது நிற்ப, அதன்முன் உள்ள ககர உயிர்மெய்யும் இறுதி மகரமெய்யும் கெடுதல் நீக்கத்தக்கது அன்றெனவும், அவை அங்ஙனம் கெட்டவழி அவ்விடத்து வருமொழி வல்லெழுத்திற்கு ஏற்ற மெல்லெழுத்து மிக்குமுடியும் எனவும் கூறுவர் தொல்காப்பியர். அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே முதனிலை யொழிய முன்னவை கெடுதலும் வரைநிலை யின்றே ஆசிரி யர்க்கு மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான. (தொல். 315) எனவரும் சூத்திரம் இத்திரிபினைக் கூறுவதாகும். (உ-ம்) அகம்+கை=அங்கை என வரும். இச்சூத்திரத்தில் `கெடுதலும் என்ற உம்மையால், ககர வுயிர்மெய்யும் மகர வொற்றும் கெடாது நின்று, ஈற்றிலுள்ள அம்மகரம், அல்வழியெல்லாம் மெல்லெழுத்தாகும் (தொல். எழுத். 314) என்ற விதிப்படி ஙகரமாகத் திரிந்து `அகங்கை எனவும் வரும் என்பது இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகளாற் புலனாம். `அகம் என்ற சொல்முன்னர்க் `கை என்ற சொல்லேயன்றிச் `செவி என்பது வரினும் நிலைமொழியிடையிலுள்ள ககர வுயிர் மெய்யும் மகர வொற்றும் கெடும் என்பர் பவணந்தியார். அகமுனர்ச் செவிகை வரின் இடையன கெடும். (தொல். 222) என்பது நன்னூலார். (உ-ம்) அகம்+செவி=அஞ்செவி எனவரும். `அஞ்செவி நிறைய மந்திர மோதி என்பது புறப்பொருள் வெண்பாமாலை. இவ்வாறே `அகம் என்பதன்முன் `சிறை என்பது வரினும் இடையன கெட்டு `அஞ்சிறைத் தும்பீ (குறுந்தொகை-2) என வருதலையும் இச்சூத்திர விதியால் தழுவிக்கொள்வர் சங்கர நமச்சிவாயர். `நும் என்னும் மகரவீற்றுச் சொல், அல்வழிக்கண் கூறுங்கால், அச்சொல்லில் நகர ஒற்றின்மேல் நின்ற உகரங்கெட, அவ்வொற்றின் மேல் ஈகாரம் ஊர்ந்து நீம் என நின்று, அவற்றின் இடையிலே ஓர் இகரம் வந்து நிலைபெற்று நீயிம் என ஆகி, இறுதியிலுள்ள மகர மெய் கெட அவ்விடத்து ரகர மெய்யொன்று வந்து நீயிர் எனத் திரிந்து முடியும் என்பர் தொல்காப்பியர். இத்திரிபினை, அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வயின் ஈவர `இ இடை நிலைஇ ஈறுகெட ரகரம் நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பான் மொழிவயின் இயற்கை யாகும். (தொல். 326) எனவரும் சூத்திரத்தில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். (உ-ம்) நீயிர் குறியீர், சிறியீர், தீயீர், பெரியீர். எனவரும் `நும் என்ற சொல்லே நீயிர் எனத் திரிந்தது என்னுந் தொல்காப்பியர் கருத்துக்கு மாறாக `நீர் என்ற சொல்லே `நும் எனத்திரிந்தது எனப் பவணந்தியார் கூறியுள்ளமை முன்னர்க் (நன்னூல் 247-ஆம் சூத்திரம்) குறிக்கப்பெற்றது. மகர வீற்றின்முன் அகர முதன்மொழியும் ஆகார முதன் மொழியும் வருமொழியாய் வருங்காலத்து மகர ஒற்றின்மேல் நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து, நீடாமையும் உரித்து என்பது, அகர ஆகாரம் வரூஉங் காலை யீற்றுமிசை அகரம் நீடலு முரித்தே. (தொல். 311) எனவரும் சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது. (உ-ம்) மரம்+அடி=மரஅடி குளம்+ஆம்பல்=குளாஅம்பல் எனவரும். மேல் (312-ல்)`செல்வழியறிதல் வழக்கத்தான என்பதனாற் `குளாஅம்பல் என்புழி ஆகாரத்தை அகர மாக்குக என விதிப்பர் நச்சினார்க்கினியர். `தேன் என்னுஞ் சொல், வல்லெழுத்து முதன் மொழி வருமிடத்து `மீன் என்பதற்குக் கூறிய இயல்பும் திரிபுமாகிய உறழ்ச்சி நிலையை யொத்து முடிதலும், இறுதி னகரங் கெட்டு வருமொழி வல்லெழுத்து மிகுதலும் அதன் இனமாகிய மெல்லெழுத்து மிகுதலும், மெல்லெழுத்து முதன்மொழி வருமிடத்து இறுதி னகரவொற்றுக் கெட்டும் கெடாதும் உறழ்ந்து முடிதலும் பெறும் என்பதனை, தேனென் கிளவி வல்லெழுத் தியையின் மேனிலை யொத்தலும் வல்லெழுத்து மிகுதலும் ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே வல்லெழுத்து மிகுவழி இறுதி யில்லை. மெல்லெழுத்து மிகினு மான மில்லை. மெல்லெழுத்து தியையின் இறுதியோ டுறழும். (தொல். 340, 341, 342) (உ-ம்) தேன்+குடம்=தேன்குடம், சாடி, தூதை, பானை தேன்+குடம்=தேற்குடம், சாடி, தூதை, பானை தேன்+குடம்=தேக்குடம், சாடி, தூதை, பானை தேன்+குடம்=தேங்குடம், சாடி, தூதை, பானை எனவும், தேன்+ஞெரி=தேன்ஞெரி, நுனி, மொழி தேன்+ஞெரி=தேஞெரி, நுனி, மொழி எனவும் வரும். ஆசிரியர் தொல்காப்பியனார் கூறிய இம்முடிபுகளை, தேன்மொழி மெய்வரின் இயல்பும், மென்மை மேவின் இறுதி யழிவும், வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமாம் இருவழி (நன். 214) எனவரும் சூத்திரத்தால் பவணந்தியார் தொகுத்துக் கூறினார். இனி, `தேன் என்னும் இச்சொல் `இறால் என்னும் வருமொழி யோடு புணருமிடத்து, நிலைமொழியின் னகரம் கெடாது நின்று இயல்பாய் முடிதலும், இறுதி னகரம் கெட்டவழி ஈரொற்றான தகரம் மிகப்பெறுதலும் உண்டு இம்முடிபு, இறாஅற் றோற்றம் இயற்கை யாகும். ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. (தொல். 343, 344) எனவரும் சூத்திரங்களாற் கூறப்பெற்றுள்ளமை காணலாம். `ஒற்றுமிகு தகரம் என்றதனால் தகரம் ஈரொற்றாய் மிகும் என்பது புலனாம். (உ-ம்) தேன்+இறால்=தேத்திறால் எனவும் தேனிறால் எனவும் வரும். னகரவீற்று விரவுப்பெயராகிய சாத்தன், கொற்றன் முதலிய இயற்பெயர்முன்னர்த் `தந்தை என்னும் முறைப்பெயர் வருமொழியாய் வரின், தந்தை என்னும் பெயரின் முதற்கண் நின்ற தகரஒற்றுக்கெட அதன் மேல் ஏறிநின்ற அகரம் கெடாது நிற்கும். நிலைமொழியாய் நின்ற இயற்பெயர் இறுதியாகிய `அன் என்பதன் கண் அகரம், தான் ஏறி நின்ற மெய்யை யொழித்து னகரத்துடன் கெட்டு முடியும் என்பர் ஆசிரியர். இம் முடிபினை, இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட அகரம் நிலையும், மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே. (தொல். 347) என்ற சூத்திரம் தெளிவாகக் குறித்தல் காணலாம். (உ-ம்) சாத்தன்+தந்தை=சாத்தந்தை கொற்றன்+தந்தை=கொற்றந்தை எனவரும் முதற்கண் மெய் என்றதனால், சாத்தன் றந்தை, கொற்றன்றந்தை, என்னும் இயல்பு முடிபுங் கொள்க என்பர் இளம்பூரணர். முற்கூறிய இயற் பெயர்களுள், ஆதன், பூதன் என்னும் இரண்டும் நிலைமொழியாய் நின்று வருமொழியாகிய `தந்தை என்னும் முறைப்பெயரோடு புணருங்கால், நிலைமொழி யீற்றிலுள்ள `அன் கெடுதலும், வருமொழி முதலிலுள்ள தகரவொற்றுக் கெடுதலும் என முற்கூறிய செய்கைகளுடனே நிலைமொழிப் பெயரில் `அன் கெட நின்ற தகரவொற்றும் வருமொழி முதலில் தகர வொற்றுக்கெட நின்ற அகர வுயிரும் ஒரு சேரக்கெடும் என்பது, ஆதனும் பூதனுங் கூறிய இயல்பொடு பெயரொற் றகரந் துவரக் கெடுமே. (தொல். 348) என்ற சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது. (உ-ம்) ஆதன் + தந்தை = ஆந்தை பூதன் + தந்தை = பூந்தை எனவரும். மேற்கூறிய இயற்பெயர்கள், சிறப்புப் பண்பினை அடை மொழியாகப் பெற்று வருங்கால் முற்கூறிய இருவகைச் செய்கையும் பெறாது இயல்பாய் முடிவனவாம். இங்ஙனம் இயல்பாதலை, சிறப்பொடு வருவழி இயற்கை யாகும். (தொல். 349) என்பதனாற் குறித்தார் ஆசிரியர். (உ-ம்) பெருஞ்சாத்தன்+தந்தை=பெருஞ்சாத்தன்றந்தை பெருங்கொற்றன்+தந்தை=பெருங்கொற்றன்றந்தை எனவரும். மேற்கூறிய இயற்பெயர்களின் முன், இன்னாற்கு மகன் இன்னான் என மக்கள் முறைப்பெயர் வந்து கூடுமிடத்து, நிலைமொழியாகிய இயற்பெயரீற்றில் உள்ள அன் தான் ஏறிய மெய்யையொழித்துக் கெடும்வழி `அம் சாரியை வந்து நிற்றலும் உரியதாகும். இச்சாரியைப் பேற்றினை, அப்பெயர் மெய்மொழித் தன்கெடு வழியும் நிற்றலும் உரித்தே அம்மென் சாரியை மக்கள் முறைதொகூஉ மருங்கி னான. என்ற சூத்திரத்தால் ஆசிரியர் குறித்துள்ளார். (உ-ம்) கொற்றன்+கொற்றன்=கொற்றங்கொற்றன் சாத்தன்+கொற்றன்= சாத்தங்கொற்றன் என நிலைமொழியீற்று `அன் கெட்டு `அம் சாரியை பெற்றன. கொற்றங்கொற்றன் - கொற்றனுக்கு மகனாகிய கொற்றன் எனப் பொருள்படும். `முன் என்னுஞ்சொல் நிலைமொழியாய்நிற்க, அதன் முன் `இல் என்பது வருமொழியாய் வரின், அச்சொல்லின் மேலே றகரமெய் ஒன்று தோன்றி நின்று முடிதல், தொன்றுதொட்டு மருவிவந்த இலக்கண முடிபென்பர் ஆசிரியர். முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் இல்லென் கிளவிமிசை றகரம் ஒற்றல் தொல்லியன் மருங்கின் மரீஇய மரபே. (தொல். 355) எனவரும் சூத்திரம் இம்மரூஉ முடிபினைக் குறிப்பதாகும். (உ-ம்) முன் +இல் = முன்றில் எனவரும். `பொன் என்னும் னகரவீற்றுச் சொல் செய்யுளிற் பயிலுங்கால், தன் இறுதியாகிய னகரம் கெடாநிற்க அதன் முன்னர் லகர வுயிர்மெய்யும் மகரவொற்றும் முறையே வந்து `பொலம் எனத் திரிந்து முடிதல் உண்டு. பொன்னென் கிளவி யீறுகெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கிற் றொடரிய லான (தொல். 356) என்ற சூத்திரத்தால் இத்திரிபினைக் குறிப்பிடுவர் ஆசிரியர். (உ-ம்) `பொலஞ் சுடராழி பூண்டதேரே எனவரும். `இல் என்னும் லகரவீற்றுச்சொல், இருப்பிடமாகிய மனையை யுணர்த்தாது ஒரு பொருளினது இல்லாமையை உணர்த்துமிடத்து, அதன் முன் இடையே ஐகாரம் வருதலும், அவ்வழி வல்லெழுத்து மிகுதலும், இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், (முற்கூறிய வண்ணம் வல்லெழுத்து மிகும்படி) இடையே ஆகாரம் வந்து முடிதலும் ஆகிய இவற்றைத் தன் முடிபாக உடையதாகும். இம் முடிபுகளை, இல்லென் கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் ஐயிடை வருதலும் இயற்கை யாதலும் ஆகாரம் வருதலும் கொளத்தகு மரபின் ஆகிட னுடைத்தே. (தொல். 373) என்ற சூத்திரத்தில் ஆசிரியர் குறித்துள்ளமை காணலாம். (உ-ம்) இல்+கல்=இல்லைக்கல்,இல்லைகல், இல்கல். இல்லாக்கல் - சுனை, துடி, பறை எனவரும் இல்லாமையை உணர்த்துவதாகிய `இல் என்னுஞ் சொன்முடிபுகளை, இல்லெ னின்மைச் சொற்கை யடைய வன்மை விகற்பமும் ஆகாரத்தொடு வன்மை யாகலும், இயல்பும் ஆகும். (நன். 233) என்ற சூத்திரத்தில் நன்னூலாசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். பிறவாறு வருவன `ஏழ் என்னும் ழகர வீற்று எண்ணுப் பெயர்முன் அளவுப் பெயரும், `நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வெண்ணுப் பெயரின் முன்னின்ற ஏகாரமாகிய நெட்டெழுத்து எகரமாகக் குறுகுதலும், நிலைமொழி யீற்று ழகரமெய்யின் பின் உகரம் வருதலும் தொல்லாசிரியன் இருவகை வழக்கிலும் விலக்காது உடன்பட்ட திரிபுகளேயாகும். இவற்றை, அளவு நிறையும் எண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் கடிநிலை யின்றே ஆசிரியற்கு. (தொல். 389) என்ற நூற்பாவில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். (உ-ம்) ஏழ்+கலம்=எழுகலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும், எழுகழஞ்ச, தொடி, பலம் எனவும், எழு மூன்று, எழு நான்கு எனவும் வரும். `ஏழ் என்பதனோடு `பத்து என்பது வந்து புணருமிடத்துப் `பத்து என்பதன் இடையிலுள்ள தகர மெய் கெட்டு அவ்விடத்து ஆய்தம் பெற்று `பஃது என நிற்றலும் உண்டு. இவ் வருமொழித் திரிபினை, பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி. (தொல். 390) எனவரும் சூத்திரத்தாற் குறித்தார். (உ-ம்) `எழுபஃது எனவரும். `ஏழ் என்பதன் முன் `ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர் வருமொழியாய் வருமிடத்து முற்கூறியபடி நெடுமுதல் குறுகி நின்று, உகரம் பெறாது முடியும் என்பதனை, ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே. (தொல். 391) என்பதனால் உணர்த்தினார். (உ-ம்) ஏழ்+ஆயிரம் = ஏழாயிரம் எனவரும். ஏழ் என்பதன் முன் நூறாயிரம் என்பது வருமொழியாய் வருமிடத்து முற்கூறியவாறு நெடுமுதல் குறுகி உகரம் பெறுதல் இல்லை. இவ்வியல்பு முடிபினை, நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே. (தொல். 392) எனவரும் சூத்திரத்தால் உணரலாம். (உ-ம்) ஏழ்நூறாயிரம் எனவரும். ஆசிரியர் தொல்காப்பியனார் `ஏழ் என இதனை ஒற்றீற்று மொழியாகக்கொண்டு புணர்ச்சி விதி கூறியுள்ளார். நன்னூலா சிரியர் பவணந்தியார் இவ்வெண்ணினை ஏழு, என உயிரீற்று மொழியாகக் கொண்டுள்ளார். இந்நுட்பம் `ஏழன் உயிரும் ஏகும் ஏற்புழி (நன் - உயிரீற்றுப் - 38) என அவர் விதி கூறுமாற்றால் நன்கு விளங்கும். `ஏழ் நெடுமுதல் குறுகும் என்னும் தொல்காப்பிய விதியை `ஏழ் குறுகும் என்ற தொடரிற் பவணந்தியார் உடன் பட்டுள்ளமை காணலாம். தெரியச் சொல்லப்பட்ட மெய்யீறு வருமொழியோடு புணரும் இயல்பின்கண், மேல் முடிந்த முடிபுகளன்றி வழக்கினுட் கண்டு முடித்தற்கு உரியன பிறவும் உளவாயின் அவற்றையும் இங்குக் கூறப்பட்டவற்றுடன் கருதி நோக்கிச் சாரியை பெறுவன வற்றிற்குச் சாரியையும் எழுத்துப் பெறுவனவற்றிற்கு எழுத்தும் கொடுத்து ஏற்றவாறு முடித்துக் கொள்க என்பார், உணரக் கூறிய புணரியன் மருங்கிற் கண்டு செயற்குரியவை கண்ணினர் கொளலே. (தொல். 465) என இவ்வியலுக்குப் புறனடை கூறி முடித்தார் ஆசிரியர். இவ்வாறே பவணந்தியாரும் மெய்யீற்றுப் புணரியலின் இறுதியில், இடையுரி வடசொலின் இயம்பிய கொளாதவும் போலியும் மரூஉவும் பொருந்திய வாற்றிற்கு இயையப் புணர்த்தல் யாவர்க்கும் நெறியே. (நன். 239) எனப் புணரியல்களுக்குப் புறனடை கூறி முடித்துள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கதாகும். 4. குற்றியலுகரப் புணரியல் குற்றியலுகர ஈறுநின்று, பொருட்பெயர், எண்ணுப் பெயர் ஆகிய வருமொழிகளோடு புணருமாறு கூறலின், இது குற்றிய லுகரப் புணரியல் என்னும் பெயர்த்தாயிற்று. ஈரெழுத்தொரு மொழியாய்த் தனிநெட்டெழுத்தின் பின்னும், இரண்டிற்கு மேற்பட்ட மூன்று முதலிய எழுத்துக்களாலாகிய தொடர் மொழிகளின் ஈற்றிலும் வல்லின மெய்யை ஊர்ந்து குற்றியலுகரம் வரும் என மொழிமரபிற் கூறினார். இரண்டிறந்திசைக்கும் தொடர்மொழி யீற்றுக் குற்றுகரங்களை அவற்றின் அயலில் தொடர்ந்துள்ள எழுத்துவகையால், உயிர்த்தொடர், இடைத் தொடர், ஆய்தத் தொடர், வன்றொடர், மென்றொடர் என ஐந்து தொடராகப்பகுத்து அவற்றுடன் தனி நெடிற் பின்வரும் குற்றுகரத்தையும் கூட்டி அறுவகையாக்கி, அவை உயிர், வலி, மெலி, இடை ஆகிய நாற்கணத்தோடும் புணரும் இயல்பினை இவ்வியலில் விளக்கு கின்றார். ஈரெழுத் தொருமொழி, உயிர்த்தொடர், இடைத்தொடர் ஆய்தத் தொடர்மொழி, வன்றொடர், மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன். (தொல்.406) இதன்கண், மேல் `நெட்டெழுத்திம்பரும் தொடர் மொழி யீற்றும் வரும் எனக்கூறிய குற்றியலுகரத்துள் நெட்டெ ழுத்தின்பின் வரும் குற்றியலுகரத்தை `ஈரெழுத்தொருமொழி என ஒன்றாகவும், தொடர் மொழியீற்றில் வரும் குற்றுகரத்தை உயிர்த்தொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர், வன் றொடர், மென்றொடர் என ஐந்து வகையாகவும் பகுத்துக் குற்றியலுகரம் வருமிடம் ஆறு என வகைபெறக் கூறியுள்ளமை காணலாம். (உ-ம்) நாகு - ஈரெழுத்தொருமொழி வரகு - உயிர்த்தொடர் தெள்கு - இடைத்தொடர் எஃகு - ஆய்தத்தொடர் கொக்கு - வன்றொடர் குரங்கு - மென்றொடர் ஈரொற்றுத் தொடர்மொழி யிடைத்தொட ராகா. (தொல்.407) மேற்கூறிய ஆறனுள் க ச த ப ங ஞ ந ம ஈரொற்றாகிவரும் குற்றியலுகர வீற்றுச்சொற்கள் ஒருவாற்றான் இடையொற்றுக் களோடு தொடர்ந்துவரினும் அவற்றிற்கு முன்னே கசதபஙஞந மக்களுள் ஒன்று குற்றியலுகரத்தைத் தொடர்ந்து நிற்றலால் அவ்வாறு முன் தொடர்ந்த வற்றின் தொடராக அவை கொள்ளப்படுமல்லது இடைத்தொடராகக் கொள்ளப்படா என்பது இதன் பொருள். (உ-ம்) ஆர்க்கு, ஈர்க்கு, நொய்ம்பு, மொய்ம்பு எனவரும். அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா விறுதியும் உகர நிலையும். (தொல்.408) இஃது `இடைப்படிற் குறுகுமிடனுமாறுண்டே (எழுத்து 37) என்றதனாற் புணர்மொழிக்கண் குற்றியலுகரம் அரைமாத் திரையினுங் குறுகுமென முன் மொழிமரபிற் கூறிய தனை விலக்கி `அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே என்ற விதிப்படி அரை மாத்திரை பெற்று நிற்றலே எல்லாக் குற்றுகரங்களுக்குமுரிய பொதுவியல்பாகும் என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணும் ஆறீற்றின்கண்ணும் குற்றியலுகரம் அரை மாத் திரையைப் பெற்று நிற்கும் என்றவாறு. இனி `எல்லா இறுதியும் உகரம் நிறையும் எனப் பாடங் கொண்டு `அல்வழியைச் சொல்லுமிடத்தும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் ஆறீற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும் எனப்பொருள் கொள்வர் இளம்பூரணர். எனவே இருமொழிப் புணர்ச்சிக்கண் வரும் குற்றியலுகரம் எல்லாவிடத்தும் ஒரு மாத்திரை பெற்று நிற்குமென்பது இவ்வுரை யாசிரியர் கருத்தெனத் தெரிகிறது. இக்கருத்துப் பொருந்துவதன் றென்பது மொழிமரபில் `இடைப்படிற் குறுகு மென்னுஞ் சூத்திரவுரையில் விளக்கப்பட்டது. அன்றியும் இருமொழிப் புணர்ச்சிக்கண் குற்றியலுகரம் ஒருமாத்திரை பெறுமென்றார்க்குச் செய்யுளியலில் ஆசிரியர் குற்றுகரத்தான் நேர்பசை நிரைபசை கோடலும் அவற்றான் அறுபது வஞ்சிச்சீர் கோடலும் பத்தொன் பதினாயிரத்து இரு நூற்றுத்தொண்ணுற்றொரு தொடை கோடலு மின்றாய் முற்றிய லுகரமாகவே கொள்ள வேண்டுமாதலின் மாறுகொளக் கூறலென்னுங் குற்றந்தங்கு மென்பர் நச்சினார்க்கினியர். வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வரு வழித் தொல்லை யியற்கை நிலையலு முரித்தே. (தொல்.409) (இ-ள்) வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகரம் வல்லெழுத்து முதன்மொழியாய் வருமிடத்து `சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி இச்சூத்திரத்திற்குப் பழைய அரைமாத்திரை பெற்று நிற்கு மென்று கூறுவாரு முளர் எனப் பிறரது உரையினை நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டி யுள்ளமையை நோக்குங்கால் அவர்களது கருத்தன்றென்பது இனிது புலனாம். யகரம் வரும்வழி இகரங் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது. (தொல். 410) இது குற்றியலிகரம் புணர்மொழியகத்து வருமென்கின்றது. (இ-ள்) ஆறீற்றுக் குற்றியலுகர முன்னரும் யகர முதன்மொழி வருமிடத்து நிலைமொழிக் குற்றுகரவெழுத்து முற்றத்தோன்றாது ஆண்டு ஓர் இகரம் வந்து அரை மாத்திரை பெற்று நிற்கும் என்றவாறு. (உ-ம்) நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கி யாது, குரங்கியாது எனவரும். மேற் பொதுவகையாற் குற்றியலுகர வீற்று இயல்பினைக் கூறிய ஆசிரியர், ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் பொருட் பெயரோடு புணரும் புணர்ச்சி கூறத்தொடங்கி 400 முதல் 422 வரையுள்ள சூத்திரங்களால் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி கூறுகின்றார். ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் வேற்றுமையாயின் ஒற்றிடை இனமிகத் தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி. (தொல். 411) ஈரெழுத்தொருமொழிக் குற்றுகரவீறும் உயிர்த் தொடர்மொழிக் குற்றுகரவீறும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வருமாயின், இனமாகிய வொற்று (தன்னொற்று) இடையிலே இரட்டிக்க, வருமொழி வல்லெழுத்து மிக்குமுடியு மென்பதாம். (உ-ம்) யாட்டுக்கால் செவி, தலை, புறம் எனவும் முயிற்றுக்கால் சினை, தலை, புறம் எனவும் வரும். `தோற்றம் என்றதனால் யாடு+ஞாற்சி = யாட்டு ஞாற்சி, முயிறு + ஞாற்சி = முயிற்று ஞாற்சி, மாட்சி, யாப்பு, வன்மை, அடைவு என ஏனைக்கணத்தும் இவ்விரு தொடரின்கண்ணும் ஒற்றிரட்டித்தல் கொள்க. இங்ஙனம் இவ்விருமொழிக்கண்ணும் நின்று இரட்டுவன டகர, றகர வொற்றுக்களே யென்பதனை, நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட் டற வொற் றிரட்டும் வேற்றுமை மிகவே. (நன். 183) என்ற சூத்திரத்தாற் குறிப்பிட்டார் நன்னூலார். ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே. (தொல். 402) இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது. முற்கூறிய விருதொடர்களுள் இனவொற்று இடையே மிக்குமுடியாத மொழிகளுமுள; அப்பகுதியுள் வருமொழி வல்லொற்று மிக்கு முடிதலில்லை என்றவாறு. முற்கூறிய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றுகரங் களுள் டகர றகர மல்லாத கு, சு, து, பு என்னும் நான்கீற்று மொழி களும் இனவொற்று மிகாதனவாம்; அஃதாவது ஒற்றிரட்டா தனவாம். நாகுகால் - செவி, தலை, புறம் எனவும் வரகுகால் - சினை, தாள், பதர் எனவும் வரும். `அத்திறம் என்றதனால் உருபிற்கு எய்திய சாரியை பொருட்கு எய்திய வழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க என்பர் உரையாசிரியர். இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் நடைஆ இயல என்மனார் புலவர். (தொல். 413) இஃது இடை நின்ற இரண்டிற்கும் முடிபு கூறுகின்றது, (இ-ள்) இடையொற்றுத் தொடர்க் குற்றியலுகரமும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகரமும் முற்கூறிய இயல்பு முடிபினை யுடையவென்று கூறுவர் புலவர் என்றவாறு. (உ-ம்) தெள்கு கால், சிறை, தலை, புறம் எனவும் எஃகுகடுமை, சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும். மேற் சூத்திரத்தும், இச்சூத்திரத்தும் கூறிய இயல்பு முடிவினை நன்னூலார், 182. இடைத் தொடராய்தத் தொடரொற்றிடையின் மிகாநெடி லுயிர்த்தொடர் முன்மிகா வேற்றுமை. (நன். 182) என்ற சூத்திரத்துட் கூறிப்போந்தார். வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிறுதி கிளையொற் றாகும். (தொல். 414) இது பின்னின்ற இரண்டிற்கும் முடிபு கூறுகின்றது. வன்றொடர் மொழிக் குற்றுகரவீறும் மென்றொடர்மொழிக் குற்றுகரவீறும் வருமொழி வல்லெழுத்து இடையிலே மிக்கு முடியும். மெல்லொற்றுத் தொடர் மொழிக்கணின்ற மெல்லொற் றெல்லாம் இறுதிக்கட் குற்றியலுகரமேறி நின்ற வல்லொற்றாகவும் அம்மெல்லொற்றின் கிளையாகிய வல்லொற்றாகவும் திரிந்து முடியும். இறுதி வல்லொற்று - குற்றியலுகரமேறிய ஒற்று. கிளை வல்லொற்று - ணகரத்திற்குடகரமும், னகரத்திற்கு றகரமும் என இவ்வாறு புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாய் வருமெழுத்து. (உ-ம்) கொக்குக்கால் சிறகு, தலை, புறம் எனவும் குரங்குக்கால் செவி, தலை, புறம் எனவும் எட்குக் குட்டி - செவி, தலை, புறம் எனவும் எற்புக்காடு - சுரம், தலை, புறம் எனவும் வரும். இங்ஙனம் வேற்றுமைக்கண் மென்றொடர் மொழிக் குற்றுகரத்தின் மெல்லொற்று இறுதி வல்லொற்றாகவும், கிளை வல்லொற்றாகவும் திரிந்து முடியுமெனப் பொதுப் படக்கூறி `மெல்லொற்று வலியா மரப்பெயருமுளவே (எழுத்து 416) என்பதனால் மென்றொடர் மொழி மரப்பெயருள் அங்ஙனம் திரியாதனவுஞ் சிலவுளவென விதந்தார். நன்னூலார் பிற்கால வழக்கு நோக்கி, மென்றொடர் மொழியுட்சில வேற்றுமையிற் றம்மின வன்றொடராகா மன்னே. (நன். 184) என்பதனால் மென்றொடர் மொழிக் குற்றுகர வீறுகளுட் சில வேற்றுமைக்கண் தமக்கு இனமான வன்றொடராதலை யொழிந்தன பெரும்பாலன என விதி கூறினார். மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை. (தொல். 415) இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது. குற்றியலுகரவீற்று மரப்பெயர் அம்முச்சாரியை பெறும். (உ-ம்) தேக்கங்கோடு செதிள், தோல், பூ எனவும் குருந்தங்கோடு - செதிள், தோல், பூ எனவும் வரும். கமுகு+காய்= கமுகங்காய், தெங்கு+காய்=தெங்கங்காய், கம்+புல் = கம்பம்புல், பயறு+காய்=பயற்றங்காய் எனவருவன மரமல்லாத புல்லைக் குறித்தனவாயினும் இச் சூத்திரத்து மரப் பெயர்க்கிளவிக் குற்றியலகரமென ஒருவாற்றான் அடக்கப்பெற்று அம்சாரியை பெறுதல் கொள்க. மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. (தொல். 416) இது மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒரு மருங்கு மறுக்கின்றது. மேல் 414-ம் சூத்திரத்திற் கூறியவாறு மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாது இயல்பாய் முடியும் மென்றொடர்க் குற்றுகரவீற்று மரப்பெயரும் உள என்பதாம். (உ-ம்) புன்கு+கோடு=புன்கங்கோடு, செதிள், தோல்,பூ எனவும் குருந்து+கோடு=குருந்தங்கோடு, செதிள் தோல், பூ எனவரும். ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் அம்இடை வரற்கும் உரியவை உளவே அம்மர பொழுகும் மொழிவயி னான. (தொல். 417) இஃது ஈரெழுத்து மொழிக் குற்றியலுகரத்திற்கும் வன்றொடர் மொழிக் குற்றியலுகரத்திற்கும் எய்தாதெய்துவித்தது. (இ-ள்) ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரமும் வல் லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரமும் அம்முச்சாரியை இடையே வந்து முடிதற்குரியனவுமுள, அவ்விலக்கணத்தால் நடக்கும் தொழில் களிடத்து என்றவாறு. (உ-ம்) ஏற்+கோள்=ஏற்றங்கோள், சூது+போர்=சூதம்போர், வட்டு + போர் = வட்டம்போர், புற்று+ பழஞ்சோறு =புற்றம்பழஞ்சோறு எனவரும். `அம்மிடை வரற்கும் என்புழி உம்மை எதிர்மறை யாகலின் நாகுகால், கொக்குக்கால் என அம்சாரியை பெறாதனவே பெரும் பாலன என்க. `அம்மர பொழுகும் என்றதனால் அரசக்கன்னி, முரசக்கடிப்பு என அக்குச்சாரியையும் வல்லெழுத் தும் பெற்று முடிதலும் அரச வாழ்க்கை என அக்குச்சாரியை பெற்று முடிதலும், இருட்டத்துக் கொண்டான் விளக்கத்துக் கொண்டான் என அத்துச்சாரியையும் வல்லெழுத்தும் பெற்று முடிதலும் கொள்க. ஆசிரியர் தொல்காப்பியனார் `ஈரெழுத்து மொழி என்றதனை நன்னூலார் `நெடிற்றொடர் என வழங்கியுள்ளார். ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம் அக்கிளை மொழியு முளவென மொழிப. (தொல். 418) இது மென்றொடர் மொழியுட் சிலவற்றுக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. (இ-ள்) ஒற்று முன்னே நின்ற நிலைதிரியாது அக்குச் சாரியை யோடு வரும் அக்கிளையான சொற்களுமுள என்பர் என்றவாறு. (உ-ம்) குன்று = கூகை = குன்றக்கூகை, மன்று + பெண்ணை = மன்றப்பெண்ணை எனவரும். உம்மையால் கொங்கு + உழவு = கொங்கத்துழவு என அத்துப் பெறுதலும் கொள்க. எண்ணுப் பெயர்க் கிளவி உருபியல் நிலையும். (தொல். 419) (இ-ள்) குற்றுகர வீற்று எண்ணுப் பெயர்கள் பொருட் பெயரோடு புணரும்வழி உருபு புணர்ச்சியினியல்பிலே நின்று அன்சாரியை பெற்றுமுடியும். என்றவாறு. (உ-ம்) ஒன்று+காயம்=ஒன்றன் காயம், இரண்டு + காயம் = இரண்டன் காயம், சுக்கு, தோரை, பயறு எனவரும். ஒன்றன் காயம் = ஒன்றனாற் கொண்ட காயம் எனவிரியும். வருமொழி வரையாது கூறினமையின் ஒன்றன்ஞாண், நூல், மணி, யாழ், வட்டு, அடை என இயல்புகணத்துக் கண்ணும் அன்சாரியை பெறுதல் கொள்க. வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும். (தொல். 420) (இ-ள்) வண்டு, பெண்டு என்ற மென்றொடர்க் குற்றுகரவீற்றுச் சொற்கள் இரண்டும் இன்சாரியை பெற்று முடியும் என்றவாறு. (உ-ம்) வண்டினைக் கொணர்ந்தான். பெண்டினைக் கொணர்ந்தான் எனவரும். பெண்டென் கிளவிக் கன்னும் வரையார் (தொல். 421) (இ-ள்) பெண்டென்னும் சொல்லுக்கு இன்னேயன்றி அன்சாரியை வந்து முடிதலையும் நீக்கார் என்பதாம். (உ-ம்) பெண்டன்கை, செவி, தலை, புறம் எனவரும். யாதென் இறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும் உருபியல் நிலையும். (தொல். 422) இஃது ஈரெழுத்தொருமொழிக் குற்றிய லுகரத்துள் ஒன்றற்கும் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றிய லகரத்திற்கும் வேறு முடிபு கூறுகின்றது. (இ-ள்) யாதென்னும் ஈரெழுத் தொருமொழிக் குற்றுகர ஈறும் சுட்டெழுத்தினை முதலாகவுடைய அஃது, இஃது, உஃது என்னும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர வீறும் உருபுபுணர்ச்சியி னியல்பிலே நின்று அன்சாரியை பெற்றுச் சுட்டு முதலிறுதி ஆய்தம் கெட்டு முடியும் என்றவாறு. (உ-ம்) யாது+கோடு=யாதன்கோடு; அஃது+கோடு=அதன் கோடு, இஃது + கோடு - இதன்கோடு. உஃது+கோடு=உதன்கோடு, செவி, தலை புறம் எனவரும். அஃது, இஃது, உஃது எனவரும் ஆய்தத் தொடர் மொழிகளில் ஆய்தங்கெடின் முற்றுகரமா மாதலின் ஆய்தத்தைக் கெடுத்தற்கு முன் அன்சாரியையின் அகரத்தைக் குற்றுகரத்தின்மேல் ஏற்றிச் செய்கை செய்தல் வேண்டுமென்பர் நச்சினார்க்கினியர். முன்உயிர் வருமிடத் தாய்தப் புள்ளி மன்னல் வேண்டும் அல்வழி யான. (தொல். 423) இது முற்கூறியவற்றுட் சுட்டு முதலுகரத்திற்கு ஒரு வழி அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்) சுட்டு முதலாகிய ஆய்தத்தொடர்மொழிக் குற்றுகர வீற்றின் முன்னே அல்வழிக்கண் உயிர் முதன்மொழி வருமிடத்து ஆய்தப்புள்ளி முன்போலக் கெடாது நிலைபெற்று முடிதல் வேண்டும் என்றவாறு. (உ-ம்) அஃதாடை, இஃதிலை, உஃதுரல் எனவரும். `முன் என்றதனால் வேற்றுமைக்கண்ணும் ஆய்தங் கெடாமை கொள்க என்பர் உரையாசிரியர். (உ-ம்) அஃதடைந்தான் எனவரும். ஏனைமுன் வரினே தானிலை யின்றே. (தொல். 424) இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய ஈறுகளின் முன்னர் உயிர்க் கணமல்லன வருமாயின் அவ்வாய்தம் கெட்டு முடியும் என்றவாறு. (உ-ம்) அஃது + கடிது = அதுகடிது எனவரும். இவ்வாறு ஏனையவற்றோடும் ஒட்டுக. அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ் சொல்லிய பண்பின் இயற்கை யாகும். (தொல். 425) இஃது ஆறீற்றுக் குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்) அல்வழியைச் சொல்லுமிடத்து ஆறு ஈற்றுக் குற்றுகரமும் மேற்சொல்லிய பண்பினைபுடைய இயல்பாய் முடியும் என்பதாம். (உ-ம்) நாகுகடிது, வரகுகடிது, தெள்குகடிது, எஃகு கடிது, குரங்கு கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். கரட்டுக்காணம், திருட்டுப்புலையன், குருட்டுக்கோழி, வெளிற்றுப்பனை எனவும், வரட்டாடு, குருட்டெருது எனவும், இருபெயரொட்டுப் பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவொற்று மிக்கு வல்லெழுத்துப் பெற்று முடிதலும் இயல்பு கணத்துக்கண் இனவொற்று மிக்குமுடிதலும் ஓர்யாட்டை யானை, ஐயாட்டை எருது எனவும், அற்றைக் கூத்தர், இற்றைக் கூத்தர் எனவும், மன்றைத்தூதை, பண்டைச் சான்றோர் எனவும் மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லொற்றும் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாகாது ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும் இச்சூத்திரத்தில்வரும் `சொல்லிய `பண்பின் என்ற சொற்களாற் கொள்ளப்படும். `பண்பின் என்றதனால் ஐகாரம் பெற்று முடிவனவற்றை ஐயீற்றுடைக் குற்றுகரமு முளவே. (நன். 185) என்ற சூத்திரத்தால் சுட்டினார் நன்னூலார். வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. (தொல். 426) இஃது அவ் வீறீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது. (இ-ள்) வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றியலுகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து வருவழி வந்த எழுத்து மிக்குமுடியும் என்றவாறு. (உ-ம்) சுக்குக்கடிது, பட்டுக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும். இதனை வன்றொடரல்லன முன்மிகா அல்வழி. (நன். 181) என்ற சூத்திரத்தில் குறிப்பிட்டார் நன்னூலார். சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் யாவினா முதலிய மென்றொடர் மொழியும் ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை. (தொல். 427) இதுவும் அவ்வாறீற்றுள் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது. (இ-ள்) சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர் மொழிக் குற்றுகரமும் யா வென்னும் வினாவை முதலாகவுடைய மென்றொடர்மொழிக் குற்றுகரமும் வல்லெழுத்துப் பெறுதலாகிய அவ்வியல்பிற்றிரியாது மிக்குமுடியும். (உ-ம்) ஆங்குக் கொண்டான், ஈங்குக் கொண்டான், ஊங்குக் கொண்டான், யாங்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். இயற்கை என்றதனால் இருந்து கொண்டான், ஆண்டு சொன்றான் என மென்றொடர்க் குற்றியலுகர வீற்று வினையெச்சம் இயல்பாயும், செத்துக்கிடந்தான் செற்றுச் செய்தான் என வன்றொடர்க் குற்றியலுகர வீற்று வினையெச்சம் மிக்கும் முடிதல் கொள்ளப்படும். யாவினா மொழியே இயல்புமாகும். (தொல். 428) இது மேலனவற்றுள் ஒன்றற்கு எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) மேற்கூறியவற்றுள் யா வினாவை முதலாக வுடைய சொல் முற்கூறியவாறன்றி இயல்பாயும் முடியும். என்றவாறு. (உ-ம்) யாங்கு கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவரும். இவ்விடத்து யாங்கு என்பது எப்படி என்னும் வினாப் பொருளை உணர்த்திற்றென்பர் நச்சினார்க்கினியர். இயல்பும் ஆகும் என்ற உம்மையால் மிக்கு முடிதலே வலி யுடைத்து. அந்நான் மொழியுந் தந்நிலை திரியா. (தொல்.429) இது மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. (இ-ள்) சுட்டு முதன் மூன்றும் யா முதன் மொழியுமாகிய அந்நான்கு மென்றொடர் மொழிகளும் தம் மெல்லொற்றாய் தன்மை திரிந்து வல்லொற்றாகாதியல்பாய் முடியும் என்பதாம். முன்னர் யா மொழியென்னாது வினாவென்றதனான் ஏழாவதன் இடப்பொருட்டாய் முந்து, பண்டு, இன்று, அன்று, என்று எனவரும் பிறவும் இயல்பாதல் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். உண்டென் கிளவி உண்மை செப்பின் முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும் மேனிலை யொற்றே ளகார மாதலும் ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே வல்லெழுத்து வரூஉங் காலை யான. (தொல். 430) இது மென்றொடர் மொழியுள் வினைக்குறிப்பாய் நின்ற தோர் சொல் பண்பை உணர்த்துங்கால் வேறு முடிபு பெறுதல் கூறுகின்றது. (இ-ள்) உண்டு என்னும் சொல் வினைக்குறிப்பை யுணர்த்தாது ஒரு பொருள் தோன்றுங்காற்றோன்றி அது கெடுந்துணையும் உண்டாய் நிற்கின்ற உண்மைத் தன்மையாகிய பண்பை யுணர்த்தி நிற்குமாயின் வல்லெழுத்து முதன்மொழி வருங்காலத்து அவ் வுண்டென்னுஞ் சொன் முன்னர் நின்ற குற்றுகரம்தான் ஏறி நின்ற மெய்யொடுங் கெடுதலும் அக்குற்றியலுகரத்திற்கு மேல் நின்ற ணகர வொற்று ளகர வொற்றாய்த் திரிதலுமாகிய அவ்விரு நிலையையுமுடைத் தென்பதாம். இவ்விரு முடிபும் பெறுமென்றது வல்லெழுத்துக் களுள் மகரமுதன்மொழி வருமிடத்தென்றும் மற்றைய மூன்றெழுத்தின்கண் ஈறு கெடாதே நின்று முடியுமென்றுங் கூறுவர் இளம்பூரணர். (உ-ம்) உண்டு+பொருள்=உள்பொருள் எனவரும். உரிமையும் உடைத்தே என்ற உம்மையால் இவ்விருமுடிபும் பெறாது உண்டு பொருள் என இயல்பாய் வருதலையுங் கொள்வர் நச்சினார்க்கினியர். இருதிசை புணரின் ஏயிடை வருமே. (தொல். 431) இது குற்றுகரவீற்றுத் திசைப் பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது. (இ-ள்) குற்றுகர வீற்றுத் திசைப் பெயர்களுள் இரண்டு பெருந்திசையும் தம்மிற்புணருமிடத்து ஏயென்னுஞ் சாரியை இடையே வந்து முடியுமென்பதாம். (உ-ம்) தெற்கேவடக்கு, கிழக்கேமேற்கு எனவரும். இவை உம்மைத் தொகை. திரிபுவேற கிளப்பின் ஒற்று முகரமுங் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர் ஒற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கொடு புணருங் காலை யான. (தொல்.432) இரு பெருந்திசைகளோடு கோணத்திசைகள் புணர்த்தலின் எய்தாதெய்துவித்தது. (இ-ள்) பெருந்திசைகளோடு கோணத்திசைகளை வேறாகப் புணர்க்குமிடத்து அவ்வுகரமேறி நின்றமெய்யும் அவ்வீற் றுகரமுங் கெட்டு முடிதல் வேண்டுமென்பர். அது தெற்கென்ற திசையோடு புணருங்காலத்து அத்திசைக்குப் பொருந்தி நின்ற றகரவொற்றுத் தன் வடிவு திரிந்து னகரவொற்றாய் நிற்கும் என்றவாறு. (உ-ம்) வடக்கு+கிழக்கு=வடகிழக்கு,வடமேற்கு; தெற்கு+ கிழக்கு= தென்கிழக்கு, தென்மேற்கு எனவரும். வேறு என்றதனால் வடவேங் கடம், தென்குமரி எனத் திசைப்பெயரோடு பொருட் பெயர் புணரும் வழியும் இவ்விதி பொருந்தி நிற்றல் கொள்க. திசையொடு திசைபுணரும் இவ்விதியில் திசையொடு பிற சொற்கள் புணருமியல்பையுஞ் சேர்த்து மேற்கு என்ற திசைப்பெயர் பிறபெயரொடு புணருங்கால் றகரம் லகரமாகத் திரிதலையுங்கூட்டி, திசையொடு திசையும் பிறவுஞ் சேரின் நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும் றகரம் னல வாத் திரிதலுமாம் பிற. (நன். 186) எனச் சூத்திரஞ் செய்தார் நன்னூலார். குற்றியலுகரவீற்றெண்ணுப் பெயர் முடிபு. ஒன்றுமுத லாக எட்ட னிறுதி எல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற் குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே முற்றஇன் வரூஉம் இரண்டலங் கடையே. (தொல்.433) இது பத்தென்னும் எண்ணுப் பெயரோடு எண்ணுப் பெயர் வந்து புணருமாறு கூறுகின்றது. (இ-ள்) பத்தென்னும் எண்ணுப் பெயர்முன் ஒன்று முதல் எட்டீறாகவுள்ள எல்லாவெண்ணுப் பெயர்களும் வந்து புணருமாயின் பத்தென்னும் நிலைமொழியீற்றினின்ற குற்றுகரம் தான் ஏறிய மெய்யோடுங்கெடும், ஆண்டு இரண்டல்லாத எண்ணுப் பெயரோடு புணர்வழி இன்சாரியை இடைவந்து முடியத்தோன்றும் என்பதாம். (உ-ம்) பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு எனவரும். நிலைமொழி முற் கூறாததனால் ஒன்பதின் கூறு, ஒன்பதின்பால் எனப் பிறவெண்ணின் முன் பிற பெயர் வந்துழியும் இன்பெறுதல் கொள்வர் உரையாசிரியர். பத்த னொற்றுக் கெட னகாரம் இரட்டல் ஒத்த தென்ப இரண்டுவரு காலை. (தொல்.434) இது மேல் இன் பெறாதென்று விலக்கிய இரண்டற்குப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) பத்தென்னுஞ் சொல்லில் நின்ற தகரவொற்றுக்கெட அவ்விடத்து னகரவொற்று இரட்டித்து வருதல் இரண் டென்னும் எண் வருமொழியாய் வருங்காலத்திற் பொருந்திற் றென்பர் ஆசிரியர் என்றவாறு. (உ-ம்) பன்னிரண்டு எனவரும். இதனை, இரண்டு முன்வரிற் பத்தினீற்றுயிர் மெய் கரந்திட வொற்று னவ்வாகு மென்ப. (நன். 198) என்னுஞ் சூத்திரத்திற் குறிப்பிடுவர் நன்னூலார். ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது. (தொல். 435) இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வரின் வரும் முடிபு கூறுகின்றது. (இ-ள்) முற்கூறிய பத்தென்னும் எண்முன் ஒன்று முதலியனவே யன்றி ஆயிரமென்னும் எண் வந்தாலும் முன்னர்க் கூறிய இயல் பிற்றிரி யாது ஈறுகெட்டு இன் பெற்று முடியும் என்றவாறு. (உ-ம்) பதினாயிரம் எனவரும். நிறையு மளவும் வரூஉங் காலையுங் குறையா தாகும் இன்னென் சாரியை. (தொல்.436) (இ-ள்) முற்கூறிய பத்தன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப் பெயரும் வருங்காலத்தும் இன்னென்னும் சாரியை குறையாது வந்து முடியும் என்றவாறு. (உ-ம்) பதின்கழஞ்சு, தொடி, பலம் எனவும்; பதின்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும் பதிற்றகல் பதிற்றுழக்கு எனவும் வரும். `குறையாதாகும் என்றதனால் பத்தென்பதன் முன்னர்ப் பொருட்பெயரும் கொள்க. (உ-ம்) பதின்றிங்கள், பதிற்றுவேலி, யாண்டு, அடுக்கு, முழம் எனவரும். இன்சாரியையின் னகரம் றகர மாதல் `அளவாகு மொழிமுதல் (எழுத்து 021) என்பதனுள் `நிலைஇய என்றதனால் கொள்ளப்படும். பத்தென்பதன்முன் ஒன்று முதலெண்களே யன்றி ஆயிரம் கோடி யென்னு மெண்ணுப் பெயரும், அளவுப் பெயரும், பிற பெயரும் புணருமிடத்து முற்கூறியபடி பத்தென்பதென் ஈற்றுயிர் மெய் கெட்டு ஆசிரியர் கூறியபடி இன்சாரியையேனும் அதன் திரிபாகிய இற்றுச் சாரியையேனும் பெற்று நிற்குமென்பதனை, ஒன்றுமுத லீரைந் தாயிரங் கோடி எண்ணிறை யளவும் பிறவரிற் பத்தின் ஈற்றுயிர் மெய்கெடுத் தின்னு மிற்றும் ஏற்ப தேற்கு மொன்பது மினைத்தே. (நன். 197) என்ற சூத்திரத்தாற் சுட்டி ஒன்பதென்னும் எண் வருமொழியாய் வருமிடத்தும் இவ்விதியைச் சேர்த்தார் நன்னூலார். ஒன்று முதல் ஒன்பதெண்களோடு பத்தென்பது புணர்தல். ஒன்றுமுத லொன்பான் இறுதி முன்னர் நின்ற பத்த னொற்றுக் கெட ஆய்தம் வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப கூறிய இயற்கை குற்றிய லுகரம் ஆற னிறுதி அல்வழி யான. (தொல். 437) (இ-ள்) ஒன்று முதல் ஒன்பதீறாகக் கூறுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் வருமொழியாக வந்து நின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகரவொற்றுக்கெட ஆய்தம் இடையிலே நிலைபெறு மியல்பிற்றென்று கூறுவர், அவற்றுள் ஆறென்னும் ஈறல்லாத விடத்து வரும் நிலைமொழிக் குற்றியலுகரம் முற்கூறிய வியற்கையால் மெய்யொடுங் கெட்டு முடியும் என்றவாறு. `வந்து என்றதனால் ஆய்தமாகத் திரியாது தகர வொற்றுக் கெட்டு ஒருபது என்று நிற்றலும் கொள்க என்பர் உரையாசிரியர். முதலிரு நான்கா மெண்முனர்ப் பத்தின் இடையொற் றேகல் ஆய்தமாகல் எனவிரு விதியு மேற்கு மென்ப. (நன். 195) என்ற நன்னூற் சூத்திரம் இச்சூத்திரக் கருத்தை ஒட்டியதாகும். முதலீ ரெண்ணி னொற்று ரகர மாகும் உகரம் வருத லாவயினான. (தொல். 438) இது மேற்கூறிய சிலவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. (இ-ள்) முதற்கண் நின்ற ஒன்று, இரண்டு என்னும் இரண்டெண்ணினுடைய ன க ர வொற்றும் ணகர வொற்றும் ரகர வொற்றாகத் திரியும்; அவ்விடத்து உகரம் வந்து நிலை பெறும் என்பதாம். (உ-ம்) ஒன்று+பத்து=ஒருபஃது எனவரும். இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு நடைமருங் கின்றே பொருள் வயினான. (தொல்.439) இதுவும் அது, (இ-ள்) இரண்டென்னும் எண்ணிற்கு இடைநின்ற ரகர வுயிர்மெய் அம்மொழி பொருள் பெறுமிடத்து நடக்குமிட மின்றிக் கெடும். என்றவாறு. (உ-ம்) இரண்டு+பத்து=இருபஃது எனவரும். ஒன்று, இரண்டு என்பதன் ஈற்றுக் குற்றியலுகரத்தை மெய்யொடுங் கெடுத்து னகர ணகர வொற்றினை ரகர வொற்றாக்கி உகரமேற்றிப் பத்தென்பதனிடை நின்ற தகர வொற்றுக் கெடுத்து ஆய்தமாக்கிப் பஃதென வருவிக்க ஒருபஃது, இருபஃது என முடிந்தமை காண்க. இங்குக் கூறிய முதலீரெண்ணின் நிலைமொழியீற்று முடிபினை, ஒன்றன் புள்ளி ரகரமாக இரண்ட னொற்றுயி ரேகவுவ் வருமே. (நன். 189) என்ற சூத்திரத்தாற் கூறினார் நன்னூலார். இதன்கண் ஆசிரியர் இரண்டு என்னுஞ்சொல்லின் ரகார வுயிர் மெய்யைக் கெடுத்து ணகரத்தை ரகரவொற்றாக்கி முடித்தவாறு முடிபுகூறாது இரண்டென்பதன் ணகரவொற்றும் ரகரத்தை யூர்ந்துநின்ற அகரவுயிரும் கெடுத்து ரகரவொற்றின் மேல் உகரமேற்றிமுடித்தார் நன்னூலார். மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும். (தொல்.440) இதுவும் அது. (இ-ள்) மூன்று, ஆறு என்பன நெடுமுதல் குறுகி முடிவனவாம். இவ்விரண்டெண்களோடு ஏழென்னும் மெய்யீற் றெண்ணுப் பெயரையுஞ் சேர்த்து எண்ணிறையளவும் என்னுஞ் சூத்திரத்து (நன். 188) மூன்றாறேழ் முதல் குறுகும் என்றார் நன்னூலார். மூன்றனொற்றே பகார மாகும். (தொல். 441) இதுவும் அது. (இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கண் நின்ற னகர வொற்றுப் பகர வொற்றாய்த் திரிந்து முடியும் என்றவாறு. (உ-ம்) நான்க னொற்றே றகார மாகும் (தொல்.442) இதுவும் அது. (இ-ள்)நான்கு என்னும் எண்ணின்கண் நின்ற னகர வொற்று றகர வொற்றாய்த் திரிந்து முடியும். என்றவாறு. (உ-ம்) நான்கு+பத்து=நாற்பஃது எனவரும். ஐந்தனொற்றே மகார மாகும். (தொல்.443) இதுவும் அது, ஐந்தென்னு மெண்ணின்கண் நின்ற தகரவொற்று மகர வொற்றாய்த் திரிந்து முடியும். என்றவாறு. (உ-ம்) ஐந்து+பத்து=ஐம்பஃது எனவரும். ஏழு என்பது குற்றிய லுகரமன்மையின் ஈண்டுக் கூறப்பட வில்லை. உருபியலில் காண்க. எட்டனொற்றே ணகார மாகும். (தொல்.444) (இ-ள்) எட்டென்னு மெண்ணின்கண் நின்ற டகர வொற்று ணகர வொற்றாய்த் திரிந்து முடியும். என்றவாறு. (உ-ம்) எட்டு+பத்து=எண்பஃது எனவரும். எட்ட னுடம்புணவ் வாகு மென்ப. (நன். 193) என்றார் நன்னூலார். ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் முந்தை யொற்றே ணகாரம் இரட்டும் பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி ஒற்றிய தகரம் றகர மாகும். (தொல். 445) இஃது எய்தாதது எய்து வித்தது. (இ-ள்) ஒன்பது என்னும் நிலைமொழிமுன் பஃதென் பதனை வருவித்து முடிக்குங்கால் நிலைமொழியாகிய ஒன்ப தென்னு மெண்ணின ஒகரத்திற்கு முன்னாக ஒரு தகர வொற்றுத் தோன்றி நிற்கும். முன்சொன்ன ஒகரத்தின் முன்னர் நின்ற னகரவொற்று ணகரவொற்றாய் இரட்டித்து நிற்கும். நிலைமொழியில் நின்ற பஃதென்னுஞ் சொல்லும் வருமொழிக் கண் ஆய்தமும் பகர வுயிர் மெய்யுங் கெட்டுப்போக நிலை மொழியில் இரட்டிய ணகரத்தின் பின்னர் ஊகாரமாகிய ஓரெழுத்து வந்து நிற்றல் வேண்டும். வருமொழியிறுதிக் குற்றுகரமேறிய தகர வொற்று றகர வொற்றாய்த் திரிந்து நிற்கும் என்றவாறு. பஃதென்கிளவியும் ஆய்தமும் பகரமும் கெட என உம்மை தொக்கு நின்றன. (உ-ம்) x‹gJ+g¤J=bjh©ûW எனவரும். இதனை, ஒற்றாய்வந்து நின்ற தகரவொற்றின்மேல் நிலைமொழி ஒகரத்தை ஏற்றித் தொ என நிறுத்தி ணகரவொற்றிரட்டி நிலை மொழியில் பஃதென்னுஞ் சொல்லை யும் வருமொழிக்கண் பகரவுயிர்மெய்யையும் ஆய்தத்தையுங் கெடுத்து ஊகாரமேற்றித் தொண்ணூ என வாக்கி வருமொழிக் குற்றுகரமேறி நின்ற தகரவொற்றினை றகரவொற்றாகத் திரித்து முடிக்கத் தொண்ணூறு என முடிந்து நின்றது. பஃதென்கிளவி யாய்த பகரங்கெட என்பதற்கு நிலை மொழிக்கண் ணின்ற பஃதென்னுஞ் சொல்லும் வருமொழியிற் பகரமும் ஆய்தமுங் கெட்டுப்போக எனப் பொருள்கூறி நிலை மொழிக்கண் பஃதென்னுஞ் சொற்கெடுதலைப் பகரவாய்த மென்னாத முறையன்றிக் கூற்றினாற்கொள்வர் உரையாசிரியர். ஆசிரியர் ஒன்பஃது என நிறுத்திப் பஃது என்பதனை வருவித்து வேண்டுஞ் செய்கைசெய்து இச்சூத்திரத்தின் முடிக்கின்றா ராதலின் ஒன்பஃதென்பதிற் பஃதென்னுஞ் சொற்கெடுதலைப் பகர வாய்த மென்னாத முறையன்றிக் கூற்றினாற் கொள்ள வைத்தார் என்றல் பொருந்தாது. அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுங் கிளந்த இயல தோன்றுங் காலை. (தொல். 446) இது மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பானெண்களோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்) முற் கூறிய ஒன்றுமுத லொன்பதெண்களின் முன்னர் அளந்தறியப்படும் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வந்து புணருமாயின் ஆறனிறுதியல்லாத குற்றுகரம் உகரமேறி இரண்டென்பதனிடை நின்ற ரகர வுயிர்மெய்கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி நான்கனொற்று வன்கணத்து றகரமாயும் எட்டனொற்று ணகரமாயும் முடியும் என்பதாம். (உ-ம்) ஒருகலம், இருகலம் எனவும், ஒருகழஞ்சி, இருகழஞ்சி எனவும், நாற்கலம், எண்கலம் எனவும், நாற்கழஞ்சு, எண்கழஞ்சு எனவும் வரும். மூன்ற னொற்றே வந்த தொக்கும். (தொல். 447) இதுமேல் மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுகின்றது. (இ-ள்) மூன்றென்னும் எண்ணின் னகர வொற்று வருமொழியாய் அளவுப்பெயர் நிறைப் பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றோடு ஒத்த ஒற்றாய்த் திரிந்து முடியும் என்றவாறு. (உ-ம்) மூன்று+கலம்=முக்கலம், சாடி, தூதை, பானை எனவும் மூன்று+கழஞ்சு=முக்கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும். ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும். (தொல். 448) இதுவுமது. (இ-ள்) ஐந்தென்பதன் நகரவொற்று வருமொழி வல்லெழுத் திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும் என்றவாறு. (உ-ம்) ஐந்து+கலம்=ஐங்கலம், சாடி, தூதை, பானை எனவும் ஐந்து+கழஞ்சு=ஐங்கழஞ்சு,கஃசு, தொடி, பலம் எனவும் வரும். கசதப முதன்மொழி வரூஉங் காலை (தொல். 449) இது மேற்கூறிய மூன்றற்கும் வருமொழி வரையறுக் கின்றது. (இ-ள்) மேற் கூறியவாறு மூன்றனொற்று வந்தவொற்றாய்த் திரிதலும் ஐந்தனொற்று மெல்லெழுத்தாதலும் அளவுப்பெயர் நிறைப்பெயர்கட்கு முதலாம் ஒன்ப தெழுத்துக்களினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன்மொழியாய் வந்த விடத்தாம் என்றவாறு. (உ-ம்) அறுகலம், சாடி, தூதை, பானை எனவும் அறுகழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். நமவ என்னும் மூன்றொடு சிவணி அகரம் வரினும் எட்டன்மு னியல்பே. (தொல். 450) இச்சூத்திரம் ஞ ந ம ய வ வெனும் (எழுத்து 144) என்ற சூத்திரத்துப் பொது விதியின் அடங்குவனவற்றை வேறோர் பயனோக்கி விளங்கக் கூறியதாகலின், `இது வேண்டா கூறி வேண்டியது முடித்தல் நுதலிற்றென்பர் உரையாசிரியர். (இ-ள்) அளவிற்கும் நிறைக்கு முதலாமெனப்பட்ட நமவ என்னும் மூன்றனோடு பொருந்தி அகர முதன் மொழி வரினும் முற்கூறியவாறே எட்டென்பதன் டகாரம் ணகாரமாய் வேறோர் விகாரமின்றி இயல்பாய் முடியும் என்பதாம். இவ் வேண்டா கூறலால் எண்ணகல் என ஒற்றிரட்டுதல் கொள்ளப்பட்டது. (உ-ம்) எட்டு+நாழி=எண்ணாழி, மண்டை, வட்டி, அகல் எனவரும். உம்மையான் உயிர்க்கணத்து உகர முதன்மொழிவரினும் வல்லெழுத்துவரினும் எண்ணுழக்கு, எண்கலம், சாடி, தூதை, பானை என இயல்பாய் முடிதல் கொள்க. ஐந்தும் மூன்றும் நமவரு காலை வந்த தொக்கும் ஒற்றியல் நிலையே. (தொல். 451) இதுவும் மேல் மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுகின்றது. (இ-ள்) ஐந்து, மூன்று என்னும் எண்ணுப்பெயர்கள் நகரமுதன் மொழியும் மகர முதன்மொழியும் வருங்காலத்து மேற்கூறியவாறே மகரமும் பகரமுமாகாது வருமொழி முதல் வந்த வொற்றோடு ஒத்தவொற்றாய்த் திரிந்து முடியும் என்றவாறு. (உ-ம்) ஐந்து+நாழி=ஐந்நாழி, ஐம்மண்டை, மூன்று+ நாழி= முந்நாழி, மும்மண்டை எனவரும். மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிக் கூற்றினால் நான்கு +நாழி நானாழி என்னும் முடிபின் கண் விகாரமாகிய னகரத்தின் முன்னர் வருமொழி நகரத்திரிபும், அதுகாரணமாக நிலைமொழி னகரக்கேடும் கொள்ளப்பட்டன என்பர் இளம்பூரணர். மூன்ற னொற்றே வகரம் வருவழித் தோன்றிய வகரத் துருவா கும்மே. (தொல். 452) இதுவுமது. (இ-ள்) மூன்றென்னும் எண்ணின்கணின்ற னகர வொற்று வகர முதன்மொழி வருமிடத்து அவ்வருமொழி வகரமாய்த் திரிந்து முடியும் என்றவாறு. (உ-ம்) மூன்று+வட்டி = முவ்வட்டி எனவரும். தோன்றிய என்றதனான் முதல் நீண்டு வகரவொற்றின்றி மூவட்டியென்றுமாம் என்பர் உரையாசிரியர். நான்க னொற்றே லகார மாகும். (தொல். 453) இதுவுமது. (இ-ள்) நான்கென்னும் எண்ணின்கணின்ற னகர வொற்று வகர முதன்மொழி வந்தால் லகரவொற்றாகித் திரிந்து முடியும். (உ-ம்) நான்கு+வட்டி = நால்வட்டி எனவரும். ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. (தொல். 454) இதுவுமது. (இ-ள்) ஐந்தென்னும் எண்ணின்கணின்ற நகர வொற்று வகர முதன்மொழி வருமிடத்துக் கெட்டு முடியும் என்றவாறு. (உ-ம்) ஐந்து+வட்டி = ஐவட்டி எனவரும். முந்தை என்றதனான் நகரவொற்றுக்கெடாது வருமொழி வகரமாய்த் திரிந்து ஐவ்வட்டி என வருதலுங் கொள்வர் உரையாசிரியர். முதலீ ரெண்ணின்முன் உயிர்வரு காலைத் தவலென மொழிப உகரக் கிளவி முதனிலை நீட லாவயி னான. (தொல். 455) இது மாட்டேற்றான் எய்திய உகரத்திற்குக் கேடு கூறி முதல் நீள்க என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது. (இ-ள்) ஒரு, இரு என முடிந்து நின்ற முதலீரெண்ணின் முன் உயிர் முதன்மொழி வருமிடத்து நிலைமொழி யுகரமாகிய எழுத்துக் கெடுமெனச் சொல்வர். அவ்விடத்து அவ்வெண்களின் முதலெழுத் துக்கள் நீண்டு முடியும் என்றவாறு. (உ-ம்) ஓரகல், ஈரகல், ஓருழக்கு, ஈருழக்கு எனவரும். மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் தோன்றிய வகரத் தியற்கை யாகும். (தொல். 456) இதுவுமது. (இ-ள்) மூன்று, நான்கு, ஐந்து என்னுமெண்களின் முன்னர்த் தோன்றி நின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகரவொற்றாயும் நான்கின்கண் லகர வொற்றாயும், ஐந்தின் கண் ஒற்றுக் கெட்டும் முடியும் என்பதாம். உ-ம் முவ்வகல், முவ்வழக்கு, நாலகல், நாலுழக்கு, ஐயகல், ஐயுழக்கு எனவரும். மூன்று என்பது முதல் நீண்டவிடத்து நிலைமொழி னகர வொற்றுக் கெடுதல் தோன்றிய என்ற மிகையாற் கொள்ளப்படும். மூன்றன் முதனிலை நீடலு முரித்தே உழக்கென் கிளவி வழக்கத் தான. (தொல். 457) இஃது எய்தியது விலக்கிற்று. (இ-ள்) உழக்கென்னுஞ் சொல் வருமொழியாய் வரும் வழக்கிடத்து நிலைமொழியாகிய மூன்றென்னும் எண்ணுப் பெயரின் முதனிலை நீண்டு முடிதலுமுரித்து என்றவாறு. (உ-ம்) மூவுழக்கு எனவரும். வழக்கத்தான என்றதனால் அகல் என்பது வருமொழியாய் வருமிடத்தும் மூவகல் என இச்செய்கை பெறுதல் கொள்க. மூன்று + உழக்கு = மூழக்கு, மூன்று+ஆழாக்கு = மூழாக்கு என்னும் மரூஉ முடிபு இவ்வியலின் புறனடையாற் கொள்ளப்படும். ஆறென் கிளவி முதல் நீடும்மே. (தொல். 458) இதுவுமது. (இ-ள்) ஆறென்னு மெண்ணுப்பெயர் அகல், உழக்கு என்பன வரின் முன்னர்க் குறுகிநின்ற முதலெழுத்து நீண்டு முடியும் என்றவாறு. (உ-ம்) ஆறகல், ஆறுழக்கு எனவரும். ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. (தொல். 459) இது குற்றுகரம் மெய்யொடுங் கெடாது நின்று இன்பெறுக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதிவகுக்கின்றது, (இ-ள்) ஒன்பதென்னும் எண்ணுப்பெயரிறுதிக் குற்றுகரம் தன் வடிவுநிலை திரியாது நின்று இன்சாரியை பெற்று முடிதல் வேண்டும் என்றவாறு. (உ-ம்) ஒன்பது+கலம்=ஒன்பதின் கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். `உருபு என்றதனால் ஒன்பதிற்றென இன்சாரியையின் னகரம் றகரமாக இரட்டுதல் கொள்ளப்படும். சாரியை மொழியே யென்றதனான் இன்சாரியையோடு உகரமும் வல்லெழுத்துங் கொடுத்து ஒன்பதிற்றுக்கலம், சாடி என எல்லாவற்றோடும் ஒட்டுக என்பர் நச்சினார்க்கினியர். நூறு முன் வரினுங் கூறிய இயல்பே. (தொல்.460) (இ-ள்) ஒன்று முதல் ஒன்பான்களோடு நூறென்னு மெண்ணுப் பெயர் வந்தாலும் மேற் பத்தென்பதோடு புணரும்வழிக் கூறிய இயல்பெய்தி முடியும் என்றவாறு. அவ்வியல்பாவது குற்றுகரம் மெய்யொடுங்கெட்டு மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகி முதலீரெண்ணி னொற்று ரகரமாய் உகரம் பெற்று இரண்டென்னு மெண்ணின் இடைநின்ற ரகரம் கெட்டு முடிதலாம். (உ-ம்) ஒருநூறு, இருநூறு, அறுநூறு, எண்ணூறு எனவரும். மூன்ற னொற்றே நகார மாகும். (தொல். 461) (இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கணின்ற னகர வொற்று நகர வொற்றாகத் திரிந்து முடியும். என்றவாறு. (உ-ம்) முந்நூறு எனவரும். நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா. (தொல். 462) இதுவுமது. (இ-ள்) நான்கென்னு மெண்ணும் ஐந்தென்னு மெண்ணும் தம்மொற்றுக்கள் நிலை திரியாது முடியும் என்றவாறு. (உ-ம்) நானூறு, ஐந்நூறு எனவரும். `மெய் என்றதனால் நானூறு என்புழி வருமொழி ஒற்றாகிய நகரக்கேடு கொள்ளப்படும் என்பர் இளம்பூரனர். நான்கு என்புழிக் குகரம் கெட நின்ற னகரம் குறிலணைவில்லா னகரமாதலின் அதனை நோக்கி வந்த வருமொழி நகரம் மயக்க விதியின்மையின் னகரமாகத் திரிந்த நிலையில் தான் கெடும் என்பதே பவணந்தி முனிவர் கொள்கை. குறிலணை வில்லா ணனக்கள் வந்த நகரந் திரிந்துழி நண்ணுங் கேடே. (நன். 210) என்பது நன்னூல். ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே முந்தை யொற்றே ளகாரம் இரட்டும் நூறென் கிளவி நகார மெய்கெட ஊஆ வாகும் இயற்கைத் தென்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகர மொற்றும். (தொல்.463) இதுவுமது. (இ-ள்) ஒன்பதென்னு மெண்ணின் முதனின்ற ஒகரம் மேற் பத்தென்பதனோடு புணரும்வழிக் கூறியவாறுபோல ஒரு தகரம் ஒற்றாய்வர அதன் மேலேறி முடியும். அவ்வொகரத்தின் முன்னின்ற னகர வொற்று ளகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும். வருமொழியாகிய நூறு என்னும் எண்ணுப்பெயர் நகரமெய் கெட அதன் மேலேறிய ஊகாரம் ஆகாரமாம் இயல்புடைத் தென்பர். அம்மொழியிடை ஓர் இகரமும் ரகரமும் வர ஈறாகிய குற்றுகரத்தினையும் அஃதேறி நின்ற றகர வொற்றினையுங் கெடுத்து ஒரு மகரவொற்று வந்து முடியும் என்பதாம். (உ-ம்) ஒன்பது+நூறு = தொள்ளாயிரம். இவ்வாறு ஆசிரியர் ஒன்பஃது என்னும் எண்ணுப் பெயரோடு பத்து, நூறு என்னும் பெயர்களைத் தனித் தனியே புணர்த்தி முறையே தொண்ணூறு, தொள்ளாயிரம் எனத் திரித்து முடிபு கூறினாற்போல நன்னூலார் செய்கை செய்யாராயினார். எண்பஃதுடனே பத்தொன்பதும் நூறென்பதும் வந்து புணரு மாயின் நிலைமொழியாய் எட்டின்மேல் ஒன்று ஒள்பஃதெனப் பஃதென்னும் இறுதியாய்த் திரிந்து நின்றாற் போல, வருமொழியாய எண்பதின்மேற்பத்தை நூறெனவும் v©û‰¿‹nkš நூற்றை ஆயிரமெனவும் திரித்து, நிலைமொழி முதற்கண் ஒகர உயிரோடு தகர மெய்யை அதற்கு ஆதாரமாக நிறுத்தி அந்நிலை மொழியின் இறுதிக்கண் பஃதைக் கெடுத்து அம்மொழி முதற்கு அயல்நின்ற னகரவொற்றை நிரனிறை வகையானே பத்தின் புணர்ச்சிக்கு ணகரவொற்றாயும் பத்தின் திரிபாகிய நூற்றின் புணர்ச்சிக்கு ளகரவொற்றாயும் திரிப்பது முறையாம் என்பது பட, ஒன்பா னொடு பத்து நூறு மொன்றின் முன்னதி னேனைய முரணி ஒவ்வொடு தகரம் நிறீஇப் பஃதகற்றி னவ்வை நிரலே ணளவாத் திரிப்பது நெறியே. (நன். 194) எனச் சூத்திரஞ் செய்தார் பவணந்தி முனிவர். ஆயிரக் கிளவி வரூஉங்காலை முதலீ ரெண்ணின் உகரங் கெடுமே. (தொல்.464) ஒன்று முதலொன்பான்களோடு ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்) ஆயிரமென்னுஞ் சொல் ஒன்று முதல் ஒன்பான் களோடு வந்து புணருமாயின் ஒரு இரு என முதல் ஈரெணண்ணின் கட் பெற்று நின்ற உகரங்கெட்டு முடியும் என்றவாறு. (உ-ம்) ஓராயிரம், இராயிரம் எனவரும். முதனிலை நீடினும் மான மில்லை. (தொல். 465) இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) அம் முதலீரெண்ணின் ஒகர இகரங்கள் நீண்டு முடியினுங் குற்றமில்லை என்றவாறு. (உ-ம்) ஓராயிரம், ஈராயிரம் எனவரும். மூன்ற னொற்றே வகாரமாகும். (தொல்.466) இது மாட்டேற்றோடு ஒவ்வா முடிபு கூறுகின்றது. (இ-ள்) மூன்றென்னு மெண்ணின்கண் நின்ற னகர வொற்று வகரவொற்றாய்த் திரிந்து முடியும் என்றவாறு. (உ-ம்) முவ்வாயிரம் எனவரும். முன்னின்ற சூத்திரத்து நிலையென்றதனான் முதனிலை நீண்டு வகரவொற்றுக் கெட்டு மூவாயிரம் எனவும் வருதல் கொள்க. நான்க னொற்றே லகார மாகும். (தொல். 467) இதுவுமது. (இ-ள்) நான்கென்னு மெண்ணின்கணின்ற னகர வொற்று லகரவொற்றாகத் திரிந்து முடியும் என்றவாறு. (உ-ம்) நாலாயிரம் எனவரும். ஐந்த னொற்றே யகார மாகும். (தொல். 468) இதுவுமது. (இ-ள்) ஐந்தென்னும் எண்ணின்கணின்ற நகர வொற்று யகரவொற்றாய்த் திரியும் என்றவாறு. (உ-ம்) ஐயாயிரம் எனவரும். ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும். (தொல்.469) இதுவுமது. (இ-ள்) ஆறென்னுமெண்ணின்கணின்ற குற்றியலுகரம், நெடுமுதல் குறுகி அறுவென முற்றுகரமாய் நிற்றலின், தானேறிய மெய்யாகிய றகரவொற்றுக் கெடாது நிற்ப முற்றுகரமாகிய ஈறு கெட்டு முடிதல் வேண்டும் என்றவாறு. (உ-ம்) அறாயிரம் எனவரும். முன்னர் `நெடுமுதல் குறுகும் (எழுத்து - 440) என்ற விதிப்படி ஆறு அறு எனத் திரிந்து நிற்கின்ற முற்றுகரத்தையே ஈண்டு `ஆறன் மருங்கிற் குற்றியலுகரம் என்றார் ஆசிரியர். இங்ஙனம் கூறியது திரிந்ததன் திரிபு அதுவென்னுங் கருத்தினா லென்பர் உரையாசிரியர். எனவே ஈண்டுக் கெடுமெனச் சொல்லப்பட்டது அறு என்பதன் கண் முற்றியலுகரமே யென்பதும் ஆறு என்பதனீற்றுக் குற்றியலுகரமே யென்பதும் ஆறு என்பதனீற்றுக் குற்றியலுகரமாயின் மெய்யீறு போலக் கெடாது நின்று உயிரேற இடங்கொடுக்கு மென்பதும் புலனாம். இது புணரியலில் `குற்றியலுகரமும் அற்றெனமொழிப என்னுஞ் சூத்திரவுரையில் விளக்கப் பெற்றமை நோக்கத்தக்கதாகும். ஒன்பா னிறுதி உருபு திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே. (தொல். 470) இதுவுமது. (இ-ள்) ஒன்பதென்னும் எண்ணினிறுதிக் குற்றுகரம் தன் வடிவு கெடாது இன்சாரியை பெற்று முடிதல் வேண்டும் என்றவாறு. (உ-ம்) ஒன்பதினாயிரம் எனவரும். நூறா யிரமுன் வரூஉங் காலை நூற னியற்கை முதனிலைக் கிளவி. (தொல். 471) இஃது ஒன்று முதல் ஒன்பான்களோடு நூறென்னு மெண் அடையடுத்த ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது. (இ-ள்) நூறாயிரமென்னும் அடையடுத்த மொழி ஒன்றுமுதல் ஒன்பான்கள்முன் வருமொழியாய் வருங்காலத்து ஒன்றென்னு முதனிலைக்கிளவி நூறென்னு மெண்ணோடு புணர்ந்தாற்போல விகாரமெய்தி முடியும் என்றவாறு. (உ-ம்) ஒரு நூறாயிரம் எனவரும். நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற்கு ஈறு சினையொழிய இனவொற்று மிகுமே. (தொல். 472) இது நூறென்பதனோடு ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. (இ-ள்) நூறென்னு மெண்ணுப் பெயர் ஒன்றுமுதலொன் பான்களோடு புணருமிடத்து ஈறாகி நின்ற குற்றுகரந் தன்னாற் பற்றப் பட்ட மெய்யோடுங் கெடாது நிற்ப அச்சினைக்கு இனமாகிய றகரவொற்று மிக்கு முடியும் என்றவாறு. (உ-ம்) நூற்றொன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது எனவரும். அவையூர் பத்தினும் அத்தொழிற் றாகும். (தொல். 473) (இ-ள்) நூறென்பது நின்று முற்கூறிய ஒன்று முதலொன் பான்களை யூர்ந்து வந்த பத்தென்பதனோடு புணருமிடத்தும் முற் கூறியவாறு ஈறுசினை யொழிய இனவொற்று மிக்கு முடியும் என்றவாறு. (உ-ம்) நூற்றொருபஃது, இருபஃது, முப்பஃது, நாற்பஃது, ஐம்பஃது, அறுபஃது, எழுபஃது எனவரும். `ஆகும் என்றதனால் ஒரு நூற்றாருபஃது, இரு நூற்றொருபஃது என நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்ளப்படும். அளவும் நிறையும் ஆயியல் திரியாது குற்றியலுகர மும் வல்லெழுத் தியற்கையும் முற்கிளந் தன்ன என்மனார் புலவர். (தொல். 474) (இ-ள்) நூறென்பதனோடு அளவுப் பெயரும் நிறைப்பெயரும் புணருமிடத்து முற்கூறிய இயல்பிற் றிரியாது இனவொற்று மிக்கு முடியும். அவ்விடத்துக் குற்றியலுகரம் கெடாமையும் இனவொற்று மிக்கு வன்றொடர் மொழியாய் நிற்றலின் வல்லெழுத்து மிகும் இயல்பும் `வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே (226) என வன்றொடர் மொழிக்குக் கூறிய தன்மையவாய் முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. (உ-ம்) நூற்றுக்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும் கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். `திரியா என்றதனான் ஒரு நூற்றுக்கலம், இரு நூற்றுக்கலம் என நூறென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்ளப்படும். ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும். (தொல். 475) இஃது ஒன்றுமுதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தனோடும் ஒன்று முதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது. (இ-ள்) ஒன்று முதலெட்டீறாகப் பத்தென்னுமெண் ஏறி ஒரு சொல்லாகி நின்ற ஒருபஃது முதலிய எண்ணுப் பெயர்கள் ஒன்று முதலாகிய ஒன்பதெண்கள் வருமொழியாய் வருமிடத்துப் பஃது என்பதன் ஆய்தங்கெட்டு ஆண்டு இனவொற்றாகிய ஒரு தகரவொற்று இடையிலே மிக்கு முடியும் என்றவாறு. (உ-ம்) ஒருபத்தொன்று, இருபத்தொன்று என எல்லாவற்றோடும் வரும். இதனை நன்னூலார், ஒருபஃதாதி முன் னொன்று முதலொன்பான் எண்ணும் அவையூர் பிறவு மெய்தின் ஆய்த மழியவாண் டாகுந் தவ்வே. (நன். 196) என்ற சூத்திரத்தாற் கூறினார். ஆயிரம் வரினே இன்னென் சாரியை ஆவயி னொற்றிடை மிகுத லில்லை. (தொல். 476) (இ-ள்) ஒருபஃது முதலியன ஆயிரத்தோடு புணருமிடத்து இன்சாரியைபெறும். அவ்விடத்துத் தகர வொற்று இடை மிகாது என்றவாறு. (உ-ம்) ஒருபதினாயிரம், இருபதினாயிரம், எண்பதினாயிரம் எனவரும். அளவும் நிறையும் ஆயியல் திரியா (தொல். 477) இஃது ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்) ஒருபஃது முதலிய எண்களின் முன்னர் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடைமிகாது இன்சாரியை பெற்று முடியும் என்றவாறு. (உ-ம்) ஒருபதின்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும், கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். `திரியா என்றதனால் ஒருபதிற்றுக்கலம், இருபதிற்றுக் கலம் என்னும் முடிபிற்கு இன்னின் னகரம் இரட்டிய றகர மாதலும், ஒருபதினாழி என்னும் முடிபின்கண் வருமொழி நகரம் திரிந்தவழி நிலைமொழியின் னகரக்கேடும்கொள்க என்பர் இளம்பூரணர். முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் ஞநமத் தோன்றினும் யவவந் தியையினும் முதனிலை யியற்கை என்மனார் புலவர். (தொல். 478) இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட்பெயரைப் புணர்க்கின்றது. (இ-ள்) ஒன்றென்னுமெண்ணின் முன் வல்லெழுத்து முதன் மொழிவரினும் ஞ, ந, ம, க்களாகிய மெல்லெழுத்து முதன்மொழி வரினும் யவக்களாகிய இடையெழுத்து முதன்மொழிவரினும் அவ்வொன்றுமுத லொன்பான்கள் முன் எய்திய முடிபு நிலைமை எய்தி முடியுமென்று கூறுவர் புலவர் என்றவாறு. (உ-ம்) ஒருகல், சுனை, துடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு எனவரும். அதனிலை உயிர்க்கும் யாவரு காலையும் முதனிலை ஒகரம் ஓவாகும்மே ரகரத் துகரந் துவரக் கெடுமே. (தொல். 479) ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர் முதல் மொழி முடியுமாறுங் மேற்கூறிய யகரம் வேறுபட முடியுமாறும் கூறுகின்றது. (இ-ள்) ஒன்றென்னு மெண்ணின் திரிபாகிய ஒரு என்பதன் முன்னர் உயிர்முதன்மொழியும் யாமுதன்மொழியும் வருமொழி யாய் வருங்காலத்து அம் முதனிலையின் தன்மையாவது ஒகரம் ஓகாரமாய் நீளும், ரகரத்து மேல் நின்ற உகரம் முற்றக்கெட்டு ஓர் என முடியுமென்பதாம். (உ-ம்) ஓரடை, ஓராடை, இலை, உரம், ஊர்தி, எழு, ஏணி, ஐயம், ஒழுங்கு, ஓலை, ஔவியம், ஓர்யானை எனவரும். `துவர என்றதனான் இரண்டு என்னும் எண்ணும் மூன்று என்னும் வண்ணும் செய்யுளகத்து முறையே ஈர், ஈரசை, ஈர்யானை எனவும் மூ, மூவசை, மூயானை யெனவும் முதல் நீண்டு வேறுபட முடிதல் கொள்ளப்படும். இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர் வழங்கியல் மாவென் கிளவி தோன்றின் மகர அளவொடு நிகரலு முரித்தே. (தொல். 480) (இ-ள்) இரண்டென்னு மெண் முதலாக ஒன்பதீறாக நின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர் வழக்கின் கண்ணே நடந்த அளவு முதலியவற்றிற்குரிய மாவென்னுஞ் சொல் வருமொழியாய்வரின் அவ்வெண்ணுப் பெயர்களின் முன்னர்த் தந்து புணர்க்கப்படும் மண்டை யென்னும் மகரமுதல் அளவுப்பெயரோடொத்து விகாரப் படுதலு முடைத்து என்பதாம். உம்மையான் விகாரப்படாது இயல்பாய் முடிதலு முரித்தெனக் கொள்க. (உ-ம்) இருமா, மும்மா, நான்மா, ஐம்மா, அறுமா, எழுமா, எண்மா, ஒன்பதின்மா எனவரும். இரண்டுமா, மூன்றுமா எனவும் வரும். விலங்குமாவை நீக்குதற்கு வழங்கியன் மா என்றார். இச் சூத்திரத்து இரண்டு முதல் ஒன்பான் என்று எடுத்தமையின் ஒன்றென் பதன் முன்னர் ஒருமா என்னும் முடிபேயன்றி ஒன்றுமா என்னும் முடிபு இல்லையாயிற்று. மிக்க எண்ணோடு குறைந்த எண் வருங்கால் உம்மைத் தொகையாகவும் குறைந்த எண்ணோடு மிக்க எண்வருங் கால் பண்புத்தொகை யாகவும் முடித்தல் ஆசிரியர் கருத்தாகும். லனவென வரூஉம் புள்ளி யிறுதிமுன் உம்முங் கெழுவும் உளப்படப் பிறவும் அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச் செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும் வேற்றுமை குறித்த பொருள்வயி னான. (தொல். 481) இது, லகார வீற்றுச் செய்யுள் முடிபு கூறுகின்றது என இளம்பூரணரும், இது புள்ளிமயங்கியலுள் ஒழிந்து நின்ற செய்யுள் முடிபு கூறுகின்றது என நச்சினார்க்கினியரும் கூறுவர். (இ-ள்) லகார னகாரமாகிய புள்ளியீற்றுச் சொன்முன் உம், கெழு என்னுஞ் சாரியைகளும் பிற சாரியைகளும் அப்பெற்றிப் பட்ட மொழியிடத்தே தோன்றி, செய்யுட் சொற்களைத் தொடர்புபடுத்திக் கூறுமிடத்து வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண் பொருள்பெற நிற்கும் என்பதாம். (உ-ம்) வானவரிவில்லுந் திங்களும், கல்கெழுகானவர் நல்குறு மகளே எனவும், `மாநிதிக்கிழவனும் போன்ம் எனவும் கான் கெழுநாடு எனவும் வரும். துறைகெழுமாந்தை, வளங்கெழு திருநகர் எனப் பிற ஈறுள்ளும் இச்சாரியை வருதல் `மொழியிடைத் தோன்றி என்பதனாற் கொள்ளப்படும். அன்ன மரபின் என்றதனால் சாரியை காரணமாகப் பூக்கேழூரன், வளங்கேழ் திருநகர் என வல்லெழுத்துப் பெறுதலும் நிலைமொழியீறு திரிதலும் சாரியையது உகரக்கேடும் எகரநீட்சியும் கொள்ளப்பெறும். `சான்றோர் செய்யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற் கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க என்பர் நச்சினார்க்கினியர். உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினுந் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் ஐம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ் செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின் மெய்யொருங் கியலுந் தொழில்தொகு மொழியும் தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வரூஉம் எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும் அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய புணரியல் நிலையிடை உணரத் தோன்றா. (தொல். 482) மேல் நிலைமொழியும் வருமொழியுமாகச் சொற்களைப் புணர்க்கும் விதி கூறிய ஆசிரியர், இச்சூத்திரத்தால் அங்ஙனம் நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியுமாகப் புணர்க்கப்படாத சொற்கள் இவை யென்பதனை எடுத்துரைக்கின்றார். (இ-ள்) உயிரெழுத்தும் புள்ளியெழுத்தும் ஈறாக நிற்பதோர் சொல்லாகிக் குறிப்பின்கண்ணும் இசையின் கண்ணும் பண்பின் கண்ணுந்தோன்றி ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும், ஒருவன், ஒருத்தி, பலர், ஒன்று, பல என்னும் ஐந்துபாலையும் அறியவரும் பண்புத் தொகை மொழிகளும், செய்யும், செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய காலங் காட்டும் உம்மும் அகரமும் ஒருசேர நடக்கும் புடை பெயர்ச்சி தொக்குநிற்குஞ் சொற்களும், தமது தன்மை கூறுமிடத்து நிறுத்தசொல்லும் குறித்து வருகிளவியுமாய் வாராது தன்முன்னர்த் தாமே வந்து நிற்கும் எண்ணுப்பெயரினது தொகுதியும் உளப்பட அத்தன்மையவாகிய பிறவுமெல்லாம் உலகத்து மருவிநடந்த வழக்கினது பகுதியைத் தம் இலக்கண மாகவுடையனவாம்; அவை ஒன்றனோடொன்று புணருதல் நடந்த தன்மை இடம் விளங்கத் தோன்றவென்றவாறு. உரிச்சொல் குறைச்சொற்கிளவியாதலானும், கருஞ் சான்றான் எனப் பண்புத்தொகையாயவழிக் கரியான் சான்றான் என மரூஉவாய்த் திரிந்து நின்றதாகலானும், கொல்யானையென வினைத்தொகையாயவழிக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும் எனக் காலங்காட்டுவன கொல் எனத் திரிந்தனவாகலானும், தம்முன் தாம் வருமெண்ணுப் பெயர்கள் நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியும் அன்மையானும் இங்ஙனம் வழக்கிடத்து மரூஉவாய் வந்தன நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாகப் புணர்க்கப்படாவென ஆசிரியர் விலக்கினார். (உ-ம்) விண்விணைத்தது, கார்கறுத்தது, ஒல்லொலித்தது எனவும் கரும்பார்ப்பனி எனவும், கொல்யானை எனவும் பப்பத்து எனவும் வரும் . கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கி னுணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத் தென்மனார் புலவர். (தொல். 483) இஃது இவ்வதிகாரப் புறனடை கூறுகின்றது. (இ-ள்) முன்னர் எடுத்தோதாதனவாய்ச் செய்யுளிடத்துத் திரிந்து வருவனவற்றையும், வழக்கிடத்தே மரூஉவாய்த் திரிந்து வருவனவற்றையும், முற்கூறப்பட்ட இலக்கண முடிபின் வேறுபடத் தோன்றின் நல்லறிவினது ஆராய்ச்சியான் வழக்கி யற்கண் அவற்றின் வேறுபாட்டை அறிந்து நடத்துகவெனக் கூறுவர் புலவர். (உ-ம்) தட என்னும் அகரவீற்றுரிச்சொல் `தடவுத்திரை என உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் `தடவு நிலை என உகரம் பெற்றும் வந்தது அது என்னும் அகர வீறு `அதவத்துக்கனி என வேற்றுமைக்கண் அத்துய் பெற்றது. கசதப - தோன்றின் என்பது `கசதபத்தோன்றின் என வல்லெழுத்துப் பெற்றது. நறா, குரா எனவரும் ஆகார வீற்றுச்சொற்கள் `நறவங் கண்ணி `குரவநீடிய எனக் `குறியதனிறுதிச் சினை கெட்டு இரு வழியும் அம்முப் பெற்றன. ஆகார வீறு பிணா+நாய்=பிணவு நாய் என அல்வழிக்கண் அம்முப் பெறாதும், இரா+வழங்கு= இரவழங்கு என உகரம் பெறாதும் வந்தன. கள்ளி+காடு= கள்ளியங்காடு என இகரவீறு வேற்றுமைக்கண் அம் சாரியை பெற்றது. தீ+அன்ன = தீயினன்ன (மலைபடு-145) என ஈகாரவீறு வேற்றுமைக்கண் இன்சாரியைபெற்றது. திரு+அவர்= திருவத் தவர் (நாலடி 57) எ உகரவீறு வேற்றுமைக் கண் அத்துச் சாரியை பெற்றது. ஏ+பெற்ற = ஏப்பெற்ற (சீவக-2965) என ஏகாரவீறு வேற்றுமைக்கண் எகரம் பெறாது வந்தது. கை+உண்டாம் போழ்தே= கைத்துண்டாம் போழ்தே (நாலடி-19) எனவும், கை+ இல்லர்=கைத்தில்லர் (நான்மணி - 69) எனவும், புன்னை+கானல் = புன்னையங்கானல் எனவும், முல்லை+தொடையல் = முல்லையந்தொடையல் எனவும் ஐகாரவீறு வேற்றுமைக்கண் அத்தும் அம்மும் பெற்றன. கோ+இல்= கோயில் என ஓகாரவீறு யகரவுடம்படு மெய் பெற்றது. `காரெதிர் கானம்பாடினேமாக (புறம் 144) `பொன்னந் திகிரி என்புழிக் கான், பொன் என்னும் னகர வீறுகள் இருவழியும் அம்முப் பெற்றன. `வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரலிசை (நற்றிணை-62) என்புழி வெதிர் என்னும் ரகரவீறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது. `நாவலந் தண்பொழில் (பெரும்பாண்-465) என லகரவீறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றது. நெய்தல்+சிறுபறை= நெய்தலஞ் சிறுபறை என லகர வீறு அல்வழிக்கண் அம்முப் பெற்றது, ஆயிடை யிருபேராண்மை செய்தபூசல் (குறுந்தொகை - 43) என்புழி `அவ் என்னும் வகர வீறு `இடை என்னும் உருபொடு புணர்ந்து `ஆயிடை என நீண்டு வேறுபட முடிந்தது. தெவ்+முனை=தெம்முனை என்புழி வகரங் கெட்டு மகர வொற்றுப்பெற்று முடிந்தது. அ+அனைத்தும் = அன்றி யனைத்தும் என அகரச் சுட்டு அன்றி எனத் திரிந்தது. கோங்கின் முகை, தெங்கின்பழம் எனக் குற்றுகர வீறு இன்பெற்றன. இவ்வாறே செய்யுளில் திரிந்து வருவனவுளவேல் அவற்றை யெல்லாம் இவ்வதிகாரப் புறனடையால் முடித்துக் கொள்ளுதல் வேண்டும் என்பர் நச்சினார்க்கினியர். `அருமருந்தன்னான் எனற்பாலது அருமருந்தான் என மரூவாய் முடிந்தது என இளம்பூரணரும், `அரு மருந்தான் என்பது ரகர வுகரங் கெட்டு அருமந்தான் என முடிந்தது என நச்சினார்க்கினியரும் கூறுவர். சோழன் + நாடு = சோணாடு எனவும், பாண்டியன் + நாடு = பாண்டியநாடு எனவும் அன் கெட்டு முடிந்தன. தொண்டைமான் + நாடு = தொண்டை நாடு என ஈற்றெழுத்துச் சில கெட்டும், மலையமான் +நாடு = மலாடு என முதலெழுத் தொழிந்தன பலவுங் கெட்டும் முடிந்தன எனவும், பொது + இல் = பொதியில் என உகரந்திரிந்து இகரமாய் யகரவுடம்படுமெய் பெற்று முடிந்தது எனவும், பிறவும் இவ்வாறே திரிந்து மருவி வழங்குவன வெல்லாம் இப்புறனடை யான் அமைத்துக் கொள்க எனவும் விதி கூறுவர் நச்சினார்க் கினியர். நன்னூலாசிரியராகிய பவணந்தி முனிவர் தாம் வகுத்துக் கொண்ட விகுதிப் புணர்ச்சி, பதப் புணர்ச்சி, சாரியைப் புணர்ச்சி, உருபு புணர்ச்சி ஆகிய நான்கின் புணர்ச்சிக் கண்ணும் வேறுபட வந்தவற்றை யெல்லாம் உணர்ந்து ஒப்புநோக்கி அமைத்துக் கொள்ளும் முறையில் புறனடைச் சூத்திரங்களாகச் சில நூற்பாக்களை எழுத்ததிகாரத்தின் இறுதியில் அமைத்துள்ளனர். இதற்கிது சாரியை யெனின் அளவின்மையின் விகுதியும் பதமும் உருபும் பகுத்து, இடை நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும் ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறியே. (நன். 253) என்பது சாரியை பற்றிய புறனடையாகும். விகுதி முதலிய புணர்ச்சிக்கண் இன்னதற்கு இன்ன சாரியை என்று வரையறுத்து விதித்தன வற்றுள்ளும் ஒழிந்தன வற்றுள்ளும் தனித்தனி யெடுத்துக் கூறத் தொடங்கின் அவை அளவின்றி விரியுமாகலின் விகுதிப் புணர்ச்சியினையும் பதப்புணர்ச்சி யினையும் உருபுபுணர்ச்சியினையும் கண்டவிடத்து அவற்றைப் பகுத்து அவற்றினிடையே நின்ற ஏகாரம் அகரம் முதலிய எழுத்துச் சாரியையினையும் அன் ஆன் முதலிய பதச்சாரியை யினையும் இவ்விருசாரியையும் பெறாது இயல்பாய் நின்ற தன்மையினையும் தெளிய அறிவித்தல் அறிஞரது நெறி முறை யாகும் என்பது இந்நூற்பாவின் பொருளாகும். உருபு புணர்ச்சிக்கண் விதித்த சாரியை முதலிய முடிபுகள் அவ் வுருபுதொக்க பொருட்புணர்ச்சிக்கண்ணும் உரியவை யுரியன என்பது, உருபின் முடியவை ஒக்குமப் பொருளினும் என்பதனால் உணர்த்தப்பட்டது. (நன். 238) பவணந்தி முனிவர் தாம் இயற்றிய நன்னூல் கருக்க நூலாதலின் அதன்கண் விகுதி, பதம், சாரியை, உருபு என்னும் நான்கின் புணர்ச்சிக்கண்ணும் விதிகள் பொதுப்படக் கூறப் பட்டனவாயினும் அவ்விதிகளுள் இவ்விதி இதற்குப் பொருந்தும் இவ்விதி இதற்குப் பொருந்தாது என உய்த்துணர்ந்து இவ்விதி இதற்குப் பொருந்தாது என உய்த்துணர்ந்து எவ்விதி எதற்குப் பொருந்துமோ அவ்விதியை அதற்குக் கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்தும் முறையில், விகுதிபதஞ் சாரியை யுருபனைத்தினும் உரைத்த விதியினோர்ந் தொப்பன கொளலே. (நன். 265) எனப் புறனடை கூறியுள்ளமை ஆழ்ந்துணரத் தக்கதாகும். இச் சூத்திரவுரையில் நன்னூ லுரையாசிரியர்கள் எடுத்துக் காட்டிய விளக்கங்கள் கூர்ந்துணர்த்தக்கனவாகும். இயல்பின் விகாரமும் விகாரத் தியல்பும் உயர்திணை யிடத்து விரிந்துந் தொக்கும் விரவுப் பெயரின் விரிந்து நின்றும் அன்ன பிறவு மாகும் ஐயுருபே. என இரண்டாம் வேற்றுமைக்கும், புள்ளியும் உயிரு மாயிறு சொன்முன் தம்மினாகிய தொழின்மொழி வரினே வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆகும். (நன். 256) என மூன்றாம் வேற்றுமைக்கும் அமைந்த புறனடைச் சூத்திரங்களும் இவ்வதிகாரத்துள் இதற்கு இது முடிபென்று விதிக்கத் தகுவன வற்றையெல்லாம் தனித்தனி வரையறுத்து விதிகூறத் தொடங்கின் அவை வரம் பின்றி விரியுமாதலால் வகுத்து விதி கூறியவற்றின் இலக்கணங்களை ஏதுவாகக் கொண்டு வகுத்து விதி கூறாத வற்றையும் கருதலளவையால் வகுத்து விதி யுரைத்துக்கொள்க என அறிவுறுத்தும் முறையில் இதற்கிது முடிபென் றெஞ்சா தியாவும் விதிப்பள வின்மையின் விதித்தவற் றியலான் வகுத்துரை யாதவும் வகுத்தனர் கொளலே. (நன். 257) எனப் பவணந்தி முனிவர் கூறிய அதிகாரப் புறனடையும் மேற்காட்டிய நூற்பாக்களுக்கு உரையாசிரியர்கள் எடுத்துக் காட்டிய உதாரணங்களும் விளக்கங்களும் எழுத்ததிகாரத்திற்கு அமைந்த புறனடை விதிகளாக இங்கு ஒப்புநோக்கி யுணர்ந்து கொள்ளத் தக்கனவாகும். கூறிய குன்றினும் முதனூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்லாப் பியன்றன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே. என்றார் பல்காப்பியனாரும். பிற்சேர்க்கை உயிரெழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு நெட்டெழுத் துக்கள் பிறப்பு முதலியவற்றால் ஒத்த ஒலியமைப்புடையன என்பதும், ஒத்த குற்றெழுத்தில்லாத ஐகார ஔகாரங்களுக்கு முறையே இகர உகரங்கள் இசையால் ஒத்தன என்பதும், குன்றிசை மொழிவயி னின்றிசை நிறைக்கும் நெட்டெழுத் திம்பர் ஒத்தகுற் றெழுத்தே. ஐ ஔ வென்னும் ஆயீ ரெழுத்திற்கு இகர உகரம் இசைநிறை வாகும். (தொல். 41, 42) எனவரும் நூற்பாக்களால் உணர்த்தப்பட்டன. இவ்வாறே கசடதபற என்னும் வல்லெழுத்தாறுக்கும் ஙஞணநமன என்னும் மெல்லெழுத் தாறும் முறையே ஒத்துப் பொருந்தும் ஒசை யுடையன ஆதலால் அவற்றைக் கிளையொற்று என வழங்குவர் தொல்காப்பியனார். இவ்விரு சூத்திரங்களையும் அடியொற்றி, ஐ ஔ இஉச் செறிய முதலெழுத்து இவ்விரண்டு ஓரினமாய் வரல் முறையே. (நன். 71) என அஆ, இஈ, கங, சஞ என்றாங்கு எழுத்துக்களை இனப்படுத் தினார் நன்னூலார், தானம், முயற்சி, அளவு, பொருள், வடிவு ஆன வொன்றாதி ஓர் புடையொப்பு இனமே. (நன். 72) என இனமென்றதற்குக் காரணமுங் கூறினார். எழுத்துக்களுக்குப் பிறப்புணர்த்தும் நிலையில் உயிரெழுத் துக்களுள்ளும், மெய்யெழுத்துக்களுள்ளும் பல எழுத்துக் களுக்குச் சேர்த்துப் பிறப்பு ஒன்றாகச் சொல்லப்பட்டன வேனும் அவை தனித்தனி எழுத்தாதற்கேற்ற ஒலிவேறுபாடுடையன என நுணுகி யுணர்தல் வேண்டும் என்பதனை, தத்தந் திரிபே சிறிய வென்ப. (தொல். 88) எனவரும் பிறப்பியற் சூத்திரத்தில் ஆசிரியர் தொல் காப்பியனார் குறித்துள்ளார். அவர் குறித்தவண்ண எழுத்துக் களிடையே யமைந்த சிறிய வேற்றுமைக்குரிய ஒலி முயற்சியாகிய காரணங்களை, எடுத்தல் படுத்தல் நலித லுழப்பிற் றிரியும் தத்தமிற் சிறிதுள வாகும். (நன். 88) எனவரும் சூத்திரத்தில் பணவந்தியார் தெளிவாகக் குறித் துள்ளமை காணலாம். மொழிகள் தம்முட்புணருங்கால் ஓரெழுத்து நிற்றற்குரிய நிலையில் மற்றோ ரெழுத்துப் போலியாய் நிற்றலுண்டு என்பதனை, ணனவென் புள்ளிமுன் யாவு ஞாவும் வினையோ ரனைய என்மனார் புலவர். (தொல். 146) என்பதனால் உணர்த்தினார் தொல்காப்பியர். இவ்விதி யினை இறந்ததுவிலக்கல் என்னும் உத்திபற்றிப் பவணந்தியார் கூறாது விட்டனராயினும், இவ்வாறு மொழியின் முதலிலும் இடையிலும் பயின்றுவரும் எழுத்துப் போலிகளை எதிரது போற்றல் என்னும் உத்தியால் நன்னூல் 123, 124-ஆம் சூத்திரங்களிற் குறித்துள்ளார். சில விடங்களில் மொழி முதலிலும் இடையிலும் அகரம் நின்ற நிலைக்களத்து ஐகாரம் போலியாய் வருமென்பதனையும் யுணர்த்துவது, அ ஐ முதலிடை யொக்குஞ் சஞயமுன். (நன். 123) என்ற சூத்திரமாகும். உ-ம். மயல் மையல் எனவும் அரசு அரைசு எனவும் வரும். சில இடங்களில் ஐகாரத்தின் பின்னும் யகரவொற்றின் பின்னும் இயல்பாய் நகரம் நின்ற நிலைக்களத்து ஞகரம் போலியாய் வருதலுண்டென்பது, செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞின்ற வொண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே. எனத் திருநாவுக்கரசர் அருளிய திருவிருத்தத்தால் அறியப்படும். இவ்வாறு செய் + நின்ற = செய்ந்நின்ற, செய்ஞ் ஞின்ற எனவும், மை+நின்ற=மைந்நின்ற மைஞ்ஞின்ற எனவும் புணர் மொழியிடை வரும் போலியைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திபற்றி, ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி ஞஃகா னுறழு மென்மரும் உளரே. (நன். 124) என்ற சூத்திரத்தாற் குறித்தார் பவணந்தி முனிவர். தனது தொழிலைச் சொல்லவரும் ஆகாரவீற்று வினா வினை யுடைய வினைச்சொல்லும், யாவென்னும் வினாப் பெயரும், விளித்தலையுடைய பெயராகிய ஆகாரவீற்று உயர் திணைச் சொல்லும் வல்லெழுத்து முதலிய வந்து புணருங்கால் இயல்பாய் முடிவன என `ஆவுமாவும் விளிப்பெயர்க் கிளவியும் எனவரும் 224 ஆம் சூத்திரத்திற் குறித்தார் தொல்காப்பியனார். இதனை, ஈற்றியா வினாவிளிப் பெயர்முன் வலிபியல்பே. (நன். 160) என்னும் சூத்திரத்தாற் பவணந்தி முனிவர் குறித்துள்ளார். இல்லாமை என்னும் குறிப்புணர்த்தும் இலம் என்னும் உரிச்சொற்குமுன் உண்டாதல் என்னும் பொருளுடைய `படு என்னும் வினைக்குறிப்புப் பெயர் வருமொழியாய் வருங்காலத்துச் செய்யுளிடத்து மகரக் கேடும் திரிபுமின்றி `இலம்படு என இயல்பாய் நிற்கும். இதனை யுணர்த்துவது, இலமென் கிளவிக்குப் படுவரு காலை நிலையலு முரித்தே செய்யு ளான. (தொல். 316) என்ற நூற்பா. இதனை இந்நூலின் 256-ஆம் பக்கத்துச் சேர்க்க. மக்கள் என்னும் பெயர்ச்சொல்லிறுதி னகரம் இயல் பாதலேயன்றித் தக்க இடம் அறிந்து வல்லொற்றாகத் திரிந்து மக்கட்கை, செவி, தலை, புறம் எனவருதலும் உரித்தெனக் கூறுவது, மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி தக்கவழி யறிந்து வலித்தலு முரித்தே. (தொல்.404) என்ற நூற்பாவாகும் இதனை 253-ஆம் பக்கத்தில் திரிந்து முடியும் ஈறுகள் என்ற தலைப்பின்கீழ்ச் சேர்க்க. அவ், இவ், உவ் என்னும் வகர ஈற்றுச் சுட்டுப் பெயர்களின் வகரம் அல்வழிக்கண் வல்லெழுத்து முதன் மொழிவரின் (அவ்+கடிய = அஃகடிய என்றாங்கு) ஆய்தமாகத் திரிந்து வரும் என்பதனை யுணர்த்தும். வேற்றுமை யல்வழி யாய்த மாகும். (தொல். 379) என்ற சூத்திரத்தினையும், வகரவீற்றுச் சுட்டின் திரிபுணர்த்திய, மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும். (தொல். 380) என்ற சூத்திரத்தையும் 256-ஆம் பக்கத் தொடக்கத்திற் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும். தொல்காப்பியம் எழுத்ததிகாரம் சூத்திர முதற்குறிப்பகராதி பக்கம் எண் அ ஆ உ ஊ 160-173 அ ஆ என்னும் 163-181 அ இ உ அம் மூன்றும் 52-31 அஃறிணை விரவுப்பெயர் 148-155 அக்கென் சாரியை 196-27 அகமென் கிளவிக்குக் 231-315 அகர ஆகாரம் 233-311 அகர இகரம் 82-54 அகர இறுதிப் 176-203 அகர உகரம் 82-55 அகரத்திம்பர் 82-56 அடையொடு தோன்றினும் 222-318 அண்ணம் சேர்ந்த 104-99 அண்ணம் நண்ணிய 101-93 அணரி நுவிநா 101-94 அத்தவண் வரினும் 194-219 அத்திடை வரூஉம் 157-168 அத்தின் அகரம் 132-125 அத்தேவற்றே 135-133 அத்தொடு சிவணும் 222-317 அதனிலை உயிர்க்கும் 274-479 அந்நான் மொழியுந் 252-429 அம்மின் இறுதி 133-139 அம்மூவாறும் 48-22 அரையள புகுறுகல் 40-13 அரையெனவரூஉம் 156-165 அல்லதன் மருங்கிற் 232,233-326 அல்லது கிளப்பின் இயற்கை 218-351 அல்லது கிளப்பின் எல்லா 250-425 அல்லது கிளப்பினும் வேற்றுமை 223-322 242-408 அல்வழியெல்லாம் இயல்பென 217-31 அல்வழி .... உறழென 227-368,398 அல்வழி ... மெல்லெழுத் 230-314 அவ்வழிப்பன்னீருயிரும் 97-84 அவ்வாறெழுத்தும் 100-92 அவ்வியலையும் 40-12 அவற்று வழிமருங்கிற் 129-118 அவற்றுள் 50-24 அ ஆ ஆயிரண்டு 98-85 அ இ உ அம் அ இ உ எ இகர இறுபெயர் இன்னின் இகரம் 130-120 ஈரொற்றுத் தொடர் 242-407 கரமும் கானும் 136-135 ணனஃகான் 51-தொல் 26 நிறுத்த சொல்லின் மெய்யீறெல்லாம் மெல்லெழுத்தியற்கை 142-145 ரகாரழகாரங் 76-49 லளஃகான் முன்னர் 50-24 இயற்கையவாகும் 171-197 இன்னேவற்றே 129-119 குற்றியலிகரம் முன்னப் பொருள்மெய்பிறிதாதல் அவையூர் பத்தினும் 271-473 அழனென் இறுதிகெட 211-354 அழனே புழனே 169-193 அளந்தறி கிளவியும் 261-446 அளபிறந்துயிர்த்தலும் 58-53 அளவாகும் மொழி 130-121 அளவிற்கும் நிறையிற்கும் 157-170 அளவும் ஆயியல்திரியா 273-477 அளவும் ஆயியல் திரியாது 272-474 அளவு நிறையும் எண்ணும் 238-379 அளவும் நிறையும் வேற்றுமை 210-319 அன்றுவருகாலை 203-258 அன்னவென்னும் 181-210 அன்னென்சாரியை 170-194 ஆ ஈ ஊ ஏ ஐ 33-4 ஆ எ ஓ 88-64 ஆ ஏ ஓ அம் மூன்றும் 54-32 ஆகார இறுதி 177-221 ஆடூஉமகடூஉ 197-271 ஆண்மரக்கிளவி 219-304 ஆணும் பெண்ணும் 215-303 ஆதனும் பூதனும் 235-348 ஆய்தநிலையலும் ஆயிரக்கிளவி 269-464 ஆயிரம்வரினும் 255-485 ஆயிரம்வரினே 273-476 ஆயிரம்வருவழி 239-391 ஆரும்வெதிரும் 213-363 ஆவயின் வல்லெழுத்து 208-30 ஆவும் மாவும் 182-224 ஆவோடல்லது 89-65 ஆறன் உருபின் 127-115 ஆறன் உருபினும் 154-161 ஆறன்மருங்கிற் 270-469 ஆறென்கிளவி 265-458 ஆன்முன் வரூஉம் 193-233 ஆனினகரமும் 131-124 ஆனொற்றகரமொடு 194-232 இ ஈ எ ஏ ஐ 98-86 இக்கின் இகரம் 132-126 இகர இறுதி 177-235 இகரயகரம் 86-58 இடம்வரை கிளவிமுன் 179-231 இடைநிலை ரகரம் 258-439 இடைப்படிற்குறுகும் 63-37 இடையெழுத்தென்ப இடையொற்றுத்தொடரும் 245-413 இதழியைந்து 103-97 இயற்பெயர் முன்னர்த் 235-347 இரண்டுமுதலென்பான் 274-480 இராவென்கிளவிக் 191-227 இருதிசைபுணரின் 253-431 இருளென்கிளவி 221-402 இல்லமரப்பெயர் 211-313 இல்லென்கிளவி 238-373 இல்லொடு கிளப்பின் 192-293 இலமென்கிளவிக்கு 284-316 இறாஅற்றோற்றம் 234-343 இன்றிஎன்னும் 202-237 இன்னிடைவரூஉம் 165-186 இன்னெனவரூஉம் 134-131 இனி அணி என்னும் 179-236 ஈகார இறுதி 177-249 ஈமுங்கம்மும் 206-328 ஈரெழுத் தொருமொழி 241-406 ஈரெழுத்துமொழியும் 244-411 247-417 ஈரெழுத்து வள்லொற்று ஈரெழுத் தொருமொழி ஈறியன்மருங்கின் 65-39 158-171 ஈறியன்மருங்கினும் 65-39 உ ஊ ஒ ஓ என்னும் உ ஊ ஒ ஓ ஔ என 99-87 உ ஊ காரம் 92-74 உகர இறுதி அகர 177-254 உகரமொடு புணரும் 155-163 உச்சகாரம் 92-75 உச்சகாரமொடு 93-79 உட்பெறுபுள்ளி 41-14 உண்டென்கிளவி 253-433 உணரக்கூறிய 240-465 உதிமரக்கிளவி 187-243 உந்திமுதலா 95-83 உப்பகாரம் 92-76 உப்பகாரமொடு 93-80 உம்மை எஞ்சிய 190-223 உயர்திணைப் பெயரே 128-117 உயர்திணையாயின் உருபியல் 224-378 உணர்திணையாயின் நம்மிடை 167-190 உயிர்ஔ எஞ்சிய 91-69 உயிர்முன் வரினும் உயிர்மெய் வரினும் உயிர்மெய் ஈறும் 117-106 உயிர்மெய் அல்லன உயிரிறு சொல்முன் 118-107 உயிரீறாகிய உயர்திணை 147-153 உயிரீறாகிய முன்னிலைக் 145-150 உயிரும் அளவும் உயிரும் புள்ளியும் 276-482 உரிவரு காலை 200-240 உருபியல் நிலையும் 199-294 உருவினும் இசையினும் 66-40 உரைபொருட்கிளவி 192-212 ஊ என் ஒருபெயர் 196-26 ஊகார இறுதி 177-264 எ என வருமுயிர் 91-71 எகர ஒகரத் 43-16 எகர ஒகரம் 185-272 எகின்மரமாயின் 219-336 எஞ்சியவெல்லாம் 93-77 எட்டனொற்றே 259-441 எண்ணின் இறுதி 171-198 எண்ணுப்பெயர்க்கிளவி 248-419 எப்பெயர் முன்னரும் 133-128 எருவும் செருவும் 195-244 எல்லா எழுத்தும் 106-102 எல்லாமென்னும் 166-189 எல்லாமொழிக்கும் 138-140 எல்லாருமென்னும் 167-191 எழுத்தெனப்படுப 21-தொல்.1 எழுத்தோரன்ன 139-141 ஏ ஓ எனும் 92-73 ஏகார இறுதி 177-274 ஏயென் இறுதிக்கு 191-277 ஏழனுருபிற்குத் 173-201 ஏழென்கிளவி 224-388 ஏனவை புணரின் 217-381 218-383 ஏனவைவரினே 176-256 ஏனை எகினே 206-337 ஏனைப் புளிப்பெயர் 189-245 ஏனைமுன்வரினே 250-424 ஏனைவகரந் 206-382 ஏனைவகரம் 164-184 ஐ அம்பல்லென 218-393 ஐ ஒடுகு இன் 124-113 ஐ ஔ என்னும் 69-42 ஐகார இறுதி 177-235,280 291-42 ஐகார ஔகாரங் 136-137 ஐந்த... மகார 259-443 ஐந்த ... முந்தையது 264-454 ஐந்த ... மெல்லெழுத் 262-448 ஐந்த ... யகார 269-468 ஐந்தும் மூன்றும் 263-451 ஐயின் முன்னரும் 132-127 ஒடுமரக்கிளவி 187-262 ஒவ்வும் அற்றே 91-72 ஒழிந்ததன் நிலையும் 186-291 ஒற்றிடை இனமிகா 244-402 ஒற்றுநிலைதிரியா 248-418 ஒற்றுமிகுதகரமொடு 234-341 ஒன்பான் ஒகரமிசை 260-445 ஒன்பான் முதனிலை 267-463 ஒன் பானிறுதி 266-459 ஒன்று முதலாக எட்டு 270-470 ஒன்றுமுதலாகப் ஒன்று முதலாகிய 272-475 254-433 ஒன்றுமுதலொன்பான் 257-437 ஓகார இறுதி ஏகார 177-276 ஓகார இறுதிக்கொன்னே 165-180 ஓரளபாகும் 85-57 ஓரெழுத்தொருமொழி 71-45 ஓளகார இறுதிப் 178-295 191-295 ஔகார இறுவாய்ப் 37-8 ஔவென வரூஉம் 146-152 ககார ஙகாரம் 100-89 கசதப முதலிய 140-143 கசதப முதன்மொழி 262-449 கண்ணிமைநொடி 35-7 கதநபம எனும் 87-60 கவவோடியையின் 91-70 காரமுங் கரமும் 136-134 கிளந்த அல்ல 277-483 கிளைப்பெய கிளைப் 215-338 கிளைப்பெய கொளத் 215-307 கீழென் கிளவி 214-365 குமிழென் கிளவி 213-386 219-385 குயினென் கிளவி 215-335 குற்றியலிகரம் 22-3 61-34 குற்றியலுகரமுறை 90-67 குற்றியலுகரத்திறுதி 170-195 குற்றியலுகரக் 157-167 குற்றியலுகரமும் 110-105 குற்றெழுத்திம்பரும் 191-267 குற்றெழுத்தைந்தும் 70-44 குறியதன் இறுதிச் 78-156 193-234 குறியதன் முன்னர் 28-5/65-38 குறியதன் முன்னரும் 190-226 குறுமையும் நெடுமையும் 77-50 குறையென்கிளவி 156-166 குன்றிசை மொழிவயின் 67-41 281-41 கொடிமுன் வரினே 201-285 ஙஞணநமன 51-25 சகரக்கிளவியும் சகார ஞகாரம் 100-90 சார்ந்துவரினல்லது 105-101 சாரென்கிளவி 214-364 சாவ என்னும் 199-209 சிறப்பொடுவருவழி 236-349 கட்டின் முன்னர் 175-4, 205,206,207,208 கட்டின் முன்னரும் 179-255 சுட்டினியற்கை 176-238 சுட்டுச்சினைநீடிய 251-427 சுட்டுமுதல் இயல்பா சுட்டு முதல் நிலையும் 198-263 281 சுட்டுமுதல் வகரம் 164-183 சுட்டுமுதல் வயினும் 228-334 சுட்டுமுதலாகிய இகர 152-159 சுட்டுமுதலாகிய ஐயென் 161-171 சுட்டுமுதலாகிய வகர 224-378 சுட்டுமுதலுகரம் 161-176 செய்யா என்னும் 179-222 செய்யுள் இறுதிப் 79-51 செய்யுள் மருங்கின் 203-288 சேவென்மரப்பெயர் 187-278 ஞகாரை ஒற்றிய 204-296 ஞணநமன 93-78 ஞந என்புள்ளிக் 164-182 ஞநம யவவெனினும் 141-144 ஞநமவ என்னும் 51-27 டகாரணகாரம் 100-91 டறலள என்னும் 50-23 ணகார இறுதி 225-302 ணளவென்புள்ளி 143-146 ணனவென்புள்ளி 282-146 தகரம் வருவழி தத்தந்திரிபே 99-88 282-77 தம்மியல் கிளப்பின் 74-47 தாம்நாம் என்னும் 166-188 தாயென்கிளவி 217-358 தாழென்கிளவி 220-384 தான்யான் என்னும் 168-192 தான்யானெனும் பெயர் 225-352 தானும் பேனுங் 215-351 திங்கள் முன்வரின் 196-248 திங்களும் நாளும் 196-286 திரிபுவேற கிளப்பின் 254-432 தேற்ற எகரமும் 184-273 தேனென் கிளவி 233-340 தொடரல் இறுதி 202-214 தொழிற்பெயரெல்லாம் 205-306 நகர இறுதியும் 204-298 நமவ என்னும் 262-450 நாட்பெயர்க்கிளவி 221-331 நாயும் பலகையும் 207-374 நாவிளிம்பு வீங்கி 102-96 நாண்முன்தோன்றும் 196-247 நான்கனொற்றே றகார 259-442 நான்கனொற்றே லகாரம் 264-453 269-467 நான்கும் ஐந்தும் 267-462 நிலாவென்கிளவி 194-228 நிறுத்தசொல்லுங் 122-110 நிறையுமளவும் 256-436 நீ என் ஒரு பெயர் 197-253 நீ என் பெயரும் 183-250 நீட்டம் வேண்டின் 34-6 நீட வருதல் 192-208 நீயென் ஒரு பெயர் 162-179 நும்மென் இறுதி 165-187 நும்மென் இறுதியும் 154-162 நும்மெ னொருபெயர் 209-325 நுனிநா அணரி 102-95 நூறாயிரமுன் 271-471 நூறுமுன் வரினுங் 266-460 நூறூர்ந்து வரூஉம் 218-392 239-392 நூறென்கிளவி 271-472 நெட்டெழுத்திம்பர் 170-196 நெட்டெழுத்திம்பருந் 62-36 நெட்டெழுத்தேழே 70-43 நெடியதன் இறுதி இயல்பாகுந 215-400 228-400 நெடியதனிறுதி இயல்புமாரு 215-370 நெடியதன் முன்னர் 153-160 நெல்லுஞ் செல்லுங் 227-371 படர்க்கைப் பெயரும் 222-320 பத்தனொற்றுக்கெட 255-434 பத்தென்கிளவி 239-300 பதக்குமுன்வரினே 179-239 பல்லவை நுதலிய 160-174 பல்லிதழ் இயைய 104-98 பலரறி சொன்முன் 159-173 பலவற்றிறுதி உருபியல் 197-220 பலவற்றிறுதி நீடுமொழி 192-213 பன்னீருயிரும் 87-59 பனியெனவருஉங் 194-241 பனையின் முன்னர் 201-284 பனையும் அரையும் 195-260 200-283 பனையென் அளவுங் 157-169 பாழென்கிளவி 214-387 பீரென் கிளவி 219-365 புணரியல் நிலையிடை 61-35 புள்ளியில்லா 45-17 புள்ளியிறுதியும் ... கிளவியும் 174-202 புள்ளியிறுதியும் ... சொல்லிய புள்ளியிறுதியும்... வல்லெழுத்து புள்ளியீற்றின்முன் 137-138 புள்ளும் வள்ளுந் 206-403 புளிமரக் கிளவிக்கு பூவென் ஒருபெயர் 189-298 பூல்வேலென்றா 219-375 பெண்டன் கிளவிக் 249-421 பெயருந் தொழிலும் 134-132 பெற்றம் ஆயின் 197-279 பொன்னென் கிளவி 237-356 மஃகான் ... வவ்வுந் 51-28 மக்களென்னும் 284-404 மகப்பெயர்க்கிளவி 194-218 மகர இறுதி 209-310 மகரத் தொடர்மொழி 94-82 மகன்வினை கிளப்பின் 212-359 மரப்பெயர் பெயர்க்கிளவிக்கம்மே மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து 187-217 மருவின் தொகுதி 123-111 மழையென்கிளவி 195-287 மன்னுஞ் சின்னும் 228-333 மாமரக்கிளவியும் 187-231 மாறுகொள் எச்சமும் வினாவும் 185-275 மாறுகொள் எச்சமும் ஐயமும் 186-290 மின்னும் பின்னும் 206-345 மீனென்கிளவி 229-339 முதலா ஏன 89-66 முதலீரெண்ணின் முன் 264-455 முதலீரெண்ணினொற்று 257-438 முதனிலையெண் 273-478 முதனிலை நீடினும் 269-465 முரணென் தொழிற்பெயர் 215-309 முற்றியலுகரமொடு 90-68 முன்உயிர் வருமிடத் 249-423 முன்னென்கிளவி 237-355 மூவள பிசைத்தல் 34-5 மூன்றன் முதனிலை 265-457 மூன்றனொற்றே நகார 267-461 மூன்றனொற்றே பகார 259-441 மூன்றனொற்றே வகரம் 263-452 மூன்றனொற்றே வகரம் 269-466 மூன்றனொற்றே வந்த 261-447 மூன்று தலையிட்ட 108-93 மூன்றும் நான்கும் 265-456 மூன்று மாறும் 258-440 மெய்ந்நிலைச் சுட்டின் 52-30 மெய்யின் அளபே 40-11 மெய்யின் இயக்கம் 73-46 மெய்யின் இயற்கை 43-15 மெய்யின் வழியது 46-18 மெய்யுயிர் நீங்கிற் 138-139 மெய்யோடியையினும் 39-10 மெல்லெழுத்தாறும் 105-100 மெல்லெழுத்தியையின் 234-342 மெல்லெழுத்தியையின் அவ் 284-380 மெல்லெழுத்தியையின் ணகார 230-397 மெல்லெழுத்தியையின் னகார 230-367 மெல்லெழுத்துமிகினும் 223-323/234-341 மெல்லெழுத்து மிகுவழி 150-157 மெல்லெழுத்துறழும் ... உளவே 213-360 மெல்லெழுத்துறழும்.... தான 209-312 மெல்லெழுத்தென்ப மெல்லொற்று வலியா 247-416 மென்மைஇடைமையும் 133-130 மொழிப்படுத் திசைப்பினும் 80-53 மொழி முதலாகும் 143-147 யகர இறுதி 212-357 யகரம் வருவழி 243-410 யரழ என்னும் புள்ளி 51-29 யரழ என்னும் மூன்றும் 75-48 யவமுன் வரினே யாதென் இறுதியுஞ் 173-200 யாதென்.... உருபியல் 249-422 யாமரக்கிளவியும் 187-229 யாவினாமொழியே 252-428 யாவென் வினாவின் 162-178 யாவென் வினாவும் 160-175 ரகார இறுதி 212-362 லகார இறுதி 226-356 லனவெனவரூஉம் புள்ளி 144-149 லனவென - யிறுதி 275-481 வஃகானமெய்கெட 131-122 வகரக்கிளவி 93-81 வகாரமிசையும் 211-330 வண்டும் பெண்டும் 248-420 வரன் முறை மூன்றும் 136-136 வல்லெழுத்தியற்கை வல்லெழுத்து - வேற்றுமை வல்லெழுத்து - இல்லை 189-246 வல்லெழுத்து - தான வல்லெழுத்து முதலிய 126-104 வல்லெழுத்தென்ப வல்லென்கிளவி 206-373 வல்லொற்றுத்....ÄFnk 251-426 வல்வொற்றுத் .... வருவழி 243-409 வளியென வருஉம் 195-242 வன்றொடர் மொழியும் 245-414 வாழிய என்னும் 199-211 வாழிய என்பதன் விசைமரக்கிளவியு 187-282 விண்ணென வரூஉங் 222-305 வினையெஞ்சு கிளவியும் 178,179-204 வினை எஞ்சு கிளவிக்கும் 179-265 வெயிலென் கிளவி 221-377 வெரிந ளிருதி 208-300 வேற்றுமைக் .... ரற்றே 177- தொல்-206,221,225,249,252,254, 259,264,266,274,276,289,292 வேற்றுமைக்.... ரற்றே ஒகரம் வருதல் வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத் 144-148 வேற்றுமைக்கு கெட 205-299 வேற்றுமை குறித்த 123-112 வேற்றுமை யல்வழி எண்ணென் 226-308 வேற்றுமையல்வழிக்குறுகலு 218-353 வேற்றுமை யல்வழியாய்த 284-279 வேற்றுமையாயின் .... யெகினொடு 206-348 வேற்றுமைவழிய 128-116 ழகர உகரம் 192-261 ழகார இறுதி 212-383 னஃகான் றஃகான் 131-123 னகார இறுதி 226-331 னகர இறுவாய்ப் 37-9 னகாரை முன்னர் 79-52 நன்னூல் எழுத்ததிகாரம் சூத்திர முதற்குறிப்பகராதி பக்கம் எண் அ ஆ உ ஊ 89-104 அ ஆ எ ஒவ் 89-105 அ இ உம் முதற் 53-66 அ ஐ முதலிடை 283-123 அகமுனர்ச்செவி அடிநா வடியணம் 104-99 அண்ணநுனிதாநனி 102-86 அண்ணநுனி நாவருட 102-83 அண்பல்லடி 101-80 அண்பல் முதலும் 103-84 அதுமுன் வருமன்று 203-180 அம்முதலீராறாவி 38-63 அம்மனிகரம் 83-125 அவ்வழி இ ஐ ம் 152-176 அல்வழியாமா அவ்வழி ஆவி 97-75 அவற்றுள் அ இ உ 33-64 அவற்றுள் முயற்சியுள் 98-76 அன்றியின்றியென் 202-173 ஆ ஈ ஊ ஏ 33-65 ஆமுன் பகரவீ 193-177 ஆய்தக் கிடந்தலை 106-87 ஆவிஞணநமன 94-107 ஆவியரழ 146-161 ஆவியுமொற்றும் 59-99 இ ஈ எ ஏ ஐ 99-77 இ ஈ ஐ வழி 139-162 இசைகெடின் 68-91 இடைச் சொல்லேயோ 187-201 இடைத்தொடர் 245-182 இடையினம் இடையுரி வடசொலின் 240-239 இதற்கிதுசாரியை 279-253 இதற்கிது 281-257 இயல்பின் விகாரமும் 151-255 இயல்பினும் விதி 180-165 இயல்பெழும் 36-100 இரண்டுமுன் 255-198 இல்லெனின்மைச் 238-233 ஈமுங்கம் முமுருமுந் 208-223 ஈற்றியா 284-160 உ ஊ ஒ ஓ அல 88-63 உ ஊ ஒ ஓ ஔ 88-103 உடன்மேலுயிர் 109-204 137-204 உயிர்மெய்யாய்தம் 29-60 உயிர்மெய்யிரட்டு 29-61 உயிர்வரினுக்குறள் 111-164 உயிருமுடம்புமாம் 22-59 உரிவரினாழியின் உருபின் 225-238/200-238 எகரவினாமுச் 176-163 எடுத்தல் படுத்தல் 282-88 எண்பெயர் எண்மூவெழுத்தீற்று 142-158 எயாமுதலும் 56-67 எல்லாமென்பதிழி 167-245 எல்லாருமெல்லீரும் 168-249 எழுத்தே ஐ ஔ இ உச் 282-71 ஐயீற்றுடைக் 251-185 ஒரு பஃதாதிமுன் 272-196 ஒன்பானொடுபத்து 268-194 ஒன்றுமுதலெட் 173-249 ஒன்றன்புள்ளி 258-189 ஒன்று முதலீரைந் 256,257-197 கஙவுஞ் 101-79 கசதப வொழிந்த 49-110 கீழின் முன்வன்மை 214-215 குயினூன் வேற்றுமை 216-216 குறியென் கீழாக் குறியதன் முன்னர் குறிலணைவில்லா 267-210 154-210 குறில்செறியாலள 154-229 குறில்வழிலளத்தவ் 230-228 ஙம்முன்கவ்வாம் 51-111,112,114,115 சாதிகுழூஉப்பரண் 216-211 சாவவென் மொழி 199-169 சிறப்பினுமினத் 22-73 சுட்டியா வெகர 87-106 சுட்டின்முன் 173-251 சுவைப்புளிமுன் செய்யியவென்னும் 142-167 ஞணநமலவளன 206-207 ஞனமுன்றம்மினம் டறமுன் கசப 51-113,117 ணனமுன்னினம் ணனமுன்னும் 211-96 ணனவல்லினம் 144-209 தம்பெயர் மொழியி 90-121 தமிழவ்வுறவும் 220-225 தற்சுட்டளபொழி 86-95 தான் தாம் நாம் 163,169-247 தானம் முயற்சி 282-72 திசையொடுதிசை 254-186 தெவ்வென் மொழியே 208-236 தேன்மொழி 216-214 தொல்லை வடிவின 44-98 தோன்றல் திரிதல் 121-154 நவ்விறுதொழிற் நான்கன்மெய்யே நிறையுயிர் 96-74 நின்றநெறி 47-109 நெடிலோடாய்தம் 63-94 நெடிலோடுயிர்த் 244-183 நெல்லுஞ் செல்லுங் 227-232 பவ்வீநீமீ 184-178 பன்னீருயிருங் 87-102 பனைமுன்கொடி புள்ளிவிட்டவ்வொடு 46-89 புள்ளியுமுயிருமாயிரு 149-256 280-256 பூப்பெயர் முன் 190-200 புள்ளும் வள்ளும் 208-234 பொதுப்பெயருயர் திணைப் 148-159 மகரவிறுதி 95-122 மம்முன் பயவ மரப்பெயர் முன்னர் 188-166 மரமல்லெகின் 208-215 216-215 மவ்வீறொற்றழிந் 210-219 மின்பின்பன்கன் 208-217 மீகீழிதழுறப் 103-81 மீன்றவ்வொடு 229-213 மூன்றாறுருபெண் 184-179 மூன்றுயிரன்பு மெய்களகரமும் 137-126 மெய்யுயிர் முதல் 121-151 மெல்லினம் மென்றொடர்மொழி 246-184 மேற்பல்லிதழுற 104-85 மொழிமுதற் காரணம் 21-58 மொழியாய்த் தொடரினும் 81-127 யகரம் வரக்குறள் 62-93 யரழமுன்னர்க்கசதப 214-224 யரழமுன்னர்மொழி யரழவொற்றின்முன் 77-119 ரழவல்லன தம்முற் 52-118 லளமுன் லளமெய்திரிந்த 80-120 லளவீற்றியைபினாம் 67-97 லளவேற்றுமையிற்றடவும் 226-209 227-227 வல்லினங் கசடத 48-68,69,70 வல்லே தொழிற்பெயர் 208-231 வவ்விறுசுட்டிற் 164-250 வன்றொடரல்லன 251-181 வாழியவென்பதன் 199-168 விகாரமனைத்தும் 121-153 வேற்றுமையாயின் வேற்றுமையைம்முதல் 125-152 வேற்றுமைமப்போய் னலமுன் றனவும் 145-234 னஃகான் கிளைப்பெயர் 216-212