மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20 பதிப்பு மனோன்மணியம் - நாடகம் பதிப்பு வீ. அரசு இளங்கணி பதிப்பகம் நூற்பெயர் : மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20 ஆசிரியர் : மயிலை சீனி. வேங்கடசாமி பதிப்பாசிரியர் : பேரா. வீ. அரசு பதிப்பாளர் : முனைவர் இ. இனியன் பதிப்பு : 2014 தாள் : 16கி வெள்ளைத்தாள் அளவு : தெம்மி எழுத்து : 11 புள்ளி பக்கம் : 384 நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) விலை : உருபா. 360/- படிகள் : 1000 மேலட்டை : கவி பாஸ்கர் நூலாக்கம் : வி. சித்ரா & வி. ஹேமலதா அச்சிட்டோர் : ஸ்ரீ வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் வடபழனி, சென்னை - 26. வெளியீடு : இளங்கணி பதிப்பகம் பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15பி, தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. நூல் கிடைக்குமிடம் : தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 17. 044 2433 9030.` பதிப்புரை 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் புகழ்பூத்த பொற் காலமாகும். தமிழ்மொழியின் மீட்டுருவாக்கத்திற்கும், தமிழின மீட்சிக்கும் வித்தூன்றிய காலம். தமிழ்மறுமலர்ச்சி வரலாற்றில் ஓர் எல்லைக் கல். இக்காலச் சூழலில்தான் தமிழையும், தமிழினத்தையும் உயிராக வும் மூச்சாகவும் கொண்ட அருந்தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் தோன்றி மொழிக்கும், இனத்திற்கும் பெரும் பங்காற்றினர். இப் பொற்காலத்தில்தான் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் 6.12.1900இல் தோன்றி 8.5.1980இல் மறைந்தார். வாழ்ந்த காலம் 80 ஆண்டுகள். திருமணம் செய்யாமல் துறவு வாழ்க்கை மேற்கொண்டு தமிழ் முனிவராக வாழ்ந்து அரை நூற்றாண்டுக்கு மேல் அரிய தமிழ்ப் பணி செய்து மறைந்தவர். தமிழ்கூறும் நல்லுலகம் வணங்கத்தக்கவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் தமிழினம் தன்னை உணர்வதற்கும், தலைநிமிர்வதற்கும், ஆய்வாளர்கள் ஆய்வுப் பணியில் மேலாய்வை மேற்கொள்வதற்கும் வழிகாட்டுவனவாகும். ஆய்வுநோக்கில் விரிந்த பார்வையுடன் தமிழுக்கு அழியாத அறிவுச் செல்வங்களை வைப்பாக வைத்துச் சென்றவர். தமிழ் - தமிழரின் அடையாளங்களை மீட்டெடுத்துத்தந்த தொல்தமிழ் அறிஞர்களின் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். தமிழ்மண்ணில் 1937-1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போரை முன்னெடுத்துச்சென்ற தலைவர்கள், அறிஞர்கள் வரிசையில் இவரும் ஒருவர். வரலாறு, இலக்கியம், கலை, சமயம் தொடர்பான ஆய்வு நூல்களையும், பொதுநலன் தொடர்பான நூல்களையும், பன்முகப் பார்வையுடன் எழுதியவர். பேராசிரியர் முனைவர் வீ. அரசு அவர்கள் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியிட்டுள்ள ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ நூல்வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிய வரலாற்று நூலில் ஆவணப்பணி, வரலாறு எழுது பணி, கலை வரலாறு, கருத்து நிலை ஆகிய பொருள்களில் இவர்தம் நுண்மாண் நுழைபுல அறிவினை மிக ஆழமாகப் பதிவுசெய்துள்ளார். ‘முறையான தமிழ் இலக்கிய வரலாற்றை இனி எழுதுவதற்கு எதிர்கால ஆய்வாளர்களுக்கு வழிகாட்டிச் சென்றவர்’ - என்பார் கா. சுப்பிரமணியபிள்ளை அவர்கள். ‘மயிலை சீனி. வேங்கடசாமி ஆண்டில் இளையவராக இருந்தாலும், ஆராய்ச்சித் துறையில் முதியவர், நல்லொழுக்கம் வாய்ந்தவர். நல்லோர் கூட்டுறவைப் பொன்னே போல் போற்றியவர்.’ என்று சுவாமி விபுலானந்த அடிகளார் அவர்களும், “எண்பதாண்டு வாழ்ந்து, தனிப் பெரும் துறவுபூண்டு, பிறர் புகாத ஆய்வுச்சூழலில் புகுந்து தமிழ் வளர்த்த, உலகச் சமயங்களையும், கல்வெட்டு காட்டும் வரலாறுகளையும், சிற்பம் உணர்த்தும் கலைகளையும் தோய்ந்து ஆய்ந்து தோலா நூல்கள் எழுதிய ஆராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கட்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கியும், தமிழ்ச் செம்மல்கள் பேரவையின் ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொண்டும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பாராட்டிச் சிறப்பிக்கிறது” என்று இப் பெருந்தமிழ் அறிஞரை அப்பல்கலைக் கழகம் போற்றியுள்ளதை மனத்தில் கொண்டு இவரின் அனைத்துப் படைப்புகளையும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் வீ. அரசு அவர்கள் - போற்றுதலுக்கும், புகழுக்கும் உரிய இவ்வாராய்ச்சிப் பேரறிஞரின் நூல்கள் அனைத்தையும் பொருள்வழிப் பிரித்து, எங்களுக்குக் கொடுத்து உதவியதுடன், பதிப்பாசிரியராக இருந்தும், வழிகாட்டியும், இவ்வாராய்ச்சித் தொகுதிகளை ஆய்வாளர்களும், தமிழ் உணர்வாளர்களும் சிறந்த பயன்பெறும் நோக்கில் வெளியிடுவதற்கு பல்லாற்றானும் உதவினார். அவருக்கு எம் நன்றி. இவ்வருந்தமிழ்ச் செல்வங்களை அனைவரும் வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாராய்ச்சி நூல்கள் எல்லா வகையிலும் சிறப்போடு வெளி வருவதற்கு உதவிய அனைவர்க்கும் நன்றி. - பதிப்பாளர் பதிப்பு: மனோன்மணியம் நாடகம் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மனோன்மணியம் நாடகத்தை 1961 ஆம் ஆண்டு பதிப்பித்துள்ளார். இந்நூல் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடப்புத்தகமாக இடம்பெற்றிருந்தது. இந்தப் பின்புலத்தில் இந்நூலை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் பதிப்பித்து மாணவர்களின் தேவைக்காக வழங்கியுள்ளார் என்று கருத முடியும். இந்நூலுக்கு மயிலை சீனி. வேங்கடசாமி எழுதியுள்ள முன்னுரையில் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை குறித்த விரிவான பதிவுகளைச் செய்துள்ளார். மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் புலமை குறித்து அறிவதற்கு இம்முன்னுரை பெரிதும் உதவுகிறது. தமிழில் நாடகக் கலை எவ்விதம் உருவானது என்பது தொடர்பான ஆய்வுரையையும் இம்முன்னுரையில் காணமுடிகிறது. மனோன் மணியம் நாடகம் தமிழில் முதல் நாடகமாகப் பலரும் கருதுவதைப் போல் இவரும் கருதியுள்ளார். செய்யுள் வடிவில், காவியமரபில், அங்கம் மற்றும் களம் என்னும் பிரிவுகளோடு மனோன்மணியம் எழுதப்பட்டிருப்பதால் இதற்கு நாடக நூல் என்ற அங்கீகாரம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்நூலின் செய்யுள் நடை கூடுதலான காவிய மரபாகவே அமைந்திருப்பதைக் காண்கிறோம். ஏனெனில் இந்நாடகம் உருவான காலங்களில் பேச்சு மரபை முதன்மைப்படுத்திய விலாச நாடகங்களும் உருவாகிவிட்டன. அத்தன்மையை இந்நூல் கணக்கில் எடுத்துக்கொண்டதாக அறியமுடிய வில்லை. எனவே மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்கள் தத்துவத்துறையில் புலமை மிக்கவர் என்பது உண்மை. ஆனால் அத்தத்துவத்தை இந்நாடகத்தின் வழி வெளிப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சி முழுமையான நாடகமாக இப்பிரதி அமையும் வாய்ப்பை தடைசெய்கிறது எனலாம். இந்நூலுக்கு மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விரிவான குறிப்புரை எழுதியிருப்பதைக் காண்கிறோம். இக்குறிப்புரை நாடகத்தைப் புரிந்து கொள்வதற்குப் பெரிதும் உதவுகின்றது. இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி. சென்னை - 96 தங்கள் ஏப்ரல் 2010 வீ. அரசு தமிழ்ப் பேராசிரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி “ஐந்தடிக்கு உட்பட்ட குறள் வடிவம்; பளபளக்கும் வழுக்கைத் தலை; வெண்மை படர்ந்த புருவங்களை எடுத்துக் காட்டும் அகன்ற நெற்றி; கனவு காணும் கண்ணிமைகளைக் கொண்ட வட்ட முகம்; எடுப்பான மூக்கு; படபடவெனப் பேசத் துடிக்கும் மெல்லுதடுகள்; கணுக்கால் தெரியக் கட்டியிருக்கும் நான்கு முழ வெள்ளை வேட்டி; காலர் இல்லாத முழுக்கைச் சட்டை; சட்டைப் பையில் மூக்குக் கண்ணாடி; பவுண்டன் பேனா; கழுத்தைச் சுற்றி மார்பின் இருபுறமும் தொங்கும் மேல் உத்தரீயம்; இடது கரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகப் பை. இப்படியான தோற்றத்துடன் சென்னை மியூசியத்தை அடுத்த கன்னிமாரா லைப்ரெரியை விட்டு வேகமாக நடந்து வெளியே வருகிறாரே! அவர்தான் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.” எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் அவர்களின் மேற்கண்ட விவரிப்பு, அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களைக் கண்முன் காணும் காட்சி அனுபவத்தைத் தருகிறது. திருமணம் செய்து கொள்ளாமல், இல்லறத் துறவியாக வாழ்ந்தவர். எண்பதாண்டு வாழ்க்கைக் காலத்தில், அறுபது ஆண்டுகள் முழுமையாகத் தமிழியல் ஆய்வுப் பணிக்கு ஒதுக்கியவர். இருபதாம் நூற்றாண்டில் பல புதிய தன்மைகள் நடைமுறைக்கு வந்தன. அச்சு எந்திரத்தைப் பரவலாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவானது. சுவடிகளிலிருந்து அச்சுக்குத் தமிழ் நூல்கள் மாற்றப் பட்டன. இதன்மூலம் புத்தக உருவாக்கம், இதழியல் உருவாக்கம், நூல் பதிப்பு ஆகிய பல துறைகள் உருவாயின. இக் காலங்களில்தான் பழந்தமிழ் நூல்கள் பரவலாக அறியப்பட்டன. இலக்கிய, இலக்கணப் பிரதிகள் அறியப்பட்டதைப்போல், தமிழர்களின் தொல்பழங்காலம் குறித்தும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தன. பிரித்தானியர் களால் உருவாக்கப்பட்ட தொல்பொருள் ஆய்வுத்துறை பல புதிய வரலாற்றுத் தரவுகளை வெளிக்கொண்டு வந்தது. பாரம்பரியச் சின்னங்கள் பல கண்டறியப்பட்டன. தொல்லெழுத்துக்கள் அறியப்பட்டன. பல்வேறு இடங்களில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டன. தமிழ் மக்களின் எழுத்துமுறை, இலக்கிய, இலக்கண உருவாக்கமுறை ஆகியவை குறித்து, இந்தக் கண்டுபிடிப்புகள் மூலம் புதிதாக அறியப்பட்டது. அகழ்வாய்வுகள் வழிபெறப்பட்ட காசுகள் புதிய செய்திகளை அறிய அடிப்படையாக அமைந்தன. வடக்கு, தெற்கு என இந்தியாவின் பண்பாட்டுப் புரிதல் சிந்துசமவெளி அகழ்வாய்வு மூலம் புதிய விவாதங்களுக்கு வழிகண்டது. தமிழகச் சூழலில், தொல்பொருள் ஆய்வுகள் வழி பல புதிய கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டன. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு அகழ் வாய்வுகள்; தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியவை தமிழக வரலாற்றைப் புதிய தலைமுறையில் எழுதுவதற்கு அடிகோலின. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் மேலே விவரிக்கப்பட்ட சூழலில்தான், தமது ஆய்வுப் பணியைத் தொடங்கினார். வேங்கடசாமி சுயமரியாதை இயக்கச் சார்பாளராக வாழ்வைத் தொடங்கினார். பின்னர் பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள் குறித்த அக்கறை உடையவராக இருந்தார். இவ்வகை மனநிலையோடு, தமிழ்ச் சூழலில் உருவான புதிய நிகழ்வுகளைக் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். கிறித்தவம், பௌத்தம், சமணம் ஆகிய சமயங்கள், தமிழியலுக்குச் செய்த பணிகளைப் பதிவு செய்தார். இவ்வகைப் பதிவுகள் தமிழில் புதிய துறைகளை அறிமுகப்படுத்தின. புதிய ஆவணங்கள் மூலம், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறுகளை எழுதினார். சங்க இலக்கியப் பிரதிகள், பிராமி கல்வெட்டுகள், பிற கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை வரலாறு எழுதுவதற்குத் தரவுகளாகக் கொண்டார். கலைகளின்மீது ஈடுபாடு உடைய மன நிலையினராகவே வேங்கடசாமி இளமை முதல் இருந்தார். தமிழ்க் கலை வரலாற்றை எழுதும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். கட்டடம், சிற்பம், ஓவியம் தொடர்பான இவரது ஆய்வுகள், தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் புதிய வரவாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் இந்தியவியல் என்ற வட்டத்திற்குள் தமிழகத்தின் வரலாறும் பேசப்பட்டது. இந்திய வியலைத் திராவிட இயலாகப் படிப்படியாக அடையாளப் படுத்தும் செயல் உருப்பெற்றது. இப் பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி யவர் வேங்கடசாமி அவர்கள். இன்று, திராவிட இயல் தமிழியலாக வளர்ந்துள்ளது. இவ் வளர்ச்சிக்கு வித்திட்ட பல அறிஞர்களுள் வேங்கடசாமி முதன்மையான பங்களிப்பாளர் ஆவார். மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் வரலாற்றுச் சுவடுகள் அடங்கிய - இந்திய இலக்கியச் சிற்பிகள் மயிலை சீனி. வேங்கடசாமி என்ற நூலை சாகித்திய அகாதெமிக்காக எழுதும்போது இத்தொகுதி களை உருவாக்கினேன். அப்போது அவற்றை வெளியிட நண்பர்கள் வே. இளங்கோ, ஆர். இராஜாராமன் ஆகியோர் திட்டமிட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை. அத்தொகுதிகள் இப்போது வெளிவருகின்றன. இளங்கணி பதிப்பகம் பாவலர் பாவேந்தர் பாரதிதாசனின் அனைத்துப் படைப்புகளையும் ஒரே வீச்சில் ‘பாவேந்தம்’ எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளதை தமிழுலகம் அறியும். அந்த வரிசையில் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் உழைப்பால் விளைந்த அறிவுத் தேடல்களை ஒரே வீச்சில் பொருள்வழிப் பிரித்து முழுமைமிக்க படைப்புகளாக 1998இல் உருவாக்கினேன். அதனை வெளியிட இளங்கணிப் பதிப்பகம் இப்போது முன்வந்துள்ளது. இதனைப் பாராட்டி மகிழ்கிறேன். தமிழர்கள் இத்தொகுதிகளை வாங்கிப் பயன்பெறுவர் என்று நம்புகிறேன். - வீ. அரசு மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுகள் - சுயமரியாதை இயக்க இதழ்களில் செய்திக் கட்டுரைகளை எழுதுவதைத் தமது தொடக்க எழுத்துப் பயிற்சியாக இவர் கொண்டிருந்தார். அது இவருடைய கண்ணோட்ட வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. - கிறித்தவ சபைகளின் வருகையால் தமிழில் உருவான நவீன வளர்ச்சிகளைப் பதிவு செய்யும் வகையில் தமது முதல் நூலை இவர் உருவாக்கினார். தமிழ் உரைநடை, தமிழ் அச்சு நூல் போன்ற துறைகள் தொடர்பான ஆவணம் அதுவாகும். - பௌத்தம் தமிழுக்குச் செய்த பங்களிப்பை மதிப்பீடு செய்யும் நிலையில் இவரது அடுத்தக் கட்ட ஆய்வு வளர்ந்தது. பௌத்தக் கதைகள் மொழியாக்கம் மற்றும் தொகுப்பு, புத்த ஜாதகக் கதைத் தொகுப்பு, கௌதம புத்தர் வாழ்க்கை வரலாறு என்ற பல நிலைகளில் பௌத்தம் தொடர்பான ஆய்வுப் பங்களிப்பை வேங்கடசாமி செய்துள்ளார். - சமண சமயம் மீது ஈடுபாடு உடையவராக வேங்கடசாமி இருந்தார். மணிமேகலை, சீவக சிந்தாமணி, ஆகியவற்றை ஆய்வதின் மூலம் தமிழ்ச் சூழலில் சமண வரலாற்றை ஆய்வு செய்துள்ளார். சமண சமய அடிப்படைகளை விரிவாகப் பதிவு செய்துள்ளார். சமணச் சிற்பங்கள், குறித்த இவரது ஆய்வு தனித் தன்மையானது. - பல்வேறு சாசனங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளிலிருந்து இலக்கியங்கள், இலக்கணங்கள் அச்சு வாகனம் ஏறின. இந்தப் பின்புலத்தில் கி.மு. 5 முதல் கி.மு. 9ஆம் நூற்றாண்டு முடிய உள்ள தமிழ்ச் சமூகத்தின் ஆட்சி வரலாற்றை இவர் ஆய்வு செய்தார். பல்லவ மன்னர்கள் மூவர் குறித்த தனித்தனி நூல்களைப் படைத்தார். இதில் தமிழகச் சிற்பம் மற்றும் கோயில் கட்டடக்கலை வரலாற்றையும் ஆய்வு செய்தார். - அண்ணாமலைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவை அடிப்படையாகக் கொண்டு, தமிழ் நூல்களின் கால ஆய்விலும் இவர் அக்கறை செலுத்தினார். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் குறித்த கால ஆய்வில் ச. வையாபுரிப்பிள்ளை போன்றோர் கருத்தை மறுத்து ஆய்வு நிகழ்த்தியுள்ளார். இச் சொற்பொழிவின் இன்னொரு பகுதியாக சங்கக் காலச் சமூகம் தொடர்பான ஆய்வுகளிலும் கவனம் செலுத்தினார். - சென்னைப் பல்கலைக்கழக அறக்கட்டளைச் சொற்பொழிவில் சேரன் செங்குட்டுவனை ஆய்வுப் பொருளாக்கினார். இதன் தொடர்ச்சியாக கி.பி. 3-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழகத்தின் வரலாற்றைப் பல நூல்களாக எழுதியுள்ளார். சேர சோழ பாண்டியர், பல குறுநில மன்னர்கள் குறித்த விரிவான ஆய்வை வேங்கடசாமி நிகழ்த்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகக் களப்பிரர் தொடர்பான ஆய்வையும் செய்துள்ளார். இவ் வாய்ப்புகளின் ஒரு பகுதியாக அன்றைய தொல்லெழுத்துக்கள் குறித்த கள ஆய்வு சார்ந்து, ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். - ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் அதன் பாரம்பரியச் செழுமை குறித்த அறியும் தரவுகள் தேவைப்படுகின்றன. இவற்றை ஆவணப் படுத்துவது மிகவும் அவசியமாகும். மறைந்து போனவற்றைத் தேடும் முயற்சி அதில் முக்கியமானதாகும். இப் பணியையும் வேங்கடசாமி மேற்கொண்டிருந் தார். அரிய தரவுகளை இவர் நமக்கு ஆவணப்படுத்தித் தந்துள்ளார். - தமிழர்களின் கலை வரலாற்றை எழுதுவதில் வேங்கடசாமி அக்கறை செலுத்தினார். பல அரிய தகவல்களை இலக்கியம் மற்றும் சாசனங்கள் வழி தொகுத்துள்ளார். அவற்றைக் குறித்து சார்பு நிலையில் நின்று ஆய்வு செய்துள்ளார். ஆய்வாளருக்குரிய நேர்மை, விவேகம், கோபம் ஆகியவற்றை இவ்வாய்வுகளில் காணலாம். - பதிப்பு, மொழிபெயர்ப்பு ஆகிய பணிகளிலும் வேங்கடசாமி ஈடுபட்டதை அறிய முடிகிறது. - இவரது ஆய்வுப் பாதையின் சுவடுகளைக் காணும்போது, தமிழியல் தொடர்பான ஆவணப்படுத்தம், தமிழருக்கான வரலாற்று வரைவு, தமிழ்த் தேசிய இனத்தின் கலை வரலாறு மற்றும் அவைகள் குறித்த இவரது கருத்து நிலை ஆகிய செயல்பாடுகளை நாம் காணலாம். மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் 1936 : கிறித்தவமும் தமிழும் 1940 : பௌத்தமும் தமிழும் 1943 : காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு) 1944 : இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு) 1948 : இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம் 1950 : மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு மகாபலிபுரத்து ஜைன சிற்பம் 1952 : பௌத்தக் கதைகள் 1954 : சமணமும் தமிழும் 1955 : மகேந்திர வர்மன் : மயிலை நேமிநாதர் பதிகம் 1956 : கௌதம புத்தர் : தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் 1957 : வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் 1958 : அஞ்சிறைத் தும்பி : மூன்றாம் நந்தி வர்மன் 1959 : மறைந்துபோன தமிழ் நூல்கள் சாசனச் செய்யுள் மஞ்சரி 1960 : புத்தர் ஜாதகக் கதைகள் 1961 : மனோன்மணீயம் 1962 : பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1965 : உணவு நூல் 1966 : துளு நாட்டு வரலாறு : சமயங்கள் வளர்த்த தமிழ் 1967 : நுண்கலைகள் 1970 : சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள் 1974 : பழங்காலத் தமிழர் வாணிகம் : கொங்குநாட்டு வரலாறு 1976 : களப்பிரர் ஆட்சியில் தமிழகம் 1977 : இசைவாணர் கதைகள் 1981 : சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள் 1983 : தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 - தமிழ்நாட்டரசு வெளியீடு : பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு - ஆண்டுஇல்லை) வாழ்க்கைக் குறிப்புகள் 1900 : சென்னை மயிலாப்பூரில் சீனிவாச நாயகர் - தாயரம்மாள் இணையருக்கு 6.12.1900 அன்று பிறந்தார். 1920 : சென்னைக் கலைக் கல்லூரியில் ஓவியம் பயிலுவதற்காகச் சேர்ந்து தொடரவில்லை. திருமணமின்றி வாழ்ந்தார். 1922 : 1921-இல் தந்தையும், தமையன் கோவிந்தராஜனும் மறை வுற்றனர். இச் சூழலில் குடும்பத்தைக் காப்பாற்ற பணிக்குச் செல்லத் தொடங்கினார். 1922-23இல் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் நாளிதழில் ஆசிரியர் குழுவில் இடம்பெற்றார். 1923-27 : சென்னையிலிருந்து வெளிவந்த லக்ஷ்மி என்ற இதழில் பல்வேறு செய்திகளைத் தொகுத்து கட்டுரைகள் எழுதிவந்தார். 1930 : மயிலாப்பூர் நகராட்சிப் பள்ளியில் தொடக்கநிலை ஆசிரியராகப் பணியேற்றார். 1931-32 : குடியரசு இதழ்ப் பணிக் காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா. வுடன் தொடர்பு. சுயமரியாதை தொடர்பான கட்டுரைகள் வரைந்தார். 1931-இல் கல்வி மீதான அக்கறை குறித்து ஆரம்பக் கல்வி குறித்தும், பொதுச் செய்திகள் பற்றியும் ‘ஆரம்பாசிரியன்’ என்னும் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளார். 1934-38-இல் வெளிவந்த ஊழியன் இதழிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார். 1936 : அறிஞர் ச.த. சற்குணர், விபுலானந்த அடிகள், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் ஆகிய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1955 : 16.12.1955-இல் அரசுப் பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றார். 1961 : 17.3.1961-இல் மணிவிழா - மற்றும் மலர் வெளியீடு. 1975-1979: தமிழ்நாட்டு வரலாற்றுக்குழு உறுப்பினர். 1980 : 8. 5. 1980-இல் மறைவுற்றார். 2001 : நூற்றாண்டுவிழா - ஆக்கங்கள் அரசுடைமை. பொருளடக்கம் பரிதப்பு மனோன்மணியம் - நாடகம் முன்னுரை 18 முகவுரை 31 பாயிரம் 44 நாடக உறுப்பினர் 47 முதல் அங்கத்தின் விளக்கம் 48 முதல் அங்கம் 54 இரண்டாம் அங்கத்தின் விளக்கம் 95 இரண்டாம் அங்கம் 107 மூன்றாம் அங்கத்தின் விளக்கம் 143 மூன்றாம் அங்கம் 160 நான்காம் அங்கத்தின் விளக்கம் 212 நான்காம் அங்கம் 232 ஐந்தாம் அங்கத்தின் விளக்கம் 298 ஐந்தாம் அங்கம் 306 புராணக்கதை விளக்கம் 338 பதிப்பு மனோன்மணியம் - நாடகம் முன்னுரை பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன் மணியம் என்னும் இந் நாடகநூல் தமிழில் உள்ள நாடக நூல்களில் முதன்மையானது. முழுவதும் செய்யுள் நடையில் அமைந்து இலக்கிய வளம் அமையப்பெற்ற இந்தச் சிறந்த நாடக நூலைக் கற்றோரும் மற்றோரும் புகழ்ந்து போற்றுவது சரியானதே, சரித்திரத் தொடர் புடையது போன்றும் தமிழ் நாட்டில் நிகழ்ந்ததுபோன்றும் காணப்படுகிற இந் நாடகக் கதை உண்மையில் கற்பனைக் கதையே; தமிழ்நாட்டில் நிகழ்ந்த சரித்திரக்கதை அல்ல இந்தக் கதைக்கு மூலக்கதையாய் இருப்பது லிட்டன் பிரபு அவர்கள் ஆங்கிலத்தில் செய்யுளாக இயற்றி யுள்ள The Lost Tales of Miletus அல்லது The Secret way என்னும் சிறு நூலாகும். இந்தச் செய்யுளில் கூறப்படுகிற கதையைத் தமிழ்நாட்டு மரபுக்கும் தமிழ்நாட்டுச் சூழ்நிலைக்கும் ஏற்ப அமைத்துக் கருத்தினைக் கவரும் அழகான நாடக நூலாகச் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியுள்ளார்கள். எனவே, இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு பழைய கதையைத் தழுவி எழுதப்பட்ட ஒரு கற்பனைக் கதையாகும். இது தமிழ்மொழியின் சிறந்த கலைச் செல்வங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. எல்லோரும் படித்து இன்புறக்கூடிய நல்ல நூலாக அமைந்துள்ளது. மனோன்மணீய நாடக நூலை ஆராய்வதற்கு முன்பு இந்நூலை இயற்றிய ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களின் வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும். நூலாசிரியர் வரலாறு பேராசிரியர் இராய்பகதூர் சுந்தரம் பிள்ளை அவர்களின் முன்னோர் தமிழ்நாட்டிலிருந்து மலையாள நாட்டில் திருவாங்கூர் இராச்சியத்தின் துறைமுகப்பட்டினமாகிய ஆலப்புழை என்னும் ஊரில் குடியேறியிருத்தனர். அந்தக் குடும்பத்தில் வந்தவர். சுந்தரம் பிள்ளை யின் தகப்பனார் பெருமாள் பிள்ளையவர்கள். பெருமாள் பிள்ளை துணிகள் விற்கும் அறுவை வாணிகராக இருந்தார். அவர் சைவ சமயப் பற்றும் தமிழ் மொழிப் பற்றும் உடையவர். அவருடைய மனைவியார் பெயர் மாடத்தி அம்மையார். இவர்களுடைய மகனார் கல்வியறிவில் புகழ்பெற்று விளங்கிய பேராசிரியர் சுந்தரம் பிள்ளை யவர்கள். சுந்தரம் பிள்ளையவர்கள் கி.பி 1855-ஆம் ஆண்டில் பிறந்து நாற்பத்திரண்டு வயது வாழ்ந்து 1897-இல் காலமானார். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்த பிள்ளையவர்கள். இருபத் திரண்டு ஆண்டுகள் இளமைப் பருவத்தில் கழித்தார். மிகுதி இருபது ஆண்டுகள் தமிழ்மொழிக்காகத் தொண்டு செய்தார். இந்தக் குறுகிய காலத்தில் இவர் செய்த தொண்டு சிறந்தது. பிள்ளையவர்கள் மேலும் இருபது முப்பது ஆண்டு வாழ்ந்திருப்பாரானால் தமிழ்மொழி, தமிழ் வரலாறு, நாட்டு வரலாறு முதலிய துறைகளில் பல சிறந்த தொண்டுகளைச் செய்திருப்பார் என்பதில் ஐயமில்லை. இளமையில் ஆலப்புழையில் ஒரு பாடசாலையில் கல்வி பயின்றார். சிறு வயதிலேயே இவருடைய தந்தையார் இவருக்குத் தேவாரம் திருவாசகம் திருக்குறள் முதலிய நூல்களைக் கற்பித்தார். இளமையி லேயே சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றும் உறுதியும் இவருக்கு ஏற்பட்டிருந்தது. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மிகுந்த பற்றும் ஆர்வமும் உண்டு. பிற் காலத்தில் அவர் இயற்றிய மனோன்மணீய நாடக நூலில், திருவாசகத்தி லிருந்து சொற்களையும் பல இடங்களில் ஆண்டிருப்பதிலிருந்து இதனை நன்கறியலாம். ஆலப்புழை பாடசாலைப் படிப்பு முடிந்த பிறகு திருவனந்தபுரத்தில் உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று மெட்ரிகுலேஷன் பரீட்சையின் தேர்ச்சியடைந்தார். பிறகு திருவனந்த புரம் மகாராஜா கல்லூரியில் சேர்த்து கல்வி பயின்று பி.ஏ. பரீட்சையில் தேறினார். அந்தக் கல்லூரித் தலைவராகிய மிஸ்டர் ராஸ் என்பவர், இவருடைய திறமையைக் கண்டு அக் கல்லூரியிலேயே இவரை ஆசிரியராக அமர்த்தினார். அந்த ஆண்டிலேயே பிள்ளைவர்கள் சிவகாமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு இருபத்தொரு வயது. சுந்தரம்பிள்ளை ஆசிரியராக அமர்ந்து எஃப்.ஏ., பி. ஏ. வகுப்பு களுக்குச் சரித்திரப் பாடங்களையும், பி.ஏ. வகுப்புக்குத் தத்துவ சாஸ்திரப் பாடமும் கற்பித்துவந்தார். கற்பித்து வந்ததோடு அமையாமல் தாமும் கல்வியை மேன்மேலும் கற்று வளர்த்துக் கொண்டார். அடுத்த ஆண்டில், திருநெல்வேலியில் இருந்த ஆங்கிலத் தமிழ் உயர்தரப் பாட சாலைக்குத் தலைமையாசியராக நியமிக்கப்பெற்றார். சென்னைக் கல்வி இலாகாக தலைவராக இருந்த டாக்டர் டன்கன் அவர்கள். மேற்படி பாட சாலைத் தலைமைப் பதவிக்குத் திறமைசாலி ஒருவர் வேண்டுமென்று கேட்க, மிஸ்டர் ராஸ் அவர்கள் சுந்தரம் பிள்ளையே அதற்குத் தகுந்தவர் என்று கண்டு இவரைச் சிபாரிசு செய்தார். திருநெல்வேலிக்குச் சென்று தலைமை ஆசிரியராக அமர்ந்த பிள்ளையவர்கள். தமது முயற்சி யினால் அப் பாடசாலையை இரண்டாந்தரக் கல்லூரியாக உயர்த்தி னார். இப்போதும் அக் கல்லூரி திருநெல்வேலி இந்து காலேஜ் என்று பெயர்பெற்று விளங்குகிறது. திருநெல்வேலியில் இருந்தபோது சுந்தரம் பிள்ளையவர்கள் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்னும் பெரியாருடன் பழகி அவரைச் சமய குருவாகக் கொண்டார். அவரிடம் சமய நூல்களைக் கற்றுத் தத்துவ ஆராய்ச்சி செய்தார். அக்காலத்தில்தான் நூற்றொகை விளக்கம் என்னும் சயன்ஸ் சம்பந்தமான நூலையும், மனோன்மணீய நாடக நூலையும் எழுதத் தொடங்கினார். இரண்டாண்டுகள்தான் அங்குப் பணியாற்றினார். பிறகு, மீண்டும் திருவனந்தபுரத்தில் மகாராஜா கல்லூரியில் அலுவல் புரிந்தார். பணியாற்றிக்கொண்டே ஆங்கில இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களையும் மேன் மேலும் ஆழ்ந்து பயின்றார். எபிகிறாபி என்னும் பழைய கல்வெட் டெழுத்துச் சாசனங்களை ஆராய்வதிலும் ஈடுபட்டிருந்தார். திருவாங் கூர் சமஸ்தானத்தில் சாசன ஆராய்ச்சி இலாகா ஏற்படுத்தி அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் இருந்த விசாகத் திருநாள் மகாராஜா அவர்கள், பிள்ளையவர்களின் திறமையைக் கண்டு, திருவனந்தபுரம் அரண் மனையில் இவரைப் “பிறவகை சிரஸ்தார்” உத்தியோகத்தில் அமர்த்தினார். இவ்வலுவலில் இருந்த போது பிள்ளையவர்கள் சட்டக்கலை நூல்களைப் பயின்றார். ஆனாலும், இந்தப் பணியில் அவர் அதிக காலம் இருக்க வில்லை. மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் ஹார்வி அவர்கள் அலுவலை விட்டு ஓய்வுபெற்றுத் தாய்நாடு சென்றார். அவர் இருந்த இடத்தில் சுந்தரம் பிள்ளையவர்கள் முதல்வராக அமர்த்தப் பெற்றார். பிள்ளையவர்கள் கல்லூரியில் தமது கடமைகளைச் செய்து கொண்டே அதனுடன் சமயத் தொண்டும் இலக்கியத் தொண்டும் செய்துவந்தார். சென்னைப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புகொண்டு தமிழ், சரித்திரம், தத்துவ சாஸ்திரம் முதலிய பாடங்களின் பரிசோத கராக இருந்தார். தென் இந்திய சரித்திர சம்பந்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதனால் இவரைப் பாராட்டி அரசாங்கத்தார் இவருக்கு “ராய்பகதூர்” என்னும் சிறப்புப் பட்டம் வழங்கினார்கள். 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்த பிள்ளை யவர்கள், அக்காலத்தில் இருந்த புலவர்களுடன் நட்புரிமையும் தொடர்பும் கொண்டிருந்தார். நாகப்பட்டினத்தில் புத்தகக்கடை வைத்திருந்தவரும் பெரும்புலவருமான இயற்றமிழாசிரியர் நாராயண சாமிப் பிள்ளை அவர்களிடத்திலும் பிள்ளையவர்கள் தமிழ் நூல்களைப் பாடங் கேட்டதாகக் கூறுவர். மகா வித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையவர்கள், உ.வே. சாமிநாதையர் அவர்கள், பூண்டி அரங்கநாத முதலியார் அவர்கள், சுவாமி வேதாசலம் (மறைமலை யடிகள்) அவர்கள் முதலியவர்களுடன் நட்புக்கொண்டிருந்தார். ராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள், முகவை இராமாநுஜ கவிராயர், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், சரவணப் பெருமாளையர், உ. வே. சாமிநாதையர் முதலிய அறிஞர்கள் அக்காலத்தில்தான் (19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்), படிப்பாரற்று மூலையில் முடங்கிக் கிடந்த ஏட்டுச் சுவடிகளை அச்சுப் புத்தகங்களாக அச்சிற் பதிப்பித்து வெளிப்படுத்தினார்கள். பிள்ளையவர்கள் காலத்திலே பழைய தமிழ் நூல்களும் புதிய தமிழ் நூல்களும் அச்சுப் புத்தகங்களாக வெளிப்பட்டன. இதைத்தான் பிள்ளையவர்கள் தமது மனோன்மணீய நூலில் தமிழ்த் தெய்வ வணக்கத்தில், “நிற்புகழ்ந் தேத்தும்நின் நெடுந்தகை மைந்தர் பற்பலர் நிற்பெரும் பழம்பணி புதுக்கியும் பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும்” தொண்டு புரிந்ததாகக் கூறினார். பிள்ளையவர்கள் தமிழ்த் தாய்க்குப் புதிய தொண்டு செய்ய எண்ணினார். தமிழில் நாடக நூல்கள் இல்லாத குறையை யுணர்ந்து மனோன்மணீயம் என்னும் சிறந்த நாடக நூலை இயற்றினார். இவர் இயற்றிய ஏனைய நூல்களைவிட மனோன்மணீயமே இவருக்குப் பெரும் புகழைத் தந்துள்ளது. இவரை “மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை” என்று வழங்குவது வழக்கம். மனோன்மணீயத்தை இயற்றுவதற்கு முன்னமே “சிவகாமி சரிதம்” என்னும் சிறு செய்யுள் நூலை இயற்றினார். கோல்ட்ஸ்மித்து என்னும் ஆங்கிலப் புலவர் இயற்றிய The Vicar of Wakefield என்னும் நூலில் உள்ள ஒரு கதைப்பாட்டைத் தழுவி சிவகாமி சரிதத்தை இயற்றினார். குறள் வெண் செந்துறைப் பாவினால் அமைந்த சிவகாமி சரிதம் ஐம்பது செய்யுளைக் கொண்டது. அந்நூலின் காப்புச் செய்யுள் இது: “ நானோ சிவகாமி நற்சரிதஞ் செப்புவனென் றோனோ தடுமாற்ற மென்னெஞ்சே! - மானோய் தீர் போதகமே செய்யுமுக்கட் போதகமே நம்போதப் போதகமே வீற்றிருக்கும் போது.” இந்தச் சிவகாமி சரிதத்தைப் பிறகு இவர் தமது மனோன் மணீய நாடகத்தில் இணைத்துவிட்டார். இணைத்தபோது,இந்தக் காப்புச் செய்யுளை நீக்கிவிட்டார். தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் நிறைந்து, பல சாத்திரங்களைக் கற்றறிந்த இந்த நல்லறிஞர் நடுவயதிலே 42-வது ஆண்டிலே காலமானது வருந்தத்தக்கது. வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில் தாழி உடைந்ததுபோல, சிறந்த நல்ல நூல்களை எழுதித் தமிழ்மொழிக்குத் திருப்பணி செய்யத் தொடங்கிய காலத்தில் மரணம் அடைந்தார். மேலும் இருபது முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருப் பாரானால், நல்ல சிறந்த நூல்களை இயற்றியிருப்பார் என்பதில் சற்றும் ஐயம் இல்லை. இவர் எழுதிய ஞானசம்பந்தர் கால ஆராய்ச்சி, தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் முதலிய ஆங்கிலக் கட்டுரைகள் தமிழ் நாட்டுச் சரித்திர வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறுகளுக்குப் பெரிதும் துணையாக இருக்கின்றன. ராய்பகதூர் பெ. சுந்தரம் பிள்ளையவர்களின் காலக் குறிப்பு: ஆண்டு 1855 பங்குனி மாதம் 28ஆம் தேதி சுந்தரம் பிள்ளையவர்கள் பிறந்தார். 1876 பி.ஏ. வகுப்பில் தேறினார். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்தார். 1877 சிவகாமி அம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார். திருநெல்வேலியில் ஆங்கிலத் தமிழ் உயர்தரப் பள்ளியின் தலைமை ஆசிரியராக அமர்ந்தார். 1879 மீண்டும், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் ஆசிரிய ரானார். 1880 எம். ஏ. பரீட்சையில் தேறினார். 1882 திருவனந்தபுரம் அரண்மனையில் பிறவகை சிரஸ்தார் (Commis sioner of Seperate Revenue) என்னும் உத்தியோகத்தில் அமர்ந்தார் 1884 திருவனந்தபுரத்தில் சைவப் பிரசார சபையைச் சில நண்பர்களுடன் சேர்ந்து நிறுவினார். 1885 திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகவும் முதல்வராகவும் அமர்ந்தார். 1888 சயன்ஸ் பயில்வதற்கு முன்னுரையாக “நூற்றொகை விளக்கம்” என்னும் நூலை இயற்றி வெளியிட்டார். 1889 சிவகாமி சரிதை என்னும் கவிதைநூலை இயற்றினார். இது ஆங்கிலக் கவிதையைத் தழுவி இயற்றப்பட்டது. 1891 புகழ்பெற்ற மனோன்மணீயம் என்னும் நாடக நூலை முதன் முதலாக வெளியிட்டார். 1894 “Early Sovereigns of Travancore” (திருவாங்கூரின் பழைய அரசர்கள்) என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். 1895 “The Age of Gnanasambandar” (ஞானசம்பந்தரின் காலம்) என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதினார். (Madras Christian College Magazine.) 1896 “ராய்பகதூர்” என்னும் சிறப்புப் பட்டம் பெற்றார். 1897 ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு உயிர் நீத்தார். மனோன்மணீயக் கதைக்கு முதனூலாக அமைந்த The Lost Tale of Miletus என்னும் செய்யுள் நூலை இயற்றிய லிட்டன் பிரபுவின் வாழ்க்கை வரலாற்றையும் இங்குக் சுருக்கமாக அறிதல், இந் நூலாராய்ச்சிக்குப் பயனுள்ளதாகும். ஆகவே அவருடைய வரலாற்றையும் சுருக்க மாகத் தருகிறோம். லிட்டன் பிரபு (1803 - 1873) இங்கிலாந்து தேசத்தில் லண்டன்மா நகரத்தில் பிறந்த இவர் ஆங்கில நூலாசிரியராகவும் அரசியல் வாதியாகவும் திகழ்ந்தார். இவருடைய முழுப்பெயர் நுனறயசன Edward George Earle Bulwer Lytton என்பது. இவரது தந்தையாகிய ஜெனரல் புல்வர் என்பவர். இவருடைய இரண்டாவது வயதில் காலமானார். ஆகவே, எலிஜபெத் லிட்டன் என்னும் பெயருள்ள இவரது அன்னையார் இவரைப் போற்றி வளர்த்தார். இயற்கையாகவே கல்வியில் விருப்பம் உள்ள இவர், தமது 7-ஆவது வயதில் கவிதைகளை இயற்றி வெளியிட்டார். 1823-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உயர்தரக் கல்வி பயின்றார். 1826-இல் பல்கலைக் கழகத்தை விட்ட பிறகு நாவல்களையும் நாடக நூல்களையும் செய்யுள்களையும் இயற்றினார். அரசியலிலும் ஈடுபட்டிருந்தார். 1831-ஆம் ஆண்டு முதல் 1842-ஆம் ஆண்டு வரையில் பார்லிமெண்டு அங்கத்தினராக இருந்தார். 1858-இல் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் காரியதரிசியாக நியமனம் பெற்று அலுவல் செய்தார். 1866-இல் “லார்டு” என்னும் பிரபுப்பட்டம் பெற்றார். 1873-ஆம் ஆண்டு ஜனவரியில் காலமானார். லிட்டன் பிரபு, நாவல் முதலிய 28 நூல்களை வசன நடையில் எழுதினார். 10 செய்யுள் நூல்களை இயற்றினார். 6 நாடக நூல்களை எழுதினார். இவர் எழுதிய நூல்களில் உலகப் புகழ்பெற்று விளங்குவது. “பாம்பி நகரத்தின் இறுதி நாட்கள்” (The Last days of Pompeii) என்னும் நாவல், இவர் 1833-ஆம் ஆண்டு இத்தாலி தேசம் சென்று அங்கு நேபில்ஸ் நகரத்தில் சிலகாலம் தங்கியிருந்தார். அவ்வமயம் அங்கிருந்த வெசூவியஸ் என்னும் பழைய எரிமலையைக் கண்டார். இந்த மலையின் அடிவாரத்திலே இருந்த பாம்பி என்னும் செல்வம் மிக்க நகரத்தை. இந்த மலையிலிருந்து வெளிப்பட்ட அனற்பிழம்பு மூன்று நாட்கள் வரையில் சாம்பலைக் கக்கி மூடிமறைத்து அழித்துவிட்டது. இது நிகழ்ந்தது கி.பி. 79-இல். இவ்வாறு எரிமலையினால் அழிந்த பாம்பி நகரம் 1748-இல் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு 1808-இல், புதைபொருள் ஆராய்ச்சிக்காரர்களால் முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டது. தோண்டி எடுக்கப்பட்ட இந் நகரத்தைக் கண்ட லிட்டன் பிரபு, இதன் அழிவைச் சரித்திரக் கதையாக அமைத்து 1834-இல் “பாம்பி நகரத்தின் இறுதி நாட்கள்” என்னும் நாவலை எழுதினார். இவர் 1866-இல் இயற்றிய செய்யுள்நூல் The Lost Tales of Miletus என்பது. இதற்கு The Secret way என்று வேறு பெயரும் உண்டு. ஒரு பழைய கதையையே இவர் செய்யுளாகப் பாடினார். இந்தக் கதையைத் தழுவிப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் மனோன்மணீயம் என்னும் இந்த நாடக நூலைக் கற்பித்து எழுதினார். மேல் நாட்டில் வாய்மொழியாக வழங்கிவந்த கதையை லிட்டன் பிரபு செய்யுள் நடையில் வழிநூலாக அமைத்தார். சுந்தரம் பிள்ளையவர்கள். அதன் சார்புநூலாக இந்த நாடக நூலை அமைத்தார். தமிழில் நாடகக் கலை தமிழ்மொழியிலே நாடக நூல்கள் இல்லை என்னும் குறைபாடு உண்டு. இன்றுங்கூட போதுமான நாடக நூல்கள் தமிழில் கிடையா. பழமையான நாடக நூல்களும் இல்லை. இப்படிக் கூறுவதனாலே தமிழர்களுக்கு நாடகக்கலையே தெரியாது என்று கருதுவது தவறு. மூன்று சங்கம் வைத்து முத்தமிழை வளர்த்தவர்கள் தமிழர்கள். முத் தமிழில் நாடகத் தமிழும் ஒன்று. நாடகத் தமிழை வளர்த்தவர்களுக்கு நாடகக்கலை தெரியாது என்று கூற முடியுமா? தமிழர் நாடகக்கலையை வளர்த்தனர் என்பதற்குப் பழைய தமிழ் நூல்களிலே போதுமான சான்றுகள் உள்ளன. தொல்காப்பியத்திலே, நாடக நூல்களில் அமைய வேண்டிய எட்டு வகையான சுவைகள், மெய்ப் பாடுகள் முதலியவை கூறப்படுகின்றன. நாடகம் எழுதுவதற்கு இலக்கணமாகச் சில நூல்களும் இருந்தன. அகத்தியம், குணநூல், கூத்தநூல், சந்தம், சயந்தம், செயன்முறை, செயிற்றியம் நூல், முறுவல், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல் முதலிய நாடக இலக்கண நூல்கள் இருந்தன. அந் நாடக இலக்கண நூல்களின் சூத்திரங்கள் சிலவும் இப்போதும் நமக்குக் கிடைத்துள்ளன. நாடக இலக்கண நூல்கள் இருந்தன என்றால் நாடக இலக்கிய நூல்களும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? மேலும், அல்லிக்கூத்து, கொடுகொட்டி, குடைக்கூத்து, குடக்கூத்து, பாண் டரங்கம், துடி, கடயம், மரக்காலாடல் முதலிய கூத்துக்களையும் உலகப் புகழ்பெற்ற பரத நாட்டியத்தையும் வெகு சிறப்பாக வளர்த்துப் போற்றிய தமிழர், அவைகளோடு தொடர்புடைய நாடகக் கலையை யும் நன்கு வளர்த்தார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. தமிழர் நாடகக்கலையை வளர்த்தார்கள் என்றால், தமிழில் நாடக நூல்கள் ஏன் இல்லை? இந்தக் கேள்விக்கு விடை என்ன? பழைய தமிழ் நூல்களில் நாடக இலக்கணங்கள் கூறப்படுகிறபடியால், நாடக இலக்கிய நூல்களும் இருந்திருக்க வேண்டும். அவை பிற்காலத்தில் அழிந்திருக்க வேண்டும். நாடக நூல்கள் இரண்டு வகை. படிப்பதற்காக மட்டும் எழுதப்படும் நாடக நூல்கள் ஒருவகை. நடிப்பதற்காக எழுதப்படும் நாடக நூல்கள் இன்னொரு வகை. தமிழிலே படிப்பதற்காக நாடக நூல்கள் எழுதப்படவில்லை. நடிப்பதற்காக மட்டும் நூல்கள் எழுதப்பட்டன. அந்த நூல்களும் பொதுமக்களுக்காக எழுதப்பட வில்லை; நடிப்பவர்களுக்கு மட்டும் எழுதப்பட்டன. நடிகர்கள் நாடகங்களை நடித்துக் காட்ட, மற்றப் பொதுமக்கள் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள். ஆகவே பொதுமக்கள் படிப்பதற்காகத் தமிழில் நாடக நூல்கள் எழுதப்படவில்லை. வடமொழியிலே படிப்பதற்காகவும், நடிப்பதற்காகவும் நாடக நூல்கள் இயற்றப்பட்டன. சங்க காலத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டிலே ஒரு மரபு இருந்து வந்தது. அந்த மரபு என்னவென்றால், ஒவ்வொரு கலைக்கும் ஒவ்வொரு குழு அல்லது இனம் இருந்தது. சிற்பக்கலை, ஒவியக்கலை, தச்சுக்கலை முதலிய கலைகளுக்கு அததற்கென்று ஒவ்வொரு இனம் அல்லது குழு அமைந்திருந்ததுபோலவே, பரதநாட்டியம், இசை, நாடகம் முதலிய கலைகளுக்கும் அதற்கென்று தனிப்பட்ட இனத்தார் இருந்தனர். அந்தந்தக் கலைகளை அந்தந்த இனத்தார் மட்டும் பயின்று வந்தனர். (சமீபகாலம் வரையில் பரதநாட்டியக் கலையை ஒரு இனத்தார் மட்டும் பயின்றுவந்தனர். ஆனால், அண்மைக் காலத்தில் இக் கலையை எல்லா இனத்தாரும் பயின்று வருகின்றனர். ஒருகாலத்தில் பாணர்கள் மட்டும் சிறப்பாகப் பயின்றுவந்த இசைப்பாட்டுகளைப் பிற் காலத்தில் எல்லோரும் பயின்றனர். ஆனால், நாதசுரம், தவில், மேளம் போன்ற இசைக் கலைகளை இன்றும் ஒரு இனத்தார் மட்டும் பயின்று வருகின்றனர்.) அதுபோன்று, பண்டைக் காலத்தில் நாடகம் நடிப்பதற் கென்றே இரு இனத்தார் இருந்தனர். அவர்கள் நாடகக் கலையைப் பயின்று நாடகங்களை மேடையில் நடித்துக் காட்டினர். அவற்றைப் பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். எனவே, நாடக நூல்கள் பொது மக்களுக்காக எழுதப்படவில்லை. நாடக நூல்கள் நாடகக் கலைஞருக் காக மட்டும் எழுதப்பட்டன. கி. பி. 15-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ் நாட்டிலே அரசியல் மாறுபாடுகளும் சமூக மாறுபாடுகளும் ஏற்பட்ட காலத்தில், பழைய தமிழ் நாடகம் புறக்கணிக்கப்பட்ட காலத்தில், தமிழ் நாடகக்கலை அழிந்து, அந்த இடத்தில் தெருக்கூத்து போன்ற நாடகங்கள் பிற்காலத்தில் தோன்றலாயின. தெருக்கூத்துக்கள் ஏற்பட்டது, நாடகக்கலையின் வீழ்ச்சிக்கு அடையாளமாகும். கி.பி. 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியும் ஆங்கிலேயக் கல்வியும் நமது நாட்டில் ஏற்பட்ட பிறகு, மேல் நாட்டு நாடக முறைகளைப் பின்பற்றி நாடகங்கள் நடிக்கப்பட்டன. அதனால், தெருக்கூத்துக்கள் சிறிது சிறிதாக மறைந்து நாடகக்கலை உயர்வு பெற்றது. மேல்நாட்டு நாடகங்கள் நமது நாடகக்கலையைப் பலவிதத்தில் வளர்க்க உதவிபுரிந்துள்ளன. இதுவே தமிழ்நாட்டு நாடகக்கலை வரலாற்றின் சுருக்கம். தமிழர் பண்டைக்காலம் முதல் நாடகக்கலையை வளர்த்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதே நேரத்தில் பொதுமக்கள் படிப்பதற்காக நாடக நூல்களை எழுதவில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. மனோன்மணீயம் - முதல் நாடகநூல் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள், தமிழில் நாடக இலக்கிய நூல்கள் இல்லாத குறையை உணர்ந்தார். வளமான இலக்கியங்கள் வெவ்வேறு துறைகளில் தமிழில் இருக்கவும், வடமொழி ஆங்கில மொழிகளில் உள்ளது போன்று நல்ல நாடக நூல்கள் தமிழில் இல்லாத குறையை அவர் உணர்ந்தார். இக் குறைபாட்டைத் தீர்க்கவே மனோன்மணீய நாடகத்தை இயற்றினார். இந்த நாடக நூலைப் படிப்பதற்காகவே எழுதியதாக அவரே தமது முன்னுரையில் எழுதியுள்ளார். படிப்பதற்காக எழுதப் பட்ட நாடக நூலாகையினாலே, ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில நாடக நூலாசிரியர் எளிய பாக்களினால் (Blank Verse) நமது நாடக நூல்களை இயற்றியதுபோலவே, இவரும் எளிய செய்யுள் நடையாகிய ஆசிரியப் பாவினால் இந் நூலை இயற்றினார். மனோன்மணீயம் சிறந்த நாடக நூலாகப் போற்றப்படும் காரணங்களில் ஒன்று, இது செய்யுள் நடையில் அமைந்துள்ளதாகும். மனோன்மணீய நாடகத்தின் கதையை இங்குக் கூற வேண்டுவதில்லை. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் தாமே எழுதியுள்ள கதையின் வசனம் இதனுடன் சேர்த்திருப்பதனாலும், ஒவ்வொரு அங்கத்துக்கும் கதை விளக்கம் எழுதியிருப்பதனாலும் இங்குக் கதையை விளக்கவேண்டுவது இல்லை. ஆகவே அதனை விடுத்து, இந்நூலின் அமைப்பைப்பற்றியும் நடையைப் பற்றியும் சில கூறுவோம். நாடக இலக்கணம் கதைகளை நாடகங்களாக அமைப்பதற்குச் சில இலக்கண மரபு உண்டு, நாடகம் எழுத வேண்டுமானால், பொதுவாகக் கதையை ஐந்து வகுப்பாகப் பிரிக்க வேண்டும். இந்த ஐந்து பெரும் பிரிவுக்கு அங்கம் என்பது பெயர். அங்கத்தைச் சந்தி என்றும் கூறுவர். பிறகு, ஒவ்வொரு அங்கமும் (சந்தியும்) களம் என்னும் உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும். கதையின் அமைப்புக்கு ஏற்பக் களங்கள் சிலவாகவும் பலவாகவும் அமையும். ஆனால் அங்கம் அல்லது சந்தி ஐந்தாகத்தான் இருக்கவேண்டும். இது தமிழ் மரபு மட்டும் அல்ல ; வடமொழி நாடக மரபும் மேல்நாட்டு நாடக மரபும் ஆகும். வடமொழி நாடகங்களும், உலகப் புகழ்பெற்ற ஷேக்ஸ்பியர் நாடகங்களும் ஐந்து சந்திகளாகவே (அங்கங்களாகவே) பிரிக்கப்பட்டுள்ளன. (ஒரோவழி, வெகு அருமையாக, நாடகங்கள் ஏழு சந்திகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. ஆனால் இது விதி விலக்கு.) முதல் சந்தியை முகம் என்றும், 2-ஆம் சந்தியைப் பிரதிமுகம் என்றும், 3-ஆம் சந்தியைக் கருப்பம் என்றும், 4-ஆம் சந்தியை விளைவு என்றும், 5-ஆம் சந்தியைத் துய்த்தல் என்றும் கூறுவர். அதாவது, நாடகத்திலே, கதையின் அமைப்பு இவ்வாறு அமைய வேண்டும். நிலத்தை உழுது பண்படுத்தி விதைப்பது போன்றது முதல் சந்தியாகிய முகம். இதில் கதையின் தொடக்கம் காட்டப்படும். பயிர் வளர்ந்து பெரிதாவது போல, கதையின் இரண்டாவதாகிய பிரதிமுகம் அமையவேண்டும். மூன்றாவது அங்கத்தில் (சந்தியில்), பயிர் விளைந்து கதிர் விடுவதுபோல, கதையின் முக்கிய கட்டம் தோன்றவேண்டும். பயிர் முற்றிப் பழுப்பதுபோல கதையின் கருத்து வெளிப்படுவது நான்காவ தாகிய விளைவு என்னும் சந்தியில் அமையவேண்டும். பயிரை அறுவடை செய்து உண்பதுபோல, கதையின் கருத்து முழுவதும் வெளிப்படுவது துய்த்தல் என்னும் ஐந்தாவது சந்தியாகும். இவ்வாறு வயலில் பயிரின் வளர்ச்சி படிப்படியாகக் காணப்படுவது போல, நாடகத்தில் கதையின் வளர்ச்சியைப் படிப்படியாக ஐந்து அங்கங்களில் அமைத்துக் காட்டவேண்டும், பிறகு, நாடக உறுப்பினரின் பேச்சிலும் நடிப்பிலும் எட்டு வகையான (ஒன்பது வகை என்றும் கூறுவர்) சுவைகளும், (இரசங்களும்), மெய்ப்பாடுகளும் தோன்றும்படி நாடகம் எழுதப்படவேண்டும். (இவைபோன்ற நாடகக் கலைச் செய்திகளை முத்தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. விபுலாநந்த அடிகளார் இயற்றியுள்ள மதங்க சூளாமணி என்னும் நூலிலும், திரு. பரிதிமாற் கலைஞன் அவர்கள் இயற்றியுள்ள நாடகத் தமிழ் என்னும் நூலிலும் கண்டுகொள்க.) பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள், மேலே சொல்லிய நாடக அமைப்பு முறைகளைப் பின்பற்றித் தமது மனோன்மணீய நாடகத்தைச் சுவைபடச் செம்மையாக நன்கு எழுதியுள்ளார்கள். ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் நாடகக் கலைஞர் எழுதியுள்ள நாடக அமைப்பைப் பின்பற்றி இவரும் எளிய ஆசிரியப்பாவினால் இந் நாடகத்தை இயற்றி யுள்ளார்; இடையிடையே வேறுவகைப் பாக்களையும் இடத்திற்கேற்ப அமைத்துள்ளார். தமிழ் மரபுப்படி இயற்றிய இந்த நாடக நூலிலே புராணக் கதைக் குறிப்புக்களும், புதிய சயன்ஸ் என்னும் மேனாட்டுச் சரித்திரக் கருத்துக் களும், தமிழ், ஆங்கிலம், மலையாளம் என்னும் மும்மொழி களில் வழங்கும் பழமொழிகளும் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர் வாழ்ந்தது மலையாள நாடாகலின் சில மலையாளச் சொற்களும் இதில் இடம் பெற்றுள்ளன. தமிழில் வழங்காத வடமொழிச் சொற்கள் புதுமுறையாக வழங்கப்பட்டுள்ளன. திருக்குறளும், திருவாசகமும் இவர் போற்றிப் பயின்ற தனி நூல்கள். ஆகவே, திருக்குறளும், திருக் குறளின் சொற் களும் சொற்றொடர்களும், திருவாசகத்தின் சொற்களும் சொற்றொடர் களும் இந்நூலில் ஆங்காங்கே ஆளப்படுகின்றன. வியஞ்சனம், க்ஷேமம், வாயசம், சம்போ சங்கர அம்பிகாபதே, தயாநிதே, கிரகித்தனர்,வியர்த்தம், பிசிதமரம், பாக்கியசிலாக்கியன், சுதந்தர பங்கர், க்ஷேமம், நிசிதவேலரசாடவி, உசிதம், அரகர குரு கிருபாநிதே, சுவானம். தனுகரணம், பிரணவ நாதமே தொனிக்கும். அந்நியோந்நிய சமாதானச் சின்னம், உத்தமோபாயம், இராச்சியபரண சுதந்திரம், விளம்பனம், பச்சாதாபப்படுத்துவம், யதார்த்தம், பிரபுத்துவம், கிருபணன், ஏகாந்தப் பெருங் ககனம், வேஷ ரகசியம், அகோராத்திரம், பஞ்சாசத் கோடி, பிரத்தியக் பிரபோதயம், கரதலாமலகம், சுதேசானு ராகம், துவாதசாந்தம், தாதான்மியம், குணப் பிரதமம் முதலியன இவர் ஆளும் வடமொழிச் சொற்கள். திருவடி, கற்பனை, சாடு திருமேனி, திருவாணை, மாற்றொலி, வெள்ளம் முங்கி, யதார்த்தம், பரசியம் முதலியன மலையாள மொழியில் வழங்குகிற சொற்கள். தென்பாண்டி நாடே சிவலோகமாம், வார்கடல் உலகில் வாழ்கிலன். இவை திருவாசகச் சொற்றொடர்கள். சுந்தரம் பிள்ளையவர்கள், கோடகநல்லூர் சுந்தரசுவாமி என்பவரைத் தனது சமய குருவாகக் கொண்டிருந்தார். அவரையே, இந்த நாடகத்தின் ஜீவக அரசனுடைய குலகுருவாக இருத்தி அவர் பெருமையைக் கூறுகிறார். ஆலிவர் கோல்ட் ஸ்மித் (Oliver Goldsmith) என்னும் ஆங்கிலக் கவிவாணர் எழுதிய The Vicar of Wakefield என்னும் நவீனத்தில் Edwin and Angelina, A Ballad என்னும் செய்யுளைத் தழுவி, சுந்தரம் பிள்ளையவர்கள் சிவகாமி சரிதை என்னும் பெயரினால் செய்யுள் புனைந்தார். அதனை மனோன்மணீயத்தில் புகுத்தியுள்ளார். இதன் ஆங்கில மூலத்தையும், மனோன்மணீயக் கதையின் மூல நூலாகிய லிட்டன் பிரபு இயற்றிய The Lost Tales of Miletus அல்லது The Secret way என்னும் ஆங்கிலச் செய்யுளின் மூலத்தையும் இந் நூலின் இறுதியில் அநுபந்தமாகச் சேர்த்துள்ளோம். இவை, மூலச் செய்யுள்களை ஆராய்ச்சி செய்வோருக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். மனோன்மணீய நாடக நூலுக்கு விளக்கமான குறிப்புரை எழுத வேண்டுமென்று சென்னை சாந்தி நூலகத்தார் கேட்டுக் கொண்டபடி என்னால் இயன்ற அளவு இவ்வுரையை எழுதியுள்ளேன். குற்றங்களைக் களைந்து குணத்தைக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ் வாய்ப்பினை அளித்த சாந்தி நூலகத்தாருக்கு எனது நன்றியுரியது. மயிலாப்பூர், சென்னை-4 2. 1. 1961 மயிலை சீனி. வேங்கடசாமி முகவுரை (நூலாசிரியர், ராய்பகதூர் பெ. சுந்தரம்பிள்ளை யவர்கள் எழுதியது ) “ மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரி யத்தோ டுறழ்தரு தமிழ்த்தெய் வத்தை உண்ணினைந் தேத்தல் செய்வாம்.” “ இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும் இருமொழியும் ஆன்றவரே தழீஇனார் என்றாலிவ் விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ.” “ கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.” என்றெடுத்த ஆன்றோர் வசனங்கள் உபசாரமல்ல, உண்மையேயென்பது பரத கண்டம் என்னும் இந்தியா தேசத்திலுள்ள பற்பல பாஷைகளைச் சற்றேனும் ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்கும் யாவர்க்கும் திண்ணிதிற் றுணியத் தக்கதே. பழமையிலும், இலக்கண நுண்மையிலும், இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்றக் கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ் மொழி சிறிதும் தலை கவிழ்க்கும் தன்மையன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத் தமிழ்மொழி பற்பல காரணச் செறிவால், சில காலமாக நன்கு பாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலை தளர்ந்து, நேற்றுதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது. இக் குறைவு நீங்கத் தங்கள் தங்களுக் கியன்றவழி முயற்சிப்பது, தங்களை மேம்படுத்தும் தமிழ்மொழியைத் தம்மொழியாக வழங்கும் தமிழர் யாவரும் தலைக்கொள்ள வேண்டிய தவறாக் கடன் பாடன்றோ! மேற்கூறிய முயற்சிக்கேற்ற வழிகள் பலவுளவேனும் அவற்றுள் இரண்டு தலைமையானவை. முதலாவது முன்னோராற் பொருட் சுவையும் சொற்சுவையும் பொலிய இயற்றப்பட்டிருக்கிற அருமையான நூல்களுள் இறந்தவையொழிய இனியும் இறவாது மறைந்து கிடப்பன வற்றை வெளிக்கொணர்ந்து நிலை பெறச் செய்தலேயாம். இவ் வழியில் பெரிதும் உழைத்தும் பெரும்புகழ் படைத்த ஸ்ரீ தாமோதரம் பிள்ளையவர்கள், பிரமஸ்ரீ சாமிநாதய்யர் அவர்கள் முதலிய வித்துவ சிரோமணிகளுடைய நன்முயற்சிக்கு ஈடு கூறத்தக்கது யாது? தம் மக்கட்கு எய்ப்பில் வைப்பாக இலக்கற்ற திரவியங்களைப் பூர்விகர்கள் வருந்திச் சம்பாதித்து வைத்திருக்க அம் மக்கள், அவை இருக்கு மிடந்தேடி எடுத்தநுபவியாது இரந்துண்ணும் ஏழைமைபோலன்றோ ஆகும், ஈடு மெடுப்பு மற்ற நுண்ணிய மதியும் புண்ணிய சரிதமு முடைய நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டு உழைத்து ஏற்படுத்தியிருக்கும் அரிய பெரிய நூல்களை நாம் ஆராய்ந்து அறிந்து அநுபவியாது வாளா நொந்து காலம் போக்கல் ! ஆதலால் முற்கூறிய உத்தம வித்துவான்களைப் பின்றொடர்ந்து நம் முன்னோர் ஈட்டிய பொக்கிஷங்களைச் சோதனைசெய்து தமிழராகப் பிறந்த யார்க்கும் உரிய பூர்வார்ஜித கல்விப் பொருளை க்ஷேமப்படுத்தி யநுபவிக்க முயல்வது முக்கியமான முதற் கடமையாம். பூர்வார்ஜித தனம் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதனைப் பாதுகாப்பதோடு ஒவ்வொருவரும் தத்தமக்கியன்ற அளவு உழைத்துச் சொற்பமாயினும் புதுவரும்படியைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டு மென்பது பொதுவான உலக நோக்கமாக இருப்பதால், முற்கூறிய முயற்சியோடு இரண்டாவதொரு கடன்பாடும் தமிழர் யாவர்க்கும் விட்டு விலகத்தகாததாகவே ஏற்படும். பூர்வார்ஜிதச் சிறப்பெல்லாம் பூர்வீகர்கள் சிறப்பு; அந்த அந்தத் தலைமுறையார்களுக்கு அவரவர்கள் தாமே ஈட்டிய பொருளளவும் சிறப்பேயொழிய வேறில்லை. அத் தலைமுறையாரைப் பின் சந்ததியார் பேணுவதற்கும் அதுவே யொழிய வேறு குறியுமில்லை. ஆனதினால் எக்காலத்திலும் எவ் விஷயத்திலும் பூர்வீகர்களால் தங்களுக்குச் சித்தித்திருப்பவற்றை ஒவ்வொரு தலைமுறையாரும் பாதுகாப்பதுமன்றித் தங்களாற் கூடிய அளவும் அபிவிருத்தி பண்ணவும் கடமை பூண்டவர்களாகின்றார்கள். ‘பூர்வார் ஜிதம் மிகவும் பெரிதாயிருக்கின்றதே! நம் முயற்சியால் எத்தனைதான் சம்பாதிப் பினும் நமது பூர்வார்ஜிதத்தின்முன் அஃது ஒரு பொருளாகத் தோற்றுமா’ என மனந்தளர்ந்து கைசோர்வார்க்கு அவர் பூர்வார்ஜிதப் பெருமை கேடு விளைவிப்பதாகவன்றோ முடியும். அந்தோ! இக் கேட்டிற்கோ நம் முன்னோர் நமக்காக வருந்தி யுழைத்துப் பொருளீட்டி வைக்கின்றார்கள் ! பிதிர்களாய் நிற்கும் அம் முன்னோர் இவ் விபரீத விளைவைக் கண்டால் நம்மை எங்ஙனம் வாழ்த்துவர்? இக் கூறிய உண்மை செல்வப் பொருளுக்கன்றிக் கல்விப் பொருளுக்கும் ஒரு குடும்பத்துள் வந்த ஒருவனுக்கன்றி ஒரு தேசத்திற் பிறந்த ஒவ்வொரு தலைமுறையாருக்கும் ஒன்று போலவே பொருத்தமுடையதாதலால், “ குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்” என்னும் திருக்குறளை நம்பி நம் முன்னோர் யாதேனும் ஒரு வழியில் அபரிமிதமான சிறப்படைந்தாராயின் நாமும் அவர் போலவே இயன்ற அளவும் முயன்று பெருமைபெறக் கருதுவதன்றோ அம் முன்னோர்க் குரிய மக்கள் நாமென முன்னிற்றற் கேற்ற முறைமை! “ தீங்கரும் பீன்ற திரள்கால் உளையலரி தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்கு--ஓங்கும் உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை.” ஆதலால் அருமையாகிய பூருவ நூல்களைப் பாதுகாத்துப் பயின்று வருதலாகிய முதற்கடமையோடு அவ் வழியே முயன்று அந்த அந்தக் காலநிலைக் கேற்றவாறே புது நூல்களை இயற்ற முயலுதல் தமிழ் நாடென்னும் உயர்குடியிற் பிறக்கும் ஒவ்வொரு தலைமுறையாருக்கும் உரித்தான இரண்டாம் கடமையாய் ஏற்படுகின்றது. மேற்கூறிய இரண்டாம் கடமையைச் சிரமேற்கொண்டு தமிழோர் என்னும் பெரிய குடும்பத்துள்ளே தற்காலத்துள்ள தலைமுறை யாருட் கல்வி கேள்வி அறிவு முதலிய யாவற்றுள்ளும் கனிஷ்டனாகிய சிறியேன், “ இசையா தெனினும் இயற்றியோ ராற்றால் அசையாது நிற்பதாம் ஆண்மை” என்னும் முதுமொழியைக் கடைப்பிடித்து நவீனமான பல வழிகளுள்ளும் என் சிறுமதிக் கேற்றதோர் சிறுவழியிற் சில காலம் முயன்று வடமொழி முதலிய பாஷைகளிலுள்ள நாடக ரீதியைப் பின்றொடர்ந்து இயற்றிய ‘மனோன்மணீயம்’ என்னும் இந் நாடகம், பூர்வீக இலக்கியங்களுடன் சற்றேனும் உவமிக்க இயையாதெனினும், ஆஞ்சனேயராதி வானர வீரர்கள் சேதுபந்தனஞ் செய்யுங் காலத்தில் கடனீரிலே தோய்ந்து மணலிற் புரண்டு அம் மணலைக் கடலில் உகுத்த சிறு அணிற் பிள்ளையின் நன்முயற்சி அங்கீகரிக்கப்பட்டவாறே, கல்வி கேள்வியால் நிறைந்த இத் தலைமுறைச் சிரேஷ்டர் அங்கீகரித்து எனது இச் சிறு முயற்சியும் தமிழ் மாதாவுக்கு அற்பிதமாம்படி அருள்புரியாதொழியார் என நம்பிப் பிரகடனம் செய்யப்படுகின்றது. இந்நாடகம் வடமொழி ஆங்கிலேயம் முதலிய பாஷைகளில் உள்ள நாடக வழக்கிற் கிசையச் செய்திருப்பதால் இதனுள்ளடங்கிய கதை அங்கங்கே நடந்தேறும் சம்பாஷணைகளாலும் அவாய் நிலைகளாலும் கோவைப்படுத்தி அறிந்துகொள்ள வேண்டியதாயிருக்கின்றது. இக்கதை புதிதாக இருப்பதினால் அவ்விதம் கோவைப்படுத்தி அறிந்து கொள்ளுவோர்க்கு அநு கூலமாகச் சுருக்கி ஈண்டுக் கூறப்படுகின்றது. கதாசங்கிரகம் முற்காலத்தில் மதுரைமா நகரில் ஜீவகன் என ஒரு பாண்டியன் அரசு புரிந்துவந்தான். அவன் பளிங்குபோலக் களங்கமில்லாத நெஞ்சினன். அவன் மந்திரி குடிலன் என்பவன், ஒப்பற்ற சூழ்ச்சித் திறமை யுடையவ னாயினும், முற்றும் தன்னயமொன்றே கருதும் தன்மையனாயிருந்தான். அதனால் அரசனுக்கு மிகவும் உண்மையுடையவன்போல் நடித்து அவனை எளிதிலே தன் வசப்படுத்திக்கொண்டான். அங்ஙனம் சுவா தீனப்படுத்திய பின்பு, தன் மனம் போனபடியெல்லாம்அரசனையாட்டித் தன் செல்வமும் செல்வாக்கும் வளர்த்துக்கொள்ளத் தொன்னகராகிய மதுரை இடங்கொடாதென உட்கொண்டு அந்நகரின்மேற் பாண்டியனுக்கு வெறுப்புப் பிறப்பித்து, திருநெல்வேலி என்னும் பதியிற் கோட்டை கொத்தளம் முதலியன இயற்றுவித்து, அவ்விடமே தலைநகராக அரசன் இருந்து அரசாளும்படி செய்தான். முதுநகராகிய மதுரை துறந்து கெடுமதி யாளனாகிய குடிலன் கைப்பட்டு நிற்கும் நிலைமையால் ஜீவகனுக்கு யாது விளையுமோ என இரக்கமுற்று அவனுடைய குலகுருவாகிய சுந்தர முனிவர் அவனுக்குத் தோன்றாத் துணையாயிருந்து ஆதரிக்க எண்ணித் திருநெல்வேலிக் கருகிலுள்ள ஓர் ஆச்சிரமம் வந்தமர்ந் தருளினர். முனிவர் வந்து சேர்ந்தபின் நிகழ்ந்த கதையே இந் நாடகத்துட் கூறப்படுவது. முனிவர் எழுந்தருளியிருப்பதை யுணர்ந்து ஜீவகன் அவரைத் தன் சபைக் கழைப்பித்து, தனது அரண்மனை கோட்டை முதலியன வற்றைக் காட்டி அவை சாசுவதம் என மதித்து வியந்துகொள்ள, அவ்விறுமாப்பைக் கண்ணுற்ற முனிவர், அவற்றின் நிலையாமையைக் குறிப்பாகக், கூறியும் அறியாதொழிய, அவன் குடும்பத்திற்கும் கோட்டை முதலியவற்றுக்கும் க்ஷேமகரமாகச் சில கிரியா விசேஷம் செய்யும் பொருட்டு அவன் அரண்மனையில் ஓரறை தம் சுவாதீனத்து விடும்படி கேட்டு, அதன் திறவுகோலை வாங்கிக்கொண்டு,தம் ஆச்சிரமம் போயினர். ஜீவக வழுதிக்குச் சந்ததியாக மனோன்மணி என்னும் ஒரே புத்திரிதான் இருந்தனன். அவள் அழகிலும் நற்குண நற் செய்கைகளிலும் ஒப்புயர்வற்றவள். அவளுக்கு அப்போது வயது பதினாறாக இருந்தும், அவள் உள்ளம் குழந்தையர் கருத்தும் துறந்தோர் நெஞ்சமும்போல யாதொரு பற்றும் களங்கமுமற்று நின்மலமாகவே யிருந்தது. அவளுக்கு உற்ற தோழியாக இருந்தவன் வாணி. இவள் ஒழுக்கம் தவறா உளத்தள்; தனக்கு நன்றெனத் தெள்ளிதில் தெளிந் தவையே நம்புந் திறத்தள்; அல்லனவற்றை அகற்றும் துணிபு முடையள். இவ் வாணி நடராஜனென்ற ஓர் அழகமைந்த ஆனந்த புருஷனை யறிய, அவர்களிருவர் உள்ளமும் ஒருவழிப்படர்ந்து காதல் நேர்ந்தது. அதற்கு மாறாக இவ் வாணியினது பிதா மிகப் பொருளாசை யுடையோனாதலால், குடிலனுடைய மகன் பலதேவன் என்னும் ஒரு துன்மார்க்கனுக்குத் தன் மகளை மணம்புரியில் தனக்குச் செல்வமும் கௌரவமும் உண்டாமென்ற பேராசை கொண்டு அவ்வாறே அரசன் அநுமதிபெற்று விவாகம் தடத்தத் துணிந்தனன். அதனால் வாணிக்கு விளைந்த சோகம் அளவற்றதா யிருந்தது. இச் சோகம் நீங்க மனோன் மணி பலவாறு ஆறுதல் கூறும் வழக்கமுடையவளா யிருந்தாள். இவ்வாறிருக்கும்போது முனிவர் கோட்டை காணவந்த நாளிரவில் ஈடுமெடுப்புமற்ற சேரதேசத் தரசனாகிய புருடோத்தமவர் மனைப் பூருவகரும பரிபாகத்தால் மனோன்மணி கனாக்கண்டு மோஹம் கொள்ள அவட்குக் காமசுரம் நிகழ்ந்தது. அச் சுரம் இன்ன தன்மைய தென்றுணராது வருந்தும் ஜீவகனுக்குத் தெய்வகதியாய்த் தம் அறைக்கு மறுநாட்காலமே வந்த முனிவர் மனோன்மணி நிலைமை காமசுரமே எனக் குறிப்பாலுணர்ந்து அவள் நோய் நீங்கு மருந்து மணவினையே எனவும், அதற்கு எவ்விதத்திலும் பொருத்த முடையோன் சேர தேசத்துப் புருடோத்தமனேயெனவும் அவ்வரசனது கருத்தினை நன்குணர்ந்து அம்மணவினை எளிதில் முடிக்க வல்லோன் நடராஜனே யெனவும் உபதேசித்தகன்றார். வாணியினது காதலனாகிய நடராஜன் மேல் அவள் பிதா ஆரோபித்திருந்த அபராதங்களால் வெறுப்புக் கொண்டிருந்த பாண்டியன் அக் குரு மொழியை உட்கொள்ளாத வனாய்க் குடிலனுடைய துன்மந்திரத்தை விரும்பினன். குடிலனோ, தன்னயமே கருதுவோனாதலால், சேர தேசத்தரசன் மருமகனாக வருங்காலத்தில் தன் சுவாதந்தரியத்திற்கு எங்ஙனம் கெடுதி வருமோ என்ற அச்சத்தாலும், ஒருகால் தன் மகனாகிய பலதேவனுக்கே மனோன்மணியும் அவட்குரிய அரசாட்சியும் சித்திக்கலாகாதா என்ற பேராசையாலும் முனிவர் கூறிய மணத்தைத் தடுப்பதற்குத் துணிந்து, தொடக்கத்திற் பெண்வீட்டார் மணம்பேசிப் போதல் இழிவென்னும் வழக்கத்தைப் பாராட்டிப் புருடோத்தமன் மனக் கோள் அறிந்தே அதற்கு யத்தனிக்க வேண்டுமென்றும், அப்படி யறிதற்குப் பழைய சில விவாதங்களை மேற்கொண்டு ஒரு தூது அனுப்ப வேண்டுமென்றும், அப்போது கலியாணத்திற்குரிய சங்கதிகளையும் விசாரித்து விடலாமென்றும் ஒரு சூதுகூற அதனை அரசன் நம்பி, குடிலன்மகன் பல தேவனையே இவ்விஷயத்திற்குத் தூதுதனாக அனுப்பினான். சேரதேசத்திலோ புருடோத்தமன் தனக்குச் சில நாளாக நிகழ்ந்து வரும் கனாக்களில் மனோன்மணீயைக் கண்டு காமுற்று அவள் இன்னாளென வெளிப்படாமையால் மனம் புழுங்கி யாருடனேனும் போர் நேர்ந்தால் அவ் வாரவாரத்திலாயினும் தன் மனத்தைக் கொள்ளை கொள்ளும் கனாவொழியாதாவென்ற நோக்கமுடனிருக்கும் சந்தியாக இருந்தது. அதனாற் பல தேவன் சென்று தன் பிதா தனக்கு இரகசியமாகக் கற்பித்தனுப்பியபடி சேரன் சபையில் அகௌரவமான துர்வாதம் சொல்லவே புருடோத்தமன் கோபம் கொண்டு போர்க்கோலம் பூண்டு பாண்டி நாட்டின்மேற் படையெடுத்துப் புறப்பட்டான். அச் செய்தி அறிந்து ஜீவகனும் போருக்கு ஆயத்தமாகவே இருபடையும் திருநெல்வேலிக்கெதிரிலே கைகலந்தன. அப்படிப் போர் நடக்கும் போது பாண்டியன் சேனையின் ஒரு வியூகத்திற்குத் தலைவனாக இருந்த பலதேவனை அவன் கீழிருந்த ஒரு சேவகன் தன் வேலாலே தாக்க, அதனால் அவன் மூர்ச்சிக்கவும் படைமுழுதும் குழம்பவும் சங்கதி ஆயிற்று. அப்படித் தாக்கநேரிட்ட காரண மேதென்றால், பல தேவன் களவு வழிக் காமம் துய்க்கும் துன்மார்க்கனாதலால் அப் படைஞனது சகோதரியைக் கற்பழித்துக் கெடுத்துவிட்டது பற்றி யுண்டான வைரமே என்பது, படைஞன் வேலாற் பலதேவனைத் தாக்கியபொழுது கூறிய வன்மொழியாலும் அவன் தங்கைக்கு அரண் மனையினின்றும் பலதேவன் திருடிப் பரிசாக அளித்த ஒரு பொற்றொடி அவன்கையில் அக்காலம் இருந்தமையாலும் வெளிப் படுகின்றது. படை நியதி கடந்த அச் சேவகனை அருகுநின்ற வீரர் அக்கணமே கொன்றுவிட்டார்கள். பலதேவனும் மூர்ச்சை தெளிந்து கொண்டான். ஆயினும் படையிற் பிறந்த குழப்பம் தணியாது பெருகி விட்டதனால் பாண்டியன் சேனை சின்னபின்னப்பட்டுச் சிதறுண்டு ஜீவகன் உயிர் தப்புவதும் அரிதாகும்படி தோல்வி நேர்ந்தது. சத்திய வாதியாகிய நாராயணன் என்னும் ஒரு சுத்தவீரன் அக்காலம் வந்து உதவி செய்யாவிடில் அப் போர்க்களத்தில் ஜீவகன் மாண்டேயிருப்பன். இந் நாராயணன் யாரென்றால், நடராஜனுடைய நண்பன். இவன் குடிலனுடைய சூதுகள் தெரிந்தவன். அரசன் நிந்தித்துத் தள்ளினும் அவனைக் காப்பாற்றும் பொருட்டு அவனை விட்டு நீங்காது மதுரையி னின்றும் அவனோடு தொடர்ந்து வந்த பரோபகாரி. குடிலன் இவன் திறமும் மெய்ம்மையும் அறிந்துளானாதலால், இந் நாராயணன் போர் முகத்திருக்கில் தான் எண்ணியபடி ஜீவகனுயிருக்குக் கேடுவர வொட்டான் எனக் கருதிச் சண்டை ஆரம்பிக்கும் முன்னமே அவனைக் கோட்டைக் காவலுக்காக நியமித்தனுப்பினான். ஆயினும் போர்க்களமே கண்ணாக இருந்த நாராயணன் சேனையிற் குழப்பம் பிறந்தது கண்டு சில குதிரைப் படைகளைத் திரட்டிக் கொண்டு திடீரென்று பாய்ந்து சென்று அரசனையும் எஞ்சின சேவகரையும் காப்பாற்றிக் கோட்டைக்குட் கொண்டுவந்து விடுத்தான். சுத்தவீரனாகிய அரசன் இங்ஙனம் தான் பகைவருக்கு முதுகிட்ட இழிவை நினைந்து நினைந்து துக்கமும் வெட்கமும் தூண்டவே தற்கொலை புரிய யத்தனிக்கும் எல்லை நாராயணன் மனோன்மணியினது ஆதரவின்மையை அரசனுக்கு நினைப்பூட்டி அக் கொடுந்தொழிலிலிருந்து விலக்கிக் காத்தான். அவனது நயவுரையால் அரசன் ஒருவாறு தெளிவடைந்திருக்கும்போது சேரன் விடுத்த ஒரு தூதுவன் வந்து, ஒரு குடம் தாமிரவர்ணி நீரும் ஓர் வேப்பந்தாரும் போரிலே தோற்றதற்கு அறிகுறியாகக் கொடுத்தால் சமர் நிறுத்துவதாகவும், அன்றேல் மறுநாட் காலையிற் கோட்டை முதலிய யாவும் வெற்றிடமாம்படி தும்பை சூடிப் போர் முடிப்பதாகவும் கூறினான். போரில் ஒருமுறை தான் புறங் கொடுத்த புகழ்க்கெடுதியை உயிர் விடுத்தேனும் நீக்கத் துணிவுகொண்ட ஜீவகன் அதற்குடன் படாமல் மறுத்துவிட்டு, பின்னும் சமருக்கே யத்தனித்துத் தன் அரண்களைச் சோதித்து நோக்குங்கால் அவை ஒருநாள் முற்றுகைக் கேனும் தகுதியற்று அழிந்திருப்பதைக் கண்ணுற்று, அவ்வளவாகத் தன் படைமுற்றும் தோற்க நேரிட்ட காரணம் வினவலாயினான். தன் கருத்திற் கெதிராக அரசனைக் காப்பாற்றி வரும் நாராயணன்மேற் றனக்குள்ள பழம்பகை முடிக்க இதுவே தருணம் எனக் கண்டு அரண் காவலுக்கு நியமிக்கப்பட்ட நாராயணன் காவல் விடுத்துக் கடமைமீறி யுத்தகளம் வந்ததே காரணமாகக் காட்டிக் கோபமூட்டிப் படையிற் பிறந்த குழப்பத்திற்கு ஏதுவாகப் பல தேவனை ஒரு சேவகன் வேலாற் றாக்கினதும் தெரிவித்து, அதுவும் வியூகத் தலைவனாக ஆக்கப் பெறாத பொறாமையால் நாராயணன் ஏவிவிட்ட காரியமே எனவும் அத் தொழிலுக்குப் பரிசாக அவன் அரண்மனையினின்றும் திருடிக் கொடுத்ததே அவன் கையிலிருந்த அரண்மனை முத்திரை பொறித்த பொற்றொடி எனவும் குடிலன் ஒரு பொய்க் கதை கட்டி அதனை அரசன் நம்பும்படி செய்தான். அவ்வாறே களவு கொலை ஆஞ்ஞாலங்கனம் முதலிய குற்றங்களை நாராயணன்மேற் சுமத்தி அவற்றிற்காக அவனைக் கழுவேற்றும்படி விதியும் பிறந்தது. இத்தருணத்தில் சுந்தர முனிவர் அத்தியந்த ஆவசிகமான ஓரிரகசியாலோசனைக்கு அரசனை யழைப்பதாகச் செய்தி வந்தமை யால் நாராயணனை அவ்விதிப்படி கழுவேற்றவில்லை. முனிவர் இப்போது வந்த காரணம் என்னவென்றால், ஜீவகன் குடிலன் வசத்தனாய், நெல்வேலிக் கோட்டையே சாசுவதமென இறுமாந் திருந்தமை கண்டு பரிதாபம் கொண்டு, தமக்கென இரந்து வேண்டிக் கொண்ட அறைமுதல், தமதாச்சிரம வெளிவரையும், ஆபத்காலோப யோகமாக அதிரகசியமான ஒரு சுருங்கை உழைத்துச் சமைத்துக் கொண்டு, பற்றுக் கோடற்று நின்ற ஜீவகனையும் அவன் மகளையும் கேடுற்ற கோட்டையினின்றும் தமது ஆச்சிரமத்திற்கு அச் சுருங்கை வழி யழைத்துச் செல்ல வுன்னியே சுந்தரர் இத்தருணம் எழுந்தருளினர். கோட்டையின் நிலையாமையுணர்ந்தும் அதின் மேல் வைத்த அபி மானம் ஒழியாமையால் அஃதுடன் தான் முடியினும் இன்னும் ஒரு முறை போருக்கஞ்சிப் புறங்கொடுத்தல் தகாதென ஜீவகன் துணிந்து மறுக்க, மனோன்மணி, பாண்டியர் குலத்திற்கு ஏக சந்ததியாக இருப்ப தனால் மற்றையர் எக்கேடுறினும் அவளையேனும் காப்பாற்றுதல் தம் கடமையென ஒரு தலையா உறுத்து முனிவர் கூற, மன்னவன் அங்ஙனம் இயைந்து நடுநிசியில் முனிவரோடு தன் மகளை ஆச்சிரமம் அனுப்புவதாக ஒப்புக் கொண்டான். முனிவரும் சம்மதித்து அகன்றார். உடனே நிசாமுகம் தோன்றிற்று. தன் அருமை மகளைப் பிரியும் வருத்தம் ஒருபுறமும் பிரியாதிருக்கில் அவட் குண்டாகும் கெடுதியைக் குறித்த அச்சம் மற்றொரு புறமுமாக ஜீவகன் சித்தத்தைப் பிடித்தலைக்கக் கலக்கமுற்று, குருமொழியிலும் ஐயம் பிறந்து, குடிலனை வரவழைத்து, முனிவர் அதிரகசியமாகக் கூறிய சுருங்கை முதல் சகல சங்கதியும் தெரிவித்து அவனது அபிப்பிராயம் உசாவுவா னாயினன். அதற்கு அப்பாதகன் இதுவே தன் மனக்கோள் நிறை வேற்றற்குரிய காலமெனத் துணிந்துகொண்டு மனோன்மணியை இடம் பெயர்ப்பது தற்கால நிலைமைக்கு எவ் விஷயத்திலும் உத்தம மெனவும், ஆயினும் மணவினை முடியா முன்னம் அனுப்புவதால், கன்னியாகிய அவளுக்குப் பழிப்புரைக் கிடமாவதேயல்லால் அரசனுக்குச் சற்றும் சித்த சமாதானத்திற் கிடமில்லையெனவும் அவன் நெஞ்சில் சஞ்சலம் விளைவித்து, ஜீவகன் தானாகவே பலதேவனுக்கு மனோன்மணியை அன்றிரவே கலியாணம் செய்துகொடுத்து முனிவர் ஆச்சிரமத்திற்கு மகளையும் மருமகனையும் சேர்த்து அனுப்புவதாகத் துணியும்படி தூண்டி விட்டுத் தான் நெடுங்காலமாகக் கொண்டிருந்த அபிலாஷத்தைப் பூர்த்திப்படுத்திக் கொண்டான். ஆயினும் அவ்வளவோடு நில்லாமல், தன்னையறியாமல் முனிவர் வகுத்த கள்ள வழியைக் கண்டறிய வேண்டுமென்று விருப்புற்று, அது அவர் வந்த அன்றே தமக்காகப் பெற்றுக் கொண்ட அறைக்குச் சம்பந்தப் பட்டிருப்பதே இயல்பென ஊகித்து, அவ்வறையிற் சென்று நோக்கி அச் சுருங்கையைக் கண்டுபிடித்து அவ் வழியேபோய் வெளியேறிப் பார்க்குங்கால், சத்துரு பாசறை அருகே தோன்றிற்று. அன்று பகலில் தன் மகனுக்குச் சண்டையில் நேரிட்ட மோசடிபோலத் தனக்கும் இனி வரக்கிடக்கும் போரில் உட்பகையாலோ வெளிப்பகையாலோ யாதேனும் அபாயம் நேரிட்டுவிடலாமென்ற பயத்தாலும், மனோன்மணி விவாகம் எப்படியும் அன்றிரவே நடந்தேறுமென்ற துணிவாலும், நடந்தேறில் ஜீவகனது பிரீதியால் சித்திக்கத்தக்கது வேறொன்றுமில்லையென்ற உறுதியாலும், கோட்டைக்குத் திரும்ப வேண்டுமென்ற எண்ணம் விடுபட, தான் வருந்திக் கண்டுபிடித்த கற்படையைச் சேரனுக்குக் காட்டி அவ்வழியே அவனை அழைத்துச் சென்று யாதொரு உயிர்ச் சேதத்திற்கு மிடமில்லாமல், பாண்டியனையும் அவன் கோட்டை யினையும் சுலபமாகப் பகைவன் கையில் ஒப்பித்து விட்டால், ஒரு குடம் ஜலத்திற்கும் ஒரு பூமாலைக்குமாகச் சமரை நிறுத்தித் தன்னூருக்குத் திரும்ப எண்ணின சேரன், தன்னையே முடிசூட்டிச் சிங்காதனம் சேர்க்காதொழிவனோ என்ற பேராசை பிடர்பிடித் துந்தவும் ஊழ்வலி யொத்து நிற்கவும் செய்ததினால், அத் துரோகியாகிய குடிலன் மெள்ள மெள்ளப் பாசறை நோக்கிப் போகவே, கனாவில் மனோன்மணியினது உருவங்கண்டு காமுற்றநாள் முதலாக யாதொன்றிலும் மனஞ் செல்லாத வனாய் இரவெல்லாம் நித்திரையற்றுத் தனியே திரிந்து வருந்தும் புருடோத்தமனை நடுவழியிற் சந்தித்துக் கொண்டான். அதுவும் தனது பாக்கியக் குறியாகவே மதித்து மகிழ்ந்த குடிலன், எதிர்ப்பட்ட சேரனிடம் தனது துரோக சிந்தனையை வெளிப்படுத்த, தன்னயங் கருதாச் சதுரனாகிய புருடோத்தமன் தன் சேவகரைக் கூவிக் குடிலன் காலிலும் கையிலும் விலங்கிடுவித்து, “வீரமே உயிராகவுடைய வஞ்சி வேந்தருக்கு வெற்றியன்று விருப்பு; இவ்வித இராஜ துரோகிகளைக் காட்டிக் கொடுத்து, மாற்றலராகிய மன்னவரையும் இரட்சித்துப் பின்பு வேண்டு மேற்பொருது தமது வீரம் நாட்டலேயாம்” என அவனுக்கு விடைகூறி, அவன் கூறிய சுருங்கை வழியே ஜீவகன் சபைக்கு வழிகாட்டி வரும் படி கட்டளையிட்டான். இம் மொழி கேட்ட பாவி இடியொலி கேட்ட பாம்புபோலத் திடுக்கிட்டுத் திகைத்து நின்றான். ஆயினும் தானிட்ட கட்டளை மீறில் சித்திரவதையே சிக்ஷையா மென்று சேரன் சினந்துகூற, அதற்கு அஞ்சி அவ்வாறே கற்படைக்கு வழிகாட்டி நடப்பானாயினன். இப்பால் ஜீவகன் தன் மகளைப் பலதேவனுக்கு மணஞ் செய்வித்து இருவரையும் முனிவர் ஆச்சிரமம் அனுப்புவதே தகுதியெனத் தெளிந்த வாறே அச் செய்தியை மனோன்மணிக் கறிவிக்க அது அவள் செவிக்குக் காய்ச்சின நாராசம்போலிருந்த தாயினும் தன் பிதாவுக்கு நேர்ந்த ஆபத்துக் காலத்தை நன்குணர்ந்து அவனுக்கேற்றபடி நடந்து அவனைத் தேற்றுவதே தற்கால நிலைக்கேற்ற தனது கடமைப்பாடெனத் தெளிந்து அங்ஙனம் ஒப்புக்கொண்டதுமன்றி, தன்பாடு எங்ஙனம் ஆயினும் தன்னைச் சார்ந்தவர் சுகத்தைப் பாராட்டும் பெருங் குணத்தால், காதல் கொண்டிருக்கும் வாணி, தன் கருத்திற்கிசைய நடராஜனை மணஞ் செய்து கொள்ளவும், நெடுங்காலமாகத் தன் குடும்ப ஊழியம் தலைக்கொண்டு நின்ற நாராயணன் செய்த தவறு யாதேயாயினும் அதனைப் பொறுத்து அவனைச் சிறைவிடவும் தன் பிதாவினிடம் விரும்பிக் கேட்டுக் கொண்டனள். அப்படியே ஜீவகன் அனுமதி கொடுத்து அக மகிழ்ந்து மணவினைக்கு ஆயத்தம் செய்யவே, நடுநிசி சமீபிக்க முனிவரும் நடராஜனும் வந்து சேர்ந்தார்கள். தாம் போய் மீளுவதற்குள்ளாக குடிலன் செய்த துராலோசனையும், அதற் குடன்பட்ட மன்னவனுடைய ஏழைமையும், கருணாவிலாசம் இருந்தமையும் கண்டு வியந்து, அரசன் நிச்சயித்தவண்ணமே நடத்தச் சுந்தரர் இசைந்தார். கற்படைக் கருகில் உள்ள மணவறையை விவாக முகூர்த்தத்திற் கிசைந்தவாறு அலங்கரித்து, அதில் குடிலன் ஒழிய மற்ற மந்திரிப் பிரதானிகளுடன் முனிவர் ஜீவகன் நடராஜன் பலதேவன் நாராயணன் முதலிய அனைவரும் கூடிக் குடிலன் வரவிற்குச் சற்று எதிர்பார்த் திருந்தும் வரக்காணாமையால் மணவினைச் சடங்குகள் தொடங்கி, பல தேவனுக்கு மாலைசூட்ட மனோன்மணியை வரவழைக்கும் எல்லை, குடிலன் வழிகாட்ட கற்படை வழிவந்த புருடோத்தமனும் முனிவ ரறையில் வந்து சேர்ந்து அடுத்த அறையாகிய மணவறையில் நடக்கும் ஆகோஷம் என்னவென்று நோக்கவே, தன் திரைவிட்டு, வெளிவந்து பலதேவ னெதிரே மணமாலையும் கையுமாய்ச் சித்திரப் பிரதிமை போல உணர்வற்றுச் செயலற்று நின்ற தன் காதலியாகிய மனோன் மணியைக் கண்ணிரண்டும் களிக்கக் காணலும், பள்ளத்துட் பாயும் பெருவெள்ளம்போல் அவாப் பெருகி யீர்த்தெழ, திடீரென்று கடிதிற் குதித்து யாரும் அறியாது சபையுட் புகுந்து கையற்ற சோகத்தால் மன மிறந்து நின்ற மனோன்மணிதன் கண்முன் சென்று நின்றனன். தன்னுள்ளத்திருந்த தலைவன் இங்ஙனம் பிரத்தியக்ஷப்படலும் அக்கணமே ஆனந்தப் பரவசப்பட்டு மனோன்மணி,தான் கைக் கொண்ட மணமாலையை அவன் கழுத்தோடு சேர்த்துத் தற்போதமிழந்து அவன் தோண்மேல் வீழ்ந்து மூர்ச்சை யாயினள். இங்ஙனம் அயலான் ஒருவன் சபையுட் புகுந்ததும், மனோன்மணி அவனுக்கு மாலைசூட்டி மூர்ச்சித்ததும் கண்டு ஜீவகனாதியர் திடுக்கிட்டுச் சூதெனக் கருதிப் பொருதற் கெழுங்கால், சந்தர முனிவர் கையமைத்துச் சமாதானம் பிறப்பிக்கப் புருடோத்தமன், குடிலன் தன்னிடத்தில் வந்து கூறிய துரோகச் சிந்தனையும் தான் அதற்கிசையாது அவனையே கால் யாப்பிட்டு ஜீவகனுடன் ஒப்புவிக்கக் கொணர்ந்தமையும் கூறிக் குடிலனை விலங்கும் காலுமாகச் சபை முன் நிறுத்திவிட்டு, தனக் குயிர்நிலையா நின்ற மனோன்மணியுடன் தன் பாசறைக்கு மீள யத்தனிக்குமளவில், சுந்தர முனிவர் ஆஞ்ஞையால் ஜீவகன் மனந்தெளிந்து மகளையும் மருமகனையும் வாழ்த்த அது கண்ட யாவரும் கண்படைத்த பெரும் பயன் அடைந்து அருட்டிறம் புகழ்ந்து ஆனந்தம் அடைந்தனர். இதுவே இந் நாடகத்துள் வரும் கதையின் சுருக்கம். இக் கதையை வேண்டுழி வேண்டுழி விரித்து ஆங்கிலேய நாடக ரீதியாக ஜீவகனாதியராகிய கதா புருஷர்களுடைய குணாதி சயங்கள் அவர் அவர் வாய்மொழிகளால் வெளிப்படும்படி செய் திருப்பதுமன்றி “வாழ்த்து வணக்கத்துடன்” தொடங்கி, “நாற் பொருள் பயக்கும் நடை” யினைக் கூடிய அளவும் தழுவி, “தன்னிகரில்லாத் தலைவனையும்” தலைவியையும் உடைத்தாய், “மலைகட னாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றம்” என்றின்னவும் பிறவும் ஏற்புழிப் புனைந்து, “நன் மணம் புணர்தலே” முடிவாகக் கொண்டு, “மந்திரம் தூது செலவிகல் வென்றி” எனச் சந்தியிற் றொடர்ந்து “அங்கம் களம்” என்னும் பாகுபாடுடைத்தாய் நிற்கும் இந் நாடகத்தில் தமிழ்க்காவிய வுறுப்புக்கள் பற்பல ஆங்காங்கு வருவித்திருப்பதும் அன்பொடு பார்ப்போர் கண்ணுக்குப் புலப்படலாம். இல்லறம் துறவறம் பத்தி ஞான முதலிய மோக்ஷ சாதனங்கள் பொருத்தமுடைய சந்திகளில் வெளிப்படையாக அமைந்திருப்பது மல்லாமல் இக் கதையினையே ரூபகமாலாலங்காரமாகக் கருதில், தத்துவ சோதனை செய்யும் முமுக்ஷுகளுக்கு அனுகூலமாகப் பவிக்கவும் கூடும். அப்படி உருவக மாலையாகக் கொள்ளுங்கால், ஜீவகனைச் சார்போத மான ஜீவாத்மா ஆகவும், அவனைத் தன் வசப்படுத்தியாட்டுவித்த குடிலனை மாயாசக்தியாகவும், மனோன்மணியை ஜீவாத்மாவின் பரி பக்குவ காலத்துதிக்கும் முத்திக்குரிய உத்தம பாகமான சுத்ததத்துவ மாகவும், அவள் தோழி வாணியைப் புத்திதத்துவமாகவும், அவள் காதலனாகிய நடராஜனை ஞானதாதாவான உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்தமனை அனுக்கிரக சத்தியாகவும், சந்தர முனிவரைக் கருணாநிதியாகிய ஞானாசாரியராகவும், ஜீவகனுக்குத் தலைநகராகக் கூறிய முத்திபுரம் என்னும் மதுரையை ஜீவாத்மா வுதித்தொடுங்கும் மூலத்தானமாகவும், அவனும் குடிலனும் சேர்ந்து கட்டிய நெல்வேலிக் கோட்டையை மாயாகாரியமான அன்னமயாதி பஞ்சகோசத்தாலமைந்த சரீரமாகவும், அதிலிருந்து மனோன்மணி கண்ட கனாவைச் சுத்தாந்தக் கரண ஜநிதமான பரோக்ஷ ஞானமாகவும், சேரதேசத்தில் புருடோத் தமன் கண்ட கனாவைப் பரமபசுபதியான ஈசுவரனது அருளின் ஸ்புரணமாகவும், மனோன்மணியும் புருடோத்தமனும் சந்திக்கக் காரணமாக முடிந்த முனிவர் கட்டிய சுருங்கையைப் பிரத்தியக்ஷாநு பூதிக் கேதுவான பாசவிமோசன பந்தாவாகவும், பிறவும் இம்முறையே பாவித்து உய்த்துணர்ந்துகொள்ள வேண்டியது. ஏறக்குறைய வாசக நடைக்குச் சமமான அகவற்பாவால் இந் நாடகம் பெரும்பாலும் ஆக்கப்பட்டிருக்கிறதினால் ஒருவர் மொழியாக வரும் ஒரு வரியில் அகவல் அடிமுடியா விடங்களில் அடுத்த வரியில் வரும் சீரோடு சேர்த்து ஆசிரிய அளவடியாக்கி முடித்துக்கொள்க. பலவேறு தொழில்களிடையிலும் பிணி கவலையாதிகள் நடுவிலும் ஆங்காங்கு அகப்பட்ட அவகாசங்களிற் செய்யப் பட்டமையால் இந் நாடகத்துட் பல பாகங்கள் என் சிற்றறிவிற்கே திருப்தி தருவன அல்ல. பல காரணங்களால் ஆங்காங்குப் பல வழுக்களும் வந்திருக்கின்றன. அவற்றுள் முக்கியமானவற்றைத் திருத்தி அனுபந்தத்துள் சேர்த்திருக்கின்றேன். இவை போன்றன பிறவும் உளவேல் கண்டுணர்த் தும் அன்புடையார்க்கு எப்போதும் நன்றியறிதல் உடையனாய் இருப்பேன். கல்வி கேள்விகளிற் சிறந்த கனவான்கள் இக் கூறிய குறைவுகளைப் பாராட்டாது என்னை இம் முயற்சிக்குத் தூண்டிவிட்ட நன்னோக்கத்தையே கருதி இந் நவீன நாடகத்தை அநாதரவு செய்யாது கடைக்கணித்து அருள்புரியப் பலமுறை பிரார்த்திக்கின்றேன். “ பொறிஇன்மை யார்க்கும் பழியன்(று) அறிவறிந் தாள்வினை யின்மை பழி.” குரு சுந்தர சரணாலயம். மனோன்மணீயம் பாயிரம் கடவுள் வணக்கம் (நேரிசை வெண்பா) வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர் போதமும் போய்த்தீண்டாப் பூரணமே-பேதமற வந்தெனை நீ கூடுங்கால் வாழ்த்துவர்யார் வாராக்கால் சிந்தனையான் செய்ம்முறையென் செப்பு. தமிழ்த்தெய்வ வணக்கம் (பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா) நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கொழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில், தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும்அதிற்சிறந்த திரவிடநல் திருநாடும்; அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே. 1 பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையரு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமும்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே. 2 - இவையிரண்டும் ஆறடித்தரவு கடல்குடித்த குடமுனியுன் கரைகாணக் குருநாடில் தொடுகடலை யுனக்குவமை சொல்லுவதும் புகழாமே. 1 ஒருபிழைக்கா அரனார்முன் உரையிழந்து விழிப்பாரேல் அரியதுன திலக்கணமென் றறைவதுமற் புதமாமே. 2 சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின் முதுமொழிநீ அநாதியென மொழிகுவதும் வியப்பாமே. 3 வேகவதிக் கெதிரேற விட்டதொரு சிற்றோடு காலநதி நினைக்கரவாக் காரணத்தி னறிகுறியே. 4 கடையூழி வருந்தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள் உடையாருன் வாசகத்தி லொருபிரதி கருதினதே. 5 தக்கவழி விரிந்திலகுஞ் சங்கத்தார் சிறுபலகை மிக்கநலஞ் சிறந்தவுன்றன் மெய்ச்சரித வியஞ்சனமே. 6 வடமொழிதென் மொழியெனவே வந்தவிரு விழியவற்றுள் கெடுவழக்குத் தொடர்பவரே கிழக்கொடுமேற் குணராரே. 7 வீறுகடைய கலைமகட்கு விழியிரண்டு மொழியானால் கூறுவட மொழிவலமாக் கொள்வர்குண திசையறியார். 8 கலைமகடன் பூர்வதிசை காணுங்கா லவள்விழியுள் வலதுவிழி தென்மொழியா மதியாரோ மதியுடையார். 9 பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே.10 வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒருகுலத்துக் கொருநீதி. 11 மனங்கரைத்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள் கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ. 12 -இவை பன்னிரண்டும் தாழிசை எனவாங்கு - தனிச்சொல் நிற்புகழ்ந் தேத்துநின் நெடுந்தகை மைந்தர் பற்பலர் நின்பெரும் பழம்பணி புதுக்கியும். பொற்புடை நாற்கவிப் புதுப்பணி குயிற்றியும் நிற்பவர் நிற்க நீபெறும் புதல்வரில் அடியேன் கடையேன் அறியாச் சிறியேன் கொடுமலை யாளக் குடியிருப் புடையேன் ஆயினும் நீயே தாயெனுந் தன்மையின் மேயபே ராசையென் மீக்கொள ஓர்வழி உழைத்தலே தகுதியென் றிழைத்தவிந் நாடகம் வெள்ளிய தெனினும் விளங்குநின் கணைக்காற்கு ஒள்ளிய சிறுவிர லணியாக் கொள்மதி யன்பே குறியெனக் குறித்தே. -ஆசிரியச் சுரிதகம் அவையஞ்சின நெஞ்சொடு கிளத்தல் (நேரிசை வெண்பா) அமைய அருளனைத்தும் ஆட்டுமேல் நெஞ்சே சுமைநீ பொறுப்பதெவன் சொல்லாய் -- நமையுமிந்த நாடகமே செய்ய நயந்தால் அதற்கிசைய ஆடுவம்வா நாணம் அவம். பாயிரம் முற்றிற்று. வெண்பா 2-க்கு அடி 8 கலிப்பா 1-க்கு அடி 49 ஆகப் பாயிரம் 1-க்கு அடி 57 நாடக உறுப்பினர் ஜீவக வழுதி ... பாண்டி நாட்டு மன்னன் குடிலன் ... ஜீவக வழுதியின் அமைச்சன் சுந்தரமுனிவர் ... ஜீவக வழுதியின் குலகுரு நிஷ்டாபரர், கருணாகரர் ... சுந்தரமுனிவரின் சீடர்கள் நடராஜன் ... வாணியின் காதலன் நாராயணன் ... ஜீவக வழுதியின் நண்பன் பலதேவன் ... குடிலனின் மகன் சகடன் ... வாணியின் தந்தை முருகன் ... ஜீவக வழுதியின் படைவீரன் புருடோத்தமவர்மன் ... சேரநாட்டு அரசன் அருள்வரதன் ... சேரநாட்டுச் சேனாபதி மனோன்மணி ... அரசகுமாரி; ஜீவக வழுதியின் மகள் வாணி ... மனோன்மணியின் தோழி; சகடனின் மகள் சேவகர், படைவீரர், ஒற்றர், நகரவாசிகள், உழவர், செவிலித்தாய், தோழியர் முதலியோர். “நாடகம் நிகழும் இடம் : திருநெல்வேலியும் திருவனந்தபுரமும். மனோன்மணீயம் முதல் அங்கத்தின் விளக்கம் முதற் களம் ஜீவகன் என்னும் பாண்டிய அரசன் திருநெல்வேலியில் புதிதாக அமைத்த கோட்டையைப் பார்ப்பதற்காக இராஜ குருவாகிய சுந்தர முனிவர் எழுந்தருளுகிறார். அவரை வரவேற்க அரண்மனையில் ஆயத்தமாக இருக்கின்றனர். எழுந்தருளிய சுந்தரமுனிவரை அரசன் வரவேற்று ஆசனத்தில் அமரச் செய்து வணங்குகிறான். முனிவர் வாழ்த்தி ஆசி கூறுகிறார். பிறகு அரசன், மனோன்மணி, நகர மக்கள் முதலியவர்களின் க்ஷேமங்களை விசாரிக்கிறார். அரசன் ஏற்றவாறு விடைகூறியபின், தான் புதிதாக அமைத்த கோட்டையைப் புகழ்ந்து பேசி, கோட்டையை முனிவருக்குக் காட்டும்படி தன் அமைச்சனான குடிலனுக்குக் கூறுகிறான். பாண்டி நாட்டையும், பொதிகை மலையை யும், தாமிரபரணி ஆற்றையும், திருநெல்வேலியில் புதிதாக அமைந் துள்ள கோட்டையின் சிறப்புக்களையும் குடிலன் புகழ்ந்து பேசுகிறான். இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும் தெளிந்த முனிவர், குடிலன்மீது ஐயங்கொண்டு அரசனுக்கு ஏதோ ஆபத்து வர இருக்கிறது என்பதை உணர்கிறார். தனது ஐயத்தை முனிவர் அரசனிடம் குறிப்பாகக் கூறுகிறார். பிறகு, அரசகுமாரி மனோன்மணியைக் காணக் கன்னி மாடத்துக்குச் செல்கிறார். இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் நின்ற நகர மக்கள் தமக்குள் உரையாடிக் கொள்கின்றனர். அமைச்சன் கோட்டையைப் புகழ்ந்து பேசியதைப்பற்றியும் முனிவர் குறிப்பாகக் கூறியதைக் கேட்ட அரசனும் அமைச்சனும் முகம் மாறியதையும் அரச குமாரி மனோன்மணியின் சிறந்த குணங்களையும் பற்றி நகர மக்கள் பேசுகின்றனர். இரண்டாம் களம் அரண்மனையின் கன்னிமாடத்திலே அரசகுமாரி மனோன்மணியும், அவள் தோழி வாணியும் கழல் ஆடுகின்றனர். அவ் விளையாட்டின் போது காமதேவனுடைய இயல்பைப் பாடுகின்றனர். அப் பாட்டினிடையே, வாணி தன் காதலனாகிய நடராஜன் பெயரைத் தற்செயலாகக் குறிப்பிடுகிறாள். மனோன்மணி, நடராஜனுக் கும் வாணிக்கும் உள்ள காதலைப் பற்றி வினவுகிறாள். வாணி, தன் தாயும் தந்தையும் நடராஜனை மணம்செய்துகொள்ளக் கூடாதென்று தடுப்பதையும், அமைச்சன் மகனாகிய பலராமனை மணம்செய்து கொள்ளத்தன்னை வற்புறுத்துவதையும் தெரிவித்து மனம் வருந்துகிறாள். பலராமனையே வாணி மணந்துகொள்வதற்கு என்ன தடை என்று மனோன்மணி கேட்கிறாள். அதற்கு வாணி, காதலின் தன்மையை விளக்கித் தான் காதலித்த நடராஜனையே மணக்கப்போவதாகக் கூறுகிறாள். மனோன்மணி நகைத்து, காதல் என்பது பொய்க்கூற்று என்றும், தான் காதலில் அகப் படாமல் சுந்தரமுனிவர் வழியில் நின்று தவம் செய்யப்போவதாகவும் கூறுகிறாள். ‘காதல் வயப்படுமுன் இவ்வாறு பேசுவது இயல்பு. நீயும் காதல் வலையிற் படும்போது காதலின் தன்மையை அறிவாய்’ என்று வாணி கூற, மனோன்மணி, ‘சுந்தரமுனிவர் அடுத்த அறையில் தங்கி அங்குச் சக்கரம் அமைக்கப் போகிறார். அவரிடம் அறையின் திறவு கோல் இருப்பதனால், அவர் அடிக்கடி வருவார். அவரிடம் ஞான வாசிஷ்டம் முதலிய நூல்களைக் கேட்டு வைராக்கியத்துடன் தவம் செய்வேன்’ என்று கூறினாள். வாணி தன்னைப் பலதேவனுக்கு மணம் செய்விக்கத் தன் தந்தை அரசர் பெருமானின் சம்மதம் பெறப் போவதாகவும் கூறுகிறாள். தனக்கு நடராஜனையன்றி வேறொருவனை மணம்செய்துகொள்ள விருப்பமில்லை என்றும், தன் தாய் நடராஜனைத் தன் வீட்டுக்கு வரக்கூடாதென்று கட்டளையிட்டதாகவும், அமைச்ச னாகிய குடிலன் நடராஜனை ஊரைவிட்டுப் போகும்படி விரட்டுகிறா னென்றும் நடராஜனும் வாழ்க்கையை வெறுத்து மனம் கவல்கிறா னென்று கூறி வருந்துகிறாள். அவ்வமயம் செவிலித்தாயும் ஒரு தோழியும் வந்து மனோன்மணி நட்டு வளர்த்த முல்லைக்கொடி அரும்பு விட்டு மலர்ந்திருக்கிறது என்றும், அது அரசகுமாரியின் திருமணத்துக்கு அறிகுறி என்றும் கூறி அழைத்துச் செல்கின்றனர். மூன்றாம் களம் ஜீவக மன்னனும், நண்பன் நாராயணனும், அமைச்சன் குடிலனும் கொலுமண்டபத்தில் அமர்ந்து உரையாடுகின்றனர். நமது கோட்டையை முனிவர் துச்சமாகப் பேசிய காரணம் என்னவென்று ஜீவகன் குடிலனை வினவ, இதுவே தகுந்தசமயம் எனக் கண்டு, குடிலன் இராஜ குருவின்மீது அரசனுக்கு வெறுப்பு உண்டாகும்படிப் பேசுகிறான். ‘துறவிகள் கோவிலைக் கண்டு மகிழ்வர். அவர் கோவில் கட்டும்படி கூறினார் ; நாம் கோட்டை கட்டினோம். அதுபற்றி அவர் பொறாமையும் வெறுப்புங் கொண்டுள்ளார்போலும்’ என்று கூறினான். அரசன் அதனை ஆமோதித்தான். குடிலன் மேலும் முனிவர்மேல் வெறுப்பு உண்டாக்க இவ்வாறு பேசினான் : ‘வேடத்தைக் கண்டு யாரையும் முற்றுந் துறந்தவர் என்று கருதக்கூடாது. வசிட்டர் கௌசிகர் முதலிய இருடிகள் அக்காலத்து மன்னர்களுக்கு இன்னல்கள் விளைக்கவில்லையா? உலகத்திலே ஆசை அற்றவர் யாருளர் ?’ என்று பேசினான். குடிலனுடைய கபடங்களை நன்கறிந்த நாராயணன், குடிலனுடைய பேச்சை நம்பக்கூடாது என்று அரசனுக்குக் குறிப்பாகக் கூறுகிறான். பசை அற்ற எலும்பை ஒரு நாய் கௌவி எடுக்கும்போது அரசன் அவ் விடம் போக, அந்த நாய் தான் கௌவும் எலும்பை அரசன் கவர்ந்து கொள்ள வந்தான் என்று கருதி உறுமுகிறது என்னும் கருத்தமைந்த ஒரு வெண்பாவைக் கூறுகிறான். (குடிலனாகிய நாய் அதிகாரப் பதவியைக் கௌவிக்கொள்ள முயற்சி செய்யும்போது, அப் பதவியைச் சிறிதும் கருதாத சுந்தரமுனிவர் அரசனிடம் சில செய்தியைக் கூறியது கேட்டு, அவர் தன்னுடைய அதிகாரப் பதவிகளைக் கவர்ந்துகொள்ள விரும்புவதாக நினைப்பது ஏன் என்பது இவ்வெண்பாவின் கருத்து.) அவ்வமயம், வாணியின் தந்தையாகிய பொருளாசை கொண்ட சகடர் அவ்விடம் வந்து வாணியின் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறார். வாணி, நடராஜன் என்பவனை மணஞ் செய்து கொள்ளப் பிடிவாதமாக இருக்கிறாள் என்றும், தனக்கு அது விருப்பமில்லை என்றும், அமைச்சன் மகனாகிய பலதேவனுக்கு அவளை மணம் செய்விக்க விரும்புவதாகவும் கூறுகிறார். அரசர்பெருமான் அவளுக்குப் புத்திமதி கூறிப் பலதேவனை மணக்கும்படி செய்யவேண்டும். இல்லையேல் இந்தத் தள்ளாத வயதில் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தேசாந்தரமாகக் காசிக்குப் போய்விடுவேன் என்று சகடர் கூறி வருந்துகிறார். இவற்றையெல்லாம் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த நாராயணன், இந்தக் கிழவன் பொருளாசை கொண்டு தன் மகளைப் பலதேவனுக்கு மணம் செய்விக்க விரும்புகிறான் என்பதை மறைமுகமாக அரசனிடம் ஒரு வெண்பாவினால் கூறுகிறான். தான் கொடுத்த வாக்குறுதியைக் காக்கும்பொருட்டு அன்று அரிச்சந்திரன் காசிக்குச் சென்று தன் மகனை விற்றான். இன்று, பொருளாசையினால் தன் மகளை விற்கும் அரிச்சந்திரரும் இருக்கிறார். என்பது அச் செய்யுளின் கருத்து. ஆனால், அரசன் அதனையும் உணர்ந்து கொள்ளவில்லை. சகடர் நடராஜனைப் பித்தன் பேயன் வீணன் என்று கூறி, அவனுக்குத் தன் மகளை மணஞ் செய்விக்க விரும்பவில்லை என்று சொல்கிறார். அரசனும் வாணியின் காதலன் நடராஜனைப்பற்றித் தவறாக எண்ணுகிறான். குடிலனும் அதற்கு ஒத்து ஊதுகிறான். அரசன், வாணிக்கு அறிவு புகட்டிப் பலதேவனை மணஞ்செய்ய இசையுமாறு கூறுவதாக வாக்களிக்கிறான். சகடர் மகிழ்ந்து விடைபெற்றுச் செல்கிறார். அவ்வமயம், மனோன்மணியின் செவிலித்தாய் வந்து, மனோன் மணி உடல்நலமில்லாமல் இருப்பதைக் கூறுகிறாள். உணவும் உறக்கமும் இல்லாமல் தனக்குத் தானே ஏதேதோ பிதற்றுகிறாள் என்றும், மருந்தினால் தீராத புதுமையான நோயாக இருக்கிறதென்றும் தெரிவிக் கிறாள். அவளுக்கு இது வரையில் யாதொரு நோயும் வந்ததில்லையே, இது என்ன புதுமை என்று கூறி அரசன் கவலையடைகிறான். இதுதான் சமயம் என்று குடிலன், ‘இது சுந்தரமுனிவரின் மந்திரச் செயலாக இருக்குமோ’ என்று அரசனுக்கு அவர்மீது ஐயம் உண்டாகும் படி கூறுகிறான். அது தவறான ஐயம். முனிவர் மனோன்மணியிடத்தில் மிகுந்த கருணையுள்ளம் கொண்டவர். ஒரு யந்திரம் எழுதிவைக்க ஒரு அறை வேண்டும் என்று கேட்டார். ஒரு அறையைத் திறவுகோலுடன் அவருக்கு அளித்தோம். இந்நோயின் காரணம் தெரியவில்லை என்று கூறி அரசன் தன் மகள் மனோன்மணியைக் காணக் கன்னி மாடத்துக்குச் செல்கிறான். குடிலன், மங்கைப்பருவம் உள்ள மனோன் மணிக்குக் காமநோய் ஏற்பட்டுள்ளது என்பதை அறிகிறான். பிறகு அரசாட்சியை எவ்வாறு கைப்பற்றலாம் என்பதுபற்றிச் சிந்திக்கிறான். நான்காம் களம் ஜீவகன் தன் மகள் மனோன்மணியின் நோய் இன்னதென்று அறியவில்லை. அதுபற்றி அவளை வினவுகிறான். மனோன்மணி தனக்கு ஒன்றும் நோய் இல்லை என்று கூறுகிறாள். அப்போது, அருகில் நின்ற வாணியிடம் அரசன் அவளுடைய திருமணத்தைப் பற்றிப் பேசுகிறான். நடராஜன் உதவாக்கறை; அவனை விட்டு, பலதேவனையே மணஞ் செய்துகொள் என்று கூறுகிறான். வாணி வினயமாக மறுக்கிறாள். அரசன் தன் கருத்தையே மீண்டும் வற்புறுத்துகிறான். வாணி மீண்டும் மறுக்கிறாள். அரசன் விடவில்லை. ‘ஐந்துநாள் தவணை தருகிறேன் ; அதற்குள் பலதேவனை மணஞ்செய்ய முடிவு செய்துகொள்’ என்று கூறுகிறான். அவ்வமயம் சுந்தரமுனிவர் அங்கு எழுந்தருளுகிறார். மனோன் மணியின் வேறுபாட்டைக் கண்டு அதுபற்றி வினவுகிறார். செவிலித்தாய், மனோன்மணியின் நிலையை விளக்கிக் கூறுகிறாள். உண்ணாமலும், உடுக்காமலும், நீராடாமலும், விளையாடாமலும் ஏக்கங்கொண்டிருப்பதை விளக்கிக் கூறுகிறாள். சுந்தரமுனிவர் மனோன்மணியின் வேறுபாட்டுக் குரிய உண்மைக் காரணத்தை அறிகிறார். அது மணப்பருவத்தில் உண்டாகிற வேறுபாடு என்பதைத் தெரிந்து, அரசகுமாரன் ஒருவனுக்கு அவளை மணஞ் செய்விக்கும்படி அரசனிடம் கூறுகிறார். அரசன் இவளுக்குத் தகுந்த குமரன் யார் உளன் என்று முனிவரை வினவுகிறான். சேர நாட்டு அரசன் புருஷோத்தமன் மனோன்மணிக்குத் தகுந்த மணவாளன் என்று முனிவர் கூறுகிறார். நல்லது, யோசித்து அதன்படி செய்கிறேன் என்கிறான் அரசன். யோசிக்கவேண்டாம் ; நம்மிடமுள்ள நடராஜனைத் தூது அனுப்பினால் அவன் இதனை நன்கு முடிப்பான் என்று முனிவர் கூற, அரசன் குடிலனோடு கலந்து யோசித்துச் செய்வதாகக் கூறுகிறான். குடிலனுடைய எண்ணத்தை நன்கறிந்தவரான முனிவர் தெய்வத்தைப் பிரார்த்தித்த வண்ணம் போகிறார். அரசன் மணச் செய்தியைக் குடிலனுக்குக் கடிதம் எழுதித் தெரிவிக்கிறான். ஐந்தாம் களம் அமைச்சனாகிய குடிலன் தனது மாளிகையில் தனியாக ஆழ்ந்த யோசனையோடு உலவிக்கொண்டிருக்கிறான். ‘பழைய தலை நகர மாகிய மதுரையை விட்டுத் திருநெல்வேலிக்கு வருமாறு செய்தேன். அரசன் என் சொல்லுக்கு அடங்கி நடக்கிறான். என்னிடம், எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறான். அரசகுமாரி மனோன் மணிக்குத் திருமணம் செய்யும் காலம் நெருங்கிவிட்டது. இது ஒரு நல்ல வாய்ப்பு. என் மகன் பலதேவன் தீயகுணம் உள்ளவனானாலும் அவனுக்கே மனோன் மணியை மணம் செய்தால் நான் நெடுநாளாக எண்ணியிருக்கும் கருத்து நிறைவேறிவிடும். இதைச் செய்து முடிக்கும் உபாயம் என்ன’ என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறான். அவ்வமயம், சேவகன் ஒருவன் அரசன் அனுப்பிய கடிதத்தைக் கொண்டுவந்து கொடுக்க, அதனை வாசித்துப் பார்த்துச் செய்தியறிகிறான். புருடோத்தமனுக்கும் மனோன்மணிக்கும் திருமணம் நடக்காதபடி சூழ்ச்சிசெய்து தடுக்கவேண்டும் என்று எண்ணுகிறான். தனக்கு நம்பிக்கையுள்ள ஆளைச் சேரநாட்டரசனிடம் தூது அனுப்பி, புருஷோத்தமனுக்குச் சினத்தையும் பகையையும் மூட்டி, அவனைப் படையெடுத்து ஜீவகன்மேல் போருக்கு வரும்படி செய்யவேண்டும் என்றும் அப்போர் நடக்கும்போது நெருக்கடியான நிலைமையை உண்டாக்கித் தன் மகன் பலதேவனுக்கு மனோன்மணியை மணம் புரிவிக்கச் செய்வது எளிது என்றும், பிறகு தன் மகன் பலதேவனே பாண்டிநாட்டுக்கு அரசனாவான் என்றும் தனக்குள் சூழ்ச்சி செய்கிறான். பிறகு திருமணச் செய்தி கேட்டு மகிழ்ச்சி யடைந்ததுபோல நடித்துக் கடிதம் கொண்டுவந்த சேவகனுக்கு வெகுமதி கொடுத்து அனுப்புகிறான். மனோன்மணீயம் முதல் அங்கம் முதற் களம் இடம் : பாண்டியன் கொலுமண்டபம். காலம் : காலை (சேவகர்கள் கொலுமண்டபம் அலங்கரித்து நிற்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன் : புகழ்மிக அமைதரு பொற்சிங் காதனந் திகழ்தர இவ்விடஞ் சேர்மின் சீரிதே. 2-ம் சே: அடியிணை யருச்சனைக் காகுங் கடிமலர் எவ்விடம் வைத்தனை? 3-ம் சே: ஈதோ! நோக்குதி. 4-ம் சே: 5 அவ்விடத் திருப்பதென்? 5-ம் சே: ஆரம். பொறு! பொறு! விழவறா வீதியில் மழையொலி யென்னக் கழைகறி களிறுகள் பிளிறுபே ரொலியும், கொய்யுளைப் புரவியின் குரத்தெழும் ஓதையும் மொய்திரண் முரசின் முழக்கும் அவித்துச் 10 ‘சுந்தர முனிவா! வந்தனம் வந்தனம்’ எனுமொலி யேசிறந் தெழுந்தது. கேண் மின்! 2-ம் சே: முனிவரர் என்றிடிற் கனிவுறுங் கல்லும்! 4-ம் சே: எத்தனை பக்தி! எத்தனை கூட்டம்! எள் விழற் கிடமிலை. யான்போய்க் கண்டேன்! 3-ம் சே: 15 உனக்கென் கவலை? நினைக்குமுன் ஓடலாம். முதற் சே: அரசனும் ஈதோ அணைந்தனன், காணீர்! ஒருசார் ஒதுங்குமின். ஒருபுறம்! ஒருபுறம்! (ஜீவகன் வர) யாவரும்: (தொழுது) ஜய! ஜய! விஜயீபவ ராஜேந்திரா!! (சுந்தர முனிவர், கருணாகரர், குடிலன், நகரவாசிகள் முதலியோர் வர) ஜய! ஜய! விஜய தவரா ஜேந்திரா!! ஜீவகன்: 20 வருக! வருக! குருகிரு பாநிதே!! திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில் அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ குருகுல விஜயன் கொடித்தேர்ப் பீடமோ யாதென ஓதுவன்? தீதற வாதனத்து 25 இருந்தருள் இறைவ! என்பவ பாசம் இரிந்திட நின்பதம் இறைஞ்சுவல் அடியேன் (ஜீவகன் பாதபூசை செய்ய) சுந்தரமுனிவர் : வாழ்க! வாழ்க! மன்னவ! வருதுயர் சூழ்பிணி யாவுந் தொலைந்து வாழ்க! சுகமே போலும், மனோன்மணி? ஜீவ: சுகம். சுகம். சுந்: 30 இந்நக ருளாரும் யாவரும் க்ஷேமம்? ஜீவ: உன்னரு ளுடையோர்க் கென்குறை? க்ஷேமம். கூடல் மாநகர் குடிவிட் டிப்பால் பீடுயர் நெல்லையில் வந்தபின் பேணி அமைத்தன னிவ்வரண். இமைப்பறு தேவருங் 35 கடக்கரும் இதன்றிறம் கடைக்கண் சாத்தி ஆசிநீ யருள நேசித்தேன் நனி. எத்தனை புரிதான் இருக்கினும் எமக்கெலாம் அத்த!நின் அருள்போல் அரணெது? குடில! இவ்வழி யெழுந்தநம் இறைவர், கடிபுரி 40 செவ்விதின் நோக்கக் காட்டுக தெரிந்தே, குடிலன்: ஊன்வரு பெருநோய் தான்விட அடைந்த அன்பரின் புறஇவ் வருளுருத் தாங்கி வந்தருள் கிருபா சுந்தர _த்தீ! நீயறி யாததொன் றில்லை; ஆயினும், 45 உன்னடி பரவி யுரைப்பது கேண்மோ, தென்பாண்டி நாடே சிவலோக மாமென முன்வாத வூரர் மொழிந்தனர். அன்றியுந் தரணியே பசுவெனச் சாற்றலும் மற்றதிற் பரதமே மடியெனப் பகர்வதுஞ் சரதமேல், 50 பால்சொரி சுரைதென் பாண்டி யென்பது மேல்விளம் பாதே விளங்கும். ஒருகால் எல்லா மாகிய கண்ணுதல் இறைவனும் பல்லா யிரத்த தேவரும் பிறரும் நிலைபெற நின்ற பனிவரை துலையின் 55 ஒருதலை யாக, உருவஞ் சிறிய குறுமுனி தனியா யுறுமலை மற்றோர் தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில் மலையமோ அலதுபொன் வரையோ பெரிது? சந்து செவிவழித் தந்த கங்கையும், 60 பின்னொரு வாயசங் கவிழ்த்த பொன்னியும்; வருந்திய தேவரோ டருந்தவர் வேண்ட, அமிழ்திலுஞ் சிறந்த தமிழ்மொழி பிறந்த மலையம்நின் றிழிந்து, விலையுயர் முத்தும் வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற் 65 சந்தனா டவியுஞ் சாடி வந்துயர் குங்கும முறித்துச் சங்கின மலறுந் தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில் வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி, இருகரை வாரமுந் திருமக ளுறையுளாப் 70 பண்ணுமிப் புண்ணிய தாமிர வர்ணியும், எண்ணிடி லேயுமென் றிசைக்கவும் படுமோ? இந்நதி வலம்வர விருந்தநம் தொன்னகர் பொன்னகர் தன்னிலும் பாலிவுறல் கண்டனை தொடுகட லோவெனத் துணுக்குறும் அடையலர் 75 கலக்கத் தெல்லையும் கட்செவிக் சுடிகையும் புலப்பட வகன்றாழ் புதுவக ழுடுத்த மஞ்சுகண் துஞ்சுநம் இஞ்சி யுரிஞ்சி உதயனு முடல்சிவந் தனனே! அதன்புறம் நாட்டிய பதாகையில் தீட்டிய மீனம், 80 உவாமதிக் குறுமா சவாவொடு நக்கும். வெயில்விரி யெயிலினங் காக்க இயற்றிய எந்திரப் படைகளுந் தந்திரக் கருவியும் பொறிகளும் வெறிகொளுங் கிறிகளு மெண்ணில: சுந்: (எழுந்து) சம்போ!சங்கர! அம்பிகா பதேஎ! 85 நன்று மன்னவ! உன்றன் றொல்குலங் காக்கநீ யாக்கிய இவையெல்லாம் கண்டுளேம். அல்லா துறுதி யுவதோ? சொல்லுதி! ஜீவ: என்னை! என்னை! எமக்கருள் குரவ! இன்னும் வேண்டிய தியாதோ? துன்னலர் 90 வெருவுவர் கேட்கினும்; பொருதிவை வென்றுகைக் கொள்ளுவ ரென்பதும் உள்ளற் பாற்றோ? ஆயினும் அரணி லுளபுரை நோக்கி நீயினி இயம்பிடில் நீக்குவன் நொடியே. சுந்: காலம் என்பது கறங்குபோற் சுழன்று 95 மேலது கீழாக் கீழது மேலா மாற்றிடுந் தோற்ற மென்பது மறந்தனை. வினைதெரிந் தாற்றும் வேந்தன் முனமுனம், ஆயற் பாற்ற தழிவும் அஃதொழி வாயிலு மாமென வையகம் புகலும். 100 உன்னையு முன்குலத் துதித்தநம் மனோன்மணி தன்னையுஞ் சங்கரன் காக்க! தயாநிதே! அன்பும் அறமுமே யாக்கையாக் கொண்ட நின்புதல் வியையான் காணநே சித்தேன், அத்திரு வுறையும் அப்புறம் போதற் 105 கொத்ததா மோஇக் காலம்? உணர்த்தாய். ஜீவ: ஆம்! ஆம்! சேவக! அறைதி சென்று தேமொழிக் கன்னிதன் சேடியர் தமக்கு நங்குல முனிவர் இங்குள ரெனவே. (அரசனும், முனிவரும், சீடரும் அப்புறம் போக) குடி: (தனதுள்) நங்கா ரியம்ஜயம் எங்கா கினுஞ்செல! (சேவகனை நோக்கி) 110 சேவகா! முனிவர் சிவிகையுஞ் சின்னமும் யாவுமவ் வாயிலிற் கொணர்தி. சேவ: சுவாமி! (குடிலன் முதலியோர்போக) முதல் நகரவாசி: கடன்மடை விண்டெனக் குடிலன் கழறிய நயப்புரை! ஆ! ஆ! வியப்பே மிகவும்! நாட்டைச் சிறப்பித் துரைத்தது கேட்டியோ? 2-ம் ந: 115 கேட்டோம்; கேட்டோம். நாட்டிற் கென்குறை விடு! விடு! புராணம் விளம்பினன் வீணாய். 3-ம் ந: குடிலன் செய்யும் படிறுகள் முனிவர் அறியா தவரோ? சிறிதா யினுமவன் உரைத்தது கருத்திடைக் கொண்டிலர் உவர்த்தே. 1-ம் ந : 120 ஆம்! ஆம்! அவன்முகம் ஏமா றினதே. விரசமா யரசனும் வியர்த்தனன் கண்டேன். 2-ம் ந: முனிவரங் கோதிய தென்னை? முற்றும் துனிபடு நெருக்கிற் கேட்டிலன். 3-ம் ந: யாதோ - ‘மனோன்மணி’எனப்பெயர் வழங்கினர். அறிவைகொல்? 4-ம் ந: 125 வாழ்த்தினர் போலும், மற்றென்? பாழ்த்தஇத் 2-ம் ந: தந்தையிற் பரிவுளர் மனோன்மணி தன்மேல் 3-ம் ந: ஐயமற் றதற்கென்? யார்பரி வுறார்கள்? வையகத் தவள்போல் மங்கைய ருளரோ? அன்பே யுயிரா அழகே யாக்கையா 130 மன்பே ருலகுசெய் மாதவம் அதனான் மலைமகள் கருணையுங் கலைமக ளுணர்வுங் கமலையி னெழிலும் அமையவோ ருருவாய்ப் பாண்டியன் தொல்குல மாகிய பாற்கடல் கீண்டெழு மதியென ஈண்டவ தரித்த 135 மனோன்மணி யன்னையை வாழ்த்தார் யாரே? 2-ம் ந: அன்றியும் முனிகட் கவள்மேல் வாஞ்சை இன்றுமற் றன்றே, இமையவர்க் காக முன்னொரு வெள்வி முயன்றுழி வன்னி தவசிகள் தனித்தனி யவிசு சொரிந்துந் 140 தழையா தவிதல் கண்டுளந் தளர்ந்து மன்னனுங் குடிலனுந் துன்னிய யாவரும் வெய்துயிர்த் திருக்க, விளையாட்டாக மைதிகழ் கண்ணி பேதை மனோன்மணி நெய்பெய் போழ்தில் நெடுஞ்சுழி சுழித்து 145 மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப் புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா முனிவர் யாவரும் மணியென மொழியில் தங்கள் தலைமிசைக் கொள்வர் தரணியில் எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே. 4-ம் ந: 150 ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர் அவ்வழி யேகுநர் போலும். இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே. (நகரவாசிகள் போக) முதல் அங்கம் : முதற் களம் முற்றிற்று இரண்டாம் களம் இடம் : கன்னிமாடம் காலம் : எற்பாடு (மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க) (ஆசிரியத் தாழிசை) மனோன்மணி: (தோழியுடன் கழல் விளையாடிப் பாட) துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன் அணைகில னரன்முன்னென் றாடாய் கழல் அணைந்துநீ றானானென் றாடாய் கழல். 1 வாணி: நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண் ஆறா வடுவேயென் றாடாய் கழல் அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல். 2 மனோ: இருளில் தனித்துறை யேழையர் தங்கள் மேற் பொருதலோ வீரமென் றாடாய் கழல் போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல். 3 வா: எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல் கரிந்தது பதியென் றாடாய் கழல் கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல். 4 மனோ: தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத் தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல் உருவங் கரந்தானென் றாடாய் கழல். 5 வா: உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால் அரையுரு வானாரென் றாடாய் கழல் அந்நட ராஜரென் றாடாய் கழல். 6 (பெருமூச்செறிய) (நேரிசை ஆசிரியப்பா) மனோ: (சிரித்து) ஏதடி வாணி! ஓதிய பாட்டில் ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து? நன்று! நன்று! நின் நாணம். மன்றலு மானது போலும்வார் குழலே! 1 வா: 5 ஏதம் மாநீ சூது நினைத்தனை? ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன். இச்சகத் தெவரே பாடினும், உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே. 2 மனோ: மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்! 10 திங்கள் கண்டு பொங்கிய கடலெனச் செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற் சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக் களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர் ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய் 15 காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே. 3 வா: ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்! எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று திரிபவ ரொப்பநீ செப்பினை! நான் கண் டேநாள் நாலைந் தாமே. 4 மனோ: 20 ஏதடி! நுமது காதல் கழிந்ததோ? காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்? காதள வோடிய கண்ணாய்! ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே. 5 வா: 25 எதனையான் இயம்புகோ! என்றலை விதியே. (கண்ணீர் சிந்தி) வா; விளை யாடுவோம் வாராய். யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே! 6 மனோ: ஏனிது! ஏனிது வாணீ! எட்பூ ஏசிய நாசியாய்! இயம்புக. 30 மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே. 7 வா: எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா? தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய அனுபவித் தன்றே அகலும்? மனையில் தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்! 35 சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை. என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும் இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம் முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர். யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்? 40 வார்கடல் உலகில் வாழ்கிலன். மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே. 8 மனோ: முல்லையின் முகையும் முருக்கின் இதழுங் காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும் முரண்டேன்? பலதே வனுக்கே மாலை 45 சூடிடிற் கேடென்? காதால் வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ ளணங்கே! வா: அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி. நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன். இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும் 50 மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை? ஆடவ ராகமற் றெவரையும் நாடுமோ நானுள வளவுமென் உளமே? 10 மனோ: வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென வதியும் வதன மங்காய்! வாணீ! 55 பேய்கொண் டனையோ? பித்தே றினையோ நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன் தன் மக னாகிச் சாலவும் வலியனாய் மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும் உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ? 60 பேய்கொண் டனையோ? பேதாய்! வேய்கொள் தோளி விளம்பா யெனக்கே. 11 வா: அறியா யொன்றும், அம்ம! அரிவையர் நிறையழி காதல் நேருந் தன்மை ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ் 65 சென்று பாய்ந்து சேருதல். திரியுங் காற்றும் பெட்புங் காரணம் இன்மையில் ஆற்றவும் ஒக்குமென் றறைவர். மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே! 12 மனோ: புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல் 70 இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே! காதல் கொள்ளுதற் கேதுவும் இலையாம்! தானறி யாப்பே யாட்டந் தானாம்! ஆயினும் அமைந்துநீ ஆய்ந்துணர்ந் தோதுதி. உண்டோ இவர்தமில் ஒப்பு? 75 கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே! 13 வா: ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம! என்னுளம் போயிறந் ததுவே மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே. 14 மனோ: பித்தே பிதற்றினை. எத்திற மாயினுந் 80 தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம், காந்தள் காட்டுங் கையாய்! தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே? 15 வா: ஈதெலாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்! மாதர்க் குரியதிக் காதல், 85 என்பதொன் றறியும் மன்பதை யுலகே. 16 மனோ: மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில் வனத்தி லெய்தி வற்கலை புனைந்து மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே. சுந்தர முனிவன் சிந்துர அடியும், 90 வாரிசம் போல மலர்ந்த வதனமும், கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும், பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல் நரைதரு தலையும், புரையறும் உரையும், சாந்தமுந் தயையும் தங்கிய உடலும், 95 மாந்தளிர் வாட்டு மேனி வாணி! எண்ணுந் தோறுங் குதித்து நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே. 17 வா: சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல் கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக் 100 காதல் கதுவுங் காலை ஓதுவை நீயே யுறுமதன் சுவையே. 18 மனோ: வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண், வீண். காதலென் பதுவென்? பூதமோ? பேயோ? வெருட்டினால் நாய்போ லோடிடும்; வெருவில் 105 துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை. அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம் இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை! படர்சுழி யோடு பாய்திரை காட்டும் 110 வடதள வுதர வாணீ! மங்காய்! வரும்பொழு தரும்பொருள் கேட்போம் வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே. 19 வா: நூறாக் கேட்கினும் நூலறிவு என் செயும்? நீறா கின்றதென் நெஞ்சம். நாளை 115 என்னுயிர் தாங்குவ தெவ்விதம்? மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே? 20 மனோ: உன்றன் சிந்தையும் உந்தைதன் கருத்தும், மன் றல் வழுதிக் குரைக்க வருவதும், ஆமையின் புறச்சார் பலவன் ஒதுங்குவது 120 ஏயு மெழிற்கால் வாணீ! நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே? 21 வா: அதுவே யம்ம! என் உளநின் றறுப்பது. வதுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்! ஒருமொழி வேண்டினர்; உரைத்திலேன் பாவி. 125 நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை. பிச்சியான், ஓகோ! பேசினே னிலையே! இனியென் செய்வேன்? என் நினைப் பாரோ? மனைவரா வண்ணமென் னனையு முரைத்தாள். ஊர்வரா வண்ணங் குடிலனும் ஓட்டினன். 130 யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்? உயிரே யெனக்கிங் கொருதுணை. அயிரா வதத்தனும் அறியா வமுதே! (அழ) 22 மனோ: அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமும் நெருஞ்சிலா அஞ்சிய அடியாய்! அழுங்கலை! அழுதுகண் 135 அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங் கருத்ததே! ஏனிது! கருணைக் கடவுள்நின் கருத்தே முடிப்பக் காண்டி, அஃதோ மணங்கமழ் கோதையர் வந்தனர். அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே! 23 (செவிலியும் தோழிப்பெண்களும் வர) செவிலி: 140 தாயே! வந்துபார் நீயே வளர்த்த முல்லையு நறுமுகை முகிழ்த்தது. வல்லை காதலிற் கவிழ்வை போலும்! போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே! 24 மனோ: போடி! நீ யாது புகன்றனை? தவத்தை 145 நாடிநா னிருக்க நணுகுமோ என்மனந் துச்சமாம் இச்சையாற் சோர்வு? நெருப்பையுங் கரையான் அரிக்குமோ நேர்ந்தே! 25 முதற்றோழி: பொய்யன் றம்ம! மையுண் கண்ணால் வந்துநீ நோக்கு, சந்தமார் முல்லை 150 நிரம்ப அரும்பி நிற்குந் தன்மை. இன்றிரா அலரும் எல்லாம். துன்றிரா நிகர்குழல் தோகாய்! வருகவே. 26 (எல்லோரும் போக) முதல் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. மூன்றாம் களம் இடம் : கொலுமண்டபம். காலம் : காலை. (ஜீவகன், குடிலன், நாராயணன் சம்பாஷித்திருக்க.) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஜீவகன்: நமக்கத னாலென்? நன்றே யாமெனத் தமக்குச் சரியாம் இடத்திற் றங்குக. எங்கே யாகினுந் தங்குக. நமக்கென்? ஆவலோ டமைத்தநம் புரிசையை யவர்மிகக் 5 கேவலம் ஆக்கினர். அதற்குள கேடென்? குறைவென்? குடில! கூறாய் குறித்தே. குடிலன்: குறையான் ஒன்றுங் கண்டிலன் கொற்றவ! நறையார் வேப்பந் தாராய்! நமதிடங் கூடல் அன்றெனுங் குறையொன் றுளது. 10 நாடி லஃதலால் நானொன் றறியேன். மேலுந் தவசிகள் வேடந் தாங்கினோர் ஆலயம் ஒன்றையே அறிவர். முன்னொரு கோவில் அமைத்ததிற் குறைவிலா உற்சவம் ஓவ லிலாதே உஞற்றுமின் என்றவர் 15 ஏவினர் அஃதொழித் தியற்றின் மிப்புரி. ஆதலா லிங்ஙனம் ஓதினர். அதனை அழுக்கா றென்றுநா மையமற் றறைதல் ஒழுக்க மன்றே. குருவன் றோவவர்? ஜீவ: ஐயரும் அழுக்கா றடைந்தார். மெய்ம்மை 20 கோவில் தானா காவலர் கடமை? கேவலம்! கேவலம்! முனிவரும்! ஆ! ஆ! குடி: அதிசய மன்றுபூ பதியே! இதுவும். துறந்தார் முற்றுந் துறந்தவ ரல்லர். மறந்தார் சிற்சில. வறிதே தமக்கு 25 மனோகர மாகிய சினகர மொன்றில் உலகுள பொருளெலாம் உய்ப்பினும் பின்னும் நிலைபெற நிரம்பா தவர்க்குள வாசை. வசிட்டர் முன்னர் வாளாப் புகைத்தனர் முசிப்பிலா மன்னர் திரவிய முற்றும். 30 கௌசிகன் இரக்கவோர் மௌலி வேந்தன் பட்டபா டுலகில் யாவரே பட்டுளர்? சிட்ட முனிவர்கள் செயலாற் பலகால் புரந்தரன் தனதுருக் கரந்து திரிந்தனன். முனிவரே யாயினும் மனிதரே மீண்டும் 35 இச்சை யற்றவர் இச்சகத்து யாவர்? ஜீவ: ஒவ்வும்! ஒவ்வும்நீ உரைத்தது முற்றும். நாராயணன்: (தனதுள்) ஐயோ! பாவி! அருந்தவ முனிவரைப் பொய்யன் ஆக்குவன். புரவல னோவெனில் எடுப்பார் கைப்பிள்ளை. தடுப்பார் யாரே? (நேரிசை வெண்பா) நாரா: (அரசனை நோக்கி) கொல்லா யெனப்பகைஞர் கோற்றொடியார் கும்பிட்டுப் பல்லிளிக்கக் கண்சிவக்கும் பார்த்திபனே - பொல்லா வெறுமெலும்பை நாய்கௌவும் வேளை நீ செல்ல உறுமுவதென் நீயே யுரை. (சேவகன் வர) (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) சேவ: 40 மன்னிய கலைதேர் சகடர் வந்தனர். ஜீவா: (நாராயணனை நோக்கி) வரச்சொல் சேவக! உரைத்தநின் உவமையிற் சற்றே குற்ற முள்ளது நாரணா! குடி: (தனதுள்) அரசன் மாறாய்ப் பொருள் கிர கித்தனன். (அரசனை நோக்கி) வெற்றுரை வீணாய் விளம்பினன். அதனிற் 45 குற்றங் காணக் குறுகுதல் முற்றும் மணற்சோற் றிற்கல் தேடுதல் மானும். ஜீவ: (சகடரை நோக்கி) (சகடர் வர) சுகமோ யாவரும் முதிய சகடரே! மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் ஆயின தன்றே? சகடர்: ஆம்! ஆம்! அடியேன். ஜீவ: 50 மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? சகட: அறத்தா றகலா தகலிடங் காத்துப் பொறுத்ததோட் புரவல! உன்குடை நீழற் பொருந்தும் எங்கட் கரந்தையு முளதோ? சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் 55 மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே எந்தன் புதல்வி வாணியை வதுவையிற் கொடுக்கவோ ராசை கொற்றவ! மற்றது முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே. ஜீவ: சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ் 60 சாலவும் பொருந்தும். சகடரே! அதனால் களித்தோம் மெத்த. ஏ! ஏ! குடில! ஒளித்த தென்நீ உரையா தெமக்கே? குடி: ஆவ தாயின் அறிவியா தொழிவனோ? ஜீவ: இடையூ றென்கொல்? இடியே றன்ன 65 படையடு பலதே வன்றான் ஏதோ விரும்பினன் போலும் வேறோர் கரும்பே! குடி: இல்லையெம் இறைவ! எங்ஙனம் உரைக்கேன்! சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக. ஜீவ: என்னை? சகடரே! இடையூ றென்னை? சக: 70 பரம்பரை யாயுன் தொழும்புபூண் டொழுகும் அடியனேன் சொல்பழு தாயின தில்லை. முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல் ஒருத்தியே யென்சொல் வியர்த்தம் ஆக்குவள். ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள். 75 விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும், ஓரா ளொன்றும்; உணராள் தன்னயம்; நேரா ளொருவழி; பாராள் நெறிமுறை; என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும் இன்னல் தருவதொன் றில்லை, தாதையர் 80 மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர் எனுமொழி யெனக்கே யனுபவம் இறைவ! உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர் தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம். நரைத்த தென்சிரம்; திரைத்த தென்னுடல் 85 தள்ளருங் காலம்; பிள்ளையும் வேறிலை. என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க மன்னவ! கிருபையேல் வாழ்து மிவ்வயின், இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினிச் (கண்ணீர் துளிக்க) செல்ல விடையளி செல்லுதுங் காசி. ஜீவ: 90 ஏனிது சகடரே! என்கா ரியமிது! தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள். காணி லுரைப்பாம். வீணிவ் வழுகை. நாராயணன்: (தனதுள்) பாதகன் கிழவன் பணத்திற் காக ஏதுஞ் செய்வன், இறைவனோ அறியான், 95 ஓதுவங் குறிப்பாய். உணரி லுணர்க. (அரசனை நோக்கி) (நேரிசை வெண்பா) மாற்றலர் தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே - சோற்றதற்காய்த் தன்மகவை விற்றவரிச் சந்திரனு முன்னவையில் என்மகிமை யுள்ளா னினி. (நிலைமண்டில ஆசிரியப்பா, தொடர்ச்சி) ஜீவ: தனிமொழி யென்னை? நாரா: சற்றும் பிசகிலை. நீட்டல் விகாரமாய் நினையினும் அமையும். ஜீவ: காட்டுவ தெல்லாம் விகாரமே. காணாய் கிழவரின் அழுகை. நாரா: சிலவரு டந்தான். 100 நெடுநாள் நிற்கும் இளையவ ரழுகை. ஜீவ: விடு.விடு. நின்மொழி யெல்லாம் விகடம். (நாராயணன் போக) (சகடரை நோக்கி) அறிவிர்கொல் அவளுளம்? சக: சிறிதியா னறிவன்: திருநட ராசனென் றொருவனிங் குள்ளான். பொருவரும் புருடன்மற் றவனே யென்றாள் 105 சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர். குடி: (அரசனை நோக்கி) நல்லதப் படியே நடக்கிலென்? இவர்க்கும் பொல்லா முரண்டேன்? சக: (குடிலனை நோக்கி) போம்!போம்! உமது குழந்தையேல் இங்ஙனம் கூறீர்! முற்றும், இழந்திட வோவெனக் கித்தனை பாடு? 110 பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ? (அரசனை நோக்கி) காவலா! அவனைப் போலயான் கண்டிலன்; சுத்தமே பித்தன்; சொல்லுக் கடங்கான், தனியே யுரைப்பன்; தனியே சிரிப்பன்; எங்கேனு மொருபூ இலைகனி யகப்படில் 115 அங்கங் கதனையே நோக்கி நோக்கித் தங்கா மகிழ்ச்சியில் தலைதடு மாறுவன். பரற்கலும் அவனுக் ககப்படாத் திரவியம்: ஆயிரந் தடவை யாயினும் நோக்குவன். பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை? ஜீவ: 120 ஆமாம்! யாமும் கண்டுளேஞ் சிலகால் நின்றால் நின்ற படியே; அன்றி இருக்கினும் இருப்பன் எண்ணிலாக் காலம். சிரிக்கினும் விழிக்கினும் நலமிலை தீயதே. அவனன் றோமுன் அஞ்சைக் களத்தில் ... குடி: 125 அவன்றான்! அவன்றான்! அழகன்! ஆனந்தன். ஜீவ: அழகிருந் தென்பயன்? தொழிலெலாம் அழிவே. எங்கவன் இப்போது? குடி: இங்குளன் என்றனர். சிதம்பரத் தனுப்பினேன்; சென்றிலன் நின்றான். இதந்தரு நின்கட் டளையெப் படியோ? ஜீவ: 130 மெத்தவும் நன்மை; அப்படி யேசெய். குடி: சித்தம்; ஆயினுஞ் செல்கிலன். முனிவர் பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும். சரியல; இராச்சிய தந்திரத் தவர்க்கென்? ஜீவ: (சகடரை நோக்கி) நல்லது சகடரே! சொல்லிய படியே 135 மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம். விடுமினித் துயரம். சக: இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி. திவ்விய திருவடி வாழுக சிறந்தே! (சகடர் போக, செவிலி வர) ஜீவ: (செவிலியின் முக நோக்கி) 140 என்னை இவள்முகம் இப்படி யிருப்பது? தோன்றம் நன் றன்றே! செவிலி: நேற்றிரா முதலா - ஜீவ: பிணியோ என்கண் மணிக்கு? செவிலி: பிணியா யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம். ஜீவ: சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும். 145 அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும். வந்தவா றென்னை? நடந்தவா றென்னை? செவிலி: அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம் நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப 150 நம்மனை புகுந்த செல்வி. எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த 155 நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப் பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக் கண்படு மெல்லை - கனவோ நினைவோ. - ‘நண்ப! என்னுயிர் நாத’வென் றேங்கிப் 160 புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத் துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி, குழலுஞ் சரியும்; கழலும் வளையும்; மாலையுங் கரியும்; நாலியும் பொரியும்; விழியும் பிறழும்; மொழியுங் குழறும்; 165 கட்டழ லெரியும்; நெட்டுயிர்ப் பெறியும்; நயனநீர் மல்கும்; சயனமே லொல்கும்; இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா; தெய்வம் நொந்தேம், செய்கட னேர்ந்தேம்; அயினிநீர் சுழற்றி அணிந்தேம் பூதி; 170 மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப் பனிநீர் சொரிந்து நனிசேர் சாந்தம் பூசினேம்; சாமரை வீசினேம்; அவையெலாம் எரிமே லிட்ட இழுதா யவட்கு வரவர மம்மர் வளர்க்கக் கண்டு 175 நொந்தியா மிருக்க, வந்தன வாயசம் ‘காகா இவளைக் கா’ வெனக் கரைந்த. சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின; கங்குல் விடிந்தும் அங்கவள் துயரஞ் சற்றுஞ் சாந்த முற்றில ததனால் 180 அரச!நீ அறியிலெஞ் சிரசிரா தென்றே வெருவி யாங்கள் விளைவ துரைக்கும் நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம்; பெண்ணை யந்தார் சூடிட நுந்தம் பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர். 185 எண்ணம் மற்றவர்க் கியாதோ அறியோம்; பனம்பூச் சூடியும் முனம்போ லவேசுரம். ஏது மறியாப் பேதை! நேற்றுத் தவஞ்செய ஆசை யென்றவள் தனக்குக் காதனோய் காணவோ ரேதுவு மில்லை. 190 எந்தாய் இருக்கு நிலைமை இனிநீ வந்தே காண்குதி மன்னவ ரேறே! ஜீவ: ஆ!ஆ! நோவிது காறுமொன் றறிகிலள். இதுவென் புதுமை? என்செய் கோயான்? குடி: தவஞ்செய ஆசை யென்றுதாய் நவின்ற 195 வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச் செய்கையோ என்றோர் ஐயம் ஜனிக்கும்; நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம் அறியலாந் தகைத்தோ? ஜீவ: வறிதவ் ஐயம். மொழியொரு சிறிதும் மொழிந்திலர்; கண்டுழி 200 அழுதனர்; அழுதாள் உடன்நம் மமுதும்; ஆசி பேசியங் ககலுங் காலை ஏதோ யந்திரம் எழுதிவைத் திடவோர் அறையுட னங்கணந் திறவுகோ லோடு தமக்கென வேண்டினர்; அளித்தன முடனே. 205 நமக்கதி னாலென்? நாமறி யாததோ? என்னோ அறியேன் இந்நோய் விளைவு? (ஜீவகனும் செவிலியும் போக) குடி: (தனதுள்) யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்? அவ்வள வறிவி லாரோ முனிவர்? அவ்வள வேதான்; அன்றியென்? ஆயினும், 210 எத்தனை பித்தனிவ் வரசன்! பேதையின் இத்திறங் காமம் என்பதிங் கறியான்; உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே. (குடிலன்போக) முதல் அங்கம் : மூன்றாம் களம் முற்றிற்று. நான்காம் களம் இடம் : கன்னிமாடம். காலம் : மாலை. (மனோன்மணி சயனித்திருக்க; ஜீவகன், வாணி, செவிலி சுற்றி நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன்: உன்னன் பிதுவோ? என்னுயி ரமிர்தே! உனக்குறு துயரம் எனக்குரை யாததென்? விரும்பிய தென்னன் றுரைக்கில் விசும்பில் அரும்பிய அம்புலி யாயினுங் கொணர்வன்; 5 வருத்துவ தென்னென வழங்கின் மாய்ப்பன் உறுத்துங் கூற்றுவ னாயினும் ஒறுத்தே. தாய்க்கு மொளித்த சூலோ? தையால்! வாய்க்கு மொளித்த உணவோ? மங்காய்! ஏதா யினுமெனக் கோதா துளதோ? 10 பளிங்கும் பழித்த நெஞ்சாய்! உனக்குங் களங்கம் வந்த காரண மெதுவோ? பஞ்ச வனக்கிளி செஞ்சொல் மிழற்றி இசையது விரித்தோர் பிசித மரமேல் இருந்து பாடு மெல்லை, ஓர் வானவன் 15 திருந்திய இன்னிசை யமுதிற் செப்பிப் போயது கண்டு, சேயதோர் போந்தையில் தனியே பறந்துபோய்த் தங்கி, அங்கவன் பாடிய இசையே கூவிட உன்னி நாடி நாடிப் பாடியும் வராது. 20 வாடி வாயது மூடி மௌனமாய் வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும் நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில் தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும் பேதாய்! இன்றெனக் கென்னோ 25 ஓதா யுன்றன் உளமுறு துயரே! 1 செவிலி: உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச் சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில் யாம்படுந் துயரம் அறிந்துங், 30 காம்படு தோளீ! கருதாய் போன்மே. 2 ஜீவ: ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ! பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்? பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற் சோறே போலப் பேரே யன்றி 35 வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்! பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி வந்துழி யகலும் பனியெனச் சுந்தர முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக் 40 கனியென வுனையான் கண்டநாள் தொட்டு, நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும் என்மிகை நீக்கி இன்ப மெய்தி, உன் மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற உயிர்தரித் திருந்தேன்! செயிர்தீ ரறமும் 45 வாய்மையும் மாறா நேசமுந் தூய்மையுந் தங்கிய உன்னுளம் என்னுளந் தன்னுடன் எங்கும் கலந்த இயல்பா லன்றோ மறந்தே னுன்தாய் இறந்த பிரிவும்! உன்னை யன்றி யென்னுயிர்க் குலகில், 50 எதுவோ வுறுதி யியம்பாய்? மதிகுலம் விளங்க வருமனோன் மணியே! 3 மனோன்மணி: (கண்ணீர் துளும்பி) எந்தையே! எனதன் பினுக்கோ ரிழுக்கு வந்த தன்று; மேல் வருவது மிலை; இலை. உரைக்கற் பாற்றதொன் றில்லை. 55 உரைப்பதெப் படியான் உணரா தொழியிலே? 4 ஜீவ: குழந்தாய்! என்குலக் கொழுந்தே! அழாய்நீ; அழுவையே லாற்றேன்; நீயழல் இதுவரைக் கண்டது மிலை; யான் கேட்டது மிலையே. பெண்களின் பேதைமை யென்னே! தங்களைப் 60 பெற்றா ருற்றார் களுக்குந் தமக்கும், விழுமம் விளைத்துத் தாமே யழுவர். என்னே யவர்தம் ஏழைமை! மின்னேய் (வாணியை நோக்கி) மருங்குல் வாணீ! வாராய் இப்புறம் அருங்கலை யாய்ந்தநின் தந்தைசொன் மதியும் 65 உன்புத் தியுமுகுத் துழல்வதென் வம்பில்? நலமே சிறந்த குலமே பிறந்த பலதே வனாமொரு பாக்கிய சிலாக்கியன் தன்னை நீ விடுத்துப் பின்னையோர் பித்தனை நச்சிய தென்னை? ச்சீ! 70 நகையே யாகும் நீசெயும் வகையே. 5 வாணி: அகலிடந் தனிபுரந் தாளும் வேந்தே நிகழுமென் சிறிய நினைவெலாம் விரித்து விநயமாய் நின்பால் விளம்ப எனது நாணம் நாவெழா தடக்கு மாயினும் 75 பேணி யொருமொழி பேசுவன், நேசமில் வதுவை நாசகா ரணமே. 6 ஜீவ: புதுமைநீ புகன்றாய்! வதுவைமங் கையர்க்குப் பெற்றா ராற்றுவர்; ஆற்றிய வழியே தையலார் மையலாய் நேயம் பூண்டு 80 வாழ்வது கடமை. அதனில் தாழ்வது தகுதியோ தருமமோ? சாற்றே. 7 வா: கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன்; ஆயினும் ஐயமொன் றுண்டு; நேயமும் ஆக்கப் படும்பொரு ளாமோ? நோக்கில் 85 துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியுங் கானல் வரியும் பாலையில் திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாருவாய்த் தழைத்தும், ஓயாத் தொழிலில் 90 நேருந் தாகம் நீக்குவான் நிமல ஊற்றா யிருந்தவ ருள்ளம் ஆற்றியும், ஆறலைக் கள்வர் அறுபகை மீறில் உறுதுணை யாயவர் நெறிமுறை காத்தும் முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் 95 ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும், இவ்விதம் யாரையுஞ் செவ்விதிற் படுத்தி, இகத்துள சுகத்திற்கு அளவுகோ லாகி, பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், இல்லற மென்பதன் நல்லுயி ரேயாய், 100 நின்ற காதலின் நிலைமை, நினையில், இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா யுருகி ஒன்றாந் தன்மை யன்றி, ஒருவரால் ஆக்கப் படும்பொரு ளாமோ? 105 வீக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே! 8 ஜீவ: ஆமோ அன்றோ யாமஃ தறியேம். பிஞ்சிற் பழுத்த பேச்சொழி, மிஞ்சலை. மங்கைய ரென்றுஞ் சுதந்தர பங்கர். பேதையர். எளிதிற் பிறழ்ந்திடு முளத்தர். 110 முதியவுன் தந்தை மதியிலுன் மதியோ பெரிது? மற் றவர் தமில் உன்னயம் பேண உரியவர் யாவர்? ஓதிய படியே பலதே வனுக்கே உடன்படல் கடமை. வா: இலையெனில்? ஜீவ: கன்னியா யிருப்பாய் என்றும், வா: 115 சம்மதம். ஜீவ: கிணற்றிலோர் மதிகொடு சாடில் எம்மதி கொண்டுநீ யெழுவாய்? பேதாய்! கன்னியா யிருக்கில் உன்னழ கென்னாம்? அரைக்கி லன்றோ சந்தனங் கமழும்? வா: விரைதரு மோசிறு கறையான் அரிக்கில்? ஜீவ: 120 நானே பிடித்த முயற்கு மூன்றுகால் ஆனால் எங்ஙனம்? வா: அரிவையர் பிழைப்பர்? (சேடி வர) சேடி: சுந்தர முனிவர் வந்தனர் வாயிலில். கால நோக்கினர். ஜீவ: சாலவு மினிதே; ஆசனங் கொணர்தி. (வாணியை நோக்கி) யோசனை வேண்டாம்; 125 எப்படி யாயினுங் சகடர் சொற்படி நடத்துவம் மன்றல். நன்குநீ யுணர்தி. ஆயினுந் தந்தனம் ஐந்துநாள். ஆய்ந்தறி விப்பாய் வாய்ந்தவுன் கருத்தே. 9 வா: இறக்கினும் இறைவ! அதற்கியா னிசையேன். 130 பொறுத்தருள் யானிவண் புகன்ற மறுத்துரை யனைத்தும் மாற்றல ரேறே. 10 (சுந்தரமுனிவர் வர) ஜீவ: (முனிவரைத் தொழுது) வணங்குது முன்றன் மணங்கமழ் சேவடி. இருந்தரு ளுதியெம் இறைவ! பரிந்துநீ வந்ததெம் பாக்கியப் பயனே. 11 சுந்தர: (மனோன் மணியை நோக்கி) 135 தீதிலை யாதும்? க்ஷேமமே போலும். ஏதோ மனோன்மணி! ஓதாய் வேறுபா டாய்நீ விளங்குமாறே. 12 மனோன்மணி: (வணங்கி) கருணையே யுருவாய் வருமுனீ சுரரே எல்லா மறியும் உம்பாற் 140 சொல்ல வல்லதொன் றில்லை. சுகமே. 13 செவிலி: (மனோன்மணியை நோக்கி) கரும்போ, யாங்கள் விரும்புங் கனியே! முனிவர் பாலுநீ யொளிப்பையே லினியிங்கு யார்வயி னுரைப்பாய்! ஐயோ! இதுவென்? (முனிவரை நோக்கி) ஆர்வமும் ஞானமும் அணிகல னாக்கொள் 145 தேசிக வடிவே! செப்புமா றறிகிலம் மாசறு மனோன்மணி தன்னுரு மாறி நேற்றிரா முதலாத் தோற்றுந் தோற்றம். மண்ணாள் மேனியும்; உண்ணாள் அமுதும்; நண்ணாள் ஊசலும்; எண்ணாள் பந்தும்; 150 முடியாள் குழலும்; படியாள் இசையும்; தடவாள் யாழும்; நடவாள் பொழிலும்; அணியாள் பணியும்; பணியாள் ஏவலும்; மறந்தாள் கிளியும்; துறந்தாள் அனமும்; தூங்குவள் போன்றே ஏங்குவள்; எளியை! 155 நோக்குவள் போன்றே நோக்குவள் வெளியை; கேட்டுங் கேட்கிலள்; பார்த்தும் பார்க்கிலள்; மீட்டுங் கேட்பள்; மீட்டும் பார்ப்பள்; தனியே யிருப்பள்; தனியே சிரிப்பள்! விழிநீர் பொழிவள்; மெய்விதிர்த் தழுவள்; 160 இங்ஙன மிருக்கில் எங்ஙன மாமோ? வாணியும் யானும் வருந்திக் கேட்டும் பேணி யிதுவரை ஒருமொழி பேசிலள். அரசன் கேட்டும் உரைத்திலள். அன்பாய் முனிவ! நீ வினவியும் மொழியா ளாயின் 165 எவருடன் இனிமேல் இசைப்பள்? தவவுரு வாய்வரு தனிமுதற் சுடரே! 14 சுந்தர: (ஜீவகனை நோக்கி) குழவிப் பருவம் நழுவுங் காலை களிமிகு கன்னிய ருளமும் வாக்கும் புளியம் பழமுந் தோடும் போலாம். 170 காதல் வெள்ளங் கதித்துப் பரந்து மாத ருள்ளம் வாக்கெனும் நீண்ட இருகரை புரண்டு பெருமூச் செறியில், எண்ண மெங்ஙனம் நண்ணும் நாவினை? தாதா அன்பு போதா தாகும் 175 காலங் கன்னியர்க் குளதெனும் பெற்றி சாலவும் மறந்தனை போலும். தழைத்துப் படர்கொடி பருவம் அணையில், நட்ட இடமது துறந்துநல் லின்ப மெய்த அருகுள தருவை யவாவும் அடையின் 180 முருகவிழ் முகையுஞ் சுவைதரு கனியும் அகமகிழ்ந் தளித்து மிகவளர்ந் தோங்கும்; இலையெனில் நலமிழந் தொல்கும். அதனால் நிசிதவே லரசா டவியில் உசிதமா மொருதரு விரைந்துநீ யுணரே. 15 ஜீவ: 185 எங்குல குருவே! இயம்பிய தொவ்வும். எங்குள திக்கொடிக் கிசைந்த பொங்கெழில் பொலியும் புரையறு தருவே. 16 சுந்தர: உலகுள மற்றை யரசெலாம் நலமில் கள்ளியுங் கருவேற் காடுமா யொழிய, 190 சகமெலாந் தங்க நிழலது பரப்பித் தொலைவிலாத் துன்னலர் வரினும் அவர்தலை யிலையெனும் வீரமே இலையாய்த் தழைத்து, புகழ்மணங் கமழுங் குணம்பல பூத்து, துனிவரு முயிர்க்குள துன்பந் துடைப்பான் 195 கனியுங் கருணையே கனியாக் காய்த்து, தருமநா டென்னும் ஒருநா மங்கொள் திருவாழ் கோடாஞ் சேரதே சத்துப் புருடோத் தமனெனும் பொருவிலாப் புருடன் நீங்கி லில்லை நினது 200 பூங்கொடி படரப் பாங்காந் தருவே. 17 ஜீவ: நல்லது! தேவரீர் சொல்லிய படியே, இடுக்கண் களைந்த இறைவ! நடத்துவன் யோசனை பண்ணி நன்றே. 18 சுந்தர: யோசனை வேண்டிய தன்று. நடேசன் 205 என்றுள னொருவன். ஏவில், சென்றவன் முடிப்பன் மன்றல் சிறக்கவே. 19 ஜீவ: கெடலறு சூழ்ச்சிக் குடிலனோ டுசாவி ... ... சுந்தர: (எழுந்து) அரகர! குருபர! கிருபா நிதியே! காவாய் காவலன் ஈன்ற 210 பாவையை நீயே காவாய் பசுபதே ! 20 (சுந்தரமுனிவர் போக) ஜீவ: தொழுதோம்; தொழுதோம். செவிலி! யவ்வறைக் கெழுதுங் கருவிகள் கொணராய் பழுதிலாக் குடிலற் குணர்த்துவம் பரிந்தே. (ஜீவகன் முதலியோர் போக) முதல் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று. ஐந்தாம் களம் இடம் : குடிலன் மனை. காலம் : மாலை. (குடிலன் உலாவ.) (இணைக்குறள் ஆசிரியப்பா) குடிலன்: (தனிமொழி) புத்தியே சகல சக்தியும்! இதுவரை நினைத்தவை யனைத்தும் நிறைவே றினவே. உட்பகை மூட்டிப் பெட்புற் றிருந்த மதுரையாம் முதுநகர் விடுத்து மன்னனைப் 5 புதியதோர் பதிக்குக் கொணர்ந்து புரிசையுங் கட்டுவித் தோம்நம் இட்டமாம் வகையே நாமே யரசும் நாமே யாவும்; மன்னவன் நமது நிழலின் மறைந்தான்; பிடித்தாற் கற்றை விட்டாற் கூளம்; 10 மதுரையை நெல்லை இனிமேல் வணங்குமோ? இதுதனக் கிறைவன் இறக்கில் யாரே அரச ராகுவர்? - (மௌனம்) புரவலன் கிளைஞர் புரிசையைக் கேட்கினும் வெருளுவர். வெல்லார். ஆயினும் - 15 முழுதும் நம்மையே தொழும்வகை யிலையோ? கருவியுங் காலமும் அறியில் அரியதென்? ஆ! ஆ! அயர்த்தோம் அயர்த்தோம்! மயக்கம் மனோன்மணி கொண்டதை முற்றும் அயர்த்தோம்! ஆ! ஆ! ஆயிழை யொருவனைக் 20 கண்டு காமங் கொண்டவ ளல்லள்; பருவம் வருதலாற் பற்றல் விழைந்தனள். அருகுள தெட்டியே யாயினும் முல்லைப் படர்கொடி படரும்; பலதே வனையவள் இடமே பலமுறை யேவி லுடன்படல் 25 கூடும். கூடிலென் கூடா? யாவன் அஃதோ வருமொரு சேவகன்? (சேவகன் வர) சேவகன்: ஜய! ஜய! விஜயீ பவகுடி லேந்திரா? (திருமுகம் கொடுக்க) குடி: (வாசித்து நோக்கி) நல்ல தப்புறம் நில்லாய்; ஓ! ஓ! சொல்லிய தார்கொல்? சுந்தர னேயாம் (சேவகன் ஒருசாரிருந்து தூங்க) 30 அடுத்தது போலும் இம்மணம், அவசியம் நடக்கும். நடக்கிலென்? நமக்கது நன்றே. அரசர்கட் காயுள் அற்பமென் றறைவர்; பிரியமாந் தன்மகட் பிரிந்து வெகுநாள் வாழான் வழுதி, வஞ்சி நாட் டார்க்குத் 35 தாழார் இந்நாட் டுள்ள ஜனங்களும். அதுவும் நன்றே - ஆயினுங் கால தாமதஞ் சாலவு மாகும்; வேறோரு தந்திரம் வேண்டும்; ஆ! ஆ! மாறன் மாண்டான்; மன்றலும் போனது; 40 சேரன் இறுமாப் புடையதோர் வீரன் ஆமெனப் பலரும் அறைவர். அதனால் நாமவன் பால்விடுந் தூதுவர் நலம்போன் மெள்ள அவன்றன் செருக்கினைக் கிள்ளிற் படைகொடு வருவன்; திண்ணம். பாண்டியன் 45 அடைவதப் போதியாம் அறிவம். போர்வந் திடிலிவன் நேர்வந் திடுமெலாம் யார் இற வார்கள்? யார் அறி வார்கள்? முடிதன் அடிவிழில் யாரெடுத் தணியார்? அரச வமிசக் கிரமம் ஓரில் 50 இப்படி யேமுத லுற்பவம் இருக்கும் சிலதலை முறையாப் பலவரு டஞ்செலில் இந்துவில் இரவியில் வந்தோ ரெனவே, மூட உலகம் மொழியும், யாரே நாடுவர் ஆதியை? நன்று நன்றிது! 55 தோடம்! - சுடு! சுடு! தீது நன்றென ஓதுவ வெல்லாம் அறியார் கரையும் வெறுமொழி யலவோ? பாச்சி பாச்சி என்றழும் பாலர்க்குப் பூச்சி பூச்சி என்பது போலாம்; 60 மன்னரை உலகம் வணங்கவும் பார்ப்பார்க் கன்னங் கிடைக்கவும் அங்ஙன மறைந்து மதியி லாரை மயக்குவர் வஞ்சமாய். அதினால் நமக்கென்? அப்படி நினைக்கில் இதுவரை இத்தனை நன்மையெப் படிவரும்? 65 பார்க்குதும் ஒருகை. சுந்தரன் யந்திரங் காக்கும் வகையுங் காண்போம்; சுவான சக்கரம் குக்கனைத் தடுத்திடும் வகையே யந்திரத் தந்திரம் இருப்பதென் றறியான். பித்தன் மெத்தவும்! நமக்கினி இதுவே 70 உத்தம உபாயம். ஓகோ! சேவக! சித்தம் மெத்தக் களித்தோம் இந்த மணவுரை கேட்டென மன்னன் துணியப் பாவனை பண்ணுவோம். ஏ! ஏ! சேவக! (சேவகன் எழுந்துவர) இன்றுநாம் உற்றஇவ் வின்பம் போல 75 என்றும் பெற்றிலம். இணையறு மாலை இந்தா! தந்தோம். இயம்பாய், வந்தோம் விடியுமுன் மன்னவைக் கென்றே. (நேரிசை ஆசிரியப்பா) சேவ: வாழ்க! வள்ளால்! நின்உதா ரம்போல் ஏழுல கெவற்றிலும் உண்டோ? 80 வாழ்க! எப்போதும் மங்கலம் வரவே. குடி: (தனிமொழி) நல்லது; விரைந்து செல்வாய்! நொடியில் (சேவகன் போக) மதியிலி! என்னே மனிதர் மடமை! இதுவும் உதாரமாய் எண்ணினன்; இங்ஙனம் தருமந் தானம் என்றுல கறியுங் 85 கருமம் அனைத்துஞ் செய்பவன் கருத்தைக் காணின் நாணமாம்; அவரவர் தமக்கா எண்ணிய எண்ணம் எய்துவான் பலவும் பண்ணுவர் புண்ணியம் போல, எல்லாந் தந்நயங் கருதி யன்றித் தமைப்போற் 90 பின்னொரு வனையெணிப் பேணுவ ருளரோ? புண்ணியஞ் சீவகா ருண்ணிய மெனப்பல பிதற்றுதல் முற்றும் பித்தே, அலதேல் யாத்திரை போன நூற்றுவர், சோறடு பாத்திரந் தன்னிற் பங்கு பங்காக 95 ஒருவரை யொருவர் ஒளித்துப் பருமணல் இட்ட கதையா யிருக்குமோ? அவ்வளவு எட்டுமோ உலகின் கட்டைச் சிறுமதி? - ஆயினும், அரசனைப் போலிலை பேயர் பெரிய மேதினி யெங்குமே. முதல் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. (கலித்துறை) சீரும் வதுவையுஞ் சேர்முறை செப்பியுஞ் சீவகன்றான் போரும் நிதனமும் புந்திசெய் மந்திரம் போற்றினனே சாருந் தனுகர ணங்களைத் தானெனுந் தன்மைவந்தால் யாரும் அருள்வழி நிற்கிலர் மாயை யடைவிதுவே. முதல் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா 52 -க்கு அடி 830 ஆசிரியத் தாழிசை 6 -க்கு அடி 18 வெண்பா 2 -க்கு அடி 8 கலித்துறை 1 -க்கு அடி 4 ஆக, அங்கம்1-க்கு: பா. 61 -க்கு அடி 860 இரண்டாம் அங்கத்தின் விளக்கம் முதற்களம் பாண்டியன் ஜீவகனும் அமைச்சன் குடிலனும் மனோன்மணி யின் திருமணத்தைப்பற்றி ஆலோசனை செய்கின்றனர். சேரநாட்டு மன்னன் புருஷோத்தமனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்கு மாறு கூறியவர் சுந்தரமுனிவரே என்பதைத் தெரிவித்து அதனை விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று அரசன் கூறுகிறான். திருமணத்தைப் பற்றி மகிழ்ச்சி கொண்டவன்போலக் குடிலன் நடித்து, இதுபற்றித் தானும் பல நாட்களாகக் கருதியதுண்டு என்றும், கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்ததால் இதுபற்றிப் பேச முடியாமற் போயிற்றென்றும், மனோன்மணியை உருவும் திருவும் அறிவும் ஆண்மையும் படைத்த புருஷோத்தமனுக்கே மணம் செய்விப்பது தகுதி என்றும், அறியாதவர் பலவாறு பேசினாலும் உடனே தூது அனுப்புவது தகுதி என்றும் அரசனிடம் கூறுகிறான். ‘அறியாதவர் பலவாறு பேசுவர்’ என்பதன் கருத்து என்ன வென்று அரசன் கேட்கக் குடிலன், ‘மணமகன் வீட்டாரே மணமகளைத் தேடி வருவது உலக வழக்கம்; மணமகள் இல்லத்தார் முதன் முதலில் மணமகன் இல்லத்தைத் தேடிப் போவது வழக்கம் அல்ல. ஆனால், அவசர காரியத்துக்குச் சாத்திரம் சம்பிரதாயம் பார்க்க வேண்டிய தில்லை’ என்று கூறுகிறான். ‘உலக வழக்கம் அப்படியானால் நாம் தூது அனுப்பவேண்டியதில்லை. மனோன்மணியை மணஞ் செய்ய விரும்பாத அரசர்கள் உண்டோ’ என்று அரசன் கூற, அதற்கு அமைச்சன் கூறுகிறான்: ‘குமாரி மானோன்மணியை விரும்பாத அரசர்கள் யாருளர்? சோழன், கலிங்கன், கன்னடன், காந்தாரன், மச்சன், கோசலன், விதர்ப்பன், மராடன், மகதன் முதலாய அரசர்கள் மனோன்மணியை மணம்புரிய ஆவல் கொண்டு தவஞ்செய்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு குறை உண்டு. ஆனால், அவன் கருத்தை அறியாமல் நாம் எப்படித் தூது அனுப்புவது என்பதுபற்றித் தான் சிந்திக்கிறேன்.’ இவ்வாறு அமைச்சன் கூறியதைக் கேட்ட அரசன், புருஷோத் தமன் கருத்தை அறியும் உபாயம் யாது என்று வினவ, குடிலன், அதற்கு உபாயம் உண்டு எனக் கூறி, அதனை விளக்கிச் சொல்கிறான். ‘இப்போது சேரமன்னன் ஆட்சிக்குட்பட்டிருக்கிற நன்செய்நாடு (நாஞ்சில் நாடு) என்று ஒரு நாடு உண்டு. அது முறைப்படி பாண்டியராகிய உமக்கே உரியது. அது நீர்வளம், நிலவளம் பொருந்திய செழிப்பான நாடு. அங்கு வழங்குவது மலையாளமொழி அல்ல; தமிழ் மொழி. அங்கு வழங்கிவருகிற பழக்கவழக்கங்களும் தமிழரின் பழக்கவழக்கங்களே. (இந்த நன்செய் நாட்டின் இயற்கை எழிலையும் வளப்பங்களையும் நூலாசிரியர் இங்குக் குடிலன் வாயிலாக நன்கு சிறப்பிக்கிறார்.) இந்நாடு இப்போது சேரன் ஆட்சியில் இருந்த போதிலும், அதன் உரிமையை நாம் விட்டுவிடவில்லை. அதனைக் கைப்பற்றுவதற்காகத்தானே அதற்கு அருகிலே இந்தத் திருநெல்வேலிக் கோட்டையைக் கட்டினோம்? இப்போது புருஷோத்தமனிடம் தூது அனுப்பி நன்செய் நாட்டைத் திருப்பிக் கொடுக்கும்படி கேட்போம். நமது புதிய கோட்டையின் வலிமையைக் கருதி அவன் திருப்பிக் கொடுப்பான். அல்லது ஏதேனும் வாதம் தொடங்குவான். அந்தச் சமயத்தில் இரு தரத்தாருக்கும் பொதுவான முறையில் இந்தத் திருமணத்தைப் பேசி முடிப்போம்.’ இவ்வாறு சூழ்ச்சியாகக் குடிலன் பேசியதை அரசன், உண்மை எனக் கருதி ‘இது நல்ல உபாயந்தான். மெத்த மகிழ்ச்சி’ என்று கூறுகிறான். குடிலன், இந்தக் காரியம் கைகூடவேண்டுமானால், தூது போகிறவர் திறமையுள்ளவராயிருக்க வேண்டும். பெருமானடிகளே தகுந்த தூதனைத் தேர்ந்தெடுத்தனுப்புங்கள் என்று கூறுகிறான். அதற்கு அரசன், ‘ உமது மகன் பலதேவன் இருக்கிறானே. அவன் முன்னமே சில தடவைகளில் பகையரசர்களிடம் தூது சென்றிருக்கிறான் அல்லவா? அவனையே தூது அனுப்புவோம்’ என்று கூறுகிறான். குடிலன் நினைத்த காரியம் கைகூடிற்று என்று மனத்தினுள் மகிழ்ச்சிகொண்டு அதை வெளியில் காட்டாமல், ‘அடியேனுடைய உடல் பொருள் ஆவி சுற்றம் யாவும் அரசர்பெருமானுக்குரியனவே. பலதேவனைத் தூது அனுப்பலாம். ஆனால், அவன் இளைஞன். இப்பெரிய காரியத்துக்கு அவனைத் தூது அனுப்புவது தகுமோ என்று யோசிக்கிறேன்’ என்று மனமில்லாதவன்போலக் கூறுகிறான். வெள்ளையுள்ளம் படைத்த அரசன், ‘பெரிய காரியம் ஆனால் என்ன? சேரனிடம் சொல்ல வேண்டியவைகளை எல்லாம் முறையாகச் சொல்லி அனுப்பினால் பலதேவன் நன்றாக எடுத்துக் கூறுவான். இந்தக் கஷ்டங்களை எல்லாம் உணராமல், பித்துக்கொள்ளி நடராஜனைத் தூது அனுப்பும்படி நமது குருநாதர் கூறுகிறார்’ என்று சொன்னான். ‘அரசர் பெருமானே! அவருக்குத் தெரிந்தது அவ்வளவு தான். துறவி குளத்தை வெட்டு என்று சொல்லத் தெரியுமே தவிர அரச தந்திரம் அவர்களுக்குத் தெரியாது. அரசர்களிடம் தூதுசெல்ல நடராஜனுக்கு என்ன தகுதி உண்டு? பெண்களிடம் தூதுசெல்லத் தகுதி யுடைவன் அவன்’ என்றான் குடிலன். காலம் கடத்தாமல் உடனே பலதேவனைத் தூது அனுப்புக என்று அரசன் கூற ‘கட்டளைப்படியே இன்றே அனுப்புகிறேன்’ என்று கூறி விடைபெற்றுச் சென்றான் அமைச்சன். தனித்து அமர்ந்திருக்கும் பாண்டியன், ‘கூர்த்த மதியுள்ள குடிலனை நமது அமைச்சனாகப் பெற்றது நமது பாக்கியம்’ என்று தனக்குள்ளே பேசிக் கொள்கிறான். அவ்வமயம் நகரப் பிரபுக்கள் சிலரும் நாராயணனும் அவ்விடம் வருகிறார்கள். அரசன் அவர்களிடத்திலும் தன் அமைச்சனைப் பற்றிப் புகழ்ந்து பேசுகிறான். சற்று முன்புதான் நமது அமைச்சருடன் இராஜீய காரியமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய அறிவே அறிவு என்று அரசன் புகழ்ந்து கூறுகிறான். ‘இதனைக் கேட்ட பிரபு ஒருவர், ‘அதற்கென்ன ஐயம்! குடிலனுடைய அறிவுக்கு எல்லை யுண்டா? தேவகுருவும் அசுரகுருவுங்கூட இவரிடம் வந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார். குடிலனுடைய அறிவும் திறமையும் அரசருக்குத் தீமை பயக்கும் என்று நாராயணன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டான். மற்றொரு பிரபு, ‘அரசர் பெருமானிடத்திலும் அரச குடும்பத்தினிடத் திலும் அமைச்சருக்கு இருக்கிற பக்தி சொல்லி முடியாது. இராமரிடம் அனுமானுக்கு இருந்த பக்தி போன்றது அவருடைய பக்தி’ என்று மெச்சிப் பேசினார். ‘இதுவும் முழுப் பொய். அரசர் இதனையும் உண்மை என நம்புவார்’ என்று தனக்குள் பேசிக் கொண்டான் நாராயணன். அவ்வமயம் அங்கிருந்த சேவகர், அரசனை வணங்கித் தன் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றிக்காட்டி, ‘அரசர் பெருமான் நேற்று அடியேனிடம் திருமுகம் கொடுத்து அனுப்பியபோது, திருமணச் செய்தியையறிந்து மகிழ்ச்சியடைந்து அதற்கு அடையாள மாக இந்த முத்துமாலையை அமைச்சர் அடியேனுக்கு வெகுமதியாக அளித்தார்’ என்று கூறினான். இதைக் கேட்டு, ஏதோ பொல்லாங்கு அரசருக்குச் செய்ய எண்ணியிருக்கிறான் என்பது இதனால் நன்கு தெரிகிறது என்று தனத்குள் சொல்லிக்கொள்கிறான் நாராயணன். ‘பாருங்கள் அமைச்சருடைய இராஜபக்தியை. இராமனுக்குப் பரதன் போலவும், முருகனுக்கு வீரபாகு தேவர் போலவும் அரசர் பெருமானிடம் சுவாமி பக்தியுள்ளவர் குடிலர்’ என்று மற்றொரு பிரபு அபிப்பிராயங் கூறினார். நாராயணன் வெளியே போய், தனது மூக்கில் கரி பூசிக்கொண்டு உள்ளே வருகிறான். அவனது மூக்கைக் கண்டு அரசன் நகைத்து, ‘என்ன நாரண, உனது மூக்குக் கரியாயிருக்கிறது’ என்று கேட்டான். ‘புறங் குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி, மூக்கிற் கரியாருடைத்து’ என்னும் திருக்குறளை நினைவுறுத்துவதற்காக இப்படிச் செய்துகொண்டேன்’ என்று விடைகூறுகிறான் நாராயணன். இதைக் கேட்டு எல்லோரும் நகைக்கிறார்கள். பிறகு பிரபுக்கள் அரசனிடம் விடைபெற்றுச் செல்கிறார்கள். அரசன், நாராயணனைப் பார்த்து, ‘உனக்கென்ன பைத்தியமா? ஆமாம். நடேசனுடைய தோழன்தானே. அவனைப்போல நீயும் பைத்தியக் காரன்தான்’ என்று கூற, நாராயணன், ‘எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகும் மாந்தர் பலர்’ என்று திருக்குற ளினால் விடையளிக்கிறான். ‘திருக்குறள் எதற்கும் இடம் அளிக்கும். அதை விடு’ என்று கூறி அரசன் சேவகனுடன் செல்கிறான். நாராயணன் தனியே இருந்து தனக்குள்ளே சிந்திக்கிறான். ‘வெள்ளை யுள்ளம் படைத்த அரசன் குடிலனை முழுதும் நம்பியிருக்கிறான். குடிலனோ சூது வாது அறிந்த சுயநலக்காரன். இவனை எல்லோரும் நல்லவன் என்றே நம்புகிறார்கள். இவனுடைய கள்ள உள்ளத்தை அறிந்தவர்களும் இவன் கள்ளத்தனத்தை வெளியில் சொல்ல அஞ்சு கிறார்கள். அரசாட்சி, நெருப்பு ஆறும் மயிர்ப் பாலமும் போன்றது. அரசர் பெருமான் விழிப்பாக இருந்தால் பிழைப்பார்; இல்லையேல் படவேண்டியதைப் பட்டே தீரவேண்டும். அரசருக்கு உதவி செய்து அரச காரியங்களைச் செம்மையாகவும், முறையாகவும், நேர்மை யாகவும் செலுத்தவேண்டுவது அமைச்சர் கடமை. அதை விட்டு இந்த அமைச்சன் அரசனைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றக் கள்ளத் தனமாகச் சூழ்ச்சிகளைச் செய்கிறான். அந்தோ ! இவனுடைய சூது வாதுகளை வெளிப்படுத்துவது எப்படி? வெளிப்படையான சான்று களைக் காட்டினால்தானே நம்புவார்கள்? சூழ்ச்சிக்காரர்கள் சான்றுகள் தெரியும்படியா காரியம் செய்கிறார்கள்? அரசன் குடிலனுடன் ஏதோ மந்திராலோசனை செய்ததாகக் கூறினான். நடேசன் பெயரையும் குறிப்பிட்டார். அரசருக்கு ஏதோ ஆபத்து வரும்போல் தோன்றுகிறது.’ இவ்வாறு தமக்குள் நாராயணன் எண்ணிக் கொண்டே போகிறான். இரண்டாம் களம் காலைவேளையின் இயற்கைக் காட்சிகளைக் கண்டுகொண்டு நடராஜன் நிற்கிறான். அக்காட்சிகளைப் பற்றித் தனக்குத் தானே பேசிக்கொள்கிறான். ஒன்றும் புலப்படாமல் இருள் முடிக்கிடந்த இந்த உலகம், சூரியன் ஒளிபரப்பிப் புறப்படுகிற இக் காலைவேளையில், ஓவியன் ஒருவன் கிழிச்சீலையிலே வர்ணங்களைக் கொண்டு ஓவியம் எழுதிக் காட்டுவதுபோலக் காணப்படும் காட்சி அழகானது. சுரைக் கொடி படர்ந்த வீட்டுக் கூரையின் மேலே ஏறி ஒய்யாரமாக நிற்கிற சேவல் சிறகை அடித்துக்கொண்டு கொக்கரக்கோ என்று கூவுவதும், கருநிறக் காகங்கள், சூரியன் தம்மையும் இருள்கூட்டங்கள் என்று கருதித் துரத்து வானோ என்று ஐயங்கொண்டு ‘நாங்கள் காக்கைகள், இருட் கூட்டம் அல்ல’ என்று சொல்லுவது போலக் கா, கா என்று கூவிக் கொண்டு நாற்புறமும் பறந்து செல்லும் காட்சியும், பறவைக் கூட்டங்கள் பலநிறம் அமைந்த தமது சிறகுகளைத் தாளம் போடுவதுபோல அசைத்து இனிய குரல்களினால் பாடுவதும் காண்பதற்கும் கேட்பதற்கும் இனிமையானது. இதோ நீரோடும் இந்த வாய்க்காலில் ஆணும் பெண்ணும் ஆன இரண்டு நாரைகள் அன்புடன் காதல் செலுத்துகின்றன. வாணி ! நற்குணம் வாய்ந்த நங்காய் ! அன்றொரு நாள் நாம் இருவரும் அன்பு செலுத்திய இடமும் இதுதானே ! புத்தம் புதிய குவளைமலரைப் பறித்து அன்று உன்னிடம் கொடுத்தபோது, அதனை நீ உன் கூந்தலில் சூட்டிக் கொள்ளாமல், ஓடுகிற நீரில் விட்டு வேடிக்கை பார்த்தனை. உடனே நான் என்ன எண்ணுவேனோ என அஞ்சி நீ நெஞ்சம் கலங்கினாய். அந்தக் காட்சி இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது. வாணி! கவலைப் படாதே. நீ வேண்டுமென்று அப்படிச் செய்யவில்லை என்பதை நான் அறிவேன். உன் உள்ளமும் என் உள்ளமும் ஒன்றுபட்ட பின்னர் உன் கருத்து என்ன என்பதை நான் அறியேனா?’ இவ்வாறு நடராஜன் தனக்குள் எண்ணமிட்டுக்கொண்டிருக்கும்போது, யாரோ கூறிய “வாணி” என்னும் சொல் அவன் காதில் விழுந்தது. அச்சொல் வந்த வழியே திரும்பிப் பார்த்தான். ஒருபுறத்தில் பலதேவனும் அவனுடைய தோழனும் நற்றாய் ஒருத்தியும் நின்று பேசிக் கொண்டிருப்பதைக் கண்டான். கண்டு, மறைந்து நின்று அவர்கள் பேசுவதைக் கூர்ந்து கேட்கிறான். “நீ என் மகளைக் கெடுத்தாய்; உன்னை நம்பி அவள் கெட்டாள். அவளுடைய வாழ்வு அழிந்தது. வாணியை நீ மணம்செய்யப் போகிறாய். அன்று என் மகள் தலையை உன் கையினால் தொட்டு ஆணையிட்டாய். இன்று நீ வாணியை மணம் செய்யப்போவதாகக் கூறுகிறார்கள். என் மகள் சாகக்கிடக்கிறாள். எங்கள் வீட்டுக்கு வரமாட்டாயா? இதோ இந்தக் கடிதத்தைப் படித்து என் மகளின் துயரத்தைத் தெரிந்துகொள்” என்று அந்தத் தாய் பேசினாள். “அந்தக் கதைகளை எல்லாம் நீ நம்பாதே. அந்தக் கிழவன் பண ஆசைகொண்டு வாணியை எனக்கு மணஞ்செய்துகொடுக்கத் துடிக் கிறான். எனக்கு அலுவல் இருந்தபடியால் வரமுடியவில்லை. இதோ இந்தத் தங்க வளைகளைக் கொண்டுபோய் உன் மகளுக்குக் கொடு. நான் இன்று திருவனந்தபுரம் போகிறேன். இன்னும் இரண்டு நாளில் திரும்பி வருவேன். வந்தவுடன் உன் வீட்டுக்கு வருகிறேன்” என்று பலதேவன் விடை கூறினான். அந்தத் தாய் பொன்வளைகளைப் பெற்றுக்கொண்டு போகிறாள். தோழன் பலதேவனைப் பார்த்து, “இது எத்தனையாவது இடம்? ஐந்தோ ஆறோ? வாணியை மணம்செய்து விலங்கு மாட்டிக்கொண்ட பிறகு இதெல்லாம் போய்விடும்” என்று கூறினான். “வாணியானால் என்ன, மனோன்மணியானால் என்ன! அதெல்லாம் உலகம் மதிப்பதற்காகக் கலியாணம். காரியத்தில் நமது இஷ்டம்போல் நடக்கவேண்டும். வா போகலாம். எனக்காக ஆட்கள் காத்திருப்பார்கள்” என்று கூறிக்கொண்டே பலதேவன் நண்பனை அழைத்துக்கொண்டு போய்விட்டான். மறைவாக இருந்த நடராஜன் கோபம் பொங்கத் தனக்குள்ளே பேசிக்கொள்கிறான்: “இவ்வளவு துஷ்டர்கள் இவ்வுலகத்தில் இருக்கிறார்களா ! பாதகன் ! கயவன் ! நற்குணமுள்ள வாணிக்குத் தகுந்தவனா இவன்? இவன் ஏன் திருவனந்தபுரம் போகிறான்?” இவ்வாறு தனக்குள்ளே சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, அவன் நண்பன் நாராயணன் அங்கு வருகிறான். வந்த நாராயணனிடம், பல தேவன் திருவனந்தபுரம் போகிற காரியம் என்னென்று கேட்க, வாணியின் திருமணத்தைப்பற்றித் தூது போகிறதாகக் கூறினான். பிறகு, பலதேவனை மணக்கும்படி அரசன் வாணியை வற்புறுத்திக் கூறினான் என்றும், அதற்கு அவள் ‘செத்தாலும் அவனை மணஞ்செய்ய மாட்டேன்’ என்று கூறியதாகவும் நடராஜனிடம் தெரிவிக்கிறான். “அப்படியா? சற்று முன்பு அவளைப்பற்றி வேறுவிதமாக எண்ணினேன்” என்றான் நடராஜன். நாராயணன், “பெண்மனத்தை எப்படி நம்புவது? ‘ செத்தாலும் பலதேவனை மணக்கமாட்டேன்’ என்று கூறினாளே தவிர, உன்னை மணப்பதாக அவள் அரசனிடம் கூறவில்லையே? நீதான் அவளைப்பற்றி உருகுகிறாய்” என்றான். “இல்லை; புருடரே தீயர். இரக்கமில்லா இருளுடைய நெஞ்சர். காதகர், கடையர்” என்றான் நடராஜன். “மாதர்கள் எவ்வளவுதான் ஓதியுணர்ந்தவரானாலும் உறுதியான மன மில்லாதவர்கள். கடலில் அலை வீசுவதுபோல அவர்கள் உள்ளம் நிலைத்திராமல் அலைந்து கொண்டேயிருக்கும்” என்றான் நாராயணன். நடராஜன் கூறுகிறான்: “கடலில் அலை அடிப்பது கரை ஓரத்திலேதான்; நடுக்கடலில் அலையில்லாமல் அமைதியாக இருக்கும். பம்பரம் சுழன்று சுழன்று ஆடினாலும் அது ஓரிடத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டு தான் சுழல்கிறது. அதுபோல, பெண்களின் மனம் புறத்தில் உறுதியற்றது போலத் தோன்றினாலும் அகத்தில் நிலைத்த உறுதியுள்ளவர்கள். அப்படியல்லர் ஆண்கள். திருமணத்தை ஓர் வாணிகமாகக் கொள்கின்றனர். வாழ்க்கை என்னும் கடலில் ஓடுவது ஆடவர் நெஞ்சம் என்னும் படகு. இந்த நெஞ்சமாகிய படகைப் பாதுகாப்புள்ள நல்ல துறையில் போய்ச் சேராதபடி எண்ணம் என்னும் காற்று அடித்து அப்படகைத் திசைகள் எங்கும் ஓடி அலையச் செய்கிறது. இவ்வாறு திசை தெரியாமல் அலைந்து திரியும் ஆடவர் நெஞ்சமாகிய படகை, பாதுகாப்பான குடாக்கடலில் செலுத்தி அறத் துறை என்னும் துறை முகத்தை அடையச்செய்து நங்கூரம் பாய்ச்சி நிறுத்துகிறவர் ஆடவரை மணந்த மங்கையர். அன்றியும், ஆடவர், வாழ்க்கையில் செயல் படும்போது பொய்யும் வழுவுமான வழிகளில் மோதுண்டு ஆசையென்னும் திசைகளில் அலைந்து திரியாமல் ஆடவ ராகிய மரக்கலத்தை நல்வழியில் செலுத்தும் சுக்கான் போன்றவர் மங்கையர். இதனை அறியாத ஆண்கள் மிருகங்களிலும் தாழ்ந்தவராய், சிற்றின்பத்தையே விரும்பித் தமது வாழ்க்கைத் துணைவரையும் தம்மையும் அழுந்தச் செய்யும் சேறாக மாற்றுகிறார்கள். தவஞ்செய்து மந்திர வாளைப் பெற்றவன், அவ் வாளினால் பகைவரை அழித்து நன்மை யடையாமல், தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளவும், தனக்குத் துணையா யுள்ளவர்களைத் துன்புறுத்தவும், அவ் வாளைப் பயன்படுத்துவது போல, அவர்கள் பாலையும் நஞ்சாகச் செய்யும் அறிவிலிகள். அன்பும் நல்ல குணமும் உள்ளவர் இல் வாழ்க்கைத் துணைவர்களானால், அவர்களுக்கு உலகத்தில் இல்லாதது யாது? அவர்களே கல்வியும் நல்லறிவும் உடையவர்களானால் பொன்மலர் மணம் பெற்றதுபோலாவர். கேட்டதை எல்லாம் தருகிற கற்பக மரம் என்னும் தெய்விக மரத்தை அதன் அருமை பெருமை தெரிந்து அதனைத் தகுந்தபடி பயன்படுத்தத் தெரியாமல், ஒருவன் அதனை வெட்டிச் சுட்டுக் கரியாக்கி உலைக்களத்துக்குப் பயன்படுத்துவது போல, மனிதரின் மடமை இருந்தவாறு என்னே! தனக்கென வாழும் மிருக மனப் பான்மையை நீக்கிப் பிறர்க்கென வாழும் பேரறிவாளனை நான் எனது என்னும் செருக்கை அகற்றி மனத்தை அமைதிப்படுத்திப் பேரின்ப வெள்ளத்தில் முழுகச் செய்ய மனத்தைப் பக்குவப்படுத்தும் பாட சாலையாக இருப்பது இல்லற வாழ்க்கை. இதனை இவ்வாறு கருதும் நல்லறிவு இல்லாதவர், தினவு கொண்ட மிருகங்கள் தமது தினவைத் தீர்த்துக்கொள்ள உராயும் மரக்கட்டைபோல மடத்தனத்தினால் தம்மையும் மற்றவரையும் கெடுக்கும் கெடுமதியை என்னென்பது! நாரணா! இன்று நான் கண்டதும் கேட்டதும் எனக்குத் தீராத் துயரத்தைத் தருகின்றன. நான் போய் வருகிறேன். ஏதேனும் நிகழ்ந்தால் - முனிவர் ஆசிரமத்தில் இருப்பேன் - அங்கு வந்து சொல்லு” என்று கூறி நடராஜன் போகிறான். “இது என்ன புதுமை ! போகிற இடத்திலெல்லாம் நான் காண்ப தும் கேட்பதும் கதை கதையாக இருக்கிறது. சரி ; நடப்பது நடக்கட்டும். நேரமாயிற்று” என்று சொல்லிக் கொண்டே நாராயணன் போகிறான். மூன்றாம் களம் காலை நேரம், திருவனந்தபுரத்து அரண்மனையில் சேர நாட்டரசன் புருடோத்தமன் தன்னந் தனியே இருந்து தனக்குள் எண்ணுகிறான்: “நாள்தோறும் நான் கனவிற் காணும் மங்கை யாரோ தெரியவில்லை. தேவலோகத்துத் தெய்வ மகளிரைக் கண்டாலும் கலங்காத என் மனம் இவளைக் கண்டு, மத்தினால் கடையப்படுகிற தயிர்போல, அலைகின்றது. நீண்ட கூந்தலும் அணிந்த ஆடையும் நெகிழ்ந்து விழ, முழுநிலா போன்ற முகத்தைக் கவிழ்த்துக் காதல் கனியும் கண்களால் நோக்கித் தனது அழகான கால் விரலினால் தரையைக் கீறி நின்ற காட்சி என் உள்ளத்தைக் கொள்ளைகொண்டது. அவள் யாரோ, எந்நாட்டவளோ, ஒன்றும் தெரியவில்லை. அன்பும், ஆழகும், நலமும் உடைய அவளை நேரிற் காண்பேனானால்...... காண முடியுமா? அது வீண் எண்ணம். இந்தக் கனவை வெளியில் யாரிடத்திலும் சொல்ல இயலவில்லை. கனவில் காண்பன பொய் என்று கூறுவார்கள். நான் காண்பது கனவு தான். ஆனால் பொய்க் கனவல்ல. கனவாக இருந்தால், நனவு போல நாள்தோறும் அம்மங்கை ஏன் தோன்றவேண்டும்? இது வெறும் பொய்த்தோற்றம் அல்ல. இக் கனவுக் காட்சி நாள்தோறும் வளர்பிறைபோல வளர்ந்துகொண்டே போகிறது. முந்திய நாள் இரவில், அவள் முகத்திலே புன்முறுவல் காணப்பட வில்லை. ஆர்வத்தோடு கண் இமைக்காமல் பார்த்தாள். நேற்று இரவு என் மனத்தை முழுவதும் கவர்ந்துகொண்டாள். வெண்மையான நெற்றியில் கரிய கூந்தல் சிறிது புரள, புருவத்தை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த கண்களால் அன்புடன் அவள் என்னை நோக்கியபோது, நானும் அவளை நோக்கினேனாக, வெட்கத்தினால் அவளுடைய கன்னம் செவ்வானம் போலச் சிவக்கச் சந்திரமண்டலம் போன்ற முகத்தைக் கவிழ்த்து, குமுதம் போன்ற செவ்வாயில் புன் முறுவல் அரும்பிய இனிய காட்சி என் நெஞ்சில் நிலைத்திருக்கிறது. தன் அழகினால், தேவ கன்னியரையும் ஆண்மக்கள் என்று கருதும் படிச் செய்கிற கட்டழகு வாய்ந்த இப்பெண்ணரசி யார்? எங்குள்ளவள்? அறிய முடிய வில்லையே! மறக்கவும் முடிய வில்லையே! ... ... மறக்கத்தான் வேண்டும். ஆனால், மறப்பது எப்படி? போர் முதலிய ஏதேனும் ஏற்படுமானல் அந்த அலுவலில் மனத்தைச் செலுத்தி ஒருவாறு மறக்கலாம் ... ... ” இவ்வாறு புருடோத்தமன் தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு சேவகன் வந்து வணங்கி, “பெருமானடிகளே ! பாண்டி நாட்டிலிருந்து ஒரு தூதன் வந்திருக்கிறான்” என்று கூறினான். “யார் அவன்?” என்று கேட்க, “அவன் பெயர் பலதேவன்” என்று கூறினான் என்றான் சேவகன். அரசன் அவனை உள்ளே வரும்படி கட்டளையிட, தூதன்வந்து அரசனைப் பணிந்து கூறுகிறான்: “சேர நாட்டு மன்னருக்கு மங்கலம் உண்டாகுக. தன்னுடைய (பாண்டியனுடைய) புகழைப் பூமிதேவி சுமக்க, பூமிபாரத்தை (அரசாட்சியை)த் தன் (பாண்டியன்) தோளிலே தாங்கிக்கொண்டு, பகையரசர்களின் தலைகளைப் போர்க் களத்திலே உருட்டி, ஆணைச்சக்கரத்தை நாடெங்கும் உருட்டி, கலகஞ் செய்யும் நாட்டுக் குறும்பர்கள் (பாண்டியனுடைய) முற்றத்திலே தமது கைகளையே தலையணையாகக் கொண்டு உறங்குவதற்கு முற்றத்தில் இடம் பார்க்க, திருநெல்வேலியில் வீற்றிருந் தரசாளும் ஜீவக மன்னன் அனுப்பிய தூதன் நான். பாண்டிய மன்னனின் முதன்மந்திரியாகிய, சூழ்ச்சியிலும் இராஜதந்திரத்திலும் வல்ல குடிலேந்திரரின் மகனாகிய என் பெயர் ... ... ” “ வந்த காரியத்தைக் கூறுக ” என்றான் புருஷோத்தமன். தூதனாகிய பலதேவன் தொடர்ந்து கூறுகிறான்: “நெல்லை மாநகரத்திலே பாண்டிய மன்னன் புதிதாக அமைத்த கோட்டை பகைவரும் நாகராசனும் அஞ்சுந் தன்மையது. உயிர்களுக்கு உள்ள பிறப்பு இறப்பு என்னும் பெருங்கடலைவிட அகலமும், உயிர்களை வாட்டும் ஆணவ மலத்தைவிட அதிக ஆழமும் உடையது அக் கோட்டையின் அகழி. கோட்டை மதில்களோ, அஞ்ஞானத்தின் திண்மையைவிடப் பலமானவை. கோட்டை மதிலின்மேல் அமைத் துள்ள யந்திரப் படை முதலிய கணக்கில்லாத போர்க்கருவிகள், உலக விஷயங்களில் உயிர்களைச் செலுத்தி அழுத்தும் புலன்களைப் போன்றவை.” “ வந்த அலுவலைக் கூறுக ” என்றான் புருஷோத்தமன். தூதுவன் கூறுகிறான்: “அரசர்பெருமானே! தங்கள் நாட்டின் தென் கிழக்கில் உள்ள நன்செய் நாடு, எங்கள் பாண்டியருக்கு உரியது. அங்கு வழங்கும் மொழியும் அங்குள்ள பழக்க வழக்கங்களும் இதற்குச் சான்று.” “ஆமாம், அதற்கென்ன?” தூதுவன் தொடர்ந்து கூறுகிறான்: “உரிமையை நாட்டி வல்லமை யோடு ஆணை செலுத்தாத அரசர்கள் காலத்தில் நீங்கள் அந்த நன்செய் நாட்டைப் பிடித்துக்கொண்டு சதியாக ஆட்சி செய்கிறீர்கள். அந்த உரிமையை மீட்க எண்ணியே பழைய நகரமாகிய மதுரையை விட்டு நன்செய் நாட்டுக்கு அருகிலே திருநெல்வேலியில் கோட்டை அமைத்து அங்கு வந்திருக்கிறார் எமது பாண்டிய மன்னர்.” “சொல்லவேண்டியதை விரைவாகச் சொல்” என்றான் புருஷோத் தமன். தூதுவன்: “பாண்டியரும் சேரரும் போர் செய்தால் யார் பிழைப்பார்? சூரியனும் சந்திரனும் எதிர்ப்பட்டால் சூரியன் மறைய உலகில் இருள் மூடுவதுபோல, நீவிர் இருவரும் போர் செய்தால் உலகம் தாங்காது. ஆகவே, நீதியைக் கூறி நன் செய் நாட்டினை அதற்குரிய வரிடம் சேர்ப்பிப்பதே முறை என்பதைத் தெரிவித்துத் தங்களுடைய கருத்தைத் தெரிந்துகொள்ளவே என்னைத் தூது அனுப்பினார்.” “எல்லாம் சொல்லியாய் விட்டதா?” என்றான் சேர மன்னன். தூதுவன்: “ஒன்று சொல்லவேண்டும். இரண்டு வேந்தரும் போர் செய்தால் உலகம் துன்பம் அடையும். அன்றியும், போரில் உமக்கு என்ன நேரிடுமோ? ஆகையினால், ஆண்சிங்கம் போன்ற ஜீவக அரசருடன் தாங்கள் போர்புரிவது நன்றல்ல” அதுகேட்டுப் புருஷோத் தமன் இகழ்ச்சிக் குறிப்போடு நகைக்கிறான். பலதேவன் மேலும் பேசுகிறான்: “நன் செய் நாட்டினைத் திருப்பிக் கொடுப்பது பெருமைக் குரியது அல்ல அன்று கருதினால், ஒரு உபாயம் கூறுகிறேன். பாண்டியன் அரண்மனையில் மனோன்மணி என்னும் மலர் அலர்ந் திருக்கிறது. அம் மலரின் தேனை உண்ணும் வண்டு இங்குத் திருவனந் தபுரத்தில் இருக்கிறது. மனோன்மணி,தங்கள் அரியாசனத்தில் அமர்ந்தால், பாண்டியன் போரிடமாட்டான்; நன்செய் நாடும் தங்களுக்கே உரிய தாகும். புருஷோத்தமன், “ ஓகோ! மலரிடம் செல்ல வண்டைக் கொண்டு போகிறார்கள் போலும்! நல்லது. இருவரும் காதல் கொண்டால் அல்லது எமது நாட்டில் திருமணம் நிகழாது. அன்றியும் எமது அரியாசனம் இரண்டு பேருக்கு இடங்கொடாது. இதனை அறிவாயாக” என்றான். தூதுவனாகிய பல தேவன், “நல்லதாயிற்று,மனோன்மணியின் திருமணம் தடைப்பட்டது” என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான். புருஷோத்தமன் தொடர்ந்துகூறுகிறான்: “ ஆகவே, நீ சொன்ன மணச் செய்தியை மறந்துவிடு. நன்செய் நாட்டைப்பற்றி நீ பேசின பேச்சு நகைப்பை உண்டாக்குகிறாது.நமது அமைச்சரிடம் வந்து புகலடைந்து, நடைப்பிணம் போல தலைவாயிலின் நின்று, தமது முடியையும், செங் கோலையும் கப்பமாகக் கொடுத்துக் கைகட்டி வாய்பொத்தி மன்னர்கள் நிற்க, அவரது மனைவியர் வந்து தமது மங்கல நாணை நிலைக்கச் செய்யவேண்டுமென்று கெஞ்சுகிற எமது சபையிலே, நீ வந்து அஞ்சாமல் ‘நஞ்செய் நாட்டினைப் பாண்டியனுக்குக் கொடு’ என்று கூறிய பிறகும் நீ இன்னும் உயிருடன் இருப்பது நீ தூதுவன் என்னும் காரணம் பற்றியே. சற்றும் சிந்திக்காமல் உன்னை வரவிட்ட பாண்டியன் யாருடைய பகையும் இல்லாதபடியால், இதுகாறும் முடிசூடி அரசாண்டான். இன்னும் ஒருவார காலத்தில் அறிவான். நீ புகழ்ந்து பேசிய கோட்டையும் நீ ஆண்சிங்கம் எனக் கூறிய அரசனும் உண்மையில் இருப்பார்களானால், அந்த வலிமையையும் பார்ப்போம்” என்று சொல்லி அருகிலிருந்த சேவகனிடம், சேனாதிபதி அருள் வரதனை அழைக்கும்படி கட்டளையிட்டான். அருள்வரதன் வந்து வணங்கி நிற்க, புருஷோத்தமன் அவனிடம், “பாண்டியனுடைய நெல்லை நகரத்துக்கு நாளை புறப்படுகிறோம். நமது படைவீரர்களை ஆயத்தப்படுத்துக” என்று கூறி, மீண்டும் தூதுவனிடம் கூறுகிறான்: “நீ விரைந்து போய்க்கொள். பாண்டியன் போரில் வல்லவனானால் - ஒரு வாரத்துக்குள் நாம் அங்கு வருவோம் - அவன் சேனையுடன் கோட்டையைப் பலமாகக் காத்துக் கொள்ளட்டும். இல்லையானால், எனது அடியில் அவன் முடிவைத்து வணங்கி நமது ஆணைக்கு அடங்கி நடக்கட்டும். வீணாகத் தூது அனுப்பியதற்கு வஞ்சி நாட்டின் விடை இது. விரைந்துபோய்ச் சொல்லுக.” இவ் விடையைக் கேட்டுக் கொண்டு பலதேவன் சென்றான். சேனாதிபதியாகிய அருள்வரதன் சென்று போர்வீரர்களை எல்லாம் அழைத்துப் போருக்குப் புறப்பட ஆயத்தமாக இருக்கும்படி சொல்கிறான். வீரர்கள் போர்ச் செய்தி கேட்டு மகிழ்கிறார்கள். “இது காறும் போர் இல்லாமல் சோம்பிக் கிடந்தோம். போர் இல்லா நாளெல் லாம் பிறவா நாளே என்று ஏங்கிக் கிடந்தோம். நல்ல வேளை யாகப் போர்வந்தது” என்று மகிழ்கிறார்கள். “நாளை காலையில் நெல்லைக்குப் புறப்பட்டுப் போகிறோம். கோட்டையை முற்றுகையிட்டுப் பிடிக்கவேண்டும். போருக்குச் செல்ல ஆயத்தமாக இருங்கள்!” என்று சேனைத் தலைவன் கூறியதைக் கேட்டுக்கொண்டு வீரர்கள் தத்தம் இருக்கைக்குப் போகிறார்கள். இரண்டாம் அங்கம் முதற் களம் இடம் : அரண்மனை. காலம் : வைகறை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன்: சொல்லிய தெல்லாஞ் சுந்தர முனிவரே! புருடோத் தமனெனும் பொறையனே நமக்கு மருமா னாக மதித்ததும் அவரே; என்றுங் குழந்தை யன்றே; மன்றல் 5 விரைவில் ஆற்ற வேண்டும்; நாம் இது வரையும் மறதியா யிருந்தது தவறே யாம் இனித் தாமத மின்றியிம் மணமே கருமமாய்க் கருதி முடிப்பாம்; வருமுன் கருதும் மந்திர வமைச்சே! 1 குடிலன்: 10 இறைவ! இதுகேட் டெனக்குள இன்பம் அறைவதெப் படியான்? அநேக நாளாப் பலமுறை நினைத்த துண்டிப் பரிசே; நலமுறப் புரிசை நன்கு முடியும் அற்றம் நோக்கி யிருந்தே னன்றிச் 15 சற்றும் மறந்தே னன்று; தனியே கட்டளை பிறந்துங் கடிமணந் தன்னை விட்டுள தோஇனி வேறொரு காரியம்? புருடோத் தமனெனும் பொருநைத் துறைவன் காண்டகும் ஆண்டகை யென்றும், ஞானம் 20 மாண்ட சிந்தைய னென்றும், யாண்டுந் திரியுந் தவசிகள் உரைசெய யானுங் கேட்ட துண்டு; மற்றவன் நாட்டிற்கு இன்றே தூதுவ ரேவின், மங்கையை மன்றல் செய்வான் மனதோ வன்றோ 25 என்றியாம் அறியலாம் எளிதில். அறியார் பலவும் பழிப்பர்; நமக்கதி லொன்றும் இலை. இன் றேதூ தேவுவம் பனந்தார் வேய்ந்தோன் அனந்தைப் பதிக்கே. 2 ஜீவ: பழிப்ப ரென்ற மொழிப்பய னென்னை? 30 பகருதி வெளிப்படப் பண்பாய் நிகரிலாச் சூழ்ச்சி நெடுந்தகை யோனே ! 3 குடி: எண்ணுதற் கில்லை இறைவ! அவையெலாம்; கண்ணகன் ஞாலங் கழறும் பலவிதம். மணஞ்செய முதன்முதற் பேசி வருதல், 35 இணங்கிய ஆடவ ரில்லுள் ளாரே; அன்றி யாடவர்த் தேடி மன்றல் சாற்றுதல் தகாதெனப் போற்றுமிவ் வுலகம்; முன்னை வழக்கும் அன்னதே; ஆயினும் ஆத்திரந் தனக்குச் சாத்திர மென்னை? ஜீவ: 40 கூடா தஃதொரு காலும்; குடில! கேடாம் நமது கீர்த்திக் கென்றும்; மாசறு மனோன்மணி தனக்கும் மாசாம்; என்னே ஆத்திரம்? நமது கன்னியை விழையும் மன்னருங் குறைவோ? 4 குடி: 45 குறைவோ அதற்கும் இறைவ! ஓஹோ! மூவருந் தேவரும் யாவரும் விரும்புநங் கொழுந்தை விழைந்து வந்த வேந்தரைக் கணக்கிட லாமோ? கலிங்கன், சோழன், கன்னடன் வடிவில் ஒவ்வார்; காந்தர் 50 மன்னவன் வயதிற் கிசையான்; மச்சன் குலத்திற் பொருந்தான்; கோசலன் பலத்திற் கிணங்கான்; விதர்ப்பன் வீர மில்லான்; வணங்கலில் நிடதன்; மராடன் கல்வியில் நேரான்; மகதன் தீராத் தரித்திரன்; 55 இன்னம் பலரும் இங்ஙனம் நமது கன்னியை விழைந்துங் கல்வி வடிவு குணம்பலங் குலம்பொரு ளென்றிவை பலவும் இணங்கா ரேமாந் திருந்தார். அரசருள் கொங்கன் றனக்கே இங்கிவை யாவும் 60 பொருத்த மாயினும் இதுவரைப் பாலியன், ஆகையில் இவ்வயின் அணைந்திலன். எங்ஙனந் திருத்தமா யவன்கருத் தறிந்திடு முன்னம் ஏவுதுந் தூதரை? ஏதில னன்றே. ஜீவ: படுமோ அஃதொரு காலும்? குடில! 65 மற்றவன் கருத்தினை யுணர உற்றதோ ருபாயம் என்னுள துரையே. 5 குடி: உண்டு பலவும் உபாயம்; பண்டே இதனைக் கருதியே யிருந்தேன்; புதிய கடிபுரி முடியும் முன்னர்க் கழறல் 70 தகுதி யன்றெனக் கருதிச் சாற்றா தொழிந்தேன் மாற்றல ரேறே 6 ஜீவ: நல்லது! குடில! இல்லை யுனைப்போல் எங்குஞ் சூழ்ச்சித் துணைவர். பங்கமி லுபாயம் என்கொல்? பகரே. 7 குடி: 75 வஞ்சிநா டதனில் நன்செய் நாடெனச் செந்தமிழ் வழங்குந் தேயமொன் றுளது. அதன் அந்தமில் பெருவளம் அறியார் யாரே? மருதமும் நெய்தலும் மயங்கியங் கெங்கும் புரையரு செல்வம் நிலைபெற வளரும்; 80 மழலைவண் டானம் புலர்மீன் கவர, ஓம்புபு நுளைச்சியர் எறிகுழை, தேன்பொழி புன்னைநுண் தாதாற் பொன்னிறம் பெற்ற எருமையின் புறத்திருந் திருஞ்சிறை புலர்த்தும் அலைகடற் காக்கைக் கலக்கண் விளைக்கும்; 85 கேதகை மலர்நிழல் இனமெனக் கருதித் தாராத் தழுவிடச் சார்தரச் சிரித்த ஆம்பல்வாய் கொட்டிடும் கோங்கலர்த் தாதே; வால்வளை சூலுளைந் தீன்றவெண் முத்தம் ஓதிமக் குடம்பையென் றுன்னுபு காலாற் 90 பருந்தினங் கவர்ந்துசென் றடம்பிடைப் புதைக்கும் கரும்படு சாலையின் பெரும்புகை மண்டக் கூம்பிய நெய்தற் பூந்தளிர் குளிர மேய்ந்தகல் காரா தீம்பால் துளிக்கும்; அலமுகந் தாக்குழி யலமரும் ஆமை 95 நுளைச்சியர் கணவரோ டிழைத்திடும் ஊடலில் வழித்தெறி குங்குமச் சேற்றிடை யொளிக்கும்; பூஞ்சினை மருதிடை வாழ்ந்திடும் அன்றில் நளிமீன் கோட்பறை விளிகேட் டுறங்கா; வேயென வளர்ந்த சாய்குலைச் சாலியில், 100 உப்பார் பஃறி யொருநிரை பிணிப்பர். இப்பெருந் தேயத் தெங்கும் இராப்பகல் தப்பினும் மாரி தன்கடன் தவறா. கொண்மூ வென்னுங் கொள்கலங் கொண்ட அமிழ்தினை யவ்வயிற் கவிழ்த்தபின் செல்புழி 105 வடியும்நீ ரேநம் மிடிதீர் சாரல். நன்னீர்ப் பெருக்கும் முந்நீர் நீத்தமும் எய்யா தென்றும் எதிர்த்திடும் பிணக்கில் நடுக்கடல் நன்னீர் சுவைத்திடு மொருகால்; மரக்கலம் வந்திடும் வயற்கரை யொருகால்; 110 வாய்த்தலை விம்மிய மதகுபாய் வெள்ளம் ஓமென வோஇறந் தொலிக்கப் பிரணவ நாதமே தொனிக்குமந் நாட்டிடை யொருசார்; நறுமலர்க் குவளையும் நானிறத் திரணமும் படர்தரும் பழனக் கம்பளம் பரப்பித் 115 தாமரைத் தூமுகை தூமமில் விளக்கா, நிலவொளி முத்துங் கவடியும் பணமா, அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண துகிர்க்கா லன்னமும் புகர்க்கால் கொக்குஞ் செங்கட் போத்துங் கம்புட் கோழியுங் 120 கனைகுரல் நாரையுஞ் சினமிகு காடையும் பொய்யாப் புள்ளும் உள்ளான் குருகும் என்றிவை பலவும் எண்ணில குழீஇச் சிரஞ்சிறி தசைத்துஞ் சிறகை யடித்தும், அந்தியங் காடியின் சந்தங் காட்டித் 125 தந்தங் குழூஉக்குரல் தமைவிரித் தெழுப்பும் பேரொலி யொன்றுமே யார்தரு மொருசார்; வீறுடை யெருத்தினம் வரிவரி நிறுத்தி ஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப் பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் 130 போற்றிய குரவையே பொலிதரு மொருசார்; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர் நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர் நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் 135 தருமொலி பரந்தே தங்குவ தொருசார்; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொருசார்; 140 தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப் பயிர் மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள், 145 எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும். சின்னா ளாகச் சேரனாண் டிடினும் இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை 150 கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை. பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம் மணத்திற் குதவியாய் வந்தது நன்றே. ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக் 155 கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில் நாட்டிய நமது நகர்வலி கருதி மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம் ஒப்புர வாகா தொழியான் பின்னர், 160 அந்நியோந் நியசமா தானச் சின்னம் ஆகவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின், மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே. 8 ஜீவ: மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம் 165 இதுவே! குடில! இதனால் வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே. 9 குடி: அப்படி யன்றே! செப்பிய உபாயம் போது மாயினும் ஏகுந் தூதுவர் திறத்தாற் சித்தி யாகவேண் டியதே. 170 வினைதெரிந் துரைத்தல் பெரிதல, அஃது தனை நன் காற்றலே யாற்றல். அதனால், அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும் தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் 175 வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ! 180 உன்ன தெண்ண முறுமே யுறுதி; அன்றெனி லன்றே! அதனால் வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே. 10 ஜீவ: அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்பல 185 தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான், அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. 11 குடி: ஐய மதற்கென்? ஐய! என்னுடல் 190 ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது ஜீவ: பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் 195 விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன். வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் 200 நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார். அவர்கருத் திருந்த வாறே! 12 குடி: குற்றமோ அதுவுங் கொற்றவ! முனிவர் அறிந்ததவ் வளவே யாகும். ஏழை! துறந்தா ரறிவரோ தூதின் தன்மை? 205 இகழ்ச்சியும் புகழ்ச்சியு மின்பமுந் துன்பமும் எல்லா மில்லை; ஆதலால் எவருங் கட்டுக கோவில் வெட்டுக ஏரி, என்று திரிதரும் இவர்களோ நமது நன்றுந் தீதும் நாடி யுரைப்பர்? 210 இராச்சிய பரண சூத்திரம் யார்க்கும் நீச்சே யன்றி நிலையோ? நடேசன்! யோசனை நன்று! நடேசன்! ஆ! ஆ! ஏதோ இவ்வயிற் சூதாப் பேதையர் உள்ளம் மெள்ள உண்டு மற்றவர் 215 அம்மை யப்பரை அணுகா தகன்று தம்மையும் மறந்தே தலைதடு மாறச் செய்யுமோர் சேவக முண்டுமற் றவன்பால், ஐயமொன் றில்லை. அதனால் மொய்குழல் மாதர்பால் தூதுசெல் வல்லமை கூடும். 220 பித்த னெப்படிச் சுந்தரர்க்கு ஒத்த தோழனா யுற்றனன்! வியப்பே! 13 முனிவரும் வரவர மதியிழந் தனரே! ஜீவ: இருக்கும், இருக்கும். இணையறு குடில! பொருக்கெனப் போயுன் புதல்வற் குணர்த்தி 225 விடுத்திடு தூது விரைந்து; சால விளம்பனஞ் சாலவுந் தீதே. 14 குடி: ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் தூது செல்வான் தொழுதுன் அநுமதி பெறவரு வான்நீ காண்டி; 230 இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! 15 (குடிலன் போக) ஜீவ: (தனதுள்) நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம் அல்லவோ இவனை நாம் அமைச்சனாய்ப் பெற்றதும்? என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை? (சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) (பிரபுக்களை நோக்கி) வம்மின், வம்மின், வந்து சிறிது 235 கால மானது போலும், நமது மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் குழ்ச்சியன். முதற் பிரபு: அதற்கெ னையம்? சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி 240 இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும். நாராயணன்: (தனதுள்) நல்லது கருதான வல்லமை யென்பயன்! 2-ம் பிரபு: மன்னவ! அதிலும் உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில் 245 வைத்த பரிவும் பத்தியு மெத்தனை! குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட ஆஞ்ச னேயனோ அறியேம்! நாரா: (தனதுள்) முழுப்பொய் வாஞ்சையாய் மன்னனிவ் வாயுரை முகமன் விடுப்பனோ விடமென? குடிப்பனே! சேவகன்: கொற்றவ! 250 நேற்று மாலையில் நின்றிரு வாணையிற் சென்றுழித் திருமுகம் நோக்கி யேதோ சிந்தனை செய்துதன் சித்த மகிழ்ச்சியால் தந்தன னெனக்கித் தரள மாலை. நாரா: (தனதுள்) எதுவோ பொல்லாங் கெண்ணினன் திண்ணம். ஜீவ: 255 பார்மின், பார்மின், நம்மிசை வைத்த ஆர்வமும் அன்பும். ஆ! ஆ! நாரா: (தனதுள்) யாதும் பேசா திருக்கி லேசுமே நம்மனம்; குறியாற் கூறுவம்; அறிகி லறிக. (நாராயணன் செல்ல) 3-ம் பிரபு: சாட்சியு மோகண் காட்சியாம்! இதற்கும்! 260 அங்கைப் புண்ணுக் காடியும் வேண்டுமோ? எங்கு மில்லையே யிவன்போற் சுவாமி பத்தி பண்ணுநர். சுமித்திரை பயந்த புத்திரன், வீரவா கிவர்முதற் போற்றிய எத்திறத் தவரும் இறைவ! இவனுக் 265 கிணையோ தன்னய மெண்ணாப் பெருமையில்? (நாராயணன் மூக்கிற் கரி தேய்த்துவர) ஜீவ: (நாராயணனை நோக்கி) ஏ! ஏ! நாரணா கரியா யுன்மூக் கிருந்தவா றென்னை? ஏ! ஏ! இதுவென்! நாரா: மூக்கிற் கரிய ருளரென நாயனார் தூக்கிய குறளின் சொற்படி, எல்லாம் 270 உள்ளநின் னருகவ ரில்லா ராவரோ? ஜீவ: ஓகோ! ஓகோ! உனக்கென் பைத்தியம்; யாவரும்: ஓகோ! ஓகோ! ஓகோ! ஓகோ! (யாவரும் நகைக்க) ஜீவ: நாரணா! நீயும் நடேசன் தோழனே. (பிரபுக்களை நோக்கி) நல்லது; விசேடமொன் றில்லை போலும். முதற் பிரபு: 275 இல்லையெம் இறைவ! எல்லாப் புவியுநின் வாகுவே தாங்க! மங்கலம் வரவே! (பிரபுக்கள் போக) ஜீவ: நாராயணா! உனக் கேனிப் பித்து? தீரா இடும்பையே தெளிவி லையுறல். நாரா: எனைவகை தேறியக் கண்ணும், வினைவகை 280 கோடிய மாந்தர் கோடியின் மேலாம். ஜீவ: எதற்குந் திருக்குறள் இடத்தரும்! விடுவிடு. விரும்பி யெவருந் தின்னுங் கரும்பு கைப்பதுன் வாய்க்குற் றம்மே. 16 (அரசனும் சேவகர்களும் போக) நாரா: (தனிமொழி) ஐயோ! இதற்கென் செய்வன்! அரசன், 285 உறுதியா நம்பினன்; சிறிதும் பிறழான். வெளுத்த தெல்லாம் பாலெனும் மெய்ம்மை யுளத்தான்! களங்கம் ஓரான். குடிலனோ சூதே யுருவாத் தோற்றினன். அவன்றான் ஓதுவ உன்னுவ செய்குவ யாவுந் 290 தன்னயங் கருதி யன்றி மன்னனைச் சற்று மெண்ணான். முற்றுஞ் சாலமா நல்லவன் போலவே நடிப்பான், பொல்லா வஞ்சகன். மன்ன னருகுளோர் அதனை நெஞ்சிலும் நினையார்; நினையினும் உரையார். 295 இறைவன் குறிப்பிற் கிசைய அறைவர் வடித்து வடித்த மாற்றொலி போன்றே. தடுத்த மெய்ம்மை சாற்றுவர் யாரே? என்னே யரசர் தன்மை! மன்னுயிர்க் காக்கவும் அழிவும் அவர் தங் கடைக்கண் 300 நோக்கி லுண்டாம் வல்லமை நோற்றுப் பெற்றார்; பெற்றவப் பெருமையின் பாரம், உற்றுநோக் குவரேல் உடல்நடுங் காரோ? கருப்போ தேனோ என்றவர் களிப்பது நெருப்பா றும்மயிர்ப் பாலமும் அன்றோ? 305 விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வாலாற் றேளும். வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து 310 பாரா ராளும் பாரென் படாவே? யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் 315 மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் 320 தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய? இனியான் எப்படிச் செப்புவன்? 325 நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய உறுகண் நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை! 330 இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே. 17 (நாராயணன் போக) இரண்டாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. இரண்டாம் களம் இடம் : ஊர்ப்புறத்து ஒரு சார். காலம் : வைகறை. (நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) (இணைக்குறள் ஆசிரியப்பா) நடராஜன்: (தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் 5 தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து 10 சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து 15 ஒருமுறை கூவி உழையுளார் புகழ் உற்றுநோக் குவர்போற் சுற்றுநோக் குதலும், இருட்பகை யிரவி இருளெனத் தம்மையுங் கருதிக் காய்வனோ என்றயிர்த் திருசிறைக் கையான் மார்பிற் புடைத்துக் கலங்கி 20 மெய்யாந் தம்பெயர் விளம்பி வாயசம் பதறியெத் திசையிலும் சிதறியோ டுதலும், பன்னிறச் சிறகர்ப் பறவைத் தொழுதி தம்மினந் தழுவிச் சூழ்ந்து வட்டாய் அங்கங் கிருந்து தங்கண் முறைமுறை 25 அஞ்சிறை யொத்தறுத் தடியா, எஞ்சலில் இசையறி மாக்களின் ஈட்டம் போல வசையறு பாடல் வழங்கலும் இனிதே! அதுவென்! ஆஹா! அலகா லடிக்கடி ததையுந் தஞ்சிறை தடவி விளக்கிக் 30 கதுவுங் காத லாணையிட் டறைந்து பின்புசென் றோயா தன்புபா ராட்டும் இவ்விரு குருகுங் காதலர். கண்டும் அவர்நிலை காணார் போல்துகிர்த் துண்டங் கொண்டு பரலைச் சொரிந்த 35 பழமெனப் பாவனை பண்ணிக் கொத்தி உழையுழை ஒதுங்கி யோடிப் போலிக் கூச்சங் காட்டுமிக் குருகுகா தலியே. ஆடவர் காத லறை தலுந் தையலர் கூடமாய்க் கொள்ளலும் இயல்பே போலும்! 40 வாணீ! மங்காய்! வாழி நின்குணம்! ஒருதினம் இவ்வயின் உனையான் கண்டுழி முருகவிழ் குவளைநின் மொய்குழற் சூட்டத் தந்ததை யன்பாய் மந்தகா சத்தொடு. வாங்கியும்; மதியா தவள்போ லாங்கே 45 ஓடுமவ் வாய்க்கால் நீரிடை விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தனை. ஏதியா னெண்ணுவ னோவென வுடன் நீ கலங்கிய கலக்கமென் கண்ணுள தின்றும். அழுங்கலை வாணீ! அறிவேன்! அறிவேன்! 50 உளத்தோ டுளஞ்சென் றொன்றிடிற் பின்னர் வியர்த்தமே செய்கையும் மொழியும் - “வாணி” என்றபேர் கேட்டனன்! யாரது? (உற்றுச் செவிகொடுத்து) காணின் நன்றாம். காரிகை யார்கொல்? (பலதேவனும், ஒரு நற்றாயும், தோழனும் தொலைவில் வர) சொல்வதென்! சூழ்ச்சியென்! கேட்குதும் மறைந்து. (ஆசிரியத்துறை) நற்றாய்: நாணமு மென்மகள் நன்னல மும்முகுத் துன்னை நம்பி வீணில் விழைந்தஇக் கேடவள் தன்னுடன் வீவுறுமே. பேணிய என்குடிப் பேர்பெரி தாதலினால் வாணியின் வம்புரை யாமினி யஞ்சுதும் வாரலையோ. 1 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) 55 ஐயோ! இதுவென்! கட்டம்! கட்டம்! (ஆசிரியத்துறை) நற்: நாணிக் கவிழ்ந்தவள் தன்றலைதொட்டு நவின்றவுன்றன் ஆணைக் கவள்சிரம் அற்றினி வீழினு மஞ்சிலம்யாம். காணப் பிறர் பொருள் கள்ளல மாதலினால் வாணிக்குரித்தெனக்கேட்டபின்வௌவலம்வாரலையோ. 2 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) நாராயணன் அன் றுரைத்தது மெய்யே! (ஆசிரியத்துறை) நற்: நாணமி லாமகள் சாவுக் கினிவெகு நாள் களில்லை காணிய நீயும் விரும்பலை யோலையிற் கண்டுகொள்வை. பேணிய நின்வாழ் வேபெரி தாதலினால் வாணி யொளித்துநீ வாசித் தறிந்துகொள் வாரலையோ. 3 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) நட: (தனதுள்) ஆயினும் இத்தனை பாதகனோ இவன்! பலதேவன்: எவருனக் குரைத்தார் இத்தனை பழங்கதை! சவமவ ளெனக்கேன்? இவள் சுக மெங்கே? 60 பொய்பொய் நம்பலை ஐயமெல் லாம்விடு. பணத்திற் காக்கிழப் பிணந்துடிக் கின்றது. சேரன் பதிக்கோர் செய்திசொல் லுதற்காச் சென்றிதோ இரண்டு நாளையிற் றிரும்புவன். இச்சிறு பொற்றொடி மைச்சினிக் குக்கொடு. 65 வருகுவன் ஈதோ! மறக்கன் மின் என்னை! (நற்றாய் போக, பலதேவனும் தோழனும் நடக்க) தோழன்: செவ்விது! செவ்விது! இவ்விட மெத்தனை ஐந்தோ? ஆறோ? பல: அறியேன். போ! போ! இச்சுக மேசுகம், மெய்ச்சுகம் விளம்பில். தோ: வாணியை மணந்தபின் பூணுவை விலங்கு. பல: 70 வாணி யாயினென்? மனோன்மணி யாயினென்? அதைவிடப் படித்த அலகையா யினுமென்? கணிசத் திற்கது; காரியத் திற்கிது. வாவா போவோம்; வழிபார்த் திருக்குஞ் சேவக ராதியர் செய்குவ ரையம். 75 எத்தனை பொழுதிங் கானது வீடுவிட்டு? ஏகுவம் விரைவில், இனித்தா மதமிலை. (பலதேவனும் தோழனும் போக) நட: கொடுமை! கொடுமை! இக் கொடும்பா தகன்சொல். கடுவெனப் பரந்தென் கைகால் நடுக்கின. கைத்ததென் கண்ணுங் காதும். 80 இத்தனை துட்டரும் இருப்பரோ உலகில்? ஐந்தோ! ஆறோ! அறியான்! பாதகன்! நொந்தது புண்ணா யென்னுளங் கேட்க. மெய்ச்சுகம் இதுவாம்! விளம்புவ தென்னினி? இச்சண் டாளனும் வாணியும்! ஏற்கும்! 85 ஒருபிடி யாயவன் உயிரினை வாங்க ஓடிய தெண்ணம்; உறுத்தின தென்கை! தீண்டவும் வேண்டுமோ தீயனை? என்னிவன் அனந்தைக் கேகுங் காரியம்? யாருடன் வினவ? நாரணனோ அது? (நாராயணன் வர) 90 வாவா, நாரணா! நாராயணன்: ஏ! ஏ! என்னை! சினந்தனை தனியாய்? நட: ஏன் இத் தீயவன் அனந்தைக் கேகுங் காரணம்? நாரா: யார்? யார்? நட: அறிவை! நீவிளை யாடலை; அறைதி. நாரா: வதுவை மனோன்மணி தனக்கு வழங்கிட ... நட: 95 அதுவும் நன்றே! கெடுவனிவ் வரசன்! நாரா: அடுத்தது வாணியின் மணமும், அறைந்துளேன் நட: விடுத்திடவ் வெண்ணம்; தடுக்கையா னறிவன்; விடுத்தனன் கண்டும்; எரித்திடு வேன்நொடி. உறுதியொன் றுளதேல்! உரையாய் நடந்தவை. நாரா: 100 முதியவ ருசிதனுக் குரைக்க மற்றவன் வதுவையவ் வழியே யாற்றிட வாணியை அதட்டினன். நட: அதற்கவள்? நாரா: மறுத்தனள். நட: எங்ஙனம்? நாரா: ‘இறக்கினும் அதற்கியா னிசையேன்’ என்றாள். நட: அரைக்கண முன்னம் அறிந்திலே னிம்மொழி. நாரா: 105 என்னே யுன்மதி! ஏந்திழை யார்சொல் நீர்மே லெழுத்தாம்; யாரறி வாருளம்? மாறி நாடொறும் வேறுபா டுறுமதி யெண்ணுட் பட்டு நிண்ணயங் கூடலாற் பெண்கள் நிலையிற் பெரிதுந் திடனே. 110 புண்கொள் நெஞ்சொடு புலம்புகின் றாய்மிக. காதலா மூழிக் கனன்முன் வையாய் மாதரார் கட்டுரை மாயா தென்செயும்? அக்கண முற்ற துக்கந் தூண்டக் கன்னியா யிருப்ப னென்றா ளன்றி 115 யன்ன தவள்கருத் தாமோ? நட: அறியாய்! புருடரே புலையர்; நிலையிலாப் பதடிகள்; இருளடை நெஞ்சினர்; ஈரமி லுளத்தர்; ஆணையு மவர்க்கொரு வீணுரை; அறிந்தேன். தந்நய மன்றிப் பின்னொன் றறியாக் 120 காதகர்; கடையர்; கல்வியில் கசடர் நாரா: ஓதி யுணரினும் மாத ருள்ளம் அலையெறி கடலினுஞ் சலன மென்ப. நட: திரைபொரல் கரையிலும் வெளியிலு மன்றி கயத்திலும் அகத்திலுங் கலக்க மவர்க்கிலை. 125 தியக்கமும் மயக்கமுஞ் செறிவ தரிவையர். உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி, பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய். 130 சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலை தருங் கொடியஇவ் வலகைகள் வழியே. புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் 135 மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை! மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை 140 ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி 145 அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து 150 கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் கானாய், நின்றது மங்கையர் நிலைமை யென்று நினையா மனிதர், விலங்கினுங் கீழாய் 155 அனையார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேறா மாற்றுவர். தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர் வெல்லாது அந்தோ! தம்மெய் யரிவார் போலத் 160 தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவராய் நலிந்து பாலையும் நஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே! துதிபெறு மன்புநற் குணமு முளாரில் துணைவ ராயின் 165 இல்லதென் னுலகில்? இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் நாற்றம் பெற்றவா றன்றோ? எற்றே மடமை! கேட்டிட வேட்டவை யாவையும் ஈயுங் கற்பக தருவென அற்பமுங் கருதாது 170 அடியுடன் முறித்து முடிபுற வெரித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமுந் தனதா அன்புபா ராட்ட, 175 மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தந் தெளித்துத் தானெனு நினைப்புந் தனக்கெனு மிச்சையும் ஓய்வுறச் செய்து மற் றென்றாய் நின்ற 180 எங்கு நிறைந்தபே ரின்ப வெள்ளம் முங்கி யதனுள் மூழ்கிட யாரையும் பக்குவஞ் செய்யுநற் பள்ளிச் சாலை, இவ் இல்லற மென்பதோர் நல்லுணர் வின்றி, உடல்தின வடக்குமா உரைஞ்சிடு தடியென 185 மடத்தனங் கருதித் தம்மையும் பிறரையுங் கெடுத்திடு மாந்தரின் கெடுமதி யென்னே! நாரணா! இவ்வயிற் கேட்டதுங் கண்டதுந் தீராத் துயரமே செய்வது செல்குவன். ஏதா யினுமினி எய்தில், 190 ஓதாய் முனிவர் உறையு ளுற்றே. 1 (நடராஜன் போக) (நேரிசை ஆசிரியப்பா) நாரா: (தனிமொழி) நல்லது மிகவும்! செல்லிடந் தோறுங் கதையா யிருந்தது. கண்டதென்? கேட்டதென்? புதுமையிங் கிதுவும்! பொருந்துவ தெதுவா யினுஞ்சரி. ஏகுவம் மனைக்கே. 2 (நாராயணன் போக) இரண்டாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. மூன்றாம் களம் இடம் : திருவனந்தையிற் சேரன் அரண்மனை. காலம் : காலை. (புருடோத்தமன் சிந்தித்திருக்க.) (நேரிசை ஆசிரியப்பா) புருடோத்தமன்: (தனிமொழி) யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்! வார்குழல் துகிலோடு சோர மாசிலா மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள் விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப 5 பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு விரல் நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து விண்ணணங் கனைய கன்னியர் பலரென் கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச் சித்தம் மத்துறு தயிரில் திரிந்து 10 பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ? எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா நல்வியும் நண்பும் நலனு முடையவள் யார்கொலோ? நாள்பல வானவே. ஆ! ஆ! விழிப்போ டென்கண் காணில்! - வீண்! வீண்! 15 பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்? கனவு பொய்யெனக் கழறுவர். பொய்யோ? நனவினும் ஒழுங்காய் நாடொறுந் தோற்றும் பொய்யல; பொய்யல; ஐய மெனக்கிலை. நாடொறும் ஒருகலை கூடி வளரும் 20 மதியென எழில்தினம் வளர்வது போலும் முதனாள் முறுவல் கண்டிலம்; கடைக்கணில் ஆர்வம் அலையெறி பார்வையன் றிருந்தது. நேற்றிராக் கண்ட தோற்றமென் நெஞ்சம் பருகின தையோ! கரிய கூந்தலின் 25 சிறுசுருள் பிறைநிகர் நறுநுதற் புரளப் பொருசிலைப் புருவம் ஒருதலை நெகிழ்த்துச் செவ்வரி படர்ந்த மைவழி நெடுவிழி உழுவலோ டென்முகம் நோக்க எழுங்கால் என்னோக் கெதிர்படத் தன்னோக் ககற்றி, 30 வெய்யோன் வாரியில் விழுங்கால் துய்ய சேணிடைத் தோன்றுஞ் செக்கர்போற் கன்னம் நாணொடு சிவக்க, ஊர்கோள் நாப்பண் தோன்றிய உவாமதி போன்றங் கெழிலொளி சுற்றிய வதனஞ் சற்றுக் கவிழ்த்தி, 35 அமுதமூற் றிருக்குங் குமுதவா யலர்ந்து மந்த காசந் தந்தவள் நின்ற நிலைமையென் நெஞ்சம் நீங்குவ தன்றே! தேவ கன்னியர் முதலாந் தெரிவையர் யாவரே யாயினும் என்கண் தனக்கு 40 மைந்தரா மாற்றுமிச் சுந்தரி யார்கொலோ? அறியுமா றிலையே! அயர்க்குமா றிலையே! உண்டெனிற் கண்டிடல் வேண்டும். இலையெனில் இன்றே மறத்தல் நன்றே, ஆம்! இனி மறத்தலே கருமம். மறப்பதும் எப்படி? 45 போரெவ ருடனே யாயினும் புரியிலவ் ஆரவா ரத்தில் அயர்ப்போ மன்றி... (சேவகன் வர) சேவகன்: எழுதரு மேனி இறைவ! நின் வாயிலில் வழுதியின் தூதுவன் வந்துகாக் கின்றான் புரு: யாரவன்? சேவ: பேர்பல தேவனென் றறைந்தான் புரு: (தனதுள்) 50 சோரன்! (சேவகனை நோக்கி) வரச்சொல். (தனதுள்) தூதேன்? எதற்கிக் கயவனைக் கைதவன் அனுப்பினான்? நயந்தீ துணர்ந்து நட்டிலன் போன்மே. 1 (பலதேவன் வர) பலதேவன்: மங்கலம், மங்கலம்! மலய மன்னவ! பொங்கலைப் புணரிசூழ் புவிபுகழ் சுமக்கத் 55 தன்தோள் தாரணி தாங்க எங்கும் ஒன்னார் தலையோடு திகிரி யுருட்டிக் குடங்கை யணையிற் குறும்பர் தூங்க இடம்பார்த் தொதுங்குந் தடமுற் றத்து மேம்படு திருநெல் வேலிவீற் றிருக்கும் 60 வேம்பார் ஜீவக வேந்தன் விடுத்த தூதியான். என்பே ரோதில் அவ் வழுதியின் மந்திரச் சிகாமணி தந்திரத் தலைவன். பொருந்தலர் துணுக்குறு மருந்திறற் சூழ்ச்சியன், குடிலேந் திரன்மகன்... புரு: (தனதுள்) மடையன் வந்ததென்? பல: 65 அப்பெரு வழுதி யொப்பறு மாநகர் நெல்லையிற் கண்டு புல்லார் ஈட்டமும் அரவின தரசும் வெருவி ஞெரேலெனப் பிறவிப் பௌவத் தெல்லையும் வறிதாம் ஆணவத் தாழ்ச்சியும் நாண அகழ்வலந் 70 தொட்டஞ் ஞானத் தொடர்பினு முரமாய்க் கட்டிய மதிற்கணங் காக்க விடயத்து எட்டி யழுத்தி இழுக்கும் புலன்களின் யந்திரப் படைகள் எண்ணில இயற்றி... புரு: வந்த அலுவலென்? பல: மன்னவா! நீயாள் 75 வஞ்சிநா டதற்குத் தென்கீழ் வாய்ந்த நன்செய்நா டென்றொரு நாடுள தன்றே? எங்கட் கந்நா டுரித்தாம். அங்கு பரவு பாடையும் விரவுமா சாரமும் நோக்கில் வேறொரு சாக்கியம் வேண்டா... புரு: 80 நல்லது! சொல்லாய். பல: தொல்லையாங் கிழமைபா ராட்டித் தங்கோல் நாட்டி நடத்த வல்ல மன்னவ ரின்மையால் வழுதிநாட்டு எல்லையுட் புகுந்தங் கிறுத்துச் சின்னாள் சதியாய் நீயர சாண்டாய்.... .... புரு: அதனால்? பல: 85 அன்னதன் உரிமை மீட்க உன்னியே முதுநக ராமெழில் மதுரை துறந்து நெல்லையைத் தலைநகர் வல்லையில் ஆக்கி ஈண்டினன் ஆங்கே. புரு: வேண்டிய தென்னை? உரையாய் விரைவில் பல: உதியனும் செழியனும் 90 போர்தனி புரியில் யார்கொல் பிழைப்பர்? பங்கமில் இரவியுந் திங்களுந் துருவி எதிர்ப்படுங் காலை, கதிர்க்கடுங் கடவுள் மறையஇவ் வுலகில் வயங்கிருள் நிறையும். அவரந் நிலையில் அமர்ந்திடில் அவ்விருள் 95 தவறாத் தன்மைபோல் நீவிர் இருவருஞ் சமர்செயி லுலகம் தாங்கா தென்றே எமையிங் கேவி இவ்வவைக் கேற்றவை நீதியா யெடுத்தெலாம் ஓதி, நன் செய்நாடு உடையார்க் குரிமை நோக்கி யளிப்பதே 100 கடனெனக் கழறிப் பின்னிக ழுன்கருத்து அறிந்து மீளவே விடுத்தான். புரு: ஆ! ஹா! முடிந்ததோ? இலையெனின் முற்றும் செப்புவாய். பல: மேலும் ஒருமொழி விளம்புதும் வேந்தே! சாலவும் நீவிர் பகைக்கின் சகமெலாம் 105 ஆழ்துயர் மூழ்கலும் அன்றி, உங்கட்கு ஏது விளையுமோ அறியேம். ஆதலின், அஞ்சா அரியே றன்னஜீ வகனுடன் வெஞ்சமர் விளைத்தல் நன்றல. புரு: (பயந்தாற்போல்) ஆ! ஆ! பல: நன்செய்நா டினிமேல் மீட்டு நல்கலும் 110 எஞ்சலில் பெரும்புகழ்க் கேற்ற தன்றெனில் உரைக்குது முபாயமொன் றுசிதன் மனையில் திரைக்கடல் அமுதே உருக்கொண் டதுபோல் ஒருமலர் மலர்ந்தங் குறைந்தது. தேனுண விரைமலர் தேடளி வீற்றிங் கிருந்தது. 115 அன்னவள் மன்ன! நின் அரியணை யமரில் தென்னவன் மனமும் திருந்தும். நன்செய்நா டுன்னதும் ஆகும். பரு: உண்மை! ஓஹோ! வண்டு மலரிடை யணையஉன் நாட்டில் கொண்டு விடுவரே போலும். நன்று! 120 கோதறு மிருபுறக் காதல் அன்றியெம் நாட்டிடை வேட்டல்மற் றில்லை. மேலும்நம் அரியணை இருவர்க் கிடங்கொடா தறிகுதி. பல: (தனதுள்) சுரிகுழல் வதுவை போனது. சுகம்! சுகம்!! புரு: ஆதலின் முடிவில் நீ ஓதிய தொழிக. 125 நன்செய்நா டதற்கா நாடிநீ நவின்ற வெஞ்சொல் நினைதொறும் மேலிடும் நகையே. அடைக்கலம் என்றுநம் அமைச்சரை யடைந்து நடைப்பிணம் போலக் கடைத்தலை திரிந்து முடியுடன் செங்கோல் அடியிறை வைத்துப் 130 புரவலர் பலர்வாய் புதைத்து நிற்க, அனையர்தம் மனைவியர் அவாவிய மங்கல நாணே இரந்து நாணம் துறந்து கெஞ்சுமெஞ் சபையில், அஞ்சா தெமது நன்செய்நா டதனை நாவு கூசாமற் 135 பாண்டியற் களிக்க என்றுரை பகர்ந்தும், ஈண்டுநீ பின்னும் உயிர்ப்பது தூதுவன் என்றபே ரொன்றால் என்றே அறிகுதி. கருதா துனையிங் கேவிய கைதவன் ஒருவா ரத்திற் குள்ளாய் அவன்முடி 140 யார்பகை இன்மையால் இதுகா றணிந்து பார்வகித் தானெனப் பகரா தறிவன். விரித்துநீ யெம்மிட முரைத்த புரிசையும், அரிக்குநே ரென்னநீ யறைந்த அரசனும் இருப்பரேல் காண்குவம் அவர்வலி யினையும். (சேவகனை நோக்கி) 145 அருள்வர தனையிங் கழையாய்! சேவக! (அருள்வரதன் வர) பல: (தனதுள்) சிந்தனை முடிந்தது. அருள்வரதன்: வந்தனம்! வந்தனம்!! புரு: நல்லது! செழியன் நெல்லையை நோக்கி நாளையாம் ஏகுவம். நமதுபோர் வீரரவ் வேளையா யத்தமாய் வைப்பாய். அருள்: ஆஞ்ஞை. புரு: (பலதேவனை நோக்கி) 150 செல்லாய் விரைவில். தென்னன் போர்க்கு வல்லா னென்னில் வாரமொன் றிற்குள் துன்னிய சேனையும் தானும்நீ சொன்ன கடிபுரி பலமாக் காக்க. இல்லையேல், முடிநம் அடியில் வைத்து நாமிடும் 155 ஆணைக் கடங்கி யமர்க, எமதிடம் வீணுக் குன்னை விடுத்தகை தவற்கு வஞ்சியான் மொழிந்த மாற்றமீ தெனவே எஞ்சா தியம்புதி, ஏகாய், ஏகாய்! (பலதேவன் போக) (தனதுள்) முட்டாள் இவனை விட்டவன் குட்டுப் 160 பட்டபோ தன்றிப் பாரான் உண்மை. பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம். நண்ணிய நமது கனாவின் எண்ண மேகினும் ஏகும் இனியே. (புருடோத்தமன் போக) (காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.) (நிலைமண்டில ஆசிரியப்பா) அருள்: தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு; 165 நேர்ந்தது வெம்போர். யாவரும்: வாழ்கநம் வேந்தே! முதற் படைஞன்: நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி. யாவ: உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழுக உன்சொல்! 2-ம் படை: பெரும்போர் இலாநாள் பிறவா நாளே. 3-ம் படை: மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும். 4-ம் படை: 170 யாவரோ, பகைவர்? அருளா பரணா! தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்? அருள்: பாண்டியன். யாவ: (இகழ்ச்சியாய்) பாண்டியன்! சீச்சீ! பகடி. அருள்: ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்.... யாவ: வியப்பு! வியப்பு! 3-ம் படை: வேற்றா ளொருவனென் 175 அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன். முதற் படை: அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன். 4-ம் படை: யாதோ காரணம்? ஓதாய், தலைவா! 2-ம் படை: அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ? 180 செப்பிய துனக்கு? நமக்கேன்? சீச்சீ! அருள்: நல்லது வீரரே! நாளை வைகறை நெல்லையை வளைந்து நெடும்போர் குறித்துச் செல்லற் குரியன திட்டம் செய்வான் வல்லையில் ஏகுதும். மங்கலம் உமக்கே. (அருள்வரதன் முதலியோர் போக) இரண்டாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. (கலித்துறை) அடைய மனோன்மணி அம்மையுஞ் சேரனும் ஆசைகொள்ள இடையில் நிகழ்ந்த கனாத்திற வைபவம் என்னையென்க! உடலு ளுலண்டென வேயுழல் கின்ற வுயிர்களன்புந் தடையில் கருணையுஞ் சந்தித்தல் எங்ஙனஞ் சாற்றுதுமே. இரண்டாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா 22 -க்கு அடி 708 ஆசிரியத் தாழிசை 3 -க்கு அடி 12 வெண்பா 1 -க்கு அடி 4 ஆக, அங்கம்1-க்கு: பா. 26 -க்கு அடி 724 மூன்றாம் அங்கத்தின் விளக்கம் முதற் களம் அரண்மனை மண்டபத்தில் காலை வேளையில் பாண்டியன் அமைச்சனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறான். “அமைச்சரே! தூதுபோன உமது மகன் கல்வியும் அறிவும் உடையவன். அவனுக்கு அபாயம் வரும் என்று ஐயுற வேண்டாம்” என்றான் அரசன். அதற்கு அமைச்சன், “ பலதேவனால் காரியம் கெடும் என்று நான் ஐயுறவில்லை. உலக இயற்கை அறியாத சிறுவனானாலும் முயற்சியிலும் அறிவிலும் முதிர்ந்தவன் என்று கூறுகிறார்கள். ஆனால், வஞ்சி நாட்டார் வஞ்சனைக்கு அஞ்சாதவர். ‘மிஞ்சினால் கெஞ்சுவர், கெஞ்சினால் மிஞ்சுவர்’ என்னும் பழமொழி அவர்களுக்கே தகும். அதனால்தான் என் மனம் மருள்கிறது. மேலும், சேர வேந்தன் இயற்கையில் கடுஞ்சினம் உடையவன் என்று கூறுகிறார்கள்” என்று கூறினான். “சேரன் சினமுள்ள வனானாலென்ன? தேவர்களும் விரும்புகிற நமது மனோன்மணி, இலக்குமி போன்ற அழகும், அன்பு நிறைந்த மனமும், தெளிவான அறிவும் உள்ளவள் என்று முன்னமே முனிவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவனிடம் திருமணம் பற்றிக் குறிப்பாகக் கூறினால், கரையை யுடைத்து ஓடுகிற வெள்ளம்போல அடங்கா மகிழ்ச்சியுடன் இங்கு ஓடி வருவான். உமக்கு மனக்கவலை வேண்டாம்” என்றான் அரசன். அதற்கு அமைச்சன் கூறுகிறான்: “ முனிவர்கள் குமாரியின் அழகைக் கூறியிருப்பார்கள் என்று நினைப்பதற்கில்லை. துறவிகள் பெண்களின் அழகைப் பேசமாட்டார்கள். கல்விப் புலமையும் தெளிந்த மனமும் உடையவர்கள்தான் கூற முடியும். இப்போது தூதுவன் மூலமாகப் புருடோத்தமன் குமாரியின் அழகு இயல்பு முதலியவற்றை எல்லாம் அறிந்திருப்பான். அம்மா! பலதேவன் தன்னந் தனியே அரச குமாரியைப்பற்றிப் பெருமையாகப் புகழ்ந்து பேசியதைக் கேட்டிருக் கிறேன். அவன் குமாரியின் அவயவங்களின் அழகைப் புகழ்ந்து பேசி, ‘இக் குமாரிக்குப் பணிவிடை செய்ய தேவர்களுக்கும் வாய்க்காது. அவள் அருகில் இருந்து பணிவிடை செய்யப்பெற்றது எனது பாக்கியம். என் றென்றும் இப்படியே பணிவிடை செய்து கொண்டிருந்து உயிர் விடுவது அல்லவா நல்லது!’ என்று அவன் பலமுறை சொல்லிக் கொண்டதை நான் கேட்டிருக்கிறேன்.” இதைக்கேட்ட அரசன், “ அதற்கென்ன ஐயம், குடிலரே! உண்மையான இராஜபக்தியுள்ள பலதேவன் குமாரியிடம் வாஞ்சையும் பரிவும் காட்டுவது இயல்புதானே’ என்று கூறினான். “அதற் கல்ல நான் சொன்னது. அரசே! மனோன்மணி யம்மையின் சிறப்பை யெல்லாம் சேரன் அறிந்திருந்தாலும், அவன் வெறியன் ஆதலால், திருமணத்திற்கு இசைவானோ என்றுதான் என் மனம் ஐயுறுகின்றது. அவன் உறுதியான உள்ளம் உடையவன் அல்லன். மனம் போனபடி யெல்லாம் நடப்பவன் என்று தாங்களும் கேட்டிருக்கிறீர்கள்” என்றான் அமைச்சன். அரசன் கூறினான்: “ ஆமாம்! அறிவோம். எதைப்புகழ்வது எதை இகழ்வது என்பது அவனுக்குத் தெரியாது. வேத வியாசனே வந்து புகழ்ந்தாலும் அவன் அதனைப் பொருட்படுத்த மாட்டான் ; யாரேனும் புலையன் வந்து புகழ்ந்தால் மகிழ்வான். யாரேனும் வந்து அவன் அடியை வணங்கினால் இறுமாந்திருப்பான். செருப்புப் காலால் யாரேனும் மிதித்தால் அதனை விரும்பி உவப்பான். மலர் சூட்டினால் சினம் அடைவான்; கல்லால் அடித்தால் மகிழ்வான். பெரியார், சிறியார், பேதையர், அறிஞர், உற்றார், அயலார் என்பதைக் கருதமாட்டான். ஆனால், குடிலரே ! இவையெல்லாம் பிரபுத்து வத்துக்கு அடையாளம் அல்லவா?” இதைக்கேட்டு அமைச்சன் கூறினான்: “அடியேனுக்கு அதில் ஐயம் ஒன்று உண்டு. முடிசூடிய அரசர்களிலே கோட்டையின் பலமும், சேனைப் பலமும், நிறைந்த செல்வமும், உறுதியான எண்ணமும், பணியாத வலிமையும் தங்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு உள்ளன? தங்களிடம் இல்லாத ஒரு குணத்தைப் பிரபுத்துவம் என்று யார் கூறுவார்கள்? இது எப்படிப் பொருந்தும்? சேரன் தாய் தந்தையருக்குக் கீழடங்கி வளர்ந்தவன் அல்லன் என்பதைத் தாங்கள் கருதவில்லை போலும்! நல்லது கெட்டது என்பதை அவன் அறியவில்லையானால், நாம் கூறும் நல்லதை அவன் எப்படி ஏற்றுக்கொள்வான் என்று தான் என் மனம் நினைக்கிறது.” “நீர் சொல்லுவது சரி! நமது குருநாதர் சொல்லை மீறக்கூடாது என்பதற்குத்தானே நாம் பலதேவனைத் தூது அனுப்பினோம்? நான் கூறுவதை அவன் விரும்பாவிட்டால் அது அவன் விதி. நமக்கென்ன? மனோன்மணிக்கு மணவாளர்களா கிடையாது?” என்றான் அரசன். “அதற்கென்ன? ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அதல்ல, அரசே! தூது சென்றவனுக்குச் சேரன் என்ன தீங்கு செய்வானோ என்று என் மனம் பதறுகிறது. அப்பொழுதே சொல்ல எண்ணினேன். அரசர் பெருமானின் கட்டளைக்கு எதிர் பேசக்கூடாது என்று சும்மா இருந்தேன்” என்று கூறினான் குடிலன். அரசன், “பதறாதீர், குடிலரே ! நமது தூதுவனுக்கு அவன் இழிவு செய்யத் துணிந்தால், அப்போதல்லவா பார்க்கப் போகிறீர்? அவனுடைய செருக்கும், வலிமையும், செல்வமும் எல்லாம் என்னவாகும்? கொஞ்சத்தில் விடுவேனோ? குடிலரே! தூது சென்ற உமது மகனுக்கு அவன் தினைத்துணைத் தீங்கு செய்தால், நமது குமாரிக்குப் பனைத்துணை தீங்கு செய்ததாகக் கருதிப் பழி வாங்குவேன்” என்று கூறினான். இந்தச் சமயத்தில் ஒற்றன் ஒருத்தன் வந்து வணங்கி, திருமுகம் ஒன்றை அரசனிடம் கொடுத்துச் சென்றான். ஒற்றனுடைய முகத் தோற்றத்தைக் கண்ட அமைச்சன், தனக்குள்ளே, நாம் கருதிய காரியம் முழுவதும் முடிந்தது. போர்மூண்டது. அரசனுக்கு இறுதியும், நமக்கு உறுதியும் வாய்க்கும் என்று சொல்லிக் கொண்டான். திருமுகத்தைப் படித்துப் பார்த்த அரசன், சினங்கொண்டு தனக்குள் கூறிக் கொண்டான்: துட்டன். நமது தூதனை ஏசினான். திருமணத்தை இகழ்ந்து பேசினான். அவன் அடியை வணங்கினால் விடுவானாம்! போர் செய்ய வருவானாம். முடி பறித்திடுவானாம். துஷ்டப்பயல் என்று கடிந்து பேசி, அமைச்சனைப் பார்த்து, “குடிலரே! நீர் கூறியபடியே ஆயிற்று. இக் கடிதத்தைப் படித்துப் பாரும்” என்று சொல்லித் திருமுகத்தைக் கொடுத்தான். குடிலன் அதனைப் படித்துப் பார்த்து, “என்ன சொல்வது! உண்ண வா என்றால், குத்தவா என்கிறான். அவன் போருக்கு வந்ததைப்பற்றி அஞ்சவில்லை. குமாரியைக் கூறிய குற்றமும் இழிவும் கருதியே என் மனம் அழிகின்றது” என்று கூறினான். அரசன், “பொறு, பொறு, குடிலரே! நம்மைக் குற்றம் கூறிய அவன் குலத்தை வேரோடும் அழித்து விடுகிறேன், பாரும்” என்று சினந்து கூறினான். “அரசர்பெருமான் போர்க்களஞ் சென்றால் அச் சிறுவன் பிழைப் பனோ? ஏதோ மயக்கங் கொண்டு போருக்கு வருகிறான். நாம் வெற்றிபெறுவது உறுதி. ஆனாலும், மதுரையிலிருந்து சேனையை அழைப்பது நல்லது. காலந்தான் போதாது” என்றான் அமைச்சன். “மதுரைச் சேனையின் உதவி நமக்குத் தேவையில்லை. ஒரே நாள் போரில் அவன் அஞ்சி ஓடிப்போவான். புலிவேட்டைக்கு இசை வான பறையொலி எலிவேட்டைக்குப் பொருந்துமா?” என்று அரசன் கூற, அமைச்சன், “ மேலும், அவன் உடனே புறப்பட்டு வருகிறபடியால், அவனிடம் போதிய சேனை இராது” என்றான். “பெரிய சேனையுடன் வந்தால்தான் என்ன? குடிலரே! நீர் போய் போருக்கு வேண்டிய ஆயத்தங்ளைச் செய்யும். நாமும் இதோ வருகிறோம்” என்று சொல்லி அரசன் போய் விட்டான். அப்போது, தனியே இருந்த குடிலனிடம் வாயிலண்டை இருந்த சேவகன் வந்து வணங்கி, “தங்களைப் போன்ற சூழ்ச்சிமிக்க அமைச்சர் யார் உண்டு? தாங்கள் கருதிய எல்லாம் நிறைவேறும்” என்று கூறினான். அதைக் கேட்டுக் குடிலன் திடுக்கிட்டான். ஆனாலும், வெளிக்குக் காட்டாமல், “நல்லது. நீ போய்க்கொள்” என்று கூற அவன் போய்விட்டான். குற்றமுள்ள நெஞ்சினனாகிய குடிலனுடைய மனத்திலே சேவகன் கூறிய சொற்கள் கலக்கத்தை உண்டாக்கின. அவன் தனக்குள்ளே கூறிக்கொள்கிறான்: “அவன் சொல்லியது என்ன? கள்ளப்பயல். என் கருத்தை அவன் அறிந்திருப்பனோ ? அரசனிடம் கூறுவனோ? நமது அந்தரங்க சூழ்ச்சிகள் இவனுக்கு எப்படித் தெரியும் ? ஒருவேளை நாராயணன் சொல்லியிருப்பானா ? அவன் சொல்லி யிருக்கக் காரணம் இல்லை. ஓகோ! அன்று இவனுக் குத்தானே மாலையைப் பரிசாகக் கொடுத்தோம்? அதற்காக வாழ்த்துக் கூறினான் போலும். ‘கள்ளமனம் துள்ளும்’ என்றும், ‘தன் உள்ளம் தன்னையே சுடும்’ என்றும், ‘குற்றமுள்ள மனம் குறுகுறுக்கும்’ என்றும் உலகோர் கூறும் பழமொழி எவ்வளவு உண்மை! அதன் உண்மையை இப்போது நம்மிடத்திலேயே கண்டோம். அவன் வந்து கூறினபோது என் மனம் விதிர்விதிர்த்துப் படபடத்துப் பட்டபாடு என்னே! சீச்சீ! எவ்வளவு அச்சம் ! வஞ்சித்து வாழ்வு பெறுவது எவ்வளவு கொடியது! நஞ்சு போல நெஞ்சு கொதிக்க, இரவும் பகலும் பலப்பல எண்ணங்கள் நச்சரிக்க, அடிக்கடி செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டு பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ளும் பேதைமை வேறு உண்டோ! ஓகோ! மனமே! நில் நில், ஓடாதே. என்ன தர்மோபதேசம் செய்கிறாய்! பளபள. என்ன இது? ஏன் என் மனம் இப்படி எண்ணுகிறது! முதலைகள் , நாம் கொன்ற பிராணிகளைத் தின்னும்போதல்லவா கண்ணீர்விடும் என்பார்கள்? மனமே, வா. வீண் காலம் போக்காதே. நீதி நியாயங்களைக் கருதுவதற்கு இது காலம் அல்ல” என்று தனக்குள் எண்ணிக்கொண்டே குடிலன் சென்றான். இரண்டாம் களம் திருநெல்வேலிக் கோட்டைக்கு அப்பால் ஊரின் புறமாகக் காலை வேளையில் நடராஜன் தனியே செல்கிறான். அரண்மனையிலிருந்து சுந்தர முனிவருடைய ஆசிரமத்துக்குச் சுரங்கம் அமைக்கும் வேலையை முடித்துவிட்டான். இன்னும் சிறுபகுதி வேலை ஆசிரமத்தில் செய்ய வேண்டி யிருக்கிறது. நடராஜன் தனக்குத்தானே பேசிக்கொள்கிறான் : “வேலை இன்றிரவு முடிந்துவிடும். வாணியின் முகக்காட்சி என் மனத்தில் இருந்து இந்த வேலையைச் செய்து முடிக்க என்னை ஊக்கப் படுத்துகிறது. அதனால் அல்லவா இந்த வேலை இவ்வளவு விரைவாக இப்போது முடிந்தது! யாரையும் இயக்குவதற்கு இன்ப முள்ள இலட்சியம் வேண்டும். எல்லோருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும். உலகத்திலே குறிக்கோள் இல்லாதவை எவை ? இதோ முளைத்துள்ள இச் சிறு புல்லுக்கும் குறிக்கோள் உண்டு. இது தன் சிறு பூவை உயரத் தூக்கி அலரச் செய்து அதிலுள்ள தேன்துளியை வந்து உண்ணுமாறு தேனீக்களை அழைத்து அவற்றின்மூலமாக மகரந்தப் பொடிகளைக் கருப்பையில் சேர்ப்பித்துக் காய்காய்க்கிறது. காய்ந்த காய்கள் ஒரே இடத்தில் விழுந்து முளைத்தால் அவை நன்றாகத் தழைத்து வளரா. ஆகையால், அக் காய்களைத் தூரத்தில் வெவ்வே றிடங்களுக்கு அனுப்புவதற்காக அவற்றின்மேல் சுணைகளையும் முட்களையும் உண்டாக்கி, அருகில் வருகிற ஆடு மாடு பறவை மனிதர் முதலியவர் களின் மேல் ஒட்டிக்கொள்ளச் செய்து அவற்றின் மூலமாக வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வளரச் செய்கிறது. இதன் இயற்கை இயல்பையும் குறிக்கோளையும் காண்போர், எதையும் அற்பமென்று கருதாமல், அவற்றில் உள்ள அன்பையும் அழகையும் குறிக்கோளுக்கு ஏற்ற முயற்சியையும் கண்டு, அவற்றுடன் அன்பினால் கலந்து இன்பம் அடைகிறார்கள். “இதோ ஓடுகிற வாய்க்காலில்தான் எத்தனை விசித்திரம் உண்டு! கடலை மலையாகவும் மலையைக் கடலாகவும் மாற்றுவதற் கல்லவா இவ் வாய்க்கால் ஓடுகிறது! பரற் கற்களை உருட்டி உராய்ந்து மணலாக்கி வெள்ளத்தில் சேரும் புல் மண்கல் முதலியவைகளையும் அடித்துக் கொண்டு ஓடுகிற ஆறானது, கடல் என்னும் மடுவை அமைக்கிற காலம் என்னும் தச்சனுக்கு உதவியாக அவற்றைக் கொடுத்து, ‘ஐயா , சூரியனின் ஆணையினால் நீராகிய நான் ஆவியாகி மேகமாகச் சென்று மலைகள் குன்றுகளின்மேல் மழையாகப் பெய்து அருவியாக ஓடிச் சுனைகளில் இழிந்து, நிலத்தின் உட்புறங் களில் நுழைந்து ஓடி, ஊற்றாகப் பாய்ந்து ஆறாக ஓடி மடுவாய்க் கிடந்து மதகில் குதித்து வாய்க்காலில் ஓடிப் பலவாறு பாடுபட்டுச் சேர்த்துக் கொண்டு வந்த கல்லும் மண்ணும் சிறிதேயாயினும் அவற்றையும் ஏற்றுக்கொள்க. இன்னும் போய்க்கொண்டு வருவேன்’ என்று கூறி மீண்டும் மேகமாகி மழை யாகப் பெய்து இரவும் பகலும் ஓயாமல் உழைக்கும் உழைப்பாளிகள் யார் உளர்?” இவ்வாறு கூறிக்கொண்டே நடராஜன் வாய்க்காலின் நீரைக் கையினால் தடுக்கிறான். அது வழிந்து ஓடுகிறது. “ஐயோ ! உனக்கு நோகிறதோ ! அழாதே, போ” என்று சொல்லி விடுகிறான். “தண்ணீரே, உன்னைப்போல் உலகத்தில் உழைப்பவர் யாவர் ? நீங்காத அன்பும் ஊக்கமும் உறுதியும் உன்னைப் போலவே எல்லோருக்கும் இருந்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும் !” என்று கூறுகிறான். பிறகு, மண்ணில் காணப்பட்ட நாங்கூழ்ப் புழுவை (நாகப் பூச்சியை)க் கண்டு அதற்கும் குறிக்கோள் உண்டு என்பதைக் கூறுகின்றன. “நாங்கூழ்ப் புழுவே, உன்னுடைய உழைப்பு ஓயாத உழைப்பு. எல்லா உழைப்பிலும் உழவர் உழைப்பே மேலானது, உழவருக்குப் பேருதவி செய்கிறவன் நீ. மண்ணைப் பக்குவப்படுத்துவதற்காகவே நீ பிறந்தாய். மண்ணைத் தின்று அதை மெழுகுபோலாக்கிப் பதப்படுத்தி உருட்டி உருட்டி உமிழ்கிறாய். புகழை விரும்பாமல் உழைப்பவரைப்போல நீ மண்ணில் மறைந்து வாழ்கிறாய். நீ மண்ணைப் பக்குவப்படுத்தா விட்டால், இந்தப் பயிர்கள் எப்படி விளையும் ? நீ செய்யும் இப் பேருதவியை எண்ணாமல் எறும்பு முதலிய பூச்சிகள் உன்னைக் கடித்துக் குறும்பு செய்கின்றன. உனக்குள்ள பொறுமையும் உழைப்பும் வேறு யாருக்கு உண்டு?” என்று கூறுகின்றான். அது மண்ணுள் மறைவதைக் கண்டு, “நீ புகழை விரும்பவில்லை. நல்லது போ. உன் வேலையைச் செய். இப்படி இன்பத்தையும் அன்பையும் காணாமலும் இவைகளைப் போற்றாமலும் இருக்கிற மனிதரின் வாழ்நாள் என்னே ! உடம்பையும் மனத்தையும் பெற்றுள்ள மனிதர்கள், சூரியனின் கதிர்களை இழுத்து ஒருமுகப்படுத்தித் தீயையுண்டாக்குகிற சிற்றாடியை (லென்ஸ் என்னும் கண்ணாடியை)ப் போல, அறிவை ஒருமுகப் படுத்திக் காணாத மக்கள், கள்ளர்... அவனை (பலதேவனை) நினைக்காதே. சினத்தீ எழும்புகிறது ! கருமி! அற்பன்! விடுவிடு!” என்று இவ்வாறு அவன் தனக்குள் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, தூசிப் படலம் புகை போல வானத்தில் காணப்பட்டதைக் கண்டான். கண்டு வியப்படைந்து கூறுகிறான்: “அது என்ன? புகையா, மேகமா? மேகத்தின் நிறம் இப்படி இராது. பொதிகை மலைமேல் எழும்பி வருகிற சூரிய ஒளியையும் மறைத்துவிடுகிற இந்தப் புழுதிப் புகை என்ன? அதோ தோன்றுவன கொடிச்சீலைகள். இடியோசை போலக் கேட்பது தேர்களின் ஓசை. ஓ! படை வருகிறது. வருகிறவன் யார்? வருகிற திசையைப் பார்த்தால் சேரன்போலத் தெரிகிறது. சீச்சீ! போருக்கல்ல அவன் வருவது! திருமணம் செய்ய வருகிறான். போலும். ஓகோ! இது என்ன பாட்டு - போர்ப்பாட்டாக இருக்கிறதே!” இவ்வாறு இவன் சிந்திக்கும்போது சேரனின் படைகள் அணிவகுத்துச் செல்வதைக் கண்டான். சேனைகளுடன் செல்லும் பாணர்கள் வீரச் சுவையுள்ள போர்ப் பாடல்களைப் பாடுகிறார்கள். இடையிடையே “ஜே! ஜே !” என்னும் கூச்சல் வானத்தில் பிளந்து செல்கின்றன. இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் வியப்படைந்த நடராஜன் தனக்குள் கூறுகிறான்: சேனைகளின் ஆரவாரமும், மிடுக்கும், போர்க் களப் பாட்டும், தலையில் சூடியுள்ள வஞ்சிப்பூ மாலையும் போர்க் குறிப்பைக் காட்டுகின்றனவேயல்லாமல், திருமணக் குறிப்பைக் காட்ட வில்லையே. என்ன நேரிடுமோ! தரைப்படைகளும், யானைப்படைகளும், தேர்ப்படைகளும் திருநெல்வேலியை நோக்கி வருகின்றன. ஐயோ! மனோன்மணியின் திருமணக் கோலமா இது! இவ்வாறு நடராஜன் எண்ணிக் கொண்டிருக்கும்போது இரண்டு உழவர்கள் அங்கு வந்தார்கள். வந்தவர்கள் நடராஜனைப் பார்த்து, “என்ன சாமி! ஆச்சரியப்பட்டுக் கொண்டு நிற்கிறீர்கள்!” என்று கேட்டனர். “படைவந்ததைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான் நடராஜன். “பார்த்தோம்! போருக்கு அழைத்தால், யார் வரமாட்டார்கள்?” என்றான் ஒரு உழவன். “திருமணத்துக்காக அல்லவோ தூது போயிற்று?” என்று கேட்டான் நடராஜன். “மணப்பேச்சு பிணப்பேச்சாயிற்று. குடிலன் தொட்டால் பொன்னும் கரியாகுமே” என்றான் மற்றொரு உழவன். “என்ன செய்தி?” என்று கேட்டான் நடராஜன். அதற்கு முதல் உழவன், “அது எங்களுக்குத் தெரியாது. குடிலன் கொடியவன். பாண்டியனுடைய நாட்டைப் பிடுங்கிக் கொள்ளவும், மனோன்மணியைத் தன் மகனுக்கு மணம் செய்விக்கவும் சூழ்ச்சி செய்கிறான். இப்படிச் சூழ்ச்சி செய்து சேர மன்னனைப் படையெடுத்து வரச் செய்தான்” என்று கூறினான். “சீச்சீ! சேரன் வஞ்சனைக்கு இசையமாட்டான். நீ சொல்வது பொய்” என்றான் நடராஜன். அதுகேட்ட உழவன் கூறுகிறான்: “பொய் அல்ல சாமி! மெய். உள்ளது. கேளுங்கள் சொல்லுகிறேன். என் மைத்துனன் தன் தாய் செத்ததற்குத் திதி கேட்கப் புரோகிதர் சேஷையரிடம் போனான்” என்றுரைத்து, இரண்டாவது உழவனைப் பார்த்து, “அன்று ஞாயிற்றுக் கிழமை. அன்றுதான் சாத்தன் உன்னிடம் சண்டையிட்டான்” என்று சொல்லி, மீண்டும் நடராஜனிடம் கூறுகிறான்: “புரோகிதருடைய மாமனார் ஆமைப் பலகையில் உட்கார்ந்துகொண்டு, மருமகன் சேஷையரிடம் பேசிக்கொண்டிருந்தாராம்.” குரலைத் தாழ்த்தி மெல்ல, “அவர்கள் பலப்பல இரகசியங்கள் பேசிக்கொண்டார்கள்” என்றான். “இங்கு யார் இருக்கிறார்கள், பயப்படாமல் சொல்” என்றான் நடராஜன். இரண்டாவது உழவன், “புரோகிதரின் மாமனார் மந்திரி வீட்டு ஜோசியர்” என்று ஆரம்பித்தான். முதல் உழவன் அவனைத் தடுத்து, “பொறு பொறு, நான் சொல்கிறேன். என் மைத்துனன் சாஸ்திரி வீட்டுக்குப் போனான். அப்போ, புரோகிதரின் மாமனார் சொன்னாராம்: “மாப்பிள்ளை! நேற்று மந்திரியின் ஆத்துக்காரி கேட்டாள். பல தேவனின் ஜாதகத்தில் ராஜயோகம் இருக்கிறது என்று சொன்னீர்களே! அந்தயோகம் எப்போது வரும் என்று கேட்டாள். சீக்கிரம் வரும் என்றேன். பிறகு மனோன்மணியின் திருமணத்தைப் பற்றிக் கேட்டாள். அது நடக்காது என்று சொன்னேன். அவள் மேலுக்கு வருத்தம் அடைந்ததுபோலக் காணப்பட்டாலும் மனத்தில் மகிழ்ச்சியடைந்தாள் என்று தெரிந்தது. பெரிய மனுஷாளின் எண்ணங்கள் அவர்கள் முகத்தி லிருந்தே வெளியாகின்றன’ என்று சொல்லிச் சிரித்தாராம். பிறகு என் மைத்துனன் திவசத்துக்கு நாள் தெரிந்துகொண்டு வந்தான். இவைகளை என்னிடம் சொன்னான். சாக்கி வேண்டுமானால் காக்கைச் சுப்பனைக் கேட்கலாம்” என்று கூறினான். பிறகு, இரண்டாவது உழவன் கூறினான்: “தூதுக்குழுவுடன் போன இரும்படி இராமன், போகிற வழியில் என் தங்கை வீட்டுக்கு வந்தான். அப்போது நான் அங்கு இருந்தேன். அரண்மனைச் செய்தி என்ன என்று கேட்டேன். அரசர் தத்தெடுக்கப் போகிறார் என்றான். யாரை எப்போது என்று கேட்டேன். அவன் பதில் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போய்விட்டான். முதல் உழவன், “இந்த இரும்படி இராமன், பலதேவனுக்கு நண்பன்” என்றான். இரண்டாவது உழவன், “குடிலன் ஆள்வதைவிட சேரன் ஆள்வது மேலானது” என்றான். “அது நமக்கு இழிவு. மேலும் மனோன்மணி அம்மைக்குத் துன்பம் உண்டானால் அதை யாரும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்றான் முதல் உழவன். இரண்டாம் உழவன், “தந்தை செய்த வினை அவன் மக்களைச் சேரும் என்பார்கள். வாணியின் வயிற்றெரிச்சல் பாண்டியனை விடுமா” என்றான். முதல் உழவன், “விதி என்று சொல்லிக் கடமை செய்யாமல் விடுவது மடமை. போர் வந்தால் நாட்டுக்காகப் போர்செய்வதே கடமை” என்றான். “அரசன் சரியாக இருந்தால் நீ சொல்வது சரி, சாமி. நீங்களே சொல்லுங்கள். வாணியைத் தங்களுக்குத் தெரியாது போலிருக்கிறது....” என்று நடராஜனைக் கேட்டான். நடராஜன், “தெரியும், தெரியும். நீங்கள் போங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டான். பிறகு தனக்குள் கூறிக்கொண்டான்: “பாமர மக்கள் தங்கள் மனம் போனபடி பேசுகிறார்கள். சூழ்ச்சியாக யூகிப்பதும், அனுமானிக்கும் அளவும், முன்பின் காட்டிக் காரண காரியங்களைப் பொருத்திக் கூறுவதும் கேட்க மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் சொல்வது முழுவதும் தவறல்ல. அரசியல் இரகசியம் அங்காடி அம்பலம் என்னும் பழமொழி சரியாகத்தான் இருக்கிறது. மண் குடத்தில் இருக்கிற நீர் கசிந்து கசிந்து வெளிப்படுவதுபோல, அரசர் அமைச்சர் முதலியவர்களின் மனத்தில் உள்ள இரகசியங்கள் அவர்களின் கண் முகம் நடை மொழி முதலியவற்றின் மூலமாக வெளிப் படுகின்றன. பக்கத்தில் உள்ளவர் அவற்றை அறிந்து அவைகளுடன் தமது கருத்தையும் கலந்து வெளியே தூற்றுகிறார்கள். ஆனால், இவர்கள் கூறியவையெல்லாம் குடிலனுடைய குணங்களுடன் பொருத்தமாக இருக்கின்றன. இந்தச் செய்தியையும் படைவந்த செய்தியையும் முனிவருக்குக் கூறுவோம்” என்று எண்ணிக்கொண்டு போகிறான். மூன்றாம் களம் அரண்மனையிலே கன்னிமாடத்திலே நிலா முற்றத்தில் குமாரி மனோன்மணி உலவுகிறாள். நடு இரவு. வாணியும் அருகில் இருக்கிறாள். அறையில் படுத்திருக்கும் செவிலி, “ஏனம்மா, நடு இரவில் எழுந்து உலவுகிறாய்? கண்விழித்தால் உடம்பு சூடுகொள்ளும். படுத்து உறங்கு” என்றாள். “எனக்கு உடம்பு வியர்க்கிறது; இங்கேயே இருக்கிறேன். நீ தூங்கு” என்று மனோன்மணி சொல்லி, “வாணி! உனக்கும் தூக்கம் பிடிக்கவில்லையோ” என்று கேட்டாள். “கண்விழித்து எனக்குப் பழக்கம்” என்றாள் வாணி. “அன்றிற் பறவைகள் ஏன் இப்படி இறைகின்றன! முனிவர் அறையில் ஓசை கேட்கிறது, நாள்தோறும் நிலத்தைத் தோண்டுகிறது போல சந்தடி கேட்கிறது. இன்று ஊரிலும் சந்தடியாக இருந்தது. என்ன காரணம்?” என்று மனோன்மணி கேட்டாள். வாணி, சேரன் படையெடுத்து வந்த செய்தியைச் சொல்லாமல், உரையாடலை வேறுபக்கமாகத் திருப்புகிறாள். “தாங்கள் கண்டது கனவுதானா?” என்று கேட்டாள். “நான் கண்டது கனவும் அல்ல, நனவும் அல்ல” என்றாள் மனோன்மணி. “அவரைக் கண்ணால் கண்டதில்லையோ?” “இல்லை. ஆனால் கண்ணிலேதான் இருக்கிறார். நீ ஓவியம் எழுதவல்ல சித்திரலேகையாக இருந்தால் அவரைப் போலப் படம் எழுதிக் காட்டுவாய்.” “இது புதுமை.” “அது இருக்கட்டும். வாணி! உன் பாட்டைக் கேட்டு நெடு நாளாயிற்று. இப்போது ஒரு பாட்டுப் பாடு” என்றாள் மனோன்மணி. “என் பாட்டைத்தான் எல்லோரும் தெரிந்திருக்கிறார்களே! உங்கள் பாடுதான் ஒருவருக்கும் தெரியாது.” “வாணி! இப்போது இதுபற்றிப் பேசவேண்டாம். இதை யெல்லாம் மறக்க நீ ஒரு பாட்டுப் பாடு” என்று மனோன்மணி விரும்பினாள். வாணி அதற்கிணங்கி வீணை வாசித்துக்கொண்டு சிவகாமி சரிதத்தைப் பாடுகிறாள், அவள் பாடிய சிவகாமியின் கதை இது:- காடெங்கும் திசைதெரியாமல் அலைந்து திரிந்து அலுத்துப் போன ஒரு வாலிபன், காட்டில் ஒரு முனிவனைக் கண்டு வணங்கிக் கூறினான்: “அடிகளே! வழிதெரியாமல் அலைகிற அடியேனுக்கு ஒரு வழி கூறவேண்டும். அளவைக் குறிக்காமலே நிழலை அளப்பது போல, இந்தக் காடு முழுவதும் அலைந்து திரிந்தேன். காடோ வளர்ந்து கொண்டே போகிறது. இரவும் வந்துவிட்டது. இனி நடக்க இயலாது. நான் தங்க ஒரு இடம் காட்டியருளவேண்டும்” என்று கேட்டான். வாலிபனின் வேண்டுகோளைக் கேட்ட முனிவர் கூறினார்: “வீடு என்றும் மடம் என்றும் எனக்குக் கிடையாது. ஏகாந்தப் பெருவெளிதான் என்னுடைய வீடு. ஆசையெல்லாம் துறந்த வீரர்கள்தாம் என் வீட்டையடைய முடியும். இங்கே, பாயும் பூவணையும் கிடையாது. பாலுணவு கிடைக்காது. இளைஞனே! நீ விரும்பினால் என்னுடன் வா. இல்லை யானால் நீ விரும்பிய இடம் போய்க்கொள்.” இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்ட வாலிபன், ஏதோ ஒரு நினைவு தூண்ட, முனிவரை வணங்கி அந்த முனிவரின் பின்னாலே நடந்தான். கரிய திரைச்சீலைகள் திசை தெரியாமல் மூடிக்கொண்டது போல இரவு வந்தது. வானத்திலே விண்மீன்கள் வெளிப்பட்டு ஒன்றோ டொன்று ஏதோ இரகசியம் பேசிப் புன்முறுவல் பூப்பது போலத் தோன்றின. இணைபிரிந்த அன்றில் பறவைகள் ஏங்கிக் கூவின. வௌவால்கள் பறந்தன. மின்மினிப் பூச்சிகள் மினுமினுத்து வெளிச்சந் தந்தன. அந்த இருண்ட காட்டிலே பாம்பின் தலையில் உள்ள மாணிக்க மணியும், யானைகளின் வெண்மையான தந்தங்களும், புலிகளின் அனல் போன்ற விழிகளும் ஒளிகொடுத்தன. ஊசி சென்ற வழியே நூல் செல்வதுபோல, முனிவரைப் பின்தொடர்ந்து வாலிபன் நடந்தான். முனிவர் புதர்களில் நுழைந்தும் மலையேறியும் குகையில் இழிந்தும் ஆற்றைக் கடந்தும் நடந்தார். வாலிபனும் பின்தொடர்ந்து சென்றான். கடைசியில் அவர் ஒரு வெளியான இடத்திற்கு வந்தார். அங்கு நெருப்பு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. முனிவர் அருகிலிருந்த விறகுகளை எடுத்து நெருப்பில் போட்டார். இளைஞனைப் பார்த்து, “வழிநடந்த இளைப்பும் பசியின் களைப்பும் அகல நெருப்பருகில் இருந்து இக் காய்கனி கிழங்குகளை அருந்து” என்று கூறி, பழங்களையும் கிழங்கு களையும் அருகில் வைத்தார். தன் நாக்கினால் ஒரு விரல்அளவு தாண்டமாட்டாதவர்கள் மலைகளையும் கடல்களையும் தாண்டி அலைகிறார்கள். என்னே மனிதரின் அறிவு!” என்று கூறி நகைத்தார். ஆனால், இளைஞனோ மௌனமாக நின்றான். “உனக்குக் கூச்சமேன்? நெடுந்தூரம் அலைந்து வருந்தி பசித்திருக்கிறாய். நெருப்பினருகில் சென்று குளிர்காய்ந்து உணவை அருந்து. உன் சோர்வு நீங்கும்” என்றார். வாலிபன் பதுமை போல அசையாமல் நின்றான். முனிவர் இரண்டு மூன்றுமுறை கூறினார். அவன் அசையவில்லை. அப்போது, நெருப்பு கொழுந்துவிட்டெரிந்து வெளிச்சம் தந்தது. முனிவர் அவ்வாலிபன் முகத்தை அவ் வெளிச்சத்தின் உதவியால் ஊன்றிப் பார்த்தார். அவன் கண்களில் நீர் வழிய, தலைகுனித்து நின்றான். முனிவர் கேட்டார்: “வீட்டில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டு இப்படி வந்துவிட்டாயா? உனக்கு என்ன கவலை? உன் மனத்திலிருப்பதைச் சொல்லு. பெரும்பொருளை இழந்தனையா? நண்பர் இகழ்ந்தனரா? நீ காதலித்த பெண் உன்னைக் கைவிட்டனளா? உண்மையைக் கூறு. ஐயோ! இவ்வுலகத்துச் சுகங்கள் எல்லாம் இதோ இந்தத் தீயில் எழுந்து அடங்குகிற நிழல் போன்றவை. நண்பர்களும் உறவினரும் நாடி வருவது, நெய்க்குடத்தை மொய்க்க வரும் எறும்புபோன்றது. காதல் என்பது முயற்கொம்பு. பெண்கள் கபட எண்ணம் உடையவர்.” இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்ட வாலிபன், கனவிலிருந்து விழித்து எழுபவன் போல விழித்து, வெட்கத்துடன் முகம் வெளுத்து நின்றான். பிறகு அவ்வாலிபன் தான் அணிந்த வேஷத்தைக் கலைத்தான். வாலிபசந்நியாசியின் வேஷம் மாறி, அழகான மங்கையொருத்தியின் வடிவமாக மாறினான். பெண்ணாக மாறிய அம் மங்கை, முனிவரின் பாதங்களில் தலை வைத்து வணங்கிக் கூறுகிறாள் : “ காவிரிப்பூம்பட்டினத்திலே ஒரு தாய் வயிற்றில் இரண்டு பெண்களும் ஒரு மகனும் ஆக மூவர் பிறந்தார்கள். இரண்டு பெண்களில் ஒருத்திக்கு மக்கட்பேறு இல்லை. மற்றொருத் திக்குப் பாவியாகிய நான் மகளாகப் பிறந்தேன். அந்த ஆண்மகனுக்கு ஒரு பிள்ளை. அந்தப் பிள்ளையும் நானும் சிறு வயதில் ஒன்றாக வளர்ந்தோம். அவர் அழகர். அன்புள்ளவர். அவர் பெயரை என் நா கூறாது.” இதைக் கேட்ட முனிவரின் உடல் சிலிர்த்தது. கண்களில் நீர் வழிந்தது. அவர் அதை மறைப்பதற்கு நெருப்பில் விறகு இடுபவர்போலத் திரும்பினார். மங்கை மேலும் கூறினாள்: “பிள்ளைப்பேறற்ற என் சிறிய தாய் பெருஞ்செல்வம் படைத்தவள். அவள் அச் செல்வம் முழுவதையும் எனக்குக் கொடுத்தாள். பாவி, நான் அச் செல்வத்தினால் மதி மயங்கினேன். அவரை நான் அசட்டை செய்தேன். பொருளுக்காகப் பொய்க்காதல் பேசி என்னை மணக்கப் பலர் வந்தார்கள். என் காதலரைத் தவிர நான் அவர்களை விரும்பினேன் இல்லை. ஆனால், செல்வச் செருக்கால், குறும்புத் தனத்தால் செருக்குக் கொண்டேன். அவர் தமது கருத்தைக் குறிப்பாக உணர்த்தியும் நான் வாளா இருந்தேன். கடைசியில் அவர் என்னைவிட்டு அகன்றார். அவரைத் தேடினேன், காணப்படவில்லை. பலநாள் தேடினேன். கிடைக்க வில்லை. நெடுநாள் தேடியும் அவர் இருந்த இடம் தெரியவில்லை. கடைசியாக அவரைக் கண்டுபிடிப்பது, இல்லையேல் உயிரை மாய்ப்பது என்று தீர்மானஞ் செய்து ஆண் வேடந்தாங்கி அலைந்து திரிந்தேன். எங்கேயும் தேடினேன். பல இடங்களில் அலைந்தேன். காணாமல் அலுப்படைந் தேன். இதுவரையிலும் அவரைக் கண்டேன் இல்லை. முனிவர் பெருமானே! என் காதலரின் சாயல் உம்மிடம் இருப்பதைக் காண்கிறேன். ஆகையால் தான் என் கதையை உம்மிடம் கூறினேன். இனி நான் உயிர்வாழ்ந்து பயனில்லை. இதோ இந்தத் தீயே எனக்குக் கதி” என்று சொல்லி மூண் டெழுகின்ற தீயில் பாய்ந்தாள். மின்னல்போல முனிவர் பாய்ந்து அவளைப் பிடித்துத் தடுத்தார். “சிவகாமி! நான்தான் உன்னுடைய சிதம்பரன்!” என்று கூறினார். அவர் நா குளறிற்று. சிவகாமியும் சிதம்பரரும் ஒன்றாயினர். பார்வதியும், சரசுவதியும், இலக்குமியும் வந்து அவர்களை வாழ்த்தினார்கள். அருந்ததியும் வந்து ஆசி கூறினாள்.” இந்தச் சிவகாமி சரிதத்தை வாணி இசைப்பாட்டாகப் பாடினாள். கேட்ட மனோன்மணி வாணியைப் பாராட்டினாள். பிறகு, “வாணி ! உன் காதலன் எங்கிருக்கிறார்?” என்று வினவினாள். “என் மனத்தில் இருக்கிறார்.” “வெளியில் எங்கே இருக்கிறார் ?” “அறியேன் - முனிவருடைய ஆசிரமத்தில் இருப்பதாக நாராணர் கூறினார்.” “ஏன் ? என்ன நடந்தது ? நிகழ்ந்ததைக் கூறு.” வாணி சொன்னாள் : “ஒருநாள் அவரும் நானும் நகருக்கப்பால் ஒரு வாய்க்காலண்டை போனோம். அங்கே கூழாங்கற்களிடையே சலசலவென்று பாய்ந்தோடும் நீரையும் அந்நீரில் வெண்ணிலாவின் பால்போன்ற ஒளியையும் பார்த்துக் கொண்டு நெடுநேரம் இருந்தோம். அப்போது அவர் அங்கு மலர்ந்திருத்த குவளைப்பூ ஒன்றைப் பறித்து என்னிடம் அன்பாகக் கொடுத்தார். அதனை வாங்கி, அறிவிலியாகிய நான், கண்ணில் ஒற்றினேன் இல்லை; முகர்ந்து மணம் கண்டேன் இல்லை; தலையில் சூடினேன் இல்லை. ஓடும் நீரில் அதைவிட்டு வேடிக்கை பார்த்துச் சிரித்தேன். அவர் புன்முறுவலுடன் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அதற்குள்ளாக என் தாயார் அங்குவந்து சுடுசொல் கூறினார். நான் வாளாநின்றேன். அவர் ஒன்றும் பேசாமல் போய்விட்டார். அதுமுதல் அவரைக் காணவில்லை. இனி காண்பேனோ என்னமோ? ஒருமுறை பார்த்து என் கருத்தைக் கூறினால் அல்லாமல் மனம் சாந்தியடையாது.” மனோன்மணி, “வாணி! இருவர் மனமும் ஒன்றானால் வாய் பேசாமல் கருத்தை உணர்வார்கள். அதில் ஒன்றும் ஐயம் இல்லை” என்றாள். இவ்வாறு பேசும்போது, மனோன்மணியின் உடல் நடுங்கிற்று. “எனக்கு இப்படி உடம்பு அடிக்கடி நடுங்குகிறது. ஏனோ தெரியவில்லை !” என்றாள். “குளிர்காற்றில் இருப்பது கூடாது. உள்ளே வா அம்மா! இதோ மழையும் வருகிறது.” “அதென்ன, ஊர்ப்பக்கமாக வெளிச்சம் தெரிகிறது? கூச்சலும் கேட்கிறது? போர்க்குறி காணப்படுகிறது ... ... வாணி! அதென்ன, சொல்” என்றாள் மனோன்மணி. “சொல்லுகிறேன், உள்ளே வா”என்று வாணி கூற, இருவரும் உள்ளே சென்றனர். நான்காம் களம் சுந்தரமுனிவர் ஆசிரமத்தில் காலைப்பொழுதில் அவருடைய சீடர்களாகிய நிஷ்டாபரரும் கருணாகரரும் உரையாடுகின்றனர். நிஷ்டாபரர் கூறுகிறார்: “கருணாகரரே! வேத வேதாந்தங்களை யெல்லாம் படித்தறிந்த நீர், போர் வந்தது பற்றிக் கவலைகொண்டு இரவெல்லாம் தூக்கமில்லாமல் கண் விழித்தது ஏன் ? போர் உலகத்து இயற்கைதானே? போரில் தானா மக்கள் சாகிறார்கள்? போரில்லாமலே நாள்தோறும் எண்ணிறந்த உயிர்கள் சாகின்றன. எறும்பு முதலாக எல்லா உயிர்களும் சாவதைக் கணக்கிட்டுச் சொல்லமுடியுமா? இதோ இச் சிலந்தி அதனை எட்டுக் கால்களினாலும் கட்டிப் பிணைத்துக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும் போது ஈ கதறி அழுகிற குரலை யார் கேட்கிறார்கள்? உலகத்தை யெல்லாம் ஒன்றாக நோக்கும்போது, உடம்பும் அதனைச் சேர்ந்த ஒரு உறுப்புதானே ? ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ள இந்தப் பூமி, சூரிய மண்டலத்தின் ஒரு சிறுதுளி. வானத்தில் காணப்படுகிற விண்மீன்கள் ஒவ்வொன்றும் சூரியனைவிட'a6எவ்வளவு பெரியவை! இந்தச் சூரியனும் விண் மீன்களும் எல்லாம் சேர்ந்து ஒரு பிரமாண்டம் என்று கூறுவர். இதுபோல ஆயிரத்தெட்டு பிரமாண்டங்கள் உள்ளன என்பர். ஆயிரத்தெட்டு என்றால், கணக்காக ஆயிரத்தெட்டு என்பதல்ல, கணக்கற்றவை என்பது பொருள். இந்த ஆயிரத்தெட்டு பிரமாண்டங்களும், திருமாலுடைய கொப்பூழில் தோன்றிய செந்தாமரைப் பூவின் பல இதழ்களில் ஒரு இதழிலே பிரமனாகிய சிலந்தி அமைந்த சிறு கூடு. ஏன்? அந்தத் திருமாலும் பெருங்கடலிலே சிறுதுரும்பு என்பர். திருமால் கிடக்கும் கடலும், மெய்ப்பொருளாகிய கடவுளுடன் ஒப்பிடும்போது சிறு கானல் நீர்போன்றது. இவைகளுடன் ஒப்பிடும்போது உயிர்களாகிய நாம் எதற்குச் சமம்?... “நீர் யார் ? நான் யார்? ஊரேது? பேரேது? போரேது? மாயை யாகிய பெருங்கடலில் தோன்றிய குமிழிகள் போன்ற இப் பற்பல பிரமாண்டங்கள் அடிக்கடி வெடித்து அடங்குகின்றன. அதனைத் தடுப்பவர் யார்? இயற்றும் இத்தொழிலில் அகப்பட்ட நாம் இயந்திரக் கல்லில் அகப்பட்ட பயறுபோல் உள்ளோம். யார் என்ன செய்ய முடியும்? இந்த மாயை உம்மையும் பிடித்தால் நீர் கற்ற கல்வியும் ஞானமும் குருட்டரசனுக்குக் கொளுத்திவைத்த விளக்குப்போலவும் இருட்டறை யில் பொருளைக் காணவிரும்பும் கண்போலவும் பயனற்றதாகும். உலகத்தை ஊன்றிப் பார்க்குந்தோறும் துயரந்தான் அதிகப்படும். ஆகவே ‘சட்டி சுட்டது கைவிட்டது’ என்பது போல இவ்வுலகத் துன்பங்களை மறப்பதற்கன்றோ துறவு பூண்பது? உலகத்தை மறந்தால் உள்ளமும் மறையும். மனம் மறைந்தால் உள்முகமான மெய்ஞ்ஞானம் தோன்றும். அந்தஇடத்தில் ‘நான்’ என்பதும் உலகம் என்பதும் இல்லை. எல்லையற்ற அறிவாய் அழியாத பேரின்பமே கிட்டும். இவ்வாறு நான் உலக இயல்பைக் கடந்துநிற்கும் நிலையைக் கூறுவது, ‘குருடனுக்குப் பாலின் நிறம் கொக்கு’ என்று கூறிய கதை போலாகும். நீரே உமக்குள் பொறுமையாக இருந்து தெளிய வேண்டும்.” இவ்வாறு வேதாந்தக் கருத்தை நிஷ்டாபரர் கூறியதைக் கேட்டுக் கருணாகரர் கூறுகிறார்: “எனக்கு இகமும் வேண்டாம் பரமும் வேண்டாம், சுவாமி! என்னால் ஆன சிறு தொண்டு செய்ய விரும்பு கிறேன். உலகம் பொய் என்றீர். அதனை நமக்கு முதன்முதல் உணர்த்தி யவர் நம் குருநாதர் அன்றோ? அவர் அதனை உணர்த்துவதற்கு முன்பு எப்படியிருந்தோம்? உலக இயல்பில் கட்டுண்டு பொய்யிலும் வழுவிலும் சிக்குண்டு அல்லற்பட்டிருந்தபோது, கருணாநிதியாகிய சுந்தரத்தேசிகர் ‘அடகெடுவாய்! இதுவல்ல நன்னெறி’ என்று கூறி நல்வழி காட்டாமற் போனால் நமக்கு என்ன தெரியும்? மனம் என்னும் அளவில்லாத பெருவெளிக்குப் பூட்டு ஏது, தாழ் ஏது? பஞ்சேந்திரயம் ஐந்துமட்டுந்தானா மனத்தைக் கெடுப்பது? ஆயிரம் ஆயிரம் வழிகளில் புகுந்து அரைநொடியில் மனத்தை நரகமாக மாற்றிவிடும் தீய நினைவு கள். குருநாதன் அருளுடன் காட்டிய வழியினாலல்லவா உய்ந்தோம்? அவர் திருவருள் இல்லையானால் நமது அஞ்ஞானம் நமக்கு எப்படித் தெரியும்? “அண்டங்கள் எல்லாம் ஒன்றோடொன்று மோதாமல் காப்பது கடவுளின் கருணையல்லவா ? நீர் கூறிய சிலந்தியைப் பாரும். தன் சிறிய வலையில் வந்து சிக்கிய ஈயைத் தன் குஞ்சுகளுக்கு உண்ணக் கொடுத்து அன்பு காட்டுகிறது. அது அன்பென்னும் நூலைப் படிக்கத் தொடங்கும் அரிவரி பாடம் அல்லவா? உலகில் காணப்படுகிற துயரங்களைக் கண்டு இரங்கினால் அது மனமாசு நீக்கிப் பொன்னாகச் செய்யும் நெருப்புப் போலாகும். பவழமல்லி முதலிய வெண்மையான பூக்கள் எல்லாம் இருளில் பூச்சிகள் மலர் இருப்பதை அறிந்து கொள்வதற்கே வெண்மை நிறமாகப் பூக்கின்றன என்று நேற்று இரவு நடராஜர் சொல்லுவதற்கு முன்பு நாம் நினைத்தோம் இல்லை. ஈக்களைக் கவர்வதற்கு இருளில் வெண்ணிறம் அன்றே பொருந்தும்? ஈக்கள் வந்தால்தானே பூக்கள் கரு தரித்துக் காயாகும்? இக் காரண காரியங்களை அறிவதற்கு நமது சிற்றறிவு போதாது. “பாரும்; மனோன்மணி தன் ஊழ்வினை காரணமாகத் தன் கண்ணால் காணாத, காதால் கேட்டிராத ஒருவனை எண்ணி மயங்கினாள். அதனால் துன்புறுகிறாள். அவள் கருதிய அந்த ஆள், புருடோத்தமன் என்று குருநாதர் கூறினார். அது எல்லா விதத்திலும் பொருத்தமாக இருக்கிறது. போருக்கு வந்த புருடோத்தமனும் குமாரி மனோன்மணியும் ஒருவரையொருவர் கண்டால் போர் இல்லையாகும். இதை விடுத்து, நமது குருநாதர் சிரமப்பட்டுச் சுருங்கை தோண்டி அமைக்கிறார் என்று என் சிற்றறிவினால் நான் முதலில் நினைத்தேன். பிறகு, ஒரு காரணத்துக்காகதான் இப்படிச் செய்கிறார் என்று தெரிந்தேன். துன்பங்களைக் கண்டு உளம் கரைந்து ‘தெய்வத்திருவருள் இவரைக் காக்க’ என்று இரங்கி வேண்டினால் அதுவே முத்தியும் மோக்ஷமும் ஆகும்” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, சுந்தர முனிவரும் நடராஜனும் அங்கு வந்தார்கள். அவர்களைக் கண்டதும் சீடர்கள் இருவரும் எழுந்து நின்று வணங்கினார்கள். சுந்தரமுனிவர் நடராஜனைப் பார்த்துக் கூறுகிறார்: “உமது அருளினால் சுருங்கை இன்று முடிந்தது. நீர் இல்லாவிட்டால் இந்த வேலை இவ்வளவு விரைவாக முடிந்திராது. இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்!” நடராஜன்: “நன்றாயிருக்கிறது தங்கள் முகமன் பேச்சு. இதென்ன வேடிக்கை! தங்கள் ஏவல்படி செய்வது அல்லாமல் என்னால் ஆவது என்னயிருக்கிறது” என்றான். முனிவர், கருணாகரரைப் பார்த்து, “ நீர் உறங்கி எத்தனை நாளாயிற்று! ஏன் உறங்கவில்லை? எத்தனைநாள் வருந்தி உழைத்தீர்!” என்று கேட்டார். கருணாகரர், “அடியேனுக்கு அலுப்பு என்ன? இங்கு வந்தபோது நிஷ்டாபரர் நிட்டையிலிருந்து கண் விழித்தார். இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தோம். இதோ விடியற் காலமாய் விட்டது” என்றார். “உங்கள் பேச்சை நாம் அறிவோம். ஓயாத பேச்சு, என்றும் முடியாத பேச்சு, உங்களுக்குச் சமயச் சச்சரவு வேண்டாம். அவரவர்கள் நிலையிலேயே அவரவர்கள் இருக்கலாம்” என்று கூறினார். பிறகு எல்லோரும் சென்றனர். மூன்றாம் அங்கம் முதற் களம் இடம் : பாண்டியன் அரண்மனை. காலம்: காலை. (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை) (நிலைமண்டில ஆசிரியப்பா) ஜீவகன்: ஐயமென்? அருஞ்சூழ் அமைச்ச! நின் தனையன் பெய்வளைக் கன்னியென் பேதையின் வதுவைக் குரியன முற்றும் ஒருங்கே முடித்து வருவதற் கமைந்த வலிமையும் கல்வியும் 5 உபாயமும் யாவும் உடையான்; அதனால் அபாயம் கருதிநீ ஐயுறல் வீண்! வீண்! குடிலன்: பலதேவ னாலொரு பழுதுறும் எனவெனக் கிலையிலை ஐயம் சிறிதும். உலகத்து இயற்கை யறியா இளையோ னாகிலும் 10 முயற்சியின் மதியின் முதியோன் எனவே மொழிகுவர், அவனாற் பழுதிலை. கொற்றவ! வஞ்சிநாட் டுள்ளார் வஞ்சனைக் கஞ்சார். நஞ்சினும் கொடிய நெஞ்சினர், அவர் தாம் கெஞ்சிடின் மிஞ்சுவர்; மிஞ்சிடிற் கெஞ்சுவர்; 15 என்னும் தொன்மொழி ஒன்றுண் டதனால் மன்னவ! சற்றே மருளும் என்னுள்ளம். அன்றியும் புருடோத் தமனெனும் அரசன் கன்றுஞ் சினத்தோன் என்றார் பலரும். ஜீவ: சினத்தோன் ஆயினென்? தேவரும் தத்தம் 20 மனத்தே அவாவி மயங்குநம் மனோன்மணி திருவும் வெருவும் உருவும், பெருகும் அருளுறை யகமும். மருளறு முணர்வும், முன்னமே இருடிகள் மொழியக் கேட்டுளன். அன்னவன் தன்னிடைப் பின்னரும் பெயர்த்துக் 25 குறிப்பால் நமது கொள்கை யுணர்த்தில் செறித்திடும் சிறையினை யுடைத்திடும் புனல்போல் தாங்கா மகிழ்ச்சியுள் தாழ்ந்தவன் இப்பால் தலையா லோடி வருவன். உனக்கு மலைவேன் மந்திரக் குடிலேந் திரனே! குடி: 30 முனிவர்க ளாங்கே முன்னர் மொழிந்தனர் எனநாம் நினைப்பதற் கில்லை. நம் அமுதின் எழிலெலாம் எங்ஙனம் முனிவோர் மொழிவர்? துறந்தார்க் கவைதாம் தோற்றுமோ மறந்தும்? சிறந்த நூல் உணர்வும் தெளிந்ததோர் உளமும் 35 செப்பினர் என்றிடில் ஒப்பலாந் தகைத்தே. ஆயினும், மலையநாட் டரசன் நமது தாயின் தன்மை சகலமும் இப்போது அறியா தொழியான்; அயிர்ப்பொன் றில்லை. நெறிமுறை சிறிதும் பிறழா நினது 40 தூதுவன் யாவும் ஓதுவன் திண்ணம். அம்ம! தனியே அவன்பல பொழுதும் மம்மர் உழன்றவன் போன்று மனோன்மணி அவயவத் தழகெலா மாறா தறைந்தறைந்து, “ இமையவர் தமக்கும் இசையுமோ இவளது 45 பணிவிடை? நமது பாக்கிய மன்றோ அணிதாய் இருந்திவட் காம்பணி யாற்றுதும்? என்றுமிப் படியே இவள் பணி விடையில் நின்றுநம் உயிர்விடில் அன்றோ நன்றாம்?” என்றவன் பலமுறை யியல்பல்கேட் டுளனே. ஜீவ: 50 ஐயமோ? குடிலா! மெய்ம்மையும் இராஜ பத்தியு நிறைந்த பலதே வன்றன் சித்த மென்குல திலகமாந் திருவுடன் பரிவுறல் இயல்பே. அரிதாம் நினது புத்திர னென்னில், இத்திற மென்றிங்கு 55 ஓதவும் வேண்டுவ துளதோ? ஏதிதும்? குடி: அதுகுறித் தன்றே யறைந்ததெம் இறைவ! மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி சீரெலாம் அறியினும் சேரன் வெறிகொளும் சிந்தையன் ஆதலின் வதுவைக் கவன்தான் இசைவனோ, 60 யாதோ எனவென் மனந்தான் அயிர்க்கும். அவன்குணம் ஒருபடித் தன்றே; அவனுளம் உவந்தன வெல்லாம் உஞற்றுவன் என்றே நாட்டுளார் நவில்வது கேட்டுளாய் நீயும். ஜீவ: ஆம்! ஆம்! அறிந்துளேம். ஏமாப் படைந்த 65 தன்னுளம் வியந்தவை இன்னவென் றில்லை. வேதம் வகுத்த வியாசன் வியந்து போற்றினும் பொருட்டாய் எண்ணான்; புலையன் சாற்றுதல் ஒருகால் தான்மகிழ்ந் திடுவன்; ஒருவன் தனதடி யிணையடைந் துறவே 70 பெரிது விரும்பினும் பெருமைபா ராட்டுவன்; மற்றோர் மனிதன் சற்றுமெண் ணாதே செருப்பால் மிதிக்கினும் விருப்பா யிருப்பன்; மலரிடிற் காய்வன்; பரலிடின் மகிழ்வன்; பெரியோர் சிறியோர் பேதையர் அறிஞர் 75 உரியோர் அயலோர் என்றவன் ஒன்றும் உன்னான். ஆயினும் இன்னவை யாவும் பிரபுத் துவமலாற் பிறவல குடிலா! குடி: அடியேற் கவ்விடத் தையமொன் றுளது. முடிபுனை மன்னரிற் கடிநகர்ச் செருக்கும் 80 இணையிலாச் சேனையும் ஈறிலா நிதியுந் துணிவறா உளனும் பணிகிலா உரனும் உனைவிட எவர்க்குள? ஓதுவாய். உன்வயின் தினையள வேனும் சேரா தாகும் ஒருகுணம் பிரபுத் துவமென யாரே 85 உரைதர உன்னுவர்? ஒவ்வுவ தெவ்விதம்? மலையன் தந்தைகீழ்த் தாய்க்கீழ் வளர்ந்தவன் அலனெனும் தன்மைநீ ஆய்ந்திலை போலும். நன்றுதீ தென்றவன் ஒன்றையு நாடான் என்றிடில் நாம்சொலும் நன்மையும் எங்ஙனம் 90 நாடுவன் எனவெனக்கு ஓடுமோர் நினைவே. ஜீவ: ஒக்கும்! ஒக்கும்நீ யுரைத்தவை முற்றும். குலகுரு கூறுதல் கொண்டில மென்னில் நலமன் றென்றே நாடி யனுப்பினோம். நயந்தில னாகில் அவன்விதி, நமக்கென்? 95 இயைந்த கணவர்வே றாயிரம். காண்குதும், குடி: அதற்கேன் ஐயம்? ஆயிரம்! ஆயிரம்! இதுமாத் திரமன் றிறைவ! சேரன் சென்றவர்க் கெங்ஙனந் தீதிழைப் பானோ என்றே யென்மனம் பதறும். ஏவுமுன் 100 உரைக்க உன்னினேன் எனினும் உன்றன் திருக்குறிப் பிற்கெதிர் செப்பிட அஞ்சினேன். ஜீவ: வெருவலை குடிலா! அரிதாம் நமது. தூதுவர்க் கிழிபவன் செய்யத் துணியும் போதலோ காணுதி, பொருநைத் துறைவன் 105 செருக்கும் திண்ணமும் வெறுக்கையும் போம்விதம்! விடுவனோ சிறிதில்? குடில! உன்மகற்குத் தினைத்துணை தீங்கவன் செய்யின்என் மகட்குப் பனைத்துணை செய்ததாப் பழிபா ராட்டுவன். (ஒற்றன் வர) ஒற்றன்: மங்கலம்! மங்கலம்! மதிகுல மன்னவா! ஜீவ: 110 எங்குளார் நமது தூதுவர்! ஒற்: இதோ! இம் மாலையில் வருவர். வாய்ந்தவை முற்றுமிவ் ஓலையில் விளங்கும்; ஒன்னல ரேறே! (ஒற்றன் போக, ஜீவகன் ஓலை வாசிக்க) குடி: (தனதுள்) ஒற்றன் முகக்குறி ஓரிலெம் எண்ணம் முற்றும் முடிந்ததற் கற்றமொன் றில்லை. 115 போரும் வந்தது. நேரும் புரவலற் கிறுதியும் எமக்குநல் லுறுதியும் நேர்ந்தன. ஜீவ: (தனதுள்) துட்டன்! கெட்டான்! விட்டநந் தூதனை ஏசினான்; இகழ்ந்தான் பேசிய வதுவையும் அடியில்நம் முடிவைத் தவனா ணையிற்கீழ்ப் 120 படியில் விடுவனாம்; படைகொடு வருவனாம்; முடிபறித் திடுவனாம். முடிபறித் திடுவன்! (குடிலனை நோக்கி) குடிலா! உனைப்போற் கூரிய மதியோர் கிடையார். கிடையார். அடையவும் நோக்காய். கடையவன் விடுத்த விடையதி வியப்பே! (குடிலன் ஓலை நோக்க) குடி: 125 நண்ணலர் கூற்றே! எண்ணுதற் கென்னே! உண்ணவா என்றியாம் உறவுபா ராட்டிற் குத்தவா எனும்உன் மத்தனன் றேயிவன்! யுத்தந் தனக்கெள் ளத்தனை யேனும் வெருவினோம் அல்லோம். திருவினுஞ் சீரிய 130 உருவினாள் தனக்கிங் குரைத்ததோர் குற்றமும் இழிவையும் எண்ணியே அழியும் என்னுளம்! ஜீவ: பொறு! பொறு! குடில! மறுவிலா நமக்கும் ஒருமறுக் கூறினோன் குலம்வே ரோடுங் கருவறுத் திடலுன் கண்ணாற் காண்டி. குடி: 135 செருமுகத் தெதிர்க்கிற் பிழைப்பனோ சிறுவன்? ஒறாமயக் கதனாற் பொருவதற் கெழுந்தான். வெற்றியாம் முற்றிலுங் கொள்வேம் எனினும், ஆலவா யுள்ள படைகளை யழைக்கில் சாலவும் நன்றாம்; காலமிங் கிலையே. ஜீவ: 140 வேண்டிய தில்லை யீண்டவர் உதவி. தகாதே யந்தநி காதர்தஞ் சகாயம். ஒருநாட் பொருதிடில் வெருவி யோடுவன். பின்னழைத் திடுவோம்: அதுவே நன்மை. புலிவேட் டைக்குப் பொருந்துந் தவிலடி 145 எலிவேட் டைக்கும் இசையுமோ? இயல்பாய். குடி: அன்றியு முடனே அவன்புறப் படலால் வென்றிகொள் சேனை மிகஇரா தவன்பால். ஜீவ: இருக்கினென்? குடிலா! பயமோ இவற்கும்? பொருக்கெனச் சென்றுநீ போர்க்கு வேண்டியவெலாம் 150 ஆயத்த மாக்குதி. யாமிதோ வந்தனம் ... (ஜீவகன் போக, வாயிற்காத்த சேவகன் வணங்கி வந்து) சேவகன்: விழுமிய மதியின் மிக்கோய்! நினைப்போற் பழுதிலாச் சூழ்ச்சியர் யாவர்? நின்மனம் நினைந்தவை யனைத்தும் நிகழுக வொழுங்கே. குடி: நல்லது! நல்லது! செல்லா யப்பால் (சேவகன் போக) (தனதுள்) 155 சொல்லிய தென்னை? சோரன் நமது நினைவறிந் துளனோ? நிருபர்க் குரைப்பனோ? இனையவன் எங்ஙனம் உணருவன்? வினையறி நாரண னோர்ந்து நவின்றனன் போலும்... காரணம் அதற்கும் கண்டிலம். ஆ! ஆ! 160 மாலைக் காக வாழ்த்தினன் இவனும்! புலமையிற் சான்றோர் புகல்வது பொய்யல, “கள்ள மனந்தான் துள்ளு” மென்பதும் “தன்னுளந் தன்னையே தின்னு” மென்பதும் “குற்றம் உள்ளோர் கோழையர்” என்பதும் 165 சற்றும் பொய்யல. சான்றுநம் மிடத்தே கண்டனம். அவனெம் அண்டையில் அம்மொழி விளம்பிய காலை விதிர்விதிர்ப் பெய்தி உளம்பட படத்தென் னூக்கமும் போனதே. சிச்சீ! இச்சைசெய் அச்சஞ் சிறிதோ! 170 வஞ்சனை யாற்பெறும் வாழ்வீ தென்னே! நஞ்சுபோல் தனது நெஞ்சங் கொதிக்கக் கனவிலும் நனவிலும் நினைவுகள் பலவெழத் தன்னுளே பன்முறை சாவடைந் தடைந்து பிறர்பொருள் வௌவும் பேதையிற் பேதை 175 எறிகடல் உலகில் இலையிலை. நில்! நில்!... நீதியை நினைத்தோ நின்றேன்? பள! பள! ஏதிது? என்மனம் இங்ஙனம் திரிந்தது! கொன்றபின் அன்றோ முதலை நின்றழும்? வாவா காலம் வறிதாக் கினையே. 180 ஓவா திவையெலாம் உளறுதற் குரிய காலம் வரும், வரும். சாலவும் இனிதே! (குடிலன் போக) மூன்றாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. இரண்டாம் களம் இடம் : ஊர்ப்புறம் ஒருசார். காலம் : எற்பாடு. நடன்: நடராஜன். (நேரிசை ஆசிரியப்பா) நடராஜன்: (தனிமொழி) காலையிற் கடிநகர் கடந்து நமது வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய் இன்றிரா முடிக்கினும் முடியும். துன்றராக் கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம் 5 பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம் என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி. அதனால் அன்றோ இதுபோல் விரைவில் இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது? எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை 10 இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம். ஈண்டெப் பொருள் தான் இலக்கற் றிருப்பது? இதோ ஓ! இக்கரை முளைத்தஇச் சிறுபுல் சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி. 15 அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை நலமுற அழைத்து நல்லூண் அருத்திப் பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ! என் 20 தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே, இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார் சிக்கிநீர் சென்மின்!” எனத்தன் சிறுவரைப் 25 புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும் பொறுமையும் புலனுங் காண்போர்; ஒன்றையும் சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும் போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும் 30 பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப. ஆர்த்தெழு மன்பினால் அனைத்தையும் கலந்துதம் என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர். தமக்கூண் நல்கும் வயற்குப யோகம், எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால் 35 செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ! அலைகடல் மலையா மலையலை கடலாப் புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்! பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச் சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத் 40 தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத் தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள் காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச் சாலத் தகும்இவை எனவோர்ந் துருட்டிக் 45 கொண்டு சென்று இட்டுமற் “றையா! அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச் சென்றபின் பெருமலைச் சிகர முதலாக் குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும், குகைமுகம் இழிந்தும், பூமியின் குடர்பல நுழைந்தும், 50 கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும், ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும், ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும், மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும் பற்பல பாடியான் பட்டங் கீட்டியது 55 அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்; இன்னமு மீதோ ஏகுவன்.” எனவிடை பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய் வந்திவண் அடைந்துமற், றிராப்பகல் மறந்து நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்? (நீரைக் கையாற் றடுத்து) 60 நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்! நில்! இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி. நீரே! நீரே! என்னையுன் நிலைமை? யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? நீக்கமில் அன்பும் ஊக்கமும் உறுதியும் 65 உனைப்போல் உளவேல் பினைப்பே றென்னை?... (நாங்கூழ்ப் புழுவை நோக்கி) ஓகோ! நாங்கூழப் புழுவே! உன்பாடு ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்! உழைப்போர் உழைப்பில் உழுவோர்தொழில்மிகும். உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ. 70 எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை. விடுத்தனை யிதற்கா, எடுத்தஉன் யாக்கை. உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய விழுமிய சேறாய் வேதித் துருட்டி வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல 75 ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்! இப்புற் பயிர்நீ இங்ஙனம் உழாயேல் எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும் குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப் புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை? 80 ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள? (நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி) விழுப்புகழ் வேண்டலை, அறிவோம். ஏனிது? துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ! ஆ! எங்கு மிங்ஙனே இணையிலா இன்பும் பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக் 85 காணார் பேணும் வாணாள் என்னே! அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற் சிதறிய குணக்கதிர் செறிந்து திரள வைத்தசிற் றாடியின் மையமே யொத்த உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர்... 90 நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே! சினக்கனல் எழும்பும். நமக்கேன் இச்சினம்? கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்? என்கொல் அத்தோற்றம்? புகையோ?-மங்குலுக்கு இந்நிற மில்லை. செந்நிறப் படாமென, 95 பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற் கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன் உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப் பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப் பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே? 100 இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்? இடியுருண் டதுபோல எழுமொலி தேரொலி! அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்? வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்... 105 பொருதற் கன்றவன் வருவது. சரிசரி வதுவைக் கமைந்து வந்தான் போலும். இதுவென்? ஓகோ? மணப்பாட் டன்றிது. (வஞ்சிநாட்டுச் சேனை அணிவகுத்து வழியில் ஒருபுறம் போகப் படைப்பாணர் பாட) (வஞ்சித் தாழிசை) படைப்பாணர்: அஞ்சலி லரிகாள்! நும் சஞ்சிதப் பெருவாழ் வெம் வஞ்சியன் சினத்தாற் கண் துஞ்சிய கனவே காண் 1 படைகள்: ஜே! ஜே! ஜே! பாணர்: எஞ்சலில் பகைகாள்! நும் மஞ்சுள மணி மகுடம், வஞ்சியன் சினத்தா னீர் கஞ்சியுண் கடிஞையே காண் 2 படை: ஜே! ஜே! ஜே! பாணர்: மிஞ்சிய பகைகாள்! நும் துஞ்சிய பிதிர்க் கூட்டம் வஞ்சியன் சினத்தா லெள், நெஞ்சிலும் நினையார் காண். 3 படை: ஜே! ஜே! புருஷோத்தமர்க்கு ஜே! ஜே! (நேரிசை ஆசிரியப்பா. தொடர்ச்சி) நட: பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும், வார்கழல் ஒலியும், வயப்படை யொளியும், 110 பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச் சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில் உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும் இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில் 115 மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை காட்டிய முகக்குறி யாவும் நன்றல, வேட்டலோ இதுவும்! விளையுமா றெவனோ! நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும் பெய்மத 120 மைம்முகில் ஈட்டமும், வான்தொடு விலோதனப் பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச் செல்லும் அசலத் திரளும் செறிந்து, நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம். அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவை 125 வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ! (இரண்டு உழவர்கள் வர) முதலுழவன்: வியப்பென்? சுவாமி நட: வயப்படை வந்தது அறிவையோ நீயும்? முதல் உழ: அழைத்திடில் யாவர் அணுகார்? நட: வழுதி மணமொழி வழங்க அன்றே விடுத்தான்? 2-வது உழ: மணமொழி பிணமொழி யானது. குடிலன் கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே! நட: செய்ததென்? முதல் உழ: ஐய! அதுநாம் அறியோம். குடிலன் படிறன்; கொற்றவன் நாடும் முடியும் கவர்ந்து மொய்குழல் மனோன்மணி 135 தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான். மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச் சூதாய்த் துணைவரக் கூவினான். நட: சீச்சீ! ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான். பொய்பொய்; புகன்றதார்? முதல் உழ: பொய்யல, பொய்யல. 140 ஐய! நா னறைவது கேட்டி: எனது மைத்துன னவன்தாய் மரித்த மாசம் உற்றதால் அந்தத் திதியினை யுணரச் சென்றனன் புரோகித சேஷைய னிடத்தில். அன்றுநாள் ஆதித்த வாரம்: அன்றுதான் (2-வது உழவனை நோக்கி) 145 சாத்தன் உன்னுடன் சண்டை யிட்டது. (நடராஜனை நோக்கி) சாத்திரி தரையி லிருக்கிறார்; அவரது மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில் (நாற்புறமும் நோக்கி, செவியில்) இருந்து பலபல இரகசியம் இயம்புவர் ... நட: திருந்தச் செப்பாய்; யாருளர் இவ்வயின்? 2-வது உழ: 150 இந்த மாமனார் மந்திரி மனைவிக்கு உற்ற ஜோசியர். முதல் உழ: பொறு! யான் உரைப்பன். மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி அருகே நின்றனன். அப்போ தறைவர் : “ மருகா! நேற்று மந்திரி மனைவி 155 பலபல பேச்சுப் பகருங் காலை, பலதே வன்றன் ஜாதக பலத்தில் அரச யோகம் உண்டென் றறைந்தது விரைவில் வருமோ என்று வினவினள். வரும்வரும் விரைவில் என்றேன் யானும். 160 மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி வதுவைக் காரியம் பேசினள். மற்றுஅது நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள். நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற் 165 சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்.” எனப்பல இரகசியம் இயம்பி, “வலியோர் மனக்குறி, முகக்குறி, வறிதாம் சொற்கள் இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?” எனஉரைத் திருவரு மெழுந்துபின் நகைத்தார். 170 பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே எனக்கிங் கிவையெலாம் இயம்பினன். உனக்குச் சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும் உண்டு;மற் றவனைக் கண்டுநீ வினவே. 2-வது உழ: வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு. 175 மீண்டும் ஒருமொழி கேள்; இவ் வழியாய்த் தூதுவர் போகும் காலைத் தாக ஏதுவால். இரும்படி இராமன் என்றன் தங்கை மனைக்கு வந்தவத் தருணம் அங்கியான் இருந்தேன். “அரண்மனைச் செய்தி 180 என்ன?” என் றேற்கவன் இயம்பும்: “மன்னன் தெத்தெடுத் திடும்படி யத்தன முண்”டென, “ எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ் செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான். முதல் உழ: பலதே வற்கிவன் நலமிகு சேவகன், 2-வது உழ:185 குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம். முதல் உழ: ஆயினும், நமக்கஃ திழிவே. மேலும் தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக் குறுதுயர் ஒருவரும் ஆற்றார். 2-வது உழ: அறிவிலாத் தந்தையர் தம்வினை மக்களைச் சாரும். 190 சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை விடுமோ? சொல்லாய். முதல் உழ: விதியெனப் பலவும் படியோர் பாவனை பண்ணித் தமது கடமையின் விலகுதல் மடமை; அதனால் நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி 195 எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி, 2-வது உழ: அரசன், அரசனேற் சரியே; சுவாமீ! உரையீர் நீரே திருவார் வாணியை அறியீர் போலும் நட: அறிவோம் அறிவோம்! நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர் ... (உழவர் போக) (தனதுள்) 200 ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில் தோற்றுவ தனைத்தும் சாற்றுவர், அவர்தம் தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல், சுகம்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும் அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும் 205 கூட்டிக் காரண காரியக் கொள்கைகள் காட்டலும், காணக் களிப்பே! ஆயினும் பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர் ஜனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர். அரசியல் இரகசியம் அங்காடி யம்பலம் 210 வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர் புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல், அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள் சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள் விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி 215 ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத் தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில் தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும் குடிலன் குணமுடன் கூடலால் அவையும், படையிவண் வரநாம் பார்த்ததும், 220 அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே. (நடராஜன் போக) மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. மூன்றாம் களம் இடம் : கன்னிமாடம்; நிலாமுற்றம். காலம் : யாமம். (மனோன்மணி உலாவ, வாணி நிற்க, செவிலி படுத்துறங்க.) (நேரிசை ஆசிரியப்பா) செவிலி: (படுத்தபடியே) ஏதம்மா! நள்ளிரா எழுந் துலாவினை? தூக்கம் ஒழிவையேல் சுடுமே யுடலம். மனோன்மணி: உடலால் என்பயன்? சுடவே தகுமது வேர்க்கிற திவ்விடம்; வெளியே இருப்பல். 5 போர்த்துநீ தூங்கு! (செவிலி தூங்க) வாணீ! உனக்கும் உறக்க மில்லையோ? வாணி: எனக்கது பழக்கம். மனோ: வருதி இப்புறம், இருஇரு... (இருவரும் நிலாமுற்றத்திருக்க) இதுவரை எங்கிருந் தனவிவ் அன்றிற் பேய்கள்! நஞ்சோ நாவிடை? நெஞ்சந் துளைக்கும் 10 உறக்கங் கொண்டனள் செவிலி! குறட்டைகேள். கையறு நித்திரை! வாணீ! மற்றிது வைகறை யன்றோ? வா: நடுநிசி அம்மா! மனோ: இத்தனை யரவமேன்? முனிவ ரறையில் நித்தமு முண்டிது! நிதியெடுப் பவர்போல் 15 தோண்டலு மண்ணினைக் கீண்டலும் கேட்டுளேன். ஊரிலேன் இன்றிவ் உற்சவ அரவம்? வா: (தனதுள்) போரெனிற் பொறுப்பளோ? உரைப்பனோ? ஒளிப்பனோ? மனோ: கண்டதோ நகருங் காணாக் கனவு? வா: கண்டது கனவோ தாயே? மனோ: கண்டது... 20 கனவெனிற் கனவு மன்று: மற்று நனவெனில் நனவு மன்று. வா: நன்றே! கண்ணாற் கண்டிலை போலும்! அம்ம! மனோ: கண்ணால் எங்ஙனங் காணுவன்? கண்ணுளார்! வா: எண்ணம் மாத்திரமோ? இதுவென் புதுமை! மனோ: 25 எண்ணவும் படாஅர்! எண்ணுளும் உளாஅர்! வா: புதுமை! ஆயினும் எதுபோ லவ்வுரு? மனோ: இதுவென வொண்ணா உவமையி லொருவரை எத்திற மென்றியான் இயம்ப! நீயுஞ் சித்திர ரேகை யலையே. விடுவிடு! 30 பண்ணியல் வாணீ! வாவா! உன்றன் பாட்டது கேட்டுப் பலநா ளாயின! வா: என்பா டிருக்க! யாவரு மறிவார்! உன்பா டதுவே ஒருவரு மறியார். மனோ: பாக்கிய சாலிநீ! பழகியும் உளையே! 35 நீக்குக இத்தீ நினைவு! யாழுடன் தேக்கிய இசையிற் செப்பொரு சரிதம் (வாணி வீணைமீட்ட) அவ்விசை யேசரி ஒவ்வுமித் தருணம்! (வாணி பாட) சிவகாமி சரிதம் (குறள்வெண்செந்துறை) “வாழியநின் மலரடிகள்! மௌனதவ முனிவ! மனமிரங்கி அருள்புரிந்தோர் வார்த்தையெனக் கீயில் பாழடவி இதிற்சுழன்று பாதைவிடுத் தலையும் பாவியொரு வனையளித்த பலனுறுவை பெரிதே. 1 சாரும்வரை குறியாது தன்னிழலை யளக்குந் தன்மையென நான் நடக்கத் தான்வளரும் அடவி. ஆரிருளில் இனிநடக்க ஆவதிலை. உடல மாறும்வகை வீடுளதே லடையுநெறி யருளாய்.” 2 என்றமொழி கேட்டமுனி யெதிர்விடையங் கியம்பும்: “ஏகாந்தப் பெருங்ககனம்; இதிலுலக ரணையார்; சென்றுறைய மடமுமிலை; திகழ்வெளியென் வீடு; சிந்தையற நொந்தவர்க்குச் சேரவிலை பந்தம். 3 அறங்கிடந்த சிந்தையரா யாசையெலாந் துறந்த அதிவீர ரொழியஎவ ராயினுமிங் கடையார். உறங்கஅவர் பணிப்பாயும் பூவணையும் உன்னார் உண்ணவெனில் பாலமிழ்தும் ஒன்றாக மதியார். 4 ஆதலிலென் பாலுறுவ தியாதெனினு மைந்த! அன்புடன் நீ யென்பிறகே யணையிலஃ துனதாம். வேதனையும் மெய்ச்சலிப்பும் விட்டகல இருளும் விடியும். உடன் மனமிருக்கில் வேண்டுமிடம் ஏகாய்,” 5 என்றுரைத்த இனியமொழி யிருசெவியுங் குளிர, ஏதோதன் பழநினைவும் எழவிருகண் பனித்து நன்றெனவே தவவடிவாய் நின்றமகன் வணங்கா நன்முனிவன் செல்வழியே நடந்துநனி தொடர்ந்தான். 6 இந்திரநற் சாலவித்தை யெதுவோவொன் றிழைக்க இட்டதிரை யெனத்திசைக ளெட்டுமிருள் விரிய அந்தரத்தே கண்சிமிட்டிச் சுந்தரதா ரகைகள் அரியரக சியந்தமக்குள் ளறைந்துநகை புரிய; 7 என்புருகப் பிணைந்தஅன்றில் இணைசிறிது பிரிய ஏங்கியுயிர் விடுப்பவர்போ லிடையிடையே கூவ, அன்புநிலை யாரறிவ ரென்பனபோல் மரங்கள் அலர்மலர்க்கண் ணீரருவி அகமுடைந்து தூவ; 8 விந்தைநடப் பதுதெரிக்க விளிப்பவரில் வாவல் விரைந்தலைய மின்மினியும் விளக்கொடுபின் ஆட; இந்தவகை அந்தியைமுன் ஏவிஇர வென்னும் இறைவியும்வந் திறுத்தனள்மற் றிளைஞருயிர் வாட. 9 பொறியரவின் சுடிகையுறு பொலன்மணியி னொளியும், பொலிமதத்திண் கறையடியின் புலைமருப்பி னொளியும். அறிவரிய சினஉழுவை அழல்விழியி னொளியும், அலதிலையவ் அடவியிடை யயல்காட்டு மொளியே. 10 பிரிவரிய ஊசிவழி பின்தொடரும் நூல்போல் பேரயர்வின் மனமிறந்து பின்தொடரும் மைந்தன், அரியபுத ரிடையகற்றி அன்பொடழைத் தேகும் அம்முனிவ னடியன்றி அயலொன்றும் அறியான். 11 ஒருங்கார நிறைமுளரி உழையொதுக்கி நுழைந்தும், உயர்மலையின் குகைகுதித்தும் ஒங்கார ஒலியே தருங்கான நதிபலவுந் தாண்டிஅவ ரடைந்தார் சார்பிலர்க்குத் தனித்துணையாந் தவமுனிவ னிடமே. 12 நேயமுட னெவ்வழியும் நேர்ந்தவரைத் தன்நுண் நிறுவுதலை வளைத்தழைக்கு நெருப்பொன்றும் அன்றி வாயிலெனப் பூட்டென்ன மதிலென்ன வழங்கும் மனையென்னும் பெயர்க்குரிய மரபொன்று மின்றி. 13 நின்றதனி யிடமிவர்கள் நேர்ந்தவுடன் முனிவன் நெருப்பின்னும் எழுப்புதற்கு நிமலவிற கடுக்கி ஒன்றியமெய்ப் பத்தரில்தன் உளங்கூசி யொருசார் ஒதுங்குகின்ற மைந்தனகம் உவப்பஇவை உரைக்கும்: 14 “இனிநடக்க வழியுமிலை; இனித்துயரு மில்லை. இதுவேநம் மிடம்மைந்த! இக்கனலி னருகே பனிபொழியும் வழிநடந்த பனிப்பகல இருந்து பலமூல மிதுபுசிக்கிற் பறக்குமுன திளைப்பே. 15 தந்நாவி லொருவிரலைத் தாண்டவறி யாமல் சாகரமும் மலைபலவுந் தாண்டியலை கின்றார். என்னேயிம் மனிதர்மதி!” எனநகைத்து முனிவன் இனியகந்த முதலனந்த இனம்வகுத்தங் கிருந்தான். 16 இருந்தமுனி “வருந்தினவ! ஏதுனது கூச்சம்? இருவருமே யொருவரெனி லெவர்பெரியர் சிறியர்? திருந்தஅன லருகிலினிச் செறிந்துறைதி மைந்த! சேர்ந்தார்க்குக் களிப்புதவுஞ் சேரார்க்குப் பனிப்பே.” 17 என இரங்கி இரண்டுமுறை இயம்பியுந்தன் னருகே யேகாம லெதிரொன்று மிசையாமல் தனியே மனமிறந்து புறமொதுங்கி மறைந்துவறி திருந்த மகன் மலைவு தெளிந்துவெளி வரும் வகைகள் பகர்ந்தான். 18 பகர்ந்தநய மொழிசிறிதும் புகுந்ததிலை செவியில்; பாதிமுக மதியொருகைப் பதுமமலர் மறைப்பத் திகழ்ந்தசுவ ரோவியம்போ லிருந்தவனை நோக்கிச் சிந்தைநனி நொந்துமுனி சிறிதுகரு திடுவான். 19 செந்தழலு மந்தவெல்லை திகழ்ந்தடங்கி யோங்கி திகைக்கஎலி பிடித்தலைக்குஞ் சிறுபூனை யெனவே விந்தையொடு நடம்புரிந்து வீங்கிருளை வாங்கி மீண்டுவர விடுத்தெடுத்து விழுங்கிவிளங் கினதே. 20 மொழியாதும் புகலாது விழிமாரி பொழிய முகங்கவிழ வதிந்தகுறி முனிநோக்கி வினவும்: “எழிலாரு மிளமையினில் இடையூறா திகளால் இல்லமகன் றிவ்வுருவ மெடுத்திவண்வந் தனையோ? 21 ஏதுனது கவலை? உளத் திருப்பதெனக் கோ தாய். இழந்தனையோ அரும்பொருளை? இகழ்ந்தனரோ நண்பர் காதல்கொள நீவிழைந்த மாதுபெருஞ் சூதாய்க் கைவிடுத்துக் கழன்றனளோ? மெய்விடுத்துக் கழறாய். 22 ஐயோஇவ் வையகத்தி லமைந்தசுக மனைத்தும் அழலாலிங் கெழுந்தடங்கு நிழலாக நினையாய். கையாரும் பொருளென்னக் கருதிமணல் வகையைக் காப்பதெலா மிலவுகிளி காத்தலினும் வறிதே. 23 நண்பருற வினர்கள்நமை நாடியுற வாடல் நறுநெயுறு குடத்தெறும்பு நண்ணலென எண்ணாய்! பெண்களாகக் காதலெலாம் பேசுமுயற் கொம்பே! பெருங்கபட மிடுகலனோ பிறங்குமவ ருடலம்!” 24 எரியுமுளம் நொந்தடிக ளிசைத்தவசை யுட்கொண்டு ஏதிலனீள் கனவுவிழித் தெழுந்தவன்போல் விழித்து விரிவெயிலில் விளக்கொளியும் மின்னொளியிற் கண்ணும் வெளிப்பட்ட கள்வனும்போல் வெட்கிமுகம் வெளுத்தான். 25 இசைத்தவசைச் செயலுணர எண்ணிமுகம் நோக்கி இருந்தயதி யிக்குறிகண் டிறும்பூதுள் ளெய்தி’ விசைத்தியங்கு மெரியெழுப்பி மீண்டுமவன் நோக்க வேஷரக சியங்களெலாம் வெட்டவெளி யான. 26 நின்மலவி பூதியுள்ளே பொன்மயமெய் தோன்றி நீறுபடி நெருப்பெனவே நிலவியொளி விரிக்கும். உண்மைதிகழ் குருவிழிக்கு ளுட்கூசி யொடுங்கும் உண்மைபெறு கண்ணினையும் பெண்மையுருத் தெரிக்கும். 27 கூசுமுக நாணமொடு கோணியெழில் வீச குழற்பாரஞ் சரிந்துசடைக் கோலமஃ தொழிக்கும். வீசுலையில் மூக்கெனவே விம்மியவெய் துயிர்ப்பு வீங்கவெழு கொங்கைபுனை வேடமுழு தழிக்கும். 28 இவ்விதந்தன் மெய்விளங்க இருத்தமக ளெழுந்தே யிருடிபதந் தலைவணங்கி யிம்மொழியங் கியம்பும்: “தெய்வமொடு நீவசிக்குந் திருக்கோயில் புகுந்த தீவினையேன் செய்தபிழை செமித்தருள்வை முனியே! 29 மண்ணுலகிற் காவிரிப்பூ மாநகரிற் செல்வ வணிககுல திலகமென வாழ்வளொரு மங்கை. எண்ணரிய குணமுடையள். இவள் வயிற்றி லுதித்தோர் இருமகளி ரொருபுருட ரென்ன அவர் மூவர். 30 ஒப்பரிய இப்புருடர்க் கோர்புதல்வ ருதித்தார். ஒருத்திமகள் யான்பாவி; ஒருத்திமுழு மலடி. செப்பரிய அம்மலடி செல்வமிக வுடையள்; செகமனைத்து மவள்படைத்த செல்வமென மொழிவர். 31 உடல்பிரியா நிழல்போல ஓதியஅப் புதல்வர் உடன்கூடி விளையாடி யொன்றாக வளர்ந்தேன். அடல்பெரியர் அருளுருவர் அலகில்வடி வுடையர், அவருடைய திருநாமம் அறைவேனோ அடிகாள்?” 32 உரைத்தமொழி கேட்டிருடி யுடல்புளக மூடி ஊறிவிழி நீர்வதன மொழுகவஃ தொளிக்க எரிக்கவிற கெடுப்பவன்போ லெழுந்துநடந் திருந்தான். இளம்பிடியுந் தன்கதையை யெடுத்தனள்முன் தொடுத்தே. 33 “மலடிசிறு தாய்படைத்த மதிப்பரிய செல்வம் மடமகளென் றெனக்களித்தாள். மயங்கியதின் மகிழ்ந்து தலைதடுமா றாச்சிறிய தமியளது நிலையும் தலைவனெனுந் தன்மையையுந் தகைமையையு மறந்தேன். 34 குறிப்பாயுள் ளுணர்த்தியும்யான் கொள்ளாது விடுத்தேன். குறும்புமதி யாலெனது குடிமுழுதுங் கெடுத்தேன். வெறுப்பாக நினைந்தென்மேல் வேதனைப்பட் டவரும் வெறும்படிறென் உள்ளமென விட்டுவில கினரே. 35 பொருள்விரும்பிக் குலம்விரும்பிப் பொலம்விரும்பி வந்தோர் பொய்க்காதல் பேசினதோ புகலிலள வில்லை. அருளரும்பி யெனைவிரும்பி ஆளுமென ததிபர் அவரொழிய வேறிலையென் றறிந்துமயர்ந் திருந்தேன். 36 ஒருவாரம் ஒருமாதம் ஒருவருட காலம் ஓயாமல் உன்னியழிந் தேன்உருவங் காணேன். திருவாருஞ் சேடியர்க்குச் செப்பஅவர் சேரும் திசைதேயம் எவரறிந்து தெரிப்பரெனச் சிரித்தார். 37 ஆயத்தார் கூடியெனை ஆயவுந்தான் ஒட்டார். அகல்வேலை யோஎறியும் அகோராத்திரங் கெடுத்து; தீயைத்தா னேயுமிழுஞ் சிறந்தகலை மதியும்; திரிந்துலவுங் காலுமுயிர் தின்னுநம னென்ன. 38 கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடிக் கண்டிடச்சென் றேயலைந்த கட்டமெனைத் தென்க? உண்டெனத்தம் யூகநெறி உரைப்பவரே அல்லால் உள்ளபடி கண்டறிந்தோர் ஒருவரையுங் காணேன். 39 உண்டெனிலோ கண்டிடுவன்; இல்லையெனில் ஒல்லை, உயிர்விடுத லேநலமென் றுன்னியுளந் தேறி கண்துயிலும் இல்லிடந்தீ கதுவவெளி யோடும் கணக்காஇவ் வேடமொடு கரந்துபுறப் பட்டேன். 40 தீர்த்தகுளம் மூர்த்திதலம் பார்த்துடலம் சலித்தேன். திருக்கறுபற் குருக்கள்மடம் திரிந்துமனம் அலுத்தேன். வார்த்தைகத்தும் வாதியர்தம் மன்றனைத்தும் வறிய. மறுத்துறங்கும் யோகியர்போய் வாழ்குகையும் பாழே. 41 மான்மறவாக் கலையினமே! வாழ்பிடிவட் டகலா மதம்பெருகு மாகுலமே! வன்பிகமே! சுகமே! நான்மறவா நாதனையெஞ் ஞான்றுமறி வீரோ? நவில்விரெனப் பின்தொடர்ந்து நாளனந்தங் கழித்தேன். 42 இவ்விடமும் அவ்விடமும் எவ்விடமும் ஓடி இதுவரையும் தேடியுமென் அதிபரைக்கண் டிலனே, எவ்விடம்யான் நண்ணவினி? எவ்விடம்யான் உண்ண? இக்காயம் இனியெனக்கு மிக்கஅரு வருப்பே. 43 ஐயோவென் உள்ளநிலை அறியாரோ இனியும்? ஆசைகொண்டு நானலைந்த தத்தனையும் பொய்யோ? பொய்யேதான் ஆயிடினும் புனிதரவர் தந்த போதமலால் வேறெனக்கும் ஓதுமறி வுளதே? 44 நல்லர்அரு ளுடையரென நம்பிஇது வரையும் நானுழைப்ப தறிவரெனில் ஏனெதிர்வந் திலரோ? இல்லையெனில் என்னளவும் இவ்வுலகம் அனைத்தும் எந்நலமும் கொல்லவென எடுத்தசுடு காடே. 45 என்னுடைய உயிர்த்துணைவர் எண்ணரிய அருளில் ஏதோசிற் சாயையுன திடத்திருத்தல் கண்டு மன்னுதவ மாமுனிவ! மனத்துயரம் உன்பால் வகுத்தாறி னேன்சிறிது, மறுசாட்சி யில்லை. 46 இனியிருந்து பெரும்பயனென்? இவ்வழலே கதி”யென்று எரியுமழல் எதிரேநின் றிசைத்தமொழி முழுதும் முனிசெவியிற் புகுமுனமே மூதுருவம் விளக்கி முகமலர்ந்தங் கவளெதிரே முந்திமொழி குளறி.... 47 “சிவகாமி யானுனது சிதம்பரனே” என்னச் செப்புமுனம் இருவருமற் றோருருவம் ஆனார்! எவர்தாமுன் அணைந்தனரென் றிதுகாறும் அறியோம். இருவருமொன் றாயினரென் றேயறையும் சுருதி. 48 பரிந்துவந்து பார்வதியும் பாரதியும் கஞ்சப் பார்க்கவியும் யார்க்கிதுபோல் வாய்க்குமென வாழ்த்த, அருந்ததியும் அம்ம! இஃது அருங்கதியென் றஞ்ச ஆர்வமுல கார்கவென ஆரணங்கள் ஆர்த்த. 49 ஆழிபுடை சூழுலகம் யாவுநல மேவ! அறத்துறை புகுந்துயிர்கள் அன்புவெள்ளம் மூழ்க! பாழிலலை வேனுடைய பந்தனைகள் சிந்த பரிந்தருள் சுரந்தமை நிரந்தரமும் வாழ்க! 50 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) மனோ: வாணி! மங்காய்! பாடிய பாட்டும், வீணையின் இசையும் விளங்குநின் குரலும் 40 தேனினும் இனியவாய்ச் சேர்ந்தொரு வழிபடர்ந்து ஊனையும் உயிரையும் உருக்கும். ஆ! ஆ! (இருவரும் சற்று மௌனமாயிருக்க) உனதுகா தலனெங் குளனே? உணர்வைகொல்? வா: எனது சிந்தையில் இருந்தனர்: மாறார். மனோ: ஆயினும் வெளியில்? வா: அறியேன், அம்ம! மனோ: 45 போயின இடம்நீ அறியாய்? வா: நாரணன் முனிவர் தம்மடத் தேகினர் தனியென ஓதினன் ஓர்கால். மனோ: ஓகோ! ஓகோ! (மௌனம்) கடைநாள் நிகழ்ந்தவை யென்னை? கழறாய் வா: அடியனேற் கந்நாள் கெடுநாள் மிகவும்! 50 ஒருநாள் அந்தியில் இருவரும் எதிர்ச்சையாக் கடிபுரி கடந்துபோய், நெடுவயற் பாயும் ஒருசிறு வாய்க்காற் கரைகண் டாங்கே, பெருமலை பிறந்த சிறுகாற் செல்வன் தெண்ணீர்க் கன்னி பண்ணிய நிலாநிழற் 55 சிற்றில் பன்முறை சிதைப்பவன் போன்று சிற்றலை யெழுப்பச் சிறுமி முறுமுறுத்து அழுவது போல விழுமிய பரல்மேல் ஒழுகும் தீம்புனல் ஓதையும் கேட்டுப் பழுதிலாப் பால்நிலா விழுவது நோக்கி 60 இருவரும் மௌனமாய் நெடும்பொழு திருந்தோம். கரையிடை அலர்ந்த காவியொன் றடர்த்தென் அருகே கொணர்ந்தெனக் கன்பா யீந்தனர். வருவதிங் கறியா மதியிலி அதனைக் கண்ணிணை ஒற்றிலன்; உள்மணம் உகந்திலன்; 65 மார்பொடு சேர்த்திலன்; வார்குழற் சார்த்திலன்; ஆர்வமும் அன்பும் அறியார் மான ஓடும் தீம்புனல் மாடே விடுத்துச் சிறுமியர் குறும்பு காட்டிச் சிரித்தேன். முறுவலோ டவரும் ஏதோ மொழிய 70 உன்னும் முன்னரென் அன்னையங் கடைந்தாள்; தீமொழி பலவும் செப்பினள். யானோ? நாவெழில் இன்றி நின்றேன். நண்பர் மறுமொழி ஒன்றும் வழங்கா தேகினர். அதுமுதல் இதுகாறும் அவர்தமை ஐயோ! 75 கண்டிலேன். இனிமேற் காண்பனோ? அறியேன். ஒருமுறை கண்டென் உளக்கருத் தவருடன் உரைத்தபோ தன்றி ஒழியா துயிரே! மனோ: உரைப்பதென் வாணீ! உளமும் உளமும் நேர்பட அறியா என்றோ நினைத்தாய்? வா: 80 ஓர்வழிப் படரின் உணருமென் றுரைப்பர். மனோ: ஏனதில் ஐயம்? எனக்கது துணிபே! பூதப் பொருட்கே புலன்துணை அன்றிப் போதப் பொருட்குப் போதும் போதம். இரவியை நோக்கற் கேன்விளக் குதவி? 85 கருவிநுண் மையைப்போற் காட்சியும் விளங்கும். பட்டே உணரும் முட்டா ளர்கள்போல் தொட்டே உணரும் துவக்கிந் திரியம். நுண்ணிய கருவியாம் கண்ணே உணரும் எண்ணறச் செய்த்தாம் நுண்ணிய ஒளியை! 90 கண்ணினும் எத்தனை நுண்ணிய துள்ளம்! களங்கம் அறுந்தொறும் விளங்குமங் கெதுவும். உண்மையாய் நமதுள முருகிலவ் வுருக்கம் அண்மை சேய்மை என்றிலை; சென்றிடும். எத்தனை பெட்டியுள் வைத்துநாம் பூட்டினும் 95 வானுள மின்னொளி ‘வடக்கு நோக்கி’ யைத் தானசைத் தாட்டும் தன்மைநீ கண்டுளை? போதங் கரைந்துமேற் பொங்கிடும் அன்பைப் பூத யாக்கையோ தடுத்திடும்? புகலாய்! வா: கூடும் கூடும்! கூடுமக் கொள்கை; 100 நம்பலாம் தகைத்தே! மனோ: நம்புவ தன்றிமற்று என்செய நினைத்தாய்? இவ்வரும் பொருள்கள் தருக்கவா தத்தால் தாபித் திடுவோர் கரத்தால் பூமணம் காண்பவ ரேயாம்! அரும்பிற் பூமண மாய்குத லேய்ப்பத் 105 தரும்பக் குவமிலார் தமதுளம் போய வழியே வாளா மனக்கணக் கிட்டு மொழிவார் முற்றும் துணிவா யெனயான் இச்சிறு தினத்தின் இயைந்தவை தம்மால் நிச்சயித் துணர்ந்தேன். வாணீ! ஐயோ! 110 நம்பலென் பதுவே அன்பின் நிலைமை! தெளிந்தவை கொண்டு தெளிதற் கரியவை உளந்தனில் நம்பி உறுதியாய்ப் பிடித்துச் சிறிது சிறிதுதன் அறிவினை வளர்த்தே அனுபவ வழியாய் அறிவதை அந்தோ! 115 ‘அனுமா னாதியால் ஆய்ந்தறிந் திடுவோம் அலதெனில் இலையென அயிர்ப்போம்’ எனத்திரி வாதியர் அன்பொரு போதுமே அறியார். தாய்முலைப் பாலுள் நஞ்சு ஆய்பவ ரவரே! முற்றுங் களங்கம் அற்றிடில் ஆ! ஆ! (உடல் புளகாங்கிதமாய் நடுங்க) 120 ஏதோ வாணீ! இப்படி என்னுடல்?... வா: தமோ? தாயே! மனோ: சீ! சீ! இன்றெலாம் இப்படி அடிக்கடி என்னுடல் நடுங்கும்! வா: இக்குளிர் காற்றின் இடையே இருத்தல் தக்க தன்றினி. தாயே பாராய்! 125 அம்மழை பெய்யும் இம்மெனும் முன்னம். மனோ: நனைந்திடில் என்னை? கரைந்திடு மோவுடல்? (எழுந்து மேகம் பார்க்க) வா: (தனதுள்) ஐயோ! ஏன்நான் அத்திசை காட்டினேன்? பொய்யெப் படியான் புகல்வன்! மனோ: வாணீ! ஊர்ப்புறம் அத்தனை யொளிஏன்? ஓ! ஓ! 130 ஆர்ப்பேன்? ஆ! ஆ! அயிர்ப்பேன்? அறைகுதி. போர்க்குறி போலும், புகலுதி உண்மை. (மழை இரைந்து பெய்ய) அஞ்சலை அஞ்சலை. இதோஎன் நெஞ்சிடை வெஞ்சரம் பாயினும் அஞ்சிலேன்! விளம்பு. வா: இம்மழை நிற்கலை அம்ம! அறைகுவன் ... 135 விளம்புவன் வீட்டுள் வருக! தெளிந்ததோர் சிந்தைத் தீரநற் றிருவே! (இருவரும் போக) மூன்றாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. நான்காம் களம் இடம் : சுந்தரமுனிவர் ஆசிரமம். காலம் : வைகறை. (நிஷ்டாபரர் கருணாகரர் இருவரும் அளவளாவி இருக்க.) (நேரிசை ஆசிரியப்பா) நிஷ்டாபரர்: ஏதிஃ துமக்குமோ இத்தனை மயக்கம்? வேதவே தாந்தம் ஓதிநீர் தெளிந்தும் இரவெலாம் இப்படி இமையிமை யாதே பரிதபித் திருந்தீர்! கருணா கரரே! 5 பாரினிற் புதிதோ போரெனப் புகல்வது! போரிலை ஆயினென்? யாருறார் மரணம்? எத்தினம் உலகில் எமன்வரா நற்றினம்? இத்தினம் இறந்தோர் எத்தனை என்பீர்? ஒவ்வொரு தினமும் இவ்வனம் ஒன்றில், 10 எறும்பு முதலா எண்ணிலா உயிர்கள் உறுந்துயர் கணக்கிட் டுரைப்போர் யாவர்? சற்றிதோ மனங்கொடுத் துற்றுநீர் பாரும். குரூரக் கூற்றின் விரூபமிச் சிலந்தி! பல்குழி நிறைந்த பசையறு தன்முகத்து 15 அல்குடி யிருக்க, அருளிலாக் குண்டுகண் தீயெழத் திரித்துப் பேழ்வாய் திறந்து கருக்கொளும் சினைஈ வெருக்கொளக் கௌவி விரித்தெண் திசையிலும் நிறுத்திய கரங்களின் முன்னிரு கையில் வெந்துறக் கிடத்தி, 20 மார்பொடு வயிறும் சோர்வுறக் கடித்துப் பறித்திழுத் திசித்துக் கறிக்கமற் றவ்ஈ நொந்துநொந் தந்தோ! சிந்தனை மயங்கி எய்யா தையோ! என்றழு குரலிங்கு யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்? 25 கைகால் மிகில்நம் மெய்வே றாமோ? நோவும் சாவும் ஒன்றே, அன்றியும் உலகெலாம் நோக்கில்நம் உடலொரு பொருளோ? பஞ்சா சத்கோடி யெனப்பலர் போற்ற எஞ்சா திருந்த இப்புவி அனைத்தும் 30 இரவியின் மண்டலத் தொருசிறு திவலை. பரவிய வானிடை விரவிய மீனினம் இரவியில் எத்தனை பெரியஒவ் வொன்றும்! இரவியும் இம்மீன் இனங்களும் கூடில் ஒருபிர மாண்டமென் றுரைப்பர் இதுபோல் 35 ஆயிரத் தெட்டுமற் றுண்டென அறைவர். ஆயிரத் தெட்டெனல் அலகிலை என்பதே. இப்பெரும் உலகெலாம் ஒப்பறு திருமால் உந்தியந் தடாகத் துதித்தபன் முளரியில் வந்ததோர் நறுமலர் தந்தபல் லிதழில் 40 ஓரிதழ் அதனில் ஓர்சார் உதித்த நான்முகச் சிலந்தி நாற்றிய சிறுவலை. ஏன்மிக? நாமிங் கோதிய மாலும் ஒருபெருங் கடலில் உறுதுரும் பென்ப. அப்பெருங் கடலும் மெய்ப்பொருட் கெதிரில் 45 எப்படிப் பார்க்கினும் இசையாப் பேய்த்தேர். இங்கிவை உண்மையேல், எங்குநாம் உள்ளோம்? நீர்யார்? நான்யார்? ஊரெது? போரெது? போரெனப் பொறுக்கலீர்! ஓ! ஓ! பாரும்! மருவறு மாயா மகோததி யதனிற் 50 புற்புதம் அனைய பற்பல அண்டம் வெடித்தடங் கிடுமிங் கடிக்கடி. அதனைத் தடுப்பவர் யாவர்? தாங்குநர் யாவர்? விடுத்திடும், விடுத்திடும். வீணிவ் விசனம். இந்திர ஜாலமிவ் எந்திர விசேடம். 55 தன்தொழில் சலிப்பற இயற்றும். மற் றதனுள் படுபவர் திரிகையுட் படுசிறு பயறே. விடுபவர் யாவர்பின்! விம்மி விம்மிநீர் அழுதீர், தொழுதீர், ஆடினீர், பாடினீர், யாரென் செய்வர்! யாரென் செயலாம்! 60 அடித்திடில் உம்மையும் பிடிக்குமிம் மாயை. பிடித்திடிற் பின்நும் படிப்பும் ஞானமும் குருட்டர சனுக்குக் கொளுத்திய விளக்கும் இருட்டறை யிருந்துகண் சிமிட்டலும் என்ன ஆர்க்குமிங் குமக்கும் பிறர்க்குமென் பயக்கும்? 65 பார்க்கப் பார்க்கஇப் படியே துயரம் மீக்கொளும், அதனால் விடுமுல கெண்ணம். சுட்டதோர் சட்டிகை விட்டிடல் என்னத் துறப்பதிவ் வுலகம் மறப்பதற் கன்றோ! மறக்கிற் சுயமே மறையும். மறைய 70 இறக்கும் நும்முளம். இறக்குமக் கணமே பிறக்கும் பிரத்தியக் பிரபோ தோதயம்! நீரும் உலகமும் நிகழ்த்திய போரும் யாருமங் கில்லை. அகண்டசித் கனமாய் எதிரது கழிந்தபே ரின்பமே திகழும்! 75 உரையுணர் விறந்தவிந் நிருபா திகம்யான் உரைதரல், பிறவிக் குருடற் கொருவன் பால்நிறம் கொக்குப் போலெனப் பகர்ந்த கதையாய் முடியும்! அதனாற் சற்றே பதையா திருந்துநீர் பாரும் 80 சுதமாம் இவ்வநு பூதியின் சுகமே. 1 கருணாகரர்: சுகம்யான் வேண்டிலேன் சுவாமி! எனக்குமற் றிகம்பரம் இரண்டும் இலையெனில் ஏகுக. யாரெத் ஒருபொருள் உளதாம் அளவும், ஞான தயாநிதி நங்குரு நாதன் 85 ஈனனாம் என்னையும் இழுத்தடி சேர்த்த வானநற் கருணையே வாழ்த்தியிங் கென்னால் ஆனதோர் சிறுபணி ஆற்றலே எனக்கு மோனநற் சித்தியும் முத்தியும் யாவும். ஐயோ! உலகெலாம் பொய்யா யினுமென்! 90 பொய்யோ பாரும்! புரையறு குரவன் பரிந்துநம் தமக்கே சுரந்தவிக் கருணை! இப்பெருந் தன்மைமுன் இங்குமக் கேது? செப்பிய நிட்டையும் சித்தநற் சுத்தியும் எப்படி நீரிங் கெய்தினீர்? எல்லாம் 95 ஒப்பறு நுந்திறம் என்றோ உன்னினீர்? அந்தோ! அந்தோ! அயர்ப்பிது வியப்பே! சுந்தரர் கடைக்கண் தந்திடு முன்னம் பட்டபா டெங்ஙனம் மறந்தீர்? பதைப்பறு நிட்டையா யினுமென்? நிமலவீ டாயினென்? 100 ஆவா! யாம்முன் அல்லும் பகலும் ஒவாப் பாவமே உஞற்றியெப் போதும் ஓருசாண் வயிறே பெரிதாக் கருதியும், பிறர்புக ழதுவே அறமெனப் பேணியும், மகிழ்கினும் துயருழந் தழுகினும் சினகரம் 105 தொழுகினும் நன்னெறி ஒழுகினும் வழுவினும் எத்தொழில் புரியினும் எத்திசை திரியினும் “நாமே உலகின் நடுநா யகம்நம் க்ஷேமமே ஜகசிருட் டியினோர் பெரும்பயன்” என்னஇங் கெண்ணி எமக்கெமக் கென்னும் 110 தந்நயம் அன்றிப் பின்நினை வின்றி முடிவிலா ஆசைக் கடலிடைப் பட்டும்; தடைசிறி தடையிற் சகிப்பறு கோபத் தீயிடைத் துடித்தும்; சயஞ்சிறி தடையில் வாய்மண் நிறைய மதக்குழி அதனுள் 115 குதித்துக் குதித்துக் குப்புற விழுந்தும்; பிறர்புகழ் காணப் பெரிதகம் உடைந்தும்; பிறர்பழி காணப் பெரிதக மகிழ்ந்தும்; சிறியரைக் காணிற் செருக்கியும்; பெரியரைக் காணிற் பொறாமையுட் கலங்கி நாணியும்; 120 எனைத்தென எண்ணுகேன்! நினைக்கினும் உடலம் நடுங்குவ தந்தோ! நம்மை இங்ஙனம் கொடும்பேய் ஆயிரம் கூத்தாட் டியவழி, விடும்பரி சின்றிநாம் வேதனைப் படுநாள் “ஏ! ஏ! கெடுவாய்! இதுவல உன்நெறி 125 வா! வா! இங்ஙனம்” எனமனம் இரங்கிக் கூவிய தார்கொல்? குடிகொண் டிருந்த காமமா திகளுடன் கடும்போர் விளைக்க ஏவிய தார்கொல்? இடைவிடா தவைகள் மேவிய காலை மெலிந்துகை யறுநம் 130 ஆவியுள் தைரியம் அளித்தவர் யார்கொல்? சுந்தரர் கருணையோ நந்திற மோஇவை? உளமெனப் படுவதோ அளவிலாப் பெருவெளி; கோட்டையும் இல்லை; பூட்டுதாழ் அதற்கிலை; நஞ்சே அனைய பஞ்சேந் திரியம்; 135 அஞ்சோ வாயில்? ஆயிரம்; ஆயிரம்; அரைநொடி அதனுள் நரகென நம்முளம் மாற்றிடக் கணந்தொறும் வருந்தீ நினைவோ சாற்றிடக் கணிதசங் கேத மேயிலை. இப்பெரும் விபத்தில் எப்படிப் பிழைப்பீர்? 140 அருளா தரவால் யாதோ இங்ஙனம் இருள்தீர்ந் திருந்தீர்; இலையெனில் நிலையெது? விட்டதும் தொட்டதும் வெளிப்படல் இன்றி நிட்டையும் நீரும் கெட்டலைந் திடுவீர்! கட்டம்! கட்டம்! கரதலா மலகமாய்க் 145 கண்டுமோ அருளிற் கொண்டீர் ஐயம்! “யார்கேட் கின்றார்? யார்காக் கின்றார்?” என்றீர் நன்றாய். நண்பரே! நம்நிலை கண்டுளம் இரங்கிக் காத்தருள் புரிந்து தொண்டுகொண் டாண்ட சுந்தரன் கருணை 150 நமக்கென உரித்தோ? நானா உயிர்கள் எவர்க்கும் அதுபொது அன்றோ? இயம்பீர். எங்கிலை அவனருள்? எல்லையில் அண்டம் தங்குவ தனைத்தும் அவனருட் சார்பில் அண்டகோ டிகளிங் கொன்றோ டொன்று 155 விண்டிடா வண்ணம் வீக்கிய பாசம், அறியில் அருளலாற் பிறிதெதுஆ கருஷணம்? ஒன்றோ டொன்றியாப் புற்றுயர் அன்பில் நின்றஇவ் வுலகம், நிகழ்த்திய கருணை பயிற்றிடு பள்ளியே அன்றிப் பயனறக் 160 குயிற்றிய பொல்லாக் கொடியயந் திரமோ? பாரும்! பாரும்! நீரே கூறிய சிலந்தியின் பரிவே இலங்கிடு முறைமை! பூரிய உயிரிஃ தாயினும், தனது சீரிய வலையிற் சிக்குண் டிறந்த 165 ஈயினை ஈதோ இனியதன் குஞ்சுகள் ஆயிரம் அருந்த அருகிருந் தூட்டி மிக்கநல் அன்பெனும் விரிந்தநூல் தெளிய அக்கரம் பயில்வ ததிசயம்! அதிசயம்! இப்படி முதற்படி. இதுமுத லாநம் 170 ஒப்பறும் யாக்கையாம் உயர்படி வரையும் கற்பதிங் கிந்நூற் கருத்தே. அதனால் இத்தனி உலகில் எத்துயர் காணினும் அத்தனை துயரும், நம் அழுக்கெலாம் எரித்துச் சுத்தநற் சுவர்ணமாச் சோதித் தெடுக்க 175 வைத்தஅக் கினியென மதித்தலே, உயிர்கட்கு உத்தம பக்தியென் றுள்ளுவர். ஒருகால் காரண காரியம் காண்குவம் அல்லேம். யாரிவை அனைத்தும் ஆய்ந்திட வல்லார்? பாரிசா தாதிப் பனிமலர் அந்தியின் 180 அலர்தலே அன்னவை விளர்நிறம் கிளர நறுமணம் கமழ்தற் குறுகா ரணமென நேற்றிரா நடேசர் சாற்றிடும் முன்னர் நினைத்தோம் கொல்லோ? உரைத்தபின் மற்றதன் உசிதம்யார் உணரார்? நிசியலர் மலர்க்கு 185 வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல் எவ்வணம் அவற்றின் இஷ்டநா யகராம் ஈயின மறிந்துவந் தெய்திடும்? அங்ஙனம் மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்? இவ்விதம் நோக்கிடில் எவ்வித தோற்றமும் 190 செவ்விதிற் பற்பல காரணச் செறிவால் அவ்வவற் றுள்நிறை அன்பே ஆக்கும். சிற்றறி வா தலான் முற்றுநாம் உணரோம். அந்தியில் இம்மலர் அலர்வதேன் என்பதிங் கறிகிலோம் ஆயினும் அதற்குமோர் காரணம் 195 உளதென நம்பலே யூகம், அதனால் உலகிடைத் தோன்றும் உறுகணுக் கேது நலமுற நமக்கிங் கிலகா ததினாற் பலமுறை நம்மையே பரிந்திழுத் தாண்டவர் இலையுல கிடையென எண்ணுவ தெங்ஙனம்? 200 யாரிங் குலகெலாம் அறிந்திட வல்லார்? பாருமிங் கீதோ! பரம தயாநிதி நங்குரு நாத னென்பதார் ஒவ்வார்? நம்புவம் நீரும் நானுமிங் கொருப்போல். ஆயினும் பாரும்! அம்மணி மனோன்மணி, 205 ஏதோ ஊழ்வினை இசைவால் தனது காதாற் கேட்கவும் கண்ணாற் காணவும் இல்லா ஒருவனை எண்ணி மயங்கினள். அல்லல் இதுவே போதும், அஃதுடன் அப்புரு டன்றான் ஆரென ஆயில் 210 ஒப்புறு புருடோத் தமனே என்ன எப்படி நோக்கினும் இசையும். அப் படியே செப்பினர் யாவும் தெரிந்தநம் குருவும். ஏதோ ஒருவன் சூதா ஏவிய தூதால் வந்ததே ஈதோ பெரும்போர்! 215 போர்புரிந் திடவரு புருடோத் தமனும் வார்குழல் மனோன்மணி மாதும், நோக்கில் நம்மிலும் எத்தனை நம்பிய அன்பர்! இம்மென ஒருமொழி இசைத்திவர் தம்மை ஒருவரை ஒருவர் உணர்த்திடப் பண்ணில், 220 வெருவிய போரும் விளைதுயர் அனைத்தும் இருவர்தம் துக்கமும் எல்லாம் ஏகும். இப்படிச் சுலபசாத் தியமா யிருக்க அப்படி ஒன்றும் அடிகளெண் ணாமல் சுருங்கைதொட் டிடவே துவக்கித் தன்திரு 225 அருங்கை வருந்தவும் ஆற்றுமப் பணியே. சுருங்கை இதற்குஞ் சொல்லிய துயர்க்கும் நெருங்கிய பந்தம் நினைத்தற் கென்னை? ஒன்றும் தோற்றுவ தன்றுஎன் தனக்கே, என்றுநான் எண்ணி எம்குரு நாதன் 230 திருமொழி மறுத்தென் சிற்றறி வினையே பெரிதெனக் கருதலோ, அலதவர் பேணிய இவ்வழி நம்மதிக் கெட்டா விடினும் செவ்வி திதுவெனத் தெளிதலோ தகுதி? இப்படி யேயாம் இவ்வுல கின்நிலை. 235 அற்பமும் அதிலிலை ஐயம். நமதுமற் றெய்ப்பினில் வைப்பா யிருந்தபே ரருளைக் கைப்படு கனியெனக் கண்டபின், உலகில் எப்பொரு ளையுமிப் படியே இவ்வருள் தாங்கிடும் என்பதில் சமுசயம் என்னை? 240 இல்லா மாயை என்செய வல்லதாம்? எல்லாம் அவனருள் அல்லா தில்லை. என்னனு பவமிது. மன்னிய இவ்வருள் தன்னிடை மூழ்கித் தானெனல் மறந்து, நெருப்பிடை இழுதென நெக்குநெக் குருகி 245 இருப்பவர் பிறர்க்காய் இராப்பகல் உழைப்பர் ஒருபயன் கருதார். அருள்கரு துவதென்? அகிலமும் தாங்கும் அருளிலோர் அரங்கமாச் சகலமும் செய்வர். அஃதவர் சமாதி. எங்கெலாம் துக்கம் காணினும் அங்கெலாம் 250 அங்கம் கரையநின் றரற்றி “ஐயோ! எம்மையும் காத்த இன்னருள் இவரையும் செம்மையிற் காக்க” எனமொழி குளறி அழுதுவேண் டுவதே அன்றி விழுமிய முத்தியும் வேண்டார் தமக்கே. 2 (சுந்தரமுனிவரும் நடராஜரும் வர; கருணாகரர், நிஷ்டாபரர் இருவரும் எழுந்து வணங்க) சுந்தர: 255 எல்லாம் நடேசரே! உமதுபே ரருளே! அல்லா தென்னால் ஆகுமோ? சுருங்கை இத்தினம் எப்படி முடியும்நீர் இலரேல்? எத்தனை கருணை? என்னைகைம் மாறு? நட: நல்லது! நல்லது! சொல்லிய முகமன்! 260 வேலை எனதோ? உமதோ? விநோதம்! ஏவிய வழியான் போவதே அல்லால் ஆவதென் என்னால்? ஆ! ஆ! நன்றே! சுந்தர: கருணா கரரே! களைப்பற நீரிங்கு ஒருவா றுறங்கவென் றுன்னி அன்றோ 265 இவ்விடம் அனுப்பினோம்? என்னை சிறிதும் செவ்விதில் தூங்கா திருந்தீர்! சீச்சீ! எத்தனை நாளா யினநீர் தூங்கி! இத்தனை வருந்தியும் ஏனிலை தூக்கம்? பன்னாள் இரவும் பகலும் உழைத்தீர். 270 எந்நா ளாறுவீர் இவ்வலுப் பினிமேல்? கருணா: அடியேற் கலுப்பென்? அருளால் அனைத்தும் முடிவது. மேலும், யான்வரும் வேளை இட்டமாம் நிட்டா பரரும் தனியாய் நிட்டைவிட் டெழுந்தார். இருவரும் அதனால் 275 ஏதோ சிலமொழி ஓதிமற் றிருந்தோம். ஈதோ உதயமும் ஆனதே; இனியென்? சுந்தர: விடிந்த தன்றிது; வெள்ளியின் உதயம் படும், படும்; மிகவும் பட்டீர் வருத்தம். உங்கள்பேச் சறிவோம்; ஓயாப் பேச்சே! 280 இங்கது முடியுமோ? ஏனுங் கட்கும் சமயிகட் காம்சச் சரவு? அமையும் உங்கட் கவரவர் நிலையே. 3 (யாவரும் போக) மூன்றாம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று. (கலித்துறை) சாற்றரும் ஆபதந் தான் தவிர்த் தின்பந் தரமுயன்று தோற்றருங் கற்படை யேதோ அமைத்தனன் சுந்தரனே. வேற்றுரு வாயகம் வேதித்து நம்மை விளக்குமவன் மாற்ற மனுபவம் வந்தபின் னன்றி மதிப்பரிதே. மூன்றாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா 6 -க்கு அடி 819 வஞ்சித் தாழிசை 3 -க்கு அடி 12 குறள்வெண்செந்துறை 50 -க்கு அடி 100 கலித்துறை 1 -க்கு அடி 4 ஆக அங்கம் 1 -க்கு: பா. 60 -க்கு அடி 935 நான்காம் அங்கத்தின் விளக்கம் முதற் களம் போர்க்களம். காலைவேளை . குடிலன் மகன் பலதேவன் படைகளை அணிவகுக்கிறான். குடிலன் தனியே ஓரிடத்தில் அரசனை எதிர்பார்த்திருக்கிறான். அரசன் தோல்வியுற்று உயிர் இழக்கவேண்டும் என்பது குடிலனுடைய உள் எண்ணம். ஆகையினாலே, அரசனிடம் உண்மைப் பற்றும் அன்பும் உள்ள நடராஜன் முதலிய வீரர்களைப் போர்க்களத்தில் இருத்தாமல், அவர்களைக் கோட்டைக்குக் காவலாக அமைத்துத் தன் மகனான பலதேவனைத் தளபதியாக்கி யிருக்கிறான். அரசன் வருகையை எதிர்நோக்கி இருக்கும் அமைச்சன், தனக்குள்ளே எண்ணிக் கொள்கிறான் : “ஒருத்தன் கொண்ட பேராசையினால் கடல்போன்று துன்பம் உலகத்தில் ஏற்படுகிறது. இதோ இந்தப் போர்க்களத்திலே அணி அணியாக நிற்கும் போர்வீரர்களில் மாண்டு மடியப்போகிறவர்களின் தொகையைக் கணக்கிட முடியுமா? குளத்திலே கல்லைப் போட்டால், அது விழுந்த இடத்தில் வட்டமாக அலைகள் தோன்றிப் பெரிதாகிப் பெரிதாகிக் கரையை வந்து மோதுவதுபோல, வீரர் இறந்தால், அந்தத் துன்பம் மனைவிமக்கள், உற்றார், பெற்றார், நண்பர் முதலியவர்களிடம் பரவிப் பெருந்துயர் உண்டாக்குகிறது ! சீச்சீ ! இதென்ன, எனக்கு ஏன் இந்த எண்ணங்கள்? அரசனுக்காகச் சாகவேண்டியது இவர்கள் கடமை. பல ஆண்டுகளாக அரசனுடைய சோற்றைத் தின்று வருகிற இவர்கள் செய்தது என்ன? செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்கவேண்டும் அல்லவா? மேலும், பலபேர் துன்பப்பட்டால்தான் ஒருவன் சுகம் அடையலாம் என்பது உலக இயற்கை. ஆகவே, இவர்களுக்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? உழுவோர் நெய்வோர் பல்லக்குச் சுமப் போர்கள் முதலியவர் துன்பம் அடைவதனாலே அவ்வவ்வேலைகளை வேண்டாமென்றா சொல்லுவார்கள்? ஒவ்வொருவரும் அவரவர் நன்மைகளையே நாடுகிறார்கள். வாய்க்காலில் மௌனமாக நின்று கொண்டு மீன் வருமளவும் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிற கொக்கைப்போல, அறிவாளிகள் காலம் இடம்வரும்வரையில் பொறுமையோடு கருமமே கண்ணாகக் காத்திருப்பார்கள். எண்ணித் துணிவர்; துணிந்தபின் அதனைச் செய்து முடிப்பர். கோழைகள் என்றும் இன்பம் பெறமாட்டார்கள்...” இவ்வாறு குடிலன் தன் காரியத்தைப்பற்றித் தனக்குள் எண்ணிக் கொண்டிருக்கும்போது அரசன் வருகிறான். குடிலன் அரசனை வரவேற்று அணிவகுப்பைக் காட்டுகிறான். பிறகு பேச்சோடு பேச்சாக, கோட்டைக் காவலுக்கு நாராயணனை ஏற்படுத்தி யிருப்பதாகவும் அப் பணியை நாராயணன் அரைமனதோடு ஏற்றுக்கொண்டு போனதாகவும் கூறி நாராயணன் மீது அசூயையை உண்டாக்குகிறான். அரசன் வந்ததைக் கண்டு போர்வீரர் ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர். போர் அணிவகுப்பைக் கண்டபிறகு அரசன், வீரர்கள் வீறு கொள்ளும்பொருட்டு அவர்களுக்கு வீரமொழி கூறுகிறான்:- “வீரர்களே! உங்கள் போர்க் கோலத்தைக் கண்டு மகிழ்ந்தோம்! உங்களுக்கு வாய்த்திருக்கும் இந்தப் பெரும்பேறு யாருக்கு வாய்க்கும்? தாயினும் சிறந்த தாயாகிய உங்கள் பாண்டி நாட்டுக்குத் தீங்கு செய்யப் படையெடுத்து வந்தனர். உங்கள் தாய்நாட்டைக் காப்பதற்காக நீங்கள் இப்போர்க்களத்தில் வந்திருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்தில் பொங்கும் சினத்தீ அடங்காமல் மேலே புகைந்து உங்கள் கண்களில் பொரிகிறது. உங்கள் புருவம் நெறிப்பதும் மீசை துடிப்பதும் உங்கள் முகக் குறிப்பும் கண்டு பாண்டித்தாய் மகிழ்ச்சியடைகிறாள். உங்களை ஊட்டி வளர்த்த தாமிரபரணித் தாய் அதோ அலையெடுத்து ஆரவாரிக்கிறாள்! (வீரர்கள் வீறுகொண்டு ஆரவாரம் செய்கிறார்கள்.) உங்களை ஊட்டி வளர்த்த தாமிரபரணித் தாய் கூறுவதைக் கேளுங்கள்! ‘என் அருமை மக்களே! என் நீரைக் குடித்து வளருங்கள். என் நீரைக் குடித்து வளர்ந்த நீங்கள் ஒப்புயர்வில்லாத வீரர்களாகி, சுதந்தரத்தின் முத்திரையை உங்கள் இருதயத்தில் பதிய வைத்திருக்கிறீர்கள். அயலான் ஒருவன் என்னைத் தீண்டுவானாயின், உங்கள் மார்பில் குருதியைப் பொழிந்து உங்கள் உயிரைக் கொடுத்தாகிலும் என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று ஆணையிடுகிறாள். தாமிரபரணியின் நீரைக் குடித்து வளர்ந்த நீங்கள் போர்க்கோலத்துடன் களத்தில் நிற்பதைக் கண்டு அவள் உங்களை வாழ்த்துகிறாள். (வீரர்கள் வீறுகொண்டு ஆரவாரம் செய்கின்றனர்.) “அகத்தியர் ஆய்ந்த தமிழ்மொழி, நமது தாய்மொழி. அதை அன்னியருக்கு அடிமைப்படாதபடி காப்பாற்றுவது உங்கள் கடமை யன்றோ ! “உங்களைத் தொட்டிலில் இட்டு, உம்முடைய பெரியோர்களின் சிறப்பையும் புகழையும் பாடி உங்கள் அன்னைமார் தாலாட்டி வளர்த்த காலம் முதல், அவர்களுடைய வீர தீரங்களைக் கேட்டு வளர்ந்தீர்கள். தமிழையும் பண்டையோர் வீரத்தையும் அருந்தி வளர்ந்த நீங்கள், ஆண்மையும் உரிமையும் இழந்தவர் அல்லர். பொதிகைமலைக் காற்றைச் சுவாசித்து வளர்ந்த நீங்கள் அன்னியனுக்கு அடிமைப்பட்டு நாட்டபிமானம் இல்லாமல் நடைப் பிணமாகத் திரியும் பேடிகளல்லர். நீங்கள் தேசாபிமானம், பாஷாபிமானம், ஆண்மை, சுதந்தரம், வீரம், ஆற்றல் அற்றவர்கள் என்று உங்களைத் துச்சமாக எண்ணிப் போருக்குவந்த பகைவர்மேல் நீங்கள் சினங்கொண்டிருப்பது முழுவதும் சரியே. போரிலே என்ன ஆகுமோ என்று உங்கள் மக்கள் மனைவியர் உறக்கம் இல்லாமல் அழுகின்றனர். அதனைக் கண்டு உங்கள் நெஞ்சம் பதைத்துக் கோபம் கொண்டது இயல்பே. சிங்கத்தை அதன் குகையில் சென்று பிடரிமயிரைப் பிடித்து இழுத்தால் அது சினங் கொள்ளாதிருக்குமோ? உரிமை பறிபோகும்போது அதனை ஆண்மையோடு காப்பாற்றுவது வீரர்களின் கடமையல்லவா? “நாட்டுப் பற்று என்னும் தீ வேள்வியைவிடத் தூய்மையானது என்று விண்ணவரும் கருதுவர். படையெடுத்து வந்து உங்கள் உள்ளத்தில் கோபத் தீயை மூட்டிவிட்ட பகைவர், தாங்களே உங்கள் கோபத் தீயை எரியவிடும் விறகுகளாக அமைகிறார்கள். இன்று நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் உலகமுள்ளளவும் சொல்லும், ‘பாண்டி நாட்டார் சுதந்தரம் உடையவர். அவர்களிடம் போகாதீர்கள். சுதந்தரமும் செருக்கும் அவர்களுக்கு உயிராக, உணவாக, மூச்சாக உள்ளன?’ என்று. போர்க்களத்திலே நீங்கள் கொள்ளும் காயங்கள், வெற்றி மகள் உங்களுக்கு முத்தமிட்டளித்த வெற்றி முத்திரை என்று கருதுங்கள். (போர்வீரர்கள் மீண்டும் ஆரவாரம் செய்கின்றனர்.) “போரில் அடைந்த காயம் உங்கள் வீரப் புகழின் அடையாளம். இப் பெருமை யாருக்கு வாய்க்கும்! உங்கள் பின்சந்ததியார் தலைமுறை தலைமுறையாகப் பேசுவார்கள்: ‘நமது பெரியோர் போரிட்டுப் புண் அடைந்து பெற்ற சுதந்தரம் அல்லவா நாம் இப்போது அடைந்துள்ள சுதந்தரம்’ என்று பெருமையுடன் பேசுவார்கள். நீங்கள் அடைவது விழுப்புண் அல்ல; புகழின் கண். போரில் புண்கொள்ளாமல் புகழுடம்பு பெற்றவர் யார்? அத்திப் பழத்தில் கொசுக்கள் உண்டாகிச் சாவது போல, நாள்தோறும் சாகிறவர் பலப் பலர்.அவர்கள் எல்லாம் பிறந்து வாழ்ந்தவர்கள் என்று கருதப்படுவரோ! வீரர்களே ! நீங்கள் இன்று அடையப்போகிற புகழைப்பற்றி நானும் பெருமைப்படுகிறேன். உங்களில் போருக்கு அஞ்சி உயிர்விட அஞ்சுவோர் ஒருவரும் இலர். இருந்தால் சொல்லுங்கள், அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் அனுப்புவோம். (இல்லை , இல்லை. ஒருவரும் இல்லை என்ற குரல்.) “நல்லது. உரிமைக்காக சுதந்தரத்துக்காக மேன்மைக்காகப் புகழுக்காகப் போராடுவோம் ! வாருங்கள். அதோ, விஜயலட்சுமி காத்திருக்கின்றாள். குமாரி மனோன்மணி உங்கள் வெற்றிக்காக நோன்பு நோற்கிறாள். வெற்றி முரசு கேட்டால்தான் அவள் நோன்பு விடுவாள். (குமாரி மனோன்மணிக்கு ஜே என்னும் குரல்). நமது தாய் தந்தையர் மனைவி மக்கள் நமது நாடு எல்லோருடைய சுதந்தரத்தை யும் அழித்துப் பறிக்க வந்தனர் பகைவர்கள். அவர்களை அடிப்போம்; விரட்டுவோம்; மண்டையை உடைப்போம்; குடலைப் பிடுங்குவோம்; உயிர் குடிப்போம்; வெற்றிபெறுவோம். வாருங்கள்! வாருங்கள்!!” முரசு கொட்டுகின்றனர். பாணர்கள் போர்ப் பாட்டுப்பாடுகிறார்கள். படை வீரர்கள் சேனைத் தலைவரைப் பின் தொடர்ந்து போர்க்களம் செல்கின்றனர். இரண்டாம் களம் கோட்டையைப் பாதுகாக்கக் கோட்டைவாயிலில் நிறுத்தப்பட்ட வீரர்கள் தமக்குள் பேசிக்கொள்கிறார்கள். இந்த வீரர்கள் அரசனிடம் பேரன்பு கொண்டவர்கள். சாவேறு படையினராகிய இவர்கள் அரசனுக்காக உடலையும் உயிரையும் எந்த நிமிடமும் விடத் தயாராக இருப்பவர். அரசனுக்குத் தீங்கு செய்ய அந்தரங்கத்தில் கருதிக் கொண்டு, வெளிக்கு உண்மையாளனைப்போல நடிக்கும் மந்திரியாகிய குடிலன், இந்தச் சாவேறு வீரர்களை அரசனுடன் போர்க்களத்தில் இருத்தாமல் கோட்டையில் இருக்கச் செய்தான். ஆனால், இவர்கள் எல்லோரும் போர்களத்தில் சென்று போர்செய்யத் துடிக்கின்றனர். கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டியபடியால், ஒன்றும் பேசாமல் கோட்டையில் காவல் இருக்கின்றனர். அவர்கள் கண்ணும் மனமும் போர்க்களத்தை நோக்கி இருக்கின்றன. அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டனர்: அரசர்பெருமானின் போர்க்களப் பேச்சைக் கேட்ட புல்லும் வீரம் கொள்ளும்! இந்தப் படை தோற்றல் வேறு எந்தப் படைதான் வெல்லும்!” என்றான் ஒரு வீரன். “முழுவதும் கேட்டனையோ ?” என்றான் மற்றொரு வீரன். “ஆம். முழுவதும் கேட்டேன். இங்கு வர எனக்குச் சற்றும் மனம் இல்லை. ஆணையை மீறுவது கூடாது என்று வந்தேன். இல்லையேல், போர்க்களத்துக்கே போயிருப்பேன். நமக்குப் பாக்கியம் இல்லை, என் செய்வது?” என்றான் முதலில் பேசிய வீரன். “பாக்கியம் இல்லை என்பதல்ல. அந்தக் கோணவாய்ச் சடையன், குடிலனிடம் ஏதோ சொல்லி நம்மை எல்லாம் இங்கே வைத்து விட்டான்” என்றான் இரண்டாவது வீரன். “என்னையும் அவன் கெடுத்தான். சண்டி சங்கரன் பகைவர் சேனையுடன் வந்திருக்கிறான். அவன் ஒருகாலத்தில் என்னையும் என் தாயையும் சந்தையில் பழித்துப் பேசினான். அவனைப் பழிவாங்கலாம் என்றிருந்தேன்” என்றான் மூன்றாவது வீரன். “சேர நாட்டினர் பிஞ்சில் பழுத்தவர்கள்; வாயாடிகள். அவர்களை எனக்குத் தெரியும். நான் ஜனார்த்தனம், வைக்கம் முதலான ஊர்களுக்குப் போயிருக்கிறேன்” என்றான் நாலாம் வீரன். “சண்டி சங்கரனை நான் விடப்போவதில்லை. அவனைத் தேடிக் கண்டுபிடித்து இந்த வாளுக்கு இரையாக்குவேன். அவன் போரில் செத்துக் கிடந்தால் அவன் தலையை நசுக்குவேன்” என்றான் மூன்றாவது வீரன். “சீச்சீ ! பிணத்துடன் போரிடும் வீரனா நீ ! மேலும், பொது எதிரியோடு நாட்டுக்காகப் போரிடுகிறோமேயல்லாமல், சொந்தப் பகைக்காகப் போரிடுகிறோம் இல்லை. நமது சுதந்தரத்தைப் பறிக்க வந்தபடியால் சேர நாட்டினருடன் போர் செய்கிறோம். இல்லை யானால், அவர் களுக்கும் நமக்கும் பகை என்ன ?” என்று கூறினான் முதல் வீரன். இச் சமயத்தில், நாராயணன் போர்க்கோலத்துடன் குதிரை ஏறி அவ்விடம் வருகிறான். இவன் கோட்டைக் காவல் வீரர்களுக்குத் தலைவன். இவனை வரவேற்கின்றனர், இவனுக்குக் கீழ்ப்பட்ட இரண்டு படைத் தலைவர்கள். இங்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாராயணன் கேட்க, ஐயாயிரம் வீரர்கள் இருப்பதாகவும், இவ் வீரர் களுக்கு ஏற்ற இடம் இது அல்லவென்றும், போர்க்களம் அனுப்பப்பட வேண்டியவர்கள் என்றும் கூறுகின்றனர். “வருந்த வேண்டாம். நமக்குக் கொடுத்த பணியைச் செய்வோம்” என்றான் நாராயணன். “வேண்டுமென்றே நம்மையெல்லாம் இங்கு வைத்திருக்கிறார் குடிலர்” என்றான் ஒரு சேனைத் தலைவன். “கோட்டைக் காவலுக்கு எத்தனை வீரர் வேண்டும் ?” என்று நாராயணன் கேட்க, “இங்குள்ளவர்களில் நாலில் ஒரு பகுதி போதும்” என்று விடை கூறுகின்றனர். “நல்லது. கால் பகுதியினர் மட்டும் இங்கே கடமை செய்யட்டும். மற்றக் குதிரை வீரர்களை அணிவகுத்துத் தயாராகவை” என்று நாராயணன் கட்டளையிட்டான். உதவித் தலைவர்கள் அவ்வாறே செய்தனர். கோட்டை வாயிலில் குதிரைமேல் அமர்ந்தபடியே நாராயணன் போர்க்களத்தைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். குடிலன், சாவேறு வீரர்களை அரசன் பக்கத்தில் வைக்காமல் கோட்டைக்குள் வைத்த காரணம், நாராயணனுக்குத் தெரியும். அரசனுக்கு ஏதோ அபாயம் வரப்போகிறது என்பதை அறிந்துதான் நாரயணன் போர்க்களத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அருகில் உதவித் தலைவன் குதிரைமேல் அமர்ந்து நிற்கிறான். போர்க்களத்தில் பாண்டி நாட்டுப் படைபோர் செய்கின்றது. பாண்டியனுக்கு இடது பக்கத்தில் குடிலன் மகன் பலதேவனும் வலப் புறத்தில் குடிலனும் இருந்து போரிடுகின்றனர். போரின் மத்தியில் திடீரென்று ஒரு குழப்பம் காணப்பட்டது. போர்க்களத்தின்மேல் கண்ணுங் கருத்துமாக இருந்த நாராயணன், தனது உதவி வீரனைப் பார்த்து, “அரசருக்கு ஏதோ ஆபத்துப்போல் தெரிகிறது. குதிரை வீரர்களை அழைத்துக்கொண்டு விரைவில் என்னைத் தொடர்ந்து வா” என்று கட்டளை யிட்டான். பிறகு, மெல்லிய குரலில், “குடிலனை நம்பாதே” என்று அவன் காதில் சொன்னான். அதற்கு அவ்வீரன், “ஆம். அதை நானும் அறிவேன்” என்று சொல்லி, குதிரைப் படை வீரர்களை அழைத்துக் கொண்டு விரைவாக நாராயணனைப் பின்தொடர்ந்து போர்க்களம் நோக்கிச் சென்றான். மூன்றாம் களம் பகல் வேளையில் அரண்மனையில் ஜீவக அரசன் போரில் பின்னடைந்தது பற்றிக் கவலையுடனும் துன்பத்துடனும் அமர்ந்து இருக்கிறான். சேவகர்கள் வாயிலண்டை நின்று தமக்குள் பேசிக் கொள்கிறார்கள். “அரசர்பெருமானுக்கு ஆறுதல் கூறுவோர் அருகில் இல்லையே, நாம் அரசருக்கு ஆறுதல் கூறுவது எப்படி ? இச்சமயம் நாராயணன் இங்கிருந்தால் ஆறுதல் கூறுவார்” என்று சொல்லிக் கொள்கின்றனர். “நாராயணர் இளவரசிக்கு ஆறுதல் சொல்லப் போயிருக்கிறார்” என்றான் ஒரு சேவகன். “அவர் இன்று போர்க்களத்தில் செய்த துணிச்சலான செயலினால் நாம் எல்லோரும் இன்று உயிர் பிழைத்தோம். இல்லையேல்... ...” என்று மற்றொரு சேவகன் கூறினான். “அரசர் பெருமான் எழுந்து நிற்கிறார். ஏதோ சொல்லுகிறார்” என்றான் இன்னொரு சேவகன். அரசன் எழுந்து நின்று தனக்குத் தானே பேசிக்கொள்கிறான் : “இன்னும் உயிர் வைத்திருக்கிறேன்! பாண்டியர் குலத்தின் பெருமை என்னோடு அழிந்தது ! இதற்கு முன்பு போர்க்களம் சென்ற பாண்டியர் வெற்றி பெற்றுத் திரும்பினர்; அல்லது போர்க்களத்தில் உயிர் விட்டனர். இன்று நான் போர்க்களத்தில் பின்னடைந்து ஓடி வந்தேன்! என் போன்ற வீணர் யாருளர்? இந்த வில் ஏன்? வாள் ஏன் எனக்கு? ... ஆம்! இந்த வாள் இப்போது எனக்குப் பயன்படும்!” என்று சொல்லிக் கொண்டு உறையிலிருந்து வாளை எடுக்கிறான். அரசன் தற்கொலை செய்துகொள்வான் என்று அஞ்சிய சேவகர் அவனிடம் ஓடுகின்றனர். அவ்வமயம் நாராயணன் அவ்விடம் வருகிறான். நிலைமையை உணர்கிறான். “அரசே! இளவரசியார் மனோன்மணியைத் தாங்கள் மறந்துவிட்டீர் போலும்!” என்று கூறுகிறான். அதைக் கேட்ட மன்னன், தற்கொலை செய்துகொள்வதை விடுத்து, மனோன்மணியின் நிலையை உணர்ந்து மூர்ச்சித்து விழுகிறான். நாராயணனும் சேவகர்களும் குளிர்ந்த நீரைத் தெளித்தும், மெல்ல விசிறியும் அரசனை மூர்ச்சை தெளிவிக்கின்றனர். அரசன் தெளிந்து எழுந்து, “குழந்தாய்! குழந்தாய்! மனோன்மணீ!” என்று கூவி, துக்கத்தில் ஆழ்கிறான். நாராயணன், “அரசே! என்ன காரியம் செய்யத் துணிந்தீர்! தாங்கள் உயிர் விட்டால் இளவரசிக்கு ஆதரவு யார் உள்ளனர் ? தாங்கள் உயிர் விட்ட பிறகு இளவரசியார் உயிரோடிருப்பரோ ?” என்று கூறி அரசனைத் தேற்றுகிறான். “ஐயோ ! நான் என்செய்வது! இருதலைக் கொள்ளி எறும்புபோல என் மனம் துடிக்கிறதே! போரிற் புறங்கொடுத்து ஒடிவந்து இன்னும் உயிரை வைத்துக்கொண்டிருப்பதோ மானம்!” “பெருமானடிகளே! உயிரை மாய்த்துக்கொள்வது வீரம் அன்று. பெருந் துன்பம் நேரிட்டபோது சுற்றத்தாரை விட்டு உயிர் நீப்பது வீரம் அன்று” என்றான் நாராயணன். “போர்க்களத்தில் ஓடியவனுக்கு வீரம் என்ன இருக்கிறது” என்றான் அரசன். “இடம் காலம் கருதிப் போரில் பின்னடைவது வீரம்தான். சூழ்ச்சியுடன் சேர்ந்த வீரமே வீரம். காலம் இடம் கருதிப் பின் வாங்குவது வீரந்தான்; கண்ணை மூடிக்கொண்டு போரில் உயிர் விடுவது வீரம் அல்ல.” “போதும் போதும், உமது நியாயம் ! என் மகளுக்காக என் உயிரை வைத்திருக்கிறேன். நான் இப்போது வெறும் மனிதன். அரசனும் அல்லன், பாண்டியனும் அல்லன்” என்று கூறிச் சேவகர்களை அழைத்து, “என்னுடன் இருங்கள்...ஏன் நிற்கிறீர்கள்?”என்று கேட்டான். சேவகர் மனம் கலங்கி, “பெருமான் அடிகளே ! தாங்கள் கூறுவது என்ன!...” என்று கூறுகின்றனர். “அரசன் என்றும், அடிகள் என்றும் என்னைக் கூறாதீர். பாண்டியன் போர்க்களத்தில் இறந்துபோனான். நான் வெற்று மனிதன்” என்றான் பாண்டியன். “அரசர்பெருமானே! வெற்றுரை வழங்காதீர்கள். அதோ பாரும், அவர்கள் கண்ணீர் விடுகின்றனர்” என்றான் நாராயணன். “ஏன் வருந்துகின்றீர்கள்? வாருங்கள் வாருங்கள்” என்றான் அரசன். “சூரியனைக் கண்டால் அல்லவா தாமரைகள் மலரும்? அரசர் பெருமானே வருந்தினால் எங்களுக்கு வாழ்வேது?” என்றான் சேவகன். அதைக் கேட்ட அரசன் திடங்கொண்டான். சேவர்களுக்கு ஆறுதல் கூறத் தொடங்கினான். “வீரர்களே! துன்பம் ஏன், துயரம் ஏன்? போரை இழந்து விட்டோம் என்றா எண்ணுகிறீர்கள்? நமது படை அழியவில்லை, கோட்டை அழியவில்லை. இனியும் போர் செய்வோம்! வெல்லுவோம்! புகழை நிலைநிறுத்துவோம்!” நாராயணன், “அதற்கென்ன ஐயம் ? அரசே! தாங்கள் இப்போது கூறியவை முழுவதும் உண்மை. நீரின் ஆழத்திற்கு ஏற்ப தாமரைத் தண்டு உயர்ந்து வளர்ந்து மேலே வருவது போல, ஒருவருடைய ஊக்கத்தின் அளவாகத்தான் அவருடைய மேன்மையும் வளர்கிறது. அடிக்க அடிக்க மேலெழும்பும் பந்துபோல, மேன்மேலும் முயற்சி செய்தால் இன்பம் உண்டு. அரசே ! தாங்கள் கூறியபடியே மன ஊக்கமும், தளரா முயற்சியும், தகுந்தவர் உதவியும் இருக்குமானால் ஊழையும் வெல்ல லாம்; போர் வெல்வதோ அரிது?” என்று கூறினான். அவ்வமயம் குடிலனும் பலதேவனும் அவ்விடம் வருகின்றனர். அரசன் உற்சாகத்துடன் உயிரோடிருப்பதைக் கண்டு குடிலன் வியப்படைகிறான். ‘தகுந்தவர் உதவி’ என்று நாராயணன் கூறியது என்ன? என்று தனக்குள் ஐயுறுகிறான். தான் மிகுந்த வருத்தம் அடைந்தவன்போல முகத்தை வைத்துக்கொண்டு ஒருபுறம் ஒதுங்கி நிற்கிறான். அரசன் குடிலனையும் பலதேவனையும் கண்டு அழைக்கிறான். குடிலன், சூதுவாது தெரியாதவன் போலவும், உண்மையாக உழைப்பவன் போலவும் பேசுகிறான். தன் மகன் பலதேவனை அருகில் அழைத்து அவன் மார்பில் உள்ள காயத்தைக் காட்டுகிறான். “இது என்ன காயம்! அம்பு பட்ட காயம்போல் தெரிய வில்லையே” என்றான் அரசன். குடிலன்: “இது அன்பின் அறிகுறி! பகைவரும் பொய்யரும் இக் காயத்தைப்பற்றிப் பலவாறு கூறுவர். உண்மையில்...” “வருந்தாதே! வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகக் கவலை வேண்டாம். நாளைக்கு வெல்லுவோம்”என்று கூறினான் அரசன். குடிலன், தன்னுடைய சூதான செயல்களினால் போரில் தோல்வி ஏற்பட்டதை அரசன் தெரிந்துகொள்ளவில்லை என்று அறிந்து தைரியம் அடைகிறான். பிறகு அரசனிடம் கூறுகிறான்: “நெடுநாளாகத் தங்கள் பணிவிடைக்காகவே அடியேனுடைய உடல் பொருள் ஆவியை வைத்திருந்தும், இந்தப்போரிலே, கொடியவர் சிலர் செய்த சூது காரணமாக, நான் மனம் தடுமாற்றம் அடைந்தேன். அதை நினைக்குந் தோறும், கண்ணில் விழுந்த மணல் அரிப்பதுபோல என் நெஞ்சை அரிக்கிறது.” பலதேவனைக் காட்டி, “இதோ, இவன் அடைந்த புண் போல நானும் போரில் புண்ணடையாமற் போனது எனக்குப் பெருந் துயரமாக இருக்கிறது. தங்கள் கையில் உள்ள வாளினால் என் மார்பிற் குத்தி என் உயிரைப் போக்கினால், மகிழ்ச்சியோடு சாவேன்” என்றான். “உம்மைப் போல் இராஜ பக்தி உள்ளவர் யார்?” என்று அரசன் குடிலனைப் புகழ்கிறான். இதையெல்லாம் பார்த்தும் கேட்டும் நின்றிருந்த நாராயணன், இதென்ன நாடகம்! இந்தக் கோழைப் பயலுக்கு மார்பில் எப்படிப் புண் பட்டது! போர் செய்து பட்ட புண் இது அல்ல. இதை அறிய வேண்டும்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு போகிறான். அப்போது குடிலன் கூறுகிறான் : “அரசருடைய திருவடிகளில் பணிவிடை செய்யத் தொடங்கிய நாள் முதலாக எனக்கென ஒன்றும் கேட்கவில்லை. என் மார்பைப் பிளந்து அதன் உள்ளே பார்ப்பீரானால், அங்கு அரசர்பெருமானுடைய பெயர் எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர். அது உண்மையா இல்லையா என்பதை அப்பொழுது அறிவீர்கள்.” இவ்வாறு கூறி முழந்தாளிட்டுப் பணிந்து அழுகிறான். அரசன்: “குடிலரே! எழுந்திரும். வருந்தாதீர்! உம்முடைய மனத் துயரத்தை நான் அறிவேன். சற்று முன்புதான் நானும் தற்கொலை செய்து கொள்ளத் துணிந்தேன் ; நாரயணன் அப்போது வந்து தடுத்திருக்கா விட்டால்....” குடிலன் தனக்குள்; பாவி! இப்போதும் கெடுத்தான் என்று சொல்லிக்கொள்கிறான். ஜீவகன் கூறுகிறான்: “அமைச்சரே! வாளை உறையில் இடவில்லை. நாளையும் போர் செய்வோம். போருக்கு அஞ்சியா ஓடி வந்தோம் ?” “யார் அஞ்சினார் ! அப்படி நினைப்பது தவறு.” நாராயணன் நின்ற இடத்தைப் பார்த்துக்கொண்டே, “ஒரு சிறுவனை இரண்டு நாள் போர் செய்து வென்றார்கள் என்று பிறர் கூறுவதற்கு அனுகூலமாகச் சிலர் சதி செய்கிறார்களே என்று தான் என் மனம் வருந்துகிறது. நாம் களத்தைவிட்டு வந்தது சரி என்று போர்முறையை யறிந்தவர் ஒப்புக் கொள்வார்கள். வேட்டைநாய் ஒரே ஓட்டமாய் ஓடிக் கௌவும். சிங்கம் பதுங்கிப் பாயும் ; பாய்ந்தால் குறி தவறாது. நாம் மீண்டுவந்தது, மீனைப் பிடிக்கத் தூண்டில் முள்ளில் இரையை வைத்தது போலாகும். நாளைக் காலை சேரனையும் அவன் சேனையையும் சின்னாபின்னம் செய்வோம். ஒருவேளை நமது கருத்தை அறிந்து இன்று இரவே அவன் திரும்பிப் போய்விடுவானோ என்றுதான் அஞ்சுகிறேன்” என்று சமயத்துக்கு ஏற்றவாறு பேசினான் குடிலன். “என்னவானாலும் ஆகட்டும்! நாளைக் காலை போர் செய்வோம்” என்றான் அரசன். இச் சமயத்தில், சேரன் அனுப்பிய தூதன் ஒருவன் வந்தான். சேரன் சமாதானத்திற்குத் தூது அனுப்பினான் போலும் என்றான் குடிலன். வந்த தூதன் அரசனை வணங்கிக் கூறுகின்றான்: “அருளுடைய மனமும், தெளிவுடைய அறிவும், வீரம் பொருந்திய உடம்பும் உடைய என்னுடைய அரசர்பெருமான் என்னைத் தூது அனுப்பினார். இன்று நிகழ்ந்த போரில் யார் வென்றவர் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே, ஒருகுடம் தாமிரவர்ணி, நீரும், ஒரு வேப்ப மாலை யும் எனது அரசருக்குக் கொடுத்துத் தாங்களும் அவர் ஆணைக்கு அடங்கு வீரானால், வாழலாம். கோட்டை இருக்கிறது என்று கருதிப் போருக்கு வருவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போலாகும். பொழுது விடிவதற்குள்ளாக வேப்பமாலையும் தாமிரவர்ணி நீரும் தருவீரானால் போர் நிற்கும்; இல்லையேல் போர் நிகழும். இரண்டில் எது தங்கள் கருத்தோ அப்படியே செய்யுங்கள்.” தூதன் கூறியதைக் கேட்ட அரசன் , “தூதுவ! நன்றாகச் சொன்னாய்! சிறுவனாகிய உன் அரசன் அடுத்த போரில் என்ன நேரிடுமோ என அஞ்சி உன்னைத் தூது அனுப்பினான் என்பது நன்றாகத் தெரிகிறது. நீ கூறியதற்கு விடை இது: சேரன் தாமிரவர்ணி நீரையும் வேப்ப மாலையையும் பிச்சை கேட்கிறான். அவன் கேட்கும் பொருள்கள் எனக்குச் சொந்தம் அல்ல; அவை பாண்டியர் பரம்பரைச் சொத்து. அதைக் கொடுக்க நமக்கு உரிமை இல்லை. பொதுச் சொத்தைத் தானம் செய்வது முறையல்ல. நாளை, போர்க்களத்தில் சந்திக்கலாம் என்று சொல்லுக.” இந்த மறுமொழியைக் கேட்ட தூதன், “தாங்கள் நிலைமையைச் சற்றும் தெரிந்துகொள்ளவில்லை. உமது வலியைப் பெரிதெனத் தவறாகக் கருதுகிறீர். எடுப்பார் கைப்பிள்ளையைப்போல இருக்கிறீர். இன்று சொற்ப நேரத்தில் எமது அரசர் வென்றதைச் சிந்தித்துப் பாரும்” என்று கூறினான். அருகிலிருந்த குடிலன் தூதுவனைப் பார்த்து, “நீ தூதுவன், கொண்டுவந்த செய்தியைச் சொல்லிவிட்டு, மறுமொழியைக் கொண்டுபோக வேண்டியவன் நீ. பழிச் சொற்களைப் பேசினால் உன் உயிர்போய்விடும். உடனே போய்விடு” என்று கூறினான். “அப்படியே! இனி போரைப்பற்றி வேறொன்றில்லை” என்று கூறித் தூதுவன் போய் விடுகிறான். ஜீவகன், “நீரும் தாரும் வேண்டுமாம்! மானம் போனபின் வாழ்வு எதற்கு? இதுகாறும் பாண்டியகுலம் ஒருவருக்கு அடிபணிந்ததில்லை. ஆற்றுநீரும் வேப்பமாலையும் கொடுத்து விட்டு நாணம் இல்லாமல் உயிர் வாழ்வதைவிட உயிர் விடுவேதே மேல். குடிலரே! எதுவாயினும் ஆகட்டும். போருக்குச் செல்வோம். இப்போது மனோன்மணியைக் கண்டு அவளைத் தேற்றி வருவோம். நான் வருமளவும் இங்கேயே இரும்” என்று சொல்லி இளவரசி மனோன்மணியைக் காணச் சென்றான். அரசன் சென்ற பிறகு குடிலன், “இனி என்ன! உனக்குக் கேடு காலந்தான். இரண்டுமுறை நீ தப்பினாய். அந்தத் தப்பிலிப் பயல், நாராயணன் உன்னைத் தப்பச் செய்து என் சூழ்ச்சியைக் கெடுத்தான்” என்று சொல்லித் தன் மகன் பலதேவனைப் பார்த்து “இதற்கெல்லாம் காரணம்....” என்று கூறிய போது, பலதேவன் குறுக்கிட்டு, “இதுபோல உன் நெஞ்சில் வேல் பாய்ந்தால் உனக்குத் தெரியும்”என்று கூறினான். குடிலன், “அது உன்னால் ஏற்பட்டது”என்றான். பலதேவன், “அரசனைக் குத்திக் கொல்ல எண்ணினாய். ஊழ் வினை என்னைக் குத்திவிட்டது. அது யார் பிழை?” என்றான். குடிலன்: “உன் பாழான வாயைத் திறக்காதே. ஊரிலே பகை வைத்துக்கொள்ளாதே என்று பலமுறை சொன்னேன். பகையை உண்டாக்கிக்கொண்டு ஊழ்வினை ஊழ்வினை என்கிறாய்.” பலதேவன்: “காதல் செய்வது பகை உண்டாக்குவதோ. பாவி!” குடிலன்: “நீயும் உன் காதலும்! பேய்ப்பயல்! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனம் எரிகிறது. அருமையாகச் சேர்த்த பணத்தை எல்லாம் பாழ்படுத்திக்கொண்டு ....” பலதேவன் , “பணம் பணம் என்று பதைக்கிறாய், பிணமே! என் நெஞ்சில் புண்பட்டு நிற்கிறேன். வீணாகப் பேசாதே” என்று சினந்து பேசிவிட்டுப் போய்விடுகிறான். குடிலன், “இதுவும் தலைவிதி! இவனுடன் பேசிப் பயன் என்ன? நான் செய்த சூழ்ச்சிகள் எல்லாம் பாழாயின! போகட்டும்! இனிப் புதுவழியைக் காணவேண்டும். ஆம்; நாராயணன் இருக்கும் வரையில் நமது நோக்கம் ஒன்றும் நிறைவேறாது. அவனை ஒழிக்கும் உபாயம் என்ன?” என்று தனக்குள் கூறிக்கொண்டே செல்கிறான். நான்காம் களம் அரண்மனையில் ஜீவகனும் குடிலனும் ஆலோசனை செய்கின் றனர். பலதேவனும் ஒருபுறம் நிற்கிறான். ஜீவகன் ஆத்திரத்துடன், “குடிலரே! இது என்ன ஆச்சரியம்! கோட்டையின் அகழியை ஒரு பக்கத்தில் பகைவர் தூர்த்துவிட்டனர் என்று அந்தப்புரத்துப் பெண்கள் கூறினர். இதுவரை நான் அதை அறியவில்லை. அது உண்மைதானா?” என்று கேட்டான். நாராயணனை ஒழிப்பதற்கு இதுவே தகுந்த சமயம் என்று எண்ணிக் கொண்டு குடிலன், “ஒருபுறம் மட்டுமா!” என்றான். அரசன்மேலும் ஆத்திரம் அடைந்து, “என்ன! என்ன!” என்றான். “அரசே ! இந்தச் சூதை என்ன என்று சொல்வேன்!” “கோட்டை மதில்மேல் இருந்த ஆயுதங்கள் எல்லாம் என்ன வாயின ?” “கர்த்தா இல்லையானால், கருவிகள் என்ன செய்யும்!” “காவல் இல்லையோ ? அங்கிருந்த சேவகர் யார்?” குடிலன் கூறினான்: “எட்டாயிரம் போர் வீரரைக் கோட்டையில் காவல் வைத்தோம்; நாராயணரைத் தலைவர் ஆக்கினோம். ஆனால் நாராயணர் ... அவரைத்தான் போர்க்களத்தில் பார்த்தோமே!” அரசன்: “ஆமாம்! போர்க்களத்திலே பார்த்தோம்! காவலை விட்டு விட்டா வந்தான்?” குடிலன்: “அவரைவிட நமக்கு உண்மையாளர் யார்? வேலியே பயிரை மேய்கிறது என்றால் , தெய்வந்தான் காப்பாற்ற வேண்டும்,” அரசன்: “துரோகம் ! துரோகம் !” குடிலன்: “துரோகம் அல்ல, அரசே ! அடியேன்மேலுள்ள விரோதம் ! அரசருக்கு அவர் துரோகம் செய்யவில்லை.” அரசன் : “கெடுபயல் ! துரோகி ! அவனை விடப்போவதில்லை!” குடிலன், “ஐயோ ! சுவாமி ! எலியைக் கொல்ல வீட்டுக்குத் தீ கொளுத்திய கதையாக இருக்கிறது ! அவருக்கு அமைச்சர் பதவியும் முதன்மை இடமும் வேண்டும் என்று கேட்டால் தாங்களே மகிழ்ச்சி யுடன் அளித்திருப்பீர்களே! அவ்வளவு அன்புவைத்திருக்கிறீர்கள் அவர்மேல்” என்று கூறி அழுகிறான். “அவ்வளவு துட்டனா? இவ்வளவு கொடியவன் என்று நாம் சற்றும் நினைக்கவில்லை? என்றான் அரசன். “அடியேனுக்கு இந்த அமைச்சா பெரிது? வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் நானே இந்தப் பதவியை மகிழ்ச்சியோடு கொடுத் திருப்பேனே! இதை மனத்தில் வைத்துக் கொண்டு, போர்க்களத்திலே இப்படிச் செய்வது தகுதியா!” என்று கூறி பலதேவனுடைய மார்பைச் சுட்டிக் காட்டினான். “யார், யார்! நாராயணனா இப்படிச் செய்தான்!” “அவர் நேரில் செய்யவில்லை. அவர் ஏவலினால் ஒருவன் செய்தான்” என்றான் பலதேவன். “அப்படியா! அவனைச் சிரத்சேதம் செய்கிறேன். போர்க் களத்தில் இடது பக்கத்தில் குழப்பம் உண்டானது அவனால் தான் போலும் !” “முழுவதும் அவனால்தான் குழப்பம். நமது மானத்தைக் கெடுத்தான். போருக்கிடையில் குழப்பத்தை உண்டாக்கினான்” என்றான் குடிலன். அரசன், ஒரு சேவகனிடம் நாராயணனை அழைத்துவரக் கட்டளையிட்டான். “இத்தனைத் துட்டனா இவன்? ஏன் இப்படிச் செய்தான்?” என்றான். குடிலன் கூறுகிறான்: “சுவாமி பொறுத்தருளும். பிழை என்னுடையது. தங்கள் திருவுளக் கருத்துப்படி பலதேவனைப் படைத் தலைவ னாக்கினேன். அது என் பிழைதான். அதனால் இவனை இவ்விதம் செய்தான். அதுமட்டுமா ! போர்க்களம் எல்லாம் சுழன்று திரிந்து குழப்பம் செய்துவிட்டான். காலாட்படை, குதிரைப்படை, யானைப் படை, தேர்ப்படை எல்லாவற்றையும் கலைத்து நமக்குக் கிடைக்க வேண்டிய வெற்றியை அழித்துவிட்டான்!” அரசன், “ஆமாம் ; நாமும் கண்டோம்” என்று கூறி, இன்னொரு சேவகனைப் பார்த்து, “கொண்டுவா அவனை, விரைவில்” என்று கூற, சேவகன் ஓடினான். அப்போது குடிலன், அரசனுடைய கோபத்தைச் சாந்தப்படுத்துகிறதுபோலக் கூறினான்: “போனது போகட்டும் அரசே! நாளை போரில் வெல்லுவோம். தாங்கள் ஒன்று கேட்டால் அவன் ஒன்று உளறுவான். இனி கேட்டு என்ன பயன்?” அரசன், “எதைப் பொறுத்தாலும் இதைப் பொறுக்க மாட்டேன். எவ்வளவு சூது! எவ்வளவு கொடுமை!” என்று கூறும்போது, நாராயணன் உள்ளே வர, அவனை நோக்கி, “போருக்குப் போகும்முன் நாம் உனக்கு இட்ட கட்டளை என்ன?” என்று கேட்டான். “அப்போது, அரசர்பெருமான் கட்டளை ஒன்றும் இல்லை. கோட்டையைக் காக்கும்படி குடிலர் கூறினார்” என்றான் நாராயணன். “குடிலர் என்றால் என்ன, நாம் என்றால் என்ன? இருவரும் ஒருவர்தானே! கோட்டையைக் காத்தனையோ?” “நன்றாகக் காத்தேன்” என்றான் நாராயணன். “அப்படியானால் பகைவர் அகழியை ஒரு பக்கம் எப்படித் தூர்த்தனர்?” “பகைவர் அகழியைத் தூர்க்கவில்லை. நமது படையின் பிணம் தூர்த்தது” என்றான் நாராயணன். “போர்க்களத்தில் உன்னைக் கண்டோம். அங்கேயா உன்னு டைய கோட்டைக் காவல்?” “அரசர்பெருமானைக் காக்க அங்கு வந்தேன்.” அரசன், பலதேவனுடைய காயத்தைக் காட்டி, “உன்கபட நாடகம் நன்றாக இருக்கிறது ! அவன் நெஞ்சில் புண் பார்த்தாயா? அது எப்படி வந்தது !” “அது வந்த காரணத்தை அவனே அறிவான்” என்றான் நாராயணன். “உனக்குத் தெரியாதா” என்று அரசன் மீண்டும் கேட்க, நாராயணன், “இவன் பக்கத்திலிருந்த ஒரு சேவகன், தன் கையிலிருந்து பொன் காப்பைக் காட்டி, ‘நீ என் தங்கைக்குச் செய்த இழிவை இப்படித் தீர்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லி வேலினால் இவன் நெஞ்சில் குத்தினான் என்று பலர் சொல்லக் கேட்டேன்” என்று கூறினான். அப்போது, குடிலன் தன் கையிலிருந்த பொற்காப்பைக் காட்டிக் கூறுகிறான். “நன்றாயிருக்கிறது. இது அரண்மனைக்குரியது. இதோ அரண் மனை முத்திரை இதில் இருக்கிறது. வாணியுங்கூட இதில் கலந்திருக் கிறாள்போல் தெரிகிறது. அரசே! விடை கொடுங்கள், நாங்கள் போகிறோம். எங்கள் மேல் வஞ்சகர் பழி சுமத்துகிறார்கள்” என்று கூறித் தன் கை விரலில் அணிந்திருந்த அமைச்சு மோதிரத்தைக் கழற்றி நீட்டுகிறான். அரசன் நாராயணனை நோக்கி, “எவ்வளவு சூது! உத்தமன் போல நடித்தாய்! கள்ளன்! துட்டன்! சுவாமித் துரோகி! அமைச்சரே! சேவகரே! நாராயணன் நன்றிகெட்ட பாதகன்! நாம் இட்ட கட்டளையை மறந்து கடமை தவறினான். நமது அரண்மனையில் இருந்த பொற்காப்பைத் திருடினான். அதனை ஒருத்தனுக்குக் கொடுத்து பலதேவனைக் கொல்லத் தூண்டினான். உத்தரவு இல்லாமல் போர்க்களத்தில் வந்து யானைப்படை, தேர்ப்படை, குதிரைப் படைகளைக் கலைத்துக் குழப்பம் செய்து நமக்குத் தோல்வியை உண்டாக்கினான். இவனைக் கொண்டுபோய்க் கழுவேற்றுங்கள். நமது ஆணை!” என்றான். “அரசர் கொடுக்கும் தண்டனைக்கு நான் அஞ்சவில்லை. இத்தனை காலம் ஆகியும் உண்மை அறியவில்லை. அரசர் குலம் வாழ்க!” என்றான் நாராயணன். அரசன் படைத்தலைவனை நோக்கி, “நீதியிலிருந்து தவற வில்லை. இவனுக்குச் சரியான தண்டனைதான் அது. விரைவாகக் கொண்டுபோய் இவனைக் கழுவில் ஏற்றுக” என்று கூறினான். அதுகேட்ட வீரன்! “அரசரின் கட்டளைப்படியே செய்கிறேன். வாருங்கள் குடிலரே!” என்று குடிலனை அழைத்தான். அரசன், வீரனைக் கோபத்துடன் நோக்க, “தாங்கள் கூறியன எல்லாம் குடிலருக்குத்தான் பொருந்தும். வேறு யாரும் தவறு செய்யவில்லை” என்று கூறினான். குடிலன் அரசனைப் பார்த்து, “கேட்டீர்களா அரசரே, இக்கெடு பயலின் கொடுமொழியை!” என்று அலறினான். அரசன் வீரனைச் சினந்து, “இவனையும் கழுவில் ஏற்றுங்கள்” என்று அங்கிருந்த சேவகர்களுக்கு ஆணையிட்டான். அப்பொழுது இன்னொரு வீரன், “அப்படியானால் பதினாயிரம் கழுமரம் வேண்டும்” என்றான். இவ்வமயம் வாயில் சேவகன் வந்து, சுந்தர முனிவர் அரண்மனை வந்திருப்பதாகவும், அரசரைக் காண விரும்புவதாகவும் தெரிவித்தான். அரசன் அமைச்சனிடம், “குடிலரே! தண்டனையை நீர் நடத்தும். நம் போய் வருகிறோம்” என்று கூறி எழுந்தான். குடிலன், “இவர்களைவிட்டு விடுங்கள்” என்றான் “விடமுடியாது” என்றான் அரசன். “அப்படி யானால் தாங்களே ஆணையை நடத்துங்கள்” என்றான் அமைச்சன். “நல்லது, நடத்துவோம். நாம் வருகிறவரையில் இவர்கள் இருவரையும் சிறையில் அடைத்து வையுங்கள்” என்று சொல்லி அரசன் முனிவரைக் காணச் சொன்றான். அமைச்சன். தன் சேவகனான சடையனை அழைத்து “இவர் களைக் கொண்டு போய்ச் சிறையில் அடைத்து வை” என்று கட்டளை யிட்டு உடனே பலதேவனை அழைத்துக் கொண்டு வேகமாய்ப் போய் ஒளிந்துகொள்கிறான். குடிலனுடைய சேவகர்களே மற்றச் சேவகர்கள் துரத்திவிடுகின்றனர். குடிலனைத் தேடுகின்றனர். நாராயணன் சேவகர்களை அழைத்துக் குழப்பத்தைத் தடுத்து அமைதி உண்டாக்குகிறான். சேவகர், அரசன் அநீதியாக விதித்த தண்டனைக்காகச் சினங்கொள்கின்றனர். நாராயணன் அவர்களுக்கு ஆறுதல் கூறி அமைதிகொள்ளச் செய்கிறான். குடிலனும் பலதேவனும் ஒளிந்துகொண்டே வெளியில் நிகழ்கிறதைக் கேட்டுக்கொண்டிருக் கின்றனர். அவ்வமயம் ஒரு சேவகன் வந்து அரசன் அழைப்பதாகக் கூறுகிறான். அரசனிடம் குடிலனும் பலதேவனும் போகிறார்கள். ஐந்தாம் களம் அரண்மனையில் சுந்தரமுனிவரை அரசன் சென்று காண்கிறான். போரில் பின்னடைந்து வருந்தும் அரசனுக்கு அவர் ஆறுதல் கூறுகிறார். “புயல்காற்றுக்கு வளைந்து கொடுக்கும் மூங்கில் பின்னர் நிமிர்ந்து நிற்கிறது ; வளையாத நெடுமரம் வேரோடு பெயர்ந்து விழுந்து அழிந்துவிடுகிறது” என்று கூறுகிறார். “மூங்கில், மரத்துக்கு இணையா! அதனை யார் மதிக்கிறார்? ஆணிவேருடன் அற்று வீழ்ந்தாலும் மரத்தையே போற்றுவர் பெரியோர். அடிகளே ! என் உயிரைப் போரில் போக்குவேன் ! அதுவே என் முடிவு” என்றான் அரசன். “அரசே! பொறும்; பொறும். நெருப்புக் கோழி தன் தலையை மட்டும் மறைத்துக்கொண்டு, தன் உடல் முழுவதும் மறைந்திருப்பதாக நினைத்துக்கொள்வது போல இருக்கிறது உம்முடைய நியாயம். அலைகொலை புரிந்து. கொள்ளை யிடுவோர், களவு செய்து பிறர் பொருளைப் பறிப்போர் முதலிய குற்றவாளிகளும் அகப்பட்டுக் கொண்டால் மரணத்துக்கு அஞ்சாமல் கழுவேறுகிறார்கள். துன்பம் வந்தால், அதனைப் பொறுப்பதா அல்லது உயிர்விடுவதா தகுதி? கடலில் போகும் மரக்கலம் புயல்காற்றில் அகப்படுமானால், அதனை ஒரு இடத்தில் சேர்த்துப் புயல் போகும் அளவும் காத்திருந்து, மீண்டும் பிரயாணம் மேற்கொள்வான் மாலுமி. அப்படியின்றி அதனைப் புயலில் அகப்பட விட்டு அழித்துவிடுவான் அல்லன். புகழுக்காக உயிர்விடத் துணிந்தீர் ; ஆனால் உனது கடமையை மறந்தீர். நீர் நம்பிய பாய்மரம் பழுது. கோட்டையை நம்புவதில் பயனில்லை. பெருங்காற்று அடங்கும் வரையில் ஒதுங்கியிருப்பது நல்லது” என்று கூறினார் முனிவர். அரசன் அதற்கு இணங்கவில்லை. போர் செய்து களத்தில் உயிர் விடுவதே தன் கருத்து என்பதை வற்புறுத்துகிறான். முனிவர், இளவரசி மனோன்மணியைக் காப்பது அவன் கடமை என்றும், அரசன் காக்காமற்போனால் அவளைக் காப்பது தமது கடமை என்றும் கூற, அதற்கு என்ன உபாயம் உள்ளது என்று அரசன் கேட்கிறான். முனிவர், கோட்டையிலிருந்து தமது ஆசிரமத்துக்கு ஒரு சுரங்க வழி செய்திருப் பதாகவும், அவ்வழியின் வாயிலாக அரசனும் அரச குமாரியும் தப்பிச் செல்ல முடியும் என்றும் கூற, அரசன், இளவரசியை அதன் வழியாகத் தப்பிவைக்கும்படியும் தான் போர் செய்யப் போர்க்களம் செல்லப் போவதாகவும் கூறி, சுரங்க வழியைக் காட்டும் படி கேட்கிறான். முனிவர், நள்ளிரவில் வந்து காட்டுவதாகச் சொல்லிப் போகிறார். அரசன் இளவரசிக்காகக் கவலைப்படுகிறான். முனிவர்மீதும் ஐயம் கொள்கிறான். ‘சுரங்க வழியைக் காட்டாமலே போய் விட்டார். உண்மையில் சுரங்கம் உண்டா? இல்லையா? சுரங்க வழியை முனிவர் கட்டி யமைக்க முடியுமா? இவரால் அல்லவா இந்தப் போர் வந்தது? இவர் சொல்லிய திருமணம் காரணமாகத் தானே புருஷோத்தமன் போர் செய்ய வந்தான்?’ என்று தனக்குள் எண்ணுகிறான். பிறகு, குடிலனை அழைப்பித்து அவனிடம், முனிவர் கூறிய சுரங்க வழியைப் பற்றியும், அவர் அவ் வழியாகத் தன்னைத் தப்பிப்போக அழைத்தது பற்றியும் கூறுகிறான். சுரங்க வழி, கோட்டையில் முனிவர் தங்கும் அறையில் இருக்கும் என்று குடிலன் ஊகித்தறிந்து, அதனை இகழ்ந்து பேசுகிறான். “இவ்வளவு பெரிய கோட்டையை அமைத்த நமக்குச் சுரங்க வழி அமைக்கத் தெரியாதா? அது அவசியம் இல்லை என்றுதானே செய்யாமல் விட்டோம்” என்று கூறுகிறான். முனிவருடன் இளவரசியைச் சுரங்க வழியாக அனுப்புவது சரியா என்று அரசன் கேட்க, அனுப்புவதில் தவறில்லை என்றும், ஆனால் திருமணம் செய்துவைத்த பிறகு அனுப்பவேண்டும் என்று கூறுகிறான். “திருமணம் செய்ய இது தகுந்த காலமா? யாருக்கு அவளைத் திருமணம் செய்விப்பது?” என்று அரசன் கேட்க, குடிலன், தன் மகனுக்குத் திருமணம் முடிக்கலாம் என்று குறிப்பாகக் கூறகிறான். நெருக்கடியான காலத்தில் வேறு வழியில்லை என்று கண்டு; அரசன் அதற்கு ஒப்புக் கொள்கிறான். ஆனால், மனோன்மணி இத் திருமணத் திற்கு இசை வாளோ என்று ஐயுறுகிறான். வஞ்சகனாகிய குடிலன், “இளவரசி இசை வாள். அவளுக்குப் பலதேவன்மேல் ஆசை உண்டு. அதற்கு மாறு பாடாகத் தாங்கள் கருதுவதுதான் அவளுக்கு வருத்தமாக இருக்கிறது. பலதேவனும் அவள்மீது காதல்கொண்டிருக்கிறான்” என்று சொல்ல, அரசன் உண்மையென நம்பி, இன்று இரவு இரண்டாவது யாமத்தில் திருமணம் செய்யலாம் என்று கூறி, மனோன் மணியிடம் இச் செய்தியைக் கூறிவருகிறேன் என்று சொல்லிப் போகிறான். தனியே இருக்கும் குடிலன் தன் சூழ்ச்சி நிறைவேறியதைக் கண்டு மனம் சந்தோஷப்படுகிறான். மனோன்மணி திருமணத்தை மறுப் பாளோ என்று நினைத்து அஞ்சுகிறான். “மறுக்க மாட்டாள். விருப்பம் இல்லாவிட்டாலும் மௌனமாக இருப்பாள். மௌனம் சம்மதத்தின் அடையாளம் என்று கூறித் திருமணத்தை நிறைவேற்றி விடலாம். நல்லகாலம்; நாராயணனும் சிறையில் இருக்கிறான். முனிவர் வருவதற்குள் திருமணத்தை முடித்துவிட்டால் பிறகு அவர் என்ன செய்ய முடியும்? முனிவர் சுரங்கம் செய்திருக்கிறார் என்று அரசர் கூறினார். அதைப் பார்க்கவேண்டும். நமது ஆபத்துக் காலத்துக்கு அது உதவியாக இருக்கும்... ஐயோ ! இந்தச் சேவகர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தோம், என்னென்ன வெகுமதி அளித்தோம்! நன்றி கெட்ட நாய்கள் ! நமக்குப் பகைவராக உள்ளனர். அந்தப் படுபயல் நாராயணன் இனி தப்பமாட்டான். என் சூழ்ச்சிகளை எல்லாம் நாசமாக்கினவன் அவன். இனி அவன் கழுமரம் ஏறவேண்டியவன் தான்” என்று பலவாறு எண்ணுகிறான். நான்காம் அங்கம் முதற் களம் இடம் : படை பயில் களம். காலம் : காலை. (பலதேவன் படையணி வகுக்க, குடிலன் அரசனை எதிர்பார்த் தொருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) குடிலன்: பருதியும் எழுந்தது; பொருதலும் வந்தது... (பெருமூச்செறிந்து) (தனிமொழி) கருதுதற் கென்னுள, காணுதும். ஆ! ஆ! ஒருவன தாசைப் பெருக்கால் உலகில் வருதுயர் கடலிற் பெரிதே! வானின் 5 எழுந்தவிவ் இரவி விழுந்திடு முன்னர் ஈண்டணி வகுக்குமிக் காண்டகும் இளைஞரில் மாண்டிடு மவர்தொகை மதிப்பார் யாரே ! மாண்டிடல் அன்றே வலிது. மடுவுள் இட்டகல் லாலெழும் வட்டமாம் விரிதிரை 10 வரவரப் பெரிதாய்க் கரைவரை வரல்போல், நின்றவிவ் வீரரை ஒன்றிய மனைவியர் உற்றார் பெற்றார் நட்டார் என்றிப் படியே பரவுமே படியெலாம் துயரம் !... (சற்று நிற்க) என்னை என்மதி இங்ஙனம் அடிக்கடி 15 என்னையும் எடுத்தெறிந் தேகுதல்? சிச்சீ! மன்னவர்க் காக மாள்வ திவர்கடன், மன்னவன் என்போன் மதியில் வலியோன், அன்றியும் பலநா ளாகநம் அன்னம் தின்றிங் கிருந்திவர் செய்ததேன்? அவர்தம் 20 உடன்பா டிதுவே. கடம்பா டாற்றும் காலம் விடுவதார்? மேலும் இயல்பாப் பலபெயர் துக்கப் பட்டால் அன்றி உலகில் எவரே ஒருசுகம் அணைவார்? இயல்பிது வாயின் இரங்கல் என்பயன்? 25 வயலுழும் உழவோர் வருத்தமும் குனிந்திருந்து ஆடை நெய்வோர் பீடையும் வாகனம் தாங்குவோர் தமக்குள தீங்கும் நோக்கி உலகிடை வாழா தோடுவ ரோபிறர்? அலகிலா மானிடர் யாவரும் அவரவர் 30 நலமே யாண்டும் நாடுவர், மதிவலோர் களத்தொடு காலமும் கண்டுமீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென அடங்கிச் சம்பவம் சங்கதி என்பவை நோக்கி இருப்பர்; நலம்வரிற் பொருக்கெனக் கொள்வர் 35 நண்ணார் இதுபோல் நலமிலா ஐயம் எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம். ஏழையர் அலரோ இரங்குவர் இங்ஙனம்? கோழையர்! எங்ஙனம் கூடுவார் இன்பம்? வந்தனன் அஃதோ மன்னனும். (ஜீவகன் வர) 40 வந்தனம் வந்தனம் உன்திரு வடிக்கே (நிலைமண்டில ஆசிரியப்பா) சீவகன்: குடிலா! நமது குறைவிலாப் படைகள் அடையவும் அணிவகுத் தனவோ? குடி: அடியேன். நாரணர்க் கன்றோ நீளரண் காப்பு? சொன்னதப் படியென உன்னினன். சீவ: ஆமாம்! சீவ: 45 அதற்கேன் ஐயம்? குடி: அவர்க்கது முற்றும் இதக்கே டென்றனர், ஆயினும் போயினர். (படைகள் வணங்கி) படைகள்: ஜயஜய! ஜீவக வேந்த ! விஜயே! குடி: அதிர்கழல் வீரரும் அரசரும் ஈதோ எதிர்பார்த் திருந்தனர் இறைவ! நின் வரவே. 50 நாற்றிசை தோறும் பாற்றினம் சுழல நிணப்புலால் நாறிப் பணைத்தொளி பரப்பும் நெய்வழி பருதி வைவேல் ஏந்திக் கூற்றின்நா என்னக் குருதிகொப் புளித்து மாற்றலர்ப் பருகியும் ஆற்றலா தலையும் 55 உறையுறு குறுவாள் ஒருபுறம் அசைத்துக் காற்றினும் மிகவும் கடுகிக் கூற்றின் பல்லினும் கூரிய பகழி மல்கிய தூணி தோளில் தூக்கி, நாண் நின்று எழுமொலி உருமுபோன் றெழுப்பி ஆர்த்தவர் 60 கடிபுரி காக்குநின் காற்படை யாளர் இருப்புக் கலினம் நெரித்துச் சுவைத்துக் கருத்தும் விரைவு கற்கும் குரத்தால் பொடியெழப் புடைக்கும் புரவிகள், போர்க்கு விடைகேட் டுதடு துடித்தலும் வியப்பே. 65 நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து மம்மர் வண்டினம் அரற்ற மும்மதம் பொழியும் வாரணப் புயலினம், தத்தம் நிழலொடு கறுவி நிற்பதும் அழகே. முன்னொரு வழுதிக்கு வெந்நிட் டோடிய 70 புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் போன்ற கொடிஞ்சி நெடுந்தேர் இருஞ்சிறை விரித்து “ வம்மின்! வம்மின்! வீரரே! நாமினி இம்மெனும் முன்னமவ் விந்திர லோகமும் செல்லுவம்! ஏறுமின்! வெல்லுவம்!” எனப்பல 75 கொடிக்கரம் காட்டி யழைப்பதும் காண்டி... ஜீவ: கண்டோம், கண்டோம். களித்தோம் மிகவும் உண்டோ இவர்க்கெதிர்? உனக்கெதிர்? ஓ! ஓ! (படைகளை நோக்கி) வேற்படைத் தலைவரே! நாற்படை யாளரே! கேட்பீர் ஒருசொல்! கிளர்போர்க் கோலம் 80 நோக்கியாம் மகிழ்ந்தோம். நுமதுபாக் கியமே பாக்கியம். ஆ! ஆ! யார்க்கிது வாய்க்கும்? யாக்கையின் அரும்பயன் வாய்த்ததிங் குமக்கே! தாயினும் சிறந்த தயைபூண் டிருந்தநும் தேயமாம் தேவிக்குத் தீவினை யிழைக்கத் 85 துணிந்தவிவ் வஞ்சரை எணுந்தொறும் எணுந்தொறும் அகந்தனில் அடக்கியும் அடங்கா தெழுந்து, புகைந்துயிர்ப் பெறியப் பொறிகண் பொரிய நெடுந்திரட் புருவம் கொடுந்தொழில் குறிப்ப வளங்கெழு மீசையும் கிளர்ந்தெழுந் தாடக் 90 களங்கமில் நும்முகம் காட்டுமிச் சினத்தீ கண்டுஅப் பாண்டியே கொண்டனள் உவகை. அலையெறிந் தீதோ ஆர்த்தனள். கேண்மின்! முலைசுரந் தூட்டிய முதுநதி மாதா! படைகள்: தாம்பிர பன்னிக்கு ஜே! ஜே! ஜீவ: ஒருதுளி யெனும்நீர் உண்டுளீர் ஆயின் 95 கருதவீர் தாம்பிர பன்னியின் கட்டுரை. “ மக்காள்! அருந்தி வளர்மின்! நுமக்கு மிக்கோர் இல்லா வீரமாய்ப் பரந்து முதுசுதந் தரத்தின் முத்திரை ஆகி, இதுபரி ணமித்துஉம் இதயத் துறைக! 100 அன்னியன் கைப்படா இந்நீர் கற்பிற்கு இழிவுறின் மார்பினின் றிதுவே சோரியாய்ப் பொழிகநீர் பொன்றிடும் அளவும்!” என்றன்றோ வாழ்த்தி நுந்தமை வளர்த்தினள்? அவளுரை தாழ்த்தா திவணீர் போர்த்தபோர்க் கோலம் 105 பார்த்தாள் ஆர்த்தவள் வாழ்த்தா தென்செய்வள் ! படைகள்: ஜே! ஜே! ஜீவ: விந்தம் அடக்கினோன் தந்தநற் றமிழ்மொழி தற்சுதந் தரமறும் அற்பர்வாய்ப் படுமோ? படைகள்: தமிழ்மொழிக்கு ஜே! ஜே! ஜீவ: பழையோர் பெருமையும் கிழமையும் கீர்த்தியும் மன்னிய அன்பின்நும் அன்னையர் பாடி 110 நித்திரை வரும்வகை ஒத்தறுத் துமது தொட்டில்தா லாட்ட, அவ் இட்டமாம் முன்னோர் தீரமும் செய்கையும் வீரமும் பரிவும் எண்ணி இருகணும் கண்ணீர் நிறையக் கண்துயி லாதுநீர் கனிவுடன் கேட்ட 115 வண்தமிழ் மொழியால் மறித்திக் காலம் “ஆற்றிலம்; ஆண்மையும் உரிமையும் ஒருங்கே தோற்றனம்” எனச்சொலத் துணிபவர் யாவர்? படைகள்: சிச்சீ! ஜீவ: பொதியமா மலையிற் புறப்பட் டிங்குதன் படியே உலாவுமிச் சிறுகால், பணிந்துமற்று 120 “அடியேம்” எனத்திரி பவர்க்கோ உயிர்ப்பு! படைகள்: ஹே! ஹே! ஜீவ: கோட்டமில் உயிர்ப்போ கூறீர், அன்ன நாட்டபி மானமில் நடைப்பிண மூச்சும்? படைகள்: சிச்சீ! சிச்சீ! ஜீவ: சேனையோ டிவ்வழி திரிந்துநேற் றிரவில்நும் திருவனை யார்களும் சேய்களும் கொண்ட 125 வெருவரு நித்திரைக் குறுகண் விளைத்துநும் பாஷாபி மானமும், தேசாபி மானமும் பொருளெனக் கருதா தருணிறை நுமது தாய்முலைப் பாலுடன் வாய்மடுத் துண்டநல் ஆண்மையும் சுதந்தரக் கேண்மையும் ஒருங்கே 130 நிந்தைவஞ் சியர்செய வந்தநும் கோபம் முற்றும் இயல்பே. மற்றுதன் குகையுள் உற்றரி முகமயிர் பற்றிடின் அதற்கக் குறுமபால் எழுஞ்சினம் இறும்பூ தன்றே! உரிமைமேல் ஆண்மைபா ராட்டார் சீதம். 135 பெருமையில் பிணத்திற் பிறந்ததோர் சீதம். அந்தணர் வளர்க்கும் செந்தழல் தன்னிலும் நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தீ அன்றோ வானோர்க் கென்றுமே உவப்பு! வந்தஇக் கயவர்நும் சிந்தையிற் கொளுத்திய 140 வெந்தழற் கவரே இந்தளம் ஆகுக! படைகள்: ஆகுக! ஆகுக! ஜீவ: இன்றுநீர் சிந்தும் இரத்தமோர் துளியும், நின்றுகம் பலவும் நிகழ்த்துமே “இந்தப் பாண்டியர் உரிமைபா ராட்டும் பண்பினர்; தீண்டன்மின் திருந்தலீர்! அவர் தம் செருக்கு. 145 சுதந்தரம் அவர்க்குயிர்; சுவாசமற் றன்று. நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை”... எனமுர சறையுமே எத்திசை யார்க்கும். இத்தனிப் போரில்நீர் ஏற்றிடும் காயம் சித்தங் களித்து, ஜயமா துமக்கு 150 முத்தமிட் டளித்த முத்திரை ஆகி எத்தனை தலைமுறைக் கிலக்காய் நிற்கும்! படைகள்: ஜே! ஜே! ஜீவ: போர்க்குறிக் காயமே புகழின் காயம். யார்க்கது வாய்க்கும்! ஆ! ஆ! நோக்குமின்! அனந்தம் தலைமுறை வருந்தனி மாக்கள், 155 தினந்தினம் தாமனு பவிக்குஞ் சுதந்தரம் தந்ததம் முன்னோர் நொந்தபுண் எண்ணிச் சிந்தையன் புருகிச் சிந்துவர் கண்ணீர், என்றால் அப்புண் ‘இரந்துகோட் டக்கது’ ‘அன்றோ? அறைவீர். ஐயோ! அதுவும் 160 புண்ணோ? புகழின் கண்ணே, எவரே புண்படா துலகிற் புகழுடம் படைந்தார்? புகழுடம் பன்றியிவ் விகழுடம் போமெய்? கணங்கணம் தோன்றிக் கணங்கணம் மறையும் பிணம்பல, இவரெலாம் பிறந்தார் என்பவோ! 165 உதும்பர தருவில் ஒருகனி அதனுட் பிறந்திறும் அசகம் இவரிலும் கோடி. பிறந்தார் என்போர் புகழுடன் சிறந்தோர். அப்பெரும் புகழுடம் பிப்படி இன்றிதோ! சுலபமாய் நுமக்கெதிர் அணுகலால். துதித்துப் 170 பலமுறை நுமது பாக்கியம் வியந்தோம். ஒழுக்கமற் றன்றது வெனினும், உம்மேல் அழுக்கா றுஞ்சிறி தடைந்தோம். நும்மோடு இத்தினம் அடையும் இணையிலாப் பெரும்புகழ் எத்தனை ஆயிரம் ஆயிரம் கூறிட் 175 டொத்ததோர் பங்கே உறுமெனக் கெனவே ஓடுமோர் நினைவிங் கதனால், வீரர்காள்! நீடுபோர் குறித்திவண் நின்றோர் தம்முள் யாரே ஆயினும் சீராம் தங்கள் உயிருடம் பாதிகட் குறுமயர் வுன்னிச் 180 சஞ்சலம் எய்துவோர் உண்டெனிற் சாற்றுமின். வஞ்சகம் இல்லை. என் வார்த்தையீ துண்மை. மானமோ டவரையிம் மாநக ரதனுட் சேமமாய் இன்றிருத் திடுவம். திண்ணம், உத்தம மாதர்கள் உண்டுமற் றாங்கே 185 எத்தனை யோபேர். இவர்க்கவர் துணையாம். படைகள்: இல்லை! இல்லையிங் கத்தகைப் புல்லியர்! ஜீவ: குறைவெனக் கருதன்மின். எம்புகழ்க் கூறு சிறிதாம் எனவுனிச் செப்பினோம். அதனாற் பிறிதுநீர் நினையீர். பேசுமின் உண்மை. படைத்தலைவர்: இல்லையெம் இறைவ! இந்நா டதனுள் இல்லையத் தகையர். யாவரும்: இலையிலை! இலையே! ஜீவ: நல்லதப் படியேல், நாமே நுஞ்சுய நாட்டில்நல் உரிமைபா ராட்டும் பெரிய மேன்மையும் அதனால் விளைபுகழ் அதுவும் 195 மறுக்கிலம். பொறுக்குமின். வம்மின்! விஜய இலக்குமி காத்திருக் கின்றாள்! அன்றியும் ஒலிக்குநும் ஜயபே ரிகைகேட் டலதுமற்று ஓய்கிலள் நோன்புநம் தாய்மனோன் மணியே. 2 படைவீரர்: மனோன்மணிக்கு ஜே! ஜே! ஜே! யாவரும்: இளவரசிக்கு ஜே! ஜே! ஜே! (குறளடி வஞ்சிப்பா) ஜீவ: நந்தாய் தமர் நங்கா தலர் நஞ்சேய் பிறர் நந்தா வுறை நந்தேய மேல் வந்தே நனி நொந்தாழ் துயர் தந்தே இவண் நிந்தா நெறி நின்றா ரிவர் தந்தா வளி சிந்தா விழ, அடிப்போ மடல் கெடுப்போ முகத் திடிப்போங் குட லெடுப்போ மிடுப் பொடிப்போஞ் சிர முடைப்போம் பொடி பொடிப்போம் வசை துடைப்போ முயிர் குடிப்போம் வழி தடுப்போம் பழி முடிப்போ மினி நடப்போம் நொடி, எனவாங்கு, பெருமுர சதிரப் பெயருமின் கருமுகில் ஈர்த்தெழும் உருமென ஆர்த்தே. (படைகள் முரசடித்து நடக்க, படைப்பாணர் பாட) (கலித்தாழிசை) படைப்பாணர்: தந்நகர மேகாக்கச் சமைந்தெழுவோர் ஊதுமிந்தச் சின்னமதி சயிக்குமெமன் செருக்கொழிமின் தெவ்வீர்காள்! சின்னமதி! சயிக்குமெமன் எனச்செருக்கி நிற்பீரேல், இன்னுணவிங் குமக்கினிமேல் எண்ணீரே எண்ணீரே இசைத்துளோமே. 1 படைகள்: ஜே! ஜே! பாணர்: மறுகுறுதம் ஊர்காக்கும் வயவர்புய மேவிஜயை உறைவிடமா இவர்வாளென் றோடிடுமின் தெவ்வீர்காள்! உறைவிடமா? இவர்வாளென்றோடிடீர் ஆயினினி மறலிதிசை ஒருபோதும் மறவீரே மறவீரே வழங்கினோமே. 2 படைகள்: ஜே! ஜே! பாணர்: ஒல்லுமனை தான்காக்க உருவியகை வாளதற்குச் செல்லுமுறை பின்னரிலை திரும்பிடுமின் தெவ்வீர்காள்! செல்லுமுறை பின்னரிலை எனத்திரும்பீர் ஆயின்நுங்கள் இல்லவர்க்கு மங்கலநாண் இற்றதுவே இற்றதுவே இயம்பினோமே. 3 படைகள்: ஜே! ஜே! (படைகளும் ஜீவகன் முதலியோரும் போர்க்களம் நோக்கிப் போக) நான்காம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. இரண்டாம் களம் இடம் : கோட்டைவாசல். காலம் : காலை. நடர்: கோட்டை காக்கும் படைஞர். (நேரிசை ஆசிரியப்பா) முதற் படைஞன்: இப்படை தோற்கின் எப்படை ஜயிக்கும்? எப்படி இருந்த திராஜன் பேச்சு! கல்லும் உருகிக் கண்ணீர் விடும். இப் புல்லும் கேட்கிற் புறப்படும் போர்க்கு. 2-ம் படை: முற்றும் கேட்டைகொல்? முதற் படை: முற்றும் கேட்டேன். சற்றும் மனமிலை திரும்புதற் கெனக்கு. சரியல ஆணையில் தவறுதல் என்றே வெருவிநான் மீண்டேன். இலையேல் உடன்சென் றொருகை பார்ப்பேன். ஓகோ! சும்மா 10 விடுவனோ? பார்க்கலாம் விளையாட் டப்போது. என்செய! என்செய! எத்தனை பேரையான் பஞ்சாய்ப் பறத்துவன்! துரத்துவன்! பாண்டியில் வஞ்சவிவ் வஞ்சியர் என்செய வந்தார்? நெஞ்சகம் பிளந்திந் நெடுவாள் தனக்குக் 15 கொஞ்சமோ ஊட்டுவன் குருதி! என்செய! நினைதொறும் உடலெலாம் தின்பது தினவே! பாக்கியம் இல்லையென் கைக்கும் வாட்கும்! 2-ம் படை: பாக்கியம் அன்றது. பறைப்பயல் பாவி குடிலனோ டுலாவும் கோணவாய்க் கொடியன், 20 சடையன், தலைவனோ டெதுவோ சாற்றித் தடுத்தே நமையெலாம் விடுத்தான் இப்பால். 3-ம் படை: கெடுத்தான் அவனே என்னையும். அன்றேல் முடித்தே விடுவனென் சபதம் முற்றும். சண்டிஅச் சங்கரன் வந்துளான் சமர்க்கு. 25 கண்டேன். கையிற் கிடைக்கிற் பண்டென் தாயையும் என்னையும் சந்தையிற் பழித்த வாயினை வகிர்ந்து மார்பினைப் பிளந்து... (வாய்மடித்துப் பற்கடிக்க) 4-ம் படை: வஞ்சியர் அனைவரும் மானமில் மாக்கள். பிஞ்சிற் பழுத்த பேச்சினர். யானெலாம் 30 நன்றா யறிவன். ஒன்றார் என்னுடன். சென்றுளேன் ஜனார்த்தனம். கண்டுளேன் வைக்கம். 3-ம் படை: விடுவேன் அல்லேன். அடுபோர் முடியினும் நடுநிசி ஆயினும் அடுகள முழுவதும் தேடுவன்; சங்கரன் செத்தான் ஆயினும் 35 நாடி யவன் தலை நசுக்கி மிதித்து வாயிடை நெடுவேல் இறக்கி... முதற் படை: சீ! சீ! சேவக னாநீ! செப்பிய தென்னை! யாவரே பிணத்தோ டாண்மைபா ராட்டுவர்? பிணமோ பிணத்தோ டெதிர்க்க! 3-ம் படை: போ! போ!. 40 பெருமைநீ பேசேல். பெற்றவுன் தாயேல் அருமைநீ அறிகுவை. முதற் படை: யாரா யினுமென்? பிணத்தொடு பிணக்கெது? சீ! சீ! அன்றியும் ஒருவன் தனக்கா உண்டாம் குரோதம் கருதியிங் கெவன்வாள் உருவினன்? நமக்கெலாம் 45 மாதா இவ்வயின் மகாநா டிதுவே. ஏதோ அவளையும் நம்மையும் இகழ்ந்திவ் வஞ்சியர் வஞ்சமாய் நம்மையும் இகழ்ந்திவ் நெஞ்சகம் கொதித்து நெடியநம் சுதந்தரம் தனக்கா உயிரையும் உவப்போ டளிக்கத் 50 துணிந்தே நம்மையும் மறந்தே நின்றோம். என்னில் அவரவர் இழுக்கு ஆர் கருதுவர்? உன்னுதி நன்றாய். ஒருவன் தனக்கா வந்தபோர் அன்றிஃ தூர்ப்போர். அதனால் இதோஅங் கெய்தினோர் யாரே ஆயினும் 55 சுதேசாநு ராகத் தொடர்பால் அன்றிப் பலவாம் தமது பழம்பழி மீட்போர் கொலைபா தகஞ்செயும் கொடுமைய ரேயாம். (நாராயணன் படைக்கோலமாகிக் குதிரையின்மேல் வர) 2-ம் படை: பாரும்! பாரும்! நாரா யணரிதோ... நாராயணன்: உன்பெயர் முருக னன்றோ? முதற் படை: அடியேன். 4-ம் படை: என்பெயர் சாத்தன். சுவாமி! நாரா: ஓகோ! எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்? முதற் படை: பத்தைஞ் றுளர். மெத்தவும் உத்தமர். மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தம் தகுதிக் கேற்ப தன்றிக் காவல். நாரா: 65 பொறு! பொறு! முருகா! புரையற் றோர்க்குமற் றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும் சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும் திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு. 2-ம் படை: வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல் நாணமும் நோவுமாம் நாரா யணரே ! நாரா: வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ! அப்படி யேதான் ஆயினும் நமக்குக் கைப்படு கடமையே கடமை... முருகா! 75 எத்தனை பேரால் ஏலுமிக் காவல்? முதற் படை: நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி. நாரா: அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின் இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல் ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக் 80 காட்டுதி எனக்கு. முதற் படை: காட்டுவன் ஈதோ! (அணிவகுத்துக் காட்ட) நாரா: (தனதுள்) நல்லனித் தலைவன். வல்லவர் இவரும். முதற் படை: ஈதோ நின்றனர்! (காவற்படைகளை விலக்கி நிறுத்திக்காட்டி) நாரா: போதுமோ இவர்கள்? முதற் படை: போதும்! போதும்! காவற் படைகள்: போதுமே யாங்கள்... நாரா: எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர் 85 பண்ணும் தவறுநம் பாலாய் முடியும். காவற் படை: தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ! நாரா: தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்? காவற் படை: மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல். நாரா: 90 சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல். பரிமற் றையர்க்கெலாம் உளவோ? 3-ம் படை: ஓகோ! 4-ம் படை: பெரியதென் பரிபோற் பிறிதிலை. நாரா: காணுதும். அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா! மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான் 95 வைத்துள படையும் அழைத்திப் புறநீ நொடியினில் வருதி. முதற் படை: அடியேன், அடியேன். (முதற்படைஞன் போக) நாரா: ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின். (கோட்டைமேல் உலாவி நின்று) (தனதுள்) அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன. வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ? 100 ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா! முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும். குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்? வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும் உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ! 105 வறிதாக் கினையே வாளா அனைத்தும் அறியா தொருவனை யமைச்சா நம்பி! இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை? மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்? 110 வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல் மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே; சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்? 115 அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை. (2-ம் படைஞனை நோக்கி) முருகன் வரவிலை? 2-ம் படை: வருவன் விரைவில் நாரா: 120 அதுவென் ஆ! ஆ! 2-ம் படை: ஆ! ஆ! அறியோம்! நாரா: பலதே வன்படை அலவோ? 2-ம் படை: ஆம்! ஆம்! நாரா: மன்னவன்? 2-ம் படை: நடுவே. நாரா: வலப்புறம்? 2-ம் படை: குடிலன். நாரா: என்னையிக் குழப்பம் இடப்புறம்? 2-ம் படை: ஏதோ! நாரா: வருவது முருகன் போலும். முருகா! (முருகன் வர) 125 வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம், (படைவீரரை நோக்கி) இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்! முதற் படை: வந்தனர் ஈதோ மற்றைய வீரரும். நாரா: தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் 130 வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறம் காக்குதும், வருகவென் அருகே! (முருகன் காதில்) குடிலனை நம்பலை. முதற் படை: அடியேன் அறிவேன். நாரா: அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின்! 135 உம்வயின் உளதுநம் செம்மல துயிரே. 1 (யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல) நான்காம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : நண்பகல். (ஜீவகன் தனியாய்ச் சோர்ந்து கிடக்க, சேவகர் வாயில் காக்க) (நேரிசை ஆசிரியப்பா) முதற் சேவகன்: செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ ஆறுதல் கூறுவம்? 2-ம் சேவ: கூறலும் வீணே! பெருத்த துயரிற் பேசும் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். 3-ம் சேவ: பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? 4-ம் சேவ: நாரா யணரேல் தீரமாய் மொழிவர். 3-ம் சேவ: மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய். முதற் சேவ: எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்? 4-ம் சேவ: மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். 2-ம் சேவ: சகிப்பளோ கேட்கில் தமியள் ... 3-ம் சேவ: ஆயினும், மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ! 2-ம் சேவ: நாரா யணரே நன்மதி உடையோர். 4-ம் சேவ: 15 பாரீர்! இன்றவர் பண்ணிய சாகசம், இன்றியாம் பிழைத்ததிங் கிவரால். அன்றேல் ... (ஜீவகன் எழுந்து நடக்க) 3-ம் சேவ: அரசன் அஃதோ எழுந்தான் காணீர். முதற் சேவ: உரைதரு கின்றான் யாதோ? ஒதுங்குமின். அடுத்திவண் நிற்பீர். அமைதி! அமைதி! ஜீவ: 20 கெடுத்தேன் ஐயோ! கெடுத்தேன்! நாணம் விடுத்துயிர் இன்னும் வீணில் தரித்தேன். ஆ! ஆ! என்போல் யாருளர் வீணர்! யாருளர் வீணர்! யாருளர்! யாருளர்! பாண்டியன் தொல்குலம் பட்டபா டின்றுமற் 25 றிதுவோ! இதுவோ! மதிவரு குலமே! மறுவறு நறவே! மாசறு மணியே! அழியாப் பழிப்புனக் காக்கவோ உனது வழியாய் உதித்தேன் மதியிலா யானும்! அந்தோ! இந்து முதலா வந்த 30 முன்னோர் தம்முள் இன்னார்க் கிரிந்து மாண்டவர் அன்றி மீண்டவர் உளரோ! யாதினிச் செய்குவன்! ஐயோ பொல்லாப் பாதகன் மக்களுள் வெட்கமில் பதடி. (பற்கடித்து) போர்முகத் தோடிப் புறங்கொடுத் தேற்குக் 35 கார்முகம் என்செய! கடிவாள் என்செய! (வில்லும் வாளும் எறிந்து) ஓ! ஓ! இதனால் உண்டோர் பெரும்பயன். (மறுபடியும் வாளை எடுத்து நோக்கி நிற்க, சேவகர் ஓடிவர) போ! போ! வெளியே போரிடைப் பொலியாது வாளா இருந்த வாளுக் கீதோ (நாராயணன் வர) எனாதுயிர் ஈவேன், வினாவுவர் யாவர்? நாரா: 40 மனோன்மணி தன்னை மறந்தாய் போலும்! ஜீவ: குழந்தாய்! குழந்தாய்!... (விழுந்து மூர்ச்சிக்க) சேவகர்: கொற்றவா! கொற்றவா! நாரா: பேசன்மின்! (அரசனை மடியில் தாங்கி) முதற் சேவ: பேசன்மின்! நாரா: வீசுமின்! அகன்மின்! முதற் சேவ: வெளியே! 4-ம் சேவ: பனிநீர்... நாரா: தெளிநீ சிறிது. ஜீவ: குழந்தாய்! குழந்தாய்! கொன்றேன் நின்சீர்! (எழுந்து சோர்வாயிருக்க) நாரா: 45 இழந்தால் இருப்பளோ? என்செயத் துணிந்தாய்? ஜீவ: நஞ்சே எனக்கியான்! என்செய் வேனினி! இருதலைக் கொள்ளியில் எறும்பா னேனே! செருமுகத்து இரிந்தென் மானம் செகுத்தும் உயிரினை ஓம்பவோ உற்றது? ஓர்சிறு 50 மயிரினை இழக்கினும் மாயுமே கவரிமா. பெருந்தகை பிரிந்தும்ஊன் சுமக்கும் பெற்றி மருந்தாய் எனக்கே இருந்ததே நாரணா! நாரா: மன்னவ! யார்க்கும் தன்னுடல் மாய்த்தல் அரிதோ? பெரிதாம் அஞர்வந் துற்றுழிக் 55 கருதிய தமரைக் காட்டிவிட் டோடி ஒளிப்பதோ வீரமென் றுன்னினை? ஜீவ: ஓ! ஓ! போரிடை ஓடுவோன் வீரம்நா டுவனோ? நாரா: காலமும் களமும் கண்டு திரும்புதல் சாலவும் வீரமே. தக்கவை உணரும் 60 தன்மையில் சௌரியம் மடமே, சூழ்ச்சிசேர் வன்மையே வீரத் துயிராம் மன்னவ! ஜீவ: போதும்! போதும்நின் போலி நியாயம்! சாதலுக் கஞ்சியோர் தனையளுக் காகச் சூதக உடம்பைச் சுமக்கத் துணிந்தேன். 65 மன்னனும் அல்லன். வழுதியும் அல்லன்! (சேவகரை நோக்கி) என்னுடன் இருமின்! ஏன்நிற் கின்றீர்? முதற் சேவ: இறைவ! ஈதென்னை! ஜீவ: இறைவனென் றென்னை இசைப்பது வசையே. இஃதோ காண்மின்! அசைந்த தொருநிழல். அஃதோ யானெனப் 70 பாருமின், பாண்டியன் போரிடைப் பட்டான் வாரும்! வாரும்! இருமின் யாவரும். நாரா: வீணாய் வெற்றுரை விளம்பலை வேந்தே! காணாய் அஃதோ! அவர்விடும் கண்ணீர். (சேவகர் அழுதலை நோக்கி) ஜீவ: வம்மின்! வம்மின்! எம்மனீர்! ஏனிது? முதற் சேவ:75 பருதிகண் டன்றோ பங்கயம் அலரும்? அரச நீ துயருறில் அழுங்கார் யாரே? ஜீவ: பிரியசே வகரே! பீடையேன்! துயரேன்! இழந்தனம் முற்றும் என்றோ எண்ணினீர்! அழிந்ததோ நம்மரண்? ஒழிந்ததோ நம்படை? 80 மும்மையில் இம்மியும் உண்மையில் இழந்திலம். வெல்லுவம் இனியும்: மீட்போம் நம்புகழ். அல்லையேற் காண்மின்! நாரா: அதற்கென் ஐயம்? இறைவ!இப் போதுநீ இசைத்தவை சற்றும் குறைவிலை. தகுதியே. கூறிய படியே 85 ஆவது காண்குவம். அழகார் அம்புயப் பூவின துயர்வு பொய்கையின் ஆழத் தளவா வதுபோல், உளமது கலங்கா ஊக்கம் ஒருவன தாக்கத் தளவெனத் துணிவார்க் குறுதுயர், தொடுமுன் எவ்வும் 90 அணியார் பந்துறும் அடிபோல், முயற்சியில் இயக்கிய இன்பம் பயக்குமென் றிசைக்கும் சான்றோர் சொல்லும் சான்றே அன்றோ? ஆதலின் இறைவநீ ஓதிய படியே உள்ளத் தெழுச்சியும் உவகையோ டூக்கமும் 95 தள்ளா முயற்சியும் தக்கோர் சார்பும். (குடிலனும் பலதேவனும் வர) உண்டேல் ஊழையும் வெல்லுவம். மண்டமர் அடுவதோ அரிது வடிவேல் அரசே! குடி: (தனக்குள்) இப்பரி சாயர சிருப்பது வியப்பே! தக்கோர் என்றனன் சாற்றிய தென்னோ! (அழுவதாகப் பாவித்து ஒருபுறம் ஒதுங்கி முகமறைந்து நிற்க) ஜீவ: 100 ஏனிது குடில! ஏன்பல தேவ! ஆனதென்? அமைச்ச! ஆ! ஆ! குடி: அடியேன். ஜீவ: வருதி இப்புறம்! வருதியென் அருகே! குடி: (அழுது) திருவடிச் சேவையில்... ஜீவ: செய்தவை அறிவோம். குடி: (ஏங்கி) ஜனித்தநாள் முதலா... ஜீவ: உழைத்தனை! உண்மை! குடி: 105 உடல்பொருள் ஆவி மூன்றையும் ஒருங்கே... ஜீவ: விடுத்தனை. உண்மை. விளம்பலென்? குடி: உண்மையில் பிசகிலன் என்பது... ஜீவ: நிசம்! நிசம்! அறிவோம்! குடி: (விம்மி) எல்லாம் அறியும் ஈசனே சான்றெனக்கு அல்லால் இல்லை... ஜீவ: அனைவரும் அறிவர். குடி: 110 அருமை மகனிவன் ஒருவன்... ஜீவ: அறிகுவம். குடி: பாராய் இறைவ! (பலதேவன் மார்பினைச் சுட்டிக்காட்டி) ஜீவ: (பலதேவனை நோக்கி) வாராய். குடி: இப்புண் ஆறுமா றென்னை? தேறுமா றென்னை? உன்னருள் அன்றிமற் றென்னுள தெமக்கே... ஜீவ: அம்பின் குறியன்று, யாதிது? குடி: அடியேம். 115 அன்பின் குறியிது! ஜீவ: ஆ! ஆ! குடி: ஆயினும் பொல்லாப் பகைவர் பொய்யர் அவர்பலர்... இல்லா தாக்குவர் இறைவ! என் மெய்ம்மை... (அழ) ஜீவ: வெல்வோம் நாளை! விடுவிடு துயரம். குடி: (தனதுள்) அறிந்திலன் போலும் யாதும்! (சிறிது உளம் தெளிந்து) ஜீவ: அழுங்கலை. 120 வெறுந்துய ரேனிது? விடு! விடு! உலகில் வெற்றியும் தோல்வியும் உற்றிடல் இயல்பே, அழுவதோ அதற்கா விழுமிய மதியோய்! குடி: (தனதுள்) சற்றும் அறிந்திலன்! என்னையென் சமுசயம்! ஜீவ: முற்றிலும் வெல்லுதும் நாளை, அதற்கா 125 ஐயுறேல்! அஞ்சலை! ஆயிரம் வஞ்சியர் நணுகினும் நாளை... குடி: நாயேற் கதனில் அணுவள வேனும் இலையிலை அயிர்ப்பு. நெடுநாள் ஆக நின்பணி விடைக்கே உடலோ டாவியான் ஒப்பித் திருந்தும், 130 கெடுவேன், அவையிக் கிளர்போ ரதனில் விடுமா றறியா வெட்கமில் பதடியாய்க் கொடியார் சிலர்செய் கொடுஞ்சூ ததனால் தடுமா றடைந்தென் தகைமையும் புகழும் கொடுமா றுகுத்த கெடுமதி ஒன்றே 135 கருத்திடை நினைதொறும் கண்ணிடு மணல்போல், உறுத்துவ திறைவ! ஒவ்வொரு கணமும். பகைவர்தம் படைமேற் படுகிலா வுடலம் கெடுவேற் கென்னோ கிடைத்ததிங் கறியேன்! அடுபோர்க் களத்தியாண் டடைந்திலன்! ஐயோ! 140 வடிவேல் ஒன்றென் மார்பிடை இதுபோல் (பலதேவனைக் காட்டி) படுமா றில்லாப் பாவியேன் எங்ஙனம் நோக்குவன் நின்முகம்? காக்குதி! ஐயோ! தாக்குறு பகைவர் தம்படை என்னுயிர் போக்கில. நீயே போக்குதி! காக்குதி! 145 இரக்கமுற் றுன்திருக் கரத்துறை வாளிவ் உரத்திடைஊன்றிடில் உய்குவன். அன்றேல்... (அழுது) ஜீவ: உத்தம பத்தியில் உனைப்போல் யாரே! நாரா: (தனதுள்) மெத்தவும் நன்றிந் நாடகம் வியப்பே! மற்றக் கோழைக் குற்றதெப் படிப்புண்? 150 போரிடை உளதன் றியார்செய் தனர்பின்? உணர்குவம் இப்பேச் சோய்விலாப் பழங்கதை. (நாராயணன் போக) குடி: சித்தமற் றவ்வகை தேர்ந்துள தென்னில், இத்தனை கருணையும் எனக்கென அருளுதி, பாதநற் பணிவிடை படைத்தநாள் முதலா 155 யாதுமொன் றெனக்கா இரந்திலன். உணர்வை ஓதிய படியென் உரங்கிழித் துய்ப்பையேல் போதுமிங் கெனக்(கு)அப் போதலோ காண்குவர் மன்னுல குள்ளம் என்னுள நிலைமை! உன்பெயர்க் குரிய ஒவ்வோர் எழுத்தும் 160 என்னுரத் தழியா எழுத்தினில் எழுதி இருப்பதும் உண்மையோ இலையோ என்பது பொருக்கெனக் கிழித்திங் குணர்த்துதி புவிக்கே. (முழந்தாளூன்றி நின்றழ) ஜீவ: அழுவதேன்? எழு! எழு! யாரறி யார்கள்! உன்னுளம் படும்பா டென்னுளம்அறியும். 165 என்னது பவங்கேள் குடிலா! ஈதோ சற்றுமுன் யானே தற்கொலை புரியத் துணிந்துவாள் உருவினேன். துண்ணென நாரணன் அணைந்திலன் ஆயினக் காலை... குடி: ஐயோ! ஜீவ: தடுத்தான்; விடுத்தேன்! குடி: (தனதுள்) கெடுத்தான் இங்கும்! ஜீவ: 170 அரியே றன்ன அமைச்ச! பெரியோர் தரியார்; சகியார் சிறிதொரு சழக்கும். ஆயினும் அத்தனை நோவதற் கென்னே? வாளுறை சேர்த்திலம்! நாளையும் போர்செயக் கருதினோம்! உறுதி! வெருவியோ மீண்டோம்? குடி: 175 வஞ்சியர் நெஞ்சமே சான்றுமற் றதற்கு. மீண்டதிற் குறைவென்? ஆ! ஆ! யாரே வெருவினார்? சீ! சீ! வீணவ் வெண்ணம்! இருதினம் பொருதனர் சிறுவனை வெலற்கென் றொருமொழி கூறநம் உழையுளார் சிலர்செய் (நாராயணன் நின்றவிடம் நோக்கி) 180 சதியே யெனக்குத் தாங்காத் தளர்ச்சி அதுவலால் என்குறை மதிசூல மருந்தே! சென்றுநாம் இன்று திரும்பிய செயலே நன்றெனப் போர்முறை நாடுவோர் நவில்வர். செவ்விதில் ஓடிநாய் கௌவிடும். சிறந்த 185 மடங்கலோ எதற்கும் மடக்கியே குதிக்கும். குதித்தலும் பகையினை வதைத்தலும் ஒருகணம். நாளைநீ பாராய்! நாந்தூ தனுப்பும் வேளையே அன்றி விரிதலை அனந்தை ஊரார் இவ்வயின் உற்றதொன் றறியாச் 190 சீராய் முடியுநம் சிங்கச் செருத்திறம்! மீண்டோம் என்றுனித் தூண்டிலின் மீனென ஈண்டவன் இருக்குக: இருக்குக, வைகறை வரும்வரை இருக்கில் வத்தவிவ் வஞ்சியர் ஒருவரும் மீள்கிலர். ஓர்கால் இக்குறி 195 தனக்கே தட்டிடில் தப்புவன் என்பதே எனக்குள துயரம். அதற்கென் செய்வோம்! ஆதலின் இறைவ! அஞ்சினேம் என்றொரு போதுமே நினையார் போர்முறை அறிந்தோர். ஜீவ: எவ்விதம் ஆயினும் ஆகுக. வைகறை, 200 இதுவரை நிகழ்ந்தவற் றெதுகுறை வெனினும் அதுவெலாம் அகலநின் றரும்போர் ஆற்றுதும். குடி: வஞ்சியான் இரவே அஞ்சிமற் றொழிந்திடில் அதுவுமாம் விதமெது? (சேவகன் வர) சேவ: உதியன் தூதுவன் உற்றுமற் றுன்றன் அற்றம்நோக் கினனே. குடி: 205 சரி! சமா தானம் சாற்றவே சார்ந்தான். ஜீவ: பெரிதே நின்மதி! ஆ! ஆ! வரச்சொல். (வஞ்சித் தூதன் வர) தூதன்: தொழுதனன், தொழுதனன். வழுதி மன்னவா! (வணங்கி) அருளே அகமாத் தெருளே மதியா அடலே உடலாத் தொடைபுக ழேயா 210 நின்றவென் இறைவன் நிகழ்த்திய மாற்றம் ஒன்றுள துன்வயின் உரைக்க என்றே விடுத்தனன் என்னை அடுத்ததூ துவனா. இன்றுநீர் இருவரும் எதிர்த்ததில் யாவர் வென்றனர் என்பது விளங்கிடும் உனக்கே. 215 பொருதிட இனியும் கருதிடில் வருவதும் அறிகுவை! அதனால் அறிகுறி உட்கொண் டுறுவது முன்னுணர்ந் துறவா வதற்கே உன்னிடில் தாம்பிர பன்னியி னின்றொரு கும்ப நீருமோர் நிம்ப மாலையும் 220 ஈந்தவன் ஆணையில் தாழ்ந்திடில் வாழ்வை! மதிற்றிற மதித்திரு மாப்பையேல் நதியிடை மட்பரி நடாத்தினோர்க் கொப்பா குவையே. ஆதலின் எங்கோன் ஓதிய மாற்றம் யாதெனிற் கைதவா! வைகறை வருமுன் 225 தாரும் நீரும்நீ தருவையேற் போரை நிறுத்துவன். அல்லையேல் நின்புரம் முடிய ஒறுத்திட உழிஞையும் சூடுவன். இரண்டில், எப்படி உன்கருத் தப்படி அவற்கே. ஜீவ: நன்று! நன்று! நீ நவின்றனை. சிறுவன் 230 வென்றதை நினைத்தோ அலதுமேல் விளைவதைக் கருதித் தன்னுளே வெருவியோ உன்னை விடுத்தனன் என்பதிங் கெடுத்துரை யாதே அடுத்திவண் உள்ளார் அறிகுவர் ஆயினும், மற்றவன் தந்தசொற் குற்ற நம்விடை 235 சாற்றுதும் கேட்டி. தன்பொருள் ஆயின் ஏற்றிரந் தவர்க்கியாம் யாதுமீந் திடுவோம். அருந்திடச் சேரன் அவாவிய புனலும் விரும்பிய சுரும்பார் வேம்பும் விதுகுலம் வரும்பரம் பரைக்காம் அல்லால் எனக்கே 240 உளவல; அதனால் ஒருவனீந் திடுதல் களவெனக் காணுதி. மற்றுநீ கழறிய உழிஞையங் குளதெனில் வழுதிபாற் பழுதில் நொச்சியும் உளதென நிச்சயம் கூறே. தூதன்: ஐயோ! கைதவா! ஆய்ந்திலை உன்றன் 245 மெய்யாம் இயல்பு. மிகுமுன் சேனையின் தீரமும் திறமும் உனதரும் வீரமும் கண்முற் படுமுன் கவர்ந்தசே ரற்கிம் மண்வலி கவர்தலோ வலிதென் றுன்னினை? என்மதி குறித்தாய்! எடுத்தகைப் பிள்ளாய்! குடி: 250 நில்லாய் தூதுவ! நின்தொழில் உன்னிறை சொல்லிய வண்ணம் சொல்லி யாங்கள் தரும்விடை கொடுபோய்ச் சாற்றலே அன்றி விரவிய பழிப்புரை விளம்புதல் அன்றே. அதனால் உன்னுயிர் அவாவினை யாயின் 255 விரைவா யேகுதி விடுத்தவன் இடத்தே. தூதன்: குடிலா! உன்மனப் படியே! வந்தனம். மருவிய போரினி வைகறை வரையிலை. இரவினில் வாழுமின் இவ்வர ணகத்தே. (தூதுவன் போக) குடி: தூதிது சூதே, சொன்னேன் அன்றோ? ஜீவ: 260 ஏதமில் மெய்ம்மையே ஆயினும் என்னை? நீரும் தாரும் யாரே அளிப்பர்? எனவோ அவைதாம்? யாதே வரினும் மனவலி ஒல்கலை மானமே பெரிது. சிதைவிடத் துரவோர் பதையார் சிறிதும் 265 புதைபடுங் கணைக்குப் புறங்கொடா தும்பல். மதிகுல மிதுகா றொருவரை வணங்கித் தாழ்ந்துபின் நின்று வாழ்ந்ததும் அன்று! மாற்றார் தமக்கு மதிகுல மாலையும் ஆற்றுநீ ருடன்நம் ஆண்மையும் அளித்து 270 நாணா துலகம் ஆளல்போல் நடித்தல் நாணாற் பாவை உயிர்மருட் டுதலே ஒட்டார் பின்சென் றுயிர்வாழ் தலினும் கெட்டான் எனப்படல் அன்றே கீர்த்தி! அதனாற் குடிலா! அறிகுதி துணிபாய். 275 எதுவா யினும்வரில் வருக, ஒருவனை வணங்கியான் இணங்குவன் எனநீ மதியேல். (எழுந்து) வருவோம் நொடியில், மனோன்மணி நங்குலத் திருவினைக் கண்டுளந் தேற்றி மீள்குவம். கருதுவ பலவுள. காணுதும். 280 இருநீ அதுகா றிவ்வயின் இனிதே. (ஜீவகன் போக) குடி: கருதுதற் கென்னே! வருவது கேடே. தப்பினாய் இருமுறை. தப்பிலி நாரணன் கெடுத்தான் பலவிதம் மடப்பயல் நீயே (பலதேவனை நோக்கி) அதற்கெலாம் காரணம். பலதே: அறிகுவை, ஒருவன் 285 இதுபோல் வேலுன் நெஞ்சிடை இறக்கிடில். குடி: உன்நடக் கையினால் பலதே: உன்நடக் கையினால்! மன்னனைக் குத்திட உன்னினை; ஊழ்வினை! என்னையே குத்திட இசைந்தது; யார்பிழை? குடி: பாழ்வாய் திறக்கலை. ஊழ்வினை! ஊழ்வினை! 290 பகைக்கலை எனநான் பலகாற் பகர்ந்துளேன். பலதே: பகையோ? பிரியப் படுகையோ? பாவி! குடி: பிரியமும் நீயும்! பேய்ப்பயல்! பேய்ப்பயல்! எரிவதென் உளமுனை எண்ணும் தோறும். அரியவென் பணமெலாம் அழித்துமற் றின்று. பலதே: 295 பணம்பணம் என்றேன் பதைக்கிறாய் பிணமே! நிணம்படு நெஞ்சுடன் நின்றேன். மனத்திற் கண்டுநீ பேசுதி! மிண்டலை வறிதே! (பலதேவன் போக) குடி: விதியிது! இவனுடன் விளம்பி யென்பயன்? இதுவரை நினைத்தவை யெல்லாம் போயின! 300 புதுவழி கருதுவம்! போயின போகுக! (மௌனம்) எதுவுமிந் நாரணன் இருக்கில், அபாயம். ஆ! ஆ! உபாயமிங் கிதுவே. 2 (குடிலன் போக) நான்காம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. நான்காம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : மாலை (ஜீவகனும் குடிலனும் மந்திராலோசனை; பலதேவன் ஒருபுறம் நிற்க.) (நேரிசை ஆசிரியப்பா) ஜீவகன்: ஆதி இன்னதென் றோதுதற் கரிய வழுதியின் தொழுகுல வாணாள் ஓரிரா எனமதிப் பதற்கும் இருந்ததே! குடில! இத்தனை கேடின் றெங்ஙனம் விளைந்தது? 5 சற்றும் அறிந்திலேன் தையலர் புகலுமுன். மாற்றார் நமது மதிற்புறத் தகழைத் தூர்த்தார் எனப்பலர் சொல்லுவ துண்மைகொல்! குடி: ஓரிடம் அன்றே. உணர்ந்திலை போலும். (தனதுள்) வேரறக் களைகுதும். இதுவே வேளை. ஜீவ: 10 என்னை! என்னை! குடி: மன்னவா! யானிங் கென்னென ஓதுவன் இன்றையச் சூது? ஜீவ: மருவரு மதிலுள கருவியென் செய்தன? குடி: கருவிகள் என்செயும் கருத்தா இன்றியே! ஜீவ; காவல் இல்லைகொல்? சேவகர் யாவர்? குடி: 15 ஏவலின் படியாம் எண்ணா யிரவர் ஆதியர் காவலா ஆக்கியே அகன்றோம். ஜீவ: ஏதிது பின்னிவர் இருந்துமற் றிங்ஙனம்? குடி: இருந்திடில் இங்ஙனம் பொருந்துமோ இறைவ! ஜீவ: செவ்விது! செய்ததென்? குடி: எவ்விதம் செப்புகேன்? 20 நாரணர் காவலின் நாயகர் ஆக்கினோம். போரிடைக் கண்டனை நாரணர் தம்மை. ஜீவ: மெய்ம்மை! கண்டனம். விட்டதென் காவல்? குடி: ஐய! யான் அறிகிலன். அவரிலும் நமக்கு மெய்ம்மையர் யாவர்? வேலியே தின்னில் 25 தெய்வமே காவல் செய்பயிர்க் கென்பர். ஜீவ: துரோகம்! துரோகம்! குடி: துரோகமற் றன்று! விரோதம்! அடியேன் மேலுள விரோதம். திருவடி தனக்கவர் கருதலர் துரோகம். ஜீவ: கெடுபயல்! துரோகம்! விடுகிலன் சிறிதில். குடி: 30 மடையன்! ஐயோ! மடையன்! சுவாமீ! எலிப்பகை தொலைக்க இருந்ததன் வீட்டில் நெருப்பினை இடல்போல் அன்றோ நேர்ந்தது. விருப்பம்மற் றவர்க்குன் வெகுமதி ஆயின், திருத்தமாய் ஒருமொழி திருச்செவி சேர்க்கில் 35 அளிப்பையே களிப்புடன் அமைச்சும் தலைமையும்! அத்தனை அன்புநீ வைத்துளை! (அழுது) ஜீவ; ஆ! ஆ! எத்தனை துட்டன்! எண்ணிலன் சற்றும்! குடி: ஐயோ! எனக்கிவ் வமைச்சோ பெரிது? தெய்வமே அறியுமென் சித்த நிலைமை! 40 வெளிப்பட ஒருமொழி விளம்பிடில் யானே களிப்புடன் அளிப்பனக் கணமே அனைத்தும். விடுவேம் அதற்கா வேண்டிலெம் உயிரும்! (பலதேவன் மார்பைக் காட்டி) போர்முகத் திங்ஙனம் புரிதலோ தகுதி? ஜீவ: யார்? யார்? நாரணன்? (பலதேவனை நோக்கி) பலதே: ஆம்! அவன் ஏவலில் 45 வம்பனங் கொருவன்... ஜீவ: நம்பகை அன்றுபின்! குடி: நின்பகை அன்றுமற் றென்பகை இறைவ! ஜீவ: உன்பகை என்பகை! ஓ! ஓ! கொடியன்! செய்குவன் இப்போ தேசிரச் சேதம்! இடங்குழம் பியதிங் கிதனாற் போலும்? குடி: 50 அடங்கலும் இதனால் ஐய! அன்றேல், இடப்புறம் வலப்புறம் யாதே குழம்பும்? மடப்பயல் கெடுத்தான்! மன்ன! நம் மானம்! ஒருமொழி அல்லா திருமொழி ஆயின் வெருவர வெம்படை வெல்லுவ தெங்ஙனம்! ஜீவ: 55 அழைநா ரணனை. (முதற் சேவகனை நோக்கி) முதற் சேவ: அடியேன் ஜீவ: நொடியில். (சேவகன் போக) பழமையும் பண்பும்நாம் பார்க்கிலம் பாவி! இத்தனை துட்டனோ? ஏனிது செய்தான்? குடி: சுத்தமே மடையன்! சுவாமீ! பொறுத்தருள். என்னதே அப்பிழை. மன்ன! நீ காக்குதி! 60 வருபவை உன்திரு வருளால், வருமுன் தெரிவுறும் அறிவெனக் கிருந்தும், திருவுளம் நிலவிய படியே பலதே வனைப்படைத் தலைவனாய் ஆக்கிடச் சம்மதித் திருந்தேன். எனதே அப்பிழை, இலதேல் இவ்விதம் 65 நினையான் இவனுயிர் நீங்கிடப் பாவி! அதன்பின் ஆயினும் ஐயோ! சும்மா இதமுற இராதுபோர்க் களமெலாம் திரிந்து கடிபுரிக் காவற் படைகளும் தானுமாய் இடம்வலம் என்றிலை: இவுளிதேர் என்றிலை: 70 கடகயம் என்றிலை: அடையவும் கலைத்து, கைக்குட் கனியாய்ச் சிக்கிய வெற்றியை (விம்மி) ஜீவ: கண்டனம் யாமே. குடி: காலம்! காலம்! ஜீவ: கொண்டுவா நொடியில்,(2-ஆம் சேவகனை நோக்கி) 2-ம் சேவ: அடியேன்! அடியேன் - (2-ஆம் சேவகன் போக) குடி: சென்றது செல்லுக, ஜயிப்போம் நாளை. 75 ஒன்றுநீ கேட்கில் உளறுவன் ஆயிரம். கெடுநா உடையான். கேட்டினி என்பயன்? ஜீவ: விடுவேம் அல்லேம். வெளிப்படை. கேட்பதென்? எழுமுன் அவன் கழு ஏறிடல் காண்குதும். குடி: தொழுதனன் இறைவ! பழமையன்! பாவம்! 80 சிறிதுசெய் கருணை. அறியான்! ஏழை! ஜீவ: எதுவெலாம் பொறுக்கினும் இதுயாம்பொறுக்கிலம். எத்தனை சூதுளான்! எத்தனை கொடியன்! குடி: சுத்தன்! ஜீவ: சுத்தனோ? துரோகி! துட்டன்! (நாராயணன் உள்ளே வர) இட்டநம் கட்டளை என்னையின் றுனக்கே? (முருகன் முதலியோர் வாயிலில் நிற்க) நாரா: 85 எப்போ திறைவ? ஜீவ: இன்று போர்க் கேகுமுன்! நாரா: அப்போ தாஞ்ஞையாய் அறைந்ததொன் றில்லை. கடிபுரி காக்கவென் றேவினன் குடிலன். ஜீவ: குடிலனை யாரெனக் கொண்டனை, கொடியாய்! நாரா: குடிலனைக் குடிலனென் றேயுட் கொண்டுளேன். ஜீவ: 90 கெடுவாய்! இனிமேல் விடுவாய் பகடி! குடிலனென் அமைச்சன். நாரா: நெடுநாள் அறிவன்! ஜீவ: நானே அவனிங் கவனே யானும். நாரா: ஆனால் நன்றே, அரசமைச் சென்றிலை. ஜீவ: கேட்டது கூறுதி. நாரா: கேட்டிலை போலும். ஜீவ: 95 கடிபுரி காத்தைகொல்? நாரா: காத்தேன் நன்றாய். ஜீவ: காத்தையேல் அகழ்க்கணம் தூர்த்ததென்பகைவர்? நாரா: தூர்த்ததுன் பகையல. துரத்திய படைப்பிணம். பார்த்துமேற் பகருதி. ஜீவ: பார்த்தனம் உன்னை ஆர்த்தபோர்க் களத்திடை. அதுவோ காவல்? நாரா: 100 உன்னையும் காத்திட உற்றனன் களத்தில். ஜீவ: என்னையும் கபட நாடகம்? இனிதே! அவனுரம் நோக்குதி. அறிவைகொல்? (பலதேவனைக் காட்டி) நாரா: அறிவேன். ஜீவ: எவனது செய்தவன்? நாரா: அவனே அறிகுவன். ஜீவ: ஒன்றும்நீ உணர்கிலை? நாரா: உணர்வேன். இவன்பால் 105 நின்றதோர் வீரன்:இப் பொற்றொடி யுடையான்: “ என்தங் கையினிழி விப்படி எனக்கே” என்றுதன் கைவேல் இவனுரத் தெற்றிப் பொன்றினன் எனப்பலர் புகல்வது கேட்டேன். ஜீவ: நன்றுநன் றுன்கதை! குடி: நன்றிது நன்றே! (பொற்றொடி காட்டி) 110 பூணிது நினதே! அரண்மனைப் பொற்றொடி. காணுதி முத்திரை! வாணியும் சேர்ந்துளாள். இச்செயற் கிதுவே நிச்சயம் கூலி. அடியேந் தமக்கினி விடையளி அகலுதும். அஞ்சிலேம் உடலுயிர்க் கஞ்சுவம் மானம். 115 வஞ்சகர் கெடுப்பர். வந்தனம். (தன் முத்திரைமோதிரம் கழற்றி நீட்ட) ஜீவ: (நாராயணனை நோக்) நில்! நில்! இத்தனை சூதெலாம் எங்குவைத் திருந்தாய்? உத்தமன் போலமற் றெத்தனை நடித்துளாய்! சோரா! துட்டா! சுவாமித் துரோகி! வாராய் அமைச்ச! வாரீர் படைகாள்! (முருகன் முதலிய தலைவரும் படைஞரும் வர) 120 நாரா யணனிந் நன்றிகொல் பாதகன், இன்றியாம் இவனுக் கிட்டகட் டளையும் நன்றியு மறந்து நன்னகர் வாயிற் காவல்கை விடுத்துக் கடமையிற் பிறழ்ந்தும் மேவருந் தொடியிதெங் கோவிலில் திருடியும், 125 ஏவலர்க் கதனையீந் தேபல தேவன் ஓவலில் உயிரினை உண்டிடத் தூண்டியும் அநுமதி இன்றியின் றமர்க்களத் தெய்திக் கனைகழற் படைபரி கரிரதம் கலைத்துச் சுலபமா யிருந்தநம் வெற்றியும் தொலைத்துப் 130 பலவழி இராசத் துரோகமே பண்ணியும் நின்றுளான். அதனால் நீதியா யவனை இன்றே கொடுங்கழு வேற்றிட விதித்தோம்! அறிமின் யாவரும்; அறிமின்! அறிமின்! சிறிதன் றெமக்கிச் செயலால் துயரம். 135 இன்றுநேற் றன்றெனக் கிவனுடன் நட்பு. நாரா: வெருவிலேன் சிறிதும் வேந்தநின் விதிக்கே! அறியாய் ஆயின் இதுகா றாயும் வறிதே மொழிகுதல்! வாழ்க நின்குலம்! ஜீவ: நட்பல; மக்களே யாயினென்? நடுநிலை 140 அற்பமும் அகலோம். ஆதலின் இவனை (படைத்தலைவரை நோக்கி) நொடியினிற் கொடுபோ யிடுமின் கழுவில்! முருகன்: அடியேம். நொடியினில் ஆற்றுதும் ஆஞ்ஞை குடிலரே வாரும்! ஜீவ: மடையன் இவன்யார்! முரு: கூறிய பலவும், குடிலரோ டொவ்வும். 145 வேறியார் பிழைத்தனர் வேந்தமற் றின்றே? குடி: கேட்டனை இறைவ! கெடுபயல் கொடுமொழி. (காதில்) மூட்டினன் உட்பகை! நாரா: முருகா! சீ! சீ! (முருகனை அருகிழுத்து) ஜீவ: மாட்டுதிர் இவனையும் வன்கழு வதனில் (சேவகனை நோக்கி) முரு: ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும். (வாயிற்சேவகன் வர) சேவ: 150 சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை. சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம். ஜீவ: வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில். குடி: மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்; 155 விடுத்திட அருளாய்! ஜீவ: விடுகிலம் குடி: ஆயின், ஜீவ: அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம். அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில். (ஜீவகன் போக) குடி: (தன் சேவகனை நோக்கி) சடையா! கொடுபோய் அடையாய் சிறையில் (சடையன் அருகே செல்ல) முரு: அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம். (சடையன் பின்னும் நெருங்க) 160 வேணுமோ கோணவாய் விக்கா! சடையன்: கொக்கொக்! (விக்கி) முரு: கூவலை! விடியுமின் கூவலை! சடையன்: கொக்கொக். சேவகர் யாவரும்: சேவலோ! சேவவேலா! சேவலோ! சேவலோ! (கைதட்டிச் சிரித்து) குடி: ஏதிது? இங்ஙனம் யாவரு மெழுந்தார்! வீதியிற் செல்லலை. வீணர்! அபாயம்! 165 ஒழிகுவம் இவ்வழி! வழியிது! வா! வா! (குடிலனும் பலதேவனும் மறைய)? சேவகரிற் சிலர்: பிடிமின் சடையனை! (சடையனும் குடிலனும் சேவகரும் ஓடிட, சில படைஞர் துரத்திட, சில ரார்த்திட) மற்றைய சேவகர்: பிடிமின்! பிடிமின்! சேவகரிற் சிலர்: குடிலனெங் குற்றான்? குடி: கொல்வரே! ஐயோ! (நன்றாய் மூலையில் மறைய) சேவகரிற் சிலர்: விடுகிலம் கள்வரை! மற்றைய சேவ: பிடிமின்! பிடிமின்! (கூக்குரல் நிரம்பிக் குழப்பமாக) நாரா: முருகா! நிகழ்பவை சரியல சிறிதும் (ஒரு திண்ணையிலேறி நின்று) அருகுநில். சீ! சீ! அன்பரே அமைதி! (குழப்பங் குறைந்து அமைதி சிறிது பிறக்க) முரு: அமைதி! கேண்மின்! முதற் சேவகன்: அமைதி! அமைதி! நாரா: நல்லுயிர்த் துணைவரே! நண்பரே! ஒருமொழி சொல்லிட ஆசை! சொல்லவோ? (குழப்பந் தீர) சேவகரிற் சிலர்: சொல்லுதி. (சிறிது சிறிதாய்ப் படைஞர் நெருங்கிச் சூழ) சேவகர் யாவரும்: சொல்லாய்! சொல்லாய்! பல்லா யிரந்தரம்! நாரா: 175 நல்லீர் மிகவும் அல்லா திங்ஙனம் முன்பின் அறியா என்போ லிகள்மேல் அன்புபா ராட்டீர். அநேக வந்தனம்! (கைகூப்பி) சேவ: அறியா ருனையார்? அறிவார் யாரும். (முற்றிலும் அமைதி பிறக்க) நாரா: அறிவீர் ஆயினும் யானென் செய்துளேன்? 180 என்செய வல்லவன்! என்கைம் மாறு! பாத்திர மோதும் பரிவிற் கித்தனை! சேவ: காத்தனை! காத்தனை! காவற் கடவுள் நீ! நாரா: கெட்டார்க் குலகில் நட்டார் இல்லை! ஆயினும். வீரர்நீ ராதலின் நும்முடன் 185 ஈண்டொரு வேண்டுகோள் இயம்பிட ஆசை. அளிப்பிரோ அறியேன்? (படைஞர் நெருங்கிச் சூழ) சேவ: அளிப்போம் உயிரும்! குடி: (பலதேவன் காதில்) ஒளித்ததிங் குணர்வனோ? ஓ! பல தேவ! நாரா: ஒருதின மேனும் பொருதுளேன் உம்முடன். கருதுமின் என்னவ மானமுஞ் சிறிதே. சேவ: 190 உரியதே எமக்கது. பெரிதன் றுயிரும்; (யாவரும் கவனமாய்க் கேட்க) குடி: (தனதுள்) எரியிடு வானோ இல்லிடை? ஐயோ! நாரா: அத்தனை அன்புநீர் வைத்துளீர் ஆயின் என்மொழி தனக்குநீர் இசைமின், எனக்காத் தீதே ஆயினும் செமித்தருள் புரிமின்! சேவ: 195 யாதே ஆயினும் சொல்லுக! நாரா: சொல்லுதும்! போர்க்களத் துற்றவை யார்க்கும் வெளிப்படை. ஊர்ப்புறத் தின்னம் உறைந்தனர் பகைவர். நாற்புறம் நெருப்பு; நடுமயிர்த் தூக்கின் மதிகுலக் கொழுந்தாம் மனோன்மணி நிலைமை. 200 இதனிலும் அபாயமிங் கெய்துதற் கில்லை. நுந்தமிழ் மொழியும் அந்தமில் புகழும் சிந்திடும்; சிந்திடும் நுஞ்சுதந் தரமும். இத்தகை நிலைமையில் என்னைநும் கடமை? மெய்த்தகை வீரரே! உத்தம நண்பரே! 205 எண்ணுமின் சிறிதே! என்னைநம் நிலைமை! களிக்கவும் கூவவும் காலமிங் கிதுவோ? வெளிக்களத் துளபகை, வீண்கூக் குரலிதைக் கேட்டிடிற் சிறிதும் கேலியென் றெண்ணார்; கோட்டையுட் படைவெட் டேயெனக் கொள்வர். 210 பெரிதுநம் அபாயம்! பேணி அதற்குநீர் உரியதோர் கௌரவம் உடையராய் நடமின். விடுமின் வெகுளியும் வீண்விளை யாட்டும். படையெனப் படுவது கரையிலாக் கருங்கடல். அடலோ தடையதற்கு? ஆணையே அணையாம். 215 உடைபடின் உலகெலாம் கெடுமொரு கணத்தில் கருமருந் தறையிற் சிறுபொறி சிதறினும் பெருநெருப் பன்றோ? பின்பார் தடுப்பர்? அதனால் அன்பரே! ஆணைக்கு அடங்குமின். குடி: (மூச்சு விட்டு) ஆ! நாரா: இதுபோல் இல்லை யெனக்குப காரம்! (மௌனம்) 220 இரந்தேன். அடங்குமின்! இரங்குமின் எமக்கா! 1-ம் சேவ: நாரா யணரே! நவின் றவை மெய்யே! ஆரே ஆயினும் சகிப்பர் அநீதி! நாரா: ஏதுநீர் அநீதியென் றெண்ணினீர்? நண்பரே! ஓதிய அரசன் ஆணையை மீறி 225 எனதுளப் படிபோர்க் கேகிய அதற்கா மனுமுறைப் படிநம் மன்னவன் விதித்த தண்டனை யோவநி யாயம்? அலதியான் உண்டசோற் றுரிமையும் ஒருங்கே மறந்துமற் றண்டிய அரச குலத்திற் கபாயம் 230 உற்றதோர் காலை உட்பகை பெருக்கிக் குற்றமில் பாண்டிற் கற்றமில் கேடு பண்ணினேன் என்னப் பலதலை முறையோர் எண்ணிடும் பெரும்பழிக் கென்பெயர் அதனை ஆளாக் கிடநீர் வாளா முயலலோ 235 யாதே அநீதி? ஓதுமின். அதனால் என்புகழ் விரும்புவி ராயின், நண்பரே! ஏகுமின் அவரவர் இடத்திற் கொருங்கே! 1-ம் சேவ: எங்கினி ஏகுவம் இங்குனை இழந்தே? 2-ம் சேவ: உன்கருத் திருப்பிற் குரியதோ இவ்விதி? நாரா: 240 கருத்தெலாம் காண்போன் கடவுள், விரித்த கருமமே உலகம் காணற் குரிய. ஒருவனோ அலதிவ் வுலகமோ பெரிது? கருதுமின் நன்றாய். காக்குமின் அரசனை. செல்லுமின். நில்லீர்! செல்லிலென் றனக்கு 245 நல்லீர் மிகவும்! சேவ; நாரா யணரே! உமக்காங் கொடிய கழுமரம் எமக்கும் நன்றே என்றே நின்றோம் அன்றிக் கெடுதியொன் றெண்ணிலம். கொடுமதற் கநுமதி. நாரா: தென்னவன் சிறைசெயச் செப்பினன்; அதனால் 250 இன்னம் பிழைப்பேன் இக்கழு, உமக்கியான் சொன்னவா றடங்கித் துண்ணென ஏகில். இல்லையேல் எனக்கினி எய்துவ தறியேன். வல்லைநீர் செல்லுமின்! செல்லுமின்! வந்தனம். செல்லுமின்! சத்தியம் செயிக்கும்! செயிக்கும்! 255 நல்லது! நல்லது! (படைஞர் விடைபெற்றுப் போக) முரு: நாரா யணரே! நுஞ்சொல் என்சிரம். ஆயினும் நுஞ்செயல் சரியோ என்றெனக் குறுவதோர் ஐயம். சத்தியம் செயிக்கும் என்றீர். எத்திறம்? குடிலன் தனக்கநு கூலமாய் அனைத்தும் 260 முடிவது கண்டும் மொழிந்தீர் முறைமை! நாரா: பொறு! பொறு! முடிவில் அறிகுவை. முரு: முடியும் தருணம் யாதோ? மரணமோ என்றால், மரணம் அன்றது; மறுபிறப் பென்பீர். யாதோ உண்மை? நாரா: (இருவரும் நடந்து) ஓதுவம். வாவா! 265 நன்றிது: தீதிது: என்றிரு பான்மையாய்த் தோற்றுதல் துணிபே. அதனால் தேற்றம் இதேயெனச் செய்கநல் வினையே. 1 (நாராயணனும் முருகனும் சிறைச்சாலைக்குப் போக) பலதே: என்னையுன் பீதி? எழுவெழு. இவர்க்குன் பொன்னோ பொருட்டு? (பலதேவனும் குடிலனும் வெளியே வந்து) குடி: போ! போ! மடையா 270 உன்னினன் சூதே. பலதே: உன்குணம். நாரணன் சொன்னது கேட்டிலை? குடி: சொல்லிற் கென்குறை? முன்னினும் பன்னிரு பங்கவன் துட்டன், (சேவகன் வர) சேவ: மன்னவன் அழைத்தான் உன்னைமற் றப்புறம். குடி: வந்தனம் ஈதோ! சுந்தரர் போயினர்? சேவ: 275 போயினர். குடி: ஓ! ஓ! போ இதோ வந்தோம். (சேவகன் போக) (தனதுள்) ஆயின தென்னையோ அறிகிலம். ஆயினும் சேயினும் எளியன். திருப்புவம் நொடியே. 2 (குடிலனும் பலதேவனும் போக) நான்காம் அங்கம்: நான்காம் களம் முற்றிற்று. ஐந்தாம் களம் இடம் : அரண்மனையில் ஒருசார். காலம் : மாலை. (ஜீவகனும் சுந்தரமுனிவரும் மந்திராலோசனை) (நேரிசை ஆசிரியப்பா) சுந்தரர்: வளையும்வேய் நிமிரும்; வளையா நெடுமரம் கிளையுடன் கெடுமே கிளர்காற் றதனில்! ஜீவகன்: முளையுமோர் மரமோ? முனிவ! புல்லினம் களைகுவர், களைகிலர் காழ்பெறும் தருக்கள். 5 சேணுயர் தேக்கு திசையெறி சூறையில் ஆணிவே ருடனெழுந் ததிர்ந்தசைந் திறினும் பேணுவர் அதனைப் பெரியோர்! யாரே காணுவர் காழறு நாணமில் நாணலை? ஓருயிர்ப் பேனும் உண்டேல், அடிகாள்! 10 போரிடைப் போக்குவன்; புகழெனக் கதுவே! சுந்: பொறுபொறு! ஜீவக! வெறுமொழி புகலேல்! அரியது செய்வதே ஆண்மையும் புகழும்! அரிதுயிர் தரித்தலோ மரித்தலோ அறைதி. வேட்டையா ரோட்டிட வெருவுதீக் குருவி 15 நீட்டிய தன்சிர நீள்மணற் புதைத்துத் தனதுகண் காணாத் தன்மையாற் பிறரும் தனதுடல் காணார் எனநினை வதுபோல் என்னையில் மயக்கம் மன்னவ! உனக்கும்! சிறுபசி தாங்காச் சிறுமையர் பற்பலர்; 20 அறவழி இதுவென அறியாக் கயவர்; பிறர்பொருள் வௌவியும் பிறவுயிர் கவர்ந்தும் அலையும் தீமையர் அநேகர், அகப்படின் மலைவற மரணமும் வெருவார் மான. கலக்கமொன் றின்றிக் கழுவே றிடுதல் 25 புலப்படக் கண்டுளாய் இலக்கமின் முறையே. துரத்திடும் துயர்க்கணம் வருத்திடும் காலை மரித்தலோ அவையெலாம் சகித்தலோ தகுதி? தன்னுயிர் ஈவர் தக்கோர் சார்ந்த மன்னுயிர் காத்திடு மார்க்கமற் றஃதேல். 30 வார்கடல் முகட்டில், மாநிதி வழிஞர் ஆர்கலன், அலையெறி புயல்கால் ஆதியாற் சேர்திசை திரிந்து தியங்குமேல், மீகான் களமும் காலமும் கருதித் தனக்குறு தளர்வுபா ராட்டுதல் தவிர்த்து, சாய்ந்து,மற் 35 றெதிருறு காற்றிற் கிசைவுற வதிந்து, தன்றிசை செல்லத் தக்ககால் வரும்வரை சென்றொரு கரைசேர்ந் தொன்றுவ னல்லால், உவப்புறு நிதிகெட உழையுளார் களும்பரி தவித்திட மரக்கலம் துறப்பனோ சாற்றாய். 40 தக்கோர் செயலெலாம் தமக்கா அலவே! முக்கியம் புகழோ தக்கவுன் கடமையோ? அதனால் ஜீவக! அகற்றந் நினைப்பு. மதிகுலம் வந்த மதிவலோர் பலரும் செலாவழி நின்திமில் செலுத்தினை; தீங்காய் 45 உலாவிய சுழல்காற் றோடொரு சுழியிடைப் பட்டனை; நம்பிய பாய்மரம் பழுது. விட்டிடிக் கோட்டையாம் வெளிக்கட லோட்டம் மண்டிய பெருங்காற் றடங்கும் வரையும் அண்டையில் உளதோர் கைவழி அதனில் 50 ஒண்டிநீ ஒதுங்கி உன்தொல் நகராம் துவாத சாந்தத் துறைபோய் நிவாதமா நிலைபெற லேநெறி முறையே! 1 ஜீவ: என்குல முனிவ! இயம்பிய மாற்றம் நன்கே. உன்றன் நயப்பிற் கென்செய! 55 கழுமரக் கதையதைக் கண்டேன் இன்றே. பழுதுபாய் மரமெனப் பகர்ந்ததும் உண்மை! வழுவெனக் கண்டது மாற்றினன். அநேக வந்தனம் வந்தனம்! ஆயினும் ஒருசொல் சிந்தையிற் சேர்த்தெனைத் தெருட்டிட வேண்டும். 60 வேற்றுமை உருவாய் விளங்கிய காலம் காற்றினும் கடுகிய கடுநடை உடைய தன்றோ? அதிலகப் பட்டார் முந்திச் சென்றால் நின்றார்! சிறிதுசிந் தித்து நிற்பரேற் பெரிதும் பிற்பட் டொழிவர். 65 ஆதலால் அடிகாள் பூதலத் துயர்ந்த மேதையின் மிகுத்த மானிடர்க் கரசராய் வந்தவர், தந்தமக் குற்ற மதித்திறம் எட்டிய மட்டும் குற்றம் விடுத்துக் கால கதிக்கநு கூலமாய் நவீனச் 70 சீர்பல திருத்தி ஓரியல் புதிதா நாட்டித் தமது நாட்டுளோர் சுகம்பா ராட்டிலரேல் அவ ராண்ட நாட்கெல்லை காட்டுமோ கொடிய காலக் கரப்பே! இவ்வழி தனக்கெனத் துணிந்ததோர் இயல்பே 75 அவ்வர சனுக்காம் யாக்கை. அஃதின் அழிவே யவன தொழிவாம். அதனால் எல்லாம் அறிந்த இறைவ! இவ் விடத்தியான் பல்லா யிரநாட் பரிவுடன் உழைத்தே அமைத்தவிப் புரியும் சமைத்தவிவ் வரணும் 80 நன்றே ஆயினும் ஆகுக: அன்றிப் பொன்றினும் பொன்றுக: பொறித்தவென் அரசியல் மற்றவை தம்மொடு மாண்டிடும்: மாண்டபின் அற்றதோர் கவந்தம் அமர்க்களத் தாடும் பெற்றிபோல் மூச்செறி பிணமா யானும் 85 நடித்தலோ உன்திரு வடித்தா மரையைப் பிடித்ததற் கழகாம் பேசாய் விடுத்தே! சுந்: எடுத்ததன் முயற்சி யாதே யாகுக! முடித்திடு முன்ன ரடுத்ததன் மதியால் தீங்கெனத் தேர்ந்திடி னாங்கவற் றுட்பின் 90 வாங்கலே யார்க்கும் ஆம்பணி யென்ப. தீமைகை விடற்கு வேளைசிந் திப்போர் சேய்மை உனிமனை திரும்பார் ஒப்பர். ஆதலால் ஜீவக! தீதென வருதற் கியாதோர் ஐயமும் இலைநீ தொடரியல் 95 எனவின் றெய்தி யவற்றால் உனது மனத்திடை மயக்கற மதித்துளை ஆயின், ஒழுங்கா யிவையெலாம் ஒழித்தியான் குறித்த மருங்கே அணைந்து வாழலே கருமம். வேறிலை தேறு மார்க்கம். 100 கூறுதி அதனால் உன்மனக் கோளே. 2 ஜீவ: ஐய!யான் உரைப்பதென்? அடுத்தவை (இவையெலாம்) கைவிடில் என்னுயிர் கழியும், அதனில் இன்றியான் பட்ட இகழ்ச்சி முழுதும் பொன்றிடப் பொருதுபின் பொன்றுதல் அன்றோ 105 சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல் மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே! சுந்தர: சங்கரா! சற்றே தாதான் மியபலம்! வெங்கரா பிடித்தவை விடினும் விடுமே! நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய 110 அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும் பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல் கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி. இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன். செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் ஐயம் 115 வருவது. அதனால், மதிகுலம் வந்த ஒருமலர் நின்னுழை உள்ளது; தமிழர் ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்;நீ காவா யாகிற் காப்பதெம் கடனே. ஜீவ: இதுபோ லில்லை அடிகள் செய்யும் 120 உதவி. தமியேற் குளதுயர் இதுவே; கண்மணி தனையெணிப் புண்படும் உள்ளம். அருளுதி காக்கும் உபாயம் இருணிறை இடுக்கணுக் கியைந்திடு மருந்தே. சுந்தர: நல்லது! கேட்டி! சொல்லுதும், உரியநீர் 125 விட்டான் முதலையும், விரும்பிய திலகப் பட்டாற் களிறும் பலமில ஆகி விடுமென அறிந்த கெடுவினை யாளர் தொடர்பினால், அவரிடு தூண்டிலிற் சிக்கி இடமது பெயர்ந்துழி. எடுத்தவெவ் வினைக்கும் 130 கேடுமுன் கருதிக் கோடலே முறையெனும், அறிவோர் மொழியயர்ந் திறுமாப் பகத்துட் கொண்டுநீ நின்றதைக் கண்டிக் கடிபுரி தொட்டென் உறையுள் மட்டுமோர் சுருங்கை அதிரக சியமாய் அமைத்துளேன். அவ்வழி, 135 சதமென நம்புமிச் சாலி புரமும், அதன்புறம் ஊன்றிய அடர்புலப் படையும், அறிந்திடா வகையவை கடந்துசென் றுன்னை மறந்திடா மாபதி அடைந்திடச் செயுமே. ஜீவ: தேவரீர் செய்யும் திருவரு ளுக்குமா 140 றாவதும் உளதோ? ஆ! ஆ! அடிகாள்! வழுதியர் பலர்பலர் வழிவழி காக்கும் முழுமதித் தொழுகுலத் தெய்வநீ போலும். பழுதற நீயிவண் பகர்ந்ததோர் வழியிது திருத்திட எடுத்த வருத்தமெத் தகைத்தே! சுந்: 145 நல்லது! முகமன் நவின்றனை. நிற்க. சொல்லிய சுருங்கை உனக்குமிவ் விடுக்கணில் உதவுமோ அன்றோ உரைக்குதி விரைந்தே. ஜீவ: அடியேன் ஆசை திருவடி அறியும். கடிபுரி விடிலுயிர் நொடியுமிங் கிராது. 150 பாண்டியர் குலமெனும் பாற்கடல் உதித்த காண்டகு கன்னியை இவ்வழி உன்திரு உளப்படி கொடுபோய் அளித்தரு ளுதியேல், இந்துவின் குலமெனும் முந்திய பெயர்போய்ச் சுந்தரன் குலமெனச் சந்ததம் வழங்கும். 155 நீங்கா திதுகா றென்னுளம் நிறைந்த தாங்காப் பெருஞ்சுமை தவிர்தலால் யானும் ஒருமனம் உடையனாய் மறலியும் வெருவ ஆற்றுவன் அரும்போர். அதனிடை யமபுரம் ஏற்றுவன் எங்குலம் தூற்றிய சேரனை; 160 வென்றிடின் மீளுவன். அன்றெனிற் பண்டே அனையிலாத் தனையளுக் கம்மையும் அப்பனும் தயாநிதி! நின்றிருச் சரணமே என்ன வியாகுல மறவே விடுவனென் உயிரே. சுந்தர: விடுகிலை, ஆகினும் வெளிக்கடல் ஓட்டம். 165 நடுநிசி நாமினி வருகுதும். கொடிய கடிபுரிக் கனலிடைக் காய்ந்திடும் உன்றன் சிறுகொடி மறுவிடம் பெயர்த்துதும், சிறந்த அந்தமில் செழியரைத் தந்திட உரித்தே. (எழுந்து) ஜீவ: கட்டளைப் படியே? கட்டிய கற்படை 170 கண்டிட ஆசையொன் றுண்டடி யேற்கு. சுந்தர: காட்டுதும் இன்றிரா கற்படை சேர்முறை. ஒருவர் ஒருபொருள் அறியில் இரகசியம்; இருவர் அறிந்திடிற் பரசியம் என்ப. கைக்கெட் டியதுதன் வாய்க்கெட் டுதற்குள் 175 வந்துறும் அந்தமில் பிரதிபந் தங்களே. (முனிவர் போக) ஜீவ: வந்தனம். வந்தனம். அடிகாள்! வந்தனம். (தனிமொழி) என்னே! என்னே! இந்நாள் இயன்றவை! கொன்னே கழிந்தன் றோரிமைக் கொட்டும். குகுநாள் மழையொடு மிகுகாற் றெறிந்த 180 பரவையின் பாடெலாம் பட்டதென் உளமே. இரவினில் வருபவை எவையெலாம் கொல்லோ? தாயே! தாயே! சார்வன சற்றும் ஆயேன், எங்ஙனம் பிரிந்துயிர் ஆற்றுவேன்? விடுக்குமா றெவனென் விளக்கே? உன்னைக் 185 கெடுக்குமா றெவனிக் கிளர்போ ரிடை? அது தடுக்குமா றெவனினி? சமழ்ப்பற் றுடலம் பொறுக்குமா றெவன்? இப் பொல்லா வல்லுயிர் துறக்குமா றெவனுனைத் துணையற விடுத்தே? அந்தோ! அந்தோ! என்றன் தலைவிதி! 190 நாற்புற நெருப்புறின் நளியும் தனது வாற்புற நஞ்சால் மாய்ந்திடும் என்ப. நரனலன்; நரேந்திரன்; நானது போற்சுதந் தரனலன் எனிலென் தலைவிதி கொடிதே! பிரிவென என்னுளம் கருதிடு முனமே 195 பிரையுறு பாலென உறைவதென் உதிரம். நாணா துன்முகம் காணுவ தெவ்விதம்? நடுநிசிப் பொழுது தொடுகற் படைவழி முனிவரன் பிறகுனைத் தனிவழி விடுத்திவண் தங்குவன் யானும்! தங்குவை நீயும்! 200 இங்கதற் கிசையேன். இறக்கினும் நன்றே! (மௌனம்) கற்படை இதுதான் எப்புறத் ததுவோ! உரைத்திலர் முனிவர் ஒளித்தனர். இஃதும் உளதோ? இலதோ? உணர்பவர் யாவர்? களவழி இதுமுனி கட்டற் பாற்றோ 205 முனமே முனிவன் மொழிமணம் அன்றோ இனையவிப் போர்க்கெலாம் ஏதுவாய் நின்றது! கூடிய தன்றது! ஏ! ஏ! குடிலனை ஓடியிங் கழையாய்! (சேவகன் வர) (சேவகன் போக) உண்மையெப் படியென நாடுமுன் வாடி நலிதல் என்பயன்? 210 நம்புதல் எல்லாம் துன்பமே தருவது. நம்பினோம் நாரா யணனை, அதற்கா வம்பே செய்தான் மாபா தகனவன். நட்பே நமக்கிங் குட்பகை யானது! முனிவரோ முதுநகர் விடுத்தநாள் முதலா 215 மனத்திடைக் களங்கம் வைத்துளர். அஃதவர் விளம்பிய மொழியே விளக்கிடும். நன்றாய் ஆரா யாமுனம் அனுப்புதல் தவறே. (குடிலன் வர) வாராய் குடில! மந்திரி உனக்கு நேர்தான் ஆரே! நிகழ்ந்தவை அறிவைகொல்? 220 சுந்தர முனிவரோர் சுருங்கைதொட் டுளராம்; நந்தமை அழைத்தனர் ஒளித்திட அவ்வழி; மறுத்திட, மனோன்மணி யேனுமங் கனுப்பென ஒறுத்தவர் வேண்டினர்; உரியநம்; குலமுனி ஆதலின் ஆமென இசைந்தோம்; அவ்வழி 225 யாதென வினாயதற் கோதா தேகினர்; பாதிரா வருவராம். பகர்ந்தவிக் கற்படை மெய்யோ பொய்யோ? மெய்யினில் எவ்வயின் உளதென உணர்தியோ? ஒழுங்குகொல், நமது இளவர சியையங் கனுப்புதல்? குடி: இறைவ! 230 முன்னர்நாம் ஒருநாள் இந்நகர் காண அழைத்தோம்! அந்நாள் யாதோ பூசை இழைத்திட வோரறை இரந்தனர். ஜீவ: ஆம்! ஆம்! குடி: அவ்வறை எவ்வறை? ஜீவ: அதுயான் அறிவேன். செவ்வே வடக்குத் தேம்பொழிற் கிப்புறம். 235 மறுமுறி மணவறை, குடி: (தனதுள்) அறிவிது வெகுநலம்; (ஜீவகனை நோக்கி) உறுவதங் கென்னென உணர்ந்தனை? ஜீவ: உணர்ந்திலேன். குடி: அதுவே கற்படை. அறிந்துளேன். பழுது செயத்தகு வினையல ஆதலில் திருவுளம் உணர்த்திலேன். முனிவர் ஓதிய திதுவே. 240 இவ்வரண் முற்றும் இயற்றிய நமக்குச் செவ்விதில் இதுவோ செய்தற் கரியது? சுந்தரர் நமையெலாம் புந்தியற் றவரென நொந்துதாம் உழைத்ததை நோக்கிடின் நகைப்பே! ஜீவ: நந்தொழில் பழித்தலே சிந்தையெப் பொழுதும்; 245 பண்டே கண்டுளோம். பாங்கோ அனுப்புதல்? குடி: பழுதல; பாலுணும் குழவிகை யிருப்ப மல்லுயுத் தஞ்செய வல்லவர் யாரே? அனையினை ஒருபாற் சேமமாய் அனுப்பிய பினையிலை கவலையும் பீதியும் பிறவும். 250 உட்பகை வெளிப்பகை எப்பகை ஆயினென். கவலையொன் றிலதேல் எவருனை வெல்வர்? ஆதலால் முனிவர் ஓதிய படியே அனுப்புதல் அவசியம் குணப்பிர தம்மே. ஆனால் அறியா அரசகன் னியர்கள் 255 தேனார் தெரியல் சூடுமுன் இரவில் தனிவழி யநியர்பால் தங்குதல்....? ஜீவ: தவறே குடி: முனிவரே ஆயினும், அநியரே. உலகம் பைத்தியம்; பழித்திடும்; சத்தியம் உணராது. ஜீவ: மெய்ம்மை. வதுவைமுன் விதியன் றனுப்புதல். குடி: 260 அனுப்பினும் அதனால் ஆம்பயன் என்னே? மனத்துள கவலை மாறுமோ? கவலை முன்னிலும் பன்னிரு பங்காய் முதிரும். ஜீவ: அதுவே சரி! சரி! ஐயமொன் றில்லை. வதுவைக் கிதுவோ தருணம்? குடி: மன்னவ! 265 அடியேன் அறிவிப் பதுவுமிங் கதுவே! கொடிதே நம்நிலை. குற்றமெப் புறமும். அடிகள் அறைந்தவா றனுப்பா திருக்கில் உட்பகைச் சதியால் ஒருகால் வெற்றி தப்பிடின் நங்குலம் எப்படி ஆமோ? 270 வைப்பிடம் எங்குபின்? எய்ப்பிடம் எங்கே? திருமா முனிவரோ கருநா உடையர். நம்பிய தலைவரோ வம்பினர்; துரோகர். இத்தனை பொழுதுமங் கெத்தனை கூச்சல்! எத்தனை கூட்டம்! எத்தனை குழப்பம்! 275 முருகனும் நாரா யணனும் மொழிந்த அருவருப் புரையிங் கறையேன். அவர்தாம் சேவகர் குழாங்களைத் திரட்டி யென்மேல் ஏவினர்; அதற்கவர் இசைந்திலர். பிழைத்தேன்! வேண்டினர் பின்னையும்; தூண்டினர் உன்னெதிர். ஜீவ: 280 காண்டும்! காண்டும்! கடுஞ்சிறை சேர்த்தனை? குடி: சேரா திவரைமற் றியாரே விடுவர். ஆயினும் தலைவர் நிலைமை இஃதே! வெல்லுவ தெலாநம் வீரமே அல்லால் இல்லை அவர்துணை என்பது தெளிவே. 285 அல்லொடு பகல்போல் அல்லல்செய் கவலையும் வீரமும் எங்ஙனம் சேருமோ அறியேன். கவலைதீர் உபாயம் கருதில், நுவல்தரு கல்லறை நன்றே கடிமண முடியின்... கடிமண மதற்கோ. முடிபுனை மன்னர் 290 வேண்டுமென் றன்றோ ஆண்டகை நினைத்துளை? வருடக் கணக்காய் வேண்டுமற் றதற்கே, ஒருநலம் காணின் ஒருநலம் காணேம். ஏற்ற குணமெலாம் இருப்பினும் இதுபோல் மாற்றல னாய்விடின் மனோன்மணி யென்படும்? 295 பிரிதலே அரிதாம் பெற்றியீர்! பிரிந்தபின் பொருதலே ஆய்விடிற் பொறுப்பளோ தனியள்! பூருவ புண்ணியம் அன்றோ, மன்றல் நேருமுன் இங்ஙனம் நெறியிலான் துர்க்குணம் வெளியா யினதும்? எளிதோ இறைவ! 300 வேந்தராப் பிறந்தோர்க் குனைப்போற் சாந்தமும் பிறர்துயர் பேணும் பெருமையும் ஒழியா அறம்நிறை அகமும் அறிவும் அமைதல். பாண்டமேல் மாற்றலாம் கொண்டபின் ! என் செய்! ஆண்டுகள் பழகியும் அறிகிலம் சிலரை. 305 ஐயோ! இனிநாம் அந்நிய ராயின் நன்றாய் உசாவியே நடத்துதல் வேண்டும். அன்றேற் பெரும்பிழை! ஜீவ: ஆ!ஆ!சரியே! குடி: ஆதலின், இறைவ! ஆய்விடத் தெங்கும் ஏதமே தோன்றுவ தென்னே இந்நிலை? ஜீவ: 310 அரசல எனினமக் காம்பிழை என்னை? குடி: திருவுளப் பிரியம். தீங்கென் அதனில்? உன்றன் குலத்திற் கூன்றுகோல் போன்று முடிமன் னவர்பலர் அடிதொழ நினது தோழமை பூண்டுநல் ஊழியம் இயற்றும் 315 வீரமும் மேதையும் தீரமும் திறமும் குலமும் நலமும் குணமும் கொள்கையும் நிரம்பிய நெஞ்சுடைப் பரம்பரை யாளராய் நிற்பவர் தமக்குமற் றொப்பெவ் வரசர்? அற்பமோ ஐய! நின் அடிச்சே வகமே? ஜீவ: 320 என்னோ மனோன்மணிக் கிச்சை? அறிகிலேன்! குடி: மன்னோ மற்றது வெளிப்படை அன்றோ? அன்னவட் கிச்சை உன்னுடன் யாண்டும் இருப்பதே என்பதற் கென்தடை? அதற்கு விருத்தமாய் நீகொள் கருத்தினைச் சிந்தையிற் 325 பேணியே கலுழுநள் போலும். பிறர்பால் நாணியிங் கோதாள். வாணியேல் நவில்வள். ஜீவ: உத்தமம்! உத்தமம்! மெத்தவும் உத்தமம்! பலதே வன்தன் நலமவள் கண்டுளாள்? குடி: பலகால் கண்டுளாள். கண்டுளான் இவனும். 330 ஆர்வமோ டஃதோ மார்பிடைப் பட்டபுண் ‘மனோன்மணி மனோன்மணி, எனுமந் திரத்தால் ஆற்றுவான் போலவே அவ்வறை யிருந்தவன் சாற்றலும் சற்றுமுன் ஜாடையாய்க் கேட்டேன். ஆயினும். அரச! பேயுல கென்குணம் 335 அறியா ததனால் வறிதே பலவும் சாற்றும். தன்னயம் கருதல்போற் பிறர்க்குத் தோற்றம், அதனால் தூற்றுவர். அதுவும் மாற்றலே மந்திரத் தலைவர்தம் மாட்சி. ஆதலின், இறைவ! அவைக்களத் தநேக... ஜீவ: 340 ஓதலை. ஓதலை. உனதன் றத்தொழில். தனையைக் குரியது தந்தையே உணருவன். இனையதே என்மகட் கிந்நிலைக் கேற்பதும். அரசனா யாய்கினும் சரியிம் முடிபு. மிகைதெரிந் தவற்றுள் மிக்கது கொளலெனும் 345 தகைமையில் தகுவதும் இதுவே. அதனால், குடிலா! மறுக்கலை. குடி: அடியேன். அடியேன். ஜீவ: இந்நிசி இரண்டாஞ் சாமம் அன்றோ முன்னநாம் வைத்த முகூர்த்தம்? குடி: ஆம்!ஆம்! ஜீவ: செவ்விது செவ்விது! தெய்வசம் மதமே! 350 ஆவா! எவ்வள வாறின தென்னுளம்! ஓவா என்றுயர்க் குறுமருந் திதுவே! பிரிந்திடல் ஒன்றே பெருந்துயர். குடி: பிரிந்துநீர் இருந்திடல் எல்லாம் ஒருநாள். அதற்குள் வெல்லுதல் காண்டி! மீட்குதும் உடனே. ஜீவ: 355 நல்லது! வேறிலை நமக்காம் மார்க்கம். ஒருமொழி மனோன்மணி உடன்கேட் டிஃதோ வருகுதும். அதற்குள் வதுவைக் கமைக்குதி அவ்வறை அமைச்ச ரேறே! 4 (ஜீவகன் போக) குடி: தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை. (தனிமொழி) இப்படி நேருமென் றெண்ணினர் யாவர்? முனிவரன் வந்ததும், நனிநலம் நமக்கே! மறுப்பளோ மனோன்மணி? சீசீ! மனதுள் வெறுப்புள ளேனும் விடுத்தவ ளொன்றும் மொழியாள். சம்மதக் குறியே மௌனம். 365 அழுவாள்; அதுவும் பிரிவாற் றாமையே ஆய்விடும், அரச னாய்விலா உளத்துள். நடுநிசி வருமுன் கடிமணம் இவண்நாம் முடிக்கின் முனிவன் தடுப்பதும் எவ்விதம்? ஏய்த்திட எண்ணினன் என்னையும்! பேய்ப்பயல்! 370 வாய்த்ததிங் கெனக்கே மற்றவன் கற்படை. (மௌனம்) ஊகம் சென்றவா றுரைத்தோம். உறுதி யாகமற் றதன்நிலை அறிவதார்? உளதல துரைப்பரோ முனிவர்? உளதெனின் உரைத்தவா றிருத்தலே இயல்பாம். எதற்குமீ துதவும். (மௌனம்) 375 சென்றுகண் டிடுவம். திறவுகோல் இரண்டு செய்த தெதற்கெலாம் உய்வகை ஆனதே! எத்தனை திரவியம் எடுத்துளேம்! கொடுத்துளேம்! அத்தனை கொடுத்தும் அறிவிலாப் படைஞர், நன்றியில் நாய்கள் இன்றஃ தொன்றும் 380 உன்னா தென்னையே ஓட்டிடத் துணிந்தன. என்னோ நாரணன் தனக்குமிங் கிவர்க்கும்? எளியனென் றெண்ணினேன். வழிபல தடுத்தான். கெடுபயல் பாக்கியம், கடிமணம் இங்ஙனம் நடுவழி வந்ததும்! விடுகிலம். 385 கொடியனை இனிமேல் விடுகிலம் வறிதே. 5 நான்காம் அங்கம்: ஐந்தாம் களம் முற்றிற்று. (கலித்துறை) அரிதா நினைத்ததன் அங்கங்கள் யாவும் அழிந்தபின்னும் புரியேபொருளெனப் போற்றிய ஜீவகன் புந்தியென்னே! பிரியாத சார்பு பெயர்ந்து விராகம் பிறந்திடினும் தெரியாது தன்னிலை ஆணவம் செய்யும் திறஞ்சிறிதே! நான்காம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா 12 -க்கு அடி 1297 வஞ்சிப்பா 1 -க்கு அடி 14 கலித்தாழிசை 3 -க்கு அடி 12 கலித்துறை 1 -க்கு அடி 4 ஆக, அங்கம் 1-க்கு பா. 17க்கு அடி 1327 ஐந்தாம் அங்கத்தின் விளக்கம் முதற் களம் அமைச்சன் குடிலன், அரண்மனையில் சுந்தரமுனிவர் அமைத்த சுரங்க வழியைக் கண்டுபிடித்து அதன் வழியாக இறங்கிச் சென்றான். அவ்வழி, கோட்டைக்கும், சேரமன்னன் இருந்த பாசறைக்கும் இடையேயுள்ள வெளியிடத்தில் கொண்டுபோய் விட்டது. இரவு நேரம். குடிலனுக்குப் புதிய யோசனை உண்டாயிற்று. நேரே சேரன் இருக்கும் பாசறைக்குச் சென்று தன் எண்ணத்தைத் தெரிவித்தால் அதற்கு அவன் உடன்படுவான். ஆண்டுதோறும் தாம்பிரபரணி நீரும் வேப்பந் தாரும் அனுப்பிக்கொண்டேயிருந்தால், அவன் தன்னையே அரசனாக்குவான் என்று அவன் சிந்தித்தான். “பலதேவனுக்கும் மனோன்மணிக்கும் திருமணம் நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? இப்பொழுதே என்னை அவன் எதிர்த்துப் பேசுகிறான். படைவீரர்கள் நம்மை வெறுக்கிறார்கள். சேரனைக் கண்டு வணங்கி நயமாகப் பேசினால், அவன் இணங்கி விடுவான்! ஆஆ ! நமது அறிவே அறிவு! ஊழ் என்றும் தலைவிதி என்றும் பேசுவது எல்லாம் வீண்பேச்சு! இந்தச் சுரங்க வழி நமக்கு நல்லதாக அமைந்தது” என்று நினைத்துக் கொண்டே நடந்தான். நடந்து, சேரன் பாசறைக்கு அருகில் சென்றான். அவ்வமயம் சேரமன்னன் புருடோத்தமன் உறக்கம் இல்லாமல் அங்குத் தன்னந்தனியனாக உலாவிக்கொண்டிருந்தான். அவன் தன் கனவில் அடிக்கடி தோன்றும் நங்கையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே உலவுகிறான். அவனைக் கண்ட குடிலன் வியப்படைந்தான். “இவன் மனிதன் அல்லன் தேவனோ? கந்தருவன்போலக் காணப் படுகிறான்!” என்று எண்ணினான். சேர அரசன் புருடோத்தமன் மெல்ல நடந்து அவ்விடம் வந்தபோது குடிலனைக் கண்டான். அயலான் என அறிந்து, “ யார்? உன் பெயர் என்ன?” என்று கேட்டான். “அடியேன், குடிலன்” என்றான் அமைச்சன். “இந்த நேரத்தில் இங்கு வரக் காரணம் என்ன?” “அரசே! தங்களிடம் ஒரு வார்த்தை சொல்ல வந்தேன். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல தாங்கள் எதிர்ப்பட்டீர்கள் !” என்றான் குடிலன். “வந்த காரியம் என்ன? விரைவில் சொல்?” என்றான் புருடோத் தமன். “அரசே! தங்கள் புகழ் உலகமெங்கும் பரவியுள்ளது. எங்கள் நாட்டையும் தாங்களே அரசாள்வது தகுதி. இன்று நடந்த போரில் மன மில்லாமலே நான் போர் செய்தது தாங்கள் அறிந்ததே. மக்கள், தங்கள் புகழை எண்ணித் தங்களையே அரசராக ஏற்கவிருக்கின்றனர். ஆனால், பாண்டியன் அவர்களைப் போர் செய்யத் தூண்டுகிறான்” என்றான். குடிலன், சூதாக ஏதோ கருதுகிறான் என்று அறிந்த சேரன், “நல்லது! அதனால் உனக்கு வேண்டியது என்ன? சொல்”என்றான். குடிலன் கூறுகிறான்: “ஆண்டகையே! போரில் மாண்டவர் போக, மீண்டவர் உயிரையேனும் காத்தருள வேண்டும். வீணாக மக்கள் மாண்டுபோனது என் மனத்தைத் துன்புறுத்துகிறது. மற்றவர்களை யெல்லாம் போரில் மடியாதபடி காத்தருள வேண்டும்!” “உன் அரசனிடம் ஏன் இதைச் சொல்லவில்லை?” என்று கேட்டான் புருடோத்தமன். “சொல்லிப் பயன் என்ன? அவர் சொல் புத்தியும் கேளார். அருள் உள்ளம் இல்லாதவர். இன்று மாலையில் தாங்கள் விட்ட தூது வார்த்தையையும் ஏற்றுக்கொண்டாரில்லை. மக்களைப் போர்க் களத்தில் அனுப்பிக் கொன்று நாட்டைச் சுடுகாடாக்கப் பார்க்கிறார். அடியேனுக்கு ஒரு வார்த்தை சொன்னால், பாண்டியனையும் கோட்டையையும் ஒரு நொடியில் தங்கள் வசம் ஒப்புவிக்கிறேன்.” இதைக் கேட்ட சேரன், ‘பாதகன்! விசுவாச காதகன்!’ என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான். குடிலன் மேலும் தொடர்ந்து சொல்லுகிறான் : “அரசே பாண்டிய அரசன் தங்கள் கைவசமானால், அங்குள்ளவர் ஒருவரும் தங்களை எதிர்க்கமாட்டார்கள். திருநெல்வேலி தங்களுக்குரிய தாய்விட்டால் மதுரையும் தங்களுக்குக் கீழ்ப்பட்டுவிடும். பாண்டிய நாடு தங்கள் அடிக்கீழ் ஒதுங்கும். அரசர்பெரும! அடியேனுக்கு அரச பதவி மட்டும் அருள்செய்வீரானால், தாங்கள் விரும்பியதுபோல நீரும் தாரும் என் தலைமேல் சுமந்துகொண்டு தங்கள் வாயிலில் கொண்டுவந்து தருவேன். இராமன் வென்ற இலங்கையை விபீஷணன் காத்ததுபோல பாண்டிநாட்டைக் காத்திடுவேன்!” புருடோத்தமன், இவன் தந்திரசாலி, சாமர்த்தியமாகப் பேசுகிறான் என்று எண்ணிக்கொள்கிறான். குடிலன், “அரசனுடைய அந்தப்புரந்துக்குப் போக ஒருவரும் அறியாத ஒரு சுரங்கவழி உண்டு. அவ்வழியாய்ப் போனால் அரசனைச் சிறைப்பிடிக்கலாம்” என்றான். புருடோத்தமன், “உண்மைதானா?” என்று கேட்டுக்கொண்டே, “யார் அங்கே....” என்று அழைத்தான். சற்றுத் தூரத்திலிருந்து சேனாபதி அருள்வரதன் விரைந்து வந்து வணங்கினான், “கைகால்களுக்குத் தளையிட விலங்குகள் கொண்டுவா” என்றான் புருடோத்தமன். குடிலன்: “அரசர்பெருமானே! அடியேன் கூறுவது முழுவதும் உண்மை.” “சுரங்கவழி எங்கே இருக்கிறது? நீ அவ்வழி யாகத்தான் வந்தாயோ?” என்று கேட்டான் சேரன். “அருகிலேயே இருக்கிறது. அவ்வழியாகத்தான் வந்தேன்” என்றான் குடிலன். அருள்வரதன் சில வீரர்களுடன் விலங்குகளைக் கொண்டு வர, சேரன் குடிலனைச் சுட்டிக்காட்டி, “பூட்டுங்கள்!” என்று ஆணையிட்டான். வீரர்கள் குடிலனுக்கு விலங்கு பூட்டினார்கள். “அரசே! நான் ஓட மாட்டேன். எனக்கேன் விலங்கு? அருள்கூர்ந்து எனக்கு வாக்களியு ங்கள்” என்று வேண்டினான் குடிலன். சேரன், “வாயை மூடு ! சேரன் வஞ்சமாக வெல்லமாட்டான்! போர்க்களத்திலே அரசர்களை வென்று சிறைப்பிடிப்பான்... நல்லது, நட. “சுரங்க வழியைக் காட்டுக” என்று கட்டளை யிட்டான். குடிலன் சுரங்க வழியைக் காட்டி முன்நடக்க, சேவகர்களும், அருள்வரதனும், புருடோத்தமனும் பின் தொடர்ந்து சென்றனர். இரண்டாம் களம் அரண்மனையில் கன்னிமாடத்தில் ஊழியப் பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். அரசன், இளவரசியைப் பல தேவனுக்கு மணம்செய்ய யோசித்திருப்பதைக் கூறியதும், அதற்கு இளவரசி விரும்பவில்லையானாலும், அரசனுக்கு உள்ள மனத்துன்பத் தையும் நெருக்கடியையும் கருதி, அவனுக்கு மேலும் மேலும் மன வருத்தம் ஏற்படக்கூடாது என்று கருதி திருமணத்திற்கு இசைந்ததும், அரசன் சென்றவுடன் இளவரசி மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டதும், பிறகு நெடுநேரம் கழித்துத் தெளிந்தெழுந்ததும் ஆகியவற்றைப்பற்றிப் பேசுகின்றனர். அவ்வமயம், இளவரசி மனோன்மணி நீராடித் திருமணத்திற் குரிய ஆடையணிகளை அணிந்துகொண்டு வாணியுடன் அவ்விடம் வருகிறாள். ஊழியப் பெண்கள் வேறிடம் போகின்றனர். இளவரசி, தான் இரண்டு வரங்களை அரசரிடம் கேட்டுக் கடிதம் எழுதியதாகவும், அவ் வரங்களை அரசர் கொடுத்ததாகவும் கூறுகிறாள். “வாணி, உன்னை நடராசனுக்கு மணம் செய்விக்க அரசர் இசைந் துள்ளார். இதோ, அவர் எழுதிய இசைவுக் கடிதம், பார்” என்று கூறி, இளவரசி, வாணியிடம் ஒரு கடிதத்தைக் கொடுக்கிறாள். வாணி, கடிதத்தைப் படித்து, “என்ன அம்மா, இது? எனக்கு இது சம்மதம் இல்லை. தாங்கள் மனம் வருந்தியிருக்க, நான் மணம்செய்து இன்புறுவதா? இது முடியாது!” என்றனள். “என் தந்தையின் மனம்போல நடப்பது என் கடமை இந்த நெருக்கடியில் அவர் இஷ்டம்போல் நடக்காவிட்டால் அவர் பெருந் துயர் அடைவார் என்றாள்” மனோன்மணி. “தங்களைப் பலதேவனுக்குத் திருமணம் செய்விப்பது பகலுக்கும் இரவுக்கும் உள்ள உறவுபோன்றது. கிளியைக் கழுகுக்கு மணம் செய்விப்பதுபோன்றது. தங்களுடைய பெருந்துயருக்கிடையே என்னுடைய திருமணந்தானா பெரிது?” என்று கூறி மறுத்தாள் வாணி. மனோன்மணி, “வாணி ! வருந்தாதே. என் தந்தைக்கு வந்த துன்பத்தைப் போக்குவதற்காகவே அவருடைய விருப்பப்படி நடந்து அவருக்கு மகிழ்ச்சி உண்டாக்குவதற்காகவே இத் திருமணத்தை நான் ஏற்றுக்கொண்டேன். மற்றவர்களின் நன்மைக்காகத் தமது சுகங்களைத் துறப்பதுதான் உண்மையான தவம். உன்னை நடராஜனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்றும், நாராயணரைச் சிறை விடுவிக்க வேண்டும் என்றும் அரசரிடம் கேட்டேன். அவர் அவ்விதமே சம்மதம் தந்தார்” என்று கூறினாள். வாணி, “அம்மணி! தாங்கள் கனவு கண்டு காதலித்த அவரை - அவர் யாராயினும் ஆகுக - அவரைத் தாங்கள் திருமணம் செய்யும் நாளே நான் திருமணம் செய்யும் நன்னாள். அதுவரையில் நான் மணம் செய்யேன். தங்களிடம் பணி விடை செய்துகொண்டிருப்பேன்” என்றாள். “வாணி ! நீ சொல்வது பேதைமை. என் மணம் இன்னும் அரை நாழிகையில் நடக்கப்போகிறது. இதற்குள் நான் கனவிற் கண்ட நாயகன் எப்படி வரப்போகிறார்? நீ என்னிடம் கொண்டுள்ள அன்பினால் இவ்விதம் கூறுகிறாய்!” என்றாள் மனோன்மணி. “கடவுள் இல்லை என்றால் இப்படி எல்லாம் நடக்கட்டும். உண்டு என்றால் அவர் திருவருள் கிடைக்கட்டும்” என்றாள் வாணி. மூன்றாம் களம் அரண்மனையில் மண மண்டபத்தில் நள்ளிரவில் பட்டம் பகல் போல விளக்குகள் வெளிச்சந் தருகின்றன. மண்டபம் அலங்கரிக்கப் பட்டு அழகாகக் காணப்படுகிறது. வீரர்களும் முக்கியஸ்தர்களும் கூடியிருக்கின்றனர். மண்டபத்தில் இரண்டு திரைகள் காணப் படுகின்றன. ஒரு திரை மணமகளுக்காக; மற்றொரு திரை, சுரங்க வாயிலை மறைப்பதற்காக. பாண்டியன் மண்டபத்தில் நுழைகிறான். அவனைப் பின்தொடர்ந்து சுந்தர முனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராஜன், நாராயணன் முதலியோர் வருகின்றனர். அரசன் ஆசனத்தில் அமர்ந்து எல்லோரையும் அமரும்படி கூறுகிறான். அமைச்சனாகிய குடிலன் அங்கு இல்லாதது கண்டு, “உம்முடைய தந்தையார் இன்னும் இங்கு வராதது என்ன?” என்று வியப்புடன் பலதேவனைக் கேட்கிறான். “மாலையில் அவரைப் பார்த்தேன்; தனியே போனார் என்று கூறுகிறார்கள்” என்றான் பலதேவன். “பாருங்கள், குடிலர் படும்பாடு ! எப்பொழுதும் நம் காரியமாகவே கண்ணாயிருக்கிறார். நமது காரியமாகத்தான் அவர் போயிருப்பார். இப்படி உழைப்பவர் எந்த உலகத்திலும் இல்லை” என்று கூறி, முனிவரைப் பார்த்து, “அடிகாள் ! முகூர்த்த வேளை வந்ததோ? தொடங்கலாமோ?” என்று கேட்கிறான். அவ்வேளையில் சுரங்க வழியாக அருள்வரதன் முதலியவருடன் புருடோத்தமன் அங்கு வருகிறான். குடிலனைப் பத்திரமாய்ப் பார்த்துக் கொள்ளச் சுரங்கத்தில் சேவகரிடம் விட்டு, புருடோத்தமனும் சேனாபதி யும் அறையில் நுழைகின்றனர். திரைமறைவில் இருந்தபடியே, திரைக்கப்பால் காணப்படும் காட்சிகளை விளக்கு வெளிச்சத்தில் நன்றாகக் காண்கின்றனர். புருடோத்தமன், சுந்தர முனிவரும் நடராஜனும் மண்டபத்தில் இருப்பதைக் கண்டு வியப்படைகிறான். ‘இதென்ன! மந்திராலோசனை நடைபெறுகிறதோ! ... ... அலங்காரங் களும் மாலைகளும் இருப்பதைப் பார்த்தால் மணவறைபோல இருக்கிறது. நல்லது; இந்தத் திரைமறைவில் நின்று நடப்பதைப் பார்ப்போம் !’ என்று தனக்குள் எண்ணிக்கொள்கிறான். அந்தச் சமயத்தில் பாண்டியன் கூறுகிறான்: “அடிகளே! அமைச்சர்களே! வீரர்களே! கேளுங்கள். நமது இளவரசியைக் காப்பதற்காக இங்குக் கூடியிருக்கிறோம். இன்று காலை போர்க் களத்தில் நமக்கு ஓர் இழுக்கு நேர்ந்தது. அந்த இழுக்கை நாளைக் காலையில் போர்க்களத்தில் வெற்றி கொண்டாவது, உயிர் கொடுத் தாவது நீக்குவோம். அதற்கு முன் நமது இளவரசிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடிக்கவேண்டும். “குடிலரை அறியாதவர் யார் ? அவரைப்போல அறிவும் சூழ்ச்சியும் உண்மையும் உறுதியும் பக்தியும் சத்தியமும் உடையவர் வேறு யார் உள்ளனர் ! தன்னலம் இல்லாமல் நமக்காக உழைக்கின்றார். பாருங்கள்; இப்போதுங்கூட இந்த நடுஇரவில் அவர் எங்கேயோ சென்று நமக்காகப் பாடுபடுகிறார். இப்படிப்பட்ட அமைச்சரைப் பெற்றது நமது பாக்கியமே (திரைமறைவில் இருந்து இதனைக் கேட்ட புருடோத்தமன், ‘ஐயோ! கஷ்டம்! இவ்வரசன் களங்க மில்லாதவன் ! குடிலனின் துரோகத்தை யறியாதவன்!”என்று தனக்குள் கூறிக்கொள்கிறான்.) அவருடைய மகன் பலதேவன் வீரம், அறிவு, ஆற்றல், ஊக்கம் முதலியவற்றில் சிறந்து விளங்குகிறதை எல்லோரும் அறிவீர்கள். நமக்கு நேர்ந்திருக்கிற போர் நெருக்கடியைக் கருதியும், குடிலருடைய குடும்பத்துக்கு நாம் கடமைப் பட்டிருப்பது கருதியும் நமது இளவரசியை பலதேவருக்குத் திருமணம் செய்விக்க இசைந்துள்ளளோம். திருமணம் முடிந்தவுடன் மணமக்கள் முனிவர் ஆசிரமத்திற் சென்று தங்குவார்கள். அதற்காகவே அடிகள் இங்கிருந்து சுரங்கவழி யொன்றை அமைத்துள்ளார். இளவரசி மனோன்மணியைப் பற்றிய கவலை தீர்ந்த பிறகு, நாளைக் காலை போர்க்களம் சென்று போர் செய்து நமது மானத்தைக் காப்போம்!” என்று கூறி, சகடரை நோக்கி, “ உமது கருத்தைக் கூறும்” என்று கூறினான். “எல்லாம் சரிதான் ; மணமகன் அரசகுலம் அல்ல... அது தான்...” என்று இழுத்தார் சகடர். “குலத்தைப்பற்றி யோசிப்பதைவிட குணத்தைப் பற்றித்தான் கருதவேண்டும்” என்றான் அரசன். “அரசே ! மனிதரால் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல்” என்றான் நாராயணன். சகடரும் மற்றவர்களும் ‘சரிசரி’ என்று கூறிச் சம்மதம் தெரிவித்தனர். அரசன், இளவரசியை மண மண்டபத்தின் திரைக்குள் வரும்படி அழைப்பித்தான். மனோன்மணி, வாணிவாணி கடவுள் வாழ்த்துப் பாடினாள். சுந்தரமுனிவர், “மனோன்மணீ! இங்கு வருக! மாலையைக் கையில் எடு. உன் மனதை இறைவன் அறிவான். அவன் திருவருள் இன்னமும் உன்னைக் காக்கும்” என்று கூறினார். மனோன்மணி மண மாலையைக் கையில் ஏந்தி, வாடிய முகத்துடன் உயிர் இல்லாப் பாவை போல திரைக்கு வெளியே வருகிறாள். அதேசமயம் எதிரிலிருந்த திரைச் சீலையி லிருந்து புருடோத்தமன் திரைக்கு வெளியே வருகிறான். தான் கனவில் கண்டு காதலித்த உருவமே அது என்று அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் பொங்க மனோன்மணி அங்கு விரைந்து சென்று மாலையைப் புருடோத்தமன் கழுத்தில் இடுகிறாள். புருடோத்தமனும், தான் கனவில் கண்டு வரும் பெண் இவள் என்று அறிந்து வியப்படைகிறான். எதிர்பாராத இந்நிகழ்ச்சியைக் கண்டு எல்லோரும் அதிசயிக் கின்றனர். சுந்தரமுனிவர், “மங்கலம் உண்டாகுக!” என்று மணமக்களை வாழ்த்துகிறார். பலதேவன், “பிடியுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என்று கூவுகிறான். சுந்தர முனிவர் அவர்களைத் தடுத்து அமைதியுண்டாக்கு கிறார். சேரன் சேனாபதி அருள்வரதனும் அவனுடைய வீரர்களும், புருடோத்தமனையும் மனோன்மணியையும் சூழ்ந்து நின்றுகாவல் புரிகின்றனர். எல்லோரும், “பாதகன் ! படையுடன் இங்கேயும் வந்தான்” என்கின்றனர். அருள்வரதன், விலங்குடன் தலைகுனிந்து நிற்கும் குடிலனைச் சுட்டிக்காட்டிக் கம்பீரமாக, “இதோ உங்கள் பாதகன்!” என்று கூறினான். ஜீவகன், “குடிலரே ! என்ன இது ! அடிகாள் ! இது என்ன சூது!” என்றான். “பொறு ! பொறு ! விரைவில் அறிவோம்” என்றார் முனிவர். புருடோத்தமன் பேசுசிறான் : “நாம் சூது ஒன்றும் செய்யவில்லை. சூது செய்தவன் உம்முடைய அமைச்சன் ! சுரங்க வழி இருப்பதை என்னிடம் கூறி இவ்வழியாக வந்து உமது நகரத்தைப் பிடிக்கும்படி எம்மை அழைத்தான். உமது அரசையும் நாட்டையும் தனக்குக் கொடுக்கும்படி என்னைக் கேட்டான். இவனுடைய சூதையும் துரோகத்தையும் உமக்குச் சொல்லி உம்மைத் தெளிவிக்கவே இவனைச் சுரங்க வழியாக நாம் அழைத்து வந்தோம். வந்த இடத்தில், மண நிகழ்ச்சியைக் கண்டோம். இளவரசியை எதிர்பாராதவிதமாகப் பெற்றோம். இனி உமது விருப்பம், சென்று வருகிறேன். உமக்கு விருப்பமானால் போர்க்களத்தில் சந்திப்போம்.” ஜீவகன், “குடிலரே! இது உண்மையா! சொல்லும்!” என்றான். குடிலன் பேசாமல் தலைகுனிந்து நிற்கின்றான். “ஏன் மௌனம் ? குடிலரே! உண்மையைக் கூறும்!” என்றான் நாராயணன். குடிலனைப் பார்த்து எல்லோரும், “அட பாவீ!”என்றனர். சுந்தரர், “விடுங்கள்! இப்போது ஏன் விசாரணை ? எல்லாம் கடவுள் திருவருள்... அரசே! மகளையும் மருகனையும் வாழ்த்தும்” என்றார். எல்லோரும் மணமக்களை வாழ்த்துகின்றனர். ஐந்தாம் அங்கம் முதற் களம் இடம்: கோட்டைக்கும் வஞ்சியர் பாசறைக்கும் நடுவிலுள்ள வெளி. காலம்: யாமம். (குடிலன் தனியே நடக்க) (நேரிசை ஆசிரியப்பா) குடிலன்: (தனிமொழி) திருமணம் கெடினும் தீங்கிலை ஈங்கினி. இருசரம் இன்றி எப்போ ரிடையும் ஏகார் மதியோர். இதில்வரு கேடென்? ஆகா வழியும் அன்றிது. சேரனை 5 அணைந்தவன் மனக்கோள் உணர்ந்ததன் பின்னர் சுருங்கையின் தன்மை சொல்லுதும் ஒருங்கே. இசைவனேற் காட்டுதும். இன்றேல் மீள்குதும். பசையிலா மனத்தன்! பணிதலே விரும்புவன்! பாண்டிநா டாளவோ படையெடுத் தானிவன்? 10 தூண்டிடு சினத்தன்; தொழுதிடில் மீள்வன். வேண்டிய நீரும் விழைந்ததோர் தாரும் பாண்டில் பாண்டிலா யாண்டுகள் தோறும் அனுப்புதும். குறைவென் அதனில்? இதுவே மனக்குறை நீக்கு மார்க்கம். - வதுவை 15 போயினென்? ஆயினென்? பேயன் நம்மகன் எடுத்தெறிந் திடுவனிப் போதே நம்மொழி. அடுத்தநம் படைஞரோ பகைவர்; அவர்நமைக் கெடுத்தநா ரணற்கே கேளொடு கிளைஞர், ஆதலின் இஃதே தீதறு முறுதி ... 20 என்னைநம் ஊகம்! என்னைநம் ஊக்கம்! முன்னர்யாம் அறியா இன்னநற் சுருங்கையில் துன்னிருள் வழிதனி தொடர்ந்திவண் சேர்ந்தோம். ஊக்கமே பாக்கியம். உணர்விலார் வேறு பாக்கியம் ஊழெனப் பகர்வதெல் லாம்பாழ். 25 சாக்கியம் வேறென்? சாத்தியா சாத்தியம் அறிகுறி பலவால் ஆய்ந்தறிந் தாற்றும் திறமுள ஊகமே யோகம்; அன்றி (நட்சத்திரங்களை நோக்கி) வான்கா டதனில் வறிதே சுழலும் மீன்காள்! வேறும் உளதோ விளம்பீர்? 30 மதியிலா மாக்கள் விதியென நும்மேற் சுமத்தும் சுமையும் தூற்றும் சும்மையும் உமக்கிடு பெயரும் உருவமும் தொழிலும் அமைக்கும் குணமும் அதில்வரு வாதமும். யுக்தியும் ஊகமும் பக்தியும் பகைமையும். 35 ஒன்றையும் நீவிர் உணரீர்! அஃதென்? வென்றவர் பாசறை விளங்குவ தஃதோ! இங்குமற் றுலாவுவன் யாவன்? பொங்குகால் வருந்தொறும் சிலமொழி வருவ.அஃதோ திரும்பினன் ! ஒதுங்குவம். தெரிந்துமேற் செல்குவம். (புருடோத்தமன் தனியா யுலாவி வர) (குறள்வெண் செந்துறை) புருடோத்தமன்: (பாட) உண்ணினைவில் ஒருபோதும் ஓய்வின்றிக் கலந்திருந்தும் உயிரே என்றன் கண்ணிணைகள் ஒருபோதும் கண்டிலவே நின்னுருவம் காட்டாய் காட்டாய். 1 அவத்தைபல அடையுமனம் அனவரதம் புசித்திடினும் அமிர்தே என்றன் செவித்துளைகள் அறிந்திலவே தித்திக்கும் நின்னாமம் செப்பாய் செப்பாய். 2 பொறிகளறி யாதுள்ளே புகும்பொருள்கள் இலையென்பர் பொருளே உன்னை அறியவவா வியகரணம் அலமாக்க அகத்திருந்தாய் அச்சோ அச்சோ. 3 (புருடோத்தமன் சற்றே அகல) (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) குடி: (தனிமொழி) 40 மனிதன் அலனிவன்! புனிதகந் தருவன்! தேவரும் உளரோ? யாதோ? அறியேன். இருளெலாம் ஒளிவிட இலங்கிய உருவம் மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு உருவிலை என்பர். ஓசையும் உருவும்! 45 பாடிய பாட்டின் பயனென்! அஃதோ! நாடி அறிகுதும். நன்று நன்று. (புருடோத்தமன் திரும்பிவர) (குறள்வெண் செந்துறை - தொடர்ச்சி) புரு: (பாட) புலனாரக் காண்பதுவே பொருளென்னும் போதமிலாப் புன்மை யோர்க்கிங் குலவாதென் உளநிறையும் உனதுண்மை உணர்த்தும்வகை உண்டே உண்டே. 4 பெத்தமனக் கற்பிதமே பிறங்குநினை வெனப்பிதற்றும் பேதை யோர்க்கோர் யத்தனமற் றிருக்கவென்னுள் எழுமுனது நிலையுரைப்ப தென்னே யென்னே. 5 தேர்விடத்தென் உள்ளநிறை தெள்ளமுதே உன்னிலைமை தேரா திங்ஙன் ஊர்விடுத்தும் போர்தொடுத்தும் உனையகல நினைத்ததுமென் ஊழே ஊழே. 6 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) குடி: சேரனே யாமிது செப்பினோன். போரினில் ஒருபுறம் ஒதுங்கி அரசனை அகற்றி நின்றதாற் கண்டிலேன். நிறைந்த காமுகன். 50 ஒன்றநு கூலம் உரைத்தான். நன்றே ஊரிவன் விடுத்ததும் போரிவண் தொடுத்ததும். எண்ணிய கொள்கைக் கிசையும் புகன்றவை. நண்ணுதும் நெருங்கி. நல்லது ! திரும்பினன். (புருடோத்தமன் திரும்பிவர) புரு: (தனிமொழி) என்றும் கண்டிலம் இன்றுகண் டதுபோல். எத்தனை முகத்திடைத் தத்துறு துயரம்! இவ்வயின் யான்வந் திறுத்தநாள் முதலாக் கௌவையின் ஆழ்ந்தனை போலும்! ஐயோ! (குடிலன் எதிர்வர) (குடிலனை நோக்கி) ஜடிதி! பெயரென்! சாற்றுதி! தத்க்ஷணம்! குடி: அடியேன்! அடியேன்! குடிலன்! அடிமை! புரு: 60 வந்ததென் இருள்வயின்? வாளிடென் அடியில்! குடி: வெந்திறல் வேந்தநின் வென்றிகொள் பாசறை சேர்ந்துன் அமையம் தேர்ந்து தொழுதுஓர் வார்த்தைநின் திருச்செவி சேர்த்திடக் கருதி வந்தனன் அடியேன்: தந்தது தெய்வம் 65 உன்றன் திருவடி தரிசனம் உடனே! சிந்தையெப் படியோ அப்படி என்செயல்! புரு: செப்புதி விரைவில். செப்புதி வந்தமை! குடி: ஒப்பிலா வீர! எப்புவ னமுநின் மெய்ப்புகழ் போர்த்துள ததனால், இப்புவி 70 நீவரு முனமே நின்வசப் பட்டுத் தாவரும் இன்பம் தடையறத் துய்ப்பப் பாக்கியம் பெற்றிலம் பண்டே என்றுனி ஏக்கமுற் றிருந்தமை யானெடு நாளாய் அறிந்துளன். இன்றுநீ ஆற்றிய போரிற் 75 செறிந்திரு படையும் சேர்தரு முனமே முறிந்தியாம் ஓடிய முறைமையும் சிந்தையிற் களிப்படை யாமலே கைகலந் தமையும் வெளிப்படை யன்றோ? வேந்த!இப் புவியோர் வெல்லிட மும்வெலா இடமும் யாவும் 80 நல்லவா றறிவர். நாயினேன் சொல்வதென்? வேசையர் தங்கள் ஆசையில் முயக்கம் அன்றோ இன்றவர் ஆற்றிய போர்முறை? என்செய் வாரவர்? என்செய்வார்? ஏழைகள்! நின்புகழ் மயக்கா மன்பதை உலகம் 85 யாண்டும் இன்றெனில், அணிதாம் இந்தப் பாண்டியும் நின்பாற் பகைகொளத் தகுமே! ஒருவா றறமே யாயினும், மருவாக் கொற்றவர் பிழைக்காக் குற்றமில் மாக்களை மற்றவர் மனநிலை முற்ற அறிந்தபின் 90 கருணையோ காய்தல், தருமநல் லுருவே! புரு: (தனதுள்) யாதோ சூதொன் றெண்ணினன். அறிகுவம். (குடிலனை நோக்கி) வேண்டிய தென்னை அதனால்? விளம்புதி. குடி: ஆண்டகை யறியா ததுவென்? இன்று மாண்டவர் போக மீண்டவ ரேனும் 95 மாளா வழிநீ ஆளாய் என்னக் கைகுவிப் பதேயலாற் செய்வகை யறியா அடியேன் என்சொல! ஆ! ஆ! விடியில் வாளா மாளும் மனிதர் தொகுதி எண்ணி எண்ணி எரிகிற தென்னுளம். 100 எண்ணுதி கருணை! இவர்க்குள் தாய்க்கொரு புதல்வராய் வந்த பொருநரெத் தனையோ? வதுவை முற்றுறா வயவரெத் தனையோ? புதுமணம் புரிந்த புருடரெத் தனையோ? நொந்த சூலினர் நோவு பாராது 105 வந்திவண் அடைந்த மள்ளரெத் தனையோ? தாய்முகம் வருந்தல் கண்டழுந் தன்சிறு சேய்முகம் மறவாச் செருநரெத் தனையோ? செயிருற முழந்தாள் சேர்ந்தழு பாலரைத் துயிலிடைத் துறந்த சூரரெத் தனையோ? புரு: 110 சரி, சரி! இவையுன் அரசர்க் காங்கு சாற்றா தொழிந்ததென்? குடி: சாற்றிலென்? போற்றான் யார்சொலும் புந்தியும் சற்றும். அன்பிலன்; பிறர்படும் துன்பம் சிறிதும் அறியா வெறியன். அன்பொ டிம்மாலை 115 குறியா நீவிடு தூதையும் கொண்டிலன். அண்டிய சீவ ராசிகள் அனைத்தையும் மண்டமர் இதில்நின் வைவாள் தனக்கே இரையிடல் ஒன்றே விரதமாக் கொண்டனன். பித்தன் ஒருவன் தன்னால் இத்தமிழ் 120 நாடெலாம் வெறுஞ்சுடு காடாய் விடுமே. ஆவ! இப்பெரும் பாவமும் பழியும் அஞ்சினேன்; அஞ்சினேன்! எஞ்சலில் கருணை யுருவே! அடியேற் கொருமொழி தருவையேல் ஒருவர்க் கேனு முறுதுய ரின்றி 125 அரசனும் புரிசையும் அரைநொடிப் போதிலுன் கரதல மாமொரு கௌசலம், காட்டுகே னடியேன் கேட்டரு ளரசே! (நிலைமண்டில ஆசிரியப்பா) புரு: (தனதுள்) பாதகா! விசுவாச காதகா! ஆ! ஹா! (சிரித்து) குடி: அரசன் கைப்படி லாங்குளார் யாருமென் 130 உரைதவ றாதுன் குடைக்கீ ழொதுங்குவர். மங்கல மதுரையு மிங்கிவர் வழியே உன்னா ணைக்கீ ழொ துங்குதல் திண்ணம். தொல்புவி தோற்றியது தொட்டர சுரிமை மல்கிய புவியிஃ ததனால், “மன்னவன்” 135 என்றபே ரொன்றுநீ யீவையே லென்றும், நின்னா ணையின்கீழ் நின்றுநீ முன்னர் வேண்டிய தாரொடு நீருமே யன்றிமற் றீண்டுள எவையே யாயினும் வேண்டிடில், சிரமேற் சுமந்துன் முரசா ரனந்தைக் 140 கோயில் வாயிலிற் கொணர்ந்துன் திருவடி கண்டுமீள் வதுவே கதியடி யேற்காம். பண்டிரா கவன்றன் பழம்பகை செற்று வென்றதோ ரிலங்கை விபீஷணன் காத்தவா றின்றுநீ வென்றநா டினிதுகாத் திடுவேன். புரு: 145 சமர்த்தன் மெத்தவும்! அமைத்ததந் திரமென்? குடி: அரசன தந்தப் புரமது சேர யாவரு மறியா மேவருஞ் சுருங்கை ஒன்றுளது. அவ்வழி சென்றிடி லக்கணங் கைதவன் கைதியா யெய்துவ னுன்னடி. புரு: 150 உண்மை? (சேவகரை நோக்கி) யாரது? குடி; உதியன் கண்முன் மெய்ம்மை யலாதெவர் விளம்புவர்? (அருள்வரதன் வர) அருள்: அடியேன்! புரு: கைத்தளை காற்றளை கொடுவா நொடியில். (அருள்வரதன் போக) (குடிலனை நோக்கி) எத்திசை யுளதுநீ யியம்பிய சுருங்கை? குடி: அணிதே! அஃதோ! சரணம் புகுந்த 155 எளியேற் கபய மியம்புதி யிறைவ! புரு: அவ்வழி யோநீ யணைந்தனை? குடி: ஆம்! ஆம்! செவ்விதி னொருமொழி செப்பிடி லுடனே காட்டுவ னடியேன். (அருள்வரதனுஞ் சேவகரும் விலங்கு கொண்டுவர) புரு: (குடிலனைச் சுட்டி) பூட்டுமின்! நன்றாய்! குடி: ஐயோ! ஐயோ! ஓஹோ! செய்ததென்? 160 மெய்யே முற்றும். பொய்யிலை! பொய்யிலை! (அருள்வரதன் விலங்கு பூட்ட) புரு: எத்திசை யுளதச் சுருங்கை? ஏகாய்! சித்திர வதையே செய்வேன் பிழைப்பில்! குடி: (அழுது) தேடியே வந்து செப்பிய வடியேன் ஓடியோ போவேன்? ஓஹோ! உறுதி 165 முந்தியே தந்திடில்... புரு: மூடுநின் பாழ்வாய்! சேரன் விஜயமுந் திருடான்! அறிகுதி. (சேவகரை நோக்கி) சூரர் பதின்மர் சூழுக விருபுறம்! (குடிலனை நோக்கி) நடவா யுயிர்நீ நச்சிடில். கெடுவாய்! எத்திறம் பிழைப்பினுஞ் சித்திர வதையே! (யாவரும் சுருங்கை நோக்கிப் போக) ஐந்தாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று. இரண்டாம் களம் இடம் : கன்னிமாடத் தொருசார். காலம் : யாமம். (சில தோழிப்பெண்களும் ஒரு கிழவியும் அளவளாவி இருக்க) (நிலைமண்டில ஆசிரியப்பா) கிழவி: எதுக்குமிவ் விளக்கும் இச்சிறு செம்பும் ஒதுக்கிவை அம்மா! உதவும் வழியில். முதற்றோழி: என்னடி கிழவி சொன்னால் அறிகிலை. போம்வழி அறியோம்! போமிடம் அறியோம்! 5 மந்திரக் குளிகையோ! அந்தர மார்க்கமோ! மூட்டையேன்? முடிச்சேன்? கேட்டியோ தோழி? காது மில்லை! கண்ணு மில்லை! ஏதுமில்லை! ஏனுயிர் இருப்பதோ! கிழவி: கிழவிபேச் சேற்குமோ கின்னரக் காரிக்கு! 10 படும்போ தறிவை!இப் படியே பண்டு முன்னொரு சண்டையில் உன்னைப் பெறுமுன் ஓடினோம்... முதற்றோழி: போடீ! உன்கதை அறிவோம் (கிழவி போக) சிரிக்கவா? என்செய! சிவனே! சிவனே! (நகைக்க) 2-ம் தோழி: அம்மணி என்செய்தாள்? அக்காள்! அதன்பின் 15 ‘அப்படி அரசன் மீண்டான்.’ செப்பாய்! முதற்றோழி: எப்படிச் செப்பயான்? ஏந்திழை பட்டபாடு. அய்யோ! அத்துயர் தெய்வமே அறியும்! மன்னவன் வாசல் கடந்தான் எனுமுனம் தன்னிலை தளர்ந்தாள், சாய்ந்தாள். வாணியும் 20 அருகுள செவிலியும் யானுமாய் விரைவில் தாங்கினோம் பாங்குள அமளியிற் சேர்த்தோம். மூச்சிலை; பேச்சிலை; முகமெலாம் வெயர்வை. இட்டகை இட்டகால் இட்டவப் படியே. இப்படி முடிந்ததே! இனியென் செய்வோம்! 25 தப்புமோ இவ்வொரு தத்துமென் றெண்ணி ஏங்கினோம், தியங்கினோம்; பாங்கிருந் தழுதோம். 2-ம் தோழி: ஐயோ தெய்வமே! அப்போ தவளுயிர் பட்டபா டெதுவோ!கட்டம்! கட்டம்! முதற்றோழி: விதியிது! அலதிது கதையிலும் உளதோ? 30 நொந்தபுண் அதனிலே வந்திடும் நூறிடி. தந்தை தேறிடத் தன்துயர் மறைத்து மகிழ்ச்சி காட்டினான். வந்ததித் தளர்ச்சி. மூடிடில் தீயும் மூளுமும் மடங்காய். 2-ம் தோழி: எத்தனை வேதனை! எத்தனை சோதனை! 35 யாது மறியாட் கேதித் துணிபு? ஓதிய கட்டுரை ஒருமுறை இனியும் நவிலுதி அக்காள்! முதற்றோழி: நங்கைநன் மொழியென் செவியிடை இனியும் மணிபோல் திகழும்! அரசனை அடிபணிந் தொருசார் ஒதுங்கி 40 நீக்கமில் அன்பும் ஊக்கமும் களிப்பும் காட்டிய மதிமுகம் கோட்டியே நின்ற தோற்றமென் கண்ணின் மாற்றுதல் அரிதே! “என்னோ இதற்கும் யோசனை எந்தாய்! கொன்னே வருந்தலை! கொள்கையிற் பிறழா 45 நீதிநம் பாலெனில் நேர்வது ஜயமே. ஏததற் கையம்? இதுவிட் டடிமை பெயர்வது பெரிதல, பேருல கதற்குத் துயர்வரும் எல்லைநம் துயர்நோக் குதலோ பெருமை! அண்ணிதே முனியிடம்; கருதிய 50 பிரிவோ ஒருதினம்! குருவும் தந்தையும் சமமெனிற் சுந்தர விமலன் தன்திருப் பாதா தரவே போதா தோதுணை? ஆயினும் அத்தனை அவசிகம் ஆயின், ஆகுக ஆஞ்ஞைப் படியே! தடையிலை. 55 அன்னையும் நின்னை அன்றிவே றறியேன். உன்னதே இவ்வுடல். உன்திரு உள்ளம் உன்னிய படியெலாம் உவப்பச் செய்குவன். அடிமையின் கவலையால் அரசர்க் கியல்பாம் கடமையிற் பிறழும் கலக்கம் விலக்குவை! 60 அன்பாம் உன்பால் ஐய! உன்மகள் வேண்டும் வரமெலாம் யாண்டுமிவ் வொன்றே.” 2-ம் தோழி: மொழியோ இதுவும்? ஆஆ! ஆஆ! இதுவெலாம் காணவோ எழுதினன் பிரமன்? முதற்றோழி: எதுவெலாம் காணவோ இருப்பது இக்கண்? 2-ம் தோழி: என்செய் கின்றனள் இப்போது ஏழை? முதற்றோழி: வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை! ஏதோ எழுது கின்றனள். வாணி கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல். 2-ம் தோழி: நீரா டினளோ இந்நிசி? முதற்றோழி: ஆம்!ஆம்! 70 எழுந்து வாசநீ ராடி முன்சுரத் தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக் கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி, அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து, 75 நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி, ‘நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி! அன்றுபோல் அன்றோ இன்றென் நிலைமை!’ என்று சிறுமுறு வலித்தனள். என்சொல! உருவமும் உடையும் உரையும் நடையும் 80 சருவமும் பாவனை பண்ணியும்... (அழ) (மனோன்மணியும் வாணியும் வர) அஃதோ! 2-ம் தோழி: வந்தனள் காணுதி. வாணியும் பின்னுளள். மறைகுவம் அவ்வறை. வருகஇவ் வழியே! (தோழிமார் போக) மனோ: எந்தைபோல் தயாநிதி எங்கணும் இல்லை. வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே! 85 ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க! வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை. (திருமுகங்காட்ட; வாணி வாசிக்க) சொன்னேன் அன்றே வாணீ! முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். வாணி: 90 இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணீ! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம். மனோ: 95 என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம். வாணி: ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய 100 வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை! (அழ) மனோ: 105 வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? 110 தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ் யாக்கையில் அமையுமோ நீக்கமில் இன்பம். எனக்கெனக் கென்றெழும் இச்சையா திகளெனும் 115 மனக்களங் கங்களாம் மாசுகள் அனைத்தும் தேய்த்தவை மாற்றித் திகழொளி யேற்றி மண்ணிய மணியாப் பண்ணிட என்றே வைத்தஇக் கடிய வாழ்க்கையாம் சாணையைப் பைத்தபூஞ் சேக்கையாப் பாவித் துறங்க 120 யத்தனஞ் செய்திடும் ஏழையர் போல என்னை நீ எண்ணினை! வாணி! இந்தச் சுகவிருப் பேநமைத் தொழும்புசெய் பந்தம். தவமே சுபகரம். தவமென்? உணருவை? உடுப்பவை உண்பவை விடுத்தரண் அடைந்து 125 செந்தீ ஐந்திடைச் செறிந்தமைந் துறைதல் ஆதியா ஓதுப அல்ல. அவற்றைத் தீதறு தவமெனச் செப்பிடார் மேலோர். இவ்வுயிர் வாழ்க்கையில் இயைந்திடும் துயரம், ஐயோ! போதா தென்றோ அன்னோர் 130 போனகம் துறந்து கானகம் புகுந்து தீயிடை நின்று சாவடை கின்றார்? தந்தைதா யாதியா வந்ததன் குடும்ப பந்தபா ரத்தினைப் பேணித் தனது சொந்தமாம் இச்சைகள் துறந்து மற்றவர்க் 135 கெந்தநா ளுஞ்சுகம் இயைந்திடக் கடமையின் முந்துகின் றவரே முதற்றவ முனிவர். வாணி: அத்தகைத் தவமிங் கடியேன் தனக்கும் ஒத்ததே அன்றோ? மனோ: ஒத்ததே யார்க்கும். மேம்படக் கருதிடில் ஓம்புதி நீயும். 140 அடுத்தவர் துயர்கெடுத் தளித்தலே யானிங்கு எடுத்தநற் றவத்தின் இலக்கணம் ஆதலின், நடேசனை நச்சுநின் நன்மணம் அதுவும் விடாதெனை அடுத்த வீரநா ரணன்றன் கடுஞ்சிறை தவிர்த்தலும் கடனெனக் கருதி 145 எழுதினேன். இஃதோ! வழுதியும் இசைந்தான். என்கடன் இதுவரை: இனியும் இச்சை. வாணி: ஆயிடிற் கேட்குதி அம்மணீ! என்சூள். கண்டவர்க் கெல்லாம் பண்டைய வடிவாய் நீயிவண் இருக்க நின்னுளம் வாரி 150 வெள்ளிலா மெள்ள விழுங்கி இங்ஙனம் வேதகம் செய்த போதக யூதபம்; பேரிலா ஊரிலாப் பெரியோன் அவன்றான் யாரே ஆயினும் ஆகுக. அவனைநீ அணையுநாள் அடியேன் மணநாள். அன்றேல், 155 இணையிலா உன்னடிக் கின்றுபோல் என்றும் பணிசெயப் பெறுவதே பாக்கியம் எனக்கு. கடமையும் பிறவும் கற்றறி யேன்விடை மடமையே ஆயினும் மறுக்கலை மணியே! மனோ: பேதைமை அன்றோ ஓதிய சபதம்? 160 ஏதிது வாணி! என் மணம் தனக்கோ இனியரை நாழிகை. இதற்குள் ஆவதென்? அன்பின் பெருக்கால் அறைந்தனை போலும். மன்பதை உலகம் வாஞ்சா வசமே. வாணி: உடலலால் உயிரும் விழியலால் உணர்வும் 165 கடபட சடமலாற் கடவுளும் இலையேல் வேண்டிய விளைக! விசனமென்? அன்றேற் காண்டியவ் வேளை கருணையின் இயல்பே. 1 (இருவரும் போக) ஐந்தாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று. மூன்றாம் களம் இடம் : அரண்மனையில் மணமண்டபம். காலம் : நடுநிசி. (அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) (நிலைமண்டில ஆசிரியப்பா) முதற்படைத் தலைவன்: அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர். 2-ம் படை: நடரா சனைநீர் அறியீர் போலும்! முதற்படை: அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக் 5 கெடுத்தான் கிழவன். 3-ம் படை: அடுத்ததம் மணமும்! தெரியீர் போலும்! முதற்படை: தெரியேன், செய்தியென்? 3-ம் படை: கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட 10 அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன். முதற்படை: இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே. 3-ம் படை: எத்திரை தாய்க்கென் றியம்புதி. கேட்போம். முதற்படை: இத்திரை தாய்க்காம். 3-ம் படை: சீ! சீ! அத்திரை. 2-ம் படை: எத்திரை ஆயினென்? ஏனிரை கின்றீர்? முதற்படை: இருதிரை வந்தவா றிதுவே ஆயினும் ஒருதிரைக் கொருதிரை எத்தனை தூரம்? 3-ம் படை: அதோ அவன் அறிகுவன். அறிந்திதோ வருவேன் (3-ம் படைஞன் மற்றோரிடம் போக) முதற்படை: ஐயோ! பொய்யறும் அன்னையம் மணிக்கும் 20 பொய்யன் பலதே வனுக்குமோ பொருத்தம்? 2-ம் படை: வருத்தமேன் உனக்கு? மன்னன் திருவுளக் கருத்தனு சரித்துநாம் காட்டலே கடமை (3-ம் படைஞன் மீண்டும் வர) 3-ம் படை: (முதற்படைஞனை நோக்கி) இப்புறம் வருதி. செப்புவன் ரகசியம். சத்தியம் செய்தபின் சாற்றினன். நீயும் 25 எத்திறத் தோர்க்கும் இயம்பலை. பத்திரம்! அத்திரை மணத்திற் கன்று. மற் றப்புறம் நெருங்கிய சுருங்கையொன் றுளதாம். அவ்வழி செல்லில் வெகுதொலை செலுமாம். இப்போர் வெல்லும் வரையும் அவ்வழி மணந்தோர் 30 இருவரும் எய்திவாழ்ந் திருப்பராம். முதற்படை: சரி! சரி! பொருவரும் புத்திமான் குடிலன். எத்தனை விரைவினிற் சமைத்தான்! வெகுதிறம் உடையான். 3-ம் படை: இப்போ தன்றது; நகரா ரம்பம் எப்போது அப்போ தேவரும் துயரம் 35 கருதிமுன் செய்தனன். முதற்படை: ஒருவரும் அறிந்திலம்! (முருகன் வா) 3-ம் படை: யாரது, முருகனோ? நாரணன் எங்கே? முருகன்: நாரணன் அப்புறம் போயினான்; வருவன். 3-ம் படை: பிழைத்தீர் இம்முறை. முரு: பிழைத்திலம் என்றும்! 3-ம் படை: அத்திரைச் செய்தி அறிவாய். வைத்ததார்? முரு: 40 வைத்தது ஆராயினென்? வெந்தது வீடு! (இருவரும் நகைக்க) 2-ம் படை: வாயினை மூடுமின். வந்தனன் மணமகன். முரு: ஈயோ வாயில் ஏறிட நாயே! முதற்படை: அரசனும் முனிவரும் அதோவரு கின்றர்! (ஜீவகன், சுந்தரமுனிவர், கருணாகரர், நிஷ்டாபரர், பலதேவன், நடராசன், நாராயணன் முதலியோர் வர) ஜீவ: இருமின் இருமின்! நமர்காள் யாரும்! (ஜீவகன், முனிவர் முதலியோர் தத்தம் இடத்திருக்க) 45 கொலுவோ கொல்லிது! மணவறை! இருமின். பலதேவ ரேநும் பிதாவிது காறும் வந்திலர் என்னை? பலதே: மன்னவர் மன்ன! அந்தியிற் கண்டேன் அடியேன். அதன்பின் ஒருவரும் கண்டிலர். தனிபோ யினராம். ஜீவ: 50 இருமிரும் நீரும். எங்கே கினும்நம் காரிய மேயவர் கருத்தெப் பொழுதும். (நாராயணனை நோக்கி) பாரீர் அவர்படும் பாடு. நாரா: பார்ப்பேன்! சத்தியம் சயிக்குமேற் சாற்றிய படியே! ஜீவ: இத்தகை உழைப்போர் எப்புவ னமுமிலை. 55 எண்ணிநிச் சயித்த இத்தொழில் இனியாம் பண்ணற் கென்தடை? சுவாமி! அடிகள் தந்தநன் முகூர்த்தம் வந்ததோ? சுந்: வந்தது. (புருடோத்தமனும், குடிலனும் அருள்வரதன் முதலிய மெய்காப்பாளருடன் கற்படை வழி வர) புரு: (கற்படையில் அருள்வரதனை நோக்கி) நின்மின்! நின்மின்! பாதகன் பத்திரம்! என்பின் இருவர் வருக. (தனதுள்) இதுவென்? 60 இந்நிசி எத்தனை விளக்கு! ஏதோ! மன்னவை போலும்! மந்திரா லோசனை! இவர்சுந் தரரே! அவர்நட ராஜர்! இவர்களிங் குளரோ! எய்திய தெவ்வழி? இத்திரை எதற்கோ? அத்திரை எதற்கோ? 65 இத்தனை கோலா கலமென் சபைக்கு? மாலையும் கோலமும் காணின் மணவறை போலாம். அறிந்தினிப் போவதே நன்மை. மந்திரம் ஆயின் மற்றதும் அறிவோம். இந்தநல் திரைநமக் கெத்தனை உதவி! (திரைக்குப் பின் மறைந்து நிற்க) ஜீவ: 70 என்குலம் காக்க எனவருள் பழுத்துக் கங்கணம் கட்டிய கருணா நிதிகாள்! மனத்திறந் தாழ்ந்த மதிமந் திரிகாள்! எனக்கென உயிர்வாழ் என்படை வீரர்காள்! ஒருமொழி கூறிட அனுமதி தருமின். 75 ஆடையின் சிறப்பெலாம் அணிவோர் சிறப்பே; பாடையின் சிறப்பெலாம் பயில்வோர் சிறப்பே; எள்ளரும் மதிகுலச் சிறப்பெலாம், எமர்காள்! கள்ளமில் நும்முனோர் காப்பின் சிறப்பே. ஆதலில் உமக்குப சாரம்யான் ஓதுதல். 80 மெய்க்குயிர் கைக்குநா விளம்புதல் மானும். ஈண்டுகாத் திடுவல்யான் எனக்கடன் பூண்டதும் மதிகுல மருந்தாய் வாய்த்தஎன் சிறுமி விதைபடும் ஆலென விளங்கினள். அவளைக் காத்திடும் உபாயம் கண்டிட இச்சபை 85 சேர்த்தனன் என்பது தெரிவீர் நீவீர். இன்றுநாம் பட்டதோர் இழுக்கிவ் வைகறை பொன்றியோ வென்றோ போக்குவம் திண்ணம். ஒருகுலத் தொருவன் ஒருமரத் தோரிலை. அப்படி அன்றுநம் கற்பகச் சிறுகனி! 90 தப்பிடின் மதிகுலப் பெயரே தவறும். அரியவிச் சந்தியைப் பெரிதும் கருதுமின். இருந்திடச் சிறியள்: அபாயம்! தனியே பிரிந்திடப் பெரியள்: பிழை!அஃ தன்றியும் குலமுடி வெண்ணிக் குலையுநம் உளத்திற் 95 கிலையத னாலோர் இயல்சமா தானம். ஆதலில் அரியதற் காலத் தியல்பை யாதென நீவிர் ஆய்ந்தியான் இப்போ தோதிடும் உபாயத் தாலுறு நன்மையும் தீமையும் நன்றாய்த் தெரிந்து செப்புமின்! 100 குடிலனை அறியார் யாரிக் கொற்றவை? 2-ம் படை: குடிலனை அறியுமே குவலயம் அனைத்தும். ஜீவ: அறிந்திடில் இறும்பூ தணையார் யாவர்? மதியுளார் யாரவன் மதியதி சயித்திடார்? நெஞ்சுளார் யாரவன் வன்திறற் கஞ்சார்? 105 யார்வையார் அவனிடத் தாரா ஆர்வம்? உண்மைக் குறைவிடம்; திண்மைக் கணிகலம். சத்திய வித்து: பத்தியுன் மத்தன். ஆள்வினை தனக்காள்; கேள்விதன் கேள்வன். ஏன்மிக? நமர்காள்? இந்நடு நிசியிலும் 110 யானறி யாதுழைக் கின்றனன் எனக்கா. நன்றே இங்கவன் இலாமையும் : அன்றேல் தற்புகழ் கேட்க அற்பமும் இசையான். புரு: (தனதுள்) எத்தனை களங்கமில் சுத்தன்! கட்டம்! ஜீவ: பற்பல பாக்கியம் படைத்துளர் பண்டுளோர். 115 ஒப்பரும் அமைச்சனை இப்படி ஒருவரும் முன்னுளோர் பெற்றிலர்; பின்னுளார் பெறுவதும் ஐயமென் றுரைப்பேன். அன்னவன் புதல்வன் மெய்ம்மையும், வாரமும் வீரவா சாரமும், பத்திசேர் புத்தியும், யுத்திசேர் ஊக்கமும் 120 உடையனாய் அடையவும் தற்பிர திமைபோல், இனியொரு தலைமுறை தனிசே வகஞ்செய இங்குவீற் றிருந்திலன் ஆயின், எமர்காள்! எங்குநீர் கண்டுளீர் இச்சிறு வயதிற் பலதே வனைப்போற் பலிதமாம் சிறுதரு? 2-ம் படை:125 இலையிலை எங்கும்! இவர்போல் யாவர்! ஜீவ: எனதர சுரிமையும் எனதர சியல்பும் தமதார் உயிர்போல் தாம்நினைத் திதுவரை எவ்வள வுழைத்துளார் இவ்விரு வருமெனச் செவ்விதின் எனைவிட நீவிரே தெரிவீர். 130 இக்குலம் அவர்க்கு மிக்கதோர் கடன்பா டுடையதென் றொருவரும் அயிர்ப்புறார். அதனால் தடையற அக்கடன் தவிர்க்கவும் நம்முளம் கலக்கிடும் அபாயம் விலக்கவும் ஒருமணம் எண்ணினேன். பண்ணுவேன் இசைவேல் நுமக்கும். 135 மணவினை முடிந்த மறுகணம் மணந்தோர் இருவரும் இவ்விடம் விடுத்துநம் முனிவரர் தாபதம் சென்று தங்குவர். இத்தகை ஆபதம் கருதியே அருட்கடல் அடிகள் தாமே வருந்திச் சமைத்துளார் அவ்விடம் 140 போமா றொருசிறு புரையறு சுருங்கை. அவ்வுழி இருவரும் அடைந்தபின், நம்மைக் கவ்விய கௌவையும் கவலையும் விடுதலால், வஞ்சியன் ஒருவனோ, எஞ்சலில் உலகெலாம் சேரினும் நம்முன் தீச்செறி பஞ்சே. 145 இதுவே என்னுளம். இதுவே நமது மதிகுலம் பிழைக்கும் மார்க்கமென் றடிகளும் அருளினர் ஆஞ்ஞை. ஆயினும் நுமது தெருளுறு சூழ்ச்சியும் தெரிந்திட விருப்பே. 1 (நேரிசை ஆசிரியப்பா) உரையீர் சகடரே உமதபிப் பிராயம். சகடன்: 150 அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி! நாரா: (தனதுள்) மருகன் தப்பிய வருத்தம் போலும். ஜீவ: குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே. பெயரால் என்னை? பேயனிவ் வஞ்சியான் பெயரால் அரசன்! செயலாற் புலையன்! 2-ம் படை: செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்! நாரா: மனிதரால் ஆவதொன் றில்லை. மன்னவா! இனியெலாம் ஈசன திச்சை. சக: சரி! சரி! யாவ: சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! ஜீவ: வாராய்! நாரணா! ஆனால் அப்புறம் 160 சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய். (நாராயணன் போக) யார்க்கும் சம்மதம் எனிலிச் சடங்கினை முடிப்போம். வம்மின்! இனியிது மங்கல மணவறை. கவலை அகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த் 165 திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்! இன்றுநாம் வென்றோம் என்றே எண்ணுமின்! இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி வருமுன் ஏகுவம் அரைநா ழிகைத்தொழில்! ஆற்றுவம் அரும்போர் கூற்றுமே அஞ்ச. 170 நாளைநல் வேளை: நம்மணி பிறந்தநாள். பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில் ஓரோர் மங்கல விசேடம்! சக: ஓ! ஓ! சரி! சரி! ஒவ்வொரு வருடமும் அதிசயம்! (நாராயணன் திரும்பிவர. மனோன்மணி, வாணி முதலிய தோழியருடன் திரைப்பின் வந்து நிற்க) நாரா: இட்டநின் கட்டளைப் படியே எய்தினர். ஜீவ: (நாராயணனை நோக்கி) 175 மற்றிவர் கவலை மாற்றிட ஒருபா சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி! வாணி: (பாட) (கொச்சகக் கலிப்பா) நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த ஒருகரிமுன் ஓர் முறையுன் பெயர் விளிக்க உதவினைவந் தெனவுரைப்பர்; ஆர்துயர அளக்கர்விழும் அறிவிலியான் அழைப்பதற்குன் பேர்தெரியேன் ஆயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ. 1 பாரரசர் துகிலுரியப் பரிதவிக்கும் ஒருதெரிவை சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தாள் எனஉரைப்பர்; ஆர்துணையும் அறவிருக்கும் அறிவிலியான் அழைப்பதற்குன் ஊர்தெரியேன் ஆயிடினும் உறுதிதரல் உனக்குரித்தே. 2 மறலிவர மனம்பதறும் மார்க்கண்டன் உனதிலிங்கக் குறிதழுவி அழிவில்வரம் கொண்டான்முன் எனவுரைப்பர்; வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன் நெறியறியேன் ஆயிடினும் நேர்நிற்றல் நினதருளே. 3 (ஆசிரியப்பாவின் தொடர்ச்சி) சுந்: எதுவோ இதனினும் ஏற்புடைப் பிரார்த்தனை? மந்திரம் தந்திரம் வழங்கும் நற்செபம் யாவையும் இதுவே. பாவாய்! மனோன்மணீ! 180 வருதி இப்புறம். வாங்குதி மாலை. (மனோன்மணி மணமாலைகொண்டு பலதேவனெதிர் வர) ஒருதனி முதல்வன் உணர்வன் உன்னுளம். உன்னன் புண்மையேல் இன்னமும் காப்பன். (புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க) முதற்படை: ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம். 3-ம் படை: ஊற்றிருந் தொழுகி உள்வறந் ததுகண். 4-ம் படை: அமையா நோக்கமும் இமையா நாட்டமும், ஏங்கிய முகமும் நீங்கிய இதழும், உயிரிலா நிலையும் உணர்விலா நடையும் பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்! (மனோன்மணி புருடோத்தமனைக் காண: உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க) யாவ: எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்? புரு: 190 இங்கோ நீயுளை! என்னுயிர் அமிர்தே! (புருடோத்தமன் தலைதாழ்க்க: மனோன்மணி மாலை சூட்டி அவன் றோளோடு தளர்ந்து மூர்ச்சிக்க) சுந்: மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே! யாவ: சோரன்! சோரன்! சோரன்! சோரன்! நிஷ்டாபரர்: கண்டேன்! கண்டேன்! கருணா கரரே! (கருணாகரரைத் தழுவி) யாவ: பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்! பலதே: 195 கொன்மின்! கொன்மின்! (யாவரும் புருடோத்தமனைச் சூழ: சுந்தரர் கூட்டம் விலக்க.) சுந்: நின்மின்! நின்மின்! (அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர) அருள்வரதன்: அடையின் அடைவீர் யமபுரம். அகன்மின்! (புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ் சூழ்ந்து நின்று காக்க) யாவ: படையுடன் பாதகன்! (பின்னிட) அருள்: (விலங்குடன் குடிலனைக் காட்டி) பாதகன் ஈங்குளான். ஜீவ: குடிலா உனக்குமிக் கெடுதியேன்? ஐயோ! அடிகாள்! இதுவென்! இதுவென்! அநீதி! 200 அறியேன் இச்சூ தறியேன்! அறியேன்! சுந்: பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில். புரு: வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல் அஞ்சினேன். சூதுன் அமைச்சன் செய்கை. சுருங்கையின் தன்மை சொல்லி யென்னையிங் 205 கொருங்கே அழைத்தான் உன்னகர் கவர. உன்னர சுரிமையும் உன்னகர் நாடும் என்னிடம் இரந்தான் இச்சூ திதற்கா! ஓதிய சுருங்கையின் உண்மைகண் டிவன்தன் சூதும் துரோகமும் சொலிஉனைத் தெருட்ட 210 எண்ணியான் வந்துழி இவ்வொளி விளக்கும் பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமும் தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும் எனதுயிர் அவாவிய இவ்வரு மருந்தை நனவினிற் காணவும் நண்ணவும் பெற்றேன். 215 பிரிகிலம் இனிமேல். உரியநின் உரிமை யாதே ஆயினும் ஆகுக. ஈதோ! மீள்குவன். விடைகொடு நாளையும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே. ஜீவ: உண்மையோ? குடிலா! உரையாய்! (குடிலன் முகங் கவிழ்த்து நிற்க) நாரா: இதுவுநின் 220 உண்மையோ! மௌனமேன்? யாவ: ஓகோ! பாவி! நாரா: படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்! சுந்: விடுவிடு! விசாரணைக் கிதுவன் றமையம்! நன்மையே யாவும் நன்மையாய் முடியின். வாராய் ஜீவக! பாராய் உன்மகள் 225 தாராத் தன்னிரு கைதோள் சூட்டி எண்படு மார்பிடைக் கண்படு நிலைமை. இருமனம் ஏனினி; என்றுமிப் படியே மருகனு மகளும் வாழ்க! வாழ்த் துதியே. ஜீவ: கண்மணீ! அதற்குட் கண்வளர்ந் தனையோ! 230 உன்னையும் மறந்துறங் குதியேல் இனிமேல் என்னையெங் கெண்ணுவை? இறும்பூ திருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தமை! (மனோன்மணி திடுக்கிட்டு விழிக்க) வெருவலை! மணியே! பிரியீர் இனியே! 3 பள்ள உவர்க்கடலிற் பாய்ந்தோடும் வெள்ளமென உள்ளம் உவந்தோடி ஒன்றானாய்--விள்ளா மணியின தொளியும் மலரது மணமும் அணிபெறு மொழியின் அருத்தமும் போல, அந்நிசி யாகவெஞ் ஞான்றும் மன்னிய அன்புடன் வாழ்மதி சிறந்தே! (யாவரும் வாழ்த்த) ஐந்தாம் அங்கம்: மூன்றாம் களம் முற்றிற்று. (கலித்துறை) சிறிதா யினும்பற் றிலாதுகை யற்ற திருமகடன் குறியாந் தலைவன் குடிலன்பின் எய்திய கொள்கைகண்டீர் அறிவோம் எனுநம் அகங்கரம் ஆறும் அவத்தையினிற் செறிவா யிருக்குந் திருக்கு வெளிப்படும் சீரிதுவே. ஐந்தாம் அங்கம் முற்றிற்று. ஆசிரியப்பா 6 -க்கு அடி 569 வெண்செந்துறை 6 -க்கு அடி 12 கொச்சகக் கலிப்பா 3 -க்கு அடி 12 மருட்பா 1 -க்கு அடி 6 ஆக அங்கம் 1-க்குப் பா. 16 -க்கு அடி 599 பாக்களின் வரி எண்ணிக்கை பாயிரம் அடி 57 அங்கம் 5-க்கும் அடி 4445 ஆக இந்நாடகத்துள் வந்த அடிகள் 4502 மனோன்மணீயம் முற்றிற்று. புராணக்கதை விளக்கம் அகத்தியர் கடல்குடித்த கதை பக்கம் 17 ஒருகாலத்தில் மித்திரர் வருணர் என்பவர்கள் பேரழகியாகிய ஊர்வசியைக் கண்டு அவள் மீது ஆசைகொண்டார்கள். அதனால் அவர்களுக்கு விந்து வெளிப்பட்டது. ஒருவர் விந்து குடத்திலும், மற்றொருவர் விந்து நீரிலும் விழுந்தன. குடத்தில் விழுந்ததிலிருந்து அகத்தியரும். நீரில் விழுந்ததிலிருந்து வசிஷ்டரும் உண்டானார்கள். குடத்திலிருந்து உண்டானபடியினாலே அகத்தியருக்குக் குடமுனி என்று பெயர் ஏற்பட்டது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒருகாலத்தில் போர் ஏற்பட்டது. விருத்திராசுரனும் ஏனைய அசுரர்களும் கடலின் உள்ளே புகுந்து ஒளிந்துகொண்டனர். அப்போது இந்திரன் அகத்திய முனிவரிடம் வந்து அசுரர்களை வெளிப்படுத்தவேண்டும் என்று வேண்டிக்கொள்ள, அதற்கு அவர் உடன்பட்டுக் கடல்நீரைக் கையினால் முகந்து அருந்தினர். அதனால் கடல்நீர் வற்றியது. அப்போது அங்கு மறைந்திருந்த விருத் திராசுரன் முதலிய அசுரர்களை இந்திரன் கொன்றான். பிறகு, இந்திரன் வேண்டிக்கொண்டபடி அகத்தியர் மீண்டும் நீரைக் கடலில் உமிழ்ந்தார். “ முனிக்கரசு கையால் முகந்து, முழங்கும் பனிக்கடலும், உண்ணப் படும்.” சகரர் சாகரம் தோண்டிய கதை பரத கண்டத்தை அரசாண்ட சகர சக்கரவர்த்தி ஒரு காலத்தில் அசுவ மேத யாகம் செய்யத் தொடங்கினார். யாகம் செய்வதற்கு முன்னர், யாகக் குதிரையைத் தேசம் எங்கும் சுற்றி வலம்வரும்படி அனுப்புகிற வழக்கம்போல, தமது குதிரையை அனுப்பினார். பொறாமை கொண்ட இந்திரன். ஒருவரும் அறியாமல் யாகக் குதிரையைக் கொண்டுபோய்ப் பாதாள லோகத்திலே தவம் செய்துகொண்டிருந்த கபில முனிவரின் அருகில் கட்டிவிட்டுச் சென்றான். யாகக் குதிரை உலகமெங்கும் தேடியும் காணாமையால், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் அறுபதி னாயிரவரும் பாதாள லோகத்திற் சென்று தேடலாம் என்று எண்ணி பரத கண்டத்தின் கிழக்குப் பக்கத்தைத் தோண்டிக்கொண்டு பாதாளம் சென்றார்கள். குதிரையைக் கண்டார்கள். இவர்கள் தோண்டிய பெரும் பள்ளம் நீர் நிறைந்து கடலாயிற்று. சகர சக்கரவர்த்தியின் அறுபதி னாயிரம் பிள்ளைகளுக்கும் சகரர் (சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள்) என்பது பொதுப்பெயர். சகரர் தோண்டிய படியினால் கீழ்க்கடல் சாகரம் என்று பெயர்பெற்றது. சிவபெருமான் - நக்கீரர் கதை சண்பகமாறன் என்னும் பாண்டியனுடைய மனைவியின் கூந்தலில் நறுமணம் வீசிற்று. பாண்டியன், இந்த நறுமணம் கூந்தலில் இயற்கையாக உண்டாயிற்றோ. செயற்கையாக அமைந்ததோ என்று ஐயுற்றான். தனது ஐயத்தைத் தீர்ப்பவருக்கு ஆயிரம் பொன் வெகுமதி யளிப்பதாகக் கூறி, தமிழ்ச் சங்க மண்டபத்தில் பொற்கிழியைத் தொங்க விட்டான். அப்பொழுது ஆலவாய்க் கோவிலில் அருச்சனை செய்யும் தருமி, மணம்புரியப் பணம் இல்லாமல் இருந்தவன் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்ள, அவர் ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி’ என்று தொடங்கும் ஒரு செய்யுளை இயற்றி அதனைக் கொண்டு போய்ச் சங்கத்தாரிடம் படித்துக்காட்டிப் பொற்கிழியைப் பெற்றுக் கொள்ளும் படி கூறினார். (குறுந்தொகை 2-ஆம் செய்யுளைக் காண்க.) தருமி அவ்வாறே சங்கத்தாரிடம் சென்று அச் செய்யுளைப் படித்துக் காட்டிப் பொற்கிழியைக் கேட்டான். சபையிலிருந்த நக்கீரர், “இச் செய்யுளில் மகளிர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்று சொல்லியிருப்பதனால் இது குற்றமுள்ள செய்யுள்” என்று அச் செய்யுளில் குற்றம் கண்டு கூறினார். அதைக் கேட்ட தருமி மீண்டும் கோவிலுக்குச் சென்று சிவபெரு மானிடம் நடந்ததைக் கூறினான். சிவபெருமான் புலவர் உருவத்தோடு சங்க மண்டபத்திற்கு வந்தார். வந்து, “என் செய்யுளில் குற்றம் கண்டவன் யார்?” என்று கேட்டார். நக்கீரர், தான் குற்றம் கண்டதாகக் கூறினார். “என்ன குற்றம்?” என்று சிவன் கேட்க, அவர் முன்பு கூறியது போல, “மகளிர்க்குக் கூந்தலில் இயற்கை மணம் உண்டென்பது குற்றம்” என்று கூறினார். சிவபெருமான் அதற்கு விடை கூற முடியாமல், தமது நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டினார். நக்கீரர் அதற்கும் அஞ்சாமல், “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே!” என்றார். திருஞானசம்பந்தரின் புனல்வாதம் திருஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்றபோது பாண்டியன் சபையிலே அவருக்கும் சமணர்களுக்கும் சமயவாதம் நிகழ்ந்தது. அதில் புனல்வாதமும் ஒன்று. இரு சமயத்தாரும் தங்கள் மதக் கருத்தை எழுதிய பனையேட்டை வைகையாற்றில் விடுவது என்றும், யாருடைய ஏடு ஆற்றுக்கு எதிராகச் சென்று கரையேறுகிறதோ அவருடைய சமயமே மெய்ச் சமயம் என்று ஒப்புக்கொள்ளப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அவ்வாறே திருஞானசம்பந்தரும் சமணரும் தத்தம் மதக் கொள்கையினை எழுதிய பனையேட்டை வைகையாற்றில் விட்டனர். சமணர் எழுதி விட்ட ஏடு ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றது. திருஞானசம்பந்தர் விட்ட ஏடு வெள்ளத்திற்கு எதிராகச் சென்று கரை ஒதுங்கிற்று. இமயமும் பொதிகையும் சமமான கதை பக்கம்17 ஒருகாலத்தில் சிவபெருமான் மலையரசன் மகளாகிய பார்வதியைத் திருமணம் செய்தார். அத் திருமணம் இமயமலையில் நடைபெற்றது. அத் திருமணத்தைக் காணத் தேவரும் மனிதரும் ஏனை யோரும் இமயமலைக்குச் சென்றனர். அதனால் இமயமலை கனத்தி னால் தாழ்ந்து, பொதிகைமலை உயர்ந்தது. அதுகண்ட சிவபெருமான், அகத்திய முனிவரைப் பொதிகைமலைக்குப் போகும்படி கூறினார். அதன் படியே அகத்தியர் வந்து பொதிகைமலையில் தங்கினார். அப்போது, பளுவில்லாதபடியால் மேலெழுந்த பொதிகை மலை தாழ்ந்து, இமயமும் பொதிகையும் சமமாக நின்றன. சந்நு காதில் கங்கை வெளிப்பட்ட கதை பக்கம் 18 பகீரதன் என்பவன் நெடுங்காலம் தவம் இருந்து ஆகாய கங்கையைப் பூலோகத்தில் கொண்டு வந்தான். பூமியில் வந்த கங்கை பாய்ந்து ஓடியது. வழியில் சந்நு முனிவர் யாகம் செய்து கொண்டிருந் தார். அவர், கங்கையாறு ஓடிவருவதைக் கண்டு. அது யாக குண்டத்தில் புகுந்து யாகத் தீயை அழித்துவிடும் என்று அஞ்சி. கங்கைநீர் முழுவதையும் குடித்துவிட்டார். அப்போது பகீரதனும், தேவர்களும் முனிவர்களும் கங்கையாற்றை வெளியே விடும்படி சந்நுவை வேண்டிக்கொண்டனர். இவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சந்நு முனிவர். கங்கையாற்றைத் தமது காதின் வழியாக வெளியே விட்டார். இதனால், கங்கை யாற்றுக்குச் சாநுவி என்னும் பெயர் ஏற்பட்டது. காக்கை காவிரியை உண்டாக்கிய கதை பக்கம் 18. வாயசம் கவிழ்த்த பொன்னி இந்திரன் பூஞ்சோலை அமைக்க விரும்பினான். சோலைக்கு நீர் வேண்டுமாகையால், அவன் விநாயகக் கடவுளை வழிபட்டான். அவ்வமயம் பொதிகை மலையை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அகத்திய முனிவர், கமண்டலத்தைக் கீழே வைத்தபோது விநாயகர் காக்கை வடிவமாகச் சென்று கமண்டல நீரைக் கவிழ்த்துவிட்டார். அந்நீர் பெருகிக் காவிரியாறாகப் பாய்ந்தது. மன்மதனை எரித்த கதை பக்கம் 22 தாரகாசுரனை அழிப்பதற்காக முருகக்கடவுளை உதவவேண்டும் என்று தேவர்கள் சிவபெருமானை வேண்டினார்கள். அப்போது சிவபெருமான் யோகத்தில் அமர்ந்திருந்தார். யோக நிஷ்டையைக் கலைத்துப் பார்வதி மீது இச்சை கொள்ளும்படிச் செய்ய தேவர்கள் மன்மதனை வேண்டினார்கள். மன்மதன் சென்று மலர்க்கணைகளைச் சிவபெருமான்மீது எறிந்தான். அவர் நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். மன்மதன் எரிந்து சாம்பலானான். மன்மதன் மனைவி இரதி தன் கணவனைப் பிழைக்கும்படி இரந்து வேண்டினாள். சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பித்து எழுப்பி, இரதிக்கு மட்டும் தெரியும்படியும் மற்றவர்களுக்குக் காணப்படாத படியும் அமைத்தார். ஆகவே, மன்மதன் அனங்கன் (உருவம் இல்லாதவன்) என்று பெயர் பெற்றான். அவன் ஐந்துவிதமான பூ அம்புகளை எய்து சிற்றின்ப உணர்ச்சியை மனிதர் உள்ளத்தில் ஊட்டுகிறான் என்பது புராணக் கதை. கடுவுண்ட கண்டர் பக்கம் 22 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். அப்போது அக் கடலிலிருந்து சில பொருள்கள் தோன்றின. அவற்றுடன் நஞ்சும் தோன்றியது. நஞ்சைக் கண்டவுடன் அவர்கள் அஞ்சி ஓடினார்கள். சிவபெருமானிடம் சென்று பாற்கடலில் நஞ்சு வெளிப்பட்டதைக் கூறினார்கள். சிவபெருமான், ஆலால சுந்தரரை அனுப்பி நஞ்சைக் கொண்டுவரச் செய்து அதனைத் தமது வாயில் இட்டு விழுங்கினார். விழுங்கும்போது பார்வதியார், நஞ்சு உள்ளே போகாதபடி அவர் கழுத்தில் நிறுத்தினார். இதனால் சிவபெருமானுக்குக் கடுவுண்ட கண்டான் (கடு - விஷம்) என்றும், நஞ்சுண்ட கண்டன் என்றும், காள கண்டன், கறைக் கண்டன், நீலகண்டன் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. அரிச்சந்திரன் கதை பக்கம் 31 பொய் சொல்லா விரதத்தோடு வாழ்ந்த அரிச்சந்திரனைப் பொய்யனாக்க விசுவாமித்திரர் அவனுக்குப் பல துன்பங்கள் ஏற்படச் செய்கிறார். அரிச்சந்திரனிடம் பெரும்பொருளை யாகத்தின் பொருட்டு யாசித்துப் பெற்றுக்கொண்டு, அப்பொருளை அவனிடமே வைத்துப் போகிறார். பிறகு நாட்டியப் பெண்களை அனுப்பி அரசனிடமிருந்து அப்பொருள்களைத் தானமாகப் பெறும்படி செய்கிறார். பொருள் இல்லாத சமயத்தில் வந்து கேட்டு ஆட்சியைப் பெற்றுக் கொள்கிறார். இவ்வாறு பொருளையும் அரசையும் இழந்த அரிச்சந்திரன் கடைசியில் தன்னையும் தன் மனைவியையும் மகனையும் விற்கும்படியான இக்கட்டான நிலையடையும்படி செய்கிறார். கடைசியாகத் துன்பங்கள் நீங்கினார். சத்தியமே வெல்லும் என்பதை நிறுவினார். இந்திரன் உருக்கரந்த கதை பக்கம் 31 சியவன முனிவர் இந்திரனுக்கு அவிர்ப்பாகம் கொடுக்காமல், அசுவினி தேவர்களுக்குக் கொடுப்பதைக் கண்டு இந்திரன் அம் முனிவர் மேலே வச்சிராயுதத்தை எறிந்தான். அவர் அவனைச் சபித்தார். அதனால் அவன் கடலில் ஒளிந்தான் என்பது ஒரு கதை. துருவாச முனிவர் தேவேந்திரனுக்கு ஒரு மலரைக் கொடுக்க அவன் அதை வாங்கித் தான் ஏறியிருந்த ஐராவதயானையின் தலையில் வைத்தான். அந்த யானை அந்தப் பூவைத் தும்பிக்கையினால் எடுத்துத் தன் காலில் வைத்துத் தேய்த்தது. அதுகண்டு சினந்த துருவாச முனிவர் அவனை வேடனாகும்படி சபித்தார். இந்திரன் அச் சாபத்தினால் காட்டில் வேடனாகத் திரிந்தான் என்பது மற்றொரு கதை. இந்திரன் அகலிகையைக் கற்பழித்த காரணத்தினால், கௌசிக முனிவர் அவன் உடம்பு முழுவதும் பெண்குறியாகக் கடவது என்று சபிக்க, அச் சாபம் ஏற்ற இந்திரன் வெட்கி வெளியே வரமுடியாமல் மறைந்து வாழ்ந்தான் என்பது இன்னொரு கதை. கடலில் அமுதம் தோன்றிய கதை பக்கம் 97 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பை மத்தைக் கடையும் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமும் இருந்து கடைந்தபோது, அப் பாற்கடலிலிருந்து அமுதம் தோன்றியது. அமுதம் எடுக்கத் தேவர்களோடு உழைத்த அசுரர்களுக்கு உரிய பாகத்தைக் கொடுக்காமல், தேவர்கள் வஞ்சனையாக அதை எடுத்துக் கொண்டு போய்த் தாங்கள் மட்டும் அருந்தினார்கள். அமுதத்தை அருந்தியபடியால் நோயின்றி நெடுங்காலம் வாழ்ந்தார்கள். பாம்பு சந்திரனை விழுங்கிய கதை பக்கம் 126 பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அமுதம் கிடைத்தது. அந்த அமுதத்தைத் தம்முடன் உழைத்த அசுரர்களுக்குப் பங்கு கொடுக்காமல் கொண்டுபோய்த் தேவர்கள் மட்டும் பகிர்ந்து சாப்பிட் டார்கள். அப்போது இராகு கேது என்னும் இரண்டு அசுரர்கள் தேவர்கள் போல உருவம் கொண்டு தேவர்கள் அமுதம் சாப்பிடுகிற பந்தியில் போய் உட்கார்ந்தார்கள். இதையறிந்த சூரியன் சந்திரனாகிய தேவர்கள். அமுதத்தைப் பங்கிடுகிற விஷ்ணுவினிடம் குறிப்பாகத் தெரிவித்தார் கள். விஷ்ணு அவர்களை அடித்துத் துரத்தினார். அதனால், சூரிய சந்திரர்களின்மேல் பகைகொண்டு இராகு கேதுக்களாகிய அசுரர்கள் பாம்பின் உருவங் கொண்டு அவர்களை விழுங்குவதாகவும். அப்படி விழுங்குவதனால்தான் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஏற்படுகின்றன என்றும் புராணக் கதை கூறுகிறது. கஜேந்திர மோக்ஷம் பக்கம் 291 கஜேந்திரன் என்னும் யானை திருமால் மீது பக்திகொண்டு, நாள் தோறும் நீரோடையில் தாமரைப்பூவைப் பறித்துப் பெருமாளைப் பூசித்துக்கொண்டிருந்தது. ஒருநாள் ஒரு முதலை யானையின் காலைப் பிடித்து நீரில் இழுத்தது. யானையும் பலங்கொண்ட மட்டும் முதலையைக் கரைக்கு இழுத்தது. அதனால் முடியவில்லை. முதலை யானையை நீரில் இழுத்துச் சென்றது. அவ்வமயம், யானை திருமாலை நினைத்தது. திருமால் வந்து தமது கைச்சக்கரத்தினால் முதலையைக் கொன்று யானையை விடுவித்து, அதற்கு மோக்ஷம் தந்தருளினார். துகிலுரிந்த கதை பக்கம் 291 பாண்டவர் ஐவரும் கௌரவருடன் சூதாடி நாடு நகரம் முதலியவைகளைத் தோற்றனர். கடைசியில், தருமபுத்திரர், திரௌபதி யையும் பணையம் வைத்துச் சூதாடினார். அவளையும் தோற்றார். அப்போது, துரியோதனன் திரௌபதியைச் சபையில் அழைத்து அவள் துகிலை அவிழ்த்து மானபங்கம் செய்தான். திரௌபதிக்கு உதவி செய்வார் ஒருவருமிலர். அப்போது திரௌபதி, கண்ணபிரானைத் தியானம் செய்தாள். கண்ணன் திருவருளால் அவள் அணிந்திருந்த ஆடை வளர்ந்துகொண்டேயிருந்தது. இவ்வாறு கண்ணபிரான் திருவருளினால் திரௌபதி மானம் காப்பாற்றப்பட்டாள். மார்க்கண்டேயன் கதை பக்கம் 291 மார்க்கண்டேயன் என்பவர் நற்குணமும் நல்லொழுக்கமும் உடையவராயிருந்தார். ஆனால், அவருக்கு அற்பாயுள் என்பது அறிந்து அவருடைய பெற்றோர்கள் மனம் கவன்றார்கள். மார்க்கண்டேயர், தமது பெற்றோரின் மன வருத்தத்தைத் தீர்க்கும்பொருட்டுச் சிவலிங்க வழிபாடு செய்துகொண்டிருந்தார். அவருக்குப் பதினாறு வயதான போது, அவர் உயிரைக் கவர இயமன் வந்தான். மார்க்கண்டேயர் தாம் பூசைசெய்துகொண்டிருந்த சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொண்டார். இயமன் பாசக்கயிற்றை எறிந்து அவர் உயிரைக் கவர முயற்சி செய்தான். அப்போது சிவபெருமான் வெளிப்பட்டு யமனை உதைத்துத் தள்ளி மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறுவயது தந்தருளினார் என்பது புராணக் கதை. *** THE SECRET WAY By The Rt. Hon. Lord Lytton The very striking legend which suggests the following poem is found in Athenaeus, book xiii. c. 35. It is there given as a quotation from the History of Alexander, by Chares of Mitylene.’ The author adds, that ‘ the story is often told by the barbarians who dwell ia Asia, and is exceedingly admired; and they have painted representations of the story in their temples and palaces, and also in their private houses.’ In constructing the plot of the poem, I have? made some variations in incident and denouement from the meagre outlines of the old romance preserved in Athenaeus, with a view of heightening the interest which springs from the groundwork of the legend. I should add that the name of the Scythian king’s daughter is changed from Odatis, which, for narrative purpose, a little too nearly resembles that of her father, Omartes-to Argiope : a name more Hellenic it is true, but it may be reasonably doubted whether that of Odatis be more genuinely Scythian. For the sake of euphony, the name of the Persian Prince is softened from Zariadres to Zariades. This personage is said by the author whom Athenaeus quotes, to have been the brother of Hystaspes, and to have held dominion over the country from above the Caspian Gates to the river Tanais (the modern Don). Assuming that he existed historically, and was the brother of Hystaspes and uncle to Darius I, he would have held the dominions assigned to him, as a satrap under Cambyses, not as an independent sovereign. But in a romance of this kind, it would be hypercritical, indeed, to demand strict historical accuracy. Although . the hero of the legend would have been, as described, of purely Persian origin (a royal Achaemenian), and the people subjected to him would not have belonged to Media proper, in the poem he is sometimes called the Mede, and his people Medes, according to an usage sufficiently common among Greek writers when speaking generally of the rulers and people of the great Persian Empire. It may scarcely be worth while to observe that though in subsequent tales where the Hellenic deities are more or less prominently introduced or referred to, their Hellenic names are assigned to them, yet in the passing allusions made in this poem to the God of War or the Goddess of Morning, it was judged more agreeable to the general reader to designate those deities by the familiar names of Mars and Aurora, rather than by the Greek appellations of Ares and Eos. MARTES, King of the wide plains which, north , Of Tanais, pasture steeds for Scythian Mars, Forsook the simple ways And Nomad tents of his unconquered fathers; 4 And in the fashion of the neighbouring Medes, Built a great city girt with moat and wall, And in the midst thereof A regal palace dwarfing piles in Susa 8 With vast foundations rooted into earth, And crested summits soaring into Heaven, And gates of triple brass, Siege - proof as portals welded by the Cyclops. 12 One day Omartes, in his pride of heart, Led his High Priest, Teleutias, thro’ his halls, And chilled by frigid looks, When counting on warm praise, asked - ‘What is wanting? 14 ‘Where is beheld the palace of a king, So stored with all that doth a king beseem; The woofs of Phrygian looms, The gold of Colchis, and the pearls of Ormus, 20 ‘Couches of ivory sent from farthest Ind, Sidonian crystal, and Corinthian Bronze, Egypt’s vast symbol gods, And those imagined into men by Hellas; 24 ‘Stored not in tents that tremble to a gale, But chambers firm - based, as the Pyramids, And breaking into spray The surge of Time, as Gades breaks the ocean?’ 28 Nor thou nor I the worth of these things now Can judge ; we stand too near them; said the sage. None till they reach the tomb Scan with just eye the treasures of the palace. 32 But for the building - as we speak, I feel Thro’ all the crannies pierce an icy wind More bitter than the blasts Which howled without the tents of thy rude fathers. 36 Thou hast forgot to bid thy masons close The chinks of stone against Calamity.’ The sage inclined his brow, Shivered, and, parting, round him wrapt his mantle. 40 The king turned, thoughtful, to a favourite chief, The rudest champion of the polished change That fixed the wain - borne homes Of the wild Scythian, and encamped a city; 44 ‘Heard’st thou the Sage, brave Seuthes ?’ asked the King. Yea, the priest deemed thy treasures insecure, And fain would see them safe In his own temple;’ The King smiled on Seuthes. 48 Unto this Scythian monarch’s nuptial bed But one fair girl, Argiope was born: For whom no earthly throne Soared from the level of his fond ambition. 52 To her, indeed, had Aphrodite given Beauty, that royalty which subjects kings, Sweet with unconscious charm, And modest as the youngest of the Graces. 56 Men blest her when she moved before their eyes Shame - faced, as blushing to be born so fair, Mild as that child of gods Violet - crowned Athens hallowing named ‘Pity,’* 60 Now, of a sudden, over that bright face There fell the shadow of some troubled thought, As cloud, from purest dews Updrawn, makes sorrowful a star in heaven: 64 And as a nightingale that having heard A perfect music from some master’s lyre, Steals into coverts lone, With her own - melodies no more contented, 68 But haunted by the strain, till then unknown, Seeks to re - sing it back, herself to charm. Seeks still and ever fails, Missing the key - note which unlocks the music,- 72 So, from her former pastimes in the choir Of comrade virgins, stole Argiope, Lone amid summer leaves Brooding that thought which was her joy and trouble. 76 The King discerned the change in his fair child, And questioned oft, yet could not learn the cause; The sunny bridge between The lip and heart which childhood builds was broken. 80 Not more Aurora, stealing into heaven, Conceals the mystic treasures of the deep Whence with chaste blush she comes, Than virgin bosoms guard their earliest secret. 84 Omartes sought the priest, to whose wise heart So dear the maiden, he was wont to say That grains of crackling salt From her pure hand, upon the altar sprinkled, 88 Sent up a flame to loftier heights in heaven Than that which rolled from hecatombs in smoke. ‘King,’ said the musing seer, ‘Behold, the woodbine, opening infant blossoms, 92 ‘Perfumes the bank whose herbage hems it round, From its own birthplace drinking in delight; Later, its instinct stirs; Fain would it climb - to climb forbidden, creepeth, 96 ‘Its lot obeys its yearning to entwine; Around the oak it weaves a world of flowers; Or, listless drooping, trails Dejected tendrils lost mid weed and briar. 100 ‘There needs no construing to my parable: As is the woodbine’s, so the woman’s life: Look round the forest kings, And to the stateliest wed thy royal blossom.’ 104 Sharp is a father’s pang when comes the hour In which his love contents his child no more, And the sweet wonted smile Fades from his hearthstone to rejoice a stranger’s. 108 But soon from parent love dies thought of self; Omartes, looking round the Lords of earth, In young Zariades Singled the worthiest of his peerless daughter; 112 Scion of that illustrious hero - stem, Which in great cyrus bore the loftiest flower Purpled by Orient suns; Stretched his vast satrapies, engulphing kingdoms, 116 From tranquil palmgroves fringing Caspian waves, To the bleak marge of stormy Tanais; On Scythia bordering thus, No foe so dread, and no ally so potent 120 Perilous boundary - rights by Media claimed O’er that great stream which, laving Scythian plains, Europe from Asia guards, The Persian Prince, in wedding Scythia’s daughter 124 Might well resign, in pledge of lasting peace But ill the project of Omartes pleased His- warlike free - born chiefs, And ill the wilder tribes of his fierce people; 128 For Scyth and Mede had long been as those winds Whose very meeting in itself is storm, Yet the King’s will prevailed, Confirmed, when wavering, by his trusted Seuthes. 132 He, the fierce leader of the fiercest horde, Won from the wild by greed of gain and power, Stood on the bound between Man social and man savage, dark and massive : 136 So rugged was he that men deemed him true, So secret was he that men deemed him wise, And he had grown so great, The throne was lost behind the subject’s shadow. 140 In the advice he whispered to the king He laid the key - stone of ambitious hope, This marriage with the Mede Would leave to heirs remote the Scythian kingdom, 144 Sow in men’s minds vague fears of foreign rule, Which might, if cultured, spring to armed revolt. In armed revolt how oft Kings disappear, and none dare call it murder. 148 And when a crown falls bloodstained in the dust, The strong man standing nearest to its fall Takes it and crowns himself; And heirs remote are swept from earth as rebels. 152 Of peace and marriage-rites thus dreamed the king; Of graves and thrones the traitor ; while the fume From altars, loud with prayer To speed the Scythian envoys, darkened heaven. 156 A hardy prince was young Zariades, Scorning the luxuries of the loose - robed Mede, Cast in the antique mould Of men whose teaching thewed the sould of Cyrus. 160 To ride, to draw the bow, to speak the truth, Sufficed to Cyrus,’ said the prince, when child. ‘Astyages knew more’ Answered the Magi - ‘Yes, and lost his kingdoms.’ 164 Yet there was in this prince the eager mind Which needs must think, and therefore needs must learn; Natures, whose roots strike deep, Clear their own way, and win to light in growing. 168 His that rare beauty which both charms and awes The popular eye ; his the life-gladdening smile; His the death - dooming frown; That which he would he could; men loved and feared him. 172 Now of a sudden over this grand brow There fell the gloom of some unquiet thought, As when the south wind sweeps Sunshine from Hadria in a noon of summer: 176 And as a stag, supreme among the herd, With lifted crest inhaling lusty air, Smit by a shaft from far, Deserts his lordly range amidst the pasture, 180 And thro’ dim woodlands with drooped antlers creeps To the cool marge of rush-grown watersprings; So from all former sports, Contest, or converse with once-loved companions, 184 Stole the young prince thro’ unfrequented groves, To gaze with listless eyes on lonely streams. All, wondering, marked the change, None dared to question; he had no fond father. 188 Now, in the thick of this his altered mood, Arrived the envoys of the Scythian king. Reluctant audience found, And spoke to ears displeased their sovereign’s message. 192 ‘Omartes greets Zariades the Mede: Between the realms of both there rolls a river Inviolate to the Scyth, Free to no keels but those the Scythian charters: 196 Yet have thy subjects outraged oft its waves. And pirate foray on our northern banks Ravaged the flocks and herds, Till Scythian riders ask “Why sleeps the Ruler?” 200 ‘Still, loth to fan the sparks which leap to flame Reddening the nations, from the breath of kings; We have not sought thy throne With tales of injury or appeals to justice; 204 ‘But searching in our inmost heart to find The gentlest bond wherewith to link our realms, Make scyth and Mede akin, By household ties their royal chiefs uniting, 208 We strip our crown of its most precious gem, Proffering to thee our child Argiope: So let the Median Queen Be the mild guardian of the Scythian river. 211 Lifting his brow, replied Zariades: Great rivers are the highways of the world: The Tanais laves my shores; For those who dwell upon my shores I claim it. 216 If pirates land on either side for prey, My banks grow herdsmen who can guard their herds; Take, in these words, reply To all complaints that threaten Median subjects. 220 But for the gentler phrase wherewith your king Stoops to a proffer, yet implies command, I pray you, in return, To give such thanks as soften most refusal. 224 ‘Thanks are a language kings are born to hear, But speak not glibly till they near their fall, To guard his Scythian realm, On the Mede’s throne the Scyth would place his daughter; 228 ‘I should deceive him if I said “Agreed.:” No throne, methinks, hath room for more than one; Where a Queen’s lips decide or peace or war, she slays the king her husband. 232 ‘Thus thinking, did I wed this Scythian maid, It were no marriage between Mede and Scyth; Nor wrong I unseen charms; Love, we are told, comes like the wind from heaven. 236 ‘Not at our bidding, but its won free will. And so depart - and pardon my plain speech. That which I think I say, Offending oft - times, but deceiving never’. 240. So he dismissed them, if with churlish words, With royal present, and to festal pomps, But one, by Median law Nearest his throne, the chief priest of the Magi, 244 Having heard all with not unprescient fears, Followed the Prince and urged recall of words Which, sent from king to king, Are fraught with dragon seeds, whose growth is armies. 248 Mute, as if musing in himself, the Prince Heard the wise counsel to its warning close. Then, with a gloomy look, Gazed on the reader of the stars, and answered 252 Leave thou to me that which to me belongs; My people need the Tanais for their rafts; Or soon or late that need Strings the Mede’s bow, and mounts the Scythian rider. 256 Mage, I would pluck my spirit from the hold Of a strong phantasy, which, night and day, Haunts it, unsinews life, And makes my heart the foe of my own reason. 260 Perchance in war, the gods ordain my cure; And courting war, I to myself give peace. Startled by these wild words, The Mage, in trust-alluring arts long - practised, 264 Led on the Prince to unfold their hidden sense; And having bound the listener by the oath Mage never broke, to hold Sacred the trust, the King thus told his trouble. 268 Know that each night (thro’ three revolving moons) An image comes before me in a dream; Ever the same sweet face, Lovely as that which blest the Carian’s slumber. 272 Nought mid the dark - eyed daughters of the East, Nought I have ever seen in waking hours, Rivals in charm this shape Which hath no life - unless a dream hath substance. 276 ‘But never yet so clearly visible, Nor with such joy in its celestial smile Hath come the visitant, Making a temple of the soul it hallows, 280 As in the last night’s vision; there it stooped Over my brow, with tresses that I touched. With love in bashful eyes, With breath whose fragrance lingered yet in waking, 284 And balmed the morn, as when a dove, that brings Ambrosia to Olympus, sheds on earth Drops from a passing wing: Surely the vision made itself thus living 288 To test my boast, that truth so fills this soul It could not lodge a falsehood ev’n in dream: Wonderest thou, Magian, now, Why I refuse to wed the Scythian’s daughter ? 292 And if I thus confide to thee a tale I would not whisper into ears profane, Tis that where reason ends, Men have no choice between the Gods and Chaos. 296 Ye Magi are the readers of the stars, Versed in the language of the world of dreams: Wherefore consult thy lore, And tell me if Earth hold a mortal maiden 300 In whom my nightly vision breathes and moves. If not, make mine such talismans and spells, As banish from the soul Dreams that annul its longing for the daylight. 304 Up to his lofty fire-tower climbed the mage, Explored the stars and drew Chaldaean schemes; Thrid the drak maze of books Opening on voids beyond the bounds of Nature; 308 Placed crystal globes in hands of infants pure; Invoked the demonds haunting impious graves; And all, alas, in vain; The dream, adjured against itself to witness, 312 Refused to. wander from the gate of horn, To stars, scrolls, crystals, infants, demons, proof. Foiled of diviner lore The Mage resumed his wisdom as a mortal; 316 And since no Mage can own his science fails, But where that solves not, still solution finds, So he resought the King, Grave-browed as one whose brain holds Truth new - captured:320 Saying, ‘O King, the shape thy dreams have glassed Is of the Colchian Mother of the Medes; When, on her dragon car, From faithless Jason rose subline Medea, 324 Refuge at Athens she with Aegeus found; To him espoused she bore one hero - son, Medus, the Sire of Medes; And if that form no earthly shape resembles 328 What marvel? for her beauty witched the world, Ev’n in an age when woman lured the gods; Retaining yet dread powers (For memories die not) of her ancient magic, 332 Her spirit lingers in these Orient airs, And guards the children of her latest love, Thus, hovering over thee, She warms they heart to love in her - those children. 336 As in her presence thou didst feel thy soul Lodged in a temple, so the Queen commands That thou restore the fanes And deck the altars where her Medus worshipped; 340 And in the spirit - breath which balmed the morn Is symbolized the incense on our shrines, Which, as thou renderest here, Shall waft thee after death to the Immortals. 344 Seek, then, no talisman against the dream, Obey its mandates, and return its love; So shall thy reign be blest, And in Zariades revive a Medus. 348 ‘Friend,’ sighed the King, ‘albeit I needs must own All dreams mean temples, where a Mage explains, Yet when a young man dreams Of decking altars, ’tis not for Medea, 352 He said and turned to lose himself in groves, Shunning the sun. In wrath against the stars The Mage resought his tower. And that same day went back the Scythian envoys. 356 But from the night which closed upon that day, The image of the dream began to fade, Fainter and paler seen, With saddened face and outlines veiled in vapour; 360 At last it vanished as a lingering star Fades on Cithaeron from Maenad’s eyes, Mid cymbal, fife, and horn, When sunrise flashes on the Car of Panthers. 364 As the dream fled, broke war upon the land; The “Scythian hosts had crossed the Tanais. And, where the dreamer dreamed, An angry King surveyed his Asian armies. 368 Who first in fault, the Scythian or the Mede, Who first broke compact, or transgressed a bound, Historic scrolls dispute As Scyth or Mede interprets dreams in story. 372 Enough for war when two brave nations touch, With rancour simmering in the hearts of kings: War is the child of cloud Oftentimes stillest just before the thunder. 376 The armies met in that vast plain whereon The Chaldee, meting out the earth, became The scholar of the stars, - A tombless plain, yet has it buried empires. 380 At first the Scythian horsemen, right to left, Broke wings by native Medes outstretched for flight, But in the central host Stood Persia’s sons, the mountain race of Cyrus; 384 And in their midst, erect in golden car With looks of scorn, Zariades the King; And at his trumpet voice Steed felt as man that now began the battle. 388 Up, sons of Persia, Median women fly; And leave the field to us whom gods made men: The Scythian chases well Yon timorous deer; how let him front the lions. 392 He spoke, and light - touched by his charioteer Rushed his white steeds down the quick - parted lines; The parted lines quick - closed, Following that car as after lightning follow 396 The hail and whirlwind of collected storm: The Scyths had scattered their own force in chase, As torrents split in rills The giant waves whose gathered might were deluge; 400 And, as the Scythian strength is in the charge Of its fierce riders, so that charge, misspent, Left weak the ignobler ranks, Fighting on foot; alert in raid or skirmish, 404 And skilled in weapons striking foes from far, But all untaught to front with levelled spears, And rampart-line of shields, The serried onslaught of converging battle: 408 Wavering, recoiling, turning oft, they fled; Omartes was not with them to uphold; Foremost himself had rode Heading the charge by which the Medes were scattered; 412 And when, believing victory won, he turned His bloody reins back to the central war, Behold, - a clud of dust, And thro’ the cloud the ruins of an army! 416 At sunset, sole king on that plain, reigned Death. Far off, the dust-cloud rolled; far off, behind A dust-cloud followed fast; The hunted and the hunter, Flight and Havoc 420 ‘With the scant remnant of his mighty host (Many who ‘scaped the foe forsook their chief For plains more safe than walls.) The Scythian King repassed his brazen portals, 424 In haste he sent to gather fresh recruits Among the fiercest tribes his fathers ruled, They whom a woman led When to her feet they tossed the head of Cyrus. 428 And the tribes answered - ‘Let the Scythian King Return repentant to old Scythian ways, And la.ugh with us at foes. Wains know no sieges - Freedom moves her cities 432 Soon came the Victor with his Persian guards, And all the rallied vengeance of his Medes; One night, sprang up dread camps With lurid watch-lights circling doomed ramparts, 436 As hunters round the wild beasts in their lair Marked for the javelin, wind a belt of fire. Omartes scanned his walls And said, ‘Ten years Troy baffled Agamemnon. 440 Yet pile up walls, out-topping Babylon, Manned foot by foot with sleepless sentinels, And to and fro will pass, Free as the air thro keyholes, Love and Treason. 444 Be elsewhere told the horrors of that siege, The desperate sally, slaughter, and repulse; Repelled in turn the foe, With Titan ladders scaling cloud - capt bulwarks, 448 Hurled back and buried under rocks heaved down By wrathful hands from scatheless battlements. With words of holy charm, Soothing despair and leaving resignation, 452 Mild thro’ the city moved Argiope, Pale with a sorrow too divine for fear; And when, at morn and eve, She bowed her meek head to her father’s blessing, 456 Omartes felt as if the righteous gods Could doom no altars at whose foot she prayed. Only, when all alone, Stole from her lips a murmur like complaint, 460 Shaped in these words, ‘Wert thou, then, but a dream? Or shall I see thee in the Happy Fields ? Now came with stony eye The livid vanquisher of cities. Famine; 464 And moved to pity now, the Persian sent Heralds with proffered peace on terms that seem Gentle to Asian kings, And unendurable to Europe’s Freemen; 468 I from thy city will withdraw ray hosts, And leave thy people to their chiefs and laws, Taking from all thy realm Nought save the river, which I make my border, 472 If but, in homage to my sovereign throne, Thou pay this petty tribute once a year; Six grains of Scythian soil, One urn of water spared from Scythian fountains. 476 And the Scyth answered - ‘Let the Mede demand That which is mine to give, or gold or life; The water and the soil Are, every grain and every drop, my country’s: 480 And no man hath a country where a King, Pays tribute to another for his crown. And at this stern reply, The Persian doomed to fire and sword the city. 484 Omartes stood within his palace hall, And by his side Teleutias, the high priest. ‘And rightly,’ said the King, ‘Did thy prophetic mind rebuke vain - glory. 488 ‘Lend me thy mantle now; I feel the wind Pierce through the crannies of the thick-ribbed stone. ‘No wind lasts long,’ replied, With soothing voice,- the hierarch. Calm and tempest 492 ‘Follow .each other in the outward world, And joy and sorrow in the heart of man: Wherefore take comfort now, The earth and water of the Scyth are grateful, 496 ‘And as thou hast, inviolate to the Scyth, His country saved, that country yet to thee Stretches out chainless arms, And for these walls gives plains that mock besiegers, 500 Traversed by no invader save the storm, Nor girt by watchfires nearer than the stars. Beneath these regal halls, Know that there lies a road which leads to safety. 504 ‘For, not unpresicent of the present ills When rose thy towers, the neighbours of the cloud, I, like the mole, beneath, Worked path secure against cloud - riving thunder. 508 ‘Employing Aethiops skilled not in our tongue, Held day and night in the dark pass they hewed: And the work done, sent home: So the dumb earthworm shares alone the secret. 512 ‘Lo, upon one side ends the unguessed road There, - its door panelled in yon far recess, Where, on great days of state, Oft has thy throne been set beneath the purple; 5l6 ‘The outward issue opes beyond the camp, Mid funeral earth mounds, skirting widths of plain, Where graze the fleetest steeds, And rove the bravest riders Scythia nurtures, 520 They whom thou ne’er could’st lure to walls of stone, Nor rouse to war, save for their own free soil. These gained, defy the foe; Let him pursue and space itself engulphs him. 524 Omartes answered - ‘With the towers I built Must I, O Kind adviser, stand or fall. Kings are not merely men - Epochs their lives, their actions the world’s story. 528 I sought to wean my people from the wild, To centre scattered valours, wasted thoughts, Into one mind, a State; Failing in this, my life as king has perished: 532 And as mere man I should disdain to live. Deemest thou now I could go back content A Scytb among the scyths ? I am no eaglet - I have borne the aegis. 536 ‘But life, as life, suffices youth for joy. Young plants win sunbeams, shift them as we may. So to the Nomad tribes Lead thou their Queen. - O sa”ve, ye gods, my daughter!’ 540 The king’s proud head bowed o’er the hierarch’s breast. ‘Not unto me confide that precious charge,’ Replied the sweet voiced seer ; Thou hast a choice of flight, I none. Thou choosest 544 ‘To stand or fall, as stand or fall thy towers; Priests may not choose; they stand or fall by shrines. Thus stand we both, or fall, Thou by the throne, and I beside the altar. 548 But to thy child, ev’n in this funeral hour, Give the sole lawful guardian failing thee; Let her free will elect From thy brave warriors him her heart most leans to; 552 ‘And pass with him along the secret way. To lengthen yet the line of Scythian Kings, Meanwhile, since needs must be We trust to others this long-guarded secret. 556 Choose one to whom I may impart the clue Of the dark labyrinth; for a guide it needs; Be he in war well tried, And of high mark among the Nomad riders; 560 Such as may say unto the antique tribes With voice of one reared up among themselves, From walls of stone I bring Your King’s child to your tents; let Scythia guard her 564 ‘Well do thy counsels please me,’ said the King. ‘I will convene to such penurious feast , As stint permits, the chiefs Worthiest to be the sires of warlike monarchs: 568 ‘And, following ancient custom with the Scyths, He unto whom my daughther, with free choice, The wine - cup brimming gives, Shall take my blessing and go hence her husband. 572 ‘But since, for guide and leader of the few That for such service are most keen and apt, The man in war most tried, And with the Nomads most esteemed, is Seuthes, 576 Him to thy skilled instructions and full trust Will I send straight. Meanwhile go seek my child, And, as to her all thought Of her own safety in mine hour of peril 580 Will in itself be hateful, use the force That dwells on sacred lips with blandest art; Say that her presence here Palsies mine arm and dulls my brain with terror; 584 That mine own safety I consult in hers, And let her hopeful think, that, tho’ we part, The same road opes for both; And if walls fail me, hers will be my refuge. 588 Omartes spoke, and of his stalwart chiefs ‘Selecting all the bravest yet unwived, He bade them to his board The following night, on matters of grave import; 592 To Seuthes then the secret he disclosed, And Seuthes sought the hiefarch, conned the elite. And third the darksome maze To either issue, sepulchre and palace; 596 And thus instructed, treasu’re, town, and king Thus in his hands for bargain with the foe The treason schemed of yore, Foiled when the Mede rejected Scythian nuptials, 600 Yet oft revolved - as some pale hope deferred, Seen indistinct in rearward depths of time Flashed as, when looked for least, Thro’ the rent cloud of battle flashes triumph. 604 And. reasoning with himself, ‘the Mede’, he said ‘Recks not who sits upon the Scythian throne, So that the ruler pay Grains of waste soil and drops of useless water: 608 And if I render up an easy prey The senseless king refusing terms so mild, For such great service done And for my rank among the Scythian riders, 612 ‘The Mede would deem no man so fit as I To fill the throne; whose heir he scorned as wife, And yield him dust and drops, Holding the fealmS.and treasures of Omartes.’ 616 So, when the next day’s sun began to slope, The traitor stood before Zariades, Gaining the hostile camp From the mute grave.mound of his Scythian fathers. 620 Plain as his simplest soldier’s was the tent Wherein the lord of half the Orient sate, Alone in anxious thought, Intent on new device to quicken conquest. 624 But for the single sapphire in his helm, And near his hand the regal silver urn, Filled with the sparkling lymph, Which, whatsoe’er the distance, pure Choaspes 628 Sends to the lips of Achaemenian kings, The Asian ruler might to Spartan eyes Have seemed the hardy type Of Europe’s manhood crowned in Lacedaemon. 632 The traitor, sure of welcome, told his tale, Proffered the treason and implied the terms. Then spoke Zariades; ‘Know that all kings regard as foe in common 636 ‘The man who is a traitor to his king. ’Tis true that I thy treason must accept. I owe it to my hosts To scorn no means destroying their destroyer, 640 ‘But I will place no traitor on a throne. Yet, since thy treason saves me many lives, I for their sake spare thine: And since thy deed degrades thee from the freeman, 644 ‘I add to life what slaves most covet - gold They service done, seek lands where gold is king; And, tho’ thyself a slave, Buy freemen vile eno’ to call thee master. 648 But if thy promise fail, thy word ensnare, Thy guidance blunder, by they side stalks death. Death does not scare the man Who, like thyself, has looked on it in battle; 652 ‘But death in battle has a warrior’s gravel; A traitor dead - the vultures and the dogs. Then to close guard the King Consigned the Scyth, who for the first time trembled; 656 And called in haste, and armed his Sacred Band, The Persian flower of all his Orient hosts; And soon in that .dark pass Marched war, led under rampired walls by treason. 660 Safe thro’, the fatal maze the Persians reached Stairs winding upward into palace halls, With stealthy hand the guide, Pressed on the spring of the concealed portal, 664 And slowly opening, peered within: the space Stood void; for so it had been planned, that none Might, when the hour arrived Obstruct the spot at which escape should vanish: 668 But farther on, voices were heard confused, And lights shone faintly thro’ the chinks of doors, Where one less spacious hall Led, also void, to that of fated banquet. 672 Curious, and yielding to his own bold heart, As line on line came, steel-clad, from the wall, Flooding funereal floors, The young King whispered, ‘Here await my signal,’ 676 And stole along the intervening space, At whose far end, curtains of Lydian woof, Between vast columns drawn, Left a slight crevice where their folds disparted; 680 He looked within, unseen; all eyes were turned Towards a pale front, just- risen o’er the guests, In which the Persian knew His brother King; it was not pale in battle. 684 And thus Omartes spoke: - ‘Captains and sons Of the same mother, Scythia, to this feast, Which in such straits of want Needs strong excuse, not idly are ye summoned. 688 Wishing the line of kings from which I spring Yet to extend, perchance, to happier times, And save mine only child From death, or, worse than death, the Median bondage, 692 ‘I would this night betroth her as a bride To him amongst you whom herself shall choose; And the benignant gods Have, thro’ the wisdom of their sacred augur, 696 ‘Shown me the means which may elude the foe, And lead the two that in themselves unite The valour and the sway Of Scythia where her plains defy besiegers. 700 If the gods bless the escape they thus permit, Braved first, as fitting, by a child of kings, Then the same means will free Flight for all those who give to siege its terror; 704 Women and infants, wounded men and old, If few by few, yet night by night, sent forth, Will leave no pang in death To those reserved to join the souls of heroes. 708 As, in the hush of eve, a sudden wind Thrills thro’ a grove and bows the crest of pines, So crept a murmured hum Thro’ the grave banquet, and plumed heads bent downward: 712 Till hushed each whisper, and upraised each eye, As from a door behind the royal dais Into the conclave came The priest Teleutias leading the King’s daughter. 716 ‘Lift up thy veil, my child, Argiope,’ Omartes said. ‘And look around the board, And from yon beakers fill The cup I kiss as in thy hand I place it. 720 ‘And whosoever from that hand receives The cup, shaH. be thy husband and my son.’ The virgin raised her veil; Shone on the hall the starlight of her beauty. 724 But to no face amid the breathless guests Turned downcast lids from which the tears dropped slow: Passive she took the cup, With passive step led by the whispering augur 728 Where, blazing lustre back upon the lamps, Stood golden beakers under purple pall. ‘Courage, ‘said low the priest, ‘So may the gods, for thy sake, save thy father !’ 732 She shivered as he spoke, but, lips firm - prest Imprisoning all the anguish at her heart, She filled the fatal cup, Raised her sad eyes, and vaguely gazed around her. 736 Sudden those eyes took light and joy and soul, Sudden from neck to temples flushed the rose, And with quick, gliding steps, And the strange looks of one who walks in slumber, 740 She passed along the floors, and stooped above A form, that, as she neared, with arms outstretched, On bended knees sunk down And took the wine - cup with a hand that trembled: 744 A form of youth - and nobly beautiful As Dorian models for Ionian gods. ‘Again!’ it murmured low, ‘O dream, at last! at last! how I have missed theel’ 748 And she replied, ‘The gods are merciful, Keeping me true to thee when I despaired. But now from every guest Burst the quick cry of anger and of terror; 752 For rose the kneeler, rose that sovereign front Dire to the lives of men as Mars, the star; Zariades the Mede! Rang from each lip: flashed from, each sheath the sabre: 756 Thrice stamped the Persian’s foot: to the first sound Ten thousand bucklers echoed back a clang; The next, and the huge walls Shook with the war-shout of ten thousand voices; 760 The third, and as between divided cloud Flames fierce with deathful pest an angry sun, The folds, flung rudely back, Disclosed behind one glare of serried armour. 764 On either side, the Persian or the Scyth, The single lord of life and death to both, Stayed, by a look, vain strife; And passing onward amid swords uplifted, 768 A girl’s slight form beside him his sole guard, He paused before the footstool of the King, And in such tones as soothe The wrath of injured fathers, said submissive - 772 I have been guilty to the gods and thee Of man’s most sinful sin, - ingratitude; That which I pined for most Seen as a dream, my waking life rejected; 776 Now On my knees that blessing I implore. Give me thy daughter; but a son receive, And blend them both in one As the mild guardian of the Scythian River.’ 780 A BALLAD By OLIVER GOLDSMITH “ Turn, gentle hermit of the dale, And guide my lonely way, To where yon taper cheers the vale. With hospitable ray. “ For here, forlorn and lost tread, With fainting steps and slow; Where .wilds immeasurably spread, Seem lengthening as I go”. “ Forbear, my son,” the hermit cries, “To tempt the dangerous gloom; For yonder faithless phantom flies To lure thee to thy doom. “ Here to the houselesss child of want, My door is open still; And tho’ my portion is but scant, I give it with good will. “ Then turn to-night, and freely share Whate’er my cell bestows; My rushy couch, and frugal fare, My blessing and repose. “ No flocks that range the valley free, To slaughter I condemn: Taught by that power that pities me, I learn to pity them. “ But from the mountain’s grassy side A guiltless feast I. bring; A scrip with herbs and fruits supply’d, And water from the prisng. “ Then, pilgrim, turn, thy cares forego; All earth-born cares are wrong: Man wants but little here below, Nor wants that little long.” Soft as the dew from heav’n descends, His gentle accents fell; The modest stranger lowly bends, And follows to the cell. Far in a wilderness obscure The lonely mansion lay, A refuge to the neighbouring poor And strangers led astray. No Stores beneath its humble thatch Requir’d a master’s care; The wicket opening with a latch, Receiv’d the harmless pair. And now when busy crowds retire To take their evening rest, The hermit trimm’d his little fire, And cheer’d his pensive guest; And spread his vegetable store, And gayly prest, and smil’d, And skill’d in legendary lore. The lingering hours bcguil’d. Around in sympathetic mirth Its tricks the kitten tries, The cricket chirrups in the hearth; The crackling faggot flies. But nothing could a charm impart To sooth the stranger’s woe; For grief was heavy at his heart, And tears began to flow. His rising cares the hermit spy’d, With answering care opprest: “ And whence, unhappy youth,” he cry’d, “The sorrows of thy breast ? “ From better habitations spurn’d, Reluctant dost thou rove; Or grieve for friendship unreturn’d, Or unregarded love? “ Alas! the joys that fortune brings Are triflingi and decay; And those who prize the paltry things, More trifling still than they. “ And what is friendship but a name, A charm that lulls to sleep; A shade that follows wealth or fame, But leaves the wretch to weep ? “ And love is still an emptier sound, The modern fair one’s jest, On earth unseen, or only found To warm the turtle’s nest. “ For shame, fond youth, thy sorrows hush, And spurn the sex,” he said: But, while he spoke, a rising blush His love-lorn guest betray’d. Surpriz’d he sees new beauties rise Swift mantling to the view, Like colours o’er the morning skies, As bright, as transient too. The bashful look, the rising breast, Alternate spread alarms, The lovely stranger stands confest A maid in all her charms. And “ah, forgive a stranger rude, A wretch forlorn,” she cry ‘d, “ Whose feet unhallowed thus intrude Where heaven and you reside. “ But let a maid thy pity share. Whom love has raught to stray; Who seeks for rest, but finds despair Companion of her way. “ My father liv’d beside the Tyne, A wealthy lord was he; And all his wealth was Vark’d as mine, He had but only me. “ To win me from his tender arms. Unnumber’d suitors came; Who prais’d me for imputed charms, And felt or feign’d flame. “ Each hour a mercenary crowd With richest proffers strove, Amongst the rest young Edwin bow’d, But never talk’d of love. *** மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் தொகுதி வரிசைகள் தொகுதி - 1 : பண்டைத் தமிழக வரலாறு: சேரர் - சோழர் - பாண்டியர் இத்தொகுதியில் சங்க கால தமிழ் மன்னர்கள் குறித்த இலக்கியம் மற்றும் ஆவணங்கள் சார்ந்த வரலாற்று ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இப்பொருளில் தனி நூலாக இப்போதுதான் தொகுக்கப்படுகின்றது. பல்வேறு நூல்களில் இடம்பெற்றவை இங்கு ஒருசேர உள்ளன. தொகுதி - 2 : பண்டைத் தமிழக வரலாறு: கொங்கு நாடு - பாண்டியர் - பல்லவர் - இலங்கை வரலாறு பண்டைத் தமிழகத்தில் கொங்கு பகுதி தனித் தன்மை யோடு விளங்கிய பகுதியாகும். மயிலை சீனி. வேங்கட சாமி அவர்கள் கொங்கு பகுதிகள் குறித்து செய்த ஆய்வுகள் இங்கு தொகுக்கப்படுகின்றன. பல்லவ மன்னர்கள் பற்றித் தனித்தனியான நூல்களை மயிலை சீனி அவர்கள் எழுதினார். இவற்றிலிருந்து மன்னர்கள் குறித்து வரலாறுகள் மட்டும் இத்தொகுதியில் தொகுக்கப் படுகின்றன. பாண்டியர்கள் குறித்த தகவல்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை தமிழர் வரலாறு குறித்துப் பல இடங்களில் மயிலை சீனி அவர்கள் எழுதியுள்ளவை இத்தொகுதியில் இணைக்கப்படுகின்றன. தொகுதி - 3 : பண்டைத் தமிழக வரலாறு: களப்பிரர் - துளு நாடு இருண்ட காலம் என்று கூறப்பட்ட வரலாற்றில் ஒளி பாய்ச்சிய ஆய்வு களப்பிரர் பற்றிய ஆய்வு ஆகும். இன்றைய கர்நாடகப் பகுதியிலுள்ள துளு நாடு பற்றியும் இவர் எழுதியுள்ளார். இவ்விரண்டு நூல்களும் இத் தொகுதியில் இடம்பெறுகின்றன. தொகுதி - 4 : பண்டைத் தமிழகம்: வணிகம் - நகரங்கள் மற்றும் பண்பாடு மயிலை சீனி பல்வேறு தருணங்களில் எழுதிய பண்டைத் தமிழர்களின் வணிகம், பண்டைத் தமிழக நகரங்கள் மற்றும் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 5 : பண்டைத் தமிழகம்: ஆவணம் - பிராமி எழுத்துகள் - நடுகற்கள் தமிழர்களின் தொல்லெழுத்தியல் தொடர்பான ஆய்வுகள் தமிழில் மிகக்குறைவே. களஆய்வு மூலம் மயிலை சீனி அவர்கள் கண்டறிந்த பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான ஆய்வுகள் இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. தொகுதி - 6 : பண்டைத் தமிழ் நூல்கள்: காலஆராய்ச்சி - இலக்கிய ஆராய்ச்சி பண்டைத் தமிழ் நூல்களின் காலம் பற்றிய பல்வேறு முரண்பட்ட ஆய்வுகள் தமிழில் நிகழ்ந்துள்ளன. மயிலை சீனி அவர்கள் தமது கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் குறித்துச் செய்து கால ஆய்வுகள் இத் தொகுதியில் தொகுக்கப்படுகின்றன. தமிழ்க் காப்பியங் கள் மற்றும் பல இலக்கியங்கள் குறித்து மயிலை சீனி அவர்கள் செய்த ஆய்வுகளும் இத் தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 7 : தமிழகச் சமயங்கள்: சமணம் ‘சமணமும் தமிழும்’ என்ற பொருளில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறு கின்றது. சமணம் குறித்து இவர் எழுதிய வேறு பல கட்டுரைகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 8 : தமிழகச் சமயங்கள்: பௌத்தம் ‘பௌத்தமும் தமிழும்’ என்னும் பொருளில் இவர் எழுதிய ஆய்வுகள் இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. பௌத்தம் தொடர்பாக பல்வேறு இடங்களில் மயிலை சீனி எழுதிய கட்டுரைகள் அனைத்தும் இத்தொகுதி யில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 9 : தமிழில் சமயம்: கௌதமபுத்தரின் வாழ்க்கை புத்தரின் வரலாறு புத்த ஜாதகக் கதைகளை அடிப்படை யாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இவ்வகையில் மயிலை சீனி அவர்கள் எழுதிய புத்தரின் வாழ்க்கை வரலாறு இத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தொகுதி - 10 : தமிழில் சமயம்: பௌத்தக் கதைகள் - இசைவாணர் கதைகள் 1940 முதல் பௌத்தக் கதைகளை தமிழில் மொழி பெயர்த்தவர் மயிலை சீனி. பௌத்தக் கலைவாணர்களின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் தொகுத்துள்ளார். இவ் விரண்டு நூல்களும் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. தொகுதி - 11 : தமிழில் சமயம்: புத்த ஜாதகக் கதைகள் புத்த ஜாதகக் கதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. மயிலை சீனி அவர்கள் செய்துள்ள புத்த ஜாதகக் கதைகளின் மொழிபெயர்ப்பு இத்தொகுதியில் இடம்பெறுகிறது. தொகுதி - 12 : தமிழகக் கலை வரலாறு: சிற்பம் - கோயில் மயிலை சீனி தமிழக சிற்பங்கள் மற்றும் கோயில்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள அவ்வாய்வு களை இத்தொகுதியில் ஒருசேரத் தொகுத்துள்ளோம். தொகுதி - 13 : தமிழக கலை வரலாறு: இசை - ஓவியம் - அணிகலன்கள் தமிழர்களின் பண்மரபு குறித்தும் தமிழ் நாட்டு ஓவியம் குறித்தும் விரிவான ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவ்வாய்வுகள் அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன. தமிழர்களின் அணிகலன் குறித்து மயிலை சீனி. எழுதியுள்ள ஆய்வுகளும் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. தொகுதி - 14 : தமிழக ஆவணங்கள்: சாசனச் செய்யுள் - செப்பேடுகள் - கல்வெட்டுகள் கல்வெட்டுக்களில் செய்யுள்கள் மிகுதியாக எழுதப் பட்டுள்ளன. இவை அனைத்தையும் தொகுத்து சாசனச் செய்யுள் மஞ்சரி என்ற ஒரு நூலை மயிலை சீனி அவர்கள் வெளியிட்டார்கள். தமிழக வரலாறு தொடர்பாக செப்பேடுகளில் காணப்படும் விரிவான தகவல்கள் பற்றி இவர் ஆய்வு செய்துள்ளார். தமிழில் உள்ள கல்வெட்டுக்கள் தொடர்பாகவும் மயிலை சீனி அவர்களுடைய ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. இவை அனைத்தும் இத்தொகுதியில் இணைக்கப் பட்டுள்ளன. தொகுதி - 15 : தமிழக ஆவணங்கள்: மறைந்துபோன தமிழ் நூல்கள் மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் நூல் ஒன்றை எழுதியுள்ளார். சுமார் 250 மறைந்து போன நூல்கள் பற்றிய விரிவான தகவல்களை இந்நூலில் அவர் தொகுத்துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 16 : தமிழ் இலக்கிய வரலாறு: பத்தொன்பதாம் நூற்றாண்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் என்னும் பெயரில் மயிலை சீனி அவர்கள் எழுதிய நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. இப்பொருள் குறித்து தமிழில் உள்ள அரிய நூல் இதுவென்று கூறுமுடியும். தொகுதி - 17 : தமிழ் இலக்கிய வரலாறு: கிறித்துவமும் தமிழும் ஐரோப்பிய இயேசு சபைகள் மூலமாக தமிழகத்திற்கு வருகைப்புரிந்த பாதிரியார்கள் தமிழுக்கு செய்த தொண்டு அளவிடற்பாலது. இப்பணிகள் அனைத்தை யும் இவர் தொகுத்துள்ளார்; மற்றும் தமிழில் அச்சுக் கலைமூலம் உருவான பல்வேறு புதிய விளைவுகள் குறித்தும் மயிலை சீனி எழுதியுள்ளார். இவை அனைத்தும் இத்தொகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுதி - 18 : தமிழியல் ஆய்வு: சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு பல்வேறு தருணங்களில் பண்பாட்டுச் செய்திகளுக்குத் தரவாக சொற்கள் அமைவது குறித்து மயிலை சீனி அவர்கள் ஆய்வு செய்துள்ளார். இவ்வாய்வுகள் இத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. பல அறிஞர்களில் வாழ்க்கை வரலாறு குறித்தும் இவர் எழுதியுள்ளார் அச் செய்திகளும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. தொகுதி - 19 : பதிப்பு, மொழிபெயர்ப்பு, உரை: நேமிநாதம் - நந்திகலம்பகம் - பிற நேமிநாதம், நந்திகலம்பகம் ஆகியவற்றை இவர் பதிப்பித்துள்ளார். ‘மத்தவிலாசம்’ என்னும் சமஸ்கிருத நாடக நூலை மொழிபெயர்த்துள்ளார். இந்நூல்கள் இத் தொகுதியில் இணைக்கப்படுகின்றன. மயிலை நேமி நாதர் பதிகம் என்ற ஒரு நூலையும் இவர் பதிப்பித் துள்ளார். அந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. உணவு முறைகள் குறித்து இவர் எழுதிய உள்ள நூலும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுதி - 20 : பதிப்பு: மனோன்மணியம் நாடகம் மனோன்மணியம் சுந்தரப்பிள்ளை எழுதிய மனோன் மணிய நாடகத்தை மயிலை சீனி பதிப்பித்துள்ளார். இந் நாடகம் குறித்த விரிவான ஆய்வுரையையும் இந்நூலில் செய்துள்ளார். இந்நூல் இத்தொகுதியில் இடம்பெறுகிறது. வீ. அரசு குறிப்புகள் குறிப்புகள் குறிப்புகள் சிங்காதனம் - சிங்காசனம். திகழ்தர - விளங்க. அடியினை - இரண்டு பாதங்கள். கடிமலர் - மணமுள்ள பூ. ஆரம் - சந்தனம்; பூமாலை. கழைகறி - கரும்பைக் குறிக்கும். கொய்யுளை - கொய்யப்பட்ட (கத்தரிக்கப்பட்ட) பிடரி மயிர். ஜய விஜயீபரவ-வெற்றி உண்டாவதாக. தவராஜேந்திரா தவ ராஜர்களுக்கு இந்திரன் போன்றவனே. பவம்-பிறம் இரிந்திட முறிந்துபோக. பீடு-பெருமை. அத்த தலைவ கேண்மோ - கேட்பீராக, வாதவூரர் - திருவாதவூரிற் பிறந்தவர்; மாணிக்கவாசகர். “தென்பாண்டி நாடே சிவலோகம்” மாணிக்கவாசகர் திருவாக்கு. “தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே”, “மீளா அருள்புரிவான் நாடு என்றும் தென்பாண்டி நாடே தெளி” என்று திருவாசகத்தில் கூறப்பட்டிருப்பது காண்க. 48 முதல் 51 வரையில் உள்ள அடிகளில், நிலஉலகத்தைப் பசுவாகவும், பரதகண்டத்தை (இந்தியா தேசத்தை அப்பசுவின் மடியாகவும், தென்கோடியாகிய பாண்டிநாட்டை மடியில் உள்ள காம்பாகவும் உருவகம் செய்கிறார். தரணி - பூமி; நிலம். பரதம் - பாரத தேசம், சரதம் - உண்மை. சுரை-காம்பு, சுரத்தலையுடையது என்னும் பொருள் உள்ளது. கண்ணுதல்-நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான். பனிவரை-இமயமலை. துலை-தராசு. குறுமுனி - அகத்திய முனிவர். மலயம் - மலயமலை, பொன்வரை - இமய மலை. 55 முதல்58 வரையில் உள்ள அடிகள் புராணக் கதையைக் குறிக்கின்றன. அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) சந்நு - ஒரு முனிவர் பெயர். இவர் காது வழியாகக் கங்கை வெளிப்பட்டது. (அதனைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) காழ் அகில் - வைரம் பொருந்திய அகில் மரம். சாடி - மோதி, குங்குமம் - குங்கும மரம். பணை - வயல். வாரம் - ஓரம். ஏயும்-ஒக்கும். அடையலர் - பகைவர். கட்செவி - பாம்பு. சுடிகை - உச்சிக் கொண்டை. மஞ்சு - மேகம். இஞ்சி - மதில். உரிஞ்சி-உராய்ந்து, உதயன் - சூரியன். பதாகை - கொடி. உவாமதி - முழுநிலா. மாசு - களங்கம். 79, 80 - ஆம் அடிகள் மீன் உருவம் எழுதப்பட்ட பாண்டியனுடைய கொடி காற்றில் அசைந்தாடுவது, முழு நிலாவினுடைய களங்கத்தை நக்குவது போலிருக்கிறது என்னும் கருத்துள்ளது. மீன்கள் பாசி முதலிய அழுக்கைத் தின்பது இயல் பாகலின், நிலாவில் உள்ள களங்கத்தை நக்குவதுபோலிருக்கிறது என்று கூறினார். எயிலினம் - கோட்டையின் மதில், கொத்தளம் முதலியவை. எந்திரப் படை, தந்திரக் கருவி, பொறிகள் - பகைவர் போருக்கு வந்தால் அவர்களை எதிர்ப்பதற்காகக் கோட்டைச் சுவர்களின்மேல் அமைக்கப்படும் போர்க்கருவிகள். கிறிகள் - வஞ்சக வழிகள், துன்னலர் - பகைவர். வெருவுவர் - அஞ்சுவார்கள். பொருது - போர்செய்து, அரண்கோட்டை. புரை - குற்றம்; பலவினம். முனமுனம் - முதன் முதலில். ஆயற்பாற்று -ஆராயத்தக்கது. திரு - திருமகள் போன்ற மனோன்மணி. அறைதி - சொல்லுக. கழறிய - சொன்ன. புராணம் - பழங்கதை. படிறு - வஞ்சகம். உவர்த்து - வெறுத்து. விரசமாய் - சுவையில்லாமல்; விருப்பமில்லாமல். துனி - வெறுப்பு. கீண்டு - கிழித்து, துன்னிய - நெருங்கியிருந்த, அவிசு - ஓமத்தீயில் சொரியும் நெய். புங்கவர் - உயர்ந்தவர். இக்கு - இக்ஷு; கரும்பு. எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம். கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல்- கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து-சேர்ந்து, நீறு ஆனான்- சாம்ப லானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) பலி கொண்டு - பிச்சை ஏற்று. அம்பலத்தொருவர் -திருச்சிற்றம் பலத்தில் எழுந்தருளிய சிவபெருமான். உடைந்தான்- தோற்றான். கரந்தான் - மறைந்தான். நடராஜர் - வாணியின் காதலன் பெயர். மன்றல் - திருமணம். வார்குழல் - நீண்ட கூந்தலையுடையவள். இச்சகம் - இந்த உலகம். உயிர்ப்பு - மூச்சு. கபோலம் - கன்னம். நுவன்று - சொல்லி; வெளிப்படுத்தி. இயம்பு - b சால்லு. ‘எருது ஈன்றது என்றால் என்ன கன்று. என்பதுபோல’ என்பது பழமொழி. ‘ எருது ஈன்றது என்றால் தொழுவத்திலே கட்டு’ என்றும் கூறுவர். ‘காள பெற்றென்னு கேட்டு கயறெடுத்து’ என்பது மலையாளப் பழமொழி. பிழைத்தவர் - பிழை செய்தவர். எட்பூ - எள்ளின் பூவை. ஏசிய - இழித்துக் கூறிய. நாசி - மூக்கு. எள்ளின் பூவை மகளிரின் மூக்குக்கு உவமை கூறுவது மரபு. “முதலையின் பிடிபோல்” - இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது. கைரவம் - ஆம்பல். முரண்டு - பிடிவாதம். வள்ளை - வள்ளை இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற. ஒருவர் - இங்கு நடராஜனைக் குறிக்கிறது. வேய் - மூங்கில்; கணுவுடைய மூங்கிலை மகளிர் தோளுக்கு உவமை கூறுவது மரபு. பெட்பு - அன்பு; ஆசை. கண்டு-கற்கண்டு. காரிகை அணங்கு - தெய்வமகள் போன்ற அழகுள்ள பெண். காந்தள் காட்டும் கை - காந்தள்பூ கைக்கு உவமை. மின்புரை இடை - மின்னல் மகளிர் இடைக்கு உவமை. வற்கலை - மரவுரியாடை. சிந்துர அடி - சிவந்த பாதம். வாரிசம் - தாமரை. வதனம் - முகம். கருணை அலை - கருணையாகிய அலை. பரிவு - அன்பு. முகிழ்க்கும் - அரும்பும். புரையறும் - குற்றமற்ற. மாந்தளிர் வாட்டு மேனி - மாந்தளிர் மகளிரின் நிறத்திற்கு உவமை. கதுவு - கௌவு ; பற்று. வெருவில் - அஞ்சினால். இருத்திட - வைக்க. வடதளம் - ஆல இலை. உதரம் - வயிறு. வடதள உதரம் - ஆலிலை போன்ற வயிறு. ஆலிலையை மகளிர் வயிற்றுக்கு உவமை கூறுவது மரபு. வாசிட்டாதி - ஞானவாசிஷ்டம் முதலிய நூல்கள். இது ஒரு வேதாந்தத் தமிழ்நூல். ஆளவந்தார் இதன் ஆசிரியர். வைராக்கிய நூல் - துறவறத்தில் வைராக்கியம் கொள்ளச் செய்கிற சாத்திரங்கள். உந்தை - உன் தந்தை. மன்றல் - திருமணம். வழுதி - பாண்டிய அரசன். அலவன் - நண்டு. ஏயும் - ஒக்கும். பிச்சி - பித்சி; பைத்தியக்காரி. அயிராவதத்தன் - அயிராவதம் என்னும் யானையையுடைய இந்திரன். இந்திரன் முதலிய தேவர்கள் அமுதத்தை உணவாக உடையவர். அமுதே - தேவாமிர்தம் போன்றவளே. அழுங்கு - வருந்து. அழுங்கலை - வருந்தாதே. அனிச்சம் - அனிச்சப் பூ, இது மிக மென்மையுடையது. நெருஞ்சில் - நெருஞ்சி முள். “அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர், அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்பது திருக்குறள். கஞ்சனக் கதுப்பு - கண்ணாடி போன்ற கன்னம். பெண்களின் கன்னத்தைக் கண்ணாடிக்கு உபமானம் கூறுவது மரபு. முகை - அரும்பு. முகிழ்த்தது - அரும்பிற்று. வல்லை - விரைவாக, போது நீத்து - தாமரைப்பூவை விட்டு. செந்தாமரையிலிருக்கும் இலக்குமி அம் மலரைவிட்டு என் மனையில் வந்தது போன்றவளே. துச்சம் - அற்பம். இச்சை - காமம் ; காதல். கரையான் - சிதல். ‘நெருப்பைக் கரையான் அரிக்குமோ’, ‘நெருப்பில் ஈ மொய்க்குமோ’ என்பன பழ மொழிகள். சந்தம்ஆர் முலை - அழகுள்ள முலை. துன்று இரா - நெருங்கிய இரவு. புரிசை - கோட்டை. நறை ஆர் - தேன் பொருந்திய. வேப்பந் தாராய் - வேப்பமாலை பாண்டியருக்கு உரியது. ஓவல் இலாதே - ஓய்வு இல்லாமல். உஞற்று - செய். புரி - நகரம். அழுக்காறு - பொறாமை. காவலர் - அரசர். பூபதி - அரசன். மனோகரம் - அழகு. சினகரம் - கோயில். வசிட்டர் - வசிஷ்ட முனிவர். வாளா - வீணாக. கௌசிகன் - கௌசிக முனிவர். மௌலி - முடி. இது அரிச்சந்திரன் கதையைக் குறிப்பது. (புராணக்கதை விளக்கத் திற் காண்க.) சிட்ட முனிவர் - உத்தமராகிய முனிவர்கள். புரந்தரன் - இந்திரன். உருக்கரந்து - உருவை ஒளித்து. (இக் கதையைப் புராண விளக்கத்திற் காண்க.) இச்சகம் - இந்த உலகம். புரவலன் - அரசன். மானும் - ஒக்கும். மேயின - வந்த. அறத்தாறு - அறவழி. அரந்தை - துன்பம். சால - மிக. வேறோர் கரும்பு - வேறொரு பெண். தொழும்பு - அடிமை. மொய்குழல் - இங்கு வாணியைக் குறிக்கிறது. வியர்த்தம் - வீண். ஓராள் - நினையாள். நேராள் - உடன்படாள். மாற்றம் - சொல். கூற்றுவர் - இயமன் போன்றவர். இவ்வயின் - இவ்விடம். இறைவன் - அரசன். நாண் - கயிறு. இங்கு வில்லின் நாணைக் குறிக்கிறது. மகவு - மகன்; பிள்ளை. நீட்டல் விகாரம் - மேலே சொன்ன வெண்பாவில் உள்ள தனிச் சொல், சொற்றதற்காய் என்றிருக்கவேண்டுவது சோற்றதற்காய் என நீண்டதைக் குறிக்கிறது. பொருவரும் - ஒப்பில்லாத. முரண்டு - பிடிவாதம். பூவை - நாகணவாய்ப் புள்; மைனா என்பர். ஈயவோ - கொடுக்கவோ. ‘கிளியை வளர்த்துப் பூனை கையில் கொடுக்கலாமா’ என்பது பழமொழி. பெயர்ந்திலன் - போகவில்லை. நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல் மந்திரம் - மாடிவீடு. எல்லை - அளவில். குழல் - கூந்தல். வளை - வளையல். நாலி - முத்து. நெட்டுயிர்ப்பு - பெருமூச்சு. ஒல்கும் - தளரும். அயினி நீர் - ஆலத்தி நீர். பூதி - திருவெண்ணீறு. சாந்து - சந்தனம். இழுது - நெய். மம்மர் - மயக்கம். வாயசம் - காகம். கங்குல் - இரவு. வெருவி - அஞ்சி. நிமித்திகர் - சோதிடர். கூஉய் - கூவி; அழைத்து. பெண்ணையந்தார் - பனையின் அழகிய மாலை. பனைமாலை சேர அரசருக்குரியது. சேர அரசனுக்கு மனோன்மணியை மணம் செய்விக்கும் படி சோதிடர் கூறினார்கள் என்பது கருத்து. ஏது - காரணம். ஐயம் - சந்தேகம். ஜனிக்கும் - உண்டாகும். மாற்றம் - சொல். அங்கணம் - முற்றம். அம்புலி - நிலா. மாய்ப்பன் - அழிப்பன். உறுத்தும் கூற்றுவன் - வருத்தும் யமன். ஒறுத்து - தண்டித்து. வனம் - வர்ணம். (இடைக் குறை.) பிசிதமரம் - வேப்பமரம். வானவன் - தேவன். சேயது - தூரத்தில் உள்ளது. போந்தை - பனை. உன்னி - எண்ணி. துப்பிதழ் - பவழம் போன்று சிவந்த உதடு. காம்பு அடு - மூங்கிலைப் பழிக்கும். போன்ம் - போலும். பரிதி - சூரியன். பரிதி வந்துழி அகலும் பனி, என்பது ‘சூரியனைக் கண்ட பனி போல’ என்னும் பழமொழி. மிகை - துன்பம், வருத்தம். உஞற்ற - செய்வதற்கு. மதி குலம் - சந்திரகுலம், பாண்டியர் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர். விழுமம் - துன்பம். உகுத்து - உதிர்த்து. வம்பில் - வீணில். வினயம் - பணிவு. நேசம் இல் - அன்பு இல்லாத. ஆற்றுவர் - செய்வர். கற்பனைக்கு - கட்டளைக்கு. கானல் - வெப்பம். பாலை - பாலைநிலம். தாருவாய் - மரமாய். நிமல ஊற்று - நிர்மல ஊற்று; சுத்தமான ஊற்றுநீர். ஆறலை கள்வர் - வழிப்பறி செய்யும் கள்வர். அயர்ச்சி - சோர்வு. இகம் - இம்மை, இவ்வுலக வாழ்க்கை. பரம் - மறுமை, மறுவுலக வாழ்க்கை. வீக்கிய - கட்டிய. கழற்கால் - வீரக்கழலை யணிந்த கால். மிஞ்சலை - மீறாதே. சுதந்தர பங்கம் - சுதந்தரம் இல்லாமல். பங்கம் - குறைவு. சாடில் - விழுந்தால். விரை - மணம்; வாசனை. கறையான் - சிதல். மாற்றலர் ஏறு - பகைவருக்கு ஏறு போன்றவன். யார்வயின் - யாரிடத்தில். மண்ணாள் - கழுவாள்; நீராடாள். மேனி - உடம்பு. குழல் - கூந்தல். தடவாள் - வாசிக்கமாட்டாள். பணி - நகை. பணியாள் - கட்டளை யிடமாட்டாள். அனம் - அன்னம்; உணவு. (இடைக்குறை). நண்ணும் - அடையும். தரு - மரம். முருகு - அழகு; மணம்; தேன். ஒல்கும் - தளரும். நிசிதவேல் - கூர்மையான வேலையுடைய. அரசாடவி - அரசராகிய காட்டில். புரையறு - குற்றம்அற்ற. கள்ளி - கள்ளிச் செடிகள். கருவேற்காடு - முள்ளையுடைய கருவேலமரக்காடு. துன்னலர் - பகைவர். துனி - வருத்தம். துடைப்பான் - தீர்க்கும் பொருட்டு. திருவாழ்கோடு - திருவாங்கூர் இராச்சியம். இது சேரநாட்டைச் சேர்ந்தது. நீங்கில் - தவிர்ந்தால். இடுக்கண் - துன்பம். களைந்த - நீக்கிய. ஏவில் - ஏவினால். பரிந்து - விரைந்து. பெட்பு - விருப்பம். ‘பிடித்தால் கற்றை விட்டால் கூளம்’ பழமொழி. வெருளுவர் - அஞ்சுவார்கள். அயர்த்தோம் - மறந்தோம். பற்றல் - பற்றுதல். விழைந்தனள் - விரும்பினாள். வழுதி - பாண்டியன். மாறன் - பாண்டியன். இறுமாப்பு - செருக்கு. கொடுவருவன் - கொண்டு வருவான். திண்ணம் - உறுதி. உற்பவம் - உற்பத்தி. இந்து - சந்திரன். இரவி - சூரியன். கரையும் - கூவும். சுவானம் - நாய். குக்கன் - குக்கல்; நாய். இணையறு - ஒப்பற்ற. வள்ளால் - வள்ளலே. உதாரம் - தயாளம். பருமணல் இட்ட கதை: இது கோமுட்டி பால் ஊற்றின கதை போன்றது. சில வழிப்போக்கர் சேர்ந்து ஒன்றாகச் சோறு சமைக்க எண்ணினர். உலையில் அவரவர் பங்கு அரிசியைப் போடவேண்டி யிருக்க, ஒவ்வொருவரும் மணலைப் பெய்த கதையைக் குறிக்கிறது. நிதனம் - அழிவு. தனு - உடம்பு. கரணங்கள் - பொறி புலன்கள். பொறையன் - சேர அரசன். ஆற்ற - செய்ய. மருமான் - மருமகன். மந்திரம் - சூழ்ச்சி, ஆலோசனை. அறைவது - சொல்லுவது. இப்பரிசு - இவ்விதம், இப்படி. அற்றம் - காலம். பொருநை - சேர நாட்டில் உள்ள ஒரு ஆறு. பொருநைத் துறைவன் - சேர அரசன். ஞானம் மாண்ட - அறிவினால் மாட்சிமைப்பட்ட. செய்வான் - செய்ய. ஏவுவம் - விடுப்போம். வேய்ந்தோன் - அணிந்தவன். அனந்தைப்பதி - திருவனந்தபுரம். மொழிப்பயன் - மொழியின் கருத்து. ஞாலம் - உலகம். இங்கு ஆகுபெயராய் மக்களைக் குறித்தது. கழறும் - சொல்லும். ஆடவர் இல் - மணமகன் வீடு. மாசு - குற்றம், அழுக்கு. மூவர்-அயன் அரி அரன் என்னும் மூவர். கொழுந்து-குலக் கொழுந் தாகிய மனோன்மணி. காந்தர் - காந்தார தேசம். மச்சன் - மச்ச தேசத்து அரசன். இணங்கார் - பொருந்தாதவர். கொங்கன் - கொங்கு நாட்டரசன். இவ்வயின் - இவ்விடத்தில், கடிபுரி -காவல் அமைந்த கோட்டை. சாற்றாது - சொல்லாமல். பங்கம்இல் - குற்றம் இல்லாத. வஞ்சிநாடு - வஞ்சி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட சேரநாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு. செழிப்பான நன்செய் நிலம் உடையது பற்றி நாஞ்சில் நாடு எனப் பெயர் பெற்றுள்ளது. (நாஞ்சில் - ஏர்.) (75 முதல் 144-ஆம் வரி வரையில் நாஞ்சில் நாட்டை நூலாசிரியர் குடிலன் என்னும் நாடக உறுப்பினன் வாயிலாகப் புகழ்ந்து பேசுகிறார்.) அந்தம் இல் - முடிவு இல்லாத மருதம் - வயல் சூழ்ந்த இடம். நெய்தல் - கடல் சார்ந்த இடம். மயங்கி - கலந்து. வண்டானம் - நாரை. புலர்மீன் - நெய்தல் நில மக்கள் மணலில் உலர்த்தும் மீன். ஓம்புபு - காக்க. நுளைச்சியர் - பரதவ சாதிப் பெண்கள். இருஞ்சிறை - நீண்ட சிறகுகளை. புலர்த்தும் - உலர்த்துகின்ற. அலக்கண் - துன்பம். கேதகை - தாழை. தாரா - வாத்து. (வரி 85 - 87) நீரோடையின் கரையில் வளர்ந்த தாழைப் புதரில் பூத்த தாழம்பூவின் நிழல், தண்ணீரில் வாத்தின் உருவம் போலத் தோன்ற, அதுகண்ட தாரா அதனைத் தழுவிற்று. தாராவின் அறியாமையைக் கண்ட ஆம்பல் வாய்திறந்து சிரித்தது. சிரித்தபோது அதன் உள்ளிருந்த பூந்துகள் சிந்தின. வால்வளை - வெண்மையான சங்கு. உளைந்து - வருந்தி. ஓதிமம் - அன்னம், குடம்பை - முட்டை. உன்னுபு - நினைத்து. அடம்பு - அடம்பங் கொடி. இது கடற்கரைப் பக்கத்தில் தரையில் படர்வது. மண்ட - நெருங்க. 92-93 வரி. பூந்தளிரைக் குளிர மேய்ந்து அகலும் காராம்பசு. அலமுகம் - கலப்பையின் முனை. அலமரும் - வருந்துகிற. ஊடல் - கணவனுக்கும் மனைவிக்கும் உண்டாகும் பிணக்கம். மருது - மருதமரம். அன்றில் - அன்றில் பறவை. நளி - பெருமை. மீன்கோட் பறை - மீன் பிடிப்பதற்காக அடிக்கும் பறை. விளி - ஓசை. வேய் - மூங்கில். சாலி - நெல். உப்பார் பஃறி - உப்பு ஏற்றிச் செல்லும் ஓடம். பிணிப்பர் - கட்டுவார்கள். மாரி - மழை. கொண்மூ - மேகம். அவ் வயில் - அவ்விடத்தில். முந்நீர் - கடல். ஆக்கல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று நீர்மையையுடையது என்றும். ஆற்றுநீர் ஊற்றுநீர் வேற்றுநீர் என்னும் மூன்று நீரை யுடையது என்றும் பொருள் உடையது. எய்யாது - களைப்படையாமல், ஓ இறந்து - ஓசை பெருகி. பிரணவ நாதம் - ஓங்கார ஒலி. இரணம் - உப்பு. ஈண்டு உப்பளத்தை உணர்த் திற்று. பழனம் - வயல். தூமுகை - தூய்மையான மொட்டு. தூமம்இல் - புகை இல்லாத. கவடி - பலகறை, சோழி. அலவன் - நண்டு. பல விரல் - (பலகால்களாகிய) விரல்களால். துகிர்க்கால் அன்னம் - பவழம் போன்ற செந்நிறமான கால்களை யுடைய அன்னப் பறவை. புகர் - சாம்பல் நிறம். போத்து - செம்போத்து. இது நாரை இனத்தைச் சேர்ந்தது. கம்புட்கோழி - சம்பங்கோழி. புள் - பறவை. உள்ளான் குருகு - உள்ளான் குருவி. இது நீர்நிலைகளில் வாழ்வது. குழீஇ - குழுமி. அந்தியங்காடி - மாலைச் சந்தை. வீறு - ஆற்றல். ஈறிலா - முடிவு இல்லாத. சகரர் - சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள். 128-129 அடிகள், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் நிலத்தை உழுதது போல, உழவர் ஏரைப் பூட்டி உழுதனர் என்பது கருத்து. சகர குமரர்கள் நிலத்தை ஆழமாக உழுதபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்று என்பது புராணக் கதை. பொன் ஏர் - அழகான ஏர். குரவை - குரவைப் பாட்டு. இது குரவைக் கூத்து ஆடும்போது பாடும் பாட்டு. நாறு - நாற்று. களைப் பகை - களையாகிய பகையை. அடுபவர் - கெடுப்பவர், கொல்பவர். கடைசியர் - வயல்வேலை செய்யும் பெண்கள். பள்ளு - ஒருவகைப் பாட்டு. தமிழ்ப் பிரபந்த நூல்களில் ஒன்று. கிணைப்பறை - மருத நிலத்துப் பறை. தூவி - இறகு. நீவுதல் - தடவுதல். உலப்பறு - வற்றாத, குறையாத. பாடை - பாஷை, மொழி. “உனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும்” என்பது, நாஞ்சில் நாடு பாண்டியருக்கே உரியது என்பதை அந்நாட்டில் வழங்குகிற தமிழ்மொழியே சான்று பகரும் என்னும் கருத்துடையது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டில், பிற்காலத்திலே தமிழ்மொழி மலையாள மொழியாக மாறிய பிறகும் நாஞ்சில்நாட்டில் தமிழ் மொழியே வழங்குகிறது. கண்டனன் - உண்டாக்கினேன். இப் புரி - இந்தக் கோட்டை. கிழமை - உரிமை. கிளத்தில் - சொன்னால். ஓதினும் - சொன்னாலும். ஒப்புரவு - இசைந்து பழகுதல். அந்நியோந்நியம் - நெருங்கிப் பழகுதல். திறத்தால் - திறமையினால். ஆற்றலே - செய்வதே. ஆற்றல் - வல்லமை. அரசவாம் - அரசு + அவாம். அவாம் - அவாவும், விரும்பும், மேவலர் - பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் - இளைஞன். உதியன் - சேரன். இராச்சிய பரண சூத்திரம் - இராச்சியத்தை ஆளும் முறை. இவ் வயின் - இவ்விடத்தில். சூதா - சூதாக. பேதையர் - பெண்கள். சேவகம் - வீரம். “பித்தன் எப்படிச் சுந்தரர்க்கு, ஒத்த தோழனாய் உற்றனன்” என்னும் அடிக்கு, ‘பித்தனாகிய நடேசன் சுந்தரமுனிவருக்கு எப்படி ஒத்த நண்பனாக ஆனான்’ என்று ஒரு பொருளும், ‘பித்தனாகிய சிவ பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு எப்படி ஒத்த நண்பனானான்’ என்று வேறொரு பொருளும் தோன்றுவது காண்க. இணையறு - ஒப்பில்லாத. பொருக்கென - விரைந்து. கல வளம்பனம் - காலம் தாழ்த்தல். திறல் - வலி. சுரர் - தேவர். சுரகுரு - தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி; வியாழன் என்றும் கூறுவர். பிரசுரன் - அசுர குருவாகிய சுக்கிராச்சாரி. திருமேனி - அரசனைக் குறிக்கும் சொல். மலையாள நாட்டினர் அரசனைத் திருமேனி என்று விளிப்பது வழக்கம். இந்நூலாசிரியர் மலையாள நாட்டில் வசித்து. மலையாள அரசரிடம் பழகியவராகலின் இச் சொல்லை ஆள்கிறார். இவ்வாறே மலையாள நாட்டில் சிறப்பாக வழங்கும் சொற்கள் பல இந்நூலில் பயிலப்படுகின்றன. ஆஞ்சனேயன் - அனுமான். இராமனுக்கு ஆஞ்சனேயன் மெய்அடிமை பூண்டதுபோல, குடிலன் ஜீவக மன்னனுக்கு அடிமை பூண்டானோ என்பது கருத்து. திருமுகம் - கடிதம் தரள மாலை - முத்துமாலை, திண்ணம் - உறுதி. “அங்கைப் புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ” - கைப் புண்ணுக்குக் கண்ணாடியும் வேண்டுமோ என்னும் பழமொழி. ஆடி - கண்ணாடி. சுவாமி பத்தி - எஜமானிடம் பக்தி. சுமித்திரை பயந்த புத்திரன் - சுமித்திரை பெற்ற பரதன். வீரவாகு - முருகக் கடவுளின் சேனாபதி. இராமனிடத்தில் பரதனும், முருகனிடத்தில் வீரவாகு தேவரும் உண்மைப் பக்தி கொண்டிருந்தது போல, குடிலன் ஜீவகனிடம் உண்மைப் பக்தி கொண்டுளான் என்பது கருத்து. தன்னயம் எண்ணா - சுயநலம் நினைக்காத. நாயனார் - திருவள் ளுவ நாயனார். தூக்கிய குறள் - ஆராய்ந்து கூறிய திருக்குறள். 268 அடி. “புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து” என்னும் திருக்குறளைச் சுட்டுகிறது இவ் வாக்கியம். நின் அருகு - உன் பக்கத்தில். அவர் - ‘அகங் குன்றி மூக்கிற் கரியார்’. வாகு - தோள். ஐயுறல் - ஐயப்படுவது. கோடிய - கோணிய, வளைந்த. 279-280 அடி, “எனை வகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான், வேறாகு மாந்தர் பலர்” என்னும் திருக்குறளை உணர்த்துகிறது. 286 அடி, ‘வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர்’ என்பது பழமொழி. களங்கம் - குற்றம். ஓரான் - உணர மாட்டான். உன்னுவ - நினைப்பவை. அறைவர் - பேசுவர். மாற்றொலி - எதிரொலி. கருப்பு - கரும்பு. காலும் விடம் - விஷத்தை உமிழும், பாரார் - பாராதவர்கள். படிறு - வஞ்சகம், பொய். சித்திரப் பார்வை அழுந்தார்க்கு - ஓவியத்தைப் பார்க்கும் முறைப்படி பார்க்கத் தெரியாதவர்களுக்கு வரை - கோடு, கீறல். உறுகண் - துன்பம். பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப் படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். இரவி - ஞாயிறு, சூரியன். அயிர்த்து - ஐயுற்று. காய்வனே - கோபிப்பானோ, எரிப்பானோ. தம் பெயர் விளம்பி - தம்முடைய பெயரைச் சொல்லி, அதாவது காகா எனக் கூவித் தாம் காகங்கள், இருள் அல்ல என்று சொல்லி. சூரியன் கதிர்பரப்பி இருளை ஓட்டியபோது, கருநிறமுடைய காகங்கள், தங்களையும் இருள் என்று கருதிச் சூரியன் ஓட்டுவானோ என்று அஞ்சி காகா என்று கூவித் தங்கள் பெயரைத் தெரிவித்தன என்பது கருத்து. சிறகர்ப் பறவை - சிறகுகளையுடைய பறவைகள். தொழுதி - தொகுதி, கூட்டம். அஞ்சிறை - அழகிய சிறகு. ஒத்தறுத்து - தாளம் பிடித்து. எஞ்சலில் - குறைவில்லாத, இசையறி மாக்கள் - இசைப் புலவர்கள். ஈட்டம் - கூட்டம். ததையும் - நெருங்கிய, அடர்ந்த. கதுவும் - பற்றுகிற. குருகு - நாரை. துகிர்த்துண்டம் - பவழம்போன்ற சிவந்த அலகு. உழையுழை - அங்கும் இங்கும். (உழை - பக்கம்). போலிக் கூச்சம் - பொய்யான வேட்கம். கூடமாய் - மறைவாய். இவ்வயின் - இவ்விடத்தில். கண்டுழி - பார்த்த போது. முருகு - மணம், அழகு. மந்தகாசத்தொடு - புன்முறுவலோடு. அழுங் கலை-வருந்தாதே. வியர்த்தம் - வீண். யார்கொல் - யாரோ? உகுத்து - உதிர்த்து, சிந்தி. விழைந்த - விரும்பிய. வீவுறும் - கெடும். வம்புரை - வீண் பேச்சு. அஞ்சுதும் - அஞ்சுகிறோம். வாரலையோ - வரமாட்டாயா. கட்டம் - கஷ்டம். அவள் தன் தலைதொட்டு - அவளுடைய தலையை உன் கையினால் தொட்டு. நவின்ற - சொன்ன. கள்ளலம் - களவு செய்யமாட்டோம். வௌவலம் - பற்றிக் கொள்ள மாட்டோம். காணிய - காண, பார்க்க. விரும்பலை - விரும்பவில்லை. (ஆசிரியத்துறைச் செய்யுள்கள் மூன்றும், தன் மகளுடன் பலதேவன் களவொழுக்கம் கொண்டிருந்து, இப்போது அவன் வாணியை மணம் செய்யப்போகும் வதந்தியைக் கேட்ட ஒரு தாயின் கூற்று.) சவம் அவள் - அவள் பிணம், என்றது வாணியை, கிழப்பிணம் - கிழவனாகிய சகடன். பொற்றொடி - பொன்வளையல். மைச்சினி - என்பது பலதேவனின் காதலி. மறக்கன்மின் - மறவாதீர்கள். விலங்கு - கட்டு. அலகை - பேய். கணிசம் - கண்ணியம், மதிப்பு. அது - திருமணம். இது - கூடாவொழுக்கம். கடு - நஞ்சு. கைத்தது - கசந்தது. அனந்தை - திருவனந்தபுரம், சேரவேந்தனின் தலைநகரம். அறைதி - சொல்லுக. உசிதன் - பாண்டியன். உறு - அடைகிற. மதி - அறிவு. நிண்ணயம் - நிர்ணயம், உறுதி. திடன் - உறுதி. ஊழிக் கனல் - யுக முடிவில் உண்டாகிற தீ. வையாய் - வைக்கோலாக. மாதரார்- பெண்கள். மாயாது - அழியாமல். பதடிகள் - பதர்போன்றவர். ஈரம்இல் - அன்பு இல்லாத. காதகர் - கொலை காரர். சலனம் - அசைவு, கலக்கம். திரைபொரல் - அலை யடிப்பது, மனங் கலங்கவது. கயம் - ஆழமான நீர்நிலை. அகம் - உள்ளே, மனம். அவர்க்கு - கயத்துக்கும், பெண்களுக்கும். 123- 125 வரியின் கருத்து : நீர் நிலைகளில் அலையடிப்பதும் மகளிர் மனங் கலங்குவதும் வெளியில் அல்லாமல் அகத்தில் அல்ல என்பது. செறிவது - அடர்வது, நெருங்குவது. அரிவையர் - பெண்கள். விள்ளா - விடாத, விண்டுபோகாத. கறங்கு - சுழல்வது, காற்றாடி. மரக்கலம் - படகு. நீள்திசை - பரந்த திசைகள். நிண்ணயம் - நிர்ணயம். இயக்க - செலுத்த. குடா - குடாக் கடல், குடாக்கடல்களில் கப்பல்கள் தங்குவது மரபு. நங்கூரம் - கப்பல்களை நிலையாக நிறுத்துவதற்காக நீருக்கடியில் பாய்ச்சப்படும் கருவி. எற்றுண்டு - மோதப்பட்டு. கடாவி - செலுத்தி. சுக்கான் - கருதிய பக்கமாகக் கப்பலைத் திருப்புவதற்கு ஏற்பட்டுள்ள கருவி. 139-153 வரியின் கருத்து: வாழ்க்கை என்னும் கடலிலே செல்லும் ஆடவருடைய மனமாகிய கப்பல், அது போய்ச் சேரவேண்டிய அறத்துறையை விட்டு அகன்று, ஆசை என்னும் காற்றினால் திசைகளில் சென்று அலையாதபடி குடாக்கடலில் கொண்டுபோய் நிறுத்தும் நங்கூரம்போலவும், ஆடவர் செய்யும் செயல்களில் பொய்யும் வழுவும் மோதுவதனால் ஆசையாகிய திசைகளிலே அலைந்து கெடாதபடி அன்பும் அறமும் ஆன நல்வழியிலே செலுத்திச் சுகமாகிய நல்ல துறைமுகத்திலே சேர்க்கிற சுக்கான் போலவும் இருப்பது, ஆடவரை மணந்த மங்கையரின் நிலைமை என்பது. அனையார்-அப்படிப்பட்டவர். இங்கு மகளிரைக் குறித்தது. 158 - 162 வரியின் கருத்து: தவம் செய்து மந்திரவாளைப் பெற்றவர், அவ் வாளினால் பகைவரைக் கொன்று வெல்லாமல் தம்மைத் தாமே வெட்டிக் கொள்வது போலவும், தமக்குத் துணையாய் வந்தவரைப் பகைவர் என்று கருதி அவரையும் துன்புறுத்துவதுபோலவும் பாலை நஞ்சாக (நல்லதைத் தீயதாகச்) செய்கிறார்கள் இவர்கள் என்பது. துதி பெறும் - புகழ் பெறும். இல் துணைவராயின் - இல்வாழ்க்கைத் துணைவரானால். உளதேல் - இருக்குமானால். நாற்றம் - மணம், வாசனை. எற்றே- என்னே. வேட்டவை - விரும்பியவை. கற்பக தரு - கற்பகமரம். இது தேவலோகத்தில் இருப்பது. இம்மரத்தின் கீழிருந்து வேண்டிய பொருளை நினைத்தால் அதனைத் தருவது. வரி: 168 - 171. நினைத்ததைக் கொடுக்கும் கற்பகமரத்தைக் கரிக்காக வெட்டிய கொல்லனைப்போல. மனக்கோள் - மனத்தின் கோணல். உள்ளம் விரித்து - மனத்தை அன்பினால் விரிவுபடுத்தி. பொறை - பொறுமை. சாந்தி - அமைதி. ஓய்வுற - ஓயும்படியாக. முங்கி - முழுகி. மலையாள நாட்டு வழக்கு. உடல் தினவு அடக்கும் - உடம்பின் தினவை நீக்கும். மா உரைஞ்சிடு தடி - மிருகங்கள் தினவு தீர உராய்ந்துகொள்ளும் மரக்கட்டை. 172- 186 வரியின் கருத்து: தனக்காக மட்டும் வாழ்கிற மிருகத் தன்மை யுள்ள மனக்கோட்டத்தை நிமிர்த்திப் பிறர் இன்ப துன்பங்களையும் தனதெனக் கருதுவதனாலே, பையப் பைய மனத்தை விரிவடையச் செய்து, பொறுமையையும் அன்பையும் படிப்படியாக ஊட்டி, அறிவு தெளிந்து நான் எனது என்னும் சுயநலத்தை அடக்கி எங்கும் நிறைந்து பேரின்பமாய் நின்ற பேரின்ப வெள்ளத்தில் மூழ்கச் செய்து யாவரையும் பக்குவப்படுத்துகிற பாடசாலையாக இருப்பது இல்லற வாழ்க்கை என்பதை அறியாமல், தினவுகொண்ட மிருகங்கள் உராய்ந்து தினவு தீர்த்துக்கொள்ளும் மரக்கட்டை போல, மடத் தனத்தினால் தம்மையும் பிறரையும் கெடுக்கும் மனிதரின் கெடுமதி என்னே என்பது. எய்தில் - நிகழ்ந்தால், உற்று -அடைந்து, வந்து. 1 முதல் 44 வரிகளில், புருடோத்தமன் கன்னிகை ஒருத்தியைக் கனவில் கண்டு காதல் கொண்டு அவளைப்பற்றித் தன் மனத்தில் சிந்திப்பது கூறப்படுகிறது. வார்குழல் - நீண்ட கூந்தல். துகில் - ஆடை, உடை. நுதிவேல்- கூர்மை யான வேல். விரகதாபம் - காதல் வேட்கை. தரளநீர்- முத்துப்போல் உதிரும் கண்ணீர். பரிபுரம் - சிலம்பு. பங்கயம் -தாமரைப்பூ போன்ற பாதம், உவமையாகுபெயர். வருந்துபு - வருந்தி. விரல் நிலம் கிழிப்ப -கால் விரலினாலே நிலத்தைக் கீற. விண் அணங்கு- தெய்வமகள். நவ்வி- அழகு. நண்பு - நட்பு, அன்பு. முறுவல் - புன்சிரிப்பு. நெஞ்சம் பருகினது - மனத்தைக் குடித்தது. உழுவலோடு - அன்புடன். வெய்யோன் - சூரியன். வாரியின் - கடலில். செக்கர் - செவ்வானம். ஊர்கோள் - நிலாவைச் சுற்றி யிருக்கிற ஒளி வட்டம். நாப்பண் - நடுவில். உவாமதி - முழுநிலா. குமுத வாய் - ஆம்பல்போன்ற வாய். மந்தகாசம் - புன்முறுவல். அயர்க்குமாறு - மறக்கும்படி. போர் -சண்டை. வழுதி - பாண்டியன். கயவன் - கீழ்மகன். கைதவன் - பாண்டியன். போன்ம் -போலும். மலைய மன்னவ - மலைய மலைக்கு அரசனே. மலயமலை பாண்டியனுக்கு உரியது. ஆனால், தூதுவன் சேரனை மலையமலைக் குரியவனாகக் கூறுகிறான். புணரி - கடல். புவி புகழ் சுமக்க - உலகம் பாண்டியனுடைய புகழைச் சுமக்க. தன்தோள் - பாண்டியனுடைய தோள். தாரணி தாங்க- பூமியைத் தாங்க; அதாவது அரசாட்சி செய்ய. ஒன்னார் - பகைவர். திகிரி - ஆணையாகிய சக்கரம். குடங்கை - உள்ளங்கை. குறும்பர் - குறுநில மன்னர், சிற்றரசர். தடமுற்றம் - பெரிய முற்றம். வேம்புஆர் - வேப்பமாலையை யணிந்த, பொருந்தலர் - பகைவர். துணுக்குறும் - அஞ்சும், நடுங்கும். திறல் - வலி, வெற்றி. கண்டு-அமைத்து. புல்லார் - பகைவர். ஈட்டம் - கூட்டம். அரவினது அரசு - பாம்பரசனாகிய ஆதிசேஷன். வெருவி - அஞ்சி. பிறவிப் பௌவம் - பிறப்பாகிய கடல். உயிர்களின் கணக்கற்ற பிறப்பு களுக்குக் கடல் உவமை. ஆணவத்து ஆழ்ச்சி - ஆணவமலத்தின் ஆழம். அகழ்வலம் - பல முள்ள அகழி. தொட்டு - தோண்டி. உரம் - பலம். மதிற்கணம் - மதில்களின் கூட்டத்தை. விடயம் - விஷயம், அதாவது ஐம்புலன்களின் விஷயம். எட்டி - போய்ப் பிடித்து. புலன்களின் - ஐம்புலன்களைப்போல. யந்திரப் படை - இயந்திரப் பொறி முதலிய போர்க் கருவிகள். 65 முதல் 72 வரிகளில் கோட்டைக்கும் மனித உடம்பிற்கும் உவமை கூறப்படுகிறது. கோட்டையைச் சூழ்ந்துள்ள அகழி பிறவிக்கடல் போல அகலமும், உயிர்களின் ஆணவமலம் போன்று ஆழமும் உடையது; கோட்டைமதில்கள் உயிர்களின் அஞ்ஞானம் போன்று பலமுடையன ; மதில்சுவர்களின் மேல் வைக்கப்பட்டுள்ள போர்க் கருவிகள் ஐம்புலன்களைப் போல் அஞ்சத்தக்கன என்ற சைவ சித்தாந்த தத்துவங்கள் பொருத்திக் கூறப்படுகின்றன. வஞ்சி நாடு - சேர நாடு. நன்செய் நாடு - நாஞ்சில் நாடு, நன்செய் நாடு என்னும் சொல் நாஞ்சில் நாடு என்று திரிந்ததாக இந் நூலாசிரியர் கருத்துப் போலும். பரவும் - பரவியுள்ள, பாடை - பாஷை. விரவும் - கலந்துள்ள. ஆசாரம் - பழக்க வழக்கம். சாக்கியம் - சாட்சி, சான்று. (தமிழ்மொழியும், தமிழர் பழக்க வழக்கமும் உடைய நாஞ்சில் நாடு, (சில ஆண்டுக்கு முன்பு கேரள நாடு தனி நாடாகப் பிரிக்கப்பட்டபோது) இப்போது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.) 75 முதல் 79 வரையில் உள்ள வரிகள், இந் நூலாசிரியர் காலத்தில் நாஞ்சில் நாடு மலையாள தேசத்துடன் சேர்ந்திருந்ததைத் தெரிவிக்கிறது. கிழமை - உரிமை. இறுத்து - தங்கியிருந்து. சதியாய் - வஞ்சனை யாய். வல்லை - விரைவு. ஈண்டின் - நெருங்கி வந்தான். உதியன் - சேரன். செழியன் - பாண்டியன். பங்கமில் - குற்றம் இல்லாத. 91 முதல் 101 வரியின் கருத்து: சூரியனும் சந்திரனும் நேர்ப்பட்டால் சூரிய கிரகணம் உண்டாகி உலகம் இருள்படுவதுபோல, பாண்டியனும் சேரனும் எதிர்த்துப் போரிட்டால் நாட்டு மக்கள் துன்பம் அடைவார்கள். அவ்வாறு நேராதபடி நன்செய் நாடாகிய நாஞ்சில் நாட்டை அதற்குரியவரிடம் சேர்ப்பிக்கக் கூறும்படி என்னைத் தூது அனுப்பினான் என்பது. அரியேறு - ஆண்சிங்கம். வெம்சமர் - கொடிய போர். திரைக்கடல் அமுது - பாற்கடலில் உண்டான அமுதம். (கதை விளக்கம் காண்க.) விரைமலர் - மணமுள்ள பூ. அளி - வண்டு. கோது அறும் - குற்றம் இல்லாத. வேட்டல் - திருமணம் செய்தல். அடியிறை - பாதகாணிக்கை. இறை - கப்பம், திறை. புரவலர் - அரசர். மங்கல நாண் - தாலிக்கயிறு. பகர்ந்தும் - சொல்லியும். உயிர்ப்பது - மூச்சு விடுவது, உயிரோடிருப்பது. பார்வகித்தான் - பூமியை அரசாண்டான். அரிக்குநேர் - சிங்கத்துக்குச் சமமான. அறைந்த - சொல்லிய. ஆஞ்ஞை - ஆணை. பச்சாத்தாபம் - பரிதாபம். உய்ந்தோம் - பிழைத்தோம். மூவர் - மும் மூர்த்திகள். பகடி - கேலி. யதார்த்தம் - உள்ளபடி, மலையாள நாட்டு வழக்கு. அப்பம் தின்னவோ அலால்குழி எண்ணவோ என்பது, “அப்பம் தின்னால் போரெ குழி எண்ணுன்னெந் தின்னு” என்னும் மலையாளப் பழமொழியைக் கூறுகிறது. இந்தப் பழமொழியை “அப்பம் தின்னால் மதி, குத்தெண்ணெண்டா” என்றும் கூறுவர். கலித்துறை : உலண்டு - உலண்டு என்னும் பூச்சி. உழல்கின்ற - பிறப்புகளில் சுழல் கின்ற. சாற்றுதும் - சொல்லுவோம். மனோன்மணியின் காதல் அன்பு சுத்த ஆத்துமாவின் ஞானமாகவும், புருஷோத்தமன் அவளிடம் கொண்ட அன்பு கடவுளின் திருவருளாகவும் கூறப்படுகிறது. ஞானம் பெற்ற ஆன்மாவிடத்தில் ஈசுவரனின் கருணை படிகிறது. என்னும் தத்துவம் இங்கு ஒப்பிடப்படுகிறது. சூழ் - சூழ்ச்சி, யோசனை. தனையன் - மகன். ஐயுறல் - ஐயப்படாதே. பழுது உறும் - குற்றம் நேரும். மிஞ்சுவர் - மீறுவார்கள். தொன்மொழி - பழமொழி. கன்றும் - கோபிக்கும். திருவும் வெருவும் உரு - இலக்குமியும் அஞ்சுகிற அழகு. மருள் அறு - மயக்கம் இல்லாத. செறித்திடும் - அடக்கும். சிறையினை - கரையை. புனல் - நீர். மலைவு - கலக்கம். மலையநாடு - சேர நாடு. அயிர்ப்பு - ஐயம். மம்மர் உழன்றவன் - மயக்கத்தினால் வருந்தினவன். அறைந்து - சொல்லி. பரிவுறல் - அன்பு கொள்ளுதல். உஞற்றுவன் - செய்வான். ஏமாப்பு - இறுமாப்பு, செருக்கு. புலையன் - இழிந்தவன். பரல் - கூழாங்கல். பேதையர்- அறிவிலோர், மடையர். உன்னான் - நினைக்கமாட்டான். ஈறு இலா - முடிவில்லாத. உரன் - வலிமை உன்னினேன் - நினைத்தேன். வெருவலை - அஞ்சாதே.பொருநைத் துறைவன் - சேர அரசன். (பொருநை - சேரநாட்டில் உள்ள ஆறு.) வரி 107 - 108. ‘தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத் துணையாக், கொள்வர் பழி நாணுவார்’ என்னும் திருக்குறள் கருத்தையுடையது. வாய்ந்தவை - நிகழ்ந்தவை. ஓரில் - ஆராய்ந்தால். நண்ணலர் -பகைவர். கூற்று - இயமன். உன்மத்தன் - பைத்தியக்காரன். திரு - இலக்குமி. மறு - குற்றம். செருமுகம் - போர்க்களம். ஆலவாய் - மதுரை நகரம். நிகாதர் - வஞ்சகர் வரி 144 - 145. இது ஒரு பழமொழி வரி 162 - 164. இவை மூன்றும் பழமொழிகள். “குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்னும் பழமொழியின் கருத்துள்ளவை. விதிர் விதிர்ப்பு - நடுக்கம். தன்னுளே - தன் மனத்திற்குள்ளே. “கொன்ற பின் அன்றோ முதலை நின்றழும்” என்பது ஆங்கிலப் பழமொழி. முதலைக் கண்ணீர் என்பர். கடிநகர் - காவல் உடைய நகரம். வேலை - சுரங்கம் அமைக்கும் வேலை. துன்று - நெருங்கிய. அரா - பாம்பு. அராக்கவ்விய முழுமதி - கேது என்னும் பாம்பினால் விழுங்கப்பட்ட முழு நிலா. கேது என்னும் பாம்பு சந்திரனை விழுங்குவதால் சந்திரக் கிரகணம் ஏற்படுகிறது என்பது புராணக் கதை. (இதைப் புராணக் கதை விளக்கத்திற் காண்க.) அராக்கவ்விய...இளமுகம் - வாணியின் முகம் முழுநிலா போன்றும், பின்னி விடப்பட்ட அவளுடைய கூந்தல் சந்திரனை விழுங்கும் பாம்பு போன்றும் இருக்கின்றன என்பது கருத்து. இப்பணி - சுரங்கம் அமைக்கும் வேலை. வினை - தொழில். இவ்வயின் - இவ்விடத்தில். இலக்கு - குறி, இலட்சியம். காண்டி - காண்க. பூம்பராகம் - பூவில் உள்ள மகரந்தப்பொடி. பரப்பித்து - பரப்பி. ஆசுஇலா - குற்றம் இல்லாத. தூசு - ஆடை, உடை. தோட்டி - துறட்டி. துன்னில் - நெருங்கியிருந்தால். சிறார் - சிறுவர். புள் - பறவை. ஆ - பசு. அயம் (அஜம்) - ஆடு. அயம் (ஹயம்) - குதிரை. சிக்கி - சிக்கிக்கொண்டு. 13 முதல் 25 வரிகள், செடிகளின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. செடிகள் தமது பூக்களில் உள்ள தேனைப் பருகத் தேனீ முதலிய பூச்சிகளை வரச் செய்து அவற்றின் மூலமாகப் பூந்தாதுகளைக் கருப்பையிற் சேர்ப்பித்துக் காய்காய்த்து விதை யுண்டாக்கி, அக் காய்களின்மேல் உள்ள சுணையினால் ஆடு மாடு மனிதர் பறவைகள் முதலியவர் மூலமாக வெவ்வேறிடங்களில் சென்று வளரச் செய்கிற தாவரங்களின் இயற்கை விசித்திரம் கூறப்படுகிறது. கண்பனிப்ப - கண்ணீர் துளிக்க. சீரிய Jளி - நுண்ணிய மணல். வெடித்து - பொடியாக்கி. ஈர்த்து - இழுத்து, முந்நீர் மடு - கடலாகிய நீர்நிலை. காலத்தச்சன் - காலமாகிய தச்சன். சாலத் தகும் - பெரிதும் பொருந்தும். ஓர்ந்து - உணர்ந்து. அண்டயோனி - சூரியன். 34 முதல் 59 அடிகள், நீரின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. ஆற்றில் ஓடுகிற நீர் கற்களை உடைத்துப் பொடியாக்கித் தன்னிடம் அகப்பட்ட பொருள்களை எல்லாம் மணல் கல்லுடன் அடித்துக் கொண்டு போய்க் கடலில் சேர்க்கிறது. மீண்டும் அந் நீரே சூரிய வெப்பத்தினால் ஆவியாக மேலே சென்று மேகமாகி மழையாகப் பெய்து அருவியாகவும் ஆறாகவும் சுனையாகவும் ஊற்றாகவும் வாய்க்காலாகவும் ஓடி ஓய்வின்றி இராப் பகலாக உழைக்கின்றது என்னும் இயற்கையின் விசித்திரத்தைக் கூறுகின்றன. சாடு - பாய். ஈட்டியது - சேகரித்தது. ஏகுவன் - போவேன். எழிலி - மேகம். இவண் அடைந்து - இங்கே வந்து. நிரந்தரம் - எப்பொழுதும். நாங்கூழ்ப் புழு - மண்புழு, நாகப்பூச்சி. பாடு - உழைப்பு. ஓவா - ஓயாத. விழுமிய - சிறந்த. யாக்கை - உடம்பு. வேதித்து - மாற்றி. 65 முதல் 80 அடிகள், நாங்கூழ்ப் புழுவின் இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. பறவைகள் பூச்சிகள் தன்னைப் பிடித்துத் தின்னாதபடி மண்ணில் மறைந்து வாழ்கிற நாங்கூழ்ப் புழு மண்ணைக் கிளறி விடுகிறது. அதனால் காற்றும் வெளிச்சமும் மண்ணில் கலந்து மண் பயிர் பச்சைகள் நன்றாக வளர்வதற்கு ஏற்றதாகிறது. அன்றியும் மண்ணுடன் மட்கிப்போன இலைகளையும் அழுக்குகளையும் தின்று ஜீரணித்து மெழுகுபோலாக்கி அதைச் சிறுசிறு மண் கட்டிகளாக வெளிப்படுத்தி நிலத்தை உரப்படுத்துகிறது. இவ்வாறு பயிர்த் தொழிலாளருக்கு இப்புழு பெரிதும் துணைபுரிகிற இயற்கை விசித்திரத்தைக் கூறுகின்றன. விழுப்புகழ் - சிறந்த புகழ். அலகிலா - எல்லை இல்லாத. இலகிய - விளங்கிய. சிற்றாடி -சிறிய கண்ணடி; சூரிய கிரணங்களை ஒன்றாகச் சேர்த்துத் தீயையுண்டாக்குகிற சிறு கண்ணாடி. மையம் - சிற்றாடி யின் நடுவிடம். சிற்றாடியின் நடு மையம் சூரிய கிரணங்களை ஒன்று சேர்ப்பதுபோல, உடம்பின் மையமாக இருப்பது மனம். 87 முதல்89 அடிகள், சிற்றாடியின் (Hand lens) மையம் சூரிய கிரணங்களை ஒன்றுபடுத்துவது போல, உடம்பில் சிதறியுள்ள குணங்களை மனம் ஒன்றுபடுத்துகிறது என்பதைக் கூறுகின்றன. தீயன் - இங்குப் பலதேவனைக் குறிக்கிறது. கிருபணன் - உலோபி. தீனம் - எளியவன், ஏழை. தோற்றம் - காட்சி. படாம் - துணி. பொதியில் - பொதிகைமலை. முகடு - உச்சி. பொற் புறு - அழகுள்ள. கரு - உருவங்களை அமைக்கும் வார்ப்பட அச்சு (Mould). ஆடகப் பெருக்கு - உருக்கிய பொன். அருக்கன் - சூரியன். 95 முதல் 98 வரிகளின் கருத்து: பொதிகைமலையின்மேல் சூரியன் புறப்படுகிற காட்சி, நாள் ஆகிய கம்மியன் (சூரிய வெளிச்சமாகிய) உருக்கிய பொன்னை (பொதிகை மலையாகிய) அச்சில் (மூசையில்) ஊற்றுவதுபோலத் தோன்றுகிறது என்பது. பதாகை - கொடி. தொகுதி - கூட்டம். அடுபடை - கொல்லும் சேனை. வஞ்சித்தாழிசை 1. அஞ்சல்இல் - அஞ்சாத. அரிகாள் - பகைவர்களே. சஞ்சிதம் - மிகுந்துள்ளது, எஞ்சியுள்ளது. சஞ்சிதப் பெருவாழ்வு - சென்றதுபோக மீதியுள்ள வாழ்நாள். வஞ்சித்தாழிசை 2. எஞ்சல்இல் - குறைவில்லாத. மஞ்சுள - அழகுள்ள. கடிஞை - பிச்சைப் பாத்திரம். வஞ்சித்தாழிசை 3. பிதிர் -மூதாதையர். துஞ்சிய பிதிர் - இறந்து போன உயிர்கள். இவர்களைத் தென்புலத்தார் என்பர். எள் - இங்கு பிதிர்களுக்கு இடும் எள். இறந்தவர்களின் சாந்திக்காக எள்ளும் நீரும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். ஜே - ஜெயம், வெற்றி. ஆர்ப்பு - ஆரவாரம். கழல் - வீரக்கழல்; வெற்றிபெற்ற போர்வீரர் இதைக் காலில் அணிவர். வயப்படை - வலிமையுள்ள சேனை. ஒளி - பொலிவு. வஞ்சித்தொடை - வஞ்சிப் பூமாலை; மாற்றரசரைத் தாக்குவதற்காகச் செல்லும் வீரர்கள் அணிவது. இது பழைய தமிழரசரின் போர் மரபு. தண்ணுமை பொருவும் - மத்தளம் போன்ற. பொருப்பு - மலை. உருமு - இடி. ஓதை - ஓசை. ‘வெண்கலப் பொருப்பில் உருமு வீழ்ந்தென்ன’ என்பது வெண்கல மலைமேல் இடி உருண்டது போல என்னும் பழமொழி. வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல என்றுங் கூறுவர். துன்னிய - நெருங்கிய. குரத்த - குளம்பினை யுடைய. கொய்யுளை - கத்தரிக்கப்பட்ட பிடரி மயிர். திரைக்கடற் கூட்டம் - அலை வீசுகின்ற கடல்போன்ற (குதிரைகளின்) கூட்டம்; குதிரைப் படை. பெய்மத மைம்முகில் கூட்டம் - மதநீரைப் பொழியும் கருமேகம் போன்ற (யானைகளின்) கூட்டம்; யானைப் படை. விலோதனம் - துகில்கொடி. அசலத்திரள் - மலைகளின் கூட்டம். இங்குத் தேர்ப் படையைக் குறிக்கின்றது. வயப்படை - வலிமையுள்ள சேனை. படிறன் - வஞ்சகம். சமைந்தான் - தொடங்கினான். மலயன் - மலைய மலைக்குத் தலைவன்; சேரன். அறைவது - சொல்லுவது. மரித்த - செத்த. ஆமைப் பலகை - ஆமையின் வடிவமாக அமைந்த மணை. அவ் வெல்லை - அப்பொழுது. அறைவர் - சொல்லுவார். இயம்பி - சொல்லி. வலியோர் - பெரியோர். இது மலையாள நாட்டு வழக்குச் சொல். 166 முதல் 168 அடிகள்: பெரிய மனிதரின் முகக் குறி, மனக் குறிகள், அவர்கள் சொல்லாமலே அவர்கள் எண்ணியதைத் தெரிவிக்கும் என்னும் கருத்துள்ளன. சாக்கி - சாட்சி, கரி. ஏதுவாக - காரணத்தினால். தெத்தெடுத்தல் - பிள்ளைப் பேறில்லாதவர் பிறருடைய பிள்ளையைச் சுவீகாரம் செய்தல். குடகன் - சேரன். உறுதுயர் - வருகிற துன்பத்தை. ஆற்றார் - பொறுக்கமாட்டார். படியோர் - உலகத்தவர். சாற்றுவர் - சொல்லுவார்கள். தேற்றம் - தெளிவு. மாற்றம் - சொல், பேச்சு. அனுமானித்தல் - கருதல் அளவை; காரியத்தைக் கண்டு காரணத்தையுணர்தல். அளவை - பிரமாணம், தன்மை. அங்காடி - கடைத்தெரு. அம்பலம் - பலரும் கூடும் இடம். 209-ஆம் வரி. ‘அரண்மனை இரகசியம் அங்காடி பரசியம்’ என்னும் மலையாள நாட்டுப் பழமொழியைக் குறிக்கின்றது. அந்தரங்கப் பொருள் - இரகசியங்கள் உழையுளார் - அருகில் உள்ளவர். அடையவும் - முழுவதும். அறைகுவம் - சொல்லுவோம். நள்ளிரா - நடு இரவு. கையறு நித்திரை - தன்னை மறந்து தூங்குதல். வைகறை - விடியற் காலம். அரவம் - ஓசை. நிதியெடுப்பவர்போல் - புதையல் தோண்டி எடுப்பவர் போல. 13 - 15 வரிகள், அரண்மனையிலிருந்து ஆசிரமம் வரையில் முனிவர் சுரங்கம் தோண்டுவதால் உண்டாகும் அரவத்தைக் குறிக்கின்றன. 19 வரி. கண்டது கனவோ? - நீ காதல் கொள்ளக் காரணமாயிருந்தது கனவுக் காட்சியோ? கண்ணுளார் - கண்ணிலே தங்கி யிருக்கிறார். சித்திர ரேகை - சித்திரலேகை. இவள், வாணாசுரன் மகளாகிய உஷை என்பவளின் தோழி. மனிதர் உருவத்தைச் சித்திரமாக வரைவதில் வல்லவள். உஷை தான் கனவிற் கண்டு காதல் கொண்ட அநிருத்தனை இன்னான் என்று அறியாமல் வருந்திய போது, சித்திரலேகை அவன் உருவத்தை ஓவியமாக எழுதிக் காட்டினாள். அவ் வுருவந்தான் தான் காதலித்தவன் என்று கூற, சித்திரலேகை தன் மாயா ஜாலத்தினால் அநிருத்தனை அவன் உறங்கிய கட்டிலோடு கொண்டுவந்து உஷையினிடம் விட்டாள் என்பது புராணக் கதை. நீ சித்திரலேகை அல்லை - என்பது, சித்திரலேகைபோல வாணி ஓவியம் எழுத வல்லவள் அல்லாள் என்பது 34 வரி. பழகியும் உளையே - வாணி தன் காதலனை நேரில் கண்டு பழகி யிருக்கிறாள் என்பதும், மனோன்மணி தன் காதலனை நேரில் காணாமல் கனவில் மட்டும் கண்டிருக்கிறாள் என்பதும் கருத்து. செய்யுள் 1 . அடவி - காடு. பாதை விடுத்து - வழி தவறி. அளித்த - பாதுகாத்த. செ. 2. வரை - அளவு, எல்லை. வரை குறியாது நிழலை அளத்தல் - தன் நிழலை அளக்க விரும்பிய ஒருவன், அந் நிழலின் எல்லையைக் குறிக்காமலே அளக்கத் தொடங்கினால் அது அளவுக்கு அகப்படாமல் நீண்டுகொண்டே போகும் என்பது. ஆரிருள் - நிறைந்த இருள். உடல மாறும் வகை - உடலம் ஆறும் வகை என்றும், உடலம் மாறும் வகை என்றும் பிரித்து இருபொருள் கொள்க. வீடு - இல்லம், மோட்சம். செ. 3. ஏகாந்தம் - தனித்த இடம். பெருங் ககனம் - பெரிய வெளி. அணையார் - சேர மாட்டார்கள். சிந்தை அற - மனம் இல்லை யாகும்படி. பந்தம் - உலகப் பற்று, கட்டு. செ. 4. பணிப் பாய் - அலங்காரப் பணி செய்யப்பட்ட பாய், திருமால் பள்ளிகொள்ளும் பாம்பாகிய பாய். பூஅணை - மலர் அணை; பிரமன் இருக்கிற வெண்டாமரையாகிய அணை - உன்னார் - நினைக்க மாட்டார்கள். செ. 5. வேதனை - துன்பம். மெய் - உடம்பு. சலிப்பு - களைப்பு. விடியும் - நீங்கும், போகும். செ. 6. ஏதோ தன் பழ நினைவு எழ - வழிப்போக்கனுக்கு முனிவரைப்பற்றி ஏதோ பழைய நினைவு உண்டாக. கண்பனித்து - கண்ணீர் கசிந்து. செ. 7. இழைக்க - செய்ய. அந்தரம் - ஆகாயம். சுந்தரம் -அழகு. தாரகைகள் - விண்மீன்கள். அறைந்து - சொல்லி. செ. 8. பிணைந்த - சேர்ந்த. அன்றில் - அன்றிற் பறவை. இவை ஆணும் பெண்ணும் இணைபிரியாமல் இருக்கும் என்றும், பிரிந்தால் உடனே உயிர்விடும் என்றும் கூறுவர். இவை கற்பனைப் பறவை. அலர்மலர் - அலர்கின்ற மலர்கள். கண்ணீர் அருவி - கண்ணீர் அருவி என்றும், கள் (தேனாகிய) நீர் அருவி என்றும் இருபொருள் கொள்ளலாம். அகம் உடைந்து - மனமுடைந்து. தூவ - சொரிய. செ. 9. விந்தை - வித்தை. தெரிக்க - சொல்ல. விளிப்பவரின் - கூப்பிடு கிறவர்போல. வாவல் - வௌவால் பறவை, வௌவால் தனது தோல் சிறகுகளை அசைத்துப் பறப்பது கையை அசைத்து அழைப்பது போல இருக்கிறது. விளக்கொடு - வெளிச்சத்தோடு. அந்தி - மாலைநேரம். ஏவி - போகவிட்டு. அந்தியை முன் ஏவி இரவென்னும் இறைவி வந்திறுத்தனள் - மாலை நேரமாகிய தோழியை முன் போகவிட்டு இரவாகிய இராணி அவள் பின்னே வந்தாள். செ. 10. பொரியரவு - புள்ளிகளையுடைய பாம்பு. சுடிகை - தலை, உச்சி. பொலன்மணி - பொலிவுள்ள மாணிக்க மணி. பாம்புகளின் தலையில் மாணிக்க மணி உண்டென்பது கவிஞர்களின் கற்பனை. ஒளி - வெளிச்சம். திண் - திண்ணிய, பலமுள்ள. கறைபடி - யானை, (உரல்போன்ற காலையுடையது). மருப்பு - தந்தம். உழுவை - புலி. அழல் விழி - நெருப்புப் போன்ற கண்கள். செ. 11. பேரயர்வு - அதிகத் தளர்ச்சி, மனம் இறந்து - மனம் கடந்து. செ. 12. ஒருங்குஆர - ஒன்றாக நெருங்கியுள்ள. முளரி- முட்கள். உழை - பக்கம். ஓங்கார ஒலி தரும் கானநதி - காட்டாறுகளின் நீர்ஒலி ஓங்கார சத்தத்தை உண்டாக்கின. செ. 13. முனிவர் நமது இருப்பிடத்தை யடைந்தபோது அங்கே எரிந்துகொண் டிருந்த நெருப்புச் சுடர், தலையைத் தாழ்த்தி வரவேற்றதுபோலிருந்தது. செ. 14. நிமலம் - நிர்மலம், சுத்தமான. மெய்ப்பத்தர் - உண்மையான பக்தர். செ. 15. பனிப்பு - குளிர், நடுக்கம். பலம் - பழம். மூலம் - கிழங்கு. செ. 16. நாவில் - நாக்கில். ஒரு விரலைத் தாண்டுதல் - ஒரு விரற் கிடை தூரத்தைக் கடத்தல். நாவினால் குண்டலி சக்தியை எழுப்பி ஒரு விரற்கிடை தூரத்தைக் கடந்து அமுத கலையை உண்ணுவது ஹடயோக முறை. இதனை யோகிகள் செய்வார்கள். சாகரம் - கடல். கந்தம் - கிழங்கு. அனந்தம் - பல. செ. 17. திருந்த - செம்மையாக. உறைதி - தங்குவாய். பனிப்பு - நடுக்கம். செ. 18. இயம்பியும் - சொல்லியும். இசையாமல் - சொல்லாமல். மலைவு - மயக்கம். பகர்ந்தான் - சொன்னான். செ. 19. முகமதி ஒருகைப் பதும மலர் மறைப்ப - முகமாகிய சந்திரனைக் கையாகிய தாமரையினால் மறைத்தான். முனிவருடன் வந்த வாலிபன், உண்மையில் பெண்மகளாகை யினால், தீயின் வெளிச்சத்தில் தன்னைப் பெண் என்று தெரிந்து கொள்ளாதபடி முகத்தைக் கையினால் மறைத்தான் என்பது கருத்து. சுவர் ஓவியம் - சுவரில் எழுதப்பட்ட ஓவியம். பண்டைக் காலத்தில் ஓவியங் களைச் சுவர்களிலே எழுதினார்கள். கருதிடுவான் - எண்ணுவான். செ. 20. இரவு வேளையில், தீச்சுடர் அடங்குவதும் பொங்கி எரிவதுமாக இருந்த காட்சி, எலியைப் பிடித்த பூனை அதனைக் கொன்று தின்பதற்கு முன்னர். அவ்வெலியை ஓடவிட்டுப் பிடித்து விளையாடுவதுபோல இருந்தது என்பது இச் செய்யுளின் கருத்து. செ. 21. வதிந்த குறி - முகத்தில் காணப்பட்ட குறி. எழிலாரும் இளமை - அழகு பொருந்திய இளமைப் பருவம். இடையூறாதி - துன்பம் முதலியவை. இவண் - இங்கே. செ. 22. ஓதாய் - சொல்லுவாய். கழன்றனளோ - நீங்கினாளோ. மெய் விடுத்து - உண்மையை வெளியே விட்டு. கழறாய் - சொல்லுவாய். செ. 23. வையகம் - உலகம். கையாரும் - கையில் வரும். இலவு - இலவ மரம். இலவங்காய் பழுக்காது. முற்றிய பிறகு வெடிக்கும். பழுத்தால் உண்ணலாம் என்று காத்துக்கொண்டிருக்கும் கிளி ஏமாற்றம் அடையும். ஆகவே ‘இலவுகாத்த கிளி போல’ என்னும் பழமொழி வழங்குகிறது. இச் செய்யுளின் முதல் இரண்டடிகளின் கருத்து, தீ எரியும்போது அந்த வெளிச்சத்தில் பொருள்களின் நிழல் காணப்பட்டு அது தணியும்போது நிழலும் மறைந்துவிடுவதுபோல உலக சுகங்கள் நிலைத்திரா என்பது. செ. 24. “நெயுறு குடத்தெறும்பு நண்ணல்” - நெய்க் குடத்தை எறும்பு மொய்ப்பது போல என்னும் பழமொழி. முயற்கொம்பு - இல்பொருள் உவமை. பெருங் கபடம் இடும் கலன் - வஞ்சகமாகிய பொருள்களை இட்டு வைக்கும் பாத்திரம். பிறங்கும் - விளங்கும். செ. 25. அடிகள் - முனிவர். ஏதிலன் - வறியவன். வெயிலின்முன் விளக்கொளி என்பது பழமொழி. மின்னெளியில் கண்போல - மின்னல் வெளிச்சத்தில் கண் கூசுவதுபோல வெளிப்பட்ட கள்வன் - பிடிபட்ட திருடன். செ. 26. யதி - துறவி, முனிவர். இறும்பூது - வியப்பு. வேஷ ரகசியங்கள் - மாறுவேடம். வெட்ட வெளியான - வெளிப்பட்டன. செ. 27. நின்மல விபூதி - தூய்மையான திருநீறு. பொன் மய மெய் - பொன் நிறமான உடம்பு. நீறுபடி நெருப்பு - நீறியுள்ள சாம்பலுக்குள்ளே இருக்கிற நெருப்பு. கண் இணை - இரண்டு கண்கள். தெரிக்கும் - காட்டும். செ. 28. எழில் - அழகு. குழல் - கூந்தல். சடைக்கோல மஃது - சடைக் கோலத்தை. வீசு உலையின் மூக்கு என - உலைக்களத்தில் துருத்தி யின் மூக்கிலிருந்து வெளிப்படும் காற்றைப்போல. வெய்துயிர்ப்பு - பெருமூச்சு. செ. 29. செமித்தருள்வை - பொறுத்தருள்க. செ. 30. காவிரிப்பூ மாநகர் - காவிரிப்பூம்பட்டினம். உதித்தோர் - பிறந்தவர். செ. 31. மலடி - வந்தி, பிள்ளைப்பேறு இல்லாதவள். செப்பரிய - சொல்லுவதற்கு அருமையான. செகம் - உலகம். செ. 32. அடல் - வலிமை. அருளுவர் - அன்பே உருவமானவர். அலகுஇல் - அளவில்லாத. அறைவனோ - சொல்லுவேனோ. செ. 33. புளகம் மூடி - மயிர்க்கூச்செறிந்து. வதனம் - முகம். இளம்பிடி - இளைய பெண்யானை போன்ற பெண். - பதினாறு கலைகளையுடைய சந்திரன், நிலா. கால்காற்று, பிரிந்திருக்கும் காதலருக்கு வெண்ணிலாவும், இளங் காற்றும் துன்பம் செய்கிறது என்பது கருத்து. செ. 34. மடமகள் - இளம்பெண். தடுமாறா - தடுமாறி. தகைமை - நல்ல குணங்கள். செ. 35. வேதனைப்பட்டு - வருத்தம் அடைந்து. படிறு - வஞ்சகம். செ. 36. பொலம் - அழகு, பொன். புகலில் - சொன்னால். அருள் அரும்பி - அன்பு முகிழ்த்து. அதிபர் - தலைவர். அயர்ந்திருந்தேன் - மறந்திருந்தேன். செ. 37. உன்னி - நினைத்து. திருவாரும் - அழகுள்ள. சேடியர் - தோழிமார். தெரிப்பர் - சொல்லுவார்கள். செ. 38. ஆயத்தார் - தோழிப் பெண்கள். ஆயவும் - எண்ணிப் பார்க்கவும். அகல் வேலை - பரந்த கடல். எறியும் - அலைவீசும். அகோராத்திரம் - பகலும் இரவும். கடல் ஓசை பிரிந்த காதலர் களுக்குத் துன்பம் உண்டாக்கும் என்பது கவிமரபு. கலைமதி - பதினாறு கலைகளையுடைய சந்திரன், நிலா. கால்காற்று, பிரிந்திருக்கும் காதலருக்கு வெண்ணிலாவும், இளங் காற்றும் துன்பம் செய்கிறது என்பது கருத்து. செ. 39. காசினி - பூமி. கட்டம் - கஷ்டம். எனைத்தென்க - எவ்வளவு என்று சொல்ல. செ. 40. ஒல்லை - விரைவில். உன்னி - எண்ணி. தீகதுவ - தீ பற்றி எரிய. கரந்து - மறைந்து, ஒளிந்து. செ. 41. தீர்த்தகுளம் - புண்ணிய நீர்த்துறைகள். மூர்த்தி - மூர்த்தங்கள் உள்ள இடங்கள். தலம் - இடம். இங்குக் கோயில்களைக் குறிக்கிறது. திருக்குஅறு - மயக்கம் நீங்கிய. வாதியர் - சமயவாதம் செய்வோர். மன்று -சபை, அம்பலம். மறுத்து உறங்கும் - உடல் தூக்கத்தை மறுத்து யோக நித்திரை தூங்கும். யோகியர் - யோகம் செய்பவர். செ. 42. மான் - பெண்மான். கலை - ஆண்மான். பிடி - பெண்யானை. மா - மிருகம். இங்கு ஆண்யானையைக் குறிக்கிறது. வன்பிகம் - வலிமையான குயில். சுகம் - கிளி. எஞ்ஞான்றும் - எப்போதாவது. நவில்விர் - சொல்லுங்கள். அனந்தம் - முடிவில்லாத (பல). இச் செய்யுளுக்குக் குறிப்புப்பொருள்: மால் (மயக்கத்தை) விடாத 64 கலைஞானங்களே! பிடிவாதமே வாழ்வாகக்கொண்ட மதச் சச்சரவு உடைய ஆகுலமே! (ஆரவாரங்களே!) அநித்தமாகிய ஜடதுக்க முள்ள இகலோகங்களே! சுகமுள்ளவை என்று கூறப்படுகிற இந்திர லோகம் முதலிய பரலோகங்களே என்பது. செ. 43. காயம் - உடம்பு. அருவருப்பு - வெறுப்பு. செ. 44. புனிதர் - சுத்தமானவர். போதம் - அறிவு. செ. 46. சிற்சாயை - சில சாயல். வகுத்து - விபரமாகச் சொல்லி. செ. 47. இவ்வழலே கதி - இந்த நெருப்பிலே விழுந்து இறப்பேன் என்பது கருத்து. மூதுருவம் விளக்கி - பழைய உருவத்தை வெளிப்படக் காட்டி. மொழிகுளறி - சொல் தடுமாறி. செ. 48. அறையும் - சொல்லும். சுருதி - இங்குச் செவி வழிச் செய்தி என்பது பொருள். செ. 49. பார்வதி - சிவபெருமானின் சக்தி. பாரதி - கலைமகள், சரசுவதி. கஞ்சப் பார்க்கவி - செந்தாமரை மலரில் எழுந்தருளியுள்ள திருமகள், இலக்குமி. அருந்ததி - இவள் கற்புக்குத் தெய்வமாக விளங்குபவள். அருங்கதி - கிடைத்தற்கரிய நிலை. ஆர்வம் - அன்பு. ஆர்க - பொருந்துக. ஆரணங்கள் - வேதங்கள். ஆர்த்த - ஆரவாரம் செய்தன. செ. 50. ஆழி - கடல். புடைசூழ் - பக்கங்களிலே சூழ்ந்த. பந்தனைகள் - துன்பங்களாகிய கட்டுகள். சிந்த - கெட. நிரந்தரம் - எப்பொழுதும். கழறாய் - சொல்வாய். எதிர்ச்சையா - தற்செயலாய். கடிபுரி - காவல் அமைந்த கோட்டை. பெருமலை - இங்குப் பொதிகைமலையைக் குறிக்கிறது. சிறுகால் செல்வன் - இளங்காற்றாகிய மகன். தெள்நீர்க் கன்னி - தெளிந்த நீராகிய பெண். சிற்றில் - சிறுவீடு; சிறுமிகள் விளையாட்டாகக் கட்டுவது. காவி - குவளைப்பூ, நீலத் தாமரை. அடர்த்து - கொய்து. சார்த்திலன் - சூடவில்லை. மான - ஒக்க, போல. மாடே - இடத்தில். பூதப்பொருள் - பருப்பொருள், ஸ்தூலப் பொருள். புலன் துணை - ஐம்புலன்களின் உதவி. போதப்பொருள் - அறிவுப் பொருள். இரவி - சூரியன். வரி 85. கண் செம்மையாக இருந்தால் காட்சி நன்றாகத் தெரியும். படலம் முதலிய ஏற்பட்டால் காட்சி நன்றாகத் தெரியாது என்பது கருத்து. துவக்கு இந்திரியம் - தொட்டு உணரும் புலன். வடக்கு நோக்கி - வடக்கு திசையைக் காட்டும் ஒரு யந்திரம். இதில் உள்ள முள் எப்போதும் வடக்கு திசையிலேயே திரும்பி நிற்கும். பூதயாக்கை - பருவுடல். கரத்தால் - கையினால். ஏய்ப்ப - ஒப்ப, போல. அனுமான ஆதி - அனுமானம் பிரத்தியட்சம் முதலிய அளவைகள். அயிர்ப்போம் - சந்தேகப்படுவோம். ஆர்ப்பு - ஆரவாரம். வெம்சரம் - கொடிய அம்பு. விளம்பு - சொல்லு. பரிதபித்து - வருந்தி. உறார் - அடையமாட்டார். எமன் - சாவு. குரூரக் கூற்றின் - கொடுமையுள்ள எமனுடைய. விரூபம் - அவலட்சணம். சிலந்தி - சிலந்திப் பூச்சி. பசை அறு - இரக்கம் இல்லாத. அல் - இரவு, இருட்டு. பேழ் - பெரிய. வெருக்கொள - அஞ்சும்படி. கரங்கள் - சிலந்தியின் கால்கள். b வந்துற - முதுகு பொருந்தும்படி. இசித்து - இழுத்து; இது கொச்சைச் சொல் என்று சிலர் இகழ்வர். இச்சொல் குண்டலகேசி காவியத்திலும் பயிலப்பட்டுள்ளது. (புறத்திரட்டு 411-ஆம் செய்யுள் காண்க.) கறிக்க - கடிக்க. எய்யாது - ஒழியாமல் பஞ்சா சத்கோடி - ஐம்பது கோடி. 28-29 வரிகள், இந்தப் பூமி ஐம்பதுகோடி யோசனை பரப்புள்ளது என்னும் புராணக் கருத்தைக் கூறுகின்றன. இரவியின் மண்டலம் - சூரிய மண்டலம்; சூரிய மண்டலத்தில் பல அண்டங்கள் அடங்கியுள்ளன. மீனினம் - நட்சத்திரத் தொகுதி. அலகிலை - அளவில்லாதது. ஒப்பறு - ஒப்பில்லாத. உந்தி - கொப்பூழ். முளரி - தாமரை. நான்முகச் சிலந்தி - நான்கு முகமுடைய பிரமனாகிய சிலந்தி நாற்றிய - கட்டித் தொடங்கவிட்ட. மாலும் - திருமாலும். பேய்த்தேர் - கானல்நீர். மகோததி - பெருங்கடல். புற்புதம் - நீரில் தோன்றும் குமிழி. இந்திரஜாலம் இவ் எந்திர விசேடம் - இந்த உலகம் மாயையின் காரியமாக அமைந்தது. திரிகை - இயந்திரக் கல். ஆர்க்கும் - இரைகின்ற. மீக்கொளும் - அதிகப்படும். வரி - 67. ‘சட்டிசுட்டது கைவிட்டது’ என்பது பழமொழி. பிரத்தியக் பிரபோதயம் - உள்முகமான மெய்ஞ்ஞானம். அகண்ட - பரந்த. சித்கனம் - அறிவுமயம். நிருபாதிகம் - காலதேச விவகாரங்களைக் கடந்துநிற்கும் நிலை. 76-78 வரிகள். பாலின் நிறத்தையறியாத பிறவிக் குருடனுக்குப் பாலின் நிறம் கொக்குப் போன்றது என்று சொன்ன கதையைக் குறிக்கிறது. (கதை விளக்கத் திற் காண்க.) சுதமாம் - தானே தெரியும். அநுபூதி - தான் அறிந்ததும் ஆனால் பிறருக்குச் சொல்ல முடியாததுமான அறிவு. மோனம் - மௌனம். சித்தி - மோட்சம். முத்தி - மோட்சம். புரையறு - குற்றமற்ற. குரவன் - குருநாதன். உஞற்றி - செய்து. சினகரம் - கோயில். இச் சொல் முதலில் ஜைனக் கோவிலுக்குப் பெயராக அமைந்து, பிறகு கோயில் என்னும் பொதுப் பொருளைப் பெற்றது. அகம் உடைந்து - மனம் வருந்தி. விடும் பரிசு - விடுகிற விதம். கையறும் - செயலற்றிருக்கும். கணித சங்கேதம் - கணக்குக் குறியீடு. கரதலா மலகம், கரதல + ஆமலகம் - கையில் நெல்லிக்கனி. ‘உள்ளங்கை நெல்லிக்கனி.’ விண்டிடா - பிண்டுபோகாது. வீக்கிய - கட்டிய. பாசம் - கயிறு. ஆகருஷ்ணம் - இழுக்கும் சக்தி. யாப்புஉற்று - கட்டுண்டு. பயிற்றிடு - பயிற்சி அளிக்கின்ற. குயிற்றிய - செய்த. பூரிய - எளிய. அக்கரம் - அட்சரம், எழுத்து. வரி 174 - 175. பொன்னை நெருப்பில் இட்டுப் புடம் போட்டால் அதன் அழுக்கை நீக்கிப் பிரகாசிக்கச் செய்கிற நெருப்பு என்பது கருத்து. உள்ளுவர் -நினைப்பார்கள். பாரிசாதம் - பவழமல்லிப்பூ. இது இரவில் மலர்வது. 179-181 வரிகள்: வெண்ணிற மலர்கள் இராக் காலத்தில் மலர்வதன் காரணம், இருட்டில் வெண்ணிறம் காட்டி வண்டுகளையும் ஈக்களையும் கவர்ச்சி செய்வதற்காக என்பது. உசிதம் - பொருத்தம். நிசி - இராத்திரி. செறிவு - அடர்ச்சி, நெருக்கம். உறுகண் - துன்பம். ஏது - காரணம். இலகாதது - விளங்காதது, தெரியாதது. இசைவு - பொருத்தம். அடிகள் - சுந்தரமுனிவர். சுருங்கை - கரந்துபடை. ஒருத்தரும் அறியாதபடி மறைத்து அமைக்கப்பட்ட வழி. நீர் போவதற்கு அமைக்கப்பட்டு, அது தெரியாதபடி மேலே மூடப்பட்ட கால்வாய்க்கும் பெயர். சுருங்கை என்பது கிரேக்க மொழி. கி. மு. முதல் நூற்றாண் டிலும் கி. பி. 1, 2 நூற்றாண்டுகளிலும் கிரேக்கராகிய யவனர் தமிழ் நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்த காலத்தில், அவர் மூலமாகத் தமிழ்மொழியில் கலந்த கிரேக்கச் சொற்களில் இதுவும் ஒன்று. இச்சொல் சங்க காலத்து நூல்களிலும் பிற்காலத்து. நூல்களிலும் காணப்படுகின்றது. தொட்டிட - தோண்ட. (தொடு - தோண்டு.) எய்ப்பினில் வைப்பு - இளைத்த காலத்தில் உதவுவதற்கு வைத்த பொருள், சேமநிதி. கைப்படு கனி - உள்ளங்கை நெல்லிக்கனி. சமுசயம் - ஐயம். இழுது - நெய். சமாதி - பிரமத்தோடு மனம் ஒன்று பட்டிருக்கும் நிலை. அரற்றி - வாய்விட்டுக் கதறி. முகமன் - முன்நின்று பாராட்டுவது. உதயம் - உறப்பாடு. சமயிகள் - பல மதத்தார்கள். காண் தகும் - காணத்தக்க, மதிப்பார் - கணக்கிடுபவர். மடு - குளம். ஒன்றிய - சேர்ந்துள்ள. நட்டார் - நண்பர். படியெலாம் - பூமி எங்கும். கடம்பாடு - கடமை. வீரருடைய கடமை, செஞ்சோற்றுக் கடன் கழிப்பது. பீடை - துன்பம். வாகனம் - (இங்கு) பல்லக்கு, சிவிகை. அலகு இலா - எண்ணிக்கை இல்லாத. களம் - இடம். ‘மீன் உண்ணக் குளக்கரை இருக்கும் கொக்கென’ என்பது ‘கொக்கொக்கக் கூம்பும் பருவத்து; மற்றதன், குத்தொக்க சீர்த்த இடத்து’ என்ற திருக்குறள் கருத்து. சம்பவம் - நிகழ்ச்சி. சங்கதி - தொடர்பு, செய்தி. ‘எண்ணார் துணிந்தபின் பண்ணார் தாமதம்’ என்பது, ‘எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு’ என்ற திருக்குறளின் கருத்தைக் கூறுகிறது. அடையவும் - முழுவதும். இதக்கெடு - நன்மைக் கேடானது. பாற்று இனம் - பருந்துகளின் கூட்டம்; (பாறு - பருந்து). நிணம் - கொழுப்பு. புலால் - மாமிசம், இறைச்சி. பணைத்து - பருத்து. பருதி - சூரியன், ஒளி. வை - கூர்மை. குருதி - இரத்தம். மாற்றலர் - பகைவர். பருகியும் - அவர் உயிரைக் குடித்தும் குறுவாள் - சிறுவாள். பகழி. - அம்பு, தூணி - அம்புகளை இட்டு வைக்கும் தூணி. நாண்நின்று - வில்லின் நாணிலிருந்து. உருமு - இடி. காற் படையாளர் - காலாள் படையினர். கலினம் - கடிவாளம். ‘கருத்தும் விரைவு’ - மனோவேகம். குரம் - குதிரையின் குளம்பு. கூன் பிறை - வளைந்த நிலாப்பிறை போன்ற. துணை மருப்பு - இரண்டு தந்தங்கள். மும்மதம் - மூன்று மதநீர். யானைகளுக்கு மூன்றுவித மதநீர் பெருகுவதால் மும்மதம் எனப் பெயர்பெற்றது. வாரணப் புயல் இனம் - மேகம் போன்று கருநிறமுள்ள யானைக் கூட்டம். வெந்நிட் டோடிய - முதுகு காட்டி ஓடின. புரந்தரன் - இந்திரன். ‘முன்னொரு வழுதிக்கு வெந்நிட்டோடிய பரந்தரன்’ என்பது, பாண்டியன் ஒருவன் இந்திரனுடன் போர் செய்து வென்ற கதையைக் குறிக்கிறது. இக் கதையைத் திருவிளையாடற் புராணம், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தில் காண்க. புரந்தரன் கைப்படாப் பொருப்புகள் - இந்திரனுடைய கைவாளினால் சிறகை இழக்காத மலைகள். முன் காலத்தில் மலைகள் சிறகு பெற்று வானத்தில் பறந்து திரிந்தன என்றும், இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டி வீழ்த்தியபடியால், அந்த மலைகள் பறக்க முடியாமல் நிலத்தில் தங்கிவிட்டன என்னும் புராணக்கதையைக் குறிக்கிறது இந்த அடி. தேர்கள் மலைகளுக்கு உவமை. கொடிஞ்சி நெடுந்தேர் - கொடிஞ்சி என்னும் உறுப்பையுடைய பெரிய தேர். நாற்படை - நான்கு விதமான படை. அவை, யானைப் படை, குதிரைப்படை, தேர்ப் படை, காலாட்படை என்பன. யாக்கை - உடம்பு. பாண்டி - பாண்டி நாடாகிய தாய். முதுநதி மாதா - தாம்பிரவர்ணி ஆறாகிய தாய். சோரி - இரத்தம். பொன்றிடும் அளவும் - சாகிற வரையில். விந்தம் அடக்கியோன் - விந்திய மலையைத் தாழச் செய்தவனாகிய அகத்தியன். முற்காலத்தில் விந்திய மலை உயர்ந்து இறுமாப் படைந்திருந்தது என்றும், அவ்வழியாக வந்த அகத்திய முனிவர் அதன் தலையில் தன் கையை வைத்துச் சிறிதாக அடக்கினார் என்றும் புராணம் கூறம். தந்தநற்றமிழ்மொழி - அகத்தியன் முதலில் இலக்கணம் எழுதி அமைக்கப்பட்ட தமிழ்மொழி. கிழமை - உரிமை. ஓத்தறுத்து - தாளம் பிடித்து. சிறுகால் - இளங் காற்று. பொதிகை மலையிலிருந்து தென்றற் காற்று வீசுகிறது என்பது கவி மரபு. உயிர்ப்பு - மூச்சு. திரு அனையார் - இலக்குமி போன்ற மனைவியர். உறுகண் - துன்பம். கேண்மை - உரிமை. வஞ்சியர் - வஞ்சி நாட்டார், சேரநாட்டவர். அரி - சிங்கம். சீதம் - குளிர்ச்சி. செந்தழல் ஓமத்தீ. கயவர் - கீழ்மக்கள். இந்தளம் - விறகு, எரிகரும்பு, திருந்தலீர் - பகைவர்களே. ஜயமாது - ஜயலட்சுமி. இரந்து கோட்டக்கது - வேண்டிக்கொள்ளும் தகுதியுடையது. ‘புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்காடு, இரந்துகோட் டக்க துடைத்து’ என்னும் திருக்குறளுடன் இவ்வடியை ஒப்புநோக்குக. சுழலுமிசை வேண்டிவேண்டர் வுயிரார் கழல் யாப்புக் காரிகை நீர்த்து (78 - 7) உதும்பர தரு - அத்திமரம். பிறந்துஇறும் - பிறந்து சாகும். அசகம் - கொசுகு. அத்திக்காய்களில் கொசுக்கள் உண்டாகி அதிலேயே மடிவது இயற்கை. அடி 167. இவ்வடியுடன், ‘தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார், தோன்றலின் தோன்றாமை நன்று’ என்னும் திருக்குறளை ஒப்புநோக்குக. அழுக்காறு - பொறாமை. சேமம் - பாதுகாவல். புல்லியர் - இழிந்தவர். விஜயலக்குமி - வெற்றி மடந்தை. தமர் - சுற்றத்தார். நந்தா - கெடாமல். நிந்தாநெறி - நிந்தித்தலாகிய வழி. தந்தாவளி - தந்தம் - பல்; ஆவளி - வரிசை. சிந்தா விழ - உதிர்ந்து விழ. அடல் - வலிமை. பெயருமின் - புறப்படுங்கள். உருமு என ஆர்த்து - இடி போல ஆரவாரித்து. கலித்தாழிசை 1. ஊதும் இந்தச் சின்னம் - ஊதுகின்ற இந்த எக்காளம். சயிக்கும் - வெல்வான். எமன் - எம் மன், எங்கள் அரசன் (இடைக் குறை). தெய்வீர்காள் - பகைவர்களே. சின்னமதி - சிற்றறிவு. இன் உணவு - இனிய சாப்பாடு. இசைத்துளோம் - சொன்னோம். கலித்தாழிசை 2. வயவர் - வீரர். புயம் மேவி - தோளில் தங்கி. ஜயை - வெற்றி மடந்தை, ஜயலட்சுமி. இவர்வாள் - ஏறி இருப்பாள். 3-ஆம் அடி: உறைவிடமா - வெற்றி மடந்தை வாழும் இடமா, விஷம் இருக்கும் இடமா. இவர்வாள் - ஏறி இருப்பாள், இவர்களுடைய வாள். மறலி - யமன். வழங்கினோம் - சொன்னோம். கலித்தாழிசை 3. ஒல்லும் - பொருந்தும். முதல் இரண்டடிகளின் கருத்து: உறையிலிருந்து உருவிய வாள் வெற்றி பெற்றால் அல்லாமல் மீண்டும் உறையில் செல்லாது. அதாவது, சமாதானப் பேச்சு இனி கிடையாது. இல்லவர் - மனைவியர். இற்றது - அறுந்தது. வெருவி - அஞ்சி. பஞ்சாய்ப் பறத்துவன் - பஞ்சுபறப்பது போலப் பறக்கச் செய்வேன். சடையன் - குடிலனுடைய சேவகன். சாற்றி - சொல்லி. வகிர்ந்து - கீறி, பிளந்து. ஒன்றார் - சேரமாட்டார். ஜனார்த்தனம், வைக்கம் - இவை சேர (மலையாள) நாட்டில் உள்ள ஊர்கள். குரோதம் - கோபம், பகை. இவ்வயின் - இவ்விடத்தில். உவப்போடு - மகிழ்ச்சியோடு. இழுக்கு - குற்றம். உன்னுதி - நினைப்பாயாக. சுதேச அநுராகம் - தன் நாட்டின்மேல் அன்பு. வாயில் -கோட்டை வாயில், திறத்தார்-வலிமையுள்ளவர். புரையற்றோர்-குற்றமற்றவர். ஏலும்- இயலும், முடியும். ஏற்கும்முன்- கடமையை ஏற்றுக்கொள்ளும் முன்பு. நம் பால்- நம்மேல். சாற்றியது- சொன்னது. பரி -குதிரை. ஆம்பொழுது - வேண்டியபோது. வாம்பரி - தாவி ஓடுகின்ற குதிரை. உன்வயின் -உன்னிடத்தில் . வாளா - சும்மா. உன்னுழை - உன்னிடத்தில். வீதல் -அழிதல், சாதல். வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் -அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் - அரசனுடைய உயிர். தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் - தனித்து இருப்பவள். சாகசம் - துணிவுச் செயல். மதிவரு குலம் - சந்திரனிலிருந்து வரும் பரம்பரை. நறவு - தேன். இந்து - சந்திரன், நிலா. இரிந்து - தோற்று ஓடி, புறங்கொடுத்தல் -முதுகுகாட்டி ஓடுதல். கார்முகம்- வில். கடிவாள் - கூர்மையான போர்வாள். பொலியாது- விளங்காமல். அகன்மின் - அகலுங்கள். “இருதலைக் கொள்ளி எறும்புபோல” என்பது பழமொழி. செருமுகம் - போர்க்களம். செகுத்து -அழித்து, கொன்று. பெற்றி - தன்மை. மருந்து -அமிர்தம். அஞர் -துன்பம், வருத்தம். சௌரியம் -வீரம். தனையள்- மகள். சூதக உடம்பு -அசுத்த உடம்பு. அழுங்கு - அழு. பீடை - துன்பம். பருதி - சூரியன். மும்மையில் - மூன்று ஆற்றல்களில். மூன்று ஆற்றல்களாவன: அறிவு, ஆண்மை, பெருமை என்பன. 85 - 87 அடிகளின் கருத்து, “வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம், உள்ளத்தனைய துயர்வு” என்னும் திருக்குறளின் கருத்தையுடையது. எவ்வும் - எழுகின்ற. அணியார் பந்து - அழகான பந்து. இசைக்கும் - கொல்லும். மண்டு அமர் - நெருங்கிச் செய்யும் போர். சமுசயம் - ஐயம். தடுமாறு -தடுமாற்றம். தகைமை -பெருமை. உரம் - மார்பு. உய்ப்பையேல் - உய்த்துபோகச் செய்தால் (உய்தல் - பிழைத்தல்). சழக்கு- குற்றம். வெருவு - பயப்படு. மடங்கல் - சிங்கம். அனந்தை ஊர் - திருவனந்த புரம். தூண்டிலின் மீனென - தூண்டில் முள்ளில் சிக்கிய மீனைப் போல. உதியன் - சேரன். உற்று - அடைந்து, வந்து. அற்றம் - சமயம். தெருள் - தெளிவு, விளக்கம். அடல் - வலிவு, வீரம் தொடை - மாலை. மாற்றம் - சொல், பேச்சு. கும்பம் - குடம். நிம்ப மாலை - வேப்ப மாலை; இது பாண்டிய மன்னருக்கு உரியது. மதில் திறம் - கோட்டையின் வலிமை. மட்பரி - மண்குதிரை. நதியிடை மட்பரி நடாத்தினோர் - என்பது ‘மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினது போல’ என்னும் பழமொழியைக் குறிக்கிறது. ஒறுத்திட - தண்டிக்க, உழிஞை - உழிஞைப் பூமாலை. பண்டைக்காலத்துத் தமிழரசர், பகையரசரின் கோட்டையை முற்றுகை செய்யும்போது அணியும் மாலை. கோட்டையை வளைத்து முற்றுகை இடுவதற்கு உழிஞைப் போர் என்பது பெயர். உழிஞை சூடுவன் - கோட்டையை முற்றுகையிடுவான். அவாவிய -ஆசைப்பட்ட, சுரும்பு ஆர் - வண்டுகள் மொய்க்கிற. விதுகுலம்- சந்திர குலம் (விது - சந்திரன் ) நொச்சி - நொச்சி மாலை: கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிடு வோரைக் கோட்டையின் உள்ளிருந்து போர் செய்வோர் அணியும் மாலை. கோட்டைக்குள்ளிருந்து பகைவரை எதிர்க்கும் போருக்கு நொச்சிப் போர் என்பது பெயர். ஏதம் - குற்றம். ஒல்கலை - தளராதே. உரவோர் - மனவலி யுடையவர். உம்பல் - யானை. 265. இந்த அடி, “சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பின், பட்டுப்பா டூன்றுங் களிறு” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது 271-ம் அடி. “நாணகத்தில்லா ரியக்கம் மரப்பாவை, நாணால் உயிர் மருட்டியற்று” என்னும் திருக்குறளின் கருத்துள்ளது. 272 - 273 அடிகள், “ஒட்டார் பின்சென் றொருவன் வாழ்தலின் அந் நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று” என்னும் திருக்குறளைக் கூறுகின்றன. தப்பினாய் இருமுறை - போர்க்களத்திலும், தற்கொலை செய்ய நினைத்தபோதும் அரசன் தப்பியது. தப்பிலி - பிழை இல்லாதவன் என்றும் போக்கிரி என்றும் இருபொருள் கொள்க. பிரியப்படுகை - அன்பு செலுத்துவது, காமங் கொள்வது மிண்டலை - பேசாதே. மிண்டுக என்பதும் சேர நாட்டில் வழங்கு கிற மலையாள மொழிச் சொல். தையலர் - பெண்கள். இங்குக் கன்னிமாடத்தில் இருக்கும் பெண்களைச் சுட்டுகிறது. வேறரக் களைகுவம் - என்றது நாராயணனைக் கருதிக் கூறியது. ஆதியர் - சிறந்தவர். அடி 24 - 25: ‘வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி’ என்னும் பழமொழியைக் கூறுகின்றது. அடி 31 - 32. “எலிக்குப் பயந்து வீட்டைச் சுட்டது போல” என்னும் பழமொழியைச் சுட்டுகிறது. “எலியெ சிற்றிச்சு இல்லம் சுட்டால் எலி சாடியும் போம், இல்லம் வெந்தும் போம்” என்பது மலையாள நாட்டுப் பழமொழி. ஒரு மொழி அல்லாது இருமொழி ஆயின் - ஒருவர் கட்டளை இடாமல் இருவர் கட்டளையிட்டால் என்பது கருத்து. கடிபுரி - கோட்டை. இவுளிதேர் - குதிரைப்படை, தேர்ப்படை. கடகயம் - மதம் பொருந்திய யானை. கைக்குட்கனி - உள்ளங்கை நெல்லிக் கனி. குடிலனைக் குடிலன் என்றே கொண்டேன் - குடிலனை வஞ்சகன் என்றே கருதினேன் என்பது கருத்து. (குடிலன் -வஞ்சகன்). பகடி -கேலி, பரிகாசம். பொற்றொடி - பொன் வளையல். ‘என் தங்கையின் இழிவு இப்படி எனக்கே’-பலதேவனுடைய சோரக் காதலியின் சகோதரன் பலதேவனை வேலால் குத்தியபோது சொன்ன சொல். உரத்து - மார்பிலே. பொன்றினன் - இறந்தான். கூலி - இங்குக் கைக்கூலி என்பது பொருள். சுவாமித் துரோகி - யஜமானத் துரோகி, அரசத் துரோகி, கோவில் - அரண்மனை. ஓவல் இல் - நீங்குதல் இல்லாத. கனைகழல் - ஒலிக்கின்ற வீரக்கழல். வெருவிலேன் - அஞ்ச வில்லை. பிழைத்தனர் - பிழைசெய்தனர். மாட்டுதிர் - மாட்டுங்கள், கழுவேற்றுங்கள். கழு பதினாயிரம் வேண்டும் - நாராயணனைக் கழுவிலேற்றினால் அவனுடன் கழுவேறுபவர் பதினாயிரம்பேர் உள்ளனர் என்பது கருத்து. சடையன் - இவன் குடிலனுடைய சேவகன். கொக்கொக் - சடையன் விக்கலினால் உண்டாகும் ஓசை. உற்றன் - இருக்கிறான். பாத்திரம் - தகுதி. ‘கெட்டார்க்கு உலகில் நட்டார் இல்லை’ என்பது, “கெட்டார்க்கு நட்டார் கிளையிலும் இல்லை” என்னும் பழமொழியைக் குறிக்கிறது. செமித்து - க்ஷமித்து, பொறுத்து. 198-199 அடிகள். நெருப்புக்கு மேலே மயிரில் கட்டித் தொங்கவிடப் பட்ட உரி, எந்த நிமிஷத்திலும் எரியும் நிலைமையில் இருப்பது போன்றது மனோன்மணியின் நிலைமை என்னும் கருத்துள்ளன. சிந்திடும் - சிந்திப்போகும். அடலோ - வீரமோ, வலிவோ, ஆணை - கட்டளை. கருமருந்து அறை - வெடி மருந்து இருக்கும் அறை. பொறி - தீப்பொறி. இரந்தேன் - வேண்டினேன். பாண்டிக்கு - பாண்டி நாட்டுக்கு. அற்றம் இல் - முடிவு இல்லாத. வாளா - வீணாக. தென்னவன் - பாண்டியன். துண்ணென - விரைவாக. வல்லை - விரைவாக, எத்திறம் - எப்படி. தேற்றம் - தெளிவு. பீதி -பயம். சேயினும் எளியன்- குழந்தையை விட எளியவன். வேய் - மூங்கில். கிளர் காற்று - மேலெழுகின்ற காற்று முளை - மூங்கில். காழ் பெறும் - வயிரம் பெற்றுள்ள. தருக்கள் மரங்கள். இறினும் - முறிந்தாலும். காழ் அறும் - வயிரம் இல்லாத. தீக்குருவி -நெருப்புக்கோழி. கயவர் - இழிந்த குணமுள்ளவர். மான - போல, ஒப்ப. இலக்கமில் -கணக்கற்ற. துயர்க்கணம் -துன்பமாகிய கூட்டம். (கணம் - கூட்டம்.) வார்கடல் முகட்டில் - பரந்த கடகலங்குமானால். மீகான் - மிகாமன், கப்பலோட்டி. கால் - காற்று. திமில் - மரக்கலம், படகு. சுழல்காற்று -(இங்கு) பகைவர். சுழி - ஆபத்து. பாய்மரம் -அமைச்சனாகிய குடிலன். துவாதசாந்தம் - பன்னிரண்டின் முடிவு. புருவத்துக்குமேலே பன்னிரண்டு விரற் கிடையுள்ள இடம். இங்குத் துவாதசாந்தம் என்பதற்கு மதுரை மாநகரம் என்பது பொருள். பூலோக வடிவமாக இருக்கிற விராட் புருஷனுக்குத் துவாதசாந்த இடமாக இருக்கிற இடம் மதுரை என்று கூறுவர். நிவாதமா - உறைவிடமாக என்றும், (புயற்) காற்று இல்லாத இடமாக என்றும் இரு பொருள் கொள்ளலாம். நயப்பிற்கு - அன்பிற்கு அடி 55 - 56. முனிவர் பொதுவாகக் கூறிய கழுமர உவமையை, நாராயணன் கழுமரமேற உடன்பட்டதைச் சுட்டுகிறதாகவும், குடிலனைச் சுட்டிக் கூறிய பாய்மரம் நாராயணனைக் குறித்துக் கூறியதாகவும் அரசன் மயங்கிக் கூறும் சொற்கள். தெருட்டிட - தெளிவுபடுத்த. வேற்றுமை உருவாய் - மாறுபாடு உடையதாய். காலக் கரப்பு - காலத்தினால் ஏற்படும் மறைப்பு. பொன்றினும் - அழிந்தாலும். பொறித்த - நிறுவிய. அற்ற - தலையற்ற. கவந்தம் - தலையில்லாத உடம்பு; போர்க்களத்தில் தலைவெட்டப்பட்ட உடம்பு. தலைவெட்டப்பட்ட போர்வீரரின் உடம்பு (கவந்தம்) சில நேரம் போர்செய்வதும் உண்டு. பெற்றி போல் - தன்மைபோல. உனி - உன்னி, நினைத்து. தொடரியல் என - சங்கிலித் தொடர்போல. மருங்கு - இடம். மனக்கோள் - மனத்திற் கொண்டது தாதான்மியம் - ஒன்று மற்றொன்றாதல். செயற்கை வாசனை என்பது பொருள். குடிலனோடு பழகியதனால் ஏற்பட்ட குணம் என்பது பொருள். வெம்கரா - கொடிய முதலை. அடி 108. முதலைப்பிடி என்பது கருத்து. “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது பழமொழி. 109 - 111 அடிகள், நண்டு குஞ்சகளை ஈன்றவுடன் செத்துத் தன் உடம்பையே குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கிறது என்பது கருத்து. பிராந்தி - மயக்கம். ஒருமலர் - ஒரு பூ; என்றது மனோன்மணியை. அடி 124 - 126. “நெடும்புனலுள் வெல்லும் முதலை யடும் புனலின், நீங்கின் அதனைப் பிற” என்னும் திருக்குறளின் கருத்தை விளக்கு கிறது. அயர்ந்து - மறந்து. சாலிபுரம் - நெல்வேலி, திருநெல்வேலி. சாலிபுரம் என்பதற்குத் திருநெல்வேலி என்றும், உடம்பு என்றும் இருபொருள் கொள்க. புலப் படை - பகைப்புலத்துப் படை என்றும், ஐம்புலப்படை என்றும் இரு பொருள் கொள்க. மாபதி - மதுரை நகரம் என்றும், பரம் பொருளாகிய கடவுள் என்றும் இருபொருள் கொள்க. அளித்தருளுதியேல் - காத்தருளினால். சந்ததம் - எப்பொழுதும். மறலி - யமன். சிறுகொடி - சிறிய பூங்கொடி போன்ற மனோன்மணி. 172 - 173 அடி, ‘ஒருவர் அறியில் இரகசியம், இருவர் அறிந்தால் பரசியம்’ என்பது மலையாள நாட்டுப் பழமொழி. 174 - 175 அடிகள், ‘There is many a slip between the cup and the lip’ என்னும் ஆங்கிலப் பழமொழியைக் கூறுகின்றன. பிரதிபந்தங்கள் - தடைகள். குகுநாள் - அமாவாசை நாள், உவா நாள். பரவை - கடல். எவன் - எவ்விதம். சமழ்ப்பு - குற்றம், நாணம். நளி - தேள். பிரையுறு பால் என - உரை குற்றிய பால்போல. தொடு கற்படை - தோண்டி அமைக்கப்பட்ட சுரங்க வழி. களவழி - கள்ள வழி, சுரங்க வழி. நலிதல் - வருந்துதல். களங்கம் - வஞ்சனை, மாசு. ஒறுத்து - வருத்தி. செவ்வே வடக்கு - நேர் வடக்கு. மறு முறி - அடுத்த அறை. (முறி - அறை. இது மலையாள நாட்டு வழக்குச் சொல்.) 235 - 243. அரசன் பேச்சைக் கொண்டே சுரங்கம் இருக்கும் இடத்தைக் குடிலன் யூகித்தறிந்துகொண்டு, அதைத்தான் முன்னமே அறிந்தவன் போலப் பேசுவதை இவ்வடிகள் உணர்த்துகின்றன. பாங்கோ - தகுதியோ. குணப் பிரதம் - நன்மை தருவது தேனார் தெரியல் சூடுமுன் - வண்டுகள் மொய்க்கும் மாலையணிவதற்கு முன்பு; மணம் ஆவதற்குமுன்பு என்பது பொருள். அநியர் - அந்நியர். வதுவை முன் - திருமணத்துக்கு முன்பு. கருநா - கருநாக்கு, கருநாக்குள்ளவர் சொல்லும் தீய சொற்கள் பலித்து விடும் என்று கூறுவர். குழாங்கள் - கூட்டங்கள். காண்டும் - பார்ப்போம் 284 - 285 அடிகளின் கருத்து, இரவும் பகலும் சேர்ந்திராததுபோல, கவலையும் வீரமும் சேர்ந்து நில்லா என்பது. நுவல் தரு - சொல்லப்படும். கல்லறை - சுரங்கவழி. இதுபோல் மாற்றலன் - புருஷோத்தமனைப் போல பகைவன். பாண்டமேல் மாற்றலாம் - மண்கலத்தை விருப்பம் போல் மாற்றி வாங்கலாம், திருமணம் அப்படிப்பட்டதன்று என்பது கருத்து. ஏதம் - குற்றம். மேதை - அறிவு. விருத்தமாய் - எதிராக, பகையாக. கலுழுநள் - அழுகின்றவள். சாற்றல் - சொல்லல். மந்திரத் தலைவர் - ஆலோசனை கூறும் தலைவர், அமைச்சர். 344 - 345 அடி, “குணநாடிக் குற்றமு நாடி யவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்” என்னும் திருக்குறள் கருத்துடையது. மீட்குதும் - (மனோன்மணியைத்) திரும்பவும் அழைக்கலாம். ‘தப்பினன் நாரணன். சாற்றற் கிடமிலை’ - நாராயணன் சிறையில் இருப்பதால், மனோன்மணி - பலதேவன் திருமணத்தைத் தடுத்து நிறுத்த அவனால் முடியாது என்பது கருத்து. விடுத்து - வாய்விட்டு. கெடுபயல் - பலதேவனைக் குறிக்கிறது. கொடியன் - நாராயணனைக் கருதிற்று. தன் படையை எவரும் வெல்ல முடியாது என்று நினைத்திருந்த ஜீவக அரசன், போரில் தோற்ற பின்னும் தன் கோட்டையை முக்கியமானதென்று கருதியிருக்கிற தன்மை, ஆசை முதலிய பற்று நீங்கி வைராக்கியம் உண்டானாலும், ஞானமில்லாமல் வைராக்கியத்தை மட்டும் அடைந்தவர், தம் நிலையை உணராதது போன்றது ஆகும் என்பது கருத்து. அரிதா - (வெல்லுவதற்கு) அருமையானது. அங்கங்கள் - (சேனையின்) உறுப்புகள். புரி - கோட்டை. புந்தி - புத்தி . சார்பு நான் எனது என்னும் பற்று. பெயர்ந்து - போய். விராகம் - வைராக்கியம், பற்று ஒழித்தல். ஆணவம் - அகங்காரம். ஆணவம், கர்மம், மாயை என்னும் மும்மலங்களில் ஒன்று. ஆன்மாக்களின் அறிவை மறைப்பது இதன் குணம். இரு சரம் - இரண்டு அம்புகள். மனக்கோள் - மனத்தில் உள்ள கருத்து. பாண்டில் - வண்டி. நம் மகன் - பலதேவன். சாத்தியாசாத்தியம்- முடிவதும் முடியாததும். யோகம் - அதிர்ஷ்டம். வான்காடு - வானமாகிய காடு. மீன் - விண் மீன். சும்மை - ஒலி. கு. செந்துறை-1. உண்ணினைவில் - மனக் கருத்தில். 2. அனவரதம் - எப்போதும். 3. பொறிகள் - ஐம்பொறிகள். கரணம் - அந்தக்கரணம்; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அகக்கருவிகள். அலமாக்க - அலைய, கலங்க. அச்சோ - அந்தோ. மருள்தரு - மயங்கச் செய்கிற. மதனன் - மன்மதன். குறள்வெண் செந்துறை - 4. புலன் ஆர - (கண்ணாகிய) புலன் நுகரும்படி. போதம் இலா - அறிவு இல்லாத. 5. பெத்தமனம் - அவத்தைகளால் கட்டுப்பட்ட மனம், கற்பிதம் - இல்லாததை உண்டு எனக் கற்பிப்பது. பிறங்கும் - விளங்கும். யத்தனம் அற்று - முயற்சி இல்லாமல். இந்த ஆறு குறள்வெண் செந்துறைச் செய்யுட்களும் (6 - ஆவது செய்யளின் கடைசி அடியைத் தவிர) ஞானசமாதியில் தெரிகிற பிரமானுபூதிக்கும், புருடோத்தமன் கனவில் கண்ட மனோன்மணி யின் காதல் வடிவத்திற்கும் பொருந்தியிருப்பது காண்க. அநுகூலம் உரைத்தான் - சேரன் போர் தொடுத்தது கனவை விலக்கும் பொருட்டு ; நாடு பிடிப்பது அல்ல. இது குடிலனுக்கு அனுகூலம். இறுத்த - தங்கிய. கௌவை - துன்பம். ஜடிதி - விரைவாக, இந்துஸ்தானிச் சொல். ஜல்தி என்றும் வழங்குகிறது. தத்க்ஷணம் - இப்பொழுதே, உடனே. எப்புவனமும் - எந்த உலகமும். இப்புவி - இந்தப் பாண்டிய தேசம். தாவரும் - கெடுதலில்லாத. உனி - உன்னி, நினைத்து. மயக்கா - மயக்காத மன்பதை - மக்கள். தகுமே - தகுமோ. பொருநர் - போர்வீரர். வயவர் - வீரர். மள்ளர் - வீரர். செருநர் - போர்வீரர் (செரு - போர்). செயிர்உற - துன்பத்துடன். குறியா - குறியாக. ஆவ - ஐயோ, இரக்கச்சொல். கரதலமாம் - கையில் ஆகும். கௌசலம் - சாமர்த்தியம். விசுவாச காதகன் - செய்ந்நன்றியைக் கொன்றவன். திண்ணம் - உறுதி. முரசுஆர் - முரசு ஒலிக்கின்ற. அனந்தைக் கோயில் - திருவனந்த புரத்து அரண்மனை. இராகவன் - இராமன். செற்று - அழித்து. 142 - 144 அடிகள். இராமன் இலங்கையை வென்று விபீஷணனுக்கு முடிசூட்டியதுபோல குடிலனாகிய எனக்கு முடிசூட்டுவையாயின் நன்றாக அரசாள்வேன் என்று குடிலன் கூறியது. மேவரும் - அடைதற்கருமையான. கைதவன் - பாண்டியன். கைதியாய் - சிறையாளனாக. (கைதி - இந்துஸ்தானிச் சொல்). தளை - விலங்கு. பிழைப்பில் - தவறு செய்தால். உறுதி - பாண்டிய நாட்டுக்கு அரசனாக்குவேன் என்னும் உறுதிமொழி. விஜயம் - வெற்றி நச்சிடில் - விரும்பினால். குளிகை - மாத்திரை. பாங்குஉள - பக்கத்தில் உள்ள, அமளி - படுக்கை, தத்து - விபத்து. 43 - 61. வரிகள். மனோன்மணியைப் பலதேவனுக்கு மணம் செய்விக்க எண்ணியிருப்பதை அரசன் மனோன்மணிக்குக் கூறிய போது, தனக்கு அது விருப்பமில்லாமல் இருந்தும், தனது தந்தைக்கு மாறுபேசக் கூடாதென்னும் கருத்துடன் அவள் சம்மதம் தெரிவித்ததை முதல் தோழி இவ்வரிகளில் கூறுகிறாள். வல்லை - விரைவில். வாசநீர் - மணமுள்ள நீர். முன்சுரத்து அழுந்திய அன்று - முன்னொருநாள் கனவு கண்டு சுரத்தினால் வருந்திய அன்றைய தினம். ஆடியில் - முகம் பார்க்கும் கண்ணாடியில். திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப் போகிற திருமணம். துயரில் - பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில். இச்சையாதிகள் - ஆசை முதலியன. மனக்களங்கம் - மனத்தில் படிகிற கறை. மாசுகள் - அழுக்குகள். மண்ணிய - கழுவிய. சாணை - சாணைக்கல், மாணிக்கம் முதலிய கற்களைப் பட்டை பிடிப்பதற்கு உபயோகப்படுத்துவது. தொழும்பு - அடிமை. பந்தம் - கட்டு. செந்தீ ஐந்து - பஞ்சாக்கினி. நான்குபுறத்திலும் நெருப்புக் குழியும் மேலே சூரியனும் எரிக்கும்போது நடுவில் இருந்து தவம் செய்வதற்கு உதவுவது. போனகம் - உணவு. அளித்தல் - காத்தல். சூள் - சபதம். வெள்ளில் - விளாமரம். இங்கு விளாம்பழம் என்பது கருத்து. யானை நோய் என்பது விளாம் பழத்துக்கு உண்டாகும் நோய். இந்நோய் கொண்ட விளாங் கனிக்குள் சதைப்பற்று இராது. ஓடு மட்டும் இருக்கும். இதனை “யானை யுண்ட விளாங்கனி” என்று கூறுவர். வேதகம் செய்த - வேறு படுத்திய. போதகம் - யானை. யூதபம் - யானைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கும் யானை. போதகயூதபம் - என்பது அரச யானை போன்றவன் என்பது பொருள். இது மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்த காதலனைக் குறிக்கிறது. “வெள்ளிலா மெள்ள விழுங்கி யிங்ஙனம், வேதகம் செய்த போதக யூதபம்” என்னும் அடியின் கருத்து: யானையுண்ட விளாங்கனியில் ஓடு தவிர உள்ளே சதை இல்லாதிருப்பது போல, மனோன்மணியின் மனத்தைக் கவர்ந்து அவளை வெற்றுடம்பினளாக்கியது அவள் கனவில் கண்டு காதலித்த அரசனாகிய யானை என்பது. வாஞ்சாவசம் - அன்பின் வழிபட்டது. கடபட சடம் - (கடம் - குடம். படம் - துணி. சடம் - உடம்பு) தர்க்கவாதிகள் உபயோகப்படுத்தும் சொல்; ஆரவாரப் பேச்சு என்பது கருத்து. கோண்இலா - கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி - மனோன்மணி. காட்டல் - பாவனை செய்தல். அவ்வுழி - அந்த இடம். பொருவரும் - ஒப்பில்லாத. பிழைத்தீர் - உய்ந்தீர். பிழைத்திலம் - தவறு செய்தோமில்லை. வெந்தது வீடு - குடி கெட்டது. நமர்காள் - நம்மவர்களே. மந்திராலோசனை - இரகசிய ஆலோசனை. மனத்திறம் - மனவலிமை. எள்ளரும் - இகழ்தல் இல்லாத, குற்றமற்ற, மானும் - ஒக்கும், ஆல் - ஆலமரம். பொன்றியோ - உயிர் விட்டோ. சந்தி - காலம், நிலைமை. கொற்றவை - அரசசபை. வன்திறல் - மிகுந்த வல்லமை. திண்மை - பலம், வலி ஆள்வினை - முயற்சி. வாரம் - அன்பு. அடையவும் - முழுவதும். பலிதம் - பலன் தருவது. அயிர்ப்புறார் - சந்தேகப்படமாட்டார். தாபதம் - தவம் செய்யுமிடம். ஆபதம் - ஆபத்து. புரையறு -குற்றம் இல்லாத. கவ்விய - பற்றிய. கௌவை - துன்பம். ஆஞ்ஞை - கட்டளை. தெருள்உறு - தெளிவுள்ள. சூழ்ச்சி - யோசனை. தினமணி - சூரியன். நம்மணி - மனோன்மணி. கொச்சகக் கலிப்பா - 1. துயர அளக்கர் - துன்பமாகிய கடல். பிறகிடல் - பின் வாங்குதல். இதில் கஜேந்திர மோக்ஷக் கதை கூறப்படுகிறது (புராணக் கதை விளக்கத்தில் காண்க). 2. அரசன் - துரியோதனாதியர். ஒரு தெரிவை - திரெபதி. துவரைநகர் - துவாரகை, கண்ணபிரானுடைய நகரம். சிதைவு. அழிவு. இதில் திரௌபதியின் துகிலுரிதல் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). 3. மறலி - யமன். வெறி கழுமி - மயக்கம் நிறைந்து. பொறி அழியும் - அறிவு அழியும். இதில் மார்க்கண்டேயன் கதை கூறப்படுகிறது (புராணக்கதை விளக்கத்தில் காண்க). இக் கொச்சகக் கலிப்பா மூன்றும், பொதுவான கடவுள் வாழ்த்தாகவும், மனோன்மணி கனவுகண்டு அதனால் கொண்ட காதல் மனோநிலைக்குப் பொருந்தியதாகவும் இருப்பது காண்க. வஞ்சியான் வஞ்சியான் - வஞ்சி நாட்டான் வஞ்சனை செய்ய மாட்டான். தெருட்ட - தெளிவுபடுத்த. வந்துழி - வந்தபோது. நண்ணவும் - அடையவும். வேட்டையேல் - விரும்புவாயானால். ஞாட்பிடை - போர்க்களத்தில். தாரா - மாலையாக. எண்படு - கருதப்படும். கண்படு - துயில்கின்ற. இறும்பூது - வியப்பு, ஆச்சரியம். வெருவலை - அஞ்சாதே. விள்ளா - விண்டுபோகாத, விட்டுப் பிரியாத. அருத்தம் - பொருள். கையற்ற - செயல்அற்ற. குறி - அடையாளம். அவத்தை - நிலைமை. செறிவாய் - நெருக்கமாய். திருக்கு - குற்றம். இக்கலித்துறை, தன் சுதந்தரம் விட்டு அருள்வழி நின்ற போதம் அதீதப்படும் முறையைக் கூறுகின்றது. * In the Market place of the Athenians is an altar of Pity which divinity, as she is, above alt others, beneficent to human life and to the mutability of human affairs, is alone of all the Greeks reverenced by the Athenians.’-’Pausanias; Attics, c. xvil.