தமிழ்ப் பேரவைச் செம்மல் வெள்ளைவாரணனார் நூல் வரிசை 6 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு - பாகம் 2 ஆசிரியர் பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் நூற்குறிப்பு நூற்பெயர் : வெள்ளைவாரணனார் நூல் வரிசை : 6 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு -2 ஆசிரியர் : பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் பதிப்பாளர் : இ. தமிழமுது மறு பதிப்பு : 2014 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி பக்கம் : 16 + 384 = 400 படிகள் : 1000 விலை : உரு. 375/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை -5. அட்டை வடிவமைப்பு : வி. சித்ரா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : மாணவர் பதிப்பகம் பி-11, குல்மொகர் அடுக்ககம், 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை -600 017 தொ.பே: 2433 9030 üš »il¡F« ïl« : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே. : 044 2433 9030 பதிப்புரை 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியும் தமிழ்ப்புலமையும் தமிழாய்வும் மேலோங்கி வளர்ந்த பொற்காலமாகும். இப் பொற்காலப் பகுதியில்தான் தமிழ்ப்பேரவைச் செம்மல் பெருந்தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் தோன்றி வளர்ந்து வாழ்ந்து தாய்மொழித் தமிழுக்கு வளமும் வலிமையும் சேர்த்தார். இப்பெரும் பேரறிஞர் எழுதிய நூல்கள் அனைத்தையும் வெளியிட முடிவுசெய்து க.வெள்ளைவாரணனார் நூல் வரிசை எனும் தலைப்பில் 21 தொகுதிகள் முதல் கட்டமாக வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத நூல்களைத் தேடியெடுத்து இனிவரும் காலங்களில் வெளியிட முயல்வோம். தமிழ் இசை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், சைவ சித்தாந்தம் ஆகிய நால்வகைத் துறைகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நூல்கள் தமிழுக்கும் தமிழருக்கும் பெரும் பயன்தரக் கூடிய அறிவுச் செல்வங்களாகும். ஆழ்ந்த சமயப்பற்றாளர், பதவிக்கும் புகழுக்கும் காசுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்ளாது தமிழ்ப்பணி ஒன்றையே தம் வாழ்வின் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர், நடுவணரசு தமிழகத்தில் கலவைமொழியாம் இந்தியைக் (1938) கட்டாயப் பாடமாகத் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் புகுத்தியபோது அதனை எதிர்த்துப் போர்ப்பரணி பாடிய தமிழ்ச் சான்றோர்களில் இவரும் ஒருவர். காக்கை விடுதூது எனும் இந்தி எதிர்ப்பு நூலை எழுதி அன்று தமிழ்நாட்டு ஆட்சிக் கட்டிலில் முதல்வராக அமர்ந்திருந்த இராசாசிக்கு அனுப்பித் தம் எதிர்ப்பைப் பதிவு செய்தவர். தம்முடைய தமிழாய்வுப்பணி மூலம் தமிழ் வரலாற்றில் நிலைத்து நிற்பவர், தமிழையும் சைவத்தையும் இரு கண்களெனக் கொண்டவர். தமிழிலக்கணத் தொன்னூலாம் தொல்காப்பியத்தை யும், பின்னூலாம் நன்னூலையும் ஆழ்ந்தகன்று கற்று ஒப்பாய்வு செய்தவர், தம் கருத்துகளும் வாழ்க்கை முறையும் முரண்படாமல் எண்ணியதைச் சொல்லி, சொல்லியபடி நடைமுறையில் வாழ்ந்து காட்டிய பெருந்தமிழறிஞர். தொல்காப்பியன் என்ற பெயர் இயற்பெயரே என்று நிறுவியவர், தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங்கடமலைத்தொடரும், தெற்கே குமரியாறும் தமிழக எல்லைகளாக அமைந்திருந்தனவென்றும், கடல்கோளுக்குப் பிறகு குமரிக்கடல் தென் எல்லை ஆனது என்பதையும், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தவர், தொல்காப்பியம் இடைச்சங்கக் காலத்தில் இயற்றப்பட்டது என்பதையும், முச்சங்க வரலாற்றை முதன்முதலில் கூறியது இறையனார் களவியல் உரைதான் என்பதையும், தொல்காப்பியம், சங்கச் செய்யுளுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்திற்கு முன்னரே இயற்றப்பட்டது என்பதையும், திருமூலர் தம் திருமந்திரமே சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல் நூலாக திகழ்வது என்பதையும், திருமுறை கண்ட சோழன் முதலாம் இராசராசன் அல்ல முதலாம் ஆதித்தனே திருமுறை கண்ட சோழன் என்பதையும், வள்ளலாரின் திருவருட்பா தமிழின் சொல்வளமும், பொருள் நுட்பமும், ஒப்பற்றப் பேரருளின் இன்பமும் நிறைந்தது என்பதையும், சைவ சமயம் ஆரியர்க்கு முற்பட்டது என்பதையும், பழந்தமிழ் நாகரிகத்தின் ஊற்றுக்கண் தமிழும் சைவமும் என்பதையும் தம் நூல்களின் வழி உறுதி செய்தவர். தம் ஆய்வுப் புலமையால் பல புதிய செய்திகளையும் தமிழ் உலகுக்கு அளித்தவர். இவர் எழுதிய நூல்கள் தமிழ்உலகிற்குப் பெருமை சேர்ப்பன. தமிழ் இலக்கிய வரலாற்றிற்கு கூடுதல் வரவாக அமைவன. இவருடைய அறிவுச் செல்வங்கள னைத்தையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் தொகுத்து தமிழ் உலகிற்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இதனை வெளிக்கொணர எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்து உதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து இந்நூல்வரிசை செப்பமுடன் வெளிவரத் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. எம் தமிழ்க் காப்புப் பணிக்கு துணை நிற்க வேண்டுகிறோம். 2010 பதிப்பகத்தார் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம்! தமிழாராய்ச்சியின் வளர்ச்சியில் புதிய போக்குகளை உண்டாக்கிய பெருமைக்குரியவர்கள் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அறிஞர் களேயாவர். ஏட்டுச் சுவடிகளில் இருந்த இலக்கிய, இலக்கணப்பெருஞ் செல்வங்களை அனைவரும் அறியுமாறு செய்து புதிய ஆய்விற்குத் தடம் பதித்தவர்கள் இவர்களே ஆவர். மேலை நாட்டார் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும், கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழி வகுத்தன. ஆறுமுக நாவலர் (1822-1879) சி.வை. தாமோதரம் பிள்ளை (1832-1901), உ.வே. சாமிநாதையர் (1855-1942) ஆகியோர் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளாய் விளங்கித் தமிழுக்கு வளம் சேர்த்தனர் என்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர், இ. சுந்தரமூர்த்தி தனது பதிப்பியல் சிந்தனைகள் எனும் நூலில் பதிவு செய்துள்ளார். இந்நூல் தொகுதிகளை வெளியிடுவதன் மூலம் தமிழ்ப்பதிப்பு முன்னோடிகளை வணங்குவோம். முன்னுரை நாவலந் தீவில் தோன்றி வளர்ந்த சமயங்களுள் தொன்மையும் முதன்மையும் பெற்று விளங்குவது சைவசமயமாகும். சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் விளங்கும் செம்பொருளாகிய சிவபரம்பொருளைச் சிவம் என வழங்குதல் தமிழ் மரபாகும். சிந்தனைக்கரிய சிவமே போற்றி எனவரும் திருவாசகத் தொடர் இம்மரபினை வலியுறுத்தல் காணலாம். செம்பொருளாய சிவமெனலாமே எனவருந் திருமந்திரத் தொடர் ஒரு நாமம் ஒருருவமின்றி மாற்ற மனங்கழிய நின்ற பரம்பொருளைச் செம்பொருள் எனவும் சிவம் எனவும் போற்றும் தொன்மை மரபினைச் சுட்டுவதாகும். செம்பொருளாகிய சிவபரம்பொருளை நம் முன்னோர் திருவுருவில் எண்ணி அம்மையப்பனாக வழிபடும் நிலையில் அம்முதல்வனுக்கு அமைந்த திருப்பெயர் சிவன் என்பதாகும். செவ்வானன்ன திருமேனியினனாகத் திருவுருவமைத்து வழிபட்ட நிலையில் அமைந்த சிவன் என்னுந் திருப்பெயர் செம்மையென்னுந் தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்த பெயராகும் என்பதனைச் செம்மேனிப் பேராளன் வானோர்பிரான் எனக் காரைக்காலம்மையாரும், சிவனெனுநாமந் தனக்கேயுடைய செம்மேனியம்மான் எனத் திருநாவுக்கரசரும் அருளிய மெய்ம்மொழிகளால் இனிதுணரலாம். எனவே முழுமுதற் கடவுளுக்கு வழங்கும் சிவம், சிவன் என்னும் இருபெயர்களுள் முன்னையது சிந்தனைக்கு அரிய உருவங்கடந்த நிலையினையும், பின்னையது அடியார்க்கு எளிவந்தருளுந் திருவுருவ நிலையினையும் குறித்து வழங்குதலும் இவ்விரு நிலைப்பெயர்க்கும் அடிப்படையாயமைந்தது செம்மையென்னும் பண்பென்பதும் நன்கு தெளியப்படும். இவ்வுண்மை, செம்பொருட்டுணிவே சிவபெருமானே எனவருந்திருவாசகத் தொடரால் உய்த்துணரப்படும். செம்மேனிப் பேராளனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு போற்றும் வழிபாட்டு நெறியாதலின் இது சைவம் என்னும் பெயர்த்தாயிற்று. எந்நாட்டவர்க்கும் இறைவனாகிய முதல்வனைத் தென்னாட்டவ ராகிய தமிழ்மக்கள் சிவன் என்ற திருப்பெயராற் போற்றி வழிபட்டனர் என்பது தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி எனவரும் திருவாசகச் செழுமறையால் இனிதுபுலனாம். சிவபெருமானை வழிபட்டு அம் முதல்வனது திருவருட்டுணை கொண்டு உலகுயிர்கள் இயங்குந் திறத்தினைத் தமது வாழ்வியல் நுகர்ச்சியிற் கண்டு தெளிந்த தமிழ் மக்கள் தமது வாழ்வியலின் முடிந்த முடிவாகக் கண்டுணர்ந்த மெய்யுணர்வுக் கொள்கை இடைக்காலத்திற் சைவசித்தாந்தம் என்ற பெயரால் வழங்கப் பெறுவதாயிற்று. குமரிமுதல் இமயம் வரை பரவி வாழ்ந்த தொன்மைக் குடியினராகிய தமிழ்மக்களின் அகவாழ்வாகிய குடும்ப வாழ்க்கையிலும், புறவாழ்வாகிய சமுதாய வாழ்க்கையிலும் முகிழ்த்துத் தோன்றிய சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கையானது வடநாட்டின் வழிவந்த வேத உபநிடதங்களுடன் தொடர்பு பெற்றுச் சிவாகமங்களின் சார்புடையதாய்ச் செழித்து வளர்ந்த காலம் திருமூலநாயனார் காலம் எனக் கொள்ளுதல் பொருந்தும். சைவசித்தாந்தம் பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (உலகு) என்னும் முப்பொருளுண்மையாகிய இம்முடிபு வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் தொல்காப்பியனார் காலத்தும் அவர்க்குப்பின் கடைச்சங்க காலத்தும் தமிழகத்தில் வாழ்ந்த நாட்டு மக்கள் வாழ்க்கையொடு தொடர்புடையதாய் நிலைபெற்று வரும் பண்டைத் தமிழர் தத்துவக் கொள்கையாகும். இவ்வுண்மை இயற்றழிழ் நூலாகிய தொல்காப்பியத்தையும் சங்கச் செய்யுட்களையும் உலகப் பொது மறையாக நிலவும் திருக்குறளையும் சைவசித்தாந்த சாத்திரங்களோடு ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும். பழந்தமிழர் மேற்கொண்டொழுகிய தெய்வ வழிபாட்டு நெறியில் உருவாகிய சைவசித்தாந்தம் என்னும் முத்தி நெறி பற்றிய மெய்யுணர்வுக் கொள்கையினைச் சிறப்பாகப் பத்தி நெறியாகிய தெய்வ வழிபாட்டுடன் இயைத்துப் பேணி வளர்த்த அருளாசிரியர்கள் திருமூலநாயனார் முதல் சேக்கிழார் நாயனார் வரையுள்ள திருமுறையாசிரியர்களாவர். தோத்திர வடிவிலமைந்த சைவத் திருமுறைகளாகிய செந்தமிழிலக்கியங்களிலிருந்து சைவசித்தாந்தச் சாத்திரமாகிய இலக்கண நூல்களை உருவாக்கிக் கொடுத்தவர்கள் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார், திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியார், திருவதிகை மனவாசகங்கடந்தார், உமாபதி சிவாசாரியார் ஆகிய திருவருட் சான்றோராவர். பன்னிரு திருமுறையாசிரியர்களில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் ஆகிய நால்வரையும் சைவ சமயகுரவர் நால்வர் எனச் சிறந்தெடுத்துப் போற்றுவது போலவே சைவசித்தாந்த நூல்களை இயற்றியருளிய சான்றோர்களுள் மெய்யுணர்வுபதேச பரம்பரையைத் தோற்றுவித்து வளர்த்த மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார் ஆகிய நால்வரையும் சைவசமய சந்தானகுரவர் நால்வர் எனப் போற்றுவது சைவமரபாகும். மெய்கண்ட நூல்களாகிய சித்தாந்த சாத்திரம் பதினான்கினையும் அருளிச் செய்த திருவருட் சான்றோர்களின் வரலாறுகளையும் அவர்களால் இயற்றப்பெற்ற திருவுந்தியார் முதல் சங்கற்பநிராகரணம் முடியவுள்ள சைவ சமய மெய்ந்நூல்கள் பதினான்கின் பொருளமைப் பினையும் இவற்றுக்கு நிலைக்களமாகவுள்ள பன்னிரு திருமுறைகளிற் காணப்படும் சைவசித்தாந்தக் கொள்கையினையும் இவை எல்லாவற்றுக்கும் காலத்தால் முற்பட்ட சிலப்பதிகாரம், சங்கவிலக்கியம், திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய பண்டைத் தமிழ் நூல்களில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள தத்துவ நுண் பொருள்களையும் ஒப்புநோக்கி யாராய்ந்து தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவிவரும் சைவசித்தாந்த மெய்ந்நெறிக் கொள்கையினை வரலாற்று நெறியில் ஆராய்ந்து விளக்கும் முறையில் மெய்கண்ட நூல்களின் வரலாறாகிய இந்நூல் எழுதப் பெறுகின்றது. சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கையினைச் சிறப்பாகத் தமிழகத்திலும் பொதுவாகப் பாரத நாட்டிலும் நிலைபெற்று வழங்கும் வைதிகம் வைணவம் முதலிய ஏனைச் சமயதத்துவக் கொள்கைகளோடும் நாட்டு மக்களின் வாழ்வியலோடும் ஒப்புநோக்கியுணரும் ஒப்பீடும் இந்நூலில் உரியவிடங்களில் மேற்கொள்ளப்பெறும். அணிந்துரை மக்களை மக்களாக வாழ்விக்கவே எல்லாச் சமயங்களும் முற்படுகின்றன. வாழ்வின் அருமை சமய நெறியினாலே முழுமையாக உணரப்பெறும் என்பதைப் பலரும் நம்புகின்றனர். எனவே, சமய தத்துவ ஆராய்ச்சி மக்கட்குப் பலவகைகளிலும் வேண்டப்படுவ தொன்றாகிறது. மனிதனை மனிதனாக வாழச்செய்து தெய்வமாக உயர்த்தும் இப்பணியை மேற்கொள்ளுதல் அறிவுடைப் பெருமக்களின் தலையாய கடமையாகிறது. தத்துவ உணர்வு வளர்ச்சியடையுமானால், நாட்டில் மக்களிடையே ஏற்படும் பல்வேறு குழப்பங்களும் தீரும். மனம் தெளிவு அடையும். நலங்கள் பல விளையும். இவ்வகையில் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எண்ணும் மனநிலையை மக்கள் பெற வேண்டும் என்பது திருவள்ளுவரின் கருத்தாகும். இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். என்றும், இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். என்றும் இதனை விளக்குவர். இன்பத்தை விரும்பாமல் துன்பத்தை இயற்கையானது என்று தெளிந்தவன் துன்பம் அடைய மாட்டான் என்பதும், இன்பம் வந்தபோது அதை மனத்தான் விரும்பாதவன், துன்பம் வந்த காலத்திலும் அதற்காக மனம் வருந்தமாட்டான் என்பதும் குறட்கருத்துக்களாம். இவற்றை அடிப்படையாகக் கொண்டவையே நம் சமய நூல்கள். மெய்யுணர்வு தலைப்பட்டவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகவே கருதுவர். அத்தகையவர் கடமை உணர்வுகளில் தவறாத வாழ்வினை உடையவராவர்; உரிமை என்ற உணர்வே இல்லாதவராயிருப்பர். அவர்களே என்றும் இன்பம் பெருகும் இயல்பினராய் விளங்குவர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை எனப் பாடிய அப்பரடிகள் போன்றோர் இந்நிலையில் வாழ்ந்து காட்டிய பெருமக்களாவர். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எண்ணும் இந்நிலை பெறுதல் எளிதல்ல. தத்துவ உணர்வுகளை நெறியாக வளர்ப் பதனாலேயே அதனை மக்களிடையே உண்டாக்க முடியும். இவ்வயில், சிவனை வழிபடும் சிவநெறியான சைவமே மிகப் பழமையானது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் காணக் கிடைத்த அகழ்வாய்வுப் பொருள்களாலும் அறிகிறோம். சிவநெறியிற் கொள்ளப்படும் அடிப்படை உண்மைகளையும் கொள்கைகளையும் முறைப்படுத்தி உணர்த்தும் நூல்கள் சாத்திரங்கள் எனப்பெறும். சாசனஞ் செய்வது சாத்திரம் என்பர். சாசனம் - ஒழுங்கு, ஆணை, பொருள்களை ஒழுங்குபடக் கூறுதல் பற்றியும், ஆசான் வடிவில் தோன்றி இறைவன் தன் ஆணையை இந்நூல்கள் வடிவில் வைத்தல் பற்றியும் இவை சாத்திரம் எனப்பெறும். இவ்வியல்புள்ள, ஞான மெய்ந்நெறி உணர்த்தும் தமிழ் நூல்களுள் முதன்மையான முழுநூல் திருமூலரின் திருமந்திரமாகும். எட்டாம் நூற்றாண்டு முதலாகவே நம் நாட்டில் சமயக் கொள்கைகளிலே குழப்பங்கள் பல மலிந்திருந்தன. அக்குழப்பங்களை நீக்கி மக்கள் தெளிவுணர்வு பெற்றுய்ய வேண்டுமென்னும் நற்சிந்தை கொண்ட சிவாநுபூதிச் செல்வர்கள் அருளிச்செய்த செந்தமிழ் நூல்கள் பதினான்கு ஆகும். அவை, திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, உண்மை நெறி விளக்கம், கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, சங்கற்ப நிராகரணம் என்பனவாம். மக்கள் பொய்யை நீங்கி மெய்யில் நிற்குமாறு, மெய்யைக்கண்டு காட்டுதலால் மெய்கண்ட நூல்கள் எனவும், மறைமுடிவின் சித்தாந்தம் கூறும் சிவாகம ஞானபோதப்பொருள் உணர்த்ததுதல் பற்றிச் சைவ சித்தாந்த சாத்திரங்கள் எனவும் இந்நூல்கள் வழங்கப் பெறுகின்றன. சைவ சமய மெய்ந்நூல்களாம் இப்பதினான்கின் பொருளமைப் பினை வரலாற்று நோக்கில் ஆராய்ந்து சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்னும் தலைப்பிலான இவ்வரிய நூலைப் படைத்துள்ளார், திருமுறைத் தமிழ்மணி, சித்தாந்தச் செம்மல், கலைமாமணி, பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்கள். தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமந்திரம், திருமுறைகள் ஆகிய பண்டைத் தமிழ் நூல்களில் பொதிந்துள்ள நுண்பொருள்களையெல்லாம் ஒப்பு நோக்கியாராய்ந்து இந்நூலில் வெளிக்கொணர்ந்திருப்பதைக் கொண்டு இந்நூலாசிரியரின் பேருழைப்பையும் பெருஞ் சிந்தனையையும் நன்குணரலாம். சிவவழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும் என்னும் முதற்பகுதியிலேயே பண்டைக்காலத்தில் சமய வேறுபாடில்லாத பொதுமை வாய்ந்த கடவுள் வழிபாடு நம்நாட்டில் இருந்தமையை இந்நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளமை பாராட்டுக்குரியதாகும். தொல்காப்பியனார் காலம் முதலாக உள்ள வழிபாட்டு நெறிகளையும் தத்துவக் கொள்கைகளையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிரல்படத் தொகுத்துரைக்கும் ஓர் அரிய நூலாக இது அமைந்திருப்பது தமிழுலகத்திற்கும் சமய உலகிற்கும் மேலும் பெருமை சேர்ப்பதாகும். சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் பொதுவாக உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் கருத்துக்களைத் தழுவியுள்ளன என்பதும், சிறப்பாகச் சைவத் திருமுறைகளால் தெளிந்துணரப் பெற்ற தத்துவ உண்மைகளை விரித்துரைக்கும் செந்தமிழ் நூல்களே இப்பதினான்கு நூல்கள் என்பதும் இந்நூலாசிரியரின் முடிந்து முடிபாகும். சைவமும் தமிழும் தம்மிரு கண்ணெனப் போற்றிய திரு க.வெள்ளைவாரணனார் அவர்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக (14-1-1917 - 13-6-1988) இந்நிலவுலகிலே வாழ்ந்திருந்த சைவப் பெருந்தகையாவார். இலக்கண இலக்கியப் பெரும்புலமையாளரான பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் படைத்த பன்னிரு திருமுறை வரலாறு பயன்மிக்கதொரு நூலாகும். இவ்வகையில் இவருடைய மற்றொரு படைப்பான சைவ சித்தாந்த சாத்திர வரலாறு என்னும் இப்பெருநூலினைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் இப்பொழுது பெருமையுடன் வெளியிடுகின்றது. பல்லாண்டுகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய இவர் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலும் மொழிப்புலத் தலைவராகப் பணியாற்றியவர் ஆவார். அரிய இலக்கண, சமய நூல்களை உருவாக்கியளித்த இந்நூலாசிரியரின் ஆராய்ச்சித் திறனை இப்புதிய நூல் மூலமாக மேலும் பலரும் உணர்வர் என நம்புகிறேன். இந்நூல் நன்முறையில் உருவாவதற்குப் பெருந்துணை புரிந்த பேராசிரியர் முனைவர் சோ.ந. கந்தசாமி அவர்களுக்கும், தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநர் (பொ.) முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி அவர்களுக்கும் நன்றி. இந்நூலை நன்முறையில் உருவாக்கிய பதிப்புத்துறையினருக்குப் பாராட்டுதல்கள். 20-12-2002 முனைவர் இ. சுந்தரமூர்த்தி துணைவேந்தர் பொருளடக்கம் பதிப்புரை iv முன்னுரை vii அணிந்துரை x 5. திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும் 1 6. சிலப்பதிகாரத்தில் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் சிவநெறிக் கோட்பாடுகளும் 77 7. மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் சிவநெறிக் கொள்கையும் 113 8. தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் கூறும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் தத்துவவுண்மைகளும் 132 9. திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள் 274 10. திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை 336 சைவ சித்தாந்த சாத்திர வரலாறு - பாகம் 2 5. திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறி முறைகளும் தத்துவவுண்மைகளும் தமிழ் மக்களது வாழ்வியற் கூறுகளாகிய ஒழுக்கநெறி, கலை, நாகரிகம், பண்பாடு, மெய்ந் நூற்கொள்கை என்பன பிற மொழியாளரிடமிருந்து பிரித்துணர்தற்குரிய தனிச்சிறப்பு வாய்ந்தன என்பது, தொல்காப்பியம், பத்துப்பாட்டுப்பாடல், எட்டுத்தொகை முதலிய தொன்னூல்களால் நன்குணரப்படும். ஆசிரியர் தொல் காப்பியனார் காலத்திலும் அவர்க்குப் பின் கடைச்சங்க காலத்தலும் தமிழகத்திற் குடியேறிய வடமொழியாளர் தொடர்பினால் அன்னோர் தம் வேத நெறியானது, தமிழ்வேந்தர்களது ஆதரவுடன் தமிழ்நாட்டில் வேரூன்றித் தமிழர் சமுதாயத்திலும் இடம்பெற்று வளர்வதாயிற்று என்பதற்குரிய குறிப்புகளும் தமிழ்த் தொன்னூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. வடநாட்டில் வடமொழியாளர் மேற்கொண்ட வேத வேள்வி பற்றிய வைதிகநெறியினை யெதிர்த்து அந்நாட்டில் தோன்றி புத்த சமண சமயங்களின் தாக்குதலால் வைதிகநெறியின் வளர்ச்சி தடைப்பட்டமையாலும் வேதத்தையே பற்றுக்கோடாகக் கொண்டுள்ள அந்நெறியானது தமிழகத்தில் மக்களது ஆதரவின்றித் தனித்துப் படர்தற்குரிய பற்றுக்கோடில்லாமையாலும் தமிழ்மக்களால் போற்றப்பெறும் தொன்மைவாய்ந்த கடவுட்கொள்கையாகிய சிவநெறியின் சார்பினைப் பெற்றுத் தமிழகத்தில் நன்கு வேரூன்றி நிலைபெறுவதாயிற்று. இந்நிலையில் வைதிக நெறிக்கு மாறாக வேதவேள்விகளை எதிர்க்கும் நோக்குடன் வடநாட்டில் தோன்றி வளர்ந்த சமண பௌத்த சமயங்களும் சங்ககாலத்தில் தமிழகத்தில் நுழைந்து தமிழ்மக்களின் நன்மதிப்பினைப் பெற்றுத் தமிழகத்தில் நிலைகொள்வனவாயின. இவ்வாறு ஒன்றோடொன்று முரண்பாடுடையனவாகிய பல்வேறு சமயங்களும் தமிழகத்தில் இடம்பெற்றுப் பரவிரும் சூழ்நிலையிலேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் தமிழகத்தில் தோன்றினார். தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத அயலவர் நுழைவினாற் பரவி வளரும் பல்வேறு சமயக்கொள்கைகளும் தம்முள் முரண்பட்டு மோதித் தமிழகத்தின் பொதுவாழ்விலே பல்வேறு குழப்பங்களை உண்டுபண்ணாதபடி பல்வேறு சயங்களின் தாக்குதல்களால் விளையும் முரண்பாடுகளை முன்னுணர்ந்து விலக்கக்கருதிய திருவள்ளுவர் எல்லாச் சமயத்தாரும் நன்றென விரும்பியேற்றுக் கொள்ளும் வண்ணம் உலகமக்கள் அனைவரும் அன்பினால் ஒன்றுபட்ட வாழ்தற்கு இன்றியமையாத மெய்ம்மையான ஒழுக்கநெறியினை அறிவுறுத்தும் முறையில் வாழ்வியல் நுலாகிய திருக்குறளை இயற்றியருளினார் என்பது திருக்குறளைப்பற்றிய வரலாறாகும். மக்களது நல்வாழ்வுக்கு உறுதியளிப்பனவாக உயர்ந்தோரால் உணர்த்தப் பெற்றவை அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று மேயாகும். மக்கட்குலத்தார் தமது வாழ்க்கைக் கடமைகளில் ஈடுபட்டு உழைக்கும்போது தம்மாற் பிறர்க்கு எத்தகைய தீங்கும் நேராதபடி தம்முடைய மனம் மொழிமெய் என்னும் முக்கரணங் களையும் ஒரு நெறிப்படச் செலுத்தும் நல்லொழுக்க நெறியே அறம் எனப்படும். இத்தகைய அறநெறியில் நின்று பொருளைச் சேர்த்து அப்பொருளைக்கொண்டு இன்பம் நுகர்தலே நன்றுந்தீதும் பகுத்துணரும் மனவுணர்வுடைய நன்மக்களின் வாழ்க்கை முறையாகும். இம்முறையினை மூன்றன்பகுதி என்ற பெயராற் குறிப்பிடுவர் தொல்காப்பியர். தொல்காப்பியனார் குறித்தவண்ணம் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று பகுதிகளாக அமைந்த மக்களது நல்வாழ்க்கை முறையினை மூன்று பால்களாக விளக்கும் நோக்குடன் திருவள்ளுவர் அருளிச்செய்த அறநூல் திருக்குறள். அறிவுநலம் வாய்ந்த புலவர் பெரு மக்களால் இயற்றப்பெறும் இலக்கியங்கள் யாவும் வாழ்க்கைக்கு அடிப்படையாகிய அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்கள் மூன்றனையும் தம்மகத்தே கொண்டு அமைதல் வேண்டும் என்பது தமிழ் இலக்கிய மரபாகும். எல்லாவுயிர்களாலும் விரும்பி நுகரப்படுவது இன்பம். இன்ப நுகர்ச்சிக்குச் சாதனமாக மக்களால் ஈட்டப்படுவது பொருள். அவ்வாறு பொருளை யீட்டுங்கால் பிறவுயிர்க்குத் தீங்கு நேராதவாறு மாசற்ற மனத்தாலும் தீமையில்லாத சொல்லாலும் செயலாலும்பொருள் செய்தொழுகும் நெறிமுறையே உயர்ந்தோரால் அறம் எனச் சிறப்பித் துரைக்கப்படும். ஏனைய பொருளும் இன்பமும் போல் இவ்வுலக வாழ்வில் மட்டும் பயன்தருமளவில் நின்று விடாமல் பிறப்புத்தோறும் உயிரொடு தொடர்ந்து சென்று இம்மை மறுமை வீடு என்னும் மும்மை நலங்களையும் ஒருங்கே தருதற்குரிய ஆற்றல் வாய்ந்தது அறம் ஒன்றேயாகும். எனவே பொருள் இன்பம் என்னும் இரண்டினும் அறமே வலியுடையது என்பதனைத் திருக்குறளில் அறன்வலியுறுத்தல் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் தெளிவாக வலியுறுத்தியுள்ளார். தமிழ் மூவேந்தருள் சோழன் நலங்கிள்ளியின் வெண்கொற்றக்குடையானது சேரன் பாண்டியன் என்னும் ஏனையிருவர் குடைகளினும் முற்பட்டு உயர்ந்து விளங்கும் தோற்றத்திற்கு, அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள் மூன்றனுள் ஏனைப்பொருளும் இன்பமும் பிற்பட அறம் ஒன்றே முற்பட்டு விளக்குந் திறத்தினை உவமையாக எடுத்துக்காட்டும் முறையில் அமைந்தது, சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉந் தோற்றம் போல இருகுடை பிற்பட ஓங்கிய வொருகுடை உருகெழுமதியின் நிவந்து சேண் விளங்க (புறம். 31) எனவரும் புறப்பாடலாகும். அறமுதலாக எண்ணப்படும் இறுதிப் பொருள் மூன்றனுள் மன்னுயிர்களுக்கு நிலைபெற்ற ஆக்கத்தை வழங்கவல்ல வன்மையுடையது அறம் ஒன்றுமே என்பதும் ஏனைய பொருளும் இனபமும் முற்கூறிய அறத்தின் துணையினைக்கொண்டு பயனளித்தற் குரியன என்பதும் மேற்குறித்த கோவூர்கிழார் வாய்மொழியால் நன்குபுலனாகும். மக்களது மனத்திற்படிந்துள்ள அழுக்காறு அவா, வெகுளி என்னும் குற்றங்களையும் இன்னாச்சொல் முதலிய மொழிக்குற்றங் களையும் அகற்றிய நிலையில் நிகழ்வதே மெய்ம்மையான அறம் எனப்படும். நல்லறங்கட்கெல்லாம் நிலைக்களமாகத் திகழ்பவன் அறத்தின்கடலாகவும் அருளாளனாகவும் விளங்கும் இறைவன் ஒருவனே. அம்முதல்வனது திருவருள்நெறியாகிய ஒழுக்க நெறியின் வழுவாது ஒழுகுவோரே அறவோர் எனப்போற்றப்பெறும் சிறப்புடையோராவார் என்பன அறத்தின் தொடர்பாகத் திருவள்ளுவர் அறிவுறுத்திய கருத்துக்களாகும். அறத்திற்குப் பற்றுக்கோடாகிய இறைவனது அருள்வழி யடங்கிநின்று மாசற்றமனமும் தீமையில்லாத சொல்லும் உடையராய்ச் செய்யும் நற்செயல்களே அறமெனப்படும் என்பது திருவள்ளுவர் அறிவுறுத்திய அறத்தின் இலக்கணமாகும். அறத்தைப்பற்றிய நல்லுணர்வு, மக்களினத்தாரில் தனியொருவருடைய கல்வி அறிவு செல்வம் செயல்திறன் முதலியவற்றால் மட்டும் உலகியல் வாழ்வில் நிலை பெறுதற்குரிய சுருங்கிய எல்லையுட்பட்டு அடங்குவதன்று; மக்கள் ஒவ்வொரு வரும் தாம்தாம் வழிபட்டுப்போற்றும் இறைவனது அருளால் ஒன்றுகூடிப் பெறுதற்குரிய விரிந்த பரப்பினையுடையது அறமாகும். சுருங்கக்கூறின் உலக முதல்வனாகிய இறைவனது பேரருளும் அவ்வரு ளால் மக்கள் மனத்தகத்தே ஊற்றெடுத்துப் பெருகும் பேரன்பும் ஒருங்கு இணைந்த சமுதாய அமைப்பிற் கருக்கொண்டு நிலை பெறுவதே அறம் எனக்கூறுதல் மிகவும் பொருத்த முடையதாகும். ஆசிரியர் திருவள்ளுவனார், அறமுதலாகியமும் முதற்பொருள் எனத் தொல்காப்பியனார் குறித்தவண்ணம் மூன்றன்பகுதியாக (முப்பால்களாக)த் தம் நூலை இயற்றியுள்ளார். தொல்காப்பியனார் வாழ்ந்த காலத்திற்கும் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கும் பிறப்பட்ட காலத்தில் வாழ்ந்த பெருமக்கள் அறமுதலாக முன்னோர் எண்ணிய உறுதிப்பொருள் மூன்றனுள் இன்பத்தினைச் சிற்றின்பம் எனவும், பேரின்பம் எனவும் இரண்டாகப் பகுத்தனர். இப்பகுப்பு சிற்றின்பம் மற்றின்பம் (பேரின்பம்) எனத் திருவள்ளுவர் பகுத்த முறையினை அடியொற்றியதாகும். சிற்றின்பம் என்றது ஐம்புலன்களால் இவ்வுலகில் நுகர்தற்குரிய இம்மையின்பத்தினை; மற்றின்பம் (பேரின்பம்) என்றது பிறப்பற்ற நிலையிற் பெறுவதற்குரிய வீடுபேற்றினை. இவற்றுள் முன்னதனை இன்பம் என்றும் பின்னதனை வீடு என்றும் பெயரிட்டு அறம் பொருள் இன்பம் வீடு என உறுதிப்பொருள்கள் நான்கெனக் கொண்டனர் பின் வந்தோர். இங்ஙனம் பிற்காலத்தில் நான்காவதாகப் பிரித்துரைக்கப்படும் பேரின்பமாகிய வீடுபேறு தொல்காப்பியனார் முதலிய முன்னைத் தமிழ்ச் சான்றோரால் மூன்றவதாகச் சுட்டப்பட்ட இன்பத்துள்ளேயே அடங்கும் என்பது, சிற்றின்பம் வேண்டி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டுபவர் (திருக். 175) எனவும், இன்பம் இடையறாது, ஈண்டும் அவாவென்னும் துன்பத்துட்டுன்பங் கெடின் (திருக். 369) எனவும் வரும் திருவள்ளுவர் வாய்மொழிகளால் இனிது விளங்கும். எனவே வையத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறியினை அறிவுறுத்த எண்ணிய திருவள்ளுவர் தாம்கூற எடுத்துக்கொண்ட அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப்பொருள்களை அறிவுறுத்தும் முப்பாலிலே பிற்காலத்தில் நான்காவதாகப் பகுத்துரைக்கப்படும் வீடுபேற்றின்பமும் அடங்கவே திருக்குறளை இயற்றியுள்ளார் என்பது ஆன்றோர் துணிபாகும். இது பற்றியே முப்பாலில் நாற்பால் மொழிந்தவர் (திருவள்ளுவமாலை 19) எனவும், அறம் பொருள் இன்பம் வீடென்னும் இந்நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவு (திருவள்ளுவமாலை 8) எனவும் திருவள்ளுவரைப் புலவர் பெருமக்கள் பலரும் உளமுவந்து போற்றியுள்ளார்கள். எனவே திருக்குறளின் அறம் பொருள் இன்பம் என்னும் மும்முதற் பொருள்களே விரித்துரைக்கப்படினும் அம்முப்பொருள்களின் வாயிலாக முடிந்த பேரின்ப நிலையாகிய வீடுபேற்றியல்பும் தெரிவிக்கப்பெற்றுள்ளமை பெறப்படும். இந்நுட்பம், அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனளித்தேம் வீடு தெளிந்தேம் (திருவள்ளுவமாலை 50) எனவரும் திருவள்ளுவமாலையால் இனிது புலனாதல் காணலாம். மேற்குறித்த உறுதிப்பொருள் நான்கினுள் இறுதிக் கண்ணதாகிய வீடுபேற்றுநிலை, திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார், பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் நான்கதிகாரங்களிலும் துறவற இயலில் அருளுடைமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அலாவுறுத்தல் என்னும் ஐந்து அதிகாரங்களிலும் தெளிவாக உணர்த்தப் பெற்றுள்ளன. இந்நுட்பத்தினைத் தெளியவுணர்ந்த சைவசமய சந்தான ஆசிரியர் நால்வருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரிய சுவாமிகள், தெய்வப் புலமைத் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் மெய்வைத்த சொற்பொருள் நுட்பங்களை விரித்து விளக்கும் நோக்குடன் வீட்டு நெறிப்பாலாகத் திருவருட் பயன் என்னும் சைவ சித்தாந்த நூலை அருளிச் செய்துள்ளார். தொல்காப்பியம் முதலிய பண்டைத் தமிழ் நூல்களால் அறிவுறுத்தப்பெறும் தெய்வங்கொள்கையில் உறுதியான நம்பிக்கையுடைய புலமைச்செல்வர் திருவள்ளுவர் என்பதும் அவர் இயற்றியருளிய திருக்குறள் மெய்யுணர்வினால் உணர்ந்துரைத்த பேருண்மைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் தமிழ் மறையென்பதும், தனியறிவை - முன்னந் தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவ ரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல் (நெஞ்சு விடுதூது, கண்ணி 23 -25) எனவரும் உமாபதி சிவாச்சாரியார் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருளுண்மையினை வற்புறுத்தும் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கை செந்தமிழ் நாட்டில் வாழ்ந்த திருமூலர், மெய்கண்டார் முதலிய அருளாசிரியர் களால் அறிவுறுத்தப் பெற்றதென்பதும், தமிழ்நாட்டிற்கே சிறப்புரிமையுடையதாக உருவாகி வளர்ந்துள்ள இத்தத்துவக் கொள்கைக்குரிய வேர்கள் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் முதலிய தமிழ்க் தொன்னூல்களில் ஆங்காங்கே ஆழ்ந்து ஊன்றிப்பரவி இடம் பெற்றுள்ளன என்பதும் தொல்காப்பியம் திருக்குறள் முதலிய பண்டைத் தமிழ் நூல்களையும் சைவத் திருமுறைகளையும் அவற்றின் பயனாகத் தோன்றிய சைவசித்தாந்த சாத்திரங்களாகிய மெய்கண்டநூல்கள் பதினான்கினையும் ஒப்பிட்டு ஆராய்வார்க்கு இனிது விளங்கும். மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் ஒன்றாகிய திருவருட்பயன் என்பது, சைவசமய சந்தான ஆசிரியர் நால்வருள் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பட்ட எட்டு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளின தமிழ் மறையாகிய திருக்குறளை அடியொற்றி இயற்றப் பெற்றதென்பது இதன்கண் உள்ள குறள் வெண்பாக்களின் சொற்பொருளமைப்பாலும், பத்துக்குறள் கொண்டது ஓர் அதிகாரமாக அமைந்த அதிகாரத்தொடர்பாலும் இந்நூலின் முதற்கண் உள்ள பதிமுதுநிலை என்னும் அதிகாரம் திருக்குறளின் முதலதிகாரமாகிய கடவுள் வாழ்த்தினைச் சொற்பொருட் கூறுகளால் அவ்வாறே அடியொற்றியமைந்திருத்தலாலும் திருவள்ளுவர் அகரமுதல எனத் திருக்குறளைத் தொடங்கியது போலவே இந்நூலாசிரியரும் அகரவுயிர்போல் என இந்நூலைத் தொடங்கியிருத்ததலாலும் நன்கு துணியப்படும். திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் வீடு பேறடைவார் உணர்ந்து கொள்ளுதற்குரிய மெய்யுணர் வுண்மைகளை ஆங்காங்கே குறித்துள்ளமையுணர்ந்த உமாபதி சிவாச்சாரியார், சைவசித்தாந்தத் தத்துவத்திற்கு அடிப்படையாக அமைந்த அவ்வுண்மைகளை விரித்து விளக்கும் நோக்குடன் திருவருட்பயன் என்னும் சைவ சித்தாந்த மெய்ந்நெறிப்பயனை இயற்றியுள்ளமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தகுவதாகும். மெய்கண்டார் அருளிய சிவசித்தாந்தத் தனிமுதல் நூலாகிய சிவஞானபோதத்தின் சார்புநூலாக உமாபதி சிவாசாரியாரால் இயற்றப்பெற்றது சிவப்பிரகாசம் என்பதாகும். அந்நூலில் விரித்துரைக்கப் பெறும் சைவ சித்தாந்தவுண்மைகளைக் கற்றுணர விரும்புவோர் அப்பொருளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முதற்கண் புரிந்து கொள்ளும் முறையில் உமாபதி சிவாச்சாரியாரால் இயற்றப்பெற்றது திருவருட்பயன் என்பதாகும். இறைவனது திருவருள் ஞானம் பெற்ற திருமுறையாசிரியர்களால் அருளிச் செய்யப்பெற்ற மெய்ப் பொருளியல்பாகிய நற்பொருட்பயன்களைச் சிறப்புமுறையில் விளக்க எழுந்த திருவருட்பயன் என்னும் இந்நூலானது உலகு உயிர் கடவுள் என்னும் முப்பொருளுண்மையினை வற்புறுத்தும் பொதுநிலையில் உலகப் பொதுமறையாகிய திருக்குறளின் யாப்பினையும் சொற்பொருளமைப்பினையும் அவ்வாறே அடியொற்றிச் செல்கின்றது. இவ்வுண்மை, எழிலீரைந்தும் வழுவறப்புணர்த்தித் தெள்ளுசீர்ப்புலமை வள்ளுவன் தனக்கோர் நற்றுணையுடைத்தெனக்கற்றவர் களிப்ப அருட்பயனென்னா அதற்கொருநாமந் தெருட்படப்புனைந்து செந்தமிழ்யாப்பிற் குறளடி வெள்ளை ஒரு நூறியம்பினன் எனவரும் நிரம்பவழகிய தேசிகர் உரைப்பாயிரத்தால் இனிது புலனாதல் காணலாம். யாதானும் நாடாமல் ஊராமல் (திருக். 397) என்றபடி உலக மக்கள் அனைவரும் ஒருநாட்டார் ஒரூரார் ஒரு குடும்பத்தார் என்னும் ஒருமையுணர்வுடன் அன்பினால் அளவளாவி இனிது வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த ஒழுகலாற்றினை வற்புறுத்தும் முறையில் வாழ்வியல் நூலாகத் திகழ்வது திருக்குறள். உலகத்தில் எல்லா மக்களும் இன்பமாக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளையுடைய திருவள்ளுவர், உலகில் மன்னுயிர்களின் வாழ்வுக்கு அடிப்படையாகவுள்ள பொருள்களின் தன்மைகுறித்துத் தம்முள் மாறுகோளுரை பகரும் சமயவாதிகளின் கருத்தின் வழியே சார்ந்து நின்று அவர்களுள் ஒருதிறத்தார்க்குரிய கொள்கையினை மட்டும் வற்புறுத்தும் நிலையில் ஒருபாற் சாயாமல், உலகமக்கள் எல்லோர்க்கும் உரிய இவ்வுலக வாழ்வினை அடிப்படையாகக் கொண்டு உயிர்கட்குச் சார்பாக எக்காலத்தும் மாறாதுள்ள செம்பொருளுண்மையினை உள்ளத்திற்கொண்டு உலகத்தார் உய்திபெறும் வண்ணம் வையத்து வாழ்வாங்கு வாழ்தற்குரிய நெறிமுறைகளை அறிவுறுத்தும் நிலையில் வாழ்வியல் நூலாகிய திருக்குறளை இயற்றியுள்ளார், இச்செய்தி, சமயக்கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன் (கல்லாடம் 14) எனவும், ஒன்றே பொருளெனின் வேறென்ப வேறெனின் அன்றென்ப ஆறு சமயத்தார் - நன்றென எப்பாலவரும் இயைபவே வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி (திருவள்ளுவமாலை 9) எனவும் வரும் ஆன்றோர் வாய் மொழிகளால் இனிது புலனாகும். பல சமயத்தவரும் தத்தமக்குரிய மறைநூலாக மதித்துப்போற்றும் நிலையில் உலக வாழ்க்கையில் அனைவர்க்கும் பயன் தரும் நல்லறங்கள் எல்லாவற்றையும் நடுநிலையில் நின்று அறிவுறுத்தும் பொதுநூலாக விளங்குவது திருக்குறள் என்னும் உண்மையினைச் சமயவேறுபாடின்றி எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். எனினும் இப்பொதுமையுணர்வொன்றினையுமே கருதி ஒன்றோடொன்று முரண்பட்ட சமயக்கொள்கைகள் யாவும் திருக்குறள் நூலாசிரியராகிய திருவள்ளுவர்க்கு உடன் பாடாவனவே எனக் கூறத்துணிவார் எவரும் இலர். சமயவாதிகளுள் கடவுள் உண்டு என்னும் கொள்கை யுடைவர்களும் கடவுள் இல்லை என்னும் கொள்கையாளர்களும், உயிர்கள் உள என்பாரும் இல என்பாரும், காணப்படும் உலகம் மெய் என்பாரும் வெறும் பொய்த் தோற்றமே என்பாரும், உயிர்கட்கு மறுபிறப்பும் இருவினைப் பயன்களும் உள என்பாரும் இல்லை என்பாரும் எனத் தம்முள் முரண்பட்ட கொள்கைகளையுடையராதலை அவரவர் சமய நூல்களால் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பலசமயத்தாரும் தம்முள் மாறுகொண்டு கூறும் பல்வேறு முடிவுகளுக்கும் இடந்தரும் நிலையில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியிருத்தல் இயலாது. இங்ஙனம் பலதிறத்தாலும் முரண்பட்ட கொள்கையினவாகிய சமயங்கள் பலவற்றுள் ஏதேனும் ஒரு சமயத்தினைச் சார்பாகக் கொண்டு தமது நூலை இயற்றாமல் உலகமக்கள் அனைவரது வாழ்க்கையிலும் காணப்படும் இன்பத் துன்பங்களாகிய நுகர்ச்சிகளையும் அவற்றுக்குக் காரணமாய் மக்கள் செய்யும் நல்வினை தீவினைகயும் அடிப்படையாய்க் கொண்டு நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இவையெனப் பகுத்துணர்ந்து தீவினையைத் தவிர்த்து நல்லனவே செய்தொழுகுதலாகிய அறநெறியினை உலக மக்கள் மேற்கொள்ளும்படி அறநூலாகிய திருக்குறளைத் திருவள்ளுவர் இயற்றியுள்ளார் என்பதும், நல்லதன் நலனும் தீயதன் தீமையும் ஆகிய இருவினைப்பயனும், அவை காரணமாக வரும் மறுபிறப்பும் இல்லையெனச் சாதிக்கும் இன்மைக் கொள்கைக்குத் திருக்குறளிற் சிறிதும் இடமில்லை யென்பதும் இந்நூலைக் கற்போர் உளங்கொளத்தக்கனவாம். திருவள்ளவர் திருக்குறளிலே ஐயத்திற்கிடனின்றி அறிவுறுத்திய கருத்துக்களிற் பெரும்பாலன அவர்க்குமுன் நெடுங்காலமாகத் தமிழகத்தே வாழ்ந்த சான்றோர்கள் தமது வாழ்க்கை நுகர்ச்சியிற் கண்டு அறிவுறுத்திய தொன்மையுடையனவே. தமிழ்நாட்டில் இடைக்காலத்திற் குடியேறிய அயலவர் கூட்டுறவால் பரவிய புதிய கொள்கைகளை எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு (திருக். 423) எனத்தெளிந்த சிந்தனையுடன் நடுவுநிலையில் நின்று ஆராய்ந்து அவற்றுள் நல்லனவற்றை உடன்பட்டு ஏற்றுக்கொண்டும், இந்நாட்டில் நெடுங்காலம் நிலைத்துள்ள பழைமையுடையனவாயினும் தீமையுடையனவற்றைக் கண்டித்து அறவே விலக்கியும் மக்களுக்கு நற்பயன்தரும் ஒழுக்கநெறியினை அறிவுறுத்தும் முறையினைத் திருவள்ளுவர் தம்நூலில் மேற் கொண்டுள்ளார். எனவே திருக்குறள் உலகப்பொதுமறை எனப் போற்றப்பெறுவதாயிற்று. உலகமக்கள் அனைவர்க்கும் பயன்படும் வகையில் பொதுநூலியற்றத் திருவுளங் கொண்ட திருவள்ளுவர், தாம் ஒரு நாட்டிற்கோ ஒரு மொழிக்கோ ஒரு சமயத்திற்கோ ஓரினத்திற்கோ உரியவர் என்ற நிலையில் தம்முடைய உள்ளத்தை ஒரு குறிப்பிட்ட சிறிய எல்லைக்குள் சுருக்கிக்கொள்ளாமல் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றாங்கு உலகிற் பலதிறப்பட்ட கொள்கையாளர்களின் கருத்துக்களுக்கும் விரிந்து இடங்கொடுக்கும் விசும்புதோய் உள்ளத்தினராய், உலகத்தார் உள்ளியதெல்லாம் நுனித் துணர்ந்து அறிவுறுத்தும் முறையில் திருக்குறளை இயற்றியுள்ளார். இதுபற்றியே எல்லாப் பொருளும் இதன் பாலுள இதன்பால், இல்லாத எப்பொருளும் இல்லையால் (திருவள்ளுவமாலை) எனப் புலவர் பெருமக்கள் திருக்குறளைப் பாராட்டிப் போற்றியுள்ளார்கள். உலகப்பொது மறையாகத் திகழும் திருக்குறளில் தமிழ்நாட்டில் தொன்மைக் காலத்தே தோன்றி நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம் வைணவம் முதலிய தெய்வ வழிபாட்டு மரபுகளையும் தமிழர் கண்ட தத்துவவுண்மைகளையும் புலப்படுத்தும் குறிப்புக்களும் வடநாட்டில் தோன்றியனவாய் இடைக்காலத்தே தமிழகத்தில் வந்து பரவிய வைதிகம் சமணம் பௌத்தம் முதலிய சமயங்களுக்குரிய கருத்துக்களையும் கொள்கைகளையும் புலப்படுத்தும் குறிப்புக்களும் இடம் பெற்றிருத்தல் காணலாம். பன்னெடுங்காலமாகத் தமிழகத்தில் வாழும் சைவர் வைணவர் சமணர் பௌத்தர் முதலிய பல சமயச் சான்றோர்களும் திருவள்ளுவர் அருளிய திருக்குறளைத் தத்தம் சமயத்திற்கு அரண்செய்யும் பொதுமறையாகவே மதித்துப் போற்றி வந்துள்ளார்கள். இச்செய்தி இதுவரை தமிழ்நாட்டில் தமிழ்மொழியில் தோன்றி வழங்கும் பல்வேறு சமய நூல்களால் நன்கு புலனாகும். இவ்வாறு திருக்குறளானது பல்வேறு சமயத்தவராலும் பல்வேறினத்தவர்களாலும் மதித்துப் போற்றப்பெறும் பொதுநூலாகக் கருதப்படினும் பன்னெடுங்காலமாகத் தமிழ் மக்கள் தம் வாழ்க்கையிற் கடைப்பிடித்தொழுகும் தெய்வக் கொள்கையினையும் அதனொடு தொடர்புடைய மெய்யுணர்வுக் கொள்கையினையும் ஐயத்திற் கிடனின்றித் தெளிவுபடுத்தும் முறையில் இந்நூல் அமைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டின் தொன்மைச் சமயங்களாகிய சைவ வைணவ சமயங்கட்குச் சிறப்புரிமையுடை யனவாகவுள்ள நம்பிக்கைக்கும் தொன்மைச் செய்திகட்கும் வழிபாட்டு நெறிக்கும் தத்துவவுண்மைக்கும் ஆதாரமாகிய பொருட் குறிப்புக்கள் பல திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களும் தோற்றமில் காலமாக (அநாதியே) உள்ள பொருள்கள் என்பது சைவ சித்தாந்தத் தத்துவநெறியின் அடிப்படைக் கொள்கையாகும். இக்கொள்கைக்கு நிலைக்களமாகத் திருக்குறள் அமைந்துள்ளது. இறைவன் மன்னு யிர், உலகு எனத் திருக்குறளில் வழங்கும் சொல்லாட்சியினைக் கூர்ந்து நோக்குங்கால் இம்மூன்று பொருள்களும் தோற்றமில் காலமாகவுள்ள உள்பொருள்களேயென்பது ஆசிரியர் திருவள்ளுவர் கோட்பாடாதல் நன்கு தெளியப்படும். திருக்குறளில் கடவுள் வாழ்த்து என்னும் முதலதிகாரத்தில் இறைவனாகிய பதியின் உண்மையும், வான்சிறப்பு என்னும் இரண்டாம் அதிகாரத்தில் உலகமாகிய பாசத்தின் உண்மையும் நீத்தார்பெருமை என்னும் மூன்றாம் அதிகாரத்தில் உயிர்களாகிய பசுவின் உண்மையும் முறையே உணர்த்தப்பெற்றன. திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறளும் நான்மறைமுடிபாகிய உபநிடதங்களும் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் என்னும் மூவர் அருளிய தேவாரமும் திருவாதவூர் முனிவர் அருளிய கோவை திருவாசகமும் திருமூலர் அருளிய திருமந்திரமும் மேற்குறித்த முப்பொருளுண்மையினை அறிவுறுத்தும் திறத்தில் ஒத்த கருத்துடைய மெய்ந் நூல்களாகும். இவ்வுண்மையினை, தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர்தமிழும் முனிமொழியுங் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் எனவரும் பாடலில் ஔவையார் விளக்கியுள்ளமை காணலாம். பன்னிரு திருமுறைகளிலும் திருக்குறள் பலவிடங்களிலும் எடுத்தாளப்பெற்றுள்ளது. திருமுறைகளின் பயனாகவமைந்த சைவ சித்தாந்தத் தத்துவ வுண்மைகளை விளக்கத் தோன்றிய திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் சிவஞானபோதம் முதலிய மெய்கண்ட நூல்களிலும் திருக்குறளின் பாடல்களும் தொடர்களும், சொற்களும் கருத்துக்களும் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன. இவ்வாறு தமிழ்மறையாகிய திருக்குறளோடு சைவத் திருமுறைகள் பன்னிரண்டும் சைவ சித்தாந்த நூல்கள் பதினான்கும் நெருங்கிய தொடர்புடையனவாக அமைந்திருத்தலை உற்று நோக்குங்கால் மேற்குறித்த சைவத் திருமுறைகளாலும் மெய்கண்ட நூல்களாலும் அறிவுறுத்தப்பெறும் சைவ சித்தாந்தத் தத்துவங்கள் பலவற்றுக்கும் ஆதாரமாகத் திகழ்வது திருவள்ளுவர் அருளிய உலகப் பொதுமறையாகிய திருக்குறளே என்னும் உண்மை நன்கு புலனாகும். இவ்வுலக நிகழ்ச்சியைக் கூர்ந்து நோக்குங்கால் காணப்படும் உலகம் ஓர் ஒழுங்கு நிலையாகிய ஆணைக்கு உட்பட்டு நின்று செயற்படுதல் நன்கு புலனாகும். இத்தகைய நியதியொடு பொருந்திய உலகின் இயக்கத்திற்கு வினை முதலாய் உடனின்று இயக்கி நிற்கும் பேரறிவும் பேராற்றலும் பேரருளும் வாய்ந்த முழுமுதற் பொருள் ஒன்று உலகுயிர் கட்குச் சார்பாய் இருத்தல் வேண்டும் என்பது அறிஞர் பலர்க்கும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இங்ஙனம் எல்லார்க்கும் புலனாகும் நிலையிற் காணப்படும் உலக நிகழ்ச்சியாகிய காரியத்தை அடிப்படையாகக் கொண்டு இக்காரியத்திற்குரிய வினை முதலாய் உலகுயிர்களை உடனின்று இயக்கியருளும் முழுமுதற் பொருளாகிய கடவுளது உண்மையினை உணர்த்தக் கருதிய திருவள்ளுவர், அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே யுலகு (திருக். 1) எனக் காண்டற்கரிய கடவுளின் உண்மையினைக் கருதலளவையால் நிறுவிப்போந்தார். எழுத்துக்கள் எல்லாம் தம்மை உடனிருந்து செலுத்தும் அகரவொலியினைத் தமக்கு முதலாகவுடையன. அதுபோல உலகமும் தன்னை உடனிருந்து இயக்கி நிற்கும் ஆதி பகவனாகிய இறைவனைத் தனக்கு முதலாகவுடையது என்பது இதன்பொருள். இங்கு உலகு என்றது, உடம்பொடு காணப்படும் உயிர்த் தொகுதியினை. ஓர் வரையறையுடன் காணப்படும் இவ்வுலக இயக்கமாகிய காரியத்தினைக் கொண்டு இதற்கு நிமித்த காரணமாகிய பொருள் ஒன்று உண்டு எனத் துணிய வேண்டியிருத்தலால் உலகு ஆதி பகவனை முதலாகவுடையது என உலகில் மேல் வைத்துக் கடவுளது உண்மையினைப் புலப்படுத்தினார் ஆசிரியர். ஆயினும் தனக்கு முதல்வனாக ஆதிபகவனைத் தேர்ந்து கொள்ளும் உணர்வுரிமையும் உடைமைத்தன்மையும் உலகிற்கு இன்மையால், உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பதே இத்திருக்குறளின் கருத்தாகக் கொள்ளுதல் வேண்டும் என விளக்கம் கூறினார் பரிமேலழகர். ஆசிரியர் தொல்காப்பியனாரும், எழுத்தெனப் படுப, அகர முதல (நூன்மரபு 1) எனவும், மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் (மொழி. 13) எனவும் வரும் நூற்பாக்களில் எழுத்துக்கள் எல்லாவற்றின் இயக்கத்திற்கும் காரணமாய் நிற்கும் அகரம் முதன்மை யுடையதாதலைத் தெளிவாகக் குறித்துள்ளார். அகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண்நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலாலும் வேறுபட்டதாக ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையுடைத்து என்று கோடும் (கொள்ளுதும்), இறைவன் ஒன்றேயாய் நிற்குந்தன்மையும் பல்லுயிர்க்குந்தானேயாய் நிற்குந் தன்மை போல எனவும் இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்தினைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற் போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க் கண்ணும் கலந்து அவற்றின் தன்மையேயாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது. அகர முதல என்னுங் குறளால் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்களெல்லாம், அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம் என வள்ளுவர் உவமை கூறியவாற்றானும், கண்ணன் எழுத்துக்களில் அகர மாகின்றேன் யானே எனக் கூறிய வாற்றானும் பிற நூல்களானும் உணர்க எனவும் தொல்காப்பிய முதற்சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் அகரத்தைப் பற்றிக்கூறிய கருத்துக்கள் திருக்குறள் முதலதிகாரத்தின் முதற்குறளில் விளக்கமாக அமைந்திருத்தல் காணலாம். இத்திருக்குறளைத் திருமூலர் முதலிய திருமுறை யாசிரியர்களும் மெய்கண்டார் முதலிய சைவ சித்தாந்த நூலாசிரியர்களும் தாம் வழிபடும் சிவபரம் பொருளுக்குரிய சிறப்பியல்பினை அறிவுறுத்தும் நிலையில் மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார்கள். திருவள்ளுவர் அருளிய திருக்குறளில் கடவுள் உயிர் உலகம் என்னும் முப்பொருள் களைப் பற்றிக் கூறப்பெற்றுள்ள தத்துவவுண்மைகளை அடியொற்றிச் சைவசித்தாந்த மெய்ந் நூற்பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய திருவருட்பயன் என்னும் நூல் என்பது முன்னர்க் கூறப்பெற்றது. இந்நூல் திருக்குறளைப் போன்று பத்துக் குறளைத் தன்னகத்தே கொண்டது ஓர் அதிகாரமாகப் பதிமுது நிலைமுதல் அணைந்தோர் தன்மையீறாகப் பத்ததிகாரங்களை யுடையது. திருவள்ளுவர் அகரமுதல எனத் தொடங்கியது போலவே இந் நூலாசிரியரும், அகரவுயிர் போல் அறிவாகி எங்கும் நிகரிலிறை நிற்கும் நிறைந்து என இந்நூலைத் தொடங்கியுள்ளார். அகரம் நாத மாத்திரையாய் எத்தகைய விகாரமுமின்றி இயற்கையில் தோன்றுவதாய் எழுத்துக்கள் தோறும் நிறைந்து முதன்மையுற்று நிற்ப, ஏனைய எழுத்துக்களெல்லாம் அவ்வகரத்தின் இயக்கத்தால் வெவ்வேறு முயற்சியிற்றோன்றித் திரிபுடையவாய் நிலவுதல்போல, ஆதிபகவனாகிய இறைவன் இயற்கையுணர்வினாய் முற்றுணர்ந்துயாண்டும் நீக்கமற நிறைந்து முழுமுதல்வனாக விளங்கி உலக வுயிர்கள் யாவும் அவனது ஆணைக்குள் அடங்கி வினைக்கீடாக உலக உடல் கருவி நுகர்வினைப் பெற்றுத் திரிபுடையனவாய் நிலவா நின்றன என்பதாம். எழுத்துக்கள் எல்லாவற்றினும் நிறைந்து அவற்றிற்கெல்லாம் முதலாய் நிற்கும் பொதுவியல்புபற்றி அகரத்தை இறைவனுக்கு உவமையாகக் கூறினும் அப்பரம்பொருள் அறிவேயுருவாய் உலகப்பொருளனைத்தும் தனக்கு உடைமையாக்க கொண்ட தன்னேரில்லாத் தலைவனும் ஆதலால், உண்மையாக ஆராய்ந்து பார்க்குங்கால் அம்முதல்வன் தன் உடைமைப் பொருள்களாகிய பசுபாசங்கள் ஒன்றினோடும் உவமிக்கப்படுபவனல்லன் என்பதே திருவள்ளுவர் கருத்தென்பது அறிவுறுத்துவார், அறிவாகி எங்கும்நிகிரிலிறை நிற்கும் நிறைந்து என்றார். அகரவுயிர்போல் அகர முதல என்னும் முதற் குறளையும் அறிவாகி என்பது வாலறிவன் என்னும் இரண்டாம் குறளின் தொடரையும், நிகரிலிறை என்பது தனக்குவமையில்லாதான் (திருக். 7) என்னும் தொடரையும் எங்கும் நிறைந்து நிற்கும் என்பது, இறைவன் (திருக். 5,10) பெயர்க் காரணத்தையும் விளக்கும் முறையில் அமைந்திருத்தல் ஒப்புநோக்கியுணரத்தகுவதாகும். எழுத்துக்கள் உயிர், மெய் என இருதிறத்தனவாய் அகரமுதல ஆதல் போன்று, உலகமும் உணர்வுடைய வுயிர்கள் உணர்வில்லாத உயிரல் பொருள்கள் என இரு திறத்தினதாய் ஆதிபகவனை முதலாகவுடையது என்று அறிவுறுத்துவது திருக்குறளின் முதற் குறளாகும். உயிரெழுத்து ஆன்மாவுக்கும் மெய்யெழுத்து தத்துவப் பிரபஞ்சத்திற்கும் அகரம் ஆதிபகவானாகிய இறைவனுக்கும் உவமை. ஆதிபகவன் என்பது இருபெயரொட்டுப் பண்புத்தொகை என்பர் பரிமேலழகர். அவர் கருத்துப்படி இத்தொடர் ஆதியாய பகவன் என விரியும்; முதற்கடவுள் என்பது இதன்பொருளாகும். இனி, ஆதிபகவன் என்னும் இத்தொடர்க்கு ஆதியொடு கூடியபகவன் எனப் பொருள் கொள்வர் ஆளுடையபிள்ளையார். இங்கு ஆதி என்றது, எப்பொருள்களையும் தோற்றுவிக்கும் அன்னையாகிய சக்தியை. உலகத்தோற்றத்திற்குக் காரணமானவள் என்ற பொருளில் ஆதி என்னும் சொல் சக்தியாகிய அன்னையைக் குறிக்கும் காரணப் பெயராயிற்று. ஆதி என்ற சத்தியை ஒருபாகத்திற்கொண்டவன் இறைவன் என்பார் ஆதிபகவன் என்றார் திருவள்ளுவர். சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன் (1-115-4) எனவரும் திருஞான சம்பந்தர் தேவாரத்தொடர் ஆதிபகவன் என்னும் திருக்குறள் தொடரின் விளக்கமாக அமைந்துள்ளமை அரியத்தகுவதாகும். எல்லாம் வல்ல இறைவனை அம்மையுடன் அமர்ந்த அப்பனாகப் பெண்ணொரு பாகனாகக் கருதிப்போற்றும் முறை தமிழ்நாட்டில் தொன்று தொட்டு நிலவி வரும் தெய்வவழிபாட்டு மரபாகும். இம்மரபு நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன் (ஐங்குறுநூறு, கடவுள் வாழ்த்து) எனவும், பெண்ணுருவொரு திறனாகின்று அவ்வுரு தன்னுளடக்கிக் கரக்கினும கரக்கும் (புறநானுறு,கடவுள் வாழ்த்து) எனவும், ஊர்ந்தது ஏறே, சேர்ந்தோள் உமையே (அகநானுறு,கடவுள் வாழ்த்து) எனவும் வரும் சங்கச் செய்யுட்களிலும் இடம் பெற்றுள்ளமை காணலாம். இயல்பாகவே பாசங்களின் நீங்கிய முற்றுணர்வினனாகிய இறைவன் உலகப்பொருள்களில் தோய்வின்றித் தானே திகழொளியாய்த் தனித்துநிற்கும்நிலையில் சிவம் (அப்பன்) எனவும் உலகெலாமாகி வேறாய் உடனுமாய் இவ்வாறு உலக உயிர்களொடு கலந்து நிற்கும் நிலையில் சத்தி (அம்மை) எனவும் ஒருமையின் இருமையினாய (தாதான்மிய சம்பந்தத்தால் இருதிறப்பட்டு) உலகினை இயக்கி நிற்றல் பற்றி அம்முதல்வனை ஆதிபகவன் (அம்மையப்பன்) எனத் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனக் கொள்ளுதல் பெரிதும் ஏற்புடையதாகும். இறைவன் அம்மையப்பனாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக்காத்து அழித்து மறைத்து அருள் புரிகின்றான் என்பது தன்னிற்பிரிவிலா எங்கோமான் (திருவெம்பாவை) எனவும், எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் (சிவஞான சித்தியார் சுபக். 165) எனவும், சிவனெனும் பொருளும் ஆதிசத்தியொடு சேரில் எத்தொழிலும் வல்லதாம் (சௌந்தரியலகிரி) எனவும் வரும் ஆன்றோருரைகளால் இனிதுணரப்படும். இறைவன் தனது அருவாகிய சிற்சத்தியுடன் வேறாதலும் (பேதமாதலும்) ஒன்றாதலும் (அபேதமாதலும்) இன்றி அவ்விரண்டற்கும் பொதுவாய் (தாதான்மிய சம்பந்தத்தால்) நீக்கமின்றி எங்கும் விரிந்து நிற்பன் என்பார் ஆணையின் நீக்கமின்றி நிற்பன் (சிவஞானபோதம், இரண்டாம் சூத்திரம்) என்றார் மெய்கண்டார். எந்த எந்தப் பொருள் யாண்டும் விரிந்து நிற்கின்றதோ அந்த அந்தப் பொருள் ஒன்றாதலும் இரண்டாதலும் இன்றி அவ்விரண்டற்கும் பொதுமையில் நிற்கும், தன் எல்லையளவும் விரிந்து பரவிநிற்கும் ஞாயிறு தன்னொளிக்கதிரோடு நீக்கமின்றி நிற்றல் போலும் என்னும் ஏதுவால் இறைவன் தானும் தன்சத்தியும் என இருதிறப்பட்டுத்தனது ஆணையாகிய சிற்சத்தியுடன் நீக்கமின்றி நிற்றலை வலியுறுத்தும் நிலையில் அமைந்தது ஆதிபகவன் என்னும் இத்திருப்பெயர் என்பதும் இது மாதொருகூறாகிய அம்மையப்பரைக் குறித்த பெயரென்பதும் நன்கு துணியப்படும். அம்மையப்ப ரேயுலகுக் கம்மையப்பர் என்றறிக அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர் எல்லா வுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் (திருக்களிற். 1) எனவரும் திருக்களிற்றுப்படியார் முதற்பாடல், ஆதிபகவன் முதற்றேயுலகு என்னும் திருக்குறள் தொடருக்குரிய விளக்கவுரையாக அமைந்துள்ளது. உலகமெலாம் ஒடுங்கிய ஊழிக்காலத்தே, பெண்ணுரு ஒரு திறனாகின்று அவ்வுருத் தன்னுளடக்கிக் கரக்கினங் கரக்கும் (புறநானூறு, கடவுள் வாழ்த்து) என்றபடி அம்மையின் வடிவினைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொண்டு ஒருவனாக நின்ற இறைவன், உலகத்தை மீளத்தோற்றுவிக்கும் படைப்புக் காலத்தே உயிர்களின் வினைப்பயன்களை நுகர்வித்துக் கழித்தற்பொருட்டும், உயிர்களைத் தோற்றமில் காலமாகப் பிணித்துள்ள அக விருளாகிய ஆணவமலம் கழலும் பக்குவத்தை யடைதற் பொருட்டும் தன்னுள் அடக்கிய சத்தியினை மீண்டும் தன்னுருவில் வெளிப்படச்செய்து அம்மையப்பராக விருந்து ஒடுங்கிக்கிடந்த மன்னுயிர்களை உலகுஉடல் கருவி நுகர் பொருள்களுடன் மீளவும் தோற்றுவித்தருள்வன் என்பார், அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்றறிக என்றார். இதனால் எல்லாவற்றையும் ஒடுக்குதற் கருத்தாவாகிய இறைவனே மீளவும் படைத்தற்குரியவன் என்பதனையும் புலப்படுத்தியவாறு. பல்லுயிர்க்கும் தாயுந் தந்தையுமாகிய இறைவர் மன்னுயிர்த் தொகுதிகளின் இயல்புக்குத் தக்கவாறு தன்மைக் கண்ணும் முன்னிலைக் கண்ணும் படர்க்கைக் கண்ணும் எழுந்தருளி வந்து நற்பொருளையறிவுறுத்தி ஆட்கொண்டு அருள்புரிவார் என்பார் அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் என்றார். இங்ஙனம் உயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி இவ்வுலகத்துத் திருமேனி கொண்டு எளிவந்து அருள்புரிவாராயினும் நிலமுதல் நாதமுடிவாகவுள்ள தத்துவங்களைக் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் அவ்விறைவரது உண்மையியல்பு யாவராலும் உணரவியலாத அருமையுடையது என்பார் எல்லாவுலகுக்கும் அப்புறத்தார் என்றார். இவ்வாறு அண்டங்கடந்து அப்புறத்தாராயினும் தம்மின் வேறல்லாத அருள் என்னும் சத்தியாலே எல்லாவுலகங்களும் தொழிற்பட்டு இயங்கும் வண்ணம் உலகுயிர்களிற் பிரிவறக் கூடியிருந்தே அவற்றின் தன்மை தம்மைப் பற்றாதவாறு அவற்றுள் சிறிதும் தோய்வின்றி நிலைத்துள்ளார் என்பார், இப்புறத்தும் அல்லார்போல் நிற்பர் அவர் என்றார். அம்மையப்பராகிய இறைவர், தன்னிற்பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு இரண்டறக்கலந்து நின்று ஐந்தொழில் நிகழ்த்தியருளுதலாகிய பொதுவியல்பும், இவ்வாறு உலகுயிர்களோடு பிரிவறக்கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தான்எய்தலின்றி இவை யெல்லாவற்றையுங் கடந்து சிந்தனைக்குரிய சிவமாகித்தனித்து மேற்பட்டு விளங்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குணர்த்துவது திருக்களிற்றுப்படியார் முதற்பாடலாகும். இது திருக்குறள் முதற்பாடலிலமைந்த ஆதிபகவன் முதற்றேயுலகு என்னுந் தொடரால் உணர்த்தப்படும். இறைவனது பொதுவும் சிறப்புமாகிய இருவகை இலக்கணங்களையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளமை இங்கு ஊன்றி நினைக்கத்தகுவதாகும். திருக்குறளின் முதலதிகாரமாகிய கடவுள் வாழ்த்தில் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசையேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறிவாழியந்தணன் எண்குணத்தான் என்பன எல்லாம்வல்ல கடவுளுக்குரிய திருப்பெயர்களாகக் குறிக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் எண்குணத்தான் என்ற பெயர் இறைவனுக்கே சிறப்புரிமையுடைய குணங்கள் எட்டு என்பதனைப் புலப்படுத்துவதாகும். எண் குணங்களாவன தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது எனப் பரிமேலழகர் தரும் முதல் விளக்கம் எண்குணத்தான் என்ற திருப்பெயர் சிவபெருமானுக்குச் சிறப்புரிமை யுடையது என்பதனை நன்கு வலியுறுத்துவதாகும். எல்லா நூல்களையுங் கற்றவர்க்கு அக்கல்வி யறிவினாலாய பயன் ஞானமேயுருவாகிய இறைவன் திருவடிகளைத் தொழுது போற்றுதலேயாகும் எனவும், மெய்ந் நூல்கள் பல கற்றுணர்ந்தும் கடவுள் திருவடியினைத் தொழாதார்க்கு அவர்கற்ற கல்வியறிவினாற் சிறிதும் பயனில்லை எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅ ரெனின் (திருக். கட. வா. 2) எனவரும் திருக்குறளாகும். எல்லாவற்றையும் இருந்தாங்கே உணரவல்ல முற்றுணர்வு ஞானமே திருமேனியாகவுடைய இறைவனொருவனுக்கேயுரிய தனிப்பண்பு என்பதனை வாலறிவன் என்ற தொடராலும் உலகத்து உடம்பொடு கூடி வாழும் மக்கள் முதலிய உயிர்கள் யாவும் பிறர் அறிவித்தால் அறியும் சிற்றறிவுடையனவாதலின் மக்கள் தாம் பெற்ற கல்வியறிவாற்பயன் பேரறிவுப் பொருளாகிய இறைவன் திருவடிகளை வணங்கி அறிவினால் நிறைவு பெறுதலே என்பதனை இறைவன் நற்றாள் தொழாஅரெனின் கற்ற தனாலாய பயன் என்கொல் என்ற தொடராலும் திருவள்ளுவர் புலப்படுத்திய திறம் உய்த்துணரத் தகுவதாகும். அன்பினாற் கசிந்துருகிப் போற்றும் அடியார்களின் நெஞ்சத் தாமரையிலே சோதிப்பொருளாய்ச் சுடர்விட்டுத் தோன்றுதல் இறைவனது அருளின் நீர்மையாதலின் எல்லாம் வல்ல முதல்வனுக்கு மலர்மிசையேகினான் என்பது ஒரு திருப்பெயராயிற்று. நினைப்பவர் நெஞ்சத்தினைக் கோயிலாக் கொண்டெழுந்தருளிய இறைவனது நல்ல திருவடிகளை இடைவிடாது நினைந்து போற்றுவார் எல்லாவுலகிற்கும் மேலாகிய வீட்டுலகின்கண்ணே எக்காலத்தும் அழிவின்றி வாழ்வார் என அறிவுறுத்துவது, மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் (திருக். கட. வா. 3) எனவரும் திருக்குறளாகும். உயிர்க்குயிராய்ப் பிரிவின்றி (இரண்டறக் கலந்து) நிற்றல் இறைவனது இயல்பு என்பதனை மலர்மிசை யேகினான் என்னும் இத்தொடரால் திருவள்ளுவர் உய்த்துணர வைத்துள்ளமை உணர்தற்குரியதாகும். இறைவன் உலகுயிர்களோடு இரண்டறக்கலந்து நிற்கும் இப்பெற்றியை அத்துவிதம் என்ற சொல்லால் வழங்குதல் சைவசித்தாந்த மரபாகும். குறைவிலா நிறைவாகிய முதல்வனுக்கு ஒன்றை விரும்புதலும் வெறுத்தலும் ஆகிய குற்றங்கள் இல்லை. வேண்டுதலும் வேண்டாமையும் இல்லாதவனாகிய இறைவன் திருவடியைச் சேர்ந்தார்க்கும் விருப்புவெறுப்பு என்னும் அவ்விருகுற்றங்களும் இல்லாதொழிதலால் அவை காரணமாக வரும் பிறவித்துன்பங்களும் அவர்கட்கு எக்காலத்தும் உளவாகா என்பர், வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டும் இடும்பை யில (திருக். கட. வா. 4) என்றார் திருவள்ளுவர். இறைவனது பொருள் சேர்ந்த புகழ்த்திறங்களை எக்காலத்தும் விரும்பிப் போற்றுவார்க்கு அகவிருளாகிய ஆணவத்தைப் பற்றிவரும் நன்றும் தீதும் ஆகிய இரு வினைகளும் உண்டாக மாட்டா என அறிவுறுத்துவது, இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (திருக். கட. வா. 5) எனவரும் திருக்குறளாகும். இதன்கண் இருள் என்றது அவிச்சையாகிய மயக்கத்தை எனவும் பொருள் என்றது மெய்ம்மையை எனவும் கொண்டு, மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினையென்னும் இரண்டு வினையும் உளவாகா, இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து எனப் பரிமேலழகர் உரை வரைந்துள்ளார். இன்ன தன்மைத்தென ஒருவராலுங் கூறப்படாமையின் அவிச்சையை இருள் என்றும் நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் இருவினையுஞ்சேரா என்றும் கூறினார். இறைமைக்குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின் அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர்புகழெனப்பட்டது. புரிதல் - எப்பொழுதுஞ் சொல்லுதல் என்பது மேற்குறித்த குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய விளக்கவுரையாகும். உலகப்பொருள்கள் கட்புலனாகாதவாறு கண்ணொளியைத் தடைசெய்து நிற்கும் புறவிருளும் அது போலவே நுண்பொருள்களை உள்ளம் உணராதவாறு உயிரின் அறவினைத் தடைசெய்து நிற்கும் அகவிருளும் என இருளை இருவகையாகப் பகுத்துரைப்பர் பண்டைத் தமிழ்ச்சான்றோர். இருள் தூங்கு விசும்பு (நற்றிணை 261) எனப் புறவிருளும் இருள்நீங்கியின்பம் பயக்கும் (திருக்குறள் 52) இருள்தீர்காட்சி (பெரும்பாண். 443) என அகவிருளும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். உலகிற் புறத்தே காணப்படும் இருள் ஞாயிற்றின் ஒளிக்கதிர்களால் நீங்குமாறு போலவே, மக்களின் உள்ளத்தே அறிவினைத் தடைசெய்து நிற்கும் அகவிருளானது உயிர்க்குயிராய்த் திகழும் இறைவனது அருளொளியாகிய மெய்யுணர்வினால் நீங்கும் என்பது, இறைவன் பொருள் சேர்புகழ் புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். சைவசமய சந்தானகுரவருள் ஒருவராகிய உமாபதி சிவாச்சாரியார் தோற்றமில் காலமாக (அநாதியாக) நிலைத்துள்ள பொருள்களை, ஏகன் அநேகன் இருள்கருமம் மாயை யிரண்டு ஆக இவைஆறு ஆதியில் (திருவருட்பயன் 5) என ஆறாகப் பகுத்துக் கூறியுள்ளார். உலகிற்கு முதல்வனாகிய இறைவனும் எண்ணிறந்தனவாகிய உயிர்த் தொகுதியும், அவற்றின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவமலம் எனப்படும் இருளும், உயிர்கள் மீளப்பிறத்தற்குக் காரணமாகிய கன்மமும் சுத்தம் அசுத்தம் எனப்படும் மாயை இரண்டும் ஆக இவை ஆறும் அநாதியே (தோற்றமில் காலமாக) உள்ள உள்பொருள்களாகும் என்பது இக் குறட்பாவின் பொருளாகும். ஆன்மாக்களின் அறிவாற்றலைத் தடைசெய்து நிற்கும் அகவிருளை ஆணவம் எனவும் மலம் எனவும் வழங்குதல் சைவசித்தாந்த மரபாகும். ஆணவம் என்பது எண்ணிறந்த உயிர்கள் தோறும் கூடிநின்று அவற்றின் அறிவை மறைத்தும் தான் ஒன்றேயாயிருப்பது உயிர்களது வினை நுகர்ச்சியாகிய பக்குவம் இன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப அவரவர் இடங்களிலே அறிவைமறைத்து நின்று அந்தந்த ஆன்ம போதங்களின் மீட்சியிலே நீங்குவதாயிருக்கிறதன் செயல் வகையாகிய எண்ணிறந்த ஆற்றல்களையுடையது, செறிந்த இருளும் வெளியென்று சொல்லுமளவுக்கு மொய்த்து இருண்டு உயிர்களின் அறிவைப்பிணித்து நின்று மறைத்தலைச் செய்வது செம்போடு கூடிய களிம்பானது அந்தச் செம்பு உள்ளபொழுதே அதனை உள்ளும்புறம்பும் கலந்து அதன்வெட்டு வாய்தோறும் கூடிநின்றாற்போல உயிரறிவோடும் கலந்து மறைந்து நிற்கிற அழியாத அநாதிமலமாய் உயிர்களின் விழைவு அறிவு செயல் என்னும் மூவகை யாற்றலும் சிறிதும் நிகழாதபடி மறைத்து நிற்பது எனச் சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் ஆணவ மலத்தின் இயல்பினை விரித்துரைக்கின்றன. உயிர்களின் அகக்குற்றமாகிய இவ்வாணவமலம் திருக்குறளிலும் சைவத்திருமுறைகளிலும் இருள் எனவே குறிக்கப்பெற்றுள்ளது. இந்நுட்பத்தினைத் தெளியவுணர்ந்த உமாபதி சிவாசாரியார் திருக்குறளை அடியொற்றித் தாம் இயற்றிய திருவருட்பயன் என்னும் சைவசித்தாந்த நூலில் இருள் என்பதனை ஆணவமலம் என்ற பொருளில் ஆள்கின்றார். ஆணவமலத்தின் இலக்கணத்தினை விரித்துக்கூறும் அதிகாரத்திற்கு இருள்மலநிலை என அவர் பெயரிட்டமைக்கு இருள்சேர் இருவினையும் சேரா எனவரும் தொடரில் திருவள்ளுவர் இருள் எனக்குறித்தது ஆணவமலம் எனத் தெளியவுணர்ந்தமையே காரணமாகும். இருள் நீங்கியின்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு (திருக். 351) எனவரும் குறளில் மயக்கத்தினை மருள் என்ற சொல்லாற் குறித்த திருவள்ளுவர், மருளின் வேறாக இருள் என்றதோர் பொருளுண்மை யினையும் உடன்குறிப்பிடுகின்றார். எனவே இருள்சேர் இருவினை எனவரும் தொடரிலுள்ள இருள் என்பதற்குப் பரிமேலழகர் கூறுமாறு மயக்கம் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. இவ்வுலகிற்புறத்தே காணப்படும் பூத இருளானது, ஒரு பொருளையும் காண முடியாதபடிக் கண்களை மறைத்து நிற்பது. இவ்வாறே உயிர்களின் அகத்தே அறிவுக்கண்ணினை மறைத்து நிற்பதாகிய இருளொன்று உண்டெனவும், அகவிருளாகிய அது தன் தன்மையிதுவென உயிர்கள் உணராதவாறு உயிர்களது அறிவினை மறைத்து நிற்றலால், ஆன்மாவாகிய பொருளையும் காட்டாது அதனை மறைத்துள்ள தன்னையும் காட்டாது நிற்குந்தனித் தன்மையுடையதெனவும் சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும். ஒருபொருளுங் காட்டா திருளுருவம் காட்டும் இருபொருளுங் காட்டா திது (23) என்பது திருவருட்பயன். உலகத்திற் புலனாகும் பூதவிருளாகிய புறவிருளும் உயிர்களின் அகத்தே விரவி நிற்கும் ஆணவ மலமாகிய அகவிருளும் மறைத்தற்றொழிலால் தம்முள் ஒக்குமாயினும் பூதவிருளானது பண்ட பதார்த்தங்கள் எல்லாவற்றையும் மறைத்தாலும் மறைத்து நிற்பதாகிய தன்னை வெளிக்காட்டி நிற்கும், ஆணவ மலமாகிய அகவிருளோ ஆன்மாவாகிய பொருளை மறைத்தலோடு இன்ன தன்மைத்தென ஒருவரும் உணராதவாறு தன்னையும் மறைத்து நிற்கும் தனித்தன்மையுடைய தென்பதனை மேற்குறித்த திருவருட்பயனில் உமாபதிசிவாசாரியார் தெளிவாகப் புலப்படுத்தி யுள்ளமை காணலாம். அறியுந்தன்மையுடைய உயிர்களின் அறிவாற்றலைத் தடை செய்து உயிர்கட்கு ஊனத்தை விளைத்து நிற்கும் இருள் என்பதொரு மலம் அநாதியேயுண்டென்பதும், அவ்விருள்நீக்கத்திற்கு இறைவன் அருளும் சிவஞானமாகிய பொருளையே துணையாகக்கொண்டு இறைவனது புகழ்த் திறங்களைப் புகழ்ந்து போற்றி வழிபடுதல் இன்றியமையாதென்பதும் ஊனத்தி ருள் நீங்கிட வேண்டில் ஞானப்பொருள் கொண்டடி பேணும் (1-38-3) எனவரும் ஆளுடையபிள்ளையார் வாய்மொழியால் அறியப்படும். ஆன்மாக்களை ஆணவ இருளாகிய திரை அநாதியே மறைத்து நிற்றலால் மெய்ஞ்ஞானமாகிய பெரும் பொருளை யுணருந்தகுதி வாய்ந்த அறிவாகிய கண்ணின் ஒளியினையிழந்து நுகர்தற்குரிய பொருள் எதனையும் அடையப் பெறாது, அதனை நாடிப் பெறுதற்குரிய உபாயத்தினையும் இழந்து ஒன்றும் புரியாத குருடர்களாய் மன்னுயிர்கள் தம்மை அணுத்தன்மைப்படுத்தி மறைத்து நிற்கும் ஆணவவிருளில் அழுந்தித்தடுமாறிய கேவல நிலையில் இருந்தன. பேரருளாளனாகிய இறைவனது திருவடியெனப்பெறும் திருவருட் சத்தியானது உயிர்களது இடர்நிலைக்கு இரங்கி, கொடிய நரகமெனப்படும் அவ்விருளாகிய துன்பக்குழியில் துயருறும் அவ்வுயிர்களைத் தன் அருளாகிய கையினைக் கொண்டு பற்றியெடுத்து ஈறிலாப்பேரின்பவாழ்வாகிய இன்பக்கரையிலே ஏற்றி உய்வித்தருள் கின்றது. இறைவன் மன்னுயிர்கட்குச் செய்யும் அருளுபகாரமாகிய இந்நிகழ்ச்சியை, இருள்தரு துன்பப்படல மறைப்பமெய் ஞானமென்னும் பொருள்தரு கண்ணிழந்துண் பொருள்நாடிப் புகலிழந்த குருடருந் தம்மைப் பரவக்கொடு நரகக்குழிநின் றருள்தருகை கொடுத்தேற்றும் ஐயாறன் அடித்தலமே எனவரும் திருவிருத்தத்தில் திருநாவுக்கரசர் விரித்து விளக்கியருள் கின்றார். இத்திருவிருத்தத்தின் சொற்பொருளமைதியைக் கூர்ந்து நோக்குங்கால், திருவள்ளுவர் கூறிய இருள்சேர் இருவினை என்ற தொடரில் இருள் என்றது, மெய்யுணர் வினைப் பெறவொட்டாது உயிர்களின் அறிவுக்கண்னை மறைத்து அணுத்தன்மைப்படுத்தி நிற்கும் ஆணவம் எனப்படும் இருள் மலத்தினையே என்பதும், தோற்றமில் காலமாக உயிர்களைப் பிணித்துள்ள அவ்விருள்படல மறைப்பினாலேயே உயிர்கள் தாமேயறியுந்தன்மையையிழந்து அல்லற் படகின்றன என்பதும், பொருள் சேர் புகழ் என்ற தொடரிற் பொருள் என்றது, இறைவனது திருவருள் ஞானத்தையே என்பதும் இறைவனது புகழ் அவன் அருள் புரியும் மெய்ஞ்ஞானத்தின் துணை கொண்டே உணர்தற் குரியதாதலின் அதனைத் திருவள்ளுவர் பொருள்சேர் புகழ் என அடைகொடுத்தோதினார் என்பதும் நன்கு புலனாகும். ஆணவம் எனப்படும் அகவிருள் நீங்க நோக்கும் ஞானநாட்டம் உயிர்கட்கு இயல்பாக அமைந்ததன்று என்பதும், அநாதிமறைத்துள்ள அவ்விருளைநீக்கி உயிர்கட்கு மெய்யுணர்வும் பேரின்பமும் அளிக்கவல்ல பேரருளும் முற்றுணர்வும் முடிவிலாற்றலும் ஒருங்குடைய முதல்வன் இறைவன் ஒருவனே என்பதும் சிவநெறிச் செல்வர்கள் துணிபாகும். இந்நுட்பம், இருளறுத்து நின்று, ஈசன் என்பார்க்கெல்லாம் அருள்கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே (5.31.8) எனவும், இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி இடர்பாவங் கெடுத்து எனவும் அப்பர் அருள்மொழிகளால் இனிது புலனாதல் காணலாம் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வழியாக நிகழும் ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் ஐம்புல நுகர்ச்சிகளிலும் விருப்புற்றுத் தம்முணர் வின்றித் தாழும் தன்மை மக்களது மனத்தியல்பாகும். ஐம்பொறிகளையும் அடக்கும் வன்மையின்றி ஐயுணர்வுகளின் வழியே செல்லும் மக்களது மனத்தினைத் திருத்தி அவ்வைந்தினையும் அடக்கி யாளவல்ல ஆற்றலை வழங்குதல் இறைவனது அருளியல்பாகும். நல்லொழுக்க நெறி நிற்பார்க்கு இன்றியமையாத புலனடக்கத்தையும் பொய்மையே பெருக்கும் பாசப்பிணிப்பின் நீக்கத்தையும் அளித்தற்பொருட்டு எல்லாம்வல்ல இறைவன் உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்திய மெய்ந்நெறியே பொய்தீர் ஒழுக்க நெறியாகும். உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்தும் இறைவனது திருவருட்குறிப்புணர்ந்து அம்முதல்வன் அறிவுறுத்திய மெய்ம்மையான ஒழுக்கநெறியில் நிற்போர் பிறப்பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் நெடிது வாழ்வார் என்பார் பெரியோர். இவ்வுண்மை, பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார் (திருக். 6) எனவரும் திருவள்ளுவர் வாய்மொழியால் இனிது புலனாம். ஈண்டு இறைவனைப் பொறிவாயில் ஐந்தவித்தான் என்றது, இறைவன் தனக்கு ஐம்பொறிகளுடைய யாக்கை யமைந்திருந்து அவற்றின் வாயிலாக நிகழும் அவாக்கள் ஐந்தினையும் தன் ஞானத்தால் அடக்கி வென்றான் என்ற கருத்திற் கூறப்பட்டதன்று. இறைவன் ஏனைய உயிர்களைப் போன்று மாயையின் சம்பந்தமுடைய உடம்பினையுடைய பாசத்துள் அகப்பட்டவன் அல்லன் என்பது அவன் தூய மெய்யுணர்வினையே தன் மேனியாகக் கொண்டவன் என்பதும் வாலறிவன் என்ற தொடரால் உணர்த்தப்பட்டன. ஐம்புல அவாக்களால் உந்தப்பட்டு எத்தகைய பொருள்களையும் விரும்புதலும் வெறுத்தலும் இறைவனுக்கு இல்லை என்பது வேண்டுதல் வேண்டாமையிலான் என்ற தொடரால் முன்னரே வலியுறுத்தப்பட்டது. அருளே திருமேனியாகவுடைய இறைவனுக்கு ஐம்பொறிகள் இல்லை. எனவே ஐம்பொறிவாயிலாக நிகழும் ஐயுணர்வு இறைவனுக்கு இல்லாமையும் அவை இல்லையாகவே அவற்றையடக்குதல் வேண்டாமையும் நன்கு விளங்கும். விருப்பு வெறுப்புடைய உயிர்கள் ஐயுணர்வுகளால் மயங்கி அவற்றை யடக்க மாட்டாது அல்லற்படுந் துன்பநிலையிலே அருளாளனாகிய இறைவன் பொறிவாயில் ஐந்தினையும் அடக்கியாளும் மெய்ம்மையான ஒழுக்கநெறியினை அகத்தே அவர்தம் உள்ளத்திலிருந்து உணர்த்தியும் புறத்தே குருவாக எழுந்தருளி வந்து அறிவுறுத்தியும் நலஞ்செய்கிறான் என்பதும், இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இறைவனாலன்றி ஏனைப் புலனுணர்விலகப்பட்ட மாந்தர்களால் எடுத்துரைக்கப்படும் அவர்கள் சூழ்நிலைக்கேற்பக் குறுகிய வரம்புட்பட்டமைவனவன்றி உலகவுயிர்கள் எல்லாவற்றுக்கும் மனநிறைவு தரும் மெய்ம்மை வாய்ந்த ஒழுக்கநெறியாக அமைதல் இயலாதென்பதும் இத்திருக் குறளால் அறிவுறுத்தப்படும் அரிய வுண்மைகளாகும். ஆகவே பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் திருக்குறள் தொடர், தன்பாலுள்ள ஐம்பொறிகளையும் அடக்கினான் என்ற பொருளில் வழங்கப்பெறவில்லையென்பதும் தன்னை அன்பினால் வழிபடும் அன்பர்கட்கு அன்னோர் தம் ஐம்புலன்களையும் அடக்கி வெல்லும் நல்வழியினை அறிவுறுத்தினான் என்ற பொருளிலேயே தெய்வப் புலவரால் ஆளப்பெற்றதென்பதும், வறிதே நிலையாத இம்மண்ணுலகில் நரனாக வகுத்தனை நான்நிலையேன் பொறிவாயில் இவ்வைந்தினையும் அவியப் பொருது உன்னடியேபுகும் சூழல் சொல்லே (7.3.3) எனவரும் நம்பியாரூரர் வாய்மொழியால் நன்கு தெளியப்படும். பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் என்ற தொடரைப் பொய்யிலா மெய்ந்நெறிக்கே தக்கிருந்தார் (2.42.1) என ஆளுடைய பிள்ளையார் விரித்துப்பொருள் அருளிச்செய்துள்ளமையும் இங்கு நினைக்கத் தகுவதாகும். தன்னின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனி முதல்வனாகத் திகழும் இறைவனுடைய திருவடிகளை நினைந்து வழிபடும் இயல்புடையவர்களே, தம்மனத்தின்கண் நிகழுந் துன்பங்களாய கவலைகளை மாற்றவல்லவர் எனவும், இறைவன் திருவடியினை நினையாதார் காமவெகுளி மயக்கங்களாகிய மனமாசுகளை நீக்கமாட்டமையால் அவற்றால் வரும் துன்பங்களுள் அழுந்திக் கவலையுறுவர் எனவும் அறிவுறுத்துவது, தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது (திருக். 7) எனவரும் திருக்குறளாகும். எவ்வகையாலும் தனக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி உயர்வறவுயர்ந்தோன் இறைவன் ஒருவனேயாதலின் அம்முதல்வனைத் தனக்குவமை யில்லாதான் எனக் குறித்தார் திருவள்ளுவர். தனக்குவமையில்லாதான் என்னும் இத்தொடர்ப் பொருளை விளக்கும் முறையில் அமைந்தது, பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மை யான் (திருவருட் 3) எனவரும் திருவருட்பயனாகும். மிகப்பெரிய அண்டங்கள் அனைத்தும் தனது பரந்த விரிவுக்குள் அடங்கத்தான் அவை யெல்லாவற்றையும் கடந்து மேலாக விளங்கும் பெருமையினாலும் மிகமிகச் சிறிய அணுக்கள்தோறும் ஊடுருவியாண்டும் நீக்கமறக் கலந்து நிற்கும் நுண்மையினாலும், உயிர்தோறும் உயிர்க்குயிராய் நின்று பொருள்களைக் காட்டியும் கண்டும் அருள்சுரக்கும் பெருங்கருணைத் திறத்தாலும் உயிர்களின் முயற்சியாற் சென்றடையமுடியாத திருவாகிய வீடுபேற்றின்பத்தை மன்னுயிர்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டு நின்று வழங்கும் அருமைத் திறத்தினாலும் தன்னையொப்பார் ஒருவருமில்லாத தம்முதல்வன் இறைவன் என்பது இதன் பொருளாகும். தனக்கு உவமையில்லாதான் (ஒருவாற்றானுந் தனக்கு ஒப்பில்லாதவன்) இறைவன் எனவே அம்முதல்வன் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளும் சுதந்திரமும் முதலிய உயர்வறவுயர்ந்த குணங்களையுடையன் என்பதும் பெறப்படும். இவ்வாறு இறைமைக்குணங்களாகிய இலக்கணத்தால் ஒருவாற்றானும் வேற்றுமையில்லாத நிலையில் அவ்வியல்புடைய பரம்பொருள் பலவாக இருத்தல் இயலாது, ஒன்றேயாய் இருப்பது என அறிவுறுத்துவார் அதனை ஒன்றலா ஒன்று (சிவஞான போதம் சூ. 2 அதிகரணம் 3) என்றார் மெய்கண்டார். ஒன்றலா ஒன்று - ஒப்பற்ற பரம்பொருள். தனக்குவமையில்லாத இறைவன் திருவருள் வழி நின்று தற்போதம் நீங்கிய அடியார்கள் கதிரவன் எங்கே தோன்றினாலும் எமக்கு ஆவதென்ன என்று எத்தகைய மனக்கவலையுமின்றி இனிதிருப்பார்கள் என்பது, எங்கெழிலென் ஞாயிறு எளியோ மல்லோம் எனவரும் அப்பரருள் மொழியால் அறியப்படும். கண்ணுதல் தன்நிறைவதனிற் கலந்தார்க்குப் பண்டை ஏகதேசவுணர்வு தூர்ந்து போதலின் ஏகதேசவுடம்பில் நிகழும் இன்பத் துன்பத்திற்கு உற்பாத முதலியவற்றை நோக்கி வரக் கடவதோர் கவலையின்மையின், எங்கெழிலென் ஞாயிறெமக்கு என்று குறைவின்றி நிற்பாராயினா ரென்பது, தனக்குவமையில்லாதான் தாள்சேர்ந்தார்க்கல்லால், மனக்கவலை மாற்றலரிது என எதிர்மறை முகத்தாற் கூறியதும் இதுபற்றியென்க (சித்தியார். சுபக். சூ. 8. 31ஆம் செய்யுளுரை) எனச் சிவஞானமுனிவர் இத்திருக்குறளை மேற்கோளாகக் காட்டி விளக்கிய திறம் இங்கு மனங்கொளத்தகுவதாகும். அறத்தின் கடலாகவும் அருளேயுருவினனாகவும். திகழ்வோன் இறைவன். அம்முதல்வன் திருவடியாகிய புணையைப் பற்றினார்க் கல்லது பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடத்தல் இயலாது என அறிவுறுத்துவது, அறவாழியந்தணன் தாள் சேர்ந்தார்க் கல்லாற் பிறவாழிநீந்தல் அரிது (திருக். கட. வா. 8) எனவரும் திருக்குறளாகும். நல்லறங்கள் எல்லாவற்றுக்கும் நிலைக்களமாய் நின்று, அவ்வறங்களை நிகழ்த்துதற்குரிய பேரருளாளனாகத் திகழ்வோன் இறைவன் ஒருவனேயாதலின் அம்முதல்வனை அறவாழியந்தணன் எனக் குறித்தார் திருவள்ளுவர். அறக்கடலாகிய அருளாளன் என்பது இத்தொடரின் பொருளாகும். அறங்கள் எல்லாவற்றுக்கும் அருளே மூலம் (தயாமூலதனம்) ஆதலின் அறமும் அருளும் ஆகிய இவ்விரண்டின் திருவுருவாகவும் இறைவன் விளங்குகின்றான் என்பார் அறவாழி என்னாது அறவாழியந்தணன் என்றார் தெய்வப்புலவர். கடலேயனைய அறமும் அழகிய தண்ணளியாகிய பேரருளும் ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனிடத்தன்றி ஏனையுயிர்த் தொகுதிகளிடத்தே முழுவதும் நிலைபெறுதலாகிய என்பது புலப்பட அறவாழியந்தணன் என ஒருமையாற் கூறினார். இறைவனை அறவாழியந்தணன் என ஒருவனாகவும் இறைவனருள் பெற்ற அறவோர்களாகிய நீத்தாரை அந்தணர் என்போர் அறவோர் (திருக்.) எனப் பலராகவும் குறித்துள்ளமை இறைவன் ஒருவன் உயிர்கள் பல என்னும் தமிழ் முன்னோரது தத்துவக்கொள்கையினைப் புலப்படுத்துதல் காணலாம். எண்குணங்களையுடையவன் இறைவன் எனவும் எண்குணத் தானாகிய அம்முதல்வனுடைய திருவடிகளை வணங்காத தலைகள் தமக்குரிய புலன்களையுணரும் ஆற்றலில்லாத பொறிகளைப் போலப் பயன்படாதனவே எனவும் அறிவுறுத்துவது, கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (திருக். கட. வா. 9) எனவரும் திருக்குறளாகும். எண்குணங்களாவன தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல், முற்றுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. அணிமாவை முதலாகவுடையன எனவும் கடையிலா அறிவை முதலாக வுடையன எனவும் உரைப்பாருமுளர் எனப் பரிமேலழகர் தரும் விளக்கம், சிவாகமத்துக் கூறப்படும் எண்குணங்களே இறைவனுக்குச் சிறப்புரிமையுடைய குணங்களாம் என்பதனை நன்கு புலப்படுத்தவதாகும். அன்றியும் அணிமா முதலியன எட்டும் யோகிகளால் முயன்று பெறுதற்குரிய எண்வகைச் சித்திகள் எனப்படுவனவல்லாது கடவுளுக்கேயுரிய சிறப்புடைக் குணங்களாகாமையும் ஆருகதர் கூறும் கடையிலா அறிவு (அநந்த ஞானம்) முதலிய எட்டினுள் அநந்தஞானம், அநந்ந வீரியம், அநந்ததரிசனம், அநந்தசுகம் என்னும் நான்குமே குணங்களாகக் கொள்ளத்தக்கன. நாமமின்மை, கோத்திரமின்மை ஆயுளின்மை அழியாவியல்பு என்னும் நான்கும் உயிர்க் குணங்களின் மறுதலை யெனப்படுவனவன்றி ஒரு பொருளின் பண்பெனப் படாமையானும் சிவபெருமானுக்குரிய சிறப்புடைப் பண்புகளாகச் சிவநெறிச் செல்வர் கூறும் எண்குணங்களையே இறைவனுக்குச் சிறப்புரிமை யுடைய எண்குணங்களாக முதற்கண் எடுத்துரைத்தார் பரிமேலழகர். இனி திருவள்ளுவர் கூறும் கடவுள் வாழ்த்து எல்லாச் சமயத்தார்க்கும் பொதுவாக அமைந்ததாதலின் இதன்கண் கடவுளக்குரிய பெயர்களாக ஆளப்பெற்ற ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை யேகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழியந்தணன், எண்குணத்தான் என்னும் ஒன்பது திருப்பெயர்களுள் முதற்கண் உள்ள எட்டுப்பெயர்களால் அறிவுறுத்தப்பட்ட எட்டுக் குணங்களையே ஒன்பதாவது குறளில் எண்குணத்தான் என்ற பெயரால் திருவள்ளுவர் தொகுத்துக் கூறினார் எனக் கொள்ளுதல் ஏற்புடையதாகும். எண்குணத்தானாகிய இறைவனை வழிபட்டுப் பாசப்பிணிப் பறுத்து வீடுபெறுதற்கென்றே அமைந்தது இம்மக்கட்பிறவியாகும். மனிதப்பிறவியின் நோக்கத்தினை யுணர்ந்து இறைவன் திருவடிகளைத் தலையால் வணங்கிப் போற்றாதாரது வாழ்வு பயனுடையதன்று எனத் திருவள்ளுவர் எதிர்மறைவாய் பாட்டாற்கூறிய இக்கருத்தினை உடன்பாட்டு முகத்தால் அறிவுறுத்துவதாக அமைந்தது திருநாவுக்கரசர் அருளிய தலையே நீவணங்காய் என்னும் திருஅங்கமாலைத் திருப்பதிகமாகும். காரணகாரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருவது பிறவிப்பிணிப்பாதலின் அது பிறவிப்பெருங்கடல் என உருவகித்துக் கூறப்படும். இறைவன் அடியாகிய புணையைப் பற்றினோர் பிறவியாகிய பெருங்கடலை எளிதின் நீந்தித் கடப்பர். இறைவன் திருவடியாகிய புணையின் துணை பெறாதார் அப்பெருங்கடலை நீந்தமாட்டாது அதனுள் வீழ்ந்து அழுந்துவர் என்பார், பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேரா தார் (திருக். கட. வா. 10) என்றார் திருவள்ளுவர். உலகியல்பை நினையாது இறைவனடியையே நினைப்பார்க்குப் பிறிவியாதலும், இறைவனடியை நினையாது உலகியல்பையே நினைவார்க்குப் பிறவி ஆறாமையும் இக்குறளால் நியமிக்கப்பட்டன. காணப்படும் இவ்வுலகம் ஆதிபகவனை முதலாகவுடையது எனவே உலகியற்கு முதல்வன் இறைவன் ஒருவனே என்பது பெறப்படும். அம்முதல்வன் தூய மெய்யுணர்வே தன் திருமேனியாக வுடையவன் எனவே அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இயற்கை யுணர்வினன் என்பதும் பெறப்படும். உயிர்களின் நெஞ்சத் தாமரையில் எழுந்தருளியவன் இறைவன் எனவே அம்முதல்வன் உயிர்களோடு பிரிவின்றிக் கலந்துள்ளான் என்பதும் கூறினாராயிற்று. வேண்டுதல் வேண்டாமையிலான் இறைவன் எனவே குறைவிலா நிறைவாகிய அவனுக்குப் பகையும் நட்பும் இல்லையென்பது பெறப்படும். உலகு உயிர்கள் ஆகிய எல்லாப்பொருள்களிலும் நீக்கமறத் தங்கியிருத்தல் கடவுளிலக்கணமாதலின் இறைவன் என்பது கடவுளுக்குரிய காரணப்பெயராயிற்று. இறுத்தல் என்னும் வினையடியாகப் பிறந்த பெயர் இறை என்பதாகும். இறை - பொருள்கள்தோறும் நீக்கமறத் தங்கியிருப்பது. இறைவனுடைய பொருள் சேர் புகழ்த் திறங்களை இடை விடாது புகழ்ந்து போற்றுவார்க்கு இருள்சேர் இருவினையும் சேரா எனவே இருவினைத் தொடக்குடையவை உயிர்கள் என்பதும் அவ்விருவினைத் தொடக்கினின்றும் இயல்பாகவே நீங்கி விளங்கிய முற்றறிவினன் இறைவன் என்பதும் உய்த்துணர வைத்தாராயிற்று. பொறிவாயில் ஐந்தவித்தான் எனவே ஐம்புலன்களையும் அடக்கவல்ல அறிவாற்றலை உயிர்கட்கு வழங்கவல்லவன் உயிர்க்குயிராகிய இறைவனே என்பதும் அவனருள் வலியின் துணைகொண்டு ஐம்புல வுணர்வின் நீங்கி மெய்ப்பொருளை யுணர்ந்து உய்தி பெறுதற்குரிய நெறியே பொய்தீர் ஒழுக்க நெறியெனப் போற்றப்படும் என்பதும், அந்நெறியில் நிலைநின்றொழுகுவார் எக்காலத்தும் அழிவின்றி வாழ்தலாகிய பேரின்ப நிலையைப் பெறுவர் என்பதும் அறிவுறுத்தியவாறாகும். ஒப்பாரும் மிக்காரும் இன்றி எல்லாவுயிர்கட்கும் ஒப்பற்ற தவைனாகத் திகழ்தலே இறையியல்பாதலின் கடவுளாகிய முழுமுதற்பொருள் ஒன்றேயென வலியுறுத்துவது தனக்குவமையில்லாதான் என்ற தொடராகும். ஒருவன் என்னும் ஒருவனாகிய முதல்வனே பல்வகைப் பிறவியுட்பட்டு அல்லலுறும் மன்னுயிர்களின் மனக்கவலைகளை மாற்றி வாழ்வளிக்க வல்லவன் என்பது இக்குறளால் அறிவுறுத்தப்படும் தத்துவவுண்மையாகும். அறத்தின் கடலாகவும் அருள் வடிவினனாகவும் திகழ்வோன் இறைவன் என்பது அறவாழியந்தணன் என்ற பெயராற் புலனாகும். மன்னுயிர்களின் பொருட்டு உலகினைப் படைத்து வாழ்வளிக்கும் வினைமுதலாகவுள்ள முழுமுதற்பொருள் ஒரு குணமும் இல்லாத வெறும் அறிவாக மட்டும்இருத்தல் இயலாது. அன்புடைய உயிர்களால் எண்ணிப் போற்றுதற்குரிய எல்லா நற்பண்புகளும் ஒருங்கே அமைந்த நல்ல குணப்பொருளே என்று அறிவுறுத்துவார், இறைவனை எண்குணத்தான் என்ற பெயராற் குறித்தார் திருவள்ளுவர். இவ்வாறு திருக்குறள் முதலதிகாரத்தில் இறைவனைக் குறித்து வழங்கப்பெற்ற பெயர்களாகிய தொடர்கள் யாவும் இறைவனது பொது வியல்பும் உண்மையியல்பும் ஆகிய இலக்கணங்களைச் சுருக்கமும் தெளிவும் பொருந்த விரித்துரைக்கும் நிலையில் அமைந்துள்ளமையும் இங்குத் திருவள்ளுவர் விரித்துக் கூறிய கடவுள் இலக்கணமே சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் பதியிலக்கணமாக அமைந்துள்ளமையும் திருக்குறளின் முதற்கண் அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் இவ்வதி காரத்தையும் உமாபதி சிவாசாரியார் இயற்றிய திருவருட்பயனின் முதற்கண் அமைந்த பதிமுதுநிலை என்னும் அதிகாரத்தினையும் ஒப்புநோக்குவார்க்கு நன்குபுலனாகும். தாம் கூறக்கருதிய அறங்களுக்கெல்லாம் நிலைக் களமாகத் திகழும் முழுமுதற் கடவுளை முதற்கண் வாழ்த்தி வணங்குதல் இன்றியமையாதென அறிவுறுத்திய திருவள்ளுவர் நம்மனோர் கண்கட்குப் புலனாகாது அருவாய்த் தத்துவங் கடந்து நிற்கும் தனி முதற்பொருளாகிய இறைவனது அருளின் நீர்மையாக வெளிப்பட்டுக் கைம்மாறு கருதாது உலகிற்குப் பயன்பட மழையினைப் பொழியும் வானத்தின் சிறப்பினையுணர்த்தும் பகுதி திருக்குறளில் உள்ள வான்சிறப்பு என்னும் இரண்டாம் அதிகாரமாகும். உலகத்துப் பயிர்கள் வளரப்பொழியும் மழையானது பல்லுயிர்க்கும் அருள்சுரக்கும் இறைவனது திருவருள் வண்ணமாகத் திகழும் சிறப்புடையதாகும். இவ்வுண்மையினை மன்னானவன் உலகிற்கொரு மழை யானவன் (1.16.6) எனவும், சொரிவிப்பார் மழை 95.15.3) எனவும், காக்கின்ற மழையாய்ப் பொழிவானை (7.59.3) எனவும், முன்னியவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே என்னப்பொழியாய் மழையே லோரெம்பாவாய் (திருவெம் பாவை 16) எனவும் வரும் திருமுறைத்தொடர்கள் நன்கு விரித்துரைத்தல் காணலாம். கடவுளது அருளின் நீர்மையதாய்ப் பயிர்முதலிய பல்லுயிர்களையும் உடம்பொடு கூடி வாழ்தற்கு நிலைக்களமாகத் திகழும் ஐம்பெரும் பூதமுதலிய தத்துவங்களின் திரட்சியாகிய உலகின் உண்மையினையும் உடன் உணர்த்துவதாக அமைந்துள்ளமை இங்கு மனங்கொள்ளத் தகுவதாகும். இறைவனது திருவருள் நீர்மையையுணர்ந்து அவனது திருவருளின் துணைகொண்டு ஐம்புலன்களையும் வென்று விருப்புவெறுப்பின்றி வாழும் அறவோர் நீத்தார் எனப் போற்றப் பெறுவர். யான் எனது என்னும் இருவகைப் பற்றினையும் நீத்த பெரியோர்களாகிய அவர்தம் பெருமையினை விரித்துரைப்பது திருக்குறளில் உள்ள நீத்தார் பெருமை என்னும் மூன்றாம் அதிகாரமாகும். பொறிவாயில் ஐந்தவித்தானாகிய இறைவன் அருளிய மெம்மையான ஒழுக்கநெறியில் வழுவாதொழுகி யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் அறுத்தவர்களாகிய நீத்தாரது பெருமையினையே விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும் விழுமியது என எல்லாச் சமயநூல்களும் பாராட்டும் என்பார், ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவற் றுணிவு (திருக். நீத்தார். 1) என்றார் திருவள்ளுவர். இங்கு ஒழுக்கம் என்றது, பொறி வாயில் ஐந்தவித்தான் அருளிய ஒழுக்கநெறியினை. அந் நெறியில் நின்று துறத்தலாவது, மெய்ம்மையான ஒழுக்க நெறியில் வழுவாதொழுக அறம் வளரும். அறம் வளரத்தீவினை தேயும். தீவினை தேய அறியாமை நீங்கும். அறியாமை நீங்கவே நிலையுடையன நிலையற்றனவாகிய பொருள்களது வேறுபாட்டுணர்வும் அழியுந்தன்மையனவாகிய இம்மை மறுமையின்பங்களில் உவர்ப்பும் பிறவித் துன்பங்களும் தோன்றும். அவை தோன்றவே வீடு பெறுதலில் விருப்பம் உண்டாகும். அஃதுண்டாகப் பிறவிக்குக் காரணமாகிய பயனில்லாத முயற்சிகளெல்லாம் நீங்கி வீடுபேற்றிற்குக் காரணமாகிய யோகமுயற்சி யுண்டாகும். அஃதுண்டாகவே மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகிய எனதென்பதும் அகப்பற்றாகிய யான் என்பதும் விட்டு நீங்கும். ஆதலால் இவ்விருவகைப் பற்றுக்களையும் இம்முறையே உவர்த்து நீத்து விடுதலே முற்றத்துறத்தலாகும் என விளக்குவர் பரிமேலழகர். துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத் திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று (திருக். 22) எனவரும் திருக்குறள் இருவகைப் பற்றுக்களையும் நீத்தாரது பெருமையினை அளவிட்டுரைத்தல் இயலாது என்பதனை அறிவுறுத்துவதாகும். இருவகைப் பற்றினையும் விட்டாரது பெருமையினை எண்ணாற் கூறி அறிவிக்கத் தொடங்கின் அளவுபடாமையால் இவ்வுலகத்துப் பிறந்திறந்தார் இத்துணையர் எனக் கூறியளவிட்டுரைத்தாற் போலும் (முடியாத செயலாம்) என்பது இதன்பொருளாகும். இதன்கண் துறந்தார் என்றது, யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் விட்டொழிந்து வீடு பேற்றின்பத்தினை நுகர்தற்குரிய சான்றோர்களை. பெருமை - மிகுதி. இறந்தார் என்றது, இப்பிறப்பிற் பற்று நீங்காது மீளவும் இவ்வுலகிற் பிறந்து வீடுபெறும் நோக்கத்துடன் இருவகைப் பற்றும் நீங்கத் துறவறத்தினை மேற்கொள்ள வேண்டிய பாசப்பிணிப் புடைய உயிர்களை. துறந்தார் பெருமைகூறும் முகத்தால் உயிர்கள் எண்ணிலவாதலையுணர்த்துவது இத்திருக்குறளாகும். இதனடியொற்றி உயிர்களது உண்மையினையும் அவை எண்ணிலவாதலையும் கூறுவது, பிறந்தநாள் மேலும் பிறக்குநாள் போலும் துறந்தோர் துறப்போர் தொகை (திருவருட். 11) எனவரும் திருவருட்பயனாகும். இக்குறளின் ஈற்றிலுள்ள தொகை என்பதனைப் பிறந்த நாள் பிறக்கும் நாள், துறந்தோர், துறப்போர் தொகை மேலும் பிறக்கும் நாள் தொகை போலும் எனவும், நிரனிறைப்பொருள் கொள்க. பிறந்தநாள் - உலகம் தோன்றியது முதல் இதுவரை உயிர்கள் பல்வகைப் பிறவிகளுட்பட்டுத் தோன்றிய நாள்கள். மேலும் பிறக்கும் நாள் இனிமேலும் உயிர்கள் பிறவியுட்பட்டுப் பிறத்தற்கு உளவாகும் நாள் துறந்தோர் - பிறவிப் பிணிப்பினின்றும் விடுபட்டு இருவகைப்பற்றினையும் நீத்து இறைவனடியைத் தலைப்பட்டு இன்புறும் உயிர்கள், துறப்போர் இனிமேலும் இறைவனருளால் பிறவிப் பிணிப்பிலிருந்தும் விடுபட்டு உய்தி பெறுதற்கு உரியராக இப்பொழுது பாசப்பிணிப்புடன் கூடிப்பிறந்து துறவினை மேற்கொள்ளும் நிலையினரான உயிரிகள், ஆன்மாக்கள் முன்பு பிறந்த நாளுக்கும் இனிமேல் பிறக்கப்போகிற நாளுக்கும் தொகை கூறமுடியாதவாறு போல இதுவரை தேகப் பிரபஞ்சத்தைத் துறந்து வீடுபெற்ற உயிர்களுக்கும் இனிமேல் துறந்து வீடடையப் போகிற உயிர்களுக்கும் தொகை அளவிட்டுக் கூறமுடியாது என்பது இதன் பொருளாகும். படைப்புக்காலந்தொட்டுப் பலவகைப் பிறப்புக்களிற் பிறந்து வடுப்பெற்ற உயிர்களையும் இனிமேலும் பிறந்து இருவகைப் பற்றுக்களையுந் துறந்து வீடு பெறுதற்கு உரியனவாய்ப் பாசப்பிணிப்புடன் கூடியுள்ள ஏனைய உயிர்களையும் இத்துணையர் என அறிந்து கணக்கிட்டுக் கூறவதென்பது, உலகந்தோன்றியது முதல் இதுவரை எத்தனை நாட்கள் கழிந்தன, இனிமேல் வரக்கூடிய நாட்கள் எத்தனை என எண்ணித் தொகை கூறவொண்ணாதது போல இயலாத செயலாம் என்றவாறு. எனவே இதுவரை பாசப்பிணிப்பொழிந்து வீடுபெற்ற உயிர்களும் வீடுபெறாத நிலையிற் பாசப்பிணிப்புடன் கூடியுள்ள உயிர்களும் அளவற்றனவாம் என அவற்றின் மிகுதி கூறினாராயிற்று. துறந்தார், வையத்து இறந்தார் எனத் திருவள்ளுவர் பகுத்துக்கூறிய இருவகைவுயிர்களையும் துறந்தோர் துறப்போர் என முறையே உமாபதி சிவாசாரியார் குறித்துள்ளார். இதனால் உயிர்கள் எண்ணற்றன எனச் சைவசித்தாந்தம் கூறும் கொள்கை திருக்குறளில் முன்னமே இடம் பெற்றுள்ளமை காணலாம். ஐம்பொறிகளாகிய கருவிகளின் துணையின்றி உலகப்பெருள்கள் எதனையும் உணர முடியாத நிலையில் அறிவினாற் குறைபாடுடைமை உயிர்களது இயல்பாகும். உயிர்களின் அறிவு வளர்ச்சிக்குச் செவி முதலிய பொறிகள் இன்றியமையாதன என்பதும் அவற்றின் துணையின்றி எதனையும் உணரமுடியாத அறிவுக்குறைபாடுடையன ஆன்மாக்கள் என்பதும் கோளில் பொறியிற்குணமிலவே எனவரும் திருக்குறள் தொடராற் குறிப்பால் உணர்த்தப் பெற்றன. இக்குறிப்பினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, பொறியின்றி யொன்றும் புணராத புந்திக் கறிவென்ற பேர்நன் றற (திருவருட். 15) எனவரும் திருவருட்பயனாகும். செவி முதலிய கருவிகளின் துணையில்லாமல் யாதொரு பொருளையும் உணரமாட்டாத உயிர்களுக்கு நூல்வல்லோர் அறிவுடையன (சித்து) என்று இட்டு வழங்கும் பெயர் மிகவும் அழகிது என்பது இதன் பொருளாகும். அறிவு என்ற பேர் அறநன்று என்ற தொடர் இங்கு இகழ்ச்சிக் குறிப்பாய் நின்று உயிர்கள் அறிவினாற் குறைபாடுடையன என்பதனைப் புலப்படுத்தி நிற்றல் காண்க. இறைவன் தூய அறிவேயுருவாகத் திகழ்வோன் என்னும் உண்மையினை வாலறிவன் என்ற பெயராற் புலப்படுத்திய திருவள்ளுவர் அம்முதல்வனியல்புக்கு வேறான உயிர்த் தொகுதிகள் அறிவும் அறியாமையும் விரவப்பெற்றன என்னும் உண்மையினை, அறிதோ றறியாமை கண்டற்றால் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு (திருக். 1110) எனவரும் திருக்குறளில் உவமை வாயிலாகப் புலப்படுத்து கின்றார். அன்புடைய காதலியைப் பெற்றோர் அறியாதவாறு உடன்போக்கில் அழைத்துக்கொண்டு செல்லும் தலைவன், தலைவியொடு கூடிச் செல்லுதலால் தனக்கு மேன்மேலும் உளவாம் இன்பமிகுதியினைத் தனக்குள்ளே சொல்லிக் கொள்வதாக அமைந்தது மேற்குறித்த திருக்குறட் பாடலாகும். நூல்களாலும் நுண்ணுணர்வாலும் பொருள்களைஆராய்ந்து அறியுந்தோறும் அதுவரை அவ்வுண்மை யினை யறிந்து கொள்ளாத தனது அறியாமை புலப்படுமாறு போல், செவ்விய அணிகலன்களையுடையளாய இவளை இடை விடாது செறியுந்தோறும் இவள்மாட்டு முன்னர் அறியப் படாத காதலின்பம் காணப்படாநின்றது என்பது இதன் பொருளாகும். அறிவிற்கு எல்லையின்மையால் மேன்மேல் அறிய அறிய முன்னைய அறிவு அறியாமையாய் முடியுமாறு போலச் செறிவுக்கு எல்லையின்றி மேன்மேற் செறியச் செறிய முன்னைச் செறிவு செறியாமையினாய் முடியா நின்றது எனத் (தலைவன்) தன் ஆற்றாமை கூறியவாறு என இக்குறட்பாவுக்கு விளக்கம் தருவர் பரிமேலழகர். இவ்விளக்கம் மாந்தர் பொருள்களை அறியுந் தோறும் பெறும் அறிவு தாம் அதற்குமுன் அப்பொருள்களைப் பற்றி அறிந்திருந்த அறிவினைக் குறைபாடுடையதாகக் காட்டுதலால் உயிர்களது அறிவு குறைபாடுடையது என்னும் உண்மையினை நன்கு புலப்படுத்தல் காணலாம். பாசப்பிணிப்புடைய ஆன்மாக்கள் முற்றுணர்வுடைய இறைவனைப் போன்று எல்லாம் அறிந்தனவு மாகாமல் உலகத் தொகுதியாகிய உணர்வில்லாத சடப் பொருள்கள் போன்று ஒன்றும் அறியாதனவும் ஆகாமல் உணர்வுடைய பொருளைச் சார்ந்த நிலையில் உணர்வு விளக்கம் பெறுவனவும் உணர்வில்லாத பொருள்களைச் சார்ந்த நிலையில் உணர்வு விளக்கம் பெறாதனவாகவும் ஆக அவ்விருதிறப்பொருள்களிலும் தோய்ந்து சார்ந்ததன் வண்ணமாய் நின்றுணருந்தன்மையனவாகும் என்பது சைவ சித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் ஆன்ம விலக்கணமாகும். ஆன்மாவின் உண்மையியல்பாகிய சிறப்பிலக்கணம் குறித்த இம்முடிவிற்கு ஆதாரமாக அமைந்தது, நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும்அறிவு (திருக். 452) எனவரும் திருக்குறளாகும். நீரானது தான் சார்ந்த நிலத்தினது இயல்பினாலே தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மையினைப் பெறுவதாகும். அதுபோல மாந்தரது அறிவும் தான் சேர்ந்த இனத்தினது இயல்பினாலே தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மையினைப்பெறும் என்பது இதன் பொருள். இதன்கண் மாந்தர்க்கு அறிவு இனத்து இயல்பது ஆகும் எனக்குறித்த பொதுவகை முடிபிலிருந்து உய்த்துணர்ந்து கொள்ளப்பெற்றது உயிர்கள்யாவும் சார்ந்ததன் வண்ணமாந்தன்மையன என்னும் இச்சிறப்பு வகை முடிபாகும். ஆகவே உயிர்கள் முற்றுணர்வுடைய இறைவனைப் போன்று தாமே எல்லாம் அறிந்தனவும் ஆகாமல், உலகத்திலுள்ள அறிவில்லாத பொருள்களைப் போன்று ஒன்றும் அறியவியலா தனவுமாகாமல், அறிவுடைய பரம்பொருளைச் சார்ந்த வழி அறிவுடையனவாகவும், அறிவில்லாத சடப்பொருள்களைச் சார்ந்த வழி அறிவில்லாதனவாகவும் அதுவதுவாய்ச் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையெனச் சைவசித்தாந்தம் கூறும் ஆன்ம விலக்கணம் பற்றிய முடிவுக்கு மேற்காட்டிய திருக்குறள் ஆதாரமாயமைந்து அரண்செய்தல் இங்கு மனங்கொளத்தகுவதாகும். காணப்படும் உலகம் உள்ளபொருளாய்ப் பல்வேறு நுண் பொருள்களால் (தத்துவங்களால்) இயன்றது என்பது சாங்கியம் முதலிய தத்துவ நூலார் கண்டுணர்த்திய உண்மை முடிபாகும். உலகம் உள்பொருள் என்னும் இம்முடிவு தொல்காப்பியம் முதலிய தமிழ்த்தொன்னூல்களிலேயே இடம் பெற்ற தொன்மையுடையதாகும். உலகம் உள் பொருள் என்பது முப்பொருளுண்மை கூறும் சைவ சித்தாந்தக் கொள்கைக்கு ஏற்புடையதேயாகும். உலகினைப் பருப்பொருள்களாகப் பகுத்து ஆராயுமிடத்து நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனப்படும் ஐவகைப் பொருளில் திரட்சியே இவ்வுலகம் என்னும் உண்மை எளிதிற் புலனாகும். பருப்பொருள்களாகத் தோன்றும் நிலமுதலிய ஐம்பெரும் பூதங்களுக்கும் முதற்காரணமாய் நுண்ணிய நிலையில் உள்ளவை முறையே நாற்றம், சுவை, ஒளி,ஊறு, ஓசை என்னும் ஐந்துமாகும். ஐம்பெரும் பூதங்களுக்கு முதலாகவுள்ள இவற்றைத் தன் மாத்திரை என வழங்குவர் தத்துவ நூலார். நுண் பூதங்களாகிய இவ்வைந்தினையும் கூர்ந்து ஆராயவல்ல மெய்யறி வினர்க்கு இவற்றிற்குக் காரணமாய் இவற்றினும் நுண்ணியவாகி தத்துவங்கள் பலவுள்ளன என்பது இனிது புலனாகும். உலகின் நுண் கூறுகளாகிய தத்துவ வகையினைப் பகுத்துணரவல்ல நுண்ணுணர்வு என்பது இனிது புலனாகும். உலகின் நுண்கூறுகளாகிய தத்துவ வகையினைப் பகுத்துணரவல்லது நுண்ணுணர் வுடையோர் பொறிவாயில் ஐந்தவித்தானாகிய இறைவன் அறிவுறுத்திய ஒழுக்க நெறியில் வழுவா தொழுகுபவராய் ஐம்புலவுணர்வுகளையும் புறத்தே செல்லவொட்டது தம் அறிவின் திறத்தால் அடக்கி யாளவல்ல செம்புலச்செல்வர் களாய் யான் எனது என்னும் இருவகைப் பற்றுக் களையும் அறவே நீக்கிய அருளாளர்களே என்பதனை அறிவுறத்துவது, சுவை யொளியூறோசை நாற்றமென் றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு எனவரும் திருக்குறளாகும். சுவையும் ஒளியும் ஊறும் ஓசையும் நாற்றமும் என்று சொல்லப்படும் தன் மாத்திரைகள் ஐந்தின் கூறுபாட்டினையறிதலாவது ஓசை ஊறு ஒளி சுவை நாற்றம் என்னும் இவை ஐந்தும் முறையே விசும்பு, வளி, தீ, நீர், நிலம் என்னும் ஐம்பெரும் பூதங்கட்கும் முதற் காரணமாயின எனவும், நுண்பதங்களாகிய தன் மாத்திரைகளிலிருந்தே மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் அறிவுப்பொறிகள் (ஞானேந்திரியம்) ஐந்தும் வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்னும் தொழிற்கருவிகள் (கன்மேந்திரியம்) ஐந்தும் தோன்றுவன எனவும் இவற்றைப் பகுத்துணரும் உணர்வுடையாரை வகைதெரிவான் என்று உடன்பட்டுரைத்தமையால் ஆன்மா எனப்படும் அறிவுடைய பொருள் உண்டெனவும், பகுத்துணர்தற் கருவிகளாகிய புத்தி அகங்காரம் மனம் ஆகிய அகக்கருவிகளும் அவற்றிற்கு மூலமாகிய மூலப்பகுதியும் உண்டு எனவும் ஆராய்ந்து அறிதலாகும். வகைதெரிவான் கட்டேயுலகு எனத் திருவள்ளுவர் கூறுதலால் ஐம்பெரும் பூதங்கள் தன் மாத்திரைகள் முதலிய தத்துவக்கூறுகளாக உலகினைப் பகுத்தாராய்ந்து பயன் கொள்ளும் உணர்வுரிமையுடைய உயிர்கள் உள்பொருளாதலும் இங்ஙனம் வகைப்படுத்து ஆராய்தற்குரிய செயப்படு பொருளாகிய உலகம் உணர்வில்லாத உள்பொருளாதலும் தமிழ் முன்னோர் கண்ட தத்துவவுண்மைகளாதல் நன்கு தெளியப்படும். காணப்படும் இவ்வுலகம் கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருளேயென்பது சைவ சித்தாந்தம் கூறும் தத்துவக் கோட்பாடாகும். உலகினைப் படைத்த முதல்வன் ஒருவன் உண்டென்பது, இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக வுலகியற்றி யான் (திருக். 1062) எனவரும் திருக்குறளில் உலகியற்றியான் என்ற தொடரால் உணர்த்தப்பட்டது. உலகினைப் படைத்த இறைவன் இவ்வுலகின்கண் வாழ்வார்க்கு முயன்று தொழில்புரிந்து வாழ்தலையன்றிப் பிறர்பாற் சென்று இரந்து (யாசித்து) ஏற்று உயிர்வாழ்தலையும் ஒரு தொழிலாக விதித்திருப்பானாயின் அக்கொடுந்தொழிலை விதித்த அவனும் இரப்போரைப் போன்று எங்கும் திரிந்து கெடுவானாக என்பது இதன் பொருளாகும். இரத்தலின் இழிவினையும் வேறுதொழில் செய்யாது இரந்தே உயிர் வாழ்வோம் என்று வாழும் இரவலர் படுந்துயரத் தினையும் கண்டு வருந்திய திருவள்ளுவர், இவ்விழி நிலைக்கு இடனாக இவ்வுலகினைப் படைத்த இறைவனை வெகுண் டுரைப்பது போன்ற, மானங்கெட வரும் இரத்தலின் அச்சத்தைப் புலப்படுத்துவது இத்திருக்குறளாகும். இதன்கண் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் என்ற தொடரிலுள்ள வேண்டின் என்னும் வினையெச்சம் உலகியற்றியான் அங்ஙனம் வேண்டுவான் அல்லன் என்பதனையும் மக்கள் முயன்று தொழில்செய்து அறிவு திருவாற்றல்களால் உயர்வுபெறுதலே இறைவனது படைப்பின் நோக்கம் என்பதனையும் மக்கள் ஒரு தொழிலையுஞ் செய்யாது இரந்து உயிர்வாழ்வோம் என்று எண்ணும் இழிநிலை உலகினைப் படைத்த இறைவனது திருவுளக்குறிப்பிற்கு முரண்பட்ட தென்ப தனையும் வற்புறுத்துங் குறிப்பினதாதல் ஆய்ந்துணரத் தகுவதாகும். திருவள்ளுவர் உலகு, உயிர், கடவுள் என்னும் முப்பொருளுண் மையுடன் பட்டநிலையிலேயே வாழ்வியல் நூலாகிய இத்திருக்குறளை இயற்றியுள்ளார். இச்செய்தி, உலகு, மன்னுயிர், இறைவன் ஆகிய முப்பொருள்களையும் உள்பொருளாகக் கொண்டு தாம் கூற எடுத்துக்கொண்ட அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப் பொருள்களைத் திருவள்ளுவர் தம் நூலில் வற்புறுத்தலால் நன்கு தெளியப்படும். நல்லறிவுடைய சான்றோர் பலராலும் தம் வாழ்கை நுகர்ச்சிகளின் பயனாக உள்பொருள்களெனத் தெளிந்துரைக்கப்படும் கடவுளுண்மை, உயிருண்மை, இருவினைப் பயனுண்மை, மறுபிறப்புண்மை முதலிய உண்மைகளைத் தத்தம் சிற்றறிவுக்குப் புலனாகாமை காரணமாக இல்லையென மறுத்துரைப்போர் திருவள்ளுவர் காலத்திலும் இருந்தாரெனத் தெரிகிறது. சிறுபான்மையினராகிய அன்னோர் மக்களினத்தினராய் வாழ்ந்தாலும் உலகத்து வாழும் பெரும்பாலோர் தம் வாழ்க்கை நுகர்ச்சியின் பயனாக உண்டெனத் தெளிந்த உண்மைகளைத் தம் சிற்றறிவுக்குப் புலனாகாமை யொன்றே கொண்டு இல்லையென மறுத்துரைக்கும் முகமாக உலகமாந்தர் பலரொடும் முரண்பட்டுத் திரிதலின் அன்னோர் மக்கள் வடிவிற்காணப்படினும் உலகிற்பலரும் கண்டு அஞ்சத்தக்க பேய் வடிவினராகவே கருதப்படுவர் என்பதும் அவர்கள் வற்புறுத்தும் இன்மைக் கொள்கையினை உலகமக்கள் பலரோடும் ஒத்துவாழும் நல்லுணர்வுடைய பெருமக்கள் ஒரு பொருளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் தெய்வப்புலவர் கருத்தாகும். இக்கருத்து, உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்(து) அலகையா வைக்கப் படும் (திருக். 850) எனவரும் திருக்குறளின் இடம் பெற்றுள்ளமை காணலாம். உலக மக்களுக்கு ஆக்கந்தரும் உறுதிப்பொருள்களுள் முதலாவதாக அறித்தினைக் கூறவே அறவுணர்வுக்கு நிலைக்களமாய அறவாழியந்தணனாகிய இறைவது உண்மையும் அடுத்து உயிர்களது நுகர்ச்சிக்குக் காரணமாகிய பொருள்கூறவே அந்நுகர்ப்பொருள்களின் திரட்சியாகிய உலகின் உண்மையும், மூன்றாவதாக இன்பம் கூறவே அவ்வின்பத்தினை நுகர்தற்குரிய உயிர்களது உண்மையும் உடன் கூறினாராயிற்று. திருக்குறளின் முதற்கண் அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரம் உலகுயிர்களை இயக்கியருளும் கடவுள் ஆகிய முழுமுதற் பொருள் உண்டு என்னும் உண்மையினைக் கரதலளவையால் (அனுமானப் பிரமாணத்தால்) வலியுறுத்தி இறைவனது பொதுவியல்புடன் தன்னியல்பும் ஆகிய இருவகையிலக்கணங் களையும் சுருக்கமும் தெளிவும் பொருந்த விரித்து விளக்குந்திறன் முன்னர் எடுத்துக்காட்டப் பெற்றது. முதலதிகாரத்திற்கு அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் பெயர் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே (தொல். பொருள். புறத்.) என்னும் தொடரை அடியொற்றி யமைக்கப் பெற்றதாகும். இறைவனுக்கு வழங்கும் பெயர்கள் பலவற்றுள் கடவுள் என்ற பெயர் திருக்குறளில் இடம் பெறவில்லை. ஆயினும் கடவுளைக்குறித்துப் பலராலும் வழங்கப்பெறும் இறைவன் என்ற பெயர் இவ்வதிகாரத்தில் இருமுறை ஆளப்பெற்றுள்ளமை காணலாம். இறைவன் என்னும் தமிழ்ச்சொல் உலகுயிர்கள் தோறும் நீக்கமறத் தங்கியுள்ளவன் என்ற பொருளிற் கடவுளைக்குறித்து வழங்கும் காரணப் பெயராகும். இறுத்தல் - தங்குதல் உயிர்ப்பொருள் உயிரல் பொருள் ஆகிய எல்லாப் பொருள்களிலும் நீக்கமறத்தங்கியிருத்தல் கடவுளது இயல்பாதலின் இறைவன் என்ற சொல் கடவுளுக்குரிய காரணப்பெயராயிற்று. உலக முதல்வனாகிய கடவுளுக்கேவுரிய இப்பெயர் அவனருளால் உலகத்தையாளும் உரிமை பெற்ற மன்னர்க்குரிய பெயராகவும் தொன்னூல்களில் ஆளப் பெற்றுள்ளது. முன்னுயிர்களாற் செய்யப்படும் நன்றும் தீதும் ஆகிய இருவினைகட் கேற்ப அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை வினைசெய்த உயிர்களே நுகரும்படி நடுநிலையில் நின்று முறைசெய்தல் இறைவனுக்குரிய இயல்பாகும் என்பது பால்வரை தெய்வம் என்னும் தொல்காப்பியத் தொடர்க்குப் பொருள் காண்புழி முன்னர் விளக்கப்பெற்றது. வேண்டுதல் வேண்டாமையின்றி நடுநிலையில் நின்று எல்லாவுயிர்களையும் அவற்றின் இருவினைப் பயன்களையருத்தி முறை செய்து காப்பாற்றும் இறைமைத் தன்மையாகிய முறைமை, மலர்தலையுலகுக்கு உயிரெனச் சிறந்த மன்னனிடத்தும் அமைந்திருத்தல் கொண்டு மன்னனையே கடவுளாக மதித்து இறைவன் என உயர்த்துப் போற்றுதலும் தமிழ்மரபாயிற்று. இறைவன் என்ற பெயர் கடவுள் ஒருவர்க்கேயுரிய காரணப்பெயரென்பதும் அப்பெயரால் மன்னனைக் குறித்தல் உபசார வழக்கென்பதும் ஆகிய இவ்வுண்மையினை, முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் கிறையென்று வைக்கப் படும் (திருக். 388) எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் தெளிவாக விளக்கிய திறம் கூர்ந்துணரத் தகுவதாகும். தான் முறைசெய்து பிறர் நலியாமற் காத்தலையுஞ்செய்யும் அரசன் பிறப்பினால் மனிதனேயாயினும் செயலால் மனிதர்க்குக் கடவுள் என்று உயர்த்துப் போற்றப்படுவான் என்பது இத்திருக்குறளின் பொருளாகும். இறை என்னாது இறையென்று வைக்கப்படும் எனத்தெரிந்து மொழிதலால் இறை என்பது கடவுளுக்கேயுரிய பெயரென்பதும் மன்னனை இறையென உயர்த்துக் கூறுதல் உபசாரவழக்கென்பதும் நன்கு தெளியப்படும். உயிரும் உடம்பும் தம்முள் கலப்பினால் ஒன்றாயும் பொருட்டன்மையால் வேறாயும் உள்ள இருவேறு பொருள்கள் என்பம் ஆசிரியர் தொல்காப்பினார் காலத்துக்கு முற்பட்ட காலம் முதல் இன்றுவரை தமிழகத்தில் நிலைபெற்றுவரும் தத்துவக் கொள்கை. யென்பது முன்னர் விளக்கப்பட்டது. உடம்பும் உயிரும் பொருட்டன்மையால் வேறாவன என்பது யாவரும் அறிந்ததே. உடம்பு உருவுடையது, நிலையின்றி அழியுமியல்பினது, அறிவில்லாதது, உயிரோ காணாமரபினதாய் அருவாயுள்ளது, என்றும் அழிவின்றி நிலைபெற்றுள்ளது, அறிவுடையது. அருவாய் அழிவில்லாததாய் அறிவுடையதாய் உள்ள உயிர்க்கும் உருவாய் அழிவுடையதாய் அறிவில்லாததாய் உள்ள உடம்புக்கும் ஏற்பட்ட தொடர்பு அன்பு என்னும் உயிர்ப்பண்பினை வளர்த்தற்பொருட்டு ஏற்பட்டதாகும் என்பார். அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க் கென்பொ டியைந்த தொடர்பு (திருக். 73) என்றார் திருவள்ளுவர். காணுதற்கரிய அருவாகிய உயிர்க்கு உருவாகிய எற்புச் சட்டமாகிய உடம்போடு உண்டாகிய தொடர்ச்சி அன்பு என்னும் உயிர்ப்பண்பினோடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர் என்பது இதன் பொருளாகும். அருவாகிய உயிர்கள் உருவாகிய உடம்பொடு கூடியல்லது அன்பு செய்யலாகாமையின் அன்பினை வளர்த்தற் பொருட்டே உயிர்க்கு உடம்பொடு கூடிய இத்தொடர்ச்சியுளதாயிற்று என்பதாம். ஆகவே உயிர் உடம்பினைப் பெற்றதன் பயன் அன்புடைமை என்பது கருத்து. ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு அன்போடு இயைந்த வழக்கு என்ப எனச் சான்றோர் கூறுவர். எனவே மன்னுயிர்கள் எற்புச் சட்டமாகிய உடம்பின் தொடர்ச்சி பெறாது இருள்நிலையி லிருந்த காலமும் உண்டு என உய்த்துணர வைத்தாராயிற்று. உயிர்கள் உடம்பின் தொடர்ச்சி பெறாது தனித்திருந்த இருள்நிலையினைக் கேவலநிலை எனச் சைவசித்தாந்த நூல்கள் கூறுகின்றன. உயிர்கள் உடம்பொடு கூடி உலக நுகர்ச்சியைப் பெற்று வாழும் நிலையினைச் சகலநிலை எனச் சைவ சித்தாந்தம் கூறும். இந்நிலை உயிர்வேறு உடம்புவேறு எனப் பிரித்துணராதவாறு உடம்பும் உயிரும் ஒன்றிவாழும் நிலையாகும். இந்நிலையில் உயிருக்கும் உடம்புக்கும் அமைந்த தொடர்பினை, உடம்போ டுயிரிடை யென்னமற் றன்ன மடந்தையோ டெம்மிடை நட்பு (திருக். 1122) எனவரும் திருக்குறளில் ஆசிரியர் உவமை முகத்தால் விளக்கியுள்ளார். தலைமகன் தலைவியெனத் தனக்குள்ள காதன் மிகுதியைக் கூறுவதாக அமைந்தது இத்திருக்குறள் உடம்போடு உயிரிடையுளவாகிய நட்புக்கள் எத்தன்மையன அத்தன்மையன, இம்மடந்தையொடு எம்மிடையுளவாய நட்புக்கள் என்பது இதன்பொருள். உடம்போடு, உயிர்க்கு உளவாகிய நட்புக்களாவன, உடம்பும் உயிரும் வேற்றுமையின்றி இரண்டும் ஒன்றேயென எண்ணும்படி கலந்துவருதல், இன்பத் துன்பங்களை ஒக்க அனுபவித்தல், ஒன்றையொன்று இன்றியமையாமை என்பனவாம். இதனால் உயிர் உடம்புடன் கூடி வாழும் சகலநிலை விரித்துரைக்கப்பட்டது. உயிரும் உடம்பும் பொருட்டன்மையால் வேறாயினும் இன்ப துன்பங்களை நுகருந்திறத்தில் ஒன்றற்கொன்று இன்றியமையாத கலப்பினால் ஒன்றாகவே கருதப்பட்டு வருதல் உலகியலிற்கண்டது. இத்தகைய கலப்பினை இருமையின் ஒருமை (அத்துவிதம்) என்றால் பொருந்தும். இவ்வுலகத்தில் ஒத்த அன்பினராய் இல்வாழ்க்கைக்கண் ஒழுகி மனையோடும் மக்களோடும் சுற்றத்தோடும் கூடி வாழ்ந்தவர்கள் பிறப்புப் பிணிப்பு நீங்கப்பெறும் சிறந்த பேரின்பத்தினை அன்புடையராய் இல்லறத்தில் ஒழுகிய நெறியின் பயன் என்று கூறுவர் பண்டைத்தமிழ்ச் சான்றோர். இவ்வுண்மை, அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றார் எய்துஞ் சிறப்பு (திருக். 75) எனவரும் திருக்குறளின் விரித்துரைக்கப் பெற்றுள்ளமை காணலாம். ஈண்டுச்சிறப்பு என்றது எல்லாப் பேற்றினும் சிறந்த வீடுபேறாகிய இந்நிலை உயிர்களின் சுத்தநிலை எனப்படும். வீடுபயக்கும் உணர்வாகிய ஞானப்பகுதி திருக்குறளில் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல் அவாவறுத்தல் என்னும் நான்கதிகாரங்களில் விரித்துரைக்கப்பட்டது. அவற்றுள் நிலையாமையாவது, உலகில் தோற்றமுடையனாவாய்க் காணப்படும் எல்லாப் பொருள்களும் என்றும் ஒருபெற்றியனவாய் நிலையுதலிலவாந்தன்மை. காணப்படும் உலகம் உள்பொருளாயினும் என்றும் ஒரு பெற்றியதாய் நில்லாது மாறுந்தன்மையாதலின் நில்லாவுலகம் என்றார் தொல்காப்பியனாரும். பிறப்பற்ற நிலையே வீடுபேறென்பதும் பிறவா நிலை பெறுதற்குத் தன் உடம்பின் கண்ணும் ஏனைய உலகப்பொருளின் கண்ணும் வைத்த அவாவை அறவே துறத்தல் வேண்டுமென்பதும், புறமாகிய செல்வத்தின் கண்ணும் அகமாகிய உடம்பின் கண்ணும் உளதாம்பற்றினை அவற்றது நிலையின்மை நோக்கி அறவே விட்டொழித்தலே துறவுநிலையாம் என்பதும் ஆசிரியர் திருவள்ளுவர் அறிவுறுத்தும் தத்துவவுண்மைகளாகும். மற்றுந்தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பும் மிகை (திருக். 345) என்பது திருவள்ளுவர் வாய்மொழி. இதனால் பிறவா நிலையாகிய வீட்டினையடைதலே அறிவுடைய நன்மக்களின் நோக்கமாதல் வேண்டும் என்பதும் வீடுபேற்றுக்குச் சாதனமாவது இருவகைப் பற்றுக்களையும் அறவே விட்டு நீங்குதலாகிய துறவறமே என்பதும் நன்கு புலனாகும். உடம்பு என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது, பத்துவகை இந்திரியவுணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடியமனம். இது நுண்ணுடம்பு எனவும்படும். இத்துன்பங்களால் உயிரோடு ஒற்றுமைப்படுதலின் இவ்வுடம்புகளும் யான் எனப்படும் என்பார் பரிமேலழகர். அகம் புறம் என்னும் இருவகைப் பற்றினையும் இறுகப் பற்றிக் கொண்டு அப்பற்றினை விடாதவர்களைப் பிறவித் துன்பங்கள் இறுக்கப்பற்றிக் கொண்டு நீங்காமல் வருத்துவன. இப்பற்றுக்களை அறவே விடடொழித்தவர்களே வீடு பேற்றினைத் தலைப்பட்டவர்கள், அங்ஙனம் துறவாதவர்கள் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டு வருந்துவர் என்பார். தலைப்பட்டார் தீரத் துறத்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் (திருக். 348) என்றார் திருவள்ளுவர். முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார். அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டோராவார் என்பது இதன் பொருள். தீரத் (முற்றுத்) துறத்தலாவது பொருள்களையும் (உரு, அரு என்னும்) இருவகையுடம்பினையும் உவர்த்துப் பற்றறவிடுதல், ஈண்டுத் தலைப்படுதல் என்றது இறைவனது திருவருள் ஞானத்தை எய்தப்பெறுதல், இருவகைப்பற்றினையும் விட்டொழித்தவர்க்கே இறைவனது பற்றாகிய திருவருள் ஞானம் கைகூடும் என்னும் தெய்வப்புலவர் வாய்மொழியினை, தனியறிவை முன்னந் தலைப்பட்டார் தீரத்துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவரென்று - நிலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல் (நெஞ்சுவிடு தூது, கண்ணி 23-25) என உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய சித்தாந்த நூல்கள் எட்டினுள் ஒன்றாகிய நெஞ்சு விடு தூதில் எடுத்தாண்டுள்ளமை சைவசித்தாந்தத் தத்துவ வுண்மைகளுக்குத் திருக்குறள் நிலைக்களமாக விளங்குதலை நன்கு வற்புறுத்துவதாகும். ஒருவர்க்கு இருவகைப் பற்றும் அற்ற பொழுதே அப்பற்றறுதி அவரது பிறப்பையறுக்கும். பற்று அறாத - பொழுது அவற்றாற் பிறந்திறந்து வருகின்ற நிலையாமை காணப்படும் என்பார், பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப்படும் (திருக். 349) என்றார் திருவள்ளுவர். பிறப்புக்குக் காரணமாகிய இருவகைப் பற்றும் நீங்கிய பொழுதே அவற்றின் காரியமாகிய பிறப்பும் அற்றதாம் முறைமைபற்றிய பற்றற் கண்ணே பிறப்பறுக்கும் என்றார். அற்றது பற்றெனில் உற்றது வீடு என்பது நம்மாழ்வார் அருளிச்செயல். எல்லாப் பொருளையும் பற்றி நின்றே தனக்கென்று ஒரு சார்பில்லாதவன் இறைவன். பற்றற்றானாகிய அம் முதல்வன் ஓதிய வீட்டுநெறியினை இதுவே நன்னெறி யென்று மனத்துட் கொள்ளுதல் வேண்டும். அங்ஙனம் கொண்டு அதன்கண் உபாயமாகிய தியானச் சமாதிகளை மனத்தாற் செய்தல் வேண்டும். அங்ஙனம் செய்தால் அநாதியாய் வரும் உடம்பின் பற்றுத் தானே நீங்கிவிடும் என அறிவுறுத்துவது, பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (திருக். 350) எனவரும் திருக்குறளாகும். எல்லாவற்றுக்குஞ் சார்பாய் நின்று தனக்கென்று ஒரு சார்பு வேண்டாதவன் இறைவன் எனப் பகுத்துணர்த்துவார் அம்முதல்வனைப் பற்றற்றான் என்றார். துறவற நெறியினை மேற்கொள்ளுதற்கும் அநாதியே வந்த உடம்பின் பற்றினை விட்டொழித்தற்கும் இறைவன் திருவருளே துணை செய்வதாகும் என்பதும், அம்முதல்வனது அருளின்றி இருவகைப் பற்றுக்களையும் விட்டொழித்தலாகிய துறவறப்பயன் கைகூடா தென்பதும் ஆகிய உண்மைகள் இத்திருக்குறளில் நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை மனங்கொளத் தகுவதாகும். மன்னுயிர்கள் பாசப்பிணிப்பிற் பட்டுப் பிறத்தாலும் அப்பிணிப்பின் நீங்கி வீடு பெறுதலும் ஆகிய இருமை வகையினையும் அவற்றின் காரணங்களையும் ஐயந்திரிபின்றி உள்ளவாறுணர்தல் மெய்யுணர்தலாகும். இதனை வடநூலார் தத்துவ ஞானம் என்பர். திருக்குறளில் மெய்யுணர்தல் என்னும் அதிகாரம் தமிழ் முன்னோர் கண்டுணர்ந்த தத்துவ ஞானத்தினைச் சுருங்கச் சொல்லி விளங்கவுணர்த்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம். என்றும் நிலைபேறுடைய மெய்ப் பொருளல்லாதவற்றை நிலையான மெய்ப்பொருள் என்று பற்றுச்செய்யும் (விபரீத வுணர்வாகிய) மயக்கவுணர்வானே இன்பமில்லாத பிறப்பு உண்டாவது என அறிவுறுத்துவது, பொருளல்ல வற்றைப் பொருளேன்றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு (திருக். 351) எனவரும் திருக்குறளாகும். விபரீதவுணர்வாவது, மறுபிறப்பும் இருவினைப் பயனும் கடவுளும் இல்லை யெனவும் மற்றும் இத்தன்மையவுஞ் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கெனத் துணிதல். குற்றியை மகவென்றும் இப்பியை வெள்ளியென்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. மருள், மயக்கம், விபரீதவுணர்வு, அவிச்சையென்பன ஒருபொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமேயாகலின் மாணாப்பிறப்பு என்றார். இதனாற் பிறப்புத்துன்பம் என்பதூஉம் அதற்கு முதற்காரணம் அவிச்சை யென்பதூஉம் கூறப்பட்டன என்பர் பரிமேலழகர். மயக்கவுணர்வின் நீங்கி மெய்யுணர்வுடைய ராயினார்க்கு அம்மெய்யுணர்வு எல்லாத் துன்பத்திற்குங் காரணமாயுள்ள ஆணவம் என்னும் அகவிருள் நீங்க வீட்டினைக் கொடுக்கும் என அறிவுறுத்துவது. இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி மாசறு காட்சி யவர்க்கு (திருக். 352) எனவரும் திருக்குறளாகும். ஈண்டு இருள் என்றது, உயிர்கள் அடையும் எல்லாத் துன்பத்திற்கும் காரணமாயுள்ள ஆணவல்லிருளை. இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி என்பது அப்பரருள் மொழி. மருள் என்றது மயக்கவுணர்வினை. மாசறு காட்சியென்றது மெய்ப்பொருளுணர்வினை. வீடென்பது உயர்வறவுயர்ந்த பேரின்பநிலையென்பதும் அதனைப் பெறுதற்கு நிமித்தகாரணம் மெய்ப்பொருளுணர்வென்பதும் இதனால் கூறப்பட்டன. இனி, இங்கு இருள் என்றது நரகத்தினையெனவும் அஃது ஆகுபெயராய் அதற்குக் காரணமாகிய பிறப்பின் மேல் நின்றதெனவும் கூறுவர் பரிமேலழகர். ஆசிரியர் திருவள்ளுவர் இருள் என்ற சொல்லினை ஆணவம் என்னும் அகவிருள் என்ற பொருளிலும் மருள் என்ற சொல்லினை மயக்கவுணர்வு என்ற பொருளிலும் ஆண்டுள்ளார் என்பது இருள்சேர் இருவினையுஞ்சேரா, இருணீங்கியின்பம் பயக்கும், மருளானாம் மாணாப் பிறப்பு எனவரும் திருக்குறள் தொடர்களை ஒப்புநோக்கி ஆராய்வார்க்கு இனிது விளங்கும். ஐயத்தினின்றும் நீங்கி மெய்ப்பொரு ளுண்மையை யுணர்ந்தார்க்கு அவர்கள் எய்தி நின்ற நிலவுலகத்தினும் இனி எய்துதற்குரிய வீட்டுலகம் மிகவும் அணிமைக்கண் நெருங்கியுள்ளது என்பார். ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து (திருக். 353) என்றார் திருவள்ளுவர். ஐயமாவது ஒருபொருளைக் குறித்துப் பலவேறாக எண்ணி அவற்றுள் ஒன்றிலுந்துணிவு பிறவாது நிற்றல். ஒருவாற்றாற் பிறர் மதங்களைந்து தமது மதத்தினை நிலைநாட்ட முயலுதல் எல்லாச் சமய நூல்கட்கும் இயல்பாதலின் அந்நூல்கள் கூறுகின்றவற்றுள் யாது மெய் என நிகழும் ஐயத்தினை யோக முதிர்ச்சி யுடையார் தமது அனுபவத்தால் நீக்கி அதன் மெய்மையை யுணர்வராதலின் அத்தகைய மெய்ப்பொருள் பயிற்சியுடையோரை ஐயத்தின் நீங்கித் தெளிந்தார் என்றார். மெய்ப்பொருளைத் தெளிந்தார்க்கு அவ்வனுபவவுணர்வு பயின்று மேற்படிப் பண்டையுலகியலுணர்வு தூர்ந்து மறையுமாதலின் இவ்வுலகியல் தொடர்பினும் வீட்டியல் தொடர்பே அவர்க்கு மிக நெருக்க முடையதாய் வரும் என்பார் வையத்தின் வானம் நணியதுடைத்து என்றார். மெய்ப்பொருளாகிய இறைவனையுணர்ந்து போற்றாதார்க்குப் புறத்தே செல்லுதற்குரிய புலன்களின் வேறுபாட்டால் ஐந்தாகியவுணர்வுடைய மனம் புலனடக்கத்தால் அவற்றை விட்டு நீங்கித் தம்வயத்ததாய வழியும் சிறிதும் பயனில்லையென்பது, ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர் வில்லா தவர்க்கு (திருக். 354) எனவரும் திருக்குறளால் வலியுறுத்தப்பட்டது. ஐயுணர்வு- ஐந்தாகிய உணர்வு என்றது ஐம்புலவுணர்வுடைய மனத்தினை எய்துதலாவது, புறத்தே செல்லாது மடங்கி ஒருநிலைப்பட்டு அடங்கித்தாரணைக்கண் நிற்றல். மெய்யுணர்வு - மெய்ப் பொருளாகிய இறைவனையுணரும் உணர்வு. செம்பொருளாகிய இறைவனைச் சிந்தித்துப் போற்றாதார்க்கு மனம் ஐம்புலம் வழிச் செல்லாது அடங்கி நின்றாலும் அதனாற் சிறிதும் பயனில்லையெனவே தெளிந்த மெய்ப்பொருட் சிந்தனையுடையார்க்கே வீடுபேறாகிய பேரின்பநிலை எய்தும் என்பது பெறப்படும். உலகத்து யாதொரு பொருள் யாதோரியல் பிற்றாய்த் தோன்றினும் தோன்றிய அவ்வெளித் தோற்றத்தைக் கண்ட அளவில் அமைந்துவிடாது அப்பொருளின் உள்நின்று இயக்கும் மெய்ப்பொருளைக் (இறைவனைக்) கண்டுணர்வதே உண்மையான அறிவாகும் என்பர் சான்றோர். இந்நுட்பம், எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு (திருக். 355) எனவரும் திருக்குறளில் வலியுறுத்தப்பெற்றுள்ளமை காணலாம். இதன்கண் எப்பொருள் என்றது புறத்தே காணப்படும் மாறுந்தன்மையதாய உலகப்பொருள்களை. அப்பொருள் மெய்ப்பொருள் என்றது, அவ்வுலகப் பொருள்களின் உள்நின்றியக்கும் மாறாவியல்பினதாகிய செம்பொருளை. யாதொரு பொருள் யாதோரியல்பிற்றாய்த் தோன்றினும் அத்தோன்றியவற்றைக் கண்டொழியாது அப்பொருள்களினின்று மெய்யாய பொருளைக் காண்பதே மெய்யுண்வாவது எனப் பொருள் வரைந்து இதனை மெய்யுணர்வாவது இலக்கணங் கூறியதாகக் கூறினார் பரிமேலழகர். பொருள்தோறும் உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து நின்ற வுண்மையைக் காண்பதே மெய்யுணர்வு என்றவாறு, அஃதாவது கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்றவழி அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதோர் குடியும் வேழநோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேஎய் என்பதோர் இயற்பெயரும் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்பதோர் சிறப்புப்பெயரும் ஒரு பொருளின்கட் கற்பனையாகலின் அவ்வாறு (உலகத்தார் கற்பித்துக் கொண்ட கற்பனையினை மெய்ம்மையென) உணராது நிலமுதல் உயிரீறாகிய தத்துவங்களின் தொகுதியெனவுணர்ந்து அவற்றை நிலமுதலான காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டு சென்றாற் காரண காரியங்கள் இரண்டுமின்றி முடிவாய் நிற்பதனை யுணர்தலாம். எப்பொருள் என்ற பொதுமையான் இயங்கு திணையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறே யுணர்ப்படும். இதனால் மெய்யுணர்வினது இலக்கணம் கூறப்பட்டது எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் சாங்கிய நூலார் கொள்கையினை அடியொற்றி யமைந்ததாகும். மெய்யுணர்தல் என்ற தொடர், மெய்மையான் (ஒரு பொருளை ஆராய்ந்து) உணர்தல் என்ற பொருளுடைய அதிகாரத் தலைப்பாகும். சொல்லின் முடியும் இலக்கணத்ததாகிய மெய்யுணர்தல் என்ற தொடர் மெய்ம்மையான் ஒன்றனை ஆராய்ந்துணர்தல் என்ற பொதுப்பொருளோடு மெய்ப்பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்துணர்தல் என்ற சிறப்புப் பொருளையும் தருவதாகும். அத்தகைய சிறப்புப்பொருளை விரித்துரைக்கும் நிலையிலமைந்தனவே இவ்வதிகாரத்தில் நான்கு முதல் ஒன்பது முடியவுள்ள குறள்கள். ஐந்தாங் குறளாகிய இதன்கண் புறத்தே காணப்படும் பொருள்களை யெல்லாம் எப்பொருள் என்ற வினாவில் அடக்கியும் அங்ஙனம் அடக்கியவற்றை அப்பொருள் எனச் சுட்டி அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என அவற்றை உள்நின்றியக்கும் செம்பொருளைக் கண்டு தெளிதலே மெய்யுணர்வின் சிறப்பியல்பாகும் என்று ஆசிரியர் வலியுறுத்தினார் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். இம்மக்கட்பிறப்பின் கண்ணே அருளனுபவமுடைய ஆசிரியனிடத்தே உபதேசமொழிகளைக் கேட்டு அதனால் மெய்ப்பொருளையுணர்ந்தவர் மீண்டும் இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர் என்பது, கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி (திருக். 356) எனவரும் திருக்குறளால் உணர்த்தப்பட்டது. கற்றலாவது பலரிடத்தும் பலகாலும் நற்பொருளைக் கேட்டுப் பயிலுதல். மெய்ப்பொருள் காணுதலாவது, என்றும் மாறாத மெய்ப்பொருளாகிய முழுமுதற் பொருளை உள்ளத்திற் சிந்தித்துப் போற்றுதல். ஈண்டு வாரா நெறி - இவ்வுலகத்து மீண்டும் வந்து பிறவாமைக்கு ஏதுவாகிய வீட்டு நெறி. மீண்டு வாரா வழியருள் புரிபவன் (திருவாசகம்) எனவும் வாராவுலகருளவல்லான் (திருத்தாண்டகம்) எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இத்திருக்குறள் தொடருடன் வைத்து ஒப்பு நோக்கத்தக்கன. மெய்ப் பொருளை யுணர்தற்கரிய கேட்டல் சிந்தித்தல் தெளிதல் என்னும் உபாயம் மூன்றனுள் கேட்டல் இதனாற் கூறப்பட்டது. ஆசிரியன்பாற் கேட்ட உபதேச மொழிகளை உள்ளமானது அளவைகளாலும் பொருந்து மாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனால் என்றும் உள்ளதாகிய முழுமுதற்பொருளையுணருமானால் அங்ஙனம் உணர்ந்த உயிர்க்கு மீண்டும் பிறப்புளதாக நினைக்க வேண்டா என்பார், ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாய்ப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (திருக். 357) என்றார் திருவள்ளுவர். இதன்கண் உள்ளம் என்றது ஆன்மாவை. உள்ளது என்றது என்றும் மாறாது உள்ளதாகிய சத்தாகிய முழுமுதற் பொருளை. உள்ளம் ஒருதலையாய் ஓர்த்து உணரின் பேர்த்துப்பிறப்பு (உளதாக) உள்ள வேண்டா என இசையும். ஆன்மாவை உள்ளம் என்றும் முழுமுதற் பொருளை உள்ளது (சத்து) என்றும் வழங்கும் சைவசித்தாந்தச் சொற்பொருள் மரபு இத்திருக்குறளில் இடம் பெற்றுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். இத்திருக்குறளின்படி உள்ளது எனப்படும் முழுமுதற் பொருளைத் தெளியவுணர்ந்து வழி படாதவர்கள் சமணர்கள் என்ற செய்தியை ஒர்த்துள்ளவாறு நோக்கி யுண்மையையுணராக் குண்டர் வார்த்தையை மெய்யென்றெண்ணி மயக்கில் வீழ்ந்தழுந்து வேனை எனவரும் திருநேரிசையில் திருநாவுக்கரசர் குறித்துள்ளமை காணலாம். இதனால் இறைவனைச் சிந்தித்தலாகிய உபாயம் கூறப்பட்டது. பிறப்பிற்குக் காரணமாகிய பேதைமைகெட வீட்டிற்கு நிமித்த காரணமாகிய செவ்விய முழுமுதற் பொருளைக் கண்டு தெளிவதே ஒருவர்க்கு மெய்யுணவாகும் என அறிவுறுத்துவது, பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு (திருக். 358) எனவரும் திருக்குறளாகும். பிறப்பென்னும் பேதைமை எனவும் சிறப்பென்னுஞ் செம்பொருள் எனவும் காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்குங் காரணமாதலுடைமையின் அச்சிறப்புப் பற்றி அதனையே பிறப்புக்குக் காரணமாக்கிக் கூறினார். எல்லாப் பொருளினுஞ் சிறந்ததாதலால் வீடு சிறப்பெனப்பட்டது. தோற்றக்கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையால் தனியென்றுங் கலத்தலின்மையின் தூய்தாய்த் தான் எல்லாவற்றையுங்கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாதல் பற்றி அதனைச் செம்பொருள என்றார். மேல் மெய்ப்பொருள் எனவும் உள்ளது எனவும் கூறியதூஉம் இது பற்றியென வுணர்க. அதனை (செம்பொருளை)க் காண்கையாவது உயிர் தன்அவிச்சை கெட்டு அதனோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்; இதனைச் சமாதியெனவும் சுக்கிலத் தியானம் எனவும் கூறுவர். உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது அஃது ஆதுவாய்த் தோன்றும் என்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின் வீடெய்து வார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாகிய பாவனை கெடுதற்பொருட்டுக். கேவலப் பொருளையே பாவித்தல் வேண்டுதலால் அதனை முன்னே பயிறலாகிய இதனின் மிக்க உபாயம் இல்லையென்பது அறிக. இதனாற் பாவனை கூறப்பட்டது என இத்திருக்குறளுக்குப் பரிமேலழகர் தரும் விளக்கும் சைவசித்தாந்தக் கோட் பாட்டிற்கு ஒத்ததேயாகும். பரிமேலழகர் இங்குக் கேவலப் பொருள் என்றது முதற்பொருளாகிய செம்பொருளாகிய சிவமெனலாமே (திருமந்திரம்) எனவரும் திருமூலர் வாய்மொழியாலும் செம்பொருட்டுணிவே (திருவாசகம்) எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியாலும் நன்கு தெளியப்படும். ஒருவர் எல்லாப் பொருட்குஞ் சார்பாகிய செம் பொருளை யுணர்ந்து தம்மைச் சார்வனவாகிய இருவகைப் பற்றும் அறஒழுகவல்லராயின் அவரை முன்னர்ச் சாரக் கடவனவாய் நின்ற துன்பங்கள் அவர்தம் உணர்வொழுக்கங் களையழித்துச் சாரமாட்டா என்பார், சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மாற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் (திருக். 359) என்றார் தெய்வப்புலவர். இத்திருக்குறளில் முதற்கண் உள்ள சார்பு என்பது உலகுயிர்களாகிய எல்லாப் பொருட்கும் சாரும் நிலைக்களமாகத் திகழும் செம்பொருளையும் அடுத்து நின்ற சார்பு என்பது உயிர்களைச் சார்வனவாகிய இருவகைப் பற்றுக்களையும் உணர்த்தின. ஆகுபெயர் சைவனாரவர் சார்பலால் யாம் சார்பிலோம் நாங்களே என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல். இத்திருக்குறளில் சார்புணர்தல் என்றது எல்லாப் பொருட்குஞ் சார்பாய் நின்ற முழுமுதற் பொருளை இடைவிடாது உணருந் தியானத்தையும் சார்பு கெடவொழுகல் என்றது சமாதியையுங் குறிப்பன. இத்திருக்குறட்பொருளை விரித்துரைக்கும் நிலையில் அமைந்தது, சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் என்றமையான் சார்புணர்தல் தானே தியானமுமாம் - சார்பு கெடவொழுகின் நல்ல சமாதியுமாம் கேதப் படவரு தில்லைவினைப் பற்று எனவரும் திருக்களிற்றுப்படியார் வெண்பாவாகும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன : பிறப்பு அனாதியாய் வருதலின் உயிரான் அறவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் பிறந்தவுடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப்பின்னும் அனுபவிக்கக் கடவனவாய்க்கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல் ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், அழித்துச்சார்தராஎன்றார்......ãw¥ã‰F¡ காரணமாகலான் நல்வினைப் பயனும் நோயெனப்பட்டது. மேல்மூன்று உபாயத்தானும் பரம்பொருளையுணரப் பிறப்பறும் என்றார். அஃது அறும் வழிக்கிடந்த துன்பங்களெல்லாம் என்செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து, அவை ஞானயோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சாராமாட்டாமையானும் வேறு சார்பின்மையானும் கெட்டுவிடும் என்பது இதனாற் கூறப்பட்டது எனப் பரிமேலழகர் தரும் விளக்கம். மெய்யுணர்தல் என்னும் இவ்வதிகாரத்திற் கூறப்படும் கருத்துக்கள் யாவும் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருளுண்மையை வற்புறுத்தும் சைவ சித்தாந்தக் கொள்கையினர்க்கே முற்றிலும் பொருந்துவனவாதலை நன்கு புலப்படுத்துகின்றது. மேற்கூறியவாறு சார்புணர்ந்து சார்புகெட வொழுகுதலாகிய ஞானயோகங்களின் முதிர்ச்சி யுடையார்க்கு விழைவு, வெறுப்பு, மயக்கம் என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூட அறவே கெடுதலால் அவற்றின் காரியமாகிய வினைப்பயன்கள் அவர்க்குச் சிறிதும் உளவாகா என அறிவுறுத்தவது, காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமங் கெடக்கெடும் நோய் (திருக். 360) எனவரும் திருக்குறளாகும். மக்கள்பால் அமைந்த காமம் வெகுளி மயக்கம் என்னும் முக்குற்றங்களுள் ஏனையிரண்டிற்கும் அடிப்படையாக அமைந்தது மயக்கம். இது ஒன்றும் அறியாமையாகிய பேதைமை எனவும், தான் சிற்றறிவினனாயிருந்தே தன்னைப் பேரறிவினனாக மதித்துப் பெரியோரை அவமதித்தொழுகும் புல்லறிவாண்மையும் என இருவகைப்படும். இவ் விரண்டினையும் இரண்டதிகாரங்களில் திருவள்ளுவர் விரித்துரைத்தலால் சிற்றறிவுடைமை உயிர்களது இயல்பு என்பதனைத் திருவள்ளுவர் அறிவுறுத்தினாராவர். அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யான் என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்குஇதுவேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் ஆசையும் அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும் எனவடநூலார்க் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலான் மூன்று என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்ப்போலு மாகலின் அம்மிகுதி தோன்ற இவை மூன்றன் நாமம் கெட என்றார். .fhuzkha அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இல்லை என்பது இதனாற்கூறப்பட்டது. முன்கிடந்த துன்பங்களும் மேல் வரக்கடவதுன்பங்களும் இல்லாதல் மெய்யுணர்வின் பயனாகலின் இவையிரண்டு பாட்டும் இவ்வதிகாரத்தவாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்தவுடம்பும் அது கொண்ட வினைப்பயன்களுமேயென்பது பெற்றாம் என இக்குறளுக்கு விளக்கங்கூறுவர் பரிமேலழகர். மெய்யுணர்ந்தாராகிய சிவஞானிகளுக்கு ஓதுகன்மும் இல்லை என்பது, ஏன்ற வினையுடலோ டேகும் இடையேறும் வினை தோன்றில் அருளே சுடும் (திருவருட்பயன் 98) எனவரும் சித்தாந்த நூலால் நன்கு தெளியப்படும். உயிர்களால் முன்னர் ஈட்டப்பட்டு நுகர்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாது சேர்ந்துள்ள பழவினையைச் சஞ்சிதம் எனவும், அவற்றுள் இப்பிறப்பில் நுகர்தற்கென உடம்பினால் முகந்து கொள்ளப்பட்டநுகர்வினையைப் பிராரர்த்தம் எனவும், பிராரர்த்தம் நுகரும் பொழுதே அந்நுகர்ச்சியினுடன் தோன்றும் விருப்பு வெறுப்புக் காரணமாகப் புதியனவாய் வந்து ஏறும் வினையினை ஆகாமியம் எனவும் வழங்குதல் சைவசித்தாந்த மரபு. சஞ்சிதவினை ஆசிரியன் செய்யும் தீக்கையினாற் கெட்டொழியும், ஆகாமியம் சிவஞானத்தினால் வெந்தொழியும் என்பர். இப்பிறவியில் எடுத்தவுடம்பில் நுகர்தற்குரிய பிராரர்த்தமும் அது காரணமாக வந்தேறும் ஆகாமியமும் அற்றொழியப் பிறவாநிலை வந்தெய்தும். எனவே இனிவரும் பிறவிக்குரியனவாகிய சஞ்சிதம் கெட்டொழியும் என்பது கூறாமலேயே விளங்கும். இம்மூவகை வினைக்கும் சார்புணர்ந்து சார்புகெட வொழுகும் மெய்ஞ்ஞானிகளைச் சாராமாட்டா என்பர் சார்தரும் நோய் சார்தரா எனவும் நாமங்கெடக்கெடும் நோய் எனவும் கூறினார் திருவள்ளுவர். யோகஞானங்களையுடையராய் முன்னும் பின்னுமுள்ள வினைத்தொடர்பு அறுத்தார்க்கு அவர்தம் உடம்பும் அதுமுகந்து கொண்ட வினைப்பயன்களும் எஞ்சி நின்றமையின் வாதனை பற்றி ஒரோவழி முன்னர்த் துறக்கப்பட்ட புலன்கள் மேற்பழைய பயிற்சி வயத்தால் நினைவு செல்லுதல் உண்டு. அந்நினைவும் மருள் (அவிச்சை) எனப்படும் மாணா பிறப்பிற்கு வித்தாகும். அம்மயக்கத்தினை இடைவிடாத மெய்ப்பொருளுணர்வினால் அறுத்தல் வேண்டும் என அறிவுறுத்துவது அவாவறுத்தல் என்னும் அதிகாரமாகும். எல்லாவுயிர்க்கும் பிறப்பிற்குக் காரணம் அவாவே என்பதனையும், அத்தகைய அவா அறவே பிறவாமைதானே வரும் என்பதனையும் விளக்க அறிவுறுத்தவது, அவாவென்ப எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பினும் வித்து (திருக். 361) எனவரும் திருக்குறளாகும். உடம்பு நீங்கிப் போங்காலத்து அடுத்தவினையும் அது காட்டுங்கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்து உதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவா அக்கதிக்கண் கொண்டு செல்லும் ஆகலான் பிறப்பீனும் அவா என்றார். தேவகதி, மானுடகதி, விலங்குகதி, நரககதி என்னும் பிறப்வுவகையான் உளதாய உயிர் வேறுபாட்டினும் அவை தம் தன்மைதிரியும் வளர்காலம் தேய்காலம் எனும் காலவேறுபாட்டினும் அவா பிறவிக்கு வித்தாதல் வேறுபடாமையின் எல்லாவுயிர்க்கும் எஞ்ஞான்றும் என்றார். பிறவிக்கு வித்தாவது அவா என்னும் இக்கொள்கை எல்லாச் சமயங்கட்கும் ஒத்தலால் என்ப எனப் பொதுப்படக் கூறினார். இதனால் அவா பிறப்பிற்கு வித்தாதல் கூறப்பட்டது. பிறப்புத்துன்பமாதல் அறிந்தவர் ஒரு பொருளை வேண்டுவராயின பிறவாமையை வேண்டிப் பெறுதல் வேண்டும். அங்ஙனம் வேண்டப்பெறும் பிறவாமை தானும் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவர்க்குத் தானேயுண்டாகும் என்பார், வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் (திருக். 362) என்றார் திருவள்ளுவர். தோற்றமில் காலமாகத் தாம் பிறப்பு பிணி மூப்பு இறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை யுணர்ந்தவர்க்கு ஆசை இன்பத்தின் கண்ணே யாகனான் பிறவாமையை வேண்டும் என்றார். இவ்வுலகிற்குச் சிற்றின்பங்கருதி ஒரு பொருளை அவாவின் அவாவானது பிறப்பீனும் வித்தாய்ப் பின்பும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின் பிறவாமையாகிய அப்பேறு ஒன்றையும் வேண்டாமையாகிய அவாவின்மையை வேண்டத் தானே வரும் என்றார். இத்திருக்குறட்பொருளைப் பகுத்து விளக்கும் முறையில் அமைந்தது, வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்மையால் வேண்டின தொன்றுமே வேண்டுவது வேண்டினது வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடு வேண்டாமை வேண்டுமவன்பால் (திருக்களிற்றுப்படியார் 40) எனத் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அருளிய திருக்களிற்றுப்படியார் பாடலாகும். வேண்டுவார் வேண்டுவதே யீந்தருளும் இறைவன் பால் ஒன்றை விரும்பி வேண்டுங்கால் பிறவாமையாகிய பேறோன்றுமே வேண்டத்தகுவதாகும் எனத் திருவள்ளுவ நாயனார் அறிவுறுத் தினமையால் பிறவாமையாகிய அஃதொன்றுமே வேண்டிப் பெறுதற்குரியதாகும். பிறவாமையாகிய அப்பேறுதானும் உலகப்பொருள்களில் வைத்த அவாவையறுத்தலாகிய வேண்டாமை யினை வேண்டத்தானேவரும் என்ற திருவள்ளுவர் வாய்மொழியினால் யாவரும் விரும்பி வேண்டத்தக்க முதல்வன்பால் பிறவாமைக்குக் காரணமாகிய அவாவறுத்தல் ஒன்றுமே விரும்பிவேண்டத்தகுவதாகும் என்பது மேற்காட்டிய பாடலின் பொருளாகும். அவாவின்மையே உயிர்களைத்தோற்றமில் காலமாகப் பற்றியுள்ள மலமாசினை நீக்கித் தூய்மையுடைய துறவறமாகிய வீட்டு நெறியினை நல்கி ஆன்மாவைத்தூய்மை செய்வதாதலின் இத்தகைய அவா வறுத்தலாகிய மனத்தூய்மை வாய்மைப் பொருளாகிய இறைவனை இடைவிடாது சிந்தித்தலாலேயே பெறுதற்குரியதாகும். இவ்வுண்மையினை, தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் (திருக். 364) எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். உயிர் அநாதியே தன்னைப் பற்றியுள்ள மலமாகிய மாசு நீங்குதலே வீடாதலின் அவ்வீடுபேற்றினைத் தூஉய்மை என்றும் திரிபின்றியுள்ள மெய்ப்பொருளாகிய இறைவனை வாஅய்மை என்றும் கூறினார் திருவள்ளுவர். தூஉய்மையாகிய வீடுபேறு அவாவின்மைக் காரணமாகப் பெறுதற்குரியது என்பார் தூஉய்மை என்பது அவாவின்மை எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார். வாய்மை என்றது மெய்ப்பொருளாகிய இறைவனை. வேண்டுதல் - இடைவிடாது நினைத்துப் போற்றுதல், இதனால் அவாவறுத்தல் என்பது வீடடைதற்கு வழிமுறையானன்றி நேரே எதுவென்பதும், அத்தகைய அவாவறுத்தல் தானும் இறைவனை இடைவிடாது நினைந்து போற்றுதல் வாயிலாகவே ஒருவர்க்குக் கைகூடும் என்பதும் இத்திருக்குறளில் வலியுறுத்தப் பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். அவாவினை முற்ற அறுத்தவனுக்குச் செய்தன வெல்லாம் தவமாம். அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமுமில்லை. அவாவே துன்பத்திற்குக் காரணமாகும். அவா என்று சொல்லப்படு கின்ற மிக்க துன்பம் ஒருவர்க்குக் கெடுமாயின் அவர் வீடுபெற்ற பின்னர் என்பதின்றி இவ்வுலகத்து உடம்பொடு கூடிநின்ற நிலையிலும் இன்பம் இடையறாது என்பார், இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துட் டுன்பங் கெடின் (திருக். 369) என்றார் திருவள்ளுவர். அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் ஈண்டும் இன்பம் இடையறாது என இயைத்துப் பொருள் கொள்வர் பரிமேலழகர், துன்பத்துள் துன்பமாவது வாழ்க்கையில் நேரும் பிறதுன்பங்களெல்லாம் இன்பம் என்று எண்ணுமாறு வரும் மிக்க துன்பம். ஈண்டு - இவ்வுலகத்து உடம்பொடு கூடியுள்ள நிலையிலும், அவாவறுத்தார்க்கு மனமானது உலகப்பொருள் மேற் சிறிதும் பற்றின்மையால் தடுமாற்றமின்றி நிறைவு பெற்று நிற்றலால் இடையறாத இன்ப நிலையினையுடையதாயிற்று என்பார். இன்பம் இடையறாது என்றார். அவாவறுத்தார் இவ்வுலகில் உடம்பொடு கூடிவாழும் நிலையிலேயே மெய்ப் பொருளாகும் இறையொடு கலந்து வீடுபேற்றின்பத்தினை நுகர்வர்என்னும் சைவசித்தாந்தக் கொள்கைக்கு இத்திருக்குறள் அரண்செய்தல் அறியத்தகுவதாகும். நம்மிடத்த உள்ளது போதும் எனும் மன நிறைவினைத் தராத இயல்பினதாகிய அவாவினை ஒருவர்அறவே நீக்குவராயின் அத்தகைய நீத்தல், அவர்க்கு அப்பொழுதே எக்காலத்தும் திரிபின்றி ஒரு நிலையராம் வீடுபேற்றியல்பினைக் கொடுக்கும் என்பார், ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் (திருக். 370) என்றார் தெய்வப்புலவர். ஆராமையாவது நமக்கு உள்ளது போதும் என மனம் நிரம்பாமை. தாமேயன்றித் தம்பயனும் நிலையாமை வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல். பெற்றது போதும் என மனம் நிரம்பாது பெறாத பொருளின் மேற் பற்றுவைப்பதே அவா எனப்படும் என அதன் இயல்பினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது, ஆராவியற்கை அவா என்னும் தொடராகும். பேரா வியற்கை என்றது என்றும் மாறாது அழியாவின்ப நிலையினதாகிய வீடு போற்றினைக் களிப்புக்கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி உயிர் நிரதிசய (உயர்வறவுயர்ந்த இன்பத்ததாய் நிற்றலின், வீட்டினைப் பேராவியற்கை என்றும், அஃது அவா நீத்தவழிப் பெறுதல் ஒருதலை (உறுதி)யாதலின் அந்நிலையே தரும் என்றும் கூறினார். நன்றாய் ஞானங்கடந்து போய் நல்லிந்திரிய மெல்லா மீர்த் தொன்றாய்க்கிடந்த அரும் பெரும் பாழ் உலப்பிலதனை யுணர்ந்துணர்ந்து சென்றாங்கின்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால் அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே (திருவாய்மொழி 78.5) என்பதும் இக்கருத்தேபற்றி வந்தது. இந்நிலைமை யுடையவனை வடநூலார் சீவன் முத்தன் என்ப எனப் பரிமேலழகர் தரும் விளக்கம் தெய்வத் திருவருளால் வீடு பேற்றின்பம் உளதாம் என்னும் கடவுட் கொள்கையுடைய சமயங்கட்கொல்லாம் ஏற்புடையதாகும். இவ்வாறு உடம்பொடு கூடியுள்ள நிலையிலேயே அவா வறுத்து வீட்டின்ப நிலையெய்திய சீவன் முத்தர்களைப் பராவு சீவர் (தேவாரம் 3.67.6) எனவும் நடமாடுங்கோயில் நம்பர் (திருமந்திரம் 1857) எனவும் போற்றுதல் சைவசித்தாந்தத் தமிழ் மரபாகும். இவ்வுலகில் உடம்புடன் கூடிவாழும் விழிப்பு நிலையிலேயே உலகப்பொருள்களின் அவாவை முற்றக்களைந்து உலக வாழ்க்கையில் சிறிதும் தோய்வின்றிச் செம்பொருளாய சிவத்துடன் கூடி நின்று தன் செயலறச் சிவமே தாமாகத் திகழும் திருவருள் நலம் வாய்க்கப்பெற்ற சீவன் முத்தர்களை, சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் சருவசங்க நிவிர்த்தி வந்த தபோதனர்கள் இவர்கள் பாக்கியத்தைப் பகர்வது என்இம்மையிலே உயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவரன்றோ எனப் போற்றுவர் அருணந்தி சிவாசாரியார். பராவுதல் சஞ்சரித்தல் மக்கள் வடிவினை மேற்கொண்டு உலகிற் சஞ்சரிக்கும் சிவ பரம் பொருள்களாகத் திகழ்பவர் என்னும் கருத்தில் சிவஞானிகளுக்கு வழங்கும் பெயர் பராவுசிவர், நடமாடுங்கோயில் நம்பர் என்பனவாகும். இம்மை மறுமை வீடு என்னும் மும்மைப் பயன்களையும் ஒருங்கே பயக்கும் பொருளும் இன்பமும் கூறத்தொடங்கி அவற்றிற்குக் காரணமாகிய ஊழின் வலிமையினை ஊழ் என்னும் அதிகாரத்திற் கூறியுள்ளார். ஊழைப்பற்றித் திருவள்ளுவர் கூறியுள்ளவற்றைத் தொகுத்து நோக்குவோமாயின் சைவசித்தாந்தக் கொள்கையின் வேர்கள் இவ்வதிகாரத்திற் கால்கொண்டுள்ளமை இனிது புலனாகும். உயிர்கள் செய்த நன்றுந்தீதுமாகிய இருவினைப் பயன்கள் அவ்வினை செய்த உயிர்களையே சென்றடையுமாறு அமைந்த முறைமையே ஊழ் எனப்படும். பால்மறை, உண்மை, தெய்வம், நியதி, விதி என்பன ஊழினைக்குறித்து வழங்கும் மறுபெயர்களாகும். அறத்தொடு நெருங்கிய தொடர்புடையதாய்ப் பொருள் இன்பங்கட்கு ஏதுவாதலின் அறத்துப்பாலின் இறுதிக்கண் ஊழைப் பற்றிய அதிகாரம் வைக்கப்பட்டது. உலக வாழ்க்கையில் ஒருசாரார் இடைவிடாமுயற்சி யுடையவராகவும் மற்றொரு சாரார் சோம்பர்களாகவும் இருக்கக் காண்கிறோம். முயற்சி ஆக்கத்திற்கும் சோம்பல் (மடி) அழிவிற்கும் காரணம் என்பது யாவரும் அறிந்த உண்மை. மக்கள்பால் அசைவின்மை - தளரா முயற்சி தோன்றுவதற்கும் அவர்கள்பால் மடி - சோம்பல் குடி கொண்டிருத்தற்கும் ஊழ் காரணம் என்பதும் முயற்சிக்குக் காரணமாகிய ஊழ் ஆகூழ் எனவும் சோம்பற்குக் காரணமாக ஊழ் போகூழ் எனவும் ஊழ் இருவகைப்படும் என்பதும், ஆகூழாற் றோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழாற் றோன்றும் மடி (திருக். 371) எனவரும் இவ்வதிகாரத்து முதற்குறளால் விளக்கப்பெற்றன. ஆகூழ் - ஆகுஊழ் - பொருளும் இன்பமும் அதற்குக் காரணமாகிய ஊழ், பொருள் இன்பம் ஆகியவற்றின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய தளராமுயற்சியும் சோம்பலையும் ஒருவர்க்கு ஊழ் காரணமாகவே அமைவன என்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. மக்களது வாழ்விலே புறத்தே வெளிப்படும் முயற்சி சோம்பல் என்பனவற்றுக்கேயன்றி அகத்தே தோன்றும் இயற்கையறிவின் தொழிற்பாட்டிற்கும் அவ்வறிவு விரிவடையாத நிலையாகிய பேதைமைக்கும் ஊழே காரணமாவது என்பார், பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை (திருக். 372) என்றார் திருவள்ளுவர். ஒருவர்க்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப்பொருளிழக்கும் இழவூழ்வந்தவிடத்து அவ்வூழ் அவரது அறிவைப் பேதைமைக்கு உட்படுத்தும். ஆகலூழ் வந்தவிடத்து அவரது அறிவு சுருங்கிய நிலையினதாயினும் அவ்வறிவை விரிவடையச் செய்யும் என்பது இதன் பொருளாகும். ஒருவர்க்கு இயற்கையானாய அறிவினை வேறுபடுத்தும் வன்மையுடையது ஊழென்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. ஒருவர் நுண்ணிய பொருள்களை யுணர்த்தும் நூல்கள் பல கற்றாராயினும் பேதைமைப் படுத்தும் ஊழ்வந்துற்றவிடத்து அவர்க்குத் தாம் முன்கற்ற கல்வியறிவு வெளிப்படாது பின்னும் தம் ஊழினாலாகிய பேதைமையறிவே வெளிப்பட்டுத் தோன்றும் என்பர், நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும் (திருக். 373) என்றார் இயற்கையறிவையேயன்றிச் செயற்கையானாகிய கல்வி யறிவைவுங் கீழ்ப்படுத்து மேற்படுந் தன்மையது ஊழ் என்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. உலகத்து ஊழினாலாகியஇயற்கை இரண்டுபடும். ஆதலாற் செல்வமுடையராதற்குக் காரணமான ஊழ் வேறு, அறிவுடையராதற் காரணமான ஊழ் வேறு என ஊழினை வகைப்படுத்துரைப்பது, இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு (திருக். 374) எனவரும் திருக்குறளாகும். செல்வத்தினை ஈட்டுதலும் அதனைக் காத்தலும் அறிவுடையார்க்கல்லது இயலாதல்லவா? அங்ஙனமாயினும் அறிவுடையார் வறியராகவும் அறிவிலார் செல்வராகவும் உலகியலிற் காணப்படுதலால் அறிவுடையராதற்குக் காரணமான ஊழ் செல்வமுடைமைக்குக் காரணமாகாமையும் செல்வமுடையராதற்குக் காரணமான ஊழ் அறிவுடைமைக்குக் காரணமாகாமையும் நன்கு தெளியப்படும் என்பார் திருவேறு தெள்ளியராதலும் வேறு என்றார். எனவே உலகிற் பொருளீட்டுதற்கு அறிவாகிய துணைக் காரணமும் வேண்டப்படாது ஊழே காரணமாம் என்பது வலியுறுத்தப்பட்டது. உலகிற் பொருளீட்டுதற்கு நல்ல துணைக் காரணங்களாகக் காலம், இடம், கருவி, தொழில் முதலாயின என்பதும் பலரும் அறிந்த உண்மையாகும். இவையெல்லாம் நல்லனவாய்த் திருந்தும் மூலகாரணமாயுள்ள ஊழ் துணை செய்யாது இழவூழாயவழி நல்லவை யெல்லாம் தீயவாய் முடியும். மேற்குறித்த காலம், இடம், கருவி, தொழில் முதலிய துணைக்காரணங்கள் தீயனவாயினும் ஆகலூழ் உற்றவழித் தீயனவும் நல்லனவாய் முடியும் என்பார். நல்லவை யெல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வஞ் செயற்கு (திருக். 375) என்றார். ஊழால் என்பது அதிகாரத்தால் வந்த இயைந்தது. அழிக்கும் ஊழ் உற்றவழிக்காலம் இடம் முதலியன நல்லனவாயினும் எடுத்தசெயல் பயன்தராது அழியும். ஆக்கும் ஊழ் உற்றவழி காலம் முதலிய துணைக்காரணங்கள் தீயனவாயினும் ஆக்கம் உண்டாகும். ஆகவே காலம் முதலிய துணைக் காரணங்களையும் வேறுபடுத்தும் வன்மை ஊழுக்கு உண்டென்பது இதனாற் பெறப்படும். ஊழ்வயத்தால் தமக்குத் தொடர்பில்லாத பொருள்களை ஒருவர் எத்துணை வருந்திக் காத்தலும் அப்பொருள்கள் அவரிடத்துநில்லாது ஒழிந்து போகும். ஊழ் வயத்தால் தமக்கேயுரியவாய பொருள்களைக்காவாது புறத்தே கொண்டு போய்ச் சொரிந்தாலும் அவை அவர்களை விட்டு நீங்கமாட்டா. இவ்வுண்மை, பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம (திருக். 376) என்ற குறளில் வலியுறுத்தப்பெற்றது. பரிதல் - வருந்திக் காத்தல். பால் அல்ல ஊழால் தம்மொடு தொடர்பில்லாதன. தம - ஊழால் தம் நுகர்ச்சிக்கு உரியவாய பொருள்கள் உய்த்துச்சொரிதல் - வீட்டிற் பாதுகாப்பாக வையாது புறத்தே கொண்டு போய்க்கொட்டுதல். மக்களிடத்தே பொருள்கள் நிலைத்துத் தங்குதற்கண் தங்காது அழிந்து போவதற்கும் முறையே அவற்றைக் காத்தலும் காவாமையும் காரணமாதலின்றி அவரவர்தம் ஊழ்வினையே காரணமாம் என்பது இதனால் உணர்த்தப்பட்டது. இவ்வாறு பொருளின் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் ஊழ்தானே மூலகாரணமாதலை விளக்கிய திருவள்ளுவர் பொருள்களை ஈட்டுதற்கேயன்றி அவற்றை நுகர்தற்கும் ஊழின் துணை இன்றியமை யாதது என்பதனை, வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது (திருக். 377) எனவரும் குறளில் தெளிவாகக் குறித்துள்ளார். இறைவன் ஒவ்வோருயிர்க்கும் வகுத்தருளிய ஊழ்முறைமையானன்றிக் கோடிக்கணக்கான நுகர்பொருள்களை முயன்று தொகுத்தார்க்கும் அவற்றை நுகர்தல் என்பது இயலாது என்பது இதன் பொருளாகும். ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோ றுயிரின் கட்செல்லாமல் (வினைசெய்த) அவ்வுயிர்களே வகுத்து நுகர்வித்தல் இறைவன் ஆணை யாதலின் அங்ஙனம் வகுத்தளிக்கும் இறைவனை வகுத்தான் என்ற பெயராற் குறிப்பிட்டார் திருவள்ளுவர். ஒருவரது வினையின் பயனாகிய ஊழ்வினை தானே யுருவெடுத்து வினைசெய்தாரைப் பற்றி நுகர்விக்கும் உணர்வும் ஆற்றலும் உடையதன்றென்றும் உலகினையும் உலகத்து எல்லாப் பொருள்களையும் ஒழுங்குபெற வகுத்து இயக்கியருளும் இறைவன் உயிர்கள் செய்த இருவினை கட்கேற்ப வகுத்த முறைமைதானே ஊழ் எனப்படு மென்றும் தெளிவுபடுத்தக் கருதிய திருவள்ளுவர் வகுத்தான் வகுத்த வகை என்ற தொடரால் ஊழ்வினையாவது இதுவென விளக்கியுள்ளார். இத்தொடரில் வகுத்தான் என்னுஞ்சொல் இறைவனைக் குறிப்பதாகும். வகுத்தவகை என்றது இறைவனால் வகுக்கப்பட்ட நியதியாகிய ஊழினைக் குறிப்பதாகும். பகுத்தது பால் என வழங்கினாற்போல வகுத்தது வகை யென்றாயிற்று. தெய்வத்தின் இயல்பினைப் புலப்படுத்தக் கருதிய தொல்காப்பியனார் அதனைப் பால்வரை தெய்வம் என்ற தொடராற் சுட்டினமையும் தொல் காப்பியனார் கருத்துப்படி ஊழின் இயல்பினை விளக்கக்கருதிய திருவள்ளுவர் அதனை வகுத்தான் வகுத்தவகை என்ற தொடராற் சுட்டினமையும் தெய்வத்தைக் குறித்தும் ஊழினைக் குறித்தும் முறையே தொல்காப்பியனாரும் திருவள்ளுவனாரும் கூறிய கருத்துக்கள் முன்னர் விளக்கப்பெற்றன. வகுத்தான் வகுத்த வகை எனவரும் இத்தொடர்ப் பொருளைக் கூர்ந்து நோக்கின், இருவினைகளைச் செய்யும் உயிர்களும் அவ்வுயிர்களாற் செய்யப்படும் வினைகளும் அவ்வினைப் பயன்களாக உயிர்கள் நுகர்தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகளும், இருவினைப்பயன்களை வினைசெய்த உயிர்களே பிறழாது நுகரும்படி நியமித்த நுகர்விக்கும் முதல்வனாகிய இறைவனும் என நான்கு பொருள்கள் மெய்ந்நூற் கொள்கையினாற் குறிக்கொண்டு கருதத் தக்கனவாம் என்பது நன்கு புலனாகும். மேற்குறித்த நான்கு பொருள்களையும் சிவநெறியாளர்கள்தம் சமயத்துக் குரிய சிறப்புடைப் பொருள்களாகக் கொண்டுள்ளனர். இப்பொருள் நான்கினையும் சைவ சமயத்துக்கேயுரிய சிறப்புடையனவாகச் சாக்கிய நாயனார் தெளிந்துணர்ந்த திறத்தினை, செய்வினையும் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும் மெய் வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவ நெறியல்லவற்றுக் கில்லையென உய்வகையாற் பொருள்சிவ மென்றருளாலே யுணர்ந்திருந்தார் (பெரிய. சாக்கிய. 5) எனச் சேக்கிழார் நாயனார் வகுத்து அருளிச் செய்துள்ளமையும் அவர் அருளியவண்ணமே சைவசமய சந்தான ஆசிரியருள் ஒருவராகிய உமாபதி சிவனாரும் இந்தப் பொருள்களையும், செய்வானுஞ் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பானும் உய்வான் உயனென் றுணர் (திருவருட்பயன் 5) எனச் சைவசமயத்தத்துவ நுண்பாருள்களாக எடுத்தாண்டுள்ளமையும் திருக்குறள் கூறும் தத்துவ நெறியினை அடிப்படையாகக் கொண்டது சைவசித்தாந்தத் தத்துவ நெறி என்னும் உண்மையை நன்கு தெளிவுபடுத்துதல் காணலாம். உயிர்கள் முன்செய்த வினையின் பயனாகிய ஊழினால் உறுதல்பாலனவாகிய இன்பத் துன்பநுகர்ச்சிகளை ஊழ்ஊட்டாது கழியுமானால் உலகில் வறுமை காரணமாக நுகர்தற்குரிய பொருள்கள் இல்லாதவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறக்குங் கருத்துடையராவர் என்பார், துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின் (திருக். 378) என்றார் திருவள்ளுவர். இவ்வுலகத்து நுகர்பொருள் வாய்க்கப்பெறாத வறியோர்களும் குடும்பத் தொடர்பினை மேற்கொண்டு பண்டை நல்வினைப் பயனால் உண்டுடுத்து இனிது வாழக்காண்கின்றோமாதலின் இன்பதுன்ப நுகர்ச்சிக்கு நேரே காரணமாவது அவர்தம் முன்வினைப் பயனாகிய ஊழேயன்றிச் செல்வ வறுமைகள் காரணமல்ல என்பது இக்குறளால் வலியுறுத்தப்பட்டது. மக்கள் தாம் முன்னர்ச் செய்த தீவினையும் நல்வினையும் காரணமாகவே நல்வினைப் பயனாகிய இன்ப நுகர்ச்சியும் தீவினைப் பயனாகிய துன்பநுகர்ச்சியும் ஊழால் ஊட்டப்படுகின்றன. என்னும் உண்மையையுணரப் பெறுவீர்களாயின தீதும் நன்றும் பிறர்தரவாரா என்னும் தெளிவுடையராய்த் தம்மையடைந்த இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்களை விருப்பு வெறுப்பின்றி ஒப்ப நுகரும் உணர்வுடையராதலே மெய்யுணர்வுடையார் இயல்பாதல் வேண்டும். ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமாதலின்றிப் புண்ணியபாவம் இரண்டிலும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து அவ்வினைத்தொடர்பினை விடுவோனது அறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்பநிகழ்தலே இருவினை யொப்பு என்பார் சைவசித்தாந்திகள். மெய்த்திரு வந்துற்றாலும் வெந்துயர் வந்துற்றாலும் ஒத்திருக்கும் உள்ளத் துரனுடைமையாகிய இவ்விருவினையொப்பு மெய்யுணர்வுடை யார்க்கு இன்றியமையாதது என வற்புறுத்துவது, நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன் (திருக். 379) எனவரும் திருக்குறளாகும். ‘jh« brŒj ešÉid K⮪J ï‹gkh»a gaid¤ jU«bghGJ mjid ïÅJ vdÉU«ã Ef®gt®fŸ, jh« brŒj ÔÉid K⮪J J‹gkh»a gaid¤jU«bghGJ mjidí« m›thW Efu K‰glhJ btW¤J mjid mf‰w Ka‹W mšy‰gLtJ v‰W¡F? என்பது இதன் பொருளாகும். நன்று ஆங்கால் நல்லவாக்காணுதல் போலவே அன்று ஆங்காலும் அல்லற்படாது அனுபவித்தல் வேண்டும் என்பது கருத்து. காணுதல் - அனுபவித்தல். மக்கள் தாமே முன்செய்துகொண்டன இருவினையாதலாலும் அவை தத்தம் பயன்களாகிய இன்பதுன்பங்களை ஊட்டாது கழியமாட்டா ஆதலாலும், இருவினைப்பயன்களாகிய இன்பம் துன்பம் என்னும் இரண்டுமே வினைசெய்த மக்களால் மனம் பொருந்தி நுகரத்தக்கனவாகும். அங்ஙனமாகவும் அவற்றுள் நல்லதன் பயனாகிய இன்பத்தை மட்டும் உளம் இயைந்து அனுபவித்துத் தீயதன் பயனாகிய துன்பத்திற்கு உளம்பொருந்தி நுகராது வெறுத்து வருந்துதல் அறிவுடையார் செய்கையன்றாம் என ஆசிரியர் இத் திருக்குறளால் அறிவுறுத்தியுள்ளமை காணலாம். இறைவனது திருவருட்பதிவால் இருள் மலந்தேயும் நினையினராகிய மெய்யுணர்வுடையார்க்குரியதாகச் சைவசித்தாந்தம் கூறும் இருவினையொப்பின் இயல்பு இத்திருக்குறளில் இடம் பெற்றுள்ளமை நுணுகி நோக்கற்பாலதாகும். உலகத்துவாழும் உயிர்கள் நுகர்தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகள் எல்லாம் அவ்வவ்வுயிர்கள் செய்த இருவினைகளின் மேலிட்டு அவற்றின் பயனாய் ஊழ்வழியாக வருதலுடைமையின் மன்னுயிர்கள் செய்யும் பல்வேறுவகை முயற்சியினைவிட ஊழே மிகவும் வலிமை வாய்ந்தது என்பதனை அறிவுறுத்துவார். ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் (திருக். 380) என்றார் திருவள்ளுவர். ஊழாகிய தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தை ஆராய்ந்தாலும் அச்சூழ்ச்சியின் வழியாகவோ அன்றிப் பிறிதொன்றன் வழியாகவோ முற்பட்டு நிற்பது ஊழ்வினையாகும். அதனால் ஊழ்போல் வலிமையுடையனயாவை என ஊழின் வன்மையினை வற்புறுத்திக் கூறும் நிலையில் அமைந்தது இந்திருக்குறளாகும். வேண்டுதல் வேண்டாமையிலானாகிய கடவுளைக் குறித்து வழங்கும் இறை என்னும் சொல் நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்று நீதிவழங்கும் இறைவனது தன்மையாகிய நடுவுநிலைமை என்ற பொருளிலும் ஆளப்பெறுதல் உண்டு. இந்நுட்பம், ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்தி யார்மட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை (திருக். 541) எனவரும் திருக்குறளாலும், நடுவுநிற்றல் இறைக்கு இயல்பாதலின் அதனை இறை என்றும், எனவரும் பரிமேலழகர் உரைவிளக்கத்தாலும் இனிய புலனாம். உயிர்கள் இயல்பாகவே அறிவுடையனவாயினும் தோற்றமில் காலமாகத் தம்மைப் பற்றியுள்ள பாசப் பிணிப்பினால் மறைக்கப்பட்டு அறியாமையில் அகப்பட்டுள்ளன என்பதும் தோண்டத்தோண்ட மணற்கேணிநீர் ஊறுமாறு போன்று மக்கள் இடைவிடாது கல்வி பயிலுந்தோறும் அவர்தம் அறிவு மேம்பட்டு விளங்கும் எனவும் ஒரு பிறப்பிற் கற்ற கல்வியறிவு அவர் பெறும் எழுபிறப்புக்களிலும் தொடரும் எனவும் மக்கள் ஒவ்வொரு பொருளையும் பற்றி அறியுந்தோறும் அதற்கு முன் அப்பொருளைப் பற்றியறியாதிருந்தமை அவர்க்குப் புலப்பட்டு மேலும் மேலும் பொருளையறிதற்கு முற்படும் அறிவுநாட்டம் தோன்றி அவர்கட்கு இன்பம் தரும் என்பதும் அறனறிந்து மூத்த அறிவுடையாராகிய சான்றோர்கள் பிறர் உற்ற நோய்களை நீக்கி அந்நோய்கள் மீண்டும் வந்தடையாதவாறு தடுத்து நிறுத்தும் தகைமையுடையார் என்பதும் அத்தகைய சான்றோரினத்திற் சார்ந்தால் மக்கள் உயர்வு பெறலாம் என்பதும், தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு (திருக். 396) ஒருமைக்கண் தான்கற்ற கல்வி யொருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து (திருக். 398) அறிதோ றறியாமை கண்டற்றால் (திருக். 1110) அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல் (திருக். 441) உற்றநோய் நீக்கி யுறா அமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் (திருக். 442) எனவரும் திருக்குறளால் உணர்த்தப்பட்டன. சேர்ந்தாரது அறிவைத் திரித்து இம்மை மறுமையின்பங்களைக் கெடுக்கும் காமம் வெகுளி மயக்கம் ஆகிய சிறுமை யியல்பினரைச் சேர்தலாகாது என அறிவுறுத்துவது திருக்குறளிலுள்ள சிற்றினஞ் சேராமையென்னும் அதிகாரமாகும். பெரியாரைத் துணையாகக் கொள்ளுதலால் வரும் நன்மையினை அறிவுறுத்திய திருவள்ளுவர் அவர்க்கு மாறாகிய சிற்றினத்தைச் சேர்தலால் உளவாகும் தீமையினைச் சிற்றினஞ்சேராமை யென்னும் அதிகாரத்திலும் விரித்துரைக்கின்றார். விசும்பின் கண்ணே மழையுருவில் தன் தன்மையதாய் நின்ற நீரானது நிலத்தொடு சேர்ந்தபொழுது தனது நிறம் சுவை முதலிய தன்மைகள் திரிந்து வேறுபட்டாற்போன்று தனிநிலைமைக்கண் தன்தன்மைத்தாய உயிரினது அறிவு பிறவினத்தோடு சேர்ந்த பொழுது அவ்வினத்தின் சார்பால் பண்பு தொழில் முதலிய வேறுபடும் என்பது திருவள்ளுவர் உயிரின் சிறப்பியல்பாகக் கண்டுணர்த்திய தத்துவ வுண்மையாகும். இந்நுட்பம், நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு (திருக். 452) எனவும், இனத்தான் ஆம் இன்னான் எனப்படுஞ் சொல் (திருக். 453) எனவும், இனத்துளதாகும் அறிவு (திருக். 454) எனவும், மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டும், இனந்தூய்மை தூவா வரும் (திருக். 455) எனவும் வரும் திருவள்ளுவர் வாய்மொழிகளால் நன்கு தெளியப்படும். மக்கள் உயிர்வாழ்க்கையினை இம்மை (பிறப்பு), மறுமை (மறுபிறப்பு), அம்மை (பிறப்பறுநிலை) என மூவகையாகப் பகுத்துரைப்பர் அறிஞர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் (திருக். 50) என்ற தொடரால் இம்மை வாழ்வைக் குறித்தார். இவ்வுலகிற் பிறந்தோர் நன்றுந்தீதும் ஆகிய இருவினைகளைப் புரிதலும் நல்லதன் பயனாகிய இன்ப நுகர்தற்குத் தேவருலகினையும் தீயதன் பயனாகிய துன்ப நுகர்தற்கு நரகத்தினையும் அடைந்து எஞ்சிய வினை காரணமாக மீளவும் பிறத்தலும் உடையர் என்பது இப்பரத கண்டத்தில் பன்னெடுங்காலமாகச் சான்றோர் அனைவரும் உடன்பட்டு வரும் தத்துவக் கொள்கையாகும். இன்பமே நுகரும் தேவருலகினைப் புத்தேளிர் வாழும் உலகு (திருக். 58), புத்தேளுலகு (திருக். 213, 234), அவ்வுலகம் (திருக். 247) எனவும் துன்பமே நுகரும் நரகருலகினை இருள்சேர்ந்த இன்னாவுலகம் (திருக். 243), ஆரிருள் (திருக். 121) எனவும் வானோர்க்குத் தலைவனாகிய இந்திரனை அகல் விசும்புளார் கோமான் இந்திரன் (திருக். 25) எனவும் திருவள்ளுவர் குறித்துள்ளார். உயிர்கள் தாவரம், ஊர்வன, நீர்வாழ்வன, விலங்கு, பறவை, மனிதர், தேவர் என்னும் எழுவகைப் பிறப்புக்களிலும் வினைவயத்தால் தொடரும் எழுமை முறையினவாய்ப் பிறப்பன என்பது, எழுமை எழுபிறப்பும் (107) எழுபிறப்பும் தீயவைதீண்டா (62) எனவும் வரும் திருக்குறள் தொடர்கள் பிறப்பு வகையினையும் வினைத்தொடர்பால் உளதாம் எழுமையினையும் புலப்படுத்துவன. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றாக் குடம்பு மிகை (திருக். 345) பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் (திருக். 349) வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் (திருக். 38) யானெனெ தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த வுலகம் புகும் (திருக். 346) வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் (திருக். 362) என்புழிப் பிறப்பறுநிலையே பேரின்பமாகிய வீடுபெறுதலும் அந்நிலையடைதற்கு அவா வறுத்தலே சாதனமாதலும் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். பேதைமை காரணமாக நிலையுதலிலாவாகிய பொருள்களில் வைத்த பற்றுக்களே பிறப்பிற்குக் காரணமாம் என்பது, பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானாம் மாணாப் பிறப்பு (திருக். 351) பொருளானாம் எல்லாமென் றீயா திவறும் மருளானாம் மாணாப் பிறப்பு (திருக். 1002) என்பவற்றாற் புலப்படுத்தப்பட்டது. மெய்யுணர்வினால் உளதாம் அவாவறுதியே வீடு பேற்றுக்குக் காரணமாம் என்பதும் அத்தகைய அவாவை அறுத்தற்குரிய துறவுநிலையாகிய உறுதிப்பாடு தூயதாகிய முழுமுதற் பொருளை இடைவிடாது சிந்தித்தலினாலே உளதாகும். என்பதும் தூஉய்மை என்ப தவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும் (திருக். 364) பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (திருக். 350) என்பவற்றால் விரித்துரைக்கப்பெற்றன. உயிர்கள் எண்ணிறந்தன என்பதும், உலகமக்கள் தாம் தேடியவுணவைத் தாமே தனித்துண்ணாது இல்லாதார் பலர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்டுவாழ்தலே முன்னைச் சான்றோர் வகுத்த உலகியல் அறம் (திருக். 322) என்பதும், கொல்லாமையொன்றே சிறப்புடைய அறம் (திருக். 321, 323) எனவும், கொல்லா அறத்தினை மேற்கொண்டோரே இருவகைப் பற்றினையும் நீத்தாருள் தலையாயவர் (திருக். 325) என்பதும், கொல்லா அறத்தினை மேற்கொண்டோர்பால் உயிருண்ணுங்கூற்று செல்லாது (திருக். 326) எனவும், தனது உயிர் உடம்பினின்று நீங்கும் நிலையேற்பட்டாலும் பிறிதொன்றன் உயிரை நீக்குதல் கூடாது (திருக். 327) எனவும், தேவர்பொருட்டு வேள்விக்கண் பிறவுயிரைக் கொன்றால் இன்பமிகும் செல்வம் பெரிதாகும் என்று இல்வாழ்வார்க்கு வேதத்துட் கூறப்பட்டதாயினும் துறவால் அமைந்தோர்க்கு ஓருயிரைக் கொல்லுதலால் வரும் செல்வம் இழிவாம் (திருக். 328) என்பதும் கொலைத்தொழிலையுடைய மாந்தர் அதன் புன்மையை அறியாராயினும் மெய்யுணர்ந்தார் நெஞ்சத்து அன்னோர் புலைத்தொழிலராகவே இழித் தொதுக்கப்படுவர் (திருக். 329) என்பதும் அருவருக்கும் உடம்பினராகவும் இழிதொழில் வாழ்க்கையினராகவும் இவ்வுலகில் வறுமை நிலையிற் காணப்படுவோர் முன்னைப் பிறப்பில் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கியவர் (திருக். 330) என்பதும் திருக்குறளிற் கொல்லாமை என்னும் அதிகாரத்தில் விரித்துரைக்கப்பட்டன. உயிரின் அறிவு இருள்மலத்தின் சேர்க்கையால் மயக்கமும் வஞ்சனையும் உடையதாய்ப் பிறர்பொருளைக் களவிற்கவர்தல், பிறவுயிர்களைக் கொல்லுதல் முதலிய தீச்செயல்களுக்குக் காரணமாதல் பற்றிக் களவென்னுங் காரறிவு என்றார் திருவள்ளுவர். இங்கு இருள் மலத்தின் காரியத்தினைக் காரணமாகவுபசரித்தார் ஆசிரியர். பிறர் பொருளைக் கவர என்னும் களவு பற்றிய கருத்தும் தனக்குரிய பொருள்களையெல்லாம் பற்றுக்களையும் துறவுபற்றிய எண்ணமும் இருளும் ஒளியும் போலத் தம்முள் மாறுபட்டனவாகும். தன்னெஞ் சறிவது பொய்யற்க; பொய்த்தபின்; தன்னெஞ்சே தன்னைச் சுடும் (திருக். 293) எனவும், உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லா முளன் (திருக். 294) எனவும் வரும் பாக்களில் நெஞ்சு, உள்ளம் என்பன இடவாகுபெயராய் உயிருணர்வையும் அவ்வுணர்வுக் குணர்வாய் எவ்வுயிர்க்குஞ் சான்றாயுள்ள முழுமுதற் பொருளையும் குறித்து நின்றன. எவ்வுயிர்க்குஞ் சான்றாம் ஒருவனை என்பது அப்பர் அருள்மொழி. கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் தங்காது தகைவின்றித் தாஞ்செய்யும் வினைகளுள் நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் மறையாவாம் நெஞ்சத்துக்குறுகிய கரியில்லையாதலின் (நெய்தற்கலி 8) எனவரும் கலித்தொகைத் தொடரிலும் நெஞ்சு என்பது நெஞ்சத்தில் நிலைபெற்றுள்ள முழுமுதற் பொருளைக் குறித்து நிற்றல் ஒப்பு நோக்கற்பாலதாகும். செல்வத்தையும் அதற்கு ஏதுவாகிய நன் முயற்சியையும் நல்கும் தெய்வம் செந்தாமரை மலரில் வீற்றிருந் தருளும் திருமகள். திருமகள் சிவந்த திருமேனியுடைய தெய்வம் என்பதும் அகமலர்ச்சியுடையராய் விருந்தோம்புவோர் வீட்டில் திருமகள் விரும்பித் தங்குவாள் என்பதும், அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல் (திருக். 84) எனவரும் திருக்குறளிற் குறிக்கப்பெற்றன. பிறர் செல்வங் கண்டு பொறாமைப்படுகின்றவனைத் திருமகள் தானும் பொருளாய்த் தனக்கு மூத்தாளாகிய மூதேவிக்கு இடமாகக் காட்டிவிட்டுத்தான் நீங்கிவிடுவாள் என்பார், அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் (திருக. 167) என்றார் திருவள்ளுவர். செய்யவள் - திருமகள், தவ்வை - தமக்கை, என்றது மூதேவியை. கரியவளாகிய மூதேவி மெய்ம் முயற்சியில்லாத சோம்பரிடத்தே தங்குவாள். அவன் தங்கையாய்ச் செந்தாமரை மலரில் வீற்றிருக்குந்திருமகள் சோம்பலில்லாதானது முயற்சியின் கண்ணே தங்கியிருப்பாள் என்பார், மடியுளாள் மாமுகடி யென்ப மடியிலான் தாளுளாள் தாமரையி னாள் (திருக். 617) என்றார் தெய்வப்புலவர். மடி - சோம்பல், தாள் - முயற்சி. மாமுகடி - கரிய நிறத்தாளாகிய மூதேவி, சேட்டை. தாமரையினாள் - திருமகள், இங்கு எடுத்துக் காட்டிய குறள்களால் மக்கள் நன்முயற்சியாலடைதற்குரிய செல்வத்திற்குத் தெய்வம் திருமகள் என்பதும் சோம்ப லடைதற்குரிய வறுமைக்குத் தெய்வம் திருமகளின் தமக்கையாகிய சேட்டை என்பதும் திருவள்ளுவர் காலத்திற்கு முற்றொட்டுவரும் நம்பிக்கையாதல் நன்கு விளங்கும். சோம்பல் இல்லாத மன்னன் மண்ணுலகும் வானுலகும் ஆகிய உலகம் முழுவதனையும் தனது ஆட்சியின் கீழ் வைத்து ஆளும் ஆற்றலையும் சிறப்பினையும் பெறுவான் என மடியின்மை சோம்பலின்மையாகிய இடையறா முயற்சியின் பெரும்பயனை வற்புறுத்துவது, மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒழுங்கு (திருக். 610) எனவரும் திருக்குறளாகும். சோம்பல் இல்லாத மன்னன் தன் அடியின் அளவினாலே எல்லாவுலகங்களையும் தாவி அளந்த இறைவனாகிய திருமால் கடந்து பெற்ற உலகப் பரப்பு முழுவதனையும் பெறுவான் என்பது இதன் பொருள். இதன்கண் அடியளந்தான் என்றது, மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பாவகை முடியத்தாவிய சேவடி யுடையனாகிய திருமாலை. தாஅயது என்றது, அம்முதல்வன் குறளுருவாகிய வாமனவடிவாய் மாவலி என்னும் அசுரமன்னன் பாற்சென்று தன் காலடியால் மூவடிமண் இரந்து பெற்று, யாவர்க்கும் அடங்காத பெருவன்மை படைத்த மன்னனைத் தன் அடிக்கீழ் அடக்கிக் கவர்ந்து கொண்ட மூவுலக மரபினை. காத்தற்கடவுளாகிய திருமால் உலகவுயிர்களை உய்வித்தல் கருதித் தன்னருளால் மேற்கொண்ட அருட்பிறப்புக்கள் பத்தினுள் ஒன்றாகிய வாமனாவதாரமாகிய புராணச்செய்தியினை இத்திருக்குறளில் திருவள்ளுவர் குறித்துள்ளமை காணலாம். திருக்குறள் காமத்துப்பாலில், தாம்வீழ்வார் மென்றோட்டுயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு (திருக். 11103) எனவரும் திருக்குறள், உயர்வற வுயர்நத பேரின்பத்தை யடைதற்கு முயலவேண்டிய நீ பெண்ணொருத்தியை விரும்பிக் களவொழுக்க மாகிய இச்சிற்றின்பத்திற்கு முயலுதல் தகாது எனக்கூறிய பாங்கனை நோக்கித் தலைவன் ஒருவன் கூறுவதாக அமைந்ததாகும். ஐம்புலன்களையும் நுகர்வார்க்குத் தம்மால் விரும்பப் பெறும் மகளிரின் மெல்லிய தோளின்கண் துயிலும் துயில் போல, ஐம்புல நுகர்ச்சிகளைத் துறந்த தவயோகிகள் எய்தும் செங்கண்மாலுலகம் வருந்தாமல் எய்துதற்குரிதாமோ என்பது இதன் பொருளாகும். தாமரைக்கண்ணனாகிய செங்கண் மாலுலகம் உயர்வறவுயர்நல முடையனாகிய திருமால் வீற்றிருந்தருளும் நிலையில் அவன்பால் மெய்யன்புடைய அடியார்களாகிய அயர்வறும் அமரர்கள் அவனது திருமேனியழகில் இடைவிடாது திளைத்துமகிழும் நிலையில் அம்முதல்வனைக் கண்ணிமையாது கண்டு இன்புறும் இயல்பின தென்பதும், உறக்கத்தைவிட்டுத் தவயோகங்களால் வருந்திய பெருமுயற்சியுடைய பெரு மக்களே அதனைப் பெறுதற்குரியார் என்பதும், அத்தகைய இன்பம் உலகவாழ்க்கையில் திளைத்து மகிழும் ஏனையோரால் எளிதில் அடையத் தக்கதன்றென்பதும் இதனால் புலனாம். ஒத்த அன்புடைய தலைவியின் காதலின்பத்தில் திளைத்த தலைவன், அவன்பால் வைத்துள்ள இன்ப அன்பின் திறத்தைப் புலப்படுத்தும் நிலையில் தலைமகள் மென்றோளில் உறங்கிப்பெறும் காதலின்பத்தினும் செங்கண்மாலுலகத்து விழித்துப்பெறும் பேரின்பம் அத்துணைச் சிறந்ததாமோ எனச் செங்கண்மாலுலக இன்பத்தினை உவமையாகக் காட்டித்தான் பெறும் இம்மையின் பத்தினை உயர்த்துக்கூறும் முறையில் திருமாலுலகத்து நித்திய சூரியகளாகிய அடியார்கள் பெறும் பேரின்ப நிலையினைத் திருவள்ளுவர் அத்திருக்குறளிற் சுட்டி யுள்ளமை கூர்ந்துணரத்தக்கதாகும். இனி இக்குறளில் தாமரைக்கணணான் உலகு என்பதற்கு இந்திரனுலகு எனப் பொருள் கூறுவர் மணக்குடவர். வானோர் வேந்தனாகிய இந்திரன் ஐம்புலன்களிற் செல்லும் அவாவை அடக்கும் வலியற்றவனாய்த் கோதமமுனிவர் மனைவி அகலிகையினை வஞ்சனையாற்கூடி அம்முனிவரால் வெகுண்டு சபிக்கப்பட்டு உடல் முழுவதும் அருவருக்கத்தக்க ஆயிரம் புண்களை யுடையனாய்ப் பின்னர் அம்முனிவர் தம் அருளால் அப்புண்கள் தாமரைமலர் போலும் அழகிய கண்களைப் பெற்று ஆயிரங்கண்ணோன் ஆனான் என்பது இராமாயணத்தில் வரும் ஒருகதை. இக்கதையை எடுத்துக்காட்டாகக் கொண்டமைந்தது, ஐந்தவித்தா னாற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி (திருக். 25) எனவரும் திருக்குறளாகும். நீத்தார் பெருமையுணர்த்தும் இக்குறள் ஐம்புலன்களிற் செல்லும் அவாவையடக்காமல் அவற்றையடக்கிய கோதம முனிவனது சாபமும் அருளும் பெற்று நிறைமொழிமாந்தருள் ஒருவனாகிய அம்முனிவனது ஆற்றலை உலகம் உணரச் செய்தவன் வானோர் வேந்தனாகிய இந்திரனாதலின் அவனே ஐந்தவித்த நீத்தாரது ஆற்றிற்குச் சான்றாயினான் என்பார் இந்திரனே சாலுங்கரி என்றார். கரி - சான்று; சாட்சி. ஒத்த காதலர் இருவருள்ளத்தே காமவுணர்வினைத் தோற்றுவிக்கும் காமன் (1199) என்னுந் தெய்வத்தையும், வினைவயத்தாலாய உடம்பில் வாழும் உயிரினை வினை நுகர்ச்சி முடிந்த காலம் பார்த்து உடம்பினின்றும் பிரிக்கும் கூற்றம் (269, 765, 894, 1085) என்னும் தெய்வ ஆற்றலையும் திருவள்ளுவர் திருக்குறளிற் குறிப்பிட்டுள்ளார். இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் தம்காலத்தில் நிலவிய தெய்வங் கொள்கையினையும் தமிழ் முன்னோர் தமது வாழ்க்கையில் பெற்ற முதிர்ந்த அறிவின் திறத்தால் உண்டென நம்பிய புத்தேளிர் வாழும் உலகு, இருள் சேர்ந்த இன்னாவுலகம், வானோர்க்கு உயர்ந்தவுலகம், தாமரைக் கண்ணான் உலகு ஆகியவற்றையும் பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து அல்லற்படும் மாந்தர்கள் மீண்டும் பிறவாநிலையாகிய வீடுபேற்றினையடைதற்குச் சாதனமான தவமும் ஞானமும் ஆகிய மெய்ந் நெறி முறைகளையும் அந்நெறியினால் மக்கள் அடைதற்குரிய பேராவியற்கையாகிய பேரின்பநிலையினையும் அதனையடைதற்குத் துணைபுரியும் முழுமுதற் பொருளாகிய இறைவனது இயல்பினையும் தாம் இயற்றிய உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் சுருக்கமுந் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளமை ஒருவாறு விரித்துரைக்கப்பட்டது. சமயங்கடந்த நிலையில் நின்ற திருவள்ளுவர் விளக்கிய இறைவனியல்பு சைவசித்தாந்தம் கூறும் பொதுவும் உண்மையும் ஆகிய பதியிலக்கணத்தடன் பெரிதும் ஒத்து நிற்றலும் ஒருவாறு உணர்த்தப்பட்டது. திருவள்ளுவர் ஆன்மாவை உள்ளம் எனவும் பரம் பொருளை உள்ளது (சத்து) எனவும் குறித்து வழங்கியுள்ளார் (திருக். 357). இம்மரபு சைவசித்தாந்த நூல்களிலும் தொடர்ந்து இடம் பெற்று வந்துள்ளது. திருவள்ளுவர் செம்பொருள் என்ற சொல்லால் வழங்கிய பரம் பொருளையே சைவசித்தாந்திகள் சிவம் என்னும் செந்தமிழ்ப் பெயராற் பரவிப் போற்றுகின்றனர் என்பது, செம்பொருளாய் சிவமெனலாமே (2573) எனவரும் திருமந்திரத்தாலும், செம்பொருட்டுணிவே சிவபெருமானே (திருவாசகம் - பிடித்தபத்து) என்னும் திருவாசகத் தொடராலும் நன்கு வலியுறுத்தப்பெற்றது. திருக்குறள் கடவுள் வாழ்த்தில். மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் (திருக். 3) வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கு (திருக். 4) தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க்கு (திருக். 7) அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்த லரிது (திருக். 8) என்றாங்கு வலியுறுத்தப்படும் இறைவனடி சேர்தலே வீடுபேறு என்னும் அடிசேர்முத்தியே சைவசித்தாந்தக் கொள்கையினரது முடிந்த முடிபாக அமைந்துள்ளமையும் இங்கு மனங்கொளத்தகுவதாகும். எனவே தென்னாட்டின் சிறப்புடைய தத்துவக்கொள்கையாகத் திகழும் சைவ சித்தாந்தக் கொள்கைகளுக்கு நிலைக்களமாகத் திகழ்வது தமிழ் மறையாகத் தெய்வப்புலவர் அருளிய திருக்குறள் என்று கூறுதல் பெரிதும் ஏற்புடையதாகக் காணலாம். மேலை நாட்டுக் கிறித்துவப் பாதிரியாராகிய ஜி.யூ. போப்பையர் அவர்கள் திருவள்ளுவர் தாம் கூறும் அறநெறியை (சைவசித்தாந்தம் கூறும் பதி பசு பாசம் என்னும்) மாண்புடைய முப்பொருளுண்மையை அடியாகக் கொண்டு வகுத்துள்ளார் எனத்தம் துணிவினைப் புலப்படுத்தியுள்ளார். டாக்டர் ஜி.யூ. போப்பையர் அவர்கள் திருக்குறள் நுதலும் அறம் என்ற தலைப்பில் ஆற்றிய விரிவுரையில் இக்கொள்கை வலியுறுத்தப்பட்டது என்பதனை ஜே. எம். நல்லசாமி பிள்ளையவர்கள் திருக்குறளிலுள்ள மெய்யுணர்தல் என்னும் அதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தெழுதிய கட்டுரை யொன்றில் மேற்குறித்த போப்பையர் கருத்தை வெளி யிட்டதுடன் உண்மையில் திருவள்ளுவர் கொள்கை புத்தர் சமணர் கொள்கைகளைப் போல் கடவுளின்மைக் கொள்கையன்று. இவ்வகையில் திருக்குறளுக்கும் நாலடிக்கும் வேறுபாடுளது (ஆங்கில நூல் பக்கம் 147) என எழுதியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கி யுணரத்தகுவதாகும். 6. சிலப்பதிகாரத்தில் காணப்பெறும் தெய்வ வழிபாடுகளும் சிவநெறிக் கோட்பாடுகளும் மக்கள் வாழும் நிலத்தியல்புக்கு ஏற்ப அவர்தம் மனத்தியல்பாகிய தெய்வங்கொள்கையும் வழிபாட்டு முறைகளும் தோன்றி நிலைபெறுவனவாதலின் தெய்வங் கொள்கையினைத் திணைக் கருப்பொருள்களுள் ஒன்றாக அடக்குவர் பண்டைத்தமிழாசிரியர். முல்லை நிலத்தில் திருமால் வழிபாடும், குறிஞ்சி நிலத்தில் முருகன் வழிபாடும், மருத நிலத்தில் வேந்தன் (இந்திரன்) வழிபாடும், நெய்தல் நிலத்தில் கடற்றெய்வமாகிய வருணன் வழிபாடும் தோன்றி நிலைபெற்றன. இவ்வாறு நான்கு நிலத்தவர்களும் தாங்கள் வாழும் சூழ்நிலைக்கேற்பத் தம் உள்ளத்து வகுத்து அமைத்துக் கொண்டனவே திணைக்கருப்பொருளாகிய இத்தெய்வ வழிபாடுகளாம். இத்தெய்வவழிபாடுகள் உருப்பெறுதற்குத் துணையாய் முன்னின்றவை ஞாயிறு, திங்கள், மழை, நிலம் என்னும் ஐம்பூதங்களின் சார்புடைய இயற்கைப் பொருள்களாம். வாழ்க்கைக்கு நேர்முறையிற் பயன்படும் இவ்வியற்கைப் பொருள் வணக்கமே மக்கட் சமுதாயத்தில் முதன்முதலில் தோன்றித் திணைக் கருப்பொருளாகிய தெய்வ வழிபாட்டின் தோற்றத்திற்குத் துணைசெய்திருத்தல் வேண்டும். இவ்வியற்கைப்பொருள் வணக்கம் எக்காலத்தும் மாறாது நிலை பெறுவதாகும். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதுங் கொங்கலர்தார்ச் சென்னிகுளிர்வெண் குடைபோன்றிவ் அங்கண் உலகளித்த லான் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரிநாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரித லான் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலியுலகிற் கவனளிபோல் மேனின்று தான்சுரத்த லான் பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் வீங்குநீர் வேலி யுலகிற் கவன்குலத்தோடு ஓங்கிப் பரந்தொழுக லான் எனவரும் மங்கல வாழ்த்துப் பாடலால் இளங்கோவடிகள் இவ்வியற்கைப் பொருளை வழிபட்டு முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தைத் தொடங்குகிறார். அடிகள் தம் காலத்தில் தமிழ்நாட்டில் நிலவிய சமயங்களையும் அவற்றை மக்கள் மதித்தொழுகிய திறத்தையும் தம் நூலில் தெளிவாக விளக்குகின்றார். நானிலத்தவருள் ஒரு நிலத்தார் மற்றைய நிலத்தவருடன் சேர்ந்து தொழில்புரியும் நிலையேற்பட்ட பின்னர்த் திணைக்கருப் பொருளாகிய தெய்வ வழிபாடுகள் ஒருங்குநேர்ந்து வளரும் நிலைமையைப் பெற்றன. இத்திணை வகை வழிபாடுகளே பண்டைத் தமிழ்நாட்டில் சமய வளர்ச்சிக்கு அடிப்படையாய் அமைந்தன. இவ் வழிபாடுகள் வளர்ந்து சிறந்த நிலையினைச் சிலப்பதிகாரம் நன்கு விளக்குகின்றது. குன்றக்குரவையில் குறிஞ்சி நிலத்தெய்வமாகிய முருகவேள் வழிபாட்டினையும், ஆய்ச்சியர் குரவையில் முல்லைநிலத் தெய்வமாகிய திருமால் வழிபாட்டினையும், இந்திரவிழவூரெடுத்த காதையில் மருதநிலத் தெய்வமாகிய இந்திர வழிபாட்டினையும், கானல்வரியில் நெய்தல்நிலத் தெய்வமாகிய வருணன் வழி பாட்டினையும், வேட்டுவ வரியில் முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல்பு இழந்த பாலைநிலத் தெய்வமாகிய கொற்றவை வழிபாட்டினையும் இளங்கோவடிகள் சிறப்பு முறையில் வைத்துப் பாராட்டுகின்றார். முருகன் வழிபாடு அறுமுக ஒருவனாகிய முருகனுக்கு அஞ்சுடர் நெடுவேல் படையாக விளங்குவதென்றும், அவனது வேலை நிறுத்தி வழிபடும் கோயில் வேற்கோட்டம் என்னும் பெயருடையதென்றும், இத்தகைய வேற்கோட்டமும் இதனை யேந்திய பழந்தமிழ்த் தெய்வமாகிய அறுமுகச் செவ்வேள் எழுந்தருளிய அணிதிகழ் கோயிலும் சேவலைக் கொடியாக ஏந்தியவனென்றும், கோழிச்சேவற் கொடியோனாகிய அப்பெருமானது கோயில் மதுரை நகரத்தே சிறப்புற்றுத் திகழ்ந்த தென்றும், மதுரை நகரத்தை யெரியூட்டி வையைக் கரையின் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் கண்ணகியார், கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங் கவுணரைக் கடந்து சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறி அக்குன்றத்தே வேங்கை மர நிழலில் குன்றவாணர் காணக் கோவலனோடு வானவர் போற்றத் துறக்கம் புக்காரென்றும் இளங்கோவடிகள் கூறுகின்றார். மேற்காட்டிய தொடரில் முருகன் கிரவுஞ்சம் என்னும் மலையைப் பிளந்து கடல்நடுவே நின்ற சூர்மாவை வேலாற் கிழித்து அவுணர்களை வென்று அமரரைக் காப்பாற்றிய அருட்செயல் குறிப்பிட்டுள்ளமை காணலாம். திருச்செங்குன்றென்னும் மலையில் வேங்கை மரத்தின் நிழலிலே வந்து நின்ற கண்ணகியாரைக் கண்ட மலைவாண ராகிய குறவர் மலைவேங்கை நறுநிழலில் வள்ளி போல்வீர் என அவ்வம்மையை அழைக்கின்றார்கள். இதனால் குறவர் குலத்தில் தோன்றிய வள்ளி நாச்சியாரை முருகப்பெருமான் அருந்தமிழ்க் களவொழுக்க முறைப்படி மணந்து கொண்ட புராண நிகழ்ச்சியில் அக்குறவர்களுக் கிருந்த ஈடுபாடு நன்கு விளங்குகின்றது. கண்ணகியார் வானவர் போற்றக் கொழுநனொடும் வானகம் புக்க வியப்புடை நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்த மலைவாணர் தம் மகிழ்ச்சி மிகுதியால் வரையுறை தெய்வமாகிய முருகவேளை வழிபட்டுச் சூர்மாவைக் கொன்ற வேலனையேந்திக் குரவைக் கூத்தாடும் இயல்பினை விளக்குவது குன்றக் குரவையாகும். முருகப்பெருமான் சிறப்புப் பொருந்திய திருச்செங்கோடு, வெண்குன்றென்னும் பெயருடைய சுவாமிமலை, திருவேரகம் ஆகிய இத் திருப்பதிகளில் என்றும் நீங்காத கோயில் கொண்டு எழுந்தருளியிருத்தலையும் அப்பெருமான் முன்னொரு காலத்தில் கடல்நடுவிற் புகுந்து சூரபதுமனாகிய மாமரத்தை வேலால் தடிந்தருளிய அருட்செயலையும், அணி முகங்கள் ஓராறும் ஈராறு கையுமுடைய முருகவேள் பிணிமுகம் என்னும் பெயருடைய மயிலின் மீது எழுந்தருளிப் பகைவர்களாகிய அவுணர்களை வென்ற திறத்தையும் சரவணப் பொய்கையில் தாமரை மலராகிய பள்ளியிடத்தே கார்த்திகைப் பெண்கள் அறுவராலும் பாலூட்டி வளர்க்கப் பெற்றவனாகிய அறுமுகப்பெருமான் திருக்கையிலேந்திய வேலே குருகு (கிரவுஞ்சம்) என்னும் பெயருடைய மலையைக் காவலாகக் கொண்டு அதனைச் சூழ்ந்து வரும் இயல்புடைய தாரகனாகிய அவுணனது மார்பகத்தையும் அம்மலையையும் பிளந்த தென்னும் வெற்றித் திறத்தையும் மலைவாணர் மகளிர் எடுத்துரைத்துப் போற்றும் நிலையில் பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளன. சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமு நீங்கா விறைவன்கை வேலன்றே பாரிரும் பௌத்தி னுள்புக்குப் பண்டொருநாட் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே. அணிமுகங்க ளோராறு மீராறு கையும் இணையின்றித் தானுடையா னேந்திய வேலன்றே பிணிமுகமேற் கொண்டவுணர் பீடழியும் வண்ண மணிவிசும்பிற் கோனேத்த மாறட்ட வெள்வேலே. சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர் திருமுலைப்பா லுண்டான் றிருக்கைவே லன்றே வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகு பெயர்க்குன்றம் கொன்ற நெடுவேலே. இவை மூன்றும் குன்றக்குரவர் தம் கருத்து நிறைவேறும் வண்ணம் தெய்வத்தைப் பரவிய பாடல்களாம். தலைவனாலுளதாய தலைவியின் மெலிவுக்குரிய காரணத்தை ஆய்ந்து பாராத செவிலித்தாய், அம்மெலிவு கடம்பனாகிய முருகனால் உண்டாயதெனத் தவறாக எண்ணி வேலனைக் கொண்டு வெறியாடச் செய்கின்றாள். அவள் பேச்சைக்கேட்டு முருகபூசை செய்யும் வேலன் வருவானாயின் அவன் மடமையுடை யவனாவனென்றும் அவன் மேற்கொண்டு நிகழ்த்தும் வெறியாடலில் கிரவுஞ்ச மலையைப் பிளந்தவனும் ஆலமர் செல்வன் புதல்வனும் கடப்ப மலர்மாலையை அணிந்தவனும் மலைவாணர் தொழும் கடவுளும் ஆகிய முருகப்பெருமான் வெளிப்படின் நம் நிலையை அவன் உள்ளவாறு அறியாதவனென்றும், அன்பர் மலர்தூவி வழிபடுமிடத்தே எழுந்தருளி வருதல் அவனது அருளின் இயல்பாதலால் அப்பெருமான் வேலனார் வந்து வெறியாடும் இடத்திலே நீலநிறமமைந்த மயிலின் மேலே வள்ளி நாச்சியாருடன் எழுந்தருளி வருதல் திண்ணம் என்றும், அவ்வாறு ஆலமர் செல்வன் புதல்வன் எழுந்தருள்வானாயின் அவனை வணங்கி மலைநாட்டுக்குரிய தலைவனது திருமணத்தினை முடித்தருளும்படி வேண்டுவோமாக என்றும் எண்ணிய தோழி, வெறியாட்டு விழாவில் முருகக் கடவுளை நோக்கி, கயிலை மலையில் எழுந்தருளிய இறைவனுடைய திருமகனே, மலைமகளாகிய உமை யம்மையார் பெற்ற அரும்பெறல் மகனே, ஆறு முகங்களையுடைய பெருமானே, எங்கள் குல முதல்வியாகிய வள்ளி நாச்சியாருடைய திருவடிகளோடு நின் திருவடி களையும் இறைஞ்சிப் போற்றுகின்றோம். நின் திருவடிகளை வணங்கிச் சூளுரைத்த தலைவர் துன்பமாகிய களவொழுக்கத்தை விட்டொழித்துப் பலர் அறியத் தவியைத் திருமணஞ் செய்து வாழ்வாராக எனச் செவிலிக்கு அறத்தொடு நிற்பதாக அமைந்த குன்றக் குரவைப் பகுதி, வேலன் முருகனை வழிபட்டு வெறியாடும் இயல்பினையும் அதன் பயனையும் வெளிப்படுத்துகின்றது. இதன்கண் முருகக் கடவுள் தந்தையாகிய இறைவன் ஆலின்கீழ் அமர்ந்து முனிவர்களுக்கு அறமுரைத்தருளியதும், அப்பெருமான் கயிலை மலையில் வீற்றிருத்தலும், மலையரசன் மகளாரை மணந்தருளியதும், மலைமகளாகிய அம்மையார்க்கு முருகன் மகனாகியதும், குறமகளை மணந்து கொண்டருளியதும், ஆறு திருமுகங்களுடன் குறமகளுடன் மயில் மீது எழுந்தருளி அன்பர்க்கு அருள்செய்தலும் ஆகிய செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. முருகப்பெருமான், தன்னை அன்பினால் வழிபடும் அடியார்களின் முன் தோன்றியருளுங்கால் அவர்கள் அச்சமின்றிக் கண்டு வழிபடுதற்கேற்றவாறு தன் தெய்வத் தன்மையை உள்ளடக்கிக் கொண்டு மக்கள் வடிவில் இளையோனாக வந்து அருள்புரியும் இயல்பினையும் உடையான் என்பதனை, அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலங் காட்டி (திருமுருகு. 289-290) என்ற தொடரால் நக்கீரனார் குறிப்பாக அறிவுறுத்தியுள்ளார். இவ்வியல்பினை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின்கண் சிறிது வெளிப்பட விளக்கிய திறம் இவண் கருதத்தகவதாம். களவொழுக்கத்தில் இரவுக்குறியின் கண்ணே அடிக்கடி வந்து செல்கின்றான் தலைமகன். அவனை நோக்கித் தோழி கூறுவதாக அமைந்தது, கடம்பு சூடி யுடம்பிடி யேந்தி மடந்தை பொருட்டால் வருவ திவ்வூர் அறுமுக மில்லை அணிமயி லில்லை கடம்பூண் தெய்வ மாக நேரார் மடவர் மன்றவிச் சிறுகுடி யோரே என வருங் குன்றக் குரவைப் பகுதி, தலைவ, நீ தலைவியைப் பெறுதல் கருதிப் கடப்ப மலர் மாலையை யணிந்து வேற்படையைத் தாங்கிக்கொண்டு இரவில் இவ்வூர்க்கண் அடிக்கடி வந்து செல்வது, கண்டார் நின்னை முருகனெனக் கருதி ஆராயாது விடுவர் என்னுங் கருத்தினாலென அறிகின்றேன். கடவுளாகிய முருகன் நின்னைப் போன்று ஒரு முகமும் இரு கையும் உடைய தனது பழைய திருமேனியாகிய இளையவடிவுடனும் வருதல் கூடும் என்னும் உண்மையினை அறிந்து கொள்ள மாட்டாது. ஆறுமுகமும் பன்னிரண்டு கைகளுங் கொண்ட வடிவுடனன்றி முருகன் இத்தகைய மக்கள் வடிவில் வருதலியலாது எனக் கருதும் அறியாமை உடையோர் இச்சிறுகுடியோர் ஆதலின், நீ இங்ஙனம் வருங்கால் உனக்கு ஆறுமுகங்கள் இல்லை என்றும், அழகிய மயிலாகிய ஊர்தி இல்லையென்றும், பக்கத்தில் குறமகளாகிய வள்ளிநாச்சியார் இல்லையென்றும், பன்னிரண்டு தோள்கள் இல்லையென்றும் கூறி, இவ்வூரார் வழிபாட்டினை ஏற்றுக்கொள்ள வந்த முருகனாக நின்னை உடன்பட மாட்டார்கள் எனத் தோழி தலைவனுக்கு அறிவுறுத்த முகத்தால் இக்களவொழுக்கத்தினை விட்டுத் தலைவியை மணந்து கொள்ளத் தூண்டினாள் என்பது மேலெடுத்துக் காட்டிய அடிகளின் பொருளாகும். இவ்வாறு தலைமகள் முருகனுக்கு உரிய கடப்ப மலர்மாலையை அணிந்து கையில் வேற்படையினையேந்தி வருதற்குக் காரணம் தன்னைக் கண்டார் மணங்கமழ் தெய்வத்து இளையோனாகிய முருகன் என்றெண்ணி, விலக்காதிருப்பர் என்பது கருதியே என்பதனை, தலைமகள் கடம்பு சூடி உடம்பிடி யேந்தித் தன்னைக் குமரெனன்று பிறர் கருத வந்த காரணம் பண்டைத் தன் மணங்கமழ் தெய்வத்திள நலங்காட்டி யென்றாராதலால் என்ற உரைக்குறிப்பால் அரும்பதவுரையாசிரியர் இனிது விளக்கியுள்ளார். அன்றியும் அறுமுகமுடைய வடிவமொன்றே அக்காலத்து முருகனுக்கு உரிய வடிவமாயிருந்திருப்பின், அவ்வடிவமில்லாமை கருதித் தலைவனை முருகனென உடன்படாத சிறுகுடியோரை மடவர் மன்ற இச்சிறு குடியோரே எனத்தோழி இகழ்ந்துரைத்ததாக இளங்கோவடிகள் கூறியதற்கு ஒரு சிறிதும் இயைபில்லாமையறிக. ஒரு முகமும் இருகையும் உடைய முருகன் திருவுருவமே சங்க காலத்திற்கு முன்னுள்ள பழையவடிவம் என்றும், இளங்கோவடிகள் காலத்து அப்பழைய வடிவம் மக்களால் மறக்கப்படும்படி பிற்றை நாளில் புராணங்களில் சொல்லப்பெற்ற ஆறுமுகத் திருமேனியே பொது மக்கள் வழிபாட்டில் இடம்பெறத் தொடங்கிய தென்றும் மேற்காட்டிய சிலப்பதிகாரத் தொடராலும் அதற்கு அரும்பதவுரையாசிரியர் எழுதிய உரைக்குறிப்பாலும் இனிது புலப்படுத்தியுள்ளமை காண்க. பத்தினிக்கோட்டம் அமைத்து வழிபட்ட செங்குட்டுவனுக்குக் கண்ணகியார் தமது கடவுள் தோற்றத்தைப் புலப்படுத்தியருளி, தென்னவன் தீதிலன் தேவர்கோன் றன்கோயில் நல்விருந் தாயினான் நானவன் றன்மகள் வேன்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன் எனக் கூறியருளுதலால் குறிஞ்சி நிலத்திற்கு உரிமையுடைய தெய்வம் முருகனே என்னும் தொன்மை நன்கு வலியுறத்தப் பெறுதல் காணலாம். கருங்கடலில் நடுவே சூரனது வேற்றுருவாகிய வஞ்சத்தையறிந்து அவனைக் கொன்ற முருகன் அக்கடல் நடுவே திரையாகிய அரங்கத்தில் துடிகொட்டி ஆடிய கூத்து துடியென்னும் ஆடலாகும். அவுணர்கள் தாம் பொருதற் கெடுத்த படைகளைத் கீழே எறிந்துவிட்டு வருந்திய நிலையிலே முருகன் தன்முன் குடையைச் சாய்த்து அக்குடையினை மறைப்புத் திரையாகக் கொண்டு நின்றாடிய கூத்து குடைக் கூத்தாகும். இவ்விரு கூத்தினையும் முறையே, நீர்த்திரை யரங்கத்து நிகர்த்துமுன் னின்ற சூர்த் திறங் கடந்தோன் ஆடிய துடியும் எனவும் இளங்கோவடிகள் விளக்கினமை காண்க. திருமால் வழிபாடு திருமால் கோயில் கொண்டுள்ள இடங்களாகத் திருவரங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, மதுரை, காவிரிப்பூம்பட்டினம், வஞ்சி நகரத்தே ஆடக மாடம் என ஆறு திருப்பதிகள் சிலப்பதிகாரத்திற் கூறப்பெற்றுள்ளன. கோவலனும் கண்ணகியும் ஊழ்வினை செலுத்த வைகறைப் பொழுதிலே காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்பட்டுத் தோரண வாயிலைக் கடந்து, அரவணையில் மீது அறிதுயில் கொள்ளும் மணிவண்ணன் என்னும் திருநாமத்தை உடைய திருமால் கோயிலை வலஞ்செய்து மதுரைக்குப் புறப்பட்டார்கள் என இளங்கோவடிகள் கூறுகின்றார். கோவலன் என்னும் பெயர் திருமாலுக்குரிய திருநாமங்கள் பலவற்றுள் ஒன்று; அச்சொல் கோபாலன் என்னும் பெயரொடு ஒத்த பொருளுடையது. மதுரையில் கோவலனைக் கண்ட மாடலமறையோன் அவனைக் கோபால என அழைக்கின்றான். பரிபாடல் கோவல எனத் திருமாலைப் பரவுகின்றது. ஆகவே கோவலன் பிறந்த காலத்து அவனுடைய பெற்றோர்கள் திருமால் வழிபாட்டில் பற்றுடையவர்களாயிருந்தனர் என்பது பெறப்படுகின்றது. கோவலனும் கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் புறப்படும்பொழுது மணிவண்ணப் பெருமாள் கோயிலை வலம் வந்தார்கள் என அடிகள் குறித்தலால் அவ்விருவர்க்கும் திருமால் வழிபாட்டில் பற்றுள்ளமை விளங்கும். இனி மதுரைக்குச் செல்லும் கோவலன் சோழநாடு கடந்து பாண்டி நாட்டெல்லையில் மாங்காட்டு மறையோனைச் சந்தித்த பொழுது அம்மறையோன் தனது யாத்திரையின் நோக்கத்தைக் கோவலனுக்குத் தெரிவிக்கின்றான். நீலமேகமானது பொன் மலையில்மேல் பக்கங்களில் வரிந்து ஒருசேரப் படிந்தாற்போன்று ஆயிரந் தலையையும் அணுகுதற்கரிய வன்மையையுமுடைய பாம்பணைப் பள்ளியின்மேல் திருமகள் தங்கும் மார்பையுடைய திருமால் திரை தவழும் காவிரியாற்றின் இடைக்குறையாகிய திருவரங்கத்திலே பள்ளி கொண்டருளிய திருக் கோலத்தையும், திருவேங்கடமென்னும் மலையுச்சியின் மீதே ஞாயிறும் திங்களும் இரண்டு பக்கங்களிலும் விளங்க அவற்றின் நடுவே நீல மேகமானது தன் மின்னலைப் புத்தாடையாக வுடுத்துத் தன்னிடத்தேயுள்ள வானவில்லை ஆரமாகப் பூண்டு நின்றாற் போலச் சக்கரம் படையையும் சங்கினையும் அழகிய தாமரை மலர்போலும் வலக்கையிலும் இடது கையிலும் முறையே ஏந்தி அணிகிளரும் ஆரத்தை மார்பிற் பூண்டு பொன்னடை யுடுத்துச் சிவந்த கண்களையுடைய நெடியோனாகிய அப்பெருமான் நின்ற திருக்கோலத்தையும் எனக்குக் காட்டுவாயாக என்று என்னுடைய கண்கள் என்னுள்ளத்தைக் கவற்றுதலாலே அப்பெருமானது இருவகைக் கோலங்களையும் காணுதற் பொருட்டு வந்தேன்? என மாங்காட்டு மறையோன் கோவலனுக்குக் கூறும் பகுதி : நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும், வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கொடி யுடுத்து விளங்குவிற் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட்டுள்ளேன் (காடுகாண் காதை 35-53) என்பதாகும். மதுரைக்கு வழி கூறும் அம்மறையோன், மதுரைக்குச் செல்லும் வழி கொடும்பாளூர் நெடுங்குளத்தின் பக்கத்திலே மூன்று கிளையாய்ப் பிரிகிறதென்றும், அது பிறைமுடிக்கண்ணிப் பெரியோனாகிய சிவபெருமான் ஏந்திய முத்தலைச் சூலத்தை யொத்ததென்றும் அவற்றின், இடப்பக்கத்தே யமைந்த வழியே சென்றால் திருமால் குன்றத்தை அடையலாமென்றும், அக்குன்றத்தின்கண் பிலத்துவழி உண்டென்றும், அப்பிலத்துக்குள்ளே புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தியென்னும் மூன்று பொய்கைகள் உளவென்றும், அவற்றுள் புண்ணிய சரவணத்தில் மூழ்கினால் இந்திரானற் செய்யப்பட்ட ஐந்திர வியாகரணத்தை உணரலாம் என்றும், பலகரணியில் மூழ்கினால் பழம் பிறப்பை யுணரலாமென்றும், இட்ட சித்தியில் ஆடினால் நினைத்ததெல்லாம் பெறலாம் என்றும் கூற, அப்பிலத்துக்குள்ளே நுழைய விரும்பினால் சிலம்பாற்றின் கரையில் அமைந்த கோங்கமரநிழலின் கண்ணே இயக்கியாகிய ஒருத்தி தோன்றி, இப்பிறப்பிற்கின்பமும் மறுபிறப்பிற்கின்பமும் இவை இரண்டுமொழிந்து எக்காலத்தும் ஒன்றாந் தன்மையாய்த் திறம்பாது அழிவற நிற்பதுமாகிய பொருள்கள் யாவை? என் பெயர் வரோத்தமை; இவற்றையுரைத்தார்க்கு யானுரியேன் ஆதலின் திருவுடையீர்நீவிர் உரைத்தீராயின் இப்பில வாயிற் கதவம் திறந்து தருவேன் என்று கூறுவாள். அவள் கேட்ட வினாவுக்கு மறுமொழி கூறின், அவள் கதவைத் திறந்த வழி விடுவாள், அவ்வழியே நீண்ட இடைகழிகள் பல உள்ளன. அவற்றைக் கடந்தால் இரட்டைக் கதவுடைய வாயிலொன்று தோன்றும். அதற்கு மேலாகச் சென்றால் மற்றொருத்தி தோன்றி ஈறில்லாத இன்பம் யாது? அதனை உரைத்தீராயின் நீங்கள் இம்மூன்று பொருளினும் விரும்பிய பொருளைப் பெறுவீர் என்பாள். அவ்வாறு வினவிய அவள், யான் கேட்டதற்கு நும் பேதைமையான் மறுமொழி கூறீராயினும் நும்மை வருத்தம் செய்யேன், நீங்கள் போதற்குரிய வழியிலே செலுத்துவேன் என்பாள். அவள் கேட்ட பொருளை உரைத்தாருளராயின், முற்கூறிய பொய்கைக் கரைகளிலே அவர்களைச் செலுத்தி அவற்றைக் காட்டி மீள்வாள். அருமறையிடத்தே ஐந்தெழுத்தாலும் எட்டெழுத்தாலும் ஓதப்பட்டு வருகிற மந்திரமிண்டையும் ஒருமையுடன் மனத்தால் நினைந்து வாக்கினால் துதித்து அப்பொய்கை மூன்றனுள் நீங்கள் விரும்பிய பொய்கையில் முழுகினால் அவற்றால் வரும் பயன் தவத்தால் முதிர்ந்தவர்களாலும் காணத் தகுவன அல்ல. அப்பொய்கைகளின் பயனை நீங்கள் விரும்பாவிட்டால் அம்மலை மீது நின்றோனுடைய பொலிவு பொருந்திய தாமரை மலர் போலும் பாதங்களை நினைந்து வழிபடுவீராக. அப்பொழுதே அவனது கருடப்புள் எழுதிய கொடிமரம் நிற்குமிடத்தைக் காண்பீர்கள். கண்டபொழுதே அவன் திருவடிநிலை நும்மை எடுத்துக்கொண்டு பிறவித் துன்பத்தைக் கெடுக்கும் என்று திருமால் குன்றத்தின் வழியியல்பினையும் ஏனையிரண்டும் வழிகளின் இயல்பினையும் சொல்லி முடித்து, நீணிலம் கடந்த நெடுமுடியண்ணல் தாள் தொழுதகையேன் யானும் போகுவல். கண்கூடாகக் காணத்தகும் பிலத்தின் இயல்பு இதுவாகும் என மறையோன் வழிசொல்லி முடிக்கின்றான். இம்மறையோன் கூறியவற்றைக் கோவலனுக்கு வழித் துணையாக வந்த சமணத் துறவியாகிய கவுந்தியடிகள் கேட்டு நலம்புரி கொள்கை நான்மறையாள! இந்திரவியாகரணத்தை எம்முடைய அருககுமாரன் அருளிச் செய்த பரமாகமங்களிற் காண்கின்றிலையோ? அதன் பொருட்டுப் புண்ணிய சரவணத்தில் முழுக வேண்டியதில்லை. முற்பிறப்பிற் செய்தவற்றை இப்பிறப்பின் நிகழ்ச்சியாற் காணுதல் உண்டு. எய்தாத பொருள் எதுவுமில்லை யாதலின் இட்ட சித்தி எய்துதல் வேண்டா. அதனால் நீ கூறிய பிலத்தில் புகவேண்டிய இன்றியமையாமை எங்களுக்கு இல்லை. நீ காமுற்று வந்த தெய்வத்தைக் கண்டு வழிபடுதற்கு நீ போவாயாக. யாங்களும் எங்களுக்குப் பொருத்தமான வழியிற் போகிறோம் என்று அம்மறையோனை நோக்கிக் கூறுகின்றார். இவ்வாறு கவுந்தியடிகள் கூறிய மொழி சமண சமயத்தவர்களின் சமயப்பற்றினையும் வைதிக நெறியில் அவர்களுக்கிருந்த வெறுப்பினையும் நன்கு புலப்படுவதாக அமைந்துள்ளமை காணலாம். கோவலன் கவுந்தியடிகளின் துணைகொண்டு கண்ணகியை அழைத்துக்கொண்டு மதுரைக்கு செல்லும் வழியில் அவனைத் தேடிக் கொணர்தற்பொருட்டு மாதவியால் அனுப்பப்பட்ட கோசிகன் என்னும் மறையவன், இடைவழியில் கோவலனைக் கண்டு மாதவி கொடுத்த ஓலையைக் கொடுத்து, அவனது பிரிவால் காவிரிப்பூம்பட்டினத்திலுள்ளார் வருந்தும் துயர்நிலைக்கு இராமபிரான் பிரிவால் அயோத்தி நகர மக்கள் அடைந்த துயர் நிலையை உவமையாக எடுத்துரைக்கின்றான். மதுரைநகரப் புறஞ்சேரியில் தங்கிய கோவலன் கவுந்தியடிகளை நோக்கி யான் மாதவியால் வைத்த பெரு வேட்கையால் பொருள் முழுவதையும் இழந்து மனைவியுடன் வேற்று நாடடைந்து சிறுமையுற்றேன் என்று வருந்திய பொழுது, காமம் சார்பாகக் கடுந்துயருழந்தோர் இன்று நின்னளவினரல்லர்; முன்னும் எண்ணிறந்தோருளர். தன் தந்தையாகிய தசரதனது ஏவலாலே மனைவியொடும் வனத்திற் போய் அவளைப் பிரிதலால் கொடுந் துன்பத்தை அனுபவித்தவன் வேத முதல்வனாகிய நான்முகனைப் பெற்ற திருமால் என்பதனை உலகம் எல்லாம் அறியும். நீ அறிந்திலையோ? அது நெடு நாளாக வழங்கும் செய்தியன்றோ என இவ்வாறு இராமாயணக் கதையினையும்; சூதாடி நாடிழந்து மனைவியைப் பிரிந்து வருந்திய நளன் கதையினையும் எடுத்துக் காட்டித் தேற்றுகிறார். இவ்விடத்து வேத முதல்வன் தந்தையாகிய இராமபிரானைக் காமம் சார்பாக வினையிற் கட்டுண்டு துன்புற்றவராகக் கவுந்தியடிகள் கூறும் குறிப்பு அவர் மொழிகளிற் புலனாதல் காணலாம். கோவலனுக்குக் கண்ணகி வாழையிலையில் அடிசில் படைத்த தோற்றத்தையும் கோவலன், வணிகர்க்கு வேதத்தில் கூறிய முறைப்படிப் பலியிடுதல் வாய் பூசுதல் முதலிய செய்த பின் உண்ணுந் தோற்றத்தினையும் கண்டு மகிழ்ந்த ஆயர்மகளிர், அவ்விருவரையும் முறையே ஆயர் பாடியில் அசோதை பெற்றெடுத்த காயாம்பூ நிறத்தவனாகிய கண்ணனாகவும், அவனைத் தொழுநையாற்றில் வருத்தமகற்றி மணந்து கொண்ட ஆயர் மகள் நப்பின்னையாகவும் ஐயுற்று வியந்து பாராட்டுகின்றார். இச்செய்தி, குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங் கமுத முண்க வடிக ளீங்கென அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் உரிய வெல்லா மொருமுறை கழித்தாங்கு ஆயர் பாடியி னசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமு துண்ணும் நம்பி ஈங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத் தொழுனை யாற்றினுட் டூமணி வண்ணனை விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையும் தவ்வையும் விம்மித மெய்திக் கண்கொளா நமக்கிவர் காட்சி யீங்கென உண்டினி திருந்த உயர்பே ராளன் (கொலைக்களக் காதை 42-54) எனவரும் தொடரிற் குறிக்கப் பெற்றுள்ளமை காணலாம். இவ்வாறு இடைச்சேரியில் மாதரி வீட்டில் தங்கிக் கண்ணகியார் படைத்த உணவினையுண்டு அவரது காற்சிலம்பில் ஒன்றை மதுரையில் விற்றற்குச் சென்ற கோவலன், ஊழ்வினை வயத்தால் கள்வன் எனக் கருதப்பட்டுக் கொல்லப்படுகிறான். அந்நிலையில் கண்ணகி தங்கிய இடைச்சேரியில் தீய நிமித்தங்கள் பல நிகழ்கின்றன. அவற்றைக் கண்டு அஞ்சிய ஆயர் மகளிர் சாந்தி செய்யும் பொருட்டாகத் தம் வழிபடு கடவுளாகிய திருமாலைப் போற்றிக் குரவைக் கூத்தாடுகின்றனர். அதனைக் குறிப்பது ஆயச்சியர் குரவையாகும். இதன்கண் முல்லைநிலத் தெய்வமாகிய திருமால் வழிபாடு பலதிறத்தாலும் விரித்து விளக்கப்படுகின்றது. கண்ணனாகிய திருமால் கன்றால் விளாமரத்தை யெறிந்தது, ஆநிரை மேய்த்தது, ஆயர் மகளிர்க்காகக் குருந்தினை வளைத்துக் கொடுத்தது, கடல் வண்ணனாகிய அக்கடவுள், வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிப் பாற்கடலைக் கடைந்து தேவர்க்கு அமுதீந்தது, கடல் வயிறு கலக்கிய தன் கைகளை ஆயர் பாடியில் அசோதையார் உரலிற் பிணித்துக் கட்டும்படி எளியானய் விளையாடியது, உலகத்தை யுண்டது, களவினால் உறிவெண்ணெய் உண்டது, மூவுலகும் ஈரடியால் அளந்தது, நூற்றுவரால் துரியோதனாதியர்பால் நாற்றிசையும் போற்றப் பாண்டவர்க்காகத் தூது சென்றது, வாணன் பேரூராகிய சோநகரத்தை யழித்தது, இராமவதாரத்தில் தம்பியாகிய இலக்குவனோடும் காடடைந்தது, பேருலக மெல்லாம் தமது விரிகமலவுந்தியிடை விரிந்து தோன்றச் செய்தது, கண்ணனும் பலதேவனும் ஆகிய இருபெருந் தெய்வமாக மக்களால் வழிபடப் பெற்று அருள் செய்வது, மாமனாகிய கம்சனது வஞ்சனையைக் கடந்து வென்றது, கருடக்கொடியுயர்த்தது, நாராயணனென்னும் திருநாமத்தின் சிறப்பு ஆகியவற்றையெல்லாம் ஆயர் மகளிர் உளமுந்து போற்று முகமாக இளங்கோவடிகள் விரித்துரைத்துள்ளார். அஞ்சன வண்ணனாகிய கண்ணன் தன் மாமனாகிய கம்சனது வஞ்சனையால் வந்த யானையின் கொம்பை ஒடித்து நின்றாடிய கூத்தினை அல்லித் தொகுதியென்றும், காமன் மகன் அநிருந்தனைத் தன் மகள் உழை காரணமாக வாணாசூரன் சிறைப்படுத்திய பொழுது அவனுடைய சோநகர வீதியிலே திருமால் குடங்கொண்டு ஆடிய கூத்தினைக் குடக்கூத்து என்றும், திருமால் வாணனை வெல்லுதற்கு மல்லனாய் நின்று பொருது கொன்றாடிய கூத்து மல்லாடல் என்றும், அந்நாளில் காமன் ஆண்மைத் தன்மையிற் றிரிந்த பேடிக் கோலத்தோடு ஆடிய கூத்தினைப் பேடு என்றும், அவுணர்கள் போர் செய்யலாற்றாது மயங்கி வீழும்படி திருமகள் ஆடிய ஆடலைப் பாவைக் கூத்தென்றும், சோநகரத்து வடக்கு வாயிலிலே இந்திராணி வயலிடத்தே நின்றாடிய கூத்தினைக் கடையமென்றும் அடிகள் குறிப்பிடுகின்றார். இந்திரன் வழிபாடு மருதநிலத் தெய்வமாகிய இந்திரனைத் தேவர் கோமான், விண்ணவர் முதல்வன், விண்ணவர், தலைவன், ஆயிரங்கண்னோன், மலைச்சிறகரிந்த வச்சிர வேந்தன், இடிப்படை வானவன், விறல்வேல் வானவன் என் அடிகள் புகழ்கின்றார். இந்திரனை வழிபடுங் கருத்துடன் காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரவிழாக் கொண்டாடப் பெற்றது. இந்த விழாவின் நிகழ்ச்சியை இந்திரவிழவூரெடுத்த காதையில் இளங்கோவடிகள் விரித்துரைத்துள்ளார். சித்திரை மாதத்துச் சித்திரை விண்மீன் கூடிய பூரணை நாளிலே மருவூர்ப் பாக்கத்திற்கும், பட்டினப் பாக்கத்திற்கும் நடுவேயமைந்த பொது நிலமாகிய நாளங்காடியிலே, வெற்றி பொருந்திய வேலையுடைய முசுகுந்தனுக்கு வந்த இடையூற்றை ஒழித்தற் பொருட்டு இந்திரனால் அனுப்பப்பட்டுத் தேவருலகிலிருந்தும் போந்து பலிகொள்ளும் பூதத்தின் பீடிகையிலே, புழுக்கல் முதலிய பலிகளைச் சொரிந்து மறக்குடிப் பெண்டிரும் வீரர்களும் பலியிட்டு வழிபடுகின்றனர். அதன்பின் ஐவகை மன்றங்களிலும் பலியிட்டு இந்திரனது வச்சிராயுதம் நிற்கும் கோயிலாகிய வச்சிரக்கோட்டத் திலிருக்கும் முரசையானை மீது ஏற்றி, அவனது ஐராவதம் நிற்கும் கோயிலிலே சென்று விழாவின் தொடக்கத்தையும் முடிவையும் அறைந்து சாற்றி, கற்பகதரு நின்ற கோயிலிலே ஐராவதமெழுதிய கொடியையேற்றி ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் அரச குமாரரும் பரதகுமாரரும் கூடி ஆயிரத்தெட்டு அரச தலையிற் சுமப்பித்துக் கொண்ட காவிரியின் நன்னீரைப்பொற்குடத்தேந்தி விண்ணவர் தலைவனாகிய இந்திரனை நீராட்டி வழிபடுகின்றனர். இவ்விழா இருபத்தெட்டு நாள் நடந்து, விழா முடிவில் கடலாட்டு நிகழுமென்றும், இப்பெரிய விழாவைக் காணுதற் பொருட்டு வடநாட்டவரும் இங்கு வருவரென்றும் அடிகள் விளக்கியுள்ளார். வருணன் நெய்தல் நிலத் தெய்வம் வருணனாவான். கரிய மலர் நெடுங்கண் காரிகையாகிய தலைவியின் முன்னர்க் கடற்றெய்வங் காட்டிக்காட்டி நின்னைப் பிரியேன் என்று தலைவன் தலைவிக்குச் சபதஞ் செய்கின்றான். அச்சபதத்தை அவன் மறந்து விடுகிறான். அந்நிலையில் தலைவர் அறனில்லாதவர் என்பது எமக்கு முன்னமே எப்படித் தெரியும் என்று தோழி தலைவன் முன்னின்று முன்னிலைப் படர்க்கையாகப் பேசுகின்றாள். இப்பேச்சில் தலைவன் கடற்றெய்வத்தில் முன் நின்னைப்பிரியேன் எனத் தலைவிக்குச் சபதஞ் செய்து கொடுத்தமை குறிக்கப்பட்டது. மாலைப்பொழுது கண்டு வருந்திய தலைவி, தலைவன் நின்னைப் பிரியேன் என்று தனக்குச் சொன்ன சபதத்தினைப் பொய்த்தமை கருதி, அவனைக் கடற்றெய்வம் சினந்து வருத்தாதபடி அத்தெய்வத்தைப் பணிந்து வேண்டுகின்றாள். பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடற் றெய்வம்நின் மலரடி வணங்குதும் என்பது தலைவியின் வேண்டுகோள். இதனால் கடற்றெய்வமாகிய வருணன் வழிபாடு நெய்தல் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டமை விளங்கும். கொற்றவை பாலைக்குத் தெய்வம் கொற்றவை என்பதனை இளங்கோவடிகள் வேட்டுவ வரியில் விரித்துரைத்துள்ளார். கொற்றவை வழிபாடு ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்திலேயே சிறப்புற்று விளங்கிய தாகும். சிறந்த கொற்றவை நிலை என்பது தொல்காப்பியம். கொற்றவைக்குப் பழையோள் என்று ஒரு பெயருண்டு. எனவே தெய்வத்தைத் தாயாகக் கருதி வழிபடும் இவ்வழிபாடு மிகமிகப் பழைமையுடையதென்பதும் துணியப்படும். இக்கொற்றவை வழிபாடு சிவ வழிபாட்டுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய தென்பதையும் முல்லைநில வழிபாடாகிய திருமால் வழிபாட்டினைத் தனக்கு அங்கமாகக் கொண்டதென்பதையும், முருகவேள் வழிபாட்டுடன் சம்பந்தமுடையதென்பதையும் இளங்கோவடிகள் வேட்டுவவரியில் நன்கு விளக்குகின்றார். மதியின் வெண்டோடு சூடுஞ் சென்னி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை எனவரும் தொடரில் இறைவன் பிறை சூடியதனைக் கொற்றவை மேல் ஏற்றிக் கூறினார். நெற்றிக் கண்ணுடைமை, நஞ்சுண்டு கண்டங்கறுத்தமை, நாகம் நாணாக மேரு மலையை வில்லாக வளைத்தமை, திரிசூலமேந்தினமை, பெண்பாகத்திற் சிலம்பும் ஆண்பாகத்திற் கழலும் அமைய மங்கைபாகரானமை ஆகிய இவை யாவும் பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமானுக்கு உரியனவாம். அப்பெருமானுடன் பிரிப்பின்றி உடனாதல் பற்றி - இச்செயல்களெல்லாவற்றையும் சத்தியாகிய கொற்றவையின் மேலேற்றிச் சிலப்பதிகாரம் போற்றுகின்றது. எருமையின் தலையும் அவுணன் உடம்பும் பெற்ற மகிடாசுரன் தலைமீது நின்ற வெற்றித் தெய்வமாகிய கொற்றவையைத் திருமாலின் தங்கையென அடிகள் பாராட்டியுள்ளார். கண்ணுதல் பாகம் ஆளுடையாள் என்றும், திங்கள் வாழ் சடையாள் என்றும் திருமாற்கு இளையாள் என்றும், கொற்றவை, ஐயை, பாய்கலைப் பாவை என்றும் பாராட்டிய அடிகள், ஆனைத் தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் காணத் தெருமைக் கருந்தலை மேல் நின்றாயால் என்றும், வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் கரிய திரிக்கோட்டுக் கலைமிசை மேல் நின்றாயால் என்றும், சங்கமுஞ் சக்கரமுந் தாமரைக் கையேந்திச் செங்க னரிமான் சினவிடைமேல் நின்றாயால் என்றும் சிவபெருமான் செய்தனவெல்லாம் சத்தி செய்தனவாகக் கூறி உள்ளார். அப்பெருமாட்டி வானோர் வணங்க மறைமேல் மறையாகிய ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி நிற்குமியல்பினையும், அரி, அரன், அயன் என்னும் முத்தேவர்கள் உள்ளக் கமலத்தே விரிந்த சோதிப் பொருளாக விளங்கி நிற்கும் இயல்பினையும், கங்கையைச் சடைமுடியில் அணிந்த கண்ணுதற் கடவுளின் இடப்பாகத்தே உமா தேவியின் உருவாய்த் திகழுமியல்பினையும், விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சமுண்டு இருந்தருள் செய்யும் இயல்பினையும் வேட்டுவர்கள் எடுத்துரைத்துப் போற்று கின்றார்கள். சிவபெருமானுக்குரிய கொன்றை மலரும் திருமாலுக் குரிய துளவமும் ஒருசேரத் தொடுத்த மாலையைக் கொற்றவையின் தோள்மேல் வேட்டுவர் அணிகின்றனர். இவ்வாறு அணியுங் குறிப்பு சிவ வழிபாடும் திருமால் வழிபாடும் கலந்த நிலையில் அமைந்தது கொற்றவை வழிபாடென்பதனை வலியுறுத்துகின்றது. கொன்றையந் . . தொடுத்த .’ . மருதில் நடந்துநின் மாமன்செய் வஞ்சம் உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய் எனக் கொற்றவையைத் திருமாலாகவே கருதிக் கஞ்சன் செய்த வஞ்சனையைக் கடந்த கண்ணன் செயலைக் கொற்றவை மீதேற்றிப் போற்றுகின்றனர். திருமாலைக் குறித்த மாயவன் என்ற பெயரும் கொற்றவையைக் குறித்த மாயவள் என்ற பெயரும் ஒரே முதனிலையில் தோன்றினவை. இக்குறிப்பினால் சிவசத்தியில் ஒன்றாகிய புருஷசத்தியே திருமால் என்னும் குறிப்பினை அக்காலச் சைவர் கொண்டிருந்தமை புலனாகும். இதனை மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற நாதர் என வரும் திருஞான சம்பந்தர் வாய்மொழியும் வற்புறுத்தல் காணலாம். கோவலன், பாய்கலைப்பாவை மந்திரத்தை ஓதுமியல் புடையவன் என்றும், அம்மந்திரத்தால் காட்டில் மயக்குந் தெய்வத்தை ஆற்றல் கெடச் செய்தனனென்றும் மதுரை நகர்க்கருகேயமைந்த சிற்றூரில் மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் பாடிய பாய்கலைப் பாவை பாடற் பாணியினைக் கேட்டு மகிழ்ந்தனனென்றும் சிலப்பதிகாரம் கூறுதலால், கொற்றவை வழிபாட்டில் கோவலன் நம்பிக்கையுடையவன் என்பது நன்கு விளங்கும். இறைவனை ஆடல் கண்டருளிய அணங்கு எனப் பத்திரகாளியையும், அடர்த்தெழு குருதியடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றி வேற்றடக்கைக் கொற்றவை எனத் துர்க்கையையும், அறுவர்க்கிளைய நங்கை எனச் சத்த மாதர்களில் ஒருத்தியாகிய பிடாரியையும் அடிகள் குறித்துள்ளார். மதுரை நகரத்தே கொற்றவைக்குக் கோயிலிருந்தமையும், அக்கொற்றவை கோயில் வாசலில் கண்ணகி பொற்றொடி தகர்த்தமையும் அடிகள் குறிப்பிடுவர். உலகுக்கு இடர்செய்யும் அவுணரொடு துர்க்கை செய்த போரிலே அவுணர் பாம்பு தேள் முதலிய உருவில் வஞ்சனையால் வந்து எதிர்க்க, அது பொறாளாகி மரத்தினால் கால் கட்டிக் கொண்டு ஆடி அவற்றைச் சிதைத்த ஆடல், மரக்கால் ஆடல் எனப்படும் . இதனை, காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள் மாயவள் ஆடிய மரக்கா லாடல் என்று குறிப்பிடுவர் அடிகள். சிவவழிபாடு இவ்வழிபாடு எல்லா நிலத்துக்கும் பொதுவாகவுரியது. சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாமுது முதல்வன் வாய்மை யின்வழா நான்மறை மரபின் தீமுறை யொருபால் நால்வகைத் தேவரும் மூவறு கணங்களும் பால்வேறு தெரிந்த பகுதித் தோற்றத்து வேறுவேறு கடவுளர் சாறுசிறந் தொருபால் அறவோர் பள்ளியும் அறனோம் படையும் புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் திறவோ ருரைக்குஞ் செயல்சிறந்த தொருபால் சிறந்து விளங்கின எனவும், பாண்டிய நாட்டு மதுரை நகர்ப் புறத்தே அருந்தெறற் கடவுளாகிய திருவாலவாய்ப் பெருமான் திருக்கோயிலில் ஓதிய நான்மறையோசையும், மாதவர் கூறிய பொருளுரையும் முழுங்கின எனவும், மதுரை நகரிலே நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் விளங்கின எனவும் சிலப்பதிகாரம் கூறும். பிறவா யாக்கைப் பெரியோன் எனவும் சிலப்பதிகாரம் அருந்தெறற் கடவுள் எனவும் நுதல்விழி நாட்டத்திறையோன் எனவும் சிவபெருமான் ஒருவனையே அடிகள் முதலில் வைத்துப் போற்றுதலை நோக்குங்கால், அவர் காலத்தில் தமிழ் நாட்டிலே பெரும்பான்மை மக்களால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புடைய வழிபாடு சிவ வழிபாடென்பது நன்கு துணியப்படும். செங்குட்டுவன், அருந்தமிழ் இகழ்ந்த ஆரிய அரசரை வெற்றி கோடல் கருதி இமயஞ் செல்லப் புறப்பட்டபொழுது. திங்களைச் சூடிய நீண்ட பெருஞ் சடைமுடியினையும் உலக முழுவதனையும் தன்னுள் அடக்கிய திருவுருவத்தினையும் உடைய யாவர்க்கும் உயர்ந்தோனாகிய சிவபெருமானுடைய திருவடிகளை வெற்றி, பொருந்திய வஞ்சி மாலையுடன் தன்முடி மீதணிந்து எவர்க்கும் தாழாத தலையால் அப்பெருமானை இறைஞ்சிப் போற்றி, அந்தணர் ஏந்திய வேள்விப்புகை தன் மார்பில் அணிந்த மாலையின் கண்ணே புகுந்து மணங்கமழப் பட்டத்து யானை மீதமர்ந்து போந்தான் எனவும், அந்நிலையில், குடதிசைக் கோவாகிய செங்குட்டுவன் வெற்றி பெறுவானாக என வாழ்த்திக் கொண்டு ஆடகமாடம் என்னும் திருக்கோயிலில் அறிதுயில் கொள்ளும் திருமாலின் பிரசாதத்தைக் கையிற் கொண்டு திருமாலடியார் சிலர் செங்குட்டுவனை ஏத்தி நின்றனர் எனவும், அதனை உணர்ந்த வேந்தர் பெருமான் கங்கையைச் சடையிற் கரந்தருளிய செஞ்சடைக் கடவுளாகிய சிவபெருமானுடைய அழகிய திருவடிகளைத் தன் தலைமேற் புனைந்திருத்தலால் திருமாலின் பிரசாதத்தை வாங்கித் தன் தோள்களிற் புனைந்து சென்றான் எனவும் இளங்கோவடிகள் கூறுகின்றார். நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி யிறைஞ்சி வலங்கொண்டு மறையோ ரேந்திய வாகுதி நறும்புகை நறைகெழு மாலையி னல்லகம் வருத்தக் கடக்களி யானைப் பிடர்த்தலை யேறினன் குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென ஆடகமாத் தறிதுயில் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின் றேத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத் தாங்கின னாகித் தகைமையிற் செல்வுழி (கால்கோட்காதை 54-67) எனவரும் தொடர்களால் அடிகள் இச்செய்தியை விளக்கியுள்ளார். அங்ஙனம் செல்லும் செங்குட்டுவனை நோக்கி இமயத்தினின்றும் வந்த முனிவர்கள், செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ! என அழைக்கு முகமாக அவ்வேந்தன் சிவபெருமான் திருவருளாற் பிறந்த சிறப்பினைக் கூறுதலாலும், அவ்வேந்தனை நோக்கி ஆனேறூ ர்ந்தோன் அருளினில் தோன்றி மாநிலம் விளக்கிய மன்னவன் என மாடல மறையோன் கூறுதலாலும், செங்குட்டுவனுடைய முன்னோர்களாகிய சேரவேந்தர்களும் அவர்கள் வழியிற்றோன்றிய அவ்வேந்தர் பெருமானும் சிவவழிபாட்டில் அழுந்திய பற்றுடை யோராய் விளங்கினமையும் இனிது விளங்கும். செங்குட்டுவன் செய்த போரில் எதிர் நிற்றலாற்றாராகிய மன்னர், சடைமுடியுடையராய் உடல் முழுதும் முழுநீறு பூசிய சிவனடியாராகவும், மயிற் பீலியைக் கையிலேந்திய சமண நோன்பிகளாகவும்; பாடும் பாணராகவும் ஆடுங்கூத்தராகவும் தாந்தாம் கற்று வல்ல தொழில் நிலைக்கேற்ப வெவ்வேறு கோலமணிந்து தப்பிப் பிழைத்தார்கள் எனவும் வெற்றி பெற்ற செங்குட்டுவன் வடதிசைக் கண்ணே மறைகளைப் பாதுகாக்கும் அந்தணருடைய வேள்விக் குண்டத்தின் முத்தீயை அவியாது பேணும் பெரிய அருள் வாழ்க்கையைப் போற்றிப் பாதுகாத்திடுமின் எனத் தூதர்க்குச் சொல்லி வில்லவன் கோதை முதலிய படைத்தலைவர்களை ஏவி இமயமலையிலே கண்ணகியார் வடிவமைத்தற்குரிய சிலையினைக் கொண்டான் எனவும் இளங்கோவடிகள் கூறுதலால் அவர் காலத்து வடநாட்டில் சிவவழிபாடும் சமணசமயமும் வைதிக வேள்வி முறைகளும் மேற்கொள்ளப் பெற்றமை நன்கு விளங்கும். ஆரிய மன்னரை வணங்கி வஞ்சி நகரத்தையடைந்த செங்குட்டுவன், தன் பட்டத்தரசி இளங்கோ வேண்மாளுடன் ஒருங்கு வீற்றிருந்த காலத்துப் பறையூர் என்னும் ஊரிற் பிறந்த கூத்தச் சாக்கையன் என்பான், எல்லாச் செல்வங்களுக்கும் நிலைக்களனாகிய சிவந்த திருவடியிலே சிலம்பென்னும் காலணி ஒலிக்கவும், சிவந்த கையின் கண்ணே துடியென்னும் பறை முழங்கவும், சிவந்த நிறமுடைய கண்கள் அன்பராயினார்க்கு ஆயிரந்திருக் குறிப்புகளைப் புலப்படுத்தியருளலும் செந்நிறமுடைய சடைக்கற்றைகள் திசை முழுதும் பரந்து அலையவும், உமாதேவியார் தாமணிந்த பாடகம் ஒலிக்காமலும் தோள்வளைகள் நடுங்காமலும் காதணி அசையாமலும் கூந்தல் அவிழாமலும் தன் இடப்பாகத்தே அமையவும் பெரியோனாகிய சிவபெருமான் ஆடிய கொடு கொட்டி யென்னும் கூத்தை ஆடிக்காட்டினன். இச்செய்தியை, திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும் செங்கணாயிரந் திருக்குறிப் பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூடகந் துளங்காது மேகலை யொலியாது மென்முலை யசையாது வார்குழை யாடாது மணிக்குழல் அவிழாது உமையவள் ஒருதிற னாக வோங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் எனவருந் தொடரால் இளங்கோவடிகள் விளக்குகின்றார். கொடுகொட்டி ஆடல் சிவபெருமானால் ஆடப்பெற்ற கூத்தாகும். இது, தேவர் தமக்குத் துன்பம் விளைக்கும் திரிபுரத்தவுணர்களை யழிக்கும்படி வேண்டத் தேவர் யாவரினுமுயர்ந்த இறைவனாகிய சிவபெருமான் வடவைத் தீயைத் தலையிலேயுடைய பெரிய அம்பு ஏவல் கேட்ட அளவிலே திரிபுரத்தவுணர் வெந்து நீறாக விழுந்த வெண்ணீற்றுக் குவியலிலே பைரவிக்குரிய சுடுகாடாகிய அரங்கத்திலே உமாதேவி ஒருபக்கத்தில் நின்று பாணி, தூக்கு, சீர் என்னுந் தாளவகைகளைச் செலுத்த வெற்றிக்களிப்பால் கைகொட்டி நின்று ஆடிய கூத்தாகும். திரிபுரந் தீப்பற்றி எரியக்கண்டும் இரங்காது கை கொட்டி நின்று ஆடிய கொடுமையுடையதாதல் பற்றி இது கொடு கொட்டி எனப்பெயர் பெற்றது. இதனியல்பினை பாரதி யாடிய பாரதி யரங்கத்துத் திரிபுர மெரியத் தேவர் வேண்ட எரிமுகப் பேரம் பேவல் கேட்ப உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொடுகொட் டியாடல் என விரித்துரைப்பர் அடிகள். திரிபுரத்தை யழித்தற் பொருட்டு வானோராகிய தேரில் நால்வேதமாகிய குதிரைகளைப் பூட்டிக் கூர்முள் பிடித்துச் சாரதியாயிருந்து ஓட்டிய நான்மகன் காணும்படி பாரதி வடிவாகிய இறைவன் வெண்ணீற்றை யணிந்தாடிய கூத்து பாண்டரங்கம் எனப்படும். இதனியல்பினை, தேர்முன் நின்ற திசைமுகன் காணப் பாரதி யாடிய வியன்பாண் டரங்கம் என விளக்குவர் அடிகள். இங்கு எடுத்துக்காட்டிய பகுதிகளால் சிவபெருமானாகிய இறைவன் என்றும் பிறவா யாக்கை யாகிய அருள் திருமேனியுடையான் என்றும், தேவர் போற்றத் திங்கள் சூடிய செல்வன் என்றும், யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான் ஆதலின் பெரியோன் என்னும் திருப்பெயருடையான் என்றும், நெற்றிக் கண்ணுடையான் என்றும், உமையை ஒரு பாகத்திற்கொண்ட அம்மையப்பன் என்றும், ஆலின் கீழ் அறமுரைத்தருளிய ஆசான் என்றும், முருகவேட்குத் தந்தையென்றும், நஞ்சுண்டு கண்டத் தடக்கித் தேவர்களை உய்வித்த பேரருளாளன் என்றும், உமையவள் காண ஆடினான் என்றும், திரிபுரத்தை எரித்தருளியவன் என்றும், திருக்கயிலையில் வீற்றிருப்பவன் என்றும், அவனே அட்டமூர்த்தியாகிய உலகு பொதியுருவத்து உயர்ந்தோன் என்றும், அவனது வழிபாடு சேர சோழ பாண்டியர்களாகிய மூவேந்தர் நாட்டிலும் பெருக வழங்கியது என்றும், வடநாட்டிலும் பரவியிருந்தது என்றும், இமயமலையில் உச்சியிலே குயிலாலுவம் என்னுமிடத்தே உமையொரு பாகனாகிய இறைவனுக்குத் திருக்கோயில் அமைந்திருந்ததென்றும் அடிகள் விளக்கிய திறம் அறியத்தகுவதாகும். பிற தெய்வங்கள் பலதேவன் :கண்ணனுக்கு முன்னோனாகிய பலதேவனை வால்வளைமேனி வாலியோன் எனவும், புகர் வெள்ளை எனவும் குறிப்பிட்டு அத்தெய்வத்துக்குரிய கோயில் புகார் நகரத்திலும் மதுரையிலும் அமைந்திருந்ததனை அடிகள் கூறியுள்ளார். காமன் : திருமாலுக்கு மகனாகிய காமனைக் காமக் கடவுள், மகர வெல்கொடி மைந்தன், மகரத்தின் கொடியோன், மீனேற்றுக் கொடியோன், உருவிலாளன் எனக்குறித்த அடிகள், காமவேள் கோட்டம் காவிரிப்பூம்பட்டினத்தில் அமைந்திருந்த தனையும், காமன் தன் மகன் அநிருத்தன் பொருட்டு வாணன் பேரூரில் பேடிக் கூத்தாடிய இயல்பினையும் குறித்துள்ளார். காமனுக்குக் கரும்பு வில்லேன்றும், தென்றலும் குயிலும் துணை செய்வன வென்றும் மகளிர் காமன் சேனையென்றும் சிலப்பதிகாரம் கூறும். ஞாயிறு : பலர் தொழத் தோன்றிய உலகுதொழு மண்டிலம் என அடிகள் ஞாயிற்றைப் புகழ்தலால் ஞாயிறு வணக்கம் அவர் காலத்தில் எல்லாச் சமயத்தவராலும் மேற்கொள்ளப் பெற்றமை விளங்கும். அடிகளே, ஞாயிறு போற்றுதும் என இறைஞ்சுதலும் கண்ணகியார் காய்கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் என அத்தெய்வத்தை வினவ, அது ஒள்ளெரி யுண்ணுமிவ் வூர் என மறுமொழி கூறியதும், புகார் நகரத்தே கதிரவனுக்குரிய கோயிலாகிய பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம் அமைந்திருந் தமையும் தமிழ்நாட்டில் அடிகள் காலத்து ஞாயிறு வழிபாடு நிலைபெற்ற செய்தியைப் புலப்படுத்துவனவாகும். திங்கள் : திங்களைப் போற்றுதும் எனக் காப்பியத்தைத் தொடங்கும் பொழுதே திங்களைத் தெய்வமாகக் கொண்டு அடிகள் போற்றுதலாலும் நிலாக்கோட்டம் என்ற பெயரால் சந்திரனுக்குரிய கோயில் புகார் நகரத் துண்மையை அடிகள் விளக்குதலாலும் பெரியோனாகிய இறைவன் இமையவர் ஏத்த அழகொடு முடித்த அருமை யுடையது பிறையெனக் குறித்தலாலும், மகளிர் பிறை தொழுதலாகிய வழக்கம் உள்ளமையானும் திங்கள் வணக்கம் தமிழ்நாட்டில் பண்டுதொட்டு நிலவியிருந்தமை யுணரப்படும். தீ வழிபாடு மதுரை நகரத்தே கண்ணகியாரது ஏவலால் மாலையெரியங்கி வானவனாகிய தீக்கடவுள் தோன்றி, அந்நகரத்தில் வாழ்ந்த நல்லோரை விடுத்துத் தீயோரைச் சுட்ட திறத்தினை அடிகள் விளக்குவதாலும், சோழ நாட்டில் புகாரிலுள்ள கோயில்களில் நான்முகன் கூறிய வேத நெறிப்படி ஓமங்கள் நடந்தன என்றும், மங்கல மறையோர் வாழும் ஊர்களில் அரசனது வெற்றியுடனே மழைக்குக் கருப்பத்தைத் தோற்றுவிக்கும் அழலை வளர்க்கின்ற வேள்விச் சாலையிலுண்டான மறையோரால் உண்டாக்கப்பட்ட தேவருணாவின் ஆவி, மலைகளை மூடிய மேகத்தைப் போன்று மாடங்களை மூடி நிற்கும் என்றும் நாட்டுவளங் கூறுதலாலும், மாடலமறையோன் செங்குட்டுவனை நோக்கி மறக்கள வேள்வி செய்யாது அறக்கள வேள்வியைச் செய்தல் வேண்டும் என அறிவுறுத்தலாலும், அக்காலத்து வேதநூல் முறைப்படி அழற்கடவுளைப் போற்றி வேள்வி செய்யும் வழக்கம் வேத நெறியாளர்பால் நிலைபெற்றிருந்தமை நன்கு புலனாகும். வசுக்கள் எண்மரும், அருக்கர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், மருத்துவர் இருவரும் ஆகிய முப்பத்து முக்கோடித் தேவர்களுக்கும், பதினெண்வகைப்பட்ட தெய்வ கணங்களுக்கும் புகார் நகரத்தே திருவிழா நடைபெற்றன என்றும் ஊர்ப்புறத்தே பாசண்டச் சாத்தனுக்குக் கோயில் அமைந்திருந்தது என்றும் சிலப்பதிகாரம் கூறும். புறச்சமயங்கள் காவிரிப்பூம்பட்டினத்தில் அருகர் பள்ளியும் புத்தர் பள்ளியும் இருந்தன. நிக்கந்தக் கோட்டம் என்பது அருகன் கோயில். கோவலன் புகார் நகரத்தை விட்டு மனைவியுடன் வைகறையில் புறப்பட்டு வந்தபொழுது ஐந்து கிளைகளையுடைய அரசமரமாகிய மாபோதி நிழலில் எழுந்தருளிய புத்தன் அருளிச் செய்த ஆகமங்களை உணர்ந்த ஆகாய சாரிகள் மறைய இருந்து எல்லோர்க்கும் உண்மைப் பொருளை யுபதேசித்தற் பொருட்டு இந்திரனால் அமைக்கப்பட்ட புத்த விகாரங்கள் ஏழினையும் முறையே கண்டானென்றும், புலாலுணவைத் துறந்து பொய் கூறாமையாகிய விரதத்தோடு அழுக்காறு முதலிய குற்றங்களை நீக்கி ஐம்பொறிகளை அடக்கி மெய்ப்பொருள் உணர்ந்த பெரியோர் கூடிய ஸ்ரீகோயிலில் அருகர், சித்தர், உபாத்தியார், ஆசிரியர், சாதுக்கள் என்னும் பஞ்ச பரமேட்டிகள் நிலைபெற்ற ஐந்து சந்துங் கூடிய நடுவிடத்தே அமைந்த மன்றின் கண்ணே அசோகின் நிழலிலே விழாக் காலங்களில் ஆகாய சாரிகளாகிய சாரணர்கள் வருவார்களென்று சமணரில் இல்லறத் தாராகிய சாவகர்கள் இட்ட சந்திர காந்தக் கல்லாகிய சிலாவட்டத்தைக் கோவலன் தொழுது வலங்கொண்டான் என்றும், பின்னர்க் காவிரிக் கரையில் ஒரு பொழிலகத்தே தங்கிய சமண சமயத் தவச் செல்வியாகிய கவுந்தியடிகளைக் கண்டு வணங்கி இவ்வம்மையார் கூறிய முறையிலே எவ்வுயிர்க்கும் தீங்கு நிகழாதபடியும், சமண சமய ஒழுக்கம் சிதையாதபடியும் அவ்வம்மையாரைத் துணையாகக் கொண்டு மதுரைக்குச் சென்றானென்றும், செல்லும் வழியில் கவுந்தியடிகள் உறையூரில் அருகனைத் துதித்து வழிபட்டாரென்றும் அங்கு வான்வழியே வந்த சாரணர் கவுந்திக்கு ஊழ்வினைத் திறத்தையறிவுறுத் தினார்கள் என்றும், மதுரை நகரத்தே கோவலன் ஊழ்வினையால் கொல்லப்பட்டு இறந்த காலத்துக் கவுந்தியடிகள் உண்ணாநோன்போடு உயிர் துறந்தாரென்றும் அடிகள் விரித்துரைத்துள்ளார். சமணமும், புத்தமும் தமிழ்நாட்டில் தோன்றிய மதங்களல்ல. வைதிக நெறியிற் காணப்பட்ட வழுக்களை நீக்குதற்பொருட்டு வடநாட்டில் தோன்றிய இவ்விரு சமயங்களும் கடைச்சங்க காலத்தில் பிற்பகுதியிலே தமிழ் நாட்டிற் பரவத் தொடங்கின. பத்துப்பாட்டில் மதுரைக் காஞ்சியில்தான் முதன் முதலாக் சமண சமயத்தைப் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. அதனை யடுத்துச் சமண சமயத்தைப் பற்றி விரிவாகக் கூறுவது இச்சிலப்பதிகாரந்தான். எனவே, இந்நூல் தோன்றிய காலத்துச் சமணசமயம் சோழநாட்டிலும் பாண்டி நாட்டிலும் நிலைபெறத் தொடங்கிய முறையினையும் அச்சமயத்தார் மக்களிடையே பரப்பிய அருளற நெறியாகிய சீவகாருண்ணிய ஒழுக்கம் ஊழ்வினை யுருவெடுத்து ஊட்டும் முறையாகிய அவர்தம் சமய உண்மைகளையும் கவுந்தியடிகள் வாழ்க்கை முறையிலும் கோவலன் கண்ணகி வாழ்க்கை முறைகளிலும் வைத்து இளங்கோவடிகள் உணர்த்துதலை நோக்குங்கால் அடிகள் சமண சமயச் சீலங்களிலே கொண்டுள்ள பெருமதிப்பு நன்கு விளங்கும். சமண சமயம் பற்றிய கருத்துக்களை விரித்துரைத்தாற் போலப் புத்த சமயக் கருத்துக்களைச் சிலப்பதிகாரம் விரித்துரையாமையை நினைக்குங்கால் இளங்கோவடிகள் காலத்துப் புத்த சமயம் தமிழகத்தில் நன்றாக வேரூன்றவில்லையென்பது விளங்கும். கோவலன் தீ வினையாற் கொல்லப்பட்டு இறந்த கடுந்துயர் கேட்டுத் துயரமுற்றவர்களுள் கோவலன் தந்தை மாசாத்துவான் என்பான், தன் பெரும்பொருளைத் தானம் செய்து விட்டு இந்திரவிகாரமாகிய புத்தர் கோயிலை வணங்கித் துறவு மேற்கொண்டான் என்றும், கண்ணகியின் தந்தையாகிய மாநாய்கன் என்பான், தன் பொருளைத் தானம் செய்துவிட்டுச் சமண சமயத்தின் பகுதியாகிய ஆசீவக சமயத்தைச் சார்ந்து துறவு மேற்கொண்டான் என்றும் சிலப்பதிகாரம் கூறும். இக்குறிப்புக்களால் சமண புத்த சமயங்கள் தமிழ்நாட்டில் பரவி நிலைபெறத் தொடங்கிய காலம் இளங்கோவடிகள் வாழ்ந்த காலமேயென்பது நன்கு தெளியப்படும். சமண சமயத்தார் தமிழ் நாட்டில் தங்கள் சமயத்தைப் பரப்ப நேர்ந்த பொழுது அவர்கள் வருவதற்கு முன் இத்தமிழ் நாட்டிலே குடிபுகுந்து வேதநெறியைப் பரப்பிய வைதிகர் கொள்கையைச் சமயம் நேர்ந்த பொழுதெல்லாம் மறுத்துரைக்கத் தவறியதில்லை. இச்செய்தி கவுந்தியடிகள் மாங்காட்டு மறையொனை நோக்கி அவன் கூறிய தீர்த்தச் சிறப்பையும் தெய்வ வழிபாட்டையும் வன்கண்மையாக மறுத்துரைத்தமையாற் புலனாகும். இவ்வாறு வேதநெறிக்குத் தடையான புறச்சமயங்கள் தலையெடுத்த இக்காலத்தே வைதிக நெறியைப் பேணுதலையே தொழிலாகவுடைய வேதியர்கள் சோம்பியிருந்துவிடவில்லை. அவர்கள், வட இமயம் முதல் தென் குமரி வரை தீர்த்த யாத்திரை சென்று நாட்டு மக்களையும் நாடாள் வேந்தரையும் கண்டு வேத நெறியினை விரித்துரைத்து அவர்களால் பெரிதும் ஆதரிக்கப்பெற்றுத் தமக்குரிய வேத வேள்விகளையும் நெகிழ விடாது நிலை நாட்டியுள்ளார்கள. இச்செய்தியினை மாடலன், மாங்காட்டு மறையோன், பராசுரன் என்னும் மறையவர்களின் செயல் மூலமாக இளங்கோவடிகள் தம் நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இந்த நாட்டில் புதிய புதிய சமயங்களை வரவேற்று ஆதரிக்கும் மக்களுக்குள் வணிகர் முதலிடம் பெற்றுள்ளனர். அவர்கள் கடல் கடந்து வெளி நாடெங்கும் சென்ற பல சமய மக்களோடும் அளவளாவி அவர்களோடு கொண்டும் கொடுத்தும் வாணிகம் செய்யும் இயல்புடையோராதலின் அவர்கள் எல்லாச் சமயங்களையும் ஆதரிக்குமுகத்தால் அவ்வச் சமய மக்களுடன் அன்பினாற் கலந்து உறாவடியுள்ளனர். இச்செய்தியைக் காவிரிப்பூம் பட்டினத்து வணிகனாகிய கோவலன் குடும்பத்தில் வைத்து இளங்கோவடிகள் தெளிவுபடுத்து கின்றார். கோவலன், பெயரால் திருமால் சமயத்தவன். கொள்கையால் சாவகநோன்பி (சமணரில் இல்லறத்தான்). வேதியர்களுக்குப் பொன்னும் பொருளும் தந்து ஆதரித்தமையால் வைதிக சமயத்தில் ஈடுபாடுடையவய்த் தோன்றுகின்றான். கொற்றவை மந்திரத்தைச் செபிக்கும் இயல்பினால் சிவசமயத் தொடர்புடையவனாகக் காணப்படுகின்றான். கோவலன் கொலையுண்டமைக்கு ஆற்றாது கண்ணகியின் தந்தை மாநாய்கன் ஆசீவகமாகிய சமண சமயத்தைச் சார்கின்றான். கோவலன் தந்தை மாசாத்துவான் புத்த சமயத்தைச் சார்கின்றான். கோவலன் காதற்கிழத்தியாகிய மாதவியும் அவள் மகள் மணிமேகலையும் புத்த சமயத்தைச் சார்கின்றனர். இச்செய்திகள் யாவும் வணிக குடும்பத்தில் அக்காலத்தமைந்த சமயவுரிமையை நன்கு புலப் படுத்துகின்றன. இவ்வாறு தமிழகத்தே பல்வகைச் சமயங்கள் நிலவினவாயினும், தமிழ் வேந்தர்கள்மட்டும் பிறவாயாக்கைப் பெரியோனாகிய இறைவனை வழிபடும் உறுதியில் தவறாது. ஏனைச் சமயங்களையும் நடுநிலையில் நின்று ஆதரித்து வந்துள்ளார்கள். ஆனேறுயர்த்தோன் அருளால் சேரர் குடியில் தோன்றிய செங்குட்டுவனுக்குத் தம்பியாகிய இளங்கோவடிகள் தம் தெய்வக் கொள்கையில் சிறிதும் பிறழாத உள்ளமுடையவராய்ச் சமயவாதிகள் கருத்தின்வரிச் செல்லாது தம் காலத்தே நிலவிய உலகியல் வாழ்க்கையை உள்ளவாறு எடுத்துரைத்துள்ளார். அதனால் எல்லாச் சமயத்தவராலும் தம் தம் சமயத்தவரெனப் பாராட்டிப் போற்றும் ஆசிரியர் திருவள்ளுவரைப் போன்று சமயப் பொது நோக்குடையவராகத் திகழ்கின்றார். அரச நீதியில் தவறியவர்களை அறக்கடவுள் வருத்து மென்பதும், புகழமைந்த பத்தினிப் பெண்களை மக்களேயன்றித் தேவரும் போற்றுவர் என்பதும், ஒருவன் ஒரு பிறப்பிற் செய்த வினைப்பயன் அவனை நிழல் போல் தொடர்ந்து வந்த மறுபிறவியிலும் வருத்துமென்பதும் ஆகிய இம்மூன்று உண்மைகளையும் கருவாகக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூலின் உறுதிப் பொருளாகிய இம்மூன்று பொருள்களிலும் புகழமைந்த பத்தினியை மக்களே யன்றித் தேவரும் போற்றுவர் என்ற கருத்தே நடுநாயகமாக ஆசிரியரால் எடுத்துரைக்கப் பெறுகிறது. எனவே பத்தினிப் பெண்டிரைத் தம் தெய்வமாகக் கொண்டு வழிபடும் வழிபாட்டு முறையினைப் பரப்புதற்குத் தோன்றிய நூலே இச்சிலப்பதிகாரம் என்பது பெறப்படும். மதுரை நகரத்திற்குப் புறப்பட்டுச் செல்லும் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் வேட்டுவர் வாழும் சிற்றூரிலே கொற்றவை கோயிலில் தங்கியிருக்கிறார்கள். அப்பொழுது அவ்வூரில் கொற்றவைக்குத் திருவிழா நடைபெறுகிறது. அவ்விழாவிலே கொற்றவை கோலங்கொண்டு நின்ற வேட்டுவப் பெண்ணாகிய சாலினியின்மேல் அத்தெய்வம் ஆவேசித்து, மலர் போலும் பாதங்கள் வழிநடையால் தளர்ந்து வருந்த, அவ்வருத்தம் தீரும்படிக் கணவனுடனே இருந்த கண்ணகியைப்பார்த்து, இங்கிருக்கின்ற இவள் கொங்குநாட்டினை ஆளும் செல்வி; குடநாட்டினை ஆளும் பாவை; தென்றமிழ் நாடாகிய பெண் செய்த தவப்பயனால் முளைத்த கொழுந்து போல்வாள். இவ்வுலகிற்கு முழு மாணிக்கம் போன்று, உயர்ச்சி பெற்ற பெண்ணுருக் கொண்டதோர் திருமணி எனப் பாராட்டிப் போற்றுகின்றது. கணவனே டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்ததவக் கொழுந்து ஒருமா மணியா யுலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்ப எனவரும் தொடரில் தெய்வத்தால் போற்றப்படும் சிறப்பு கண்ணகியார்பால் அமைந்திருத்தலை அடிகள் விளக்கினமை காணலாம். வீட்டைவிட்டுப் புறப்படாத மெல்லிய இயல்பினையுடைய கண்ணகியார், தம் கணவன் கோவலனோடு மதுரைக்குச் சென்ற காலத்து, ஞாயிற்றின் கொடிய வெம்மையினால் துன்முற்ற தம் கணவன் பொருட்டுத் தாம் கண்டார் நடுங்கத் தக்க துன்பத்தை யடைந்து, நாப்புலர வாட்டமுற்று வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் நினையாது மகளிர்க்கு இன்றியமையாத கற்பாகிய கடமையினை மேற்கொண்டதிறத்தை, அவர்களுடன் துணையாக வந்த சமயணத் துறவியாராகிய கவுந்தியடிகள் நேரிற் கண்டவராதலின், கற்புக்கடம் பூண்ட இக்கண்ணகியாகிய தெய்வத்தைத் தவிர வேறு தெய்வத்தைத் தாம் காணாமையினை மாதிரியாகிய ஆயர்மகளிடம் எடுத்துரைக் கின்றார். அப்பகுதி, என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மக ளறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் தன்றுயர் காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக் கற்புக் கடம்பூண்டஇத் தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால் என்பதாகும். இதனால் துறவிகளாலும் போற்றத்தகும் சிறப்பு கற்புடைத் தெய்வமாகிய கண்ணகியின்பால் அமைந்த இயல்பினை அடிகள் நன்கு விளக்கினமை காணலாம். பிறதெய்வம் தொழாது தன் தெய்வமாகிய கணவனையே தொழுது துயிலெழும் இயல்புடைய கற்புடைய மகள் பெய்யென்று சொல்லிய அளவிலே மழை பெய்யும் என்பதையும், இங்ஙனம் கணவனைப் பேணி வழிபடும் மகளிர் இவ்வியல்பினைத் தமக்குரிய கடமையாகப் பெறுவராயின், அவர்கள் தேவர்கள் வாழும் உலகிலே அவர்களாற் பாராட்டிப் போற்றப் பெறுவார்கள் என்பதனையும், தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (திருக். 55) பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு (திருக். 58) எனவரும் குறள்களால் தெய்வப்புலவர் அறிவுறுத்துகின்றார். திருவள்ளுவர், வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்திற் கூறிய கற்பென்னும் திண்மையுடைய மகளிர்க்குரிய நற்குண நற்செய்கைகள் யாவும் கண்ணகியார்பால் நன்கமைந்த திறத்தைச் சிலப்பதிகாரம் பலவிடங்களிலும் விரித்துரைக்கின்றது. தேவந்தியென்னும் பார்ப்பனத் தோழி கணவனைப் பிரிந்து வருந்திய கண்ணகியை அடைந்து, சோமகுண்டம் சூரியகுண்டம் என்னும் தீர்த்தங்களில் மூழ்கிக் காமவேள் கோயிலைத் தொழுதவர்கள் இப்பிறப்பில் தம் கணவரோடு பிரியா வாழ்க்கையைப் பெறுவதோடு மறுபிறப்பிற் போக பூமியிலும் போய் இன்புறுவார்கள். ஆதலால் நாம் ஒருநாள் அத்தீர்த்தங்களில் ஆடுவோம் என்று கூற அது கேட்ட கண்ணகியார், அது பெருமையுடைய செயலன்று என மறுத்துக் கூறுகின்றார். இவ்வாறு கண்ணகியார் தம் கணவனைத் தவிர வேறு தெய்வம் தொழா உள்ளத்து உறுதியினால் அழற்கடவுளும், மதுராபதியும், வானோரும் வணங்கும் சிறப்புற்ற திறத்தை, தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதாற் - றெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய் கண்ணகி விண்ணகமா தர்க்கு விருந்து (கட்டுரை காதை) என்னும் வெண்பாவினால் அடிகள் வற்புறுத்துரைக்கின்றார். தம்நாட்டின் வளர்ச்சி குறித்தும் தம்மையாதரித்த வேந்தர்க்குச் செஞ்சோற்றுக் கடன் கழித்தற் பொருட்டும் போர்க்களத்தே பகைவரொடு பொருது வெற்றி தந்து உயிர் துறந்த தறுகண் வீரர்களின் புகழைக் கல்லிலே எழுதி, அக்கல்லை நட்டுத் தெய்வமாக வழிபடும் வழக்கம் நம் தமிழ்நாட்டில் தொல்காப்பியர் காலத்திற்கு முற்பட்டு நிலவிரும் பழைய வழக்கமாகும். இத்தகைய நடுகல் வழிபாடு சங்கத்தொகை நூல்களிற் பலவிடங்களிலும் குறிப்பிடப்படுகின்றது. போர்க்களத்தில் இறந்த வீரரைத் தெய்வமாக நிறுத்தற்குரிய கல்லினைக் காணுதலும், அவ்வாறு காணப்பட்ட கல்லைக் கொள்ளுதலும், அதனை நீரில் அமிழ்த்தித் தூய்மை செய்தலும், அதனைக் குறித்த இடத்தில் நடுதலும், அவ்வாறு நாட்டிய கல்லிற்குக் கோயிலெடுத்துப் படைத்து வணங்குதலும், அக்கல்லில் உறையுந் தெய்வத்தின் புகழ் கூறி வாழ்த்துதலும் என ஆறு பகுதியாக இவ்வீரர் வழிபாடு நிகழுமென்பதனை, காட்சி கால்கோல் நீர்ப்படை நடுதல் சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தலென்று இருமூன்று மரபிற் கல் எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் அறியலாம். இவ்வாறு தறுகண்மை மிக்க வீரர்களுக்குச் செய்யும் இவ்வழிபாட்டினைக் கற்பென்னும் திண்மையால் மன்னவன் முன் வழக்குரைத்து வென்று கணவற்குற்ற பழிதுடைத்து மதுரையைத் தீக்கிரையாக்கிய வீரபத்தினியாகிய கண்ணகியார்க்கும் செய்ய வேண்டுமென எண்ணியவர்கள் சேரவேந்தனாகிய செங்குட்டுவனும் அவன் மனைவி வேண்மாளுமாவார். அவர்களது நல்லுளத்தால் தொடங்கிய இப் பத்தினி வழிபாடு சேரநாட்டிலேயன்றித் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மாளுவ நாட்டிலும் கடல்சூழ்ந்த இலங்கையிலும் பரவி நிலைபெற்ற வரலாற்றினை இளங்கோவடிகள் தம் நூலில் திறம்பட விளக்குகின்றார். இதுகாறும் கூறியவற்றால் கற்புடையமகளிரைத் தெய்வமாக எண்ணிக் கோயிலெடுத்து வழிபடும் வழக்கம் இளங்கோவடிகள் காலத்திலேதான் சிறப்பு முறையில் நிலைநாட்டப்பட்டதென்பதும், கண்ணகியார்க்குக் கற்கோயில் அமைந்த செங்குட்டுவனாகிய தம் தமையன் கருத்தினைப் பின்பற்றி அவ்வம்மையார்க்குச் சொற்கோயிலமைத்த வழிபட்டவர் இளங்கோவடிகள் என்பதும் நன்கு விளங்கும். அடிகள் தாம் சொல்லக் கருதிய பொருளைக் கற்போர் மனத்தில் நன்கு பதியச் செய்தல் வேண்டிக் கூறிய தெய்வத்தின் ஆவேச மொழிகளும் தெய்வத் தோற்றங்களும் பண்டைப்பிறப்பின் நிகழ்ச்சிகளும் அற்புதங்கள் சிலவும் இளங்கோவடிகள் காலத்தும் மக்களிடையே நிலை பெற்றிருந்த தெய்வ ஆவேசத்தின் நம்பிக்கையைப் புலப்படுத்துவனவாகும். தீக்கடவுள் பார்ப்பனக்கோலத்துடன் கண்ணகி முன் தோன்றினான் எனவும், பார்ப்பனப்பூதம், அரசபூதம், வணிகப்பூதம், வேளாண்பூதம் ஆகிய நால்வகை வருணப் பூதங்களும் மதுரை நகரத்தே இருந்தன எனவும், வணிகரை மன்னர் பின்னோர் எனவும் சிலப்பதிகாரம் குறிப்பிடுதலால், அக்காலத்து வேதநெறியைப் பின்பற்றிய நால்வகைச் சாதி வேறுபாடு இந்தமிழகத்தே புகுந்து நிலைபெறத் தொடங்கினமை நன்கு புலனாம். மேற்குறித்த நால்வகைப் பூதங்களைப் பற்றிக் கூறிய வருணனைப் பகுதிகள் சிலப்பதிகார ஏடுகள் எல்லாவற்றிலும் காணப்படவில்லை. கவுந்தியடிகள் மாதரியை நோக்கித் தானத்தின் பயனைப் கூறுமிடத்தும் மதுராபதி என்னும் தெய்வம் கண்ணகியின் முன்தோன்றிக் கோவலன் கொலையுண்டிறந்தமைக்குக் காரணமாகிய ஊழ்வினையை எடுத்துரைக்குமிடத்தும் மறுபிறப்பின் உண்மையினை இளங்கோ வடிகள் வற்புறுத்துகின்றார். மதுரை நகரில் காவற்றெய்வமாகிய மதுராபதியைக் கொற்றவையின் வடிவுடையவளாக இளங்கோவடிகள் புனைந்துரைக் கின்றார். இதனால் ஒவ்வோர் ஊருக்கும் காவல் தெய்வமாகக் கொற்றவையின் உருவில் ஊர்காவல் தெய்வத்தைத் தமிழ் மக்கள் போற்றி வழிபட்டு வரும் வழக்கம் நன்கு புலனாகின்றது. இக்காலத்தும் சிற்றூர்கள்தோறும் பிடாரி என்னும் எல்லைத்தெய்வம் வழிபடப் பெற்று வருகின்றமை இங்கு நினைத்தற்குரியதாகும். கோசல நாட்டு வேந்தனாகிய தயரதனும் அயோத்தி நகர மக்களும் அல்லலுற்று வருந்தத் திருமாலின் அவதாரமாகிய இராமபிரான் தம்பி இலக்குவனொடும் காட்டைந்ததும், சீதையைப் பிரிந்து வருந்தியதும், இராவணனது இலங்கையை அழித்ததும் ஆகிய இராமாயணக் கதையையும்; கண்ணன் பாண்டவர் பொருட்டுத் துரியோதனன்பால் தூது சென்றது, கதிரவனை ஆழியால் மறைத்தது முதலிய பாரதக் கதையினையும், நளன் சூதாடி ஆட்சியையிழந்து மனைவியைப் பிரிந்து துன்புற்ற கதையினையும் இளங்கோவடிகள் தாம் இயற்றிய காப்பித்தியத்திற் குறிப்பிடுதலால் வடமொழியிலுள்ள புராண இதிகாசங்கள் இளங்கோவடிகள் காலத்தில் தமிழகத்திற் பரவி எல்லோராலும் பயிலப் பெற்றமை நன்கு தெளியப்படும். காவிரிப்பூம்பட்டினத்தில் சோமகுண்டம் சூரிய குண்டம் என்ற தீர்த்தங்களும், திருமாலிருஞ்சோலையாகிய அழகர்மலையில், புண்ணிய சரவணம், பவகாரணி, இட்டசித்தி என்னும் பெயருடைய பொய்கைகளும் சிறந்த பயனளிப்பனவாகக் கூறப்படுதலாலும், பாவந்தீரக் குமரியாடுதலும் கங்கையாடுதலும் ஆகிய செய்தி குறிப்பிடப்படுதலாலும் கருதிய தலயாத்திரையும் சமய வொழுகலாற்றின் கூறுகளாக மக்களால் மேற்கொள்ளப்பெற்றன என்பது நன்கு புலனாகும். சமண சமயத்தினை மேற்கொண்ட கோவலன் தன் மகள் மணிமேகலைக்குப் பெயரிடும் நாளில் தானம்வாங்க வந்து தெருவே மதயானையால் வருத்தமுற்ற அந்தணனை யானையின் பிணிப்பினின்றும் மீட்டுக் காப்பாற்றிப் பொருள் அளித்தமையும் அறியாமையால் கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியின் பாவத்திற்குக் கழுவாய் செய்யப் பொருள் அளித்தமையும், செங்குட்டுவன் என்னும் வேந்தன் மாடல மறையோனுக்குத் தன் நிறையளவாகிய பொன்னினைத் தானமாகக் கொடுத்தலும் அக்காலத்துப் பொது மக்களும் வேந்தர்களும் நான்மறைவல்ல வேதியர்களை நன்கு மதித்துச் சிறப்பாக ஆதரித்தனர் என்பதனை நன்கு புலப்படுத்து வனவாகும். மண்ணுலக வேந்தன் முசுகுந்தன் பொருட்டு வானோர் தலைவன் இந்திரனால் அனுப்பப்பட்ட பூதம் காவிரிப்பூம் பட்டினத்தில் கோயில் கொண்டிருத்தலும், அப்பூதம் தீமைசெய்தோரை ஒறுத்துலும், மயன் என்னும் தெய்வத்தச்சன் மன்னர்க்குப் பட்டி மண்டபம் முதலிய நிருமித்துக் கொடுத்தலும், இந்திர விழாவைக் காண வித்தியாதரர்களும் தேவர்களும் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்துபோதலும், அந்நகரத்திலுள்ள ஐவகை மன்றங்கள் தெய்வச் சிறப்புடையவாகத் திகழ்வதலும் ஆகிய வியப்புடைய செய்திகளை இளங்கோவடிகள் தமது காப்பியத்திற் குறித்துள்ளார். இவற்றால் அக்கால மாந்தர்களுக்குத் தெய்வச் செயல்களில் நிரம்பிய ஈடுபாடுண்மையை இளங்கோவடிகள் விளக்கினாராவர். இளங்கோவடிகள் காலத்தே சிவன், திருமால், முருகன், கண்ணன், பலதேவன், அருகன், புத்தன் முதலிய தெய்வங்கள் பலவற்றுக்கும் நகர்தோறும் பெருங்கோயில் அமைத்து வழிபடும் வழக்கம் நிலைபெற்றிருந்தமை சிலப்பதிகாரத்தால் நன்குணரப்படும் இக்கோயில்கள் எல்லாவற்றுள்ளும் தலைமையும் சிறப்பும் உடையதாய் விளங்கியது சிவபெருமான் திருக்கோயிலே என்பதனை, பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும் என்று முதற்கண் வைத்துக் கூறுதலால் உய்த்துணரப்படும். வம்பப் பரத்தனும் பரத்தையும் கூடி எள்ளி நகையாடிய நிலையில் சமணத் துறவியாகிய கவுந்தியடிகள் அவ்விருவரையும் நரியாகித் திரியும்படி சபிக்கின்றார். அச்சாபம் பெற்ற இருவரும் நரியாகிக் கூக்குரலிடுகின்றனர். இச்செய்தியால் தவறு செய்தோரைச் சபிக்க வல்ல துறவிகளின் பேராற்றல் புலப்படுத்தப்படுகின்றது. திங்கட் குலத்தவராகிய பாண்டியர்கள் மறைமுது முதல்வனாகிய சிவபெருமானது திருவருள் வழியில் வந்தவர்கள் என்பது, மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறையுயர் பொதியிற் பொருப்பன் எனவரும் தொடரால் உய்த்துணரப்படும். இத்தொடர்பு, தென்னவற் பெயரிய துன்னருந்துப்பிற் றொன்முது கடவுட் பின்னர்மேய வரைத்தாழருவிப் பொருப்பிற் பொருந (மதுரைக்) எனவரும் மதுரைக்காஞ்சியிற் கூறப்பட்டமை முன்னர்க் குறிக்கப்பட்டது. வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்க ணாயிரத்தோன் திறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென் றிடியுடைப் பெருமழை எய்தாது ஏகப் பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்க (சிலப். காடுகாண். 18-29) என்று கூறி மாங்காட்டு மறையோன் பாண்டியனை வாழ்த்து கின்றான். இவ்வாழ்த்தின்கண், திங்கட் குலத்தினனாகிய பாண்டியன் முன்னொரு காலத்தில் வேலால் கடலை வென்றதும், ஆயிரங் கண்ணானாகிய இந்திரன் வஞ்சனையால் அணிவித்த பெரிய ஆரத்தினைத் தாங்கிய பெருமையும், வளையினால் எறிந்து இந்திரனுடைய மணி மடியை வீழ்த்தியதும், பாண்டியனுக்குத் தோற்ற இந்திரன் தன் ஊர்தியாகிய மேகத்தைப் பாண்டிய நாட்டிற் பெய்யாதபடி தடுத்தலும், அந்நிலையிற் பாண்டியன் மேகத்தை விலங்கிட்டுச் சிறையிலடைத்ததும் ஆகிய செய்திகள் குறிக்கப் பெற்றுள்ளன. பழைய வரலாறுகளாகிய இவையனைத்தும் திருவிளையாடற் புராணத்தில் இடம்பெற்றுள்ளமை திங்கட்குலத்திற் பிறந்த பாண்டியர்கள் சிவபெருமானுடைய திருவருள் வழியில் வந்தவர்கள் என்னும் புராணத் தொடர்பினை வற்புறுத்தல் காணலாம். கண்ணகியார் பாண்டியன் அவையில் வழக்கு உரைக்குமிடத்துத் தான் பிறந்த சோழநாட்டினையாண்ட வேந்தர்களின் நீதிமுறையினை எடுத்துரைக்கும் நிலையில் சோழ மன்னன் தன்னை அடைக்கலம் புகுந்த புறாவினைக் காப்பாற்றுதற்பொருட்டும் அதனைத் துரத்திவந்த பருந்தின் பசியினைத் தீர்த்தற்பொருட்டும் தன்னுடம்பின் தசையினை அரிந்து கொடுத்த இரக்கச் செயலையும், தன்மகனது தேர்க்காலில் அரைபட்டிறந்த இளங்கன்றின் பிரிவாற்றாது கண்ணீர்விட்டுக் கதறிய தாய்ப்பசுவின் துயரத்தைக் கண்டு பொறாது, தன்னுடைய ஒருமைந்தனையே தேர்க்காலிற் கிடத்தி முறைசெய்த சோழமன்னனது நீதிமுறையையும் பாராட்டிக் கூறுவதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இவ்வாறே தம் குடியிற் பழையோராகிய சேரமன்னர் புகழ் பெற்ற செய்திகளையும் இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். வேண்டுதல் வேண்டாமையிலாத அரசத்துறவி இளங்கோ வடிகள் அவர் தம் காலத்தில் தமிழகத்தில் நிலவிய பல சமயச் சார்புடைய தெய்வவழிபாட்டு முறைகளையெல்லாம் தாம் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்தில் நடு நிலை பிறழாமல் எடுத்துரைத்துள்ளார். எனவே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகிய இளங்கோவடிகளால் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரம் அவர்காலத் தமிழ்நாட்டின் சமய நிலையை உள்ளவாறு உணர்தற்குத் துணைபுரியும் எனக் கொள்ளலாம். 7. மணிமேகலையிற் காணப்படும் தெய்வ வழிபாடுகளும் சிவநெறிக் கொள்கையும் முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரத்துடன் வரலாற்று நிகழ்ச்சியாலும் காப்பியத் தலைவர்களின் உறவாலும் இடவகையாலும் காலத்தாலும் மிக நெருங்கிய தொடர்புடையது, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை யென்னும் செந்தமிழ்க் காப்பியமாகும். சோழநாட்டின் கடற்றுறைப் பட்டினமாகிய புகார் நகரத்தில் மாசாத்துவான் என்னும் வணிகனுடைய மைந்தன் கோவலன் என்பானுக்கு, ஆடல் பாடல் அழகு என்னுந்திறத்தாற் சிறந்த நாடகக் கணிகைபாற் பிறந்த மகள் மணிமேகலை. இவள் தன் தந்தை கோவலன் மதுரையிற் கொலையுண்டிறந்த துயரச் செய்தி கேட்டு வருந்தித் தன் தாய் மாதவியுடன் புத்த சமயத்தைச் சார்ந்து இளம் பருவத்திலேயே துறவு பூண்ட வரலாற்றை விரித்துரைப்பது சாத்தனார் இயற்றிய செந்தமிழ்க் காப்பியமாதலின் இது மணிமேகலை துறவு என்னும் பெயருடைய தாயிற்று. மணிமேகலை துறவு என்னும் இப்பொருட்டொடர் நிலைச் செய்யுள் பரந்த மொழியால் அடிநிமிர்ந்தொழுகிய தோல் என்னும் வனப்பினையுடையது. முப்பது அகவற்பாக்களால் இயன்றது, ஒவ்வோர் அகவலும் னகரமெய்யீற்றால் முடிதலின் இயைபு எனப்படும் வனப்புக்கு இக்காப்பியம் இலக்கியமாக அமைந்துள்ளது. கோவலன் மகள் மணிமேகலையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு அவளது வரலாற்றின் வழிப் புத்தசமய நல்லறங்களையும் ஒழுகலாறுகளையும் புத்த சமயத் தத்துவங்களையும் விரித்து விளக்கும் புத்த சமயக் காப்பியமாகவே சாத்தனார் இதனை இயற்றியுள்ளார். இக் காப்பிய நிகழ்ச்சிகளிற் பெரும்பாலன தமிழகத்திற் சோணாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்திலும் சேரர்க்குரிய வஞ்சி நகரத்திலும் சோழர்க்குரிய காஞ்சியிலும் நிகழ்ந்தன. ஆதலின் மணிமேகலை பிறந்து வளர்ந்து துறவடைந்த தமிழகத்தைச் சொல்லோவியஞ் செய்து காட்டும் முறையில் தமிழகத்தில் நிலவிய பல்வேறு தெய்வ வழிபாடுகளையும் தம் காலத்தில் வாழ்ந்த பல்வேறு சமய வாதிகளையும் தம் காப்பியத்திற் குறித்துச் செல்லுதல் இக்காப்பிய ஆசிரியராகிய சாத்தனாரது கடமையாயிற்று. அம்முறையில் இக் காப்பியத்தில் சிவன், முருகன், திருமால், குமரி, கொற்றவை, இந்திரன் முதலிய தொன்மைத் தெய்வ வழிபாடுகளும், மணிமேகலா தெய்வம், சதுக்கப்பூதம், சம்பாபதி, சிந்தா தேவி, தீவதிலகை, கந்திற்பாவை முதலிய பிற தெய்வங்களின் வழிபாடுகளும் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தில் நெடுங்காலமாக நிலவிவரும் சைவம் வைணவம் ஆகிய தொன்மைச் சமய நூல்களை விரித்துரைக்கும் சைவ வைணவ சமயவாதிகளுடன் வேத நெறியினைப் பின்பற்றியொழுகும் அளவைவாதி, பிரமவாதி ஆகியோர் கொள்கைகளும் தெய்வங் கொள்கையினை யுடன்படாத ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதியென்னும் ஐவகைச் சமயவாதிகளின் தத்துவக் கொள்கைகளும் பிறர் மதங்களைப் பூர்வ பக்கமாக எடுத்துரைக்கும் முறையில் இக்காப்பியத்தில் மணிமேகலை சமயக்கணக்கர் தம் திறங்கேட்ட காதையில் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. பிறர் மதம் களைந்து தம் மதத்தினை (புத்த சமயத் தத்துவத்தினை) நிறுவும் நிலையில் அமைந்தது, மணிமேகலை தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதையாகும். இதன்கண் பௌத்த சமயத்தார் தம் கொள்கையினை நிறுவுதற்கு மேற்கொண்ட தருக்கநெறி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. பௌத்த சமய வுண்மைகளைத் தெளிவாக விளக்கும் முறையில் அமைந்தது இக் காப்பியத்தின் இறுதிக் கண்ணதாகிய பவத்திறமறு கெனப்பாவை நோற்ற காதையாகும். மணிமேகலைக் காலத்துச் சமயவாதிகள் மெய்ப்பொருள்களையுணர்த்துவனவாகிய நூல்கள், உலகியல், தத்துவம், முத்தி நிலை என்னும் இத்திறங்களைத் தங்கள் தங்கள் இயல்பினால் எடுத்துக்காட்டி மக்களை நன்னெறிப் படுத்தவல்ல சமயக்கணக்கராகிய சான்றோர்கள் காவிரிப்பூம்பட்டினம் முதலிய தமிழகத் தலைநகரங்களில் நிகழும் இந்திரவிழா முதலிய தமிழகத் தலைநகரங்களில் நிகழும் இந்திரவிழா முதலிய திருவிழா நிகழ்ச்சிகளிற் கலந்து கொண்டு அறிஞர் பலரும் குழுமிய பட்டி மண்டபத்தில் அமர்ந்து தத்தம் சமயவுண்மைகளைப் பலரும் தெளிவாக உணர்ந்து கொள்ளும்படி விளங்க விரித்துரைத்தனர். இச்செய்தி, மெய்த்திறம், வழக்கு, நன்பொருள், வீடுஎனும் இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும் சமயக் கணக்கரும் (மணிமேகலை, விழாவறைகாதை, 11-13) எனவும், ஒட்டிய சமயத்துறு பொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்கறிந் தேறுமின் (மேலது, 60-61) எனவும் வரும் மணிமேகலைத் தொடர்களால் இனிது புலனாம். தமிழகத்திற் சிவவழிபாட்டின் முதன்மை சங்க காலத்தில தமிழகத்தில் நிலவிய தெய்வ வழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் தலைமையும் சிறப்பும் வாய்ந்தது சிவவழிபாடு ஒன்றுமே என்பது முன்னர் விளக்கப் பெற்றது.சிலப்பதிகாரம் மணிமேகலை தோன்றிய காப்பிய காலத்தும் இந்நிலை தொடர்ந்து வந்துளது. இந்திர விழாவினைப் புகார் நகரமக்களுக்கு முரசறைந்து அறிவிக்கும் முரசறைவோன் கூறுவதாக அமைந்தது, நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக வேறுவேறு சிறப்பின் வேறு வேறு செய்வினை ஆறறிமரபின் அறிந்தோர் செய்யுமின் (மணிமேகலை 1. 54-57) எனவரும் விழாவறை காதைத் தொடராகும். (மலைமகளா ராகிய உமாதேவியார் கண்புதைத்து விளையாடிய பொழுது உலகெலாம் இருள் மூடிய நிலையில்) நெற்றியிலே புறப்பட்டுத் தோன்றிய நெற்றிக் கண்ணினையுடைய சிவபெருமான் முதலாகக் காவிரிப் பூம்பட்டினத்திலுள்ள சதுக்கப்பூதம் இறுதியாக வேறு வேறு விழச் சிறப்பினையும் வேறு வேறு வழிபாட்டு முறையினையும் செய்யும் நெறியினையறிந்த பூசகர்கள் செய்வீர்களாக என்பது இத்தொடரின் பொருளாகும். எனவே இத்தொடர் மணிமேகலைக் காப்பியம் இயற்றப்பெற்ற காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் முதலாகத் தமிழகத்திலுள்ள பேரூர்களிலும் சிற்றூர்களிலும் நிலவிய தெய்வவழிபாடுகள் எல்லாவற்றுள்ளும் நுதல்விழி நாட்டத்து இறைவனாகிய சிவபெருமானைப் பரவிப் போற்றும் சிவவழிபாடே முதன்மை பெற்று விளங்கிய திறத்தை நன்கு புலப்படுத்துதல் காணலாம். மதுரை நகரத்திலேயமைந்துள்ள திருக்கோயில்களிற் காலைப் பொழுதில் வழிபாடு நிகழ்ந்த திறத்தைக் கூறும் இளங்கோவடிகள், நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச்சேவல் உயர்த்தோன் நியமமும் மேழிவலனுயர்ந்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற்கொடியோன் கோட்டமும் அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் காலைமுரசம் கனைகுரல் இயம்ப (சிலப். ஊர்காண் 7-12) என நுதல்விழிநாட்டத் திறையோனாகிய சிவபெருமான் திருக் கோயிலையே முதன்மையுடையதாகக் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தகுவதாகும். சாத்தனார் காலத் தமிழ் மக்களின் சமயப் பொதுநோக்கு தமிழகத்தில் வாழ்ந்த சமயவாதிகள் பலரும் தத்தம் சமய நுண்பொருள்களை உறுதிப்படுத்திக் கூறுந்திறத்தில் ஏனைய சமயவாதிகளுடன் உறழ்ந்து (வாதிட்டு) ஏதுவும் எடுத்துக்காட்டும் தந்து தத்தம் சமயமே அமைவுடையதாக நிலைநிறுத்தும் தருக்கநெறிமுறையும் சொல்வன்மையும் உடையவர்களாக விளங்கினார்கள் என்பதனையும் அன்னோர் பட்டிமண்பத்து ஏறியமர்ந்து பலவாறாக விரித்துக் கூறுவனவற்றையெல்லாம் அமைதியாகவிருந்து கேட்டு மகிழும் நிலையில், எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எனத் தெய்வப்புலவர் அறிவுறுத்திய வண்ணம் பல சமயத் தத்துவநுட்பங்களையும் இகலின்றிக் கேட்டுணரும் மெய்யுணர்வு வேட்கையுடையராய் விளங்கினார்கள் என்பதனையும் நன்கு புலப்படுத்தும் நிலையில் அமைந்தது, ஒட்டிய சமயத்துறு பொருள் வாதிகள் பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் பற்றாமாக்கள் தம்முடனாயினும் செற்றமுங்கலாமுஞ் செய்யாதகலுமின் (மணி. க. 90-93) எனவரும் விழாவறை காதைப் பகுதியாகும். மணிமேகலையாசிரியர் சாத்தனார் தம் காப்பியத்துள் புத்த சமய வுண்மைகளையே விரித்துரைக்கும் குறிக்கோள் உடையவராயினும் தமிழ் நாட்டு நிகழ்ச்சிகளையே கருவாகக் கொண்டு தம்மால் இயற்றப்பெறும் தமிழ்க்காப்பியம் தமிழகத்திற் பெரும்பான்மையினராகவுள்ள சைவர் வைணவர் முதலிய ஏனைச் சமயத்தோராலும் போற்றிப் பயிலப்பெறுதல் வேண்டும் என்னும் விருப்புடையராய்த் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கும் சிவன், திருமால், முருகன், நான்முகன், கொற்றவை, திருமகள், முதலிய தெய்வங்களைப் பற்றிய செய்திகளையும் வழிபாடுகளையும் ஆங்காங்கே குறித்துள்ளமை காணலாம். ஆலமர் செல்வன் மகன் (முருகன்) ஆலமரநிழலில் அமர்ந்திருந்து முனிவர்க்கு அருமறைப் பொருளை யறிவுறுத்திய முதல்வன் சிவபெருமான் என்பதும் அவ்விறைவனுக்கு மகனாகத் தோன்றியருளிவன் முருகப் பெருமான் என்பதும் முன்னர்க் கூறப்பட்டன. மணிமேகலையாசிரியர் சாத்தனாரும் இக் குறிப்பினைத் தம் காப்பியத்தில் எடுத்துரைத் துள்ளார். மணிமேகலையும் சுதமதியும் பூக்கொய்தற்பொருட்டு மலர்வனத்திற்குச் செல்லும்போது புகார் நகரவீதியிற் கண்ட நிகழ்ச்சிகளாகச் சிலவற்றை ஆசிரியர் புனைந்து கூறியுள்ளார் அவற்றுள் ஒன்று, தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரைப் பொலந்தேர் மீமிசைப் புகர்முக வேழத்து இலங்குதொடி நல்லார் சிலர்நின்றேற்றி ஆலமர் செல்வன் மகன் விழாக் கால்கோள் காண்மினோவென்று கண்டுநிற்குநரும் (மணிமேகலை 3. 141-145) என்பதாகும். மகளிர் சிலர் தளர்நடையினராய்ப் பொறுக்கலாற்றாத அணிகலன்கள் அணியப்பெற்ற இளம் புதல்வர்களைப் பொன்னாலி யன்ற தேர்மீதமைக்கப்பட்ட யானையின் மேல் அமரச்செய்து ஆலின் கீழமர்ந்த சிவபெருமானுக்கு மைந்தனாகிய முருகவேளின் விழாத் தொடங்கப் பெற்றதனைக் காண்பீராக என்று சொல்ல, அவ்வழகிய காட்சியை மற்றையோர் கண்டு மகிழ்ந்து நிற்குந் தோற்றத்தை இத்தொடர் புலப்படுத்துவதாகும். சிவபெருமான் ஆலநீழலில் அமர்ந்தருளி முனிவர் பெரு மக்களுக்கு அருமறைப் பொருள்களை உபதேசித்தருளிய தொன்மைச் செய்தியும் அம்முதல்வன் ஈன்ற மைந்தனாகிய முருகப் பெருமானுக்கு ஊர்தோறும் திருவிழா நிகழ்த்தும் வழக்கமும், அத்திருவிழா நாட்களில் முருகப்பெருமான் தேரிலும் யானையிலும் எழுந்தருளித் திருவுலாப்போதும் தெய்வக் காட்சியும் மேற்காட்டிய தொடரால் நன்கு புலனாதல் காணலாம். முருகப்பெருமானுக்குச் சிறப்பாகவுரியது கார் காலத்து மலரும் கடப்பமலர் மாலையாகும். இது காரலர் கடம்பன் (மணிமேகலை 4. 49) எனவரும் தொடராற் குறிக்கப்பட்டது. முருகப்பெருமான் கிரவுஞ்சம் என்னும் மலையுருக் கொண்டு உலகிற்கு இடர்விளைந்த அவுணனைத் தனது வேற்படையால் இருகூறாகப் பிளந்து கொன்றான் என்ற புராணச்செய்தி, குருகுபெயர்க் குன்றங்கொன்றோன் அன்னநின் முருகச் செல்வி (மணிமேகலை 13-14) எனவரும் தொடரிற் குறிக்கப்பட்டது. பொன்னணிநேமி வலங்கொள் சக்கரக்கை மன்னுயிர் முதல்வன் (மணி. க 57-58) என மணிமேகலை திருமாலைக் குறிப்பிடுகின்றது. பொன்னால் இயன்ற வட்டத்தினையுடைய சக்கரப் படையை வலப்பக்கத்தில் ஏந்தி மன்னுயிர்கட்கு இறைவனாகத் திகழ்வோன் திருமால் என்பது இத்தொடரின் பொருளாகும். திருமால் மாவலி என்னும் அவுணர்வேந்தன்பால் குறள் வடிவுகொண்டு மூவடிமண் வேண்டிப்பெற்று நெடியோனாய் நிமிர்ந்து மூவுலகையும் ஈரடியால் அளந்து கொண்ட புராணச்செய்தி, நெடியோன் குறளுருவாகி நிமிர்ந்துதன் அடியிற்படியை அடக்கிய அந்நாள் (மணி. 19. 52-52) எனவரும் தொடரில் விரித்துரைக்கப்பெற்றது. திருமால் அவதாரமாகிய கண்ணபிரானும் பலதேவரும் நப்பின்னையும் ஆகிய மூவரும் துவராபதியில் எருமன்றத்தே குரவைக் கூத்தாடிய திறத்தை, மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையிஃதாமென நோக்கியும் (மணி. க. 65-66) எனவரும் தொடரில் ஆசிரியர் புலப்படுத்தியுள்ளார். பசிய மூங்கிலும் வெண்பூக்களையுடைய கடம்பும் ஒருங்கே நின்றதோற்றமானது, பசுமைநிறம் வாய்ந்த திருமேனியையுடைய கண்ணபிரானும் வெள்ளை நிறம் வாய்ந்த திருமேனியையுடைய தமையனாகிய பலதேவரும் ஒருங்கு நின்ற தெய்வத்தோற்றத்தைப் புலப்படுத்துதலால் அதனைக் கைகூப்பி வணங்கியசெய்தி, பாசிலை செறிந்த பசுங்காற் கழையொடு வால்வீ செறிந்த மராஅங் கண்டு நெடியோன் முன்னொடு நின்றனனாம் எனத் தொடிசேர் செங்கையிற் றொழுது நின்றேத்தியும் (மணி. க. 75-78) எனவரும் தொடரிற் குறிக்கப்பெற்றது. திருமால் இராமனாக அவதரித்தபொழுது, கடல் சூழிலங்கை வேந்தனாகிய இராவணனைப் பொருது அழித்தல் வேண்டிக் குரங்குகளைக் கொண்டு மலைகளால் கடலில் அணை கட்டிய செய்தி, நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடலரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொணர்ந்தெறிந்த நெடுமலை யெல்லாம் அணங்குடை யரக்கர் வயிறுபுக்காங்கு (மணி. க. 8-11) எனவரும் தொடரில் உவமையாக எடுத்தாளப் பெற்றுள்ளமை காணலாம். மன்மருங்கறுத்த மழுவாள் நெடியோன் (மணி. 32-25) என்பதனாற் பரசுராம் அவதாரம் குறிக்கப்பட்டது. திருமகள் திருமாலின் தேவியாகிய திருமகள் தாமரை மலரில் வீற்றிருந்தருள்பவள் என்பதும் பொன்னிறத் திருமேனியினை யுடையவள் என்பதும், விரைமலர்த் தாமரையொரு தனியிருந்த திருவின் செய்யோள் போன்று (மணி. 16. 33-34) எனவும், பொன்னேரனையாய் (மணி. 2.16) எனவும் வரும் தொடர்களாற் புலனாம். வாணாசுரன் தன் மகள் உழை காரணமாக அநிருத்தனைச் சிறைப்படுத்திய நிலையில் அவனையழித்தற் பொருட்டுத் திருமால் மேற்கொண்ட போரில் திருமகள் அசுரர்கள் மயங்கி மூர்ச்சித்து விழும்படி கொல்லிப்பாவை வடிவு கொண்டு ஆடிய கூத்து பதினோராடல்களுள் ஒன்றாகிய பாவைக்கூத்தாகும். இதனை, திருவின் செய்யோள் ஆடிய பாவையும் (மணி.5. 4) என்ற தொடரால் ஆசிரியர் குறித்துள்ளார். திருமால் மகன் காமன் வாணாசுரனுடைய பேரூராகிய சோ என்னும் நகரத் தெருவில் நீன் நிலம் அளந்த திருமாலின் மகனாகிய காமன் ஆண்மை திரிந்த பெண்மைக் கோளமுடையனாய் அடிய ஆடல் பதினோராடல்களுள் ஒன்றாகிய பேடு என்னும் கூத்தாகும். வாணன் பேரூர் மறுகிடை நடந்து நீணில மளந்தோன் மகன் முன் ஆடிய பேடிக்கோலத்துப் பேடுகாண்குநரும் (மணி.3. 123-125) என மணிமேகலை மலர்வனம் புக்க காதையில் இக்கூத்துக் குறிப்பிடப்பெற்றுள்ளமை காணலாம். காமனுக்கு வானில் உலவும் தென்றற் காற்றாகிய தேரும் மீன்கொடியும் கரும்பு வில்லும் மலர்க்கணையும் உரியன என்பது, வான்தேர்ப்பாகனை மீன் திகழ்கொடியனைக் கருப்பு வில்லியையருப்புக்கணை மைந்தனை (மணி. 20,91-92) எனவரும் தொடரால் உணர்த்தப்பட்டது. திருமால் மகன் பிரமன் படைப்புக் கடவுளாகிய நான்முகனைத் திருமாலின் மகனெனவும் அவனருளிய நன்னூல் அருமறையெனவும் உணர்த்துவது, பொன்னணிநேமி வலங்கொள் சக்கரக்கை மன்னுயிர் முதல்மகன் எமக்கருளிய அருமறை நன்னூல் (மணி. 13. 57-59) எனவரும் மணிமேகலைத் தொடராகும். முதுமறை முதல்வன் என்பதும் நான்முகனுக்குரிய பெயர். தெய்வக்கருவும் திசைமுகக் கருவும் செம்மலர் முதியோன் செய்த அந்நாள் என மணிமேகலைப் பதிகம் கூறுதலாலும், ஊழிமுதல்வன் உயிர்தலின் அல்லது ஆழித்தாழியக வரைத்திரிவோர் தாந்தரின் யானுந்தருகுவன் (மணி. 6. 172-174) எனச் சம்பாதி கூறுதலானும் படைப்புக் கடவுளாகிய பிரமனைக் கடவுளாக வேதவாதிகள் உடன் பட்டுரைக்குமாறு போன்று புத்தர்களும் உடன் பட்டுரைத்தல் காணலாம். குமரித்தெய்வம் குமரித்துரையில் கன்னியாகுமரி என்ற தெய்வம் பண்டுதொட்டு மக்களால் வழிபடப்பெற்று வருகின்றது. இவ்வழிபாடு மணிமேகலை காலத்திலும் தொடர்ந்து நிலை பெற்றிருந்தமையினை, குமரிபாதங்கொள்கையின் வணங்கி (மணி. 13. 74) எனவரும் தொடராற்புலனாம். கொற்றவை விந்தமலையில் வெற்றிவெல்போர்க் கொற்றவையாகிய துர்க்கைக்குக் கோயில் உண்டு என்பதும் அம்மலையைக் காக்கும் காவற்றெய்வமாகிய விந்தாகடிகை என்பவள் யாரேனும் அம்மலை மேலுள்ள கோயிலின்மேல் வான்வழியே சென்றால் வெகுண்டு அவர்களை இழுத்துத் தன் வயிற்றின் அகத்திடுவாள் என்பதும் அந்தரஞ் செல்வோர் அந்தரியிருந்த விந்தமால்வரை மீமிசைப்போகார் போவாருளரெனிற் பொங்கியசினத்தள் சாயையின் வாங்கித்தன் வயிற்றிடூஉம் விந்தங் காக்கும் விந்தா கடிகை (மணி.20. 116-120) எனவரும் மணிமேகலைப் பகுதியால் அறியப்படும். சக்கரவாளக் கோட்டத்தில் காடமர் செல்வியாகிய கொற்றவைக்குக் கோயிலமைந்திருந்ததென்பது, காடமர் செல்விகழி பெருங்கோட்டமும் என்ற தொடராற் புலனாகும். சிந்தாதேவி பாண்டிய நாட்டு மதுரையம்பதியில் சிந்தாதேவியாகிய கலைமகளுக்குக் கோயில் இருந்ததென்பதும், அங்கு எழுந்தருளிய சிந்தாதேவி என்றும் நாடுவறங்கூரினும் வறுமையடையாது உணவளிக்கும் பிச்சைப் பாத்திரத்தைத் தந்தருளியதென்பதும் மணிமேகலை ஆபுத்திரன்திறம் அறிவித்த காதையாலும் பாத்திரமரபு கூறிய காதையாலும் புலனாம். சிந்தாதேவி செழுங்கலை நியமித்து, நந்தா விளக்கே நாமிசைப்பாவாய், வானோர் தலைவி மண்ணோர் முதல்வி என அத்தெய்வத்தை ஆபுத்திரன் போற்றுதலால் வேதநெறியாளர் போற்றும் நாமகளாகிய சரசுவதியே இங்குச் சிந்தாதேவி என்ற பெயராற் போற்றப்பெறுகின்றாள் எனக் கருத வேண்டியுள்ளது. மணிமேகலை கேட்டறிந்த சமயக் கொள்கைகள் வேற்றுருக் கொண்டு வஞ்சி நகரத்தையடைந்த மணிமேகலை அந்நகரத்தில் வாழும் சமய வாதிகள் பலருடைய தத்துவக் கொள்கைகளையும் தெரிந்துகொள்ள விரும்பி அவர்களுள்ளே வைதிகநெறியைச் சார்ந்த அளவை வாதியைக் கண்டு நினது கொள்கை யாது? சொல்லுக என வினவுகின்றாள். அவன் தனது கோட்பாட்டைக் கூறக் கேட்ட பின் முறையே சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி ஆகியவர்களையடைந்து அன்னோர் தம் சமயக் கொள்கைகளை முறையே கூறக்கேட்டு மெய்த்திறம, வழக்கு என்னும் எத்திறத்திலும் இவர்களது உரை பொருந்தாது என்று எண்ணி அவர்களை விட்டு நீங்கிப் பின்பு ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி என்போரை யணுகி வினவி ஐவகைச் சமயங்களையும் அறிந்து கொண்டனள் எனச் சாத்தனார் கூறுகின்றார். எனவே வைதிகநெறியினையும் கடவுட் கொள்கையையும் ஏற்கும் விருப்பின்றி வேதநெறியொடு மாறுபட்டனவும் கடவுட் கொள்கையில்லாதனவும் புத்த சமயத்தோடு உடன் எண்ணப்படுவனவுமாகிய புறச்சமயங்களைப் பற்றிய விளக்கமே சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் விரிவாக இடம் பெற்றுள்ளன என்பதும் தெய்வங்கொள்கை யினையுடைய சைவம் வைணவம் முதலிய அகச் சமயம் பற்றிய தத்துவ விளக்கங்கள் இக்காதையில் ஓரளவே சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன என்பதும் இங்கு மனங் கொள்ளத்தக்கனவாகும். மணிமேகலையிற் காணப்படும் சைவவாதியின் கூற்று மணிமேகலை இறைவன் ஈசன் எனக்கூறிய சைவ வாதியை நேர்பட்டு, நின்னால் வழிபடப்பெறும் தெய்வம் எத்தன்மையது என வினவிய பொழுது, அதனைக் கேட் சைவவாதி தான் வழிபடும் சிவபரம்பொருளாகிய ஈசனது பொதுவியல்பினையும் சிறப்பியல்பாகிய உண்மை யிலக்கணத்தினையும் தொகுத்துக் கூறுவதாக அமைந்தது, இருசுடரோடு இயமானன் ஐம்பூதமென் றெட்டுவகையும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டிநிற்போனும் கலையுருவினோனும் படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும் தன்னில்வேறு தானொன்றில்லோனும் அன்னோன் இறைவனாகும் (மணி. 27. 89-95) எனவரும் பகுதியாகும். ஞாயிறு திங்கள் என்னும் கதிர்கள் இரண்டுடன் வேள்வித் தலைவனாகிய ஆன்மா, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்கள் ஆகிய எண்வகைப் பொருள்களிலும் தான் அவற்றின் உயிர் போன்று ஊடுருவிக் கலந்தும், அவையெல்லாவற்றுக்கும் தானே உடம்பாக அவற்றையெல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டு அவற்றின் மேற்பட விரிந்தும் பிரிவின்றி உலகுயர்களைப் பிணித்து நிற்பவனும், எல்லாக் கலைகளையும் தனது உருவாகயுடையவனும், உலகெலாம் படைத்து (மன்னுயிர்கட்கு இன்பம் விளைய) ஆடல் புரிந்தருளும் அருட்பண்பினையுடையவனும் உலகங்களை யெல்லாம் அழித்து ஒடுக்குந்திறத்தால் (உயிர்களின்) துயரத்தைத் தீர்த்தருளும் உயர்ச்சியையுடையவனும், தன்னையின்றித் தனித்து நிற்கும் பொருள் வேறொன்றும் இல்லை யென்னும்படி எல்லாப் பொருட்குஞ் சார்பாயுள்ளவனும் ஆகிய அத்தன்மையுடையவனே உலகுயிர்கட்கு இறைவனாவன் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும். சைவவாதியின் கூற்றில் இடம்பெற்றுள்ள சைவ சமய வுண்மைகள் சைவவாதியின் சமயக் கொள்கையினைக் குறிக்க எண்ணிய மணிமேகலையாசிரியர் சாத்தனார் இறைவன் ஈசன் என நின்ற சைவவாதி என அடை மொழி புணர்த்துக் கூறியுள்ளார் இறைவன் - உலகு உயிர்கள் ஆகிய எல்லாப் பொருள்களிலும் நீக்கமின்றி நிலைத்துள்ளவன். ஈசன் - உலகப் பொருள் எல்லாவற்றையும் தனது உடைமையாகக் கொண்ட தலைவன். ஈசன் என்னும் பெயர் ஈண்டுச் சிவபெருமான் என்னுஞ் சிறப்புப்பொருளில் ஆளப் பெற்றுள்ளது, சங்கரன் ஈசன் சயம்பு எனவரும் சிலப்பதிகாரத் தொடரில் சிவபெருமானுக்குரிய சங்கரன் ஈசன் சயம்பு எனவரும் சிறப்புப் பெயர்கள் இறைவன் என்னும் பொதுப்பொருளில் வழங்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களின் ஆட்சியைக் கூர்ந்து நோக்குங்கால், சிவவழிபாடு தமிழ் நாட்டில் மக்கள் எல்லோரும் மதித்துப் போற்றும் சிறப்பு வழிபாடாகவும் பொது வழிபாடாகவும் யாண்டும் பரவியிருந்தமை இனிது புலனாகும். இனி, மணிமேகலையில் இடம்பெற்றுள்ள சைவவாதி கூற்றிலமைந்த கடவுளிலக்கணத்தினை ஒரு சிறிது நோக்குவோம். ஞாயிறு திங்கள் ஆன்மா ஐம்பெரும்பூதம் என்னும் எண்பேருருவினனாக (அட்ட மூர்த்தியாக) இறைவன் விளங்குந்திறத்தினை, இருசுடரோடு இயமான்ன ஐம்பூதம் என்று எட்டுவகையும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டிநிற்போன் என்ற தொடர் விரித்துரைப்பதாகும் இருசுடர் என்பது ஞாயிறும் திங்களுமாகிய ஒளிப்பொருள்கள். இயமானன் வேள்வித்தலைவன், என்றது ஆன்மாவை. ஐம்பூதமாவன நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்பன. மேற்குறித்த எண்வகைப் பொருள்களையும் இறைவன் தனக்குரிய திருமேனிகளாகக் கொண்டு அவற்றுடன் பிரிவின்றி ஒன்றுபட்டு விளங்கும் திறத்தை, இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங்காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி (6.91.1) எனவரும் நின்ற திருத்தாண்டகத்தில் திருநாவுக்கரசர் அருளிச் செய்துள்ளமை இங்கு ஒப்புநோக்கற்பாலதாகும். இங்ஙனம் இறைவன் அட்டமூர்த்தியாகத் திகழ்கின்றான் எனவே, கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருட் கொள்கை அக்காலச் சைவவாதிக்கு உடன்பாடாதல் நன்கு தெளியப்படும். உலகாகிய சடப்பொருளோடும் உயிராகிய சித்துப்பொருள்களோடும் இரண்டறக் கலந்து நிற்குந்திறத்தில் இறைவனுக்குள்ள அத்துவித சம்பந்தத்தை உவமங்காட்டி விளக்கும் முறையில் அமைந்தது, உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போன் என்ற தொடராகும். உலகுயிர்களோடு இறைவன் பிரிவின்றி ஒன்றாய்க் கலந்து நிற்குந் திறத்திற்கு, உயிரானது உடம்போடு பிரிவின்றி ஒன்றாய்க் கலந்து நிற்கும் திறம் உவமையாகக் கூறப்பட்டது. உயிரும் யாக்கையும் ஆய் என்புழி ஆக்கச்சொல் ஆள்வாரிலி மாடு ஆவேனோ (திருவாசகம்) என்புழிப் போல உவமவுருபின் பொருள் குறித்து நின்றது. உயிரானது உடம்பெனவும் தான் எனவும் பிரித்தறியவொண்ணாதவாறு உடம்பேயாய்க் கலந்துநின்ற அவ்வுடம்பினை இயக்கி நிற்றல் போல இறைவனும் உலகமே தனது உருவமாகக் கலந்து ஒன்றாய் நின்று உலகுயிர்களை இயக்கியருள் கின்றான் என்பது சைவசமயத்தின் துணிபாகும். உயிரும் யாக்கையு மாய்க் கட்டி நிற்போன் எனவே, உயிரும் உடம்பும் கலப்பினால் ஒன்றாயினும் உணர்வுடைமையும் உணர்வின்மையும் ஆகிய பொருட்டன்மையால் தம்முள் வேறாதல் போன்று, இறைவனும் உலகுயிர்களோடு கலப்பினால் ஒன்றாயினும் பொருட்டன்மையால் வேறென்பதும் உய்த்துணரப்படும். இங்ஙனம் இறைவனாகிய சிவபெருமான் உலகமேயுருவமாக எவ்வகைப் பொருள்களும் விரித்துப் பரவியதன் அருள் எல்லைக்குள் அடங்கி யமைத்தான் அவற்றின் மேற்பட விரிந்து விளங்கும் இயல்பினனாதலை, நிலவுக்கதிரணைந்த நீள்பெருஞ் சென்னி உலகுபொதியுருவத் துயர்ந்தோன் (சிலப். கால்கோட்) எனவரும் தொடரில் இளங்கோவடிகள் தெளிவாகக் குறித்துள்ளார். உயிர்களின் அகத்திருளை நீக்கி அறிவினை விளக்கும் கலைகளின் உருவாகத் திகழ்ந்து இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி மன்னுயிர்களுக்கு இன்னருள் சுரப்பவன் கண்ணுதற்கடவுளாகிய சிவபெருமானே என்பதனைப் புலப்படுத்தவது, கலையுருவினோன் என்ற தொடராகும். கலையாகிக் கலைஞானந்தானேயாகி (6.94.2) எனவரும் அப்பர் அருள்மொழியும், ஐயாறதன்மிசையெட்டுத் தலையிட்டமையில் வான்கலை மெய்யுடன் பொருந்தி (திருச்சிற்றம் பலக் கோவை-க பேர் உரை) எனவரும் பேராசிரியர் உரையும் இங்கு ஒப்புநோக்கற் பாலனவாகும். கட்புலனாகக் காணப்படும் இவ்வுலகம், தானே தோன்றியதன்று, மன்னுயிர்களின் நலங்குருதி ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனால் தோற்றுவிக்கப்பெற்று உள்ளதாகிய உள்பொருளே என்பதும், சங்கார காரணனாகவுள்ள முதல்வனையே முதலாகவுடையது இவ்வுலகம் என்பதும் சைவசமயத்தின் கொள்கையாகும். இக்கொள்கையினை வலியுறுத்தும் முறையில் அமைந்தது, படைத்து விளையாடும் பண்பினோனும் துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோனும் எனவரும் சைவவாதியின் கூற்றாகும். செம்பிற்களிம்பு போன்று உயிர்களைத் தோற்றமில் காலமாகப் பற்றியுள்ள இருளாகிய ஆணவமலத்தினை நீக்குதற்பொருட்டு அருளாளனாகிய இறைவன், உலகு உடல் கருவி நுகர் பொருள்களைப் படைத்து உயிர்கட்கு இன்பம் விளைய ஆடல்புரிகின்றான் என்பதும், அம்முதல்வனே உயிர்களின் கண்மமலம் நீங்குதற்பொருட்டு உளதாகிய உலகத்தை ஒடுக்கி உயிர்களின் பிறப்பு இறப்புத் துன்பங்களைத் துடைத்து மன்னுயிர்கட்கு அமைதி வழங்குகின்றான் என்பதும் மேற்குறித்த இரண்டடிகளாலும் முறையே புலப்படுத்தப் பெற்றுள்ளமை உய்த்துணரத் தகுவதாகும். தனது விரிவெல்லையினைக் கடந்து தன்னின் வேறாக ஒருபொருளும் இல்லை யென்னும்படி உலகுயிர்களாகிய எவ்வகைப்பொருள்கட்கும் சார்பாயுள்ளவன் இறைவன் ஒருவனே என்பதும், தன்னில் வேறுதானொன்று இல்லோனும் அன்னோன் இறைவன் என்ற தொடரால் முடித்துக் கூறப்பட்டது. இறைவனைச் சார்பு என்ற சொல்லால் திருவள்ளுவர் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கத்தக்கது. இறைவனும் உயிர்களும் பொன்னும் அதனாலாய அணிகலன்களும் போல அபேதம் என்பர் ஏகான்மவாதிகள். ஒளியும் இருளும் போலப் பேதம் என்பர் மாத்துவர். சொல்லும் பொருளும் போலப் பேதாபேதம் என்பர் பாஞ்சராத்திரிகள். இறைவன் உயிர்களோடு பேதம் அபேதம் பேதாபேதம் என்னும் மூன்றுமாய் அத்துவிதமாய்க் கலந்து நிற்பன் என்பர் சைவசித்தாந்திகள். அபேதம் - ஒன்றாகியும் மற்றொரு வகையால் வேறாகியும் நிற்றல். என்றும் உள்ள உயிர்கட்கு நிலைபேறாகிய சார்பும் அறிதலும் செய்தலும் என்னும் இம்மூன்றும் இன்றியமையாதன. இறைவன் உயிரும் உடம்பும்போல உயிர்களோடு ஒன்றாய் நிற்றலால் நிலைபேறாகிய சார்பும், கண்ணும் கதிரவனும் போல வேறாய்நின்று பொருள்களைக் காட்டுதலால் அறிதலும், கண்ணொளியும் உயிரறிவும் போல உடனாய் நின்று காட்டிக்காணுதலால் செயலும் நிகழும் என்பர் அறிஞர். இவ்வாறு ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்னும் முத்திறங்களும் ஒருங்கமைந்த அத்துவித சம்பந்தமே (இருமையின் ஒருமையே) இறைவனுக்கும் உயிர்களுக்கும் இடையேயுள்ள நீங்காத்தொடர்பு என்பது தம்காலத்தில் வாழ்ந்த சைவவாதியின் கருத்தாதலை மணிமேகலையாசிரியர் மேற்குறித்த சைவவாதியின் கூற்றில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளமை காணலாம். எட்டுவகையும் உயிரும் யாக்கையுமாய்க் கட்டி நிற்போன் என்ற தொடரால் அபேதமும் படைத்து விளையாடும் பண்பினோன், துடைத்துத் துயர்தீர் தோற்றத்தோன் என்ற தொடர்களாற் பேதமும், தன்னில்வேறு தானொன்னில்லோன் என்ற தொடராற் பேதாபேதமும் ஆக இம்மூவகையும் விரவிய அத்துவித நிலையில் இறைவன் உயிர்களோடு தொடர்புடையனாகத் திகழுந்திறம் இங்குப் புலப்படுத்தப் பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். மணிமேகலை கூறும் சைவக்கொள்கை திருமுறைகளில் அமைந்துள்ளமை இறைவன் எண்பேருருவினனாய்ப் பொருள்தோறும் யாண்டும் நீக்கமறக்கலந்து உடனாய் நிற்கும் அத்துவித இயல்பினை விளக்குவது, நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோடெண் வகையாய்ப் புணர்ந்துநின்றான் உலகேழெனத்திசை பத்தெனத் தானொருவனுமே பலவாகி நின்றவா தோணோக்க மாடாமோ எனவரும் திருவாசகச் செழும்பாடலாகும். ஒருபொருளே பல பொருள்களாக விரிந்து தோற்றுதலும், ஒருபொருளே பல பொருள்களிலும் ஊடுருவிக் கலந்து நிற்றலும் தம்முள் மாறாகிய இருவேறு தன்மைகளாகும். இவ்விரண்டினுள் முழுமுதற் பொருள் ஒன்றே தானல்லாத பலபொருள்களிலும் ஊடுருவி இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பினை அறிவுறுத்துவது, தான் ஒருவனுமே பலவாகி நின்றவா என்ற தொடராகும். இத்திருப்பாடலில் எண்வகையாய் நின்றான் என்னாது எண்வகையாப் புணர்ந்து நின்றான் எனத் திருவாதவூரடிகள் தாம் கூறும் பொருள் இனிது விளங்க விரித்துக்கூறிய நுட்பம் இங்கு நினைக்கத் தக்கது. புணர்ந்து நிற்றல் என்றது, ஒருபொருள் தானல்லாத பிறபொருளுடன் கூடிநிற்றலையே குறிப்பதாகும். இங்ஙனமன்றி ஒருபொருளே பலவாக விரிந்து தோன்றுதலையோ, ஒன்று மற்றொன்றாகத் திரிந்து தோன்றுதலையோ அத்தொடர் குறிப்பதன்று. ஓர் உடம்பினுட் கலந்து நிற்கும் உயிர், அவ்வுடம்பின் ஐம்பொறிகளிலும் ஐம்புலவுணர்வுகளைத் தோற்றுவித்தல் பற்றி உடம்போடு ஒன்றாய்க் கூடி நிற்பினும் அதன் தன்மையினைக் கூர்ந்து நோக்குங்கால் அவ்வுயிர் உடம்பின் வேறாதல் போன்று, இறைவனும் எண்பேரு ருவினனாக உலகுயிர்கள் எல்லாவற்றினும் நீக்கமறக்கூடி அவை பலவுமாய் விரவியிருப்பினும் அவற்றின் தன்மை தனக்கெய்தலின்றித் தான் அவற்றின் வேறாய் நிற்பன் என்னும் மெய்ம்மையினையே தான் ஒருவனுமே பலவாகி நின்றவா எனவரும் இத்தொடரில் திருவாதவூரடிகள் விளக்கி யருள்கின்றார். ஒருவன் எனவே ஒருவன் என்னும் ஒருவனாகிய இறைவனும், பல எனவே அவனல்லாத அவன் அவள் அதுவெனப்படும் உலகுயிர்களும், ஆகி எனவே அவற்றொடு பிரிவின்றி (அத்துவிதமாய்)க் கலந்து விளங்கும் அம்முதல்வனது தன்மையும் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இதுகாறும் எடுத்துக்காட்டிய குறிப்புக்களால் மணிமேகலையிற் சைவவாதியின் கூற்றாக அமைந்த இறைவனது இலக்கணமும் திருவாசகம் முதலிய திருமுறைகளிற் கூறப்படும் இறைவனிலக்கணமும் ஒத்தமைந்துள்ளமையும் சைவசித்தாந்த நூல்களால் விரித்துரைக்கப் பெறும் அத்துவித இலக்கணத்திற்குரிய அடிப்படைக் கொள்கைகள் மணிமேகலை கூறும் சைவவாதியின் கூற்றில் இடம் பெற்றுள்ளமையும் இனிது புலனாதல் காணலாம். மணிமேகலை சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் வேதவாதியின் வேறாகச் சைவவாதியும் வைணவ வாதியும் பிரமவாதியும் பிரித்துக் கூறப்பட்டுள்ளனர். சைவசமயத்தின் உட்பகுதிகளாகிய பசுபதம் காபாலிகம் மாவிரதம் முதலிய சமயங்கள் மணிமேகலையிற் கூறப்படவில்லை. அவை வடநாட்டிற் சிவனை வழிபடும் கூட்டத்தினரிடையே காணப்படும் பல்வேறு நோன்பு களையும் கோலங்களையும் குறிப்பனவன்றித் தமக்கெனச் சிறப்புரிமையுடைய தத்துவக் கொள்கையின் வழியமைக்கப் பெற்ற சமயங்களன்மையின் அவற்றை மணிமேகலையாசிரியர் இங்குக் குறிப்பிடவில்லையென எண்ணவேண்டியுள்ளது. சுதமதியென்பாள் மணிமேகலையை அழைத்துக் கொண்டு மலர் கொய்தற்கென மலர்வனம் நோக்கிச் செல்லும்பொழுது புகார் நகர வீதியிலே பித்தனொருவன் அலரி மாலையினையணிந்த தோளினனாய் குவிந்த முகிழாகிய எருக்க மலர்களைக் கோத்த மாலையை யணிந்தவனாய், உயர்ந்த கிளைகளிலுள்ள பூங்கொத்துக் களையும் சுள்ளிகளையும் ஒடித்துக் கிழிந்த உடையிற் கட்டிக்கொண்டு உடல் முழுவதும் வெண்ணீறணிந்து அழுதும் தொழுதும் சுழன்றும் ஓடியும் ஒருபக்கத்தில் நின்று தன்னிழலைக் கண்டு மாறுபட்டுத் தாமதித்தும் நின்று காட்சியை, கணவிரமாலையிற் கட்டியதிரன் புயன் குவிமுகிழெருக்கிற் கோத்த மாலையன் சிதவற்றுணியொடு சேணோங்கு பெருஞ்சினைத் ததர் வீழ்பொடித்துக் கட்டியவுடையினன் வெண்பலிச் சாந்தம் மெய்ம்முழுதுரீஇ மையலுற்றமகன் (மணி.3. 104-114) எனவரும் தொடரிற் சாத்தனார் புனைந்துரைக்கின்றார். இதன்கண் மையலுற்ற மகனாகிய பித்தன் கொண்டுள்ள வேடம் முழுநீறுபூசிய சிவனடியார் திருவேடத்தை நினைவுபடுத்தும் நிலையில் அமைந்துள்ளமை உய்த்துணரத்தகுவதாகும். இவ்வாறே சக்கர வாளக்கோட்டம் உரைத்த காதையில், சுடலை நோன்பிகள் ஒடியாவுள்ளமொடு மடைதீயுறுக்கும் வன்னிமன்றமும் (6. 86-87) எனக் காபாலிக சமயத்தாரையும், விரதயாக்கையர் உடைதலை தொகுத்தாங் கிருந்தொடர்ப்படுக்கும் இரத்திமன்றமும் (6. 88-89) என மாவிரத சமயத்தாரையும் சாத்தனார் குறித்துள்ளமை இங்கு நினைக்கத்தக்கதாகும். அரியதவச் செல்வர்களும் நாடாளும் அரசர்களும், கணவனோடு ஒருங்குயிர் விடும் கற்புடைமகளிரும் இறந்துபட்டால் அவர்கட்குக் கோயிலெடுத்து வழிபடும் பழக்கம் தமிழகத்தில் தொன்றுதொட்டு வருவதாகும் இச்செய்தி, அருந்தவர்க்காயினும் அரசர்க்காயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும் இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண்டன்ன சுடுமணோங்கிய நெடுநிலைக் கோட்டமும் எனவரும் தொடரால் அறியப்படும். இருவகைப் பற்றுக்களையும் விட்டொழித்த துறவிகள் இறந்தால் வீடுபேற்றுக்குரியராகிய அவர்களை உலகமக்கள் தொழுது போற்றுவதலும், உலகப்பற்றுடைய பிறர் இறந்தால் அவர்களது பிரிவால் சுற்றத்தார் முதலியோர் அழுது அரற்றுதலும் இயல்பு. இவ்வியல்பினை, துறவோர் இறந்த தொழுவிளிப்பூசலும் பிறவோர் இறந்த அழுவிளிப்பூசலும் (6. 72-73) என்ற தொடராற் சாத்தனார் குறிப்பிடுதலால், இருவகைப் பற்றுக்களையும் விட்டொழித்த துறவிகள் எந்தச் சமயத்தவராயினும் அவர்களைத் தெய்வமாக எண்ணி வழிபட்டுப் போற்றுதல் தமிழகத்தில் தொன்றுதொட்டு நிலவிவரும் சமய ஒழுகலாறாகும் என்பது நன்கு புலனாகின்றது. 8. தமிழாகமம் எனப் போற்றப்பெறும் திருமூலர் திருமந்திரம் கூறும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் தத்துவவுண்மைகளும் பன்னிரு திருமுறையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்டவர் திருமூலதேவநாயனார் ஆவர். இவரை நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் எனத் திருத்தொண்டத் தொகையில் நம்பியாரூரர் பரவிப் போற்றியுள்ளார். திருத்தொண்டத் தொகையில் வகையாகத் திருத்தொண்டர் திருவந்தாதி பாடியருளிய நம்பியாண்டார் நம்பிகள், குடிமன்னு சாத்தனூர் கோக்குல மேய்ப்போன் குரம்பைபுக்கு முடிமன்னு கூனற்பிறையாளன்றன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படியே பரவிட்டெனுச்சி அடிமன்ன வைத்தபிரான மூலனாகிய அங்கணனே (36) எனவரும் பாடலில் திருமூலர் வரலாற்றை வகுத்துக் கூறியுள்ளார். நற்குடிகள் நிலைபெற்ற சாத்தனூரிலே பசுநிரையை மேய்ப்போன் ஆகிய ஆயனது உடம்பிற் புகுந்து, முடியிலே நிலைபெற்ற வளைந்த பிறைச் சந்திரனைச் சூடியவனாகிய சிவபெருமானை முழுமை வாய்ந்த தமிழ்கூறிய வண்ணமே நிலைபெற்ற வேதங்கள் சொல்லியபடியே பரவிப் போற்றி எனது சென்னியிலே தன் திருவடிகளை நிலைபெறச் செய்த பெருமான் மூலன் என்னும் பெயருடைய அருளாளனாவன் என்பது இத்திருவந்தாதியின் பொருளாகும். இப்பாடலில், பரவிட்டு என்னும் வினையை, முழுத்தமிழின் படியே பரவிட்டு எனவும், வேதத்தின் சொற்படியே பரவிட்டு எனவும் ஈரிடத்தும் சென்றியையும்படி நம்பியாண்டார் நம்பி கூறியிருத்தலால், திருமூலநாயனார் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருளும் நிரம்பிய தமிழ் மறைகளையும் வடமொழி வேதங்களையும் தழுவித் தமிழாகமம் ஆகிய இத்திருமந்திரமாலையை அருளிச் செய்துள்ளார் என்பது இனிது புலனாகும். அம்மையப்பராகிய இறைவன் தமிழும் ஆரியமும் ஆகிய இருமொழிகளிலும் பொருள் ஒத்து அமையும்படி ஞானநூற்பொருள்களை உமையம்யைர்க்குத் திருவாய் மலர்ந்தருளினன் என்பதனை, மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின் றெரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக் காரிகை யார்க்குக் கருணை செய்தானே (திருமந்திரம் 65) எனத் திருமூலர் தெளிவாகக் குறித்துள்ளார். இப்பாடற் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால் முற்காலத்தில் சிவபெருமானால் அருளிச் செய்யப்பெற்ற ஞானநூல்களாகிய சிவாகமங்கள் தமிழிலும் வடமொழியிலும் ஒப்ப அமைந்திருந்தன என்பது நன்கு புலனாம். உலக மக்கள் உணர்ந்து உய்யும்படிப் பண்டைநாளில் தமிழிலும் வடமொழியிலும் இறைவனூலாகிய ஆகமங்கள் இயற்றப்பெற்று வழங்கின என்பதனை, அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச் சொல் வடசொல் லெனுமிவ்விரண்டும் உணர்த்துமவனை யுணரலுமாகும் (திருமந்திரம் 66) என ஆகமச் சிறப்புணர்த்தும் பகுதியில் திருமூலர் விளங்கக் கூறியுள்ளார். வழிபாட்டுக்குரிய மந்திரங்கள் தமிழிலும் பிறமொழிகளிலும் அமைந்திருந்தன. இச்செய்தி வயிரவி மந்திரம் என்ற பகுதியில் அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல் வந்த வழிமுறை மாறியுரை செய்யும் செந்தமிழாதி தெளிந்து வழிபடு நந்தியிதனை நலமுரைத்தானே (திருமந்திரம் 1089) எனத் திருமூலர் அறிவுறுத்துதலால் அறியப்படும். திருமூலநாயனார் தமது வரலாறு கூறுவதாக அமைந்த திருமந்திரப் பாயிரப் பகுதியில், நந்தியிணையடி நான்தலை மேற்கொண்டு புந்தியினுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அந்திமதிபுனை அரனடி நாடொறுஞ் சிந்தை செய்தாகமஞ் செப்பலுற்றேனே (திருமந்திரம் 73) எனவும், என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமந்திரம் 81) எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகள் திருமந்திர மாலையாகிய இந்நூல் தமிழாகமமாக அருளிச் செய்யப்பெற்ற திறத்தைப் புலப்படுத்து வனவாகும். திருமந்திரத்திற் கூறப்படும் சைவசித்தாந்தத் தத்துவ வுண்மைகள் செந்தமிழ் நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்த சிவஞானிகளால் அருளிச் செய்யப்பெற்ற தொன்மை யுடையனவாகும். இவ்வுண்மை யினை, சதா சிவதத்துவம் முத்தமிழ்வேதம் இதாசனியா திருந்தேனின்ற காலம் (திருமந்திரம் 76) எனவும், தமிழ் மண்டலம் ஐந்துந் தழுவிய ஞானம் உமிழ்வது போல உலகந் திரிவர் அவிழும் மனமும் எம்ஆதி யறிவுந் தமிழ் மண்டலம் ஐந்துந் தத்துவமாமே (திருமந்திரம் 1648) எனவரும் திருமூலர் வாய்மொழிகள் நன்கு வலியுறுத்தல் காணலாம். வடமொழியிலுள்ள வேதத்தைப் பொதுநூலாகவும் தமிழிலும் வடமொழியிலும் உள்ள சிவாகமங்களைச் சிறப்பு நூலாகவும் கொண்டு பொதுவும் சிறப்புமாகிய இவ்விரு திறப்பொருள்களும் ஒருங்கமைய அருளிச்செய்யப் பெற்ற செந்தமிழ்ச் சிவாகமம் திருமந்திரமாலையாகும். இவ்வுண்மை, வேதமோடாகமம் மெய்யாம் இறைவனுல் ஓதும் பொதுவுஞ் சிறப்புமென்றுள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே (51) எனவரும் திருமூலர் வாய்மொழியாலும், முழுத்தமிழின் படி, வேதத்தின் சொற்படியே பரவிட்டு என் உச்சி, அடிமன்ன வைத்தபிரான் மூலனாகிய அங்கணனே என நம்பியாண்டார் நம்பிகள் திருமூல நாயனாரைக் குறித்துப் போற்றிய தொடராலும் நன்கு துணியப்படும். திருக்கயிலாயத்தில் நந்திதேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறை யோகிகளுள் ஒருவர், பொதியமலையில் அகத்திய முனிரைக் கண்டு அளவளாவும் விருப்புடன் கயிலையினின்றும் புறப்பட்டுத் திருக்கேதாரம், பசுபதி நேபாளம், அவிமுத்தம், விந்தம், திருப்பருப்பதம் முதலிய தலங்களைப் பணிந்து தமிழ்நாட்டையடைந்து திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவதிகை ஆகிய தலங்களை வணங்கித் தில்லைப் பதியையடைந்து இறைவனது திருக்கூத்துத் தரிசனம் கண்டு மகிழ்ந்தார். பின்பு அங்கிருந்தும் புறப்பட்டுக் காவிரியையடைந்து நீராடித் திருவாவடுதுறை யிறைவரை வணங்கிச் செல்லும் வழியில் சாத்தனூரையடுத்துக் காவிரியின் தென்கரையில் உள்ள சோலையில் ஆநிரை மேய்க்கும் மூலன் என்னும் பெயருடைய ஆயன் இறந்துபட, அந்நிலையில் அவனால் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனுடம்பைச் சூழ்ந்து நின்று கதறின. அப்பசுக்களின் துயரத்தைப் போக்கத் திருவுளங் கொண்ட சித்தராகிய யோகியார் தமது உடம்பை அச்சோலையின் ஒருபுறத்தே பாதுகாப்பாக மறைத்து வைத்து விட்டுத் தாம் கற்றுவல்ல பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் சித்தித் திறத்தால் தமது உயிரை மூலன் என்னும் இடையனது உயிர் நீங்கிய உடம்பிற்புகச் செய்து உயிருடன் எழுந்தார். அது கண்டு பசுக்களெல்லாம் துயர்நீங்கி மகிழ்ந்தன. மூலனுடம்பு புகுந்த சித்தர் பசுக்களை யெல்லாம் சாத்தனூரிற் செலுத்திவிட்டு மீண்டு வந்து தமது பழையவுடம்பினை மறைத்து வைத்த இடத்திற்சென்று பார்த்தார்.அவ்வுடம்பு அவர் அங்குத் திரும்பி வருவதற்கு முன்னரே இறைவனால் மறைக்கப்பட்டு ஒழிந்தது. அந்நிலையில் தாம் பாதுகாப்பாக மறைத்து வைத்த தம்முடம்பு காணாது போயினமைக்கு இறைவன் திருவருளே காரணம் எனவுணர்ந்து தமது முன்னையவுடம்பினாற் சிறிதும் பயனில்லையெனத் தெரிந்து கொண்டு மூலனாகிய இடையனது உடம்பினையே தமக்குரிய உடம்பாகக் கொண்டு திருவாவடுதுறைத் திருக்கோயிலையடைந்து அங்குள்ள அரசமரத்தின் அடியில் எண்ணில்லாத பல ஆண்டுகள் சிவயோக நிலையில் அமர்ந்திருந்து சிவபரம் பொருளைத் தியானித்துத் தாம் உணர்ந்த மெய்யுணர் வுண்மைகளைச் செந்தமிழ் மொழியில் ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் திருப்பாடல்ர்கள் அடங்கிய திருமந்திரமாலை என்னும் பனுவலை அருளிச்செய்து திருக்கயிலாயத்தையடைந்து சிவபெருமான் திருவடிநீழலில் என்றும் பிரியாதுறையும் பேரின்பநிலையினைப் பெற்றார் என்பது திருமூலநாயனார் வரலாறாகும். இவ்வரலாறு சேக்கிழார் நாயனார் இயற்றிய திருத்தொண்டர் புராணத்தில் இருபத்தெட்டுத் திருப்பாடல்களால் விரித்துக் கூறப்பெற்றது. இவ்வரலாற்று நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் திருமூலநாயனார் அருளிச்செய்த திருமந்திரமாலையில் சிவயோகியாராகிய அவர் தமது வரலாறு கூறும் முறையிலமைந்த பாயிரப் பகுதியிலுள்ள திருப்பாடல்கள் அகச் சான்றுகளாக அமைந்துள்ளன. திருமந்திரமாலையின் நூலாசிரியர்க்குத் திருமூலர் என வழங்கும் இப்பெயர் அவர் மூலனுடம்பிற் புகுந்த பின்னரேயுளதாயிற்று. நந்தி திருவருள் பெற்ற நான் மறையோகியராய் இருந்த இவர்தம் முன்னைய நிலையில் இவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை உள்ளவாறு அறிந்துகொள்ளுதற்கேற்ற வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காமையால் சிவயோகியார் திருமூலராதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர் குலம் பேர் முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்துச் சேக்கிழாரடிகள் எதுவும் கூறாது விட்டார். திருமூலராகிய சிவயோகியார் திருக்கயிலையில் நந்தியெம் பெருமான்பால் ஞான நூற்பொருள்களை ஓதியுணர்ந்த நான்மறை யோகிகளுள் ஒருவர் என்பது, நந்தியருள் பெற்ற நாதரை நாடின் நந்திகள் நால்வர் சிவயோகமாமுனி மன்றுதொழுத பதஞ்சலி வியாக்கிரர் என்றிவர் என்னோ டெண்மரு மாமே (திருமந். 67) எனவரும் அவர் தம் வாய்மொழியால் அறியப்படும். சிவயோகியாராகிய இவர் அட்டமா சித்திகளும் கைவரப் பெற்றவர் என்பது, அரியதெனக்கில்லை அட்டமாசித்தி பெரிதருள் செய்து பிறப்பறுத்தானே (திருமந். 641) என அவர்கூறுதலாற் புலனாகும். மூலன் இறந்தமையால் பசுக்கள் உற்றதுயரத்தை நீக்குதற் பொருட்டு இறைவனருளால் மூலனது உடம்பிற் புகுந்து பசுக்களைச் சாத்தனூரிற் சேர்த்து விட்டு மீண்டு வந்து தமது பழையவுடம்பினை மறைத்து வைத்தவிடத்திற் பார்த்தபோது அவ்வுடம்பு இறைவனருளாற் காணாது போகவே அவ்வுடம்பினாற் பயனில்லை யென்றுணர்ந்து, இறைவன் திருவருட்குறிப்பின் வண்ணம் மூலனுடம்பிலேயே தங்கிச் சிவயோக நிலையில் நெடுங்காலம் இருந்தார் என்பது, நந்தியருளாலே நாதனாம் பேர்பெற்றோம் நந்தியருளாலே மூலனை நாடினோம் நந்திஅருளா அது என் செய்யும் நாட்டினில் நந்திவழிகாட்ட நானிருந்தேனே (திருமந். 68) எனத் தம்மைப் பற்றிக் கூறுதலால் அறியப்படும். இதன்கண் நந்தி அருளா அது என ஆசிரியர் சுட்டியது, இறைவனால் மறைத்தொழிக் கப்பட்ட தமது பழையவுடம்பினை. இவ்வாற இறைவன் தம்முடைய பழையவுடம்பினை மறைத்து மூலனுடம்பிற் புகச் செய்தருளிய இப்படைப்பு, அம்முதல்வனது பொருள்சேர் புகழ்த்திறங்களைச் செந்தமிழ்ப் பாக்களால் புனைந்து போற்றுதற்கேற்ற நல்லதொரு படைப்பாகும் என்பார், பின்னை நின்றென்னே பிறவி பெறுவது முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமந். 81) என்றருளிச் செய்தார். சிவபெருமான் திருவருளால் மூலனுடம்பிற் புகுந்து திருமூலர் எனப் பெயர் பெற்ற சிவயோகியார் திருவாவடுதுறைத் திருக்கோயிலையடைந்து அம்மையப்பராகிய இறைவரைப் பணிந்து அங்குள்ள சிவபோதியாகிய அரசமரத்தின் நீழலில் எண்ணில்லாத பல்லாண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்தார் என்பது, சேர்ந்திருந்தேன் சிவமங்கைதன் பங்கனைச் சேர்ந்திருந்தேன் சிவனாவடு தண்டுறை சேர்ந்திருந்தேன் சிவபோதியினீழலிற் சேர்ந்திருந்தேன் சிவன் நாமங்கள் ஓதியே (திருமந். 79) எனவும், இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி இருந்தேன் இராப்பகல் அற்றவிடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்னந்தி இணையடிக் கீழே (திருமந். 80) எனவும், ஞானத் தலைவிதன் நந்திநகர் புக்கு ஊனமில் ஒன்பது கோடியுகந்தனுள் ஞானப்பாலாட்டி நாதனையர்ச்சித்து நானும் இருந்தேன் நற்போதியின் கீழே (திருமந். 82) எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் இனிது விளங்கும். இப்பாடலில் நந்திநகர் என்றது திருஆவடு துறையினை. சிவயோகத்தமர்ந்த திருமூலர் இறைவன் திருவருளை இடைவிடாது சிந்தித்திருந்து தமிழ் மூவாயிரம் ஆகிய ஆகமத்தை அருளிச் செய்தார் என்பதும் இவ்வருள் நூலுக்கு ஆசிரியர் இட்டபெயர் திருமந்திமாலை என்பதும், நந்தியிணையடி நான்தலை மேற்கொண்டு புந்தியினுள்ளே புகப்பெய்து போற்றிசெய்து அந்திமதிபுனை அரனடிநாள்தொறும் சிந்தை செய்தாகமஞ் செப்பலுற்றேனே (திருமந். 73) எனவும், பிறப்பிலி நாதனைப் பேர்நந்திதன்னைச் சிறப்பொடுவானவர் சென்றுகைகூப்பி மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை உறைப்பொடுங் கூடிநின்றோதலுமாமே (திருமந். 86) எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு புலனாம். சிவயோகியாராகிய திருமூலர் தமிழாகமமாகிய திருமந்திர மாலையை அருளிச் செய்த காலத்தில் தமிழ் மொழியிற் சைவசமய நுண்பொருள்களை விரித்துரைக்கும் சாத்திர நூல்கள் சிலவாக அருகிக் காணப்பட்டன. எனினும் அத்தமிழ் நூல்களில் இல்லாத பொருள்கள் வேறெம் மொழிகளிலும் இல்லையென்று சொல்லும்படி உலகமக்கள் அனைவரும் உணர்ந்து உய்திபெறுதற்குரிய அரும் பொருள்கள் அனைத்தும் அத்தமிழ் நூல்களில் நிரம்பி யிருந்தன. இவ்வுண்மையினை, அங்கி மிகாமை வைத்தான் உடல்வைத்தான் எங்கு மிகாமை வைத்தான் உலகேழையும் தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம் பொங்கிமிகாமை வைத்தான் பொருள்தானுமே (திருமந். 87) எனவரும் திருப்பாடலில் திருமூலர் தெளிவாக வெளியிட்டுள்ளமை காணலாம். திருமூலர் தம்முடன் நந்தியெம்பெருமான்பால் உபதேசம் பெற்றவர்களாக நந்திகள் நால்வரையும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் நால்வரையும்) சிவயோகமாமுனி, தில்லையில் திருக்கூத்துத் தெரிசனம் கண்ட பதஞ்சலி, வியாக்கிர பாதமுனிவர் ஆகியோரையும் சேர்த்து எண்மராகக் குறித்துள்ளதனை (திருமந்திரம் - 67) நோக்குங்கால் இவர் மேற்குறித்த முனிவர் பெருமக்கள் காலத்தையொட்டி வாழ்ந்தவர் என்பது நன்கு புலனாகும். தில்லையறி பதஞ்சலி வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்களுடன் இறைவனது திருக்கூத்தினைக் கண்டபின்னர் இவர் இவ்வுலகில் நெடுங்காலம் இருந்தவர் என்பது, செப்புஞ் சிவாகமம் என்னும் அப்பேர்பெற்றும் அப்படி நல்கும் அருள்நந்திதாள் பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் ஒப்பில எழுகோடி யுகமிருந்தேனே (திருமந். 74) என இவர் தமது வரலாறு கூறுதலால் இனிது விளங்கும். திருமூலர் இவ்வாறு இவ்வுலகில் நெடுங்காலம் தங்கியிருந்ததன் காரணம் இறைவனுடன் பிரிப்பின்றி விளங்கும் அருட்சத்தியாகிய புவனாபதியென்னும் அருந்தவச் செல்வியை வழிபட்டு அவ் வன்னையின் திருவருளால் இவ்வுலகிற் பத்திநெறியையும் யோக நெறியையும் ஞானநெறியையும் நிலைபெறச்செய்து இறைவனது அருட்கூத்தனை விளக்கும் தமிழ்மறையாகிய திருமந்திரப் பனுவலை அருளிச் செய்தற்பொருட்டேயாம். இருந்தவக் காரணம் கேள்இந்திரனே பொருந்திய செல்வப் புவனாபதியாம் அருந்தவச் செல்வியைச் சேவித்துஅடியேன் பரிந்துடன் வந்தனன் பத்தியினாலே (திருமந். 75) எனவும், மாலாங்கனே யிங்குயான் வந்தகாரணம் நீலாங்கமேனியன் நேரிழையாளொடு மூலாங்கமாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே (திருமந். 77) எனவும் திருமூலர் தன் மாணாக்கர்களாகிய இந்திரன், மாலாங்கன் என்பவர்களை நோக்கிக் கூறும் முறையில் அமைந்த திருப்பாடல்களால் இக்காரணத்தினை நன்கு புலப்படுத்தியுள்ளார். திருமூலர் அருளிய திருமந்திரப் பனுவலைக் கேட்டுணர்ந்த மாணவர்கள் மாலாங்கன், இந்திரன், சோமன், பிரமன், உருத்திரன், கந்துரு, காலாங்கி, கஞ்சமலையன் என்னும் பெயருடைய எழுவராவர். இச்செய்தி, மந்திரம் பெற்றவழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன்பிரமன் உருத்திரன் கந்துருக் காலாங்கி கஞ்சமலையனோடு இந்த எழுவரும் என்வழியாமே (திருமந். 69) எனவரும் பாடலால் அறியப்படும். மூலனுடம்பிற் புக்குத் திருமூலராயெழுந்த சிவயோகியார், சிவபெருமான் திருவருளால் சதாசிவமூர்த்தியையொத்துச் சிவாகமப் பொருளை அறிவுறுத்தவல்ல முற்றுணர்வும் தேவர்க்கெல்லாம் முதன்மையும் பெற்று விளங்கிய திறத்தினை, நந்தியருளாலே மூலனைநாடிப்பின் நந்தியருளாலே சதாசிவனாயினேன் நந்தியருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் நந்தியருளாலே நானிருந்தேனே (திருமந். 92) எனவரும் திருப்பாடலிற் குறித்துள்ளார். கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்பியாரூரர் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் எனப் போற்றியிருந்தலாலும் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தருடன் திருநாவுக்கரசரும் அருளிய தேவாரப் பதிகங்களில் திருமந்திரப் பாடல்களின் சொற்றொடர்களும் பொருள்களும் பலவிடங்களில் எடுத்தாளப்பெறுதலாலும் திருமூலநாயனாரது காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பது நன்கு தெளியப்படும். திருமூலர் திருவாவடுதுறையில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்தில் அமர்ந்திருந்து ஆண்டுக்கு ஒருபாடலாக மூவாயிரந் திருப்பாடல்களை அருளிச் செய்தார் எனத் திருத்தொண்டர் புராணம் கூறும். இக்கூற்றுக்குத் தெளிவான சான்றுகள் கிடைக்காமற்போயினும் சேக்கிழாரடிகள் கூறுமாறு திருமூலர் நெடுங்காலம் சிவயோகத் தமர்ந்திருந்து திருமந்திரப் பனுவலைப் பாடியருளினார் என்பது, ஒப்பில் எழுகோடியுகம் இருந்தேனே (திருமந். 74) எனவும், இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி (திருமந். 80) எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு துணியப்படும். இக்காயத்தே எனத் திருமூலர் சுட்டியது சிவயோகியாராகிய அவர் தமதுடம்பைத் துறந்த மூலம் என்னும் இடையனது உடம்பிற் புகுந்து நிலைபெற்ற பின்னராதலின் அவரால் இக்காயம் எனச் சுட்டப்பட்ட உடம்பு மூலனுடம்பு எனக் கொள்ளுதல் பொருந்தும், மேற்குறித்த பாடல்களில் எழு கோடியுகம், எண்ணிலி கோடி என்ற தொடர்கள் அளவுபடாத பல்லாண்டுகள் எனப் பொருள் தந்து நின்றன. திருக்குறளிலுள்ள சொற்றொடர்களும் பொருள்களும் திருமந்திரத்தில் எடுத்தாளப் பெறுதலாலும், தொல் காலத்தில் மூன்று பகுதிகளாக இருந்த தமிழகம் திருமந்திரத்தில் ஐந்து மண்டலங்களாகப் பகுத்துணரப்படுதலாலும் கடைச்சங்க காலத்தற்குப் பின் கொங்குமண்டலம் அயலவர்க்கு இடந்தந்து கள்வர்பயத்தால் வழிப்போவார்க்கு இடர் விளைவிக்குமியல்பினதாய் மாறிய செய்தியைத் திருமந்திரம் குறிப்பிடுதலாலும் திருமூலர் அருளிய திருமந்திர மாலை மூவாயிரம் பாடல்களால் முழுமை பெற்ற காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டெனக் கொள்ளுதல் பொருந்தும். திருமூலர் திருஆவடுதுறையிற் சிவபோதியின்கீழ்ச் சிவயோகத்த அமர்ந்த காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பன்னூறாண்டுகள் முற்பட்டிருத்தல் வேண்டும். எனவே எண்ணிலிகாலம் சிவயோகத் தமர்ந்த திருமூலர் கடைச் சங்கம் நிலவிய காலத்தலும் தமிழ்நாட்டில் இருந்திருத்தல் கூடும் என எண்ணுதற்கு இடமுண்டு. தொல்காப்பியம் புறத்திணையியல் 20-ஆம் சூத்திரவுரையில், யோகிகளாய் உபாயங்களான் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன் தேயத்து அனநிலை வகையோராவர். அவர்க்கு மாணாக்கராகத் தவஞ் செய்வோர் தாபதப் பக்கத்தராவர் என நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம் பெருமை வாய்ந்த சிவயோகியாராகிய திருமூல நாயனாரையும் அவர்தம் மாணாக்கர் களையும் குறித்ததெனக் கருதவேண்டியுள்ளது. திருமூலர், வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் தெளிந்துணர்ந்த சிவஞானச் செல்வராய்த் தாம் சிவனருளாற் சிந்தித்துணர்ந்த சிவாகம உண்மைகளை இமய முதற் குமரி வரையுள்ள பாரத நாட்டவர் பலரும் ஓதியுணர்ந்து உய்தி பெறுதல் வேண்டும் என்னும் அருளுள்ளத்தால் இத்திருமந்திரமாலையை அருளிச் செய்துள்ளார். எனவே அவர் அருளிய திருமந்திரப் பாடல்களில் சைவ சித்தாந்தக் குறியீடுகளாகிய பதி, பசு, பாசம், ஆணவம், கன்மன், மாயை, சித்து, அசித்து, சரியை, கிரியை, யோகம், ஞானம், சத்து, அசத்து, சதசத்து, வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம், நாதம், விந்து, சத்தி, சாத்துமான், வயிந்தவம், சத்தாதி, வாக்குமனாதிகள், சாக்கிராதீதம், சுத்தம், துரியம், விஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர், சகலத்தின் அஞ்ஞானர், பிரளயாகலத்து அஞ்ஞானர், சகலத்தின் அஞ்ஞானர், இயமம், நிமயம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகராம், தாரணை, தியானம்,சமாதி, கவச நியாசங்கள் முத்திரை, பத்மாசனம், பத்திராசனம், சிங்காதனம், பூரகம், கும்பகம், ரேசகம் என்றாற்போலும் வடசொற்களும் தொடர்களும், அக்காலத்திற் பொது மக்களிடையே வழங்கிய வழக்குச் சொற்கள் சிலவும் ஆங்காங்கே இடம் பெறுவனவாயின. தமிழ் வடமொழியென்னும் இருமொழிகளையும் கலந்து திருமூலர் தாமே படைத்துக்கூறிய அணுவன் (திருமந். 2051), மாயாள் (399) என்றாற்போலும் புதுச்சொற்களும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன. வேத சிவாகமங்களின் முடிந்த முடிபாகிய சைவம் என்ற பொருளிற் சித்தாந்தம் என்ற வடசொற் றொடர் திருமூலர் திருமந்திரத்திலேதான் முதன்முதலாகக் காணப்படுகின்றது. சுந்தரர் காலத்துப் பல்லவ வேந்தனாகிய இரண்டாம் நரசிங்கவர்மன் தான் காஞ்சியில் எடுப்பித்த கயிலாயநாதர் கோயிலிற் பொறித்துள்ள வடமொழிக் கல்வெட்டில் சைவசித்தாந்த நெறியைப் பின்பற்றியவன் எனத் தன்னைக் கூறிக் கொள்கின்றான். இம்மன்னன் திருமூலநாயனார் காலத்திற்குப் பின் தோன்றியவன் ஆதலின் இவன் பின்பற்றிய சைவசித்தாந்தம் என்பது திருமூலர் திருமந்திரத்தில் விரித்துக் கூறப் பெற்றுள்ள சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கையே எனக் கருதுதல் பெரிதும் பொருத்தமுடையதாகும். ஆரியமும் தமிழுமாகிய இருமொழிகளையும் நன்கு தேர்ந்து குமரி முதல் இமயம் வரை போக்குவரவு புரிந்த சிவயோகியாராகிய திருமூலர் அருளிய திருமந்திரத்தில் இருமொழிக்கும் பொதுவாகிய சமய சாத்திரக் குறியீடுகளும் பொதுமக்களிடையே பயின்ற வழக்குச் சொற்களும் விரவிக் காணப்படுதல் இயல்பு. ஆகவே திருமந்திரப் பாடல்களின் சொல்லமைப்பு ஒன்றே பற்றித் திருமூலர் காலத்தின் தொன்மையினைக் குறித்து ஐயுறுதற்குச் சிறிதும் இடமில்லையென்க. திருமந்திர நூலமைப்பு திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம், தமிழ்ச் சிவாகமம் என்பதனை அறிஞர் பலரும் நன்கறிவர். சிவாகமங்கள் தந்திரம், மந்திரம், உபதேசம் என்னும் மூவகை உரையளவைகளையும் உறுப்பாகக் கொண்டன. அவற்றுள் தந்திரகலையாவது, வேத சிவாகமங்களின் வகையாகிய கருமகாண்டம் ஞானகாண்டம் உபாசனாகாண்டம் என்னும் மூன்றனுள் கருமகாண்டம் பற்றி முன்னொடுபின் மாறுகோளின்றி அனுட்டித்தலை அறிவுறுத்துவது மந்திரகலை என்பது, உபாசனாகாண்டம் பற்றி மன முதலிய அடக்கித் தெய்வத்தை வழிபடு முறையினை விரித்துரைப்பது உபதேசகலை என்பது ஞானகாண்டம் பற்றித் தனக்கு முதலும் முடிவுமில்லாத இறைவன் தன்னின் வேறல்லாத எண்குணங்களை யுடையனாதல், தன்னின் வேறாகிய பசு பாசங்களையுடையனாதல் முதலிய இறைவனுடைய இயல்புகளைத் தான் உணருமாறும் பிறர்க்கு உணர்த்து மாறும் விளங்க அறிவுறுத்துவதாகும். இனி, சாத்திரங்களை முன்னொடுபின் மலைவறக் கொள்ளுகிறது தந்திரகலையாம் என்றும், கரணங்களுடைய வியாபாரங்களை அடக்கி அவரவர் தங்களுக்கு வேண்டின தெய்வங்களை அந்தந்த மந்திரங்களினாலே வழிபடுகிறது மந்திரகலையாம் என்றும், தனக்கு முதலும் முடிவுமில்லாத பரமேசுவரனுடைய சிவஞானத்தைப் பக்குவான்மாக்களுக்குப் போதிப்பது உபதேசகலையாம் என்றும் ஞானகாண்டம் ஒன்றே பற்றி இவ்மூவகைக் கலைகளின் இலக்கணங்களைப் பகுத்துரைத்தலும் ஏற்புடையதேயாகும். ஆகமங்களுக்கு அங்கமாகிய இம்மூவகை உரையளவைகளையும், அனாதியேயமலனாய அறிவனுலாக மந்தான் பினாதிமாறின்றிப் பேணல் தந்திரம், மந்திரந்தான் மனாதிகளடக்கித் தெய்வம் வழிபடும் வாய்மையாகும் தனாதியீறிலான்தன் தன்மை யுணர்த்துதல் உபதேசந்தான் (சித்தியார். சுபக்கம். 13) எனவரும் திருவிருத்தத்துள் அருள்நந்தி சிவாசாரியார் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளார். மேலே கூறப்பட்ட தந்திரம் மந்திரம் உபதேசம் என்னும் மூவகை உரைத்திறங்களும் ஒருங்கமைந்த செந்தமிழ்ச் சிவாகமமாகத் திகழ்வது திருமூலர் அருளிய இத்திருமந்திரமாலையாகும். தந்திரம் மந்திரம் உபதேசம் எனப்படும் மூன்றனுள் நடுவேயுள்ள மந்திரம் என்பது, முன்னுள்ள தந்திரத்தோடும் பின்னுள்ள உபதேசத்தோடும் பிரிவின்றியமைந்த தொடர்பினதாகிய தலைமை பற்றி இத்தமிழாகமத்தை மந்திரமாலை எனக் குறித்துள்ளார். தமிழ் மூவாயிரமாகிய இத்திருமந்திரத்தின் பாடல்கள் ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பெற்றன என்பது, தந்திரம் ஒன்பது சார்பு மூவாயிரம் சுந்தரஆகமச் சொல்மொழிந்தானே (திருமந். 101) எனவரும் இந்நூலின் பாயிரப்பாடலால் அறியப்படும். சைவ சமயத்துட் கூறப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளையும் அறிவுறுத்தக் கருதிய திருமூலர், நாற்சீரடி நான்கு கொண்ட கலிவகை யாப்பினால் இதனை இயற்றியுள்ளார். செப்பலோசை தழுவிய இக்கலிப்பாவகை திருமந்திரத்தில்தான் முதன்முதற் காணப்படுகிறது. எனவே இதனைத் திருமந்திரயாப்பு என்பர் விபுலாநந்த அடிகளார். இந்நூலுக்குத் திருமூலர் இட்டபெயர் திருமந்திரமாலை என்பதாகும். மறப்பிலர் நெஞ்சினுள் மந்திரமாலை, உறைப்பொடுங் கூடி நின்றோதலுமாமே (திருமந். 86) எனவரும் இந்நூற் பாயிரப்பகுதியாலும் ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திரமாலை எனச் சேக்கிழாரடிகளும் மூலர் திருமந்திரமாலை என உமாபதி சிவமும் கூறுதலானும் இப்பெயர் வழக்கம் இனிது புலனாகும். இது, மூவாயிரம் தமிழ்ப் பாடல்களையுடைமை பற்றித் தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கப்பெறும். முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ்சாத்தி என்பது பெரிய புராணம். இந்நூல், தொல்காப்பியனார் கூறிய எழு நிலத் தெழுந்த செய்யுட்களுள் மறைமொழிகிளந்த மந்திரத்தான என்ற செய்யுளின் பாற்படுதலின் திருமந்திரம் என வழங்கப்பெறுவதாயிற்று. தாம் சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயன் தரச் சொல்லும் ஆற்றல் வாய்ந்த நிறைமொழி மாந்தராகிய பெரியோர், இஃது இவ்வாறாகுக எனத் தமது ஆணையாற் சொல்லப்பட்டு, அவ்வாற்றல் அனைத்தையும் தன்கட் பொதிந்து வைத்துள்ள செறிவுடைய நன்மொழிகளே மந்திரம் எனப்படும். இதன் இயல்பினை ஆசிரியர் தொல்காப்பியனார், நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப (செய்யுளியல்) என்ற நூற்பாவில் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார். இந்நூற்பாவை அடியொற்றியதே, நிறை மொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் (திருக்குறள் 28) எனவரும் திருக்குறளாகும். நிறைமொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப்பயன்களைப் பயந்தேவிடும் மொழி என்றார் பரிமேலழகர். நிறைமொழி மாந்தராவார், இருவகைப் பற்றுக்களையும் நீக்கி ஐந்து புலன்களையும் அடக்கி எவ்வுயிர்க்கும் அருளுடையராய் வாழும் பெரியோர். ஆணையிற்கிளத்தலாவது, இஃது இவ்வாறு ஆகுக எனத் தமது ஆற்றல் தோன்றச் சொல்லுதல். மறைமொழி புறத்தார்க்குப் புலனாகாமல் மறைத்துச் சொல்லும் சொற்றொடர் என்பர் பெரியோர். இனி, மறைமொழி என்பதற்குப் பலர்க்கும் புலப்படாது மறைந்துள்ள அரிய உண்மைகளைத் தன்னகத்தே பொதிந்துள்ள மொழி எனப் பொருளுரைத்தலும் பொருந்தும், சான்றோர் எண்ணியவண்ணம் செயற்படுத்தற்குரிய ஆற்றல் முழுவதும் தன் கண் வாய்க்கப் பெற்ற மொழியே மந்திரம் எனப்படும் என்பார், அதனை வாய்மொழி (செய்யுளியல் 75) என்ற பெயராலும் குறித்தார் தொல்காப்பியனார். இவை தமிழ்மந்திரம் என்றற்கும், மந்திரந்தானே பாட்டாகி அங்கதம் எனப்படுவனவும் உள. அங்கதப்பாட்டு அல்லாத மறைமொழியே மந்திரம் என ஈண்டுச் சிறப்பித்துரைக்கப்படும் என்றற்கும் மறைமொழிதானே எனப் பிரித்துரைத்தார். எனவே சபித்தற்பொருளில் வரும் மந்திரச் செய்யுளை அங்கதப்பாட்டு எனவும் வசைப் பொருளில் வாராது உலக நலங்குறித்து வரும் மறைமொழியினையே மந்திரம் எனவும் வழங்குதல் ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தென்பது நன்கு விளங்கும். திருமூல நாயனார் திருவாய் மலர்ந்தருளிய இத் திருமந்திரமாலை முற்குறித்த தொல்காப்பிய இலக்கணத்தின்படி அமைந்த தமிழ் மந்திரங்களுக்குரிய சிறந்த இலக்கியமாகத் திகழும் சிறப்புடையதாகும். ஊன் பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம் (85) எனத் திருமூல நாயனாரும், சிவயோகமிகு மந்திரமாம் முறையொன்று எனத் திருமுறை கண்ட புராண ஆசிரியரும் இதனை மந்திரப்பனுவலாகக் குறித்துள்ளமை இங்கு நினைக்கத் தக்கதாகும். தமிழ் மூவாயிரமாகிய இந்நூல் பொருள் தொடர்பு உடையதாய் மாலை போன்று அமைந்திருத்தலின் இதனை முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரம் என்றார் சேக்கிழார். இறைவன் சிவயொகியாருது பண்டைய வுடம்பினை மறைப்பித்துச் சாத்தனூர் மூலனுடம்பில் நின்றவாறே திருவாவடுதுறையில் சிவயோகத்து அமரும் வண்ணம் செய்தருளியது, இறைவனூலாகிய சிவாகமங்களை இந்நிலவுலகில் தமிழால் வகுத்தருளிச் செய்ய வேண்டும் என்னும் திருவுளக்குறிப்பினாலேயென்பதும் இத்திருவருட் குறிப்பினையுணர்ந்த திருமூலர் திருவாவடு துறையில் அம்மையப்பரை வணங்கிச் சிவயோகத் தமர்ந்து தமிழாகமம் ஆகிய இந்திருமுறையினை அருளிச் செய்தார் என்பதும், தண்ணிலவார் சடையார் தாம்தந்த ஆகமப்பொருளை மண்ணின் மிசைத்திருமூலர் வாக்கினால் தமிழ் வகுப்பக் கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க எண்ணிறைந்த வுணர்வுடையார் ஈசரருள் எனவுணர்ந்தார் (பெரிய. திருமூலர்) எனவரும் சேக்கிழார் வாய்மொழியாலும், சிந்தைசெய்தாகமஞ் செப்பலுற்றேனே (திருமந். 73) எனவும், என்னை நன்றாக இறைவன் படைத்தவன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமந். 81) எனவும் மேல் எடுத்துக்காட்டிய திருமூலர் வாய்மொழி களாலும் நன்குணரப்படும். மூவாயிரந் திருப்பாடல்களையுடைய திருமந்திரத்தில் காப்புச் செய்யுளோடு சேர்த்து 3048 பாடல்கள் உள்ளன. இவையன்றிப் பிறநூலுரைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டு இந்நூலுட் சேர்க்கப்படாதவை 11 பாடல்கள். ஏட்டுச் சுவடிகளிலிருந்து வெளிவராதனவாய்ச் சைவசித்தாந்த சமாசப் பதிப்பிற் காட்டப்பெற்ற பாடல்கள் 17. இவற்றின் மேலாக வெள்ளியம்பலவாணத் தம்பிரான் சுவாமிகளால் ஞானாவரணபாடியத்திலும் முத்திநிச்சயப் பேருரையிலும் காட்டப்பட்ட திருமந்திரப் பாடல்களில் இதுவரை வெளிவராதன ஏறக்குறைய 30 திருப்பாடல்கள். இவை யெல்லாவற்யும் சேர்த்து எண்ணுங்கால் திருமந்திரத்தின் பாடற்றொகை மூவாயிரத்து நூறு என்னும் என்ணையும் கடந்துவிடும். இவ்வாறு திருமந்திரப் பாடல்கள் மூவாயிரத்துக்கும் மேலாக மிகுந்து காணப்படுதற்கு, இவற்றுட்சில இந்நூலில் இருமுறையும் மும்முறையுமாக இடம்பெற்றிருத்தலும், சில பாடல்கள் பாடபேதங்களால் உருத்திரிந்து வெவ்வேறு பாடல்களாக எழுதப் பெற்றிருத்தலும் இவ்வருள் நூலின் யாப்பினை யடி யொற்றிப் பிற்காலத்திற் பாடப்பெற்ற பாடல்கள் சில யாப்பு ஒப்புமை பற்றித் திருமந்திரம் என்ற பெயராற் குறிக்கப் பட்டிருத்தலும், அவற்றுட் சில இந்நூலினுள்ளே இடைச் செருகலாக இடம் பெற்றிருத்தலும் காரணங்களாகும். திருமூலநாயனார் இத்திருமந்திரமாலையை ஒன்றவன்றான் என்ற திருப்பாடலை முதலாகக் கொண்டு தொடங்கி மூவாயிரம் திருப்பாடல்களால் நிறைவேற்றி யருளினார் என்பது, ஏனவெயிறணிந்தாரை ஒன்றவன்றான் என்றெடுத்து, முன்னிய அப்பொருண்மாலைத் தமிழ் மூவாயிரஞ்சாத்தி எனவரும் சேக்கிழார் வாய்மொழிகளால் இனிது விளங்கும். ஒன்றவன்றான் எனவரும் இத்திருப் பாடலுக்கு முன்னேயுள்ள ஐந்துகரத்தனை என்னும் விநாயகர் வணக்கத் திருப்பாடல் இந்நூற்குக் காப்புச் செய்யுளாகப் பின்வந்த சான்றோரொருவராற் பாடிச் சேர்க்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பர் அறிஞர். இனி, திருமந்திரம் பாயிரப்பகுதியிலுள்ள 112 பாடல்களில் 67 பாடல்களே திருமூலர் வாக்கென்றும் ஏனைய 45 பாடல்களும் இடைச்செருகல் என்றும் கருதுவாரும் உளர். திருமந்திர நூலின் தொடக்கத்திலமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்களும், திருமூலர் தமது குருமரபின் வழிமுறை கூறும் குரு பாரம்பரியமும் ஆசிரியர் தாம் இந்நூலை இயற்றுதற்குரிய சூழ்நிலையும் நோக்கமும் ஆகிய இயைபினைப் புலப்படுத்தும் முறையில் தமது வரலாற்றினைத் தாமே கூறுவதாக அமைந்த திருமூலர் வரலாறும், ஆசிரியர் கூறும் அவையடக்கமும் ஆகிய பகுதிகள் இந்நூலின் தொடக்கத்தே விரித்துக் கூறுதற்குரிய பாயிரப் பொருள்களாதலின், இவை திருமூலர் வாக்காகவே கொள்ளத்தக்கன. சிந்தை செய்தாக மஞ்செப்ப லுற்றேனே (திருமந். 73) ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே (திருமந். 74) சேர்ந்திருந்தேன் சிவன் ஆவடுதண்டுறை (திருமந். 79) இருந்தேன் இக்காயத்தே எண்ணிலிகோடி (திருமந். 80) தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே (திருமந். 81) நானுமிருந்தேன் நற்போதியின் கீழே (திருமந். 82) எனத் திருமூலர் தன்மையொருமையில் வைத்துத் தம்மைப் பற்றிக் கூறிய இவ்வகச் சான்றுகளைப் பின்வந்தோர் கூற்றாக ஒதுக்கி விடுதல் ஒரு சிறிதும் பொருந்தாது. இத்திருப்பாடல்களையே ஆதாரமாகக் கொண்டு சேக்கிழார் திருமூலர் வரலாற்றை விரித்துக் கூறியுள்ளமையும் இங்குக் கருதத்தக்கது. இப்பாயிரத்திறுதியில் திருமந்திரப் பாடல் தொகையினையும் பொருட்சிறப்பினையும் கூறும் 99, 100ஆம் பாடல்களும், குரு வரலாறு கூறும் 101, 102ஆம் பாடல்களும் பிற்காலச் சான்றோராற் பாடப்பெற்றுப் பாயிரத்திறுதியிற் சேர்க்கப்பட்டனவாகும். மூலனுரை செய்த மூவாயிரந்தமிழ் மூலனுரை செய்த முந்நூறு மந்திரம் மூலனுரை செய்த முப்பதுபதேசம் மூலனுரை செய்த மூன்றுமொன் றாமே (திருமந். 3046) என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு திருமூலர் தமிழ் மூவாயிரமாகிய திருமந்திரத்தின் வேறாக முந்நூறுமந்திரம், முப்பது உபதேசம் என்ற இரண்டு நூல்களையும் இயற்றினார் எனவும் இவையிரண்டும் அவர் மூலனுடம்பிற் புகுவதற்கு முன் இயற்றப்பட்டனவென்றும் கூறுவாருமுளர். திருமூலர் திருமந்திரமாலையின் வேறாக இரண்டு நூல்களைச் செய்துள்ளதாகச் சேக்கிழாரடிகள் திருமூலநாயனார் புராணத்திற் குறிப்பிடவில்லை. மேற்குறித்த பாடலிற் குறிப்பிடப்பட்ட மூவாயிரந்தமிழ், முந்நூறுமந்திரம், முப்பது உபசேதம் என்னும் இம்மூன்றும் திருமந்திரமாலையாகிய இந்நூலில் அமைந்துள்ள மூவகைப் பொருட் கூறுகளையே குறித்தன எனக் கருதவேண்டியுள்ளது இக்கருத்தினை உறுதிப்படுத்தும் முறையில் இந்நூல் முதல் தந்திரத்தின் தொடக்கத்தில் உபதேசம் என்ற தலைப்பில் முப்பது திருப்பாடல்கள் அமைந்திருத்தல் காணலாம். இதுபோலவே முந்நூறுமந்திரம் என்பதும் இதன்கண் அமைந்த மற்றொரு பகுதியாய் அடங்கியிருத்தல் வேண்டும். மூவாயிரந்தமிழ் என்றது மூவாயிரந்தமிழ்ப் பாடல் தொகையைச் சுட்டி நின்றதாகும். மூவாயிரம் தமிழ்ப்பாடல் களையுடைய இந்நூல், முப்பது உபதேசமும் முந்நூறு மந்திரங்களும் உடையதாய்த் தந்திரம் மந்திரம் உபதேசம் எனப்படும் மூவகையுறுப்புக் களையும் பெற்று ஒப்பற்ற தமிழாகமமாகத் திகழ்கின்றது என்பதே இப்பாடலின் கருத்தாகும். திரு விசுவநாத பிள்ளையவர்கள் வெளியிட்ட திருமந்திரப் பதிப்பில், நான்காந் தந்திரத்தில் திருவம்பலச்சக்கரம் 89 பாடல்கள், வயிரவிமந்திரம் 50 பாடல்கள், ஏரொளிச்சக்கரம் 36 பாடல்கள், வயிரவச்சக்கரம் 6 பாடல்கள், சாம்பவி மண்டலச் சக்கரம் 10 பாடல்கள், புவனாபதிச் சக்கரம் 12 பாடல்கள், நவாக்கரி சக்கரம் 100 பாடல்கள் ஆக 303 பாடல்களே இங்குக் குறிக்கப்பட்ட முந்நூறு மந்திரம் எனவும், முதல் தந்திரத்தில் உபதேசம் என்ற தலைப்பிலுள்ள முப்பது பாடல்களே முப்பதுபதேசம் எனவும் வெளியிடப் பெற்றுள்ளமை இக்கருத்தினை வலியுறுத்தல் காணலாம். தமிழ் மொழியில் முதல்நூலாக அருளிச்செய்யப் பெற்றது திருமந்திரமாலை என்பது தொன்றுதொட்டு வழங்கிவரும் வரலாற்றுண்மையாகும். திருமூலராகிய சிவயோகியார் தாம் கயிலையிலிருந்து வரும்பொழுதே மந்திரமாலிகா என்றொரு வடமொழி நூலைக் கொண்டு வந்து தமிழில் மொழிபெயர்த்தாரென்றும், உபமன்யு பத்தவிலாசத்திற் கூறப்படும் அவரது வரலாற்றை நோக்கின் இதன் முதனூல் வடமொழியில் உள்ளதென்பது போதரும் என்றும் அறிஞர் ஒருவர் எழுதியுள்ளார். உபமன்யுபத்த விலாசம் என்பது சேக்கிழார் இயற்றியருளிய பெரிய புராணத்தை அடியொற்றி வடமொழியில் அமைந்த மொழி பெயர்ப்பு நூலென்பது, காய்தலுவத்தலகற்றி ஆராயவல்ல நல்லறிஞர் பலர்க்கும் ஒப்ப முடிந்த உண்மையாகும். வடமொழியில் அமைந்த அந்நூலில் திருமந்திரமாலை என்னும் இந்நூலின் பெயர், ஸ்ரீமந்த்ர மாலிகா எனக் குறிக்கப்பட்டிருத்தலை ஆதாரமாகக் கொண்டு திருமூலரால் முதனூலாக அருளிச்செய்யப்பெற்ற திருமந்திரத்தை வடநூலொன்றின் மொழிபெயர்ப்பாத் துணிந்து கூறுதல் நடுநிலையில் நின்று உண்மை காணும் ஆராய்ச்சியாளர்க்கு அடாத செயலாம். ஆரியமும் தமிழும் வல்ல சிவயோகியாராகிய திருமூலர் இறைவன் திருவருளால் தியானநியிலிருந்து அருளிய திருமந்தரம் வடநூலின் மொழி பெயர்ப்பாக இருக்குமானால் இந்நூல் அருளிச் செய்த வரலாற்றை விரித்துரைக்கும் இந்நூற்பாயிரப் பகுதியில் இச்செய்தியைத் தெளிவாகக் குறித்திருப்பர். அவ்வாசிரியருடைய வாய் மொழிகளை அகச்சான்றுகளாகக் கொண்டு அவரது வரலாற்றினை விரித்துரைத்த சேக்கிழார் நாயனாரும் இக்குறிப்பினைத் திருத்தொண்டர் புராணத்தில் தெளிவாக விளக்கிக் கூறியிருப்பர். சிந்தை செய்து ஆகமஞ் செப்பலுற்றேன் (73) எனவும், பெருஞ்சுடர் ஒன்றின் வேரறியாமை விளம்பு கின்றேன் (96) எனவும் திருமூலர் இந்நூற்பொருளைத தாம் சிந்தித்துணரந்த அனுபவ மொழிகளில் வைத்து அருளிச் செய்திருத்தலாலும், திருவாவடுதுறையில் மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்து அமர்ந்திருந்த திருமூலர் உலகமக்கள் உய்திபெறுதல் வேண்டும் என்னும் பேரருளால் தம் திருவுள்ளத்தே தோன்றிய எண்ணங்களை ஓராண்டுக்கு ஒரு திருப்பாடலாகக் கொண்டு மூவாயிரந் திருப்பாடல்கள் அருளிய திறத்தைத் திருமூலநாயனார் புராணம் 24, 25, 26 ஆம் பாடல்களில் சேக்கிழாரடிகள் விளக்கியிருத்தலாலும் திருமந்திரத்தை வடநூல் மொழிபெயர்ப் பெனக் கருதுதற்குச் ஸ்ரீமந்த்ரமாலிகா என்னும் பெயரைத் தவிர அப்பெயருடன் வடமொழியில் ஒருநூல் இருப்பதாகவோ அன்றி இருந்த தாகவோ கொள்ளுதற்குரிய சான்றினை அவர் குறிப்பிடாமையும் இங்குக் கருதத்தகுவதாகும். இறைவனூலாகிய சிவாகமங்கள் இருபத்தெட்டென்பதும், அவை அம்முதல்வனது ஈசான முகத்திலிருந்து அருளிச் செய்யப் பெற்றன என்பதும், அஞ்சனமேனி அரிவையோர் பாகத்தன் அஞ்சொடிருபத்து மூன்றுள ஆகமம் அஞ்சலிகூப்பி அறுபத்துறுவரும் அஞ்சாமுகத்தில் அரும் பொருள் கேட்டதே (திருமந். 57) எனவும் வரும் திருமந்திரத்தாற் புலனாம். சிவபெருமான் அருளிய ஆகமங்கள் இருபத்தெட்டிற்கு மேலும் எண்ணிலவாக உள்ளன என்பதும் அவ்வாகமப் பொருள்களை யெல்லாம் பல ஆண்டுகளாக சிந்தித் துணர்ந்ததன் பயனாகவே திருமூலர் இத்திருமந்திரப் பனுவலை அருளிச் செய்துள்ளார் என்பதும், அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம் எண்ணில் இருபத்தெண்கோடி நூறாயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பொருள் உரைத்தனர் எண்ணிநின்றப் பொருள் ஏத்துவன் நானே (திருமந். 58) எனவரும் அவரது வாய்மொழியால் அறியப்படும். சிவபெருமானிடமிருந்து சத்தியும் சத்தியிடமிருந்து சதாசிவமும் அவர்பால் மகேசுவரரும் அவரிடமிருந்து ஸ்ரீகண்ட உருத்திரரும், அவர்பால் திருமாலும், அவரிடமிருந்து பிரமதேவரும் அவரிடமிருந்து உருத்திரரும் இம்முறையே உபதேசம் பெற்றனரென்றும், இவர்கள் தனித்தனியே உபதேச வாயிலாகப் பெற்றுணர்ந்த காரணம் காமிகம், வீரம், சிந்தியம், வாதுளம், வியாமளம், காலோத்திரம், சுப்பிரம், மகுடம் என்னும் இவ்வொன்பது ஆகமங்களையும் திருநந்திதேவர் ஒருங்கு கைவரப்பெற்றார் என்றும் ஆகமச் சிறப்பினை அறிவுறுத்தும் முறையில் அமைந்தன, சிவமாம் பரத்தினிற் சத்திசதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவமால் பிரமீசர் தம்மில் தாம்பெற்ற நவஆகமம் எங்கள் நந்தி பெற்றானே (திருமந். 62) எனவும், பெற்ற நல்லாகமங் காரணங்காமிகம் உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம் மற்றநல்வியாமள மாகுங்காலோத்திரம் துற்றநற் சுப்பிரமம் சொல்லும் மகுடமே (திருமந். 63) எனவும் வரும் திருமந்திரப் பாடல்களாகும். இங்குக் குறித்த ஒன்பது ஆகமங்களின் சாரமாகவே திருமந்திரத்தில் ஒன்பது தந்திரங்கள் அமைந்துள்ளன எனக் கருதுவாரும் உளர். இங்ஙனங் கூறுவதைக் காட்டிலும் சிவாகமங்களின் நுண்பொருள்களை ஒன்பது தந்திரங்களாகத் திருமூலர் வகைப்படுத்து உணர்த்தினார் எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும் என்பர் அறிஞர். சிவாகமங்கள் தாம் கூறும் பொருள்களைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பாதங்களாக வகுத்துரைப்பன. தமிழகாமமாகிய திருமந்திரத்தில் வேதச் சிறப்பும் ஆகமச் சிறப்பும் ஒருங்கே உணர்த்தப்பெற்றன. வேதம் ஆகமம் என்னும் இருவகை நூல்களும் இறைவனால் அருளிச் செய்யப்பெற்றன எனவும், வேதம் உலகியலொழுக்கத்தினை யுணர்த்தும் பொதுநூல் எனவும் ஆகமம் நிலவும் மெய்ந்நெறியாகிய சிவநெறியையுணர்த்தும் சிறப்பு நூல் எனவும் ஆசிரியர் குறித்தலால் இத்திருமந்திர மாலையிற் பொதுவாக வேதநூற் பொருளும் சிறப்பாகச் சிவாகம நூற்பொருளும் எடுத்தோதப் பெற்றன எனக் கொள்ளுதல் ஏற்புடைதாகும். இந்நூலின் பெரும் பிரிவினைத் தந்திரம் எனவும் இவற்றுள் உள்ள திருப்பாடல்களை மந்திரம் எனவும் வழங்குதல் மரபு. இத்திருமந்திர மாலையின் ஆசிரியர் திருமூலர், உலகிய லொழுக்க நெறியினை விரித்துக் கூறும் பாடல்களில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளமை காணலாம்.1 இதனைக் கூர்ந்து நோக்குங்கால், தமிழாகமமாகிய இத்திருமந்திரத்திற்கு வேத சிவாகமங்களாகிய இறைவனூற்பொருளேயன்றிப் பண்டைத் தமிழ் நூற்பொருள்களும் மூலமாக அமைந்துள்ளமை இனிது புலனாகும். சிவாகமங்களின் ஞானபாதத்தில் உளவாகவும் மலைவுதீர்த்தற் பொருட்டு இறைவர் அருளத் தாம் கேட்டுணர்ந்த நுண்பொருள்களை நந்திபெருமான் சனற்குமாரர் முதலிய முனிவர்களுக்கு உபதேசித் தருளினார். நந்திதேவர்பால் உபதேசம் பெற்றவர் திருமூலராகிய சிவயோகியார் நந்திதேவர்பால் தாம் உணர்ந்த சிவாகமப் பொருளைத் திருமந்திரப் பாடல்களாக்கி அவற்றை ஒன்பது தந்திரங்களாக வகுத்துத் தமிழ்மூவாயிரமாக அருளிச் செய்தார். இத்திருமந்திரமாலை பதி பசு பாசம் என்னும் முப்பொருளுண்மையினையும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளையும் அறிவுறுத்தும் நிலையில் அமைந்துள்ளது. இவ்வுண்மை, உள்ளுணர் வானஞான முதலிய ஒருநான்குண்மை தெள்ளுதீந் தமிழாற் கூறுந்திருமூலர் எனவும், நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்தமொழித் திருமூலர் எனவும் இந்நூலாசிரியரைக் குறித்தும், ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திர மாலை என இந்நூலைக் குறித்தும் சேக்கிழாரடிகள் சிறப்பித்துப் போற்றுதலால் இனிது விளங்கும். ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திரமாலை என்றமையால் சைவ சமயத்தின் ஞானநன்னெறியினை விளக்கம் முறையில் ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆகிய நால்வகை நன்னெறிகளையும் திருமூலதேவர் இத்திருமந்திரப் பனுவலில் அருளிச் செய்துள்ளார் என்பது நன்கு விளங்கும். திருமூலர் தாம் கூறும் மந்திரப் பொருளை மக்கள் எல்லோரும் விரும்பிக் கேட்பதிலும், கேட்டு அவ்வழியில் ஒழுகிப் பயன் பெறுவதிலும் மனவெழுச்சியும் உறுதிப்பாடும் உடையராதற் பொருட்டுத் தாம் இந்நூல் வாயிலாக உணர்த்த எடுத்துக்கொண்ட சிவாகமப் பொருள்களின் சிறப்பும், சிவாகமம் தமக்குக் கிடைத்த வழிமுறையும், தாம் கேட்டுணர்ந்த ஆகமப் பொருளைத் திருமந்திரமாலையாகத் தமிழிற் சொல்ல நேர்ந்த காரணமும் என இந்நூலைப் பயில்வோர் இன்றியமையாது முதற்கண் அறிந்து கொள்ளுதற்குரிய செய்திகளை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது திருமந்திரத்தின் முதற்கண் அமைந்த பாயிரப் பகுதியாகும். வேதம் பொதுநூல், ஆகமம் சிறப்புநூல் என்பது முன்னர் உணர்த்தப்பெற்றது, இங்கு வேதம் எனப்படுவன வேதசிரம் எனவும் வேதாந்தம் எனவும் போற்றப்பெறும் ஞானபாதங்களாகிய உபநிடதங்களையென்பர் பெரியோர். பிறவித் துன்பத்தினின்றும் நீங்கி வீடு பேறடைதலே அறிவுடைய நன்மக்களின் கடமையும் செயலும் ஆகும். பிறப்பறுத்த வீடு பெறும் நிலை ஆருயிர் முதல்வனாகிய சிவனையடைந்தாலன்றிக் கை கூடாது. சிவன் ஒருவனே எல்லார்க்குந் தலைவன். சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை. அவன் படைத்தளித்தழிக்கும் மூவர்க்கும் முதல்வன். தாயினும் நல்லன். தேவர் முதலிய யாவரும் அவனையே தொழுவர். அவனால் தொழப்படுவார் ஒருவருமிலர். இடியும் முழக்கமும் ஈசன் உருவம். அயன் அரி அரன் மூவரும் ஆராய்ந்து நோக்குங்கால் இறைவனது அருளாகிய தொடர்ச்சியால் ஒருவரேயாவர். சிவனருளல்லது வேறு தெய்வமில்லை. சிவபெருமான் உயிர்கள் மேல் வைத்த பெருங்கருணையால் மன்னுயிர்கள் பாசப்பிணிப்பினின்றும் நீங்கி வீடுபேறடைதற்பொருட்டு வேதசிவாகமங்களை அருளிச் செய்துள்ளார். அவற்றின் வழியொழுகிப் பிறவிப் பெருங்கடல் நீந்தி வீடு பெறுதற்குரிய நற்செயல்களே அறிவுடைய நன்மக்களால் மேற்கொள்ளத்தக்கன. சிவபெருமான ஆகமப்பொருளை நந்திதேவர்க்கு உபதேசித்தருளினார். அவர் கயிலையில் சனற்குமாரர் முதலிய முனிவர் நால்வர்க்கும் பதஞ்சலி வியாக்கிரர் ஆகிய முனிவர்க்கும் எனக்கும் உபதேசித்தருளினார். ஆகமப் பொருளைத் தமிழிற் சொல்லும் பொருட்டே என்னை இம்மூலனுடம்பில் இருக்கும்படி இறைவன் படைத் தருளினார். இறைவர் அருளின் வழியான் மூலனுடம்பிற் புகுந்து திருவாவடு துறையிற் பல்லாண்டுகள் சிவயோகத்து அமர்ந்திருந்தேன். அரனடி நாள்தோறும் சிந்தை செய்து ஆகமம் செய்யலுற்றேன். இறைவன் ஆடியருளும் திருக்கூத்தின் சிறப்பினை அறிவுறுத்தும் மறைநூலாகிய இதனைச் செப்புதற்பொருட்டே யான் இங்கு வந்தேன். நான்பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுவதாகுக. யான் கூறிய ஞானம் மிக்க இம்மந்திரங்களை உளம் பொருந்திக் கேட்டுணர்வோர் இறைவனுடைய திருவடிகளில் தலைப்பெய்து இன்புறுவர் என இப்பாயிரப் பகுதியில் திருமூலர் அறிவுறுத்தியருள்கின்றார். இந்நூலில் உள்ள ஒன்பது தந்திரங்களுள் முதற்கண் உள்ள நான்கும் சிவஞானத்தைப் பெறுதற்கு விரும்பியவர் தம்மை உள்ளும் புறம்பும் தூய்மையுடையவராக்கிக் கொள்ளுதற்குரிய சாதனங்களை உணர்த்துவன. இடையிலுள்ள ஐந்தாந்தந்திரம் சமயங்களின் முடிந்த முடிபாகிய சைவ சித்தாந்த உண்மைகளை விரித்துரைப்பது. ஆறு முதல் ஒன்பது முடியப் பின்னுள்ள நான்கு தந்திரங்களும் ஞானம் பெறும் நிலையில் உணர்ந்து பெறத்தக்கன வாயுள்ள நற்பயன்களை விரித்துக் கூறுவன. இந்நூலின் முதலாந் தந்திரம் ஞானம் பெற முயல்வோர் அதற்குரியவாறு தம்மைத் தூய நல்லொழுக்க நெறியில் நிலைக்கச் செய்து கொள்ளுதல் வேண்டும் என வற்புறுத்தி அதற்கு வேண்டிய சாதனங்கள் இவையென அறிவுறுத்தவதாகும். இஃது இருபத்துநான்கு அதிகாரங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. இதன் தொடக்கத்திலுள்ள முப்பது திருப்பாடல்களும் உபதேசம் என்ற தலைப்பில் அமைந்துள்ளன. இதனையடுத்து யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்பன உலகியல் வாழ்க்கை யனுபவங்களை எடுத்துக்காட்டி வற்புறுத்தப் பெற்றுள்ளன. அடுத்து உயிர் நிலையாமை யென்ற தலைப்பில் பத்துப் பாடல்கள் உள்ளன. உயிர்கட்கு என்றும் அழிவில்லையென்பது சைவ சித்தாந்தக் கொள்கை என்பதனை யாவரும் அறிவர். அங்ஙனமாகவும் இங்கு உயிர்நிலையாமையென்றது மன்னுயிர் தான் தங்கியுள்ள ஓருடம்பிலேயே என்றும் விரும்பி நிலைபெற்றிருக்க மாட்டாத தன்மையது என்பதனைக் கூறுவதாகும். வீயாது உடம்பொடு நின்றவுயிரும் இல்லை (புறம். 363) எனவரும் புறப்பாடல் தொடர் ஓருடம்பிலேயே நிலைத்திருக்க மாட்டாத தன்மையினை வற்புறுத்தல் காண்க. உயிர் நிலையாமையை யடுத்துக் கொல்லாமை, புலால்மறுத்தல், பிறன்மனை நயவாமை, மகளிர்இழிவு, நல்குரவு என்னும் அதிகாரங்களில் அமைந்த பாடல்கள் முறைப்படுத்தப் பெற்றுள்ளன. இவை தமிழ் மறையாகிய திருக்குறளில் அதிகாரத் தலைப்பினையும் அறப்பொருட் பகுதிகளையும் அடியொற்றியமைந் திருத்தல் காணலாம். இவற்றையெடுத்து, அக்கினிகாரியம், அந்தண ரொழுக்கம் என்ற தலைப்பிலுள்ள பாடல்கள் வேதப் பொருளையுளங்கொண்டு கூறியனவாகும். அரசாட்சிமுறை, வானச்சிறப்பு, தானச்சிறப்பு, அறஞ்செய்வான் திறம், அறஞ்செயான்திறம், அன்புடைமை, கல்வி, கேள்வி, கல்லாமை, நடுவுநிலைமை, கள்ளுண்ணாமை ஆகிய தலைப்புக்களில் அமைந்த திருமந்திரப் பாடல்கள் உலகியலொழுக்கமாகத் தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிய பொருளுரைகளை அகத்துட்கொண்டு, அப்பொருள்களை உலகியலின் உயிர்நிலையய் நிலவும் மெய்ந்நெறியாகிய சைவ சித்தாந்தத்திற்குப் பொருந்தும் வண்ணம் விரித்துக் கூறும் நிலையில் அமைந்துள்ளன. இங்குத் திருமூலர் கூறும் நிலையில் அமைந்துள்ளன, இங்குத் திருமூலர் கூறும் கல்வியாவது சிவபரம்பொருளைச் சிந்திக்கும் நிலையிலமைந்த கல்வியே. கேள்வி யென்றது அவ்விறைவனது பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கேட்டுணரும் கேள்வியினை. இவ்வாறே நடுவு நிலைமை, அன்புடைமை முதலாக இத்தந்திரத்திலுள்ள ஏனைய அதிகாரப் பொருள்களையும் சிவநெறியில் ஒழுகுவோர்க்குரிய சிறப்பியல்பினவாக ஆசிரியர் கூறியுள்ளமை கருதத்தகுவதாகும். வேத சிவாகமங்களின் ஒன்றுபட்ட துணிபு சிவனே பரம்பொருள் என்று முன் பாயிரத்திற் கூறிய பொருளைச் சிறப்புமுறையில் பரித்துரைப்பதாக அமைந்தது திருமந்திரத்தின் இரண்டாந் தந்திரமாகும். இஃது அகத்தியம் என்பது முதல் பெரியாரைத் துணைக்கோடல் என்பது ஈறாக இருபத்தைந்து தலைப்புக்களை யுடையது. இறைவன் வேண்டுதல் வேண்டாமையிலானாயினும் நம்மைப்போன்ற எண்ணில்லா உயிர்கள் உய்திபெறுதற்பொருட்டுத் தனது இயல்பாகிய பேரருளால் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்து கொண்டு இருக்கிறான். அம்முதல்வன் செய்யும் ஐந்தொழில்களுட்படுவன உயிர்கள் எடுத்துள்ள உடம்பும், அதன் அகக்கரணங்களும் புறக்கரணங்களும் உயிர்கள் வாழ்தற்கு இடனாகிய புவனங்களும், உயிர்கள் நுகர்தற்குரிய நுகர் பொருள்களும் ஆகும். உடலும் உயிருமாகச் சேர்த்துப் படைக்கப்பெறும் நிலை கருவுற்பத்தி என்ற தலைப்பில் பேசப்படுகிறது. உயிர்கள் ஒருமலமுடையன, இருமல முடையன, மும்மலமுடையன என்னும் பாகுபாட்டினால் முறையே விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படும் என்றும், அவற்றுள் வீடுபேற்றில் விருப்ப முடைய சகலவர்க்கத்தார் நூற்பொருளைக் கேட்டற்குரியர் என்றும், அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது மூவகைச் சீவவர்க்கம் என்ற பகுதியாகும். சகல வர்க்கத்தாராகிய மக்கட் குலத்தார், இவ்வுலகில் நன்னெறியறிந்து ஒழுகிப் பிறவாநெறியாகிய வீடுபேற்றின்பத்தை அடைதற்கு உரியராதலின் தம்மால் வேண்டும் பொருளளித்து வழிபட்டு நற்பொருளைக் கேட்டுணர்தற் குரிய மெய்யுணர்வுடைய பெரியோர்களை அறிந்து வழிபட்டும் மனமாசகற்றும் தீர்த்தத்தின் இயல்பு தெரிந்தும் தம்மைத் தூய்மை செய்துகொள்ளுதல் வேண்டும் என்பதும், மன்னுயிர்கள் உய்தற்பொருட்டு இறைவன் அன்பர்க்கு எளிவந்து அருள்புரியும் அருள் நிலையங்களாகிய திருக்கோயிலின் பண்பு தெரிந்தும், அங்கு நிலையாக எழுந்தருளி யிருந்து உயிர்களின் இடரகற்றி இன்பமளிக்கும் இறைவனது அதோமுகத்து (கீழ்நோக்கிய முகத்தின்) இயல்பு கண்டும், அம்முதல்வனை வழிபட்டுச் சிவநிந்தை, குருநிந்தை, மாகேவரநிந்தை ஆகிய தீமைகளினின்றும் நீங்கி பொறை யென்னும் அணிகலனைப் பூண்டு, பெரியோரை அறிந்து, அவர்களைத் துணையாகக் கொண்டு, நன்னெறியில் ஒழுகி உய்தி பெறுதல் வேண்டுமென்றும் ஆசிரியர் இத்தந்திரத்தில் அறிவுறுத்தி உள்ளார். மூன்றாந்தந்திரம் அட்டாங்க யோகம் முதல் சந்திரயோகம் ஈறாக இருபத்தொரு தலைப்புக்களையுடையது, இதன்கண் எண்வகை யோக உறுப்புக்களாகிய இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவும், இவற்றை மேற் கொண்டோர் அடையும் பேறுகளும் கூறப்பெற்றுள்ளன. உயிர்களைக் கொல்லாதவனும், பொய்கூறாதவனும்,பிறர் பொருளைத் திருடாதவனும் மதிக்கத்தக்க நற்பண்புகளை யுடையவனும், பிறவுயிர்க்கு நலஞ்செய்வவனும், மனமொழி மெய்கள் தீயவற்றிற் செல்லாது அடங்குதலுடையவனும், ஒருபக்கம் கோடாத நடுவு நிலைமை யுடையவனும், தன்பாலுள்ளவற்றை வறியோர்க்குப் பகுத்தளித்து உண்ணுபவனும், மனத்தின்கண் அழுக்கில்லாதவனும், கழிகாமம் ஆகிய குற்றங்கள் இல்லாதவனும் ஆகிய இயல்புடையவனே இயமம் என்னும் யோகவுறுப்பில் நிலைபெற்று ஒழுகுபவன் (திருமந்திரம்554) என்பர் திருமூலர். தனக்குற்ற துன்பங்களைப் பொறுத்து, பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்யாமையாகிய தவமும், இறைவன் திருப்பெயராகிய மந்திரத்தைச் செபித்தலும், என்றும் சிந்தையின் நிறைவாகிய மனமலர்ச்சி யுடைமையும், மறுபிறப்பும் இருவினைப் பயனும் அதனையறிந்து உண்பிக்கும் இறைவனும் உண்டென்னும் உறுதிப்பாடும், வறியார்க்கு ஈதலும் சிவனை நினைந்து மேற்கொள்ளும் விரதமும் முடிந்த முடிவாகிய மெய்ந்நூற்பொருளைக் கேட்டுணர்தலும் சிவவெள்வியும், சிவபூசனையும், ஒளியுடைய பொருளைக் கூர்ந்துணரும் மெய்யுணர்வும் எனச் சொல்லப்பட்ட உயர்ச்சியுடைய இப்பத்துச் செயல்களையும் செய்யும் இயல்புடையோர், நன்றே புரிதலாகிய நியமத்தில் நிற்போர் ஆவர் (திருமந்திரம் 557) எனத் திருமந்திரம் கூறும். யோகத்திற்கு இன்றியமையாத இருக்கை ஆதனம் எனப்படும். பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாசனம் எனச் சொல்லப்பட்ட ஏழும் உத்தம ஆசனமாகும். இவற்றுடன் தொன்மையுடைய பிற ஆசனங்களையும் கூட்டி எண்ண எட்டு எனவும் பத்து எனவும் அறுபத்து நான்கு எனவும் நூறு எனவும் பலவாகும் (திருமந்திரம் 563) என்பர் திருமூலர். பிராணாயமமாவது உந்திக்கமலத்திலிருந்து எழும் இடகலை பிங்கலையாகிய இருவகை உயிர்ப்பினையும் தத்தம் இயக்கத்திலிருந்து தடுத்து நிறுத்துதல் ஆகும். மெய்ப்பொருளை நினைந்து பிராணாயாமம் செய்வோர் தம்மனத்தை அடக்க வல்லவர் ஆவர். பிராணாயாமப் பயிற்சியின் பயன் குருவின் அருள்வழியே பெறத்தக்கது என்பதனை, ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே எனவருந் திருமந்திரத்தில் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். (இ-ள்) குதிரைச் சேவகன் நல்லவன். குதிரைகளும் இரண்டுள்ளன. அவனைக் கொண்டு அக்குதிரைகளைத் தத்தம் புலங்களிற் செல்லுமாறு செலுத்தி இழுத்தும் பிடிக்கும் உபாயம் அறிபவர்கள் இல்லை. மெய்யுணர்வு மிக்க ஞானத்தலைவனாகிய குருவின் திருவருளைப் பெற்றால் சேர்த்துப் பிடிக்க (அக்குதிரைகள்) வசப்படும் எ-று. ஆரியன் - குதிரைச் சேவகன், என்றது மனத்தினை. குதிரை இரண்டாவன இடகலை, பிங்கலை என்னும் இருநாடிகளில் செல்லும் வளிகள். வீசிப்பிடித்தல் - நெடுந்தூரம் செல்லுமாறு விட்டு இழுத்தல். விரகு - உபாயம், கூரிய - மெய்யுணர்வு மிக்க. வாரிப்பிடித்தல் - (இடகலை , பிங்கலை என்னும் இருவகை வளியையும்) சேர்த்துப் பிடித்தல். வசப்படுத்தல் - சுழுமுனை வழிச் சென்று கும்பித்தல். பிரத்தியாகாரமாவது மனத்தை ஐம்புலப் பொருள்களில். புறத்தே போகவிடாது அகமுகமாகத் திருப்பும் பயிற்சி. இது தொகைநிலையெனவும் கூறப்படும். மூக்குக்குக் கீழே பன்னிரண்டு அங்குல எல்லையிலுள்ள அநாகத்தானத்திலே சாதகனாகிய நீ உள்ளத்தை ஒருமை நிலையில் வைத்துப் பரம்பொருளைத் தியானித்தலையும் செய்ய வல்லாயாயின் பெருமை வாய்ந்த சித்தியும் பெருமை பொருந்திய (இராச) யோகமும் வந்து நின்னைப் பொருந்தும். உன்னுடைய உடம்புக்கு எக்காலத்தும் அழிவில்லை (திருமந்திரம் 581) என்பர் திருமூலர். தாரணையாவது தாங்கி நிற்றல், இது பொறை எனவும் பெயர்பெறும். மனத்தினை ஒருவழி நிறுப்பது பொறைநிலை என்பது சிலப்பதிகார உரை மேற்கொள். புலன்வழிப் பாடராமல் அகமுகப்பட்டு நிற்கும் மனத்தினைக் குறிக்கத்தக்க பொருளாகிய சிவத்தினிடத்தே கொண்டு செலுத்தி அது கீழ்நோக்கிச் செல்லாதபடிப் பிணித்து நடுநாடியின் உள்வழியாக ஆறு ஆதாரங்களையும் கடந்து மேலைப் பெருவெளியை நோக்கிக் காணாத கண்களும் கேளாச் செவிகளும் எனக் கண்டோர் கருதும்படி இறைவனை அகத்தே நோக்கி நிற்கும் தாரணைப் பயிற்சி யுடையார்க்கு அப்பயிற்சி வாழ்நாள் வீணே கழியாதபடி அடைத்துக் காக்கும் உபாயமாகும் (திருமந்திரம் 568) என்பர் திருமூலர். தியானமாவது தாரணையில் நிறுத்தப்பட்ட உள்ளமானது ஐம்புலன்களாலும், அவற்றால் எய்தும் நுகர்ச்சிகளாலும் திரிபு அடையாமல் மெய்ப்பொருளாகிய இறைவனுடன் ஒன்றித் தொடர்புறும் நீளநினைதலாகும் எண்ணாயிரம் ஆண்டுகள் யோகநிலையில் (உள்ளத்தை ஒருமைப்படுத்தி) இருந்தாலும் (தியானிப்போர்) கண்களாற் பருகுதற்கினிய அமுதமாகக் காட்சி நல்கும் இறைவனைக் கண்ணாரக் கண்டறிவார் இல்லை. (அம் முதல்வனை அவனருளால்) தம் உள்ளத்துள்ளே நாடி அகத் தெழுஞ் சோதியின் ஒளி தோன்றுமாறு இருந்து நோக்கினால் கண்ணாடியினுள்ளே வடிந்தோன்றுமாறு போல அம்முதல்வன் உள்ளத்துள்ளே கலந்து தோன்றுவான். எனத் தியானமாமாறும் அதன் பயனும் பற்றித் திருமூலர் நவின்றுள்ளார். சமாதி என்பது இயமம் முதலான யோக அங்கங்கள் ஏழிலும் பயிற்சி நிரம்பிய ஆன்மா, தன்னை மறந்து சிவத்துடன் ஒன்றியுணரும் நிலையாகும். ஞானத்தின் நுண்மை நிலையாகிய இதனை நொசிப்பு என வழங்குதல் தமிழ் மரபாகும். கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று சிற்பனை யெல்லாஞ் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தகுந்தண் சமாதியே என்பர் திருமூலர். (இ-ள்) பொருள்தோறும் உலகத்தார் கற்பித்து வழங்குகின்ற கற்பனைகளை யொழிந்து மூலாக்கினிவழியே மேற்சென்று (உலகினைச் சிருட்டித்த) சிற்பனும் பேரொளியாய்த் திகழும் அழகனும் ஆகிய இறைவனைத் தேடிப் புணர்ந்த சந்திரமண்டலத்தோடு பொருந்தித் தனக்கு மேலான பரம்பொருளே தான் ஆகும் நிலையில் தற்போதமிழந்து ஒன்றியுடனாகும் தகுதிவாய்ந்ததே உள்ளத்தைக் குளிர்விக்கும் தன்மையினதாகிய சமாதி (திருமந்திரம் 628). கற்பனை - உலகத்தார் பொருள்தோறும் புனைந்து வழங்கும் பெயர், வடிவு முதலிய வேற்றுமைகள். கனல் - மூலாக்கினி. சிற்பன் - உலகினைப் படைத்த சிற்பி. என்றது உலகியற்றியானாகிய இறைவனை. புணர்மதி - மூலாக்கினியின் வெம்மை சென்று சார்தற்கு இடனாகிய சந்திரமண்டலம். தற்பரம் - தனக்குப்பரம் என்றது, ஆன்மாவாகிய தனக்கு மேலான பொருள் என்றவாறு. தண்மை - குளிர்ச்சி. சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே எனவும் உளங்குளிர் தமிழ்மாலை எனவும் வரும் திருமறைத் தொடர்கள், பிறவித் துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்குவது இறைவன் திருவருள் நினைவாகிய சிவஞானம் என்னும் மெய்ம்மையை வற்புறுத்துவனவாகும். எண்வகை யோக உறுப்பினையடுத்து அணிமா, லகிமா, மகிமா, பிராத்தி கரிமா, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் ஆகிய எண்வகைச் சித்திகளின் இயல்பும் பயன்களும் கூறப் பெற்றுள்ளன. அணிமா தம் உடம்பினை அணுவினும் மிக நுண்மையதாக்கிக் கொள்ளும் வன்மை. மிகமா - மலையினும் மிக்க பெருமையுடைய வடிவினைக் கொள்ளுந்திறன். கரிமா - இலேசான பஞ்சினையும் அளவிடமுடியாத கன முடையதாகச் செய்யும் ஆற்றல். இலகிமா - எத்துணைக் கனமுடைய பொருளையும் ஆகாயத்தினும் நொய்தாகச் செய்யும் திறன். பிராப்தி - வேண்டியவெல்லாம் விரும்பியவாறு அடையப்பெறுதல். பிராகாமியம் - விரும்பிய நுகர் பொருள்களைப் படைத்து விரும்பிய பலவடிவிற் புகுந்து அவற்றை நுகர்தல். ஈசத்துவம் - தத்துவங்களை நீங்காமல் நின்று அவற்றை நடத்தும் இயல்பினால் தேவர் முதலியோரால் வழிபடப் பெறுதல். வசித்துவம் - எல்லா உலகங்களையும் தன்வசப்படுத்துதல். இவ்வெண்வகைச் சித்திகளையும், தானே அணுவும் சகத்துத்தன் நோன்மையும் மானாக் கணமும் பரகாயத் தேகமும் தனானாவதும் பரகாயஞ் சேர் தன்மையும் ஆனாத வுண்மையும் வியாபியும் ஆம்எட்டே (திருமந். 649) எனத் திருமூலர் விளக்கியுள்ளமை காணலாம். நன்னெறியினை நாடிய சாதகன், தான் இப்பிறப்பிற் கொண்டுள்ள ஓர் உடம்பில் இருந்து கொண்டே தான் வேண்டிய பயன்களைப் பெறுதல் வேண்டும். அதற்கு உபாயம் தனது உடம்பினை நெடுங்காலம் நிலைபெறச் செய்தலேயாகும் மூன்றாந் தந்திரத்தின் உள்ளுறையாவது சரீரசித்தி உபாயமாகும்.உடம்பின்றி உயிர்த் தனித்து நின்று தொழில் புரிதல் இயலாது. அறம் முதலிய உறுதிப் பொருள்களை உயிர் பெறவேண்டுமாயின் அதற்குரிய முயற்சிகளை உடம்பொடு கூடி நின்றே செய்தல்வேண்டும். ஆகவே ஞானசாதனமாகிய உடம்பினைப் பேணுதல் உயிருக்கு இன்றியமையாதது என்னும் உண்மையினை, உடம்பார் ஆழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (திருமந்திரம் 724) உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உம்பினுக்குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புறே யுத்தமன் கோயில் கொண்டானென் றுடம்பினை யானிருந் தோம்பு கின்றேனே (திருமந்திரம் 725) எனவரும் திருமந்திரங்களால் திருமூலர் அறிவுறுத்தி யருள்கின்றார். மேற்குறித்த வண்ணம் இயமம் நியமம் முதலிய எண்வகை யோக வுறுப்புறுப்புக்களால் உடம்பினைப் பேணி மனத்தினை ஒருமை நிலையிற் கொணர்ந்து சிந்தையில் எழுந்தருளிய முழுமுதற்பொருளை நினைந்து போற்றும் தவநெறியினை நாலிருவழக்கின் தாபதப்பக்கம் (தொல். புறத்.) என்பர் தொல் காப்பியனார். உடம்பினைத் தூய முறையில் நன்கு பேணிச் சரியை கிரியை ஆகிய நெறிகளிற் பயின்ற பின்னர்ச் சிவயோகத்தில் நிலைபெற்று அமர்ந்து சிவஞானமாகிய பயனைப் பெறுதற்கு நிறைமொழி மாந்தராகிய பெருமக்கள் அருளிய மறைமொழிகளாகிய மந்திரங்களின் பயிற்சியும் அவற்றின் வன்மையுமே பெறுதல் இன்றியமையாததாகும். எனவே இத்திருமந்திரத்தின் நாலாந் தந்திரத்தில் திருவம்பலச் சக்கரம் முதலிய மந்திரச் சக்கரங்களின் உபாசனை முறைகள் விரிவாக விளக்கப் பெற்றுள்ளன. நாலாந்தந்திரம் அசபை முதல் நவாக்கரி சக்கரம் ஈறாகப் பதின்மூன்று தலைப்புக்களை யுடையது. இதன்கண் தெய்வம் நிலைபெறும் மந்திரச் சக்கரங்களின் வடிவம், அளவு, வரைகள், அவ்வரைகளினுள்ளே அடைக்கப்பெறும் மந்திர எழுத்துக்கள், உரிய மந்திரங்கள் அவற்றை அருச்சிக்கும் முறைகள், அவ்வவற்றின் அதி தெய்வங்கள் வலிமை, பயன் முதலியன விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இன்ன சக்கரத்தை இன்ன சாதனத்தில் எழுதி இன்ன இடத்தில் இன்னவாறு மேற்பூச்சும் அணியும் மலரும் முதலியன சாத்தி இன்னபடி இத்தனை காலம் வழிபட்டால் வசியம் முதலாகச் சொல்லப்படும் உலகியற் பயன்களுள் இன்னின்ன பயன்களை எளிதிற் பெறலாம் என்ற செயல் முறைகளைத் திருமூலதேவர் இத்தந்திரத்தில் விரித்துக் கூறியுள்ளார். இறைவன் தனது திருவருளாகிய சத்தியின் மூலமாகவே மன்னுயர்கட்கு அருள்புரிவானாதலால் இத்தந்திரத்திற் கூறப்படும் மந்திரச் சக்கரங்களிற் பெரும்பாலன இறைவன் திருவருளாகிய சத்தி பேதங்களைப் பற்றியனவாக அமைந்துள்ளன. உலகியல் வாழ்விலும் மறுமையிலும் உலக மக்கள் விரும்பிய பயன்களை அளிக்கவல்ல மந்திரங்கள் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வந்துள்ளன என்பது, கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரமாதலின் (சிலப். காடுகாண். 196-7) எனவும், அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை மரபின் மந்திர மிரண்டும் ஒருமுறையாக வுளங்கொண்டோதி (சிலப். காடுகாண். 128-130) எனவும், ஆறெழுத்தடங்கிய அருமறைக்கேள்வி நாவியல் மருங்கின் நவிலப்பாடி (திருமுருகு.) எனவும் வரும் தொடர்களால் இனிது விளங்கும், இக்குறிப்புக் களைக் கூர்ந்து நோக்குங்கால் இத்தகைய தெய்வ மந்திரங்கள் பல உபதேச முறையில் தமிழகத்தில் நெடுங்காலமாக நிலைபெற்று வழங்கி வந்துள்ளன என்பது இனிது புலனாகும். ஆகவே திருமூலநாயனாரால் திருமந்திரத்திற் குறிக்கப் பெற்றுள்ள மந்திரங்கள் பலவும் தென்றமிழ் நாட்டில் மக்களிடையே உபதேச முறையிற் பயிலப்பெற்று வழங்கிய தொன்மையுடையன என்பது நன்கு துணியப்படும். திருமந்திரமாலையினை அருளிய திருமூலர் ஆரியமும் செந்தமிழும் கற்று வல்ல சிவயோகியாராதலின் இமயம் முதல் குமரி வரையுள்ள நிலப்பகுதியாகிய பரத கண்டத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் பயன்படும் முறையில் தமிழும் ஆரியமும் ஆகிய இருமொழி யெழுத்துக்களும் விரவிய நிலையில் அகரமுதல் க்ஷகர மீறாகிய ஐம்பத்தோ ரெழுத்துக்களால் ஆகிய மந்திரங்களை இந்நூலில் வகுத்துக் கூறியுள்ளார். அசபை ஓரெழுத்து மந்திரமாகிய இது, மந்திரங்களுக் கெல்லாம் அடிப்படையானது. நாவினாற் செபிக்கப்படாமல் உயிர்வளியாகிய பிராணனுடன் இழைந்து இயங்கும் மந்திரமாதலின் அசபை (செபிக்கப்படாதது) எனப் பெயர் பெற்றது. ஹம் என்றும் இதனை அம்ச மந்திரமென்றும் அன்னமந்திரம் என்றும் அங்குசம் என்றும் வழங்குதல் உண்டு. ஓரெழுத்து மந்திரமாகிய அசபையின் இயல்பும் அதனைச் செபிக்கும் முறையும் 884, 906ஆம் திருமந்திரப் பாடல்களில் உணர்த்தப்பெற்றன. திருவம்பலச்சக்கரம் மந்திரங்களின் மேம்பட்ட திருவைந்தெழுத்திற் கமைந்த சக்கரங்களுள் சிறப்புடையது திருவம்பலச் சக்கரமாகும். சிதாகாசப்பெருவெளியில் அற்புதத் தனிக் கூத்தாடும் அம்பலவாணர் அருட்சத்தியாகிய சிவகாமி யம்மையுடன் மந்திரவடிவாய் நின்று நிலவுவது, இந்த யந்திரமாகும். மந்திரத்தலையாக விளங்குவது இத்திரு வம்பலச் சக்கரமாகும். திருவைந்தெழுத்தே இறைவனுக்குரிய திருமேனியாகத் திகழ்கின்றதென்பதனை விளக்குவது, அஞ்செழுத்தாலே யமர்ந்தனன் நந்தியும் அஞ்செழுத்தாலே யமர்ந்த பஞ்சாக்கரம் அஞ்செழுத்தாகிய அக்கர சக்கரம் அஞ்செழுத்தாலே யமர்ந்திருத்தானே (திருமந். 934) எனவரும் திருமந்திரமாகும். நந்தியாகிய இறைவன் அஞ்செழுத்தாகிய மந்திர வடிவாக அமர்ந்துள்ளான். அவன் விரும்பியமர்ந்த பஞ்சாக்கரமும் ஐந்தெழுத்தால் ஆகியதே. ஐந்தெழுத்தாகிய அக்கரங்கள் அடைக்கப்பெற்ற சக்கரத் துள்ளே ஐந்தெழுத்தையே மனது திருமேனியாகக் கொண்டு இறைவன் எழுந்தருளியுள்ளான் என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். இதனை அடியொற்றி யமைந்தது, அஞ்செழுத்தே ஆகமமும் அண்ணல் அருமறையும் அஞ்செழுத்தே ஆதிபுராண மனைத்தும் - அஞ்செழுத்தே ஆனந்தத் தாண்டவமும் ஆறாறுக் கப்பாலாம் மோனந்த மாமுத்தியும் (44) எனவரும் உண்மை விளக்கச் செய்யுளாகும். எல்லாம் வல்ல இறைவன் நாதமுடிவிலே திருவைந்தெழுத்தினையே தனக்குரிய திருமேனியாகக் கொண்டு ஆடல் புரிந்தருளும் முறைமையினை அறிவுறுத்துவது, ஆகின்ற பாதமும் அந்நவாய் நின்றிடும் ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம் ஆகின்ற சீயிரு தோள் வவ்வாய்க் கண்டபின் ஆகின்ற வச்சுடர் அவ்வியல் பாமே (திருமந். 941) எனவரும் திருமந்திரமாகும். உயிர்கட்கு ஆக்கமளிக்குந் திருவடியும் அந்த நகாரமாய் நிலைபெறும். உந்திச்சுழியுள் அவ்விடத்திலே மகாரம் பொருந்துவதாகும். சிகாரம் இரண்டு தோள்களாகவும் வகாரம் வாயாகவும் கண்டபின், திருமுடிக்கண் விளங்குகின்ற சுடர் யகாரத்தின் தன்மையதாகும் என்பது இதன் பொருள். நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய் சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்த வவ்வு வாயதாய் யவ்விரண்டு கண்ணதாய் எழுத்துநின்ற நேர்மையிற் செவ்வையொத்து நின்றதே சிவாய மஞ்செழுத்துமே (97) எனவரும் சிவவாக்கியர் பாடல் இத்திருமந்திரத்தை அடியொற்றி யதாகும். பொன்னம்பலத்திலே ஆடல் புரிந்தருளும் இறைவன், தன் திருவடியிலே நகரமும், திருவுந்தியிலே மகரமும், திருத்தோள்களிலே சிகரமும், திருமுகத்திலே யகரமும் ஆகவும் திகழுந்திறத்தினை, ஆடும்படிகேள்நல் வம்பலத்தான் ஐயனே நாடுந்திரு வடியிலே நகரம் - கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகருமுகம் வா,முடியப் பார் (உண்மை விளக்கம் 32) எனவரும் பாடலிலும், ஒலிக்கின்ற உடுக்கை ஏந்திய திருக்கையிலே சிகாரமும் நன்றாக வீசிய திருக்கையிலே வகாரமும், அமைத்த திருக்கையிலே யகாரமும், அக்கினியேந்திய கையிலே நகாரமும், முயலகனை மிதித்துள்ள பாதத்திலே மகாரமும் கொண்டருளி நிருத்தஞ் செய்தருளுந்திறத்தினை, சேர்க்குந் துடிசிகரம், சிக்கெனவா வீசுகரம், ஆர்க்கும் யகரம் அபயகரம் - பார்க்கிலிறைக்கு அங்கி நகரம், அடிக்கீழ் முயலகனார் தங்கு மகரமது தான் (உண்மைவிளக்கம் 33) எனவரும் பாடலிலும், திருவாசி ஓங்காரமாகவும் அதன்கண் உள்ள சுடர்கள் ஓங்காரத்தை விட்டு நீங்காத திருவைந் தெழுத்தாகவும் அமைய அழகிய திருவம்பலத்தில் இறைவன் செய்தருளும் நிருத்தத்தை யான் எனது என்னும் செருக்கற்றுக் கண்டவர்கள் பிறப்பிறப்பற்ற பேரின்பமுத்தியினைப் பெறுவார்கள் என்பதனை, ஓங்கார மேநற்றிருவாசி உற்றதனில் நீங்கா வெழுத்தே நிறைசுடராய் - ஆங்காரம் அற்றார் அறிவரணி அம்பலத்தான் ஆடலிது பெற்றார் பிறப்பற்றார் பின் (உண்மைவிளக்கம் 34) எனவரும் பாடலிலும் திருவதிகை மனவாசகங்கடந்தார் விரித்துக் கூறியுள்ளமை இங்கு மனங்கொளத்தகுவதாகும். எவ்வகைப் பொருள்களுக்கும் பரந்து இடங் கொடுக்கும் ஆதாரமாகவும் இடந்தொறும் பரவியுள்ள பொருள்களாகவும் சிவமும் சத்தியும் இரண்டறக் கலந்து விளங்குந்திறத்தினை உணர்த்துவது, வாயும் மனமுங் கடந்த மனோன்மணி பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத் தாயும் மகளும் நற்றாரமும் ஆமே (திருமந். 1178) எனவரும் திருமந்திரமாகும். சொல்லையும் நினைப்பையுங் கடந்த மனோன்மணியாகிய அன்னையும் அச்சம் விளைக்கும் பேய்க் கூட்டத்தினையும் ஆக்கம் நல்கும் பூதகணங்களையும் தனக்கு ஏவற் சுற்றமாகவுடைய கன்னிமைப் பருவத்தினளும் ஆகிய பராசத்தி நூலறி வினையும் உயிருணர்வையும் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் சிவபரம்பொருளுக்குத் தாயாகவும் மகளாகவும் நல்ல மனைவியாகவும் திகழ்கின்றாள் என்பது இத்திருப் பாடலின் பொருளாகும். வாய், மனம் என்பன ஆகுபெயராய்ச் சொல்லையும் நினைவையும் குறித்தன. வாயும் மனமும் கடத்தலாவது சொல்லுக்கும் சிந்தனைக்கும் எட்டாது (மாற்றம் மனம் கழிய) அப்பாற்பட்டு விளங்குதல், மனோன்மணி - பெண்பிள்ளை - கன்னி என்பன இறைவியைக் குறித்தன. ஆய்தல் என்றது நூலறிவினையும் அறிவு என்றது உயிருணர்வையும் குறித்தன. அரன் - உயிர்களின் பாசங்களை நீக்குபவன். இறைவனும் அவனின் வேறல்லாத திருவருளும் மன்னுயிர்களை உய்வித்தல் வேண்டிச் சிவமும் சத்தியுமாகத் திகழ்தல் பற்றிச் சிவமும் சத்தியும் கணவனும் மனைவியும் ஆகவும், சிவதத்துவத் தினின்றும் சத்திதத்துவம் தோன்றும் முறைபற்றி அவ்விரண்டும் முறையே தந்தையும் மகளும் ஆகவும், சத்திதத்துவத்தினின்றும் சதாசிவத் தத்துவம் தோன்றும் முறைபற்றிச் சத்திதாயாகவும் சதாசிவம் மகனாகவும், சுத்த மாயையினின்றும் இறைவனது ஞான சத்தியின் தூண்டுதலால் சிவதத்துவமும் கிரியா சத்தியின் தூண்டுதலால் சத்திதத்துவமும் முன்னும் பின்னும் ஆக முறையே தோன்றுதல் பற்றி அவ்விரண்டும் முறையே தமையனாகவும் தங்கையாகவும் இவ்வாறு உலகியற்பிறப்பு முறை உறவில் வைத்து உருவம் செய்யப் பெற்றன. உலக முதல்வனாகிய அப்பனோடு அம்முதல்வனின்றும் பிரிக்க வொண்ணாத அருளாகிய அம்மைக்கு உள்ள தொடர் பினைத் தத்துவநெறியில் விளக்கும் முறையில் உருவக அணிநலந் தோன்றத் திருமூலநாயனார் அருளிய திருமந்திரப் பொருளை உளங்கொண்ட திருவாதவூரடிகள், எம்பெருமான் இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் (திருவாசகம், திருப்பொற்சுண்ணம் 13) எனவும், தவளத்த நீறணியுந் தடந்தோளண்ணல் தன்னொருபா லவள் அத்தனாம் மகனாம் தில்லையான் (திருக்கோவையார் 112) எனவும் இறைவனை உமையம்மையுடன் உறவுமுறை குறித்தும் போற்றியருளினார். திருமூலநாயனார் சைவ சித்தாந்தத்தின் சிறப்புடைய தத்துவங்களாகக் கண்டுணர்த்திய சுத்த தத்துவத் தோற்றம் பற்றிய இவ்வுருவகத்தின் கருத்தினை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, சிவம்சக்தி தன்னையீன்றும் சத்திதான் சிவத்தையீன்றும் உவந்திருவரும் புணர்ந்திங் குலகுயிரெல்லா மீன்றும் பவன்பிரம சாரியாகும் பான்மொழி கன்னியாகும் தவந்தரு ஞானத்தோர்க்கித் தன்மைதான் தெரியுமன்றே (சிவஞான சித்தியார் சுபக்கம் 166) எனவரும் சிவஞான சித்தியாராகும். கனகமார் கவின்செய் மன்றில் அனகநாட கற்கெம் அன்னை அனைவிதாய் தங்கை மகள் (சிதம்பரச் செய்யுட்கோவை) எனவரும் குமரகுருபரர் பாடலும் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். முழுமுதற்பொருளாகிய இறைவன் புறமாகிய பொருள்களை நோக்காது தன்னளவில் அறிவுப்பிழம்பாய் நிற்கும் நிலையி சிவம் எனவும், தனது அருளால் மன்னுயிர்களை நோக்கும் நிலையிற் சத்தி எனவும், அப்பனும் அம்மையும் என இருதிறமாகக் கூறப்பெறுவன். இறைவனது திருவருள் ஞானசத்தியாய்ச் சுத்தமாயையில் தோய்ந்த பகுதி சிவதத்துவம் எனவும், கிரியா சத்தியாய்த் தோய்ந்த பகுதி சத்தி தத்துவம் எனவும், ஞானமும் கிரியையும் சமநிலையில் தோய்ந்த பகுதி சதாசிவ தத்துவம் எனவும், ஞானமும் கிரியையும் ஆகி ஒத்துத் தோய்ந்த பகுதி மகேசுர தத்துவம் எனவும், கிரியை குறைந்து ஞானம் மிகுந்து தோய்ந்த பகுதி சுத்தவித்தை எனவும் இவை ஐந்தும் சுத்தத்தத்துவங்கள் எனவும் வழங்கப்பெறும். இத் தத்துவங்கள் ஐந்தும் இறைவனுக்குச் சுதந்திர வடிவங்களாகும். சிவம், சத்தி, நாதம், விந்து என்னும் நான்கும் அருவத் திருமேனிகள். சதாசிவம் ஒன்றும் அருவுருவத்திருமேனி. மகேசன், உருத்திரன், மால், அயன் என்னும் நான்கும் உருவத் திருமேனிகள், இறைவன் இவ்வொன்பது வகையாக நின்று உயிர்கட்கு அருள் புரிவன் என்பார். சிவஞ்சத்தி நாதம்விந்து சதாசிவன்திகழும் ஈசன் உவந்தருள் உருத்திரன்றான் மால் அயன் ஒன்றினொன்றாய்ப் பவந்தரும் அருவம் நாலிங்குருவம் நால்உபயம் ஒன்றாம் நவந்தருபேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர் (சிவஞானசித்தி. சுபக்கம். 164) என்றார் அருணந்தி சிவாசாரியார். திருமந்திரத்தின் ஐந்தாந்தந்திரம் சுத்தசைவம் முதலாக உட்சமயம் ஈறாக இருபது உட்பிரிவுகளை யுடையதாகும். இதன்கண் நால்வகைச் சைவமும், சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளும், அவைபற்றியமைந்த தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என்னும் நெறிமுறைகளும், மேற்குறித்த நெறிகளில் நிலைபெற்றொழுகினோர் பெறுதற்குரிய சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்னும் நால்வகைப் பேறுகளும், மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்னும் நால்வகைச் சத்தி நிபாதப் பக்குவ நிலைகளும் அறிவுறுத்தப்பெற்றுள்ளன. புறச்சமயங்களின் ஒவ்வாத்தன்மைகளைப் புலப்படுத்துவது புறச்சமய தூடணம் என்ற பகுதியாகும். இத்தந்திரத்தில் திருமூலர் கூறியுள்ள பொருட்பகுதிகளை அடியொற்றியே அருணந்தி சிவாசாரியாக தாம் இயற்றிய சிவஞானசித்தியாரில் சரியை முதலிய நால்வகை நன்னெறிகளையும் இந்நான்கும் ஒவ்வொன்றும் நந்நான்காய் விரியும் முறைமையினையும் பிறவற்றையும் பிரித்துக் கூறியுள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கதாகும். பதி பசு பாசம் (கடவுள், உயிர், உலகம்) என்னும் முப்பொருள் களும் என்றும் உள்ளனவாகும். அவற்றுள் பதி - இறைவன், இறைவன் ஒருவனே, பசு - உயிர். உயிர்கள் எண்ணில்லாதன. அவை அநாதியே (தோற்றமில் காலமாகவே) மலத்தாற் பிணிக்கப்பட்டுள்ளன; அருளாளனாகிய இறைவன் உயிர்கள் இருள் மலப்பிணிப்பினின்றும் விடுபட்டு உய்யும் பொருட்டு உடல் கருவி உலகு நுகர்பொருள்களைத் தந்து அவற்றின் வழி நன்றும் தீதும் ஆகிய இருவினைகட் கீடாகிய பிறவிகளில் உயிர்களைச் செலுத்துகின்றான். உயிர்கள் பல்வகைப் பிறவிகளிலும் வந்து பிறந்து நல்வினை தீவினைகளைச் செய்து உழல்கின்றன. இவ்வாறு வினை வயத்தால் மாறிமாறிப் பிறந்திறந்துவரும் உயிர்கள் பிறவித் துன்பங்களினின்றும் நீங்கி என்றும் பேராவியற்கையாகிய நிலையான பேரின்பத்துள் இருக்க முயல்வதுவே நல்லுணர்வு பெற்ற உயிர்களின் குறிக்கோளாக அமைதல் வேண்டும். அத்தகைய நன்முயற்சிகளையும் நற்பணிகளையும் மேற்கொள்ளுதற்குக் குருவின் அருளும் திருவைந்தெழுத்து திருநீறு முதலிய சிவசாதனங்களுமே துணையாவன. அத்தகைய துணையினைக் கொண்டு சிவநெறியில் ஒழுகினால் உலகமக்கள் பிறவித்துன்பம் நீங்கி நிலையான பேரின்பத்தைப் பெறலாம். அவ்வருளனுபவம் மாறாதிருக்க இறைவனடியார்களுடன் இருக்கும் பழக்கம் இன்றியாமையாததாகும் என்னும் சைவ சமயவுண்மைகள் இந்த ஐந்தாந்தந்திரத்திற் கூறப்பெற்றுள்ளன. சைவ சமயத்தின் நால்வகை நெறிகளில் ஒன்றாகிய சரியை என்பது, திருக்கோயிலில் அமைந்துள்ள இறைவனது உருவத் திருமேனியை யுளங்கொண்டு போற்றித் திருக்கோயிலில் திருவலகிடல், மெழுகுதல், திருவிளக்கு ஏற்றுதல், மலர்கொய்து மாலை தொடுத்தல், புகழ்ந்து பாடுதல் முதலாக உடம்பின் தொழில்களாக நிகழ்வது. கிரியை என்பது திருக்கோயிலில் உள்ள அருவுருவத் திருமேனியாகிய சிவலிங்கத்தை அகத்தேயும் புறத்தேயும் பூசனை புரிதலாகிய வழிபாட்டு முறையாகும். யோகமாவது இறைவனுக்குரிய உருவம், அருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளுள் மிக நுண்ணிய அருவத்திரு மேனியை அகமுயற்சியால் இடைவிடாது நினைந்து அப்பொருளுடன் ஒன்றியுணர்வதாகும். ஞானமாவது மேற்குறித்த உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூவகைத் திருமேனிகளையும் முறையே வழிபட்டுவர உயிரின்கண் உளதாம் பக்குவ முயற்சியாலே உள்ளவாறு உணர்வு விளங்கி முன்குறித்த உடம்பின்தொழில் மனத்தின் தொழில் இரண்டினையும் கைவிட்டு இறைவனது பொருள்சேர் புகழ்த்திறங்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் ஆகிய அறிவுத்தொழில் அளவால் இறைவனை வழிபடுதலாகும். சரியை முதலிய நால்வகை நெறிகளும் இத்திருமந்திரத்தில் 1443 முதல் 1476 முடியவுள்ள திருப்பாடல்களில் விளக்கப் பெற்றன. சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாசமார்க்கம் என்னும இந்நால்வகை மார்க்கங்களும் 1477 முதல் 1506 முடியவுள்ள திருப்பாடல்களில் விரித்துரைக்கப் பெற்றன. நால்வகை நெறிகள், மார்க்கங்கள் ஆகிய இவற்றின் பயனாகவுள்ள நால்வகை முத்திப்பேறுகளும் 1507 முதல் 1513 முடியவுள்ள திருப்பாடல்களில் எடுத்துரைக்கப் பெற்றன. சாலோகம், சாமீபம், சாரூபம்,சாயுச்சியம் என்னும் நால்வகை முத்திகளின் இயல்பினை விளக்குவது, பாசம் பசுவான தாகும் இச்சாலோகம் பாசம் அருளான தாகும் இச்சாமீபம் பாசம் சிவமான தாகும் இச்சாரூபம் பாசம் கரைபதி சாயுச் சியமே (திருமந். 1509) எனவரும் திருமந்திரமாகும். சடமாகிய பாசம் ஆன்மாவின் அறிவெல்லைக்குள் அடங்கி நிற்க இறைவனை வழிபட்டு மகிழும் நிலை இறைவனுலகில் ஒப்ப உறைதலாகும். உயிரைப் பிணித்துள்ள பாசம் உயிரறிவை மறைத்தலாகிய தன்மை யினை யிழந்து அருளினால் விலகத்தான் இறைவனையணுகி நிற்றல் இறைவனது அருகிருத்தலாகும். பசுகரணங்களாகிய பாசப்பகுதி பதிகரணங்களாக மாறுதல் இறைவனுருப் பெறுதலாகும். பாசஞானமான நூலறிவும் பசுஞானமான ஆன்மபோதமும் கரைதொழியப் பதியாகிய பரம் பொருளுடன் இரண்டறக்கலந்து ஒன்றாதல் சாயுச்சியம் எனப்படும். சிவம் என்னும் பெயரடியாகப் பிறந்தது சைவம் என்னும் பெயராகும. சிவன் என்ற சொல் தனித்தமிழ்ச் சொல் என்பது செம்மேனிப் பேராளன் வானோர்பிரான் என்னும் காரைக்கால் அம்மையார் வாய்மொழியாலும் சிவனெனும் நாமந்தனக்கேயுடைய செம்மேனியம்மான் எனவரும் அப்பரருள்மொழியாலும் நன்கு வலியுறுத்தப் பெற்றுள்ளமை காணலாம். திருவுருவநிலையிற் சிவன் என அன்னீறாக வைத்துப் போற்றப்பெறும் இறைவனை உருவங்கடந்த நிலையில் செம்பொருள் எனவும் சிவம் எனவும் போற்றுதல் நெடுங்காலமாக நிலைபெற்று வரும் தமிழ்மரபாகும். செம்பொருளாய சிவமெனலாமே எனவரும் திருமந்திரம் இம்மரபினை இனிது புலப்படுத்துவதாகும். சிவம் என்ற தமிழ்ச் சொல்லின் அடியாக வடமொழித் தந்திதாந்த விதியை யொட்டியுருவாகிய சொல்லே சைவம் என்பதாகும். இதனால் ஆரியம் தமிழ் என்னும் இருமொழி நூல்களிலும் சிவ வழிபாடு பற்றிய தத்துவ நூல்கள் தோன்றி வழங்கினமை நன்கு புலனாம். இச் சொல்லுக்குப் பொருள் விளக்கம் கூறுமுகமாகச் சைவ சமயங்கூறும் அத்துவிதமுத்தியின் இயல்பினை விளக்குவது, சைவஞ் சிவனுடன் சம்பந்தமாவது சைவந் தனையறிந்தே சிவஞ்சாருதல் சைவஞ் சிவமன்றிச் சாராமல் நீவுதல் சைவஞ் சிவானந்தஞ் சாயுச்சியமே (திருமந். 1512) எனவரும் திருமந்திரமாகும். சைவமாவது உலகுயிர்களுடன் ஒன்றாய் வேறாய் உடனாய் நிற்கும் சம்பந்தத்தினையுடையது. சைவமாவது ஆன்மா தன்னைச் சிவத்துக்கு அடிமையென்றுணர்ந்து சிவத்தினை வழிபட்டுச் சாருதல். சைவமாவது, சித்தாகிய பரம்பொருளன்றி அசித்தாகிய பாசங்கள் தன்னைச் சாராதவாறு நீங்கியொழுகுதல். சைவமாவது சிவத்துடன் இரண்டறக்கலந்து அம்முதல்வன் வழங்கும் சிவானந்தமாகிய பேரின்பத்தினைத் துய்த்து மகிழ்தலாகிய சாயுச்சிய நிலையாகும் என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். சிவமாகிய முழுமுதற்பொருளோடு உலகுயிர்களுக்கு உளதாகிய தொடர்பினை விளக்கும் சமயநெறியே சைவம் என்பது உணர்த்துவார். சைவம் சிவத்தோடு சம்பந்தம் ஆவது என்றார். சிவமயம் என்பது இத்தொடர்பினையே குறிப்பதாகும். சார்ந்ததன் வண்ணமாம் தன்மையதாய ஆன்மா சதசத்தாகிய தன்னியல்பினையறிந்து அசத்தாகிய பாசங்களைச் சாராது சத்தாகிய சிவத்தினைச் சார்ந்து உய்திபெற வகுத்தநெறியே சைவம் என்பது அறிவுறுத்துவார் சைவம் தனையறிந்தே சிவம் சாருதல் என்றார். பாச நீக்கமும் சிவப்பேறும் ஆகிய இருவகைப் பயன்களுள், உயிர்க்குயிராய் உள்நின்று உதவிவரும் இறைவனருளால் அல்லது தான் ஒன்றையுஞ் செய்யாமையாகிய இறை பணியினால் பாசநீக்கம் உண்டாகும் என்பார் சைவம் சிவமன்றிச் சாராமல் நீவுதல் என்றார். நீவுதல் - நீங்குதல். ஒரு பொருளைக் காட்டக் காணுந்தன்மையதாய கண்ணுக்கு ஒன்றைக் காணும்படி உடனிருந்து காட்டி அதனத்தானும் காணும் உயிரைப்போன்று, அறிவிக்க அறியுந்தன்மையதாகிய ஆன்மா பொருள்கள் அறியும்படி இறைவன் அதனோடு உடனாய்நின்று உயிர்க்கு அறிவித்துத் தானும் அவ்விடயங்களிற் கலந்து அறிந்து உதவி செய்தலால், இவ்வாறு உயிருடன் அத்துவிதமாய் நின்று உதவி செய்தருளும் இறைவது பெருங்கருணைத்திறத்தை மறவாது நினைந்து செய்யும் பேரன்பினலே அம்முதல்வனுடைய திருவடியாகிய சிவானந்த அநுபவத்தை ஆன்மா தலைப்பட்டு மகிழ்தலே சைவசமயம் கூறும் வீடுபேறாகும் என்பது அறிவுறுத்துவார், சைவஞ்சிவானந்தஞ் சாயுச்சியமே என்றார் திருமூலர். இத்திருமந்திரத்தின் முதலடியில் முப்பொருள்களின் உண்மையும் இலக்கணமும், இரண்டாமடியிற் சாதனமும், மூன்றாமடியிற் பாசநீக்கமும், நான்காமடியிற் சிவப்பேறும குறிப்பாக விளக்கப் பெற்றுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். உயிர்களைத் தோற்றமில் கலமாகப் பிணித்துள்ள அகவிருளாகிய ஆணவமலம் உயிரைவிட்டுக் கழலும் பக்குவத்தினை அடைதற் பொருட்டு அதற்குத் துணையாய் நின்று நடத்திய இறைவனது மறைப்பாற்றலாகிய திரோதான சத்தியானது, இருள் மலம் கழலும் பக்குவத்தினை யடைந்தபோது கருணைமறமாக இருந்த தன்னுடைய செய்கை மாறிக் கருணை யெனப்படும் பண்டைப் பராசத்தி யுருவேயாய் உயிர்கள்பாற் பதிதல் சத்தி நிபாதம் எனப்படும். சத்தி நிபாதம் - திருவருட்சத்தி உயிர்களிற் பதிதல். அதுபடிகால் முறையால் மந்ததரம், மந்தம், தீவரம், தீவிரதரம் என நால்வகைப்பட்டு நிகழும், அவற்றின் இயல்பினை 1514 முடியவுள்ள திருமந்திரப் பாடல்கள் விரித்துரைக்கின்றன. ஆணவமாகிய மலவிருளால் தடைப்பட்டிருக்கின்ற ஆன்ம சத்தியாகிய அறையின் மூலையிற் சிறிதும் தோன்றா வண்ணம் கட்டுநிலையிலிருந்த ஆன்மாவை அதன் இயல்புக் கேற்பச் செலுத்தும் மறைப்பாற்றலாகிய திரோதான சத்தியானது, ஆன்மாவின் ஆணவமலம் கழலும் அளவில் முன்னர்க் குருட்டுக் கிழவனாக்கிடந்த ஆன்மாவுக்கு முன்னின்று அருள்செய்ய நினைந்து அவனது இருள்மலத் தன்மையாகிய குருட்டினை நீக்கி இறைவனது திருவருளாகிய தன் இயல்புகள் பலவற்றையும் புலப்படுத்திக்காட்டி, ஆன்மா உற்ற தற்போதத்தை முழுங்கச் செய்து தனது அருளாரின் பத்தினை ஆன்மா வுணர்ந்து நுகரும்படி சிவத்துடன் ஒன்றச் செய்தருளியது என்பார், இருட்டறை மூலை யிருந்த குமரி குருட்டுக் கிழவனைக் கூடல்குறித்துக் குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி மருட்டி அவனை மணம்புரிந்தாளே (திருமந். 1514) என்றார் திருமூலநாயனார். இப்பாடலில் இருட்டு என்றது ஆணவ இருளை. அவ்விருளாற்பற்றப்பட்ட அறைமூலை என்றது, ஆணவல்லிருளால் அடர்க்கப்பட்டிருந்த ஆன்ம சிற்சத்தியை. அதிலிருந்த குமரி என்றது, ஆணவமலம் கழலும் பக்குவத்தையடையும் படி மறைந்து நின்று ஆன்மாவைச் செலுத்திய திரோதான சத்தியினை. குருட்டுக்கிழவன் என்றது, தோற்றமில் காலமாக ஆணவல்லிருளிலப்பட்டு அறிவாகிய கண்ணொளியிழந்த ஆன்மாவை, அதனைக் கூடுதலாவது, ஆணவ மலத்துடன் மறைந்து நின்ற திரோதான சத்தியானது அருட் சத்தியாக மாறி ஆன்மாவின் முன்னிற்றலை, குறித்தல் என்றது, ஆன்மாவின்கண் அருளாய்ப் பதிதலை, குருடு என்றது, ஆணவ மலமாகிய படலத்தால் மறைக்கப்பட்டு ஒளியிழந்த தன்மையினை. குணம்பல காட்டுதலாவது, அருளாகிய தன்னியல்புகள் பலவற்றையும் புலப்படுத்தித் தெருட்டுதல். மருட்டுதலாவது, ஆன்ம போதத்தை மழுங்கச் செய்தல். மணம் புரிதலாவது, சிவபோகத்தை நுகர்தற்கு உரிய நிலையில் ஆன்மாவைச் சிவத்தோடு கூட்டுதல். இருவினையொப்பும் சத்தி நிபாதமும் எய்தினோர் பெறும் பயனை விரித்துரைப்பது, இருவினை நேரொப்பில் இன்னருட்சத்தி குருவென வந்து குணம்பல நீக்கி தரும் அரன் ஞானத்தால் தன்செயல் அற்றால் தரிமலந் தீர்ந்து சிவனவன் ஆமே (திருமந். 1527) எனவரும் திருமந்திரச் செய்யுளாகும். புண்ணியம் பாவம் என்னும் இருவினைகளிலும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனது அறிவின்கண் அவ்விரு வினைப் பயன்களும் சமம் என்னும் உணர்வு தோன்றிய நிலையில் இனிய திருவருளாகிய சத்தி குருவாக எழுந்தருளி உயிரின் பசுபோத குணங்களை நீக்கித் தந்தருளும் சிவஞானத்தால் தன்செயல் அற்றால் அவ்வான்மா மும்மலங்களும்கெட்டுச் சிவமே ஆவன் என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். இருவினை நேரொத்தல் - நன்றுந் தீதும் ஆகிய இரு வினைகளிலும் சமபுத்தியுண்டாதல். இருவினையொப்பாவது நல்வினை தீவினைகளிலும், அவற்றின் விளைவாகிய புண்ணிய பாவங்களிலும், அவற்றின் பயனாகிய இன்பத் துன்பங்களிலும் ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்புமின்றி ஆன்ம அறிவின்கண் ஒப்ப உவர்ப்பு நிகழ்தல். இன் அருட் சத்தி என்றது, முன்னர் உயிரின் ஆணவமலம் பக்குவமாதற் பொருட்டுச் சினம்பொருந்திய திரோதாயியாயிருந்த மறைப்பாற்றலாகிய சத்தியே உயிரின் மலம் கழலும் பக்குவத்தினை யுண்டாக்கியபின் இனிய அருட்சத்தியாயிற்று என்பதாம். குணம்பல நீக்கித் தரும் அரன்ஞானம் என்றது, உயிரின் தாழ்ந்த குணங்களைப் போக்கி மேலான சிவகுணம் பொருந்தும்படி சிவஞானத்தைத் திருவருட்சத்தியே தந்தருளும் என்பதாம். தன்செயலறுதலாவது, ஆன்ம போதம் கெடுதலால் நன்றெசெய்வாய் பிழைசெய்வாய் நானே இதற்கு நாயகமே எனத் தன்செயல் ஒழிந்து இறைவன் செயலில் அடங்கிநிற்றல். திரிமலம் - ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள். சிவம் ஆதலாவது, ஆன்மா தன்பொருட்டன்மையழிந்து சிவம் ஒன்றாயே ஒழியாமலும் சிவத்தின்வேறாய் ஆன்மா தனித்து நில்லாமலும், பாலொடு அளாவிய நீரானது தன் உண்மை கெடாமல் பாலின்தன்மையதாய் அதனுடன் பிரிவறக் கலந்து ஒன்றாதல் போன்று, ஆன்மா தன் உண்மை கெடாமல் சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றாதலாகும். உயிர் இருவினையொப்பும் மலபரிபாகமும் திருவருட் பதிவும் பெற்றுக் குருவருளால் தூய்மை பெற்றுச் சிவமேயாய்த் திகழும் இந்நிலையினை விளக்குவது, இருவினைச் செயல்கள் ஒப்பின்ஈசன்றன் சத்திதோயக் குருவருள் பெற்று ஞானயோகத்தைக் குறுகி முன்னைத் திரிமலமறுத்துப் பண்டைச் சிற்றறிவொழிந்து ஞானம் பெருகிநாயகன்றன் பாதம்பெறுவது சுத்தமாகும் (230) எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தமாகும். கடவுளுண்மையினை உடன்படாத புறச்சமயங்களின் பொருந்தாமையை அறிவுறுத்துவது, திருமந்திரத்திலுள்ள புறச்சமய தூடணம் என்ற பகுதியாகும். உணர்வில் திருந்தாத புறச்சமயங்கள் ஆறும் கடவுளுண்மையினை யுணரு உணர்வுடையன அல்ல என அறிவுறுத்துவது, ஆயத்துள் நின்ற அறுசமயங்களும் காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா மாயக் குழியில் விழுவர் மனைமக்கள் பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே (1530) எனவரும் திருமந்திரப்பாடலாகும். சமயத்தொகுதியுட் கூறப்பட்டு நின்ற புறச்சமயங்கள் ஆறும், உயிர்களின் உடம்பினுள்ளே எழுந்தருளிய முழுமுதற்பொருளாகிய கடவுளைக் கண்டுணரமாட்டா; அச்சமயங்களை மேற் கொண்டொழுகுவோர் மனைவிமக்கள் என்னும் பாசத்தில் அகப்பட்டு இவ்வுலகவாழ்க்கையில் இடர்ப்படுமாறு போலவே மறுமையிலும் பொய்ம்மையே பெருக்கும் பாசவலையுள் அகப்பட்டு வருந்துவர் என்பது இப்பாடலின் பொருளாகும். ஆயம் - கூட்டம்; சமயத்தொகுதி, மணிமேகலைக் காப்பியத்தில் உலோகாயதம், பௌத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம் என்னும் ஆறும், சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, பூதவாதி என்னும் ஏழும் மதக் கோட்பாடுகளாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பூதவாதி கூறுவன உலேகாயதத்துள் அடங்குதலின் பிற்கூறிய மதங்களும் ஆறேயாகும். இனி, திவாகரத்துள வைசேடிகம், நையாயிகம், மீமாஞ்சை, ஆருகதம், பௌத்தம், உலோகாயதம் என்பன ஆறு சமயங்கள் எனக்குறிக்கப்பட்டன. இவை ஆறும் கடவுட் கொள்கையில்லாத சமயங்களாதலின் புறச்சமயங்கள் ஆயின. இவற்றை இருமுச்சமயத்தொரு பேய்த்தேர் எனக் குறித்தார் திருவாதவூரடிகள். காயம் - உடம்பு. உடம்புளே யுத்தமன் கோயில் கொண்டானென்று உடம்பினையானிருந் தோம்புகின்றேனே எனத் தாம் பெற்ற அருளனுபவத்தினை முன்னர்க் கூறியவாறே காயத்துள் நின்ற கடவுள் என இங்கும் எடுத்துரைத்தார் சிவயோகியாராகிய திருமூலதேவர். காண்கிலா - காணும் ஆற்றலற்றனவாயின. கில் என்பது ஆற்றலுணர்த்தும் இடைநிலை தெய்வங் கொள்கையில்லாத அறுசமயத்தவரும் அச்சமயங்களிற் கூறப்படும் பொய்ம்மைக் கொள்கைகளை இன்பந்தரும் மெய்ம்மைக் கொள்கைகள் என்று நம்பித்தம் வாழ்நாட்களை வீணே கழித்தாற் போலவே மறுமையிலும் எல்லையற்ற துன்பக்குழியில் வீழ்ந்து இடர்ப்படுவர் என்பார், மனைமக்கள் பாசத்துள் உற்றுப்பதைக்கின்றவாறே மாயக்குழியில் விழுவர் என்றார். மாயக்குழி - பொய்ம்மைக் கொள்கையினால் விளைந்த துன்பக்குழியாகிய நிரயம். இறைவன் சமயங்கடந்த தனிமுதற்பொருள் என அறிவுறுத்துவது, ஆறு சமயமுங் கண்டவர் கண்டிலர் ஆறு சமயப் பொருளும் அவனவன் தேறுமின் தேறித்தெளிமின் தெளிந்தபின் மாறுத லின்றி மனைபுக லாமே (1533) எனவரும் திருமந்திரமாகும். ஆறுசமயம் - உலோகாயதம் முதலாக முற்கூறப்பட்ட புறச்சமயங்கள்; என்றது, அவற்றின் தத்துவக் கொள்கைகளை விரித்துரைக்கும் நூல்களை காணுதல் - கற்றுணர்ந்து அவற்றின் மெய்ம்மையினைக் கண்டு தெளிதல். தேறுதல் - ஆராய்தல். தெளிதல் - துணிதல். தெள்ளத் தேறித் தெளிந்து தித்திப்பதோர் உள்ளத்தேறல் என்பர் திருநாவுக்கரசர். மாறுதல் - பிறப்பு இறப்பில் அகப்பட்டு அலைதல். மாறுதலின்றிப் புகும் மனை என்றது, பேராவியற்கையாகிய வீட்டினை. களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி உயிரானது தனக்கு ஒப்பில்லா துயர்ந்த பேரின்பத்ததாய் ஒருநிலையில் அமைந்தே விடும் புக்கிலாக விளங்குவது வீடு பேறாகிய அந்நிலையென்பது உணர்த்துவார் மாறுதலின்றி மனைபுகலாமே என்று அருளிச் செய்தார் திருமூலர். கடவுளுண்மையினை யுடன்பட்டொழுகும் அகச் சமயங்கள் ஆறும் ஒருவன் என்னும் ஒப்பற்ற பரம் பொருளையடைதற்கு வகுத்த நெறிகளே என்பதும், இவ்வுண்மை யுணராது சமயத்தார் பலரும் தம்மிற் பிணங்கி மற்றைச் சமயங்களை இகழ்ந்துரைத்தல் அறிவுடைமையாகாது என்பதும் ஆகிய வுண்மைகளை அறிவுறுத்துவது, ஒன்றது பேரூர் வழியா றதற்குள் என்றது போல இருமுச் சமயமும் நன்றிது தீதிது வென்றுரை யாளர்கள் குன்று குரைத்தெழு நாயை யொத்தார்களே (1558) எனவரும் திருமந்திரமாகும். அறிவுடைய நன்மக்கள் சென்று அடைதற்குரிய பெருமை வாய்ந்த ஊர் ஒன்றேயாகும். அவ்வூரை யடைதற்குரிய வழிகள் ஆறுள்ளன என்றாற்போன்று, கடவுளுண்மையைக் கூறும் ஆறு சமயங்களும் முழுமுதற் பொருள ஒன்றையேயடைதற்குச் சாதனமாகவுள்ளன. யாம் கூறும் இதுவே நன்று? பிறர்கூறும் இது தீது என்று இவ்வாறு தம்முட்பிணங்கும் சமயவாதிகள் மலையைப் பார்த்துக் குரைத்து ஓடும் நாயையொத்தவராவர் என்பது இத் திருமந்திரத்தின் பொருளாகும். உட்சமயங்களிற் கூறப்படும் உண்மைகள் புறங் கூற்றாகிய வெற்றுரைகளால் மறுக்கப்படாதன என்பதும், அவற்றின் பொருளொருமையினையுணரவல்ல அறிவு மதுகையின்றிப் புறத் தோற்றத்தினைக் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஓடும் நாயினைப் போன்று, பிறர்கூறுவனவற்றை உள்ளவாறுணர்ந்து கொள்ளும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனிலவாகச் செய்வார்கள் என்பார், குன்றுகுரைத்தெழும் நாயை யொத்தார்களே என அவர்தம் இழிவினைப் புலப்படுத்தினார். ஞானமே திருமேனியாக வுடைய இறைவன், சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களிலெல்லாம் கூறப்பட்ட மெய்யுணர்வு முடிபுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச்சென்று முழுமுதற் பொருளாகிய இறைவனொருவனையே நோக்கி முடிவன என அறிவுறுத்துவார், ஒன்று அது பேரூர், வழி ஆறு அதற்கு உள என்றார். இத்திரு மந்திரத்தை அடியொற்றியது, சுத்தவடி வியல்பாகவுடைய சோதி சொல்லிய ஆகமங்களெல்லாம் சூழப்போயும் ஒத்துமுடியுங்கூட ஓரிடத்தே ஒருபதிக்குப் பலநெறிகள் உளவானாற்போல் பித்தர்குண மதுபோல ஒருகாலுண்டாய்ப் பின்னொரு காலறிவின்றிப் பேதையோராய்க் கத்திடும் ஆன்மாக்களுரைக் கட்டிற்பட்டோர் கனகவரை குறித்துப் போய்க்கடற்கே வீழ்வார் (சித்தியார். பரபக்கம். 9) எனவரும் சிவஞான சித்தியார் பாடலாகும். சமய பேதங்களையே மனத்துட்கொண்டு முரண் பாடுடையராய்ச் சமயப் பொதுமையினை நாடாதோர் பேரின்பநிலையாகிய வீட்டினை அடைதற்கத் தகுதியில்லாதோர் என அறிவுறுத்துவது, இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும் பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென் ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புகலாமே (1568) எனவரும் திருமந்திரமாகும். இறைவனையடைதற்கு வகுக்கப்பெற்ற சமய நெறிகளில் இதுவே தவநெறி, அதுவே தவநெறி என இருவகையாக வேறுபடுத்திப் பேசும் மன மயக்கமுடைய சமயவாதிகளைக் கண்டால் எங்கள் குரு முதல்வராகிய சிவபெருமான் அவர்தம் பேதைமையினை யெண்ணித் தன்னுள்ளத்துள்ளே நகுவான். மக்கள் மேற்கொண்ட தவநெறியாகிய சமயம் எதுவாயிருந்தால் என்ன? அத்தவமுடையோர் எந்த நாட்டில் எந்த இனத்திற் பிறந்தால் என்ன? எல்லா நெறிகளும் இறைவனையடைந்து உய்தி பெறுதற்கு அமைக்கப் பெற்றனவே என்னும் உண்மையினை யுடன்பட்டுப் பிணக்கின்றி இறைவனை யுணர்ந்து போற்றுவார்க்கு விரைவிற் சிவமாநகர் எனப்படும் வீட்டினையடைதல் மிகவும் எளிதாம் என்பது இதன் பொருளாகும். எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கு இங்கேயென்றருள் புரியும் எம்பெருமான் என ஆளுடையபிள்ளையாரும், ஆறு சமயத்தவரவரைத் தேற்றுந் தகையன என ஆளுடைய அரசரும், அறிவினான் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க்கங்கே யாரருள் புரிந்து என ஆளுடையநம்பியும், வேறுபடு சமயமெலாம் புகுந்துபார்க்கின் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டல்லால் மாறுபடுங் கருத்தில்லை முடிவில் மோன வாரிதியில் நதித்திரள் போல் வயங்கிற்றம்மா எனத் தாயுமானாரும், கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருளீதெனத் தொல்லையின் ஒன்றேயாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயஞ் சொல்லும் பொருளும் போற்பரந்தவன்றே எனக் கம்பரும் கூறுவன மேற்குறித்த திருமந்திரப் பொருளைஅடி யொற்றியமைந்துள்ளமை காணலாம். திருமூலர் அறிவுறுத்திய சமயப்பொது நெறியாகிய இதனை, ஒத்துச் சென்று தன் திருவருள் கூடிடும் உபாயம் (திருவாசகம்) என்பர் திருவாதவூரடிகள். சிவனே குருவாய் வந்து நற்பொருளை அறிவுறுத்தல் சைவ சித்தாந்த வுண்மைகளை உபதேச வாயிலாகக் கேட்டறிந்தோர், அவற்றைச் சிந்தித்துத் தெளிந்துணர்தற்குரிய பொருள்களாகிய ஞானம் பெறும் சாதனங்களை உணர்த்துவது திருமந்திரப்பனுவலின் ஆறாந்தந்திரமாகும். இது, சிவகுரு தரிசனம் முதல் பக்குவன் என்பது முடியப் பதினான்கு உட்பிரிவுகளையுடையது. இதன்கண் சிவகுரு தரிசனம், திருவடிப்பேறு, ஞாதிரு ஞான ஞேயம், துறவு, தவம், அருளுடைமையின் ஞானம் வருதல், அவவேடம், தவவேடம், அபக்குவன், பக்குவன் என்ற தலைப்புக்களில் வைத்து மெய்யுணர்வுக்குரிய சாதனங்கள் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. ஆன்மாக்கள் உய்திபெறுதல் வேண்டி இறைவன் தன்னடியார் திறத்தே நிகழச் செய்யும் தசகாரியமென்னும் அடியார் செய்கை பத்தும் ஆறாந்தந்திரமாகிய இதன் கண்ணும் ஏழு எட்டு ஒன்பது ஆகிய தந்திரங்களிலும் கூறப்படும் பொருள்களால் உணர்த்தப் பெறுகின்றன. சிவகுரு தரிசனம் என்பது, காண்டற்கரிய கடவுளாகிய சிவபெருமான் தன்னை அன்பினாற் கசிந்துருகிப் போற்றும் அடியார் திறந்து வைத்த பெருங்கருணைத் திறத்தால் நம்மைப் போலும் மானிடவுருவினை மேற் கொண்டு குருவாகி எளிவந்து நற்பொருளை உபதேசித் தருளப் பொருள்களின் உண்மையினை உள்ளவாறு காணுதலாகும். உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்திய சிவபொருமானே புறத்தே ஆசிரியத் திருமேனிதாங்கிக் குருவாய் வந்து அருள்புரிவன் எனத் தெளிவிக்கும் முறையில் அமைந்தது, பத்தி பதித்துப் பரவும் அடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால் சித்தம் இறையே சிவகுரு வாமே (1573) எனவரும் திருமந்திரமாகும். (அருச்சனை வயலுள்) அன்பாகிய விதையை விதைத்து யாவரும் பரவிப் போற்றும் திருவடியை அடியேனுக்கு நல்கித் தனது தூய மெய்யுணர்வு உபதேசத்தால் எனது மலமாயா கன்மங்களாகிய குற்றங்கள் கெட்டொழிய (மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் அறுவகை நெறிகளையும்) சோதித்துப் போக்கிச் சத்தாகிய இறையியல்பினையும் அசத்தாகிய பாசத்தின் இயல்பினையும் (சத்தியைச் சார்ந்தவழிச் சத்தாகியும், அசத்தினைச் சார்ந்தவழி அசத்தாகியும் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடைமை பற்றிச்) சதசத்து எனப்படும் ஆன்மாவின் இயல்பினையும் உள்ளவாறு புலப்படுத்திக் காட்டுதலால் அகத்தே உயிர்க்குயிராய்ச் சிந்தையில் எழுந்தருளியுள்ள சிவபரம்பொருளே புறத்தேயும் குருவாக எழுந்தருளி வந்தது என்பது இதன் பொருளாகும். பத்தி - அன்பு, பதித்தல் - விதைத்தல், பரவும் அடி நல்குதலாவது, யாவரும் போற்றிப் பரவும் திருவருளாகிய திருவடி மாணாக்கரது சிந்தையிலும் சென்னியிலும் பொருந்திப் பதியும்படி ஆசிரியத் திருமேனிகொண்டு எழுந்தருளித் தீக்கை புரிதல், சிந்தையினும் என்றன் சிரத்தினிலும் சேரும்வகை, வந்தவனை என்பது திருக்களிற்றுப்படியார். சுத்த உரையாவது, மலமாயா கன்மங்களைக் கழுவும் ஞான நன்னீராகிய உபதேசமொழி. துரிசு - குற்றம். சோதித்தலாவது உயிர்கள் அறிந்தும் விரும்பியும் செயற்படும் நெறிகளாகிய மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் அறுவகை வழிகளையும் குற்றம் நீங்கச் சோதித்துத் தூய்மை செய்தல். சத்து என்பது, என்றும் ஒரு தன்மையினதாய் மாறாதுள்ள செம்பொருளாகிய சிவம்; சுட்டுணர்வினாலே உணரப்படாத தூய்மையும் சிவஞானம் ஒன்றினாலே யுணர்தற்குரிய மெய்ம்மையும் உடைய பரம்பொருள். அசத்து என்பது உயிருணர்வாற் சுட்டியறியப்பட்டு அடிக்கடி நிலமாறுந் தன்மையதாகிய உலகத்தொகுதி. சதசத்து என்பது, சத்தினைச் சார்ந்த நிலையிற் சத்தின் தன்மையதாகவும் அசத்தினைச் சார்ந்ததன் வண்ணமாந்தன்மை யினையுடைய ஆன்மா. சித்தம் இறையே என்றது, உயிர்க்குயிராயுள்ள பரம்பொருளை. சித்தம் இறையே சிவகுருவாமே என்றது, உயிர்களின் அகத்தே யெழுந்தருளிய சிவமே புறத்தே குருவாகவும் வெளிப்பட்டு அருளும் என்பதாம். இத் தொடர்ப் பொருளை அடியொற்றியமைந்ததே, அகத்துறுநோய்க் குள்ளின ரன்றி அதனைச் சகத்தவரும் காண்பரோ தான் எனவரும் திருவருட்பயனாகும். உலகெலாங்கடந்தும் மன்னுயிர்கட்கு உயிராகிய அகத்துள் நின்றும் அருள்புரியும் சிவபரம்பொருளே உபதேசகுருவாகவும் புறத்தே எழுந்தருளி வந்து இன்னருள் புரிவன் என அறிவுறுத்துவது, எல்லாவுலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக் கொண்டிங்கே யளித்தலால் சொல்லார்ந்த நற்குரு சுத்த சிவமே (1576) எனவரும் திருமந்திரமாகும். எல்லாவுலகங்களையுங் கடந்து அப்பாற்பட்டு விளங்கும் முதல்வன் இவ்வுலகின் இப்புறத்தானாக பரிபாகமுடைய நல்லோருள்ளத்திலே விளங்கித் தோன்றி மிக்க திருவருளைச் சுரத்தலாலும் எல்லோரும் பிறவிப் பெருங்கடலி னின்றும் நீங்கி உய்தி பெறுதல் வேண்டி ஆசிரியத் திருமேனி கொண்டு இங்கே எழுந்தருளி வந்து நன்ஞானத்தை வழங்குதலாலும் உபதேசித்தலைப் பொருந்திய நல்லகுரு தூய சிவபெருமானே என்பது நன்கு தெளியப்படும் என்பது இதன் பொருள். பரிபாக முடைய நல்லோர்க்கு உயிர்க்குயிராய் உள்நின்றுணர்த்தும் சிவ பெருமானே புறத்தே வெளிப்படாத் தோன்றிச் சிவஞானத்தை வழங்கும் குரு ஆவன் என்பதாம். இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால் நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் - இல்லா அருவாகித் தோன்றானை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று (சிவஞானபோதம். 8ஆம் சூத்திரம், 2ஆம் அதிகரணம்) எனவரும் மெய்கண்டார் வாய்மொழி இங்குச் சிந்தித்தற் குரியதாகும். திருமூலநாயனார்த தம்பிறவி வேரறக் குருவின் திருவருளால் திருவடிப்பேறு எய்தினமை குறித்து மகிழ்ந்துரைப்பதாக அமைந்தது, திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக் கருவழி மாற்றிடக் கண்டுகொண் டேனே எனவரும் திருமந்திரமாகும். அடியேனை அருட் கண்ணால் நோக்கி என்தலைமேல் தன்திருவடியைச் சூட்டி, எங்குமாய் நீக்கமற் நிறைந்திருக்கும் தனது பெரிய வடிவினை அடியேன் உள்ளத்திற் கொள்ளும்படி தந்தருளிய பேர்நந்தியாகிய சிவபெருமானைக் குருவடிவில் எம்மனோர் காண எழுந்தருளிய எமது தலைவனை மீண்டும் கருவிற்செலுத்தும் பிறவி வழியினை மாற்றிப் பிறவா நெறியாகிய பெருநெறியிற் செல்லும் நிலையிற் காணப்பெற்றுப் பயன்கொண்டேன் என்பது இதன் பொருள். அருள்நோக்கி என்சிரத்தில் திருவடி வைத்துப் பெருவடிவைத் தந்தபேர்நந்தி என இயையும். அருள்நோக்கி - அருட்கண்ணாற் பார்த்தருளி. அத்தாவுன் அடியேனை அன்பால் ஆர்த்தாய், அருள்நோக்கால் தீர்த்த நீராட்டிக் கொண்டாய் என்பது திருநாவுக்கரசர் வாய்மொழி. ஆகமங்கள் எங்கே அறுசமயம்தா னெங்கே யோகங்கண் எங்கே யுணர்வெங்கே - பாகத்து அருள்வடிவுந் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு எனவரும் திருக்களிற்றுப்படியாரும், நானுமென் சிந்தையும் நாயகனுக்கெவ் விடத்தோம் தானுந்தன்தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் (திருவாசகம். கோத்தும்பி) எனவரும் திருவாசகமும் இங்கு நினைக்கத்தக்கன. கருவழி மாற்றிடுதலாவது, கடலின் அலைபோல் மேன்மேல் தொடர்ந்து வரும் பிறவி வழியை யடைத்துப் பிறவா நெறியினைத் தலைப்படுதல். திருவார்பெருந்துறை மேயபிரான் என்பிறவிக் கருவேரறுத்தபின் யாவரையுங் கண்டதில்லை எனவும், பிறவிவேரறுத் தென்குடிமுழு தாண்டபிஞ்ஞகா எனவும் வரும் திருவாசகத் தொடர்கள் இங்கு நோக்கத்தக்கன. குருவின் அருளால் திருவடிஞானம் பெற்றமையால் உளதாம் பெரும்பயனைக் கூறுவது, கழலார் கமலத் திருவடி யென்னும் நிழல்சேரப் பெற்றென் நெடுமாலறியா அழல்சேரும் அங்கியுள் ஆதிப்பிரானும் குழல்சேரும் என்னுயிர்க் கூடுங்குலைந்ததே (1600) எனவரும் திருமந்திரமாகும். வீரக்கழல் பொருந்திய செந்தாமரைமலர் போலும் இறைவன் திருவடியாகிய நிழலைச் சேரப்பெற்றேன். உலகினையளந்த நெடியோனாகிய திருமாலாலும் அறியவொண்ணாத வெம்மை பொருந்திய தீப்பிழம்பினுள் விளங்கிய முதல்வனாகிய சிவபெருமானும் அற்புதமான அமுததாரைகளாக எனதுடம்பின் எற்புத் துளைகள் தோறும் வந்து சேர்ந்தான். (அதனால்) அழியுந்தன்மையாதாகிய என்னுடம்பில் வைத்த பற்றும் சிதைந்தழிந்தது என்பது இதன்பொருள். குழல்- நரம்பின்துளை. ஆதிப்பிரான் குழல் (தோறும்) சேரும். அதனால் உயிர்க்கூடும் குலைந்தது என்க. அற்புதமான அமுத தாரைகள் ஏற்புத்துளைதொறும் ஏற்றினன், உருகுவது உள்ளங்கொண்டு ஓர் உருச்செய்தாங்கு எனக்கு அள்ளூ றாக்கை யமைத்தனன் எனவும், அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள் எனவும் வரும் திருவாசகத்தொடர்களும், சுழலார் துயர்வெயிற் சுட்டிடும்போதடித் தொண்டர் துன்னும் நிழலாவன என்றும் நீங்காப் பிறவிநிலை கெடுத்துக் கழலா வினைகள் சுழற்றுவ வாலவனங் கடந்த அழலார் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே என அப்பரடிகள் அருளிய திருவிருத்தமும் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கனவாகும். கழல் என்பது, வீரர்கள் தமது வெற்றிக்கு அடையாளமாகக் காலில் அணிந்து கொள்ளும் அணியாகும். அழல்சேரும் அங்கியுள் ஆதிபிரான் ஆயினும் அவனுடைய திருவடி குளிர்ந்த நிழலைச் செய்யும் என்பது ஓர்நயம். மாசில் வீணையும் எனவரும் திருக்குறுந் தொகையும் உரா அத்துணைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத், தண்ணிழலாம் பதி (சிவஞானபோதம் சூத். 9) எனவரும் சிவஞான போதமும் இத்திருமந்திரப்பொருளை அடியொற்றி யமைந்துள்ளமை ஒப்பவைத்துணர்தற்குரியதாகும். ஞாதுருஞானஞேயம் அறியும் உயிராகிய ஆன்மா, அறிதற்கருவியாகிய உயிரறிவு, அறிதற்குரிய பொருளாகிய முழுமுதற்கடவுள் என்னும் இம்மூன்றனுள் ஞாதுரு (அறிவான்) ஆகிய தன்னையும், ஞானம் (அறிவு) ஆகிய கருவியினையும் மறந்து, ஞேயம் (அறியத்தகுபொருள்) ஆகிய இறையுணர்வில் ஏகனாகி ஒன்றுதலை உணர்த்துவது, ஞாதுருஞான ஞேயம் என்னும் இப்பகுதியாகும். ஞாதுரு - அறிவான்; ஆன்மா. ஞானம் - அறிவு, ஞேயம் - அறியத் தகுபொருள் ஆகிய சிவம். ஆன்மா தற்போதம் இழந்து சிவஞானத்தால் இறையுணர்வில் அழுந்தி நிற்றலை உணர்த்துவது இப்பகுதியாகும். ஆன்மா இம்முறையில் ஞேயத்து அழுந்துதலால் பாச நீக்கமும் சிவப்பேறும் உளவாம் என்பதனை உணர்த்துவது, நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா; படரினும் நீங்கா அமுத நிலைபெறலாமே (1605) எனவரும் திருமந்திரமாகும். உயிர்களை விட்டு என்றும் நீங்காத நலம் வளர்பேரின்பத்தை நல்கும் சிவபரம் பொருளைத் தியானித்தலாகிய உண்மை நிட்டையில் நிலைத்து நிற்கவே, ஆன்மாவைச் சார்ந்துள்ள மலமாயை கன்மங்களாகிய பாசங்கள் (முன்னர்ப் பிணிப்பவிழ்ந்து நீங்கினவை) மீளவும் தொடர்ந்து பற்றமாட்டா; அவை ஒரோவழி முன்னை வாசனைவயத்தால் மீண்டுவந்து பற்ற முற்படினும் அகங்காரமாகிய தற்போதத்தின்நீங்கி ஞேயமாகிய மெய்ப்பொருளில் அழுந்துதலாகிய அந்நிலையிற் பிறழாது நிற்கவே தன்னைச் சார்ந்தாரை என்றும் புறத்தே நீங்கவிடாத சிவானந்தமாகிய பேரின்பத்தில் திளைத்து மகிழும் பேராவியற்கை யாகிய வீட்டுநிலையினைப்பெறலாம் என்பது இதன் பொருளாகும். சிவமாகிய முழுமுதற்பொருள், உயிர்களின் கட்டு நிலையிலும் வீட்டு நிலையிலும் அவ்வுயிர்களை விட்டு நீங்காது அவையேதானேயாய் என்றும் ஒட்டிநிற்கும் இயல்பினது என்பார், நீங்காச் சிவானந்தஞேயம் என்றார் இன்பமே என்னுடைய அன்பே எனப் போற்றுவர் மாணிக்கவாசகர். ஞேயம் என்றது, சிவஞானத்தின் துணை கொண்டு உயிர்களால் உணர்ந்து பயன்கொள்ளுதற்குரிய கடவுளை. ஞேயத்தே நிற்றலாவது, அப்பரம்பொருள் நல்கிய நிறைந்த சிவஞானத்திலே தாம் அடங்கித் தமது அறிவினுள்ளே சிவானந்தமாகிய பேரின்பம் குடி கொள்ளும்படி அம்மெய்ப்பொருளுணர்வில் அழுந்தி இன்துயிர் (ஆனந்தநித்திரை) கொள்ளுதல். இதன் இயல்பினை, ஓங்குணர்வின் உள்ளடங்கி உள்ளத்துள் இன்பொடுங்கத் தூங்குவர்மற் றேதுண்டு சொல் (91) எனவரும் திருவருட் பயனில் உமாபதிசிவம் இனிது விளக்கியுள்ளார். வினை ஒழிவுபெற்ற நல்லுயிர்கள் பழைய வாசனைத் தொடர்பால் மலமாயை கன்மங்கள் மேல்வந்து அடராதவாறு உயிர்க்குயிராய் நிற்கின்ற திருவருள் ஞானத்தோடும் கூடி ஞேயமாகிய பொருளிற்பிரிவற அழுந்தி நிற்றலாகிய அணைந்தோர் தன்மையினை யுணர்த்துவது மேற்குறித்த திருவருட் பயனாகும். இதன்கண் ஓங்குணர்வு என்றது உயிர்களைத் தோற்றமில்காலமாக மறைத்து வந்துள்ள ஆணவ இருள் விட்டு நீங்கத்தக்கதாகப் பக்குவமுடைய உயிர்களின் உள்ளத்திலே பேரொளியாய் விரிந்து பரவி மேலிட்ட சிவஞானத்தினை. அவ்வுணர்வினுள் அடங்கலாவது, உயிரானது சிவஞானமாகிய அப் பேரறிவுக்குள்ளே அடங்கித் தற்போதும் தோன்றாமல் நிற்றல். உள்ளத்தில் இன்பு ஒடுங்க என்றது, சீவன்முத்தராயுள்ள அவர்கள் தங்கள் உள்ளத்திலே சிவனைத் தியானிக்கும்போது சிவன் அங்கே பதிந்து நிற்றால் அவர் தமது உள்ளத்திலே பேரின்பம் விளையும் வண்ணம் சிவத்தில் அழுந்தி இன்புறுதலை. தூங்குதலாவது, மயக்க விகற்பங்களிற் படாமல் தூங்காமல் தூங்குதல் என்றது. புண்ணிய பாவங்களைப் பயக்கும் விருப்பு வெறுப்புக்களாக வந்துபொருந்தும் கன்மமும், மண் முதல் மாயையீறாகக் காணப்படும் மாயையும், சுட்டியறிவதாகிய விபரீதவுணர்வையுண்டுபண்ணும் ஆணவமும் ஆகிய இம்மும் மலங்களும் சிவஞானிக்கு ஆகாதன என்றுணர்ந்து தற்போதம் தோன்றாதவாறு நீக்கிச் சிவஞானத்துள் அடங்கிச் சிவாநுபவம் சுவாநுபூதிகம் ஆமாறு ஞான நிலையில் உறைத்து நிற்றல். அருளோடு ஒன்றியுறங்குதலாகிய இதனியல்பினை, சொற்பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்காதானை எனவும், அறியாமை யறிவகற்றி யறிவினுள்ளே அறிவுதனை யருளினா னறியாதேயறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்களோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பையாகின் (சித்தியார், 382) எனவும் சான்றோர் அறிவுறுத்தியுள்ளார்கள். எல்லாமலங்களும் பற்றறத்துடைத்து மெய்யுணர்ந்து நிட்டை கூடினார்க்கு எடுத்தவுடம்பு நிற்குமளவும் நுகர் (பிராரத்த) வினையானது அவ்வுடம்பைப்பற்றி நின்று அவரை வாசனை வயத்தால் ஒரோவழி வந்து தாக்கும். அது சார்பாக விருப்பு வெறுப்புக்கள் உண்டாகும். அவையுண்டாகவே நிலமுதலாகிய பொருள் ஏகதேசப்படும். படவே அவற்றைச் சுட்டியறிவதாகிய விபரீதவுணர்வு மேற்பட்டு மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்திப் பிறவிக்கு வித்தாகும். இவ்வாறு தாம் நீங்கிய நிலையிலும் மீண்டு பற்றி வருத்தும் வகையில் உயிரை அணுகிப்படர்வன பாசமாம் என்பது தோன்றப் பாங்கானபாசம் என்றார். பாங்கு ஆனபாசம் என்றது, அற்றம் பார்த்து மீண்டும் பற்றுதற்கு அணுகி நிற்கும் பாசம் என்னும் கருத்தினது. படர்தல் - மேலூர்ந்து அடர்தல். படரினும் என்புழி உம்மை எதிர்மறை. ஆங்காரம் - யான் எனது என்னும் தன்முனைப்பு. அது என்றது ஞேயத்தை, அதன் நிலைநிற்றலாவது ஞேயமாகிய மெய்ப்பொருளுணர்வில் அடங்கிநிற்றல். நீங்காநிலை, அமுதநிலை எனத்தனித்தனி இயைத்துப்பொருள்கொள்க. நீங்காநிலை - தன்னைச் சார்ந்தாரைப் புறத்தே நீங்கவிடாது பிரிவறத்தன்னோடு உடனாக்கிக் கொள்ளும்நிலை. அமுதநிலை - பேராவியற்கையாகிய பேரின்பநிலை. இந்நிலையினை, பாசிபடுகுட்டத்திற் கல்லினைவிட்டெறியப் படும்பொழுதுநீங்கி அதுவிடும் பொழுதிற் பரக்கும் மாசுபடு மலமாயை யருங்கன்ம மனைத்தும் அரனடியை யுணரும்போதகலும், பின் அணுகும் நேசமொடுந் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும் நினைவுடையோர் நின்றிடுவர் நிலையதுவேயாகி ஆசையொடும்அங்குமிங்குமாகி யலமருவோர் அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி யுரைப்பாம் (சித்தியார். 291) எனவரும் பாடலில் அருணந்தி சிவனார் தெளிவாக விளக்கியுள்ளவை அறியத்தகவதாகும். மேற்காட்டிய திருமந்திரத்தில் பாசம் படரார் எனப் பாச நீக்கமும், நீங்கா அமுதநிலைபெறலாம் எனச் சிவப்பேறும் ஆகிய இருவகைப் பயன்களும் தெரித்துணர்த்தப் பெற்றமை காண்க. காண்பான் காட்சியுணர்வு காணத்தகுபொருள் என்னும் வேற்றுமையற்று மெய்ப்பொருளில் அழுந்தி நிற்றலின் இயல்பினையும் அதனைக் குரு தமக்கு உபதேசித்தருளிய திறத்தையும் விளக்குவது, காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும் கோணாத போகமுங் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமும் காணா யெனவந்து காட்டினன் நந்தியே (1610) எனவரும் திருமந்திரமாகும். காணாத கண், கேளாத கேள்வி என்றது, தத்தம் உணர்வு நிகழ்தற்குரிய வாயிலாகக் கண் முதலிய பொறிகள் இருந்தும், அப்பொறிகள் உலகப் பொருள்களைப் பற்றாது காணுங்கரணங்களெல்லாம் பேரின்ப மெனப் பேணும் நிலையில் உயிர் சிவானந்தத்தில் திளைக்கும்படி தத்தம் செயல் மடங்கி திறத்தினை, விழித்தகண் குருடாய்த் திரிவீரரும் பலரால என்பது பெரிய புராணம். கோணாதபோகம் என்றது, விருப்பு வெறுப்புக்களால் மனம் மாறுபடாது திருவருளில் ஒன்றிநுகரும் சிவா நுபவமாகிய நுகர்ச்சி. கோணுதல் - மாறுபடுதல். கூடாத கூட்டம் என்றது, பின்பிரிந்து கூடும்நிலையின்றி எக் காலத்தும் உடனாய் ஒன்றியிருத்தலாகிய அத்துவிதநிலை நாணாவது, செய்யத்தகாதனவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல். நாணாத நாணாவது, அவனருளாலல்லது ஒன்றையுஞ் செய்யாது தான் என்னும் உணர்வு ஒடுங்குதல்; தன்பணிநீத்து இறைபணி நிற்றல். நாதாந்தபோதம் என்றது, நாததத்துதவம் முடியவுள்ள முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்து அதன்மேலாக விளங்கும் சிவஞானத்தினை. காணாய் - கண்டறிய மாட்டாதாய், காண்பாயாக. காட்டினன் - உபதேசித்துப் பொருளின் இயல்பினை யான் காணும்படி உடனிருந்து காட்டியருளினான். நந்தி - சிவபெருமான். இறைவனது திருவருளாலேயே உயிர்கட்கு ஞானம் உண்டாகும் என்னும் உண்மையினை உணர்த்துவது, அருளுடைமையின் ஞானம் வருதல் என்னும் பகுதியாகும். இறைவன் திருவருள் கிடைத்தால் எல்லா நலங்களும் எளிதிற் கிடைக்கும் என அறிவுறுத்துவது, பிரானரு ளுண்டெனின் உண்டுநற் செல்வம் பிரானரு ளுண்டெனின் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமும் ஆமே (1645) எனவரும் திருமந்திரமாகும். நற்செல்வம் - கெடுதலும் ஆதலும் இல்லாத நல்லசெல்வம். நன்ஞானம் - குறையாத பேரறிவாகிய சிவஞானம். பெருந்தன்மை - பெருங்குணம்; என்றது இறைவனுக்குரிய எண்குணங்களை. பெருந்தெய்வம் - பெருந்தெய்வமாகிய சிவமாந்தன்மைப் பெருவாழ்வு. இத்திருமந்திரப் பாடலை ஒத்து அமைந்தது, அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பெருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு (அற்புதத்திருவந்தாதி) எனவரும் காரைக்காலம்மையார் அருளிச் செயலாகும். நற்பொருளைக் கேட்டற்குரிய பக்குவனாகிய நன்மாணாக்கனது இயல்பினைக் கூறுவது, சத்தும் அசத்தும் எவ்வறெனத் தானுன்னிச் சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச் சத்தியில் இச்சைத் தருவோன் சற்சீடனே (1697) எனவரும் திருமந்திரமாகும். என்றும் மாறாதுள்ள மெய்ப்பொருளும், ஒருநிலையில் நில்லாது மாற்றமடையும் பொய்ப்பொருளும், எத்தன்மையவெனத் தான் சிந்தித் துணர்ந்து, சித்தத்தை யுருகச் செய்து சிவபெருமானது திருவருள் உய்யும் நெறியிது வெனக் காட்டிக் துணை செய்ய, அம்முதல்வன் கைம்மாறு கருதாது செய்துவரும் உபகாரத்தை மறவாது கடைப்பிடித்துச் செய்யும் பேரன்பினாலே அதன்பயனாகிய சிவஞானம் கைவரப் பெறுதல் வேண்டி இறைவனைப் பணிந்து பேரானந்தத்தை வழங்கும் அம்முதல்வனது திருவருளிற் படிதற்குப் பெரு விருப்புடையோன் பரிபாக முடைய நல்ல மாணாக்கனாவன் என்பது இதன்பொருளாகும். சத்து என்றது, சுட்டறிவினால் அறியப்படாது சிவஞானம் ஒன்றினாலே அறிதற்குரியதாய் என்றும் மாறாவியல்பினையுடைய உள்பொருளாகிய சிவம் அசத்து என்றது, உயிரறிவினாற் சுட்டியறியப்படுவதாய் அழியுந்தன்மையதாகிய உலகத்தொகுதி. சித்து - சித்தம்; அம்முக்கெட்டுச்சித்து என உகரவீறாய் நின்றது. திருமூல நாயனார் கூறிய சத்து, அசத்து என்பவற்றின் இயல்பினை, உணருரு வசத்தெனின் உணரா தின்மையின் இருதிறனல்லது சிவசத்தாம் என இரண்டு வகையின் இசைக்குமன்னுலகே (சிவ.சூ. ம) எனச் சிவஞான போத ஆறாஞ்சூத்திரத்தும், சதசத்தின் இயல்பினை, யாவையுஞ் சூனியம் சத்தெதிராகவிற் சத்தேயறியாதசத்தில் தறியா திருதிறன் அறிவுள திரண்டலா ஆன்மா (சிவ. சா. 7) என ஏழாஞ்சூத்திரத்தும் ஆசிரியர் மெய்கண்டார் விளக்கியுள்ள திறத்தைக் கூர்ந்து நோக்குங்கால் திருவுந்தயார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார் முதலாகவுள்ள சித்தாந்த சாத்திரம் பதினான்கிற்கும் முதல்நூலாகத் திகழ்வது திருமூலர் அருளிய திருமந்திரமாகிய திருமுறையே என்பது நன்கு புலனாகும். ஏழாந் தந்திரம் இஃது ஆறாதாரம் முதல் இதோபதேசம் ஈறாக முப்பத்தெட்டு உட்பிரிவுகளையுடையது. இதனுட் கூறப்படும் பொருள்களுள், ஆறாதார நிலைகள், சிவலிங்க பேதங்கள், அருளொளி, குருலிங்க சங்கம் வழிபாடு, ஆதித்தர் வகை. ஐம்பொறிகளை யடக்கும்முறை, சற்குரு, இதோபதேசம் என்பன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இவை மேற்குறித்த தசகாரியங்களுள் சிவரூபம், சிவதரிசனம் என்னும் இரண்டையும் விளக்குவன. போசனவிதி, பிட்சாவிதி, பூரணக் குகைநெறிச் சமாதி, சமாதிக்கிரியை, விந்துச்சயம் என்பன, ஞானம் பெறுதற்குத் துணையாகவுள்ள நல்லொழுக்க நெறிகளை யறிவுத்துவனவாகும். முலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுள் வைத்து அண்ட லிங்கம் முதலிய அறுவகை இலிங்கங்களையும் கண்டு வழிபடுதலும், அருளொளிக்குள் ஒடுங்கியிருந்து குருலிங்க சங்கமம் என்னும் மூன்றிடங்களிலும் சிவபெருமானை வெளிப்படக் கண்டு வழிபடுதலும் ஆகிய இவை, அகமும் புறமுமாகச் செய்தற்கரிய வழிபாடுகள் எனச் சைவநூல்கள் கூறும். ஐந்திந்திரியம் அடக்கும் முறை, கூடாவொழுக்கம் நீத்தல், கேடுகண்டிரங்கல் என்ற தலைப்புக்களிலுள்ள திருமந்திரப் பாடல்கள், நல்லொழுக்க நெறியில் நின்று இறைவனை வழிபடுவார்பால் குற்றங்கள் நீங்க இன்றியமையாது இருத்தற்குரிய நற்பண்புகளை விளக்குவன. இத்தந்திரத்தின் இறுதியிலுள்ள இதோபதேசம் என்ற பகுதி, பொதுவாக உலகமக்கள் அனைவரும் சிறப்பாகச் சிவநெறிச் செல்வர்களும் அன்புடன் கடைப்பிடித்தொழுகி உய்தி பெறுதற்குரிய நல்லுரைகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கின்றது. இறைவனை யோகநெறி நின்று உணர்தற்கு நிலைக்களமாகிய ஆதாரங்கள் ஆறின் இயல்பினைக் கூறுவது, நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலிமேல் நின்ற குறிகள் பதினாறும் மூலங்கண்டாங்கே முடிந்து முதலிரண்டுங் காலங்கண்டானடி காணலு மாமே (1704) எனவரும் திருமந்திரமாகும். நாலிதழ்த்தாமரைவடிவாகிய மூலாதாரமும், ஆறிதழ்த் தாமரை வடிவாகிய சுவாதிட்டானமும், பத்திதழ்த் தாமரை வடிவாகிய மணிபூரகமும், பன்னீரிதழ்த் தாமரைவடிவாகிய அநாகதமும். அவற்றின் மேல்நின்ற பதினாறிதழ்த் தாமரை வடிவாகிய விசுத்தியும் ஆகிய இவற்றின் மூலத்தைத் தரிசித்து அங்கங்கே முடிந்த நிலையெய்தி, இவற்றின் முதலாயுள்ள இரண்டிதழ்த் தாமரைவடிவாகிய ஆஞ்ஞையில் காலத்தை வென்றவனாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் கண்டு வழிபடும்பேறு உளதாம் என்பது இதன் பொருளாகும். அண்டம் முழுவதும் சிவலிங்கவடிவாகக் காணும் காட்சி அண்டலிங்கம். மக்கள் உடம்பே சிவலிங்கமாதலை யுணர்த்துவது பிண்டலிங்கம். மானுடராக்கை வடிவு சிவலிங்கம் (1726) என்றார் திருமூலர். இறைவன் அருவுருவத் திருமேனியாகத் திகழ்வது, சதாசிவலிங்கம். அருள்நிலை பெற்ற ஆன்மாவே சிவலிங்கமாகக் கொண்டு வழிபடப் பெறுவது ஆத்மலிங்கம் ஆகும். ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந்தானே (1762) என்றார் திருமூலர். ஆன்மா பெற்றுள்ள சிவஞானத்தையே சிவலிங்கமாகக் கொண்டு வழிபடப் பெறுவது, ஞானலிங்கம். எல்லாமாய் விளங்கும் பரசிவத்தை ஒரு தறியின் இடமாக எழுந்தருளச் செய்து வழிபாடு செய்யப்பெறுவது சிவலிங்கமாகும். இத்தகைய சிவலிங்கத் திருமேனியே ஒன்பான் வகையாகி அவரவர் பக்குவ நிலைக்கேற்ப நற்பயன் தந்தருளும் என்பது, மலர்ந்த அயன், மால், உருத்திரன், மகேசன், பலந்தரும் ஐம்முகன், பரவிந்து, நாதம், நலந்தரும் சத்தி சிவன் வடிவாகிப் பலந்தரு லிங்கம் பராநந்தியாமே (1776) எனவரும் திருமந்திரமாகும். தாமரைமலரிடத்தே தோன்றிய பிரமன், திருமால், உருத்திரன், மகசேன், ஞானவன்மையினை நல்கும் ஐந்து திருமுகங்களையுடைய சதாசிவன், மேலான விந்து, நாதம், நலத்தினையருளும் சத்தி, சிவன் என்னுந் திருமேனியாகி உயிர்கட்கு முத்திப்பயனைநல்கும் இலிங்கத் திருமேனி பராசத்தியுடன் பிரிவின்றியுள்ள சிவபெருமானது திருவுருவமாகும் என்பது இதன் பொருளாகும். இங்குத் தனிமுதல்வனாகிய இறைவனுக்குச் சொல்லப்பட்ட ஒன்பது வடிவங்களையும், சிவஞ்சத்திநாதம் விந்து சதாசிவன் திகழும்ஈசன் வந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றினொன்றாய்ப் பவந்தரும் அருவம்நால் இங்குருவம் நால் உபயம் ஒன்றாய் நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர் (சித்தியார் சுபக். 164) எனவரும் பாடலில் அருவம்,4 அருவுருவம்,1 உருவம்4 எனவகைப் படுத்துக் கூறுவர் அருணந்திசிவாசாரியார். மேற்குறித்த ஒன்பது வகையுள் சிவம் என்பது, புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய் நிற்கும்நிலை. சத்தி என்பது, உயிர்களை நோக்கி நிற்கும் அருள்நிலை. நாதம் என்பது, சிவசத்தி உயிர்களின் பொருட்டு அருள்புரிய முன்னிற்குங்கால் ஞானசத்தி வடிவாய் நிற்கும் நிலை. பரநாதம் என்பதும் இதுவே. விந்து என்பது, மேற்குறித்த ஞானசத்தியால் தோற்றுவிக்கப்பெறும் கிரியாசத்தியாகும். இது பரவிந்து எனவும் படும். (இந்தக் கிரியாசத்தி சுத்தமாயைக் கூடிய விடத்து நாதம் தோன்றும் நாதத்தினின்று விந்துதோன்றும். இவை முறையே அபரநாதம் எனவும் அபரவிந்து எனவும் கூறப்படும்). இங்குக் கூறப்பட்ட அறிவுநிலை, அருள்நிலை, ஞானசத்தி, கிரியாசத்தி இவை நான்கும் இறைவனுக்குரிய அருவத்திருமேனிகள். சதாசிவன் என்பது, தூலலயநிலையில் நின்று பொதுவகையாற் சங்கற்பித்த இறைவன், போகநிலையில் நின்று தனது ஞான சத்தியாற் சிறப்பு வகையால் நோக்கிக் கிரியா சத்தியாற் சிறப்புவகையாற் சங்கற்பித்து நிற்கும் நிலையாகும். ஞானமும் கிரியையும் சிறப்புவகையிற் கலந்து நிற்கும் போகநிலையாகிய இது சிவபெருமானுக்குரிய அருவுருவத்திருமேனியாகும். இனி, மகேசன் என்பது, சுத்தமாயையில் சூக்குமமாய்க் காரியந் தோன்றுதற்கு அதிகாரநிலையில் நின்று கிரியாசத்தியை மிக்குச் செலுத்திநிற்கும் நிலை. கிரியை மிகுந்து நின்ற அதிகார நிலை இதுவாகும். உருத்திரன் என்பது உலகினை ஒடுக்குந்தொழிலில் நின்ற திருமேனியாகும். மால் என்பது, உலகினை நிலைபெறுத்திக் காக்குந் தொழிலில் நின்ற திருமேனியாகும். அயன் என்பது, உலகினைத் தோற்றுவிக்கும் நிலையில் மேற்கொண்ட திருமேனி. இவை நான்கும் உருவத்திருமேனிகள். பரமசிவத்துடன் பிரிவின்றியிருக்கும் பராசத்தியாகிய அருள்காரணமாகவே இங்குச் சொல்லப்பட்ட ஒன்பது வகைத் திருமேனிகளும் அமைந்தன என அறிவுறுத்துவார், பலந்தருலிங்கம் பராநந்தியாமே என்றார் திருமூலர். மலைமகள் பாகமாக அருள்காரணத்தின் வருவார் எனவரும் தேவாரமும் இங்கு நினைத்தற்குரியதாகும். காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய் நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம் எனவரும் சேக்கிழார் வாய்மொழி, மேற்குறித்த திருமந்திரப் பொருளை அடியொற்றி யமைந்ததாகும். சிவனை வழிபடுவோர் குருவின்பால் உபதேசம் பெற்று மனமொழி மெய்களால் தூய்மையுடையராய் நல்லொழுக்க நெறியில் ஒழுகும் மரபுவழி வந்த வழிபாட்டு முறைகளை யுணர்த்துவது, சம்பிரதாயம் என்ற பகுதியாகும். உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து நொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிக் கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே (1778) எனவரும் திருமந்திரம் ஆசிரியன் மாணவனுக்குத் தீக்கை செய்து உபதேசித்தருளுந்திறத்தை உணர்த்துகின்றது. நந்தியாகிய சிவபெருமான், பக்குவமுடைய மாணவனது படர்ந்த வினைத் தொடர்பு அற்று நீங்கும்படி அவனை அருட்கண்ணால் நோக்கி அவனது தலையின்மேல் தன் கையை வைத்து, விரைவில் தனது திருவடியை அவனது முடிமேற்சூட்டி, நுண்ணுணர்வாகிய சிவஞானத்தை உபதேசித்தருளி, அம்மாணவனுடைய உடல் பொருள் உயிர் அனைத்தையும் அவன் வார்த்த நீருடன் தன்னுடைமையாக ஏற்றுக்கொண்டு, விரைந்துவரும் வெள்ளம் போன்று தொடர்ந்து வரும் பிறவி அற்றொழியும்படி நன்னெறியைக் காட்டிய ருளினன் என்பது இதன் பொருளாகும். நந்தி, பார்த்துக் கைவைத்து அடிவைத்து, நுண்ணுணர்வாக்கி, உடல் பொருள் ஆவி உதகத்தாற் கொண்டு, பிறப்பு அறக்காட்டினன் என இயைத்தப்பொருள் கொள்க. நந்தி - சிவன், பார்த்தல், கக்ஷு தீக்ஷை. அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய், கண்ணால் நோக்கிக் காணப்பர் பணிகொள்ளுங் கபாலியாரே எனவரும் திருநாவுக்கரசர் வாய்மொழிகள் திருக்கண்ணோக்கமாகிய இத்தீக்கையினைக் குறிப்பனவாகும். கை வைத்தலும் முடிமேல் அடிவைத்தலும் பரிசதீக்கையாகும். நுண்ணுணர்வாக்கி எனவே அவ்வுணர்வினைத் தோற்றுவித்தற்குக் காரணமாகிய மானச தீக்கை. உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொள்ளுதலாவது, மாணவன் யான் எனது என்னும் செருக்கறுதற் பொருட்டுத் தன்னுடைய உடல் பொருள் உயிர் அனைத்தையும் குருவின் கையில் நீர்வார்த்துக் கொடுக்க, அவர் அவையனைத்தையும் தம் உடைமையாக ஏற்றுக் கொண்டருளுதல் (உதகம் - நீர்) தீக்கையில் நிகழும் இச்சம்பிரதாயத் தினை, அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமையெல்லாமும் குன்றேயனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழியால் நன்குணரலாம். திருவருள்வைப்பு என்பது, குருவின் உபதேசத்தின் வழிநின்று முன்னையோரது ஒழுக்கநெறியினைப் பின்பற்றி ஒழுகுவார்க்கு இறைவனது திருவருளே எல்லாவற்றுக்கும் ஆதாரமாகவும் உள்ளீடாகவும் வைக்கப்பெற்ற திறத்தை யுணர்த்தும் பகுதியாகும். இறைவன் உயிர்களின் பொருட்டு நிகழ்த்தும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் உயிர்கள் பால் வைத்த திருவருளை நிலைக்களமாகக் கொண்டே நிகழ்வன என்பது, அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட் டருளில் அழிந்திளைப் பாறி மறைந்திட் டருளான ஆனந்தத் தாரமு தூட்டி அருளாலென் னந்தி யகம்புகுந்தானே (1800) எனவரும் திரமந்திரத்தால் உணர்த்தப்பெற்றது. உயிராகியயான் அருளின் உதவியாற் பிறந்து, அதன் துணையால் வளர்ந்து, (கன்மத்தால் பிறந்தும் இறந்தும் அலைப்புண்ட அயர்வுநீங்க) அருளால் ஒடுங்கி இளைப்பாறி, (இருவினைப் பயன்களை நுகர்ந்து தொலைத்தற் பொருட்டு) அவ்வருளால் மறைக்கப்பட்டு நின்றநிலையில் என் குருநாதனாகிய சிவபெருமான் தனது திருவருளாகிய இன்பமயமான நிறைந்த அமுதத்தை உண்பித்துத் தனது திருவருளால் என் அகத்துட்புகுந்து என்னுள்ளமே கோயிலாகக் கொண்டு எழுந்தருளினான் என்பது இதன் பொருளாகும். பிறத்தல், வளர்தல், இளைப்பாறுதல் ஆகிய இவை உயிர்களின் தொழில்களாயினும், இவற்றை உயிர்களே செய்து கொள்ளும் ஆற்றல் அற்றன என்பதும் இத்தொழில்களின் நிகழ்வுக்கு இறைவனது திருவருளே ஏதுவாகும் என்பதும் புலப்பட அருளிற் பிறந்திட்டு ............... வளர்ந்திட்டு ............ மறைந்திட்டு என்றார். இத்திருமந்திரத்தில் இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் முறையே குறிக்கப் பெற்றிருத்தலும், இறுதியிற் கூறப்பட்ட அருளே யன்றி முன்னர்க் கூறப்பட்ட ஏனைய நான்கும் அருளின் நிமித்தமாகவே இங்குத் தெளிவாக விளக்கப் பெற்றுள்ளமையும் காணலாம். இத்திருமந்திரப் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, ஏற்ற இவை அரனருளின் திருவிளையாட்டாக இயம்புவர்கள், அணுக்கள் இடர்க்கடல்நின்றும் எடுத்தே ஊற்றமிக அருள்புரிதல் ஏதுவாக உரைசெய்வர், ஒடுக்கம் இளைப்பொழித்தல், மற்றைத் தோற்றம் மலபாகம்வரக், காத்தல் போகந் துய்ப்பித்தல், திரோதாயி நிறுத்தலாகும் போற்றலரும் அருள் அருளேயன்றி மற்றுப் புகன்றவையும் அருளொழியப் புகலொணாதே (6) எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளாகும். கன்மத்தினால் அலைப் புண்ணும் உயிர்களை இளைப்பாற்றுதலே அழித்தல். நீங்காதுள்ள ஆணவமலம் நீங்குதற்பொருட்டு மீளவும் தனுகரணபுவன போகங்களோடு கூட்டுதலே படைத்தல் கன்மங்ளை நுகர்ந்து மலம் நீங்குதற்குரிய பக்குவம் உண்டாக்குதலே காத்தல். அந்தப் போகங்களைப் புசிப்பித்துக் கன்மங்களைத் தொலைப்பித்தற்காகக் குறிப்பிட்ட கால அளவுகளிலே அவற்றில் நிறுத்துதலே மறைப்பு. உயிர்களைப் பாசப்பிணிப்பகற்றித் திருவடியிலே கூட்டிக்கொள்ளுதலே அருளல். போற்றி யெல்லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம், போற்றி யெல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள், போற்றியெல்லா வுயிர்க்கும் ஈறாம் இணையடிகள், போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம், போற்றியாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் (திருவெம்பாவை 20) என இறைவன் செய்யும் ஐந்தொழில்களும் திருவாசகத்திற் குறிக்கப்பெற்ற திறத்தை மதுரைச் சிவப்பிரகாசர் மேற் காட்டிய சிவப்பிரகாசவுரையில் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். அருளால் என் நந்தி அகம்புகுந்தானே என்பதனை என்மனமே யொன்றிப்புக்கனன் போந்த சுவடில்லையே (4) என்ற தொடரில் அப்பரடிகள் குறித்துள்ளமை இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவதாகும். சிவபரமபொருள் தன்னிற்பிரிவில்லாத பராசத்தியின் சொரூபமாகிய அருளொளியாய் ஞாயிறு திங்கள் முதலிய புறப்பொருள்களிலும் மன்னுயிர்களின் அகத்திலும் தோன்றும் சோதியாய்ச் சுடர்விட்டு விளங்கிப் புற விருளையும் அகவிருளையும் நீக்கி உயிர்களின் அறிவினை விளக்கி நிற்றலை விளக்குவது அருளொளி என்னும் பகுதியாகும். அருளொளியால் உயிர்கள் எய்தும் பயனை உணர்த்துவது, விளக்கினை யேற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே (1818) எனவரும் திருமந்திரமாகும். திருவருள் ஞானமாகிய விளக்கினையேற்றி எல்லையற்ற தூயவெளியாகிய பரம் பொருளை யுணர்ந்து போற்றுவீராக. தூண்டாவிளக்காகிய அதன் சுடரொளியின் முன்னே உயிரை அநாதியே பற்றியுள்ள மலமாயை கன்மங்களாகிய துன்பங்கள் நில்லாது நீங்கும். உயிரின அறிவினை விளக்கும் ஒளிவளர் விளக்காகிய அருளொளியினைத் தன்கண் பெற்றுடை யவர்கள் அவ்வொளியினாற் சூழப்பெற்று விளங்கும் தூய ஞானச்சுடர் விளக்காக ஒன்றி ஒளியுடன் திகழ்வார்கள் என்பது இதன் பொருளாகும். இத்திருமந்திரத்தின் முதலடியில் விளக்கு என்றது, சிவஞானத்தினை. ஏற்றுதல் - கொளுத்துதல்; உயிரது அறிவிற் பற்றும்படி அதனோடு இயைந்து ஆன்மபோதம் அடங்க நிற்றல். இம்முறையில் இறைவனைக் கண்டு வழிபடும் முறையினை, ஊனி லுயிரப்பை யொடுக்கி யொண்டசுடர் ஞான விளக்கினை யேற்றி நன்புலத் தேனை வழிதிறந் தேத்துவார்க் கிட ரான கெடுப்பன அஞ்செழுத்துமே (3.22.4) எனத் திருஞானசம்பந்தரும், உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே (4.75.5) எனத் திருநாவுக்கரசரும் அருளிய திருப்பாடல்களால் இனி துணரலாம். இனி, இத்திருமத்திரத்தின் இரண்டாமடியில் விளக்கு என்றது, இறைவனது அருளொளியினை. மெய்கிளரும் ஞானவிளக்குக் கண்டாய் (6.23.2) எனவும், தூண்டாவிளக்கின் சுடரனையாய் (திருவாசகம்) எனவும், ஒளிவளர்விளக்கே (9.1.1) எனவும் அருளாளர் இறைவனை விளக்காக அழைத்துப் போற்றியுள்ளமை காணலாம். மூன்றாமடியில் முதற்கண் விளக்கு என்றது, உயிரறிவினை. அவ்விளக்கை விளக்கும் விளக்காவது இறைவனருளாகிய சுடரொளி. அதனையுடையவர்கள் என்றது, அவ்வொளி உள்ளும் புறம்புந் தோன்றக் காணும் அருளாளர்களை அப்பெருமக்கள் சோதியும் சுடரும் சூழொளி விளக்கும் ஆகிய அவ்வொளியினால் உள்ளும்புறம்பும் ஒருதன்மைக் காட்சியராய் விளங்கும் நன்ஞானம் பெற்றுடையராய் ஆணவ இருள் நீங்க ஈறில் பெருஞ்சோதியினிற் பிரிவறக் கலந்தொளிரும் சுடர் விளக்காகத் திகழ்வர் என்பார், விளக்கை விளக்கும் விளக்குடையார்கள், விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே என்றருளிச் செய்தார். சிவபூசை என்பது பூ, நறும்புகை, விளக்கு, திருமஞ்சனம், திருவமுது முதலியன கொண்டு, பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி என்னும் ஐந்து சுத்திசெய்து, ஆசனம் இட்டு மூர்த்தியை அதன்கண் எழுந்தருளச் செய்து மூர்த்திமானாகிய இறைவனைப் பாவனை செய்து அத்திருவுருவின்கண் ஆவாகித்து மெய்யன்புடன் அருச்சித்து விருப்புடன் சிவவேள்வியினைச் செய்து வழிபடுதலாகும். இப்பூசை புறப்பூசை (கிரியை), அகப்பூசை (ஞானம்) என இருவகைப்படும். பூசைப் பொருள்களைப் புறத்தே சேமித்துக் கொண்டு இறைவனை வழிபடுவது புறப்பூசை. இவற்றை மனத்தாலே படைத்துக் கொண்டு வழிபடுதல் அகப்பூசையாகும். அகப்பூசைக்குரிய அங்கங்கள் உணர்த்துவது, உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலாயம் வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே (1823) எனவரும் திருமந்திரமாகும். பேரருள்வள்ளலாகிய இறைவனுக்கு ஊனுடம்பே கோயில் வளாகமாகிய ஆலயமாகும். உள்ளமே இறைவன் வீற்றிருந்தருளும் கருப்ப இல்லாகிய பெருங்கோயிலாகும். அவ்வாலயத்தின் கோபுர வாசலாகத் திகழ்வது வாயாகும். இறைவனைப் பூசிக்கும் முறையினைத் தெளிவாகவுணர்ந்த சிவஞானிகட்கு அவர்தம் ஆன்மாவே இறைவனை ஆவாகித்துப் பூசித்தற்கேற்ற சிவலிங்கத் திருமேனியாகும். வஞ்சனையை விளைக்கும் ஐம்புலன்களும் அடங்கிய நிலையே அவ்வழிபாட்டிற்குரிய உள்ளொளியினைத் தரும் தூண்டாத மணிவிளக்காகும் என்பது இதன்பொருளாகும். இவ்வகப்பூசையின் இயல்பினை விளக்குவது, காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும்பாலா நிறையநீ ரமைய ஆட்டிப் பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே (4) எனவரும் திருநேரிசையாகும். சிவஞானத்தை உபதேசித்தருளிய சிவகுருவைப் பூசித்தலின் சிறப்பினையுணர்த்துவது குருபூசை என்னும் பகுதியாகும். சிவனடியார்களைச் சிவனெனவே கண்டு வழிபடுஞ் சிறப்பினை யுணர்த்துவது மகேசுவரபூசை என்பதாகும். இறைவனுக்குத் தாம் எக்காலத்தும் அடிமையே என்னும் தொன்மையினை யுணர்ந்து வழிவழி இறைவனுக்குத் தொண்டுபுரியும் சிவனடியாரது பெருமையினை யுணர்த்துவது அடியார் பெருமை என்ற பகுதியாகும். சிவனை வழிபடுவோர் உணவுண்ணும் முறையினை உணர்த்துவது போசனவிதி. தான் உண்ணுதல் வேண்டும் தனக்கென்று உலையேற்றாமல் சமைக்கும்பொழுதே அடியார்க்கென்று சமைத்த உணவே விரும்பியுண்ணத்தக்க நல்லமிழ்தமாகும். பிட்சாவிதி என்னுந்தலைப்பில், பரந்துல கேழும் படைத்த பிரானை இரந்துணி என்பார்கள், எற்றுக் கிரக்கும் நிரந்தரமாக நினையும் அடியார் இரந்துண்டு தன்கழல் எட்டச் செய்தானே (1888) எனவரும் திருமந்திரம் இறைவன் பிச்சைத்தேவனாதற்குரிய காரணம் கூறுகின்றது. விரிந்து பரவிய ஏழுலகங்களையும் படைத்தருளிய சிவ பெருமானை இரந்து பிச்சையேற்று உண்பவன் என்று கூறுவர் (அறியாதார்). உலகெல்லாமுடையானாகிய அவ்விறைவன் எதற்காக இரத்தற்றொழிலை மேற்கொள்ள வேண்டும்? இடைவிடாது தன்னைத் தியானிக்கும் அடியார்கள் பிறர்பால் இரந்து அன்னோர் இட்டவுணவினையுண்டு தன்திருவடியை அடையும் வண்ணம் இவ்விரத்தற்கோலத்தை மேற்கொண்டருளினான் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். இறைவனை இடைவிடாது போற்றுந் தொழிலினராய சிவனடியார்கள் ஆக்கைக்கே இரைதேடி அலையாமல் அன்புடை யாரது மனைக்கண் சென்ற அவர் உவந்தளிக்கும் உணவை அளவாக வுண்டு தன் பொன்னார்திருவடியை அடைதற்பொருட்டே இறைவன் பிச்சையேற்குந் தவ வேடத்தினைத் தான் மேற்கொண்டு தன்னடியார்க்கு வழிகாட்டியதல்லது, பசியும் பிணியும் பகையுமில்லாத ஈசன் வறுமையினாலோ நுகர்ச்சி வேண்டும் என்னும் ஆராமையினாலோ இரத்தற்றொழிலை மேற்கொண்டான் அல்லன். ஏற்பதிகழ்ச்சி என்னுந் தாழ்வுரை உலக மக்களால் அடியார்க்கு எய்தாமற் பரிகரித்தற்பொருட்டே உலகெலாமுடைய இறைவன் இரத்தற் றொழிலை மேற்கொண்டு பிச்சைத் தேவனாகத் திகழ்கின்றான் என்பது இத்திருப்பாடலாற் புலனாம். படிமுழுதும் வெண்குடைக்கீழப் பாரெலொம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மை - கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட் டோடேந்தி யுண்ப துறும் (க்ஷேத்திரத் திருவெண்பா) என ஐயடிகள் காடவர்கோன் நாயனாரும், அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர் (திருவிசைப்பா) எனக் கருவூர்த்தேவரும் அருளிய வாய்மொழிகள் அப்பெருமக்கள் காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களது பற்றற்ற துறவுநிலையை நன்கு புலப்படுத்துதல் காணலாம். செஞ்சுட ரோன் முதலாகிய தேவர்கள் மஞ்சுடை மேரு வலம்வரு காரணம் எஞ்சுட ரீசன் இறைவன் இணையடி தஞ்சுட ராக வணங்குந் தவமே (1975) எனவரும் திருமந்திரம் இறைவன் அண்டத்துள் ஞாயிறாய் விளங்குந் திறத்தினை உணர்த்துவதாகும். செங்கதிரோன் முதலிய ஒளிமண்டிலங்கள் மேருமலையை வலம்வருவதன் காரணம், கயிலாய நாதன் கழல்களாகிய திருவடிகளை வணங்கி அத்திருவடியின் ஒளியினைத் தாம் பெற்று ஒளிர்தல் வேண்டும் என்னும் நோக்கமேயாம் என்பது இதனால் வலியுறுத்தப்பட்டது. எனவே அண்டங்களிலுள்ள ஞாயிறு முதலிய எல்லாச் சுடர்களுக்கும் ஒளிவழங்கும் ஆதித்தன் சிவனே என்பது பெறப்படும். மெய்ச்சுடருக் கெல்லாம் ஒளிவந்த பூங்கழல் உத்தரகோசமங்கைக் கரசே (திருவா. நீத்தல்) எனவரும் திருவாசகமும், நாயகன் கண்ணயப்பால் நாயகிபுதைப்ப எங்கும் பாயிருளாகி மூடப் பரிந்துல கினுக்கு நெற்றிக் தூயநேத்திரத்தி னாலே சுடரொளிகொடுத்த பண்பிற் றேயமா ரொளிகளெல்லாம் சிவனுருத்தேசதென்னார் (72) எனவரும் சிவஞானசித்தியாரும் இங்கு நினைக்கத் தக்கனவாகும். பசுவிலக்கணம் என்ற தலைப்பில், சிவனும் சீவனும் பிரியாது உடனாய் விளங்குந் திறத்தினை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில் துன்னி இரண்டுந் துணை பிரியாதன தன்னிலை யன்னம் தனியொன்ற தென்றக்கால் பின்ன மடவன்னம் பேறணு காதே (2006) எனவரும் திருமந்திரமாகும். ஆற்றங்கரையிலே இரண்டு அன்னப் பறவைகள் ஒருங்கே உடனமர்ந்துள்ளன. அவையிரண்டும் தம்முள் பிரிப்பின்றி நெருங்கித் துணை பிரியாதுள்ளன. அவற்றுள் தன்னியல்பினதாகிய ஆண் அன்னம் வேறு பிரிந்திருப்பது என்றக்கால் அது பிரிய வேறுபட்ட பெண் அன்னம் வாழ்க்கைப் பேறாகிய இன்பத்தினை அடையமாட்டாது என்பது இதன் பொருளாகும். வாழ்க்கையாகிய ஆற்றின்கரை யெனப்படும் உடம்பின் கண்ணே உயிரும் சிவமும் ஒன்றியுள்ளன. தன்னியல்பினதாகிய சிவம் உயிரின்வேறாகப் பிரிந்து விடுமானால், அது பிரியத் தனிப்பட்டுள்ள ஆன்மா சிவப்பேற்றினை அடைதல் இயலாது என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இத்திருமந்திரம் பிறிதுமொழிதல் என்னும் அணியின்பாற்படும். இரண்டும் அன்னமாயினும் அவற்றின் வேற்றுமை தோன்றத் தன்னிலையன்னம் என்றும் மடவன்னம் என்றும் அடைபுணர்த்து ஓதினார். தன்னிலையன்னம் என்றது, எக்காலத்தும் தன்னியல்பில் மாறாதுள்ள மெய்ப்பொருளாயுள்ள சிவபரம்-பொருளை. மடவன்னம் என்றது, அநாதியே ஆணவமலத்தால் மறைக்கப்பட்ட அறிவினதாகிய ஆன்மாவை. துன்னுதல் - பொருளால் வேறுபடினும் கலப்பினால் ஒன்றாய் நெருங்குதல், பேறு என்பது, வீடு பேறாகிய இன்பத்தினை. பிரியாநண்பினையுடைய இருபறவைகள் ஒரே கிளையில் அமர்ந்துள்ளன. அவற்றுள் ஒன்று இனிய பழத்தைத் துய்க்கின்றது. மற்றது உண்ணாது பார்த்துக் கொண்டிருக்கிறது (இருக்கு வேதம் 1.164.20) என்னும் மறைமொழிப்பொருள் இத்திருமந்திரத்தோடு ஒப்புநோக்கற் பாலதாகும். இதனால் என்றும் மாறாத இயல்பினது சிவம் என்பதும் அது மன்னுயிர்க்குச் சார்பாயுள்ளது என்பதும் அதன் சார்பின்றி அறியாமையையுடைய உயிர் பேரின்ப வாழ்வினைப் பெறுதல் இயலாதென்பதும் உணர்த்தப்பெற்றன. கூடாவொழுக்கம் என்ற தலைப்பில் தவத்தொடு பொருந்தாத தீயவொழுக்கத்தை நீக்குதற்குரிய உபாயம் கூறுவதாக அமைந்தது, கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி யில்லா இடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந் தாரே (2067) எனவரும் திருமந்திரமாகும். தம்மைக் கண்காணிக்கும் தலைவராவார் இவ்விடத்து எவரும் இல்லையென்று எண்ணிக் கூடாவொழுக்கத் தினராய்க் கள்ளச் செயல்கள் பலவற்றையும் செய்வார் உண்மையறியாதார். ஆராய்ந்து நோக்குங்கால் நல்லனவும் தீயனவுமாக நாம் செய்யுஞ் செயல்களை உடனிருந்து கூர்ந்து நோக்கும் இறைவன் இல்லாத இடம் எதுவும் இல்லை. உயிர்கள் செய்யும் செயல்களைக் கண்காணித்து முறைவழங்கும் தலைவனாக (உயிர்களின் உள்ளத்தும் ஆக) எங்கும் கலந்து நின்ற இறைவனைக் காணும் கண்ணுக்குக் காட்டும் கதிர்போன்று உயிரின் அகத்தும் நுகரும் பொருள் களிடத்தும் ஒப்பத்தங்கிக் கண்காணிக்குந் தலைவனாகக் கண்டுணர்ந்தவர்கள், முன்னம் அவனைத் தாம் காணாமையால் மறைவிற் செய்த தீய செயல்களை விடடொழியும் நல்லுணர்வினராவர் என்பது இதனால் அறிவுறுத்தப்பட்ட பொருளாகும். கண்காணி-தம்கீழுள்ளோர் செய்யும் தொழில்களின் நன்மை தீமைகளை உடனிருந்து மேற்பார்த்து அவர்களது குற்றங்களைந்து நெறிப்படுத்தும் அதிகாரி. கள்ளம் - பிறர் அறியாதபடி வஞ்சனையால் மறைவிற்செய்யும் செயல். காணுதல் - அறிவினாற்கூர்ந்து நோக்குதல். கண்காணி - கண்ணுள் (உயிரறிவில்) உடனின்று காணுபவன். மனத்தகத்தான் .......fhs¤âah‹ அவன் என்கண்ணுளானே எனவும். நானேதும் அறியாமே என்னுள்நின்று நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய் எனவும் கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் காலத்தைக் கழித்துப்போக்கித் தெள்ளியே னாகினின்று தேடினேன் நாடிக்கண்டேன் உள்குவா ருள்கிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று வெள்கினேன் வெள்கிநானும் விலாவிறச் சிரித்திட்டேனே (4) எனவும் வரும் அப்பர் அருளிச் செயல்கள், இறைவன் உயிர்கள் செய்யும் செயல்களை உள்ளும் புறம்பும் நின்று மேற்பார்த்து நெறிப்படுத்தும் கண்காணியாய் எவ்விடத்தும் நீக்கமறக் கலந்து நிற்றலையும் அவ்வுண்மையினையுணர்ந்தார், அதுகாறும் அறியாமையால் தாம்மறைவிற் செய்த தவறுகளுக்கு நாணிவருந்தி அத்தீச்செயலை அறவே விட்டு நீங்குவர் என்பதனையும் அறிவுடைமாந்தர்தம் கூடா வொழுக்கத்தை விட்டு நீங்குதற்குரிய உபாயம் இதுவே என்பதனையும் இந்திருமந்திரம் நன்கு புலப்படுத்தல் அறியத்தகுவதாகும். எழாந்தந்திரத்தில் இதோபதேசம் என்றதலைப்பில் அமைந்துள்ள திருமந்திரப் பாடல்கள் யாவும் மக்கள் இம்மை மறுமைப் பயன்களை எய்துதற்குரிய உயர்ந்த கோட்பாடுகளையும் சிறந்த வழிமுறைகளையும் இனிய மொழிகளால் அறிவுறுத்துவனவாகும். பிறப்புவகையாகிய குலமும் ஒன்றே. வழிபடுதற்குரிய பரம்பொருளாகிய இறைவனும் ஒருவனே. ஆதலால் எல்லாவுயிர்கட்கும் நலம் பயக்கும் எண்ணங்களையே எண்ணுங்கள். அவ்வாறு எண்ணுவீராயின் நமனால்வரும் சிறப்புத்துன்பம் நுமக்கில்லை. நாணமின்றிப் பலவிடத்துஞ்சென்று பலரையும் நாடியடைதற்குரிய நற்கதி பிறிதொன்றுமில்லை. எனவே நீவிர் (ஒழுக்கநெறியிற் பிறழாது) நின்று நுமது உள்ளத்தே இறைவனை நிலைபெற நினைந்து உய்திபெறுவீராக என உலகினர்க்கு அறிவுறுத்துவதாக அமைந்தது. ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி யில்லை நுஞ்சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந்துய்மினே (2104) எனவரும் திருமந்திரமாகும். இத்திருப்பாடல், தெய்வங் கொள்கை யுடைய எல்லாச் சமயத்தார்க்கும் ஏற்றபொதுமை வாய்ந்த உபதேசமாக அமைந்துள்ளமை குறிக்கத்தகுவதாகும். குலம் - உயர்திணை மாந்தரின் பிறப்புப்பற்றிய பிரிப்பு. வினை வயத்தால் உளவாம் பிறப்பு மக்களிடையே பல்வேறு இனமாகப் பிரித்துப் பேசப்படினும் உயிர் நிற்றற்குரிய உடம்பு என்னும் பொதுமையால் நோக்கும்பொழுது பிறப்பு வகைபற்றிப் சிறப்பு எதுவும் இல்லையென்பார் ஒன்றே குலமும் என்றார். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என வரும் திருக்குறள் இத்தொடரில் நிலைபெற்றுள்ளது. எல்லாவுயிர்களும் ஓரினமே. அவ்வுயிர்கட்குத் தலைவனாக நின்று அருள்புரியும் இறைவனும் ஒருவனே என்னும் இவ்வுண்மையினை உள்ளவாறுணர்ந்தோர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் ஆன்மநேய ஒருமைப் பாடுடையராய் எவ்வுயிர்க்கும் நன்றே நினைந்து உய்திபெறும் நல்லியல்பினராவராதலின் அன்னோர்க்கு இறத்தல் துன்பம் என்றும் நேராது என்பார், நன்றே நினைமின் நமன் இல்லை என்றார். நலம்பெற விரும்பியவர்கள் நாணமின்றிப் பலரிடத்துஞ்சென்று நற்பொருளை வினவிப்பெறுதல் உலகியல்பு. அவ்வாறு எங்கும் அலைந்து திரிந்து அடைதற்குரிய நற்கதி நுமக்குப்புறம்பாக எதுவுமில்லை; நும்மனத்தகத்திலேயே நிலைபெற்றுள்ளது. ஆதலில் இறைவனை மனத்தின்கண் மறவாது நினைத்தலொன்றே போதுமானது என்பார், சென்றே புகுங்கதி இல்லை என்றும், நும்சித்தத்து நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே என்றும் கூறினார். சென்றே புகுங்கதி இல்லை எனவே நீர் அக்கதியை நாடிச் செல்லவேண்டிய இன்றியமையாமை யில்லை, சென்றடையாத திருவாகிய அச்சிவகதி நும்முள்ளத்திருந்து வெளிப்பட்டுத் தோன்றி நும்மை அகத்திட்டுக் கொள்ளும் என அறிவுறுத்தினாராயிற்று, உயிர்கட்குச் சார்பாயுள்ள சிவபெருமானை அன்பால் நினைவார் எய்தும் பயனும் நினையாதார் அடையும் தீமையும் உணர்த்துவது, சார்ந்தவர்க் கின்பங்கொடுக்குந் தழல்வண்ணன் பேர்ந்தவர்க் கின்னாப் பிறவி கொடுத்திடும் கூர்ந்தவர்க் கங்கே குரைகழல் காட்டிடும் சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே (2114) எனவரும் திருமந்திரமாகும். தீவண்ணனாகிய சிவபெருமான் தன்னை அன்பினாற் சார்ந்து ஒழுகுவார்க்கு இன்பத்தை நல்கியருள்வான். தன் திருவருள் ஆணையின் வழிச்சாராது விலகி நடப்பார்க்குத் துன்பமே விளைக்கும் பிறவியைக் கொடுப்பான். தன்பால் அன்பு மீதூரப் பெற்றார்க்கு ஒலிக்கின்ற கழலணிந்த திருவடியைக் காட்டி அருள் புரிவான். அவனது திருவடியாகிய சிவஞானம் சேரப் பெற்றவர்கள் இறைவனை அணுகிச் சென்றுணர்ந்து இன்புறுவோராவர் என்பது இதன் பொருள். சார்தல் - இருவகைப் பற்றும் நீங்க இறைவனை அடைக்கல மெனச் சார்ந்து தன் செயலற்று இறைவனது அருள்வழி யொழுகுதல்; அவனருளாலன்றித் தானாக ஒன்றையுஞ் செய்யாமை தீயானது தன்னை மதித்து அகலாது சார்ந்தொழுகுவாரது குளிரை நீக்கி நலஞ்செய்தும் தன்னைவிட்டு விலகினார்க்குப் பயன்தராதும் அமைதல் போன்று, தீவண்ணனாகிய இறைவனும் அன்பினால் தன்னை அகலாதொழுகுவார்க்கு நடுக்கம் அகற்றி நலம்புரிதலும் விலகியொழுகுவார்க்குப் பிறவிப்பிணியுட்பட்டு வருந்தப் பயன்தராதொழிதலும் ஆகிய இருநிலைமையும் உடையன் என்பார், தழல் வண்ணன் சார்ந்தவர்க்கு இன்பங்கொடுக்கும் பேர்ந்தவர்க்கு இன்னாப் பிறவிகொடுத்திடும் என்றார். சார்ந்தவர்க்கின்பங்கள் தழைக்கும் வண்ணம். நேர்ந்தவன் (1.113.5) எனவும், தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானை (2.4.11) எனவும், சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்குவானலன் (4.11.6) எனவும் வரும் அருளிச்செயல்கள் இத்திருமந்திரத்தின் சொற் பொருள்களை அடியொற்றியமைந்தனவாகம். இறைவன் அருள்வழி நிற்பார்க்கு இன்பமும், அங்ஙனம் நில்லாது தாம் விரும்பியவழி ஒழுகுவார்க்குத் துன்பமும் செய்தல் அருளாளனாகிய இறைவனுக்கு நடுவுநிலைமையன்று என்பாரை நோக்கி, அவர்தம் மொழியை உடன்பட்டே அமைதி கூறுவதாய்ச் சார்ந்தாரைக் காத்தல் தலைவர்கடன் என்னும் பழமொழியை எடுத்துக்காட்டி இச்செயல் உயிர்களைத் திருத்திப் பணிகொள்ளும் இறைவனுக்கு நடுவன்மையும் அன்று என வலியுறுத்துவது, சார்ந்தாரைக் காத்தல் தலைவன் கடனாதல் சார்ந்தாரைக் காத்தும் சலிமிலனாய்ச் - சார்ந்தடியார் தாந்தானாச் செய்தபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முற் செய்வினையும் ஆங்கு (சிவஞானபோதம் சூத்.10. வெண்பா. 44) எனவரும் சிவஞானபோத உதாரணவெண்பாவாகும். இது மேற்காட்டிய திருமந்திரத்தைத் தழுவியமைந்ததாகும். எட்டாந்தந்திரம் திருமந்திரத்தின் எட்டாந்தந்திரம், உடலிற் பஞ்சபேதம் என்பது முதல் சோதனை என்பது ஈறாக நாற்பத்துமூன்று உட்பிரிவுகளையுடையது. இவற்றுள் உடலிற் பஞ்சதேம் சாக்கிரம் முதலிய அவத்தைபேதங்கள் கேவல சகலசுத்தம் என்னும் மூவகை நிலைகள் அறிவுதயம், ஆறந்தம், மகாவாக்கியம், வாய்மை, அவாவறுத்தல், பத்தியுடைமை, சோதனை முதலிய பொருள்கள் சிறப்பாகக் குறிக்கத்தக்கனவாகும். சிவதரிசனத்தின் பின் சிவனொடு கூடுதல் என்னும் சிவயோக நிலையினையுணர்த்துதல் எட்டாந் தந்திரத்தின் கருத்து என்பர் பெரியோர். இத்தந்திரத்திற் கூறப்படும் சிவயோக நிலைகள் பற்றிய அரும் பொருள்களும் மேற்கூறப்பட்ட அட்டாங்கயோகம் பற்றிய நுண்பொருள்களும் அனுபவமுடைய ஆசிரியர்களை வழிபட்டு அவர்கள் அறிவுறுத்திய நெறியில் நின்று உணர்ந்து கொள்ளத்தக்கனவன்றி ஏனையோரால் உணர்ந்து கூறப்படும் எளிமையுடையன அல்ல. எனவே அப்பொருள்களைப் பற்றி இவ்வாய்வு நூலில் விளக்கம் தருதற்கு இயலவில்லை. அடித்தலை யறியுந்திறங்கூறல் என்ற பகுதி, ஆன்மா இறைவன் திருவருளில் தலைப்பட்டுத் தாடலைப் போல் அடங்கி நிற்றலாகிய அத்துவிதநிலையினைப் புலப்படுத்துவதாகும். மகாவாக்கியம் என்ற பகுதியில் தத்துவமசி எனவும் சிவாத்துவிதம் எனவும் அருமறைகளிற் கூறப்படும் தத்துவ நுண்பொருள் விரித்துரைக்கப் பெற்றுள்ளது. வாய்மைவழி நின்று தன்னை யறிந்திடுந் தத்துவஞானிகள், உலகப் பொருள்களிலுள்ள அவாவையறுத்து, உயிர்க்குயிராகிய முதல்வன்பால் எல்லையற்ற பத்தியுடையராயச் சிவ யோகத்தின் முடிந்த நிலையில் நிற்குந்திறத்தினை விளக்குவன இத்தந்திரத்தினுள் வாய்மை, ஞானிசெயல், அவாவறுத்தல் பத்தியுடைமை, சோதனையென்ற தலைப்புக்களில் அமைந்த திருமந்திரப் பாடல்களாகும். ஆணவம் மாயை கன்மம் என்னும் மும்மலங்களும் நெல்லில் (அரிசியைச் சூழ்ந்து) அமைந்துள்ள முளைதவிடு உமி என்பவற்றைப் போன்று ஆன்மாவை முறையே பிணித்துள்ளன. அவ்வாறு மலத்தினால் அநாதியே மறைக்கப்பட்டுள்ள ஆன்மாவும், என்றும் ஒருநிலையினதாகிய பரம்பொருளைப் போன்று வியாபக நிலையை யுடையதாகாமல், முளை, தவிடு, உமியினால் மறைக்கப்பட்ட அரிசியினைப் போன்று மும்மலங்களால் மறைக்கப்பட்டுக் கட்டுற்றுநிற்கும். ஆகவே ஆன்மாவாகிய நீ நின்னின் வேறாகிய இப்பாசங்களைப் பிரித்துணர்தற்பொருட்டுத் தாணுவாகிய சிவபெருமான் திருவடியை விரும்பிப் போற்றுவாயாகஎன மாணாக்கற்கு அறிவுறுத்துவதாக அமைந்தது, ஆணவ மாயையுங் கன்மமு மாமலம் தாணு முளைக்குத் தவிடுமி, ஆன்மாவும் தாணுவை யொவ்வாமல் தண்டுல மாய்நிற்கும் பேணுவாய் மற்றுநின் பாசம் பிரித்தே (2129) எனவரும் திருமந்திரமாகும். மும்மலம் நெல்லினுக்கு முளையொடு தவிடுமிபோல் மம்மர்செய்தணுவி னுண்மை வடிவினை மறைத்துநின்று (சித்தியார் சுபக். 172) எனவரும் சிவஞானசித்தியாரும், உயிருண்டாவே யுளதுமலம், மலமுளதாய் ஒழிந்தவெல்லாம் நெல்லின் முளைதவிடுமிபோல் அநாதியாக நிகழ்த்திடுவர் இதுசைவம் நிகழ்த்துமாறே (சிவப். 25) எனவரும் சிவப்பிரகாசமும் இத்திருமந்திரத்தை அடியொற்றி யமைந்தன. நெல்லின் முளைதவிடுமிபோல் என்னும் இவ்வுவமையில் நெல்லினுள்ளேயுள்ள அரிசி ஆன்மாவிற்கு உவமை. அரிசியைப் பற்றியுள்ள தவிடு ஆணவமலத்திற்கு உவமை. உமி மாயைக்கு உவமை என விளக்கந்தருவர் மதுரைச் சிவப்பிரகாசர். ஆணவம் பிண்டி, அருமாயை தான்உமி, காமியம் மூக்கென்று காண் என்பது வீட்டு நெறிப்பால், நெல்லின் உமிபோனால் முளைசீவியாதாற் போலக் கன்மமும் மாயை ஆதாரமாக ஒடுங்கி மீளவும் மாயை ஆதாரமாகச் சீவிக்கும். கன்மமில்லாத போது மாயையும் சீவிப்பற்றுப்போம் என்பர் சிவப்பிரகாசர். ஆணவம் உமியையும் கன்மம் முளையையும் மாயை தவிட்டையும் ஒக்கும் என உரை கூறுவாருமுளர். நெல்லிற் குமியும் நிகழ்செம்பினிற் களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே எனவரும் சிவஞான போத வெண்பாவில் வல்லி (மாயை)க்கு உவமையாக உமியும், ஆணவமலத்திற்கு உவமையாகக் களிம்பும் கூறப்படுதலால் சிவப்பிரகாசர் தந்த விளக்கமே பொருத்தமுடையதாகும். ஆணவத்துக்குத் தவிட்டினை உவமையாகக் காட்டுவர் உமாபதி சிவாசாரியார். ஆன்மாக்கள் இறைவன் திருவருளால் உய்திபெறும் முறையினைப் பிறிதுமொழிதல் என்னும் அணிநலம் அமைய எடுத்துரைப்பது, பசுக்கள் பலவண்ணம் பாலொரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல்போடிற் பசுக்கள் தலைவனைப்பற்றி விடாவே (2193) எனவரும் திருமந்திரமாகும். பசுக்களே பலநிறத்தன. ஆயினும் அவற்றின் பாலானது வெண்மையாகிய ஒரே நிறமுடையதாகும். அப்பசுக்களைப் புலங்களிற் செலுத்தி மேய்ப்போனாகிய இடையன் ஒரே தன்மையன். பசுக்களை மேய்க்குந் தொழிலை மேற்கொண்ட ஆயன் தான் கையிற் கொண்ட கோலைக் கீழே போடுவானாயின் (முன்னர் அக்கோலினால் மொத்துண்டு பயந்து ஓடிய) அப்பசுக்கள் தம் தலைவனாகிய அவனை அன்பினாற் பற்றிச் சூழ்ந்து கொண்டு அவனை விட்டு நீங்கமாட்டா என்பது இதன் பொருளாகும். பாசத்தாற் கட்டுண்டமையின் பசுவெனப்பெயர் பெற்ற உயிர்கள் ஆணவமலம் ஒன்றேயுடைய விஞ்ஞானா கலர், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய பிரளயா கலர், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய சகலர் எனப் பலதித்தனவாயினும் அவை யாவும் சார்ந்த தன் வண்ணமாந்தன்மையாகிய ஓரியல் பேயுடையன என்பார், பசுக்கள் பலவண்ணம், பால் ஒருவண்ணம் என்றார். பாலின் நிறம் வெண்மை; இங்குச் சார்ந்ததன் வண்ணமாந் தன்மையினைக் குறிப்பால் உணர்த்திற்று. உயிர்கள் பல, இறைவன் ஒருவனே என்பது உணர்த்துவார், பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம் என்றார். கோல் என்றது உயிர்களை அவை செய்த இருவினைகளின் வழி மறைந்து நின்று செலுத்தும் சினமருவு திரோதாயியாகிய சத்தியினை, கோலைப் போடுதலாவது, அக்கோலினால் உயிர்களின் மலங்கழலும் பக்குவம் எய்தியபின், முன்னர் வெகுண்டு வினைப்பயன் அருத்திய திரோதான சத்தியே தன் சினந்தவிர்ந்து நலம்புரியும் அருட்சத்தியாக மாறுதல் அடைதல். அத்திருவருட்சத்தி பதிந்தபின் உயிர்கள் யாவும் தம் அச்சத்திற்கு ஏதுவாகிய பாசப் பிணிப்பின் நீங்கிச் சிவஞானமாகிய தெளிவு பெற்றுச் சிவபரம்பொருளை அன்பினால் அணுகி இன்புறும் நிலையினவாகும் என்பார், பசுக்களை மேய்க்கின்ற ஆயன்கோல் போடிற், பசுக்கள் தலைவனைப் பற்றிவிடாவே என்றார். சாத்தனூரில் ஆனிரை மேய்த்த மூலன் என்னும் ஆயன்பாற் பசுக்கள் கொண்ட அன்பினை நேரிற்கண்ட சிவயோகியார், தாம் கண்ட காட்சியினை உவமையாகக் கொண்டு பசுபதியாகிய இறைவன்பால் ஆன்மாக்கள் கொள்ளும் நேயத்தினையும் எடுத்துக்காட்டிய திறம் உணர்ந்து போற்றத்தகுவதாகும். ஆன்மா தோற்றமில் காலமாக ஆணவமலத்தால் மறைக்கப்பட்டுத் தனக்குரிய விழைவு அறிவு செயல் என்னும் மூவகை ஆற்றல்களும் வெளிப்படுத்தற்குரிய வாய்ப்பின்றித் தனித்துக் கிடந்த இருள்நிலை கேவலாவத்தை எனப்படும். இவ் அவத்தையில் இயல்பினை உணர்த்துவது, அறிவிலன் அமூர்த்தன் அராகாதி சேரான் குறியொன் றிலான் நித்தன் கூடான்கலாதி செறியுஞ் செயலில்லோன் திண்கர்த்தா அல்லோன் கிறியின் மலன் வியாபி கேவலத்தோனே (2247) எனவரும் திருமந்திரமாகும். கேவல நிலையினனாகிய ஆன்மா (அந்தக்கரணம் முதலிய கருவிகளைப் பெறாமையால்) அறியுந் திறமில்லாதான்; தனக்கென வடிவ மில்லாதான்; அராக முதலிய குணங்கள் சேரப்பெறாதான்; ஒன்றிலும் இச்சையில்லாதான்; தோற்றக்கேடுகள் இல்லாமையால் என்றும் நிலைத்துள்ளவன்; கலைமுதலிய தத்துவங்களோடு கூடாப்பெறாதான்; தனக்கென்று பொருந்திய செயல் எதுவும் இல்லாதான்; எனவே திண்மையுடைய வினைமுதலாந் தன்மையில்லாதான்; வஞ்சனையைச் செய்யும் ஆணவமலத்தோடு கூடியவன்; வியாபகத் தன்மையனாயினும் மலவிருளில் அழுந்தியுள்ளான் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். இங்குக் குறி என்றது, முதனிலைத் தொழிற்பெயராய் இச்சையை உணர்த்தியது. அராகாதிகுணம் என்றது, தருமம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதர்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் என்னும் புத்திகுணம் எட்டினையும். அராகாதிகுணங்கள் இல்லான் இனம் பற்றி ஏனைய போநுகர்ச்சிக்குரிய கருவிகளும் இல்லாதவன் என்பதும் கொள்ளப்படும். உயிரானது இருள்மலத்தினால் மறைக்கப்பட்டு எத்தகைய கருவிகளும் பெறாமல் ஒருசெயலுமின்றிக் கிடந்த கேவலாவத்தையின் இயல்பினை விளக்கும் இத்திருமந்திரப் பொருளை கூர்ந்துணர்ந்த அருணந்திசிவாசாரியர், இத்திருப்பாடற்கு உரை விளக்கம் தரும் முறையில், அறிவிலன் அமூர்த்தன்நித்தன் அராகாதி குணங்களோடுஞ் செறிவிலன் கலாதியோடுஞ் சேர்விலன் செயல்கள் இல்லான் குறியிலன் கருத்தாவல்லன் போகத்திற் கொள்கையில்லான் பிரிவிலன் மலத்தினோடும் வியாபிகேவலத்தில் ஆன்மா (சித்தியார் சுபக். 288) எனக் கேவலநிலையின் இயல்பினை விரித்துரைத்துரைத்தார். ஆன்மா உடம்பு முன் இல்லாதவன்; கலை முதலிய தத்துவங்களோடு முன் சேராதவன்; புத்திகுணம் எட்டினையும் முன்பொருந்தாதவன்; எதிலும் இச்சை இல்லாதவன்; அறிவுமுன் இல்லாதவன்; ஒரு தொழிலும் முன் இல்லாதவன்; தனக்கென முன் ஒரு சுதந்தரம் இல்லாதவன்; போகத்தில் முன்கொள்கை இல்லாதவன்; தோற்றக்கேடுகள் முன் இல்லாதவன்; ஏகதேசி யாதல் முன் இல்லாதவன்; கேவல அவத்தையில் ஆணவ மலத்தோடும் மட்டுமே கூடியுள்ளவன் என்பன கேவல நிலையில் ஆன்மாவின் இயல்புகளாகக் கூறப்பட்டன. ஆன்மா, மாயையின் காரியப்பொருள்களாகிய உடல் கருவி உலகு, நுகர்பொருள் ஆகியவற்றைப் பெற்றுள்ள இவ்வுலகியல்நிலை சகலாவத்தை எனப்படும், இதன் இயல்பினைக் கூறுவது, உருவுற்றுப் போகமே போக்கியந்துற்று மருவுற்றுப் பூத மனாதியான் மன்னி வருமச் செயல்பற்றிச் சத்தாதிவைகிக் கருவுற் றிடுஞ் சீவன் காணுஞ் சகலத்தே (2261) எனவரும் திருமந்திரமாகும். மாயாகாரியமான உடம்பினைப் பொருந்தி உடுத்த வுடம்பிற்குரிய போக போக்கியங்களை நுகர்ந்து பூதங்களைச் சார்ந்து மனம் முதலிய அகக்கருவியோடு நிலைத்து அவற்றால் வருகின்ற செயல்களைப் பொருந்தி ஓசை முதலிய விடயங்களில் விரும்பித்தங்கிக் கருவுற்றுப் பிறந்தவுயிர் காணப்பெறும் சகலாவத்தை யினையுடையதாகும் என்பது இதன்பொருளாகும். உயிர், உடல் கருவி முதலியவற்றைப் பெற்று உலகிற் பிறந்து போகம் நுகர்ந்து வரும் இவ்வுலகியல் வாழ்வு சகலாவத்தை என்பதாம். இத்திருமந்திரச் சொல்லையும் பொருளையும் அடி யொற்றியது, உருவினைக் கொண்டுபோக போக்கியத் துன்னல் செப்பல் வருசெயல் மருவிச் சத்தமாதியாம் விடயந்தன்னிற் புரிவதுஞ் செய்திங் செல்லாயோனியும் புக்குழன்று திரிதரும் சகலமான அவத்தையிற் சீவன்சென்றே (230) எனவரும் சிவஞான சித்தியாராகும். உருவினைக் கொண்டும் நுகர்ச்சிப் பகுதியாகிய கலை முதலியவற்றோடு செறிந்தும் இச்சையுற்றும் நால்வகை வாக்குக்களால் நிகழும் அறிவினையடைந்தும் தொழிலைப் பொருந்தியும் ஓசை முதலிய நுகர்பொருள்களில் விருப்பஞ் செய்தும் போகம் நுகர்ந்தும் இவ்வுலகிற் பிறப்பு இறப்புக்களிற் புக்கு உழன்றும் ஏகதேசியாய்ச் சகலாவத்தையிற் சீவித்து நிற்பவன் சீவன் என்னும் ஆன்மா என்பது இதன்பொருள். போகம் நுகர்ச்சி போக்கியம் - நுகர்பொருள். நுகர்ச்சிக்குரிய கருவியாகிய கலை முதலியவற்றைப் போககாண்டம் என்றும், நுகர் பொருட்பகுதியாகிய புந்தி முதலியவற்றைப் போக்கிய காண்டம் என்றும் வழங்குதல் மரபு. ஆன்மா இறையருளாற் பாசப்பிணிப்பினின்றும் நீங்கித் தூயதாகிய நிலை சுத்தாவத்தையெனப்படும். இதன் இயல்பினை விளக்குவது, இருவினை யொத்திட இன்னருட்சத்தி மருவிட ஞானத்தின் ஆதனமன்னி கருவினைக் கொண்டருட் சத்திமுன கூட்டிப் பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே (2262) எனவரும் திருமந்திரமாகும். இருவினையொப்பு நிகழ இனிய திருவருளாகிய சத்தி பதிய, ஞானயோகத்தில் ஒன்றி யிருத்தலால் நிலைத்த உபதேச குரு வாய்க்கப்பெற்று அவரால் திருவருட் சத்தியாகிய சிவஞானம் கூடப்பெற்றுப் பெரிய குற்றமாகிய ஆணவ முலம் நீங்கிப் பிறவாநிலையை யடைதலே சுத்தாவத்தையாகும் என்பது இதன்பொருள். ஓசை முதலிய நுகர்பொருள்களின் விருப்பங்கழிதற்கு ஏதுவாவது இருவினையொப்பு. போக போக்கியக் கருவிகளின் செறிவு நீங்குதற்கு ஏதுவாவது சத்திநிபாதம். உருவங்கழிதற்கு ஏது குருவருள். பிறந்து திரிதல் கழிதற்கு ஏது ஞானசாதனம். ஏகதேசத் தன்மை கழிதற்கு ஏது மும்மலநீக்கம். ஓசை முதலிய பொருள் நுகர்ச்சி கழிதற்கு ஏது வாதனை நீக்கம். பாச அறிவிச்சை செயல்களை கழிதற்கு ஏது ஞானப்பெருக்கம். இருவினையொப்பு : ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பும் ஆதல் இன்றிப் புண்ணியபாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுவோனது அறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்ப நிகழ்தல். மலபரிபாகம் : ஆணவமலம் தனது ஆற்றல் தேய்தற் குரிய துணைக் காரணங்கள் எல்லாவற்றோடும் கூடுதல். சத்திநிபாதம் : ஆணவமலத்திற்கு அனுகூலமாய் நின்று நடாத்திய திரோதானசத்தி ஆணவமலம் ஆன்மாவை விட்டுக்கழலும் பக்குவத்தினையடைந்துபோது கருணை மறமாகிய தன் செய்கை மாறிக் கருணையெனப்படும் முன்னைப் பராசத்தி உருவாய் ஆன்மாக்களிடத்துப் பதிதல். சத்தி நிபாதம் - சத்தியதுவீழ்ச்சி. நி என்பது ஏற்றமாக என்னும் பொருள் குறித்து நின்றதோர் இடைச்சொல். ஆன்மா, இறைவனருளால் கேவலநிலையினின்றும் சகலநிலையை எய்திச் சுத்த நிலையை அடையுமாறு கூறுவது, மாயை கைத்தாயாக மாமாயை யீன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர் கேவல சகலத்தெய்தி ஆய்தரு சுத்தமுந் தான் வந்தடையுமே (2268) எனவரும் திருமந்திரமாகும். எவ்விடத்துமாய் நீக்கமறக் கலந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான், அப்பனாக நின்று அருள்புரியப் பொருந்திய ஆன்மா, கத்தமாயை (தன்னைப் பிள்ளையாய்ப்) பெற, அசுத்தமாயை செவிலித் தாயாய் நின்று வளர்க்க, கேவலநிலையின் நீங்கிச் சகலநிலையை யடைந்து (சிவஞானத்தால்) ஆய்ந்து தெளியப் பெறும் சுத்த நிலையையும் தான் வந்தடையும் என்பது இதன்பொருள். இறைவன் கேவலமாகிய இருள்நிலையிற் கிடந்த ஆன்மாவைச் சுத்தமாயையின் இடமாகத் தோன்றச் செய்து, அசுத்தமாயையைக் கொண்டு வளரச்செய்து, தூய்மைப்படுத்தித் தன் திருவடிக்கீழ்ச் சேர்த்தருள்வன் என்பது இதன் கருத்தாகும். ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே, ஏயும் உயிர், மாமாயை ஈன்றிட மாயை கைத்தாயாகக் கேவலத்தின் (நீங்கிச்) சகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான்வந்து அடையும் என இயையும். மாமாயை- சுத்தமாயை. மாயை - அசுத்தமாயை. கைத்தாய் - செவிலித்தாய். ஆன்மதரிசனம் செய்யும் உபாயம் உணர்த்துவது, பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் தன்னை மறைத்தது தன் கரணங்களாந் தன்னின் மறைந்தது தன் கரணங்களே (2289) எனவரும் திருமந்திரமாகும். பொன்னால் இயன்ற அழகிய அணிகலம் அணிகலம் என்ற வடிவில் தன்னைக் காண்பார்க்குத் தனக்கு முதற்காரணமானது பொன் என்னும் உண்மையினை உலகத்தார் காணாதவாறு தன் வினைத் திறத்தால் பொன்னை மறைத்து விட்டது. அவ்வணிகலத்தில் மேற்பட்டுத் தோன்றும் தொழில்நட்பத்திற் கருத்தைச் செலுத்தாமல் அதற்கு முதற்காரணமாவது யாது எனக் கூர்ந்துணர்வார்க்கு அவ்வணிகலத்தின் வடிவம் தனித்துத் தோன்றாமல் பொன் என்ற அளவிலேயே அதற்குள் அடங்கி மறைந்தது. அது போல, ஆன்மாவாகிய தன்னை மறைத்தது தன்கரணங்களாகிய மாயேயன். (நானார் என்னுள்ளமார் எனக் கூர்ந்து நோக்கிய நிலையில்) தன்னுடைய கருவிகரணங்களாகிய அத்தொகுதியானது ஆன்மாமேற்பட்டுத் தோன்ற அதன் வியாபகத்துள் அடங்கி மறைந்தது என்பது இதன் பொருள். ஆன்மா தனுகரணங்களே தானாகப் பேதமின்றி எண்ணிய நிலையில் ஆன்மா என்னும் சித்துப்பொருள் மறைய அது பெற்றுள்ள கருவிகரணங்களாகிய சடப் பொருளே மேற்பட்டுத் தோன்றுவதாம். அவற்றைச் சடம் என உணர்ந்த நிலையில் ஆன்மாவாகிய சித்துப் பொருளின் வியாபகமே மேற்பட்டுத் தோன்றத் தன்னியல்பினை உள்ளவாறு உணர்தலாகிய ஆன்மதரிசனம் உளதாகும் என்பது கருத்து. ஆன்மா தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றார் மெய்கண்டதேவரும். இத்திருமந்திரம் எடுத்துக்காட்டுவமை என்னும் அணியமைந்ததாகும். எல்லாஞ்சிவனென்ன நின்ற நிலையைத் தரிசிக்குமாறு உணர்த்துவது, மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே (2290) எனவரும் திருமந்திரமாகும். மரத்தாற் செய்யப்பட்ட மதயானையின் வடிவமானது தொழில் வன்மையால்தன்னை உயிருடைய யானைபோலக் காட்டி மயக்கித் தனக்கு முதற்காரணமரிகய மரத்தின் தன்மையினை மறைத்து நின்றது. அதன் மெய்ம்மைத் தன்மையைக் கூர்ந்து நோக்குவார்க்கு முன்பு மெய்ம்மையுடையது போன்று காணப்பட்ட யானையின் தோற்றம். மரத்தினுள் மறைந்து போயிற்று. அதுபோல, நில முதலாகக் காணப்படும் பூதகாரியமாகிய உலகத் தொகுதி தனக்குப் பற்றுக்கோடாகிய பரம்பொருளின் மெய்ம்மைத் தன்மை தோன்றாதபடி மறைத்துத் தானே மெய்ப்பொருள் என்பது போன்று விரிந்து தோன்றுகின்றது. என்றும் உள்ளதாகிய மெய்ப்பொருள் எதுவென்று உண்மையான் நோக்குவார்க்குப் பரம்பொருளின் வியாபகமே மேற்பட்டுத் தோன்றுதலால் இப்பிரபஞ்சம் அசத்துப் பொருளாய்ச் சத்தாகிய பரம்பொருளினுள் அடங்கிவிடும் என்பது இத்திருமந்திரத்தால் விரித்துரைக்கப்பெற்றது. அசத்தாகிய உலகப் பொருளின் வழி நின்று அதன் புறத் தோற்றமே காண்பார்க்கு அதன் உள்ளீடாகிய பரம்பொருள் காணப்பெறாது. சத்தாகிய பரம்பொருளின் அருள்வழி நின்று உலகின் உள்ளீடாகிய மெய்ம்மையினைக் காணவல்லார்க்கு அசத்தாகிய பிரபஞ்சத்தின் தோற்றம் கட்புலனாகாது என்பது கருத்து. பரஞானத்தாற் பரத்தைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர் பதார்த்தங்கள் பாரார் ........................................ சீவின்முத்தர் சிவமே கண்டிருப்பர் (சித்தியார்) என்றார் அருணந்தி சிவனாரும். இறைவனது உடைமைப் பொருளாகிய தம் (ஆன்மாவின்) இயல்பினை உணர்ந்து தம்மை அடிமையாகவுடைய இறைவனையும் உள்ளவாறு உணர்பவர்களே சித்தாந்தசைவர்களாவர் என்பது, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் (சிவஞானபோதம் அவையடக்கம்) எனவரும் மெய்கண்டார் வாய்மொழியால் இனிது புலனாகும். ஆன்மா தன்னையறிதலால் வரும் பயன் உணர்த்துவது, தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை தன்னை யறியாமல் தானே கெடுகின்றான் தன்னை யறியாமல் அறிவை யறிந்தபின் தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே (2355) எனவரும் திருமந்திரமாகும். ஆன்மா தனது இயல்பை உள்ளவாறு அறிந்து கொள்ளுதலால் தனக்கு வரக்கூடியது ஒரு துன்பமும் இல்லை. ஆன்மா தன்னியல்பினை உள்ளவாறு உணராமையினாலேயே தானே (வாழ்க்கைப் பயனையிழந்து வீணே) கெடுகின்றான். தனதியல்பினை உள்ளவாறு உணர்தற்கு எதுவாகிய சிவஞானத்தைத் தந்தருளும் இறைவனை அறிந்து பின்பு தன் தலைவனாகிய இறைவனையே பூசிக்கத் தான் அவனுடன் பிரிப்பின்றி யிருத்தலாகிய பேரின்ப நிலையைப் பெறுகின்றான் என்பது இதன் பொருளாகும். தன்னை அறிதலாவது, ஆன்மாவாகிய தன்னை இறைவனுக்கு அடிமையென்று அறிதல், தனக்கு ஆன்மாவுக்குத் தன்னையறிதலால் தனக்கு வருவது ஆன்மலாபமாகிய ஊதியமேயன்றி எத்தகைய இழப்பும் இல்லை என அறிவுறுத்துவார் தன்னையறியத் தனக்கொரு கேடில்லை என்றார். தன்னியல்பை யறியாமையால் தலைவனையும் அறியப்பெறாது ஆன்மசுத்திக்குப் பின் உண்டாகும் சிவப்பேறாகிய பெரும்பயனை யிழந்து ஆன்மாவாகிய தனக்கே கேடு சூழ்கின்றான் என்பார், தன்னையறியாமல் தானே கெடுகின்றான் என்றார். தன்னையறியும் அறிவு என்றது அறிவே யுருவாகிய இறைவனை. ஆன்மா தன்னை அறியும்பொழுதே தானே முதல்வன் அல்லன் தனக்கு மேலாக முதல்வன் ஒருவன் உளன் என்பதனையும் அறிந்து கொள்வான் ஆதலால் தனக்குச் சார்பாயுள்ள அத்தலைவனில்லாமல் தானில்லை என்பதனையுணர்ந்து அவனருளிய சிவஞானத்தைப் பெற்று அம்முதல்வனையே வழிபட்டு அவனோடு இரண்டறக் கலந்து என்றும் பொன்றாப் பெருவாழ்வைப் பெறுவான் என்பார் தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்தானே என்றார். இதன் நான்காமடியில் தன்னை என்றது, தன் ஐ - தன் தலைவன் என்ற பொருளில் ஆளப்பெற்றதாகும். தன்னிற்றன்னையறியுந் தலைமகன் (2349) எனத் திருமந்திரத்திலும் திருக்குறுந்தொகையிலும் தன்னை என்பது தன்தலைவன் என்ற பொருளிற் பயின்றுள்ளமை காணலாம். இங்குத் தன்னையறிதல் என்றது, சிவரூபத்தால் ஆன்மதரிசனமும், சிவதரிசனத்தால் ஆன்மசுத்தியும் பெறுதலை. குருவின் அருளால் ஆன்மா தன்னை அறிவுடைய சித்துப் பொருள் என்று அறிந்து கொண்டமை கூறுவது. அறிவு வடிவென் றறியாத என்னை அறிவு வடிவென்றருள் செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளா லறிந்தே அறிவு வடிவென் றறிந்திருந் தேனே (2357) எனவரும் திருமந்திரமாகும். அறிவுருவே ஆன்மா என்று அறியும் ஆற்றலில்லாத என்னை என் குருமுதல்வனாகிய நந்தி அறிவே ஆன்மாவின் உருவம் என்னும் உண்மையை அறிவுறுத்தியருளினான். அவனது திருவருளால் என்னுயிரின் உருவம் அறிவு என்பதனையுணர்ந்து (இவ்வுண்மையை அறிவுறுத்திய) அம்முதல்வனது திருமேனி ஞானமே என்பதனையுணர்ந்து அறிவே வடிவாகிய அவனுடன் பிரியாது ஒன்றியிருக்கும் நிலையினைப் பெற்றேன் என்பது இதன் பொருளாகும். உயிர்க்கு அறிவே வடிவென்று அறிவுறுத்திய இத்திருமந்திரப் பொருளையுளங்கொண்டு விளக்கம் முறையில் அமைந்தது, ஆறு சுவையும் அருந்தி அவைதம்மை வேறொருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறாறும் ஒன்றொன்றா நாடியுணர்ந் தோதியதில் உற்றறிவாய் நின்றபொருள் தானேகாண் நீ (உண்மை 26) எனவரும் உண்மை விளக்கச் செய்யுளாகும். பாராதி பூதம் நீயல்லை - உன்னிப் பாரிந்திரியங் கரண நீயல்லை ஆரா உணர்வு நீயென்றான் - ஐயன் அன்பாயுரைத்த சொல் ஆனந்தந்தோழி எனத் தாயுமானார் கூறும் குருமொழியும் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். திருமூலர் காலத்தில் வேதாந்தம் அதன் மேற்பட்ட சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்னும் அறுவகைச் சமயத் தத்துவ முடிபுகள் அச்சமயத்திற் குரியனவாக வழங்கின என்பது, வேதத்தன் அந்தமும் மிக்க சித்தாந்தமும் (2370) எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும். உடல் கருவிகளோடு கூடியும் அவற்றில் அழுந்தாமல் சீவன் முத்தராம் நிலை சித்தாந்தச் செந்நெறிக் குரியதென்பதும் சித்தாந்தமும் வேதாந்தமும் பொருளொற்றுமை யுடையன என்பதும், சித்தாந்தத்தே சீவன் முத்தி சித்தித்தலால் சித்தாந்தத்தே நிற்பர் முத்தி சித்தித்தவர் சித்தாந்த வேதாந்தஞ் செம்பொரு ளாதலால் சித்தாந்த வேதாந்தங் காட்டுஞ் சிவனையே (2394) எனவரும் திருமந்திரத்தால் அறியப்படும். சித்தாந்தச் செந்நெறியிலே இவ்வொரு பிறவியியே சீவன் முத்தி கைவரப்பெறுதலால் அந்நெறியிற் பிறழாது நின்றொழுக வல்லவர் சீவன் முத்தி கைவரப்பெற்றவராவர். மெய்ந்நெறியாகிய சைவ சித்தாந்தமும் உலகியல் நெறியாகிய வேதாந்தமும் ஆகிய இவற்றிற் கூறப்படுவன சிறப்பும் பொதுவுமாகிய செம்பொருளதலால் அவ்விருவகை நெறியும் சிவனது சிறப்பியல்பும் பொதுவியல்புமாகிய உண்மைகளை விளக்கிக் காட்டுவன என்பது இதன் பொருளாகும். சித்தாந்தம் என்பது சிவாகமங்களின் முடிந்த முடிபு. சீவன் முத்தியாவது, உயிரானது உடம்பு முதலிய மாயேயத்தோடு கூடிய நிலையிலும் அவற்றிற் பற்றுச் சிறிதுமின்றிச் சிவத்தோடு அழுந்தி நிற்றல். சித்தித்தல் - எண்ணியபடியே கைவரப்பெறுதல், செம்பொருள் - முரண்படாத இயைபுடைய பொருள். சித்தாந்தம் வேதாந்தம் சிவனைக்காட்டும் எனத் திருமூலர் இருவகை நெறிகளையும் சிறப்பாக எடுத்துரைத்தலால், தென்னாட்டில் உருவாகி வழங்கிய சித்தாந்தமும் வடநாட்டில் உருவாகி வழங்கிய வேதாந்தமும் பொருளொருமையால் ஒத்த தத்தவமுடிவுகளாகக் கருதப்படும் நிலை திருமூலநாயனார் காலத்திற்கு முன்னரேயே தமிழகத்தில் உருவாகியதென்பது நன்கு புலனாகும். ஆயினும் வேதாந்தத்தினும் சித்தாந்தமே உயர்வுடையது என்னும் கொள்கை தமிழகத்தில் வேரூன்றியிருந்ததென்பது, வேதத்தின் அந்தமும் மிக்க சிந்தாந்தமும் என்ற தொடரில் மிக்க சித்தாந்தமும் எனத் திருமூலர் அடைபுணர்த்து ஒதுதலாலும் இத்திருமந்திரத் தொடரை யுளங்கொண்டு, வேதநெறி தழைத்தோங்கமிகு சைவத்துறை விளங்க எனச் சேக்கிழார் பெருமான் மிகு சைவத்துறை எனச் சிறப்பித்துக் கூறுதலாலும் உய்த்துணரப்படும். வேதம் ஆகமம் என இறைவன் அருளிய மெய்ந் நூல்கள் முறையே உலகியல் நூலாகிய பொதுநூல் எனவும் சைவம் ஆகிய சிறப்புநூல் எனவும் இருவகைப்பட உள்ளன. இறைவன் வாய்மொழிகளாகிய இவ்விருவகை நூல்களும் இருவேறு முடிபின ஆதலால் இவை தம்முள் வேறுபாடுடையன என்பர் சிலர். இறைவனருள் பெற்ற பெரியோர்க்கு இவ்விரு நூற்பொருள்களும் ஒருதன்மையனவே என அமைதி கூறும் நிலையில் திருமூலர் அருளியது, வேதமோ டாகமம் பொய்யாம் இறைவனூல் ஓதும் பொதுவுஞ் சிறப்பு மென்றுள்ளன நாதன் உரையவை நாடில் இரண்டந்தம் பேதமதென்பர் பெரியோர்க் கபேதமே (2397) என்னும் திருமந்திமாகும். இத்திருமந்திரப் பொருளை அடியொற்றி, உலகியல் வேதநூ லொழுக்க மென்பதும் நிலவு மெய்ந்நெறி சிவநெறிய தென்பதும் (பெரிய. சம்பந்தர்) எனவும், வேதப்பயனாஞ் சைவமும் போல் (பெரிய. சண்டீசர்) எனவும் சேக்கிழார் கூறும் வாய்மொழிகள் இங்கு உளங்கொளத் தக்கனவாகும். வேதங்களே பிரமாண நூல்கள் எனக்கொண்டு சிவாகமங்களைப் பிரமாணமாக ஏற்றுக் கொள்ளாதாரும் சிவாகமமே பிரமாணநூல்கள் எனக்கொண்டு வேதங்களைப் பிரமாணநூல்களாக ஏற்றுக் கொள்ளாதாரும் ஆகிய வேதவாதிகளும் ஆகமவாதிகளும் தம்முன் முரணின்றி வேதம் பொதுவும் ஆகமம் சிறப்பும் என உடன்பட்டு வைதிக சைவராய் வாழ்தற்குரிய ஒற்றுமை யுணர்வைத் தமிழகத்தில் நிலைநாட்டிய பெருமை திருமூல நாயனார்க்குரிய தனிச்சிறப்பாகும். சிவபெருமான் குருவடிவாய் எழுந்தருளிவந்து அருள் நோக்கமாகிய தீக்கை செய்து இப்பிறப்பிலேயே சீவன்முத்தராகச் செய்து ஆட்கொண்டு மும்மல அழுக்கைக் கழுவி ஞானக்கடலில் மூழ்கச்செய்து சிவானந்தம் மேலிடச் செய்து, மேல்வரும் பிறவியை யொழித்து முத்தி வடிவாகிய திருவடிக் கீழ்வைத்தருள்வன் என்பது சைவ சித்தாந்தம் கூறும் மெய்யுணர்வுக் கொள்கையாகும். இதனைச் சித்தாந்தத்தே சீவன் முத்தி சித்தித்தலால் சித்தாந்தத் தேநிற்போர் முத்தி சித்தித்தவர் (திருமந். 2394) எனவரும் திருமந்திரத்தில் திருமூலர் தெளிவாகக் குறித்துள்ளார். இதனை, சித்தாந்தத் தேசிவன்றன் றிருக்கடைக்கண் சேர்த்திச் செனனமொன்றி லேசீவன் முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவும் உலகரெல்லாம் மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங்குழியில் வீழ்ந்திடுவர் இதுவென்ன பிராந்தி (சித்தி. சுபக். 268) எனவரும் திருவிருத்தத்தில் அருணந்திசிவனார் எடுத்தாண்டுள்ளமை காணலாம். திருவடி வைப்பாம் ஞானதீக்கையாமாறு உணர்த்துவது, அடித்தலையறியுந்திறங் கூறல் என்ற பகுதியாகும். கால், தாள் என்னுஞ்சொற்கள் இறைவனது திருவருளாகிய திருவடியைக் குறிப்பன. தலை என்பது அத்திருவருளால் ஆன்மா பெறும் சிவஞானத்தைக் குறிப்பதாகும். இந்நுட்பம். காலுந் தலையும் அறியார் கலதிகள் காலந்தச் சத்தியரு ளென்பர் காரணம் பாலொன்று ஞானமே பண்பார் தலையுயிர் காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகும் (2425) எனவரும் திருமந்திரத்தால் விரித்துரைக்கப்பெற்றது. தாள்தந் தளிக்குந் தலைவனே சற்குரு தாள்தந்து தன்னையறியத் தரவல்லோன் தாள்தந்து தத்துவாதீதச் சதாசிவன் தாள்தந்த பாசந் தணிக்குவமன் சத்தே (2049) எனவரும் திருமந்திரமும் இங்கு நினைத்தற்குரியதாகும். தருவாயெனக்குன் திருவடிக்கீழொர் தலைமறைவே என்பது அப்பர் அருள்மொழியாகும். இறைவனது திருவருள் உள்நின்று உணர்த்தினால் தான் இறைவனை நினைந்து போற்றுதல் இயலும். அம்முதல்வனது திருவருட் குறிப்பின்றி உயிர்கள் இறைவனை நினைதல் இயலாது என அறிவுறுத்துவது, சிந்தையி னுள்ளே எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடிக் கீழது எந்தையும் என்னை அறியகிலா னாகில் எந்தையை யானும் அறியகி லேனே (2428) எனவரும் திருமந்திரமாகும். இதன்பொருளை அடியொற்றி யமைந்தன என்னை யேதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும் பிரானென் றறிந்திலேன் என்னைத் தன்னடி யானென் றறிதலும் தன்னை நானும் பிரானென் றறிந்தேனே எனவரும் திருக்குறுந்தொகையும், என்னை நினைந்தடிமை கொண்டென்னிடர் கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் எனவரும் நம்பியாண்டார் நம்பிகள் அனுபவமொழியும் ஆகும். மனத்தகத்தானாகிய இறைவனைத் தலைமேலானாக வைத்து வணங்குமாறு உணர்த்துவது, ஊறும் அருவி உயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவன்றிச் சூடான் புரிசடை யோனே (2335) எனவரும் திருமந்திரமாகும். உள்ளிருந்து ஊற்றெடுத்துப் பெருகும் உயர்ந்த மலையின் உச்சியில்மேல், நதியில்லாமலே வெள்ளம் பெருகும் அரிய தடாகம் ஒன்றுளது. அத்தடாகத்தினுள்ளே சேற்றின் தொடர்பின்றிப் பூக்கும் செழித்த கொடியிலுள்ள தாமரைப் பூவையன்றிக் கட்டமைந்த சடையினையுடைய எம்பெருமான் வேறுமலர்களை விரும்பியணிய மாட்டான் என்பது இதன் பொருளாகும். இப்பாடலில், ஊறும் அருவி உயர்வரையுச்சி என்றது, புருவநடுவாகிய ஆஞ்ஞைத் தானத்தினை. அதன்மேல் தளம் என்றது உச்சிக்குமேல் பன்னிருண்டங்குல நிலையில் உள்ளதெனப்படும் மீதானத்தினை. சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூ என்றது சுழுமுனை முடிவிலுள்ள ஆயிரவிதழ்த் தாமரையை. தலைமேலுள்ள தெனப்படும் மீதானமாகிய அரிய குளத்திலே மலர்ந்த தாமரப்பூவே இறைவன் விரும்பியணியும் நறும்பூவாகும் என்பதாம். மனத்தகத்தான் தலைமேலான் என்வும் அப்பூதி, குஞ்சிப்பூவாய் நின்ற சேவடியாய் எனவும் வரும் அப்பர் வருள்மொழிகள் இங்குஒப்புநோக்கி யுணரத்தக்கன. வினைநீக்கமே மெயய்ணர்வு பெறுதற்கும் வீடு பேற்றிற்கும் வழிசெய்யும் என அறிவுறுத்துவது, வினையா லசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவீட வீடென்னும் வேதமும் ஓரார் வினையாளர் மிக்க வினைவறி யாரே (2557) எனவரும் திருமந்திரமாகும். மக்களுக்கு வினைத்தொடர்பு உள்ளவரையிலும் அதனால் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றி நிகழும் விபரீதவுணர்வும் ஆகிய அசத்துக்கள் விளையும் என்பதனை உணரமாட்டார். மெய்யுணர்வுடைய ஆசிரியன் அருள்பெற்ற நிலையில் வினை ஒழிந்துபோம் என்பதனையும் உணர மாட்டார். வினையொழியவே பாசங்களினின்றும் விடுபடுதலாகிய வீடுபேறு தாம் என்னும் மெய்ந்நூற்பொருளையும் ஓதியுணர்ந்திலர். வினைத்தொடர் பிற்பட்டோர் வினை காரணமாகவுளவாம் மிக்க துன்ப விளைவினை அறிய மாட்டாராயினர் என்பது இதன் பொருளாகும். உடம்பின் கண்ணதாகிய நுகர்வினை (பிராரத்த) வாதனை உயிரைத் தாக்குவதாகவுள்ள வரையிலும் அதனால் வரும் விருப்பு வெறுப்புக்களும் அவைபற்றிக் காட்சிப்படும் மண்முதல் மாயைகளும் அவைபற்றி நிகழும் விபரீத வுணர்வும் ஆகிய அசத்துக்கள் நீங்கிய பின்னரும் மீண்டும் உயிரை வந்து கூடுவன ஆதலால் அதற்கொல்லாம் மூலமாகிய பிராரத்த வாசனை முற்றிலும் நீங்கினாலன்றி அவ் அசத்துப் பொருள்களைக் கீழ்ப்படுத்து மெய்யுணர்வு மேலோங்குதல் இயலாது. ஆகவே பிராரத்த வாசனை பற்றறக் கழிதற் பொருட்டு மெய்யுணர்வுடையாரை நாடிவழிபடுதல் வேண்டும். அவ்வழி பாட்டினல் வினைநீங்கி மெய்யுணர்வு மேம்பட்டு நிகழும். ஆதலால் மெய்யுணர்வுடைய சிவஞானிகளை அன்பினால் வழிபடுக என அறிவுறுத்துவது, வினையா லசத்து விளைதலான் ஞானம் வினைதீரி னன்றி விளையா - வினைதீர் ஞானத்தை நாடித்தொழவே அதுநிகழும் ஆனத்தால் அன்பிற் றொழு (79) எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். இதன் கண் ஞானம் என்றது சிவஞானிகளை. இவ்வெண்பா மேற்குறித்த திருமந்திரத்தினை அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். வேதத்துட் கூறப்படும் மாகவாக்கியப் பொருளைக் குருமுகமாகவுணர்ந்து பயன் பெறுமாறு கூறுவது, நீயது வானாயென நின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்கும் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகும் (2577) எனவரும் திருமந்திரமாகும். நீ அது ஆனாய் என்னும் பொருளில் ஆசிரியன் மாணவனை நோக்கி அறிவுறுத்திய தத்துவமசி என்னும் மகாவாக்கியம் மாணவனது உள்ளத்திற்பொருந்தி அதுநான் ஆனேன் என்னும் பொருளின் சிவோகம் பாவனையாக அமைய அதனால் தற்போதம் கெட, சீர்த்திமிக்க நந்தியாகிய குருவின் பெருங்கருணை ஆன்மாவைச் செம்பொருளாகிய சிவத்தோடு இரண்டறக் கலக்கும்படி ஒன்றுவிக்கும். (குருவின் திருவருளால்) சிவமாகிய அவ்வுயிரானது எல்லையற்ற பேரின்பநிலையை எய்தி இன்புறுவதாகும் என்பது இதன் பொருளாகும். நீ அது ஆனாய் என்பது தத்துவமசி மகா வாக்கியம். தத் - அது. துவம் - நீ. ஆசி - ஆனாய். மகாவாக்கியம் - பேருரை. தத்துவமசி என்பது ஆசிரியன் மாணவனை நோக்கி அறிவுறுத்தும் நிலையிலமைந்த மகாவாக்கியமாகும். இதன்பொருளை மாணவன் சிந்திக்கும் முறையில் அமைந்தது, அது நான் ஆனேன் என்பதாகும். சமைந்து அறுதலாவது, உள்ளத்திற் பொருந்தித் தான் என்னும் தற்போதம் கெடுதல், சேய சிவம் - செம்மையேயாய சிவபரம்பொருள், சிந்தைக்கும் மொழிக்கும் எட்டாத நிலையில் தூராதிதூரமாக அப்பாற்பட்டுள்ள சிவ பரம்பொருள் எனினும் அமையும். நணியானே சேயானே எனப் போற்றுவர் நாவுக்கரசர். சீர்நந்தி பேரருள் சேய சிவமாக்கும் என இயையும். ஆயது - அவ்வாறு சிவத்தோடு ஒன்றாகிய ஆன்மா. ஆனந்த ஆனந்தி - எல்லையற்ற பேரானந்தத்தை யுடையது. கண்டஇவை யல்லேன் நான்என் றகன்று காணாக் கழிபரமும் நானல்லேன் எனக்கருதிக் கசிந்த தொண்டினொடும் உளத்தவன்றான் நின்றகலப் பாலே சோகமெனப் பாவிக்கத் தோன்றுவன்வே றின்றி விண்டகலு மலங்களெலாம் கருடதியா னத்தால் விடமொழியும் அதுபோல விமலதையும் அடையும் பண்டைமறை களும்அதுநான் ஆனேன் என்று பாவிக்கச் சொல்லுவதிப் பாவகத்தைக் காணே (298) எனவரும் சிவஞான சித்தியார் இத்திருமந்திரத்தினை யடியொற்றி வேதத்திற் கூறப்பட்ட மகாவாக்கியத்தின் பொருளைச் சைவசித்தாந்த மரபுக்கேற்ப விளக்கியுள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணர்தற் குரியதாகும். மேற்குறித்த மகாவாக்கியமாகிய பெரும்பெரும் பெயர்ப் பொருளாகத் திகழ்வது சிவபரம் பொருளே யென்னும் உண்மையினைத் தெளிவுபடுத்தும் வாயிலாகச் சிவபரம்பொருளைத் தரிசிக்குமாறு உணர்த்துவது, அறிவறி யாமை யிரண்டு மகற்றிச் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறியாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே (2580) எனவரும் திருமந்திரமாகும். சுட்டறிவாகிய சகலாவத்தையும் எதனையும் அறியாமையாகிய கேவலாவத்தையும் ஆகிய இரண்டினையும் (சிவஞானத்தினால்) நீக்கிப் (பொருள்தோறும்) செறிவுடையதாய் அறிவேயுருவாய் எங்கும் நீக்கமறக் கலந்து நின்ற சிவபெருமானை ஆன்மபோதத்தால் வேறாக நின்றுணராது அவனருளோடு ஒன்றியிருந்து எம்முயிர்க் குயிராய பெருமான் என்று அன்பினாற் பேணிப் போற்றும் அருளாகிய இலக்கினை யுணராதவர்கள் சிவபரம் பொருளைக் கண்டு கொள்ளும் திறமறியாதார் என்பது மேற்குறித்த திருமந்திரத்தின் பொருளாகும். ஆசிரியனது அருள் நோக்கத்தால் இருவகைப் பாசமும் நீங்கிக் கேட்கும் முறையிற் கேட்டுச் சிந்திக்கும் முறையிற் சிந்தித்து அன்புசெய்து அருள்வழி அடங்கிநிற்கும் இயல்பினர்க்கு இறைவனியல்பு கேட்குங்காலத்துப் பொருட்டன்மை பற்றிப் பேதமாய்த் தோன்றியும் தெளிந்த பின்னர் இவ்விரண்டுமின்றி நுண்ணியனும்பரியனுமாயதோர் முறைமை பற்றி எவற்றினும் ஒற்றித்து நின்றே ஒன்றிலுந் தோய்விலனாய்ப் பேதாபேதமாய்த் தோன்றியும் நிற்கும் அம்முதல்வனது தன்மை இனிது விளங்கும் என இவ்வாறு தெளிதலின் இயல்பினை விளக்குவது, அறியாமை யறிவகற்றி யறிவி னுள்ளே அறிவுதனை அருளினான் அறியாதே யறிந்து குறியாதே குறித்தந்தக் கரணங்க ளோடும் கூடா வாடாதே குழைந்திருப்பை யாகில் பிறியாத சிவன்தானே பிரிந்து தோன்றிப் பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த் தோன்றி நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி நின்றென்றுந் தோன்றிடுவன் நிராதார னாயே (282) எனவரும் சிவஞான சித்தியாராகும். குழைந்திருத்தல் என்றது, ஆன்மசுத்தியை, மேற்கூறியவாறு கேவல சகலங்களிற் பொருந்துதலும் தற்போதம் முனைத்தலும் ஆகிய இரண்டு மின்றி அருளிலேயழுந்தி எங்கும் சிவமயமே காண்டல் சிவதரிசனமாம் என்னும் இவ்விருத்தம் மேற்குறித்த திருமந்திரத்தின் விளக்கமாதல் காணலாம். அறியவறி யாமை யகன்ற வாருயிர் அறிவறி யாத பேரருளைக் கூடீடின் பிறவறி யாதவப் பிரானுட் கொண்டுபோய்ப் பிறிவறி யாவகை வைக்கும் பின்னையே எனவரும் பதி பசு பாச விளக்கம் இங்கு நினைத்தற் குரியதாகும். உயிர்கள் வாழ்க்கை நுகர்ச்சிகளை நுகர்தற்குரிய வழிகளாக அமைந்தன மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறும் ஆம். இவற்றுள் முதல் மூன்றும் சொல்லுலகம் எனவும் பின் மூன்றும் பொருளுலகம் எனவும் கூறப்படும். இங்குச் சொல்லப்பட்ட சொல்லும் பொருளும் ஆகிய அறுவகை நெறிகளுள், மந்திரம் பதத்திலும், பதம் வன்னத்திலும், வன்னம் புவனத்திலும், புவனம் தத்துவத்திலும், தத்துவம் கலையிலும் அடங்க ஒடுக்கிக் கலையைத் திரோதான சத்தியிலும், திரோதான சத்தியைச் சிவத்திலும் அடங்குமாறு குரு வானவர் தீக்கையினால் மாணாக்கனைச் சோதித்துத் தூய்மை செய்தல் அத்துவா சோதனை எனப்படும். அத்துவா - வழி. பொல்லாத என்னழுக்கிற் புகுவான் என்னைப் புறம்புறமே சோதித்த புனிதன் (6) என்பது திருநாவுக்கரசர் அருளிச்செயல். ஆசிரியன் அத்துவாக்களைச் சோதித்துத் தீக்கை செய்ய அதனால் மாணவனிடத்தே சிவம் பிரகாசிக்குமாறு உணர்த்துவது, அறிவறி வென்றங் கரற்றும் உலகம் அறிவறி யாமையை யாரும் அறியார் அறிவறி யாமை கடந்தறி வானால் அறிவறி யாமை அழகிய வாறே (2637) எனவரும் திருமந்திரமாகும். சுட்டுணர்வாகிய குறையுடைய அறிவினையே அறிவு என்று சொல்லி அரற்றுவர் உலகத்தார். அறிவு இத்தகையதென்பதனையும் அறியாமை இத்தகைய தென்பதனையும் அவருள் யாரும் அறியமாட்டார். அறிவும் அறியாமையும் விரவிய தம் நிலையைக் கடந்து அறிவே யுருவாகிய சிவத்தின் வழி அடங்கி நிற்பாராயின் அவர்தம் சுட்டறிவினாலறிதலாகிய அறியாமைகெட நிற்கும் நிலை சிவப்பிரகாசமாகிய பேரழகினைத் தருவதாகும் என்பது மேற்குறித்த திருமந்திரத்தின் பொருள் ஆகும். இங்கு அறிவு என்றது, கருவிகளின் நீங்கிச் சிவஞானத்தினால் முற்றிலும் அறிவே விளங்கப் பெறும் சுத்தாவத்தையினை. அறியாமை என்றது, கருவிகளுடன் கூடாமையால் ஒன்றும் விளங்காமையாகிய கேவலா வத்தையினை. அறிவறியாமை என்றது, அறிவும் அறியாமையும் விரவிய சகலாவத்தையினை, அறிவாதல் சுத்த அறிவாகிய சிவஞானத்துடன் பொருந்துதல். அறிவு அறியாமை என்றது, சுட்டுணர்வாகிய உயிரறிவினால் அறியாமை, என்றது ஓங்குணர்வாகிய சிவஞானத்துள் ஒடுங்கித் தற்போதம் கெடுதல். ஒன்பதாந்தந்திரம் திருமந்திரத்தின் முடிவில் உள்ள ஒன்பதாந் தந்திரம், தசகாரியத்துள் ஒன்றாகிய சிவபோகம் என்னும் பேரின்ப நிலையை விளக்கும் முறையில் அமைந்துளது. இங்குச் சிவபோகம் என்றது, உயிர் சிவயோகத்தாற் சித்துடன் கூடிய நிலையில் தன்னை மறந்து சிவனது பேரருளில் திளைத்தின்புறுதலாகிய சிவசாயுச்சிய நிலையினை, இத்தந்திரத்துட் குருமடதரிசனம் என்பது முதலாகச் சர்வ வியாபி என்பதீறாக இருபத்திரண்டு உட்பிரிவுகள் உள்ளன. இவற்றுட் குருமட தரிசனம், ஞானகுரு தரிசனம், திருக்கூத்துத் தரிசனம், ஆகாசப்பேறு ஞானோதயம், சத்திய ஞானானந்தம், சொரூபஉதயம், சிவதரிசனம் என்னும் பகுதிகள் சிவயோகிகளின் அநுபவநிலையைக் குறிப்பன. பிரணவசமாதி, தூலசூக்கும அதிசூக்கும பஞ்சாக்கரங்கள், மோனசமாதி என்னும் பகுதிகள் எல்லாப்பொருள்களையுந் தன்னகத்தே அடக்கியுள்ளன திருவைந்தெழுத்தினை அவவத்தானத்தில் வைத்தத்தியானிக்கும் நிலையில் சிவபோகத்து அழுந்துந் திறத்தினைத்தெளிய விளக்குவன. இப்பகுதிகளிற் கூறப்படும் தத்துவநுட்பங்கள் உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய மெய்கண்ட நூல்களில் எடுத்தாளப்பெற்றன. திருக்கூத்துத் தரிசனம் என்ற பகுதி சைவத்தின் மிகச் சிறந்த நுண்பொருள்களை விளக்குவது. இதிற்கூறப்படும் சிவானந்தக்கூத்து என்பது, சிவஞானிகள் என்றும் தம் மெயயுணர்விற் கண்டுகளிக்கும் ஆனந்தக் கூத்தாகும். இதனை, அண்ணலார் தமக்களித்த மெய்ஞ்ஞானமே யான அம்பலமுந்தம் உண்ணிறைந்த ஞானத்தெழும் ஆனந்த ஒருபெருந்திருக் கூத்தும் (பெரிய. திருஞான. 150) எனக் குறிப்பிடுவர் சேக்கிழார் நாயனார். குறியொன்றுமில்லாத கூத்தன்றன் கூத்து (திருவா. அச்சோ) என்பர் திருவாதவூரடிகள். பக்குவமுடைய சிவஞானிகளுக்குச் சிறப்புமுறையில் அவர்தம் மெய்யுணர்வில் நின்று நிகழ்த்தப்பெறும் இத்திருக்கூத்தினையன்றி, உலகவுயிர்கள் யாவும் நலம் பெற்றுய்தல் வேண்டும் என்னும் பொதுநிலையில் இறைவனால் நிகழ்த்தப் பெறுந் திருக்கூத்து சுந்தரக்கூத்து பொற்பதிக்கூத்து பொற்றில்லைக் கூத்து, அற்புதக்கூத்து என்னுந் தலைப்புக்களில் இத்தந்திரத்தில் விரித்துரைக்கப்பெற்றுளது. இதன்கணுள்ள சூனிசம்பாஷணை என்ற பகுதி உணர்தற்குரிய நுண்பொருள்களைக் கேட்போர் எளிதின் மனங்கொள்ளும் படி உருவகவாய்பாட்டால் பிறிது மொழிதல் என்னும் அணிநலம் அமைய மறைத்துக்கூறும் முறையில் அமைந்துளது. இதன் இறுதியிலுள்ள வரையுறை மாட்சி, அனைந்தோர் தன்மை, தோந்திரம், சர்வவியாபி என்னுந் தலைப்பிலமைந்த திருமந்திரப் பாடல்கள், பசுகரணங்க ளெல்லாம் பதி கரணங்களாகப் பெற்றுச் சிவபோகத்தில் திளைத்து இன்புறும் அருளாளர்களாகிய சீவன்முத்தர்களது இயல் பினைப் புலப்படுத்துவன. நகார முதலாகும் நந்திதன் நாமமே (திருமந்திரம் 2699) எனத் தூலபஞ்சாக்கரத்தினைக் குறித்த திருமூலர், சிவனரு ளாய சிவன் திருநாமம் சிவனரு ளான் மாத்திரோத மலமாயை சிவன் முதலாகச் சிறந்து நீரோதப் பவமத கன்று பரசிவ னாமே (2711) எனச் சூக்கும் பஞ்சாக்கரத்தின் இயல்பினையும் அதனை விதிப்படி ஓதுவார் பெறும் பயனையும் உணர்த்தியுள்ளார். இறைவனது திருவருளாகிய ஞான நடனத்தை யுணர்த்தும் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தின் சிகாரம் இறைவனையும் வகாரம் அருளாகிய சத்தியினையும் யகரம் ஆன்மாவையும் நகாரம் (அதனைமறைத்த) திரோதான சத்தியையும் மகாரம் ஆணவ மலத்தினையும் குறிப்பன. நீவிர் (அவ்வைந்தெழுத்தின் பொருளை யுணர்ந்து) சிகார முதலாகச் சிறப்புடன் ஓதுவீராயின் நமது உயிர் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கிப் பரம்பொருளாகிய சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றாகும் என்பது இதன் பொருளாகும். கன்மம் திரோதான சத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்குதலின் வேறு கூறப்பட்வில்லை. மகாரம் ஆணவ மலத்தையே குறிப்பது. ஆயினும் அழுக்கு நீக்கும் உவர்மண் போன்று அம்மலத்தைக் கழுவுதற்கென இறைவனாற் கூட்டப்பட்டது மாயை என்பார் அதனையும் மலத்தோடு இணைந்து மலமாயை என ஒருங்கு குறித்தார் எனக் கருத வேண்டியுளது. இத்திருமந்திரத்தை அடியொற்றி இதன் விளக்கமாக அமைந்தது சிவனரு ளாவி திரோதமலம் ஐந்தும் அவனெழுத் தஞ்சின் அடைவாம் - இவனின்று நம்முதலா ஓதிலருள் நாடாது, நாடும்அருள் சிம்முதலா ஓது நீ சென்று (உண்மை. 41) எனவரும் உண்மை விளக்கமாகும். இதன்கண் கன்மமும் மாயையும் தனித்துச் சொல்லப்படவில்லை. மாயையும் கன்மமும் திரோதானசத்திக்குக் கருவியாய் அதனுள் அடங்குதலின், திரோதான சத்தியின் இலக்கணங் கூறவே மாயை கன்மங்களது இலக்கணமுங் கூறியவாறாதலறிக (சிவ. பாடியம் சூ5) என விளக்கந்தருவர் சிவஞான முனிவர். எனவே மேற்குறித்த திருமந்திரத்தின் இரண்டாமடி, சிவனருளான் மாத்திரோத மலமாம் என்றிருத்தல் வேண்டுமெத் தோன்றுகின்றது. திருவைந்தெழுத்து இறைவன் திருவருளின் வண்ணமாயது என்பார் சிவனருளாய சிவன் திருநாமம் என்றார் திருமூலதேவர். ஆதியார் அருளாய அஞ்செழுத்து, ஓதியேறினார் உய்யவுலகெலாம் (பெரிய. திருஞான) எனவரும் சேக்கிழார் வாய்மொழி இக்கருத்தினை வலியுறுத்துவதாகும். திருவாய்ப் பொலியச் சிவாநமவென்று நீறணிந்தேனே (4) எனவும், நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநமவெனப் பெற்றேன் (திருவாசகம்) எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் சூக்கும பஞ்சாக்கரத்தின் உருவினைப் புலப்படுத்தல் காண்க. அதிசூக்கும பஞ்சாக்கரத்தின் அமைப்பும் அதனை விதிப்படி எண்ணுதலால் வரும் பயனும் உணர்த்துவது, சிவாய நமவெனச் சித்தம் ஒடுக்கி அவாயம் அறவே அடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை அவாயங்கெட நிற்க ஆனந்த மாமே (2718) எனவரும் திருமந்திரமாகும். சிவாயநம என்னுஞ் சூக்கும பஞ்சாக்கரத்தின் துணையால் சித்தத்தை ஒருவழிப்பட நிறுத்தித் தற்போதத்தால் உளதாம் அச்சம் அறவே நீங்க (திரோதத்தையும் மலத்தையும் உணர்த்தும் நம என்பதனை விலக்கி) ஆன்மாவை இறைவனுக்கு மீளாவடிமையாக்கிச் சிவாய சிவசிவ என்ற இவ்வாறு திருவைந்தெழுத்தைச் சிந்தையில் எண்ணித் தற்போதத்தால் உண்டாகும் அச்சம் அகன்றோழியச் சிவபரம்பொருளை ஒன்றி நின்று உணர்தலால் சிவானந்தமான பேரின்பம் விளையும் என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். ஆன்மா ஆணவமலமாகிய குற்றத்துடன் கூடிய நகாரத்திற்கும் அருளாகிய வகாரத்திற்கும் இடையே நிற்கும் நிலையினையுணர்த்தும் பருமைநிலையில் அமையாது, யகரமாகிய உயிர் வகரமாகிய அருளினாலே அவ்வகரத்திற்கும் சிவமாகிய சிகரத்திற்கும் இடையே நிற்கும் தூய நிலையினை யுணர்த்துவது, சிவாயசிவ என்னும் அதிசூக்கும பஞ்சாக்கரமாகும் என்பது குருமகமாகத் தெளியத்தக்க தாகும். மிக நுண்ணிய இத்திருவைந்தெழுத்தினை, ஆகினவா நாப்பண் அடையா தருளினால் வாசியிடை நிற்கை வழக்கு (89) எனவரும் திருவருட்பயனில் உமாபதி சிவம் உணர்த்தி யுள்ளமை கூர்ந்துணர்தற்பாலதாகும். விண்ணினார் பணிந்தேத்த வியப்புறு மண்ணினார் மறவாது சிவாயவென் றெண்ணினார்க் கிடமா வெழில் வானகம் பண்ணினாரவர் பாலைத் துறையரே எனத் திருநாவுக்கரசு நாயனாரும், நண்பாற் சிவாயவெனா நாலூர் மயானத்தே இன்பாயிருந்தானை யேத்துவார்க் கின்பமே (2.46.10) எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் அருளிய திருப் பாடல்களில் அதிசூக்கும பஞ்சாக்கரம் உபதேசிக்கப் பெற்றுள்ளமை உணர்ந்து போற்றத் தகுவதாகும். உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால் அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரியாய் பொன்னம்பலத்ம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே (கோயில்மூத்த. 1) எனவரும் திருவாசகம் சத்தியும் சிவமும் ஒத்திருபாலுற, முத்தியாரும் முறைமையருளிய உண்மையை அறிவுறுத்துவது என்பர் சீகாழித் தாண்டவராயர். இறைவன் செய்தருளும் ஞானமயமான திருக்கூத்தின் இயல்பினை விரித்துரைக்கும் அற்புதக்கூத்து என்னும் தலைப்பில் அமைந்தது, நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்கவொளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமன் இருந்திடஞ் சிற்றம்பலமென்று தேர்ந்துகொண்டேனே (2770) எனவரும் திருமந்திரமாகும். திருமூலதேவநாயனார் அற்புதத் திருக்கூத்தினைத் தாம் கண்டு தரிசித்த திறத்தை இத் திருப்பாடலால் அருளிச் செய்கின்றார். நெற்றிக்கு நேரே இருபுருவங்களின் இடைவெளியாகிய ஆகாயத்திலே தியான நிலையில் அழுந்திக்கூர்ந்து நோக்குதலால் ஒளியுருவாய்த் திகழும் மந்திரப் பொருளாய் உயிர்கள் பற்றி நிற்றற்குரிய பற்றுக்கும் பற்றாய்ப் பரம் பொருளாகிய இறைவன் இருக்கும் இடம் நுண்ணிய ஞான வெளியாகிய திருச்சிற்றம்பலமே என்னும் மெய்ம்மையினை இறைவன் திருவருளால் தேர்ந்து அறிந்து கொண்டேன் என்பது இத்திருமந்திரத்தின் வாயிலாகத் திருமூலர் அறிவுறுத்தும் அருளனுபவவுண்மையாகும். நெற்றிக்குநேரே புருவத்து இடைவெளி என்றது, ஆறாதாரங்களுள் ஆஞ்ஞை எனப்படும் இடத்தினை. உற்றுப் பார்த்தல் - ஒருவழிப்பட இருந்து கூர்ந்து நோக்குதல். அங்ஙனம் தியானிக்கும் நிலையில் நாதாந்தத்தின் அஞ்செழுத்து மந்திர நிலையில் நின்று ஒளியுருவில் ஆடல் புரியும் இறைவனது திருக்கூத்துப் புலனாகும் என்பார், உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம் என்றார். உயிர்கள் பற்றிய எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடு இறைவனே என்பது அறிவுறுத்துவார் பற்றுக்குப் பற்றாய் என்றார். பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமானே எனப் போற்றுவர் நம்பியாரூரரும். இத்தகைய அற்புதக் கூத்து நிகழ்தற்குரிய நிலைக்களமாகத் திகழ்வது நுண்ணிய பரவெளியாகிய சிதாகாசமே என்பார், பரமன் இருந்திடம் சிற்றம் பலமென்று தேர்ந்துகொண்டேனே என்றார். ஆன்மாவின் இடமாக ஐந்தெழுத்தே திருமேனியாக நாதமுடிவிலே நற்றவத்தோர்காண இறைவன் நிகழ்த்தும் இவ்வற்புதத் திருக்கூத்தினைக் குருவின் அருளால் காணுதல் வேண்டும் என்பதனை, நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத் தஞ்செழுத்தால் உற்றுருவாய் நின்றாடல் உள்ளபடி - பெற்றிடநான் விண்ணார் பொழில்வெண்ணெய் மெய்கண்ட நாதனே தண்ணார் அருளாலே சாற்று (உண்மை. 30) என மாணவர் வினாவும் வினாவாகவும், எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன் சிவாயநம வென்னுந் திருவெழுத் தஞ்சாலே அவாயமற நின்றாடு வான் (உண்மை. 31) என ஆசிரியர் கூறும் விடையாகவும் திருவதிகை மனவாசகங் கடந்தார் அறிவுறுத்தியுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். கூத்தப்பெருமானது ஆடல் திருமேனி, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களின் அமைப்பினைத் தன்னகத்தே கொண்டது என்பது, அரன்துடி தோற்றம். அமைத்தல் திதியாம், அரன் அங்கி தன்னில் அறையில் சங்காரம் அரனுற் றணைப்பில் அமருந் திரோதாயி அரனடி யென்னும் அனுக்கிரகந் தானே (2799) எனவரும் திருமந்திரமாகும். கூத்தப்பெருமான் (வலக்கையில்) எந்திய உடுக்கை படைப்புத்தொழிலைக் குறிப்பதாகும். அமைத்த (வலக்) கை காத்தற்றொழிலை யுணர்த்தும். அம்முதல்வன் (இடக்கையில்) ஏந்தியதீயின் அமைப்பினைக் கூறின் அழித்தற் றொழிலாகும். இறைவன் ஊன்றிய திருவடியினால் (முயலகனை) அணைத்துள்ள நிலையில் மறைத்தற்றொழில் பொருந்தியுள்ளது. அவ்விறைவனது தூக்கியதிருவடி எக்காலத்தும் மன்னுயிர்கட்கு அருள் புரியுந் திறத்தைக் குறிப்பதாகும் என்பது இதன் பொருள். இத்திருமந்திரப் பொருளை விரித்துரைப்பது, தோற்றந் துடியதனில், தோயுந்திதி யமைப்பில், சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா ஊன்று மலர்ப்பதத்தே உற்றதிரோதம், முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு (35) எனவரும் உண்மை விளக்கமாகும். உடுக்கையேந்திய கையிலே படைத்தலும், அமைத்த திருக்கையிலே காத்தலும் தீயேந்திய கையிலே அழித்தலும், உறுதியாக ஊன்றிய திருவடியிலே மறைத்தலும், தூக்கிய திருவடியிலே அருளலாகிய வீடுபேறும் நிகழ இறைவன் ஆடல் புரிதலை நாடியுணர்வாயாக என்பது இதன்பொருள். இறைவன் வகுத்த நியதியின் வழியே அடியார்கள் இசைந்து நடக்குமாறு உணர்த்துவது ஊழ் என்னும் பகுதியாகும். மெய்யுணர்வுடைய பெரியோர்கள் தமது உடம்பைச் செதுக்கினாலும் வெட்டினாலும் செஞ் சந்தனத்தைப் பூசினாலும் தலையில் உளியினால் அடித்தாலும் ஞானமே திருமேனியாகவுடைய இறைவனது அருளின் வழி நிற்றலல்லது தம் உள்ளத்தே கவற்சியும் களிப்பும் இன்றித் தம் இயல்பாகிய பெருமையில் வழுவாது நிற்பர் என அறிவுறுத்துவது, செற்றிலென் சீவிலென் செஞ்சாந் தணியலென் மத்தகத்தேயுளி நாட்டி மறிக்கிலென் வித்தகன் நந்தி விதிவழியல்லது தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே (2847) எனவரும் திருமந்திரமாகும். சிவனைத் தரிசிக்குமாறு உணர்த்துவது சிவதரிசனம் என்ற பகுதியாகும். ஆன்மா எனவும் சிவன் எனவும் பிரித்து உணரக்கூடிய நிலையில் அவ்விருபொருளும் வேறாய் நிற்றல் இல்லை. ஆன்மாவின் உணர்வினுள்ளே உயிர்க்குயிராகிய சிவனும் வெளிப்பட்டுத் தோன்றுவான். (அம்முதல்வனைச் சிந்தித்தற் கருவியாகிய) சிந்தை தெளிவுபெறும்படி சிவஞானத்தால் தெளிந்துணர வல்லார்க்கு அவர்தம் சிந்தையினுள்ளே சிவபெருமான் வீற்றிருந்தருள்கின்றான் என அறிவுறுத்துவது, சிந்தைய தென்னச் சிவனெனன் வேறில்லை சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும் சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச் சிந்தையி னுள்ளே சிவனிருந் தானே (2853) எனவரும் திருமந்திரமாகும். இதன் முதலிரண்டடிகளிலும் சிந்தை என்றது ஆன்மாவை; பின் இரண்டடிகளிலும் சிந்தை என்றது அகக்கருவியாகிய சித்தத்தை. ஆன்மாவும் சிவமும் பொருட்டன் மையால் வேறுபொருளாயினும் உயிர்களோடு பிரிப்பின்றி அவையே தானேயாய்க் கலந்துள்ள கலப்புத் தன்மையால் ஒன்றாதலின் உயிரையும் சிவத்தையும் வேறு பிரித்தல் இயலாதென்பார், சிந்தையதென்னச் சிவனென்ன வேறில்லை என்றார். சிந்தையது என்புழி அது பகுதிப் பொருள் விகுதி. உயிர்களோடு இறைவன் கொண்டுள்ள அத்துவித நிலையாகிய இத்தொடர்பினை, அண்டமோ ரணுவாம் பெருமை கொண்டணுவோர் அண்டமாம் சிறுமை கொண்டடியேன் உண்டவூண் உனக்காம் வகையெனதுள்ளம் உள்கலுந்தெழு பரஞ்சோதி (9) எனவரும் கருவூர்த்தேவர் திருவிசைப்பா விளங்க உணர்த்துதல் அறிந்து மகிழத்தக்கதாகும். எங்ங் கிறைவனுளனென்பாய் மனனேயான் எங்ங் கெனத் திரிவாரின் (நன்னுல். சங்கர. உரைமேற்கோள்) என்பதும் இதனையே வலியுறுத்தும். சிவஞானத் தெளிவுடையோர் சிந்தையிலே இறைவன் வெளிப்பட்டுத் தோன்றுவான் என்னும் உண்மையினை, சிந்தையும் தெளிவுமாகித் தெளிவினுட் சிவமுமாகி எனவரும் அப்பர் தேவாரம் இனிது விளக்குகின்றது. சிவபெருமானது உண்மையியல்பினைக் காணுமாறு உணர்த்துவது, உணர்வும் அவனே உயிரும் அவனே புணரும் அவனே புலவி அவனே இணரும் அவன்தன்னை எண்ணலு மாகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே (2857) எனவரும் திருமந்திரமாகும். உயிருணர்வில் விளங்குபவனும் அவ்விறைவனே. அவ்வுணர் வினைத் தோற்றுவித்து உயிரில் நிலைத்திருப்பவனும் அவனே. எல்லாப் பொருள்களோடும் பிரிவின்றிப் புணர்ந்திருப்பவனும் அவனே. அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அவற்றுள் ஒன்றினுந்தோயாது பிரிந்திருப்பவனும் அவனே. பூங்கொத்தினைப் போன்று எப்பொருள்களும் தன்கண் பூத்து விளங்குதற்கு ஆதாரமாயுள்ள அம்முதல்வன் தன்னை உயிர்கள் சிந்தித்துணர்தற்கு இயலாதவாறு அப்பாற் பட்டுள்ளான். (ஆயினும்) கொத்தாய் மலர்ந்த பூக்களிடத்தே உள்ளிருந்து தோன்றும் நறுமணத்தினைப் போன்று எவ்வுயிர்க்கும் உள்ளிருந்து தோன்றும் சிறப்பினை யுடையனாய் மாறாது நிலைபெற்றுள்ளான் என்பது இதன் பொருளாகும். கந்தழியாவது ஒருபற்றும் அற்று அருவாய்த்தானே நிற்கும் தத்துவங்கடந்த பொருள். ........... இதனை உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதருநாற்றம்போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் (திருவாசகம்) என அதனை உணர்ந்தோர் கூறியவாற்றான் உணர்க(திருமுருகு...........e¢ . உரை) என்பர் நச்சினார்க்கினியர். இக்கருத்து துணரின் மலர்க்கந்தம் துன்னநின்றானே எனவரும் இத்திருமந்திரத்தில் வேரூன்றியுள்ளமை காணலாம். இணர், துணர் - பூங்கொத்து. கந்தம் - மணம். துன்னுதல் - பிரிவின்றிச் சேர்தல். பொருள்களை ஆராய்ந்து பார்க்கும் அறிவுடைய ஆன்மாவின் உறையுளாகிய உடம்பின்கண்ணே உயிர்க்கு நற்பயன் விளைக்கும் அறிகருவிகளாகிய ஐம்பொறிகள் உள்ளன. அவை ஐந்தும் தம்மை நல்வழியிற் செலுத்தும் ஆசிரியனைப் பெறாமையால் சீவபோதமாகிய வெறி கொண்டு புலன்களின் வழியே உழல்கின்றன. அவை தீதொரீஇ நன்றின்பாற் செலுத்தவல்ல ஆசிரியனைப் பெற்று அவனது உபதேசத்தின்வழி தற்போதம் அடங்கப்பெறின், அவை ஐந்தும் சிவஞானமாகிய பாலினை உயிர்க்கு நிரம்பத் தருவன என்னும் அரியவுண்மையினை விளக்கும் விடுகதை போன்று அமைந்தது, பார்ப்பான் அகத்திலே பாற்பாசு ஐந்துண்டு மேய்ப்பாரை யின்றிவெறித்தத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற் பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே (2883) எனவரும் திருமந்திரமாகும். இதன்கண் பார்ப்பான் என்றது ஆன்மா. பசு - ஐம்பொறிகள். மேய்ப்பார் - குரு. வெறி - உலகப் பொருள்களிற் செல்லும் மருட்சி. பால் - நல்லுணர்வு. வரையுறைமாட்சி என்பது தியான எல்லையாகிய மலையின் உச்சியில் உறைவோராகிய சிவஞானிகளின் மாண்பினையுணர்ததும் பகுதியாகும். அப்பகுதியிலுள்ளது, உரையற்ற தொன்றையுரை செயும் ஊமர்காண் கரையற்ற தொன்றைக் கரைகாண லாகுமோ திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப் புரையற் றிருந்தான் புரிசடை யோனே (2955) எனவரும் திருமந்திரமாகும். நால்வகை வாக்குக்களையும் கடந்து நின்ற ஒப்பற்ற பரம்பொருளை ஏதுக்களாலும் எடுத்துக்காட்டுக்களாலும் சொல்ல முற்படும் ஊமைகளே, கரைகாணாக் கடலாகவுள்ள அதனை எல்லை கண்டு கூற இயலுமோ? திரையடங்கிய நீர்நிலைபோன்று சித்தந் தெளிந்துள்ள சிவஞானிகளுக்குத் கட்டமைந்த சடையினனாகிய சிவபெருமான் களங்கமற வெளிப்பட்டிருந்தான் என்பது இதன் பொருளாகும். சொல்லும் இடமன்று சொல்லப் புகுமிடம் எல்லை சிவனுக் கென் றுந் தீபற என்றால் நாம் என்சொல்கோம் உந்தீபற (29) எனவரும் உய்யவந்த தேவநாயனார் வாய்மொழி இங்கு நினைத்தற்குரியதாகும். அயரா அன்பினால் அரன்கழல் அணைந்தோராகிய சீவன்முத்தர்களது இயல்பினை விளக்குவது, ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசங் கழிந்தேன் கடவுளும் நானுமொன் றானேன் அழிந்தாங் கினிவரும் ஆக்கமும் வேண்டேன் செழுஞ் சார்புடைய சிவனைக் கண்டேனே (2958) எனவரும் திருமந்திரமாகும். எப்பொருட்குஞ் செழுமைநல்கும் சார்பாந் தன்மையையுடைய சிவபெருமானை அவனருளாற் கண்டுணரப் பெற்றேன். ஆதலால் பிறவிப் பிணியினை விட்டொழிந்தேன். உலகவுறவாகிய பாசப்பிணிப்பினை விட்டு விலகினேன் (எனது பசுபோதங் கழன்றமையால்) கடவுளும் நானும் எனப் பிரித்துணரவொண்ணாத படி இறைவனோடு இரண்டறக் கலந்து ஒன்றானேன். ஆதலால் அங்கு அழியுந்தன்மையவாய் வரும் எத்தகையே செல்வங்களையுமே இனி வேண்டும் குறையுடையேனல்லேன் என்பது இதன்பொருள். செழுஞ்சார்புடைய சிவனைக் கண்டேன் (ஆதலாலே) பிறவி ஒழிந்தேன், உறவு என்னும் பாசம் கழிந்தேன். கடவுளும் நானும் ஒன்றானேன், ஆங்கு அழிந்து வரும் ஆக்கமும் இனி வேண்டேன் என இயையும், எல்லாப் பொருட்கும் பற்றுக் கோடாகிய இறைவனது சார்பு உலகத்துப் பிற சார்பு போலன்றி எக்காலத்தும் ஊக்கமும் ஆக்கமும் நல்கும் செழுமை வாய்ந்தது என்பார் செழுஞ் சார்புடைய சிவன் என்றார். நான் என்றது உடம்புளிருக்கும் பொழுதே அரன்கழலணையும் பேறுபெற்ற ஆன்மாவை. கடவுளும் ஆன்மாவும் ஒன்றாதலாவது, உப்பானது தனது கடினத்தன்மை நீங்கி நீரோடு ஒன்றாய்க் கலத்தல் போல உயிர் தனது சகசமலமாகிய ஆணவமலங் கெட்டொழியக் கடவுளோடு இரண்டறக் கலந்து ஒன்றாதால். ஆங்கு என்றது, சீவன் முத்தர்க்கு அயலதாய் வேறுபட்ட உலகினை, அயரா அன்பின் அரன்கழலணைந்த திருமூல தேவநாயனார் தமது அருளனுபவத்தில் வைத்து அணைந்தோர் தன்மையினை விளக்குவதாக அமைந்தது இத்திருமந்திரப் பாடலாகும். திருமூலநாயனார் அருளிச் செய்த இத்திருமந்திர மாலையில் தெய்வப்புலவர் அருளிய திருக்குறளிலுள்ள கருத்துக்களும் சொற்றொடர்களும் பொன்னே போற் பொதிந்து வைக்கப் பெற்றுள்ளமை பன்னிரு திருமுறை வரலாறு இரண்டாம் பகுதியில் திருமந்திரமும் திருக்குறளும் என்ற தலைப்பில் எடுத்துக்காட்டப் பெற்றன.1 பன்னிரு திருமுறைகளில் ஒன்றாகிய திருமந்திரத் தொடர்களும் கருத்துக்களும் ஏனைய பதினொரு திருமுறைகளிலும் இடம் பெற்றுள்ளமை திருமந்திரமும் ஏனைய திருமுறைகளும் என்ற தலைப்பில் எடுத்துக் காட்டப்பெற்றது.2 திருமந்திரமும் மெய்கண்டநூல்களும் திருமூல தேவநாயனார் திருவாய் மலர்ந்தருளிய திருமந்திரமாலை என்னும் இப்பனுவல், தமிழகத்தில் தோன்றி வளர்ந்த சைவ சித்தாந்தத் தத்துவவுண்மைகளை விரித்து விளக்கும் சாத்திரநூலாகவும் சைவநெறியில் ஒழுகிச் சிவபரம்பொருளை மனமொழி மெய்களால் வாழ்த்தி வழிபடுதற்குச் சாதனமாகிய தோத்திர நூலாகவும் விளங்கும்தொன்மையும் சிறப்பும் வாய்ந்ததாகும். சைவ சித்தாந்தத் தத்துவவுண்மைகளை விளக்கும் நிலையிற் பிற்காலத்துத் தோன்றிய திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் சிவஞானபோதம் சிவஞான சித்தியார் முதலிய மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கிற்கும் முதல் நூலாகத் திகழ்வது தமிழாகமமாகிய இத்திருமந்திரமேயாகும். என்றும் மாறா வியல்பினதாகிய மெய்ப்பொருளை மாறுந்தன்மை யவாகிய ஏனைய உலகப் பொருள்களினின்றும் பிரித்துக் காணும் மெய்யுணர்வினை வழங்கவல்லன் மேற்குறித்த சைவ சித்தாந்த சாத்திரங்களாதலின் இவை மெய்கண்டநூல்கள் எனச் சிறப்பித்துப் போற்றப் பெறுவனவாயின, சிவஞானம் பெற்ற நல்லுயிர், தன் உடம்பையும் கருவி கரணங்களையும் ஏனைய தத்துவங்களையும் தன்னின் வேறாகப் பகுத்துணர்ந்து என்றும் மாறாதுள்ள சிவ பரம்பொருளே மெய்ப்பொருள் எனக் கண்டு தெளியுமாயின் அவ்வுயிர் மெய்கண்டது எனச் சிறப்பித்துப் பாராட்டப் பெறுவதாகும். இத்நுட்பம், மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத் தவ்வாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வா யுயிரும் இறையாட்ட ஆடலாற் கைவா யிலாநிறை யெங்குமெய் கண்டதே (2586) எனவரும் திருமந்திரத்தால் உய்த்துணரப்படும். இத்திருமந்திரப்பொருளை அடியொற்றியமைந்தது, பன்னிறங் காட்டும் படிகம்போல்இந்திரியம் தன்னிறமே காட்டுந் தகைநினைந்து - பன்னிறத்துப் பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய்கண்டான் மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு (சிவஞானபோதம் சூ. 8) எனவரும் சிவஞான போதவெண்பாவாகும். உயிர்தான் முன்னே செய்து கொள்ளப்பட்ட புண்ணியத்தின் மிகுதியால் தனக்கு உயிர்க்குயிராய் இதுகாறும் உள்நின்றுணர்த்திய பரம்பொருளே இப்பொழுது குருவடிவமுங் கொண்டு எழுந்தருளிவந்து சிவதீக்கை செய்து மன்னவ குமாரனாகிய நீ ஐம்பொறிகளாகிய வேடர் சூழலில் அகப்பட்டு வளர்ந்து நின்பெருந்தகைமையறியாது மயங்கி இடர்ப்பட்டாய், நின் பெருந்தகைமையாவது இவ்வியல்பினது என்று அறிவுறுப்ப அறிந்த அளவிலேயே அவ்வேடர் சூழலை விட்டு நீங்கி வேறுபாடின்றி ஒன்றாந் தன்மையின் நிலைபெற்று அம்முதல்வன் திருவடிகளை அணையும் என்று இறைவன் குருவாய் வந்தருளும் முறைமையினைக் கூறுவது, ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட் டன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே எனவரும் சிவஞானபோத எட்டாஞ் சூத்திரமாகும். உணர்த்த உணரும் இயல்பினையுடைய உயிர்கள் ஐம்பொறிகளால் மயக்கமுற்றுத் தமது இயல்பினை அறியமாட்டா. படிகத்தின் வைத்த பல்வேறு வகைப்பட்ட நிறங்கள் அப்படிகவொளியைக் கீழ்ப்படுத்துத் தத்தம் இயல்பினையே விளக்கி நிற்குமாறு போல, அவ்வைம் பொறிகள் தாம் ஆன்ம சொரூபத்தைக் கீழ்ப்படுத்துத் தம்மாற் காட்டப்பட்ட விடயங்களின் அளவே அவ்வான்மாவுக்குக் காட்டி நிற்பனவாகலான் என ஏதுக்காட்டி நிறுவுவது, இவ்வெட்டாஞ்சூத்திரத்தின் மூன்றாம் அதிகரணமாகும். இந்திரியங்க ள் அவ்வாறு தம்மாற் காட்டப்பட்ட விடயங்களையே காட்டி நிற்பனவாயின் இவ்விந்திரியங்கள் உள்ள போது இறைவன் குருவாய் வந்துணர்த்தினும் தன்னை யுணர்தல் இயலாதுபோலும் என ஐயுறுவாரை நோக்கித் தன்னையுணர்தற்கு உபாயம் கூறுவதாக அமைந்தது, பன்னிறங் காட்டும் படிகம் போல் எனவரும் இவ்வுதாரண வெண்பாவாகும். தன்னாற் சாரப்பட்ட பன்னிறங்களின் இயல்பே தன்பாற் காட்டி நிற்கும் பொதுவியல்புடைய படிகக்கல் போன்று, தன்னாற் சாரப்பட்ட இந்திரியங்களின் இயல்பையே சார்ந்ததன் வண்ணமாய்த் தன்மாட்டு விளக்கி நிற்கும் தனது பொதுவியல்பை முன்னர்ச் சிந்தித்தறிந்து கொண்டு பின்பு அந்நிறங்கள் படிகத்துக்கு வேறு என்று அறியுமாறுபோலப் பலவகையியல்புடைய பொதுவியல்பைச் செய்யும் ஐம்பொறிகளைத் தன்னின் வேறெனத் தெளிந்து அவற்றானாய பொதுவியல்பு பொய்யாயொழியுமாறு தனது சிறப்பியல்பை யுணர்ந்தானாயின் அவ் அசத்தாகிய பொறிகளுக்கு வேறாகிய சிவசத்தினது இயல்பு தன்னிடத்து விளங்கச் செய்யுமாகலின் அச்சிவசத்துக்கு அடிமையாவன் என்பது இவ்வுதாரணவெண்பாவின் பொருளாகும். இவ்வெண்பாவிலுள்ள மெய்கண்டான் என்ற தொடர் மேற்குறித்த திருமந்திரத்திலுள்ள எங்கும் மெய்கண்டதே என்ற தொடர்ப்பொருளைத் தன்னகத்துக் கொண்டுள்ளமை காணலாம். தேவர் முதலிய யாவராலும் அறிய வொண்ணாத சிவபரம்பொருள் மன்னுயிர்கட்கு அருள்புரிதல் வேண்டி ஆசிரியத் திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து உயிர்களைப் பாசப்பிணிப்பினை அகற்றி மெய்யுணர்வு அளித்தருளும் என்பது சிவநெறிச் செல்வர்களது துணிபாகும். இக்கருத்து, குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே (1581) எனவரும் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளமை காணலாம் இவ்வுண்மையினை, அகளமா யாரும் அறிவரிதப் பொருள் சகளமாய் வந்ததென் றுந்தீபற தானாகத் தந்ததென் றுந்தீபற (திருவுந்தியார் 1) எனவரும் பாடலில் திருவியலூர் உய்ய வந்த தேவநாயனார் விளக்கியுள்ளார். தோற்றமில் காலமாகத் தூய்மைப் பொருளாய் எத்தகையோராலும் இன்னதன்மைத்தென அறியவொண்ணாததாய் உள்ள சிவமாகிய முழுமுதற் பொருள் நம் பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளியது என்று உந்தி பறப்பாயாக. அறிதற்கரிய அம்முதற்பொருள் தானே வலியவந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்று உந்தி பறப்பாயாக என்பது இதன் பொருள். இதனை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, அகளமயமாய் நின்ற அம்பலத்தெங்கூத்தன் சகளமயம் போலுலகில் தங்கி - நிகளமாம் ஆணவ மூல மலமகல ஆண்டான்காண் மாணவ என்னுடனாய் வந்து (4) எனவரும் திருக்களிற்றுப்படியார் பாடலாகும். அகளம் - அருவம், என்றது, உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கும் பேரறிவினை.சகளம் - உருவம், என்றது, குருவாகி வந்து அறிவிக்கின்ற திருமேனியை, திருவுந்தியார் திருக்களிற்றுப் படியார் ஆகிய இவ்விரு நூல்களும் திருமூல நாயனார் அருளிய திருமந்திரத்திற் கூறப்படும் சிவாநுபவ வுண்மைகளை விரித்துரைக்கும் அநுபூதி நூல்களாகும். திருவருள் ஞானம் பெற்ற நல்லுயிர்கள் தன்முனைப்பு அற்றுச் சிவபரம்பொருளோடு பிரிவற ஒன்றிநிற்கும் பெற்றியினை விளக்குவது, வித்தினிலன்றி முளையில்லை யம்முனை வித்தினிலன்றி வெளிப்படு மாறில்லை வித்தும் முளையும் உடனன்றி வேறல்ல அத்தன்மைத்தாகும் அரநெறி காணுமே (1932, 3192) எனவரும் திருமந்திரமாகும். விதையினுள்ளே முளையென்று ஒருமுதல் வெளிப்படாது ஒன்றாய் அடங்கியிருத்தல் போன்று சிவஞானம் பெற்ற ஆன்மாக்களும் தாம் என்றதொரு முதன்மைகெடச் சிவபரம் பொருளிடத்திலே பிரிவற அடங்கியிருப்பார்கள் என்பது இதன் பொருளாகும். இதன் பொருளை விளக்கும் நிலையிலமைந்தது. வித்துமதன் அங்குரமும் போன்றிருக்கும் மெய்ஞ்ஞானம் வித்துமதன் அங்குரமும் மெய்யுணரில் - வித்ததனிற் காணாமை யாலதனைக் கைவிடுவர் கண்டவர்கள் பேணாமை யாலற்றார் பேறு எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். மெய்ப்பொருளாகிய இறைவனது திருவருள் ஞானம் விதையும் அதனிடத்தே முளைத்தெழுந்த முளையும் போன்று முறையே காரணமாகிய சிவம் மறைந்தும் காரியமாகிய ஞானம் வெளிப்பட்டும் இருக்கும். காரணமாகிய விதையினையும் அதன் காரியமாகிய முளையினையும் மெய்ம்மையாக உணருமிடத்து அம்முளையிடத்தே விதை வெளிப்படத் தோன்றாமையால் அவ்விதையின் உண்மையினையுணராது அதனை நெகிழவிடுவர் ஒருசாரார். வெளிப்பட விரிந்த முளையுண்மையைக் கண்டவர்களும் திருவருளாகிய அதனைப் பேணிப் போற்றாமையால் அதனாற் பெறுதற்குரிய சிவப்பேற்றை இழந்தவர்களாவர் என்பது இதன் பொருளாகும். வித்து - விதை. அங்குரம் - முளை. சைவ சித்தாந்தம் கூறும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் இயல்பினை விளக்குவது, பதி பசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற் பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணுகாப் பசுபாசம் பதியணுகிற் பசுபாசம் நிலாவே (115) எனவரும் திருமந்திரமாகும். இறைவன், உயிர், தளை எனச் சொல்லப்படும் முப்பொருள்களுள் பதியாகிய இறையைப் போலவே உயிரும் தளையும் தோற்றமில் காலமாக உள்ள பொருள்களே. எனினும் பதியாகிய இறையைப் பசுவும் பாசமும் சென்று பற்றவல்லன அல்ல. பதியாகிய இறைவன் (உயிர்கள்மேல் வைத்த கருணையால்) அணுகுவானாயின் உயிரினிடத்துப் பசுத்துவமும் ஏனைப் பாசமும் நில்லாது நீங்குவனவாம் என்பது இதன்பொருள். பதி - இறைவன். பசு - பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள உயிர். பாசம் என்பன உயிரின் அறிவை அனாதியே மறைத்துள்ள ஆணவம் கன்மம் மாயை என்னும் மூவகைப் பிணிப்புக்கள். அனாதி - இன்னகாலத்தில் தோன்றின எனத் தோற்றம் சொல்ல முடியாத காலம். பசு அறிவாகிய குறையுணர்வினாலும் பாச அறிவினாலும் தொடர வொண்ணாது அப்பாற்பட்டு விளக்குவதே பரம்பொருள் என்பது அறிவுறுத்துவார், பசு பாசம் பதியினைச் சென்று அணுகா என்றார். இத்தொடரின் பொருளையே சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரத்து ஊனக்கண் பாசம் உணராப் பதியை என்ற தொடரால் மெய்கண்டார் எடுத்தாண்டுள்ளார். இத்திருமந்திரப் பொருளைச் சிந்தித்து உணரும் முறையில் திருவதிகை மனவாசகம் கடந்தார் தம் ஆசிரியர் மெய்கண்ட தேவரை நோக்கி வினவும் முறையில் அமைந்தது, வாக்கு மனமிறந்த வான்கருணை யாளனுருத் தாக்கறவே நிற்குந் தனிமுதல்வா - நீக்காப் பதியினைப் போல் நித்தம் பசுபாசம் என்றாய் கதியிடத்து மூன்றினையுங் காட்டு (உண்மை. 49) எனவரும் உண்மை விளக்கமாகும். மனவாக்குக்களுக்கு எட்டாத அருளே வடிவாய் உலகத்திலே தோய்வற்று நிற்கும் ஒப்பற்ற தலைவனே, விட்டு நீங்காமல் இருக்கும் பதிப்பொருளைப்போல் பசுவும் பாசமும் நித்தியப் பொருள்களே என்று அருளிச் செய்தாய். முத்தியிலும் அம் மூன்று பொருள்களும் அழியாமல் நிற்கிற முறைமையை அடியேனுக்குக் காட்டியருள்வாயாக என்பது இதன்பொருளாகும். இதன்கண் வாக்கு மனமிறந்த வான்கருணையாளன், உருத்தாக்கறவே நிற்குந் தனிமுதல்வா என்பது, பசு பாசம் பதியினைச் சென்று அணுகா என்ற இத் திருமந்திரத் தொடரையும், பதியினைப்போல் நித்தம் பசுபாசம் என்றாய் என்பது பதிபசுபாசம் எனப் பகர் மூன்றிற் பதியினைப்போல் பசுபாசம் அனாதி என்ற தொடரையும் அடியொற்றியமைந்த விளக்கமாகும். ஆன்மா தூலவுடம்பினை விட்டு நீங்கிச் செல்லுதற்குப் பாம்பு தன் சட்டையைக் கழற்றிப் புதியதொரு தோல் போர்த்துச் செல்லுதலும், புருடன் நனவுடம்பின் நீங்கிக் கனவுடம்பிற் செல்லுதலும், யோகிகள் தம் உடம்பு நீங்கிக் கனவுடம்பிற் செல்லுதலும், யோகிகள் தம் உடம்பு நீங்கி வேறோருடம்பிற் செல்லுதலும் உவமையாகும். இவ்வுண்மைகள், நாகமுடலுரிபோலும் நல்லண்டச மாகநனாவிற் கனாமறந்தல்லது போகலுமாகும் அரனருளாலேசென் றேகுமிடஞ் சென்றிருபயனுண்ணுமே (2132) உண்டு நரக சுவர்க்கத்தி லுள்ளன கண்டு விடுஞ்சூக்கம் காரணமாச்செலப் பண்டு தொடரப் பரகாய யோகிபோற் பிண்ட மெடுக்கும் பிறப்பிறப்பெய்தியே (2133) எனவரும் திருமந்திரப்பாடல்களில் இடம்பெற்றுள்ளமை காணலாம். குடம் உடைந்தவிடத்துக் குடஆகாயம் ஆகாயத்தொடு கூடுதல் என்றது, உயிர் சூக்குமவுடம்பை விட்டுச் செல்லுதற்கு உவமையாகும். இவ்வுவமைகளின் வேறு பாட்டினைப் புலப்படுத்தி உயிர் தூலம் சூக்குமம் ஆகிய இருவேறுடம்புகளினின்றும் பிரிந்து செல்லுதலை விளக்குவதாக அமைந்தது, அரவுதன் தோலுரிவும் அக்கனவும் வேறு பரகாயம் போய்வருமப் பண்பும் - பரவிற் குடாகாய ஆகாயக் கூத்தாட்டா மென்ப தடாதுள்ளம் போமாறது (சிவஞானபோதம், வெண்பா 14) எனவரும் சிவஞானபோத வெண்பாவாகும். உயிர் உடம்பை விட்டுப் போதற்கு இவ்விரு வேறு உவமைகள் ஆகமங்களிற் கூறப்படினும் அரவுதன் தோலுரிவு முதலியான தூலவுடம்பினை விட்டுப்போதற்கும் குடாகாயவுவமை சூக்கும்வுடம்பை விட்டுப் போதற்கும் உவமையாக எடுத்தாளப் பெற்றன என இவற்றின் வேறுபாட்டினைத் தெளித்துணர்க என்பதாம். மாயையின் காரியமாய் உயிர்நிலைபெறுதற்கு இடனாகிய உடலினை மாயாபுரி (திருமந்திரம் 2528) என்ற தொடரால் குறித்தார் திருமூலநாயனார். இத்திருமந்திரத் தொடரை யுளங்கொண்ட மெய்கண்டார் சிவஞானபோதம் மூன்றாஞ் சூத்திரத்தில் மாயாவியந்திரதணு எனக் குறித்துள்ளார். உடம்பையே தான் என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்த, நீ, குருவின் உபதேசத்தால் உயிராகிய நின்னை உடம்பின் வேறாக அறிவுடைப் பொருள் என்று தெரிந்து கொண்டாய் என மாணவனுக்கு அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, உன்னை யறியாதுடலை முன்நானென்றாய் உன்னை யறிந்து துரியத் துறநின்றாய் (2279) எனவரும் திருமந்திரமாகும். இத்திருமந்திரத்தொடர்ப் பொருளை விளக்கும் முறையில் அமைந்தது, எனதென்ற மாட்டின் எனதலா தென்னா துனதலா துன்கைகால் யாக்கை - எனதென்றும் என்னறிவ தென்றும் உரைத்துநீ நிற்றிகாண் என்னிலவை வேறாம் உணர் (சிவஞானபோதம் சூ. 3 அதி.2) எனவரும் வெண்பாவாகும். அறிவு விளக்கம் பெறாத காலத்துப் பதி (ஊர்) மனைவி முதலிய புறப்பொருள்களைத் தனித்தனியே எனது எனது எனத் தற்கிழமைப் பொருள்களாகக் கூறிக்கொண்டு நின்றாற்போல, உனது அல்லாத உன்கை கால் உடம்புகளைத் தனித்தனியே எனது என்றும் அங்ஙனம் அறிந்த பாச அறிவினை என் அறிவு அது என்றும் தற்கிழமைப் பொருளாகக் கூறிக்கொண்டு நின்றாற்போல, நீ ஆன்மாவாகிய ஒரு பொருளாக வேறு நிற்கின்றாய். ஆராய்ந்து பார்ப்பாயாயின் ஆக கை கால் முதலியன உயிராகிய உனக்கு வேறாவன என்று உணர்வாயாக என்பது இதன் பொருளாகும். எனது உடல் என்றலின் ஆன்மாவுளது என்னும் சிவஞானபோதம் மூன்றாஞ்சூத்திரம் இரண்டாம் அதிகரணத்திற்குரிய இவ்வெண்பா மேற்குறித்த திருமந்திரத்தொடர்ப் பொருளை இனிது விளக்கி நிற்றல் காணலாம். பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் அறியப்படுவதாய் ஒருநிலையில் நில்லாது அழிந்து மாறுந்தன்மையதாகிய பிரபஞ்சத்தை அசத்து எனவும், அழிவின்றி என்றும் உள்ளதாய்ப் பதிஞானம் ஒன்றினாலேயே அறியப்படும் முழுமுதற் கடவுளைச் சத்து எனவும் சிவசத்து எனவும், சத்தினைச் சார்ந்த நிலையிற் சத்தாகவும் அசத்தினைச் சார்ந்த நிலையில் அசத்தாகவும் நின்று சத்தும் அசத்துமாகிய அவ்விரு திறப்பொருள்களையும் அறியுந் தன்மைத்தாகிய ஆன்மாவைச் சதசத்து எனவும், அறிவேயுருவாகிய பரம்பொருளைச் சித்து எனவும் அறிவிலதாகிய பாசத்தை அசித்து எனவும் குறியிட்டு வழங்குதல் சைவசித்தாந்த நூன் மரபாகும். சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு சித்தும் அசித்துஞ் சேர்வுறாமே நீத்த சுத்தம் அசத்தமும் தோய்வுறாமே நின்று நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே (1420) சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கூடிச் சித்தும் அசித்தும் சிவசத்ததாய் நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்காத் துரியத்துச் சுத்தரா மூன்றுடன் சொல்லற்ற வர்களே (2328) எனவரும் திருமந்திரப் பாடல்களில் மேற்குறித்த சைவ சித்தாந்தக் குறியீடுகளும் அவற்றின் விளக்கமும் இடம் பெற்றிருத்தல் காணலாம். மேற்குறித்த திருமூலர் திருமந்திரப் பாடல்களை யுளங்கொண்ட மெய்கண்டார், சத்தாவது இது, அசத்தாவது இது எனச் சத்தினையும் அசத்தினையும் வரையறுத்து உணர்த்தும் முறையிற் கூறியது, உணருரு அசத்தெனின் உணராதின்மையின் உருதிறனல்லது சிவசத்தாமென இரண்டு வகையின் இசைக்கும் மன்னுலகே (சிவ.சூ. 6) எனவரும் சிவஞானபோதம் ஆறாஞ்சூத்திரமாகும். உயிர்க் குயிராகிய பரம்பொருள் அளவைகளால் அறியப்படும் இயல்புடையதென்றால், அவ்வாறு அறியப்படும் உலகப்பொருள் போல அழிபொருளாய் முடியும் என்பார், உணர்உரு எனின் அசத்து என்றார். அம்முதற்பொருள் எவ்வாற்றானும் அறியப்படாத பொருளென்றால் அது முயற்கோடு போல இல்பொருளாய் விடும் என்பார், உணராது எனின் இன்மையின் என்றார். ஆதலால் உயிரறிவாற் சுட்டியறியப்படுதலும் ஒருவாற்றானும் அறியப்படாமையுமாகிய இவ்விரு பகுதியுமன்றிச் சுட்டுணர்வால் அறியப்படாமையும் சிவ ஞானத்தால் அறியப்படுதலும் ஆகிய இவ்விரண்டு வகையானும் சிவமாகிய சத்துப்பொருளாம் எனக்கூறுவர் மெய்யுணர்வில் நிலைபெற்ற சிவஞானிகள் என்பார், இருதிறன் அல்லது சிவசத்தாம் என இரண்டு வகையின் மன்னுலகு இசைக்கும் என்றார் மெய்கண்டார். முதல்வனுக்குரிய சிறப்பிலக்கணம் கூறும் சிவஞான போதம் ஆறாஞ் சூத்திரமாகிய இது, சத்தும் அசத்தும் எவ்வாறெனத் தானுன்னிச் சித்தம் ஒடுக்கிச் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணித் தானந்தச் சத்தியின் இச்சைத் தகுவோன் சற்சீடனே (1697) எனவரும் திருமந்திரப் பொருளையுளங்கொண்டு கூறியதாகும். என்றும் மாறாதுள்ள மெய்ப்பொருளும் ஒருநிலையில் நில்லாது மாற்றமடையும் பொய்ப்பொருள்களும் எத்தன்மையன எனச் சிந்தித்துணர்ந்து, சித்தத்தை யுருகச் செய்து, சிவபெருமானது திருவருள் உய்யும் நெறியிதுவெனக் காட்டித் துணைசெய்ய, அம்முதல்வன் கைம்மாறு கருதாது செய்துவரும் உபகாரத்தை மறவாது கடைப்பிடித்துக் செய்யும் பேரன்பினாலே அதன் பயனாகிய சிவஞானம் கைவரப் பெறுதல் வேண்டி அம்முதல்வனைப் பணிந்து பேரானந்தத்தை வழங்கும் அம்முதல்வனது திருவருளிற் படிதற்குப் பெருவிருப்புடையோன் பரிபாகமுடைய நல்ல மாணாக்கனாவன் என்பது இதன்பொருள். சத்து - சுட்டுணர்வால் அறியப்படாது சிவஞானம் ஒன்றினாலே அறிதற்குரியதாய் என்றும் மாறாதுள்ளதாகிய சிவம். அசத்து - சுட்டி அறியப்படுவதாய் அழியுந்தன்மையதாகிய உலகத்தொகுதி. சித்து - சித்தம், அம்முக்கெட்டுச் சித்து என நின்றது. உயிர்கட்கு ஞானத்தை நல்குவது தடையிலா ஞானமாகிய சிவசத்தியேயாதலின் ஞானம்பெற விழைவோன் சத்தியாகிய திருவருளைப் பெறுதற்குப் பெருவேட்கையுடையனாதல் வேண்டும் என்பார், சத்தியில் இச்சைத் தருவோன் சற்சீடனே என்றார். ஆன்மா தானே எதனையும் தனித்து நின்று அறிவும் அறிவுடையோன் அல்லன், ஆயினும் அறிவே இல்லாதவனும் அல்லன். தானே அறிய முயலும் அவ்வான்மாவின் அறிவு சத்துடனும் அசத்துடனும் கூடியறிவதானால் திருவருளாய் நின்று உதவிபுரிய ஆன்மாதானே அசத்தினைச் சார்ந்து அசத்தாய் அறிந்து பின் சத்தாகிய சிவத்துடன் கூடிச் சத்தாய் ஒன்றியுடனாம் என்று உணர்த்துவது, தானே அறியான், அறிவிலோன் தானல்லன், தானே அறிவான் அறிவுசத்து அசத்து என்று ஆனால், இரண்டும் அரனருளாய் நிற்கத் தானே யறிந்து சிவத்துடன் தங்கமே (2329) எனவரும் திருமந்திரமாகும். இதன்கண் தான் என்றது ஆன்மாவை. உயிரிலக்கணம் உயர்த்துவதாகிய இத்திருமந்திரப் பொருளை அடியொற்றியமைந்தது, யாவையுஞ் சூனியம் சத்தெதிராகலிற் சத்தே அறியாது, அசத்துஇலது அறியாது இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா எனவரும் சிவஞானபோத ஏழுஞ்சூத்திரமாகும். மாற்றம் மனங்கடந்த சிவத்தின் முன்னிலையில் உணருருவாகிய அசத்துப் பொருள்கள் யாவும் இப்பொருள்போற்பாழாம் ஆதலின் சத்தாகிய சிவம் அசத்தாகிய பிரபஞ்சத்தை அறிந்து நுகராது; அசத்துப் பொருளாகிய பிரபஞ்சம் அறிவில்லாத சடமாகலின் சிவத்தை அறிதல் செய்யாது. ஆதலால் (சொல்லொதொழிந்ததனால் உணரப்படுவதாகிய) பாரிசேட அளவையால் இருதிறனறிவுளது உண்டென்பது பெறப்படுதலின் அதுவே சத்தாதற்றன்மையும் அசத்தாதற்றன்மையும் ஆகிய இரண்டுமின்றிச் சதசத்தாயுள்ள உயிராகும் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும். இரண்டலா ஆன்மா இருதிறன் அறிவுளது என்றது, சத்தெதிர்நில்லாத அசத்துமம் சத்தும் தம்முள் ஒன்றாய் நின்று அறியப்படாமையான் இருதிறனறிவுளது இரண்டலா ஆன்மாவேயாம், தம்முள் ஒன்றானொன்று அநுபவிக்கப் படாத ஞாயிற்றையும் விடயத்தையும் அநுபவிக்கும் கண்போலும் என அநுமானங்கூறிக் காண்க என விளக்குவர் சிவஞானமுனிவர். ஆன்மாவாகிய தான் என்றும் முதல்வனாகிய அவன் என்றும் சித்துப்பொருள் இரண்டென்பர் அறிஞர். தான் என்றும் அவனென்றும் பிரித்துணராதவாறு உயிரோடு முதல்வனுக்குள்ள அத்துவிதத்தொடர் பினையெண்ணித் தான் அவன் எனச் சிந்தித்துணரமாட்டார் கேவலநிலையில் உள்ள ஆன்மாக்கள். ஆன்மா தான் என்னும் ஆன்மபோதம் இல்லையாக அவனே தானாக அடங்கிநிற்கும் நிலையே உயிர்களின் சுத்தாவத்தையாகும் எனவுணர்த்துவது, தானென்றவ னென்றிரண் டென்பர் தத்துவம் தானென்றவ னென்றிரண் டற்ற தன்மையைத் தானென் றிரண்டுன்னார் கேவலத் தானவர் தானின்றித் தானாகத் தத்துவ சுத்தமே (2348) எனவரும் திருமந்திரமாகும். இதன் நான்காமடியில் தானின்றி என்பதிலுள்ள தான் என்பது ஆன்ம போதத்தையும், தானாக என்பதிலுள்ள தான் என்பது முதல்வனாகிய அவனையும் குறித்து நின்றன. ஆன்மாவாகிய தான் என்றும் முதல்வனாகிய அவன் என்றும் கூறப்படும் உண்மைப் பொருள்களுள் தான் அவன் என்னும் இரண்டினையும் ஆன்மாவாகிய தனக்குள்ளே கண்டு தான் என்ற சொல்லப்படும் ஆன்மாவாகிய பூவை முதல்வனாகிய அவனது திருவடியிற் சாத்தினால் அவ்வான்மா இரண்டறச் சிவத்துடன் கூடி ஒன்றாவதல்லது அந்நிலையில் நான் என்றும் அவனென்றும் பிரித்துணர முற்படுதல் வீடுபேறாகிய நற்பயனைத் தராது என அறிவுறுத்துவது, தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவம் நானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை யவனடி சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன்றன்றே (1607) எனவரும் திருமந்திரம் ஆகும். அவனே தானே ஆகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே எனவரும் சிவஞானபோதம் பத்தாஞ் சூத்திரமாகும். உயிர்க்குயிராகிய இறைவன், ஆன்மாக்கள் பாசப் பிணிப்புட்பட்ட கட்டுநிலையில் தான் என வேறு தோன்றாது அவ்வான்மாவாய் ஒற்றித்து உயிர்க்குள் அடங்கி நின்றாற் போலப் பாசப்பிணிப்பின் நீங்கிச் சுத்தனாகிய ஆன்மா தன்முனைப்பற்று முதல்வனோடு அடங்கித் தன் செயலற அம்முதல்வன் செயல்வழி ஒழுகவே மலம் மாயை என்ற இரண்டினோடு வலிய கன்மமும் இல்லையா யொழியும் என்பது இதன்பொருள். தானென்ற வனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை அவனடி சாத்தினால் (1607) எனவரும் திருமந்திரத் தொடரைப் பின்பற்றியமைந்தது, தம்மிற் சிவலிங்கம் கண்டதனைத் தாம் வணங்கித் தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு பூவாகப் பூவழியா மற்கொடுத்துப் பூசித்தால் ஓவாமை யன்றே யுளன் (44) எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். ஞானகுரு தரிசனத்தால் உண்டாகும் பயன் இதுவென உணர்த்துவது, கருடன் உருவங் கருது மளவிற் பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவங் குறித்தஅப் போதே திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே (2659) எனவரும் திருமந்திரமாகும். மந்திரவுருவினதாகிய கருடனது வடிவினை மாந்திரிகன் தனது வடிவாக ஒன்றித் தியானிக்கு மளவிற் பெரிய நஞ்சு தீர்ந்து மரணபயங் கெட்டொழியுமாறு போன்று, குருவின் திருமேனியைக் கண்டு தியானித்த அப்பொழுதே மும்மலவழுக்கு தன்னை விட்டு நீங்க அம்மாணவன் சிவமாந்தன்மை யினையடைந்து இன்புறுவன் என்பது இதன் பொருளாகும். கருட தியானத்தால் விடம் நீங்க மரணபயந்தவிர்தல் போன்று குருவைத் தரிசித்துச் சிவமாகத் தியானிக்கும் பாவகத்தால் மும்மலம் நீங்கச், சிவனுடன் அத்துவிதமாந் தன்மையைப் பெறுவன் என்பதாம். ஆதிபௌதிகம், ஆதி தைவிகம், ஆதியான்மிகம் எனக் கருடன் மூவகைப்படும். உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் மாந்திரிகன் உள்ளத்தில் அதுபோல் வைத்துத் தியானிக்கப்படும் மந்திரவுருவாகிய கருடன் ஆதிதைவிக கருடன். அம்மந்திர உருவமே தானாகத் தன்னறிவு அதன் வயத்ததாம்படி உறைத்து நிற்குமாறு ஒன்றித் தியானிக்கும் பாவனை கருட பாவனை எனப்படும் அம்மந்திரம் இடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆதியான்மிக கருடன் எனப்படும். சுட்டியறியப்பட்ட பிரபஞ்சத்தை, இது மெய்ப்பொருளன்று, இது மெய்ப்பொருளன்று என இவ்வாறு ஒவ்வொன்றாக வைத்து நோக்கி இது மெய்ப்பொருளன்று எனக் கழித்து நீக்கி, அவ்வாறு கண்டு நீங்கிய ஆன்மாவாகிய தன்னறிவின் கண்ணே சுட்டுணர்வின்றி நின்ற கடவுளை யாராய்ந்த, அது நானானேன் என்று ஒருவன் பாவிப்பானாயின், அப்பாவனையால் வேறன்றியுடனாய் விளங்கித் தோன்றும் முதல்வனது அருளால், தொன்மையே கூடிநின்ற தனது பொதுவியல்பைத் தான் விட்டு நீங்க வல்லனாவன். இவ்வாறு உயிர் தன்னுடன் வேறன்றித் தோன்றும் முதல்வனது அருளால், தான் பாசப்பிணிப்பினின்றும் நீங்குதல், ஒள்ளிய கருட தியானத்தில் விளங்கித் தோன்றும் கருடனால் தியானிப்போனாகிய பாவகன் பாம்பின் விடத்தைத் தீர்த்துக் கொள்ளுமாறு போலாம் என விளக்குவது, கண்டத்தை யன்றன் றெனவிட்டுக் கண்டசத்தாய் அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டணைந்த ஊனத்தைத் தான்விடுமாறுத்தமனின் ஒன்கருட சானத்தில் தீர்விடம்போல் தான் (சிவஞானபோதம் சூ. அதி. 2) எனவரும் சிவஞானபோத உதாரணவெண்பாவாகும். சானம் - தியானம், வடமொழிச் சிதைவு. இவ்வெண்பா மேற்குறித்த திருமூலர் வாய்மொழியை அடியொற்றியமைந்ததாகும். ஆன்மா, சிவனுக்கு உடைமையாதலை அஞ்செழுத்து உச்சரிக்கும் முறையில் வைத்து நோக்கித் தன் உடம்பினுள்ளே இதயம் பூசைத்தானமாகவும், உந்தி ஓமத்தானமாகவும் புருவநடு தியானத்தானமாகவும் கொண்டு புறம்பே பூசை செய்யும் முறைப்படி உள்ளத்தாமரையில் திருவைந்தெழுத்தாகிய திருமேனியில் அம்முதல்வனைத் தியானித்து, கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எண்வகை மலர்களால் அருச்சித்து, அத்திருமந்திரத்தினாலே, குண்டலித்தானமாகிய உந்தியிலே ஞான அனலையெழுப்பி, அதன்கண் விந்துத்தானத்து அமிழ்தமாகிய நெய்யைச் சுழுமுனைநாடி இடைநாடியாகிய சுருக்குசுருவங்களால் சொரிந்து ஓமஞ்செய்து, விந்துத் தானமாகிய புருவநடுவிலே சிகாரயகார வகாரங்கள் மூன்று முறையே அதுவெனும் (தற்பதப்) பொருளும், நீயெனும் (துவம்பதப்) பொருளும், ஆகின்றாய் எனும் (அசிபதப்) பொருளும் ஆம்முறைநோக்கி அதனால் சிவோகம் பாவனை செய்வானாயின் அப்பாவனைக்கண் முதல்வன் விளங்கித் தோன்றுவன். அங்ஙனம் பாவிப்பவன் ஆண்டான் அடிமைத்திறத்தால் இறைவனும் அடிமையானவன். இவ்வுண்மையினை அறிவுறுத்துவது, அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டரனை அஞ்செழுத்தால் அர்ச்சித் திதயத்தில் - அஞ்செழுத்தால் குண்டலியிற் செய்தோமம் கோதண்டஞ் சானிக்கில் அண்டனாம் சேடனாம் அங்கு (சிவஞானபோதம், வெண்பா 59) எனவரும் பாடலாகும். இறைவனைத் திருவைந்தெழுத்தின் துணையால் புருவத்தின் இடைவெளியாகிய விந்துத் தானத்திற் கண்டு வழிபடும் இம்முறை, நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி உற்றுற்றுப் பார்க்க வொளிவிடுமந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரமனிருந்திடம் சிற்றம்பலமென்று சேர்ந்து கொண்டேனே (2770) என முன்னர்க் காட்டிய திருமந்திரப் பாடலின் விளக்கப் பெற்றுள்ளமை காணலாம். நெல்லுக்குத் தவிடும் உமியும் அநாதியாயிருந்தும் ஒருகாலத்திலே நீங்குந் தன்மைபோல, உயிர்களுக்கு மலம்மாயை கன்மம் என்னும் மும்மலங்களும் தொன்மையேயுள்ளன என்றும், அவை தத்தம் காரியத்தைச் செய்தல் முதல்வனது ஆணையால் என்றும், வீடுபெற்ற உயர்களிடத்தில் அவை இல்லாதொழியினும் பாசப் பிணிப்புடைய உயிர்களிடத்திலே அம்மலங்கள் நீங்காது நிற்றலால் அவற்றின் உண்மைத் தன்மைக்கு அழிவில்லை யென்றும் அறிவுறுத்துவது, நெல்லிற் குமியும் நிகழ்செம் பினிற்களிம்பும் சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வாள் அலர்சோகஞ் செய்கமலத் தாம் (சிவஞானபோதம் சூத். 2 அதி. 2) எனவரும் வெண்பாவாகும். நெல்லின்கண் உமியும், செம்பின்கண் களிம்பும் எக்காலத்து உளவாயின என்று ஆராய்ந்து சொல்லுங்கால் அந்நெல்லும் செம்பும் உளவாயின அன்றே அவையுள்ளனவன்றி இடையேவந்தன அல்ல எனல் வேண்டும். அதுபோல மாயை, ஆணவம், கன்மம் என்னும் மும்மலங்களும் அநாதியேயுள்ளனவாம். முன்னேயுளதாகிய தாமரைப்பூ மலர்தலும் குவிதலும் கதிரவனாற் செய்யப்படுமாறு போல அவை தத்தங் காரியங்களைச் செய்தல் இறைவனது முன்னிலையினானேயாகும் என்பது இதன் பொருளாகும். மாயை இறைவனுக்கு வைப்புச் சத்தியாதலால் வல்லி என்றார். மலம் - ஆணவம். சகசமலமாகிய ஆணவத்தின் இயல்பினை விளக்குவார் நிகழ் செம்பினிற் களிம்பு என்றார். ஆணவமலமானது செம்பின் வெட்டுவாய் தோறும் கலந்துள்ள களிம்பினைப் போன்று அநாதியே உயிருடன் விரவி அதன் அறிவைத் தடைசெய்து நிற்றலின் அது களிம்பு என்ற பெயராலும் வழங்கப்படும். களிம்பறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி (114) என வரும் திருமந்திரம் இப்பெயர் வழக்கத்தினை நன்கு புலப்படுத்துவதாகும். மூலமலத்தின் காரியம் மோகம், மதம் முதலாயின. இருவினையின் காரியம் இன்பதுன்பம் முதலாயின. மாயையின் காரியம் தனுகரணம் முதலாயின. வள்ளலால் ஆம் எனவே திரோதான சத்தியது உண்மையும் பெற்றாம். அது, பாகம் வருவித்தற் பொருட்டு மலத்தின்வழி நின்று மோகம் முதலியவற்றைத் தொழிற்படுத்துவதாகிய சிவ சங்கற்பத்திற்கு ஏதுவாதல் பற்றி, மலம் என்று உபசரித்துக் கூறப்படும். இவ்வாறு மலம், கன்மம், மாயை, திரோதானம், மாயாகாரியம் என்னும் ஐவகைப் பாசமுங் கண்டுகொள்க என விளக்குவர் சிவஞானமுனிவர். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களுடன் ஆணவமலத்தைப் பரிபாகஞ் செய்யும் இறைவனது சத்தியாகிய திரோதான சத்தியுயம் மாயையின் காரியங்களாகிய மாயேயத்தையும் சேர்த்து மலம் ஐந்து எனக் கூறும் மரபு திருமூலநாயனார் காலத்திலேயே நிலைபெற்றிருந்த தென்பது, மாறா மலம் ஐந்தால் (திருமந்திரம் 2160) எனவும், நேரா மலம் ஐந்து (திருமந்தரம் 2166) எனவும், வணங்கிடும் ஐம்மலம் (திருமந்திரம் 2177) எனவும் ஐம்மலந் தான்விட்டு (திருமந்திரம் 2207) எனவும், ஒத்துறுபாசம் மலம் ஐந்தோடாறாறு, தத்துவபேதம் (திருமந்திரம் 2211) எனவும், நந்திபராவத்தை நாடச் சுடர்முனம், அந்தியிருள் போலும் ஐம்மலமாறுமே (திருமந்திரம் 2293) எனவும் வரும் திருமந்திரப் பாடல்களால் இனிது புலனாகும். இங்குக் குறித்த ஐவகைமலங் களையும் விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, மோகமிக உயிர்கள்தொறும் உடனாய்நிற்கும் மூல ஆணவம் ஒன்று, முயங்கி நின்று பாகமிகவுதவு திரோதாயி ஒன்று பகர்மாயை ஒன்று, படர்கன்மம் ஒன்று தேகமுறு கரணமொடு புவனபோகச் செயலாருமாமாயைத் திரட்சி ஒன்றென் (று) ஆகமலம் ஐந்தென்பர், ஐந்தும் மாறா தருளென்ப தரிதென்பர் அறிந்துளோரே (32) எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளாகும். ஆன்மா மலம் நசித்து இறைவனைச் சேர்ந்து இரண்டற்று ஒன்றும் முறையினை உணர்த்துவது, அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற்றுருச் செய்த அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாகுமாறு போற் செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே (136) எனவரும் திருமந்திரமாகும். (கடலிடத்தேயுள்ள) நீரின் மிகுந்த உவர்ப்பானது, கதிரவனது வெப்பத்தால் உப்பு எனப் பேர்பெற்று உருக்கொண்ட அது, மீண்டும் நீரிற்கலந்தபோது நீரேயாகுமாறு போல, முடிவாகச் சொல்லுமிடத்து ஆன்மா சிவத்துள் அடங்கும் என்பது இதன்பொருள். அப்பு - நீர். கூர்மை - கடல் நீரிலுள் கரிப்புத்தன்மை,. நீரிடத்தே பொருந்தியுள்ள கரிப்புத் தன்மை கதிவரன் வெப்பத்தால் வேறு பிரிக்கப்பட்டு உப்பு என உருக்கொண்ட அது, மீண்டும் தண்ணீருடன் கூடியவழி அதனுடன் பிரிவின்றி அடங்குமாறு போலப் பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள கட்டு நிலையில் இறைவனது விரிவினில் பொதுவாக அடங்கிக்கிடந்த ஆன்மா, பாசப்பிணிப்பற்று வீட்டுநிலையில் சிறப்புநிலையிற் சிவத்துள் அடங்கி யொன்றாகும் என்பது இதன்பொருள். அப்பினிற் கூர்மை ஆதித்தன் வெம்மையால் உப்பெனப் பேர்பெற்று உருச் செய்த அவ்வுரு என்பது, இறைவனருளால் உயிர் கருவி கரணங்களைப் பெற்று உப்புடன் கூடிய நிலையையும், அவ்வுரு அப்பினிற் கூடிய தொன்றாதல் என்பது மும்மலப் பிணிப்பின் நீங்கிய முத்தி நிலையையும் குறித்தற்கு அமைந்த உவமைகளாகும். பூரண அறிவு விளங்கி ஆன்மா இறைவன்வசமாய் ஒன்றுபட்டுக் கூடுங்கால், பண்டைய ஏகதேச அறிவுகெட்டுக் கூடுமோ? அன்றிக் கெடாது கூடுமோ? என ஐயந்தோன்றுதல் இயல்பே. ஏகதேச அறிவு கெட்டு இறைவனைக் கூடுமென்றால், அறிவாகிய உயிர்க்குணங் கெடவே ஆன்மாவாகிய குணியும் கெடும் எனப்பட்டு அங்கு இருபொருள் ஒன்றாயக் கூடியதென்றல் இயலாது. ஏகதேச அறிவு கொடாது கூடுமென்றால், ஏகதேச அறிவுகெடாத வழி வியாபகப் பொருள் விளங்குதலின்மையால் அவ்விரண்டும் ஒன்றாகக் கூடுமாறில்லை. மற்று எவ்வாறு கூடுமெனின், ஏகதேச அறிவினைச் செய்யும் ஆணவம் கன்மம் மாயை என்னும் மலங்கள் மட்டும் கெட்டொழியத் தண்ணீரைச் சேர்ந்த உப்புப்போல ஆன்மா இறைவன் திருவடியைத் தலைப்பட்டு இறைவனுக்கு அடிமையாம். அந்நிலையில் இறைவனது திருவடி உயிரைத் தன்து வியாபகத்துள் அடக்கிக் கொள்ளும் என அறிவுறுத்துவர், உப்பெனப் பேர்பெற்றுருச் செய்த அவ்வுரு, அப்பினிற் கூடிய தொன்றாகுமாறு போல், செப்பினிற் சீவன் சிவத்துள் அடங்குமே என அருளிச் செய்தார் திருமூலநாயனார். இத்திருமந்திரப் பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, நசித்தொன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா நசித்திலதேல் ஒன்றாவதில்லை - நசித்துமலம் அப்பணைந்த உப்பின் உளமணைந்து சேடமாம் கப்பின்றாம் ஈசன் கழல் (சிவ. 11அதி. 2) எனவரும் சிவஞான போத உதாரணவெண்பாவாகும். அரன்கழல் செல்லுங்கால் ஆன்மா சகசமலங் கெட்டு ஒன்றுமோ கெடாதொன்றுமோ என வினவினார்க்குக் கெட்டு ஒன்றும் என்றால் ஆன்மாவும் கெடுமாதலால் அவ்விடத்த ஒன்றமாட்டாது. சகசமலங் கெடாதாயின் ஆன்மாவும் சிவமும் இருபொருளாய் ஒன்றாமாறு இல்லை. ஆதலால் அருத்தாபத்தி யளவையால் உப்பு தனது கடினத் தன்மை நீங்கி நீரின் ஒன்றாமாறுபோல ஆன்மாவும் தனது சகசமலம் கெட்டொழிய அரன்கழலையொன்றி அதற்கு அடிமையாம். அங்ஙனம் அடிமைத்திறத்தால் ஒன்றாகிய ஆன்மாவுக்கு மீளப்பிரிதல் இல்லை என்பது இதன்பொருளாகும். தன் கண்ணதாகிய கடினகுணம் நீங்கி நீரினைச் சேர்ந்து ஒன்றாகிய உப்பு, ஆன்மா மலம் நசித்து இறைவன் கழலில் ஒன்றுபடுதல் மாத்திரைக்கு உவமையாயிற்று. மலம் நசித்தலாவது ஆணவமலம் தனது மறைத்தற்சத்தி மடங்கிக் கீழ்ப்படுதல் மாத்திரையே பிறிதன்று என்பது, பொன்வாள்முன் கொண்மூவிற் புக்கொடுங்கிப் போயகலத் தன்வாளே யெங்குமாந்தன்மைபோல் (சிவ. சூ. 11 அதி. 2 வெண்பா 73) என்னும் உவமையாற் புலனாம். இருபொருள் ஒன்றாய்க் கலந்து ஒன்றினுள் ஒன்று அடங்கி இரண்டுங்கெடாது ஒன்றாய்த் தோன்றுதற்கு அப்பணைந்த ( நீரொடுகலந்த) உப்பு உவமை. பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களும் வியாபக வியாப்பியங்களாய் (விரிவும் விரிவின் அடங்கியனவுமாய்) நிற்கும் முறைமைக்குத் தண்கடல் நீர் உப்புப் போல் என உவமை கூறுவர் மெய்கண்டார். உப்பானது தண்ணீரொடு கலத்தலன்றிக் கடலாகிய வெளியுடன் விரவாமைபோலப் பாசமும் ஆன்மாவாகிய பசுவைச் சார்தலன்றிக் கடவுளாகிய பதியைச் சார்தல் இல்லையென்பது இவ்வுவமையாற் புலனாகும். அறிவிற் சிறந்தோரும் அறிவற்று அயர்வோரும் ஆகிய இவர்கட்குஅன்றி, அறிவும் அறியாமையும் ஒருங்குடையார்க்குப் பயன்படும் நோக்கத்துடனேயே ஆசிரியர்கள் அறிவுநூல்களை அறிவுறுத்தி யருள்வர் என்பது, அறிவிக்க வேண்டாம் அறிவற் றயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும் அறிவுற் றறியாமை யெய்திநிற் போர்க்கே அறிவிக்கத் தம்மறி வாரறி வோரே (2327) எனவரும் திருமந்திரமாகும். இத்திருமந்திரப் பொருளை அடியொற்றி யமைந்தது, போதமிகுத் தோர்தொகுத்த பேதை மைக்கே பொருந்தினோர் இவர்க்கன்றிக் கதிப்பாற் செல்ல எதுநெறி எனும்அவர்கட் கறிய முன்னாள் இறைவன் அருள் நந்திதனக்கியம்ப (சித்தியார், பரபக்கம், 10) எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தமாகும். திருமூலநாயனார் திருமந்திரம் திருக்கூத்துத் தரிசனப்பகுதியில், தேவர்கள் தானவர் சித்தர்வித்தி யாதரர் மூவர்களாதி முப்பத்து மூவர்கள் தாபதர் சத்தர் சமயஞ் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே (2731) தத்துவ மாடச் சதாசிவந் தானாடச் சித்தமு மாடச் சிவத்தி தானாட வைத்த சராசரமாட மறையாட அத்தனு மாடினான் ஆனந்தக் கூத்தே (2789) எனவரும் திருப்பாடல்களில் இறைவன் திருவருளால் தாம்கண்டு மகிழ்ந்த ஆனந்தத் திருக்கூத்தின் இயல்பினைக் குறித்துள்ளமை காணலாம். இத்திருமந்திரப் பாடல்களை அடியொற்றிய கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்தது, ஆதிநடு அந்தமிலா அளவில் சோதி அருண்ஞான மூர்த்தியாய் அகிலம் ஈன்ற மாதினையும் ஒருபாகத் தடக்கி வானோர் மகுட சூடாமணியாய் வையம்போற்றும் பாதிமதியணி பவளச் சடைகள் தாழப் படரொளியம் பலத்தாடும் பரனார் பாதத் தாதுமலி தாமரைகள் சிரத்தே வைத்துத் தளராத பேரன்பு வளரா நிற்பாம் (சித்தியார், பரபக்கம் 1) எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். திருவம்பலத்து நிருத்தம் பண்ணுகையாவது, பூமிக்குச் சுழுமுனை நாடி சிதம்பரம் ஆதலால் அதில் ஆடுகை. அஜபாவர இபமாம் இரண்டக்கரமாகிய திருவடிகளால் ஆடுவதனால் உலகத்திற்கு உயிருமாய் நிற்பன் என்பது கருத்து. உயிர்களுக்குப் பலமாயிருப்பன் என்பது அஷ்ட மூர்த்தி வடிவாதலால். தானாடத் தசையாடும் என்னும் பழவார்த்தையும் இதனை நோக்கி எனக் கொள்க என விளக்கங்கூறுவர் சிவாக்கிரயோகியார். இறைவன் புறத்தே திருக்கோயிலுள் இருக்குந் திருமேனியும், நேயமலிந்த அடியார்களாகிய திருவேடமும் அதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிரை இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளார் செய்யும் பூசையினை ஏற்றருள்கின்றான் என்பது, தாபரத் துண்ணின் றருளவல் லான்சிவன் மாபரத் துண்மை வழிபடு வாரில்லை மாபரத் துண்மை வழிபடு வாளர்க்குப் பூவகத் துண்ணின்ற பொற்கொடி யாமே (1717) படமாடக் கோயிற் பகவற்கொன் றீயின் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் படமாடக் கோயிற் பகவற்க தாமே (1857) எனவரும் திருமந்திரப் பாடல்களால் அறியலாம். இவற்றை அடியொற்றி யமைந்தது, தாவர சங்கமங்கள் என்றிரண்டுருவில் நின்று மாபரன் பூசைகொண்டு மன்னுயிர்க் கருணைவைப்பன் (118) எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். ஆன்மா அரசும் அமைச்சரும் போல அந்தக்கரணம் முதலிய மாயா கருவிகளைப் பற்றி உடன் நின்று அறியுங்கால் அரசன் போல் அவற்றுள் பலவற்றை விட்டுவிட்டுச் சென்று ஐவகை அவத்தைகளை (உணர்வுநிலைகளை) அடைவதாகும். அந்நிலையில் நனவு நிலையாகிய சாக்கிரத்தில் நுதல் இடமாக முப்பந்தைந்து கருவிகளும், கனவுநிலையில் கண்டம் இடமாக இருபத்தைந்து கருவிகளும், உறக்க நிலையில் நெஞ்சம் இடமாக மூன்று கருவிகளும், பேருறக்க நிலையில் கொப்பூழ் இடமாக இரண்டு கருவிகளும், துரியாதீதம் எனப்படும் உயிர்ப்படக்க நிலையில் மூலம் இடமாக ஒருகருவியும் நிற்கும் என்பர். உயிர் கருவிகளோடு கூடி அறியும் நிலையில் உள்ள உணர்வு நிலைகளாகிய ஐந்து அவத்தைகளிலும் தொழிற்படுங் கருவிகளை முப்பதோ டைந்தாய் முதல்விட்டங் கையைந்தாய் செப்பதின் மூன்றாய்த் திகழ்ந்திரண் டொன்றதாய் இப்பதி நின்ற இயல்பை யறிந்தவர் அப்பதி நின்றமை ஆய்ந்துகொள் ளீரே (2143) எனவரும் திருமந்திரத்தில் திருமூலர் தொகைப்படுத்திக் கூறியுள்ளார். இத்திருமந்திரப்பாடலை அடியொற்றியமைந்தது ஒன்றணையா மூலத் துயிரணையும் நாபியினில் சென்றணையும் சித்தம் இதயத்து - மன்றவே ஐயைந்தாம் நன்னுதலிற் கண்டத்தின் வாக்காதி மெய்யாதி விட்டகன்று வேறு (வெண்பா 28) எனவரும் சிவஞான போத உதாரண வெண்பாவாகும். சாக்கிரத்தானம் எனப்படும் நெற்றியிலே ஞானேந்திரியம் கன்மேந்திரியம் எனப்படும் புற இந்திரியங்கள் பத்துடன் பொருந்திய இருபத்தைந்து கருவிகள் தொழிற்படும். சொப்பனத்தானம் எனப்படும் கண்டத்தில் மேற்கூறிய புறஇந்திரியம் பத்தும் நீங்கலாக இருபத்தைந்து கருவிகள் தொழிற்படும். சுழுத்தித் தானமாகிய இதயத்தின் கண்ணே முற்கூறியவற்றுள் இருபத்திரண்டு கருவிகளை விட்டு நீங்கி, சித்தம், புருடதத்துவம், பிராணவாயு ஆகிய மூன்று கருவிகள் தொழிற்படும். துரியத்தானமெனப்படும் உந்தியிலே புருடதத்துவத்தோடு பிராணவாயு என்னும் இரண்டுமே தொழிற்படும். இக்கருவிகள் ஒன்றும் அணையாத அதீதத் தானமெனப்படும் மூலாதாரத்திலே புருடன் ஒன்றுமே தொழிற்படும். தாம்கூடியும் குறைந்தும் வருதலால் ஆன்மா ஐவகை அவத்தையுறுதற்குக் காரணமாகிய முப்பத்தைந்து கருவிகளாவன. ஞானேந்திரியம் கன்மேந்திரியம் ஆகிய புற இந்திரியம் பத்தும், அவற்றிற்குரிய விடயங்கள் பத்தும், அவற்றினுக்கு உட்கருவியாகிய அந்தக் கரணங்கள் நான்கும், அவற்றோடுகூடி அவத்தையுறுவதாகிய புருடன் ஒன்றும், அங்ஙனம் ஆன்மா ஐவகை உணர்வுநிலைகளை அடைதற்குரிய வன்மைக்கு ஏதுவாய், அகங்காரத்தாற் செலுத்தப்படும் பிராணன் முதலிய வாயுக்கள் பத்தும் என இவை. உயிரானது மேற்குறித்த உணர்வு நிலைகளாகிய காரிய அவத்தைகளை அடைதற்குக் காரணமாக உள்ளவை கேவலம், சகலம், சுத்தம் என்னும் மூன்று நிலைகளாகும். இம்மூன்றையும், காரணாவத்தை என வழங்குதல் மரபு, இவற்றுள் கேவலம் என்பது உயிர் தனக்குரிய விழைவு, அறிவு, செயல் என்பவற்றின் நிகழ்ச்சி சிறிதும் இன்றி, மாயேயமாகிய கருவிகளைப் பெறாது தனித்துத் தன்னளவில் நிற்கும் நிலையாகும். சகலம் என்பது ஆன்மா உடல் கருவிகள் முதலியவற்றோடுங் கூடி விழைவு அறிவு செயல் ஆகிய அவை ஒருசிறிது விளங்க நிற்கும் நிலை. சுத்தம் என்பது ஆன்மா தன்னைப் பற்றிய ஐவகை மலங்களும் நீங்கி, சிவத்தோடு கூடி விழைவு அறிவு செயல்கள் எங்குமாய்ப் பரவி விளங்கும் நிலையாகும். இம்மூவகை நிலைகளையும் விளக்கும் முறையில் அமைந்தது. கேவல சகல சுத்தம் என்று மூன்றவத்தை ஆன்மா மேவுவன், கேவலம் தன்னுண்மை, மெய் பொறிகளெல்லாம் காவலன் கொடுத்தபோது சகலனாம், மலங்களெல்லாம் ஓவினபோது சுத்தம் உடையன் உற்பவந் துடைத்தே (227) எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். காரணா வத்தைகளாகிய இம்மூன்றையும் இவற்றின் காரியங்களாகிய அவத்தை வகைகளையும் திருமந்திரம் எட்டாந் தந்திரத்தில் கேவல சகல சுத்தம் என்ற தலைப்பில் திருமூலர் வகுத்தும் விரித்தும் விளக்கியுள்ளமை ஆராய்ந்து உணரத் தகுவதாகும். ஆணவமலம் ஒன்றேயுடைய உயிர்களை விஞ்ஞான கலர் எனவும், ஆணவம் கன்மம் என்னும் இருமலமுடைய உயிர்களைப் பிரளயாகலர் எனவும், ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமுடைய உயிர்களைச் சகலர் எனவும் இவ்வாறு ஆன்மாக்களை மூவகையாகப் பகுத்துரைத்தல் சைவ சித்தாந்த நூன்மரபாகும். இம்மரபு, மெய்ஞ்ஞானந் தானே விளையும் விஞ்ஞானகலர்க் கஞ்ஞான வச்சகலர்க் கக்குருவாய் - மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்து மன்றிப் பிரளயா கலருக்கு முன்னுணர்த்துந் தான்குருவாய் முன் (சிவஞானபோதம் வெண்பா 47) எனவும், உரைதரும் இப்பசுவர்க்கம் உணரின் மூன்றாம் உயரும் விஞ்ஞானகலர் பிரளயா கலர்சகலர் நிரையின்மலம், மலங்கன்ம, மலங்கன்மம் மாயை நிற்கும் முதலிருவர்க்கும் நிராதாரமாகிக் கரையிலருட் பரன்துவிதா சத்திநி பாதத்தாற் கழிப்பன்மலம், சகலர்க்குக் கன்மவொப்பில் தரையிலாசான் மூர்த்தி ஆதாரமாகித் தரித்தொழிப்பன் மலம் சதுர்த்தாசத்தி நிபாதத்தால் (சித்தியார், சுபக். 254) எனவும், மூவகை ஆருயிர் வர்க்கம் மூலமலத்தார், கன்ம மூலமலத்தார், மூன்று முடையாரன்றே தீவகமாம் எனவுருவாய் வந்து நாதன் திருநோக்கால் பரிசத்தால் திகழும் வாக்கால் பாவனையால் மிகுநூலால் யோகப் பண்பால் பரவிவரும் அவுத்திரியாற் பாசநாசம் மேவ அருளுதவும், அவுத்திரியிரண்டு திறனாம் வியன்கிரியை ஞானமென விளம்புமாறே (சிவப்பிரகாசம் 8) எனவும் வரும் மெய்கண்ட நூல்களில் இடம் பெற்றுள்ளமை காணலாம். மூவகை ஆருயிர் வர்க்கம் ஆகிய இப்பிரிவு, ஆணவ மாகும் விஞ்ஞான கலருக்குப் பேணிய மாயைப் பிரளயா கலராகும் ஆணவ மாயையுங் கன்ம மூன்றுமே காணுஞ் சகலர்க்குக் காட்டு மலங்களே (2241) ஆணவத்தா ரொன் றறியாத கேவலர் பேணிய மாயைப் பிரளயா கலராகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணுஞ் சகலர் முப்பாசமும் புக்கோரே (2240) எனவரும் திருமந்திரப் பாடல்களை அடியொற்றியதாகும். இத்திருமந்திரப் பாடல்களைக் கூர்ந்து நோக்குங்கால் ஆணவமலம் ஒன்றேயுடையவர் விஞ்ஞானகலர் எனவும் ஆணவம் மாயை என்னும் இருமலமுடையவர் பிரளயகலர் எனவும், ஆணவம் மாயைகன்மம் என்னும் மும்மலமுடையவர் சகலர் எனவும் கூறும் கொள்கை திருமூலர் கருத்தாகுமோ என ஐயுற வேண்டியுளது. இவ்விரு பாடல்களின் பொருள்களும் மேலும் சிந்தித்தற்குரியன. வேதம் சிவாகமம் என்னும் இருதிற நூல்களும் சிவபெருமானால் அருளிச் செய்யப் பெற்ற முதல் நூல்கள் எனவும், வேறுரைக்கும் எல்லா நூல்களும் இவற்றை முதலாகக் கொண்டு இயற்றப் பெற்ற வழிநூல்கள் எனவும், வேதம் உலகத்தார் உய்தற்பொருட்டுப் பொதுநூலாகவும், சிவாகமம் சத்திநிபாதர் உய்தற்பொருட்டுச் சிறப்புநூலாகவும் அருளிச் செய்யப்பெற்றன எனவும் அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள் ஆதிநூல் அநாதியமலன் தருநூல் இரண்டும் ஆரணநூல் பொது, சைவம் அருஞ்சிறப்பு நூலாம் நீதியினால் உலகர்க்கும் சத்தி நிபாதர்க்கும் நிகழ்த்தியது, நீண்மறையினொழி பொருள் வேதாந்தத் தீதில் பொருள்கொண்டுரைக்கு நூல்சைவம் பிறநூல் திகழ்பூர்வம், சிவாகமங்கள் சித்தாந்தமாகும் (267) எனவரும் சிவஞான சித்தியாராகும். இது, வேதமோ டாகமம் மெய்யாம் இறைவனுல், ஓதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக நாதன் உரையிவை நாடில் இரண்டந்தம் பேதம தென்பர் பெரியோர்க் கபேதமே (2397) எனவரும் திருமந்திரத்தையும், உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும் நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பம் (பெரிய. திருஞானசம்பந்தர்) எனவும், வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க (பெரிய. திருஞானசம்பந்தர், 1) எனவும் வரும் திருத்தொண்டர் புராணத் தொடர்களையும் விரித்துரைக்கும் முறையில் அமைந்துள்ளமை அறியத்தகுவதாகும். வேதாந்தம் முதலிய ஆறு அந்தங்கள் (சமயதத்துவக் கொள்கைகள்) திருமூலர் காலத்தில் இந்நாட்டில் வழங்கின. எனினும் அவற்றுள் சைவசித்தாந்தக் கொள்கையே தனிச் சிறப்பு வாய்ந்ததாகத் தமிழ்மக்களாற் போற்றப்பெற்று வந்தது என்பது வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும் எனவும் சித்தாந்தத்தே சீவன் முத்தி சித்தித்தலால் சித்தாந்தத்தே நிற்பர் முத்தி சித்தித்தவர் (2394) எனவும் வரும் திருமூலர் வாய்மொழிகளால் நன்கு தெளியப்படும். சித்தாந்தத் தேசிவன்றன் திருக்கடைக்கண் சேர்த்திச் செனனமொன்றி லேசீவன் முத்த ராக வைத்தாண்டு மலங்கழுவி ஞான வாரி மடுத்தானந் தம்பொழிந்து வரும்பிறப்பை யறுத்து முத்தாந்தப் பாதமலர்க் கீழ்வைப்ப னென்று மொழிந்திடவும் உலகரெலாம் மூர்க்க ராகிப் பித்தாந்தப் பெரும்பிதற்றுப் பிதற்றிப் பாவப் பெருங்குழியில் விழுந்திடுவர் இதுவென்ன பிராந்தி (சித்தியார், சுபக். 268) எனவரும் சிவஞானசித்தியார் மேற்குறித்த திருமந்திரப் பொருளை யுணர்ந்து பயன்கொள்ளாத மக்களை நினைந்து இரங்கிக் கூறியதாதல் அறியத்தகுவதாகும். தானமியாகந்தீர்த்தம் (277) எனவரும் சிவஞான சித்தியாரில், அரன் முனிலாதொழியின் உற்பவித்து ஞான நெறியடைந்தடைவர் சிவனை என்ற தொடர் சரியை முதலிய சிவபுண்ணியங்களைச் செய்தவர்கள் போகத்தில் விருப்புடையராயின், விசிட்டமான கன்மபரிபாகத்தாலே புரியட்டக வுடலையெடுத்துப் பொல்லாதென்ற சகலயோனிகளைப் புசித்துத் தொலைத்தவாறே பிரளயாகலராய்ப் பின்பு விஞ்ஞானகலராய் ஞானநெறியைத் தலைப்பட்டுச் சிவனடியை அடைவார்கள் என்பதனை அறிவுறுத்துவதாகும். இது, விஞ்ஞான கன்மத்தால் மெய்யட்டகங் கூடி விஞ்ஞான கன்மத்தாற் சகலயோனிபுக் கெஞ்ஞானமு மெய்தியிடையிட்டு மீண்டுபோய் விஞ்ஞான ராய்ச் சிவமேவுவ துண்மையே (499) என்னும் திருமந்திரப்பாடலை உளங்கொண்டு கூறிய விளக்கமாகும். திருமூலர் காலத்தில் வேதம்வல்ல அந்தணர்களுக்குக் குடியிருப்பாக (ப்பிரமதேசமாக) அரசர்களால் ஊர்கள் தானஞ்செய்யப் பெற்றன. அவ்வாறு அந்தணர்க்கு ஊர்களைத் தானமாகக் கொடுப்பது இம்மை மறுமையிற் பெரும்பயன் விளைக்கும் என்ற நம்பிக்கை மன்னர்கள் மனத்தில் வழிவழியாகத் தொடர்ந்து நிலைபெற்று வந்துள்ளமை நம் நாட்டிலுள்ள கல்வெட்டுக்களாலும் செப்புப்பட்டயங்களாலும் நன்கு புலனாகின்றது. அதுபோலவே இறைவன் எழுந்தருளிய திக்கோயில்களைக் கட்டி முடித்தலும் இம்மை மறுமைகளிற் பெரும்பயன் விளைக்கும் சிறப்புடைய அறமாகக் கருதப்பட்டு வருகின்றது. இங்குக் குறிக்கப்பட்ட பேரறங்கள் எல்லாவற்றையும் விட மக்களது மனவிருளைப் போக்கித் தமது ஞானமெய்ந்நெறியால் உலகிற்கு நற்பயன் விளைக்கும் சிவஞானிகட்கு ஒரு பகல் ஒருவேளையுணவளித்தலால் வரும் பயனுக்கு மேற்குறித்தவை யாவும் சிறிதும் ஒப்பாகமாட்டா என வற்புறுத்தும் நிலையில் அமைந்தது, அகரம் ஆயிரம் அந்தணர்க்கீயி லென் சிகரம் ஆயிரம் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலூண் பலத்துக்கு நிகரில்லை யென்பது நிச்சயந் தானே (1860) எனவரும் திருமூலர் திருமந்திரமாகும். அந்தணர் குடியருப்பூர்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அந்தணர்க்கீவதால் வரும் பயன்யாது? திருக்கோயில்கள் ஆயிர்க்கணக்கினவாகக் கட்டி முடித்தலால் உளதாம் பயன் யாது? யாவரும் புகழ்ந்தேத்தும் சிவஞானியாகிய அடியார் ஒருவர் ஒரு பகற்பொழுது உண்ண உணவளித்தலால் வரும் பயனுக்கு மேற்குறித்த அறப்பயன்கள் சிறிதும் ஒவ்வா என்பது உறுதி என்பது இதன் பொருளாகும். இங்ஙனம் சிவஞானிகட்கு ஒன்றனையீதலால் வரும் பயனை அறிவுறுத்துவதாக அமைந்தது, சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் திலமளவே செய்திடினும் நிலமலைபோல் திகழ்ந்து பவமாயக் கடலினழுந் தாதவகை யெடுத்துப் பரபோகந் துய்ப்பித்துப் பாசத்தை யறுக்கத் தவமாரும் பிறப்பொன்றிற் சாரப் பண்ணிச் சரியைகிரி யாயோகம் தன்னினும் சாராமே நவமாரும் தத்துவஞா னத்தை நல்கி நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே (278) எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தமாகும். குருவினாலன்றி ஞானம் பெறுதல் இயலாது என அறிவுறுத்துவது, சூரிய காந்தமுஞ் சூழ்பஞ்சும் போலச் சூரிய காந்தஞ் சூழ்பஞ்சைச் சுட்டிடா சூரியன் சந்நிதியிற் சுடுமாறு போல் ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே (117) எனவரும் திருமந்திரமாகும். சூரியகாந்தக்கல்லும் அதனைச் சூழவைத்த பஞ்சும் போல் (உயிர்களின் மலத்தைச் சுட்டெரித்தற்குரிய சிவமும் அதனைப் பற்றாகப் பற்றியுள்ள ஆன்மாவும்) பிரிவறக்கூடிய இயைபுடையனவாயினும், சூரியகாந்தக்கல் தன்னகத்தேயுள்ள நெருப்பினால் தன்னைச் சூழவைத்துள்ள பஞ்சினைச் சுட்டெரித்தல் இல்லை. அத்தகைய சூரிய காந்தக்கல் ஞாயிற்றின் முன்னிலையைச் சார்ந்தபோது, அதனின்றும் தோன்றும் தீ பஞ்சினைச் சுட்டெரித்தல் போன்று, (இறைவன்) குருவாகத் தோன்றிய அந்நிலையில் வெளிப்பட்ட சிவஞானத்தீயினால் உயிரைச் சூழ்ந்துள்ள மலங்களாகிய பஞ்சுத் தொகுதி சுடப்பட்டு அழிந்தன என்பது இதன் பொருளாகும். இறைவனை உயிர்க்குயிராகத் தன்னுள் கொண்ட பக்குவமுடைய ஆன்மாவுக்குச் சூரிய காந்தக்கல்லும், ஆன்மாவைப் பிணித்துள்ள மலங்களுக்குப் பஞ்சும், ஞானாசிரியன் முன்னிலையில் மாணாக்கனது அறிவின் கண்ணே சிவஞானம் வெளிப்பட்டு மலங்களையழித்தற்குச் சூரிய காந்தக்கல் சூரியன் முன்னிலையிற் பொருந்திய அளவில் அதன்கண் நின்று தீ வெளிப்பட்டுப் பஞ்சினைச் சுட்டெரித்தலும் உவமையாகும். இத்திருமந்திரப்பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது, சூரிய காந்தக்கல்லி னிடத்தே செய்ய சுடர்தோன்றி யிடச்சோதி தோன்று மாபோல் ஆரியனாம் ஆசான்வந் தருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத் தூரியனாம் சிவன்தோன்றும் தானுந் தோன்றும் தொல்லுலக மெல்லாந்தன் னுள்ளே தோன்றும் நேரியனாய்ப் பரியனுமாய் உயிர்க்குயிரா யெங்கும் நின்றநிலை யெல்லாம்முன் நிகழ்ந்து தோன்றும் (சுபக். 280) எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். சிவனுடைய அருளிடமாக நின்று ஆன்மசுத்தி பண்ணினவர்கள், தத்துவம் முப்பத்தாறோடும் கூடி நிற்கும் பொழுதே அவற்றோடு கூடிச் சீவிப்பதுஞ் செய்யாமல் அறிவு குலைவதும் செய்யாமல் சிவத்துடன் ஒன்றிநிற்கும் நிலையே சாக்கிரத்தில் அதீதம் எனப்படும் தெளிவுநிலையாகும். இதனை அறிவிப்பது, பொற்புறு கருவியாவும் புணராமே, அறிவிலாமற் சொற்பெறும் அதீதம் வந்து தோன்றுமே, தோன்றிநின்ற சிற்பரமதனால் உள்ளச் செயலறுத்திட உதிக்கும் தற்பரமாகி நிற்றல் சாக்கிராதீதந் தானே (8) எனவரும் சிவப்பிரகாசச் செய்யுளாகும். இதன்கண் குறித்தவாறு தத்துவம் முப்பத்தாறும் நீங்கியதே முத்தி யென்பதற்கு முப்பதும் ஆறும் படிமுத்தி யேணியாய் ஒப்பிலாப் பேரண்டத் துள்ளில் வெளிபுக்குச் செப்ப வரிய சிவங்கண்டு தான்தெளிந் தப்பரி சாகி அமர்ந்திருந் தாரே (126) எனவரும் திருமந்திரத்தை உதாரணங்காட்டுவர் மதுரைச் சிவப்பிரகாசர். ஆன்மா ஆணவத்தால் மறைப்புண்டு அறியாமையாய்க் கிடப்பதுஞ் செய்யாமல்,அகக்கரணம் புறக்கரணங்களோடுங்கூடிச் சகலனாய்ச் சத்தாதி விடயங்களோடும் கூடிச் சீவிப்பதுஞ் செய்யாமல் நின்ற இடமே சாக்கிராதீதம் என்பதற்கு, நினைப்பு மறப்பு மிலாத விடத்தே வினைப்பற் றறுக்கும் விமல னிருப்பன் வினைப்பற் றறுக்கும் விமலனை நாடி நினைக்கப் புகிலவன் நீளிய னாமே (2970) இரவும் பகலு மிலாத விடத்தே குரவஞ் செய்கின்ற குழலியை நாடி அரவஞ் செய்யாதவ ளோடுஞ்சந் திக்கிற் பரவஞ் செயாவகைப் பாலனு மாமே (1134) நின்றவச் சாக்கிரந் துரியம தானால் மன்றனும் அங்கே மணஞ்செயா நின்றிடும் மன்றன் மணஞ்செயின் மாயையும் மாய்ந்திடும் அன்றே யிவனும் அவனென லாமே (2227) என்னுந் திருமந்திரப் பாடல்களை அவ்வுரையாசிரியர் எடுத்துக் காட்டுவர். மேலான நிட்டையினைப் பெறுதற்குப் பக்குவ முடையவர்கள் ஆசாரியனிடத்திலே உண்மையைப் பெற்று அநுபவத்தில் அறிகிறதொழிய வெறும் நூலறிவினாலே அறிதல் இயலாது என்பதற்கு, காட்டுங் குறியுங் கடந்தவர் காரணம் ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன் கூட்டுங் குருநந்தி கூட்டிடின் அல்லது ஆட்டின் கழுத்தின் அதற்கறந் தற்றே (2937) என்னுந் திருமந்திரத்தை மேற்கோளாகக் காட்டுவர் மதுரைச் சிவப்பிரகாசர். தத்துவங்களும் ஆன்மாவும் தம்மிற் கூடிச் சீவிக்கும் முறைமையும், அவ்வாறு சீவிக்கும் பொழுதே அவையிரண்டும் பகல் விளக்குப்போலே தற்போதம் மழுங்கி நிற்க அருளொளி மேலிட்ட நிலையில் ஆன்மா அவ்வருளோடுங் கூடிச் சிவாநுபவத்தைப் பெறும் முறைமையும் அறிவுறுத்துவது, பற்றிடுங்கருவி யாவும்படர்ந்துணர் வளிக்குங்காலை உற்றறிந்திடுவ தொன்றின் உணர்வினின் உண்மையாகும் மற்றது பகல்விளக்கின் மாய்ந்திட வருவதுண்டேல் பெற்றிடும் அதனை மாயப் பிறப்பினை யறுக்கலாமே எனவரும் சிவப்பிரகாசமாகும். பகல்விளக்குப்போல் என்றது ஆன்மா தற்போதம் கெட்டு நிற்றல். இதற்குப் பிரமாணம் திருவாசகத்தில், வான்கெட்டு மாருதமாய்ந்தழல் நீர் மண்கெடினுந் தான்கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக் கூன்கெட்டுயிர் கெட்டுணர்வு கெட்டென்னுள்ளமும் போய் நான்கெட்டவா பாடித்தெள்ளேணங் கெட்டாமோ எனவும், திருமந்திரத்தில் ஒத்திட்டிருக்க வுடம்போடுயிர்தான் செத்திட்டிருப்பர் சில சிவயோகிகள் (121) எனவும் கண்டு கொள்க என்பர் மதுரைச் சிவப்பிரகாசர். புலன்களையடக்கித் தவநெறியில் நின்று எல்லாப் பொருள்களும் ஒடுங்குதற்கு நிலைக்களமாகிய ஞேயத்தில் (பரம்பொருளில்) ஒன்றி நிற்போர் அடையும் பயன்களை யுணர்த்துவது, ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையு மில்லை இராப்பக லில்லை படும் பயனில்லை பற்றுவிட் டோர்க்கே (1624) எனவரும் திருமந்திரமாகும். எல்லாப் பொருள்களும் ஒடுங்குதற்குக் காரணமான சிவபரம் பொருளினிடத்தே ஒன்றி நிலைபெற்ற தவச்செல்வர்களாகிய பெருமக்களது உள்ளமானது உலகில் நேரும் இடையூறுகளையெண்ணித் துளக்கமுறுவதில்லை. அந்நிலையில் அங்குக் கூற்றுவனும் அணுகுவதில்லை. துன்பமும் இல்லை, இரவு (மறப்பு) பகல் (நினைப்பு) என்ற வேற்றுமையில்லை, (யான் எனது என்னும் இருவகைப்) பற்றுக்களை விட்டொழித்தோராகிய அவர்கட்கு (இவ்வுலகிற் பிறரால்) அடையவேண்டிய பயன் எதுவும் இல்லை. (எனவே ஒன்றாலுங் குறைவின்றிப் பேரின்ப நிலையில் வாழ்வார்கள்) என்பது இதனால் உணர்த்தப்படும் பொருளாகும். இதன்கண் ஒடுங்கி என்றது, உலகுயிர்களெல்லாம் ஒடுங்குதற்க் காரணமாகிய சங்காரக் கடவுளை, சிவஞானபோதம் முதற்சூத்திரத்தில் அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் தோற்றியதிதியே, ஒடுங்கி மலத்துளதாம் எனச் சங்கார காரணனாகிய இறைவனை ஒடுங்கி என்ற பெயராற் குறித்தார் மெய்கண்டார். ஒடுங்கி மலத்துளதாம் என்ற தொடர்க்கு ஒடுங்கின சங்காரத்தினல்லது உற்பத்தியில்லை என அவர்தாமே உரை வரைந்திருப்பதால் ஒடுங்கி என்பதனை எல்லாப்பொருள்களும் தன்கண் ஒடுங்குதற்கு நிலைக்களமானவன் என்ற பொருளில் சிவபொருமானைக் குறித்த பெயராகவே ஆண்டுள்ளார் என்பது நன்கு தெளியப்படும். இச்சூத்திரத்து அந்தம் ஆதி என்மனார் புலவர் என அவர் கூறுமாறு சங்கார காரணனாகிய சிவபெருமானே உலகினை மீளவும் தோற்றுவிப்பவன் என்பது, தொல்லூ ழிதடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற் பல்வயினுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான் போல் எனவரும் கலித்தொகைத் தொடர் கொண்டு முன்னர் வலியுறுத்தப் பட்டது. எனவே இறைவனைக் குறித்ததென மெய்கண்டார் சுட்டிய பெயர், ஒடுங்கிநிலை பெற்ற உத்தமர் உள்ளம் என வரும் இத் திருமந்திரத்தில் முன்னரே இடம் பெற்றுள்ளமை இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும். ஒடுங்கி நிலைபெற்ற என்பதற்கு ஒடுங்கியாகிய இறைவனிடத்தே ஒன்றி நிலைபெற்ற எனப் பொருள் கொள்ளுதலே ஏற்புடையதாகும். அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும் சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால் ஒன்று மிருசுடராமரு ணோதயந் துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே (2001) எனவரும் திருமந்திரப் பொருளை உளங்கொண்ட உமாபதி சிவாசாரியார் குருமுதல்வராகிய மெய்கண்டார் அருளிய சிவஞானபோதத்தையும் அதன்வழி நூலாகிய அவர்தம் மாணவர் அருணந்தி சிவாசாரியார் அருளிய சிவஞான சித்தியையும் பின்பற்றிக் கருத்திலுறை திருவருளும் இறைவன் நூலுங்கலந்து தாம் இயற்றிய சார்பு நூலுக்குச் சிவப்பிரகாசம் எனப் பெயரிட்டுள்ளளமை இங்குக் குறிப்பிடத்தகுவதாகும். திருமந்திரத்திலிருந்தும் மெய்கண்ட நூல்களிலிருந்தும் இதுகாறும் எடுத்துக்காட்டிய ஒப்புமைப் பகுதிகளைக் கூர்ந்து நோக்குங்கால் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார் உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் முதலிய சைவசித்தாந்தச் சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் பத்தாந்திருமுறையெனப் போற்றப் பெறும் திருமூலர் திருமந்திரமே முதல் நுலாகத் திகழும் தனிச் சிறப்புடையதென்பது நன்கு புலனாதல் காணலாம். 9. திருமுறைகளில் இடம்பெற்றுள்ள சைவ சித்தாந்த உண்மைகள் காரைக்காலம்மையார் திருவருள் ஞானம் பெற்றவர் காரைக்காலம்மையார் திருவருள் ஞானமாவது முதலிகள் மூவர் (தேவார ஆசிரியர் மூவர்) காரைக்காலம்மை முதலாயினோர்க்குண்டாகிய ஞானமென அறிக என மதுரைச் சிவப்பிரகாசர் கூறுதலால் இவ்வுண்மை நன்கு தெளியப்படும். காரைக்காலம்மையார் இறைவனருளாற் பெற்ற திருவருள் ஞானத்தின் பயனாகத் திகழ்வன அவர் அருளிய மூத்த திருப்பதிகங்கள் இரண்டும் திருவிரட்டை மணிமாலையும் அற்புதத் திருவந்தாதியும் ஆகிய திருவருட்பனுவல்களாகும். அவற்றுள் அற்புதத் திருந்தாதி யென்பது இறைவனருளால் தம் உள்ளத்துத் தோன்றிய சிவஞானத்தின் ஒருமைப்பாட்டினால் உமையொரு கூறனாகிய இறைவனைப் பாடிப்போற்றியதாதலின் அப்பெயர்த் தாயிற்று. அற்புதம் - ஞானம். இந்நூல் ஓதுதற்கு இனிமையும் எளிமையும் உடையதாய் உணர்தற்கு அரிய சிவஞானத்து இயல்பினைத் தெளிவுபடுத்துவதாகும். காணப்படும் உலகம் காண்டற்கரிய கடவுளாகிய ஒருவனால் தோற்றுவிக்கப்பெற்ற உள்பொருளே என்பதும், யாது யாண்டு ஒடுங்கும் அஃது அதனில் உற்பத்தியாம், மண்ணிற் குடம்போலும் என்னும் விட்டு நீங்காமை இயல்பினால் உலகினை ஒடுக்கிய இறைவனே உலகத்தை மீளத்தோற்றுவிப்பவனும் ஆவன் என்பதும் சைவசித்தாந்தக் கொள்கையாகும். இக்கொள்கை இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான தோற்றி இறைவனே யீண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே எந்தாய் எனவிரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அது மாற்றுவான் (அற்புதத். 5) எனவரும் அற்புதத்திருவந்தாதியில் இடம் பெற்றுள்ளமை காணலாம். (எப்பொருளிலும் நீக்கமறத் தங்கியிருத்தலால்) இறைவன் என்னும் காரணப் பெயருடைய கடவுளே மன்னுயிர்களுக்கு உடல் கருவி உலகு நுகர்பொருள்களைப் படைத்தளிப்பவன், அவற்றை மீண்டும் ஒடுக்குதலைச் செய்பவனும் அவ்விறைவனே. எம் தந்தையே எனப் போற்றி வழிபடும் உயிர்களாகிய எங்கள் மேல் பொறுத்தற்கரிய துன்பங்கள் வந்து வருத்துமாயின் அவற்றைப் போக்கி இவ்வுலகில் வாழச் செய்பவனும் அவ்விறைவனே என்பது மேற்காட்டிய திருப்பாடலின் பொருளாகும். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் நம்மால் அணுகமுடியாத பரவெளியிலுள்ளான் என்று சொல்லுவார் சொல்லுக. மேலும் தேவருகத்துள்ளான் என்று சொல்லுவார் சொல்லுக. அப்பெருமான் எனது நெஞ்சமாகிய அணி இடத்தில் இருந்து அன்பர்கட்கு அருள் புரிகின்றான் என யான் உறுதியாகச் சொல்கின்றேன் என்பார், வானத்தா னென்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்னெஞ்சத் தானென்பன் யான் (அற்புதத். 6) என்று அருளிச் செய்தார் காரைக்காலம்மையார். இதனால் இறைவன் உயிர்தோறும் உயிர்க்குயிராய்க் கலந்துள்ள திறம் நன்கு புலப்படுத்தப் பெற்றமை காணலாம். உலகமெல்லாவற்றையும் ஆள்விப்பதும் உயிர்களின் பிறவி நோயைப் பொன்றக் கெடுப்பதும் ஈசனது திருவருளேயாகும். அத்திருவருளின் துணைகொண்டே மெய்ப்பொருளாகிய சிவபரம்பொருளைக் கண்டு வழிபடும் நற்பேறுடையனாயினேன். அடியேனுக்கு எக்காலத்தும் எல்லாப் பொருளாகவும் நின்று துணைபுரிவது அத்திருவருளேயாகும் என்பார், அருளே யுலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு (அற்புதத். 9) என இறைவனோடு பிணிப்பின்றியுள்ள திருவருட்சத்தியே உலகுயிர்களை இயக்கி நிற்குந் திறத்தினை விரித்துரைத்தார். அவனருளே கண்ணாகக் கொண்டு தன்னைச் சிந்தித்துக் காண வல்ல தவச்செல்வர்களுக்கு அவர்களது உள்ளத்துள்ளே பேரொளிப் பிழம்பாகத் தோன்றியருள்புரிதல் அருளாளனாகிய இறைவனது இயல்பாகும். அப்பெருமானைப் புறத்தே கண்டு மகிழ வேண்டுமென விரும்புவார்க்கும் அவர்கள் விரும்பிய வண்ணமே எதிர் தோன்றிக் காட்சியளிக்கவல்ல எளிமைத் தன்மைவாய்ந்த அருளாளன் அவன், அவனைக் கைதொழுது போற்றும் மெய் யடியார்களுக்கு அவனது திருவுருவத்தைக் காணுதல் இயலும் என்பது அம்மையாரது உள்ளத்துணிபாகும். அறியும் இயல்புடைய ஆன்மாவேயாய் ஒற்றித்து நிற்பவனும் இறைவனாகிய அவனே. அங்ஙனம் உயிர்களோடு வேறறக் கலந்து நிற்பினும் உயிர்களாகிய அவற்றின் தன்மை தன்னைப் பற்றாதவாறு தான் அவற்றின் வேறாக நின்று அவ்வுயிர்களுக்குப் பொருளின் இயல்பினை உள்ளவாறு அறிவித்தருள்பவனும் அவனே. கண்களுக்குப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு காட்டித் தானும் உடனிருந்து காணும் உயிரைப்போன்று, உயிர்களுக்குப் பொருளின் இயல்பினை உள்ளவாறு அறிவுறுத்தி அவற்றொடு பிரிப்பின்றி உயிர்க்குயிராய் உடனிருந்து அறிந்து உதவிசெய்பவனும் அவனே. எல்லாவற்றையும் இருந்தாங்கு அறிகின்ற மெய்யுணர்வே திருமேனியாகக் கொண்டு விளங்குபவனும் அவனே. விரிந்து ஒளிதரும் சுடர்ப்பொருள்களும் நிலனும் வானும் ஆகிய உலகப்பொருள்கள் எல்லாவற்றோடும் கலந்து நின்று உலகத்தை இயக்கி நிற்பவனும் அம்முதல்வனே என உலகுயிர்களோடு இறைவனுக்குள்ள அத்துவிதத் தொடர்பினை விளக்குவது, அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவா யறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே யவன் (அற்புதத். 20) எனவரும் அற்புதத் திருவந்தாதியாகும். உயிரின் தூண்டுதலின்றித் தொழிற்படாத கண் ஓருருவத்தைக் காணுங்கால் உயிரினது உணர்வு எனவும் கண்ணொளியெனவும் பிரித்துணரவாராது இரண்டன் காட்சியும் ஒன்றனையொன்றுவிடாது அத்துவிதமாய் ஒருங்கே நிகழுமாறு போல, முதல்வனது காட்டும் உதவியின்றி ஒன்றையும் தானே காணமாட்டாத உயிர், ஒருபொருளை அறியுங்காலும் முதல்வனது பேரறிவு உயிரறிவு எனப் பிரித்துணர வாராது வேறன்றி உடனாய்க் கலந்துநிற்ப முதல்வனும் அவ்வாறு உயிரோடு கலந்து நின்று உயிருக்குத் தான் அறிவித்ததொன்றனை அவ்வுயிர் அறிந்ததென்றும் அதனைச் செலுத்திநின்று தான் அறிந்ததொன்றும் பகுத்தறிய வாராது இருவகையறிவும் ஒருங்கேநிகழுமாறு உயிர்கட்குச் செய்துவரும் இவ்வுதவியினைக் காணும் உபகாரம் என்பர் சைவ சித்தாந்திகள். இறைவன் உயிர்கட்குச் செய்யும் இவ்வுபகாரம் உயிர்களது பெத்தநிலையிலும் (கட்டு நிலையிலும்), வீட்டு நிலையிலும் (முத்தி நிலையிலும்) ஒரு பெற்றித்தாய் நிகழுமாறு செய்யும் அத்துவித நிலையினை இத்திருவந்தாதி இனிது புலப்படுத்தல் அறியத்தகுவதாகும். அவையேதானேயாய் (சிவ.சூ. 2) என மெய்கண்டாரும், உலகெலாமாகி வேறாய் உடனுமாய் (சித்தியார்) என அருணந்தி சிவாசாரியாரும் கூறிய அத்துவிதவியல்பு இத்திருவந்தாதியில் இடம் பெற்றுள்ளமை கூர்ந்துணரத் தகுவதாகும். அத்துவிதமாவது, பேதப்பொருள் இரண்டும் தம்முள் அபேதமாதற்குரிய சம்பந்த விசேடம்.................cÆ® ஒன்றனையறிதல் முதல்வன் உடனின்றறிதலையின்றி அறிவித்தல் மாத்திரையான் அமையாதென்பது, தொண்டனேன் நினையுமா நினையே விரும்புமா விரும்பே (திருவிசைப்பா) ........... இவ்வாறு முத்திநிலைபற்றியோதிய திருவாக்குக்களாலும் அறிக. இவ்வியல்பு நோக்கியன்றே அறிவானுந் தானே அறிவிப்பான்தானே என்றோதிய அம்மை, அறிவாய் அறிகின்றான் தானே எனவும் ஓதியதூஉம் என்க. முன் அறிதல் அறிவித்தற்பொருட்டு எனவும், பின் அறிவாயறிதல் விடயத்தில் அழுந்துவித்தற் பொருட்டு எனவும் கொள்க (சிவஞானபோதச் சிற்றுரை, சூ. 11) எனச் சிவஞான முனிவர் இத்திருப்பாடலுக்குக் கூறிய விளக்கம் ஆழ்ந்துணரத்தகுவதாகும். அவனே யிருசுடர் தீயாகாச மாவான் அவனே புவிபுனல் காற்றாவான் - அவனே இயமானனாய் அட்டமூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து (21) எனவரும் இப்பாடல் முன்னர்க் கூறியபடி இறைவன் உலகெலாமாகி வேறாய் உடனுமாய் நிற்கும் முறைமையினை விரித்துரைப்பதாகும். (முன்னைத் திருப்பாடலிற் கூறிய இயல்பினனாகிய) அவ்விறைவனே ஞாயிறு திங்கள் என்னும் இருசுடர்களாகவும் தீயாகவும் ஆகாயமாகவும் விளங்குபவன். அவனே நிலம், நீர், காற்று என்னும் இவையாவும் நிற்பவன். ஆன்மாவாகியும் (இரு சுடர் முதல் உயிர் ஈறாக எண்ணப்பட்ட) என்பேருருவினனாகியும் ஞானமே திருமேனியாகத் திகழ்பவனாகி (அன்பர்க்கு) எளிவந்து அருள் செய்து நிற்பவனும் அவ்விறைவனே யாவன் என்பது இதன் பொருளாகும். இயமானன் - வேள்வித்தலைவன், என்றது ஆன்மாவை. ஞானமேயாகிய தனது உண்மைத் திருமேனியேயன்றி உலகப் பொருள்கள் எல்லாவற்றோடும் அத்துவிதமாய்க் கலந்து நிற்றலால் இருசுடர் முதலாகவுள்ள இவற்றையும் தனக்குரிய திருமேனியாகக் கொண்டுள்ளான் என்பது கருத்தாகலின் அட்டமூர்த்தியுமாய் என்புழி உம்மை எச்சப் பொருளதாய் நின்றது. ஞானமயனாகி வந்து நின்றானும் அவனே என இயைத்துரைக்க. கி.பி. ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிலவிய அருளாசிரியர்கள் திருமூலநாயனார், காரைக்காலம்மையார் காலத்தையடுத்துக் கி.பி. ஏழு எட்டாம் நூற்றாண்டுகளில் தோன்றிச் சிவநெறியினை வளர்த்த அருளாசிரியர்கள் சைவ சமய குரவர்கள் எனப் போற்றப்பெறும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவரும் எல்லாம் எல்ல இறைவனைப் பண்பொருந்தப் போற்றிப் பரவிய இன்னிசைச் செழும்பாடல்கள் தேவாரம் என்ற பெயரால் ஏழு திருமுறைகளாகப் பகுக்கப்பெற்றன என்பதும் அவற்றுள் ஆளுடையபிள்ளையாராகிய திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் ஒன்று, இரண்டு, மூன்றுஆம் திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள் நான்கு, ஐந்து, ஆறாம் திருமறைகளாகவும், நம்பியாரூரராகிய சுந்தரர் அருளிய திருப்பதிகங்கள் ஏழாந்திரு முறையாகவும் வகுக்கப்பெற்றன என்பதும் மணிவாசகப்பெருமானாகிய திருவாதவூரடிகள் அருளிய திருவாசகம் திருச்சிற்றம்பலக்கோவை என்னுமிரு நூல்களும் எட்டாந்திருமுறையாக வகுக்கப்பெற்றன என்பதும் அறிஞர் பலரும் நன்கறிந்த செய்திகளாகும். இறைவனருள் பெற்ற செம்புலச் செல்வராகிய இந்நால்வரும் சிவபரம்பொருளைப் பரவிப் போற்றிய திருவருளிலக்கிய மாகிய இத்தோத்திரப் பாடல்களில் கடவுள், உயிர், உலகம் என்னும் முப்பொருளுண்மையும் அவற்றின் இலக்கணமும் மன்னுயிர்கள் இறைவனை வணங்கிப் பிறவிப் பிணிப்பி னின்றும் விடுபட்டு உய்தி பெறுதற்குரிய சாதனமும் இறைவன் திருவருளைப் பெற்றோர் அடையும் பேரின்ப நிலையாகிய வீடுபேற்றியல்பும் ஆகிய சைவசித்தாந்தத் தத்துவக் கொள்கைகள் இடம் பெற்றுள்ளன. திருவருள் ஞானம் பெற்ற பெருமக்கள் அருளிய சைவத் திருமுறை களாகிய இவ்வருள்நூல்களை அன்புடன் பயின்று சிவபரம் பொருளைச் சிந்தித்துப் போற்று சிவஞானச் செல்வர் களாகிய திருவியலூர் உய்வந்த தேவநாயனார் அவர்தம் மாணாக்கர்க்கு மாணாக்கராகிய திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார், மெய்கண்ட தேவநாயனார், அவர்தம் மாணாக்கர் அருணந்தி சிவாசாரியார், திருவதிகை மனவாசகங்கடந்தார், மறைஞான சம்பந்தர் மாணாக்கராகிய உமாபதி சிவாசாரியார் ஆகிய பெருமக்கள் அருளிய திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலிய சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் சைவத்திரு முறைகளின் பயனாகத் தோன்றிய செந்தமிழ்த் தத்துவநூல்களாகும். திருமுறைகளின் பயனாகத் தோன்றியனவே இச் சைவசித்தாந்த சாத்திரங்கள் என்பது திருமூலநாயனார் அருளிய திருமந்திரப் பொருளை இந்நூல்கள் எடுத்தாண்ட திறத்தினை விளக்குமிடத்து நன்கு எடுத்துக்காட்டப்பெற்றது. அவ்வாறே தேவாரத் திருமுறைகளில் சைவ சித்தாந்தத் தத்துவக் கொள்கை வேரூன்றி விளங்குந் திறத்தை இங்கு ஒரு சிறிது நோக்குதல் ஏற்புடையதாகும். தேவாரத் திருமுறைகளிற் சைவசித்தாந்தம் மூவாதபேரன்பின் மூவர் முதலிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களில் அறிவுறுத்தப் பெறும் பொருள்கள் பற்றிச் சிவநெறிச் செல்வர் பலர் பலதிறமாகப் பகுத்துச் சிந்தித்துள்ளார்கள். வித்தகப்பாடல் முத்திறத் தடியரும் திருவாய் மலர்ந்தருளிய தேவாரத் திருப்பதிகங்கள் முழுவதனையும் நாடோறும் ஓதி மகிழ விரும்பிய சிவாலய முனிவர் என்பவர்க்குப் பொதியின் முனிவராகிய அகத்தியர், மூவர் திருப்பதிகங்களிலுமிருந்து இருபத்தைந்து பதிகங்களைத் திரட்டித்தந்து, அத்திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணஞ் செய்வோர் மூவர் தேவாரப்பதிகங்கள் முழுவதனையும் ஓதிய பெரும்பயனைப் பெறுவர் என அறிவுறுத்தி மறைந்தருளினார் என்றதொரு வரலாறு செவிவழிச் செய்தியாக வழங்கப்பெற்று வருகின்றது. அகத்திய முனிவர் சிவாலய முனிவர் பொருட்டுத் திரட்டித் தந்த தேவாரப் பதிகங்கள் இருபத்தைந்தும் அகத்தியர் தேவாரத்திரட்டு என்ற பெயருடன் பாராயணஞ் செய்யப் பெற்று வருவதனை அறிஞர் பலரும் நன்குணர்வர். அகத்தியர் தேவாரத்திரட்டில், தேவாரத் திருப்பதிகங்களின் திருவுள்ளக்கிடையாகக் குருவருள், திருவெண்ணீறு (பரையின் வரலாறு), அஞ்செழுத்துண்மை, கோயிற்றிறம், சிவனுருவம், திருவடி, அருச்சனை, அடிமைநிலை என்னும் எண்வகைப் பொருட் பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இவையெட்டும், குருவருளும் வெண்ணீறெழுத்தஞ்சும் கோயில் அரனுருவும் என்தலை மேலாக்கும் - திருவடியும் சிட்டான அர்ச்சனையும் தொண்டும் சிவாலயர்க்கென் றிட்டார் அகத்தியனார் எட்டு எனவரும் வெண்பாவிற் குறிக்கப்பெற்றன. தோடு கூற்று பித்தா மூன்றும், பீடுடைத் தேசிகன் பேரருளாகும் எனவரும் அகத்தியத் தேவாரத் திரட்டின் சிறப்புப்பாயிரத்தைக் கூர்ந்து நோக்குங்கால் மூவரருளிய தேவாரத் திருப்பதிகங்கள் முழுவதனையும் மேற்குறித்த குருவருள் முதலிய எண்வகைப் பொருள்பற்றிப் பகுத்துணர்ந்து கொள்ளுதல் சிவநெறிச் செல்வர்கள் ஆராய்ந்து கண்ட பொருட்பாகு பாடாம் என்பது நன்கு தெளியப்படும். முற்குறித்த அகத்தியர் தேவாரத்திரட்டினைப் போன்று முழுப்பதிகங்களாகத் தொகுக்கப்படாமல், சைவ சித்தாந்தச் செம்பொருட்டுணிபினை இனிது விளக்கும் குறிப்புடைய தனித்தனிப் பாடல்களாக உமாபதி சிவாசாரியாரால் தொகுக்கப்பெற்றது. திருமுறைத் திரட்டு என்பதாகும். இது தேவார அருள்முறைத் திரட்டு எனவும் வழங்கப் பெறுகின்றது.சைவ சமய சந்தானகுரவருள் ஒருவராகிய உமாபதி சிவாசாரியார் கருத்திலுறை திருவருளும் இறைவனூலுங்கலந்து சிவப்பிரகாசம் திருவருட்பயன் முதலிய சைவசித்தாந்த சாத்திரநூல்களை இயற்றும் நிலையில், தாம்கூற எடுத்துக்கொண்ட சைவசமயத் தத்துவ நுண்பொருளுக்கு அரண்செய்யும் முறையில் முன்னூல் சான்றாகத் தொகுத்தளிக்கப்பட்ட சிறப்புடையது இத்திருமுறைத் திரட்டாகும். இச்செய்தி முன்னூல் சான்று மருவுதிருமுறைத்திரட்டு வைத்தனன் மன்னுயிர்க்கே எனவரும் ஞானதீக்கைத் திருவிருத்தத்தால் நன்கு விளங்கும். இத்திருமுறைத் திரட்டில் மூவர் தேவாரப் பதிகங்களிலிருந்து தொண்ணுற்றொன்பது திருப்பாடல்கள் தொகுக்கப்பெற்றுள்ளன. இவை 1) பதிமுதுநிலை, 2) உயிரவைநிலை, 3) இருண்மலநிலை, 4) அருளதுநிலை, 5) அருளுருநிலை, 6) அறியும்நெறி, 7) உயிர் விளக்கம், 8) இன்புறுநிலை, 9) அஞ்செழுத்தருள்நிலை, 10) அணைந்தோர் தன்மை எனப் பத்து அதிகாரங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளன. இப்பத்துத் தலைப்புக்களும் இவ்வாசிரியர் இயற்றிய திருவருட்பயன் என்ற நூலிலும் இம்முறையே அமைந்துள்ளன. இவ்வமைப்பினை நுணுகி நோக்குங்கால் திருவருட் பயன் என்பது, திருவருட்பனுவலாகிய தேவாரத் திருமுறையின் பயனாகச் சைவசித்தாந்தத் தத்துவவுண்மைகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நோக்கத்துடன் உமாபதி சிவாசாரியாரால் இயற்றப்பெற்ற சைவசித்தாந்த சாத்திரம் என்பது நன்கு தெளியப்படும். தேவாரத் திருப்பதிகங்களில் அறிவுறுத்தப்பெறும் நற்பொருள்களை நாள்தோறும் சிந்தித்துணரும் முறையில் தொகுக்கப்பெற்றுள்ள அகத்தியர் தேவாரத் திரட்டு, திருமுறைத் திரட்டு என்னும் இத்தொகுப்புக்களின் அமைப்பினைக் கூர்ந்து நோக்குங்கால், நம் முன்னோர்கள் தேவாரத் திருப்பதிகங்களின் பொருள் நலங்களைக் குருவருள் முதலிய எட்டு வகையாலும் பதிமுதுநிலை முதலிய எட்டிறந்த பலவகையானும் பகுத்து ஆராய்ந்துள்ளார்கள் என்பது நன்கு புலனாகின்றது. தேவாரத் திருப்பதிகங்கள், திருவாசகம் முதலிய சைவத் திருமுறைகளின் சாரமாக அமைந்தனவே சிவஞான போதம் முதலிய சாத்திரங்கள் ஆகும். சைவ சமய குரவராகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் பெற்ற செம்புலச் செல்வர்கள் ஆதலால் அப்பெருமக்களைப் பண்டை நற்றவத்தால் தோன்றிப் பரமனைப் பத்தி பண்ணும் தொண்டர் எனவும் சிவாகமங்களிற் குறிப்பிட்டபடி கால்முறையி னன்றி இறைவன் தானே எளிவந்து அவர்களை ஆட்கொண்டு சிவகதியிற் சேர்த்தருளினன் எனவும் மெய்ந்நூல்கள் கூறும் கொள்கைகளால் வேறுபாடுடைய எல்லாச்சமயங்களாலும் வழிபடப் பெறும் இறைவன் மாதொருபாகனாகிய சிவபெருமானே எனத் தெளிந்து சமயங்களிடையே காணப்படும் கொள்கை வேறுபாடுகளைக் கருதாமல் எவ்வுயிர்க்கும் இறைவன் ஒருவனே என்றுந் தெளிந்து வழிபடுதலொன்றே உலகமக்கள் உய்தி பெறுதற்குரிய நன்னெறி யாகும் என்பது சைவசமய அருளாசிரியர்களின் துணிபாகும். எத்தவத்தோர்க்கும் இலக்காய்நின்ற எம்பெருமான் (1-44-10) எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க் கிங்கேயென்றருள் புரியும் எம்பெருமான் (2-40-6) என ஆளுடையபிள்ளையாரும், விரிவிலா அறிவினார்கள் வேறொரு சமயஞ்செய்தே எரிவினாற் சொன்னாரேனும் எம்பிராற்கேற்றதாகும் பாராழிவட்டத்தார் பரவியிட்ட பன்மலரும் நறும்புகையும் பரந்து தோன்றும் (6-18-6) ஆரொருவர் உள்குவாருள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந்தோன்றும் (6-18-11) என ஆளுடைய அரசரும், அறிவினான் மிக்க அறுவகைச் சமயம் அவ்வவர்க்கங்கே ஆரருள் புரிந்து என ஆளுடைய நம்பியும் அருளிய பொருளுரைகள் எல்லாச் சமயத்தாரும் தனித்தனியே செய்கின்ற வழிபாடுகள் அனைத்தும் உலக முதல்வனாகிய ஒருபெருங்கடவுளையே சென்று சார்கின்றன என்பதும் சமயங்கடந்த தனிமுதற் பொருளாகிய அவ்விறைவனே எல்லாச் சமயத்தார்க்கும் எளிவந்து அருள்சுரக்கும் பேரருள் முதல்வனாகத் திகழ்கின்றான் என்பதும் ஆகிய பேருண்மையினை நன்கு வற்புறுத்துகின்றன. மக்கள் தாம் தாம் போற்றும் தெய்வத் திருவுருவவேறுபாடுகளாலும் தாம் தாம் மேற்கொண்ட தத்துவக்கோட்பாடாகிய கொள்கை வேறுபாடுகளாலும் பிற்காலத்திற் சமயங்களிடையே பிணக்குக்கள் தோன்றி மக்கள் வாழ்விலே குழப்பம் விளைவித்த நிலையில் சைவ சமய அருளாசிரியர்கள் அறிவுறுத்திய சமய ஒருமைப் பாட்டுணர்வினை மீண்டும் வலியுறுத்தும் நிலையில் அமைந்தது, சென்றநெறியெல்லாம் செந்நெறியாம்படி நின்ற பரிசறிந்துந்தீபற நீசெயல் செய்யாதேயுந்தீபற (37) எனவரும் திருவுந்தியாராகும். இது தன்முனைப்பின்றித் திருவருள் வழியொழுகினால் எல்லாநெறிகளும் நன்னெறியேயாகும் என வற்புறுத்துகின்றது. உலக மக்கள் தத்தம் வினைக்கு ஈடாகச் சென்ற வழிகள் எல்லாம் செவ்விய நன்னெறிகளாக அமையும்படி உயிர்களின் உள்ளும்புறம்பும் இறைவன் உறுதுணையாய் நின்று அருள்புரியும் திருவருளின் திறத்தினை அறிந்து தெளிவாயாக. நீயாக எந்தச் செயலையும் தன் முனைப்பினாற் செய்தலைத் தவிர்வாயாக என்பது இதன் பொருளாகும். இத்திருவுந்தியாரில் நெறி என்றது உலக மக்கள் மேற்கொண்ட சமயநெறிகளைச் சென்ற நெறி யெல்லாம் செந்நெறியாம் படி நின்ற பரிசு என்றது மக்கள் கடைப்பிடித்தொழுகுகின்ற எல்லாச் சமய நெறிகளும் ஏணிப்படிகளாக அமைய இவையனைத்தும் முடிவில் தன்கண் வந்து சேரும்படி எல்லோரையும் செந்நெறியாகிய சிவநெறிக் கேயுரியராகத் திருத்திப் பணிகொண்டு அருள் புரியவல்ல இறைவன் தானொருவனே யென்னும்படி எச்சமயத்தார்க்கும் எவ்வுயிர்க்கும் ஒப்ப அருள்கூர்ந்து நிற்கும் இறைவனது பொதுமை நிலையினை, ஆறு சமயத்தவரவரைத் தேற்றுந்தகையன தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே ஏற்றுந்தகையன இன்னம்பரான்றன் இணையடியே (4-100-7) எனவரும் அப்பர் அருண்மொழி இறைவனது இப்பொதுமை நிலையினை நன்கு புலப்படுத்தல் காணலாம். நீ செயல் செய்யாதே என்றது, இறைவனது திருக்குறிப்புக்குமாறாக நினது தற்போதத்தால் சிலசெயல்களைச் செய்யத் தொடங்கிப் பழிக்கு ஆளாகாதே என அறிவுறுத்தியவாறு. மேற்குறித்த திருவுந்தியாரின் பொருளை விரித் துரைப்பதாக அமைந்தது, யாதேனுங் காரணத்தால் எவ்வுலகி லெத்திறமும் மாதேயும் பாகன் இலச்சினையே - யாதலினால் பேதமே செய்வாய் அபேதமே செய்திடுவாய் பேதாபேதஞ் செய்வாய்பின் (82) எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். உலகப் பொருள்களில் யாதேனும் ஒன்றை ஆய்வுக்குரிய பொருளாகக் கொண்டு அதனதன் அமைப்புக்கும் இயக்கத்திற்கும் உரியதனை எதுவாகக் கொண்டு நோக்கினாலும் எல்லா வுலகங்களிலும் உள்ள எவ்வகைப் பொருள்களும் சத்தியுடன் கூடிய சிவனுடைய அடையாளமாகவே யமைந்திருத்தலால் (கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொரு ளுண்மையினை யுணரப் பெற்ற நீ) அழிந்துமாறும் இயல்பினதாகிய உலகமும், என்றும் அழியாவியல்பினதாகிய சிவமும் வேறு வேறு பொருள்கள் எனக் கொண்டாலும் கொள்க, உலகுயிர்களாய்க் கலந்து இயங்கும் நிலையில் எல்லாம் பிரமமே என அபேதமாகக் கொண்டாலும் கொள்க, அன்றி இவை சொல்லும் பொருளும்போல் ஒருவாற்றான் ஒன்றாதலும் ஒருவாற்றான் வேறாதலும் ஆகிய பேதாபேதப் பொருளெனக் கொண்டாலும் கொள்க (அது பற்றிக் கவலையில்லை) என்பது இதனால் அறிவுறுத்தப்படும் பொருளாகும். மேற்கூறிய பேதம், அபேதம், பேதாபேதம் என்னும் மூவகைகளும் ஒன்றைக் கடைப்பிடித்து இறைவனை நினைந்து வழிபாடு செய்வாயானால் எல்லாம் ஆம் இறைவன் இம்முத்திறமும் ஒருங்கமைய உலகுயிர்களோடு ஒன்றாய் வேறாய் உடனாய் இங்ஙனம் இரண்டறக் கலந்து விளங்கும் இயல்பினையுடையான் அவ்விறைவன் என்னும் அத்துவித உண்மை பின்பு உனக்கு நன்கு புலனாகும் என்பார் பின் என்றார். பின் என்பது எச்சமாய் நின்று, பின் உனக்கு எல்லாம் விளங்கும் என்னும் பொருளைத்தந்து நின்றது. எல்லாச் சமயத்தாராலும் மனமொழி மெய்களாற் சிந்தித்துத் துதித்து வழிபடப்பெறும் தெய்வம்ஒன்றே என்னும் இவ்வுண்மை யினை வலியுறுத்தும் முறையில் அமைந்தது, மனமது நினைய வாக்குவழுத்த மந்திரங்கள் சொல்ல இளமலர் கையிற் கொண்டங்கிச் சித்ததெய்வம் போற்றிச் சினமுதலகற்றி வாழுஞ் செயல் அறமானால் யார்க்கும் முனமொரு தெய்வம்எங்கும் செயற்கு முன்னிலையா மன்றே எனவரும் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும். ஆன்மபோதங்கெட எல்லாம் வல்ல இறைவனைத் தியானிக்கும் இயல்புடைய பெரியோர்கள், இவ்வுலக வாழ்வில் கருவி கரணச் சேட்டைகளின் நீங்கிச் சிவபரம் பொருளின் அருட் செயலே தம்பால் விளங்கப்பெற்றுத் திகழும் தூய நிலை சீவன் முத்தி நிலை எனப்படும். இங்ஙனம் பசுகரணங்களெல்லாம் பதிகரணங் களாகப் பெற்ற செம்புலச் செல்வர்களாகிய இப்பெருமக்களைக் காணுங் கரணங்களெல்லாம் பேரின்பமெனப்பேணும் அடியார் எனப் போற்றுவர் பெரியோர். அறவே நின்னைச் சேர்ந்த அடியார் மற்றொன்றறியாதார் சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்தாரே (திருவாசகம்) என்றவாறு, விழிப்புநிலையிலேயே உலகப்பொருள்களில் தோய்வற்று மேல்நிலையில் நின்று தன்செயலறச் சிவமேதானாகத் திகழும் திருவருள் நலம் வாய்க்கப்பெற்ற இப்பெருமக்களை, சாக்கிரத்தே அதீதத்தைப் புரிந்தவர்கள் உலகிற் சருவ சங்க நிவிர்த்திவந்த தபோதனர்கள் இவர்கள் பாக்கியத்தைப் பகர்வதுவென் இம்மையிலேயுயிரின் பற்றறுத்துப் பரத்தையடை பராவுசிவர் அன்றோ (சித்தியார், சூ. 8. விருத்தம் 85) எனப்போற்றுவர் அருணந்தி சிவாசாரியார். பராவுதல் - சஞ்சரித்தல். பராவுசிவர் என்றது, மக்கள் வடிவினை மேற்கொண்டு உலகிற் சஞ்சரிக்கும் சிவபரம்பொருள் என்னும் கருத்தில் சிவஞானிகளுக்கு வழங்கும் பெயராகும். நிராமய பராபர புராதன பரவுசிவராகவருளென் றிராவுமெதிராயது பராநிலை புராணனமராதி பதியாம் (3. 6. 6) எனவரும் ஆளுடையபிள்ளையார் தேவாரத்தில் இப்பெயர் இடம் பெற்றுள்ளமை காணலாம். பராவுசிவர் எனப்போற்றப்பெறும் இப்பெருமக்களை நடமாடுங்கோயில் நம்பர் (திருமந்திரம் 1857) எனக் குறிப்பிடுவர் திருமூலநாயனார். இங்ஙனம் தன் செயல் என்பது ஒன்றின்றி உயிர்முனைப் படங்கிச் சித்தம் சிவமாகப் பெற்ற மெய்யடியார்கள் இவ்வுலகிற் செய்யும் செயல் அனைத்தும் தவச்செயலாம் என்பதும், அவற்றை இறைவன் தன் செயலாகவே ஏன்றுகொண்டு அவரோடு ஒட்டி உடனாய் நின்று அருள்புரிவன் என்பதும் எனதுரை தனதுரையாக எனவும், உயிராவணமிருந்துற்று நோக்கி உள்ளக்கிழியின் உருவெழுதி உயிர் ஆவணஞ்செய்திட்டு உன்கைத்தந்தால் உணரப்படுவாரொடொட்டிவாழ்தி (6.25.1) எனவும், தொடர்ந்தென் சிந்தைத் தன்னுருவைத் தந்தவனை எனவும், சித்தஞ்சிவ மாக்கிச்செய் தனவே தவமாக்கும் அத்தன் (திருவாசகம்) எனவும், நற்செயலற்றிந்தநாமற்றபின்நாதன் தன்செயல் தானேயென்றுந்தீபற தன்னையே தந்தானென்றுந்தீபற (திருவுந்தியார் 6) எனவும் வரும் அருளனுபவமொழிகளால் இனிது விளங்கும். ஆற்றின் வழியேசென்று கடலிற்கலந்து உவர்த் தன்மை பெற்ற நீரானது கடலோதத்தால் மீளவும் ஆற்று நீருடன் கலந்தபொழுது அந்நீரையும், உவர்ப்பு சுவையுடையதாகச் செய்வது போன்று, சித்தம் சிவமாகப் பெற்ற ஞானிகளது உணர்வு, இறையருட்பெருக்கால் உலகிலேயே மீளவும் கலக்கநேரிட்டால் அக்கலப்பு, பாசப் பிணிப்புடைய மக்களுடைய மனமாயை கன்மங்களையும் நீக்கி நலஞ்செய்யும் ஆற்றலுடையது என்பர் பெரியோர். இவ்வாறு சிவமாந்தன்மைப் பெருவாழ்வினைப்பெற்ற அருட்செல்வர்கள்பால் இறைவன் உடனாய் நின்று அவர்களைக் கொண்டு அருட்செயல் பல நிகழ்த்தியருள்வன் என்பதற்கு எடுத்துக்காட்டாகத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமயகுரவர் நால்வரும் செய்தருளிய அற்புதங்களைத் திருக்களிற்றுப்படியார் 70, 71, 72, 73 ஆகிய பாடல்களில் விரித்துரைப்பர் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார். சைவ சமய குரவராகிய இவர்கள் இவ்வுலக வாழ்வில் உயிர்கள் படுந்துயரங்களை எண்ணிய நிலையில் நம்மனோருடைய மும்மலங்களையும் மாற்றும் அருமருந்தாகத் திருவாய்மலர்ந்தருளிய அருளுரைகளே தேவாரம் திருவாசகம் முதலிய அருள் நூல்களாகும். சிவஞானச் செல்வர்களாகிய இவர்கள், உலகமக்கள் அனைவரும் இறைவன் திருவருளைப் பெற்று உய்யும்படி சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகை நன்னெறிகளை அறிவுறுத்தி அந்நெறிகளில் ஒழுகிக் காட்டியுள்ளார்கள். அவற்றுட் சரியையாவது, திருக்கோயில்களில் அலகிடல், மெழுகல், மலர்கொய்து மாலை தொடுத்தல், இறைவனைப் புகழ்ந்து பாடுதல் முதலாக உடம்பின் தொழில்களாக நிகழ்வது. இதன் இயல்பினை, துண்ணெனவிரும்பு சரியைத் தொழிலர் தோணிபுர மாமே (3.81.7) கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி (2.43.5) என ஞானசம்பந்தரும், பெரும்புலர் காலைமாலை பித்தர்க்குப் பத்தராகி அரும்பொடு மலர்கள் கொண்டங்கார் வைத்தே யுள்ளேவைத்து விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினாலிட வல்லார்க்குக் கரும்பினிற்கட்டிபோல்வார் கடவூர்வீரட்டனாரே (4.31. 4) விளக்கினார் பெற்றவின்பம் மெழுக்கினாற் பதிற்றியாகும் துளக்கில் நன்மலர்தொடுத்தால் தூயவிண்ணேறலாகும் விளக்கிட்டார் பேறுசொல்லின்மெய்ந்நெறிஞானமாகும் அளப்பில கீதஞ்சொன்னார்க்கடிகள் தாம் அருளுமாறே (4.77.33) நிலைபெறுமாறெண்ணுதியேல் நெஞ்சேநீவா நித்தலும் எம்பிரானுடைய கோயில்புக்குப் புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப் பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித் தலையாரக்கும்பிட்டுக் கூத்து மாடிச் சங்கராசய போற்றிபோற்றியென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையேம் ஆதியென்றும் ஆரூரா வென்றென்றே அலறாநில்லே (6.31.3) எனத் திருநாவுக்கரசரும் விளக்கியுள்ளமை காணலாம். கிரியையாவது, திருக்கோயிலில் எழுந்தருளிய சிவலிங்கத் திருவுருவாகிய அருவுருவத் திருமேனியே பொருளென்றுணர்ந்து புறத்தேயும் அகத்தேயும் பூசனை புரிந்து வழிபடுதலாகும். இதன் இயல்பினை, நறைமலிதரு மலரொடுமுகை நகுமலர்புகை மிகுவள ரொளி நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர் குறைவிலபதம் அணைதரவருள் குணமுடை யிறையுறை வனபதி சிறைபுனலமர் சிவபுரமது நினைபவர் செயமகள் தலைவரே (1.21.4) எனவும், தடங்கொண்டதோர் தாமரைப்பூ முடிதன்மேற் குடங்கொண்டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட (1.32.3) எனவும், வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளுரே (2.43.5) எனவும் திருஞானசம்பந்தரும், கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை அப்போது மலர்தூவி யைம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே (4.7.3) எனவும், காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலாநிறைய நீரமையவாட்டிப் பூசனை யீசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே (4.76.4) எனவும், மறைகலந்த மந்திரமும் நீருங்கொண்டு வழிபட்டார் வானாளக் கொடுத்தியன்றே எனவும் திருநாவுக்கரசரும், அகத்தடிமை செய்யும் அந்தணன்தான் அரிசிற்புனல் கொண்டுவந்தாட்டுகின்றான் (7.9.6) எனவும், முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன் எனவும் நம்பியாரூரரும் குறித்துள்ளமை காணலாம், யோகமாவது, இறைவனுக்குரிய உருவம், அருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளுள் அருவத் திருவுருவமேயே பொருளென்றுணர்ந்து, இறைவனை உள்ளத்துள்ளே வைத்து வழிபடுதல். இதன் இயல்பினை, சினமலியறுபகை மிகுபொறி சிதைதருவகை வளிநிறுவிய மனனுணர்வொடு மலர்மிசையெழுதருபொருள் நியதமும் உணர்பவர் தனதெழிலுருவது கொடுவடை தகுபரனுறைவது நகர்மதிள் கனமருவிய சிவபுரநினைபவர் கலைமகள் தரநிகழ்வரே (1.21.5) என ஞானசம்பந்தரும், உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்துநோக்கில் கடம்பர் காளைதாதை கழலடி காணலாமே (4.75.4) உயிராவண மிருந்துற்று நோக்கி உள்ளக் கிழியின் உருவெழுதி உயிர் ஆவணம் செய்திட்டுன் கைத்தந்தால் உணரப்படுவாரோ டொட்டிவாழ்தி (6.25.1) என நாவுக்கரசரும், ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண்பொருள் (7.45.4) தேடுவன் தேடுவன் செம்மலர்ப்பாதங்கள் நாடொறும் நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல் மாடுவன் மாடுவன் வன்கைபிடித்து மகிழ்ந்துளே ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூ ரெம் அடிகட்கே (7.45.9) நாற்றானத் தொருவனை நானாயபரனை எனச் சுந்தரரும் தெளிவாகக் குறித்துள்ளார்கள். ஞானமாவது, மேற்குறித்த வண்ணம் உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் முறையே வழிபட்டுவர ஆன்மாவின்கண் நிகழும் பக்குவ முதிர்ச்சியாலே உள்ளவாறு மெய்யுணர்வு விளங்கி, உலகெலாங் கடந்தும் உயிர்க்குயிராய் அணுத்தொறும் விரவியும். என்றும் ஒருபெற்றியதாயுள்ள உண்மையறிவு இன்பமே இறைவனது திருமேனியாம் என்றும் முற்குறித்த உருவம் அருவுருவம் அருவம் என்பன பருமைவழியே நுண்மையினையுணர்தல் என்னும் முறைப்படி ஞானத்திரளாய் நின்ற இறைவனை உணர்தற் பொருட்டும் வழிபடுதற் பொருட்டும் கொண்ட திருமேனிகளேயென்றும் உணர்ந்து, முன்னர்க்குறித்த உடம்பின்தொழில் மனத்தொழில் இரண்டினையும் கைவிட்டுக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடுதல் ஆகிய அறிவுத் தொழிலளவில் அமைந்து இறைவனை வழிபடுதலாகும். ஞானநன்னெறியாகிய இதனை, நுண்ணறிவால் வழிபாடு செய்யுங்காலுடையான் (1.5.4) ஊனத்திருள் நீங்கிட வேண்டில் ஞானப்பொருள் கொண்டடிபேணும் (1.38.3) என ஆளுடையபிள்ளையாரும், ஞானத்தால் தொழுவார் சிவஞானிகள் ஞானத்தால் தொழுவேனுனை நானலேன் ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு ஞானத்தாயுனை நானுந் தொழுவனே (5.91.3) என ஆளுடைய அரசரும், நத்தார்புடை ஞானன் (7.80.1) ஞானமூர்த்தி நட் டமாடி (7.81.7) என ஆளுடைய நம்பியும் குறித்துள்ளமை இங்கு மனங் கொளத்தகுவதாகும். அறிதல் ஒப்புமையால் சரியை முதலிய நான்கும் ஞானமேயாம் எனவும், ஆயினும் அரும்பு மலர் காய் கனியாதல் போலச் சோபான முறையாகிய தம்முள் வேறுபாட்டால் முறையே ஒன்றற்கு ஒன்று அதிகமாய், நான்காம் எண்ணு முறைமைக் கண் நின்ற ஞானமே முடிவாகிய ஞானமாம் எனவும் எனவே இந்நான்கினும் அறிவுநுணுகி வளரவளர, அறியாமையை விளைக்கும் மலமும் அம்முறையே தேய்ந்து தேய்ந்து வருதலின் அவற்றின் பயனாகிய சாலோகம் முதலிய நான்கும் முத்தியேயாம் எனவும் ஆயினும் அம்மலநீக்கமும் அவ்வாறு நிகழும் சோபான முறையானே அவை ஒன்றற்கு ஒன்று ஏற்றமாய், அவற்றுள் நான்காம் எண்ணுமுறைமைக் கண் நின்ற சாயுச்சியம் ஒன்றே முடிவாகிய முத்தியாம் எனவும் கூறுவர் சிவஞானமுனிவர். இறைவனை அடைதற்குரிய இந்நால்வகை நெறிகளையும் முறையே, தாசமார்க்கம், சற்புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்கம் என வழங்குவர் சான்றோர். இந்நால்வகை நெறிகளையும் கடைப்பிடித்து ஒழுகுவோர் முறையே சாலோகம் (இறைவன் உலகினையடைதல்), சாமீபம் (இறைவனது அருகே இருத்தல்), சாரூபம் (இறைவனது உருவினைப் பெறுதல்) என்னும் பதமுத்தியையும், சாயுச்சியம் (இறைவனுடன் இரண்டறக் கலத்தல்) என்னும் பரமுத்தியையும் அடைவர் எனமெய்ந்நூல்கள் கூறும். இங்குக்குறித்த நால்வகை மார்க்கங்களையும் முறையே மகன்மைநெறி, தொண்டுநெறி, தோழமை நெறி, (இரண்டற) ஒன்றும்நெறி என வழங்குதல் பொருந்தும், நால்வகை நெறிகளின் இயல்பினையும் பயனையும் சிவஞான சித்தியார் எட்டாஞ்சூத்திரத்தில் வரும் 18 முதல் 22 வரையுள்ள திருவிருத்தங்கள் விரித்துரைக்கின்றன. மக்கள் விரும்பிச் செய்தற்குரிய வேள்விகள் கன்மவேள்வி, தவவேள்வி, செபவேள்வி, தியானவேள்வி, ஞானவேள்வி என ஐந்தாகும். இவற்றுள் முற்கூறப்பட்ட நான்கும் போகத்தையூட்டுவன. ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என ஐவகையாகக் கூறப்படும் ஞான வேள்வி ஒன்றுமே உயிர்கட்கு வீடுபேற்றை அளிக்கவல்லது. இதனை, ஞானநூல்தனையோதல் ஓதுவித்தல் நற்பொருளைக் கேட்பித்தல், தான்கேட்டல், நன்றா ஈனமிலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவனடி அடைவிக்கும் எழில்ஞானபூசை ஊனமிலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம் ஒன்றுக்கொன்று உயரும் இவை ஊட்டுவது போகம் ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோர் எல்லாம் என்ற பாடலில் அருணந்தி சிவனார் அறிவுறுத்தியுள்ளார். ஐவகையால் நினைவார்பால்அமர்ந்து தோன்றும் (6.18.3) எனவரும் நாவுக்கரசர் வாய்மொழி இங்கு நினைத்தற் குரியதாகும். மேற்குறித்த நால்வகை நெறிகளுள் தாதமார்க்கத்து இயல்பு திருநாவுக்கரசரிடத்தும், சற்புத்திர மார்க்கத்து இயல்பு திருஞானசம்பந்தரிடத்தும், சகமார்க்கத்தியல்பு நம்பியாரூரரிடத்தும் சன்மார்க்கத் திறம் மாணிக்கவாசகரிடத்தும் அன்னோர் தம் வரலாற்று நிகழ்ச்சிகளில் வெளிப்பட்டு விளங்குதல் காணலாம். சரியை வழி நின்றவர் அப்பர் எனவும், கிரியை வழி நின்றவர் சம்பந்தர் எனவும், யோக நெறி நின்றவர் சுந்தரர் எனவும், ஞானநெறி நின்றவர் மாணிக்கவாசகர் எனவும் கூறுதல் உண்டு. ஆயினும் சைவ சமய குரவராகிய இந்நால்வரும் எல்லாம் வல்ல இறைவனருளால் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் கைவரப்பெற்று முதிர்ந்த ஞான நெறியில் நின்ற செம்புலச் செல்வர்களே என்பது சேக்கிழார் முதலிய அருளாசிரியர்களின் துணிபாகும். இறைவன் எல்லாமாய் அல்லதுமாய் நிற்கும் இயல்புடையவன் எனவும், அம் முதல்வன் நம்மனோர்க்கு அருள்செய்யும் பொருட்டு மலைமகள் பாகமாக அருள் காரணத்தின் வருவார் என்றபடி அருளே திருமேனியாக அவ்வப்பொழுது அடியார்கள் விரும்பிய திருமேனியினைக் கொண்டு தோன்றி அருள்புரிவன் எனவும் தேவாரம் கூறும். நின்ற திருத்தாண்டகம் முதலிய திருப்பதிகப்பாடல்கள் இறைவனது எல்லாம் ஆகிய நிலைமையையும் மண்ணல்லை விண்ணல்லை என்பது முதலிய பாடல்கள் அவன் அல்லனாய் நிற்கும் நிலைமையையும் உணர்த்துவன. இறைவன் உருவம் அருவம் அருவுருவம் என்று சொல்லப்படும். மூவகையுள் ஒன்றிலும் அடங்காதவனாய் அப்பாற்பட்டு நிற்கும் இயல்பினன் ஆதலின் அம்முதல்வனை அம்மூவகையுள் அடக்கி உரைத்தல் பொருந்தாது என்பதனை எந்தையாரவர் எவ்வகையார் கொலோ (3.54.3) எனவரும் தொடரில் ஞானசம்பந்தப் பிள்ளையார் குறிப்பிட்டுள்ளமை காணலாம். வேதம் பசுவாகவும், சிவாகமம் பாலாகவும், நால்வர் ஓது தமிழாகிய திருமுறைகள் நெய்யாகவும் அமைய அந்நெய்யின் உறுசுவையாக அமைந்ததே மெய்கண்டாரருளிய சிவஞான போதமாகும். திருமுறைக்கும் சிவஞான போதத்திற்கும் உள்ள இத் தொடர்பினைப் விரித்துரைப்பது, வேதம்பசு அதன்பால் மெய்யாகமம் நால்வர் ஓதுதமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதமிகு நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணை மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறன் எனவரும் பழம்பாடலாகும். கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் தமிழரின் தொன்மைச் சிவநெறியினை உணர்த்தும் முறையில் சிவாகமப் பொருளை விரித்துரைக்கும் சிவஞான போதம் என்னும் தமிழ் முதல் நூலை இயற்றினார். இந்நூல் சிவாகமங்களின் ஞானபாதப் பொருளை ஆராய்ந்து வரையறுத்து பொருள்துணிபு உணர்த்துதலின் சிவஞான போதம் என்னும் பெயர்த்தாயிற்று என்பர் சிவஞான முனிவர். சிவஞான போதம் பன்னிரு சூத்திரங்களால் இயன்றது. கருத்தும் மேற்கோளும் ஏதுவும் உதாரணமும் ஒருங்குடையதாய்த் திகழும் இந்நூலின் முதல் மூன்று சூத்திரங்கள் பதி, பாசம், பசு என்னும் முப்பொருள்களின் உண்மைக்குப் பிரமாணங்கூறுவன. நான்கு ஐந்து ஆறாம் சூத்திரங்கள் முறையே பசு, பாசம், பதி ஆகிய முப்பொருள்களின் இலக்கணம் உணர்த்துவன. ஏழு எட்டு ஒன்பதாஞ் சூத்திரங்கள் பாசத்துட்பட்ட உயிர்கள் பாசத்தினை ஒழித்து சிவபரம் பொருளையடைதற்குரிய சாதனம் கூறுவன. பத்து, பதினொன்று, பன்னிரண்டாம் சூத்திரங்கள் பாசநீக்கமும் சிவப்பேறும் ஆகிய பயன் கூறுவன. இவ்வகையால் இந்நூல் பிரமாண இயல், இலக்கண இயல், சாதன இயல், பயனியல் என நான்கு இயல்களை உடையதாயிற்று. இவற்றுள் முப் பொருள்களின் பொதுஇலக்கணம் உணர்த்தும் முன்னுள்ள ஆறு சூத்திரங்களும் பொது அதிகாரம் எனவும், அவற்றின் சிறப்பிலக்கணம் உணர்த்தும் பின் ஆறு சூத்திரங்களும் உண்மை அதிகாரம் எனவும் வழங்கப்பெறும். சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாந் திருமுறையாகத் திகழும் திருத்தொண்டர் புராணத்தில் போற்றப்பெறும் சிவனடியார் செய்திகளை உளங்கொண்டு திருத்தொண்டர் திருவேடத்தையும், திருக்கோயில்களையும் சிவனெனவே தொழுது போற்றும் சீவன் முத்தர்களின் இயல்பினை அறிவுறுத்தும் நிலையில் சிவஞான போதத்தின் பன்னிரண்டாம் சூத்திரம் அமைந்துள்ளமை குறிப்பிடத் தகுவதாகும். அவன் அவள் அது எனப் பகுத்துரைக்கப்படும் உலகத்தொகுதி தோன்றுதல், நிலைபெறுதல், ஒடுங்குதல் ஆகிய முத்தொழிலுடைமையால் அஃது ஒரு வினைமுதலால் தோற்றுவிக்கப் பெற்ற உள்பொருளே எனவும், உள்பொருளாகிய உலகம் உயிர்களின் மலத்தீர்வு காரணமாகத்தான் ஒடுங்குதற்குக் காரணமாகிய கடவுளாலேயே மீளவும் தோற்றுவிக்கப்பெற்று நிலைபெறுவதெனவும், உலகிற்கு அந்தத்தைச் செய்து ஒடுக்கும் கடவுளே அதனைத் தோற்றுவிக்கும் ஆதியும் ஆவான் எனவும் அறிவுறுத்துவது, அவனவ ளதுவெனும் அவைமூ வினைமையின் தோற்றிய திதியே ஒடுங்கிமலத் துளதாம் அந்தம் ஆதி என்மனார் புலவர் எனவரும் சிவஞானபோத முதற்சூத்திரமாகும். அவன் அவள் அது எனப்பகுத்துரைக்கப்படும் உலகத்தொகுதி தோன்றுதல் நிலைபெறுதல் ஒடுங்குதல் ஆகிய முத்தொழிற் படுவதென்பதும் அங்ஙனம் உலகினை மூவுருவில் நின்று முத்தொழிற்படுத்தும் இறைவன் ஒருவனே என்பதும் ஆகிய உண்மைகளை, புவம் வளிகனல் புனல் புவிகலையுரைமறை திரிகுண மமர்நெறி திவமலிதரு சுரர்முதலியர் திகழ்தரு முயிரவையவை தம பவமலி தொழிலது நினைவொடுபதும நன்மலரது மருவிய சிவனது சிவபுரம் நினைபவர் செழுநிலனினில் நிலை பெறுவரே (1.21.1) எனவும், மலைபல வளர்தரு புவியிடை மறைதருவழிமலி மனிதர்கள் நிலைமலிசுரர் முதலுலகுகள் நிலைபெறுவகை நினைவொடுமிகும் அலைகடல் நடுவறிதுயி லமரரியுருவியல் பரனுறைபதி சிலைமலிமதிள் சிவபுர நினைபவர் திருமகளொடு திகழ்வரே (1.21.2) எனவும், பழுதில கடல்புடை தழுவிய படிமுதலியவுலகுகள் மலி குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலமலிதரு முயிரவை யவை முழுவது மழிவகை நினைவொடு முதலுருவியல் பரனுறைபதி செழுமணியணி சிவபுரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே (1.21.3) எனவும் வரும் திருப்பாடல்களில் திருஞானசம்பந்தர் அறிவுறுத்தி யருள்கின்றார். இறைவன் ஒருவனேயாயினும் அம்முதல்வன் முத்தொழில்களைச் செய்யுமிடத்து அவ்வத் தொழிலுக்கு உரிய வகையிவ் மூவுருவில் நின்று இயற்றியருள்கின்றான் என்பது திருமுறையாசிரியர் கருத்தாகும். இந்நுட்பம், அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழிய தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை யின்று (அற்புதத். 18) எனக் காரைக்காலம்மையாரும். படைத்தளிப்பமும் மூர்த்திகளாயினை (திருவெழுகூற்றிருக்கை) எனச் சம்பந்தரும், ஒருவனாய் உலகேத்த நின்றநாளோ ஓருருவே மூவுருவ மானநாளோ என அப்பரடிகளும், மூவுருத்தனதாம் மூலமுதற் கருவை என நம்பியாரூரரும், அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனுந் தானே (திருக்கயிலாய ஞானவுலா) எனச் சேரமான் பெருமாள் நாயனாரும், ஆதிப்பிரானும் அணிமணிவண்ணனும் ஆதிக்கமல மலர்மிசை மாயனும் சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார் பேதித்துலகம் பிணங்குகின்றார்களே (திருமந்திரம் 104) எனத் திருமூலதேவரும் அருளிய வாய்மொழிகளால் இனிது புலனாம். இனி ஒருவனாகிய இறைவன் தொழில்வகையால் மூவுருவினனாய் மூன்று பெயர்களில் வைத்துப் போற்றப் பெற்ற உண்மை நிலையினையுணராதார் ஒவ்வொரு தொழிலுக்கும் தனித்தனியே உரியவராக அயன் அரி அரன் என்னும் மூவரை வேறுபடக் கொண்டு வழிபடுவாராயினர். அங்ஙனம் வழிபடப்பெறும் பிரமவிட்டுணு உருத்தரர்களிடத்து முதல்வனுடைய சத்திகள் பதிந்து நின்று செலுத்துதலால் அவருடைய உருவங்கள் முதல்வனுரு வோடு ஒப்ப வைத்துக் கூறப்படும். அவ்வாறு சத்திகளாற் செலுத்தப்படாது பிரமன் முதலியோரே படைப்பு முதலிய தொழில்களைச் செய்வரெனச் கூறின் முதல்வனொருவன் வேண்டுவ தில்லை. ஆதலால் முதல்வனாகிய சிவனே ஐந்தொழில்களையுஞ் செய்வன். அவனது சத்திகளால் அதிட்டிக்க (செலுத்த)ப் பட்டுப் பிரமன் முலியோர் ஒவ்வொரு தொழிலைச் செய்வர் என்பது, அயன்றனை யாதியாக அரனுருவென்ப தென்னை பயந்திடுஞ் சத்தியாதிபதிதலாற் படைப்புமூலம் முயன்றனர் இவரேயாயின் முன்னவன் தன்னை முற்றும் நயந்திடும் அவன் இவர்க்கு நண்ணுவதொரோ வொன்றாமே (சித்தியார். சுபக். 80) எனவரும் திருவிருத்தத்தால் இனிது விளங்கும். உயிரணவமுழுவதும் அழிதருவகை நினைவொடு முதலுருவியல் பரன் என அழிக்குங்கடவுளே முதலிற் படைக்குங்கடவுளும் ஆவன் என ஆளுடையபிள்ளையார் அருளிச் செய்ததனை யுளங்கொண்டு, உலகமெல்லா வற்றுக்கும் அந்தத்தைச் செய்யும் மகாசங்காரக்கடவுளே ஒடுங்கியவுலகங்களை மீளத்தோற்றுவிக்கவும் செய்ய வல்லவன் என அறிவுறுத்துவார் அந்தம் ஆதி என்மனார் புலவர் என்றார் மெய்கண்டார். அந்தம் ஆதி என்பதற்குச் சங்கார காரணனாயுள்ள முதலையே முதலாகவுடைத்து இவ்வுலகம் என ஆசிரியர் பொருள் விரித்துரைப்பர். அந்தம் ஆதி என்மனார் புலவர் எனவரும் சிவஞானபோதத் தொடர் அந்தமும் ஆதியும் ஆகிய ஆண்ணலார் (1, 35, 1) என ஆளுடைய பிள்ளையாரும், அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் (4. 55. 2) என ஆளடைய அரசரும் அருளிய திருப்பாடல் தொடர்களை யுளங் கொண்டு கூறியதாகும். உயிர்களின் நுகர்ச்சிக்கு நிலைக்களமாயுள்ள உலகம் என்றும் உள்ள பொருள் என்பதும் அதனைத் தோற்றுவித்து நிலைபெறச் செய்பவன் இறைவன் என்பதும், தாயாகி வுலகங்களை நிலைபேறு செய்தலைவன் (1.15.3) எனவரும் ஆளுடையபிள்ளையார் வாய்மொழியால் அறியப்படும். காரியமாகிய உலகத்திற்கு விதைபோன்று காரணமா யமைந்தது மாயை என்னும் சடசத்தியாகும். அவ்விதையினின்று முளைதோன்று மாறு போன்று மாயையினின்றும் உலகம் தோன்றும். விதைக்கு நிலக்களமாயுள்ள நிலம் குளிர்ந்த வழியல்லது விதையினின்றும் முளைதோன்றாது. அது போல மாயை தனக்கு ஆதாரமாய் நின்று தோற்றுவிக்கும் இறைவனது சத்தி சங்கற்பித்தாலன்றி அம்மாயை யினின்றும் உலகம் தோன்றாது. ஆகவே மாயையின் ஒடுங்கிய உலகம் அதற்கு ஆதாரமாய் நின்ற இறைவன் சத்தியின் ஒடுங்கித் தோன்றியதேயாம் என்பார், வித்துண்டா மூலம் முளைத்தவா தாரகமாம் அத்தன்தாள் நிற்றல் (சிவ. சூ 1, வெண்பா 3) என்றார் மெய்கண்டார். இவ்வாறு உலகத்தொகுதியின் மூலம் இறைவனது திருவடியை யெனப்படும் சத்தியினை ஆதாரமாகக் கொண்டுள்ளது என்பது, படிக்கொள் சேவடியான் என ஆளுடையபிள்ளையாரும், முந்தாகி முன்னே முறைத்த அடி (திருவடித் திருத்தாண்டகம்) நடுவாயுலக நாடாயவடி என ஆளுடைய அரசரும் அருளிய அருண்மொழிகளால் நன்கு புலனாம். படி - உலகம். படிக்கொள் சேவடி - உலகங்களைத் தன்கண்ணே அடக்கிக் கொண்ட சிவந்த திருவடி என்றது இறைவனது சத்தியினை. கிழங்கினின்றும் முறைத்த தாமரையை அக்கிழங்கிற்கு ஆதாரமாகிய சேற்றினின்றும் முளைத்தது (பங்கசம்) என்றாற்போல உலகு அவனுருவிற் றோன்றி யொடுங்கிடும் (சித்தியார் 1. 32) என்பர் பெரியோர். வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவன் படைப்பு முதலிய தொழில்களைச் செய்வானாயின் அத்தொழில் பற்றி விகாரமுறுவன் அல்லனோ என வினவுவாரை நோக்கி, கருவி கரணங்களால் வினைசெய்வாரே அவ்வினையால் விகாரப்படுவர். இறைவன் கருவி கரணங்களாலன்றிக் காலத்தத்துவம் போன்று ஒன்றினுந்தோய்வின்றி நினைவளவானே அத்தொழில்களைச் செய்ய வல்லானாதலின் அவற்றால் விகாரமடைதல் இல்லை என அறிவுறுத்துவது, நோக்காது நோக்கி நொடித்தன்றே காலத்தில் தாக்காது நின்றுளத்திற் கண்டிறைவன் - ஆக்காதே கண்டநனவுணர்விற் கண்ட கனவுணரக் கண்டவனில் இற்றின்றாங்கட்டு (சிவ. 1. 4) எனவரும் உதாரண வெண்பாவாகும். இறைவன் இறப்பு நிகழ்வு எதிர்வு முதலியனவாய் வேறுபட்டு எல்லாத் தொழிலும் செய்தும் தனக்கு விகாரமின்றி நிற்கும் காலம் போல விகாரப்படாது நின்று உலகத்தைக் கரணத்தாற் படையாது உள்ளத்தாற் படைத்து அவ்வாறே காவாது காத்து அழியாது அழித்தலால் கனவிற் கண்டவற்றை நனவுணர்வில் அறிபவன் அவற்றால் தொடக்குண்டு விகாரம் அடையாதவாறு போலத் தொடக்குண்ணாத விகாரமின்றி நிற்பன் என்பது இதன் பொருளாகும். நோக்குதல் - காத்தல், நொடித்தல் - அழித்தல், ஆக்குதல் - படைத்தல், இவ்வுதாரண வெண்பா, நோக்காதே எவ்வளவும் நோக்கி னானை நுணுக்காதே யாதொன்றும் நுணுகி னானை ஆக்காதே யாதொன்றும் ஆக்கி னானை அணுகாதா ரவர்தம்மை யணுகா தானைத் தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத் திருப்புன்கூர் மேவிய சிவ லோகனை நீக்காத பேரொளிசேர் நீடூ ரானை நீதனேன் என்னேநான் நினையா வாறே (6.11.5) எனவரும் திருத்தாண்டகத்தின் சொற்பொருளை அடியொற்றி யமைந்துள்ளமை அறியத்தகுவதாகும். இதன்கண் நுணுகுதல் என்றது பருமையுருவினதாகிய பிரபஞ்சத்தை நுண்ணுருவில் ஒடுக்குதலாகிய அழித்தற் றொழிலைக் குறித்துநின்றது. உருவும் அருவும் என்னும் அவ்விரு கூற்றுப் பிரபஞ்சத்துள் ஒன்றாகாமல் அவற்றிற்கு அப்பாற்பட்டு வேறாய் விளங்குவது பரம்பொருள் என்பதனைப் புலப்படுத்துவார், ஒன்றலா ஒன்று என அதனைக் குறித்தார் மெய்கண்டார். அதனால் உலகினை இயக்கும் பரம்பொருள் முற்றுணர்வும் அளவிலாற்றலும் பேரருளும் சுதந்திரமும் முதலிய உயர்வற வுயர்ந்த குணங்களுடையன் என்பது பெறப்படும். படவே இத்தன்மையனாய முதற்கடவுள் ஒருவனேயமையுமாகலின் வேறும் அத்தன்மையர் உண்டெனக் கொள்வது மிகையென்னும் குற்றமாம். அன்றியும் பொருட்குக்கூறும் இலக்கணத்துள் ஒருவாற்றானும் வேற்றுமையில்லாதபோது அங்ஙனம் ஒரே தன்மையதாகிய பொருள் ஒன்றாயிருத்தலன்றிப் பலவாக வேறுபடுதல் இயலாது என்னும் கருத்தால் உலகு உயிர்களை இயக்கியருளும் முதல்வன் ஒருவனாகவேயிருத்தல் வேண்டும் என்பார் ஒன்றலா ஒன்று (சிவ. சூ. 1வெ.) என வரையறுத் தோதினார் மெய்கண்டார். ஒன்றலாஒன்று என இறைவனைக் குறித்து வழங்கப்பெற்ற இத்தொடர், எந்தையாரவர் எவ்வகையார்கொலோ ஒருவனாயுலகேத்த நின்றநாளோ (6) ஒன்றும் நீ அல்லை (திருவாசகம்) எனவரும் திருமுறைத் தொடர்களை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம். ஒன்றலா ஒன்றாகிய அப்பரம்பொருள் போல் என்றும் அழிவின்றி நிலைபெற்றுள்ள உயிர்த்தொகுதி வீடுபேற்றின் கண்ணும் பலவாற்றானும் பரம்பொருளுக்கு மீளா அடிமையாகும் என்பார். அதனின் ஈறலா ஒன்று, பலவாறே தொழும்பாகும் அங்கு என்றார் அங்கு என்றது வீடுபேற்றுநிலையினை. தொழும்பு - அடிமை. பலவாறே தொழும்பு ஆதலாவது, இருள் நீங்கிய நிலையிலும் கண் ஞாயிற்றின் ஒளியையின்றியமையாதவாறு போல மலம் நீங்கிய முத்தி நிலையிலும் ஆன்ம அறிவுக்கு முதல்வனது துணை இன்றியமையாதவாறும் ஆன்மா, கண்படிகம் ஆகாசம் போலச் சார்ந்ததன் வண்ணமாயன்றி முதல்வன் போலத் தனித்து நிற்கும் ஆற்றல் இல்லாதவாறும், முதல்வன்போல் ஐந்தொழில் செய்யும் வினை முதலாம் உரிமையின்றிச் சிவாநுபவம் ஒன்றினுக்கே உரித்தாயவாறும் முதல்வனை நோக்கத்தூல அறிவாகலால் விளக்கொளியுள் கண்ணொளியடங்கி நிற்றல்போல முதல்வனது விரிவினுள் அடங்கி நிற்குமாறும் பற்றி முதல்வனுக்கு என்றும் அடிமை யாதலாம். நாமார்க்குங் குடியல்லோம் ............................... கோமாற்கே நாமென்னும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடியினையே குறுகினோமே என நாவுக்கரசரும், மீளாவடிமையுமக் கேயாளாய் என நம்பியாரூரரும் அருளிய வாய்மொழிகள் ஆன்மா, கட்டுநிலையில் மட்டுமன்றி வீட்டு நிலையிலும் முதல்வனுக்கு அடிமையாதலை நன்கு புலப்படுத்தல் அறியத்தகுவதாகும். உலக முதல்வனாகிய இறைவன் கலப்பினால் உடம்பின் உயிர்போல் அவ்வுயிர்களேயாகியும், பொருட்டன்மையால் கண்ணின் அருக்கன்போல உயிர்களின் வேறாகியும், உயிர்க்குயிராதல் தன்மையால் கண்ணொளியின் உயிரறிவினையொத்து உயிர்களோடு உடனாகியும் இயைந்து நின்று, தன்னிற்பிரிவிலாச் சத்தியினால் ஊட்டப்பெறும் இருவினைகளால் அவ்வுயிர்கள் இறத்தலையும் பிறத்தலையும் புரியும்படி தனது திருவருளாணையிற் பிரிப்பின்றி ஒன்றாய் நிற்பன் என்னும் உண்மையினை யுணர்த்துவது, அவையே தானே யாயிருவினையிற் போக்குவரவு புரிய ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே (சிவ. சூ. 2) எனவரும் சிவஞான போத இரண்டாஞ் சூத்திரமாகும் உலகுயிர் களோடு இறைவனுக்குள்ள தொடர்பு பேதம், அபேதம், பேதாபேதம் என்னும் மூன்றிற்கும் அப்பாற் பட்டதாய், ஒன்றாகாமல் இரண்டாகாமல் ஒன்றுமிரண்டும் இன்றாகாமல் இரண்டறக் கலந்து நிற்பதாகிய அத்துவத சம்பந்தம் என்பதனை அறிவுறுத்துவது இச்சூத்திரமாகும். முதல்வன், உடலும் உயிரும் போல் உலகெலாமாகி நிற்றலால் ஒன்றாகியும் கண்ணொளியும் கதிரவனொளியும்போல் பொருட்டன்மையால் வேறுபட்டு நின்று அவற்றுக்கு விளக்கந்தருதலின் அவற்றின் வேறாகியும், கண் ஒருபொருளைக் காணும் நிலையில் உயிர் அதனொளியுடன் கலந்து நின்று பொருளைக்காட்டித் தானும் காணுமாறு போல முதல்வனும் உயிர்க்குயிராய்ப் பொருள்களை அறிவித்துத் தானும் உடனிருந்து அறிந்து உதவுதலால் உடனாகியும் இவ்வாறு கலந்து நின்று அருள்புரியும் அத்துவிதத் தொடர்புடையான் என்பது சைவசித்தாந்த மெய்ந்நூல்கள் கூறும் இறைவனது இயல்பாகும். இவ்வியல்பினைத் தெளிவுபட அறிவுறுத்தும் நிலையில் அமைந்தது, ஈறாய் முதலொன்றாயிரு பெண்ணாண் குணமூன்றாய் மாறாமறை நான்காய் வருபூதம் மவையைந்தாய் ஆறார் சுவையேழோசையோ டெட்டுத்திசை தானாய் வேறாயுடனானானிடம் வீழிம் மிழலையே (1-11-2) எனவரும் திருஞானசம்பந்தர் தேவாரமாகும் இத்திருப்பாடற்பொருளை உளங்கொண்டு சைவசித்தாந்தம் கூறும் உயிர்நிலைக் கொள்கையாகிய சுத்தாத்துவித உண்மையினை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது. ஈறாகியங்கே முதலொன்றாய் ஈங்கிரண்டாய் மாறாத எண்வகையாய் மற்றிவற்றின் - வேறாய் உடனாயிருக்கும் உருவுடைமையென்றுங் கடனாயிருக்கின்றான் காண் (86) எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். உலகெலாம் ஒடுங்கிய காலமாகிய அவ்விடத்து, முழுமுதற் பொருளாகிய சிவம் ஒன்றுமேயாகியும், மீண்டும் படைப்புக் காலமாகிய இவ்விடத்துச் சத்தியும் சிவமும் என இரண்டாகியும் எல்லாவற்றையும் சத்தியிடமாய் நின்று மாறுபடாத ஐம்பெரும் பூதம் ஞாயிறு திங்கள் ஆன்மா என்னும் எண்பேருருவினனாகியும் இங்குச் சொல்லப்பட்ட உலகுயிர்த்தொகுதியுடன் பிரிவறக் கூடியிருக்கு நிலையிலும் அவற்றின் தன்மை தன்னைப் பற்றாதவாறு அவற்றின் வேறாகியும், உயிர்க்குயிராய் உள்நின்று அறிவித்தும் அறிந்தும் உதவுதலால் உயிர்களோடு உடனாகியும் இவ்வாறு ஒன்றாய் வேறாய் உடனுமாயிருக்கும் தன் உண்மையினை எக் காலத்தும் தனக்குரிய முறைமையாகக் கொண்டிருக்கின்றான் அம் முதல்வன் அவனது இயல்பினை (மாணவனே) கண்டுணர்வாயாக என்பது இதன்பொருளாகும். இதன்கண் ஈறாய் முதலொன்றாய் என்றது வேறாதலையும், மாறாத எண்வகையாய் என்றது ஒன்றாதலையும், உடனாயிருக்கும் உருவுடைமை என்றது உடனாதலையும் உணர்த்தி நின்றன. இவ்வான்மாக்களுக்கு இருவினைமுதல்வனது ஆணையால்வரும் என்பார், ஆணையின் இருவினையின் போக்கு வரவு புரிய என்றார். ஒருவன்தான் செய்தவினையின் பயனைத்தானே அனுபவித்தல் வேண்டும் என்னும் நியதியை முந்திச் செய்வினை இம்மைக்கண்வந்து மூடுமாதலின் என்பதனால் நம்பியாரூரரும், மெய்த்தன்னுறும் வினை என்பதனால் ஞானசம்பந்தரும் உடன்பட்டுக் கூறியுள்ளனர். அறிவிலதாகிய அவ்வினைதானே செய்தோனையடைந்து பயன்தருதல் இயலாது. விருப்பு வெறுப்புடைய உயிர்கள் தாமே தாம்செய்த வினைப்பயன்களை அறிந்து எடுத்துக் கொண்டு நுகர்ந்து கழிக்கும் பேரறிவும் நடுநிலையும் ஒருங்கு உடையன அல்ல. எனவே உயிர்கள் செய இருவினைப் பயன்களைச் செய்த உயிர்களே நுகரும்படி செய்பவன் நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாகிய இறைவன் ஒருவனே என்பது சைவ சமயத்தின் துணிபாகும். இக்கொள்கை ஆசிரியர் தொல்காப்பியனார்க்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவர்க்கும் உடன்பாடென்பது முன்னர் விளக்கப்பெற்றது. உயிர்கட்கு இருவினைப் பயன்களை ஊட்டும் இறைவன் தீவினைப்பயனை அருத்தும்போது, நோயாளர்களின் பிணிநீக்கும் மருத்துவன் நோய்தீர்க்கும் கசப்பு மருந்தினை வெல்லக்கட்டி முதலிய இனிய பொருளோடும் கலந்து அருத்துவது போன்று உயிர்கள் நுகர்தற்குரிய தீவினைப்பயனை இனிமையைத்தரும் நன்மையுடனே கூட்டி நுகரும்படி செய்விப்பான் என்பதும் உயிர்கள் செய்த பாவங்கள்தீர நல்வினையையும் தந்தருளுவான் என்பதும், இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் பண்டுநாம் செய்தவினைகள் பறையவோரருள் நெறிபயப்பார் பாவங்கள் தீர்தர நல்வினை நல்கி எனவரும் ஆளுடைய பிள்ளையார் வாய்மொழியாலும், வேம்பினொடு தீங்கரும்பு விரவியெனைத்தீற்றி எனவரும் நம்பியாரூரர் வாய்மொழியாலும் நன்கு விளங்கும். கடவுள், உயிர், உலகம் ஆகிய மூன்றும் என்றும் உள்ள பொருள்கள் எனவும், அம்மூன்றனுட் கடவுள் என்பது நிலைமாறாத முற்றறிவுடைய பொருள் எனவும், உயிர்கள் அறிவிக்க அறியும் தன்மையையுடையன எனவும், உலகம் ஒருநிலையில் நில்லாது மாறுதலடையும் உள்பொருள் எனவும் சைவ சித்தாந்தம் கூறும். இத்தகைய முப்பொருளுண்மை, கற்றுக்கொள்வன வாயுள நாவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடையானுளன் நாமுளோம் எற்றுக்கோ நமனார் முனிவுண்பதே என்ற திருக்குறுந்தொகையில் தெளிவாக உணர்த்தப்பட்டது. இறைவனுக்குத் தொண்டுபட்ட உயிர்களாகிய நாம் நமனால் முனியப்படும் எளிமையுடையோம் அல்லோம் என்பார் இதன் முதலிரண்டடிகளாலும் உலகின் உண்மை கூறி, மூன்றாமடியில் கடவுள், உயிர் என்னும் இவ்விரண்டின் உண்மையினை உணர்த்தியருள்கின்றார் திருநாவுக்கரசர். கற்றைச் செஞ்சடையான் உளன் என்பதனை அடுத்துப் பல்லுயிர்களையும் தம்மோடு உளப்படுத்தி நாம் உளோம் என்றாது, ஞானமேயுருவாகிய அவ்விறைவனது சார்பினால் அவனுக்கு அடிமையாகிய நாமும் பொன்றாத பேரின்ப நிலையைப் பெறுதற்கு உரியராய் உள்ளோம் என அறிவுறுத்தியவாறாகும். மேற்குறித்த முப்பொருள்களுள் உயிரின் இலக்கணத்தைக் கூறவந்த திருநாவுக்கரசர், ஆணவ இருளால் மறைப்புண்டு அல்லற்படும் அவ்வுயிர்களைத் தன்னருளாகிய கைகொடுத்து ஏற்றி உய்வித்தருளும் இறைவனது பெருங்கருணைத் திறத்தினையும் ஒருங்கு உணர்த்துவதாக அமைந்தது, இருள்தரு துன்பப்படலம் மறைப்ப மெய்ஞ்ஞானமென்னும் பொருள்தரு கண்ணிழந் துண்பொருள் நாடிப்புகலிழந்த குருடருந்தம்மைப் பரவக் கொடுநரகக்குழிநின் றருள் தருகைகொடுத்தேற்றும் ஐயாறன் அடித்தலமே எனவரும் திருவிருத்தமாகும். ஆணவ வல்லிருளால் உளதாகிய துன்பப்படலமானது, உயிரின் அறிவாகிய கண்ணொளியைத் தடைசெய்து மறைத்து நிற்றலால் மெய்யுணர்வாகிய கண்ணொளியை யிழந்து நுகர்பொருளை நாடிப்பெறும் உபாயத்தினையிழந்து பிறவிக்குருடரும் தம்மைப் பரவியுய்திபெறும்படி கொடிய இருளுலகமாகிய நரகக்குழியினின்றும் தனது அருளாகிய கையினால் எடுத்து உய்யும்படி செய்தருளுவது ஐயாற்றினறவரது திருவடியாகிய அருட்சத்தி என்பது இத்திருவிருத்தத்தின் பொருளாகும். உயிர்கட்கு ஊனத்தை விளைவிக்கும் இருள் என்பதொரு மலம் உண்டென்பதும், அவ்விருள் நீக்கத்தற்கு இறைவன் அறிவுறுத்தும் சிவஞானமாகிய பொருளையே துணையாகக் கொண்டு இறைவனது திருவருளைப் புகழ்ந்து போற்றி வழிபடுதல் இன்றியமையாதென்பதும், ஊனத்திருள நீங்கிட வேண்டின் ஞானப்பொருள் கொண்டடி பேணும் (1-38-3) ஞானத்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல் ஊனத்திரளை நீக்கும் அதுவும் உண்மைப்பொருள் போலும் (1-69-3) எனத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிய தேவாரத்தால் நன்கு புலப்படுத்தப்பபெற்றுள்ளமை காணலாம். ஆணவமாகிய இருள்நீங்க நோக்கும் ஞானநாட்டம் ஆன்மாக்களுக்கு இயல்பாக அமையவில்லையென்பதும் உயிர்களின் அகத்திருளை நீக்கி நற்பொருளையறிவுறுத்தி இன்பம் அளிக்கவல்ல பேரருளும் பேரறிவும் பேராற்றலும் ஒருங்கேயுடைய இறைவன் ஒருவனே என்பதும் திருமுறையாசிரியர்கள் துணிபாகும். இந்நுட்பம், இருளற நோக்கமாட்டாக் கொத்தையேன் (4-69-1) இருளறுத்து நின்று, ஈசனென்பார்க்கெலாம் அருள்கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே (5-41-8) இருளாயவுள்ளத்தின் இருளை நீக்கி (6-54-4) எனவரும் வாகீசர் வாய்மொழிகளால் இனிது விளங்கும். இங்ஙனம் உயிர்களின் அறிவினை அநாதியே மறைத்து நிற்பதாய் ஆன்மாக்களை அணுத்தன்மைப்படுத்தி நிற்கும் ஆணவமலமாகிய உள்மாசினையே தெய்வப்புலவர் திருவள்ளுவரும் சைவத் திருமுறையாசிரியர்களும் இருள் என்ற சொல்லால் வழங்கியுள்ளனர். இந்நுட்பத்தினைத் தெளியவுணர்ந்த உமாபதி சிவாசாரியார் தாம் இயற்றிய திருவருட்பயனில் ஆணவம் என்ற பெயரால் வழங்கப்படும் மூலமலத்தின் இயல்பினை விரித்துரைக்கும் அதிகாரத்திற்கு இருள்மலநிலை எனப் பெயரிட்டு வழங்கியுள்ளார். ஆணவமலம் என்பது, எண்ணிறந்த உயிர்கள் தோறும் கூடிநின்று அவற்றின் அறிவினை மறைத்தும் தான் ஒன்றாயிருப்பது, உயிர்களின் பக்குவமின்மை, பக்குவம் ஆகியவற்றுக்கு ஏற்ப அவரவர் இடங்களிலே மறைத்து நின்று அந்தந்த ஆன்மபோதங்களின் மீட்சியிலே நீங்குவதாயிருக்கிற தன் செயல்வகையாகிய எண்ணிறந்த ஆற்றல்களையுடையது, செறிந்த இருளும் வெளியென்று சொல்லும்படி இருளாய் நின்று உயிர்களுக்கு மிக்க மறைப்பினைச் செய்வது, செம்பினுடன் கூடியுள்ள களிம்பானது அந்தச் செம்பு உள்ள அன்றே அதனை மறைத்து உள்ளும் புறம்பும் கலந்து அதன்வெட்டுவாய் தோறும் நின்றாற்போல, உயிரறிவோடுங் கலந்து மறைத்து நிற்கிற அழியாத அனாதிமலமாய் உயிர்களின் விழைவு அறிவு செயல் என்னும் மூவகையாற்றலும் சிறிதும் நிகழாதபடி தடைசெய்து நிற்பதாகும். இதன் இயல்பினை, ஏகமாய்த் தம்கால எல்லைகளின் மீளும் எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட மோகமாய்ச் செம்பினுறு களிம்பேய்ந்து நித்த மூலமலமாய் அறிவு முழுதினையும் மறைக்கும் (சிவப். 20) எனவரும் சிவப்பிரகாசத் திருவிருத்தத்துள் உமாபதி சிவாசாரியார் சுருக்கமும் தெளிவும் பொருந்த விளக்கியுள்ளார். எண்ணிறந்த சத்திகளால் எண்ணிறந்த உயிர்கள் தோறும் செம்பிற்களிம்பும் நெல்லின் உமியும் போலத் தோற்றமில் காலமாக விரவி நிற்பதொன்றாய், கேவல நிலையில் அவ்வுயிர்களின் அறிவொடு தொழிலைமறைத்து, சகலநிலையில் போகநுகர்ச்சிக்கு வினைமுதலாதல் தன்மையை நிகழ்த்தி, அறியாமை நிகழ்ச்சிக்குக் காரணமாய் நிற்பது ஆணவமலம் ஆகும். இது வியாபகமாகிய உயிரை அணுத்தன்மைப் படுத்து மறைப்பதாகலின் ஆணவம் என்னும் பெயருடையைதாயிற்று. இது பாசப்பிணிப்பிற்கு மூலமாய் உயிரைப்பிணித்து நிற்றலின் பசுத்துவம் எனவும் வழங்கப்படும். உயிர்களை அறியாமையிருளிற் படுத்துமறைப்பதாகலின் இதனை இருள் மலம் எனவழங்குதல் தமிழ் மரபு. இனி, கன்மம் என்பது ஆணவம் காரணமாக உயிர்களிடத்துத் தோன்றும் விருப்பினையுடையதாய்ப் போக நுகர்ச்சிக்கு ஏதுவாகி உயிரைப் பிறவியுட்படுத்துவதாகும். கன்ம மலமாகிய இதனது இயல்பு, மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை எனவரும் அப்பர்தேவாரத்தில் விளக்கப்பெற்றுள்ளமை காணலாம். எண்ணரிய சத்தியுடைய உயிர்களின் அறிவொடு தொழிலை ஆர்த்துப் பந்தித்து நிற்கும் இருள் மலத்தால் உளவாகிய பழவினை என்பது இத்தொடரின் பொருளாகும். மாயை என்பது ஆடையிற் படிந்த அழுக்கினை உவர் மண்ணைக்கொண்டு கழுவுதல் போன்று உயிரினைப்பற்றிய ஆணவ அழுக்கினை அகற்றுதற்பொருட்டு இறைவனால் உயிர்களுக்குக் கொடுக்கப்பட்டு அவற்றிற்குச் சிறிது அறிவுநிகழ்ச்சியை விளைப்பதாகும். ஆணவம், கன்மம், மாயை என்னும் இம்மும் மலங்களின் இயல்பினையும் முறையே விளக்கும் நிலையில் அமைந்தது, விளையாததொர் பரிசில்வரு பசுபாச வேதனையொண் தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம் (1-12-2) எனவரும் ஆளுடையபிள்ளையார் தேவாரமாகும். இதன்கண், 1. விளையாததொர் பரிசில் வருபசு (வேதனை) 2. பாசவேதனை 3. ஒண்தளை என மும்மலமும் முறையே குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் விளையாததொர் பரிசில் வரு பசு வேதனை என்ற தொடர், புதிதாகத் தோன்றாததன்மையில் (அஃதாவது அநாதியே) உயிரைப் பற்றியுள்ள பசுத்துவம் எனப்படும் ஆணவ மலத்துன்பம் எனப்பொருள்படும். பாச வேதனை என்பது நல்வினை தீவினையாகிய இருவினைப் பிணிப்பால் உண்டாகிய துன்பம் ஈண்டுப் பாசம் என்றது கன்ம மலத்தையேயென்பது, வினையென்பாச மறைவிலே என வரும் நாவுக்கரசர் வாய்மொழியாலும் இருவினைப்பாசம் (பெரிய-நாவுக்) எனவரும் சேக்கிழார் வாய்மொழியாலும் நன்கு தெளியப்படும். ஒண்தளை என்பது உயிர்கட்குச் சிறிது அறிவு நிகழ்ச்சியை (ஒட்பத்தை) விளைப்பதாய் உயிரைத் தளைத்துள்ள மாயையைக் குறிக்கும். மாயாமலம் உயிர்கட்கு விழைத் அறிவு செயல்களை விளக்குந்தன்மையது என்பதனை அருணந்தி சிவாசாரியார் தாம் இயற்றிய சிவஞான சித்தியாரில் ஆணவமலம் எனத் தனியே ஒரு மலமில்லை அது மாயாகாரியமே என்பார் கூற்றை மறுத்துரைக்குமிடத்து, மலமெனவேறொன்றில்லை மாயாகாரியம் அது என்னின், இலகுயிர்க்கு இச்சாஞானக்கிரியைகள் எழுப்பும் மாயை; விலகிடும்மலம் இவற்றை வேறுமன்றதுவேறாகி உலகுடல் கரணமாகி உதித்திடும் உணர்ந்துகொள்ளே எனவரும் திருவிருத்தத்தால் தெளிவாக விளக்கியுள்ளார். இதன்கண் இலகு உயிர்க்கு இச்சா ஞானக்கிரியைகள் எழுப்பும் மாயை என்பது, மாயை உயிர்களுக்கு விழைவு அறிவு தொழில்களை எழுப்பும் தன்மையது என்பதனை விளக்கி நின்றது. விலகிடும் மலம் இவற்றை என்பது, ஆணவமலம் உயிரின் விழைவு அறிவு செயல்களை மறைத்துத் தடைசெய்து நிற்கும் தன்மையது என்பதனைக் குறித்து நின்றது. உயிரோடு ஒற்றித்து நின்று அறிவிச்சை செயல்களை மறைப்பதாகிய மலத்துக்கும் வேறு நின்று அவற்றை விளக்குவதாகிய மாயைக்கும் வேற்றுமை பெரிதாகலான் மாயையே மலம் என்பார் மதம்போலி எனச் சிவஞானமுனிவர் ஆணவமலமும் மாயையும் தம்முள் வேறு என்பதனை நன்கு விளக்கியுள்ளார் இவ்விளக்கம் மாயை ஒண்தளை (அறிவு விளக்கத்தைக் தரும் தளை) ஆதலை நன்கு உறுதிப்படுத்துதல் காணலாம். விளையாததொர் எனத் தொடங்கும் ஞான சம்பந்தப் பிள்ளையார் தேவாரத்தில் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலத்தில் வைப்பு முறையும் அவற்றுள் ஒவ்வொன்றின் சிறப்பியல்புகளும் உரிய அடைமொழியுடன் சேர்த்து விளக்கப் பெற்றுள்ளன. விளையாததொர் பரிசில் வரு என்ற தொடர் ஆணவமாகிய பசு வேதனைக்கும், ஒண்மை (புத்திகூர்மை)யைக் குறிக்கும் ஒண் என்பது, உயிரைப் பற்றியுள்ள தளைகளுள் (கட்டுக்களுள்) ஒன்றாகிய மாயைக்கும் அடைமொழியாகிய அமைந்த நயம் வியந்து போற்றத் தகுவதாகும். உயிர்களைப் பிணித்துள்ள மும்மலங்களையும் நீக்கியருளவல்ல உயிர்த்துணையாவான் இறைவன் ஒருவனே என்னும் உண்மையினை, இழிப்பரிய பசு பாசப் பிறப்பை நீக்கும் என் துணையே எனவரும் தொடரில் திருநாவுக்கரசர் தெளிவாகக் குறித்துள்ளார். இத்தொடரில் பசு என்றது பசுத்துவமாகிய ஆணவமலத்தையும் பாசம் என்றது கன்மமலத்தையும் பிறப்பு என்றது மாயாகாரி யத்தையும் குறித்து நின்றன. இத் தொடரையுளங்கொண்டு மலந்தாங்கிய பாசப்பிறப்பறப்பீர் (7-82-6) என இறைவனைப் போற்றினார் சுந்தரர். முப்பொருளுண்மையைக் குறிக்கும் பதி, பசு, பாசம் என்னும் பெயர்கள் தேவாரத் திருப்பதிகங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வுண்மை, பாலனாம் விருத்தனாம் பசுபதிதானாம் (1-76-3) எனவும் பசு பதியதன் மிசைவருசுபதி எனவும், பாசமதறத்து (3-79-10) எனவும் வரும் திருப்பதிகத் தொடர்களால் இனிது புலனாம். இவ்வான்மாக்கள் இருவினைகாரணமாக இறந்து பிறந்து வருந்தன்மையன என்பதனை, துறக்கப்படாத வுடைலைத் துறந்துவெந்தூ துவரோ டிறப்பன் இறந்தால் இருவிசும்பேறுவன் ஏறிவந்து பிறப்பன் பிறந்தநாற் பிறையணிவார் சடைப்பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோவென்றென் உள்ளங்கிடந்து மறுகிடுமே எனவரும் திருவிருத்தத்தில் திருநாவுக்கரசர் குறித்துள்ளமை காணலாம். இத்திருவிருத்தத்தை அடியொற்றியமைந்தது, கண்டநனவைக் கனவுணர்வின்தான் மறந்து விண்பறந்தத்தூடு வினையினால் - கண்செவிகெட் டுள்ளதே தோற்ற உளம் அணுவாய்ச் சென்றுமனந் தள்ள விழுங்கருவிற்றான் (சிவ. சூ. 2, வெ. 13) எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். உயிரானது பூதசாரம் முதலிய உடம்பின்கட் பொருந்தித் துறக்க நிரயங்களிற் சென்று இருவினைப்பயனாகிய இன்பத் துன்பங்களை அநுபவித்துப் பின்னர் நனவின்கண் கண்டவற்றைக் கனாக்காணுங்காலத்து மறந்து அறிவு வேறுபட்டாற்போல முன்னைக் கண்செவி கெட்டவாறும், உள்ளதே தோற்ற அதனூடு விண்படர்ந்தவாறும் அங்கு அநுபவித்தவாறும் ஆகியவற்றை மறந்து, முன்னுடம்பு இறங்குங்கால் அடுத்தவினை காட்டும் கதிநிமித்தம் பற்றி உயிர் அவாவியபடி மனம் செலுத்துதலால் அக்கதிர்கண் செல்லுதற்கு ஏதுவாய் எஞ்சி நின்ற புண்ணிய பாவ எச்சத்தால் சூக்குமதேக அளவாய்ச் சென்று அம்மனம் தள்ளியகதிக்கு அமைந்த கருவின்கண் விழும் என்பது இதன் பொருளாகும். உயிர்கட்குப் படைப்புக்காலந்தொட்டுச் சங்காரகாலம் அளவும் நிலைபெற்றுள்ளது சூக்குமவுடம்பாதலின் அதனை உள்ளது எனக்குறித்தார். என்றும் உள்ளதாகிய அந்நுண்ணுடம்பானது, பூதவுடம்பு பூதசார வுடம்பு, யாதனாவுடம்பு என்பவற்றுள் வேண்டியது ஒன்றனைத் தோற்று தன்மையது என்பார், உள்ளதே தோற்ற என்றார். இருவினைகளைச் செய்தற்குரிய பூதவுடம்பு மண்ணுலகத்திற்கும் நல்வினைப் பயனாகிய இன்பத்தினை நுகர்தற்குரிய பூத சாரவுடம்பு விண்ணுலகத்திற்கும் தீவினைப் பயனாகிய துன்பத்தினை நுகர்தற்குரிய யாதனாவுடம்பு நிரயத்திற்கும் உரியன என்பர். முன்னுடம்பு இறங்குங்காலத்து மனம் எங்குச் சென்று பற்றியதோ அங்கு வந்து மீளப்பிறக்கும் என்பார் மனம் தள்ளக் கருவில் விழும் என்றார். உள்ளதே தோற்ற என்றதனால் உடல் திரிவும் விண்படர்ந்து என்றதனால் இடத்திரிவும் கனவுணர்வின் மறந்து என்றதனால் அறிவுத்திரிவும் பெறப்பட்டன. வேதத்துட் கூறப்படும் பஞ்சாக்கினி வித்தையின் இயல்பு இங்கு உணர்த்தப்பட்டது என்றும், ஆன்மாத் தூலவுடம்பின் நீங்கிய வழித் துறக்கமும், மேகமண்டலமும் நிலனும் தந்தையும் தாயும் என்னும் ஐந்து நிலைக்களத்தும் வைகித்தோன்றுதலின், இவ்வைந்தின் இடமும் அங்கியாகவும், இவற்றின் எய்திய ஆன்மா ஆவுதியாகவும் தியானிப்பதொரு சாதகமாதலின் இது பஞ்சாக்கினி வித்தையெனப்பட்டது என்றும் கூறுவர் சிவஞானமுனிவர். எல்லாவுலகத்துக்கும் தலைமையாய் எப்பொருளையும் அமைத்து இயக்கும் ஆற்றல் வாய்ந்த முழுமுதற் கடவுள் ஒன்றுதான் இருக்க முடியும் என்று உணர்ந்து அப்பரம்பொருளைக் சிவனெனவே தெளிந்து வழிபட்ட செம்புலச் செல்வர்கள் தேவார ஆசிரியர்கள் ஆவர். ஒரு தெய்வவழிபாட்டினை அறிவுறுத்துஞ் சமயமே சிறந்தது என்பர் அறிவர். ஒன்றே குலனும் ஒருவனே தேவனும் எனச் சாதிவேறுபாடற்ற தனிப்பெருஞ் சிவவழிபாட்டினையே திருமூலரும் அறிவுறுத்தியுள்ளார். ஒருவன் கழல்அல்லாது எனது உள்ளம் உணராதே கூத்தாநின் குரையார்கழலேயலாது ஒத்தநாவெனக்கெந்தை பிரானிரே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே எனத் தேவார ஆசிரியர் மூவரும் சிவபெருமான் ஒருவனையே போற்றியதுடன், தம் பாடல்களில் முருகன், விநாயகர் முதலிய கடவுளர்களைக் குறிக்க நேர்ந்த விடங்களில் தம்மால் வணங்கப்பெறும் சிவபெருமானால் தலையளிக்கப்பெற்ற சிறப்புடையவர்கள் என்ற அளவில் அத்தெய்வங்களைப் பாராட்டி, தாம் சிவபரம் பொருளைத் தவிர வேறு தெய்வங்களை நினையாத உறுதிப்பாடுடையராகத் திகழ்தல் காணலாம். திருஞானசம்பந்தர்க்குத் திருமணம் நிகழ்ந்தபோது அவர் தீவலஞ்செய்தலாகிய சடங்கினைச் செய்ய நேர்ந்த நிலையில் ஞானசம்பந்தர் யான் விருப்புறும் அங்கியாவார் விடையுயர்த்தவரே என்னும் மெய்ம்மையினை யுரைத்துத் திருநல்லூர்ப்பெருமணக் கோயிலை வலம்வந்து சுற்றத்தாரோடு பற்றறுத்து உய்ந்த செய்தி பெரிய புராணத்தில் விரித்துரைக்கப்பெற்றது. காணப்பட்ட உடம்பாற் காணப்படாத உயிர்க்கு உண்மை கூறும் முறையில், உடலிலங்கும் உயிர் உள்ளளவுந்தொழ உள்ளத்துயர் போமே (1-3-8) என்று அருளிச் செய்தார் திருஞானசம்பந்தர். இக்கருத்தினை யுளங்கொண்ட மெய்கண்டார் தாம் இயற்றிய சிவஞானபோதத்தில் உயிருண்மை கூறும் மூன்றாஞ்சூத்திரத்தில் மாயா இயந்திரதனுவினுள் ஆன்மா உளது என ஏதுக்களால் எடுத்துரைத்து விளக்கினார். தங்குதற்குரிய குடிசை ஒன்றினை அமைக்க வேண்டுமானால், தூண்களாகக் கால்களை நட்டு இருபக்கத்தும் பக்க வாரைகளாகிய கைகளை ஏற்றி அவற்றின் மேற் சார்த்துக் கழிகளை வரிந்துகட்டி அதன்மேல் ஓலை முதலியவற்றால் கூரைவேய்ந்து மண்ணைக் குழைத்துச் சுவரேடுத்து நுழைவாயிலும் புழைக்கடைவாயிலும் என இரண்டு வாசல்களை அமைத்துப் பக்கங்களிற்காற்றுப் புகுந்து இயங்கக் காலதர்களை (சாலேகங்களை) அமைத்துக் கண்டோர் யாவரும் விரும்பித் தங்குதற்கேற்ற கவர்ச்சி யுடையதாகச் செய்து முடித்தல் இயல்பு. இங்ஙனமே அருளாளனாகிய இறைவனும் உயிர்களாகிய நாம் விரும்பித் தங்குதற்கேற்ற கவர்ச்சி வாய்ந்ததாக மக்கள் யாக்கையாகிய இவ்வுடம்பினை நமக்குப் படைத்து வழங்கியுள்ளான். இச்செய்தியினை, கால்கொடுத்திரு கையேற்றிக் கழிநிரைத்திறைச்சி மேய்ந்து தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டுவாசல் ஏல்வுடைத்தா வமைத்தங்கேழு சாலேகம் பண்ணி மால்கொடுத்தாவி வைத்தார் மாமறைக்காடனாரே (4-33-4) எனவரும் திருநேரிசையில் திருநாவுக்கரசர் சுவைபொருந்தக் கூறியுள்ளார். உயர்திணை உயிர்களுக்கென அமைத்தளிக்கப்பட்ட யாக்கையாகிய இவ்வில்லம் அவ்வுயிருக்கு மட்டுமேயல்லாமல் ஐம்பொறிகள் தங்கி ஆட்சிபுரிதற்குரிய உரிமை இடமாகவும் அப்பொறிகளுக்கிடையே உயிர் ஒதுக்குக் குடியிருக்கவேண்டிய துச்சிலாகவும் (வாடகைவீடாகவும்) அமைந்து மக்கள் வாழ்வுக்குப் பல்வேறு துன்பங்களை விளைப்பதாயினும் இக்குடிசையிற்புகுந்த உயிரானது இதனை விட்டு வெளியேற விரும்பாததொரு கவர்ச்சியினை இதற்கு உண்டாக்கி இதன்கண் உயிர்களைக் குடியேற்றினான் இறைவன் என்பார், மால்கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காடனாரே என்றார். இவ்வாறே ஞான சம்பந்தரும், என்பினாற் கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்திது நம்மில்லம் புண்புலால் நாறுதோல் போர்த்துப் பொல் லாமையால் முகடுகொண்டு முன்பெலாம் ஒன்பது வாய்தலால் குரம்பையின் மூழ்கிடாதே அன்பனாரூர் தொழுதுய்யலாம் மையல் கொண்டஞ்சல் நெஞ்சே (2-79-8) என யாக்கையின் அமைப்பினையும் அதனது நிலையாமை யினையும் நெஞ்சிற்கு அறிவுறுத்தியுள்ளார். இங்கு எடுத்துக்காட்டிய திருமுறைப் பாடல்களால் காணப்படும் உருவாகிய உடல் கருவிகளுக்கு வேறாக அருவாகியதோர் உயிருண்மை வலியுறுத்தப்பட்டமை காணலாம். ஆன்மா மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக் காரணங்கள் நான்கனுள் ஒன்றன்று. ஆயினும் தன்னை அனாதியே மறைத்துள்ள சகசமலமாகிய ஆணவமலம் காரணமாகப் பொருள்களை உணருந் தன்மையை இழந்தது. ஆதலால் நுண்ணர்வின்மையின் சூழ்ச்சித் துணைவராகிய அமைச்சரது உதவியை நாடிய அரசனைப் போன்று அந்தக் கரணங்களாகிய கருவிகளோடு கூடிநின்று நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என்னும் ஐவகையுணர்வு நிலைகளை யுடையதாயிற்று என்பார், அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று, அவை சந்தித்தது ஆன்மா, சகசமலத்து உணராது அமைச்சு அரசு ஏய்ப்பநின்று, அஞ்சு அவத்தைத்தே (சிவ. சூ. 4) என்றார் மெய்கண்டார். ஐம்புலன் நாலாம் அந்தக்கரணம் (திருவெழு கூற்றிருக்கை) எனவரும் ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயலாலும், மனத்தொகைத் திருக்குறுந்தொகை சித்தத்தொகைத் திருக்குறுந் தொகை, உள்ளத்தொகைத் திருக்குறுந்தொகை எனத் திருநாவுக்கரசர் அருளிய திருக்குறுந்தொகைகளின் அமைப்பாலும் அந்தக் கரணங்களின் வேறாயது ஆன்மா என்பதும் சகசமலத்தால் உணருந்தன்மை யிழந்த ஆன்மா அகக்கருவிகளாகிய அவற்றின் துணை கொண்டே அறியுந்தன்மையைப் பெற்றுப் பயனடைகின்றது என்பதும் உய்த்துணரப்படும். ஐம்பொறிகளாகிய வாயில்களும் அவற்றில் செல்லும் உணர்வுகளாகிய ஐம்புலன்களும் உயிராற் செலுத்தப் படுவனவாயினும் தம்மைச் செலுத்தும் உயிரை அறிந்து கொள்ளவல்லன அல்ல. அவற்றைப்போலவே தம்மை உள்நின்று செலுத்தும் தம்முணர்வின் தமியாகிய இறைவனை யுணரமாட்டா. அவ்வுயிர்கள் பொருள்களை அறிதல் என்பது, காந்தத்தைக் கண்ட இரும்பு அதன் முன்னிலை யளவிலே தொழிற்படுமாறு போல நினைவள வானே தூண்டிச் செலுத்தும் முதல்வனது திருவருள் முன்னிலையாலே ஆகம் என்பது, விளம்பிய வுள்ளத்து மெய்வாய் கண்மூக் களந்தறிந் தறியா அங்கவை போலத் தாம்தம் முணர்வின்தமி அருள் காந்தங் கண்ட பசாசத் தவையே (சிவ. சூ 5) எனவரும் சிவஞான போதச் சூத்திரத்தால் உணர்த்தப்பட்டது. இதனால் இறைவன் உயிர்களுக்குப் பொருள்களை அறிவிக்கும் உதவியாகிய காட்டும் உபகாரம் உணர்த்தப்பட்டது. பொறிப்புலன்களைப் போக்கறுத்துள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்புறும் அமுதாயவன் ஏகம்பம் குறிப்பினாற் சென்று கூடித்தொழுதுமே (5-48-4) எனவும், கல்லாதனவெல்லாங் கற்பித்தானைக் காணாதனவெல்லாங் காட்டினானை (6-43-1) எனவும், காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே எனவும் வரும் அப்பர் அருள்மொழிகள் இறைவனது காட்டும் உபகாரத்தைப் புலப்படுத்துவனவாகும். இறைவனது சிறப்பியல்பாகிய சொரூப இலக்கணம் ஒன்றினையே சிறந்தெடுத்துக்கூறும் முறையில் அமைந்தது, கறையணி வேலிலர்போலுங் கபாலந் தரித்திலர்போலும் மறையும் நவின்றிலர்போலும் மாசுணம் ஆர்த்திலர்போலும் பறையுங் கரத்திலர்போலும் பாசம் பிடித்திலர்போலும் பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரமபுரம் அமர்ந்தாரே (2-65-1) எனவரும் பிரமபுரத் திருப்பதிகமாகும். இறைவன் செய்தனவாகப் புராணங்களிற் கூறப்படும் செயல்கள் பலவற்றையும் தொகுத்துக் கூறி, இச்செயல்கள் யாவும் உலக முதல்வனாகிய அண்ணலாற் செய்யப்பட்டன அல்ல என மறுத்துரைக்கும் முறையில் இப்பதிகப்பாடல்கள் அமைந்திருத்தல் காணலாம். உலகப் பொருள்கள் ஒன்றினுந் தோய்வற நிற்கும் தன் உண்மை நிலையிற் சிவன் எனத் திகழும் தனிமுதல்வன், முன்னர்க்கூறப்பட்ட படைத்தல் முதலிய தொழில்கள் எல்லாவற்றையும் தன் தொழிலாகக் கூடி நின்று செய்யும் நிலையினும் தான் அத்தொழில் பற்றி விருப்பு வெறுப்புக் கொள்ளாது அவற்றில் தோய்வற விளங்குதல் பற்றி இறைவன் செய்தனவாகப் புராணங்கள் கூறும் அச்செயல்கள் யாவும் ஏகதேச நிலையில் ஒன்றிற் கருத்திருத்திச் செய்யும் முறையில் அவனாற் செய்யப்பட்டன அல்ல என உலகமக்களுக்கு அறிவுறுத்தும் நிலையில் ஞானசம்பந்தர் இத்திருப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார். இந்நுட்பம், பெண்ணுரு ஆணுரு வல்லாப்பிரமபுர நகர்மேய அண்ணல் செய்யாதனவெல்லாம் அறிந்து வகைவகையாலே நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள் விண்ணவ ரோடினிதாக வீற்றிருப்பாரவர் தாமே (2-68-11) எனவரும் இதன் திருக்கடைக்காப்புச் செய்யுளால் இனிது புலனாதல் காணலாம். இத்திருப்பதிகப் பொருளை அடியொற்றி இறைவனது சொரூப இலக்கணத்தினை யுணர்த்துவது, சிவன் அருவுருவுமல்லன் சித்தினோடசித்து மல்லன் பவமுதல் தொழில்களொன்றும் பண்ணிடுவானுமல்லன் தவமுதல் யோகபோகந் தரிப்பவனல்லன்தானே இவைபெற இயைந்தும் ஒன்றும் இயைந்திடா இயல்பினானே (சித்தியார் சுபக்கம்-89) எனவரும் சிவஞானசித்தியார் திருவிருத்தமாகும். கறையணி வேலிலர் போலும் எனவரும் திருப்பதிகத்திற்கு இது பொருள் என்பதனை மேற்குறித்த சித்தியார் திருவிருத்தத்தின் உரையில் மறைஞானதேசிகர் இத்தேவாரப்பாடலை மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளமையால் நன்குணரலாம். அணுமுதல் அண்ட முதலாய அனைத்தையும் ஆராய்ந்தறிந் தவர்களே யான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீத்த பெருமக்களாவர். இவர்கள் முத்தி யடைதற்குப் படிமுறையாகக் கொண்டவை முப்பத்தாறு தத்துவங்கள் என்பதும் இவற்றை முத்தியடைதற்குரிய ஏணிப்படியாகக் கொண்டு தத்துவங்கடந்த செம்பொருளாகிய சிவத்தினைக் கண்டு தெளிந்தவர்களே ஈறிலாப் பேரின்பமாகிய வீடுபேற்றினைப் பெற்றவராவர் என்பதும் அறிவுறுத்துவார், சித்தர் சிவலோகம் இங்கே தெரிசித்தோர் சத்தமுஞ் சத்தமுடிவுந் தம்முள் கொண்டோர் நித்தர் நிமலர் நிராமயர் நீள்பர முத்தர்தம் முத்திமுதல் முப்பத்தாறே (125) முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய் ஒப்பிலா ஆனந்தத்துள் ளொளிபுக்குச் செப்ப வரிய சிவங்கண்டு தான்தெளிந் தப்பரிசாக அமர்ந்திருந் தாரே (126) என்றார் திருமூலநாயனார். முப்பத்தாறு தத்துவங்களாவன :- சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை எனச் சிவதத்துவம் ஐந்தும், காலம் , நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், அசுத்த மாயை என வித்தியாதத்துவங்கள் ஏழும், நீலம், நீர், தீ, வளி, விசும்பு என்னும் ஐம்பூதங்கள், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள், ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை என்னும் தன் மாத்திரைகள் ஐந்து, வாக்கு, கால், கை, எருவாய், கருவாய் என்னுந்தொழிற்கருவிகள் ஐந்து, மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கு என ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் ஆக முப்பத்தாறு தத்துவங்களாகும். மேற்குறித்த தத்துவங்களின் காரியமாய் அமைந்தவை தாத்துவிகங்கள் என வழங்கப்பெறுவன. நிலத்தின் கூறாக மயிர், எலும்பு, தோல், நரம்பு, தசை என்னும் ஐந்தும் நீரின் கூறாக ஓடும்நீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை என்னும் ஐந்தும் தீயின் கூறாக உணவு, உறக்கம், அச்சம், இணைவிழைச்சு, சோம்பல் என்னும் ஐந்தும் வளியின் கூறாக ஓடல், நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் என்னும் ஐந்தும், ஆகாயத்தின் கூறாக காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் என்னும் ஐந்தும் ஆக இருபத்தைந்தும் பூதகாரியங் களாகும். பிராணன், ஆபானன், உதானன், வியானன், சாமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் என வாயுக்கள் பத்து. இடைகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அலம்புடை, புருஷன், குரு, சங்கினி என நாடிகள் பத்து. சொல்லுதல், செல்லுதல், கொடுத்தல், விடுத்தல், இன்புறுதல் என வசனாதிகள் ஐந்து. சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என வாக்குக்கள் நான்கு. சத்துவம், இராசதம், தாமதம் எனக் குணங்கள் மூன்று. தைசத அகங்காரம், வைகாரியகங்காரம், பூதாதி யகங்காரம் என அகங்காரங்கள் மூன்று. ஆக இவை அறுபதும் தாத்துவிகங்கள் எனப்படும். மேற்கூறப்பட்ட தத்துவம் முப்பத்தாறும் தாத்து விகங்கள் அறுபதும் ஆகத் தொண்ணுற்றாறும் அண்டத்தி லுள்ளவாறேயமைந்த பிண்டமாகிய உடம்பின்கண் விரவியுள்ளன என்பதும் இவை உடம்பினுள்வாழும் உயிர்க்கு உதவியாய் நிற்றலேயன்றி இடர்செய்தலும் உண்டென்பதும் உடல் சிதைந்தால் இவையனைத்தும் உடம்பினைவிட்டு ஓடுவன என்பதும், முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் செப்பமதிளுடைக் கோயிலுள் வாழ்பவர் செப்பமதிளுடைக் கோயில் சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத்தார்களே (திருமந்திரம் 154) எனவரும் திருமந்திரத்தாற்புலனாம். இதன்கண் முப்பதும் முப்பதும் எனமுதற்கண் கூறப்பட்ட அறுபதும் தத்துவங்களின் காரியமாகிய தாத்துவிகங்களைக் குறித்தன. முப்பத்தறுவர் என்றது முப்பத்தாறு தத்துவங்களைக் குறித்தது. செப்பமதிளுடைக் கோயில் என்றது மக்கள் யாக்கையினை உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் (திருமந்திரம்) என்பராதலின் உடம்பினைக் கோயில் என்றார். மேற்குறித்த முப்பத்தாறு தத்துவங்களும் அறுபது தாத்துவிகங்களும் ஆகத் தொண்ணுற்றாறும் கூடி உடம்புளே ஆட்சி செலுத்த அவற்றிடையே அகப்பட்டுத் தாம் வருந்தும் திறத்தினை, முப்பதும் முப்பத்தாறும் முப்பது மிடுகுரம்பை அப்பர்போல் ஐவர்வந்து அதுதருகிது விடென்று ஒப்பவே நலியலுற்றால் உய்யுமாறறிய மாட்டேன் செப்பமே திகழுமேனி திருப்புகலூ ரனீரே (4-54-3) தொக்குநின்றைவர் தொண்ணுற்றறு வருந்துயக்கமெய்த மிக்கு நின்றிவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன் (4-67-5) சாணிரு மருங்குநீண்ட சழக்குடைப் பதிக்குநாதர் வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரு மயக்கஞ்செய்து பேணிய பதியினின்று பெயரும் போதறிய மாட்டேன் சேணுயர் மாடநீடு திருக்கொண்டீச் சரத்துளானே (4-67-7) எனவரும் பாடல்களில் திருநாவுக்கரசர் விரித்துக் கூறிய திறம் இங்கு நினைத்தற்குரியதாகும். இங்குக் குறித்த முப்பத்தாறு தத்துவங்களின் இயல்பினை மெய்கண்ட தேவர் மாணவருள் ஒருவராகிய திருவதிகை மனவாசகங்கடந்தார் தாம் இயற்றிய உண்மை விளக்கம் என்ற நூலில் விரித்துக் கூறியுள்ளமை இங்குக் குறிக்கத்தகுவதாகும். உயிர்கள் செய்யும் நலந்தீங்குகளையெல்லாம் அவ்வுயிர்களின் உள்ளத்துள்ளே நின்றறிந்து, நல்லன இவை தீயன இவை என்று உயிர்கட்கு அறிவுறுத்தி நல்வழிப் படுத்தும் இறைவனது இருப்பினை உணரப்பெறாது தம்மனம் போனபடி நடக்கும் உலகமக்களைத் திருத்தக் கருதிய திருநாவுக்கரசர், அன்னோரது செயலைத் தம்மேல் ஏறிட்டுக்கொண்டு, இறைவனை நோக்கித்தமது பேதைமையினை வெளியிட்டுரைப்பதாக அமைந்தது, கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் கலத்தைத் கழித்துப்போக்கித் தெள்ளியேனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன் உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்தறிதியென்று வெள்கினேன் வெள்கிநானும் விலாவிறச் சிரித்திட்டேனே (4-75-3) எனவரும் திருநேரிசையாகும். இத்திருப்பாடல் உயிர்க் குயிராய்க் கலந்து நிற்கும் இறைவனது உண்மையினை மக்களது அநுபவத்தில் வைத்து விளக்குந் தனிச் சிறப்புடையதாகும். திருத்தாண்டகத்தில், நானேதும் அறியாமே என்னுள்நின்று நல்லனவும் தீயனவும் காட்ட நின்றாய் என்பதும் இக்கருத்தினதேயாகும். உயிரது ஆராய்ச்சி யறிவின்கண்ணும் உடனாய் நின்று உணர்த்துபவன் உள்ளங் கவர்கள்வனாகிய இறைவனே என்பதனை உள்ளத்தின் கண்ணனாகிய கள்வன்தான் (சிவ. சூ. 9 ஆதி. 2) எனவரும் தொடரினால் உணர்த்தினார் மெய்கண்டார். இங்ஙனம் இறைவன் உயிர்க்குயிராயிருக்கும் இறைவனது இருப்பினைத் தம் அனுபவத்தில் வைத்துணரும் பயிற்சியைப் பெறாது கடவுள் என்பதொருபொருள் இல்லை என்று கூறித் திரியும் பாழ்ங்கொள்கையினரை நோக்கித் திருநாவுக்கரசர் கடவுள் உண்டொன்னுந்தங் கொள்கையினை உறுதியுடன் அறிவுறுத்துவதாக அமைந்தது, அந்திவட்டத்திங்கட் கண்ணியன் ஐயாறமர்ந்துவந்தென் புந்திவட்டத்திடைப் புக்கு நின்றானையும் பாய்யென்பனோ சிந்தி வட்டச்சடைக்கற்றையலம்பச் சிறிதலர்ந்த நந்திவட்டத்தொடு கொன்றைவளாவிய நம்பனையே (4-98-2) எனவரும் திருவிருத்தமாகும். நிலையற்ற இவ்வுலகினையே மெய்யெனநம்பி உலகமெலாம் இயக்கும் பேராற்றல் வாய்ந்த கடவுளையும் அம்முதல்வனது திருவருளாணையால் ஊட்டப்பெறும் இருவினைப்பயனையும் இல்லையென்று சாதித்துத் திரியும் உலகாயதவாதிகளை நோக்கி, நீங்கள் இவ்வுலக நடையொன்றையே மெய்யென நம்பிக் கடவுளும் இருவினைப் பயனும் இல்லையென்று பேசுதலை விட்டொழியுங்கள். உம்மால் நிலையுடையதாகப் பேசப்படும் இவ்வுலகியல் வாழ்வில் ஐம்பெரும் பூதங்களின் மாறுதலால் புயல், கடற்பெருக்கு, பூகம்பம் முதலிய அழிவுகள் பெரும் படைகளைப் போன்று திடீரென்று தோன்றி அல்லல் விளைப்பதனைக் காண்கின்றீர்கள் இவ்வாறு உலகிலே அவ்வப்பொழுது உயிர்களின் வாழ்வுக்குத் தடையாகவுளவாகும் இடையூறுகளை யெல்லாம் நீக்கி மன்னுயிர்கட்கு அன்னையும் அத்தனுமாய் அருள்சுரந்து துணைநிற்பவன் ஆனைக்காவில் எழுந்தருளிய அண்ணலாகிய இறைவனே என்பதனை உணர்ந்து உய்திபெறுவீராக என்று அறிவுறுத்துவதாக அமைந்தது, நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள் தடையொன்றின்றியே தன்னடைந்தார்க்கெலாம் அடையநின்றிடும் ஆனைக்கா அண்ணாலே (5-31-6) எனவரும் திருக்குறுந்தொகையாகும். புண்ணியபாவமாகிய இருவினைகளிலும் அவற்றின் பயன்களிலும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து அவற்றை நீக்கும் ஆன்மாவின் அறிவின்கண் அவ்விருவினைப் பயன்களும் சமம் என்னும் உணர்வு தோன்றிய நிலையில் இனிய திருவருளாகிய சத்திகுருவாக எழுந்தருளிப் பசுபோத குணங்களை நீக்கிச் சிவஞானத்தை உபதேசித்தருளும் எனவும் அங்ஙனம் குரு அருளிய சிவஞானத்தால் ஆன்மா தற்போதங்கெடப் பெற்றால் அத்தகைய ஆன்மா மும்மலங்களுங் கெட்டுச் சிவமே ஆவன் எனவும் உணர்த்துவது, இருவினை நேரொப்பில் இன்னருட்சத்தி குருவெனவந்து குணம்பலநீக்கித் தரும் அரன் ஞானத்தால் தன்செயலற்றால் திரிமலந்தீர்ந்து சிவனவன் ஆமே (1527) எனவரும் திருமந்திரமாகும். உயிர்த்திருவருட்பதிவு பெற்றுக் குருவருளால் தூய்மைபெறும். இந்நிலையினை விளக்குவது, இருவினைச் செயல்கள் ஒப்பின் இன்னருட் சத்திதோயக் குருவருள் பெற்று, ஞானயோகத்தைக் குறுகிமுன்வைத் திரிமல மறுத்துப் பண்டைச் சிற்றறிவொழிந்து ஞானம் பெருகி நாயகன்றன் பாதம் பெறுவது சுத்தமாமே (230) எனவரும் சிவஞான சித்தியாராகும். உயிர் தான் முன்னே செய்து கொள்ளப்பட்ட புண்ணிய விசேடத்தால் தனக்கு உயிர்க்குயிராய் இதுகாறும் உள்நின்றுணர்த்தி வந்த பரம் பொருளே இப்பொழுது குரு வடிவமும் கொண்டு எழுந்தருளி வந்து சிவதீக்கை செய்து, மன்னவகுமாரனாகிய நீ, ஐம்பொறிகளாகிய வேடர் சூழலில் அகப்பட்டு நின் பெருந்தன்மை யறியாது மயங்கி இடர்ப்பட்டாய், நின் பெருந்தன்மையான இவ்வியல்பினது என்று அறிவுறுப்ப அங்ஙனம் அறிந்த அளவிலேயே ஐம்பொறிகளாகிய வேடரை விட்டுநீங்கி வேற்றுமையின்றி இரண்டற ஒன்றுந்தன்மையின் நிலைபெற்று அம்முதல்வன் திருவடிகளை அணையும் என்பது, ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட் டன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே (சிவ. சூ 8) எனவரும் சிவஞானபோத எட்டாஞ் சூத்திரமாகும். இறைவனே உயிர்கட்குக் குருவாகி எழுந்தருளி வந்து மெய்யுணர்வளிப்பன் என்னும் உண்மையினை, குருவே சிவனெனக் கூறினன் நந்தி குருவே சிவமென்பது குறித்தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர்வற்ற தோர் கோவே (1581) எனவரும் திருமந்திரத்தாலும், அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையை எனவரும் திருவாசகத்தாலும் நன்குணரலாம். இறைவனது பேரானந்தப் பெருஞ்செல்வமுழுதும் தனக்கேயாகக் கொண்டு அநுபவிக்கும் சுதந்திரமுடைய ஆன்மாவை ஆறலைத்துக் கொண்டு சிறுமையுறுத்துதலும் விதி விலக்கை இழப்பித்து இழிதொழிலில் நிற்பித்தலும் பற்றி ஐம்பொறிகளை வேடர்களாக உருவகித்தல் மரபு. கூர் முள்ளுடைய ஐம்பொறிகளாகிய வேடர் சூழலினின்றும் தப்பி உய்திபெற வேண்டுமானால் இறைவனது திருவடி நீழலில் மறைந்து நின்று அம்முதல்வன் அறிவுறுத்தியருளும் மெய்யுணர்வென்னும் படைக்கலங்களால் ஐம்புல வேடர்களை எய்துவெல்லலாம் என்பார், புள்ளுவர் ஐயர் வேடர் புனத்திடைப்புகுந்து நின்று துள்ளுவர் சூறைகொள்வர் தூநெறிவிளைய வொட்டார் முள்ளுடை யவர்கள் தம்மை முக்கணான்பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்றங்குணர்வினால் எய்யலாமே என அருளிச் செய்தார் திருநாவுக்கரசர். முன்னைத் தவத்தின் பயனாக இறைவனே குருவாக எழுந்தருளிவந்து ஞானத்தினையுணர்த்த உணர்ந்த உயிரானது, தன்னை ஐம்பொறிகளுக்கு வேறாகப் பகுத்துணர்ந்த அந்நிலையிலேயே பிறிது காரணம் வேண்டாது தனக்கு ஆதாரமாகிய முதல்வனுடைய திருவடியைத் தலைப்படுவதாகும். தவத்தினில் உணர்த்த விட்டு அன்னியமின்மையின் அரன்கழல் செலுமே என்னும் மேற்கோளை வலியுறுத்தும் ஏதுவாக அமைந்தது, ஊசல் கயிறற்றால் தாய் தரையே யாந்துணையான் எனவரும் சிவஞானபோதத் தொடராகும். இத்தொடரில் எடுத்தாளப் பெற்ற உவமையால், இவ்வான்மாவானது தன்னை ஐம்பொறிகளின் வேறு எனப்பிரித்துணரவே தமது முதல்வன் திருவடியை அணையும் என்ற மேற்கோளை நிலைநிறுத்தும் முறையில் இத்தொடர் அமைந்துள்ளது. இங்குக் குறிக்கப்பட்டுள்ள மேற்கோளும் ஏதுவும், உறுகயி றூசல்போல ஒன்றுவிட்டொன்று பற்றி மறுகயி றூசல்போல வந்துவந்துலவும் நெஞ்சம் பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத் தறுகயி றூசலானேன் அதிகை வீரட்டனீரே (4-26-4) எனவரும் திருநேரிசையில் பிறைபுல்கு சடையாய் பாதத்து அறுகயி றூசலானேன் எனவரும் தொடரை அடியொற்றி யமைந்துள்ளமை காணலாம். உயிர்களது குறையுணர்வாகிய பசு அறிவினை ஊனக்கண் எனவும் எல்லாம் வல்ல முதல்வனது பேரறிவினை ஞானக்கண் எனவும் வழங்குதல் சைவ சித்தாந்த மரபாகும். இம்மரபு, ஊனத் திருள்நீங்கிட வேண்டின் ஞானப் பொருள்கொண்டடி பேணும் எனவும், ஊனப்பேர் ஒழிய வைத்தார் ஓதியேயுணர வைத்தார் ஞானப்பேர் நவில வைத்தார் (4-30-7) கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய் (6-73-2) அவனருளே கண்ணாகக் காணினல்லால் எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இம்மரபினைப் புலப்படுத்தல் காணலாம். குறையுணர்வாகிய பசு அறிவாலும் பாச அறிவாலும் உணரப்படாத இறைவனை அவனது திருவடி ஞானத்தால் தன்னறிவின் கண்ணே ஆராய்ந்து தெளிக. அத்திருவடி ஞானத்தால் நிலம் முதல்நாதம் ஈறாகிய பாசத்தொகுதி பரந்து திரிதற்கண் மிக்க வேகமுடைய பேய்த்தேரின் இயல்பினதாய்க் கழிந்தொழிவது என்று அறிந்து நீங்கவே, அங்ஙனம் நீங்குதற்கு ஏதுவாகிய பதி (சிவ) ஞானம் பிறவித்துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய் வெளிப்பட்டு விளங்கும், அவ்வாறு பாசத்தொடர்பினை நீங்கிச் சிவஞானத்தைப் பெற்று முழுமுதற்பொருளைக் கண்டகாட்சி நிலை குலையாமைப் பொருட்டுத் திருவைந்தெழுத்தினை விதிப்படி யுச்சரித்தல் வேண்டும் என அறிவுறுத்துவது, ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தைநாடி, உராத்துணைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதி விதி என்னும் அஞ்செழுத்தே எனவரும் சிவஞானபோதம் ஒன்பதாஞ் சூத்திரமாகும். இறைவன் உயிரறிவாலும் கலையுணர்வாலும் அறியப் படாதவன் என்பது, திருமாலும் நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை (திருவங்கமாலை) எனவும், அரியானை (6-1-1) எனவும், காண்டற்கரிய கடவுள் கண்டாய் (6) எனவும் வரும் திருநாவுக்கரசர் வாய்மொழிகளாலும், மாற்றமனங்கழிய நின்ற மறையோனே எனவரும் திருவாசகத் தொடராலும், உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் எனவரும் சேக்கிழார் வாய்மொழியாலும் நன்கு தெளியப்படும். இறைவன் திருவடியானது பிறவித்துயராகிய வெப்பத்தால் வாட்டமுற்று வந்தடைந்தோர்க்குக் குளிர்ந்த நீழலாய் வெளிப்பட்டு விளங்கும் என்பது, சுழலார்துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர் துன்னும் நிழலா வனஎன்றும் நீங்காப் பிறவி நிலைகெடுத்துக் கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த அழலா ரொளியன காண்க ஐயாறனடித்தலமே (4-92-19) எனவரும் திருநாவுக்கரசர் அருளிச் செயலால் நன்கு விளங்கும். உயிர் தூய்மையடைதற்குத் திருவைந்தெழுத்தினை விதிப்படி எண்ணுதல் வேண்டும் என்றார். ஈண்டு அஞ்செழுத்து என்றது முத்தி பஞ்சாக்கரத்தை என்பர் சிவஞான முனிவர். உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய்ப் பொலியச் சிவாயநமவென்று நீறணிந்தேன் (4-94-6) அல்லலாக ஐம்பூதங்களாட்டினும் வல்லவாறு சிவாயநமவென்று நல்லமே வியநாதன் அடிதொழ வெல்லவந்த வினைப்பகை வீடுமே (5-43-6) எனத் திருநாவுக்கரசரும், நானேயோதவஞ் செய்தேன் சிவாயநமவெனப் பெற்றேன் தேனாயின்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே (திருவாசகம்) எனத் திருவாதவூரடிகளும் அருளிய பொருளுரைகள் இங்கு எண்ணத்தக்கனவாகும். ஆன்மா தன்னியல்பினை உள்ளவாறு அறிதற்கும் இறைவனைது அருள் ஞானம் கைவரப்பெறுதல் வேண்டும் என அறிவுறுத்துவது, நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னையாரறிவார் வானோர்பிரான் என்னையாண்டிலனேல் (திருக்கோத்தும்பி) எனவரும் திருவாசகமாகும். இதன்பொருளை விரித்து விளக்கும் முறையில் அமைந்தது திருவெண்காட்டடிகள் அருளிய திருவிடை மருதூர் மும்மணிக்கோவையில் மேவிய புன்மயிர்த்தொகையோ எனத்தொடங்கும் பதின்மூன்றாந் திருப்பாடலாகும். உயிர் எவ்வியல்பினது என ஆராயப் புகுந்து தத்துவசோதனை செய்து தம்மியல்பினை உணரப் பெறாது வருந்திய அடிகள், இறைவனது திருவருளையே கண்ணாகக் கொண்டு நோக்கிய நிலையில் உயிராகிய தம்மையும் உயிர்க்குயிராகிய இறைவனையும் உணரப்பெற்ற திறத்தை விரித்துரைப்பது இத்திருப்பாடலாகும். உடலிற் பொருந்திய மயிர்த்தொகுதியோ அதற்கிடமாய தோலின் பரப்போ, தோலினிடையே வைத்துப் பொதியப் பட்ட புண்ணோ புண்ணிடை யூறும் உதிரப்புனலோ அவற்றிடையே கூறுசெய்து நிற்கும் எலும்போ, எலும்பிடை முடை நாற்றத்துடன் பொருந்திய மூளைவிழுதோ, வழுவழுப்புடையதாய் உள்ளேயொழுகும் வழும்போ, மெதுவாகச் சென்று ஊரும் புழுவாகிய கிருமிகளின் வரிசையோ, நீரிடையே வைத்த மலக்குவையோ, உடலுறுப்புக்களை இணைத்துக்கட்டிய நரம்பாகிய கயிறோ, உடற்குள் நின்று பிரியாது வருத்தும் பிணியோ தெரியாது இவற்றுள் இன்னதுயான் என்று அறிந்திலேன். ஆன்மா வாகிய என்னை மேற்கூறியவாறு உடற்பகுதிகள் எங்குந் தேடிப் பார்த்தேன். அவற்றுள் யாதிலும் என்னைக் காணப் பெற்றிலேன். இறைவனாகிய நினது திருவருள் எனக்குரியதாகக் கிடைத்தலால் வஞ்சனையைச் செய்யும் அறியாமைப் படலம் கீறித் தூயஞானக் கண்ணின் ஒளிகைவரைப் பெற்றபின்னர் நின் அடியவனாகிய யானும் முதல்வனாகிய நினது பெருந்தன்மை யினையும் கண்டேன். கண்டவுடனே காண்பானாகிய என்னையும் கண்டேன் என்னைப் போலும் பிறரையுங் கண்டேன். வியத்தற்குரிய தன்மையென்னே! இறைவனாகிய நின்னைக் கண்டு நின்னருள் பெறாதமாந்தர் ஆன்மாவாகிய தம்மையுங்காண இயலாத தன்மையினராவர் என்பது இத்திருப்பாடல் பொருளாகும். இதன்கண், நின்னைக் காணாமாந்தர் தன்னையுங் காணாத் தன்மையோரே என ஓதியவாற்றான், ஏனைப்பசு பாசங்களும் சிவஞானத்தானன்றி அறியப்படாவென்பது போதரும் எனவும், ஆன்மா பிறவுயிர்களைத் தனித்த முதலாய்ப் பிரித்தறியுமாறு இல்லையாயினும், சிவத்தைத் தரிசிக்கும் வழித்தான் அதுவாய் நின்று தன்னையறியுமாறு போலப் பிறவுயிர்களையும் அச்சிவத்தின் வண்ணமாய்க் கண்டறிதல் அமைவுடைத்தென்பது, என்னையுங்கண்டேன் பிறரையுங்கண்டேன் நின்னிலையனைத்தையுங் கண்டேன் என்னே நின்னைக் காணாமாந்தர் தன்னையுங் காணாத்தன்மையோரே என்பதனாற் புலனாம் எனவும் சிவஞானமுனிவர் இத்திருப்பாடற் பொருளை இனிது விளக்கியுள்ளார். மேற்குறித்த திருவெண்காட்டடிகள் பாடலை அடியொற்றி யமைந்தது, நாடியோ என்போ நரம்புசீக் கோழையோ தேடி எனையறியேன் தேர்ந்தவகை - நாடியரன் தன்னாலே தன்னையுங் கண்டு தமைக்காணார் என்னாமென அறிவார் இன்று (வெ. 54) எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். நாடி, எலும்பு, நரம்பு முதலிய உடலுறுப்புக்களுள் உயிராகிய யான் ஆர்? என்று என்னைத்தேடிப் பார்த்தும் என்னைத் தெளிய அறிந்து கொண்டேனல்லேன். இவ்வாறு தம்மைப் பற்றி ஆராயந்தறிகின்ற ஆராய்ச்சியறிவின் கண்ணே இதனைத் தெளிவிப்பதாகிய அறிவு வேறு உண்டு என்று ஆராய்ந்து நோக்கி, அவ்வாறு நாடுங்கால் விளங்கித் தோன்றும் இறைவனது திருவடி ஞானத்தால் அம்முதல்வனையும் உணர்ந்து அவனது பேரறிவினுள்ளே தாம் அடங்கி நின்று அங்ஙனம் அறியும் பொருளாகிய தம்மையும் உணரும் பயிற்சி பெறாதார், உயிராகிய தம்மை எங்ஙனம் அறியவல்லார் என்பது இதன் பொருளாகும். இப்பாடல் சிவரூபத்தால் ஆன்மதரிசனமும் சிவதரிசனத்தால் ஆன்ம சுத்தியும் ஆமாறுகூறிற்று என்பர் பெரியோர். தம்செயல் நீத்து இறைபணி நிற்பார்க்குப் பிராரத்த வினை (நுகர்வினை) உடலூழாய் நின்று வருத்தாது கழியும் என்றும், ஏனையோர்க்கு உயிரூழாய்த் தொடர்ந்து வருத்தும் என்றும் கூறுவர் சான்றோர். தம்பால் அடைக்கலமெனச் சார்ந்தவர்களை இடர் நீக்கிக் காப்பாற்றுதல் தலைமைக் குணமுடையார்க்குரிய கடமையாதலால் தன்னைச் சார்ந்து தன் அடித்தொழில்புரியும் அடியார்க்குளவாம் வினைத் துன்பங்களை நீக்கியும் ஏனையோர்க்கு அருத்தயும் நிற்றலால் இறைவன் நடுவுநிலைமையில்லான்போலும் என ஐயுறுவரை நோக்கி அங்ஙனம் செய்தல் உலகியல் வழக்குக்குப் பொருந்தியதே என வற்புறுத்துவது, சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்குவான் நலன் (4-11-6) எனவரும் திருநாவுக்கரசர் அருள்மொழிகளாகும். இதனை அடியொற்றியது, சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல் சார்ந்தாரைக் காத்தும் சலமிலனாய்ச் - சார்ந்தடியார் தாந்தானாச் செய்து பிறர் தங்கள்வினை தான்கொடுத்தல் ஆய்ந்தார்முன் செய்வினையும் ஆங்கு (சிவ. சூ. 10, வெ. 64) எனவரும் சிவஞானபோத உதாரண வெண்பாவாகும். தன்னை யடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங் கடனாவதுதான் என அப்பரடிகள் எடுத்தாண்ட பழமொழி இவ்வெண்பாவில் இடம் பெற்றுள்ளமை காணலாம். காணுந்தன்மையினையுடைய கண்ணுக்குப் புறப்பொருள் களைக் காட்டித் தானும் அதனுடன் கூடியிருந்து காணும் ஆன்மாவைப் போன்று இறைவனும் அறியுந்தன்மையதாகிய உயிர்களோடு கலந்து நின்று பொருள் காட்டும் உதவியினைப் புரிதலோடு அவ்வுயிருடன் கூடிக் காணும் உதவியினையும் புரிகின்றான் என்பதனை அறிவுறுத்துவது, காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே எனவரும் சிவஞானபோதப் பதினோராஞ் சூத்திரமாகும். இது, உண்ணிலாப் புகுந்து நின்றங் குணர்வினுக்குணரக் கூறி (4-25-8) உள்ளத்தின் உள்ளிருந்தங் குறுதிகாட்டி (4-5-6) நானேதும் அறியாமே என்னுள் நின்று நல்லனவுந் தீயனவும் காட்டா நின்றாய் (6-7) எனக் காட்டும் உபகாரத்தையும் உள்குவாருள் கிற்றெல்லாம் உடனிருந்தறிதி (4-75-3) எனக் காணும் உபகாரத்தையும் உணர்த்தும் நிலையில் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் தொடர்களையும், அறிவானுந்தானே அறிவிப்பான்தானே அறிவாயறிகின்றான் தானே (அற்புத.) எனவரும் காரைக்காலம்மையார் வாய்மொழியையும் அடியொற்றி யமைந்துள்ளமை அறியற்பாலதாகும். இறைவனடியார்கள் யாவராயினும் குலவேற்றுமை கருதாது அவர்களைச் சிவபெருமான் ஆகவே தெளிந்து வழிபடுதல் வேண்டும் என்பது திருமுறை ஆசிரியர்கள் உலகமக்களுக்கு அறிவுறுத்திய உறுதியுரையாகும். தெய்வம் உண்டெனத் தெளிந்தோர் அத்தெய்வத்தை வழிபடுதல் போலவே தெய்வமுண்டெனத் தெளிந்த அடியார்களையும் தெய்வமாகப் பேணிவழிபடுதல் வேண்டும் என்பார், தெய்வந் தெளியின் தெளிந்தோர்ப் பேணுமின் என அறிவுறுத்தினார் இளங்கோவடிகள். நலமிலராக நலமதுண்டாக நாடவர்நாடறிகின்ற குலமிலராகக் குலமதுண்டாகத் தவம்பணி குலச்சிறை எனக் குலச்சிறைநாயனார் சிவனடியார்களை வழிபட்ட திறத்தினை மங்கையர்க்கரசி என்னும் திருப்பதிகத்தில் ஆளுடைய பிள்ளையார் விரித்துக் கூறியுள்ளார். எவரேனுந்தாமாக இலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங்கண்டால் உள்கி உவராதே அவரவரைக் கண்டபோதே உகந்தடிமைத் திறம்நினைந்தங்குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன்திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே (6-61-3) எனவரும் திருத்தாண்டகம் சிவனடியார்களைச் சிவன் எனவே தெளிந்து வழிபடும் முறையினை அறிவுறுத்துகின்றது. திருநாவுக்கரசர் அறிவுறுத்திய முறையில் சிவனடியார்களைச் சிவனெனவே தெளிந்து வழிபட்டவர் நம்பியாரூரர் என்பது, துணிப்படும் உடையுஞ்சுண்ண வெண்ணீறும் தோற்றமும் சிந்தித்துக் காணில் மனிப்படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன் எனவரும் அவரது வாய்மொழியால் நன்கு விளங்கும் தேவார ஆசிரியர் மூவரும் இறைவன் கோயில் கொண்டெழுந்தருளிய திருத்தலங்கள்தோறும் சென்று திருக்கோயில்களைச் சிவனெனவே வழிபட்ட செய்தி அவர்கள் திருவாய்மலர்ந்தருளிய திருப்பதிகங் களாலும் அவர்களது வரலாறு கூறும் திருத்தொண்டர் புராணத்தாலும் நன்கு தெளியப்படும். தூய வெண்ணீறுதுதைந்த பொன்மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழிகண்ணும் பதிகச் செஞ்சொல் மேயசெவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே (பெரிய. திருநாவுக். 148) எனத் திருநாவுக்கரசரது சிவவேடப் பொலிவினைச் சொல்லோவியஞ் செய்துகாட்டிய சேக்கிழாரடிகள், அப்பரது அருள்வேடத்தைக்கண்ட சிவஞானசம்பந்தர் தம் உள்ளக்கிழியிலே உருவெழுதி நெடுங்காலமாக வழிபடப் பெற்றுவந்த அடியார் திருவேடமே இப்பொழுது திருநாவுக்கரசராகப் புறத்தே எழுந்தருளியது என எண்ணித் திருநாவுக்கரசரைத்தொழுது மகிழ்ந்த செய்தியினை, சிந்தையிடையறா அன்பும் திருமேனிதனிலசைவும் கந்தைமிகை யாங்கருத்தும் கையுழவாரப்படையும் வந்திழி கண்ணீர் மழையும் வடிவிற்பொலி திருநீறும் அந்தமிலாத் திருவேடத்தரசுமெதிர் வந்தணைய கண்டகவுணியக் கன்றும் கருத்திற்பரவு மெய்க்காதல் தொண்டர் திருவேடம் நேரேதோன்றிய தென்னத் தொழுதே (பெரிய. சம்பந்தர். 270, 271) எனவரும் பாடல்களில் விரித்துக் கூறியுள்ளார். இங்ஙனம் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்ற சிவஞானிகள் அடியார் திருவேடத்தினையும் திருக்கோயிலையும் அரனெனவே கண்டுதொழுத வரலாற்றுச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு சீவன் முத்தராகிய அணைந்தோர் தன்மையினை அறிவுறுத்துவதே சிவஞானபோதத்தில், செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலங்கழீஇ அன்பரொடுமரீஇ மாலற நேயம் மலிந்தவர்வேடமும் ஆலயந்தானும் அரனெனத் தொழுமே எனவரும் பன்னிரண்டாஞ் சூத்திரமாகும். பன்னிரண்டாந் திருமுறையாகிய திருத்தொண்டர் புரணத்திற் கூறப்படும் அடியார் செய்திகள் சிவஞானபோதம் பன்னிரண்டாஞ் சூத்திரப் பொருளுக்குரிய இலக்கியங்களாக அமைந்திருத் தலையுணர்வோர், பன்னிருதிருமுறைகளின் பயனாக அமைந்ததே மெய்கண்டார் இயற்றிய சிவஞானபோதம் என்னும் சைவசித்தாந்த சாத்திரம் என்னும் மெய்ம்மையினைத் தெளிவாக உணர்வார்கள் என்பது திண்ணம். இடையறாப் பேரன்பால் சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சத்தராய் மெய்ம்மயிர் சிலிர்ப்பக் கண்ணீர்ததும்ப உள்ளங் கசிந்துருகிய அடியார்களுடனே இறைவன் பிரிவின்றி உடனாய் நிற்பன் என்பது, பண்ணிற்பொலிந்த வீணையர் பதினெண்கணமும் உண்ணாநஞ் சுண்ணப்பொலிந்த மிடற்றினால் உள்ளம் உருவில் உடனாவர் (2-111-4) எனவும், உயிராவணமிருந்துற்று நோக்கியுள்ளக் கிழியினுருவெழுதி உயிர் ஆவணஞ் செய்திட்டு உன்கைத்தந்தார் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி (6-25-1) எனவும் வரும் திருமுறைத் தொடர்களால் இனிது விளங்கும். இத்தொடர்களை அடியொற்றியமைந்தது, உள்ள முருகிலுடனாவரல்லது தெள்ளவரியரென்றுந் தீபற சிற்பரச் செல்வரென்றுந்தீபற (7) எனவரும் திருவுந்தியாராகும். மேலான ஞானப்பெருஞ் செல்வத்தை வரையாது வழங்கவல்ல அருள்வள்ளலாகிய இறைவன், ஆன்மாக்களது உள்ளம் (தீயிற்பட்ட மெழுகு போன்று) உருகிய பக்குவநிலையினைப் பெற்றால் ஆன்மாவோடு ஒட்டி உடனாவர். உள்ளம் உருகப் பெறாத ஏனையோர் தமது சுட்டறிவினால் ஆராய்ந்தறிந்து கூடுதற்குரிய எளிமை நிலையினர் அல்லர் என்பது இதன் பொருளாகும். அடியார்கள் தன்னை அன்பினாற்கருதத் தொடங்குதற்கு முன்னமேயே விரைந்து முன்னின்று அருள்புரியும் பேரருளாளன் இறைவன் என்பதனை, எம்பிரான் என்றதே கொண்டென்னுளே புகுந்து நின்றிங் கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே உழிதர்வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால் எம்பிரான் எண்ணினல்லால் என்செய்கேன் ஏழையேனே (4-76-3) எனவும், தன்னை முன்னம் நினைக்கத்தருவான் எனவும் வரும் திருமுறைகளால் அறியலாம். இத்திருமுறைப் பொருளை விளக்கும் நிலையில் அமைந்தது, கருதவதன் முன்னங்கருத்தழியப் பாயும் ஒருமகள் கேள்வனென்றுந்தீபற உன்ன அரியனென்றுந்தீபற (19) எனவரும் திருவுந்தியாராகும். ஆன்மாவின் உள்ளத்திலே தோன்றாது நிற்றலால் கள்வன் எனப்படும் இறைவனது இருப்பினை உள்ளவாறு காணவல்லார்க்கு அக்கள்ளந்தீர்தலின் தம்மையும் முதல்வனையும் காணுதல் கூடும் என்பதும் அங்ஙனம் காணவல்லார்க்கு ஆறு அத்துவாக்கள் வழியாக ஈட்டப்பட்ட வினைக்குவியல் அனைத்தும் கவரப்பட்டு அவர்தம் வெளிக்கு வெளியாய்ப் பரமாகாசமாகி விடும் ஐம்புல வேடர்களாற் கவர்ந்து கொள்ளப்படாத வீடுபேறும் எளிதாகக் கிடைக்கும் என அறிவுறுத்துவது, கள்ளரோடில்லமுடையார் கலந்திடில் வெள்ள வெளியாம் என்றந்தீபற வீடும் எளிதாமென்றுந்தீபற (23) எனவரும் திருவுந்தியாராகும். இது, வெள்ளநீர்ச் சடையினார்தாம் வினவுவார்போல வந்தென் உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்கு நான்புடைகள் போந்து கள்ளரோ புகுந்தீரென்னக் கலந்துதான் நோக்கிநக்கு வெள்ளரோம் என்று நின்றார் விளங்கிளம் பிறையினாரே (4-75-9) எனவரும் திருநேரிசைப் பொருளையுளங்கொண்டு கூறியதாகும். தோன்றாது நிற்றல் பற்றிக் கள்வர் என்றார். வெள்ளரோம் - வெட்டவெளியில் உள்ளோம். கலத்தல் ஆவது கள்ளராகிய இறைவரோடு இல்லமுடையாராகிய வினைக்குவியலை அப்புறப் படுத்தும் நிலையில் ஒன்றித் தொழில் புரிதல். சிவஞானிகள் உலகப் பொருள்களிற் கருத்தைச் செலுத்தாது உயிர்க்குயிராகிய இறைவனையே எக்காலத்துஞ் சார்ந்து நிற்றலின் இறைவனும் இவர்களுடைய வினைப் பயன்களைத் தானே ஒன்று கொள்வனாதலால் இவ்வடியார்களுடைய கருவி கரணங்களெல்லாம் சிவகரணங்களாக அமைய அந்நிலையில் அவர்கள் பெற்ற சிற்றின்பமும் பேரின்பமாக வந்து முடியும் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலிமென்றோட்டடமுலை ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருளதே (7-45-4) எனவரும் நம்பியாரூரர் அருளிச்செயலும், தென்னாவலூ ராளி தேவர்பிரான் திருவருளால் மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனும் மெல்லியல் தன் பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே சார்வாகப் பன்னாளும் பயில்யோக பரம்பரையின் விரும்பினார் (பெரிய. தடுத். 181) எனவரும் சேக்கிழார் நாயனார் வாய்மொழியும் உலகப் பொருள்களைப் பாராது சிவபரம் பொருளையே நோக்கிய செம்புலச் செல்வர்களுடைய கருவி கரணங்கள் சிவ கரணங்களாகத் தூய்மைபெற்ற நிலையில், அவர்கள் இவ்வுலகில் துய்த்த சிற்றின்பமும் பேரின்பமாக நிறைவுபெற்ற தன்மைக்குச் சிறந்த இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவ்வுண்மையினைப் புலப்படுத்தும் நிலையில் அமைந்தது, பெற்ற சிற்றின்பமே பேரின்பமாமங்கே முற்றவரும் பரிசுந்தீபற முளையாது மாயையொன்றுந்தீபற (33) எனவரும் திருவுந்தியாராகும். சிவயோக நெறியில் நிற்போர் பிராணவாயுவைப் புறத்தே போகாமல் ஒடுக்கி இறைவனது திருவருள் ஞானமாகிய விளக்கினையேற்றிப் புறத்தே செல்லும் இடைபிங்கலைகளின் வழிகளையடைத்து நன்புலன் ஒன்றி அகத்தே மேல்நோக்கிச்செல்லும் சுழுமுனை வழியினைத் திறந்து திருவைந்தெழுத்தின் துணை கொண்டு நாத தத்துவத்தில் நிலைபெற்ற சிவபரம்பொருளை ஆறாதாரங்களுக்கும் மேலான மீதானத்திலே கூடிநின்று உலக வாதனை களாலுளவாம் இடர்களை நீங்கி இன்புறுவர். இச்செய்தி, ஊனிலுயிர்ப்பை யொடுக்கியொண்சுடர் ஞானவிளக்கினையேற்றி நன்புலத்து ஏனைவழி திறந்தேத்துவார்கிட ரான கெடுப்பன் அஞ்செழுத்துமே (3-22-3) எனவரும் ஆளுடையபிள்ளையார் திருப்பாடலால் அறியப்படும். உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக மடம்படு முணர்நெய்யட்டி உயிரெனுந் திரிமயக்கி இடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்துநோக்கில் கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே (4-75-4) எனவும், கழிப்பாலை மேயகபாலப்பனார் வானிடத்தையூடறத்து வல்லைச் செல்லும் வழிவைத் தார்க்கவ் வழியே போதும் நாமே (6-22-3) எனவும் வரும் திருநாவுக்கரசர் திருப்பாடல்கள் இச்சிவயோக நெறியினைக் குறித்து நிற்றலும், இதற்கு இலக்கணமாக நாலுகரணங்களு மொன்றாய் நல்லஅறிவு மேற்கொண்டு காலும் பிரமநாடி வழிக்கருத்துச் செலுத்திக் கபாலநடு ஏலவே முன்பயின்றநெறி எடுத்த மறைமூலந்திறப்ப மூலமுதல் திருப்பாதம் அடைவார்கயிலை முன்னடைந்தார் (பெரி. பெருமிழலை. 10) எனப் பெருமிழலைக் குறும்பநாயனார் வரலாறு அமைந்துள்ள மையும், மனத்தகத்தான் தலைமேலான் (6-8-5) எனவும், ஓங்கினாரெமதுச்சியாரே (2726-2) எனவரும் திருமுறைத் தொடர்களும் ஆறாதாரத்திற்கும் மேலாகிய மீதானத்தைக் குறித்தல் காணலாம். இத்தகைய சிவயொக நெறியினை விளக்குவது, நாலாய பூதமும் நாதமும் ஒன்றிடின் நாலாம் நிலையாமென்றுந்தீபற நாதற்கிட மதென்றுந்தீபற (36) எனவரும் திருவுந்தியாராகும். நாலாம்பூதமாகிய உயிர் விளியும் நாதமும் சேர்ந்து ஒன்றுமிடம் பிரமமந்திரம் எனப்படும் உச்சிப் பெருவெளியாகும். நாதவுருவினனாகிய இறைவன் எழுந்தருளி யிருக்கும் மேலான இடமும் அம்முதல்வனை ஆன்மா கூடுதற்குரிய இடமும் அதுவேயாகும். அடியார்கள் இறைவனைத் தம் உடம்பினகத்தே வைத்து வழிபடும் போது அவர்களது உந்தித்தாமரை ஒமத்தானமாகவும் நெஞ்சத்தாமரை பூசைத்தானமாகவும்நெற்றிக்கமலம் தியானத் தானமாகவும் அமைய அகப்பூசையினை முறைப்படி செய்து இம் மூன்றிற்கும் மேலாய் மீதானம் எனப்படும் தலையினது உச்சியாகிய பிரமரந்திரப் பெருவெளியிலே தம்முயிரைச் செலுத்திக் கலந்து இன்புறும் நிலையில் நாலாந்தானமாகிய அவ்விடத்திலே ஆயிரவிதழ்த் தாமரையிலே அம்மையப்பராக இறைவர் எழுந்தருளியிருப்பார் என்பார் தாரத்தின் .................. நாற்றானத்தேயிருப்பர் (திருக்களிற்றுப்படியார்-79) என்றார் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார். ஆறாதாரங்களாகிய மூன்று மண்டலங்களையும் கடந்து நாலாவது தானமாகத் திகழ்வது உச்சிப் பெருவெளியாதலின் அது நாற்றானம் என வழங்கப் பெறுவதாயிற்று. இப்பெயர் வழக்கம், நாற்றானத் தொருவனை நானாயபரனை (7-38-4) எனச் சிவயோகியாராகிய நம்பியாரூரர் பாடலில் நிலைபெற்றுள்ளமையும் இந்நிலையினை நாலாம் நிலத்தின் நடுவான பொருள் (திருமந்திரம்-840) எனத் திருமூலநாயனார் குறித்துள்ளமையும் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தக்கனவாகும். 10. திருவாதவூரடிகள் மேற்கொண்டொழுகிய சிவநெறிக் கொள்கை சைவ சமய குரவர் எனப்போற்றப்பெறும் நால்வருள் காலமுறைப்படி நாலாமவராக வைத்து எண்ணப்பெறுபவர் திருவாதவூரடிகளாகிய மாணிக்கவாசகராவர். அடிகள் தமக்கு முன்னுள்ள திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய தேவார ஆசிரியர் மூவரும் அம்மூவர்க்கும் காலத்தால் முற்பட்ட திருமூலநாயனாரும் கொண்டொழுகிய சைவசித்தாந்தம் எனப்படும் சிவநெறிக் கொள்கையினையே மேற்கொண்டொழுகியவராவர். இச்செய்தி திருமந்திரமாலையிலும் மூவர் தேவாரப்பதிகங்களிலும் உள்ள தொடர்களும் கருத்துக்களும் அடிகள் அருளிய திருவாசகம் திருக்கோவையாகிய அருள் நூல்களில் அவ்வாறே எடுத்தாளப் பெற்றிருத்தலால் இனிது விளங்கும். திருவாசகத்தில் பதி பசு பாசம் என்னும் முப்பொருள் பேசப்பட்டுள்ளது. பதி - இறைவன், பசு - ஆன்மா, பாசம் - உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம் கன்மம் மாயைஎன்னும் மும்மலப்பிணிப்புக்கள். அவற்றுள் மாயையின் காரியமாகிய உடல் கருவி உலகுநுகர்பொருள் என்னும் மாயேயத்தையும், இறைவனது சத்திகளுள் ஒன்றாகிய திரோதாயி (மறைப்புச் சத்தி)யையும் வேறுபிரித்து எண்ணி மலங்கள் ஐந்து எனக் கூறுதலும் உண்டு. இவ்வாறு மும்மலம் எனவும் ஐம்மலம் எனவும் வழங்கும் சைவ சித்தாந்தக் குறியீடுகளும், இருவினையொப்பு முதலிய நுண் பொருள்களும் திருவாசகத்தில் இடம் பெற்றுள்ளன. இக்குறிப்புக்களை உற்றுநோக்குங்கால் திருவாதவூரடிகள் திருமூலர் அருளிய சைவசித்தாந்தத் தத்துவக்கொள்கைகளை மேற்கொண்டொழுகிய செம்புலச்செல்வர் என்பது நன்கு துணியப்படும். ஒருவன் என்னும்ஒருவன் காண்க (திருவண்டப் பகுதி) எனவரும் திருவாசகத்தொடர், உலகங்கள் எல்லாவற்றையும் இயக்கும் ஒப்பற்ற முழுமுதற்கடவுள் ஒன்றே என்பதனை அறிவுறுத்துகின்றது. ஒருவனே தேவனும் என்றார் திருமூலர். இங்ஙனம் ஒருவனாகிய முதல்வன் தனது ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மையப்பராக விருந்து உயிர்கட்கு அருள்புரியுந் திறத்தினை உணரப்பெற்ற மணிவாசகப் பெருந்தகை யார் அம்மையே அப்பா ஒப்பிலாமணியே என அம்முதல்வனை அழைத்துப் போற்றியதுடன் தாம்கண்ட தெய்வக் காட்சியினை, தோலுநதுகிலுங் குழையுஞ் சுருள்தோடும் பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ் சூலமுந்தொக்க வளையுமுடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ எனவரும் திருப்பாடலில் புனைந்து போற்றியுள்ளார். சீர்காழிப்பதியில் பிரமதீர்த்தக்கரையில் நின்று கொண்டு திருக்தோணிச் சிகரம்பார்த்து அம்மே அப்பா என அழுதருளிய கவுணியப்பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப்பாலை அருத்தியருளிய திருவருட்செயலும், இவ்வாறே திருத் தொண்டத் தொகையடியார் பலர்க்கும் இறைவன் அம்மையப்பராகத் தோன்றியருள்புரிந்த திருவருட் செயல்களும் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளன. இவ்வுண்மையினை வற்புறுத்தும் நிலையில் அமைந்தது, அம்மையப்பரே யுலகுக்கம்மையப்ப ரென்றறிக அம்மையப்பர் அப்பரிசே வந்தளிப்பர் - அம்மையப்பர் எல்லாவுலகுக்கும் அப்புறத்தார் இப்புறத்தும் அல்லால் போல்நிற்பர் அவர் (1) எனவரும் திருக்களிற்றுப்படியார் மங்கலவாழ்த்துப் பாடலாகும். இறைவன் குருவாகத் திருமேனிகொண்டு எழுந்தருளிவந்து தம்மை ஆண்டு கொண்டருளிய திறத்தை, அருபரத்தொருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையை எனவும், புவனியிற் சேவடி தீண்டினன் காண்க சிவனெனயானுந்தேறினன் காண்க எனவும், பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே எனவும், இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை யாண்டுகொண்டிங் கெழுந்தருளும் மதுவளர் பொழில் திருவுத்தரகோச மங்கையுள்ளாய் திருப்பெருந்துறைமன்னா (திருப்பள்ளியெழுச்சி) எனவும், முன்னே எனையாண்ட பார்ப்பானே எனவும், அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும் தெரிக்கும் படித்தன்றி நின்ற சிவம் வந்துநம்மை உருக்கும் பணிகொள்ளும் என்பது கேட்டுலகமெல்லாஞ் சிரிக்குந் திறம்பாடித் தெள்ளேணம் கொட்டாமோ எனவும் வரும் திருவாசகச் செழும் பாடல்கள் திருவாதவூரடிகளுக்கு இறைவனே குருவாக எழுந்தருளிவந்து மெய்யுணர்வளித்த திறத்தினை விரித்துரைப்பனவாகும். இங்ஙனம் சிவமே குருவாக எழுந்தருளும் திருவருளின் திறத்தை வியந்து போற்றுவது, அகளமா யாரும் அறிவரிதப்பொருள் சகளமாய் வந்ததென்றுந்தீபற தானாகத் தந்ததென்றுந்தீபற (1) எனவரும் திருவுந்தியாராகும். தோற்றமில் காலமாகத் தூய்மைப் பொருளாய் எத்தகையோராலும் இன்ன தன்மைத்து என அறிய வொண்ணாததாயுள்ள சிவமாகிய அம்முழுமுதற் பொருளே நம்பொருட்டுத் திருமேனி கொண்டு குருவாக எழுந்தருளி வந்தது. அம்முதற்பொருள் தானே வலியவந்து மெய்யுணர்வை வழங்கியருளியது என்பது இதன் பொருளாகும். அகளம் - அருவம், என்றது, உயிர்க்குயிராய் நின்று அறிவிக்கும் பேரறிவினை சகளம் - உருவம், என்றது, குருவாகி வந்து அறிவிக்கும் திருமேனியை, யாரும் அறிவரிது அப்பொருள் என்றது, தன்னைக் கூடினவர்களாலும் கூடாதவர்களாலும் இன்னதன்மையதென அறிய வொண்ணாத சிவபரம்பொருளை. தானாகத் தருதல் - பிறிது காரணமின்றித் தன் அருளே காரணமாக எளிவந்து வலியக் கொடுத்தல், தானாக என்பதற்குச் சிவமேயாக எனப் பொருளுரைத்தலும் உண்டு. தருதல் - ஞானத்தைத் தருதல், இறைவன் கருவாகத் திருமேனி கொண்டு எழுந்தருளி மெய்ப்பொருளை உபதேசித்தருளுதலாலேயே உபதேச பரம்பரையில் ஆகமப் பயிற்சியும் சமயவொழுகலாறுகளும் யோகம் முதலிய நெறிமுறைகளும் உலகத்து நிலைபெற்று வழங்கி வருகின்றன என இறைவன் குருவாய் எழுந்தருளுதலின் இன்றியமையாமையை விரித்துரைப்பது, ஆகமங்கள் எங்கே அறுசமயந்தானெங்கே யோகங்களெங்கே யுணர்வெங்கே - பாகத் தருள்வடிவுந்தானுமா யாண்டிலனேலந்தப் பெருவடிவை யாரறிவார் பேசு (5) எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். இது, நானும் என்சிந்தையும் நாயகனுக்கெவ்விடத்தோம் தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல் எனவும், நானார் என்னுள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை யண்டிலனேல் எனவும் வரும் திருவாதவூரடிகள் அனுபவமொழிகளை அடியொற்றி யமைந்ததாகும். சிவானுபவம் இன்னதன்மைத்தெனச் சொல்லால் வெளியிட்டுரைக்கவொண்ணாதது என்பதனை, தடக்கையினெல்லிக் கனியெனக் காயினன் சொல்லுவதறியேன் வாழிமுறையோ தரியேன் நாயேன் தான்எனைச் செய்தது தெரியேன்................. என்னிற் கருணை வான்தேன்கலக்க அருளொடு பராவ முதாக்கினன் (திருவண்டப்பகுதி) எனவருந்தொடரில் அதனையுணர்ந்தோராகிய மணிவாசப் பெருமான் குறித்துள்ளார். இக்குறிப்பினை அடியொற்றி யமைந்தது, எங்ஙனிருந்ததென் றெவ்வண்ணஞ் சொல்லுகேன் அங்ஙனிருந்ததென்றுந்தீபற அறியும் அறிவதன்றுந்தீபற (4) எனவரும் திருவுந்தியாராகும். சிவபூசனையில் ஈடுபட்டிருந்த சண்டீசப்பிள்ளையார் (சிவபூசைக்குரிய பாற்குடத்தைச் காலால் இடறிய எச்சதத்தனைக் கொல்லுதல்) ஐம்பெரும் பாதகங்களுள் ஒன்றான கொலையென்றும் அதனைச் செய்தல் பழியுடைய செயலாம் என்றும் சிறிதும் எண்ணிப் பாராமல், தன்னைப் பெற்றுவளர்த்த தந்தையும் தனக்கு மறைஓதுவித்த வேதியனும் குருவும் ஆகிய அவனுடைய இரண்டு கால்களையும் வெட்டி வீழ்த்திடக்கண்டு இறைவன் சண்டீசநாயனாரது வல்வினையின் திறத்தால் சிவமாந் தன்மைப் பெரும்பதத்தினை அவர்க்கு வழங்கியருளினார் என்னும் மெய்ம்மை நிகழ்ச்சியினைக் கண்டுணர்ந்தனையல்லவா என மாணவனை நோக்கி வல்வினையின் திறம் கூறுவதாக அமைந்தது, பாதகமென்றும் பழியென்றும் பாராதே தாதையை வேதியனைத் தாளிரண்டும் - சேதிப்பக் கண்டீசர் தாமாம் பரிசளித்தார் கண்டாயே சண்டீசர் தன்செயலாற்றான் (19) எனவரும் திருக்களிற்றுப்படியாராகும். இது, தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்பஈசன் திருவருளாற்றேவர் தொழப் பாதகமே சோறு பற்றியவாதோணோக்கம் (திருவாசகம்) எனவரும் திருவாசகப் பாடலை அடியொற்றி யமைந்துள்ளமை ஒப்புநோக்கியுணரத் தகுவதாகும். தன்னியல்பால் ஒருவனாகிய இறைவன் உயிர்க்குயிராய்ப் பொருள்கள்தோறும் நீக்கமறக் கலந்து நின்று உலகுயிர்களை இயக்கியருளுதலால் உலகிற் பல்வேறு வடிவினவாகவும் திகழ்கின்றான் என்பதனை, ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க (சிவபுராணம்) எனவருந்தொடரால் திருவாதவூரடிகள் அறிவுறுத்துவர். இத்தொடர்ப் பொருளை விரித்துரைக்கும் முறையில் அமைந்தது, ஏகனுமாகிய நேகனுமானவன் நாதனு மானானென்றுந்தீபற நம்மையே யாண்டானென்றுந்தீபற (5) எனவரும் திருவுந்தியாராகும். நிராதாரயோகத்தில் நிற்பார்க்கு நிகழும் திருவருள் அடையாளம் இதுவென உணர்த்துவது, திருச்சிலம்போசை ஒலிவழியே சென்று நிருத்தனைக்கும்பிடென்றுந் தீபற நேர்பட அங்கே நின்றுந்தீபற (17) எனவரும் திருவுந்தியாராகும். அனவரத தாண்டவம் புரிந்தருளும் திருவடியில் உள்ள திருச்சிலம்பாகிய திருவருளினுடைய ஓசையொலி வழியே சென்று மீதானத்தே ஆடல்புரியும் கூத்தப்பெருமானைக் கண்டு கும்பிடுவாயாக. அங்கே அப்பரம்பொருள் வெளிப்பட்டுத் தோன்ற ஐம்புல வழியாகிய சிறநெறியிற் செல்லாது திருவருளாகிய செந்நெறியில் நிலைத்து நிற்பாயாக என்பது இதன் பொருளாகும். இறைவன் திருவடியிலுள்ள சிலம்பும் அதன் கண் இருந்து தோன்றும் ஓசை ஒலியும் முறையே பரவிந்தும் பரநாதமும் ஆகும் என்பர். திருவடிச் சிலம்பொலி அகஞ் செவிக்குப் புலனாகும் நிலையில் ஓசை எனவும் உயிருணர்வுக்குப் புலனாகும் நிலையில் ஒலி எனவும் பெயர் பெறும். ஓசையொலியெலாம் ஆனாய் நீயே எனப் போற்றுவர் தாண்டகவேந்தர். திருச்சிலம்போசை ஒலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிடுதலாவது, உலக ஆரவாரத்தினின்றும் நீங்கி அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானமேயுருவாகத் திகழும் இறைவனைத் தமது நெஞ்சத்தாமரையினுட் சென்னியிலும் வைத்து வழிபடுதல். அங்ஙனம் வழிபடும் சிவயோகியர்க்குத் திருவருள் மயமான பத்துவகை நாதம் அகத்தே தோன்றும் எனவும் தற்போதங் கெடத் திருவருளின் ஓசையொலி வழியே கும்பிடுவார்க்குக் கூத்தப்பெருமான் நேர்படத் தோன்றியருள்வன் எனவும், இங்ஙனம் சிலம்பொலி கேட்டால் அவனருள் வழி நிற்போர்க்கே இயலும் ஏனையோர்க்கு இயலாது எனவும் அறிவுறுத்துவது, மணிகடல் யானை வார்குழல் மேகம் மணிவண்டு தும்பி வளைபேரிகையாழ் தனித்தெழு நாதங்கள் தாமிவை பத்தும் பணிந்தவர்க் கல்லது பார்க்க வொண்ணாதே (606) எனவரும் திருமந்திரமாகும். மணி, கடல், யானை இசை வளர்தற்கு இடனாகிய வேய்ங்குழல், மேகம், நீலமணி போலும் நிறமுடைய வண்டு, (தேன்நுகரும்) தும்பி, வளை (சங்கு) பேரிகை, யாழ் என மிகவும் நுண்ணியவாய் மெல்லிய வாய்த் தோன்றுகின்ற இப்பத்துவகை நாதங்களும் இறைவனைப் பணிந்து போற்றும் தியானநிலையிலுள்ள செம்புலச் செல்வர்க்கல்லது ஏனையோரால் செவிப் புலனாகக் கண்டுணுர்தல் இயலாது என்பது இத்திருமந்திரத்தின் பொருளாகும். நன்மணிநாதம் முழுங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே வீணைமுரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பனவாகாதே என மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகத் தொடர்களும் தூங்கிருள் நடுநல்யாமத்தே மழலை யாழ்சிலம்ப வந்தகம் புகுந்தோன் எனக் கருவூர்த்தேவர் அருளிய திருவிசைப்பாத் தொடரும் அப்பெருமக்களின் சிவயோக அனுபவத்தை நன்கு புலப்படுத்து வனவாகும். திருவாதவூரடிகள் திருச்சிலம்போசை யொலிவழியே சென்று நிருத்தனைக் கும்பிட்டுப் பெற்ற பேரின்ப நிலையை விரித்துரைக்கும் நிலையில் அமைந்தது, சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் தேரார்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய் பேரானந்தம் பாடிப்பூவல்லி கொய்யாமோ எனவரும் திருவாசகமாகும். இத்தகைய சிவயோக நெறியில் ஒழுகித் திருச்சிலம்பொலி கேட்டவர் சேரமான் பெருமாள் நாயனார் ஆவர். இச்செய்தி, வாசத்திருமஞ்சனம் பள்ளித்தாமம் சாந்தம் மணித்தூபம் தேசிற்பெருகுஞ் செழுந்தீபம் முதலாயினவும் திருவழுதும் ஈசர்க்கேற்ற பரிசினால் அருச்சித்தருள எந்நாளும் பூசைக்கமர்ந்த பெருங்கூத்தர் பொற்பார் சிலம்பினொலி யளித்தார் (பெரிய. கழறிற். 24) எனவரும் சேக்கிழாரடிகள் வாய்மொழியால் இனிதுணரப்படும். மதுரையிற் குதிரைச் சேவகனாக எழுந்தருளிய சிவபெருமான் வழங்கிய பேரானந்தமாகிய திருவருளின்பத்தைத் தூயதாமரை மலர்போலும் திருவாயிலிருந்து வெளிப்படும் அழகிய சொற்களால் திருவாசகப்பனுவலாக அருளிச்செய்து, வஞ்சனையை விளைக்கும் பிறவித் துன்பத்தை நாம் அறியாவண்ணம் நம்மனோர்க்கு நன்னெறி காட்டிய பெருந்தகையார் திருவாதவூரடிகள் ஆவர். இவ்வுண்மையை, பாய்பரியோன்தந்த பரமானந்தப் பயனைத் தூய திரு வாய்மலராற் சொற்செய்து - மாயக் கருவாதை யாமறியா வாறுசெய்தான் கண்டாய் திருவாதவூராளுந்தேன் எனவரும் திருக்களிற்றுப்படியார் விரித்துரைத்தல் காணலாம். அதுவென்றும் இதுவென்றும் ஒருபொருளைச் சுட்டியறிதலின்றி எல்லாவற்றையும் ஒருங்கேயறியும் பேரறிவுப் பொருளாகிய அதுவே, இவ்வாறு ஆன்மாவின் பக்குவகாலத்து இத்தகைய மானிடவுருத்தாங்கிக் குருவாய் எழுந்தருளியது என்று உணர்வாயாக. அப்பரம்பொருள் எங்கும் விரிந்த ஞானமாகிய சடையையுடைய சிவபெருமானே எனத்தெளிய உணர்வாயாக என அறிவுறத்துவது, அதுவிது வென்னாதனைத் தறிவாகும் அதுவிது வென்றறிந்துந் தீபற அவிழ்ந்த சடையானென்றுந் தீபற (36) எனவரும் திருவுந்தியாராகும். அனைத்தறிவாகும் அது என்றது சிவபரம்பொருளை. இரண்டாமடியில் இது என்றது குருவாக வந்த திருமேனியை. அதுவே இது என்புழி சிவமே குருவாக வந்தது என்னும் தேற்றேகாரம் வருவித்துரைக்கப்படும். அது பழச்சுவையென அமுதென அறிதற் கரிதென எளிதென அமரரும் அறியார் இது அவன்திருவுரு, இவன் அவன் எனவே எங்களையாண்டு கொண்டிங்கெழுந்தருளும் மதுவளர் பொழிற்றிருவுத்தரகோச மங்கையுள்ளாய் திருப்பெருந்துறைமன்னா எனத் திருவாதவூரடிகள் தாம் அருளிய திருப்பள்ளி யெழுச்சியில் இறைவனே தமக்குக் குருவாய் எழுந்தருளிய திறத்தை வியந்து போற்றியுள்ளமை இங்கு நினைக்கத்தகவதாகும். இனி, சிவமானவாபாடி (திருத்தெள்ளேணம்) எனவும், சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே (கோயிற்றிருப் பதிகம்) எனவும் திருவாசகத்தில் வருந்தொடர்கள் அடிகள் காலத்துப் பரவிய மாயாவாதக் கொள்கை யினை ஒரளவு தழுவி யமைந்தன என்பாருமுளர்.1 இக்கருத்து ஒரு சிறிதும் பொருந்தாது என்பதனை ஆசிரியர் மறைமலையடிகளார் தாம் இயற்றிய மணிக்கவாசகர் வாலாறுங் காலமும் என்னும் ஆராய்ச்சி நூலில் தக்க காரணங்காட்டி விளக்கியுள்ளார்கள். திருமந்திரம் முதலிய ஏனைய திருமுறைகளையும் எட்டாந்திருமறை யாகிய திருவாசகம் ஆகிய பனுவல்களையும் ஒப்புநோக்கிப் பயில் வார்க்குச் சைவத்திருமுறைகள் பன்னிரண்டும் சைவசித்தாந்தச் செந்நெறியினைக் கடைப் பிடித்தொழுகிய அருளாளர் அருளிய பொருளுரைகள் என்பதும் பிற்காலத்தெழுந்த மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கிற்கும் இத்திருமுறைகளே மூலநூல்கள் என்பதும் நன்கு புலனாகும். கடவுள், உயர், உலகம் என்னும் இம்மூன்று என்றும் உள்ள பொருள்கள் என்பது சைவசித்தாந்தக் கொள்கை. பிரமம் ஒன்றே உள்பொருள், உலகம் வெறும் பொய்த்தோற்றமே என்பது மாயாவாதக் கொள்கை. சிவனருள் பெற்ற திருவாதவூரடிகள் மாயாவாதக் கொள்கையினையும் அதனோடொத்த உலகாயதக் கொள்கை யினையும் அறவே வெறுத்து விலக்கியவர் என்பது, மிண்டிய மாயா வாதமென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித்தா அர்த்து உலாகாயதனெனும் ஒண்டிறற் பாம்பின் கலாபே தத்த கடுவிடம் எய்தி (போற்றித். 54-57) எனவரும் திருவாசகத் தொடராடல் இனிது விளங்கும். உயிர்கள் ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களாற் பிணிக்கப்பட்டுள்ளன என்னும் உண்மை, ஆணவ மாயையுங் கன்மமு மாமலம் காணு முளைக்குத் தவிடுமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்றுநின்பாசம் பிரித்தே (2192) எனத்திருமந்திரத்திற் கூறப்பட்டிருத்தலால் ஆன்மாக்கள் மும்மலங் களாற் பிணிக்கப்பட்டிருத்தலால் இலக்கணத்தாற் பிரமப்பொருளின் வேறாவன என்னும் கருத்து தேவார ஆசிரியர் காலத்திற்கு முன்பே சைவநூல்களில் இடம் பெற்றுள்ளமை நன்கு புலனாகும். இம்மும்மலங்களைப் பற்றிய இயல்பு தேவாரத் திருப்பதிகங்களிலும் இடம் பெற்றுள்ளமை முன்னர் விரித்துரைக்கப்பட்டது. உயிர்களின் அறிவை விளங்கவொட்டாது தடை செய்து நிற்றல் ஆணவமாகிய இருள்மலத்தின் செயல். எல்லாவுயிர்களும் மாயையின் காரியமாகிய உடல் கருவி உலகு நுகர்பொருள் என்பவற்றைப் பெற்று அவற்றின் உதவியால் அறியாமை சிறிது சிறதாக நீங்க அறிவு விளக்கம் பெறுவன. இவ்வாறு உயிர்களின் அறிவு விளங்குதற்குக் கருவியாய் நின்று பயன்தருதல் மாயையின் செயலாகும். உயிர்கள் மலம்மாயை என்னும் இரண்டின் அகமாய் நின்று வினைசெய்யுங்கால் நல்வினை தீவினை என்னும் இரு வினைகள் நிகழ்வன. இவ்வினைகளால் உண்டாகும் பழக்கத்தை உயிர்களின் அறிவிற் பதியும்படி செய்தல் கன்ம மலத்தின் செயலாகும். ஆணவமலத்தால் அறியாமையும், மாயை கன்மங்களால் அவ்வறியாமை நீங்கி அறிவு விளங்கப் பெறுதலும் உயிர்கள்பால் இடையறாது நிகழ்வன. இவற்றுள் ஆணவ மலம் ஒன்றே செம்பிற்களிம்பு போன்று, உயிரோடு ஒற்றித்து அதன் விழைவு அறிவுசெயல் ஆகிய ஆற்றல்களை அநாதியே மறைத்து நிற்பது. மாயையும் கன்மமும் அம்மலநீக்கத்திற்கும் உயிர்களின் அறிவு விளக்கத்திற்கும் துணை செய்வனவாய் இடையேயொரு காலத்து வந்து சேர்ந்தனவாகும். மல நீக்கத்திற்குத் துணை செய்யும் இவையிரண்டும் ஆணவ மலத்தோடு உடன்நின்று அம்மலத்தின் சார்பினால் தாமும் ஒரோவொருகால் மயக்கத்தை விளைத்தல் பற்றி மலம் என்ற பெயரால் வழங்கப்படுவனவாயின. அறியாமையைச் செய்யும் மலத்தின் வன்மையை ஒடுக்கி உயிர்கட்கு அறிவினை விளங்கச் செய்தற்பொருட்டே எல்லாம் வல்ல இறைவன் பல வேறுடம்புகளையும், கருவிகளையும் அவை தங்குதற்குரிய பல்வேறு உலகங்களையும் அவை நுகர்தற்கேற்ற பல்வேறு நுகர்பொருள் களையும் மாயையென்னும் முதற்பொருளினின்றும் படைத்து வழங்குகின்றான். இறைவனாற் படைத்திளிக்கப்படும் உடல், கருவி, உலக நுகர்பொருள்களாகிய இவை மாயை என்னும் முதற்பொருளின் காரியங்களாதலின் இவை மாயேயம் என வழங்கப்படும். இவ்வாறு இறைவன் உயிர்கட்கு உடல், கரணம், உலகு, நுகர்பொருள்களைப் படைத்து வழங்குதலின் நோக்கம், உயிர்கள் உலகநுகர்ச்சிகளால் நன்றுந்தீதும் கண்டு அறிவு விளங்கப்பெற்றுத் தம்மைப் பிணித்துள்ள பாசப் பிணிப்பினின்றும் விடுபட்டுப் பேரின்பவுருவினதாகிய சிவத்துடன் இரண்டறக்கலந்து தாமும் சிவமுமாய் நிலை பெயராப் பேரின்ப நிலையினைப் பெறுதற் பொருட்டேயாம். முதல்வன் திருவருளால் மாயை கன்மங்களின் உதவியினைப் பெற்றுச் சிறிது சிறிதாக அறியாமை தேய்ந்து, அம்முறையே அறிவு விளங்கப்பெற்ற உயிர்கள், தமக்குத் தோன்றாத் துணையாய் நின்று அருள்புரியும் உண்மை யறிவின்பவுருவினனாகிய சிவபரம்பொருளை அடைந்து அம்முதல்வனது திருவடியில் இரண்டறக்கலந்து ஒன்றாதலிலேயே தமது நாட்டத்தைச் செலுத்தி உலகியற் பொருள்களிலும் தம்மைச் சூழ்ந்துள்ள உற்றார் உறவினர் முதலியோரிடத்திலும் தம் உடம்பிலும் உயிராகிய தம்மிலும் செல்லும் உணர்வை மடித்துத் திருப்பித் தம் உயிருணர்வுக்கு உணர்வாய் விளங்கும் சிவபரம்பொருளிலே படியுமாறு செய்து, தாம் ஒருபொருள் உண்டென்பதனை மறந்து சிவமாகவே அமர்ந்திருப்பன என்பர் பெரியோர். இவ்வாறு உயிர்கள் மும்மலப் பிணிப்பினின்றும் நீங்கிச் செம்பொருளாகிய சிவத்தைத் தலைக்கூடிச் சிவமெனத் தாமென வேறின்றி இரண்டறக் கலத்தலையே திருவாதவூரடிகள் சிவமாதல் எனக் குறித்துள்ளார். ஆகவே மலம் மாயை என்னும் பாசங்களும், அவற்றோடு உடனாய் நிற்றல் பற்றிப் பசுவென வழங்கப்படும் உயிர்களும் இவை எல்லாவற்றையும் ஊடுருவி யாண்டும் நிறைந்து நின்றே ஒன்றினுந் தோய்வற விளங்கும் பதியாகிய சிவமும் என இம்மூன்றும் என்றும் உள்பொருள்களேயா மென்பதும், உயர்கள் மலமாயை கன்மங்களின் பிணிப்பினின்றும் விடுபட்டுச் சிவத்தைத் தலைக்கூடுதல் என்பது, மும்மலங்களாற் கட்டுப்பட்டு அல்லற்படும் முன்னைய நிலையினின்றும் பெயர்ந்து என்றும் பேராவியற்கையாகிய பெருநிலையைப் பெற்றுப் பேரின்பவுருவாய் நிற்கும் அவ்வளவேயல்லது, அவ்வுயிர்கள் தம் பொருண்மைகெட்டு ஒன்றுமேயில்லாத வெறும் பாழாயொழிதல் அன்று என்பதும் சைவ சித்தாந்தத்தின் கொள்கைகளாகும். மணிவாசகப்பெருமான் திருவாய்மலர்ந்தருளிய திருவாசகப் பனுவலில் சைவ சித்தாந்த நுண்பொருள்கள் ஆங்காங்கே தெளிவாக விளக்கப்பெற்றுள்ளன. ஆன்மாவின் அகத்தே அறிவை மறைத்து நிற்கும் ஆணவமலமும் புறத்தே அவ்வுயிர்களின் கட்புலனை மறைத்து நிற்கும் இருளும் ஆணவமலத்தின் இருவேறு திறங்களாதலின், அதனை இருள் எனவும், அஃது அறியாமையைச் செய்தலின் அஞ்ஞானம் எனவும், உயிர்களின் அறிவு செயல் முதலியன வெளிப்பட ஒட்டாது அவற்றைச் கயிறுபோல இறுகப் பிணித்து நிற்றலின் பாசம் எனவும், உயிர்கட்குக் கலக்கத்தை விளைவித்தலின் மலம் எனவும், அம்மலத்தின் முனைப்பால் உயிர்களிடத்தே நிகழும் வினைகள் கொடுமை யுடையனவாதலின் கடியவினை எனவும் இவ்வாறு தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றிவருத்தும் பழைமை யுடையதாதல் பற்றிப் பழமலம் எனவும், உயிர்கள் அடையும் எல்லாத் துன்பங்கட்கும் காரணமாதல் பற்றிப் பாசவேர் எனவும், திருவாதவூரடிகள் ஆணமலத்தின் இயல்பினை விளங்க அறிவுறுத்தியுள்ளார். இந்நுட்பம், வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாயஇருளை (சிவபுராணம்) அஞ்ஞானந்தன்னை அகல்விக்கும் நல்லறிவே (சிவபுராணம்) பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே (சிவபுராணம்) என்னுடையிருளை ஏறத்துரந்தும் (கீர்த்தித் திருவகவல்) அவன் வாங்கிய என்பாசத்திற்காரென்று (திருக்கோவை 109) பாசந்தனையறுத்து ஆண்டுகொண்டோன் (திருக்கோவை 115) கடலின் திரையதுபோல் வருகலக்கமல மறுத்து (உயிருண்ணிப்பத்து) கடிவினையகற்றிப் பழமலம் பற்றறுத்தாண்டவன் (திருப்பாண்டிப்பதிகம்) பாசவேர் அறுக்கும் பழம்பொருள் (பிடித்தபத்து) எனவரும் திருவாசகம், திருக்கோவைத் தொடர்களால் இனிது புலனாதல் காணலாம். ஆன்மாவை மறைத்துள்ள ஆணவமலத்தின் இயல்பினைக் கூறுமிடத்து அம்மலத்தின் ஆற்றலைக் கெடுத்து உயிர்கட்கு மெய்யுணர்வளித்து உய்வித்தருளும் சிவத்தின் இயல்பினை, அஞ்ஞானந்தன்னை அகல்விக்கும் நல்லறிவே எனவும், மலம் அறுத்து எனதுடலும் எனதுயிரும் புகுந்து ஒழியா வண்ணம் நிறைந்தான் எனவும், கழிவில் கருணை எனவும், பல்பொருள் எனவும், அவன் தில்லையில் ஒளி எனவும் வரும் தொடர்களில் அடிகள் உடன் வைத்துணர்த்தியுள்ளார். முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாகிய சிவம் என்றும் நல்லறிவுப் பொருளாகத் திகழ்தலும், மலத்தினின்றும் விடுபட்ட உயிர் தன் பொருட்டன்மை சிதையாதிருக்க அவ்வுயிரின்கண் சிவம் புலப்பட்டுத் தோன்றி உயிரின் உடல் கருவி கரணங்களை அகத்திட்டு விளங்குதலும், பேரருளாளனாகிய இறைவன் உயிர்களின் மலத்துயரினைத் துடைத்துத் தனது பேரருளின்பத்தை உயிர்கட்கு வழங்கும் திருவருட் குறிப்புடையனாகத் திகழ்தலும் அம்முதல்வன் தன்பால் அன்புடைய அடியார்கட்கு அருள்வழங்குதற் பொருட்டுத் தில்லைச் சிற்றம் பலமாகிய அருள்வெளியிலே ஒளியுருவினனாக நின்று ஆடல் புரிதலும் இங்கு எடுத்துக்காட்டிய திருவாசகத் தொடர்களால் இனிது விளங்கும். உயிரும் சிவமும் பொருட்டன்மையால் இருவேறு பொருள்களாதலும், ஆன்மாக்கள் தோற்றமில் காலமாகவே மும்மலப் பிணிப்புடையனவாயிருக்க, முற்றுணர்வும் பேரருளும் அளவிலாற்றலும் வரம்பிலின்பமும் உடையனாய் இயல்பாகவே பாசங்களின் நீங்கிய இறைவன், உயிர்களை மும்மலப் பிணிப்பினின்றும் விடுவித்து அவ்வுயிர்களைச் சிவமாகிய தன்னுடன் பிரிவின்றி ஒன்றும் வண்ணம், தனது அருளொளியில் அகத்திட்டுக் கொள்ளுதலும் மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகப் பாடல்களால் நன்கு புலனாதலின், அடிகள் சைவ சித்தாந்த சமயத்தினராதல் நன்கு தெளியப்படும். இறைவனது அருளுபகாரத்தால் மலப்பிணிப்பினின்றும் நீங்கிய தூயஉயிர்கள்பால் முதற்பொருளாகிய சிவம் முனைத்துத் தோன்றிப் பக்குவமுடைய உயிர்களைத் தன்னுளடக்கித் தன்னையே காட்டி நிற்கும் என்பது, சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித்தா மூலம் அத்தகை யான்மா அரனையடைந் தற்றார் சுத்த சிவமாவரே சத்தசைவரே (1440) எனவும், அனாதி சிவனைம் மலமற்றப்பாலாய் மனாதியடங்கத் தனைக்கண்டரனாய்த் தனாதி மலங்கெடத் தத்துவாதீதம் வினாவு நீர் பாலாதல் வேதாந்த வுண்மையே (2401) எனவும், உயிரைப் பரனையுயர் சிவன்றன்னை அயர்வற் றறிதொந்தத் தசியதனாற் செயலற் றறிவாகியுஞ் சென்றடங்கி அயர்வற்ற வேதாந்த சித்தாந்தமாமே (2402) எனவும் திருமூல நாயனாரும், எம்பிரா னென்றதே கொண்டென்னுளே புகுந்துநின்றிங் கெம்பிரான் ஆட்ட ஆடி என்னுளே யுழிதர்வேனை எம்பிரான் என்னைப் பின்னைத் தன்னுளே கரக்கு மென்றால் எம்பரா னென்னினல்லால் என்செய்கேன் ஏழையேனே (4-76-3) எனவும், தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும்யானும் ஆகின்றதன்மையனை (6-98-7) எனவும், என்னானாய் என்னானாய் (6-95-7) எனவும், திருநாவுக்கரசு நாயனாரும், திகழ்ந்த மெய்ப்பரம்பொருள் சேர்வார் தாமே தானாகச் செயுமவன் (1-126-7) எனவும், அப்பரிசிற் பதியான அணிகொள் ஞானசம்பந்தன் (1-54-11) எனவும் ஆளுடைய பிள்ளையாரும், நாற்றானத்தொருவனை நானாய பரனை (7-38-4) எனவும், என்னவனாம் அரன் (7-39-11) எனவும் நம்பியாரூரரும் ஓதியவற்றால் நன்கு புலனாம் இத்திருமுறை யாசிரியர்கள் அறிவுறுத்திய இவ்வுண்மையினையே நானவனென் றோதினர்க்கு நாடுமுளம் உண்டாதல் தானென வொன்றின்றியே தானதுவாய் - நானெனவொன் றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடி வைத் தில்லென்று தானாம் இறை (சிவ. சூ. 10 வெ. 1) எனவரும் வெண்பாவில் மெய்கண்ட தேவர் அறிவுறுத்தியுள்ளார். திருமூலர் திருமந்திரத்தில் வேதாந்தம் என்றது உபநிடதங்களையே. மாயாவாதத்தை வேதாந்தம் என வழங்குதல் பிற்கால வழக்காகும். சிவபரம் பொருளின் திருவடியைச் சேர்தல் என்பது இறைவனது திருவருளிற் பதிதலாதலின் அதனைச் சிவமாதல் என வழங்குதலும் திருமூலநாயனார் காலந்தொட்டு வழங்கி வரும் சைவ சித்தாந்த மரபேயாகும். இவ்வுண்மை, ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக நின்று சமய நிராகாரம் நீங்கியே நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற் சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே (1437) எனவரும் திருமந்திரத்தாற் புலனாகும். ஆன்மா தன் பொருட்டன்மையழிந்து சிவம் ஒன்றாகியே ஒழியாமலும், சிவத்தின் வேறாய்த் தான் தனித்து நில்லாமலும், பாலொடு அளாவிய நீர், தன் உண்மை கெடாமல் பாலின் தன்மையதாய் அதனுடன் பிரிவறக் கலந்து ஒன்றாதல் போன்று, மலம் நீங்கித் தூயதாகித் தன் உண்மை கெடாமல் சிவத்துடன் இரண்டறக் கலந்து ஒன்றாதலையே சிவமாதல் எனச் சைவசித்தாந்த நூல்கள் கூறும் என்பது மேற்குறித்த திருமந்திரப் பாடலில் விளக்கப் பெற்றுள்ளமை காணலாம். ஆதித்தப் பிரகாசம் காட்டாகப் பிரபஞ்சரூபத்தைப் பற்றி நின்ற கண்ணானது அந்த உருவங்களைவிட்டு அந்தப் பிரகாசத்துக்கு முதலாயிருக்கிற ஆதித்தனைக் கண்டு பிரிவற நின்றாற்போல, ஆன்மாவும் அருளிடமாகக் கூடிநின்று சத்தாதிவிடயங்களைப் புசித்து நிற்கச் செய்தே அதனையும் விட்டு மனோவிகாரமும் அடங்கி அந்த அருளுக்கு முதலாயிருக்கிற சிவத்தோடும் அந்த அருள் காட்டாகச் சென்று கூடிப் பிரிவற்று இரண்டற நிற்கையால் ஆன்மா அந்தச் சிவத்தோடுங் கூடிச் சிவமாய் நிற்கும் எனக் கூறி, அதற்குப் பிரமாணமாக, அவமாய தேவர் அவகதியில் அழுந்தாமே பாவமாயங் காத்தென்னை யாண்டுகொண்ட பரஞ்சோதி நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாம் ஒழிந்து சிவமான வாபாடித் தெள்ளெணங் கொட்டாமோ (4) எனவரும் திருவாசகத் திருப்பாடலை எடுத்துக் காட்டுவர். மதுரைச் சிவப்பிரகாசர் சிவமாய் என்றது ஆன்மா தற்போதமாய் நிற்பதுஞ் செய்யாமல் தான் என்றகிற முதல் கெடுவதுஞ் செய்யாமல் தற்போதங்கெட்டு அந்தச் சிவத்தோடுங்கூடி இரண்டறநின்று அனுபவித்தது என அறிக. அப்படிச் சிவமாய் என்ற சொல் அந்தச் சிவமாவதுஞ் செய்யாமற் பிரிந்து நிற்பதுஞ் செய்யாமல் நிற்கை என்பதற்குப் பிரமாணம் சங்கற்ப நிராகரணத்தில், ஆனாய் என்பதனைத்தும் அவ்வவை தானாகாமையைச் சாற்றிடும் என்க தாமே யெனுமித் தனியேகாரம் அழிந்திலர் அதுவே ஆய்த்திலர் அதுவிட் டொழிந்திலர் பிறிவிலரெனுமிவை யுணர்த்தும் (சிவப். 80) எனச் சிவமாதல் என்னுஞ் சொல்லுக்கு அவ்வாசிரியர் கூறும் உரைவிளக்கம் இங்கு உணரத் தகுவதாகும். ஆன்மா தன் முயற்சியாற் சிவமாதல் இயலாது சிவனது அருளாலேயே ஆன்மா சிவத்தோடுங்கூடி இரண்டற நிற்கும் என்பது சைவசித்தாந்த மெய்ந்நூல்களின் துணிபாகும். அவனிவனான தவனரு ளாலல்ல திவனவனாகா னென்றுந் தீபற என்றும் இவனேயென்றுந்தீபற எனவரும் திருவுந்தியார் இவ்வுண்மையினைத் தெளிவு படுத்துவதாகும். இங்கு அவன் என்றது மாற்றமனங்கழிய நின்ற இறைவனை. இவன் என்றது ஆன்மாவை. அம்முதல்வனாகிய சிவன் இவ்வான்மாவாகத் தான் பிரிவற நின்ற சிவமாகிய நிலை அம்முதல்வனது எல்லையற்ற அருள்காரணமாக வுளதாவதல்லது, ஆன்மாவாகிய இவன் சிவனாகிய முதல்வனாக மாட்டான். எக்காலத்தும் இவ்வான்மா சிவனுக்கு அடிமையாகவுள்ளவனே என்னும் உண்மையினைத் தெளிந்துணர்வாயாக என்பது, இத்திரு வுந்தியாரின் பொருளாகும். சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனருளாலே அவன்தாள் வணங்கி எனவரும் சிவபுராணத் தொடர் இங்குச் சிந்திக்கத் தகுவதாகும். வேதம் ஏகம் என ஒன்றையே குறிப்பிடுதலால் முழு முதற்பொருள் ஒன்றே உள்ளது, ஏனைய உயிரும் உலகமும் வெறுந்தோற்றமே என்பர் ஒரு பொருட்கொள்கையாளர். அன்னோர் கருதுமாறு முழுமுதற்பொருள் ஒன்றையே குறிக்க வேண்டின் அதனை ஏகம் என்ற சொல்லினாலேயே கூறுதல் அமையும். இனி, இருபொருட் கொள்கையாளர் கருதுமாறு முழுமுதற்பொருளும் உயிரும் தனித்தனி வேறாய் நிற்பின் துவிதம் என்ற சொல்லாற் சொல்லலாம். அவ்வாறன்றி ஏகம் எனக் குறித்த வேதம் ஏகம் அத்துவிதீயம் என அத்துவிதம் என்ற சொல்லாலும் இணைத்துக் கூறுகின்றது. வேதத்துள் வரும் அத்துவிதம் என்ற சொற் பொருளைக் கூர்ந்து நோக்குங்கால், இறைவன் ஒன்றாயும் இரண்டாயும் நில்லாமல் உயிர்களோடு பிரிப்பின்றி உடனாய் நிற்றலால் அங்ஙனம் இரண்டறக் கலந்து நிற்றலாகிய நிலையினை வடமொழியில் அத்துவிதம் என்ற சொல்லாற் குறித்தனர் சான்றோர். உலகுயிர்களோடு இறைவனுக்குள்ள இத்தொடர்பினை இருமையின் ஒருமை எனக் குறித்தருளுவர் ஆளுடையபிள்ளையார். சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் ஆன்மா என்பது மாண்டூக்கிய உபநிடதம். அத்துவிதம் என்று சொல்லுக்கு ஏகம் (ஒன்று) என ஒருசாராரும், துவிதம் (இரண்டு) என மாற்றொரு சாராரும் பொருள் கொண்டனர். ஒன்றும் இரண்டும் ஆகா இரண்டற்ற தன்மை என இதற்கு உண்மைப்பொருள் கண்டார் மெய்கண்டார். இங்ஙனம் ஒன்றெனலும் ஆகாமல் இரண்டெனலும் ஆகாமல், தூயநல்லுயிர்கள் சிவத்தோடு இரண்டறக் கலந்து சிவமாந் தன்மையாய் அடங்கி ஒன்றாகும் வீடு பேற்றின் நிலையே சிவமாதல் என்னுந்தொடரால் அறிவுறுத்தப் பெறுகின்றதென்பது சைவ சித்தாந்த மெய்ந் நூற்கொள்கையாகும். இம்முடிபினைத் தெளிவுபடுத்தும் நிலையில் அமைந்ததே, நவமாய செஞ்சுடர் நல்குதலும் நாமொழிந்து சிவமானவாபாடி எனவரும் திருவாசகத்தொடராகும். இறைவன் அருளாற் பெற்ற சிவஞானத்தால் உள்ளந்தெளிவடையாதவர்கள் இத்தகைய சிவமாந்தன்மைப் பெருவாழ்வைப் பெற மாட்டார்கள் என்பதனை, தெளிவறியாதார் சிவமாகமாட்டார் (1480) எனவரும் திருமந்திரத்தொடரால் திருமூலதேவ நாயனார் அறிவுறுத்தி யுள்ளமை இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். நிலநீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் உலகேழெனத் திசை பத்தெனத்தான் ஒருவனுமே பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமே (5) எனவரும் திருப்பாடல், இறைவன் ஐம்பூதங்கள், ஞாயிறு, திங்கள், ஆன்மா ஆகிய எல்லாப்பொருள்களிலும் பிரிவின்றிக் கலந்து விளங்குந் திறத்தினை விரித்துரைப்பதாகும். இத்திருப்பாடலில் தான் ஒருவனுமே பலவாகி நின்றவா என்ற தொடர் இறைவன் உலகுயிர்களாகிய பொருள் தோறும் யாண்டும் நீக்கமறக் கலந்து உடனாய் விளங்கும் இயல்பினைக் கூறுவதாகும். இறைவன் தன்னையன்றி வேறொருபொருளும் இல்லாதிருக்க, அவன் ஒருவனே உலகுயிர்களாகிய பல பொருள்களுமாய்க் காணப்படுகின்றான் என இத்தொடர்க்குப் பொருள் கொள்வாருமுளர். இப்பொருள் இத்திருவாசகத்தை அருளிச் செய்த திருவாதவூரடிகள் கருத்துக்குச் சிறிதும் ஒவ்வாததாகும். ஒருபொருளே பல பொருள்களாகத் தோற்றமளித்தலும் ஒருபொருளே பல பொருள்களிலும் ஊடுருவிக் கலந்து நிற்றலும் தம்முள்மாறுபட்ட இருவேறு தன்மைகளாகும். இவ்விரண்டினுள் இத்திருப்பாடலில் மணிவாசகப் பெருமான் குறித்தது, ஒருபொருளே தம்முள் வேறுபட்ட பல பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இயல்பினையேயாகும். இந்நுட்பம் எண்வகையாய் நின்றான் என்னாது, எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் எனத் தாம் கூறும் பொருள் இனிது விளங்கத் திருவாதவூரடிகள் தெரித்து மொழிதலால் நன்கு உணரப்படும். புணர்ந்து நிற்றல் என்றது, ஒருபொருள், தான் அல்லாத மற்றொரு பொருளுடன் கூறி நிற்றலையே குறிக்கும். அங்ஙனம் அன்றி ஒரு பொருளே பலபொருள்களாய் விரிந்து தோன்றுதலையோ ஒன்று மற்றொன்றாகத் திரிந்து தோன்றுதலையோ அச்சொல் குறிப்பதன்றாம். ஓருடம்பினிற் கலந்து நிற்கும் உயிர், அவ்வுடம்பின் ஐம்பொறிகளினும் ஐம்புல உணர்வினைத் தோற்றுவித்தல் பற்றி உடம்போடு ஒன்றாய்க் கலந்திருப்பினும் உண்மையால் நோக்கும் வழி அவ்வுயிர் உடம்பின் வேறாதல் போன்று, முதல்வனாகிய இறைவனும் உலகுயிர்கள் எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்து நின்று அவற்றை இயக்குதல் பற்றி அவை பலவுமாய் விரவி நிற்பினும் உண்மையில் அம்முதல்வன் அவற்றின் வேறாய்த் தான் ஒருவனே யாவன் என்னும் மெய்ம்மையினையே, தான் ஒருவனுமே பலவாகி நின்றவா எனவரும் இத்தொடரில் அடிகள் தெளிவாக விளக்கியுள்ளார். ஒருவனுமே என்றமையால் ஒருவன் என்னும் ஒருவன் ஆகிய இறைவனும் பல எனவே அவனல்லாத உலகுயிர்களும், ஆகி எனவே அவற்றோடு அத்துவிதமாய்க் கலந்து விளங்கும் இறைவனது தன்மையும் புலப்படுத்தப் பெற்றுள்ளமை காணலாம். இக்கருத்தினைன் நள்ளுங் கீழுளும் மேலுளும் யாவுளும் எள்ளும் எண்ணெயும் போல் நின்ற எந்தையே (திருவாசகம் திருச்சதகம் 46) என முன்னரும் அடிகள் வற்புறத்தியுள்ளமை இங்கு ஒப்பவைத்து உணர்தற்பாலதாகும். இறைவன் எல்லாப் பொருள்களுமாய்க் கலந்துள்ளான் என்று கூறிய அளவில் இறைவன் ஒருவனே உலகமாகவும் உயிர்களாகவும் விரிந்து தோன்றுகின்றான், அவனையன்றி வேறொரு பொருளும் இல்லை எனப் பிறர் பிறழவுணராதவாறு, நிரந்த ஆகாயம் நீர்நிலந் தீ கால்ஆய், அவையல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே எனவும், பெண்ணாகியாணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி எனவும் அம்முதல்வன் கலப்பினால் ஒன்றாயும், பொருட்டன்மையால் வேறாயும் உயிர்க்குயிராதற்றன்மையால் உடனாயும் நிற்குந் திறத்தினைத் திருவாதவூரடிகள் விளக்கிய திறம் ஈண்டு நினைத்தற் குரியதாகும். இறைவன் கலப்பினால் உலகுயிர்களாக நிற்குந் திறத்தினை நின்ற திருத்தாண்டகத்திலும், பொருட்டன்மையால் அவற்றின் வேறாதலை விரிகதிர் ஞாயிறல்லர், மண்ணல்லை விண்ணல்லை முதலிய திருப்பாடல்களிலும் திருநாவுக்கரசர் அறிவுறுத்தியுள்ளமை முன்னர்க் கூறப்பட்டது. விண்ணிற் கதிரவன் எழுந்த நிலையில் உலகிற் புறவிருள் மறைந்துபோக, மக்கள் கண்ணின் ஒளி விளங்கப் பெற்று எதிர்ப்பட்ட எல்லாப் பொருள்களையும் காணப்பெறுதல் போன்று, ஆன்மாவுக்கு இறைவனது, அருளொளி தோன்றிய அளவில் இதற்குமுன் அதனைப் பற்றியிருந்த ஆணவஇருள் நீங்கி மறைய, அவ்வருளொளியின் உதவியால் ஆன்மாவானது தன்னையும் தன் உயிர்க்குயிராய முதல்வனையும் ஏனைய பொருள்களின் நிகழ்ச்சியினையும் உள்ளவாறு காணும் ஆற்றலைப் பெறுகின்றது. பளிங்கினில் விளங்கித் தோன்றிய மலர்களின் வடிவும் நிறமும் கதிரவன் வானின் உச்சியை அடையும்போது மெல்ல மெல்லக் குறைந்து உச்சிக்கு வந்த நிலையில் முற்றிலும் இல்லையாய் ஒழிதல் போன்று செழுஞ்சுடர் ஞாயிறாகிய இறைவனது அருள் விளக்கம் உயிரின்கண் பதியுந்தோறும் முன்னர் ஆன்மாவைச் சூழ்ந்திருந்த மாயை கன்மங்களின் சார்பும் அணுவணுவாய்த் தேய்ந்து பின்னர் அவ்வருளொளி ஆன்மாவை முற்றிலும் அகத்திட்டுக் கொண்ட நிலையில் அவற்றின் சார்பு ஆன்மாவை விட்டு முற்றிலும் இல்லையாய் ஒழிந்துபோம். இவ்வாறு மாயை கன்மங்களின் சார்பு முற்றுங்கெடச் சிவனொளியில் ஒன்றி நின்று காணும் தூய நல்லறிவினராகிய சிவஞானிகட்கு மெய்ப் பொருளாகிய சிவபரம் பொருளையன்றி உயிராகிய தம்மைப்பற்றி உணர்வும் ஏனைய உலகப் பொருள்களும் தோன்றாதொழியும். இவ்வுண்மையினை, ஐம்புலன் கையிகந்து சிவனருளில் திளைக்கும் செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் தாம்பெற்ற சிவானுபவத்தில் வைத்து எடுத்துரைத்துப் போற்றுவதாக அமைந்தது, இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலாற் பிறிதுமற் றின்மை சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந் தொன்றாந் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்றுநீ யல்லை, அன்றியொன் றில்லை யாருன்னை யறியகிற் பாரே (கோயிற் றிருப்பதிகம் 7) எனவரும் திருவாசகத் திருப்பாடலாகும். நின்திருவருளைப் பெறும் வாய்ப்பினைப் பெற்ற இக்காலத்தே அடியேற்கு நின் திருவருளை வழங்கி, என்னை மறைத்துள்ள ஆணவ இருளை அகற்றிப் (பளிங்கனைய) என்னுள்ளத்தின்கண்ணே எழுந்து தோன்றும் கதிரவனைப் போன்று, (என் உள்ளும் புறம்புமாக யாண்டும் நிறைந்து) நிற்கும் நின் இயல்பினை (ச் சுட்டுணர்வினால் வேறாக வைத்துணரும்) நினைப்பு முற்றும் நீங்க (நின் அருளின் வண்ணமாய் ஒன்றியிருந்து) நினைப்பேனாயினேன். (அங்ஙனம் நினைத்த அளவிலே, என்னை அகத்திட்டுக் கொண்டு விளங்கும்) நின்னையன்றி (மாயாகாரியமாகிய பொருள்களுள்) ஒன்றும் இல்லையென்னும்படி உலகெலாம் ஆகியாண்டும் பரவிச் சென்று அணுவினும் மிக நுண்ணியனாய் உலகுயிர்கள் தோறும் ஊடுருவி மறைந்து (இங்ஙனம் உள்ளும் புறம்புமாய் யாண்டும் நீக்கமற நிறைந்து) யாவும் ஒன்றாய்ப் பிரிவின்றி விளங்கும் திருப்பெருந்துறைப் பெருமானே, (நீ இவ்வாறு உலகெலாமாகி நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அவற்றுள் ஒன்றினுந் தோய்வின்றி யுள்ளாய். ஆதலால்) நீ அவற்றுள் ஒன்றும் ஆவாயல்லை. (உலகுயிர்கள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்வோன் நீயேயாதலின் நின்னையன்றி அவற்றுள் ஏதொன்றும் இல்லை. (மும்மலப் பிணிப்புற்று வருந்தும் இக் கட்டு நிலையில் நின்னைத் தம்மின் வேறாகக் காண்பார்க்கு அவர் காணும் காட்சியுள்ளாகவே நீ புலப்படாது மறைந்து நிற்றலின் அன்னோர் நின்னை உள்ளவாறு காணுதல் இயலாது. இனி நினது அருளாற் பாசப்பிணிப்பினின்றும் விடுபட்டு நின்னருள் வழி நின்று காணும் சிவஞானிகட்கு மீண்டுணர்தற்குக் கருவியாகிய சித்தவிருத்தியும் ஒடுங்குதலால் அந்நிலையில் நீ வேறு தாம் வேறாய்ப் பிரிந்து நின்று காணுதலும் இயல்வதன்று எனவே) யார்தாம் நின்னியல்பினை உள்ளவாறு உணரவல்லார்? என்பது இத்திருப்பாடலின் பொருளாகும். இதன்கண் சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம் எனவரும் தொடர், நேரியனாய்ப் பிரியனுமாய், உலகெலாமாகி வேறாய் உடனுமாய் நிற்கும் இறைவனது இயல்பினை உணர்த்துவதாகும். இந்நுட்பம், திரண்டாம் பயனெனுந் திருவருள்தெளியிற் சென்று சென்றணுவாய்த் தேய்ந்து தேய்ந்தொன்றும் என்றிறையியற்கை யியம்புதல் எனத் திருவாதவூர் நயினார் கர்த்தாவினுடைய தன்மையை அருளிச் செய்தது எனவரும் உரைக்குறிப்பாலும் உய்த்துணரப்படும். இறைவனது திருவருளுக்கு உரியராகிய சிவஞானிகள் முதல்வனுடன் பிரிப்பின்றி ஒன்றியுடனாம் முத்திநிலையில் முதல்வனும் உளன், அம்முதல்வனோடு ஒன்றச் சிவானந்தம் நுகரும் உயிரும் உளது, முன்னர் உயிரைப்பற்றி நின்று பின்னர் விலகிச் செயலற்று அடங்கிய மலமாயை கன்மங்களும் உள்ளன. முன்பெல்லாம் உயிரை இறுகப்பிணித்து நின்ற மும்மலப் பிணிப்பு அவ்வுயிரைவிட்டு நீங்கினமையால் உயிரானது முதல்வனது திருவருளில் மூழ்கி அவ்வருளே மேற்பட்டுத் தோன்றத்தான் அதன்கண் பிரிவற இயைந்து பேரின்பம் நுகர்ந்திருக்கும். அவ்வளவே அவ்வுயிரின் முன்னைய கட்டு நிலைக்கும் பின்னைய வீட்டு நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடாகும். இன்றெனக்கருளி எனவரும் இத்திருவாசகத்தின் பொருள் நுட்பத்தையுணர்ந்து சிவஞானம் பெற்ற நல்லுயிர் தன்முனைப்படங்கி இறைவனது அருள்வழியடங்கி ஒற்றித்து நிற்கும் திறத்தினை அறிவுறுத்துவது, அவனே தானேயாகிய அந்நெறி ஏக னாகி இறைபணி நிற்க மலமாயை தன்னொடு வல்வினை யின்றே (சிவ.சூ 10) எனவரும் சிவஞானபோதம் பத்தாஞ் சூத்திரமாகும். இறைவன் உயிர்களின் கட்டுநிலையில் அவற்றோடுங்கூடி நின்று காரியப் படுத்தும்பொழுதே தானொரு முதல் இல்லை யெனும்படி தோன்றாமல் நின்று காரியப்படுத்தினாற் போன்று, உயிராகிய நீயும் சிவனது ஞானத்தினாலல்லவோ காரியப்பட்டு வருகிறோம் என்பதையுர்ந்து, ஆன்மபோதம் சீவியாமல் அருள் வழி அடங்கி நிற்பாயாக என அறிவுறுத்துவது, இச்சூத்திரமாகும். உயிர் தன்னைப் பற்றியுள்ள மும்மலப் பிணிப்பு அற்று நீங்கும்பொருட்டு அவற்றின் இயல்போடு ஒன்றுபட்டு நில்லாது சிவத்தின் இயல்போடு ஒன்றியிருந்து அதுவே தானாய் நிற்கும் பயிற்சியினை, இடையறாது மேற்கொள்ளுதல் வேண்டும். இடையறாது நிகழும் அப்பழக்கத்தினால், உயிரைப் பற்றியிருந்த மலத்தினியல்பு அதனை விட்டு நீங்க, உயிர் செம்பொருளாய சிவத்தின் இயல்பில் அடங்கி நிற்கும். மலம் அறுதற்பொருட்டுச் செயற்பாலதாய இப்பயிற்சியினை, தானவனாகும் சமாதிகை கூடினால் ஆனமலமறும் அப்பசுத் தன்மைபோல் (2320) எனவரும் திருமந்திரத்தில் திருமூலநாயனார் அருளிச் செய்துள்ளார். இறைவன் திருவருளிலே உறைத்து நிற்பார்க்குப் புறத்தேயுள்ள புறப்பொருள்களைப் பற்றிய உணர்வும் தம்மோடு உடனாய் நிற்கும் உடம்பைப் பற்றிய உணர்வும் தமக்கு அகக்கருவிகளாயமைந்த மனம் முதலியவற்றைப் பற்றிய உணர்வும் உயிராகிய தான் ஒருபொருள் உண்டு என எண்ணுந் தன்னைப்பற்றிய உணர்வும் நிகழாத வண்ணம் அவையனைத்தும் மறக்கப்பட்டு மறைந்தொழிதல் இயல்பாதலின், இறைவன் திருவருளால் மலமாயை கன்மங்களின் பிணிப்பு நீங்கியபொழுதே அவற்றோடு உடனிகழும் இவ்வுணர்வுகளும் அணுவணுவாய்த் தேய்ந்து ஒழிவன என்னும் உண்மையினை, வான்கெட்டு மாருதமாய்த் தழல்நீர் தண்கெடினுந் தான்கெட்டலின்றிச் சலிப்பறியாத் தன்மையனுக்கு ஊன்கெட்டுயிர் கெட்டுணர்வு கெட்டென் உள்ளமும் போய் நான்கெட்ட வாபாடித்தெள்ளேணம் கொட்டாமோ எனவரும் திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தமது சிவானுபவத்தில் வைத்துத் தெளிய விளக்கியுள்ளார். பாசப்பிணிப் பினின்றும் விடுபட்டு இறைவனது திருவருளில் ஒன்றுபட்டுத் திளைத்தலாகிய முத்திநிலைக்கண் சிவானுபவம் ஆகிய இதனை, தானும் அழிந்து தனமும் அழிந்துநீ டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன் வானும் அழிந்து மனமும் அழிந்தபின் நானும்அழிந்தமை நானறியேனே (திருமந்திரம் 2951) எனவும், இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள்ளாகி அருளா லழித்திடும் அத்தனடிக்கே உருளாத கன்மனம் உற்றுநின்றேனே (திருமந்திரம் 2952) எனவும் வரும் திருமந்திரப் பாடல்களில் திருமூலநாயனார் நன்கு விளக்கியுள்ளார். பாசப் பிணிப்பினின்றும் நீங்கிய தூயஉயிர், இறைவனுடன் இரண்டறக் கலந்த நிலையில் இதற்குமுன் அதன்கண் நிகழ்ந்த புறப்பொருளுணர்வும் தன்னைப் பற்றிய உணர்வும் முற்றிலும் மறைந்தொழிய இறைவனது மெய்யுணர்வு மட்டுமே மேற்பட்டு விளங்கத் தன்னுணர்வு அதனுள் அடங்கி உரைவரம் பிகந்த சிவஞானமாகிய பேரின்ப வெள்ளத்திற் படிந்து இன்புறும். இவ்வின்பநிலையில் உயிரானது தன்பொருட்டன்மையிற் சிறிதும் கெடாதிருக்கும் என்பதனை, முத்திதனின் மூன்று முதலும் மொழியக்கேள் சுத்தவனு போகத்தைத் துய்த்தலணு - மெத்தவே இன்பங் கொடுத்தவிறை இத்தைவிளை வித்தல்மலம் அன்புடனே கண்டுகொளப்பா (உண்மை 50) எனவரும் உண்மை விளக்கப்பாடலில் திருவதிகை மனவாசகங் கடந்தார் தெளிய விளக்கியுள்ளமை அறியத்தகுவதாகும். உலகநுகர்ச்சியிற் பதிந்த உணர்வோடு உள்ள உயிர்க்குச் சிவம் விளங்காது, சிவபோகத்தில் திளைக்கும் உணர்வோடு உள்ளம் கூடிய உயிர்க்கு உலகம் தோன்றாது. இவ்வாறு கட்டு நிலையிலும் வீட்டு நிலையிலும் இருதிறப்பட்டுச் சார்ந்ததன் வண்ணமாதல் உயிரின் இயல்பாகும். புறப்பொருள் நோக்கினதாய உலகியல் நிலையும் பரமே பார்த்திருக்கும் அகப்பொருள் நோக்கும் ஆகிய இருவகை நோக்கினையும் உணர்த்தும் நிலையில் அமைந்தது, மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை பரத்தை மறைந்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே (திருமந்திரம் 2290) எனவரும் திருமூலர் வாய்மொழியாகும். ஆன்மாவானது சார்ந்ததன் வண்ணமாந்தன்மையது என்பதனை, நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு (திருக்குறள் 452) எனத் திருவள்ளுவனார் பொதுமுறையிலும். யாதொன்று பற்றின் அதன் இயல்பாய்நின்று பந்தமறும் பளிங்கனைய சித்துநீ (ஆகாரபுவனம்-சிதம்பர) எனத் தாயுமானார் சிறப்புமுறையிலும் வைத்து அறிவுறுத்தி யுள்ளமை இங்கு நினைக்கத்தக்கதாகும். சிவவுணர்வாய் நிற்றல் என்பது மலமாயை கன்மங்களில் ஒன்றினிடத்தும் ஒருசிறிதும் நினைவுசெல்லாமல் உயிராகிய தன்னையும் நினையாமல் சுட்டுணர்வு நீங்கச் சிவம் ஒன்றையே நினைந்திருத்தல். இங்ஙனம் சிவவுணர்வில் தலைப்பட்டிருக்கும் உயிர் இறைவனது திருவடி ஞானத்தால் சிவமேபெறுந் திருவுடையதாகத் திகழுந்திறத்தினை, திருவடி ஞானம் சிவமாக்குவிக்கும் (திருமந்திரம் 1598) எனவரும் தொடரில் திருமூலநாயனார் தெளிவாக விளக்கியுள்ளார். தற்சேட்டைகெட நின்றதே சிவாநுபவம் என்பதற்குப் பிரமாணம் தேவாரத்தில் தன்னை மறந்தாள் தன்னாமங்கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே என்பதும் திருவாசகத்திலும். ஊன்கெட்டுளிர் கெட்டுணர்வு கெட்டென் உள்ளமும் போய் நான்கெட்ட வாபாடித் தெள்ளேணங் கொட்டாமோ என்பதும் கண்டு கொள்க எனச் சிவப்பிரகாசவுரையில் மதுரைச் சிவப்பிரகாசர் கூறும் விளக்கம் இங்கு உளங்கொளத் தக்கதாகும். இறைவனது திருவடியாகிய திருவருளே சிவஞானமாகும் என்பது, சிக்கல் வெண்ணெய்ப் பெருமானடி, ஞானமாக நினைவார் வினையாயின நையுமே எனவரும் ஆளுடைய பிள்ளயார்வாய் மொழியால் இனிது புலனாகும். இத்தகைய சிவஞானத்துள்ளே தம் அறிவானது அடங்கிச் சிவத்தோடு இரண்டறக் கலந்து காணும் இக்காட்சியினையே உபநிடதங்கள் சோகம் பாவனை எனவும் சிவாகமமாகிய சித்தாந்த மாமறைகள் சிவோகம்பாவனை எனவும் கூறுவன. இந்நுட்பம், மன்னிய சோகமாம் மாமறையாளர்தம் சென்னியதான சிவோகமாம் ஈதென்ன அன்னது சித்தாந்த மாமறை ஆய்பொருள் துன்னிய ஆகம நூலெனத் தோன்றுமே (2403) எனவரும் திருமந்திரத்தாற் புலனாம். இறைவன்பாற் செலுத்த வேண்டிய அன்பினையும் அதனாற் பெறும் பேற்றினையும் இல்லையாகச் செய்து தம்மைப் பிணித்துள்ள பசுத்தன்மை பாசத்தன்மைகளை அறுத்து இறைவன் தன்திருவடிக் கண்ணே தம்மைப் பிரிவறச் சேர்த்துக் கொண்டதனையும் அங்ஙனம் தமக்குத் திருவடி நல்கியதே தம்மைச் சிவமாக்கியாண்டமை யாதலையும், பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவன் எனஎன்னை யாக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே எனவும், முத்திநெறி யறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி யறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவா ரச்சோவே (அச்சோப்பதிகம் 1) எனவும் வரும் திருப்பாடல்களில் மாணிக்கவாசகப் பெருமான் தெளிவாகக் குறித்துள்ளார். ஆன்மா இங்ஙனம் சிவத்தோடு ஒன்றியியைந்து சிவமாகிய நிலையிலும் இறைவனுக்குரிய ஐந்தொழிலியற்றல் முதலிய தொழிலினைச் செய்யாததாய் அம்முத்தி நிலையிலும் இறைவனுக்கு அடிமையாய்ச் சிவாநுபவம் ஆகிய நுகர்ச்சி யொன்றிற்கேயுரியதாம் என்பது, சிவமாக்கி என்ற அளவிலமையாது எனையாண்ட என அடிகள் விதந்து கூறும் சொற்குறிப்பால் இனிது புலனாம். உம்பர்பிரான் உற்பத்தியாதிகளுக்குரியன் உயிர்தானும் சிவாநுபவம் ஒன்றினுக்குமுரித்தே (சித்தியார் சுபக். 319) எனவரும் அருணந்தி சிவாசாரியார் வாய்மொழி இங்கு ஒப்புநோக்கி யுணர்தற்குரியதாகும். வேந்தர் பெருமானாக விளங்கிய ஐயடிகள் காடவர் கோன் நாயனார் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்களைப் பணிந்து ஒவ்வொரு வெண்பாவினாற் பரவிப் போற்றியுள்ளார். அங்ஙனம் இறைவன் கோயில் கொண்டருளிய தலங்களைப் பரவிப் பாடிய இனிய தமிழ் வெண்பாக்களின் தொகுதியே க்ஷேத்திரத் திருவெண்பா என்னும் பனுவலாகும். மறவாத பேரன்பினால் இறைவனது திருவருள் ஞானத்தால் சிவானந்த அநுபூதியைத் தலைப்பட்ட மெய்யடியார்கள் சிவவேடத்தையும் திருக்கோயில்களையும் சிவனெனவே தெளிந்து வழிபடுவர் என்பதற்குச் சிவாலயங்களமைந்த திருத்தலங்களைப் பாடிப் பரவிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார் சிறந்த இலக்கியமாகத் திகழ்கின்றனார். உலகு உடல் கரணம் நுகர்பொருள் என்பவற்றை உயிர்களுக்குத் தந்து அவற்றைப் பிறப்பித்தற்கு முன்னரே தனது இச்சையாற்கொண்ட அருளாகிய திருமேனியைக் கொண்டவன் இறைவனாதலின், முதுமைக்கு முதல்வனாகவுள்ளவன் அவனே. பழமையையுடைய நான்மறைகளை அருளிய முதல்வனாகிய அவன் எழுகடல்களையுந் துறைகளாகக் கொண்ட ஏழுலகங்களுக்குத் தலைவனாயினும் கயிலை மலையின் உச்சியில் விரும்பி வீற்றிருக்கின்றான். தன்னால் தோற்றுவிக்கப்பெற்ற உலகத்தை இடமாகக் கொண்டு எழுந்தருளி யிருப்பினும் இவ்வுலகங்களெல்லாந் தன்னால் தோற்றுவிக்கப்படுதற்கு முன் தான் எல்லாவுயிர்களிடத்தும் கொண்ட நடுவுநிலைமையோடு கூடிய திருவருளாகிய தொன்மை இயல்பினின்றும் சிறிதும் வழுவாது யாண்டும் எல்லாவுயிர்களின் அகத்தும் ஒப்ப வீற்றிருந்து அருள்புரிதலால் இறைவன் என்னும் காரணப் பெயரையுடையவன். தன்வயத்தனாதல் முதலிய எண்குணங்களைத் தனக்கேயுரிமையாகக் கொண்டமையால் எல்லார்க்கும் நல்லருள் சுரக்கும் ஈசனாகத் திகழ்பவன். தன்னை இடைவிடாது நினைந்து போற்றும் மெய்யடியாருள்ளத்தைக் கோயிலாகக் கொண்டு விரும்பி வீற்றிருப்பவன். நஞ்சுடைய பாம்பினையும் அணிகலனாக அணிந்துள்ளவன். இவ்வாறு காலம் இடம் பொருள் ஆகிய எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு விளங்கும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை இவ்வரம்புகட்கு உட்பட்டு வழங்குஞ் சொற்களால் சொல்லிப் போற்றுதல் நம்மனோர்க்கு இயலாது என்பது, முறைவனை மூப்புக்கு நான்மறைக்கும் முதலேழ்கடற்குந் துறைவனைச் சூழ்கயிலாயச் சிலம்பனைத் தொன்மை குன்றா இறைவனை எண்குணத்தீசனையேத்தினர் சித்தந்தம்பால் உறைவனைப் பாம்பணையாம் பின்னையென்சொல்லி யோதுவதே (பொன்வண்ணத். 53) எனவரும் பொன்வண்ணத்தந்தாதியாற் புலனாம். சேரமான் பெருமாள் நாயனார் சொலற்கரிய சூழலாய் விளங்கும் இறைவனது இயல்பினை இத்திருப்பாடலால் விளக்கிய திறம் நினைந்து போற்றத்தகுவதாகும். இறைவன் தன்னை அன்பினால் நினைந்து போற்றும் மெய்யடியார்க்கு அருள்செய்தல் கருதி அவரவர் விரும்பிப் போற்றும் பல்வேறு திருவுருவங்கொண்டு தோன்றியருள் புரிவன் என்பதும், இங்ஙனம் பலவேறு திருவுருவங்களை யுடையனாயினும் இறைவன் ஒருவனே என்பதும் உணர்த்துவார், உருவு பலகொண்டுணர்வரிதாய் நிற்கும் ஒருவன் (கைலைபாதி) என்றார் நக்கீரதேவர். தான் ஒருவனுமே பலவாகி நின்றவா எனவரும் திருவாசகம் இங்கு நினைவுகூரத் தகுவதாகும். சொல்லும் பொருளும் போலவும் உடலும் உயிரும் போலவும் மலரும் மணமும் போலவும் எல்லாப் பொருள்களிலும் அத்துவிதமாய்க் கலந்து விளங்குகின்றான் என்பதும், எனினும் மக்கள் தம் ஐம்புலன்களாற் பற்றியுணர்தற்குரிய நிலையின்றி ஒன்றினுந் தோய்வின்றிப் புலனுணர்வுக்கு அப்பாற்பட்டுள்ளான் என்பதும் ஆகிய உண்மையினை, உரையும் பொருளும் உடலும் உயிரும் விரையும் மலரும்போல் விம்மிப் - புரையின்றிச் சென்றவா றோங்குந் திருக்கயிலை யெம்பெருமான் நின்றவா றெங்கும் நிறைந்து (கைலைபாதி) எனவும், நிறைந்தெங்கும் நீயேயாய் நின்றாலும் ஒன்றின் மறைந்தைம்புலன் காணவாராய் (கைலைபாதி) எனவும் நக்கீரதேவர் விரித்துக் கூறியுள்ளார். ஒருபற்றும் அற்று அருவாய்த்தானே நிற்குந்தத்துவங்கடந்த பொருளாகிய இறைவனை, உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமல ரெழுதருநாற்றம் போற் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் என மணிவாசகப் பெருமான் உணர்ந்து போற்றிய குறிப்பு மேற்குறித்த விரையும் மலரும் போல் விம்மி என்ற தொடரில் இடம்பெற்றுள்ளமை காணலாம். பரணதேவநாயனார் பாடிய சிவபெருமான் திருவந்தாதியில், தத்துவத்தின் உட்பொருள் எனவும், பெண் ஆண் அலியென்று பேச்சுக்கடந்த பெருவெளி எனவும், சொல்லாயம் இன்றித் தூநெறிக்கட், சொல்லாய்ப் பரந்த சுடரொளி எனவும், தாமேயவாறு சமய முதற் பொருளுந் - தாமேயவாறு தழைக்கின்றார் எனவும், உருவு பல கொண்டொருவராய் நின்றார் - உருவு பலவாம் ஒருவர் எனவும் வரும் தொடர்கள் முழுமுதற்பொருளாகிய இறையியல்பினைத் தெளிவாக விளக்குவனவாகும். தமிழகத்துத் தோன்றி வழங்கும் தெய்வ வழிபாடுகள் எல்லாவற்றையும் தனக்கு அங்கமாகக் கொண்டு அவையெல்லா வற்றோடும் தொடர்புடையதாய் மக்கள் அனைவர்க்கும் பொதுவாக விளங்குவது சிவ வழிபாடு என்பதனை, வேந்துக்கமாக்கடற் சூரன்முன்னாள்பட வென்றிதந்த சேந்தற்குத்தாதை, இவ்வைய மளந்த தெய்வத்திகிரி ஏந்தற்கு மைத்துனத்தோழன் இன்றேன்மொழி வள்ளி யென்னும் கூந்தற் கொடிச்சிதன் மாமன்வெம்மால் விடைக்கொற் றவனே எனவும், கொற்றத் துப்பின் ஒற்றை யீன்ற துணங்கையஞ் செல்வத் தணங்கு தருமுதுகாட்டுப் பேய்முதிர் ஆயத்துப் பிணவின்கொழுந எனவும் வரும் சிவபெருமான் திருமும்மணிக்கோவைப் பாடல்களில் இளம்பெருமானடிகள் விளக்கியுள்ளமை இங்குக் குறிப்பிடத் தகுவதாகும். ஒலிக்குங் கடலிடத்தே நுரையும் அலையும் சுழற்சியும் எல்லையற்ற நீர்த் திவலைகளும் பெருத்தும் சிறுத்தும் எண்ணிலவாய்த் தோன்றி மீளவும் அக்கடலிடத்தே அடங்குமாறு போன்று, இயங்குவன நிற்பனவாகிய உலகத்தொகுதி யனைத்தும் இறைவனிடத்தே தோன்றி மீளவும் அவனிடத்தே ஒடுங்குவன எனவும், தான் ஒன்றினுந் தோன்றாத, ஒன்றினும் ஒடுங்காத தனிமுதல்வனாகத் திகழ்வோன் இறைவன் எனவும் விளக்கப் போந்த திருவெண் காட்டடிகள், நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகடற் பெருத்துஞ் சிறத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி யிருங்கட லடங்குந் தன்மை போலச் சராசர மனைத்தும் நின்னிடைத் தோன்றி நின்னிடைய டங்கும்நீ ஒன்றினுந் தோன்றாய் ஒன்றினும் அடங்காய் என அம்பலத்தாடும் உம்பர் நாயகனைப் பரவிப் போற்றுகின்றார். உலகனைத்தும் இறைவன்பால் தோன்றி ஒடுங்குவன என்னும் கருத்தமைந்த இத்தொடரை ஆதாரமாகக் காட்டி உலகத் தொகுதிக்கு முதற்காரணமாகத் திகழ்வோன் இறைவனே என்பது திருவெண் காட்டடிகள் கருத்தெனக் கருதுவாரும் உளர். அன்னோர் கருதுமாறு இவ்வுலகத்தொகுதி இறைவனை முதற்காரணமாகக் கொண்டு தோன்றியிருக்குமானால் முதற்காரணத்தோடு ஒத்தகுணங்களே அதன் காரியத்திலும் உள்ளனவாதல் வேண்டும் என்னும் நியதிபற்றி இறைவனாகிய சித்துப் பொருளை முதற்காரணமாகக் கொண்டு தோன்றிய காரியமாகிய உலகமும் சித்துப் பொருளின் குணமாகிய அறிவினையுடையதாதல் வேண்டும். உலகம் அறிவற்ற சடப்பொருள் என்பது யாவர்க்கும் உடன்பாடாதலின், அறிவில் பொருளாகிய அது அறிவுடைப்பொருளாகிய இறைவனை முதற்காரணமாக்க கொண்டு தோன்றியதெனக் கூறுதல் பொருந்தாது, உலகத்தொகுதி மாயையாகிய உள்பொருளிலிருந்து இறைவனர் தோற்றுவிக்கப்பட்டு விரிந்து மீண்டும் அதன்கண் ஒடுங்கும் என்பதே திருமூல நாயனார் முதலிய திருமுறையாசிரியர்களின் துணிபாகும். நீரில் தோன்றி மீளவும் நீரில் ஒடுங்கும் நுரை, அலை, சுழல் முதலியவற்றை நீர்க்கு இடமாகிய கடலிலே தோன்றி யொடுங்குதல் போல எனத் திருவெண்காட்டடிகள் உவமையாக எடுத்தாளுதலால், இயக்குவன நிற்பனவாகிய உலகத்தொகுதிக்கு இறைவன் ஆதார மாவதன்றி மற்ற காரணமாகான் என்பதே திருவெண்காட்டடிகள் கருத்தென்பது இனிது புலனாகும். நின்னிடைத் தோன்றி நின்னிடை யொடுங்கும் என்றது, மாயைக்குத் தாரகம் ஆதல் பற்றி யென்றுணர்க. அக்கருத்து உணர்ந்துகோடற்கன்றே நீரிற்றோன்றியொடுங்கும் நுரை முதலியவற்றை நீர்க்கிடமாகிய கடலிற் றோன்றியொடுங்குதல் போல் என்று உவமை கூறினாராகலின், ஆண்டு ஆசங்கைக்கு இடமின்மையுணர்க (சிவஞான போதப் பேருரை, ஏழாம் சூத்திரம் இரண்டாம் அதிகரணம்) எனச் சிவஞானசுவாமிகள் இத்தொடர்ப் பொருளைத் தெளிவு படுத்தினமை இங்கு நினைத்தாற்குரியதாகும். இறைவனது திருவருளாகிய கண்ணின் உதவியைப் பெறுதற்கு முன், இல்லன உளவாய், உள்ளன காணாது தாம் அறியாமையாகிய இருளிலகப்பட்டு அல்லற்பட்ட தன்மையையும், திருவருளாகிய ஞானநாட்டம் பெற்ற பின்னர் அசத்தாகிய உலகத்தொகுதி இல்லையாகிமறைய, இறைவனாகிய மெய்ப்பொருள் எங்குமாய் விளங்கித் தோன்றிய தன்மையினையும் திருக்கழுமுல மும்மணிக் கோவையின் பத்தாம் பாடலில் திருவெண்காட்டடிகள் தெளிவாக விளக்கியுள்ளமை காணலாம். இடைமருதினை இடமாகக் கொண்டு எழுந்தருளிய பெருமானே, அடியேன் பிறவிச் சுழலில் அகப்பட்டுத் தடுமாறும்போது யானுற்ற துன்பத்தினையும், என்னை யீன்றெடுக்கும் நிலையில் என்தாயுற்ற துன்பத்தினையும் உள்ளவாறு உணர்வோர் உயிர்க்குயிராகிய நின்னையன்றியாருளர்? பெருகிய துன்பந்தருவதாகிய இப்பிறவிச் சுழலிற் பட்டு இனிப்பிறக்கும் வலியுடையேனல்லேன், நின்னை உறுதுணையாகப் பற்றிய வழிபடும் ஒருநெறியைத் தவிரப் பிறவிநோய் களைதற்குப் பிறிதொரு வழியும் இல்லை. மீண்டுவாரா வழியருளும் நின் திருவருள் நெறியில் ஒழுகுதற்கு விருப்பு வெறுப்பற்ற ஒருமை மனம் வேண்டும். ஐம்புலவேடர்களின் ஆணைவழிநின்று தானல்லாதவற்றைத் தானெனக் கருதும் மயக்க நிலையினையுடையது என்மனம். இம்மனத்தைக் கொண்டு நின்னை நினைந்து போற்றுதல் எங்ஙனம் இயலும்? கல்லைத்தெப்பமாகக் கொண்டு கடலைக் கடக்க எண்ணிய பேதையர் என்னையன்றி வேறுயாருளர்? பிறவிப்பெருங்கடலை அடியேன் கடக்கவும் வேண்டும், அங்ஙனங் கடத்தற்கு உறுதுணையாக நின்னை நினைத்தலும் வேண்டும், ஒரு நெறியில் நின்று நின்னை நினைந்து என இடை மருதீசனை நோக்கித் திருவெண் காட்டடிகள் வேண்டுவதாக அமைந்தது, திருவிடை மருதூர்மும்மணிக்கோவையின் நான்காம் பாடலாகும். இறைவனை யுணர்ந்து போற்றுதற்கும் இறைவன் திருவருளே துணைபுரிதல் வேண்டும் என்னும் உண்மை இதனால் அறிவுறுத்தப்பெற்றமை காண்க. எல்லாம் வல்ல முழு முதற்கடவுளாகச் சிவபெருமானை நினையாமலும் அம்முதல்வன் திருப்பெயராகிய திருவைந்தெழுத்தினை முறைப்படி ஓதாமலும் பச்சிலையும் நீருங்கொண்டு அம்முதல்வனை வணங்காமலும் வேறுயாராகவோ நினைக்கும் புறச் சமயத்தார் உள்ளத்திலும் இடை மருதீசன் பொன்னார் திருவடியே நண்ணி அருள் வழங்கும் என்பார், ஓராதேயஞ்செழுத்தும் உன்னாதே பச்சிலையும் நேராதே நீரும் நிரப்பாதே - யாராயோ எண்ணுவா ருள்ளத் திடைமருதர் பொற்பாதம் நண்ணுமா மென்னும்மது நாம் அன்றென்றும் ஆமென்றும் ஆறு சமயங்கள் ஒன்றொன்றோ டொவ்வா துரைத்தாலும் - என்றும் ஒருதனையே நோக்குவார் உள்ளத் திருக்கும் மருதனையே நோக்கி வரும் என்றார் திருவெண்காட்டடிகள். இப்பாடல்கள் எல்லாச் சமயத்தாராலும் வழிபடப்பெறும் பரம்பொருள் ஒன்றே யென்னும் உண்மையினைத் தெளிவாக வற்புறுத்துதல் காணலாம். உடல்வன்மை படைத்தானொருவனால் முயன்று வீசி எறியப்பட்டு வானத்தின்கண் உயர்ந்து விரைந்து சென்றகல்லும், வலியில்லாதானொருவனால் மெதுவாக எறியப்பட்டுச் சென்ற கல்லும் நிலத்தின்கண்ணே ஒருசேர விழுதலைக் காண்கின்றோம். அதுபோலவே இறைவனது திருநாமமும் தன்னை ஓதுவாராது ஞானத்தின் வன்மை மென்மைகளால் மாறுபடாது தனக்கு ஆதாரமாகிய இறைவனருளால் ஈர்க்கப்பட்டு ஒதுவார் அனைவர்க்கும் ஒப்ப நலம்புரியும் சிறப்புடையது என்னும் உண்மையினை, வல்லா னொருவன் கைம்முயன் றெறியினும் மாட்டா னொருவன் வாளா எறியினும் நிலத்தின் வழாஅக் கல்லே போல் நலத்தின் வழாஅர்நின் நாமம் நவின்றோரே (திருவிடைமருதூர் மும்மணிக்கோவை) எனவரும் தொடரால் அடிகள் விளக்கிய திறம் வியந்து போற்றத் தக்கதாகும். எல்லாப் பொருள்களிலும் நீக்கமறக் கலந்து விளங்கும் இறைவனுக்கு உலகமே உருவமாதலின், அப்பேருருவினை விட்டு விலகி நிற்கும் பொருள்கள் உலகில் இல்லை. எனவே உலகப் பொருள்கள் யாவும் இறைவன் திருவுருவின் அவயவங்களாகவே கொள்ளத் தக்கன. திரிபுரம் எரித்தது, தக்கன் தலையரிந்தது, இந்திரனைத் தோள் நெரித்தது, பிரமன்தலையிலொன்றைக் கிள்ளியது, மன்மதனை எரித்தது, இராவணனை விரலால் அடர்த்தது, கூற்றுவனை யுதைத்தது முதலாக இறைவன் செய்த செயல்களெனப் போற்றப் பெறுவனவெல்லாம் இறைவன் உலகத்தை இயக்குங்கால் அவனது அருளினை ஏற்றுக் கொள்ளாதார் தம் வினைவயத்தால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் எனக் கொள்வதல்லது இறைவன்தானே தனக்குப் புகழுண்டாதல் வேண்டி விரும்பிச் செய்த வீரச்செயல்களென மெய்யுணர்வுடையோர் கொள்ளமாட்டார்கள் என்பதனை உருவாம் உலகுக்கு எனவரும் திருவொற்றியூர் ஒருபாவொருபது பாடலில் திருவெண்காட்டடிகள் தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் சிவபெருமானது உண்மையிலக்கணம் புலப்படுத்தப்பெற்றுள்ளமை அறியத்தகவதாகும். மெய்ப்பொருளை யுணரமுற்பட்டு அறிவினால் உயர முயலும் நான்முகன் முதலான ஆணவ இருளில் அகப்பட்டுப் பல்வேறு உடம்பினைப் பெற்றுழலும் ஏனைய உயிர்கள் ஈறாகவுள்ள எல்லாவுயிர்களும் உருவம், உணர்வு, பெருமை, ஆற்றல், செல்வம், வன்மை, செய்யும் தொழில்வகை, ஆகியவற்றால் வேறுபட்டனவாகி, வினைத்தொடக்கினின்றும் நீங்காது ஒன்றையொன்றொவ் வாதனவாய்க் கூடி நிற்பது இவ்வுலகத் தொகுதி. இதன்கண் வாழும் உயிர்களின் ஒழுகலாறுகள், நிலைபெற்ற பெருங்கடலுள் உயர்ந்து தோன்றும் அலைகளைப் போன்று இறைவனாகிய முழுமுதற் பொருளை ஆதாரமாகக் கொண்டு தோன்றி, அப் பொருளினது வியாபகத்திடையே வளர்ந்து விரிந்தும் ஒடுங்கியும் இடம்பெயர்ந்தும் கலந்தும் ஒன்றிலும் தோய்வின்றி விளங்கும் அம்முதல்வனது இயல்பினை விளக்கி நிற்பன. இங்ஙனம் இறைவனது வியாபகத்துள்ளே இவ்வுலகந் தோன்றி நின்றொடுங்கித் தொழிற்படும் இயல்பினை தோன்றி நின்றொடுங்கித் தொழிற்படும் இயல்பினை இறைவனது திருவருள் ஞானம்பெற்ற பெரியோர்கள் அறிவதல்லது திருவருள் பெறாத ஏனையோர் அறிதல் இயலாது என்னும் உண்மையினை விரித்துரைப்பது பொருளுணர்ந்தோங்கிய எனவரும் ஒருபாவொரு பதின் ஐந்தாந்திருப்பாடலாகும். சிவபெருமானது திருக்கோலத்தில் அமைந்துள்ள தத்துவ வுண்மைகளைப் புலப்படுத்தும் முறையில் அமைந்தது, திருவொற்றியூர் ஒருபாவொருபதில், தூமதி சடைமிசை வைத்தது தூமதி ஆமதி யானென அமைத்தவாறே அறனுருவாகிய ஆனேறேறுதல் இறைவன்யானென இயற்றுமாறே அது அவள் அவனென நின்றமை யார்க்கும் பொதுநிலை யானென வுணர்த்திய பொருளே முக்கணன் என்பது முத்தீவேள்வியில் தொக்க தென்னிடையென்பதோர் சுருக்கே வேதமான்மறி யேந்துதல் மற்றதன் நாதன் நானென நவிற்றுமாறே மூவிலையொருதாட் சூல மேந்துதல் மூவரும் யானென் மொழிந்தவாறே எண்வகை மூர்த்தி என்பதிவ்வுலகினில் உண்மையா னென உணர்த்தியவாறே எனவரும் ஆறாம் பாடலாகும். திருவெண்காட்டடிகள் இயற்றிய பனுவல்களில் அமைந்த பாடல்கள் யாவும் முன்னைத் திருமுறை யாசிரியர்கள் அருளிய அருள் நூல்களை அடியொற்றியனவாய் சைவ சித்தாந்த வுண்மைகளைத் தெளிய விளக்குவனவாக அமைந்துள்ளமை இங்குச் சிறப்பாகக் குறிக்கத்தகுவதாகும். திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையார் திருவருள் பெற்ற நம்பியாண்டார் நம்பிகள் மூத்தபிள்ளையாரைக் குறித்து முதன்முதற் பாடிய இரட்டை மணிமாலையின் முதற்செய்யுள் என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்துத் தன்னை நினையத் தருகின்றான் - புன்னை விரசுமகிழ் சோலை வியனாரை யூர்முக்கண் அரசுமகிழ் அத்திமுகத் தான் என்பதாகும். இதன்கண் இறைவன் உயிர்கள் தன்னை நினையுமாறு நினைந்தாலன்றி அவ்வுயிர்கள் அம்முதல்வனை நினைக்குந் திறம்பெறமாட்டா என்னும் உண்மை வலியுறுத்தப் பெற்றுள்ளமை காணலாம். தன்னைமுன்னம் நினைக்கத் தருவான் எனவரும் தேவாரத் தொடர் இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். உயிரையின்றி யமையாதகண், ஓர் உருவத்தைக் காணுங்கால், உயிரானது கண்ணுடன் பிரிப்பின்றிக் கலந்து நின்று, அவ்வுருவத்தைக் கண்ணுக்குக் காட்டித் தானும் உடனிருந்து காணுமாறுபோல, இறைவனை யின்றியமையாத உயிரும், ஒருபொருளை அறியுங்கால் இறைவனது பேரறிவானது, உயிரறிவோடு பிரிப்பின்றிக் கலந்து நின்று அப்பொருளை உயிர்க்கு அறிவித்துத் தானும் அதனோடு உடனிருந்து அறிந்து உதவும். இங்ஙனம் இறைவன் உயிர்கட்குச் செய்யும் உதவி, உயிர்கள் பாசத்தாற் பிணிக்கப்பட்டுள்ள கட்டுநிலையிலும் பாசம் நீங்கி இன்புறும் முத்தி நிலையிலும் ஒப்ப நிகழும் என்பர். தீயானது ஒருபொருளில் தங்கிநின்று சுட்டு ஒன்று வித்தலாகிய தன் தொழிலை நிகழ்த்துமாறுபோல, இறைவனும் ஆன்மாக்களிடத்துப் பிரிப்பின்றித் தங்கி நின்றே அவற்றின் பாசங்களை அகற்றி அருள்புரிதலாகிய தன் தொழிலை நிகழ்த்துவன். இவ்வாறு உயிர்க்குயிராய் உடனின்று உதவிபுரியும் இறைவனது பெருங்கருணைத் திறத்தை யுணர்ந்து தம் செயலெல்லாவற்றையும் கைவிட்டு இறைவனை இடைவிடாதெண்ணி அவனருளாலல்லது ஒன்றையுஞ் செய்யாராகிய திருமாளிகைத்தேவர், உயிர்கட்குக் கருணையால் உபகரித்துவரும் இறைவனது உரிமையை நோக்குந்தோறும் அம்முதல்வன்பால் வைத்துள்ள பேரன்பு அடங்காது மீதூர்தலின் அப்பேரன்பே தானாக விளங்கித்தோன்றும் பேரானந்தத்தை நுகர்ந்து மகிழும் நிலையில் ஒளிவளர்விளக்கே யெனத்தொடங்கும் திருவிசைப்பாத் திருப்பதிகத்தை உளங்குளிர்ந்து பாடியுள்ளார். இறைவனது பொருள்சேர் புகழை வாயாரப் பாடிப் போற்றுதற்கும் மனத்தால் நினைத்தற்கும் அம்முதல்வனுக்குத் தொண்டுபட்டு வணங்குதற்கும் அவனோடு ஒன்றி இன்புறுதற்கும் அவ்விறைவனது காட்டும் உபகாரமேயன்றி அம்முதல்வன் உயிரோடு ஒன்றித்துநின்று காணும் உபகாரமும் இன்றியமையாதது என்னும் இவ்வுண்மையை வற்புறுத்துவது ஒளிவளர்விளக்கே எனத் தொடங்கும் இத் திருவிசைப்பாத் திருப்பதிகம் ஆகும். காணுங் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் காண வுள்ளத்தைக் கண்டு காட்டலின் அயரா அன்பின் அரன்கழல் செலுமே (சிவ. சூ 11) எனவரும் சிவஞானபோதச் சிற்றுரையுள், உயிர் ஒன்றனையறிதல், முதல்வன் உடனின்று அறிதலையின்றி அறிவித்தல் மாத்திரையான் அமையாது என்பது, தொண்டனேன் நினையுமா நினையே, விரும்புமா விரும்பே, தொடருமா தொடரே, நுகருமா நுகரே என்றிவ்வாறு முத்திபற்றி யோதிய திருவாக்குக்களானும் அறிக என மாதவச் சிவஞான முனிவர் குறித்துள்ளமை இங்கு உணர்ந்து இன்புறத்தகுவதாகும். இணங்கிலாவீசன் என்னும் முதற்குறிப்புடைய திருவிசைப்பாத் திருப்பதிகத்தில், சிவநெறியையும் சிவனடியார்களையும் இகழ்ந்துரைக்கும் பேய்மக்களைத் தம் கண்கள் காணா என்றும் வாய் அவரோடு உரையாடாது என்றும் திருமாளிகைத்தேவர் கூறியுள்ளார். மறப்பித்துதம்மை மலங்களின் வீழ்க்குஞ் சிறப்பில்லார் தந்திறத்துச் சேர்வை - அறப்பித்துப் பத்தரினத்தாய்ப் பரனுணர்வினாலுணரும் மெய்த்தவரை மேவாவினை (சிவஞானபோதம் - வெண்பா 75) என மெய்கண்ட தேவர் அறிவுறுத்தருளிய சிவபத்தர் இலக்கணம் திருமாளிகைத் தேவர் அருளிய இத்திரு விசைப்பாப் பதிகத்தில் இடம்பெற்றுள்ளமை காண்க. காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறுபோல அடியார் திருமேனியிற் காணப்படும் சிவசாதனமாகிய திருவெண்ணீற்றுத் திருவேடம் மெய்யுணர் வுடையாரை வசீகரித்து இன்பஞ்செய்யும் என்பதனை, சேலுங்கயலுந்திளைக்குங்கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணிமார்பிலங்குமென்று புண்ணியர் போற்றிசைப்ப (திருப்பல்லாண்டு) எனவரும் திருப்பல்லாண்டில் சேந்தனார் குறித்துள்ளார். காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடைசாந்து அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல மெய்யுணர்வுடையாரைக் காட்சி மாத்திரையின் வசீகரித்து இன்பஞ்செய்தல் பற்றித் திருவேடத்தையும் சிவாலயத்தையும் என்று உபசரித்தார். அது சேலுங்கயலுந் திளைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம், போலும்பொடியணமார்பிலங்குமென் று புண்ணியர் போற்றிசைப்ப என்னுந் திருவாக்கானும் அறிக (சிவஞானபோதச் சிற்றுரை, சூ. 12) எனச் சிவஞானமுனிவர் கூறும் விளக்கம் இங்கு எண்ணத்தகுவதாகும். தில்லைச்சிற்றம்பலவர் திருவருளால் உலகெலாம் எனத் தோன்றிய அருள் மொழியினை முதலாகக் கொண்டு அருள்மொழித் தேவராகிய சேக்கிழாரடிகளால் அருளிச் செய்யப்பெற்றது திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணமாகும். பன்னிரண்டாந்திருமுறையாகிய இது, உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என்னும் திருப்பாடலை முதலாகக் கொண்டு தொடங்குகின்றது. உயிர்கள் எல்லாவற்றாலும் மனத்தால் உணர்தற்கும் வாய்மொழிகளால் ஓதுதற்கும் அரியவனும், பிறைத்திங்கள் உலவுதற் கிடனாகிய கங்கை நீர நிறைந்த சடையுடன் பொருந்திய திருமேனியை யுடையவனும் அளவில்லாத பேரொளிப் பிழம்பாகத் திகழ்பவனும் ஞானமயமான தில்லைச் சிற்றம்பலத்திலே அருட்கூத்தியற்றுபவனும் ஆகிய இறைவனுடைய செந்தாமரை மலர்போலும் சிலம்பணிந்த திருவடியினை வாழ்த்தி வணங்குவாம் என்பது இதன் பொருளாகும். இச்செய்யுள் தெய்வவணக்கமும் செயப்படு பொருளும் எய்தவுரைக்குந் தற்சிறப்புப் பாயிரமாகவும் இந்நூலின்மங்கல வாழ்த்தாகவும் அமைந்துள்ளது. இதன்கண் உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன், நிலவு உலாவிய நீர்மலிவேணியன், அலகு இல்சோதியன் அம்பலத்து ஆடுவான் என முழுமுதற்பொருளின் இலக்கணமாகிய பொருளியல்பு உரைத்தலும், மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் என வாழ்த்தும் வணக்கமும் ஒருங்கு அமைந்திருத்தல் காணலாம். இங்கு உலகு என்றது, உயிர்களை, உணர்தல் - மனத்தின் தொழில்; அஃது உயிரின் அறிவாகிய பசுஞானத்தினைக் குறித்தது. ஓதுதல் - வாக்கின் தொழில்; அது நூலறிவாகிய பாசஞானத்தினைக் குறித்தது. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் உணர்தற்கு அரியவன் முழுமுதற்பொருளாகிய இறைவன் என்பது புலப்படுத்துவார், உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்றார் சேக்கிழார் நாயனார். இதனால் மாற்றமனங்கழிய நின்ற இறைவனது சொரூபலக்கணம் எனப்படும் உண்மையியல்பு உணர்த்தப்பட்டது. வாக்குமனமறிந்த வான்கருணையாளனாகிய இறைவன் தன்னடியார்க்கு எளிவந்து அருள் புரியுங்கால் உருவத் திருமேனி தாங்கி எழுந்தருள்வன் என்பார் நிலவுலாவிய நீர்மலிவேணியன் என்றார். அருமையில் எளிய அழகனாகிய அவன் எவ்வுயிர்க்கும் அருளுடையராய் வாழும் அறவோர் சிந்தையினையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளுவான் என்பார், அலகில் சோதியன் என்றார். நினைப்பவர் மனங்கோயிலாகக் கொண்டவன் எனவும், அந்தணர்தஞ்சிந்தையானை எனவும், சிந்தைதனை மயக்கந் தீர்க்கும் ஏரொளியை எனவும் தூண்டுசுடரனைய சோதி கண்டாய் எனவும் வரும் அப்பர் அருள் மொழிகளும், ஏதுக்களாலும் எடுத்தமொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி என ஆளுடையபிள்ளையார் அருளுரையும், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி எனவரும் திருவாதவூரடிகள் மணிவாசகமும் இங்கு நினைக்கத் தக்கனவாகும். அரியவன் என்றதனால் அருவமும், வேணியன்...............M«gy¤J ஆடுவான் என்றதனால் உருவமும், அலகில்சோதியன் என்றதனால் அருவுருவமும் என மூவகைத் திருமேனிகளையும் ஒருங்குடையவன் இறைவன் எனப் புலப்படுத்தியவாறு, திருத்தொண்டர்புராணத்தின் முதற்கண் உள்ள உலகெலாம் எல்லாவுலகங்களிலும் வாழும் அவன் அவள் அதுவெனும் மன்னுயிர்த்தொகுதியைச் சுட்டி நின்றது. எனவே கடவுள்வாழ்த்தாக அமைந்த இந்திருப்பாடலில் கடவுள் உயிர் உலகு என்னும் முப்பொருள்களுள் உயிர்களின் உண்மையும் அவை உடம்புடன் உலவுதற்கிடனாகிய உலகினது உண்மையும் உடன் கூறினாராயிற்று. இறைவன் அருளிய உலகெலாம் என்னும் இம்மறைமொழி அஞ்செழுத்து ஓதியேறினார் உய்ய உலகெலாம் (பெரிய. சம்பந்தர் 216) என இந்நூலின் நடுவிலும், மன்றுளார் அடியாரவர் வான்புகழ், நின்றதெங்கும் நிலவியுலகெலாம் (பெரிய. வெள்ளானை) என இந்நூலின் முடிவிலும் ஆசிரியரால் எடுத்தாளப் பெற்றுள்ளமை காணலாம். அருமறை முதலில் நடுவினிற் கடையில் அன்பர்தஞ் சிந்தையில் அலர்ந்த, திருவளர்ஒளிசூழ் திருச்சிற்றம்பலம் முன்தோன்றிய திருத்தொண்டர் புராணமாகிய இத் திருமறையில் திருவைந்தெழுத்தின் பெருமையினையும் இறைவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றின் சிறப்பினையும் சேக்கிழாரடிகள் ஆங்காங்கே குறித்துள்ளமை மனங்கொளத் தகுவதாகும். சைவசமயத்தில் இறைவனை யடைதற்குரிய வழிகளாகச் சரியை கிரியை யோகம் ஞானம் என நால்வகை நெறிகள் வகுக்கப் பெற்றுள்ளன. இந்நான்கினையும் ஏணிப்படிகளாகக் கொண்டு ஞான நெறியினைக் கடைப்பிடித் தொழுகும் சிவஞானிகளாகிய திருத்தொண்டர்கள் உலக மக்கள் உய்திபெறுதல் வேண்டி மேற்குறித்த நால்வகை நெறிகளுள் ஒன்றினைத் தமக்குச் சிறப்புடைய வாழ்க்கை நெறியாக மேற்கொண்டு வாழ்ந்து காட்டிய வரலாற்று நிகழ்ச்சிகளைச் சேக்கிழார் நாயனார் திருத்தொண்டர் புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார். ஞானமுதல் நான்குமலர் நற்றிருமந்திரமாலை (பெரிய. திருமூலர் 26) நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியாசாரியை யெலா மலர்ந்த மொழித்திருமூலதேவர் (பெரிய. திருமூலர் 28) எனவரும் தொடர்களின் ஞான நெறியினை அடிப்படையாகக் கொண்டு நிகழும் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நால்வகை நெறிகளையும் குறித்துள்ளமை காண்க. இதனால் ஞானநெறியொன்றே ஞானத்திற் சரியை, ஞானத்திற் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என நான்காக வகுத்துரைக் கப்படும் என்பதும் உய்த்துணர வைத்தாராயிற்று. வேத சிவாகமங்களிலும், எனதுரையாக தனதுரையாக என்றபடி இறைவன் அருள்வழியடங்கி நின்ற திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் முதலிய சிவாநுபவச் செல்வர்கள் திருவாய்மலர்ந்தருளிய அருள்நூல்களாகிய திருமுறைகளிலும் நிரம்பிய பயிற்சியும் ஈடுபாடும் உடைய சேக்கிழார் நாயனார், வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்கத் தாம் இயற்றிய திருத்தொண்டர் புராணமாகிய செந்தமிழ்க் காப்பியத்தில் உலகியல் வேதநூலொழுக்கமாகிய வைதிக நெறியினையும், அதனினும் சிறப்புடையதாகத் தமிழ்ச் சான்றோர்களால் பேணி வளர்க்கப்பெற்று என்றும் நின்று நிலவும் பெருமை வாய்ந்த மெய்ந்நெறியாகிய சிவநெறியினையும் பொதுவும் சிறப்புமாகிய அந்நெறிகளில் வழுவாதொழுகிச் சிவபெருமான் திருவருளுக்குரியராகிய திருத்தொண்டர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளில் வைத்து இனிது விளக்கியுள்ளார். தமிழகத்திற் சைவ சமயச் சான்றோர்களால் இறைவன் திருவருள் கொண்டு போற்றி வளர்க்கப்பெற்ற சைவ சித்தாந்தத் தத்துவ உண்மைகள் பல இத்திருத்தொண்டர் புராணத்தில் இலக்கியச் சுவையமைய நன்கு விளக்கப் பெற்றுள்ளமை காணலாம். கன்னிவேட்டைக்குச் சென்ற திண்ணனார் காளத்தி மலையினைக் கண்டு அம்மலைமேல் எழுந்தருளிய குடுமித் தேவரை வழிபடுதல் வேண்டுமென்னும் பெருவேட்கை யுடையராய் நாணனைத் துணையாகக் கொண்டு காளத்தி மலைமேல் ஏறிச் சென்ற அன்பின் திறத்தினை, நாணனும் அன்பும் முன்பு நளிர்வரையேறத் தாமும் பேணுதத்துவங்கள் என்னும் பெருகு சோபானமேறி ஆணையாஞ் சிவத்தைச் சார அணைபவர் போல ஐயர் நீணிலை மலையையேறி நேர்படச் செல்லும் போதில் (பெரிய. கண்ணப்ப. 103) எனவரும் பாடலில் ஆசிரியர் விளக்கியுள்ளார். தம் தோழனாகிய நாணன் என்பவனும் தாம் குடுமித்தேவர்பால் வைத்த அன்பும் தமக்கு முன்னே குளிர்ச்சியுடைய மலையின் மேல் ஏறிச்செல்ல, உயிர்களைப் பேணிவளர்க்கும் தத்துவங்கள் என்னும் (அறிவு) பெருகும் படிகளை, அருளாகிய சத்தியுடன் பிரிவின்றியுள்ள சிவபரம் பொருளைச் சார அணைபவர்களாகிய சிவயோகிகளைப் போலத் திண்ணனாராகிய வேட்டுவத் தலைவர் நீண்ட நிலைமை யினையுடைய திருக்காளத்தி மலையின்மேல் ஏறித் குடுமித் தேவரை நேர்படக் காணச்சென்றார் என்ற செய்தி இச் செய்யுளிற் குறிக்கப்பெற்றது. சுத்தம் அசுத்தம் என்னும் இருவகை மாயையினின்றும் தோன்றிய நிலம் முதல் சிவம் ஈறாகவுள்ள தத்துவங்கள் முப்பத்தாறும், சகலநிலையில் உயிர்களின் அறிவு விழைவு செயல் என்பவற்றின் வளர்ச்சிக்குக் கருவியாய் அவ்வுயிரின் உணர்வு முதலியவற்றை வளர்த்தலின் பேணு தத்துவங்கள் எனப்பட்டன. இவை எல்லாவுயிர்களுக்கும் போக நுகர்ச்சியைக் கொடுப்பனவாய் ஊழிக்காலம்வரை நிலைத்திருக்கும் உண்மைப்பொருள்களாதலின் தத்துவம் எனப் பெயர் பெற்றன. நிலமுதல் நாதமீறாகவுள்ள இத் தத்துவங்கள் அனைத்தையுங்கடந்து மேற்சென்று தத்துவங் கடந்த செம்பொருளாகிய இறைவனை அணைதற்கு இத் தத்துவங்கள் படிபோன்று மேன்மேல் விரிவுடையனவாக அமைதலின் தத்துவங்கள் என்னும் பெருகுசோபானம் என்றார். சோபானம் - படி, சிவபரம் பொருளாகிய இறைவன் தனது அருளாகிய சத்தியுடன் நீக்கமின்றி நிற்றலால் சிவமும் சத்தியும் ஒருபொருளே என்பது உணர்த்துவார், ஆணையாம் சிவம் என்றார். ஆணையின் நீக்கமின்றி நிற்குமன்றே (சிவ. சூ. 2) எனவரும் சிவஞான போத இரண்டாஞ் சூத்திரத்தொடர் மேற்குறித்த ஆணையாஞ் சிவத்தை எனவரும் சேக்கிழார் வாய்மொழியை அடியொற்றி யமைந்ததாகும். புறப்பொருளை நோக்காது பேரறிவு மாத்திரமாய் நிற்கின்ற முழுமுதற்பொருளே சிவம் எனவும் அச்சிவம் உயிர்களுக்குப் பசுத்துவத்தை நீக்குவதிற் கொண்டுள்ள அருளே சத்தி எனவும் கூறப்படும். தன்னை விளக்குவதூஉம் விடயங்களை விளக்குவதும் தானேயாகிய ஞாயிறு ஒன்று தானே விடயங்களை விளக்குழிக் கதிர் எனவும், தன்னை விளக்குழிக் கதிரோன் எனவும் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் அது போலப் புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன்னியல்பின் நிற்பதூஉம் புறப்பொருளை நோக்கி நின்றுணர்த்துவதூஉம் ஆகிய இரண்டியல்புடைய பேரறிவாகிய சைதன்னியம் ஒன்றே அங்ஙனம் புறப் பொருளை நோக்கி நிற்கும் நிலையிற் சத்தி எனவும், புறப்பொருளை நோக்காது அறிவு மாத்திரமாய் நிற்கும் நிலையிற் சிவம் எனவும், தாதான்மியத்தான் இருதிறப்பட்டு இயைந்து நிற்கும் எனச் சிவஞானமுனிவர் கூறும் விளக்கம் இங்கு நோக்கத்தக்கதாகும். சிவயோகிகள் நிலமுதற் சிவமீறாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் படிமுறையானே ஏறிக்கடந்து சிவத்தை அணையுமாறு போலத் திண்ணனாரும் காளத்தி மலையிற் படிவழியே ஏறிச்சென்று குடுமித் தேவரைச் சார்ந்தார் எனச் சைவசித்தாந்தத் தத்துவ வுண்மையினை உவமையாகச் சேக்கிழார் எடுத்தாண்டுள்ளதிறம் இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும். ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் உயிர்களை அநாதியே பற்றியுள்ளன என்பதும், முற்றுணர்வும் வரம்பிலாற்றலும் பேரருளும் உடைய இறைவன் உயிர்களை அநாதியே பிணித்துள்ள மலப்பிணிப்பு நீங்க உயிர்களுக்கு உலகு உடல் கருவி நுகர்பொருள்கள் ஆகியவற்றைப் படைத்துக் கொடுத்து இவ்வுலகில் வாழ்வாங்கு வாழச் செய்து பாசப்பிணிப்பொழிந்து மீண்டும் பிறவாநெறியாகிய வீடுபேற்றினைத் தந்தருள்கின்றான் என்பதும், உயிர்கள் தம்மைப் பற்றியுள்ள பாசப்பிணிப்பு அகல அருளேயுருவாகிய ஈசனை அன்பினால் மறவாது வழிபடுதல் வேண்டுமென்பதும் சைவ சித்தாந்த நூற்றுணிபாகும். இதனை, தொழுவார் தம் மும்மை மாமங்களற வீடருள்தில்லை மல்லலம் பதியின் (பெரிய. தடுத்தாட். 92) எனவும், தொல்லைவினை, ஆசுடைய மலமூன்றும் அணையவரும் பெரும்பிறவி மாசுதனைவிடக் கழித்து (பெரிய. திருக்குறிப்பு. 114) எனவும், மருள்பொழி மும்மலஞ் சிதைக்கும் வடிச்சூலம் (பெரிய. சிறுத்தொண்டர். 35) எனவும் வரும் தொடர்களுள் ஆசிரியர் குறித்துள்ளார். மேற்குறித்த மும்மலங்களுடன் ஆணவமலத்துடன் கூடி நின்று அதனைக் கழலும் பக்குவமுடையதாகச் செய்யும் இறைவனது மறைப்புச் சத்தியாகிய திரோதமலத்தினையும் ஆன்மாக்களுக்குத் தனுகரணபுவன போகங்களாய்க் காரியப்படும் சுத்தமாயையின் திரட்சியாகிய சுத்த தத்துவங்களையும் கூட்டி மலம் ஐந்து எனப்பகுத்துரைக்கும் வழக்கம் உண்டென்பது, மலங்கள் ஐந்தாற் சுழல்வன் தயிரிற்பொரு மத்துறவே (நீத்தல் விண்ணப்பம் 29) எனவரும் திருவாசகத் தொடரால் அறியப்படும். தன்பரிசும் வினையிரண்டும் சாருமலம் மூன்றும் அற அன்புப்பிழம்பாய்த் திரிவார் (பெரிய. கண்ணப்பர் 154) எனவும், இருவினைப் பாசமும்மலக்கல் ஆர்த்தலின் வருபவக்கடலில் வீழ்மாக்கள் ஏறிட அருளுமெய் யஞ்செழுத் தரசையிக்கடல் ஒருகல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ (பெரிய. திருநாவுக். 129) எனவும் வரும் தொடர்களில் ஐவகை மலங்கள் குறிக்கப் பெற்றுள்ளமை உய்த்துணரத்தகுவதாகும். இருவினைகளைச் செய்கின்ற உயிர்களும் அவ்வுயிர்களாற் செய்யப்படும் நன்றுந் தீதுமாகிய வினைகளும், அவ்வினை காரணமாக உயிர்களைச் சேர்தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகளும், உயிர்கள் செய்த வினைப்பயன்களைச் செய்த உயிர்களே நுகரும்படி நியமித்து நுகரச் செய்பவனாகிய இறைவனும் எனச் சைவசமயச் சான்றோர்களால் ஆராய்ந்து நிச்சயிக்கப்பட்ட பொருள்கள் நான்காகும். இவ்வுண்மையினை, செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனுங் கொடுப்பானும், மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே இவ்வியல்பு சைவநெறியல்ல வற்றுக்கில்லையென உய்வகையாற் பொருள் சிவனென்றருளாலே உணர்ந்தறிந்தார் (பெரிய. சாக்கிய. 5) எனச் சாக்கியநாயனார் இறைவனருளால் உணர்ந்ததாகச் சேக்கிழார் அறிவுறுத்தியுள்ளார். அருண்மொழித்தேவர் சைவசமயத்தின் துணிபொருளாக அறிவுறுத்திய இப்பொருள் வகையினை, செய்வானுஞ் செய்வினையும் சேர்பயனுஞ் சேர்ப்பானும் உய்வா னுளனென் றுணர் (திருவருட்பயன் 43) என உமாபதி சிவாசாரியார் எடுத்தாண்டுள்ளமை மனங் கொளத்தகுவதாகும். இதன்கண் செய்வான் என்றது, உயிரினை. உயிர்களாற் செய்யப்படும் நன்றுந்தீதுமாகிய வினைகள், செய்வினையும் எனப்பட்டது. சேர்பயன் என்றது, தாம் செய்த நல்வினை தீவினைகள் காரணமாக உயிர்களைச் சேர்தற்குரிய இன்ப துன்பங்களாகிய நுகர்ச்சிகளை சேர்ப்பவன் என்றது, உயிர்கள் செய்த இருவினைப் பயன்களைச் செய்த உயிர்களே நுகர்ந்து கழிக்கும்படி நியமித்து நுகரச் செய்பவனாகிய இறைவனை. தாம் செய்த நல்வினை தீவினைகளின் பயனைத் தாமே அறிந்து எடுத்துக்கொண்டு நுகரும் உணர்வுவன்மையும் வினைப்பயன்களாகிய இன்ப துன்பங்களின் விருப்பு வெறுப்பற்ற தன்மையும் உயிர்களுக்கு இல்லை. செய்த வினைப்பயன்களைச் செய்த உயிர்களே நுகரும்படி சென்று சேரும் உணர்வு வினைக்கு இல்லை. எனவே உயிர்கள் செய்த வினைப்பயன்களை அவ்வவ்வுயிர்களே நுகந்து கழிக்கும்படி வரையறுத்து நுகர்விப்பவன் இறைவன் என்பது சைவ சமயச் சான்றோர் துணிபாகும். உயிர்களுக்கு உலகு உடல் கருவி நுகர்பொருள்களைப் படைத்தளிப்பவன் இறைவன் ஆதலால் அம்முதல்வனே எல்லாப் பொருள்களையும் தனக்கு உடைமையாகக் கொண்டுள்ள உடையான் என்றும், உலகம் பொருள்கள் யாவும் அவனது உடைமை என்றும், உணர்வுடையனவாகிய உயிர்கள் ஆண்டவனாகிய அவனுக்கு அடிமை என்றும் உணர்ந்து அம்முதல்வனது திருவருள் வழி அடங்கி நடத்தலே மெய்யுணர் வுடையோர் செயலாகும். இதனை, எப்பொருளும் ஆக்குவான் ஈசனேயெனு முணர்வும் அப்பொருள்தான் ஆளுடையான் அடியார்கள் எனுமறிவும் இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும் துப்புரவில்லார் துணிவு துகளாகச் சூழ்ந்தெழுந்தார் (பெரிய. சம்பந்தர். 71) எனவும், தம்மையுள்ள வாறறிந்தபின் சங்கரற் கடிமை மெய்ம்மையே செயும் விருப்புடன் மிக்கதோரன்பால் பொய்ம்மை நீங்கிய பொருளிதுவெனக்கொளும் பொற்பால் செம்மையேபுரி மனத்தினார் சிவநேசரென்பார் (பெரிய. சம்பந்தர். 1085) எனவும் வரும் திருப்பாடல்களில் சேக்கிழாரடிகள் தெளிவாக அறிவுறுத்தியுள்ளார். தம்மையுள்ளவாறறிந்தபின் என மேற்குறித்த பெரியபுராணச் செய்யுட்பொருளை அடியொற்றியமைந்தது, தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் எம்மையுடைமை யெமையிகழார் - தம்மை உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற் புணராமை கேளாம் புறம் எனவரும் சிவஞானபோத அவையடக்கச் செய்யுளாகும். உயிர்கட்கு இருவினையொப்பு உண்டாகிய நிலையில், ஆணவமலம் தனது ஆற்றல் தேய்தற்குரிய துணைக்காரணங்கள் எல்லாவற்றோடும் கூடுதலாகிய மலபரிபாகமும், மலபரிபாகம் காரணமாக அவ்வுயிரிடத்தே இறைவனது திருவருள் பதிதலாகிய சத்திநிபாதமும் உளவாகும். ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பும் ஆதல் இன்றிப் புண்ணியபாவம் இரண்டினும் அவற்றின் பயன்களினும் ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து, விடுவோனது அறிவின்கண் அவ்விருவினையும் அவ்வாறு ஒப்ப நிகழ்தலே ஈண்டு இருவினை யொப்பு என்பதற்குப் பொருள் என்பர் சிவஞானமுனிவர். திருஞானசம்பந்தப்பிள்ளையார் திருக்கையினால் திருநீறுபூசப்பெற்ற கூன்பாண்டியன் முன்னை வினை நீங்கி இருவினையொப்பு உடையனாய் இறைவனை உள்ளவாறு அறியுந்தன்மையினைப் பெற்றான் என்பதனை, தென்னவன் மாறன்தானுஞ் சிரபுரத்தலைவர் தீண்டிப் பொன்னவில் கொன்றையார் தந் திருநீறு பூசப்பெற்று முன்னைவல் வினையும் நீங்கி முதல்வனையறியுந் தன்மை துன்னினான் வினைகள் ஒத்துத்துலையென நிற்றலாலே (பெரிய. சம்பந்தர். 819) எனவருஞ் செய்யுளில் சேக்கிழார் நாயனார் தெளிவாக விளக்கியுள்ளார். மலபரிபாகம் வருமளவும் மலத்திற்கு அநுகூலமாய் நின்று நடத்திய இறைவனது திரோதானசத்தி (மறைப்பாற்றல்) மலபரிபாகம் எய்தி நிலையில், கருணைமறமாகிய தனது செய்கைமாறிக் கருணையெனப்படும் முன்னைப் பராசத்தியுருவாய் உயிர்கள் பாற்பதிதலே சத்திநிபாதம் எனப்படும். இறைவனது அருட்சத்தி பக்குவமுடைய உயிர்கள்பாற் பதிதலால் அவ்வுயிர்கள் பாசத்தொடர்பினின்றும் விலகி இறைவனது திருவருளில் தோய்வன. இவ்வுண்மையினை, திங்கள்சேர் சடையார்தம்மைச் சென்றவர் காணாமுன்னே அங்கணர் கருணைகூர்ந்த அருள்திரு நோக்கம் எய்தத் தங்கியபவத்தின் முன்னைச் சார்புவிட்டகல நீங்கிப் பொங்கிய ஒளியினீழல் பொருவிலன் புருவமானார் (பெரிய. கண்ணப்பர். 104) எனவும், அந்நிலையில் திருத்தோணி வீற்றிருந்தார் அருள் நோக்கால் முன்னிலைமைத் திருத்தொண்டு முன்னியவர்க்கருள் புரிவான் பொன்மலை வல்லியுந்தாமும் பொருவிடைமேல் எழுந்தருளிச் சென்னியிளம் பிறைதிகழச் செழும்பொய்கை மருங்கணைந்தார் (பெரிய. சம்பந்தர். 64) எனவும் வரும் திருப்பாடல்களில் அருண்மொழித்தேவர் இனிது புலப்படுத்தியுள்ளார். தாள் தலை என்னும் இவ்விரு சொற்களும் புணருங்கால் நிலைமொழியீற்றில் நின்ற ளகரமும் வருமொழி முதலில் வந்த தகரமும் தம்மிற் பிரித்தறிய வொண்ணாதவாறு டகரமாகிய ஓரெழுத்தாக ஒன்றுபட்டு நிற்கும். அதுபோல ஆன்மாவும் சிவமும் அவை எனவும் தான் எனவும் வேறு பிரித்துணரவொண்ணாதவாறு அவையே தானேயாய்ப் பிரிவற ஒன்றாகிய நிலையில் ஆன்மாவின்கண் நிகழ்வதே சிவாநுபவம் ஆகும். இதனை அறிவுறுத்தும் முறையில் அமைந்தது, தாடலைபோற் கூடியவை தானிகழா வேற்றின்பக் கூடலை நீ ஏகமெனக் கொள் (74) எனவரும் திருவருட்பயனாகும். இவ்விளக்கம், தங்கள் பெருமான் அடிநீழல் தலையாம் நிலைமை சார்வுற்றார் (பெரிய. முருக. 13) எனவரும் சேக்கிழார் வாய்மொழியினை அடியொற்றி யமைந்திருத்தல் காணலாம். ஆன்மா சிவத்தோடும் கூடும் நிலையில் ஒன்றாகி, ஆன்மாவென்னும் அப்பொருள் கெட்டழிவதுமில்லை, உயிரும் சிவமும் என இரண்டாகிப் பிரிந்து வேறுபடுவதும் இல்லை, இரண்டற்ற நிலையில் (அத்துவிதமாய்) நின்று அநுபவிக்கும் என்பதனை, ஒன்றாலும் ஒன்றா திரண்டாலும் ஓசையெழா தென்றாலொன் றன்றிரண்டுமில் (75) எனவரும் திருவருட்பயனில் உமாபதி சிவம் இனிது விளக்கியுள்ளார். சைவ சித்தாந்தம் கூறும் முத்தி நிலை பற்றிய இவ்விளக்கம். நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசமந்திருந்தார் (பெரிய. திருநாவுக். 427) எனவும், காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலங் கொண்டருளித் தீதகற்ற வந்தருளுந் திருஞான சம்பந்தர் நாதனெழில் வளர்சோதி நண்ணியதனுட் புகுவார் போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி யுடனானார் (பெரிய. சம்பந்தர். 1253) எனவும் அருண்மொழித்தேவர் கூறிய வீடுபேற்றியல்பினை விளக்கும் முறையில் அமைந்திருத்தல் காணலாம். இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினையும் சிவஞானபோதம் முதலிய மெய்கண்ட நூல்கள் பதினான்கினையும் ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து சிவஞானபோதம் முதலிய சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கும் பொதுவாக உலகப் பொதுமறையாகிய திருக்குறளையும் வேதசிவாகமக் கருத்துக்களையும் தழுவியனவாய்ச் சிறப்பாகச் சைவத் திருமுறைகள் பன்னிரண்டினையும் மூல இலக்கியங்களாகக் கொண்டு அவற்றினின்றும் தெளிந்துணரப் பெற்ற தத்துவ வுண்மைகளை வரித்துரைக்கும் செந்தமிழ்த் தத்துவ நூல்களாகத் திகழ்கின்றமை இனிது புலனாகும்.