தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை 8 திருமந்திர அருள்முறைத் திரட்டு ( உரையுடன் ) ஆசிரியர் பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 8 திருமந்திர அருள்முறைத் திரட்டு ஆசிரியர் : பேராசிரியர் : க. வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 16 + 296 = 312 படிகள் : 1000 விலை : உரு. 295/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மோகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030. உ குருபாதம் திருக்கயிலாய பரம்பரை தருமையாதீனம் இருபத்தாறாம் பட்டத்தில் எழுந்தருளியிருக்கும் குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அருளிய வாழ்த்துரை ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம்ஆதியே சைவ சமயம் எனப்படுகின்ற சிவநெறியின் சிறப்பை மக்கள் எளிதில் உணரச் செய்வன பன்னிரு திருமுறை களாகும். இவைகளை இறைவனே உலகிற்கு அருளினான் என்பது, இவற்றின் ஆசிரியர்களது வரலாற்றால் நன்கு அறியப்படும். பன்னிரு திருமுறைகளில் முதற்கண் உள்ள எட்டினை அருளிச் செய்தவர்கள் சமயாசாரியர் நால்வருமாவர். அவருள் திருஞானசம்பந்தர் நம்மைப்போல வினை காரணமாக இவ்வுலகில் வந்து பிறவாது, இறைவனது திருவருளாலே விடுக்கப் பெற்றுத் திருவவதாரம் செய்தமையை திருந்தடி-மறக்குமா றிலாத என்னை மையல் செய்து மண்ணின்மேல்-பிறக்குமாறு காட்டினாய் என்று அவரே அருளிச் செய்தமையால் விளங்குகின்றது. முன்னமே முனியாகி நமை அடையத் தவம் முயன்றான் என்னும் பெரிய புராணத்தால் முற்பிறப்பிலேயே இறைவனை அடையற்பாலராகிய ஒருவரையே இறைவன் திருநாவுக்கரசராக உலகிற்குத் தந்தருளினான் என்பது அறியப்படுகின்றது. சுந்தரரது வருகை திரு வருளாலே நிகழ்ந்தமை நன்கறியப்பட்டது நீக்கி முன் எனைத் தன்னோடு நிலாவகை குரம்பையில் புகப்பெய்து என்னும் திருவாசகப் பகுதியால், மாணிக்கவாசகரது திருவவதாரச் சிறப்பும் இனிது விளங்கும். இந்நால்வரும் அருளிச் செய்த தேவார திருவாசகங் களாகிய எட்டுத் திருமுறைகளோடு ஒத்த பெருமையுடையது, திருமூலர் அருளிச்செய்த திருமந்திரமாகிய பத்தாந் திருமுறை. இதனை அருளிச் செய்வதற்காகவே இறைவன் இதன் ஆசிரியராகிய சிவயோகியாரை அவரது உடம்பை மறைத்து மூலம் உடம்பில் நிறுத்தித் திருவாவடுதுறையிலே இருக்கச் செய்தான் என்பது அவரது திருவாக்கினாலே நன்கு தெளிவாகின்றது. சமயாசாரியர்கள் அருளிச்செய்த தேவார திருவாசகங்கள் தோத்திரங்களாய் நிற்க, திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் சாத்திரமாய்ச் சைவ சமயத்தின் உண்மை, ஒழுக்கம், பயன் முதலியவற்றை நன்கு விளக்கி நிற்கின்றது. வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க என்ற சேக்கிழார் திருவாக்கால், வேதநெறியில் விளங்கும் பல துறைகளாகிய சமயங்களுள் சைவம் மேலான துறை என்பது தெளிவுறும். வடமொழி வேதம் மக்கட்குப் பொதுவான அறங்களை முறைப்படுத்திச் சொல்வது. அவ்வேதத்தில் சொல்லப்பட்டிருக் கின்ற அறங்கள் சைவம், வைணவம் முதலிய பல சமயங்களுக்கும் பொதுவானவை. சைவத்தைப் பற்றிய சிறப்பு முறைகளை-ஆலய அமைப்பு முறைகளை-வழிபாட்டு முறைகளைச் சிறப்பாக விளக்குவன சிவாகமங்கள். சைவத்திற்கு இருப்பதுபோலவே பிறசமயங்களுக்கும் உரிய சிறப்பு முறைகளை விளக்கும் ஆகமங்கள் உண்டு. வைகானசம், பாஞ்சராத்திரம் என்ற ஆகமங்கள் வைணவத்தைச் சிறப்பாகத் தெளிவுபடுத்தும் வைணவ ஆகமங்கள். வடமொழியில் உள்ள வேதம் போல மக்கள் வாழ்வியல் முறைகளை - பொது அறங்களைத் தொகுத்தும், வகுத்தும் முறைப்படுத்தி உரைப்பது தெய்வப் புலவர் செய்த திருக்குறள். சிவாகமத்தைப் போலச் சைவத்துறையின் சிறப்பு அறங் களைத் தொகுத்தும், வகுத்தும், விரித்தும் முறைப்படுத்தி உரைப்பது திருமூலர் அருளிய திருமந்திரம். பெற்றநல் லாகமம் காரணம் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமளம் ஆகும் காலோத்திரம் துற்றநன் சுப்பிரம் சொல்லும் மகுடமே என்று கூறும் ஒன்பது ஆகமங்களின் பிழிவாகத் திருமந்திரம் விளங்குகின்றது. வேதாகமங்களும், பொதுமறையாகிய திருக்குறளும், சிறப்பு ஆகமமாகிய திருமூலர்திருமந்திரமும், மூவர் தமிழும் திருவாசகமும் ஆகிய அனைத்தும் சொல்லும் முறை வேறு பட்டாலும் ஒரு பொருளையே உணர்த்திடும் நூல்கள் ஆகும். தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம் என்று உணர் ஆகவே, வடமொழிச் சிவாகமம் போலவே, தமிழ் ஆகம மாகிய திருமந்திரம், சிவபரத்துவத்தையும், சிவனை வழிபட்டு இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் அடையும் நெறியையும் நன்கு விளக்குகின்றது. அதனால், சைவாகமத்தைப் போலவே திருமந்திரத்திலும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கும் இனிது எடுத்துக் கூறப்படுகின்றன. மேலும் இந்நூலால் குருபாரம் பரியச் சிறப்பும் அறியப்படுகின்றது. ஆகமங்களுக்குரிய தந்திரம் என்னும் பெயரால் அமைந்த ஒன்பது உட்பிரிவுகளை உடைய இந்நூல், அவற்றின் உட்பிரிவாகிய அதிகாரங்கள் பலவற்றை உடையதாய், அறநெறி, அருள் நெறி பற்றிய உண்மைகள் பலவற்றையும் உணர்த்தும் நிறைவுடைய சிவநெறி நூலாக உள்ளது. இதனை ஆசிரியர் திருமூல தேவர், சித்தர் மொழி நடையில் அருளிச் செய்திருப்பதால், எளிதில் பொருள் உணர இயலாது, ஆழ்ந்து சிந்தித்தும், உபதேச முறையிலும் உணர வேண்டியுள்ளது. மூவாயிரம் பாடல்களை உடைய இவ்விரிந்த நூலில், இன்றியமையாத பாடல்களாகச் சிலர் சில திரட்டுக்களை வெளியிட்டுள்ளனர். இம் முறையிலே சிதம்பரம் அண்ணமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறைத் துணைப் பேராசிரியர் திரு க. வெள்ளை வாரணனார், பலரது விருப்பத்தின்படி இத் திருமந்திரத்தின் சிறந்த பாடல்களை எடுத்து அருள் முறைத் திரட்டு எனத் திரட்டி இருத்தல் பயன் தரத்தக்க ஒன்றாகும். திரு க. வெள்ளை வாரணனார் சிறந்த தமிழ் நூல், சைவ நூல் பயிற்சியுடன், திருமுறைகளில் தனிப்பட்ட ஆராய்ச்சித் திறன் பெற்றவர் என்பதை, அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட இவரது பன்னிரு திருமறை ஆராய்ச்சி நூல்களால் பலரும் அறிவர். இது பற்றியே இவர் நமது ஸ்ரீலஸ்ரீகயிலைக்குருமணி அவர்களால் திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் என்னும் பட்டம் அளித்து ஆசிர்வதிக்கப்பெற்றார். உமாபதி சிவாசாரியார் தேவாரத் திருப்பதிகப் பாடல்கள் பலவற்றை அவர் செய்த திருவருட்பயனில் உள்ள அதிகார முறையில் வைத்து, அருள்முறைத் திரட்டு எனத் திரட்டியது போலத் திருமந்திரப் பாடல்கள் பலவற்றை அப்பெயரால் திரட்டி இருத்தல், இவரது மரபு வழிப்படும் நிலையைத் தெரிவிக்கின்றது. கல்வி மட்டுமன்றிச் சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும், நற்பண்பும் உடைய இவர் திருமந்திரப் பாடல்கள் பலவற்றிக்குத் தேவாரம், திருக்குறள் முதலிய வற்றிலிருந்து எடுத்த சிறந்த மேற்கோள்களுடன் விளக்கவுரை எழுதி, முதற்கண் திருமூலர் வரலாறு, திரு மந்திரநூல் அமைப்பு என்பவற்றையும் தந்திருத்தல் பலர்க்கும் பயன் தருவதாகும். சிதம்பரம் அன்பர்கள் பலர் திருமந்திரத்தினை முறையாக இத்திரட்டின் ஆசிரியரிடம் வகுப்புமுறை வாயிலாகக் கேட்டுப் பயன் பெற்றனர். செல்வம், அதிகாரம் முதலியவற்றால் உலகியலில் செல்வாக்குப் பெற்றவர்கள் ஓர் ஊர் அல்லது நகரத்தில் ஒருசிலரே இருப்பார்கள். அவர்கள் மேலும் மேலும் உலகியலில் ஈடுபடுவதே நாட்டில் பெரும் பான்மையாகக் காணப்படுவது. சிதம்பரம் திரு ஆர். கனகசபைப்பிள்ளை, அறப்பணிச்செல்வர் டாக்டர். திரு. கே. அரங்கசாமிப் பிள்ளை, திரு வாகீசம்பிள்ளை முதலிய செல்வாக்குடைய பெருமக்கள் பலர் மேற்குறித்த திருமந்திரத்தினை வகுப்பு முறையில் விரிவுரை நிகழ்த்துதற்கு ஏற்பாடு செய்து நடத்தித், தாங்களும் கேட்டுப் பயன் பெற்றதுடன், இத்தகைய திரட்டு ஒன்றைத் திரட்டுவித்து வெளியிட முன்வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. இவ் வருள் முறைத் திரட்டு நூல் நன்கு வெளிவந்து பலர் கையிலும் சென்று பயனளிக்கவும், இந் நற்பணியில் பங்குபற்றிப் பயன்பெறும் அன்பர்கள் பலரும் நலமெலாம் பெற்று நீடுவாழவும் ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கர் திருவருளைச் சிந்திக் கின்றோம். பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் முதல் பதிப்புரை தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த சமயமாக விளங்குவது சைவ சமயம், மக்கள் உள்ளத்திலே தெய்வ நம்பிக்கையை உணடாக்கி அன்பு நெறியில் ஒழுகச் செய்து அறிவு நெறியை வளர்ப்பன தெய்வத் திருவருள் பெற்ற சைவசமயப் பெருமக்கள் அருளிய பன்னிரு திருமுறைகளாகும். அவற்றுள் பத்தாவது திருமுறையாகத் திகழ்வது திருமூல நாயனார் அருளிச்செய்த திருமந்திரம். தமிழ் மூவாயிரம் என்னும் இத் திருமுறை சைவ சிந்தாந்த சாத்திரமாகவும் தோத்திரமாகவும் விளங்கும் தனிச்சிறப்புடையது; சிவாகமவுண்மைகளும் உலக வாழ்க்கையும் ஆகிய இருவகைப்பொருள்களையும் இனிய தமிழால் விரித்துக் கூறுவது; உலக வாழ்க்கையிலே எல்லோரும் மேற்கொண்டு ஒழுகத்தக்க நல்வாழ்க்கை முறையினையும் சிறப்பாகச் சமயச் சான்றோர்களால் உணர்ந்து போற்றத்தக்க ஞானயோக நுண்பொருள்களையும் ஒருசேர அறிவுறுத்துவது. திருமூல நாயனார் அருளிய இத் திருமந்திர நுண் பொருள்களைத் திருமுருக கிருபானந்த வாரியாரவர்கள் வானொலியிற் பேசக்கேட்டு மகிழ்ந்த திருவாளர் R. கனகசபைப் பிள்ளை அவர்கள், பலரும் எளிதின் உணர்ந்து பயன் பெறுதற்குரியவகையில் உள்ள திருமந்திரப் பாடல்கள் சிலவற்றையாவது திரட்டி அவற்றின் பொருளை உணர்ந்து கொள்ளுதல் நலமாகும் என்று தெரிவித்தார்கள் சிதம்பரம் நகரமன்றத்தலைவராகவும் தமிழ்நாடு சட்டப் பேரவையுறுப்பின ராகவும் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினராகவும் நாட்டின் நலங்கருதும் பல்வேறு குழுக்களின் உறுப்பினராகவும் அமர்ந்து பொதுநலப்பணிகள் பலபுரிந்தவரும் தமிழ்நாடு மாநிலக்கூட்டுறவு வங்கியின் தலைவராக இருந்துதமிழகத்திற்கு நற்பணிகள் புரிந்துவருபவரும்கல்வி வளர்ச்சியிலும் தமிழ் வளர்ச்சியிலும் பேரார்வமுடையராய் நுண்ணிய நூல்களைக் கற்று மகிழ்தலையே தமது பொழுது போக்காகக் கொண்டவரும் ஆகிய திருவாளர் பிள்ளையவர்கள் தில்லைத்தமிழ் மன்றம் என்ற மன்றத்தினை உருவாக்கி அம்மன்றத்தின் சார்பில் திருமந்திர வகுப்பு நிகழ்தற்குரிய வாய்ப்பினைச் செய்துதவினார்கள். விரோதிகிருது ஆண்டு தை 23-ஆம் நாள் நிகழ்ந்த சிவகாமியம்மை திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளில் தில்லைத் தமிழ் மன்றத்தின் சார்பில் சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள தருமையாதீனத் திருமடத்தில் திருமந்திர வகுப்பு தொடங்கப்பெற்றது. ஓராண்டு முழுவதும் நிகழ்ந்த வகுப்புக்களில் திருமந்திரம் முழுவதிலுமிருந்து இருநூற்று நாற்பது திருப்பாடல்கள் உரை கூறப்பெற்றன. வகுப்பில் பாடஞ் சொல்லப்பெற்ற திருமந்திரப் பாடல்களின் உரையினைத் தொகுத்து நூலாகவெளியிடுவது பயனுடையதாகும் எனப் பலரும் விரும்பினார்கள். அதன்பயனாகத் திருமந்தர அருள்முறைத் திரட்டு என்னும் இந்நூல் தில்லைத் தமிழ் மன்றத்தின் வெளியீடாக வெளிவருகின்றது. தில்லைப் பெருங்கோயிலின் திருப்பணிகளை இனிது நிறைவேற்றிக் குடமுழுக்கு விழாவை மிகச் சிறப்பாக நிகழ்த்தியும் பெரியபுராணம் அரங்கேறிய ஆயிரக்கால் மண்டபத்தைப் பெரும்பொருட்செலவிற் பழுதுபார்த்தும் தெய்வநெறித் தொண்டாற்றித் தில்லையம்பலவரது எடுத்த பெற்பாதத்தின்கீழ் என்றுமிருக்கும் பெருவாழ்வு பெற்றவர் ஆடூர் பெருநிலக்கிழார் M. இரத்தினசபாபதி பிள்ளையவர்கள் என்பதனைத் தமிழகத் திலுள்ள சைவ மெய்யன்பர்கள் அனைவரும் நன்குணர்வார்கள். தருமபூஷணம் பிள்ளையவர்களின் மூத்தமைந்தர் செந்தமிழ்ச் செல்வர் திரு R. கனகசபைபிள்ளை யவர்களால் தொடங்கப் பெற்று அவர்கள் பால் அன்பும் நன்மதிப்புமுடைய அன்பர்களின் ஆதரவினால் நிகழும் தில்லைத் தமிழ்மன்றத்தின் அறிவுத் தொண்டினைப் பாராட்டித் திருக்கயிலாய பரம்பரை திருத் தருமபுர ஆதினத்தின் இருபத்தாறாவதுபட்டத்தில் எழுந்தருளி யிருக்கும் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முகதேசிக ஞானசம் பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்துரை வழங்கியருளினார்கள். தில்லைத் தமிழ்மன்றத்தின் சார்பில் தமிழ்வகுப்பு நிகழ்தற்குத் தங்கள் ஆதீனத் திருமடத்தில் இடந்தந்தருளும் அருள்மிகு குருமகா சந்நிதானம் அவர்களின் திருவடிகளுக்குத் தில்லைத் தமிழ் மன்றத்தின் சார்பில் அடியேனது உளங்கனிந்த வணக்கத்தினையும் நன்றியையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். பல அலுவல்களுக்கிடையே விரைந்து எழுதப்பெற்று வெளிவரும் இந்நூலின் உரையில் எனது அறியாமையால் நிகழ்த்த குற்றங்களை நீக்கி நற்பொருள்களைக்கொள்ளும் வண்ணம் அறிஞர் பெருமக்களை வேண்டுகின்றேன். திருமந்திரப் பொருளை யுணர்ந்துகொள்ளும் முறையில் நூல்கள் இயற்றியுள்ள அறிஞர்பெருமக்களுக்கு எனது நன்றியுரியதாகும். ஞானமுண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே என்னும் நோக்கத்துடன் தில்லைத் தமிழ்மன்றத்தினை நிறுவி இத்திரு முறைப்பணியில் என்னையும் அன்புடன் ஈடுபடுத்திய தில்லைத் தமிழ்மன்றத்தார்க்கு எனது உளமார்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்நூலினை ஆர்வமுடன் வனப்புற அச்சிட்டுத் தந்த அண்ணாமலைநகர் சிவகாமி அச்சகத்தாரது பணி அன்பர்களின் பாராட்டுக் குரியதாகும். அன்புள்ள க. வெள்ளைவாரணன் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். பொருளடக்கம் பதிப்புரை ix முதல் பதிப்புரை xii திருமூலநாயனார் வரலாறு 1 திருமூலநயனார் காலம் 7 திருமந்திர நூலமைப்பு 10 திருமந்திர அருள்முறைத் திரட்டு 14 செய்யுள் முதற்குறிப்பு 287 திருமந்திர அருள்முறைத் திரட்டு திருமூலநாயனார் வரலாறு திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில் முதற் பெருங்காவல் பூண்டவர் திருநந்திதேவர். அவரது திருவருள்பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர். அகத்திய முனிவர்க்கு நண்பர். அவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவயோகியார் பொதிய மலையை அடைதற்கு எண்ணித் திருக் கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங் காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்து காஞ்சி நகரையடைந்தார். திருவேகம்பப் பெருமானை இறைஞ்சிப் போற்றினார். அந்நகரிலுள்ள சிவயோகியர்களாகிய தவ முனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்பு திருவதிகையை யடைந்து புரமெரித்த பெருமானை வழிபட்டுப் போற்றினார். இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருவளர் திருச்சிற்றம்பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப் புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப்பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப்பதியில் சிலகாலம் தங்கி யிருந்தார். தில்லைத் திருநடங் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென் கரையினை யடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து அம் முதல்வனுடன் எழுந்தருளியிருந்து அருள்புரியும் திருத்தலமாகிய திருவா வடுதுறையையணுகித் திருக்கோயிலை வலம்வந்து மாசிலா மணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையில் அத் தலத்தைவிட்டு நீங்காததொரு கருத்து அவருள்ளத்தே தோன்ற அங்கே தங்கியிருந்தார். ஆவடுதுறை இறைவர் பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லும் பொழுது வழியிற் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே பசுக் கூட்டங்கள் கதறி யழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆனிரை மேய்க்குங் குடியிற் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ்விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்குந் தொழிலில் ஈடுபட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்து கொள்ள உயிர் நீங்க அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து கிடந்தான். அந்நிலையில் அவனால் அன்புடன் மேய்க்கப் பெற்ற பசுக்கள் உயிர் பிரிந்த அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கி நின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின. அத்துயரக் காட்சியைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவரது திருவுள்ளத்திலே பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும் என்றதோர் எண்ணம் இறைவர் திருவருளால் தோன்றியது. இந்த ஆயன் உயிர் பெற்றெழுந்தாலன்றி இப்பசுக்கள் துயரம் நீங்கா என எண்ணிய சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்து விட்டுத் தமக்குத்தெரிந்த கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பிற் புகுமாறு செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். எழுதலும் சுற்றியிருந்த பசுக்களெல்லாம் தம் துயரம் நீங்கி அன்பினால் அவரது உடம்பை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளி யோடி விரும்பிய இடங்களிற் சென்று புல்லை மேய்ந்தன. அது கண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பி மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரி யாற்றின் துறையிலிறங்கி நன்னீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார். அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை யணுக மாலைப்பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெதுவாக நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளிற் சென்று சேர்ந்தபின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே. அவர்க்கு என்ன நேர்ந்ததோ? என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக்கொண்டு வழியெதிரே செல்பவள் சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம் பிற்றோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும் என எண்ணினாள். அவரைத் தளர்வின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவருடம்பைத் தொடுதற்கு நெருங்கினள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார் அவள் தம்மைத் தீண்டாதவாறு தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவருமின்றித் தனியளாகிய அவள் திருமூலரது தொடர்பற்ற நிலையினைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந் துன்பத்தைச் செய்துவீட்டீர் என்று புலம்பி வாட்டமுற்றாள். நிறை தவச் செல்வராகிய திருமூலர் அவளைப் பார்த்து நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்திற் புகுந்து சிவயோகத்தில் அமர்ந்திருந்தார். தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ட மூலன் மனைவி, அதுபற்றி யாரிடமும் சொல்லாமலும், தவ நிலையின ராகிய அவர்பால் அணையாமலும், அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்ததும் அவ்வூரிலுள்ள நல்லோரை யடைந்து தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; பேய் பிடித்தல் முதலிய பிறிதொரு சார்பால் உளதாகியதும் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை யெல்லாம் அறவேகளைந்து தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்துள்ளார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும் எனத் தெளிந்தார்கள். இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப்பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லா வற்றையும் ஒருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராகத் திகழ்கின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபட மாட்டார் என மூலன் மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அது கேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகே யிருந்தவர்கள் அவளுக்குத் தேறுதல் சொல்லி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். சாத்தனூர்ப் பொது மடத்தில் சிவயோகத்தில் அமர்ந் திருந்த திருமூலர், யோகு கலைந்து எழுந்து முதல் நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தம்முடம்பினை மறைத்துவைத்த இடத்தினையடைந்து தம்முடம்பைத் தேடிப் பார்த்தார். வைத்த இடத்தில் அது காணப்பட வில்லை. அது மறைந்துபோன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார். சிவபெருமான் உயிர்கள்பால் வைத்த பெருங்கருணையினாலே அருளிய சிவாகமங்களின் அருள் பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருட்டிறத்தால் சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித் தருளினார். இவ்வுண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய வுணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்கட்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அவர்களெல்லோரும் தம்மைவிட்டு நீங்கியபின் சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டகன்று திருவாவடு துறைத் திருக்கோயிலை அடைந்தார். அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி அத்திருக்கோயிலின் மேற்றிசையிலுள்ள அரச மரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோ கத்து அமர்ந்து, நெஞ்சக்கமலத்தில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார். இவ்வாறு சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார், ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சி னாலுளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும்பொருட்டு ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன்பிலிற்றும் திருமந்திர மாலையாகிய ஞானப்பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில் ஒன்றவன் தானே என்னும் திருப்பாடலைப் தொடங்கி, ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்து மூவாயிரம் திருப்பாடல்களை அருளிச்செய்தார். இங்ஙனம் தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமான் திருவருளாலே திருக்கயிலையை யடைந்து இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியா துறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனிதிருந்தார். திருமூலர் அருளிய திருமந்திரமாலை நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ்கின்றது எனச் சேக்கிழார் பெருமான் திருமூல நாயனார் வரலாற்றினைப் பெரியபுராணத்தில் விரித்துக் கூறியுள்ளார். திருமூலர் வரலாற்றில் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிய திருப்பாடல்கள் அகச்சான்றாக அமைந் துள்ளன. நம்பியாரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் எனத் திருமூல நாயனாரைப் போற்றியுள்ளார். திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெறும் அடியார்களின் வரலாற்றை வகைப் படுத்துணர்த்தும் முறையில் திருத்தொண்டர் திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பிகள், குடிமன்னு சாத்தனூர்க் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு முடிமன்னு கூனற் பிறையாளன் றன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டுஎன் உச்சி அடிமன்ன வைத்த பிரான் மூலனாகிய அங்கணனே எனவரும் பாடலில் திருமூலநாயனார் வரலாற்றினை வகைப்படுத்து உணர்த்தியுள்ளார். நற்குடிகள் நிலை பெற்றுவாழும் சாத்தனூரிலே பசுக் கூட்டத்தை மேய்ப் பானாகிய இடையனது உடம்பிற் புகுந்து சென்னியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனையணிந்த சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழிற் கூறிய வண்ணமே நிலைத்த வேதங்கள் சொல்லியபடியே பரவிப்போற்றி எனது சென்னியிலே தன் திருவடியினை நிலைபெறச் செய்தருளிய பெரியோன் திருமூலன் என்னும் பெயரை யுடைய அருளாளன் ஆவன் என்பது இத்திருவந்தாதி யின் பொருளாகும். எனவே திருமூல நாயனார் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் நிரம்பப் பெற்ற தமிழ் மறைகளையும் வடமொழி வேதங்களையும் தழுவித் தமிழாகமம் ஆகிய இத் திருமந்திர மாலையை அருளிச் செய்தார் என்பது புலனாம். திருமூலநாயனார் காலம் நம்பியாரூரராகிய சுந்தரர் தாம் பாடிய திருத்தொண்டத் தொகையில் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் எனத் திருமூலநாயனாரைப் போற்றியுள்ளார். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களில் திருமூலர் அருளிய திருமந்திரப்பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் பல இடங்களில் எடுத்தாளப்பெற்றுள்ளன. எனவே திருமூல நாயனாரது காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதென்பது நன்கு தெளியப்படும். திருமூலர் திருமந்திரத்தை அருளிச்செய்த காலத்து இந்நாட்டின் தாய்மொழியாகிய தமிழும் தமிழ்நாட்டைச் சூழவுள்ள புறநாடுகளின் தாய்மொழிகளாகிய பதினேழு மொழிகளும் ஆகப் பதினெட்டு மொழிகள் சிறந்து விளங்கின. இப் பதினெண் மொழிகளில் வெளிவந்த மெய்ந்நூற் பொருள்களை உணர்ந்துகொள்வதில் அக்காலச் சான்றோர் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டார்கள். இம் மொழிகள் யாவும் மக்கள் நலங்கருதி அண்டமுதல்வனாகிய இறைவனால் அறமுதற் பொருள்களை உணர்ந்து உய்தி பெறுதற்குரிய சாதனமாகப் படைத்தளிக்கப் பெற்றன. இப் பதினெண் மொழிகளில் கூறப்படும் அறமுதற் பொருள்களை உணர்ந்தவர்களே பண்டிதர் எனச் சிறப்பாக மதித்துப் பாராட்டப்பெற்றனர் என்பது, பண்டிதராவார் பதினெட்டுப் பாடையுங், கண்டவர் கூறுங் கருத்தறிவாரென்க (59) எனவரும் திருமந்திரத்தால் இனிது விளங்கும். இவ்வாறு தமிழுடன் ஏனைய பதினேழு மொழிகளையும் சேர்த்துப் பதினெண் மொழிகள் என வழங்கும் வழக்கம் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் காணப்படவில்லை. அன்றியும் திருமந்திரத்தில் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் தொடர்களும் பொருள்களும் அவ்வாறே எடுத்தாளப் பெற்றுள்ளன. திருமூலர், தம் காலத்தில் நிலவிய தமிழ்நாட்டின் பகுப்பினைத் தமிழ் மண்டலம் ஐந்து எனக் குறித்துள்ளார். தமிழ்நாடு சேரமண்டலம், பாண்டி மண்டலம், சோழ மண்டலம், தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பிரிந்து தனித்தனி ஆட்சியில் நிலைபெற்ற காலம் கடைச்சங்க காலத்திற்குப் பின் கி. பி. மூன்றாம் நூற்றாண்டினை யொட்டியதாகும். தில்லையிற் கூத்தப்பெருமான் அருட்கூத்தியற்றும் திருவம்பலத்திற்கு முதன்முதற் பொன்வேய்ந்து அதனைப் பென்னம்பலமாகத் திருப்பணி செய்தவன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ மன்னனாகிய சிம்மவர்மன் என்பர் அறிஞர். எனவே அவ்வேந்தனாற் பொன்வேயப்பெற்ற திருவம்பலத்தைப் பொன்னம்பலம் என்ற பெயராற் போற்றிய திருமூலநாயனார் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியிலோ அன்றி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ இந் நூலினை நிறைவு செய்திருத்தல் வேண்டும் எனக் கருதுதல் ஏற்புடையதாகும். திருமூலநாயனார் இந்நிலவுலகில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்து அமர்ந்திருந்து தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திரமாலையைப் பாடியருளினார் எனச் சேக்கிழார் நாயனார்கூறுதலால், திருமூலர் திருவாவடுதுறையிற் சிவ போதியாகிய படரரசின்கீழ்ச் சிவயோகத்தமர்ந்த காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூறாண்டுகள் முற்பட்டதாகும். எண்ணிலி காலம் சிவயோக நிலையில் அமர்ந்த அத் தவமுனிவர் கடைச்சங்கம் நிலவிய காலப் பகுதியிலும் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியம் புறத்திணையியல் 20-ம் சூத்திரவுரையில், யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்தேயத்து அனைநிலை வகையோராவர். அவர்க்கு மாணாக்க ராகத் தவஞ்செய்வோர் தாபதப் பக்கத்தராவர் என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம், பெருமை வாய்ந்த சிவயோகியாராகிய திருமூலநாயனாரையும் அவர் தம் மாணாக்கர்களையும் குறித்ததெனக் கருதவேண்டியுளது. ஆரியமும் தமிழும் ஆகிய இருமொழிகளையும் நன்கு பயின்று குமரிமுதல் இமயம்வரை போக்குவரவு புரிந்த தவமுனிவர் திருமூலர். அவர் அருளிய திருமந்திரத்தில் சமய நூற் குறியீடுகளாகிய வட சொற்களும் அக்காலப் பொதுமக்கள் வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் காணப்படுதல் இயல்பே. திருமூலர் தம் நூலில் ஆறு சமயங்கள் எனவும் அவற்றிற் பலவாகிய நூறு சமயங்கள் எனவும் தம் காலத்து வழங்கிய சமயங்கள்பற்றிக் குறித்துள்ளார். எனினும் வேதவழக்கொடு மாறுபட்ட புத்த சமண மதங்களைப் பற்றிய குறிப்பெதுவும் திருமந்திரத்தில் இடம் பெறவில்லை. இதனைக் கூர்ந்து நோக்குங்கால், புத்த சமண மதங்கள் தமிழ்நாட்டிற் பரவி நன்கு வேரூன்றுவதற்கு முன்னரே திருமூலர் தமிழாகமமாகிய இந்நூலை இயற்றியிருத்தல் வேண்டும் என்பது இனிது புலனாகும். திருமந்திர நூலமைப்பு திருமூலநாயனார் அருளிய திருமந்திரம் தமிழ் ஆகமமாகத் திகழ்கின்றது. சிவாகமங்கள் தந்திரம் மந்திரம் உபதேசம் என்னும் மூவகை உரைகளையும் அங்கமாகக் கொண்டன. அவற்றுள் தந்திரகலை என்பது, வேத ஆக மங்களின் வகைகளாகிய கருமகாண்டம் ஞானகாண்டம் உபாசனா காண்டம் என்னும் மூன்றனுள் கருமகாண்டம் பற்றி முன்னொடு பின் முரண்பாடின்றி மேற்கொள்ளும் செயல் முறைகளை அறிவுறுத்துவது. மந்திரகலை என்பது உபாசனா காண்டம் பற்றி மனமுதலியன அடக்கித் தெய்வத்தைத் தியானித்து வழிபடும் முறையினை விரித்துரைப்பது. உபதேசகலை என்பது ஞானகாண்டம் பற்றித் தனக்குத் தோற்றமும் ஈறுமில்லாத இறைவனுடைய தன்மைகளைத் தான் உணருமாறும், பிறர்க்கு உணர்த்துமாறும் அறிவுறுத்துவது. மேற்குறித்த மூவகை உரைத்திறங்களும் ஒருங்கமைந்த செந்தமிழ்ச் சிவாகமமாக விளங்குவது திருமூலர் திருமந்திரமாகும். தந்திரம், மந்திரம், உபதேசம் என்னும் மூன்றனுள் நடுவே நின்ற மந்திரம் என்பது முன்னுள்ள தந்திரப் பகுதியோடும், பின்னுள்ள உபதேசப் பகுதியோடும் நெருங்கிய தொடர்புடையதாம் தலைமைபற்றித் திருமூலர் இறைவனருளாற் சிந்தை செய்து அருளிய இத்தமிழாகமத்தை மந்திரமாலை எனக் குறித்துள்ளார். இந் நூலிலுள்ள திருப்பாடல்கள் ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பெற்றுள்ளன. திருமூலர் தாம் அருளிய தமிழாகமப் பொருள் தமக்குக் கிடைத்த வழியினை எடுத்துரைக்கும் நிலையில் அருளிய பாடல்கள் திருமந்திர நூலின் தொடக்கத்திற் பாயிரம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. சைவ சமயத்திற் கூறப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நெறிகளையும் தமிழில் அறிவுறுத்த எண்ணிய திருமூலர் நாற்சீரடி நான்கினாலாகிய கலிப்பாவின் வகையாகிய யாப்பினால் இத் திருமந்திர மாலையை அருளிச் செய்துள்ளார். ஒற்றுநீக்கி எழுத்தெண்ணுங்கால் அடிதோறும் பன்னிரண்டெழுத்தும் நாலாமடி நேரசையினைக் கொண்டு தொடங்கியதாயின் பதினோரெழுத்தும் பெற்று வெண்டளை பிழையாது வருவது திருமந்திரத்தின் யாப்பமைதியாகும். இந் நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர். திருமந்திரமாலை என்பதாகும். இந் நூல் மூவாயிரம் திருப்பாடல்களை யுடைமைபற்றி இதனைத் தமிழ் மூவாயிரம் என வழங்குதலும் உண்டு. இந்நூல் தொல்காப்பியனார் வகுத்துரைத்த எழுநிலத் தெழுந்த செய்யுட்களுள் மறைமொழி கிளந்த மந்திரத்தான என்ற செய்யுளமைப்பின்பாற் படுதலின் திருமந்திரம் என வழங்கப் பெறுவதாயிற்று. தாம் கூறும் சொல்லின் பொருண்மை எவ்விடத்தும் எக்காலத்தும் குறைவின்றிப் பயன் தரும்படி சொல்லும் ஆற்றல் வாய்ந்த நிறைமொழி மாந்தராகிய பெரியோர்களால் இஃது இவ்வாறாகுக எனத் தமது ஆணை தோன்றச் சொல்லப்பட்டு அவ்வாற்றலனைத்தையும் தன்னிடத்துப் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன் மொழியே மந்திரம் எனப்படும். பிறரைச் சபிக்கும் நிலையில் அமைந்த மந்திரச் செய்யுளை அங்கதப்பாட்டு எனவும், உலக நலங்குறித்து வரும் மறைமொழியினையே மந்திரம் எனவும் வழங்குவர் தொல்காப்பியர். சிவபெருமான் சிவயோகியாரது பழையவுடம்பை மறைப்பித்துச் சாத்தனூர் ஆயனாகிய மூலனுடம்பில் இருந்தபடியே திருவாவடு துறையிற் சிவயோகத்தில் அமரச் செய்தருளியது, திருமூலர் சிவாகமங்களைச் செந்தமிழால் வகுத்தருளிச் செய்யவேண்டும் என்ற திருக்குறிப்பே என்பதும், இறைவரது இத்திரு வருட் குறிப்பினையுணர்ந்த திருமூலர் திருவாவடுதுறையில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத் தமர்ந்திருந்து தமிழ் மூவாயிரமாகிய இத்திருமுறையினை அருளிச் செய்தா ரென்பதும் திருமூலர் வரலாறு கூறும் சேக்கிழாரடிகள் வாய்மொழியாலும், சிந்தைசெய் தாகமஞ் செப்ப லுற்றேனே (திருமந்-72) எனவும், என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே (ஷெ. 81) எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளாலும் அறியப்படும். திருமந்திரமாலையாகிய இந்நூலைத் திருமூலநாயனார் ஒன்றவன்றானே என்ற திருப்பாடலை முதலாகக்கொண்டு தொடங்கி மூவாயிரந் திருப்பாடல்களால் நிறைவுசெய் தருளினார் என்பது சேக்கிழார். இப்பொழுது ஒன்றவன்றான் என்ற திருப்பாடலுக்கு முன்னே ஐந்துகரத்தனை எனவரும் விநாயகர் வணக்கத் திருப்பாடல் திருமந்திரத்திற் காப்புச் செய்யுளாக முதற்கண் இடம் பெற்றுளது. தமிழ் மூவாயிரம் ஆகிய திருமந்திரத்தின் பாடற்றொகை இப்பொழுது 3109 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு மிகுந்து காணப்படுதற்கு இவற்றுட் சில பாடல்கள் பொருளியைபுபற்றி இருமுறையும் மும்முறையுமாக இந் நூலில் இடம்பெற்றிருத்தலும், சில பாடல்கள் பாடபேதங் களால் உருவந்திரிந்து வெவ்வேறு பாடல்களாக எழுதப் பெற்றிருத்தலும், இந்நூலைப் பயின்ற பிற்காலச் சான்றோர் சிலர் இதன் சொற்பொருள் யாப்பமைதியினை அடியொற்றிப் பாடிய பாடல்கள் சில ஒப்புமைபற்றித் திருமந்திரம் என்ற பெயராற் குறிக்கப்பட்டு இடைச்செருகலாக இதன்கண் இடம்பெற்றிருத்தலும் காரணங்களாகும். திருமந்திர நூலின் தொடக்கத்தில் அமைந்தது பாயிரம் என்ற பகுதியாகும். பாயிரம் என்பது நூலின் வரலாறாகும். இதன்கண் கடவுள் வாழ்த்தும் திருமூலர் தமது குருமரபின் வழிமுறை கூறும் குருபாரம்பரியமும், இந்நூலினைத் தாம் இயற்றுதற்குரிய தொடர்பினைப் புலப்படுத்தும் முறையில் திருமூலர் தமது வரலாற்றினைத் தாமே கூறும் நிலையில் அமைந்த ஆசிரியர் வரலாறும் அவையடக்கமும் கூறும் திருப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன்பின்னே திருமந்திரப் பாடற்றொகையினையும் பொருட்சிறப்பினையும் கூறும் 99, 100-ஆம் பாடல்களும் குருமட வரலாறு கூறும் 101, 102-ஆம் பாடல்களும் ஆகிய நான்கும் திருமூலர் கூறும் பாயிரத்தின் புறத்தேயமைந்த மற்றொரு பாயிரமாய்ப் பிற்காலத் சான்றோராற் பாடப்பெற்று இப்பாயிரத்தின் இறுதியிற் சேர்க்கப்பட்டன எனக் கொள்ளுதல் பொருந்தும். இறைவன் நூலாகிய சிவாகமப் பொருளை அறிவுறுத்தத் திருவுளங் கொண்ட திருமூல நாயனார், அப்பொருளைக் கேட்பார்க்கு ஊக்கம் உண்டாக்கும் பொருட்டு வேத சிவாகமப் பொருள்களின் சிறப்பும் அப் பொருளுணர்வு தமக்குக் கிடைத்த வழிமுறையும் தாம் இந்நூலைச் செய்தற் குரிய காரணமும் என இந்நூலைப் பயில்வோர் இன்றியமையாது முதற்கண் அறிந்து கொள்ளுதற்குரிய செய்திகளை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது திருமந்திரத்தின் தொடக்கத்திலுள்ள பாயிரப் பகுதியாகும். அதனையடுத்து இந்நூலிலுள்ள ஒன்பது தந்திரங்களுள் முதல் நான்கு தந்திரங்களும் சிவஞானத்தைப் பெறுதற்கு விரும்பியவர்கள் தம்மை அகமும் புறமும் தகுதி யுடையவராக்கிக் கொள்ளுதற்குரிய சாதனங்களையும், நடுவிலுள்ள ஐந்தாந் தந்திரம் சைவ சித்தாந்த சமய தத்துவங்களையும், பின்னுள்ள நான்கு தந்திரங்களும் ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறுதற்குரிய நற்பயன்களையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்தனவாகும். உ சிவமயம் திருமூலநாயனார் அருளிய திருமந்திரமாலை என்னும் பத்தாந்திருமுறையிலிருந்து தொகுக்கப்பெற்ற திருமந்திர அருள்முறைத் திரட்டு விநாயகர் கா ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. திருமந்திரமாலை என்னும் மறைநூற் பொருளை விரித துரைக்கத் திருவுளங் கொண்ட ஆசிரியர், இடையூறு நீக்கி இன்னருள்புரியும் விநாயகக் கடவுளை முதற்கண் போற்றுகின்றார். (இதன்பொருள்) ஐந்து திருக்கைகளையுடையவனும் யானை முகத்தினையுடையவனும் சந்திரனது இளைய பிறை வடிவினையொத்த தந்தத்தினையுடையவனும் நந்தியென்னும் திருப்பெயருடைய சிவபெருமானுக்கு மைந்தனும் சிவஞானச் சுடர்க்கொழுந்தாகத் திகழ்பவனும் ஆகிய விநாயகப் பெருமானை அறிவினுள் (அறிவாக) வைத்து (அம் முதல்வனுடைய ஞானசக்தி கிரியாசத்தி யென்னும்) திருவடிகளைப் போற்றித் துதிக்கின்றேன் என்றவாறு. விநாயகப் பெருமானுக்குத் திருக்கரங்கள் ஐந்தாகலின் ஐந்துகரத்தன் என்றார். கரம் - கை. ஐந்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், கலசம், ஒடித்த கொம்பு, மோதகம் என்னும் ஐந்தினையும் கொண்டுள்ளார் விநாயகர். இவை ஐந்தும் ஆன்மாக்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்னும் ஐந்து மலங்களையும் களையும் தொழிலினைக் குறிப்பன என்றும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலைச் செய்யும் ஐந்தெழுத்தினுருவாகிய இறைவர் விநாயகர் என்பதனைக் குறிப்பன என்றும் கூறுவர். யானைமுகம், ஓங்காரமே திருவுருவாகத் தோன்றியவர் விநாயகர் என்பதனைக் குறிப்பதாகும். சிவஞானச் சுடராய்த் தளிர்த்துத் தோன்றும் பேருணர்வாகிய ஞானமே திருமேனியாக வுடையார் விநாயகப் பெருமான் என்பார், ஞானக்கொழுந்து என்றார். புந்தி - புத்தி; உயிரின் அறிவு. அடி என்றது, இறைவனது ஞானசக்தி கிரியாசத்தி என்னும் திருவருளின் உருவாகிய திருவடிகளை, அடியினைப் புந்தியுள் வைத்துப் போற்றுதலாவது, இறைவனுடைய ஞானசத்தி கிரியா சத்தியாகிய திருவருளைத் தம்முடைய அறிவாற்றல் செயலாற்றல்களுக்கு முதலாகக்கொண்டு அதன்வழி அடங்கி நடத்தல். கடவுள் வாழ்த்து 1. ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான் ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச் சென்றனன் தானிருந் தானுணர்ந் தெட்டே. இத்திருமந்திரம் கடவுளின் இயல்பினை உணர்த்துகின்றது. (இ-ள்) வேதத்துள் ஏகம் எனப்படும் பரம்பொருள் சிவபெருமானாகிய அவனே. அவனுடன் வைத்து இரண்டாவதாக எண்ணப்படுவது அவனின் வேறல்லாத இனிய திருவருளாகிய சத்தியே. அம்முதல்வன் குரு லிங்க சங்கமம் என்னும் மூன்றினுள்ளே நிலைபெற்றுள்ளான். நான்குமறைகளையும் (உயிர்கள் உய்யுமாறு) உணர்ந்து அருளிச் செய்தனன். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளையும் வென்று அடக்கியருளினான். ஆறிடங்களிலும் விரிந்து பரவியுள்ளான். ஏழண்டங்களுக்கும் அப்பாலாய்க் கடந்து சென்றுள்ளான். மன்னுயிர்கள் தன்னை எளிதின் உணர்தற்பொருட்டு நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள், ஆன்மா என்னும் எட்டினும் பிரிவின்றி எழுந்தருளியுள்ளான் எ-று. ஒன்று - வேதத்துள் ஏகம் என்ற சொல்லாற் போற்றப்படும் பரம்பொருள். ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்பது திருவாசகம். ஒன்றென்ற தொன்றே காண் ஒன்றேபதி என்பது சிவஞானபோதம். ஞாயிறாகிய ஒருபொருளே தன்னை விளக்கும் நிலையிற் கதிரோன் எனவும் உலகப் பொருள்களை விளக்கும் நிலையிற் கதிர் எனவும் இருதிறப்பட்டு ஒருபொருளாந் தன்மையிற் பிரிவின்றி இயைந்து நிற்குமாறு போன்று, பரம்பொருள் ஒன்றே புறப்பொருள் நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல்பில் நிற்கும் நிலையிற் சிவம் எனவும், உலக வுயிர்களை நோக்கி அருளுருவாய் நின்று உணர்த்தும் நிலையிற் சத்தி எனவும் இவ்வாறு குணியும் (பண்புடைப் பொருளும்) குணமும் (பண்பும்) ஆக இருதிறப்பட்டு இயைந்து நிற்றலின், இரண்டு அவன் இன்னருள் என்றார். இரண்டு - இரண்டாவதாகச் சொல்லத்தக்கது அருள் என்றது சத்தியினை. சத்தியும் சிவமும் தம்மிற் பிரிவின்றியுள்ள ஒரு பொருளே என்பதனை நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் என வரும் திருவெம்பாவைத் தொடரில் திருவாதவூரடிகள் தெளிவாக விளக்கியுள்ளார். ஆதிபகவன் எனத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும், மலைமகள் பாகமாக அருள் காரணத்தின் வருவார் என ஆளுடைய பிள்ளையாரும், அம்மையே அப்பா எனத் திருவாதவூரடிகளும், சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனி முழு முதலுமாய் எனப் பூந்துருத்தி நம்பிகாட நம்பியும், அம்மையப்பரே யுலகுக்கு அம்மையப்ப ரென்றறிக எனத் திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாரும் அருளிய மெய்ம்மொழிகள் இங்கு நினைக்கத் தக்கனவாகும். இனி அவன் இன்னருள் இரண்டு என இயைத்து இறைவன் உயிர்கட்குச் செய்யும் திருவருள் அறக்கருணை, மறக்கருணை என இரண்டாகும் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். அறக்கருணை அனுக்கிரகம். மறக்கருணை- திரோதான சத்தி. மூன்று என்றது, அருவாகித்தோன்றாத இறைவனைக் குறித்து வழிபடுதற்குரிய குருலிங்க சங்கமம் ஆகிய மூவகைத் திருமேனிகளை; அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்றெனவும் அவன், அவள், அது என்னும் மூன்றெனவும் கூறுவதும் உண்டு. நான்கு என்றது நான்மறைகளை. நால் வேதங்களை உயிர்கள் உணர உணர்த்தியருளினான் என்பார் நான்கு உணர்ந்தான் என்றார். ஐம்பொறிகளை வெல்லும் ஆற்றல் மக்களுக்கு இயல்பாக அமையவில்லை. அத்தகைய ஆற்றலை அவர்களுக்கு வழங்கி உய்விக்க வல்லவன் இறைவன் ஒருவனே என்பதுணர்த்துவார் ஐந்து வென்றனன் என்றார். பொறிவாயில் ஐந்தவித்தான் எனத் திருவள்ளுவரும் வென்றானைப் புலனைந்தும் என அப்பரடிகளும், பொறிவாயில்இவ் வைந்தினையும் அவியப் பொருது உன்னடியே புகுஞ்சூழல் சொல்லே என நம்பியாரூரரும் அருளிய பொருளுரைகள் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கனவாகும். ஆறு-மக்களது உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்கள்; மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம்,கலை என்னும் ஆறு அத்துவாக்கள் (வழிகள்) எனக் கொள்ளுதலும் பொருந்தும். விரிதல் - பரவி வியாபித்தல். ஏழ் உம்பர் - ஏழு அண்டங்களுக்கும் அப்பால்; இனி ஆறு ஆதாரங்களையுங் கடந்து ஏழாவது ஆதாரமாயுள்ள ஆயிர விதழ்த் தாமரையாகிய மேலிடம் எனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். உம்பர் - மேல். உணர்ந்து எட்டு இருந்தான் என இயைத்துப் பொருள் கொள்க. உணர்ந்து - உணர; மாற்ற மனங்கழிய அப்பாற்பட்டு நின்ற தன்னை உலகவுயிர்கள் எளிதின் உணரும்பொருட்டு எட்டில் (அட்டமூர்த்தமாக) இருந்தான் என்பதாம். ஒன்றவன் தானே என்னும் இத்திருமந்திரத்தை அடியொற்றி, ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய் மாறாமறை நான்காய்கரு பூதம்மவை யைந்தாய் ஆறார்சுவை யேழோசையோ டெட்டுத்திசை தானாய் வேறாயுட னானானிடம் வீழிம்மிழ லையே (1-11-2) எனவரும் ஆளுடைய பிள்ளையார் திருப்பாடல் ஒன்று முதல் எட்டளவும் குறித்த எண்ணலங்கார முடையதாய் அமைந்திருத்தல் காணலாம். 2. போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாங் கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. திருமூலர் திருமந்திரமாலையில் தாம் கூற எடுத்துக் கொண்ட பொருள் இதுவென அருளிச் செய்கின்றார். (இ-ள்) எனது இனிய உயிரின்கண் உயிராய் நிலை பெற்றுள்ள தூயவனும், நான்கு திசைகளிலும் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் நலம்புரியும் இயல்புடைய அருளாகிய அம்மைக்கு நாயகனும், பெருந்திசைகளுள் ஒன்றாகிய தென்திசைக்கு ஒப்பற்ற காவலனாகிய இயமனை (த்தன்னை அடைக்கலமாக அடைந்த அந்தணாளனாகிய மார்க்கண்டேயர் பொருட்டு) உதைத்து அடக்கியருளியவனும் ஆகிய சிவபெரு மானை (அவனுக்கு அடியவனாகிய) யான் போற்றுதல்கூறிப் பரவி அவனது பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கூறத் தொடங்குகின்றேன். எ-று இன்னுயிர் மன்னும் புனிதனை, நாற்றிசைக்கும் நல்ல மாதுக்கு நாதனை, மேற்றிசைக்குள் தென்திசைக்கு ஒரு வேந்தனாம் கூற்று உதைத்தானை யான் போற்று இசைத்துக் கூறுகின்றேன் என இயைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். போற்று-போற்றுதல்; தோத்திரம். போற்று இசைத்தல்-தோத்திரம் சொல்லி வழிபடுதல். என்னுயிரைக் காட்டிலும் எனக்கு இனிமையானது பிறி தொன்று இல்லை என்பார், இன்னுயிர் என்றார். என்னுயிரிலும் சிறந்து உயிர்க்குயிராய் என்னுயிரில் நிலைபெற்றுள்ளவன் தூயோனாகிய இறைவன் என்பார், இன்னுயிர் மன்னும் புனிதன் என்றார். நாற்றிசை என்பது அத்திசைகளில் வாழும் உயிர்களை யுணர்த்தியது; இடவாகு பெயர். நல்ல மாது-நலம்புரியும் இயல்புடைய திருவருளாகிய சத்தி. நாதன்-நாயகன். மேற்றிசை-கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்னும் பெருந்திசைகள். அவற்றுள் ஒன்று தென் திசை என்பார், மேற்றிசைக்குள் தென் திசை என்றார். மேற்றிசை யெனப்படும் பெருந்திசை நான்கினுள் ஒன்றாகவுள்ளது தென்திசை என்பதாம். தென்திசைக்கு வேந்தனாம் கூற்று என இயையும். தென்திசைக்கு வேந்தன்- தென்திசைக்குக் காவலன். கூற்று-இயமன். உடம்பினின்றும் உயிரைக் கூறுபடுத்துப் பிரித்தற்றொழிலுடையனாதல் பற்றிக்கூற்று என்பது காரணப் பெயராயிற்று. உணர்த்தவுணருஞ் சிற்றறிவினனாகிய யான் வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட இறைவனது இயல்பினை உணர்ந்து கூறும் உணர்விலேனாயினும் இன்னுயிர் மன்னும் புனிதனாகிய அவனைப் போற்றிசைத்து அவனது அருளின் துணைகொண்டு ஒன்றி உணர்ந்து ஒருவாறு உரைத்தற்கு முற்பட்டேன் என்பார், இன்னுயிர் மன்னும் புனிதனைப் போற்றிசைத்து யான் கூறுகின்றேன் என்றருளிச் செய்தார். இவ்வாறே, அவனரு ளாலே யவன்தாள் வணங்ங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும் ஓயவுரைப்பனியான் எனத் திருவாதவூரடிகளும் மாசில்மணியின் மணி வார்த்தையாகிய திருவாசகத்தைத் தொடங்கியருளினமை இங்கு ஒப்புநோக்கத் தக்கதாகும், 3. சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே. தனக்கு உவமையில்லாதான் இறைவன் என்பது உணர்த்துவது இத்திருப்பாடல். (இ-ள்) சிவனாகிய அவனை ஒப்பாவார் இவ்வுலகில் யாவரும் இல்லை. சிவபெருமானுக்கு ஒப்பான தெய்வம் (எங்கேனுமுளதோ என்று அறிவு நூல்களின் துணை கொண்டு ஆராய்ந்து) தேடினாலும் அத்தகையதொரு தெய்வம் எங்கும் இல்லை. (படைத்தற் கடவுளும் காத்தற் கடவுளமாகிய இருவர் அம்முதல்வனைத் தேடிக்காணப்புகுந்த) அன்று (நான்முகன் அன்னமாய் விண்ணிற் பறந்து சென்று காணவொண்ணாத) செம்மையான சடை முடியையும் (திருமால் கேழலாய் நிலத்தினை அகழ்ந்து தேடிக் காணவொண்ணாத) செந்தாமரை மலர் போலுந் திருவடியையும் உடையான் (அம்முதல்வன்) எ-று. அருளே திருமேனியாகக் கொண்டு எவ்வுயிர்க்கும் அருள்சுரக்கும் செம்பொருளாகிய சிவபெருமானை உலகினைப் படைத்துக் காத்து அழித்தலாகிய முத்தொழிலைச் செய்யும் அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகளுள் ஒருவனாகக் கொண்டுரைத்தல் பொருந்தாதென்றும், தன்னையொப்பாவார் ஒருவருமில்லாத தனி முதல்வன் அவன் என்றும் அறிவுறுத்த எண்ணிய திருமூல நாயனார், மூவர்கோனாய் நின்ற அம்முதல் வனது இறைமைத் தன்மையை விளக்கும் புராணச் செய்திகளுள் திருமால் பிரமர் அடிமுடிதேடி யறிய வொண்ணாதவாறு ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ் சோதியாய் நின்ற செயலைக் குறிப்பால் உணர்த்தும் முறையில் அன்று புவனங்கடந்து பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரையானே என்றார். அன்று என்றது, மாலும் அயனும் தாம்தாம் பிரமம் என முரண்பட்டு நின்ற அக்காலத்தினை. புவனங் கடந்து பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடி எனச் சடைமுடியின் சிறப்பினை விரித்துரைக்கவே, அம்முதல்வனது திருவடியாகிய தாமரை பாதாளம் ஏழினுங்கீழ்ச் சொற்கழிவு பாதமலர் என்றவாறு பாதாளம் ஏழினையுங் கடந்து அப்பாற்சென்ற சிறப்பினது எனத் திருவடியின் பெருமையினையும் உய்த்துணர வைத்தாராயிற்று. தவனம் - வெப்பம்; வெம்மையுடைய தீயின் செந்நிறத்தைச் சுட்டி நின்றது. தாமரை என்பது மலர்போலுந் திருவடியினைக் குறித்தது. அவனெடொப்பார் இங்கு யாவரும் இல்லை என்பதோடு சிவனொடொக்குந்தெய்வம் எங்குந் தேடினும் இல்லை என்பதனை, அங்ஙனம் எங்குந்தேடி உண்மை யுணர்ந்தாராகிய திருமால் பிரமரது செயலில் வைத்து ஆசிரியர் குறிப்பாக விளக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். இத்திருமந்திரப் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, தேவரி னொருவனென்பர் திருவுருச் சிவனைத்தேவர் மூவராய் நின்றதோரார் முதலுருப் பாதிமாதர் ஆவது முணரார் ஆதியரியயற்கரிய வொண்ணா மேவுரு நிலையும் ஓரார் அவனுரு விளைவும் ஓரார் (சுபக் - 69) எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். 4. அவனை யொழிய அமரரும் இல்லை அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை அவனன்றி ஊர்புகு மாறறி யேனே. (6) இது, எல்லாவுயிர்களுக்கும் இறைவனது உதவி இன்றியமை யாதது என்பதனை உணர்த்துகின்றது. (இ - ள்) சிவபெருமானாகிய அவனது சார்பினைப் பெறாதொழியின் தேவர்களும் (தத்தம் போகங்களை நுகர்ந்து இன்புறுதல்) இல்லை. அம்முதல்வனது திருவருளாகிய துணையின்றிச் செய்யப்பெறும் அரிய தவம் எதுவும் (இனிது நிறைவேறுதல்) இல்லை. அம்முதல்வனையன்றி அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகளால் ஆகக் கூடியது எதுவும் இல்லை. அம்முதல்வனது திருவருளின் துணைபெற்றன்றிப் பேராவுலகமாகிய வீட்டுலகத்தினையடையும் நெறியிருப்பதாக யான் அறிந்திலேன். எ-று. இறைவன் மக்களது சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் அப்பாற்பட்டு விளங்குதல் பற்றி அவன் எனச் சேய்மைச் சுட்டாற் கூறினார். அமுதமுண்டு சாவாநிலை யினராகிய தேவரும் இறைவனருளைப் பெறாராயின் தாம் நுகர்தற்குரிய இன்பங்களையிழந்து துன்புறுவரென்பார், அவனையொழிய அமரரும் இல்லை என்றார். அமரர்-தேவர். அமரரும் என்றவிடத்து உம்மை உயர்வுசிறப்பு. ஐம்பொறிகளைச் சென்றவிடத்திற் செல்லவிடாது அடக்கிய நிலையிற் செய்யத்தகும் தவம் பொறிவாயில் ஐந்தினையும் அடக்குதற்கு வேண்டிய ஆற்றலை வழங்கும் இறைவனது திருவருளின் துணைகொண்டே செய்து நிறைவேற்றுதற்குரியதாகும். அவனது அருளின் துணையில்லை யேல் எத்தகைய தவமும் நிறைவேறாது என்பார், அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை என்றார். திருத்துறையூர்த் தலைவாவுனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே என நம்பியாரூரர், தமக்குத் தவநெறி தந்தருளும்படி திருத்துறை யூர்ப் பெருமானை வேண்டிக்கொண்டதும் இதுபற்றியேயாகும். அயன், அரி, அரன் என்னும் மும்மூர்த்திகளையும் உள் நின்று இயக்கி உலகத்தைப் படைத்துக் காத்தளிக்கும் முத்தொழில்களையும் செய்தருள்பவன் சிவபெருமான் ஒருவனே என்பதுணர்த்துவார் அவனன்றி மூவரால் ஆவது ஒன்றில்லை என்றார். ஆவது - இயல்வது. தேவர்கோ வறியாத தேவதேவன் செழும்பொழில்கள் பயந்துகாத்தழிக்கும் மற்றை மூவர்கோனாய் நின்ற முதல்வன் எனவரும் திருவாசகம் இங்கு எண்ணத்தகுவதாகும். சிற்றறிவும் சிறுதொழிலும் உடையனவாய்ப் பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள உயிர்த் தொகுதிகள் முற்றுணர்வும் வரம்பிலாற்றலுமுடைய முதல்வனது திருவருளின் துணை கொண்டே தம்மைப் பிணித்துள்ள பாசங்களை யறுத்துப் பேராவியற்கையாகிய வீட்டுலகினைப் பெறுதற்குரியன என்பதனையும், இறைவனது அருள்வழி யொழுகுதலாகிய திருவருள் நெறியினையன்றி உயிர்கள் வீடுபெறுதற்குத் துணைபுரியத்தக்க பிறிதொரு நெறியில்லை என்பதனையும் எனது குருநாதனாகிய நந்தியருளாலே நன்குணர்ந்து கொண்டேன் எனத் தமது அநுபவத்தினை உலகத்தார் உள்ளத்திற் பதியும்படி யுணர்த்த விரும்பிய திருமூலர், அவனன்றி ஊர்புகும் ஆறு அறியேனே என்றார். இங்கு ஊர் என்றது சிவமாநகர் எனப் போற்றப்பெறும் வீட்டுலகினை. ஆறு-வழி. 5. முன்னையொப் பாயுள்ள மூவர்க்கு மூத்தவன் தன்னையொப் பாயொன்றும் இல்லாத் தலைமகன் அன்னையப் பாவெனில் அப்பனு மாகுவன் பொன்னையொப் பாகின்ற போதகத் தானே. (7) சிவனது அநாதி முறைமையான தொன்மையினையும் அருளின் நீர்மையினையும் உணர்த்துகின்றது. (இ-ள்) பொன்னையொத்து விளங்கும் (நெஞ்சத்) தாமரையின் அகத்தே எழுந்தருளிய இறைவன், (உலகம் படைக்கப்பெறும்) தொன்மைக்காலத்தே தம்முள் (தொழில் வகையால்) ஒத்துள்ள (அயன் அரி அரன் என்னும்) மும்மூர்த்தி களுக்கும் முந்திய தொன்மையுடையவன்; தன்னை ஒப்பாவது ஒரு பொருளும் இல்லாத நிலையில் தனி முதல்வனாகத் திகழ்பவன்; தன்னை (அன்பினால்) அப்பா என அகங்குழைந்து அழைத்தால் (அவ்வாறு அழைத்துப் போற்றுவார்க்கு) அப்பனுமாய் எளிவந்து அருள்புரியும் பேரருளாளனாவன். எ-று. பொன்னை யொப்பாகின்ற போதகத்தான், மூவர்க்கு மூத்தவன், தலைமகன், அப்பனும் ஆகுவன் எனமுடியும். பொன்னை ஒப்பாகின்ற போது என்றது, உயிர்களின் உள்ளக் கமலமாகிய பொன்னிற மலரினை. போது-மலர். நெஞ்சத் தாமரையிலே நீங்காது எழுந்தருளியவன் இறைவன் என்பது, மலர் மிசையேகினான் (திருக்குறள்-3) எனத் தெய்வப்புலவரும் அகனமர்ந்த அன்பினராய் அறுபகைசெற் றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள் இருக்கும் புராணர் (1-132-6) என ஆளுடைய பிள்ளையாரும், எரியாய தாமரைமேல் இயங்கினாரும் (6 16-7) என அப்பரடிகளும் அருளிய பொருளரைகளாற் புலனாம். அயன் அரி அரன் என்னும் மூவரையும் தோற்றுவித்து அம்மூவர் வாயிலாக உலகினைப் படைத்துக்காத்து ஒடுக்குதலாகிய முத்தொழில்களையும் செய்தருளும் முன்னைப் பழம் பொருளாகத் திகழ்பவன் சிவபெருமான் ஒருவனே எனத் தெளிவிக்கும் முறையில் முன்னையொப்பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் என்றார். மூத்தவனா யுலகுக்கு முந்தினானே (6-44-1) எனவும், படைப்போற் படைக்கும் பழையோன், படைத்தவை காப்போற் காக்குங் கடவுள், காப்பவை கரப்போன் கரப்பவை கருதாக் கருத் துடைக் கடவுள் (திருவாசகம்-திருவண்டப்-13-16) எனவும் முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே (திருவெம்பாவை-9) எனவும் வரும் திருமுறைத்தொடர்கள் இங்கு நோக்கத் தக்கன. தனக்கு உவமை இல்லாதான் (திருக்குறள் - 7) என்பார் தன்னை ஒப்பாயொன்றும் இல்லாத் தலைமகன் என்றார். அப்பனும் என்ற எச்ச உம்மை அன்னையாதலேயன்றி அப்பனாகவும் உள்ளான் என்பதனையுணர்த்தியது. அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்வணா நீயலையோ (4-112-3) என நாவுக்கரசரும் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே எனத் திருவாதவூரடிகளும் அன்பினால் அழைத்துப் போற்றினமையும், அம்மே அப்பா என்று அழுது அழைத்தருளிய காழிப் பிள்ளையாருக்கு இறைவன் அம்மையப்பராய் எழுந்தருளி எளிவந்து அருள்செய்தமையும் இத்திருமந்திரப் பொருளின் மெய்ம்மையினைத் தெளிவித்தல் காணலாம். 6. தீயினும் வெய்யன் புனலினுந் தண்ணியன் ஆயினும் ஈசன் அருளறி வாரில்லை சேயினும் நல்லன் அணியன் நல் லன்பர்க்குத் தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. (9) இறைவனுடைய திருவருட் பண்புகளை விரித்துரைக்கின்றது. (இ - ள்) ஈசனாகிய சிவபெருமான், தீயைக்காட்டிலும் வெம்மையுடையவன்; நீரைக்காட்டிலும் குளிர்ச்சியுடையவன்; ஆனாலும் அவனது அருளின் திறத்தை உள்ளவாறு அறிவார் ஒருவருமே இல்லை. (அவனது அருளின் தன்மையை அறியவல்லார்க்கு) தாழ்சடையினை யுடையானாகிய சிவபெரு மான் (சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத) சேய்மை நிலையினன் ஆயினும் (எவ்வுயிர்க்கும்) தன் திருவருளாகிய நலத்தினை யுடையான். நன்மையாகிய அறத்தினையுடையராய்த் தன்பால் அன்புடையார்க்கு மிகவும் அணுகியவனாய் எளிவந்து ஈன்றதாயினுஞ் சிறந்த பேரன்பினனாய் நலஞ் செய்பவனாவன் எ - று. ஈசன் வெய்யன் தண்ணியன், ஆயினும் (அவனது) அருளறிவார் இல்லை எனவும், தாழ்சடையோன் சேயினும் நல்லன் நல்லன்பர்க்கு அணியன், தாயினும் நல்லன் எனவும் இயைத்துப் பொருள் கொள்க. மன்னுயிர்க்கு உளவாகும் தீமைகளை அழிக்குந் திறத்தில் தான் பற்றிய பொருள்களைச் சுட்டழிக்கும் வெம்மைமிக்க தீயைக் காட்டிலும் வெம்மையுடை யவனாகத் திகழ்வோன் ஈசன் என்பார் தீயினும் வெய்யன் என்றார். பிறவித் துயராகிய கடுவெயிலிற்பட்டு அல்லற்படும் உயிர்களுக்குக் குளிர்ந்த நீரினுந் தண்மையுடையனாய்த் திருவடி நீழலைத் தந்து அருள்புரியும் அழகிய தண்ணளியினை யுடைமையால் அறவாழி யந்தணனாக விளங்குவோன் என்பார் புனலினுந் தண்ணியன் என்றார். சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போது அடித்தொண்டர் துன்னும் நிழலாவன... ஐயாறன் அடித்தலமே (4-92-19) என்பது அப்பரடிகளின் அநுபவ மொழியாகும். இவ்வாறு இறைவன் தோன்றாத் துணையாயிருந்து தீமையைத் தெறுதலும் நன்மையை அளித்தலும் ஆகிய தனது திருவருட்டிறத்தால் மன்னுயிர்களை முறை செய்து காத்தருளவும் உலகத்தார் அம்முதல் வனது அருளுபகாரத்தை உள்ளவாறு உணரப்பெற்றிலரே என்பார், ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை என இரங்கிக் கூறினார். பின்தாழ் சடையோனாகிய சிவபெருமான், ஒன்றினுந் தோயாது நிற்கும்; தன்னியல்பில் எல்லா வுலகங்களையுங் கடந்து அப்பாற்பட்டுச் சேய்மையிடத் தானாயினும், தன்பால் அன்புடைய அறவோராகிய நல்லோர்க்கு மிகவும் அணுகிய நிலையில் எளிவந்து, பெற்ற தாயினும் இனியனாய் நல்லருள் புரியும் பெற்றியன் என்பார், சேயினும் நல்லன், நல்லன்பர்க்கு அணியன், தாயினும் நல்லன் என்று அருளிச்செய்தார். சேயினும்-சேயன் ஆயினும்; சேய்மை யிடத்தான் ஆயினும். நணியானே சேயானே என நாவுக்கரசரும் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே என மாணிக்கவாசகரும் அருளிய வாய்மொழிகள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. இனி, சேயினும் நல்லன் என்பதற்கு, குழந்தையினும் நல்லன் எனப் பொருள் கொள்வாருமுளர். சேய்-பிள்ளை. கைம்மாறு கருதாது அன்பினாற் பேணிப் போற்றுந்திறத்தில் பெற்றதாயினும் சிறந்த பேரன்புடையார் பிறர் யாருமில்லை. அங்ஙனம் அன்புடைய பெற்ற தாயைக் காட்டிலும் உயிர்களிடத்தே பேரன்புடையவனாய் இன்னருள் புரிபவன் இறைவன் ஒருவனே என்பார், தாயினும் நல்லன் என்றார். தாயினும் நல்ல சங்கரனுக்கு (5-100-9) எனவும், பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே (6-38-6) எனவும் பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து (திருவாசகம்) எனவும் வரும் அருளிச் செயல் இந்திருமந்திரத்தின் விளக்கமாகும். 7. பொன்னாற் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னாற் றொழப்படும் எம்மிறை மற்றவன் தன்னாற் றொழப்படு வாரில்லை தானே. (8) முற்குறித்த தாழ்சடையோன் என்பதன் கருத்தினை விளக்கிக் கூறுகின்றது. (இ-ள்) பொன்னினால் செய்தாலொத்த பொலிவுற்று மிளிரும் சடை இதுவாகும் எனக்கண்டோர் மகிழ்ந்து போற்ற (அச்சடை) தன் பின்புறத்தே தாழ்ந்து விளங்குமாறு எழுந்தருளி யிருப்பவன் தந்தியென்னும் திருப்பெயருடைய சிவபொருமான். (அவன்) என்னையொத்த தவமுடையோரால் தொழுது போற்றப்பெறும் எம் இறைவனாவன். அவனால் தொழப்படும் கடவுளர் பிறரெவருமில்லை. (எனவே எல்லாக்கடவுளராலும் தொழப்படுந் தனிமுதல் அவன் ஒருவனே) எ - று. புரிதல்-செய்தல், பின்னால் - பின்னே. பிறங்க-விளங்க. அவன் சடை என்றும் பின்னே தாழ்ந்து விளங்கும் எனவே அம்முதல்வன் யாரையும் வணங்கியறி யான் என்பது குறித்தவாறு. பிறப்பில் பொருமானைப் பின்தாழ் சடையானை (1-80-2) எனவும், தொழப்படுந் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னைத் தொழப்படுந் தேவர்தம்மால் தொழுவிக்கும் தம் தொண்டரையே (4-112-5) என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந்தான் ஈசன் (திருச்சாழல் - 2) எனவும் வரும் அருளுரைகள் தன்னால் தொழப்படுவாரில்லாத தனிமுதல்வன் தாழ்சடை யோனாகிய சிவன் என்னும் மெய்ம்மையை அறிவுறுத்து வனவாகும். 8. தானே இருநிலந் தாங்கிவிண் ணாய்நிற்கும் தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும் தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் தானே தடவரை தண்கட லாமே. (10) இறைவன் உலகெலாமாகி நிற்கும் நிலையினை உணர்ந்துகின்றது. (இ-ள்) இறைவனாகிய தான் ஒருவனே பெரிய நிலமுழு வதனையும் தாங்கி (எல்லாப் பொருள்களுக்கும் விரிந்து இடங்கொடுக்கும்) பரந்த ஆகாயமாகிக் கலந்து நிற்கின்றான். தான் ஒருவனே சுடுந்தன்மையுடைய தீயும் (இருள்கடியும் சுடராகிய) கதிரவனும் மதியுமாகிக் கண்ணிற் கலந்து விளங்குகின்றான். தான் ஒருவனே தன்னிற் பிரிவிலாததாய் மழையைப் பொழியும் அருட் சத்தியாய் உலகுயிர்களோடு கலந்து நிற்கின்றான். தான் ஒருவனே பெரிய மலையாகவும் தண்மையதாகிய நீரையுடைய கடலாகவும் கலந்துள்ளான். எ-று. தான் என்றது இறைவனை. தானே என்பதில் ஏகாரம் தேவர் முதலிய பிறரினின்றும் அவனைப் பிரித்து உணர்த்துதலின் பிரிநிலையேகாரமாகும். இறைவன் இவ்வாறு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஞாயிறு, திங்கள் ஆகிய உலகப் பொருள்களோடும் உயிர்களோடும் பிரிவின்றி ஒன்றாய்க் கலந்து நிற்கும் நிலையினை, இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி பெருநலமுங்குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தானேயாகி நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே (6-94-1) என அப்பரடிகளும், பண்ணும்பத மேழும்பல வோசைத் தமிழவையம் உண்ணின்றதொர் சுவையும் முறுதாளத் தொலிபலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ் சுடர்மூன்றும் விண்ணும் முழு தானானிடம் வீழிம்மிழலையே (1-11-4) எனத் திருஞானசம்பந்தரும், நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகே ழெனத்திசை பத்தெனத் தானொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ என மணிவாசகப்பெருமானும் விரித்து விளக்கியுள்ளமை நினைக்கத்தகுவதாகும். உலகப் பொதுமறையாகிய திருக்குறளை அருளிச் செய்த தெய்வப்புலவர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்தினை யடுத்து அம்முதல்வனது அருளின் வண்ணமாக அமைந்த வான்சிறப்புனை அமைத்துள்ளார். எனவே உலகெல்லாம் வாழ்வதற்குக் காரணமாக அமைந்த மழை இறைவனுடன் பிரிவன்றியுள்ள திருவருளாகிய சத்தியின் ஆற்றலைப் புலப்படுத்தும் குறிப்பினதாகும் என்பார், தானே மழைபொழி தையலுமாய் நிற்கும் என்றார். சொரிவிப்பார் மழை (5-16-3) எனவும், பாரவன்காண் பாரதனிற் பயிரானான்காண் பயிர்வளர்க்குந் துளியவன்காண் துளியில்நின்ற நீரவன்காண் (6 87 6) எனவும் நாவுக்கரசரும், குழைக்கும் பயிர்க்கோர் புயலே யொத்தியால் (7-4-4) என நம்பியாரூராரும், நந்தம்மையாளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும் முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய் (திருவெம்-16) என மணிவாசகரும் அருளிய மெய்ம் மொழிகள் இறைவனோடு பிரிவில்லாத அம்மையின் அருள்வண்ணமாக நிகழ்வது மழை என்பதனை இனிது புலப்படுத்தல் அறியத்தகுவ தாகும். தடவரை - பெரியமலை. 9. மண்ணகத் தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும் விண்ணகத் தான்ஓக்கும் வேதகத்தான் ஒக்கும் பண்ணகத் தின்னிசை பாடலுற்றானுக்கே கண்ணகத்தே நின்று காதலித்தேனே. இடவரம்பின்றி எங்கும் கலந்து அருவாய்நிற்கும் இறைவனைக் கண்ணாரக்கண்டு வழிபடுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) இறைவன், மண்ணுலகத்திலுள்ளாரை ஒத்துத் தோன்றுவான்; விசும்பில் இயங்குவாரை ஒத்துத் தோன்றுவான்; வானுலகத்திலுள்ளாரை ஒத்துத் தோன்றுவான்; வேதத்தின் உட்பொருளாய்த் தோன்றுவான். பண்ணின் கண்ணே இசையுரு வாகிப் பண் பொருந்திய தோத்திரப் பாடலில் வெளிப்பட்டருளும் அம்முதல்வனுக்கு, (அவன்) என் கண்ணினுள்ளே நின்று அருளுதலால், அன்பு செய்கின்றேன் (யான்). எ-று. தன்பால் அன்புடைய அடியார்கள் நினைத்தவுருவில் நினைத்தவிடத்தில் வெளிப்பட்டுத் தோன்றி அருள் செய்தலால் மண்ணகத்தான் ஒக்கும் வானகத்தான் ஒக்கும், விண்ணகத்தான் ஒக்கும் என்றார். தன்னை அன்பினால் தியானிக்கும் சிவஞானிகளுக்கு அறிவுநூல்களின் பொருளாய் அவர்தம் உள்ளத்தே வெளிப்பட்டருளுதலால் வேதகத்தான் ஒக்கும் என்றார். வேதத்து அகத்தான் எனற்பாலது வேதம் என்பதன் அம் கெட்டு வேதகத்தான் என வந்தது. பண் அகத்து இன்னிசை யுருவினனாகிப் பாடலில் உற்றான் எனவிரிக்க. அன்புநெறியாகிய பத்தி நெறியில் நின்று இறைவனைப் பண்ணமைந்த பாடல்களாற் பரவிப் போற்றுவார்க்குப் பத்திமைப் பாடலின் கண்ணே இசை யுருவாகி இறைவன் வெளிப்பட்டருள்புரிவன் என்பது, பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி (6-55-7) பாட்டான நல்ல தொடையாய் போற்றி (6-57-1) பண்ணும் பதமேழும் பலவோசைத் தமிழவையும் உண்ணின்ற தொர்சுவையு முறுதொலி பலவும் .. விண்ணும் முழுதானான் (1-11-4) பாட்டகத் தின்னிசை யாகி நின்றானை (7-62-3) ஏழி சையாய் இசைப் பயனாய் (7-51-10) தமிழின் நீர்மைபேசித் தாளம் வீணைபண்ணி நல்ல முழவ மொந்தை மல்குபாடல் செய்கையிடம் ஓவார் (1-73-8) எனவரும் திருமுறைத் தொடர்களால் இனிது புலனாம். சிந்தனைக்கு எட்டாத சிவபரம் பொருள், தன்னை அன்பினால் நினைந்து போற்றும் அடியார்களின் கண்ணகத்தே தோன்றி அருள் புரிதலை அனுபவத்தில் உணர்ந்து மகிழ்ந்தயான் அங்ஙனம் எளிவந்தருள்புரிந்த இறைவன்பால் ஆராத காதலுடையேன் ஆயினேன் என உலகத்தார்க்கு அறிவுறுத்துவார் கண்ணகத்தே நின்று காதல் செய்தேனே என்றார். நின்று-நிற்றலால். காதல் செய்தல் - இறைவன்பால் அன்புமீதூரப் பெறுதல். கண்ணகத்தே நின்று களிதரு தேனே (திருப்பள்ளி யெழுச்சி - 9) எனப் போற்றுவர் திருவாதவூரடிகள். இத் திருமந்திரத்தை யடியொற்றியமைந்தது, விண்ணகத்தான் மிக்க வேதத்துளான் விரிநீருடுத்த மண்ணகத்தான் திருமாலகத்தான் மருவற்கினிய பண்ணகத்தான் பத்தர் சித்தத்துளான் பழநாயடியேன் கண்ணகத்தான் மனத்தான் சென்னியான்எம் கறைக்கண்டேனே (4-112-6) எனவரும் திருவிருத்தமாகும். 10. அப்பனை நந்தியை ஆரா வமுதினை ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால் அப்பரி சீசன் அருள்பெற லாமே. (36) இறைவனது அருளைப் பெறுதற்கு உபாயம் கூறுகின்றது. (இ-ள்) எவ்வுயிர்க்கும் தந்தையாய் விளங்குபவனும் நந்தி என்னும் திருப்பெயருடையவனும் தெவிட்டாத அமிழ்தம் போன்றவனும் ஒப்பில்லாதவனும் வள்ளலும் ஊழிக்காலத்தும் கேடின்றியுள்ள முதல்வனும் ஆகிய சிவ பெருமானை எந்த முறையினாலாயினும் போற்றித் துதிப் பீராக. அங்ஙனம் துதித்தால் அம்முறையிலேயே எல்லா முடையவனாகிய ஈசனது திருவருளைப்பெற்று இன்புறலாம். எ-று. ஆரா அமுது-தெவிட்டாத அமுதம். ஆர்தல்-நுகர்ந்தது போதும் என மனநிறைவு பெறுதல். ஆராமை-நுகர்ந்தது போதும் என மன நிறைவுபெறாமை; மேன்மேலும் நுகர வேண்டும் என்னும் விருப்பத்தைத் தோற்றுவிக்கும் அமுதம் போல்பவன் என்பார் ஆரா அமுது என்றார். ஒப்பு இலி-ஒப்பார் இல்லாதவன். வள்ளல்-வரையாது வழங்குபவன். ஊழி-உலகம் அழியும் காலம். தாம் தாம் விரும்பிய சமயக் கொள்கையில் நிற்போராய் எந்த உருவிலாயினும், எந்தப் பெயரிலாயினும் எந்த மொழியிலாயினும், எந்த இடத்திலாயினும், எந்த நெறியிலாயினும் எந்தையாகிய இறைவனை மறவாது ஏத்துதல் மக்களது நீங்காக் கடமையென வற்புறுத்துவார், எப்பரிசாயினும் ஏத்துமின் என்றார். பரிசு-தன்மை. எந்நிலையில் நின்றாலும் என் கோலங் கொண்டாலும், மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள் என்றே சாக்கிய நாயனார் இறைவனைப் போற்றியதிறம் இங்கு நினைத்தற்குரியதாம். எப்பரிசாயினும் என்பதற்கு எந்த நோக்கத்தினாலேனும் எனப்பொருள் கொண்டு அச்சத்தினாலோ அன்றி அன்பினாலோ ஈசனை ஏத்துமின் எனப் பொருளுரைத்தலும் பொருந்தும். அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும், நெஞ்சம்வாழி நினைநின்றி யூரைநீ (5-23-9) என்பது அப்பர் அருள்மொழி. அப்பரிசு ஈசன் அருள் பெறலாம்- அவ்வச்சமயவழி நின்று செய்யப்படும் அம்முறையிலேயே ஈசனாகிய இறைவனுடைய திருவருளை உறுதியாகப் பெறலாம். நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீலமணி மிடற்றான் நீர்மையே - மேலுவந்த தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே யாம் (அற்புதத்திருவந்தாதி - 33) எனக் காரைக்காலம்மையாரும், எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக் கொங்கேயு மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ் சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே (2-40-6) என ஆளுடைய பிள்ளையாரும், ஆரொருவர் உள்குருவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும் (6-8-11) என ஆளுடைய அரசரும் எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் (ஆதியுலா) எனச் சேரமான் பெருமாள் நாயனாரும் அருளிய பொரு ளுரைகள், எவ்வகைச் சமய நெறிகளில் நின்றும் இறை வனைத் துதிப்போர்க்கு அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய் நின்ற அம்மையப்பனாகிய சிவபெருமானே எளிவந்து அருள்புரிவன் என்னும் மெய்ம்மை யினை வற்புறுத்தும் முறையில் அமைந்திருத்தல் காணலாம். வேதச் சிறப்பு 11. வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின் ஓதத்தகும் அறம் எல்லாம் உளதர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. (51) இறைவன் அருளிய முதுநூலாகிய வேதத்தின் சிறப்பினை உணர்த்துகின்றது. (இ - ள்) வேதத்தின் தொடர்பினை விட்டு நீங்கிய அறநூல் எதுவும் இல்லை. (உலகத்தார்) ஓதியுணரத்தகும் எல்லா அறங்களும் வேதத்தின் கண்ணே அடங்கியுள்ளன. நல்லறிஞர் யாவரும் (இது ஏற்றுக்கொள்ளத் தக்கது, அது ஏற்றுக்கொள்ளத் தகாதது என இவ்வாறு முரண்படப் பேசும்) தர்க்கவாதத்தை விட்டொழித்துப் பொருள்வளம் நிறைந்த (மெய்ந்நூலாகிய) வேதத்தை ஓதியே வீட்டிற்கு வாயிலாகிய ஞானத்தினைப் பெற்றார்கள் எ - று. வேதம் என்பது இறைவனருளிய பழம் பாடலாகும். விடுதல் - பொருளின் தொடர்பினைவிட்டு வேறாதல். எல்லா அறநூல்களும் உலகியல் ஒழுக்க நூலாகிய வேதத்துடன் நெருங்கிய தொடர்புடையனவே என வற்புறுத்துவார், வேதத்தை விட்ட அறம் இல்லை என்றார். அறம் - அறநூல். ஓதத்தகும் அறம் எல்லாம் வேதத்தின் உள (ஆதலின்) மதிஞர் தர்க்கவாதத்தை விட்டு வளம் உற்ற வேதத்தை ஓதியே வீடுபெற்றார்கள் என்க. மதிஞர் - அறிவிற் சிறந்தோர். தர்க்கவாதம் - இது ஆகும், அது அல்லது எனத் தம்முட் பிணங்கிக் கூறும் உரை. வீடு என்றது வீடு பேற்றிற்கு ஏதுவாகிய ஞானத்தினை. ஆகமச் சிறப்பு 12. பண்டித ராவார் பதினெட்டுப் பா டையுங் கண்டவர் கூறுங் கருத்தறிவார் என்க பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும் அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே (59) உலகில் வழங்கும் எல்லா மொழிகளும் மக்கட்குலத்தார் நல்லறவழியிற் கூடிவாழ்தற்கென இறைவனருளால் தோன்றி வளம்பெற்றனவே என்பது உணர்த்துகின்றது. (இ - ள்) கலைநூற்புலமையுடையார் எனச் சிறப்பாகப் போற்றத்தக்கவர்கள், (பரதகண்டத்து வாழும் மக்கள் பேசும்) பதினெண் மொழிகளையும் கற்றுணர்ந்து அவ்வம் மொழியாளர் கூறும் நல்லறக் கருத்துக்களை உணர்ந்து ஒழுகுபவர்களேயாவர். கலைநூற் புலவர் பயிலும் பதினெண் மொழிகளும் அண்டங்களுக் கெல்லாம் முதல்வனாகிய இறைவன் (உலகத்தார்க்கு) அறத்தினை வகுத்தருளிச் செய்த வழிகளாம் எ - று. பண்டிதர் - புலமைச் செல்வர். பதினெண்மொழிகளாவன வடவேங்கடம் தென்குமரி ஆகிய எல்லைக்குள் வழங்கும் தமிழும், தமிழ் நாட்டைச் சூழவுள்ள பதினேழு நிலப்பகுதிகளில் வழங்கும் பதினேழு மொழிகளும் ஆகும். அம்மொழிகள் வழங்கும் பதினேழ் நிலங்களைக் குறிப்பது, சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந் துளுக்குடகம் கொங்கணங் கன்னடங் கொல்லந் தெலுங்கங் கலிங்கம்வங்கம் கங்க மகதங் கடாரங் கவுடங் கடுங்குசலந் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதினேழ் புவி தாமிவையே. எனவரும் பழம்பாடலாகும். அருமணம், காம்போசம், ஈழம், கூவிளம், பல்லவம், அங்கம் என்பன முதலானவை மேற்குறித்த நாடுகளின் மறுபெயர்களும் அவற்றின் பிரிவுகளுமாக அடங்கும் என்பர். அண்டமுதலான்-அண்டங்கள் அனைத்தையும் படைத்து அளித்து ஒடுக்கவல்ல முதல்வனாகிய இறைவன். ஆறு-வழி. மக்கள் பேசும் மொழிகளில் அவர்கள் எளிதின் உணர்ந்து மேற்கொள்ளத் தக்கவாறு இறைவன் அருளிச்செய்த அருள் நூல்களே ஆகமங்கள் என்பது இத்திருமந்திரத்தாற் புலனாம். ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க என்பது திருவாசகம். 13. சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற நவஆகமம் எங்கள் நந்திபெற் றானே. இறைவன் அருளிய சிவாகமங்கள் உபதேச முறையில் தமக்குக் கிடைத்த வழியினைத் திருமூலநாயனார் இத்திருமந்திரத்தால் உணர்த்துகின்றார். (இ-ள்) சிவமாகிய பரம்பொருளிடமிருந்து சத்தியும் (சத்தியிடமிருந்து) சதாசிவரும் (சதாசிவரிடமிருந்து) உயர்ச்சி யுடைய முதல்வராகிய மகேசரும் (மகேசரிடமிருந்து) உருத்திர தேவரும் (உருத்திர தேவரிடமிருந்து) தவச் சிறப்புடைய திருமாலும் பிரமதேவரும் உருத்திரரும் இம்முறையே தங்களுக்குள்ளே தாம் (உபதேச வாயிலாகப்) பெற்ற ஒன்பது ஆகமங்களையும் எம்முடைய குருநாதராகிய நந்திதேவர் ஒருங்கே பெற்றார். எ-று. சிவமாம் பரம்-சிவமாகிய பரம்பொருள். பரத்தினின்-பரம்பொருளிடமிருந்து; இன்-ஐந்தாம் வேற்றுமை யுருபு. உவமம் ஆம் மகேசர் என்க. உவமம்-உயர்ச்சி. நவ ஆகமம்-ஒன்பது ஆகமங்கள். நவம்-ஒன்பது. 14. பெற்றதல் ஆகமங் காரணங் காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம் துற்றநற் சுப்பிரஞ் சொல்லு மகுடமே. (63) திருமூலர் தம் குருநாதர் பெற்ற ஒன்பது ஆகமங்கள் இவை என்கின்றார். (இ-ள்) எம் குருநாதராகிய நந்திபெருமான் பெற்ற நல்ல ஆகமங்களாவன காரணம், காமிகம், பொருந்திய நல்ல வீரம், உயர்ந்த சிந்தம், வாதுளம், வியாமளம், ஆக்கமுடைய காலோத்தரம், பொருட் செறிவுடைய நல்ல சுப்பிரம், உயர்த்துச் சொல்லப்பெறும் மகுடம் என்னும் இவ்வொன்பதுமாகும். எ-று. இங்குச் சொல்லப்பட்ட ஒன்பது சிவாகமங்களின் பொருள்களை அடியொற்றியே ஒன்பத தந்திரங்களாகத் திருமூலர் வகுத்து அருளிச் செய்துள்ளார் என்பர் பெரியோர். சிவபெருமான் அருளிய ஆகமங்கள் இருபத்தெட்டு என்பதனை, அஞ்சனமேனி அரிவை யோர் பாகத்தன் அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம் (57) எனவரும் திருமந்திரத்தில் திருமூலர் குறித்துள்ளார். இருபத்தெட்டு ஆகமங்களாவன: காமிகம், யோகசம், சிந்தியம், காரணம், அசிதம், தீப்தம், சூக்குமம், சகச்சிரம், அஞ்சுமான், சுப்பிரபேதம், விசயம், நிச்சுவாசம், சுவாயம்புவம், ஆக்கினேயம், வீரம், ரௌரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகவிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேசுரம், கிரணம், வாதுளம் என்பன. இவை சாதசிவ மூர்த்தியின் ஐந்து திருமுகங்களினின்றும் தோன்றிச் சுத்தவித்தியா தத்துவத்திலுள்ள சதாசிவனால் அநந்தருக்கும் அவரால் ஸ்ரீகண்டருக்கும், அவரால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அவர்களால் மனிதருக்கும் மனிதரால் மனிதருக்கும் ஆக உபதேச முறையில் உலகிற் பரவுவன எனவும், முற்குறித்த இருபத்தெட்டு ஆகமங்களுள் முதற் பத்தும் ஒரு மலமுடையராய விஞ்ஞானகலருள் பரமசிவனது அருளைப்பெற்ற பிரணவர் முதலிய பத்துச் சிவன்களுக்கும் அருளிச் செய்யப் பெற்றமையால் சிவபேதம் எனவும், ஏனைய பதினெட்டும் பரமசிவன்பால் உபதேசம்பெற்ற அனாதிருத்திரர் முதலிய பதினெட்டு உருத்திரர்களுக்கும் அருளிச் செய்யப்பெற்றமையால் உருத்திரபேதம் எனவும் கூறுவர். வேதம் ஆகமம் என்னும் இருவகை நூல்களுள் வேதம் உலகர்க்கும் சிவாகமம் திருவருட்பேறுடைய பக்குவர்களுக்கும் ஆக இறைவனால் அருளிச் செய்யப் பெற்றமையால் உலகியல் ஒழுக்க நூலாகிய வேதத்தைப் பொது எனவும் சிவநெறியின் சிறப்புணர்த்தும் சிவாகமத்தைச் சிறப்பு எனவும் கொள்வர் பெரியோர். உலகியல் வேத நூலொழுக்க மென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும் என வரும் சேக்கிழார் வாய்மொழியால் இவ்வுண்மை புலனாம். இனி வைதிகருள் ஒரு சாரார் வேதத்தை மட்டும் பிரமாணமாகக் கொண்டு ஆகமத்தைப் பிரமாணமாகக் கொள்ளாது நெகிழ்ந்து போவர். வேதம் சிவாகமம் என்னும் இருதிற நூல்களையும் அருளிய முதல்வன் ஒருவனே யாதலின் வேதம் சிவாகமம் இரண்டையும் ஒருங்கே பிரமாணமெனக் கொண்டு திருமூலநாயனார் இத் திருமந்திரமாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்துள்ளார். வேதம், சிவாகமம் என்னும் இருதிற நூல்களையும் அருளிச்செய்த முதல்வன் சிவபெருமான் ஒருவனே எனவும், வேதம் முதல் மூன்று வருணத்தார்க்குரியது சிவாகமம் நான்கு வருணத்தார்க்கும் உரியது எனவும், பஞ்சப்பிரமம் பிரணவம் பஞ்சாக்கரம் பிராசாதம் முதலிய மந்திரங்களும், பதிபசுபாசம் முதலிய பொருள் வழக்கமும், திருநீற்றின் உத்தூளனம் திரிபுண்டரம் உருத்திராக்கம் தரித்தல் சிவலிங்க பூசை முதலிய ஒழுகலாறுகளும் வேதம் சிவாகமம் இரண்டினும் ஒப்பக்காண்டலால் அவ்விரண்டும் பிரமாணமேயாம் எனவும் யாம் வேதத்திற்கும் சிவாகமத்திற்கும் வேற்றுமை கண்டிலம் எனவும் நீலகண்ட சிவாசாரியார் கூறும் தெளிவுரை திருமூல நாயனார் அருளிய மெய்யுரையை அடியொற்றி யமைந்துள்ளமை உணர்ந்து போற்றத்தகுவதாகும். 15. மாரியுங் கோடையும் வார்பனி தூங்கநின் றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து ஆரிய முந்தமி ழும்உடனே சொல்லிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. (65) சிவபெருமான் உமையம்மை முதலியோர்க்கு அருளிய ஆகமங்கள் ஆரியம் தமிழ் என்னும் இருமொழிகளிலும் அமைந்துள்ள திறத்தை எடுத்துரைக்கின்றது. (இ-ள்) (வானம் பொழிதற்குரிய) கார்காலத்திலும் கடுவெயிற் காலத்திலும் (உயிர்கட்கு வெம்மை விளைக்கும்) நீண்ட பனித்துளியே சொரிய நிற்றலால் (பயிர்வளர நீர் பாயும்) ஏரியும் மழைநீர் வரவு தடைப்பட்டமையால் (உலகவுயிர்கள் பசியினாலும் பிணியினாலும்) வாட்டமுற்று வருந்தும் அல்லற்காலத்தில் அழகே யுருவாகிய உமையம் மையார்க்கு ஆரிய மொழியிலும் தமிழ் மொழியிலும் (உலகர் நலம்பெறுதற் குரிய இனிய) பொருளுரைகளை உபதேசித்து மன்னுயிர்க்கு அருளை நல்கினான் (சிவபெருமான்). எ-று. மாரி-மழை; இங்கு மழை பொழிதற்குரிய காலத்தைக் குறித்தது. கோடை - கடுவெயிற்காலம். தூங்க சொரிய; தூங்க என்னும் செய வென் எச்சம் காரணப் பொருளில் வந்தது. பனிப் பருவம் உலகிற்கு வெம்மையை விளைப்பது. ஆதலால் பனி குறைய மழை பொழிதல் வேண்டும் எனப் பாவை நோன்பினை மேற்கொண்ட இளமகளிர் உமையம்மையை வழிபட்டுப் போற்றும் வழக்கமுண்மையும் இங்கு நினைக்கத்தக்கதாகும். ஏரி - பயிர் வளர்தற்குரிய பெரு நீரைத் தன்னிடத்தே கொண்ட நீர்நிலை. நிற்றல்-(மழையின்மையால்) நீர் வரத்துத் தடைப்படுதல். இளைத்தல்-பசியால் வாடி வருந்துதல். உயிர்களின் உடற்பசி நீங்க மழை வெள்ளத்தைத் தன்கண் தேக்கிக் கொண்ட ஏரியாகிய நீர் நிலையினைப் போன்று உயிர்ப்பசியினைப் போக்கும் ஞானமாகிய பெரு வெள்ளத்தைத் தங்கண் தேக்கிக் கொண்டு நிற்பன உலக அன்னையின் வாயிலாக உலகம் நலம்பெற ஆரிய மொழியிலும் தமிழ் மொழியிலும் இறைவன் அருளிய சிவாகமங்களாம் என்ற வுண்மையினைத் திருமூலர் இத்திருமந்திரத்தால் தெளிய விளக்கிய திறம் நினைந்து மகிழத்தக்கதாம். திருமூல நாயனார் காலத்தில் ஆரிய மொழியில் மட்டுமன்றிச் செந்தமிழ் மொழியிலும் வழிபாட்டுக்குரிய மந்திரங்கள் ஒப்ப அமைந்திருந்தன என்பது, அந்த நடுவிரல் ஆதிசிறு விரல் வந்த வழிமுறை மாறியுரை செய்யும் செந்தமி ழாதி தெளிந்து வழிபடு நந்தி யிதனை நலமுரைத் தானே (திருமந் - 1089) என வயிரவி மந்திரம் என்ற பகுதியல் வரும் திருப் பாடலால் நன்கு தெளியப்படும். 16. நந்தி யருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே. (67) திருமூலர், தம் குருநாதர்பால் உபதேசம் பெற்ற மாணவர்கள் தம்முடன் சேர்த்து எண்மர் என்பதனைக் இப் பாடலில் எடுத்துரைக்கின்றார். (இ-ள்) நந்தியாகிய சிவகுருவின்பால் உபதேசம் பெற்ற நாதர் என்னும் சிறப்புக்குரிய மாணாக்கர்களைத் தெரிந்து கூறுமிடத்து, சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என நந்திகள் நால்வராவர். சிவயோகமா முனிவரும் தில்லைப் பொன் மன்றிலே (திருக்கூத்தினைக் கண்டு) தொழுத பதஞ்சலி முனிவரும் (புலிக்கால் முனிவராகிய) வியாக்கிரபாதரும் என்று சொல்லப்பட்ட இவர்களுடன் என்னையுஞ் சேர்த்து எண்ண எண்மர் எனவும் சொல்லுதல் பொருந்தும் எ-று. திருமூலநாயனார் இத்திருப்பாடலில் நந்தியருள் பெற்ற மாணவருள் சிவயோக மாமுனி, தில்லையில் திருநடங் கண்டு தொழுத பதஞ்சலி முனிவர், வியாக்கிர பாதர் என்னும் மூவருடன் தம்மையுஞ் சேர்த்து எண்ணுதலால் இவர்கள் நால்வரும் ஒரு காலத்தவர் என்பது நன்கு விளங்கும். தில்லையில் பதஞ்சலிமுனிவரது வேண்டு கோளை நிறைவேற்றுதற் பொருட்டே சிவபெருமான் கூத்தப்பெருமானாகத் திருமேனி கொண்டு தோன்றி என்றும் நிலவும் திருக்கூத்தினை யாடியருள்கின்றார் என்பார் மன்று தொழுத பதஞ்சலி எனச் சிறப்பித்தார். பதஞ்சலிக்கு அருளிய பரமநாடக எனப் போற்றுவர் திருவாதவூரடிகள். 17. நந்தி யருளாலே நாதனாம் பேர்பெற்றோம் நந்தி யருளாலே மூலனை நாடினோம் நந்தி யருளாவ தென்செய்யும் நாட்டினில் நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. (69) சிவயோகியாராகிய சித்தர் இறைவன் அருளால் மூலன் என்னும் பெயருடைய ஆயனுடம்பிற் புகுந்து, தமது பழையவுடம்பு மறைய மூலனுடம்புடனே இருந்த தன்மையினை இத்திருப்பாடலால் குறித்தருள்கின்றார். (இ-ள்) நந்தியாகிய இறைவன் திருவருளால் நாதன் என்னும் சிறப்புப் பெயரினைப் பெற்றோம். நந்தியாகிய சிவனருளாலே (சாத்தனூரில் ஆநிரை மேய்ப்பானாகிய) மூலனது உடம்பினை நாடி அடைந்தோம். நந்தியாகிய முதல்வனால் (மீண்டும்) அருளப்பெறாத (மறைந்த) அப் பழைய உடம்பு நாட்டகத்தே (எனக்கு) என்ன பயனைத் தரவல்லது? (தாராது) எனவே நந்தியாகிய எம்பிரான் நன்னெறியைக்காட்டி அருள்புரிய யான் (மூலன் உடம்பிலேயே) இருந்தேன், எ-று. நாதன் என்னும் பேர், சிவயோக நிலை கைவரப் பெற்றார்க்கு உரிய சிறப்புப் பெயராகும். மூலன்-சாத்தனூரில் பசுக்களை மேய்க்குந் தொழிலினனாகிய ஆயன். மூலனை நாடுதலாவது அவனது உயிர் உடம்பினை விட்டு நீங்கிய நிலையில் அவனால் மேய்க்கப் பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிக் கதறுகின்ற துயரத்தினைக் கண்டு பொறாது இறைவனது அருட் குறிப்புணர்ந்து தம்முடைய பழைய வுடம்பினை வேறோரிடத்திற் பாது காவலாக மறைத்து வைத்துவிட்டு மூலனது உடம்பில் தம்முயிரைப் புகுத்தி அவ்வுடம்புடன்கூடி அப்பசுக்களின் துயரத்தைப் போக்குதல். நந்தி அருளா அது என்றது, இறைவனால் மீண்டும் அருளப்பெறாது மறைக்கப்பட்டு இல்லையாகிய தமது பழைய உடம்பினை. இறைவனது அருளுக்கு உரியதல்லாத அப்பழைய உடம்பு நாட்டிற்கு எத்தகையபயனையும் தாராது என்பார், நந்தி அருளா அது நாட்டின் என் செயும்? என வினவினார். இறைவன் உயிர்கள் உய்திபெறுதற்குரிய நன்னெறியினை உள்நின்று உணர்த்த மூலனுடம்புடன் கூடித் திருவாவடுதுறையிற் படரரசின் கீழ்ச் சிவயோகத்து அமர்த்திருந்தேன் என்பார், நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே என்றார். 18. நந்தி யிணையடி நான்தலை மேற்கொண்டு புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றிசெய் தந்தி மதிபுனை அரனடி நாள்தோறும் சிந்தைசெய் தாகமஞ் செப்ப லுற்றேனே. (73) திருமூலர் இறைவன் திருவருள் வழி நின்று தாம் தமிழாகமம் செய்யத்தொடங்கிய செய்தியினை எடுத்துரைக் கின்றார். (இ-ள்) நந்தியாகிய குருவின் இரண்டு திருவடிகளையும் தலைமேற்கொண்டு அத் திருவடிகளைப் புந்தியின் கண்ணும் புகுந்து நிலைபெறச் செய்து போற்றித் துதித்து அந்திக் காலத்துத் தோன்றும் பிறையினை (ச்சடையில்) அணிந்த சிவபெருமானுடைய திருவடிகளை நாள்தோறும் சிந்தித்து (ச்செந்தமிழ்ச்சிவ) ஆகமமாகிய இத் திருமந்திர மாலையைச் சொல்லத் தொடங்குகின்றேன். எ-று. நந்தி என்றது, சிவனாகிய குருநாதரை. புந்தி-புத்தி. அந்திமதி-மாலைக்காலத்துத் தோன்றும் பிறைமதி. 19. சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற் சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. (79) திருமந்திரமாலையாகிய இத் தமிழாகமம் தோன்றுதற்குத் துணையாயமைந்த சூழல்களை விரித்துரைக்கின்றது. (இ-ள்) (எவ்வுயிர்க்கும் சிவமாகிய மங்கலங்களை அருளுதலால்) சிவமங்கை யென்னும் திருப்பெயருடைய உமா தேவியை ஒருபாகத்திற்கொண்ட சிவபெருமானை உள்ளத்தால் ஒன்றித் தியானித்திருந்தேன். சிவபெருமானுக்குரிய திருஆவடுதுறை என்னுந் தலத்தைச் சேர்ந்து (அதனையே தங்குமிடமாகக் கொண்டு) இருந்தேன். (அத்தலத்தில்) நன்மையாகிய ஞானத்தை வழங்கும் அரசமரத்தின் நீழலிற் பொருந்தியிருந்தேன். (அங்குச்) சிவபெருமானுக்குரிய திருப்பெயர்களையோதிக் கொண்டு சிவயோகத்தில் அமர்ந்திருந்தேன். எ - று. சேர்தல் - இடைவிடாது தியானித்தல். சிவமங்கை பங்கன் - மாதொருபாகனாகிய சிவபெருமான். சிவனுக்குரிய ஆவடுதுறை என்னுந் திருக்கோயிலுள்சிவ போதியின் நீழலிற் சிவன் நாமங்கள் ஓதிச் சிவமங்கை தன்பங்கனைச் சேர்ந்திருந்தேன் என இயையும், போதி - அரசமரம். சிவனது திருவருளின் விளைவாகிய தமிழாகமம் தோன்றுதற்குரிய சார்பாதல்பற்றி அம்மரத்தினைச் சிவ போதி என்றார். 20. பின்னைநின் றென்னே பிறவி பெறுவது முன்னைநன் றாக முயல்தவஞ் செய்கிலர் என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன் றாகத் தமிழ் செய்யுமாறே. (81) முன்னைத் தவத்தின் பயனாக இறைவன் தமக்கு ஞானம் அருளிய திறத்தினைத் திருமூலர் வியந்து போற்றுகின்றார். (இ-ள்) முன்னைப் பிறவிகளிலே நன்றாகிய ஞானம் பெறுதற் பொருட்டு (இறைவனது திருவருளின் துணை கொண்டு) முயன்று தவஞ்செய்ய மாட்டாதார், (மெய்யுணர்வு பெறும் திறத்தில் முயற்சியின்றிப்) பிற்பட்டு நிற்றலால் இப்பிறவியிற் பெறுதற்குரிய பயன் யாதுளது? (ஒன்றுமில்லை). இறைவன் (சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத) தன்னை நன்றாகத் தமிழ் மொழியாற் புலப்படுத்தும் மெய்யுணர்வுடைய வனாம்படி (முன்னைத் தவமுடையனாகிய) எளியேனை (இப்பிறவியில் மனமொழி மெய்களால்) நலமுடையவனாகப் படைத்தருளினான். எ-று முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர் பின்னை நின்று (இப்) பிறவி(யில்) பெறுவது என்னே? இறைவன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்னை நன்றாகப் படைத்தனன் என இயைத்துப் பொருள் கொள்க. முன்னை - முற்பிறவி. பின்னை நிற்றலாவது முன் முயன்று தவம் செய்யாமையால் பயன் பெறுதற்குரிய வாய்ப்பின்றிப் பின்னிற்றல். பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற்கரியன் பெருமானே என்றார் திருவாதவூரடிகளும். முன்னைத் தவமுடைய என்னை என்பார், என்னை என்றார். நன்று ஆக-மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்களாலும் நலம் விளைய. வாக்கு மனங்களுக்கு எட்டாத இறைவன் தன்னைத் தமிழ் மொழியால் உலகத்தார்க்குத் தெளியவுணர்த்தும் மெய்யுணர்வுடையவனாம்படி என்னை மூலனுடம்பிற்புகுத்திப் புதியவனாகப் படைத்தருளினன் என்பார், இறைவன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு என்னை நன்றாகப் படைத்தனன் என்றார். பரம் பொருளின் இயல்பினை உள்ளவாறுணர்த்தும் மெய்யுணர்வின் உருவாகத் திகழ்வது தமிழ்மொழி என்னும் மெய்ம்மையினைத் திருமூலர் இத் திருமந்திரத்தால் புலப் படுத்தியருளிய திறம் உணரத் தகுவதாகும். ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ் நூலறிவாலும் உயிருணர்வாலும் எளிதிற் காணவொண்ணாத கடவுளைப் புனைந்து காட்டும் படிமக்கலம் ஆக விளங்கும் திறத்தை, பூம்படிமக்கலம் பொற்படிமக்கலம் என்றிவற்றால் ஆம்படிமக்கல மாயினும் ஆரூரகத்தமர்ந்தார் தாம்படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ்மாலைகளால் நாம்படிமக்கலஞ் செய்துதொழுதுய் மடநெஞ்சே (4-102-3) எனவரும் திருவிருத்தத்தால் திருநாவுக்கரசர் புலப்படுத்தி யுள்ளமை இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். 21. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்று கைகூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப் பொடுங் கூடிநின் றோதலுமாமே. (86) பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவனை உலகத்தார் அன்பு உறுதியுடன் கூடிப் போற்றுதற்குரிய சாதனமாக அமைந்தது திருமந்திரமாலையாகிய இத் திருமுறை என இதனால் நூற்பயன் உணர்த்துகின்றார் திருமூலர். (இ-ள்) பிறத்தல் இல்லாதவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகிய சிவபெருமானை வானுலகத்தவராகிய தேவர்கள் அன்புரிமைச் சிறப்புடன் சென்று கைகூப்பி வணங்கி எக்காலும் மறத்தல் இல்லாதவராய் நினைத்தற்கும் உறுதியுடன் கூடி நின்று ஓதிப் போற்றுதற்கும் மந்திரமாலையாகிய இத்திருமுறை ஏற்புடையதாகும். எ-று. வானவர், பிறப்பிலிநாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு சென்று கைகூப்பி நெஞ்சினுள் மந்திரமாலையினை மறப்பிலராய் நின்று ஓதலும் ஆம் என இயையும். பிறப்பு இலி-பிறத்தல் இல்லாதவன்; பிறவா யாக்கைப் பெரியோன் எனப் போற்றுவர் இளங்கோவடிகள். பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை, மறப்பிலார் கண்டீர் மையல் தீர்வாரே என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச்செயல். சிறப்பு - அன்பின் மிகுதி, வானவரும் இறைவனை யணுகி மறவாது நினைந்து போற்றுதற்கும் ஓதித் துதித்தற்குஞ் சாதனமாவது மந்திரமாலை யாகிய இந்திருமுறை எனவே மண்ணுலகத்தார் இறைவனை மறவாது போற்றுதற்குச் சிறந்த சாதனமாவதும் இத் திருமந்திரமாலையே என்பது தானே புலனாம். இத்திருப்பாடலால் திருமந்திர மாலை யென்னும் நூற்பெயரும் அதனை ஓதுதலால் வரும் பயனும் ஒருங்கு உணர்த்தியவாறு காண்க. முதல் தந்திரம் சிவஞானம் பெற முயல்வோர் அதற்குத் தகுதியுடை யராகத் தம்மைத் தூய நல்லொழுக்க நெறியில் நிலைக்கச் செய்து கொள்ளுதல் வேண்டும் என வற்புறுத்தி அதற்குரிய சாதனங் களையும் உபதேசிப்பது இதன் முதல் தந்திரமாகும். 223 பாடல்களையுடைய இஃது 24 அதிகாரங்களாகப் பகுக்கப் பெற்றுளது. இதன் முதற்கண் உள்ள 30 பாடல்கள் உபதேசம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. இதனையடுத்து யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை யென்பன உலகியலில் வைத்து அறிவுறுத்தப் பெற்றன. நிலைபெற்ற உயிர் தான் எடுத்துள்ள ஓருடம்பிலேயே நிலைபெற்றிருக்க இயலாத தன்மையினை யுரைப்பது உயிர் நிலையாமையென்ற அதிகாரம். இதனையடுத்துக் கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன்மனை நயவாமை, மகளிர் இழிவு, நல்குரவு ஆகிய அதிகாரங்கள் உள்ளன. இவை திருக்குறளமைப்பினை அடியொற்றி அமைந்தனவாகும். இவற்றின் பின்னுள்ள அக்கினிகாரியம், அந்தண ரொழுக்கம் என்பன வேதப் பொருளை யுளங்கொண்டு கூறியன. அரசாட்சி முறை, வானச்சிறப்பு, தானச்சிறப்பு, அறஞ்செய்வான் திறம், அறஞ்செயான் திறம், அன்புடைமை, கல்வி, கேள்வி, கல்லாமை, நடுவுநிலைமை, கள்ளுண்ணாமை என்பன உலகிய லொழுக்கமாகத் திருவள்ளுவர் கூறியவற்றை உளங்கொண்டு, உலகியலின் உயிர் நிலையாய் நிலவும் மெய்ந் நெறியாகிய சமய வாழ்க்கைக்குப் பொருந்தும் வண்ணம் விரித்துக் கூறுவன. இங்குத் திருமூலர்அறுவுறுத்திய கல்வி, கேள்வி முதலிய பகுதிகள் உலகியலுக்குரிய கல்வி, கேள்வி முதலிய பொது வியல்புகளைக் குறியாமல், இறைவனுடைய பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கற்றலும் கேட்டலும் முதலிய சிறப்பியல்புகளைக் குறிப்பனவாகும். 22. விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்காண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் மேற்கொண்டு உண்ணின் றுருக்கியோ ரொப்பிலா வானந்தக் கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே. (113) அருபரத்து ஒருவன் அவனியிற் குருபரனாகி வந்து தமக்கு உபதேசித்தருளிய திறத்தினை உணர்த்துகின்றார். (இ-ள்) [m©l¤â‰F அப்பாலனாகிய ïiwt‹,] பரமாகாயமாகிய பெருவெளியினின்றும் இறங்கி எளிவந்து (உயிர்களது) வினைப்பக்குவத்திற்கு ஏற்பக் குருவடிவம் கொண்டு, அருளாகிய தண்மை நிலை பெற்ற திருவடியை என் தலையின்மேற் பாதுகாவலாக முன்வைத்து (த்தீக்கை செய்து) எனது உள்ளத்திலும் புகுந்து நெஞ்சினையுருக்கி ஒப்பில்லாத பேரின்பத்தை விளைக்கும் சிவஞானமாகிய கண்ணினைக் காட்டி முன்னின்று காட்சிதந்து செம்பிற் களிம்பு போன்று அநாதியே என்னுயிரைப் பற்றியுள்ள ஆணவ மலத் தொடர்பினை அறுத்து அருள் செய்தான். எ-று. இறைவன் ஆசிரியத் திருமேனிகொண்டு வந்து திருவடி சூட்டினான் என்பார் தலைக்காவல் முன் வைத்து என்றார். அம்முதல்வனே உயிர்க்குயிராய் உள் நின்று உள்ளத்தை யுருக்கினான் என்பார் உள்நின்றுருக்கி என்றார். என்னை இப் பவத்திற் சேராவகையெடுத்து என் சித்தத்தே தன்னை வைத்து அருளினாலே தாளிணை தலைமேற் சூட்டும் ...b மய்கண்டான் என அருணந்தி சிவாசாரியாரும், சிந்தையிலும் என்றன் சென்னியிலும் சேரும் வகை வந்தவனை எனத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனாரும் கூறும் அநுபவ மொழிகள், காண்டற்கரிய கடவுள் குருவின் வடிவில் எழுந்தருளிவந்து அருள் புரியுந் திறத்தைக் குறிப்பனவாகும். களிம்பு என்றது செம்பிற்களிம்பு போன்று உயிரை அநாதியே பற்றியுள்ள ஆணவமலத்தினைக் குறித்தது; உவம ஆகுபெயர். 23. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அநாதி பதியினைச் சென்றணுகாப் பசுபாசம் பதியணுகிற் பசுபாசம் நிலாவே. (115) சைவசித்தாந்தம் கூறும் பதி பசுபாசும் என்னும் முப் பொருளியல்பினை விளக்குகின்றார். (இ-ள்) இறைவன், உயிர், தளை எனச் சொல்லப்படும் முப்பொருள்களுள் பதியாகிய இறைவனைப் போலவே உயிரும் தளையும் தொன்மையுடையனவே. எனினும் பதியாகிய இறைவனை உயிரும் பாசமும் சென்று பற்ற வல்லன அல்ல. பதியாகிய இறைவன் (உயிர்கள்மேல் வைத்த கருணையால்) அணுகு வானாயின் உயிரினிடத்துப் பசுத்துவமும் ஏனைப்பாசமும் நில்லாது நீங்குவனவாம் எ-று. பதி-இறைவன். பசு-உயிர். பாசம் என்பன, உயிரின் அறிவை அநாதியே மறைத்துள்ள ஆணவம் கன்மம் மாயை என்னும் மூவகைப் பிணிப்புக்கள். அநாதி-இன்ன காலத்தில் தோன்றின எனத் தோற்றம் சொல்ல முடியாத காலத்தன. பசு அறிவாகிய குறை யுணர்வினாலும் பாசவறிவினாலும் தொடர வொண்ணாது அப்பாற்பட்டு விளங்குவதே பரம்பொருள் என்பார் பசு பாசம் பதியினைச் சென்று அணுகா என்றார். இத்தொடரின் பொருளையே ஊனக்கண் பாசம் உணராப்பதி என்ற தொடரால் மெய்கண்டார் எடுத்தாண்டுள்ளார். உண்மை விளக்க ஆசிரியராகிய திருவதிகை மனவாசகங் கடந்தார். இத் திருமந்திரப் பொருளைச் சிந்தித்து உணரும் முறையில், வாக்கு மனமிறந்த வான்கருணை யாளனுருத் தாக்கறவே நிற்குந் தனிமுதல்வா நீக்காப் பதியினைப் போல்நித்தம் பசுபாசம் என்றாய் கதியிடத்து மூன்றினையுங் காட்டு (உண்மை - 49) எனத் தம் ஆசிரியரை வினவுகின்றார். மனவாக்குகளுக்கு எட்டாத அருளே வடிவாய் உலகத்திலே தோய்வற்று நிற்கும் ஒப்பற்ற தலைவனே! விட்டு நீங்காமல் இருக்கும் பதிப் பொருளைப் போல் பசுவும் பாசமும் நித்தியப் பொருள்களே என்று அருளிச் செய்தாய். முத்தியிலும் அம்மூன்று பொருள்களும் அழியாமல் நிற்கிற முறைமையை அடியேனுக்கு அருளிச் செய்வாயாக என்பது இதன் பொருளாகும். இதன்கண் வாக்குமனம் இறந்த வான் கருணையாளன், உருத் தாக்கறவே நிற்கும் தனிமுதல்வா என்பது பசுபாசம் பதியினைச் சென்று அணுகா என்ற இத் திருமந்திரத் தொடரையும், பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய் என்பது பதி பசுபாசம் எனப் பகர் மூன்றிற் பதியினைப்போல் பசுபாசம் அநாதி என்ற தொடரையும் அடியொற்றியமைந்த விளக்கமாகும். 24. சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலச் சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியிற் சுடுமாறு போல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே. (117) குருவினாலன்றி ஞானம் பெறுதல் இயலாது என்கின்றார். (இ-ள்) சூரிய காந்தக் கல்லும் அதனைச் சூழ்ந்த பஞ்சும் போல் (உயிர்களின் மலத்தைச் சுட்டெரித்தற் குரிய சிவமும் அதனைப் பற்றாகப் பற்றிய ஆன்மாவும்) பிரிவற்ற இயைபுடை யவாயினும் சூரிய காந்தக்கல் தன்னகத்தேயுள்ள நெருப்பினால் தன்னைச் சூழ்ந்துள்ள பஞ்சினைச் சுட்டெரித்தல் இல்லை. அத்தகைய சூரிய காந்தக்கல் ஞாயிற்றின் முன்னிலையைச் சார்ந்தபொழுது அதனின்று தோன்றும் தீ பஞ்சினைச் சுட்டெரித்தல் போன்று (இறைவன்) குருவாகத் தோன்றிய அந்நிலையில் வெளிப்பட்ட சிவஞானத் தீயால் உயிரைச் சூழ்ந்த மலங்களாகிய பஞ்சுத் தொகுதி சுடப்பட்டழிந்தன. எ - று. இறைவனை உயிர்க்குயிராகத் தன்னுள் கொண்ட பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சூரிய காந்தக் கல்லும், ஆன்மாவைப் பிணித்துள்ள மலங்களுக்குப் பஞ்சும், ஞானாசிரியன் முன்னிலையில் மாணாக்கனது அறிவின் கண்ணே சிவஞானம் வெளிப்பட்டு மலங்களை யழித்தற்குரிய காந்தக்கல் சூரியன் சந்நிதியிற் பொருந்திய நிலையில் அதன்கண் நின்று தீ வெளிப்பட்டுப் பஞ்சினைச் சுட்டெரித்தலும் உவமையாகும். இத்திருமந்திரப் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, சூரியாந்தக் கல்லினிடத்தே செய்ய சுடர்தோன்றி யிடச்சோதி தோன்றுமாபோல் ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றும், தோன்றத் தூரியனாம் சிவன்தோன்றும் தானுந்தோன்றும் தொல்லுலக மெல்லாந்தன்னுள்ளே தோன்றும் நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிராய் எங்கும் நின்றநிலை யெல்லாம் முன் நிகழ்ந்துதோன்றும் (சுபக் - 280) எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். ஆரியன் -ஆசாரியன். 25. சத்தமுதல் ஐந்துந் தன்வழித் தான்சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ சுத்த வெளியிற் சுடரிற் சுடர்சேரும் அத்தம் இதுகுறித் தாண்டுகொள் அப்பிலே. (135) பொறிவாயிலாகச் செல்லும் புலன் ஐந்தனையும் அடக்கி யொழுக வல்லார் இறைவனுக்கு அணுக்கராவர் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) ஓசை முதலாகச் சொல்லப்பட்ட ஐம்புலன்களும் ஆன்மாவாகிய தன் அறிவின்வழி அடங்கி நிற்குமாயின் அறிவுப் பொருளாகிய ஆன்மாவுக்குச் சித்துப் பொருளாகிய சிவத்தை யன்றிச் சார்தற்குரிய பற்றுக்கோடு பிறிதொன்றுளதோ? தூய பெருவெளியில் உள்ள பேரொளியில் ஏனைய சுடர்களும் ஒன்றியடங்கித் தோன்றும். (அது போல அறிவுப் பொருளாகிய ஆன்மாவும் இறைவனுடைய பேருணர்வெல்லையில் தன்னுணர்வு அடங்கி ஒற்றித்து நிற்கப் பெறும். ) இங்குக் கூறிய பொருளாகிய இதனை (த் தான்சார்ந்த நிலத்தியல்பதாகும்) நீரிலே வைத்துத் தெளியவுணர்ந்து குறிக்கொண்டு (மேற்குறித்த சத்த முதலிய ஐம்புலன்களையும்) அறிவினால் அடக்கியாண்டு பயன் கொள் வாயாக. எ-று. சத்தம் முதல் ஐந்து என்றது, செவி முதலிய ஐம்பொறி வாயிலாக நிகழும் ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் என்னும் ஐம்புல வுணர்வுகளை. இவற்றைப் பொறிவாயில் ஐந்து (5) என்பர் திருவள்ளுவர். இங்குக் கூறப்படும் சத்த முதல் ஐந்து என்பன செவி முதலிய ஞானேந்திரியங்களான் அறியப்படும் விடயவுணர்வுகளாம். இந்திரியங்களுக்கு வன்மையை விளைப் பனவாய் ஐம்பெரும் பூதங்களுக்குக்காரணமான சுவையொளி யூறோசை நாற்றம் என்று கூறப்படும் தன்மாத்திரைகள் வேறு, விடயங்களாக இங்குச் சொல்லப்பட்ட சத்த முதலியன வேறு என்பதனைச் சிவஞான முனிவர் பேருரையில் விளக்கியுள்ளார். உலகப் பொருள்களிற் செல்லும் சத்தம் முதலிய ஐம்புலன்களையும் அடக்கி அறிவினால் அவற்றை விட்டு நீங்கிய நிலையில் சடப்பொருளாகிய உலகத்தோடு ஆன்மாவுக்கு உள்ள தொடர்பு அறுபட்டமையால் அந்நிலையிற் சித்துப் பொருளாகிய இறைவனே அவ்வுயிர்க்கு ஆதாரமாய் நின்று அவ்வுயிரைத் தாங்கிக் கொள்வன் என்பார் சத்தம் முதல் ஐந்தும் தன்வழித் தான் சாரில் சித்துக்குச் சித்தன்றிச் சேர்விடம் வேறுண்டோ என்றார். தன் என்றது ஆன்மாவை. தான் - அசை. தன்வழிச் சேர்தலாவது உயிரறிவிற்கு அடங்கித் தம் செயலறுதல். சித்து-அறிவுடைப்பொருள்; முன்னது உயிர், பின்னது இறைவன். ஒருவர் ஏறியிருந்து ஆடுதற்கு ஆதாரமான ஊசலின் கயிறு அறுந்தால் அவர்க்கு உற்றுழியுதவும் தாய்போல் நின்று தாங்கிக் கொள்வது எல்லாவற்றுக்கும் ஆதாரமாகிய நிலமேயன்றிப் பிறிதில்லை. அது போல இவ்வான்மா தன்னைச் சடமாகிய ஐம்புலன்களின் வேறாக அறிந்து அவற்றின் வழியொழுகாது அவற்றை நீங்கி யொழுகவே தமது முதல்வனாகிய இறைவனது திருவடியை யணையும் என்பார், இனி, இவ்வான்மா தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றது. ஊசல் கயிறற்றால் தாய்தரையே யாந்துணையான் என விளக்குவர் மெய்கண்டதேவர். பாதத்து அறுகயிறூசலானேன் எனவரும் அப்பர் அருள்மொழியும் இங்கு நினைக்கத் தகுவதாகும். அண்டப்பரப்பிலுள்ள ஞாயிற்றின் வியாபகத்தில் ஏனைய சுடரொளிகள் அடங்கி யொற்றித்து நிற்றல்போல, இறைவனுடைய வியாபகத்தில் ஆன்மாவினறிவு அடங்கி நிற்கும் என உவமை கூறி விளக்குவார் சுத்தவெளியில் சுடரில் சுடர் சேரும் என்றார். உன்னுருவிற் சுவை யொளியூறோசை நாற்றத் துறுப்பினது குறிப்பாகு மைவீர்நுங்கள் மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க்கையோ வையைகமே போதாதே யானேல் வானோர் பொன்னுருவைத் தென்னாரூர் மன்னுகுன்றைப் புவிக் கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென்சிந்தைத் தன்னுருவைத்தந்தவனை யெந்தை தன்னைத் தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன்மின்னே. (6-27-4) எனவரும் திருத்தாண்டகம் இங்குச் சிந்தித்தற்குரியதாகும். அத்தம்-பொருள்; அப்பில்-நிலத்தியல்பால் திரியும் தண்ணீரைப் போன்று. அப்பு-நீர். சார்ந்ததன் வண்ணமாந் தன்மையுடைய ஆன்மா என்னும் குறிப்பினது. குறித்து - குறிக்கொண்டு. ஆண்டுகொள் - ஐம்புலன்களையும் அறிவின் வழி அடக்கி ஆண்டு பயன்கொள்க. 26. அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற் றுருச்செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகு மாறுபோற் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே. (136) ஆன்மா மலம் நசித்து இறைவனைச் சேர்ந்து ஒன்றுபடுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) (கடலிடத்தேயுள்ள) நீரின் மிகுந்த உவர்ப்பானது கதிரவனது வெப்பத்தால் உப்பு எனப் பேர்பெற்று உருக்கொண்ட அது மீண்டும் நீரிற் கலந்தபோது நீரே யாகுமாறு போல முடிவாகச் சொல்லுமிடத்து ஆன்மா சிவத்துள் அடங்கும் எ-று. அப்பு-நீர். கூர்மை-கடல் நீரில் உள்ள கரிப்பு. நீரிடத்தேயுள்ள கரிப்புத்தன்மை கதிரவன் வெப்பத்தால் வேறு பிரிக்கப்பட்டு உப்பு என உருக்கொண்ட அது, மீண்டும் தண்ணீரோடு கூடியவழி அதனுடன் பிரிவின்றி யடங்குமாறு போலப் பெத்தகாலத்து இறைவனது வியாபகத்துள் பொதுவாக அடங்கிக்கிடந்த ஆன்மா, முத்திக் காலத்துச் சிறப்பு முறையில் அடங்கியொன்றாம் என்பதாம். அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற்று உருச் செய்த என்பது, இறைவனருளால் உயிர் கருவி கரணங்களைப் பெற்ற பெத்தநிலையையும், அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாதல் என்பது முத்திநிலையையும் குறித்தற்கெழுந்த உவமைகளாகும். பூரண அறிவு விளங்கி ஆன்மா இறைவன் வசமாய் ஒன்றுபட்டுக் கூடுங்கால் பண்டை ஏகதேச அறிவுகெட்டுக் கூடுமோ? கெடாது கூடுமோ? என ஐயுறுதல் இயல்பே. ஏகதேச அறிவுகெட்டுக் கூடுமெனின் அறிவாகிய குணங் கெடவே ஆன்மாவாகிய குணயும் கெடும் எனப்பட்டு இரு பொருள் ஒன்றாய்க் கூடிய தொன்றல் இயலாது. ஏகதேச அறிவு கெடாத வழி வியாபகப் பொருள் விளங்குதலின்மையால் அவ்விரண்டும் ஒன்றாகக் கூடுமாறில்லை. மற்று எவ்வாறுகூடும் எனின், ஏகதேசவறிவைச் செய்யும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் மட்டும் கெட்டொழிய, ஆன்மா தண்ணீரைச் சேர்ந்த உப்புப்போல இறைவன் திருவடியைத் தலைப்பட்டு இறைவனுக்கு அடிமையாம். இறைவன் திருவடி உயிரை விட்டு வேறாதலின்றி இயைந்து நிற்கும் என்பது, நசித்தொன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா நசித்திலதேல் ஒன்றாவதில்லை-நசித்து மலம் அப்பணைந்த உப்பின் உளமணைந்து சேடமாம் கப்பின்றாம் ஈசன் கழல் (சிவ - 11. அதி - 2) எனவரும் உதாரண வெண்பாவாற் புலனாம். தன் கண்ணதாகிய கடின குணம் நீங்கி அப்பினைச் சேர்ந்து ஒன்றாகிய உப்பு, ஆன்மா மலம் நேசித்து முதல்வனைச் சேர்ந்து ஒன்றுபடுதல்மாத்திரைக்கு உவமையாயிற்று. மலம் நசித்தலாவது தனது மறைத்தற் சத்தி மடங்கிக் கீழ்ப்படுதல் மாத்திரையே பிறிதன்று என்பது, பொன்வாள்முன் கொண்மூவிற் புக்கொடுங்கிப் போயகலத் தன்வாளே யெங்குமாந் தன்மையால் என்னும் உவமையாற் புலனாம். இருபொருள் ஒன்றாய்க் கலந்து ஒன்றினுள்ஒன்று அடங்கி இரண்டுங் கெடாது ஒன்றாய்த் தோன்றுதற்கு அப்பணைந்த உப்பு உவமை. பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களும் வியாபக வியாப்பியங்களாய் நிற்குமாற்றிற்குத் தண்கடல் நீருப்புப் போல் என உவமை கூறுவர் மெய்கண்டார். உப்பு நீரொடு விரவுதலன்றிக் கடலொடு விரவாமை போலப் பாசமும் பசுவைச் சார்தலன்றிப் பதியைச் சாராமை இவ்வுவமையாற் புலனாம். 27. திருவடியே சிவமாவது தேரில் திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில் திருவடியே செல்கதியது செப்பில் திருவடியே தஞ்சம் உள்தெளிவார்க்கே (138) இறைவன் திருவடியே ஆன்மாக்களுக்கு எல்லாமாய்ப் பயன் விளைக்கும் என்கின்றது. (இ-ள்) ஓர்த்துணருங்கால் இறைவன் திருவடியே சிவமாகிய மெய்ப் பொருளாகும். உள்ளத்திற் சிந்திக்குங்கால் ஈசனுலகாவதும் திருவடியே. பொருள்சேர் புகழ்த்திறத்தினைச் செப்புங்கால் சென்றடைதற்குரிய சிவகதியாவதும் திருவடியே. உள்ளத்தே தெளிந்துணர வல்லார்க்குப் புகலிடமாவதும் திருவடியே எ-று. திருவடியென்றது இறைவனது இன்னருளாகிய சத்தியை. தேர்தல் _ ஓர்ந்து உள்ளவாறு நோக்கி ஆராய்தல். ஓர்த்துள்ள வாறுணர்வார்க்குப் பிறப்பொழியச் செம்பொருளாம் சிவம் வெளிப்படுமென்பார், தேரில் திரு வடியே சிவமாவது என்றார். சிந்தித்தல் - அப்பொருளைப் பலருடன் கற்றுப்பயிலல். கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் மற்றீண்டுவாரா நெறியாகிய சிவலோகத்தைத் தலைப்படுபவர் என்பார், சிந்திக்கில் திருவடியே சிவலோகம் என்றார். இறைவனது பொருள்சேர் புகழ்த்திறங்களைச் செப்பினார் இருள்சேர் இருவினையும் நீங்கித் தெருள்பெற்று நன்னெறியினை அடைந்துய்வர் என்பார், செப்பில் திரு வடியே செல்கதியது என்றார். திருவடியினையே சிந்தையில் இடைவிடாது தியானித்துத் தெளிந்துணர்தலாகிய நிட்டைகூட வல்லாரைத் திருவடியே புகலிடமாய் அமைந்து ஏற்றுகொள்ளும் என்பார், உள்தெளிவார்க்குத் திருவடியே தஞ்சம் என்றார். தஞ்சம் - புகலிடம்; பற்றுக்கோடு இறைவன் திருவடிகளைக் கற்றலும் கேட்டலும் சிந்தித்தலும் தெளிதலும் செய்வார் பெறும் பயன் இதனால் உணர்த்தப்பெற்றமை காணலாம். 28. தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே. (139) குருமுகமாகப் பெறுவனவே உண்மை ஞானங்களாம் என்பதுணர்த்துகின்றது. (இ-ள்) குருவின் திருமேனியைச் சிவனுருவெனக் காணுதலே ஞானத்திற் சரியையாம். குருவின் திருப்பெயரை இறைவன் திருப்பெயராகச் சொல்லித் துதித்து வழிபடுதலே ஞானத்திற் கிரியையாம். குருவின் அருளுபதேசத்தினை இறைவன் வாய்மொழியென நம்பிக் கேட்டு அதன் வழி ஒன்றுபட்டொழுகலே ஞானத்தில் யோக மாகும். குருவே சிவனெனத் தியானித்து நிட்டைகூடலே ஞானத்தில் ஞானமாம் எ - று. காண்டல் முதலிய நான்கனுள் காண்டல் ஞானத்திற் சரியை. திருநாமம் செப்பல் ஞானத்திற் கிரியை. திரு வார்த்தை கேட்டல் ஞானத்தில் யோகம். குருவுருச் சிந்தித்தல் ஞானத்தில் ஞானம் எனக் கொள்ளுதல் பொருந்தும். 29. போதந் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப் போதந் தனில் வைத்துப் புண்ணிய ராயினார் நாதன் நடத்தால் நயனம் களிகூர வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே. (142) சிவகுருவின் அருளுரையினைக் கடைப்பிடித்தொழுகு வோர் எய்தும் பயன் உணர்த்துகின்றது. (இ-ள்) சிவஞானத்தை வழங்கிய எங்கள் தவப்பயனாகிய இறைவனைத் தமது உயிருணர்வில் வைத்துப் போற்றிச் சிவபுண்ணியரான பெரியோர்கள் இறைவனது அருட்கூத்துத் தரிசனத்தால் கண்கள் களிகூரப் பெற்று மறைகள் போற்ற வீட்டுலகினை அடைந்து இன்புறுவார்கள் எ-று. போதம் இரண்டனுள் முன்னது மெய்யுணர்வு; சிவஞானம். பின்னது உயிருணர்வு; ஆன்மபோதம். புண்ணியம் என்றது சரியை கிரியை யோகம் என்னும் தவத்தின் பயனாகிய பதமுத்திகளை. போதந்தனில் வைத்தலாவது அம்முதல்வன் உடம்பின்கண் உயிர் போன்று ஆன்மாவே திருமேனியாகக் கலந்து நிற்கும் வண்ணம் தம்முனைப்பின்றி இறைபணியினராய் உயிராவணஞ்செய்து ஒட்டி வாழ்தல். இங்ஙனம் ஏகனாகி இறைபணி நின்றோர், மாற்ற மனங்கழிய நின்ற இறைவன் மேலான திருவைந் தெழுத்தாலும் கருணையினாலும் திருமேனி கொண்டு பராசத்தியாகிய திருவம்பலத்தை இடமாகக் கொண்டு ஒரு பாகத்தே விளங்கும் மலைமகளார் காண ஆடியருளும் ஆனந்தக் கூத்தினைக் கண்கள் களிகூரக் கண்டு வேதங்கள் தொழுதேத்த ஞானாகாசமாகிய பெருவெளியையடைந்து இன்புற்றனர் என்பதாம். 30. மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென்றிருந்தது தீயினைச் சேர்ந்தது விண்ணின்று நீர்வீழின் மீண்டு மண்ணானாற் போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே. (143) குருவின் உபதேசத்தால் வீடு பயக்கும் உணர்வாகிய ஞானம் பெறும் ஆன்மா, நில்லாதவற்றின் இயல்பினை யுணர்ந்தன்றி அவற்றிலுள்ள பற்று நீங்கி நிலையுடைய பொருளை நாடுதல் இயலாதாதலின் யாக்கை, செல்வம், இளமை, உயிர் என்பவற்றின் நிலையாமையையுணர்த்துகின்றார். இப்பாடல் யாக்கை நிலையாமை உணர்த்துகின்றது. (இ-ள்) [ghid, சட்டி, மடக்கு முதலிய பல்வேறு fy§fS¡F«] முதற் காரணமாயுள்ளது மண் ஒன்றே யென்றுணர் வீர். அம்மண்ணாலாகிய கலம் (சுடப்படாத பச்சை மட்கலமும் சுடப்பட்ட மட்கலமும்) என இருவகைப்படும். அவற்றுள் தீயினைச் சேர்ந்து சுடப்பட்ட மட்கலம் (நீராற்கரைதலின்றி) உறுதியான தன்மையைப் பெற்றது. (அங்ஙனம் சுடப்படாத வெயிலிற் காயவைக்கப்பட்ட பச்சை மட்பாண்டம்) வானிடத் தினின்று மழைத்துளி வீழ்ந்தால் மீண்டும் மண்ணாகக் கரைந்து உருச்சிதைந் தொழியும். (அதுபோன்று நாம் பெற்றுள்ள மாயாகாரியமாகிய யாக்கையும் இறைவனது அருட்பெருந்தீயினாற் சுடப்படின் அழியாததிண்மையைப் பெறுதலும் அவ்வாறு சுடப்படாத நிலையில் உலகப்பற்றாகிய மழைத்துளிபட உருச்சிதைந்து அழிதலும் ஆகிய இருவகை நிலையினைப் பெறுவதாகும்). இக்கருத்துடன் திருவருளைச் சிந்தித்து நிலையுடைய வாழ்வினைப் பெறுதலின்றி இவ்வுலக மாந்தரிற் பெரும்பாலோர் வறிதே இறந்தொழிகின்றார்கள் எ-று. உலகில் வாழும் எவ்வகைப்பட்ட உயிர்களின் உடம்பு கட்கும் முதற்காரணமாயமைந்தது மாயையென்னும் மண் ஒன்றே என்பார், மண் ஒன்று கண்டீர் என்றார். மன்னுயிர்களின் யாக்கையனைத்திற்கும் மாயை ஒன்றே காரணமாயினும் அதன் விளைவாகிய யாக்கை இறைவனருளாகிய தீயாற் சுடப்படின் எளிதிற் சிதையாத திண்மையுடையதாதலும் அதன் சார்பின்றிப் புலனுணர்வாகிய மழைத்துளிபடின் எளிதிற் உருச்சிதையும் தன்மையதாதலும் என இருவகை நிலையினதென்பார், மண் ஒன்றாயினும் இருவகைப் பாத்திரம் என்றார். அவற்றுள் தீயின் தொழிலாகிய சுடுதலைப் பெற்ற மண்மலம் புனல்படச் சிதையாத திண்மையைப் பெற்றது என்பார், தீயினைச் சேர்ந்தது திண்ணென்றிருந்தது என்றார். திண்ணெனல் _ புனலாற் கரைந்து சிதையாத திண்ணியதாதல். தீயினாற் சுடப்படாத ஏனைப் பசுமட்கலம் மழைத் துளி பட்டாற் கரைந்து சிதைதல் போலத் திருவருளாகிய தீயினாற் பக்குவப்படாத அருளிலார் யாக்கை சிதைந் தொழியும் என்பார் விண்ணின்று நீர்வீழின் மீண்டும் மண்ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற தாறே என்றார். தீயினைச் சேர்ந்தது - நெருப்பினாற் சுடப்பட்டது. தீயினைச் சேர்ந்தது திண்ணென்றிருந்தது. எனவே இறந் தொழிவது தீயினைச் சேராதது என்பது பெறப்படும். யாக்கையின் நிலையாமையுணர்த்துவார் அதனை நிலையுடையதாக்குதற்குரிய சாதனமும் உடன் கூறியவாறு. இருவகைப்பாத்திரம் என்பதற்கும் ஆணும் பெண்ணுமாகிய இருவகையான உடல் எனவும், தூலசூக்குமமாகிய இருவகைச் சரீரங்கள் எனவும் பச்சை மட்குடம் மழை நீரில் கரைந்து போவதுபோல் தூல உடம்பு தீயினில் அழிந்துபோகும் எனவும் விளக்கம் கூறுதலும் உண்டு. பாத்திரத்திற்குக் காரணமாகிய மண் ஒன்றேயாயினும் அதனானியன்ற பாத்திரத்தைச் சுடுமட்கலம் எனவும் பசு மட்கலம் எனவும் இருவகையாகப் பகுத்துரைத்தலுண் டென்பதும் அவற்றுட் பசுமட்கலம் நீர்பட்டால் எளிதிற் சிதையுமென்பதும் பசுமட்கலத்துள் நீர் பெய்திரீஇயற்று எனவரும் திருக்குறளாற் புலனாம். சுடப்படாத பசுமட் பாண்டமானது மழைத்துளிபட்ட அளவே கரைந்து சிதையும். அத்தகைய பசுமட்கலம் தீயின்கண் ஆழ்ந்து கிடந்து சூளையிற் சுடப்பட்ட பின் எத்தனை ஆண்டுகள் தண்ணீருட் கிடந்தாலும் உருச் சிதையாது. அதுபோன்று உலகபோகமாகிய பசுமைத் தன்மைத்தாகிய மாந்தரது உரனில்லாத நெஞ்சம் மழைத் துளிபோலும் சிறிய துன்பங்கள் வந்த அளவிலேயே நிலை கலங்கி யழியுமியல்பினதாயினும் இறைவனது திருவருளாகிய பெருந் தீயில் ஒடுங்கி யாழ்ந்திருந்தமையால் திண்ணெண்னும் தன்மையினதாய் எத்தகைய இடர்கள் அடுக்கிவரினும் நிலைகலங்காத் தன்மையடையும்படி இடை மருதீசன் ஆட்கொண்டருளிய திறத்தை விரித்துரைப்பது, எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பில் இன்றுளி பட நனைந்துருகி அழலையாழ்பு உருவம் புனலொடுங் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவித் தொழிலையாழ் நெஞ்சம் இடர்படாவண்ணம் தூங்கிருள் நடுநல் யாமத்தோர் மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன் மருவிடந் திருவிடை மருதே. எனவரும் கருவூர்த்தேவர் திருவிசைப்பாவாகும். எளிதில் அழிந்தொழியும் இயல்பினது நிலையிலாத யாக்கை. இறைவனை இடைவிடாது நினைந்து போற்று அம்முதல்வன் அவ்வுடம்பினை இடமாகக் கொண்டமையான் வினைப்பயனாய் வந்த இழிந்த யாக்கையும் இறைவன் உவந்தெழுந்தருளியிருத்தற்கேற்ற உயர்ந்த நிலையுடைய விமானமாக விளங்கியதென்பதனை, புனல்பட வுருகி மண்தழல் வெதும்பிப் பூம்புனல் பொதிந்துயி ரளிக்கும் வினைபடு நிறைபோல் நிறைந்த வேதகத்தென் மனநெக நெகிழ்ந்தபே ரொளியே முனைபடு மதில்மூன் றெரித்த நாயகனே முகத்தலை யகத்தமர்ந் தடியேன் வினைபடும் உடல் நீபுகுந்து நின்றமையால் விழுமிய விமான மாயினதே. எனக் கருவூர்த் தேவர் அருளிச் செய்கின்றார். 31. பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி யவருடன் வழி நடவாதே. (144) நிலைபெற்ற யாக் கையின்கண் வாழும் மாந்தர் தாம் மேற் கொள்ளும் விரத ஞானங்களாலல்லது உற்றார் உறவினரால் நிலைபேறெய்துதல் இயலாது என்கின்றது. (இ-ள்) வினைப் போகங்களாகிய பண்டங்களைப் பெய்து வைத்த சிறு குடிலாகிய உடம்பு நெடுநாட்களாகப் பயன்படுத் தப்பட்டுப் பழையதாய்ச் சிதைந்து வீழ்ந்த போது அக்குடிசையைச் சார்பாக வைத்து உண்டு வாழ்ந்த மனைவியும் மக்களும் அதன்கண் வாழ்ந்த உயிரோடு உடன்செல்லமாட்டார்கள். மாந்தர் மேற்கொண்டு நிகழ்த்திய விரதமும் ஞானமும் அன்றி வேறு அவரால் ஈட்டப்பட்ட எவ்வகைப் பொருள்களும் அவருடன் வழித்துணையாகச் செல்லுதல் இல்லை எ-று. பண்டம் பல பிறவிகளில் ஈட்டப்பட்டு அவ்வுடலில் நுகர்தற்கென முகந்து கொள்ளப்பட்ட பிராரத்த வினைகளாகிய சரக்கு. கூரை-ஒலையினால் வேயப்பெற்ற எளிய குடிசை. கல்லால் கட்டப்பட்ட வீடுகளைப்போன்று பல ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும் வன்மையின்றிச் சில்லாண்டிற் சிதையும் இயல்பினது என்பார், மனை என்னாது கூரை என்றார். பழகுதல்-பல நாள் புழங்கப்பட்டு வெளியே பனி மழை வெயிலாலும் கரையான் முதலியவற்றாலும் சிதைவுறுதல். விழுதல்-முற்றிலும் அழிந்துபோதல். உண்பிப்பார் போன்று தோன்றி இதனாற் பயன் நுகர்ந்தவர் என்பது புலப்படுத்துவார் உண்ட அப்பெண்டிரும் மக்களும் என்றார். கொண்ட-வழித்துணையாகக் கொள்ளப்பட்ட. விரதம்-இன்ன அறத்தைச் செய்வேன் எனவும் இன்ன பாவத்தை ஒழிவேன் எனவும் தத்தம் ஆற்றலுக்கேற்ப வரையறுத்துக் கொள்ளும் ஒழுக்கமாகிய நியமம். அவையாவன அருளுடைமை, புலால் மறுத்தல், தவம், கூடா வொழுக்கந் தவிர்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை முதலியன. ஞானமாவது வீடு பயக்கும் உணர்வு. அது திருக்குறளில் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என்னும் நான்கதிகாரங்களில் வைத்து உணர்த்தப்பெறும். இவற்றையே சார்புணர்ந்து சார்புகெட ஒழுகல் என்பார். மண்டுதல்-முற்பட்டு விரைந்து நெருங்குதல். வழி நடத்தல்-வழித் துணையாக உடன்சென்று தளர்வகற்றித் தாங்கிக் கொள்ளுதல். நடவாது, ஒருமை பன்மை மயக்கம். 32. ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே. (145) யாக்கை நிலையாமை உணர்த்தும் வாயிலாக உற்றார் சுற்றத்தார் முதலியோரது அன்பின் நிலையாமையும் உடன் உணர்த்துகின்றது. (இ-ள்) (பண்டம் பெய் கூரையாகிய உடல் வீழ்ந்த பின்னர் அதனை அடக்கஞ் செய்தற்கென) ஊர் மக்களெல்லொரும் ஒன்றுகூடிப் பேரிரைச்சலிட்டு அழுதுதீர்த்து முன் அவ்வுடம்பிற் குரிய இயற்பேரினை நீக்கிப் பிணம் என்ற பெயரைக் கொடுத்துச் சூரை என்னும் முட்செடி வளர்ந்த சுடுகாட்டிற் கொண்டு சென்று தீ மூட்டிப் பின்பு நீரினில் மூழ்கி (அவ்வுடம்பினோடு ஒருவர் வாழ்ந்தார் என்னும்) எண்ணத்தையும் (விரைவில் விட்டொழித்துத் தத்தமக் குரிய அலுவல்களிலகப்பட்டு) மறந்தார்கள். ஊர்-இடவாகு பெயர். ஒலிக்க அழுதல்-தமது பிரி வாற்றாமை பலர்க்கும் புலப்படப் புலம்புதல். பேர்-பெற்றோர்கள் விருப்பத்துடன் வைத்த பெயர். சிறப்புடைய அப் பெயரை நீக்கி இழிவுடைய பிணம் என்ற பெயரை அவ்வுடம்புக்கு இடுவர் என்பார், பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு என்றார். சூரை-ஒரு வகை முட்செடி. நீரினில் மூழ்குதல் - பிணத்தினை நெருங்கிய வாலாமை (உடல் மாசும் உள்ளத்தின் மாசும்) நீங்கக் குளித்தல். நினைப்பு ஒழிதல்-இருந்தார் என்ற எண்ணமும் அறவே நீங்க மறந்தொழிதல். 33. அடப்பண்ணி வைத்தார் அடிசிலை யுண்டார் மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார் இடப்பக்கமே யிறைநொந்தது வென்றார் கிடக்கப் படுத்தா கிடந்தொழிந்தாரே. (148) உலகில் யாக்கை நிலையாமையே மிகவும் நிலைபெற்றதென உணர்த்துகின்றது. (இ-ள்) தமக்கு விருப்பமான உணவினைச் சமைக்கச் செய்து வைத்தார். அத்தகைய உணவினை ஆரவுண்டார். இளமை பொருந்திய மனைவியாருடன் அன்பினால் அளவளாவினார். (மார்பின்) இடதுபக்கத்திலே சிறிது வலிக்கின்றது என்று சொன்னார். கீழே நீட்டிப் படுத்தார். படுத்தவர் மீள எழுந்திராது கிடந்தவாறே உயிர் நீங்கி யொழிந்தார். எ-று. அடுதல்-சமைத்தல். அடிசில்-உணவு. மடக்கொடியார்-இளமை பொருந்திய மனைவியார். மந்தணங் கொள்ளல்-தனிமையிலிருந்து அளவளாவி மகிழ்தல். இடப்பக்கம் நெஞ்சின் இடம். இறை-சிறிது. கிடக்கப்படுத்தல்- மீள எழும் நிலையின்றிப் படுத்த படுக்கையிலே கிடக்குமாறு நோயில் விழுதல். கிடந் தொழிதல்-அவ்வாறு படுத்த படுக்கையிலேயே உயிர் விடுதல். நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் நிலை யாமையை விடச் சிறிது நேரத்திற்கு முன் நல்ல நிலையிலிருந்து உணவருந்தி உரையாடி மகிழ்ந்தார், இப்பொழுது தான் படுத்தார், அதிர்ச்சி யெதுவுமின்றி இன்னுயிர் பிரிந்தது என்னும் இந்நிகழ்ச்சியில் நிலையாமையின் ஆற்றல் நன்கு புலனாதல் காணலாம். 34. வளத்திடை முற்றத்தோர் மாநில முற்றுங் குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான் குடமுடைந் தாலவை யோடென்று வைப்பர் உடலுடைந்தால் இறைப்போதும் வையாரே. யாக்கையின் நிலையாமை யுணர்த்துவார் அதன் தூய்மை யின்மையையும் உடனுணர்த்துகின்றார். (இ ள்) படைத்தற் கடவுளாகிய குயவன் வளப்பமான இடையாகிய முற்றத்திலுள்ள கருப்பையாகிய குளத்தின் மண்ணைக் கொண்டு இவ்வுலக மக்கள் யாக்கையாகிய கலங்களைச் செய்தான். (வேட்கோவன் செய்த) மண்குடம் உடைந்தால் அதன் உடைந்த பகுதியினைப் பயன் கொள்ளும் ஓடு எனக்கொண்டு அதனை எறிந்து விடாமல் வீட்டிற் பாதுகாப்பில் வைப்பர் உலகத்தார். உடலாகிய குடம் உடைந்தால் அதனைச் சிறிது நேரம் கூட வைத்திருக்க விரும்பமாட்டார்கள் எ-று. இடைமுற்றம் _ இடையாகிய நிலத்தின் முற்றம். குளம் என்றது மாதாவுதரத்திலமைந்த கருப்பையினை. குயவன் என்றது படைத்தற்கடவுளாகிய பிரமனை. மாநிலம் என்றது நிலத்திலுள்ள உடம்புகளை. குடம் _ மட்குடம். ஓடு _ குடத்தின் உடைந்த பகுதி. அதுவும் நெருப்பு முதலியவற்றை எடுத்தற்குப் பயன்படுதல் கருதி அதனை வீட்டிற் சேமித்து வைத்தல் இயல்பு. 35. காக்கை கவரிலென் கண்டார் பழிக்கிலென் பாற்றுளி பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டுப் போனவிக் கூட்டையே. உயிர் பிரிந்தபின் கணமும் நிலையில்லாத யாக்கைக்குச் செய்யப்படும் சடங்குகளால் எத்தகைய பயனுமில்லை என்கின்றது. (இ-ள்) தோற்பையாகிய உடம்பில் நின்று வினைகளை மிகச் செய்து அவ்வுடம்பினைப் பேணும் கூத்தாடியாகிய உயிர் புறப்பட்டுச் சென்றபின் வெறுங்கூடாகிய இவ்வுடம்பினைக் காக்கைகள் கவர்ந்துண்டால் வரும் சிதைவு யாது? கண்டோர் இகழ்த்துரைத்தலால் வரும் இழிவு யாது? பால் துளிகளைத் தெளித்தலால் வரும் ஆக்கம் யாது? பலரும் கூடிப் போற்றினால் வரும் உயர்வு யாது? எ-று. உயிர் நீங்கிய யாக்கையினை நன்முறையில் அடக்கஞ் செய்யாமல் இகழினும் அன்றி முறைப்படி அடக்கஞ் செய்து போற்றினும் அதனால் அதனைப் பிரிந்து சென்ற உயிர்க்கு அழிவோ ஆக்கமோ எதுவும் இல்லை என்பதாம். தொழில் அறச் செய்து-வினைகளை மிகுதியாகச் செய்து. ஊட்டுதல்-உணவினாற் பேணிக்காத்தல். கூத்தன் என்றது ஆன்மாவை. ஆடுங் கூத்தர்போன்று பிறவிகள்தோறும் வேறு வேறு கோலங்களுடன் தோன்றுதல் பற்றி ஆன்மா வைக் கூத்தன் என்றார். ஆடுங் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழிக் கூடிய கோலத்தி னொருங்கு நின்றியலாது செய்வினை வழித்தாய் உயிர் செலும் (áy¥_cm. 165 - 167) என இளங்கோவடிகளும் உயிர்களைக் கூத்தர்களாகக் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். பார்த்துழிப் பெய்யிலென் என்றும் தொழிலறச் செய் தீட்டும் என்றும் பாடங்கொண்டு அதற்கேற்ப உரை கூறுதலும் உண்டு. இம்மந்திரத்தை யடியொற்றியது, நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிச்சிலென் தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக்கால் (யாக்கை நிலையாமை - 6) எனவரும் நாலடியார் செய்யுளாகும். செல்வம் நிலையாமை 36. தன்னது சாயை தனக்குத வாதுகண் டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போமுட லொக்கப் பிறந்தது கண்ணது காணொளி கண்டு கொளீரே. ஆன்மாவின் உடைமையாகிய செல்வம் நிலையாது என்று அறிவுறுத்துகின்றது. (இ-ள்) தன்னுடைய உடலின் நிழல் தனக்குச் சிறிதும் பயன்படாமை கண்டும் என்னுடையது செல்வம் (ஆதலால் எனக்கேயுரியது) எனக்கொண்டு (அதனைப் பிறர்க்கு உதவாது வறிதே) இருப்பார்கள் அறிவிலிகள். கருதத்தக்க உணர்வுடைய உயிரோ (உடலைவிட்டுப் பிரிந்து) போகும். உடலுடன் ஒருசேரப் பிறந்தது கண்ணின் கண்ணதாய்ப் பொருள்களைக் காணுதற் கமைந்த ஓளியாகும். அவ்வொளி (உடலில் உயிர் இருக்கும் நிலையிலும் ஆற்றல் குன்றிப் பயன்படாமை போன்று ஏனைச் செல்வங்களும் இவ்வாறே பயன்படாதன என்றுணர்ந்து (தாமுள்ள காலத்திலேயே தம்முடைமையைப் பிறர்க்கு ஈந்து) பயன் கொள்வீராக என்பதாம். தன்னது சாயை - தன்னுடம்பின் நிழல். இந்நிழல் தன் மேற்படும் வெயில் வெப்பத்தை மறைக்க உதவாது. எனினும் தன்னுடம்பின் நிழலால் பிறர்மீதுபடும் வெயில் வெப்பத்தை மறைத்தல் அன்புடையார் செயலாகும். கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலால் துன்னருந் தகையவே காடென்றா ரக்காட்டுள் இன்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத் தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே. (பாலைக்கலி - 10) எனவரும் கலித்தொகையில் அன்புடையார் தம்முடம் பாகிய என்பினாலும் அன்பர்க்கு உரியராம் இயல்பினை ஆசிரியர் விளக்கியுள்ளமை காணலாம். ஒருவரது உடம் பின் நிழல் அவர்க்கே யுரியதாயினும் அந்நிழல் அவர்க்கு ஒரு சிறிதும் பயன்படாமைபோல அவர்தம் செல்வமும் அவர்க்கே பயன்படும் என்னும் நியதியில்லை. இந்நுட்பத்தினை விளங்கவுணர்த்துவது, வையிற் கதிர்வடிவேலோனை வாழ்த்தி வறிஞர்க் கென்று நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள் நுங்கட் கிங்ஙன் வெய்யிற் கொதுங்க உதவா உடம்பின் வெறுநிழல்போல் கையிற் பொருளும் உதவாது காணுங் கடைவழிக்கே. (18) எனவரும் கந்தரலங்காரமாகும். எனவே நாம் தேடி வைத்த பொருள் நமக்கேயாகும் என்றெண்ணி அறஞ் செயாது வறிதேயிருத்தல் அறிவிலார் செயலாம் என்பது கருத்து. இனி, பிறிதின்கிழமைப் பொருளேயன்றித் தற் கிழமைப் பொருளாகிய கண் முதலிய பொறிகளும் உடலோடு பிரிவின்றி ஒக்கவுள்ளன வாயினும் அவையும் கடைபோகப் பயன் தருவன ஆகா என்பார் உடல் ஒக்கப் பிறந்தது கண்ணது காண் ஒளி என்றும் அக்கண் ணொளியை எடுத்துக்காட்டாகக் கொண்டு நிலையாமையைக் கண்டுகொள்வீராக என்பார், கண்டு கொளீரே என்றும் கூறினார். உயிர்க்கு அகத்துடைமையாகிய கண் முதலிய புலன் ஐந்தும் ஒருவர்க்குக் கடைசிவரை பயன்படா என்பதனை, புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட்டு ஐம்மேலுந்தி அலமந்த போதாக எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயலாலும், காலன் வருமுன்னே கண்பஞ்சடை முன்னே எனவரும் பழம்பாடலாலும், கண் செவி கெட்டு (சிவ.சூ-உ.அதி ங) எனவரும் சிவஞான போதத்தாலும் அறிந்து கொள்ளலாம். இதனால் உயிரோடு கூடியுள்ள நிலைமைக்கண்ணும் உடலிற் பிரியாதுள்ள கண் முதலிய கருவிகள் உயிர்க்குப் பயன்படா தொழிதலை விளக்கிய வாறு. உடலொக்கப் பிறந்தது கண்ணது ஒளி, காண் ஒளி என இயையும். அவ்வொளி கண்கள் உடலுடன் கூடியிருக்கும் நிலையிலும் உயிர்க்கோ அவ்வுடலுக்கோ சிறிதும் பயன் படாதவாறு போல உடைமையாகிய செல்வமும் நும்முயிர்க்கோ உடலுக்கோ சிறிதும் பயன்படாமையைக் கண்டுணர்வீராக என்பார் கண்டுகொளீரே என்றார். என்னது மாடு என்ற தொடர்ப்பொருளை எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை எனவரும் நாலடியார் விளக்குகின்றது. 37. தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின் ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக் கூற்றன் வருங்கால் குதிக்கலுமாமே. (172) நிலையற்ற பொருளால் உயிர்வாழ்க்கை நிலைபெறுதல் இயலாது எனவுணர்த்துகின்றது. (இ-ள்) (எப்பொருட்குஞ் சார்பாய் நிலைபெற்ற பொருளாகிய தெய்வம் ஒன்றுண்டு என) அறிவுடையோர் தெளிவிக்கத் தெளிந்துணர்மின். அங்ஙனம் தெய்வ முண்டெனத் தெளிவு பெற்றோர்களே மீண்டும் அவ்வுறுதி யினின்றும் பிறழ்ந்து சிந்தையிற் கலக்கமுறாதீர். பேராற்று வெள்ளம் போன்று (ஒருகால் மிக்கும் மறுகால் குறைந்தும்) வரும் நிலையாப் பொருள் காரணமாக மகிழ்ந்தும் வருந்தியும் மிகவும் கலக்கமுற்று மனங் குழம்பாமல் உங்கள் செல்வத்திற் கொண்டுள்ள பற்றினை விலக்கி அறவே களைவீராக. உடம்பினின்றும் உயிரைக் கூறபடுத்தும் கூற்றுவன் வருங்காலத்து அப்பொருளைக் கொண்டு அவனைக் கடந்து வெல்லுதலும் இயலுமோ? (இயலாது என்பதாம்.) தேற்றுதல்-தெளிவித்தல். தெளிதல்-கலக்கம் நீங்கித் தெளிவுபெறுதல். கலக்கி மலக்குதல், ஒருபொருட் பன்மொழி. மலக்குதல் கலக்கமடைதல். ஆற்றுப் பெருக்கின் - ஆற்றிற் பெருவெள்ளம் போன்று. ஆற்றிற் பெருவெள்ளம் தான் கலங்கியும் ஏனையவற்றைக் கலக்கியும் வருதல் இயல்பு. உங்கள் செல்வத்தை மறுத்து மாற்றிக் களைவீர் என இயைக்க. செல்வத்தை-செல்வத்திலுள்ள பற்றினை. குதித்தல்-தாண்டுதல்; கடத்தல், வெல்லுதல். ஆமே என்புழி ஏகாரம் எதிர்மறைப் பொருள் தந்தது. பொருளின் சார்பு கொண்டு இறப்பினை நீக்குதல் இயலாது என்பதாம். இனி, கூற்றங் குதித்தலும் கைகூடும் என்ற திருக்குறட் பொருளின்படி ஆமே என்புழி ஏகாரத்தைத் தேற்றே காரமாகக் கொண்டு, உங்கள் செல்வத்திற் கொண்டுள்ள பற்றினை அறவே மாற்றித் தெய்வமுண்டென்னுந் தெளிவுடைய ராய் அம் முழுமுதற் பொருளிடத்து அன்புடையீ ராயின் கூற்று வனைக் கடத்தலும் எளிதில் இயல்வதேயாம் எனப் பொருளுரைத் தலும் பொருந்தும். செல்வத்தால் வரும் கலக்கத்திற்கு ஆற்றுப் பெருக்கினை இங்கு உவமை கூறியது கொண்டு, ஆறிடுமேடு மடுவும் போலாஞ் செல்வம் மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் _ சோறிடும் தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக உண்ணீர்மை வீறும் உயர்ந்து என விளக்குவர் ஔவையார். 38. வாழ்வு மனைவியும் மக்களுடன் பிறந் தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள் மேவு மதனை விரிவுசெய்வார் கட்குக் கூவுந் துணையொன்று கூடலுமாமே. (174) நிலையாச் செல்வத்தையே கருதிச் சேர்வார் நிலைத்த துணை யினைப் பெறார் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) வாழ்க்கைத் துணையாகிய மனையும் மக்களும் உடன் பிறந்தார் முதலிய ஏனைச் சுற்றத்தாரும் (எமக்குத் தருதற்குரிய) ஒள்ளிய பொருளின் அளவு எவ்வளவு என்று வினவுவர். (வேறொன்றும் செய்யமாட்டார்). இங்ஙனம் விரும்பப்படும் பொருளையே பெருக்கிக் கொண்டு (இறைவனது திருவருளை நாடாது) இருப்பார்க்கு (உயிர் உடலை விட்டுப் பிரியும் கலக்க நிலையில்) இங்கே வாவென்று கூவி அழைத்துக் கொள்ளும் ஆருயிர்த் துணையாகிய ஒப்பற்ற முழுமுதற் பொருளைக் கூடுதலும் இயலுமோ? (இயலாது) எ-று. வாழ்வு மனைவி-மனை வாழ்க்கைக்கு இன்றியமையாத வாழ்க்கைத் துணையாகிய மனைவி. மக்கள்-பிள்ளைகள். உடன்பிறந்தார்-சகோதரர். எமக்கு ஒண்பொருள் அளவு எது என்பர்-எங்களுக்கு நீ தருதற்குரியஒள்ளிய பொருள் எவ்வளவு எனத் தம் நலம் ஒன்றையே குறிக்கொண்டு வினவுவதன்றிப் பொருளைத் தரும் உங்களுக்கு எத்தகைய உதவியையும் செய்ய முற்படுவாரல்லர். மேவுதல்-விரும்புதல். அதனை விரிவு செய்தலாவது அப்பொருளைக் கொண்டு அறஞ் செய்யாது அப்பொருளையே ஒன்று பத்தாக மேன்மேலும் பெருக்குதல். கூவுந்துணை என்றது சென்றுபுகும் வழியிதுவெனத் தெளியாது திகைத்து அலமரும் இடர்நிலையில் அக்கலக்கமகற்றிப் புகுநெறியிதுதான் இங்கே வா எனக் கூவியமைக்கும் வழித்துணை; வழித்துணை என்றது பிறவிச் சூழலிற்பட்டு வழிதெரியாது அலமரும் உயிர்களை இங்கே வாவென்று கூவியழைத்துக் கொள்ளும் வழித்துணை நாதராகிய இறைவனை. அங்கத்தை மண்ணுக்காக்கி யார்வத்தை யுள்ளேவைத்துப் பங்கத்தைப் போகமாற்றிப் பாவித்தேன் பரமாவுன்னைச் சங்கொத்த மேனிச்செல்வா சாதல்நாள் நாயேனுன்னை எங்குற்றா யென்றபோதால் இங்குற்றேன் என் கண்டாயே. என அப்பரடிகளும் இருளைத் துரந்திட் டிங்கேவாவென் றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் கண்டாயம்மானே நின் மலரடிக்கே கூவிடுவாய் என மாணிக்கவாசகரும் அருளிய பாடல்கள் இறைவன் கூவுந்துணையாதலை விளக்குவனவாகும். ஆமே என்புழி ஏகாரம் எதிர்மறை. இனி விரிவு செய்தல் என்பதற்கு நல்லறங்களாற் பலர்க்கும் பயன் படச் செலவு செய்தல் எனப்பொருள் கொண்டு ஆமே என்பதன் ஏகாரத்தைத் தெற்றேகாரமாகக் கொள்வதும் உண்டு. இளமை நிலையாமை 39. கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தெருதாய்ச் சிலநாளில் விழக்கண்டுந் தேறார் வியனுலகோரே. (177) இளமை நிலையாமை கூறுகின்றது. (இ-ள்) நாட்காலையில் கீழ்த்திசையிலே இளமைச் செவ்வியுடையதாய் எழுந்து விரைந்து மேற்சென்ற கதிரவன் (நண்பகலில் இளமைத்தன்மை நீங்கிப் பின்னர் முதுமை எய்தி) மேற்றிசையிலே வீழ்ந்து மறைதலைக் கண்ணாரக் கண்டிருந்தும் இளமையின் எழுச்சி என்றும் நிலையுடையதன்று என்பதனை அகக் கண்ணில்லாதார் தெளிய உணர்கின்றிலர். (தம் வீட்டிலே பிறந்த) பசுவின் இளங்கன்று சில ஆண்டுகளில் காளைப்பருவம் நீங்கி முதுமையையடைந்து எருதாய்ச் செயலற்று இறத்தலைக் கண்ட பின்னரும் இப்பரந்த உலகில் வாழும் மாந்தர் தமது இளமையும் அங்ஙனம் நிலையாதென்னும் உண்மையைத் தெளிய அறிகின்றிலரே (என்னே அவர்தம் பேதைமை? எ-று. விழி என்றது, இங்கு ஞானநாட்டத்தினை. குழக் கன்று - பாலுண்ணும் பருவத்து இளங்கன்று. மழவுங் குழவும் இளமைப் பொருள் என்பது தொல்காப்பியம். மூத்தல் - முதுமையடைதல். எருது என்றது உழுதற்கும் பெரும்பாரம் இழுத்தற்கும் ஏற்ற ஆற்றலுடைய காளைப் பருவத்தினை இழந்து முதுமையெய்திய எருதினை. விழுதல் - இறத்தல். உயிரல் பொருள் உயிர்ப் பொருள் ஆகிய எவ்வகைப் பொருட்கண்ணும் இளமைச்செல்வி நிலைத்தலில்லை என்பதனை இளஞாயிற்றிலும் இளங்கன்றிலும் வைத்து அறிவுறுத்திய திறம் உணரத்தக்கதாகும். 40. பாலன் இளையன் விருத்தன் எனநின்ற காலம் கழிவன கண்டும் அறிகிலார் ஞாலம் கடந்தண்டம் ஊடறுத்தானடி மேலும் கிடந்து விரும்புவன் நானே. (181) இதுவும் அது. (இ - ள்) உயிர்வாழ்வுக்கென நியமிக்கப்பட்டு நின்ற வாழ்நாள் பாலுண் பருவத்துப் பாலன் என்றும் நடுவயதினனாகிய இளைஞன் என்றும் முதிர்ந்த பருவத்தினனாகிய விருத்தன் என்றும் இங்ஙனம் பல்வேறு பருவங்களாய்க் கழிவனவற்றைக் கண்டிருந்தும் இளமை நிலையாதென்பதனை மாந்தரிற் பலர் அறியும் ஆற்றலின்றியுள்ளார்கள். இவ்வுலகைக் கடந்து அண்டங்களையும் ஊடறுத்து என்று முளனாய் நிற்கின்ற இறைவனடியினைப் புகலாகப் பற்றிக் கிடக்கும் யானோ (அவர் வழியிற் செல்லாது) மேன்மேலும் அவ்வடித்துணையையே புகலாகப் பற்றிக் கிடந்து அன்பு செய்வேனாயினேன் எ-று. நின்ற காலம் - இன்னின்னார்க்கு இவ்வளவு என ஊழால் வரையறுக்கப்பட்டு நின்ற வாழ்நாள். பாலன் - தொடக்கநிலைப் பருவம். இளையன் - இடைநிலைப் பருவம். விருத்தன்-கடைநிலைப்பருவம். ஞாலம் கடந்து அண்டம் ஊடறுத்தான் என்றது, கால எல்லைக்குட்பட்டு இயங்கும் உலகங்களைக் கடந்து அண்டத்துக்கு அப்பாலாய் நின்ற காலகாலனாகிய கடவுளை. அவனடித் துணையைப் பற்றியவர்கள் அதன் துணைகொண்டு ஞால எல்லையையும் கால எல்லையையும் ஒருங்கே கடக்க வல்லவராதலின் அவர் வழி நின்று அவ்விறைவன் திருவடிகளையே சரணெனப் பற்றிக்கிடந்து விரும்பி அன்பு செய்வேனாயினேன் என்பார் ஞாலங் கடந்து அண்டம் ஊடறுத்தான் அடி மேலும் கிடந்து விரும்புவன் நானே என்றார். கிடத்தல் - ஆன்ம போதங்கெடத் தன் செயலறுதல். இதனால் நிலையாமையைக் கடத்தற்கு உபாயங் கூறியவாறுணர்க. உயிர் நிலையாமை 41. தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில் இழைக்கின்ற தெல்லாம் இறக்கின்ற கண்டும் பிழைப்பின்றி எம்பெரு மானடி ஏத்தார் அழைக்கின்ற போதறியாரவர் தாமே. (187) ஓர் உடம்பிலேயே உயிர் என்றும் நீங்காது நிலைத்திருத்தல் இல்லை என்பதனை உணர்த்துகின்றது. (இ-ள்) தழைத்து வளர்கின்ற தளிர்களையும குளிர்ந்த மலர்களையும் உடைய மரத்தின் கிளையில் ஈனிலாகிய கூட்டினை இழைக்கப்பெற்று வாழ்கின்ற பறவைக்குஞ்சுகள் எல்லாம் அதன்கண்ணேயே நிலையாகத் தங்கி விடாமல் காலம் வந்தபோது வேற்றிடம் நாடிச் செல்லுமாறுபோல உயிர் உடம்பினைவிட்டுப் பிரிந்து செல்லுதலைக் கண்டு வைத்தும் எம்பெருமானாகிய இறைவன் திருவடிகளைப் போற்றி வழிபடாதார் (கூற்றுவன் தம்மை) அழைக்கும் காலத்து அவர்கள் தாம் செய்வது இன்னதென்றறியாது அலமரும் அறிவிலிகளாவர் எ-று. தழைத்தல் - செழித்து வளர்தல். கொம்பு - கிளி. இழைத்தல் - பொறையுயிர்த்தற்குரிய ஈனில் என்னும் கூட்டினைக் கட்டுதல். உள்ளுர்க்குரீஇத் துள்ளுடைச் சேவல் சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறாவெண் பூக்கொழுதும் (குறுந் - 85) என்றார் குறுந்தொகையினும். மனையுறை குருவி வளைவாய்க் சேவல் சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி ஈனில் இழைக்க வேண்டி (திருவாருர் மும்மணிக் - 19) என்பது சேரமான் பெருமாள் நாயனார் திருப்பாடல். இறத்தல்-கூட்டை விட்டுப் பறந்து செல்லுதல். குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போ டுயிரிடை நட்பு என்பது திருக்குறள். வீயாது உடம்பொடு நின்ற உயிருமில்லை மடங்கலுண்மை மாயமோ வன்றே (363) என்பது புறநானூறு. அழைக்கின்றபோது - இயமன் வந்து அழைக்கும்போது. 42. ஐவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஓலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல் விட்டாரே. (188) உடம்பிற் பொறிகள் செயலற்றொழிய உயிரானது உடம்பை விட்டுப் பிரியும் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம் புலத்தார்க்கும் பொதுவுடைமையாக உடம்பாகிய ஒரு வயல் விளைந்து கிடந்தது. தமக்குரிய அவ்வயலை அவர் ஐவரும் தத்தமக்கே யுரியதாகக் கொண்டு காத்து வருகின்றார்கள். அவ்வைந்து பேர்க்கும் தலைவனாகிய உயிர்க்கு இயமனிடமிருந்து ஓலைவந்து உயிர் (அதனை விட்டுப் பிரிந்து) சென்றமையால் அவர் ஐவரும் அவ்வயலைக் காக்குந் தொழிலைச் செய்யமாட்டாது கைவிட்டார்கள் எ - று. ஐவர் என்றது ஐம்பொறிகளை. ஒரு செய் என்றது அவ்வைந்தின் உழப்பிற்கும் பொதுநிலமாகிய உடம்பினை. ஐவர்க்கு நாயகன் என்றது அப் பொறிகளைந்தையும் தத்தம் புலங்களிற் செலுத்தித் தொழில் கொள்ளவல்ல உயிரை. நாயகனுக்கு என கு உருபு விரித்துரைக்க. ஓலை என்பது, குறித்த காலம் முடிந்தமையால் உடம்பினை விட்டு நீங்குக என விதிக்கும் முறையில் அமைந்த சாக்காட்டினை. காவல் விடுதல் என்றது தம்மைச் செலுத்திப் பணிகொள்ளும் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தமையால் பொறிகள் செயலற்றழிதலை. 43. அவ்வியம் பேசி அறங்கெட நில்லன்மின் வெவ்விய னாகிப் பிறர்பொருள் வவ்வன்மின் செவ்விய னாகிச் சிறந்துண்ணும் போதொரு தவ்விக்கொ டுண்மின் தலைப்பட்ட போதே. (196) உயிர் நிலையாமை யுணர்ந்தோர் தவிர்வனவும் செய்வனவும் இவையென வுணர்த்துகின்றது. (இ - ள்) பொறாமையாற் கோட்டமுடைய சொற்களைப் பேசி அறம் சிதைய நில்லாதீர்கள். கொடுமையுடைய நெஞ்சத் தராய்ப் பிறர்க்குரிய பொருளைக் கவர எண்ணாதீர்கள். (உயிர் உடம்பில் நிலைபெற்றிருக்கும் காலத்திலேயே) செம்மையுடைய நெஞ்சத்தினராய் வாழ்க்கையிற் சிறந்து விளங்கி உண்ணுங் காலத்து ஓரகப்பையாவது நும்மை வந்து அடைந்தோர்க்குக் கொடுத்து உண்பீர்களாக எ - று. அவ்வியம்-பொறாமை; கோட்டமுடைய சொற்கள். வெவ்வியன்-கொடுமையுடையோன். செவ்வியன்-செப்பமுடை யவன்; நடுவு நிலைமையுடையோன். தவ்வி-அகப்பை. தலைப்படுதல்-நேர்படுதல்; வந்தடைதல். கொல்லாமை ஐயறிவுடையன முதல் ஓரறிவுடையன வீறாய உயிர்களை மறந்துங் கொல்லுதலைச் செய்யாமை. 44. பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமும் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே. (197) கொல்லாமையாகிய அறம் இறைவழிபாட்டுக்குரிய எண்வகை மலர்களுள் சிறப்புடையதென்பது உணர்த்துகின்றது. (இ-ள்) பிறவிப் பெருங்கடலைக் கடத்தற்குப் பற்றுக் கோடாயுள்ள நல்ல சிவகுருவினை வழிபடுதற்குரிய பலவாகிய மலர்களுள்ளும் பிறவுயிர்களைக் கொல்லாமையாகிய அறமே ஒளியுடைய நன்மலர் மாலையாம். உள்ளமாகிய தகளியின் ஞானச்சுடரே அசைவற்ற திருவிளக்காகும். பொருந்தி நுகரும் நிவேதனம் உயிரேயாகும். பூசை கொண்டருளும் இறைவன் அமர்ந்தருளிய இடம் தலையின் உச்சியாகிய பிரமரந்திரமாகும். தந்தை தாயாவானும்.................nfhdhFthD« குரு என்பதுணர்த்துவார் பற்றாய நற்குரு என்றார். பன்மலர் என்றது, அகப்பூசைக்குரிய நறுமலர்களாகிய அன்பு, கொல்லாமை, பொறியடக்கம், வாய்மை, பொறை, அருள் அறிவு, தவம் என்னும் எண்வகை மலர்களை. உரைசெய் நூல்வழி யொண்மலர் எட்டிடத் திரைகள் போல்வரு தீவினை தீர்ப்பரால் (5-54-7) என்பது அப்பர் அருள்மொழி. அணுக்கள்-உயிர்கள். நற்றார்-நல்தார்-நல்லமாலை. நடுக்கற்ற சித்தம் தீபம், உற்று ஆரும் (உணவு) ஆவி, அமர்ந்த இடம் உச்சி ஆம் என இயையும். நடுக்கற்ற சித்தம்-துளங்காத சிந்தை. அதுவே பூசைக்குரிய தீபமாம் என்க.உள்ளமேதகளியாக.......ïUªJ நோக்கில், கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே, எனவும், பூசனையீசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே எனவும் வரும் அப்பரருள் மொழிகள் இங்கு ஒப்புநோக்கி யுணரத் தக்கனவாகும். ஆவி-உயிர். ஆன்மாவே நிவேதனப் பொருள் என்பதாம். அமர்ந்த இடம் என்புழிப் பெயரெச்சத்து அகரம் தொக்கது செய்யுள் விகாரம். இறைவன் வழிபடுவார் சென்னியின் உச்சியில் எழுந்தருளி வழிபாட்டினை யேற்றுக்கொள்ளுதலை எமது உச்சியாரே என ஞானசம்பந்தரும் மனத்தகத்தான் தலைமேலான் என நாவுக்கரசரும் தூய மாமலர்க் சேவடிக்கணஞ் சென்னி மன்னிச் சுடருமே என வாதவூரடிகளும் அருளிய மறைமொழிகளாலுணரலாம். கொள்லாமை பற்றிக் கூறவந்தவர் இயைபுபற்றி அகப் பூசைக்குரிய ஏனை அங்கங்களையும் உடன் கூறினார். 45. கொலையே களவுகட் காமம் பொய்கூறல் மாலைவான பாதக மாமவை நீக்கித் தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க் கிலையா மிவை ஞானானந்தத் திருத்தலே. (200) ஐம்பெரும் பாவங்களின் நீங்கினோர் அவற்றாலுளவாந் துன்பங்களினீங்கிச் சிவானந்தப் பெருவாழ்வு பெறுவர் என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) கொலையும் களவும் கள்ளும் காமமும் பொய் கூறலும் ஆகிய இவை ஐந்தும் அஞ்சி நடுங்கத்தக்க பெரும் பாதகங்கள் ஆகும். அவற்றை நீக்கி எல்லாவற்றுக்கும் மேலாகிய சிவபெருமான் திருவடியை உள்ளத்தாற் சார்ந்து வழிபட்டோர்க்கு இவற்றால் வரும் துன்பங்கள் இல்லை. இறைவனது ஞானமாகிய சிவானந்தத்துள் திளைத்திருத்தலாகிய பேரின்பம் உளதாகும் எ -று. கொலையே என்புழி ஏகாரம் எண்ணுப் பொருளில் வந்தது. மலைவான பாதகம்-விளைவுகண்டு உயிர்கள் நடுக்க முறுதற்குரிய பெருங் குற்றங்கள். தலையாம்-மேலான, எங்கும் வியாபகமான. நான்காமடியில் இவை இலை ஞானானந்தத்து இருத்தலே ஆம் என இயைத்துப் பொருள் கொள்க. இவை என்றது ஆகு பெயராய் இவற்றால் விளையும் துன்பங்களை யுணர்த்தியது. நல்குரவு - வறுமை நுகரப்படுவன யாவும் இல்லாமை. 46. பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென் றக்குழி தூர்க்கும் அரும்பண்டந் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை யேத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. (210) அறஞ்சாரா நல்குரவினை நீக்குதற்கு ஓர் உபாயம் கூறுகின்றது. (இ-ள்) பொழுது விடிகின்றது என்று சொல்லிக் கொண்டு விடியற்காலந் தொடங்கியே ஒரு நாளும் நிரம்பாத வயிற்றுக் குழியினை நிரப்புதற்பொருட்டு (அக்குழியினை நிரப்புதற்குரிய) அரிய பண்டங்களைத் தேடுகின்ற மக்களே! நும்முடைய உழைப்பினால் எத்தகைய குழிகளை நிரப்பியாவது எங்கும் நீக்கமறத் தங்கிய முதல்வனை (நுமது விழைவு அறிவு செயல்களுக்கு முதலாகக் கொண்டு) போற்றி வழிபடுமின். அவ்வழிபாட்டினால் உங்களுடைய உள்ளத்தின் மாசுகளாகிய அழுக்குகள் அறவே நீங்கிய நிலையில் (உங்களுள்ளத்தே கிளர்ந்தெழுந்த நல்லுணர்வின் பயனாகத்) தூராத அவ்வயிற்றுக் குழியும் எளிதில் தூர்ந்து விடும் எ-று. வயிறாகிய குழி ஏனைக் குழிகள் போலப் பண்டங்களைக் கொண்டு ஒரே நேரத்தில் தூர்த்தற்குரிய பள்ளமடைய குழியாகத் தோற்றாமல் மேடாகத் தோன்றிக் காலந்தோறும் அளிக்கப்பெறும் பண்டங்களை யெல்லாம் ஏற்றும் எஞ்ஞான்றுந் தூர்க்கப்படாத நிலையில் மறைக்கப்பட்டுள்ள குழியாம் என்பார், பொய்க்குழி என்றார். பொய்க்குழி - பார்வைக்கு மேடு போன்றிருந்து கால் வைத்தால் உள்ளே ஆழ்த்துங் குழி; என்றது, யானை முதலியவற்றை வீழ்த்துதற்குக் கிணறுபோல் ஆழமாகத் தோண்டப்பட்டுத் தழை முதலியவற்றால் மூடப்பெற்று மேடுபோல் தோன்றும் வஞ்சனைக் குழியினை. பொய்யறை என்பர் இளங்கோ அடிகள். இரவெல்லாம் பசியினால் வருந்தி எப்பொழுது பொழுது புலரும் என்று எதிர்பார்த்திருந்து விடிகின்ற பொழுதிலேயே வயிற்றுப் பசியினைத் தணித்தற்குரிய உணவுப் பண்டங்களைத் தேடித் திரியும் நல்குரவாளரது ஆராமையால் விளைந்த அல்லலை விளக்குவார், பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருதென்று அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் என்றார். இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு என்றார் தெய்வப் புலவரும். புலரி - வைகறை புலருது - விடிகின்றது. என்று - இன்றாவது பசிதீர உணவு கிடைக்குமா என்று எண்ணி வருந்தி. எக்குழி தூர்த்தும் - எத்தகைய இடர்ப்பாடுகளைக் கடந்தும். இறைவனை ஏத்து தலாவது உயிர்க்குயிராய் உள்நின்றியக்கும் இறைனது ஞானசக்தி கிரியாசத்தி ஆகிய திருவடிகளைத் தம்முடைய ஞானசத்தி கிரியாசத்தியாகிய முயற்சிக்கு வியாபகமாகக்கொண்டு நல்லற நெறியில் நின்று பொருளீட்டி வையத்து வாழ்வாங்கு வாழ முயலுதல். அக்குழி-தூராக் குழியாகிய வயிற்றுக் குழி; என்றது அதன்கண் மூண்டெரியும் பசித்தீயினை. தூர்த்தல் - தவிர்த்தல். படுகுழிப் பவ்வத்தன்ன பண்டியைப் பெய்தவாற்றால் கெடுவதிம் மனிதர்வாழ்க்கை காண்டொறுங் கேதுகின்றேன் முடுகுவர் இருந்துள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் அடியனேன் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே எனவரும் அப்பரருள்மொழியும் இங்கு ஒப்புநோக்கற்பாலது. அழுக்கற்றபோதே அக் குழிதூரும் என இயைக்க. அழுக்கு - மனமாசு. தன்னுழைப்பால் தொழில் செய்து வாழ முயலாது பிறர் உழைப்பால் வாழ்குவம் என்று எண்ணித் தமது கருவி கரணங்களைச் செயற் படுத்தாது சோம்பியிருக்கும் பேதைமை. அழுக்கறவே தூராக் குழியாகிய வயிற்றுப் பசியும் எளிதில் தீரும் என்பதாம். அக்கினிகாரியம் _ தீயோம்பல் உலகம் நலமுற மழை வளமுண்டாக ஞானம் மிக ஞானச்சுடராகிய இறைவனை வேள்வித்தீயுருவில் வைத்து வழிபடுதல். 47. ஒண்சுட ரானை யுலப்பிலி நாதனை ஒண்சுட ராகியென் னுள்ளத் திருக்கின்ற கண்சுட ரோன் உலகேழுங் கடந்தஅத் தண்சுட ரோமத் தலைவனு மாமே. (221) சுடர் விட்டுளன் எங்கள் சோதி எனப் போற்றப்பெறும் சிவபரம் பொருளே வேள்விமுதல்வன் என்பது உணர்த்து கின்றது. (இ - ள்) ஒளி தங்கிய சுடராகத் திகழ்பவனும் அழிவில்லாத முதல்வனும் ஒளி திகழுஞ் சோதியாகி என் உள்ளத்துள்ளே எழுந்தருளி யிருக்கின்றவனும் ஞாயிறு திங்கள் தீ என்னும் முச்சுடர்களைக் கண்களாகக் கொண்டு விளங்குபவனும் ஏழுலகங்களையுங் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் தண்ணிய அருள் வாய்ந்த சுடருருவினனும் ஆகிய இறைவன் வேள்வித் தலைவனாகவும் விளங்குகின்றான் எ - று. எல்லா வுலகங்களிலும் ஒளி வழங்கும் அண்டவொளியாகத் திகழ்பவன் இறைவன் என்பார் ஒண்சுடரானை என்றார். ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர் என்பது அப்பர் அருளிச் செயல். உலப்பிலி-கேடிலான். உலப்பிலியாகிய நாதன். உலகின் கண்ணாகப் புறத்தே ஒளி வழங்கும் இறைவன் ஒளிவீசும் சோதிப்பொருளாய் உயிர்களின் உள்ளத்தே எழுந்தருளி அகவிருள் கடிகின்றான் என்பதனைத் தமது அனுபவத்தால் உணர்த்துவார் ஒண்சுடராகி என்னுள்ளத்திருக்கின்ற கண் சுடரோன் என்றார். கண்சுடரோன்-ஞாயிறு திங்கள் தீ என்னும் சுடர்களைக் கண்களாக உடையவன் ; அண்டங்களை யெல்லாங் கடந்து அப்பாற்பட்டு நின்று ஞாயிறு முதலியவற்றுக்கொல்லாம் ஒளி வழங்கும் பேரொளிப் பொருள் இறைவனே என்பார் உலகேழுங் கடந்த அத் தண்சுடர் என்றார். பேரொளி யுடையதாயினும் வெம்மையுடையதாய்த் தெறுசுடராகாது அருளால் எவ்வுயிர்களையும் பிறவி வெம்மையைப் போக்கிக் குளிர்விப்பது என்பார் தண்சுடர் என்றார். சுடர் விட்டுளன் எங்கள்சோதி எனவும், காரொளிய திரு மேனி...... தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் திகழொளி அண்டமாரிருளூடு கடந்து உம்பர் உண்டுபோலும் ஓர் ஒண்சுடர் எனவும் சோதியே சுடரே பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடர் மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் எனவும் வரும் திருமுறைகள் இங்கு உளங்கொள்ளத்தக்கன. இறைவன் நிலமுதலாகிய எண் பேருருவினனாகத் திகழ்வோனாதலின் வேள்வியில் வேட்கப்படுந் தீயாகவும் அதனை வேட்கும் வேள்வித் தலைவனாகவும் திகழும் மெய்ம்மையினை அங்கிவேட்டலாகிய செயலில் வைத்து அறிஞர் உணர்தற்குரியர் என்பதாம். அந்தணரொழுக்கம் அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தை செய் அந்தணர்களுக்குரிய ஒழுகலாற்றினை உணர்த்துவது. 48. வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர் வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை ஒழிந்திலர் வேதாந்த மாவது வேட்கை யொழிந்திடம் வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டாரே. (229) அந்தணரியல்பும் அவரால் அணவப்பெற்ற வேதாந்தமாகிய உபநிடதங்களின் முடிந்த பொருட்பயனும் உணர்த்துகின்றது. (இ-ள்) வேத முடிபாகிய மெய்ந்நூற் பொருளைக் கேட்டுணரும் ஆர்வமுடைய வேதியர்கள் அந்நூற் பொருளை யுள்ளவாறு கேட்டுணர்ந்த பின்னரும் அவ்வுணர்வின் பயனாக உலகப்பொருள்களில் தாம் கொண்டுள்ள வேட்கையினை விட்டு நீங்கினாரல்லர். வேதங்களின் முடிந்த பொருளாவது, பொருள்கள் மேற்கொண்டுள்ள ஆசையை விட்டொழித்த நிலையேயாகும். ஆகவே வேதசிரப் பொருளை உள்ளவாறு கேட்டுணர்ந்த அந்தணர்கள் அதன் பயனாக ஆசையை அறவே விட்டொழித்தனர் எ - று. வேதசிரசாகிய உபநிடத மெய்ந்நூல்களைக் கற்பதன் பயன் நிலையற்ற உகலப்பொருள்கள் மேலுள்ள வேட்கையை விட்டொழித்து நிலையுடைய முதல்வன் திருவருளைப் பற்றுதலே யாதலின், வேட்கையை விட்டொழித்தவரே வேதத்தின் முடிபொருளாகிய பிரமப்பொருளை உள்ள வாறுணர்ந்த அந்தணராவர் என்பதாம். வேட்கை நீங்காத வேதியர் இயல்பினை, பரித்த செல்வ மொழியப் படருநாள் அருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவர் கருத்தின் ஆசை கரையின்மை கண்டிறை சிரித்த செய்கை நினைந்தழுஞ் செய்கையாள் (சுந்தர - காட்சி - 25) எனச் சீதையின் நிலையாகக் கம்பர் பாடிய பாடலில் காணலாம். 49. நூலுஞ் சிதையும் நுவலிற் பிரமமோ நூலது கார்ப்பாசம் நுண்சிகை கேசமாம் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் நூலுடை யந்தணர் காண நுவலிலே. (230) நூல் சிகை முதலிய புறவேட மட்டும் உடையோர் அந்தணராகார் என்கின்றது. (இ-ள்) முப்புரி நூலும் சிகையும் அந்தணரியல்பினை விளக்கும் அடையாளமாகுமோ? புறத்தே காணப்படும் நூலானது பஞ்சாகும். சிகை என்பது கேசமாகும். நூலுடைய அந்தணராவார் இன்னார் என அடையாளங் கண்டுணர விளக்கிக் கூறுமிடத்து அவர்க்குரிய நூலாவது வேத சிரமாகிய உபநிடதங்களின் பயிற்சியேயாகும். நுண்ணிய சிகையாவது மெய்ம்மையான ஞானமாகும் எ - று. கார்ப்பாசம்-பஞ்சு. கேசம்-மயிர், முடி. பிரமமோ பிரமப் பொருளுணர்ச்சியை உணர்த்துவனவோ? ஓகாரம் எதிர்மறை. உணர்த்தா என்பதாம். நூலுடை அந்தணன் காணும் என்ற பாடத்திற்கு, விரிநூலுணர்ச்சியின்றிப் புரி நூல் மட்டுமுடைய பேர் கொண்ட அந்தணரே இவ்வுண்மையைக் கண்டு தெளிவீராக எனப் பொருளுரைத்தல் பொருந்தும். புறத்தே காணப்படும் நூலும் சிகையும் அந்தணர்க்குரிய உண்மையான அடையாளங் களாக மாட்டா. இவ்வுண்மையை, கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும் தோலும் பூண்டு துயரமுற் றென்பயன் நீல மாமயிலாடு துறையனே நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே எனவரும் திருப்பாடலில் திருநாவுக்கரசரும் தெளிவாகக் குறித்துள்ளமை காணலாம். 50. அந்தண்மை பூண்ட அருமறையந்தத்துச் சிந்தைசெய் யந்தணர் சேருஞ்செழும்புவி நந்துத லில்லை நரபதி நன்றாகும் அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. (234) மெய்ம்மையான அந்தணர் வாழும் நாடு எல்லா நலங்களும் பெறும் என்கின்றது. (இ-ள்) அழகிய தண்ணளியை மேற்கொண்ட அருமறை முடிப்பொருளை இடைவிடாது சிந்திக்கும் அருளாளராகிய அந்தணர்கள் வாழும் நாடு ஒருநாளும் கேடுறுதல் இல்லை. அந்நாட்டினை யாளும் வேந்தன் குடிமக்களுக்கு எல்லா நலங்களையும் செய்யும் நற்பண்புடையானாவன். (அந்நாடு அவ்வந்தணர்களால்) காலை மாலையாகிய இருபொழுதும் வேத முறைப்படி வேள்விகளை இயற்றும் எ - று. அந்தணர் என்பதற்கு அழகிய தண்ணளியினையுடையார் எனத் திருவள்ளுவர் குறித்த காரணத்துடன் வேதத்தின் அந்தத்தை அணவுவோர் எமற்றொரு காரணனத்தினையும் இயைத்து விளக்கும் முறையில் அந்தண்மை பூண்ட அருமறை யந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் என்றார். அந்தண்மை பூண்ட அந்தணர், அருமறை அந்தத்துச் சிந்தைசெய் அந்தணர் எனத் தனித்தனி இயைத்துப் பொருள் கொள்க. அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான் எனவரும் திருக்குறளும் அந்தணர் என்பது அழகிய தட்பத்தினை யுடையார் என ஏதுப்பெயராதலின் அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது கருத்து எனவரும் பரிமேலழ கருரையும் இங்குக் கருதத்தக்கனவாகும். அத்தகைய அந்தணர் சேர்தலால் புவிவளம் பெற்றுச் செழிக்கும் என்பார் அந்தணர் சேரும் செழும்புவி என்றார். நந்துதல்-கேடு. நரபதி-வேந்தன் அந்தி சந்தி என்பன மாலையந்தியையும் காலையந்தியையும் குறித்தன. ஆகுதி-வேத நெறிப்படி செய்யப்பெறும் வேள்வி. அரசாட்சி முறை அரசியல் நெறி முறைமையைக் கூறும் பகுதி; திருக்குறளி லுள்ள கொடுங் கோன்மை என்ற அதிகாரம் பொருளை அடியொற்றியது. 51. கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் கல்லா அரசனின் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம்ஓரான் கொல்லேன்பான் நல்லாரைக் காலன் நணுக நில்லானே. (238) அரசியல் நெறி முறையைக் கல்லாமையால் முறைகோடிய அரசனால் விளையும் துன்பத்தினைக் கூறுகின்றது. (இ-ள்) தனக்குரிய அரசியல் நீதி முறையைக் கற்றுணராத அரசனும் உடலினின்றும் உயிரைக் கவரும் கூற்றுவனும் உயிரை வருத்தும் கொடுஞ் செய்கையால் தம்முள் ஒப்பவராவர். அவ்விருவருள் நீதி நெறியைக் கல்லாத அரசனைவிடக் கால முணர்ந்து உயிர்கொள்ளும் முறைமையுடைய கூற்றுவன் உயிர்க்கு மிகவும் நல்லனாவன். எவ்வாறெனில் தனக்குரிய நீதியைக் கற்றுணராத அரசன் அறமுறையினை யுணராமையால் (தன் கருத்துக்கு ஒவ்வாத நன்மக்களையும்) கொல்க எனக் கடுந்தண்டஞ் செய்வான். காலனோ நல்லோரை நெருங்கவு மாட்டான் எ - று. கல்லா அரசன் நெறிமுறையுணராது நல்லோரையுங் கொல்லவும், காலன் முறையுணர்ந்து நல்லோரை அணுகாமையால், காலனை விடக் கல்லா அரசனே மிகவும் கொடியன் என்பதாம். இது கல்லா அரசனுக்கும் காலனுக்கு முள்ள வேறுபாட்டினை யுணர்த்துதலின் வேற்றுமை யணியெனப்படும். கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண் டல்லவை செய்தொழுகும் வேந்து. (551) என்றார் தெய்வப்புலவரும். காலன் செய்வது ஒரு பொழுதைத் துன்பம். இவன் செய்வது எப்பொழுதும் துன்பமாம். 52. நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறி நாடொறும்நாடி அவன்நெறி நாடானேல் நாடொறும் நாடு கொடுமூட நண்ணுமால் நாடொறுஞ் செல்வம் நரபதி குன்றுமே. (239) நாட்டில் தவநெறியை நாளும் ஆராய்ந்து மன்னன் முறை செய்யாமையால் நாட்டையும் கேடு கூறுகின்றது. (இ-ள்) மன்னவன் நாள்தோறும் தனது நாட்டில் நிகழும் தவநெறிச் செயல்களை நாள்தோறும் ஆராய்ந்து (அந்நெறியினைப் போற்றிக் காக்கும் வகையில்) தனக்குரிய அரசியல் நெறி முறைமையினையும் ஆராய்ந்து நடவானாயின் (அவனால் ஆளப்பெறும்) நாடு நாள்தோறும் (உயிரும் உடைமையும்) கேடெய்தும். (அதுவேயுமன்றி) அறியாமையும் வந்தடையும். மக்கள் தலைவனாகிய அவன் நாள் தோறும் தன் செல்வம் குறைந்து தேய்வுறுவான். எ-று. நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும் (553) எனவரும் திருக்குறட் பொதுவிதியை அடியொற்றி எழுந்த சிறப்பு விதியாகும். தன்னாட்டு நிகழுந் தீமைகளை நாடோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைக் செய்யாத அரசன் நாள்தோறும் நாட்டினை யிழக்கும் என்பது இத் திருக்குறளின் பொருளாகும். இழத்தல்-பயனெய்தாமை. இனி, நாட்டில் அவநெறி நாடொறும் நாடித்தவநெறி நாடானேல் என்ற பாடத்திற்கு தனது நாட்டில் அவநெறியாகிய தீய நெறிகளையே நாடித் தவநெறியினை நாடாதொழிவானானால் எனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். நாடு - நாட்டில் வாழும் உயிர்கள். கெடுதல் - உயிரும் உடைமையும் இழந்து வாழ்வின்பயனை இழத்தல். மூடம் - அறியாமை. குன்றுதல் - தேய்ந்து இல்லையாதல். 53. வேடநெறி நில்லார் வேடம் பூண்டென்பயன் வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன் வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. (240) தவவேடத்தாரைத் தவநெறியில் நிலைக்கச் செய்தல் நாடாளும் வேந்தனது கடமை என்கின்றது. (இ - ள்) தாம் மேற்கொண்டுள்ள தவவேடத்திற்கு ஏற்ப (மெய்ம்மையான தவவொழுக்கத்தில் நிலைபெற்று) ஒழுகும் ஆற்றலில்லாதார் அத்தவவேடத்தினைப் புறத்தே மேற் கொண்டமையால் யாது பயன்? தாம் மேற்கொண்ட வேடத்திற்கு ஏற்பத் தவநெறியில் நிலைபெற்றொழுகுவோரது தவக்கோலமே மெய்ம்மையான தவத்தினைப் புலப்படுத்தும் வேடமாகும். தாம் மேற்கொண்ட தவ வேடத்திற்கு ஏற்ப அந் நெறியில் நிலைபெற்றொழுகும் ஆற்றல் இல்லாதாரைவெற்றித் திறம் வாய்ந்த வேந்தன் அவர்தாம் மேற்கொண்ட வேடத்திற்குப் பொருந்திய நல்லொழுக்க நெறியில் நிலைபெற்றொழுகச் செய்தால் அச் செயலே அவர்க்கும் பிறர்க்கும் வீடு பேற்றின் பத்தைத் தரும் நன்னெறியாகும் எ - று. வேடநெறி நில்லார் என்றது, தாம் புறத்தே மேற் கொண்ட தவவேடத்திற்குப் பொருந்த அகத்திலும் அத்தவநெறியினைப் பற்றி நடவாத கூடாவொழுக்கத்தாரை. தாம் மேற்கொண்ட வேடத்திற்கு ஏற்பத் தவவொழுக்கத்தினை நெகிழாதொழுகும் அகத்து உணர்வுடையவர்களே மெய்ம்மையான தவமுடையார் என்பார், வேடநெறி நிற்போர் வேடம் மெய் வேடமே என்றார். தவமேயன்றிப் புறக்கோலமாகிய தவவேடம்கூட முன்னைத் தவவொழுக்க முடையவர்களாலேதான் மேற்கொள்ளத் தக்கது என்பதும் அத்தகைய உள்ளத்துரனில்லாதவர்கள் தவ வேடத்தை மட்டும் மேற்கொள்வது பயனற்ற முயற்சியாய் முடியும் என்பதும் தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை அஃதிலார் மேற்கொள்வது (262) எனவரும் திருக்குறளிற் குறிக்கப்பெற்றமை காண்க. ஆகுதல் - பொருத்தமுடையதாதல் நாடகமாந்தரால் மேற்கொள்ளப்படுவதும் வேடம் எனப்படும். நாடகத்தா லுன்னடியார் போல் நடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் என்பது திருவாசகம். 54. ஞான மிலாதார் சடைசிகை நூல்நண்ணி ஞானிகள் போல நடிக்கின் றவர்தம்மை ஞானிக ளாலே நரபதி சோதித்து ஞானமுன் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே. (242) போலி வேடத்தாரைத் தக்க ஞானிகளாலே சோதித்து நல்வழிப் படுத்துதல் வேந்தனது கடமையென்கின்றது. (இ - ள்) மெய்யுணர்வு கைவரப்பெறாதார் மெய்யுணர் வுடையார்க்குரிய சடை சிகை பூணூல் முதலியவற்றை மேற் கொண்டு அகவுணர்வு சிறிதுமின்றிப் புறத்தே மெய்யுணர்வுடைய ஞானிகளைப் போன்று நடித்துத் திரிவராயின் வேந்தன் அன்னோர் செயல்களை மெய்யுணர்வுடைய சான்றோரைக் கொண்டு சோதித்து அவர்களுக்கு உள்ளவாறு மெய்யுணர்வு கொளுவுதல் நாட்டில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நலம் பயக்கும் செயலாகும் எ - று. ஞானமிலாதார் தம் புறவேடத்தால் தாம் கெடுதலோடு தம்மை நம்பிய பிறரையும் கெடுப்பாராதலின் வேந்தன் தக்காரைக் கொண்டு அன்னோரைத் திருத்தி நல்வழிப்படுத்துதல் அவர்களை உய்வித்தலோடு அவர்களை நம்பிக் கெடாதவாறு உலக மக்களையும் உய்வித்த நற்செயலாம் என்பார், ஞான முண்டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே என்றார். சடை சிகை மெய்யுணர்வையும் பூணூல் சாத்திர ஞானத்தையும் புலப்படுத்தும் அடையாளங்களாகும். ஞானமுடையார் இவரெனச் சோதித் துணரும் மெய்யுணர்வு ஏனையோர்க்கு இருத்தலியலாதாகலின் அரசன் ஞானிகளைக் கொண்டே சோதித்தல் வேண்டும் என்பார் ஞானிகளாலே சோதித்து என்றார். சடை, துறவிகட்குரியது. சிகை, இல்லறத்தார்க்குரியது. 55. ஆவையும் பாவையும் மற்றற வோரையும் தேவர்கள் போற்றுந் திருவேடத் தாரையும் காவலன் காப்பவன் காவா தொழிவனேல் மேவும் மறுமைக்கு மீளா நகரமே. (243) மன்னனாற் குறிக்கொண்டு காக்கப்பெறுவார் இன்னின்னார் என்கின்றது. (இ-ள்) பசுவையும் பாவை போலும் பெண்டிரையும் அறவோராகிய அந்தணர்களையும் தேவர்கள் போற்றுந் திருவேடத்தினராகிய சிவஞானிகளையும் உலகில் வரும் இடர்நீக்கிக் காக்குங் கடமையுடையவன் மாநிலங் காவலனாகிய மன்னனேயாவன். அவன் அவர்களைக் காக்குங் கடமையினைச் செய்யாதொழிவானாயின் அவன் மறுமையில் மீளா நரகத்தில் வீழ்ந்து வருந்தும் பெருந்துன்பத்தையடைவான் எ-று. M_gR. பாவை-பாவை போல்வாராகிய மகளிர். அறவோர்-அந்தணர்; துறவிகள். தேவர்கள் போற்றும் திருவேடத்தார் என்றது சிவஞானியராகிய அடியார்களை. நேயமலிந்தவராகிய அன்னோர் திருவேடத்தை அரன் எனவே கொண்டு தொழுதல் வேண்டும் என்பார் தேவர்கள் போற்றுந் திருவேடத்தார் என்றார். fhty‹_eh£o‹ ஐவகை யச்சங்களைப் போக்கிக் காக்கும் கடமை யினையுடைய வேந்தன். சாதுவாகிய பசுவும் பசுப் போன்று தம்மைப் பாதுகாக்கும் வன்மை பெறாத பாவையரும் அந்தணரும் அடியார்களும் உலகிற் கொடியோரால் வரும் துன்பங்களை எதிர்த்துத் தம்மைத்தாமே காத்துக் கொள்ளும் உடல் வலிமையற்றோராதலின் அவர்களைக் காத்தல் அரசன் கடமையாம் என்பதும், அரசனது காவலின்றி அன்னோர் தமது கடமையை நிறைவேற்றுதல் இயலாதென்பதும் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவலின்றெனின் இன்றாம் எனவரும் மணிமேகலைத் தொடராற் புலனாம்: அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் (543) என்றார் தெய்வப்புலவரும். இறைகாக்கும் வையக மெல்லம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் (547) என்பது திருக்குறள். ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர் காவலன் காவா னெனின் (590) தொழப்படுந் தேவர்தொழப் படுவானைத் தொழுதபின்னைத் தொழப்படுந் தேவர்தம்மால் தொழுவிக்குந்தன் தொண்டரையே எனவரும் அப்பர் அருள்மொழி இங்கு நினைத்தற்குரியதாம். 56. தத்தஞ் சமயத் தகுதிநில் லாதாரை அத்தன் சிவன் சொன்ன ஆகமநூல்நெறி எத்தண்ட முஞ்செயும் அம்மையில்; இம்மைக்கே மெய்த்தண்டஞ் செய்வதவ் வேந்தன் கடனே. (247) அவரவர்க்குரிய சமய நெறியில் வழுவாதொழுகச் செய்தல் அரசனது கடமை யென்கின்றது. (இ-ள்) எவ்வுயிர்க்கும் தந்தையாகிய சிவன், தான் அவரவர் பக்குவ நிலைக்கேற்ப அருளிச் செய்த அறிவு நூல்களின் நெறிகளிலே தாம் தாம் மேற்கொண்டுள்ள சமய ஒழுக்கத்திற்குத்தக நிலைபெற்றொழுகாத மக்களை இனிமேல் வரும் பிறவியிலே எத்தகைய கடுந்தண்டங்களையும் செய்து ஒறுத்தருளுவன். இப்பிறவியிலேயே அவர்களை உடலுடன்வைத்து ஒறுத்துத் திருத்துவது அத்தகைய இறைமைத் தன்மையுடைய அரசனது கடமையாகும். எ-று அத்தன் சிவன், சொன்ன ஆகம நூல்நெறி தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை அம்மையில் எத்தண்டமும் செயும்; இம்மைக்கே மெய்த்தண்டம் செய்வது அவ்வேந்தன் கடன் என இயையும். அத்தன்-அப்பன். உலகாயத முதற்கொண்டு எல்லாச் சமய நெறிகளும் உயிர்களது அறிவின் தரத்துக் கேற்பச் சிவபெருமானால் ஏணிப்படி நெறியாக அருளிச் செய்யப் பெற்றனவே என்பார் அத்தன் சிவன் சொன்ன ஆகம நூல்நெறி என்றார். நெறிகளுள் என ஏழாம் வேற்றுமையுருபு விரித்துரைக்க. ஆகமம் எனினும் நூல் எனினும் ஒரு பொருள். எத்தண்டமும்-மென்மையும் வன்மையுமாகிய எவ்வகைத் தண்டங்களையும். சிவன் அம்மையில் செய்யும்; இம்மைக்கே தண்டஞ் செய்வது அவ்வேந்தன் கடன் என்க. அம்மை-வரும் பிறப்பு. இம்மை-இப்பிறப்பு. மெய்த்தண்டம்-உடலுடன் வைத்து ஒறுத்தல். அவ்வேந்தன்-இறைவன் செய்யும் முறைமையாகிய அத்தன்மையை யுடைய அரசன். அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. வானச் சிறப்பு 57. அமுதூறு மாமழை நீரதனாலே அமுதூறும் பன்மரம் பார்மிசைத் தோற்றும் கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறுங் காஞ்சிரை யாங்கது வாமே. (248) மழைநீரா லுளதாம் பயன் கூறுகின்றது. (இ-ள்) அமிழ்தின் தன்மை சுரக்கும் மழையின் நீரினால் (உயிர்கட்கு) இனிமை சுரக்கும் தன்மையவாய பலவகை மரங்கள் நிலமிசைத் தோன்றி வளர்வன இனிமை சுரக்கும் கமுகு தென்னை கரும்புகளுடன் வாழை முதலியன அமிழ்தனைய நற்பயன்களைச் சுரப்பன. (இயல்பாகவே கசப்புடைய) எட்டியுங்கூட (மழையின் வளத்தால்) அவ்வமுதின் நீர்மையைப் பெற்றுச் சிறப்பதாகும். மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலால் அம்மழைதான் உலகவுயிர்கட்கு இறவாமையைத் தரும் அமுதம் என்றுணரும் பான்மையையுடையது என்பார், வானின் றுலகம் வழங்கி வருதலாற் றானமிழ்தம் என்றுணரற் பாற்று என்றார் திருவள்ளுவர். அமுதமுண்டார் சாவாது நிலை பெறுதலின் ஓரறிவுயிர் முதல் எல்லாவுயிர்களையும் உலகில் உடம்புடன் நிலைபெறச் செய்யும் மழைநீரை அமுதூறு மாமழைநீர் என்றார் திருமூலதேவர். ஊறு கமுகு தெங்கு கரும்பொடு வாழை அமுதூறும் எனவும் காஞ்சிரை(யும்) ஆங்கதுவாம் எனவும் இயைத்துரைக்க. காஞ்சிரை அமுதூறுதலாவது நீர்வளத்தால் தன் கசப்புத்தன்மை குறைதல். தவநிலைக்குரிய மூலிகையாதல்பற்டுக் காஞ்சிரையும் உடன் கூறப்பட்டது. ஆங்கதுவாதல்-முற்குறித்த அமுதின் தன்மையை யுடையதாய் வளம்பெற்று வளர்தல். மன்னானவன் உலகிற் கொரு மழையானவன் 1- 16-6 சொரிவிப் பார் மழை 5- 16-3 கார்க்குன்ற மழையாய்ப் பொழிவானை 7- 59-3 குழைக்கும் பயிர்க்கோர் மழையே யொத்தியால் 7- 4-4 தூயநீர் அமுதாயவாறது சொல்லு கென்றுமைக் கேட்கச் சொல்லினீர் 7- 88-9 தானச்சிறப்பு வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தலின் சிறப்பு. 58. ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின் பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின் வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. (250) இன்னாரென்னும் வேற்றுமையின்றி வறியாரெவர்க்கும் கொடுத் துண்மின் என அறிவுறுத்துகின்றது. (இ-ள்) எத்திறத்தோர்கும் (வறுமைத்துயர் நீங்கக்) கொடுப்பீராக. அத்தன்மையர் இத்தன்மையர் என்று வேற்றுமை பாராட்டாதீர்கள். விருந்தினர் வரும் காலத்தை எதிர்பார்த்து (அவருடன்) இருந்து உண்பீராக ஈட்டிய பொருளை (யார்க்கும் பயன்படாமற்) பழையனவாகக் கழியுமாறு இறுகச் சேர்த்து வைக்காதீர்கள் காக்கை தன்னினத்தை அழைத்து உடனுண்ணும் செவ்வியை அறிந்து ஒழுகுவீராக. வறியோராயின் அன்னோர் எத்தகையராயினும் அவர்தம் குல முதலிய வேற்றுமை கருதாது பொருள்தந்து பாதுகாத்தற் குரியராவர் என்பார், ஆர்க்கும் இடுமிண் அவர் இவர் என்னன்மின் என்றார். தன்கண்வந்த விருந்தினரை யுபசரித்து இனி வருதற்குரிய விருந்தினரை எதிர்பார்த்து வரவேற்று அவரோடு உடன் உண்டு மகிழ்தல் இல்வாழ்வார்க்குரிய கடமையாம் என்பார் பார்த்திருந்து உண்மின் என்றார். செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு (86) என்னும் திருக்குறள் இங்கு ஒப்புநோக்குதற் குரியதாகும் ஈட்டிய (சமைத்த) பொருள் பழையதாய்த் தன் ஆற்றலற்று முடங்க அதனைத் தானும் நுகராது பிறர்க்கும் வழங்காது இறுகச் சேர்த்து வைத்தல் அறமாகாது என்பார் பழம் பொருள் போற்றன்மின் என்றார். இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு என்னும் மெய்ம்மையை யுணராது உணவின்கண் பெரு விருப்புடையராய் விருந்தினரோடன்றித் தனித்து விரைந் துண்ணப் புகுதல் தவறென்பார் வேட்கையுடையீர் விரைந்து ஒல்லையுண்ணன்மின் என்றார். காக்கை தான் உண்ணப் புகுங்கால் தன் இனத்தையெல்லாம் அழைத்து உண்ணுதல் போலச் சுற்றமும் விருந்தும் சூழவிருந்து உடனுண்ணலே இல்வாழ்வாராற் செய்யத்தக்கது என்பார் காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே என்றார். காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும், அன்ன நீரார்க்கேயுள எனவரும் தமிழ்மறைப் பொருள் இதன் ஈற்றடியில் இடம்பெற்றுள்ளமை காண்க. விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும் இடகிலேன் அமணர்கள்தம் அறவுரைகேட் டலமந்தேன் எனவும் கொடையிலேன் கொள்வதே நான் எனவும் வரும் அப்பர் அருள்மொழிகள் இங்குக் கருதத்தக்கன. அறஞ்செய்வான் திறம் 59. யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே. (252) யாவரும் அன்றாட வாழ்க்கையில் எளிதில் மேற்கொள்ளுதற் குரிய அறங்களாவன இவையென்றுணர்த்துகின்றது. (இ - ள்) இறைவனுக்கு ஒரு பச்சிலையிட்டு வழிபடுதல் என்பது யாவர்க்கும் உரிய எளிய செயலேயாம். பசுவுக்கு ஒருவாய்ப் புல்லைப் பறித்தளித்தல் எல்லோர்க்கும் இயல்வதேயாம். தாம் உண்ணுங் காலத்தில் ஒரு கைப்பிடி உணவைப் பிறர்க்குக் கொடுத்தல் எல்லார்க்கும் எளிய அறமேயாகும். பிறருக்குப் (பொருளை வழங்க முடியாவிட்டாலும்) இனிய மொழிகளைப் பேசுதல் எளிய நல்லறமேயாகும். எ-று. யாவர்க்கும் - செல்வர் வறியோர் என்னும் வேறுபாடு இன்றி எத்திற மக்களுக்கும். ஆம் - இயலக்கூடியதாகும். உறக்கம் நீங்கியெழுந்தவுடன் தெய்வ வழிபாடும் பசுக்காத்தலும் உண்ணும் போது ஒரு கைப்பிடி உணவினைப் பிறர்க்குக் கொடுத்து உண்ணுதலும் யாவரிடத்தும் இன்னுரைகளைப் பகர்தலும் செல்வர் வறியவர் என்னும் வேறுபாடின்றி எல்லோராலும் நாள்தோறும் வழுவாது செய்தற்குரிய எளிய நல்லறங்களாம். அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந் தின்சொல னாகப் பெறின் என்பதனை நினைவுபடுத்தும் முறையில் அமைந்தது யாவர்க் குமாம் பிறர்க்கின்னுரைதானே எனவரும் இறுதி அடியாகும். நொச்சியாயினுங் கரந்தையாயினும் பச்சிலையிட்டுப் பரவும்தொண்டர் கருவிடைப்புகாமற் காத்தருள்புரியுந் திருவிடைமருத என்றார் பட்டினத்தடிகளும், தெய்வ வழிபாடு, உயிரிரக்கம், உணவளித்தல், இன்சொற் கூறல் என்பன எளிய அறங்களே யாதலின் ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல் என வற்புறுத்து வாராயினர். 60. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி இளைப்பினை நீக்கும் இருவழியுண்டு கிளைக்குந் தனக்குமக் கேடில் புகழோன் விளைக்குந் தவம் அறம் மேற்றுணையாமே. (258) பிறவித் துன்பங்களைப் போக்குதற்குத் தவமும் அறமுமே துணையாம் என்கின்றது. (இ - ள்) அலைகள் மோதித்தாக்கும் இருவினைகளின் பயனாகிய பிறவிக்கடலை விட்டுக் கரையேறுதற்கு உதவும் தோணியாய் உயிர்களின் இளைப்பினை நீக்குதற்குரிய இரு வழிகள் உள்ளன. கெடுதலில்லாத புகழையுடைய அவ் இறைவனை நினைந்து செய்யும் நல்ல தவமும் அறமுமாகிய இவ்விரு வழிகளே (தன்) சுற்றத்தார்க்கும் தனக்கும் மறுமைக்குத் துணையாய் நின்றுதவுவனவாகும் எ-று. திளைத்தல்-பொருதல்; மோதுதல். இளைப்பாவது-புல் முதலிய பல பிறவிகளை எடுத்து அலைந்தமையால் உளதாகும் சோர்வு. புல்லாகிப் பூடாய் ............. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் என்பது திருவாசகம். இருவழியாவன பிற் கூறப்படும் தவமும் அறமுமாகிய நெறிகள். கேடில் புகழோன் என்றது அழியாப் புகழினனாகிய இறைவனை. இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையரெனக் கருதி உலகத்தார் கூறும் புகழுரைகள் பொருளற்ற கற்பனையாய்ச் சிதைவன ஆதலின் இறைமைக் குணங்கள் முற்றுமுடைய இறைவனே கேடில் புகழோனாவன். கேடில் புகழோனை எண்ணி விளைக்குந் தவமும் அறமும் என்க. ஈண்டு தவம் துறவினையும் அறம் இல்லறத்தையும் குறித்துநின்றன. மேல்-மறுமை. அறம் செய்த உடம்பு அழியவும் உயிரோடொன்றி ஏனையுடம்பினும் துணையாய்ச் சேறலில் மேற்றுணை யாமே என்றார். அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது பொன்னுங்காற் பொன்றாத் துணை என்றார் தெய்வப்புலவரும். அறஞ்செய்யான் திறம் அறஞ் செய்யாதார் இயல்புணர்த்துகின்றது. 61. இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது முன்பவர் செய்கையினாலே முடிந்தது இன்ப மதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம் அறியாரே. (267) அறத்தான் வருவதே இன்பமென்பதுணர்ந்து அறஞ் செய்யாதார் அறிவிலர் என்கின்றது. (இ - ள்) மக்கள் வாழ்க்கையில் இன்பம் துன்பம் என இருவகை நுகர்ச்சிகள் பொருந்த(இறைவன்)வகுத்த நியதி முற் பிறவிகளில் அன்னோர் செய்த நல்வினை தீவினைகளாலே வரையறுக்கப்பட்டு முடிந்ததாகும். தம்பாலுள்ள பொருளை வறியோர்க்கு வழங்கி மகிழ்தலாகிய அவ்வின்பத்தினை நல்லோர்பாற் கண்டிருந்தும் தம்பாலுள்ளதனை வறியோர்க்கு ஈயமாட்டாத அறிவிலிகள் உயிர்ப்பண்பாகிய அன்பிலராவர். எனவே அதன் பயனாய் மாசற்றவுள்ளத்தின் நிலைபெற்ற அறத்தினையும் அறியமாட்டாராயினார் எ-று. உயிர்கள்பால் அன்புடைமையே இல்வாழ்க்கையின் பண்பாகவும் அன்பின் காரணமாகத் தம்பால் வந்த வறியார்க்கு வழங்கிப் பகுத்துண்டு வாழ்தலாகிய அறமே வாழ்க்கையின் பயனாகவும் அமைந்த திறத்தை உள்ளவாறறிந்தாராயின் அன்பினால் அறஞ்செய்து இன்புறுந்திறத்தைப் பெற்றிருப்பர் என்பார், இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள் அன்பிலார் சிந்தை அறம் அறியாரே என்றார். அன்பும் அறனு முடைத்தாயி னில்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்றார் தெய்வப்புலவரும். இறைவன் இன்பத்திற்குக் காரணமாகிய அன்பாகிய பண்பாகவும் அன்பின் செய்கையாகிய அறமாகவும் திகழ்கின்றான் என்பது அறவாழியந்தணன் எனவும் அறக்கண்ணென்னத் தகும் அடிகளாரூரர் எனவும் வரும் வாய்மொழிகளாற் புலனாம். ஈதல் இன்பத்தை நல்கும் செயலாதலும் இவறன்மை துன்பத்தை நல்கும் குற்றமாதலும் ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை வைத்திழுக்கும் வன்கணவர் (228) எனவரும் திருக்குறளாற் புலனாம். ஈபவர்க்கருளும் வைத்தார் என்பது அப்பரருள் மொழி. அன்புடைமை தொடர்புடையார்கண் காதலுடையராதல்; உயிர்க் குயிராய்ப் பிரிவின்றியுள்ள இறைவனிடத்து அன்புடையராதலை யுணர்த்துகின்றது. 62. அன்பு சிவமிரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே. (270) உயிர்ப் பண்பாகிய அன்புக்கும் உயிர்க்குயிராகிய சிவத் துக்கும் உள்ள பிரிக்கமுடியாத தொடர்பினை உணர்த்துகின்றது. (இ - ள்) இறைவனையடைதற்குச் சாதனமாகிய அன்பும் அதனாலடையத் தகும் பயனாகிய சிவமும் என இருவேறு பொருளாகப் பிரித்துரைப்பர் அவற்றின் இயைபினை அறியாதார். உயிரிடத்துக் காணப்படும் அன்பே சிவ பரம் பொருளின் விரிந்த விளக்கமாகும் என்பதை எத்துணையறிஞர்களும் உள்ளவாறு அறியமாட்டாராயினர். உயிர்ப்பண்பாகிய அன்பே சிவத்துவ விளக்கமாகும் என்னும் மெய்ம்மையினை யாவரும் (அனுபவத்தால்) அழுந்தி அறிந்தபின்னர் அன்னோர் எவ்வுயிரிடத்தும் விரிந்து விளங்குவதாய்த் தம்பால் நிலைபெற்ற அன்பே சிவமாகி விரிந்து தோன்ற அத்தகைய சிவத்தின் வியாபகத்துள்ளே (விரிவினுள்ளே) அன்புருவாய்ப் பிரிப்பின்றி அமர்ந்திருந்தார்கள் எ-று. எவ்வுயிரும் நீங்காதுறையும் இறையாகிய சிவத்தின் விரிந்த விளக்கமே உயிர்களிடத்துக் காணும் அன்பாகிய பண்பென வுணர்ந்து அன்புருவாகிய பரமசிவத்தினிடத்தே நீங்காத பேரன்புடையராய் வழிபட்டு ஒழுகுவோரே எவ்வுயிர்க்கும் அன்புடையார் தமக்கும் அன்புடையார் ஆவர். இவ் உண்மையை உணராதார் அன்பு சிவம் என்பன தனித்த இருவேறு பொருள்கள் என்றெண்ணிப் பிழைபடப் பேசுவர் என்பார். அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் என்றார். உயிர்க்குணமாகிய அன்பென்பது சிவபரம்பொருளின் திருவுருவ விளக்கமே யன்றி அதனின் வேறாய பிறிதொரு பொருளன்று என்பார், அன்பே சிவமாவது என்றார். ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே, அன்பினில் விளைந்த ஆரமுதே என்பது திருவாசகம். சிவத்துவ விளக்கமாகிய அன்பினைப் பெருக்குதற்கே உயிர்கட்கு என் போடியைந்த இவ்வுடம்பு கொடுக்கப் பெற்றதென்பது, அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு எனவரும் பொதுமறையாற் புலனாகும். மகிழ்திட மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் _ இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே யின்னும் பெருக்கு எனவரும் காரைக்கால் அம்மையார் அருளிச் செயலும் அழலார் வண்ணத் தம்மானை அன்பிலணைத்து வைத்தேனே எனவரும் அப்பர் அநுபவ மொழியும் இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கனவாகும். அன்பு என்பது சிவத்துவ விளக்கமே என்பதும் அவ்விளக்கத்தை முழுவதும் பெற்றோர் சிவத்தோடு பிரிவின்றியுடனாம் வீடுபேற்றினைப் பெற்றவராவர் என்பதும் உணர்த்துவார், அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே என்றார். தெளிவுபற்றி அமர்ந்திருந்தார் என இறந்த காலத்தாற் கூறினார். அறிதல் என்றது அழுந்தியறிதலாகிய அனுபவத்தினை. முன்புசெய் தவத்தின் ஈட்டம் முடிவிலா இன்பமான அன்பினை யெடுத்துக்காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்பெருங் காதல்கூர வள்ளலார் மலையை நோக்கி என்பு நெக்குருகியுள்ளத் தெழுபெரு வேட்கையோடும் நாணனும் அன்பும் முன்பு நளிர்வரை ஏறத்தாமும் பேணுதத்துவங்க ளென்னும் பெருகு சோபானம் ஏறி ஆணையாஞ் சிவத்தைச்சார அணைபவர்போல ஐயர் பொங்கிய ஒளியினீழல் பொருவிலன் புருவமானார். பிறதுறை வேட்கைநீங்கி அன்புகொண்டுய்ப்பச் செல்லும் அவர் சார்வருந் தவங்கள் செய்து முனிவரும் அமரர்தாமும் கார்வரை யடவிசேர்ந்துங் காணுதற்கரியார் தம்மை ஆர்வமுன் பொங்க ஆரா அன்பினிற் கண்டுகொண்டே நேர்பெற நோக்கிநின்றார் நீளிருள் நீங்க நின்றார் முன்பு திருக்காளத்தி முதல்வனார் அருள்நோக்கால் இன்புறு வேதகத்திரும்பு பொன்னானாற்போல் யாக்கைத் தன்பரிசும் வினையிரண்டுஞ் சாருமல மூன்றுமற அன்புபிழம் பாய்த்திரிவார், அவர்கருத்தின் அளவினரோ எனவரும் சேக்கிழார் வாய்மொழிகள் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரது இயல்பினை உள்ளவாறுணர்த்துதல் காணலாம். ஈசனுக் கன்பில்லா ரடியவர்க் கன்பில்லார் எவ்வுயிர்க்கு மன்பில்லார் தமக்கு மன்பில்லார் பேசுவதென் அறிவிலாப் பிணங்களை நாமிணங்கிற் பிறப்பினினும் இறப்பினினும் பிணங்கிடுவர் விடுநீ எனவரும் அருணந்தி சிவனார் வாய்மொழியும் இங்கு நோக்கத் தகுவதாகும். 63. என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி யகங் குழைவார்க் கன்றி என்பொன் மணியினை எய்த வொண்ணாதே. (272) அன்பினாலன்றி இறைவனை யடையமுடியாதென்கின்றது. (இ-ள்) எலும்பினையே விறகாகக் கொண்டு பொன் போன்று ஒளியுடையதாய்க் திகழும் (நெருப்பினை மூட்டி அத்) தீயின்கண் தன்னுடம்பின் தசையை அறுத்து இட்டு (அதனைப் பொன்னிற முடையதாய்ப்) பொரியும்படி வறுத்தாலும் (கடுந் தவங்களைச் செய்தாலும்) அன்பினால் நெஞ்சம் நெகிழ்ந்து உருகிக் குழையும் இயல்புடையார்க் கல்லாமல் (அன்பரல்லாத பிறரெவராலும்) என்னுடைய மனமணியாகத் திகழும் இறைவனை அடைய முடியாது எ - று. என்பே விறகா இறைச்சியறுத்திட்டு என்றதனால் காமியப் பயன் கருதிச் செய்யுங் கடுந் தவத்தினையும் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் என்றதனால் அத்தகைய பயன் கருதிச் செய்யும் வேள்வியையும் ஒருங்கு குறித்துள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். காமியப் பயன்களைக் கருதிச் செய்யப்படும் வேள்வி முதலாயினவற்றால் வரும் இன்பம் முன்னர்ப் பசித்து உண்டு பின்னும் பசிப்பானுக்கு அவ்வுணவினால் வரும் இன்பத்தையொத்து நிலையிலதாதலின், இவை மெய்ப் பொருளையுணர்தற்குரிய ஞானத்தைத் தருவன அல்ல என்பதும், இறைவனை மறவாத பேரன்பினாற் செய்யப்படும் சரியை கிரியா யோகங்களாகிய அன்புநெறியே இறைவனை உள்ளவாறுணர்ந்து அடைதற்குரிய மெய்ந்நெறியாம் என்பதும் விளங்க, அன்போடுருகி யகங்குழைவார்க் கன்றி என்பொன் மணியினை எய்தவொண்ணாதே என்றார். அன்புரிமை தோன்ற என்பொன்மணி என்றார். என் பொல்லா மணியே என்பது திருவாசகம். ஞான மீசன் பாலன்பே என்றனர் ஞானமுண்டார் எனவரும் சேக்கிழார் வாய்மொழியும் இங்குச் சிந்திக்கத் தகுவதாகும். 64. ஆர்வமுடையவர் காண்பர் அரன் தன்னை ஈரமுடையவர் காண்பார் இணையடி பாரமுடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெறிகொடு கொங்கு புக்காரே. (273) ஆர்வமும் அதற்குக் காரணமாகிய அன்புமுடையா அடையும் பயனும் அஃதிலாதார் எய்தும் இழிவு உணர்த்துகின்றது. (இ-ள்) அன்பின் மிகுதியாகிய ஆர்வத்தையுடைய உருகுமனத்தின் அடியார்கள் பிறவி வேரறுக்கும் இறைவனைக் கண்டு இன்புறுவர். எவ்வுயிர்க்கும் பரிவாகிய அன்புடையவர்கள் எவ்விடத்தும் இறைவன் திருவடியினைக் கண்டு மகிழ்வார்கள். அன்பென்னும் பண்பின்றி உலகப்பற்றாகிய சுமையினை யுடையவர்கள் அடுத்தடுத்துளவாம் பிறவியையே பெற்று அல்லற்படுவர். அன்பிலாதாராகிய அவர்கள் அஞ்சத்தக்க நெறியினைப் பின் பற்றிக் கொங்கு நாட்டினிற் புகுவோரைப் போன்று மீளாத் துன்பத்தில் அகப்பட்டோராவர் எ - று. அன்பீனும் ஆர்வமுடைமை யதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு என்றார் தெய்வப் புலவரும். தொடர்புடையாரிடத்துக் செய்த அன்பு அத்தன்மையாற் பிறரிடத்தும் விருப்பமுடைமையைத் தோற்றுவிக்கும். அவ்விருப்பமுடையையாகிய ஆர்வம் யாவரும் நண்பர் என்று கருதும் அளவிறந்த சிறப்பினைத் தருவதாகும் என்பது இதன் பொருளாகும். தொடர்புடைய உயிர்களிடத்து அன்புடையார் அவ்வுயிர்களிடத்து இறைவனுடைய ஞானசத்தி கிரியா சத்தியாகிய திருவடிகளைக் கண்டு பயன்பெறுவர் என்பார், ஈரமுடையவர் காண்பார் இணையடி என்றார். ஈரம் - அன்பு. அன்பின் வளர்ச்சியாகிய ஆர்வத்தினைப் பெற்றவர்கள் பகையும் நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று கொண்டு எவ்வுயிர்களையும் சிவனெவே காணும் தெளிவுடை யராவர் என்பார், ஆர்வமுடையவர் காண்பார் அரன்றன்னை என்றார். பார்பதம் அண்டமனைத்துமாயெங்கும்பரந்ததோர்படரொளிப்பரப்பே...........ahUw வெனக்கிங் காரயலுள்ளார் ஆனந்தமாக்குமென் சோதி எனவரும் திருவாசகம் இங்கு நினைத்தற்குரியதாகும். கோரநெறி - ஆறலைப்பார் வாழும் அஞ்சத் தக்க நெறி. கொங்கு புக்கார் கூறை கோட்படுவர் ஏமரார் கொங்கேறினார் என்னும் பழமொழி இத்திருமந்திர அடியை அடியொற்றியதாகும். கல்வி இறைவனைப் பற்றிய அறிவுநூல்களைக் கற்றல். 65. நிற்கின்றபோதே நிலையுடையான்கழல் கற்கின்ற செய்மின் கழிந்தறும் பாவங்கள் சொற்குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின் மற்றொன் றிலாத மணிவிளக்காமே. (292) வாழ்நாள் உள்ளபோதே மெய்ந்நூற் கல்வியைக் கற்று அதற்குத் தக ஒழுகுக என்று கூறுகின்றது. (இ - ள்) நிலையாத உடம்பில் உயிர் நிற்கின்ற காலத் திலேயே கேடிலியாய் என்றும் நிலைபெற்றுள்ள இறைவன் திருவடிகளைப் போற்றும் மெய்ந்நூல்களை இடை விடாது கற்றலைச் செய்வீராக. அங்ஙனம் கற்பீராயின் முன்னைப் பாவங்கள் நும்மைவிட்டுக் கழிந்து தொலையும். அந் நூல்களிற் சொல்லியவண்ணம் சொற் சோர்வுபடாமல் இறைவனைப் போற்றி வணங்குவீராக. அவ்வாறு வணங்கினால் மற்றொன்றினால் அடரப்படாத தூய மாணிக்க மணிவிளக்காக இறைவன் நும்முள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுவன் எ - று. நிற்கின்றபோதே - நிலையாத யாக்கை நிலைபெற்றுள்ள பொழுதே. ஒருபொழுதும் நிலையுடையதன்று என்பார் நிற்கின்றபோதே என்றார். நிலையுடையான் - என்றும் அழிவில்லாத முதல்வன் ; கேடிலி. நிலையுடையான்கழலகேடு படாத் திருவடி. கற்றல் -அனுபவமுடைய தேசிகர் பலர் பக்கலிலும் பலகாலும் பயிலுதல் கறீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மறீண்டு வாராநெறி (356) என்பது திருக்குறள் சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி இறைவனைப் பரவிப்போற்றுக என்பார், சொற்குன்றல் இன்றி தொழுமின் என்றார். மற்றொன்றிலாமை - மற்றொன்றல் தடைப்பட்டுத் துளங்குதலும் மாசுபடிதலும் இல்லாமை மணிவிளக்கு - இரத்தின தீபம். சுடர்விட்டுளன் எங்கள் சோதி இரந்திரந்துருக என் மனத்துள்லே யெழுகின்ற சோதியே சோதியே சுடரே சூழ் ஒளிவிளக்கே மதிப்பவர் மனமணி விளக்கை எனவரும் திருமுறைத் தொடர்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கனவாம். இறைவனைப் போற்றித் தொழுதலால் முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் வேரொடுங்கெடும் என்பது முன்னை நான் செய்த பாவம் முதலறப் பின்னை நான் பெரிதும் அருள் பெற்றதும் அன்னமார் வயற் கோழம்பத் துள்ளுறை பின்னலார் சடையானைப் பிதற்றியே எனவரும் அப்ப ரருள்மொழியால் இனிது விளங்கும். 66. கடலுடையான் மலையானைந்து பூதத் துடலுடையான் பல வூழிதொ றூழி அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன் இடமுடையார் நெஞ்சத் தில்லிருந்தானே. (299) கற்பார் நெஞ்சில் நிற்பான் இறைவன் என்கின்றது. (இ - ள்) உலகில் விரிந்து ஆழ்ந்த நீராகிய கடலைத் தனக்குரிய இடமாகவுடையவன். வானுறவுயர்ந்த மலைகளை இடமாகக் கொண்டவன். ஐம்பூதங்களையும் தனக்குரிய உடம்பாகவுடையவன். உலகமெல்லாம் ஒடுங்கும் பலவூழிகள் தோறும் தனக்கழிவின்றி வெற்றிமிக்கு விளங்கும் அறவுருவாகிய விடையினை ஊர்தியாகக் கொண்ட மகாதேவன். இடைவிடாது தன்னைத் தியானித்தலால் விரிந்து பரந்த இடைமுடைய மெய்யுணர்வுடையார் நெஞ்சத்தினையே தனக்குரிய கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருக்கின்றான் எ - று. கடலும் மலையுமாக இறைவன் கலந்து விளங்குந் திறத்தினை, கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானை எனவும் ஐம்பூதங்களையும் பிறவற்றையும் உடம்பாகக்கொண்டு விளங்குந் திறத்தினை நிலநீர் நெருப்புயிர் நீள் விசும்பு நிலாப் பகலோன், புலனாயமைந்தனோ டெண் வகையாய்ப் புணர்ந்து நின்றான் எனவும் வரும் திருமுறைத் தொடர்களாலுணரலாம். ஊழிக் காலத்தும் உலையாத பெருவலியுடைய அறவுருவாகிய ஆனேறூர்வோன் என்பார் பலவூழிதோறூழி அடல் விடை யேறும் அமரர்கள் நாதன் என்றார். அடலானே றூரும் அடிகள் என்பது ஆளுடைய பிள்ளையார் அருள்மொழி. வேண்டுதல் வேண்டாமையினாற் சுருங்காது மகவெனப் பல்லுயிர் அனைத்தையும் ஒப்ப மதித்துப் பரந்திடங் கொடுக்கும் விசும்புதோயுள்ளமுடையார் என்பார் இடமுடையார் நெஞ்சத்து என்றார். குறமனம் முன்கலவாத் தமிழாகரன் என்பதும் அது. நெஞ்சத்து இல் - நெஞ்சமாகிய கோயில். நினைப்பவர் மனங் கோயிலாகக் கொண்டவன் என்பதாம். கேள்வி கேட்டமைதல் கேட்கப்படும் நூற்பொருளைக் கற்றறிந்தார் கூறக்கேட்டு ஆசான் கூறிய நெறியில் அமைந்தொழுகுதல். வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்வதற்கு உபாயம் மூன்று; அவை கேள்வி, விமரிசம் பாவனை என்பன. அவற்றுட் பலர்பக்கலிலும் பலகாலும் கேட்டுப் பயிறலாகிய கல்வியின் இன்றியமையாமை முன்னர் விளக்கப் பெற்றது. கல்வி கேள்விகளின் பயனாகிய ஓர்த்துணர்தலாகிய விமரிசமும் செம்பொருள் காண்டலாகிய பாவனையும் இவ்வதிகாரத்திற் கூறப்படும். 67. தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின் ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின் ஓதியுணர்ந்தவர் ஓங்கிநின்றாரே. (301) முதற்பொருளை அறிதற்குரிய உபாயங்கள் இவையென உணர்த்துகின்றது. (இ-ள்) தேவர்களுக்கெல்லாந் தலைவனும் ஒளிதிகழும் திருமேனியை யுடையானும் ஆகிய இறைவனை உங்களில் யாவர் ஒருவர் உள்ளவாறு அறியப்பெற்றார்களோ அத்தன்மை யராகிய நீவிர் அம்முதல்வனை உள்ளவாறு அறிந்த பின் அவனது பொருள்சேர் புகழ்நூலை ஓதுமின். அறிஞர் வாயிலாக அந்நூற் பொருளை இடைவிடாது கேட்பீராகத் அதனை உள்ளத்தில் ஆராய்ந்துணர்வீராக. உணர்ந்த பின் அவ்வாறு ஓதியுணர்ந்தார் அம் மெய்ப்பொருளோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தலால் அதுஅதுவாய்ப் பிரிவற்ற நிலையில் உயர்ந்து நின்றாராவர். எ-று. ஓதுதல் என்றது கற்றலை. கேண்மின் என்றது கேட்டலை. உணர்தல் என்றது ஆராய்தலாகிய விமரிசத்தை ஓங்கி நிற்றலாவது - மெய்ப்பொருளை இடைவிடாது ஒற்றுமையுறப் பாவித்து உயர்நிலையடைதல். ஓர்த்துள்ள முள்ளதுணரின் ஒரு தலையாப், பேர்த்துள்ள வேண்டா பிறப்பு என்றார் திருவள்ளுவரும். 68. பெருமான் இவனென்று பேசியிருக்கும் திருமானிடர் பின்னைத் தேவரும் ஆவர் வருமாதவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும் அருமாதவத் தெங்கள் ஆதிப்பிரானே. (303) சிவோகம்பாவனை செய்வோர் எய்தும் பயன் கூறுகின்றது. (இ - ள்) எல்லாம் வல்ல பெருமானாகிய அவனே உயிராகிய இவனாகவும் ஒட்டி வாழ்கின்றான் என அம்முதல்வனது பெருமைகளைத் துதித்து அவனை ஒருமையுடன் போற்றி யிருக்குந் திருவுடைய மனிதர்கள் அங்ஙனம் பின்னர்த் தேவராம் பெருவாழ்வையும் பெறுவோராவர். இங்ஙனம் அமைந்த வருதலாகிய பெருந் தவமுடையார்க்கு அன்னோர் செய்த அரியதவங்களின் பயனாக எங்கள் முதல்வனாகிய பெருமான் திருவுளமகிழ்ந்து அருள்புரிவான் எ - று. பெருமான், அவன் என்பதுபட நின்றது. இவன் என்றது, தியானிக்கும் ஆன்மாவை. பேசியிருத்தலாவது இறைவனது புகழைப் பேசித் தன் முனைப்பற அவனது அருள்வழி யடங்கித் தியானித்து நிட்டை கூடியிருத்தல். அங்ஙனமிருப்போர் சிவமேபெறுந் திருவுடைய தலையாய மனிதர் என்பார் திருமானிடர் எனச் சிறப்பித்தார். பின்னை - தியானித்த பின்பு. தேவரும் ஆவர் என்பது அவ்வாறு தியானிக்கப்பெறும் சிவமேயாகவும் திகழப் பெறுவர் என்பதாம். உயிராவணஞ் செய்திட் டுன்கைத் தந்தார் உணரப்படுவாரோ டொட்டி வாழ்தி எனவும் நாற்றானத் தொருவனை நானாய பரனை செச்சை மலர்புரை மேனியன் திருப்பெருந்துறையுறைவான் நிச்சம் மென நெஞ்சின் மனனி யானாகி நின்றானே எனவும் வரும் அருளிச் செயல்கள் இங்கு நினைக்கத் தக்கன. எங்கள் ஆதிப்பிரான் வருமாதவர்க்கு அருமாதவத்து மகிழ்ந்தருள் செய்யும் என இயையும். அருந்தவத்தின் பெருவலியால் அறிவதன்றி என்பது அப்பர் தேவாரம். கல்லாமை இறைவன் புகழ்த்திறங்களைக் கற்றலைச் செய்யாமை; என்றது அதனினாய இழிபினை. விதி முகத்தாற் கூறிய அளவில் முற்றுப்பெறாமை நோக்கி எதிர்மறை முகத்தானும் கூறுகின்றார். 69. ஆதிப்பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் சோதிஅடியார் தொடரும் பெருந்தெய்வம் ஓதிஉணர வல்லோமென்பர் உண்ணின்ற சோதி நடத்துந் தொடர் வறியாரே. (319) இறைவனூல்களைக் கல்லாமையால் வரும் இழிவு கூறுகின்றது. (இ - ள்) உலகத் தோற்றத்திற் கெல்லாம் நிமித்த காரணமாகிய முதல்வன். தேவர்களாலும் அறிதற்கரிய மேலாகிய சுடர்ப்பொருள். உயிர்களின் உள்ளத்தே நுண்ணிய சோதியாகத் திகழ்வோன். அடியார்கள் அன்பினால் தொடர்ந்து போற்றும் பெருமைவாய்ந்த தெய்வம். எல்லா நூல்களையுங் கற்றுணர்ந்தோம் எனத் தம்மை வியந்துரைக்கும் உலகத்தாரிற் பலர் உயிர்க்குயிராய் உள்நின்ற சோதிப் பொருளாகிய இறைவன் உலகினையும் உயிர்களையுங் கலந்து நின்று இயக்கும் அந்துவித சம்பந்தமாகிய தொடர்பினை ஒருசிறிதும் அறியாதாராயினர் எ - று. பரஞ்சுடர் என்றது, அண்டவொளியும் அகண்டவொளியும் ஆக விளங்கும்நிலையினை. சோதி என்றது உயிர்க்குயிராய் நின்று அறியாமையிருளைநீக்கி அறிவிக்கும் நிலையினை. உண்ணின்ற சோதி எனப் பின்விளக்குதல் காண்க. தொடர்தல் - அன்பினால் போற்றுதல். நடந்துந் தொடர்பாவது அவையே தானேயாய் இருவினையிற் போக்குவரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்றல். மெய்ப்பொருளைக் கல்லாதார் எத்துணை உலக நூல்களைக் கற்றுணர்ந்தாராயினும் உண்மை யறிவு பெறார் என்பதாம். நடுவு நிலை எல்லாப் பொருட்கும் நடுவாய், வேண்டுதல் வேண்டாமை யின்றி நிற்கும் சிவபரம்பொருளின் அருள்வழி நிற்றல். 70. நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை நடுவுநின்றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின்றார் நல்ல தேவரும் ஆவர் நடுவுநின்றார்வழி நானும் நின்றேனே. (320) நடுவுநிலைமை இல்வழி யுளவாம் தீமையும் நடுவுநிற்பார்க் குளவாய நன்மையும் கூறுகின்றது. (இ - ள்) நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியாக நடுநிற்கும் சிவனருள்வழி நின்றவர்க்கன்றி மெய்யுணர்வு தோன்றுதலில்லை. அங்ஙனம் அருள்வழி நிற்பார்க்குத் துன்பவுலக நுகர்ச்சியும்இல்லை. அருள்வழிநிற்கும் நடுநிலையாளர் உலகிற்கு நலம் அளிக்கும் தேவரும் ஆவர். எனவே அங்ஙனம் நடுநிற்பார் வழியினை அடியேனும் பின்பற்றி ஒழுகுவேனாயினேன். எ-று. இனி நடுவுநிலைமையாவது பகை நொதுமல் நண் பென்னும் முத்திறத்தார் மாட்டும் ஒப்பநிற்கும் நிலைமை இந்நிலை, வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவனது இயல்பாதலின், அவ்வியல்பினை யுணர்ந்தொழுகுதற்கு அவனருள்வழி யொழுகுதல் காரணமாதலின் காரணமாகிய அந்நிலையே ஈண்டு நடுவுநிலை யெனப்பட்டது எனினும் ஆம். பார்பதம்.... யாருறவெனக்கிங்கியார யலுள்ளார் ஆனந்தமாக்கும் எம் சோதி உடையாளுன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவு ளிருவீரு மிருப்பதானால் அடியேனுன் அடியார் நடுவுளிருக்கும் அருளைப்புரியாய் எனவரும் திருவாசகம் நடுவுநிற்றலை விளக்குவதாகும். இடகலை பிங்கலை சுழுமுனையாகிய மூன்றனுள் சுழுமுனை வழியில் நிற்றல் நடுவுநிலை என்பதும் உண்டு. இறை புரிந்து என்றார் திருவள்ளுவர். இறை - நடுவுநிலை. 71. நடுவு நின்றான் நல்ல கார்முகில்வண்ணன் நடுவு நின்றான் நல்ல நான்மறையோதி நடுவு நின்றார் சிலர் ஞானிகளாவோர் நடுவு நின்றார் நல்ல நம்பனுமாமே. (321) நடுவு நிலையில் நிற்போர்பெறும் பயன் கூறுகின்றது. (இ-ள்) நடுவுநிலையில் நின்று காத்தருள்பவன் நல்ல கார்மேக வண்ணனாகிய திருமால். நடுவுநிலையில் நின்று படைத்தருள்வோன் நல்ல நான்கு வேதங்களையும் ஓதிய நான்முகக் கடவுள். நடுவுநிலையில் நிலைத்து நிற்போர் சிவஞானம் கைவரப்பெற்றோராவர். நடுவுநிலையில் நிற்போர் யாவராலும் விரும்பத்தக்க நல்ல சிவனேயாவர். எ-று. நடுவுநிற்றல் காத்தல் படைத்தல் ஆகிய பெருந் தொழில் கட்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் யாவராலும் விரும்பத்தகும் விழைவுக்கும் ஏதுவாம் என்பது கருத்து. நம்பன் - யாவராலும் விரும்பத்தக்க இறைவன். இரண்டாந் தந்திரம் முதல் தந்திரத்திற் கூறப்பட்ட அறநெறி - ஒழுக்க நெறியில் நின்றவர்கள் அடையும் நலமும், நில்லாதவர்கள் அடையும் துன்பமும் இத்தன்மையன என்பதனைப் புராண வரலாறுகள் மூலமாக எடுத்துக்காட்டி விளக்கும் முறையில் அமைந்தது திருமந்திரத்தின் இரண்டாந் தந்திரமாகும். இஃது அகத்தியம் என்பது முதல் பெரியாரைத் துணைக் கோடல் ஈறாக இருபத்தைந்து தலைப்புக்களையுடையதாகும். இதனைக் காமிகாகமத்தின் சாரமென்பர். அகத்தியர் இறைவரது ஆணையால் உலகத்தைச் சமமாகச் செய்த வரலாற்தைக் குறிப்பிடுவது அகத்தியம் என்ற பகுதியாகும். இறைவன் நல்லோரைக் காத்தற் பொருட்டுத் தீயோரை ஒறுத்தடக்கிய வீரச் செயல்கள் எட்டினையும் விரித்துரைக்கும் பகுதி பதிவலியில் அட்ட வீரட்டம் என்பதாம். திருக்கோவலூரில் அந்தகாசுரனும். திருப்பறியலூரில் தக்கனும், திருக்கண்டியூரில் அயனும், திகுவிற்குடியிற் சலந்தராசுரனும், திருவதிகையில் திரிபுரத்தவுணர்களும், திருவழுவூரில் கயமுகனும், திருக்கடவூரிற் காலனும், திருக்குறுக்கையிற் காமனும் சிவபெருமானால் வென்றடக்கப்பெற்ற வீரச்செயல்கள் இப்பகுதியிற் பேசப் பெறுகின்றன. இத்தலங்கள் எட்டும் இறைவனுடைய வீரச் செயல்கள் வெளிப்பட்ட இடமாதலின் வீரதானம் - வீரட்டானம் ஆகி வீரட்டம் என வழங்கப் பெறுகின்றன. 72. அப்பணி செஞ்சடை யாதி புராதனன் முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே. (343) இது முப்புரமழித்த புராண கதையின் உட் கருத்திலை உணர்த்து கின்றது. (இ-ள்) கங்கை நீரையுள்ளடக்கிய சிவந்த சடையினை யுடைய மிகப் பழையோனாகிய சிவபெருமான் பொன் வெள்ளி இரும்பினாலாகிய மூன்று அரண்களை அழித்தான் என வெளித்தோற்றமாய் நிகழ்ந்த செயலினை மட்டும் கூறுவர், அச்செயலின் உட்கருத்தினையுணராதார் இறைவனால் அழிக்கப்பட்ட முப்புரம் என்றது, உயிரைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் காரியமாகிய செயலினை. இறைவன் இத்தகைய புரங்களை யழித்த நுட்பத்தை உள்ளவாறறிய வல்லார் யார்? (ஒருவருமிலர்) எ - று. அப்பு - நீர்; கங்கை. ஆதிபுராதனன் - உலகுயிர்கட் கெல்லாம் முதல்வனாகிய பழையோன். அப்புரம் - மும்மல காரியமாகிய அப்புரங்கள் : இனி அப்புரம் என்பதற்கு அம்முப்புரம் எனப் பொருள்கொண்டு அந்த முப்புரங்களை இறைவன் அழித்த செய்தியினை நேர்நின்றறிந்தவர் யாருள்ளார்கள், எனப்பொருள் கூறி அம்முதல்வன் இப்பொழுதும் முப்புரங்களை அழித்தருள் கின்றான் என்பதே உண்மை எனத் தெளிவித்ததாகக் கொள்ளுதலும் உண்டு. சிவபெருமான் உயிர்களுக்கு அருள்செய்தல் வேண்டி அருவுருவத் திருமேனியாகிய இலிங்கவடியில் அமர்ந்து தேவர், அசுரர், மனிதர் முதலியோர்க்கு அருள்புரிந்த செய்திகளை விரித்துரைப்பது இலிங்கபுராணம் என்ற பகுதியாகும். 73. திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை அரிய னென்றெண்ணி அயர்வுற வேண்டா புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன் பரிவொடு நின்று பரிசறிவானே. (348) அரியதில் அரிய இறைவன் வழிபடும் அன்பர்க்கு எளிவந்தருள்வன் என்கின்றது. (இ - ள்) ஒரு நிலையில் நில்லாது எங்கு திரியும் இயல்பின வாகிய மும்மதில்களை அழித்த பெருமானாகிய சிவனைக் காண்டற்கரியன் என்று கருதி அவனையடைந்து அருள்பெறுமாறு எவ்வாறு என்று மனந்தளர்தல் வேண்டா. எல்லாமுடை யவனாகிய அவ்விறைவன் தன்பால் மெய்யன்புடைய அடியார்களுக்குப் பொய்த்து மறைவானல்லன்; அவர்பால் பேரிரக்கமுடையனாய் எதிர் நின்று அவர்தம் பரிசினை அறிந்து அருள்புரிவானாவன் எ - று. திரிதல் - ஒருநிலையில் நில்லாது பலவிடத்தும் செல்லுதல். காண்டற்கரிய கடவுளே நல்லோரைக் காத்தற் பொருட்டு மேருமலையை வில்லாகப் பிடித்து வெளிப்பட்டு நின்று கொடியோர் வாழும் முப்புரங்களை அழித்தான் என்பார், திரிகின்ற முப்புரஞ் செற்றபிரான் என்றார். அரியன் என்றது, ஒன்றினுந் தோயாது எல்லாவற்றை யுங் கடந்து சிந்தனைக் கரியவனாய் விளங்கும் இறைவனது உண்மைநிலை யுணர்த்தியது. அரியானை என்பது அப்பர் அருள்மொழி. புரிவு - விருப்பம்; மெய்யன்பு. பொய்யலன் - பொய்த்து ஒழுகுவானல்லன்; மெய்யாக வெளிப்பட்டருள்வான். பரிவு - அன்பின் பெருக்கமாகிய கருணை. பரிசு - தன்மை. அறிதல் - அறிந்து அருள் செய்தல். புரிவுடையாளர் என்றது, இறைவனைச் சிவலிங்கத் திருமேனியில் வைத்து மெய்யன்பினால் வழிபாடு செய்யும் அடியார்களை இங்குற்றேனென் றிலிங்கத்தே தோன்றினான் என்பது இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை. இறைவனை மதியாது தக்கன் செய்த யாகம் வீரபத்திரராற் சிதைந்தழிய அதிற் கலந்துகொண்ட தேவர்கள் அல்லலுற்ற செய்தியை விரித்துரைப்பது தக்கன் வேள்வி என்ற பகுதியாகும். 74. தந்தைபிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை வெந்தழ லூடே புறப்பட்ட விண்ணவர் முந்திய பூசை முடியார் முறைகெட்டுச் சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே. (353) தக்கன் செய்த வேள்வியிற் கலந்துகொண்ட தேவர்கள் சீரழிந்து ஓடிய திறங்கூறுகின்றது. (இ - ள்) மூவேழுலகுக்கும் தாதையாகிய சிவபெருமான் (தன்னை மதியாது) தக்கன் செய்த வேள்வியை முனிந்தானாக, வெம்மைவாய்ந்த தீ மூண்டெரியும் வேள்வியின் நடுவிலே வெளியே புறப்பட்ட வானோர்கள் தமக்கு முற்படச் செய்தற்குரிய வழிபாடாகிய பூசையினை நிறைவுறப் பெறாதவர்களாய்த் தமது முறைமையாகிய வரிசைகெட்டு வீரபத்திரராய் வந்த தலைவன் வெகுண்ட அப்பொழுதே திசை திசையே சிதறி ஓடினார்கள் எ-று. தந்தைபிரான் என்றது மூவேழுலகுக்குந் தாதையாகிய சிவபெருமானை. தாதாய் மூவேழுலகுக்கும் என்பது திருவாசகம். வெந்தழலூடு - வேள்வி நிகழ்ச்சிக்கு இடையிலேயே. புறப்படுதல் - வெளிச்செல்ல முயலுதல். முந்தியபூசை - தக்கனால் முற்படச் செய்யத் தகுந்த வழிபாடாகிய உபசாரம். முடிதல்- நிறைவேறப்பெறுதல். முறை-வரிசை; மதிப்பு. சிந்துதல்- சிதறுதல். சிந்தித் திசைதிசையே தேவர்களை யோட்டுகந்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் என்பது திருவாசகம். சினஞ்செய்தல்-வெகுளுதல். அண்ணல் என்றது வீரபத்திரராய் வந்த இறைவனை. சக்கரம் பெற்ற திருமால் தக்கன் வேள்வியில் தன் கையிலுள்ள சக்கரத்தை வீரபத்திரர்மேல் விட அவர் அணிந்துள்ள வெண்டலை மாலையில் உள்ள தலையொன்று அதனைக் கவ்விக் கொள்ளப் பின் திருமால் இறைவனை அருச்சித்து மீண்டும் அதனைப் பெற்றுக் கொண்டதனைக் கூறுவது சக்கரப்பேறு என்ற பகுதியாகும். மாலும் பிரமனும் தாம்தாம் முதற்கடவுள் என்று தம்முள் மாறுபட்டு நிற்பத் தமக்குமுன் ஆரழலாய்த் தோன்றிய பரம்பொருளின் அடிமுடிதேடி யறியாது இளைத்துநின்ற நிலையில் இறைவன் அவர்களுக்கு அருள்செய்த செய்தியைக் கூறுவது அடிமுடி தேடல் என்ற பகுதியாகும். படைப்புக்கு முதற்காரணமான எலும்பினையுங் கபாலத்தினையும் இறைவன் தன் மேனியில் அணிந்துள்ள திறம் பேசுவது எலும்புங் கபாலமும் என்ற பாடலாகும். இறைவன் உயிர்கள் உய்திபெறுதற்பொருட்டுச் செய்தருளும் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்னும் ஐந் தொழில்களைச் செய்தருள்கின்றான். அம்முதல்வன் செய்யும் ஐந்தொழில்களுட் படுவன உயிர்கள் எடுத்துள்ள உடம்பும் கருவி கரணங்களும் உலகும் நுகர்பொருளுமாகும். 75. ஒருவனுமே உலகேழும் படைத்தான் ஒருவனுமே உலகேழும் அளித்தான் ஒருவனுமே உலகேழும் துடைத்தான் ஒருவனுமே உலகோ டுயிர்தானே. (404) படைத்தல் முதலிய எல்லாவற்றினையும் செய்தருளும் முதல்வன் ஒருவனே என்பதுணர்த்துகின்றது. (இ - ள்) கடவுளாகிய ஒருவனே ஏழுலகங்களையும் தோற்றுவித்தான்; அவ்வொருவனே ஏழுலங்களையும் காத்தலைச் செய்தான். அவ்வொருவனே ஏழுலகங்களையும் அழித்தலைச் செய்தான். அவ்வொருவனே உலகங்களோடும் உயிர்களோடும் பிரிவின்றி உடனாய்க் கலந்து மறைந்து அருள்புரிகிறான் எ - று. உலகங்களைப் படைப்பவன் பிரமன் என்றும் காப்பவன் திருமால் என்றும் அழிப்பவன் உருத்திரன் என்றும் இவ்வாறு ஒவ்வொரு தொழிலுக்கு ஒவ்வொருவராக வேறு பிரித்துரைப் பினும் இங்ஙனம் வேறுவைத்துரைக்கப்படும் எல்லா மூர்த்திகட்கும் உயிர்க்குயிராய் நின்று இத்தொழில்களைப் புரிந்தருளும் முழுமுதற்கடவுள் ஒருவனே என ஐயமகற்றித் தெளிவித்தவாறு. 76. உள்ளத் தொருவனை யுள்ளுறு சோதியை உள்ளம்விட் டோரடி நீங்கா வொருவனை உள்ளமுந் தானும் உடனே யிருக்கினும் உள்ளம் அவனை யுருவறி யாதே. (431) இறைவன் செய்யும் மறைத்தற்றொழிலை யுணர்த்துகின்றது. (இ - ள்) உயிருடன் கலந்துநிற்கும் தனிமுதல்வனும் உள்ளத்தினுள்ளே சோதியாய்த் திகழ்பவனும் நெஞ்சத்தை விட்டு ஓரடியளவுகூட நீங்காது உடன் இருப்பவனும் ஆகிய இறைவனை உயிரும் அவனும் ஒருங்கிருந்தாலும் உயிரானது அம்முதல்வனை உருவறியவொண்ணாத நிலையில் உள்ளது எ - று. உயிர்க்குயிராய்க் கலந்துள்ளான் என்பார் உள்ளத்து ஒருவன் என்றார். மனத்துள் மாயனாய் மாசறு சோதியாய் விளங்குகின்றான் என்பார் உள்ளுறு சோதி என்றார். உயிர்களின் நெஞ்சத்தைவிட்டு அணுவளவும் கணநேரமும் பிரிவின்றி உள்ளான் என்பார் உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவன் என்றார். ஓரடி நீங்குதல் - ஓர் அடி பெயர்த்து வைத்தல்; விலகிச் செல்ல முயலுதல். அவனுடைய திருவடி உயிர்களின் உள்ளத்தைவிட்டு ஒரு சிறிதும் பெயர்வதில்லை என்பதாம். இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்றார் திருவாத வூரடிகளும். உயிர்தன்னோடு உடனாயிருந்து காட்டியும் கண்டும் உதவும் பரம்பொருளை யறியாமைக்குக் காரணம் குடங்கை யினேந்திய தீயின் சூட்டினை நிகழவொட்டாது தனக்கு மாறாகிய மந்திரமுச்சரிக்குங்காறும் தடுத்துநிற்குங் குளிகைபோல, இறைவனைச் சிறப்பியல்பினாலுணரும் மெய்யுணர்வு தோன்றுங் காறும் அவனது பெருங்கருணை உயிரிடத்துத் தோன்றாதவாறு தடுத்து நிற்கும் உயிர்க்குற்றமாகிய மல சத்தியின் வழிநின்று நடத்துவதாகிய இறைவனது சங்கற்பமே மறைப்பெனப்படும். விள்ளத்தா னென்றுமாட்டேன் விருப்பெனும் வேட்கையாலே வள்ளத்தேன் போலநுன்னை வாய்மடுத் தூண்டிடாமே உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் கள்ளத்தே நிற்றியம்மா எங்ஙனங் காணுமாறே(4-76-7) எனவரும் திருநேரிசை இங்கு நினைக்கத்தகுவதாகும். கர்ப்பக் கிரியை இறைவனது ஆற்றல் கருப்பையுள்ளும் நின்று ஒவ்வோரு யிரையும் பிறப்பித்துத் கருணைபுரிதலை விளக்குவ கர்ப்பக்கிரியை என்னும் அதிகாரமாகும். 77. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச் செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து இன்பால் உயிர்நிலை செய்தஇறை ஓங்கும் நண்பால் ஒருவனை நாடுகின் றேனே. (46) மக்களது உடலின் அமைப்பினை விளக்குகின்றது. (இ - ள்) என்பாகிய கழிகளால் கூரையினை நிரைத்து நரம்பாகிய கயிறுகளாற் பிணித்துச் செம்மைநிறக் குழபுடன் கூடிய இறைச்சியாகிய மண்ணாற் சுவரெடுத்து இவ்வாறு திருத்தமுற மனை அமைத்து இன்ப உணர்வுடன் உயிர் நிலைபெறுதற்குரிய உடம்பினைப் படைத்துத் தந்தருளிய இறைவனது உயர்ந்த ஒட்டியுறவாந் தோழனையினால் ஒப்பற்ற முதல்வனாகிய அவனை நாடி அடையும் முயற்சியில் ஈடுபட்டிருக் கின்றேன் எ - று. என்பு - எலும்பு. மிடைதல் - குறுக்கும் நெடுக்குமாக பின்னிச் சார்த்துதல். வரி - வரிகயிறு. செம்பால் - செந்நீர். இன்பால் - இன்பஉணர்வோடு. உயிர்நிலை - உயிர்நிற்றற்குரிய உடம்பு. ஓங்கும் - உயர்ந்த. நன்பு - நண்பு பெத்தத்தினும் முத்தியினும் ஒட்டியுறவாம் அத்துவிதநிலை. என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந் திதுநம்மில்ல புன்புலால் நாறு தோல்போர்த்துப் பொல்லாமையால் முகடுகொண் முன்பெலாம் ஒன்பதுவாய்தலார் குரம்பையின் மூழ்கிடாரே அன்பனாரூர் தொழுதுய்யலாம் மையல்கொண்டஞ்சல் நெஞ்சே (3-79-8) என்பிருத்தி நரம்புதோல்புகப் பெய்திட்டென்னையோ ருருவமாக்கி இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் டென்னுள்ளங் கோயிலாக்கி அன்பிருத்தி யடியேனைக் கூழாட் கொண்டாட்கொண்ட ஆரூரர்தம் முன்பிருக்கும் விதியின்றிமுயல்விட்டுக் காக்கைப்பின் போனவாறே (4-5-2) கால்கொடுத் திருகையேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிரநீராற் சுவரெடுத் திரண்டுவாசல் ஏல்வுடைத்தா யமைத்தங் கேழுசா லேகம்பண்ணி மால்கொடுத் தாவிவைத்தார் மாமறைக் காடனாரே (4-33-8) எனவரும் திருப்பாடல்கள் இங்கு எண்ணத்தக்கன. பாத்திரம் 78. திலமத்தனையே சிவஞானிக் கீந்தால் பலமுத்தி சித்தி பரபோக முந்தரும் நிலமத்தனை பொன்னை நின்மூடர்க் கீந்தால் பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. (501) தானம் பெறத் தக்காரும் தகாதாரும் இவரென வுணர்த்து கின்றது. (இ - ள்) எள்ளளவு பொருளைச் சிவஞானிக்குக் கொடுத்தால் அத்தகைய தானம் தன்பயனாகப் பாசத்திலிருந்து விடுபடுதலும் எண்வகைச் சித்திகளும் மேலான வீடுபேற்றின்பமும் நல்குவதாகும். பரந்த பூமியளவு பெரும் பொன்னை மூடராகிய தீயோர்க்குக் கொடுத்தால் அதன் விளைவாக உலகப்பயனும் கெட்டு மேலான வீட்டின்பமும் சிதைவுறுவதாகும் எ - று. திலம் - எள். நின்மூடர் - அறமும் ஞானமுமில்லா இழிந்தோர். பலம் - இம்மையின்பம். அறுதல் - கெட்டொழிதல். பரபோகம் - வீட்டின்பம். குன்றுதல் - தேய்தொழிதல். 79. ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளை யோனே. (504) தானம் ஏற்றற்குரிய பாத்திரமாகிய சிவஞானியின் இயல் கூறுகின்றது. (இ - ள்) நம் வினைப்பயனாகிய ஊழ்முறையால் நன்பால் ஆதற்குரியன உண்டாவன; அழிதற்குரியன அழிவெய்துவன. நம்மைவிட்டு நீங்குதற்குரியன நீங்குவன நம்மை நாடிவருதற்குரியன வருவன. எவ்வுயிர்களையும் ஒப்பக் காத்தருளும் நந்தியென்னும் பெயருடைய இறைவன் காட்டியருளியவற்றை (விருப்பு வெறுப்பின்றியேற்று நுகர்பவன் எவனோ அவனே ஏவியவற்றைச் செய்யும் இயல்பினால் இறைவனுக்குரிய இளங்கிளை (தோழன்) எனப்படும் உறவினனாவன் எ - று. ஆதல் - தோற்றம். அழிதல் - இறப்பு. ஆவாரை யாரே யழிப்பார் அதுவன்றிச் சாவாரையாரே தவிர்ப்பவர் என்பது ஔவையார் வாய்மொழி. போவன - நம் நுகர்ச்சிக் குரியனவாய் நம்முடைமையாயிருந்து நமக்குப் பயன்படா தொழிவன. புகுவ - இதுவரை நம்பால் இல்லாதிருந்து நமது நுகர்ச்சிக்குரியனவாய் நம்மையடையும் நுகர் பொருள்கள். பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம என்றார் திருவள்ளுவர். காவலன் - எல்லாவுயிர்களையும் தாய்போற் காக்கும் அருளாளனாகிய இறைவன். காட்டித்து - நுகரக் காட்டியதனை. கண்டவன் -(விருப்புவெறுப்பின்றி) நுகர்ந்தவன். நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே எனத் தன் முனைப்பற்று இன்ப துன்ப நுகர்ச்சிகளை ஒப்ப ஏற்றுக்கொண்டவன். நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற்படுவதெவன் என்றார் தெய்வப் புலவரும். ஏவன செய்தல் - ஏவிய தொழிலை விருப்பு வெறுப்பின்றி விரைந்து செய்தல். இளங்கிளை - இளைய உறவின் முறை; தம்பி தங்கை என்றாற் போலும் உறவின் தொடர்ச்சி. இளங்கிளை யாரூரன் என்றார் நம்பியாரூரரும். அபாத்திரம் 80. மண்மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாய் எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே. (508) இறைவனை எண்ணாது ஈவாரும் ஏற்பாரும் நரகிற்புகுவர் என்று கூறுகின்றது. (இ - ள்) ஞாலமளவும் மலையளவும் ஆகிய பெரும் பொருளைத் தானங் கொடுப்பினும் உயிர்களுக்கெல்லாம் தலைவன் இவனே என்று உள்ளத்தில் இடைவிடாது சிந்தித்து வணங்காதார்க்குக் கொடுத்தவரும் அதனைப் பெற்றவரும் ஆகிய இருதிறத்தாரும் எழுவகைக் கொடிய நரகங்களிலே நண்ணித் துன்புறுவர் எ - று. மண் - ஞாலம். பொருளின் பரப்பிற்கும் உயர்ச்சிக்கும் மண்ணும் மாலையும் அளவு கூறினார். மாதனம் - பெரும் பொருள். பொருளை ஈவான் ஏற்பாரை அண்ணல் இவனென்றே யெண்ணி அஞ்சலியத்தனாய் இறைஞ்சியீதல் வேண்டும். ஏற்பானும் தமக்குத் தானஞ் செய்வாகை அண்ணல் இவனென்றே யெண்ணி அஞ்சலியத்தனாய ஏற்றல் வேண்டும். இங்ஙனம் சிவனருளை நினைந்து தானம் செய்யாதோனும் சிவனருளை நினைந்து தானம் பெறாதோனும் ஆகிய இருவரும் நரகத் துன்பத்தை யடைவர் என்பதாம். தீர்த்தம் 81. உள்ளத்தி னுள்ளே உளபல தீர்த்தங்கள் மெள்ளக் குடைந்துநின் றாடார் வினைகெடப் பள்ளமும் மேடும் பரந்து திரிவரே கள்ள மனமுடைக் கல்வியி லோரே. (509) தூய்மை பெறுதற்குரிய தீர்த்தங்கள் இவையென உணர்த்து கின்றது. (இ - ள்) அழுக்கினைப் போக்குதற்குரிய தூய நீர்நிலையாகிய தீர்த்தங்கள் (வாய்மை, அன்பு, தவம், செபம் முதலிய நற்பண்புகளாக) நம்முள்ளத்தினுள்ளே பலவுள்ளன. இறைவன் திருவருளும் உயிரன்புமாகிய இத்தீர்த்தங்களிலே தம் வினையாகிய பாவந் தீர மெள்ள இறங்கி உட்புகுந்து திளைத்து முழுகாதாராய் கடலும் மலையும் என எல்லாவிடங்களிலும் தீர்த்தங்களைத் தேடித் திரிவர் மெய்ப்பொருளைக் கற்றுணராத வஞ்சனை யுள்ளத்தார். எ - று. உயிர்களின் அழுக்கை நீக்கித் தூய்மை செய்யத் தீர்த்தங்கள் உள்ளன. புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும் என்பது பொதுமறை . ......v§FÛr னெனாதவர்க்கில்லையே என்பர் அப்பரடிகள். உள்ளத்தினுள்ளே வாய்மை அருள் அன்பு தவம் செபம் முதலிய பல தீர்த்தங்கள் உள என்பதும் அவற்றால் தாம் தூயராய் இறைவனைத் திருமஞ்சனஞ் செய்து வழிபடுபவர் மெய்யுணர்வினர் என்பதும் சிந்தைவெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல்மாலை யடிச்சேர்த்தி எந்தைபெம்மான் என்னெம்மான் என்பார்பாவம் நாசமே எனவரும் அப்பர் வாய்மொழியாற் புலனாம். ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் என்பது திருவெம்பாவை. கோடிதீர்த்தங் கலந்து குளித்தவை யாடினாலும் அரனுக் கன்பில்லையேல் ஓடுநீரினை ஓட்டைக் குடத்தட்டி மூடிவைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே. என்பது திருக்குறுந்தொகை. திருக்கோயில் 82. ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப் போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர் கூற்றுதைத் தான் திருக்கோயில் களானவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே. (517) திருக்கோயிலில் வழிபாடு தவறினால் வரும் ஏதம் கூறுகின்றது. (இ - ள்) கூற்றுவனை உதைத்தடக்கிய இறைவன் எழுந் தருளிய திருக்கோயில்கள் யாவும் வேதாகமங்களிற் கூறப்பட்ட வழிபாட்டுமுறை தவறுபடுமாயின் நாட்டில் மழையில்லா தொழிந்து பொறுத்தற்கரிய நோய் மிகுந்து நாட்டினைப் போற்றிக் காக்கும் அருமை வாய்ந்த மன்னர்களும் போர்வன்மையிற் குறைந்து சிதைவர் எ - று. மழையின்றி என்பதனாற் பசியும், நோய்மிக்கு என்பதனா பிணியும், போர் வலி குன்றுவர் என்பதனாற் பகையு உளவாதல் பெற்றாம். ஆற்றருநோய் - பொறுத்தற் கரிய நோய். அவனி - உலகம். போற்று அருமன்னர் - மலதலையுலகிற்கு உயிர் எனக் குடிமக்களாற் போற்றப்பெறும் அருங்குணங்கள் வாய்ந்த அரசர். போர்வலிகுன்றுதல் நாடுகாக்கும் வன்மையிற் குன்றிப் பகைவருக்கு எளியராதல். திருக்கோயிலில் இருந்து தன்னை அன்பினால் வழிபாடு செய்வார்க்கு வரும் இடர்களைத் தீர்த்தருளும் பேராற்றலுடையான் என்பதுணர்த்து வார் கூற்றுதைத்தான் என்றார். சாற்றிய - வேதாகமங்களிற் கூறப்பட்ட. தப்புதல் - முறையே நிகழாது தடைப்படுதல். உறுபசியும் ஓவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேராதியல்வது நாடு (734) என்றார் திருவள்ளுவர். மழையின்மையால் விளைவின்மையும் விளைவின்மையால் உறுபசியும் உண்டாதல் இயல்பு. ஓவாப்பிணி - நீங்காத நோய்; ஆற்றருநோய். செறுபகை - புறத்து நின்று வந்து அழிவு செய்யும் பகை. திருக்கோயில் வழிபாடு முறைப்படி நிகழாதொழியின் மேற்குறித்த தீமைகள் விளையும் என்பதாம். தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது. (7) என்பதும் இங்கு நினைத்தற் குரியது. 83. முன்னவனார் கோயிற் பூசைகள் முட்டிடின் மன்னர்க்குத் தீங்குள வாரி வளங்குன்றும் கன்னங் களவு மிகுத்திடுங் காசினி என்னரு நந்தி எடுத்துரைத்தானே. (518) திருக்கோயிலிற் பூசை தடைப்படின் வரும் எதம் கூறுகின்றது. (இ-ள்) உலகமுதல்வனாகிய இறைவனது திருக்கோயிலிற் பூசை தடைப்படுமானால் நாடுகாக்கும் வேந்தர்க்குப் பல வகைத் தீங்குகள் உளவாம்; மழைவளங் குறையும். உலகிற் பிறர்பொருளைக் கன்னமிட்டுக் களவிடுந்தொழில் மிகுதிப்படும் என்று என்னுடைய குருவாகிய நந்தியெம் பெருமான் இன்றியமையாத அறிவுரையாக எடுத்துக் கூறினார் எ - று. முன்னவனார் - முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள். முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி என்பர் நாவுரசர். வாரி - மழைவளம். புயலென்னும் வாரிவளங் குன்றிக்கால் என்பது திருக்குறள். கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியும் கோணிலை திரிந்திடின் மாரிவளங் குன்றும் என்றார் மணிமேகலையாசிரியர். காசினியிற் கன்னங் களவு மிகுத்திடும் என்க. என் அரு நந்தி - எனது உயிர்க் குயிராம் அருமை வாய்ந்த குருமுதல்வர். 84. பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றன்னை அர்ச்சித்தாற் போர்கொண்ட வேந்தர்க்குப் போல்லா வியாதியாம் பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமுமாம் என்றே சீர்கொண்ட நந்தி தெரிந் துரைத்தானே. (519) திருக்கோயிலிற் பூசனை செய்தற்கு உரியரல்லாதார் இவர் என உணர்த்துகின்றது. (இ - ள்) அந்தணர்க்குரிய ஒழுக்கமின்றிப் பிறப்பளவிற் பார்ப்பான் என்ற பெயரைக் கொண்டவன் திருக்கோயிலிற் பெருமானை அர்ச்சிக்கும் பணியை மேற்கொள்வானாயின் அந்நிலைமை போர்த்திறமையாற் பிறநாடுகளை வென்று கொண்ட பெருவேந்தர்க்குத் தீராத பிணியை தருவதாகும். அதனோடன்றிப் பூமியின் கண்ணேயுள்ள பல நாடுகளிற் பஞ்சமும் உண்டாகும் என்று ஞான சிறப்பினைக் கொண்ட எம் குருநாதனாகிய நந்தியெம்பெருமான் உலகத்தார்க்கு ஆராய்ந்து எடுத்துக் கூறியருளினார். எ - று. பார்ப்பான் என்ற பெயர்க்குரிய மறையோதும் உணவும் ஒழுக்கமுமின்றிப் பிறப்பு ஒன்றே பற்றிப் பெயரளவில் பார்ப்பான் எனப் பேசப்படுவோன் திருக்கோயிலில் இறைவனைப் பூசனை செய்தற்குச் சிறிதும் தகுதியுடையவன் அல்லன் என்பதும், கோயிலிற் றகுதியில்லாதான் பூசனை செய்யின் தெய்வநம்பிக்கை குறைந்து ஆட்சித்தலைவனுக்குத் தீராப் பிணியும் நாட்டிற் பெரும் பஞ்சமும் உண்டாம் என்பதும் இத்திருமந்திரத்தினால் ஆசிரியர் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய அறிவுரையாகும். அதோமுகதரிசனம் சிவபெருமானுக்கு நாற்றிசையினும் மேலும் ஆக அமைந்த திருமுகங்கள் ஐந்துடன் ஆறாவது திருமுகமாக வெளிப்பட்ட கீழ்நோக்கிய திருமுகத்தினைத் தன்னுள்ளத்தே தியானித்துக் காண்டல் அதோமுகத் தரிசனமாகும். அதோமுகம் - கீழ் நோக்கியமுகம். அத்திருமுகம் அசுரரையழிக்க அறுமுகப்பெருமான் அவதரிக்கும் நிலையில் வெளிப்பட்டதென்பது கந்தபுராணத்தால் அறியப்படும். 85. எம்பெருமான் இறைவா முறையோ என்று வம்பவிழ்வானோர் அசுரன் வலிசொல்ல அம்பளமேனி யறுமுகன்போயவர் தம்பகை கொல்லென்ற தற்பரன்தானே. (520) (இ-ள்) புதுமணம் வீசும் மலர் மாலை யணிந்த தேவர்கள் எமது பெருமானே! எங்கும் நீக்கமற நிறைந்த முதல்வனே முறையோ என்று கதறித் தம்மை நலியும் சூரபதுமன் வன்மையை எடுத்துக்கூறி முறையிட அழகிய பவளம் போலும் திருமேனியை யுடைய அறுமுகனே! நீ சென்று அத்தகைய தேவர் பகையினைக் கொன்றொழிப்பாயாக என அருள்புரிந்த தனி முதல்வன் சிவபெருமானே எ-று. அசுரன் - சூரபதுமன். பவழத் தன்னமேனி குறுந்-கடவுள் என்றாராதலின் அம்பவளமேனி அறுமுகன் என்றார். குருநிந்தை 86. ஈச னடியார் இதயங் கலங்கிடத் தேசமும் நாடுஞ் சிறப்பும் அழிந்திடும் வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும் நாசம தாகும் நந்நந்தி யாணையே. (534) சிவனடியார்களாகிய குருவை யிகழ்தலாலுளவாம் தீமையினை யுணர்த்துகின்றது. (இ-ள்) சிவனடியார்களின் சிந்தை கலங்குமாயின் பெரிய தேசமும் அதன் உட்பகுதிகளாகிய நாடும் அவற்றின் சிறப்பும் சிதைந்தொழியும். வானுலகில் இந்திரனது அரச பீடமும் மண்ணுலகில் பெருவேந்தரது ஆட்சிப் பீடமும் கெட்டொழியும். இது நம்முடைய நந்தியாகிய குருவின் ஆணையாகும் எ - று. தேசம், பெரியது; நாடு, சிறியது. வாசவன் - இந்திரன். மூன்றாந் தந்திரம் இஃது அட்டாங்கயோகம் முதல் சந்திரயோகம் ஈரு இருபத்தொரு தலைப்புக்களையுடையது. இதன்கண் இமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகார தாரணை, தியானம், சமாதி என்னும் எண்வகை யேக உறுப்புக்களும், இவற்றை மேற்கொண்டடொழுகுவே அடையும் பேறுகளும், அணிமா, லகிமா, மகிமா, பிராத்திகரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண்வகைச் சித்திகளின் இயல்புகளும் பயன்களும், கலநிலை காயசித்தி உபாயம் முதலியனவும் விரித்துரைக்க பெற்றுள்ளன. இம் மூன்றாம் தந்திரத்தின் உள்ளுறையவது சரீரசித்தி உபாயமாகும். உடம் பின்றி உயிர் தன் நின்று எத்தொழிலையுஞ் செய்யமுடியாது. அறம் முதலிய உறுதிப்பொருள்களை உயிர்கள் பெறவேண்டு மானால் அதற்குரிய முயற்சிகளை உடம்பொடுகூடிநின்றே செய்தல் வேண்டும். ஆகவே உயிர்க்கு ஞான சாதனமாகவுள்ள உடம்பினைப் பேணுதல் இன்றியமையாதது என்பதனை திருமூல நாயனார் இத் தந்திரந்தில் இனிது விளக்கியருள்கின்றார். இயமம் 87. கொல்லான்பொய் கூறான் காளவிலான் எண்குணன் நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத் திடையினின் றானே. (554) இயமம் என்னும் யோக உறுப்பினை மேற்கொண்டாரது இயல்பு உணர்த்துகின்றது. (இ - ள்) உயிர்களைக் கொல்லாதவனும், பொய் கூறாதவனும், பிறர் பொருளைத் திருடாதவனும், எண்ணத்தக்க நற்பண்புகளை யுடையானும், பிற உயிர்க்கு நலஞ்செய்பவனும், மனமொழி மெய்கள் தீயவற்றிற் செல்லாது அடங்குதலுடையவனும், ஒருபக்கம் கோடாது நடு நிற்றல் வன்மையுடையானும், தன்பாலுள்ளவற்றை வறியோர்க்குப் பகுத்தளித்து உண்ணுபவனும், மனத்தின்கண் அழுக்கில்லாதவனும், கள் காமம் ஆகிய குற்றங்கள் இல்லாதவனும் ஆகிய இயல்புடையவனே இயமம் என்னும் யோகவுறுப்பில் நிலைபெற்று ஒழுகுபவன் ஆவன் எ - று. பொய் கொலை களவே காமம் பொருள்நசை இவ்வகை ஐந்தும் அடக்கியது இயமம் (சிலப். ஊர்காண் - 11) எனவரும் சிலப்பதிகார உரை மேற்கொள் இயமத்தின் இலக் கணத்தினை உணர்த்துவதாகும். நியமம் 88. தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகம் தானம் சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி மகஞ்சிவ பூசையொண் மதிசொல் ஈரைந்து நிவம்பல செய்யின் நியமத்த னாமே. (557) நியமம் என்னும் யோகவுறுப்பினை மேற்கொண்டாரது இயல்பு உணர்த்துகின்றது. (இ-ள்) தனக்குற்ற துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யாமையாகிய தவமும், இறைவன் திருப்பெயராகிய மந்திரத்தைச் செபித்தலும், என்றும் சிந்தையின் நிறைவாகிய மனமலர்ச்சி யுடையராதலும், மறுபிறப்பும் இருவினைப் பயனும் அதனையறிந்து உண்பிக்கும் இறைவனும் உண்டென்னும் உறுதிப்பாடும் வறியார்க்கு ஈதலும், சிவனை நினைந்து மேற்கொள்ளும் விரதமும், முடிந்த முடிபாகிய மெய்ந்நூற் பொருளைக் கேட்டுணர்தலும், சிவ வேள்வியும், சிவ பூசனையும், ஒளியுடைய பொருளைக் கூர்ந்துணரும் மெய்யுணர்வும் எனச் சொல்லப்பட்ட உயர்ச்சியுடைய இப்பத்துச் செயல்களையும் செய்வானாயின் அவ்வியல்புடையோன் நன்றே புரிதலாகிய நியமத்தில் நிற்போன் எனப்பெறுவன். எ - று. பெற்றதற் குவத்தல் பிழம்புநனி வெறுத்தல் கற்பன கற்றல் கழிகடுந் தூய்மை பூசனைப் பெரும்பயன் ஆசாற் களித்தலொடு பயனுடை மரபின் நியமம் ஐந்தே (சிலம்-ஊர்காண் - 11) எனவரும் சிலப்பதிகார உரைமேற்கோள் நியமத்தின் இலக்கணத்தினை யுணர்த்துவதாகும். சந்தோடம்-மகிழ்ச்சி; பெற்றதற்கு உவத்தலாகிய மன நிறைவு; கிடைத்தது போதும் என்னும் நிறைவு. ஆத்திகம்-உலகத்தார் உண்டென்பதனை ஏற்றுக்கொள்ளும் உணர்வு. மகம்-வேள்வி. மதி-ஞானம். நிவம்-உயர்ச்சி. ஆதனம் 89. பத்திரம் கோமுகம் பங்கயம் கேசரி சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும் உத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப் பத்தொடு நூறு பலவா சனமே. 9563) யோகத்திற்கு இன்றியமையாத இருக்கையாகிய ஆதனங்களின் வகையினை யுணர்த்துகின்றது. (இ-ள்) பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சாத்திரம், வீரம், சுகாசனம் எனச் சொல்லப்பட்ட ஏழும் உத்தம ஆசனமாகும். இவற்றுடன் தொன்மையுடைய பிற ஆசனங்களையும் கூட்டி யெண்ண எட்டு எனவும் பத்து எனவும் எட்டெட்டு (அறுபத்துநான்கு) எனவும் நூறு எனவும் பலவாகும். எ - று. இவற்றுள், பத்திராசனம் என்பது, வலக்காலை இடது தொடையில் மேல்வைத்து இரண்டு முழந்தாள்களின் மேலும் இரண்டு கைகளையும் நீட்டி உடல் தளர்ச்சியின்றி நேரே நிமிர்ந்திருத்தல். கோமுகம்-கோமுகாசனம்; பசுவின் முகம் போன்ற இருக்கை; கணுக்கால்களை இடுப்புச் சந்திற் சேர்க்கும் ஆசனவகை என்பர். பங்கயம்-பதுமாசனம். வலது தொடையின் மேல் இடது பாதத்தையும் இடது தொடையின் மேல் வலது பாதத்தையும் உள்ளங்கால் மேல் நோக்கி விரிய இழுத்துவைத்து மலர்ந்த பாதங்களின் மேல் இரண்டு கைகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக்கொண்டு நிமிர்ந்திருத்தல். கேசரி-சிங்காசனம். பாத நுனிகளைப் பூமியில் ஊன்றி முழங்கால்களில் இரு கைகளையும் நீட்டி வாயைத் திறந்து கொண்டு கண்களை மூக்கு நுனியில் வைத்து நோக்கியிருத்தல். சொத்திரி-சுவத்திகாசனம்; முழந்தாளுக்கும் தொடைக்கும் நடுவில் இரண்டு பாதங்களையும் வைத்து நிமிர்ந்து அமர்ந்திருத்தல். வீரம்-வீராசனம்; இடது தொடையில் வலது பாதத்தையும் வலது தொடையில் இடது பாதத்தையும் வைத்து அமர்தல். சுகாசனம் என்பது, யோகி தனக்கு எப்படியிருந்தால் சுகமுண்டாகின்றதோ அப்படி இருத்தல். இத்தகைய ஆசனத்தின் இயல்பினை விரித்துரைப்பது, நிற்றல் இருத்தல் கிடத்தல் நடத்தலென் றெத்த நான்கின் ஒல்கா நிலைமையோ டின்பம் பயக்கும் சமய முதலிய அந்தமில் சிறப்பின் ஆசன மாகும் (சிலப்-ஊர்காண்-11) எனவரும் சிலப்பதிகார உரை மேற்கோளாகும். பிராணாயாமம் _ வளிநிலை 90. ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன் உய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்கும் கொடாதுபோய் பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. (564) மெய்ப்பொருளை நினைந்து பிராணாயாமம் செய்வோர் தம் மனத்தை அடக்கவல்லவர் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) ஐந்துபேர்க்குத் தலைவனாகவுள்ளவன் அவ்வூரில் வாழும் தலைவன். அவன் உய்திபெறும் நோக்குடன் ஏறிச் செலுத்தும் குதிரை ஒன்றுளது. அது மெய்ம்மை யாளர்க்கு வசப்பட்டு நிற்கும். பொய்ம்மையாளர்க்குக் கட்டுப்படாது துள்ளி யோடி அன்னோரைக் கீழே வீழ்த்திவிடும். எ-று. இங்கு ஐவர்க்கு நாயகன் என்றது, ஐம்பொறிகட்குத் தலைமையாகிய மனத்தை. ஊர் என்றது பொறிகளுக்கும் மனத்திற்கும் இடமாகிய உடம்பினை. உய்தல்-பிறவித் துன்பத்தினின்றும் விடுபடுதல் குதிரை என்றது பிராணனாகிய வளியினை. மெய்யர்-என்றும் மாறாத மெய்ப்பொருளாகிய பரம்பொருளைப் பற்றுக்கோடாக எண்ணி ஒழுகுபவர். பொய்யர்-நிலையில்லாத உலகப் பொருள்களை நிலையென நம்பி வாழ்வோர். பற்றுக்கொடுத்தல்-அவர்கள் தன்னைப் பற்றும்படி தான் அவர் வசப்படுதல். துள்ளி விழுத்தல்-அவர் வழி நில்லாது துள்ளி யோடி அவர்களைத் தலைகீழாக விழும்படி செய்தல். உந்தியிலிருந்து எழும் இடகலை பிங்கலை என்னும் இருவகை நாடிகளின் வழியாகச் செல்லும் காற்றினைப் புறத்தே செல்லாமல் தடுத்து அகத்தே சுழுமுனை நாடி வழியாகச் செல்லும்படி நிறுத்தும் பயிற்சியே பிராணாயாமம் எனப்படும். இதனை வளிநிலையென வழங்குதல் தமிழ்மரபு. இதன் இயல்பினை விளக்குவது, உந்தியொடு புணர்ந்த இருவகை வளியும் தந்தம் இயக்கந் தடுப்பது வளிநிலை எனவரும் சிலப்பதிகாரவுரைமேற்கோளாகும். இறைவன் அருள்வழி நின்று பிராணாயாமம் செய்வோர்க்கே மனம் ஒருவழிப்படும் என்பதனைப் பிறிதுமொழிதல் என்னும் அணியமைய இத் திருமந்திரம் விரித்துக் கூறுதல் உய்த்துணரத் தகுவதாகும். 91. ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே. (565) பிராணாயாமப் பயிற்சியின் பயன் குருவின் அருள்வழியே பெறத்தக்கது என்கின்றது. (இ - ள்) குதிரைச் சேவகன் நல்லவன். குதிரைகளும் இரண்டுள்ளன. (அவனைக்கொண்டு அக் குதிரைகளைத் தத்தம் புலங்களிற் செல்லுமாறு) செலுத்தி இழுத்துப்பிடிக்கும் உபாயம் அறிபவர்கள் இல்லை. மெய்யுணர்வு மிக்க ஞானத்தலைவனாகிய குருவின் திருவருளைப் பெற்றால் சேர்த்துப் பிடிக்க (அக்குதிரைகள்) வசப்படும் எ - று. ஆரியன் - குதிரைச் சேவன்; என்றது மனத்தினை. குதிரை இரண்டாவன இடகலை, பிங்கலை என்னும் இரு நாடிகளில் செல்லும் வளிகள். வீசிப்பிடித்தல் - நெடுந்தூரம் செல்லுமாறு விட்டு இழுத்தல். விரகு-உபாயம் கூரிய - மெய்யுணர்வு மிக்க. வாரிப்பிடித்தல் -(இடகலை பிங்கலை என்னும் இருவகை வளியையும்) சேர்த்துப் பின்தல். வசப்படுதல் - சுழுமுனை வழிச்சென்று கும்பித்தல் 92. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே. (57) பிராணாயாமஞ் செய்வோர் மரணமின்றி நெடுங்கால் வாழ்வார் என்கின்றது. (இ - ள்) வளியினை உள்ளே இழுத்தும் மெல்லே வெளியே விடுத்தும் இவ் (இடகலை, பிங்கலை) என்னும் இரண்டு காற்றினையும் நிறைக்கும் கணக்கினை உள்ளவாறு அறிவாரில்லை. அங்ஙனம் காற்றினைக் கும்பகஞ் செய்யும் கூறுபாடாகிய அளவினை அறிந்து ஆள்பவர்க்குக் கூற்றுவனைக் கடந்து நெடுங்காலம் நிலைபெறும் இலக்கு உளதாம் எ-று. ஏற்றுதல் - மேல் ஏறும்படி காற்றினை உள்ளிழுத்தல் இறக்குதல் - கீழே இறங்குமாறு வெளி விடுதல். பூரித்தல் - நிறைத்தல், காற்றைப் பிடித்தல் - கும்பகஞ் செய்தல். கணக்கு - அளவு; கூறுபாடு. கூற்றை உதைத்தலாவது, உடம்பினின்றும் உயிரைப் பிரித்துக்கொண்டு செல்லும் கூற்றுவன் தன்கண் அணுகாதவாறு அவனது ஆற்றலைக் கடந்து வென்று சாவாது நெடுங்காலம் நிலை பெறுதல். குறி - இலக்கு. இத்திருமந்திரம். கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு (269) எனவரும் திருக்குறட்பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்துள்ளமை காணலாம். 93. வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக் காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண் டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க வுண்மையே. (573) பிராணாயாம முறையாமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ - ள்) இடகலையால் (இடது மூக்கின் வழி) பதினாறு மாத்திரை கால எல்லை மூச்சை உள்ளேயிழுத்துப் பூரகஞ் செய்து விரும்பத்தக்க பிங்கலைக் கண்ணாக (வலது மூக்கின் வழி) முப்பத்திரண்டு மாத்திரை காலவளவு இரேசித்தலும் (வெளியே விடுவதும்) இத்தகைய இடகலை பிங்கலை இரண்டின் வழி நிகழும் வளியினையும் சுழுமுனையில் உந்தித் தானத்தின் அக்கினிகுண்டத்தில் அறுபத்து நான்கு மாத்திரை கால எல்லை உள்ளே நிறுத்திக் கும்பித்தலும் (நிறுத்துதலும்) பிராணாயா மத்தின் இயல்பாம் எ-று. ஈரெட்டு மாத்திரை வாமத்திற் பூசித்து, காமுற்ற பிங்கலைக் கண்ணாக முப்பத்திரண்டும் இரேசித்து இவ்விரண்டு ஓமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே என இயையும். வாமம் - இடப்பக்கம்; இடமூக்கின் வழியாகிய இட கலையை யுணர்த்தியது. ஈர்எட்டு - பதினாறு மாத்திரை. பூரித்தல் உள்ளே இழுத்தல். இரேசித்தல்-வெளிவிடுதல். கும்பித்தல் - உள்ளே நிறுத்துதல். பிங்கலை - வலமூக்கின் வழியியங்கும் காற்று. இவ் இரண்டு - இத்தகைய இடைகலை, பிங்கலை என்னும் இரண்டு. உந்தித்தானத்திலுள்ள அக்கினி மண்டலத்தில் கும்பிக்கப்படுதலை ஓமத்தாற்கும்பிக்க என்றார். எட்டெட்டு - அறுபத்துநான்கு மாத்தரை கால எல்லை. இடகலையாற் பூரித்துக் கும்பித்துப் பிங்கலையால் இரேசிப்பதும், பிங்கலையாற் பூரித்துக் குறிபித்து இடகலையால் இரேசிப்பதும் பிராணாயாம முறையால் என்றவாறு. பிரத்தியாகாரம் 94. நாசிக் கதோமுகம் பன்னிரண்டங் குலம் நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யுந் தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே. (581) மனத்தை ஐம்புலப் பொருள்களிற் புறத்தே போகாது அகத்தே திருப்புதலாகிய பிரத்தியாகாரத்தால் உண்டாகும் பயன் உணர்த்துகின்றது. (இ - ள்) மூக்குக்குக் கீழே பன்னிரண்டங்குல எல்லை யிலுள்ள அநாகதத்தானத்திலே சாதகனாகிய நீ உள்ளத்தை ஒருமை நிலையில் வைத்துப் பரம்பொருளைத் தியானித்தலையும் செய்ய வல்லாயாயின் பெருமை வாய்ந்த சித்தியும் பெருமை பொருந்திய (இராச) யோகமும் வந்த நின்னைப் பொருந்தும். உன்னுடைய உடம்புக்கு எக்காலத்தும் அழிவில்லை எ - று. நாசி - மூக்கு. அதோமுகம் - கீழே. பன்னிரண்டகுலி எல்லையிலுள்ளது அநாகததானமாகும். இதயத்தானமாகிய இதுவே இறைவனை அகத்தே வைத்துப் பூசனை செய்தற்குரிய இடமாகும். பிரத்தியாகாரம் என்பது மனத்தினைப்புறத்தே செல்லாமல் அகமுகமாகத் திருப்பும் பயிற்சி, இது தொகைநிலை யெனவும் பெயர்பெறும். இதன் இயல்பினை, பொறியுணர் வெல்லாம் புலத்தின் வழாமல் ஒருவழிப் படுப்பது தொகைநிலை யாமே எனவரும் சிலப்பதிகார உரை மேற்கோளால் உணரலாம். தாரணை 95. கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணாத்தண் டூடே வெளியுறத்தா னோக்கிக் காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு வாணா ளடைக்கும் வழியது வாமே. (588) தாரணையால் விளையும் பயன் உணர்த்துகின்றது. (இ - ள்) புறத்தே புலங்களின்வழிப் படராமல் அக முகப்பட்டு நிற்கும் மனத்தினைக் குறிக்கத்தக்க பொருளாகிய சிவத்தினிடத்தே (பிரமரந்திரமளவும்) கொண்டு செலுத்தி (அவ்வாறு சென்ற மனத்தினை)க் கீழ்நோக்கிச் செல்லாதபடி (மந்திர முதலிய சாதனங்களாற்) பிணித்து நடுநாடியின் உள்வழியாக (ஆறு ஆதாரங்களையும் கடந்து) மேலைப் பெருவெளியை அகமுகமாக நோக்கிய நிலையில் (புறத்தேயுள்ள கண்களும் செவிகளும்) காணாக்கண்களும் கேளாச் செவிகளும் எனக் கண்டோர் கருதும்படி (சோதிப் பொருளாகிய இறைவனை அகத்தே நோக்கி) இருக்கும் தாரணைப் பயிற்சி யுடையார்க்கு அப்பயிற்சி (வினைவயத்தால் உயிர்க்கு வரையறுத்துள்ள) வாழ்நாள் (வீணே கழியாதபடி) அடைத்துக் காக்கும் உபாயமாம் எ - று. தாரணை - தாங்கி நிற்றல்; இது பொறை எனவும் பெயர் பெறும். பொறை - பொறுத்தல்; மனமானது இறைவன் திருவருளைத் தன்கண் தாங்கி நிற்றல். மனத்தினை ஒருவழி நிறுப்பது பொறைநிலை எனவரும் சிலப்பதிகார உரைமேற் கோள் தாரணையின் இலக்கணத்தினை உணர்த்துவதாகும். கோணாமனம் - உயிரின் நோக்கத்திற்கு மாறுபடாது ஒத்துச் செல்லுமனம். குறிக்கொள்ளுதல் - குறிக்கதக்க இலக்காகிய சிவனிடத்திலே செலுத்துதல். கீழ்க்கட் - கீழே செல்லாதபடி பிணித்து நிறுத்தி. வீணாத்தண்டு - நாடி. வெளி - பிரமரந்திரம். வாழ் நாள் - வாணாள் என புணர்ந்தது. வாழ்நாள் வழி - உயிர் உடம்புடன் கூடவாழும் நாள் கழிந்து செல்லும் வழி. அதனை அடைதலாவது, அந்நாட்களைக் கழிய விடாது உயிர்நெடுங்கால உடம்புடன் கூடியிருக்கும்படி தடுத்து நிறுத்தும் உபாயமாகிய யோகப்பயிற்சி. இத்திருமந்திரம், வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் (33) எனவரும் திருக்குறளின் சொற்பொருள்களை அடியொற்றி யமைந்திருத்தல் அறியத்தகுவதாகும். தியானம் 96. எண்ணாயிரத் தாண்டு யோக மிருக்கினுங் கண்ணா ரமுதனைக் கண்டறி வாரில்லை உண்ணாடி யுள்ளே யொளிபெற நோக்கிடிற் கண்ணாடி போலே கலந்திருந்தானே. (603) தியானம் ஆமாறும் அதன் பயனும் உணர்த்துகின்றது. (இ-ள்) எண்ணாயிரம் ஆண்டுகள் யோக நிலையில் (உள்ளத்தை ஒருமைப்படுத்தி) இருந்தாலும் (தியானிப் போர்) கண்களாற் பருகுதற்கினிய அமுதமாகக் காட்சி நல்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டறிவார் இல்லை (அம்முதல்வனை அவனருளால்) தம் உள்ளத்துள்ளே நாடி அகத் தெழுஞ் சோதியின் ஒளிதோன்றுமாறு இருந்து நோக்கினால் கண்ணாடி யினுள்ளே வடிவந்தோன்றுமாறு போல அம்முதல்வன் உள்ளத்துள்ளே கலந்து தோன்றுவான் எ - று. தாரணையில் நிறுத்தப்பட்ட உள்ளமானது ஐம்புலன்கள் அவற்றால் எய்தும் நுகர்ச்சிகள் ஆகியவற்றால் திரிபு அடையாமல் அவற்றைக் கடந்து மெய்ப்பொருளாகிய இறைவனுடன் ஒன்றித் தொடர்புறுதல். இதன் இயல்பினை, நிறுத்திய அம்மனம் நிலைதிரி யாமற் குறித்த பொருளோடு கொளுத்துவது நினைவே எனவரும் சிலப்பதிகார உரை மேற்கோளால் அறியலாம். இத்தியானம் திருவருளாகிய சத்தியைக் தியானிக்கும் பரத்தி யானமும் ஞானவடிவாகிய குருவைத்தியானிக்கும் சிவத்தி யானமும் என இருவகையாகி யோகத்திற்கு அங்கமாகும். இவற்றுள் முன்னையது சகளத்தியானம் எனவும், பின்னையது நிஷ்களத்தியானம் எனவும் கூறப்படும். இத் திருப்பாடலிற் குறித்தது சிவத்தியானமாகும். காணுதல்-வடிவளவிற் காண்டல். அறிதல்-அதன் இயல்பினை உள்ள வாறறிதல். மதிப்பவர் மனமணி விளக்கை என்றவாறு உள்ளத்துள்ளே நாடி அவ்வொளி தோன்றுமாறு தியானித்தால் கண்ணாடியுள் வடிவந்தோன்றுமாறு போல உயிர்க்குயிராய இறைவன் உள்ளத் துள்ளே ஒளியுருவாய்க் கலந்து வெளிப்பட்டருள்வன் என்பார், உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிடிற், கண்ணாடிபோலே கலந்திருந்தானே என்றார். தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனுந் தேடித்தேடொணாத் தேவனையென்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் என்பது திருநாவுக்கரசரது தியான அநுபவமாகும். 97. மணிகடல் யானை வளர்குழல் மேக மணி வண்டு தும்பி வளைபேரிகையாழ் தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்க வொண்ணாதே. (606) தியானத்தில் ஆழ்ந்திருப்போர்க்குத் தம்முள்ளே தொன்றும் பத்துவகை நுண்ணிய நாதங்களின் வழியாக இறைவனையடைந்து மகிழும் நிலை உண்டாகும் என்கின்றார். (இ - ள்) மணி, கடல், யானை, இசை வளர்ச்சிக்கு இடனாகிய வேய்ங்குழல், மேகம், நீலமணி போலும் நிறமுடைய வண்டு, (தேன் நுகரும்) தும்பி, வளை (சங்கு) பேரிகை, யாழ் என நுண்ணியவாய் மென்மையாகத் தோன்றுகின்ற இப் பத்துவகை ஒலிகளும் இறைவனைத் தாழ்ந்து போற்றும் தியானமுடையார்க்கு அன்றி ஏனையோரால் செவிப்புலனால் கண்டுணர்தல் இயலாது எ-று. மணி, கடல், முதலாக எண்ணப்பட்ட பத்தும் அவற்றால் எழும் ஓசையைக் குறித்து நிற்கின்றன. தணிந்து எழுநாதம் - தியானிப்போர் உள்ளத்துள்ளே இறைவனருளால் மென்மையாகத் தோன்றும் நுண்ணிய ஒலிகள். நன்மணிநாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவதாகாதே வீணைமுரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடுமாகாதே சங்குதிரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பனவாகாதே என மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத் தொடர்கள் அவர்தம் தியான அநுபவத்தின் மெய்ம்மையினைப் புலப்படுத்து வனவாதல் அறிந்து போற்றத் தகுவதாகும். இவ்வாறு இறைவன் திருவருளால் தம் அகத்தே தோன்றும் நுண்ணிய ஒலியின் வழியாக இறைவனைக் கண்டு தெரிசிப்பதாகிய தியான முறையினை அறிவுறுத்துவது, திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற நேர்பட அங்கேநின் றுந்தீபற எனவரும் திருவுந்தியாராகும். திருச்சிலம்பாகிய திருவருளினுடைய ஓசையொலியாகிய பிரகாச ஒலிவழியே சென்று அவ் விடத்திலே செவ்வியதாக நின்று ஐந்தொழில் திருக்கூத்தியற்றும் இறைவனைக் கண்டு தெரிசிப்பாயாக என்பது இதன் பொருளாகும். சமாதி 98. கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று சிற்பனை யெல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே. (628) எண்வகை யோகவுறுப்புக்களுள் ஒன்றாகிய சமாதியின் இயல்பு உணர்த்துகின்றது. (இ-ள்) பொருள்தோறும் உலகத்தார் கற்பித்து வழங்குகின்ற கற்பனைகளை யொழிந்து மூலாக்கினிவழியே மேற் சென்று (உலநினைச் சிருட்டித்த) சிற்பனும் பேரொளி யாய்த் திகழும் அழகனும் ஆகிய இறைவனைத் தேடிப் புணர்ந்த சந்திரமண்டலத்தோடு பொருந்தித் தனக்கு மேலான பரம்பொருளே தான் ஆகும் நிலையில் தற்போத மிழந்து ஒன்றியுடனாகும் தகுதிவாய்ந்ததே உள்ளத்தைக் குளிர்விக்கும் தண்மையினதாகிய சமாதி எ-று. கற்பனை-உலகத்தார் பொருள்தோறும் புனைந்து வழங்கும் பெயர், வடிவு முதலிய வேற்றுமைகள். கன மூலாக்கினி. சிற்பன்-உலகினைப் படைத்த சிற்பி: என்ற உலகியற்றியானாகிய இறைவனை. புணர்மதி-மூலாக்கினியின் வெம்மை சென்று சார்தற்கு இடனாகிய சந்தி மண்டலம். தற்பரம்-தனக்குப்பரம் என்றது, ஆன்மவாகிய தனக்கு மேலான பொருள் என்றவாறு. தண்மை குளிர்ச்சி. சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே எனவும் உளங்குளிர் தமிழ்மாலை எனவும் வரும் திருமுறைத் தொடர்கள், பிறவித் துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்குவது இறைவன் திருவருள் நினைவாகிய சிவஞானம் என்னும் மெய்ம்மையை வற்புறுத்துவனவாகும். சமாதி என்பது இயமம் முதலான எண்வகை யோக அங்கங்களிலும் பயிற்சி நிரம்பிய ஆன்மா தன்னை மறந்து சிவத்துடன் ஒன்றியுணரும் நிலை. ஞானத்தின் நுண்மை நிலையாகிய இதனை நொசிப்பு என வழங்குதல் தமிழ் மரபு. நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை (தொல். உரியியல்-78) என்றார் தொல்காப்பியனார். நொசிப்பு எனப்படும் சமாதியின் இயல்பினை விளக்குவது, ஆங்ஙனம் புணர்ந்த அம்முதற் பொருளொடு தான்பிற னாகாத் தகையது சமாதி (சிலப்-ஊர்காண்-11) எனவரும் சிலப்பதிகார உரை மேற்கோளாகும். கற்பனையற்று என்னும் இத்திருமந்திரச் சொற்பொருளமைப்பினை நினைவு கூரும் முறையில் அமைந்தது, கற்பளை கடந்தசோதி கருணையே உருவமாகி அற்புதக் கோலம்நீடி அருமறைச் சிரத்தின்மேலாம் சிற்பர வியோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள்நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றிபோற்றி எனவரும் பெரியபுராணத் திருப்பாடலாகும். அட்டமாசித்தி 99. தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும் மானாக் கனமும் பரகாயத் தேகமும் தானாவதும் பரகாயஞ் சேர் தன்மையும் ஆனாத வுண்மையும் வியாபியும் ஆம் எட்டே. (649) எட்டுச் சித்திகளையும் தொகுத்துக் கூறுகின்றது. (இ - ள்) தன்னை அணுவாகச் சுருக்கிக் கொள்ளும் அணிமாவும், உலகத்துத் தன்னை மலைபோலப் பெருக்கிக் கொள்ளும் மகிமாவும், அளவிடமுடியாத கனமுடையதாகச் செய்யும் கரிமாவும், ஆகாயம்போல நொய்தாகச் செய்யும் இலகிமாவும், எங்குந் தானாக விரிந்து எல்லா வற்றையும் தன்பால் தருவிக்கும் பிராப்தியும், தான் விரும்பிய பொருள்களைப் படைத்து விரும்பிய வடிவிற் சேர்ந்து நுகரும் பிராகாமியமும், தத்துவங்களை நீங்காது நின்று விரும்பியபடி நடத்தும் உண்மைநிலையாகிய ஈசத்துவமும், தத்துவங்களில் கலந்து எங்கும் வியாபித்து எல்லாவற்றையும் தன்பால் ஈர்க்கும் வசித்துவமும் எனச் சித்திகள் எட்டாகும் எ-று. அணிமா தம் உடம்பினை அணுவினும் மிக நுண்ணிய தாக்கிக் கொள்ளும் வன்மை. மகிமா - மலையினும் மிக்க பெருமையுடைய வடிவினைக் கொள்ளுந் திறன். கரிமா - இலேசான பஞ்சினையும் அளவிடமுடியாத கன முடையதாகச் செய்யும் ஆற்றல். இலகிமா - எத்துணைக் கனமுடைய பொருளையும் ஆகாயத்தினும் நொய்தாகச் செய்யும் திறன். பிராப்தி - வேண்டியவெல்லாம் விரும்பியவாறு அடையப் பெறுதல். பிராகாமியம் - விரும்பிய நுகர்பொருள்களைப் படைத்து விரும்பிய பல வடிவிற் புகுந்து அவற்றை நுகர்தல். ஈசத்துவம் - தத்துவங்களை நீங்காமல் நின்று அவற்றை நடத்தும் இயல்பினால் தேவர் முதலியோரால் வழிபடப்பெறுதல். வசித்துவம் எல்லா உலகங்களையும் தன்வசப்படுத்தல். 100. ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை காதலில் அண்ணலைக் காண இனியவர் நாதன் இருந்த நகர்அறி வாரே. (707) புறத்தேயுள்ள தலங்களிற் சென்று இறைவனைக் காண்தினும் தம் அகத்தே கண்டு வழிபடுதலே மிகவும் பயன்தருவதாம் என அறிவுறுத்துகின்றது. (இ - ள்) அலைகளையுடைய கடல் ஆரவாரிக்கும் உலகினை வலம் வந்து தம்முடைய கால்கள் வருந்த நடந்து தலயாத்திரை செய்தும் (அதனாற் பெறும்) பயன் ஒன்றுமில்லை. பேரன்பினால் இறைவனைத் தம்முள்ளத்தே கண்டு மகிழும் இனிமையுடையார் ஆன்ம நாயகனாகிய இறைவன் எழுந்தருளிய நகர் இதுவேயென்று அறியும் தெளிவுடையாராவர் எ-று. ஓதம் - ஆலை; அலைகளையுடைய கடலையுணர்த்தியது. இறைவன் உயிர்க்குயிராய் எங்கும் நீக்கமறக் கலந்துள்ளான் என்னும் உண்மையையுணர்ந்து அம் முதல்வனைத் தமது அகத்தே கண்டு வழிபடுந் தெளிவுடைய சிவயோகிகளே எங்கும் வியாபித்து எவ்வுயிர்களையும் தம் வசப்படுத்தவல்ல வசித்துவமுடையோராவர் என்பதாம். கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்குமரித் துறை யாடிலென் ஒங்கு மாகடல் ஓதநீராடி லென் எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே (5-99-2) எனவும், கானநாடு கலந்து திரியிலென் ஞானன் என் வர்க்கன்றி நன்கில்லையே எனவும், நாடினார் கமலம் மலரயனோ டிரணியன் ஆகங்கீண்டவன் நாடிக்காணமாட்டாத் தழலாய நம்பானைப் பாடுவார் பணிவார் பல்லாண்டிசை கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத் தேடிக் கண்டுகொண்டேன் திருவாரூர் அம்மானே (4-20-10) எனவும் வரும் அப்பர் அருள்மொழிகள் வசித்துவமுடைய பத்தர்களது மாண்பினை நன்கு விளக்குவனவாகும். 101. ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று மீதான தற்பரை மேவும் பரனொடு மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி ஓதா அசிந்தமீ தானந்த யோகமே. (709) ஆனந்த யோக நெறிக்கு உபாயம் கூறுகின்றது. (இ-ள்) ஆறு ஆதாரங்களிலும் வைத்து முறையே வழிபடுதற்குரிய அதிதெய்வங்களாகிய மூர்த்திகளின் திருவருளுடனே மேற்சென்று புருவநடுவாகிய ஆஞ்ஞைத் தானத்திற்கு அப்பால் மேலான பிரமரந்திரமாகிய வெளியில் (ஆயிரஇதழ்த்தாமரையில்) தற்பரையாகிய சத்தியுடன் கூடிய சிவபரம் பொருளோடு அறிவுத்தானமாகிய மேதை முதலிய பதினாறு கலைகளையுடைய மதி மண்டலத்தையடைய மேற்பட்டுத் தோன்றும் பேரொளிக் காட்சியில் ஓதுதற்கும் சிந்தித்தற்கும் அரிய நிலையில் ஒன்றி இன்புறுதலே சிவானந்த யோகமாம் எ-று. ஆறு ஆதாரங்களாவன: மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி. ஆஞ்ஞை என்பன. இவற்றில் வைத்து வழிபடுதற்குரிய அதிதெய்வங்கள் முறையே விநாயகன், பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்போராவர். மீதானம்-ஆறாதாரகங்ளுக்கும் மேலேயுள்ள இடம்; என்றது புருவ நடுவாகி ஆஞ்ஞைத்தானத்திற்கு மேலாகவுள்ள பிரமரந்தி வெளியை. மேதை என்பது ஞானாக்கினியாகிய கலை- இது தீப்பிழம்பின் நிறமுடையது என்பர். ஈரெண் கலை பதினாறு கலை நிலைகள். பிரமரந்திரத்துக்கு அப்பால் உள்ள வெளியில் உள்ள பதினாறு கலை நிலைகளாவன; 1. அகாரம் 2. உகராம், 3. மகாரம், 4. விந்து, 5. அரைமதி 6. நிரோதினி, 7. நாதம், 8. நாதாந்தம், 9. இடதுபுறத்துச் சத்தி, 10. வியாபினி, 11. வியோமரூமை 12. அனந்தை, 13. அநாதை, 14. அநாசிருதை 15. சமனை, 16. உன்மனை. இவையாவும் பராசத்தியின் நிலைகள் எனவும் இவற்றுள் அகரம் முதல் நாதாந்தம் வரையுள்ள எட்டும் ஆதாரம் எனவும், சத்திமுதல் உன்மனை வரையுள்ள எட்டும் நிராதாரம் எனவும் கூறுவர். மனம் புறப் பொருள்களிற் செல்லாமல் உடம்பின் அகத்தேயுள்ள ஆறு ஆதாரங்களிலும் முறையே அவற்றிற்கு அதிதெய்வமாகிய மூர்த்தியைத் தியானித்த பயிற்சியாலே நிராதாரமாகிய மனத்துளக்கமற்ற மேலிடத்திலே பரம் பொருளை வழிபட்டு மகிழுமாறுணர்த்தும் இத்திருமந்திரம் பொருளை, வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும் வழிவைத்தார்க் கவ்வழியே போதும்நாமே (6-12-1) எனத் திருநாவுக்கரசரும். ஆதாரத் தாலே நிராதாரத்தே சென்று மீதானத் தேசெல வுந்தீ பற விமலற் கிடம தென்றுந் தீபற (திருவுந்தியார்-8) எனத் திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரும் குறிப்பிட்டு விளக்கியுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். காயசித்தி உபாயம் 102. உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. (724) உயிர் ஞானம் பெறுதற்கு வாயிலாயமைந்த உடம்பினைப் பேணுதலின் இன்றியமையாமையினைத் திருமூலர் தமது அநுபவத்தில் வைத்து இத்திருப்பாடலால் வற்புறுத்தி யருள்கின்றார். (இ-ள்) [ïiwtdUshš cÆ®fŸbg‰w] உடம்பு (நன்முறையிற் பேணப்படாது) சிதையுமானால் (அதன் கண் நிலைபெற்ற) உயிரும் பயன்பெறாது தளர்ச்சியுறும். (அதுவுமன்றி) உறுதியாக மெய்ஞ்ஞானத்தையும் அது பெறமாட்டாது. (ஆகவே) உடம்பினை வளர்த்தற்குரிய (இயமம் முதலிய யோகவுறுப்புக்களாகிய) உபாயங்களை உணர்ந்து எனது உடம்பினை நன்முறையிற் பேணி வளர்த்தேன். அதனால் நிலைபெற்ற உயிர்க்குரிய ஞானத்தையும் வளர்த்தவனாயினேன். எ-று. உயர்திணையாகிய மக்களை உடம்பும் உயிரும் எனப் பிரித்துப் பேசுமிடத்து அஃறிணைச் சொல்லால் வழங்குதல் முறையாயினும், அவற்றோடு ஒன்றிச் செலுத்தும் தெய்வ ஆற்றலை நோக்கி உடம்பார், உயிரார் என உயர்திணைச் சொல்லாற் குறித்தார் திருமூலர். காலம் உலகம் உயிரே உடம்பே (தொல்-சொல்-58) என்னும் சூத்திரத்தில் சொல்லப்பட்ட சொற்கள், உயிர்திணைப் பொருள்களைக் குறித்தன வாயினும் சொல்வகையால் அஃறிணைச் சொற்களே எனவும் அவை உயர்திணைக்குரியவாக ஈறுதிரித்துச் சொல்லப்படின் உயர்திணைச் சொல் முடிவுபெறும் (தொல் -சொல்-60) எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளமை இங்கு உணரத் தகுவதாகும். உயிருக்கு என்று அழிவில்லையாகவும் ஈண்டு உயிரார் அழிவர் என்றது ஆன்மா தனக்குரிய பயனைப்பெறாது இழத்தலைக் குறித்து நின்றது. உயிரை வளர்த்தலாவது ஆன்மாவை ஞான பெருக்க முடையதாக உயரச் செய்தல் 103. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. (725) மக்கள் உடம்பின் மாண்பினை விளக்கி உடலோம்பலின் இன்றியமையாமையினைத் தமது அநுபவத்தில் வைத்து அருளிச்செய்கின்றார். (இ-ள்) உண்மை யுணராத முற் பருவத்தில் உடம்பினைக் குற்றமுடையது என்று எண்ணி (அதனைப்பேணாது இகழ்ந்திருந் தேன். (இறைவனருளால் சிவயோக நெறியில் ஒழுக நேர்ந்த பின்) எனது உடம்பினுள்ளே (எனது உயிரினும்) மேலானதொரு பொருள் பொருந்தியிருத்தலைக் கண்டுணர்ந்தேன். எனது உடம்பினுள்ளே யாவர்க்கும் மேலோனாகிய இறைவன் உடம்பைக் கோயிலாகக்கொண்டு எழுந்தருளியுள்ளான் என்னும் மெய்ம்மை யுணர்ந்து எனது உடம்பினை யான் (இயம முதலிய யோக சாதனங்களை மேற்கொண்டு பல்லாண்டுகள் யோக நிலையில்) இருந்து தளராது பேணிவருகின்றேன். எ-று. இழுக்கு-குற்றம். உறுபொருள்-மேலான பொருள். உத்தமன்-யாவர்க்கும் உயர்ந்தோன். இருத்தல்-யோக சாதனங்களால் இவ்வுலகில் நெடுங்காலம் உடம்பொடு கூடியிருத்தல். ஓம்புதல்-பாதுகாத்தல். இத்திருமந்திரத்தை ஆடியொற்றி இதன் விளக்கமாக அமைந்தவை, உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் அட்டிஉயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்துநோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே (4-75-4) எனவும், காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீரமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே (4-76-4) எனவும், புன்புலால் யாக்கை புரைபுரைகனியப் பொன்னெடுங் கோயிலாப்புகுந்தென் என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே (திருவாசகம்) எனவும், வினைபடும் உடல்நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானமாயினதே (திருவிசைப்பா) எனவும் வரும் திருமுறைப்பனுவல்களாகும். நாலாந் தந்திரம் யோக உறுப்புக்களால் உடம்பை நன்கு பேணிச் சரியை கிரியை ஆகிய நெறிகளில் பழகிச் சிவ யோகத்தில் நிலைபெற்று நின்று சிவ ஞானமாகிய பயனைப் பெறுதற்கு நிறைமொழி மாந்தர் அருளிய மறை மொழிகளாகிய மந்திரங்களின் பயிற்சியும் அவற்றின் வலிமையும் பெறுதல் இன்றியமையாததாகும். ஆகவே திருவம்பலச் சக்கரம் முதலிய மந்திரச்சக்கரங்களின் உபாசனை முறைகள் நாலாந் தந்திரத்தில் விரிவாக விளக்கப் பெற்றுளன. இது அசபை முதல் நவாக்கரி சக்கரம் ஈறால் பதின்மூன்று தலைப்புக்களை உடையது. இதன்கண் மந்திரச் சக்கரங்களின் வடிவம், அளவு, வரைகள், அவற்றில் அடைக்கப் பெறும் மந்திர எழுத்துக்கள், உரிய மந்திரங்கள், அவற்றை யருச்சிக்கும் முறைகள், அவ்வவற்றின் அதி தெய்வம், வலிமை, பயன் முதலிய விரித்து உரைக்கப் பெற்றுள்ளன. இன்ன சக்கரத்தை இன்ன சாதனத்தில் எழுதி இன்ன இடத்தில் இன்னவாறு மேலச்சும் அணியும் மலரும் முதலியன சாத்தி இன்னபடி இத்தனை காலம் வழிபட்டால் வசியம் முதலாகச் சொல்லப்படும் உலகியற் பயன்களுள் இன்னின்ன பயன்களை எளிதிற் பெறலாம் என்ற செயன் முறைகளைத் திருமூலதேவர் இத் தந்திரத்தில் விரித்துக் கூறுகின்றார். இறைவன் தனது திருவருளாகிய சத்தியின் மூலமாகவே உயிர்கட்கு அருள் புரிவானாதலால் இத் தந்திரத்திற் கூறப்படும் மந்திரச் சச்கரங்களிற் பெரும்பாலன இறைவனது திருவருளாகிய சத்திபேதங்களைப் பற்றியனவாக அமைந்துள்ளன. மக்கள் விரும்பிய பயன்களை அறிக்கவல்ல இத் திருமந்திரங்கள் நாட்டில் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வருவன. கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய் கலைப்பாவை மந்திரமாதலின் (காடுகாண் 196-7) எனவும் அருமறைமருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை யெழுத்தின் மந்திரமிண்டும், ஒருமுறையாக உளங்கொண்டோதி (காடுகாண் 128 - 130) எனவும்வரும் இளங்கோ அடிகள் வாய்மொழியால் இவற்றின் தொன்மை இனிது விளங்கும். எனவே இவை தொன்றுதொட்டு நம் நாட்டில் உபதேச முறையில் நெடுங்காலமாக வழங்கிவருவன என்பது புலனாகும். திருமூலர் ஆரியமும் செந்தமிழும் கற்று வல்ல சிவயோகியராதலால் இமயம் முதல் குமரி வரையுள்ள பாரத நாட்டினர் அனைவர்க்கும் பயன்படும் முறையில் தமிழும் ஆரியமுமாகிய இரு மொழியெழுத்துக்களும் விரவிய நிலையில் அகரமுதலாகிய ஐம்பத்தோர் எழுத்துக்களால் ஆகிய மந்திரங்களை இந் நூலில் வகுத்துக் கூறியுள்ளார். அசபை ஓரெழுத்து மந்திரமாகிய இது, மந்திரங்களுக்கெல்லாம் அடிப்படையானது. செபிக்கப்படாமல் பிராணனுடன் இழைந்தியங்கும் மந்திரமாதலின் அசபை எனப்பட்டது. ஹம்ஸ என்னும் இதனை அம்ச மந்திரமென்றும் அன்ன மந்திரம் என்றும் அங்குசம் என்றும் வழங்குதல் உண்டு. 104. போற்றுகின்றேன் புகழ்ந்தும் புகல் ஞானத்தைத் தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி சாற்றுகின்றேன் அறையோ சிவ யோகத்தை ஏற்றுகின்றேன் எம்பிரான் ஓர் எழுத்தே. (884) ஓரெழுத்து மந்திரமாகிய அசபா மந்திரத்தின் இயல்பும் பயனும் கூறுகினறது. (இ-ள்) எம்பிரானின் வடிவாகிய அசபா மந்திரமாகிய ஓரெழுத்தினை எனது உயிர்ப்பின்வழி ஏற்றுகின்றேன் அதனால் வீடுபேற்றுக்கு ஏதுவாகிய சிவஞானத்தைப் பேணிப்போற்று கின்றேன். ஞானத்தின் துணையால் ஆரூயிர் நாயகனாகிய இறைவன் திருவடிகளைச் சிந்தையிற் கொண்டு தெளிந்து வழிபடுகின்றேன். உலக மக்களே எனது சிவயோக அநுபவத்தின் பயனாகக் கிடைத்த இவ்வின்பத்தினை உங்களுக்கெல்லாம் எடுத்துக் கூறி அடைகின்றேன். வம்மின். எ-று. அறையோ-உலகத்தாரைக் கூவியழைக்கும் சொல் உயிர்ப்பினை யுள்ளிழுக்கும் நிலையில் ஸ: எனவும் வெவிடும் நிலையில் அகம் எனவும் பாவிக்கும் முறையில் பேசா எழுத்தாய் நிற்கும் பேற்றியினையுடைய மந்திரமூலத்தையே அசபை என்பர். என்னுளே யுயிர்பப்ய் புறம்போந்துபுக் கென்னுளே நிற்கும் இன்னம்பரீசனே எனவரும் திருக்குறுந்தொகை இம்மந்திரத்தியல் பினை குறித்து நிற்றல் உய்த்துணரத்தகுவதாகும். ஸ: - அவன் இறைவன். அகம் - நான்; உயிர். 105. பொன்னான மந்திரம் புகலவு மொண்ணாது பொன்னான மந்திரம் பொறிகிஞ் சுகத்தாகும் பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிந் பொன்னாகும் வல்லார்க் குடம்பு பொற்பாதமே. (906) மந்திரத்தைச் செபிக்கும் முறை உணர்த்துகின்றது. (இ-ள்) பொன்போல் ஒளிவிடும் இம்மந்திரத்தை வாயால் உச்சரிக்கவும் கூடாது. பொன்போன்ற இம்மந்திரம் (முருக்கமலர் போன்ற) வாய்க்குள் அமையத்தக்கதாகும். பொன்னொளியாகிய இம் மந்திரத்தைப் பிராணனோடு கூட்டிப் பூரகம் செய்தால் (உள்ளே கொண்டால்) உடம்பு பொன்னாகும். அதனை மேலும் கும்பிக்க (உள் நிறுத்த) வல்லார்க்குப் பொன்னார் கழலாகிய திருவடிப் பேறு சித்திக்கும். பொன்னான மந்திரம்-திருவைந்தெழுத்து. புகலுதல்-சொல்லுதல். தன் செவிக்குப் புலனாகச் செபித்தலும் பிறர் செவிக்குப் புலனாகச் செபித்தலும் என மந்திர செபத்துக்கு இவ்விருவகையும் கூடாது. புகை-வாயு; பிராணன். புகையுண்டு பூரித்தலாவது திருவைந் தெழுத்தையே பிராணவாயுவுடன் கொண்டு உள் நிறைத்தல். வல்லார்-பூரகத்தின் மேலும் கும்பகம் (நிறுத்துதல்) செய்ய வல்லார். திருவம்பலச் சக்கரம் மந்திரங்களின் மேம்பட்ட திருவைந்தெழுத்திற்கு அமைந்த சக்கரங்களுள் சிறப்புடையது திருவம்பலச் சக்கரம். சிதாகாசப் பெருவெளியில் ஆனந்தக் கூத்தாடும் அம்பலவாணர் அருட்சத்தியாகிய சிவகாமியம்மையுடன் மந்திர வடிவாய் நின்று நிலவுவது இந்த யந்திரமாகும். மந்திரத் தலையாக விளங்குவது திருவம்பலச் சக்கரம் என்பர். 106. அஞ்செழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம் அஞ்செழுத்தாகிய அக்கர சக்கரம் அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந்தானே. (934) திருவைந்தெழுத்தே இறைவனுக்குரிய மந்திரவடிவாயுள்ளமை கூறுகின்றது. (இ-ள்) நந்தியாகிய இறைவன் அஞ்செழுத்தாகிய மந்திர வடிவாக அமர்ந்துள்ளான். அவன் விரும்பியமர்ந்த பஞ்சாக்கரமும் ஐந்தெழுத்தால் ஆகியதே. ஐந்தெழுத்தாகிய அக்கரங்கள் அடைக்கப்பட்ட சக்கரத்துள்ளே ஐந்தெழுத்தையே தனது திருமேனியாகச் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ளான் எ-று. 107. ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயிருதோள் வவ்வாய்க் கண்டபி ஆகின்ற வச்சுடர்யவ்வியல் பாமே. (94) திருவைந்தெழுத்தே கூத்தப் பெருமான் திருமேனி யாதனை கூறுகின்றது. (இ-ள்) உயிர்கட்கு ஆக்கமளிக்கும் திருவடியும் அந்த நகரமாய் நிலைபெறும். உந்திச் சுழியுள் அவ்விடத்தே மகரம் பொருந்துவதாம். சிகாரம் இரண்டு தோள்களாகவும் வகாரத்தை வாயாகவும் கண்டபிறகு திருமுடிக்கண் விளங்குகின்ற சுடர் யகாரத் தன்மையதாகும் எ-று. நவ் விரண்டு காலதாய் நவின்ற மவ் வயிறதாய் சிவ் விரண்டு தோளதாய் சிறந்த வவ்வு வாயதாய் யவ் விரண்டு கண்ணதாய் எழுத்து நின்ற நேர்மையிற் செவ்வை யொத்து நின்றாதே சிவாய மஞ்செழுத் துமே. (சிவ வாக்கியர் - 97) இதன் ஈற்றடி ஆகின்ற வச்சுடர் யவ்வியல்பாமே என்றிருத்தல் வேண்டும் என்பது முடியப்பார் (32) என்னும் உண்மை விளக்கத்தால் புலனாம். பொன்னம்பலத்திலே ஐந்தொழில் திருக்கூத்தியற்றும் இறைவன் தன் திருவடியிலே நகரமும், திருவுந்தியிலே மகரமும், திருத்தோள்களிலே சிகரமும், திருமுகத்திலே வகரமும், திருமுடியிலே யகரமும் ஆகவும், திருவாசி ஓங்காரமும் அதன்கண் உள்ள சுடர்கள் ஓங்காரத்தை விட்டு நீங்காத பஞ்சாக்கரமும் ஆகவும் அமைய ஆடியருளுந் திறத்தினை, ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே நாடுந் திருவடியி லேநகரம் - கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகருமுகம் வா,முடி யப் பார். (32) ஓங்கார மேநற் றிருவாசி யுற்றதனில் நீங்கா எழுத்தே நிறைசுடராம் _ ஆங்காரம் அற்றார் அறிவர் அணி அம்பலத்தான் ஆடலிது பெற்றார் பிறப்பற்றார் பின். (34) எனவரும் உண்மை விளக்கச் செய்யுட்கள் உணர்த்துவன. ஒலிக்கின்ற உடுக்கை ஏந்திய கையிலே சிகரமும், வீசியகையிலே வகரமும், அஞ்சலென்றமைத்த கையிலே யகரமும், தீயேந்திய கையிலே நகரமும், முயலகனை மிதித்தூன்றிய திருவடியிலே மகரமும் அமைய இறைவன் ஆடுந் திறத்தினை, சேர்க்ருந் துடிசிகரம் சிக்கெனவா வீசுகரம் ஆர்க்கும் யகரம் அபயகரம் _ பார்க்கிலிறைக்கு அங்கிநகரம் அடிக்கீழ் முயலகனார் தங்கும் மகரமது தான். (33) எனவரும் உண்மை விளக்கமும், உடுக்கையேந்திய கையினாலே மாயையை நீக்குதலும்; தீயேந்திய கையினாலே வினையைச் சுட்டெரித்தலும், ஊன்றிய திருவாடியினாலே மலம் சாய அமுக்குதலும், எடுத்த திருவடியினாலே அருளே தநுவாக நிறுத்துதலும், அமைத்த கையினாலே உயிர்களை ஆனந்த வெள்ளத்து அழுத்துதலும் இறைவனது திருக்கூத்து முறைமையாதலை, மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டுமலஞ் சாயஅமுக்கி அருள் தானெடுத்து _ நேயத்தால் ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல் தானெந்தை யார்பரதந் தான். (36) எனவரும் உண்மை விளக்கமும் உணர்த்துவன. 108. அஞ்சுள ஆனை அடவியுள் வாழ்வன ஆஞ்சுக்கும் அஞ்செழுத் தங்குச மாவன அஞ்சையுங் கூடத் தடக்க வல்லார்கட்கே அஞ்சாதி யாதி அகம்புக லாமே. (977) திருவைந்தெழுத்தினால் ஐம்பொறிகளை யடக்குமாறு கூறு கின்றது. (இ - ள்) காட்டுள் வாழ்வனவாகிய யானைகள் ஐந்துள்ளன. அவை ஐந்தினுக்கும் திருவைந்தெழுத்தே அங்குசமாவன. அவை ஐந்தினையும் எழுத்தஞ்சினால் மனமாகிய கூடத்தினுள்ளே அடக்கவல்லவர்கட்கே ஐந்தற்கும் முதல்வராகிய சிவசத்திகளிடம் புகமுடியும் எ-று. யானை - பொறிகள், அடவி - உடம்பு. காமம் மயக்கம் ஆகிய புதர் மண்டிக்கிடத்தலின் அடவி என்றார். அஞ்சாதி - ஐந்துக்கும் முதல்வன். ஆதி - சத்தி. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்துங் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து என்றார் தெய்வப் புலவரும். 109. அவளை யறியா அமரரும் இல்லை அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை அவளன்றி யூர்புகு மாறறி யேனே. (1053) உயிர்கட்கு உறுதியினை நல்குவது சிவசத்தியாகிய திருவருளே என அறிவுறுத்துகின்றது. (இ - ள்) திருவருளாகிய அன்னையை மதித்து வழிபட்டுப் பயன்பெறாத தேவர்களும் இல்லை. அன்னையின் துணையின்றி அரிதின் முயன்று நிறைவேற்றுதற்குரிய தவம் ஒன்றுமில்லை. அருளின் துணையின்றி உலகத்தலைவர் ஐவராற் செய்து முடித்தற்குரிய செயல் எதுவும் இல்லை. அன்னையின் துணையாகிய அருட்பதிவின்றி உயிர் வீட்டுலகினை யடைதற்குதவும் பிறிதொரு சாதனம் இருப்பதாக யான் அறிந்திலேன் எ-று. அவள் என்றது, அவனாகிய சிவனொடு பிரிவின்றியுள்ள பராசத்தியைக் குறித்த சொல். அறிதல்-மதித்து வழிபட்டுப் பயன் பெறுதல். அவளன்றி-அருளாகிய துணையின்றி. உயிர்கள் செய்தற்குரிய அரிய தவங்கட்கெல்லாம் தோன்றாத் துணையாய் உடனிருந்து ஊக்கமளிப்பது திருவருளே. திருவருள் உடனிருந்து ஊக்கம் விளைவிக்காத நிலையிற் செய்யப்படும் எத்தவமும் நிறைவேறாது என்பார் அவளன்றாச் செய்யும் அருந்தவம் இல்லை என்றார். ஐவர்-உலகினைப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளுதல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்யும் அயன், மால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்னும் ஐம்பெருங் கடவுளர். ஐம் பொறிகள் என்பாருமுளர். சிவனருளாகிய துணையின்றி ஐவரும் தத்தம் தொழிலைச் செய்து முடிக்கும் ஆற்றலுடையர் அல்லர் என்பார் அவளன்றி ஐவரால் ஆவ தொன்றில்லை என்றார். ஊர்புகுதல்-சிவமா நகராகிய வீடு பேற்றினையடைதல். திருவருளின் உறுதுணையின்றி உயிர்கள் சிவகதியினைப் பெறுதல் இயலாதென்பதனை அருளின் வழிநின்று சிவப்பேறெய்திய யான் எனது அநுபவத்தின் வழி எளிதின் உணர்ந்து கொண்டேன் என்பார், அவளன்றி ஊர்புகும் ஆறு அறியேனே என்றார். ஆறு-வழி, சாதனம். அறிதல் என்றது, ஈண்டு அழுந்தி யறிதலாகிய அநுபவ வறிவினைச் சுட்டிநின்றது. 110. வாயு மனமுங் கடந்த மனோன்மனி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண் பிள்ளை ஆயுங் அறிவுங் கடந்த அரனுக்குத் தாயும் மகளும்நற் றாரமும் ஆமே. (1178) இடமும் இடத்துள பொருளும் (ஆதாரமும் ஆதேயமும்) ஆகச் சிவமும் சத்தியும் விரிந்து விளங்குந்திறம் உணர்த்துகின்றது. (இ-ள்) சொல்லையும் நினைப்பையுங் கடந்த மனோன் மனியாகிய அன்னையும் அச்சம் விளைக்கும் பேய்க் கூட்டத் தினையும் ஆக்கம் நல்கும் பூதகணங்களையும் தனக்கு ஏவந் சுற்றமாக நிரம்பவுடைய கன்னியும் ஆகிய பராசத்தி நூலுணர்வையும் பசு போதத்தையுங் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் சிவபரம்பொருளுக்குத் தாயாகவும் மகளாகவும் நல்ல மனைவியாகவும் திகழ்கின்றாள் எ-று. வாய், மனம் என்பன ஆகு பெயராய்ச் சொல்லையும் நினைப்பையும் குறித்தன. வாயுமனமுங் கடத்தலாவது சிந்தனைக்குஞ் சொல்லுக்கும் எட்டாது அப்பாற்படுதல். மனோன்மனி-பெண்பிள்ளை-கன்னி என்பன இறைவியைக் குறிக்கும். ஆய்தல் என்றது நூலுணர்வையும் அறிவு என்றது உயிரறிவினையும் குறித்தன. அரன் - உயிர்களின் பாசங்களை நீக்குபவன். இறைவனும் அவனின் வேறல்லாத திருவருளும் அருள் புரியுங் குறிப்புடன் சிவமும் சத்தியுமாகத் திகழ்தல் பற்றிச் சிவமும் சத்தியும் கணவனும் மனைவியும் ஆகவும், சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றுதல் பற்றி அவ்விரண்டும் முறையே தந்தை மகள் ஆகவும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றுதல் பற்றி அவ்விரண்டும் முறையே மகன் தாய் ஆகவும், சுத்த மாயையினின்றும் இறைவனது ஞானசத்தியின் தூண்டுதலால் சிவ தத்துவமும் கிரியா சத்தியின் தூண்டுதலால் சத்தி தத்துவமும் முன் பின்னாகத் தோன்றும் முறைபற்றி அவ்விரண்டு முறையே தமையன் தங்கை எனவும் உலகியல் உறவில் வைத்து உருவகம் செய்யப்பெறுவன. அம்மையோடு அப்பனுக்குள்ள பிரிக்கவொண்ணாத தொடர்பினைக் குறிக்கும் இவ்வுருவக முறையினை யுளங்கொண்ட திருவாதவூரடிகள், எம் பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் (திருவாசகம் திருப்பொற்சுண்ணம் 13) எனவும், தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல் தன்னொருபா லவள் அத்தனாம் மகனாம் தில்லையான் (திருக்கோவை - 112) எனவும் இறைவனை உறவுமுறை குறித்துப் போற்றியுள்ளார். தத்துவத் தோற்றம்பற்றிய இவ்வுருவகத்தின் கருத்தினை விளக்கும் முறையில் அமைந்தது, சிவம்சத்தி தன்னையீன்றும் சத்திதான் சிவத்தையீன்றும் உவந்திருவரும் புணர்ந்திங் குலகுயி ரெல்லாமீன்றும் பவன்பிரம சாரியாகும் பான்மொழி கன்னியாகும் தவந்தரு ஞானத்தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே (166) எனவரும் சிவஞான சித்தியாராகும். கனகமார் கவின் செய் மன்றில் அனக நாடகற் கெம் அன்னை மனைவி தாய் தங்கை மகள் (சிதம்பரச் செய்யுட்கோவை) எனவரும் குமரகுருபரர் பாடலும் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாம். பரம் பொருளாகிய இறைவன் புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய் நிற்கும் நிலையிற் சிவன் எனவும் உயிர்களை நோக்கி நிற்கும் நிலையிற் சத்தி எனவும் அப்பனும் அம்மையுமாகக் கூறப்பெறுவன். இறைவனருள் ஞானசத்தியாய் மாயையில் தோய்ந்த பகுதி சிவ தத்துவம். கிரியா சத்தியாய்த் தோய்ந்த பகுதி சத்தி தத்துவம். ஞானமும் கிரியையும் ஒத்துத் தோய்ந்த பகுதி சதாசிவ தத்துவம். ஞானம் குறைந்து கிரியைமிக்குத் தோய்ந்த பகுதி ஈசுர தத்துவம். ஞானமிக்குக் கிரியை குறைந்து தோய்ந்த பகுதி சுத்தவித்தை. இவை ஐந்தும் சுத்த தத்துவங்கள் என வழங்கப்பெறும். இவை பரமசிவனுக்குச் சுதந்திர வடிவங்கள். சிவம், சத்தி, நாதம், விந்து-அருவத்திருமேனி 4, சதாசிவன்-அருவுருவத் திருமேனி 1. மகேசன், உருத்திரன், மால், அயன்-உருவத்திருமேனி 4, ஆக இறைவன் ஒன்பது வேதமாக நின்று உயிர்கட்கு அருள் புரிவன் என்பர். ஐந்தாந் தந்திரம் சுத்த சைவம் முதல் உட்சமயம் முடிய இருபது பிரிவு களையுடையது. நால்வகைச் சைவம், சரியை கிரியை யோகம், ஞானம், சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாசமார்க்கம் ஆகிய நெறிகள், சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய பேறுகள், மந்தம், மந்ததரம், தீவிரம், தீவிரதர சத்திநிபாதங்கள் கூறப்பட்டுள்ளன. புறச் சமயங்களின் ஒவ்வாத் தன்மைகளை எடுத்துரைப்பது புறச்சமய தூடணம் என்ற பகுதி. பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களம் என்றும் உள்ளவை. பதி-இறைவன். இறைவன் ஒருவனே. பசு-உயிர். உயிர்கள் எண்ணில்லாதன. உயிர்கள் அநாதியே மலத்தாற் பிணிக்கப்பட்டுள்ளன. அருளாளனாகிய இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டு அவற்றின் வினைக் கீடாகத் தனுகரணபு வன போகங்களைத் தந்து பிறவிகளிற் செலுத்துகின்றான். உயிர்கள் பல்வகைப் பிறவிகளிலும் பிறந்து வினைகளைச் செய்து உழல்கின்றன. வினைத் துன்பத்தினின்றும் நீங்கிப் பேராவியற்கை யாகிய பேரின்ப நிலையில் இருக்க முயல்வதே நல்லுணர்வுபெற்ற உயிர்களின் குறிக்கோளாக அமைதல் வேண்டும். இவ்வுணர்வு நிலையைப் பெறுதற்குக் குருவருளும் திருநீறு திருவைந்தெழுத்து முதலிய சிவ சாதனங்களுமே துணையாவன. அவற்றின் துணைகொண்டு ஒழுகினால் துன்பம் நீங்கி நிலையான இன்பத்தைப் பெறலாம். இவ்வநுபவம் மாறாதிருக்க அடியார்களுடன் இருக்கும் பழக்கம் இன்றியமையாததாகும். என்னும் உண்மைகள் ஐந்தாந் திரத்திற் கூறப்பட்டுள்ளன. இதன்கண் 1. சுத்த சைவம், 2. அசுத்த சைவம், 3. மார்க்க சைவம், 4. கடுஞ்சுத்த சைவம் என்னும் தலைப்புக்கள் திருமூலதேவர் கருத்துக்கு ஒத்தனவாகத் தோன்றவில்லை. சரியை 111. நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே. (1445) சரியையின் திறமும் பயனும் உணர்த்துகின்றது. (இ-ள்) பல்வேறு நாடுகளும் அவற்றிடையே யமைந்த திருத்தலங்களும் வழிபடும் உயிர்களுக்கு அருள் வழங்கும் நன்மைவாய்ந்த திருக்கோயில்களும் ஆகியவற்றைத் தேடியலைந்து சென்று (மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய எவ்விடத்தும்) சிவபெருமானே என அன்பினால் அழைத்து அம் முதல்வனுடைய புகழ்த்திறங்களைப் பாடித் துதியும்கள். தலையாரக்கும்பிட்டு வணங்குங்கள். அவ்வாறு வணங்கிய பின் அன்பினால் ஒரு நெறிப்பட்ட உமது நெஞ்சினையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளியிருப்பான் அம்முதல்வன் எ-று. நன்மையாவது வழிபடும் அடியார்களது இடரகற்ற யாட்கொள்ளும் அருள் நலம். தேடுதல்-அன்பர் பலரையும் வினவிச் செல்லுதல். திரிதல்-சிவபரம் பொருளை எதிர்ப்பட்டுக் கண்டு மகிழவேண்டும் என்னும் ஆர்வத்துடன் அடியார் பலருடன் பலவூர்களிலும் சுற்றியலைதல். பாடுதல் வாக்கின் தொழிதல். பணிதல், காயத்தின் தொழில். இவ்விரண்டும் சொல்லவே இனம்பற்றி மனத்தின் தொழிலாகிய நினைத்தலும் கொள்ளப்படும். பணிந்தபின், பணிந்தால், பின்னீற்று வினையெச்சம் ஏதுப்பொருளிற் பயின்றுளது. கூடிய நெஞ்சம்-புறத்தே பொறிவழி செல்லாது அறிவின் வழி அகமுகப்பட்டு நின்ற உள்ளம். கோயிலாக் கொள்ளுதல், நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் எனவரும் திருக்குறுந்தொகையாலும் விளக்கப்பெற்றது அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தன் என்பர் அப்பர் அடிகள். கிரியை 112. கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேர வொண்ணாதே. (1452) சிவபூசையாகிய கிரியையில் உள்ளம் ஒருப்படாதவழி பயனில்லை என்கின்றது. (இ-ள்) காட்டின்கண் பொருந்தி வளர்ந்த கோடியோ சனை தூரம் மணங்கமழும் சந்தனமும் வானளவும் மண மோங்கும் பெருமை வாய்ந்த நறுமலர்களும் இட்டுப் புறத்தே பெருமானை வழிபட்டாலும் உடற்பற்றினை யொழித்து உள்ளத்துள்ளே ஞானத்தினால் உணர்ந்து போற்றும் அகப்பூசையாளர்க்கன்றி ஏனையோரால் இன்பமாகிய தேன் சுரக்கும் இறைவனுடைய பொலிவார்த்த திருவடியினைச் சார்தல் இயலாது எ-று. கடி - மணம். சந்தனம் மலர் என்பவற்றை இட்டு வணங்குதல் புறத்தே செய்யப்படும் பூசனை. ஊனினை நீக்கி உணர்தல் என்றது ஐம்பொறி யடக்கமுடையராய் உடற்பற்றினை நீக்கி இறைவனை உள்ளத்துள்ளே வைத்து உணர்ந்துபோற்றுதலாகிய அகப் பூசையினை. இதன் இயல்பு, தாவியவன் உடனிருந்துங் காணாத தற்பரனை ஆவிதனில் அஞ்சொடுக்கி அங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமானே 1-62-6 எனவும் காயமே கோயிலாக எனவும் வரும் திருப்பாடல்களால் இனிது புலனாம். யோகம் 113. பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல் சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு நாவி யணைந்த நடுதறி யாமே. (1459) சிவஞானத்தினை யுணர்தற்கு உபாயமாவது சிவயோகம் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) மலரிடத்தே நறுமணம் உள்ளிருந்து விளைவுமாறு போன்று உயிரினுக்குள்ளே சிவமணம் விளைந்தது. சித்திரம் போல அசைவற்றுச் சிவத்தைத் தியானித்து (யோகநிலையில்) இருந்து உணர்ந்து அறிய வல்லார்க்கு புனாகு சேர்ந்த நடுதறி போன்று (அவர்கள் பால்) சிவஞானமாகிய மறுமணம் நிலை பெற்றுத் தோன்றும் எ-று. கந்தம்-மணம். சீவன்-உயிர். பூவினுள்ளே நறுமணம் வெளிப்பட்டுத் தோன்றுமாறு போன்று உயிர்க்குள்ளே உயிர்க்குயிராகிய சிவம் வெளிப்பட்டு விளங்குமென்பது, உற்றஆக்கையின் உறுபொருள்; நறுமலரெழுதரு நாற்றம்போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம் பொருள் எனவும், பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் ஒழிவற நிறைந்து மேவிய பெருமை இன் றெனக் கெளிவந் தருளி அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள் எனவும் வரும் திருவாதவூரர் அநுபவ மொழிகளால் இனிது புலனாம். ஓவியம்-சித்திரம். ஓவியம் போல உணர்ந்தறிதலாவது சித்திரம் போல அசைவற்று யோக நிலையில் இருந்து சிவ பரம்பொருளைத் தியானித்துப் பிரிவற ஒன்றியுணர்ந்து அறிதல். நாவி-புனுகுப்பூனை. நாவியணைந்த நடுதறி என்பது புனுகுப்பூனை அணைந்த மூங்கிற்குழாய். பூனையினால் அணுகப்பெற்ற நடுதறியிலே புனுகு சேர்தல் போன்று சிவனது சேர்க்கையால் உயிரிடத்துச் சிவஞானம் பொருந்தித் தோன்றும் என்பதாம். புனுகு சிவஞானத்திற்கும் நடுதறி உயிர்க்கும் உவமை. இறைவன் உயிரிடத்தே எழுந்தருளி அருள் செய்தலால் உயிர் சிவஞானத்தைப் பெறும் என்பதாம். 114. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்க நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே. (1467) ஞானநெறியின் சிறப்புணர்த்துகின்றது. (இ-ள்) ஞானநெறியிற் சிறந்த அறநெறி எந்த நாட்டிலும் இல்லை. ஞானநெறிக்கு அப்பாற்பட்ட சமய நெறி எதுவும் உயிர்கட்கு நன்மை தருவதன்று. ஞான வரம்பைக் கடந்த எச்சமயங்களும் நன்மை பயக்கும் வீடுபேற்றினை நல்குவன அல்ல. எனவே ஞானநெறியிற் சிறந்தவர்களே மனிதரில் தலையான மனிதர் எனப் போற்றப்பெறுவர் எ-று. ஞானம் - இறைவனவருளாற் பெறும் மெய்யுணர்வு; மெய்யுணர்வின் வழி நின்று மனத்துக்கண் மாசிலனாகி இயற்றப்பெறுவதே அறமாதலின் அறத்திற்கும் உறுதுணையாய் நின்றுதவுவது மெய்யுணர் வெண்பார் ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை என்றார். மறந்தரு தீ நெறிமாற மணிமண்டர் வாய்மைநெறி அறந்தரு நாவுக்கரசு என்பர் சேக்கிழார். நாடு என்றது பிறிதின்நோய் தன்னோய் போற் போற்றி அல்லல் களைந்து வாழும் நல்லோர் வாழும் வளி வழங்கும் மல்லல் மாஞாலத்தை. அறிவினான் மிக்க அறுவகைச் சமயம் என்றவாறு சமயங்கள் ஒன்றினொன்று படிகால் முறையால் உயர்வு பெறுதற்கு அவற்றின் தத்துவ வுணர்வாகிய ஞானமே காரணமாதலின் எத்தகைய சமயமும் ஞானத்தை யொழித்து மக்களுக்கு நலஞ்செய்தல் இயலாது என்பார் ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று என்றார். இப்பாட்டில் மிகுதல் என்னும் சொல் முதலடியிலும் நான்காமடியிலும் சிறத்தல் என்ற பொருளிலும் இரண்டா மடியிலும் மூன்றா மடியிலும் கடத்தல்-விலகுதல் என்ற பொருளிலும் ஆளப் பெற்றுளது. சிவஞானமாகிய மெய்யுணர்வினால் மிக்கவர்களே மக்களில் தலையாயினார் என்பார், ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே என்றார் ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள் ஞானன் என்பவர்க்கன்றி நன்கில்லையே (அ) நுண்ணறிவால் வழிபாடு செய்யுங்காலுடையான் (ச) எனவரும் திருமுறைகள் இங்கு நோக்கத்தக்கன. சன்மார்க்கம் 115. சைவப் பெருமைத் தனிநாயகன் நந்தி உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள் ளார்க்கு வகுத்து வைத்தானே. (1478) சன்மார்க்கத்தின் சிறப்பு உணர்த்துகின்றது. (இ-ள்) உயிர்களைச் சிவத்துடன் ஒன்றுமாறு உணர்த்தும் சிவசமயத்தின் தனி முதல்வனாகிய இறைவன் ஆன்மாக்கள் பாசப்பிணிப்பினின்றும் விடுபட்டு உய்திபெற வகுத்தருளிய உபதேச நெறியாகிய குருநெறி ஒன்றுளது. அதுதான் சிவமாந் தன்மைப் பெருவாழ்வை நல்கும் சிவ நெறியாகும். சன்மார்க்கமாகிய அதனைச் சேர்ந்து உய்தி பெற உலகில் வாழ்வார்க்கு வகைபெற விளக்கிவைத் தருளினான் எ-று. சத்-மார்க்கம்-சன்மார்க்கம் எனத்திரிந்தது தமிழ்மரபு. சத்-உள்ளது; என்றது ஞானமேயாகிய இறைவனை. சன் மார்க்கம்-ஞானநெறி-நன்னெறி. இறைவனருளிய இந்நெறி குருவழியாக உபதேச முறையிற் பெறுதற்குரியது என்பார், உய்ய வகுத்த குருநெறி என்றார். சன்மர்க்க மாகிய சிவநெறி, வையத்து வாழ்வார் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படுதலாகிய சிவமாந் தன்மைப் பெருவாழ்வைப் பெற்று இன்புறுதற் பொருட்டு இறைவனால் வகுத்தருளிச் செய்யப்பெற்றது என்பார் தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய வையத்துள்ளார்க்கு வகுத்துவைத்தானே என்றார். வையத்து வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும் என்றார் தெய்வப்புலவர். அயன் திருமால் செல்வமு மொன்றோ வென்னச் செய்யுந்தேவே என்றார் அருணந்தி சிவாச்சாரியார். பொறிவாயில் ஐந்தவித்தான் பொய் தீர் ஒழுக்கநெறி என்பதும் நினைக்கத்தக்கது. சன்மார்க்கம் 116. தெளிவறியாதார் சிவனையறியாதார் தெளிவறியாதார் சீவனுமாகார் தெளிவறியாதார் சிவமாகமாட்டார் தெளிவறியாதார் தீரார்பிறப்பே. (1480) ஞானநெறியாகிய சன்மார்க்க நெறிக்கண் நின்று தெளிவு பெறாதார் ஒரு பயனும் எய்தார் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) சிவஞானமாகிய தெளிவினைப்பெற்று இறைவனை அறிந்து வழிபடாதார் அம்முதல்வனது இயல்பினை உள்ளவாறு அறியமாட்டார். அத்தெளிவின் துணைகொண்டு உயிராகிய தம்மைப் பிரித்தறியமாட்டாதார் தம்மையுணரும் அறிவினை யுடைய உயிராக எண்ணப்பெறுவாரல்லர். சிவஞானமாகிய தெளிவினைப்பெற்ற இறைவனைச் சிவோகம் பாவனை செய்யுந் திறமில்லாதார் சிவமாந்தன்மைப் பெருவாழ்வாகிய வீடுபேற்றை அடையமாட்டார். சிவ ஞானமாகிய தெளிவினால் உயிரையும் பாசத்தையும் பிரித்தறிய மாட்டாதார் பாசபந்தமாகிய பிறவிப் பிணிப்பினின்றும் நீங்கி உய்திபெற இயலாதவராவர் எ-று. தலைவனை யுணர்தற்கும் தம்மை யுணர்தற்கும் பாசம் நீங்குதற்கும் பரமுத்தி யடைதற்கும் சன்மார்க்கமே சாதனமாய் நின்று உதவும் என்பதாம். சீவன் அறிவுநலம் வாய்ந்த உயிர். தீர்தல்-விடுபடுதல். சகமார்க்கம் 117. யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்; யோகஞ் சிவரூபம் உற்றிடும்; உள்ளத்தோர் போகம் புவியிற் புருடார்த்த சித்திய தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே (1491) சகமார்க்கமே இம்மை மறுமையாகிய இருமையின்பங்களையும் ஒருங்கே நல்கவல்லது என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) சகமார்க்கத்தில் ஒழுகும் யோகியர்க்கு யோக நெறியாகிய பொறியடக்க முதலியனவும் போகமாகிய நுகர்ச்சி வன்மையும் ஒருங்கு உளவாகும். யோகத்தின் பயனாகச் சிவசாரூபம் பொருந்தும். உள்ளத்தால் ஓர்ந்து நுகரும் போகமாக நாற்பொருட் பயனும் எளிதிற் கைவரப் பெறும் நிலையுளதாம். இவையிரண்டும் கெடாத யோக நெறியிலொழுகுவார்க்கே உளவாகும் எ-று. யோகம்-யோகத்திற்குரிய எண்வகை யுறுப்புக்கள். போகம்-உலக வாழ்வாகிய நுகர்ச்சி. உள்ளத்து ஓர் போகம்-உள்ளத்தால் ஓர்ந்துணரத் தகுவதாகிய போக நுகர்ச்சி; எனவே உடம்பானன்றி உள்ளத்தால் ஓர்ந் துணர்தலாகிய நிலையே உண்மையான நுகர்ச்சியாம் என்பது பெறப்படும். உற்றிடும் உள்ளத்தோர் போகம் என இயைத்துரைத்தலுமாம். புருடார்த்தம்-மக்கள் எய்துதற்குரிய அறம் பொருள் இன்பம் வீடடைதலாகிய நாற் பொருட்பயன். சித்தியது-முற்றுப் பெறுதலாகிய நிலைமையது. அழியாத யோகிக்கே இரண்டும் ஆகும் எனமுடிக்க. சற்புத்திரமார்க்கம் 118. பூசித்தல், வாசித்தல், போற்றல், செபித்திடல், ஆசற்ற நற்றவம், வாய்மை, அழுக்கின்மை, நேசித்திட் டன்னமும் நீர்சுத்தி செய்தல்மற் றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே. (1496) சற்புத்திர மார்க்கத்து இயல்புரைக்கின்றது. (இ-ள்) இறைவனைப் பூசனைசெய்தலும், அருள் நூல்களை வாசித்தலும், அவனைத் துதித்துப் போற்றுதலும், அவன் திருப்பெயரை மனத்தில் உருவெண்ணுதலும், குற்றமற்ற நல்ல தவமும், வாய்மையும், அழுக்காறின் மையும், அன்பு செய்து திருவமுது காட்டி நீராற் சுத்தி செய்தலும் ஆகிய இவைகளே குற்றமற்ற சற்புத்திர மார்க்கத்தின் செயல் முறைகளாம் எ-று. நேசித்திட்டு-அன்பு செய்து. அன்னமும் நீ சுத்தி செய்தல் எனப் பாடங்கொண்டு ஹம்ச பாவனை செய்து ஆன்ம சுத்தி செய்தல் எனப் பொருள் உரைத்தலும் உண்டு. அன்னம்-ஹம்சம் என்பதன் திரிபு. நீ என்றது ஆன்மாவை முன்னிலைப்படுத்தியது. நீர் சுத்தி செய்தல்- நீராற் சுத்தி செய்தல். அன்னமும் என்ற உம்மையால் ஆன்ம சுத்தி முதலியனவும் கொள்ளப்படும். தாசமார்க்கம் 119. எளியனல் தீப மிடல்மலர் கொய்தல் அளிதின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ்சன மாதி தளிதொழில் செய்வதுதான் தாச மார்க்கமே. (1502) (இ-ள்) எளிமையுடைய பணிகளாகிய திருவிளக்கேற்றுதல் பூக்கொய்தல் திருக்கோயிலாகிய அதனைத் திருவலகிடுதல் அன்புடைய சிந்தையுடன் திருமெழுக்கிடுதல் தோத்திரங்கள் சொல்லி வாழ்த்துதல் திருக்கோயிலில் (வழிபாட்டுக் காலங்களில்) மணிபற்றியடித்தல் திருமஞ்சனம் சேர்த்தல் முதலிய பலவாகிய தொண்டுகளைச் செய்வதுதான் தாசமார்க்கமாகும். எ-று. எளியன தீபம் என்றாவது எளியநல் தீபம் என்றாவது பாடங்கொள்ளுதல் பொருத்தமாகும். அளிதின். அன்புடைமை யால். அளி - அன்பு. அது என்றது தனயாகிய கோயிலைச் சுட்டியது. பளி - பள்ளி - கோயில்; இடைக்குறை. தளிதொழில் - கோயில் திருப்பணி. நிலை பெறுமாறெண்ணுதியேல் என வரும் திருத்தாண்டகமும் தீபமாலை தூபமோடு சேர்ந்த கையராகி எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருள்மொழியும், ஆமாறுன் திருவடிக்கே யகங்குழையேன் அன்புருகேன், பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர், கோமானின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன், சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே எனவரும் திருவாசகமும் இத்தொண்டு நெறியினைக் குறிப்பனவாகும். 120. சமயங் கிரியையிற் றன்மனங் கோயில் சமய மனுமறை தானே விசேடஞ் சமயத்து மூலந் தனைத்தேறல் மூன்றாஞ் சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. (1508) கிரியை நெறியில் உள்ள சமயம், விசேடம், நிர்வாணம் ஆசாரியாபிடேகமாகிய நான்கின் பயன் கூறுகின்றது. (இ-ள்) கிரியை நெறியில் சமயதீக்கையின் பயனாவது தன்னுடைய மனத்தை இறைவன் எழுந்தருளுங் கோயிலாகச் செய்தல். விசேட தீக்கையின் பயனாவது சைவ சமயத்துக்குரிய மந்திரத்தை முறையே செபித்தலாகும். சைவ சமயத்தின் மூலமந்திரமாகிய திருவைந்தெழுத்தின் உட்பொருளைத் தெளிந்துணர்தல் மூன்றாவதாக வைத்துரைக்கப்படும் நிர்வாண தீக்கையின் பயனாகும். சைவ சமயத்தில் ஆசாரிய அபிடேகமாகிய தீக்கையின் பயன் சிவனே தான் என்னும் முறையில் சிவயோக சமாதி கூடுதலாம். முதலடியில் சமயம் என்றது சமய தீக்கையினை. தீக்கை - மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது. வேதம் ஓதுதற்கண்ணும் வைதிக ஆசாரத்தின்கண்ணும் உபநயனம் பெற்றார்க்கன்றி ஏனையோர்க்கு உரிமையில்லை. அதுபோலச் சிவாகமம் ஓதுதற்கண்ணும் சைவாசாரத்தின் கண்ணும் சிவதீக்கை பெற்றார்க்கன்றி ஏனையோர்க்கு உரிமையில்லை. இத்தீக்கை சமயம் விசேடம் நிர்வாணம் ஆசாரியபிடேகம் என நான்காம். சமயதீக்கையாவது, மண்டபபூசை செய்து விதிமுறையே மாணாக்கரை வழி படச்செய்து சிவ வேள்வியால் அவரது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதல். இதனால் அவர் சைவ ஆசாரத்துக்கு உரியராகின்றார். இதுபற்றி சமயங் கிரியையில் தன் மனங்கோயில் என்றார். விசேடதீக்கையாவது சமயதீக்கை செய்து யாககுண்டத்தில் வாகீசுரனையும் வாக் வரியையும் தீ வடிவில் எழுந்தருளச் செய்து மாணாக்கரது ஆன்மாவை வாங்கி வாகீசுரனால் வாகீசுவரியின் கருப்பநாடியிற் செலுத்திக் கருமுதிர்ந்து பிறந்ததாகப் பாவித்து குண்டத்திலிருந்தும் ஆன்மாவை மீளவாங்கி மாணாக்கரது இதயத்தானத்திலே நிறுத்தி அவரைச் சிவனுக்கு மகவகச் செய்வது. இத்தீக்கை பெற்றோர் சிவபூசை முதலிய வற்றுக்கும் யோகநெறிக்கும் சிவாகமம் ஓதுதற்கும் உரியரகின்றார். இதபற்றியே சமயமனு முறைதானே விசேடம் என்றார். நிர்வாணதீக்கையாவது சமய விசேடத்தீக்கைகளைச்செய்து ஆன்மாக்கள் முக்கரணங்களாற் செய்யும் வினைகளுக்கு இடமாகிய மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் அறுவகை நெறிகளின் தன்மைகளையும் அறிந்து நிவர்த்தி முதலிய கலை ஐந்தையும் சோதித்து அவற்றினின்றும் நீங்கிய மாணாக்கரது ஆன்மாவைப் பரமசிவனிடத்தில் ஒடுக்கி மாணிக்கத்தைச் சார்ந்த படிகவொளி போலத் தற்போதம் அடங்கிப் பரம சிவனுடைய குணங்கள் தன்பால் மிக்குவிளங்கிச் சிவானந்தம் மேலிடும்படி மலத்தை நீக்கி உண்மை ஞானம் விளங்கச் செய்வது. இதுபற்றி, சமயத்து மூலந்தனைத் தேறல் மூன்றாம் என்றார். ஆசாரியாபிடேகமாவது மாணாக்கர்க்கு உபதேசிக்கும் உரிமையினை வழங்கிச் சிவமேயாகச் செய்தல். இதுபற்றி, சமயாபிடேகந் தானாஞ் சமாதியே என்றார். 121. பாசம் பசுவானதாகும் இச்சாலோகம் பாசம் அருளானதாகும் இச்சாமீபம் பாசம் சிவமானதாகும் இச்சாரூபம் பாசங் கரைபதி சாயுச்சியமே. (1509) சாலோகம் முதலிய நால்வகை முத்திகளின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) சடமாகிய பாசம் ஆன்மாவின் அறிவெல்லைக்குள் அடங்கி நிற்க இறைவனை வழிபட்டு மகிழும் நிலை சாலோகமாகும். உயிரைப் பிணித்துள்ள பாசம் உயிரறிவை மறைத்தலாகிய தன்மை யிழந்து அருள்வழி விலகி நிற்றல் சாமீபமாகும். பசுகரணங்களாகிய பாசப்பகுதி பதிகரணங்களாக மாறுதல் சாரூபமாகும். பாச ஞானமாகிய நூலறிவும் பசு ஞானமாகிய ஆன்ம போதமும் கரைந்தொழியப் பதியாகிய பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து ஒன்றாதல் சாயுச்சியமாகும். எ-று. 122. சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவஞ் சிவமன்றிச் சாராமல் நீவுதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. (1512) சைவம் என்னும் சொற்பொருளை விரித்துக் கூறுமுகமாகச் சைவங்கூறும் அத்துவித முத்தியின் இயல்பினை விளக்குகின்றது. (இ-ள்) சைவமாவது சிவம் உலகுயிர்களுடன் ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் சம்பந்தத்தினையுடையது. சைவமாவது ஆன்மா தன்னைச் சிவத்துக்கு அடிமையென் றறிந்து சிவத்தினை வழிபட்டுச் சாருதல். சைவமாவது சித்தாகிய சிவபரம் பொருளன்றி அசித்தாகிய பாசங்கள் தன்னைச் சாராதவாறு நீக்கியொழுகுதல். சைவமாவது சிவத்துடன் இரண்டறக் கலந்து அம்முதல்வன் வழங்கும் சிவானந்தமாகிய பேரின்பத்தினைத் துய்த்து மகிழ்தலாகிய சாயுச்சிய நிலையாகும் எ-று. சிவத்தோடு உலகுயிர்களுக்குளதாகிய சம்பந்தத்தை விளக்கும் சமய நெறியே சைவம் என்பார், சைவம் சிவத்தோடு சம்பந்தமாவது என்றார். சிவமயம் என்பதும் இத்தொடர்பே குறிக்கும். சார்ந்ததன் வண்ணம் ஆம் தன்மையதாகிய ஆன்மா சதசத்தாகிய தன்னியல்பினை யறிந்து அசத்தாகிய பாசங்களைச் சாராது சத்தாகிய சிவத்தினைச் சார்ந்து உய்திபெற வகுத்த நெறியே சைவம் என்பார், சைவம் தனையறிந்தே சிவம் சாருதல் என்றார் பாச நீக்கமும் சிவப்பேறும் ஆகிய இருவகைப் பயன்களுள் உயிர்க்குயிராய் உள்நின்று உதவிவரும் இறை வனருளால் அல்லது தான் ஒன்றையுஞ் செய்யாமையாகிய இறை பணியினால் பாசநீக்கம் உளதாம் என்பார் சைவஞ் சிவமன்றிச் சாராமல் நீவுதல் என்றார். நீவுதல்-நீங்குதல். ஒரு பொருளைக் காட்டக் காணுந் தன்மையதாகிய கண்ணுக்கு ஒன்றைக் காணும்படி உடனிருந்து காட்டி அதனைத் தானும் காணும் உயிர்போல, அறிவிக்க அறியுந் தன்மையதாகிய உயிர் பொருள்களை அறியும்படி இறைவன் பிரிப்பின்றி உடனாய் நின்று உயிர்க்கு அறிவித்துத் தானும் விடயங்களிற் கலந்து அறிந்து உதவி செய்தலால், இவ்வாறு உயிருடன் அத்துவிதமாய் நின்று உதவி செய்தருளும் இறைவனது பெருங்கருணையை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் பேரன்பினாலே அம் முதல்வனுடைய திருவடியாகிய சிவாநந்த அனுபவத்தை ஆன்மா தலைப்பட்டு மகிழ்தலே சாயுச்சியமாகிய வீடுபேறாகும் என்பார், சைவஞ் சிவானந்தஞ் சாயுச்சியமே என்றார். இத்திருமந்திரத்தின் முதலடியில் முப்பொருள்களின் உண்மையும் இலக்கணமும், இரண்டாமடியில் சாதனமும், மூன்றாமடியில் பாசநீக்கமும், நான்காமடியில் சிவப்பேறும் சுருக்கமாக விளக்கப் பெற்றுள்ளமை அறிந்து மகிழத் தகுவதாகும். சத்திநிபாதம்-சத்திபதிதல் 123. இருட்டறை மூலை யிருந்த குமரி குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி யவனை மணம் புரிந்தாளே. (1514) மலம் பக்குவமாதற் பொருட்டு அதற்கு அநுகூலமாய் நின்று நடத்திய திரோதானசத்தி, மலம் பரிபாகம் எய்திய வழிக் கருணைமறமாகிய செய்கை மாறிக் கருணையெனப்படும் முன்னைப் பராசத்தி யுருவேயாய் உயிர்கள்பாற் அதிதல் சத்திநிபாதம் எனப்படும். அது படிகால் முறையால் மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நால் வகைப்பட்டு நிகழுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஆணவமலமாகிய இருளால் தடைப்பட்டிருக்கின்ற ஆன்மசத்தியாகிய அறையின் மூலையிற் சிறிதும் தோன்றா வண்ணம் இருந்து கட்டு நிலையில் ஆன்மாவை அதன் இயல்புக்கேற்பச் செலுத்தும் திரோதான சத்தி, பக்குவம் வந்த அளவில் குருட்டுக் கிழவனாகிய ஆன்மாவுக்கு முன்னிற்கவேண்டு மென நினைந்து அவனது மலத் தன்மையாகிய குருட்டினை நீக்கி அருளாகிய தன் இயல்பு பலவற்றையுங் காட்டி, அவனுற்ற (நற்) போதத்தை மழுங்கச்செய்து தானேயாகத் தனது அருளாரின் பத்தினை அவன் உணர்ந்து அனுபவிக்குமாறு செய்தருளினாள் (எ-று) இருட்டு - ஆணவமலம். அதனாற் பற்றிக்கொள்ளப்பட்ட அறைமூலை என்பது ஆன்மசத்தி. அதிலிருந்த குமரி திரோதான சத்தி. குருட்டுக்கிழவன் என்றது ஆணவவிருளிற்பட்டு அறிவாகிய கண்ணொளி மறைந்த ஆன்மாவை: அதனைக் கூடுதலாவது ஆணவ மலத்தோடு மறைந்து நின்ற திரோதானசத்தி அருட்சத்தியாய் ஆன்மாவின் முன்னிற்றல். குறித்தல் என்றது அதன்கண் அருளாய்ப் பதிதலை. குருடு என்றது ஆணவமலமாகிய படலத்தால் மறைக்கப்பட்டு ஒளியிழந்த தன்மையினை. குணம் பல காட்டுதலாவது அருளாகிய தன்னுடைய இயல்பு பலவற்றையும் புலப்படுத்தித் தெருட்டுதல். மருட்டுதலாவது ஆன்மபோதத்தை மழுங்கச் செய்தல். மணம் புரிதல் சிவபோகத்தை நுகர்தற்கு உரியவகையில் ஆன்மாவை சிவத்தோடு கூட்டுதல். இத்திருமந்திரத்தைத் தொடர்ந்த பாடல்கள் திரேளசத்தி யதிகாரத்தில் அமைந்தவென்பது முத்தி நிச்சய பேருரையில் வெள்ளியம்பலவாண முனிவரால் தெளிவாக விளக்கப்பெற்றது. தீவிரதரம் 124. இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி குருவென வந்து குணம்பல நீக்கித் தருமரன் ஞானத்தால் தன்செயலற்றால் திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. (1527) இருவினையொப்பும் சத்திநிபாதமும் எய்தினோர் பெறுப் பயன் கூறுகின்றது. (இ - ள்) புண்ணிய பாவமாகிய இருவினைகளிலும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனது அறிவின்கண் அவ்விருவினைப்பயன்களும் சமம் என்னும் உணர்வு தோன்றிய நிலையில் இனிய திருவருளாகிய சத்தி குருவாக எழுந்தருளிப் பசுபோத குணங்களை நீக்கித் தரும் சிவஞானத்தால் தன்செயலற்றால் அவ்வான்மா மும்மலங்களும் கெட்டுச் சிவமேயாவன் என்பதாம். இருவினைநேர் ஒத்தல்-இருவினைகளிலும் சமபுத்தி யுண்டாதல்; இரு வினையொப்பாவது நல்வினை தீவினைகளிலும் அவற்றின் விளைவாகிய புண்ணியபாவங்களிலும் அவற்றின் பயனாகிய இன்பத்துன்பங்களிலும் ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமின்றி ஆன்ம அறிவின்கண் ஒப்ப உவர்ப்பு நிகழ்தல். இன் அருட்சத்தி என்றது, முன் ஆணவமலம் பக்குவமாதற் பொருட்டுச் சினமருவு திரோயியாயிருந்த அருளே அம்மலங்கழலும் பக்குவத்தினை யுண்டாக்கியபின் இனிய அருட்சத்தியாயிற்று என்பதாம். குணம்பல நீக்கித் தரும் அரன்ஞானம் என்றது, தாழ்ந்த உயிர்க்குணங்களைப் போக்கி மேலான சிவகுணம் பொருந்துமாறு சிவஞானத்தைத் திருவருட் சத்தியே விளைக்கும் என்பதாம். தன் செயலறுதல் - ஆன்மபோதங் கெடுதலால் நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே எனத் தன்செயலொழிந்து இறைவன் செயலில் அடங்கி நிற்றல். திரிமலம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்கள். ஆன்மா, தன் பொருட்டன்மையழிந்து சிவம் ஒன்றாயே ஒழியாமலும், சிவத்தின் வேறாய்த் தான் தனித்து நில்லாமலும், பாலொடு அளாவிய நீர் தன் உண்மை கெடாமல் பாலின் தன்மையதாய் அதனுடன் பிரிவறக் கலந்து ஒன்றாதல் போன்று, தன் உண்மை கெடாமல் சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றாதலே சிவமாதல் எனப்படும். உயிர் திருவருட் பதிவுபெற்றுக் குருவருளால் தூய்மைபெறும் இந்நிலையினை விளக்குவது, இருவினைச் செயல்கள் ஒப்பின் ஈசன்றன் சத்திதோயக் குருவருள் பெற்றுஞான யோகத்தைக் குறுகிமுன்னைத் திரிமலமறுத்துப் பண்டைச் சிற்றறிவொழிந்து ஞானம் பெருகிநாயகன் றன்பாதம் பெறுவது சுத்தமாமே (230) எனவரும் சித்தியாராகும். புறச்சமய தூடணம் சித்தாந்த சைவமல்லாத ஏனைப் புறச்சமயங்களின் பொருந்தாமை கூறுதல் 125. ஆயத்துள் நின்ற அறுசமயங்களும் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக்குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. (1530) உணர்வில் திருந்தாத புறச்சமயங்கள் கடவுளது உண்மையினை உணரும் உணர்வுடையன அல்ல என்கின்றது. (இ - ள்) சமயத் தொகுதியுட் கூறப்பட்டு நின்ற புற சமயங்கள் ஆறும் உயிர்களின் உடம்பினுள்ளே கோயில் கொண்டு எழுந்தருளிய பரம்பொருளைக் கண்டுணரமாட்டவாயின. அச்சமயங்களைப் பற்றி நடப்போர் மனைவிகள் என்னும் பாசபந்தத்தில் அகப்பட்டு இவ்வுலக வாழ்க்கையில் இடர்ப்படு மாறுபோலவே மறுமையினும் பொய்ம்மையாகிய பாசத்துள் விழுந்து வருந்துவர் எ-று. ஆயம் - கூட்டம்; சமயத்தொகுதி, மணிமேகலையில் உலோகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம் வைசேடிகம், மீமாஞ்சகம் என்னும் ஆறும், சைவவாற் பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி நிகண்டவாதி, பூதவாதி என்னும் ஏழும் மதக்கொள்கைகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பூதவாதி கூறுவன உலோகாயதத்துள் அடங்குதலின் பிற்கூறிய மதங்களும் ஆறேயாம். இனி திவாகரத்துள் வைசேடிகம் நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பௌத்தம் உலோகாயதம் என்பன அறுசமயங்கள் எனக் கூறபட்டன. இவை ஆறும் கடவுட்கொள்கையில்லாத சமயங்களாதலின் புறச்சமயங்களாயின. இருமுச் சமயத் தொருபேய்த்தேர் என்பது திருவாசகம். காயம் - உடம்பு உடம்புளே யுத்தமன் கோயில்கொண்டானென்று உடம்பினை யானிருந்தோம்புகின்றேனே எனத் தமது அருளது பவத்தை முன்னுரைத்தவாறே காயத்துள் நின்ற கடவுள் என ஈண்டும் எடுத்துரைத்தார். காண்கிலா - காணும் ஆற்றலற்றன. கில் - ஆற்றலுணர்த்தும் இடைநிலை. தெய்வங் கொள்கையில்லாத அறுசமயத்தவரும் அச்சமயங்களிற் கூறப்படும் உண்மையல்லாத வற்றை இன்பந்தரும் மெய்க்கொள்கைகள் என்று நம்பித் தம் வாழ்நாள் முழுவதும் முயன்று முயன்று பொய்த் தோற்றமாய் ஒழிந்த அவ்வின்பத்தினைப் பெறாமல் குடும்பபாசத்துள் அகப்பட்டு வருந்தியவாறே மறுமையிலும் எல்லையற்ற துன்பத்துள் உழல்வர் என்பார், மனைமக்கள் பாசத்துள் உற்றுப் பதைக்கின்றவாறே மாயக் குழியில் விழுவர் என்றார். மாயக்குழி - பொய்மையாகிய பாசத்தளை. 126. உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க் குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க் குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. (1532) கடவுளுண்டு என்று நம்பியவர்களே அம்முதல்வனது திருவருளை எளிதிற் பெற்றுப் பயனுறுவர் என்கின்றது. (இ-ள்) எம் இறைவனாகிய சிவபெருமான் என் நெஞ்சிடத்தும் எழுந்தருளியுள்ளான் உலகின் புறத்தும் எழுந்தருளியுள்ளான் என்னும் தெளிவுடையார்க்கு அம்முதல்வன் அவர்களின் உள்ளத்தின் உள்ளிருந்து உறுதி நல்குவதுடன் உலகின் புறத்தும் நீக்கமறக் கலந்து நின்று நலஞ்செய்கின்றான். இறைவன் என்பதொரு முதற்பொருள் என் நெஞ்சத்தும் இல்லை. உலகின் புறத்து எவ்விடத்தும் இல்லை என்னும் பழங்கொள்கையினர்க்கு அவர்கள் நெஞ்சத்துள் இருந்து உறுதி நல்குவதுமில்லை உலகின் புறத்துக் கலந்து நின்று இன்பஞ்செய்வதும் இல்லை, எ-று. உள்ளத்தும் புறத்தும் என்னும் உம்மைகள் முறையே எதிரது தழீஇயும் இறந்தது தழீஇயும் நின்றன. உள்ளத்தும் புறத்தும் உள்ளான் என்பார் தெய்வங்கொள்கையில் உறுதி பெற்ற நல்லறிஞர்கள். உள்ளத்தும் புறத்தும் இல்லை என்பவர் பாழ்ங்கொள்கையினராகிய நாத்திகர்கள். நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே எனவரும் அப்பர் அருள்மொழி இன்னோரை நோக்கிக் கூறியதாம். மந்திரமும் தேவும் ..........bkŒba‹Å‹ மெய்யாய் விளையும் பொய் யென்னிற் பொய்யாகிப்போம் என்றார் ஔவையாரும். ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் என்ற திருவிருத்தம் உள்ளத்தும் புறத்தும் நின்று இறைவன் செய்தருளும் உதவியைக் குறிப்பதாகும். 127. ஆறுசமயமுங் கண்டவர் கண்டிலர் ஆறுசமயப் பொருளும் அவனலன் தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின் மாறுதலின்றி மனைபுக லாமே. (1533) இறைவன் சமங்கடந்த பழம்பொருள் என்கின்றது. (இ - ள்) ஆறு சமயங்களையும் ஆராய்ந்தறிந்தவர்கள் பரம்பொருளைக் காணப்பெற்றிலர். ஆதலால் அறுசமயங்கள் கூறும் பொருள்களுள் அடங்கியவன் அம்முதல்வன் அல்லன். சொலற்கரிய சூழலாய் என்றவாறு சமயங்களின் சொல்லையும் ஆராய்ச்சியையுங் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் செம் பொருளாகிய சிவம் உண்டு என்பதனை நும்முள்ளத்தே ஆராய்ந்துணர்வீராக. அங்ஙனம் ஆராய்ந்து துணிவீராக. துணிந்தபின் அச்சுமாறுதலாகிய பிறப்பிறப்பின்றி என்றும் ஒரு நிலையதாய்த் தங்கி மகிழும் வீடுபேற்றினை அடைந்து இன்புறலாம் எ-று. ஆறுசமயம் - உலோகாயத முதலாக முற்கூறப்பட்ட புறச் சமயங்கள்; என்றது அவற்றின் தத்துவக் கொள்கைகளை விரித்துக் கூறும் நூல்களை. காணுதல் - கற்றுணர்ந்து தெளிதல். தேறுதல் - ஆராய்தல். தெளிதல் - துணிதல். தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத்தேறல் என்பர் அப்பர். மாறுதல் - பிறப்பிறப்பில் அகப்பட்டு அலைதல். மாறுதலின்றிப்படும் மனையென்றது பேரா வியற்கையாகிய வீட்டினை. களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய இன்பத்ததாய் ஒருநிலையில் அமைந்தேவிடும் புக்கிலாக விளங்குவது வீடுபேறு என்பார் மாறுதலின்றி மனைபுகலாமே என்றார். நிராகாரம் 128. பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிவண்ணம் நினைவு செய்யாதவர் ஏங்கி யுலகில் இருந் தழுவாரே. (1551) இறைவனை உள்ளத்துள்ளே அருளுருவினனாகத் தியானிப்பார் எய்தும் சிறப்பும் அங்ஙனம் நினையாதார் எய்தும் இழிவும் உணர்த்துகின்றது. (இ - ள்) அழகு பொருந்திய கொன்றைமலர்மாலையை யணிந்த படர்ந்து விரிந்த சடையினையுடைய இறைவன் திருவடியாகிய அருள்வெள்ளத்தைத் தம் நெஞ்சத்தே தாங்கிய வராய் இடைவிடாது தியானிக்கும் மாந்தர் தனக்குவமை யில்லாதானாகிய சிவனுக்குச் சமமானவராய் மனக்கவலையினை மாற்றி மகிழ்வர். அம்முதல்வனது அருள் நெறியினை நீங்கிய நிலையில் அம்முதல்வனை நினையாது தம் மனம்போனபடி யொழுகுவோர் இவ்வுலகில் துன்பங்களுட்பட்டு ஏங்கித் தம் மனக்கவலைகளை மாற்றும் துணைகாணாது வறிதேயிருந்து அழுது புலம்பும் அவல நிலையினராவர் எ-று. பாங்கு - அழது. படர்தல் - கொடிபோல் நீண்டு பரவுதல். சடையான் - சிவன்; ஞானமயமானவன் என்பது குறிப்பு. அடி என்றது, அவனது அருளுருவினை. அவனருளின் எல்லையற்ற பெருக்கத்தினைப் பொறுத்துத் தாங்கவல்ல உரவோர் என்பார் தாங்கும் மனிதர் என்றார். நேர்ஒத்தல் ஆவது தனக்குவமை யில்லாத தனிமுதல்வனை யொத்து ஞானப் பெருக்கமும் அருட்பெருக்கமும் உடையராதல். மனிதரிற்றலையான மனிதர் என அப்பர் அடிகள் குறித்தது இப்பெருமக்களையே. நீங்குதல் - இறைவனது ஒழுக்கநெறியாகிய வரம்பினைக் கடத்தல். இருத்தல் - துன்பத்தினின்றும் உய்ந்துசெல்ல உபாயங்காணாது கவலை யுற்றிளைத்துச் செயலின்றியிருத்தல். அழுதல் - துன்பத்தைப் பொறுக்கும் மனவலியின்றிக் கண்டார் இகழும் வண்ணம் புலம்பி அரற்றுதல். திருப்புன்னையங்கானல் சிந்தியாயாயின் இருப்பின்னையங்காந் திளைத்து என்பது ஐயடிகள் அருளிய அறிவுறுத்தல். 129. இருந்தழுவாரும் இயல்பு கெட்டாரும் அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில் வருந்தா வகைசெய்து வானவர் கோனும் பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. (1552) துன்பத்தால் நலிவுற்றழுபவர்கள் இறைவனைத் தியானித்தால் இன்புறுவர் என்பது உணர்த்துகின்றது. (இ -ள்) களைகணாவார் எவருமின்றித் தனிமையுற்று இருந்து அழுகின்றவர்களும் (வாழ்க்கை வளமாகிய) இயல்பு அழிந்தவர்களும் அரிய தவநிலையினை மேற்கொண்டு அத் தவநிலையில் இறைவனைத் தியானித்தால் தேவர்கோனாகிய இறைவன் அன்னோர் இவ்வுலகில் வருத்தமுறாவண்ணம் நல்லருள் செய்து தனது பெருமை நிலையாகிய சிவகதியினை உயிர்க்கு நல்குவான். அவ்வுயிர்க்கு மேல் வரக்கடவதாகிய பிறப்பும் இல்லையா யொழியும். எ-று. இருத்தல் - களைகணாவார் ஒருவரையும் பெறாது தனித்துச் செயலற்று வருந்துதல். இயல்பு - வாழ்க்கை வளம். கெடுதல் - இல்லையாயொழிதல். அருந்தவம் - செய்தற் கரிய தவம்; பொறிவாயில் ஐந்தவித்தல். அண்ணல் - யாவர்க்கும் மேலோனாகிய இறைவன். எண்ணுதல் - இடைவிடாது தியானித்தல். வருந்தாவகை - துன்பத்தால் வருத்தமுறாதவாறு; வாழ்க்கையில் எந்நாளும் இன்பமே நிலவும்படி. வானவர்கோன் - தேவதேவனாகிய சிவன். பெருந்தன்மை - இயல்பாகவே பாசங்களின் நீங்குதலால் தனக்குளதாம் உயர்ச்சி; இறைவனாகிய தனக்குரிய எண்குணங்களைப் பெற்றுயர்தலாகிய திறம். நிராகாரம் 130. ஓங்காரத் துள்ளொளி யுள்ளே யுதயமுற் றாங்கார மற்ற அநுபவங் கைகூடார் சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார் நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தாரே. (1556) அருள்வழி நின்று இறைவனை எண்ணி மகிழும் அநுபவ பெறாதார் வெறுஞ் சமயச் சடங்குகளிலேயே பயனின்றி அழுந்தியுழல்வர் என்கின்றது. (இ - ள்) பிரணவமாகிய ஓங்காரத்தின் உள்ளொளியாக விளங்கும் இறைவன் தம் உள்ளத்துள்ளே தோற்றம் பெற்று யானெனதெனுஞ் செருக்கொழிந்து சிவாநுபவங் கைகூடப் பெறாதார் தமக்கு வரவிருக்கும் சாவினை எண்ணும் உணர் விலராய்ப் பிறவா நெறியினைச் சாரும் மதுகையிலராய் (மருளுடைய) புறச்சமய நெறிக்கண்ணேயுழன்று வாழ்விற் பயனின்றிக் கழிந்தோராவர் எ-று. இறைவன் தன்னை மந்திரப்பொருளாய் வழிபடுவா ருள்ளத்திலே ஓங்காரமாகிய பிரணவமந்திரத்தின் உள்ளொளியாக விளங்குபவன் என்பது, ஒன்றவே யுணர்திராகியல் ஓங்காரத் தொருவனாகும் (4-25-9) எனவும் உய்யவென்னுள்ளத்தின் ஓங்காரமாய் நின்ற மெய்யா எனவும் ஒளிவந்தென்னுள்ளத் தினுள்ளே யொளிதிகழ அளிவந்த அந்தணனை எனவும்வரும் அருளிச்செயல்கள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன. ஆங்காரம் - அகங்காரம்; யான் என்னுஞ் செருக்கு. இத்திருமந்திரத்தை அடியொற்றியது, ஆங்காரமு மடங்கார் ஒடுங்கார பரமானந்தத்தே தேங்கார் நினைப்பு மறப்புமறார் தினைப்போதளவும் ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருகன் உருவங்கண்டு தூங்கார் தொழும்புசெய்யாரென் செய்வார்யம தூதருக்கே (கந்தரலங் - 55) எனவரும் கந்தரலங்காரமாகும். 131. ஒன்றது பேரூர் வழியா றதற்குள என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது வென்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே. (1558) அகச்சமயங்கள் ஆறும் இறைவன் ஒருவனையடைதற்கு வகுத்த நெறிகளே என்பது உணர்த்துகின்றது. (இ - ள்) சென்றடைதற்குரிய பெரிய ஊர் ஒன்றே. அதனையடையும் வழிகள் ஆறுள்ளன என்றாற்போன்று கடவுளுண்மையைக் கூறும் ஆறுசமயங்களும் ஒரு பொருளையே யடைதற்குச் சாதனமாகவுள்ளன. யாம்கூறும் இதுவே நன்று பிறர்கூறும் இது தீதுஎன்று இங்ஙனம் தம்முட் பிணங்கும் சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைத்தோடும் நாயை யொத்தவராவர் எ-று. அகச்சமயத்திற் கூறப்படும் உண்மைகள் புறங்கூற்றாகிய வெற்றுரைகளால் மறுக்கப்படாதன என்பதும் அவற்றின் ஒருமைப்பாட்டினை யுணராத தோற்றத்தினைக் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர் மலையைக் கண்டு மருண்டு குரைத்துக்கொண்டு கடிக்க ஓடும் நாயினைப் போன்று பிறர் கூறும் மெய்ம்மையினை உள்ள வாறுணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனிலவாகச் செய்வோர் என்பார், குன்று குரைத்தெழு நாயையொத்தார்களே என்றார். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள்தோறும் அருளிச் செய்த ஆகமங்களிலெல்லாம் கூறப்பட்ட மெய்யுணர்வுபற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களினும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருளாகிய இறைவன் ஒருவனையே நோக்கி முடியும் என்பார், ஒன்று அது பேரூர்; வழி ஆறு அதற்கு உள என்றார். சுத்தவடி வியல்பாக வுடைய சோதி சொல்லிய ஆகமங்களெலாம் சூழப் போயும் ஒத்து முடியுங் கூட ஓரிடத்தே ஒருபதிக்குப் பலநெறிகள் உளவானாற் போல் பித்தர்குண மதுபோல ஒருகா லுண்டாய்ப் பின்னொருகா லறிவின்றிப் பேதையோ ராய்க் கத்திடும் ஆன்மாக்களுரைக் கட்டிற் பட்டோர். கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார் எனவரும் சித்தியார் (பரபக்கம் - 9)இங்கு நினைதற்குரிய தாகும். 132. இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவம் ஆகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. (1568) சமய பேதங்களையே மனத்துட்கொண்டு சமரச நெறியை நாடாதோர் வீடடைதற்குத் தகுதியிலாதார் என்கின்றது. (இ - ள்) இறைவனையடைதற்கு வகுக்கப்பெற்ற சமய நெறிகளில் இதுவே தவநெறி அதுவே தவநெறி என இரு வகையாக வேறுபடுத்துப் பேசும் மனமயக்கமுடையார்களைக் கண்டால் எங்கள் குருமுதல்வராகிய சிவபெருமான் அவர்தம் பேதைமையை எண்ணிச் சிரிப்பான். மக்கள் மேற்கொண்ட தவநெறியாகிய சமயம் எதுவாயிருந்தாலென்ன? அன்னோர் எந்த நாட்டில் எவ்வுருவாய்ப் பிறந்தாலென்ன? எல்லா நெறிகளும் இறைவனையடைந்து உய்தற்கு அமைக்கப்பெற்றனவே என்னும் உண்மையை உடம்பட்டுப் பிணக்கின்றி இறைவனை உணர்ந்து போற்றுவார்க்கு விரைவில் சிவமாநகரை யடைதல் எளிதாம் எ - று. எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் என ஆளுடைய பிள்ளையாரும் ஆறுசமயத் தவரவரைத் தேற்றுந் தகையன என ஆளுடைய அரசரும் அறிவினான் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க் கங்கேயா ரருள் புரிந்து என நம்பியாரூரரும் வேறுபடு சமயமெல்லாம் புகுந்து பார்க்கில் விளங்குபரம் பொருளேநின் விளையாட் டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா எனத் தாயுமானாரும் கல்லிடைப் பிறந்துபோந்து கடலிடைக் கலந்தநீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பெரும் பொருளிதென்னத் தொல்லையி னொன்றேயாகித் துறைதொறும் பரந்தசூழ்ச்சிப் பல்பெருஞ்சமயஞ் சொல்லும் பொருளும்போற் பரந்த அன்றே. எனக் கம்பரும் கூறுவன இங்கு நோக்கத்தக்கன. ஒத்துச் சென்றுதன் திருவருட்கூடிடும் உபாயமதறியாமே என்பது திருவாசகம். ஆறாந் தந்திரம் சைவ சிந்தாந்த முடிபுகளை உபதேச வாயிலாகக் கேட்டறிந்தோர் அவற்றைச் சிந்தித்துத் தெளிந்துணர்தற் குரிய பொருள்களாகிய ஞானம்பெறும் சாதனங்களை உணர்த்துவது ஆறாந்தந்திரமாகும். இது சிவ குருதரிசனம் முதல் பக்குவன் என்பது முடியப் பதினான்கு உட்பிரிவுகளை யுடையது. இதன்கண் சிவகுருதரிசனம், திருவடிப்பேறு, ஞாதிரு, ஞானஞேயம், துறவு, தவம், அருளுடைமையின் ஞானம் வருதல், அவவேடம், தவவேடம், அபக்குவன், பக்குவன் என்ற தலைப்புக்களில் வைத்து ஞானசாதனங்கள் விரித்துரைக்கப்பெற்றன. ஆன்மாக்கள் உய்ய இறைவன் தன்னடியார் திறத்தே நிகழச்செய்யும் தசகாரியம் இத்தத்திரத்திலும் 7, 8, 9-ஆம் தந்திரங்களிலும் கூறப்படும் பொருள்களால் உணர்த்தப் பெறுகின்றன. சிவகுருதரிசனம் சிவபெருமான் உயிர்கள்பால் வைத்த பெருங்கருணையால் மானிடச்சட்டை தாங்கிவந்து நற்பொருளை உபதேசிக்கப் பொருள்களின் உண்மையை உள்ளவாறு காணுதல். 133. பத்திப் பதித்துப் பரவும் அடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு வாமே. (1573) உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்திய சிவனே ஆசிரியத் திருமேனி தாங்கிக் குருவாய் வந்தருள்புரிவன் என்கின்றது. (இ - ள்) (அருச்சனைவயலுள்) அன்பாகிய விதையை விதைத்து யாவரும் பரவிப்போற்றும் திருவடியை அடியேற்குநல்கித் தனது தூய மெய்யுணர்வுபதேசத்தால் எனது மலமாயை கன்மங்களாகிய குற்றங்கள் கெட்டொழியச் சோதனை செய்து போக்கிச் சத்தாகிய தன் இயல்பையும் அசத்தாகிய பாசத்தின் இயல்பினையும் சத்தினைச் சார்ந்து சத்தாயும் அசத்தினைச் சார்ந்து அசத்தாயும் சார்ந்ததன் வண்ணமாம் ஆன்மாவின் இயல்பினையும் உள்ளவாறு புலப்படுத்திக் காட்டுதலால் உயிர்க்குயிராய் அகத்துள் எழுந்தருளிய சிவபரம் பொருளே புறத்தேயும் குருவாக எழுந்தருளியது எ-று. பத்தி அன்பு. பதித்தல்-விதைத்தல். பரவும் அடி நல்குதல்-யாவரும் போற்றிப் பரவும் திருவருளாகிய திருவடி மாணாக்கன் சிந்தையிலும் சென்னியிலும் பொருந்திப் பதியும்படி புறத்தே ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளுதல். சிந்தையிலும் என்றன் சிரத்தினிலும் சேரும் வண்ணம் வந்தவனை என்பது திருக்களிற்றுப் படியார். சுத்த உரை - மலமாயா கன்மங்களைக் கழுவும் தூய ஞான நன்னீராகிய உபதேச மொழி. துரிசு - குற்றம். சோதித்தல் - அறுவகை அத்துவாக்களைச் சோதித்துத் தூய்மை செய்தல். சத்து-என்றும் உள்ளதாகிய பரம்பொருள்; சுட்டுணர் வாலேயுணரப்படாத தாய்ச் சிவஞான மொன்றினாலே யுணர்தற்குரிய பொருள். அசத்து-சுட்டுணர்வாற் சுட்டப்பட்டு நிலைமாறும் பிரபஞ்சம். சதசத்து-சத்தினைச் சார்ந்தவழிச் சத்தின் தன்மை யதாகவும் அசத்தினைச் சார்ந்தவழி அசத்தின் தன்மையதாகவும் உள்ள ஆன்மா. சித்தம் இறையே-உயிர்க் குயிராயுள்ள பரம் பொருளே. சிவகுருவாமே-புறத்தே சிவமாகிய குருவாகவும் வெளிப்பட்டருளும். அகத்துறு நேரய்க்குள்ளின ரன்றி யதனைச் சகத்தவருங் காண்பரோ தான் என்பது திருவருட் பயன். சிவஞானபோத எட்டாஞ் சூத்திரமும் இக்கருத்தினதே. உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் என்பர் ஆளுடையபிள்ளையார். 134. எல்லா வுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக்கொண் டிங்கே யளித்தலால் சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. (1576) உலகெலாங் கடந்தும் உயிர்க்குயிராகியும் அருளும் இறைவனே உபதேச குருவாகவும் அருள்புரிவன் என்கின்றது. (இ-ள்) எல்லா வுலகங்களையும் கடந்து அப்பாலனாக விளங்கும் முதல்வன் இவ்வுலகின் இப்புறத்தானாகப் பரிபாக முற்ற நல்லோருள்ளத்திலே விளங்கித் தோன்றி மிக்க திருவருளைச் சுரத்தலாலும், எல்லோரும் உய்திபெறுதலை வேண்டி ஆசிரியத் திருமேனி கொண்டு இங்கே எழுந்தருளி வந்து நன்ஞானத்தை வழங்குதலாலும் உபதேசித்தலைப் பொருந்திய நல்ல குரு தூய சிவபெருமானே யாவன் எ-று. பரிபாகமுடைய நல்லோர்க்கு உயிர்க்குயிராய் உள் நின்றும் புறத்தே வெளிப்படத் திருமேனி கொண்டும் சிவஞானத்தை வழங்கும் குரு சிவபெருமானின் வேறல்லன் சிவனே என்பதாம். மனத்தகத்தான் தலைமேலான் ........... கண்ணுளானே எனவும் அருவாகி நின்றனை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று (சிவஞானபோதம்) எனவும் வரும் பகுதிகள் இங்குச் சிந்திக்கத்தக்கன. 135. திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக் கருவழி மாற்றிடக் கண்டுகொண் டேனே. (1597) பிறவி வேரறக் குருவின் அருளால் திருவடிப்பேறு எய்தினமை கூறுகின்றது. (இ-ள்) அடியேனை அருட் கண்ணால் நோக்கி என் சிரத்தில் தன் திருவடியைச் சூட்டி எங்குமாய் நீக்கமற நிறைந்திருக்கும் தனது பெரிய வடிவினை அடியேன் உளங்கொளத் தந்தருளிய பேர்நந்தியாகிய சிவபெருமானைக் குருவின்வடிவில் எம்மனோர் காண எழுந்தருளிய பெரியோனை எமது தலைவனை மீண்டும் கருவிற் செலுத்தும் பிறவிநெறியினை மாற்றிப் பிறவா நெறியாகிய பெருநெறியிற் செல்லும் நிலையிற் காணப்பெற்றுப் பயன்கொண்டேன் எ-று. அருள் நோக்கி என்சிரத்தில் திருவடி வைத்துப் பெரு வடிவைத் தந்த பேர்நந்தி என இயையும். அருள்நோக்கி - அருட்கண்ணாற் பார்த்தருளி. அத்தாவுன் அடியேனை அன்பால் ஆர்த்தாய், அருள் நோக்கிற் றீர்த்தநீ ராட்டிக் கொண்டாய் என்பது அப்பர் அருள்மொழி. ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே யோகங்கள் எங்கே யுணர்வெங்கே - பாகத் தருள்வடிவுந் தானுமா யாண்டிலனே லந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு. (5) எனவரும் திருக்களிற்றுப்படியாரும், நானுமென் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் எனவரும் திருவாசகமும் நினைக்கத்தக்கன. கருவழி மாற்றிடுதல் - கடலின் அலைபோல்தொடரும் பிறவிவழியை யடைத்துப் பிறவா நெறியினைத் தலைப்படுதல். திருவார் பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவே ரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை எனவும், பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா எனவும் வரும் திருவாசகத் தொடர்கள் இங்கு நோக்கத்தக்கன. 136. கழலார் கமலத் திருவடி யென்னும் நிழல்சேரப் பெற்றேன் நெடுமா லறியா அழல்சேரும் அங்கியுள் ஆதிப்பிரானும் குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைந்ததே. (1600) குருவின் அருளால் திருவடி பெற்றமையால் உண்டாகிய பயன் களைக் கூறுகின்றது. (இ - ள்) வீரக்கழல் பொருந்திய செந்தாமரை மலர் போலும் திருவடியாகிய நிழலைச் சேரப்பெற்றேன். உலகினை யளந்த நெடியோனாகிய திருமாலாலும் அறியவொண்ணாத வெம்மை பொருந்திய தீப்பிழம்பினுள் விளங்கிய முதல்வனாகிய சிவபெருமானும் அற்புதமான அமுததாரைகளாக எனது எற்புத்துளைகள் தோறும் வந்து சேர்ந்தான். (அதனால்) அழியுந் தன்மையதாகிய எனது உடம்பாகிய கூட்டில் வைத்த பற்றும் சிதைந்தொழிந்தது. எ-று. குழல் - நரம்பின்துளை. ஆதிப்பிரான் குழல் தோறும் சேரும். அதனால் உயர்க்கூடும் குலைத்தது என்க. அற்புதமான அமுததாரைகள் எற்புத்துளைதொறும் ஏற்றினன், உருகுவதுள்ளங் கொண்டோருருச் செய்தாங்கெனக்கு அள்ளுறாக்கை யமைத்தனன் எனவும் அழிதருள் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள் எனவும் வரும் திருவாசகத் தொடர்களும், சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்போதடித் தொண்டர் துன்னும் நிழலாவன வென்று நீங்காப்பிறவி நிலைகெடுத்துக் கழலாவினைகள் கழற்றுவ காலவனங் கடந்த அழலார்ஒளியன காண்க ஐயாற னடித்தலமே எனவரும் திருவிருத்தமும் இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தக்கன. கழல் - வெற்றிக்கு அடையாளமாயணிவது. அழல் சேரும் அங்கியுள் ஆதிப்பிரான் ஆயினும் அவன் திருவடி குளிர்ந்த நிழலைச் செய்வன என்பது ஓர்நயம். சீதப்புன லுண்டுஎரியைக் காலும் சூதப்பொழில் என்பதும் அந்நயம்பற்றி. மாசில் வீணையும் எனத் தொடங்கும் திருக் குறுந்தொகையும், உராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம்பதி என்னும் சிவஞானபோதமும் ஈண்டு எண்ணத்தகுவன. 137. முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கில் முடிமன்னராய் நின்றதேவர்கள் ஈசன் குடிமன்னராய்க் குற்றமற்று நின்றாரே. (1601) திருவடிப் பேறெய்தியோரின் திறமுரைக்கின்றது. (இ-ள்) இறைவனது திருவடி சிந்தையினும் சென்னியினும் நிலைபெறக் கொண்டமையால் அடிமன்னர் எனப் பெறும் அன்புடையோர் பெறும் இன்பத்தினைக் கேட்கலுறின் அதற்கோர் அளவு இல்லை. அடிமன்னராய அவர்கள் முடிவேந்தராகி மூவுலகங்களையும் ஆள்வார்கள். அங்ஙனம் முடிவேந்தராய் நின்று இம்மை நலங்களைத் துய்த்துத் தேவரானவர்கள், தமது போக நுகர்ச்சி முற்றிய பின்னர் எல்லா வுலகங்களையும் உடையானாகிய இறைவன் ஒருவனுக்கே குடிமைத் தொழிலில் நிலைபெற்றவராய் மலக் குற்றம் நீங்கி அம்முதல்வன் அடிக்கீழ் ஒன்றி நிற்பவராவர் எ-று. அடி-இறையடி. மன்னர் - (சிந்தையிலும் சென்னியிலும்) நிலைபெற வைத்தவர்கள். அடிமன்னர், முடிமன்னராகி மூவுலகமது ஆள்வர்; அங்ஙனம் முடிமன்னராய்ப் பின் தேவர்களாய் ஈசன் குடிமன்னராய்க் குற்றம் அற்று நின்றார் என முடியும். நிற்றல்-பிறந்திறவா நிலையாகிய பேராவியற்கையை எய்துதல். நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணி யறியோம் பணிவோ மல்லோம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை...... கொய்மலர்ச் சேவடியிணையே குறுகினோமே எனவரும் திருத்தாண்டகப் பொருள் இதன் விளக்கமாதல் அறிக. சேவடிக்கணம் சென்னி மன்னித் திகழுமே என்பது திருவாசகம் சென்னிப்பத்து. 138. வைத்தே னடிகள் மனத்தினுள்ளே நான் பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன் அறிந்தேனவ் வேதத்தின் அந்தமே. (1602) இறைவன் திருவடிகளைச் சிந்தையிற் கொள்ளுதலால் உளவாம் பயன் கூறுகின்றது. (இ-ள்) வினைகளால் இளைத்தேனாகிய யான் வாழ்க்கைப் பேறுகளாகிய இன்பத்தினை யில்லையாக்கி வெதுப்பும் ஐம்புல வழிகளில் சென்றலையாமல் இறைவன் திருவடிகளை என் நெஞ்சத்தினுள்ளே நிலைபெற வைத்தேன். அதனால் பிறந்திறந்து உழலுதற்குத் காரணமாகிய இருவினைப் பாசத்தினை அறவே நீக்கிச் சிவஞானமாகிய மெய்யுணர்வைப் பெற்றேன். அதன் பயனாக அந்த வேத முடிவில் விளங்குகின்ற சுட்டுணர்வுக் கெட்டாத பரம்பொருளை உள்ளவாறு அறியப்பெற்று மகிழ்கின்றேன். எ-று. எய்த்தேனாகிய நான், பொய்த்தே யெரியும் புலன் வழி போகாமல் அடிகள் மனத்தினுள்ளே வைத்தேன்; உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன்; அவ் வேதத்தின்அந்தமே அறிந்தேன் என்க. பொய்த்தல்-இல்லை யாக்குதல். எரிதல்- வெதுப்புதல் புலன்கள் திகைப்பிக்க யானுந் திகைத்து இங்கு ஓர் பொய்ந்நெறிக்கே, விலங்குகின்றேன் என்பது திருவாசகம். மெய்த்தேன்-மெய்யுணர்வுடையனாயினேன். அ-பண்டறி சுட்டு. வேதத்தின் அந்தம்-வேதத் தலைதரு பொருளாகிய இறைவன். வேதத்தின் அந்தமாகிய மெய்த்தேனை (ச்சுவைத்து) அறிந்தேன் எனப் பொருளுரைத்தலும் பொருந்தும். ஒருகாலத்து ஓருகணத்தில் நாவொன்றற்கும் சுவைதருவதாய் அழியும் தேன் போலன்றி நினைத்தொறும்காண்டொறும் எப்போதும் சுவை நல்கும் மெய்ம்மையுடைய பெருந்தேன் என்பார் மெய்த்தேன் என்றார். 139. மந்திர மாவதும் மாமருந் தாவதும் தந்திர மாவதும் தானங்க ளாவதுஞ் சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்றன் இணையடி தானே. (1604) எல்லாம் ஆம் எம்பெருமான் கழல் என்பது உணர்த்துகின்றது. (இ - ள்) தன்னை நினைப்பவரைக் காக்கும் மந்திரமாக நின்றருள்வதும், தீராத நோய்தீர்க்கும் பெரிய மருந்தாகி அருள்வதும், விரிந்த நூற்பொருளாய் நின்று அறியாமையை யகற்றியருள்வதும், ஈத்துவக்கும் தானப்பயனாக நின்று இன்பம் தருவதும், அகத்தும் புறத்தும் அழகினை நல்குவதும், தூய ஞான நெறியாக நின்று உதவுவதும் என் தந்தையும் எம் தலைவனும் ஆகிய சிவபெருமானுடைய இணையடிகளே எ-று. இணையடி - திருவடித்துணை; என்றது இறைவனது ஞானசத்தி கிரியாசத்தியாகிய திருவடிகளை. மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர் வாயுமைபங்கன் திருவாலவாயான் திருநீறே, எனவும், மருந்து வேண்டில் லிவை மந்திரங் கள்ளிவை புரிந்து கேட்கப்படும் புண்ணியங் கள்ளிவை திருந்து தேவன்குடித் தேவதே வெய்திய அருந்தவத் தோர்தொழும் அடிகள் வேடங்களெ. எனவும் ஆளுடைய பிள்ளையாரும், மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான் என ஆளுடைய அரசரும் இத்திருமந்திரப் பொருளையுளங் கொண்டு கூறிய திறம் நினைத்தற்குரியதாகும். ஞாதுரு ஞான ஞேயம் அறிவான், அறிவு, அறியத்தகு பரம்பொருள் என்னும் இம் மூன்றுனுள் அறிவானாகிய தன்னையும் அறிவாகிய கருவி யினையும் மறந்து அறியத்தகு பொருளாகிய இறை யுணர்வில் ஏகனாகி யொன்றுதல். ஞாதுரு-அறிவான்; ஆன்மா. ஞானம்-அறிவு. ஞேயம்-அறியத்தகு பொருளாகிய சிவம். ஆன்மா தற்போதமிழந்து சிவஞானத்தால் இறை யுணர்வில் அழுந்தி நிற்றலை யுணர்த்துவது ஞாதுரு ஞான ஞேயம் என்ற இப்பகுதி யாகும். 140. நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா; படரினும், ஆங்கார நீங்கி யதனிலை நிற்கவே, நீங்கா அமுத நிலைபெற லாமே (1605) ஞேயத்து அழந்துதலால் பாச நீக்கமும் சிவப்பேறும் உளவாம் என்கின்றது. (இ-ள்) உயிர்களை என்றும் விட்டு நீங்காத நலம்வளர் பேரின்பத்தை நல்கும் சிவபரம் பொருளைத் தியானித்தலாகிய உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கவே ஆன்மாவை யணுகியுள்ள மலகன்ம மாயையாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்து பற்றமாட்டா; அவை ஒரோ வழி முன்னை வாசனை வயத்தால் மீண்டும் வந்து பற்ற முற்படினும் அகங்காரமாகிய தற்போதத்தின் நீங்கி ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையிற் பிறழாது நிற்கவே, தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்க விடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் பேராவியற்கையாகிய வீட்டுநிலையினைப் பெறலாம் எ-று. சிவபரம் பொருள் கட்டு நிலையிலும் வீட்டு நிலையிலும் ஆன்மாக்களை விட்டு நீங்காது அவையே தானேயாய் என்றும் ஒட்டிநிற்கும் இயல்பினது என்பார், நீங்காச் சிவானந்த ஞேயம் என்றார். ஞேயமாகிய பரம்பொருள் இன்பமே யுருவானது என்பார் சிவானந்த ஞேயம் என்றார். இன்பமே என்னுடை அன்பே எனப் போற்றுவர் மாணிக்கவாசகர். ஞேயம்-உயிர்களால் சிவஞானத்தின் துணைகொண்டு உணர்ந்து பயன்கொள்ளுதற்குரிய பரம் பொருள். ஞேயத்தே நிற்றலாவது, அப்பரம் பொருள் நல்கிய நிறைந்த சிஞானத்திலே தாம் அடங்கித் தமது அறிவினுள்ளே சிவஞானந்தமாகிய பேரின்பம் குடிகொள்ளும்படி அம் மெய்ப்பொருளுணர்வில் அழுந்தி ஆனந்த நித்திரை (இன்பத்துயில்) கொள்ளுதல். இதன் இயல்பினை, ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல் (91) எனவரும் திருவருட் பயனில் உமாபதிசிவம் இனிது விளக்கி யுள்ளார். வினை ஒழிவுபெற்ற நல்லுயிர்கள்பழைய வாசனைத் தொடர்பால் மலமாயா கன்மங்கள் மேலிடாத படி உயிர்க்குயிராய் நிற்கின்ற திருவருள் ஞானத்தோடும் கூடி ஞேயமாகிய பொருளிற் பிரிவற அழுந்தி நிற்றலாகிய அணைந்தோர் தன்மையினை விளக்குவது இத் திருவருட் பயன். ஓங்குணர்வு - (உயிர்களைத் தொன்றுதொட்டு மறைத்துள்ள ஆணவ இருள் விட்டுநீங்கத்தக்கதாகப்) பக்குவமுடைய உயிர்களின் உள்ளத்திலே பேரொளியாய் விரிந்து பரவி மேலிட்ட சிவஞானம். அவ்வுணர்வினுள் அடங்கலாவது, ஆன்மா சிவஞானமாகிய அப்பேரறிவுக்கு உள்ளே அடங்கித் தற்போதம் சீவியாமல் நிற்றல். உள்ளத்தின் இன்பு ஒடுங்க சீவன் முத்தராயுள்ள அவர்கள் தங்கள் உள்ளத்திலே சிவனைத் தியானிக்கும் பொழுது சிவன் அங்கே பதிந்து நிற்றலால் அவர் தம் உள்ளத்திலே பேரின்பம் விளையுமாறு சிவத்தில் அழுந்தி யின்புறுதல். தூங்குதலாவது, மயக்க விகற்பங்களிற் படாது உறங்காது உறங்குதல்; என்றது, புண்ணிய பாவங்களைப் பயக்கும் விருப்பு வெறுப்புக்களாய்ப் பொருந்தும் கன்மமும் மண் முதல் மாயா தத்துவ மீறாய்க் காணப்படும் மாயையும் சுட்டியறிவதாகிய விபரீத வுணர்வைப் பயக்கும் ஆணவமும் ஆகிய இம் மும்மலங்களும் சிவஞானிக்கு ஆகா என்றுணர்ந்து தற்போதம் முளையாதவாறு நீக்கிச் சிவ ஞானத்துள் அடங்கிச் சிவாநுபவம் சுவாநுபூதிகம், ஆமாறு ஞானநிலையில் உறைத்து நிற்றல். அருளோடு ஒன்றி யுறங்குதலாகிய இதனியல்பினை, சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்காதானை எனவும், அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே அறிவுதனை யருளினா னறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங் கூடாதே வாடாதே குழைந் திருப்பையாகின் (சித்தியார் 382) எனவும் சான்றோர் அறிவுறுத்தியுள்ளார்கள். எல்லா மலங்களும் பற்றறத் துடைத்து மெய்யுணர்ந்து நிட்டைகூடினார்க்கு உடம்பு நிற்குமளவும் பிராரத்த வினை அவ்வுடம்பைப்பற்றி நின்று அவரை ஒரோவழி வாசனை வயத்தால் வந்துதாக்கும். அதுசார்பாக விருப்பு வெறுப்புக்கள் உளவாம். அவையுளவாக நிலமுதலாகிய பொருள் ஏகதேசப்படும். படவே அவற்றைச் சுட்டியறிவதாகிய விபரீதவுணர்வு மேற்பட்டு மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்துப் பிறவிக்கு வித்தாம். இவ்வாறு தாம் நீங்கிய நிலையிலும் மீண்டுபற்றி வருத்தும் வகையில் உயிரை அணுகிப் படர்வன பாசமாம் என்பது தோன்றப் பாங்கான பாசம் என்றார். படாதல் - மேல் அடர்தல். படரினும் என்புழி உம்மை எதிர்மறை. ஆங்காரம். யான் என்னும் தற்போதம். அது என்றது ஞேயத்தை. அதன் நிலை நிற்றல் - ஞேயமாகிய மெய்ப்பொருளுணர்வில் அடங்கிநிற்றல். நீங்காநிலை, அமுதநிலை எனத் தனித்தனி இயையும். நீங்காநிலை - தன்னைச் சார்ந்தாரைப் புறத்தே நீங்கவிடாது பிரிவற உடனாக்கிக் கொள்ளும் நிலை. அமுதநிலை - பேராவியற்கையாகிய இன்பநிலை. இந்நிலையினை, பாசிபடு குட்டத்திற் கல்லினை விட்டெறியப் படும்பொழுது நீங்கிஅது விடும்பொழுதிற் பரக்கும் மாசுபடு மலமாயை யருங்கன்ம மனைத்தும் அரனடியை யுணரும் போதகலும், பின்அணுகும்; நேசமொடும் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும் நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவேயாகி ஆசையொடு அங்குமிங்கும் ஆகி அலமருவோர் அரும்பாச மறுக்கும்வகை அருளின்வழி யுரைப்பாம் (291) எனவரும் சித்தியாரில் ஆசிரியர் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம், இத்திருமந்திரத்தில் பாசம் படரா? எனப் பாசநீக்கமும், நீங்கா அமுத நிலைபெறலாம் எனச் சிவப்பேறும் ஆகிய இருவகைப் பயன்களும் தெரித்துணர்த்தப்பெற்றமை காண்க. 141. காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமும் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமுங் காணா யெனவந்து காட்டினன் நந்தியே. (1160) ஞாதுரு ஞானம் ஞேயம் என்னும் வேற்றுமையற்று ஞேயத்துள் அழுந்திநிற்றலின் இயல்பினையும் அதனைச் சிலகுரு தமக்கு அறிவுறுத்திய செய்தியையும் கூறுகின்றது. (இ - ள்) விழித்திருந்தும் உலகப் பொருள்களைக் காணாத கண்ணும் கேட்காத செவியும் மாறுபடாத போகமும் பிரிந்து கூடாத சேர்க்கையும் உலகத்து நாணல்லாத நாணமும் நாததத்துவத்தைக் கடந்து விளங்கும் மேலான போதமும் ஆகிய இந்நிலையைக் கண்டு தெளிவாயாக என என்முன் குருவாக எழுந்தருளிவந்து (இவற்றையான் காணுமாறு) காட்டியருளினான் கண்ணுதல் நந்தியாகிய இறைவன் எ-று. காணாத கண், கேளாத கேள்வி என்பன தத்தம் உணர்வு நிகழ்தற்குரிய வாயிலாக இருந்தும் உலகப் பொருள்களிற் பற்றுதலின்றிக் காணுங் கரணங்களெல்லாம் பேரின்பமெனப் பேணும் நிலையில் உயிர் சிவானந்தத்து அழுந்தித் திளைக்குமாறு தத்தம் செயல் மடங்கிய பொறிகளை விழித்தகண் குருடாய்த் திரிவீரரும் பலரால் என்பது பெரிய புராணம். கோணாத போகம் என்றது, விருப்பு வெறுப்புக்களால் மனம் மாறுபடாது திருவருளில் ஒன்றி நுகரும் சிவாநுபவமாகிய நுகர்ச்சி. கோணுதல் - மாறுபடுதல். கூடாத கூட்டம் என்றது, பின் பிரிந்து கூடும் நிலையின்றி எக்காலத்தும் பிரிவின்றி ஒன்றியிருத்தலாகிய நிலை. நாணாவது செய்யத் தகாதனவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல். நாணாத நாணாவது, அவனருளாலல்லது ஒன்றையும் செய்யாது தான் என்னும் உணர்வு ஒடுங்குதல்; தன்பணி நீத்து இறைபணி நிற்றல். நாதாந்த போதம் - நாததத்துவம் முடியவுள்ள முப்பத் தாறினையும் கடந்து அதன்மேலாக விளங்கும் சிவஞானம். காணாய் - கண்டறியமாட்டாதாய், காண்பாயாக. காட்டினன் - உபதேசித்துப் பொருளுண்மையினை யான் காண உடனிருந்து காட்டியருளினான். நந்தி - சிவபெருமான். துறவு அஃதாவது புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடம்பின் கண்ணும் உளதாம் பற்றினை விட்டொழித்தல். என்றும் மாறாதுள்ளதாகிய ஞேயப் பொருளில் அழுந்துவார்க்கு யான் எனது என்னும் இப்பற்றுக்கள் தடையாம் என்னும் உணர்வு தோன்றுதல் இயல்பாதலின் அவற்றைத் துறத்தலாகிய துறவு இங்குக் கூறப்படுகிறது. 142. இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பிலராய் நித்தம் வாய்மொழி வார்கட் கறப்பதி காட்டும் அமரர் பிரானே. (1614) துறவு நெறியைக் கடைப்பிடித்தற்கு இன்றியமையாத இறை யுணர்வாகிய திருவருள் ஞானம் பெறுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) இறத்தலும் பிறத்தலும் ஆகிய துன்ப இன்பக் கூறுபாடுகள் இரண்டினையும் நீங்கி, யான் எனது என்னும் இருவகைப் பற்றினையும் விட்டொழித்தற்குக் காரணமாகிய தவநெறியினை வகுத்தருளிய ஒளியுருவினனாகிய இறைவனை (எக்காலத்தும்) மறவாதவர்களாய் நாள் தோறும் வாயாற் புகழ்ந்து போற்றுவார்க்கு வானோர் பெருமானாகிய அம் முதல்வன் அன்னோர்தம் இருவகைப் பற்றுகளும் அற்றொழியு மாறு சிவஞானத்தினைக் காட்டி யருள்புரிவன் எ-று. ஈண்டு இருமை என்றது, இறத்தல் பிறத்தல் ஆகியவற்றால் உயிர்கட் குளவாம் துன்ப இன்பக் கூறுபாடுகளாகிய இரண்டினையும், இவற்றை இருமை வகை என்பர் திருவள்ளுவர். இவ்வுண்மை இருமை வகை தெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு (23) எனவரும் திருக்குறளாலும், இருமை வகை தெரிந்து என்பதற்கு, பிறப்பு வீடென்னும் இரண்டனது துன்ப வின்பக் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து எனப் பரிமேலழகர் கூறும் உரையாலும் உய்த்துணரப்படும். துறவுக்கு அடிப்படையாவது தவநெறியே என்பதும் அத்தவ நெறியும் இறைவனால் அருளிச் செய்யப்பட்ட தென்பதும் விளக்குவார் துறக்குந் தவங் கண்ட சோதிப்பிரான் என்றார். காணுதல்-செய்தல். துறவுக்கு அடிப்படையாவது உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமையாகிய தவமே யாதலின் அதனைத் துறவற வியலில் அருளைச் சாரவைத்து ஓதினார் திருவள்ளுவர். தவநெறிதானும் பொறிவாயிலைந் தவித்தானாகிய இறைவனை வேண்டிப் பெறத்தக்கது என்பது தலைவாவுனை வேண்டிக்கொள் வேன் தவநெறியே எனவரும் ஆரூரர் அருளிச்செயலால் இனிதுணரப்படும். சோதிப்பிரானாகிய இறைவன் தன்னை மறப்பிலராய் நித்தம் வாய்மொழிவார்களாகிய அன்பர்களுக்கே அவர்களைப்பற்றிய இருவகைப் பற்றுக்களும் அற்றொழியப் பதிஞானத்தை உணர்த்தித் துறந்தார்தம் தூநெறியாகிய வீட்டு நெறியைக் காட்டி அருள்புரிவன் என்பார், அமரர்பிரான் மறப்புஇலராய் நித்தம் வாய் மொழிவார்கட்கு (இருவகைப் பற்றும்) அற, பதி (ஞானம்) காட்டும் என்றார். அற-அற்று ஒழிய. பதி என்றது, பதி ஞானமாகிய சிவஞானத்தினை. தண்ணிழலாம் பதி என வரும் சிவஞானபோதத்தில் பதி என்பது பதிஞானம் என்ற பொருளிற் பயின்றுள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவதாகும். இனி அறப்பதி காட்டும் என்பதற்கு அறமயமான நகரைக் காட்டுவன் எனப் பொருள் கொள்வதும் உண்டு. பதி என்பதற்கு நெறி என்ற பொருளும் இருத்தலால் அறப்பதி காட்டும் என்பதற்கு அற நெறியாகிய துறவு நெறியைக் காட்டியருள்வன் எனப் பொருள் உரைத்தற்கும் இடனுண்டு. அறம் என்றது ஈண்டுத் துறவறத்தைக் குறித்தது; இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் எனவரும் திருக்குறளில் அறம் என்ற சொல் துறவறத்தினைச் சிறப்பாக உணர்த்தி நிற்றல் காணலாம். அமரர்பிரான்-தேவதேவன்; சிவ பெருமான். துறவறத்தின் நிற்பார்க்கு இறைவனது அருளின்துணை வேண்டும் என்பது அருந்துணையை என்னும் திருத்தாண்ட கத்தாற் புலனாம். 143. பிறந்தும் இறந்தும் பல்பேதைமை யாலே மறந்து மலவிருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளியாமே. (1615) கட்டுநிலையில் உள்ளார்க்கு மறைந்துநின்ற சிவன், அருள் சேர் பக்குவ நிலையில் துறந்தவுயிர்க்குச் சுடரொளியாய் வெளிப்பட்டுத் தோன்றுமாறு உணர்த்துகின்றது. (இ - ள்) உயிர்கள் இருள்மலமாகிய ஆணவத்துட்பட்டு அதன் பல்வேறு சத்திகளாகிய பேதைமை காரணமாகப் பலவகைப் பிறவிகளிற் பிறந்தும் இறந்தும் (இங்ஙனம் பிறந்திறந்துழலும் திறங்களை அறவே) மறந்தும் வருகின்ற கட்டு நிலைக்கண் இருள்மலம் அவ்வுயிர்களை விட்டு நீங்குதல் வேண்டி மறைந்து நின்று சிறந்த உதவியைச் செய்தருளிய சிவபெருமான், இருவினை யொப்பு மலபரி பாகம் பொருந்தித் தனது திருவருளைப் பெறுதற்குரிய காலத்துத் திருவருட் பதிவு பெற்றுத் துறவுநிலையை யடைந்த நல்லுயிர்க்கு அவர்தம் உள்ளத்தே பேரொளிப் பிழம்பாக வெளிப்பட்டுத் தோன்றியருளுவன் எ-று. (மலவிருளின் காரியமாகிய) பல்பேதைமையாலே பிறந்தும் இறந்தும் மறந்தும் (வரும் உயிர்க்கு) மலவிருள் நீங்க மறைந்து சிறந்த சிவன், அருள்சேர் பருவத்துத் துறந்தவுயிர்க்குச் சுடரொளியாம் என இயைத்துப் பொருள் கொள்ளுதல் வேண்டும். பிறப்பிற்கும் இறப்பிற்கும் மறப்பிற்கும் காரணமாவது, நில்லாதவற்றை நிலையின வென்றுணரும் பேதைமையே என்பார் பல்பேதைமை யாலே பிறந்தும் இறந்தும் மறந்தும் என்றார். இங்ஙனம் பிறந்திறந்து மறந்துழலும் கட்டு நிலையிலும் சிவபெருமான் உயிர்க்குயிராய் மறைந்து நின்று அவ்வுயிர்களின் மலவிருள் நீங்குமாறு சிறந்த உதவியைச் செய்கின்றான் என்பார் மலவிருள் நீங்க மறைந்து சிறந்த சிவன் என்றார். இங்ஙனம் மறைந்து நின்ற இறைவன் உயிர்கள் சத்தினி பாதமாகிய திருவருட்பதிவினைப் பெறும் பக்குவத்தில் துறவுநிலைபெற்ற உயிர்களுக்குச் சோதிப்பொருளாக வெளிப்பட்டருள்வன் என்பார், சிவன் அருள்சேர் பருவத்துச் சுடரொளியாம் என்றார். இத்திருமந்திரம், பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு (358) எனவரும் திருக்குறளுக்கத் திருமூலர் அருளிய விளக்கவுரை போன்று அமைந்துள்ளமை உய்த்துணர்ந்து மகிழத் தகுவதாகும். உயிர்க்குயிராய்ச் சிறந்து நின்று உதவி செய்தல்பற்றிச் சிறந்த சிவன் என்றார். சிறந்தது பயிற்றல் என்பது தொல்காப்பியம். என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்பது அப்பர் அநுபவ மொழி. 144. அறவன் பிறப்பிலி யாரு மிலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. (1616) பற்றற்றானாகிய பரம்பொருளைப் பற்றி யொழுகுதலே பற்றை யொழித்தற்குரிய உபாயமெனக் கூறுகின்றது. (இ-ள்) தூயநல்லறமே திருமேனியாகவுடையவன்; வினைவயத்தாலுளவாம் பிறப்பில்லாதவன்; பிறப்பில்லை யாகவே தனக்கெனத் தாய் தந்தை முதலிய சுற்றத் தொடர் பில்லாதவன். அவன் விரும்பி உறையும் இடம் (எல்லார் புறமும் தான்கண்டு தன்புறம் காண்போரையில்லாத) ஈமப்புறங் காடாகும். அவன் உண்ணும் உணவோ ஊராரிடும் பிச்சை யுணவாகும். அங்ஙனம் பிச்சையேற்பானாயினும் அத் துப்புரவையும் வேண்டாத துறவியும் அவனே. துறவற நெறியில் நின்றார்க்குப் பெருந்துணையாய் நின்று அன்னோரது பிறவிப் பிணியைப் போக்கும் பெரும்பித்துக் கொண்டவனும் அம் முதல்வனேயென்று கண்டுணர்வீராக எ-று. அறவாழி அந்தணன், அறவனே தாயுமிலி தந்தையிலி தான்தனியின் உண்பதும் ஊரிடுபிச்சை மூப்பதுமில்லை பிறப்பதில்லை யிறப்பதில்லை பித்தரை யொத்தொரு பெற்றியர் துறந்தோருள்ளப் பெரும்பயனை எனவரும் திருமுறைத் தொடர்கள் இங்குக் கருதத்தக்கன. 145. நெறியைப் படைத்தான் நெருங்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. (1617) துன்பந் துறத்தற்குரிய துறவுநெறியினை மேற்கொண்டோர் அந்நெறியின் வழுவினால் மீண்டும் துயரத்திற் குள்ளாவர் என்கின்றது. (இ-ள்) நெருஞ்சிலைப் படைத்தவனே அதனின்றும் விலகி நடத்தற்குரிய வழியையும் அமைத்துள்ளான் அவ்வழியினின்று வழுதி நடந்தால் நெருஞ்சிலின் முள்குத்தும். நன்கு அமைக்கப்பட்ட வழியிலிருந்து சிறிதும் வழுவாது நடக்க வல்லார்க்கு அவ்வழியில் நெருஞ்சில் முள் குத்த மாட்டா எ-று. தோற்றத்திற்கினிய பூவினையும் அதுவே காய்த்து முதிர்ந்த நிலையில் முள்ளாகி வருத்தும் விதையினையும் உடையது நெருஞ்சி. இங்கு நெருஞ்சி என்றது அன்பினால் தோற்றப் பொலிவுடையதாய் மக்கள் சுற்றம் என்னும் பிணிப்பினால் துன்பம் விளைப்பதாய் அமைந்த உலக வாழ்க்கையினை. உயிர்கள் இன்ப அன்பினை வளர்த்தல் வேண்டி இவ்வுலக வாழ்வினை அமைத்த இறைவனே இவ் வாழ்க்கை துன்பமுடையதாய் மாறிய நிலையில் இதனைவிட்டு நீங்குதற்குரிய நெறியாகத் துறவு நெறியினையும் வகுத்தருளினான் என்பார், நெருஞ்சில் படைத்தான் நெறியைப் படைத்தான் என்றார். வாழ்க்கை துயர மாதல் அறிந்தவர் அதனை விடுத்துத் துறவற நெறியில் வழுவாது இயங்கவல்லராயின் அவரை உலக வாழ்க்கையிலுளவாய துன்பங்கள் தொடரமாட்டா என்பார் நெறியின் வழுவாது இயங்க வல்லார்க்கு நெறியின் நெருஞ்சில் முள் பாயகில்லாவே என்றார். துறவு நெறியில் வழுவின் மீளவும் துன்பத்திற் குள்ளாவர் என்பார் நெறியின் வழுவின் நெருஞ்சின்முட் பாயும் என்றார். பாய்தல்-அழுந்திப் பதிதல். இது ஒட்டென்னும் அணியின்பாற்படும். புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு இனியசெய்த நங் காதலர் இன்னாசெய்தல் நோமென் னெஞ்சே (குறுந்தொகை - 202) என்பர் அள்ளூர் நன்முல்லையார். இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு துன்பமும் உடனேவைத்த சோதியான் என்பர் அப்பர் அருள்மொழியாகும். தவம் சரியை கிரியை யோகம் ஆகிய நெறிகளைத் தவம் என்றார். தவத்தினில் உணர்த்த என்பது சிவஞான போதம் 146. ஓடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையு மில்லை இராப்பக லில்லை படும்பய னில்லை பற்றுவிட் டோர்க்கே. (1624) புலன்களை யடக்கித் தவநெறி நிற்போர் எய்தும் பயன் உணர்த்துகின்றது. (இ-ள்) புறத்தே புலன் வழிப்படராது உள்முகமாகத் திரும்பி ஞேயமாகிய பொருளில் ஒன்றி நிலைபெற்ற தவச் செல்வராகிய பெருமக்களது உள்ளமானது உலகில் நேரும் இடையூறுகளை யெண்ணித் துளக்கமுறுவதில்லை. அவர்கள் இருக்கும் இடத்தே கூற்றுவனும் அணுகுவதில்லை. துன்பமும் இல்லை; இரவு (மறப்பு) பகல் (நினைப்பு) என்ற வேற்றுமையில்லை. யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் விட் டொழித்தோ ராகிய அவர்களுக்கு (இவ்வுலகிற் பிறரால்) அடைய வேண்டிய பயன் எதுவும் இல்லை. (ஒன்றாலுங் குறைவின்றி வாழ்வார்) எ-று. ஒடுங்குதலாவது புறத்தே உலகப் பொருளிற் செல்லாது அகத்தே உள்முகமாக மடங்குதல். நிலைபெறுதல்-ஞேயத்தில் அழுந்திப் பதிதல். உத்தமர்-பெரியோர். நடுங்குதல்-நிலைதுளங்கி வருந்துதல். நமன்-இயமன். இடும்பை-துன்பம். இராப் பகல் என்பது மறப்பு நினைப்பு என்னும் அறிவு மயக்கத்தைக் குறித்தது. பற்றுவிட்டோர்க்குப்படும் பயனில்லை என இயையும். படுதல்-இனிமேல் உளதாதல். பெரும் பயனாகிய பரம்பொருளை இம்மையே அடையப் பெற்றார்க்கு இனிமேல் அடையவேண்டிய பயன் எதுவும் இல்லை எனவே அன்னோர் ஒன்றாலும் குறைவுடையாரல்லர் எனக் குறித்தவாறாம். சுரும்பமருங் குழல் மடவார் கடைக் கணோக்கிற் றுளங்காத சிந்தையராய்த் துறந்தோருள்ளப் பெரும்பயனை எனவும் வானந் துளங்கிலென் மண்பாதலம்புக்கு நாமார்க்கும் குடியல்லோம் எனவும் என்று நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் எனவும் வரும் அப்பர் அருளுரைகள் இத்திருப்பாட்டின் விளக்கங்களாகும். மும்மையாயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை இம்மையே பெற்று வாழ்வார் இனிப்பெறும் பேறொன்றில்லார் என்பது பெரியபுராணம். அருளுடைமையின் ஞானம் வருதல் இறைவன் திருவருளாலேயே உயிர்கட்கு ஞானமுண்டாம் என்னும் உண்மையை யுணர்த்தும் பகுதி. 147. பிரானரு ளுண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானரு ளுண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானருளிற் பெருந் தன்மையும் உண்டு பிரானருளிற் பெருந் தெய்வமு மாமே. (1645) இறைவன் திருவருள் கிடைத்தால் எல்லா நலங்களும் எளிதிற் கிடைக்கும் என்கின்றது. (இ-ள்) உயிர்க்குயிராய சிவபெருமானது திருவருள் உண்டாயின் என்றும் அழிவில்லாத நல்ல செல்வம் உளவாகும். என்றும் அழிவில்லாத அம் முதல்வன் அருள் பெறில் நல்ல சிவஞானம் உண்டாகும். அம்முதல்வன் அருளால் உயிர்க்கு எண்பெருங் குணங்களாகிய பெருந்தன்மையும் உண்டாகும். இறைவன் திருவருளால் பெருந் தெய்வமாகிய சிவமாந்தன்மைப் பெருவாழ்வும் உண்டாகும் எ-று. நற்செல்வம் - கெடுதலும் ஆதலுமில்லாத நல்ல செல்வம். நன்ஞானம் - குறையாத பேரறிவாகிய சிவஞானம். பெருந்தன்மை - பெருங்குணம்; என்றது இறைவனுக்குரிய எண்குணங்களை. பெருந்தெய்வம் - அடியார் தொடரும் பெருந்தெய்வமாகிய சிவம்; என்றது சிவமாந்தன்மைப் பெருவாழ்வாகிய வீடுபேற்றினை. அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால்மூஅருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு எனவரும் அம்மையார் திருவந்தாதி இத் திருமந்திரப் பொருளுடன் ஒத்தமைந்திருத்தல் காணலாம். அவவேடம் மேற்கொண்டார்க்குப் பயன்தராது பழிவிளைக்கும் போலி வேடத்தினை இகழ்ந்துரைக்கும் பகுதி. 148. ஆடம்பரங் கொண் டடிசி லுண்பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. (1655) போலி வேடத்தாரை நோக்கி இடித்துரைக்கின்றது. (இ-ள்) உழைப்பின்றிச் சோற்றினையுண்டு வயிற்றை நிரப்புதல் வேண்டி வெளித்தோற்ற உயர்வினையுடையராய்த் தவவேடங்களை மேற்கொண்டு உலகிற் பொது மக்களை மயக்கி அச்சுறுத்தித் திரியும் பேதைகளே! (பயனற்ற இவ்வேடத்தால் நுமக்கு எத்தகைய நற்பேறு மில்லை. நீவிர் உண்மையான தவத்தின் பயன்பெறக் கருதுவீராயின் இப்பொய்ம்மை நிலையை விட்டு) அன்பு மேலீட்டால் இறைவன் திருவருளை வியந்து மகிழ்ச்சி மீதூர ஆடியும், அவனது புகழ்த்திறங்களைப் பாடியும், அவனை இதுகாறும் அடையப்பெறாத இடையீட்டினை யெண்ணி வருந்தி அழுதும் அரற்றியும், சிவன் எவ்விடத்தான் என அகத்தும் புறத்தும் தேடியும் சிவபெருமானாகிய அம் முதல்வன் திருவடிகளைக் தியானித்துக் காண்பிராக. எ-று. ஆடம்பரம்-உலகத்தார் தன்னை யுயர்வாக மதித்தல் வேண்டும் என்னும் நோக்குடன் தம்மைப் புறத்தே தோற்றப் பொலிவினராக அணிசெய்து கொள்ளுதல். வானுயர் தோற்றம் என்றார் திருவள்ளுவர். அடிசில்-சோறு; உணவு. உண்பான்-உண்ணும் பொருட்டு. பயன் வேடங்கள்-நற்பயனை விளைத்தற்குரிய தவவேடங்கள்; என்றது பல சமயத்தாரும் மேற்கொள்ளும் பலவகைத் தவவேடங்களை. வேடங்கள் கொண்டு எனவே புறத்தே வேடத்தைக் கொண்டதன்றி அதற்குரிய ஒழுக்கத்தை அகத்தே கொண்டிலர் என்பதாயிற்று. ஆகவே அவர்தம் வேடம் பயனற்ற (அவ) வேடம் என்பது புலனாம். வெருட்டுதல்-மயக்கி அச்சுறுத்தல். கூட வேடத்த ராகிக் குழுவிலென் வாடி யூனை வருத்தித் திரியிலென் ஆடல் வேடத்தன் அம்பலக் கூத்தனைப் பாடலாளர்க் கல்லாற் பயனில்லையே (5-99-7) என அப்பரடிகளும், நெக்குநெக்குள் உருகி யுருகி நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும் நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலுந் திருமேனி திகழநோக்கிச் சிலிர் சிலிர்த்துப் புக்கு நிற்ப தென்று கொல்லோவென் பொல்லா மணியைப் புணர்ந்தே. என வாதவூரடிகளும் அருளிய திருப்பாடல்கள் இத்திரு மந்திரப் பாடலின் பின்னிரண்டடிகளுக்கு விளக்கமாகும். தவவேடம் உண்மைத் தவநெறிக்கு ஒத்த வேடத்தின் சிறப்பினை உணர்த்தும் பகுதி. 149. தவமிக்கவரே தலையான வேடர் அவமிக்கவரே அதிகொலை வேடர் அவமிக்கவர் வேடத்தாகா ரவ்வேடந் தவமிக்கவர்க் கன்றித் தாங்க வொண்ணாதே. (1661) தவவொழுக்கமே யன்றித் தவவேடந்தானும் முன்னைத் தவப்பயிற்சியுடையார்க்கன்றி ஏனையோரால் மேற்கொள்ளுதற் குரிய எளிமையுடையதன்று எனவும், தவவேடத்தினாலும் அவவேடத்தினாலும் நாட்டிற்கு உளவாம் விளைவுகள் இவை எனவும் உணர்த்துகின்றது. (இ-ள்) மெய்மையான தவவொழுக்கப் பயிற்சி நிறைந் தவர்களே (நாட்டிற்கு நற்பயன்தரும்) மேலான தவவேடத்திற்கு உரியராவர். வீண்செயலாகிய கூடா வொழுக்கத்தினர் தமக்கு ஒவ்வாத தவவேடத்தினை மேற் கொள்வராயின் அன்னோர் மிக்க கொலைத்தொழிலையுடைய வேட்டுவரை யொத்து வாழுமுயிர்க்கு வஞ்சனையால் இடர் விளைப்போராவர். இங்ஙனம் அவத்தொழிலின் மிக்க அவர்கள் மெய்த்தவ வேடத்திற்குப் பொருத்தமுடையவராக மாட்டார்கள். மெய்த்தவ வேடமாகிய அவ்வேடம் உண்மைத் தவவொழுக்கமுடைய உரவோர்களாலன்றி வஞ்ச மனத்தராகிய படிற்றொழுக் கத்தினரால் கடைபோக மேற்கொள்ளுதற்குரிய எளிமையுடைய தன்று எ-று. தவம் மிக்கவர் - தவவொழுக்கத்தால் மேம்பட்ட உண்மைத் தவசிகள். தலையான வேடர் - சிறந்த திருவேடத்தையுடையார். அவம் மிக்கவர் - பொய்ம்மையான படிற்றொழுக்கத்தினை யுடையராய்த் தருக்கித் திரிவோர். அதிகொலை வேடர் - வஞ்சனையாற் புதரில் மறைந்துமிக்க கொலைத்தொழிலைச் செய்யும் வேட்டுவரை யொத்த கொடுந் தொழிலாளர். இத்தொடர், தவமறைந்தல்லவை செய்தல் புதல்மறைந்து, வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (274) எனவரும் திருக்குறளை அடியொற்றியதாகும். வேடர் என்ற சொல்லை வேடத்தை மேற்கொண்டோர் எனவும், பறவை விலங்கு முதலிய உயிர்களை மறைந்து கொல்லும் கொலைத்தொழிலாளராகிய வேட்டுவச் சாதியினர் எனவும் இருபொருளில் அடைகொடுத்து வழங்கிய திறம் அறிந்து மகிழ்தற்குரியதாம். அவம் மிக்கவர் - கூடா வொழுக்கத்தில் தழும்பேறிய பொய்ம்மையானராகிய போலித்தவசிகள். அவம் மிக்கவர் அவ்வேடத்து ஆகார் - பொய்ம்மையொழுக்கத்தின் மிக்கவராகிய அவர்கள் அத்தகைய வேடத்திற்கு உரியராகார். தவமிக்கவர்க்கு அன்றி - தவம் மிக்கவராலன்றி ஏனையோரால். தாங்கவொண்ணாது - மேற்கொண்டு தாங்குதற்குரிய எளிமையதன்று. முன்னைத் தவப்பயிற்சியுடையராய் நல்லொழுக்கம் வாய்ந்தவர்களே தவவேடத்தினைக் கடைசிவரை நெகிழவிடாது தாங்கும் மனத்திண்மையுடையர். ஏனையோர் அன்னரல்லராதலின் அன்னோர் தவவேடத்தினை மேற்கொள்ளுதல் பயனற்றது என்பதாம். இத்திரு மந்திரத்தின் பின்னிரண்டடிகளும், தவமுந் தவமுடையார்க் காகும்; அவமதனை அஃதிலார் மேற்கொள்வது (262) எனவரும் திருக்குறளை அடியொற்றியமைந்தன. (அகத்தின் பயிற்சியாகிய தவவொழுக்கமேயன்றிப்) புறத் தோற்றமாகிய தவவேடமும் முன்னைத் தவமுடையார்க்கே எளிதின் மேற் கொள்ளத் தகுவதாகும். அத்தவப் பயிற்சி யில்லாதார் தவவேடமாகிய அதனை மேற்கொள்வது பயனில்லாத செயலாம் என்பது இதன் பொருள். திருநீறு 150. கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே. (1666) திருநீற்றின் சிறப்பும் அதனை யணிவோர் பெறும் பயனும் கூறுகின்றது. (இ-ள்) (திருமால் பிரமரது) முழுவெலும்புக் கூட்டினை மேற்கொண்டானாகிய சிவபெருமான் திருமேனியிற் பூசப் பெறும் மெய்க்காப்பாகிய திருநீற்றினை ஒளிகெடாமற் பூசி (பூசிநீறுபோல் உள்ளும் புனிதராய்) மகிழ்வராயின் அவரைப்பற்றித் தொடரும் வினைகள் அவர்பால் தங்காமல் அகன்றொழியும்; சிவகதியாகிய பதவியும் அவர்களை வந்துசேரும். அன்னோர் உவகையுறுதற் கேதுவாகிய இறைவன் திருவடியிற் சேர்ந்து பிரிவற ஒன்றுதலாகிய பேரின்ப வாழ்வைப்பெறுவர் எ-று. கங்காளன்-முழுவெலும்புக் கூட்டினை மேற்கொண்டவன்; சிவபெருமான். கங்காளம்-முழுவெலும்புக் கூடு. எல்லா வுலகங்களும் அழிந்து தன்கண் ஒடுங்கும் பேரூழிக் காலத்துத் திருமால் பிரமர்களையும் தன்கண் ஒடுங்க அவர் தம் எலும்புக் கூட்டினைத் தோள்மேற் கொண்டு விளங்குதல் பற்றிக் கங்காளன் என்பது மகாசங்கார காரணனாகிய சிவனுக்குரிய திருப் பெயராயிற்று. இவ்வுண்மை, பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும்போய் இருங்கடல் மூடி யிறக்கும், இறந்தான் களேபரமும் கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய் வருங்கடல் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே. எனவும், நங்காயி தென்ன தவம் நரம்போ டெலும்பணிந்து கங்காளந் தோண்மேலே காதலித் தான் காணேடீ கங்காளம் ஆமா கேள் காலாந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன் காண் சாழலோ எனவும் வரும் திருப்பாடல்களாற் புலனாம். அருளாளனாகிய இறைவன் உலகெலாம் நீறாயழிவுற்ற நிலையில் மீண்டும் தன்கணின்றும் உலகினைத் தோற்றுவிக்கும் திருக் குறிப்புடன் எவ்வுயிர்க்கும் பாதுகாப்பளிக்கும் மெய்க்காப்பாக அத்திரு நீற்றினைத் திருமேனியிற் பூசிக் கொண்டான் என்பார் கங்காளன் பூசுங் கவசத் திருநீறு என்றார். பேணியணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறாதலின் கவசம் என்றார். கவசம்-மெய்க்காப்பு. ஆன நீற்றுக் கவசம் அடையப் புகுமின்கள் என்பது திருவாசகம். திரிபுரம் வெந்தவிந்த நிலையில் இறைவன் அதன் நீற்றினைத் தன் திருமேனியிற் பூசிக்கொண்டு பாண்டரங்கம் என்னும் கூத்தினை யாடியருளினான் என்பது, மண்டமர் பலகடந்து மதுகையானீறணிந்து பண்டரங்க மாடுங்காற் பணையெழி லணைமென்றோள் வண்டரற்றுங் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ எனவரும் கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலாலும், மிக்குச் செல்கின்ற போர்களிற் பலவாகிய முப்புரங்களை வென்று அந்த வலியாலே அவர்கள் வெந்து வீழ்ந்த நீற்றை அணிகையினாலே பாண்டரங்கம் என்னும் பெயர் பெற்ற கூத்தை எனவரும் அதனுரைப் பகுதியாலும் எயிலது அட்டதுநீறு இருமைக்கு முள்ளது நீறு என வரும் திருப்பதிகக் தொடராலும் நன்கு புலனாம். மங்குதல்- ஒளிமழுங்கல். மகிழ்தல்-பராவணமாகிய அந் நீற்றினை யணிதலால் மும்மலங் கெடுதலாய பயன் நோக்கி உள்ளந் தூயதாய் இன்புறுதல். சிங்காரம் உவகை; அழகு எனப் பொருள் கூறலுமுண்டு. சிவகதி என்றது சாலோக சாமீப சாரூபமாகிய பதமுத்திகளை. திருவடிசேர்வர் என்றது இரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய முத்தியை. ஞானவேடம் 151. ஞானமிலார் வேடம் பூண்டும் நரகத்தர் ஞானமுளார் வேடம் இன்றெனின் நன்முத்தர் ஞான முளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேட நண்ணி நிற்பாரே. (1668) மெய்ஞ்ஞானிகட்கு உண்மையான வேடமாவது மெய்ப் பொருளுணர்வே என வலியுறுத்துகின்றது. (இ-ள்) மெய்ப்பொருளை இடைவிடாதுணரும் அன்பில்லா தவர்கள் சிவ ஞானியர்க்குரிய வேடத்தைப் பூண்டிருந்தும் (துன்பமே நுகரும்) நரகத்தை யடைவர். (ஈசன் பால் அன்பாகிய) மெய்யுணர்வுடையோர் சிவஞானிக்குரிய வேடத்தைக் கொண்டிலராயினும் நல்ல வீடு பேற்றினை யடைந்தோராவர். எனவே சிவஞானம் தம் பாலுளதாக வேண்டு என்னும் வேட்கையுடையவர்கள் சிவபெருமானிடத்து அன்பினை விளைவிக்கும் மெய்யுணர்வின் முதிர்ச்சியாகிய செயல்களை யுடைய மெய்ம்மையான வேடத்தைச் சார்ந்து நிற்பாராக எ-று. ஞானம் என்றது, ஈசன்பால் அன்பினை விளைத்தற்குரிய உணர்வொழுக்கங்கள். ஞானம் ஈசன்பால் அன்பே என்றனர் ஞானமுண்டார் என்பர் சேக்கிழார நாயனாரும். மெய்யுணர் வில்லாத பொய்வேடத்தார் மெய்ந் நெறி சேரமட்டார் என வலியுறுத்துவார் ஞானமிலார் வேடம்பூண்டும் நரகத்தர் என்றார். பூண்டும் என்புழி உம்மை உயர்வுசிறப்பு. இதுகொண்டு ஞானமுளார் வேடம் இன்றெனினும் என இழிவு சிறப்பும்மை விரித்துரைக்கப்பட்டது. மெய்யானைத் தன்பக்கல் விரும்புவார்க்கு, விரும்பாத அரும்பாவியவர்கட் கென்றும் பொய்யானை எனவும் மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை எனவும் வரும் அப்பர் அருள்மொழிகள் இங்கு நினைக்கத்தக்கன. இறைவன் திருவடியை இறைஞ்சி வழிபடுவாரே ஞானத்தையும் அதனைப் புலப்படுத்தும் மெய் வேடத்தையும் அடையப்பெறுவர் என்பார், ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேடம் நண்ணி நிற்பார் என்றார். மேவிய வெந்நரகத்திலழுந்தாமை யுயிர்க்கு மெய்ந்நெறியைத் தான்காட்டும் வேத முதலானை எனப் போற்றுவர் நம்பியாரூரர். நக்கன்-சிவ பெருமான்; நக்னன்-ஆடையிலான்; திசைகளையே ஆடையாகக் கொண்டவன்; திகம்பரன். சிவ வேடம் சிவவேடமாவது சிவனை நினைப்பிக்கும் அடியார் திரு வேடம். நேயமலிந்தவர் வேடம் என்பர் மெய்கண்டார். 152. அருளால் அரனுக் கடிமைய தாகிப் பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி இருளான தின்றி யிருஞ் செயலற்றோர் தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே. (1676) சிவ வேடத்தார் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) இறைவன் திருவருளாலே அம் முதல்வனுக்குத் தொண்டராய்ச் செம்பொருளாகிய சிவம் விளங்குதற்கு இடமாகிய தனது உடம்பினுள்ளே இதயமாகிய பொன்னம் பலத்திலே அம்முதல்வனை நாடிக் கண்டு (அதனால்) ஆணவ விருள் இல்லையாயொழியக் கடிய வினைகள் அற்றவர்கள் சிந்தையில் தெளிவுடையராய்ச் சிவனுக்கு அடிமை பூண்ட சிவ வேடத்தர் ஆவர் எ-று. அரனுக்கு அடிமையாதற்கு அவனருள் இன்றியமை யாததென்பார் அருளால் அரனுக்கு அடிமையதாகி என்றார். அவனருளாலே அவன்தாள் வணங்கி என்பது திருவாசகம். பொருள் - செம்பொருளெனப்படும் சிவம். ஆதல் - தோன்றி விளங்குதல். தனது உடலிற் பொற்பதி என ஏழாமுருபு விரிக்க. பொற்பதி என்றது, உயிர்களது நெஞ்சத் தாமரையாகிய அழகிய ஊரினை. சீரார்பெருந்துறையான் என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து என்பது திருவாதவூரடிகள் அருளிய அநுபவ மெய்யுரை. நாடுதல் என்றது, காணப்பட்ட உடம்பினைக் கொண்டு அதனுள்ளே அருவாயுள்ள உயிரையும் உயிர்க்குயிராகிய பரம்பொருளையும் ஆராய்ந்து காணுதல். அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி என்பது சிவ ஞானபோதப் பாயிரம். இருள்-கருதியுணரப்படும் இருளாகிய ஆணவமலம். பெரும் பெயர்க் கடவுளிற் கண்டு கண்ணிருள் தீர்ந்து என்பது சிவஞான போதப் பாயிரம். இருஞ்செயல்-செய்தாரை நிழல்போற் பிரியாது நின்று வருத்தும் வல்வினை. செயலறுதல் - வினைத் தொடர்பு அறுதல். தெருள்-தெளிவு; என்றது எல்லாப் பொருளையும் படைக்க வல்லவன் எல்லா வுலகங்களையும் தனது உடைமையாகக் கொண்ட இறைவன் ஒருவனே என்னும் உணர்வும் அப்பொருள்களில் அன்புசெய்யும் உணர்வுடையராய உயிர்கள் இறைவனுக்கு அடிமைப் பொருளாவர் என்னும் அறிவும் பெற்றுத் தம்மையும் தலை வனையும்உள்ளவாறுணரும் தெளிந்த ஞானத்தினை. இத்தகைய சிவஞானச்செல்வர்கள் தம்மை ஒரு பொருளாக மதிக்காது ஊனமொன்றில்லா ஒருவனுக்கே ஆட்பட்டு இருப்போந் திருவடிக் கீழ் நாம் என்னும் தெளிந்த சிந்தையராய்ச் செம்மாந்து வாழுந் திறத்தினராய், மெய்தானரும்பி விதிர்விதிர்த்துன் விரையார் கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணீர்ததும்பி வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றிசயசய போற்றியென்னுங் கைதா னெகிழவிடேனுடையா யென்னைக் கண்டுகொள்ளே எனத் தமது அன்பின்திறம் மேற்பட்டுத் தோன்றக் கண்டார்க்குச் சிவனது திருவுருவினை நினைப்பிக்கும் நிலையில் நடமாடுங் கோயில் நம்பராக உலகிற் சஞ்சரிப்பர் என்பார், தெருளாம் அடிமைச் சிவவேடத்தார் என அருளினார். அபக்குவன் பக்குவம்-உயிர்களைப்பற்றிப் மும்மலப்பிணிப்பு சரியை முதலியவற்றால் கழலுதற்குரிய நிலை. அந்நிலையினைப் பெறாத உயிர் அபக்குவன். அபக்குவம்-மலங் கழலும் நெகிழ்ச்சியைப் பெறாமை. 153. குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடி குருடுங் குருடுங் குழிவிழு மாறே. (1680) மலங்கழலுதற்குரிய நல்லாசிரியனை யடையாத அபக்குவி களின் அவலநிலையினைக் கூறுகின்றது. (இ-ள்) உயிரின் அறிவாகிய கண்ணை மறைத்துள்ள இருட் படலமாகிய குருட்டுத் தன்மையினை நீக்கவல்ல அனுபவமுடைய நல்லாசிரியனைக் குருவாகத் தேர்ந்து கொள்ள மாட்டாதார் குருட்டுத் தன்மையினைப் போக்க மாட்டாதானைக் குருவாகக் கொண்டுழல்வர். அன்னோரது செயல் குருடனும் குருடனும்கூடித் தம்முள் ஒருவரொரு வரைக் கண்ணாரக் கண்டுகொள்ள மாட்டாத குருட்டு நிலையிலே நாடகமாடி அவ்விருவரும் குழியில் விழுந்து அவல முற்ற பேதைமைச் செயலை யொக்கும் எ-று. மாணாக்கனது பக்குவமறியாத குருவும் உண்மையான ஆசிரியன் சிவன் என உணரும் பக்குவமில்லாத மாணாக்கனும் ஞானநூற் பொருளை உள்ளவாறு உணர்த்தவும் உணரவும் தகுதியில்லாத அபக்குவர் என அறிவுறுத்தியவாறு. குருடு என்றது உயிரின் அறிவாகிய கண்ணை மறைத்துநிற்கும் ஆணவப் படலமாகிய குருட்டுத் தன்மையினை. இருள்தரு துன்பப் படலம் மறைப்ப மெய்ஞ்ஞான மென்னும் பொருள் தரு கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்த குருடர் என்பது அப்பர் தேவாரம். குழி-பிறரது உதவியின்றித் தாம் ஏறமாட்டாத படுகுழி. கொடு நரகக்குழி நின்று அருள்தரு கைகொடுத்து ஏற்றும் என்றதும் இங்கு நினைக்கத்தகுவது. பக்குவன் உணர்த்தவும் உணரவும் ஏற்ற செல்வியுடைய குருவும் மாணாக்கனும் இவர் என அறிந்து தம்மைப் பிணித்துள்ள மலங்களைப் படிமுறையே நீக்கும் பயிற்சியில் வேட்கை பெற்ற நல்லுயிர் பக்குவன் எனப்பெறும். 154. சத்தும் அசத்தும் எவ்வாறெனத் தானுன்னிச் சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச் சத்தியில் இச்சைத் தகுவோன் சற்சீடனே. (1697) பக்குவனாகிய நன்மாணாக்கனது இயல்புணர்த்துகின்றது. (இ-ள்) என்றும் மாறாதுள்ள மெய்ப்பொருளும் ஒரு நிலையில் நில்லாது மாற்றமடையும் பொய்ப் பொருள்களும் எத்தன்மையன எனச் சிந்தித்துணர்ந்து, சித்தத்தை யுருகச் செய்து, சிவபெருமானது திருவருள் உய்யும் நெறியிதுவெனக் காட்டித் துணைசெய்ய, அம் முதல்வன் கைம்மாறு கருதாது செய்துவரும் உபகாரத்தை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் பேரன்பினாலே அதன் பயனாகிய சிவஞானம் கைவரப் பெறுதல் வேண்டி அம் முதல்வனைப் பணிந்து பேரானந்தத்தை வழங்கும் அம் முதல்வனது திருவருளிற் படிதற்குப் பெருவிருப்புடையோன் பரிபாகமுடைய நல்ல மாணாக்கனாவன் எ-று. சத்து-சுட்டுணர்வால் அறியப்படாது சிவஞான மொன் றினாலே அறிதற்குரியதாய் என்றும் மாறாதுள்ளதாகிய சிவம். அசத்து-சுட்டி யறியப்படுவதாய் அழியுந் தன்மையதாகிய பிரபஞ்சம். சித்து-சித்தம்; சித்தம் அம்முக்கெட்டுச் சித்து என உகரவீறாய்த் திரிந்தது. சத்து அசத்து என்பவற்றின் இயல்பினை, உணருரு வசத்தெனின் உணரா தின்மையின் இருதிற னல்லது சிவசத்தா மென இரண்டு வகையின் இசைக்கு மன்னுலகே என விளக்குவர் மெய்கண்டார். பத்தியே ஞானத்திற்குச் சாதனம் என்பார் பத்தியின் ஞானம் பெறப்பணிந்து என்றார். உயிர்கட்கு ஞானத்தை நல்குவது தடையிலா ஞானமாகிய சிவசத்தியே யாதலின் ஞானம் பெற விழைவோன் சத்தியாகிய திருவருளைப் பெறுதற்குப் பெரு வேட்கையுடையனாதல் வேண்டும் என்பார் சத்தியில் இச்சைத் தகுவோன் சற்சீடனே என்றார். இச்சை-விருப்பம். வைத்தபொருள் நமக்காமென்று சொல்லி மனத்தடைத்துச் சித்தமொருக்கிச் சிவாய நமவென் றிருக்கினல்லால் மொய்த்த கதிர்மதி போல்வாரவர் பாதிரிப்புலியூர் அத்தன் அருள்பெறலாமோ அறிவிலாப் பேதைநெஞ்சே (4-94-5) எனவரும் திருவிருத்தம் இங்கு மனங்கொளத் தகுவதாகும். ஏழாந் தந்திரம் ஆறாதாரம் முதல் இதோபதேசம் ஈறாக முப்பத்தெட்டு உட்பிரிவுகளையுடையது. இதனுட் கூறப்படும் பொருள்களுள் ஆறாதார நிலைகள், சிவலிங்க பேதங்கள், அருளொளி, குரு லிங்க சங்கம வழிபாடு, ஆதித்தர்வகை, ஐம்பொறிகளை யடக்கும் முறை, சற்குரு, இதோபதேசம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை மேற் குறித்த தச காரியங்களுள் சிவரூபம், சிவதரிசனம் என்னும் இரண்டையும் விளக்குவன. போசனவிதி, பிட்சாவிதி, பூரணக் குகைநெறிச் சமாதி, சாமாதிக்கிரியை, விந்துச் சயம் என்பன ஞானம் பெறுதற்குத் துணையாகவுள்ள நல்லொழுக்க நெறிகளை அறிவுறுத்துவன. மூலாதாரம் முதலிய ஆறாதா ரங்களில் வைத்து அண்டலிங்கம் முதலிய அறுவகை இலிங்கங்களையும் கண்டு வழிபடுதலும், அருளொளிக்குள் ஒடுங்கியிருந்து குரு லிங்க சங்கமம் என்னும் மூன்றிடங்களிலும் சிவபெருமானை வெளிப்படக் கண்டு வழிபடுதலும் ஆகிய இவை முறையே அகத்திலும் புறத்திலும் செய்தற்குரிய வழிபாடுகளாகும். ஐந்திந்திரியம் அடக்கும் முறை, கூடா வொழுக்கம் நீத்தல், கேடுகண் டிரங்கல் என்ற பகுதியிலுள்ள மந்திரங்கள் இறைவனை வழிபாடு செய்வோர்பால் குற்றங்கள் இல்லையாதற்கு இன்றியமையாத நற்பண்புகளை விளக்குவன. இறுதியிலுள்ள இதோபதேசம் என்பது உலகமக்களனைவரும் அன்புடன் கடைப்பிடித்தொழுகி உய்திபெறுதற்குரிய நல்லுரை களைத் தன்னகத்தே கொண்டு திகழ்கின்றது. ஆறாதாரம் மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களின் இயல்புகள் அவற்றிலமைந்துள்ள ஆக்கரங்கள் தெய்வங்கள் ஆதார யோகத்தால் விளையும் பயன்கள் ஆகியவற்றை உணர்த்தும் பகுதி. 155. நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலங்கண் டாங்கே முடிந்து முதலிரண்டுங் காலங்கண் டானடி காணலு மாமே. (1704) இறைவனை யோகநிலையில் உணர்தற்கு நிலைக்களமாகிய ஆதாரங்கள் ஆறின் இயல்பினைக் கூறுகின்றது. (இ-ள்) நாலிதழ்த் தாமரை வடிவாகிய மூலாதாரமும் ஆறிதழ்த் தாமரை வடிவாகிய சுவாதிட்டானமும், பத்திதழ்த் தாமரை வடிவாகிய மணிபூரகமும், பன்னீரிதழ்த் தாமரை வடிவாகிய அநாகதமும், அவற்றின் மேல்நின்ற பதினாறிதழ்த் தாமரை வடிவாகிய விசுத்தியும் ஆகிய இவற்றின் மூலத்தைத் தரிசித்து அங்கங்கே முடிந்த நிலை யெய்தி இவற்றின் முதலாயுள்ள இரண்டிதழ்த் தாமரை வடிவாகிய ஆஞ்ஞையில் காலத்தை வென்றவனாகிய சிவ பெருமானுடைய திருவடிகளைக் கண்டு வழிபடும் பேறும் உளதாம் எ-று. நாலு - நாலிதழ்க் கமல வடிவாகிய முலாதாரம். அதன் நிறம் செம்மை. இதன் பொகுட்டில் நாற்கோண வடிவினதும் எட்டுச் சூலங்களாற் சூழப்பெற்றதும் மஞ்சள் நிறம் வாய்ந்தது மாகிய பூமண்டலம் உளது. அதில் குழந்தையுருவில் பிரமன் இருக்கிறார். அத் தாமரையின் நடுவில் மின்னல் வடிவான முக்கோண சக்கரம் உளது. அவற்றின்மேல் கருநிறமான சுயம்புலிங்கம் உளது. அதன் மேல் மூன்றரை வளையவடிவான குண்டலினி சத்தியுளது. அவ்விலிங்கத்தின் மீது தண்ட வடிவமான சித்கலை சத்தி உளது. இருமூன்று - ஆறிதழ்த் தாமரை வடிவினதாகிய சுவா திட்டானம். சிந்துரநிறம். இதன் பொகுட்டில் பிறைமதி வடிவாய் எட்டிதழ்களையுடைய நீர்மண்டலம் உளது. இதன்மேல் விஷ்ணுவும் ராகினி சத்தியும் உள்ளனர். ஈரைந்து - பத்திதழ்த் தாமரை வடிவினதாகிய மணி பூரகம். இது உந்திமூலம். இதன் பொகுட்டில் முக்கோணம். இதன் வெளியில் மூன்று சுவத்திகைகளோடு கூடிய அக்கினி மண்டல முளது. அதில் செம்மேனியினராகிய உருத்திரன் லாகினியென்னும் சத்தியுடன் விளங்குகிறார். ஈராறு - பன்னீரிதழ்த் தாமரை வடிவினதாய அநாகதம். அதன் கர்ணிகையில் புகை நிறத்தினதாய அறுகோண வடிவின தாகிய வாயுமண்டலம் உளது. அதில் கோடி மின்னொளியுடைய முக்கோணம் உளது. அதன் நடுவில் அன்ன நிறமான ஈசன் உள்ளார். அவருடன் காகினி சத்தி எழுந்தருளியுள்ளார். அவர்கள் நடுவில் பொன் மயமான பாணலிங்கமும் தீப மொட்டுப்போன்ற ஹம்சவுருவில் ஜீவனு உள்ளன. பதுமத்தின் கர்ணிகையின் கீழ்ச் செந்நிறமான எட்டிதழ்த் தாமரையுளது. அதன் நடுவே கற்பக விருட்சம் முதலியவற்றால் அணிசெய்யப் பெற்ற அகப் பூசைக்குரிய தாணு விளங்குகிறார். இது இதயத் தானம். குறிகள் பதினாறு - கழுத்தின் அடிக்கண் பதினாறிதழ்த் தாமரை வடிவில் விசுத்தி. செந்நிறமான கேசரங்களை யுடையது. இதன் கர்ணிகையில் வட்ட வடிவினதாகி ஆகாய மண்டலம் உளது. அதன் நடுவில் முக்கோணமும் அதில் சந்திரமண்டலமும் உள்ளன. அதன் நடுவில் சிவபெருமான் மாதொருபாகராக வீற்றிருக்கின்றார். சிவபாகம் பொன்னிறம். அம்மைபாகம் வெண்ணிறம். சந்திர மண்டலத்தில் ஸாகினி என்னும் சத்தி யுள்ளார். முதலிரண்டு - ஈரிதழ்த் தாமரையாகிய ஆஞ்ஞா சக்கரம். கர்ணிகையின் நடுவில் ஹாகினிசத்தி. அதற்குமேல் திரி கோணத்தில் மின்னல் வடிவான இதர என்னும் இலிங்கம். அதற்குமேல் திரிகோணத்தில் பிரணவவடிவான தீபத்தைப் போன்ற அந்தராத்மா. அதற்குமேல் நுண்ணுருவாகிய மனம். அதன்மேல் ஹம்ஸ வடிவான சிவம். இதன்குரிய இடம் புருவநடு என்பர். இவ்வாறு மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களையும் முறையே தரிசித்து ஈரிதழ்த் தாமரையாகிய ஆஞ்ஞையில் நிலைபெற்று மூலதாரமுதல் ஆஞ்ஞைவரை சோதி வடிவாக இறைவனைக் கண்டு வழிபடின் திருவடி ஞானம் பிறக்கும் என்பதாம். அண்டலிங்கம் அண்டம் முழுவதும் சிவலிங்கமாகக் காணும் காட்சி. 156. தாபரத் துண்ணின் றருளவல் லான்சிவன் மாபரத் துண்மை வழிபடு வாரில்லை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்கும் பூவகத் துள்நின்ற பொற்கொடி யாமே. (1717) இறைவனை அண்டலிங்கமாகக் கண்டு வழிபடுவார் எய்தும் பயன் கூறுகின்றது. (இ-ள்) நிலையாகப் பிரதிட்டிக்கப்பெற்ற சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளியிருந்து சரியை கிரியை யாளராகிய அடியார்களுக்கு அருள் வழங்க வல்லவன் சிவபெருமான். ஆனால் அம் முதல்வன் உலகங்கள் எல்லாவற்றிற்கும் மேலாய் விரிந்து விளக்கும் உண்மையையுணர்ந்து அம் முதல்வனை வழிபட வல்லார் இவ்வுலகத்து அரியர். அங்ஙனம் அண்டமுழுது மாய் விளங்கும் அவனது பெருமையை யுணர்ந்து வழிபட வல்ல அருளாளர்க்கும் அவ்விறைவன் அவர்தம் நெஞ்சத் தாமரையுள் பொற்கொடி போல ஒளியுடன் விளங்கி அருள்புரிவன் எ-று. தாபரம்-இறைவன் எழுந்தருளும் நிலையாகத் தாபிக் கப்படும் சிவலிங்கம். சரியை கிரியை நெறிகளில் ஒழுகுவார்க்கு இறைவன் சிவலிங்கத் திருமேனியில் நின்று எளி வந்து அருள்புரியும் இயல்பினன் என்பார், தாபரத்துள் நின்று அருளவல்லான் சிவன் என்றார். மா பரத்து உண்மை-மேலானவற்றிற் கொல்லாம் மிக மேலான ஞான வெளியில் எழுந்தருளிய இறைவனது வியாபகத்தன்மை, பூ-நெஞ்சத் தாமரை. பொற்கொடி-இறைவன் அருட் சத்தியுடன் தோற்றும் ஒளியுருவம்; சுடர்விட்டுளன் எங்கள்சோதி என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல். அண்டமா யாதியா யருமறையோ டைம்பூதப் பிண்டமா யுலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத் தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே என்பது திருநாவுக்கரசர் தேவரம். அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரிய நீ என்பது திருவிசைப்பா. 157. போது புனைகழல் பூமிய தாவது மாது புனைமுடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல்விசும்பாய் நிற்கும் ஆதி யுறநின்ற தப்பரி சாமே. (1724) அண்டமே இலிங்க வடிவாதலை உணர்த்துகின்றது. (இ-ள்) அடியார்கள் அருச்சித்த நறுமலர்களைப் புனைந்த இறைவன் திருவடி கீழுள்ள நிலவுலகமாகத் திகழ்வது. கங்கையைப்புனைந்த இறைவனது சடைமுடி வானுலகாக விரிந்துவிளங்குவது. நீதியுள் நிலைபெற்ற இறைவனது திருவுடம்பு புறத்தே விரிந்து பரவியுள்ள ஆகாயமாக விளங்குவது. உலக முதல்வனாகிய இறைவன் அண்ட முழுதுமாய் விரிந்து பொருந்திநின்ற நிலை அத்தன்மையதாம் எ-று. வேதாகமங்களிலே மந்திரம் பதம் வன்னம் புவனம் தத்துவம் கலை என்னும் அத்துவாக்கள் ஆறும் இறைவனுக்கு அவயங்களாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் மந்திரம் இரத்தமாகவும், பதங்கள் முடியாகவும், வன்னம் தோலாகவும், புவனம் உரோமமாகவும், தத்துவங்கள் எழுவகைத் தாதுவாகவும், கலை அவயவமாகவும் கூறப்படும். கழலாவது பூமி, முடியாவது வானகம் என இயைத்துப் பொருள் கொள்க. மாது-கங்கை. அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே என்பது திருவாசகம். பிண்டலிங்கம் மக்கள் உடம்பே சிவலிங்கமும் ஆதலையுணர்த்துவது. 158. மானுட ராக்கை வடிவு சிவலிங்கம் மானுட ராக்கை வடிவு சிதம்பரம் மானுட ராக்கை வடிவு சதாசிவம் மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே. (1726) மக்களுடம்பே சிவலிங்கமும் பிறவுமாதலை அறிவிக்கின்றது. (இ-ள்) மக்கள் யாக்கையில் வடிவ அமைப்பே சிவலிங்கத் திருமேனி. மக்கள் யாக்கையின் வடிவே சிதாகாயமாகிய சிதம்பரம். மக்கள் யாக்கையின் வடிவே சதாசிவ மூர்த்தி. மக்கள் யாக்கையின் வடிவே இறைவனது திருக் கூத்தாகும் எ-று. மக்கள் தலை பாணம், இடைப்பட்ட உடல் சத்திபீடம், கால் முதல் அரைவரை பிரமபீடம் எனக்கொள்ளின் மானுட ராக்கை வடிவு சிவலிங்கமாதல் புலனாம். சிதம்பரம்- சிதாகாயம். மக்கள் உடம்பில் நெஞ்சத் தாமரை சிதம்பரமாதல் தெளிவு. சதாசிவம்-சத்தியும் சிவமுமாய் ஒன்றிய மூர்த்தி. மக்கள் யாக்கை ஆணும் பெண்ணுமாய் ஒன்றிய நிலைபற்றி வடிவு சதாசிவம் என்றார். அண்டத்திற் போன்று பிண்டமாகிய உடம்பிலும் இறைவன் திருக்கூத்து நிகழ்தலின் வடிவுதிருக்கூத்தே என்றார். சதாசிவலிங்கம் இறைவன் அருவுருவத் திருமேனியாகிய சதாசிவ மூர்த்தியாய் நின்று அருளும் முறையினை உணர்த்து கின்றது. 159. அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள அஞ்சினோ டஞ்சு கரதலந் தானுள அஞ்சுட னஞ்சா யுதமுள நம்பியென் நெஞ்சு புகுந்து நிறைந்து நின்றானே. (1736) சதாசிவ மூர்த்தியின் திருமேனியைச் சிவலிங்கவுருவில் உளங்கொண்டு போற்றுமாறுணர்த்துகின்றது. (இ-ள்) இறைவனுக்கு ஈசானம் தற்புருடம் அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் என ஐந்து திருமுகங்கள் உள்ளன. (ஒவ்வொரு முகத்திலும் மும்மூன்று கண்களாக) பதினைந்து கண்கள் உள்ளன. பத்துக்கைகள் உள்ளன. அப்பத்துக் கைகளிலும் பத்து வகைப்படைகள் உள்ளன. (இத்தகைய திருவுருவத்தினை யுடைய) யாவரும் விரும்பத் தக்க சதாசிவமூர்த்தியாகிய பெருமான் என் நெஞ்சத்துட் புகுந்து எங்குமாய் நிறைந்து நிற்கின்றான் எ. று. ஐம்மூன்று-பதினைந்து. அஞ்சினோடு அஞ்சு-பத்து கரதலம்-கை. ஆயுதம் படைக்கலம். ஆத்ம லிங்கம் அருள்நிலைபெற்ற ஆன்மாவே சிவலிங்கமாதலை யுணர்த்துவது. 160. அன்றுநின் றான்கிடந் தானவன் என்று சென்றுநின் றெண்டிசை யேத்துவர் தேவர்கள் என்றுநின் றேத்துவன் எம்பெருமான் றனை ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிரந் தானே. (1762) உயிர்க்குள்ளே உயிர்க்குயிராய பெருமானைக் கண்டு போற்றுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) அன்றொருநாள் (அங்கே) நின்றான் கிடந்தான் என்று (இறைவன் வெளிப்பட்ட நிலையினைக் கண்டார்) சொல்லக் கேட்டு (குறித்த அவ்விடத்தினிற் காணப்பெறாது) எட்டுத்திசைகளிலும் (தேடிச்) சென்று ஏத்தி வழிபடுவர் தேவர்கள். எம்பெருமானாகிய அவன் என்னுடன் ஒன்றுபட்டு என்னுயிர்க்குள் உயிராய்க் கலந்துள்ளான் ஆதலால் எம்பெரு மானாகிய அம்முதல்வனை எக்காலத்தும் யான் நின்ற நிலையிலேயே நின்று என் உயிர்க்குயிராய ஆன்மலிங்கமாக வைத்து ஏத்தி வழிபடுவேனாயினேன் எ-று. அன்று என்றது, இறைவனைக் கண்ட கால விசேடத்தை. நின்றான் கிடந்தான் என்றது இறைவன் அவ்வப்பொழுது அடியார்க்கு வெளிப்பட்டருளிய இடங்களிற் கொண்ட மூர்த்தி பேதங்களை. இனி அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று என்னுந் தொடர்க்கு அன்றொருநாள் நெடியோனாய் நின்றவனும் திருப்பாற் கடலிற் கிடந்தவனுமாகிய அத் திருமாலைப் போன்று பாதாளம் ஏழினுங் கீழ்த்தேடி எனப்பொருள் கொள்ளுதற்கும் இடனுண்டு. இப்பொருளில் என்று என்பதனை உவமவுருபாகக் கொள்ளுதல் வேண்டும். தேடிக் கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொணாத் தேவனை யென்னுள்ளே தேடிக் கண்டு கொண்டேன் (4-8-12) எனவரும் திருப்பாட்டும் ஆன்மலிங்க வழிபாட்டினைக் குறிப்பால் உணர்த்தி நிற்றல் காணலாம். மனமணியிலிங்கமாகப் பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே என்பதும் இங்கு நினைத்தற்குரியதாகும். ஞான லிங்கம் ஆன்மாபெற்றுள்ள சிவஞானத்தையே சிவலிங்கத் திருமேனி யாகக் கொண்டு வழிபடுமாறு கூறுகின்றது. 161. ஆதிபரந் தெய்வம் அண்டத்து நற்றெய்வம் சோதி யடியார் தொடரும் பெருந்தெய்வம் நீதியும் மாதெய்வம் நின்மலன் எம்மிறை பாதியுள் மன்னும் பராசத்தி யாமே. (1767) ஞானலிங்கத்தின் இயல்புணர்த்துகின்றது. (இ-ள்) எல்லாவற்றையும் தோற்றுவித்தற்கு முன்னான மேலாகிய பரம்பொருளும், அண்டப் பொருள்களில் ஒன்றாய்க் கலந்து நலம்புரியும் தெய்வமும், சோதிப்பொருளாய் உயிருடன் ஒட்டிநின்று அன்புடைய அடியார்களால் தொடரப்பட்டுப் பத்திவலையுட் படுத்தப்பெறும் பெருங் கடவுளும், நீதியுள் பிரிவின்றி விளங்கும் பெருமையுடைய தெய்வமும், குற்றமற்ற தூயோனும் ஆகிய எம்பெருமான் தன் ஒருபாகத்துள் விளங்கும் பராசத்தியாகிய சிவஞானத்தினையே தனது திருவுருவாகக் கொண்டு விளங்குவான் எ-று. ஆதி-முதல். பரந்தெய்வம் என்பதனால் இறைவனது வேறாம் நிலையும், அண்டத்து நற்றெய்வம் என்பதனால் ஒன்றாம் நிலையும், சோதி என்றதனால் உயிர்க்குயிராய் உடனாம் நிலையும் சுட்டப்பட்டமை யுணரலாம். சோதியே சுடரே சூழொளி விளக்கே என்பது திருவாசகம். சிவலிங்கம் எல்லாமாய் விளங்கும் பரமசிவத்தை ஒரு குறியின் இடமாக எழுந்தருளச் செய்து வணங்கும் முறையை உணர்த்துகின்றது. 162. மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம் நலந்தருஞ் சத்தி சிவன் வடிவாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே. (1776) சிவலிங்கத் திருமேனியே நவந்தரு பேதமாகி அவரவர் பக்குவ நிலைக்கேற்ப நற்பயன் தந்தருளும் என்பது உணர்த்துகின்றது. (இ-ள்) தாமரை மலரிடத்தே தோன்றிய பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், ஞான வன்மையினை அருளும் ஐந்து திருமுகங்களையுடைய சதாசிவன், மேலான விந்து, நாதம், நலத்தினையருளும் சத்தி, சிவன் எனத் திருமேனியாகி உயிர்கட்கு முத்திப்பயனை நல்கும் இலிங்கத் திருமேனி பராசத்தியுடன் பிரிவின்றியுள்ள சிவபெருமானது திருவுருவமாகும் எ-று. மலர்ந்த-மலரிடத்தே தோன்றிய. அயன்-பிரமன். மால்-விஷ்ணு, பலம்தரும்-ஞானமாகிய வன்மையினை நல்கும். ஐம்முகன்-ஐந்து திருமுகங்களையுடைய சதாசிவ மூர்த்தி. பர விந்து-மேலான விந்து. இங்கு ஏகனாகிய இறைவனுக்குச் சொல்லப்பட்ட ஒன்பது வடிவங்களையும் சிவஞ் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் உவந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றினொன்றாய்ப் பவந்தரும் அருவம்நால் இங்குருவம்நால் உபயம் ஒன்றாம் நவந்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர் (சித்தியார்-சுபக்-164) என விளக்குவர் அருணந்தி சிவாசாரியார். 1. சிவம்-புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரை யாய் நிற்கும்நிலை. 2. சத்தி-உயிர்களை நோக்கி நிற்கும் அருள் நிலை. 3. நாதம்-சிவ சத்தி உயிர்களின் பொருட்டு வியாபரிக்குங் கால் ஞானசத்தி வடிவாய் நிற்கும் நிலை. பரநாதம் எனப்படுவதும் இதுவே. 4. விந்து-மேற்குறித்த ஞானசத்தியால் தோற்று விக்கப் பெறும் கிரியாசத்தி. இது பரவிந்து எனவும்படும். (இக்கிரியா சத்தி சுத்தமாயையைக் கூடிய விடத்து நாதம் தோன்றும், நாதத்தினின்று விந்து தோன்றும். இவை முறையே அபரநாதம், அபரவிந்து எனப்படும்) அறிவுநிலை, அருள்நிலை, ஞானசத்தி, கிரியாசத்தி இவை நான்கும் இறைவனுக்கு அருவத் திருமேனிகள். 5. சதாசிவன் - தூலலய நிலையில் நின்று பொது வகை யாற் சங்கற்பித்த இறைவன் போக நிலையில் நின்று தனது ஞான சத்தியாற் சிறப்புவகையால் நோக்கிக் கிரியாசத்தியாற் சிறப்பு வகையால் சங்கற்பித்து நிற்கும் நிலை. ஞானமும் கிரியையும் சிறப்புவகையிற் கலந்து நிற்கும் போக நிலையாகிய இஃது இறைவனுக்கு அருவுருவத் திருமேனியாகும். மகேசன் - சுத்த மாயையில் சூக்குமமாய்க் காரியந் தோன்றுதற்கு அதிகார நிலையில் நின்று கிரியா சத்தியை மிக்குச் செலுத்தி நிற்கும் நிலை. கிரியை மிக்குநின்ற அதிகாரநிலை இதுவாகும். உருத்திரன் - உலகினை ஒடுக்குந் தொழிலின் நின்ற திருமேனி. மால் - உலகினை நிலைபெறுத்தும் நிலையினதாகிய திருமேனி. அயன் - உலகினைத் தோற்றுவிக்கும் நிலையில் கொண்ட திருமேனி. மகேசன் முதலிய நான்கும் உருவத் திருமேனிகளாகும். பரமசிவத்துடன் பிரிவின்றியிருக்கும் பராசத்தியாகிய அருள் காரணமாகவே இங்குச் சொல்லப்பட்ட ஒன்பது வகைத் திருமேனிகளும் அமைந்தன என்பது அறிவுறுத்துவார், பலந்தரு லிங்கம் பராநந்தியாமே என்றார். மலை மகள் பாகமாக அருள் காரணத்தின் வருவார் எனவரும் தேவாரமும் இங்கு நினைக் கத்தகுவதாகும். சம்பிரதாயம் சிவ வழிபாடு செய்வோர் குருவின்பால் உபதேசம் பெற்று ஆகம விதிகளோடு முரணாதவாறு மன மொழி மெய்களால் தூய்மையுடையராய் ஒழுகும் மரபுவழி வந்த வழிபாட்டு முறைகளை யுணர்த்துவது. 163. உடல் பொருள்ஆவி உதகத்தாற் கொண்டு படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக் கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே. (1778) குரு சாம்பவ தீக்கை செய்து உபதேசித்தருளும் திறத்தை உணர்த்துகின்றது. (இ-ள்) நந்தியாகிய சிவபெருமான், பக்குவமுடைய மாணவனது படர்ந்த வினைத்தொடர்பு அற்று நீங்கும்படி அவனை அருட் கண்ணால் நோக்கி அவன் தலைமேல் தனது கையை வைத்து, விரைவில் தனது திருவடியை அவன் முடிமேற் சூட்டி, நுண்ணுணர்வாகிய சிவஞானோபதேசஞ் செய்தருளி, அவனுடைய உடல் பொருள் உயிர் அனைத்தையும் அவன் வார்த்த நீருடன் தன்னுடைமையாக ஏற்றுக் கொண்டு, விரைந்து வரும் வெள்ளம் போல் தொடர்ந்து வரும் பிறவியற்றொழியும் நன்னெறியினைக்காட்டியருளினன் எ-று. நந்தி, பார்த்துக் கைவைத்து அடிவைத்து நுண்ணுணர் வாக்கி, உடல் பொருளாவி உதகத்தாற்கொண்டு பிறப்பு அறக் காட்டினன் என முடிக்க. நந்தி-சிவ பெருமான். பார்த்தல்-சக்ஷு தீக்ஷ. அருள்நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய் கண்ணால் நோக்கிக் கண்ணப்பர் பணிகொள்ளும் கபாலியாரே எனவரும் திருமுறைத் தொடர்கள் திருக்கண் நோக்கமாகிய இத்தீக்கையினைக் குறித்தமை காணலாம். கைவைத்தலும் முடிமேல் அடிவைத்தலும் பரிச தீக்கையாகும். நுண்ணுணர் வாக்கி எனவே அவ்வுணர்வினைத் தோற்றுவித்தற்குக் காரணமாகிய மாசை தீக்கையின் வழிப்பட்ட வாசகதீக்கையும் செய்தருளினமை புலனாம். யான் எனதென்னும் செருக்கறுதற் பொருட்டு மாணவன் தன்னுடைய உடல் பொருள் ஆவியனைத்தையும் ஆசிரியனுக்கு நீர்வார்த்துக் கொடுக்க ஆசிரியன் அவை யனைத்தையும் தன்னுடைமையாக ஏற்றருளும் சம்பிர தாயத்தினை, அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும் குன்றே யனையாய் என்னை யாட் கொண்டபோதே கொண்டிலையோ எனவரும் திருவாசகத்தால் நன்குணரலாம். திருவருள் வைப்பு குருவின் அறிவுரையின் வழிநின்று முன்னையோரது ஒழுக்கநெறியினைப் பின்பற்றி யொழுகுவார்க்கு இறைவன் திருவருளே ஆதாரமும், ஆதேயமுமாக வைக்கப்பெற்ற திறத்தை யுணர்த்துவது. 164. அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட் டருளில் அழிந்திளைப் பாறி முறைந்திட் டருளான ஆனந்தத் தாரமு தூட்டி அருளாலென் னந்தி யகம் புகுந்தானே. (1800) இறைவன் உயிர்கள் பொருட்டு நிகழ்த்தும் ஐந்தொழில் களும் அம் முதல்வன் உயிர்கள்பால் கொண்ட திருவருளை நிலைக் களமாகக் கொண்டே நிகழ்வன வென்பது உணர்த்துகின்றது. (இ-ள்) உயிராகிய யான் அருளின் உதவியாற் பிறந்து அதன் துணையால் வளர்ந்து கன்மத்தால் பிறந்தும் இறந்தும் அலைப்புண்ட அயர்வு நீங்க அருளால் ஒடுங்கி இளைப்பாறி, வினைப்பயனை நுகர்ந்து தொலைத்தற் பொருட்டு அவ்வருளால் மறைக்கப்பட்டு நின்றநிலையில் என் குருநாதனாகிய சிவபெருமான் தனது திருவருளாகிய இன்பமயமான நிறைந்த அமுதத்தை உண்பித்துத் தனது திருவருளால் என்னுள்ளமே கோயிலாகக் கொண்டு புகுந்து எழுந்தருளினான் எ-று. பிறந்திட்டு, வளர்ந்திட்டு, இளைப்பாறி, மறைந்திட்டு என்பன ஆன்மாவின் தொழில்கள். செய்தென்னெச்சமாகிய இவற்றைச் செயவெ னெச்சங்களாகத் திரித்து ஊட்டி என்னும் பிறகருத்தாவின் வினைகொண்டுமுடிக்க. ஊட்டுதல் - நந்தியின் தொழில். பிறத்தல், வளர்தல், இளைப்பாறுதலாகிய தொழில்கள் உயிர்களின் வயத்தன வாதலின்றி இறைவனது அருளின்வயத் தனவாய் நிகழ்வன என்பார் அருளிற்பிறந்திட்டு...........kiwªâ£L’ என இத்தொழில்களின் நிகழ்ச்சிக்கு இறைவனது திருவருள் ஏதுவாதலை விளக்கிக் கூறியருளினார். இத் திருமந்திரத்தில் இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் முறையே குறிக்கப் பெற்றிருத்தலும் இவற்றின் இறுதியிற் கூறப்பட்ட அருளேயன்றி முற்கூறப்பட்ட ஏனை நான்கும் அருளின் நிமித்தமாகவே நிகழ்வன என்பது தெளிவாக விளக்கப் பெற்றுள்ளமையும் காணலாம். இதன் பொருளை, ஏற்றவிவை அரனருளின் திருவிளையாட் டாக இயும்புவர்கள், அணுக்கள் இடர்க்கடல் நின்றும்எடுத்தே ஊற்றமிக அருள்புரிதல் ஏதுவாக உரைசெய்வர் ஒடுக்கம் இளைப்பொழித்தல், மற்றைத் தோற்றம் மலபாகம்வரக், காத்தல் போகந் துய்ப்பித்தல், திரோதாயி நிறுத்தலாகும், போற்றலரும் அருள் அருளே யன்றிமற்றுப் புகன்றவையும் அருளொழியப் புகலொணாதே (சிவப்பிரகாசம் 6) என உமாபதி சிவம் விரித்து விளக்கியுள்ளார். கன்மத்தினால் அலைப்புண்ணும் உயிர்களை இளைப்பாற்றுதலே அழித்தல். நீங்காதுள்ளமலம் நீங்குதற் பொருட்டு மீளவும் தனுகரணபுவன போகங்களோடு கூட்டுதலே படைத்தல். கன்மங்களை நுகர்ந்து மலம் நீங்குதற்குரிய பக்குவம் உண்டாக்குதலே காத்தல். அந்தப் போகங்களைப் புசிப்பித்துக் கன்மங்களைத் தொலைப்பித் தற்காகக் குறிப்பிட்ட கால அளவுகளிலே அவற்றில் நிறுத்துதலே மறைப்பு. உயிர்களைத் திருவடியிலே கூட்டிக்கொள்ளுதலே அருள். போற்றி யெல்லா வுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம், போற்றி யெல்லா வுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள், போற்றி யெல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள், போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம், போற்றி யாமுய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் எனத் திருவாசகத்தில் இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் குறிக்கப்பெற்றுள்ள தென்பதனை மதுரைச் சிவப்பிரகாசர் மேற்காட்டிய சிவப்பிரகாச வுரையில் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். அருளால் என்நந்தி யகம்புகுந்தானே என்பதனை என்மனமே யொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே என்ற தொடரில் அப்பரடிகள் குறித்துள்ளமை அறியத்தகுவதாகும். 165. பிறவா நெறிதந்த பேரரு ளாளன் மறவா அருள்தந்த மாதவன் நந்தி அறவாழி யந்தணன் ஆதி பராபரன் உறவாகி வந்தென் உளம் புகுந்தானே (1803) அறவாழி யத்தணனாகிய இறைவன் உயிர்க்கு அருள்புரியும் திறங்கூறுகின்றது. (இ-ள்) அறக்கடலாகிய அருளாளனும் ஆதியாகிய பராசத்தியுடன் பிரிவின்றியுள்ள அம்மையப்பனுமாகிய சிவபெருமான் எமக்கு மீட்டும் பிறவா நெறியினைத்தந்த பேரருளாளனும் தன்னை என்றும் மறவாமைக்கு ஏது வாகிய அருள்ஞானத்தை வழங்கிய பெருந்தவமுடைய குருவும் என இவ்வாறு பல்லாற்றானும் எனக்கு உறவினனாகி வந்து உயிர்க்குயிராய் என்னுள்ளத்தே குடிகொண்டருளினான் எ-று. பிறவாநெறி-பிறவாமைக்கு ஏதுவாகிய நன்னெறி, மறவா அருள்-மறவாமல் இடைவிடாது நினைத்தற்கு இன்றியமையாத அன்பினைத்தரும் அருள்ஞானம். பிறவா நெறிதந்த அறவாழி யந்தணன், ஆதிபராபரன் என்ற தொடர்கள் அறவாழியந் தணன்தாள் சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழி நீந்தலரிது என்னுந் திருக்குறளையும், ஆதி பகவன் முதற்றேயுலகு என்னுந் திருக்குறள் தொடரையும் நினைப்பித்தல் காண்க. இங்ஙனம் உறவாகிவருதற்கு அவனை மறவா அருளாகிய திருவடிஞானமே காரணமென் பதனை, உறவுகோல் நட் டுணர்வு கயிற்றினால் முறுகவாங்கிக் கடையமுன்னிற்குமே அப்பன் நீ அம்மை நீ ஈன்றாளுமாய் எனவரும் அப்பரருள்மொழிகள் நன்கு புலப்படுத்துவனவாம். அருளொளி சிவபரம்பொருள் தன்னிற் பிரிவில்லாத பராசத்தியின் சொரூபமாகிய அருளொளியாய்த் தோன்றி ஞாயிறு திங்கள் முதலிய புறப்பொருள்களிலும் உயிர்களின் அகத்திலும் சுடர்விட்டு விளங்கிப் புறவிருளையும் அகவிருளையும் நீக்கி உயிர்களின் அறிவினை விளக்கி நிற்கும் நிலை. 166. விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே. (1818) அருளொளியால் உயிர்கள் எய்தும் பயன் உணர்த்து கின்றது. (இ-ள்) திருவருள் ஞானமாகிய விளக்கினை யேற்றி எல்லையற்ற தூவெளியாகிய பரம்பொருளை யுணர்ந்து போற்றுவீராக. தூண்டா விளக்காகிய சுடரொளியின் முன்னே உயிரை அநாதியே பற்றியுள்ள மல மாயா கன் மங்களாகிய துன்பங்கள் நில்லாது நீங்கும். உயிரின் அறிவினை விளக்கும் ஒளிவளர் விளக்காகிய அருளொளியினைத் தன்கண் பெற்றுடை யவர்கள் அவ்வொளியினாற் சூழப் பெற்று விளங்கும் தூய ஞானச் சுடர் விளக்காக ஒன்றித் திகழ்வார்கள் எ-று. முதலடியில் விளக்கு என்றது சிவஞானத்தினை. ஏற்றுதல்-கொளுத்துதல்; உயிரறிவிற் பற்றும்படி அதனோடு இயைந்து ஆன்மபோதம் அடங்கநிற்றல். இம் முறையில் இறைவனைக் கண்டு வழிபடுந்திறத்தினை, ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்து வார்க்கிட ரான கெடுப்பன அஞ் செழுத்துமே. (3-22-4) எனத் திருஞானசம்பந்தரும், உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்துநோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே. (4-75-4) எனத் திருநாவுக்கரசரும் அருளிய பொருளுரைகளால் இனி துணரலாம். இனி இரண்டாமடியில் விளக்கு என்றது இறைவனது அருளொளியினை. மெய்கிளரும் ஞானவிளக்குக் கண்டாய் (6-23-2) தூண்டா விளக்கின் சுடரனையாய் எனவும் ஒளிவளர் விளக்கே எனவும் அருளாளர் இறைவனை விளக்காக அழைத்தமை காணலாம். வேதனை-மலங்களால் விளையும் துன்பம். மாறும்-நீங்கும். மூன்றாமடியில் முதற்கண் விளக்கு என்றது உயிரறிவினை. அவ்விளக்கை விளக்கும் விளக்காவது இறைவனருளாகிய சுடரொளி. அதனையுடையவர்கள் என்றது, அவ்வொளி உள்ளும் புறம்புந் தோன்றப்பெறும் அருளாளர்களை. அன்னோர் சோதியும் சுடரும் சூழொளி விளக்கும் ஆகிய அவ்வொளியினால் உள்ளும் புறமும் ஒரு தன்மைக் காட்சியராய் விளங்கும் நன்ஞானம் பெற்று ஆணவ விருள் நீங்க ஈறில் பெருஞ்சோதியினிற் பிரிவறக் கலந்து ஒளிரும் சுடர் விளக்காகத் திகழ்வர் என்பார், விளக்கை விளக்கும் விளக்குடையார்கள், விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே என்றருளிச்செய்தார். இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச் சிவாயவே (4-11-8) என்பது அப்பர் அருண்மொழி. சிவபூசை பூ, புகை, விளக்கு, திருமஞ்சனம், திருவமுது முதலியன கொண்டு, பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்னும் ஐந்துசுத்திசெய்து ஆசனமிட்டு மூர்த்தியை எழுந்தருளச் செய்து மூர்த்தி மானாகிய பரஞ்சோதியைப் பாவனை செய்து அதன்கண் ஆவாகித்து மெய்யன்புடன் அருச்சனை செய்து விருப்புடன் சில வேள்வியினைச் செய்து முடித்தல். இதன் இயல்பினை, வாசத்திருமஞ்சனம் பள்ளித்தாமம் சாந்தம் மணித்தூபம் தேசிற்பெருகுஞ் செழுந்தீபம் முதலாயினவும் திருஅமுதும் ஈசர்க்கேற்ற பரிசினால் அருச்சித்தருள எந்நாளும் பூசைக்கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார்சிலம்பின் ஒலிஅளித்தார். (24) எனச் சேக்கிழார் சுவாமிகள் கழறிற்றிவார் நாயனார் புராணத்து விளக்கியுள்ளார். இப்பூசை புறப்பூசை (கிரியை) அகப்பூசை (ஞானம்) என இருவகைப்படும். பூசைத்திரவியங்களை வெளியிற் சேர்த்துக்கொண்டு இறைவனை வழிபடுதல் புறப்பூசை. இவற்றை மனத்தாலே படைத்துக்கொண்டு வழிபடுதல் அகப்பூசை யாகும். 167. உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே. (1823) அகப்பூசைக்குரிய அங்கங்கள் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) பேரருள் வள்ளலாகிய இறைவர்க்கு மக்களது ஊனுடம்பே கோயில் வளாகமாகிய ஆலயமாகும். உள்ளமே அம்முதல்வன் வீற்றிருந்தருளும் கருப்ப இல்லாகிய பெருங் கோயிலாகும். அவ்வாலயத்தின் கோபுர வாசலாகத் திகழ்வது வாயாகும். இறைவனை வழிபட்டுப் போற்றும் முறையினைத் தெளிவாக வுணர்ந்த சிவஞானியர்க்கு அவர்தம் ஆன்மாவே இறைவனை ஆவாகித்துப் பூசித்தற்கேற்ற சிவலிங்கத் திருமேனி யாகும். வஞ்சனையை விளைக்கும் ஐம்புலன்களும் அடங்கிய நிலையே அவ் வழி பாட்டுக்குரிய உள் ஒளியினைத்தரும் திணிந்த இரத்தின தீபமாம் எ-று. உள்ளம் - மனம். ஊனுடம்பு - ஊனாலாகிய உடம்பு. வள்ளற்பிரான்-கைம்மாறு கருதாது எல்லாவுயிர்க்கும் பேரருள் வழங்கும் பெருமானாகிய இறைவன். தெள்ளத் தெளிதல் - ஐயந்திரிபின்றி மெய்ப்பொருளைத் தெளிந்துணர்தல். கள்ளப்புலன் ஐந்து-உயிர்க்குயிராகிய இறைவனை நினைய வொட்டாது உயிரை வஞ்சித்துப் புறத்தே யீர்த்துச் செலுத்தும் ஐம்புலன்கள். காளாமணி விளக்கு-நன்கு முதிர்ச்சி பெற்றுத் திணிந்த மாணிக்க விளக்கு. காழ் ஆம் மணி விளக்கு என்க. காழா மணிவிளக்கு காளா மணிவிளக்கு என ழகரம் ளகரமாய் மருவி வழங்கிற்று. அகப் பூசையாகிய இதன் இயல்பினை, காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறையநீரமைய வாட்டிப் பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே எனவும், உயிராவண மிருந் துற்று நோக்கி யுள்ளக் கிழியி னுருவெழுதி உயிராவணஞ் செய்திட் டுன்கைத்தந்தார் உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி எனவும் வரும் திருமுறைப் பனுவல்களால் உணரலாம். 168. புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு அண்ணல் அதுகண் டருள்புரியா நிற்கும் எண்ணிலி பாவிகள் எம்மிறை யீசனை நண்ணறி யாமல் நழுவுகின் றாரே. (1828) சிவபூசையில் இன்றியமையாமையும் யாவர்க்கும் இயலுந்திறமும் செய்யாதாரது இழிவும் உணர்த்துகின்றது. (இ-ள்) புண்ணியமாகிய சிவபூசையினைச் செய்வார்க்கு இன்றியமையாத சாதனமாகிய பூவும் உண்டு நீரும் உண்டு. இறைவனாகிய சிவபெருமான் அன்பர் செய்யும் அப்பூசையின் அன்பின் திறத்தைக் கண்டு அன்னோர்க்கு இடைவிடாது அருள்புரிகின்றான். அம்முதல் வனது இருப்பினை எண்ணுத லின்றித் தீச்செயல் செய்யும் கொடியோர்கள் எம் இறைவனாகிய ஈசனை இப்பூசனையால் எளிதில் அடைய அறியாமல் அறநெறியினை விட்டு இடையில் வழுவிச் செல்கின்றார்கள். (அந்தோ அவர்தம் அறியாமை இருந்தவாறென்னே) எ-று. இறைவனைப் பூசித்தற்குப் பெருமுயற்சி செய்தலின்றிப் பூவும் நீரும் எளிதிற்கிடைக்கின்றன. பேரருளாளனாகிய இறைவனோ எவ்வகையாலும் தன்னை அன்பினால் நினைப்பாரை எதிர்பார்த்து அருள் வழங்கக் காத்திருக்கின்றான். இவ்வுண்மை யறியாமல் உலகில் தீமையே செய்தொழுகுவோர் பயனின்ற வீணே அழிகின்றனரே என இரங்கியவாறு. இத் திருமந்திரப் பொருளை யுட்கொண்டு கூறும் முறையில் அமைந்தது, கற்றுக் கொள்வன வாயுள நாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் ஏற்றுக்கோ நமனால் முனிவுண்பதே. (5-91-6) எனவரும் திருக்குறுந்தொகையாகும். புண்ணியம் என்றது பதிபுண்ணியமாகிய சிவபூசையினை. இதன் பயனை விரித் துரைப்பது, புண்ணியம் மேல்நொக்குவிக்கும் பாவம் கீழ்நூக்கும் புண்ணியனைப் பூசித்த புண்ணியத்தினாலே நண்ணிய ஞானத்தினால் இரண்டினையும் அறுத்து ஞாலமொடு கீழ்மேலும் நண்ணானாகி எண்ணும் இகலோகத்தே முத்திபெறும் இவன்தான் எங்கெழிலென் ஞாயிறெமக்கென்று குறைவின்றி கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயங் கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன் (சுபக் - 283) எனவரும் சிவஞான சித்தியாராகும். குருபூசை சிவஞானத்தை யுபதேசித்தருளிய சிவகுருவைப் பூசித்தலின் சிறப்பினை யுணர்த்துகின்றது. 169. கானுறு கோடி கடிகமழ் சந்தனம் வானுறு மாமல ரிட்டு வணங்கினும் ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது தேனமர் பூங்கழல் சேர வொண்ணாதே. (1848) குருபூசையின் சிறப்புணர்த்துகின்றது. (இ-ள்) காட்டில் பொருந்திய கோடியோசனை தூரம் மணம் கமழும் சந்தனத்தையும் வானளாவும் மணம் வீசும் நறுமலர்களையும் இட்டு இறைவனைப் பூசித்தாலும் (தன் போல் மானுடச் சட்டை சாத்திவந்த) குருவினை அவர் கொண்ட ஊனுடம்பின் வேறாக நீக்கிச் சிவமே எனத் தெளிந்துணர வல்லார்க்கல்லது ஆனந்தத் தேன் சுரக்கும் செந்தாமரை மலர் போலும் இறைவன் திருவடியை அடைந்து இன்புறுதல் ஏனையோரால் இயலாது எ-று. கான்-காடு கோடி-தூர அளவினைச் சுட்டி நின்றது. கடி-மணம். வான்-விண். வானுறுமாமலர்-விண்ணளவும் மணம்வீசும் பெருமைவாய்ந்த நறுமலர்கள். இடுதல்-திருப் பெயர் கூறி அருச்சித்தல். ஊன்-உடம்பு. ஊனினை நீக்கி யுணர்தலாவது, ஆசிரியனது காணப்பட்ட உடம்புக்குரிய பெயர் முதலியவற்றை யொழித்து அவனைச் சிவமாகவே தெளிந்து வழிபடுதல். தேன் அமர் பூங்கழல்-நினைத்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்பிலிற்றும் இறைவன் திருவடி. செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி, அந்தணனாவதுங் காட்டிவந்தாண் டாய் என்றும் முன்னே யெனை யாண்ட பார்ப்பானே என்றும் திருவாதவூரடிகள் குருவைச் சிவமாகக் கண்டு போற்றிய திறமும், உமாபதிசிவம் தமக்கு ஞானோபதேசஞ் செய்தருளிய மறைஞான சம்பந்தரை நெஞ்சுவிடுதூது, போற்றிப் பஃறொடை முதலிய பனுவல்களால் சிவமாகப் போற்றிய திறமும் இங்கு மனங்கொளத் தக்கனவாகும். மகேசுவர பூசை சிவனடியார்களைச் சிவனெனவே கண்டு வழிபடும் திறம். 170. படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க் கொன்றீயிற் படமாடக் கோயிற் பகவற்க தாமே. (1857) அரன் பூசையினும் அடியார் பூசையே மிக்க பயன் விளைத்தல் உணர்த்துகின்றது. (இ-ள்) படத்தில் உருவமைக்கப்பெற்ற மாடங்களை யுடைய கோயிலுள் திருமேனிகொண்டு எழுந்தருளியிருக்கும் பகவனாகிய இறைவனுக்கு அன்பினால் ஒரு பொருளைக் கொடுத்தால் அப்பொருள் நடத்தலையுடைய மக்களுடம் பாகிய மாடக்கோயிலில் எழுந்தருளிய விரும்பத்தக்க இறைவர்களாகிய அடியார்க்குப் பயன்தருதலில்லை. நடமாடக் கோயில் நம்பர் களாகிய அடியார்களுக்கு ஒரு பொருளைத் தந்தால் அப்பொருள் அடியார்களுக்கேயன்றி அவர்தம் உயிர்க்குயிராய் விளங்கும் படமாடக் கோயிற் பகவனாகிய இறைவனுக்கும் ஒரு சேர உவப்பினை விளைத்துப் பயன்தரும் பொருளாகும் எ - று. படம் - இறைவன் திருவுருவினை எழுதுதற் குரிய துணி. கோயில்கட்டி இறைவனை வைத்து வழிபாடுசெய்வோர் தாம் அமைக்க எண்ணிய கோயிலையும் அங்கு நிலைபெறுதற்குரிய திருமேனியையும் முதற்கண் படத்திலெழுதியமைத்து வழிபடும் மரபுபற்றிப் படமாடக் கோயிற் பகவன் என்றார். ஓரிடத்தே அசைவின்றி யமைக்கப் பெற்ற மாடக்கோயிலின் திருமேனி போலன்றி அன்பர் விரும்பிய இடங்களுக்கெல்லாம் வந்து அருள்சுரக்கும் முறையில் நடமாடும் திருக்கோயிலாகிய உடம்போடு எழுந்தருளும் திருவுருவாகத் திகழ்வார் நேயமலிந்த அடியார்களாதலின் அவர்களை நடமாடக் கோயில் நம்பர் என்றார் பராவு சிவர் என்பர் அருணந்தி சிவாசாரியார். திருக்கோயிலில் இறைவனை நோக்கிச் செய்யும் வழிபாடு அவ்விறைவனுக்கன்றி அவன் அன்பர்க்கு நேர் முறையிற் பயனளிப்பதில்லை. இறைவனடியார்களாகிய அன்பர்க்குச் செய்யும் பூசனை அவர்க்கேயன்றி அவர்தாம் நுகர்ந்தன யாவும் தனக்குரியனவாமாறு அவருயிரிற் குடி கொண்டு விளங்கும் இறைவனுக்கும் உரியதாகின்றமையின் அரன்பூசையினும் அடியார் பூசையே இருமடங்கு பயன்தரும் என்பதாம். அடியார்க்கு அளித்தது அரனுக்கும் ஆம் என்பது, அண்டமோ ரணுவாம் பெருமைகொண் டணுவோர் அண்டமாஞ் சிறுமைகொண் டடியேன் உண்டவூண் உனக்காம் வகையென துள்ளம் உள் கலந்தெழு பரஞ்சோதி என்பது கருவூர்த் தேவர் திருவிசைப்பா. 171. அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென் சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலூண் பலத்துக்கு நிகரில்லை யென்பது நிச்சயந் தானே. (1860) அடியார்க்கு அன்னமளித்தலின் சிறப்புணர்த்துகின்றது. (இ-ள்) அந்தணர் குடியிருப்பூர்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அந்தணர்க்கு ஈவதால் வரும் பயன் யாது? திருக் கோயில்கள் ஆயிரக்கணக்கினவாகக் கட்டிமுடித்த லாலுளதாம் பயன் யாது? யாவரும் புகழ்ந்தேத்தும் சிவ ஞானியாகிய அடியார் ஒருவர் பகற்பொழுது உண்ண உணவளித்தலால் வரும் பயனுக்கு இவ்வறப் பயன்கள் சிறிதும் ஒவ்வா என்பது உறுதி. எ - று. அகரம் - வேதமோதும் அந்தணர்கள் கூடிவாழும் குடியிருப்பு. அந்தணர் - வேதத்தின் அந்தத்தை அணவும் வேதியர். சிகரம் - திருக்கோயில். பகல்ஊண் - ஒரு பகற் பொழுது அளிக்கும் உணவு. நிச்சயம் - உறுதி. பலம் - பயன். மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும், அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் என்பர் சேக்கிழார். அடியார் பெருமை 172. என்தாயோ டென்னப்பன் ஏழேழ் பிறவியும் அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம் ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான் நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே. (1876) தாம் இறைவனுக்கு என்றும் அடிமையே என்னும் தொன்மை யினையுணரும் வழிவழியாளாம் அடியாரது இயல் புணர்த்து கின்றது. (இ - ள்) என்னுடைய தாயும் தந்தையும் எம்மை எழுபிறப்பும் அநாதியே சிவபெருமானுக்கு அடிமை என எழுதிக்கொடுக்க எண்ணிய ஆவண ஓலையை எழுதிய எழுத்தாளன் உலகத்தை ஒருங்கே படைத்த பிரமனாவன். அவ் ஆவணத்துக்குச் சாட்சிக் கையொப்பமிட்டு நின்றவன் நீலமேக வண்ணனாகிய நெடுமால் எ - று. சிவனடியாராவார் தாம் கருவிற் புகுமுன்பே தம் தாய் தந்தையிருவராலும் யாமும் எம்மரபில் இனி வருவோரும் இறைவனாகிய உனக்கு வழிவழி ஆட்செய்தற்குரியர் என்று ஆவணவுரிமை செய்தளிக்கும் நினைவில் நான் முகனாற் படைக்கப்பெற்றுத் திருமாலால் காக்கப் பெற்று வளர்ந்தவர் என்பதனை இத்திருமந்திரத்தால் திருமூல தேவர் தம் கூற்றாக உரைத்தருள்கின்றார். எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமை யாண்ட பெம்மான் எனவரும் தேவாரமும், மாதொரு பாகனார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர்குலத் துட்டோன்றி மேம்படு சடையனார் எனவும், அருமறை நாவல் ஆதிசைவ னாரூரன்ஓலை பெருமுனி வெண்ணெய் நல்லூர்ப் பித்தனுக்கியானு மென்பால் வருமுறை மரபினோரும் வழித்தொண்டு செய்தற்கோலை இருமையால் எழுதிநேர்ந்தேன் இதற்கிவை என்னெழுத்து. எனவும் வரும் பெரியபுராணப் பகுதியும், மழவிடையாற்கு வழிவழியாளாப் மணஞ்செய்குடிப்பிறந்த பழவடியாரொடும் கூடியெம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே எனவரும் திருப்பல்லாண்டும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கன. ஏழேழ் பிறவி - வினைப்பயன் தொடரும் ஏழுவகைப் பிறப்பு. எழுமை எழுபிறப்பும் என்றார் திருவள்ளுவர். அன்றே - அநாதியே. ஆவணம் - ஓலை; சாசனம். நேரெழுத்து - சாட்சிக் கையெழுத்து. 173. சிவயோகி ஞானி செறிந்த அத்தேசம் அவயோகம் இன்றி அறிவோருண் டாகும் நவயோகங் கைகூடும் நல்லியல் காணும் பவயோகம் இன்றிப் பரலோக மாமே. (1882) சிவனடியார் வாழும் தேசம் செழிப்புறும் என்கின்றது. (இ - ள்) சிவயோகியாகிய ஞானச்செல்வர் நிலையாகத் தங்கிய அந்த நாடு வீண்செயல்களிற் சேர்தலின்றி நல்லறிஞர் களைத் தன்கண் பெற்று விளங்கும். புதிய யோகப்பயன்கள் கைவரப்பெறும். சிறப்பென்னும் செம் பொருளின் தொடர்புடைய நல்லியல்புகள் தோன்றும். பிறவிச் சார்புடைய துன்பச்சார்பின்றி மேலான வீட்டுலகச் சார்பாகிய இன்பமே விளைவிக்கும் எ-று. சிவயோகியாகிய சிவஞானி என்றது சிவனடியாரை, செறிதல் - நிலையாகத் தங்குதல். தேசம் - நாடு. அவம் - வீண்செயல். யோகம் - சேர்தல். அறிவோர் - ஞானிகள். நவம் - புதுமை. பவயோகம் - பிறப்புக்குச் சார்பாகிய பேதைமை முதலிய குற்றங்களின்சேர்க்கை. பரலோகம் - மேலானவீட்டுலகம்; என்றது அதனாலாகிய பேரின் - பத்தினை. போசன விதி உணவுண்ணும் முறைமையினை யுணர்த்துவது. தான் உண்ணும் முன் இறைவனுக்கும் அடியார்க்கும் அளித்து இந்நுகர்ச்சி சிவன்தந்தது என்னும் நினைவுடன் உண்ணுதல் முறை. தனக்கென்று உலையேற்றாமல் சமைக்கும் பொழுதே அடியார்க்கு என்று சமைத்த உணவே உண்ணத்தக்க நல்லமிழ தாகும். 174. எட்டுத் திசையும் இறைவ னடியவர்க் கட்ட அடிசில் அமுதென் றெதிர்கொள்வார் ஒட்டி யொருநிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறி யாரே. (1884) இறைவனடியார்க்கெனச் சமைத்த அடிசில் எல்லார்க்கும் அமுதாந்தன்மையது என்கின்றது. (இ - ள்) எட்டுத்திசைகளிலும் உள்ள இறைவனடியார்கள் திருவமுது செய்தற்கெனச் சமைக்கப்பெற்ற உணவினை யாவரும் இனிய அமிழ்தமாகக் கருதித் தாமே எதிர் வந்து ஏற்றுக்கொள்வர். தமக்குரியதாக உரிமைகொண்டு ஒரு நிலத்தைச் சேர்ந்து ஆண்டு பயன் விளைவிப்பவர் அந்நிலம் பயிரேற்றப்பெறாமல் தரிசாய்க் கிடத்தலை ஒரு பொழுதும் விரும்பமாட்டார்கள் எ - று. இறைவனடியார்க்கென்று சமைக்கும் உணவு உயிர்த் தொகுதியாகிய எல்லா வயல்களிலும் ஏற்றிய பயிர்போல யாவர்க்கும் நுகர்ச்சியாகிய போகத்தை விளைக்கும் என்பார், இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுது என்று எதிர் கொள்வர் என்றார். உயிர்த்தொகுதியாகிய விளைநிலம் எல்லாவற்றையும் தனக்கு உரியனவாக அவற்றுடன் பிரிவின்றி ஒட்டியுறையும் இறைவன் உயிர்களில் எந்த உயிரும் உணவாகிய விளைவின்றிப் பாழ் நிலமாகக் கிடத்தலை விரும்பமாட்டான் என்பதனை ஒட்டி யொரு நிலம் ஆளபவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பறியாரே என்றார். இது பிறிதுமொழிதல் என்னும் அணியின்பாற்படும். ஒட்டியொருநிலம் ஆள்பவர் என்றது உணரப்படுவாரோடு ஒட்டி வாழும் இறைவனையும், நிலம் என்றது உயிர்த்தொகுதியையும் குறித்தன. விட்டுக்கிடத்தல் - பயிர் செய்யப் பெறாது பாழ்பட்டுக் கிடத்தல். அந்நிலையை நிலமாளும் இறைவன் விரும்ப மாட்டான். எனவே எவ்வுயிர்க்கும் பசிநீங்க உணவளித்தலே அம்முதல்வன் உவக்கும் நல்லறமாம் என்பது கருத்து. யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி என்பது ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. பிட்சாவிதி 175. பரந் துலகேழும் படைத்த பிரானை இரந்துணி என்பர்கள் எற்றுக் கிரக்கும் நிரந்தர மாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே. (1888) இறைவன் பிச்சைத்தேவ னாதற்குரிய காரணம் கூறுகின்றது. (இ-ள்) விரிந்து பரவிய ஏழுலகங்களையும் உண்டாக்கிய முதல்வனாகிய சிவபெருமானை இரந்து பிச்சை யேற்று உண்பவன் என்று உரைப்பர் (அறியாதார்). எல்லாமுடை யானாகிய அம்முதல்வன் எதற்காக இரத்தற்றொழிலை மேற் கொள்ளவேண்டும்? இடைவிடாது தன்னைத் தியானிக்கும் அடியார்கள் இரந்து பிறர் இட்ட உணவினை உண்டு தன் திருவடியையடையும்வண்ணம் இவ்விரத்தற் கோலத்தை இறைவன் மேற்கொண்டருளினான் எ-று. இறைவனை இடைவிடாது போற்றுந் தொழிலினராய் அடியார்கள் ஆக்கைக்கே இரைதேடி அலையாமல் அன்புடை யாரது மனைக்கண் சென்று அவர்தரும் அமுதினை அளவாக வுண்டு தன் பொன்னடி யடைதற் பொருட்டே பிச்சை யேற்குந் தவ வேடத்தினைத் தான் மேற்கொண்டு வழிகாட்டியதல்லது பசியும், பிணியும், பகையுமில்லாத அம் முதல்வன் வறுமையினாலோ நுகர்ச்சி வேண்டியோ இரத்தற் றொழிலை மேற்கொண்டிலன் என்பதாம். ஏற்ப திகழ்ச்சி என்னும் தாழ்வு அடியார்க்கு உலக மக்களால் எய்தாது பரிகரித்தற் பொருட்டே உலகெலாமுடைய இறைவன் இரத்தலைச் செய்தான் என்பதும் ஒரு நயம். அங்கையோடேந்திப் பலிதிரி கருவூர் என்பது கருவூர்த் தேவர் அருள்மொழி. ஆதித்த நிலை இறைவன், அண்டம் பிண்டம் மனம் ஞானம் சிவம் ஆகிய ஐவகை நிலையினும் ஞாயிறேயாய் ஒளிவழங்கும் நிலை. இன்றெனக்கருளி இருள்கடிந் துள்ளத்தெழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை என்பது திருவாசகம். 176. செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுட ரீசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்குந் தவமே. (1975) இறைவன் ஞாயிறு முதலியவற்றுக்கு ஒளிவழங்கி அண்டத்துள் ஞாயிறாய் விளங்குந் திறன் உணர்த்துகின்றது. (இ - ள்) செம்மைவாய்ந்த கதிர்களையுடைய ஞாயிறு முதலிய தேவர்கள் மேகம் தோய்ந்த மேருமலையை வலம் வருவதற்குரிய காரணம் சுடர்வண்ணனாகிய எம் ஈசனும் எங்கும் நீக்கமறத் தங்கிய முதல்வனும் ஆகிய இறைவன் இணையடிகளின் ஒளி தம்மைச் சார்ந்து தோற்றும் ஒளியாதல் வேண்டி வணங்கும் தவமேயாகும் எ-று. செங்கதிரோன் முதலிய சுடர்கள் மேருவை வலம்வருதலின் காரணம், கயிலாய நாதன் கழல்களாகிய திருவடிகளை வணங்கி அவற்றின் ஒளியைத் தாம்பெற்று ஒளிர்தல் வேண்டும் என்னும் நோக்கமேயாம். எனவே அண்டங்களிலுள்ள ஞாயிறு முதலிய எல்லாச் சுடர்களுக்கும் ஒளி வழங்கும் ஆதித்தன் இறைவனே என்பது புலனாம். சிவ பெருமான் திருவடி ஞாயிறு திங்கள் தீ விண்மீன் முதலிய வற்றுக்கெல்லாம் ஒளிவழங்கி அண்டத்துள் ஞாயிறாய் விளங்குந் திறத்தை, மெய்ச் சுடருக்கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தரகோச மங்கைச் கரசே எனவரும் திரு வாசகத்தாலும், நாயகன் கண்ணயப்பால் நாயகி புதைப்ப எங்கும் பாயிருளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றித் தூயநேத்திரத்தினாலே சுடரொளி கொடுத்த பண்பிற் றேயமா ரொளிகளெல்லாம் சிவனுருத் தேசதென்னார் (72) எனவரும் சிவஞான சித்தியாராலும், விரிகதிர் மதியமொடு சுடர்கண்ணாக...... இயன்றவெல்லாம் பயின்றகத் தடக்கிய வேதமுதல்வன் எனவரும் நற்றிணைக் கடவுள் வாழ்த்துத் தொடராலும் அறியலாம். பசுவிலக்கணம் 177. அன்ன மிரண்டுள ஆற்றங் கரையினில் துன்னி யிரண்டுந் துணைப் பிரியாதன தன்னிலை யன்னம் தனியொன்ற தென்றக்கால் பின்ன மடவன்னம் பேறணுகாதே. (2006) சிவனும் சீவனும் பிரியாது உடனாமாறு கூறுகின்றது. (இ - ள்) ஆற்றின் கரையிலே இரண்டு அன்னப் பறவைகள் ஒருங்கே அமர்ந்துள்ளன. அவையிரண்டும் தம்முள் நெருங்கித் துணைபிரியாதுள்ளன. தன்னியல்பினதாகிய ஆணன்னம் தனித்து வேறு பிரிந்திருப்பது என்றக்கால், அது பிரியவேறுபட்ட பெண்ணன்னம் வாழ்க்கைப் பேறாகிய இன்பத்தினை அணுகப் பெறாது எ - று. வாழ்க்கையாகிய ஆற்றின் கரையெனப்படும் உடம்பின் கண்ணே உயிரும் சிவமும் ஒன்றியுள்ளன. தன்னியல்பினனாகிய சிவன் உயிரின் வேறாகப் பிரிந்துள்ளான் என்றால், அவன் பிரியத் தனிப்பட்டுள்ள ஆன்மா சிவப் பேற்றினை அடைதல் இயலாது என்னும் பொருள்தோன்ற நின்றமையின் இப்பாடல் பிறிது மொழிதல் என்னும் அணியின்பாற்படும். இரண்டும் அன்னமாயினும் அவற்றின் வேற்றுமை தோன்றத் தன்னிலையன்னம் என்றும் மடவன்னம் என்றும் அடைபுணர்த்தோதினார். தன்னிலையன்னம் என்றது, எக்காலத்தும் தன்னியல்பில் மாறாதுள்ள மெய்ப்பொருளாகிய சிவபரம் பொருளை. மடவன்னம் என்றது அநாநதியே ஆணவமலத்தால் மறைக்கப்பட்ட அறிவினதாகிய ஆன்மாவை. துன்னுதல் - நெருங்குதல். பின்னம் - வேறாதல். பேறு என்பது வீடுபேறாகிய இன்பத்தினை. பிரியா நண்பினையுடைய இரு பறவைகள் ஒரே கிளையில் அமர்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று இனிய பழத்தைத் துய்க்கின்றது மற்றது உண்ணாது பார்த்துக் கொண்டிருக்கிறது (இருக்குவேதம் 1-164. 20) என்னும் மறைமொழிப் பொருளை இத்திருமந்திரம் அறிவுறுத்தல் காணலாம். ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை 178. அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை அஞ்சும் அடக்கில் அதேதன மாமென்றிட் டஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே. (2033) ஐம்பொறிகளை யடக்கும் உபாயம் உணர்த்துகின்றது. (இ - ள்) பொறிகள் ஐந்தினையும் பொருள்களிற் செல்ல விடாது அடக்கும் அடக்குக எனவறிதே கூறுவர். அவற்றை அடக்கும் முறையினையறியும் அறிவிலாதார். பொறிகள் ஐந்தையும் பொருள்களிற் செல்லாது கட்டுப் படுத்திய தேவர்களும் அங்கு இல்லை. அவ்வைந்தினையும் எப்பொருளிலும் செல்லாமல் அடக்கினால் ஆன்மா அறிவற்ற சடப்பொருள்போ லாய்விடும் என்பதுணர்ந்து ஐம்பெறிகளையும் வீணே அடக்குதலின்ற அவை மெய்ப் பொருளையே நோக்கும் இயல்பினவாகச் செலுத்தும் மெய்யுணர்வாகிய உபாயத்தினை அறிந்து கொண்டேன் எ-று. அஞ்சு - ஐம்பொறிகள். அடக்குதல் - விடயத்திற் செல்லாத படி தடுத்தல். அசேதனம் - அறிவில்லாதது. அடக்கா அறிவு - அடக்காமல் நல்வழியிற் செலுத்துதற்குத் துணையாகிய மெய்யுணர்வு. சற்குரு 179. பரிசன வேதி பரிசித்த தெல்லாம் வரிசை தரும்பொன் வகையாகு மாபோல் குருபரி சித்த குவலய மெல்லாம் திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே, (2054) குருவின் பரிசதீக்கையால் உயிர் மும்மலப் பிணிப்பகன்று தூய்மை பெறுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) பரிசனவேதி எனப்படும் குளிகை தொட்ட உலோகங்கள் யாவும் மாற்றுச் சிறப்பமைந்த பொன்னின் வகையாதல் போன்று, குரு பரிசித்த உலக வுயிர்கள்யாவும் மும்மலங்களும் நீங்கிச் சிவகதியாகிய வீடுபேற்றினைச் சேர்தற் குரியவாம் எ-று. பரிசனவேதி - இரும்பு செம்பு முதலிய தாழ்ந்த உலோகங் களை உயர்ந்த பொன்னாக மாற்றும் ஒருவகை மருந்து. பரிசன வேதியாகிய குளிகையினாற் பற்றப்பட்ட தாழ்ந்த உலோகங்கள் தாழ்வு நீங்கி உயர்ந்த பொன்னாய் ஒளிர்தல் போலக் குருவின் அருட்பரிசம் சார்ந்த உயிர்கள் மலமாயை கன்மங்களாகிய மாசுநீங்கிச் சிவப்பிரகாசம் பெற்றுத் திகழும் எ-று. பரிசித்தல் - சிவோகம்பாவனையிலிருந்து தன் கையினைச் சிவனது கையாகப் பாவித்து, மாணவனது சிரத்தைத் தொடுதல். திரிமலம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலம். கூடாவொழுக்கம் தவத்தொடு பொருந்தாதாய தீயவொழுக்கம் 180. கண்காணி யில்லென்று கள்ளம்பலசெய்வார் கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந்தாரே. (2067) தவத்தொடு பொருந்தாத தீய யொழுக்கத்தை நீக்குதற் குரிய உபாயம் உணர்துகின்றது. (இ-ள்) தம்மைக் கண்காணிக்கும் தலைவராவார் எவரும் இங்கு இல்லையென்று கூடா வொழுக்கத்தினராய்க் உள்ளச் செயல்கள் பலவற்றையும் செய்வார்கள். ஆராய்ந்து நோக்குமிடத்து நம் செயல்களை உடனிருந்து மேற்பார்க்கும் தலைவனாகிய இறைவன் இல்லாத இடம் எதுவுமில்லை. உயிர்களின் செயல்களைக் கண்காணித்து முறை வழங்கும் தலைவனாக (உயிர்களின் உள்ளத்தும் புறத்துமாய்) எங்கும் கலந்து நின்ற இறைவனைக் காணும் கண்ணுக்குக்காட்டும் கதிர்போல் உயிருள்ளும் நுகரும் பொருள் களிடத்தும் ஒப்பத் தங்கும் தலைவனாகக் கண்டுணர்ந்தவர்கள் அவனை முன்னங் காணாமையால் தாம் மறைவிற் செய்த தீய செயல்களை விட்டொழியும் நல்லுணர்வினராவர் எ-று. கண்காணி-தம் கீழுள்ளோர் செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை உடனிருந்து மேற்பார்த்து அவர்களை நெறிப்படுத்தும் அதிகாரி. கள்ளம்-பிறர் அறியாதவாறு வஞ்சனையால் மறைவிற் செய்யும் செயல். காணுதல்-அறிவினாற் கூர்ந்து நோக்குதல். கண்காணி - கண்ணுள் (உயிரறிவில்) உடனின்று காணுபவன். மனத்தகத்தான்.....fhs¤â யான் அவன் என் கண்ணுளானே எனவும், நானேதும் அறியாமே என்னுள் நின்று நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் எனவும் கள்ளனேன்.......áǤâ£nlnd’ எனவும் வரும் அருளிச் செயல்கள் இறைவன் கண்காணியாய் நிற்றலையும் அவ்வுண்மை யினை யுணர்ந்தார் அதுகாறும் தாம் மறைவிற்செய்த தவறுகளுக்கு நாணி வருந்தி அவற்றை விட்டு நீங்குவர் என்பதனையும் நன்கு புலப்படுத்துதல் காண்க. எங்கும் உளனிறைவன் என்றுள்ளங் கொண்டுமிக அங்கங் குலைவ தறிவு எனவும் வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்து மகத்தே நகும் எனவும் வருவன இங்கு ஒப்புநோக்குதற் குரியன. கேடு கண்டிரங்கல் 181. பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கரிய பிரானடி பேணார் பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந் தார்களே. (2090) பிறவிப் பயனைப் பெற முயலாது வீணே காலங்கழிக்கும் மாந்தரது நிலைமையினைக் கண்டு இரங்கிக் கூறியது. (இ - ள்) யாவராலும் முயன்று பெறுதற்கரியதாய மக்கட் பிறவியைப் பெற்றிருந்தும் ஆன்ம போதத்தாற் பெறுதற்கு அரியனாகிய இறைவன் திருவடிகளை அன்பினாற் பேணிப் போற்றாதொழிந்தனரே. மக்களது நல்லுணர்வினைப் பெறுதற்கியலாத நிலையில் தாழ்ந்த உயிரினங்களை யொத்த இவர்கள் யாவரும் முயன்று பெறுதற் கரிய தொன்றாகிய திருவருட் பேற்றினை இழந்தோர்களே எ - று. மக்கட் பிறவி பெறுதற்கரிய தாதலை அரிதரிது மானிட ராதலரிது எனவரும் ஔவை வாய்மொழியாலும், அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சஞ் சராயுசத்தோ டெண்டரு நாலெண்பத்து நான்கு நூறாயிரத்தாய் உண்டுபல் யோனியெல்லா மொழித்து மாநுடத் துதித்தல் கண்டிடிற்கடலைக் கையால்நீந்தினன் காரியங்காண் (சித்தியார் - சுபக்179) எனவரும் சித்தியார் பாடலாலும் அறியலாம். பெருமானாகிய இறைவன் உயிரின் முயற்சிகாளல் பெறுதற்கு அரியவன் என்பது புற்றுமாய் மரமாய் எனவும் பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற்கரியன் பெருமானே எனவும் வரும் மணிமொழிகளாற் புலனாம். உயர்திணை மாந்தர்க்குரிய நல்லுணர்வின்மையால் பிராணிகள் என்றார். பெறுதற்கரியதோர் பேறு என்றது சென்றடையாத திருவாகிய திருவருட்செல்வத்தை. 182. இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை யோரார் வருந்தேன் நுகராது வாய்புகு தேனை அருந்தேனை யாரும் அறிய கிலாரே. (2097) இதுவும் அது. (இ - று) [Ia¿îila விலங்குகளிலும் உணர்விற் குறைந்த ehy¿Édjh»a] வண்டு இனிய உணவினைப் பருகி இன்புறுதல் வேண்டி மிகுந்த தேனையுடைய மலரை அளைந்து மிக்க தேனைச் சேகரிக்கும் செயலின் மேன்மையினை (மாந்தர்) உணரமாட்டாராயினர். (ஏனைய தேன்போலாது புறத்தே சென்று பெறுதற்கில்லாததாய் நினைப்பார் நெஞ்சுள் இருந்து சுரந்து) வரும் தேனும் நாம் வாய்மடுத்துண்ணாத நிலையிலேயே நம் வாயிற் புகுந்து இனிக்கும் தேனும் (நினைத்துலும் கண்டாலும் பேசினாலும் சுவைதரும்) அரிய தன்மை வாய்ந்ததும் ஆகிய தேனை ஒருவரும் அறிந்து நுகரமாட்டாராயினர். (அந்தோ அவர்தம் அறியாமை இருந்தவாறென்னே) எ-று. வண்டு இன்புற மலர் இருந்தேன் அளைந்து பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார் அரும்தேனை யாரும் அறியகிலார் என இயையும். பெருந்தேன் - கொம்புத் தேனடை. இழைத்தல் - கட்டுதல். சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் என்பது குறுந்தொகை. பெற்றிமை-தன்மை; என்றது மலர்கள பல வற்றிலும் சென்று தினைத்தனையுள்ளதோர் தேன்துளிகளை யெல்லாம் கொணர்ந்து ஓரிடத்திற் பெரிய தேனடையாகக் கட்டிச் சேர்த்து வைத்தலாகிய அரிய தொழிற்றன்மையினை. வரும்தேன், நுகராது வாய்புகுதேன், அருந்தேன் என்றது சிவானந்தமாகிய தேனை. தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றேனுண்ணாதே நினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும் புண்ணெக ஆனந்தத் தேன்சொரியுங் குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பி எனவும், வருந்தேன் இறந்தும்பிறந்தும் மயக்கும்புலன் வழிபோய்ப் பொருந்தேன் நரகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற் பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி இருந்தேன் இனிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே (திருவிடை - 3) எனவும் வரும் திருப்பாடல்கள் ஒப்புநோக்கி உளங்கொளத் தக்கன. நுகராது வாய்புகு தேன் - கிண்ணத்திலுள்ள தேனை எடுத்து நுகருமாறு போன்று நா தன்னை உட்கொள்ளாத நிலையிலேயே தானே வலிய வந்து நம் வாயிற் புகுந்து அண்ணிக்கும்தேன். வள்ளத்தேன்போல நுன்னை வாய் மடுத்துண்டிடாமே எனவும், எண்ணித்தம்மை நினைந் திருந்தேனுக்கு, அண்ணித்திட் டமுதூறு மென்னாவுக்கே எனவும், நானையாறுபுக் கேற்கவ னின்னருள், தேனையாறு திறந்தாலே யொக்குமே எனவும் கோனைக்காவிக் குளிர்ந்த மனத்தராய்த் தேனைக் காவியுண்ணார் சில தெண்ணர்கள் எனவும் குரம்பை தோறும் நாயுட லகத்தே குரம்பை கொண்டு இன்தேன் பாய்த்திநிரம்பிய அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளை தொறும் ஏற்றினன் (திருவாசகம்) எனவும் காயத்துள் மெய்ஞ்ஞானக் கள்ளுண்ண மாட்டாதே எனவும் வருவன இங்கு நினைக்கத்தகுவன. இதோபதேசம் 183. செல்லுமளவுஞ் செலுத்துமின் சிந்தையை வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை இல்லை யெனினும் பெரிதுளன் எம்மிறை நல்ல அரனெறி நாடுமின் நீரே. (2103) மன மொழிகளால் இறைவனை வழிபட்டு நல்லொழுக்க நெறியில் நடப்பீராக என அறிவுறுத்துகின்றது. (இ - ள்) இயலும் அளவு நும் சிந்தையினை இறைவன் பாற் செலுத்தித் தியானிப்பீராக. அம்முதல்வனது மெய்ப்புகழை நீவிர் கற்றுவல்ல சொல்வன்மைக்கேற்பச் சொல்லிப் போற்றுவீராக. (அம்முதல்வனைப் புறத்தே காணாமை யொன்றேபற்றி) இல்லை என்பார் உளராயினும் எம்மிறை வனாகிய சிவபெருமான் இவ்வாறு சிந்தித்துப் போற்று வார்க்கு அவர்தம் உள்ளத்திலே பெரிதும் நிறைந்துள்ளான். உயிர்க்குயிராய் உள்நிற்கும் இறைவன் அறிவுறுத்தியாருளிய நல்ல ஒழுக்க நெறியினை நீவிர் நாடி ஒழுகு வீராக. எ - று. செல்லும் அளவு - இயலும் அளவு; முடிந்தவளவு, ஒல்லும் வகையான் அறவினை யோவாதே செல்லும் வாயெல்லாம் செயல் என்றார் திருவள்ளுவ நாயனாரும். எய்த நினைய மாட்டேனான் என்றார் ஆரூரரும். சிந்தையைச் செலுத்துதலாவது இறைவனைத் தியானித்தல். வாய்மையை வல்ல பரிசால் உரைமின்கள் என இயைக்க வாய்மை என்றது-இறைவனது மெய்ம்மையாகிய பொருள் சேர் புகழ்த் திறங்களை. வல்லபரிசு - கற்றுவல்ல தன்மைக் கேற்ப. இல்லை எனினும் - இல்லை என்பார் உளராயினும். எம்மிறை பெரிது உளன் - எம் இறைவன் உயிர்களின் உள்ளத்தின்கண் நீங்காதுள்ளான். சுடர்விட்டுளன் எங்கள் சோதி என்பது திருப்பாசுரம். நல்ல அரனெறி. பொறிவாயில் ஐந்தவித்தானாகிய இறைவன் வகுத்தருளிய நல்ல ஒழுக்க நெறி. நாடுதல்-நாடி மேற்கொள்ளுதல். 184. ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே. (2104) இதுவுமது. (இ - ள்) பிறப்பு வகையாகிய குலமும் ஒன்றே. வழி படுதற்குரிய பரம்பொருளாகிய இறைவனும் ஒருவனே. ஆதலால் எவ்வுயிர்க்கும் நலம் பயக்கும் எண்ணங்களையே எண்ணுவீராக. அவ்வாறெண்ணின் நமக்கு நமனால் வரும் இறப்புத் துன்பமில்லை. நாணமின்றிப் பல இடத்துஞ் சென்று பலரையும் நாடிப்புகும் நற்கதி பிறிதொன்று மில்லை. எனவே நீவிர் (ஒழுக்க நெறியில்) பிறழாது நின்று நுமது உள்ளத்தே இறைவனை நிலைபெற நினைந்து உய்தி பெறுவீராக எ - று. குலம் - உயிர்களின் பிறப்புவகை. வினையாலுளவாம் பிறப்பு உலகில் வெவ்வேறு வகையினவாகப் பிரித்துப் பேசப்படினும் உயிர்நிலை என்னும் பொதுமையால் நோக்கும் பொழுது அவைபற்றிய சிறப்பு எதுவுமில்லை என்பார் ஒன்றே குலமும் என்றார். பிறப் பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்னுந் திருக்குறள் இத்தொடரில் நிலைபெற்றுள்ளது. எல்லா உயிர்களும் ஓரினமே அவ்வுயிர்களுக்குத் தலைவனாக நின்று அருள்புரியும் இறைவனும் ஒருவனே என்னும் இவ்வுண்மையினை உள்ளவாறு உணர்ந்தோர் யாதும் ஊரே யாவருங் கேளிர் என எவ்வுயிர்க்கும் நன்றே நினைந்து உய்திபெறும் நல்லியல்பினராவராதலின் அன்னோர்க்கு இறத்தல் துன்பம் என்றும் நேராது என்பார் நன்றே நினைமின் நமனில்லை என்றார். நலம்பெற விரும்பியவர்கள் நாணமின்றிப் பலரிடத்துஞ் சென்று நற் பொருள்களை வினவி யடைதல் உலகியல்பு. அவ்வாறு எங்கும் அலைந்துதிரிந்து அடைதற்குரிய நற்கதி புறத்தில் இல்லை; நும் மனத்தகத்திலேயே நிலைபெற்றுளது ஆதலின் இறைவனை மனத்தின்கண் மறவாது நினைத்தலன்றே போதும் என்பார், சென்றே புகுங் கதி இல்லை என்றும் நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்துள்மின் என்றும் கூறினார். சென்றே புகுங்கதி இல்லை எனவே நீர் அக்கதியை நாடிச் செல்லவேண்டிய இன்றியமை யாமையில்லை. சென்றடையாத திருவாகிய அச்சிவகதி நும்முள்ளத்திருந்து வெளிப்பட்டுத் தோன்றி நும்மை அகத்திட்டுக் கொள்ளும் என்பதாயிற்று. 185. இக்காயம் நீக்கி யினியொரு காயத்திற் புக்குப் பிறவாமற் போம்வழி நாடுமின் எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென் றக்காலம் உன்ன அருள்பெற லாமே, (2106) இதுவுமது. (இ - ள்) பெறுதற்கரிய இம்மக்களுடம்பினைப் பயன்படுத்தி நன்னெறியினை யடையாது வீணே கழித்துவிட்டு இனி மேலும் ஓருடம்பினை எடுத்துப் பிறந்து வருந்தாமல் இவ்வுடம்பில் வாழும் இந் நிலையிலேயே பிறப்பிறப்பில்லாத பெரு நெறியினைத் தலைப்பட்டுச் செல்லும் வழியினை நாடி மேற்கொள்வீராக. நாம் கொண்டுள்ள இந்த உடம்பு நமக்கு எந்தக் காலத்திலே வந்து பொருந்தியது என்று நமது பிறவிக்குரிய மூல காரணத்தினை ஆராய்ந்து தெளிந்து இவ்வுடம்பினைவிட்டு உயிர் நீங்குங் காலத்திலும் இறைவனை மறவாது நினைந்து போற்றுதலால் அம்முதல் வனது திருவருள் வாழ்வாகிய சிவப்பேற்றினை (இப்பிறப்பிலேயே) பெற்று இன்புறலாம். எ - று. காயம் - உடம்பு. இக்காயம்-நாம் கொண்டுள்ள இவ்உடம்பு. நீக்கிப் புக்குப்பிறத்தல் என்ற சொற்கள் இவ் உடம்பினைவிட்டு உயிர் நீங்குங்கால் அடையுந்துன்பத்தினையும் மற்றோருடம் பிற்புக்குப் பிறக்குங்கால் மாதா வுதரத்தும் புறத்தும் போம்வழி என்பது இனி மீண்டும் பிறவாமல் இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய வாராவழியினை. இதனை மற்றீண்டு வாராநெறி எனவும், வாராவுலகு எனவும், மீண்டு வாராவழி எனவும் குறிப்பிடுவர் அருளாளர். எமக்கு இவ்வுடல் எக்காலத்து வந்து ஆனது என்று என்றது, தமக்கு இவ்வுடம்போடுளதாகிய தொடர்புக்கு யாது காரணம் என்று பிறவிக்குரிய காரணத் தினையும் அத்தொடர்பினை நீக்குதற்குரிய சாதனத்தினையும் ஆராய்ந்து என்பதாம். அக்காலம் - உடம்பினை விட்டு உயிர் பிரியும் காலம். அன்று அறிவாம் என்னாது அறஞ்செய்க என்றார் திருவள்ளுவர். அக்காலம் உன்னுதலாவது உடம்பினை விட்டு உயிர்பிரியும் அத்துன்பக் காலத்திலும் இறைவனை அன்பினால் மறவாது நினைத்தல். சாமன்றுரைக்கத் தருதி கண்டாய் எங்கள் சங்கரனே எனவரும் நாவுக்கரசர் விண்ணப்பம் ஈண்டு மனங்கொளத் தகுவதாகும். உன்ன - உன்னுதலால்; செயவெனச்சம் காரணப் பொருளில் வந்தது. 186. முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் அத்தகு சோதி யதுவிரும்பாரே. (2115) அன்பினால் போற்றுவார்க்கு இறைவன் வெளிபட்டு அருள் வான் என்கிறது. (இ - ள்) வீடு பேறாகிய பயனாகவும் அதனைப் பயப் பிக்கும் ஞானமாகவும் அம்மெய்யுணர்வை நல்கும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்த் திறங்களாகவும் திகழும் இறைவனை (இடையறாப் பேரன்புடையார்) எத்தனை நீண்டகாலமாயினும் இடையறாது போற்றுவர். தூயோனாகிய இறைவனும் அங்ஙனம் போற்றும் அன்பர் குழாத்திடையே நெய்யினைமுந்துறக்கொண்டு விளங்கும் (கடையப்படும் தயிராகிய) பாலிற் போன்று வெளிப்பட்டு அருள்வன். அத்தகைய (அருமையில் எளிய) சோதிப் பொருளது அருளை விரும்பிப் பெறாதார் அந்தோ இரங்கத் தக்கவராவார் எ-று. முத்தி-வீடுபேறு,. மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும், விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை என்பது அப்பர் தேவாரம். இறைவன் ஞானமயன் என்பதனை ஞானத்திரளாய் நின்றபெருமான் எனச்சம்பந்தரும், ஞானம் ஆனாய் என அப்பரும் குறித்துப் போற்றுவர். இறைவன் முத்தமிழாய் நின்ற திறத்தை முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் என வரும் திருத்தாண்டகத்தா லுணரலாம். ஏத்தும் அடியார் கூட்டத்தில் இறைவன் வெளிப்பட்டு அருளுதலை வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் எனவும், தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல, முழவமொந்தை மல்குபாடல் செய்கையிடம் ஓவார் எனவும் வரும் திருமுறைத் தொடர்களால் உணரலாம். நெய்த்தலைப்பால் நெய்யினை முந்துறுத்துக்கொண்டு விளங்கும் நிலையில் (தயிராய்க் கடையப்பெற்றுள்ள) பால். விறகில்தீயினன். ... முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே என்பது அப்பர் அருள்மொழி. 187. சிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்கள் அவனை வழிபட்டங் காமாறொன்றில்லை அவனை வழிபட்டங் காமாறு காட்டுங் குருவை வழிபடிற் கூடலுமாமே. (2119) குருவருளின்றி இறைவனருளில் தோய்ந்து இன்புறுதல் இயலா தென்பது உணர்த்துகின்றது. (இ-ள்) எண்ணிறந்த தேவர்கள் சிவபெருமானை வழிபட்டுப் போற்றியுள்ளார்கள். அம்முதல்வனை மட்டும் வழிபட்டமையால் அன்னோர் பெற்றுளதாம் உய்யு நெறியாகிய பெரும்பயன் ஒன்றுமில்லை. அம் முதல்வனை வழிபட்டு போற்றும் அந்நிலையிலேயே அங்கு உய்யும் நெறியினை அறிவுறுத்த வல்ல குருவினை (இறைவனெனவே தெளிந்து) வழிபடின் இறைவனுடன் கலந்து ஒன்றாம் பேரின்ப நிலை யினைப்பெறலாம் எ-று. ஆம் ஆறு-பாசங்களை ஒழித்து உய்யும் நெறி. கூடுதல் இரண்டறக் கலத்தல். அகளமா யாரும் அறிவரி தப்பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற எனவும், புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனென யானுந் தேறினன் காண்க அவனெனை யாட்கொண் டருளினன் காண்க எனவும் வரும் அநுபவ மொழிகள் இங்கு நினைக்கத்தக்கன. 188. சார்ந்தர்க் கின்பங் கொடுக்குந் தழல்வண்ணன் பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைக் சென்றுணர் வாரே. (2114) இறைவனை அன்பால் நினைவார் எய்தும் நலனும் நினை யாதார் அடையும் தீமையும் உணர்த்துகின்றார். (இ - ள்) தீவண்ணனாகிய சிவபெருமான் தன்னை அன்பினாற் சார்ந்து ஒழுகுவார்க்கு இன்பத்தை அருள்வான். தன் திருவருள் வரம்பின் நில்லாது விலகி நடப்பார்க்குத் துன்பமே விளைக்கும் பிறவியைக் கொடுப்பான். தன்பால் அன்பு மீதூரப் பெற்றார்க்கு ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியினைக் காட்டி அருள் புரிவான். அவனது திருவடியாகிய சிவஞானம் சேரப் பெற்றவர்கள் இறைவனை நுணுகிச் சென்று உணர்ந்து இன்புறுவோராவார் எ-று. சார்தல் - இருவகைப்பற்றும் நீங்க இறைவனை அடைக்கல மெனச்சார்ந்தொழுகுதல்; அவனருளல்லாது தானாக ஒன்றையுஞ் செய்யாமை. தீயானது தன்னை மதித்து அகலாது சார்ந்தொழுகு வார்தம் குளிரை நீக்கி நலஞ்செய்தும் தன்னை விலகினார்க்குப் பயன் தராதும் அமைதல் போன்று, இறைவனும் அன்பினால் தன்னை அகலாதொழுகுவார்க்கு நடுக்கங்களைந்து நலம்புரிதலும் விலகி யொழுகுவார்க்குப் பிறவிப்பிணியுட்பட்டு வருந்தப் பயன்தரா தொழிதலும் ஆகிய இரு நிலைமையினன் என்பார் தழல் வண்ணன் சார்ந்தவர்க்கு இன்பங் கொடுக்கும், பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவி கொடுத்திடும் என்றார் சார்ந்தவர்க்கின்பங்கள் தழைக்கும் வண்ணம், நேர்ந்தவன் (1 _ 113 _5) எனவும், தன்னடைந்தார்கின்பங்கள் தருவானை (2 _ 4 _ 11) எனவும் சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் (4 _ 11 _ 6) எனவும் வரும் அருளிச்செயல்கள் இங்கு ஒப்புநோக்கத் தக்கன. பேர்தல் - பற்றி நிற்றற்குறிய நிலையினின்றும் விலகிச் செல்லுதல். இன்னாப்பிறவி-இன்னாமைக்கு (த்துன்பத்திற்கு) ஏதுவாகிய பிறவி. பிறவி இன்னாது எனவே பிறவாமையே பேரின்பமாம் என்றாராயிற்று. பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம், பிறவா ருறுவது பெரும் பேரின்பம் (மணிமேகலை) என்றார் பிறரும். கூர்தல் - உள்ளது சிறத்தல்; உயிர்க்குயிராய இறைவன்பால் அன்பு மீதூரப் பெறுதல். குரைகழல் - ஒலிக்குங்கழலணிந்த திருவடி; என்றது திருவடி ஞானத்தை. சேர்தல் - அதனையடைதல். தேவர் - பரம்பொருள். சென்றுணர்தல் _ அழுந்தியுணர்தல். சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல் சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் _ சார்ந்தடியார் தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முற் செய்வினையும் ஆங்கு (சிவஞான போதம்- சூ- 10) எனவரும் உதாரண வெண்பா இத்திருமந்திரப்பொருளைத் தழுவியமைந்ததாகும். எட்டாந்தந்திரம் இது, உடலிற் பஞ்சபேதம்என்பது முதல் சோதனை என்பது ஈறாக நாற்பத்து மூன்று உட்பிரிவுகளையுடையது. சிவ தரிசனத்தின் பின் சிவனொடு கூடுதல் என்னும் சிவயோக நிலையினையுணர்த்துதல் எட்டாந் தந்திரத்தின் கருத்தென்பர் பெரியோர். இத் தந்திரத்திற் கூறப்படும் சிவயோக நிலைகள் பற்றிய அரும் பொருள்களும் மேற் கூறப்பட்ட அட்டாங்கயோகம் முதலிய நுண் பொருள்களும் அநுபவமுடைய ஆசிரியர்வழி யுணர்ந்து கொள்ளத்தக் கனவன்றி ஏனையோரால் எளிதில் உணரத்தக்கன அல்ல. 189. ஆணவ மாயையுங் கன்மமு மாமலங் காணு முளைக்குத் தவிடுமி யான்மாவும் தாணுவை யொவ்வாமற் றண்டுல மாய் நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே. (2192) உயிரைப் பிணித்துள்ள மும்மலங்களைப்பற்றிய இயல்பு உணர்த்துகின்றது. (இ - ள்) ஆணவம் மாயை கன்மம் ஆகியமும்மலங்களும் நெல்லில் (அரிசியைச் சூழ்ந்து) அமைந்துள்ள முளை, தவிடு, உமி என்பவற்றைப் போன்று உயிரை முறையே பிணித்து மறைத் துள்ளன. ஆன்மாவும் பரம் பொருளை யொத்து வியாபக நிலையை யுடையதாகாமல் முளை தவிடு உமியினால் மறைக்கப்பட்ட அரிசியினைப் போன்று இம் மும்மலங்களால் மறைக்கப்பட்டுக் கட்டுற்று நிற்கும். எனவே ஆன்மாவாகிய நீ நின்னின் வேறாகிய இப்பாசங்களை வேறாகப் பிரித்துணர்தற் பொருட்டுத் தாணுவாகிய இறைவன் திருவடியை விரும்பிப் போற்றுவாயாக எ-று. மும்மல நெல்லினுக்கு முளையோடு தவிடுமிபோல் மம்மர்செய் தணுவினுண்மை வடிவினை மறைத்து நின்று (176) எனவரும் சித்தியாரும், உயிருண்டாவே யுளது மலம் மலம் முளதா யொழிந்தவெல்லாம் நெல்லின்முளை தவிடுமிபோல் அநாதியாக நிகழ்த்திடுவர் இது சைவம் நிகழ்த்துமாறே (25) எனவரும் சிவப்பிரகாசமும் இத்திருமந்திரப் பொருளை அடியொற்றியமைந்தன. நெல்லின்முளை தவிடுமிபோல் என்னும் இவ்வுவமையில் நெல்லினுள்ளே யுள்ள அரிசி ஆன்மாவிற்கு உவமை. அரிசியைப்பற்றியுள்ள தவிடு ஆணவ மலத்திற்கு உவமை. அதன் நுனியிலுள்ள முளை கன்மத்திற்கு உவமை. அதற்கு இடனாகிய உமிமாயைக்கு உவமை என விளக்குவர் சிவப்பிரகாசர். ஆணவம் பிண்டி அருமாயை தான்உமி காமியம் மூக்கென்று காண் என்பது வீட்டு நெறிப்பால். நெல்லின்உமிபோனால் முளை சீவியாதாற் போலக் கன்மமும் மாயை ஆதாரமாக ஒடுங்கி மீளவும் மாயை ஆதாரமாகச் சீவிக்கும். கன்மமில்லாத போது மாயையும் சீவிப்பற்றுப் போம் என்பது சிவப்பிரகாசருரை. ஆணவம் உமியையும் கன்மம் மூளையையும் மாயை தவிட்டையும் ஒக்கும் என உரைகூறுவாருமுளர். நெல்லிற்குமியும் நிகழ் செம்பினிற் களிம்பும், சொல்லிற் புதிதன்று தொன்மையே எனவரும் சிவஞான போத வெண்பாவில் (வல்லி) மாயைக்கு உவமையாக உமியும், ஆணவ மலத்திற்கு உவமையைகக் களிம்பும் கூறப்படுதல் காணலாம். ஆணவத்துக்குத் தவிட்டினையும் உவமையாகக் காட்டுவர் உமாபதி சிவனார். 190. பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயனொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல்போடிற் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே. (2193) உயிர்கள் இறைவனால் உய்திபெறுமாற்றினைப் பிறிது மொழிதல் என்னும் அணியினாற் புலப்படுத்துகின்றது. (இ - ள்) பசுக்களோ பல நிறத்தன. ஆயினும் அவற்றின் பால் வெண்மையாகிய ஒரே நிறத்ததாம். அப் பசுக்களைப் புலங்களிற் செலுத்தி மேய்ப்பானாகிய ஆயன் ஒரே வண்ணத்தன். பசுக்களை மேய்க்குந் தொழிலை மேற் கொண்டுள்ள ஆயன் கையிற் கொண்ட கோலினைக் கீழே போடுவானாயின் (அக்கோலினால் மொத்துண்டு முன்னர் வெகுண்டோடிய) அப்பசுக்கள் தம்தலைவனாகிய அவனை அன்பினாற் பற்றிச் சூழ்ந்துகொண்டு அவனைவிட்டு நீங்க மாட்டா எ - று. உயிர்கள் ஒரு மலமுடைய விஞ்ஞானாகலர், இரு மலமுடைய பிரளாயாகலர், மும்மலமுடைய சகலர் எனப் பல திறத்தனவாயினும் அவை யாவும் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையாகிய ஓரியல்பேயுடையன என்பார், பசுக்கள் பலவண்ணம் பால் ஒருவண்ணம் என்றார். பால் - வெண்ணிறம்; இங்குச் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையினைக் குறிப்பால் உணர்த்தியது. உயிர்கள் பல இறைவன் ஒருவனே என்பது உணர்த்துவார் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் என்றார். கோல் என்றது உயிர்களை வினைகளின் வழி மறைத்து நின்று பக்குவப்படுத்தும் சினமருவு திரோதாயியாகிய சத்தியினை. கோலைப் போடுதலாவது அக்கோலினால் உயிர்களின் மலங்கழலும் பக்குவமெய்தியபின் சினமிக்கு நின்று தொழிற்படுத்தும் அத் திரோதான சத்தியே சினமடங்கித் திரு வருட் சத்தியாக மாறுதல். அத்திருவருட் சத்தி பதிந்த பின் உயிர்கள் யாவும் மருட்சிக்கேதுவாகிய பாசப்பிணிப்பின் நீங்கிச் சிவஞானமாகிய தெளிவுபெற்றுச் சிவபரம் பொருளையே தலைப்பட்டு இன்புறும் நிலையினவாம் என்பார், பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடிற் பசுக்கள் தலைவனைப்பற்றி விடாவே என்றார். மூலன்பாற் பசுக்கள் கொண்ட அன்பினை நேரிற்கண்ட சிவயோகியார் தாம் கண்ட காட்சியை அடி யொற்றியே பசுபதிபால் உயிர்கள் கொள்ளும் நேயத்தினையும் எடுத்துக் காட்டிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். 191. அறிவிலன் அமூர்த்தன் அராகாதி சேரான் குறியொன் றிலான் நித்தன் கூடான் கலாதி செறியுஞ் செயலில்லோன் திண்கர்த்தா அல்லோன் கிறியின் மலன்வியாபி கேவலத் தோனே. (2247) ஆன்மா அநாதியே ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுத் தனக்குரிய விழைவு அறிவு செயல்கள் விளங்குதற்குரிய துணையின்றியுள்ள இருள்நிலையாகிய கேவலாவத்தையின் இயல்புணர்த்துகின்றது. (இ - ள்) கேவல நிலையினனாகிய ஆன்மா (கருவிகள் இல்லாமையால்) அறியுந்திறமில்லாதான்1 தனக்கென வடிவ மில்லாதான்2 அராகம் முதலியன சேரப்பெறாதான்3 ஒன்றிலும் இச்சையில்லாதான்4 தோற்றக்கேடுகள் இல்லாமையால் நித்தன்5 கலை முதலிய தத்துவங்களோடு கட்டப்பெறாதான்6 தனக்கென்று பொருந்திய செயலில்லாதான்7 எனவே திண்மை யுடைய வினைமுதல் அல்லா தான்8 வஞ்சனையைச் செய்யும் ஆணவ மலத்தோடு கூடியவன்9. வியாபகத் தன்மையுடையவன்10. எ-று. உயிரானது ஆணவ மலத்தினால் மறைக்கப்பட்டு எத்தகைய கருவிகளும் பெறாமல் ஒரு செயலுமின்றிக் கிடந்த கேவலத்தின் இயல்பினை விளக்கும் இத்திருமந்திரப் பொருளைக் கூர்ந்துணர்ந்த அருணந்தி சிவாசாரியர், அறிவிலன் அமூர்த்தன் நித்தன் அராகாதி குணங்க ளொடுஞ் செறிவிலன் கலாதியோடுஞ் சேர்விலன் செயல்களில்லான் குறியிலன் கருத்தாவல்லன் போகத்திற் கொள்கை யில்லான் பிறிவிலன் மலத்தினோடும் வியாபி கேவலத்தி லான்மா (288) எனக் கேவலநிலையின் இயல்பினை எடுத்துரைத்தார். ஆன்மா, உடம்பு முன் இல்லாதவன்; கலாதியறி வோடு முன் சேர்தல் இல்லாதவன்; புத்தி குணம் எட்டினையும் முன் பொருந்தாதவன்; இச்சைமுன் இல்லாதவன் அறிவுமுன் இல்லாதவன்; ஒருதொழிலும் முன் இல்லாதவன் தனக்கென ஒரு சுதந்தரம் முன் இல்லாதவன்; போகத்தில் முன் கொள்கை இல்லாதவன்; தோற்றக் கேடுகள் முன் இல்லாதவன்; ஏகதேசி யாதல் முன் இல்லாதவன்; கேவலாவத்தையில் ஆணவ மலத்தோடு மட்டுமே கூடி நிற்பன் என்பது இதன் பொருள். குறி என்றது முதனிலைத் தொழிற் பெயராய் இச்சையை உணர்த்தியது. அராகாதி குணம் என்றது தருமம், ஞானம், வைராக்கியம், ஐவரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைவரியம் என்னும் புத்தி குணம் எட்டினையும். அராகாதி குணங்கள் என்ற உபலக்கணத்தால் ஏனைப் போக்கிய காண்டக் கருவிகளுங் கொள்ளப்படும். 192. உருவுற்றுப் போகமே போக்கியந் துற்று மருவுற்றுப் பூத மனாதியான் மன்னி வருமச் செயல்பற்றிச் சத்தாதி வைகிக் கருவுற்றிடுஞ் சீவன் காணுஞ் சகலத்தே. (2261) ஆன்மா உடல் கருவி உலகு நுகர்பொருள்களைப் பெற்ற நிலையாகிய சகலாவத்தையின் இயல்புணர்த்துகின்றது. (இ - ள்) மாயாகாரியமான உடம்பினைப் பொருத்தி எடுத்த உடம்பிற்குரிய போக போக்கியங்களை நுகர்ந்து பூதங்களைச் சார்ந்து மன முதலிய அகக்கருவியோடு நிலைத்து அவற்றால் வருகின்ற செயல்களைப் பொருந்தி ஓசை முதலிய விடயங்களில் விரும்பித் தங்கிக் கருவுற்றுப் பிறந்தவுயிர் காணப்பெறும் சகலாவத்தையுடையதாகும் எ - று. ஆன்மா, உடல் கருவி முதலியவற்றைப் பெற்று உலகிற் பிறந்து போகம் நுகர்ந்து திரியும் நிலை சகலாவத்தை என்பதாம். இத் திருமந்திரச் சொற்பொருளை அடியொற்றியது, உருவினைக் கொண்டு போகபோக்கியத் துன்னல்செப்பல் வருசெயல் மருவிச் சத்தமாதியாம் விடயந்தன்னிற் புரிவதுஞ் செய்திங் கெல்லா யோனியும் புக்குழன்று திரிதரும் சகலமான அவத்தையிற் சீவன்சென்றே. 9230) எனவரும் சிவஞான சித்தியாராகும். உருவினைக் கொண்டும் போக காண்டமாகிய கலை முதலியவற்றோடு செறிந்தும் இச்சையுற்றும் நால்வகை வாக்குக்களால் நிகழும் அறிவினையடைந்தும் தொழிலைப் பொருந்தியும் சத்தாதி விடயங்களில் விருப்பஞ் செய்தும் போகம் நுகர்ந்தும் இவ்வுலகிற் பிறப்பிறப்புக்களிற் புக் குழன்றும் ஏகதேசியாய் சகலாவத்தையிற் சீவித்து நிற்பவன் சீவன் என்பது இதன் பொருள். போகம் - நுகர்ச்சி. போக்கியம் - நுகர்பொருள். போககாண்டமாகிய கலை முதலியவற்றைப் போகமென்றும் போக்கிய காண்டமாகிய புந்தி முதலியவற்றைப் போக்கிய மென்றுங் கூறினார். 193. இருவினை யொத்திட இன்னருட் சத்தி மருவி ஞானத்தில் ஆதன மன்னிக் குருவினைக் கொண்டருட் சத்திமுன் கூட்டிப் பெருமல நீங்கிப் பிறவாமை சுத்தமே. (2262) ஆன்மா பாசப் பிணிப்பினின்றும் நீங்கிய தூயநிலையாகிய சுத்தாவத்தையின் இயல்புணர்த்துகின்றது. (இ - ள்) இருவினையொப்பு நிகழ இனிய திருவருளாகிய சத்தி பதிய ஞானயோகத்தில் ஒன்றியிருத்தலில் நிலைத்து உபதேச குருவாய்க்கப்பெற்று அவரால் திருவருட் சத்தியாகிய சிவஞானம் கூடப்பெற்றுப் பெரிய குற்றமாகிய ஆணவமலம் நீங்கிப் பிறவா நிலையை அடைதலே சுத்தாவத்தையாம் எ - று. இத்திருமந்திரத்தை அடியொற்றியது, இருவினைச் செயல்களொப்பின் ஈசன்றன் சத்திதோயக் குருவருள்பெற்று ஞான யோகத்தைக் குறுகி முன்ளைத் திரிமலமறுத்துப் பண்டைச் சிற்றறிவொழிந்து ஞானம் பெருகிநாயகன்றன் பாதம் பெறுவது சுத்தமாமே (230) எனவரும் சிவஞான சித்தியாராகும். இருவினையொப்பின் கண்ணே சிவ சத்திநிபாதமுறுதலால் குருவருள் பெற்றும் ஞானசாதனம் அடைந்தும், அநாதி மும்மல நீக்கியும் பழைய வாதனை நீங்கியும் ஞானம்பெருகியும் சிவபிரான் திருவருளைக் கூடுதல் சுத்தாவத்தையாம் என்பது இதன் பொருளாகும், சத்தாதி விடயங்களின் விருப்பங் கழிதற்கு ஏது இருவினை யொப்பு. போக போக்கியக் கருவிகளின் செறிவு நீங்குதற்கு ஏது சத்திநிபாதம். உருக் கழிதற்கு ஏது குருவருள். பிறந்து திரிதல் கழிதற்கு ஏது ஞானசாதனம். ஏக தேசத் தன்மை கழிதற்கு ஏது வாதனை நீக்கம். பாச அறிவிச்சை செயல்கள் கழிதற்கேது ஞானப்பெருக்கம். இருவினையொப்பு: ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பு மாதலின்றிப் புண்ணிய பாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து, விடுவோனது அறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்பநிகழ்தல். மலபரிபாகம்: மலம் தனது சத்தி தேய்தற்குரிய துணைக் காரணங்களெல்லாவற்றோடுங் கூடுதல். சத்திநிபாதம்: மலத்திற்கு அநுகூலமாய் நின்று நடாத் திய திரோதான சத்தி மலம் பரிபாக மெய்தியவழி அக்கருணை மறமாகிய செய்கை மாறிக் கருணையெனப்படும் முன்னைப் பராசத்தி ரூபமாய் ஆன்மாக்கள் மாட்டுப்பதிதல். சத்தி நிபாதம்-சத்தியினது வீழ்ச்சி. நி என்பது ஏற்றமாக என்னும் பொருள் குறித்து நின்றதோர் இடைச்சொல். 194. மாயைகைத் தாயாக மாமாயை யீன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயுமுயிர் கேவல சகலத் தெய்தி ஆய்தரு சுத்தமுந் தான்வந் தடையுமே. (2268) ஆன்மா இறைவனருளால் கேவல சகலத் தெய்திச் சுத்த நிலையை அடையுமாறு கூறுகின்றது. (இ-ள்) எவ்விடத்துமாய்க் கலந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான், அப்பனாக நின்று அருள்புரியப் பொருந்திய ஆன்மா சுத்தமாயை (தன்னைப் பிள்ளையாய்ப்) பெற, அசுத்தமாயை செவிலித்தாயாய் நின்று வளர்க்க, கேவலநிலையி னீங்கிச் சகலநிலையை யடைந்து (சிவஞானத்தால்) ஆய்ந்து தெளியப் பெறும் சுத்த நிலையையும் வந்தடையும். எ-று. இறைவன், கேவல நிலையிற் கிடந்த ஆன்மாவைச்சுத்த மாயையின் இடமாகத் தோன்றச் செய்து, அசுத்தமாயையைக் கொண்டு வளரச்செய்து, தூய்மைப்படுத்தித் தன்னடிக் கீழ்ச் சேர்த்தருள்வன் என்பது கருத்து. ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே, ஏயும் உயிர், மாமாயை ஈன்றிட, மாயை கைத்தாயாகக் கேவலத்தின் (நீங்கிச்) சகலத்தெய்தி ஆய்தரு சுத்தமும் தான் வந்தடையும் என இயையும். மாமாயை-சுத்தமாயை. மாயை-அசுத்தமாயை. கைத்தாய்-செவிலித்தாய். 195. பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன்கர ணங்களாந் தன்னின் மறைந்தது தன்கர ணங்களே. (2289) ஆன்ம தரிசனம் செய்யும் உபாயம் உணர்த்துகின்றது. (இ-ள்) பொன்னாலியன்ற அழகிய அணிகலம் அணி கலமாகத் தன்னைக் காண்பார்க்குத் தனக்கு முதற்காரணமாகியது பொன் என்னுந் தன்மையினை உலகத்தார் காணாதவாறு வினைத்திறத்தால் பொன்னை மறைத்தது. அணிகலத்தில் மேற்பட்டுத் தோன்றும் தொழில் நுட்பத்திற் கருத்தின்றி முதற் காரணமாவது யாது எனக் கூர்ந்துணர்வார்க்கு அணிகலம் தனித்துக் தோன்றாது பொன்னெனவே அதற்குள் அடங்கி மறைந்தது. அதுபோல, ஆன்மாவாகிய தன்னை மறைத்தது தன் கரணங்களாகிய மாயேயம். (நானார் என்னுள்ளமார் எனக்கூர்ந்து நோக்கிய நிலையில்) தன் கருவி கரணங்களாகிய அத்தொகுதி ஆன்மா மேற்பட்டுத் தோன்ற அதன் வியாபகத்துள் அடங்கி மறைந்தது எ-று. ஆன்மா தனுகரணங்களே தானாகப் பேதமின்றி எண்ணிய நிலையில் ஆன்மா என்னும் முதற் பொருள் மறையக் கருவி கரணங்களாகிய சடப்பொருளே மேற்பட்டுத் தோன்றுவதாம். அவற்றைச் சடமென உணர்ந்த நிலையில் ஆன்மாவின் வியாபகமே மேற்படத் தன்னியல்பினை உள்ளவாறுணரும் நிலையுளதாம் என்பது கருத்து. ஆன்மா தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை யணையும் என்றார் மெய்கண்ட தேவரும். இத்திருமந்திரம் எடுத்துக்காட்டுவமை என்னும் அணியமைந்ததாகும். வருகின்ற திருமந்திரமும் அவ்வணி யமைந்ததே. 196. மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே. (2290) எல்லாஞ் சிவனென்ன நின்ற நிலையைத் தரிசிக்குமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) மரத்தாற் செய்யப்பட்ட பெரிய மதயானையின் வடிவம் தொழிற்றிறத்தால் தன்னை உயிருடையது போல மயக்கித் தனக்கு முதற் காரணமாகிய மரத்தின் தன்மையினை மறைத்து நின்றது. அதன் மெய்ம்மைத் தன்மையினை உற்றுணர் வார்க்கு முன்னர் மெய்ம்மையுடையது போன்று காணப்பட்ட யானையின் தன்மை மரத்தினுள் மறைந்து போயிற்று. அதுபோல, நிலமுதலாகக் காணப்படும் பூதகாரியமாகிய பிரபஞ்சம் தனக்குப் பற்றுக்கோடாகிய பரம்பொருளின் மெய்ம்மைத் தன்மை தோன்றாதவாறு மறைத்துத் தானே மெய்ப்பொருள் என்பது போன்று விரிந்து தோன்றுகின்றது. சத்துப்பொருளாவது எது வென்று உண்மையான் நோக்குவார்க்குப் பரம்பொருளின் வியாபகமே மேற்பட நிலமுதலிய இப்பிரபஞ்சம் அசத்துப் பொருளாய் அதனுள் மறைந்துவிடும் எ-று. அசத்தின் வழி நின்று காண்பார்க்குச் சத்தாகிய பரம் பொருள் காணப்பெறாது. சத்தின் வழிநின்று காண்பார்க்கு அசத்தாகிய பிரபஞ்சம் காட்சிப்படாது என்பது கருத்து. பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பார் பதார்த்தங்கள் பாரார் ... ... . . ... .. . ... ... . சீவன்முத்தர் . f©oUப்பர் (311)m¿îja« 197. தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை தன்னை யறியாமற் றானேகெடு கின்றன் தன்னை யறியு மறிவை யறிந்தபின் தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே. (2355) தன்னையறிதலால் வரும் பயன் உணர்த்துகின்றது. (இ-ள்) ஆன்மா தனது இயல்பை உள்ளவாறு அறிந்து கொள்ளுதலால் தனக்கு வரக்கடவதொரு தீங்குமில்லை. ஆன்மா தன்னியல்பை உள்ளவாறுணராமையினாலேயே தானே (வாழ்க்கைப் பயனையிழந்து) கெடுகின்றான். தனதியல்பினை உள்ளவாறறிதற்கு ஏதுவாகிய சிவ ஞானத்தைத் தந்தருளும் இறைவனை அறிந்தபின்பு தன் தலைவனாகிய இறைவனையே பூசிக்கத் தான் அவனுடன் பிரிப்பின்றியிருத்தலாகிய பேரின்ப நிலையைப் பெறுகின்றான் எ-று. தன்னையறிதலாவது தன்னை இறைவனுக்கு அடிமை யென்றுணர்தல். தம்மை யுணர்ந்தார்க்கன்றித் தலைவனை யுணர்தல் இயலாதென்பார் தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் என்றார் மெய்கண்டார். தனக்கு-ஆன்மாவுக்கு. தன்னையறிதலால் தனக்கு வருவது ஆன்மலாபமாகிய ஊதியமே யன்றி எத்தகைய நட்டமுமில்லை என்பார், தன்னையறியத் தனக்கொரு கேடில்லை என்றார். தன்னியல்பை யறியாமையால் தலைவனையும் அறியப்பெறாது ஆன்மசுத்திப் பின்னுளதாம் சிவப்பேறாகிய பெரும்பயனையிழந்து ஆன்மாவாகிய தனக்கே கேடு சூழ்கின்றான் என்பார் தன்னையறியாமல் தானே கெடுகின்றான் என்றார். தன்னையறியும் அறிவு என்றது, தன்னையறியும் அறிவாகிய தலைவனை. தன்னையறியும் பொழுதே தான் முதலியல்லன் தனக்கொரு தலைவனுள்ளான் என்பதனையும் அறிந்து கொள்வானாதலின் அத் தலை வனில்லாமல் தானில்லை என்பதனை யுணர்ந்து அவனருளிய சிவ ஞானத்தைப்பெற்று அவனையே வழிபட்டு அவனோடு இரண்டறக் கலந்து என்றும் உளனாம் பெருவாழ்வைப் பெறுவான் என்பார், தன்னையறியும் அறிவையறிந்த பின் தன்னையே யர்ச்சிக்கத்தானிருந்தானே என்றார். இதன் கண் தன்னை என்றது தன்ஐ-தன் தலைவன் என்ற பொருளிலும் ஆளப்பெற்றதாகக் கொள்ள இடமுண்டு. தன்னிற்றன்னையறியுந் தலைமகன் எனவரும் (2349) திருமந்திரத்திலும் திருக்குறுந் தொகையிலும் தன்னை என்பது இப்பொருளிற் பயிலுதல் காணலாம். தன் தலைவனை யறியாமையால் தான் ஒரு முதலுண்டு என்பதனை யறியாமலே ஆன்ம லாபத்தை இழக்கின்றான் எனப்பொருள் கொள்ளுதலும் பொருந்தும். தம்மானை யறியாத சாதியாருளரே என்றார் நம்பியாரூரரும். தன் தலைவனை யறிதலால் தன்னையறிதல் என்றது, சிவரூபத்தால் ஆன்ம தரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்மசுத்தியும் பெறுதலை. 198. அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளா லறிந்தே அறிவு வடிவென் றறிந்திருந் தேனே. (2357) குருவினருளால் தன்னைச் சித்தென்றறிந்தமை கூறுகின்றது. (இ-ள்) அறிவுருவே ஆன்மா என்று அறியும் ஆற்றலில்லாத என்னை என் குருநாதனாகிய நந்தி அறிவே ஆன்மாவினுரு வென்னும் உண்மையை அறிவுறுத்தியருளினான். அவனது திருவருளால் என்னுயிரின் வடிவம் அறிவு என்பதனையறிந்து (இவ்வுண்மையை அறிவுறுத்திய) அம் முதல்வனது திருமேனி ஞானமே என்பதனையுணர்ந்து அறிவே வடிவாகிய அவனுடன் பிரியாது ஒன்றியிருக்கும் நிலையினைப் பெற்றேன் எ - று. உயிர்க்கு அறிவு வடிவென்று அறிவுறுத்திய இயல்பினை, ஆறுசுவையும் அருந்தி அவை தம்மை வேறொருவன் கூறியிடும் மேன்மைபோல்-ஆறாறும் ஒன்றொன்றா நாடியுணர்ந் தோதியதில் உற்றறிவாய் நின்றபொருள் தானேகாண் நீ (உண்மை 26) எனவரும் உண்மை விளக்கத்தா லுணராம். பாராதி பூதம் நீயல்லை _ உன்னிப் பாரிந் திரியங் கரணநீ யல்லை ஆராய் உணர்வுநீ என்றான் _ ஐயன் அன்பாய் உரைத்தசொல் ஆனந்தந் தோழி என்றார் தாயுமானாரும். ஆறந்தம் 199. வேதத்தின் அந்தமும் மிக்கசித் தாந்தமும் நாதத்தின் அந்தமும் நற்போத அந்தமும் ஓதத் தகுமெட் டியோகாந்த அந்தமும் ஆதித் கலாந்தமும் ஆறந்த மாமே. (2370) ஆறுவகைச் சமயதத்துவ முடிவுகள் இவையென்பது உணர்த்து கின்றது. (இ - ள்) வேதாந்தம்; அதன் மேம்பட்ட சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், எடுத்தோதுதற்குரிய எண்வகை யுறுப்புக்களுடன் கூடிய யோகாந்தம், முதற்கண் உணரத்தக்க கலாந்தம் எனச் சமயதத்துவ முடிவுகள் அறுவகைப்படும் எ - று. 200. சித்தாந் தேசீவன் முத்திசித் தித்தலால் சித்தாந் தேநிற்போர் முத்திசித் தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலால் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே. (2394) உடல் கருவிகளோடு கூடியும் அவற்றில் அழுந்தாமல் சீவன் முத்தராம் நிலை சித்தாந்தச் செந்நெறிக்குரிய தென்கின்றது. (இ - ள்) சித்தாந்தச் செந்நெறியிலே இவ்வொரு பிறவி யிலேயே சீவன்முத்தி கைவரப்பெறுதலால் அந்நெறியிற் பிறழாது நின்றொழுகவல்லவர் சீவன் முத்தி கைவரப் பெற்றவராவர். மெய்ந் நெறியாகிய சைவ சித்தாந்தமும் உலகியல் நெறியாகிய வேதாந்தமும் ஆகிய இவற்றிற் கூறப்படுவன சிறப்பும் பொது வுமாகிய செம்பொருள்களாதலால் சித்தாந்தமும் வேதாந்தமும் சிவனது சிறப்பியல்பும் பொதுவியல்புமாகிய உண்மைத் தன்மைகளை விளக்கி நிற்பனவாம் எ - று. சித்தாந்தம்-சிவாகமங்களின் முடிந்த முடிபு. சீவன் முத்தியாவது உயிரானது உடம்பு முதலியவற்றோடு கூடிய நிலையிலும் அவற்றிற் பற்றுச் சிறிதுமின்றிச் சிவபரம் பொருளில் அழுந்தி நிற்றல். சித்தித்தல் - கைகூடுதல். செம்பொருள் - முரணில் பொருள். சித்தாந்த வேதாந்தம் சிவனைக் காட்டும் என்க. சிவபெருமான் குருவடிவாய் எழுந்தருளிவந்து அருள் நோக்கமாகிய தீக்கைசெய்து இப்பிறப்பிலேயே சீவன்முக்தராகச் செய்து ஆட்கொண்டு மும்மல அழுக்கைக் கழுவி ஞானக்கடலில் மூழ்கச் செய்து சிவாநந்தம் மேலிடச் செய்து மேல்வரும் பிறவியை யொழித்து முத்தி முடிவாகிய திருவடிக் கீழ் வைத்தருள்வன் என்னும் சித்தாந்த உண்மையினை, சித்தாந்தத் தேசிவன்றன் றிருக்கடைக்கண் சேர்த்திச் செனன மொன்றிலே சீவன் முத்தராக வைத்தாண்டு மலங்கழுவி ஞானவாரி மடுத்தானந்தம் பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவும் உலகரெலா மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவ ரிதுவென்ன பிராந்தி (சித்தி - சுபக் 268) எனவரும் திருவிருத்தத்தில் அருணந்தி சிவாசாரியார் எடுத் தாண்டுள்ளமை காணலாம். பித்தாந்தம் - பித்தத்தின் முடிந்த நிலை - பெரும்பித்து. பிராந்தி - மயக்கம். 201. வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனூல் ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுள்ளன நாத னுரையவை நாடி லிரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே. (2397) வேதம் ஆகமம் என்பன பொருளொருமையுடையன என் கின்றது. (இ - ள்) வேதம் ஆகமம் என ஓதும் இறைவனருளிய மெய்ந்நூல்கள் முறையே உலகியல் நூலாகிய பொது நூல் எனவும் சைவமாகிய சிறப்புநூல் எனவும் இரு வகைப்பட உள்ளன. இறைவன் வாய் மொழிகளாகிய அவ் விருவகை நூல்களும் இருவேறு முடிபினவாதலாற் பேதமுடையன என்பர். இறைவனருள் பெற்ற பெரியோர்க்கு அவ்விருநூற் பொருள்களும் ஒரு தன்மையனவே எ-று. வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க எனவும் உலகியல் வேதநூ லொழுக்க மென்பதும் நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும் எனவும், வேதப் பயனாஞ் சைவமும் போல் எனவும் வரும் சேக்கிழார் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கத் தக்கன. அடித்தலையறியுந் திறங்கூறல் 202. காலுந் தலையும் அறியார் கலதிகள் காலந்தச் சத்தி யருளென்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர் காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே. (2425) திருவடி வைப்பாம் ஞானதீக்கை யாமாறு கூறுகின்றது. (இ-ள்) தீக்குணமுடையோர் கால் தலை என்பதன் பொருளறிய மாட்டார். கால் என்பது இறைவனது அருளாகிய சத்தி என்பர் (அறிந்தோர்). அவ்வருளாகிய காரணத்தில் பகுதியினால் ஆன்மாவில் பொருந்தும் ஞானமே பண்புடைய தலையெனப்பெறும். இறைவனது சத்தியாகிய திருவடி அத்தகைய ஞானத்தை உயிர்க்குக் காட்டியருள அவ்வான்மா வீடுபேற்றிற் குரியதாகும். எ-று. கால், தாள் என்னும் சொற்கள் இறைவனது திருவருளாகிய திருவடியைக் குறிப்பன. தலை என்பது, அத் திருவருளால் ஆன்மாபெறும் சிவஞானத்தைக் குறித்து. கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின் என்புழித் தாள் என்பது இறைவனது திருவருளையும் தொழுதல் என்பது அருள் காரணமாகவுளதாம் ஞானத்தோடு ஒன்று தலையும் குறிப்பான் உணர்த்தி நிற்றல் அறியத்தக்கதாகும். தாள்தந் தளிக்குந் தலைவனே சற்குரு தாள்தந்து தன்னை யறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவா தீதச் சதாசிவம் தாள்தந்து பாசந் தணிக்குமவன் சத்தே. (2049) எனவரும் திருமந்திரமும் இங்கு நினைக்கத்தகுவதாகும். தருவா யெனக்குன் திருவடித் கீழோர் தலைமறைவே என்பது அப்பர் அருள்மொழி. 203. சிந்தையி னுள்ளே எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை யறியகி லானாகில் எந்தையை யானும் அறியகிலேனே. (2428) இதுவும் அது. (இ-ள்) என் நெஞ்சத்தினுள்ளே எம்பெருமானது திருவடி நிலைபெற்றுளது. எனவே அதுகாரணமாக என் நெஞ்சமும் எம்பெருமானது திருவடிக்கீழ்ப் பொருந்தி நிலை பெற்றுளது. என் தந்தையாகிய இறைவனும் எளியேன் உய்திபெற வேண்டும் என்னும் திருவருட் குறிப்பினை உளங் கொளானாயின் எந்தையாகிய இறைவனை ஞானமிலா தேனாகிய யானும் நினைந்து உய்திபெறுதற்கு இயலாதவனாவேன். எ-று. என்னையேதும் அறிந்திலன் எம்பிரான் தன்னைநானும் பிரானென் றறிந்திலேன் என்னைத் தன்னடியா னென்றறிதலும் தன்னை நானும் பிரானேன் றறிந்தேனே. என்பது திருக்குறுந்தொகை. முக்குற்றம் 204. காமம் வெகுளி மயக்க மிவைகடிந் தேமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி ஓமெனும் ஓசையி னுள்ளே யுறைவதோர் தாம மதனைத் தலைப்பட்ட வாறே. (2436) மூவகைக் குற்றங்களும் கெட மெய்யுணர்வின் பயனை எய்துமாறு கூறுகின்றது. (இ-ள்) விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக் குற்றங்கள் மூன்றனையும் நீக்கிப் பாதுகாவலாயுள்ள மெய்ப் பொருளைச் சிக்கெனப் பிடித்திருந்த எளியேனுக்கு (உள்ளிருந்து) ஒலிக்கும் மணியாய் ஓம் என்னும் பிரணவ ஓசையினுள்ளே தங்கியதோர் ஒளிப்பிழம்பினை எய்தப்பெற்றமை எண்ணி இன்புறத்தகுவதாம். எ-று. நில்லாதவற்றை நிலையினவென்றும் அசுத்தத்தைச் சுத்தமென்றும் துன்பத்தை இன்பமென்றும் தானல்லாத பொருளைத் தானென்றும் திரியக் காணும் உணர்வாகிய அவிச்சையும், அதுபற்றி அவற்றை யானென மதிக்கும் அகங் காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் வெகுளியும் எனக் குற்றங்கள் ஐந்தாகும் என்பர் வடநூலார். அவற்றுள் அகங்காரம் அவிச்சையிலும் அவாவுதல் ஆசையிலும் அடங்குதலால் குற்றங்கள் மூன்றாயின. காமம் வெகுளி மயக்க மிவைமூன்றன் நாமங் கெடக் கெடும் நோய் (360) என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும். மூலப் பகுதியினுளவாகிய பும்துவமலமாகிய இக்குற்றங்கள் நீங்குதலே புருடதத்துவத்திற்குச் சுத்தியாகும். இச்சுத்தி மூலப்பகுதியைச் சுத்தி செய்த பின்னரே நிகழ்வதாகும். காரணமாகிய இக் குற்றங்களைக் கடிந்தார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின் எல்லாப் பொருட்குஞ் சார்பாகிய செம் பொருளைப்பற்றி இன்புறுவர் என்பார், இவை கடிந்து ஏமம் பிடித்திருந்தேனுக்கு என்றார் ஏமம் என்றது எப்பொருட்குஞ் சார்பாய்ப் பாதுகாப்பளிக்குஞ் செம்பொருளை. அதனை இடைவிடாது தியானிப்போர் தம்முள்ளே ஓங்கார ஓசையினையும் அதனுள் ஒளியுருவாகிய சிவத்தினையும் கண்டு இன்புறுவர் என்பார், ஓமெனும் ஓசையினுள்ளே யுறைவதோர் தாமம் அதனைத் தலைப்பட்டவாறே என்றார். தாமம்-ஒளி. ஓங்காரத்துள் ளொளிக்குள்ளே முருகன் உருவங்கண்டு தூங்கார் என்றார் அருணகிரிநாதரும். 205. ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனே. (2335) மனத்தகத்தானாகிய இறைவனைத் தலைமேலானாக வைத்து வணங்குமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) உள்ளிருந்து சுரக்கும் அருவியினையுடைய உயர்ந்த மலையில் உச்சியின்மேல் நதியின்றி வெள்ளம் பெருகும் அரிய தடாகம் ஒன்றுளது. அத்தடாகத்தினுள்ளே சேற்றின் தொடர் பின்றிப் பூக்கும் செழுமை பொருந்திய கொடியிலுள்ள தாமரைப்பூவையன்றிக் கட்டு அமைந்த சடையினனாகிய எம்பெருமான் வேறுமலரை விரும்பி யணியமாட்டான் எ - று. ஊறும் அருவி உயர்வரையுச்சி என்றது, புருவநடுவாகிய ஆஞ்ஞைத் தானத்தினை. அதன்மேல் குளம் என்றது உச்சிக்குமேல் 12 அங்குல நிலையி லுள்ளதெனப்படும் மீதானத்தினை. சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூ என்றது, சுழுமுனை முடிவிலுள்ள ஆயிரவிதழ்த் தாமரையாகிய ஸகராரத்தை என்பர். தலைமேலுளதெனப்படும் மீதானமாகிய அரியகுளத்தில் மலர்ந்த தாமரைப்பூவே இறைவன் விரும்பி யணியத்தக்க நறும் பூவாகும் என்பதாம். மனத்தகத்தான் தலைமேலான் எனவும் அப்பூதி குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய் எனவும் வரும் அப்பர் அருள்மொழிகள் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தக்கன. 206. வினையா லசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவீட வீடென்னும் வேதமும் ஓரார் வினையாளர் மிக்க விளைவறி யாரே, (2557) வினைநீக்கமே மெய்யுணர்வு பெறுதற்கும் வீடுபேற்றிற்கும் வழிசெய்யும் என்கின்றது. (இ-ள்) வினைத் தொடர்பு உள்ளவரையும் அதனால் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றி நிகழும் விபரீத வுணர்வும் ஆகிய அசத்துக்கள் விளையும் என்பதனை உணரமாட்டார். மெய்யுணர்வுடைய ஆசிரியன் அருள்பெற்ற வழி வினையொழிந்து போம் என்பதனையும் உணரமாட்டார். வினையொழியவே பாசங்களினின்றும் விடுபடுதலாகிய வீடு பேறுளதாம் என்னும் மெய்ந்நூற் பொருளையும் ஓதியுணர்ந் திலர். வினைத்தொடர்பிற் பட்டோர் வினைகாரணமாக வுளவாம் மிக்க துன்ப விளைவினை அறியமாட்டாராயினர் எ-று. உடம்பின்கண்ணதாகிய பிராரத்த வாசனை உயிரைத் தாக்குவதாக உள்ள அளவும் அதனால் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றிக் காட்சிப்படும் மண்முதல் மாயைகளும் அவைபற்றி நிகழும் விபரீத வுணர்வும் ஆகிய அசத்துக்கள் நீங்கிவழியும் மீண்டும் உயிரை வந்துகூடும் இயல்பின ஆதலால் அதற்கெல்லாம் மூலமாகிய பிராரத்த வாசனை அடியோடு நீங்கினாலன்றி அவ்வசத்தைக் கீழ்ப்படுத்து மெய்யுணர்வு மேலோங்குதல் இயலாது. ஆகவே பிராரத்த வாசனை பற்றறக் கழிதற்பொருட்டு மெய் யுணர்வுடையாரை நாடி வழிபடுதல் வேண்டும். அவ் வழிபாட்டினால் வினை நீங்கி மெய்யுணர்வு மேம்பட்டு நிகழும். ஆதலால் மெய்யுணர்வுடைய சிவஞானிகளை வழிபடுவாயாக என அறிவுறுத்துவது, வினையா லசத்து விளைதலான் ஞானம் வினைதீரி னன்றி விளையா _ வினைதீர ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும் ஆனந்தால் அன்பிற் றொழு. (79) எனவரும் சிவஞான போத உதாரணவெண்பாவாகும். இதன்கண் ஞானம் என்றது சிவஞானிகளை. இவ்வெண்பா மேற்குறித்த திருமந்திரத்தினை அடியொற்றி யமைந்துள்ளமை காண்க. மகாவாக்கியம் 207. நீயது வானா யெனநின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகுமே. (2577) வேதத்துட் கூறப்படும் மகாவாக்கியப் பொருளைக் குரு முகமாக வுணர்ந்து பயன்பெறுமாறு கூறுகின்றது. (இ-ள்) நீ அது ஆனாய் என்னும் பொருளில் ஆசிரியன் அறிவுறுத்திய தத்துவமசி என்னும் மகாவாக்கியம் அது நான் ஆனேன் என்னும் பொருளில் சிவோகம் பாவனையாக மாணவனுளத்துப் பொருந்தித் தான் என்னும் தற்போதம் கெட, சீர்த்திமிக்க நந்தியாகிய குருவின் பெருங்கருணை ஆன்மாவைச் செம்பொருளாகிய சிவத்தோடு இரண்டறக் கலக்கும்படி ஒன்றுவிக்கும். (குருவின் திருவருளால்) சிவமாகிய அவ்வுயிரானது எல்லையற்ற பேரின்ப நிலையை யெய்தி இன்புறுவதாகும் எ-று. நீயது வானாய்-தத்துவமசி. பேருரை-மாகவாக்கியம். இவ்வார்த்தை ஆசிரியன் உணர்த்தும் நிலையில் அமைந்தது. இதன் பொருளை மாணவன் சிந்திக்கும் முறை அது நான் ஆனேன் என்பதாகும். சமைந்து அறுதல்-உள்ளத்துப் பொருந்தித் தான் என்னும் தற்போதம் கெடுதல். சேய சிவம்-செம்மையே யாய சிவபரம் பொருள்; சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் தூராதி தூரமாய் அப்பாற்பட்டுள்ள பரம்பொருள் எனினும் அமையும். நணியானே சேயானே எனப் போற்றுவர் நாவுக்கரசர். சீர்நந்தி பேரருள் சேய சிவமாக்கும் என இயையும். ஆயது-அவ்வாறு சிவத்தோடு ஒன்றாகிய அவ்ஆன்மா. அனந்த ஆனந்தி-எல்லையற்ற பேரானந்தத்தை யுடையது. கண்ட இவை யல்லேன்நான் என்றகன்று, காணாக் கழிபரமும் நானல்லேன் எனக்குருதிக் கசிந்த தொண்டினொடும் உளத்தவன்றான் நின்ற கலப்பாலே சோகம் எனப்பாவிக்கத் தோன்றுவன் வேறின்றி விண்டகலு மலங்களெலாம் கருடதியா னத்தால் விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் பண்டைமறைகளும் அதுநான் ஆனேன் என்று பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே (298) எனவரும் சித்தியார் இத் திருமந்திரத்தின் விளக்கமாகும். 208. அறிவறி யாமை யிரண்டு மகற்றிச் செறிவறிவாய் எங்கும் நின்ற சிவனைப் பிறிவறியாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே. (2580) மகாவாக்கியப் பொருளாகிய சிவத்தினைத் தரிசிக்குமாறு உணர்த்துகிறது. (இ-ள்) (சுட்டு) அறிவாகிய சகலாவத்தையும் (எதனையும்) அறியாமையாகிய கேவலாவத்தையும் ஆகிய இரண்டினையும் (சிவஞானத்தினால்) நீக்கி (பொருள்தோறும்) செறிவுடையதாய் அறிவேயுருவாய் எங்கும் நீக்க மறக் கலந்துநின்ற சிவபெருமானை ஆன்மபோதத்தால் வேறாக நின்றுணராது அவனருளோடு ஒன்றியிருந்து எம் முயிர்க்குயிராய பெருமான் என்று அன்பினாற் பேணிப் போற்றும் அருளாகிய இலக்கினையுணராதவர்கள் சிவபரம் பொருளைக் கண்டுகொள்ளும் திறமறியாதார் எ - று. ஆசிரியனது அருள் நோக்கத்தால் இருவகைப் பாசமும் நீங்கிக் கேட்கும் முறையில் கேட்டுச் சிந்திக்கும் முறையிற் சிந்தித்து அன்புசெய்து அருள்வழியடங்கி நிற்கும் இயல்பின்ர்க்கு இறைவனியல்பு கேட்கும் காலத்துப் பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றியும், சிந்திக்குங் காலத்துக் கலப்புப் பற்றி அபேதமாய்த் தோன்றியும், தெளிந்த பின்னர் இவ் விரண்டு மின்றி நுண்ணியனும் பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றிலுந் தோய்விலனாய்ப் பேதாபேதமாய்த் தோன்றியும் நிற்கும் அம்முதல் வனது தன்மை இனிது விளங்கும் என இவ்வாறு தெளிதலின் இயல்பினை விளக்குவது, அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே அறிவுதனை அருளினான் அறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடுங் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாகில் பிறியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப் பிரபஞ்ச பேதமெல்லாந் தானாய்த் தோன்றி நெறியாலே இவையெல்லாம் அல்லவாகி நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதாரனாயே (282) எனவரும் சித்தியாராகும். குழைந்திருத்தல் என்றது ஆன்மசுத்தியை. மேற்கூறியவாறு கேவல சகலங்களிற் பொருந்துதலும் தற்போதும் முனைத்தலும் ஆகிய இரண்டு மின்றி அருளிலே யழுந்தி எங்கும் சிவமயமே காண்டல் சிவதரிசனமாம் என்னும் இவ்விருத்தம் மேற்குறித்த திரு மந்திரத்தின் விளக்கமாதல் காணலாம். அறிவறி யாமை யகன்ற வாருயிர் அறிவறியாத பேரருளைக் குட டிடின் பிறிவறி யாதாவம் பிரானுட் கொண்டுபோய்ப் பறிவறியா வகைவைக்கும் பின்னையே என்னும் பதி பசு பாச விளக்கம் இங்கு நினைத்தற்குரிய தாகும். வாய்மை என்றும் மாறாக மெய்ப்பொருளாகிய வாய்மை யுணர்வுடன் ஒன்றி வாழும் முறையினை உணர்த்துவது. 209. எல்லாம் அறியும் அறிவுதனை விட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே. (2596) வாய்மைப் பொருளை யுணராதார் வாழ்விற் பயனெய்தார் என்கின்றது. (இ-ள்) எல்லாப் பொருளையும் இருந்தாங்கே ஒருங்கு உணரவல்ல சிவஞானத்தினைக் கைவிட்டு உலகநூல்கள் எல்லாவற்றையும் அறிந்திருப்பினும் அந்நிலையில் அக்குறை யறிவால் உயிர்கள் பெறும் ஊதியம் ஒன்றுமில்லை. எல்லாப் பொருள்களையும் ஒருங்கேயறிந்த ஞானப் பொருளாகிய இறைவனைச் சிவோகம் பாவனை செய்யின் அங்ஙனம் தியானித்த ஆன்மா எல்லாவற்றையும் முற்றவுணர்ந்த இறை வனோடு இரண்டறக் கலந்து ஒன்றாம் அத்துவித நிலையினைப் பெறும். எ-று. தூஉய்மையென்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்டவரும் என்றார் திருவள்ளுவர். எல்லாம் அறியும் அறிவு என்றது சுட்டிறந்து உணர்தற் கேதுவாகிய சிவஞானத்தினை. எல்லாம் அறிந்தும்-உலகநூல்களெல்லா வற்றையும் கற்றிந்தும். இலாபம்-ஊதியம். எல்லாம் அறிந்த அறிவு என்றது, ஞானத் திரளாய் நின்ற பரம் பொருளை. நான் என்றல்-அது நான் ஆனேன் எனச் சிவோகம் பாவனை செய்தல். வாய்மையாகிய பரம்பொருளின் அருள்ஞானம் பெறாதார் ஏனை உலகநூல்கள் எல்லாவற்றையும் ஒருங்குணர்ந்தாராயினும் ஒன்றுமுணராதார் என்பதும், அருள் ஞானம்உணர்ந்தார் ஏனையுலக நூற்கல்வி சிறிதுமிலராயினும் எல்லா முணர்ந்தாராவர் என்பதும் உணர்த்தியவாறு. கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன், நற்றாள் தொழாஅ ரெனின் என்பது திருவள்ளுவர் வாய்மொழி. கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கடியேன் என்றதும் இக்கருத்தினதே. ஞானிசெயல் 210. தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலே. (2611) சிவஞானிகளின் செயலுணர்த்துகின்றது. (இ-ள்) தம் சென்னியில் திருவடி சூட்டி உபதேசித்தருளிய சிவகுருவின் அருள் ஞானத்தால் தன் முதல்வனாகிய இறை வனை இடைவிடாது தியானிக்கும் மெய்யுணர் வினராகிய சிவஞானிகள், நெடுங்காலமாகத் தங்களைத் தொடர்ந்து பிணித்துள்ள பழவினைத் தொடக்காகிய பிணிப்பை அவிழ்த்துக் களைவார்கள். உடம்பு முகந்து கொண்ட பிராரத்த வினையை நுகரும்பொழுதே அவற்றிலுள்ள விருப்பு வெறுப்புக்களாகப் பின்வந்து சேரும் ஆகாமிய வினையையும் நுண்ணிதிற்பற்றிப் பிசைந்து பொடியாய்ச் சிதர்ந்தழியச் செய்வார்கள் எ-று தன் என்றது தலைவனாகிய இறைவனை. அறிதல்-இடைவிடாது தியானித்தல். சென்னியில் வைத்த சிவன் அருள் என்றது, இறைவன் குருவாய்த் தோன்றிச் சென்னியில் திருவடி சூட்டியளித்த திருவடி ஞானத்தை. பொய்ம்மாயப் பெருங் கடலிற் புலம்பாநின்ற புண்ணியங்கள் தீவினைகாள் . ......v«kh‹w‹ அடித்தொடர்வான் உழிதர் கின்றேன் இடையிலேன் கெடுவீர்கள இடறேன்மின்னே அவாவறுத்தல் முன்னும் பின்னும் வினைத்தொடர்பறுத்த ஞானிகளுக்கு இடையில் நின்ற உடம்பும் அதுகொண்ட வினைப் பயன்களும் எஞ்சி நிற்றலால் முன்னர்த் துறக்கப்பட்ட புலன்கள்மேல் பழைய பழக்க வாசனையால் ஒரோவழி நினைவு நிகழ்தல் இயல்பு. நினைவளவாகிய அவ் அவாவும் பிறவிக்கு வித்தாம் ஆதலின் அதனை இடைவிடாது மெய்ப் பொருளுணர்வால் வேரறக் களைதல். 211. ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே. (2615) உலகப் பொருள்கள்மேல் வைத்த பற்றினை விட்டொழித் தலின் இன்றியமையாமை யுணர்த்துகின்றது. (இ-ள்) உலகப் பொருள்கள்மேல் பற்றுவைக்க வைக்க அவ்வாசையால் மேல்மேலும் துன்பங்களேயுளவாம். பொருள்கள் மேற் கொண்ட பற்றினைப் படிப்படியாக விட்டொழிக்க விட்டொழிக்க அப்பற்றறுதியால் பேரின்பம் மேன்மே லுளதாகும். ஆகவே ஆசையை வேரறக் களைமின்; ஆசையை வேரறக் களைமின்; உலகப் பொருள் வழித்தோன்றும் அவ் ஆசை ஈசனைக் குறித்த தொடர் புடையதாய் நிகழ்வதாயினும் அதனை வேரறக்களைவீராக. எ-று. ஆசை - புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய யாக்கையின் கண்ணும் உளதாம் பற்று. சித்துப் பொருள் மேல் வைப்பின் அன்பெனப்படும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் (திருக்குறள்-341) ஈசனோடு உளதாம் ஆசையாவது, ஈசனை வழிபடுதல் காரணமாக உலகப்பொருள்கள்மேல் வைக்கும் பற்று. பத்தியுடைமை இறைவன்பாலும் அவனடியார்பாலும் அன்புடையராதல். 212. அடியார் அடியார் அடியார்க் கடிமைக் கடியனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியான் இவனென் றடிமை கொண்டானே. (2624) அடியாரடியார் அடியார்க்கு அடிமை பூண்டொழுகுவோரே இறைவனது திருவருளுக்குரியராவர் என்கின்றது. (இ - ள்) இறைவன் தன் திருவடிக்கு அன்புடையராய அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடித்தொண்டு செய்தற்குரிய அடியனாய் என்னைத் தந்தமையால் தனக்கேயன்றி அவ்வடியவர்க்கும் அடித்தொண்டு பூண்டேன். யான் அத்தகைய அடியவர்களின் திருவருளால் இறைவன் திருவடியிற்சார, இவனே என் அடியனாதற்குத் தகுதி யுடையான் என்று எளி யேனையும் தன்னடியவனாக இறைவன் ஏற்றிருளினான் எ - று. நல்கிட்டு - நல்கிட; செய்தெனெச்சம்காரணப் பொருளில் வந்தது. அடியார்க்கு வழிவழி அடிமையாதல் என்பது இறை வனருளாற் கிடைக்கும் பெரும்பேறென்பதும் அத்தகைய தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமாகிய நற்பேறுடை யவர்களையே இறைவன் தனக்குரிய அடியவனாக ஏற்றருள்வன் என்பதும் அறிவுறுத்தவாறு. புகவே தகேனுனக் கன்பருள் யானென் பொல்லாமணியே தகவே யெனையுனக் காட்கொண்ட தன்மை எனவும் தன்சீரடியார் குலம்பணி கொள்ள எனைக்கொடுத்தோன் எனவும் வரும் மணிமொழிகள் இங்குச் சிந்தித்தற்குரியன. சோதனை உயிர்கள் வாழ்க்கைப் பயன்களை நுகர்தற்குரிய வழிகளாகிய மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்தவம், கலை என்னும் அறுவகை நெறிகளுள், மந்திரம் பதத்திலும் பதம் வன்னத்திலும் வன்னம் புவனத்திலும் புவனம் தத்துவத்திலும் தத்துவம் கலையிலும் அடங்க ஒடுக்கிக் கலையைத் திரோதான சத்தியிலும் திரோதான சத்தியைச் சிவத்திலும் அடங்குமாறு குரு தீக்ஷையினால் மாணாக்கனைச் சோதித்துத் தூய்மை செய்தல். பொல்லாத என்னழுக்கிற் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புநிதன் என்பது திருத்தாண்டகம்: 213. அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறியாமை கடந்தறி வானால் அறிவறி யாமை யழகிய வாறே. (2637) குரு அத்துவாக்களைச் சோதித்துத் தீக்கைசெய்ய அதனால் மாணவனிடத்தே சிவம் பிரகாசிக்குமாறு உணர்த்துகின்றது. (இ-று) சுட்டுணர்வாகிய குறைவுடைய அறிவினையே அறிவு அறிவு என்று சொல்லி அரற்றுவர் உலகத்தார். அறிவு இத்தகைய தென்பதனையும் அறியாமை இத்தகைய தென் பதனையும் அவருள் யாரும் அறியமாட்டார். அறிவும் அறியாமையும் விரவிய தம் நிலையைக் கடந்து அறிவே யுருவாகிய சிவத்தின்வழி யடங்கிநிற்பாராயின் அவர்தம் சுட்டறிவினால் அறியாமையாகிய தற்சேட்டை கெட நிற்கும்நிலை மிகவும் சிவப்பிரகாசமாகிய பேரழகினைத் தருவதாம் எ - று. அறிவு என்றது, கருவிகளின் நீங்கிச் சிவஞானத்தினால் முற்றிலும் அறிவே விளங்கப்பெறும் சுத்தாவத்தையினை. அறியாமை என்றது, கருவிகளுடன் கூடாமையால் ஒன்றும் விளங்காமையாகிய கேவலாவத்தையினை. அறிவறியாமை என்றது, அறிவும் அறியாமையும் விரவிய சகலா வத்தையினை. அறிவாதல் சுத்த அறிவாகிய சிவஞானத்துடன் பொருந்துதல். அறிவு அறியாமை என்றது சுட்டுணர்வாகிய அறிவினால் அறியாமை; என்றது ஓங்குணர்வாகிய சிவஞானத்துள் ஒடுங்கித் தற்போதம் கெடுதல். ஒன்பதாந் தந்திரம் இது, தச காரியத்துள் ஒன்றாகிய சிவபோகம் என்னும் பேரின்ப நிலையை விளக்கும் முறையில் அமைந்துளது. இங்குச் சிவபோகம் என்றது, உயிர் சிவயோகத்தாற் சிவத்துடன் கூடிய நிலையில் தன்னைமறந்து சிவனது பேரருளில் திளைத்து இன்புறுதலாகிய சிவ சாயுச்சிய நிலையினை. இவ்வொன்பதாந் தந்திரம் குருமட தரிசனம் என்பது முதலாகச் சர்வ வியாபி என்பதீறாக இருபத்திரண்டு உட் பிரிவுகளையுடையது. இதன்கண் கூறப்படும் குருமட தரிசனம், ஞானகுரு தரிசனம், திருக்கூத்துத் தரிசனம், ஆகாசப்பேறு, ஞானேதயம், சத்திய ஞானானந்தம், சோரூப உதயம், சிவதரிசனம், சிவரூப தரிசனம் என்னும் பகுதிகள் சிவயோகியர்களின் அநுபவநிலையைக் குறிப்பன. பிரணவசமாதி, தூல சூக்கும அதிசூக்கும பஞ்சாக்கரங்கள், மோனசமாதி என்னும் பகுதிகள், எல்லாப் பொருள்களையுந் தன்னகத்தே அடக்கியுள்ள திருவைந்தெழுத்தினை அவ்வத் தானங்களில் வைத்துத் தியானிக்கும் நிலையில் சிவபோகத்து அழுந்துந் திறத்தினைத் தெளிய விளக்குவன. இப்பகுதிகளிற் கூறப்படும் நுட்பங்கள் உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன் முதலிய ஞானநூல்களில் எடுத்தாளப் பெற்றன. திருக்கூத்துத் தரிசனம் என்ற பகுதி சைவத்தின் மிகச் சிறந்த நுண்பொருள்களை விளக்குவது. இதிற் கூறப்படும் சிவானந்தக் கூத்து என்பது சிவஞானிகள் என்றும் தம் மெய்யுணர்விற் கண்டுகளிக்கும் ஆனந்தக் கூத்தாகும். இதனை அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞானமே யான அம்பலமுந்தம் உண்ணிறைந்த ஞானத்தெழும் ஆனந்த ஒருபெருந் திருக்கூத்தும் (பெரிய-ஞான-150) என்பர் சேக்கிழார். குறியொன்று மில்லாத கூத்தன்றன் கூத்து என்பர் வாதவூரடிகள். பக்குவமுடைய சிவஞானிகளுக்குச் சிறப்பு முறையில் அவர் தம் மெய்யுணர்வில் நின்று நிகழ்த்தப் பெறும் இத்திருக்கூத்தினை யன்றி, உலகவுயிர்கள் யாவும் நலம்பெற் றுய்தல்வேண்டும் என்னும் பொதுநிலையில் இறைவனால் நிகழ்த்தப் பெறுந் திருக்கூத்து சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து என்னும் தலைப்புக்களில் இத்தந்திரத்தில் விரித்துரைக்கப்பெற்றுளது. இதன்கணுள்ள சூனிய சம்பாஷணை என்ற பகுதி, உணர்தற்கரிய நுண்பொருள் களைக் கேட்போர் எளிதின் மனங்கொள்ளும்படி உருவகவாய் பாட்டால் பிறிது மொழிதல் என்னும் அணிநலமமைய மறைத்துக் கூறும் முறையில் அமைந்துளது. இதன் இறுதியிலுள்ள வரையுறைமாட்சி, அணைந்தோர் தன்மை, தோந்திரம், சர்வ வயாபி என்னும் தலைப்பிலமைந்த திருமந்திரப் பாடல்கள், பசுகரணங்களெல்லாம் சிவகரணங்களாகப் பெற்றுச் சிவ போகத்தில் திளைத்து இன்புறும் அருளாளர்களாகிய சீவன் மூத்தர்களது இயல்பினைப் புலப்படுத்துவன. ஞானகுரு தரிசனம் 214. ஆயன நந்தி யடிக்கென் தலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தவென் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணவென் கண்பெற்றேன் சேயன நந்திக்கென் சிந்தை பெற்றேனே. (2658) ஞானகுரு வைத் தரிசித்தற் கேற்ற முறைமையும் சாதனங்களும் ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) ஈன்ற தாயினைப் போன்ற பேரன்புடைய நந்தியாகிய எனது குருவின் திருவடியை வணங்குதற் கெனவே அவனருளாற் சென்னியைப் பெற்றுள்ளேன். வாழ்த்துவார் வாயின்கண் எழுந்தருள் வானாகிய நம் நந்தியை வாழ்த்துதற்கெனவே என் வாயினைப் பெற்றுள்ளேன். என் உடம்பிடத்தானாகிய நம் நந்தியைக் கண்டு மகிழ்தற்கெனவே கண்களைப் பெற்றுள்ளேன். எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டுச் சேய்மையிடத்தானாகிய நம் நந்தியைச் சிந்தித்தற்கெனவே திருந்திய சிந்தையைப் பெற்றுள்ளேன். எ-று. ஆய் அன்ன-தாயினை யொத்த. தாய்போல் தலையளித் திட்டு என்பது திருவாசகம். வாயன் நம் நந்தி எனவும் காயன் நம் நந்தி எனவும் சேயன் நம் நந்தி எனவும் மகரவொற்று விரித்துப் பொருள் கொள்க. காயம்-உடம்பு. காயத்தன் எனற்பாலது அம்மீறுகெட்டுக் காயன் என்றாயிற்று; வேதத்தன் எனற்பாலது வேதன் என வழங்குதல் இங்கு ஒப்புநோக்கற் பாலதாகும். சேயன்-சிந்தைக்கும் மொழிக்குஞ் சேய்மையானவன். வாழ்த்துவார் வாயிடத்தான் என்பார் வாயன் என்றார். வாழ்த்துவார் வாயானே என்பது அப்பர் அருள்மொழி. இறைவன் உயிர்களின் உடம்பிலும் கலந்துள்ளமை மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான் எனவும் இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் எனவும் வரும் அருளிச் செயல்களாற் புலனாம். வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சுந் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை எனவும்; வணங்கத் தலைவைத்து வார்கழல் வாய்வாழ்த்தவைத் திணங்கத்தன் சீரடியார் கூட்டமும் வைத்து எனவும் சிந்தனை செய்யமனம் அமைந்தேன் செப்ப நாவமைத்தேன் வந்தனை செய்யத் தலையமைத்தேன் கைதொழ வமைத்தேன் ந்தனை செய்வதற் கன்பமைத்தேன் மெய்யரும்ப வைத்தேன் வெந்த வெண்ணீறணி யீசற் கிவையான் விதித்தனவே (பொன்-92) எனவும் வரும் திருமுறைகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன. 215. கருடன் உருவங் கருது மளவிற் பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவங் குறித்த அப்போதே திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. (2659) ஞானகுரு தரிசனத்தா லுள தாம் பயன் உணர்த்துகின்றது. (இ - ள்) மந்திர வுருவினதாகிய கருடனது வடிவினை மாந்திரிகன் தனது வடிவாக ஒன்றித் தியானிக்கு மளவிற் பெரிய நஞ்சு தீர்ந்து மரணபயங் கெட்டொழியுமாறு போன்று குருவின் திருமேனியைக் கண்டு தியானித்த அப்பொழுதே மும்மல அழுக்கு தன்னைவிட்டு நீங்க அம்மாணவன் சிவமாந்தன்மையினை அடைந்து இன்புறுவன் எ - று. கருட தியானத்தால் விடம்நீங்க மரணபயந்தவிர்தல் போல் குருவைத்தரிசித்துச் சிவமாகத்தியானிக்கும் பாவகத்தால் மும்மலம் நீங்கச் சிவனுடன் அத்துவிதமாந் தன்மையைப் பெறுவன் என்பதாம். ஆதிபௌதிகம், ஆதிதைவிகம், ஆதியான்மிகம் எனக் கருடன் மூவகைப்படும். உலகத்திற் காணப்படும் கருடன் ஆதி பௌதிக கருடன். அதற்கு அதிதெய்வமாய் மாந்திரிகண் உள்ளத்தில் அதுபோல் வைத்துத் தியானிக்கப்படும் மந்திர ரூபமாகிய கருடன் ஆதிதைவிக கருடன். அம்மந்திர ரூபமே தானாக தன்னறிவு அதன் வயத்ததாம்படி உறைத்து நிற்குமாறு ஒன்றித் தியானிக்கும் பாவனை கருட பாவனையாகும். அம்மந்திரம் இடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும். சுட்டியுணரப்பட்ட பிரபஞ்சத்தை இது சத்தன்று இது சத்தன்று என ஒரோவொன்றாக வைத்து நோக்கி, அவ்வாறு கண்டுணர்ந்த தன்னறிவின் கண்ணே சுட்டுணர்வின்றி அண்ட முதலாய் நின்ற இறைவனை ஆராய்ந்து அவன் நான் எனப் பாவிப்பானாயின் அப்பாவனையால் அத்துவிதமாய் விளங்கித் தோன்றும் முதல்வனால், அனாதியாய்க் கூடி நின்ற சுட்டுணர்வாகிய பொதுவியல்பினைத் தான் விட்டு நீங்குமாறு, ஒள்ளிய கருட தியானித்தில் விளங்கித் தோன்றும் கருடனால் அப்பாவகன் விடத்தைத் தீர்த்துக்கொள்ளுமாறு போலாம் என்பார், கண்டதை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய் அண்டனை யான்மாவி லாய்ந்துணரப் _ பண்டணைந்த ஊனத்தைத் தான்விடுமா றுத்தமனின் ஒண்கருட சானத்தில் தீர்விடம்போல் தான் என்றார் மெய்கண்டதேவர். கண்டவிவையல்லேன் என வரும் சித்தியார் கருத்தும் இதுவே. சூக்கும பஞ்சாக்கரம் 216. சிவனரு ளாய சிவன் திரு நாமஞ் சிவனரு ளான்மாத் திரோத மலமா(ம்)யை சிவன் முதலாகச் சிறந்துநீ ரோதப் பவம தகன்று பரசிவ னாமே. (2711) சூக்கும வைந்தெழுத்தின் இயல்பினையும் அதனை விதிப்படி ஓதுவார் பெறும் பயனையும் உணர்த்துகின்றது. (இ - ள்) இறைவனது திருவருளாகிய ஞான நடனத்தை யுணர்த்தும் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தில் சிகரம் இறைவனையும் வகரம் அருளாகிய சத்தியினையும் யகரம் உயிரையும் நகரம் (அதனை மறைத்த) திரோதான சத்தியையும் மகரம் ஆணவ மலத்தையும் குறிப்பன. நீவிர் (அவ்வைந்தெழுத்தின் பொருளையுணர்ந்து) சிகர முதலாகச் சிறப்புடன் ஓதுவீராயின் நும்முயிர் பிறவித்துன் பத்தின் நீங்கிப் பரம்பொருளாகிய சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றாம் எ - று. கன்மம் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்குதலின் வேறு கூறப்படவில்லை. மகரம் ஆணவமலத் தையே குறிப்பது. ஆயினும் அழுக்கு நீக்கும் உவர்மண் போன்று அம்மலத்தைக் கழுவுதற்கென இறைவனாற் கூட்டப்பட்டது மாயை என்பார் அதனையும் மலத்தொடு இணைத்து மலமாயை என ஒருங்கு குறித்தார் எனக் கருத வேண்டியுள்ளது. இத்திரு மந்திரத்தை அடியொற்றி இதன் விளக்கமாக அமைந்தது, சிவனரு ளாவி திரோதமல மைந்தும் அவனெழுத் தஞ்சி னடைவாம் _ இவனின்று நம்முதலா ஓதிலருள் நாடாது நாடும்அருள் சிம்முதலா ஓதுநீ சென்று எனவரும் உண்மை விளக்கமாகும். இதன்கண் கன்மமும் மாயையும் தனித்துச் சொல்லப்படவில்லை. மாயையும் கன்மமும் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்குதலின், திரோதான சத்தியின் இலக்கணங் கூறவே மாயை கன்மங்களது இலக்கணமுங் கூறியவாறாதலறிக (சிவ - பாடியம். சூ-5) என விளக்குவர் சிவஞான முனிவர். எனவே இத் திருமந்திரத்தின் இரண்டாமடி. சிவனரு ளான்மாத் திரோத மலமாம் என்றிருத்தல் வேண்டும் எனத் தோற்றுகின்றது. திரு வைந்தெழுத்து இறைவன் திருவருளின் வண்ணமாய தென்பதனை ஆதியா ரருளாய வஞ்செழுத் தோதியேறினார் உய்ய உலகெலாம் எனவரும் சேக்கிழார் வாய்மொழியால் இனிது புலனாம். திருவாய்ப் பொலியச் சிவாயநம வென்று நீறணிந்தேன் நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப் பெற்றேன் எனவரும் திருமுறைத் தொடர்கள் சூக்கும் பஞ்சாக்கரத்தின் உருவினைப் புலப்படுத்தல் காண்க. 217. சிவசிவ வென்கிலர் தீவினை யாளர் சிவசிவ வென் றிடத் தீவினை மாளும் சிவசிவ வென்றிடத் தேவரும் ஆவர். சிவசிவ வென்னச் சிவகதி தானே. (2716) திருவைந் தெழுத்தினை ஓதாதாரது இழிவும் ஓதுவார் பெறும் பயனும் உணர்த்துகின்றது. (இ-ள்) முன்னைத் தீவினைத் தொடக்கிற்பட்டோர் சிவசிவ எனத் திருவைந்தெழுத்தினை ஓதவல்ல உணர்விலராயினர். சிவசிவ எனக் காதலாகிக் கசிந்து ஓதுவாராயின் அன்னோரைப் பற்றிய எல்லாத் தீவினைகளும் மாய்ந்தொழியும். சிவசிவ என ஓதுதலால் (இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்றவாறு இன்பமே நுகரும்) தேவருமாவார்கள். சிவசிவ என்று இடைவிடாது ஓதச் சிவகதியாகிய வீடுபேறு தானே வந்தடையும் எ-று. திருவைந் தெழுத்தின் சிறப்புணர்ந்து ஓதுதற்கும் முன்னைத் தவம் வேண்டுமென்றும் அவ்வாறு ஓதும் உணர்வினைத் தடுத்து நிற்பது முன்னைத் தீவினை யென்றும் உணர்த்துவார், தீவினையாளர் சிவசிவ என்கிலர் என்கிறார். என்கிலர்-என்று ஓதும் ஆற்றலைப் பெற்றிலர். திருவைத் தெழுத் தோதுதலால் பாசநீக்கமும் சிவப்பேறும் உண்டாம் என்பது கருத்து. அதிசூக்கும பஞ்சாக்கரம் 218. சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ வென்றென்றே சிந்தை அவாயங் கெடநிற்க ஆனந்தமாமே. (2718) அதிசூக்கும வைந்தெழுத்தின் அமைப்பும் அதனை ஓதுதலால் வரும் பயனும் உணர்த்துகின்றது. (இ-ள்) சிவாயநம வென்னும் திருவைந்தெழுத்தின் துணையால் சித்தத்தை ஒருவழிப்பட நிறுத்தித் தற்போதத்தால் உளவாம் அச்சம் அறவே யொழிய (திரோதமலங்களை யுணர்த்தும் நம என்பதனை விலக்கி) ஆன்மாவை இறைவனுக்கு மீளாவடிமையுடையதாக்கிச் சிவாய சிவ சிவ என்று இவ்வாறு திருவைந் தெழுத்தைச் சிந்தையில் எண்ணித் தற்போதத்தால் உண்டாம் அச்சமகலச் சிவபரம் பொருளை ஒன்றியுணர்தலால் சிவானந்தமாகிய பேரின்பம் விளையும் எ-று. ஆன்மா ஆணவமலமாகிய குற்றத்துடன் கூடிய நகரத்திற்கும் அருளாகிய வகரத்திற்கும் இடையே நிற்கும் நிலையினை யுணர்த்தும் முறையில் அமையாது, யகரமாகிய உயிர் வகரமாகிய அருளினாலே அவ்வகரத்திற்கும் சிகரமாகிய சிவத்திற்கும் இடையே நிற்கும் தூயநிலையினையுணர்த்துவது சிவாயசிவ என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரமாகும் என்பது குருமுகமாகத் தெளியத்தக்கதாகும். இந்நுட்பத்தினை, ஆசினவா நாப்பண் அடையா தருளினால் வாசியிடை நிற்கை வழக்கு (89) எனவரும் திருவருட் பயன் உணர்த்துகின்றது. உடையாள் உன்றன் நடு விருக்கும் உடையாள்நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேனுன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரியாய் பொன்னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும்வண்ணம் முன்னின்றே எனவரும் திருவாசகம் சத்தியும் சிவமும் ஒத்திருபாலுற முத்தியாகும் முறைமையருளிய உண்மை யை அறிவுறுத்து வதென்பர் சீகாழித் தாண்டவராயர். திருக்கூத்துத் தரிசனம் 219. எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்கும் தங்குஞ் சிவனருள் தன்விளை யாட்டதே. (2722) இறைவனது திருக்கூத்தினைக் தரிசிக்குமாறு கூறுகின்றது. (இ-ள்) உலகப் பொருள்கள் தோறும் சிவனதுசத்தியாகிய திருவருள் கலந்து நிற்றலால் எவ்விடத்துப் பொருளும் அம்முதல்வனுக்குரிய திருமேனியேயாகும். நிற்பன நடப்பனவாகிய பொருள்கள் எங்கும் அவனது அருளியக்க மாகிய திருக்கூத்து நடைபெறுதலால் எல்லா இடங்களும் அவனது திருக்கூத்து நிகழும் சிற்றம்பலமாகும். இவ்வாறு எவ்விடத்தும் சிவபரம் பொருளே உள்ளும் புறம்பு மாய்க் கலந்து நிற்றலால் பார்க்கும் இடங்கள் யாவும் நீக்கமறத் தங்கும் சிவபெருமானது அருள் விளையாடலே இடையீடின்றி நிகழ்வதாகும் எ - று. எங்கும் சிவசத்தியாதலால் எங்குந் திருமேனி எனவும், எங்குந் திருநட்டமாதலால் எங்கும் சிதம்பரம் எனவும், எங்கும் சிவமாயிருத்தலால் உலகம் எங்கெங்கும் தங்கும் சிவன்தன் அருன்விளையாட்டே நிகழ்வது எனவும் அவனது அருளாற் கண்டு வழிபடுதலே திருக்கூத்துத் தரிசனமாகும் என்பதாம். சிவானந்தக்கூத்து 220. பூதங்கள் ஐந்திற் பொறியிற் புலனைந்தில் வேதங்கள் ஐந்தின் மிகுமாகமந் தன்னில் ஓதுங் கலைகாலம் ஊழியுடன் அண்டப் போதங்கள் ஐந்திற் புணர்ந்தாடுஞ் சித்தனே. (2730) இதுவும் அது. (இ - ள்) எல்லாம்வல்ல சித்தனாகிய சிவபெருமான், ஐம்பெரும் பூதங்களிலும், அவையிடமாக அறிதற்கு வாயில் களாகிய ஜம்பொறிகளிலும், அப்பொருள்களின் வழி நிகழும் ஐம்புல நுகர்வுகளிலும், வேதங்களின் மெய்ப்பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்திலும், வேதத்தின் மிக்க ஆகமங்களிலும் ஓதியுணரத்தக்க கலைகளிலும், உயிர்களின் நுகர்ச்சியை வரையறுக்கும் காலத்திலும், அதன் எல்லையாகிய ஊழியிலும், அண்டத்துணர்வாகிய சுவை முதலிய ஐந்திலும் வேறறக் கலந்து நின்று திருக்கூத்தினை இயற்றியருள்கின்றான் எ - று. சித்தன் ஐந்திற் புணர்ந்து ஆடும் என இயையும். புணர்தல் - வேறறக் கலத்தல். நிலம் நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன், புலனாய மைந்தனோடு எண் வகையாய்ப் புணர்ந்து நின்றான் என்பது திருவாசகம். இத் திருக்கூத்தின் இயல்பினை, பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே எனத் திருவாதவூரடிகள் கண்டு போற்றிய திறம் இவண் கருதத் தகுவதாகும். என்னத்தன் ஆடல்கண்டு இன்புற்றதால் இவ்விரு நிலமே (4-81-9) என அப்பரடிகளும், வானந்தம் மண்ணினந்தம் வைத்து வைத்துப் பார்க்க எனக்கு, ஆனந்தந்தந்த அரசே பராபரமே எனத் தாயுமானாரும் அருளிய பொருளுரைகள் இங்குக் கருதத்தக்கன. சுந்தரக்கூத்து 221. அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பால் உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேற் கண்டங் கரியான் கருணை திருவுருக் கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானே. (2732) இறைவனது அழகிய திருக்கூத்தின் தன்மையினை விளக்கு கின்றது. (இ - ள்) ஏழண்டங்களுக்கு அப்புறத்தும் அதற்கு அப்பாலும் விரிந்துள்ளது ஒன்று உண்டு என்று கூறப்படும் சத்தியாகிய திருவருள் சதாசிவ தத்துவத்தின் உச்சியின் மேல் விளங்க அங்கு நீலகண்டனாகிய சிவன் கருணையே திருவுருவாகக்கொண்டு உமையம்மையார் கண்டு களிக்க அழகியதிருக்கூத்தினை விரும்பி புரிந்தருள்கின்றான். எ-று. இறைவனது அருளாகிய சத்தி ஏழண்டங்களுக்கும் அப் புறத்து அப்பால் கடந்துவிளங்குவது என்பார், அண்டங்கள் ஏழினுக்கு அப்புறத்து அப்பால் உண்டென்ற சத்தி என்றார். ஏழண்டத் தப்பாலான் என்பர் திருநாக்கரசரும். சதாசிவத்து உச்சி என்றது, சதாசிவ தத்துவத்தையுங் கடந்த திருவருள்மயமான நிலையினை. இத் திருமந்திரப் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி அற்புதக் கோலம்நீடி யருமறைச் சிரத்தின்மேலாம் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றிபோற்றி. எனவரும் திருத்தொண்டர் புராணச் செய்யுளாகும். ஓங்கொளியாய் அருள் ஞான மூர்த்தியாகி உலகமெலாந் தொழுதேத்தும் உமையம்மை காணத் தேங்கழும் மலரிதழி திங்கள் கங்கை திகழரவம் வளர்சடைமேற் சேர வைத்து நீங்கலரும் பவத்தொடர்ச்சி நீங்க மன்றுள் நின்றிமையோர் தொழுதேத்த நிருத்தஞ்செய்யும் பூங்கமல மலர்த்தாள்கள் சிரத்தின்மேலும் புந்தியினும் உறவணங்கிப் போற்றல் செய்வ ம் எனப்போற்றுவர் உமாபதி சிவனார். பொற்பதிக் கூத்து 222. மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப் பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச் சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை ஆணிப்பொற் கூத்தனை யாருரைப்பாரே. (2743) இறைவன் தில்லையிலே ஆடியருளும் திருக்கூத்தின் இயல்பினை வியந்து போற்றுகின்றது. (இ - ள்) மாணிக்க மணியின் ஒளிமேனியனாகக் கூத்தியற்று பவனும் வளம் பொருந்திய தில்லைப் பதியுள்ஆடல் புரிபவனும் அணிநலம் வாய்ந்த அம்பலத்திலே புரிந்த சடையாடக் கூத்தாடுபவனும் இட வரம்பினைக் கடந்து மிகச் சேய்மையிலும் சென்று பரவும் பேரொளியுடன் உயிர்களின் உள்ளத்தே சிவானந்தத்தை விளைக்கும் ஆனந்தக் கூத்தினை ஆடியருள்பவனும் மாற்றுயர்ந்த ஆணிப் பொன்னால் வேயப்பெற்ற அம்பலத்திலே அநவரதமும் ஆடல்புரிபவனும் ஆகிய இறைவனது பொருள்சேர் புகழினை எடுத்துரைக்க வல்லார் யாவர்? (ஒருவருமிலர்) எ - று. சேணிற் பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச் சிற்றம் பலத்து மாணிக்கக் கூத்தன் (திருக்கோவையார் - 23) எனப் போற்றுவர் மணிவாசகர். பொற்றில்லைக் கூத்து 223. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை கூரும் இமவானின் இலங்கைக் குறியுறும் சாரும் திலைவனத் தண்மா மலயத்தூ டேறும் சுழுனை யிவை சிவபூமியே. (2747) பொற்பதியாகிய தில்லை உலகபுருடனின் இதய கமலமாய் இடை பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் சந்திக்கும் இடமாய் இறைவனது ஆடல் நிகழும் திருத்தலம் என உணர்த்துகின்றது. (இ - ள்) [cyfkh»a òUlD¡F] மேருமலை நடு நாடி யாகும். மிகுந்த இடைநாடியும் பிங்கலைநாடியும் ஆக முறையே உயர்ச்சிமிக்க வட இமயமும் தென்னிலங் கையும் அமையத் தில்லைவனம் இவற்றின் இடையே சார்ந்துளது. சுழுமுனைநாடி தில்லைக்கும் குளிர்ந்த பொதிய மலைக்கும் ஊடாக ஏறிச் செல்லும் ஆதலின் இவை சிவபூமியெனப் போற்றத்தகும் தெய்வத்தலங்களாம் எ - று. அற்புதக் கூத்து இறைவன் செய்யும் ஞானமயமான திருக்கூத்தின் இயல்பினை விரித்துரைக்கும் பகுதி. 224. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடம் சிற்றம்பல மென்று தேர்ந்து கொண் டேனே. (2770) அற்புதத் திருக்கூத்தினைத் தாம் கண்டு தரிசித்த திறத்தை அருளிச் செய்கின்றார். (இ - ள்) நெற்றிக்கு நேரே இருபுருவங்களின் இடை வெளியாகிய ஆகாயத்திலே தியானநிலையில் அழுந்திக் கூர்ந்து நோக்குதலால் ஒளியுருவாய்த் திகழும் மந்திரப் பொருளாய் உயிர்கள் பற்றிற்கும் பற்றுதற்குரிய சார்பாய்ப் பரம்பொருளாகிய இறைவன் இருக்குமிடம் சிதாகாசமாகிய திருச்சிற்றம்பலமே என்னும் மெய்ம்மையினை அநுபவத்தால் தேர்ந்து அறிந்து கொண்டேன் எ-று. நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி என்றது, ஆறாதாரங்களுள் ஆக்ஞை எனப்படும் இடத்தினை. உற்றுற்றுப் பார்த்தல் - ஒருவழிப்படவிருந்து கூர்ந்து நோக்குதல். அங்ஙனம் தியானிக்கும் நிலையில் நாதாந்தத்தின் அஞ்செழுத்து மந்திரவுருவில் நின்று ஒளியுருவில் ஆடல் புரியும் இறைவனது திருக்கூத்துப் புலனாம் என்பார், உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம் என்றார். உயிர்கள் பற்றிய எல்லாப் பொருட்கும் பற்றுக்கோடு இறைவனே என்பார் பற்றுக்குப் பற்றாய் என்றார். பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே மற்றுஆரை யுடையேன் என்றார் நம்பியாரூரரும். இத்தகைய அற்புதக் கூத்து நிகழ்தற்கு நிலைக்களமாகத் திகழ்வது உயிர்களின் உள்ளமாகிய இதயத்திலே நுண்ணிய பரவெளியாகிய ஞான காயமே என்பார், பரமன் இருந்திடம் சிற்றம்பலமென்று தேர்ந்து கொண்டேனே என்றார். ஆன்மாவின் இடமாக ஐந்தெழுத்தே திருமேனியாக நாத முடிவிலே இறைவன் நிகழ்த்தும் இவ்வற்புதத் திருக்கூத்தினை நல்ல தவமுடைய குருவின் அருளால் காணுதல் வேண்டும் என்பதனை, நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத் தஞ்செழுத்தால் உற்றுருவாய் நின்றாடல் உள்ளபடி - பெற்றிடநான் விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே தண்ணார் அருளாலே சாற்று (30) என வினாவாகவும், எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன் சிவாய நமவென்னுந் திருவெழுத்தஞ் சாலே அவாயமற நின்றாடு வான் (31) என விடையாகவும் வரும் உண்மைவிளக்கத்தால் உணரலாம். அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞானமே யானஅம்பலமுந்தம் உண்ணிறைந்த ஞானத்தெழு மானந்த ஒருபெருந் தனிக்கூத்தும் கண்ணின் முன்புறக் கண்டு கும்பிட்டெழுங் களிப்பொடுங் கடற்காழிப் புண்ணியக் கொழுந்தனையவர் போற்றுவார் புனிதராடியபொற்பு எனவரும் பெரியபுராணச் செய்யுள் அற்புதத் திருக்கூத்தின் அமைதியினைப் புலப்படுத்தல் காணலாம். 225. புளிக்கண் டவர்க்குப் புனலூறு மாபோற் களிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க் கெல்லாம் அளிக்கும் அருட்கண்ணீர்சோர் நெஞ்சுருக்கும் ஒளிக்கு ளானந்த வமுதூறு முள்ளத்தே. (2778) அற்புதத் திருக்கூத்தினைக் காண்போர் பெறும் இன்ப நிலையினை எடுத்துரைக்கின்றது. (இ - ள்) சுவைப் புளியினைப் பார்த்தவர்க்குப் பார்த்த அளவிலேயே வாயில் நீர் ஊறுவதுபோலக் களிப்பினை நல்கும் திருக்கூத்தினைக் கண்டவர்க்கெல்லாம் (அத்திருக் கூத்து) அருளைத் தோற்றுவிக்கும்; புறத்தே கண்களிலே ஆனந்தக் கண்ணீர் சொரிய நெஞ்சத்தை நெக்குருகச் செய்யும்; பேரொளிப் பொருளாகிய பரம்பொருளின் காட்சியால் அதனைக் கண்டோர் உள்ளத்தின்கண்ணே பேரானந்தமாகிய அமுதம் ஊறிப்பெருகும் எ - று. 226. அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம் அரன் அங்கிதன்னில் அறையில் சங்காரம் அரனுற் றணைப்பில் அமருந் திரோதாயி அரனடி யென்றும் அனுக்கிரகந் தானே. (2799) கூத்தப்பெருமானது திருக்கூத்து ஐந்து தொழில்களின் அமைப் புடைய தென்கின்றது. (இ - ள்) கூத்தப்பெருமான் (வலக்கரத்திலுள்ள) உடுக்கை படைப்புத் தொழிலைக் குறிக்கும். அவனது அமைத்த (வலக்)கை காத்தற்றொழிலையுணர்த்தும். அம் முதல்வனது (இடக்கையில் ஏந்திய) தீயின் அமைப்பினைச் சொல்லுமிடத்து அழித்தற் றொழிலாகும். அவன் ஊன்றிய பாதத்தினால் முயலகனை அணைத்துள்ள நிலையில் மறைத்தற்றொழில் பொருந்தியுளது. அவனது தூக்கிய திருவடி எக்காலத்தும் அருள்புரிதல் தொழிலைக் குறிப்பதாம் எ - று. இத்திருமந்திரப் பொருளை விரித்துரைப்பது, தோற்றந் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தே யுற்றதிரோத முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு (35) எனவரும் உண்மை விளக்கமாகும். உடுக்கையேந்திய திருக்கையிலே படைத்தலும், அமைத்த திருக்கையிலே காத்தலும், கூறப்பட்ட தீயேந்திய கையிலே அழித்தலும், உறுதியாக ஊன்றிய மலர் போலும் திருவடியிலே மறைத்தலும், தூக்கிய மலர்போலும் திருவடியிலே அருளாகிய வீடுபேறும் நிகழ இறைவன் ஆடல் புரிதலை நாடியுணர் வாயாக என்பது இதன் பொருள். ஊழ் இறைவன் வகுத்த நியதியின் வழியே அடியார்கள் இசைந்து நடக்குமாறுணர்த்துகின்றது. 227. செற்றிலென் சீவிலென் செஞ்சாந் தெறியிலென் மத்தகத்தே யுளிநாட்டி மறிக்கிலென் வித்தகன் நந்தி விதிவழி யல்லது தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே. (2847) தத்துவஞானிகள் இருவினைப்பயனை யேற்று அதனால் உளங் கலங்காது இறைவன் அருள்வழி நடப்பார்கள் என்று கூறுகின்றது. (இ - ள்) மெய்யுணர்வுடைய பெரியோர்கள் தமது உடம்பைச் செதுக்கினாலும் வெட்டினாலும் செம்மையுடைய சந்தனத்தைப் பூசி உபசரித்தாலும் தலையிலே யுளியை ஆழப்பதித்து அடித்தாலும் ஞானமே திருமேனியாக வுடைய இறைவனது அருளின்வழி நிற்றலல்லது தம் உள்ளத்தே கவற்சியும் களிப்பு முடையராய்த் தம் இயல்பாகிய பெருமையிற் சிறிதும் குறைய மாட்டார்கள். எ-று. செற்றுதல் - செத்துதல்; கருவிகொண்டு உடம்பின் மேற்பரப்பைச் செத்துதல். சீவுதல் - வெட்டி வீழ்த்துதல். செஞ்சாந்தெறிதல் - செம்மையுடைய சந்தனத்தை நிறைய உடம்பிற் பூசி உபசரித்தல். மத்தகம் - தலை. நாட்டுதல் - ஆழப்பதித்தல். வித்தகன் - சதுரப்பாடுடைய முதல்வன். விதி - அவனது அருளாணை. குன்றுதல் - குறைதல். தத்தவஞானிகளின் நடுவுநிலை இயல்பினை விளக்கவந்த பேராசிரியர் அஃதாவது செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந் தோடா நிலைமை அது, காம வெகுளி மயக்கம் நீங்கினோர் கண்ணே நிகழ்வது என இத்திருமந்திரத் தொடரை எடுத்தாண்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கதாம். 228. வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென் கானின்ற செந்தீ கலந்துடன் வேகிலென் தானொன்றி மாருதஞ் சண்ட மடிக்கிலென் நானொன்றி நாதனை நாடுவன் நானே (2850) திருமூலர் உலகச் சூழலாகிய வினைத் தொடக்கிலகப்படாது தம்முள்ளத்துள் இறைவனை யொன்றியுணரும் நிலையின ராதலை உலகத்தார்க்கு அறிவுறுத்தியருள்கின்றார். (இ - ள்) வானத்து மேகங்கள் நின்று பேரிடியைத் தோற்று வித்தால் என்ன? பெரிய கடல் பொங்கி மேல் வந்தால் என்ன? காற்றுடன் கூடிநின்ற தீயும் கலத்தலால் உலகப் பொருள்கள் வெந்தழிந்தாலென்ன? காற்றுத் திரண்டு சண்டமாருதமாகச் சுழன்று அடித்தால் என்ன? இவற்றால் சிறிதும் கலக்கமுறாது அடியேன் மனம் ஒன்றியிருந்து உயிருக்குயிராகிய முதல்வனை நாடித்தியானிக்கும் நிலையினையுடையேனாயினேன். எ-று. இத்திருமந்திரத்தை நினைக்கும் முறையில் அமைந்தது, வானந் துளங்கிலென் மண்கம்பமாகிலேன் மால்வரையும் தானந் துளங்கித் தலைதடுமாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர்வீழிலென் வேலைநஞ்சுண் டூனமொன் றில்லா ஒருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே எனவரும் திருவிருத்தமாகும். சிவதரிசனம். 229. சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை சிந்தை யினுள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தைதெளியத் தெளியவல்லார்கட்குச் சிந்தை யினுள்ளே சிவனிருந்தானே. (285) சிவனைத் தரிசிக்குமாறு உணர்த்துகின்றது. (இ - ள்) ஆன்மா என்றும் சிவன் என்றும் பிரித்துணரக்கூடிய நிலையில் அவ்விருபொருளும் வேறாய் நிற்றல் இல்லை. ஆன்மாவின் உணர்வினுள்ளே உயிர்க்குயிராகிய சிவனும் வெளிப்பட்டுத் தோன்றுவான். (அம்முதல்வனைச் சிந்தித்தற் கருவியாகிய) சிந்தை தெளிவு பெறும்படி சிவஞானத்தால் தெளிந்துணர வல்லார்க்கு அவர்தம் சிந்தை யினுள்ளேயே சிவபெருமான் வீற்றிருந்தருள்கின்றான். எ - று. முதலிரண்டடிகளிலும் சிந்தை என்றது ஆன்மாவை. பின்னிரண்டடிகளிலும் சிந்தை என்றது அக்கருவியாகிய சித்தத்தை. சிந்தையது என்புழி அது பகுதிப் பொருள்விகுதி. ஆன்மாவும் சிவமும் பொருட்டன்மையால் வேறுபொருளாயினும் உயிர்களோடு பிரிப்பின்றி அவையே தானேயாய்க் கலந்த கலப்புத் தன்மையால் ஒன்றாதலின் உயிரையும் சிவனையும் வேறுபிரித்தல் இயலாது என்பார், சிந்தையதென்னச் சிவனென்ன வேறில்லை என்றார். உயிர்களோடு இறைவன் கொண்டுள்ள அத்துவித நிலையாகிய இத்தொடர்பினை, அண்டமோரணுவாம் பெருமைகொண்டணுவோர் அண்டமாம் சிறுமைகொண்டடியேன் உண்டவூண் உனக்காம்வகை யெனதுள்ளம் உள்கலந்தெழுபரஞ்சோதி எனவரும் கருவூர்த்தேவர் திருவிசைப்பாஇனிது உணர்த்து கின்றது. எங்ங் கிறைவனுள னென்பாய் மனனேயான் எங்ங் கெனத்திரிவாரின் எனவரும் மேற்கோளும் இதனையே வலியுறுத்தும். சிவ ஞானத் தெளிவுடையார் சிந்தையிலே இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவன் என்னும் உண்மையினை, சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுட்சிவமுமாகி எனவரும் அப்பர் தேவாரம் இனிது விளக்குகின்றது. சிவசொரூபதரிசனம் 230. உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலு மாகான் துணரின் மலர்க்கந்தம் துன்னி நின்றானே. (2857) சிவபெருமானது உண்மை இயல்பினை உணர்த்துகின்றது. (இ-ள்) உயிருணர்வில் விளங்குபவனும் அவ்விறைவனே. அவ்வுணர்வினைத் தோற்றுவித்து உயிரில் இருப்பவனும் அவனே. எல்லாப் பொருள்களோடும் பிரிவின்றிப் புணர்ந் திருப்பவனும் அவனே. அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அவற்றில் தோயாது பிரிந்திருப்பவனும் அவனே. பூங்கொத்தினைப் போன்று எப்பொருளும் தன் கண்பூத்து விளங்குதற்கு ஆதாரமாயுள்ள அவ்விறைவன் தன்னை உயிர்கள் சிந்தித்துணர் தற்கு இயலாதவாறு அப்பாற்பட்டுள்ளான். (ஆயினும்) கொத்தாய் மலர்ந்த பூக்களிடத்தே உள்ளிருந்து தோன்றும் நறுமணத்தினைப் போன்று எவ்வுயிர்க்கும் உள்ளிருந்து தோன்றும் சிறப்பினையுடையனாய் மாறாது நிலைபெற்றுள்ளான். எ-று. கந்தழியாவது ஒரு பற்றுமற்று அருவாய்த் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் ... ..... இதனை உற்ற வாக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல், பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் என் அதனை உணர்ந்தோர் கூறியவாற்றான் உணர்க என்பர் நச்சினார்க்கினியர். இக்கருத் தினையே துணரின் மலர்க் கந்தம் துன்னிநின்றானே என இத்திருமந்திரம் விளக்குகின்றது. இணர், துணர்-பூங்கொத்து. கந்தம்-மணம். துன்னுதல்-பிரிவின்றிச் சேர்தல். சூனிய சம்பாஷணை மறைபொருள் உரையாடல், 231. பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரை யின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற் பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே. (2883) ஐம்பொறிகளாற் பயன்கொள்ளுமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) பொருள்களை யுணர்ந்து பார்க்கும் அறிவுடைய ஆன்மாவினிடத்திலே பயனைத்தரும் பொறிகளாகிய பசுக்கள் ஐந்துளளன. அவை நற்புலத்திலே மேய்ப்பாராகிய குருவைப் பெறாது உலக போகங்களில் மருண்டு திரிகின்றன. அவற்றை மேய்க்கும் குருவின் தொடர்புண்டாகி அவற்றின் மருட்சியும் நீங்கினால் உயிர்க்குரிய ஐம்பொறிகளும் நற்பயனாகிய இன்பத்தையே உயிர்கட்கு நல்குவன எ-று. பார்ப்பான்-ஆன்மா. பசு-ஐம்பொறிகள். மேய்ப்பான்-குரு. வெறி-உலகப் பொருள்களிற் செல்லும் மருட்சி. பால்-நல்லுணர்வு. வரையுறை மாட்சி 232. உரையற்ற தொன்றை யுரைசெயும் ஊமர்காள் கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே. (2955) தியான எல்லையாகிய மேல்நிலையில் இருப்போரது மாண் பினை விளக்குவது. (இ - று) நால்வகை வாக்குக்களையும் கடந்துநின்ற ஒப்பற்ற பரம்பொருளை ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் சொல்ல முற்படும் ஊமைகளே! கரைகாணாக் கடலாகவுள்ள அதனை எல்லைப்படுத்திக் கூற இயலுமோ? அலையடங்கிய நீர்நிலை போன்று சித்தம் தெளிந்துள்ள சிவஞானிகளுக்குக் கட்டமைந்த சடையினை யுடையனாகிய அவ்விறைவன் களங்கமற வெளிப்பட்டிருந்தான். எ-று. சொல்லு மிடமன்று சொல்லப் புகுமிடம் எல்லை சிவனுக்கென் றுந்தீபற என்றால் நாம் என்செய்கோம் உந்தீபற (29) எனவரும் உய்யவந்ததேவர் வாய்மொழி இங்கு நினைத்தற் குரியதாகும். அணைந்தோர்தன்மை 233. ஒழிந்தேன் பிறவி யுறவென்னும் பாசங் கழிந்தேன் கடவுளும் நானுமொன் றானேன் அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டேன் செழுஞ்சார் புடைய சிவனைக்கண் டேனே. (2958) அயராஅன்பின் அரன்கழ லணைந்தோராகிய சீவன் முத்தர் களது இயல்பினை விளக்குகின்றது. (இ-ள்) எப்பொருட்கும் செழுமை நல்கும் சார்பாந் தன்மையுடைய சிவபெருமானை அவனருளாற் கண்டுணரப் பெற்றேன். ஆதலால் பிறவிப் பிணியினை விட்டொழிந்தேன். உலக வுறவாகிய பாசப் பிணிப்பினை விட்டு விலகினேன். (எனது பசு போதங் கழன்றமையால்) இறைவனும் யானும் எனப் பிரித்துணராதவாறு இறைவனோடு பிரிவறக் கலந்து ஒன்றானேன். ஆதலால் அங்கு அழியுந் தன்மையவாய் வரும் எத்தகைய செல்வங்களையும் இனி வேண்டும் குறையுடையே னல்லேன். எ-று. செழுஞ் சார்புடைய சிவனைக் கண்டேன் (ஆதலாலே) பிறவி ஒழிந்தேன்; உறவு என்னும் பாசம் கழிந்தேன்; கடவுளும் நானும் ஒன்று ஆனேன்; ஆங்கு அழிந்து வரும் ஆக்கமும் இனிவேண்டேன் என இயையும். எல்லாப் பொருட்கும் பற்றுக்கோடாகிய இறைவனது சார்பு உலகத்துப் பிறசார்பு போலன்றி எக்காலத்தும் ஊக்கமும் ஆக்கமும் நல்கும் செழுமை வாய்ந்தது என்பார், செழுஞ் சார்புடைய சிவன் என்றார். நான் என்றது உடம்புடன் இருக்கும் பொழுதே அரன்கழல்அணையும் பேறுபெற்ற ஆன்மாவை. கடவுளும் ஆன்மாவும் ஒன்றாதலாவது, உப்பானது தனது கடினத் தன்மை நீங்கி நீரோடு ஒன்றாய்க் கலத்தல் போல, உயிர் தனது சகசமலம் கெட்டொழியக் கடவுளோடு இரண்டறக் கலந்து ஒன்றாதல். ஆங்கு என்றது, சீவன் முத்தர்க்கு அயலதாய் வேறுபட்ட உலகினை. அயரா அன்பின் அரன் கழலணைந்த திருமூல தேவ நாயனார் தமது அனுபவத்தில் வைத்து அணைந்தோர் தன்மையினை விளக்கு வதாக அமைந்தது இத் திருமந்திரமாகும். 234. ஒன்று கண்டீர் உலகுக்கொரு தெய்வமும் ஒன்று கண்டீர் உலகுக்குயி ராவது நன்று கண்டீர் இனி நமச்சிவாயப்பழம் தின்று கண்டேற்கிது தித்த வாறே. (2962) இதுவும் அது. (இ-ள்) உலகத்திற்கு ஒப்பற்ற தெய்வமும் ஒன்றே யென்று உணர்வீராக. உலகத்துக்கு உயிராய் உள் நின்று இயக்குவதும் அஃதென்றுணர்வீர். இனி எக்காலத்தும் நமக்கு நலம் விளைப்பதும் அத்தெய்வமே எனக் கண்டுணர் வீராக. (அப்பொருளைக் குறிக்கும்) நமசிவாய மந்திரமாகிய பழத்தினைத் தின்று அதன் சுவையாகிய பரம் பொருளைக் கண்டுணர்ந்தேனாகிய எனக்குச் சிவபரம் பொருளாகிய இப்பொருள் தித்திப்பினையுடையதாய் அண்ணித்ததிறம் மிகவும் இனியதாகும். எ-று. ஒரு தெய்வம்-ஒப்பற்ற பரம்பொருள். ஒரு தெய்வமும் உலகுக்கு ஒன்று கண்டீர் என்றது, உலகுக்கு முதன்மை யுடைய பொருளாக இரண்டாவதாக எண்ணக் கூடியது எதுவுமில்லை என்பதாம். ஒருவனே தேவனும் என முன்னும் அருளிச் செய்தமை காண்க. உலகுக்கு உயிராவது-உலகுயிர்களை உயிர்க் குயிராய் உள் நின்று இயக்குவது. நன்று-நலம் விளைப்பது. நமச்சிவாயப்பழம்-திரு வைந் தெழுந்தாகிய தீங்கனி; நாவிற் சுவைத்தோர்க்குப் பிறவிப் பிணி நீக்கும் சுவையினை யுடையதாய் அண்ணித்திடடு அமுதூறலின் நமச்சிவாயப்பழம் என்றார். திருவைந் தெழுத்து மந்திரம் பழமும் அதன் உட் பொருளாகிய சிவம் சுவையும் ஆதல் காண்க. அரன்கழ லணைந்தோராகிய சீவன் முத்தர்கள் தாம் உடம்போடு கூடியுள்ள நிலையில் பழைய வினைவாசனை தம்மைத் தாக்காது அகலுதல் வேண்டித் திருவைந்தெழுத்தினை விதிப்படி தம் உள்ளத்துள்ளே எண்ணு தலால் சிவானந்தத்தினை எய்தி இன்புறுந்திறத்தினை நமச்சிவாயப் பழம் தின்று கண்டேற்கு இது தித்தவாறே எனத் திருமூலர் தமது சிவாநுபவத்தில் வைத்து விளக்கியருளினார். திருவைந் தெழுத்தினைவிதிப்படி எண்ணிப் போற்றுதலாலுளவாம் சிவானந்தத்தை, ஆலைப்படு கரும்பின் சாறுபோல அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான் எனவும், எண்ணித் தம்மை நினைந் திருந்தேனுக்கு அண்ணித் திட்டமு தூறுமென் நாவுக்கே (5-11-2) எனவும், மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன் கனிதந்தாற் கனி யுண்ணவும் வல்லிரே புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி இனிது சாலவும் ஏசற்றவர் கட்கே (5-91-7) எனவும் வரும் திருநாவுக்கரசர் அருளிச்செயலால் நன்குணரலாம். 235. அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப்பகல் ஏத்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே. (2980) சீவன்முத்த ராயினார்க்கு இறைவன்பாலுள்ள அயரா அன்பினை விளக்குகின்றது. (இ-ள்) அன்பினால் உள்ளம் உருகி அவனை நினைந்து அழுவேன். அரற்றுவேன். வலிய எலும்பும் உருகுமாறு இரவும் பகலும் அம் முதல்வனை ஏத்திப் போற்றுவேன். என்னுடைய பொன்னும் மணியும் ஆகத் திகழ்வனும் எங்கும் நீக்கமறத் தங்கியவனும் எல்லாம் உடையவனும் ஆகிய இறைவனைக் கனியெனக் கொண்டு தின்னுதற்கும் கடித்தற்கும் திருத்துதற்கும் பெருவேட்கை யுடையேனானேன். எ-று. திருத்துதல்-அணிசெய்தல், உறவாக்குதல். உண்ணுதல் எனினும் பொருந்தும். விள்ளத் தானொன்றுமாட்டேன் விருப்பெனும் வேட்கையாலே வள்ளத்தேன் போலநுன்னை வாய்மடுத் துண்டிடாமே உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனுங் கள்ளத்தே நிற்றியம்மா எங்ஙனங் காணுமாறே (4_76_7) எனவரும் திருவிருத்தம் அரன் கழலணைந்தோராகிய சீவன் முத்தர்கள் இறைவன்பாற் கொண்ட அயரா அன்பினை இனிது விளக்குவதாகும். தோத்திரம் 236. மாயனை நாடி மனநெடுந் தேரேறிப் போயின நாடறி யாதே புலம்புவர் தேயமும் நாடுந் திரிந்தெங்கள் செல்வனைக் காயமின் னாட்டிடைக் கண்டுகொண்டேனே, (2982) ஒருமை யுள்ளத்தராய் உடம்புளே உத்தமனைக் கண்டு வழிபடு மாறு உணர்த்துகின்றது. (இ-ள்) யாவரும் உணராதவாறு மறைந்து நிற்போனாகிய இறைவனைத்தேடி மனமாகிய விரைந்த தேரில் ஏறிப் புறப்பட்டுச் சென்று தாம் சென்ற நாடு இது என்பதனையும் அறியாமல் தனிமையுற்றுப் புலம்புவாராயினர் (அவனது அருள் பெறாதார். யானோ) பெரிய தேசமும் சிறிய நாடும் ஆகிய எல்லாவிடங் களிலும் தேடித் திரிந்து எங்கள் சேமப் பெருஞ்செல்வனாக எளிவந்தருளிய இறைவனை எனது உடம்பாகிய இனிய நாட்டிலேயே அகமுகமாக நோக்கிக் கண்டுகொண்டேன் எ-று. இறைவன் ஊனக்கண்ணால் உணரப்படாது மறைந்து நிற்போன் ஆதலால் அவனுக்கு மாயன் என்பது பெயராயிற்று. மாய்தல் - மறைதல். மாயன் ஆட மலையான்மகளும் மருண்டு நோக்குமே என்றார் காரைக்காலம்மையாரும். மாற்ற மனங்கழியநின்ற மறையோனாகிய இறைவனை நாடிக் காணுதற்கு மனமாகிய நெடிய தேர் சிறிதும் பயன்படாதென்றும், மனமெனும் விரைந்ததேரில் ஏறி இறைவனைக் காண முற்பட்டோர் தாம் தேடிய பொருளாகிய இறைவனைப் காணப் பெறாமையோடு தாம் சென்ற இடம் இன்னது என்பதனையும் அறியப்பெறாது புலம்பும் நிலையினராவர் என்றும் கூறுவார் மாயனை நாடி மன நெடுந்தேர் ஏறிப் போயின நாடு அறியாதே புலம்புவர் என்றார். அவர்போல் தேடிக் காணாது புலம்பிய யான் மனத்தின் விரைவொழிந்து இறைவனை அவனருளே கண்ணாகச் சிவயோக நிலையில் இருந்து இவ்வுடம்பினுள்ளே அகமுகமாக நோக்கிக் கண்டு கொண்டேன் என்பார், தேசமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனைக் காயம் இன் நாட்டிடைக் கண்டுகொண்டேன் என்றார். காயம் - உடம்பு. தேசம் - பெரியது. நாடு, சிறியது. காயமின்னாட்டிடை என்பதை மின்காய நாட்டிடை என மொழிமாற்றி விரைந்தழிதலால் மின்னலை யொத்த உடம்பாகிய தேசத்து எனப் பொருள் கூறுதலும் உண்டு. திருமாலொடு நான்முகனுந் தேடித்தேடொணாத் தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன் என்பது அப்பர் அநுபவ மொழி. 237. மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல் இன்னிசை பாட இருந்தவ ராரெனின் முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப் பன்னினர் என்றே பாடறி வீரே. (2983) இறைவனைத் தோத்திரஞ் செய்வார் எய்தும் பயன் கூறுகின்றது. (இ-ள்) நிலைபெற்ற மலைபோலும் தோற்றமுடைய மதம் பொருந்திய (பட்டத்து) யானையின்மேல் (மாகதர் முதலியோர்) இன்னிசையாற் பாடித் துதிக்க அரசு வீற்றிருந்த திருவுடையார் யார் என வினவில், தாம் செயலுடை யாராயிருந்த முற்காலத்தே முழுமுதற் கடவுளாகிய இறைவனது திருப்பெயர்களைப் பலமுறை சொல்லித் துதித்தவர்களே என்னும் உண்மையை யுணர்ந்து (அம் முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறத்தினைப்) பாடிப் போற்றுவீராக எ-று. மன்னுதல்-அசைவின்றி நிலைபெறுதல். வாரணம்-யானை; ஈண்டுப் பட்டத்து யானையைக் குறித்து நின்றது. இன்னிசை பாட வாரணத்தின் மேல் இருந்தவர் என இயையும். இயல் காலம்-செயலுடையரா யிருந்தகாலம். முதல்வனார் நாமம்-இறைவர் திருப்பெயர். பன்னுதல்- பலமுறை சொல்லித் துதித்தல். பாடு அறிவீர்-பாடுதலைச் செய்வீராக. அறிதல், ஈண்டுச் செய்தல் என்னும் பொருளில் வந்தது. 238. வள்ளற் றலைவனை வானநன் னாடனை வெள்ளப் புனற்சடை வேத முதல்வனைக கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோவென்று உள்ளத் தினுள்ளே யொளித்திருந் தாளுமே. (2994) வஞ்சனையாளர்க்கு இறைவன் வெளிப்படான் என்கின்றது. (இ-ள்) வரையாது வழங்கும் வள்ளன்மையின் தனக்கு ஒப்பாரிலாத தலைவனும், மேலாகிய நல்ல நாட்டினை யுடைய வேந்தனும், கங்கை வெள்ளமாகிய நீரைக் கரந்த சடையினை யுடைய வேத முதல்வனும் ஆகிய இறைவன் வஞ்சனையின் மிக்காராகிய கொடியோர்கள் தன்னைக் கண்டு விடுவார்களோ என்று அஞ்சியே அன்பராயினார் உள்ளத்தையே தனக்குப் பாதுகாப்பான இடமாகக் கொண்டு மறைந்திருந்து மன்னுயிர்களை ஆட்கொண்டருள் கின்றான் எ-று. வள்ளல்களாயினார்க்குத் தலைவன் அவனே என்பார் வள்ளற்றலைவன் என்றார். வானநாடனே எனப்போற்றுவர் சுந்தரர். வெள்ளந்தாழ் விரிசடையாய் வேத முதல் எனப் போற்றுவர் வாதவூரடிகள். கள்ளம்-வஞ்சனை பெருமக்கள், இழித்தற் குறிப்பினது. காண்பர் கொலோ என்றது, கண்டால் உயிர்த் தலைவனாய தன்னையும் வஞ்சித்து உலகிற்குத் துன்பம் செய்வரோ என்னும் அச்சக் குறிப்பினதாகும். 239. விண்ணவ னாயுல கேழுக்கு மேலுளன் மண்ணவ னாய்வலஞ் சூழ்கடல் ஏழுக்குந் தண்ணவ னாயது தன்மையின் நிற்பதோர் கண்ணவ னாகிக் கலந்து நின்றானே (3037) இறைவன் உலகெலாமாகி நீக்கமறக் கலந்து நின்றமை கூறுகின்றது. (இ-ள்) விண்ணொடு நீக்கமறக் கலந்தவனாய் ஏழுலகங் களுக்கும் மேலாக அப்பாற்பட்டு விரிந்துள்ளான். மண்ணிடத்தே எங்கும் பரவியவனாகி உலகினைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களுக்குந் தண்மையை வழங்குபவனாய் அவ்வப் பொருளின் தன்மை போன்று பிரிவற நின்று உயிர்க்குக் காணாதவற்றைக் காட்டுவ தொரு ஒப்பற்ற கண் அவனே என்னும்படி எப்பொருளிலும் நீக்கமறக் கலந்து நிற்கின்றான் எ-று. விண்-ஆகாயம். தண்-தண்மை; குளிர்ச்சி. அது தன்மையின்-அவ்வப் பொருளின் தன்மை அவ்வப் பொருளை விட்டுப் பிரியாதவாறு போல. காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் உயிர்கட்குப் பொருளைக் காட்டிக் காணும் நிலையில் கண் போன்று உதவியருளுதல் பற்றிக் கண்ணவனாகிக் கலந்து நின்றான் என்றார். இத்திருமந்திரத்தின் சொற்பொருள் அமைப் பினை அடியொற்றி யமைந்தது, விண்ணகத்தான் மிக்க வேதத்துளான் விரிநீருடுத்த மண்ணகத்தான் திருமாலகத்தான் மருவற்கினிய பண்ணகத்தான் பத்தர் சித்தத்துளான் பழநாயடியேன் கண்ணகத்தான் மனத்தான் சென்னியானெங் கறைக்கண்டனே (4-112-5) எனவரும் திருவிருத்தமாகும். 240. உண்ணின் றெளிரும் உலவாப் பிராணனும் விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும் மண்ணின் றியங்கும் வாயுவு மாய்நிற்கும் கண்ணின் றியங்கும் கருத்தவன் தானே. (3040) உலகுயிர்களின் இயக்கத்திற்குத் துணைசெய்தருளும் இறை வனது திருவருட் சிறப்பினை வியந்து போற்றுகின்றது. (இ-ள்) காணுந் தன்மையுடைய கண்ணிற் கலந்து நின்று காணும் உயிர்போன்று உயிரறிவினுள்ளே கலந்து நின்று காணும் உதவியைப் புரிந்தருளும் அவ்விறைவன் உடம்புளே நின்று இயங்கும் கெடாத உயிர்ப்பும் (பிராணனும்) ஆகாயத்திலிருந்து நிலைபெற்று இயங்கி ஒளிவழங்கும் விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும் மண்ணுலகில் நிலை பெற்றுவீசும் காற்றுமாகி உலகுயிர்களின் உள்ளும் புறம்புமாய்க் கலந்து நிற்கின்றான். எ-று. கண்நின்று இயங்கும் கருத்து என்றது, கண்ணொளியுடன் கலந்து நின்றுகாணும் ஆன்ம போதத்தினை. கருத்தவன் என்றது, ஆன்மபோதத்திற் கலந்து நின்று காண்பவனாகிய இறைவனை. கருத்தவன், பிராணனும் விரிகதிர்ச் செல்வனும் வாயுவுமாய் நிற்கும் எனமுடிக்க. 241. வாழ்கவே வாழ்கவென் னந்தி திருவடி வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம் வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன் தாள் வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே. (3047) திருமூலநாயனார் தமக்கு மெய்யுணர்வு அருளிய குருவை யும் குருவாயிலாகச் சிவபெருமானையும் வாழ்த்திப் போற்றுவதாக அமைந்தது இத்திருமந்திரமாகும். (இ-ள்) என் குருநாதராகிய நந்தி யெம்பெருமான் திருவடி என்னுள்ளத்தில் நிலைபெற்று நீடு வாழ்க. என்னை அநாதியே மலத்தொடர்பினை யறுத்தருளிய இறைவனது திருவடி என் நெஞ்சில் நிலைபெற்று வாழ்க. மெய்யுணர்வே திருமேனியாக வுடைய இறைவனது திருவடி எனது அறிவில் நிலைபெற்று வாழ்க. எவ்வுயிர்க்கும் மலப்பிணிப்பினை இல்லையாக்கும் பேரருளாளனாகிய இறைவன் திருவடி எல்லாவுயிர்களின் உள்ளத்திலும் நிலைபெற்று வாழ்க. எ-று. வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்வ தண்புனல், வேந்தனும் ஓங்குக, ஆழ்க தீயது, எல்லாம் அரன்நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே என ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த திருப்பாடல் இத் திருமந்திரப் பொருளை நினைவுகூரச்செய்து உலக மக்களை நலம்பெற வாழ்த்திய அருளியல் வாழ்த்தாதல் அறிந்து போற்றத் தகுவதாகும். திருமூல நாயனார் திருவடி வாழ்க. செய்யுள் முதற்குறிப்பு ( பக்க எண்) அகரம் 215 அஞ்சும் அடக் 222 அஞ்சுமுக 200 அஞ்சுள ஆனை 139 அஞ்செழுத்தாலே 137 அடப்பண்ணி 59 அடியாரடியார் 257 அண்டங்கள் 268 அந்தண்மை 77 அப்பணி 102 அப்பனை 30 அப்பினிற்கூர்மை 50 அமுதூறு 84 அரன்துடி 273 அருளால் அரனுக் 191 அருளிற்பிறந் 206 அவளையறியா 140 அவனையொழிய 21 அவ்வியம் 70 அறவன் 180 அறிவறியாமை 253 அறிவறிவென் 259 அறிவிலன் 237 அறிவுவடிவென் 244 அன்புசிவ 90 அன்புள்ளுருகி 281 அன்றுநின்றான் 201 அன்னமிரண்டுள 221 ஆகின்றபாதமும் 137 ஆசையறுமின் 256 ஆடம்பரங் 184 ஆணவமாயை 234 ஆதாரயோகத் 130 ஆதிபரந் 202 ஆதிப்பிரான் 99 ஆயத்துள் 158 ஆயனநந்தி 261 ஆரியனல்லன் 120 ஆர்க்கும் இடுமின் 85 ஆர்வமுடையவர் 94 ஆவன ஆவ 109 ஆவையும் பாவையும் 82 ஆறுசமயமுங் 160 ஆற்றருநோய் 112 இக்காயம் 230 இத்தவ 164 இருட்டறை 155 இருந்தழு 161 இருந்தேன் 226 இருவினைநேரொப் 156 இருவினையொத் 239 இறப்பும் 177 இன்பம் 89 ஈச 115 உடம்பாரழியில் 132 உடம்பினை 133 உடல் பொருள் 205 உணர்வும் 276 உண்ணின் 285 உருவுற்று 238 உரையற்ற 278 உள்ளத்தும் 159 உள்ளத்தி 111 உள்ளத்தொரு 106 உள்ளம் 211 ஊரெலாங் 58 ஊறுமருவி 250 எங்குந்திருமேனி 267 எட்டுத்திசை 218 எண்ணாயிரத் 125 எல்லாம் அறியும் 209 எல்லாவுலகிற்கும் 167 எளியனல் 151 என்தாயோ 216 என்பால் 107 என்பேவிறகா 93 எம்பெருமான் 115 ஏற்றியிறக்கி 121 ஐந்துகரத் 14 ஐவர்க்கு 119 ஐவர்க்கொரு 69 ஒடுங்கிநிலை 182 ஒண்சுடரானை 74 ஒருவனுமே 106 ஒழிந்தேன் 278 ஒன்றதுபேரூர் 163 ஒன்றவன்தானே 15 ஒன்றுகண்டீர் 279 ஒன்றேகுலவம் 228 ஓங்காரத்துள் 162 ஓதம்ஒலிக் 129 கங்காளன் 188 கடலுடையான் 96 கண்காணி 224 கருடன் 262 கல்லா அரசன் 78 கழலார்கமலத் 169 கற்பனையற் 127 காக்கைகவரி 60 காணாதகண் 175 காமம் வெகுளி 249 காலுந்தலையும் 247 கானுறுகோடி 145,213 கிழக்கெழுந் 66 குருட்டினை 192 கொல்லான் 116 கொலையேகளவு 72 கோணா 123 சத்தமுதல் 48 சத்தும் அசத்தும் 193 சமயங்கிரியை 152 சார்ந்தர்க் 232 சித்தாந்தே 245 சிந்தையதென் 275 சிந்தையினுள் 248 சிவசிவவென் 265 சிவமாம் 34 சிவயோகி 217 சிவனருளாய 263 சிவனொ 19 சிவனை 232 சிவாயநம 265 சூரியகாந் 47 செஞ்சுடரோன் 220 செல்லுமளவுஞ் 228 செற்றிலென் 274 சேர்ந்திருந்தேன் 40 சைவஞ்சிவ 154 சைவப்பெருமைத் 148 ஞானத்தின் 114 ஞானமிலாதார் 81 ஞானமிலார் 189 தத்தஞ்சமயத் 83 தந்தைபிரான் 104 தவஞ்செபஞ் 117 தவமிக்கவரே 186 தழைக்கின்ற 68 தன்னது 61 தன்னையறிய 243 தன்னையறிந் 255 தாபரத்துண் 197 தானேஅணுவும் 128 தானேயிருநிலந் 26 திரிகின்ற 103 திருவடியே 52 திருவடிவைத் 168 திலமத்தனை 109 திளைக்கும் 88 தீயினும் 24 தெளிவறியா 149 தெளிவுகுரு 52 தேவர்பிரான் 98 தேற்றத்தெளிமின் 63 நடுவு 101 நடுவு நின் 100 நந்தி அருளாலே 38 நந்தி அருள்பெற்ற 38 நந்தியிணையடி 39 நாசி 123 நாடும்நகரமும் 144 நாடொறும் 79 நாலும் இரு 195 நிற்கின்ற 95 நீங்காச் 173 நீயதுவானா 252 நூலுங்சிதையும் 76 நெறியைப் 181 நெற்றிக்கு 271 பசுக்கள் 236 படமாடக் 214 பண்டம்பெய் 57 பண்டிதராவார் 33 பதிபசுபாசம் 45 பதிப்பதித்துப் 166 பத்திரம் 118 பரந்துல 219 பரிசன 223 பற்றாய 70 பாங்கமர் 160 பாசம் 152 பார்ப்பான் 277 பாலன் 67 பிரானருள் 183 பிறப்பிலி 42 பிறந்தும் 179 பிறவாநெறி 208 பின்னைநின் 41 புண்ணியஞ் 212 புளிக்கண்ட 272 பூசித்தல் 150 பூதங்கள் 267 பூவினிற் 146 பெருமான் 98 பெறுதற்கரிய 226 பெற்றதல் 34 பொய்க்குழி 72 பொன்னாற் 26 பொன்னான 136 பொன்னை 241 போதந்தரு 53 போதுபுனைகழல் 198 போற்றிசைத் 18 போற்றுகின்றேன் 136 பேர்கொண்ட 114 மணிகடல் 126 மண்மலை 110 மண்ணகத் 28 மண்ணொன்று 54 மந்திரமாவது 172 மரத்தை 242 மலர்ந்த 202 மன்னுமலை 283 மாணிக்கக் 269 மாயனை 282 மாயைகைத் 240 மாரியுங் 36 மானுடராக்கை 199 முடிமன்னர் 170 முத்தியை 231 முன்னையொப்பாய் 22 முன்னவனார் 113 மேருநடுநாடி 270 யாவர்க்குமாம் 87 யோகமும் 150 வளத்திடை 59 வள்ளற்றலைவனை 283 வாமத்தில் 122 வாயுமனமுங் 141 வாழ்கவே 285 வாழ்வுமனைவியும் 65 வானின்றிடிக் 274 விண்ணவ 284 விண்ணின் 45 விளக்கினை 209 வினையாலசத்து 251 வேடநெறி 80 வேதத்தின் 245 வேதத்தை 32 வேதமோடாகமம் 246 வேதாந்தங்கேட்க 75 வைத்தேனடிகள் 171 பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு : 14.01.1917 மறைவு : 13.06.1988 பெற்றோர் : கந்தசாமி, அமிர்தம் ஊர் : தஞ்சை மாவட்டம் - திருநாகேச்சரம் குடும்பம் : மனைவி திருமதி பொற்றடங்கண்ணி, மகள் திருமதி மங்கையர்க்கரசி திருநாவுக்கரசு கல்வி : திருப்பெருந்துறை தேவாரப்பாடசாலை (1928 - 1930). அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வித்துவான் - (1930 - 1935); அறிஞர் கா.சுப்பிர மணிய பிள்ளை, சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஆகியோர் ஆசிரியர்கள். ஆய்வு மாணவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - நாவலர் சோமசுந்தர பாரதியார் வழி காட்டி (1933 - 37) தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வு. கல்விப்பணி : கரந்தைத் தமிழ்ச்சங்கம் - விரிவுரையாளர் (1938 - 1943) அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - விரிவுரை யாளர் (1943 - 1962) அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - இணைப் பேராசிரியர் (1962 -77) அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர், துறைத் தலைவர் புலமுதன்மையர் (1977 - 79) மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - சிறப்பு நிலைப் பேராசிரியர் (1979 - 1982) தமிழ்ப் பல்கலைக் கழகம் - இலக்கியத் துறைத் தலைவர், சிறப்பு நிலைப் பேராசிரியர், புல முதன்மையர் (1982 - 87) எழுத்துப்பணி : கவிதை: 1. காக்கை விடுதூது - (இந்திமொழி கட்டாய பாட எதிர்ப்பு, 1939) 2. விபுலானந்தர் யாழ் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் உரைநடை : சங்ககாலத் தமிழ் மக்கள்- (1948) சென்னை குறிஞ்சிப் பாட்டாராய்ச்சி - பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள் (கழகப் பதிப்பு) திருநெல்வேலி தமிழிலக்கிய வரலாறு - (தொல்காப்பியம் 1957) தொல்காப்பியம் நன்னூல் - எழுத்ததிகாரம் (1962) (அ.நகர்) சேக்கிழார் நூல் நயம் - (1970) சென்னை பன்னிரு திருமுறை வரலாறு -1ஆம் பகுதி (1961) பன்னிரு திருமுறை வரலாறு -2ஆம் பகுதி (1969) (தமிழக அரசு பரிசு பெற்றது) தில்லைப்பெருங் கோயில் வரலாறு (1984) சிதம்பரம் மணிவாசகர் பதிப்பகம் திருவருட்பாச் சிந்தனை - (1986) சிதம்பரம் (தமிழக அரசு பரிசு பெற்றது) தொல்காப்பியம் - நன்னூல் சொல்லதிகாரம் (1971). இசைத்தமிழ் 1979, சிதம்பரம். திருத்தொண்டர் வரலாறு (சுருக்கம்) 1986, அரிமழம். தொல்காப்பியம் பொருளதிகார ஆய்வு, 1987 தஞ்சாவூர் சைவசித்தாந்த சாத்திர வரலாறு 2002 சைவசித்தாந்த தத்துவத்தின் வேர்கள். உரை : 1) அற்புதத் திருவந்தாதி, (1970) சிதம்பரம் 2) திருவுந்தியார், திருக்களிற்றுப் பாடியார் (1982) திருப்பனந்தாள் 3) திருமந்திர அருள்முறைத்திரட்டு (1973) சிதம்பரம் 4) கம்பராமாயணத்தில 16 படலங்கள் (1963) 5) திருவருட்பயன் - 1965 சென்னை. பதிப்பு : பரதசங்கிரகம் - 1954 - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் -சிதம்பரம் உரைவளப் பதிப்பு : 1.தொல்காப்பியம்: புறத்திணையியல் - 1983 2. தொல்காப்பியம்: களவியல் - 1983 3. தொல்காப்பியம்: கற்பியல் - 1983 4. தொல்காப்பியம்; பொருளியல் - 1983 5. தொல்காப்பியம்; உவமையியல் - 1985 6. தொல்காப்பியம்; மெய்ப்பாட்டியியல் - 1986 7. தொல்காப்பியம்; செய்யுளியல் - 1989 ஆகியவை மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடுகள். சிறப்புகள்: 1. சித்தாந்த செம்மல் - தூத்துக்குடி சைவசித்தாந்த சபை (1944) 2. திருமுறை ஆராய்ச்சிக் கலைஞர் - தருமபுரம் ஆதினம் (1971) 3. திருமுறை உரை மணி - காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடம் (1984) 4. கலைமாமணி - தமிழ்நாடு இயல் - இசை, நாடக மன்றம் (1985) 5. தமிழ்ப்பேரவைச் செம்மல் - மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (1984 - 1989) 6. தமிழகப் புலவர் குழு உறுப்பினர் 7. திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கத் திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு பொற்கிழி (1986)