சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 17 பழந்தமிழர் அரசியல் பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் தமிழர் வீரம் ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 17 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 344 = 352 படிகள் : 1000 விலை : உரு. 220/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந்நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களைச் காலவரிசையில் பொருள்வழிப் பிரித்துச் சாமி. சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளி யிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலைப் பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன் முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதைப் படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத் தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலைக் கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவுபடுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும் பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை பழந்தமிழர் அரசியல் முன்னுரை 3 1. அரசியல் உணர்ச்சி 7 2. மக்களுக்காகவே மன்னர்கள் 19 3. அறநெறி காத்த அரசர்கள் 31 4. மண்ணாசை கொண்ட மன்னர்கள் 43 5. ஆளுவோர்க்கு அறிவுரைகள் 54 6. குற்றமும் தண்டனையும் 68 7. வேந்தர்களின் வாழ்க்கை முறை 79 8. மன்னரும் மக்களும் 91 9. அறப்போர் புரிந்த அரசர்கள் 103 10. போரும் அமைதியும் 115 பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் ஆசிரியர் முன்னுரை 127 1. வாழ்வில் வளர்ச்சி 131 2. தமிழர் கண்ட கடவுளர் 138 3. முன்னோர்களின் கடவுள் வழிபாடு 148 4. வாழ்வும் வழிபாடும் 156 5. பண்டைத் தமிழர் சமயம் 170 6. பழந்தமிழர் உணவு வகை 178 7. சாதியும் தமிழரும் 190 8. பழந்தமிழர் நம்பிக்கைகள் 199 9. தமிழகத்தில் பெண் உரிமை 211 10. தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடு 221 11. பழந்தமிழ்நாட்டில் கலை வளர்ச்சி 234 12. சமுதாயப் பணி 262 13. உலகம் போற்றும் தமிழர் 270 14. தமிழர் கண்ட நல்லறம் 280 தமிழர் வீரம் முகவுரை 297 1. தமிழர் வீரம் 299 2. குமணன் 303 3. வேள்பாரி 305 4. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி 309 5. கிள்ளி வளவன் 313 6. பாண்டியன் 316 7. இளஞ்சேட் சென்னி 319 8. பாண்டியன் நெடுஞ் செழியன் 321 9. சேரன் செங்குட்டுவன் 324 10. மநுநீதி கண்ட சோழன் 326 11. போர் வெறி 328 12. தமிழர் கண்ட இன்பவாழ்வு 331 பழந்தமிழர் அரசியல் (1959) முன்னுரை பழந்தமிழர் அரசியல் என்னும் இந்நூல் பல கட்டுரைகளின் தொகுப்பு. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பொழில் என்னும் மாதப் பத்திரிகையில் நான் எழுதிவந்த கட்டுரைகளின் ஒரு பகுதி. பண்டைத் தமிழகத்தில் மன்னர் ஆட்சிதான் நிலைத் திருந்தது. அவர்கள் ஆளும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் சர்வாதிகாரிகளாகத்தான் விளங்கினார்கள். பண்டைத் தமிழ் மன்னர்கள் சர்வாதிகாரிகளாக விளங் கினாலும், நாட்டு மக்களின் நன்மைக்காகவே உழைத்து வந்தனர். நாட்டு மக்களின் நன்மைக்காக வாழ்ந்த மன்னர்களே மக்களின் மதிப்பைப் பெற்று வாழ்ந்தனர். மன்னர்கள் சர்வாதிகாரம் பெற்றவர்களாக இருந்தாலும், அவர்கள் அநீதி செய்யும்போது மக்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். பிற நாட்டு அரசர்களின் துணை கொண்டாவது கொடுங்கோல் மன்னர்களின் ஆட்சியைத் தொலைக்கப் பின்வாங்கமாட்டார்கள். பண்டைக் காலத்துத் தமிழ்ப் புலவர்கள், மன்னர்களுக்கு அவ்வப்போது அறிவுரை கூறி வந்தனர்; அவர்கள் அக்கிரமம் செய்யாமல் தடுத்து வந்தனர். அவர்கள் பொது மக்களின் நல்வாழ்வை முன்னிட்டு, அவ்வப்போது அரசியலில் தலையிடப் பின்வாங்கவில்லை. பண்டைத் தமிழரசர்களிலே தந்நலம் காரணமாக மக்களுக்குத் தீங்கிழைத்தவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் மக்களால் வெறுக்கப்பட்டார்கள்; புலவர்களால் புகழப்படாமல் ஒதுக்கப்பட்டார்கள்; நல்லவர்களால் பழிக்கப்பட்டார்கள். மக்களின் நலத்திற்காகவே வாழ்ந்த மன்னர்கள் தெய்வம் போல் போற்றப்பட்டார்கள்; அவர்கள் தெய்வங்களின் அவதார மாகவே கருதப்பட்டார்கள். பண்டை மன்னர்கள், புலவர்களையும், கலைஞர்களையும் போற்றிப் பாதுகாத்து வந்தனர். கலைகளும், கவிதைகளும், காவியங்களும் வளரத் துணை செய்தனர். கலைக்காகத் தங்கள் உயிரைக் கொடுத்த மன்னர்களும் உண்டு. மனித சமூகத்திற்குத் துரோகம் புரியும் குற்றவாளிகளுக்குப் பண்டைக் காலத்தில் கடும் தண்டனை கொடுக்கப்பட்டது. குற்றங்கள் ஒழிய- குற்றவாளிகள் தோன்றாமலிருக்க- கடுந் தண்டனையே சிறந்த வழி என்பது அவர்கள் நம்பிக்கை. ஆதியிலே சர்வாதிகாரிகளாக- தெய்வப் பிறப்பினராகக் கருதப்பட்ட மன்னர்கள் நாளடைவில் தங்கள் சர்வாதிகாரத்தை யிழந்தனர்; புலவர்களின் அறிவுரைகளை அமைச்சர்களின் உதவியை நம்பி- துணைக்கொண்டு ஆட்சி புரிந்தனர். இதன் பின்னர் ஐம்பெருங் குழு என்னும் மந்திரிசபை, எண்பேராயம் என்னும் ஜனப் பிரதிநிதி சபை இவைகளின் துணை கொண்டு அரசாண்டு வந்தனர். மன்னர்கள் பின்பற்றிய இந்த முறையே வளர்ச்சியடைந்து இன்றைய ஜனநாயக அரசு- குடிமக்கள் ஆட்சி- தோன்றுவதற்கு வழிகாட்டியது. பண்டைக் காலத் தமிழ் மன்னர்களிலே பலர் தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள்; அறநெறிக்கு மாறாக நடந்தால் தெய்வ தண்டனைக்கு ஆளாவோம் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. இக்காரணத்தால் அவர்கள் நீதி தவறி நடக்க அஞ்சினர். தமது உறவினராயினும் நீதி தவறி நடந்தால், அவர்களுக்குக் கடுந் தண்டனை விதித்தனர்; அறத்தை நிலை நிறுத்தினர். அக்கால மன்னர்கள், தாம் செய்தது தவறு, அறத்திற்கு விரோதமானது என்று அறிந்தால் தமக்குத் தாமே கடுந் தண்டனை விதித்துக் கொண்டனர். தமிழ் மன்னர்களின் இச்சிறந்த செயல்களைக் காணும் போது, நாம் ஒரு உண்மையை உணராமலிருக்க முடியாது. எந்த ஆட்சியானாலும் சரி- குடியாட்சி ஆனாலும் சரி, முடியாட்சி ஆனாலும் சரி- மக்களுக்கு நீதி வழங்கும் ஆட்சி நிலைத்து நிற்கும்; பொதுமக்களால் போற்றப்படும், வாழ்த்தப்படும் என்பதுதான் அவ்வுண்மை. போரின் கொடுமையைப் பண்டைத் தமிழ் மன்னர்கள் நன்றாக- தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தனர். ஆதலால் அவர்கள் காரணமின்றிப் போர் புரிய முற்படுவதில்லை. அநீதியை விரட்டவே- அக்கிரமத்தை ஒழிக்கவே- குடிமக்களைப் பாதுகாக்கவே- அறப்போர் புரிந்து வந்தனர். இவை போன்ற பல உண்மைகள் இந்நூலில் தக்க உதாரணங் களுடன் - மேற்கோள்களுடன்- எடுத்துக்காட்டப்பட்டிருக் கின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து திரட்டப் பட்டவைகளே இதில் கூறப்படும் உண்மைகள். பண்டைத் தமிழர்களின் அரசியல் நேர்மையை அறிய இப்புத்தகம் துணை செய்யும் என்பது நிச்சயம். சென்னை 1-5-1960 சாமி- சிதம்பரன் அரசியல் உணர்ச்சி ஆட்சியே அடிப்படை அரசியலை எவரும் அசட்டை செய்துவிட முடியாது; அதை மறந்துவிடவும் முடியாது. நாட்டின் உயிர் அரசாட்சி தான். நாட்டுக்கு நலம் புரியும் திறமுள்ள அரசியல் வேண்டும். ஒழுங்கான ஆட்சியுள்ள நாடுதான் உயர்ந்து நிற்கும். நல்ல ஆட்சியற்ற நாட்டிலே எந்த நன்மையும் நிலவாது. மக்கள் நலம் பெறுவதற்கு - முன்னேறுவதற்கு - இன்ப வாழ்க்கை வாழ்வதற்குக் கட்டுப்பாடு வேண்டும்; சட்ட திட்டங்கள் வேண்டும். கட்டுப்பாடுகளையும் சட்ட திட்டங்களையும் கண் காணிக்கும் திறமையுள்ளது அரசாட்சிதான். அரசாட்சிக்கு இத்தகைய திறமையில்லாவிட்டால் அது நேர்மையான ஆட்சி யாக நிலைத்து நிற்க முடியாது. மக்கள் முன்னேறுவதற்கான கட்டுப்பாடுகளை விதிப்பதும், சட்ட திட்டங்களைச் செய்வதும் ஆட்சியின் பொறுப்பாகும்; கடமையும் ஆகும். அரசாட்சியில்லாத நாடு இருண்டு கிடக்கும்; கதிரவன் அற்ற பகலைப்போல் ஆகும்; நட்சத்திரங்களும், சந்திரனும் இல்லாத இரவைப் போல் ஆகும். இது மட்டுமா? இன்னும் எண்ணிப் பார்த்தால் உயிரற்ற உடம்பைப் போலவும் ஆகும். இவ்வாறு கம்பன் கூறுகின்றான். வள்உறு வயிரவாள் அரசுஇல் வையகம், நள்உறு கதிர்இலாப் பகலும், நாள்ஒடும் தெள்உறு மதியிலா இரவும், தேர்தரின் உள்உறை உயிர்இலா உடலும் ஒக்குமே. (அயோ. ஆற்று.7) அரசாட்சியற்ற நாட்டிலே உழவுத் தொழில் வளராது; உணவுப் பண்டம் பெருகாது; ஒழுக்கம் நிலவாது; கலைகள் தோன்றமாட்டா. காவியங்கள் பிறக்கமாட்டா. நல்ல ஆட்சி யுள்ள நாட்டிலேதான் இவைகள் எல்லாம் வளர்ச்சியடையும். இந்த உண்மையை வரலாற்றிலே காணலாம்; பழைய இலக்கியங் களின் வாயிலாக அறியலாம். எக்காலத்தில் அரசியல் உருவாகியதோ, அக்கால முதல்தான் மக்கள் சமுதாயம் நாகரிக நெறியிலே முன்னேறிச் செல்லத் தொடங்கியது. இது வரலாறு கண்ட உண்மை. தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அரசாட்சியிலே கவலை கொண்டிருந்தனர்; கருத்தூன்றி நின்றனர். இந்த உண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு நவில் கின்றன. அரசாட்சி யில்லாவிட்டால் நாம் வாழ்க்கை நடத்த முடியாது என்பதே பண்டைத் தமிழர்களின் முடிவான கருத்து. இந்த உண்மையை ஒரு புறநானூற்றுப் பாட்டு விளக்க மாகக் கூறியிருக்கின்றது. நெல்லும் உயிர் அன்றே. நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யான் உயிர் என்பது அறிகை வேல்மிக தானை வேந்தற்குக் கடனே (புறம், 186) இது மோசிகீரனார் என்னும் புலவர் பாட்டு. பண்டைத் தமிழ் மக்களின் கொள்கையை எடுத்துக்காட்டுவது. நெல்லும் இவ்வுலக மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அன்று; தண்ணீரும் இவ்வுலக மக்களின் உயிரைக் காப்பாற்றுவது அன்று; மன்னனைத்தான் இவ்வுலகம் உயிராகக் கொண்டிருக் கின்றது. ஆதலால் ஆளும் அரசன் நான் தான் இவ்வுலகத்துக்கு உயிர் என்பதை மறவாமல் எண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும்; இதுதான் படைபலம் பொருந்திய அரசனுடைய கடமையாகும். நல்ல அரசாட்சி யில்லாவிட்டால் மக்களிடையிலே கட்டுப்பாடும் ஒற்றுமையும் காணப்படமாட்டா. மக்களிடையே ஒற்றுமையும் கட்டுப்பாடும் இல்லாவிட்டால், நாட்டிலே எந்த நல்ல செயல்களும் நடைபெறமாட்டா. உழவுத் தொழில் நடைபெறாது; வீணாகப் போகும் நீரைத் தேக்கி வைத்து அதை வேளாண்மைத் தொழிலுக்குப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். நல்ல ஆட்சியிருந்தால்தான் இக்காரியங்கள் நடக்கும். இக்கருத்தைக் கொண்டதுதான் இச்செய்யுள். மன்னவனே மக்கள் உயிர் ஆரம்ப கால அரசு தனிமனிதனுடைய ஆட்சியாகத்தான் இருந்தது. அத்தனி மனிதனைத் தெய்வப் பிறவியாகத்தான் எண்ணினர். அறிவு வன்மையும், உடல் ஆற்றலும், படைபலமும் பெற்றவர்கள் முதலில் அரசர்கள் ஆயினர். அவர்கள் மக்களு டைய துன்பங்களைத் தவிர்த்தனர்; இன்பமுடன் வாழ்வதற்கு வழி செய்தனர். இக்காரணத்தால் அக்கால மக்கள் தங்கள் மன்னனை இறைவனாக எண்ணினர். மன்னன் எது செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்; மன்னன் மொழிக்கு மறுமொழியே கூடாது. அவன் செய்கை பிடிக்காவிட்டால் வாய் மூடித்தான் வாழவேண்டும். வேந்தனுடைய ஆட்சியை விரும்பாவிட்டால் அந்த நாட்டை விட்டுக் காட்டை நோக்கி வெளியேறிவிட வேண்டும்; மன்னனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வது தவறு என்ற கொள்கை நிலவி யிருந்த காலம் ஒன்று உண்டு. அரசன் மகன்தான் அரசாளவேண்டும் என்ற கொள்கை யும் வேரூன்றி நின்றது. அரசன் ஆளுவதற்கே பிறந்தவன்; அவன் உரிமையைத் தடுக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை என்ற கொள்கையும் நிலைத்து நின்றது. தனியதிகாரமும், வழிவழியாக ஆளும் உரிமையும் ஏற்பட்டிருந்த காலத்தில்தான் அரசனே நாட்டுக்கு உயிர் என்று கருதி வந்தனர். உலக மக்கள் உடல், அரசன் உயிர் என்று எண்ணினர். மிகப் பழங்காலத்தில் தோன்றிய கொள்கை இது வாகும். மேலே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப் பாட்டு இந்த உண்மையை விளக்குகின்றது. அரசன் உயிர், மக்கள் உடல் என்பதே அந்தச் செய்யுளில் உள்ள அரசியல் கருத்து. தனியதிகாரம் படைத்த மன்னர்கள் தந்நலம் கருதாமல், மக்கள் நலம் கருதி ஆட்சி புரிந்தவரையிலும், அவர்களுடைய மதிப்பு குறையவில்லை. அவர்களை மக்கள் தங்கள் உயிராகவே மதித்து வந்தனர். வழிவழியாக ஆளும் உரிமை படைத்திருந்த காரணத்தால், திறமையற்ற மன்னர்களும் தோன்றினர்; தந்நலம் கொண்ட வேந்தர்களும் தோன்றினர். இவர்கள் மக்கள் மதிப்பைப் பெறவில்லை. மக்களால் பழிக்கப்பட்டனர்; தூற்றப்பட்டனர். இத்தகைய மன்னர்களை, வேறு மன்னர்களின் துணை கொண்டு ஆட்சியிலிருந்து விரட்டியடித்தனர் மக்கள். தனியாட்சிக்கு எதிர்ப்பு முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப்படும். (கு. 388) நீதிமுறை செய்து, மக்களைத் துன்புறாமல் காக்கும் அரசன்தான், மக்களுக்குத் தலைவன் என்று கொள்ளப்படுவான். குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. (கு. 544) குடிமக்களை ஆதரித்து ஆட்சி செய்யும் மன்னவன் அடியைத் தான் உலகம் ஆதரித்து நிற்கும். இத்தகைய எண்ணம் மக்களிடையிலே பரவிய பின் மன்னனுடைய தனி அதிகாரம் ஆட்டங் கண்டது. மக்களை மறந்து தந்நலத்திலே மூழ்கிய மன்னர்கள் நாட்டை ஆளத் தகுதியற்றவர்கள் என்று மக்கள் நினைத்தனர்; மன்னனுடைய தனி அதிகாரம் குறையவேண்டும் என்றும் மக்கள் எண்ணினர். மக்களிடையிலே மதிப்பு பெற்ற புலவர்களும், தலைவர்களும் அரசன் தவறு செய்யுங் காலத்தில் தாராளமாகக் கண்டிக்கத் தொடங்கினர். நேர்மையாக ஆளும் வேந்தன்தான் ஆளுவதற்குத் தகுதி யுடையவன் ஆவான்; அவன்தான் மக்களின் மதிப்புக்கும், பாராட்டுதலுக்கும் உரியவன் என்ற கொள்கை தோன்றியவுடன் ஒரு பெரிய கொள்கை மாற்றமும் ஏற்பட்டது. தனி அதிகாரம் படைத்த அரசனால் நேர்மையாக ஆள முடியாது; அறிஞர்களின் துணைகொண்டு ஆளுகின்ற மன்னவனே நல்ல ஆட்சியை நடத்த முடியும். அரசன் எவ்வளவு திறமையுள்ளவனாயிருந்தாலும் ஆராய்ச்சியுள்ள அறிஞர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்; அவர்கள் கூறும் கருத்தை மதித்து ஆட்சி நடத்த வேண்டும். அரசன் தவறு செய்யும் போது, அவனைக் கடிந்து கூறி விலக்கவேண்டும். அவனைத் தவறு செய்யாமல் தடுக்க வேண்டும். இது நாட்டின் நலத்திலே கவலை கொண்ட அறிஞர்கள் கடமை. இத்தகைய அறிஞர்களைத் துணையாகக் கொள்ளாத அரசனுக்கு வேறு பகைவர்களே வேண்டாம்; அவன் தானாகவே அழிந்து போவான். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் (கு. 448) என்பது போன்ற கருத்துக்கள் தோன்றின. இக்கருத்துகளைப் பொதுமக்கள் மதித்தனர். இத்தகைய கொள்கை மாற்றம் ஏற்பட்ட பின்னும், ஆளும் குடியிலே பிறந்தவன்தான் ஆளவேண்டும் என்னும் கொள்கை மட்டும் மாறவில்லை. ஆனால் மற்றொரு பழைய அரசியல் கருத்துத் தலைகீழாக மாறிவிட்டது. மக்கள் உயிர்; மன்னன் உடல் மக்கள் உடல், மன்னன் உயிர் என்ற கொள்கை மாறி விட்டது: மக்கள் உயிர், மன்னன் உடல் என்ற கொள்கை ஏற்பட்டது. இது ஒரு பெரிய தலைகீழ் மாற்றம். இந்த மாற்றத்தைப் பற்றித் திருவள்ளுவர் தெளிவாகக் கூறவில்லை. தனி மனிதன் ஆட்சியைவிட, அறிஞர்களின் துணைகொண்டு ஆளும் ஆட்சிதான் சிறந்தது என்பதை மட்டும் தெளிவாகக் கூறிவிட்டார். அரசனுடைய சர்வாதிகார ஆட்சியைத் தனியாட்சி என்று கூறலாம். அறிஞர்களின் கூட்டுறவுடன் ஆளும் ஆட்சியைத் துணையாட்சி என்று கூறலாம். தனியாட்சியைவிடத் துணை யாட்சியே சிறந்தது என்ற கொள்கையைத் தமிழகத்தில் முதலில் பரவச்செய்த பெருமை திரு வள்ளுவர்க்கே உண்டு. திருவள்ளுவர்க்குப் பின்வந்த புலவர்கள் வள்ளுவர் காட்டிய வழியிலேயே, துணை யாட்சியைப் பற்றியே, பாராட்டிக் கூறத் தொடங்கிவிட்டனர். மன்னன் உடல், மக்கள் உயிர் என்ற கொள்கையை முதலில் எடுத்துக்காட்டிய புலவர், சீத்தலைச் சாத்தனார்; மணிமேகலை ஆசிரியர். அரசன் தனது ஆட்சியிலே மாறுபடுவானாயின்- அவனது செங்கோல் கொடுங்கோல் ஆகுமானால்- கிரகங்களின் நிலைமை மாறுபடும். கிரகங்களின் நிலை மாறுபடுமானால் மாநிலம் மழையின்றி வறண்டுபோகும்; மழை பொய்க்குமானால் இவ்வுலகத்து உயிர்கள் வாழ முடியாது; இவ்வுலகத்தில் வாழும் உயிர்கள் எல்லாம் அரசனுடைய உயிர் என்று சொல்வதற்குத் தகுதி யற்றதாகும்; அரசன் வாழ்ந்தாலும் அவன் உயிரற்ற உடம்பாவான். கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்; கோள்நிலை திரிந்திடின் மாரிவறம் கூரும்; மாரி வறங்கூரின் மன்உயிர் இல்லை; மன்உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதியின் றாகும். (மணிமே, கா. 7; வரி 8-12) மணிமேகலை ஆசிரியர் காட்டிய இவ்வழியைக் கம்பர் வலியுறுத்திக் கூறுகின்றார். மன்னன் ஆட்சியை விட்டு, மக்கள் ஆட்சிக்கு அடிப்படையிட்ட இக் கொள்கை கம்பர் கருத்தைக் கவர்ந்தது. ஆதலால் அவர் இதை வலியுறுத்துவதிலே வியப் பில்லை. தசரதனுடைய ஆட்சியின் பெருமையைப் பற்றிக் கம்பர் பாராட்டிக் கூறுகின்றார். அப்பொழுது மணிமேகலை ஆசிரியரின் கொள்கையைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றார். தசரதன் வயிரங்கள் பதித்துச் செய்த சிறந்த அணிகலன் களைப் பூண்டவன்; சிங்கம் போன்ற வலிமையை உடையவன்; தனது நாட்டில் உள்ள உயிர்களையெல்லாம் தன்னுயிரைப் போலவே பாதுகாத்து வந்தான். ஆதலால் அவன், குற்றமற்ற இவ்வுலகிலே இறந்தும், இருந்தும் வாழ்கின்ற உயிர்கள் எல்லாம் உறைகின்ற ஓர் உடம்பாக இருந்தான். வயிரவான் பூண்அணி மடங்கல் மொய்ம்பினான், உயிர்எலாம் தன் உயிர் ஒப்ப ஓம்பலால், செயிர்இலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிர்எலாம் உறைவதுஓர் உடம்பும் ஆயினான். (பால. அரசியல். 10) இச்செய்யுள், அரசன் உடல்; மக்கள் உயிர் என்ற சிறந்த கொள்கையை வலியுறுத்திக் காட்டுகின்றது. மற்றோரிடத்திலே இக்கொள்கையை இன்னும் தெளிவாக உரைக்கின்றார் கம்பர். இராமனுக்கு முடிசூட்டத் தீர்மானித்தான் தசரதன். அதன்பின் அவனுக்கு அரசியல் அறிவு புகட்டுமாறு வசிட்டனை வேண்டினான். வசிட்டன் இராமனுக்கு அறவுரைகள் கூறுகின்றான். அவ்விடத்திலும் இக்கருத்து வலியுறுத்தப்படுகின்றது. இவ்வுலகையே நிலையான உயிராகக் கொள்ள வேண்டும்; அவ்வுயிரைத் தாங்கும் உடம்பு நானே என்று மன்னவன் நினைக்க வேண்டும்; அவ்வாறே மன்னவன் உலக உயிர்களைக் காப்பாற்ற வேண்டும். இத்தகைய மன்னவனை விட்டு, அறநெறி நீங்காது; அவனையே களைகண்ணாகக் கொண்டு நிற்கும். இரக்கம் என்னும் மெய்ந்நெறியிலே மன்னன் ஒழுகுவானாயின், அவன் வேறு வேள்விகளும் செய்ய வேண்டுமோ? வையம் மன் உயிராக, அம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு அய்யம் இன்றி அறம் கடவாது; அருள் மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? (அயோ. மந்தரை. 17) இச்செய்யுளும், மன்னன் உடம்பாவான், மக்கள் உயிர் ஆவர் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம். துணை ஆட்சியே சிறந்தது தனி மனிதனுடைய ஆட்சியிலே தவறு நேர்வது இயற்கை. ஆதலால் பல துறையிலும் தேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் துணைகொண்டு ஆள்வதே சிறந்த ஆட்சியாக இருக்கும் என்ற கருத்து வள்ளுவர் மூலம் பரவிற்று. இக்கருத்தும் பொது மக்களின் உள்ளத்திலே குடிபுகுந்தது. இதன்பின் மன்னவன் உயிர், மக்கள் உடல் என்னும் பழங்கருத்து வீழ்ந்தது; மக்கள் உயிர், மன்னன் உடல் என்ற புதுக் கருத்து எழுந்தது. இதன் பயனாகத் தமிழர் அரசியலில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. அரசனுக்கு அறிவுரை கூறும் அவைகள் ஏற்பட்டன. பண்டைத் தமிழகத்தின் மன்னர்கள் அறிவுரை கூறும் அவை களை அமைத்துக்கொண்டனரோ இல்லையோ, அது வேறு செய்தி. அறங்கூறும் அவையோரைக் கொண்ட ஆட்சிதான் சிறந்த ஆட்சி என்ற முடிவு தமிழகத்தில் தோன்றிவிட்டது. இம்முடிவைப் பெரியோர்கள், அறிவுள்ளவர், பொதுமக்கள், அனைவரும் வரவேற்றனர். இவ்வுண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் நமக்குத் தெளி வாக விளக்கிக் காட்டுகின்றார். மணிமேகலை ஆசிரியரும் கூறுகின்றார். ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்பவை மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. கூட்டாட்சி முறை சிலப்பதிகாரம், மணிமேகலைகளுக்கு முற்பட்ட தமிழ் நூல்களில் ஐம்பெருங்குழு, எண்பேராயம் காணப்படவில்லை. புறநானூறு, பதிற்றுப்பத்து முதலிய நூல்களில் அரசியல் பற்றிய கருத்துக்கள் பல காணப்படுகின்றன. அவைகளில், அரசனுக்கு அறிவுரை கூறுவதற்காக இக்குழுக்கள் இருந்தனவென்று கூறப் படவில்லை. ஐம்பெருங் குழுவையும், எண்பேராயத்தையும் துணை யாகக் கொண்ட ஆட்சி, உண்மையான மக்களாட்சிக்கு வழி கோலிற்று என்பதில் ஐயம் இல்லை. ஐம்பெருங் குழு என்பது என்ன? எண்பேராயம் என்பது யாது? என்பவைகளைக் கண்டால் இவ்வுண்மை விளங்கும். ஐம்பெருங் குழுவைப் பற்றியும், எண்பேராயத்தைப் பற்றியும் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விளக்கமாகக் கூறியுள்ளார். அமைச்சர், புரோகிதர், சேனா பதியர் தவாத்தொழில் தூதுவர், சாரணர் என்றிவர் பார்த்திபர்க்கு ஐம்பெரும் குழுவெனப் படுமே என்பது அடியார்க்கு நல்லார் உரையாகும். அமைச்சர்கள், புரோகிதர்கள், சேனாபதியர்கள், தூதுவர்கள், சாரணர்கள் (ஒற்றர்கள்) இவர்கள் அரசனுக்கு ஆலோசனை கூறும் ஐம்பெருங் குழுவினர் ஆவர். ஆட்சியை நடத்துவதற்கு வழிகாட்டுகின்றவர்கள்- ஆட்சியை நடத்துகின்றவர்கள்- அமைச்சர் ஆவர். காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவோர், இன்ன காலத்திலே இன்ன செயல்களைச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்து வோர், பருவ காலங்களையும், அவற்றின் இயல்புகளையும் எண்ணிக் கூறுவோர் புரோகிதர் என்று அழைக்கப்பட்டனர். சேனாபதியர், படைத் தலைவர்கள், உள்நாட்டில் அமைதி நிலவுவதற்கும், வெளிநாடுகளுடன் ஒத்த உறவு கொண்டி ருப்பதற்கும் துணையாக இருப்பவர்கள் படைத் தலைவர்கள். வெளிநாட்டு அரசாங்கத்துடன் ஏதேனும் மாறுபாடு தோன்றினால், அதை மாற்றுவதற்குத் தூதுவர்கள் வேண்டும். நல்ல அரசியல் நுட்பமும், சொல் வன்மையும் உள்ளவர்களே தூதுவர்கள். வெளிநாட்டு உறவுவலுப்பட இத்தகைய தூதுவர்கள் இன்றியமையாதவர்கள். சாரணர்கள் என்பவர்கள் ஒற்றர்கள்; இரகசியப் போலீசார் போன்றவர்கள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசாங்கத்திற்கு அறிவிப்பவர்கள். அரசன் எக்காரியத்தைச் செய்வதாயினும் மேற்காட்டிய ஐவரையும் கலந்தே செய்யவேண்டும். இதற்காகவே இந்த ஐம்பெரும் குழு ஏற்பட்டது. எண்பேராயம் கரணத்து இயலவர், கரும காரர், கனகச் சுற்றம், கடைகாப் பாளர், நகர மாந்தர், நளிபடைத் தலைவர், யானை வீரர், இவுளி மறவர், இனையர் எண்பே ராயம் என்ப என்பது அடியார்க்கு நல்லார் காட்டும் எண் வகையினரைக் கொண்ட பெரிய அவையாகும். தொழிலாளர்கள், அவர்களுடைய தலைவர்கள் இவர் களுக்குக் கரணத்தியலவர் என்று பெயர். அரசாங்க அலுவல்களைச் செய்து வருவோர், அவர் களுடைய தலைவர்கள், இவர்களுக்குக் கருமகாரர் என்று பெயர். அரசாங்கத்தின் செல்வத்தைப் பாதுகாப்போர் கனகச் சுற்றமாவர்; இவர்கள் நிதித்துறை உத்தியோகதர்கள். கனகம்- பொன். கடை காப்பாளர் என்பவர்கள், அரண்மனையையும், ஏனைய அரசாங்க அலுவல் இடங்களையும் காத்து நிற்போர்; போலீ இலாகா போன்ற துறையினர். நகர மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் நகர மாந்தர் ஆவர். சேனைத் தலைவர்களுக்குப் படைத் தலைவர்கள் என்று பெயர். யானையின் மேல் ஏறி ஊர்ந்து போர் செய்யும் வீரர் களுக்கு யானை வீரர் என்று பெயர். குதிரையின் மீதேறிச் செலுத்திப் போர் புரியும் வீரர்களுக்கு இவுளி மறவர் என்று பெயர். மேலே கூறிய தொழிலாளர், அரசாங்க அலுவலர், நிதி காப்போர், காவல்காரர்கள், நகர மக்கள், படைத் தலைவர், யானைவீரர், குதிரை வீரர் இவ்வெண்மரும் எண்பேராயம் என்று அழைக்கப்பட்டனர். ஐம்பெரும் குழு என்பது சிறிய சபை. அரசனுடைய நிர்வாக சபை; அதாவது செயற்குழுவாகும். மந்திரி சபை என்றும் கூறலாம். எண்பேர் ஆயம் என்பது பொதுமக்கள் சபையாகும். நாட்டின் முன்னேற்றத்தில் அக்கரையுள்ள அனைவருடைய பிரதிநிதிகளும் எண்பேர் ஆயம் என்னும் சபையில் உறுப்பினரா யிருந்தனர். இந்த எண்பேர் ஆயம் என்னும் சபையிலே அரசாங்கத்தை நடத்தும் பொறுப்புள்ள ஒவ்வொரு துறையின் பிரதிநிதிகளும் இருந்தனர். மக்களின் பிரதிநிதிகளும் இருந்தனர். மக்களும், ஆட்சியினரும் சேர்ந்தே நாட்டை ஆண்டனர் என்று இதனால் தெரிகின்றது. ஐம்பெரும் குழு, எண்பேராயம் இவைகளின் ஆலோசனை யின்படி நடைபெறும் அரசு சிறந்த அரசாகத்தான் இருக்கும். அந்த அரசாங்கத்தின் தலைவன், ஆளப்பிறந்த அரச குலத்தைச் சேர்ந்தவனாகவிருந்தாலும் அவன் தன் விருப்பப்படி எதையும் செய்துவிட முடியாது. மக்களின் கருத்தறிந்துதான் ஆட்சி நடத்த முடியும். வளர்ச்சிக்கு வழிகாட்டியது இன்று மன்னர் ஆட்சிக்கு இடமில்லை; மக்கள் ஆட்சிக்குத் தான் இடம் உண்டு; இந்நாட்டு மக்கள் அனைவருமே மன்னர்கள் என்று கருதுகின்ற காலம் இது. பண்டைத் தமிழர்களின் அரசியல் கருத்தும் வளர்ச்சியும், இன்றைய மக்களாட்சிக்கு வழிகாட்டியது; இன்றைய மக்களாட்சியை நோக்கி வளர்ந்து வந்திருக்கின்றது. இது வரலாறு கண்ட உண்மை. வளர்ச்சிதான் மனித சமுதாயத்தின் உயிர்நாடி. வளர்ச்சியில்லாத சமுதாயம் வாழ முடியாது. இதற்குப் பழந்தமிழர் வரலாறு ஆதரவளிக்கின்றது. மன்னன் தன் எண்ணப்படி எதையும் செய்ய உரிமை படைத்தவன்; அவன் எது செய்தாலும் அதற்கு அடங்கி நடப்பதே நமது கடமை என்று மக்கள் நம்பி வந்தனர். இது ஆரம்ப கால அரசியல். இதை மன்னர் ஆட்சிக் காலம் என்று சொல்லலாம். இதன் பின்னர், மன்னன் எவ்வளவு அறிவாற்றல் படைத் தவனாயினும், அவன் மற்றவர்களின் எண்ணங்களையும் கேட்டறிந்து நடக்கவேண்டும் என்று எண்ணினர். இத்தகைய மன்னனே செங்கோலரசனாகச் சிறந்து விளங்க முடியும் என்று நம்பினர். வள்ளுவர் வலியுறுத்தும் இத்தகைய ஆட்சியைத் துணையாட்சி என்று கூறலாம். இதன்பின், மன்னன் உயிர், மக்கள் உடம்பு என்ற கொள்கை வீழ்ந்தது; மக்கள் உயிர், மன்னன் உடம்பு என்ற கொள்கை பிறந்தது. இதன்பின், ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்ற அவையத்தாருடன் இருந்து அரசாளும் மன்னன் ஆட்சியே சிறந்தது என்று கருதினர். இத்தகைய ஆட்சியைக் கூட்டாட்சி என்று கூறலாம். மன்னர் ஆட்சி கூடாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் ஆட்சிதான் சிறந்தது என்ற கொள்கையைப் பழந்தமிழ் நூல்களிலே பார்க்க முடியாது. நல்ல அரசியல்- அரசாட்சி- இல்லாமல், நாடு முன்னேற முடியாது, மக்கள் வாழ முடியாது என்ற பழந்தமிழ் மக்களின் கருத்தே இத்தகைய அரசியல் வளர்ச்சிக்குக் காரணமாகும். பழந்தமிழ் மக்களிடம் குடிகொண்டிருந்த சிறந்த அரசியல் கருத்துக்கள்- அரசியல் கருத்து மாறுதல்கள்- அரசியல் அமைப்பு முறைகள்- இன்றைய மக்களாட்சி முறையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்து வந்திருக்கின்றன. முதலில் மன்னர் ஆட்சி, அதன்பின் துணையாட்சி, அதன்பின் கூட்டாட்சி. இந்த மாற்றமே, இன்றைய மக்கள் ஆட்சிக்கு மக்களை இழுத்து வந்தது. பண்டைத் தமிழ் மக்கள் அரசியலைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கவில்லை. நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்னும் நாட்டமுள்ளவராயிருந்தனர். இந்த நாட்டமே அவர்கள் நாகரிகத்திலே முன்னேறுவதற்கு உதவி செய்தது. நமது இலக்கியங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன. மானும் புலியும் ஒரு துறையிலே தண்ணீர் குடித்தன; பசுவும் புலியும் கூடிக் குலாவின; பண்டை ஆட்சியிலே இத்தகைய நிலை இருந்தன. இக் கலிகாலத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. பண்டைக் கால இன்ப வாழ்வு இக்காலத்தில் இல்லை. பண்டைக் காலத்தில் தான் நீதியும் நேர்மையும் உள்ள ஆட்சி நடைபெற்றது; இக்காலத்தில் அவ்வாட்சி இல்லை என்று பழம்பெருமை பேசுவோர் உண்டு. மக்கள் அறிவும், வாழ்வும், பண்பும் நாளேற நாளேற வளர்ச்சியடைந்து வருகின்றது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாதவர்களே இவ்வாறு கூறுவர். நமது அரசியல் வளர்ச்சி ஒன்றே இவர்கள் கூற்று தவறு என்பதை விளக்கும். மக்களுக்காகவே மன்னர்கள் உயிரினும் ஒழுக்கம் சிறந்தது உள்ளத்திலே தூய்மையுள்ளவர்கள் ஒருபொழுதும் தீங்கு செய்யத் துணியமாட்டார்கள். உள்ளப்போக்குத்தான் நன்மைக் கும் தீமைக்கும் நடைபாதை. மனம் மாசற்றதாக இருந்தால் செயலும் சிறந்ததாக இருக்கும். உள்ளத்திலே அழுக்குப் படிந் திருந்தால் செயலும் பொல்லாமையை நோக்கித்தான் போகும். மக்களுடைய வாழ்க்கையைச் செம்மையாக நடத்திவைப்பது உள்ளந்தான். மனத்துக்கண் *மாசு இலன் ஆதல் அனைத்து அறன் என்ற பொய்யா மொழி, என்றும் பொய்யா மொழியே யாகும். ஒருவனுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது; பொது வாழ்க்கையைப் பற்றித்தான் பேசவேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை வேறு, பொது வாழ்க்கை வேறு என்று கூறுவோர் சிலர் உண்டு. இது உண்மைக்கு மாறானது; பெரிய மனிதர்களின் குற்றங்களை மறைப்பதற்காகப் போடும் திரைச்சீலைகளில் இது ஒன்று. ஒருவருடைய தனிப்பட்ட தன்மையும், நடத்தையும் பொது வாழ்விலே தலைநீட்டாமல் அடங்கி விடமாட்டா. ஆகையால் தான் உயிரினும் ஒழுக்கம் உயர்ந்தது, சிறந்தது என்று உரைத் தனர். ஒழுக்கம் உள்ளவர்களையே உயர்ந்த மக்களாகக் கருதினர். அறிவுள்ளவர்கள் ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என்று முன்னோர்கள் மொழிந்தனர். பண்டைத் தமிழகத்தில் மக்கள் நன்மைக்காகவே வாழ்ந்த மன்னர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தனிப்பட்ட வாழ்விலும் உயர்ந்த பண்பு படைத்தவர்கள்; சிறந்த நடத்தை யுள்ளவர்கள்; அறிவும் ஆற்றலும் அமைந்தவர்கள். இத்தகைய இயல்புள்ள மன்னர்களே மக்களால் மதித்துப் பாராட்டப் பட்டனர்; இறைவன் என்று எண்ணி எல்லா மக்களாலும் போற்றப்பட்டனர். அவர்கள் ஒழுக்கமே உயிர் எனக் கொண்டு வாழ்ந்தனர்; ஆதலால் தந்நலத்திற்கு அடிமைப் படவில்லை. தாங்கள் என்ன நினைத்தாலும், எதைச் செய்தாலும், அதைத் தடுக்க யாரும் இல்லாத தனிச் செல்வாக்கிருந்தும் அவர்கள் தவறு செய்யத் துணியவில்லை. நேர்மையான வழியிலே நிலையாக நின்று தங்கள் கடமைகளைப் புரிந்தனர். இவ்வுண்மையைப் பதிற்றுப் பத்துப் பாட்டு ஒன்றிலே காணலாம். மன்னர்களின் ஒழுக்கம் முன்கோபம் பொல்லாதது. அது, ஆகும் செயல்களை யெல்லாம் அடியோடு அழித்துத் தகர்த்துவிடும். சிந்திப்பதற்குச் சிறிதும் இடந்தராது. கண்ட பொருள்களின் மேல் எல்லாம் ஆசை வைப்பது அழிவுக்கே இடமாகும். காமுற்ற பொருள்களைக் கவர்தற்கு நேர்மையற்ற வழியில் செல்லத் தூண்டுவதாகும்; அது அறநெறியைத் தாண்டி அப்பாற் சென்று மறம் புரிவதற்கு அடிப்படையாகிவிடும். அளவு கடந்த தாட்சணியம் நீதிமுறையைக்கூட நிலை குலைத்துவிடும். நடுவுநிலையிலே உறுதியாக நடப்பதற்கு முட்டுக்கட்டையாக நிற்பவைகளில் கழி கண்ணோட்டந்தான் முதல் தடை அச்சம் உள்ளவர்களால் எச்செயலையும் வெற்றியுடன் செய்து முடிக்க இயலாது, அவர்கள் பகைவர்களால் எளிதிலே அழிக்கப்படுவார்கள்; அடக்கப்படுவார்கள். பொய்ச்சொல் நன்மைகளை அழித்துவிடும்; நண்பர் களைப் பக்கத்தில் நெருங்கவொட்டாமல் விரட்டியடிக்கும்; பகைவர்களைப் பெருக்கிவிடும். பழிபாவச் செயல்களுக்கு விதையாக நிற்பது வேண்டாத- வீணான- பொய்யுரைகளேதாம். பொருளிலே அளவு கடந்த அன்பு வைத்தல் தவறு. அளவு கடந்த பேராசை அல்லலுக்கு ஊற்று. பேராசை பிடித்தவர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, இன்னது இனியது என்று எண்ணிப் பார்க்காமல் எதையும் துணிந்து செய்வார்கள். செல்வத்தையும், செல்வத்தைச் சேகரிப்பதற்குரிய துறை களையும், அழித்துவிடுதல் கூடாது. அழித்து விட்டால், அதனால் நாட்டுக்கே பெருந் தீங்கு நேரும். யாரிடத்திலும் கடுமை காட்டக்கூடாது; பகைவர்களும் பாராட்டும்படி நடந்துகொள்ள வேண்டும். தன்கீழ் வாழ்வோர், அறியாமல் குற்றம் புரிந்தால் அவர்களை அச்சுறுத்துவதோடு அமையவேண்டும். அவர்கள்மேல் இரக்கங் காட்டி அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும். ஆதலால், சினன், காமம், மிகுந்த கண்ணோட்டம், அச்சம், பொய்ச்சொல், பொருளில் மிகுந்த ஆசை, அழித்தல், கடுமை ஆகிய இவைகளும் இவைபோன்ற குற்றங்களும் கூடா ஒழுக்கம்; இவைகள் அறநெறியிலே நடத்தும் ஆட்சிக்கு முட்டுக் கட்டையாகும் என்று உணர்ந்திருந்தனர். ஆகையால் தீமைகளையெல்லாம் வெறுத்துச் சேய்மை யிலே விரட்டினார்கள்; நன்மையான செயல்களையே எப்பொழுதும் நாடிச் செய்து நலம் பெற்றனர். கடலிலிருந்தும், காடுகளிலிருந்தும் வாழ்க்கைக்கு வேண்டிய பல செல்வங் களையும் முயன்று பெற்று வாழ்ந்தனர். மற்றவர்களை- அமைதியுடன் வாழ்கின்ற பொது மக்களைத் துன்புறுத்தமாட்டார்கள். தமது முயற்சியால் பெறு வதைத் தவிர முயற்சியற்ற வேறு முறையிலே பொருளைக் கொள்ளைகொள்ள மாட்டார்கள். குற்றமற்ற சிறந்த அறிவினர்களைத் துணையாகக் கொண்டிருப்பர். அவர்கள் ஆராய்ந்துரைக்கும் சிறந்த நெறியிலே தவறாமல் நடந்து நலம் புரிவார்கள். தம்மை விரும்பும் சுற்றத்தாரோடு இருந்து, உள்ளதை அவர்களுக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்பார்கள். தமது நாட்டு மக்கள் எல்லாம் நீண்டநாள் நோயின்றி உயிர் வாழ்ந்து இன்புறும்படி நெடுங்காலம் அரசாண்டு வந்தனர். இத்தகைய சிறந்த அறிஞர் குடியிலே பிறந்தவன் நீ. சினனே, காமம், கழிகண் ணோட்டம் அச்சம், பொய்ச்சொல், அன்புமிக உடைமை தெறல், கடுமையொடு பிறவும்இவ் வுலகத்து அறம்தெரி திகிரிக்கு வழி அடை யாகும்; தீதுசேண் இகந்து, நன்றுமிகப் புரிந்து; கடலும், கானமும், பலபயம் உதவப் பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது; மையில் அறிவினர் செவ்விதின் நடந்து; தம் அமர்துணைப் பிரியாது பாத்துஉண்டு; மாக்கள் மூத்த யாக்கையொடு பிணியின்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல்! (பதிற்று. பா. 22) இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பற்றிப் பாலைக் கௌதமனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இச் செய்யுள் அச்சேர மன்னனும் அவன் முன்னோர்களும் தனிப் பட்ட முறையிலும், பொது வாழ்க்கையிலும் ஒரே விதமான ஒழுக்க நெறியைப் பின்பற்றி வந்தனர் என்பதையே வலியுறுத்தும். யானைக்கண்சேய் மாந்தரம் சேரல் இரும்பொறை என்னும் சேரனைப் பற்றிய பாட்டு ஒன்றும், நல்ல மன்னர்களின் நடுநிலையைப் பற்றி எடுத்துரைக்கின்றது. குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் அவனைப் பற்றிப் பாடும் போது அவனுடைய சிறந்த குலப் பெருமையைப் பாராட்டிக் கூறியிருக்கின்றார். கொடுமையைக் கடிந்து விரட்டியவர்கள், நல்ல முறை யிலே ஆட்சி நடத்தியவர்கள், குடிமக்கள் தாமே மகிழ்ந்து கொடுக்கும் ஆறிலொரு கடமையைப் பெற்று உண்டவர்கள், நடுநிலைமை தவறாமல் ஆட்சி புரிந்தவர்கள் எத்தகைய தடை யும் இல்லாமல் இந் நிலமுழுதும் தமது ஆணை செல்லும் படி அரசாட்சி செய்தவர்கள் ஆகிய இத்தகைய சிறந்த மன்னர்களின் குடிப்பெருமையைக் காத்தவனே! கொடிது கடிந்து, கோல்திருத்திப் படுவது உண்டு, பகல் ஆற்றி, இனிது உருண்ட சுடர்நேமி முழுது ஆண்டோர் வழிகாவல! (புற நா. 17) இப்பாடலும் பண்டைத் தமிழ் மன்னர்களின் மனப் பான்மையை விளக்கிக் காட்டுகின்றது. சோழன் நெய்தலம் கானல் இளஞ்சேட் சென்னி என்பவன் ஒரு சோழ மன்னன். அவனுடைய சிறந்த பண்பை ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். அவ்வேந்தனுடைய ஆற்றலையும் அறிவையும் பற்றி அப் பாடலிலே காணலாம். உனக்கு அடங்கி உன்னை வணங்கி வாழ்வோரை எல்லாம் நீ நன்றாக அறிந்திருக்கின்றாய். எப்பொழுதும் பிறர் மீது குறைகூறுவதையே குணமாகக் கொண்டவர்கள் சிலர் உண்டு. அத்தகையவர்கள் சொல்லும் மொழிகளையெல்லாம் உண்மையென்று கண்மூடித்தனமாக நம்பிவிடமாட்டாய். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேல் குற்றம் உண்டா என்பதை நீயே நன்றாக ஆராய்ந்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுவாய். ஒருவன் உண்மையிலேயே குற்றவாளியாக - கொடுமை செய்த வனாக- இருந்ததைக் கண்டால், நீதி நூல்களை ஆராய்ந்து அவன் செய்த குற்றத்திற்கேற்ற தண்டனை விதிப்பாய்; உனக்குக் கொடுமை செய்தவர்கள், தாமே தம் குற்றத்தை உணர்ந்து உன்னிடம் வந்து தஞ்சம் அடைந்தவர்களானால் அவர்களை நீ தண்டிக்கமாட்டாய். அவர்கள் குற்றம் புரியாத காலத்தில் அவர்களிடம் எத்தகைய அன்பு கொண்டிருந்தாயோ, அதைக் காட்டிலும் மிகுந்த இரக்கங் காட்டி அவர்களை மன்னிப்பாய். வழிபடு வோரை வல்அறி தீயே! பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே! நீமெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி, அத் தகவு ஒருத்தி! வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதிநீ பண்டையின் பெரிதே. (புற நா. 10) இச்செய்யுள் மன்னனுடைய சிறந்த அறிவை விளக்கிற்று: நீதிமுறை செய்யும் திறனைக் காட்டிற்று; பகைவர்க்கும் மன்னிப் பருளும் சிறந்த பண்பையும் குறித்தது. பத்துப்பாட்டிலே உள்ள பெரும்பாணாற்றுப்படை என்பது இளந்திரையன் என்னும் தொண்டை வேந்தன் மேல் பாடப்பட்டது. அவன் காஞ்சியிலிருந்து தொண்டை மண்டலத்தை ஆண்ட மன்னன். அவன்மீது பெரும்பாண் ஆற்றுப்படையைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணானார் என்னும் புலவர். அவர் அவ் வேந்தன் பண்பைப் பற்றிக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. மறம் வளர- அதர்மம் தலையெடுக்கப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். அறமற்றதை முளையிலேயே கிள்ளி யெறிந்துவிடுவான். அறத்திற்கே என்றும் துணையாக நிற்பான். அறம் புரிவதற்கே அவனது செங்கோல் என்றும் உதவி செய்யும். இத்தகைய சிறந்த பண்புள்ள கூர்மையான வேற்படையை உடைய திரையன். அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன். (பத்து. பெரும். 36-37) இவ்வாறு திரையன் பண்பைக் கூறிய புலவர், மேலும் அவனுடைய பெருமையைப் பாராட்டுகின்றார்: நீதிமுறைகளை வேண்டி வந்தோர் யாராயினும், தங்கள் குறையைத் தீர்த்துக் கொள்ள விரும்பி வந்தோர் யாராயினும், அவர்களை வரவேற்பான்; இன் சொற் கூறுவான்; அவர்கள் வேண்டுகின்றவைகளை வேண்டியபடியே கொடுப்பான்; நடு நிலையிலேயிருந்து உண்மையைக் கண்டறியும் குற்றமற்ற நுண்ணறிவு படைத்தவன். வறியோர்க்கும் புலவர்களுக்கும் செல்வத்தை வாரி வழங்குகின்றவன். அவன் ஒருபொழுதும் சோர்வடையமாட்டான்; எப்பொழுதும் ஊக்கத்துடன் இருக்கும் உள்ளம் படைத்தவன். அவனைச் சுற்றிக் கொடுமை செய்யாத நல்ல அமைச்சர்கள் இருப்பார்கள்; சான்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் இருப்பார்கள். முறை வேண்டுநர்க்கும், குறை வேண்டுநர்க்கும், வேண்டுப வேண்டுப வேண்டினர்க்கு அருளி. இடைதெரிந்து உணரும் இருள்தீர் காட்சிக் கொடைக்கடன் இறுத்த கூம்பா உள்ளத்து உரும்புஇல் சுற்றமொடு இருந்தோன். (பத்து. பெரும். 443- 447) மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைக் காலத் தமிழ் மன்னர்களின் பண்பைக் காணலாம். சிறந்த அறிவும், உயர்ந்த ஒழுக்கமும், ஆழ்ந்த சிந்தனையும் உள்ள வேந்தர்களே, மக்கள் போற்றும் மன்னர்களாக வாழ்ந்தனர்; மக்களுக்கு நலம் புரியும் மன்னர்களாக இருந்தனர்; அவர்களுடைய தனிப்பட்ட பண்பும், ஒழுக்கமும், அறிவுமே அவர்களைச் செங்கோல் வேந்தர்களாகச் சிறந்து வாழும்படி செய்தது. இவ்வுண்மையைப் பதிற்றுப்பத்து, புறநானூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களிலே கண்டோம். தந்நலமற்ற மன்னர்கள் பழந்தமிழ் வேந்தர்களிலே பலர், குடிகளைப் புரப்பதே தம் கடன் என்று கருதியிருந்தனர். குடிகள் நன்மையின் பொருட்டு எதையும் செய்யத் துணிந்து நின்றனர். இதற்கான சான்றுகள் பல உண்டு. அவற்றுள் தலைசிறந்து நிற்கும் புறநானூற்றுப் பாடல் ஒன்றுண்டு. அப்பாடல் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னனாலேயே பாடப் பட்டது. பண்டைத் தமிழ் வேந்தர்களின் ஆட்சிப் பெருமைக்கு அப்பாடல் ஒரு தூண்டா விளக்காகத் துலங்குகின்றது. என்னையும், எனது நாட்டையும், குடிமக்களையும் இகழ்ந்து பேசிய அந்தப் பகையரசர்களை நான் சும்மா விட மாட்டேன். கொடிய போர்க்களத்திலே அவர்கள் படை அழியும்படி தாக்குவேன். அவர்களுடைய வெற்றி முரசையும், அவர்களையும் பிடித்துக்கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் விடுவேனாயின் என்னுடைய குடை நிழலிலே வாழும் குடிமக்கள் தாங்கள் சென்று வாழ்வதற்குரிய வேறு நிழலைக் காணாமல் வருந்தி எமது அரசன் கொடுங்கோலன் என்று கண்ணீர் விட்டுக் கதறி என்னைத் தூற்றும்படியான கொடுங்கோலன் ஆவேன். சிறுசொல் சொல்லிய சினம்கெழு வேந்தரை அரும்சமம் சிதையத் தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படேன் ஆயின், பொருந்திய என்நிழல் வாழ்நர்; செல்நிழல் காணாது கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக. (புறநா 72) இதே கருத்தைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். செங் குட்டுவன் கண்ணகிக்குக் கல் கொண்டுவர வடநாட்டிற்குப் புறப் படுகின்றான். அப்பொழுது அவன், என்னை இகழ்ந்த வடதிசை மன்னர்களின் தலையிலே கண்ணகி சிலை செய்வதற்கான கல்லைச் சுமத்திக் கொண்டு வருவேன். அப்படிச் செய்யாமல் என்னுடைய வாட்படை சும்மா திரும்புமாயின், நான் ஒரு அரசன் அல்லன். வீரக் கழலையணிந்து போர்க்கோலம் கொண்ட பகைவேந்தர்களை நடுங்கச் செய்யாமல், பல நன்மை களையும் தரும் இவ்வுலகிலே, குடிமக்களை நடுங்கச் செய்யும் கொடுங்கோல் வேந்தனாவேன் என்று சூளுரைக்கிறான். வடதிசை மருங்கின் மன்னர் முடித்தலைக், கடவுள் எழுத. ஓர் கற்கொண்டு அல்லது வறிது மீளும்என் வாய்வாள் ஆகின், செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகைஅரசு நடுங்காது, பயம்கெழு வைப்பில் குடிநடுக் குறூஉம் கோலேன் ஆகுஎன. (சிலம்பு. கால்கோள்.) மேலே காட்டிய புறநானூறு, சிலப்பதிகாரம் இந்த இரண்டாலும் மன்னர்களின்- பண்டைத் தமிழ் வேந்தர்களின்- கொள்கை, குறிக்கோள் இன்னதென்பதைக் கண்டோம். புலவர் பாராட்டை விரும்பிய வேந்தர்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் மற்றொரு கொள்கை அவர்களுடைய சிறப்பை எடுத்துக்காட்டும். அவர்கள் அறிஞர் களின் பாராட்டுதலைப் பெறுவதில் பெரிதும் ஆர்வம் காட்டினர். அக்காலத்திலே பொதுமக்களிடையிலே புலவர்களுக்கு நல்ல மதிப்பிருந்தது. அவர்கள் மன்னர்களிடமும் மதிப்புப் பெற்றிருந் தனர். ஆதலால்தான் மன்னர்கள் புலவர்களின் பாராட்டைப் பெற விரும்பினர். புலவர்களால் பாராட்டிப் பாடப்பட்ட மன்னர்களையே மக்கள் உயர்ந்த பண்புள்ள வேந்தர்களாகக் கொண்டாடினர். அக்காலப் புலவர்கள், எல்லா மன்னர்களையும் பாராட்டிப் பாடல் எழுதிவிடமாட்டார்கள். ஒழுக்கமுள்ள மன்னர்களைத் தான் மதித்துப் பாடுவார்கள். செங்கோல் முறை செய்யும் மன்னர்களைத்தான் சிறப்பித்துப் பாடுவார்கள். ஆகையால் அக்கால மன்னர்கள் புலவர்களின் பாராட்டைப் பெறுவதையே முதன்மையாகக் கருதினர். புலவர்களின் பாராட்டைப் பெறவேண்டுமாயின் குடி மக்களுக்குக் கொடுமை புரியாமல் நீதியுடன் ஆட்சி புரிய வேண்டும். ஆதலால் மன்னர்களின் இந்த மனப்பான்மையும் அவர்களுடைய ஆட்சியின் சிறப்பை விளக்குவதாகும். இவ் வுண்மையை மேலே காட்டிய பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடலின் மற்றொரு பகுதியில் காணலாம். ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக, உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைகஎன் நிலவரை. இவ்வரிகள் பண்டைத் தமிழ் மன்னர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருந்த உறுதியை எடுத்துரைப்பன. நான் பகையரசர் களை வெற்றிகொள்ளாவிட்டால், கொடுங்கோலனாவது மட்டும் அன்றி, மற்றொரு பெரும்பழிக்கும் ஆளாகுவேன். உயர்ந்த தலைமையும், பெரிய நூற்கேள்வியையும் உடைய மாங்குடிமருதன் என்பவனைத் தலைவனாகக் கொண்ட, உலகம் உள்ளவரையிலும் நிலைத்து நிற்கும் பலரும் புகழும் பெருமை யுள்ள, புலவர்களால் எனது நாடு பாராட்டிப் பாடப்படாமல் ஒழிக என்பதே இவ்வரிகளின் பொருள். புலவர்கள் பாராட்டும்படி அரசு செய்யும் நாடே சிறந்த நாடு என்று பண்டைத் தமிழ் வேந்தர்கள் எண்ணினர். இந்த உண்மையை இவ்வரிகள் எடுத்துக்காட்டின. பண்டைத் தமிழ் மன்னர்களிலே பலர் அறநெறியைப் பின்பற்றி நடந்தனர். மக்களைக் காப்பதே தங்கள் கடமையெனக் கருதியிருந்தனர். குடிமக்களின் பாராட்டைப் பெற வேண்டுமே யன்றி அவர்களுடைய பழிப்பைப் பெறக் கூடாது என்பதிலே கண்ணுங் கருத்துமாயிருந்தனர். தங்கள் நாட்டைப் பற்றிப் புலவர்கள் புகழ்ந்து பாடவேண்டும் என்று ஆவல் கொண்டிருந் தனர். மன்னர்களுக்குத் தனியாட்சி உரிமை இருந்த காலத்திலும் அவர்கள் செங்கோல் மன்னர்களாகச் சிறந்து வாழ்ந்ததற்குக் காரணம் அவர்களுடைய உயர்ந்த குணமும், சிறந்த உள்ள முந்தான். இவ்வுண்மையை மேலே காட்டியவற்றைக் கொண்டு அறியலாம். புலவர்களின் பாராட்டைப் பெறக்கூடிய ஒரு நாட்டின் சிறப்பென்ன? அந்நாடு எந்நிலையிலிருக்கும்? அந்நாட்டின் ஆட்சியும், அவ்வாட்சியின் தலைவனும் எப்படி இருப்பான்? என்பவைகளை ஒரு சிறந்த செய்யுளால் காணலாம். நேர்மையாகச் செங்கோல் முறையில் ஆட்சி செலுத்திய நாட்டை அப்பாடல் அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றது. பிசிராந்தையார் என்பவர் ஒரு சிறந்த புலவர். பெரிய அரசியல் அறிஞர். அவருடைய பாடல்களிலே பல உயர்ந்த உண்மைகளைக் காணலாம். அவர் நீண்டகாலம் நோய் நொடி யின்றி உயிர்வாழ்ந்த புலவர். அவரைப் பற்றித் தமிழ்நாட்டினர் பலர் பல காலமாக அறிந்திருந்தனர். அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தவர்களிலே பலர், அவர் நரைத்த கிழவரா யிருப்பார் என்று நம்பியிருந்தனர். இப்படி எண்ணியிருந்தவர் களிலே சிலர், ஒரு நாள் அவரை நேரே பார்த்துவிட்டனர். அப்பொழுது அவர் நரைதிரையில்லாமல் இளைஞர்போல் தோற்றம் அளிப்பதைக் கண்டு வியந்தனர். வயது பலவாகியும் நரையில்லாமலிருப்பதற்கு என்ன காரணம் என்று புலவரையே கேட்டுவிட்டனர். அப்பொழுது அவர் விடையளிப்பதாக அமைந்திருக்கின்றது அச் செய்யுள். “வயது பலவாகியும் இன்னும் உமது மயிர் நரைக்க வில்லையே, இந்நிலை எப்படி உண்டாயிற்று? என்று கேட்பீர் களானால், உண்மையை உரைக்கின்றேன் கேளுங்கள். சிறந்த என் மனைவியும், மக்களும் கல்வியும் அறிவும் நிரம்பியவர்கள். ஆதலால் எனக்குக் குடும்பக் கவலையில்லை. என்னிடம் வேலை பார்க்கும் இளைஞர்கள் என்னுடைய குறிப்பறிந்து நடப்பவர்கள். அதாவது எனக்கும் என்னிடம் வேலை செய்வோர்க்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அதனால் நான் செய்யும் தொழில் தடைபடுவதேயில்லை. இவைகளுக்கெல்லாம் காரணம் எனது நாட்டு அரசன் ஒருபொழுதும் அநீதி செய்யவே மாட்டான்; நேர்மையாக நாட்டைக் காத்து வருகின்றான். அன்றியும் நான் வாழும் நாட்டிலே, நான் வாழும் ஊரிலே பல அறிஞர்கள் உண்டு. அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்கள்: செருக்கின்றி அடங்கிய அறிவுள்ளவர்கள். புலன் அடக்கமும் உள்ளவர்கள். ஆதலால்தான் நான் நரையில்லாமல் வாழ்கின்றேன். என் குடும்பம் அமைதியாக இருக்கின்றது. எனது நாடு நல்ல அரசாட்சி பெற்று உயர்ந்திருக்கிறது. ஆதலால்தான் நான் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றேன். கவலையற்ற இளைஞனைப்போல் காணப்படுகின்றேன். யாண்டுபல ஆக நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்: யான்கண் டனையர்என் இளைஞரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; அதன் தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர்யான் வாழும் ஊரே. (புறநா. 191) இந்தப் பாட்டைப் படிக்கும்போது நமக்கு வியப்புண்டா கின்றது. இப்படி ஒரு நாடு பண்டைத் தமிழகத்தில் இருந்ததா என்று எண்ணத் தோன்றுகின்றது. இருந்ததோ இல்லையோ, அதைப்பற்றி நாம் துருவித் துருவி ஆராய்ந்து மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டாம். இப்படி ஒரு நாடு இருந்தால் அது இன்பங் கொழிக்கும் நாடாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தப் பாட்டு தனியாட்சி உரிமை படைத்த மன்னர்கள் ஆண்ட காலத்திலே எழுந்த பாட்டு. இதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். பண்டைத் தமிழ் மன்னர்கள் எல்லா மக்களும் கல்வி கற்றிருக்கவேண்டும். வேலைக்காரர்களும் தலைவர் களும் ஒத்து வாழவேண்டும். அறிவும் அடக்கமும் ஒழுக்கமும் பொருந்திய சான்றோர்களின் அறிவுரைப்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்று நினைத்தார்கள். இதற்காக முயன்றார்கள் என்பதற்கு இப்பாடலே சான்றாகும். பண்டைத் தமிழரசர் களிலே சிறந்த மன்னர்கள் பலர் இருந்தனர் என்பதற்கு இப் பாடலும் ஒரு எடுத்துக்காட்டு. இதனாலும் மக்கள் வாழ்வுக்கும், நாட்டின் நன்மைக்கும் அரசாட்சியே அடிப்படை என்பதைக் காணலாம். தனியாட்சி முறை வெற்றியுடன் நடைபெற்றதற்கு அவ்வாட்சித் தலைவர் களின் அரிய பண்புகளே காரணம்; அருங்குணங்களே அப் பழுக்கற்ற நடத்தைக்கு அடிப்படை என்ற உண்மையையும் உணரலாம். சில மன்னர்கள் இவ்வாறு சிறந்த பண்புள்ளவராயிருந் தனர் என்பதைக் கொண்டு, தனிப்பட்டவர்களிடமே அதிகாரம் இருக்கவேண்டும் என்று முடிவுகட்டிவிடக் கூடாது. அதிகாரச் செருக்கால் தீமை செய்தவர்கள்- செய்கின்றவர்கள்- பலர் உண்டு. பண்டை மன்னர்களிலும் சிலர் இருந்தனர். இவ்வுண்மையைப் பின்னர்க் காணலாம். அறநெறி காத்த அரசர்கள் பண்டைத் தமிழ் மன்னர்களிலே பலர் அறநெறி தவறாமல் அரசாண்டு வந்தனர். இதை விளக்கும் சான்றுகள் பல பழந்தமிழ் நூல்களில் காணப்படுகின்றன. தமிழ் மன்னர்கள் தங்களிடம் வந்து குறைகளைத் தெரிவித்துக் கொள்ளும் குடிமக்களின் மனம் மகிழ்ச்சியடையும்படி நலம் புரிந்தனர்; மாறுபட்ட இருவர், தங்களுக்கு முறை செய்யும்படி வேண்டினால் நடுநிலையிலே நின்று அவர்களுக்கு நீதி வழங்கிவந்தனர். அக்காலத்திலே நீதி மன்றங்கள் இருந்தன. அவற்றில் அறிஞர்கள் அறம் கூறும் நீதிபதிகளாக அமர்ந்திருந்தனர். இந்த நீதிபதிகள் வாயிலாகவும் மக்களுக்கு நீதி வழங்கி வந்தனர். சில சமயங்களில் மன்னர்கள் தாமேயும், குடிமக்கள் கொண்டுவரும் வழக்குகளை நேரே ஆராய்வர்; வழக்கிட்டோர் மனக்குறை யின்றி - ஒப்புக்கொள்ளும்படி- முடிவு கூறுவர். நீதி மன்றம் நீதி மன்றத்தை அறங்கூறு அவையம் என்று கூறுகின்றது பத்துப்பாட்டு. நீதிபதிகளின் நேர்மை, அவர்கள் நீதி வழங்கும் முறை இவைகளைத் தெளிவாக அதிலே காணலாம். பத்துப்பாட்டிலே உள்ள மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனாரால் பாடப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியன் அப் பாட்டின் தலைவன். அதிலே நீதி மன்றத்தைப் பற்றிக் கூறப்படும் பகுதி நமக்கு வியப்பைத் தருகின்றது. அத்தகைய நீதிபதிகள், நீதிமுறை நீதிமன்றம் இக்காலத்தில் இருக்கின்றனவா என்ற ஐயம் பிறக்கின்றது. பயம், துன்பம், ஆசை இவைகளை நீக்கியவர்கள்; ஒரு பக்கத்தாரிடம் சினமும், மற்றொரு பக்கத்தாரிடம் மகிழ்ச்சியும் காட்டாதவர்கள்; தம்மை நடுநிலையிலேயே நிறுத்திக் கொண்ட வர்கள்; துலாக்கோலைப் போல் நடுநிலையிலேயே நிற்பவர்கள்; சிறந்த ஒழுக்கம் உள்ளவர்கள்; இத்தகையவர்கள் நீதிபதிகளாக அமர்ந்திருந்து நீதி வழங்கும் அறம் கூறும் அவையம். அச்சமும், அவலமும், ஆர்வமும் நீக்கிச் செற்றமும், உவகையும் செய்யாது காத்து, ஞெமன்கோல் அன்ன செம்மைத்து ஆகிச் சிறந்த கொள்கை அறம்கூறு அவையமும். (மதுரைக்காஞ்சி, 489-492) நீதிபதிகளின் நேர்மையை மாங்குடி மருதனார் எவ்வளவு அழகாகச் சித்திரிக்கிறார் என்பது எண்ணத்தக்கது. நீதிபதிகள் உண்மையைக் கண்டறிந்து நீதி வழங்குவதில் அஞ்சக் கூடாது. பெருங் குற்றத்திற்குக் கடுதண்டனை விதிக்கும் நிலை ஏற்படும் போதும், துன்புறக் கூடாது. அவர்கள் பேராசை பிடித்தவர்களாக இருக்கக் கூடாது; போதும் என்ற மனம் படைத்தவர்களா யிருத்தல் வேண்டும்; அளவு கடந்த ஆசையுள்ள நீதிபதிகள் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அறத்தை அழிக்கவும் செய்வார்கள். இக்கருத்தை அச்சமும் அவலமும், ஆர்வமும் நீக்கி என்ற ஒரே வரியில் தீட்டியிருக்கின்றார். வழக்கிடுவோரில் ஒருவர் உறவினராயிருக்கலாம்; அல்லது நண்பராயிருக்கலாம்; மற்றொருவர் தமக்கோ, தம் குடும்பத்திற்கோ பகைவராயிருக்கலாம்; நீதிபதியாக இருப்பவர்கள் இவற்றைச் சிறிதும் மனத்தில் எண்ணாமல் மறந்து விடவேண்டும். இருவரையும் சமமாகக் கருதி நீதி வழங்க வேண்டும். செற்றமும் உவகையும் செய்யாது காத்து என்ற வரி இவ்வுண்மையை உணர்த்துகின்றது. ஒழுக்கம் உள்ளவர்களே நீதிபதிக்குத் தகுதியுள்ளவர்கள். ஒழுக்கம் அற்றவர்களால் நீதி நிலைகுலையும். ஒரு நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவரையும் அரசாங்கம் ஒத்த நிலையி லேயே கருதவேண்டும்; ஒத்த நீதியே வழங்க வேண்டும். சாதிக்கொரு சட்டம், மதத்துக்கொரு சட்டம், சாதிக்கு ஏற்ற வாறு நீதி, மதத்திற்கேற்றவாறு நீதி என்று வழங்கும் முறை அறத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாது. மக்கள் அனைவரையும் மக்களாகவே மதித்து நீதி வழங்குவதே சிறந்த தாகும். மக்களாட்சி என்று சொல்லுகின்ற இக்காலத்திலும் இம்முறை ஏற்படவில்லை. நீதி வழங்கும் முறை பண்டைக் காலத்தில் நீதி வழங்கிய முறைக்கும், இக் காலத்தில் நீதி வழங்கும் முறைக்கும் ஒரு பெரிய வேற்றுமை உண்டு. இந்த வேற்றுமை மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வேற்றுமை. பண்டைக் காலத்தில், உண்மையான குற்றவாளியைக் கண்டறிந்து தண்டனை வழங்கினர். குற்றமற்றவர்களுக்குத் துன்பம் உண்டானால் பாதுகாத்தனர். சாட்சியளிப்போரைக் கொண்டு மட்டும் ஒரு வழக்கிலே தீர்ப்பளிக்க மாட்டார்கள். நீதிபதிகளும் தங்கள் நுண்ணறிவைக் கொண்டு குற்றம் யார் பக்கத்தில் என்பதைக் கண்டறிவார்கள். மாறுவேடம் பூண்டு சென்றுகூட குற்றவாளிகள் யார்? குற்றம் அற்றவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொண்டு நீதி வழங்குவார்கள். பொய்க்கரி புகல்வோன் ஒரு மரத்தடியில் நின்றால் அம் மரம் பட்டுப் போகும், அவன் குடும்பம் பாழாகும், அவன் செல்வம் பாழாகும், அவன் மீளா நரகுக்கு ஆளாவான் என்றெல்லாம் பொய்க்கரி கூறுவோரைப் பற்றிப் பண்டை நூல்களில் கூறப்பட்டிருக் கின்றன. ஆதலால் தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் பொய்க்கரி புகல அஞ்சினர். ஆயினும், தந்நலம் காரணமாகப் பொய்க்கரி புகல்வோர் சிலரும் இருந்திருக்கத்தான் வேண்டும். பொய்ச் சாட்சி சொல்வோர் அடையும் நிலையைப்பற்றிக் கூறியிருப் பதைக் கொண்டே அத்தகையோரும் இருந்தனர் என்று எண்ண இடந் தருகின்றது. ஆகையால், நீதிபதிகள், முழுவதும் சாட்சி களையே நம்பித் தீர்ப்புக் கூறாமல் உண்மையைக் கண்டறிய முயன்றனர். மதுரைக்காஞ்சியில் கூறிய தகுதியுள்ள நீதிபதி களால்தான் துலாக்கோல்போல் நின்று நீதி வழங்க முடியும். இக்காலத்தில் உள்ள நீதிமுறை முன்காலத்து நீதி முறை களுக்கு முரணானது. உண்மையின்மேல் நீதி வழங்க முடியாது; சட்டத்தின் மேல்தான் நீதி வழங்க முடியும். இக்காலச் சட்டப்படி, உண்மையான கொலையாளி தப்பித்துக்கொள்ள முடியும்; ஒரு பாவமும் அறியாத அப்பாவி கொலையாளியாகித் தூக்குத்தண்டனை பெறமுடியும். கொலை செய்ததை நேரே கண்டதாகச் சாட்சிகள் - சாட்சியங்கள்- இல்லாவிட்டால் கொலையாளி விடுதலை பெற்றுவிடுவான். குற்றமற்ற ஒருவனைப்பற்றி, இவன் தான் கொலை செய்தான்; அதை நாங்கள் கண்ணால் கண்டோம் என்று கூறும் சாட்சிகள் இருந்தால்- அதற்கான சாட்சியங்கள் இருந்தால்- அவன் கொலையாளியாகி விடுவான். நீதிபதிக்கு, யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்று தெரிந்தாலும்கூட அவர் தன் மனச் சாட்சியின்படி நீதி வழங்க முடியாது. சட்டத்தின் நெறியைப் பற்றியே நீதி வழங்க வேண்டும். சட்டம் சாட்சிகளையும், சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். சுருக்கமாகக் கூறினால், பண்டைக் காலத்தில் உண்மையின் படி நீதி வழங்கப்பட்டது; இக்காலத்தில் சட்டத்தின்படி நீதி வழங்கப்படுகின்றது. பண்டைக் காலத்தில் உண்மையை மறைத்துவிட முடியாது; இக்காலத்தில் உண்மையை மறைத்து விட முடியும். இதனால் இக்காலத்தில் சட்டங்களும் நீதிகளும், வலுத்தவர்களுக்கே பெரும்பாலும் துணை செய்யக்கூடியனவா யிருக்கின்றன; இளைத்தவர்களுக்கு நேர்மையும், நீதியும் கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. இதுதான் பழங்கால நீதிமுறைக்கும், இன்றுள்ள நீதிமுறைக்கும் உள்ள தலைகீழ் வேற்றுமை. கரிகால் சோழன் நேர்மையாக நீதி வழங்கிய மன்னர்களிலே கரிகாற் சோழன் சிறப்பாகப் பாராட்டப்படுகின்றான். அவன் இளம் பருவத்திலேயே நுண்ணறிவு படைத்தவனாயிருந்தான். வழக்குகளின் உண்மையை உணர்ந்து முடிவு கூறுவதில் ஒப்பற்றவனாயிருந்தான். பத்துப்பாட்டுள் ஒன்றான பொருநர் ஆற்றுப்படை என்பது கரிகாலன் மீது பாடப்பட்டது. அதைப் பாடிய ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார். இவர் அவனைப் பற்றிய வரலாற்று நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக்காட்டியிருக்கின்றார்; கரிகாற் சோழன் அரசாட்சி செய்த காலத்தில் இரண்டு முதியவர்களுக்குள் ஏதோ வழக்கு ஏற்பட்டது. அவ்வழக்கை அவர் களால் பேசித் தீர்த்துக்கொள்ள முடியவில்லை. கரிகாலனிடம் வழக்கைக் கூறி நீதி பெறலாம் என்று நினைத்து அவனிடம் அணுகினர். தோற்றத்திலே அவன் இளைஞனாயிருப்பதைக் கண்டனர். ஆதலால் இந்த இளைஞனால் நமது வழக்கை ஆராய்ந்து, உண்மையைக் கண்டறிந்து உரைக்க முடியுமோ என்று ஐயுற்றனர். அவர்களின் ஐயத்தைக் குறிப்பால் அறிந்தான் கரிகாலன். அவர்களுடைய வழக்கை அறநூல் அறிந்த முதிர்ந்த நீதிபதி ஒருவரிடம் மாற்றுவதாக உரைத்தான். அவர்களும் மகிழ்ச்சியோடு இசைந்தனர். பின்னர், அவனே, நரை முடியும் தாடியும் தரித்தவனாய் நீதிமன்றத்திலே வந்து அமர்ந்தான். முதியோர்கள் உரைத்த வழக்கைக் கேட்டான். இருவரும் ஒப்புக்கொள்ளும்படி நீதி வழங்கினான். இதனை, முதியோர், அவைபுகு பொழுதில், தம் பகைமுரண் செலவும் (188) என்ற பொருநர் ஆற்றுப்படை அடியினால் அறியலாம். இந்த வரலாற்றைப் பழமொழிப் பாட்டு ஒன்று தெளிவாகக் கூறுகின்றது. நாம் சொல்வதைக் கேட்டறிந்து நமது வழக்கிலே முடிவு கூறுவதற்கு அறியாதவன், அனுபவம் இல்லாத இளமைப் பருவம் உள்ளவன் என்று இவ்வாறு ஐயுற்ற முதியவர்கள் மகிழும்படி நரைத்த தாடி மீசைகளை வைத்துக் கொண்டு நீதிபதியாக வந்து உட்கார்ந்தான். அம் முதியவர்களின் சொற் களைக் கேட்டான். உண்மையை உணர்ந்து அவர்கள் வழக்கிலே முடிவு கூறினான். அம்முடிவைக் கேட்டு அவர்கள் உவப்படைந் தனர். ஆதலால் குலவித்தை கற்றுக்கொள்ளாமலே நன்றாக வந்துவிடும். உரைமுடிவு காணான் இளமையோன், என்ற நரைமுது மக்கள் உவப்ப, - நரைமுடித்துச் சொல்லால் முறை செய்தான் சோழன்; குலவிச்சை கல்லாமல் பாகம் படும். (பழ. 21) இப் பழமொழிப் பாட்டும், பத்துப்பாட்டில் கண்ட வரலாற்று நிகழ்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. பண்டைத் தமிழரசர்களின் நீதிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. தமிழரசர்கள், தாமே நீதிபதியாக இருந்து வழக்குகளைக் கேட்டு அறநெறிப்படி முடிவு கூறினர் என்பதற்கும் இது ஒரு உதாரணம். நீதிக்குக் காலக்கெடுவில்லை மற்றொரு சோழ மன்னன் வரலாறு பழமொழி, சிலப்பதி காரம், பெரிய புராணம் முதலிய நூல்களில் காணப்படுகின்றது. பெரியபுராணம் இவனை மனுநீதிகண்ட சோழன் என்ற பெயரால் சுட்டுகின்றது. பழமொழியிலோ சிலப்பதிகாரத்திலோ பெயர் குறிக்கப்படவில்லை. சோழன் மகன் ஒருவன், பசுங்கன்று ஒன்றின்மேல் தன் தேரை ஊர்ந்து கொன்றுவிட்டான். இந்நிகழ்ச்சியை அரசனுக்குத் தெரியாமல் அறிஞர்கள் - அமைச்சர்கள் மறைத்துவிட்டனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந் நிகழ்ச்சியை அறிந்தான் அரசன். உடனே, பல்லாண்டுகளுக்கு முன்னே பசுங்கன்றைக் கொன்ற தன் மகன்மேல் தானும் தன்னுடைய தேரை ஊர்ந்து கொன்றான். ஆதலால், நீதிமுறை செய்வதற்கு நீண்டகாலம், குறுகிய காலம் என்ற காலக்கெடு இல்லை. சால மறைத்துஓம்பிச் சான்றவர் கைகரப்பக், காலை கழிந்ததன் பின்றையும், - மேலைக் கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்; முறைமைக்கு மூப்பு இளமை, இல். (பழ. 93) பழமொழியிலே குறிக்கப்பட்ட இவ்வரலாறு சிலப்பதி காரத்திலே வேறுவிதமாகக் கூறப்படுகின்றது. சோழன் மகன் பசுவின் கன்றைப் பாராமல் தேர்ச் சக்கரத் தால் அரைத்துக் கொன்றுவிட்டான். உடனே அரசனுடைய அரண்மனை வாசலிலே கட்டியிருந்த ஆராய்ச்சி மணி அடித்தது. அரசன் வெளியே வந்து பார்த்தான். கன்றை யிழந்த பசு கண்ணீர் சிந்திக்கொண்டு நின்றது. அது அவன் உள்ளத்தைச் சுட்டது. நடந்த நிகழ்ச்சியை அறிந்தான். உடனே தன் மகனைத் தேராழி யால் கொன்று, அப் பசுவைப் போல் தானும் கண்ணீர் சிந்தினான் என்பது சிலப்பதிகாரம். அதனை, வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத், தான்தன் அரும்பெறல் புதல்வனை, ஆழியின் மடித்தோன், பெரும்பெயர்ப் புகார் என் பதியே. (சிலப். வழக்குரை. 53- 56) இவ்வரலாறு பழமொழியின் வரலாற்றுக்கு மாறுபட்டது. இச் சிலப்பதிகார வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் பெரியபுராணக் கதை பிறந்திருக்கின்றது. பழமொழியிலும் சிலப்பதிகாரத்திலும் பசுங்கன்றுக்காக மகனைக் கொன்ற சோழன் பெயர் சொல்லப்படவில்லை. பெரியபுராணம், சோழனுக்கு மனுநீதிகண்ட சோழன் என்றும், அவன் மகனுக்கு வீதிவிடங்கன் என்று பெயர் வைத்து விடு கின்றது. சிலப்பதிகாரம் இந்த நிகழ்ச்சி சோழர் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் நடந்ததாகக் கூறுகின்றது. பெரிய புராணம் திருவாரூரில் நடந்தாகச் சொல்லுகின்றது. பழமொழியில் கூறும் நிகழ்ச்சியே இயற்கையாகவும் உண்மை போலவும் காணப்படுகின்றது. இந்நிகழ்ச்சி பத்துப் பாட்டு எட்டுத்தொகை போன்ற சங்க நூல்களில் காணப் படவில்லை. எப்படியாயினும் இந்நிகழ்ச்சியும், தமிழ் மன்னர் களின் நீதிமுறைக்குச் சிறந்ததோர் உதாரணமாகும். சிபிச் சோழன் ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரைக் கொடுத்தவன் சிபிச் சக்கரவர்த்தி என்பவன். இவன் சூரிய குல வேந்தனாக - இராமனுடைய முன்னோருள் ஒருவனாக- இராமா யணத்தில் குறிக்கப்படுகின்றான். இவனைச் சோழ மன்னன் என்று புறநானூற்றுப் பாடல்களில் சொல்லப்படுகின்றது. புறநானூற்றுப் பாடல் ஒன்று இவனுடைய வரலாற்றைச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றது. முனிவர்கள் உலக மக்களின் துன்பம் தீரத் தவம் புரிகின்றவர்கள்; அவர்கள் சுடுகின்ற சூரிய வெப்பத்தைத் தாங்கி நின்று, காற்றையே உணவாகக் கொண்டு தவம் புரிகின்றவர்கள். ஒளியுடன் சூழ்ந்திருக்கின்ற விளங்குகின்ற சடையை உடை யவர்கள். அத்தகைய முனிவர்களும், வியப்பால் திகைப்படையும் படி தியாகம் செய்தவன் சிபிச் சோழன். குறிய நடையை உடைய புறா ஒன்று, வளைந்த சிறகையும், கூர்மையான நகங்களையும் உடைய ஒரு பருந்தின் பாய்ச்சலைக் கண்டு அஞ்சிற்று; அதனிடம் பிடிபடாமல் தப்பித்துக்கொள்ளும் பொருட்டு, சிபிச் சோழனைச் சரணம் அடைந்தது. அவன், அப்புறாவின் மரணத் திற்கு அஞ்சினான்; அதைக் காக்கத் துணிவுகொண்டான். உடனே, அப் பருந்தின் விருப்பப்படி, அந்தப் புறாவின் எடையள வுள்ள சதையை அதற்கு உணவாகக் கொடுக்கச் சம்மதித்தான். தன் எடையும், அப் புறாவின் எடையும் ஒன்றாயிருந்ததால், தானே துலாத் தட்டில் ஏறி நின்றான். தன் உடலையே அந்தப் பருந்துக்குக் கொடுத்து, அப் புறாவின் உயிரைக்காத்தான் என்பது புறநானூற்றுப் பாடலில் காணும் கதை. இது, தாமப்பல் கண்ணனார் என்னும் புலவரால் சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானை நோக்கிப் பாடப்பட்ட பாட்டு. நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத் தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால் உணவாகச் சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் மருளக், கொடும்சிறைக் கூர்உகிர்ப் பருந்தின், ஏறுகுதித்து ஒரீஇத் தன்அகம் புக்க குறுநடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக. (புறநா. 43) இதுவே மேலே குறித்த சிபிச் சோழன் கதையை விளக்கும் பாடல். புள்உறு புன் கண் தீர்த்த வெள் வேல் சினம்கெழு தானைச் செம்பியன் மருக என்பது புறநானூற்றின் 37- வது பாடல். மாறோக்கத்து நப்பசலை யார் பாடியது. புறவின் அல்லல் சொல்லிய, கறைஅடி யானை வால்மருப்பு எறிந்த வெண்கடைக் கோல்நிறை துலா அம்புக்கோன் மருக என்பது புறநானூற்று 39- வது பாட்டு. இதுவும் மாறோக்கத்து நப்பசலையார் பாட்டு. நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை என்பது புறநானூற்று 46- வது பாட்டு. குளமுற்றுத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை நோக்கிக் கோவூர் கிழார் பாடியது. இந்தச் சிபிச் சோழன் கதையும், பழங்கால மன்னர்களின் நீதிமுறைக்கு எடுத்துக்காட்டு: அவர்கள் தியாகச் செயலை விளக்கி நிற்பது. பொற்கைப் பாண்டியன் பாண்டிய மன்னன் ஒருவன்; தன்னுயிர்போல் மன்னுயிர் களைப் புரப்பவன்; குடிகள் எவரும் குறையுறாமல் வாழ வேண்டும் என்பதே அவனுடைய குறிக்கோள். அவனுடைய தலைநகரத்தில் கீரந்தை என்ற அந்தணன் ஒருவன் வாழ்ந்தான். அவன் ஒரு நாள் கங்கையாடப் புறப்பட்டான். அவன் மனைவி என்னைத் தனியாக விட்டுச் சென்றால் யார் பாதுகாப்பர் என்றாள். அரசன் காப்பான் அஞ்சாதே என்று உரைத்தான் அவன். இதை நகரசோதனை செய்ய வந்த அரசன் காதிலே கேட்டான். அன்று முதல் நாள்தோறும் அவ் வீட்டைப் பாதுகாத்து வந்தான் பாண்டியன். ஒருநாள் இரவில் அவ்வீட்டினுள் ஆண் குரல் ஒன்று கேட்டது. உடனே அரசன் கதவைக் கையால் தட்டினான். கங்கையாடச் சென்றிருந்த அந்தணன் அன்றுதான் திரும்பி வந்திருந்தான். அவன் கதவு தட்டப்பட்ட ஓசையைக் கேட்டு, யார் அது? என்று உரத்துக் கேட்டான். உடனே, கங்கையாடச் சென்ற கீரந்தை திரும்பி வந்துவிட்டான்; அவன்தான் தன் மனைவியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தான் மன்னன். அந்த வீட்டின் கதவைத் தட்டியது போலவே அவ் வரிசையில் இருந்த ஏனைய வேதியர்கள் வீட்டுக் கதவுகளையும் தட்டிவிட்டு அரண்மனைக்குப் போய்விட்டான். மறுநாள் கூடிய அரச சபையிலே இச்செய்தி அரசனுக்கு அறிவிக்கப்பட்டது. அரசன் இத்தகைய தீங்கு செய்தவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று மறையவர்களைக் கேட்டான். அவர்கள், அவன் கையை வெட்டிவிட வேண்டும் என்றனர். அப்பொழுதே அரசன் தன் உடைவாளை உருவினான்; தன் கையைத் தானே குறைத்தான். அதைக் கண்டு அனைவரும் வியந்தனர். பிறகு அந்தணர்கள் வேள்வி ஒன்று இயற்றினர். அதனால் குறைக்கப்பட்ட அவன் கை பொன்கையாக வளர்ந்தது என்பது பொதுவாக வழங்கும் கதை. பண்டைத் தமிழ் மன்னர்கள் தமது குடி மக்கள் எந்தக் குறையும் எய்தாமல் காத்து வந்தனர் என்பதற்கே இக்கதை பிறந்தது. இதைப்பற்றியும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க நூல்களில் காணப்படவில்லை. பழமொழியிலும், சிலப்பதிகாரத்திலும், ஒரு தனிப்பாடலிலுமே இக்கதை காணப் படுகின்றது. நீதிமுறை செய்யும் எனக்கு இச் செயல் தகுந்தது அன்று என்பதை நினைத்தான்; வேறொரு சாட்சி யில்லாவிட்டாலும் தனக்குத்தானே சாட்சியாக நின்றான்; தன் தவற்றைத் தானே உணர்ந்து தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான். இவ்வாறு செய்தவன் ஒரு பாண்டியன். ஆதலால் நல்லோர்கள், பிறர் காணமாட்டார்கள் என்று நினைத்துத் தீமை செய்ய மாட்டார்கள். எனக்குத் தகவு அன்றால் என்பதே நோக்கித் தனக்குக் கரிஆவான் தானாய்த், - தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும்; காணார் எனச் செய்யார், மாணா வினை (பழ. 102) இதுவே பொற்கைப் பாண்டியன் கதைக்கு ஆதரவான பழமொழிப் பாட்டு. வறுமையிலே வாழ்ந்த கீரந்தை என்பவனுடைய மனைவி யின் வீட்டின் கதவை ஒரு நாள் பாண்டியன் தட்டினான்; உள்ளேயிருந்த அந்தணன், கதவைத் தட்டுவது யார் என்று தன் மனைவியிடம் ஐயத்துடன் கேட்டான். அவள் அரசனுடைய பாதுகாவலைத் தவிர, வேறு குற்றமற்ற பாதுகாவல் இல்லை என்று கூறினீர். பாதுகாப்பற்ற மனையிலே என்னைத் தனித் திருக்க விட்டுச் சென்றீர். அதன்படியே இன்று அந்த அரசாகிய வேலியே பாதுகாத்தது; பாதுகாக்காதோ? என்று கூறினாள். இதை அரசன் காதில் கேட்டான். காய்ச்சிய ஆணி போல் இச்சொல் அவன் நெஞ்சிலே புகுந்தது. புகையோடு கூடிய துன்பத் தீ மூண்டு அவன் உள்ளத்தைச் சுட்டது. வேதியன் தன் மனைவியிடம் ஐயம் கொள்ளும் படி செய்து விட்டோமோ என்று அஞ்சி நடுங்கினான். உடனே வச்சிராயுதத்தைக் கையிலே யுடைய தேவேந்திரனது கிரீடத்தில் உள்ள ஒளி பொருந்திய வளையத்தை உடைத்த வலிமை பொருந்திய தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான். இத்தகைய செங்கோலையும், குறையாத வெற்றியையும் உடைய இறைவன் என்பது சிலப்பதிகாரம். இதனை, உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்; அரைச வேலி அல்லது, யாவதும் புரைதீர் வேலி இல், என மொழிந்து மன்றத்து இருத்திச் சென்றீர்; அவ்வழி இன்று அவ் வேலி காவாதோ? எனச் செவிச்சூட்டு ஆணியில் புகைச்சுழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று, வச்சிரத் தடக்கை அமரர் கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தக்கை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறை, (சிலப். கட்டுரை. 42-53) இச் சிலப்பதிகாரக் கதைக்கும், மேலே எடுத்துக்காட்டிய வழக்கத்தில் உள்ள கதைக்கும் சிறிது வேறுபாடு காணப்படுகின் றது. பழமொழிப் பாட்டில் உள்ள நிகழ்ச்சியும், சிலப்பதிகாரம் கூறும் நிகழ்ச்சியும் ஒன்றாகவே காணப்படுகின்றன. கொற்கையான் மாறன் குலசேகர வழுதி பொற்கையான் ஆனகதை போதாதோ? என்று ஒரு தனிப்பாடல் காணப்படுகின்றது. கையரிந்தான் மாறன் கதவு இடித்த குற்றத்தால் என்பது இரங்கேச வெண்பா. இவ்வாறு இப் பொற்கைப் பாண்டியன் வரலாறு இன்னும் பல பாடல்களில் பாராட்டப்படுகின்றது. மேலே காட்டிய கரிகாலன் வரலாறு, மனுநீதி கண்ட சோழன் வரலாறு, சிபிச் சோழன் வரலாறு, பொற்கைப் பாண்டியன் வரலாறு இவைகள் எல்லாம் உண்மையா? வரலாற்று நிகழ்ச்சியா? என்று ஆராய வேண்டியதில்லை. வரலாறோ, புனைந்துரையோ, எப்படியோ ஆகட்டும். பழந்தமிழ் வேந்தர்கள் குடிமக்களின் குறைகளைப் போக்குவதிலே- அவர்களுக்கு நடுநிலையிலே நின்று நீதி வழங்குவதிலே- கருத்தூன்றி யிருந்தனர். இவ்வுண்மையை விளக்குவதற்கு இக்கதைகள் உதவுகின்றன. பழந்தமிழ் வேந்தர்கள் நீதிமன்றங்களின் வாயிலாகவும் மக்கள் வழக்குகளைத் தீர்த்தனர். தாமேயும் நேரே வழக்குகளைக் கேட்டறிந்து முடிவு கூறினர். தங்கள் குடி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து- கண்டுணர்ந்து- அவைகளை நீக்கினர். இவ்வுண் மைகளைப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. மண்ணாசை கொண்ட மன்னர்கள் நாடு பிடிக்கும் ஆசை ஆசைகளிலே மூன்றை முதன்மையாகக் கூறுவர். அவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்பன. நீதி நிலவிய பழங்காலத்திலும் பல மன்னர்கள் இந்த ஆசைகளுக்கு ஆளாகித்தான் இருந்தார்கள். மண்ணாசை அதாவது நாடு பிடிக்கும் ஆசை ஒன்றிருந்தால் போதும்; ஏனைய இரண்டு ஆசைகளும் அதைத் தொடர்ந்து வளர்ந்து வந்து கொண்டே யிருக்கும். போதும் என்ற மனம் அரசர்க்கு ஆக்கம் தராது; தனது நாட்டை அகலப்படுத்த வேண்டும் என்ற ஆசை வேண்டும்; இவ்வாசையுள்ள மன்னனே குன்றாத புகழுடன் குறையற்று வாழ்வான் என்பது பழையநீதி. தமிழ் மன்னர்களிலே பலர் இந்த நீதிக்கு விலக்கானவர்கள் அல்லர். இதற்குத் தமிழ்நாட்டு முடியுடை மூவேந்தர்களின் வரலாறே போதுமானதாகும். சேரர், சோழர், பாண்டியர் மூவரும் படைப்புக் காலந்தொட்டு வாழும் பழந்தமிழ்க் குடியினர் என்பது தமிழர் கொள்கை. மூவரும் தமிழர்கள். ஒரே மொழியினர்; ஒரே நாட்டினர்; ஒரே பண்பாட்டை யுடையவர்கள். இவர்கள் மூவரும் ஒன்றுபட்டு வாழ்ந்த காலம் மிகவும் குறைவு. பெரும் பாலும் பலகாலம் ஒருவரோடு ஒருவர் போர் புரிந்து கொண்டு தான் இருந்திருக்கின்றனர். இதற்குக் காரணம் மண்ணாசை, பொன்னாசை, புகழ் ஆசையைத் தவிர வேறில்லை. அதிகாரச் செருக்கு ஆரையும் விடாது. அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்புகின்ற மக்கள் மனிதத் தன்மையி னின்றும் மேம்பட்டவர்கள். தனியதிகார உரிமை படைத் தவர்கள். தாழ்மையுடன் நடந்துகொள்ள விரும்ப மாட்டார்கள். மற்றவர்களுடன் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழக் கூட அவர்கள் மனம் துணியாது. அனைவர்க்கும் தலைவராய் ஆணை செலுத்தவே விரும்புவர். தாம் சொல்பவைகளுக் கெல்லாம் மற்றவர்கள் தலை வணங்க வேண்டும் என்றே நினைப்பார்கள். தனி அதிகார வெறி ஆசைக்கோர் அளவில்லை என்ற இடத்தில்தான் வீற்றிருக்கச் செய்யும். தனியதிகார வெறியைத்தான் ஏகாதிபத்திய வெறி என்று இக்காலத்தினர் இயம்புவர். தொல்காப்பியம் கூறுவது பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்திலே புறத் திணையைப் பற்றிக் கூறும் பகுதியினால் நாம் பல உண்மை களைக் காணலாம். சிறப்பாக, அதில் கூறப்படும் போர் முறை தற்பாதுகாப்புப் போராகவே காணப்படுகின்றது. ஆயினும் தமிழகத்தில் மண்ணாசை கொண்டு போர் செய்த மன்னர்கள் இருந்தனர். தம் வலிமையைக் காட்டிப் புகழ் பெற விரும்பிப் போர் புரிந்த மன்னர்களும் இருந்தனர். இந்த உண்மையையும் தொல்காப்பியம் மறைக்கவில்லை. வஞ்சி தானே முல்லையது புறனே; எஞ்சா மண்ணசை வேந்தனை, வேந்தன் அஞ்சுதகத் தலைசென்று அடல் குறித் தன்றே. (தொல். பொருள். புறத்திணை இயல்- 6) வஞ்சித்திணை என்பது முல்லைத்திணையென்னும் அகத்திணையோடு தொடர்புள்ளது; அடங்காத மண்ணாசை கொண்டு நாடு பிடிப்பதற்காகப் படையெடுத்து வந்த அரசனை எதிர்ப்பது; நீதிநெறியைக் கருதும் வேந்தன் வலிந்து படை யெடுத்து வந்த மன்னன் அஞ்சும்படி படைதிரட்டிச் சென்று போர் செய்வதாகும். இச் சூத்திரம் மண்ணாசை கொண்டு போர் தொடுத்த மன்னர்கள் தமிழகத்தில் இருந்தனர் என்பதற்குச் சான்று. தும்பை தானே நெய்தலது புறனே; மைந்து பொருளாக வந்த வேந்தனைச் சென்றுதலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. (தொல். பொ. புறத்திணை. 12) தும்பை என்பது நெய்தல் திணை என்னும் அகத்திணை யோடு தொடர்புள்ளது; தனது வல்லமையை உலகம் புகழ வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டு வலிந்து போர் செய்ய வந்த அரசனை எதிர்த்துச் சென்று போர் செய்து அழிப்பதாகும். இத்தகைய சிறப்புள்ளதே தும்பைத் திணையாகும். இச்சூத்திரம், தமது வீரத்தை வெளியிடுவதற்காகவே போர் புரிந்த மன்னர்களும் தமிழகத்தில் இருந்தனர் என்ற உண்மையை உரைத்தது. பண்டைத் தமிழகத்து மன்னர்களிடையிலே அறநெறியும், மக்கட் பண்பும் நிறைந்திருந்தன. அவர்கள் சிறந்த செங்கோலர் களாக வாழ்ந்தனர். இது உண்மை. ஆயினும், தனியதிகார வெறி காரணமாகப் பல அரசர்கள் அறநெறியைச் சிதைக்க அஞ்ச வில்லை. இதற்கான எடுத்துக்காட்டுக்கள் சிலவற்றைக் காண்போம். அண்ணன் தம்பிச் சண்டை சோழன் நலங்கிள்ளியும், சோழன் நெடுங்கிள்ளியும் ஒரு குலத்தினர்; ஒரு குடியினர்; அண்ணன் தம்பி முறையினர். நலங்கிள்ளி காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்ட சோழ மன்னன்; நெடுங்கிள்ளி உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோழ அரசன். இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இவர்களில் நலங்கிள்ளி தான் வலிந்து போர் செய்தவனாகக் காணப்படுகின்றான். புறநானூற்றில் உள்ள 44, 45 ஆகிய பாடல்கள் இவ் வுண்மையை உரைக்கின்றன. நெடுங்கிள்ளி ஆவூர்க் கோட்டை யுள்ளிருந்த போது நலங்கிள்ளி அக் கோட்டையை முற்றுகை யிட்டான். நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்காமல் உள்ளேயே பதுங்கியிருந்தான். அப்பொழுது கோவூர்கிழார் என்னும் புலவர் நெடுங்கிள்ளியிடம் சென்றார். கோட்டைக் கதவு அடைபட்டிருப்பதனால், கோட்டைக்குள்ளிருக்கும் மக்கள் வறுமையால் வாடுவதை அவனுக்கு எடுத்துக்காட்டினார். அறநெறியில் நடப்பதானால் கோட்டைக் கதவைத் திறந்துவிடு. நலங்கிள்ளியிடம் இக் கோட்டை உனது என்று சொல்லிவிடு; வீரனானால் நலங்கிள்ளியை எதிர்த்துப் போர் செய் என்று அறிவுரை கூறினார். இச்செய்தியைப் புறநானூற்றின் 44- வது பாடலிலே காணலாம். மற்றொரு சமயம் நெடுங்கிள்ளி, உறையூர்க் கோட்டைக் குள்ளிருந்தபோது, நலங்கிள்ளி அக் கோட்டையை முற்றுகை யிட்டான். அப்பொழுதும் நெடுங்கிள்ளி கோட்டைக் கதவைத் திறக்கவில்லை. இப்படியே பல நாட்கள் கழிந்தன. கோட்டைக்குள் வாழ்ந்த மக்கள் வறுமையால் வாடினர். இந்த அண்ணன் தம்பிச் சண்டையால் சோழ நாட்டு மக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவில்லை. அப்பொழுதும் கோவூர் கிழார் தோன்றி இரண்டு சகோதரர்களையும் சமாதானம் ஆகும்படி செய்தார். உன்னுடன் போர் செய்கின்றவன் பனம்பூ மாலையைத் தரித்த சேரன் அல்லன்; வேப்பம்பூ மாலையைத் தரித்த பாண்டி யனும் அல்லன்; உன்னுடைய மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது; உன்னுடன் எதிர்நின்று போர் செய்கின்றவன் மாலையும் ஆத்திப் பூவால் கட்டப்பட்டது. உங்களில் யார் தோற்றாலும் தோற்பது சோழர் குடிதான்; சோழன் தோற்றான் என்றுதான் சொல்லுவார்கள். போரில் இருவரும் வெற்றி யடைவது என்பது இயற்கையன்று. ஆதலால் உங்கள் செய்கை உங்கள் குடிப் பெருமைக்கு ஏற்றது அன்று. நீங்கள் செய்யும் இச் சண்டை உங்கள் போன்ற மன்னர்களுக்குத் தான் மகிழ்ச்சியைத் தரும். இவ்வாறு கோவூர்கிழார் இரு மன்னர்களையும் பார்த்துக் கூறினார். பிறகு இருவரும் போரைக் கைவிட்டனர்; இச் செய்தி புறநூனூற்றின் 45- வது செய்யுளில் காணப்படுகின்றது. அச் செய்யுள் கீழ் வருவது: இரும்பனை வெண்தோடு மலைந்தோன் அல்லன்; கரும்சினை வேம்பின் தெரியலோன் அல்லன்; நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே; ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால் குடிப்பொருள் அன்றுநும் செய்தி; கொடித்தேர் நும்மோர் அன்ன வேந்தற்கு மெய்ம்மலி உவகை செய்யும் இவ் விகலே. இவ்வாறு ஒரு குடியிலே பிறந்தவர்கள் பகைத்தெழுந்து போர் புரியத் தொடங்கியதற்குக் காரணம் மண்ணாசையைத் தவிர வேறில்லை; தனியதிகார வெறியைத் தவிர வேறில்லை. மற்றொரு வரலாறு அனைவரும் அறிந்தது. குமணனும் இளங்குமணனும் உடன்பிறந்தவர்கள்; அண்ணன் தம்பிகள். மண்ணாசையும் பொன்னாசையும் இளங்குமணனை ஆட்டி வைத்தன. உடன்பிறந்த உறவுக்கு உலை வைத்தன. புறநானூற்றில் உள்ள 165- வது பாடலும் அதன் அடிக் குறிப்பும் இவ்வுண்மையைத் தெளிவாக விளக்குகின்றன. பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் குமணனைத் தேடிச் சென்றார். தேடிச் செல்லும் வழியிலே காட்டிலே குமணனைக் கண்டார். தன் வறுமையை விளக்கிப் பாடினார். உடனே குமணன் தன் கையிலிருந்த வாளைப் புலவர் கரத்திலே நீட்டினான். புலவரே! என்னிடம் இப்பொழுது என் உடம்பைத் தவிர வேறொன்றும் இல்லை. என் தம்பி என் தலையைக் கொண்டு வருவோர்க்குப் பெரும் பரிசு அளிப்பதாக அறிவித் திருக்கிறான். ஆதலால் என் தலையைக் கொண்டு சென்று பரிசு பெற்று உமது வறுமையை விரட்டியடிமின் என்று கூறினான். தன் தலையைக் கொண்டு செல்வதற்காகவே வாளை என் கையில் கொடுத்தான் என்று அந்த 165- வது செய்யுளில் காணப்படுகின்றது. குமணனுடைய இச் சிறந்த தியாகத் தன்மையைப் பற்றி, இளங்குமணனிடம் பெருந்தலைச் சாத்தனார் இவ்வாறு எடுத்துரைத்தார். இச் செய்யுளின் அடிக்குறிப்பு வருமாறு: தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு அவன் தன் வாள் கொடுப்பக்கொண்டு வந்து இளங்குமணற்குக் காட்டிப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது. இதுவே அச்செய்யுளின் அடிக்குறிப்பு. இதனால் குமணனுடைய ஆட்சியை, அவனுடைய இளைய சகோதர னாகிய இளங்குமணன் வலிந்து கைப்பற்றிக்கொண்டான், குமணன் காட்டில் புகுந்து வருந்தினான் என்ற செய்தி தெரிகின்றது. மேலே காட்டிய நலங்கிள்ளி நெடுங்கிள்ளி வரலாறு, குமணன் இளங்குமணன் வரலாறு இரண்டும் அதிகார வெறி, அண்ணன் தம்பி உறவையும் அழிக்கும் என்ற உண்மையை உணர்த்தின. தந்தை தநயர்கள் சண்டை தந்தை, மகன் என்ற உறவுக்கும் உலை வைக்கும் தன்மை அதிகார வெறிக்கு உண்டு. இதையும் தமிழர் வரலாற்றிலே காணலாம். கோப்பெருஞ் சோழன் சிறந்த கொடையாளி; தழிழறிஞன்; தமிழ்ப் புலவரைப் போற்றுவோன். பிசிராந்தையார் என்னும் பெரும் புலவரின் ஆருயிர் நண்பன்; பழந்தமிழ்ப் புலவர்கள் நட்புக்குக் கோப்பெருஞ் சோழனையும், பிசிராந்தையாரையுந் தான் எடுத்துக்காட்டாகக் கூறுவர். இத்தகைய கோப்பெருஞ் சோழனும், அரசு, பொருள் அதிகாரம் காரணமாகத் தன் பிள்ளைகளுடன் போர் தொடுக்கத் துணிந்தான் என்ற வரலாறு காணப்படுகின்றது. அவன் தன் மக்கள்மேல் போர் செய்யப் புறப்பட்டபோது, புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர் அவனைத் தடுத்து அறிவுரை கூறினார். இவ்வரலாறு புறநானூற்றின் 213- வது பாடலில் காணப்படுகின்றது. போரிலே வெற்றி பெற்ற புகழுடைய வேந்தனே! வெண் கொற்றக்குடையின் நிழலிலே உலகத்தைக் காக்கும் மன்னனே! இவ்வுலகிலே உன்னுடன் போர் செய்யப் புறப்பட்டவர்கள் யார் என்று எண்ணிப் பார்த்தால், அவர்கள் உன் பகைவர்கள் அல்லர்; இன்னும் ஆராய்ந்து பார்த்தால், நீயும் அவர்களுக்குப் பகைவன் அல்லன். நீ தேவருலகை யடைந்தபின் உனது அரசுக் குரியவர்கள் அவர்கள்; உனக்குப் பின் உன் ஆட்சி அவர்களுக்கே உரிமையாகும். இது மட்டுமா? இன்னும் சொல்லுகிறேன் கேள். அறியாமையால் முரட்டுத்தனமாகப் போருக்கெழுந்த உன் புதல்வர்கள், போரில் தோற்று மாண்டுவிட்டால், அதன்பின் உன் செல்வத்தை யாருக்குத்தான் கொடுப்பாய்? அல்லது நீ உன் பிள்ளைகளால் வெல்லப்படுவாயானால் உன் பகைவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்; உனது புகழ் மறையும்; பழிதான் நிலை நிற்கும். ஆதலால் போர் செய்வதை விட்டுவிடு. நல்வினையைச் செய். நீ மறுவுலகம் செல்லும்போது விண்ணோர் உன்னை விருந்தாக ஏற்றுக் கொள்ளத்தக்க நற்பணிகளைச் செய்க என்ற கருத்தைப் புல்லாற்றூர் எயிற்றியனார் வலியுறுத்தினார். இவ்வரலாற்றால், தனி அதிகார வெறி, மைந்தனையும் தந்தையையும் பகைவர்களாக நின்று சண்டையிடச் செய்யும் என்ற உண்மையைக் காணலாம். அதிகார வெறி காரணமாக நடந்த அடாத செயல்கள் பலவற்றை வரலாறுகளிலே படித்திருக்கின்றோம். அண்ணனைக் கொன்று தம்பி அரியாசனம் ஏறினான்; தம்பிமார்கள் வெளியி லிருந்தால் தனது ஆட்சிக்கு ஆபத்து என்று கருதி, அண்ணன் அவர்களைச் சிறையிலிட்டான்; அரசுக்கு ஆசைப்பட்டுத் தந்தையை மகன் கொலை செய்தான்; மகனைத் தந்தை சிறையி லிட்டான் என்ற கதைகளைப் படித்திருக்கின்றோம். ஆதலால், தனியாட்சி உரிமை இருந்த காலத்தில் தமிழ் மன்னர்களிலும் இத்தகையவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது வியப்புக்குரியது அன்று. இது இயற்கையே யாகும். சரித்திரம் கண்ட உண்மை. தனியாட்சி வெறி, அறத்தை அழித்து மறத்தை வளர்ப் பதற்கும் தூண்டும். இதற்கும் எடுத்துக்காட்டுக்கள் உண்டு. தமிழ் இலக்கியத்திலிருந்து இதற்கு இரண்டு உதாரணங்களை மட்டும் பார்ப்போம். அதிகார வெறி ஒரு சோழ மன்னன். அவன் பெயர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பது. அவனுக்கும் மலையமான் திருமுடிக்காரி என்பவனுக்கும் நீண்டநாள் பகை. பல தடவை போர் புரிந்தும் மலையமான் திருமுடிக்காரியைக் கிள்ளி வளவனால் தோல்வியுறச் செய்ய முடியவில்லை. இதனால் காரியின்மேல் வளவன் அடங்காத ஆத்திரங் கொண்டிருந்தான். காரி இறந்துவிட்டான். அப்பொழுதும் கிள்ளி வளவனுக்குக் காரியின்மீதுள்ள ஆத்திரம் அடங்கவில்லை. காரியின் குழந்தை களைக் கொண்டுவந்தான்; காரியின் மீதுள்ள கோபத்தைக் குழந்தைகளின்மேல் காட்டினான். அதிகாரமும் ஆத்திரமும், அவனுடைய அறிவை அடக்கிவிட்டன. காரியின் சிறுவர்களை யானைக்காலிலே கொடுத்துக் கொல்லத் தொடங்கினான். அப்பொழுது கோவூர் கிழார் என்னும் புலவர் வந்தார்; கிள்ளிவளவனுடைய கீழ்மைச் செயலைத் தடுத்தார்; அவனுக்கு அறிவுரை கூறினார். இந்த நிகழ்ச்சியைப் புறநானூற்றின் 46-வது செய்யுளிலே காணலாம். அச் செய்யுளும் அதன் பொருளும் கீழ்வருவன; நீ சோழர் குடியிலே பிறந்தவன்; உனது முன்னோர், ஒரு புறாவின் துயரத்தை நீக்கியதோடு நிற்கவில்லை; வேறு பல துன்பங்களையும் தீர்த்தவர்கள். இக்குழந்தைகளோ, புலவர்களின் வறுமையைக் கண்டால் அதை ஒழித்து, தம்மிடம் உள்ளதைப் பிறர்க்கும் பகுத்துக்கொடுத்து உண்ணும் மரபிலே பிறந்தவர்கள். இவர்கள், யானையைக் கண்டால் பயந்து அழுகின்ற பருவத்தைக் கூட அடையாதவர்கள்; அவ்வளவு இளம்பருவமுள்ளவர்கள். இந்த இடம் புதிதாக இருக்கிறதே என்று பார்த்து வருந்து கின்றவர்கள். நான் சொல்லும் இவ்வுண்மையை நீ ஆராய்ந்து பார்; பிறகு உன் விருப்பப்படி செய். நீயே புறவின் அல்லல் அன்றியும், பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை; இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமது பகுத் துண்ணும் தண்நிழல் வாழ்நர்; களிறுகண்டு அழூஉம் அழா அல் மறந்த புன்தலைச் சிறார் அர்; மன்று மருண்டுநோக்கி விருந்தில் புன்கண்நோ உடையர்; கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்ம்மே. கிள்ளிவளவன் செய்யத் தொடங்கியது படுபாதகம் என்பது அனைவர்க்கும் தெரியும். அதைத் தடுக்க அவனுடைய அமைச்சர்கள் யாரும் முன்வரவில்லை. புலவர் தான் துணிந்து முன்வந்தார். அவரும், நீ இந்த அநீதியைச் செய்யாதே என்று அடித்துப் பேசவில்லை. நான் சொல்வதைக் கேட்பதானால், இதைச் செய்யாதே கேட்காவிட்டால் உன் மனம்போல் செய் என்றுதான் வேண்டிக் கொள்கின்றார். கேட்டனை ஆயின், நீ வேட்டது செய்ம்மே என்ற அடி இக் கருத்தையே கொண்டதாகும். கொடுங்கோல் மன்னன் நன்னன் என்பவன் ஒரு சிற்றரசன்; சிற்றரசனாயினும் பண்டை நாளில் அவன் ஆண்ட நாட்டில் அவனுக்கு எல்லா அதிகாரமும் உண்டு; நாட்டு மக்களைத் தன் எண்ணப்படி ஆட்டி வைக்கும் உரிமையுண்டு. இந்த நன்னன் ஒரு சிறு குற்றத் திற்காக ஒரு பெண்ணைக் கொலை செய்தான் என்ற வரலாறு ஒன்று வழங்குகின்றது. இதைக் குறுந்தொகையிலும் காணலாம். நன்னன் என்பவன், ஆற்றங்கரையில் இருந்த தன் தோட்டத்தில் அரிய மாமரம் ஒன்றை வளர்த்து வந்தான். அதன் காயையோ பழத்தையோ அவனைத் தவிர வேறொருவரும் தின்னக்கூடாது என்பது அவன் ஆணை. ஒருநாள் ஒரு பெண் ஆற்றுக்கு நீராடப் போனாள். ஆற்றிலே மாங்காய் ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்து அவள் தின்று விட்டாள். உடனே காவலர்கள் அவளைப் பிடித்துக்கொண்டு போய் அரசன் முன் நிறுத்தினர். அரசன் அவளுக்குக் கொலைத் தண்டனை விதித் தான். அவள் தந்தை பணக்காரன். தன் மகளைத் கொலைத் தண்டனையிலிருந்து மீட்க எவ்வளவோ முயன்றான். அப் பெண்ணின் நிறையுள்ள பொன் பதுமையும், எண்பத்தொரு யானையையும் ஈடாகக் கொடுக்க முன் வந்தான். அதற்கும் அரசன் இணங்காமல் ஒரு மாங்காய்க்காக அறியாமல் தவறு செய்த அப்பெண்ணின் உயிரை வாங்கி விட்டான். இவ்வரலாற்றைக் குறுந்தொகையின் 292-வது செய்யுளிலே காணலாம். மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை, புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு, ஒன்பதிற்று ஒன்பது களிற்றொடு அவள்நிறை பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண்கொலை புரிந்த நன்னன். நீராடும் பொருட்டுச் சென்ற பெண் நீரிலே மிதந்து வந்த பசுமையான மாங்காயை எடுத்துத் தின்ற குற்றத்திற்காக, எண்பத்தொரு ஆண் யானைகளும், அவள் அளவு நிறையுள்ள பொன்னாற் செய்த பதுமையும் ஈடாகக் கொடுக்கவும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பெண்ணைக் கொலை புரிந்தான் நன்னன். இதுவே அக் குறுந்தொகைப் பாடல். இவ்வரலாறு புறநூனூற்றின் 151- வது பாடலிலும் குறிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இளங்கண்டீரக்கோ என்னும் சிற்றரசனும், இளவிச் சிக்கோ என்னும் சிற்றரசனும் ஒன்று கூடியிருந்தனர். அப்பொழுது பெருந்தலைச் சாத்தனார் சென்றார். அவர் இளங் கண்டீரக்கோவைத் தழுவிக்கொண்டார்; இளவிச்சிக்கோவைத் தழுவிக்கொள்ளவில்லை. அதுகண்ட இளவிச்சிக்கோ புலவரைப் பார்த்து, இளங்கண்டீரக்கோவைத் தழுவிக் கொண்ட நீர் என்னை ஏன் தழுவிக்கொள்ளவில்லை என்று கேட்டான். உடனே புலவர் இளவிச்சிக்கோவைப் பார்த்துக் கீழ்வருமாறு கூறினார்; இளங்கண்டீரக்கோ தன்னைப் பாடும் புலவர்க்குப் பரிசில் அளிப்பவன்; அவன் இல்லாவிட்டாலும், அவனைப் பாடி வந்த புலவர்க்கு, அவன் பெண்டிரும் தமது தரத்திற்கேற்ப நன்கொடையளிப்பார்கள். ஆதலால் அவனைத் தழுவிக் கொண்டேன். நீயோ பெண்கொலை புரிந்த நன்னன் மரபிலே தோன்றியவன்; அன்றியும், பாடுநர்க்குப் பரிசில் வழங்காமல் கோட்டை வாசலை அடைத்திருப்பவன். ஆதலால் உன் மலை யைப்பற்றிப் புலவர்கள் பாடாமல் நீக்கினர். இக் காரணத் தால்தான், தழுவிக்கொள்ளத் தகுந்தவனாயினும் உன்னை நான் தழுவிக்கொள்ளவில்லை என்று இவ்வாறு கூறினார். இவ் வரலாற்றை இப்பாட்டின் அடிக்குறிப்புத் தெளிவாக உணர்த்து கின்றது. இளங்கண்டீரக்கோவும், இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்த வழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார், இளங்கண்டீரக் கோவைப் புல்லி, இளவிச்சிக் கோவைப் புல்லாராக, என்னை என்செயப் புல்லீர் ஆயினீர் என அவர் பாடியது. இதுவே அந்த 151- வது பாட்டின் அடிக்குறிப்பாகும். ஒரு சிறிய மாங்காய்க்காக, ஒரு பெண்ணின் அரிய உயிரை வாங்கி யதற்குக் காரணம் அதிகார வெறியைத் தவிர வேறென்ன? குழந்தைகளின் உயிரை வாங்கத் துணிந்த கிள்ளி வளவன் செயல், மாங்காய்க்காகப் பெண்ணின் உயிரை வாங்கிய நன்னன் செயல் இரண்டும் படுபாதகச் செயல்கள்; அதிகார வெறியிலே முளைத்தெழுந்த அடாத செயல்கள். மேலே கூறியவைகளைக் கொண்டு, கீழ்வரும் உண்மை களை உணரலாம். தனி அதிகார வெறியால் நாட்டிலே அடிக்கடி போர் நடைபெற்றது. அதனால் நாடு நாசமடைந்தது; மக்கள் செல்வங்கள் பாழ்பட்டன. தனி அதிகாரச் செருக்கால் அறத்தைச் சிதைத்தனர்; மனம் போனவாறு நடந்துவந்தனர். பல அரசர்கள் நீதி நெறியைப் பின்பற்றி நடந்துங்கூடச் சில அரசர்கள் இவ்வாறு அடாநெறிகளைப் பின்பற்றியதனால்; மக்கள் தனி அதிகார முறையை வெறுத்தனர். அரசர்கள் அமைச்சர்களுக்கும், அறிஞர்களுக்கும் அடங்கித்தான் வாழ வேண்டும்; அவர்கள் அறிவுரைகளைக் கேட்டுத்தான் ஆட்சி புரியவேண்டும் என்று நினைத்தனர். மன்னர்களின் தனி அதிகார ஆட்சியைவிட, மக்களின் கருத்தைப் பின்பற்றி நடத்தும் மன்னர் ஆட்சியே சிறந்தது என்று எண்ணினர். பழந்தமிழ்ப் புலவர்கள் இக்கருத்தை மக்களிடையிலே பரப்பிவந்தனர். ஆளுவோர்க்கு அறிவுரைகள் பண்டைக்கால மன்னர்களின் அரசுரிமை பிறப்புரிமை யாகவே இருந்தது. இதனால் அவர்கள் தனி அதிகாரம் பெற்றிருந்தனர். இத் தனி அதிகாரம் காரணமாக அவர்களிலே சிலர் அறநெறி தவறி நடக்கவும் துணிந்தனர்; அதிகார வெறி- அதிகாரச் செருக்கு- அவர்களை அவ்வாறு நடக்கத் தூண்டியது. இது இந்த நாட்டில் மட்டும் அன்று; எந்த நாட்டிலும் இந்த நிலைதான் இருந்தது. அறத்தைச் சிதைத்த அரசர்களின் செயல் கண்டு அறிஞர்கள் சிறிதும் அஞ்சவில்லை. அக்காலத்தில் அரசர் களைக் காட்டிலும் புலவர்களுக்கு- மக்களுடன் கலந்து பழகும் அறிஞர்களுக்கு- செல்வாக்கு மிகுந்திருந்தது. அவர்களை மக்கள் மதித்துப் பாராட்டி வந்தனர். பொது மக்களின் பாராட்டுக்குரிய புலவர்களிடம் மன்னர்களும் மதிப்பு வைத்திருந்தனர். புலவர்கள் புகலும் அறிவுரைகளை மீறி நடக்க அரசர்களும் அஞ்சினர். இது பண்டைக்கால நிலைமை. ஆதலால், புலவர்கள் அடிக்கடி அரசர்களுக்கு அறிவுரை கூறி வந்தனர்; அரசர்கள் அநீதி செய்யத் துணியும்போது அஞ்சாமல் அதைத் தடுத்தும் நின்றனர். இத்தகைய நிகழ்ச்சி களைப் பழந்தமிழ் இலக்கியங்களிலே காணலாம். கடமையை வலியுறுத்தல் நரிவெரூஉத் தலையார் என்பவர் ஒரு தலை சிறந்த புலவர்; அறநெறிகளை அறிந்தவர். அவர் ஒருநாள் கருவூரிலே இருந்த ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும் பொறையைக் காணச் சென்றார். அவனைப் பார்த்து அரசர்க்குரிய அறம் இன்னதென்று எடுத்துக்கூறினார். நீ ஒப்பற்ற வீரன்; நிகரற்ற செல்வங்களையும் பெற்றவன்; உனக்கு நான் சொல்லும் அறமொழி ஒன்று உண்டு. அருளையும், அன்பையும் கைவிட்டவர்கள் எப்பொழுதும் நரகத்திலேயே கிடந்து உழலுவார்கள். ஆதலால், நீ அவர்களுடன் சேர்ந்து, அவர்கள் சொற்களை நம்பிக் கெட்டுப்போகாதே. அரசாட்சி யைக் கண்ணும் கருத்துமாக நடத்து. ஒரு குழந்தையை எவ்வளவு அன்போடும், பாதுகாப்போடும் வளர்ப்பார்களோ, அவ்வாறு உனது நாட்டை நீ காப்பாற்று. நீஒர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்; அருளும் அன்பும் நீக்கி, நீங்கா நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல் குழவி கொள்பவரின் ஓம்பு மதி! இதுவே நரிவெரூஉத் தலையார் சேர மன்னனுக்குக் கூறிய அறம். இது புறநானூற்றின் 5-வது பாடல். ஆளுவோர் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பை எடுத்துரைத்தது இச்செய்யுள். நலங்கிள்ளி என்னும் சோழன் காலத்திலே சோழ நாடு இரண்டாகப் பிரிந்திருந்தது. சோழன் நலங்கிள்ளி என்பவன், அதிகாரத்தில் ஆசை கொண்டவன்; சோழ நாடு முழுவதையும் தானே ஆளவேண்டும் என்னும் ஆவல் கொண்டவன். அதனால் அவன் அடிக்கடி நெடுங்கிள்ளி என்னும் உறையூர்ச் சோழனுடன் சண்டை செய்து வந்தான். இவன் செய்கைக்கு ஊக்கமூட்டிய நண்பர்களும் இவனுக்கிருந்தனர் என்று தெரிகின்றது. இந்த நலங்கிள்ளியின் செய்கையைப் பொதுமக்கள் அவ் வளவாக ஆதரிக்கவில்லை. இந்நிலையை அறிந்த முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் அவனுக்கு அறநெறியை எடுத்துரைத் தார். அரசர்க்குரிய முதன்மையான கடமை இன்னது என்பதைத் தெளிவாகத் தெரிவித்தார். நாட்டுக்கும் மக்களுக்கும் தீமை செய்யும் கொடியோரை அழித்தல் வேண்டும்; அடக்குதல் வேண்டும்; தண்டிக்க வேண்டும். நடுநிலையிலே வாழும் சான்றோர்களிடம் இரக்கம் காட்ட வேண்டும்; அவர்களுக்கு எவ்வித இன்னலும் உண்டாகாமல் காப்பாற்றவேண்டும். இதுதான் அரசர்க்குரிய அறநெறி. இவ்வறநெறியை எப்பொழுதும் பின்பற்றி நடத்தல் வேண்டும்; இதில் சோர்வு காட்டவே கூடாது. இந்த அறநெறியை நீ தவறாமல் பின்பற்ற வேண்டுமானால் தீயோர் நட்பை- கூட்டுறவை - துணையைக் கைவிட வேண்டும். நல்ல செயல்களால் நன்மை யுண்டு. தீய செயல்களால் தீமைதான் விளையும் என்பதை மறுப்போர் கெட்டவர்கள். இத்தகைய கெட்டவர்களுக்கு நீ நட்புள்ளவனாக இருக்கக்கூடாது. கொடியோர்த் தெறலும், செவ்வியோர்க்கு அளித்தலும் ஒடியா முறையின் மடிவுஇலை ஆகி நல்லதன் நலனும், தீயதன் தீமையும் இல்லை, என்போர்க்கு இனன் ஆகிலியர்! இதுவே முதுகண்ணன் சாத்தனார் நலங்கிள்ளி என்னும் சோழனுக்குக் கூறிய அறிவுரை. இது புறநானூற்றின் 29-வது பாட்டு. அரசனுடைய கடமை இன்னது என்பதை இவ்வாறு தெளிவாக எடுத்துரைத்தார் முதுகண்ணன் சாத்தனார். இந்த உண்மைகளை உள்ளத்தில் கொண்டுதான் திரு வள்ளுவரும், அரசர்கள் சிற்றினத்தார்களுடன் சேரக் கூடாது என்று கூறினார். சிற்றினம் சேராமை என்று ஒரு அதிகாரமே, திருக்குறளில் அரசியலில் தனியாக அமைந்துள்ளது. அரசர்கள் எவ்வளவுதான் அறிவுள்ளவர்களாயினும்- திறமையுள்ளவர்களாயினும்- தீயோர் தொடர்பால் அவர்கள் தன்மை கெடும் என்பது உண்மை. இதற்கு ஒரு குறளே போது மான எடுத்துக்காட்டாகும். நிலத்தின் தன்மையால், அதில் வீழ்ந்த தண்ணீர் மாறுபடும்; அந்த நிலத்தின் தன்மையைப் பெறும்; அது போல, மக்களுடைய அறிவும் இனத்தால் வேறுபடும்; அவர்கள் சேர்ந் திருக்கும் இனத்தினரின் அறிவைப்போல மாறுபடும். நிலத்து இயல்பால் நீர்திரிந்து அற்றாகும்; மாந்தர்க்கு இனத்து இயல்பு அது ஆகும் அறிவு. (கு. 452) இக்குறள், அரசர்கள் தீயோருடன் சேரக்கூடாது; சேர்ந்தால் அவர்கள் நல்ல குத்திற்கு நாசம் விளையும் என்ற உண்மையை உதாரணத்துடன் உரைத்தது. நீர் வளமே நாட்டு வளம் நீர்வளம் உள்ள நாட்டிலேதான் உணவுப் பஞ்சம் உண்டா காது; விளைபொருள்கள் மிகுந்திருக்கும்; மக்கள் பசிப்பிணி யறியாமல் உண்டு மகிழ்ந்து வாழ்வார்கள்; தொழில்களும் பெருகி வளரும்; மக்களுக்கு வேண்டிய- அவர்கள் இன்புற்று வாழ்வதற்கு உரிய- எல்லாப் பொருள்களும் எளிதிலே கிடைக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசினர் அறிந்திருக்க வேண்டும். நாட்டிலே நல்ல ஆறுகள் இல்லாவிட்டாலும், மழைநீரையாவது வீணாகாமல் தேக்கி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பண்டைக் காலத்தில் ஆற்றுப் பாய்ச்சல் இல்லாத பகுதிகளிலே மழை நீரை ஏரிகளிலே தேக்கி வைத்தனர். அந்நீரைக் கொண்டே பயிர் செய்து வந்தனர். இத்தகைய நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தும் வேலையை அரசாங்கமே செய்து வந்தது; ஏற்படுத்திய நீர்த்தேக்கங்களைப் பாதுகாக்கும் வேலையையும் அரசாங்கமே மேற்கொண்டிருந்தது. இச்செயலிலே கருத்தின்றி இருந்த அரசர்களுக்கும், அரசாங்கங்களுக்கும் புலவர்கள் அடிக்கடி புத்தி புகட்டி வந்தனர். இந்த உண்மையைக் குடபுலவியனார் என்னும் ஒருவர் பாட்டு நமக்கு உணர்த்துகின்றது. குடபுலவியனார் என்னும் புலவர், பாண்டியன் நெடுஞ் செழியனைப் பற்றிப் பாடியுள்ளார். நீர்ப்பாசனத்திற்கான ஏற்பாட்டைச் செய்யவேண்டும் என்று அவர் தம் செய்யுளில் வலியுறுத்துகின்றார். செல்வங்கள் நிறைந்த பழமையான ஊரினையுடைய வெற்றி பொருந்திய வேந்தே! நீ இறந்தபின் செல்லும் மறு உலகத்திலே செல்வமுடன் வாழ விரும்பினாலும், இவ்வுல கத்தில் உள்ள அரசர்களின் வலிமையை அழித்து நீயே ஒப்பற்ற மன்னனாக வாழ விரும்பினாலும், சிறந்த நல்ல புகழை இவ் வுலகிலே நிலைநாட்ட விரும்பினாலும் சரி, அதற்கான தகுதியை நீ சம்பாதித்துக்கொள்ள வேண்டும். அத்தகுதி என்னவென்று இப்பொழுது சொல்லுகிறேன் கேள். சிறந்தவனே! உடம்புகளுக் கெல்லாம் நீர் இன்றியமையாததாகும்; அவ்வுடம்புகளுக் கெல்லாம் உணவு கொடுத்தவர்கள் தாம் உயிரை கொடுத்தவர்கள் ஆவார்கள்; அவ்வுணவை அடிப்படையாகக் கொண்டதுதான் உடம்பு. ஆதலால் உணவு என்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்தான். அந்த நிலத்தையும், நீரையும் ஒன்றாக இணைந் திருக்கும்படி செய்தவர்கள் தாம் இவ்வுலகில் உயிரையும் உடம்பையும் ஒன்று சேர்ந்திருக்கச் செய்தவர் ஆவார்; உயிரையும் உடம்பையும் படைத்தவர் ஆவார். மல்லல் மூதூர் வயவேந்தே! செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன் தகுதிகேள் இனி! மிகுதியாள! நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவு எனப் படுவது நிலத்தொடு நீரே; நீரும் நிலனும் புணரியோர், ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே. இதுவே குடபுலவியனார் நெடுஞ்செழியனுக்குக் கூறிய அறிவுரை. நீர்ப்பாசன வசதிக்கு வழி செய்தால் நாட்டிலே விளைவுப் பொருள் பெருகும். விளைவுப்பொருள் மிகுந்திருந்தால்தான் மக்கள் பட்டினி பசியின்றி, நோய் நொடியின்றி வாழ்வார்கள். அவர்கள், அரசுக்கோ அரசனுக்கோ பகைவர்களாக மாற மாட்டார்கள்; குடி மக்களின் ஆதரவைப் பெற்ற அரசு எக் காரியத்தையும் எளிதிலே நிறைவேற்றலாம். ஆதலால் பஞ்சத்திற்கு ஆளாகாமல் குடிமக்களைப் பாதுகாப்பதுதான் ஆட்சியின் முதல் கடமை. இக்கருத்துக் குடபுலவியனார் செய்யுளிலே அமைந் திருப்பதைக் காணலாம். உழவர்க்குப் பாதுகாப்பு ஒரு நாட்டின் உயிர்நாடி உழவர்கள் ஆவார்கள். உழவர்கள் வறுமையால் வாடாமல் இருந்தால்தான் உணவுப் பொருள் ஏராளமாக உற்பத்தியாகும். உழவர்கள் வாழ்வு உயர்ந்திருந்தால் தான் நாட்டிலே உண்டாக்கப்படும் கைத் தொழிற் பண்டங்களும் செலவழியும்; பண்டங்கள் செலவழிந்தால்தான் தொழில் வளரும்; தொழில் வளர்ந்தால்தான் தொழிலாளர்களுக்கு வேலையுண்டு. ஆகவே, ஒரு நாட்டின் வாழ்வும் நாகரிகமும் உழவர்களின் வாழ்க்கையைத்தான் அடிப்படையாகக் கொண்டி ருக்கின்றன. இந்த உண்மையை உணர்ந்த அரசாங்கங்கள்தாம் நிலச் சீர்திருத்தம், உழவாளர்களுக்குப் பாதுகாப்பு போன்ற செயல்களைச் செய்து வருகின்றன. இந்த உண்மையை- உழவினர் வாழ்வே நாட்டு மக்களின் நல்வாழ்வு, அரசாங்கத்தின் வாழ்வு, என்ற உண்மையைப் பண்டைத் தமிழ் சான்றோர்கள் உணர்ந்திருந்தனர். அவர்கள் அரசர்களுக்கு அடிக்கடி உழவினரைக் காக்கும்படி அறிவுரைகள் கூறிவந்தனர். வெள்ளைக்குடி நாகனார் என்பவர் ஒரு சிறந்த புலவர். அவர் ஒரு சிறு நிலக்கிழாருங்கூட. அவர் உழவுத் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தார். மழை பெய்யாமையால் அவருடைய வேளாண்மைத் தொழில் ஒழுங்காக நடக்கவில்லை; நிலமும் விளையவில்லை. ஆனால் அரசாங்கத்திலே வரி தண்டும் அலுவல் பார்ப்போர் அப்புலவரை வரி கொடுக்கும்படி நெருக்கி வந்தனர். நிலத்திலே விளைச்சல் இல்லாத காலத்திற்கும் வரி கேட்டனர். அவரை மட்டும் அல்ல; உழவர்கள் எல்லோரிடமும் அவ்வாறே வரி கொடுக்கும்படி கெடுபிடி செய்தனர். இதைக் கண்ட புலவர் நேரே அரசனிடம் சென்றார். அரசாங்க அலுவலர்கள் உழவர்களிடம் காட்டும் கருணையற்ற தன்மையை எடுத்துரைத்தார். அரசன், புலவர் மொழியைக் கேட்டு மனம் இளகினான். அவருக்கும் ஏனையோருக்கும் வரியைத் தள்ளிக் கொடுத்தான். புலவருக்கு அவர் வைத்திருந்த நிலத்தை என்றும் இறையிலியாகவே (சர்வமான்யமாக) கொடுத்துவிட்டான். இச்செய்தி புறநானூற்றின் 35-வது செய்யுளால் தெரிகின்றது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் புலவர். அவர் அரசனுக்குக் கூறிய அறிவுரைதான் கீழ்வருவது: மழை பெய்யுங்காலத்திலே பெய்யாமற்போனாலும் நிலத்தில் விளைவு குறைந்தாலும், மக்கள் தகாத செயல்களைச் செய்தாலும், இப்பெரிய உலகம், இவைகளுக்கெல்லாம் அரசர்கள் தாம் காரணம் என்று பழி சொல்லும். இந்த உண்மையை நீ நன்றாக உணர்ந்திருப்பாயானால் ஒரு காரியத்தை உறுதியாகச் செய்யவேண்டும். கோட்சொல்லுவோரின் உறுதியற்ற சொற்களைக் கேட்காதே! ஏரைப் பாதுகாத்து உழவுத் தொழில் செய்வோர்களின் குடும்பங்களைப் பாதுகாப்பாயாக. இவ்வாறு செய்வாயானால் உனக்கு அடங்காதவர்கள்- பகைவர்கள்- அவர்கள் உள்நாட்டினராயினும் சரி, வெளிநாட்டினராயினும் சரி, உன் அடியை வணங்குவார்கள். மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்கும் இக் கண் அகல் ஞாலம்; அதுநற்கு அறிந்தனை ஆயின், நீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக் குடிபுறந் தருகுவை ஆயின்நின் அடிபுறந் தருகுவர் அடங்கா தோரே. இதுவே வெள்ளைக்குடி நாகனார் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்குக் கூறிய அறிவுரை. இச்செய்யுள் உழவாளர்க்கு உதவி செய்வதே ஒரு நாகரிக அரசாங்கத்தின் முதற்கடமை என்பதை எடுத்துக்காட்டுகின்றது. தனிப்பட்ட ஒரு அரசனுக்குரிய கடமையாகக் கூறப் பட்டிருக்கும் இவ்வறிவுரை இக்காலத்து மக்களாட்சிக்கும் பொருந்தும். உழவுத்தொழிலே முதன்மையாக உள்ள நாட்டிலே உழவர்கள் மகிழ்ந்து வாழாவிட்டால் அமைதி நிலவாது; உற்பத்தியும் வளராது. இந்த உண்மையைப் பழந்தமிழர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் உழவுத் தொழில் புரிவோரைப் போற்றி வந்தனர்; பாராட்டி வந்தனர்; அவர்களுக்கு, முயற்சி செய்வோர், உதவி செய்வோர் என்ற பொருள் உள்ள வேளாளர் என்ற பெயரிட்டனர். சமூகத்திலே உயர்ந்த நிலையும் அளித்தனர். வரிக்கொடுமை பண்டைக்கால மன்னர்களிலே தந்நலங் கருதி, மக்கள் தலையிலே வரிச்சுமையை ஏற்றியவர்களும் உண்டு. தாங்கக் கூடியவர்களிடம் வரி தண்டுவதில் தவறில்லை. கொடுக்கும் சக்தியற்ற ஏழை எளியவர்கள் தலையிலே வரியைச் சுமத்தும் அரசு கொடுங்கோல் அரசாகும். அது அறம் அன்று; நீதியும் அன்று. வரி கொடுக்கும் வல்லமையற்றவர்கள் தங்கள் துன்பத்தைத் தாங்க முடியாத போது ஆட்சிக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள். இந்த உண்மையைப் பழந்தமிழ் அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். மன்னர்கள் குடிமக்களிடம், அளவுக்குமேல் வரி வாங்க முற்படும்போது புலவர்கள் தலையிட்டனர்; அரசர்களுக்கு அறிவுரை கூறினர்; அவர்கள் செய்கையைத் தடுத்தனர். இவ்வுண்மையைப் பிசிராந்தையார் என்னும் புலவர் பாடல் ஒன்று விளக்கமாகக் கூறுகின்றது: பாண்டியன் அறிவுடை நம்பி என்பவன் குடிமக்களிடம் அளவுக்கு மேல் வரி வாங்கினான். அதைக் கண்ட பிசிராந்தை யார் மன்னனிடம் சென்றார்; அஞ்சாமல் அரச நீதியை எடுத்துக்காட்டினார்; அவன் செய்கையைத் தடுத்தார். விளைந்த நெல்லை அறுத்துக் கொண்டு வந்து கவளம் கவளமாகச் சேதப்படாமல் உண்டால், ஒரு மாவுக்கும் குறைந்த நிலத்திலே அறுத்த கதிர் பல நாட்களுக்கு உணவாகும். நூறு வயல்களிலே நெல் விளைந்திருந்தாலும் சரி, ஒரு யானை தனியாக அவ்வயல்களிலே புகுந்து நெற்கதிரை உண்ணுமானால் வீண் சேதமாகும். அதன் வாயில் புகுந்த நெல்லைவிட, அதன் காலால் பாழாகும் நெல்லே மிகுதியாக இருக்கும். அதைப் போல, அறிவுள்ள வேந்தன் வரி வாங்கும் முறையை உணர்ந் திருக்கவேண்டும். மக்கள் மனங் கோணாதபடி வரி வாங்க வேண்டும். இவ்வாறு வரி வாங்கினால் அவனுடைய நாடு கோடிக்கணக்கான பொருளைக் கொடுக்கும்; அந்நாடும் சிறப்படையும்; செழிப்படையும். இவ்வாறில்லாமல் அரசன் அறிவிலே குறைந்தவனாகி, தான் கூறுவது தவறானாலும், அதையே சரியென்று சொல்லும் சுற்றத்துடன் கூடியிருப் பானாயின் அவன் வரி கொள்ளும் முறையை அறிய மாட்டான்; குடிமக்களின் அன்பு அழியும்படி- அவர்கள் வெறுக்கும்படி அவர்களிடம், வரியென்னும் பேரால் பொருள்களை வலிந்து கொள்வான். இவ்வாறு வரி வாங்குவானாயின், அம் மன்னன், யானை புகுந்த வயலைப் போலத் தானும் உண்டு இன்புற மாட்டான்; அவனால் ஆளப்படும் நாடும் நாசம் உறும். காயநெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்; நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்என் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம்போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடுமே. இதுவே பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடை நம்பிக்குக் கூறிய அறிவுரை. அளவுக்குமேல் வரி வாங்குவதனால் வரும் இன்னலைப் பற்றி இதற்குமேல் விளக்கிக் கூற இயலாது. இது புறநானூற்றின் 184- வது பாடல். இப்பாடற் கருத்தை அப்படியே சிந்தாமணி ஆசிரியர் அமைத்துப் பாடியிருக்கின்றார்; வாய்க்குப் போதுமான கவளம் அகப்படும்; வீண் சேதமும் உண்டாகாது; முறைப்படி அறுத்துக்கொண்டு வந்த நெல்லை ஒவ்வொரு நாளும் கவளமாக உண்பித்தால் இந்நிலை ஏற்படும். யானையே வயலில் புகுந்து மேயத் தொடங்கினால், விளைந்திருக்கும் கதிர் அதன் வாயில் புகாமல் வீணாக அழியும். ஆதலால் அரசன் அறிவில் சிறந்தவனாய், குடிகளின் நெஞ்சம் துன்புறாமல் வரி வாங்குவானாயின் அவன் இன்பம் அடைவான்; அவன் ஆளும் நீர்வளம் நிறைந்த நாடு முழுவதும் செல்வம் நிலையாகப் பெருகி நிற்கும். வாய்ப்படும் கேடும் இன்றாம், வரிசையின் அறிந்து, நாளும் காய்த்தநெல் கவளம் தீற்றின்; களிறுதான், கழனி மேயின், வாய்ப்படல் இன்றிப் பொன்றும், வல்லனாய் மன்னன் கொள்ளின் நீத்தநீர் ஞாலம் எல்லாம் நிதிநின்று சுரக்கும் அன்றே. (சீவக சிந்தாமணி. 2907) இதுவே சிந்தாமணிச் செய்யுள். இதுவும், அளவுக்கு மேல் வரிவாங்கும் அரசு நிலைக்காது; குடிகளின் நிலையறிந்து குறைந்த அளவில் வரி வாங்கும் அரசுதான் வாழும்; இத்தகைய ஆட்சியுள்ள நாடுதான் செழிக்கும் என்று கூறிற்று. திருவள்ளுவரும் மக்கள் தலையிலே வரியைச் சுமத்துவதை ஒத்துக்கொள்ளவில்லை. குடிமக்கள் தலையிலே வரியைச் சுமத்தாமல் வேறு வகையிலே அரசன் பொருள் தேட வேண்டும் என்றே கூறுகின்றார். பொருளுக்கு உரியவர் யாரும் இல்லாமல் விடப்பட்ட செல்வம், நீர் வழியாகவும் நிலத்தின் வழியாகவும் வேற்று நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு விதிக்கப் படும் வரி, தன் பகைவர்களிடமிருந்து கப்பமாக வாங்கப்படும் பொருள் இவைகள் தாம் அரசனுக்கு உரிய செல்வம். உறுபொருளும், உல்கு பொருளும், ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். (கு. 756) இது வள்ளுவர் காட்டும் வழியாகும். இக் குறளும் மக்களிடம் நேர்முகமாக வரி வாங்கும் கொள்கையை ஒப்புக் கொள்ள வில்லை. இயற்றலும், ஈட்டலும், காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு (கு. 385) என்ற குறளிலும் நேர்முகமாக மக்களிடம் வரி வாங்கும்படி சொல்லவில்லை. தனக்குப் பொருள் வரும் வழிகளை மேலும் மேலும் உண்டாக்குதல்; அவ்வாறு வந்த பொருளை ஓரிடத்திலே சேர்த்து வைத்தல்; சேர்த்த பொருளைப் பிறர் கவராமல் பாதுகாத்தல்; காத்த பொருளை அறம், பொருள், இன்பங்களுக்காகச் செலவழித்தல் ஆகிய இவைகளில் வல்லவனே அரசன் ஆவான். இதுவே இக் குறளின் பொருள். இயற்றல் என்பதற்குப் பரிமேலழகர் கொடுத்திருக்கும் விளக்கம் குறிப்பிடத்தக்கது. பொருள்களாவன: மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன: பகைவரை அழித்தலும், திறை கோடலும், தன் நாடு தலையளித்தலும் முதலாயின. இவ் விளக்கத்திலும், பொது மக்கள் தலையிலே வரியைச் சுமத்தும் செயல் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசனோ, பொதுமக்கள் ஆட்சியோ, எடுத்தவுடனே மக்களின்மேல் அளவுக்கு மீறிய வரி போட்டுப் பொருள் சேர்க்கும் முறையைப் பின்பற்றுவது அறமன்று. இவ்வுண்மையை மேற்கூறியவைகளால் அறியலாம். அறிஞர்கள் மக்கள்மேல் அதிக வரி போடுவதை எதிர்த்துவந்தனர் என்பதையும் காணலாம். பொதுமக்கள் ஆதரவு முடி அரசாயினும் சரி, குடி அரசாயினும் சரி, பொது மக்களின் ஆதரவைப் பெற்ற அரசுதான் நிலைத்துநிற்கும்; எல்லா மக்களும் நல்வாழ்வு பெறத் திட்டம் வகுத்து, அதனை நன்றாக நடத்திவைப்பதே ஆட்சியின் கடமை. சாதி, மத, இன, மொழி வேற்றுமை பாராட்டாமல் அனைவர்க்கும் ஒத்த நீதி வழங்குவதே ஆளுவோர் கடமை. இத்தகைய ஆட்சியே செங்கோல் ஆட்சி, மக்கள் ஆட்சி, ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்படும். படை பலத்தையும், அதிகார உரிமையையும் காட்டி மக்களை அடக்கி ஆண்டுவிட முடியாது; நல்லாட்சிக்கு நாட்டு மக்கள் அனைவரும் அடங்கி நடப்பார்கள்; நல்லாட்சியை எதிர்த்துக் கவிழ்க்க எவராலும் ஆகாது. இந்த உண்மையை மறந்த ஆட்சி எதுவாயினும் அதற்கு ஆயுள் அற்பந்தான். இந்த இயற்கை உண்மையைப் பண்டைக் காலத்தமிழ் அறிஞர்கள் அரசர்களுக்கு அடிக்கடி எடுத்துக்காட்டி வந்தனர்; மன்னர்களின் ஆட்சி, கொடுங்கோல் ஆட்சியாக மாறாமல் இருப்பதற்கு அவர்களால் ஆனவரையில் அரும்பாடுபட்டு வந்தனர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்பவன் ஒரு பாண்டிய மன்னன். அவனுக்கு, மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவர் அறிவுரை கூறுவதாக ஒரு செய்யுள் புறநானூற்றில் காணப்படுகின்றது. அச் செய்யுளில் காணப்படும் அரசியல் உண்மை எக்காலத்திற்கும் ஏற்றதாகும். கடுமையான கோபத்தையும், கொல்லுந் தன்மையும் உள்ள யானைப்படையிருந்தால் என்ன? விரைந்து செல்லும் நெஞ்சுரம் உள்ள குதிரைப்படையிருந்தால் என்ன? நீண்ட கொடியை உடைய உயர்ந்த தேர்ப்படை இருந்தால் என்ன? அஞ்சாத நெஞ்சும் உள்ள போரை விரும்புகின்ற வீரர்கள் நிறைந்த காலாட்படை இருந்தால் என்ன? இவைகள் எவ்வளவு சிறந்திருந்தாலும் அதனால் ஆட்சிக்குப் பெருமையில்லை. படை பலத்தால் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியாது. அறநெறி தவறாமையே ஆட்சிக்கு அடிப்படையாகும்; அதுவே அரசர்க்கு வெற்றி தருவதாகும். கடும் சினத்த கொல்களிறும், கதழ் பரிய கலிமாவும், நெடும் கொடிய நிமிர்தேரும், நெஞ்சுடைய புகல் மறவரும், என, நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம். (புறம், 55) இதுதான் மதுரை மருதன் இளநாகனார் அரசனுக்கு உரைத்த அறவுரை. இது பழந்தமிழ் மக்களின் அரசியல் அறிவை எடுத்துக்காட்டுகின்றதன்றோ? பதிற்றுப்பத்தின் ஒன்பதாம் பத்தைப் பாடிய புலவர் பெருங்குன்றூர்க் கிழார். குடக்கோ இளஞ்சேரல் இரும் பொறையின் மேல் பாடப்பட்டது இந்த ஒன்பதாம் பத்து. இதில், சேரனுக்கு அப்புலவர் கூறும் அரசியல் அறிவுரை குறிப்பிடத் தக்கது. மிகுந்த வேற்படைகளையுடைய இரும்பொறையே! உன்னுடைய செங்கோல்முறையைக் கண்டு மகிழ்ந்து, ஒவ்வொரு நாளும் உனது நாட்டினர் உன்மேல் அன்பு மிகுந்து உன்னை வணங்கிப் பாராட்டுவார்களாக! உயர்ந்த இவ்வுலகில் உள்ள சான்றோர்கள் உன்னைப் போற்றுவார்களாக! அரசி யலிலே எத்தகைய தவறும் ஏற்படாமல் பாதுகாப்பாயாக! உனக்கு நாட்டு மக்களின் அன்பும் ஆதரவும் இருப்பதனால், உன் பகைவருடன் செய்யும் போரிலே நீ வெற்றி பெறுவாயாக! நீயும் நீண்ட நாள் நோயின்றி- எத்தகைய துன்பமும் இன்றி - வாழ் வாயாக! பல்வேல் இரும்பொறை! நின்கோல் செம்மையின் நாளின் நாளின் நாடுதொழுது ஏத்த, உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையாது, செருமேந் தோன்றி, நோயிலை ஆகியர் நீயே. (பதிற்றுப்பத்து. 89) இப்பதிற்றுப்பத்துப் பாடலும் நாட்டு மக்கள் ஆதரவும் அன்பும் பெற்ற அரசனே நிலைத்து வாழ முடியும் என்று கூறிற்று. நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த என்ற வரியில் அமைந்த ஆழமான பொருள், என்றும் அழியாத உண்மையாகும். குடிகளின் ஆதரவைப் பெற்ற அரசன்தான் நிலைத்து வாழ முடியும் என்ற கருத்தை வள்ளுவரும் வலியுறுத்துகின்றார்: தனது நாட்டுக் குடிமக்களின் கருத்தைத் தழுவி, செங்கோல் நடத்தும் அரசனது அடியை உலகம் ஆதரித்து நிற்கும். குடிதழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. (கு. 544) இக்குறள் குடிமக்களின் கருத்தைத் தழுவி ஆளுவதே சிறந்த ஆட்சியென்பதை எடுத்துக்காட்டிற்று. அரசனுக்குப் போரிலே வெற்றி தருவது அவனுடைய வேற்படை அன்று. அவனுடைய செங்கோல் தான் வெற்றி தரும்; அதுவும் சிறிதும் வளையாமல் இருக்க வேண்டும். வேல் அன்று வென்றி தருவது, மன்னவன் கோல்; அதூஉம் கோடாது எனின். (கு. 546) இக்குறள், அரசனுக்கு வெற்றியளிப்பது அவனுடைய செங்கோல் தான்; படை வலிமையால் மட்டும் பயன் இல்லை என்று கூறிற்று. குடிமக்களைத் தழுவி நடக்காத அரசுக்கு வெற்றியில்லை; எவ்வளவு ஆயுத பலம் படைத்திருந்தாலும் கொடுங்கோல் அரசுக்குக் கொற்றமில்லை; வாழ்வும் இல்லை. இக் கருத்தையே மேலே காட்டிய இரண்டு குறள்களும் வலியுறுத்துகின்றன. பண்டைத் தமிழ்ப் புலவர்களிலே பலர் சிறந்த அரசியல் அறிஞர்களாக இருந்தனர் என்பதை அவர்கள் பாடல்கள் காட்டுகின்றன. அவர்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டிருந்தனர். அடிக்கடி அரசர்களுக்கு அரசியல் நீதிகளை அஞ்சாமல் எடுத்துரைத்து வந்தனர். அரசர்கள் எவ்வளவு வலிமையுள்ளவர்களாக இருந்தாலும், அறிவுள்ளவர்களாக இருந்தாலும் அவர்கள் சான்றோரைத் துணையாகக் கொண்டிருக்கவேண்டும். அவர்கள் சொல்வழி ஆட்சி புரியவேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். தம்மைக்காட்டிலும் கல்வியறிவுகளிலே சிறந்த பெரியோர்களைத் தமக்குத் துணையாகக் கொள்ளவேண்டும்; அப்பெரியோர்கள் காட்டும் வழியிலே நடக்கவேண்டும்; இதுவே அரசர்களுக்கு எல்லா வலிமைகளிலும் சிறந்த வலிமையாகும். தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. (கு. 444) தான் தவறு செய்யும்போது சிறிதும் அஞ்சாமல், கண்டித்துப் புத்தி புகட்டுவோரைத் துணையாகக் கொள்ளாத வேந்தன் சிறிதும் பாதுகாப்பற்றவன்; அவனைக் கெடுப்பதற்குப் பகைவர் களே வேண்டாம், அவனே அழிந்து போவான். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். (கு. 448) மேலே கூறியவைகளைக் கொண்டு பண்டைப் புலவர்கள் அரசர்களுக்கு வலியுறுத்தி வந்த கருத்துக்களைக் காணலாம். படைபலத்தைக் காட்டி மன்னர்கள் மக்களை அச்சுறுத்தித் தங்கள் விருப்பப்படி ஆள முடியாது. மக்கள் ஆட்சியினர் குடிமக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் மக்களாட்சி- குடிமக்கள் ஆட்சி- ஜனநாயக ஆட்சி- சுய ஆட்சி என்ற சொற் களைக் கூறிக்கொண்டு ஏமாற்ற முடியாது. நாட்டு மக்களின் ஒத்துழைப்பைப் பெறாமல் அரசாள முடியாது; ஆட்சியிலே நிலைக்க முடியாது. ஆட்சி பீடத்திலே அமர்ந்திருந்தாலும் நீடித்து வாழ முடியாது. இவ்வுண்மையைப் பழந்தமிழ் இலக்கியங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன. குற்றமும் தண்டனையும் குற்றங்கள் குறையும் வழி தந்நலத்தையே குறிக்கோளாகக் கொண்ட மனிதர்கள் எதையும் செய்யத் துணிவார்கள்; அவர்கள் பழி பாவங்களுக்குப் பயப்படமாட்டார்கள். பிறரைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல் தாம் மட்டும் வாழவேண்டும் என்று நினைப்பதுதான் தந்நல மாகும். ஏனையோரிடம் இரக்கங் காட்டாத இத்தகைய மனிதர்களே பெரிய குற்றவாளிகள்; மனித சமூகத்திற்குத் தீராத நோயாளிகள். இந்த நோயைப் போக்கத் தகுந்த மருந்து கொடுத்தாக வேண்டும்; இந்தக் குற்றவாளிகளைச் சீர்திருத்தம் செய்தாகவேண்டும். திருந்தாத கொடிய குற்றவாளிகளுக்குக் கடுந் தண்டனை கொடுத்தாக வேண்டும். மனித சமுதாயத்தில் குற்றங்கள் பெருகாமல் குறைய வேண்டுமானால் குற்றவாளிகளுக்குக் கொடிய தண்டனைகள் கொடுத்தாக வேண்டும்; பெரும் குற்றம் புரிவோரைக் கடுமையாகத் தண்டிப்பதிலே தவறில்லை. குற்றம் புரிகின்றவர் சிலர்; குற்றம் புரியாதவர்கள் பலர். சிலர் செய்யும் பிழைகளால்-குற்றங்களால்- கொடுமைகளால்- பலர் தீமையடைகின்றனர். பலர் நன்மைக் காகச் சிலரைத் துன்புறுத்துவது- தண்டிப்பது- இவைகளின் வாயிலாக அவர்களை நல்லவர்களாக்குவது- அறமாகும்; நீதியும் நேர்மையுமாகும். இதுவே பண்டும் இன்றும் உள்ள அரசியல் அறம். அரசாங்கத்தின் கடமை மக்கள் எல்லோரையும் மகிழ்ச்சி யுடன் வாழ வைப்பதாகும். பெரும்பாலான மக்களின் வாழ்வுக்கு ஒரு சிலர் தந்நல நோக்குடன் பாதகம் செய்வார்களானால் அவர்களை விட்டு வைப்பது தவறு; செங்கோல்முறை யாகாது. சமுதாயத்திற்கு இடையூறு செய்வோர், அமைதியான வாழ்க் கையின் அடிப்படையைத் தகர்ப்போர் ஆவார்கள். அவர்களை அடக்குவது அறமுறையேதான். அடக்காமல் விட்டால் அவர்கள் மேலும் குற்றங்களையே செய்வார்கள். புதிய புதிய குற்றவாளி களும் பிறந்து வளர்ந்து கொண்டே யிருப்பார்கள். இந்த உண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால் அவர்கள் குற்றம் புரிந்தோர்க்குக் கடுந் தண்டனைகள் கொடுத்து வந்தனர். பண்டைக் காலத்து அறநூல்களிலே இன்னின்ன குற்றங் களுக்கு இன்னின்ன தண்டனைகள் கொடுக்கவேண்டும் என்று எழுதப்பட்டுள்ளன. இக்காலத்தினர் சிலர் அந்த அறமுறை களைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றனர். அவைகள் நாகரிக மற்ற காலத்தில் ஏற்பட்டவை; இக்காலத்திற்கு ஏலாதவை; கருணையற்ற கடுந்தண்டனை முறை மிருகத்தனமானது, மனிதத் தன்மைக்கு மாறானது என்று கூறுகின்றனர். குற்றம் புரிந்தால் தப்பித்துக்கொள்ள முடியாது; கடுந்தண்டனைக்கு ஆளாகியே தீர வேண்டும்; மக்கள் சமுதாயத்திற்குத் தீங்கிழைத்தால் மாறுகால், மாறுகை வாங்கப் படும்; உயிருக்கு ஆபத்துண்டாகும் அல்லது நமது செல்வம் பறிபோகும், அல்லது நாம் இந்த நாட்டை விட்டு வெளியேற்றப் படுவோம் என்ற அச்சம் மனித சமுதாயத்தில் நிலவவேண்டும். அப்பொழுதுதான் குற்றம் புரிய நினைப்போர் தவறு செய்யத் துணியமாட்டார்கள். குற்றங்களுக்கேற்பக் கடுமையான தண்டனைகள் கொடுப்பதன் வாயிலாகத்தான் குற்றவாளி களின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். இந்த உண்மையை உள்ளத்திற்கொண்டுதான் முன்னோர் சிறு குற்றங்களுக்குக் கூடப் பெருந் தண்டனை கொடுத்து வந்தனர். பண்டைத் தமிழக வேந்தர்கள்- ஆட்சியாளர்கள்- பொது மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள். ஆதலால் அவர்கள் தவறு செய்வோர்க்குக் கடுமையான தண்டனை களைத் தரப் பின்வாங்கவில்லை; இவ்வாறு செய்வதுதான் அரசநீதி- செங்கோல் முறை- நாட்டு மக்களை நல்வாழ்விலே வாழச் செய்யும் அறநெறி- என்பதை மறவாதிருந்தனர். அறிஞர் களும், அறவோர்களும் இத்தகைய அரசுக்குத் துணை செய்தனர். ஒரு பசுங்கன்றைக் கொன்றதற்காகத் தன் மகன் உயிரையே வாங்கினான் ஒரு தமிழ் மன்னன். இரவிலே அந்தணர்கள் வீட்டுக் கதவுகளைக் கையால் தட்டிய பாண்டிய மன்னவன் ஒருவன் அக்குற்றத்திற்காகத் தன் கையையே துண்டித்துக் கொண்டான். இவைகள் கடுந் தண்டனைக்குக் காட்டாக வழங்கும் கதைகள். ஒறுக்கும் முறை குற்றமற்றவர்களைத் தண்டிப்பதுதான் கொடுங் கோன்மை; குற்றமுள்ளவர்களை ஒறுப்பது ஒழுங்குமுறை தான். குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பற்றி நன்றாக ஆராயவேண்டும். அவர்கள் குற்றவாளிகள் தாம் என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர்கள் புரிந்த குற்றத்திற்கு ஏற்ற தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறே பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. நீமெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத்தக ஒருத்தி என்பது புறநானூற்றின் 10-வது பாடல். நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து அறுதியிடப் பட்ட கொடுமையை ஒருவன்பால் காணின், அதனை நீதி நூற்குத் தக ஆராய்ந்து, அத் தீமைக்குத் தகத் தண்டஞ் செய்வை என்பது இவ்வடிகளின் பழைய உரை. சிறிதும் கண்ணோட்டம் செய்யாமல் தீமைக்குத் தகுந்தவாறு ஒறுக்க வேண்டும் என்பதை இப்பாடல் எடுத்துக்காட்டிற்று. கண்ணோட்டம் இன்றிக் குற்றத்துக்குத் தக்கவாறு தண்டனை தரவேண்டும் என்பதை வள்ளுவரும் வலியுறுத்துகின்றார். ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை என்பது திருக்குறள், 541. தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையைப் பொருந்தி அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம் என்பது இத் திருக்குறளுக்குப் பரிமேலழகர் கூறிய உரை. இங்கே எடுத்துக்காட்டிய புறநூனூற்றுப் பாட்டின் பகுதியும், திருக்குறளும், பழந் தமிழர்களின் நீதிமுறையை விளக்கின. ஒருவன் குற்றவாளிதானா என்பதை நன்றாக ஆராய்ந்து தெளியவேண்டும். அவன் உண்மையான குற்றவாளி யானால், அறநூல் விதியின்படி அவனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். குற்றவாளி யாராயிருந்தாலும் சரி; நண்பன், உறவினன் அல்லது பகைவன் என்று கருதாமல், குற்றத்திற்குத் தக்கபடி தண்டிக்க வேண்டும். இதுவே மனித சமுதாயத்தில் குற்றங்கள் வளராமல் தடுக்கும் வழியாகும். இதுவே நீதி முறையாகும். தண்டனை தருவதிலே சிறிதும் நடுநிலை தவறக்கூடாது என்பதை இப்பாடல்கள் வலியுறுத்துகின்றன. கொலைத் தண்டனை கொலைத் தண்டனையே கூடாது என்று கூறுவோர் உண்டு. நாகரிகம் பெற்ற மக்கள் சமுதாயத்தில் கொலைத் தண்டனையைப் பின்பற்றுவது அநாகரிகம்; கொலைத் தண்டனை விதிக்கப்பட்டவர், பின்னர், குற்றமற்றவர் என்று மெய்ப்பிக்கப்பட்டால், அவரைத் திருப்பிக் கொண்டுவர முடியாது; ஆதலால் கொலைத் தண்டனை கூடாது. கொலைத் தண்டனையை மறுப்போர் கூறும் கருத்துக் களில் இதுவே முதன்மையானது. கொலையாளிகள் உயிர்வாழ இடங்கொடுத்தால், மேலும் மேலும் கொலைக் குற்றம் பெருகிக் கொண்டே வரும்; கொலையாளிகள் தொகையும் வளர்ந்து வரும்; கொலைக் குற்றத்திற்குக் கொலைத் தண்டனை கொடுத்தால்தான் கொலைக் குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதே கொலைத் தண்டனை கொடுக்கும் முறையை மாற்றக்கூடாது என்போர் கூறும் கருத்துக்களில் முதன்மையானது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளியா? அல்லவா? என்பதைக் கண்டுபிடித்தாக வேண்டும். இத்தகைய திறமை படைத்தவர்கள் கையில்தான் அந்த அதிகாரம் ஒப்படைக்கப்பட வேண்டும்; நேர்மையும் நுண்ணறிவும் படைத்தவர்கள் அறங்கூறும் அவையங்களிலே அமர்ந்து நீதி வழங்கவேண்டும். இந்த முறை ஒழுங்காகப் பின்பற்றப்பட்டால் குற்றமற்றவர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட மாட்டார்கள். ஆதலால் குற்றமற்றவர்கள், குற்றவாளிகளாகக் கருதப்பட்டுத் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று வைத்துக்கொண்டு, கொலைத் தண்டனையே கூடாது என்பது பொருந்தாது. கொலைத் தண்டனை இருக்கவேண்டும் என்பதுதான் முன்னோர்கள் கருத்து; அறநெறிக்கு அடங்கி வாழ்ந்த ஆன்றோர்கள் முடிவு; தெய்வத்திற்கும் அநீதிக்கும் அஞ்சி வாழ்ந்த பண்டைய அறிஞர்களின் கருத்து. இன்றைய உலக அறிஞர்களில் பெரும்பாலோர் கொலைத் தண்டனை முறையை ஆதரிப்பவர்கள் என்பதிலே ஐயம் இல்லை. பழந்தமிழர் அரசியலிலே கொலைத் தண்டனை கையாளப் பட்டு வந்தது. நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக, அரசாங்கங்கள் கடும் குற்றம் புரிந்தோர்க்குக் கொலைத் தண்டனை கொடுக்கப் பின்வாங்கவில்லை. இந்த உண்மையைத் திருவள்ளுவர் தெளிவாக உரைக்கின்றார். கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர். என்பது திருக்குறள், 550. அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல் உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும் என்பது பரிமேலழகர் தரும் உரை. கொடியவர் என்றது தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார், என்றிவர் முதலா யினாரை; இவரை வடநூலார் ஆததாயிகள் என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லா வழிப் புற்களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப் படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதி தருமம் என்பதாயிற்று. இது கொடியார் என்பதற்குப் பரிமேலழகர் கொடுத் திருக்கும் விளக்கம். தீயிட்டு உடைமைகளையும் உயிர்களையும், பாழ் பண்ணுவோர், நஞ்சிட்டுக் கொலை செய்வோர், ஆயுதங்களால் கொலை செய்வோர், திருடுவோர், வழிப்பறி செய்வோர், கூட்டமாக வந்து கொள்ளையடிப்போர், பிறன் மனையாளை விழைவோர்- இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை விதிக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்தென்று பரிமேலழகர் விளக்கிக் கூறியிருக்கின்றார். பண்டைக் காலத்தில், மேற்கண்ட குற்றவாளிகளுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கும் வழக்கம் இருந்தது. அத்தகைய குற்றவாளிகள் சமுதாயக் கட்டுப்பாட்டையும், வாழ்வையும், நிலைகுலைப்போர் ஆவர்; ஆகையால், அவர்கள் கூட்டம் ஒழிய வேண்டுமானால் கொலைத் தண்டனை கொடுப்பதுதான் செங்கோன்மை என்று கருதினர். இன்றைய அறிஞர்கள் சிலர், திருவள்ளுவர் கொலைத் தண்டனைக்கு இணங்காதவர்; ஆதலால் இக்குறளுக்குப் பரிமேலழகர் சொல்லும் உரை பொருந்தாது என்று கூறு கின்றனர். இவர்கள், பைங்கூழ் களைகட்டதனொடு நேர் என்று வள்ளுவர் கொடுத்திருக்கும் உதாரணத்தை மறந்து விடுகின்றனர். கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் தான் அறம் என்பதற்கு ஏற்ற உதாரணம் பயிருக்குக் களையெடுத்தல் என்பதாகும். பயிர் நன்றாக வளர்ந்து பலன் தரவேண்டுமானால், அதன் இடையிலே முளைத்த களையை அடியோடு பிடுங்கியெறிய வேண்டும். அப்பொழுதுதான் பயிர் வளரும். களையை அடியோடு பிடுங்கி வீசாமல் அதன் தலையை மட்டும் அறுத்து விடுவார் யாரும் இல்லை. சமுதாயம் நன்றாக வாழவேண்டு மானால் சமூகத் தீங்கிழைப்போரை மனித சமுதாயத்திலே வாழ விடாமல் களைந்தெறிய வேண்டும். அவர்களை அழிக்க வேண்டும். அவர்களுக்குக் கொலைத் தண்டனை கொடுப்பது தான் ஒழுங்கு முறை. இதுவேதான் வள்ளுவர் கருத்து. இக்கருத்தைத்தான் பரிமேலழகர் தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார். இதனால், கடுங் குற்றவாளிக்குக் கொலைத் தண்டனை யளிப்பதுதான் செங்கோன்மையாகும் என்பதே பழந்தமிழர் கொள்கையென்பதைக் காணலாம். திருட்டுக் குற்றத்துக்குக்கூடக் கொலைத் தண்டனை கொடுப்பதைத் தமிழர்கள் அரசியல் நீதியாகக் கொண்டி ருந்தனர். இதற்குச் சிலப்பதிகாரமும் ஒரு சிறந்த உதாரணமாகும். கண்ணகி, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வழக்காடச் சென்றாள். அவள் தன்னைக் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி என்று அறிமுகம் செய்து கொண்டாள். அப்பொழுது நெடுஞ்செழியன், கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண் என்று கூறினான். திருட்டுக் குற்றத்துக்குக் கொலைத் தண்டனை கொடுப்பதே அரச நீதி; பழங்காலத்தில் திருடர்களுக்கும் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் என்ற உண்மை யையே இவ்வடிகள் காட்டுகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலன் குற்றவாளி தானா என்பதை ஆராய்ந்து பார்க்கவில்லை; பொற்கொல்லன் பேச்சை நம்பித் தண்டனை கொடுத்து விட்டான். இதுதான் பாண்டியன் செய்த பெரும் தவறு. திருட்டுக் குற்றத்துக்குக் கொலைத் தண்டனையளித்தல் அரசநீதி என்பதைச் சிலப்பதிகாரம் ஏற்றுக் கொள்ளுகிறது; திருடர்கள் கூட்டம் வளராதிருக்கவே- அவர்களால் மக்கள் சமுதாயத்திற்கு ஏற்படும் தீமைகளைத் தடுக்கவே- அவர்களுக்கு அரசாங்கம் கொலைத் தண்டனை வழங்கி வந்தது. சிலப்பதிகார காலத்தில் இவ்வழக்கம் நடைமுறையில் இருந்தது. கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியில் கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன் இல் விழைவார் என்று இவர் முதலாயினார் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று பரிமேலழகர் கூறினார். அவர் காலத்துக்கு முன்னிருந்த இளங்கோவடிகள், கொலைத் தண்டனைக்கு உரியார் இன்னார் என்று கூறுவதும் குறிப்பிடத்தக்கது. தவம் மறைந்து ஒழுகும் தன்மையி லாளர்; அவம் மறைந்து ஒழுகும் அலவல் பெண்டிர்; அறைபோகு அமைச்சர்; பிறர்மனை நயப்போர் பொய்க்கரி யாளர்; புறம்கூற் றாளர்; என் கைக்கொள் பாசத்துக் கைப்படு வோர்; எனக் காதம் நான்கும் கடும்குரல் எடுப்பிப் பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும் என்பது சிலப்பதிகாரம்; இளங்கோ தரும் நீதி. தம்மைப் பிறர் நம்புவதற்குத் தவவேடத்தில் மறைந்து நின்று, அத்தவத்திற்கு மாறான வழியில் நடக்கும் பொய் வேடத்தார்; தம்மைத் தம் கணவர் நம்பும்படி பொய்யொழுக் கத்தில் மறைந்து நின்று ஒழுகும் வீணாண மகளிர்; தம்மை நம்பி, தம் கையில் பொறுப்பை ஒப்படைத்திருக்கும் அரசரைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யும் அமைச்சர்கள்; தமது மனைவியர் வீட்டிலே தனித்திருக்க விட்டு, பிறர் மனையிலே தனித்திருக்கும் பெண்டிரை விரும்பும் தூர்த்தர்கள்; தமது மனமறிந்த உண்மை யை மறைத்து, நீதிமன்றத்திலேறிப் பொய்க்கரி புகல்வோர்; முன்னே நின்று புகழ்ந்து, பின்னே போய்ப் பழிச் சொற்களைக் கூறும் பழிகாரர்கள்- இவர்கள் எல்லாம் என் கையில் உள்ள பாசத்தில் அகப்படுவோர் என்று நான்கு திசைகளிலும் நான்கு காத தூரம் கேட்கும்படி கடுங்குரல் கொடுக்கும் ஒரு பூதம் மேற்கண்ட குற்றவாளிகளை அப் பூதம் தன் பாசத்தாற் பிணித்து நிலத்திலே மோதி அவர்கள் உயிரை உண்ணும். இத்தகைய பூதம் இருத்தலால் அவ்விடத்திற்குப் பூத சதுக்கம் என்று பெயர். மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில் அமைந்துள்ள பொருள் இதுதான். போலித் துறவிகள், கணவனை வஞ்சிக்கும் பெண்கள், அரசர்க்குக் கேடு சூழும் அமைச்சர், பிறர் மனைவியை விரும்பு வோர், பொய்க்கரி புகல்வோர், புறம் பேசுவோர்- இவர்கள் எல்லாரும் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று இதனாற் காணலாம். காவிரிப்பூம்பட்டினத்திலே இத்தகைய குற்றவாளிகளைப் பிடித்துக் கயிற்றிலே கட்டி, நிலத்திலே அடித்து உயிரைப் போக்கும் மன்றம் ஒன்று இருந்ததாம். இதன் பெயர் பூத சதுக்கம் என்பது; அங்கு நிற்கும் பூதமே இக்குற்றவாளிகளை இவ்வாறு செய்யுமாம். நான்கு தெருக்கள் கூடும் இடத்திற்குச் சந்தி என்று பெயர். ஊர் நடுவிலே, நாற்சந்தி கூடுமிடத்திலே, குற்றவாளிகளைக் கண்டறிந்து தண்டனை கொடுக்கும் மன்றம் ஒன்று இருந்தது. அந்த மன்றத்தின் தலைவர் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களைக் கைப்படுப்பதிலே வல்லவர்; அவர் அக் குற்றவாளி களுக்கு மேற்கூறியவாறு கயிற்றால் கட்டி நிலத்திலே அறைந்து கொல்லும் கடுந் தண்டனை கொடுத்து வந்தார். அந்த மன்றத்தி லிருந்து மேற்கண்ட குற்றங்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கப்படும் என்று உரத்த குரலுடன் அறிவித்துக் கொண்டேயிருப்பார்கள். இந்த நீதி மன்றத்தைத்தான் பூத சதுக்கம் என்றும், தண்டனையை நிறைவேற்றும் காவலனைத்தான் பூதம் என்றும் சிலப்பதிகாரம் சித்திரிக்கின்றது. பூத சதுக்கத்திற்கு இவ்வாறு பொருள் கொள்ளுதல்தான் பொருத்தமாகும். மேலே காட்டிய திருக்குறள், சிலப்பதிகாரம் இரண்டினாலும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் யார் யார் என்பதைக் கண்டோம். 1. தீயிடுவோர்; 2. உணவிலே நஞ்சிடுவோர்; 3. கருவியால் கொலை செய்வோர்; 4. கள்வர்; 5. வழியிலே செல்வோரைத் துன்புறுத்துவோர்; 6. கொள்ளைக் கூட்டத்தார்; 7. பொய்த் தவ வேடத்தார்; 8. கணவனை வஞ்சிக்கும் பெண்டிர்; 9. அரசனுக்குக் கேடு சூழும் அமைச்சர்; 10. பிறர்மனை விரும்புவோர்; 11. பொய்க்கரி புகல்வோர்; 12. புறங்கூறுவோர். இந்தப் பன்னிரண்டு கும்பல்களைச் சேர்ந்தவர்களும் மனித சமுதாயத்திற்குத் தீங்கு செய்வோர்; சமுதாயக் கட்டுக் கோப்பைச் சீரழிப்போர். இவர்கள் கூட்டத்தைப் பெருக விடாமல் தடுத்தால்தான் மக்கள் மன அமைதியுடன் வாழ முடியும். இந்த உண்மையை முன்னோர்கள் உணர்ந்திருந்தனர். ஆதலால்தான், இவர்கள் எல்லாம் கொலைத் தண்டனைக்கு உரியவர்கள் என்று முடிவு செய்யப்பட்டனர். பொய்ச்சாட்சி புகல்வோர்க்கும் கொலைத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. சில வழக்குகளில் குற்றவாளிகள் குற்ற மற்றவர்களாக விடுதலை செய்யப்படுகின்றனர்; குற்றமற்றவர்கள் குற்றவாளி களாகத் தண்டிக்கப்படுகின்றனர். இதற்குச் சாட்சிகளே முதற் காரணமாவர். குற்றவாளிகளிலே, நீதியை அநீதியாக்கும் பெரும் குற்றவாளிகள் சாட்சிகள்தாம். ஆதலால்தான் பொய்ச்சாட்சி புகன்றோர்க்குக் கொலைத் தண்டனை கொடுத்து வந்தனர் முன்னோர். பழந்தமிழ் நூல்களில் கூறப்பட்டிருக்கும் கொலைத் தண்டனைக்குரியவர்கள் வரிசையைப் பார்த்தால் நமக்கு வியப்பைத் தருகின்றது. இவர்களிலே பலருக்குக் கொலைத் தண்டனை விதிக்க இக்காலத்தில் சட்டம் இல்லை. குறிப்பாக, கள்வர், வழிப்பறி செய்வோர், பொய் வேடத்தார், கணவனை வஞ்சிக்கும் காரிகையர், பிறர்மனை விரும்புவோர், பொய்க்கரி புகல்வோர், புறம் கூறுவோர் ஆகியோர்க்குக் கொலைத் தண்டனை விதிப்பதில்லை. இதுதான் இக்கால நீதியாக இருக்கின்றது. இவர்களுக்கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்வோரைப் பரிகசிப்போர் சிலர் உண்டு. இன்னும் மக்களாட்சி நடைபெறும் சில நாடுகளிலே, அரசாங்க அலுவலிலே அமர்ந்துகொண்டு கையுறை (லஞ்சம்) வாங்கு வோர்க்குக் கொலைத் தண்டனையுண்டு; அரசாங்கத்தின் பணத்தை வீணாக்குவோர்க்குக் கொலைத் தண்டனை உண்டு. பல நாடுகளிலே இவர்கள் கொலைத் தண்டனைக்குரிய குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை. குற்றங்களுக்குத் தண்டனை கொடுக்கும் பழங்கால நீதி முறைகளைக் கண்டு எள்ளி நகையாடுவதில் பயன் இல்லை; அத்தகைய கொடுந்தண்டனை கொடுத்ததன் கருத்தைத்தான் நாம் காணவேண்டும். இத்தகைய கொடுந் தண்டனைகளால் மனித சமுதாயத்துக்கு நன்மை ஏற்பட்டதா தீமை ஏற்பட்டதா என்பதைத்தான் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். கடுந் தண்டனையின் வாயிலாகத்தான் குற்றங்களை ஒழிக்க முடியும்; கடுந்தண்டனை உண்டு என்றால்தான் குற்றவாளிகள் குற்றம் புரிய அஞ்சுவார்கள். இக்கருத்துடன்தான் கொலைத் தண்டனை போன்ற கொடுந்தண்டனைகளைக் கொடுத்து வந்தனர். இதனால் நல்லபலன் ஏற்பட்டது என்பதிலும் ஐயம் இல்லை. குற்றம் புரிந்தோர், தப்பித்துக்கொள்ளுவதற்கு வழியும், வசதியும் இருந்தால் குற்றங்களைத் தடுக்க முடியாது; குற்ற வாளிகள் பெருகிக்கொண்டுதான் இருப்பார்கள். குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளுவதற்கு வழி வகுத்திருக்கும் அரசாங்கம், நாளடைவில், குற்றவாளிகள்- மனித சமுதாயத்தை மதிக்காத வர்கள்- மக்கள் வாழ்வுக்குக் கேடு சூழ்பவர்கள்- ஆகியோரின் செல்வாக்கிற்குக் கட்டுப்பட்டதாகவே ஆகிவிடும். இந்த நிலைமை வலுப்பெற்று வளர்ந்தால், தந்நலத்தையே குறிக் கோளாகக் கொண்ட குற்றவாளிகளே ஆளும் பதவிகளை அடைந்துவிடுவார்கள். இத்தகைய நிலைமை ஏற்படுவதைத் தடுக்கத்தான் சமுதாயப் புல்லுருவிகளுக்குக் கடுந் தண்டனை விதிக்கும் முறையை முன்னோர்கள் அறநெறியாகக் கொண்டனர். இத்தகைய அறநெறியைத்தான் பண்டைத் தமிழ் மன்னர்களும் பின்பற்றினர். குற்றங்களுக்குத் தண்டனையளிப்பதிலே பழந்தமிழ் வேந்தர்கள் கைக்கொண்ட அறநெறி மிகச் சிறந்ததாகும். இதனை இக்கால அரசியல் வல்லுநர்கள் சிந்தித்துப் பார்ப்பார் களானால், குற்றங்களைத் தடுப்பதற்கு, முன்னோர் பின்பற்றிய தண்டனை முறைகள் தவறானவை அல்ல என்பதை ஒப்புக் கொள்ளுவார்கள். வேந்தர்களின் வாழ்க்கை முறை பண்டைத் தமிழ் மன்னர்கள் எப்படி வாழ்ந்து வந்தனர்? ஒவ்வொரு நாளும் அவர்கள் செய்து வந்த செயல்கள் யாவை? நாட்டுக்கும் மக்களுக்கும் அவர்கள் செய்து வந்த பணிகள் எவை? இக் கேள்விகளுக்குப் பழந்தமிழ் இலக்கியங்கள் நமக்கு விடையளிக்கின்றன. அரசர்களின் அன்றாட வேலைகள் தமிழரசர்கள் அன்றாடம் செய்து வந்த வேலைகளைப் பற்றிப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று புகல்கின்றது. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாட்டு அது. சோழன் நலங்கிள்ளி ஒவ்வொரு நாளும் செய்யும் வேலைகளைப் பற்றி அச்செய்யுளிலே கூறுகிறார் புலவர். பொதுவாக அரசர்களின் அன்றாட நடவடிக்கைகளை அறிந்து கொள்ள அச்செய்யுள் நமக்குத் துணை செய்கின்றது. இது புறநானூற்றின் 29- வது பாட்டு. காலையிலே யாவரும் காணும்படி காட்சிக்கு எளியனாய் வீற்றிருப்பாய்! தலைமயிரிலே, பொன்னாலாகிய தாமரையை யும் பொன் மாலையையும் அணிந்திருக்கும் பாணர்கள் கூட்டம் உன்னை முற்றுகையிடும். அவர்களுக்கு வேண்டுவன அளித்த பின்னர் அக்கூட்டம் நீங்குவதாக! பின்னர், உனது மார்பால், உனது உரிமை மகளிரின் தோள்களைத் தழுவிக்கொண்டு சிறிதுபொழுது ஓய்வு எடுத்துக் கொள்வாயாக! அதன் பின் சிறிதும் வெறுப்பதற்கு இடமில்லாத உனது கோயில் வாயிலிலே இனிதாக முரசொலிப்பதாக! தீயோரைத் தண்டிப்பாய்; நடுநிலையோர்க்கு இரங்கி உதவி செய்வாய். இவ்வாறு இடையறாமல் முறை செய்வதிலே சுறுசுறுப்புடன் இருப்பாய். நல்வினையால் நன்மையில்லை, தீவினையால் தீமையும் இல்லை என்று வீண் வாதம் பேசுவோருடன் தொடர்பு கொள்ளாது ஒழிக! உன்னுடைய படை வீரர்கள் இன்புற்று வாழும்படி அவர்களுக்கு நல்ல இருக்கையும், வேண்டும் பொருள்களும் அளிப்பாயாக! உனது சுற்றத்தார் அனைவரும் வறுமையின்றி இன்பத்திலே திளைத்து வாழ்வார்களாக! நீ தேடிப் பாதுகாத்த செல்வம், உனக்கு இவ்வுலகிலே அழியாத புகழை நிலைநிறுத்தும் வழியிலே செலவழிக! இக்கருத்துக்கள் முதுகண்ணன் சாத்தனார் பாடலில் காணப்படுவன. புறநானூற்றில் உள்ள 239- வது செய்யுளும், அரசர்களின் நடத்தையை அறியத் துணை செய்கின்றது. இச்செய்யுள் பேர் எயில் முறுவலார் என்னும் புலவர், நம்பி நெடுஞ்செழியன் என்னும் பாண்டியனைக் குறித்துப் பாடிய பாடலாகும். இப்பாண்டியன் குறுநில மன்னனாகக் காணப்படுகின்றான். இவனது வாழ்க்கையைப் பற்றிக் கூறியிருப்பதும், பொதுவாக மன்னர்களின் வாழ்க்கையை அறிவதற்கு உறுதுணையாகும். வளையல்களை அணிந்த மகளிரின் தோள்களைத் தழுவிக் கொண்டபின், மலர்ச் சோலைகளின் மலர்களைச் சூடி மகிழ்ந்தான்; குளிர்ந்த நறுமணச் சாந்தைப் பூசிக் கொண்டான்; பகைத்தவர்களை அடியோடு அழித்தான்; நண்பர்களைப் புகழ்ந்து பாராட்டினான்; இவர் நம்மினும் வலியவர் என்று எண்ணி யாருக்கும் வணக்கங் கூறமாட்டான்; இவர் நம்மினும் எளியவர் என்று கருதி யாரையும் பழிக்கமாட்டான்; பிறரிடம் சென்று தனக்கு உதவ வேண்டுமென்று இரந்தறியான்; தன்னிடம் வந்து உதவி கேட்டு இரந்தவர்க்கு இல்லையென்று சொல்லி அறியான்; அரசர்களின் சபைகளில் எல்லாம் தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசும்படி வாழ்ந்தான்; எத்தகைய பெரும் படை எதிர்த்து வந்தாலும் புறங்கொடாமல் போர் செய்தான். போரிட்டுப் புறமிட்டோடும் படைகளைப் பின் சென்று தாக்காமல் அவைகள் ஓடுவதைப் பார்த்து நின்றான்; விரைந்து செல்லும் குதிரையில் ஏறியூர்ந்தான்; நீண்ட தெருவிலே தேரேறிச் சென்றான்; உயரமான யானையிலே ஏறிச் சென்றான். இனிய மது நிறைந்த குடங்களை அனைவர்க்கும் வழங்கினான். பாணர்கள் மகிழும் படி அவர்கள் பசி நீங்க விருந்திட்டான்; தெளிவான அறமொழி களையே கூறினான்; இவ்வாறு உயர்ந்த பண்புள்ளவன் செய்யக் கூடியன எவையோ அவைகளையெல்லாம் செய்தான். இதுதான் அச்செய்யுளிலே அமைந்துள்ள பொருள். தொடியுடைய தோள்மணந்தனன்; கடிகாவின் பூச்சூடினன்; தண்கமழும் சாந்துநீவினன்; செற்றோரை வழிதபுத்தனன்; நட்டோரை உயர்வுகூறினன்; வலியர்என வழிமொழியலன்; மெலியர்என மீக்கூறலன்; பிறரைத்தான் இரப்பு அறியலன்; இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்; வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்; வருபடை எதிர்தாங்கினன்; பெயர்படை புறம்கண்டனன்; கடும்பரிய மாக்கடவினன்; நெடும்தெருவில் தேர்வழங்கினன்; ஓங்குஇயல் களிறு ஊர்ந்தனன்; தீம்செறி தசும்பு தொலைச்சினன்; பாண்உவப்பப் பசிதீர்த்தனன்; மயக்குஉடைய மொழி விடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன். இதுவே அப்பாடல். பண்டைத் தமிழ் மன்னர்களின் வாழ்வு பெரும்பாலும் உலகின்பத்தையே குறிக்கோளாகக் கொண்டிருந்தது; தாம் இன்புற்று வாழ்வதையும், தம்மைப் போல் மற்றவர்களையும் இன்புற்று வாழச் செய்வதையுமே அவர்கள் வாழ்வின் பயன் என்று கருதினர். மதத்தைப் பற்றியோ, வேறு ஆத்மீகத் துறை பற்றியோ அவர்கள் அவ்வளவாகக் கவலை கொண்டிருக்க வில்லை. இவ் உண்மையைமேலே காட்டிய புறநானூற்றுச் செய்யுட்களால் காண்கின்றோம். ஆயினும், பண்டைத் தமிழ் வேந்தர்கள் கடவுளைப் பற்றிக் கவலையற்றிருந்தார்கள்; அவர்கள் நாத்திகர்களாக இருந்தனர் என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை யிருந்தது; இறைவழிபாடு செய்து வந்தனர். ஆனால், இறை வணக்கமும் நம்பிக்கையும் தனிப்பட்டவர்களின் உரிமை என்று கருதப்பட்ட காரணத்தால், மன்னர்களைப் பற்றிப் பாடிய புலவர்கள் அவர்களுடைய ஆன்மீக ஒழுக்கத்தைப் பற்றி- கடவுள் கொள்கைபற்றி- அவ்வளவாகப் பாடவில்லை என்று தான் எண்ணவேண்டும். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிக் காரிகிழார் பாடிய பாடல் புறநானூற்றின் ஆறாவது பாட்டு. இதிலே, அம்மன்னனுடைய இறையன்பைப் பற்றியும் புலவர் குறிப்பிட்டுள்ளார். பணியியர் அத்தைநின் குடையே முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே என்பது அப்பாடலின் பகுதி. உனது பூச்சக்கரக் குடை, சிவபெருமானது கோயிலை வலம் வரும்பொழுது மட்டும் தாழ்க என்பதே இதன் பொருள். இதனால் இப் பாண்டியன் சிவனடியான் என்பதை அறியலாம். பண்டை மன்னர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகத்தான் இருந்தனர் என்பதற்கு இப் பாடல் ஒன்றே போதும். கலை வளர்த்தனர் பண்டைத் தமிழ் வேந்தர்கள் கலைகளைச் சுவைப்பவர் களாக இருந்தனர்; கலைகளிலே அவர்களுக்கு அளவு கடந்த ஆர்வம். கலைகளைச் சிறந்த பொழுதுபோக்காகக் கொண்டி ருந்தனர். கலைஞர்களைப் போற்றினர்; அவர்கள் வறுமையால் வாடாமல் காப்பாற்றினர்; கலைஞர்களைப் போற்றுவதால் தான் கலைகள் வளர்ந்தோங்கும் என்ற உண்மையை உணர்ந் திருந்தனர். உழைக்கும் பொதுமக்களை ஊக்கப்படுத்துவது கலைகள்; அவர்கள் ஓய்வு நேரத்தை இன்பமாகக் கழிக்க உதவுவது கலைகள்; அவர்களுக்குள் ஒற்றுமையை உண்டாக்குவது கலைகள். இந்த உண்மையை உணர்ந்தே மன்னர்கள் கலைகளை வளர்த்தனர்; கலைஞர்களைப் பாதுகாப்பதை முதற் கடமை யாகக் கொண்டிருந்தனர். நரம்பின் முரலும் நயம்வரும் முரற்சி விறலியர், வறும்கைக் குறுந்தொடி செறிப்பப் பாணர் உவப்பக் களிறுபல தரீஇ (17-19) என்பது மதுரைக்காஞ்சி. யாழைப் போன்ற இனிய குரலையுடைய விறலியர்கள் வெறுங்கையிலே பொன் வளையல்களை அணியும்படி செய் வான்; பாணர்கள் மகிழும்படி, யானைகள் பலவற்றைப் பரிசாகக் கொடுப்பான். இதுவே மேலே காட்டிய அடிகளின் கருத்து. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் கலைஞர்களைப் போற்றிய திறத்தை இவ்வாறு குறித்தார் மாங்குடி மருதனார் என்னும் புலவர். கரிகாற் சோழன் கலைஞர்களை எவ்வளவு அன்புடன் போற்றிப் பாதுகாத்தான் என்பதைப் பொருநர் ஆற்றுப் படையிலே தெளிவாகக் காணலாம். ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் கரிகாற் பெருவளத்தானுடைய கலையுணர்ச்சியைப் பாராட்டிப் பாடியிருக்கின்றார். கரிகாலனிடம் பரிசு பெற்று வந்தான் ஒரு பொருநன். அவன் மற்றொரு பொருநனிடம் கரிகாலன் கொடைச் சிறப்பை எடுத்துரைக்கின்றான். இவ்வாறு அமைந்த பகுதியிலே கரிகாலனின் கலைக் காதலை உணர்த்துகின்றார் முடத்தாமக் கண்ணியார். பழங்கள் பழுத்துக் கனிந்த மரத்தை நாடிச் செல்லும் பறவைபோல நான் அவனை நாடிச் சென்றேன். அவனுடைய கோட்டை வாயிற் கதவு இரவலர்க்காக எப்பொழுதும் திறந்தே வைத்திருக்கும். கலைஞர்களாகிய இரவலர்களைக் காவலர்கள் தடுக்கமாட்டார்கள். நான் அவனுடைய கோட்டை வாயிலைக் கடந்து உள்ளே சென்ற மகிழ்ச்சியால், இளைத்த என் உடம்பு பருத்தது. விடியற்காலத்திலே என் உடுக்கையை அடித்துத் தாளத்துடன் யான் பாடினேன். உடனே அவன் என்னை இதற்குமுன் பழகிய உறவினன்போல் அன்புடன் அழைத்தான். இனிய சொற்களைக் கூறி வரவேற்றான். தன் கண்ணால் காணும்படி அண்மையிலேயே இருக்கச் செய்தான். அன்புடன் பார்த்தான். ஈரும் பேனும் குடியிருந்த எனது கந்தையுடையைக் களையச் செய்தான். நுண்ணிய மெல்லிய பாம்புச் சட்டை போன்ற வழவழப்பான ஆடையை அளித்தான். நல்ல மாளி கையிலே வைத்து ஏவல் செய்ய மகளிரையும் அமர்த்தினான். அவர்கள் பொற்கலத்திலே இனிய மதுவை நிரப்பித் தந்தனர். வேண்டுமளவு கொடுத்தனர். அதனை உண்டுயானும் சுற்றமும் களைப்பு நீங்கினோம். பிறகு மன்னன் என்னையும் என்னைச் சேர்ந்தவர்களையும் அழைத்தான். அருகு சென்றோம். எங்களைப்பற்றி இன்னார் என்று அரசனுக்கு அறிமுகம் செய்தனர். நாங்களும் அரசனிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டோம். பின்னர் எங்களுக்கு வேவிறைச்சி, சூட்டிறைச்சி, வெவ்வேறு சுவை பொருந்திய பலகாரங்கள் முதலியவற்றை அளித்து உண்ணச் செய்தான். நாங்களும் உண்டு மகிழ்ந்தோம். ஒவ்வொரு நாளும், நாங்கள் எங்கள் கலைத் திறமையைக் காட்டினோம்; எங்கள் பாடல் ஆடல்களையெல்லாம் நடத்திக் காட்டினோம். இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. ஒவ்வொரு நாளும் அவன் அளித்த நல்ல விருந்தை உண்டு மகிழ்ந்து பொழுது போக்கினோம். இப்படிப் பல நாட்கள் விருந்திலே திளைத்து வெறுப் படைந்த நானும் என் சுற்றமும், எங்கள் ஊருக்குச் செல்ல விரும்பினோம். இதை அரசனிடம் அறிவித்தோம். அவன் எங்களை விட்டுப் பிரிய மனமற்றவன் ஆனான். எங்களை விட்டுப் பிரிகின்றீரோ வென்று சினந்தவனைப்போல் கேட்டான். பின்னர் யானைகளையும், ஆடை அணிகளையும் ஏராளமாக அளித்தான்; நாங்களும் எங்கள் ஆசை தீர அவைகளை ஏராளமாகப் பெற்றோம். இனி வறுமை எங்களை அணுகாத அளவுக்குப் பரிசு பெற்றோம். இவ்வாறு கரிகால் பெருவளத்தான் கலைஞர்களைப் புரந்த செயலைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. பொருநர் ஆற்றுப் படையின் 64-வது அடிமுதல் 129-வது அடிகள் வரையில் உள்ள பகுதியிலே இதனைக் காணலாம். கலைக்காக உயிர் கொடுத்தோன் பாரி என்னும் வள்ளல், கலைக்காகத் தன் உயிரையே கொடுத்த வரலாறு புறநானூற்றில் காணப்படுகின்றது. பாண்டி நாட்டில், பறம்பு நாடு என்னும் பகுதி பாரிக்கு உரியது. அது முந்நூறு ஊர்களைக் கொண்ட ஒரு சிறுநாடு. பாரி, தன்னைப் பாராட்டிப் பாடி வரும் புலவர்களுக்கும், கலைஞர்களுக்கும், அவ்வூர்கள் அனைத்தையும் பரிசிலாகக் கொடுத்துவிட்டான். அவன் வாழ்ந்த பறம்பு மலை ஒன்று தான் அவனிடம் மீதமாக இருந்தது. இந்த நிலையில், பாரியின் புகழைக் கண்டு பொறாமை கொண்ட மூவேந்தர்களும், அவன் மீது படையெடுத்து வந்தனர். பறம்பு மலையை முற்றுகையிட்டனர். பாரியைப் பணிய வைக்க முடியவில்லை. அப்பொழுது பாரியின் நண்பராகிய கபிலர் என்னும் புலவர் பெருமான் மூவேந்தர்களிடம் வந்தார். அவர் களிடம் பாரியின் வீரத்தையும், கொடைச் சிறப்பையும் எடுத்துக் கூறினார். நீங்கள் எவ்வளவு நாள் முயன்றாலும் பாரியைப் பணிய வைக்க முடியாது. நீங்கள் முறுக்கேறிய நரம்பையுடைய யாழை வாசித்துக்கொண்டு உமது விறலியர் உமது பின்னே வர ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும், அவனிடம் செல்லுங்கள். அப்பொழுது அவன் தனக்குரிய பறம்பு மலையையும், நாட்டையும் ஒன்றாகக் கொடுத்துவிடுவான். பறம்பு மலையை மட்டும் அல்ல; அவனையே கேட்டாலும் கொடுத்துவிடுவான்; என்னையும் கூடக் கொடுத்துவிடுவான் என்று கூறினார். கபிலர் சொல்லியதைத் தவிர, பாரியை வெற்றி கொள்ள அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆதலால், மூவேந்தர் களும் கலைஞர்களைப் போல உருக்கொண்டனர். இரவலர் களாய்ப் பாரியிடம் சென்றனர். பாடினர்; ஆடினர்; பாரி மகிழ்ச்சி யடைந்தான். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். அவர்கள் உன்னையே எங்களுக்குத் தரவேண்டும் என்று வேண்டினர். அவ்வாறே அவன் தன்னை அவர்களிடம் ஒப்படைத்தான். அவர்கள் அவனை இவ்வாறு ஏமாற்றிக் கொன்றனர்; அல்லது சிறை வைத்தனர். இது பாரியைப் பற்றி வழங்கும் வரலாறு. மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளில் கொள்ளலிர்; வாளில் தாரலன்; யான்அறிகுவன் அது கொள்ளும் ஆறே; சுகிர்புரி நரம்பின் சிறுயாழ் பண்ணி, விரைஒலி கூந்தல்நும் விறலியர் பின்வர, ஆடினிர், பாடினிர், செலினே, நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே என்பது புறநானூற்றின் 109- வது பாட்டு. கபிலர் பாடியது. கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும், பறம்புகொளற்கு அரிதே; முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு; முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டு; நீர் பாடினீர் செலினே என்பதும் கபிலர் பாட்டு. புறநானூற்றின் 110-வது பாடல். இப்பாடலில் யாமும் பாரியும் உளமே, குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே என்ற அடிகள் குறிப்பிடத்தக்கது. நீங்கள் அவனைப் புகழ்ந்து பாடிக் கொண்டு சென்றால், பாரி, தன்னையும், பறம்பையும், அவன் நண்பனாகிய என்னையும் உங்களுக்கு அளிப்பான் என்ற கருத்தையுடையன. இப்பாடல்கள் இரண்டும், மேலே கூறிய பாரியின் வரலாற்றை வலியுறுத்துகின்றன. பாரியின் வரலாற்றால், பண்டைக்காலத் தமிழ் மன்னர்களிலே பலர், கலை வளர்ச்சிக் காகத் தங்கள் உயிரையும் கொடுத்தனர்; அவர்கள் கலைகளைத் தங்கள் உயிரினும் உயர்ந்தனவாக எண்ணினர், வளர்த்தனர் என்பதைக் காணலாம். பதிற்றுப்பத்தின் மூன்றாவது பத்து பல்யானைச் செல் கெழுகுட்டுவனைப் பற்றிப் பாடப்பட்டது. பாடியவர் பாலைக் கௌதமனார் என்னும் புலவர். அவர், குட்டுவனுடைய கலை ஆர்வத்தையும், கலைஞர்களைக் கைவிடாமல் காப்பாற்றும் சிறப்பையும் பற்றியே பாராட்டிப் பாடுகின்றார். நாட்டிலே மழைவளங்குறைந்து வறட்சியும், பஞ்சமும் தோன்றிய காலத்திலும் நீ வாத்தியங்களை வாசித்துப் பாடும் பாடகர்களைக் கைவிடமாட்டாய்; அவர்களுடைய பசி நீங்க உணவளித்துப் பாதுகாப்பாய்; அவர்கள் மகிழும்படி பெரும் ஆடை அணிகளையெல்லாம் அளிப்பாய். உன்னுடைய கொடை யினால் அக் கலைஞர்கள் பஞ்சம் பசி அறியாமல் உண்டு மகிழ்ந்து கலை வளர்ப்பார்கள் என்ற கருத்தைப் பாலைக் கௌதமனார் வெளியிடுகின்றார். அலம்தலை உன்னத்து அம்கவடு பொருந்தி சிதடி கரையப், பெருவறம் கூர்ந்து. நிலம்பைது அற்ற புலம்கெடு காலையும், வாங்குபு தகைத்த கலப்பையர், ஆங்கண் மன்றம் போந்து மறுகுசிறை பாடும் வயிரிய மாக்கள் கடும்பசி நீங்கப் பொன்செய் புனைஇழை ஒலிப்பப் பெரிது உவந்து நெஞ்சுமலி உவகையர் உண்டு மலிந்து ஆடச் சிறுமகி ழானும் பெரும்கலம் வீசும் போர்அடு தானைப் பொலந்தார்க் குட்டுவ. (பதிற்றுப்பத்து, 23) இவ்வடிகள் சேரர்களின் கலைப்பற்றைக் காட்டுகின்றன. அவர், நாட்டிலே பஞ்சம் பரந்திருந்த காலத்திலும் கலைஞர்களைக் கைவிடாமல் காப்பாற்றினர் என்ற உண்மையை உரைக்கின்றன. மேலே காட்டியவைகளால் தமிழ்நாட்டு மூவேந்தர்களும், பெருநிலக் கிழவர்களாகிய சிற்றரசர்களும் கலை வளர்ச்சியிலே கருத்துள்ளவர்களாயிருந்தனர்; கலைஞர்களுக்கு உதவுவதையே தங்கள் சிறந்த முதன்மையான பணியாகக் கொண்டிருந்தனர் என்ற உண்மையை உணரலாம். வீர வாழ்வு பண்டைக்கால மன்னர்கள், நோயினால் வருந்தி இறப்பதை விரும்பவில்லை. அவ்வாறு இறப்பதை இழிவாக எண்ணினர். இப்படி இறப்போர்க்கு மறுவுலகச் செல்வம் கிடைப்பதும் இல்லையென்று நம்பினர். போரிலே இறப்பவர் களுக்குத்தான் வீர சுவர்க்கம் உண்டென்று கருதினர். போரிலே மாண்டுபோகாமல் நோயுற்று மாளும் மன்னர்களின் உடலை அப்படியே அடக்கம் பண்ணமாட்டார்கள். அந்தணர்களால், குறிப்பிடப்பட்ட நல்ல நேரத்திலே, தருப்பைப் புல்லிலே அவ் வுடம்பைக் கிடத்துவார்கள்; வாளால் துண்டாக்குவார்கள். அதன் பின்பே அவ்வுடம்பை அடக்கம் செய்வார்கள். இவ் வழக்கம் தமிழகத்து மன்னர் மரபில் இருந்தது என்பதைப் புறநானூற்றின் 63-வது பாடலால் காணலாம். இப் பாடல் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றி ஔவையார் பாடியது. உன்னுடன் போரில் எதிர்த்தோர் உன்னை வெல்ல முடியாது. அவர்கள் வீர சுவர்க்கம் செல்வது உறுதி. போரிலே புறமிட்டு ஓடித் தமது வீட்டிலேயே நோயால் இறந்தோர்க்கு மறுமையில் நன்மையில்லை. ஆதலால், நோயால் இறந்த மன்னர்களை அந்தணர்கள் குறித்த நேரத்திலே தருப்பைப் புல்லிலே கிடத்துவார்கள். போரிலே மாண்ட மன்னர்கள் அடையும் நல்லுலகம் செல்க என்று கூறி அவர்கள் உடம்பை வாளால் துண்டு போடுவார்கள்; அதன் பின் அடக்கம் செய் வார்கள். உன்னை எதிர்த்த வேந்தர்கள் இத்தகைய இழிவுக்கு ஆளாக மாட்டார்கள். உன்னால் போரிலே மடிந்து நல்லுலகைப் பெறுவார்கள் என்ற கருத்தை அப் புறநானூற்றுச் செய்யுள் வெளியிடுகின்றது. திண்பிணி முரசம் இழும்என முழங்கச் சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர் தார் தாங் குதலும் ஆற்றார், வெடிபட்டு ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர், நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக் காதல் மறந்தவர் தீதுமருங்கு அறுமார், அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி, மறம் கந்தாக நல்அமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வுழிச் செல் கென வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ. (93) இதுவே அந்தப் புறநானூற்றுப் பாடல். வீரப் போரில்தான் மன்னர்கள் மாளவேண்டும் என்று நம்பியதற்குக் காரணம் இருக்கவேண்டும். எல்லா மன்னர்களும் சண்டையில்தான் சாகவேண்டும் என்ற கட்டாயமிருந்தால் நாட்டிலே ஒருநாளும் சமாதானம்- அமைதி- நிலைக்க முடியாது. நாட்டிலே செல்வமோ, கலைகளோ வளர முடியாது. நாட்டு மக்களும் அமைதியுடன் வாழ முடியாது. ஆதலால் இதற்குக் காரணம் வேறு உண்டு என்பதில் ஐயம் இல்லை. நாம் காக்கும் நாட்டைப் பகைவர்களின் கொள்ளைக்கு இடமாகாதபடி பாதுகாக்கவேண்டும்; நமது நாட்டுக் குடி மக்களுக்கு எவராலும் இன்னலிழைக்க முடியாமல் காப்பாற்ற வேண்டும்; நமது உயிரைப் பெரிதாக எண்ணாமல் நாட்டின் நன்மையையே பெரிதாக மதிக்க வேண்டும் என்பதே பண்டைத் தமிழ் மன்னர்களின் கொள்கை. இதனால் தான் இத்தகைய கொடிய சபதத்தை மன்னர்கள் மேற் கொண்டிருந்தனர் என்பதே உண்மையாகும். வேந்தர்கள் நாட்டிற்கு நன்மையான செயல்களைச் செய்வதிலே எப்பொழுதும் ஈடுபட்டிருக்க வேண்டும்; உயிர் போவதாயினும் நற்செயல்களை நிறைவேற்றப் பின் வாங்கக் கூடாது; தம் உடலின்பம் ஒன்றுக்காகவே உயிர் வாழ்ந்து, இறுதியில் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்போர்க்கு இவ்வுலகில் புகழ் இல்லை; அவர்கள் பிறந்ததனால் யாருக்கும் எப்பயனும் இல்லை என்ற கருத்தையே மேலே காட்டிய நம்பிக்கை வலியுறுத்துவதாகும். மும்முரசு முழக்கம் ஒவ்வொரு நாளும் காலையிலே, அரண்மனை வாசலிலே மூன்று வகையான முரசுகள் முழங்கிக்கொண்டிருக்கும். இம் மூன்று முரசுகளுக்கும் நியாய முரசு, வீர முரசு, தியாக முரசு என்று கூறுவர். இம் முரசுகளின் முழக்கமும், அரசனுடைய அன்றாட வேலைகளைக் குறிப்பன என்றே கூறலாம். அரசன் நீதி தவறமாட்டான்; நீதி தவறுவோரைத் தண்டிப்பான்; அறநெறியிலே நடக்கும்படி செய்வான்; ஆதலால், நீதிமுறை வேண்டுவோர், தாராளமாக அரசனிடம் வந்து முறையிட்டுக்கொள்ளலாம் என்பதைக் குறிப்பதற்கே நியாய முரசு அடிக்கப்பட்டது. அரசன் அக்கிரமம் செய்வோர்க்கு அடிபணிய மாட்டான்; பொதுமக்களை நல்வாழ்வு வாழச் செய்வதற்கே உயிர் வாழ் கின்றவன்; நாட்டின்மீது படையெடுத்து வரும் பகைவர்களுக்கு அஞ்சமாட்டான்; அவர்களை எதிர்த்து விரட்டியடிக்கும் இயல்புள்ளவன் என்பதற்காகவே வீரமுரசு முழங்கிக் கொண்டிருக்கும். அரசன் தந்நலங் கொண்டவன் அல்லன்; மக்களின் நன்மைக்காகவே உயிர் வாழ்கிறவன்; மக்களுக்கு வரும் தீங்கை உயிர் கொடுத்து நீக்கும் உள்ளம் படைத்தவன்; வறுமைத் துன்பத்தோர்க்குப் பொருள் வழங்கிக் காப்பாற்றுவான்; புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லையென்னாமல் கொடையளிக்கும் இயல்புள்ளவன்; உடல், பொருள், ஆவி மூன்றையும், நாட்டுக்காகவும், நாட்டு மக்கள் நன்மைக்காகவும் அர்ப்பணிக்கும் பண்புள்ளவன் என்பதற்காகவே தியாக முரசு அடிக்கப்பட்டு வந்தது. இன்றும்கூட, அர்த்தம் இல்லாமலே, அரசர் இல்லாத பழைய அரண்மனை வாசல்களில் முரசங்கள் முழங்குவதைக் காணலாம். இதைப் பழமையின் சின்னம் என்று தான் கூறவேண்டும். பண்டைத் தமிழ் வேந்தர்கள் தங்கள் வாழ்நாளைப் பயன் உள்ள வழியிலே கழித்தனர். வறியோர்க்கு வழங்குவது, கலைஞர் களைக் காப்பது, அறத்தைப் பாதுகாப்பது, தாமும் இன்பம் அனுபவிப்பது, தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்று வள்ளுவர் கூறியதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்வது- இவைகளைப் பழந்தமிழ் மன்னர்கள் பின்பற்றி வாழ்ந்தனர். ஆதலால்தான் அவர்கள் மக்களிடம் மதிப்புப் பெற்றுத் தெய்வப்பிறவியாக மதிக்கப்பட்டு வாழ்ந்தனர். மன்னரும் மக்களும் நன்றி உணர்ச்சி நன்றி மறக்காத தன்மை ஒரு சிறந்த பண்பாகும்; இப்பண்பு மக்களிடம் மட்டும் அல்லாமல் ஏனைய உயிர்களிடமும் உண்டு; மாடு, ஆடு, குதிரை முதலிய விலங்கினங்கள் தங்களை வளர்ப்போரிடம் நன்றி காட்டுகின்றன. நாயின் நன்றியறிவை அறியாதார் இல்லை. அதன் நன்றியறிவைப் பற்றி விளக்கிக் கூறும் கதைகள் பல உண்டு; இலக்கியங்களில்கூட நாயின் நன்றி அறிவு பாராட்டப்பட்டிருக்கின்றது. ஆதலால் பகுத்தறிவுள்ள மனிதன் நன்றியறிவுடன் இருப்பதில் வியப்பில்லை. மக்களிலே நன்றி மறந்தவர்கள் இருப்பதுதான் வியப்புக்குரியது. உதவி செய்தோரை மறக்கும் மனிதர்கள்- அவர்களைப் பற்றி உள்ளத்தில் எண்ணாத மனிதர்கள்- உதவி செய்தோர்க்கு உலை வைக்க முந்தும் மனிதர்கள்- உண்டு. இவர்களை மக்கள் என்று கூறமுடியாது. உருவத்தில்தான் இவர்கள் மக்கள்; செயலில் யாரோ அறியோம் என்றுதான் சொல்லவேண்டும். நல்லவர்களிடம் நன்றியறியும் குணம் உண்டு. இதைத்தான் செய்ந்நன்றி அறிதல் என்பார்கள். இதன் சிறப்பை- இன்றியமை யாமையை- வள்ளுவர் விளக்கியிருக்கின்றார்; செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்திலே இதைக் காணலாம். பண்டைத் தமிழ் மக்களிடம் இப்பண்பு படிந்திருந்தது. இப்பண்புக்கு நாம் பல சான்றுகளைத் தேடித்திரிய வேண்டாம். அரசருக்கும் மக்களுக்கும் இருந்த தொடர்பை மட்டும் பார்த்தாலே போதும். பண்டைத் தமிழ் மக்கள் தங்கள் மன்னர்களைத் தெய்வ மாகவே மதித்துவந்தனர். அரசர் வாழ்வே தங்கள் வாழ்வென்று எண்ணிவந்தனர். அரசர் வாழ்வுக்காகத் தெய்வங்களை வணங்கி வந்தனர். எல்லாப் பெரியோர்களும் அரசர்களை வாழ்த்தி வந்தனர். இதற்குக் காரணம், அரசர்கள் மக்கள் நலமே பெரி தென்று வாழ்ந்ததுதான். இதனாற்றான் மன்னர்கள் மக்கள் மனத்திலே குடியிருந்தனர். பண்புள்ள வேந்தர்கள் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் புலவர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை வாழ்த்திப் பாடியிருக் கின்றார். அவன் நீடூழி காலம் நிலைத்து வாழவேண்டும் என்று மனமார வாழ்த்தியிருக்கின்றார். மக்கள் சார்பாகவே முடிநாகராயர் மன்னனை வாழ்த்துகின்றார். குதிரைப் படைகளையுடைய பாண்டவர்களுடன், கௌரவர் நூற்றுவர் மாறுபட்டனர்; அவர்களுக்குரிய நாட்டையும் தமது நாடாகக் கவர்ந்துகொண்டனர். இதனால் பாரதப்போர் விளைந்தது. இப் போரிலே துரியோதனாதியர் நூறு பேரும் போர் செய்து போர்க்களத்திலே மடியும் வரையிலும் இருபக்கத்துப் படைகளுக்கும் உணவிட்டாய். வேண்டிய அளவு உணவை மிகுதியாக அளித்தாய். இத்தகைய வள்ளன்மை பொருந்திய சேரனே! பால் தன் இனிமை ஒழிந்து புளிப்பேறினாலும், கதிர் தன் விளக்கம் குன்றி இருண்டு போனாலும், நான்கு வேதங்களில் கூறப்பட்ட ஒழுக்கமுறைகள் மாறுபட்டாலும், நீ நெடுங்காலம் அழிவின்றி வாழ்வாயாக! அந்திக் காலத்திலே, சிறிய கன்றுகளுடன், பெரிய கண்களை யுடைய மான் பிணைகள், அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயாகிய விளக்கு வெளிச்சத்திலே தூங்கிக்கொண்டிருக்கும். இத்தகைய காட்சியையுடையன பொன்னொளி பொருந்திய சிகரங்களை யுடைய இமயமலையும், பொதியமலையும்; இந்த மலைகள் என்றும் நிலைத்து நிற்பன; இம் மலைகளைப் போல நீயும், உனது பண்பு வேறுபடாத சுற்றமுடன் நிலைத்து வாழ்வாயாக! என்பதே அவர் கூறும் வாழ்த்து. அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை ஈர்ஐம் பதின்மரும் பொதுகளத்து ஒழியப் பெரும்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்; பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நாஅல் வேதம் நெறி திரியினும், திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி நடுக்கின்றி நிலியரோ! அத்தை; அடுக்கத்துச் சிறிதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை அந்தி அந்தணர் அரும்கடன் இறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே. (2) இதுவே புறநானூற்றுப் பாடற் பகுதி. இச்செய்யுளிலே மன்னனும் வள்ளல்; அவனுடைய அமைச்சர்கள் முதலிய அலுவலர்களும் நல்லவர்கள்; அனை வரும் நாட்டின் நலத்தை நாடுவோர் என்ற குறிப்பைக் காணலாம். திரியாச் சுற்றம் என்ற சொற்றொடர் அமைச்சர் முதலியோரின் பண்பை விளக்கிற்று. அரசன் கருத்துடன் மாறுபடாதவர்கள், அவனுடன் ஒத்துழைப்பவர்கள், தந்நலத்தால் குணங் கெட்டுக் குற்றம் செய்யாதவர்கள் என்ற பொருளை யுடையது இத்தொடர். இத்தகைய மன்னரை மக்கள் ஏன் வாழ்த்தமாட்டார்கள்? காரி கிழார் என்னும் மற்றொரு புலவர், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமியை வாழ்த்திப் பாடியிருக்கின்றார். இப்பாடலும் மக்கள் மன்னர்களை ஏன் மனமார வாழ்த்தினர் என்பதை விளக்குவதற்குத் துணை செய்யும். உன்னுடன் போர் செய்ய முன் வந்த உன் பகைவர்களின் கோட்டைக்குள், கடல் போன்ற உன் படைகள் நுழைவதற்காக முதலில் உனது யானையை ஏவுவாய்; பசுமையான விளை நிலங்களின் பக்கத்திலேயுள்ள கோட்டைகள் பலவற்றையும் கைக்கொள்வாய். அக் கோட்டைகளிலே கைப்பற்றிய அழகாகச் செய்யப்பட்ட அணிகலன்களையெல்லாம் பரிசிலர்க்கு அவரவர் தகுதியறிந்து கொடுத்துவிடுவாய். உனது குடையானது முனிவர் போற்றும் முக்கண் மூர்த்தியான சிவபெருமான் கோயிலை வலம்வரும்போது தாழ்க; சிறந்த நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர்கள் உன்னை வாழ்த்தும்போது எடுத்த கையின் எதிரில் உன் தலை வணங்குக; பகைவர்களின் நாட்டைச் சுடும்போது எழுந்து சுற்றும் புகையினால் மட்டும் உனது மலர் மாலை வாடுக; உனது மனைவிமார்களின் ஊடிய முகத்தைக் காணும் போது, உனது வெகுளி- சினம்- தணிவதாக; இவ்வாறு உனது வெற்றியால் நீ செருக்கடையாமல், அவ் வெற்றியை உன் உள்ளத்திலே அடக்கிக்கொண்டு வாழும் ஆற்றல் அமைந் தவனே! என்றும் குன்றாத கொடையை உடையவனே! மிகுந்த பெருமையை உடைய குடுமியே! நீ இவ்வுலகிலே குளிர்ந்த ஒளியை உடைய சந்திரனைப் போலவும், சுடுகின்ற ஒளி பொருந்திய கதிர்களை யுடைய சூரியனைப் போலவும் நிலைத்து வாழ்வாயாக! இதுவே காரி கிழார் கூறும் அரச வாழ்த்து. இதுவும் மக்கள் மன்னரிடம் கொண்டிருந்த அன்பை விளக்குவதாகும். செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடல்படை குளிர்ப்ப மண்டி, அடல்புகர்ச், சிறுகண் யானை செவ்விதின் ஏவிப், பாசவல் படப்பை ஆர்எயில் பலதந்து, அவ்எயில் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப், பணியியர் அத்தைநின் குடையே முனிவர் முக்கண் செல்வர் நகர்வலம் செலற்கே; இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதீரே; வாடுக இறைவநின் கண்ணி, ஒன்னார் நாடுசுடு கமழ்புகை எறித்த லானே; செலியர் அத்தைநின் வெகுளி வால்இழை மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே; ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய தண்டா ஈகைத் தகைமாண் குடுமி! தண்கதிர் மதியம் போலவும், தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெருமநீ திலமிசை யானே. (புறம். 6) இதுவே மேலே காட்டிய பொருள் அமைந்த பாடற் பகுதியாகும். சுருக்கமாகக் கூறினால், மன்னர்களை வாழ்த்துவதே புறநானூறு ஆகும். புறநானூற்றின் பெரும்பாலான பாடல்கள், மன்னர்களின் வீரம், கொடை, புகழ், நீதி முறை இவற்றைப் பாராட்டிச் சொல்லுகின்றனவாகவே அமைந்திருக்கின்றன. பதிற்றுப்பத்து நூல் முழுவதும் மன்னர்களை வாழ்த்தும் பாடல்களே. பதிற்றுப்பத்தில், இன்று நமக்குக் கிடைத்திருக்கும் எட்டுப்பத்துக்களும், எட்டுச் சேர மன்னர்களின் பெருமையை எடுத்துக்காட்டுகின்றன. பத்துப்பாட்டிலே ஏழு பாட்டுக்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் பெருமையைப் பாராட்டும் பாடல்களேயாம். பொருநர் ஆற்றுப்படை, பட்டினப்பாலை இரண்டும் கரிகால் பெருவளத்தானைப் பாராட்டும் பாடல்கள். மதுரைக் காஞ்சியும், நெடுநல்வாடையும் பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்தும் பாடல்கள். பெரும்பாண் ஆற்றுப்படை தொண்டை மான் இளந்திரையனைப் பாராட்டும் பாட்டு. சிறுபாண் ஆற்றுப்படை நல்லியக் கோடனைப் புகழும் பாட்டு. மலைபடு கடாம் நன்னனைப் பற்றிப் பாராட்டும் பாட்டு. இவ்வாறு பத்துப்பாட்டில் ஏழு பாடல்கள் மன்னர்களை வாழ்த்தும் பாடல்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இதுவும் பண்டைக்கால மக்கள் மன்னர்கள்பால் எவ்வளவு அன்பு கொண்டிருந்தனர் என்பதை விளக்கும். படைவீரர் பண்பு பண்டைக் காலத்தில் அரசன் படையில் இருந்த வீரர்கள், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்யும் தன்மையுள்ளவர் களாயிருந்தனர். அவர்கள் அரசனையும் நாட்டையும் ஒன்றாகவே எண்ணினர். இத்தகைய உறுதியும், அன்பும் உள்ளவர்களையே படைவீரர்களாகச் சேர்த்து வந்தனர். உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்சீர் குன்றல் இலர். (குறள். 778) போர் மூண்டால், உயிருக்கு அஞ்சாமற் போர் புரியும் வீரர்கள், அரசன் தம்மேல் சினந்தாலும் சிறந்த தம் கடமையில் தவற மாட்டார்கள் என்று வள்ளுவர் படை வீரர்களின் தன்மையை எடுத்துக் கூறுகின்றார். பண்டைக் காலப் படைவீரர்கள் அரசன் வெற்றிக்காக உயிர்விடப் பின்வாங்குவதில்லை. இது படைவீரர்களின் நாட்டுப் பற்றையே விளக்குவதாகும். அரசன் தெய்வப் பிறவி அரசனைத் திருமாலுக்குச் சமமாகப் பாராட்டி அவனை வாழ்த்தி வந்தனர். இவ்வழக்கம் தொல்காப்பியர் காலத்திலே தமிழகத்தில் இருந்தது. இதைப் பூவை நிலை என்று குறிப்பிடு கின்றார் தொல்காப்பியர். இதனை, மாயோன் மேய மன்பெரும் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் என்ற புறத்திணை இயல் சூத்திரப் பகுதியால் அறியலாம். மாயோனாகிய திருமாலுக்குரிய நிலைத்த பெருமையையும், அழியாத புகழையும், மன்னனோடு இணைத்துப் பாராட்டும் பூவை நிலையும் என்பதே இதன் பொருள். இதனால், அரசனைத் திருமாலின் அவதாரம் என்று நினைக்கும் ஒரு நம்பிக்கை பண்டைத் தமிழகத்தில் நிலவி இருந்ததைக் காணலாம். பண்டைப் படைவீரர்கள், தம் அரசன் வெற்றி பெற வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக்கொள்ளுவார்கள்; தங்கள் தலையைத் தாங்களே தெய்வத்தின் முன்னிலையில் பலிபீடத்தில் அறுத்து வைப்பார்கள். இந்த வழக்கம் தமிழகப் படைவீரர்கள் பால் இருந்தது. ஆர்த்துக் களம்கொண்டோர் ஆர் அமர் அழுவத்துச் சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை வெற்ற வேந்தன் கொற்றம் கொள்கென நற்பலி பீடிகை நலம்கொள வைத்து ஆங்கு. (இந்திர விழவு, 83-86) ஆரவாரித்து வெற்றி கொண்டவர்கள், போர்க்களத்திலே, பகைவர்க்கு அச்சத்தைத் தந்து, கடைக்கண் சிவந்த கடுமையான பார்வையையுடைய தலையைத் தாமே அறுப்பர்; வெற்றியை யுடைய எமது அரசன் மேலும் வெற்றியடைக என்று வாழ்த்துவர்; நல்ல பலிபீடத்திலே, அரசன் நன்மை அடையும் படி வைப்பர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இதனால் பழங்காலத்துப் படைவீரர்கள் தங்கள் வேந்தர்களிடம் வைத் திருந்த உள்ளன்பை உணரலாம். முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும். (குறள். 388) நீதிமுறைகளைச் செய்து குடிமக்களைக் காப்பாற்றும் வேந்தன், மக்களுக்குத் தெய்வம் என்றே சிறப்பாக மதிக்கப்படுவான் என்ற வள்ளுவர் கூற்றும் மன்னர்களை- மக்களுக்கு நலம் புரிந்த மன்னர்களை- மக்கள் எப்படிப் போற்றி வந்தனர் என்பதைக் காட்டும். வள்ளுவர் கூறிய இவ்வுண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் தெளிவாக விளக்கிக் கூறியிருக்கின்றார். ஆய்ச்சியர் குரவையிலே இதனைக் காணலாம். கோவா மலை ஆரம், கோத்த கடல்ஆரம் தேவர்கோன் பூண் ஆரம் தென்னர்கோன் மார்பினவே; தேவர்கோன் பூண் ஆரம் பூண்டான் செழும்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருந்து ஒசித்தான் என்பரால். கோக்கப்படாத பொதியின் மலை ஆரம், கோக்கப்பட்ட கடல் ஆரம், இந்திரண் பூண்ட பூணாகிய ஆரம் இம்மூன்றும் பாண்டியன் மார்பிலே உள்ளன; இவ்வாறு தேவர்கோன் ஆரம் முதலியவற்றைப் பூண்டவன் யார் என்றால், செழிப்புள்ள துவாரகையிலே வளர்ந்தவன்; பசு மந்தையை மேய்த்தவன் குருந்த மரத்தை ஒடித்தவன் ஆகிய கண்ணன் என்பர். இவ்வாறு பாண்டியனைத் திருமாலாக வைத்துப் போற்றி வாழ்த்துகிறது இப்பாடல். பொன்இமயக் கோட்டுப் புலிபொறித்து மண் ஆண்டான் மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன் பொன் அம்திகிரிப் பொருபடையான் என்பர் ஆல். பொன்னாகிய இமயமலையின் உச்சியிலே தன் புலி முத்திரையைப் பொறித்தவன்; இமயமலையை வடவெல்லை யாகக் கொண்டு அதற்கு இப்பால் உள்ள நாட்டையெல்லாம் ஆண்டவன்; மதில் சூழ்ந்த புகார் நகரில் வாழ்கின்ற சோழ மன்னன்; அச்சோழன் யார் என்றால், பொன்னொளி வீசும் சக்கரப் படையைத் தனது போர்ப்படையாகக் கொண்ட திருமாலே என்பர். இப் பாடல் சோழ மன்னனைத் திருமாலின் உருவாகப் போற்றி வாழ்த்துகின்றது. முந்நீரின் உள்புக்கு மூவாக் கடம்புஎறிந்தான் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்; மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கல்நவில் தோள்ஓச்சிக் கடல்கடைந்தான் என்பர் ஆல். கடலின் உள்ளே சென்று, முதிராமல் செழித்து நின்ற கடம்ப மரத்தை வெட்டி எரிந்தவன்; வளங்கள் நிறைந்த வஞ்சிமாநகரில் வாழ்கின்ற வேந்தனாகிய சேரன்; அவன் யார் என்றால், மலை என்று சொல்லப்பட்ட தன் தோள்களை வீசிக் கடலைக் கடைந்த திருமால் என்று சொல்லுவர். இப்பாடல் சேரனைத் திருமாலின் அவதாரம் என்று கூறியது. மேலே காட்டிய சிலப்பதிகாரச் செய்யுள்கள், பாண்டிய, சோழ, சேர மன்னர்களைத் திருமாலின் அவதாரங்கள் என்றே கூறின. தொல்காப்பியக் கருத்தையும், வள்ளுவர் குறளையும் விளக்கும் முறையிலே இப்பாடல் அமைந்திருக்கின்றன. மன்னர்களைத் திருமாலின் வடிவமாக மக்கள் எண்ணினர் என்பதை நம்மாழ்வார் பாடல் ஒன்றும் கூறுகின்றது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்; உருவுடை வண்ணங்கள் காணில் உலகளந் தான்என்று துள்ளும்; கருஉடைத் தேஇல்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே என்னும் வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே என்பது திருவாய்மொழி. இதில் உள்ள திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் என்னும் அடி குறிப்பிடத் தகுந்தது. சிலப்பதிகாரப் பாடலின் கருத்தும், இதுவும் ஒத்திருப்பதைக் காணலாம். கலிங்கத்துப் பரணியிலே விசயதரனுடைய பிறப்பு வளர்ப் பைப்பற்றி அவதாரம் என்ற பகுதியிலே கூறப்படுகின்றது. 1. அன்று இலங்கை பொருது அழித்த அவனே, அப் பாரதப்போர் முடித்துப், பின்னை வென்றுஇலங்கு கதிர் ஆழி விசயதரன் என உதித்தான்; விளம்பக் கேண்மின்! 2. தேவர் எலாம் குறைஇறப்பத், தேவகிதன் திருவயிற்றில்; வசுதே வற்கு மூவுலகும் தொழநெடுமால் முன்ஒருநாள் அவதாரம் செய்த பின்னை, 3. இருள் முழுதும் புவிஅகல, இரவிகுலம் இனிதுஓங்க, இராச ராசன் அருள் திருவின் திருவயிறாம் ஆல்இலையின் அவதரித்தான் அவனே மீள. இவை செயங்கொண்டார் கூற்று. இலங்கையைப் போர் செய்து அழித்த இராமனே கண்ணனாகப் பிறந்தான்; பாரதப் போரை முடித்தான்; அவனே வெற்றி பெற்று விளங்குகின்ற சக்கரப் படையையுடைய விசயதரன் என்ற பெயருடன் பிறந்தான். தேவர்கள் பூமி பாரத்தை ஒழிக்கும்படி வேண்டிக் கொண்டனர்; அதனால் வசுதேவனுக்குத் தேவகியின் வயிற்றிலே திருமால் பிறந்தான்; மூவுலகும் தொழுது வணங்கும்படி கண்ணனாகப் பிறந்தான். அதன்பின் உலகில் உள்ள இருள் நீங்க, சூரிய குலம் புகழ் பெற்று ஓங்க இராசஇராசனுடைய மகள் வயிறாகிய ஆலிலை யிலே விசயதரனாக அவதரித்தான். இச்செய்திகளே மேலே காட்டிய கலிங்கத்துப் பரணிப் பாடல்களிலே கூறப்பட்டன. ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட உலாக்கள் எல்லாம் மன்னர்களைத் திருமால் அவதாரம் என்றே கூறுகின்றன. கையும் மலர் அடியும், கண்ணும், கனிவாயும் செய்ய கரிய திருமாலை. (விக்கிரம சோழன் உலா. 158) கைகளும், மலர் போன்ற அடிகளும், கண்களும், கனி போன்ற வாயும், சிவந்திருக்கின்ற கரிய நிறமுள்ள திருமாலாகிய விக்கிரம சோழனை என்று விக்கிரமச் சோழனைத் திருமாலாகவே கூறுகிறார் ஒட்டக்கூத்தர். ஒறுக்கும் மிதிலை ஒருவில்லைத் தொல்லை இறுக்கும் அவன் இவன் என்பார்- மறுக்காமல் சென்று கனைகடல் தூர்த்துத் திருக்குலத்து நின்ற பழிதுடைப்பாய் நீ என்பர். (குலோத்துங்க சோழன் உலா. 116-117) இவைகள் குலோத்துங்க சோழன் உலாவிலே கண்டவை. குலோத்துங்க சோழனை இராமனாக உருவகம் செய்திருப்பதை இக் கண்ணிகளிலே காணலாம். சிலையால் வழிபடு தெண்திரையைப் பண்டு மலையால் வழிபட வைத்தோன் என்று இராசராச சோழன் உலாவிலே இராசராசன் இராமனாகக் கூறப்படுகின்றான். இராசராச சோழன் உலாவிலே பின்னும் அவன் திருமாலின் அவதாரமாகவே கூறப்படுகின்றான். மன்னவநீ, 379. முன்பு கருடன் முழுக்கழுத்தில் ஏறுவது; பின்பு களிற்றின் பிணர்க்கழுத்தே;- மின்போல் 380. இமைக்கும் கடவுள் உடையினைப்பண்டு; இப்போது அமைக்கும் துகிலினை அன்றே; - அமைத்தது ஓர் 381. பாற்கடல் சீபாஞ்ச சன்னியம்பண்டு; இப்போது கார்க்கடல் சென்று சங்கே;- சீர்க்கின்ற 382. தண் அம் துழாய்பண்டு சாத்தும் திருத்தாமம்; கண்ணிஇன்று ஆரின் கவட்டுஇலையே;- தண்என்ற 383. பள்ளி அறை பாற்கடலே பண்டு; திருத் துயில்கூர் பள்ளி அறை இன்று பாசறையே. இவ்வடிகளும், இராசராச சோழனைத் திருமாலின் அவதார மாகவே கூறுகின்றன. செயங்கொண்டாரால் பாடப்பட்ட கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தப் புலவரால் பாடப்பட்ட மூவர் உலா இவைகள் எல்லாம் மன்னர்களை வாழ்த்தும் நூல்களேயாகும். மூவருலா என்பது, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா, ஆகிய மூன்றும் சேர்ந்த தொகுதி. ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணியிலும் மன்னர் புகழைப் பாடாமல் விடவில்லை. சோழ மன்னர்களின் பெருமை யைப் பாராட்டிப் பாடுகின்றார். சிவஞானச் செல்வராகிய ஞானசம்பந்தரும் மன்னனை வாழ்த்துகின்றார். வாழ்க அந்தணர், வானவர் ஆன்இனம்; வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக; ஆழ்க தீயஎல்லாம்; அரன் நாமமே சூழ்க; வையக மும்துயர் தீர்கவே என்பது சம்பந்தர் பாடல். மன்னன் சிறந்து வாழ்க என்று வாழ்த்துகின்றார். மன்னர்களின் பாதுகாவலால்தான் மக்கள் நலம் பெற்று வாழ முடியும் என்ற நம்பிக்கை நிலவியிருந்த காலத்தில் அனைவரும் இவ்வாறு மன்னனை வாழ்த்தினர். மேலே கூறியவைகளால், தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், திருவாய்மொழி, கலிங்கத்துப்பரணி, மூவர் உலா, தேவாரம் முதலிய நூல்கள் எல்லாம் மன்னர்களை வாழ்த்தின; அவர்களைத் தெய்வப் பிறவியாக மதித்தன என்பதை அறியலாம். மக்கள் நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு உழைப்ப வர்கள் எக்காலத்திலும் போற்றப்படுவார்கள்; எல்லோராலும் போற்றப்படுவார்கள். இன்றும் மக்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் அரசியல் தலைவர்கள் போற்றப்படுகின்றனர்; மக்கள் நலங் கருதி உழைக்கும் அரசாங்கத் தலைவர்கள் கொண்டாடப் படுகின்றனர். மக்கள் நன்மை ஒன்றையே கருதி உழைப்பவர்கள், மன்னர்களைவிட இன்னும் மிகுந்த சர்வாதிகாரம் படைத்தவர் களாயிருந்தாலும் அவர்களும் போற்றப்படுகின்றனர் நமது நாட்டில் வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்திலே அரசாங்கத் தொடர்புள்ள ஒவ்வொரு விழாக்களின் முடிவிலும் அரச வாழ்த்துப் பாடும் வழக்கம் இருந்தது. இன்றும் இங்கிலாந்திலே அவ்வழக்கம் உண்டு; அரசர்கள் ஆளும் நாடுகளில் எல்லாம் அரச வாழ்த்துப் பாடும் வழக்கம் உண்டு. இது போலவேதான் பண்டைத் தமிழகத்தில், மக்கள் மன்னர் களைக் கொண்டாடி வந்தனர். ஆனால் தமிழ் மக்கள் மன்னர் களின் ஆணைக்கு அஞ்சி அவர்களைப் போற்றவில்லை; அவர்களுடைய பணியைப் பாராட்டிப் போற்றினார்கள். இந்த உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. இனி, மன்னர்களின் ஆட்சி வரப்போவதில்லை; மக்களாட்சி தான் இனித் தொடர்ந்து வாழ முடியும். மக்களாட்சியைத் திறம்பட நடத்திவைக்கும் தலைவர்கள் - தந்நலம் அற்ற சான்றோர்கள்- நாட்டு மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் - மக்களால் போற்றப்படுவார்கள் என்பதில் ஐயம் இல்லை; பழைய மன்னர்கனைப் போலவே பாராட்டத் தான் பெறுவார்கள். இது மக்கள் இரத்தத்தோடு கலந்திருக்கும் பழம்பெரும் பண்பாடு; செய்ந்நன்றி அறிதல் என்னும் சிறந்த ஒழுக்கம். மன்னர்களின் மாண்பைப்பற்றி இவ்வாறு பண்டை இலக்கியங்கள் கூறுகின்றன; அவர்களிடம் மக்கள் கொண்ட நம்பிக்கையைப் பற்றிப் பலவாறு பாராட்டியிருக்கின்றன. இந்தப் பழமையை வைத்துக்கொண்டு, சிலர், மீண்டும் மன்னர் ஆட்சி ஏற்படவேண்டும்; மன்னர் ஆட்சி ஏற்பட்டால்தான் பழைய தர்மங்கள் காப்பாற்றப்படும் என்று சொல்லுகின்றனர். இவர்கள் நம்பிக்கையும் பேச்சும் பயன் தராத நம்பிக்கை; வீண் பேச்சு என்பதில் ஐயம் இல்லை. அறப்போர் புரிந்த அரசர்கள் பழந்தமிழ் நாட்டிலே எப்பொழுதும் அமைதி குடி கொண்டிருந்தது என்று கூற முடியாது. பழந்தமிழ் வேந்தர்கள் அமைதியுடன் வாழ்ந்தனர் என்று சொல்லவும் முடியாது. அவர்கள் அடிக்கடி போர் புரிந்து கொண்டிருந்தனர். மூடியு டைய வேந்தர்கள் மூவரும் ஒற்றுமையுடன் உறைந்த காலம் குறைவுதான்; போரிட்டுப் பொழுது போக்கிய காலந்தான் மிகுதி. இவ்வாறு எண்ணும்படிதான் புறப்பொருள் இலக்கியங்கள் இருக்கின்றன. புறநானூறும், பதிற்றுப்பத்தும் தமிழ் வேந்தர் களின் வீரத்தைப் போற்றும் நூல்கள். அவர்கள் தம் போர் வெற்றியைப் புகழ்ந்து பேசும் பாடல்களே அவற்றுள் மிகுதியாகக் காணப்படுகின்றன. புகழுக்காகப் போர் புகழ் வேண்டிப் போர் புரிந்த மன்னர்கள் சிலரும் பண்டைத் தமிழகத்தில் இருந்தனர். தமிழ் மன்னர்களிலே சிலர் புகழுக்காகவே போர் புரிந்து வந்தனர். இவ்வுண்மையை விளக்கும் பாடல்கள் பல, பழந்தமிழ் நூல்களிலே காணப்படுகின்றன. உதாரணமாகப் புறநானூற்றுப் பாட்டு ஒன்றைக் காண்போம். சிறப்பு மிகுந்த மரபினர் பொருளையும் இன்பத்தையும் உயர்ந்தனவென்று எண்ணமாட்டார்கள்; அவர்கள் அவை களை அறத்திற்குப் பிற்பட்டன என்றே எண்ணுவர். அதுபோல; அறத்தைக் காப்பதற்காகவே உயர்ந்து நிற்கும் உனது குடை, சேர பாண்டியர்களின் குடைகள் பின்னிற்கும்படி சிறந்து முன்னிற்கும். ஒளி மிகுந்த முழுமதியைப்போல் உனது புகழ் உயர்ந்து நெடுந்தூரம் பரவி நிற்கும். நீயும் அப் புகழ்வேட்டையையே விரும்புவாய். அதன் பொருட்டு, பகைவரை வெல்லுவதற்காகப் போர்ப் பாசறையையே நீ விரும்புவாய்; இதைத் தவிர வேறு ஒன்றையும் விரும்பமாட்டாய். தமது தந்தங்களின்முனை மழுங்கும்படி, மோதி வலிமை யுள்ள பகைவரின் கோட்டைச் சுவரிலே பாயும், உனது யானை களும் சும்மா அடங்கிக் கிடப்பன அல்ல. வீர கண்டாமணியை அணிந்த உனது படை வீரர்களோ, போர் என்ற சொல்லைக் கேட்டாலோ இதோ வந்தோம், வந்தோம் என்று குதித்தெழுவார்கள். காடுகளைக் கடந்து செல்லவேண்டிய நாடு; தூரத்தில் உள்ள நாடு; அங்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லமாட்டார்கள். கல் என்ற ஆரவாரத்துடன், விழா நிறைந்த வேற்று நாடாகிய அவ்விடத்திலே தங்குவாய்; அவ்விழாவிலே கலந்து கொள்ளுவாய். கீழ்க்கடல் பின்னே நிற்க, மேற்குக் கடலின் அலைகள் உனது குதிரையின் குளம்புகளை மோதும்படி இந் நாட்டை வலமாக வந்துகொண்டே யிருப்பாய். வடநாட்டு அரசர்கள், நீ இவ்வாறு செய்யக்கூடியவன் என்று நினைத்து அஞ்சுகின்றனர். அதனால் அவர்கள் நெஞ்சத்திலே நடுங்கும் படியான துன்பம் மிகுந்தது. அத் துன்பம் அவர்களைத் தூங்காத கண்களை உடையவர்களாகச் செய்தது. இதுவே அந்தப் புறநானூற்றுப் பாடலில் அடங்கியுள்ள பொருள். கோவூர் கிழார் என்னும் புலவரால் சோழன் நலங்கிள்ளியைப் பற்றிப் பாடப்பட்டது. சிறப்புடை மரபில், பொருளும், இன்பமும், அறத்துவழிப் படூஉம், தோற்றம் போல, இருகுடை பின்பட ஓங்கிய, ஒருகுடை உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க நல்இசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் பாசறை அல்லது நீஒல் லாயே; நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார் கடிமதில் பாயும்நின் களிறு அடங் கலவே; போர்எனில் புகலும் புனைகழல் மறவர் காடு இடைக் கிடந்த, நாடுநனி சேஎய, செல்வேம் அல்லேம் என்னார்; கல்என் விழவுஉடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக் குணகடல் பின்னது ஆகக், குடகடல் வெண்தலைப் புணரி, நின் மான்குளம்பு அலைப்ப வலம்முறை வருதலும் உண்டு, என்று அலம்வந்து நெஞ்சம் நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே. (புறம். 31) இப்பாடல், புகழ் விரும்பிப் போர் செய்த மன்னர்கள் சிலர் தமிழகத்தில் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. அவர்கள் புகழை விரும்பிப் போர் புரிந்தார்களாயினும், அவைகள் பெரும்பாலும் அநீதியை எதிர்த்துச் செய்த போர் களாகத்தான் காணப்படுகின்றன; மக்கள் நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு புரிந்த போர்களாகத்தான் காட்சி அளிக்கின்றன. போர் தோன்றுவதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அந்தக் காரணம் அறத்தை அடிப்படையாகக் கொண்ட தாகவும் இருக்கலாம் அல்லாதவைகளை அடிப்படை யாகக் கொண்டதாகவும் இருக்கலாம். பழந்தமிழ் மன்னர்கள் புரிந்த போர்களிலே பெரும் பாலானவை அறத்தை அடிப்படையாகக் கொண்டவை; சிறு பான்மையே அல்லாதவைகளை அடிப்படையாகக் கொண்டவை. போரால் நாசம் பண்டைக் காலத்தில் நடந்த சண்டைகளினால் நாட்டின் செல்வங்களுக்கு நாசம் நேர்ந்தது. மக்களால் உழைத்துச் சேர்த்த பண்டங்கள் பாழாக்கப்பட்டன. நாடு நகரங்கள் அழிக்கப் பட்டன. போரினால் இந்தக் காலத்தில் ஏற்படும் நாசம் போலவே அந்தக் காலத்திலும் ஏற்பட்டன என்பதில் ஐயம் இல்லை. இதனை, வாடுக இறைவநின் கண்ணி ஒன்னார் நாடுசுடு கமழ்புகை எறித்தலானே (புறம் 6) என்ற பகுதியாற் காணலாம். இறைவனே, நீ அணிந்திருக்கும் மலர்மாலை, பகைவர்களின் நாடுகளைச் சுட்டெரிப்பதனால் எழும் புகை வீசுவதனால் வாடுவதாக. வேறொன்றினாலும் வாடுவதில்லை என்பதே இதன் பொருள். இது பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியது. இதனால் பண்டைக்காலப் போரினால் நாடு நகரங்கள் பாழ்பட்டமை காணலாம். நாடு நகரங்கள் தீக்கிரை யாகும்போது பண்டங்கள் எல்லாம் பாழாகும் என்பதிலும் ஐயம் இல்லை. வென்ற மன்னர்கள், தோற்ற மன்னர்களின் கோட்டை களைச் சிதைப்பார்கள். மாடமாளிகைகளை இடித்துத் தரை மட்டமாக்குவார்கள். மாடமாளிகைள் இருந்த இடங்கள் எல்லாம் கழுதைகள் மேயும் குட்டிச் சுவர்களாகிவிடும். அந்த இடங்கள் கழுதைகள் பூட்டிய ஏரால் உழப்படும். நல்ல வளம் பொருந்திய வயல்கள் எல்லாம் பாழாக்கப் படும்; நீர் நிறைந்த நஞ்சை நிலங்கள் எல்லாம் குதிரைகள் பூட்டிய தேரோடும் திடல்களாக்கப்படும். போரால் இத்தகைய நாசங்கள் நிகழும். பகைவர் மேல் ஆத்திரங் கொண்ட மன்னர்கள் இவ்வாறு செய்வார்கள். வெற்றி வெறி இத்தகைய நாசவேலைகளையெல்லாம் செய்யத் தூண்டும். கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய தனையவர் நனம்தலை நல்எயில், புள்ளினம் இமிழும் புகள்சால் விளைவயல் வெள்உளைக் கலிமான் கவிகுளம்பு உகளத் தேர்வழங் கினைநின் தெவ்வர் தேஎத்து. (புறம். 15) விரைந்து செல்லும் உன்னுடைய தேர்களால் தெருவிலே குழி விழுந்து சேறாகிவிடும். அந்தப் பள்ளங்களில் வெண்மையான வாயையுடைய அற்பமான கழுதைகளை ஏரிலே பூட்டி ஓட்டு வாய். இவ்வாறு எதிரிகளின் கோட்டைகளைப் பாழ்படுத்தினாய். உன்னுடைய பகைவர் நாட்டிலே பறவைக் கூட்டங்கள் நிறைந்து ஓசையிட்டுக் கொண்டிருக்கின்ற சிறந்த விளைநிலங்களை யெல்லாம் பாழ்படுத்தினை; அவ்விளை வயல்களிலே வெண்மை யான பிடரிமயிரையும், செருக்கையும் உடைய குதிரைகளின் குளம்புகள் துவைக்கும்படி உனது தேர்களை ஓட்டினை. இதுவும் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பற்றிய பாடல். போர் அறம் பண்டைக் காலத்தில் இக்காலத்தைப் போலவே போரினால் நாட்டுக்குக் கேடு விளைந்தது என்பதில் ஐயம் இல்லை. ஆனால் ஒன்று; பண்டங்கள் பாழாயினவேயன்றிப் பொதுமக்கள் உயிரை அவர்கள் பாழ்படுத்தவில்லை. போர் முனையில் நிற்போர்தான் உயிரிழந்தனர். போர் முனைக்குத் தகுதி யற்றவர்கள் பாதுகாக்கப் பட்டனர். போரை விரும்பாத மக்களும் தப்பித்துக் கொள்ளலாம். இந்த அறத்தைத் தமிழ் மன்னர்கள் பின்பற்றி வந்தனர். போர் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் பொது மக்களுக்கு அறிவித்துவிடுவார்கள். பொதுமக்கள் போர் நிகழும் இடத்திலிருந்து தப்பித்து வெளியேறுவதற்குக் காலங் கொடுப் பார்கள். அவர்கள் வெளியேறிய பின்பே போர் தொடுப்பார்கள். இதுதான் சிறந்த யுத்த தர்மம் ஆகும். ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும், பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அரும்கடன் இறுக்கும் பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடுவிடுதும். நும் அரண் சேர்மின் (புறம். 9) பசுவும் பசுக்களின் தன்மையுடைய பார்ப்பனர்களும், பெண் களும், நோயாளிகளும், முன்னோர் முறையைப் பாதுகாத்து, பிதுர் உலகில் வாழ்வோர்க்கு அரிய கடன்களைச் செய்வதற்குரிய புதல்வரைப் பெறாதவர்களும் வெளியேறி விடுங்கள். விரைவிலே எமது கணையைத் தொடுத்துவிட்டுப் போர் செய்யப்போ கின்றோம். ஆதலால், உங்கள் உயிருக்குக் கேடு நேராமல் பாதுகாப்பான இடத்தைத் தேடிக்கொண்டு போய் விடுங்கள். இவ்வாறு போர் தொடங்குமுன் அறிவிப்பார்கள். இதுதான் தமிழர் பின்பற்றி வந்த போர் அறம். தமிழ் மன்னர்கள் இந்த அறத்தைப் பின்பற்றியே போர் புரிந்து வந்தனர். இக்காலத்தில் போர் நிகழ்ந்தால், படை வீரர்களின் உயிரைவிடப் பொதுமக்களின் உயிர்களே மிகுதியாகக் கொள்ளை கொள்ளப்படுகின்றன. அமைதியான வாழ்வை விரும்பும் பொதுமக்களை அழிக்கும் படை வகைகளே இக் காலத்திலே மிகுதியாகக் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இது மறப்போருக்கே அடிப்படை. போரிலே தோற்றுப்போன நாட்டை மீண்டும் தலைதூக்கவிடாதபடி நசுக்குவதே இக்கால போர் வெறியர்களின் மனப்பான்மை. பண்டைத் தமிழ் மன்னர் களின் தன்மை இதற்கு மாறானது. பகைவரிடம் கவர்ந்த நாட்டையும் தம்நாடு போலவே பாதுகாப்பார்கள். அகநாடு புகுந்து அவர் அருப்பம் வௌவி, யாண்டுபலகழிய வேண்டுபுலத்து இறுத்து, மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில். (மதுரைக்காஞ்சி. 149-151) பகைவர்களுடைய நாடுகளிலே புகுந்து அவர்களுடைய அரண் களைப் பிடித்துக்கொள்ளுவாய். நீ கைப்பற்றிய அப்பகைவர் களின் நாடுகளிலே பல்லாண்டுகள் தங்கியிருப்பாய். போரினால் பாழ்பட்ட அந்நாடுகள் வளம் பெற்று வாழ்வதற்கான சீர்திருத்தங்களைச் செய்வாய். இத்தகைய பெருமையும் போர் வல்லமையும் பொருந்தியவனே என்று பாண்டிய மன்னன் பாராட்டப்படுகின்றான். இதனால் அக்காலத்து மன்னர்கள் எந்த நாட்டு மக்களிடமும் வெறுப்புக் கொண்டவர்கள் அல்லர் என்பதைக் காணலாம். தோற்றாரைத் துன்புறுத்தார் பண்டைத் தமிழ் வேந்தர்களிடம் மற்றொரு சிறந்த அறம் குடிகொண்டிருந்தது. அவர்கள் தோற்றுப் போனவர்களைத் துன்புறுத்துவது அறம் அன்று என எண்ணினர். போரிலே அஞ்சி ஓடுகின்றவர்களை விரட்டிப் பிடிக்கமாட்டார்கள். தோற்றுப் போனவர்களைச் சிறையிலே பிடித்து வைத்துத் துன்புறுத்தமாட்டார்கள். இப்படிச் செய்வது வீரத்திற்கு- வெற்றிக்கு- ஆண்மைக்கு- அழகன்று என்று கருதினர். போரிலே தோற்றுப் பணிந்தவர்களைத் துன்புறுத்துவதும், ஓடிப் போனவர் களை விரட்டிப் பிடித்துக்கொண்டு வந்து துன்புறுத்துவதும் தமிழர் தகைமை அல்ல என்பதே பழந்தமிழர் கொள்கை. இவ்வுண்மையைச் சிலப்பதிகாரத்தாற் காணலாம். சேரன் செங்குட்டுவன் வடநாட்டிலே, தான் சிறை பிடித்த வேந்தர்களைக் கொண்டுபோய்த் தமிழகத்து மன்னர்களுக்குக் காட்டும்படி நீலன் என்னும் படைத் தலைவனை ஏவினான். அவன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டுச் சிறை செய்யப்பட்ட கனக- விசயர்களைத் தமிழ் மன்னர்களிடம் அழைத்துச் சென்றான். முதலில் சோழநாடு புகுந்தான் நீலன். சோழன் சித்திர மண்டபத்திலே இருந்தபோது, நீலன் அமரகத்து உடைந்த ஆரிய மன்னரொடு சென்றான். சோழனை வணங்கினான். அப்பொழுது சோழன் கூறியது குறிப்பிடத்தக்கது. பெரிய போர்க்களத்திலே மிகுந்த ஆண்மையுடன் போர் செய்து, தங்கள் வாள் குடை முதலியவைகளைப் போர்க் களத்திலே இழந்தவர்கள்; கொலையாகிய போரை இனிச் செய்யமாட்டோம் என்பதற்கு அடையாளமான கோலம் பூண்டவர்கள்; தங்கள் உயிரைக் காத்துக்கொள்வதற்காக ஓடினவர்கள் ஆகிய இத்தகையோரைப் போர்க்களத்திலே சிறை பிடித்தல் வெற்றியாகாது என்று தன் சேனைத் தலைவனைப் பார்த்து உரைத்தான். நின் அமர் அழுவத்து, நெடும்போர் ஆண்மையொடு வாளும், குடையும், மறக்களத்து ஒழித்து, கொல்லாக் கோலத்து, உயிர்உய்த் தோரை, வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று; என தலைத்தேர்த் தானைத்தலைவற்கு உரைத்தனன். (சிலப். நடுகல். 90-94) இந்நிகழ்ச்சி சிலப்பதிகாரத்திற் காணப்படுவது. போரிலே தோற்றவர்களைச் சிறை செய்வது போர் வெற்றியன்று என்பதைக் குறித்தது இது. இந்த அறத்திற்கு மாறாக நடந்த செங்குட்டுவன் செயலைச் சோழன் வெறுத்தான். ஆதலால் அவன், சேரன் படைத் தலைவனாகிய நீலனிடம் முகங் கொடுத்துக்கூட உரையாடவில்லை; தன் படைத்தலைவன் முகத்தைப் பார்த்து மேலே கூறியவாறு உரைத்தான். இந் நீலன், தோற்ற மன்னர்களைப் பாண்டியனிடம் காட்டச் சென்றபோது, பாண்டியன் புகன்றதும் குறிப்பிடத் தக்கது. போர்க்களத்தின் வெற்றி, பகை மன்னன் பக்கம் ஆகும் படி, போர்க்களத்தைத் துறந்து தவக்கோலம் பூண்டு ஓடியவர் களின் மேல் மிகுந்த சினம் கொண்டு, அவர்களைப் பிடித்துத் துன்புறுத்துகின்றவனுடைய போர் வெற்றி புதுமையான வெற்றி யாகவே இருக்கின்றது! என்றான் வெற்றிவேல் செழியன். அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேல் கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் புதுவது! என்றனன் போர்வேல் செழியன். (சிலப். நடுகல். 104- 107) இவ்வாறு பாண்டியன் தமிழர்களின் போர் நீதியை எடுத்துரைத் தான். செங்குட்டுவன் செயலை இகழ்ந்து பேசினான். வெற்றி வீரர்களுக்குப் பாராட்டு பண்டைத் தமிழரசர்கள். போரிலே மாண்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்து வந்தனர். மாண்டவர்களின் மைந்தர்களைப் பாதுகாத்து வந்தனர். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கினர். காயம்பட்ட வீரர்களை யெல்லாம் காப்பாற்றினார்கள். அவர்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் புரிந்தார்கள். இவைகளையும் போர் நீதிகளாகக் கொண்டிருந்தனர். இந்த உண்மையைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். நீள்நில மன்னர் நெஞ்சுபுகல் அழித்து வானவ மகளிரின் வதுவைசூட்டு அயர்ந்தோர், உலையாவெம்சமம் ஊர்ந்து அமர் உழக்கி, தலையும் தோளும் விலைபெறக் கிடந்தோர். நாள்விலைக் கிளையுள், நல் அமர் அழுவத்து வாள்வினை முடித்து, மறத்தொடு முடிந்தோர்; குழிக்கண் பேய்மகள் குரவையின் தொடுத்து வழிமருங்கு ஏத்த வாளொடு மடிந்தோர்; கிளைகள் தம்மொடு கிளர்பூண் ஆகத்து வளையோர் மடிய மடிந்தோர், மைந்தர்; மலைத்துத் தலைவந்தோர் வாளொடு மடிய தலைத்தார் வாகை தம்முடிக்கு அணிந்தோர்; திண்தேர்க் கொடிஞ்சியொடு தேரோர் வீழ. புண்நோய் குருதியின் பொலிந்த மைந்தர்; மாற்றுஅரும் சிறப்பின் மணிமுடிக் கருந்தலை கூற்றுக் கண்ணோட அரிந்து களம்கொண்டோர்; நிறம்சிதை கவயமொடு நிறப்புண் கூர்ந்து புறம்பெற வந்த போர்வாள் மறவர்; வருக தாம் என வாகைப் பொலம் தோடு பெருநாள் அமயம் பிறக்கிடக் கொடுத்து, தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்து, பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தன் ஆடுகொள் மார்போடு அரசுவிளக்கு இருக்கையின் என்பது சிலப்பதிகாரம்- நீர்ப்படைக் காதை. செங்குட்டுவன் போரிலே வெற்றி பெற்றபின் என்ன செய்தான் என்பதை இவ்வடிகள் குறித்தன. போரிலே எதிர்த்த பகை மன்னர்களின் மன ஊக்கம் அழியும்படி போர் செய்து தமது வீரத்தை வெளியிட்டுச் சுவர்க்கம் புகுந்தவர்கள், அப் போரிலே பின்னிடாமல் நின்று போர் செய்து தலையும் தோளும் துணிபட்டுக் கிடந்தவர்கள், வாளால் வெற்றியுடன் போர் செய்து பகைவர்களை அழித்து மாண்டுபோனவர்கள். உறவினர்களும், தமது மனைவிமார்களும், தம்முடன் இறந்து போகும்படி போரிலே மாண்டவர்கள் ஆகிய இவர்களுடைய மைந்தர்களையெல்லாம் வருக என்று அழைத் தான். எதிர்த்து வந்தோர் போரிலே மடியும்படி வாட் போர் செய்து வாகைமாலை சூடி நின்ற வீரர்கள், பகைவர்களுடைய தேர்ப்படை வீரர்களைக் கொன்று இரத்தத்துடன் காட்சி யளிக்கும் வீரர்கள், எதிரிகளின் கரிய தலைகளைக் கூற்றுவனும் கண்டு இரங்கும்படி அறுத்துத் தள்ளி வெற்றி பெற்ற வீரர்கள், தம் மார்பில் இருந்த கவசம் சிதைந்தும், மார்பிலே புண் பட்டும், அஞ்சாமல் எதிரிகளைப் புறமிட்டு ஓடும்படி செய்துவந்த வீரர்கள்- இவர்களையும் வருக என்று அழைத்தான். இவர்களுக்கெல்லாம், அவர்கள் பெற்ற வெற்றிக்கு அடை யாளமாகப் பொன்னாலாகிய வாகைப் பூக்களை அளித்தான். தான் பிறந்த நாளில் கொடுக்கும் கொடையைவிட மிகுதியாகப் பரிசளித்தான். நீண்டநேரம் தங்கியிருந்து பரிசளித்து அவர் களையெல்லாம் பாராட்டினான். இச்செய்திகளே மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில் கூறப்பட்டன. போரினால் நாசமடைந்த நாடுகளை மீண்டும் வளப் படுத்துவது பண்டைக்கால மன்னர்களின் பண்பு. போரால் பொதுமக்களின் உயிருக்கு உலைவைக்க மாட்டார்கள். அவர்கள் தப்பிப் பிழைக்கும்படி முன்னறிவிப்புக் கொடுத்துவிடுவார்கள். போரிலே தோற்றுப்போனவர்களைப் பிடித்துத் துன்புறுத்து வது போர் வெற்றி ஆகாது என்று எண்ணினார்கள். போரிலே மாண்டு போனவர்களின் மைந்தர்களுக்குப் போர் வீரர்களுக் குரிய பெருமையைக் கொடுத்தார்கள்; பரிசும் கொடுத்தார்கள். போரிலே வெற்றி பெற்ற வீரர்களுக்கெல்லாம் அவர்கள் மனம் மகிழும்படி பரிசளித்துப் பாராட்டினார்கள். இவ்வுண்மை களையெல்லாம் மேலே காட்டிய சான்றுகளாற் காணலாம். போரிற் கவர்ந்த பொருள் பண்டைத் தமிழ்மன்னர்கள் பகைவர் நாட்டில் கவர்ந்த செல்வங்களைத் தம் நலத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். அவைகளையெல்லாம், இரவலர்களுக்கும், கலைஞர்களுக்கும், வீரர்களுக்கும் வழங்கி விடுவார்கள். இந்த உண்மையையும் இலக்கியங்களிலே காணலாம். பெரிய வாயினும் அமர்கடந்து பெற்ற அரிய என்னாது, ஓம்பாது வீசி என்பது பதிற்றுப்பத்து. கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் சிறப்பைக் கூறும் பகுதி இது. ஐந்தாம் பத்து. எவ்வளவு பெரிய செல்வமானாலும், போரிலே வெற்றி பெற்றுப் பகைவர்கள் நாட்டிலே கவர்ந்தவைகளை, இவைகள் கிடைத்தற்கரியவை; நாமே வைத்துப் பாதுகாக்கவேண்டும் என்று எண்ணமாட்டாய்; இரவலர்களுக்கும் வீரர்களுக்கும் அள்ளிக் கொடுத்துவிடுவாய் என்பதுதான் மேலே காட்டிய அடிகளின் பொருள். அரசியல் எதிரிகளுக்கு மன்னிப்பு பண்டைத் தமிழரசர்களிடம் மற்றொரு பெரும் பண்பு இருந்தது. அவர்கள் தம் நாட்டிலே நல்ல செயல்களைச் செய்யும்போது சிறையில் வைத்திருப்பவர்களையெல்லாம் விடுதலை செய்வார்கள். போரிலே பணியாதவர்களைச் சிறை பிடித்து வைத்திருப்பது அவர்கள் வழக்கம். அவர்களையும் நீண்டநாள் சிறையிலே வைத்துத் துன்புறுத்த மாட்டார்கள். சிறப்பாக, தெய்வங்களுக்குத் திருவிழாக்கள் நடத்தத் தொடங்கும் பொழுது, அரசியற் கைதிகளாக இருக்கின்றவர்கள் அனை வரையும் விடுதலை செய்து விடுவார்கள். கொடித்தேர் வேந்தனொடு கடவி மன்னர் அடித்தளை நீக்க அருள்சுரந்து ஒருபால் என்பது சிலப்பதிகாரம்- இந்திர விழவு ஊர் எடுத்த காதை- இந்திர விழாத் தொடங்கும்போது சோழனுடைய பகைவேந்தர் களையும், அவர்கள் கால் விலங்கைக் கழற்றிச் சிறையிலிருந்து விடுதலை செய்வார்கள்; இவ்வாறு அவர்களிடம் இரக்கங் காட்டுவார்கள் என்ற கருத்தை மேலே காட்டிய அடிகள் கூறுகின்றன. வரி நீக்கம் நல்ல நாட்களைக் கொண்டாடும்போது, பழந்தமிழ் மன்னர்கள், குடிமக்களின் வரியையும் தள்ளிவிடுவார்கள். சிறைப்படு கோட்டம் சீமின்! யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின்! சிறைக் கோட்டத்தைத் திறந்துவிடுங்கள்; வரிச் சுமையால் அவதியுறும் மக்களின் வரிகளைத் தள்ளிவிடுங்கள் என்பது கட்டுரை காதையில் காணப்படும் செய்தி. காளி கோயிலுக்கு விழாச் செய்யத் தொடங்கிய பாண்டியன் இவ்வாறு அறிவித்த தாகக் கதை. சிறையோர் கோட்டம் சீமின்! யாவதும் கறைகெழு நாடு கறைவீடு செய்ம்மின்! சிறைப்பட்டிருப்பவர்களை, சிறைக் கோட்டக் கதவுகளைத் திறந்து விடுதலை செய்யுங்கள். நாட்டினருடைய வரிச் சுமை களைத் தள்ளுபடி செய்யுங்கள். இவ்வாறு செங்குட்டுவன், கண்ணகிக்குக் கல்நாட்டும் போது கட்டளையிட்டான். இவன் கனக- விசயர்களையும், சிறை பட்டிருந்த ஏனைய வேந்தர்களையும் விடுதலை செய்தான் என்றே சிலப்பதிகாரம் சொல்லுகிறது. சோழன், பாண்டியன், சேரன் ஆகிய மூவேந்தர்களும், நல்ல நாட்களிலே- சிறப்பாகத் திருவிழாத் தொடங்கும் நாட்களிலே- அரசியற் கைதிகளை எல்லாம் சிறையிலிருந்து விடுதலை செய்து வந்தனர் என்பதைக் காணலாம். இவ்வாறு எதிரிகளை மன்னித்து அவர்களை விடுதலை செய்வது ஒரு சிறந்த அரசியல் முறையாகும். எதிரிகளைத் தமது நட்பினர்களாகச் செய்துகொள்வதற்கு இம்முறை வழிகோலு வதாகும்; பகைமை குறைவதற்கும் வழியாகும். போர் வெற்றிக்குப் பின்னர், பண்டைத் தமிழ் மன்னர்கள் தம் பகைவேந்தர்கள்பால் எப்படி நடந்து கொண்டனர் என்பதைக் குறிக்க இந்நிகழ்ச்சிகள் போதுமானவை. அரசியல் எதிரிகளைஅடக்கி ஒடுக்கி, நிலையான எதிரி களாக வைத்திருப்பது சிறந்த அரசியல் அறிவாகாது. அவர்களை நண்பர்களாகச் செய்துகொண்டு நாட்டு மக்களின் வாழ்வையே சிறந்த குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி புரிவதுதான் உயர்ந்த அரசியலாகும்; மக்கள் ஆட்சிக்குரிய மாண்பாகும். இவ்வுண்மை யைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். அரசியற் பகைவர்களுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்த செயலே இதற்குச் சான்றாகும். வரிச் சுமையால் வாடும் குடிமக்களுக்கு ஆறுதல் அளிப்பதும் அரச நீதியாகும். பண்டை வேந்தர்கள் இந் நீதியைப் பின்பற்றினர். வரி கட்ட முடியாதவர்களுக்கு, வரியைத் தள்ளிக் கொடுத்தனர். இவ்வாறு செய்து குடிமக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று வாழ்ந்தனர் அரசர்கள். போரும் அமைதியும் பழந்தமிழ் மக்கள் போரின் கொடுமையை நன்றாக அறிந்திருந்தனர். நாட்டுக்கு நலம் உள்ள செயல் எதையும் போர்க் காலத்தில் செய்ய முடியாது. மக்கள் வாழ்வுக்கு வேண்டிய ஆக்க வேலை போர்க் காலத்தில் நடைபெறாது; நாச வேலைதான் போர்க் காலத்தில் நடைபெறும். இந்த உண்மை நமது முன்னோர் உணர்ந்ததுதான். அமைதியால் நன்மை நாட்டிலே அமைதி குடிகொண்டிருந்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; மக்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களுக்குப் பஞ்சம் உண்டாகாது. அவைகள் வேண்டிய அளவு விளைவிக்கப்படும். மக்கள் விரும்பும் கலைகள் வளரும்; கவிதைகள் வளரும்; வறுமை ஒழியும்; செல்வம் செழிக்கும்; நாடெங்கும் விழாக்களும், விளையாட்டுக்களும் நடைபெறும்; அமைதி நிலவும், எல்லா நாடுகளிலும் இந்த நிலையை நாம் காணுகின்றோம். போர்க் காலத்தில் மக்கள் ஒழுக்கமும் கெட்டுப் போகும்; அமைதியான காலத்தில்தான் மக்களிடம் ஒழுக்கம் வளரும்; அமைதியான காலத்தில்தான் கூடாஒழுக்கங்களில் தலைப்படும் மக்களைத் தடுத்து நல்வழியிலே நடக்கும்படி செய்யவும் முடியும். சுருக்கமாகச் சொன்னால், போரினால் ஒரு நாட்டு மக்களின் ஒழுக்கம் கெடும்; செல்வம் அழியும்; இன்ப வாழ்வு சிதையும். அமைதியால் நாட்டிலே ஒழுக்கம் உயரும்; செல்வம் பெருகும்; இன்ப வாழ்வு வளரும். இந்த உண்மையை என்றும் எவரும் மறுக்க முடியாது. பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தைப் பாடிய ஆசிரியர் பாலைக் கௌதமனார் இந்த உண்மையை எடுத்துக்காட்டு கின்றார். பெரிய வலிமையுள்ள பகைவர்களின், பசுமையான கண் களையுடைய யானைப் படைகள் துண்டு துண்டாகச் சிதையும்படி, மிகுந்த வீரத்துடன் அவைகளை வெட்டி வீழ்த்துவார்கள். அவர்கள் இரத்தம் தோய்ந்த அடிகளை யுடையவர்கள்; வீரக் கழலை அணிந்தவர்கள்; விரைந்து செல்லும் குதிரை வீரர்கள்; இவர்கள் விரைவாக அம்பு தொடுப்பதை மறக்கும்படி உனது நாட்டை நன்றாக அமைதியுடன் காப்பாற்றுகின்றாய். நீ இவ்வாறு அமைதி நிலவும்படி அரசு செய்வதனால் உனது நாட்டிலே விளைவுப்பொருள் குறைவதில்லை; உனது நாடும் துன்பமின்றி வாழ்கின்றது. கோடை நிலைத்து, குன்று வறண்டு, அருவிநீர் விழாமல் வற்றிப்போன, பெரிய மழையற்ற காலத்திலும், உனது பேராற்றில் நீர் குறைவதில்லை. இரு கரைகளும் வழியும்படி நீர் பெருகி வரும். அகன்ற அப் பேராற்றின் பக்கத்தில் உள்ள பெரிய நிலங்களில் தண்ணீர் மிகுந்து பாயும். சும்மா விடப்பட்ட கரம்பு நிலத்திலே உள்ள வெடிப்புக்களில் எல்லாம் தண்ணீர் நிறையும். இப்படி நிறையும்படி, தழைகளால் மூடப்பட்டு, விரைந்து வந்து மிகுதியாகப் பாய்கின்ற சிறந்த தண்ணீரின் பூசல்தான்- ஆரவாரந்தான்- உனது நாட்டில் கேட்கப்படுகின்றது. இதைத் தவிர வேறு எந்தப் போரும்- பூசலும் - உனது நாட்டில் இல்லை. ஆதலால் உனது நாடு செல்வம் நிரம்பியிருக்கின்றது. இவ்வாறு பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் புகழ்ந்து பாடுகிறார் பாலைக் கௌதமனார். திருஉடைத்து அம்ம! பெருவிறல் பகைவர் பைம்கண் யானைப் புணர்நிரை துமிய உரம்துரந்து எறிந்த, கறைஅடிக் கழல்கால், கடுமா மறவர் கதழ்தொடை மறப்ப, இளைஇனிது தந்து, விளைவுமுட் டுறாது புலம்பா உறையுள் நீதொழில் ஆற்றலின்; விடுநிலக் கரம்பை விடர் அளை நிறையக் கோடை நீடக், குன்றம் புல்என அருவி அற்ற பெருவறல் காலையும் நிவந்துகரை இழிதரும் நனம்தலைப் பேரியாற்றுச் சீர்உடை வியன்புலம் வாய்பரந்து மிகீஇயல் உவலை சூடி உருத்துவரு மலிர்நிறைச் செந்நீர்ப் பூசல் அல்லது வெம்மை அரிதுநின் அகன்தலை நாடே. இதுவே அப்பாடல். அமைதியால் ஒரு நாட்டில் ஏற்படும் நன்மையை உணர்த்திற்று. ஒற்றுமையின் உயர்வு காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவரின் சிறந்த பாட்டு ஒன்று புறநானூற்றிலே காணப்படு கின்றது. அரசர்கள் தம்முள் போர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதனால் உண்டாகும் நன்மையை அப் பாடல் வலியுறுத்து கின்றது. தமிழ்நாட்டு மன்னர்கள் அடிக்கடி ஒருவரோடு ஒருவர் போர் புரிந்த காலத்தில் எழுந்த பாடல் அது. தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியதன் இன்றியமையாமையைப் பற்றி அப்பாடல் எடுத்துக் காட்டுகின்றது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன் என்பவன் ஒரு சோழ மன்னன். வெள்ளி அம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி என்பவன் ஒரு பாண்டியன். இவ்விருவரும் ஒருநாள் ஓர் இடத்திலே ஒன்றாக இருந்தனர்; பகைமையின்றி அன்புடன் அளவளாவியிருந்தனர். இதைக் கண்ட புலவர் காரிக் கண்ணனார் உள்ளத்திலே பெருமகிழ்ச்சி பிறந்தது. இவ்வாறே தமிழ் மன்னர்கள் உவகையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் தமிழ்நாடு எப்படியிருக்கும்! என்ற சிந்தனை அவர் உள்ளத்திலே வளர்ந்தது. போர் ஒழிந்து அமைதி நிலவினால் நாடும், நாட்டு மக்களும் அடையும் நன்மையைப் பற்றி நினைக்க நினைக்க அவர் நெஞ்சம் மகிழ்ந்தது. அப்புலவர் தன் மனத்தில் எழுந்த எண்ணங்களை அப்படியே அவர்கள் முன்னிலையில் கொட்டினார். நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்! இவனோ, அடிமரம் தொலைந்த- பூவாது காய்க்கும் மரமாகிய - ஆலமரத்தின் விழுது போன்றவன். அடிமரம் தொலைந்தாலும் அதன் கிளைகளை அம் மரத்தின் விழுதுகள் தாங்குகின்றன. அதுபோல, இவன் தன் முன்னோரால் காக்கப் பட்ட சுற்றத்தாரை, இவன் முன்னோர் மறைந்த பின், அவர்கள் வருந்தாமல் காப்பாற்றுகின்றான்; தான் சிறிதாயிருந்தாலும், பாம்பை அதன் கூட்டத்துடன் நடுங்கச் செய்யும் இடி ஏறுபோல இவன் இளைஞனாயினும் தன் பகைவர்க்கு இடம் கொடாத போர்த்திறம் பொருந்திய பாண்டியர் குடியிலே பிறந்தவன். நீ அறம் நிலைத்திருக்கும் உறையூரில் வாழும் அரசன்! இவனோ, நெல்லும் நீரும் எல்லாருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்; ஆதலால் அவற்றை அளிப்பதிலே பெருமையில்லை என்று கருதுகின்றவன். பொதிய மலைச் சந்தனமும், கடல் முத்தும் எல்லோராலும் பெற முடியாது; ஆதலால் அவற்றைக் கொடுப்பதே சிறந்த கொடையென்று கருதுவோன். வீர முரசு, தியாக முரசு, நீதி முரசு என்னும் மூன்று முரசும் தன் அரண்மனை வாயிலிலே முழங்கும்படி தமிழ் பொருந்திய மதுரையிலிருந்து செங்கோல் நடத்துவோன். வெண்ணிறமுள்ள உருவினனாகிய, பனைக்கொடியை உயர்த்திய பலதேவன், நீல நிறத்தோனாகிய சக்கராயுதத்தை யுடைய திருமால் என்னும் இரண்டு தெய்வங்களும் ஒன்று சேர்ந்து நின்றாற்போல நீங்கள் காணப்படுகின்றீர்கள். சிறந்த தோற்றத்துடன், காண்போர்க்கு அச்சம் பிறக்கும்படி இந்நிலையில் இருக்கின்றீர்கள். ஆதலின் இதைவிட இனிமையானது வேறு ஒன்றும் இல்லை. இன்னும் கேளுங்கள்! உங்கள் புகழ் நீடூழி வாழ்க! ஒருவர்க் கொருவர் உதவி செய்துகொண்டு வாழுங்கள்! ஒற்றுமையுடன் என்றும் இவ்வாறே கூடியிருப்பீராயின், உங்களுக்கு வெற்றி யுண்டு. கடல் சூழ்ந்த இவ்வுலகம்- பல செல்வங்களும் பெருகும் இவ்வுலகம்- முழுவதும் உங்கள் கையில்தான் இருக்கும். இது பொய்யாகாது! என்று பாடினார் காரிக்கண்ணனார். நீயே, தண்புனல் காவிரிக் கிழவனை; இவனே, முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழுநிழல் நெடும்சினை வீழ்பொறுத் தாங்குத் தொல்லோர் மாய்ந்துஎனத் துளங்கல் செல்லாது நல்இசை முதுகுடி நடுக்கறத் தழீஇ, இளையது ஆயினும் கிளை அரா எறியும் அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவர் ஏறே; நீயே, அறம்துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியஎன வரைய சாந்தமும், திரைய முத்தமும் இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே; பால்நிற உருவின் பனைக்கொடி யோனும் நீல்நிற உருவின் நேமியோனும் என்று இருபெரும் தெய்வமும் உடன்நின் றாங்கு உருகெழு தோற்றமோடு உட்குவர விளங்கி இந்நீர் ஆகலின், இனியவும் உளவோ; இன்னும் கேண்மின்நும் இசை வாழியவே! ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்! இருவீரும் உடன்நிலை திரியீ ராயின் இமிழ்திரைப் பௌவம் உடுத்த இப் பயம்கெழு மாநிலம் கைஅகப் படுவது பொய் ஆகாதே. இது காரிக்கண்ணனார் பாடலின் முற்பகுதி. இது அரசர்கள் போர் செய்யாமல் ஒன்றுபட்டு வாழ்வதன் நன்மையை உணர்த்திற்று. போருக்குத் தடை இரு மன்னர்களுக்குள் நடக்க இருந்த போர் ஒன்றை நடக்காமல் தடுத்த நிகழ்ச்சி ஒன்று புறநானூற்றில் காணப் படுகின்றது. அதியமான் நெடுமான் அஞ்சி சிறந்த வீரன்; கொடை வள்ளல்; ஔவையாரிடம் அன்பு பாராட்டும் தமிழ் அன்பன். அவனுடைய வீரத்தையும் புகழையும் கேட்டுத் தொண்டை மான் பொறாமை கொண்டான். அதியமானுடன் போர் செய்ய எண்ணினான். அதன் பொருட்டுப் படை வீரர்களையும், படைக் கலங்களையும் பெருக்கி வந்தான். இச் செய்தியை அறிந்த அதியமான், ஔவையாரிடம் ஆலோசனை கேட்டான். அவர் போர் மூளாமல் தடுத்து விடுவதாக உறுதி கூறினார். போர் நிகழ்ந்தால் நாடு நாசமுறும்; ஆதலால் போரைத் தடுக்கவேண்டும் என்பதே அதியமானுடைய கருத்து. இதை அறிந்த ஔவையார் தொண்டைமானிடம் தூதாகச் சென்றார். அவன் ஔவையாரை வரவேற்றான். அவரைத் தனது படைக்கலச் சாலைக்கு அழைத்துச் சென்றான். தான் சேர்த்து வைத்திருக்கும் படைக்கலங்களையெல்லாம் அவருக்குக் காட்டினான். அப்பொழுது ஔவையார், அதியமானுடைய வீரத்தையும், அவனுக்குள்ள பொதுமக்கள் ஆதரவையும் தொண்டைமானிடம் எடுத்துக் கூறினார். போர் வராமல் தடுத்தார். இது புறநானூற்றில் காணப்படுவது. உன்னுடைய படைக்கலங்களாகிய இவைகள் மயிற்பீலி சூட்டப்பட்டுள்ளன; மாலைகள் சூட்டப்பட்டிருக்கின்றன; வலிமையுள்ள நல்ல பிடிகளுடன் காணப்படுகின்றன; எண்ணெய் தடவப்பட்டிருக்கின்றன. அப்படியே புத்தம் புதியனவாக நல்ல பாதுகாப்புள்ள பெரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அதியமானுடைய படைக்கலங்களோ இப்படியில்லை. பகைவரைக் குத்தியதனால் கங்கும் நுனியும் முரிந்துவிட்டன. அவைகள் மீண்டும் செப்பனிடும் பொருட்டுக் கொல்லனுடைய வேலையிடமாகிய சிறிய கொட்டகையிலே எந்நாளும் கிடக்கின்றன. செல்வம் இருக்கும்போது, எல்லோர்க்கும் தாராளமாக உணவளிப்பான். இல்லையானால் உள்ளதனைப் பலரோடும் பங்கிட்டு உண்பான். வறியோரை எல்லாம் காப்பாற்றும் தலைவன் அவன்; இத்தகைய எமது மன்னனுடைய வேற்படைகள் நான் சொல்லிய நிலையில் இருக்கின்றன என்று உரைத்தார். இதனால் நீ போர் செய்து பழகாதவன்; இப்பொழுது தான் புதிதாகப் படைக்கலங்கள் சேர்த்திருக்கின்றாய்; எமது மன்னனுக்கு எப்பொழுதும் போர் புரிவதே வேலை. அவன் படைக்கலங்கள் பழமையானவை; அன்றியும் அவன் மக்களுடன் கலந்து வாழ்பவன்; அவனுக்குப் பொதுமக்கள் ஆதரவு உண்டு என்பதை எடுத்துக்காட்டினார் ஔவையார். இதனை, இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து கடிஉடை வியன்நக ரவ்வே, அவ்வே, பகைவர்க் குத்திக், கோடுநுதி, சிதைந்து, கொல்துறைக் குற்றுஇலம் மாதோ; என்றும் உண்டாயின் பதம் கொடுத்து, இல்ஆயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல்எம் கோமான், வைந்நுதி வேலே என்ற பாடலால் காணலாம். மேலே எடுத்துக்காட்டியவைகள் சங்க காலத்திலும்- அடிக்கடி போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்திலும்- அதன் கொடுமையை உணர்ந்தவர்கள் இருந்தனர். போரைத் தடுக்க முயன்றனர், அமைதியான வாழ்வை விரும்பும் புலவர்களும் அரசர்களும் இருந்தனர் என்ற உண்மையை உணர்த்துவன. போர் இல்லாமல் அமைதியுடன் வாழ்வதால்தான் நாட்டுக்கு நன்மையுண்டு; அமைதியை நிலைநாட்டும் மன்னர் களுக்குத்தான் புகழ் உண்டு; போரிலே வென்று வெற்றி வீரர் என்னும் பட்டம் பெறுவதைவிட அமைதியைக் காப்பதனால் தான் பெரும்புகழ் உண்டு, அழியாத நிலைமையும் உண்டு என்பது கம்பன் கருத்து. பண்டைத் தமிழர்களின் கருத்தே கம்பன் உள்ளத்திலும் இவ்வெண்ணத்தை உருவாக்கியது என்று உரைக்கலாம். யாரொ டும்பகை கொள்ளிலன் என்றபின் போர் ஒடுங்கும்; புகழ்ஒடுங் காது; தன் தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின் வேரொ டும்கெடல் வேண்டல்உண் டாகுமோ. வசிட்டன் இராமனுக்கு அரச நீதி கூறும்போது இவ்வாறு கூறியதாகக் கம்பன் பாடுகின்றான். யாரொடும் பகை கொள்ளாமல் சமாதானமாக வாழ முயற்சிப்பதே அரசன் கடமை; இவ்வாறு அரசன் வாழ்கின்றான் என்றபின் அவனுடைய நாட்டிலே போர் தோன்றாது; போர் தோன்றக்கூடிய நிலைமை ஏற்பட்டாலும் அந்நிலைமை மறைந்து போய்விடும். போரினால்தான் மன்னர்கள் புகழ்பெற முடியும் என்று சிலர் சொல்லுகின்றனர்; அது உண்மையன்று. போர் மறைந்தாலும், அப்போர் மறைவதற்குக் காரணமாயிருந்த மன்னனுடைய புகழ் மறையாது, குறையாது; வளரும். அந்த மன்னனுடைய சேனைகளின் அளவும் ஆற்றலும் குறையாது; பெருகித்தான் நிற்கும். இந்தத் தன்மை உண்டான பின் அந்த மன்னனும், அரசும் அடியோடு அழிந்து போக வேண்டிய நிலைமையும் ஏற்பாடாது. அந்த அரசன் நிலைத்த புகழுடன் வாழ்வான். அவனது நாடும் எல்லாச் செல்வங் களையும் பெற்று இனிது வாழும். இதுவே மேலே காட்டிய கம்பன் செய்யுளில் காணும் பொருள். போரால் தமிழகம் அடைந்த நிலையை நன்றாக அறிந்தவன் கம்பன்; போரால் நாட்டில் ஏற்பட்ட நாசங்களைக் கண்ணாரக் கண்டவன் கம்பன். ஆதலால்தான் இத்தகைய அரிய நீதியை வசிட்டன் வாயால் உரைத்தான். போர்க் கொடுமை! போரின் கொடுமையைப் பற்றி ஏறக்குறைய நூறு ஆண்டு களுக்கு முன்னிருந்த இராமலிங்க அடிகள் தெளிவாகப் பாடியிருக்கின்றார். போரினால் ஏற்படும் இழப்பும் துன்பமும் அவர் உள்ளத்தை உலுக்கிவிட்டன. அவற்றை எண்ணி எண்ணி ஏக்கம் அடைகின்றார். உலகிலேயே போர் இல்லாமல் என்றும் அமைதி நிலவவேண்டும் என்பதே வடலூர்ப் பெரியாரின் கருத்து. அரங்கினில் படைகொண்டு உயிர்க்கொலை புரியும் அறக்கடை யவரினும் கடையேன் போர்க்களத்திலே கொல்லும் கருவியைக் கையில் ஏந்தி நின்று உயிர்க்கொலை புரிகின்றவர்கள் கடைப்பட்ட மனிதர்கள். அவர்கள் நாட்டை நாசமாக்கும் போர் வெறியர்கள் என்று வெறுத்துப் பேசுகின்றார்; வீணில் போர் இழை வெறியர் புகழ்பெறு வெறியர். வீணாகப் போர் புரிகின்றவர்கள்; போர் வெறி பிடித்தவர்கள், வீணர்கள் என்று கடிந்து கூறுகிறார். உலகரசு ஆள்வோர், உறைமுடிவாள் கொண்டு, ஒருவரை ஒருவர் உயிர்அறச் செகுத்தனர், எனவே தரை உறச் சிறியேன் கேட்ட போதெல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன் என்று பாடுகின்றார். உலகிலே அரசாளுவோர், உறையிலே கிடந்த வாளை உருவிக்கொண்டு, ஒருவரை ஒருவர் பகைத்து உயிர்களைக் கொன்று குவித்தனர் என்ற செய்தியை நான் கேட்டபோதெல்லாம் நடுங்கினேன்; என் உள்ளம் தளர்ந்து நடுநடுங்கித் திகைப்படைந்தேன் என்று போரிலே தமக்குள்ள வெறுப்பைப் புலப்படுத்துகின்றார். போரின் கொடுமையைப் பற்றி இவ்வளவு கடுமையாக வெறுத்துக் கூறிய வேறு புலவர்களைக் காண முடியாது. போரினால் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏற்படும் விளைவைப் பற்றி வடலூர் வள்ளலார் நன்றாக உணர்ந்தவர். உலக மக்கள் ஒன்றுபட்டு வாழவேண்டும்; சாதி, மத, இன வேறுபாடற்ற சமரச சன்மார்க்கம் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற பரந்த நோக்கம் உள்ளவர் இராமலிங்க அடிகள். போர் நிகழ்ந்தால் இத்தகைய ஒற்றுமைக்கு இடமில்லை; உலகம் ஒன்றுபட முடியாது என்பதே அவர் கருத்து. போரின் பலன் வறுமைதான்; வறுமையால் மக்கள் ஒழுக்கங் கெடும்; வறுமையால் வாடுவோர்பால் மனிதத் தன்மை கூட மறைந்துவிடும்; தாம் வாழ்ந்தால் போதும் என்னும் தந்நலப் பேயைப் பேணி வளர்ப்பது வறுமைதான். இவ்வுண்மையைச் சிந்தித்துத் தெளிந்தவர் இராமலிங்க அடிகள். ஆதலால்தான், போரை- போர் செய்வோரை- போர் வெறி பிடித்தவர்களை- அவ்வளவு வன்மையாகக் கண்டித்துப் பாடினார். மேலே கூறியவைகளைக் கொண்டு தமிழகத்துச் சான்றோர்களின் பேரறிவைக் காணலாம். சங்க காலம் முதல் இன்று வரையிலும் போரை வெறுத்து அமைதியை விரும்பும் அறிஞர்கள் தமிழகத்தில் வாழ்ந்தனர், வாழ்கின்றனர் என்பதில் ஐயம் இல்லை. புறநானூறு, பதிற்றுப்பத்துப் போன்ற நூல்களைப் பார்த்து விட்டுத் தமிழர்கள் போர்வெறி பிடித்தவர்கள் என்று கூறுவோர் உண்டு. இது உண்மை அன்று. தமிழர்கள் செய்த போர்கள் அறத்தை நிலைநாட்டப் புரிந்த போர்களாகத்தான் இருந்தன. இராமலிங்க அடிகள் பாடுகின்றபடி வீணில் போர் இழை வெறியர் களாகத் தமிழர்கள் இருந்ததில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் குறிக்கோள் அமைதி, சமாதானம் என்பது உறுதி. இதுவரையிலும் கூறியவைகளைக்கொண்டு பண்டைத் தமிழரின் அரசியல் பற்றிய பல உண்மைகளை அறியலாம். பண்டைத் தமிழ் மக்கள் அரசியலை அலட்சியம் பண்ணி விடவில்லை. நாட்டிலே நல்லரசாட்சி நிலவவேண்டும் என்பதிலே கவலை கொண்டிருந்தனர். அவர்கள் மக்களுக்கு நன்மை செய்த மன்னர்களைத் தெய்வமாகப் போற்றினார்கள். அம்மன்னர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள். மன்னர்கள் சர்வாதிகாரம் படைத்தவர்களாயிருந்தால், அவர்கள் எவ்வளவு நல்லவர்களாயிருந்தாலும் அதிகாரச் செருக்கு அவர்களை ஆட்டிவைக்காமல் விடாது. ஆதலால், பண்டை மன்னர்களுக்குச் சர்வாதிகாரம் பிறப்புரிமையாக இருந்தும் அவர்கள் புலவர்களின் அறிவுரைகளைப் போற்றி வந்தனர்; ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்னும் மந்திரி சபையையும், பொதுஜன சபையையும் அமைத்துக்கொண்டு அரசாட்சி நடத்தி வந்தனர். பண்டைத் தமிழ் மன்னர்கள், ஆட்சியிலே சிறு குற்றம் புரிவோர்க்கும் பெருந்தண்டனை கொடுத்தனர். பண்டை மன்னர்கள் பெரும்பாலும் சமாதானத்தையே விரும்பினர். சமாதான காலத்தில் நாடு செழிக்கும் என்பது அவர்கள் நம்பிக்கை. இவ்வுண்மைகளை நமக்குப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் (1960) ஆசிரியர் முன்னுரை இவ்வுலகம் தோன்றிய விதம்; இவ்வுலகில் உள்ள உயிர்த் தொகைகள் பிறந்த விதம் இவைகளைப் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. ஒன்று மதங்களும் புராணங்களும் கூறும் கருத்து; மற்றொன்று விஞ்ஞானிகள் கூறும் கருத்து. புராணக்காரர்கள் - மதக்காரர்கள் - அவர்கள் பல வகையின ராக இருந்தாலும், உலகத் தோற்றத்தைப் பற்றி அவர்கள் சொல்வன ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கின்றன. இவ்வுலகம் இன்றுள்ள உருவிலேயே கடவுளால் ஆக்கப் பட்டது. கடவுள் மக்கள் இனத்தைப் படைத்தார்; பறவையினங் களைப் படைத்தார்: விலங்கினங்களைப் படைத்தார்; ஊர்வன, நீர் வாழ்வன, மரஞ்செடி கொடிகள், சூரிய சந்திரர்கள், நட்சத்திரங்கள் எல்லாவற்றையும் படைத்தார், மக்களுக்குரிய ஒழுக்கங்கள், அவர்கள் அறிய வேண்டிய வேத சாஸ்திரங்கள் அனைத்தையும் ஆண்டவனே ஆக்கித்தந்தான். என்பதே பெரும்பாலான மத - புராணங்களின் கொள்கையாகும். விஞ்ஞானிகள் - உலகத் தோற்றத்தை ஆராய்ந்து கண்ட அறிஞர்கள் - வேறுவிதமாகக் கூறுகின்றனர். இந்த உலகம் நெருப்புக் கோளமான சூரியனிடமிருந்து பிறந்தது. அதிலிருந்து தெறித்து விழுந்த ஒரு பகுதியே உலகா யிற்று. இது நடந்து சுமார் 200 கோடி ஆண்டுகளிருக்கலாம். இந்த உலகத்தில் சுமார் 100 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் உயிர்கள் பிறந்திருக்கலாம். முதலில் தோன்றிய உயிர்கள் ஒரு பையுள்ள கிருமிகள். அவைகள் பல பைகளைக் கொண்ட கிருமிகளாக மாறின. இந்த மாற்றம் உண்டான 50 அல்லது 60 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர்ப் புழுக்கள் தோன்றின. இப்புழுக்களிலிருந்து மீன்கள் பிறந்தன; மீன்களிலிருந்து நீரில் வாழும் பிராணிகள் பல தோன்றின. நீர் வாழ்வனவற்றிலிருந்து ஊர்வன பிறந்தன. ஊர்வனவற்றிலிருந்து பறவைகளும், தங்கள் பிள்ளைகளைப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளும் தோன்றின. விலங்கினங்களிலிருந்து தேவாங்கு என்னும் பிராணி தோன்றியது; தேவாங்கிலிருந்து வாலுடைய குரங்கு பிறந்தது; வாலுள்ள குரங்கிலிருந்து வாலில்லாக் குரங்கு பிறந்தது; வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதக்குரங்கும், மனிதக் குரங்கி லிருந்து மனிதனும் பிறந்தான். இப்படித் தோன்றிய மனிதனே இன்று வளர்ச்சியடைந்து உலகத்தை ஆட்டிப் படைக்கும் சகல சக்திகளையும் பெற்றிருக் கின்றான். மனித வளர்ச்சி இவ்வளவோடு நின்று விடவில்லை. எதிர்காலத்தில் மனித உருவத்திலும் மாறுதல் ஏற்படலாம். உலக நாகரிகம் இன்னும் வளரும்; மாறுதல் அடையும்; அந்த மாறுதலும், வளர்ச்சியும் எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. இதுவே உலகத்தோற்றத்தைப் பற்றி - வளர்ச்சியைப் பற்றி விஞ்ஞானிகள் கூறுவது. இன்றைய அறிஞர்கள் அனைவரும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பே உண்மையானது; சரியானது; இயற்கையானது; என்று நம்புகின்றனர். புராண - மதக்காரர்களின் கூற்று - ஆராய்ந்து கண்ட முடிபன்று; பண்டைக்கால அறிஞர்களால் கற்பனை செய்யப் பட்ட கதை என்றே அறிஞர்கள் நம்புகின்றனர். இவ்விரு சாரார் கொள்கைகளையும் நாம் சீர்தூக்கிப் பார்த்தால், விஞ்ஞானிகளின் கொள்கைதான் உண்மையாக இருக்கக்கூடும் என்று நினைக்க இடம் உண்டு. இன்றைய மனித சமுதாயத்தையும், பண்டைக்கால மனித சமுதாயத்தையும் பற்றி ஆராய்ந்தால் இவ்வுண்மை விளங்கும். பண்டைக்கால மக்களின் சிந்தனை, செயல், வாழ்வு இவைகளைவிட இக்கால மக்களின் சிந்தனை, செயல், வாழ்வு அனைத்தும் வளர்ந்திருக்கின்றனர்; இந்த உண்மையை எவரும் மறுக்க முடியாது. ஆதிகால மக்கள் ஆடையில்லாமல் திரிந்தனர்; வீடில்லாமல் அலைந்தனர்; அவர்களுக்கு மொழிகூடத் தெரியாது; ஒழுக்கம் இன்னதென்றே அறியமாட்டார்கள். வாய்க்கு ருசியாகச் சமைத்துச் சாப்பிடக்கூடத் தெரியாது. இப்படி வாழ்ந்த மக்கள் தாம் இன்று இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் அடக்கியாளும் ஆற்றல் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர். எந்தத் துறையில் எடுத்துக்கொண்டாலும் மக்கள் முன்னேறி யிருப்பதைக் காண்கிறோம். கல்வி, அரசியல், தொழில், கலை, சிந்தனை, சமுதாய வாழ்வு, ஆடை அணிகள், செல்வப் பெருக்கம், மக்கள் இன்ப வாழ்வுக்கான சாதனங்களைக் கண்டுபிடித்தல் போன்ற பல துறைகளில் இன்றைய மக்கள் வளர்ச்சியடைந் திருக்கின்றனர். இத்தகைய வளர்ச்சியால் மக்களுக்குத் தீமையா நன்மையா இன்பமா துன்பமா என்று விவாதிப்பது வேறு விஷயம். வளர்ச்சி உண்டா இல்லையா? என்பதுதான் நமது கேள்வி. நிச்சயமாக எல்லாத் துறையிலும் பண்டைக்கால மக்களைவிட இக்காலத்து மக்கள் வளர்ந்திருக்கின்றனர் என்பதில் ஐயம் இல்லை. இந்த வளர்ச்சியைப் பார்க்கும்போது - எண்ணும் போது - உலகத் தோற்றம் பற்றி விஞ்ஞானிகள் கூறும் கருத்தே உண்மை யென்பதைக் காணலாம். புராணக்காரர்கள், மனித சமூகம் நாகரிகத்திலே வளர்ச்சி யடைந்திருக்கிறது என்பதைக் கூட ஒத்துக்கொள்வதில்லை. பண்டைக்கால மக்கள் தாம் எல்லாவற்றிலும் உயர்ந்து இருந்தனர். இக்காலத்து மக்கள் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டனர். பண்டைக்கால மக்கள்தாம் அறிஞர்களாகவும், ஆற்றல் உடையவர்களாவும், இன்ப வாழ்வினராகவும், இருந்தனர். இக்கால மக்கள் இவைகளில் குறைந்துவிட்டனர் என்று கூறுவார்கள். இப்படிக் கூறுவது இயற்கைக்கு முரணாம் என்பதே அறிஞர்கள் கருத்து, வரலாறும் இதை மறுக்கிறது. இவ்வுண்மை யை எடுத்துக்காட்டுவதே பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் என்னும் இப்புத்தகத்தின நோக்கம். பல துறைகளிலும் மக்கள் முன்னேறியிருக்கின்றனர் என்பதை இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகளால் காணலாம். இக்கட்டுரைகளைப் படிப்போர் வளர்வதுதான் இயற்கை என்பதை ஒப்புக்கொள்ளுவார்கள். வளர்வது இயற்கை என்பதை ஒப்புக்கொள்ளுவோர் மேலும் மேலும் வளரத்தான் முயல்வார்கள் என்பது உண்மை. மக்கள் மனித வாழ்வின் வளர்ச்சியை அறிந்து மேலும் வளர்வதற்கு - எல்லாத் துறைகளிலும் முன்னேறுவதற்கு முயல வேண்டும். இக்கருத்துடனேயே இப்புத்தகம் வெளிவருகின்றது. இந்நூல் கட்டுரைகளிலே பல, தஞ்சைக் கரந்தை தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவரும் தமிழ்ப் பொழில் என்னும் மாதப் பத்திரிகையில் வெளிவந்தவை. அவைகளே பல திருத்தங்களுடன் புத்தக உருவில் வெளிவருகின்றன. இலக்கிய நிலையம் 7-வது தெரு, அன்புள்ள, சவுராஷ்டிரா நகர், சிமி. சிதம்பரனார். சென்னை - 24 10-1-1961 வாழ்வில் வளர்ச்சி மக்கள் வாழ்விலே வரவர - நாளுக்கு நாள் வளர்ச்சியைத் தான் கண்டு வருகின்றோம். ஒரு காலத்திலே - காலம் இன்னது என்று குறிப்பிடமுடியாத காலத்திலே மக்கள் - அநாகரிகமாக வாழ்ந்தது உண்டு. உடையில்லாமல் - வீடு இல்லாமல் - இயற்கை யாகக் கிடைத்த உணவுகளை உண்டு வாழ்ந்தார்கள். நாகரிகமில்லாமல் வாழ்ந்த அக்காலத்தில் அவர்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்ததுகூட இல்லை, எங்கே உணவு கிடைக்கின்றதோ - எங்கே தங்குவதற்கு மர நிழலும், மலைக் குகையும் கிடைக்கின்றதோ, அங்கெல்லாம் ஒடி ஆடித் திரிந்தார்கள். அக்காலத்தில் அவர்களிடம் தனிக் குடும்ப வாழ்க்கை கூட இருந்ததில்லை. அவரவர்கள் மனம்போனபடி ஆண் பெண்கள் கூடி வாழ்ந்தனர். இது மனித சரித்திர வளர்ச்சியை அறிந்தவர்கள் கூறுவது. பிற்காலத்தில்தான் அவர்களிடம் தனித் தனித் குடும்ப வாழ்வு ஏற்பட்டது. வரைதுறையின்றி ஒன்றாக வாழ்ந்த மக்களிடம், தன் மனைவி - தன் கணவன் - தன் பிள்ளைகள் - என்ற உணர்ச்சி ஏற்பட்ட பிறகுதான், அவர்கள் தனித் தனிக் குடும்பங்களாகப் பிரிந்து வாழத் தொடங்கினர். அவர்கள் வாழ்வதற்குக் குடிசை கட்டிக் கொள்ளத் தொடங்கினர். அப்பொழுது இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருள்கள் போதாமல் உணவுப் பொருளை உற்பத்தி செய்யவும் தொடங்கினர். நல்ல நீர்வளம் நிலவளம் உள்ள பகுதிகளிலே நிலைத்து வாழவும் தொடங்கினர். அரசியல் மக்கள் தாம் செய்த பயிர்களை அழிப்பதற்கு வரும் விலங்குகளை விரட்டியடிக்கக் காவலர்களை ஏற்படுத்தினர். இக்காவலர்கள் நல்ல பலசாலிகளாகவும் முரடர்களாகவும் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்காவலர்களுக்குத் தாங்கள் பயிரிட்டு அறுக்கும் தானியங்களிலே பங்கு கொடுத்து வந்தனர். இந்தக் காவலர்கள்தான் பின்னால் அரசர்களானார்கள். அரசர்களுக்குக் காவலர் என்று பெயர் அமைந்திருப்பதே இவ்வுண்மையைக் குறிக்கும். ஆரம்ப காலத்தில் காவலர்கள் - மன்னர்கள் - மக்களால் தேர்தெடுக்கப்பட்டிருந்தனர். புத்தருடைய தந்தையான சுத்தோதன மன்னன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேந்தன் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். மன்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதற்குத் தமிழ் இலக்கியத்திலும் ஆதரவு காணப்படுகின்றது. ஒரு காலத்திலே கழுமலம் என்ற ஊரிலே அரசாண்ட மன்னன் இறந்து போனான். மக்கள் ஒன்று கூடினர். அக்கால வழக்கப்படி மன்னனைத் தேர்ந்தெடுக்கப் பட்டத்து யானையை அலங்கரித்து அதன் போக்கில் போக விட்டனர். அது கருவூரை அடைந்தது. அங்கே கண்ட ஒரு சிறுவனைத் தூக்கிச் சுமந்து கொண்டு கழுமலத்திற்கே வந்தது. மக்கள் அச்சிறுவனையே அரசனாக்கினர். அவனே கரிகால் சோழன், என்று பழமொழிப் பாடல் ஒன்றில் காணப்படுகின்றது. * கழுமலத்தில் யாத்த களிறும் கருவூர் விழுமியோன் மேல்சென் றதனால் - விழுமிய வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால தீண்டா விடுதல் அரிது. என்ற வெண்பா மேற்காட்டிய உண்மையை விளக்கும். நாளடை வில்தான், மன்னர்கள் பரம்பரையாக ஆளும் உரிமை பெற்ற வர்கள் ஆனார்கள். தமிழ் நாட்டைப் பொறுத்த வரையிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இருந்த மன்னர்கள் பெரும்பாலும் சர்வாதிகாரிகளாகத் தான் விளங்கினார்கள். ஆயினும், இவர்களுக்கு அடிக்கடி புலவர்கள் அறிவுரைகள் கூறி வந்திருக்கின்றனர். மக்களும் மன்னன் துணையில்லாமல் - மன்னன் ஆதர வில்லாமல் வாழ முடியாது என்று நம்பி வந்தனர். இதனால், மன்னன் மக்களுடைய உயிராக மதிக்கப்பட்டான். இதனை, மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று புறநானூற்று அடியில் காணலாம். அரசனையே உயிராகக் கொண்டது இவ்விரிந்த இடத்தை உடைய உலகம் என்பதே இதன் பொருள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த நிலைமை இது. இதன்பின், வள்ளுவர் மன்னர்களின் தனியதிகாரத்தைக் கண்டித்தார். மன்னர்கள் அறிவுடையவர்களின் சொற்களைக் கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். குடி மக்களைக் கொடுமைப்படுத்தாமல் நீதியுடன் ஆளும் மன்னன் தான் வாழ முடியும் என்று தெளிவாகக் கூறினார். இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும். (குறள், 448) கடிந்து சொல்லிப் புத்தி புகட்டும் பெரியாரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பற்ற அரசன், தன்னைக் கெடுக்கும் பகைவர் இல்லாவிட்டாலும் அழிவான். கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. (குறள், 554) நீதிமுறை தவறி; ஒன்றையும் ஆராயாமல் ஆட்சி புரியும் அரசன் உணவையும், நாட்டையும் ஒருசேர இழந்துவிடுவான். இக்குறள்களே மேலே சொல்லிய உண்மையை விளக்கப் போதுமானவை. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன், மன்னர் களின் ஆட்சிக்குத் துணை செய்ய அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் மன்னன் கருத்தின்படிதான் நடந்தாக வேண்டும். அவன் தவறு செய்தாலும் தடுத்துச் சொல்ல முடியாத நிலையில் இருந்தனர். கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப் பின், தமிழகத்தில் மன்னர் களின் தனியதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு, ஐம்பெரும் குழு, எண் பேராயம் என்ற சபைகள் ஏற்பட்டன. இச்சபைகளின் முடிவுப்படியே மன்னர்கள் நடந்து வந்தனர். அமைச்சர்கள், புரோகிதர்கள், சேனாதிபதிகள், தூதுவர்கள், சாரணர்கள் (ஒற்றர்கள்) இவர்கள் கொண்ட குழுவுக்கு ஐம்பெரும் குழு என்று பெயர். இது மன்னனுடைய ஆலோசனைக் குழு. மந்திரிசபை போன்றது. தொழிலாளர் தலைவர்கள் (கரணத்து இயலவர்) உத்தி யோகஸ்தர்கள், நீதிப் பாதுகாப்பாளர்கள், பாதுகாப்பு வேலை செய்வோர், நகர மக்கள், சேனைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர். இவர்கள் அல்லது இவர்களுடைய பிரதிநிதிகள் கூடிய சபைக்கு எண்பேராயம் என்று பெயர். இது மக்கள் சபை போன்றதாகும். இவ்வுண்மையைச் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இக்காலத்திலே மற்றொரு மாற்றமும் ஏற்பட்டது. மன்னனே மக்களுக்கு உயிர் என்பது மாறிவிட்டது. மக்கள் தாம் மன்னனுக்கு உயிர் என்ற நிலைமை தோன்றி விட்டது. மன்உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதி. (மணி. காதை. 7) என்ற மணிமேகலை அடிகளால் இவ்வுண்மையைக் காணலாம். இந்த உண்மையைக் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிலே வாழ்ந்த கம்பரும் வலியுறுத்தி யிருக்கின்றார். வையம் மன்னுயிராக அம்மன்னுயிர் உய்யத்தாங்கும் உடல் அன்ன மன்னன் (அயோத்தியா காண்டம்) என்ற அடிகளால் காணலாம். உலகை உயிராகவும். அவ்வுயிரைத் தாங்கும் உடலை அரசனாகவும் கூறின இவ்வடிகள். இன்று பெரும்பாலும் மன்னர்களே ஒழிந்து விட்டார்கள். மக்கள் தங்கள் விருப்பப்படி ஆளும் ஆட்சி முறை வளர்ந்து வருவதைக் காண்கிறோம். ஆரம்பத்தில் நாகரிக மற்றவர்களாய் வாழ்ந்த மக்கள் குடும்பம் என்ற ஒன்று இல்லாமல் ஒன்றாக வாழ்ந்த மக்கள், தனித்தனிக் குடும்ப வாழ்வை மேற்கொண்டனர். நாடோடிகளாக வாழ்ந்த மக்கள் ஓரிடத்தில் நிலைத்து வாழத் தொடங்கினர். இயற்கையாக விளைந்த தானியங்களையும் வேட்டையாடிய விலங்கு பறவைகளையும் உண்ட மக்கள் பயிர் செய்யத் தொடங்கினர், பாடுபட்டுப் பயிர்செய்து விளைந்த உணவை உண்ணத் தொடங்கினர். இதன் பிறகு! தொழில்கள் பல - கலைகள் பல வளர்ந்தன. காவலுக்கு ஏற்படுத்தப்பட்டவர்கள் மன்னர்களாயினர். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் தங்கள் வலிமையால் பரம்பரையாக ஆளும் உரிமை பெற்றனர். பரம்பரையாக ஆளும் உரிமைபெற்ற மன்னர்கள் முதலில் சர்வாதிகாரிகளாகவே விளங்கினர். அதன்பின் பெரியோர் களின் அறிவுரைகளின்படி, ஆள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர். பின்னர் மந்திரி சபையினர் - மக்கள் சபையினர் - ஆலோசனையின் படியே ஆட்சி நடத்த வேண்டிய நிலைமைக்கு உட்பட்டனர். இறுதியில் மன்னர்கள் தேவையில்லை என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது. மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி நடத்தும் குடி அரசு ஏற்பட்டுவிட்டது. அரசியலிலே இத்தகைய வளர்ச்சியை நாம் காண்கிறோம். இதைப் போலவே ஒவ்வொரு துறையிலும் நாம் மாற்ற மடைந்திருக்கிறோம். அல்லது வளர்ந்து வந்திருக்கின்றோம் என்ற உண்மையை மறக்க முடியாது. கல்வியிலே பண்டைக் காலத்திலே கற்றவர்கள் சிலர்தாம்; கல்லா தவர்களே பலர். இப்பொழுது இருப்பதுபோன்ற பள்ளிக் கூடங்களோ, கலாசாலைகளோ, கல்லூரிகளோ பண்டைக் காலத்தில் இல்லை. ஆதலால் கல்வி கற்க விரும்புவோர், கற்றவர்களிடம் சென்று, அவர்கள் கருணையை எதிர்பார்த்துக் கல்வி கற்க வேண்டும். அவர்கள் ஏவிய பணிகளை எல்லாம் செய்ய வேண்டும். அவர்கள் எப்போது படிப்புச் சொல்லிக் கொடுக்கிறார்களோ, அப்பொழுது கற்றுக்கொள்ள வேண்டும். இப்படிக் கற்றுக்கொள்ளும் முறைக்குக் குருகுல வாசக் கல்வி என்று பெயர். குருகுல வாசக் கல்வி என்றால் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் வீட்டிலே வசித்து, அவர் சொல்லிக் கொடுக்கும் போது கற்றுக்கொள்ளும் கல்வியாகும். கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் ஒருவன் கல்வி கற்பதென்றால் மகா கஷ்டம். சமண புத்த மதங்கள் பரவிய பின் - இம்மதங்கள் தமிழ கத்தில் பரவிய பின் - கல்விப் பயிற்சிக்குக் கொஞ்சம் வசதி ஏற்பட்டது; கற்பதும் எளிதாயிற்று. அவர்கள் தாங்கள் தங்கி யிருந்த இடங்களிலே, பலருக்குங் கல்வி கற்றுக் கொடுத்தனர். தங்கள் மதங்களைப் பரப்புவதற்காக அவர்கள் கல்விப்பணியிலும் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் கல்வி பயில்வதற்கு நல்ல வசதி ஏற்பட்டது. சமணர்கள் - புத்தர்கள் தங்கியிருந்த இடங் களுக்குப் பள்ளிகள் என்று பெயர். இப்பெயரே பிற்காலத்தில் கல்வி கற்பிக்கும் இடங்களுக்குப் பெயராக அமைந்துவிட்டது. கல்வி கற்பிக்கும் இடங்களை இன்றும் பள்ளிக்கூடங்கள் என்று அழைக்கின்றோம். இன்று கல்வித் துறையிலே எவ்வளவோ வளர்ந்து விட்டோம், விஞ்ஞானத் துறை மேலோங்கி நிற்கின்றது. இன்னார்தான் கல்வி கற்கலாம்; இன்னார் கல்வி கற்றக் கூடாது என்ற கட்டுப்பாடே இல்லை. பண்டைக் காலத்தில் பெரும் பாலும் உயர் வகுப்பினரும் செல்வம் படைத்தவருந்தான் கல்வி கற்க முடிந்தது; அந்த நிலை இன்று அழிந்துபோய் விட்டது. தொழில் பண்டைக் காலத்தில், சிறு கருவிகளைக் கொண்டு கையினால் தான் தொழில் செய்து வந்தனர். இக்காலத்தில் எந்தத் தொழிலையும் இயந்திரங்களைக் கொண்டு செய்யும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம். தேவையான பண்டங்களையெல்லாம் சிலமணி நேரத்தில் ஏராளமாகச் செய்து குவித்து விடுகின்றோம். பண்டைக் காலத்தில், இன்ன வேலையை இன்னார் தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்தக் கட்டு பாடு சாதி வேற்றுமையை உறுதிப்படுத்தி வந்தது; இயந்திரங்கள் பெருகியபின் இந்தக் கட்டுப்பாடு உடைந்து விட்டது. இன்று எந்தத் தொழிலையும் எவரும் செய்யலாம் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. பண்டைக் காலத்தில் வானத்திலே பறக்கும் பறவைகளைக் கண்ட மனிதர்கள், நாமும் அப்படிப் பறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். இயந்திரங்கள் செய்து பறந்ததாகக் கதைகள் எழுதிவைத்தார்கள். இன்று உண்மையாகவே பறக்கின்றனர். இவை போல ஒவ்வொன்றையும் எண்ணிப் பார்ப்போ மானால், நமது வளர்ச்சியின் உண்மை புலப்படும். நமது வாழ்வு - நாகரிகம் - வர வர வளர்ந்து வருகிறதே அன்றித் தேய்ந்து போய் விடவில்லை. இவ்வுண்மையை எவரும் ஒப்புக் கொள்வார்கள். வளர்ச்சி நல்லதா? கெட்டதா? என்பது ஆராய்ச்சிக்குரிய செய்திதான். உலக வாழ்வை விரும்புவோர் வளர்ச்சியை வரவேற்கத் தான் செய்வார்கள். வாழ்வை வெறுப்போரே வளர்ச்சியை விரும்பமாட்டார்கள். வளர்ச்சியால் நன்மையுண்டு என்பதில் ஐயம் இல்லை. இனி, சமுதாயத்துறையில் பண்டைத் தமிழர்கள் எப்படி வாழ்ந்தனர்? நாளேற நாளேற எப்படி வளர்ந்தனர்? என்பவை களைப் பின்வரும் பகுதிகளிலே காண்போம். தமிழர் கண்ட கடவுளர் ஆராய்ச்சி முறை பண்டைத் தமிழர் வாழ்வைப்பற்றி இன்று பலப்பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆராய்ச்சி என்பது உண்மை நிலையை உரைப்பதுதான். இதைச் சிலர் மறந்துவிடு கின்றனர். நமது கொள்கைக்கேற்றவாறு பழந்தமிழர் வாழ்க்கை யைப் புனைந்து போற்றியும் தூற்றியும் கூறுகின்றனர். இப்படிக் கூறுவது உண்மையான ஆராய்ச்சியாகாது. தமிழர் வாழ்வு எப்படியிருக்கவேண்டும்? தமிழர் சமுதாயம் எவ்வாறு வாழவேண்டும்? என்பதிலே கருத்து வேற்றுமை உண்டு. எதிர்காலத் தமிழர் வாழ்வுக்கான திட்டங்களைப் பற்றிப் பலர் பல கருத்துக்களை வெளியிடுகின்றனர். இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதில் தவறில்லை. ஆனால், இவர்கள் தங்கள் கருத்துக்களைப் பண்டைத் தமிழர்கள்மேல் சுமத்த முயற்சிக்கின்றனர். நாங்கள் சொல்லுவது போலத்தான் பண்டைத் தமிழர்கள் வாழ்ந்தனர்; நாங்கள் சொல்வதுதான் பண்டைத் தமிழர்களின் கொள்கையாகும் என்று வல்லாடு கின்றனர். இத்தகையோர் பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பற்றிக் கூடத் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர்கள் உள்ளத்திலே படிந்து கிடக்கும் பல்வேறு வெறுப்புக்கள் காரணமாக இவர்களுடைய ஆராய்ச்சிகள் வெறும் கற்பனைக் கதைகளைப் போல் ஆகிவிடுகின்றன. இந்த நிலை மாறவேண்டும்; பழந்தமிழர்களின் உண்மை யான வாழ்க்கை வரலாற்றை அறியவேண்டும். உண்மைகள் அறிவதன் வாயிலாகத்தான் நாம் மேலும் மேலும் முன்னேற முடியும். பல தெய்வங்கள் தமிழர்களிடம் தெய்வ நம்பிக்கையிருந்ததா? அவர்கள் தெய்வங்களை வணங்கினார்களா? அவர்கள் வணங்கி வழி பாடாற்றிய தெய்வங்கள் தமிழ்நாட்டுத் தெய்வங்கள் தாமா? என்ற கேள்விகளைப் புதிய ஆராய்ச்சிப் புலவர்கள், சிலர் கிளப்பி விடுகின்றனர். இக்கேள்விகளுக்குப் புதிய ஆராய்ச்சியாளர்கள் சிலர் பட்டென்று விடையளிக்க முன்வந்து விடுகின்றனர். தமிழர் களிடம் பல தெய்வ வணக்கம் இருந்ததில்லை; அவர்கள் பகுத்தறிவுவாதிகள்; அவர்கள் ஒரு தெய்வத்தைத்தான் - ஒரே கடவுளைத்தான் வணங்கி வந்தனர்; தமிழகத்தில் புகுந்த ஆரியர்கள் தாம் பல தெய்வங்களைத் தமிழர்களை மூடநம்பிக் கைகளுக்கு ஆளாக்கினர் என்று முழக்கம் செய்தனர். தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தால் இம்முழக்கம் தவறு என்பதை அறியலாம். தமிழில் எப்பொழுது இலக்கியம் பிறந்ததோ அப்பொழுதே தமிழர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்; பல தெய்வங்களை வணங்கியவர்கள் என்ற உண்மை காணப்படுகிறது. தமிழர்கள் எப்பொழுது தனித் தனிக் குடும்பங்களாக வாழத் தொடங்கினார்களோ, அப்பொழுதே அவர்களிடம் தெய்வ நம்பிக்கை ஏற்பட்டது. பயமும் இயற்கை நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட அச்சமுமே தெய்வ நம்பிக்கையை உண்டாக்கின. இதன் காலத்தைக் குறிப்பிட முடியாது. தொல்காப்பிய காலத்திலே தமிழ் நாட்டில் பல தெய்வ வழிபாடுகள் நிலைத்திருந்தன. தொல்காப்பிய காலம் கி.பி நான்காம் நூற்றாண்டு என்பது பலர் கருத்து. இது உண்மையானால், கி.பி நான்காம் நூற்றாண்டுக்கு முன்பே, தமிழர்களிடம் பல தெய்வ வணக்கம் குடிகொண்டிருந்ததைக் காணலாம். தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவி என்பது தொல்காப்பியச் சொல்லதிகாரச் சூத்திரம். தெய்வத்தைக் குறிக்கும் பெயர்ச் சொற்கள் என்பது இதன் பொருள். இதனால் தெய்வத்தைக் குறிக்கும் - தெய்வங்களின் பெயர்களைக் குறிக்கும் - சொற்கள் பல தொல்காப்பிய காலத்திலே வழங்கின என்பதைக் காணலாம். தொல்காப்பியர் நால்வகை நிலங்கள் தான் நிலைத்த நிலங்கள் என்று கூறுகின்றார். முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் தாம் எப்பொழுதும் உள்ளவை. பாலை அவ்வப்போது தோன்றும் நிலமாகும். மழையின்றி வறண்டால், முல்லை நிலத்திலும் பாலை நிலம் பிறக்கும். குறிஞ்சியிலும் பாலை தோன்றும்; மருதத்திலும் பாலை காணப்படும்; நெய்தலிலும் பாலை உண்டாகும். இந்த உண்மையை உளங்கொண்டுதான் உலகிற்கு நானிலம் என்று பெயரிட்டனர். நால்நிலம்=நானிலம். தொல்காப்பியர் கூறும் நான்கு நிலத்து மக்களும் நான்கு தனித்தனித் தெய்வங்களை வணங்கி வந்தனர். முல்லை நிலத்தினர் திருமாலை வணங்கினர்; குறிஞ்சி நிலத்தினர் முருகனை வணங்கினர்; மருத நிலத்தினர் இந்திரனை வணங்கினர்; நெய்தல் நிலத்தினர் வருணனை வணங்கினர். *மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்பது தொல்காப்பிய அகத்திணை இயல் சூத்திரம். இதனால், பண்டைத் தமிழர்களிடையே திருமால் வணக்கம், முருகன் வணக்கம், இந்திரன் வணக்கம், வருணன் வணக்கம் ஆகிய பலதெய்வ வணக்கங்கள் இருந்தன என்பதைக் காணலாம். கொற்றவை என்னும் பெண் தெய்வத்தை வணங்கிய செய்தியும் தொல்காப்பியத்திற் காணப்படுகின்றது. கொற்றவை யைத்தான் - துர்க்கை என்றும். காளி என்றும் பல பெயர்களால் கூறுவர். †kw«fil கூட்டிய துடிநிலை, சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே என்பது தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை இயல் சூத்திரம். வீரத்தினால் அடைந்த வெற்றியைக் கொண்டாடு வதற்குத் துடிநிலை என்று பெயர். அவ்வெற்றிக்குத் துணை செய்த தெய்வம் கொற்றவை; அத்தெய்வத்தைப் புகழ்ந்து வாழ்த்திட வணங்கும் விழாவுக்கும் கொற்றவை நிலை என்று பெயர். கதிரவன், தீ, சந்திரன் என்னும் இயற்கைப் பொருள் களையும் தொல்காப்பிய காலத்துத் தமிழர்கள் தெய்வங்களாக வணங்கி வந்தனர். கொடிநிலை, கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்ற புறத்திணை இயல் சூத்திரம் இவ்வுண்மையை விளக்கும். கதிர், தீ, மதி இம் முன்றை வாழ்த்துவதும். கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டுவரும் என்பதுதான் இதன் பொருள். கொடி நிலை - சூரியன்; கொடி - உச்சி. நிலை - நிற்பது. உச்சியில் நிற்பது சூரியன். கந்தழி-நெருப்பு. கந்து - பற்றுக்கோடு. அழி - அழிப்பது; பற்றுக்கோட்டை அழிப்பது தீ. வள்ளி - குளிர்ச்சியைத் தருவது; சந்திரன். தேவர் இவையோர் என்ற சொற்கள் தொல்காப்பியத்திலே வருகின்றன. இவைகள் பலதெய்வங்களைக் குறிக்கும் சொற்கள். கடவுள் என்ற சொல்லுக்கு எல்லாவற்றையும் கடந்து நிற்பது என்று இப்பொழுது பொருள் கொள்ளுகின்றோம்; சிந்தை, சொல், செயல்களுக்கு அப்பாற்பட்டதே கடவுள் என்று கருதுகின்றோம். தொல்காப்பிய காலத்தில் கடவுளர், கடவுள் என்ற சொற்கள் தேவர்களைக் குறித்து வந்தன. கடவுள் வாழ்த்து என்பதற்கு அமரர் வாழ்த்து என்பதே பொருள். கடவுள் என்னும் சொல் இன்று நாம் கொள்ளும் பொருளில் தொல்காப்பிய காலத்தில் வழங்கவில்லை. * காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர் என்பது புறத்திணை இயல் சூத்திரம். இன்பப் பகுதிகளைக் கடவுளிடமிருந்தும் நீக்க மாட்டார்கள்; மக்களிடமிருந்தும் நீக்கமாட்டார்கள் என்று புலவர் கூறுவர் என்பதே இதன் பொருள். அது கடவுள் மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப் பெண்டிர் நயப்பனவும், கடவுள் மானிடப்பெண்டிரை நயப்பனவும், பிறவும் ஆம் என்பது நச்சினார்க்கினியரின் விளக்கம். இவைகளால் கடவுள் என்ற சொல் தேவர்களையே சுட்டி யதைக் காணலாம். தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் பல தெய்வ வணக்கங்கள் இருந்தன. திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை, சூரியன், சந்திரன், நெருப்பு முதலியவைகளையும் தெய்வங்களாக வணங்கி வந்தனர். இவைகளைத் தவிர, கூற்றுவன், பேய், பிசாசு முதலியவைகளையும் தெய்வங்களாகக் கொண்டனர். இமையவர்கள் என்ற தேவர்களையும் தெய்வங் களாகக் கொண்டனர். இவ்வுண்மைகளைத் தொல்காப்பி யத்தைப் படிப்போர் காணலாம். சிவபெருமான் தொல்காப்பிய காலத்தில் சிவ வழிபாடு இருந்ததாகக் காணப்படவில்லை. சிவபெருமானைக் குறிக்கும் சொல் தொல்காப்பியத்தில் இல்லை. சிலர் சேயோன் என்ற சொல் சிவபெருமானைக் குறிப்பது என்று கூறுகின்றனர். சிவபெருமான் நிறம் செம்மை; செய்யோன் என்ற சொல்லே சேயோன் என்று நிற்கின்றது. செய்யோன் சிவந்த நிறந்தோன். ஆதலால் சேயோன் என்பது சிவபெருமானைக் குறித்தது என்பர். குறிஞ்சி நிலத்துத் தெய்வம் முருகன், செவ்வேள், சேயோன் ஆவான். தொன்று தொட்டு குன்றவர்கள் முருகனையே தெய்வ மாகப் போற்றுகின்றனர்; இலக்கிய வழக்கிலும் உலக வழக்கிலும் குறிஞ்சித் தெய்வம் முருகனாகவே காணப்படுகின்றான். சிவபெருமான் குறிஞ்சித் தெய்வம் என்பதற்கு நூல் வழக்கும் இல்லை; உலக வழக்கும் இல்லை. ஆதலால் சேயோன் என்பதற்குச் சிவபெருமான் என்று பொருள் கொள்ளுவது பொருந்தாது என்று தான் எண்ண வேண்டும். இதனால் கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னே தமிழகத்தில் சிவன் என்ற தெய்வமோ சிவமதமோ இல்லையென்று நினைக்க இடம் உண்டு. புறநானூற்றிலே முக்கட் செல்வர் நகர் (பா-6) என்று சிவன்கோயில் குறிக்கப்பட்டுள்ளது. புறநானூறு முதலிய தொகை நூல்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவை என்று கருதுகின்றனர். இந் நூல்களில் சிவபெருமான் காணப்படுகிறார். புறநானூற்றின் 56 வது செய்யுளிலே, சிவபெருமான், பலதேவன், திருமால், முருகன் என்னும் நான்கு கடவுளரும் குறிக்கப்படுகின்றனர். *ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை மாற்றரும் கணிச்சி மணிமிடற் றோனும், கடல்வளர் விரிவளை புரையும் மேனி அடல்வெம் நாஞ்சில் பனைக்கொடி யோனும், †“k© உறு திருமணி புரையும் மேனி விண்உயர் புள்கொடி விறல்வெய் யோனும். மணிமயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும். காளையை வெற்றிக்கொடியாக உயர்த்தியவன்: தீப்போல் விளங்கும் சடைகளை உடையவன்; யாராலும் வெல்லுதற்கு முடியாத மழுப்படையை உடையவன்; நீல மணிபோல் விளங்கும் அழகிய கழுத்தை யுடையவன்; சிவபெருமான். கடலிலே வளர்த்த முறுக்கிய சங்கு போன்ற வெண்ணிறத் தை யுடையவன்; பகைவரைக் கொல்லும் கொடிய கலப்பைப் படையை உடையவன்; பனையைக் கொடியாக உயர்த்தியவன் பல தேவன். கழுவித் தூய்மை செய்யப்பட்ட அழகான நீல மணி போன்ற நிறமுள்ள திருமேனியை உடையவன்; வானோங்க உயர்ந்த கருடக் கொடியை உடையவன்; எப்பொழுதும் வெற்றி யையே விரும்புகின்றவன்; திருமால். நீல மண்போன்ற நிறமுள்ள மயிலைக் கொடியாக உயர்த்தி யவன்; எப்பொழுதும் அழியாத வெற்றியை உடையவன்; அந்த மயிலையே ஊர்தியாகக் கொண்டவன்; ஒளி பொருந்திய செய்யோன்; முருகன். இச்செய்யுள், சிவன், பலதேவன், திருமால், முருகன் என்னும் தெய்வங்களைக் குறித்தன. இந்நால்வருமே இவ் வுலகைக் காக்கும் கடவுளர்; வலிமை வாய்ந்த கடவுளர் என்று இப்பாடல் இயம்பு கின்றது. ஆல் அமர் கடவுள் (பா. 198) என்று திருமால் சுட்டப் படுகின்றார். ஆல் அமர் கடவுள் - ஆலிலையின் மேல் அமர்ந்த கடவுள்; திருமால். அகநானூற்றிலே தெய்வ வணக்கம் குறிக்கப்படுகின்றது, திருமாலை அகநானூற்றுக்கால மக்கள் தெய்வமாகப் போற்றினர் என்று காணலாம். *வண்புனல் தொழுநை வார்மணல் அகன் துறை அண்டர் மகளிர் தண்தழை உடீஇயர் மரம்செல மிதித்த மாஅல் போல என்பது அகநானூற்றின் 59ஆம் பாடலிற் காணும் பகுதி. நல்ல நீர் பொருந்திய தொழுநையாற்றின் மணல் படிந்த பெரிய நீர்த் துறையிலே, ஆயர் குல மகளிர் குளிர்ந்த தழையைப் பறித்து உடுக்குமாறு, மரம் கீழே தாழும்படி மிதித்துத் தாழ்த்திய திருமால்போல என்பது இதன் பொருள். இப்பகுதி கண்ணனைக் குறிப்பதாகக் கருதுகின்றனர். கண்ணன் கோபிகைகளின் ஆடையைக் கவர்ந்த நிகழ்ச்சியைக் குறிப்பதாக எண்ணுகின்றனர். †“N®kU§F அறுத்த சுடர்இலை நெடுவேல் சினமிகு முருகன் சூரனைக் கொன்ற ஒளி பொருந்திய வேற்படையை உடைய முருகன் என்று முருகன் குறிக்கப்படுகின்றான். இது மேற்கண்ட பாடலிற் காணப்படும் பகுதி. கல் நட்டு வணங்குதல் இறந்தோரைத் தெய்வங்களாக வணங்கும் வழக்கமும் தமிழர்களிடம் இருந்தது. இது தமிழ்மக்களின் வழிவழி வழக்க மாகும். போரிலே மாண்ட வீரர்களுக்குக் கல்நட்டு வணங்கும் வழக்கம் தமிழர் பண்பாடு என்பதைத் தொல்காப்பியத்திற் காணலாம். காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல் சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று வீரர்க்குக் கல்நாட்டும் முறையைக் கூறுகிறது தொல் காப்பியப் புறத்திணை இயல் சூத்திரம். முதலிலே நல்ல உறுதியான கல்லைக் காணுதல்; இரண்டாவது அக்கல்லை எடுத்து வருதல்; மூன்றாவது அக் கல்லை நீராட்டுதல்; நான்காவது அதனைக் குறித்த இடத்திலே நடுதல்; ஐந்தாவது அக்கல்லிலே வீரனுடைய பெயரும் புகழும் குறித்தல்; ஆறாவது அதனைத் தெய்வமாக வைத்து விழாக் கொண்டாடி வாழ்த்தி வணங்குதல்; என்று ஆறு வகையாகக் கூறப்படுகின்றது. *நல்அமர்க் கடந்த நாண்உடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் என்ற அகநானூற்றுப் பாட்டின் பகுதியும் (அகம் 67) தெய்வங்களாக நிற்கும் நடுகற்களைக் குறித்தன. நல்ல போரிலே வெற்றி பெற்ற - தோல்விக்கு நாணும் தன்மையுள்ள வீரர்களின் பெயரும் பெருமையும் பொறித்து, வழிகளிலே மயிற்பீலி சூட்டி விளங்குகின்ற நடுகற்கள் என்பதே இதன் பொருள். வீரர்களுக்குக் கல்நட்டு வணங்கும் வழக்கமே தமிழ் நாட்டில் பல தெய்வங்கள் நிலைப்பதற்குக் காரணம் ஆகும். நால்வகை நிலத்துத் தெய்வங்கள்கூட அந்நிலத்து மக்களுக்குத் துணை செய்த வீரர்களின் தலைவர்களாக இருக்கலாம். வீரர் வணக்கத்திலிருந்தே தெய்வ வணக்கம் பிறந்தது என்று சொல் வதற்கும் கூட இடம் உண்டு. விலங்குகள் போல் வாழ்ந்த மக்கள், மனிதப் பண்புடன் வாழ்வதற்கு வழிகாட்டியது தெய்வ நம்பிக்கையாகும். தெய்வ நம்பிக்கை யில்லாமல் மக்கள் வாழ்ந்த காலம் ஒன்று உண்டு. அது, நாகரிகம் அற்ற காலம்; மனிதர்களையே அடித்துத் தின்றுக் காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்த காலம்; வரலாற்றுக்கு எட்டாத காலம். தெய்வ நம்பிக்கைக்கு அடிப்படை பயந்தான்; அது ஒரு மூடநம்பிக்கையாகவும் இருக்கலாம். ஆனால். தெய்வம் உண்டு; அதற்கு நம்மைவிட மிகுந்த வல்லமை உண்டு. அதனால் எதையும் செய்ய முடியும் என்ற எண்ணம் பிறந்த பிறகு தான் மனிதன் நன்மை தீமைகளைப் பகுத்தறியத் தொடங்கினான்; கட்டுப் பாட்டுடன் நடக்கத் தொடங்கினான்; அன்பும் அறிவும் பெற்றுக் கூட்டுறவு வாழ்வு வாழத் தொடங்கினான்; மக்களிடையே நல்ல குடும்ப வாழ்வு, அரசியல் அமைப்பு, சமுதாயக் கட்டுப்பாடு முதலியவைகள் தெய்வநம்பிக்கைக்குப் பிறகுதான் உண்டாயின. ஆயினும், கொடுமைக்கும் கொள்ளைக்குங்கூடத் தெய்வநம்பிக்கை பயன்பட்டது. இவ்வுண்மையையும் நாம் மறுக்கவில்லை. இதைப் பின்னே காண்போம். பழங்கால நாகரிகம் படைத்த எந்த நாட்டிலும் தெய்வ வணக்கம் உண்டு; தெய்வ நம்பிக்கையும் உண்டு. பண்டைக் கால மக்களை அற நெறியிலே நடப்பதற்கு வழிகாட்டியது தெய்வ வணக்கம்தான். அறிவும், கல்வியும் குறைந்திருந்த அநாகரிக காலத்தில் மக்கள் தெய்வத்திற்கு அஞ்சி வாழ்ந்தனர்; அவ்வாறு அஞ்சி வாழ்ந்ததால்தான் அவர்கள் அறங்கடவாமல் நடந்து வந்தனர். ஆகவே, பழைய நாகரிகம் படைத்த தமிழர்களிடம் தெய்வ வணக்கம் இருந்ததில்லை; அது அந்நியரால் புகுத்தப்பட்டது என்று கூறுவது தமிழருடைய நாகரிகத்திற்கே இழுக்காகும்; அந்நியரால் தான் தமிழர் நாகரிகம் பெற்றனர் என்று சொல்லு வதாகத்தான் முடியும். மக்கள் அறிவு வளர்ச்சி யடைந்த பின்னர்த் தான் கடவுள் ஒன்று என்ற கருத்துப் பிறந்தது. ஒரு கடவுள்தான் உண்டு என்ற கருத்துப் பண்டைக்காலத்தில் இல்லை. பல தெய்வங்கள் உண்டு என்ற நம்பிக்கைதான் பண்டைக்கால மக்கள் கொண்ட நம்பிக்கை. சங்க காலத்திற்குப் பின்னர்த் தான்-சைன-பௌத்த மதங்கள் தமிழ்நாட்டிலே வளர்ந்து அவற்றின் செல்வாக்கு குறைந்த பிறகுதான்-சைவ வைணவ மதங்கள் சிறப்புறத் தொடங்கிய காலத்தில்-கடவுள் ஒருவர்தான் என்ற கொள்கை தமிழகத்தில் தலையெடுக்கத் தொடங்கிற்று என்று கூறிவிடலாம். *ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்! நமன்இல்லை; நாள்நாமே சென்றே புகுங்கதி இல்லை; நும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே. என்பது திருமூலர் திருமந்திரம். இந்நூல் சுந்தரமூர்த்தி நாயனார் காலத்திற்குச் சிறிது முன்னே பிறந்திருக்கலாம். சங்க காலத்திற்குப் பிற்பட்ட நூல், இந்நூலில் விநாயகரைப் பற்றிக் காணப்படுவதே இது பிற்பட்ட நூல் என்பதற்குச் சான்றாகும். சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் விநாயகர் என்னும் தெய்வம் இல்லை. இத்திருமந்திரப்பாடற் பகுதியான ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பதை வைத்துக்கொண்டு பண்டைத் தமிழர்களிடம் பல தெய்வ வணக்கம் இல்லை என்று கூறுவது பொருந்தாது. பழந்தமிழ் நூல்களைக் காண்போர் இவ்வாறு உரைப்பது தவறு என்பதை உணர்வார்கள். சங்க காலத் தமிழர்கள்-பண்டைத் தமிழர்கள்-பல தெய்வங் களை வணங்கி வந்தனர். திருமால்; சிவபெருமான்; முருகன்; வருணன்; கொற்றவை; பலதேவன் முதலியவை தமிழர்களால் வணங்கப்பட்ட தெய்வங்கள். இவைகளைத் தவிர இன்னும் பல தெய்வங்களையும் அவர்கள் வணங்கி வந்தனர். மேலே கூறிய வற்றால் இவ்வுண்மைகளைக் காணலாம். சங்ககாலத்திற்குப் பின்னர்த்தான், சைவ வைணவ மதங்கள் தமிழகத்தில் வளர்ந்தன; பக்திமார்க்கமாகப் பரவின. அக்காலத்தில்தான் கடவுள் ஒன்று என்ற கொள்கை வலியுறுத்தப்பட்டது. ஆயினும் பல தெய்வங் களை வணங்கிய பரம்பரைப் பண்பாடு தமிழர் சமுதாயத்தை விட்டு என்றும் ஒழியவில்லை. பல தெய்வ நம்பிக்கையும் வணக்கமும் இன்றும் தமிழர்கள்பால் நிலைத்துத்தான் நிற்கின்றன. முன்னோர்களின் கடவுள் வழிபாடு பண்டைத் தமிழ் மக்கள் தங்கள் பழக்க வழக்கங்களை ஒட்டியே, தாங்கள் நம்பிய கடவுளர்களையும் வழிபட்டு வந்தனர். தமிழகத்தில் மட்டும் அன்று; எந்நாட்டிலும் இப்படித்தான். இன்றும் நாம் சுவைக்கும் நல்ல பண்டங்களை நமது காதலர் களுக்குக் கொடுக்கின்றோம்; நமது குழந்தைகளுக்குக் கொடுக் கின்றோம்; நமது பெற்றோர்களுக்குக் கொடுக்கின்றோம். நமது நண்பர்களுக்கு கொடுக்கின்றோம். இது இயற்கை. இந்த இயற்கை வழியிலேயே கடவுளர் வழிபாடும் நடைபெற்று வந்தது. பெரியபுராணத்தில் உள்ள கண்ணப்ப நாயனார் வரலாறு ஒன்றே இதற்குப் போதுமான சான்றாகும். திண்ணன் என்ற கண்ணப்பர் வேடர் மரபில் வந்தவர். வேட்டையில் கிடைத்த நல்ல ஊன்களை உண்டு மகிழ்வதே வேடர்கள் வாழ்க்கை. அக்கண்ணப்பர் காளத்தியில் உள்ள சிவலிங்கத்தைக் கண்டவுடன் அன்புகொண்டார்; தாம் சுவைத்துப் பார்த்த ஊனையே சிவலிங்கத்துக்குப் படைத்தார். சிவபெருமானும் அதை ஏற்றார். இவ்வாறு பெரியபுராணம் கூறுகிறது. இது, மக்கள் தங்கள் பழக்கவழக்கங்களை ஒட்டியே தெய்வங்களைப் போற்றுவார்கள் என்பதையே காட்டுகின்றது. பண்டைத்தமிழர்கள் புலாலையும் மதுவையும் வெறுத்த வர்கள் அல்லர். சங்க நூல்களிலே புலால் உணவும், கட்குடியும் கண்டிக்கப்படவில்லை. சிறந்த வள்ளல்கள், பெரிய புலவர்கள்-குறிப்பாகக் கபிலர், ஔவையார் போன்ற புலவர்கள் எல்லாரும் இவற்றை விலக்கவில்லை. இவர்கள் எல்லோரும் புலால் உணவையும், மதுவையும் மகிழ்ந்து உண்டதையும், பாராட்டி யதையும் புறநானூற்றிலே காணலாம். பத்துப்பாட்டிலே புலால் உணவும் மதுவும் பாராட்டப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். புலால் உண்ணாதவர்களும் சங்ககாலத்திலே இருந்தனர் என்பதைப் பத்துப்பாட்டிலே காணலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர், பெரும்பாலான தமிழர்கள் - பழந்தமிழர்கள் - மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்து வாழ்ந்தவர்கள் என்பதில் ஐயம் இல்லை. இத்தகைய தமிழ் மக்கள் தங்கள் கடவுளர்களை எம் முறையில் வணங்கியிருக்க முடியும்? தங்கள் பழக்கவழக்கங் களைப் பின்பற்றித்தான் வணங்கியிருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை. ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கினார்கள்; நமது மாமிசங்களைப் படைத்து வழிபாடு செய்தார்கள். இந்த உண்மையைச் சங்க இலக்கியங்களில் நாம் காணுகின்றோம். பலியிட்டு வணங்குதல் மகள், காதல் நோயால் வருந்தியிருக்கின்றாள். அதைக் கண்ட தாய் உண்மையை உணரவில்லை. ஏதோ தெய்வக் கோளாறினால் தான் தனது அருமை மகளுக்கு நோய் வந்தது என்று நினைத்தாள். ஆதலால் தெய்வங்களுக்குப் பூசைபோட்டு மகளின் பிணியைத் தணிக்கும்படி வேண்டிக்கொள்வதென்று முடிவு செய்தாள். இதை அறிந்த தோழிப்பெண் இச்செய்தியைத் தன் தலைவியிடம் அறிவிக்கின்றாள். குறுந்தொகையின் 263 ஆவது செய்யுளில் இப்பொருள் அமைந்திருக்கின்றது. தோழியே! நீரோடும் ஆற்றின் நடுத்திட்டிலே அன்னை வெறியாட்டு எடுக்கக் கருதியிருக்கின்றாள். உன்னுடைய காதல் நோயை எந்த வகையிலும் தணிக்கமுடியாத வேறு பல தெய்வங் களைப் போற்ற நினைத்தாள். ஆட்டுக்குட்டியை அறுத்து, தினை யால் செய்த பலியைப்படைத்து, பலவகையான வாத்தியங் களும் முழங்கும்படி பூசை போடும்போது, அத்தெய்வங்கள் பூசாரிகளின் மேல் தோன்றுமே தவிர, உன் காதல் நோய்க்கு மருந்தாகாது. இத்தகைய தெய்வங்களை வாழ்த்தி, என் மகளாகிய இவள் பேயால் பீடிக்கப்பட்டாள் என்று, உன் அன்னை தெய்வத்தின் மேல் பழி சுமத்துதல் வருந்தத்தக்கது. *மறிக்குரல் அறுத்துத், தினைப்பிரப்பு இரீஇச், செல்ஆற்றுக் கவலைப் பல்இயம் கறங்கத் தோற்றம் அல்லது, நோய்க்கு மருந்து ஆகா வேற்றுப் பெருந்தெய்வம் பலவுடன் வாழ்த்திப், பேஎயக் கோளீஇயள், இவள் எனப்படுதல் நோதக் கன்றே தோழி இதுவே அந்தக் குறுந்தொகைச் செய்யுள். பழந்தமிழ் மக்கள் பல தெய்வங்களுக்கும் உயிர்பலியிட்டு வழிபாடாற்றினர் என்ற உண்மையை இப்பாடல் காட்டுகின்றது. புறநானூற்றிலேயும், கடவுளர்க்குப் புலால் உணவு தான்-புலால் வைத்துப் பூசை செய்வதுதான்-விருப்பமானது என்ற கருத்து காணப்படுகின்றது. வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவி னோரும் (புறம் 62) வாடாத கற்பகத்தின் தாரினையும், இமையாத கண்ணினையும் நாற்றமாகிய உணவையும் உடைய தேவர்களும். நாற்றம் என்பது சங்க காலத்தில் நறுமணத்தைக் குறித்தது, சமைத்த புலால் உணவின் வாசனையை நறுமணம் என்றே இன்றும் முகர்வோர் உண்டு. இப்புறநானூற்றுக் குறிப்பு, தமிழர் தெய்வங்களுக்குப் புலால்படைத்து வணங்கி வாழ்த்தினர் என்பதைக் காட்டும். பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சியில் சிவபெருமானை உள்ளிட்ட எல்லாத் தெய்வங்களும், புலால் உணவையே விரும்பும் தெய்வங்களாக இருந்தன என்ற குறிப்பு காணப்படுகின்றது. *நீரும், நிலனும், தீயும், வளியும் மாகம் விசும்போடு ஐந்துடன் இயற்றிய, மழுவாள் நெடியோன் தலைவனாக, மாசு அற விளங்கிய யாக்கையர், சூழ்சுடர் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவின் உருகெழு பெரியோர். நீர், நிலம், தீ, காற்று, திக்குகளையுடைய ஆகாயத்துடன் இந்த ஐந்தையும் ஒன்றாகப் படைத்தவன்; மழுவாகிய வாளாயுதத்தை யுடையவன்; பெரியோன்; ஆகிய சிவபெருமானை முதல்வனாகக் கொண்டவர்கள்; குற்றமற்று விளங்கும் உருவத்தையுடையவர்கள்; ஒளி பொருந்திய வாடா மலர் மாலையை அணிந்தவர்கள்; இமையாத கண்களை உடையவர்கள்; நாற்றம் கமழும் புலால் உணவை விரும்புகின்றவர்கள்; அச்சம் நிறைந்த பெரிய தெய்வங்கள். (மதுரைக் காஞ்சி 453-458) இந்தப் பத்துப்பாட்டுப் பகுதியும், பண்டைத் தெய்வங்கள் புலாலையே விரும்பின; மக்களும் அவ்வுணவையே அவை களுக்குப் படைத்தனர்; என்ற உண்மையை உணர்த்திற்று. தேவர்களுக்காக வேள்விகள் நடத்தப்பட்டன. வேள்வியிலே பலியிடப்படும் பிராணியின் ஊன் தேவர்கள் விரும்பும் உணவு. இதையே அவிப்பலி என்பர். இத்தகைய வேள்வி பாரத நாட்டினர் அனைவராலும் பண்டைக்காலத்தில் போற்றப்பட்டு வந்தது. பாரத நாட்டு மக்கள் பெரும்பாலும் பண்டைக் காலத்தில் புலால் உணவினராயிருந்தனர்; ஆதலால் உயிர்ப்பலியிடும் வேள்விகளைச் செய்தனர். அவைகளின் வாயிலாகக் கடவுளரை வழிபட்டனர். இவ்வுண்மையையே இது காட்டும். தமிழ்மக்களும் இதற்கு விலக்கல்லர். தமிழ் மக்கள் பண்டைக்காலத்தில் தங்கள் பழக்கவழக்கங் களை ஒட்டியே கடவுளரை வணங்கினர்; பொதுவாகப் பாரத நாட்டு மக்கள் அனைவரும் இம்முறையில் தான் வணங்கினர்; இவ்வுண்மைகளை மேலே கூறியவற்றைக் கொண்டு அறியலாம். இனி, குறிப்பிட்ட சில தெய்வங்கள் தமிழர்களால் எம்முறையில் வணங்கப்பட்டன என்பதையும் காண்போம். முருகன் வழிபாடு சங்க நூல்களிலே முருகனுக்கு வழிபாடாற்றிய முறை தான் விரிவாகக் கூறப்படுகின்றது. உயிர்ப்பலியில்லாமல் முருக வழிபாடு நடந்ததில்லை யென்றே சொல்லிவிடலாம். தலைவி காதலால் வருந்துகின்றாள். அதை, அவள் அன்னை அறியவில்லை. முருகனால்தான் அவளுக்குப் பிணி நேர்ந்தது என்று கருதினாள். முருகனுக்கு விழாவெடுத்தாள். அப்போது பூசாரி மீது முருகன் ஆவேசம் வந்தது. அவன் ஆடுகின்றான். அவனைப் பார்த்துத் தோழி கேட்பதாக ஒரு செய்யுள் குறுந்தொகையில் காணப்படுகின்றது. இது குறுந்தொகையின் 362-ஆம் பாட்டு. இச்செய்யுள் தமிழ்மக்கள் முருகனை எவ்வாறு வழிபட்டனர் என்பதைக் காட்டும். முருகனை வழிபட்டு வந்த அறிவுள்ள வேலனே! கோபித்துக் கொள்ள வேண்டாம். உன்னை ஒன்று கேட் கின்றேன், பல வேறுபட்ட நிறமுள்ள சில சோற்றையுடைய பலியை வைத்துப் படைத்து, சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று இத்தலைவியின் நல்லநெற்றியையும் தடவி, முருகக்கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுக்கின்றாய், இப்படிக் கொடுக்கும் பலியை, இவளை வருந்தச் செய்த மலை நாட்டுத் தலைவனுடைய மார்பும் உண்ணுமோ? * முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவல் ஓம்புமதி! வினவுவது உடையேன்! பல்வேறு உருவில் சில்அவிழ் மடையொடு சிறுமறி கொன்று, இவள் நறுநுதல் நீவி, வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலழும் உண்ணுமோ பலியே இது முருகனுக்கு ஆடு பலியிடும் வழக்கம் உண்டென்பதைக் குறித்தது. வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து அன்னை அயரும் முருகு வெறியெடுத்தால் உன் நோய் தீரும் என்று எண்ணி ஆட்டை அறுத்து உன் அன்னையால் வணங்கப்படும் முருகன் என்பது நற்றிணைப் பாட்டு 47. *களம் நன்கு இழைத்துக், கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலி கொடுத்து, உருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள் முருகனுக்குப் பூசைபோடும் இடத்தை நன்றாகத் தூய்மை செய்தான், முருகன் படையாகிய வேலுக்கு மலர்மாலை சூட்டினான். சிறந்த நகரில் ஆரவாரம் உண்டாகும்படி முருகனைப் புகழ்ந்து பாடினான். ஆட்டைப் பலி கொடுத்தான். நல்ல தினையுடன் இரத்தத்தையும் கலந்து தூவி முருகனை வழிபடச் செய்தான். இத்தகைய அச்சந்தரும் நள்ளிரவு - என்பது அகநானூற்றுப் பாடல் 22. சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து வாரணக் கொடியொடு வயின்பட நிறீஇ ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் சிறிய தினையரிசியைப் பூக்களோடு கலந்து பலி அரிசியாக வைப்பர்; ஆட்டை அறுப்பர்; கோழிக்கொடியொடு அவ் விடத்தில் முருகனை நிலைநாட்டுவர். இவ்வாறு ஊர் தோறும் நம் முருகனுக்கு விழாச் செய்வர். †“kjtÈ நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇ மிகுந்த வலிமை பொருந்திய பெரிய கால்களையுடைய கொழுத்த ஆட்டுக்கடாவின் இரத்தத்துடன் கலந்து பிசைந்த தூய வெண்மையான அரிசியைச் சிலர் பலியாகச் செய்து பல பிரப்பங்கூடைகளிலே வைத்து முருகனை வணங்குவார்கள். இவ்விரண்டு குறிப்புக்களும் பத்துப்பாட்டில் திருமுரு காற்றுப்படையில் காணப்படுவன. மேலே காட்டிய குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, பத்துப்பாட்டு முதலியவைகளின் பாடல்களால், முருகன் தமிழ் மக்களால் உயிர்ப்பலியிட்டு வணங்கப்பட்ட தெய்வம் என்பதை அறியலாம். காளி வழிபாடு துர்க்கை, ஐயை, காளி என்னும் பெண் தெய்வத்திற்கும் பலி கொடுத்தே வழிபாடு செய்தனர் தமிழர். *விடர்முகை அடுக்கத்து விரல்கெழு சூலிக்குக் கடனும் பூணாம்: கைந்நூல் யாவாம் பிளப்பும் குகையும் உள்ள மலைப்பக்கத்தில் உள்ள வெற்றி பொருந்திய துர்க்கைக்குப் பலியிட்டுப் பூசை செய்யும் கடமையைச் செய்யாது விட்டோம்; கையில் காப்பு நூலைக் கட்டாமலும் விட்டோம், இந்தக் குறுந்தொகைப் பாட்டு, தமிழர்கள் துர்க்கைக்குப் பூசை செய்த விதத்தைக் காட்டுகிறது. துர்க்கைக்கு உயிர்ப்பலி யிட்டுப் பூசைபோடும் வழக்கம் இருந்ததை விளக்குகிறது. விழாத் தொடங்கும்போது, மஞ்சள் நூலைத் தன் கையில் கட்டிக் கொள்வதற்குக் காப்புக் கட்டிக்கொள்வது என்பார்கள். விழாவின் முடிவிலேதான் காப்புக் களைவார்கள். இவ்வழக்கம் இன்றும் தமிழ் நாட்டிலே கிராம தேவதைகளுக்கு நடத்தும் திருவிழாக்களில் உண்டு. ஐயை, காளி, துர்க்கைத் திருவிழா எவ்வாறு நடை பெற்றது என்பதைச் சிலப்பதிகாரத்திலே காணலாம். சிலப்பதிகாரம். மதுரைக்காண்டம், வேட்டுவவரியிலே இவ்விழாவைப் பற்றி விரிவாகக் காணப்படுகின்றது. நாகரிகமான வழிபாடு பண்டைக்காலத்திலே தெய்வங்களுக்கு உயிர்ப்பலியிட்டு வணங்கும் வழக்கமே மிகுதியாக இருந்தது. ஆயினும், அறிஞர்கள் அதை நாகரிகமுள்ள வழிபாடாகக் கொள்ளவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உயிர்ப்பலியிடும் வழக்கத்தைக் கண்டிக்கத் தொடங்கி விட்டனர். தெய்வ வணக்க முறையிலே தமிழ் மக்களிலே ஒரு பகுதியினர் நாகரிகம் பெற்று முன்னேறி வந்தனர். தெய்வங்களுக்கு உயிர்ப் பலியிடுவது தவறு என்ற கொள்கை, சைன, பௌத்த மதங்களின் செல்வாக்குப் பாரத நாட்டில் பரவிய பிறகு தான் ஏற்பட்டிருக்க வேண்டும். தமிழ கத்திலும் அம்மதங்கள் பரவிய பின்னர்த்தான் உயிர்ப்பலியிடும் வழக்கம் குறைந்தது. சிவபெருமான் திருமால் முருகன் போன்ற தெய்வங்களை, மலர் கொண்டு பூசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. காய் கனிகள், தானியங்களால் செய்த பண்டங்கள், இவைகளைப் படைத்துப் பூசிக்கும் வழக்கம் ஏற்பட்டது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்தில் இவ்வழக்கம் தமிழகத்தில் மிகுதியாகப் பரவியது. ஆயினும், புலால் உணவை வெறுத்தவர்களே, தாங்கள் வழிபடும் தெய்வங்களைச் சைவத் தெய்வங்களாக - மாமிசப் படையலை வேண்டாத தெய்வங்களாக வைத்து வழிபாடு செய்து வந்தனர். மாமிசம் உண்ணும் மக்கள் தாங்கள் வணங்கும் தெய்வங் களைத் தங்கள் வழக்கப்படியேதான் உயிர்ப்பலியும் மாமிசப் படையலும் வைத்து வணங்கி வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட உயிர்ப்பலித்தடைச் சட்டந்தான் தெய்வங் களுக்கு உயிர்ப்பலியிடுவதை ஒரளவு தடுத்தது என்று கூறலாம். மேலே கூறியவைகளைக் கொண்டு, பண்டைத் தமிழர் களின் தெய்வவணக்க முறை அவ்வளவு நாகரிகம் பெற்ற முறையில் இல்லை என்பதைக் காணலாம். வரவர மக்கள் நாகரிகத்தில் முன்னேறிவருவதுதான் இயற்கையாகும். இந்த உண்மையை ஒட்டியே நாயன்மார்கள் ஆழ்வார்கள் காலத்தி லிருந்து தமிழ்மக்கள் கடவுள் வணக்க - வழிபாட்டு முறையிலே மிகவும் நாகரிகம் பெற்று வளர்ந்து வந்திருக்கின்றனர். இந்த வளர்ச்சி இயற்கையான வளர்ச்சியாகும். இந்த வளர்ச்சிக்குக் காரணம், சமண மதமும், புத்த மதமுந்தான் என்பதில் ஐயமில்லை. இம்மதங்கள் வடநாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதங்கள், நாகரிகம் எங்கிருந்து வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பண்பு பண்டைத் தமிழர்களிடம் படிந்திருந்தது. இதை விளக்குவதற்குச் சமண, புத்த மதங்களில் உள்ள உயர்ந்த கொள்கைகளைத் தமிழ் சான்றோர்கள் தடையன்றி ஏற்றுக்கொண்டனர் என்ற ஒன்றே போதுமானதாகும். வாழ்வும் வழிபாடும் பண்டைத் தமிழ் மக்கள் இவ்வுலக வாழ்வையே பெரிதாக மதித்து வந்தனர். இவ்வுலகத்தில் இன்புற்று வாழ்வதே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். உலகிற் பிறந்த எல்லா மக்களும் இன்புற்று வாழவேண்டும் என்பதே அவர்கள் கொள்கை, அறநெறியிலே பொருளீட்டி, இன்பம் பெற்று வாழவேண்டும் என்பதே அவர்கள் கருத்து. பண்டைத் தமிழ் நூல்கள் அனைத்தும், அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களைப் பற்றித்தான் மொழிகின்றன. இம்முப் பொருள்களைப் பற்றியே செய்யுட்கள் அமையவேண்டும் என்று தொல்காப்பியர் கூறுகின்றார். சங்க இலக்கியங்களில் அறம் பொருள் இன்பங்களைப் பற்றிய பாடல்கள் தாம் மிகுதியாகக் காணப்படுகின்றன. தமிழின் பழமை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாடல்கள் தமிழ் மொழியில் அமைந்திருக்கின்றன, பாரதநாட்டு மொழி களிலே, வடமொழியைத் தவிர பழம்பாடல்களைப் பெற்றிருக்கும் சிறப்பு தமிழ் மொழி ஒன்றுக்குத்தான் உண்டு. பாரத நாட்டில் வழங்கும் வேறு எம்மொழியிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாடல்களோ நூல்களோ இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய வேறு எம்மொழி நூல்களிலும், பாடல்களிலும் மக்கள் வாழ்க்கையை மட்டும் குறிக்கோளாகக் கண்ட கருத்துக்களைக் காணமுடியாது. இது பன்மொழிப் பயிற்சியுடையவர்கள் கண்ட உண்மை. சங்கநூல்கள் என்று கூறப்படுகின்றவை எல்லாம் தமிழ்ப் பாடல்களின் தொகுப்புகள் தான். பழந்தமிழ்நூல்களிலே, முழு நூலாக முதலில் பிறந்த நூல் - ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட ஒப்பற்ற நூல் - திருக்குறள் ஒன்றுதான். அது மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் சிறந்த நூல் என்பதை உலகம் ஒப்புக்கொண்டு பாராட்டுகின்றது. அந்நூலும் பழந்தமிழர் கொள்கையை ஒட்டி, அறம், பொருள், இன்பங்களைப் பற்றியே கூறிச் செல்லுகின்றது. இவ்வுலகில் மக்கள் சிறந்து வாழ்வதற்கான வழியையே காட்டு கின்றது. இதுதான் பழந்தமிழர் பண்பாடு. ஆனால், ஏறக்குயை 1500 ஆண்டுகளுக்கு முன் பிறந்த திருக்குறளின் கொள்கைகள் முழுவதையும் இக்காலத்து மக்கள் பின்பற்றுகின்றனர் என்று சொல்ல முடியாது; பின்பற்றவும் முடியாது. அக்காலத்திற்கும் இக்காலத்துக்கும் எத்தனையோ மாறுதல்கள் உண்டு; மாறுவது இயற்கை. காதல் வாழ்வைப் பற்றி அகப்பொருள் நூல்களிலே காணலாம். அறநெறியிலே பொருளீட்ட வேண்டும்; மனமொத்த ஆடவரும் பெண்டிரும் கூடி இல்லறம் நடத்த வேண்டும்; பிள்ளைகளைப் பெற்று மகிழ வேண்டும் என்ற கருத்துக்களை அகப்பொருள் நூல்களிலே காண்கின்றோம். மக்கள் இத்தகைய சிறந்த வாழ்வைக் காப்பதற்காகவே நல்ல அரசியல் அமைப் பையும் விரும்பினர். பண்டைத் தமிழ் நூல்கள் இவ்வாறு காதலைப் பற்றியும் அரசியலைப் பற்றியும் கூறியிருப்பதைக் கொண்டே அவர்களின் சிறந்த நாகரிகத்தை அறியலாம். இவ்வுலகில் எல்லா மக்களும் இன்புற்று வாழ்வது ஒன்றே அவர்களுடைய குறிக்கோள் என்பதைக் காணலாம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பாடப்பட்ட ஒரு சிறு செய்யுளைக் காண்போம். அது பாண்டியன் அறிவுடை நம்பி என்னும் புலவனால் பாடப்பட்டது, அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்களின் எண்ணம் அப்படியே காணப்படுகின்றது. *படைப்புப் பலபடைத்து பலரோடு உண்ணும் உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக் குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, இட்டும், தொட்டும், கவ்வியும், துழந்தும், நெய்உடை அடிசில் மெய்பட விதிர்த்தும், மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத்தாம் வாழும் நாளே, என்பதுதான் அப்பாடல். இது புறநானூற்றின் 188 ஆவது பாடல். இப்பாடலில் இவ்வுலக வாழ்விலே அடையும் இன்பத்தைத் தவிர வேறு எதுவும் கூறப்படவில்லை. பல செல்வங்களையும் பெற்றவர்; அச்செல்வத்தைப் பலரோடு கூடி அனுபவிப்பவர்; பலருக்கும் உணவிட்டுத் தாமும் உண்பவர்; மிகப்பெரும் செல்வர். ஆயினும், அவர் மகிழத்தக்க செல்வம் மற்றொன்று உண்டு. காலம் தாழ, மெதுவாக நடந்து, சிறிய கையை நீட்டிக் கலத்திலே கிடக்கும் உணவைத் தரையிலே போட்டு, அதைக் கையால் தோண்டியும், கவ்வியும், அளாவியும், நெய்கலந்த அந்த உணவை உடம்பிலே படும்படி உதறியும், பெற்றோர் உள்ளத்தை மயக்கும் தன்மையுள்ளவர்கள் மக்களே யாவர். அத்தகைய மக்களைப் பெறாதவர் தம் வாழ்நாளில் பயன் பெறாதவர் ஆவார். அவர் வாழ்நாள் வீண் நாள் தான். இதுவே இப்பாட்டின் பொருள். இதில் இவ்வுலக இன்பம் ஒன்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. அறம், பொருள், இன்பம் இம்மூன்றையும் இச்செய்யுள் எடுத்துக்காட்டுகின்றது. பல செல்வங்களையும் தேடிச்சேர்க்க வேண்டும்; இது பொருள். அச்செல்வத்தின் பயனைப் பலரும் நுகரும்படி செய்ய வேண்டும்: இது அறம். மனையாளோடு கூடி மக்களைப் பெற்று மனமகிழ்ந்து வாழவேண்டும்: இது இன்பம். இவ்வாறு பொருள் அறம் இன்பம் மூன்றைப் பற்றியும் இப்பாடல் கூறியிருக்கின்றது. இது போன்ற தமிழ்ப் பாடல்கள் எண்ணற்றவைகளைப் பெற்றிருக்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இத்தகைய பாடல் கள் தமிழ் மொழியில் அமைந்திருப்பதைக் கண்டு பன்மொழி பயின்றவர்கள் வியப்புறுகின்றனர். வேறு எந்நாட்டிலும், எம்மொழியினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இத்தகைய பாடல்களைக் காணமுடியவில்லை என்று கூறுகின்றனர். தமிழர்களின் ஒப்பற்ற பழமையான நாகரிகத்திற்கு இதுபோன்ற பாடல்களே சான்றாக நிற்கின்றன. இத்தகைய நாகரிகம் பெற்ற தமிழர்களிடம், பல வகைப் பட்ட தெய்வ வணக்கங்கள் இருந்தன; அத்தெய்வங்களை அவர்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப வணங்கி வழிபாடு செய்தனர் என்பது உண்மை. அவர்கள் பல தெய்வங்களை வழிபட்டதன் கருத்து என்ன? இவ்வுலக இன்பத்தையே பெரிதும் குறிக்கோளாகக் கொண்ட மக்கள் தெய்வ வழிபாட்டைப் பின்பற்றியதற்குக் காரணம் என்ன? இக்கேள்விகளுக்குச் சங்க இலக்கியங்கள் தெளிவாக விடையளிக்கின்றன; பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும், பண்டைத் தமிழர்களின் நம்பிக்கைகளிலும், பழக்க வழக்கங்களிலும் இக்கேள்விகளுக்குகான விடையைக் காணலாம். வழிபடு தெய்வம் பண்டைத் தமிழ் மக்கள் தனித்தனியே அவரவர்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கி வந்தனர். அவர்கள் ஒன்று கூடிக் குறிப்பிட்ட தெய்வத்தைக் கொண்டாடினர். அவர்கள் தங்கள் விருப்பப்படி தனித்தனியே வணங்கிய தெய்வத்தை வழிபடுதெய்வம் என்று அழைத்தனர். *அழிவுஇல முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண்கண்ட அங்கு அழியாத செயலைச் செய்ய முயலுகின்ற ஆசையுள்ள மக்கள், தாங்கள் வழிபடும் தெய்வம், தமக்கு உதவுவதற்காகத் தம் கண்முன்னே வந்ததைக் கண்டதுபோல என்பது நற்றிணை 9 ஆவது பாடல். இதில் தங்கள் முயற்சிக்குத் துணைவேண்டியே தெய்வத்தை வழிபட்டனர் என்ற கருத்தைக் காணலாம். †“tÊg£l தெய்வந்தான் வலிஎனச் சார்ந்தார்கண் கழியும் நோய் கைம்மிக அணங்கா கியதுபோல தம்மைக் காக்கும் என்று எண்ணி வழிபாடு செய்யப்பட்ட தெய்வமே, தம்மைச் சரணாக அடைந்தவர்களை மிகவும் வருந்தும்படி துன்புறுத்தியது போல என்பது நெய்தற்கலி 16 ஆவது செய்யுள். இதிலும், தம்மைப் பாதுக்காக்க வேண்டியே தெய்வத்தை வழிபட்டனர் என்ற உண்மையைக் காணலாம். வெற்றிக்காக வேண்டுதல் வீரர்கள் வெற்றியின் பொருட்டுக் கொற்றவை என்னும் தெய்வத்தை வணங்கி வந்தனர். *மறம்கடை கூட்டிய துடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே. போரிலே வெற்றி பெற்றவர்கள் உடுக்கையடித்து வெற்றியைக் கொண்டாடுவதும்; அவ்வெற்றியைத் தந்த கொற்றவையின் சிறப்பை எடுத்துப் புகழ்ந்து கொண்டாடுவதும், வெட்சித்திணை யைச் சேர்ந்ததாகும் என்பது தொல்காப்பியப் புறத்திணை இயலின் 59 ஆவது நூற்பா. இதனானே, வருகின்ற வஞ்சித்திணைக்கும் கொற் றவைநிலை காரணமாயிற்று; தோற்றோர்க்குக் கொற் றம் வேண்டியும் வென்றோர்க்கு மேற்செல்லும்கால் கொற்றம் வேண்டியும் வழிபடு வராதலின் - இது மேலே காட்டிய நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர் கூறும் விளக்கம். இதனால், போரிலே வெற்றி பெற உதவும் தெய்வம் கொற்றவை என்பதை அறியலாம். வெற்றி பெற்றோரும், மேலும் வெற்றி வேண்டிக் கொற்றவையைப் போற்றுவர். தோற்றோரும் வெற்றி வேண்டிக் கொற்றவையை வழிபடுவர். இந்தக் கொற்றவை வழிபாட்டின் கருத்தைச் சிலப்பதி காரத்திலே தெளிவாகக் காணுகின்றோம். அம்பு விடும் வில்லைக் கையிலே கொண்ட மறவர் குடியிலே பிறந்தவள்; உரிமையுடையவள்; முன்பு வேண்டிக் கொண்ட கடனைப்பெற்றவள்; கொக்கரிக்கின்ற வாயை உடை யவள்; தெய்வம் வந்து ஆடும் சாலினி என்பவள் - தெய்வ ஆவேசங் கொண்டாள். உடம்பின் மயில் சிலிர்த்தாள்; கைகளை உயர்த்தி வீசினாள். மறவர்கள் வியக்கும்படி, அவர்கள் கூடி யிருக்கும் வேலியிட்ட அவ்வூர் மன்றத்திலே அடிபெயர்த்து ஆடினாள். அவள், கல் என்று ஒலித்துக்கொண்டிருக்கும் உங்கள் பகைவர்களின் ஊர்களிலே பசுநிரைகள் சிறந்திருக்கின்றன; வலிமையான வில்லையுடைய மறவர்களின் மன்றுகள் பாழடைந்தன; மறவர் குடிகளுக்கு உரிமையான வழிப்பறிக் கொள்ளையால் வரும் செல்வம் பெருகவில்லை; அற நெறியிலே வாழுங் குடியினர் போலச் சினங்குறைந்து செருக்கின்றி வாழ் கின்றனர். கொற்றவையை வழிபாடு செய்யாத காரணத்தால் இந்நிலைமை ஏற்பட்டது. மானை வாகனமாகக் கொண்ட கொற்றவை தான் பெறவேண்டிய கடனைப் பெற்றால்தான். மறவர்களுக்கு வில்லால் உண்டாகும் வெற்றியைத் தருவாள்; இன்றேல் தரமாட்டாள்; கள்ளுண்டுக் களிக்கின்ற வாழ்வை விரும்புவீர்களாயின், களவாடி உண்ணும் வாழ்க்கையை உடையவர்களே! கொற்றவைக்குரிய கடனைக் கொடுங்கள் என்று அந்தச் சாலினி ஆடினாள் என்பது சிலப்பதிகாரம் வேட்டுவ வரியில் காணப்படுவது. இதனை வேட்டுவவரியின் 6 முதல் 19 வரையில் உள்ள அடிகளிலே காணலாம். கானவர்கள், தங்கள் வாழ்க்கை மேம்படக் கொற்றவையை வழிபட்டனர்; கொற்றவைக்குப் பூசைபோட்டு விழாவெடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதைச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. தெய்வ நம்பிக்கை கொடுமை செய்வதற்கும் உதவி செய்தது; தெய்வ நம்பிக்கையைக் கருவியாகக் கொண்டு தந்நலங் கொண்ட மக்கள், அறியாத மக்களை அல்லல்படுத்தி வந்தனர். திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் பிறரைக் கொடுமைப் படுத்துவதற்கும் தெய்வத்தின் துணையை வேண்டினர். இவை களுக்கெல்லாம் தெய்வம் துணை செய்யும் என்றும் நம்பினர். தெய்வ நம்பிக்கை அறநெறியில் நடப்பதற்குத் துணை செய்தது; ஆயினும் அக்கிரமம் செய்வதற்கும் அதுவே கருவியாக இருந்தது என்ற உண்மையையும் மறுப்பதற்கில்லை. பாலைநில மக்கள் போருக்காக - போர் வெற்றிக்காகக் காளியை வேண்டினர்; பிறர் பொருளைக் கொள்ளையடிப் பதற்காகத் துர்க்கையை வழிபட்டனர் என்ற செய்திகளே மேலே காட்டிய உண்மையை விளக்கும். பெண்தெய்வ வழிபாடு மிகவும் பழமையானது. இதனால் ஒரு உண்மையைக் காணலாம். ஒரு காலத்தில் மனித சமுதாயத்தில் பெண்கள்தாம் ஆதிக்கம் பெற்றிருந்தார்கள்; ஆண்கள் அவர் களுக்கு அடங்கித்தான் நடந்தார்கள் என்பதுதான் அவ்வுண்மை. பெண்கள் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அக்காலத்தில் இலக்கியங்கள் தோன்றியிருக்கவும் முடியாது. ஏனென்றால் அக்காலத்தில் கட்டுப்பாடுள்ள தனித்தனிக் குடும்ப வாழ்க்கை முறை அமைந்திருக்கவில்லை; நாளடைவில்தான் தனித்தனிக் குடும்ப வாழ்க்கை முறை அமைந்தது; இதன் பிறகுதான் பெண்கள் இல்லக்கிழத்தியர் - (வீட்டிலே வாழ்வதற்கு உரியவர்கள்) மனைவியர் - (வீட்டில் இருப்பவர்கள்) ஆனார்கள். ஆண்கள் எல்லா ஆதிக்கமும் பெற்றார்கள். கலைகளும் இலக்கியங்களும் வளர்ந்தன. ஆயினும் பெண்கள் ஆதிக்கம் இருந்ததை அறிவிக்கும் பெண் தெய்வ வழிபாட்டை மட்டும் அவர்களால் மறைத்துவிட - விட்டுவிட முடியவில்லை. இந்த நிலைமை இந்நாட்டில் மட்டும் அல்ல; ஒரு காலத்தில் அதாவது இன்றைய தனி உடைமைச் சமுதாயம் தோன்றி உருவாவதற்கு முன்பு, உலக முழுவதும் இந்த நிலைமைதான் இருந்தது. இது வரலாற்று ஆசிரியர்கள் கண்டறிந்த உண்மை. மழைக்கு வேண்டுதல் மழையில்லா விட்டால் தெய்வத்தை வேண்டி விழா வெடுப்பர்; மழை மிகுதியாகப் பெய்தாலும், அது நிற்கும்படி தெய்வத்தை வேண்டிக்கொள்வர். இவ்வழக்கம் தமிழ் மக்களிடம் இருந்தது. *மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய், மாரி ஆன்று, மழைமேக்கு உயர்க எனக் கடவுள் பேணிய குறவர் மாக்கள் பெயல்கண் மாறிய உவகையர் மலையிலே மேகங்கள் சூழ்ந்து மழை பெய்கவென்று. மிகுந்த பலி கொடுத்து வணங்குவர். அதனால் மிகுந்த மழை பெய்யும். அந்த மழை அடங்க வேண்டும்; மேகங்கள் மேலே போய்விட வேண்டும் என்று தெய்வத்தை வேண்டுவர்.அதனால் மழை பெய்யாமல் நின்றுவிடும். இதுகண்டு குறவர்கள் மிக்க மகிழ்ச்சியடைவர் என்பது புறநானூறு 143-வது பாட்டு. இதனால் மழை பெய்யவும், மழை நிற்கவும் தமிழ் மக்கள் தெய்வத்தைக் வேண்டியதைக் காணலாம். இந்திர விழாக் காலத்திலே, காவிரிப்பூம்பட்டினத்திலே உள்ள காவல் பூதத்தைப் பெண்கள் பூசையிட்டு வணங்கு வார்கள். அவர்கள் தமது நாட்டிலிருந்து பசி, நோய், பகைகள் ஒழிய வேண்டும்; மழையும், செல்வமும் பெருகவேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். இச்செய்தி சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. *காவல் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும், நோலையும், விழுக்குடை மடையும், பூவும், புகையும், பொங்கலுஞ் சொரிந்து, துணங்கையர், குரவையர், அணங்கெழுந்து ஆடிப் பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும், நீங்கி, வசியும், வளனும், சுரக்கென வாழ்த்தி, மாதர்க் கோலத்து வளவயின் உரைக்கும் மூதில் பெண்டிர் ஒதையில் பெயர்வர். காவல் பூதத்தின் பலிபீடத்திலே, அவரை, துவரை முதலிய சுண்டல்கள், எள்ளுருண்டை, மாமிசம் கலந்த சோறு, மலர், புகை, கள் இவைகளை வைத்துப் படைப்பர். துணங்கைக் கூத்தாடுவர்; குரவைக் கூத்தாடுவர், தெய்வ ஆவேசம் பொருந்தி ஆடுவர். சோழனது பெரிய நாடு முழுவதும், பசி, நோய், பகையின்றி வாழ்க; மழையும், செல்வங்களும் மிகப் பெருகுக என்று வாழ்த்துவார்கள். மறக் குடியிலே பிறந்த பெண்கள், அழகிய கோலங் கொண்டு இவ்வாறு திறமையுடன் கூறி ஓசை யிட்டுப் போவார்கள். இந்தச் சிலப்பதிகார அடிகள், தமிழ் மக்கள் தெய்வத்தை வழிபட்ட காரணத்தைக் கூறுகின்றன. பசியில்லாமல் வாழ - நோயின்றி வாழ - பகைவர் பயம் இன்றி வாழ - மழை பெய்ய - செல்வம் பெற - தெய்வத்தை வேண்டினர். மழைவளம் வேண்டியே - நாடு நன்றாக வாழவேண்டியே - பண்டைத் தமிழகத்தில் இந்திர விழா நடந்தது என்பதையும் காணலாம். மழைக்காகத் தெய்வங் களை வேண்டிக்கொள்ளுதலும், திருவிழாச் செய்வதுமாகிய வழக்கம் இன்றும் தமிழகத்தில் உண்டு. இந்த மூடநம்பிக்கை இன்னும் ஒழியவில்லை. பலன் விரும்பிப் பணிதல் அகப்பொருட் பாடல்களிலே முருக வழிபாடு காணப்படு கின்றது. தன் மகளின் உடல் சோர்ந்திருப்பதைக் காணும் தாய் வருந்துகின்றாள். தன் மகளின் உள்ளத்திலே கவலை குடிகொண்டி ருக்கின்றது; ஆதலால் அவள் தன் தோழிமார்களுடன் கலகலப் பாக உரையாட வில்லை; அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் இல்லை; என்னவோ ஒரு மாதிரியாகப் பித்துப் பிடித்தவள் போல் விழித்துக் கொண்டிருக்கின்றாள். உடலின் இளைப்பால் அவள் கை வளையல்கள் தாமே கழன்று விழுகின்றன. நாளுக்குநாள் இளைத்துப் போகின்றாள். மகளுடைய இந்த நிலைக்குக் காரணம், அவள் தன் காதலனைக் காண முடியாதது தான். தாய்க்குத் தெரியாமல் - உற்றார் பெற்றார் அறியாமல் - அவள் ஆடவன் ஒருவனுடன் களவு மண வாழ்வு நடத்துகின்றாள். இந்த உண்மை அன்னைக்குத் தெரியாது. ஆதலால், அவள் என்னவோ ஏதோ என்று எண்ணி வருந்துகின்றாள். மகளின் இந்த நோய்க்கும் காரணம் தெய்வமாகத்தான் இருக்கவேண்டும் என்று அவளுக்கு வேண்டியவர்கள் கூறுகின்றனர்; அவளும் அப்படியே நினைக் கின்றாள். ஆதலால் தன் மகள் துயர் நீங்க - நோய் ஒழிய - முருகனை வணங்கி வழிபாடாற்றுகின்றாள். இதற்கு வேலன் வெறியாட்டயர்தல் என்று பெயர். இத்தகைய செய்தியை அகப்பொருள் பாடல்கள் பலவற்றிலே காணலாம். இதற்கு ஒரு உதாரணம் காண்போம். அகநானூற்றின் 98 ஆவது பாடலைப் பார்த்தால் தெய்வ வழிபாட்டின் கருத்தைக் காணலாம். *பனிவரை நிவந்த பயம்கெழு கவாஅன் துனியில் கொள்கையொடு அவர்நமக்கு உவந்த இனிய உள்ளம் இன்னா வாக, முனிதக நிறுத்த நல்கல் எவ்வம், சூர்உறை வெற்பன் மார்புறத் தணிதல் அறிந்தனள் அல்லள் அன்னை; வார்கோல் செறிந்துஇலங்கு எல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின், முதுவாய்ப் பொய்வல் பெண்டிர், பிரப்பு உளர்பு இரீஇ முருகன் ஆரணங்கு என்றலின், அதுசெத்து ஓவத்து அன்ன வினைபுனை நல்இல் பாவை அன்ன பலர்ஆய் மாண்கவின் பண்டையால் சிறக்கஎன் மகட்குஎனப் பரைஇ குளிர்ச்சி பொருந்திய உயர்ந்த வளம் பொருந்திய மலைச் சாரலிலே அவர் நம்மைச் சந்தித்தார்; வெறுப்பில்லாத கொள்கை யுடன் அவர் நம்மிடம் மகிழ்ச்சி காட்டி இன்பம் தந்தார்; இத்தகைய அவர் உள்ளம் இன்று துன்பத்தைக் தந்துவிட்டது. அதனால் வெறுக்கும்படியான இன்னலைக் கொடுத்துவிட்டது. இந்த இன்னல் தணிய வேண்டுமானால், தெய்வம் வாழும் அந்த மலைத் தலைவனது மார்பைத் தழுவிக்கொள்ள வேண்டும்; இன்றேல் இத்துன்பம் நீங்காது. இதை அன்னை அறிய மாட்டாள். என் கையிலே நெருங்கியிருக்கும் நீண்ட கோல் வடிவான வளையல்கள் தாமே கழன்று வீழ்வதைக் கண்டு என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தாள். அவள் பொய் கூறுவதில் வல்ல அறிவுள்ள பெண்டிரைப் பார்த்து அதற்குக் காரணம் கேட்டாள்; அவர்கள் பலி நெல்லைக் குலுக்கி வைத்து எண்ணினர்; இது முருகனால் ஏற்பட்ட துன்பம் என்று கூறினர். அன்னை, அவர்கள் கூறியதை உண்மை யென்று நினைத்தாள், உடனே, சித்திரம் போன்ற நல்ல வேலைப்பாடமைந்த நல்ல வீட்டிலே உள்ள பாவை போன்றவள் என் மகள்; பலராலும் பாராட்டப்படும் சிறந்த அழகுள்ளவள் என் மகள்; அவளுடைய அழகு முன்போலவே சிறப்படைக என்று தெய்வத்தை வணங்கினாள். தலைவி, தன் தோழியிடம் உரைப்பதாக அமைந்திருக் கின்றது இச்செய்யுள். இச்செய்யுளிலே முருகனுக்கும் பூசையிட்ட முறை கூறப்படுகின்றது. தன் மகளின் நோய் நீங்கவேண்டியே, அன்னை முருகனுக்கு வழிபாடு செய்கின்றாள். இத்தகைய கருத்துள்ள பாடல்கள் அகப்பொருள் நூல்களிலே பல உண்டு. இப்பாடல்கள் எல்லாம், பலன் வேண்டியே தெய்வத்தைப் பணிந்தனர் என்ற உண்மையை உணர்த்துகின்றன. பரிபாடலில் உள்ள எட்டாம் பாட்டு முருகனைக் குறித்துப் பாடியது. திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகனை மகளிர் வணங்குகின்றனர்; தங்களுக்கு வரம் வேண்டுகின்றனர். அவர்கள் வேண்டும் வரம் இன்னின்னவை என்பதை அப்பாடலில் காணலாம். மகளிர் முருகனை வழிபடுவதற்கு வேண்டிய பொருள் களை எடுத்துக்கொண்டு பரங்குன்றத்தில் ஏறினர். எம்மைப் பிரிந்த கணவர் கனவிலே வந்து எம் நாளிலே, கண்ணகி ஒரு குன்றிலிருந்த வேங்கைமரத்தின் கீழ் வந்து நின்றாள். அவள், தேவர்களால் கொண்டு வரப்பட்ட வானவூர்தியிலே, கோ வலனுடன் கூடி வானம் சென்றாள். இதைக் கண்டிருந்த குறவர்கள் திகைத்தனர். அக்கண்ணகியை வாழ்த்தி வணங்கினர். பெரு மலையிலே எல்லா வளங்களும் பெருகவேண்டும் என்று கண்ணகியை வேண்டிக் கூத்தாடினர். இது குன்றக்குரவை. †“nfhLthŒ வைம்மின்; கொடுமணி இயக்குமின்; குறிஞ்சிபாடுமின்; நறும்புகை எடுமின்; பூப்பலி செய்ம்மின்; காப்புக்கடை நிறுமின்; பரவலும் பரவுமின்; விரவுமலர் தூவுமின்; ஒருமுலை இழந்த நங்கைக்குப; பெருமலை துஞ்சாது வளம் சுரக்க எனவே ஒரு முலையை இழந்துவந்த தெய்வத்திற்குப் பெரிய மலையிலே வளம் குறையாமல் பெருகவேண்டுமென வாழ்த்திப் பணிமின்; மான் கொம்புகளை வையுங்கள்; கொடிய ஓசையுள்ள மணியை அடியுங்கள்; குறிஞ்சிப் பண்ணைப் பாடுங்கள்; மணம் பொருந்திய புகையால் பூசியுங்கள்; பூவால் பலியிடுங்கள்; மதிலும் வாசலும் அமைத்துக் கோயில் எடுங்கள்; வணங்குவதும் செய்யுங்கள்; பல மலர்களையும் கலந்து தூவிப் போற்றுங்கள் என்பது சிலப்பதிகாரம்; இதனால் குன்றக்குரவையின் கருத்தைக் காணலாம். மேலே கூறியவைகளைக் கொண்டு, பழந்தமிழர்கள் கடவுளரை வழிபட்டதன் கருத்தை அறியலாம். இவ்வுலகில் இன்புற்று வாழ்வதற்காகவே கடவுளரை வேண்டினர்; அவர் களுக்கு விழாச்செய்து கொண்டாடினர்; அவர்களுக்கு உருவச் சிலை செய்து வைத்துப் போற்றினர்; கோயில்கள் எடுத்துக் கொண்டாடினர். இறந்தபின் இன்புறும் எண்ணத்துடன் தமிழர்கள் கடவுளரை வழிபட்டனர் என்பதற்கான ஆதரவுகளைச் சங்க நூல்களிலே மிகுதியாகக் காணமுடியவில்லை. மதக் கொள்கை களும் - தத்துவங்களும் வளர்ந்த காலத்தில்தான் மறுமை யின்பத்திற்காகக் கடவுளை வழிபாடு செய்யும் வழக்கம் உண்டா யிற்று. தேவாரம், பிரபந்தம் முதலியவைகளிலும், அவற்றின்பின் தோன்றிய வணக்கப் பாடல்களிலும், மறுமை இன்பத்தை வேண்டும் கருத்துக்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆயினும் அப்பாடல்களிலும் உலகம் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்ளும் கருத்துள்ள பாடல் களும் சிற்சில உண்டு. இது பழந்தமிழ் மக்களின் பண்பாட்டை ஒட்டி எழுந்த பாடல்கள். இன்று நடைமுறையிலும் பழந்தமிழ்ப் பண்பாடுதான் மக்களிடம் மிகுதியாகக் காணப்படுகின்றது. எனது பாவம் தொலைய வேணடும்; இவ்வுலக வாழ்வை நான் விரும்பவில்லை. பிறவா நெறியை எனக்கு ஈந்தருள வேண்டும் என்று கடவுளை வேண்டுவோர் சிறுபான்மையினர்தாம். பெரும்பாலான மக்கள், எங்கள் துன்பத்தைப் போக்க வேண்டும் என்றுதான் தெய்வங் களை வேண்டிக் கொள்ளுகின்றனர். தங்கள் பிணி தீரவேண்டும் என்று கேட்கின்றனர். இதன் பொருட்டுத் தலயாத்திரை - தீர்த்த யாத்திரை - செய்கின்றனர். இவ்வாறு தன் நலம் கருதித் தெய்வங் களை வழிபடும் வழக்கந்தான் இன்றும் மலிந்திருக்கின்றது. இருக்கு வேதத்திலே காணப்படும் இந்திர வணக்கம், வருண வணக்கம் முதலியவைகளிலே, இவ்வுலகம் இன்புறும் படிதான் வேண்டிக்கொள்ளுகின்றனர். நல்ல மழை பெய்ய வேண்டும்; மாநிலம் செழிக்க வேண்டும்; ஆடு மாடுகள் பெருக வேண்டும்; அவற்றால் மக்கள் நலம் பெற்று வாழவேண்டும் என்ற கருத்துக்களே வேதப் பாடல்களிலும் காணப்படுகின்றன. இதனால், மக்கள் கடவுளர்களை வழிபட்டதன் நோக்கம் இவ்வுலகில் இன்புற்று வாழ்வதற்காகத்தான் என்று அறியலாம். இந்தப் பண்பாட்டை வலியுறுத்தும் பாடல்களை இராமலிங்க சுவாமிகள் பாடல்களிலே ஏராளமாகக் காணலாம். பாரதியாரின் தோத்திரப் பாடல்கள் எல்லாம், பழந்தமிழர் பண்பாட்டைப் பின்பற்றியவைகளே யாகும். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதுதான் தமிழர்களின் கொள்கை. இதன் பொருட்டே அவர்கள் பல செயல்களையும் செய்துவந்தனர். கட்டுப்பாட்டுடன் வாழ - நல்லொழுக்கமுடன் வாழ - கடவுளரைப் பணிந்து வந்தனர். தங்கள் வாழ்வு செழிப்பதற் காகவே கடவுளரை வழிபட்டனர். தங்களுக்கு வேண்டியவை களையெல்லாம் கடவுளர்களால் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை யுடனேயே கடவுளர்களுக்கு விழாச்செய்து கொண்டாடினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழர்களிடம் இக்கருத்துக் குடிகொண்டிருந்தது வியத்தற்குரியது. இன்ப வாழ்வுக்குத் தெய்வத்தின் துணை வேண்டும் என்ற கருத்து, தெய்வத்தைப் பற்றிய உண்மையைத் தெளிவாக்க உதவி செய்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தெய்வங்கள் பல என்று நம்பினர். அவைகளின் வாழ்க்கை மக்களின் வாழ்க்கை யைப் போன்றதுதான். ஆனால், மக்களைவிடத் தெய்வங்கள் வலிமை படைத்தவை, ஆக்கவும் அழிக்கவும் காக்கவும் ஆற்றல் கொண்டவை என்று நம்பினர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப்பின் - தமிழகத்தில் புத்த - சமண மதங்கள் பரவியபின் பல தெய்வக்கொள்கையிலே மாற்றம் ஏற்பட்டது. அறிஞர்கள் தெய்வம் ஒன்றேதான், ஒரு தெய்வந்தான் பல தெய்வங்களாகக் காட்சியளிக்கின்றது; அத்தெய்வமே எல்லாம் வல்ல கடவுள், என்று சொல்லினர்; நம்பினர். சைவ-வைணவ நூல்களிலே இக்கொள்கையைக் காணலாம். ஆழ்வார்களும், நாயன்மார்களும் உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் கடவுள் வடிவமே; எல்லாப் பொருள்களிலும் அவன் இருக்கின்றான். கடவுள் உருவாகவும் இருக்கின்றான்; அருவாகவும் இருக்கின்றான் என்றெல்லாம் பாடியிருக்கின்றனர். இதன் பின் தமிழகத்திலே சமய சம்பந்தமான புரட்சி கருத்துக்கள் சில தோன்றின. இக்கருத்துக்கள் தோன்றிய காலத்தைச் சரியாகக் குறிப்பிடுவதற்குரிய ஆதரவுகள் இல்லை. இறைவனுக்கு என்று ஓர் இடம் இல்லை; அவன் எங்கும் நிறைந்தவன். அவனுக்கு உருவம் இல்லை; அருவானவன். அவனுக்கு உருவச்சிலை வைத்து வணங்குவதில் அர்த்தம் இல்லை. சிலை உருவம் - வணக்கம் மூடநம்பிக்கையாகும். இதுவே அப்புரட்சிக் கருத்துக்கள். இஸ்லாம், கிறிஸ்துவ மதக் கொள்கைகள் தமிழகத்திற்கு எட்டிய பின்பே இத்தகைய புரட்சி கருத்துக்கள் தமிழகத்தில் வலுவடைந்திருக்க வேண்டும். இக்கருத்துக்களைச் சிவவாக்கியர் போன்ற சித்தர்களின் பாடல்களிலே காணமுடிகின்றது. சித்தர் நூல்களின் பாஷையைப் பார்க்கும்போது, அவைகள் கி.பி. பதினான்காம் நூற்றாண்டிற்குப் பின்னர்ப் பிறந்தவை போலவே தோன்றுகின்றன. சித்தர் நூல்கள் யோகத்தை வலியுறுத்துகின்றன. யோகம் என்பதை ஒருவகை உடற்பயிற்சியிலே சேர்க்கலாம். ஆசனப் பயிற்சிகள் எல்லாம் யோகத்தைச் சேர்ந்தனவேயாகும். யோகப் பயிற்சியால் உடம்பை வலுப்படுத்தி, நோயின்றி நீண்டநாள் வாழ்வதற்கு வழிகாட்டுகின்றன சித்தர் நூல்கள். இதன்பின், கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டிலே அன்பு தான் கடவுள்; அறிவுதான் கடவுள்; இன்பந்தான் கடவுள்; மக்கள் உள்ளத்திலேதான் கடவுள் இருக்கிறார். அன்பும் அறிவும் உள்ள மனந்தான் கடவுள் வாழும் இடம் என்ற கருத்து அறிஞர்களிடையிலே பரவியது. தாயுமானவர் பாடலிலே இக்கருத்துக்களைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டிலே இக்கருத்து இன்னும் வலுப் பெற்றது. தமிழகத்திலே, இக்கருத்துக் களை மிகுதியாகப் பரவச் செய்தவர்கள் இராமலிங்க அடிகளும் பாரதியாரும் ஆவார்கள். ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! - பல ஆயிரம் வேதம் அறிவுஒன்றே தெய்வம் உண்டு ஆம்; எனல் கேளீரோ என்று அறிவே தெய்வம் என்ற தலைப்பிலே பாரதியார் கூறியுள்ளார். புராணங்களிலே கூறப்படும் சிவலோகம், வைகுந்தம் முதலியனவும் இவ்வுலகில்தான் இருக்கின்றன; அவ்வுலகில் அடையும் இன்பங்களை இவ்வுலகிலேயே அடையலாம். செத்த பிறகுதான் இவ்வுலகங்களை அடைய முடியும் என்று நினைப்பவர்கள் பைத்தியக்காரர்கள்; அவர்கள் காட்டும் சாத்திரங்களும் பேய் மொழிகள் என்று பாடியிருக்கிறார் பாரதியார், செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாம் என்றே எண்ணி யிருப்பவர் பித்த மனிதர்! அவர் சொல்லும் சாத்திரம் பேய்உரையாம் என்று இங்கு ஊதேடா சங்கம். என்று சங்கநாதம் செய்கிறார். மக்களிடம் மூடத்தனத்திலே முளைத்தெழுந்த தெய்வ நம்பிக்கை இவ்வாறு வரவர வளர்ந்து சீர்திருத்த மடைந்து வந்திருப்பதைக் காண்கிறோம். இதனால் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியடைவதே மக்கள் இயற்கை என்பதைக் காணலாம். பண்டைத் தமிழர் சமயம் இன்று தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி நிற்கின்றனர். சைவம், வைணவம், புத்தம், சமணம் இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களை ஆட்கொண்டிருக்கின்றன. இஸ்லாமும் கிறிஸ்துவமும் நமது நாட்டில் புகுவதற்குமுன், சைவம், வைணவம், புத்தம், சமணம் ஆகிய சமயங்கள் தமிழ கத்தில் நிலவின. சமயங்களே வேண்டாம் என்று சொல்வோரும் இருக்கின்றனர். சமய நெறிகளைப் பின்பற்றாதவர்களும் இருக் கின்றனர். இத்தகையோர் பண்டும் இருந்தனர். இவர்களையே நாத்திகர், உலோகாயதவாதிகள் என்று அழைத்து வந்தனர். சமயங்களுள், புத்தமும், சமணமும் வடநாட்டிலிருந்து தென்னாட்டில் குடிபுகுந்தவைகளே. புத்தம் சமணம் தென்னாட்டில் - தமிழகத்தில் - குடிபுகுவதற்கு முன், சைவமும் வைணவமும் இன்றுள்ள நிலையில் தான் தமிழகத்தில் இருந்தனவா? அல்லது வேறு நிலையில் இருந்தனவா? என்பவை ஆராயத்தக்கவை. புத்தம், சமணம் தமிழகத்தில் பரவுவதற்குமுன் சிவ வணக்கம், திருமால் வணக்கம் தமிழ் மக்களிடம் இருந்தன. இதில் ஐயத்திற்கு இடம் இல்லை. ஆனால், இன்றிருப்பது போன்ற சைவ வைணவ மத தத்துவங்கள் இருந்தனவென்று எண்ண இடம் இல்லை. ஆனால் வேதக் கொள்கைகள் தமிழகத்தில் பரவியிருந்தன. வேதங்களில் கண்ட தெய்வங்கள் பரவியிருந்தன. வேத விதிகள் பலவற்றைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். வேதங்களையும், உபநிடதங்களையும் ஆதரவாகக் கொண்ட மத தத்துவங்கள் எல்லாம் புத்த - சமண மதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்டன வென்றே கூறுகின்றனர். புத்த - சமண மதங்களுக்கு முன்னே தமிழரிடம் இருந்த மதம் - சமயம் யாது? என்று தெளிவாகக் கூற முடியவில்லை, சமணங்களுக்கான அடிப்படைத் தத்துவங்கள் தமிழரிடம் இருந்தன. சங்க நூல்களிலே இவற்றைத் தெளிவாகக் காணலாம். உயிர் உடல் ஆன்மா வேறு, உடல் வேறு என்ற கொள்கை மதஉண்மை களுக்கு அடிப்படையாகும். இந்த உணர்ச்சியின் மீதுதான் தத்துவங்கள் எழுந்தன. அவைகள் அருமையான ஆராய்ச்சி யுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் மறுவுலகத்தைப் பற்றிச் சிந்திப்பதற்குக் காரணம் இந்த உணர்ச்சிதான். புண்ணிய பாவங்களைப் பற்றி, நல்வினை தீவினைகளைப் பற்றி, பிறப்பு இறப்புக்களைப் பற்றி எண்ணிப்பார்ப்பதற்கு இந்த உணர்ச்சி தான் காரணம். ஆன்மா வேறு, உடல் வேறு என்ற எண்ணம் தமிழ் மக்களிடம் எந்தக்காலத்தில் பிறந்தது என்று கூற முடியாது. எழுத்துக்களை உயிர் எழுத்து, மெய்யெழுத்து என்று பிரித்த காலத்திற்கு முன்பே இந்த உணர்ச்சி பிறந்திருக்க வேண்டும். உயிர் தனித்து இயங்குவது; உடல் தனித்து இயங்காதது! உயிர் சேர்ந்தால்தான் - உயிர் இருந்தால்தான் உடல் இயங்கும். இவ்வுண்மையைக் கருத்தில்கொண்டே தனித்து இயங்கும் எழுத்துக்களுக்கு உயிர் எழுத்து என்று பெயரிட்டனர்; தனித்து இயங்காத எழுத்துக்களுக்கு உடல் என்ற பொருளில் மெய் எழுத்து என்று பெயரிட்டனர்; உயிர் சேர்ந்தால்தான் உடல் இயங்கும் என்ற பொருளில் உயிர்மெய் எழுத்துக்களுக்குப் பெயர் வைத்தனர். இந்த உண்மை சிந்திக்கத்தக்கது. ஊழ்வினை சங்க காலத்திற்கு முற்பட்ட தமிழரிடம் ஊழ்வினையிலே நம்பிக்கை உண்டு. இந்த உண்மையைத் தமிழ் நூல்களில் விரிவாகக் காணலாம். *ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப; மிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே என்பது தொல்காப்பியச் சூத்திரம். ஒரே நிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்; அல்லது வெவ்வேறு நிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்; உருவிலும், திருவிலும் ஒத்த இரு ஆண் பெண்கள் முன் செய்த வினையால் ஒருவரையொருவர் காண்பர்; காதலிப்பர்; பெண்ணைவிட ஆண்மகன் சிறந்தவனாயினும் கொள்ளத்தகும் என்பதே இதன் பொருள். இச்சூத்திரம் தொல்காப்பியக் களவியல் சூத்திரம்; ஒர் ஆணும் பெண்ணும் முதலில் சந்தித்துக் காதல் கொள்வதைப் பற்றிக் கூறுவது. இச்சூத்திரத்தில் இருவர் சந்தித்துக் காதல் கொள்ளுவதற்குக் காரணம் அவர்களுடைய முன்வினைதான் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பால் என்பது ஊழ்வினையை - முன்னைத் தலைவிதியைக் குறிக்கும் சொல். இதனால் தொல்காப்பியக் காலத்திலேயே, கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னரேயே தமிழ் மக்களிடம் ஊழ்வினையைப் பற்றிய நம்பிக்கை நிலவியிருந்ததைக் காணலாம். இந்த நம்பிக்கை இன்றும் விட்டுப் போய் விடவில்லை. *வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும் மல்லல்பேர் யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆர்உயிர் முறைவழிப் படூஉம்; என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம். (புறம் 192) வானம் மழை பெய்தலால், தடையின்றிக் கல்லிலே மோதி ஒலித்துக்கொண்டு ஓடும் வளம் பொருந்திய பெரிய ஆற்றிலே, நீரோட்டத்தின் வழியே செல்லும் தெப்பத்தைப் போன்றது உயிர்; அரிய உயிரானது ஊழின் வழியேதான் செல்லும்; இதை அறிஞர்களின் நூல்களின் வழியாக அறிந்திருக்கின்றோம் என்பது புறநானூறு. இந்த ஊழைப் பற்றி வள்ளுவர் ஊழ் என்றே ஓர் அதிகாரம் கூறியிருக்கின்றார். பின்னால் எழுந்த எல்லா நூல்களும் ஊழ் வினையைப் பற்றியே கூறுகின்றன. ஊழ்வினை தன் பலனைக் கொடுத்தே தீரும்; ஊழ்வினையின் படிதான் எல்லாம் நடக்கும் என்பதை வலியுறுத்தாதவர்கள் இல்லை. மறு உலகம் இறந்தபின் செல்லக்கூடிய உலகம் ஒன்று உண்டு; இவ்வுலகில் நன்மை செய்தவர்கள் மறு உலகிலே இன்பம் துய்ப்பார்கள்; இவ்வுலகிலே தீமை செய்தவர்கள் மறுவுலகிலே துன்பத்தை அடைவார்கள். இத்தகைய நம்பிக்கையும் சங்க காலத்துக்கு முற்பட்ட தமிழர்களிடம் குடிகொண்டிருந்தது. இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம்எனும் அறவிலை வாணிகன் ஆய் அல்லன் (புறம். 134) இப்பிறப்பிலே செய்த ஒன்று, மறுபிறப்பிற்கு உதவும் என்று எண்ணி, ஒரு பொருளைக் கொடுத்து அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அல்லன் ஆய் என்பவன் இப்புறநானூற்று அடிகள் மறுவுலக வாழ்வைச் சுட்டிக் காட்டுகின்றன. மறுமையில் இன்பம் அடையும் உலகத்தைக் துறக்கம் - சுவர்க்கம் - என்று கூறுவர். பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் என்று பெரும்பாணாற்றுப்படையும் பட்டினப்பாலையும் கூறு கின்றன. பெறுவதற்கு அரிய இன்பங்கள் நிறைந்த பழமையான பெருமையுள்ள சொர்க்கம் என்று இவ்வாறு பாராட்டப் பட்டுள்ளது சொர்க்கம். துன்பந்தரும் உலகத்தை நரகம் என்று கூறுவர். இத்தகைய உலகம் உண்டென்றும் தமிழர்கள் நம்பி வந்தனர். நிரயம் கொள்பவரோடு ஒன்றாது (புறம். 5) நரகத்தையே தமக்கு இடமாகக் கொள்கின்றவருடன் சேராமல் என்ற புறநானூற்று அடி, நரகம் ஒன்று உண்டென்பதை விளக்குகிறது. மறு பிறப்பு மறுபிறப்பைப் பற்றிய நம்பிக்கையும் தமிழரிடம் குடி கொண்டிருந்தது, பிறப்புகள் பல உண்டு என்று நம்பினர். மறு பிறப்பு இல்லை என்ற கொள்கையும் சங்ககாலத் தமிழரிடம் குடிகொண்டிருந்ததாகத் தெரிகின்றது. இறந்தபின் அடையும் மறு உலகம் உண்டு; இவ்வுலகில் அவரவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி மறுஉலகில் இன்ப துன்பங்களை அநுபவிப்பர் என்ற கருத்தை எல்லா மதங்களும் ஒப்புக்கொள்ளுகின்றன. ஆனால், இறந்த உயிர் மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறதா? என்பதில் சமயங்களுக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு; பழமையான சமயங்கள் எல்லாம் இறந்த பின் பிறப்பு உண்டு என்பதை ஒப்புக்கொள்ளுகின்றன. ஓர் உயிர் அதன் செயலுக்குத் தக்கபடி எண்ணரிய பிறவிகள் எடுக்கின்றன என்பதே சைவ வைணவ மதக் கொள்கை. புத்த சமணங்களும் இதை ஒப்புக் கொள்ளுகின்றன. கிருஸ்துவ - இஸ்லாம் சமயங்கள் மறுபிறப்புக் கொள்கையை ஒத்துக்கொள்ளவில்லை. தமிழர்களிடம் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே இத் தகைய இருவகையான முரண்பட்ட கருத்துக்கள் நிலவியிருந்தன என்பதைக் காண நமக்கு வியப்புண்டாகின்றது. புறநானூற்றின் 214 ஆவது பாடல் குறிப்பிடத்தக்கதொரு சிறந்த பாடல். மறு பிறப்பு உண்டு என்னும் கொள்கையும், இல்லை என்னும் கொள்கையும் அப்பாடலில் காணப்படு கின்றன. இது சிறந்த கொடை வள்ளலாகிய கோப்பெருஞ் சோழன் பாட்டு. அறிவற்றவர் தான் - அதாவது - தெளிந்த அறிவில்லா தவர் தாம் நல்வினையைச் செய்யலாமா? வேண்டாமா- என்று சந்தேகப்பட்டுக்கொண்டே யிருப்பார்கள். யானைகளை வேட்டையாடுவதற்குத் துணிந்து செல் கின்றவன் வெற்றிபெறுவான்; யானையை எளிதிலே பெறுவான்; குறும்பூழ் என்னும் சிறிய பறவையை வேட்டையாடச் செல்கின்றவன், துணிவின்மை காரணமாக அதைப் பெறாமல் திரும்புவதும் உண்டு. அதனால் உயர்ந்த எண்ணத்தை உடைய உயர்ந்தவர்கள், தாம் செய்த நல்வினையின் பயனை அடைய முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள்; ஆதலின் அவர்கள் துறக்கத்திலே இன்பத்தை அனுபவிக்கவும் கூடும். நன்மை செய்து, துறக்கத்தின் இன்பத்தை நுகர முடியாதவராயின், அவர்கள் மீண்டும் இவ்வுலகிலே பிறந்து துன்பத்தை அடையவும் கூடும். மாண்டவர் மீண்டும் பிறப்பதில்லை என்று சொல்லு வார்களாயினும், அதில் நம்பிக்கை கொள்ளுவாராயினும், நன்மை செய்தல் சிறந்ததாகும். இமயத்தின் சிகரத்தைப் போலத் தமது புகழைப் பெரிதாக இல்வுலகில் நிலை நிறுத்திப் பழியற்ற உடம்புடன் வாழ்ந்து இறப்பது தான் மிகச் சிறந்ததாகும் என்பதுதான் அப்பாடலின் பொருள். அப்பாடல் வருமாறு:- *செய்குவம் கொல்லோ நல்வினை எனவே ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி *நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே; யானை வேட்டுவன் யானையும் பெறுமே; குறும்புழ் வேட்டுவன் வெறும்கையும் வருமே; அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல்உண்டு எனில் தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; தொய்யா உலகத்து நுகர்ச்சிஇல் எனின் மாறிப் பிறப்பின இன்மையும் கூடும்; மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக் கோடு உயர்ந்தன்ன-தம் இசை நட்டுத் தீதுஇல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே. இதுவே அப்பாடல். நன்மையுண்டு என்னும் துணிவுடன் நன்மை செய்பவர் துறக்கத்தில் சென்று இன்பம் நுகர்வர்; துணிவுடன் நன்மை செய்பவனுக்கு யானையை வேட்டையாடு வோனும், துணிவற்றவனுக்குத் குறும்பூழ் வேட்டுவனும் உவமைகள். மாறிப் பிறப்பின் என்ற தொடர் பலபிறப்புக்கள் உண்டென்று உணர்த்திற்று; மாறிப் பிறவார் ஆயினும் என்ற தொடர் மறுபிறப்பு இல்லையென்று சொல்லுவோர் உண்டு என்ற பொருளை உணர்த்திற்று. மறு பிறப்பு இல்லை யென்றாலும் இவ்வுலகில் புகழ் நிலைக்கும்படி நல்ல செயல்களைச் செய்துவைத்து இறத்தலே சிறந்தது என்ற கருத்தை இச்செய்யுளின் இறுதியில் உள்ள மூன்று அடிகள் வலியுறுத்தின. இச்செய்யுள் மறு பிறப்பு உண்டு அல்லது இல்லை என்பதை வலியுறுத்தவில்லை. மறு பிறப்பு உண்டென்போரும் உளர், இல்லை யென்போரும் உளர் என்ற கருத்தை மட்டும் உரைத்தது. இறந்த உயிர் மீண்டும் பிறப்பதில்லை என்போர் தமிழ கத்தில் இருந்தனர் என்பதை இப்புறநானூற்றுப் பாடலால் காணலாம். இக்கருத்து பரிபாடலிலும் காணப்படுகின்றது. *செறுதீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும், சேரா அறத்துச் சீர் இலோரும் அழிதவப் படிவத்து அயரியோரும் மறு பிறப்பு இல்எனும் மடவோரும் சேரார், நன்னிழல் என்பது ஐந்தாவது பரிபாட்டு; முருகனைப் பற்றிப் பாடியது. உயிர்களைக் கொல்லுகின்ற தீய நெஞ்சத்தையுடைய கோபக் காரர்களும், அற நெறியை அணுகாத புகழ் அற்றவர்களும், தவவேடங் கொண்டு ஒழுக்கங் கெட்ட சோம்பேறிகளும், மறுபிறப்பு இல்லை என்ற வாதமிடும் அறிவற்றவர்களும் உன்னுடைய அடி நிழலைச் சேரமாட்டார்கள். மறுபிறப்பு உண்டு என்பதையே இப்பாடல் வலியுறுத் திற்று; மறுபிறப்பு இல்லையென்போரை மடையர் என்று வசை கூறிற்று. இதனால், மறுபிறப்பு இல்லை என்று கூறியவர்கள் தமிழகத்தில் இருந்தனர் என்பதை அறியலாம். மேலே கூறியவைகளைக் கொண்டு, பண்டைத் தமிழரிடம் சமயக் கொள்கைகள் இருந்தன; சமயத்திற்கு அடிப்படைக் கொள்கைகள் இருந்தன என்ற உண்மையைக் காணலாம். தமிழர்கள், உயிர்வேறு உடல்வேறு என்று நம்பினர்; உயிர் இருந்தால்தான் உடல் இயங்க முடியும்; உயிர் இன்றேல் உடல் தனித்து இயங்க முடியாது என்ற உண்மையை உணர்ந்திருந்தனர். ஊழ்வினையிலே தமிழர்களுக்கே நம்பிக்கையிருந்தது. உயிரை ஆட்டிவைப்பது ஊழ்வினை தான் என்று நம்பினர். இறந்தபின் செல்லக்கூடிய உலகம் தனியாக உண்டு; நன்மை புரிந்தவர்கள் துறக்கத்தையடைந்து இன்பந்துய்ப்பார்கள்; தீமை செய்தவர்கள் நரகத்தை அடைந்து துன்புறுவார். இந்த நம்பிக்கை பண்டைத் தமிழர்களிடம் இருந்தது. இறந்த உயிர்கள் மீண்டும் பிறப்பது உண்டு; ஓர் உயிர் இவ்வாறு பலபிறவி எடுக்கும் என்ற நம்பிக்கை தமிழரிடம் இருந்தது. இறந்த உயிர் மீண்டும் பிறப்பதில்லை; மறுபிறப்பு என்பது இல்லை என்ற நம்பிக்கையுள்ளவர்களும் பண்டைத் தமிழகத்தில் இருந்தனர். மீண்டும் பிறப்பு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இவ்வுலகில் பிறந்தோர் புகழுடன் வாழ வேண்டும்; புகழுக்குரிய நல்ல செயல்களைச் செய்துவிட்டு இறக்கவேண்டும்; பலனை எதிர்பாராமல் நன்மை செய்வதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்; இவ்வாறு பண்டைத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இக்கொள்கைகள் அனைத்தும் சமயங்களுக்கு அடிப்படை யானவை; பெரும்பாலான சமயவாதிகள் இக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுகின்றனர். சங்க காலத்துத் தமிழர்களிடையே - அதற்கு முன்னிருந்த தமிழர்களிடையே - மேலே காட்டிய கொள்கைகள் குடி கொண்டிருந்தன. ஆயினும், அவர்கள் பின்பற்றிய சமயம் யாது என்பதை அறியமுடியவில்லை. சமயம் என ஒன்று இருந்ததாகக் கூடச் சொல்லமுடியவில்லை. புத்த - சமண மதங்களுக்குப் பிறகுதான் பல சமயங்கள் உருவெடுத்தன; தமிழ்நாட்டில் தமிழரிடம் நிலைத்திருந்த தெய்வங்களின் பெயரால் பல சமயங்கள் சமயக் கலைகளுடன் தோன்றின என்று எண்ண இடம் உண்டு. இவ்வாறு தோன்றிய சமயங்களில் பண்டைத் தமிழர்கள் பின்பற்றி வந்த அறங்களும் அடிப்படைகளாக அமைந்தன. இது தான் உண்மை. ஆகவே, பண்டைத் தமிழர் சமயம் எதுவென்றால், அது இன்னது என்று தெரியாது; அதற்கு ஒரு பெயரைக் குறிப்பிட முடியாது என்றுதான் சொல்ல முடியும். பழந்தமிழர் உணவு வகை தமிழர்கள் உணவு பண்டைத் தமிழர்கள் உண்டு மகிழ்ந்த உணவைப் பற்றி இருவிதமான கருத்துக்கள் உண்டு. பழந்தமிழர்கள் மரக்கறி வகைகளைத்தான் உண்டு வாழ்ந்தனர்; காய், கனி, கிழங்குகள் தாம் அவர்களுடைய உணவாக இருந்தன; ஆரியர் இந்நாட்டில் குடிபுகுந்த பின்னர்த் தான் தமிழர்களின் உணவில் மாற்றம் ஏற்பட்டது; ஆரியர்கள் வேள்விகளிலே உயிர்ப்பலியிட்டு உண்பதைக் கண்டனர்; தமிழர்களும் அவர்களைப் பார்த்துப் புலால் உண்ணக் கற்றுக் கொண்டனர்; ஆரியர்கள் சோமபானம் அருந்துவதைப் பார்த்துக் தமிழர்களும் மதுபானம் செய்யக் கற்றுக்கொண்டனர் என்று கூறுவோர் உண்டு. மற்றொரு சாரார், இதை மறுத்துரைப்பார்கள், பண்டைத் தமிழர்கள் புலாலும் மதுவும் உண்டார்கள்; அவர்களுக்கு இவைகளை உண்ண அந்நியர் யாரும் கற்றுக் கொடுக்கவில்லை; தமிழகத்தில் மாமிசமும், மதுவும் நிறையக் கிடைத்தன; இவைகளைத் தேடிக் கொண்டு எங்கும் செல்லவேண்டிய கட்டாயம் இல்லை; வலியக் கிடைத்த இவைகளைத் தமிழர்கள் உண்டு மகிழ்ந்தனர்; ஊக்கமுடன் வாழ்க்கை நடத்தினர்; வீரர்களாகச் சிறந்து வாழ்ந்தனர். பிற்காலத்தில்தான் புலால் உண்பது தவறு; அது உயிர் இரக்கம் அற்ற செயல்; புலால் புசிப்பவர்கள் கருணையற்றவர்கள்; மது அருந்துவது ஒழுக்கக் கேட்டுக்கு அடிப்படை; அது பஞ்சமாபாதங்களில் ஒன்று என்ற கொள்கை பரவிற்று; மது மாமிச விலக்குக் கொள்கை சமண மதம் தமிழகத்திற் பரவிய பிறகுதான் தலை யெடுத்தது என்று இவ்வாறு கூறுகின்றவர்கள் உண்டு. இந்த இரண்டில் எது உண்மையானது, எது தவறானது என்பதைப் பற்றி நாம் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டாம், பண்டைத் தமிழர்களின் உணவைப் பற்றித் தமிழ் இலக்கியங்களில் காணப்படுவன யாவை? அவர்கள் எவ்வுணவை உண்டனர்? உணவிலே உயர்வு தாழ்வு பாராட்டும் தன்மை பண்டைத் தமிழர்களிடம் இருந்ததா? என்ற செய்திகளைப் பற்றி மட்டும் பார்ப்போம். பழந்தமிழ் இலக்கியங்களில் புலால் விலக்கும் மதுவிலக்கும் கூறப்படவில்லை. பண்டைத் தமிழர்கள் இவைகளையே சிறந்த உணவாகக் கொண்டிருந்தனர். உணவுக்கும் உயிர்க் கருணைக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. மிகச் சிறந்த அறிஞர் களாக - புலவர்களாகப் - போற்றப்பட்டவர்கள் எல்லாம் மாமிசமும் மதுவும் உண்பது உயிர்க்கருணைக்கு மாறானதல்ல; ஒழுக்கத்திற்கு முரணானதல்ல என்ற கொள்கை நிலவியிருந்த காலத்திற்கூடப் புலால் புசிக்காத தமிழ் மக்களும் இருந்தனர்; அவரவர்கள் வாழும் இடத்தையும் அவர்களுடைய வாழ்க்கை வசதியையும் பொறுத்தே அவர்களுடைய உணவும் அமைந் திருந்தது. இந்த உண்மையையே நாம் பழந்தமிழ் இலக்கியங்களில் பார்க்கின்றோம். மாமிச உணவு வகைகள் தமிழர்கள் மான்கறி உண்டதைப் பற்றிப் புறநானூற்றில் காணப்படுகின்றது. வன்பரணர் என்ற புலவரும் அவர் சுற்றத்தாரும் வழிநடை வருத்தத்தால் ஒரு பலா மரத்தின் அடியிலே சோர்ந்து கிடந்தனர். அப்பொழுது அங்கு வந்த கண்டீரக்கோப் பெருநற் கிள்ளி என்பவன் அப்புலவரைக் கண்டான். வேட்டைக்கு வந்த அவன், தனது ஆட்களை விட்டுப் பிரிந்து தனியாக அவ்விடத்தை அடைந்தான். அவன் புலவரைக் கண்டவுடன் வேட்டையாடிய மான் கறியைத் தீயிலே சுட்டான். தன்னுடைய வேலைக்காரர்கள் வருவதற்குமுன், அதைப் புலவருக்கும் அவர் சுற்றத்தாருக்கும் உண்ணக் கொடுத் தான். இதைப் புறநானூற்றின் 150 ஆவது பாடலால் காணலாம். *இழுதின் அன்ன வால்நிணக் கொழும் குறை கான் அதர் மயங்கிய இளைஞர் வல்லே தாம்வந்து எய்தா அளவை, ஓய்எனத் தான்ஞெலி தீயின் விரைவனன் கூட்டு, நின் இரும்பேர் ஒக்கலோடு தின்ம் எனத் தருதலின், அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, நன்மரன் நளிய நறுந்தண் சாரல் கன்மிசை அருவி தண்எனப் பருகி விடுத்தல் தொடங்கினேன். நெய்யைப் போன்ற வெண்மையான கொழுப்பான தசையை அவன் எடுத்தான்; காட்டிலே வழி தவறிச் சென்ற பணியாளர்கள் விரைந்து வந்து கூடுவதற்குமுன் சட்டென்று தீக்கடை கோலால் உண்டாக்கிய நெருப்பிலே சுட்டுப் பதப் படுத்தினான். உன்னுடைய பெரிய உறவினருடன் உண்ணுக என்று கொடுத்தான்; ஆதலினால் அமுதத்தைப் போல அந்தச் சூட்டிறைச்சியை உண்டேன்; துன்புறுத்திய பசியிலிருந்து விடுதலை யடைந்தேன். நல்ல மரங்கள் செறிந்த அந்தக் குளிர்ச்சி யான மலைச்சாரலிலே விழும் குளிர்ந்த அருவிநீரை அள்ளிப் பருகினேன்; குறித்த இடத்தை நோக்கிச் சுற்றத்துடன் நடக்கத் தொடங்கினேன். இதுவே இப்புறநானூற்றுப் பாடற்பகுதி, இதில் கண்டீரக் கோப்பெருநற்கிள்ளி என்னும் வள்ளல், வன்பரணர் என்னும் புலவருக்கு மான்கறி விருந்திட்டதையும் புலவர் அதை உண்ட தையும் காண்கிறோம். *புறவுக் கருஅன்ன புன்புல வரகின் பாலபெய் புன்கம் தேனொடு மயக்கிக் குறுமுயல் கொழுங்சூடு கிழித்த ஒக்கலொடு இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக் கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி. அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் எம்கோன் வளவன் வாழ்க. புறாவின் கருவைப் போன்ற வரகு; புன்செய் நிலத்திலே விளைந்த வரகு, பால் ஊற்றிச் சமைத்த அந்த வரகஞ் சோற்றைக் தேனோடு கலந்து, கொழுத்த சிறிய முயலின் சூட்டிறைச்சியுடன் உண்பவர் என் உறவினர். அவர்கள் இவ்வுணவை, இலவமரம் உயர்ந்து வளர்ந்திருக்கின்ற மன்றத்திலே உட்கார்ந்து மிகுந்த சோற்றை உண்பார்கள். இத்தகைய பாணர்களுக்குத் தனது செல்வம் முழுவதையும் அளிக்கின்றவன் எமது அரசனாகிய சோழ மன்னன். இது புறநானூற்றின் 34 ஆவது பாட்டு. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்னும் சோழ மன்னனை ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பாடியது. இதனாலும் தமிழர்கள் புலால் உண்டதை-முயற்கறி உண்டதைக் காணலாம். *தூராஅய் துற்றிய துருவைஅம் புழுக்கின் பராரை வேலைப் பருகுஎனத் தண்டி; காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை ஊழின் ஊழின் வாய்வெய்து ஒற்றி. அறுகம்புல்லை மேய்ந்து கொழுத்த செம்மறியாட்டின் மாமிசத்தை வேகவைப்பர்; அதன் துடையின் மேற்பாகத்துக் கறியை எடுத்துக் கொடுத்துத் தின்னச் சொல்லி வற்புறுத்துவர்; இரும்புக் கம்பியாலே கோத்துச் சுட்டு எடுத்த கொழுத்த ஊன் துண்டத்தை வாயிலே போட்டுக்கொண்டு, அதன் சூட்டைத் தாங்க முடியாமல் இந்தக் கடைவாய்க்கும் அந்தக் கடைவாய்க்கு மாகத் தள்ளித் தள்ளித் தின்போம். இது பத்துப்பாட்டுப் பொருநர் ஆற்றுப்படை; இதனால் தமிழர்கள் செம்மறியாட்டுக் கறியை விரும்பி உண்டதைக் காணலாம். புளிச் சுவை பண்டைத் தமிழர்கள் புளிவிட்டுச் சமைத்த கறியை விரும்பி உண்டனர், புளிச்சுவை தமிழர் போற்றிய சுவைகளில் சிறந்ததாகும். மரக்கறி வகைகளையும் புளியிட்டுச் சமைத்து உண்டனர். மாமிச உணவையும் கூடப் புளியிட்டுச் சமைத்து உண்டனர். புளியிட்டுச் சமைத்த உணவின் இனிமையைக் குறுந் தொகைப் பாட்டு ஒன்று, படிப்போர் நாவில் சொட்டும்படி எடுத்துரைக்கின்றது. †“KËjÆ® பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழா அது உடீஇக் குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர், இனிது எனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே, என்பதே அப்பாடல். இது குறுந்தொகையில் 167 ஆவது பாட்டு. கணவனிடம் மாறாத காதலுள்ள கற்புடை மங்கை ஒருத்தி; அவள் கணவனுக்காகச் சமைத்தாள்; பரிமாறினாள்; காதலன் அதனை உண்டான் என்ற செய்தியைக் கூறுகிறது இப்பாடல். காந்தள் போன்ற மெல்லிய விரல்களால் கட்டித் தயிரைப் பிசைந்தாள்; கையைக் கழுவிக்கெள்ளாமலே, நழுவிய துவைத்த தூய்மையான ஆடையை உடுத்திக் கொண்டாள். குவளைமலர் போன்ற அவளுடைய கண்களிலே, தாளித்ததனால் குய்யென்று ஒலியுடன் எழுந்த புகை சூழ்ந்தது. அதனால் வருந்தினாள். ஆயினும் காந்திப் போகாமல் நன்றாகக் கிளறிப் புளி ஊற்றிய குழம்பை வைத்தாள். அதைக் கணவனுக்குப் பரிமாறினாள். அவன் மிகவும் சுவையுள்ளது என்று சொல்லிக்கொண்டு ஆவலுடன் உண்டான். அதைக் கண்டு அவள் முகமலர்ச்சி அடைந்தாள் என்பதுதான் இச் செய்யுளில் அமைந்த பொருள். செம்புற்று ஈயலின் இன் அளைப் புளித்து செம்புற்றிலே தோன்றிய ஈசலை, இனிய மோருடன் கலந்து புளியும் விட்டுச் சமைத்த புளிக்கறியை உடையது என்பது புறநானூறு - பாட்டு 119. இதனால் ஈசலை மோரும் புளியும் விட்டுச் சமைத்துண்ணும் வழக்கம் பண்டைத் தமிழரிடம் இருந்ததைக் காணலாம். மேலே காட்டிய குறுந்தொகைப் பாட்டும், புறநானூற்று அடியும், தமிழர்கள் புளியிட்டுச் சமைத்த கறியை உணவை விரும்பி யுண்டனர் என்பதை அறிவித்தன. மதுபானம் மாமிசத்தை-புலாலை அவர்கள் விரும்பி உண்டது போலவே மதுவையும் அருந்தி மகிழ்ந்தனர். *யவனர் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனைகலத்து ஏந்தி, நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப, மகிழ்சிறந்து ஆங்கு இனிது ஒழுகு மதி; இவ்வாறு இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டியனைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்னும் புலவர் வாழ்த்துகிறார். யவனர்கள், கெட்டுப் போகாத நல்ல கலத்திலே கொண்டுவந்து கொடுத்த, சுகந்த மணம் வீசும் மதுவை உண்டு மகிழ்கின்றனை. அதனை ஒளி பொருந்திய வளையலை அணிந்த மங்கையர்கள், பொன் கலத்திலே ஊற்றி ஏந்திக் தருகின்றனர்; அந்த இனிய மதுவை வாங்கி உண்டு, நீ மகிழ்ச்சியுடன் வாழ்கின்றாய் என்பதே இதன் பொருள். *இழை அணி வனப்பின் இன்னகை மகளிர் போக்குஇல் பொலங்கலம் நிறையப், பல்கால் வாக்குபு தரத்தர வருத்தம் வீட ஆர உண்டு பேர் அஞர் போக்கிச் செருக்கொடு நின்ற காலை என்பது பொருநர் ஆற்றுப்படை. நல்ல நகைகளை அணிந்த மகளிர்; இனிமையான புன்சிரிப்புடன் விளங்கும் மகளிர்; ஒளி குன்றாத பொற் கிண்ணத்திலே மதுவை ஊற்றி ஊற்றிக் கொடுப் பார்கள். அவர்கள் கொடுக்கக் கொடுக்க நாங்கள் வாங்கிவாங்கி வழிநடை வருத்தந்தீர உண்போம்; மகிழ்ந்து நிற்போம். இதுவே மேலே காட்டிய அடிகளின் கருத்து. மேலே காட்டிய புறநானூற்று அடிகளும், பொருநர் ஆற்றுப்படை அடிகளும், தமிழர்கள் மதுவை வெறுக்கவில்லை; விரும்பி உண்டனர்; விருந்தினர்களுக்கும் கொடுத்துப் போற்றினர் என்பதை உணர்த்தின. கபிலரும் ஔவையாரும் பண்டைத் தமிழகத்தில் பார்ப்பனர்களும் மது மாமிசத்தை வெறுக்கவில்லை; சிறந்த உணவாகக் கொண்டனர். இவ்வுண் மையைப் புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று போற்றப் பட்ட கபிலர் வரலாறு காட்டுகின்றது. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவனைக் கபிலர் சந்திக்கின்றார். அவன் கபிலர் கையைப் பிடித்துக் குலுக்கினான். கபிலர் கை பூப்போல் மென்மையாக இருந்தது. இதற்குக் காரணம் யாது என்று அவன் கேட்டான்; அதற்கு கபிலர் கூறிய விடை குறிப்பிடத்தக்கது. நீ போரிலே யானையை இழுத்துப் பிடிக்கிறாய்; குதிரைகளை அடக்கி ஓட்டுகின்றாய்; வில்லிலே அம்பு பூட்டிப் பகைவர்மேல் விடுகின்றாய்; பரிசிலர்களுக்கு அணிகலன்களை வாரி வாரி வழங்குகின்றாய்; இவைகளால் உன்கை காய்த்துப் போய் வன்மை யடைந்திருக்கின்றது. உன்னைப் பாடும் எனது கை, ஊனும், கறியும், துவையலும், சோறும் அள்ளி உண்பதைத் தவிர வேறு தொழிலை அறியாது. ஆதலின் எனது கை மென்மையாக இருக்கின்றது என்று கூறினார். இச்செய்தியைப் புறநானூற்றின் 14ஆவது பாடலில் காணலாம். இதே கபிலர், பாரி மாண்டபின் பறம்பு மலையைக் குறித்துப் புலம்புகின்றார். *மட்டுவாய் திறப்பவும், மைவிடை வீழ்ப்பவும், அட்டு ஆன்று ஆனாக் கொழும்துவை, ஊன் சோறும் பெட்டாங்கு ஈயும் பெருவளம் பழுனி நட்டனை மன்னோ முன்னே! என்று பாடுகின்றார். கள்ளமைந்த பாண்டத்தின் வாயைத் திறந்து அதனை அளிப்பார் பலர்; ஆட்டுக்கடாவை வெட்டிக் கறிசமைத்து நிறைந்த கொழுப்பும் துவையலும், ஊனும் சோறும் வேண்டிய அளவு கொடுப்பார்கள். இத்தகைய சிறந்த வளம் நிறைந்து விளங்கினை முன்பு; அப்பொழுது நானும் உன்னுடன் நட்புச் செய்தேன் என்று கூறி வருந்தினார் கபிலர். இதனால் கபிலர் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்ததைக் கண்டோம். அதியமான் நெடுமான் அஞ்சி இறந்து போனான். அத்துயரம் தாங்க முடியாத ஔவையார் புலம்புகிறார். †“á¿afŸ பெறினே எமக்கு ஈயும் மன்னே; பெரிய கள் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே; சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே; பெறுஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே; என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே; அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான் நிற்கும் மன்னே கொஞ்சம் கள் பெற்றால் அது முழுவதையும் எனக்கே கொடுத்து விடுவான்; மிகுதியாகக் கிடைத்தால், யாம் பாட எமக்கும் கொடுத்துத் தானும் உண்பான்; கொஞ்சம் சோறு இருந்தாலும் பலரோடு பகிர்ந்து உண்பான்; மிகுந்த சோறு இருந்தால் மிகப் பலருடன் கூடி உண்பான்; எலும்பும் சதையும் கலந்த விருந்துள்ள இடங்களையெல்லாம் உமக்கு அளிப்பான்; அம்பும் வேலும் நுழைகின்ற போர்க்களங்களில் எல்லாம் தானே சென்று பகைவர்களை எதிர்த்து நிற்பான். இது புறநானூற்றின் 235 ஆவது பாட்டு. இதனால் ஔவை யாரும் புலாலும் மதுவும் உண்டு மகிழ்ந்தவர் என்பதைக் காணலாம். மேலே காட்டிய கபிலர், ஔவையார் பாடல்கள் தமிழர்கள் உணவைக் குறித்த உண்மைகளை உணர்த்தின. புலால் உண்ணாதவர்கள் புலால் உண்ணாத பார்ப்பார்கள் தமிழகத்தில் இருந்தனர்; புலால் உண்ணாத வேளாளர்களும் தமிழகத்தில் இருந்தனர். இச் செய்திகள் பத்துப்பாட்டில் காணப்படுகின்றன. *மறைகாப் பாளர் உறைபதிச் சேப்பின் பெருநல் வானத்து வடவயின் விளங்கும் சிறுமீன் புரையும் கற்பின், நறுநுதல் வளைக்கை மகடூஉ வயின் அறிந்து அட்ட சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப்படு வத்தம் சேதா நறுமோர் வெண்ணெயின், மாதுளத்து உருப்புறு பசுங்காய்ப் போழொடு கறிகலந்து கஞ்சகம் நறுமுறி அளைஇப் பைந்துணர் நெடுமரக் கொக்கின் அறுவடி விதிர்த்த தகைமாண் காடியின் வகையடப் பெறுகுவீர் என்பது பெரும்பாண் ஆற்றுப்படை. இதில் பார்ப்பார் உண்ணும் உணவும், அவர்கள் விருந்தினர்க்கு இடும் உணவும் காணப்படுகின்றன. பார்ப்பார் வாழும் இடத்திற்குப் போனால் அருந்ததி போன்ற கற்புள்ள பார்ப்பனப் பெண்களால் சமைக்கப்பட்ட பால்சோறு, பருப்புச்சோறு முதலியவற்றைப் பெறுவீர்கள்; இராஜான்னம் என்ற பெயர்பெற்ற உயர்ந்த நெற்சோறு கிடைக்கும்; மாதுளம் பிஞ்சைப் பிளந்து மிளகுப்பொடி, கருவேப்பிலைகளைக் கலந்து, பசுவெண்ணெயில் வேகவைத்த பொரியல் கிடைக்கும். நல்ல வடுமாங்காய் அகப்படும்; இன்னும் தயிர்ச்சாதம் மாங்காய்ச்சோறு புளியஞ்சாதம் முதலியவைகளும் கிடைக்கும். இத்தகைய பலவகை உணவுகளைப் பெறுவீர்கள். இதுவே மேலே காட்டிய அடிகளின் பொருள். இதே பெரும்பாணாற்றுப் படையிலே வேளாளர் உணவும் குறிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் சைவ வேளாளர்களும் பண்டைத் தமிழகத்தில் இருந்தனர் என்பதை அறிகின்றோம். குளிர்ந்த மருத நிலத்திலே வாழும் உழவர்களின் சிறந்த இல்லத்திலே சென்று தங்குவீர்களானால், இனிப்பான சுளைகள் நிரம்பிய பெரியபெரிய பலாப்பழம் கிடைக்கும்; நல்ல இனிமையான இளநீர் பெறுவீர்கள்; யானைக் கொம்புகளைப் போல வளைந்து தாரிலேயே பழுத்திருக்கும் வாழைப்பழங்கள் கிடைக்கும்; நல்ல பனை நுங்கு கிடைக்கும்; இன்னும் பலவகை யான பண்டங்களும் கிடைக்கும். சேப்பம் இலையோடு முதிர்ந்த நல்ல கிழங்கும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை *தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின் தாழ்கோள் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம் வீழ்இல் தாழைக் குழவித் தீநீர்க், கவைமுலை இரும்பிடிக் கவுண்மருப்பு ஏய்க்கும் குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம். திரள் அரைப் பெண்ணை நுங்கொடு, பிறவும் தீம்பல் தாரம், முனையின் சேம்பின் முனைப்புறம் முதிர் கிழங்கு ஆர்குவிர்; என்ற அடிகளால் காணலாம். வேளாளர்களிலே - உழவர்களிலே. சைவர்கள் இருந்தனர்; மாமிசம் உண்ணாதவர்கள் இருந்தனர், இச்செய்தியைப் பட்டினப் பாலையும் கூறுகின்றது. கொலை செய்யாதவர்கள்; களவு செய்யாதவர்கள்; தேவர்களை வணங்குவார்கள்; அவர்களுக்கு வேள்வியிலே ஆவுதி கொடுப்பார்கள்; நல்ல பசு, எருதுகளைப் பேணுவார்கள்; நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர்களின் புகழைப் பரவச் செய்வார்கள்; விருந்தினர்களுக்குப் பல நல்ல பண்டங்களையும் கொடுப்பார்கள்; சிறந்த நல்லொழுக்கத்தைப் பின்பற்றி நடப்பார்கள்; மேழிச் செல்வமே சிறந்ததென்று அதை விரும்பிப் பாதுகாப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனை *கொலை கடிந்தும், களவு நீக்கியும், அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், நல் ஆனோடு பகடு ஓம்பியும், நான் மறையோர் புகழ் பரப்பியும், பண்ணியம் அட்டியும், பசுபதம் கொடுத்தும், புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை. கொடு மேழி நசை உழவர் என்ற அடிகளால் அறியலாம். உணவால் உயர்வு தாழ்வில்லை பண்டைத் தமிழகத்தில் மேற்காட்டியவாறு புலால் உண்போரும் இருந்தனர்; மரக்கறி உண்போரும் இருந்தனர். ஆனால், அவர்களுக்குள் உணவு காரணமாக உயர்வு தாழ்வுகள் இல்லை; இருந்தனவென்று தெரியவில்லை. மேலே காட்டிய பெரும்பாணாற்றுப்படையினால் இவ்வுண்மையைக் காணலாம். பாணர்கள் புலால் உணவை வெறுத்தவர்கள் அல்லர். கிடைத்தால் மதுவையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். இவர்கள் பார்ப்பனர்களின் மனையில் தங்கினாலும் அவர் களால் வரவேற்று விருந்திடப்படுவார்கள்; வேளாளர்கள் மனையில் சென்றாலும் அவர்களாலும் வரவேற்று விருந்திடப் படுவார்கள். இச்செய்தியைப் பெரும்பாண் ஆற்றுப்படை கூறியிருக்கின்றது. இதனால் உணவு காரணமாக உயர்வுதாழ்வு பாராட்டும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இல்லை என்பதை அறியலாம். புலால் மறுத்தலும், மதுவிலக்கும் தமிழகத்தில் சமண சமயம் பரவியபின் தான் ஏற்பட்டன என்பதில் ஐயம் இல்லை. திருக்குறளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் புலாலும் மதுவும் பாவத்திற்கிட மானவை என்று கூறப்படவில்லை. திருக்குறளிலும், அதனை அடுத்து தோன்றிய பதினெண்கீழ்க் கணக்கு நூல்களிலும் தான் புலாலும் மதுவும் மிகுதியாக வெறுக்கப்படுகின்றன. சைவ வைணவ மதங்களும், அம்மதங்களின் பெரியார் களும் இக்கொள்கையை, சமண புத்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டனர். புலால் உண்ணல் பாவச்செயல்; கருணையற்ற செயல்; இரக்கமற்ற செயல் என்று ஒப்புக்கொண்டனர். புலன் அடக்கத்தை விரும்புகின்றவர்கள், அறிவு மாறு பட்டுத் தீயொழுக்கத்தில் செல்லாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகின்றவர்கள், புலாலையும் மதுவையும் வெறுத்தனர். பத்துப்பாட்டுக் காலத்திலே தமிழகத்திலே சமண மதம் பரவியிருந்தது; ஆதலால் அக்காலம் புலால் உணவை வெறுத்த ஆரம்பகாலம் என்று கூறிவிடலாம். ஆகவே, கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் தமிழகத்திலே புலால் மறுப்பும், கள்ளுண்ணாமையும் சிறந்த ஒழுக்க நெறியென்று பலமாகப் பிரசாரம் செய்யப்பட்டது. ஆயினும் இப்பிரசாரம் முழுவெற்றி பெற்றது என்று சொல்லமுடியாது. இதுவரையிலும் கூறியவைகளைக்கொண்டு பண்டைத் தமிழ் மக்களின் உணவு வகைகளைப் பற்றி அறியலாம். பழந்தமிழ் மக்கள் பலவகைப்பட்ட புலால் உணவுகளைச் சமைத்து உண்டனர். மரக்கறி வகைகளையும் உண்டனர். தமிழர்களுக்குப் புளியிட்ட உணவிலே விருப்பம் அதிகம். சமணமதம் பரவியபின் மரக்கறி உண்போரும் தமிழகத்தில் தோன்றினர். அக்காலத்தில் உணவு காரணமாக உயர்வு தாழ்வுகள் இல்லை. மாமிசம் உண்டோரும், மரக்கறி உண்டோரும் ஒத்த பெருமையுள்ளவர் களாகத்தான் கருதப்பட்டனர். மரக்கறி உண்போர் உயர்ந்தவர். மாமிசம் உண்போர் இழிந்தவர் என்ற வேற்றுமை பிற்காலத்தில் தான் தமிழகத்தில் தோன்றியது. இவ்வுண்மைகளை நமக்குப் பண்டைத் தமிழ் நூல்கள் உணர்த்துகின்றன. இன்று உணவு காரணமாக உயர்வுதாழ்வு பாராட்டும் வழக்கம் அனேகமாக மறைந்துவிட்டது என்றே சொல்லி விடலாம். உணவு காரணமாக உயர்வு தாழ்வு பாராட்டுவது அறியாமை என்பதில் ஐயம் இல்லை. சாதியும் தமிழரும் சாதி என்னும் சொல் சாதி என்பது தமிழ்ச்சொல் அன்று; ஜாதி என்ற வடமொழிச் சொல்லே சாதி என்று தமிழில் வழங்குகின்றது. இந்தச் சாதி என்ற சொல்லும் மக்களைக் குறிக்கும் சொல்லாகப் பண்டைக் காலத்தில் வழங்கவில்லை. தொல்காப்பியத்தில் சாதி என்ற சொல்லும் வழங்குகின்றது. ஆனால் அது மக்களைச் சுட்டவில்லை. நீர் வாழ் சாதியுள் அறுபிறப்பு உரிய நீர் வாழ் சாதியுள் நந்தும் ஒன்றும் என்பன தொல்காப்பியம் மரபியல் சூத்திரங்கள். இச்சூத்திரங் களில் சாதி என்னும் சொல் தண்ணீரில் வாழும் உயிர்களையே குறித்தன. இச்சொல் பிற்காலத்தில்தான் மக்களைக் குறித்து வழங்கிற்று. சாதி என்னும் சொல் தமிழில் இல்லை என்பது ஒரு உண்மையை உணர்த்துகின்றது. மக்களுக்குள் பிறப்பினால் வேற்றுமை இல்லை என்பதுதான் அவ்வுண்மை. பழைய நூல்களிலே நால்வகைச் சாதிகள் காணப்படு கின்றன. இப்பிரிவுகள் தமிழ்நாட்டிலும் உண்டு. தமிழ் நூல்களிலும் இப்பிரிவுகள் காணப்படுகின்றன. இப்பிரிவு - இந்நால்வகைப் பிரிவு - எப்படித் தோன்றின என்பதைப் பற்றிப் பலவகையான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரார், நால்வகைச் சாதிப் பிரிவு தமிழர்களிடம் இருந்ததில்லை; அது ஆரியர்களால் தமிழரிடம் புகுத்தப் பட்டது; என்று சொல்லுகின்றனர். இது உண்மைதானா? அல்லது தமிழரிடமேதான் நால்வகைப் பிரிவு தோன்றியதா என்பதை நாம் காணவேண்டும். நான்குவகைச் சாதிகள், நாலாயிரம் சாதிகளாக ஆகி விட்டன; இந்தக் கணக்குக்கூடச் சரி அன்று; எத்தனையோ சாதிகள்! சாதிப்பிரிவினால் உண்டான தீமைகள் பல; உண்டாகும் தீமைகள் பல. ஒருகாலத்தில் சாதி வேற்றுமை புனிதமாக - இன்றியமையாததாக - எண்ணப்பட்டது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, சாதி வேற்றுமை தீமையானது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இதைப் போக்குவதற்குத் தமிழ்ச் சான்றோர்கள் பலவகையில் முயன்றும் இருக்கின்றனர். ஆனால் இன்றளவும் சாதி வேற்றுமை ஒழிந்த பாடில்லை. சாதிப் பிரிவு, ஆரம்பத்தில் பிறப்பில் வேற்றுமையுண்டு என்ற கருத்தில் தோன்றவில்லை. தொழில் காரணமாக வகுப்புக் களாக மக்கள் பிரிந்தனர். ஒவ்வொரு தொழிலைச் செய்யும் மக்கள் ஒவ்வொரு பிரிவினராயினர். இத்தகைய பிரிவு பழந்தமிழ் நாட்டில் இருந்தது. மக்கள் ஒரே கூட்டமாக நாகரிகம் இல்லாமல் வாழ்ந்த காலத்தில் அவர்களிடம் பிரிவு தோன்றியிருக்க முடியாது. அவர்களிடம் நாகரிகம் வளர்ந்த காலத்தில் தான் பிரிவுகள் தோன்றியிருக்க முடியும். சிறப்பாக நாகரிகம் பிறந்த இடம் மருத நிலம் என்று கருதப்படுகிறது. மருத நிலம் என்பது நீர்வளம் நிறைந்த இடம். இங்கேதான், விவசாயமும் தொழில் வளர்ச்சியும் பெருகின. எங்கே உழவுத் தொழில் வளர்ச்சியடைகின்றதோ அந்த இடத்தில்தான் பலவகையான தொழில்கள் பிறக்க-வளர-இடம் உண்டு. இவற்றின் மூலம் மக்களிடையே பிரிவினை ஏற்படவும் இடம் உண்டு. ஆரியர்கள் பாரத நாட்டுக்கு வருவதற்கு முன்பே இந் நாட்டில் உழவுத்தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது. குறிப்பாகத் தமிழ் மக்கள் சிறந்த உழவர்களாக இருந்தனர். இவர்கள் சிந்து கங்கை ஆற்று நிலப்பகுதிகளில் எல்லாம் பரவியிருந்தனர். இவ்வுண்மையை வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். சாதி பிறந்த இடம் உழவுத் தொழில் வளர்ந்திருக்கும் இடத்தில்தான் உழவர்கள் இருப்பார்கள். பயிர்களை விலங்குகள் அழிக்காமல் காக்கக்கூடிய வீரர்கள் இருப்பார்கள். விளைந்த பண்டத்தை வேறிடங்களில் கொண்டுசேர்த்து, அங்குள்ள பண்டங்களை வாங்கிவரும் வணிகர்கள் இருப்பார்கள். உழவர்களுக்கும், வணிகர்களுக்கும். வீரர்களுக்கும், அறிவுரை கூறும் அறிஞர்கள் இருப்பார்கள். இன்னும் பல கருவிகளைச் செய்யும் தொழி லாளர்களும் தோன்றுவார்கள்! இது இயற்கை உண்மை. மருத நிலத்தின் தெய்வம் வேந்தன் என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இதனால், தமிழகத்தின் மருத நிலத்தில் அரசன் இருந்தான் என்று அறியலாம். பயிர்களைச் சேதமில்லாமல் காக்கத் தோன்றிய வீரர் பரம்பரையினரே பிற்காலத்தில் அரசர்களாயினர்; வேந்தர்களாயினர். பழமையான உழவுச்செல்வம் படைத்த தமிழ் மக்களி டையிலே தொழிலால் பல பிரிவுகள் பிறந்தன என்பதில் ஐயம் இல்லை. சிறப்பாக, முதலில் அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர் என்ற பிரிவுகளே பிறந்திருக்கவேண்டும். இப்பிரிவு களைப் பற்றிக் தொல்காப்பியம் தெளிவாகக் கூறுகின்றது. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் என்பது தொல்காப்பியம் - புறத்திணை இயல் சூத்திரம். அறுவகையான தொழில்களையுடைய பார்ப்பனப் பகுதி; ஐந்து வகையான தொழில்களையுடைய அரசர் பகுதி; ஆறுவகைத் தொழில்களை உடைய வணிகர், வேளாளர் பகுதி என்பது இச்சூத்திரத்தில் காணப்படுகின்றது. ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பவை அந்தணர்க்குரிய அறுவகைத் தொழில், ஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டம் என்பவை அரசர்க்குரிய ஐவகைத் தொழில். ஓதல், *வேட்டல், ஈதல், உழுதல், †நிரைகாத்தல், வணிகம் இவ்வாறு வணிகர் தொழில். ஓதல், ஈதல், உழவு, நிரைகாத்தல், வணிகம், ஏனையோர்க்கு உதவுதல் இவை வேளாளரின் ஆறு தொழில். இப்பிரிவுகளே தமிழகத்தில் தோன்றியிருந்த நால்வகைப் பிரிவுகள். இதனை இன்னும் தெளிவாகத் தொல்காப்பிய மரபியலில் காணலாம். படை, கொடி, குடை, முரசு, குதிரை, யானை, தேர், மாலை, முடி. பொருத்தமான இன்னும் பல அரசர்க்குரியன (மரபு, சூ 71). அந்தணர்க்கு உரியவைகளும் அரசர்களுக்கு உரியன (மேற்படி 72). வாணிகம் செய்வது வைகியன் வாழ்க்கை (மேற்படி 77). எட்டு வகையான உணவுத் தானியங்களை உண்டாக்குவதும் வைசியன் தொழில் (மேற்படி 78). அவர்களுக்கு மலரும் மாலையும் உண்டு (மேற்படி 79). வேளாளர்க்கு உழவு தொழிலைத் தவிர வேறு தொழில் இல்லை (மேற்படி 80), வேந்தர்கள் விரும்பினால் அவர்கள் படைக்கலப் பயிற்சி பெற்றுப் போர் வீரர்களாவார்கள். மாலையும் அணிவார்கள். (மேற்படி 81). அந்தணர்க்கு முப்புரிநூல், கரகம் (தண்ணீர்ச் செம்பு), முக்கோல், ஆசனம் இவைகள் உரியவை (மேற்படி 70). அவர்கள் அரசு செய்வதற்கும் உரியவர்கள் (மேற்படி 82). இவைகளைச் கொண்டு, அந்தணர்கள் அரசுக்கு ஆலோசனை கூறுவோர் களாகவும் இருந்தனர் என்பதை அறியலாம். மேலே காட்டியவை தொல். பொருள், மரபியலில் உள்ளவை. இதனால் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைப் பிரிவினர் தமிழகத்தில் இருந்தனர் என்பதைத் தெளிவாகக் காணலாம். அவர்கள் தொழில் காரணமாகவே இவ்வாறு பிரித்துக் கூறப்பட்டனர் என்பதில் ஐயம் இல்லை. இந்நால்வகைப் பிரிவினருள் பிறப்பால் வேற்றுமையில்லை. இவர்களுக்குள் மணங்களும் நடைபெற்று வந்தன. சமயம் நேரும் போது, ஒருவர் தொழிலை மற்றவர் பார்த்து உதவியும் வந்தனர். இத்தகைய பிரிவு நாகரிகம் பெற்ற தமிழரிடந்தான் முதலில் தோன்றியிருக்க வேண்டும். தமிழர்கள் பழமையான நாகரிகம் படைத்தவர்கள் என்பதற்கு இப்பிரிவு ஒரு சான்றாகும். சாதியும் ஆரியரும் ஆரியர்கள் இந்நாட்டுக்குள் குடிபுகும்போது தமிழரிடம் சிறந்த அரசியல் அமைப்பு இருந்தது. தமிழர்களிடம் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வகையான பிரிவுகள் இருந்தனர். இன்னும் பல தொழிலாளர்களும் இருந்தனர். அரசி யலும், தொழில்களும், சமுதாய வாழ்வும் உயர்ந்த நிலையில் இருந்தன. இந்நாட்டில் குடிபுகுந்த ஆரியர்களிடம் சாதிப்பிரிவு இருந்திருக்க முடியாது. வடஐரோப்பாவிலும், மத்திய ஐரோப்பாவிலும் தங்கியிருந்த மக்களே பல பிரிவினராக ஆரியர் என்ற பெயருடன் பல நாடுகளில் குடிபுகுந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர்தான் கைபர் கணவாய் வழியாகப் பாரதநாட்டுள் புகுந்தனர். ஒரே கும்பலாக, ஆடு மாடுகளைச் செல்வமாகக் கொண்டு வாழ்ந்த மக்களிடம் வகுப்புப் பிரிவுகள் கூட இருந்திருக்க முடியாது. அவர்கள் குடிபுகுந்த மற்ற நாடுகளில் சாதிப்பிரிவுகள் இல்லை. அவர்கள் குடிபுகுந்த பாரத நாட்டில் மட்டுந்தான் சாதிப்பிரிவுகள் இருக்கின்றன. ஆதலால், இப்பிரிவுகளை அவர்கள் கொண்டு வந்தார்கள் என்று எப்படிக் கூறமுடியும்? ருக் வேதத்தில் 8 மண்டிலங்களில் சாதிப்பிரிவைப் பற்றிக் கூறப்படவில்லை என்று வடமொழி வல்லார் கூறு கின்றனர். 8 மண்டிலங்களுக்கும் பின் வரும் மண்டிலங்களில் தான் சாதிப்பிரிவு காணப்படுவதாக உரைக்கின்றனர். ஆரியர்கள் பாரதநாட்டில் புகுந்த போது, தமிழரிடம் அமைந்திருந்த நால்வகை பிரிவை அவர்களும் பின்பற்றினர்; அவைகளைப் பற்றி அவர்கள் தமது நூல்களில் எழுதிக்கொண்டனர். தமிழரிடம் இருந்த நால்வகை வகுப்புப் பிரிவே நாளடைவில் நால்வகைச் சாதிப் பிரிவாக மாறிற்று. இதுவே பல ஆராய்ச்சியாளர்களின் கொள்கையாகும். ஆரம்பத்தில் மக்களிடையே உயர்வு தாழ்வுக்கு இட மில்லாமலிருந்த நால்வகைப் பிரிவுகள் நாளடைவில் உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கு இடமாகிவிட்டது. சாதியாகவும் மாறிவிட்டது. பிறப்பிலே வேற்றுமை உண்டு என்ற நிலையும் ஏற்பட்டுவிட்டது. இந்த உயர்வு தாழ்வின் காரணமாக மக்களுக்குள் ஒற்றுமையின்மை பிறந்து, ஒருவரை ஒருவர் வெறுக்கும் நிலை ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் ஏமாற்றும் நிலையும் தோன்றியது. சாதி வேற்றுமையால், இத்தகைய தீமைகளைக் கண்கூடாகக் கண்ட பிறகுதான், அறிஞர்கள் சாதி பேதம் ஒழிய வேண்டும் என்று கருதினர். சாதி ஒழிப்புக்கு வழி சாதி வேற்றுமை ஒழிவதற்கு வழி தேடிய அறிஞர்களிலே பலர் பலவிதமான வழிகளைச் கூறினர். கல்வி அறிவால் உயர்வு தாழ்வுகளைப் போக்கிவிடலாம் என்று நம்பினார்கள். ஆகையால் அவர்கள் மக்கள் எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்று வலியுத்தினார்கள். இந்த உண்மையைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றால் அறியலாம். ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு* அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே ஒரு குடும்பத்திலே பிறந்த பலருள்ளும், முத்தவனை வரவேற் காமல், அவருள் அறிவுடையவன் இளையவனாயிருந்தாலும் அவன் காட்டும் வழியில் அரசனும் நடப்பான்; வேறுபட்ட நால்வகைச் சாதியிலே கீழ்க்குலத்திலே பிறந்த ஒருவன் படித்திருந்தால், மேற்குலத்தில் பிறந்த ஒருவனும் அவனை வழிபடுவான் (புறம் 183). இப்பாடல் தமிழகத்தில் நால்வகைச் சாதியிருந்தது; ஆனால் கற்றவன் உயர்ந்தவன்; அவனுக்குச் சாதியில்லை; அவன் மேற்சாதியினரால் வணங்குவதற்குத் தகுதியுடையவன் ஆவான் என்று கூறிற்று. கல்வி மக்களுடைய உயர்வு தாழ்வைப் போக்கும் என்ற இக்கருத்தை இன்னும் பல புலவர்களும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர். பிற்காலத்து நூல்கள் பலவும் இக்கொள்கையை வலியுறுத்துகின்றன. திருவள்ளுவர், எல்லோரும் நல்லொழுக்கம் உடையவர் களானால் மக்களிடையே உள்ள வேற்றுமைகள் ஒழிந்துவிடும் என்று கூறுகின்றார், ஒழுக்கம் உடைய குடியே உயர்ந்த குடி; ஒழுக்கமற்ற குடி இழிந்த குடி என்பது அவர் கருத்து. இதனை. ‡“xG¡f« உடைமை குடிமை, இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்ற குறளால் காணலாம். சாதி வேற்றுமை ஒழிவதற்குக் கல்வியையும் கருவியாகக் காட்டுகின்றார் வள்ளுவர். இதனை யாதானும் நாடாமல், ஊர் ஆமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத ஆறு என்ற குறளால் அறியலாம். சமணர், பவுத்தர் முதலிய மதத்தினரும் ஒழுக்கத்தை வலியுறுத்தினர். ஒழுக்கத்தினால் மக்களிடம் உள்ள உயர்வு தாழ்வுகளைப் போக்க முயன்றனர். சைவ, வைணவ மதத் தலைவர்கள் மதத்தின் மூலம் - அன்று நெறியின் மூலம் - மக்களிடம் உள்ள சாதிவேற்று மையைப் போக்க முயன்றனர். பலதிறப்பட்ட சாதிகளிலே பிறந்த சைவ வைணவ அடியார்கள் அச்சமயத்தினரால் உயர்வாக - வேற்றுமை பாராட்டாமல் - வணங்கப்படுவதைச் காண்கிறோம். ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும், கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பர் ஆகில் அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே என்பது நாவுக்கரசர் திருவாக்கு. *குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் வலம்தாங்கு சக்கரத்து அண்ணல், மணிவண்ணற்கு ஆள் என்று உள் கலந்தார் அடியார்தம் அடியார் எம் அடிகளே என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி. இராமானுஜர், அனைவர்க்கும் அஷ்டாட்சரத்தை உபதேசித்து, எல்லோரையும் வைணவராக்கிச் சாதி பேதத்தை ஒழிக்க முயன்றார். சமயத் தலைவர்களுக்குப் பின்னே தோன்றிய கம்பன் சாதி வேற்றுமை ஒழிய எல்லோருக்கும் எல்லாச் செல்வமும் வேண்டும் என்று உரைத்தான். †“fšyhJ நிற்பார் இன்மையின் கல்வி முற்ற வல்லாரும் இல்லை; அவை வல்லார் அல்லாரும் இல்லை எல்லாரும் எல்லாச் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை என்பன கம்பன் கூறியவை. இவ்வாறு சாதி வேற்றுமை ஒழிவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையிலே முயன்றனர். சித்தர் நூல்கள் என்று வழங்கும் பாடல்களிலே சாதி வேற்றுமையைக் கடுமையாகச் சாடியிருக்கின்றார்கள். இன்றும் பலர், இத்தீமையை ஒழிக்க முயன்று கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் இன்னும் ஒழிந்தபாடில்லை. சாதியை ஒழிப்பதற்குக் கம்பன் காட்டிய வழியைத்தான், நம் காலத்துக் கவிஞர் பாரதியாரும் கூறியுள்ளார். வாழி கல்வி, செல்வம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே என்பது அவர் கூறியிருப்பது. எல்லோரும் கல்விபெற்று, வாழ்க்கை வசதியும் பெற்றுச் சமநிலையடைந்தால் சாதி தானே மறைந்துவிடும் என்பதே இன்றைய அறிஞர்களின் கொள்கை, இவ்வுண்மையை மறந்து, பிறர்மீது வசைபாடிக் கொண்டிருப்பதால் சாதி வேற்றுமை ஒழிந்துவிடாது. இதுவரையிலும் கூறியவற்றால் சாதி என்னும் சொல் தமிழ்ச் சொல் அன்று எனக் கண்டோம். தொழிற் பிரிவு காரணமாகப் பிரிந்த வகுப்புப் பிரிவுதான் நாளடைவில் சாதிப்பிரிவாக ஆயிற்று. உழவுத் தொழில் முன்னேறியுள்ள மக்களிடந்தான் தொழில் வளர்ச்சியும் தொழிற் பிரிவுகளும் உண்டாகும். தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே - ஆரியர்கள் இந்நாட்டிற்கு வரும் முன்பே - உழவிலும், தொழிலிலும், அரசியலிலும் சிறந்திருந்தனர். அவர்களிடையே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகள் இருந்தன. ஆரியர்கள் இந்நாட்டில் புகும்போது அவர்களிடம் வகுப்புப் பிரிவுகள் இல்லை. ஒரே கும்பலாக வாழ்ந்த அவர் களிடம் வகுப்புப் பிரிவுகள் இருந்திருக்க முடியாது. தமிழர்களிடம் இருந்த பிரிவுகளைப் பார்த்த பிறகே அதை அவர்கள் பின்பற்றினர். தங்கள் நூல்களில் எழுதி வைத்தனர். இப் பிரிவுதான் நாளடையில் சாதி வேற்றுமையாக-பிறப்பிலே வேற்றுமை உண்டு என்பதாக - நிலை பெற்றுவிட்டது. பிறப்பிலே உயர்வு தாழ்வு என்ற சாதிப்பிரிவின் தீமையைப் பண்டைத் தமிழர்களே கண்டித்தனர். அவ்வேற்றுமையைப் போக்கப் பலவழிகளில் முன்னோர்கள் முயன்றனர். சாதி வேற்றுமையைப் போக்க இன்றுவரையிலும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பயன் தரவில்லை. இன்றும் சாதி வேற்றுமையை ஒழிக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. சாதிவேற்றுமை ஒழிய வேண்டும் என்பதிலே கருத்து வேற்றுமையில்லை. மக்கள் நல்வாழ்விலே கருத்துள்ள வர்கள் - கவலையுள்ளவர்கள் - எல்லோரும் இதை ஒப்புக் கொள்ளுகின்றனர். பழந்தமிழர் நம்பிக்கைகள் பண்டைக் காலத்தைவிட இன்று நாம் அறிவுத்துறையிலே முன்னேறி இருக்கின்றோம். பண்டைப் பழக்க வழங்கங்கள் பலவற்றை மூடநம்பிக்கை என்று ஏளனம் செய்கிறோம். மூட நம்பிக்கைகளை விட்டொழித்தால்தான் முன்னேற முடியும் என்று முழக்கம் செய்கிறோம். மூடநம்பிகைகளை வெறுக்கும் ஆத்திரத்திலே உண்மைக்கு மாறாகக்கூட உரையாடத் தொடங்கி விடுகின்றோம். இன்று நாம் வெறுக்கும் செய்திகள் பண்டைக் காலத்திலே நம்மிடம் இருந்தவை அல்ல; அந்நியர்களால் நம்மீது சுமத்தப்பட்டவை என்று சொல்லிவிடுகின்றோம். அந்நியரால் தாம் புகுத்தப்பட்டவையோ, அல்லது நம்மிடையே பிறந்தனவோ, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சில பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் தமிழர் சமுதாயத்தில் கலந்து ஒன்றுபட்டுக் கிடக்கின்றன. அவற்றை அகற்றுவதற்கு எவ்வளவு முயன்றும் இன்னும் முடியவில்லை. அவைகளிற் சிலவற்றைக் காண்போம். நாளும் சகுனமும் எந்தக் காரியத்தைச் செய்வதற்கும், நல்ல நாள் பார்ப்பது மூடநம்பிக்கை; நாளில் என்ன இருக்கிறது? நட்சத்திரத்தில் என்ன இருக்கிறது? நம்மிடம் அறிவும், திறமையும், உறுதியும் இருந்தால் தொட்ட காரியத்தை வெற்றியுடன் செய்து முடித்து விடலாம் என்று கூறுகின்றனர். இது உண்மைதான். ஆனால் இப்படிக் கூறுகின்றவர்களில் கூடச், சிலர் தாம் செய்யும் செயல்களைச் சுப முகூர்த்தம் பார்த்துத்தான் செய்கின்றனர். நல்ல நாள், நல்ல நட்சத்திரம், நல்ல நேரம் இவைகளைப் பிறர் அறியாமல் பார்த்து வைத்துக் கொள்ளுகின்றனர். குறிப்பிட்ட நேரத்தில் செயலைத் தொடங்குகின்றனர். இதற்குக் காரணம் பரம்பரைப் பண்பைத்தவிர வேறில்லை. பண்டைத் தமிழர்களிடம் நல்ல நாள் கெட்டநாள் பார்க்கும் பழக்கம் இருந்தது. †“kiwªj ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோர்க்கு இல்லை. என்பது தொல்காப்பியக் களவியல் சூத்திரம். களவு மணம் நிகழும் காலத்தில் கெட்ட ராசியிலும் கெட்ட நாளிலும் காதலியுடன் சேராமல் இருக்கும் வழக்கம் தலைவனிடம் இல்லை என்பது இதன் பொருள். கற்புமணம் புரிந்து கொண்டவர்கள் கெட்ட ராசியிலும் கெட்ட நாளிலும் கூடிக் களிக்க மாட்டார்கள்; களவு மணத்தில் ஈடுபட்டிருக்கும் தலைவன் இந்த வழக்கத்தைப் பின்பற்ற மாட்டான். நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் என்பது தொல்காப்பியப் புறத்திணையியல் சூத்திரம். நாளாலும், பறவைகளாலும் வேறு பொருள்களாலும் தோன்றும் காரணங் களும் என்பது இதன் பொருள். மேலே காட்டிய இரண்டு சூத்திரங்களும், தமிழர்களின் பழைய நாகரிகத்தை உணர்த்தின. நல்லராசி, கெட்டராசி பார்த்தல் தமிழர்களின் வழக்கம்; நல்லநாள், கெட்டநாள் பார்த்தல் பழந்தமிழர் வழக்கம். பறவைச் சகுனம் பார்த்தலும், வேறு பல அடையாளங்களைக் கொண்டு நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதும் தமிழர்களின் பழக்கம். இந்த உண்மையை மேலே காட்டிய சூத்திரங்களால் அறியலாம். நல்லநாள் பார்ப்பதும், பறவைச் சகுனம் பார்ப்பதும் தமிழர்களின் பழக்கம் என்பதைப் புறநானூற்றுப் பாடல் ஒன்றும் தெளிவுறுத்துகின்றது. *நாள் அன்று போகிப், புள்இடை தட்பப் பதன் அன்று புக்குத் திறன் அன்று மொழியினும் வறிது பெயர்குநர் அல்லர், நெறிகொளப் பாடுஆன்று இரங்கும் அருவிப் பீடுகெழு மலையன் பாடியோரே. (புறம் 124) ஒழுங்காக ஓசை நிறைந்து வீழுகின்ற அருவியை உடைய பெருமை நிறைந்த மலையின் தலைவனாகிய மலையமான் திருமுடிக்காரியைப் புகழ்ந்து பாடிச் சென்ற புலவர்கள் பரிசு பெறுவது உறுதி. நல்ல நாள் அல்லாது கெட்டநாளிலே அவனிடம் சென்றாலும் சரி, போகாதே என்று பறவை தடுக்கின்றபோது சென்றாலும் சரி, காலம் அல்லாக் காலத்திலே போனாலும் சரி, தகுதியற்ற சொற்களை அவனிடம் கூறினாலும் சரி, வெறுங்கையுடன் திரும்ப மாட்டார்கள்; பரிசில் பெற்றுத்தான் திரும்புவார்கள். இந்தப் புறநானூற்றுப் பாட்டும் நாள் பார்க்கும் வழக்கமும் சகுனம் பார்க்கும் வழக்கமும் தமிழரிடம் இருந்தன என்பதை அறிவித்தது. பல்லி சொல்லுக்குப் பலன் நாம் ஒரு காரியத்திற்குப் புறப்படும்போது, பல்லி கத்தினால் தயங்குகின்றோம். நாம் செல்லும் செயலைக் குறித்துத் தான் அந்தப் பல்லி ஏதோ சொல்லியதாக எண்ணுகின்றோம். நாம் சும்மா இருக்கும்போது பல்லி சொன்னால் கூட அதற்கு ஏதோ பலன் உண்டு என்று எண்ணுகிறோம். பல்லி சொன்னால் தரையில் மூன்று முறை விரலால் தட்டும் பழக்கம் இன்னும் சிலரிடம் இருப்பதைப் பார்க்கலாம். பல்லி சொல்லை நம்புவதும் நமது பரம்பரைப் பழக்கந்தான். *முதைச் சுவல் கலித்த மூரிச் செந்தினை ஒங்கு வணர்ப் பெரும்குரல் உணீஇய, பாங்கர்ப் பகுவாய்ப் பல்லிப் பாடுஓர்த்துக் குறுகும் புருவைப் பன்றி (அகம் 88) உச்சியிலே செழித்து முற்றியிருக்கும் நல்ல தினையின் உயர்ந்து வளைந்த கதிரை உண்ணும் பொருட்டு, பிளந்த வாயுடைய பல்லியின் சொல்லை அறிந்து, நல்ல நிமித்தம் என்று எண்ணி இளம்பன்றி வருகின்றது. †“ikaš கொண்ட மதன் அழி இருக்கையள் பகுவாய்ப் பல்லிப் படுதொறும் பரவி நல்ல கூறுஎன நடுங்கி. ‘காதல் மிகுதியால், வலிமையற்றிருப்பவன், பிளந்த வாயை யுடைய பல்லி சொல்லும் போதெல்லாம் வணங்கினாள்; நல்லது சொல் என்று நடுங்கி வேண்டினாள். இந்த அகநானூற்றுப் பாடல்கள், பல்லி சொல்வதற்குப் பலன் உண்டென்று தமிழ் மக்கள் நம்பி வந்தனர் என்பதை உணர்த்தின. பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே. என்பது கலித்தொகை (11), பல்லியும் நல்ல இடத்திலே அவர் வருகைக்கு ஏற்றவாறு கூறின என்பதனால், பல்லி சொல் வதற்குப் பலன் உண்டு என்பதை உணர்த்திற்று நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே என்பதனால், மக்களிடம் இருந்த மற்றொரு நம்பிக்கையையும் அறிவித்தது. பெண்களுக்கு இடதுகண், இடதுதோள் துடித்தால் நன்மை உண்டு; வலதுகண் வலதுதோள் துடித்தால் தீமை வரும்; ஆண்களுக்கு வலதுகண் வலதுதோள் துடித்தால் நன்மையும் வெற்றியும் வரும்; இடதுகண் இடதுதோள் துடித்தால் தீமை யுண்டாகும். இத்தகைய நம்பிக்கையும் தமிழரிடம் இருந்தது என்ற உண்மையை இக்கலித்தொகை காட்டுகின்றது. எரி நட்சத்திரம் வானத்திலிருந்து பெரிய நட்சத்திரம் எரிந்து வீழ்ந்தால் அது விபரீதத்துக்கு அடையாளம் என்பர். சிறப்பாக அரசனுக்கு ஆகாது. அரசனுக்கு ஆபத்து என்று எண்ணி வந்தனர். கோச்சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னன் சேர நாட்டை ஆண்டு வந்தான். அப்போது ஒரு நாள் இரவிலே பெரிய நட்சத்திரம் ஒன்று எரிந்து நிலத்தில் வீழ்ந்தது. அதைக் கண்ட புலவர்களும், அரசனால் உதவிபெற்ற இரவலர்களும் வருந்தினர். நமது அரசன் நோயின்றி வாழ்வானாயின் நலம் என்று அவர்கள் எண்ணினர். அரசனுக்கு என்ன ஆபத்து வருமோ என்று நினைத்து ஏங்கினர். நட்சத்திரம் எரிந்து வீழ்ந்த ஏழாம் நாளில் சேர மன்னனாகிய இரும் பொறை உயிர் நீத்தான். இச்செய்தி புறநானூற்றில் காணப்படுகின்றது, இரும் பொறை இறந்தபோது, அவனைக் குறித்துக் கூடலூர் கிழார் என்னும் புலவர் வருந்தினார். அவன் மறைவு குறித்து இரங்கினார், அவருடைய இரங்கற்பாவிலே இச்செய்தி காணப்படுகின்றது. *கனை எரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே; அதுகண்டு, யாமும், பிறரும், பல்வேறு இரவலர் பறையிசை அருவி நல்நாட்டுப் பொருநன் நோயிலன் ஆயின் நன்று; மற்றுஇல்என அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப அஞ்சினம்; எழுநாள் வந்தன்று இன்றே. வானத்திலிருந்து மிகுந்த தீயைப் பரப்பிக்கொண்டு, காற்றால் சிதைந்து, தீ மிகுந்து, ஒரு நட்சத்திரம் விழுந்தது. அதைக் கண்டு யாமும், மற்றவர்களும், பலவேறு இரவலர்களும் வருந்தினோம். பறைபோல் முழங்கும் அருவிகள் நிறைந்த நல்ல மலைநாட்டு வீரனாகிய சேர மன்னன் துன்பமின்றி வாழ்வானாயின் நலம். இன்றேல் நாட்டுக்கு நன்மையில்லை என்று மனம் வருந்தினோம்! உள்ளத்திலே சோர்வு தோன்றிப் பரவ அஞ்சியிருந்தோம். அந்த எரிநட்சத்திரத்தைக் கண்ட ஏழாம் நாள் இன்று வந்தது.(புறம் 229) இதுவே கூடலூர் கிழார் பாடிய பாடலின் ஒரு பகுதி. எரிநட்சத்திரம் வீழ்ந்தால் அரசுக்கு ஆபத்து நேரும் என்ற நம்பிக்கைக்கு இது உதாரணம். பாரத நாட்டு மக்கள் பெரும் பாலோரும் இந்த நம்பிக்கை உள்ளவர்கள்தான். தெய்வ வாக்கு நாம் ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும்போது எங்கேயாவது இருந்து மணியோசை கேட்டால் போதும்; உடனே அந்தக் காரியத்திற்கு வெற்றி யென்று சொல்லிக்கொள்ளுகிறோம் தங்கள் பேச்சிலே இனிமேல் கவலை வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு போனால், அல்லது எல்லாம் நன்மையாகவே முடியும் என்று சொல்லிக்கொண்டு போனால், அல்லது நிச்சயம் முடிந்து விடும் என்று சொல்லிக் கொண்டு போனால், அச்சொற்களை நாம் பேசிக்கொண்டிருக்கும் காரியத்தைக் குறித்துக் கூறியதாக நினைத்துக்கொள்கிறோம். நாம் கண்ணால் காதால் கேட்ட இத்தகைய சொற்களை அசரீரி என்னும் தெய்வவாக்காக நினைக்கிறோம். இதவும் தமிழர்களின் பரம்பரைப் பண்புதான். பசு நிரையைக் கவர்தற்குச் சென்ற வீரர்கள் தாங்கள் சென்றிருக்கும் இடத்திலே, இரவிலே நல்ல பறவையின் ஒலியைக் கேட்டாலும் இடை வழியிலே நடந்து செல்வோர் பேசிக் கொள்ளும் நல்ல சொற்களைக் கேட்டாலும், அவற்றை நல்ல சகுனமாகக் கொள்ளுவார்கள். இவ்வாறு தொல்காப்பியப் புறத்திணை இயலின் 58 ஆவது சூத்திரத்தில் கூறப்படுகின்றது. இதற்கு விரிச்சி என்று பெயர். இது போன்ற ஒரு நற்செய்தி நற்றிணையின் 65 ஆவது செய்யுளில் காணப்படுகின்றது. தலைவன், தலைவியை விட்டுப் பிரிந்து சென்றான். அவன் வருவதாகச் சொல்லிப்போன பருவம் வந்தும் அவன் வரவில்லை. அதனால் தலைவி வருந்தியிருந்தாள். அப்பொழுது தோழி தலைவியைப் பார்த்துக் கூறுகின்றாள்; நமது பக்கத்து வீட்டு மாது வேறொருத்தியிடம் உரையாடும் போது, அவன் இப் பொழுதே வருவான்; என்று கூறினாள். இது உண்மையாகவே முடியும். ஆதலால் அவள் அமுதம் உண்பாளாக என்றாள் தோழி. அயலாள் கூறியதை அசரீரியின் சொல்லாக எண்ணிக் கொண்டாள் தோழி. தொல்காப்பியத்திலும் நற்றிணையிலும் காணப்படும் இச்செய்திகள் பழமையானவை. இவைகளே இன்றும் நம்மை மணி ஓசையையும் பிறர் பேச்சையும், கழுதை கத்துவதையும் கூட நன்னிமித்தம் என்று நம்பும்படி செய்வதற்குக் காரணமாகும். உடன்கட்டை ஏறுதல் உடன்கட்டை ஏறும் பழக்கம் இன்று சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது. கணவன் இறந்தால் மனைவியும் அவனுடன் பிணத்தீயிலே மூழ்கி இறந்துவிடுவதே உடன்கட்டை ஏறுவ தாகும். கணவன் இறந்த பின்னும் உயிர்வாழ விரும்பிய பெண் களையும் கட்டாயமாகக் கணவனுடன் வைத்துக் கொளுத்தி வரத் தொடங்கினர். இத்தகைய கொடுமையைப் போக்கவே உடன்கட்டை ஏறும் வழக்கம் தடுக்கப்பட்டது. உடன்கட்டை ஏறும் வழக்கமும், உடன்கட்டை ஏற்றும் கொடுமையும் பாரத நாடு முழுவதிலும் பரவியிருந்த வழக்கமாகும். தமிழர்களிடமும் இவ்வழக்கம் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கின்றது. *நல்லோள் கணவனொடு நளிஅழல் புகீஇச் சொல்இடை யிட்ட பாலை நிலையும். என்பது தொல்காப்பியப் புறத்திணை இயல் சூத்திரம். கற்புள்ள மனைவி தன் கணவனுடன் உடன்கட்டை ஏறப்போகும் போது, அதை வேண்டாம் என்று தடுப்பவருடன் எதிர்த்துக் கூறிய பாலைநிலையும் என்பது இதன் பொருள். உடன்கட்டை ஏறுகின்றவளைச் சிலர் தடுக்கின்றனர். உடன்கட்டை ஏறவேண்டாம் என்பதற்குத் தடுப்போர் கூறும் காரணங்களை அவள் ஒப்புக்கொள்ளாமல் எதிர்த்துப் பேசுகின்றாள். இதனைப் பாலைநிலை என்று கூறுகின்றது தொல்காப்பியம். இறந்த கணவனுடன், ஈமத்தீயில் பாய்ந்து மாண்ட பத்தினிப் பெண்ணின் வரலாறு ஒன்றைப் புறநானூறு எடுத் துரைக்கின்றது. பூதப்பாண்டியன் என்பவன் இறந்தான்; அவன் மனைவி பெருங் கோப் பெண்டு அவனுடன் தீயில் புகுவதற்குப் போனாள். அப்பொழுது சிலர் தடுத்துக் கூறினர். அவர்களுக்கு அவள் கூறிய எதிர் மொழியாக அமைந்திருக்கின்றது அப் புறநானூற்றுப் பாட்டு. வேளை வெந்தை வல்சி யாகப் பரல்பெய் பள்ளி பாய்இன்று வதியும் *உயவல் பெண்டிரேம் அல்லேம்; மாதோ! பெரும்காட்டுப் பண்ணிய கரும்கோட்டு ஈமம் நுமக்கு அரிது ஆகுக தில்ல; எமக்குஎம் பெருந்தோள் கணவன் மாய்ந்துஎன. அரும்புஅற வள்இதழ் அவிழ்ந்த தாமரை நள் இரும் பொய்கையும், தீயும் ஓர் அற்றே என்பது புறநானூற்றின் 246 ஆவது பாட்டு. வெள் எள்ளும் புளியும் சேர்த்துக் சமைத்த வேளைக் கீரையை உணவாகக் கொண்டு, கூழாங்கற்கள் உள்ள கட்டாந் தரையிலே பாயில்லாமல் படுத்துக் கைம்மை நோன்பு நோற்று வருந்தும் பெண்டிர் கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்லம் யாம். பெரிய சுடுகாட்டிலே அடுக்கப்பட்டிருக்கும் கரிய விறகால் ஆகிய ஈமத்தீ உங்களுக்குத் துன்பமாகத் தோன்றுக; எமக்கு, எமது பெரிய தோளையுடைய கணவனை இழந்தவுடன், தாமரைகள் பூத்த குளிர்ந்த தடாகமும், நெருப்பும் ஒன்றுதான் என்பதே இதன் பொருள். இதனால், தாமரைப் பொய்கையில் நீராட இறங்குவது போலக் கணவனுடன், தீயில் மூழ்குவர் பத்தினிப் பெண்டிர் என்பதைக் காணலாம். பத்தினிப் பெண்டிரின் இயல்பைப் பற்றி மணி மேகலையில் தெளிவாகக் கூறப்படுகின்றது. பத்தினிப் பெண்டிர், தங்கள் காதலர் இறந்துவிட்டால், உலையில் உள்ள நெருப்பை ஊதிப் பற்றவைக்கின்ற துருத்தியைப் போலப் பெருமூச்சுவிடுவர். அந்த மூச்சிலே அவர்கள் உயிரை விட்டுவிடுவார்கள்; இது தலைசிறந்த பத்தினிப் பெண்டிர் தன்மை. இப்படி உயிர் விடாதவர்கள் குளிர்ந்த நீரில் இறங்குவது போலக் கணவனுடன் ஈமத்தீயில் மூழ்கி இறப்பர். இப்படியும் இறக்காவிட்டால், தம் காதலருடன் அடுத்த பிறப்பிலே ஒன்றாக வாழும் வாழ்வை எண்ணிக் கைம்மை நோன்பு நோற்று உயிர் வாழ்வர் என்று கூறுகிறது மணிமேகலை, இதனை. *காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி ஊதுஉலைக் குருகின் உயிர்த்து; அகத்து அடங்காது இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின், நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்; நளிஎரி புகாஅர் ஆயின், அன்பரோடு உடன் உறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்; பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்து என்று ஊர் அலர் உரைத்த காதையில் வரும் அடிகளால் காணலாம். காதலன் இறந்தபின் பெருமூச்சு விட்டு உயிர்விட்ட நிகழ்ச்சியைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். பாண்டியன் நெடுஞ்செழியின் மனைவி, கோப்பெருந்தேவியின் இறப்பு இத்தகையதே. மேலே காட்டியவைகளைக் கொண்டு, காதலன் இறந்த துயரம் தாங்க முடியாது காதலி இறக்கும் தம்மையைக் குறிப்பதே உடன்கட்டை ஏறுதல் என்பதாகும். காதலன் இறந்த துயர் தாங்காமல் உயிர்விடும் பெண் களைப் பற்றி இன்றும் கேள்விப்படுகிறோம். இத்தகையவர்கள் உலகம் எங்கும் உள்ளனர். கணவன் இறந்த துயர் தாங்காமல் மனைவியிறந்த நிகழ்ச்சிகளைப் பத்திரிகைகளிலே படித்திருக் கின்றோம். இத்தகைய இயல்பு, இன்ன இனத்தினர்க்குத்தான் உரியது என்று கூறமுடியாது. எல்லா நாட்டிலும், எல்லா இனத்தினரிடமும் இத்தகைய நிகழ்ச்சி அரிதாக நடைபெறுவது உண்டு. பழந்தமிழர்களும் இதற்கு விலக்கல்லர். பண்டிகைகள் குறிப்பிட்ட சில நாட்களைப் பண்டிகைகளாக - பெரு நாட்களாக - சிறந்த நாட்களாகக் கொண்டாடும் வழக்கம் எல்லா நாட்டிலும் உண்டு; எல்லா இனமக்களிடமும் உண்டு; எல்லா மதத்தினரிடமும் உண்டு. பொருள் வசதி படைத்த குடும்பத்தினர் இத்தகைய நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்; மனைவி மக்களுடன், உற்றார் உறவினருடன் கூடிக் குதூகலிக் கின்றனர். பண்டிகைகள் மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் தோன்றியவை; ஆதலால் அவைகள் ஓழிக்கப்படவேண்டும் என்று கூறுவோர் உண்டு. இவர்கள் எவ்வளவுதான் பண்டிகை களைப் பற்றி எதிர்த்துக் கூறினாலும் அவைகள் மறைந்துவிட வில்லை. பழங்காலத்துப் பண்டிகைகள் பலவற்றை மக்கள் இன்னும் கொண்டாடிக் கொண்டுதான் வருகின்றனர். பழங்காலத்துத் தமிழ் மக்கள் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடினர். கார்த்திகை நாளிலே வீதியிலே விளக்கேற்றி வைப்பார்கள். மலர்மாலைகளைத் தொங்கவிடுவார்கள். பலரும் கூடிப் பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். *குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து, அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள், மறுகு விளக்கு உறுத்து, மாலைதூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு- (அகம். 141) என்பது அகநானூற்றுப் பாட்டு. இதில் கார்த்திகைத் திருநாளைக் கொண்டாடிய முறை காணப்படுகின்றது. சிறிய முயலாகிய களங்கம் தன் மார்பிலே விளங்கும்படி முழுமதி தோன்றும். உரோகிணி சந்திரனுடன் சேர்ந்திருக்கும். இத்தகைய கார்த்திகை நாள் இரவில் வீதியிலே விளக்கேற்றி வைப்பர்; மலர்மாலை களைத் தொங்கவிடுவர்; பழமையான சிறந்த ஊர்களிலே மக்கள் பலரும் கூடி விழாக் கொண்டாடுவர் என்பதே இவ்வரிகளில் அமைந்திருக்கும் பொருளாகும். இதனால் பண்டைத் தமிழ் மக்கள் கார்த்திகைவிழாக் கொண்டாடியதை அறியலாம். தைந்நீராடுதல் என்னும் பண்டிகையையும் பண்டைத் தமிழ் மக்கள் கொண்டாடி வந்தனர். பெண்கள் மார்கழியில் நோன்பிருந்து தைம்மாதம் முதலில் நீராடுவர். இதற்குத்தான் தைந்நீராடல் என்றுபெயர். தைஇத் திங்கள் தண்கயம் படியும் பெரும்தோள் குறுமகள் என்பது நற்றிணையின் 80-வது பாடல் பகுதி. தை மாதத்தின் முதல் நாளிலே குளிர்ந்த நீர் நிறைந்த குளத்திலே, நோன்புடன் நீராடும் பெரிய தோள்களையுடைய இளம் பெண் என்பதே இதன் பொருள். தைந்நீராடும் வழக்கம் கலித்தொகையிலும் காணப்படு கின்றது. தையின் நீராடிய தவந்தலைப் படுவாயோ என்பது கலித்தொகை 59 ஆவது பாடலில் காணப்படுவது. பெண்கள் தாம் விரும்பும் நல்ல கணவனைப் பெறுவதற் காக மன்மதனை வேண்டிக்கொள்வதே தைமாத நோன்பாகும் என்று திவ்யப் பிரபந்தம் நாச்சியார் திருமொழியில் காணப் படுகின்றது. தமிழ் நாட்டில் ஓணத்திருநாள் கொண்டாடப்பட்டு வந்தது. இன்று மலையாளத்து மக்கள் தாம் இப்பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். ஓண விழா, கார்த்திகை விளக்குத் திருநாள், திருவாதிரை நாள், தைப்பூச நாள், பங்குனி உத்திர நாள், அட்டமித் திருநாள் இவைகளையெல்லாம் தமிழர்கள் கொண்டாடி வந்தனர். தமிழகத்தில் இத்திருநாட்கள் கொண்டாடப்பட்டு வந்தன; இவ்வுண்மையைத் திருஞான சம்பந்தர் தேவாரத்திலே, திருமயிலாப்பூர் - பூம்பாவைத் திருப்பதிகத்திலே காணலாம். திவ்யப்பிரபந்தப் பாடல்களிலும், ஓணம், பங்குனி முதலிய திருநாட்கள் காணப்படுகின்றன. பண்டிகைகள் கொண்டாடும் முறையிலே மாறுதல் ஏற்பட்டிருக்கலாம். பண்டைக் காலத்தில் பண்டிகைகளைக் கொண்டாடிய முறைக்கும் இக்காலத்தில் கொண்டாடும் முறைக்கும் வேற்றுமை இருக்கலாம். நாளடைவில் இத்தகைய மாறுபாடு ஏற்படுவது இயற்கை. பரம்பரை நம்பிக்கைகள் பண்டைத் தமிழர்கள் மந்திரங்களிலே நம்பிக்கை வைத்திருந்தனர். பெரியோர்கள் சொல்லிய, பொருள் தெரியாத மொழிகளையே அவர்கள் மந்திரங்கள் என்று நம்பி வந்தனர். இன்னும் குறிகேட்டல், நோய் நீங்கத் தெய்வத்தை வேண்டிக் கொள்ளுதல், பழைய மரங்களிலே தெய்வம் வசிப்பதாக நம்புதல் போன்ற பல நம்பிக்கைகளும் தமிழ் மக்களிடம் இருந்து வந்தன. ஒரு காரியத்தைச் செய்வதற்கு நாள் பார்த்தல், நேரம் பார்த்தல், சகுனம் பார்த்தல், குறி கேட்டல் போன்றவைகளை யெல்லாம் மூடநம்பிக்கைகள் என்றே பண்டைய அறிஞர்களும் கருதினர். இதனை, எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின் என்ற திருக்குறளால் அறியலாம். காரியங்களைச் செய்ய எண்ணியவர் உறுதியுள்ளவராயிருப்பாராயின் அவர்கள் தாம் எண்ணிய எல்லாவற்றையும் எண்ணியபடியே அடைவார்கள் என்ற பொருளமைந்த இக்குறள் மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகும். இவ்வாறு முன்னோர்கள் மூடநம்பிக்கைகளைக் கண்டித்துங்கூட அவைகள் இன்னும் நம்மிடையே பலப்பல உருவங்களில் இருந்துகொண்டுதான் வருகின்றன. ஆயிரங் காலத்துப் பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் அரை நாளிலே ஒரு நாளிலே ஒழித்துவிட முடியாது. இடைக்காலத்திலே நம்மிடம் ஏற்பட்ட பழக்க வழக்கங்களை எளிதில் மாற்றிக் கொண்டுவிடலாம். பரம்பரையாக நம்மிடம் ஊறிவந்த பழக்க வழக்கங்களைத்தான் எளிதில் மாற்றிவிட முடியாது. நாளடைவில் சிறுகப் சிறுகத்தான் அவைகள் மாறும். ஆதலால் நமக்கும் பிடிக்காத பழக்க வழக்கங்கள் எல்லாம் பிறரால் நம்மீது சுமத்தப் பட்டன என்று கூறுவதில் பயன் இல்லை. இக்காரணத்தைக் காட்டிப் பிறரை வெறுப்பதும் முறையன்று. நமது குற்றங்களை நம்முடையவைதான் என்று ஒப்புக் கொண்டால், நாம் அவை களை எளிதிலே திருத்திக்கொள்ள முடியும். தமிழகத்தில் பெண் உரிமை நாகரிகம் பிறந்த இடம் பழந்தமிழ் நாட்டில் பெண்களுக்கும் ஆண்களைப் போலச் சம உரிமை இருந்தது; பிற்காலத்தில்தான் அந்த உரிமைக்கு அழிவு வந்தது; ஆண்கள் பெண்களின் உரிமையைப் பறித்தனர்; அவர்களை அடிமைகளாக்கினர்; வீட்டுக்குள் அடைத்து வந்தனர் என்று கூறுவோர் உண்டு. இது உண்மையன்று; பெண்களுக்கு எந்தக் காலத்திலும் ஆண்களைப் போன்ற சமஉரிமை இருந்ததில்லை. பெண்களின் உடலமைப்பு ஆண்களின் உடலமைப்பைவிட மெலிவானது. ஆதலால், பெண்கள் ஆண்களோடு சமமாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. அவர்கள் ஆண்களின் பாதுகாப்பில்தான் வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில்தான் பெண்களுக்கு ஓரளவு உரிமை ஏற்பட்டது என்று கூறுவோரும் உண்டு. இந்த இரண்டு கொள்கையிலும் உண்மையுண்டு. இரண்டில் எது உண்மை, எது பொய் என்று சொல்ல முடியாது. ஆரம்ப காலத்தில் பெண்கள்தாம் ஆதிக்கம் பெற்றிருந்தனர். ஆண்கள், பெண்களுக்கு அடிமையாகவே இருந்தனர். இதனை வாழ்வும் வழிபாடும் என்னும் பகுதியிலும் குறிப்பிட்டுள்ளோம். பண்டைத் தமிழகத்து மக்களுக்குள் பல பிரிவுகள் இருந்தன. அவைகள் பிறப்பினால் உண்டான பிரிவுகள் அல்ல; நாகரிகத்தால்-அறிவால்-செல்வத்தால் ஏற்பட்ட பிரிவுகள் தாம். இதுபற்றிச் சாதியும் தமிழரும் என்ற பகுதியிலும் காணலாம். மருதநிலமே மக்களிடம் பிரிவுகள் தோன்றி வளர்ந்தமைக்குக் காரணம் என்பது அங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நாகரிகம் காரணமாக மக்களிடம் தோன்றிய அப்பிரிவுகளை இரண்டு வகையிலே அடக்கிவிடலாம். (1) நல்ல நீர்வளம் உள்ள நிலப்பகுதியிலே வாழ்ந்த மக்களின் பிரிவு ஒன்று; (2) வளமற்ற நிலப்பகுதியிலே வாழ்ந்த மக்களின் பிரிவு ஒன்று. நீர்வளமுள்ள இடத்திலே - ஆற்றங்கரைகளிலே - மருத நிலத்தில் - வாழ்ந்த மக்களிடம் நாகரிகம் குடி கொண்டிருந்தது; அவர்கள் உழவுத்தொழிலின் உயர்வை உணர்ந்திருந்தனர்; நல்ல அரசியல் முறைகளை அறிந்திருந்தனர்; பலவகைத் தொழில் களையும் செய்துவந்தனர். நல்ல ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள சமுதாயமாக வாழ்ந்தனர். இந்த மக்கள் உயர்ந்த இனத் தினராகக் கருதப்பட்டனர். இந்த உயர்ந்த இனமக்களுக்குள் ஆண்களே சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடப்பதே நீதி-கற்பு-இல்லற தர்மம்-என்று கருதப்பட்டது. இந்த உயர்ந்த-நாகரிகம் அடைந்த-சமுதாயத்தில் ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இல்லை. இந்த நாகரிகம் நிறைந்த நிலப்பகுதியிலேயே, நிலஉரிமை படைத்தவர்களுக்கு அடங்கி நடக்கும் மக்கள் இருந்தனர். நிலவுரிமையுள்ளவர்கள் இடும் ஏவலைச் செய்து வாழும் மக்கள் இருந்தனர். இம்மக்களுக்குள் ஆண்-பெண் உரிமை ஒன்றாகத் தான் இருந்தது. ஆண்-பெண் அனைவரும் பாகுபாடின்றி நிலத்திலே வேலை செய்வார்கள்; இருவரும் எங்கும் தாராளமாகச் செல்வார்கள். மலை நிலமாகிய குறிஞ்சி நிலம், கடற்கரைப்பகுதியாகிய நெய்தல் நிலம், காட்டுப் பகுதியாகிய முல்லை நிலம், வறண்ட பகுதியாகிய பாலை நிலம் ஆகிய நிலப்பகுதிகளிலே வாழ்ந்த மக்களிடம் ஆண்-பெண் வாழ்வு சமத்துவமாகத்தான் இருந்த தென்று தெரிகின்றது. குறவர்கள் வேட்டையாடப் போவது போலக் குறத்திகள் குறி சொல்லுவதற்கும், மலைபடு திரவியங் களை விற்பதற்கும் புறப்பட்டு விடுவார்கள், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லுவார்கள்; மீனவப் பெண்கள் மீன்களைக் கொண்டு போய் விற்பனை செய்து வேறு பண்டங்களை வாங்கிக் கொண்டு வருவார்கள். முல்லைநில ஆயர்கள் மாடு ஆடுகளைப் பாதுகாப்பார்கள்; ஆய்ச்சியர்கள் தயிர், பால், வெண்ணெய் முதலியவற்றை வேறு நிலங்களுக்குக் கொண்டு போய் விற்பனை செய்து வருவார்கள். இந்த உண்மைகளைப் பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காணலாம். பெண்ணடிமையின் பிறப்பிடம் ஆகவே, பெண்களை அடிமையாக அடக்கி ஆளும் வழக்கம் நாகரிகம் பெற்ற உயர்ந்த சமுதாயத்தில்தான் தொடங்கிற்று என்பதில் ஐயம் இல்லை. நல்லவைகளோ, கெட்டவைகளோ-உயர்ந்த சமுதாயத்தினரால் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் தாம் இலக்கியங்களிலே இடம்பெற்று வந்தன. தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சமுதாயத்தினரால் பின்பற்றப்பட்ட வழக்கங்கள் அவ்வளவாக இலக்கியங்களில் இடம்பெறவில்லை, ஆயினும், மக்கள் வாழ்க்கையைப் பற்றிப் பாடிய புலவர்களால் உண்மையை மறைக்க முடியவில்லை. உயர்ந்த சமுதாயத்தைப் பற்றிப் பாடும்போது அவர்களிடம் உள்ள பழக்க வழக்கங் களைப் பற்றிப் பாடினர்; தாழ்ந்த சமுதாயத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் குறிப்பிட்டனர். பழந்தமிழ்ப் புலவர்களால் பாடப்பட்டிருக்கும் பாடல்களைக் கொண்டுதான் நாம் மேலே கூறிய உண்மை களைக் காணமுடிகிறது. பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில் பெண்ணுரி மையைப் பற்றிக் குறிப்பிடும் பகுதிகள் உண்டு. அவைகள் பழந்தமிழ் நாட்டு மக்களின் நாகரிகம் பெற்ற வாழ்க்கை நிலையைக் காட்டுவனவாகும். தொல்காப்பியர் ஆண் - பெண் சமத்துவத்தை ஒப்புக் கொள்ளவில்லை. *அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப. என்பது தொல்காப்பியக் களவியல் சூத்திரம். பயமும், நாணமும், அறியாமையும் முற்பட்டு நிற்றல் எப்பொழுதும் பெண்களுக்கு உரிய குணம் என்பதே இச் சூத்திரத்தின் பொருள். அச்சம், நாணம், மடமை - இம்மூன்று குணங்களும் இயற்கை யல்ல. கல்வியறிவின்றி-வெளியுலகை அறியாமல்-வீட்டுக்குள் அடைபட்டுக் கிடப்போரிடம் இக்குணங்கள் இருக்கலாம். வீட்டுக்குள் அடைபட்டுக்கிடப்போர் ஆண்களா யினும் சரி, பெண்களாயினும் சரி, அவர்களிடம் இக்குணங்கள் அமைந்திருக்கலாம். ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, நல்ல கல்வியறிவும் வெளிப்பழக்கமும் உள்ளவர்களாயிருந் தால் அவர்களிடம் இம்மூன்று குணங்களையும் காணமுடியாது. ஆதலால் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் நாகரிகம் உள்ள பெண்களிடந்தான் இந்த மூன்று குணங்களும் உண்டு; ஏனைய பெண்களிடம் காணமுடியாது. இன்றும், வாணிகம், தொழில், உத்தியோகம் முதலிய துறைகளில் உள்ள பெண்களிட மெல்லாம் இந்த மூன்று குணங்களும் இருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது. *முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை என்பது தொல்காப்பிய அகத்திணை இயல் சூத்திரம். கடல் கடந்து செல்லும்போது, பெண்களையும் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் இல்லை என்று கூறிற்று இச்சூத்திரம். †v©zU« பாசறைப் பெண்ணொடு புணரார் என்பது கற்பியல் சூத்திரம். எண்ணுதற்கரிய போர்க்களத்துப் படை வீட்டுக்குப் பெண்களுடன் செல்லமாட்டார்கள் என்று கூறிற்று இச்சூத்திரம். சுதந்திரம் படைத்த பெண்கள் இவ்விரண்டு சூத்திரங்களிலும் கூறப்பட்ட பெண்கள், நாகரிகம் பெற்ற சமுதாயத்துப் பெண்கள்; இப்பெண்கள் மனைவிமார்கள்; மணம்புரிந்து கொள்ளப்பட்டவர்கள். இதனால் நாகரிகம் பெற்ற சமுதாயத்தில் மணம்புரிந்து கொண்ட பெண்களுக்கு ஆண்களைப் போன்ற உரிமையில்லை என்பதைக் காணலாம். பண்டைத் தமிழகத்தில் பாணர் என்று ஒரு வகுப்பினர் இருந்தனர். அவர்கள் இசை, நடனம், இசைக்கருவிகளை வாசித்தல் ஆகியவைகளையே தொழிலாகக் கொண்டவர்கள். இவர்கள் நுண்கலைகளை வளர்த்து வந்தனர். ஆயினும் இவ் வகுப்பினர் தாழ்ந்த வகுப்பினராகவே கருதப்பட்டனர், சமூகத்திலே செல்வாக்குப் பெற்றிருந்த மன்னர்கள், சிற்றரசர்கள் போன்றவர்களை அண்டித்தான் இவர்கள் வாழ்க்கை நடத்தி வந்தனர். இவ்வகுப்பினருள் ஆணுக்குப் பெண் அடிமை என்ற வழக்கம் இருந்ததில்லை. இருவரும் சமமாகவே வாழ்க்கை நடத்தி வந்தனர். பண்டைத் தமிழகத்திலே பெண்களிலே புலமை படைத் தவர்கள் பலர் இருந்தனர். அவர்களுடைய பெயர்களைச் சங்க இலக்கியங்களிலே காணுகின்றோம். ஔவையார், வெறிபாடிய காமக்கண்ணியர், பூங்கண் உத்திரையார், காக்கை பாடினியார், நச்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார், மாறோக்கத்து நப்பசலையார் முதலிய பல பெண்கள் புலவர்களாக இருந்திருக்கின்றனர். இப்புலவர்களிலே ஔவையாரின் பெயரை அறியாத தமிழ் மக்கள் யாரும் இல்லை. இந்த ஔவையார் பாணர் குலத்துப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மணமாகாத பெண் என்பதும் கருதத்தக்கது. ஏனைய பெண்புலவர்களும் பாணர் குலத்துப் பெண்களாக இருக்கலாம் என்று எண்ணவும் இடம் உண்டு. கணிகையர், பரத்தையர் என்ற கூட்டத்தைச் சேர்ந்த பெண்களும் அடிமை வாழ்வு நடத்தவில்லை. சுதந்திர வாழ்வு தான் நடத்தி வந்தனர். பெண்கள் பாசறைக்குச் செல்லும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது. அரசன் போருக்குப் போகும் போது பெண் களையும் அழைத்துச் செல்வான். அவர்கள் இரவு நேரத்திலே, அரசனுடைய படுக்கையறையைக் காவல் புரிவோர்க்கு உதவி செய்வார்கள். அவர்கள் விளக்கு அணையாமல் பார்த்துக் கொள்ளுவார்கள். தற்பாதுகாப்புக்காக வாளாயுதமும் வைத் திருப்பார்கள். இச்செய்தியை முல்லைப்பாட்டிலே காணலாம். *குறுந்தொடி முன்கைக் கூந்தல்அம் சிறுபுறத்து, இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் விரவுவரிக் கச்சின் பூண்ட மங்கையர் நெய்உமிழ் சரையர், நெடும்திரிக் கொளீஇக் கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட (45-49) சிறிய வளையல்களை முன்கையிலே அணிந்திருக்கின்றனர். அவர்கள் தலைமயிர் அவிழ்ந்து பிடரியிலே தொங்குகின்றது. இரவைப் பகலாக்கக்கூடிய அவ்வளவு ஒளிபொருந்திய வாட் படையை இடுப்பிலே கட்டித் தொங்கவிட்டிருக்கின்றனர். இப் பெண்கள் எண்ணெய் சிந்தும் குழாய் வடிவமான நீண்ட பந்தத்தைக் கொளுத்தி ஏந்தித் திரிகின்றனர். இவர்கள் பாவை விளக்கு அணையும் போதெல்லாம் அவைகளை மீண்டும் கொளுத்துகின்றனர். இந்த முல்லைப்பாட்டு, பெண்கள் போர்க்களம் புகுந்த செய்தியைக் குறிப்பிடுகின்றது. இப்பெண்கள் வேறு; தொல் காப்பியர் குறிப்பிடும் பாசறைக்குப் போகாத பெண்கள் வேறு. உயர் குலத்திலே, இல்லற வாழ்க்கை நடத்தும் பெண்கள்தாம் பாசறைக்குச் செல்லமாட்டார்கள். பாசறைக்குச் சென்று உதவிசெய்யும் பெண்கள் உயர் குலத்துப் பெண்கள் அல்லர்; மணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தும் குடித்தனப் பெண் களும் அல்லர். இப்படித்தான் எண்ணவேண்டும். ஆண்களின் உரிமை பண்டைத் தமிழகத்தில் பெண்ணுரிமை மதிக்கப்படவில்லை என்பதற்கு வேறு ஆதாரங்களும் உண்டு. ஆண்கள் பல பெண்களை மணந்துகொள்ளலாம்; மனைவியர்களைத் தவிர, விலைமாதர்களுடன் கூடி வாழலாம். பெண்களுக்கு இத்தகைய உரிமையில்லை; ஒருத்தி ஒருவனைத் தான் மணந்து வாழவேண்டும். *காமக் கிழத்தி மனையோள் என்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் காமக்கிழத்தி, மனைவி என்று சொல்லப்பட்ட இவர்கள் வருத்தத்துடன் கூறிய மொழிகளுக்கு எதிராகவும் என்பது தொல்காப்பியக் கற்பியல் சூத்திரம். இச்சூத்திரம், ஒருவனுக்கு மணம் புரிந்து கொண்ட மனைவியுடன், வேறு மனைவிமார் களும் உண்டு என்பதைக் குறித்தது. காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் இல்லறத்திற்கு உரியவளாக மணந்துகொண்ட காமக் கிழத்தி, வீட்டிற்குப் புறத்திலே விளையாடும் தலைவியின் மகனைத் தழுவிக்கொண்டு வருந்துகின்ற விளையாட்டின் முடிவிலும் என்பது கற்பியல் சூத்திரம். இச்சூத்திரத்தில் உள்ள காமக்கிழத்கி என்பது இரண்டா வதாக மணந்துகொண்ட மனைவியைக் குறிக்கின்றது. இது கற்பியலில் அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின் என்று தொடங்கும் ஏழாவது சூத்திரத்தின் ஒரு பகுதி. இச்சூத்திரத்திலே காமக் கிழத்தியர் என்ற பன்மைச் சொல்லும் காணப்படு கின்றது; மாயப்பரத்தை உள்ளிய வழியும் என்ற தொடரும் காணப்படுகின்றது. ஆகவே ஒருவனுக்கு, முதலில் மணந்து கொண்டமனைவி உண்டு; இரண்டாவதாக மணந்துகொண்ட காமக்கிழத்தியர் உண்டு; மூன்றாவதாகப் பரத்தையர் பலர் உண்டு என்பதை அறியலாம். கற்பியல் சூத்திரங்கள் பலவற்றிலே இவைகளைக் காணலாம். அகப்பொருள் இலக்கியங்களில் உள்ள மருதத்திணைப் பாடல்களிலும் நாம் இந்த உண்மையைக் காணலாம். கணவன் பரத்தையர் சேரிக்குச் சென்று அவர்களுடன் கூடிவாழ்வது; பின்னர் இல்லறத்திற்குத் திரும்பி வருவது; கணவன் செய்கையை மனைவி வெறுப்பது; அதற்காக ஊடுவது; கணவனுக்கும் மனைவிக்கும் நேர்ந்த இந்த ஊடலைப் பாணர் முதலியோர் தணிப்பது; இவைபோன்ற செய்திகளைக் கூறும் பாடல்கள் காணப்படுகின்றன. இவ்வழக்கம் உயர்ந்த குலத்தினரிடந்தான் உண்டு. இது ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி அமைந்திருந்தது என்பதை அறிவதற்குச் சான்றாகும். பெண் புத்தியின் தீமை பண்டைத் தமிழகத்தில் - சங்க காலத்திற்கு முன்னே-நிலவி யிருந்த ஆண்-பெண் சமத்துவமற்ற நிலையைத் திருவள்ளுவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் ஒருத்திக்கு ஒருவன்தான் என்ற நீதியும் வேண்டும்; ஒருவனுக்கு ஒருத்திதான் வாழ்க்கைத் துணைவி யாக அமைந்திருக்கவும் வேண்டும் என்றுதான் கூறுகின்றார். இதைக் திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத் தால் அறியலாம். மனைத்தக்க மாண்புடையள்; தெய்வம் தொழாஅள், சோர்வு இலாள் என்பனபோன்ற பெண்பால் ஒருமைச் சொற்களாலேயே மனைவியைக் குறிப்பிடுகிறார். இதுவே ஒருவன் ஒரு மனைவியை மணக்கவேண்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகின்றார் என்பதைக் காட்டும். வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தால் பரத்தையர் கூட்டுறவைக் கண்டிக்கின்றார். காமத்துப்பாலிலே காதலன் பரத்தையரை நாடிச்செல்லும் பகுதியே காணப்படவில்லை, காதலன் காதலியர் இடையே நடைபெறும் ஊடல் செய்திகள் தான் உரைக்கப்படுகின்றன. இதனாலும் பண்டைக் காலத்தில் ஆணுக்கொருநீதி பெண்ணுக்கொரு நீதி என்ற கொள்கையை வள்ளுவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றே கூறலாம். ஆனால், வள்ளுவர் பெண்களையும் ஆண்களையும் சமமாகக் கருதினார் என்று கூறமுடியாது, பெண்கள், அச்சம் மடம், நாணம் ஆகிய குணங்களை இயல்பாகவே உடையவர்கள் என்றுதான் கருதுகின்றார். பெண்கள் வீட்டில் இருந்துகொண்டு இல்லறத்தை நன்றாக நடத்துவதற்குத்தான் உரியவர்கள்; பொது வாழ்க்கையில் பங்குகொள்ள உரியவர்கள் அல்லர் என்றுதான் கருதுகின்றார். பெண்களைப் பற்றி வள்ளுவர் கொண்டுள்ள கருத்தைப் பெண் வழிச் சேறல் என்ற அதிகாரத்திலே தெளிவாகக் காணலாம். இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் மனையாளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் முறையற்ற காரியம், எந்நாளும் பெரியோர் கூட்டத்திலே வெட்கம் தரும் செயலாகும். இல்லாளை அஞ்சுவான் அஞ்சும், மற்று எஞ்ஞான்றும் நல்லோர்க்கு நல்ல செயல் மனைவிக்கு அஞ்சுகின்றவன் எந்நாளும் நல்லவர்களுக்கு நன்மை செய்யமாட்டான். நட்டார் குறைமுடியார், நன்று ஆற்றார் நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர் தம் மனைவியின் விருப்பத்தின்படியே நடந்து கொள்ளு கின்றவர்கள், நண்பர்களின் குறைகளைத் தீர்க்கமாட்டார்கள், நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள். இம் மூன்று குறள்களை கொண்டே பெண்களைப் பற்றிய வள்ளுவர் கருத்தை மட்டும் அன்று, வள்ளுவர் காலத்திலிருந்த தமிழ்நாட்டுச் சான்றோர்களின் கருத்தையும் அறியலாம். வள்ளுவரால் குறிக்கப்படும் மனைவிமார்கள், நாகரிகம்பெற்ற உயர்குலத்து வீட்டுப் பெண்கள் என்றுதான் கொள்ள வேண்டும். பண்டைக்காலத்தில் இருந்த கொள்கையை ஒட்டித்தான் பிற்காலத்தில் கதைகளும் எழுந்தன. சிலப்பதிகாரத்திலே கண்ணகியைப் பற்றிக் கூறும் செய்தியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மனைவி என்ற முறையில் கண்ணகியைப் பற்றிக் கூறும் போது, அவள் பழைய பண்பாடுள்ளவளாகவே காட்டப்படு கின்றாள். தன் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து மாதவியிடம் சென்றதற்காக, அவன்மீது அவள் சினங்கொள்ளவே இல்லை. அவன் செல்வம் எல்லாம் இழந்து, மாதவியை விட்டுப் பிரிந்து, கண்ணகியிடம் வந்தான். மாயப் பரத்தையால் பொருள் இழந்தேன் என்றான். உடனே கண்ணகி அவன் மீண்டும் மாதவியை நாடிச் செல்வதற்காகத் தனது காற்சிலம்பை எடுத்துக் கொடுக்கின்றாள். சிலப்பதிகாரத்தில் உள்ள இப்பகுதி, கணவன் எந்த அநீதியைச் செய்தாலும் அதைக் கண்டிக்கும் உரிமை மனைவிக்கு இல்லை என்ற பழந்தமிழர் கொள்கையைத்தான் காட்டுகின்றது. அடிமை நிலைக்காது பெண்ணடிமையைப் பற்றி இலக்கியங்கள் எவ்வளவு வலியுறுத்தி வந்தாலும் அது நீடித்து நிற்கவில்லை. ஆணுக்குப் பெண் அடிமையாக வாழ்வதுதான் கற்பு, நீதி, ஒழுங்கு என்று நீதி நூல்களிலும், கதைகளிலும் வலியுறுத்தப்பட்டாலும், அடிமை விலங்கு நிலைத்திருக்கவில்லை. பழங்காலத்து அடிமைமுறை இனித் திரும்பி வரமுடியாது. வளர்ச்சி, முன்னேற்றம்தான் மக்கள் வாழ்வில் காணப்படும் இயற்கை. இந்த இயற்கையை ஒட்டியே இன்று ஆணும் பெண்ணும் ஒரே சமுதாயமாக வளர்ந்து வருகின்றனர். கற்பு கற்பென்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் என்ற பாரதி பாட்டைப் பாடும் காலம் இது. ஆண்கள் செய்யும் தொழில் அத்தனையும் பெண்கள் செய்யும் சமத்துவமுள்ள காலம் இது. ஆதலால் பழமையைப் பற்றிச் சரித்திரமாகத்தான் தெரிந்து கொள்ளலாம். அதைப் பின்பற்றவேண்டும் என்று கூறுவது காலத்தின் வளர்ச்சியை அறியாதவர் கூற்று. இது வரையிலும் கூறியவற்றைக் கொண்டு சில உண்மை களைக் காணலாம்: பண்டைக் காலத்தில் தமிழகத்தில் உயர்ந்தவராகக் கருதப்பட்ட சமுதாயத்தில்தான் பெண்ணடிமை முறை பிறந்தது; ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்ற கொள்கையும் தோன்றிற்று. உயர்ந்தவர்களாகக் கருதப்படாத சமுதாயத்திலே ஆண் பெண் உறவு சமத்துவமாகத்தான் இருந்தது. உயர்ந்த குலத்துப் பெண்களுக்குக் கல்வி அறிவு, கலை அறிவுகூட இல்லை. தாழ்ந்த குலத்தினராகக் கருதப்பட்ட பாணர் குலத்துப் பெண்கள்தான் கலை அறிவு படைத்திருந்தனர். அவர்களில்தான் தமிழ்ப் புலமை பெற்றவர்களும் இருந்தனர். உயர்குலத்துப் பெண்கள் இல்லாள், மனையாள் என்ற பெயர்களுடன் வீட்டில்தான் அடைப்பட்டுக் கிடந்தனர். தாழ்ந்த குலத்துப் பெண்கள் தான் பொது வேலைகளுக்குப் பயன் பட்டனர். பண்டைத் தமிழகத்திலிருந்த இந்த நிலைமை சிறிது சிறிதாக மாறிவந்தது. உயர்குலத்துப் பெண்களும் சமஉரிமை பெற்று விட்டனர். இன்றைய சமுதாயத்தில், பழைய பெண்ணடிமை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று. பழமை மாறித்தான் தீரும்; ஆனால் பழமையில் உள்ள நன்மைகள் மட்டும் எக்காலத்திலும் நிலைத்திருக்கும். அநீதிகள் நிலை நிற்கமாட்டா. காலத்திற்கு ஏற்பப் புதிய முறையிலேயே மக்கள் வாழ்க்கைமுறை மாறுவது இயற்கை. இந்த இயற்கையை ஒட்டியே நமது சமுதாயம் வளர்ந்து வருகின்றது. பழமைதான் சிறந்தது என்று எண்ணிக்கொண்டு புதிய மாறுதலுக்கு முட்டுக் கட்டை போடமுடியாது; போட நினைத்தால் அது வெற்றி பெறாது. இவ்வுண்மைகளைப் பழைய இலக்கியங்களும், மக்கள் சமுதாய வளர்ச்சியும் நமக்குக் காட்டுகின்றன. புதியன புகுதலும் பழையன கழிதலும் இயற்கையாகும். ஆனால் புதிய பழக்க வழக்கங்களைக் காட்டும் இலக்கியங்கள் மட்டும் இன்னும் தோன்றவில்லை; பெருகவுமில்லை. தமிழ்நாட்டுப் பெண்களின் பண்பாடு பெண்கள் பெருமை ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பது ஒரு பழமொழி. இந்தப் பழமொழியைப் பொருளற்றது என்று சொல்லி விடமுடியாது. இது இடைக்காலத்தில் எழுந்த பழமொழியன்று. பழமொழிபோற் படைத்த புதுமொழியும் அன்று. இது தமிழர்களின் பண்டைக்காலப் பண்பாட்டிலிருந்து பிறந்த ஒரு பழமொழியாகும். இந்தப் பழமொழி நடுத்தர வகுப்புக் குடும்பங்களுக்கே பொருந்தும். எண்ணற்ற செல்வம் படைத்த குடும்பத்தினர்க்கும், ஒன்றும் இல்லாமல், அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் குடும்பத்தினர்க்கும் பொருந்தும் என்ற கூறமுடியாது. ஏராளமான வருமானம் பெறும் குடும்பத்துப் பெண்கள் தங்கள் குடும்ப வரவுசெலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டுவ தில்லை. அவர்கள் தங்கள் மனம்போலப் பொழுதுபோக்க முடியும். உழைத்துப் பிழைக்கும் குடும்பத்துப் பெண்களுக்கும் வரவு செலவுக் கணக்குப் பார்க்கவேண்டிய கவலையில்லை. உழைப்பால் ஊதியங் கிடைத்தால்தான் உணவுண்டு, வாழும் வாழ்வுண்டு; இன்றேல் பட்டினி வாழ்வுதான். இது உழைப்போர் நிலைமை. நடுத்தர வகுப்பினரின் நிலைமை வேறு. அவர்களில் பெரும்பாலும் ஆண்கள்தாம் பொருள் ஈட்டுபவர்கள். பெண்கள் ஆண் மக்களின் வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்து குடும்பத்தை நடத்த வேண்டும். மனைவி கணவனுடைய வருவாய்க்குமேல் செலவு செய்தால் அந்தக் குடும்பம் உருப் படாது; முன்னுக்கு வராது. எப்பொழுதும் அக்குடும்பத்தில் கவலையும் துன்பமும்தான் கூத்தாடிக் கொண்டிருக்கும். கணவன் மனைவியிடம் ஒற்றுமையும் இராது; சண்டை சச்சரவுகள் தலைநிமிர்ந்து தாண்டவமாடும். இதை எண்ணித்தான் மேற் கண்ட பழமொழி எழுந்தது என்பதில் ஐயம் இல்லை. கட்டுச் செட்டாகச் செலவு செய்யும் பெண்ணால் குடும்பம் முன்னுக்கு வரும். குடும்பத்திலே செல்வம் பெருகும். ஊரார் இதைப்பற்றிப் பெருமையாகப் பேசுவர். அவள் அடிவைத்த பிறகுதான் குடும்பம் முன்னுக்கு வந்தது; அவள் நல்லபேறு உள்ளவள்; திருமகளுக்கு ஒப்பானவள் என்று புகழ்ந்து பேசுவர். இவ்வாறு, குடும்பத்தில் கவலையுள்ள பெண்களைப் போற்றும் வழக்கக்தைப் பழந்தமிழ் நூல்களிலே காணலாம். *யாய் ஆகியளே விழவுமுத லாட்டி தலைவியானவள், தலைவன் செல்வம் பெற்று மகிழ்ந்து வாழ்வதற்குக் காரணமாக உள்ளாள். (குறுந்தொகை 10) என்பது குறுந்தொகைப் பாட்டு. குறுந்தொகையின் மற்றொரு பாடலும் இதை விளக்கமாகக் கூறுகின்றது. **உடுத்தும், தொடுத்தும், பூண்டும், செரீஇயும் தழைஅணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி, விழவொடு வருதி நீயே; இஃதோ ஓர்ஆன் வல்சிச் சீர்இல் வாழ்க்கை, பெருநலக் குறுமகள் வந்தென இனிவிழவு ஆயிற்று என்னும்இவ் வூரே என்பது குறுந்தொகையின் 295 ஆவது பாடல், இப்பாடல் ஒர் உண்மை நிகழ்ச்சியை உணர்த்துகின்றது. பரத்தையர் கூட்டத்திலிருந்து பிரிந்துவந்தான் தலைவன். அவன் ஊடியிருந்த தலைவியைச் சமாதானம் செய்யும்படி தோழியை வேண்டிக் கொண்டான். அப்பொழுது அத்தோழி அத்தலைவனிடம் கூறியது இது. தலைவனே நீ இப்பொழுது பரத்தையர் கூட்டத்தோடு சேர்ந்து நீர் விளையாடிவிட்டு வருகின்றாய். அப்பரத்தையர்கள், தழைகளை உடையாக உடுத்தினர்; மாலையாகத் தொடுத்து அணிந்தனர்; காதணி முதலிய அணிகலன்களாகவும் பூண்டனர்; கூந்தலிலே மலராகவும் செருகினர். நீ இவர்களுடன் சேர்ந்து குதூகலமாக விளையாடிவிட்டு வருகின்றாய். இவன் தன் காதலியை மணப்பதற்கு முன் இக்குடும்பம், ஒரு பசுமாட்டால் உணவு பெற்று வாழ்ந்தது. இத்தகைய செல்வச் சிறப்பற்ற குடும்பம், நல்ல அழகுற்ற இளம்பெண்ணை இவன் மணந்ததும், இப்பொழுது செல்வம் பெற்று விளங்குகின்றது. பரத்தையருடன் கூடி நீர்விழா ஆடுதற்குரிய செய்வத்தைப் பெற்றது என்று உன்னைப்பற்றியும், உன் குடும்பத்தைப் பற்றியும் இவ்வூரார் உரையாடுகின்றனர். இதுவே மேற்கண்ட பாடலின் பொருள். இவைகளால் பெண்ணால்தான் ஒரு குடும்பத்திலே செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பழந்தமிழ் மக்களிடம் குடி கொண்டிருந்ததைக் காணலாம். கணவன் வாழ்வே மனைவியின் வாழ்வு கணவன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக்கொள்ளும் குணமும் பெண்களின் பண்பாகும். பரத்தையரிடம் சென்று வந்த கணவனுடன் முதலில் ஊடல் கொள்ளுவார்கள். பின்னர்க் கூடி மகிழ்வார்கள். இவ்வழக்கத்தை மருதத்தினைப் பாடல்களிலே காண்கின்றோம். நல்ல குடும்பத்துப் பெண்கள் தமது கையாலேயே கணவனுக்கு உணவு பரிமாற விரும்புவார்கள். தாமே சமைத்த உணவைத் தமது கையால் பரிமாறுவதில் அவர்களுக்கொரு தனியின்பம். தான் சமைத்த உணவைத் தனது கணவன் சுவைத்து உண்பதைக் கண்டால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இது பண்டைத் தமிழ்ப் பெண்களின் பண்பு. இதனை விளக்கும் குறுந்தொகைப் பாட்டு ஒன்று கீழ்வருவது. முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம், கழாஅது உடீஇக்; குவளை உண்கண் குய்ப்புகை கமழத் தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர், இனிது எனக் கணவன் உண்டலின், நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒள்நுதல் முகனே. (குறுந்தொகை) இதுவே பெண்ணின் பண்பைக் காட்டும் குறுந்தொகைப் பாட்டு. இப்பாடல் பழந்தமிழர் உணவு வகை என்ற பகுதியிலும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. காதலி கணவனுக்குச் சமைத்தாள், காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தயிரைப் பிசைந்தாள். அந்தக் கையை ஆடையால் துடைத்துக் கொண்டாள், அந்த ஆடையைத் துவைக்காமல் அப்படியே உடுத்தியிருந்தாள், இனிய புளிக் கறியைச் சமைத்தாள். அதைத் தாளிக்கும்போது அதிலிருந்து குய் என்ற ஓசையுடன் எழுந்த புகை அவள் கண்களில் படிந்தது. அதையும் பொருட்படுத்தாமல் சமைத்த உணவைக் கணவனுக்குப் பரிமாறினாள். அவன் அதை இனிமை! என்று சொல்லிக் கொண்டு சாப்பிட்டான். அதைக் கண்டு அவளுடைய முகம் மிகவும் மகிழ்ச்சி யடைந்தது. சமைக்கும்போது அடைந்த துன்பம் மறைந்தது. இதுவே இப்பாடலில் அமைந்திருக்கும் பொருள், இதனால் பழங்காலத்துப் பெண்களின் இயல்பு விளங்குகின்றது. கணவன் வாழ்வே தம் வாழ்வென்று அவர்கள் வாழ்ந்தனர். தமக்கென்று தனித்த இன்பவாழ்வை விரும்பவில்லை. பெண்களின் தன்மானம் இக்காலத்தில் படித்திருக்கும் ஆண்களிற் பலர், பெண் கொடுப்போர் பணமும் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க் கின்றனர். மணம் செய்து கொண்ட பெண்களிலுங்கூட, செல்வ முள்ள குடும்பத்திலே பிறந்தவர்கள், தந்தையின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர். புகுந்த வீட்டைவிடப் பிறந்த விட்டைப் பற்றியே பெருமையாகப் பேசுவார்கள். இந்த முறை பழந்தமிழர் பண்பாட்டுக்கு மாறானதாகும். பழந்தமிழ்ப் பெண்கள் தனது கணவன் தேடித்தரும் செல்வத்தைக்கொண்டே இல்வாழ்க்கை நடத்தி வந்தனர். தன் கணவன் உயிருடனிருக்கும்போது தந்தை வீட்டின் உதவியைப் பெறுவது அவமானம் என்றுகூட எண்ணினர். இதனை ஒரு நற்றிணைப் பாட்டுத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. *அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்! கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக் கொடுத்த தந்தை கொழும்சோறு உள்ளாள்; ஒழுகுநீர் நுணங்கு அறல் போலப் பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே. விளையாட்டுப் பெண்ணாக இருந்த அவள் இப்பொழுது மனையாளுக்குரிய அறிவையும், ஒழுக்கத்தையும் எப்படித் தெரிந்து கொண்டாளோ! அவளைக் கொண்ட கணவனது குடும்பம் வறுமையடைந்தது. அதை அறிந்த அவள் தந்தை நல்ல உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பினான். அப்பொருள் களைக் கொண்டு வளமாக உண்ணும் சோற்றைப் பற்றி அவள் நினைக்கவே இல்லை. நீரின் வழியிலே தானும் ஓடும் கருமணலைப் போலக் கணவன் வழியிலேயே அவள் நடக்கின்றாள். வேளை தவறி உண்ணுகின்றாள். இத்தகைய உறுதியுடையவளாக இருக்கின்றாள் அவள் (நற்றிணை 110). இதுவே மேலே கண்ட அடிகளின் பொருள். தன் மகள், கணவனுடன் ஒன்றுபட்டு இல்லறம் நடத்துவதைக் கண்ட அன்னை ஒருத்தி இவ்வாறு கூறினாள். பழந்தமிழ்ப் பெண்கள் கணவன் கருத்துப்படி வாழ்க்கை நடத்தி வந்தனர் என்பதற்குக் கீழ்வருவதும் ஒரு சான்று. இச்சான்று ஒரு குடும்பப் பெண்ணின் உணர்ந்த பண்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இதனை. *ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல் வளைக்கைக் கிணைமகள் வள்உகிர்க் குறைத்த குப்பை வேளை, உப்புஇலி வெந்ததை, மடவோர் காட்சி நாணிக், கடையடைத்து இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும், (சிறுபாண் ஆற்றுப்படை 135 -139) என்ற பத்துப்பட்டாலும் அறியலாம். பசியால் வருந்துகின்றவள்; மெல்லிய இடையை உடை யவள்; வளை அணிந்தவள்! கிணை வாசிப்போன் கிழத்தி. சமைப்பதற்கான பண்டம் ஒன்றும் இல்லை. குப்பைக் கீரையைக் கூர்மையான நகத்தினால் கிள்ளினாள். அதற்குப் போட உப்புக் கூட இல்லை. வேக வைத்தாள். அறியாதவர்கள், அந்த உணவைப் பார்த்தால் நகைப்பார்களே என்று நாணம் அடைந்தாள். ஆதலால் வாசற் கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டாள். தனது நிறைந்த சுற்றத்துடன் உள்ளே உட்கார்ந்து, அவர்களுடன் தானும் உண்டாள். இதுவே மேலே காட்டிய அடிகளின் பொருள். மேலே காட்டியவைகளால், உள்ளதை வைத்துக் கொண்டு உவப்புடன் குடும்பம் நடத்தும் பண்பே உயர்குடிப் பெண்களின் தன்மை; இப்பண்பு-வழக்கம் பண்டை உயர் குடிப் பெண்களிடம் இருந்தது என்பதைக் காணலாம். விருந்தும் மகளிரும் வந்த விருந்தினரை முகங்கோணாமல் வரவேற்று உதவி செய்யும் பண்பு பெண்களின் இயற்கையாகும். ஆண்கள் எவ்வளவு தான் விருந்தினரை வரவேற்கும் தன்மையுள்ளவராயிருந்தாலும் போதாது; பெண்களிடம் அக்குணம் இல்லாவிட்டால் பயன் இல்லை. பண்டைத் தமிழ்ப் பெண்கள் விருந்தோம்பும் குணம் படைத்தவராயிருந்தனர். *அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில் வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை மகளிர் ... ... ... ... (புறநானூறு 10) அமிழ்தத்தைத் தன் சுவையால் வென்றதும்; உண்ண உண்ணத் தெவிட்டாத மணம் கமழ்வதுமான உணவு; நல்ல தாளிப்பை யுடையது. இத்தகைய உணவை வந்த விருந்தினருக்குக் குறை யில்லாமல் வழங்குவர்; குற்றமற்ற ïவ்வாழ்க்கையையுடையkfளிர்raல்இது வாF«.” †“mšÈš ஆயினும் விருந்துவரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல்இயல் குறுமகள் (நற்றினை 142) இரவு நேரமானாலும், வந்த விருந்தினரைக் கண்டு மகிழ்ச்சி யடையும் முல்லை ஒழுக்கம்கற்பினையுடையஇளம்bபண்.மேலே காட்டிய புறநானூற்று அடிகளும், நற்றிணை அடிகளும் பெண்களின் இயல்பை எடுத்துக்காட்டுகின்றன, விருந்தோம்பும் தன்மை தமிழ்ப் பெண்களின் பிறவிக்குணம் என்பதை உணர்த்தின. காதலனுடன் ஊடியிருக்கும் மனைவி, விருந்தினர் வந்தால், ஊடலை விட்டுவிடுவாள்; விருந்தினரைப் போற்றுவதிலே - அவர்களுக்கு வேண்டிய உணவுப் பண்டங்களை ஆக்குவதிலே - பொழுது போக்குவாள். ஊடியிருந்த அவளுடைய முகத்திலே மகிழ்ச்சி தவழும் என்ற செய்தியை நற்றிணையின் பாடல் 120இல் காணலாம். நற்றிணையின் பாடல் 280இல் காணும் செய்தி குறிப்பிடத் தக்கது, காதலன் பரத்தையர் நட்பை நாடித்திரிந்துவிட்டு, மனைக்கு வருகிறான். அவன் செயலைக் கண்டிப்பதற்கு மனைவிக்கு நேரமேயில்லை; அவன் செய்கைக்காக அவனுடன் ஊடல் கொள்ளுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. காரணம், ஒயாமல் விருந்தினர் வந்து கொண்டேயிருக்கின்றனர்; அவர் களை வரவேற்று உபசரிப்பதிலேயே அவளுடைய நேரம் போய்க் கொண்டிருக்கின்றது. இவ்வாறு கூறுகிறது அச்செய்யுள். *நன்மனை நனிவிருந்து அயரும் கை தூ வின்மையின், எய்தாம் ஆறே எங்கள் நல்ல வீட்டிலே மிகுதியான விருந்தினர்கள் தங்கியிருக் கின்றனர். ஆதலால் எனக்கு ஓய்வே இல்லை. நான் ஊடுவதற்கு வழியே இல்லை என்பது அச்செய்யுளின் அடிகள். இதுவே விருந்தினரைப் போற்றுவதில் பெண்களுக்குள்ள ஊக்கத்தை உணர்த்துகின்றது. மேலே காட்டிய புறநானூற்றுச் செய்யுளும், நற்றிணைச் செய்யுட்களும் விருந்தினரைப் பேணும் வசதி படைத்த பெண் களின் இயல்பை எடுத்துரைத்தன. தமிழ்ப் பெண் எவ்வளவு விருந்தினர் வந்தாலும் மனங் கோணமாட்டாள். பண்டங்கள் குறைவாயிருந்தாலும் கவலைப் பட மாட்டாள். வந்த விருந்தினர் அவ்வளவு பேரையும் பந்தலிலே வரிசையாக உட்காரவைத்து உணவிட்டு உபசரிப்பாள். *தவச் சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள் நீள் நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும் இற்பொலி மகடூஉ (புறநானூறு 331) என்பது புறநானூறு. பெண்களின் விருந்தோம்பும் சிறப்பைப் பற்றிக் கம்பன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் வாழும் மனையிலே வறியவர்கள் பொருள் பெற்றுச் செல்கின்றனர்; எப்பொழுதும் விருந்தினர் கூடியிருந்து உண்ணுகின்றனர்; இவ்விரண்டைத்தவிர அவ்வீடுகளில் வேறு சிறந்த செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்பது கம்பன் மொழி. பெருந் தடம்கண் பிறைநுதலார்க் கெல்லாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும், வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே என்ற பாடலால் இவ்வுண்மையைக் காணலாம். பண்டைத் தமிழகத்தில், செல்வர் வீட்டுப் பெண்களிடமும் விருந்தோம்பும் குணம் உண்டு; வறியவர் வீட்டுப் பெண் களிடமும் இத்தன்மையுண்டு; உயர்ந்த குடிப் பெண்களிடமும், தாழ்ந்த குடிப் பெண்களிடமும் விருந்தோம்பும் தன்மையுண்டு. **கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை தேம்கமழ் கதுப்பின் கொடிச்சி, மகிழ்ந்துகொடு காந்தள் அம்சிறுகுடிப் பகுக்கும் மலைச்சாரலில் கானவனால் அம்பு எய்து வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் கொழுத்த இறைச்சியை, அவன் மனைவி தேன்மணம் வீசும் கூந்தலையுடைய கொடிச்சி, மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டு வருவாள். அந்த இறைச்சியைக் காந்தள் செடிகள் அழகாகப் பூத்திருக்கின்ற சிற்றூரிலே உள்ள பலர்க்கும் பகுத்துக் கொடுப்பாள். (நற்றிணை 85) இது நற்றிணையில் காணப்படும் செய்தி. இதனால் நாகரிகம் பெறாத கீழ்க் குலத்துப் பெண்களிடமும் பிறருக்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் குணம் இருந்தது; விருந்தோம்பும் தன்மையிருந்தது என்பதை அறியலாம். பழங்காலப் பண்பு இந்தக் காலத்துப் பெண்கள் வீட்டிலிருக்கும்போது அவ்வளவாகத் தங்களை அலங்கரித்துக்கொள்ளுவதில்லை. வெளியில் செல்லும்போதுதான் தங்களை அணி செய்து கொள்ளுகின்றனர். ஆடம்பரமான ஆடைகள்; மினுமினுக்கும் நகைகள்; மற்றும் பல பொருள்கள் கொண்டு கோலம்பூண்டு செல்கின்றனர். தங்கள் அலங்கரிப்பைப் பிறர் பார்க்கவேண்டும் என்பதற்காகவே ஊர்வலம் வரும் பெண்களும் உண்டு. பண்டைக் காலத்துப் பெண்கள் கணவன் முன்னேதான் அழகுடன் காட்சியளிப்பர். கணவன் இல்லாத போது தங்களைப் புனைந்துகொள்ளமாட்டார்கள். இதுவே பழந்தமிழ்ப் பெண் களின் பண்பு. கோவலனைப் பிரிந்திருக்கும் கண்ணகியின் நிலையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. *அம்செம் சீறடி அணிசிலம்பு ஒழிய மென்துகில் அல்குல் மேகலை நீங்கக் கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்; மங்கல அணியின் பிறிது அணி மகிழாள், கொடும் குழை துறந்து வடிந்துவீழ் காதினள், திங்கள் வான்முகம் சிறுவியர்பு இரியச் செம்கயல் நெடும்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாள்நுதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மைஇரும் கூந்தல் நெய்அணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்பது சிலப்பதிகாரம் அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் காணப்படுவது. கணவனைப் பிரிந்த கண்ணகி கால்களிலே சிலம்பணிய வில்லை; ஆடைக்குமேல் அணியும் மேகலாபரணத்தையும் அணிந்திலள்; கொங்கையிலே குங்குமம் பூசாள்; தாலியைத்தவிர வேறு அணிகளையெல்லாம் துறந்தாள். காதணியை நீத்தாள், முகத்திலே சிறு வியர்வைத் துளிகளுடன் இருந்தாள்! கண்ணுக்கு மை தீட்டாள்; நெற்றியிலே பொட்டும் வைத்திலள்; சிரித்தும் அறியாள், தலைமயிருக்குத் தைலம் இட்டுச் சீவமாட்டாள். இக்கோலத்துடன் உள்ளத்திலே துயர்கொண்டு உறைந்தாள் என்பதுதான் மேலே காட்டிய அடிகளின் கருத்து. காதலன் பொருள் ஈட்டுவதற்கோ, வேறு அலுவல் காரண மாகவோ காதலியைவிட்டுப் பிரிந்து செல்லுவான்; அவன் பிரிவால் வருந்தியிருக்கும் பெண்களின் நிலையை அகப்பொருள் நூல்களிலே காண்கின்றோம். பிரிந்த காதலன் திரும்பும் வரை யிலும் அவர்கள் உண்பதில்லை; உறங்குவதில்லை; நீராடுவ தில்லை; உடுத்தியும் பூண்டும் தங்களை அலங்கரித்துக் கொள்வ தில்லை என்று கூறப்படுகின்றது. இவைகள் பழந்தமிழ்ப் பெண்களின் பண்பை எடுத்துக் காட்டுகின்றது. குடிப்பெருமை போற்றும் பெண்கள் பழந்தமிழ் பெண்கள், தங்கள் குடிப்பெருமையைக் காப்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்தனர். அவர்கள் குடும்பத்தின் பரம்பரைப் பண்பாடு அவர்களிடம் குடிகொண்டிருந்தது. இதற்கு மறக்குடி மகளிர் பண்பைப் பற்றிக் கூறும் பழம்பாடல் களே போதிய சான்றாகும். வீரர் குடியிலே பிறந்த பெண்கள், தங்கள் பிள்ளைகளைப் போர்க்களத்துக்குத் துணிவுடன் அனுப்புவார்கள். அவர்கள் புறங்காட்டாமல் போர் புரியவேண்டும் என்றே விரும்புவார்கள். மார்பில் காயம்பட்டுப் போரிலே மடியும் மக்களைத்தான் அவர்கள் பாராட்டுவார்கள். தம் மக்கள் புறங்காட்டி ஓடிவந்தனர் என்று கேட்டால் அவர்கள் அவமானம் அடைவார்கள்; இத்தகைய கோழை மக்களைப் பெற்றதற்காக வருந்துவார்கள்; இச்செய்திகளைப் புறநானூற்றிலே காணலாம். *சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன் யாண்டு உளனோ என்று வினவுதி, என்மகன் யாண்டுளன் ஆயினும் அறியேன், ஓரும் புலிசேர்ந்து போகிய கல்அளை போல ஈன்ற வயிறோ இதுவே, தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே. (புறம் 86) சிறிய வீட்டில் உள்ள கல்தூணைப் பிடித்துக்கொண்டு நின்று, உன் மகன் எங்கேயிருக்கிறான் என்று கேட்கின்றாய்; என் மகன் எங்குள்ளான் என்பதை அறியேன். புலி கிடந்து எழுந்துபோன மலைக்குகை போன்ற வயிறு இது. ஆதலால் அவன் போர்க் களத்திலே தான் காணப்படுவான்; அங்கே போய் அவனைப்பார். இப்பாடல் மறக்குடிப் பெண் ஒருத்தி கூறியது. தன் மகனைப் புலியாகவும், அவனைப் பெற்றெடுத்த தன் வயிற்றைப் புலியுறைந்த குகையாகவும் பெருமையுடன் கூறிக்கொள்கிறாள். இதனால் மறக்குடிப் பெண்களின் மனப்பான்மையைக் காணலாம். பிள்ளையைப் பெற்று வளர்த்தல் எனது கடமை; அவனை அறிவுள்ளவனாகச் செய்தல் தந்தையின் கடமை; அவனுக்குப் படை செய்துகொடுத்தல் கொல்லன் கடமை; நல்லொழுக்கம் கற்பித்தல் அரசன் கடமை; போர் செய்து எதிரிகளின் படையை முறியடித்து நாட்டைக்காத்தல் மகன் கடமை என்பது புறநானூற்றின் 312 ஆவது பாட்டு, பொன் முடியார் என்னும் மறக்குடி மகள் பாடியது. உன் மகன் போர்க்களத்திலே புறமிட்டு ஒடினான் என்று சிலர் வந்து கூறினர். உடனே அவள் வாளைக் கையில் எடுத்துக் கொண்டாள், என் மகன் புறமிட்டு ஓடியிருப்பானாயின்,அவன் பாலுண்ட எனது மார்பை அறுத்தெறிவேன் என்று சூள் உரைத்தாள்; போர்க்களம் புகுந்தாள்; அங்கே கிடந்த பிணங்களை யெல்லாம் புரட்டிப் பார்த்தாள். தன் மகன் வாளால் சிதைந்து கிடப்பது கண்டு அவனையீன்ற காலத்திலும் பெரிதும் மகிழ்ந் தாள் என்பது புறநானூற்றின் 278 ஆவது பாட்டு. முதல் நாள் நடந்த போரிலே அவள் தந்தை வீரத்துடன் போர்புரிந்து மாண்டான்; நேற்றைய போரில் அவள் கணவன் போர்புரிந்து மாண்டான். இன்று போர் முரசு கேட்டதும், அவளுடைய ஒரே மகனைப் போர்க்கோலம் புனைந்து சண்டைக்கு அனுப்பினாள். மறக்குடியில் பிறந்த அவள் இயல்பு சிறந்தது என்பது புறநானூற்றின் 279 ஆவது பாடல். மேலே காட்டிய புறநானூற்றுப்பாடல்கள், பெண்கள் தம்முடைய குடிப்பெருமையைக் காப்பாற்றுவதில் முன்னின்றார் கள், குல ஒழுக்கத்தைப் போற்றி வந்தார்கள் என்பதை விளக்கும். அன்றும் இன்றும் மேலே கூறியவைகளைக் கொண்டு பழங்காலப் பெண் களின் பண்பாட்டை ஒரளவு உணர்ந்து கொள்ளலாம். ஒரு குடும்பம் வாழ்வதும் தாழ்வதும் பெண்ணால் தான் என்று அக்கால மக்கள் நம்பி வந்தனர்; அந்த நம்பிக்கை இன்றும் உண்டு. பெண்கள், தாங்கள் புகுந்த வீட்டின் இயல்புக்கேற்ப நடந்து கொள்வார்கள். பிறந்த வீட்டைப்பற்றி எண்ண மாட்டார்கள். வறுமையால் வாடும் போதும், பிறந்த வீட்டின் உதவியை எதிர்பார்க்க மாட்டார்கள்; உதவி கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வறுமையால் எவ்வளவு வாடினாலும், அதை வெளியிலே காட்டிக்கொள்ள மாட்டார்கள். உள்ளதைக் கொண்டு மகிழ்ந்து வாழ்வார்கள். தாம் சமைத்த உணவைத் தாமே தம் கணவர்க்கு இடுவார்கள். அவர்கள் அவ்வுணவைச் சுவைத்து உண்பதைக் கண்டு உள்ளம் மகிழ்வார்கள்; முகம் மலர்வார்கள். செல்வம் நிறைந்த வீட்டுப் பெண்களாயினும் சரி, வறியவர் வீட்டுப் பெண்களாயினும் சரி, விருந்து செய்வதிலே அவர் களுக்கு ஆவல் மிகுதி; எந்த நேரத்தில் விருந்தினர் வந்தாலும், எவ்வளவு விருந்தினர்கள் வந்தாலும் அலுப்புச் சலிப்பின்றி உபசரிப்பார்கள். காதலனும் காதலியும் ஊடியிருக்கும்போது விருந்தினர் வந்தால் அவர்கள் ஊடல் ஓடிப்போகும். விருந்தினர் எப்பொழுதும் இருக்கும் குடும்பத்திலே கணவன் மனைவி களுக்குள் சண்டை சச்சரவே தோன்றாது. பழங்காலப் பெண்கள் கணவன் இருக்கும்போதுதான் தங்களை அலங்கரித்துக் கொள்ளுவார்கள்; கணவனுடன் செல்லும் போதுதான் நல்லுடையும் நல்லணியும் பூண்பார்கள். பெண்கள் தங்கள் குலப்பெருமையைக் காப்பாற்றுவதிலே தலை சிறந்தவர்கள்; வீரர்குடி-மறவர்குடிப் பெண்களின் தன்மையைக் கூறும் பாடல்கள் இவ்வுண்மையை எடுத்துக் காட்டுகின்றன. பழந்தமிழ்ப் பெண்களிடம் இப்பண்புகள் குடிகொண்டி ருந்தன. இவைகளே இப்பகுதியில் கூறப்பட்டடுள்ள செய்திகள். இன்று நமது நாட்டுப் பெண்களிடம் நடையுடைகளில் எவ்வளவோ மாறுதல்களைக் காண்கின்றோம். ஆயினும், பழந்தமிழ்ப் பண்பாடு நமது நாட்டுப் பெண்களைவிட்டு ஓடிப்போய்விடவில்லை. ஒரு சிலர் பழமையைப் பற்றி எள்ளி நகையாடலாம். புதுமையைப் பற்றியே புகழ்ந்து பேசலாம். ஆயினும் பழம்பண்புகளை அவர்களால் அழித்துவிட முடிய வில்லை. பரம்பரைப் பண்பை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. தோற்றத்திலே புதிய நாகரிகப் போர்வை முடியிருக் கலாம். பழங்குடிப் பண்பு உள்ளே முடங்கித்தான் கிடக்கும். இந்த உண்மையை இந்த நாட்டில் மட்டும் அன்று; எந்நாட்டிலும் காணலாம். பழந்தமிழ்நாட்டில் கலை வளர்ச்சி கலை யென்றால் என்ன? கலை யென்பது கற்றுக்கொள்வது. கற்றுக்கொண்டு செய்யும் தொழில்கள் அத்தனைக்கும் கலை என்று பெயர். பண்டைக் காலத்தினர் தொழில்களை அறுபத்து நான்கு என்று வகுத்தனர். அந்த அறுபத்து நான்கு தொழில்களையும் அறுபத்து நான்கு கலைகள் என்று கூறினர். ஆடைக்கும் கலை என்ற பெயர் உண்டு. கற்றுக்கொண்டு செய்யும் தொழில் நெசவுத் தொழில்; ஆதலால் அத்தொழிலின் பயனாகிய ஆடையைக் கலையென்று கூறினர். அறுபத்துநான்கு கலைகள் இவை இவை என்பதைச் சுக்கிரநீதி என்னும் நூலிலே காணலாம். இந்நூல் வட மொழியி லிருந்து பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களால் தமிழில் பெயர்த்தெழுதப்பட்டுள்ளது. இந்நூலின் 4ஆவது அத்தியாயம், 3ஆம் பிரகரணத்தில் அறுபத்து நான்கு கலைகள் என்னும் தலைப்பிலே அவைகளைக் காணலாம், சமையல் செய்வது ஒரு கலை. மல்யுத்தம் செய்வதும் ஒரு கலை. நெசவுத் தொழில் ஒரு கலை. ஆபரணங்கள் செய்தல், உலோகங்களுக்கு மேற்பூச்சிடுதல், தோல்களைப் பதனிடுதல் ஆகியவைகளும் தனித்தனிக் கலைகள். வீட்டில் உள்ள பாண்டங் களை அழுக்குப் படியாமல் விளக்கி வைத்துக்கொள்ளுவதும்கூட ஒரு கலை. ஆடைகளை வெளுத்தல் ஒரு கலை; மயிர் களைதல் ஒரு கலை; உழவுத்தொழில் ஒரு கலை. குழந்தை வளர்ப்பு ஒரு கலை. நீதிபதியாக இருந்து நீதிவழங்குதல் ஓரு கலை. இவ்வாறு கற்றுக் கொண்டு செய்யுந் தொழில் ஆகிய அனைத்தும் கலை என்னும் தலைப்பில் காணப்படுகின்றன. ஆகவே படித்தறிந்தோ, படிக்காமல் கண்ணாற் பார்த்து, உள்ளத்தால் உணர்ந்து, கையால் செய்யக் கற்றுக்கொண்டோ, இயற்றப்படும் தொழில்கள் எல்லாம் கலைகள் என்பதைக் காணலாம். நம் காலத்தினர் இவ்வுண்மையை மறந்தனர். நாடகம், சங்கீதம், இசைக்கருவியை வாசித்தல் முதலிய தொழிற்களில் ஈடுபட்டிருப்பவர்களை மட்டும் கலைஞர்கள் என்று கருது கின்றனர். ஏனைய தொழில் செய்வோரைக் கலைஞர்கள் என்று எண்ணுவதில்லை. இது தொழிலிலே உயர்வு தாழ்வு கருதப் பட்டபின் தோன்றிய எண்ணம். பண்டைத் தமிழகத்தில் பல கலைகள் வளர்ந்திருந்தன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழர்கள், தங்கள் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் ஆக்கிக் கொள்ள அறிந்திருந்தனர். இன்பமாகக் கேட்டும், பார்த்தும், பொழுதுபோக்குவதற்கான இசை, நாடகம் முதலிய கலை களிலும் சிறந்திருந்தனர். இவற்றைச் சங்கநூல்கள் நமக்கு உணர்த்துகின்றன. கட்டிடக் கலை ஒரு நாட்டின் சிறந்த நாகரிகத்தைக் காட்டுவது அந் நாட்டில் அமைந்திருக்கும் கட்டிடங்களாகும். கட்டிடங்களின் அமைப்பும், வேலைப்பாடும் அந்நாட்டு மக்களின் அறிவுக்கும் முயற்சிக்கும் அடையாளம். கட்டிடக்கலையிலே பண்டைத் தமிழர்கள் கை தேர்ந்தவர்கள். அவர்கள் பெரிய பெரிய நகரங் களை அமைத்திருந்தனர். அந்நகரங்களிலே மாடமாளிகை, கூடகோபுரங்களையும் அமைத்திருந்தனர். நகரைச் சுற்றி, மதில், அகழி முதலிய பாதுகாவல்களையும் ஏற்படுத்தியிருந்தனர். `முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் என்பது தொல்காப்பியம் புறத்திணை இயல் சூத்திரம். எல்லாப் பாதுகாப்பும் அமைந்த கோட்டைச் சுவரை முற்றுகையிடுவதும் கைப்பற்றுவதும் என்பது இதன் பொருள். இதனால் கோட்டைச் சுவரின்மேல், பகைவர்களை எதிர்க்ககூடிய படைகளும், இயந்திரங்களும் அமைக்கப்பட்டிருந்தன என்பதை அறியலாம். மாடம் ஓங்கிய மணல்மலி மறுகின் (பெரும்பாண் ஆற்றுப்படை-322) மாளிகைகள் வானத்தில் உயர்ந்திருக்கின்ற மணல் நிறைந்த வீதி. விண்பொர நிவந்த வேயா மாடத்து (மேற்படி 348) வானத்துடன் போர் செய்வதுபோல் உயர்ந்திருக்கின்ற கூரையற்ற மேல் வீடுகள்-மாடிக் கட்டிடங்கள். இவைகளால் பெரிய பெரிய மாளிகைகள் கூட்டப்பட்டி ருந்தன என்பதைக் காணலாம். நகரத்தின் கோட்டை வாசல்கள் பெரிதாகக் கட்டப் பட்டிருந்தன, அவ்வாசல்களுக்கு வன்மையான கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன. யானை முதலியவைகள் அம்பாரியுடன் புகுந்து செல்லும்படியான அகன்ற உயரமான வாசல்களாக இருந்தன. இத்தகைய கோட்டை வாயில் பற்றி நெடுநல்வாடையில் காணப்படுகின்றது. *தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் கைவல் கம்மியன் முடுக்கலின் புரைதீர்ந்து ஐயவி அப்பிய நெய் அணி நெடுநிலை வென்றுஎழு கொடியொடு வேழம் சென்றுபுகக் குன்றுகுயின்று அன்ன ஓங்குநிலை வாசல் (நெடுநல்வாடை-84-88) உட்புறம் தாழ்போடும்படி, வேலைத்திறம் மிகுந்த தச்சனால் பொருந்த இணைத்து இடுக்கில்லாமல் நன்றாகச் செய்யப்பட்ட கதவுகள்: உயர்ந்த வாசற்கால்; அது வெண்சிறு கடுகும் எண்ணெயும் பூசி வணங்குகின்ற தெய்வ வடிவத்தைக் கொண்டது. வெற்றி பொருந்திய கொடியை உயர்த்திக்கொண்டு யானைகள் செல்லும் வாயில், மலையிலே துளையிட்டுச் செய்ததுபோன்ற பெரிய வாசல். †“k©cw ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின், விண் உற ஓங்கிய பல்படைப் புரிசைத், தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை, நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் மழையாடு மலையின் நிவந்த மாடமொடு, வையை அன்ன வழக்குடை வாயில். மண் உள்ள அளவும் ஆழமாகத் தோண்டிய அகழி; நீலமணி போன்ற நீர் நிரம்பிய அகழி; வானை முட்டும்படி வளர்ந்துள்ள மதில்; பல கற்படைகள் அமைந்த மதில். பழமையான வலிமை நிலைத்திருக்கின்ற தெய்வ உருவங்கள் அமைந்த உயர் நிலை (வாசல் கால்), எண்ணெய் ஊற்றுவதனால் கருமை நிறம் அடைந்திருக்கும் வலிமையுள்ள, இடுக்கில்லாமல் இணைக்கப் பட்ட கதவு, மேகம் அசைந்து கொண்டிருக்கும் மலைபோல் உயர்ந்த மாடம். இவைகள் அமைந்த கோட்டை வாயில். வையை ஆற்றில் இடையறாமல் நீரோடிக் கொண்டிருப்பது போல், மக்களும் விலங்குகளும் போய்க் கொண்டிருக்கும் வாயில். (மதுரைக் காஞ்சி 361-356.) மேலே காட்டிய நெடுநல்வாடை அடிகளும் மதுரைக் காஞ்சி அடிகளும் கோட்டை வாயிலின் சிறப்பையும் அமைப் பையும் அறிவிக்கின்றன. செல்வம் படைத்தவர்கள் வாழும் வேலைப்பாடமைந்த பெரிய வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அவைகள் நல்ல காற்றோட்டம் உள்ளவைகள். இத்தகைய வீடுகள் அமைந்த அழகிய தெருக்கள் நகரங்களில் அமைந்திருந்தன. *வகை பெற எழுந்து வானம் மூழ்கிச் சில்காற்று இசைக்கும் பல்புழை நல்இல், யாறு கிடந்து அன்ன அகல்நெடும் தெருவில் மண்டபம், கூடம், தாய்க்கட்டு, சமையல் கட்டு போன்ற பலவகையான பகுதிகளுடன் உயர்ந்து வானத்திலே மறைந் திருக்கும் கட்டிடங்கள்; அவைகள் தென்றற்காற்று வீசும் பல சாளரங்களை யுடையவை, இத்தகைய கட்டிடங்கள் இருபுறமும் அமைந்த அகன்ற நீண்ட தெருக்கள் பார்த்தால் ஆறு கிடப்பது போல் காணப்படும் அத்தெருக்கள். (மதுரைக் காஞ்சி 357-359.) இவ்வடிகள் செல்வம் படைத்தோர் வாழும் சிறந்த வீடுகள் அமைப்பைக் காட்டின. இப்பொழுது நாம் கட்டும் வீடுகளில் பல பகுதிகள் அமைக்கின்றோம். பலரும் கூடி உட்கார்ந்து பேசும் இடம் (பொது ஹால்) படுக்கை அறை; குளிக்கும் அறை; ஆகிய பல பகுதிகளைப் புதியவீடுகளிலே காண்கின்றோம். இவைபோன்ற பல பகுதி களுடன் பண்டைக் காலத்திலும் கட்டிடங்கள் கட்டி வந்தனர். அரண்மனை அரசர்கள் வாழ்வதற்கான பெரிய அரண்மனைகள் எப்படிக் கட்டப்பட்டன; அக்கட்டிடங்கள் எத்தகைய தோற்றமுடன் இருந்தன என்ற செய்திகளும் சங்கநூல்களில் காணப்படுகின்றன. இக்காலத்தில் கட்டிடக்கலை வல்லுநர்கள் பெரிய கட்டிடங்களைக் கட்டுவதற்குத் திட்டம் இடுகின்றனர். அதனைப் படமாக எழுதித் தருகின்றனர். அதை வைத்துக்கொண்டு கட்டிடக் கலையில் தேர்ந்தவர்கள் கட்டிடங்கள் கட்டுகின்றனர். இதைப் போலவே பண்டைத் தமிழகத்திலே கட்டிடக் கலையைக் கற்றறிந்து தேர்ந்தவர்கள் இருந்தனர். அவர்கள் பெரிய கட்டிடங் கள் கட்டுவதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுப்பார்கள். அவர்கள் நிலத்திலே கட்டிடங்களைக் கட்டுவதற்கு அடை யாளம் இட்டுக் கொடுப்பார்கள். இவ்வாறு குறியிடுவதை இக்காலத்தில் சதுரித்தல் என்று கூறுகின்றனர், பண்டைக் காலத்துச் சிற்பிகள் மனையைச் சதுரிக்கும் போது திசைகளை வணங்குவார்கள். தெய்வத்திற்குப் பலியும் இடுவார்கள். *ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து, நூல் அறி புலவர், நுண்ணிதில் கயிறுஇட்டுத் தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்பமனை வகுத்து (நெடுநல்வாடை 75-78) கதிரவன் ஒரு பக்கத்திலும் சாயாமல் உச்சியிலே நிற்கும் நடுப்ப கலிலே மனையைச் சதுரிக்கத் தொடங்குவார்கள். மனையடி சாத்திரம் கற்ற அவர்கள் நன்றாக ஆராய்ந்து கயிறு பிடித்துக் குறியிடுவார்கள். அப்பொழுது திசைகளை வணங்கித் தெய்வத்திற்கும் பலியிட்டு அரசர்கள் வாழ்வதற்குத் தக்கபடி மனையிலே பல பகுதிகளும் அமையும்படி திட்டம் வகுப்பார்கள். இதனால் எத்தகைய சிறந்த கட்டிடங்கள் கட்டப்பட்டன என்பதை அறியலாம். அரசர்களின் உறைவிடங்களுக்கு அரண்மனை என்று பெயர். இதனைப் பண்டைக்காலத்தில் கோயில் என்று வழங்கினர். கோ - அரசன், இல் - இல்லம், தெய்வம் உறையும் கோயில்களைக் கோட்டம் என்று அழைத்தனர். அரசன் கோயிலைப்பற்றி நெடுநல்வாடையில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. **வரை கண்டன்ன தோன்றல வரைசேர்பு வில் கிடந்தன்ன கொடிய, பல்வயின் வெள்ளி அன்ன விளங்கும் சுதைஉரீஇ, மணிகண் டன்ன மாத்திரள் திண்காழ்ச் செம்புஇயன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் மலைகளைப்போல உயர்ந்து தோன்றுகின்றன; மலை களின் மேல் மழைக்காலத்தில் இந்திரவில் ஒளிவிடுவதைப் போல நிறமுள்ள கொடிகள் பறந்துகொண்டிருக்கின்றன. பலவிடங்களிலும் வெள்ளியைப்போல விளங்கும் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. நீலமணியைப்போன்ற கருமையும் திரட்சியும் அமைந்த வலிமையுள்ள கருங்கல் தூண்கள் நிறுத்தப்பட்டிருக் கின்றன. (நெடுநல்வாடை 108-112.) இது அரசன் கோயிலின் சிறந்த தோற்றத்தைக் காட்டிற்று. பண்டைத் தமிழர்களின் கட்டிடக் கலைத்திறமையைக் காண விரும்புவோர், மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களிலே காணலாம். உலோகப் பொருள்கள் பண்டைத் தமிழர்கள் இரும்பு, பொன், வெள்ளி, செம்பு போன்ற உலோக வகைகளைக் கொண்டு பல கருவிகளைச் செய்து வந்தனர். பொன் முதலிய உயர்ந்த உலோகங்களால், அழகுக்காக மக்கள் அணியும் அணிகலன்களையும் செய்து வந்தனர். *வருதார் தாங்கல் வாள்வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும். தன்னை எதிர்த்துவரும் படையைத் தானே நின்று தடுத்தல், வாள்யுத்தம் புரிந்து பகைவரைக் கொன்று தானும் இறத்தல் ஆகிய இரண்டு வகையான அஞ்சாத வீரச்செயல்களும். (தொல்-பொருள்-புறத்திணை-சூ-5) இச்செயல்களுக்குப் பிள்ளைநிலை என்று பெயர். 1 வாள் மலைந்து எழுந்தோனை, மகிழ்ந்து பறை தூங்க நாடுஅவற்கு அருளிய பிள்ளை யாட்டும். வாளால் போர்செய்து வெற்றிபெற்று உயர்ந்தவனுக்கு, மகிழ்ச்சியுடன் பறை முழங்கும்படி நாட்டைப் பரிசளித்து, அவ்வீரனைப் பாராட்டுவதும் (தொல்-பொருள்-புறத்திணை சூ-5.) இதற்குப் பிள்ளை விளையாட்டு என்று பெயர். 2 பட்ட வேந்தனை, அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும். (தொல்-பொருள்-புறத்திணை-37.) போர்க்களத்தில் இறந்துபட்ட வேந்தனை, அவனைக் கொன்ற வேந்தனுடைய வாட்படை வீரர்களைச் சூழ்ந்து நெருங்கிநின்று கூத்தாடும் ஆரவாரமும். *பல்படை ஒருவற்கு, உடைதலின் மற்று அவன் ஒள்வாள் வீசிய நூழிலு வீரன் ஒருவனால், பல படைகளும் புறமிட்டு ஓடும் போது, அவ்வீரன் தனது ஒளிபொருந்திய வாளை வீசி அவைகளைக் கொன்று குவித்தலும். மேலே காட்டிய தொல்காப்பியச் சூத்திரங்களால் இரும்பினால் கூர்மையான வாட்படைகள் செய்தனர் என்பதை அறியலாம். கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் (தொல்-பொருள்-புறத்திணை சூ-16.) ஒரு வீரனிடம் நெருங்கிப் போர்செய்தற்கு அஞ்சிய பலர், எட்டி நின்று, கணைகளையும் வேற்படைகளையும் வீசினர். அவைகள் நெருக்கமாக அவன் மீது மொய்த்தலால். வேல்மிகு வேந்தன் வேலால் போர்செய்து வெற்றிபெறுகின்ற வேந்தன். மேலே காட்டிய தொல்காப்பிய அடிகள், அம்புகளும் வேல் என்னும் படைகளும் பண்டைத் தமிழர்களின் போர்க் கருவிகள் என்பதைக் காட்டுகின்றன. ஒளிறுவாள் அரும் சமம் வேல்மிகு தானை வேந்தன் எம் அம்பு கடி விடுதும் என்பன புறநானூற்றுச் செய்யுள் அடிகள். இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் வாள், வேல், அம்புகளைக் காணுகின்றோம். பொன்னால் சிறந்த அணிகலன்களைச் செய்து வந்தனர் பண்டைத் தமிழர்கள். காதொன்று களைதல் காதில் அணிந்த குழையை நீக்குதல். அணிந்தவை திருத்தல் அணிந்திருக்கும் அணிகலன்களின் அலங்கோலத்தைச் சரிப்படுத்திக் கொள்ளுதல். இழையே வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட ஆபரணங்கள். மேலேகாட்டிய தொல்காப்பியத் தொடர்கள், பல வகையான அணிகலன்கள் செய்யும் கலையைத் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதைக் காட்டுவன. *கூழ்உடை நல்இல் கொடும்பூண் மகளிர் கொன்றை மென்சினை பனிதவழ் பவைபோல் பைம்காழ் அல்குல் நுண்துகில் நுடங்க மால்வரைச் சிலம்பின் மகிழ்சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலிக், கால தமனியப் பொன்சிலம்பு ஒலிப்ப, உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக். கைபுனை குறுந்தொடி தத்தப், பைபய முத்த வார்மணல் பொன்கழங்கு ஆடும் பட்டினம். என்பவை பெரும்பாண் ஆற்றுப்படை அடிகள் (327 - 336). உணவு மிகுத்த நல்ல இல்லங்களிலே, வளைந்த சிறந்த அணிகலன்களைப் பூண்ட மகளிர் வாழ்கின்றனர். அவர்கள் முத்துவடம் பூண்ட தம் இடையிலே, நுண்மையான துகிலை அணிந்திருக்கின்றனர். அத்துகில், கொன்றைமலர்கள் பூத்த மெல்லிய கிளையிலே பனித்துளி தவழ்வதுபோல் அசைகின்றது. பெரிய மலையிலே மகிழ்ச்சி மிகுதியால் சிறை விரித்து ஆடுகின்ற தோகையையுடைய பெண் மயிலைப்போல் காணப்படுகின்றனர். அவர்களுடைய கால்களிலே பொன்னால் செய்யப்பட்ட சிலம்புகள் ஒலிக்கின்றன. அவர்கள், உயர்ந்த மாளிகையிலே பந்தாடி இளைத்தனர். அதன் முத்துப் போன்ற வெண்மையான மணல் நிறைந்த இடத்திலே, கையில் புனைந்த சிறிய வளையல்கள் ஒலிக்கும்படி, பொன்னால் செய்த கழங்குகளை ஏந்தி ஆடுகின்றனர். இத்தகைய செல்வச் செழிப்புள்ள பட்டினம். இதுவே மேலே காட்டிய அடிகளில் அமைந்திருக்கும் பொருள். பண்டைத்தமிழர்கள், மகளிர் அணியும் சிறந்த பொன் அணிகள் பலவற்றைச் செய்தனர்; சிலம்பென்னும் ஆபரணம் செய்தனர்; வளையல்கள் செய்தனர்; விளையாடும் கழங்கு என்னும் கருவிகளைப் பொன்னால் செய்தனர், என்பதை மேலே காட்டிய பெரும்பாண் ஆற்றுப்படை அடிகள் உணர்த்தின. *பொலம் தாமரைப் பூச்சூட்டியும் நலம் சான்ற கலம் சிதறும் பல் குட்டுவர் வெல் கோவே பொன்னாலாகிய தாமரைப் பூவைச் சூட்டியும், நன்மை நிறைந்த சிறந்த பெரிய அணிகலன்களை அள்ளிக் கொடுக்கும் அரசனே! குட்ட நாட்டினர் பலரையும் வென்ற வேந்தனே, என்பது மதுரைக் காஞ்சி (103-105.). இவ்வடிகள், தாமரை மலர்கள்போல் பொன்னால் செய்யப் பட்டன; பலவகையான பொன்னணிகள் செய்யப்பட்டன என்ற உண்மையை உணர்த்தின. இழை அணி வனப்பின் இன்நகை மகளிர் போக்குஇல் பொலங்கலம் நிறையப் பல்கால் வாக்குபு தரத்தர அணிகலன்களை அணிந்த அழகுடைய பெண்கள், ஆடல், பாடல்களால் இனிய மகிழ்ச்சியைத் தரக்கூடிய பெண்கள், மதுவைக் கெடாத பொன்கரத்திலே ஊற்றிக் கொடுக்கக் கொடுக்க (பொருநர் ஆற்றுப்படை 85-87). விளங்குஇழை மகளிர் பொலம்கலத் தேந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப, நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி பெரும (மதுரைக் காஞ்சி 779-81.) பெருமையை உடையவனே! ஒளி விசுகின்ற அணிகலன் களை அணிந்த மகளிர், பொற்கலத்திலே ஊற்றிக் கையில் ஏந்தி, மணம் வீசும் மதுவை ஊட்ட, அதனை அருந்தி நாள்தோறும் மகிழ்ந்து நீண்டகாலம் வாழ்க. தன்கமழ் தேறல் பொன்செய் புனைகலத்து ஏந்தி நாளும் ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து (புறம்-56). ஒளி பொருந்திய வளையலை அணிந்த பெண்கள், குளிர்ந்து மணம் வீசுகின்ற மதுவைப் பொன்னால் செய்த வேலைப்பாடு அமைந்த கலத்திலே ஊற்றி ஏந்தி ஒவ்வொரு நாளும் ஊட்ட, அதனை அருந்தி மகிழ்ச்சி மிகுந்து. மேலே காட்டிய பத்துப்பாட்டு அடிகளும், புறநானூற்று அடிகளும், பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களையும் பாத்திரங்களையும் குறித்தன. மேலே காட்டியவைகளைக் கொண்டு பண்டைத் தமிழர்கள் உலோகங்களைக் கொண்டு படைகள் செய்தனர், பாத்திரங்கள் செய்தனர், அணிகலன்கள் செய்தனர் என்ற உண்மைகளை அறியலாம். நெசவுக் கலை பண்டைத் தமிழர்கள் நெசவுத்தொழிலிலே சிறந்து விளங்கினர். பருத்தி நூல் ஆடைகளையும், பட்டாடைகளையும் நெய்தனர், மிகவும் மெல்லிய ஆடைகளை நெய்வதிலே கைதேர்ந் திருந்தனர். ஆடைகளிலே பூவேலைகள் செய்தனர். அழகு அழகான கரைகள் போட்ட உடைகளை நெய்தனர். *பாம்புஉரி அன்ன வடிவின; காம்பின் கழைபடு சொலியின், இழைஅணி வாரா, ஒண்பூம் கலிங்கம் பாம்பின் தோல் போன்ற, மெல்லிய பளபளத்த தோற்றம் உடையன; மூங்கில் தண்டின் உட்புறத்தேயுள்ள வெண்மையான தோல் போல நெய்யப்பட்டுள்ள, நூல் வரிசை கண்ணுக்குத் தெரியாத, ஒளிபொருந்திய வெள்ளிய ஆடை. (புறம்-383) †“neh¡F நுழைகல்லா நுண்மைய பூக்கனந்து. அரவுஉரி அன்ன அறுவை கண்ணால் காணமுடியாத அவ்வளவு மெல்லிய நூலால் நெய்யப் பட்டது! அழகான பூவேலைகள் செய்யப்பட்டது; பாம்பின் தோலைப்போல் அவ்வளவு மென்மையும், வழவழப்பும், பளபளப்பும் பொருந்தியது, இத்தகைய மெல்லிய துணி. (பொருநர் ஆற்றுப்படை 82-83) மேலே காட்டிய புறநானூற்று அடிகளும், பொருநர் ஆற்றுப்படை அடிகளும், பண்டைத் தமிழர்கள் மெல்லிய பருத்தி நூல் ஆடைகள் நெய்யக் கற்றிருந்தனர் என்பதை அறிவித்தன. *நீர்ப்படு பருந்தின் இரும்சிறகு அன்ன நிலம்தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வாலஅரைக் கொளீஇ நீரால் நனைந்த பருந்தின் பெரிய சிறகைப்போன்ற தோற்ற முள்ள-நிலத்திலே புரளும் கந்தைத் துணியைக் களைந்த பிறகு, நூற்காத நூலால் நெய்யப்பட்ட ஆடையைத் (பட்டாடை) தூய்மையான இடையிலே உடுத்திக் கொண்டு. (பதிற்றுப்பத்து; பாட்டு 12) கொட்டைக் கரைய பட்டுஉடை நல்கி - (பொருநர் ஆ. ப. 165) கொட்டைக் கரைபோட்ட பட்டாடை கொடுத்து. மேல்உள்ள பதிற்றுப்பத்தும் பத்துபாட்டும், பண்டைத் தமிழர்கள் பட்டாடைகள் நெய்தனர்; நல்ல அழகிய கரை போட்ட ஆடைகளை நெய்தனர் என்ற உண்மையை உணர்த்தின. †“g£oD«, மயிரினும், பருத்தி நூலினும் கட்டும் நுண்வினைக் காருகர் இருக்கையும் (சிலப்பதிகாரம் இந்திரவிழவு ஊர்எடுத்த காதை 16-17) பட்டு நூலாலும், எலி மயிராலும், பருத்தி நூலாலும், நெசவுத் தொழில் செய்யும், நுட்பமான தொழிலை அறிந்த நெசவாளர் வாழும் இடமும். இவ்வடிகள் பட்டாடைகள், கம்பளங்கள், பருத்தியா டைகள் நெய்யுந் திறமை படைத்த நெசவாளர்கள் தமிழகத்தில் இருந்தனர் என்பதை உணர்த்தின. *வறன்இல் புலத்தி எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூம் கலிங்கம் (நற்றிணை 90) வறுமை இல்லாதவள் - ஆடைகள் வெளுப்பவள், இரவிலே தோய்த்து எடுத்துக் காயவைத்த கஞ்சி பொருந்திய மெல்லிய பூ வேலை அமைந்த உடை சோறு அமைவு உற்ற நீர்உடைக் கலிங்கம் சோற்றால் ஆகிய கஞ்சி பொருந்திய நீரையுடைய ஆடை (மதுரைக் காஞ்சி 721) மேலே காட்டிய நற்றிணையும், பத்துப்பாட்டும், ஆடை களை வெளுத்துக் கஞ்சியிட்டு முடமுடப்பாக்கும் கலையைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பதை உணர்த்தின. இசை, நாடகக் கலை பண்டைத் தமிழகத்திலே இசைக்கலை மிகவும் வளர்ந்திருந்தது; புகழ் பெற்றிருந்தது. இன்று கர்நாடக சங்கீதம் என்று போற்றப்படும் நுண்கலை, பண்டைத் தமிழிசையின் வளர்ச்சிதான் என்பதே இசைக்கலை வல்லுநர் பலரின் கருத்து. இசையும் நாடகமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. நாடகம் இல்லாமல் இசையுண்டு. ஆனால் இசையில்லாமல் நாடகம் இல்லை. தமிழர்கள் தமிழ் மொழியை இயல், இசை, நாடகம் என்று மூவகையாகப் பிரித்துக் கூறினர். இதுவே தமிழர்களின் கலையுணர்ச்சியையும், கலைச்சிறப்பையும் காட்டு வதாகும். சிறந்த கவிதைகளும், காவியங்களும் இயற்றமிழ் வகையைச் சேர்ந்தவை. இவைகளிலே இசையுண்டு, பண்ணோடு கூடியது தான் பாடல்; பண் என்பது காதுக்கினிய ஓசை. காதுக்கினிய ஒசை அமையப் பாடுவதே பாடல். பாடல் என்று பெயர் பெற்றவை எவையானாலும் அவற்றில் இசை-பண்-அமைந்து தான் இருக்கும். இப்பாடல்களிலே முன்னிலைப்படுத்திக் கூறுவதாக அமைந்திருக்கும் பகுதிகளை யெல்லாம் நாடகத் தமிழிலே சேர்த்து விடலாம். ஆகவே இயற்றமிழ் என்று சொல்லப் படுவதில் இசையும், நாடகமும் இணைந்து கிடக்கின்றன. பக்கவாத்தியங்களுடன் இணைந்து பாடும்படி அமைத் திருக்கும் பாடல்கள் இசைத் தமிழ் வகையைச் சேர்ந்தவை, இப்பாடல்களிலும் இலக்கண அமைதியுண்டு; முன்னிலைப் படுத்திக் கூறும் பாடல்கள் உண்டு. ஆகவே. இசைத்தமிழ் என்பதிலும் இயற்றமிழும், நாடகத் தமிழும் இணைந்துதான் இருக்கின்றன. நாடகமாக-பாத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பேசிக் கொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கும் நூல்களிலும், இயற்றமிழும் உண்டு; இசைத் தமிழும் உண்டு. பண்டைக் கால இலக்கியங்கள் எல்லாம் இயல், இசை, நாடகம் மூன்றும் அமைந்த நூல்களாகத் தான் காணப்படுகின்றன. இம்மூன்று தன்மையும் அமைந்த நூல்களாகத்தான் பண்டைத் தமிழ்க் கவிதைகள் எழுதப்பட்டன. நாளடைவில்தான், இயற்றமிழ் நூல்கள் என்ற தனிப்பிரிவுகள் ஏற்பட்டிருக்க வேண்டும். கலைஞர் வகுப்பு பண்டைத் தமிழகத்தில் இசைக்கலை நாடகக்கலைகளை வளர்ப்பதற்கென்று ஒரு தனிப்பட்ட வகுப்பினரே இருந்தனர். கூத்தர் என்பவர் ஒரு பிரிவினர்; இவர்கள் தொழில் கூத்தாடுதல். குதித்தல்-கூத்து. கூத்தில் இருவகை உண்டு; ஒன்று ஏதேனும் ஒரு கதையை நடித்துக்காட்டுவது; மற்றொன்று ஒரு பாடலைப் பொருள் விளங்கும்படி அபிநயித்துக் குதிப்பது. கதையின்றி அபிநயம் பிடித்தாடும் கூத்துக்குத்தான் நடனம்; நாட்டியம் என்று கூறுகின்றோம். கதை தழுவிய கூத்தை நாடகம் என்று நவில்கின்றோம். இத்தகைய கூத்தாடிகளைத்தான் பண்டைக் காலத்தில் கூத்தர் என்று கூறியுள்ளனர். இன்றும் தமிழ்நாட்டில் கூத்தாடிகள் என்று ஒரு இனத்தினர் இருக் கின்றனர்; இவர்கள் தொழில் கூத்தாடுவதுதான். பாணர் என்பவர் மற்றொரு பிரிவினர். பாண் என்பது யாழ். பண் என்பதிலிருந்து பாண் பிறந்தது. பண் என்பது இசை, பண் என்னும் இசையைத் தரும் கருவியைப் பாண் என்று கூறினர். பாண் வாசித்தலைத் தொழிலாகப் கொண்டவர்கள் பாணர்கள். பாணர்கள் வீட்டுப் பெண்களைப் பாடினிகள் என்று அழைத்தனர். இவர்கள் வாய்ப்பாட்டுப் பாடுவதிலே சிறந்தவர்கள். யாழ் வாசிப்பவர்களைப் பாணர்கள் என்றும், அவர்கள் வீட்டுப் பெண்களைப் பாடினிகள் என்றும் அழைத்தனர். பொருநர் என்பவர்கள் மற்றொரு பிரிவினர். பொருநர் களிலே, ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி பாடுவோர் என்று பலவகையினர் உண்டு என்று நச்சினார்க் கினியர் கூறியுள்ளார். ஏருழுது விளைந்த தானியத்தைக் குவிக்கும் இடத்தையும், அவ்விடத்திற்குரிய வணிகர், வேளாளர், குறுநில மன்னர் முதலியோரையும் புகழ்ந்து பாடுவது ஏர்க்களம் பாடுவதாகும். போர்க்களத்தைப் போற்றிப்பாடுதல் போர்க்களம் பாடுவதாகும். போரிலே வெற்றிபெற்ற அரசனுடைய வீரத்தைப் புகழ்ந்து பாடுவது பரணி பாடுவதாகும். இவ்வாறு பிறரைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்று வாழ்க்கை நடத்துவோர்க்குப் பொருநர் என்று பெயர். பொருநரைச் சேர்ந்த பெண்களுக்கு விறலியர் என்று பெயர். விறல்-வெற்றி; திறமை. கூத்தர், பாணர், பொருநர் முதலியவர்கள் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அவர்கள் மேற்கொண்ட தொழில்கள் காரணமாக அவர்களைத் தனித்தனிப் பெயரிட்டு அழைத்தனர். இவ்வாறு நினைக்க இடம் உண்டு. இவ்வுண் மையைத் தொல்காப்பியத்தால் காணலாம். *கூத்தரும், பாணரும், பொருநரும், விறலியும் ஆற்றிடைக் காட்சி உழறத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் (தொல். பொருள். புறத்திணை 36) ஆடுவதிலே வல்ல கூத்தரும் யாழிசைத்துப் பாடுவதிலே சிறந்த பாணரும், புகழ் கூறுவதிலே வல்ல பொருநரும், இவைகள் எல்லாவற்றிலும் தேர்ந்த விறலியரும் ஆகிய இந்நால்வரும், வழியிலே தம் கண்ணெதிரே தோன்றிய வறியோர்க்கு தாம் யாரிடத்திலே செல்வம் பெற்றோம் என்பதை எடுத்துரைப்பர்; அவர்களிடத்திலே சென்று செல்வம் பெற்று வறுமை நீங்கும் படி கூறுவர். இவ்வாறு கூறும் பகுதியும் என்பது தொல்காப்பியம். இத்தொல்காப்பியச் சூத்திரத்தால் இசை, நாடகக்கலை களையே குலத்தொழிலாகக் கொண்ட ஒரு கூட்டத்தினர் தமிழகத்தில் இருந்தனர் என்பதைக் காணலாம். *நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரியதாகும் என்மனார் புலவர் (தொல்-பொருள். அகத்திணை 53) புனைந்துரை வகையாலும், உலகியல் வழக்கத்தாலும் புலவரால் பாடுவதற்கு அமைந்த, புலவர் மரபு வழக்கமானது, கலிப்பாட்டு, பரிபாட்டு ஆகிய இருவகைப் பாடல்களாலும் பாடுவதற்கு உரியதாகும். இவ்வாறு புலவர்கள் கூறுவார்கள். இச்சூத்திரத்தால் ஓர் உண்மையைக் காணலாம் கருத்துள்ள கற்பனைக் கதைகளையும் நாடகமாக நடித்து வந்தனர்; நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும் நாடகமாக நடித்து வந்தனர்; இவ்விருவகைக் கதைகளையும் கலிப்பாவிலோ, பரிபாட்டிலோ பாடும் வழக்கம் பண்டைப் புலவர்களிடம் இருந்தது. இதுதான் மேலே காட்டிய தொல்காப்பியச் சூத்திரத் தால் நாம் அறியும் உண்மை. பொழுது போக்குக் கலை பண்டைத் தமிழகத்தில், இசையும் கூத்தும் பொது மக்களின் பொழுதுபோக்குக்குச் சிறந்த கருவிகளாக இருந்தன; மக்கள் சமூகத்தில் உள்ள பல பிரிவினர்க்கும் இவைகள் இன்பத்தை அளித்து வந்தன. இவைகளை எல்லா மக்களும் கேட்டும், கண்டும் இன்புற்றனர் என்பதை இலக்கியங்களிலே காணலாம். இதற்கு ஒரு உதாரணத்தைக் காண்போம். ஒரு மடமங்கை; அவள் தனக்குப் பிடித்த காதலன் ஒருவனுடன் கள்ளக் காதல் உறவு கொண்டிருந்தாள். இது அவளுடைய பெற்றோர்க்குத் தெரியாது. அவளுடைய தோழிக்குக்கூட அரைகுறையாகத்தான் தெரியும். இச்சமயத்தில் ஒருநாள் அம்மடமங்கையை மணமகளாக வேண்டி அயலார் சிலர் பரிசத்துடன் வந்தனர். அதைக் கண்ட அம்மங்கை, உடனே தனது உண்மை நிலையைத் தன் தோழியிடம் சொல்லிவிட்டாள். எனது காதலன் வேறோருவன்; இப்பொழுது பரிசத்துடன் வந்திருப்பவர்க்கு நான் உரியவள் அல்லள் என்ற உண்மையை உரைத்தாள். இச்செய்தி குறுந்தொகைப் பாடல் ஒன்றில் காணப்படுகின்றது. இப்பாடலில் பண்டைக்காலத்தில் தமிழகத்தில் பலவிடங்களில் கூத்து மேடைகள் இருந்தன என்ற உண்மை காணக்கிடக்கின்றது. மள்ளர் குழீஇய விழவி னானும், மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்தக் கோனை யானும்ஓர் ஆடுகள மகளே; என்கைக் கோடுஈர் இலங்குவளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே -(குறுந்தொகைப் பாட்டு 31) பெருமையும், என்னை மணக்கும் தகுதியும் உள்ளவன் என் காதலன். அவனை வீரர்கள் கூடி நடத்துகின்ற விழாவினும் காணவில்லை. மகளிர் ஒருவரோடு ஒருவர் தழுவிக்கொண்டு ஆடுகின்ற துணங்கைக் கூத்து நடைபெறும் இடங்களிலும் காணவில்லை. நானும் துணங்கைக் கூத்தாடும் இடத்திலே சென்று துணங்கை ஆடுவதற்கு உரிய ஒருத்திதான்; என் கையில் உள்ள சங்கைப் பிளந்து செய்த வளையல்களைக் கழன்றுவீழும்படி செய்த அந்தப் பெருமையுள்ள தலைவனும் கூத்தாடும் இடங் களில் சுற்றித்திரிகின்ற ஒரு ஆண்மகன்தான். வீரர்கள் தங்கள் வெற்றியைத் தாம் வாழும் இடங்களில் கூடிக் கொண்டாடுவார்கள். அந்த வெற்றி விழாவில் கூத்தும் பாட்டும் நடைபெறும். அதைப் பொது மக்கள் பலரும் கண்டு களிப்பார்கள். இவ்வுண்மையை இப்பாடலில் உள்ள மள்ளர் குழீஇய விழவினானும் என்ற தொடரால் காணலாம். பெண்கள் பலர் கூடி ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டு கூத்தாடுவர் என்பதை, மகளிர் தழீஇய துணங்கை யானும் என்ற வரியால் காணலாம். பெண்கள் துணங்கைக் கூத்தாடும் இடத்திலே ஆண்களும் இருப்பார்கள்; அவர்கள் தாங்கள் விரும்பும் பெண்களுக்குக் கை கொடுப்பார்கள், இதனை யானும் ஓர் ஆடுகள மகளே குரிசிலும் ஓர் ஆடுகள மகனே என்ற தொடர்களால் அறியலாம். *கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெரும்செல்வம் போக்கும் அதுவிளிந்து அற்று என்பது திருக்குறள். இதுவும் தமிழகத்தில் கூத்து மேடைகள் இருந்தன என்பதைக் குறிப்பது ஆகும். பெரிய செல்வம் வந்து சேர்தல் கூத்தாடும் இடத்தில் கூட்டம் கூடுவது போன்றதாகும். அச்செல்வம் நீங்கிப் போவது அச்கூட்டம் கலைவதைப் போன்ற தாகும் என்பதே இக்குறளின் பொருள். பண்டைத் தமிழர்கள் யாழ், குழல், மத்தளம் போன்ற வாத்தியங்களைச் செய்ய அறிந்திருந்தனர். இசைக்குத் துணை யான கருவிகள் பலவற்றைக் கண்டறிந்தனர். அவற்றைச் செய்தனர். இவ்வுண்மைகளையெல்லாம் பத்துப்பாட்டிலே, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப் படை முதலியவைகளிலே சிறப்பாகக் காணலாம். சிலப்பதிகார அரங்கேற்றுக் காதை இசையைப்பற்றியும் நாடகத்தைப்பற்றியும் விரிவாகக் கூறுகின்றது. கூத்திலே அரசவைக் கூத்து, அல்லவைக் கூத்து, அதாவது அரசர்க்காடும் கூத்து, பொதுமக்களுக்காக ஆடும் கூத்து என்ற பிரிவினைப் பண்டைத் தமிழகத்தில் இருந்ததில்லை, இவைகள் பிற்காலத்தில் ஏற்பட்ட பிரிவுகள் என்றுதான் கூறவேண்டும். பண்டைத் தமிழர்கள் வளர்த்துவந்த பாட்டும் கூத்தும் இன்று மிகுந்த வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அக்காலத்தில் ஒரு குலத்தொழிலாக இருந்த இவைகள் இன்று அனைவர்க்கும் உரிய பொதுத் தொழிலாக மாற்றம் அடைந் திருப்பது ஒன்றே, இவற்றின் வளர்ச்சியைக் காட்டுவதாகும். அரசர்க்காடும் கூத்து, பொது மக்களுக்காடும் கூத்து என்னும் பிரிவும் இக்காலத்தில் இல்லை. இதுவும் வளர்ச்சிக்கு அடை யாளமாகும். தமிழே, இயல், இசை, நாடகம் என்ற முப்பகுதியை உடையது. மூன்றும் கலந்த நூல்களே பண்டைக்காலத்தில் பிறந்தன. பின்னால் தான் இயற்றமிழ்நூல், இசைத்தமிழ்நூல், நாடகத் தமிழ்நூல் என்று தனித்தனியாக எழுதப்பட்டன. இசைக்கலை, நாடகக்கலைகள் ஒரு குலத்தினரின் தொழிலாக இருந்துவந்தன. கூத்தில் நடனம், நாடகம் என இருவகை உண்டு. பாட்டுக்கு அபிநயம் பிடிப்பது நடனம்; கதை தழுவியது நாடகம், இத் தொழில்களிலே ஆண்களும், பெண்களும் ஈடுபட்டிருந்தனர். நாடகமும் பாட்டும் பொதுமக்களுக்குப் பொழுதுபோக்கும் இன்பக் கருவிகளாகப் பயன்பட்டுவந்தன. அரசர்க்காடும் கூத்து, அல்லாதார்க்கு ஆடும் கூத்து என்ற பிரிவு பண்டைக்காலத்தில் இருந்ததில்லை; பிற்காலத்தில்தான் பிறந்தது. இசையும் கூத்தும், இன்று குலத்தொழிலாக இல்லாமல் பொதுத் தொழிலாக மாறிவிட்டது. அனைவர்க்கும் பொதுச்செல்வமாகவும் ஆகி விட்டது. இவ்வுண்மைகளை மேலே கூறியவற்றைக் கொண்டு அறியலாம். போட்டியின் மூலம் கலை வளர்ச்சி கலைகள் போட்டியின் மூலம் பண்டைக் காலத்தில் வளர்க்கப்பட்டு வந்தன. கலைஞர்கள் தங்களைச் சிறந்தவர்கள் என்று காட்டிக்கொள்ள விரும்புவது இயற்கை. இதற்காக, அவர்கள் தாங்கள் கற்ற கலைத்துறையிலே மேலும்மேலும் முன்னேற முயல்வார்கள். பண்டைக் காலத்தில் கலைஞர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டிபோட்டு முன்னேறி வந்தனர். நடனமாடுவோர், பண் பாடுவோர், சூதாடுவோர் முதலியவர்கள் தங்கள் திறமையைக் காட்ட மற்றவர்களுடன் போட்டியிடுவார்கள். இவர்கள் போட்டியிடுவதற்கான மன்றங்கள் இருந்தன. இம்மன்றங்களைக் குறித்துக் காட்டக் கொடி கட்டியிருப்பர். ஆடல் கற்றவர்களை ஆடல் கற்றவர்கள் போட்டியிட்டு வெல்லவும்; பாடல் பயின்றவர்களைப் பாடக் கற்ற பாணர்கள் வெல்லவும்; சூதாட்டத்தில் வல்லவர்களை அச்சூதாட்டத்திலே வல்லவர்கள் வெல்லவும், இவையல்லாத ஏனைய கலைகளிலே வல்லவர்கள் அக்கலைகளிலே வல்லவர்களுடன் விவாதித்து வெல்லவும் கொடி கட்டப்பட்டிருந்தது. புகழ்பெற்ற நல்ல புதுநீர் நிறைந்த தடாகம்போன்ற குளிர்ந்த சுனையின் பக்கத்திலே இக்கொடி பறந்துகொண்டிருந்தது என்று பரிபாடலில் காணப் படுகின்றது. திருப்பரங்குன்றத்திலே இத்தகைய கலைப்போட்டிகள் நடந்தன என்றும் சொல்லப்படுகின்றது. *ஆடல் நவின்றோர் அவர்போர் செறுப்பவும், பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும், **வல்லாரை வல்லார் செறுப்பவும், அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர்சொல்லாய்ச் செம்மைப் புதுப்புனல் தடாகம் ஏற்ற தண்சினைப் பாங்கர்ப் படாகை நின்றன்று. (பரிபாடல் 9, வரி 72-78) இவ்வடிகள். பண்டைத்தமிழர்கள் நுண்கலைகளை எவ்வாறு வளர்த்து வந்தனர் என்பதை அறிவிக்கின்றன. ஓவியக் கலை ஓவியக்கலை என்பது ஒரு சிறந்த கலை. நடந்த பல நிகழ்ச்சி களைப் படமாக எழுதிக்காட்டுவது. கைத்திறமும் நுண்ணறிவும் உள்ளவர்களே சிறந்த ஓவியராக முடியும். கற்பனை உள்ளம் படைத்த ஓவியர்கள்தாம் கைத்திறம் உள்ள ஓவியராகவும் உயரமுடியும். ஓவியம் என்பது சித்திரம். ஓவியத்தைச் சிறுவர், பெரியோர் அனைவரும் காண விரும்புவார்கள். ஓவியங்களைக் காணவிரும்பாதவர்கள் ஒருவரும் இல்லை. இக்கலையின்மூலம் மக்களுக்குப் பல உண்மைகளை உணர்த்த முடியும். மக்களுக்கு அறிவையும் ஒழுக்கத்தையும் புகட்ட முடியும், ஓவியங்களின் வழியாகச் சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் கல்விப் பயிற்சியும் அளிக்க முடியும். ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவரும் ஒரு சிறந்த கலை. பண்டைத் தமிழர்கள் இக்கலையை மக்களுக்கு நல்லறிவூட்டவும், நீதிநெறிகளைக் கற்பிக்கவும் பயன்படுத்தி வந்தார்கள். ஒரு நிகழ்ச்சியை எழுத்தால் எழுதாமல் ஓவியங்களால் எழுதிக்காட்டி விடலாம். எத்தகைய நிகழ்ச்சிகளையும், வாயால் சொல்லாமல் - எழுத்தால் எழுதிக்காட்டாமல் - சித்திரத்திலே அமைத்துக் காட்டமுடியும். சிறந்த ஓவியங்கள் வாய்பேசாமல் பல நிகழ்ச்சிகளை நமக்குச் சொல்லும். இத்தகைய சிறந்த ஓவியங்களை இன்றும் நாம் காண்கின்றோம். இன்னும் பல கோயில்களிலே, பல ஓவியங்கள் தீட்டப் பட்டிருப்பதைக் காண்கின்றோம். மதுரைச் கோயிலுக்குச் செல்பவர்கள், அக்கோயிலின் சுவர்கள், திருவிளையாடல் புராணக் கதை முழுவதையும் ஓவியங்களால் உரைப்பதைக் காணலாம். பண்டைக்காலத்தில், கோயில் மண்டபங்களிலும், பொது இடங்களிலும், மக்களுக்கு அறிவூட்டும் ஓவியங்கள் வரையப் பட்டிருந்தன. இவ்வுண்மை பரிபாடலிலே காணப்படுகின்றது. செவ்வேளைப் பாடும் பத்தொன்பதாவது பரிபாடலிலே பரங்குன்றத்தில் உள்ள சித்திர மண்டபத்தின் சிறப்புக் கூறப் படுகின்றது. சூரியனுடன் சேர்ந்து சுழல்கின்ற சந்திரன் நட்சத்திரங்கள் ஆகியவை சக்கரவாளகிரியைச் சுற்றி வருவதைப்போல் எழுதப் பட்டுள்ளன. கிரகங்களின் இக்காட்சியைக் காண்பவர்கள் இக் காட்சியிலேயே ஈடுபட்டு நிற்பர். இரதி மன்மதன் உருவங்கள் இணைப்பாக எழுதப் பட்டிருப்பதைக் காண்பர்; கணவர்களுடன் சேர்ந்து செல்லும் பெண்கள் அதைக் கண்டபோது, இவள்தான் ரதியா? இவன் தான் மன்மதனா? என்று கேட்பர். கணவன்மார்கள் ஆம் என்று விடையளிப்பர். அகலிகையின் கதை எழுதப்பட்டிருக்கும் ஓவியத்தைக் காண்பர், இவன் இந்திரனாகிய பூனை; இவள் அகலிகை; இவன் அகலிகையின் கற்பைக் கெடுத்த இந்திரன்; இந்திரன் பூனை உருவில் வெளிவரும்போது அவனைக்கண்ட கவுதமன் இவன்; கவுதமன் சினத்தால் அகலிகை கல்லுருப்பெற்ற வடிவம் இது; இவ்வாறு அந்த ஓவியத்தைப் பார்த்து உரையாடுவார்கள். இவ்வாறு பலவகையான ஓவியங்கள் தீட்டப்பட்ட மண்டபத்தை அடைந்தவர்கள் அவைகளைக் குறித்துப் பல கேள்விகள் கேட்டனர்; அக்கேள்விகளுக்கு விடை தந்தனர். *என்றூழ் உறவரும் இருசுடர், நேமி ஒன்றிய சுடர்நிலை உள்படு வோரும்; இரதி, காமன், இவன், இவன் எனாஅ; விரகியர் வினவ, வினா இறுப் போரும்; இந்திரன் பூசை, இவள் அகலிகை, இவன் சென்ற கவுதமன், சினன் உறக் கல்உரு ஒன்றியபடி இது, என்று உரைசெய் வோரும்; இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும், சுட்டுஅறி வுறுத்தவும். இவைகளே பரிபாடல் அடிகள். ஓவத்து அன்ன வினைபுனை நல்இல் சித்திரத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த நல்ல வீடு. (பதிற்று-பா. 61) *செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ்சுவர் உருவப்பல்பூ ஒரு கொடி வளைஇ. செம்பினால் செய்யப்பட்டது போன்ற உறுதியான பெரிய சுவரிலே சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக் கின்றன. அழகிய பல மலர்கள் பூத்த கொடிகளும் எழுதப் பட்டிருக்கின்றன. (நெடுநல்வாடை - 112-113.) †“â©Ãiy மருப்பின் ஆடு தலையாக விண்ஊர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய உரோகிணி. புதிதாகச் செய்யப்பட்ட-மெழுகு பூசப்பட்ட-கட்டிலில் உள்ள மேற்கட்டியின் உற்புறத்திலே, (அஸ்மான கிரி) மேஷ ராசி முதலிய பன்னிரண்டு ராசிகளும் எழுதப்பட்டிருக்கின்றன. வானத்தில் விரைந்து சுற்றும் சூரியனுடன் மாறுபட்ட சந்திரனு டைய உருவமும் எழுதப்பட்டுள்ளது. சந்திரனும், உரோகிணி நட்சத்திரமும் பிரியாது நிற்கின்ற நிலையை ஓவியமாக்கப் பட்டிருக்கின்றது. கணவனும், மனைவியும் சந்திரனும் - உரோகிணியும் போல் பிரியாமல் வாழக் கடமைப்பட்டவர்கள் என்பதை நினைப்பூட்டவே இவ்வாறு படுக்கும் கட்டிலின் மேற்கட்டியில் ஓவியம் வரைந்தனர். மேலே காட்டிய பரிபாடல், பதிற்றுப்பத்து, நெடுநல் வாடை அடிகள், பண்டைக்காலத் தமிழர்களின் ஓவிய அறிவைக் காட்டுகின்றன. ஓவியங்களை அவர்கள் பயன்படுத்திக்கொண்ட விதத்தையும் உணர்த்துகின்றன. மருத்துவக்கலை பண்டைத் தமிழர்கள் மருத்துவக் கலையிலே சிறந் திருந்தனர். பழந்தமிழர்களின் மருத்துவக் கலையின் வளர்ச்சியே இன்று சித்த வைத்தியம் என்னும் பெயருடன் சிறந்து விளங்கு கின்றது. சித்த வைத்திய முறை பழந்தமிழர்கள் கண்டறிந்த வைத்திய முறை என்பதில் ஐயம் இல்லை. *அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது, மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன். நீக்குதற்கரிய நோயைப் பெற்றவர்களுக்கு, அவர்தின்ன விரும்பிய வைகளைக் கொடுக்காமல், அவர் நோய் தணிவதற்குரிய மருந்தை ஆராய்ந்து கொடுத்த அறநெறியை உடையவன். (நற்றிணை-பா. 136) இதில் மருத்துவனை அறவோன் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. மக்கள் துன்பத்தை நீக்கிக் காப்போனாதலின் அறவோன் என்று புகழப்பட்டது. நோய் இன்னது; அதற்குக் கொடுக்க வேண்டிய மருந்து இன்னது; மருந்துண்ணும் போது சாப்பிடக்கூடிய பண்டங்கள் என்பவைகளையெல்லாம் அறிந்தவன் சிறந்த மருத்துவன் என்ற கருத்தை இந்த நற்றிணை அடிகள் காட்டுகின்றன. தமிழர்களின் மருத்துவக் கலைத் தேர்ச்சியின் சிறப்பைக் காண வேண்டுமானால் திருக்குறள் ஒன்றே போதுமானதாகும். மருந்து என்னும் அதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையை உணரலாம். நோய் வராமல் காத்துக்கொள்ளும் வழி, நோய் வந்த பின் அந்த நோயை ஒழிக்க மருத்துவம் செய்யும் முறை, இவைகளைத் திருக்குறள் விளக்கமாகக் கூறுகின்றது. திருக்குறளில் சொல்லப் பட்டிருக்கும் வைத்திய முறை இக்காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றிருக்கும் விஞ்ஞான வைத்திய முறைக்கு ஒத்திருப்பதைக் காணலாம். மருந்து என்னும் அதிகாரத்தில் பத்துக் குறள்களில் ஏழு குறள்கள் உணவைப் பற்றியே கூறுகின்றன. உணவு மிகுந்தாலும் நோயுண்டாகும்; உணவு குறைந்தாலும் நோய் உண்டாகும் என்பது முதற் குறள். உண்ட உணவு செரித்தபின் அளவோடு உண்டால் நோய் அணுகாது என்பது இரண்டாவது குறள். உண்ட உணவு செரித்தபின் அளவோடு உண்பதுதான் நீண்டகாலம் வாழ்வதற்கு வழி என்பது மூன்றாவது குறள். குற்றமற்ற உணவை நன்றாகப் பசி எடுத்தபின் உண்ணுக என்பது நான்காவது குறள். நல்ல உணவை அளவோடு உண்டால் உயிருக்கு ஆபத்து இல்லை என்பது ஐந்தாவது குறள். குறைவாக உண்பவன் இன்புறுவான், அளவுக்கு மீறி உண்பவன், பிணியால் துன்புறுவான் என்பது ஆறாவது குறள். பசியின் அளவு தெரியாமல், மிகுதியாக உண்பவன் அளவற்ற நோய்களுக்கு ஆளாவான் என்பது ஏழாவது குறள். நோய் வருவதற்கும், நோய் வராமைக்கும் காரணம் உணவு தான் என்பது இக்கால மருத்துவர்களும் ஒப்புக் கொள்கின்றனர். உடல் நலத்துக்கேற்ற நல்ல உணவுகளை அளவோடு உண்பவர்கள் நீண்டகாலம் நோயின்றி வாழமுடியும் என்ற உண்மையைப் பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். இதற்கு இக்குறட்பாக்களே சான்றாகும். நோயாளிக்கு எப்படி மருத்துவம் செய்யவேண்டும் என்று கூறப்படும் குறள்கள் மிகச்சிறந்த கருத்துள்ளவை. முதலில் நோய் இன்னதென்று தெரிந்துகொள்ள வேண்டும்; அதன்பின் அந்த நோய் எப்படி வந்தது என்ற காரணத்தை அறிய வேண்டும்; அதன்பின் அந்த நோயைத் தணிக்கும் வழியைக் காணவேண்டும். அதன்பின் அதற்குத் தகுந்த மருந்தைக் கொடுக்க வேண்டும். நோய்நாடி, நோய் முதல்நாடி, அது தணிக்கும் வாய்நாடி. வாய்ப்பச் செயல் இது எட்டாவது குறள். இத்திருக்குறளை மறவாமல் பின்பற்றும் வைத்தியர்கள், தங்கள் தொழிலிலே வெற்றி பெறமுயும். நோயாளியின் நிலைமை, நோயின் நிலைமை, மருந்து கொடுப்பதற்கேற்ற காலம் இவற்றை ஆராய்ந்து மருத்துவம் செய்யவேண்டும். இதுவே வைத்தியன் கடமை என்று ஒன்பதாவது குறள் கூறுகின்றது. பத்தாவது குறள் மிகவும் குறிப்பிடத்தக்கது. வைத்தியம் செய்யும் முறையை நான்கு பகுதியாகப் பிரித்துக் கூறுகின்றது அக் குறள். நோயாளி, மருத்துவன், மருந்து, நோயாளியின் பக்கத்தி லிருந்து பார்த்துக் கொள்ளுகின்றவன் என்று நான்கு பகுதியை யுடையது மருத்துவ முறை. உற்றவன். தீர்ப்பான், மருந்து, உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்றே மருந்து. இதுவே திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உள்ள இறுதிக் குறள். நோயாளியின் நிலைமையை நன்றாகப் பரிசோதிக்க வேண்டும். ஒரே நோய், அவரவர்களின் உடல் நிலைக்கு ஏற்றவாறு கடுமை யாகவும் இருக்கும்; குறைவாகவும் இருக்கும். நோயாளியின் தாங்கும் சக்தியையும் அறிந்து அதற்கேற்றபடி மருத்துவம் செய்ய வேண்டும். இரண்டாவது, நோய் தீர்ப்பவனாகிய மருத்துவன் மருத்துவ முறைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும். நோயாளிக்கு நம்பிக்கை உண்டாகும்படி நடந்துகொள்ள வேண்டும். மூன்றாவது, மருந்து. அது நோயைத் தீர்க்காவிட்டாலும் கெடுதி செய்யாமலிருக்கவேண்டும். ஒரே நோய்க்குப் பல மருந்துகள் உண்டு. நோயாளியின் உடல்நிலைக்கேற்ற மருந்து இது என்று கண்டுபிடிக்கவேண்டும். நான்காவது, நோயாளியின் பக்கத்திலிருந்து பார்ப்பவன் (நர்ஸ்), அவனும் நோயாளியின் நிலையை அறிந்து, அவன் வருந்தும்போது அவ்வருத்தத்தைத் தணிக்கும் தன்மையுள்ள வனாக இருக்கவேண்டும். நோயாளியின் பக்கத்திலிருப்பவனுக்கும் மருத்துவ நூல் அறிவும், நோயாளியைப் பாதுகாக்கும் பயிற்சியும் அமைந்திருக்கவேண்டும். மருத்துவத்தைப் பற்றி மேலே கூறப்பட்டிருக்கும் செய்தி களைக் கொண்டு, பண்டைத் தமிழரின் மருத்துவ அறிவைக் காணலாம். மக்களின் நல்வாழ்வுக்கு இன்றியமையாத மருத்துவக் கலையிலே பண்டைத் தமிழர் மிகவும் அக்கறை காட்டினர். அக்கலையை வளர்த்து வந்தனர். தமிழ்நாட்டிலே மருத்துவக் கலை மிகவும் உயர்ந்தநிலையில் வளர்ந்திருந்தது. இது உண்மை, இவ்வுண்மையைப் பண்டைத் தமிழ்நூல்கள் உணர்த்துகின்றன. வானநூல் அறிவு பண்டைத் தமிழர்கள் வானநூல் அறிவும் பெற்றிருந்தனர். வானத்தில் உள்ள கிரகங்களின் மாறுபாட்டால் நிகழும் இயற்கை வேறுபாடுகளை அறிந்திருந்தனர். கார்த்திகை விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடம் இருந்தது. சந்திரனும் கார்த்திகை நட்சத்திரமும் நெருங்கியிருக்கும் நாளைக் கார்த்திகை நாள் என்று கொண்டனர். குறுமுயல் மறுநிறம் கிளர மதிநிறைந்து அறுமீன் சேரும் அகல்இருள் நடுநாள் மறுகு விளக்கு உறுத்து, மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலர் உடன்துவன்றிய விழவு. சிறிய முயலாகிய மறு தன் மார்பிலே விளங்க, முழு மதியாகிய, கார்த்திகை நட்சத்திரம் சந்திரனுடன் சேர்ந்திருக்கும் நாள் கார்த்திகை நாளாகும். இந்நாளின் நள்ளிரவில் வீதியிலே விளக்கேற்றிவைத்து மலர் மாலைகள் தொங்கவிடுவர். பலரும் கூடி விழாக்கொண்டாடுவார்கள். இது கார்த்திகை விழா. (அகநானூறு-பா. 141) வெள்ளி என்னும் நட்சத்திரத்தைக் கொண்டு மழைபெய்யும், பெய்யாது என்ற நிலையை அறிந்து வந்தனர். வெள்ளி நல்ல கிரகங்களுடன் சேரும்போது மழை பெய்யும் என்பது பண்டைத் தமிழர்கள் நம்பிக்கை. வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி பயம்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப. சிறிது வடக்கே சாய்ந்து சிறப்பு மிகுந்த வெள்ளியானது, மழைக்குப் பயன்படும் மற்றைய கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் நாளில் (பதிற்றுப்பத்து 24.) நிலம்பயம் பொழியச் சுடர்சினம் தணியப் பயம்கெழு வெள்ளி ஆநியம் நிற்ப. நிலம் மிகுந்தப் பயனைத் தரும்படியும், சூரிய வெப்பம் தணியும்படியும், மழை மிகுதியாகத்தரும் வெள்ளியானது மற்றக் கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் நாளில் (மேற்படி 69.) பதிற்றுப்பத்திற் காணும் இவ்வடிகள், தமிழர்களின் வானநூல் அறிவைக் காட்டுகின்றன. புறநானூற்றின் 229 ஆவது பாடலில் வான நூல் குறிப்புக்கள் காணப்படுகின்றன. மேஷராசியை ஆடு என்று கூறப்படுகிறது. கார்த்திகை அழல் (நெருப்பு) என்று சொல்லப்படுகிறது. கார்த்திகையின் அதிதே வதை அக்கினியாகும். அனுட நட்சத்திரம் முடப்பனை போன்ற தோற்றமுடையது; புனர்பூச நட்சத்திரம் குளம் போன்ற உருவமுடையது; இதனால் புனர்பூசத்தை, கயம், குளம், ஏரி என்னும் பெயரிட்டும் அழைப்பர். இப்புறநானூற்றுப் பாடலில், கார்த்திகை, அனுஷம் புனர்பூசம், உத்திரம், மூலம், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. நல்ல நாள் கெட்ட நாள் பார்க்கும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடம் இருந்தது. வானத்து நட்சத்திரங்களையும், கிரகங்களையும் கொண்டே நல்ல நாள் கெட்ட நாள்களைக் கண்டறிந்தனர். நல்ல நாளிலே திருமணம் செய்யும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடம் இருந்தது. *புள்ளுப்புணர்ந்து இனிய வாகத் தெள் ஒளி அங்கண் இருவிசும்பு விளங்கத், திங்கள் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக், கடிநகர் புனைந்து, கடவுள் பேணிப் படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ வதுவை மண்ணிய மகளிர். பறவைச் சகுனம் நன்மையாகக் காணும்படியும், தெளிவான நிலவொளி பெரிய வானத்தில் விளங்கும்படியும், சந்திரனை உரோகிணி நட்சத்திரம் சேர்ந்திருக்கும் குற்றமற்ற நல்ல நாளிலே, கல்யாண வீட்டை அலங்கரித்து- கடவுளை வணங்கி, மணத்தில் அடிக்கப்படும் முழவுடன் பெரிய முரசு வாத்தியமும் ஒலிக்கும்படி, தலைவியை மங்கல நீராட்டிய மகளிர். (அகநானூறு. பா. 136.) *வான் ஊர் மதியம் சகடுஅணைய வானத்துச் சாலிஒரு மீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்கண் நோன்பு என்னை சந்திரனை உரோகிணி சேரும் நன்னாளிலே, அருந்ததி போன்ற கண்ணகியை, வயதேறிய அந்தணன் வேத நெறிச் சடங்குகளைச் செய்துகாட்ட, கோவலன் கண்ணகியுடன் தீயை வலம் செய்கின்ற காட்சியைக் காண்பவர்கள் கண்கள் செய்த தவம் யாதோ! (சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்து-50-53.) சந்திரனை உரோகிணி நட்சத்திரம் சேரும் நாளை நல்ல நாளாகக் கொண்டனர் தமிழர்; அந்த நாளைத் திருமணம் செய்வதற்கேற்ற சிறந்த நாளாகக் கொண்டனர். இவ்வுண்மையை மேலே காட்டிய அகநானூற்று அடிகளும், சிலப்பதிகார அடிகளும் காட்டின. இவைகளும் பண்டைத் தமிழர்களின் வானநூல் அறிவுக்குச் சான்றாகும். இவ்வாறு வான நூற் குறிப்புக்கள் பல, சங்க இலக்கியங் களிலே காணப்படுகின்றன. இக்குறிப்புக்களால் தமிழர்களின் வானநூல் கலை அறிவைக் காணலாம். மேலே கூறியவைகளைக் கொண்டு பண்டைத் தமிழர்கள், மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் சிறந்த கலைகள் பலவற் றையும் அறிந்திருந்தனர் என்பதைக் காணலாம். சிறப்பாகப் பண்டைத் தமிழர்கள் கட்டிடக் கலையிலே தேர்ச்சி பெற்றிருந்தனர்; சிற்பக் கலையிலே சிறந்து விளங்கினர்; உலோகங்களைக் கொண்டு நுண்ணிய வேலைப்பாடமைந்த பண்டங்கள் பலவற்றைச் செய்துவந்தனர். நெசவுக் கலையிலே அவர்கள் நிகர் அற்று விளங்கினர். நடனம், இசை போன்ற அருங்கலைகளிலே ஆற்றல் பெற்றி ருந்தனர். போட்டிபோட்டுக் கலைகள் பலவற்றை வளர்த்து வந்தனர். ஓவியக்கலையை மக்களுக்கு அறிவூட்டப் பயன்படுத்தி வந்தனர். மருத்துவக் கலையிலே நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். வானநூல் கலையிலும் சிறந்து விளங்கினர். இவ்வுண்மைகளை யெல்லாம் பண்டைத் தமிழ்நூல்கள் நமக்குக் கூறுகின்றன. சமுதாயப் பணி பட்டினிப் பேச்சு உலக வாழ்வு துன்பம் நிறைந்தது, பிறந்தது முதல், இறக்கும் வரையிலும் கவலையிலேயே காலங்கழியும்; இதற்கென்ன செய்வோம்? அதற்கென்ன செய்வோம்? இன்றைப்பொழுது எப்படிப் போகும்? நாளைப் பொழுதைப் போக்க என்ன செய்யலாம்? இப்படியே வாழ்நாள் முழுவதும் சிந்தனை செய்ய வேண்டி யிருக்கிறது. இப்படி வேதனைப்பட்டு வாழ்வதைவிடச் சாவதுதான் நல்லது; அதில்தான் இன்பம் உண்டு; விடுதலை உண்டு; துன்பக் கடலிலிருந்து கரையேற இதைத்தவிர வேறு வழியில்லை. இவ்வாறு மனமொடிந்து பேசுவோர் பலர் உண்டு. வாழ்க்கையில் உள்ள கவலையும் துன்பமுமே இப்படிப் பேச வைக்கின்றன. வேதனைப்பட்ட உள்ளத்திலேதான் இம்மாதிரி யான சலிப்பு முளைக்கிறது; வெளியிலே சொல் வடிவாகத் தலை நீட்டுகின்றது. மக்களிடம் இத்தகைய சோர்வு ஞானம் எப்பொழுது பிறக்கிறது? இந்த ஞானம் வேதனைக் குரலாக எப்பொழுது வெளிவருகிறது? ஏன் வெளிப்படுகின்றது? என்பவைகளைக் கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும். எண்ணிப் பார்ப்போ மானால் உண்மை விளங்கும். பசிப்பிணியால் மக்கள் வாடும் காலத்தில்தான் இத்தகைய சலிப்புப் பேச்சுக்கள் முழங்குகின்றன. அனைவரும் கவலையில்லாமல் உண்டு களிக்கின்ற காலத்தில் இத்தகைய புலம்பல்கள் புறப்படுவதில்லை; உலக நிலையாமை யைப் பற்றிய நினைப்பே அவர்கள் நெஞ்சில் குடிபுகுவதில்லை. உணவே உயிர் வாழ்வு பண்டைத் தமிழ் மக்கள் பசிப்பிணியின் கொடுமையை அறிந்திருந்தனர். மக்கள் அனைவரும் வயிறார உண்டு வாழ வேண்டும் என்பதே அவர்கள் கொள்கை. மக்களிடையே பசிநோய் பரவி நிலைக்குமாயின் சமாதான வாழ்வு நிலைக்காது. மக்கள் ஒன்றுபட்டு வாழமாட்டார்கள். மக்களிடம் கட்டுப் பாடும் ஒழுக்கழும் இருக்க முடியாது. ஆதலால் மக்கள் அனைவரும் உணவு பெற்று வாழ வழிகாண வேண்டும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். இத்தகைய நம்பிக்கையுள்ள குறுநில மன்னர்கள் - முடியுடை வேந்தர்கள் - நிலக்கிழவர்கள் - நாட்டு மக்களின் பசித்துயரை ஒழிப்பதிலே முனைந்து நின்றனர். மக்களைப் பசி நோய்க்கு ஆளாக்காமல் பாதுகாத்தவர்கள்தான் மக்கள் தலைவர்களாகக் கருதப்பட்டனர்; நாட்டின் பாதுகாப்பாளர்களாக எண்ணப் பட்டனர். இத்தலைவர்களின் ஆதரவிலேதான் புலவர்களும் பெரியோர்களும் வாழ்ந்து வந்தனர். நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம்! உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே. நீர் இல்லா விட்டால் உடம்புகளே இல்லை; இந்த உடம்பு களுக்கெல்லாம் உணவு கொடுக்காவிட்டால் உடம்பும் அழிந்து விடும். ஆதலால் உணவு கொடுத்தவர்கள் தாம், உடம்பில் வாழும் உயிரைக் கொடுத்து, அவ்வுடம்பைக் காக்கின்றவர்கள் ஆவார்கள் (புறம் 18) என்பது புறநானூற்றுப் பாட்டு. குடபுலவியனார் என்னும் புலவர் இவ்வுண்மையைக் கூறியுள்ளார். இதனால், உணவில்லா விட்டால் இவ்வுலகில் எந்த உயிரும் வாழமுடியாது என்ற உண்மையைக் காணலாம். உலகம் வாழ-உலகமக்கள் நாகரிகத்துடன் வாழ-அவர்கள் வாழ்க்கையிலே சலிப்பில்லாமல் ஊக்கத்துடன் முன்னேற உதவி செய்வது உணவு ஒன்றுதான். ஆதலால், முதல் முதலில், நாடாள்வோர் உடனடியாகக் கவனிக்க வேண்டியது உணவைப் பற்றித்தான். நாட்டிலே உணவுப் பண்டம் பெருக நாடாள்வோர் உதவி செய்ய வேண்டும். உணவுப் பண்டம் தாராளமாக உற்பத்தி யாவதற்கான சாதனங்களை யெல்லாம் நாடாள்வோரே நன்றாக அமைக்க முயலவேண்டும். பகுத்துண்ணும் வாழ்வு நாட்டிலே உணவுப் பொருள் உற்பத்தியானால் மட்டும் போதாது. உற்பத்தியான உணவுப் பண்டங்கள் ஓரிடத்தில் குவிந்து கிடந்தால் அதனால் மக்களுக்கு என்ன பயன்? உற்பத்தியான உணவுப் பண்டங்களை ஒரு சிலர் குவித்து வைத்துக் கொண்டிருந்தால் மக்களின் பசி நோய் பறந்தோடி விடுமா? உற்பத்தியான உணவுப் பண்டங்கள் நாட்டுமக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்; கிடைப்பதற்கான வழி வகைகள் காணப்பட வேண்டும். அப்பொழுது தான் மக்கள் அனைவரும் பட்டினியில்லாமல் வாழமுடியும். இதற்கு என்ன வழி? என்ன செய்யவேண்டும்? என்பதைப் பற்றிப் பண்டைத் தமிழறிஞர்கள் கூறியிருக்கின்றனர். பகுத்துண்டு பல்உயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்த வற்றுள் எல்லாம் தலை. பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, பல உயிர்களையும் கொல்லாமல் காப்பாற்றுவதே அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் அனைத்திலும் சிறந்த அறமாகும். (கு, 332) என்பது திருக்குறள். எல்லா மக்களும் பசியால் பரிதவிக் காமல், கிடைத்த உணவைப் பலரும் பகுத்துண்டு வாழ்வதுதான் சிறந்த வாழ்வு; இது தான் மனித சமுதாயம் வேதனைப்படாமல் வாழ்வதற்கு வழி; என்பது வள்ளுவர் கருத்து. பண்டைத் தமிழர்கள் - உலக மக்கள் பின்பற்றுவதற்கான அறநூலை வகுத்தவர்கள் - கண்ட உண்மையையே வள்ளுவர் இவ்வாறு சுருக்கிக் கூறினார். துகள்தீர் பெரும்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோடு உண்க. குற்றமற்ற செல்வம் தோன்றிய காலம் தொடங்கி-கிடைத்தகால முதலே - உழுது பயிர் செய்து பெற்ற உணவைப் பலருடன் கூடியிருந்து உண்ணுக என்பது நாலடியாரின் இரண்டாவது பாட்டு. இதுவும் மேலே காட்டிய திருக்குறளின் கருத்தையே வலியுறுத்துவதைக் காணலாம். மேலே காட்டிய குறளும், நாலடியும் எக்காலத்துக்கும் ஏற்றதொரு உண்மையை எடுத்துரைத்தன. உணவு உற்பத்தி பெருகிவிட்டது; மக்கள் தொகைக்குப் போதுமான அளவு தானியங்கள் விளைந்து விட்டன; இனிப் பஞ்சம் இல்லை; என்று புள்ளிக்கணக்குப் போடுவதால் மட்டும் பயன் இல்லை; விளைந் திருக்கும் உணவுப் பண்டம் எல்லா மக்களுக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும். இவ்வுண்மையை அவை எடுத்துரைத்தன. இவ்வுண்மை எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையன்றோ? பசிக்கொடுமை மனித சமுதாயத்தில் புரையோடும் புண்ணாக இருப்பது வறுமைதான்; வறுமையின் உச்சநிலை உணவில்லாமல் உள்ளமும் உடம்பும் வாடிச் சோர்வதுதான். உணவுண்டுக் கவலையில்லாமல் வாழும் சமுதாயத்தில்தான் ஒழுக்கம் நிலைத்திருக்கும். கலைகள் காவியங்கள் கவிதைகள் வளரும். மக்களிடையே மகிழ்ச்சியும், இன்பமும் நடமாடும். பஞ்சத்தால் மெலியும் சமுதாயத்திலே - நாட்டிலே - பஞ்சத்தில் அடிபடும் தனி மனிதர்களும், நன்மை தீமை யென்று பாராமல் தாம் உயிர் பிழைக்க எதையும் செய்யத் துணிவார்கள். இந்த உண்மையை உணராதவர்கள், சோறு பெரிதன்று; மானந்தான் பெரிது; மானத்தைக் காப்பாற்ற முயல்வோம்; சோற்றுப் பஞ்சத்தைப் பற்றிப் பிறகு ஆலோசிப்போம் என்று சொல்லுவார்கள். மானத்தைக் காப்பதும், மானத்தை அழிப்பதும் உணவு தான் என்ற உண்மையை இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. பசிக் கொடுமையை உணராதவர்களே இப்படிச் சொல்லி, ஏழை மக்களின் எழுச்சிக்கு முட்டுக்கட்டை போட முயல்கின்றனர். பட்டினிப் பட்டாளத்தின் எதிரில் இவர்களுடைய பேச்சு நிலைக்காது; அவர்கள் இந்தப் பேச்சை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். பசிப்பிணியின் கொடுமையை நமது முன்னோர்கள் நன்றாக அறிந்தவர்கள். அதனால் சமுதாயமும், தனி மனிதரும் அடையும் துன்பத்தை அவர்கள் கண்ணாரக் கண்டவர்கள். அவர்கள் கண்டறிந்த உண்மையை ஒரு உதாரணத்தால் காணலாம். பசிப்பிணியைப் போலக் கொடிய பாவி ஒருவனும் இல்லை. உயர்ந்த குடியிலே பிறந்தவனாயினும் சரி, அவனுடைய பெருமையை அழித்துவிடும். அவனிடத்திலே எவ்வளவு சிறப்பி ருந்தாலும் அவற்றை அடியோடு அழித்துவிடும். தீமையென்னும் கடலைக் கடந்து, நன்மையென்னும் கரையை அடைவதற்குத் தெப்பமாக இருந்து உதவுவது கல்விதான். அத்தகைய கல்வியின் பயனையும் பசிப்பிணியாவது அழித்துவிடும். நாணம் ஒன்று தான் மனிதனுக்கு அழகு தரும் ஆபரணம். பசிப்பிணி அந்த நாணத்தையும் அழித்துவிடும். சிறந்த அழகையும் கெடுத்துவிடும். தன் மனைவியுடன் பிறர் வீட்டு வாசலிலே போய் நின்று பிச்சை ஏற்கும்படி செய்யும். பசி நோய் என்னும் கொடிய பாவியின் செய்கை இதுவாகும்.: *குடிப்பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்; நாண் அணி களையும்; மாண்எழில் சிதைக்கும்; பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்; பசிப்பிணி என்னும் பாவி. என்பது மணிமேகலை. சமுதாய வாழ்வைச் சீர்குலைக்கும் கொடும் பாவியாகப் பசிப்பிணியை உருவகித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பசிப்பிணியின் கொடுமையை விளக்கவே - மனித சமுதாயத்தைப் பசிநோய் இன்றி வாழ வைக்க வேண்டும் என்ற உண்மையை விளக்கவே - மணிமேகலை யென்னும் ஒரு காவியமே பிறந்திருக்கின்றது. இந்த உண்மையைப் பிற்காலத்து நீதிநூல்களும் வலியுறுத்தி யிருக்கின்றன. மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசிவந்திடப் பறந்து போம் பசிப்பிணி மிகுந்துவிட்டால் - அதைத் தணித்துக் கொள்ள முடியாவிட்டால் - பசியால் பிணிக்கப்பட்ட மனிதனுடைய மானம் அழியும்; குலப்பெருமை குன்றிவிடும்; அவன் கற்ற கல்வியும் அவனைக் கைவிடும்; அவன் பிறருக்குக் கொடுக்கும் இயல்பற்றவன் ஆவான்; அவனுடைய அறிவு கெடும்; உயர்ந் தோருக்கு உதவுவது பற்றி எண்ணவே மாட்டான்; தவத்தில் அவன் மனம் நாடாது; உயர்ந்த நிலையிலிருந்து இழிந்த நிலையை அடைவான்; முயற்சியற்ற சோம்பேறியாகி விடுவான்; இனிய மொழி பேசும் பெண்களின்மேல் வைத்த காதலையும் கைவிடுவான். பசிவந்தால் மானம் முதலிய இந்தப் பத்துப் பண்புகளையும் மனிதன் இழப்பான்; இவற்றைக் கைவிடாம லிருக்க எவ்வளவு முயன்றாலும் முடியாது. அவைகள் தாமாகவே மறைந்து போய் விடும். இது நல்வழிப் பாட்டு; நமது உள்ளத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் பாடல்; பள்ளிக்கூடத்தில் நாம் படித்த செய்யுள், ஆயினும் பலர் இப்பாடலைப் பற்றி அவ்வளவாகச் சிந்திப்பதில்லை. உணவுப் போராட்டத்தைப் பற்றிப் பரிகசிப் போர் இப்பாடலை நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். மேலே எடுத்துக்காட்டப்பட்ட மணிமேகலை அடிகளும், நல்வழிப் பாட்டும் பசிப்பிணியால் மக்கள் படும் வேதனையை விளக்கிக் காட்டின. அப்பாடல்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் ஒரு தனி மனிதனுக்கும் பொருந்தும்; ஏன், ஒரு சமுதாயத்திற்கும் பொருந்தும்; ஒரு நாட்டுக்கும் பொருந்தும்; ஏன்? இந்த உலகமே ஒப்புக் கொள்ளும் உண்மை என்பதில் ஐயம் இல்லை. மேலே காட்டிய புறநானூற்றுப் பாட்டின் பகுதியும் குறளும், நாலடியும், மக்கள் அனைவருக்கும் உணவளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. அடுத்தாற் போல் குறிப்பிட்ட மணிமேகலை அடிகளும், நல்வழிப் பாட்டும் மக்களிடையே பசிப்புயல் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதை அறிவித்தன. பசிப்புயல் தடுக்கப்படாமல் அலட்சியம் செய்யப்பட்டால், மக்கள் வாழ்வு என்ன ஆகும் என்பதையும் எடுத்துக்காட்டின. சமத்துவ வாழ்வு பட்டினிப் பட்டாளம் ஒழிய வேண்டுமானால் பொருளாதார சமத்துவம் ஏற்பட்டாக வேண்டும். ஒரு சில மனிதர்கள் உழைத் தாலும் - பாடுபட்டாலும் போதுமான உணவில்லாமல் பட்டினி கிடந்து சாவது; என்ற நிலைமாறவேண்டும். எல்லோர்க்கும் உணவு, உடை, இடம், வாழ்க்கை, இன்பம் இவைகள் கிடைத் தால் தான் நாட்டிலே சாந்தியும் சமாதானமும் நிலைத்திருக்கும். இந்த உண்மையை நமது முன்னோர்கள் அறிந்திருந்தனர். ஆதலால்தான் அவர்கள், இல்லாத மக்களுக்குச் சோறு போடுவது, உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய உயர்ந்த தர்மம்; இல்லறத்தார் கடமை என்று கூறி வந்தனர். இல்லாதவர்களும் இவ்வுலகில் வாழவேண்டும்; உள்ளவர் களும் இவ்வுலகிலே வாழவேண்டும்; இவ்விரு பிரிவினரும் நிலையாக இருக்கவேண்டும்; என்று நம் முன்னோர்கள் விரும்பவில்லை. மக்களிடையே சமத்துவத்தை ஒற்றுமையை ஒன்றுபட்ட வாழ்வை - விரும்புவோர் சமுதாயம் இரு பிரிவாக வாழவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள். இரப்போரும், ஈவோரும் இல்லாத ஒரு சமுதாயமாக மக்கள் வாழவேண்டும் என்பதே முனனோர்களின் கொள்கை. நல்ஆறு எனினும் கொளல்தீது; மேல்உலகம் இல்எனினும் ஈதலே நன்று பிறரிடம் பொருள் பெற்றுக்கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும், ஏற்றுக்கொள்ளுதல் தீமையாகும்; மேல் உலகம் கிடைப்பதில்லை என்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே சிறந்ததாகும். (குறள் 222) இத்திருக்குறள், பிறரிடம் பிச்சை வாங்குவோர் இந்நாட்டில் இருத்தல் கூடாது என்ற கருத்தையே உரைத்தது. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகியற்றி யான் உலகைப் படைத்தவன், இரந்தும் உயிர் வாழ்வதை விரும்பி உயிர்களைப் படைத்திருப்பானாயின், அவனும், அவ்விரப் போரைப் போலவே அலைந்து அழிக. (குறள் 1062) இக்குறளும், இவ்வுலகில் எந்த மக்களும் பிச்சை யெடுத்து வாழும்படி படைக்கவில்லை; என்ற உண்மையை உரைத்தது. பிறரிடம்-செல்வம் உள்ளவர்களிடம் பல்லைக்காட்டிக் கையேந்திப் பொருள் பெறுவது; மனிதத் தன்மையே அன்று; என்று கூறிற்று இக்குறள். பிறரிடம் பிச்சையேற்றலைப் பற்றிப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று அழகாகச் சொல்லுகின்றது. *ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று; கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று. பொருள் உள்ளவரிடம் பொருள் கொடு என்று கேட்டு யாசிப்பது இழிவானது. அப்படிக் கேட்போரிடம், கொடுக்க மாட்டேன் என்று சொல்லுதல் இரப்பதைவிட இழிவாகும். பிறர் கேட்டதை வாங்கிக் கொள்க என்று கொடுப்பது உயர்ந்தது; அப்படிக் கொடுக்கும் போது வாங்கிக்கொள்ள மாட்டேன் என்று மறுப்பது கொடுப்பதை விட உயர்ந்ததாகும். (புறம் 204) இந்தப் புறநானூற்றுப் பாட்டும் இரத்தலின் இழிவை எடுத்துக் காட்டிற்று. ஈவோரும் இரப்போரும் அற்ற சமுதாயம் தோன்ற வேண்டும் என்பதே இதன் கருத்து. எல்லோரும் எல்லாப் பெரும்செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ. எல்லாரும் எல்லாப் பெரிய செல்வங்களையும் அடைந்திருக் கின்றனர்; ஆதலால் அந்த நாட்டில் பொருள் இல்லாத ஏழை களும் இல்லை; பொருள் படைத்த செல்வர்களும் இல்லை. என்று கம்பர் கூறினார். கம்பர் காலத்துச் சமுதாயம் இந்த நிலையில் இருந்ததா இல்லையா என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனால், எல்லா மக்களும், எல்லாச் செல்வங்களும் பெற்று, உயர்வு தாழ்வற்ற ஒரே சமுதாயமாக வாழவேண்டும் என்பதே கம்பர் கருத்தாகும். இத்தகைய சமுதாயம் ஏற்பட்டால், பட்டினிப் பேய்க்கு மனித சமுதாயத்தில் வேலையில்லை. தனி ஒருவனுக்கு உணவிலைஎனில் - இந்தச் சகத்தினை அழித்திடுவோம் என்று பாரதியார் பாடியதும், பழந்தமிழர் பண்பாட்டை ஒட்டியதுதான். பழந்தமிழர் பண்பாட்டு உணர்ச்சியே அவரை இவ்வாறு பாடத் தூண்டியது என்பதில் ஐயம் இல்லை. எல்லா மக்களும் பட்டினியின்றி வாழ வழி செய்ய வேண்டும். நாட்டிலே உற்பத்தியாகும் உணவுப்பொருள் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும். மக்கள் பட்டினியால் பரிதவிப் பார்களானால் சமுதாயக் கட்டுக்கோப்புக் குலைந்துவிடும். ஆதலால் மக்களிடையே பசிப்பிணி பரவாமல் தடுப்பதே முதல்வேலை யாகும். இந்த நிலை தோன்ற வேண்டுமானால் பொருளாதார உணர்வு தாழ்வற்ற சமுதாயமாக, நமது மனித சமுதாயம் அமைய வேண்டும். இவைகள் நமது முன்னோர்களின் கருத்து என்பதை மேலே கூறியவையகளால் காணலாம். உலகம் போற்றும் தமிழர் உலகம் ஒன்றே பண்டைத் தமிழ் மக்கள் உலக மக்களையெல்லாம் ஒன்றாகவே எண்ணினர்; அவர்கள் நாட்டு வேற்றுமை பாராட்ட வில்லை; இனவேற்றுமையைப் பற்றி எண்ணவேயில்லை. மொழிவேற்றுமையைப் பற்றிப் பேசவில்லை. எல்லா நாட்டு மக்களையும், எல்லா இனத்தினரையும் எல்லா மொழியினரையும் ஒன்றாகவே கருதினர். உலகிலே வாழும் எல்லா மக்களும் இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்பதே பண்டைத் தமிழர்களின் நோக்கம். பழந்தமிழ் நூல்களிலே தமிழர்க்குரிய நீதி இது; தமிழர் அல்லாதார்க்குரிய தமிழர் ஒழுக்கம் இது என்று வேறுபடுத்திப் பேசவேயில்லை; உலக மக்கள் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்க நல்ல நெறி களையே கூறியிருக்கின்றன. உலக மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க நல்ல நெறிகளையே பாராட்டிச் சொல்லியிருக் கின்றனர். பழந்தமிழ் நூல்களைக் காண்போர், அவைகளை விருப்பு வெறுப்பில்லாமல் ஆராய்வோர், இவ்வுண்மையைக் காணலாம். உலகத்தை முன்வைத்தல் புலவர் மரபு உலகம் என்ற சொல்லையே தமிழர்கள் போற்றிப் புகழ்ந் தார்கள். இச் சொல்லை மங்கல மொழியாகக் கொண்டனர். உலகம் என்ற சொல்லை முதலில் வைத்து எழுதப்படும் பாடல் களை யெல்லாம் தெய்வத்தன்மை பெற்ற பாடல்களாகக் கொண்டனர். பழந்தமிழர்கள் உலகத்தைக் குறுகிய கண்கொண்டு காணவில்லை. பரந்த நோக்கமுடன் உலகம் முழுவதையும் பார்த்தனர். இவ்வுண்மையை விளக்கும் எண்ணற்ற சான்றுகள் தமிழ் இலக்கியங்களிலே இருக்கின்றன. உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு உலகம் மகிழ்ச்சியிலே திளைக்கும்படி வெற்றியுடன் எழுந்து வானத்திலே திரியும் ஞாயிறு; உலக மக்கள் பலராலும் போற்றிப் புகழும் கதிரவன் என்பது திருமுருகாற்றுப்படை; உலகத்திற்கு - உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் கதிரவன் என்று சூரியன் போற்றப்பட்டான். திங்களைப் போற்றுதும்; திங்களைப் போற்றுதும்; கொங்கு அலர்தார் சென்னி குளிர்வெண் குடை போல் இவ் அம்கண் உலகு அளித்தலான் மணம் வீசும் மலர் மாலையை அணிந்த சோழ மன்னனுடைய குளிர்ச்சியான வெண் கொற்றக் குடை இவ்வுலகைக் காப்பாற்று கின்றது. அதைப் போலவே சந்திரனும், மக்களுக்குக் குளிர்ச்சியை அளித்து இவ்வுலகைக் காக்கின்றது; ஆதலால் அத்தகைய சந்திரனைப் போற்றுவோம்; சந்திரனைப் போற்றுவோம். இது சிலப்பதிகாரத்தின் கடவுள் வாழ்த்து. உலகுக் கெல்லாம் குளிர்ச்சியை உதவுகின்ற காரணத்தால் சந்திரன் போற்றப்பட்டான். அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எழுத்துக்கள் எல்லாம் அ என்னும் எழுத்தைத் தலைமையாகக் கொண்டன; அதுபோல் இவ்வுலகம் ஆதி பகவனாகிய கடவுளைத் தலைமையாகக் கொண்டது. இத்திருக்குறள் உலகம் ஒரே கடவுளின் படைப்பு. உலகத்தின் தலைவன் ஆதிபகவன் ஒருவனே; ஆதலால் உலகை - உலகில் வாழும் உயிர்களை - ஒன்றாகக் கருதவேண்டும் என்னும் கருத்தையே அடிப்படையாகக் கொண்டது. சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாடத் தொடங்கிய போது, எப்படித் தொடங்குவது என்று திகைத்தார். உடனே உலகெலாம் என்று சிவபெருமான் அடியெடுத்துக் கொடுத்தார். அதை வைத்துக்கொண்டே உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்று தொடங்கிப் பெரியபுராணத்தைப் பாடி முடித்தார் என்பது கதை.உலகம் மங்கலச் சொல் என்பதை விளக்குவதே இக்கதையின் கருத்து. கம்பர், தமது இராமாயணத்தைப் பாடத்தொடங்கிய போது உலகம் யாவையும் தாம்உள வாக்கலும் என்று தான் தொடங்கியிருக்கின்றார். சேக்கிழாரும் கம்பரும் உலகம் ஒன்று என்ற கருத்துள்ள வர்கள் என்பதையே இவைகள் காட்டுகின்றன. உலகம் என்ற சொல்லை எவ்வளவு அருமையாக - உயர்வாகப் போற்றினார்கள் என்பதற்கு மேலே காட்டிய சான்றுகள் போதுமானவை. உலகத்தோடு ஒட்டி வாழ்தல் பண்டைத் தமிழர்கள் உலக மக்களுடன் ஒன்றாக இணைந்து வாழ்வதையே விரும்பினர்; ஒன்றாக இணைந்து தான் வாழ்ந்து வந்தனர். இதனை விளக்கப் பல சான்றுகள் இருக்கின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர் எல்லாவூரும் நமது ஊர்தான்; உலகில் உள்ள எல்லா மக்களும் நமது உறவினர்தாம். இது புறநானூற்று 192 ஆவது செய்யுளின் முதல் அடி. இது தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டை விளக்கும் சிறந்த பாட்டு. யாதானும் நாடுஆம்ஆல், ஊர்ஆம்ஆல், என் ஒருவன் சாந்துணையும் கல்லாத ஆறு. (கு. 379.) கற்றவனுக்கு இன்ன நாடுதான் சொந்தம்; இன்ன ஊர் தான் சொந்தம் என்று பிரித்துக் கூறுவதற்கில்லை. எந்த நாடானாலும் அது அவனுக்குச் சொந்தமான நாடுதான்; எந்த ஊரானாலும் அது அவனுக்குச் சொந்தமான ஊர்தான்; இப்படியிருக்கும் ஒருவன் இறக்கும் வரையிலும் கல்விகற்காமல் காலங் கடத்துவது ஏன்? இக்குறள், கற்றவர்கள் எந்நாட்டினராயினும், எம் மொழி யினராயினும், எவ்வினத்திராயினும், அவர்கள் உலகுக்கே பொதுவானவர்கள்; அவர்களுக்கு எந்நாடும் எவ்வூரும் சொந்தம்; உலகமக்கள் அனைவரும் உறவினர்கள் என்ற உண்மையையே எடுத்துக்காட்டிற்று. *நல்லார்க்கும் தம்மூர் என்று ஊர்இல்லை; நல்நெறிச் செல்வார்க்கும் தம்ஊர் என்று ஊர்இல்லை; - அல்லாக் கடைகட்கும் தம்ஊர் என்றுஊர்இல்லை; தம்கைத்து உடையார்க்கும் எவ்வூரும் ஊர். கல்வி அறிவுள்ள நல்லவர்களுக்கும் தமக்குச் சொந்தமான ஊர் என்று ஒரு ஊரும் இல்லை; எல்லா ஊர்களும் இவர்களுடைய ஊர்கள்தாம். நல்வழியிலே நடக்கும் பெரியோர்க்கும் தமக்குச் சொந்தமான ஊர் என்று ஒரு ஊரும் இல்லை; எல்லா ஊர்களும் அவர்களுடைய ஊர்கள்தாம். பெரியோர் அல்லாத கீழ் மக்களுக்கும் தமக்குச் சொந்தமான ஊர் என்று ஒரு ஊரும் இல்லை; அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் மக்களால் வெறுத்து விரட்டப்படுவார்கள். தமது கையிலே செல்வம் உள்ளவர்க்கும் எல்லாவூரும் சொந்த ஊர்தான்; அவர்கள் தம் செல்வத்தைக் கொண்டு எந்தவூர் மக்களின் நட்பையும் உதவியை யும் தேடிக் கொள்ளமுடியும். இவ்வெண்பா நான்மணிக்கடிகையில் உள்ள அரிய வெண்பா. உலகமக்களின் ஒன்றுபட்ட கருத்தையும் - ஒழுக்கத் தையும் விளக்கும் பாடல் இது. கற்றறிந்தவர்களும், நல்ல நடத்தையுள்ள பெரியோர்களும் எந்நாட்டினராயினும், எவ்வினத்தினராயினும், எம் மொழியினராயினும் உலகம் அவர்களைக் கொண்டாடும். கடைப்பட்டவர்கள் உலக மக்களால் வெறுக்கப்படுவார்கள். செல்வம் படைத்தவர்கள் எங்கே சென்றாலும் மக்களின் மதிப்பைப் பெற்று வாழ்வார்கள். இந்த நிலை இன்றும் இவ்வுலகில் இருப்பதைக் காண்கிறோம். மேலே காட்டியவைகளால், உலகம் ஒன்றுபட்டு இணைந்துதான் வாழ்கின்றது என்ற உண்மையை உணரலாம். உலகப் பொதுநூல் குறள் திருக்குறள் தலைசிறந்த நீதி நூல்; தலை சிறந்த தமிழ் இலக்கியம். அதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானவை. இவ்வுண்மையை இன்று அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். திருக்குறள் ஆசிரியரான திருவள்ளுவர், தமிழர்களுக்காக என்று எந்தத் தனி நீதியும் சொல்லவில்லை; தமிழ்நாட்டுக் கென்று எவ்விதத் தனி ஒழுக்கத்தையும் சொல்லவில்லை. உலக மக்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ளக்கூடிய தர்மங்களையே திரட்டிக் கூறியிருக்கின்றார். திருக்குறளை நடுநிலையில் நின்று படிப்போர் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள். திருக்குறள் உலகப் பொதுநூல் என்று தான் முடிவு கட்டுவார்கள். இதை விளக்கச் சில உதாரணங்களைக் காண்போம். விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து உள்நின்று உடற்றும் பசி (கு. 13.) மழை பெய்யாமல் பொய்க்குமானால், கடல் சூழ்ந்த பெரிய உலகமாக இருந்தாலும், பசி இவ்வுலகின் உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். ஊர் உணி நீரிநிறைந்து அற்றே உலகு அவாம் பேர்அறி வாளன் திரு (கு. 215.) உலகத்தார் விரும்பும்படி வாழ்கின்ற சிறந்த அறிவுள்ளவனது செல்வம், தடாகத்திலே நீர் நிறைந்திருப்பது போன்றதாகும். வசையென்ப வையத்தார்க்கு எல்லாம்; இசை என்னும் எச்சம் பெறாஅ விடின். (கு. 238.) புகழ் என்று சொல்லப்படும் தமக்குப் பின் மீதமாயிருக்கும் செல்வத்தைப் பெறாவிட்டால், இவ்வுலகில் வாழ்வோர்க் கெல்லாம் அது பழிப்புக்குரியதாகும். நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்துஇவ் உலகு (கு. 336.) இவ்வுலகம், நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லை; இறந்தான்; என்று சொல்லக் கூடிய பெருமையை உடையது. எவ்வது உறைவது உலகம்; உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (கு, 426.) உலகம் எவ்வாறு நடக்கின்றதோ, அவ்வாறு உலகத்தோடு சேர்ந்து வாழ்வதே அறிவாகும். இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு தனக்கு ஓர் அவமானம் வந்தால், உயிர்வாழாத மானம் உள்ளவரின் புகழை உலகத்தார் வணங்கிப் போற்றுவார்கள். திருவள்ளுவர் உலகத்தை ஒன்றாக வைத்துத்தான் - ஒரே உலகமாக எண்ணித்தான் தமது அறங்களைக் கூறியிருக்கின்றார். இதற்கு, மேலே எடுத்துக்காட்டிய சில குறள்களே போதும். இத்தகைய திருக்குறளை வைத்துக்கொண்டு, நாட்டு வேற்றுமை, இனவேற்றுமை, மொழி வேற்றுமை பேசுவதற்கு இடமே இல்லை. உலகம் ஒன்று என்னும் பழந்தமிழ்ப் பண்பாட்டுக்குத் திருக்குறள் ஒன்றே சான்றாக நிற்பதைக் காணலாம். திருக்குறள் படிப்போர் இவ்வுண்மையை மனங்கொள்ள வேண்டும். சமயத் தலைவர்களின் ஆவல் தமிழ் நாட்டிலே வாழ்ந்த சமயத் தலைவர்களும், உலகம் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றே விரும்பினர். அவர்கள் தங்கள் ஆன்ம விடுதலையை - இன்பத்தை - வேண்டி இறை வனைப் பாடினர்; ஆயினும் உலக மக்களும் இன்புற்று வாழ வேண்டும் என்பதை அவர்கள் மறந்து விடவில்லை. வாழ்க அந்தணர்; வானவர்; ஆன்இனம்; வீழ்க தண்புனல். வேந்தனும் ஒங்குக; ஆழ்க தீயது எல்லாம்; அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே. என்பது திருஞான சம்பந்தர் தேவாரம். சமயாச்சாரியார்களும் பண்டைத் தமிழர் பண்பாட்டை மறந்து விடவில்லை என்பதற்கு இத்திருப்பாட்டு ஒன்றே போதுமானது. உலகத்தில் வாழும் எல்லாவுயிர்கள்பாலும் இரக்கம் காட்டுவோர் அந்தணர்; அவைகளின் நல்வாழ்வுக்காகவே தந்நலமின்றிப் பணிபுரிவோர் அந்தணர். இத்தகையோர் வாழும் நாடே - இத்தகையோரைக் கொண்ட சமுதாயமே - உயர்ந்த நாடாக, உயர்ந்த சமுதாயமாக வளர்ச்சியடைந்து வாழும். ஆதலால் தான் வாழ்க அந்தணர் என்று வாழ்த்தினார் சம்பந்தர். வானவர்கள் என்பவர்கள் உயர்ந்த பண்புள்ளவர்கள்; அறிவு நிரம்பியவர்கள். அவர்கள் நாட்டிலே வாழ்ந்தால்தான் நாட்டுக்கு நன்மையுண்டு. ஆதலால் தான் வாழ்க வானவர் என்று குறித்தார். ஆன் இனம் - பசுக்கள் கூட்டம்; மக்களுக்கு நல்ல வளமான பாலைக் கொடுத்து அவர்களைக் காப்பவை பசுக்கள். பசும் பாலின் உயர்வு இன்றும் பாராட்டப்படுகின்றது; குழந்தைகள், முதியவர்கள் அனைவர்க்கும் ஆரோக்கியம் அளிக்கும் நல்ல உணவு பசும்பாலாகும். இக்காரணத்தால் தான் பண்டைக்கால மக்கள் பசுவையே சிறந்த செல்வமாக வைத்துப் பராமரித்து வந்தனர். ஆதலால்தான், வாழ்க ஆன் இனம் என்று வாழ்த்தினார். உலகத்தில் பஞ்சம் தோன்றாமலிருக்க வேண்டும்; நீர்வளம் குறையாதிருக்க வேண்டும்; காலமழை பெய்யாவிட்டால் நீர்வளம் குறையும். நீர்வளம் குன்றினால், உணவுப் பொருள் விளையாவிட்டால், உலகிலே பஞ்சம் தலைவிரித்தாடும்; பஞ்சம் தலைதூக்கினால் வீழ்க தண்புனல் (மழை பெய்க) என்று பாடினார். நாட்டிலே நல்ல அரசாட்சி நிலவவேண்டும்; அயோக்கியர் களை அடக்கி, நல்லவர்களைக் காப்பது ஆட்சியின் முதற் கடமை; பண்டைக் காலத்தில், வேந்தர்கள் இக்காரியத்தைச் செய்து வந்தனர். இக்காலத்தில் மக்கள் அரசு இக்காரியத்தைச் செய்து வந்தனர். ஆதலால் வேந்தனும் ஓங்குக என்று பாடினார் சம்பந்தர். அரசனே ஆளுதற்கு உரியவன் என்ற கொள்கை நிலைத்திருந்த காலத்தில் இருந்தவர், அக்கால நிலையை ஒட்டியே வேந்தனும் ஓங்குக என்று பாடினார். உலகில் உள்ள தீமைகள் எல்லாம் ஒழிந்து போக வேண்டும். தீமைகள் மறைந்தால்தான், மக்கள் தீயநெறியிலே செல்ல மாட்டார்கள். இதனால்தான். ஆழ்க தீயது எல்லாம் என்று பாடினார். உலகம் முழுதும், கடவுள் நம்பிக்கையும் கடவுளின் பெயரும் பரவியிருக்க வேண்டும். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ள வர்கள் ஒழுக்கநெறி தவறமாட்டார்கள். பிறரைத் துன்புறுத்தத் துணியமாட்டார்கள். அனைவரிடமும் அன்பு காட்டி அற நெறியிலே நடப்பார்கள். ஆதலால்தான் அரன் நாமமே சூழ்க என்று பாடினார். அந்தணர்கள், வானவர்கள், ஆன் இனம் இவர்கள் நன்றாக வாழ்ந்தால் - கால மழை தவறாமல் பெய்தால் - ஆட்சியும் அறநெறியிலே நடந்தால் - தீமைகள் எல்லாம் மறைந்தால் - உண்மையான தெய்வ பக்தி பரவிநின்றால் - இவ்வுலகிலே துன்பமே இல்லை; இன்பந்தான் நிலவும். உலக மக்களும், ஏனைய உயிர்களும் சமாதானத்துடன் வாழ்வார்கள். இந்த உண்மையையே வையகமும் துயர் தீர்கவே என்ற தொடர் விளக்கி நிற்கின்றது. இப்பாடலால், உலகெலாம் துன்பம் இல்லாமல் இன்பத் துடன் வாழவேண்டும் என்பதே தமிழகத்துப் பக்திமான்களின் கருத்தென்பதைக் காணலாம். பிற்காலத்துப் பெரியோர்கள் தாயுமானார், தாம்கண்ட இன்பத்தை அனுபவிப்பதற்கு உலக மக்களையெல்லாம் கூவி அழைக்கின்றார். *காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்; அகண்டா காரசிவ போகம் எனும் பேரின்பவெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏகஉருவாய்க் கிடக்குதையோ! இன்புற்றிட நாம் இனிஎடுத்த தேகம் விழும்முன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே என்பது தாயுமானார் பாட்டு. தாயுமானவர் பாடல் முழுவதும் இக்கருத்துக் கலந்துகிடப்பதைக் காணலாம். காகமானது, தான் கண்ட உணவை, மற்றக் காகங்களுடன் உறவுகொண்டு ஒன்றுகூடி உண்பதைக் கண்ணால் காண்கின்றீர்கள். எல்லையற்ற சிவபோகம் என்னும் பேரின்பவெள்ளம் பொங்கி நிறைந்து பரிபூரணமாகி ஒன்று திரண்டு கிடக்கின்றது. அது அனைவர்க்கும் பொதுவானது. அந்த இன்பத்தைக்கண்டு அனுபவிப்பதற்கு - அனுபவித்து இன்பம் அடைய-இனி நாம் பெற்ற உடம்பு மறைவதற்கு முன்பே உலகத்தில் உள்ளவர்களே! ஒன்று திரண்டு வாருங்கள் என்பதே மேலே காட்டிய தாயுமானவர் பாட்டின் பொருள். எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே என்பதும் அவர் அருள் மொழியாகும். பழந்தமிழர் பண்பே தாயுமானரை இவ்வாறு பாடச்செய்தது. **கள்ள வாதனை யைக் களைந்து அருள் நெறியைக் காதலித்து ஒருமையில் கலந்தே, உள்ளவாறு இந்த உலகெலாம் களிப்புற்று ஓங்குதல் என்றுவந்து உறுமோ! வஞ்சகம் பொருந்திய துன்பவாழ்வை நீக்கி, அன்புடன் வாழ்வதிலே ஆவல்கொண்டு, ஒன்றுபட்டு வாழ்வதிலே உளம் கொண்டு, உண்மையுடன் இவ்வுலக மெல்லாம் ஒன்றுபட்டுக் களிப்படைந்து, உயர்ந்து வாழக்கூடிய வாழ்வு எக்காலத்தில்தான் உண்டாகுமோ? இவ்வாறு இராமலிங்க சுவாமிகள் பாடுகிறார்கள். உலக மெல்லாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும்; உலக மக்கள் எல்லாம் சமரச சன்மார்க்க நெறியிலே வாழ வேண்டும்; என்பதே அவர் நோக்கம். இக்கருத்துள்ள ஏராளமான பாடல்களை அவருடைய அருட்பாவிலே காணலாம். இராமலிங்கரின் இக்கருத்து பண்டைத் தமிழர் பண்பாட்டின் வளர்ச்சி என்பதில் ஐயம் இல்லை. என்றன் பாட்டுத் திறத்தாலே இவ் வையத்தைப் பாவித்திட வேண்டும். என்னுடைய பாட்டின் சக்தியால் இந்த உலகத்தையே காப்பாற்ற வேண்டும் வயிற்றுக்குச் சோறிடவேண்டும், இங்கு வாழும் மனிதருக் கெல்லாம் பயிற்றிப் பலகல்வி தந்தே - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கெல்லாம் சோறுபோட வேண்டும், அவர்களுக்குப் பல கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த உலகத்தையே உயர்ந்த நிலையில் வாழச் செய்ய வேண்டும். இவைகள் பாரதியார் பாடல்கள். பண்டைத் தமிழர்களின் பண்பாட்டை ஒட்டி, உலக மக்கள் அனைவரும் உயர்ந்து வாழ வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். பாரதியார் பாடல் களில் இக்கருத்துள்ள பாடல்கள் பலவற்றைக் காணலாம். மேலே சொல்லியவைகளைக் கொண்டு, தமிழர்களின் சிறந்த பண்பாட்டைக் காணலாம். தமிழர்கள் எந்தக் காலத்திலும் குறுகிய நோக்கம் கொண்டிருக்கவில்லை. தம் நலமே பெரிது என்று கருதி வாழவில்லை; அவர்கள் சாக்கடைப் புழுக்களாக வாழ விரும்பவில்லை. உலகத்தோடு ஒட்டியே, இணைந்தே வாழ விரும்பினார்கள். இந்த உண்மையை மறந்தவர்கள் அல்லது மறக்கின்ற வர்கள்தாம் இன்று தமிழகத்தில் வெறுப்பையும், பிளவையும் விதைத்து வருகின்றனர். தமிழர் நாகரிகம் தனிப்பட்டது. தமிழ் இலக்கியங்கள் தமிழர்களின் தனிப்பட்ட பண்பைக் கூறுகின்றன. தமிழர்கள் தனித்து வாழவேண்டும். தமிழ் இலக்கியங்கள் தனித்தமிழிலே பிறக்கவேண்டும். பிற இனத்தினர் மொழியினர் கூட்டுறவே தமிழர்க்குக் கூடாது என்று சொல்லிக் கொண்டு வருகின்றனர். இப்படித் தமிழரையும் தமிழர் நாகரிகத்தையும், தமிழ் மொழியையும் பிரித்துப் பேசுவோர் தமிழர்க்கு நன்மை செய்வோர் அல்லர்; தமிழ் நாகரிகத்தை வளர்ப்போர் அல்லர்; தமிழர் பண்பாட்டுக்கு மதிப்புக்கொடுப்பவரும் அல்லர். தமிழர் கண்ட நல்லறம் மனிதத் தன்மை பறவைகளும், விலங்குகளும் பிறரைப் பற்றிக் கவலைப்படுவ தில்லை. தம்முடைய பசிக்கு இரை தேடுவதற்கே ஓடியாடித் திரிகின்றன. உண்டு, உறங்கித் தம்மினத்தைப் பெருக்கி வாழ் கின்றன. அவைகளின் வாழ்வில் எத்தகைய மாறுதலையும் நாம் காண முடியாது. எண்ண முடியாத ஆண்டுகளாக அவைகளின் வாழ்க்கை ஒரே நிலையில்தான் இருக்கின்றது. மக்களுடைய வாழ்வு ஆண்டுக்கு ஆண்டு மாறிக்கொண்டே வருகின்றது. ஒரு காலத்தில் விலங்குகளைப் போலவே, பிறந்த மேனியாக மக்கள் வாழ்ந்தனர்; இயற்கையாக விளைந்த உணவுப் பொருள்களை உண்டு உறங்கினர்; நாளடைவில் அவர்கள் பல துறையிலும் வளர்ச்சியடைந்தனர். இன்று இயற்கைச் சக்திகளை யெல்லாம் அடக்கியாளக் கூடிய நிலையில் இருக்கின்றனர். வான மண்டலங்களின் குடியேறுவதற்கு வழி காண்கின்றனர். மக்கள் இவ்வாறு முன்னேறியதற்குக் காரணம், அவர் களிடம் உள்ள கலந்து வாழும் தன்மைதான். ஒருவர்க்கொருவர் உதவி செய்யும் குணந்தான்; தாம் துன்புற்றாலும் பிறர் துன்பத்தை நீக்குவதற்குத் துணிந்து பணிசெய்யும் பண்புதான்; நல்ல செயல்களைத்தான் செய்ய வேண்டும்; தீய காரியங்களைச் செய்யக் கூடாது; என்ற மனப்பான்மைதான். இப்பண்புகள்தாம் மனித இனத்துக்குரிய சிறந்த குணமாகும்; இவைகளைத்தான் மனிதத் தன்மையென்று ஆன்றோர்கள் கூறுகின்றனர். பண்டைத் தமிழர்கள், மனிதத் தன்மையைக் காப்பாற்று வதிலே முனைந்து நின்றனர். மனித சமுதாயத்தை ஒன்றெனக் கருதினர். மனித சமுதாயம் ஒன்றுபட்டு வாழவேண்டும்; உயர்ந்த நிலையில் வாழவேண்டும்; இதற்காக உழைப்பது தமது கடமை; என்று கருதினர். இவ்வுண்மையைப் புறநானூற்றுப் பாட்டு ஒன்று தெளிவாகத் தெரிவிக்கின்றது. இவ்வுலக வாழ்வு துன்ப வாழ்வுக்கு இடமானது; இவ் வுலகத்தில் வாழ்வதால் இன்பம் இல்லை; என்று இவ்வாறு உலக வாழ்வை வெறுத்துப் பேசுகின்றனர். இப்படிப் பேசுவது தவறு. இவ்வுலகில் - இவ்வுலக வாழ்வில் நிச்சயம் இன்பம் உண்டு. எப்படி என்றால் சொல்லுகிறேன் கேளுங்கள். இந்திரர்க்குரிய இனிய உணவு அமிர்தமாகும். அந்த அமிர்தமே கிடைப்பதானாலும், அறிஞர்கள் கிடைத்தற்கரிய இனிய உணவென்று கருதி அதைத் தனித்திருந்து உண்ண மாட்டார்கள்; பிறர்க்கும் கொடுத்துத் தாமும் உண்பார்கள்; யாரையும் வெறுக்கமாட்டார்கள். பிறர் அஞ்சத்தகுந்த துன்பத்தைக் கண்டால், தாமும் அத்துன்பத்துக்கு அஞ்சுவர்; தாமதமில்லாமல், அத்துன்பத்தை நீக்குவார்கள்; சோம்பியிருக்க மாட்டார்கள். புகழ் உண்டாக்கத்தக்க செயலானால் - தமது உயிர் போனாலும் சரி, அச்செயலைச் செய்து முடிப்பார்கள். பழிவரத் தக்க காரியத்தைச் செய்வதனால், இவ்வுலகம் முழுவதும் பரிசாகக் கிடைப்பதாயிருந்தாலும், அதைச் செய்யமாட்டார்கள். ஒருக்காலும் மனத்துயரத்தால் வருந்த மாட்டார்கள். இத்தகைய பெருந்தன்மை யுள்ளவர்கள்; தம்முடைய நன்மை ஒன்றையே கருதி முயலாதவர்கள். தம் கொள்கையிலே உறுதியுள்ளவர்கள். எப்பொழுதும் பிறர் நன்மைக்காகவே உழைக்கும் பண்புள்ளவர் கள். இத்தகையவர்கள் இவ்வுலகில் இருப்பதால் - வாழ்வதால் - இவ்வுலகிலே இன்பம் உண்டு; இது மறக்க முடியாத உண்மை. இவ்வாறு கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்னும் அரச குமாரன் ஒருவன் பாடியிருக்கிறான். அந்தப் பாடல் கீழ் வருவது: *உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத் தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்; துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சி புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின் உலகுஉடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்; அன்ன மாட்சி அனையர் ஆகித், தமக்குஎன முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே (புறம். 182) இதுவே மக்கள் பண்பை விளக்கும் பாட்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் இப்பண்பைப் பின்பற்றி வந்தனர் என்பதில் ஐயம் இல்லை. இந்தப் பாடல் தமிழ் நாட்டினர்க்கு மட்டும் கூறியதன்று; தமிழர்க்கு மட்டும் சொல்லியதன்று. உலக மக்கள் அனைவர்க்கும் எடுத்துரைப்பது போல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்று வாழ்தல் மனிதனாய்ப் பிறந்தவன், புகழ் பெறவேண்டுமானால் பலரும் போற்றக்கூடிய நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். புகழ் பெறாத மனிதன் பிறந்தும் பயன் இல்லை. இந்த உண்மையைத் தமிழ்நூல்கள் வற்புறுத்திக் கூறுகின்றன. இவ்வுலகிலே நாம் கண்ணால் காணும் பொருள்கள் அனைத்தும், என்றும் நிலைத்திருப்பன அல்ல; அழிந்து போகக் கூடியனதாம். அழிந்து போகக்கூடிய இத்தகைய உலகிலே, அழியாமல் நிலைத்து வாழ விரும்புகின்றவர்கள் தமது புகழை நிலைநிற்கும்படி செய்வார்கள்; அதன் பிறகுதான் இறப்பார்கள். அவர்கள் உடம்பு மறைந்தாலும், அவர்கள் புகழ் மறையாமல் நிற்கும். வறுமையால் வருந்தி வந்தோர்க்கு உதவி, அவர்களை வாழ வைப்பதுதான் புகழ் நிலைப்பதற்குரிய செயலாகும். கிடைப்பதற்குரிய சிறந்த செல்வத்தைப் பெற்றவர்கள் பலர் உண்டு; அவர்கள், வறுமை காரணமாகத் தம்மையடைந்து பொருள் வேண்டி இரந்தவர்களுக்கு ஒன்றும் கொடுக்கமாட்டார்கள். கொடாத காரணத்தால் அவர்கள், அச்செல்வர்கள், இறந்தபின் இவ்வுலகத்தை விட்டு அடியோடு மறைந்தே போய்விடுவார்கள். அவர்கள் இரப்போர்க்கு ஈந்து புகழ்பெற்ற பழமையான மக்களைப் போன்றவர்கள் அல்லர்; பெரியோர்கள் நடந்த வழியைப் பின்பற்றி நடக்கத் தெரிந்தவர்களும் அல்லர்; ஆதலால், அவர்களை மனிதப் பிறவியின் பயனைப் பெறாதவர்களே ஆவார்கள். இவ்வாறு பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் பாடியிருக்கிறார். *மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தன ரே; துன்அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈஇயா மையின் தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே. (புறம். 165). இதனால், புகழ்பெற்று வாழ்தலே சிறந்த வாழ்க்கை யென்று பண்டைத் தமிழர் எண்ணியிருந்தனர். இக்கருத்தைக் கம்பர் ஒரு செய்யுளில் அழகாக அமைத்துப் பாடியிருக்கின்றார். இவ்வுலகைவிட்டு இறந்துபோனவர்களை யெல்லாம் இறந்துபோனவர்கள் என்று சொல்லிவிடமுடியாது. எந்தையே உண்மையில் இறந்து போனவர்கள் யாரென்றால் சொல்லு கிறேன் கேளும்; மானத்திற்கு அஞ்சிச் செத்துப் போகாமல், பிறரிடம் சென்று கையேந்திப் பொருள் கேட்டுநிற்பவர்கள் தாம் உண்மையில் மாண்டு போனவராவார்கள். உண்மையில் செத்துப் போனார்களாயினும், வறியோர்க்குப் பொருள் கொடுத்து அவர்களைக் காத்தவர்கள். இவ்வுலகத்தில் நிலைத்து வாழ்ந்தவர்கள் ஆவார்கள்; அவர்களைத்தவிர வேறு யாரும் இவ்வுலகில் வாழ்ந்திருப்பவர்கள் அல்லர். *மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய் வீந்தவர் என்பவர்; வீந்தவ ரேனும் ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரோ. (கம்பரா. வேள்விப் படலம்) இவ்வாறு பிற்காலத்து நூல்கள் அனைத்தும், புகழுடன் வாழ வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியிருக்கின்றன. வினைப் பயன் புண்ணிய பாவங்களில் தமிழர்கள் நம்பிக்கை கொண்டி ருந்தனர். நல்வினைகளைச் செய்தோர் இறந்த பின் துறக்கம் புகுவர்; இன்ப வாழ்வை அடைவர். தீவினை செய்தோர், இவ்வுலகிலும் பலராலும் பழிக்கப்படுவார்கள்; மாண்டபின் நரகத்தை அடைந்தும் துன்புறுவார்கள். இத்தகைய நம்பிக்கை பழந்தமிழர்களிடம் நிலைத்திருந்தது. வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலையை அணிந்தவன், மிகுந்த புகழையுடைவன்; இத்தகைய உன் தந்தை இவ்வுலகிலே நல்வினைகள் பலவற்றைச் செய்தான். அந்த நல்வினைகளின் பயனை அங்கே சென்று அனுபவிக்கும் பொருட்டு, சுவர்க்க லோகத்தை அடைந்தான்; என்பது புறநானூற்றுப் பாட்டு. மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர், மலையமான் சோழிய ஏனாதி திருக்கிள்ளி என்பவனைப் பார்த்துப் பாடிய பாடலாகும். *சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன் ஈண்டுச் செய்வினை ஆண்டுச்சென்று உணீஇயர் உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் என்பதே மேலே கண்ட பொருள் அமைந்த பாடல். இதே கருத்தைக் கம்பர் விளக்கிக் கூறியிருக்கின்றார். புண்ணியம் புரிந்தவர்கள் இறந்தபின் அடைவது சொர்க்க லோகமாகும். இப்படிக் கூறுவது அரிய வேதம் உரைக்கும் உண்மைப் பொருளாகும். புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும்ஈது அருமறைப் பொருளே (கம்பரா. ந. ப.) புண்ணியம் புரிந்தோர்க்குத் துறக்கம் உண்டு என்பது வேதங் களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் நம்பினர் என்பதில் ஐயம் இல்லை. இன்புற்று வாழ்வதுதான் துறக்க வாழ்வு; துன்ப வாழ்வுதான் நரக வாழ்வு. இந்த இருவகையான வாழ்வும் இவ்வுலகிலேயே உண்டென்று சொல்லும் அறிஞர்களும் உண்டு. இவ்வுலகிலோ, அல்லது வேறு எங்கோ, புண்ணியம் புரிவோர் இன்புறுவதும், பாவம் புரிவோர் துன்புறுவதும் இயல்பாகும். இது மறுக்கமுடியாத உண்மை. உயிர்கள் தாம் செய்த நல்வினை தீவினைகளின் பயனை அனுபவித்தே தீரவேண்டும். அவைகளைத் தட்டிக் கழிக்க முடியாது என்பதே பழந்தமிழர்களின் நம்பிக்கை. கல்லிலே மோதி முழங்கிக்கொண்டு ஓடுகின்ற வளங் கொழிக்கும் பேர்ஆற்றின் நீர் எந்தப் பக்கம் ஓடுமோ. அந்தப் பக்கந்தான், அதில் இட்ட தெப்பமும் ஓடும். அது போல் நமது அரியவுயிரும், நாம் செய்த வினையின் வழியே செல்லும். இதனை நன்மை தீமைகளின் தன்மைகளை அறிந்த பெரியோர்கள் இயற்றிய நூலால் உணர்ந்து கொண்டோம். *கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூம் புணைபோல், ஆர் உயிர் முறைவழிப் படூஉம், என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் (புறம் 192.) என்பது கணியன்பூங்குன்றன் என்னும் புலவர் பாட்டு. இதனால் எல்லா உயிர்களும், அவைகள் செய்த வினைக்குத் தகுந்த பலனையே நுகர்கின்றன என்ற உண்மையைக் காணலாம். தமிழர்கள் இக்கொள்கையை உறுதியாக, உண்மையாக நம்பினர் என்பதையும் அறியலாம். இந்த நம்பிக்கையை உடையவர்கள். நல்வினையைத் தான் செய்ய முயற்சிப்பார்கள். தீவினையைப்-பிறர்க்குத் துன்பம் தரும் செயல்களை - பிறர் பழிக்கும் செயல்களைச் செய்ய அஞ்சு வார்கள்; செய்யமாட்டார்கள். ஆதலால் வினைப்பயனைப் பற்றிச் சான்றோர் பலரும் அழுத்தமாகக் கூறியிருக்கின்றனர். பயன்கருதாப் பணி காரியம் செய்ய மட்டுந்தான் உனக்கு அதிகாரம் உண்டு; அக்காரியத்தின் பலனைப் பற்றிச் சிந்திக்க உனக்கு அதிகாரம் இல்லை. நான் செய்யும் காரியத்துக்குப் பலன் வேண்டும் என்று கருதாதே. ஆனால் காரியம் செய்யாமல் இருக்க விரும்பாதே என்பது பகவத் கீதை (அத். 2 சு. 47). லாபத்தைப் பற்றிச் சிந்திக்காமல் - லாபத்தை எதிர்பாராமல் - கடமையைச் செய்யவேண்டும்; சோம்பல் இல்லாமல் தன் கடமையைச் செய்கின்றவனே சிறந்த மனிதன். இவ்வாறு தந்நலம் கருதாமல் உழைக்கின்ற மக்கள் வாழும் சமுதாயந்தான் உயர்ந்த சமுதாயமாக வாழும். இவ்வுண்மையை வலியுறுத்துவதே இந்தக் கீதோபதேசத்தின் தத்துவம். இந்தக் கீதோபதேசத்தின் தத்துவத்தைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். பலன் கருதாமல் பணி செய்வதை தான் நிஷ்காம்யகர்மம் என்பர்; இதை மிக உயர்ந்த கர்மமாக அனைவரும் போற்றுகின்றனர்; நிஷ்காம்ய கர்மம் செய்யும் மக்கள் சான்றோர்கள்; வீரர்கள்; தியாகிகள்; என்பதில் ஐயம் இல்லை. உயர்ந்த உண்மைகளைக் கூறும் நாவையுடைய புலவர்கள், பாரி! பாரி! என்று சொல்லுவார்கள்; அவனுடைய பெருமைக்குரிய செயல்கள் பலவற்றையும் எடுத்துச் சொல்லி அவன் ஒருவனையே புகழ்வார்கள். இவ்வுலக மக்களைக் காப்பாற்றுகின்றவன் பாரி ஒருவன் மட்டும் அல்லன்; இவ் வுலகைப் பாதுகாப்பதற்கு மழையும் உண்டு. இவ்வுண்மையைப் புலவர்கள் ஏன் அறிய வில்லை. இவ்வாறு பாரியின் சிறப்பைப் பற்றிக் கபிலர் என்னும் புலவர் பாடியிருக்கின்றார். *பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்; பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே (புறம் 107) என்பதே அப்பாடல். இப்பாடல், பாரி என்பவன் பயன் கருதாமல், பிறர்க்கு உதவி செய்பவன் என்று குறிப்பிடுகின்றது. மழை எந்தப் பலனையும் எதிர்பார்க்காமலே பெய்கின்றது; உலகைக் காப்பாற்றுகின்றது. இது போலவே பாரியும் எந்தப் பயனையும் கருதாமல் வறியோர்களுக்கு - தன்னிடம் வந்து உதவி கேட்டவர்களுக்கு - உதவி செய்கின்றான். இவ்வாறு பலன் கருதாமல் பணி புரிகின்றவன் பாரி என்பதை எடுத்துக் காட்டிற்று இச்செய்யுள். ஆய் என்பவன் ஒரு வள்ளல்; அவனும் பலன் கருதாமலே அறம் புரிந்தவன். அவனைப் பற்றிப் பாடிய உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் அவன் பெருமையைக் கூறியிருக் கின்றார். இப்பிறப்பிலே செய்த நல்வினையின் பயன், மறுபிறப்பிலே உதவி செய்யும் என்ற நம்பிக்கையுடன் பலர் அறம் புரிகின்றனர். இவர்கள் தருமத்தை வியாபாரம் செய்கின்றவர்கள் ஆவார்கள். ஆய் என்பவன் இத்தகைய தரும வியாபாரி அல்லன். †ï«ik¢ செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வாணிகன் ஆய் அலன் (புறம் 134) என்பதே அப்பாடல். பலன் கருதாமல் அறம் புரிவதுதான் உண்மையான - உயர்ந்த - அறமாகும் என்பதைத் திருக்குறளும் வலியுறுத்தியிருக்கின்றது. மீண்டும் நமக்குத் திருப்பிக்கொடுக்க முடியாத வறியவர் களுக்கு அவர்கள் வேண்டிய ஒரு பொருளைக் கொடுப்பதுதான் ஈகை என்று சொல்லப்படுவது; மற்றவர்களுக்கு அவர்கள் வேண்டியதைக் கொடுப்பதெல்லாம் ஈகை அன்று; பயனை எதிர் பார்த்துக் கொடுக்கும் தன்மையுடையதாகும். வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து (கு. 221) என்பதே அக்குறள். இக்குறளும் நிஷ்காம்ய கர்மத்தை வலியுறுத்தும் குறளாகும். இதனால் நிஷ்காம்ய கர்மமே சிறந்தது என்னும் பாரத நாட்டுப் பண்பைப் பண்டைத் தமிழர்கள் போற்றியதைக் காணலாம். செய்நன்றி அறிதல் செய்நன்றி அறிதல் என்பதைக் தமிழர்கள் தலைசிறந்த அறமாகப் போற்றியிருக்கின்றனர். செய்நன்றி அறிதல் என்பது பிறர் செய்த நன்றியை மறவாமையாகும். மக்கள் ஒருவர்க் கொருவர் உதவிசெய்து கொண்டு ஒத்து வாழ்வதற்கு இந்த நன்றியுணர்ச்சியே பெருந்துணையாக நிற்பது. நாம் துன்புறும் போது - அல்லது உதவியை நாடியபோது - நமக்கு உதவினவர்களை நாம் மறக்காமலிருக்க வேண்டும். இவ்வாறு பிறர் உதவியை நாம் மறக்காமல் இருப்போமாயின், நாமும் உதவி செய்யும் குணத்தைப் பெறுவோம். பிறர் துன்புறும் போது - பிறர் நமது உதவியை நாடியபோது - அவர்க்கு நாமும் உதவி செய்யப் பின்வாங்க மாட்டோம். பிறர் நமக்குச் செய்த உதவியின் நினைப்பு. நம்மைப் பிறருக்கு உதவி செய்யவே தூண்டும். ஆதலால் செய்நன்றி மறவாமையைச் சிறந்த அறமாக வலியுறுத்தினர். செய்நன்றி மறப்பதைப் பிராயச்சித்தம் இல்லாத பெரிய பாவம் என்று பயமுறுத்தினர். ஆகவே செய்நன்றி மறவாப் பண்பை மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டியது அவசிய மாகும். செய்நன்றி மறவாமையின் அவசியத்தைப் பற்றி ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் அழகாகப் பாடியிருக்கின்றார். பசுவின் மடியை அறுத்த பாவிகள்; சிறந்த நகைகளை அணிந்த பெண்களின் கர்ப்பத்தை அழித்தவர்கள்; அறநூல்களை ஆராய்ந்து பார்த்து, மக்களுக்கு நல்லறங்காட்டும் பார்ப்பார் களுக்குக் கொடுமை செய்தவர்கள்; இவர்களுக்கெல்லாம் பாதகம் செய்தவர்களுக்கும், அவர்கள் பாவத்தைப் போக்கும் கழுவாய்கள் உண்டு. அதாவது பிராயச்சித்தங்கள் உண்டு. ஆனால் இந்த நிலமே கீழ்மேலாக மாறுவதானாலும் ஒருவன் நன்மையை மறந்தவர்க்கு - அழித்தவர்க்கு - நரகம் கிடைப்பது நிச்சயம். அதிலிருந்து தப்பித்துக் கொண்டு போகவே முடியாது; இவ்வாறு அறநூல் கூறியிருக்கின்றது. இதுவே அப்பாடலின் பொருள். *ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும், மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும், வழுவாய் மருங்கின் கழுவாயும் உள, என நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்என அறம்பாடிற்றே (புறம், 84) என்பதே அந்தப் பாட்டு. செய்நன்றிறவாமையே சிறந்த அறம் என்பதைத் திருவள்ளு வரும் செய்ந்நன்றி அறிதல் என்னும் ஒரு அதிகாரத்தில் பத்துக் குறள்களால் விளக்கிக் கூறியிருக்கின்றார். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (கு. 110) எந்த நன்றியை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழியுண்டு! ஒருவர் செய்த உதவியை மறந்தவர்க்கு - அழித்தவர்க்கு அப் பாவத்திலிருந்து தப்பிப்பிழைக்க வழியேயில்லை. என்பது செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்தின் இறுதிக் குறளாகும். செய்நன்றி மறவாமையின் அவசியத்தை இக்குறள் மிகவும் வலியுறுத்திக் கூறியிருக்கின்றது. இவ்வளவு சுருக்கமாக - படிப்போர் உள்ளத்தில் பதியும்படி வேறு யாராலும் வலியுறுத்திச் சொல்ல முடியாது. மேலே காட்டிய புறநானூற்றுப் பாட்டின் பொருளும், திருக்குறளின் கருத்தும் அமையக் கம்பர் அருமையாக ஒரு செய்யுளைப் பாடியிருக்கின்றார். பெற்றெடுத்த பிள்ளை எவ்வளவு கொடுமை செய்தாலும், தாய் பொறுத்துக் கொள்ளுவாள்; அவள் தன் பிள்ளையின்மேல் அழியாத அன்பு காட்டுவாள்; பிள்ளைகளின் பிற்கால நன்மை யைக் கருதி உழைப்பவன் தந்தை. கல்வியையும் அறிவையும் ஊட்டி, ஞானக் கண்ணைத் தந்து வளர்ப்பவர் குரு; அறநூல் களை அறிந்த அந்தணர்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள்; மக்களுக்குப் பாலூட்டி உதவி செய்யும் அன்புள்ள பிராணி பசு; ஒன்றுந் தெரியாத தூய தன்மையுள்ளவர்கள் குழந்தைகள்; அவர்கள் பிறர் பராமரிப்பில் வாழ்ந்து வளரவேண்டியவர்கள்; கொடியோரை எதிர்த்து நின்று, தம்மைத்தாம் காப்பாற்றிக் கொள்ள முடியாத தன்மையுள்ளவர்கள் பெண்கள்; இத்தகை யவர்களை வதைக்கின்றவர்கள் - இவர்களுக்குக் கொடுமை செய்கின்றவர்கள் மகாபாவிகள். இவர்கள் பாவத்தைப் போக்கக் கூடிய ஆற்றல் படைத்த பிராயச்சித்தங்களும் உண்டு. ஆனால், பிறர்செய்த என்றும் அழியாத நன்மையை மறந்தவர்க்கு அவர் செய்த பாவத்தை அழிக்கக்கூடிய வழி ஒன்றும் இல்லை; எக்காலத்திலும் இல்லை. *சிதைவு அகல் காதல் தாயைத் தந்தையைக், குருவைத், தெய்வப் பதவி அந்தணரை, ஆவைப், பாலரைப், பாவை மாரை, வதைபுரி குநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல்; மாயா உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ. (கம்ப. கிட்கிந்தை) இதுவே செய்நன்றி அறிதலின் சிறப்பைப் பற்றிக் கம்பர் கூறியிருப்பது. செய்ந்நன்றி அறிதல் என்பது நமக்கு நன்றி செய்தவரை நாம் மறத்தல் கூடாது; சமயம் நேரும்போது அவர்க்கு நாம் நன்றி செய்யவேண்டும்; என்பதை மடடும் வலியுறுத்துவது அன்று. பிறர் செய்த நன்றியை மறவாத பண்புதான், பிறர்க்கு நன்மை செய்யத் தூண்டும் என்ற பரந்த பொருளைக் கொண்டதாகும். இதனால் தான் இவ்வறத்தைச் சான்றோர் அனைவரும் வலியுறுத்தியிருக்கின்றனர். அறிவுரைகள் உலக நிலைமை அறிந்த ஆன்றோர்கள் தாம் கண்ட உண்மையைப் பொது ஜனங்களுக்கு உணர்த்தாமலிருக்க மாட்டார்கள். தாம் கண்ட உண்மையைப் பிறர்க்கும் அறிவித்து அவர்களை நல்வழியில் நடக்கச் செய்வதே சான்றோர்களின் பண்பு. இத்தகைய சான்றோர்கள் எந்நாட்டிலும் தோன்று வார்கள்; தோன்றியும் இருக்கின்றனர். எம்மைப்போல் பிறரும் இன்புற வேண்டும் என்று நினைத்த சான்றோர்கள் தமிழகத்தில் பலருண்டு. இத்தகைய சான்றோர்கள் பண்டைக் காலத்திலும் பலர் இருந்தனர். இக்காலத்திலும் இருக்கின்றனர். இவர்கள் இல்லாத காலமே யில்லை. பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பலர், உலக மக்கள் உயர்வதற்கான உண்மைகள் பலவற்றைக் கூறியிருக்கின்றனர். நாயன்மார்கள், ஆழ்வார்கள் முதலிய அடியார்களும் மக்கள் விடுதலைக்கான அறிவுரைகளைக் கூறியிருக்கின்றனர். திருமூலர், பட்டினத்தார், அருணகிரியார், தாயுமானார், இராமலிங்க சுவாமிகள் போன்ற மெய்யன்பர்கள் எல்லாம், உலகமக்களின் நல்வாழ்வை உள்ளத்திற்கொண்டே பாடியிருக்கின்றனர். இவர்கள் எல்லாம் பண்டைத் தமிழர்களின் பண்பாட்டை மறவாதவர்கள்; பின்பற்றியவர்கள். இவ்வுண்மையை அவர்களின் அருந்தமிழ் இலக்கியங்களைப் படிப்போர் அறிவார்கள். சிறப்பாகத் தமிழில் உள்ள நீதிநூல்கள் எல்லாம், மக்களுக்கு நல்வாழ்வு நெறியைக் காட்டுவதற்காகவே இயற்றப்பட்டவை; இன்னின்ன காரியங்கள் செய்யக் கூடாதவை; செய்யவேண்டிய செயல்களைச் செய்பவர்களே இன்பமும் புகழும் பெற்று வாழ் வார்கள்; செய்யக்கூடாத காரியங்களைச் செய்கின்றவர்கள் பழியும் பாவமும் பெற்று அதோகதியை அடைவார்கள். இவ் வுண்மைகளையே நீதி நூல்கள் எடுத்துரைக்கின்றன. சிறப்பாக அறிஞர்கள், மக்களுக்கு எடுத்துரைக்கும் சில அறிவுரைகளை மட்டும் பார்ப்போம். உலகத்தில் நடைபெறும் இயற்கை நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டி, மக்களை உண்மை யுணரச் செய்வதில் பண்டைப் புலவர்கள் மிகவும் சிறந்தவர்கள். ஒரு வீட்டிலே சாப்பறை ஒலிக்கும். மற்றொரு வீட்டிலே திருமணத்திலே வாசிக்கின்ற கேட்பதற்கு இனிமையான மத்தள வோசை முழங்கிக் கொண்டிருக்கும். காதலருடன் கூடியிருக்கும் மகளிர் மலர் மாலையாகிய அணியைப் பூண்டு மகிழ்ந்திருப் பார்கள்; காதலரை மாளக்கொடுத்த மகளிர் துன்புற்று வருந்துவர். அவர்களுடைய மையுண்ட கண்கள் குளிர்ந்த நீரைத் தொடர்ச்சியாகக் கொட்டிக் கொண்டேயிருக்கும். அந்தப் பண்பற்ற பிரம்ம தேவன்; நிச்சயமாகவே உலகத்தை இவ்வாறு படைத்திருக்கின்றான். இவ்வுலகத்தின் இயற்கை கொடுமை யானது. ஆதலால் இவ்வுலகின் இயல்பை உணர்ந்தவர்கள்; நன்மை தரும் செயல்களைக் கண்டறிந்து செய்து இன்பம் அடைக. என்பது புறநானூற்றின் 194-ஆவது பாட்டு. பக்குடுக்கை நண்கணியார் என்னும் புலவரின் அருமைச் செய்யுள். *ஓர்இல் நெய்தல் கறங்க, ஒர்இல் ஈர்ம்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூ அணியப், பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப் படைத்தோன் மன்ற அப் பண்பு இலாளன்; இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே. இதுவே அந்த அறங்கூறும் அழகிய செய்யுள். இவ்வுலக இயல்பை எடுத்துக்காட்டி அறிவுறுத்தியது இச்செய்யுள். இந்த உண்மையை நாலடியார் வெண்பா ஒன்று விளக்கிக் கூறியிருக்கின்றது. உறவினர் முதலிய பலரும் கூடியிருக்கின்றனர். முற்பகலில் மணவாத்தியம் முழங்கிக் கொண்டிருக்கின்றது. மணமும் முடிகின்றது. அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். அதே வீட்டில் அன்றைய பிற்பகலில் பிணப்பறை முழங்குகின்றது. மணக்கோலம் பூண்ட தம்பதிகள் பிணக்கோலமாகி விடுகின்றனர்; ஆதலால் மணப்பறை முழங்கிய இடத்திலேயே பிணப்பறை முழங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறு இவ்வுலகில் நடைபெறுவதும் உண்டு. இவ்வுண்மையை உணர்ந்தவர்களின் உள்ளம் - அறிவுள்ளவர்களின் மனம் - இத் துன்பத்திலிருந்து தப்பிப் போவதற்கே துணியும். இதுவே நாலடி வெண்பாவின் பொருள். *மன்றம் கறங்க மணப்பறை ஆயின அன்று அவர்க்கு ஆங்கே பிணப்பறை யாய்ப்-பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம். - (நாலடி 24) இதுவே அந்த நாலடி வெண்பா. மேலே காட்டிய புறநானூற்றுப் பாட்டு ஒரு வீட்டில் சாவும், மற்றொரு வீட்டில் வாழ்வும் நடைபெறும் இயற்கையைக் கூறியது, இந்த நாலடிப் பாட்டு. ஒரே வீட்டில் முற்பகலில் இன்பமும், பிற்பகலில் துன்பமும் நடைபெறும் இயல்பை எடுத்துரைத்தது. இரண்டும் உலக வாழ்வின் இயற்கையைக் கூறிய பாடல்கள். புறநானூற்றிலே காணப்படும் மற்றொரு பாட்டு மிகவும் அருமையான பாட்டு. அனைவரும் எளிதிலே பின்பற்றக் கூடிய அறநெறியை எடுத்துச் சொல்லுகின்றது அப்பாடல். பல சிறந்த குணங்களை யுடையவர்களே! பல சிறந்த குணங்களை யுடையவர்களே! கயல்மீன் முள்ளைப் போன்ற வெண்மையான நரைத்த மயிரையுடைய முதிர்ந்தவர்களே! சுருங்கிய கன்னத்தை யுடையவர்களே! ஒருவருக்கும் பயன் படாமல் வயதேறி யிருக்கின்றவர்களே! பல சிறந்த பண்புள்ள வர்களே! மழுவென்னும் கூர்மையான ஆயுதத்தையுடைய கடுமையான வலிமையையுடைய காலதேவன், உங்களைச் சும்மாவிட மாட்டான்; தன் பாசக்கயிற்றால் கட்டியிழுத்துக் கொண்டு போகத்தான் செய்வான்; அப்பொழுது நீங்கள் வீண்பொழுது போக்கினோமே என்று வருந்துவீர்கள். அவ்வாறு வருந்தாமல் இருக்க வழி சொல்லுகின்றேன் கேளுங்கள். நல்லன செய்தல் என்பதைச் செய்யமாட்டீர்கள். ஆனாலும் தீமை செய்வதை விட்டு விடுங்கள்; தீமை செய்யாதீர்கள்; அதுதான் எல்லோரும் மகிழ்ந்து பாராட்டும் செயலாகும். அன்றியும், நன்னெறியிலே செலுத்தும் வழியும் அதுதான். இது அந்தப் புறநானூற்றுப் பாட்டு. இது நரிவெரூஉத் தலையார் என்னும் புலவர் பாட்டு. *பல் சான்றீரே! பல் சான்றீரே! கயல்முன் அன்ன நரைமுதிர் திரைகவுள் பயன்இல் மூப்பின் பல் சான்றீரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடும்திறல் ஒருவன் பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ; நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான் எல்லோரும் உவப்பது; அன்றியும் நல்ஆற்றுப் படூஉம் நெறியும் ஆர் அதுவே. (புறம். 195) இதுவே அந்தப் பாட்டு, இப்பாடலில், பயனில்லாமல் மூத்தோரைச் சான்றீரே என்று விளித்திருப்பது, முட்டாளைப் பார்த்து அவன் மகா புத்திசாலி என்பதைப் போல் பரிகசிப்ப தாகும். நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாம லாவது இருங்கள் என்று கூறும் அறிவுரை மிகச்சிறந்த மொழி யாகும். நன்மை செய்வது கஷ்டமாக இருக்கலாம்; தீமை செய்யா மலிருப்பது எளிது. இதில் ஐயம் இல்லை. தீமை செய்யாம லிருக்கப் பழகிக் கொண்டால் போதும். அப்பழக்கம், நன்மை செய்வதற்குத் தூண்டும்; நல்ல வழியிலேதான் செலுத்தும். ஆதலால்தான் தீமை செய்யாமலிருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று வலியுறுத்திற்று இப்பாட்டு. மேலே கூறியவற்றால், பண்டைத் தமிழர்களின் சிறந்த பண்பைக் காணலாம். பிறர்க்கு உதவி செய்யும் குணமே மனிதத் தன்மையாகும். இவ்வுலகில் புகழ் பெற்று வாழவேண்டுமானால் நல்ல காரியங்களைச் செய்யவேண்டும்; நன்மை செய்வதனால் புகழும் இன்பமும் உண்டு; தீமை செய்வதனால் பழியும் பாவமுந்தான் சேரும்; ஒவ்வொருவரும் தாம் செய்த நல்வினை தீவினைப் பயன்களை அனுபவித்துத் தீரவேண்டும். பலனை எதிர்பார்க்கக்கூடாது. பிறர்வாழப் பணிபுரிவதே நம் கடமை என்று நினைக்க வேண்டும். இப்படிப் பணிபுரிகின்றவர்களே தியாகிகள்; வள்ளல்கள்; மனித சமுதாயத்தை வாழவைப்பவர்கள் ஆவார்கள். பிறர் செய்த நன்மையை மறத்தல் கூடாது; மறக்காமல் இருப்பவர்கள்தாம் பிறருக்கும் நன்மை செய்வார்கள். மக்களின் கூட்டுறவு வாழ்க்கைக்கு இந்த உணர்ச்சி அவசியமானதாகும். நம்மால் நல்ல காரியங்களைச் செய்ய முடியாவிட்டால் கூடத் தீமை செய்யாமலாவது வாழப் பழகிக்கொள்ள வேண்டும்; இப்பழக்கம் நம்மை நல்ல வழியில் செலுத்துமேயன்றித் தீயவழியில் போகவிடாது. இவைகள் எல்லாம் தமிழர் கண்ட நல்லறங்கள். அவைகளே மேலே எடுத்துக்காட்டப்பட்டன. இத்தகைய சிறந்த அறங்கள், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் உயர்ந்த அறங்கள். மக்களால் பாராட்டக்கூடியவை; பின்பற்றக் கூடியவை. தமிழர் வீரம் (1964) முகவுரை புலவர் சாமி. சிதம்பரனார் அவர்கள் புலவர் மட்டும் அல்லர்; அவர் சீர்திருத்தக்காரராகவும் வாழ்ந்தார். சாமி. சிதம்பரனாரின் தமிழ்த் தொண்டுகள் பாராட்டுதற்குரியன. போற்றுதற்குரியன. அவருடைய முற்போக்குக் கருத்துக்களை அவருடைய நூல்களிலும் கட்டுரைகளிலும் காணலாம். நூல்கள் வாயிலாகவும் கட்டுரைகள் மூலமாகவும் அவர்கள் செய்துள்ள சமூகத் தொண்டும் தமிழ்த் தொண்டும் உலகம் அறிந்ததேயாகும். சிதம்பரனார் அவர்கள் பல நூல்களை எழுதி வெளியிட்டிருக் கிறார்கள். புத்தகவடிவாக வெளிவராத பல கட்டுரைகள் உள்ளன. தமிழர்வீரம் என்னும் இந்நூல் அவ்வறிஞர் விட்டுச் சென்ற கட்டுரைகளின் தொகுப்பாகும். அறிவுக்கொடி தாமரை என்னும் பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளே இவை. அவருடைய வாழ்க்கைத் துணைவியார் திருமதி. சிவகாமி சிதம்பரனார் அவர்கள் இக்கட்டுரைகளைத் தொகுத்து நூல் வடிவமாக வெளியிட்டுள்ளார்கள். இவர்களுடைய முயற்சியைப் பாராட்டுகிறோம். தமிழர் வீரம் என்னும் இந்நூலிலே சங்ககாலத்துத் தமிழரின் வீரச்செயல்கள் கூறப்படுகின்றன. வீரம் என்பது போர்க்களத்தில் போர் வீரர் காட்டும் வீரம் மட்டும் அன்று, கொடை, கடமை, நீதி, ஒழுக்கம் முதலியவைகளிலும் வீரம் உண்டு.இவ்வீரர்கள் எல்லாம் இந்நூலில் விளக்கப்படுகின்றன. இந்நூலிலுள்ள போர் வெறி என்னுஞ் செய்யுள் யுத்தங் களினால் நாட்டு மக்களுக்கு உண்டாகும் துன்பங்களையும், கொடுமைகளையும், கஷ்டநஷ்டங்களையும் விளக்குகிறது. தமிழர் கண்ட இன்ப வாழ்வு என்னும் கட்டுரையில் ஆசிரியரின் முற்போக்குக் கருத்துக்களைக் காணலாம். இது பொதுவாக மாணவரும் மற்றவரும் படிக்க வேண்டிய நூலாகும். இந்நூலைப் படித்துப் பயன் பெறுவார்களாக. அறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களின் ஏனைய கட்டுரைகளும் இதுபோன்ற நூல் வடிவில் வெளிவருமானால் பொது மக்களுக்கும் பயனுடையதாக இருக்கும். மயிலாப்பூர் சென்னை - 4. மயிலை, சீனி. வெங்கிடசாமி. 12-3-64. தமிழர் வீரம் வீரம் என்பது ஒரு குணமாகும். அஞ்சாமை, அறிவு, கவலையின்மை, மனத்தைரியம், உடல் வன்மை இவையெல்லாம் வீரத் தன்மையை நிலைநிறுத்தும் சாதனங்கள். போர்க்களத்தில் முன்வைத்த காலைப் பின் வைக்காமல் நின்று, சண்டை செய்து வெற்றி பெறுவதோ, அல்லது உயிர்விடுவதோ மட்டிலும் வீரமன்று. ஆனால் உண்மையறியா உலக மக்கள் இத்தகைய போர்த்திறத்தை மட்டிலுமே பெரும்பாலும் வீரமெனக் கருதியிருந்தனர்; இன்றும் கருதியிருக்கின்றனர். தமிழர் வீரமோ இது மட்டுமன்று. உண்மையில் வீரம் எது வென்றால் தான் ஆராய்ந் தெடுத்துக் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காது நிறைவேற்றுதலே வீரமாகும். இவ்வகையில் நோக்கும் போது, போர்க்களம் புகுந்து முதுகு காட்டாது போர் செய்வதும் வீரந்தான். தான் எத்தொழிலை மேற்கொண்டாலும் அத் தொழிலுக்குரிய கடமைகளைத் தவறின்றிச் செய்வதும் வீரந்தான். தன் மனத்தில் உள்ள எண்ணங்களை எச்சமயத்திலும், யாருக்கும் அஞ்சாது ஆண்மையுடன் எடுத்துரைப்பதும் வீரந்தான். தனது நடத்தைகளைத் தன்கொள்கைக்கு மாறுபடாமல் நடத்திக் காட்டுவதும் வீரந்தான். சுருக்கமாகக் கூறவேண்டுமானால், உறுதியான எண்ணங்கள், உறுதியான கொள்கைகள், உறுதியான சொற்கள், உறுதியான நடத்தைகள் யாவும் வீரமென்பதில் ஐயமில்லை. ஆசிரியர் திருவள்ளுவர், ஐம்புலன் அடக்கத்தையும் வீரமாகக் கூறுகிறார், ஆம் ! புலனடக்கமென்பது எளிய காரியமா? முதலில் உடம்பு என்னும் புலனைப் பாருங்கள்; உடம்புக்கு இன்பம் விரும்பாதார் யார்? உடலின்பம் நாடியன்றோ இன்று மக்கள் பேயாய்த் திரிகின்றனர்! அடுத்தபடி நாக்கு என்னும் புலனை நோக்குங்கள்; நாக்குருசியை விரும்பாத மக்களுண்டோ? நாக்குருசியை அடக்கியாளுவது இலேசில் முடியக்கூடியதா? அடுத்தது கண் என்னும் புலன்; கண் விரும்பியவற்றை யெல்லாம் பார்க்காமல் தடுக்க யாராலாகும்? கட்புலனையடக்க முடியாமல் மக்கள் எவ்வளவு தூரம் காட்சிகளைக் காணும் பொருட்டு ஏராளமான பொருளைச் செலவு செய்து கொண்டு செல்லு கின்றனர்? அது போலவே செவிப்புலனும் ஆகும். இன்றுள்ள படக்காட்சிச்சாலைகள் பெரும்பாலும் கட்புலனையும், செவிப் புலனையும் கவர்வதற்கு ஏற்பட்டவைகள் தாமே. செவிடில்லாத நல்ல காதுகளை இனிய ஓசைகளைக் கேட்காமல் அடக்கி வைக்க முடியவில்லையே. இது போலவே மூக்கின் விஷயமும் ஆகும். அதனுடைய முகர்தல் சக்தியைத் தடுக்க மனிதர்களால், முடியவில்லையே. ஆதலால் தான் இந்த மெய், வாய், கண், செவி, மூக்கு என்னும் ஐந்து புலன்களையும் ஐந்து யானைகளுக்கு ஒப்பிட்டிருக்கிறார், வள்ளுவர். இந்த ஐந்து யானைகளையும் அடக்கியாளுவதற்கு வீரமே வேண்டும் என்று கூறுகிறார். ஆகவே இப்புலன்களை அடக்கியாளுபவன் சிறந்த வீரன் என்பதே அவர் கருத்தாகும். இதனை உரன் என்னும் தோட்டி யான் ஓர் ஐந்தும்காப்பான் என்பதனால் அறியலாம். உரன் என்பது வலிமை. வீரத்திற்கு அடிப்படை வலிமை. யானையை அடக்கி யாளுவது அங்குசமென்னும் ஆயுதம், ஐந்து புலன்களாகிய யானைகளையும் அடக்கியாளுவதற்கு வலிமை யென்னும் அங்குசமே வேண்டுமென்பது வள்ளுவரின் கருத்து. மற்றொரு குறளிலும் ஐந்தவித்தான் ஆற்றல் என்று கூறியுள்ளார். இதிலிருந்தும் ஐம்புலன்களையும் அடக்குதல் ஆற்றலாகும். அதாவது வலிமையாகும். விளக்கமாகக் கூறினால் வீரமாகும் என்பதே பொய்யா மொழியாரின் கருத்தாகும் என்பதை அறியலாம். இன்னும் ஆசிரியர் திருவள்ளுவர், சொல்வல்லானையும் வீரன் என்று கூறுகிறார். சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. என்ற குறளில் இதைக்காட்டியுள்ளார். பேசுவதில் வல்லவன் மனந்தளர்ந்து காரியங்களில் சோர்வடைய மாட்டான்; அவனிடம் பகை கொண்டு அவனை வெல்லுதல் யாராலும் முடியாத செயல்; என்பதே இக்குறளின் பொருள். இதிலிருந்து தன் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் பேசுந்திறமை படைத்தவனும் வீரனென்பது தமிழர் கொள்கையென்று அறியலாம். முதலிற் கூறியவாறு தன்னுடைய கொள்கையைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல், நீதிக்குச் சண்டை செய்வதே சிறந்த வீரம் என்பதைக் கம்பர் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். தசரதனுடைய மந்திரிமார்களின் தன்மையைப் பற்றிக் கம்பர் கூறியிருப்பது இதுவாகும்:- தம்முயிர்க்கு உறுதியெண்ணார் தலைமகன் வெகுண்டபோதும் வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர் இதில் தம்முடைய உயிருக்கு நன்மை நாடாதவராய் அரசன் கோபித்தாலுங்கூட, அக்கோபத்தினால் வரும் தீமை யையும் தாங்கிக் கொண்டு, நீதியை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக நின்று எடுத்துரைக்கும் வீரர் என்று மந்திரிமார் களைப் பற்றிக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். ஆகவே என்ன இடையூறு வருவதாயிருந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டும் தன் உண்மைக் கொள்கைகளை விடாதிருப்பதே சிறந்த வீரமென்பதும் இதனால் தெரிகின்றது. ஆகவே, மேற்கூறிய சில உதாரணங்களைக் கொண்டே தமிழர், போர் செய்தல் ஒன்றை மாத்திரம் வீரச்செயலாகக் கருதியவர் அல்லர் என்பதை அறியலாம். இம்முறையில் தமிழர் வீரம் பல துறையிலும் உண்டு. தாம் கொண்ட கொள்கையை வாழ்நாள் வரையில் விடாது நடத்திய வீரர் பலர் நமது நாட்டில் இருந்தனர். இவர்களில், இன்றளவும் தம் புகழை அழியாது நிலைநிறுத்திச் சென்ற குறுநில மன்னர்களாகிய வீரர்கள் பலர்; பெருநில மன்னர்களாகிய வீரர்கள் பலர்; எவருக்கும் அஞ்சாது தம் கருத்தைக் கூறிய புலவர் பெருமக்களாகிய வீரர்கள் பலர். தம் கடமையை உணர்ந்து அதைத் தவறாது நிறைவேற்றிய பெண்மணிகளாகிய வீராங்கனைகள் பலர் நமது நாட்டில் இருந்திருக்கின்றனர். இத்தகைய வீரர்கள் ஒவ்வொருவருடைய வரலாறுகளையும் கூறப்புகுந்தால் மலைமலையாகப் புத்தகங் களை எழுதிக் குவித்துவிடலாம். ஆதலால் நாம் சிற்சில சிறந்த வீரர்களின் சிற்சில அருஞ்செயல்களை மட்டிலும் ஆராய்வதன் மூலம் தமிழர் வீரத்தின் பெருமையைத் தெரிந்து கொள்ளுவோம். உண்மையான தமிழ் வீரர்களின் பலரைக் கண்டறிய வேண்டுமானால், புறநானூறு என்னும் படைவீட்டில் நுழைந்து பார்த்தாலே போதும். அங்கு நின்று சுற்றி நோக்கினால், முடியரசர்கள் பலர், குறுநில மன்னர் பலர், பெண்மணிகள் பலர், புலவர்கள் பலர், உயிரைக் கொடுத்தும் தன் கொள்கையை விட்டுக் கொடுக்காத உறுதியாளர் பலர், கொடையிற் சிறந்தவர் பலர், போர் புரிந்து புகழ் பெற்றவர் பலர் வீரத்தோடு ஆங்காங்கே கொலுவீற்றிருப்பதைக் காணலாம். மற்ற சங்ககால இலக்கியங்களில் தேடினாலும் இதுபோலவே எண்ணற்ற வீரர்கள் கிடைப்பார்கள். இனி அப்படிப்பட்ட வீரர்களைக் காண்போம். குமணன் குமணன் என்பவன் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்தவன்; ஒரு குறுநில மன்னன். இவனுடைய வீரச்செயலை உற்று நோக்குவோம். இவன் கல்வியறிவுடைய புலவர்கள் எது கேட்டாலும் இல்லையென்னாமல் கொடுத்து வந்தான். இக்கொடையில் உறுதியுடை யவனாயிருந்தான். இவன் தன் தம்பியாகிய இளங்குமணனால் அரசிழந்து காட்டை யடைந்து வாழ்ந்தான். அதுகாலை குமணனிடம் பரிசுபெற வந்த பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் அவனைக் காட்டிற் கண்டார். அவன் அரசிழந்து காட்டிற்கு வந்திருக்கிறான் என்பதைப் புலவர் அறியவில்லை. வேட்டைக்காக வந்திருக்கக்கூடு மெனக் கருதினார்; அதனால் தனது வறுமையைக் குமணனிடம் கூறி இரந்தார். அப்பொழுது தமிழ் வீரனாகிய நமது குமண வள்ளல் தனது உறுதியை நிறைவேற்றப் பின்வாங்கவில்லை. புலவர்க்குக் கொடுக்கக் கையிற் பொருளில்லை. ஆலோசித்தான். தன்னைவிடச் சிறந்த பொருள் வேறில்லை யென்று கருதினான். உடனே தனது உடைவாளைப் புலவர் கையிற் கொடுத்தான். தன் தலையைக் கொண்டு செல்லுமாறு குனிந்து நின்றான். புலவர் குமணன் தலையை வாங்கத் துணிவாரா? உடனே அவர் இளங்குமணனிடஞ் சென்றார். அவனை நோக்கிக் கூறுகின்றார்: ஓ இளங்குமணனே! யான் கெடாத நல்ல புகழையுடை யவனும், வெற்றி பொருந்திய வலிமையான குதிரையையுடைய வனும், பெருமையிற் சிறந்த தலைவனும் ஆகிய குமணனைக் (காட்டிற்) கண்டேன்; எனது வறுமை தோன்றப் பாடி நின்றேன், உடனே குமணன் பெருமையையுடையவனும், பரிசில் பெறத் தகுதியுடையவனும் ஆகிய இப்புலவன் பரிசில் பெறாமல் வீணாக வருந்திச் செல்லுதல் எனது நாட்டை இழந்ததைவிட எனக்குப் பெருந்துன்பத்தைத் தரும் என்று கூறித் தன்தலையை எனக்குத் தருவதற்காகத் தனது உடைவாளை என் கையிற் கொடுத்து நின்றான். தன்னை விடச் சிறந்த பொருள் வேறொன்று இல்லாமையால் தன்னையே எனக்குக் கொடுக்கத் துணிந்தான். யான் வெற்றியுடனும், அளவில்லாத மகிழ்ச்சியுடனும், விட்டுக் கொடுக்காத உறுதியான கொள்கையையுடைய நினது முன்னோ னைக் கண்டு வருகின்றேன். என்று கூறுகின்றார். இதனை: கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப் பாடி நின்றனென் ஆகக்; கொன்னே பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என நாடு இழந்த அதனினும் நனி இன்னாது என வாள் தந்தனனே தலை எனக்கு ஈயத் தன்னில் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்; ஆடுமலி உவகையொடு வருவல், ஓடாப் பூட்கை நின் கிழமையோன் கண்டே. என்னும் பாடலால் அறியலாம். (புறநானூறு - 65) பெருஞ்சித்திரனார் என்ற மற்றொரு புலவரும் குமணனு டைய கொடையையும் வீரத்தையும் புகழ்ந்து கூறியுள்ளார் குறையாத புது வருவாயையுடைய முதிரம் என்னும் மலைக்குத் தலைவனே! இவ்வுலகில் மேம்பட்டு விளங்கும் பிறப்பினையுடை யவனே! செய்யப்பட்ட தேரையுடைய குமணனே! புகழ்மிகுந்த கொடுக்குந் தன்மையுடனே நீ கையில் ஏந்தியுள்ள வேலினால் பகைவர்களை வெற்றி கொண்டு உயர்க என்றகருத்தமைத்து அதிராயாணர் முதிரத்துக் கிழவ! இவண் விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண இசைமேந் தோன்றிய வண்மையொடு பகைமேம் படுக நீ ஏந்தியவேலே (புறநானூறு - 158) என்று கூறியிருக்கும் பாடலால் உணரலாம். இக்குமணனது வீரம் தமிழர் வீரத்தின் சிறப்பைக் காட்டுகின்றதன்றோ? இவனுடைய சிறந்த வீரத் தன்மையைப் பாருங்கள்! தனது நாட்டையிழந்தான். அதுவும் வேற்றான் பகை வரால் அல்ல; தன் உடற்பிறந்த தம்பியாலேயே. தன்சுகத்தை யிழந்தான். ஆயினும், புலவர் வறுமையைத் தீர்க்கவேண்டும் என்னும் உறுதியை மட்டிலும் இழக்கவில்லை. புலவர்க்குக் கொடுக்க வேறு பொருள் இல்லாத போது, தன் தலையையாவது பகைவனிடம் கொண்டு போய்க் காட்டிப் பரிசு பெற்றுப் புலவர் வறுமையை நீக்கிக் கொள்ளுக என்று எண்ணித் தனது தலை யையே கொடுக்கத் துணிந்தான். இத்தகைய சிறந்த வீரம் வேறு எவரிடம் காண முடியும் ! வேள்பாரி பாரி என்பவன் ஒரு சிறந்த கொடை வள்ளல்; பறம்புமலை யை ஆண்டவன்; குறுநில மன்னன். கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் பிற்காலத்திற் பாராட்டிக் கூறப்பட்டவர். அஃறிணைப் பொருளாகிய முல்லைக் கொடி ஒன்று தான் படர்வதற்குத் துனணயின்றித் தவித்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டான் பாரி; உடனே தான் ஏறிவந்த தேரை, அக்கொடி படர்வதற்காக அதன் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்திவிட்டுச் சென்றான். இது பாரியின் கொடையின் பெருமையைக் காட்டக் கூறும் சிறந்த தோர் கதையாக வழங்குகிறது. முல்லைக்கொடி படர்வதற்குத் தேரைக் கெடுப்பானா எந்த முட்டாளாவது? ஒரு மரக்கிளையை வெட்டி நாட்டினால் போதாதா? என்று நினைக்கலாம். ஆம்; உண்மை தான். ஆனால் இரக்கசிந்தையுடைய சிறந்த கொடையாளிக்கழகு உடனே பிறர்படுந்துன்பத்தை நீக்குதலாகும். இந்த முறையில் முல்லைக் கொடியின் துன்பத்தை உடனே நீக்க அப்பொழுது தான் ஏறி இருந்த தேரைத்தவிர அவனிடம் ஒன்றுமில்லை. கிளை நாட்டுவ தென்றால் அரிவாள் தேடி, அல்லது கோடரி தேடி, கிளையை வெட்டி நாட்ட நேரமாகு மல்லவா? ஆதலால் இவ்வாறு செய்தான். அன்றியும் கொடை மடம் என்பது முன்னோர் களால் சிறப்பிக்கப்படுவது. அதாவது கொடுப்பதில் இன்னது இனியது என்று பாராது உடனே கொடுப்பது சிறந்த தென்பதே இதன் கருத்து. இவ்வாறு முன்பின் ஆலோசியாமல் கொடுக்குந் தன்மையுடையவனைக், கொடை மடம் பூண்டவன் என்று பண்டைப் புலவர்கள் பாராட்டிக் கூறியுள்ளனர். இத்தகைய கொடைமடம் பூண்டவனே பாரிவள்ளல். இத்தமிழ் வீரனாகிய பாரிவள்ளல் குறு நில மன்னனாயினும் கொடையில் முடியுடை மூவேந்தர்களினும் சிறந்து விளங்கினான். வீரத்திலோ மூவேந்தர் களும் ஒன்று கூடி வந்து எதிர்த்தும் அவர்களால் வெல்ல முடியாத வீரமுடையவனாயிருந்தான். இவனுடைய உயிர்த் துணைவர் கபிலர் என்னும் புலவர். இவர் அந்தணர் குடியிற் பிறந்தவர். இவருடைய பாடல்களின் மூலம் இப்பாரியின் சிறந்த வீரத்தைக் கண்டுணரலாம். பாரியின் காலத்திலிருந்த முடியுடை வேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் அவன் பெருமையைக் கண்டு பொறாமை கொண்டனர். அதனால் அவர்கள் மூவரும் ஒன்றாகக்கூடித் தங்கள் படைகளைத் திரட்டிக் கொண்டு புறப்பட்டனர், பாரியின் இருப்பிடமாகிய பறம்புமலையை முற்றுகையிடும் பொருட்டு, அம்மலையின் பக்கத்தில் உள்ள சோலையில் வந்து தங்கினர். இதனை அறிந்த பாரியின் நண்பராகிய கபிலர் அந்த அரசர்களிடம் சென்று கூறியதாவது. ஏ! மூவேந்தர்களே! அந்தி மலையின் பக்கத்தில் உள்ள சோலையில் மரங்கள்தோறும் யானைகளைக் கட்டியிருக் கின்றீர்களாயினும், இடங்கள்தோறும் அளவற்ற தேர்களை நிறுத்தியிருக்கின்றீர்களாயினும் நீங்கள் செய்யும் போர் முயற்சியினால் பாரியினது நாட்டையும், மலையையும் கைப்பற்ற முடியாது. உங்கள் வாள் வலியை கண்டு அஞ்சி, அவன் தனது நாட்டையும் மலையையும், உங்களிடம் விட்டு விடமாட்டான். அவனுடைய அரசாட்சியைக் கைப்பற்றும் வழி உங்களுக்குத் தெரியாது; ஆனால் நான் அறிவேன்; நீங்கள், நன்றாய் முறுக்கேறிய நரம்பையுடைய யாழை வாசித்துக் கொண்டு வாசனை பொருந்திய நெருங்கிய தலைமயிரையுடைய விறலியர் உங்கள் பின்னேவர, ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும், பாரியிடம் செல்லுங்கள் ! இவ்வாறு செல்லுவீர்களானால் அவன் தனது நாட்டையும், மலையையும், உடனே கொடுத்து விடுவான் என்று கூறினார். இதனை ஆங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், தாளிற் கொள்ளலிர்; வாளில் தாரலன் யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே; சுகிர்புரிநரம்பின் சீறியாழ் பண்ணி. விரை யொலி கூந்தல் நும் விறலியர் பின்வர ஆடினிர், பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கீயும்மே என்ற பாடலாற் காண்க. இவ்வாறு பாரியின் ஆற்றலைக் கபிலர் கூறக்கேட்ட மூவேந்தரும் பாரியின் வீரத்திற்கு அஞ்சினர். அவனுடன் போர் செய்து வெல்ல முடியாது என்று கருதினர். அவனிடம் சென்று யாசிப்பதற்கும் நாணமடைந்தனர். ஆதலால் மீண்டும் தமது நாடுகளை யடைந்தனர். அதன்பின் பாரியின் புகழ் முன்னிலும் பன்மடங்கு வளர்ந்து உலகிற் பரவலாயிற்று. மூவேந்தர்களின் பெருமை குறைந்தது. இந்த நிலையில் பாரி தனது அரசாட்சிக் குள்ளிருந்த முந்நூறு ஊர்களையும் இரவலர்களுக்குக் கொடுத்து விட்டான். பாரியும், அவனது உயிர்த்துணைவராகிய கபிலருமே மீதம். அவனது பறம்பு மலையும் அவனுக்குச் சொந்தமாகவேயிருந்தது. இந்நிலையின் முன்பு பயந்தோடிய மூவேந்தர்களும் மீண்டும் பொறாமையினால் தூண்டப்பட்டுப் பாரியுடன் போர்செய்வதற்காகப் பறம்பு மலையின் பக்கத்தை யடைந்தனர். அதுகண்ட கபிலர் அவர்களைப் பார்த்துக் கூறுகின்றார். ஓ! சேர, சோழ, பாண்டியர்களே! முன் வைத்த காலைப் பின் வைக்காமல் போர்செய்யும் திறமையையுடைய சேனை களுடன் நீங்கள் மூவரும் ஒன்று கூடிப் பாரியை எதிர்த்தாலும் உங்களால் வெற்றி பெற முடியாது; பறம்பு மலையைக் கைப்பற்றவும் முடியாது. குளிர்ச்சியையுடைய இந்தப் பறம்பு நாடு முந்நூறு ஊர்களையுடையது; அந்த முந்நூறு ஊர்களையும் இரவலர் பெற்றுக் கொண்டனர். யாமும் பாரியுமே மீதமாக உள்ளோம்; பறம்பு மலையும் இருக்கின்றது. ஆதலால் நீங்கள் பாரியின் மீது பாடல் பாடிக் கொண்டு புலவர்களைப் போல வருவீர்களானால், நீங்கள். விரும்பியவற்றைப் பெறலாம் என்று கூறினார். இதனை கந்து அடுதானை மூவிருங்கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே; முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு; முந்நூறு ஊரும் பரிசிலர் கொண்டனர்; யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டு, நீர் பாடினிர் செலினே. என்ற பாடலாற் காணலாம். இத்தகைய சிறப்புடைய பாரி ஒருசிறந்த தமிழ் வீரனன்றோ? இங்கே புலவர் பெருமானாகிய, காபிலரின் வீரத்தையும் சிறிது நோக்க வேண்டும். கபிலர் ஒரு சிற்றரசனு டைய ஆதரிப்பிலிருந்த ஒரு ஏழைத் தமிழ்ப் புலவர், இப்படி யிருந்தும் மூவேந்தர்களிடத்தும் தமது நண்பனுடைய வீரத்தைப் பற்றிச் சிறிதும் அஞ்சாமல் எடுத்துக் கூறினார். இதுமட்டோ நீங்களும் இரவலர் வேடம் பூண்டு எமது அரசனிடஞ் சென்று கையேந்தி நில்லுங்கள் என்று மூவேந்தரைப் பார்த்துக் கூறினார். இது பண்டைத் தமிழ்ப் புலவர்களின் வீரத்திற்கும் ஓர் எடுத்துக்காட்டாகும். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பாண்டிய மன்னர்களில் பல்யாகசாலை முதுகுடுமிப் பெரு வழுதி என்ற மன்னன் ஒருவன் சிறந்த வீரனாக விளங்கி யிருந்தான். இவனுடைய வீரம் அளவிட முடியாதது. இவன் காலத்தில் நமது நாட்டில் ஆரியர்களின் மதக்கொள்கைகள் வேரூன்றிவிட்டன வென்று கூறலாம். இம் மன்னனும் முழுதும் ஆரியர்கள் வசப்பட்டு அவர்கள் கொள்கைகளைப் பின்பற்றி யிருந்தவனாகவே காணப்படுகிறான். அவன் ஆரியர்களை மிகவும் ஆதரித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் தாராளமாகச் செய்து வந்தான் என்பதில் ஐயமில்லை. இவன் ஆரிய வேதங்களைப் பின்பற்றிப் பலவகையான யாகங்களைச் செய்துவந்தான்; இதனாலேயே பல்யாகசாலை என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளான். இவனுடைய இயல்புப் பெயர் முதுகுடுமிப் பெருவழுதி என்பதே. பலவகையான யாகங் களைச் செய்ததனாலேயே பல்யாகசாலை என்ற பெயரையும் முதுகுடுமிப் பெருவழுதி என்ற பெயருக்கு முன் சேர்த்து வழங்கப்பெற்றான் என்பதில் ஐயமில்லை. தமிழர்க்கும் வேள்வி என்பது ஒன்றுண்டு; அது ஆரியர்களின் உயிர்வதை செய்யும் யாகம் போன்ற தன்று. இத்தகைய தமிழர் வேள்விகளைச் செய்ததனால் இப் பெயர் பெற்றான் என்று கூறக் கூடாதோ என்றால், இவ்வாறு கூறுதல் பொருந்தாது. யாகசாலை என்பதே வட சொல்; ஆதலால் வடமொழி வேத வேள்விகளைச் செய்ததனாலேயே இப் பெயர் பெற்றான் என்று கொள்வதே உண்மை யாகும். மதக்கொள்கையில் இவன் எவ்வாறு இருப்பினும் தமிழர்க் குரியதாகிய, தாம் கொண்ட கொள்கையை எவ்விதத்திலும் நிறைவேற்றும் வீரத்திற் சிறந்து விளங்கினான். இவன் பெயரைக் கேட்டாலே பகைவர் நடு நடுங்குவர்; பகைவர்களுக்கு அளவற்ற கொடுமைகளைச் செய்வான்; நல்லோர்க்கும், நண்பர்களுக்கும் நன்மைகளையே புரிவான். அறம் புரிவதிலும் மிகவும் சிறந்து விளங்கினான். இவனுடைய பெருமைகளைப் பற்றி, காரிகிழார், நெட்டின்மையார் என்னும் புலவர்கள் பாடி இருக்கும் பாடல் களினால் தெரிந்து கொள்ளலாம். பகைவர்களுடைய கோட்டைகள் பலவற்றையும் பிடித்துக் கொள்ளுவாய்! நீ கைப்பற்றிய கோட்டைகளில் உள்ள அழகு பெறச் செய்த நல்ல பொருள்களை நீ எடுத்துக்கொள்ளாமல், யாசகஞ் செய்வோர்க்குக் கொடுத்து விடுவாய்! உன்னுடைய வெண்கொற்றக் கொடை முனிவர்களால் வணங்கப்பெறும் சிவபெருமான் திருநகரை வலம் வரும் காலத்தில் மாத்திரம் தாழ்க (வேறு எச்சமையத்திலும் தாழாது) பெருமையிற் சிறந்தவனே! நினது முடி நான்கு வேதங்களையும் உணர்ந்த அந்தணர்கள், உன்னிடம் யாசகங் கேட்டு ஏந்திய கையின் எதிரில் மாத்திரம் வணங்குவதாக (வேறு யாரையும் வணங்காது) இறைவனே! நீ தரித்திருக்கும் மலர் மாலை, உன் பகைவர் உடைய நாட்டை கொளுத்தும் போது கெட்ட நாற்றமுடன் எழுந்த புகையினால் வாடுக (வேறு எக் காரணத்தாலும் வாடாது) உனது கோபம் உன் மனைவிமார்களின் மகிழ்ச்சி பொருந்திய அழகிய முகத்தைக் கண்ட போது மாத்திரம் தணிக. (பகைவர் களிடம் கோபம் தணியாது) வெற்றிகளையெல்லாம் வென்று உனது உரிமையாக்கிக் கொண்ட குடுமி என்னும் பெயரை உடை யவனே! நீ இவ்வுலகில் குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைப் போல் அண்டினவர்களுக்கு நன்மை செய்துகொண்டும், சுடுகின்ற ஒளி பொருந்திய சூரியனைப் போல் பகைவர்களுக்குத் தீமை புரிந்து கொண்டும் நிலைபெற்று வாழ்வாயாக; என்று காரிகிழார் என்னும் புலவர் இவனைப் புகழ்ந்து கூறியுள்ளார். இதனை :- ... ... ... ... ஆர் எயில் பலதந்து அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப் பணியியர் அத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே; இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே வாடுக, இறைவ, நின்கண்ணி, ஒன்னார் நாடு சுடு கமழ்புகை எறித்த லானே ; செலியர் அத்தைநின் வெகுளி வாலிழை மங்கையர் துளித்த வாண்முகத்து எதிரே; ஆங்க, வென்றி யெல்லாம் வென்று அகத்தடக்கிய தண்டா ஈகைத் தகைமாண் குடுமி! தண்கதிர் மதியம் போலவும், தெறுச்சுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னுக பெருமநீ நிலமிசையானே. என்ற பாடலால் அறியலாம். இதனால் இவன்தான் மேற் கொண்ட கொள்கையை உறுதியுடன் விடாது நிறைவேற்றும் வீரச் செயலுடையவன் என்பது விளங்குகின்றதன்றோ? இம்மன்னன் அக்ரமப் போர் புரிபவன் அல்லன்; அறப்போர் புரிபவன். தன்னோடு எதிர்த்து நிற்கும் தகுதியுடைய வீரர்களோடுதான் போர் புரிவான். போர் புரியத் தகுதி அற்றவர் களுடன் போர் புரியமாட்டான். தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்ளத் திறமை அற்றவர்களுக்குப் பாதுகாப்பளித்த பின்னரே போர் தொடங்குவான். வேற்றரசன் நகர்மீது படை எடுத்துச் சென்று போர் செய்யத் தொடங்கும்போது, தான் சண்டை செய்ய வந்திருக்கும் செய்தியைப் பறை அடித்துத் தெரிவிப்பான். இதன் மூலம் சண்டைக்குத் தகுதி யில்லாதவர்களையெல்லாம் ஊரை விட்டுத் தங்கள் உயிருக்கு ஆபத்தில்லாத இடத்திற்குப் போய்ச் சேரும்படி செய்வான். இதுவே அறப்போர் ஆகும். இவனுடைய இச் செய்கையை நெட்டிமையார் என்னும் புலவர் கூறியிருப்பதனால் தெரிந்து கொள்ளலாம். ஓ பசுக்களே; பசுவின் தன்மையையுடைய பார்ப்பனர் களே! பெண்களே! பிணிவாய்ப் பட்டவர்களே! மூதாதையர் களுக்குச் செய்ய வேண்டிய கடன்களைச் செய்வதற்குரிய பொன்னைப் போன்ற புதல்வர்களைப் பெறாதவர்களே! இப்பொழுது எனது பாணத்தை விரைவாகச் செலுத்தப் போகிறேன். ஆதலால் நீங்கள் உங்கள் உயிருக்கு ஆபத்து வராத இடத்தைத் தேடிக்கொண்டு போய் விடுங்கள் என்று அறநெறி யைச் சொல்லும் தன்மையையும், அதற்கு ஏற்ற வீரத்தையும் யுடையவனே! பகைவர்களைக் கொல்லுந் தன்மையுடைய யானைகளின் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் ஆகாயத்தை மறைக்கின்ற அவ்வளவு பெரிய சேனையுடையவனே, குடுமீ என்னும் பெயரையுடைய எமது அரசனே, நீ நீடூழி வாழ்வாயாக என்பது, நெட்டிமையார் கூற்று. இதனை:- ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடையீரும், பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாதீரும், எம் அம்பு கடிவிடுதும் நும் அரண்சேர் மின் என அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி ! என்ற பாடலால் அறியலாம். நிரபராதிகளைக் கொன்று குவித்து நாடு பிடிக்கும் இக் காலத்திய நீதிகெட்ட சர்வாதிகாரிகளின் வீரத்தையும் இம் மன்னனுடன் ஒப்பிட்டுப் பார்ப்போர்க்குத் தமிழர் வீரத்தின் உயர்வு விளங்கும். கிள்ளி வளவன் கிள்ளி வளவன் என்னும் பெயரையுடைய சோழ மன்னன் ஒருவன் சிறந்த தமிழ் வீரனாக விளங்கியிருக்கிறான். இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை அரசாண்டு வந்தான். இவனைப் பற்றி, ஆலத்தூர்க் கிழார், வெள்ளைக்குடி நாகனார், மாறோக்கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், கோவூர்கிழார், இடைக்காடனார், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் முதலிய புலவர்கள் புகழ்ந்து பாடி இருக் கின்றனர். இவ்வளவு புலவர்களின் பாடல்களைப் பெற்றிருப் பதிலிருந்தே இவனுடைய வீரமும், புகழும் சிறந்ததென்று விளங்கும். இவன் சேர பாண்டியர்களை வென்று தானே வீரத்திற் சிறந்து விளங்கினவன்; எப்பொழுதும் போர் செய்வதில் பெரு விருப்பம் உடையவன்; சிறந்த யானைப் படைகளை உடையவன்; போருக்கஞ்சாத சிறந்த வீரர்களையுடையவன் ; வட நாட்டு மன்னர்களும் இவனுடைய வீரத்திற்கு அஞ்சி நடுநடுங்கி யிருந்தனர் என்று தெரிகின்றது. இதனை அறம் சிறந்ததாக இருக்கும் காரணத்தால் முதலிலும், பொருளும் இன்பமும் அவ்வளவு சிறப்பின்மையால், அதன் பின்னும் வைத்து, அறம் பொருள் இன்பம் என்று வழங்கு கின்றனர்; அது போல சேர பாண்டியர்களுடைய வெண் கொற்றக் குடைகள் பின்னாகும்படி உயர்ந்த உன்னுடைய வெண் கொற்றக் குடை ஒளி பொருந்திய கலை நிறைந்த சந்திரனைப் போலப் பிரகாசித்துத் தூரத்தில் உள்ளார்க்கும் காணும்படி யுள்ளது; இத்தகைய நீ நல்ல புகழை விரும்பி வெற்றி பெறும் சண்டையைச் செய்யும் பாசறையில் தங்கியிருப்பாயேயல்லாமல் உனது நகரில் தங்கியிருக்கச் சம்மதிக்க மாட்டாய். தமது கொம்பின் முனை மழுங்கும்படி, விரைந்து சென்று பகைவருடைய காவல் பொருந்திய கோட்டை மதிலைக் குத்தும் உன்னுடைய யானைகள் யாருக்கும் அடங்காதவை, சண்டை என்பதையே எப்பொழுதும் விரும்பும், வீரகண்டாமணியைத் தரித்த உன்னு டைய வீரர்கள், பல காடுகளையும் கடந்து செல்லக்கூடிய தூர தேசத்திற்குச் சண்டை செய்யப் போக வேண்டும் என்றாலும் பின்வாங்க மாட்டார்கள், ஆதலால் வட நாட்டில் உள்ள அரசர்கள், ஓசை பெருகும் திருவிழாவினையுடைய அந்தப் பகைவர் நாட்டில் தங்கியிருந்து கீழ்க்கடல் பின்னதாக, மேற்குக் கடலின் வெண்மையான அலைகள் நினது குதிரையின் குளம்பைக் கழுவும்படி நீ பூமியை வலம் சுற்றி வருவாய் என்று கருதி, மயங்கி மனம் நடுங்கி, துன்பம் மிகுதியாகித் தூங்காமல் இருக்கின்றனர் என்று கோவூர்கிழார் கூறியிருப்பதனால் அறியலாம். சிறப்புடைய மரபில் பொருளும் இன்பமும் அறத்து வழிபடுஉம் தோற்றம் போல இருகுடை பின்பட, ஓங்கிய ஒருகுடை உருகெழு மதியின் நிவந்து சேண்விளங்க; நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப் பாசறை அல்லது நீ ஒல்லாயே; நுதி முக மழுங்க மண்டி ஒன்னார் கடிமதில் பாயும் நின்களிறு அடங்கலவே; போரெனிற் புகலும் புனை கழல் மறவர் காடு இடைக் கிடந்த நாடு நனிசேய செல்வேம் அல்லேம் என்னார்; கல் என் விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்துக் குணகடல் பின்னதாகக் குடகடல் வெண்தலைப் புணரி நின்மான் குளம்பு அலைப்ப வலமுறை வருதலும் உண்டென்று அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. என்னும் பாடலே மேற்கூறிய பொருளைக் காட்டுகிறது. ஆவூர் மூலங்கிழார் என்னும் மற்றொரு புலவரின் பாடலால் இவனுடைய வீரத்தின் முழு சிறப்பையும் காணலாம். பெரிய சேனையையுடைய வீரம் பொருந்திய அரசனே! நீ கோபித்துப் பார்க்கும் இடங்களில் நெருப் பெரியும்; நீ அன்புடன் பார்க்கும் இடங்களில் பொன் விளங்கும்! அன்றியும் சூரியனிடம் நிலவு வீச வேண்டும் என்று விரும்பினால் அவ்வாறே உண்டாக்குவாய்; வெண்மையான சந்திரனிடத்தில் வெயில் வீச வேண்டும் என்று விரும்பினாலும் அவ்வாறே உண்டாக்குவாய்; இத்தகைய வீரமுடன் நீ விளங்குகிறாய் என்பது இப்புலவர் கூறியது:- இதனை: வியன் தானை விறல் வேந்தே நீ, உடன்று நோக்கும் வாய் எரிதவழ நீ, நயந்து நோக்கும் வாய் பொன் பூப்பச் செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை. என்ற பாடலாற் காணலாம். ஆகவே இம் மன்னனுடைய வீரமும் தமிழர் வீரத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பாண்டியன் பாண்டியன் தலையானங் கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்பவன் ஒரு சிறந்த வீரன். இவன் இளம் பருவமுடையவனாயிருக்கும் போதே போரில் வல்லவனாக விருந்தான். தலையாலங் கானம் என்னும் ஊரில், கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னனுடன் சிறுவனாக இருக்கும் போதே இவன் போர் செய்தான். அவனைத் தோற்கடித்துச் சிறையிலிட்டான். இம் மன்னன் எழினி, எருமை யூரன், பொருநன், இருங்கோவேண்மான், சேரன், சோழன் முதலிய வீரர்களுடன் சண்டை செய்து வெற்றி பெற்றவன். வீரத்தினாலும், அறத்தினாலும் சிறந்து விளங்கினான். இவன் சிறந்த படிப்பாளி; தமிழ்க் கல்வி கற்பதையே பொழுதுபோக்காக உடையவன்; தமிழிற் செய்யுளியற்றும் ஆற்றல் பெற்றிருந்தான். இவனுடைய வீரத்தையும் அறிவையும் பாராட்டிப் புலவர் பலர் பாடியிருக்கின்றனர். கல்லாடனார், இடைக் குன்றூர் கிழார், மாங்குடி கிழார், குடபுலவியனார், குறுங்கோழியூர் கிழார் முதலியவர்கள் இவன் மீது பாடல் பாடிய புலவர்கள். அவர்களுடைய பாடல்களை ஆராய்ந்தால் இவனுடைய வரலாறு முழுவதையும் நன்குணரலாம். இம் மன்னனுடைய இளம் பருவ வீரத்தைப் பாராட்டி, இடைக் குன்றூர் கிழார் என்னும் புலவர் கூறியிருப்பதாவது: சதங்கை அவிழ்த்து எடுத்து விடப்பட்ட காலிலே ஒளி பொருந்திய வீரகண்டாமணியை அணிந்திருக்கின்றான்; குடுமி களைந்த தலையில் வேம்பினது ஒளிபொருந்திய தளிரை நீண்ட கொடியாகிய உழிஞைக் கொடியுடன் தரித்திருக்கின்றான்; சிறிய காப்புகளைக் கழற்றிய கையில் வில்லேந்திக் கொண்டு பெரிய தேரினது கொடி கட்டும் இடம் பொலிவு பெறும்படி நிற்கின்றான்; இவன் யாரோ? யாரேயாயினும் அவன் தரித்திருக் கும் மாலை வாழ்வதாக; இன்னும் மார்பில் மாலையணிந்து, (குழந்தை நகையாகிய) ஐம்படைத்தாலியை எடுக்காதவனா யிருக்கிறான்; இன்று தான் பால் குடிப்பதை விட்டு உணவுண்ணத் தொடங்கியிருக்கின்றான்; இவன் ஒவ்வொரு புறத்திலிருந்தும், தன்மீது கோபித்துப் போர்செய்ய வந்த வீரர்களை மதிக்கவும் இல்லை; இகழவும் இல்லை; அவர்களை இறுகப் பிடித்து, பெரிய ஆகாயத்தின் கண் ஓசையுண்டாகும்படி அவர் உடல் நிலத்திற் கவிழ்ந்து விழும்படி செய்ததைப் பற்றி அவன் மகிழவும் இல்லை; இவ்வாறு செய்துவிட்டோமே யென்பதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளவும் இல்லை என்று கூறியுள்ளார். கிண்கிணி களைந்த கால் ஒண்கழல் தொட்டுக் குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண்தளிர் நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து, குறுந்தொடி கழித்தகைச் சாபம்பற்றி நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்கொல்? வாழ்க அவன் கண்ணி! தார் பூண்டு தாலி களைந்தன்று மிலனே! பால்விட்டு அயினியும் இன்று அயின் றனனே! வயின் வயின் உடன்று மேல் வந்த வம்ப மன்னரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே! அவரை அழுந்தப்பற்றி அகல் விசும்பு ஆர்ப்பெழக் கவிழ்ந்து நிலஞ்சேர அட்டதை மகிழ்ந்தன்றும், மலிந்தன்றும் அதனினும் இலனே (பு.நா. 77) என்பதே மேற்கூறிய பொருளமைந்த பாடல். இவனுடைய கொண்ட கொள்கையைவிடாது நடத்தும் வீரத்தன்மையை விளக்க இவனாற் பாடப்பட்ட பாட்டு ஒன்றே போதுமானதாகும். இவன் கூறியிருப்பதாவது:- புல்லிய சொற்களைச் சொன்ன, கோபம் மிகுந்த எமது பகையரசர்களை, அரிய சண்டையில் தோற்றுச் சிதறியோடும் படி சண்டை செய்து அவர்களுடைய முரசத்தையும் அவர் களையும் பிடிப்பேன்; அவ்வாறு அவர்களைப் பிடிக்காமற் போவேனாயின், எனது குடை நிழலில் வாழ்கின்ற குடிமக்கள் தாங்கள் சென்று அடை நல்ல நிழலைக் காணாதவர்களாய், எமது அரசன் மிகவும் கொடியன் என்று கூறிக் கண்ணீர் சொரிந்து பழி தூற்றும், கொடுங்கோலை யுடையவனாவேன். அன்றியும் மிகுந்த சிறப்பையும், உயர்வான கல்வி கேள்வி களையும் உடைய-மாங்குடிமருதன் முதலாக உள்ள-உலக முள்ளவரையிலும் பலராலும் புகழப்படும் சிறப்பினையுடைய புலவர்களால் எனது நாடு புகழ்ந்து பாடப்படாமற் போவதாக; அன்றியும் என்னாற் காப்பாற்றப்படுகின்றவர்கள் துன்பம் அடையுமாறும், இரக்கின்றவர்களுக்கு இல்லை யென்று சொல்லுமாறும் வறுமையடைவேன் என்று கூறியிருக்கின்றான்; இதனை : சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத்தாக்கி, முரசமொடு ஒருங்கு அகப்படேஎன் ஆயின், பொருந்திய என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது, கொடியன் எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக் குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக ; ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர் புகழ்சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை; புரப்போர் புன் கண்கூர இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே. (பு.நா. 72) என்பது மேற்கூறிய பொருள் அமைந்த பாடல். இப்பாடலால் இந்த நெடுஞ் செழியனது உண்மை வீரம் விளங்குகின்றது. இவன் தனது நாட்டில் வாழும் குடிகள் நலமடையுமாறு செங்கோல் செலுத்துதலே சிறந்த வீரம் எனக் கருதியிருந்தான். புலவர்களால் புகழ்ந்து பாடப்படாத நாடு, வீரமுடைய அரசர்களால் ஆளப்படாத நாடு என்பது இவன் மனக்கருத்து. தன்னாற் காப்பாற்றப்படுவோரைப் பாதுகாக்காமல் துன்புற விடுதல் வீரமற்ற செயல் என்பதும் இவன் உள்ளக் கிடக்கை. இரப்போர்க்கு இல்லையென்று சொல்லுதலும் வீரமில்லாமைக்கு அறிகுறி யென்பதே இவன் துணிபு. இவனைப் போன்ற சிறந்த மன்னர்களோ, அல்லது அரசாட்சி நடத்தும் ஜனத் தலைவர்களோ இக் காலத்தில் எவரேனும் உளரோ! குடிகள் பழி தூற்றுமாறு அரசாளுதல் அரசாட்சியன்று என்று கருதியிருந்த இவன் சிறந்த தன்மையை இக்காலத்தார் நுனித்துணர்வார்களாயின் நமது தமிழ் மன்னர்களின் வீரமும், அரசியல் திறமும் விளங்காமற் போகாது. இன்னும் பத்துப் பாட்டில் உள்ள மதுரைக்காஞ்சி என்னும் பாட்டுக்கும் இவனே தலைவன் என்றால் இவன் பெருமையை என்னென்று கூறுவது? இளஞ்சேட் சென்னி இளஞ்சேட் சென்னி யென்பவன் ஒரு சோழ மன்னன். இவனுடைய வீரம் எல்லோராலும் பாராட்டற்குரிய தொன்றாகும். இவன் ஒரு காலத்தில் சேரமானுடைய ஊராகிய பாமுளூர் என்பதை முற்றுகையிட்டு அதைத் தன்வசப்படுத்திக் கொண்டான். அதனால் இவனுக்குப் பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி என்ற பெயர் வழங்கும். அன்றியும் இவன் கடற்கரைச் சோலையமைந்த ஓர் ஊரை உரிமையாக உடையவனாக இருந்தது பற்றி நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி யென்ற பெயரையும் பெற்றிருந்தான். இவன் இரக்கின்றவர்களைப் புரக்க வேண்டும் என்ற கொள்கையையே சிறந்த கொள்கையாகக் கொண்டவன். இவன் செய்கையை, ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் கூறியிருப்பதனால் அறியலாம். அதுவருமாறு: நீ பகைவர்களுடைய கோட்டையை அது அவர்கள் கையிலிருக்கும் போதே பரணர்களாகிய இரவலர்களுக்கு, அக்கோட்டை உங்களுடையது; எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக்கொடுக்கும் வள்ளலாகிய வீரன். எந்தையாகிய நீ இரவலர்களைப் புரப்பதையே கடமையாகக் கொண்டிருக் கிறாய் என்று சொல்லியிருக்கிறார். ... ... ... ... நீயே ஒன்னார் ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்! பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே. (பு.நா. 203) இதுவே மேற்கூறிய பொருளமைந்த பாடலாகும். இங்கே வடநாட்டு வீரனாகிய இராமனையும், நமது தமிழ் வீரனாகிய இவனையும் ஒப்பிட்டுப் பார்ப்போமாயின் தமிழர் வீரத்தின் உயர்வு விளங்கும். இராமன் சக்கிரீவனுடன் நட்பு பூண்டவன். அவனுக்குக் கிட்கிந்தை நகரத்தை அரசாளக் கொடுத்ததாகக் கூறுகின்றான். பின்னம் வாலியுடன் வஞ்சகப் போர் செய்து அவனைக் கொன்று, கிட்கிந்தைக்குச் சுக்கிரீவனை அரசனாக்குகின்றான். இக்காரியத்தால் இராமன் அடைந்த நன்மை அளவற்றது. வானர சேனையின் உதவி கிடைக்கிறது. அதைக் கொண்டே இராவணனைக் கொல்கின்றான். இதன் பின்னர், இராமன் தன்னிடம் வந்து சரணமடைந்த இராவணனு டைய தம்பியாகிய விபீடணனுக்கு, இராவணனைக் கொல்லு முன்னரே இலங்கையைக் கொடுத்ததாகக் கூறுகின்றான்; உடனே இலங்கைக்கு அரசனாக வைத்து விபீடணனுக்குப் பட்டம் கட்டுகிறான். இதனால், இலங்கையின் நிலைமையையும், அரக்கர்களின் தந்திரங்களையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. விபீடணன் உதவியின்றேல், இராவணனை வென்றிருக்க முடியாது. ஆகவே இராமனால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த இரண்டு வீரச்செயல்களும் சுயநலம் கருதிய வீரச்செயல்கள் என்பதில் ஐயமில்லை. சுக்கிரீவன், விபீடணன் ஆகிய இருவர்களின் துணையைக் கொண்டே, இழந்த தன் மனைவி சீதையை மீட்கின்றான். இவர்கள் இருவர்களுடைய துணையும் இராமனுக்குக் கிடைத்திராவிட்டால் இராமாயணக் கதையே வேறுவிதமாகத்தான் போயிருக்கும். இத்தகைய இராமனுடைய வீரச் செயலுக்கும் இளஞ்சேட் சென்னியின் வீரச்செயலுக்கும் உள்ள வேற்றுமையைக் கவனியுங்கள். இரவலர்களுக்கும் கோட்டைகளைப் பிடித்துக் கொடுப்பதால் இளஞ்சேட் சென்னிக்குக் கிடைக்கும் பயன் என்ன? இரவலர்கள் எந்த உதவியை இவனுக்குச் செய்யப் போகின்றார்கள். ஆகவே தன்னலங் கருதா வீரச்செயலே இளஞ்சேட் சென்னியின் வீரச்செயல். இதனைத் தொல்காப்பிய உரையாசிரியரான ஆசிரியர் நச்சினார்க்கினியரும் குறித்துள்ளார். தொல்காப்பியம் புறத்திணை இயல், உழிஞைத்திணையால், கொள்ளார் தேம் குறித்த கொற்றமும் என்னும் துறையில் இராமனுடைய வீரத் தையும், இச்சென்னியின் வீரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறியிருப்பதும் கவனிக்கத் தக்கது. இராமனுடைய வீரத்தைக் காட்டிலும், சென்னியின் வீரம் சிறந்ததென்பதை ஆராய்வோர் அறியலாம். பாண்டியன் நெடுஞ் செழியன் இவன் மதுரை நகரை யாண்ட சிறந்த தமிழ் வீரன். இவனின்றேல் சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ் நூலை நாம் பெற்றிருக்க முடியாது. தன் மனைவியின் பிணக்கால் நிலைகலங்கியிருந்த சமயத்தில், பொற்கொல்லன் கூறிய பொய்யுரையை நம்பிக் கோவலனைக் கொலை செய்தான். ஆயினும் அவன் நடுநிலை தவறா நல்ல வீரன். கோவலன் குற்ற மற்றவன்; பொற்கொல்லன் சொல்லை நம்பித் தீது செய்தோம் என்று கண்ணகியின் மூலம் உணர்ந்தவுடன் தனது செங்கோல் கொடுங்கோலானமைக்கு வருந்தினான்; உடனே உயிர் விட்டுத் தனது கொடுங்கோலைச் செங்கோலாக்கினான். இவனது வீரத்தை அறிய சிலப்பதிகாரம் ஒன்றே போதும். கண்ணகி தன் கணவன் வெட்டுண்டிறந்த பின் ஒற்றைச் சிலம்பைக் கையிலேந்திக் கொண்டு பாண்டியன் அரண்மனையை யடைந்தாள்; வாயிற்காவலன் சம்மதி பெற்று உள்ளே சென்று மன்னனைக் கண்டாள், நீர் சொரியும் கண்ணையுடையவளாக வந்த கண்ணகியைக் கண்டான் மன்னன். நீர்வார் கண்ணை! என் முன்வந்தோய்! யாரையோ நீ! மடக்கொடியோய்! என்றான் நெடுஞ் செழியன். தேரா மன்னா செப்புவது உடையேன், எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்; வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடை மணி உகுநீர் நெஞ்சு சுடத் தான் தன் அரும் பெறல் புதல்வனை ஆழியின்மடித் தோன் பெரும் பெயர்ப்புகார் என்பதியே. அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகன்ஐ ஆகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப்புகுந்து ஈங்கு என்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி என்பது என் பெயரே என்று, தனது ஊர் பழம் பெரும் சிறப்பு வாய்ந்த காவிரிப்பூம் பட்டினமென்றும், சிலம்பு விற்க வந்த இடத்தில் உன்னால் கொல்லப்பட்ட கோவலனுடைய மனைவியென்றும், என் பெயர் கண்ணகி என்றும் கூறினாள். அது கேட்ட மன்னவன், பெண் அணங்கே, கள்வனைக்கோறல் கடுங்கோல் அன்று வெள் வேல் கொற்றங் காண், என்று கள்வனைக் கொன்றது கொடுங்கோன்மையன்று, செங்கோன்மையாகும் எனப் பாண்டியன் கூறினான். உடனே கண்ணகி, நற்றிறப் படராக் கொற்கை வேந்தே என் கால் பொற்சிலம்பு மணியுடை அரியே நல்ல வழியில் செல்லாத பாண்டியனே! என் காற் சிலம்பாகிய கோவலன் கொண்டு வந்த சிலம்பின் உள்ளே யுள்ள பரல் மாணிக்கம் எனக் கண்ணகி கூறினாள். உடனே மன்னன். தேமொழி உரைத்தது செவ்வை நன் மொழி. யாம் உடைச் சிலம்பு முத்துடை அரியே என்னுடைய சிலம்பினுள் உள்ள பருக்கைக் கல் முத்தாகும். என்று சொல்லி, முன்னர்க் கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைக் கண்ணகியின் முன் கொண்டு வந்து வைக்குமாறு கட்டளையிட்டான். ஏவலன் ஒருவன் அவ்வாறே கொண்டு வந்து வைத்தான். அச்சிலம்பைக் கண்ணகி எடுத்து உடைத்தாள். அச் சிலம்பின் உள்ளிருந்த பரலாகிய மணி அரசன் முன்சென்று தெறித்தது.அதைக் கண்ட மன்னன் நடு நடுங்கினான். அவன் வெண் கொற்றக் குடை தாழ்ந்து விட்டது. கையிலிருந்த செங்கோல் நழுவி விழுந்து விட்டது. மன்னனோ, பொன் செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுக என் ஆயுள் என்று சொல்லிக் கொண்டு மயங்கி வீழ்ந்து அரியணையிலேயே உயிர் துறந்தான். இவன் செய்த குற்றம் வேண்டுமென்று செய்த தல்ல; அறியாமற் செய்தது. ஆயினும் தான் செய்தது குற்றமென்று அறிந்தவுடன் உயிர் துறந்தான். இத்தகைய மானமுடைய தமிழ்வீரனைப் போன்றவர்களை வேறு எந்த நாட்டு வரலாறுகளிலேனும் கண்ட துண்டோ? சேரன் செங்குட்டுவன் பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்திருந்த மற்றொரு வீரன் சேரன் செங்குட்டுவன் என்பவன். சிலப்பதிகார நிகழ்ச்சிக் குக் காரணமாயுள்ளவர்களில் இவனும் ஒருவன். இவன் சேர நாட்டு வஞ்சிமா நகரில் இருந்து செங்கோல் செலுத்தியவன். இவன் கண்ணகியின் வரலாற்றைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் வாயிலாக அறிந்தான். தன் மனைவியின் விருப்பப்படி, வீரக் கண்ணகிக்குத் தனது நகரில் உருவச்சிலை நாட்டத் துணிந்தான். கண்ணகியின் உருவச்சிலை செய்வதற்கு இமய மலையிற் சென்று கல்கொண்டு வருதலே தனது வீரத்திற்கு ஏற்றதெனத் துணிந்தான். உடனே தனது தமிழ்ப் படைகளுடன் வடக்கு நோக்கிப் புறப்பட்டான். தன்னை எதிர் கொண்டு பணி யாதவர்களை யெல்லாம் போரில் அடக்கித் திறைகொண்டான். தமிழ் மன்னரை இகழ்ந்த கனகன், விசயன் என்னும் அரசர் களைப் பிடித்து அவர்கள் தலையில் இமயமலைக் கல்லை வைத்துக் கங்கையில் நீராட்டி வஞ்சிமாநகர்க்குக் கொண்டு வந்தான். இந்நிகழ்ச்சிக்கு முன்னும் ஒருமுறை இம்மன்னன் வட நாட்டின் மீது படையெடுத்துச் சென்று ஆரிய மன்னர்களை வென்றிருக்கிறான். கண்ணகியின் உருவச்சிலை செய்து நாட்டிய போது, சிறைப்பிடித்து வந்த கனகன், விசயன் என்னும் மன்னர் களையும், மற்றும் சிறைப்பட்டிருந்தவர்களையும், பெருந்தன்மை யுடன் விடுதலை செய்தான். இம்மன்னன் கண்ணகி சிலைக்குக் கல்லெடுக்கும் பொருட்டு வடநாடு நோக்கி யெழும்போது கூறிய மொழி யிதுவாகும்:- வடதிசை மருங்கின் மன்னர் தம் முடித்தலைக் கடவுள் எழுத ஓர் கற்கொண்டு அல்லது வறிது மீளும் என்வாய் வாள் ஆகில் செறிகழல் புனைந்த செருவெங்கோலத்துப் பகையரசு நடுக்காது பயங்கெழுவைப்பில் குடி நடுக்குறூஉம் கோலேன் ஆகுக என்று கூறினான். வடநாட்டில் உள்ள எனது பகை மன்னர்களின் தலையில் வைத்துக் கண்ணகியின் உருவச்சிலை செய்வதற்கு ஒரு கல் கொண்டு வராமல் என்னுடைய வாளாயுதம் சும்மா திரும்பு மானால், போர்க்களத்தில் பகையரசரை நடுங்க வைக்காமல் தன் குடிகளை நடுங்கவைக்கும் கொடுங்கோல் மன்னன் ஆகக் கடவேன் என்பது மேற்கூறிய அடிகளின் கருத்து. இத்தகைய நேர்மையான ஆட்சியையுடைய இவன் ஒரு சிறந்த தமிழ் வீரன் அல்லனோ! மநுநீதி கண்ட சோழன் இவனுடைய உண்மைப் பெயர் இன்னதென்று உணர் வதற்கு வழியில்லை. இம்மன்னன் புகார் நகரில் அரசு செய்தவன். இவன் அரசாண்ட காலத்தில் ஒரு நாள், இவன் மகன் ஒரு தேரில் ஏறிக் கொண்டு தெரு வழியே போய்க் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு பசுங்கன்று விரைந்து ஓடிவந்து இவனுடைய தேர்ச் சக்கரத்தில் மாட்டிக்கொண்டு இறந்துவிட்டது. உடனே அமைச்சர் முதலிய சான்றோர்கள் இந்நிகழ்ச்சியை மன்னன் அறியாதபடி மறைத்து வைத்தனர். அரசன் அறிந்தால் மகனுக்குத் தண்டனை விதிப்பான் என்ற பயத்தினாலேயே இவ்வாறு செய்தனர். இந்நிகழ்ச்சி நடந்து பலமாதங்களோ, வாரங்களோ ஆண்டுகளோ கழிந்துவிட்டன. பின்னர் எவ்வாறோ அரசனுக்கு அது தெரிந்துவிட்டது. உடனே, நாட்கள் கடந்துபோயின என்று எண்ணாமல், அறத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற ஒன்றையே எண்ணித் தன் மகனை அழைத்துத் தேர்க்காலிற் கிடத்தி அவன் மீது தேரைச் செலுத்திக் கொன்றான். இதனை:- சாலமறைத் தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் பின்றையும்-மேலைக் கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை யில் என்னும் பழமொழிப் பாட்டால் அறியலாம். மிகவும் மறைத்துப் பெரியோர்கள் ஒளித்து விட்டதனால் நிகழ்ச்சி நடந்து அதிக காலமாகியும், முன்பு பசுக்கன்றைத் தேரில் கொன்ற தன் மகனைத் தானும் தேரினால் கொன்றான்; ஆதலால் நீதி செய்வதற்கு அதிக நாள் குறைந்தநாள் என்பது இல்லை என்பதே இதன் பொருள். இவ்வீரன் வரலாற்றையே தற்காலத்தினர் பலவகையாக மாற்றி வழங்கினர். இவனுக்கே மனுநீதி கண்ட சோழன் என்ற பெயரையும் வழங்கினர். இந்தக் கதை திருவாரூரில் நடந்ததாகப் பெரிய புராணத்திற் கூறப்படுகின்றது. காவிரிப்பூம் பட்டினத்தில் நடந்ததாகவே சிலப்பதிகாரத்திலும் இக் கதைக்குக் குறிப்பு உண்டு. பெரிய புராணத்திற் கூறப்படுவது போலவே, கன்றை யிழந்த பசுவின் மூலம், அரசன் உண்மை தெரிந்து கொண்டு தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்கொன்றான் என்று சிலப்பதிகாரத்திலும் கூறப்படுகின்றது. கதை எப்படியாயினும் இவன் சிறந்த தமிழ் வீரன் என்பதில் தடை யென்னை? தன்னுடைய அரசாட்சியில் எந்த உயிருக்கும் துன்பம் நேரக் கூடாது என்பதையே விரதமாகக் கொண்டிருந்தான் என்பதில் ஐயமில்லை. பிற உயிருக்குத் துன்பம் விளைவிக்கின்றவர்கள் யாராயிருந்தாலும் அவர்களைத் தண்டிப்பதில் நடுநிலை தவறாத வீரமுடையவனாயிருந்திருக்கின்றான். இதுவே தமிழர் நீதியின் சிறப்பு; தமிழர் வீரத்தின் உயர்வு. இவனுக்கு மனுநீதி கண்ட சோழன் எனப் பிற்காலத்தார் இட்ட பெயர் சிறிதும் பொருத்த மற்றதாகும் என்பதே நமது கருத்து. ஏனெனில், மனிதர்க்குள்ளேயே சாதி பிரித்து நீதியுரைக்கும் மநுநூலில், விலங்கினையும் மனிதனையும் ஒன்றாக வைத்து நீதி வழங்க ஆதரவேது? ஆதலால் இப்பெயர் இவ்வீரனுக்குப் பெருமை யளிப்பதாகாது. போர் வெறி போர் செய்யும் கொடுமைதனைப் புனைந்துரைக்க வல்லார் யார்? சிறிது கேட்பீர்! ஊர்கின்ற பாலகர்கள் உயிர்வாங்கும்; கிழவர்களை நடுங்க வைக்கும் கார்ஓதி மாதர்பலர் கதறி அழக் கணவர்களின் உடலை மாய்க்கும் பார்மீதில் பஞ்சமென்னும் பெரும்பூதம் ஆட்சிசெயப் பண்ணும் ஐயோ! 1 பலகோடி உழைப்பாளர் இரவுபகல் பாடுபட்டு எழுப்பி வைத்த அளவில்லா மாளிகைகள் அடியோடு தரைமட்டம் ஆகும்; நன்செய் நிலமெல்லாம் பாழாகும்; நீர்த்தேக்கம் நிர்மூலம் ஆகும் அன்றோ! அளவற்ற கப்பல்களும் ஆட்களுடன் ஆழ்கடலின் அடியில் ஏகும் 2 கலகமிடும் கூட்டத்தின் மத்தியிலே கயவர்குழாம் கொள்ளை கொள்ளும்; உலகில்இதை அறியாத பேர்கள் இலை; போர்என்றால் உளம் மகிழ்வார். பலசதிகள் செய்துபொருள்கள் பறிக்கலாம் என்றெண்ணிக் குதூ கலிப்பார்; நலமென்பார்; இவர்களெலாம் சுயநலமே நாட்ட முளார் அறிந்து கொள்வோம்! 3 காட்டினிலே வாழ்கின்ற விலங்குகளே தம்மினத்தை உறிஞ்சி வாழும், நாட்டினிலே வாழ்கின்ற மதியுடைய மனிதர் இதை நாடலாமோ! ஏட்டினிலே வேதாந்தம் படித்துவிட்டு விதி வழிதான் என்பார் போல மூட்டிய தோர் போர்கண்டு பேசாமல் மூலையிலே உறங்கல் நன்றோ! 4 மக்கள் தமை மிருகமென மதிக்கின்ற கல் நெஞ்சச் சிறிய கூட்டம் எக்காலும் போர் வெறியே தலைக்கேறி இவ்வுலகை நாசம் செய்வார்! துக்கமெலாம் பொதுமக்கள் அனுபவிப்பார்; துயர்இன்றி அவர்கள் வாழ்வார்; முக்காலும் உண்மையிது; பொய்யல்ல; மூர்க்கர்வர் வழி போக வேண்டாம்! 5 தேசத்தைக் காப்பதற்கே போர்முரசு கொட்டுகிறோம்; என்று சொல்வார்; நாசத்தை விலைகொடுத்து வாங்குவதே போர்முழக்கம்; சமூக நஞ்சே; மாசற்ற பொதுமக்கள் வாழ்க்கையினை மாற்றி நிலை குலைய வைக்கும்; யோசிக்கும் அறிவுடையோர் போர்வேண்டார்; ஒற்றுமையே வேண்டு வாரே! 6 வெயிலென்றும் பனியென்றும் பாராமல் வேதனையோடு உழைத்துச் சேர்த்த உயர்பண்டம் செல்வம்எலாம் பயனின்றி ஒருநொடியில் அழிய வைப்பான் பயங்கரமே உருவமான போர் அரக்கன். இதையறிவீர்! பாவி மக்கள் நயவஞ்சப் போர்ஒழிக! ஒழிக! என்றே நாமிங்கே முழங்கு வோமே! 7 பாட்டாளர் உழைப்பினிலே வருகின்ற பயன்எல்லாம் சுரண்டி வாழும் கோட்டான்கள் தூண்டுதலே போராகும்; இவ்வுண்மை குறித்துக் கொள்வீர்! நாட்டாண்மைப் பித்தர்களும் போர்வெறியாம் நஞ்சுண்டு நாசம் ஆவார்; ஏட்டாளர், எழுத்தாளர் எல்லோரும் போர் வெறியை எதிர்த்து நிற்பீர்! 8 வெறிகொண்ட மூடர்களின் போர் முழக்கில் ஏமாற வேண்டாம் என்போம்! அறிவுதனை விபசாரம் செய்யவேண்டாம்! ஆண்மையுடன் இணைத்து வைப்போம்! குறியமனம் படைத்தவர்கள் சூழ்ச்சியெல்லாம் குலைந்தழிந்து சாக வைப்போம்! சுறுசுறுப்பாய் உலகமெல்லாம் சாந்தியென்னும் சோதியினைப் பரப்பு வோமே! 9 தமிழர் கண்ட இன்பவாழ்வு. உலக வாழ்வு துன்பம் நிறைந்தது. பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் கவலைப்பட்டே காலம் போகும். இதற்கென்ன செய்வோம் இன்றையப் பொழுது எப்படிக் கழியுமோ? நாளைய பொழுதைப் போக்க என்ன செய்யலாம்? என்ற எப்பொழுதும் சிந்தனை செய்ய வேண்டும். ஆதலால் வாழ்வதைவிடச் சாவதுதான் விடுதலை, இன்பம். என்று இப்படி வாய் வேதாந்தம் பேசுவோர் உண்டு. வாழ்க் கையில் உள்ள துன்பமும் கவலையும் இப்படிப் பேசும்படித் தூண்டுகின்றது வேதனைப்பட்ட உள்ளத்திலே இத்தகைய எண்ணங்கள் எழுகின்றன. வெளியிலே வேதாந்தமாகப் புறப்பட்டு வருகின்றன. இத்தகைய வேதனைக்குரல், மக்களிடையிலே பசிப்பிணி பரவிய காலத்தில்தான் கிளம்பியிருக்க வேண்டும் அனைவரும் கவலையின்றி உண்டு களிக்கின்ற காலத்தில் இத்தகைய புலம்பல்கள் புறப்பட்டிருக்க முடியாது. வலுத்தவர்கள் இளைத்தவர்களை அடக்கி அவர்கள் உழைப்பைச் சுரண்டத் தொடங்கிய காலத்தில்தான் இளைத் தவர்கள் இவ்வாறு புலம்பத் தொடங்கினர். நிலப்பிரபுத்துவம் நிலை பெற்று அதன் கீழ் மக்கள் ஒடுக்கப்பட்ட காலத்தில்தான் உலகமும், உலக வாழ்வும் நிலையற்றவை என்ற வேதாந்தப் பேச்சு ஏழை மக்கள் உள்ளத்திலே உதித்திருக்க வேண்டும். அக்காலத்திலே, ஏழை மக்களைப் பட்டினியால் பரி தவிக்காமல் பாதுகாத்தவர்கள் மக்கள் தலைவர்களாகக் கருதப் பட்டனர். அவர்களே மக்கள் சமூதாயத்தின் உயிர் நிலையாக எண்ணப்பட்டனர். இந்த வலுத்தவர்கள் நிழலிலேதான் அறிஞர்களும் ஆன்றோர்களும் அண்டி வாழ்ந்து வந்தனர். நிலப்பிரபுக்களின் நிழலில் வாழ்ந்த ஆன்றோர்கள் தம்முடைய நல்வாழ்வை மட்டும் நாடினர் என்று சொல்லிவிட முடியாது. அவர்கள் நாட்டு மக்களின் நல் வாழ்வையும் விரும்பினர். நாட்டு மக்கள் நலிவுற்றால்-வேதனைப்பட்டால் அல்லற்பட்டு ஆற்றாது அழுதால் அதனால் சமுதாய வாழ்வு சீர்குலையும். பெரிய துன்பம் உண்டாகும். உள்ள கட்டுப்பாடுகள் உருக்குலைந்து விடும் என்று நம்பினர். ஆதலால் அவர்கள் மக்களை அடக்கி ஆண்ட கூட்டத்தினர்க்கு அறிவுரை கூறிவந்தனர். அமைதியைக் காக்க ஆதிக்கம் செலுத்துவோர் ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துக் கூறினர். ஆதிக்கம் பெற்றிருந்தவர்களும் ஆன்றோர் அறிவுரைகளைப் போற்றி வந்தனர். அதனால் அக்காலத்தில் நாட்டில் அமைதி இருந்தது. மனித சமூகமும் முன்னேறி வந்தது. துன்பப்படுவோரும் இன்பத்துடன் வாழ முடியும் என்று எண்ணினர்: இன்று துன்புற்றாலும் நாளை இன்புறுவோம் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்தனர். வாழ்விலே இன்பம் இல்லை. துன்பம்தான் உண்டு என்று சலிப்படைந்து மக்களுக்குச் சான்றோர்கள் கூறிய அறிவுரைகள் பல உண்டு. அவைகளை முன்னோர் நூல்களிலே காணலாம். இதற்கு உதாரணமாகப் புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காண்போம். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்பவன் ஒரு பாண்டிய மன்னன்: சிறந்த தமிழ்ப் புலவனும் கூட. அவன் பாடியதாக உள்ள ஒரு பாடல் அருமையான பாட்டு. அது ஆயிரங்காலத்துப் பாட்டுத் தான்; ஆயினும், இன்றுள்ள மக்கள் வாழ்க்கைத் துன்பத்தைப் போக்குவதற்கும் வழிகாட்டும் பாட்டு. இவ்வுலக வாழ்வு துன்பக் கேணி என்று சலிப்படைந் தவர்களுக்கு ஆறுதல் கூறுவது போல் அமைந்திருக்கும் பாடல் அதுவாகும். இவ்வுலக வாழ்வில் இன்பமில்லை. துன்பம் தான் உண்டு, என்று சோர்வடைய வேண்டாம். இவ்வுலகம், நிலையற்றது என்றும் நினைக்க வேண்டாம். உலகம் நம் கண்முன்னே காணப் படுகின்றது. இவ்வுலகில் மனிதத் தன்மையுடன் வாழ்வோர் பலர் இருக்கின்றனர். அவர்கள் தேவர்களுக்குரிய உணவான அமுதம் தமக்குக் கிடைத்தாலும் சரி அது இனிமையானது. கிடைத்தற்கு அரியது என்று நினைத்துத் தாமே உண்டு விடமாட்டார்கள். பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்பார்கள். யாரையும் வெறுக்க மாட்டார்கள். எல்லா மக்களிடமும் அன்பு காட்டுவார்கள். சோம்பி இருக்கமாட்டார்கள் பிறர் அஞ்சத்தக்க பழிபாவங் களைச் செய்ய அஞ்சுவார்கள். புகழ் உண்டாக்கத்தக்க நல்ல காரியங்களை உயிரைக் கொடுத்தும், நிறைவேற்றுவார்கள். இவ்வுலகம் முழுவதையும் கொடுப்பதாகக் கூறினாலும், பழிக்கத் தக்க இழி செயல்களைச் செய்யமாட்டார்கள். இத்தகைய சிறந்த பண்புள்ளவர்களாய்த் தம்முடைய நலத்தை மட்டும் குறிக் கொண்டு உழைக்காமல் பிறர் நன்மைக்காகவே உழைக்கும் சிறந்த முயற்சியுள்ளவர்கள் இவ்வுலகில் இருக்கின்றனர். ஆகையால் இவ்வுலகில் வாழும் மக்கள் வாழ்க்கையிலே இன்பம் உண்டு. இதுவே அப்பாடலில் அமைந்திருக்கும் பொருள். அப் பாடல் கீழ்வருவது: உண்டால் அம்ம! இவ்வுலகம்! இந்திரர். அமிழ்தம்இயை வது ஆயினும், இனிது எனத் தமியர் உண்டலும் இலரே! முனிவு இலர்; துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ்எனின், உயிரும் கொடுக்குவர்: பழிஎனின், உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வு இலர்; அன்னமாட்சி அனையர் ஆகித், தமக்குஎன முயலா தோன் தாள் பிறர்க்குஎன முயலு நர். உன்மையானே (புறம் 182) இந்தப் பாடலில் உயிராக நிற்பது இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என தமியர் உண்டாலும் இலரே என்ற தொடர் தான். எல்லாமக்களும் பசியால் வேதனைப் படாமல் உணவுண்டு வாழ வழி செய்வது தான் இன்புறுவதற்கான செயல் என்பதை இச்செயல் வலியுறுத்துகின்றது. பகுத்துண்ணும் வாழ்வு இக்கருத்தை வள்ளுவரும் வலியுறுத்திக் கூறுவதைக் காணலாம். பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் கொல்லாமல் காப்பாற்று வதே. அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் அனைத்தினும் சிறந்த அறமாகும். (கு. 332). இதே கருத்தை நாலடியாரில் காண்கின்றோம். துகள்தீர் பெரும் செல்வம் தோன்றியக் கால் தொட்டுப் பகடு நடந்த கூழ் பல்லா ரோடு உண்க, குற்றமற்ற செல்வம் உண்டான காலந் தொடங்கி உழுது பயிர் செய்து பெற்ற உணவைப் பலருடனும் கூடி உண்ணுக. என்பது நாலடியாரின் இரண்டாவது பாட்டு. மேலே காட்டிய குறளும், நாலடியும் உணவு உற்பத்தியைப் பெருக்குவது மட்டும் போதாது: உணவு உற்பத்தி வளர்ந்து விட்டது: மக்கள் தொகைக்குப் போதுமான தான்யங்கள் விளைந்து விட்டன என்று புள்ளிக் கணக்குப் போடுவது மட்டும் போதாது; விளைந்திருக்கும் உணவுப் பண்டம் எல்லா மக்களுக் கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்; நிலப்பிரபுக்களின் களஞ்சியங்களிலே கட்டுண்டு கிடக்கும் உணவுப் பண்டம், நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிவிடாது. அவைகள் மக்களின் கையிலே கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். சரியான பங்கீட்டு முறை இருந்தால்தான் மக்களின் பசித்தீ அணையும். இக்கருத்தை வலியுறுத்துவனவே குறளும் நாலடியும். மேலேகாட்டியவற்றால் நாம் ஒரு உண்மையை உணரலாம். பசியால் வாடுவோர் உலக வாழ்வை வெறுக்கின்றனர். பசிக்கு இரையாகாதவர் உலக வாழ்வைச் சுவைக்கின்றனர். இதுதான் அவ்வுண்மை. பசிக் கொடுமை மனித சமுதாயத்தில் புரையோடும் புண்ணாகி இருப்பது வறுமைதான்; வறுமை என்பது உணவின்றி வாடுவதுதான். வறுமையற்ற சமுதாயத்திலே தான் கலைகள், காவியங்கள், கவிதைகள் வளரும்; வறுமையற்ற சமுதாயத்தில் மகிழ்ச்சியும் இன்பமும் நடனமாடும். பஞ்சத்தால் வளரும் நாட்டிலே எல்லா ஒழுங்குமுறைகளும் தலை தடுமாறும். பஞ்சத்தால் வாடும் தனி மனிதரும் நன்மை தீமை அறியாமல் அலைந்து தவிப்பார்கள். இந்த உண்மையை அறியாதவர்கள் சோறு பெரிதன்று; மானம் தான் பெரிது; மானத்தைக் காப்பாற்ற முயற்சிப்போம்; சோற்றுக் கவலையைப் பற்றிப் பின்னர் ஆலோசிப்போம் என்று கூறுவார்கள். மானத்தைக் காப்பதும் மானத்தை அழிப்பதும் உணவு தான் என்ற உண்மையை இவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை. வயிறார உண்டு கொழுத்திருப்பவர்கள் சோற்றுக்குப் போராடும் ஏழை மக்கள் எழுச்சிக்கு முட்டுக்கட்டை போடவே சோறு பெரிதன்று; மானந்தான் பெரிது என்று சொல்லுவார்கள். சோறில்லாமல் தவிக்கும் நிலையைப் பசிப்பிணி செய்யும் நிலையை-முன்னோர்கள் தெளிவாக வலியுறுத்தியிருக்கின்றனர். பசிப்பிணியைப் போல் கொடிய பாவி ஒருவனும் இல்லை. உயர்ந்த குடியிலே பிறந்தவனாயினும் சரி; அவனுடைய பெருமையை அழித்துவிடும். அவனிடத்திலே எவ்வளவு சிறப்பு இருந்தாலும், அவற்றை அடியோடு அழித்து விடும். தீமை யென்னும் கடலைக் கடந்து நன்மை யென்னும் கரையை அடை வதற்குத் தெப்பமாக இருப்பது கல்வியாகும். அத்தகைய கல்வியின் பயனை அழித்துவிடும். நாணம் ஒன்றுதான் மனிதனுக்கு அழகு தரும் ஆபரணம். அந்த நாணத்தையும் அழித்துவிடும். சிறந்த அழகையும் கெடுத்து விடும். தன் மனைவியுடன் சென்று பிறர் தலைவாசலிலே பிச்சை யேற்கும்படி செய்யும் பசிநோய் என்னும் கொடிய பாவியின் செயல் இதுவாகும். குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் பிடித்த கல்விப் பெரும் புணை விடும்; நாண் அணி களையும்; மாண் எழில் சிதைக்கும் பூண்முலை மாதரொடு. புறங்கடை நிறுத்தும்; பசிப்பிணி என்னும் பாவி. என்பது மணிமேகலை. வாழ்வைச் சீர்குலைக்கும் கொடும் பாவியாகப் பிசிப்பிணியை உருவகித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமுதாயத்தின் பசிப்பிணியை ஒழிப்பதுதான் அறிஞர்களின் முதல் வேலை; அரசாங்கத்தின் முதல் கடமை; மனித வாழ்வு நிலைத்திருப்பதற்கான அடிப்படைப்பணி. இவ்வுண்மையை எடுத்துக்காட்டவே மணிமேகலை என்னும் காவியமே பிறந்தது என்ற உண்மையை அதைப் படித்தார் அறிவர். இந்த உண்மையைப் பிற்காலத்து நீதி நூல்களும் எடுத்துக் காட்டியிருக்கின்றன. மானம், குலம், கல்வி வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை,-தேனின் கசிவந்த செல்லியர் மேல் கா முறுதல் பத்தும். பசிவந்திடப் பறந்து போம் என்பது நல்வழிப் பாட்டு. இது பள்ளிக்கூடத்தில் படித்த பலருடைய உளத்திலிருக்கும் பாட்டு. ஆனால் பலர் இப்பாடலை நினைத்துப் பார்ப்பதில்லை. உணவுப் போராட்டத்தைப் பற்றிப் பரிகசிப்போர். இப்பாடலை எண்ணிப் பார்க்க வேண்டும். பசிப்பிணி மிகுந்து விட்டால்-- அதைத் தணித்துக் கொள்ள முடியாவிட்டால்--பசியால் கௌவப் பட்ட மனிதனுடைய மானம் அழியும்; குலப்பெருமை மறையும்; கல்வியும் கைவிடும்; பிறர்க்கும் கொடுக்கும் தன்மை அற்றவன் ஆவான். அவனுடைய அறிவுக் கெடும்; உயர்ந்தோர்க்கு உதவுவது பற்றி எண்ணவே மாட்டான். தவத்தில் அவன் மனம் நாடவே நாடாது. உயர்வு கெடுவான்; முயற்சி செய்ய முடியாத சோம்பேறியாகி விடுவான். இனியமொழி பேசும் பெண்களின் மேல் வைத்த ஆசையையும் இழப்பான். பசிவந்தால், இத்தகைய மானம் முதலிய பத்துப் பண்புகளும் அவனை விட்டு மறையும். இதுவே மேலே காட்டிய நல்வழிப் பாட்டில் அமைந் திருக்கும் பொருள். இங்கே எடுத்துக்காட்டப்பட்ட மணிமேகலை அடிகளும் நல்வழிப் பாட்டும், பசிப்பிணியால் தனிமனிதன் படும் துன்பத்தை எடுத்துக்காட்டின. இவைகள் ஒரு சமுதாயத்திற்குப் பொருந்தும்; ஒரு நாட்டுக்கும் பொருந்தும்; உலகத்துக்கே பொருந்தும் உண்மை யாகும். மேலே எடுத்துக்காட்டிய புறநானூற்றுப்பாட்டும், குறளும், நாலடியும், மக்கள் அனைவர்க்கும் உணவளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. அடுத்தாற்போல் குறிப்பிட்ட மணிமேகலை அடிகளும், நல்வழிப்பாட்டும் பசிப்பிணி நீக்கப் படாமல் அலட்சியம் செய்யப்பட்டால் மக்கள் வாழ்வு என்ன ஆகும் என்பதை எடுத்துக்காட்டின. நிலப்பிரபுத்துவ வாழ்வு வலுப்பெற்றிருந்த காலத்திலே, அப்பொழுதிருந்த சமுதாயத்திலே நாட்டில் அமைதி நிலவுவதற்குப் பண்டைய அறிஞர்கள் இப் படித்தான் சொல்லமுடிந்தது. பலர் பட்டினியால் வாடுவதற்கும். சிலர் உண்டுக் கொழுத்து உல்லாசமாக வாழ்வதற்கும் மூலகாரணம் என்ன என்பதைப் பற்றி அவர்கள் ஆலோசிக்க வில்லை; ஆலோசித்தாலும் ஆண்டான் அடிமை வாழ்வுதான் இதற்குக் காரணம் என்ற முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை. நிலப் பிரபுத்துவ முறைதான் ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்ற உண்மை சிலர் உள்ளத்திலே தோன்றினாலும் அதை அவர்களால் வெளியிட முடியவில்லை. இந்த அளவுக்கு நிலப்பிரபுத்துவ அமைப்பு வலுப்பெற்றிருந்த காலம் அது. ஆதலால் செல்வம் படைத்தவர்கள்-- ஏழைகள் போல இரக்கங்காட்ட வேண்டும் என்று தர்மோபதேசம் செய்யத்தான் அவர்களால் முடிந்தது. ஆனால், ஆன்றோர்கள் அந்த நிலப்பிரபுத்துவ சமுதாயம் நீடித்து வாழவேண்டும் என்று விரும்பவில்லை. வலுத்தவர்கள் தயவிலே இளைத்தவர்கள் நிரந்தரமாக வாழவேண்டும் என்பதை அவர்கள் ஆதரிக்கவில்லை. மக்கள் அனைவரும் சம உரிமை யுடன் வாழ வேண்டும் என்ற எண்ணமுள்ள அறிஞர்களும் அவர்களிலே பலர் இருந்தனர். அவர்கள் நேரடியாகத் தங்கள் கருத்தைச் சொல்ல முடியாத நிலையில் இருந்தனர். ஆதலால் தங்கள் கருத்தை மற்றவர்கள் உணர்ந்து கொள்ளும்படிச் சுற்றி வளைத்துச் சில உண்மைகளை உரைத்திருக்கின்றனர். உயர்வு தாழ்வற்ற சமுதாயம் திருக்குறளிலே, இல்லற இயலிலே, ஈகை என்பது ஒரு அதிகாரம். அவ்வதிகாரத்திலே வறியோர்க்கு வழங்கவேண்டும், பசியால் வருந்துவோர்க்கு உணவு அளித்துப் பாதுகாக்க வேண்டும். வறியோரின் பசிப் பிணியைப் போக்குவதைவிடச் சிறந்த செல்வம் வேறில்லை; என்றெல்லாம் அறிவுறுத்தப்படு கின்றது. இவைகள் இல்லறத்தில் இருப்போன் கடமைகள் என்று சொல்லப்படுகின்றது. வறியோர்க்கு வழங்குவதை வலியுறுத்தும் பத்துக் குறள் களிலே ஒரு குறள் மிகவும் குறிப்பிடத்தக்கது. நல் ஆறு எனினும் கொளல் தீது; மேல் உலகம் இல் எனினும் ஈதலே நன்று. என்பதுதான் அக்குறள். இக்குறள் ஈவதை ஏற்றுக் கொள்வது தீது; இழிந்த செயல்; என்று இடித்துக் கூறுகிறது; ஈகையையும் வற்புறுத்துகின்றது. ஏற்போர் இல்லா விட்டால் ஈவோர் இருக்க முடியுமா? என்று சிந்திக்கும்படி நம்மைத் தூண்டுகிறது. பின்னால், பொருட்பாலில் இரவு என்பது ஒரு அதிகாரம். இவ்வதிகாரத்தில் உள்ள பத்துக்குறள்களும் செல்வம் உள்ளவர்கள் கொடுக்கும் குணம் படைத்தவர்களாயிருந்தால் அவர்களிடம் இருந்து பொருள் பெறுதல் தவறல்ல என்று கூறுகின்றன. இரப்போர் இல்லா விட்டால் இவ்வுலக நடவடிக் கையில் உயிர் இல்லை. உலக நடவடிக்கைகள் மரப்பதுமையின் நடமாட்டம் போன்றவை. என்று கூறுகின்றது ஒரு குறள். இரப்போர் இல்லா விட்டால் ஈவோர் புகழ் பெற்று வாழ முடியாது என்று சொல்லுகின்றது மற்றொரு குறள். இரவு என்னும் இந்த அதிகாரத்துக்கு, அடுத்துள்ள அதிகாரம் வச்சம் என்பது. இவ்வதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களும் இரத்தலின் இழிவை எடுத்துக்காட்டுகின்றன. எவ்வளவுதான் வறுமையால் வாடினாலும் பிறரிடம் இரந்து பொருள் கொள்ளுதல் இழிவு. தன் உழைப்பினால் கிடைக்கும் செல்வத்தைக்கொண்டே உயிர்வாழ வேண்டும் என்ற இவ் வதிகாரத்தின் ஐந்தாவது குறள் அறிவிக்கின்றது. உலகைப் படைத்தவன், இரந்தும் உயிர் வாழ்வதை விரும்பி, உயிர்களைப் படைத்திருப்பானாயின் அவனும், அவ்விரப்பாரைப் போலவே அலைந்து அழிக என்ற பொருள் நிறைந்த குறள் பலரும் அறிந்தது. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்-பரந்து கெடுக உலகியற்றி யான் என்பது அவ்வதிகாரத்தின் இரண்டாவது குறள். பிறரிடம் - செல்வம் உள்ளவர்களிடம் பல்லைக் காட்டிக் கையேந்திப் பொருள் பெற்று வாழ்வது மனிதத் தன்மையே அன்று என்று அடித்துக் கூறுகிறது இக்குறள். இவ்வாறே திருக்குறளுக்குப் பின்னே தோன்றிய இலக்கியங்களில் எல்லாம் இரத்தலின் இழிவையும், ஈகையின் உயர்வையும் கூறுவதைக் காணலாம். இந்த அறிவுரைகளைக் கொண்டு, நாம் காணும் உண்மை, எல்லோரும், இரப்போரும் அற்ற சமுதாயத்தையே ஆன்றோர் காண விழைந்தார்கள் என்பதுதான். செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்போரைப் பார்த்து வீணாகப் பொருளைக் குவித்து வைத்திருக்காதீர்கள், அதை மக்கள் வாழ்வுக்குப் பயன்படச் செய்யுங்கள் என்று விடாமற் சொல்லிக் கொண்டே இருந்தனர். பண்டங்களைப் பதுக்கி வைக்காதீர்கள்; பதுக்கி வைப்பது சமூகத்துரோகம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் தருமம் செய்யுங்கள் என்று இவ்வாறு நயம்படக் கூறினார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். இரத்தல் இழிவு; உழைத்து உயிர்வாழ்வதே மானம் உள்ள வாழ்வு என்ற உணர்ச்சி வறியோர் உள்ளத்தில் வாழுமானால் அவர்கள் ஏமாற மாட்டார்கள். தம் உழைப்பின் பலனைப் பிறர் சுரண்டிக் கொழுக்க விடமாட்டார்கள். தம் உழைப்பின் பலனைத் தாம் பெறுவதற்குப் போராடுவார்கள். உழைப்போர் இத்தகைய உணர்ச்சியைப் பெற்றுவிட்டால் சுரண்டும் கும்பல் வளரமுடியாது; வாழமுடியது. இரப்போரும், ஈவோரும் இல்லாத ஒன்றுபட்ட சமுதாயம் தோன்ற முடியும். இந்த உண்மை கருத்துடன்தான் ஏற்பது இகழ்ச்சி; இரக்காதே; வாங்காதே; யாசிக்காதே; என்று சொன்னார்கள். இரத்தலை இகழ்ந்துரைப்பது இக்கருத்துடன்தான் என்பதில் ஐயம் இல்லை. இரப்போரும் ஈவோரும் அற்ற சமுதாயத்தில்தான் ஏழை யென்றும் அடிமையென்றும் எவரும் இருக்க மாட்டார்கள். மனிதர்கள் யாரும் சரிநிகர் சமானமாக வாழ்வார்கள். மேலே கூறியவைகளைக் கொண்டு வர்க்க பேதமற்ற சமுதாயம் வளர்வதை முன்னோர்கள் விரும்பினர் என்று கருதலாம். உணவு பங்கீட்டைப் பற்றி- வறுமையின் கொடுமைப் பற்றி-ஈகையின் உயர்வைப் பற்றி- ஏற்பதின் இழிவைப் பற்றி-ஆன்றோர்கள் கூறி இருப்பவை அனைத்தும் மக்களின் நல் வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டவை என்பதில் கருத்து வேற்றுமையே இல்லை. வர்க்கபேதம் அற்ற சமுதாயம் ஏற்பட்டால்தான் முன்னோர்கள் கருத்து முற்றுபெறும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்துவரும் உயர்வு தாழ்வுள்ள சமுதாயத்தில், ஆன்றோர்கள் விரும்பிய இன்ப வாழ்வு ஏற்படவில்லை. தர்மத்தைப் பற்றி எவ்வளவு எடுத்துக் கூறியும்-தர்மம் செய்வ தால் சுவர்க்கம் பெறலாம் என்று ஆசை வார்த்தைக் காட்டியும் உயர்ந்த வர்க்கம் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுத்து விடவில்லை. இந்த உண்மையை நாம் நேரே காண்கிறோம். ஆதலால் சமுதாய மாறுதல் விரைவில் ஏற்பட வேண்டும். முன்னோர்களின் கருத்து சமுதாய மாறுதலுக்கு முட்டுக் கட்டையாக இல்லை இதுவே முன்னோர் மொழிகள் நமக்கு உணர்த்துவன.