சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 8 சிலப்பதிகாரத் தமிழகம் மணிமேகலை காட்டும் மனித வாழ்வு ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 8 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 432 = 440 படிகள் : 1000 விலை : உரு. 275/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவு படுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும். பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை சிலப்பதிகாரத் தமிழகம் முன்னுரை 3 அணிந்துரை 6 சிலப்பதிகாரத் தமிழகம் 9 1. சிலப்பதிகார அமைப்பு 11 2. சிலப்பதிகாரக் கதை 16 3. அறம் கூறும் நூல் 27 4. அரசியல் 31 5. பத்தினித் தெய்வம் 41 6. ஊழ்வினை 49 7. மறுபிறப்பு 58 8. காவிரிப்பூம்பட்டினம் 62 9. மதுரை மாநகரம் 70 10. மூவேந்தர் பெருமை 75 11. தெய்வீக நிகழ்ச்சிகள் 87 12. சிறுகதைகள் 91 13. தமிழர் போற்றிய வடமொழி நூல்கள் 102 14. தெய்வங்களும் கோவில்களும் 106 15. வேதமும் வேள்வியும் 119 16. திருமண முறை 125 17. பொது மகளிர் 132 18. சாதி வேற்றுமை 138 19. மத ஒற்றுமை 142 20. மன்னரும் மக்களும் 151 21. பாரத நாட்டுப் பண்பாடு 156 22. ஆரியர் - தமிழர் 162 23. சமுதாய நிலை 169 24. அறவுரைகள் 176 25. சிலம்பும் குறளும் 186 26. புரட்சிக் காவியம் 195 27. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் 207 28. சிந்தனைக்குரிய செய்திகள் 218 மணிமேகலை காட்டும் மனித வாழ்வு முன்னுரை 237 1. மணிமேகலையின் மாண்பு 241 2. கதைச் சுருக்கம் 247 3. மணிமேகலையில் சிறுகதைகள் 262 4. அரசியல் 278 5. அறவுரைகள் 286 6. பசிக் கொடுமை 294 7. உயிர்களுக்கெல்லாம் உணவு 297 8. பத்தினிப் பெண்டிர் 306 9. பரத்தையர் 312 10. புத்தர் பெருமை 318 11. புத்தமதக் கொள்கை 324 12. பிற மத வெறுப்பு 333 13. ஊழ்வினையும் பிறப்பும் 340 14. சாதி ஒழிப்பு 347 15. தெய்வீக நிகழ்ச்சிகள் 353 16. காவிரிப்பூம் பட்டினம் 358 17. மதுரை நகரம் 368 18. வஞ்சிமா நகரம் 370 19. காஞ்சி நகரம் 375 20. வள்ளுவரும் சாத்தனாரும் 378 21. சாத்தனாரும் இளங்கோவும் 385 22. சிலப்பதிகாரம் 390 23. பாரதநாட்டுப் பண்பாடு 393 24. நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் 403 25. இலக்கியச் சுவை 409 26. சிந்திக்க வேண்டியவை 419 சிலப்பதிகாரத் தமிழகம் (1958) முன்னுரை செந்தமிழ்ச் சிலப்பதிகாரம் பலராலும் பாராட்டப்படும் பழந்தமிழ் நூல்; தலைசிறந்த தமிழ்க் காவியம். இதன் ஆசிரியர் இளங்கோவடிகள் இணையற்ற முத்தமிழ்ப் புலவர், இவருக்குத் தமிழுலகில் ஒரு தனிச் சிறப்பு உண்டு. இளங்கோ அடிகள் துறவியென்பதால் அவரைப் பாராட்டுகிறோமா? இல்லை; அல்லது, அரசிளங்குமரர் - சேரர் குடித் தோன்றல் - செங்குட்டுவன் இளவல் - என்பதற்காகப் போற்றுகிறோமா? இல்லைத் கற்போர் நெஞ்சைக் கவரும் காவியம் புனைந்தார்; கவிதை பாடினார்; கருத்துக்களைத் தொகுத்துத் தந்தார் என்பதற்காகவே, தமிழ் அறிந்த அனைவரும் அவரைப் போற்றுகின்றனர். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்;அவர் சேரன் செங்குட்டுவன் தம்பி என்பதே புலவர்களின் நம்பிக்கை. சிலப்பதிகாரம் செய்தவர் சேரன் தம்பி அல்லர்; இளங்கோ அடிகள் அல்லர் என்போர் உண்டு. ஆனால் சிலப்பதிகாரம் செய்தவர்தான் யார் என்றால் தக்க விடையில்லை. சிலப்பதிகாரம் நெடுங்காலமாக நிலவுகின்றது; ஒப்புயர் வற்ற நூலாக விளங்குகின்றது. அதைச் செய்த-பாடிய-ஆசிரியர் ஒருவர் இருக்கத்தான் வேண்டும். அந்த ஆசிரியர் யாராயிருந் தாலும் சரி; அவர் பெயர் இளங்கோ அடிகள். இப்படிச் சொல்வதிலே ஏதும் தப்பில்லை. ஆதலால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தான் என்று முடிவு கட்டுவோம். சிலப்பதிகாரம் முத்தமிழ் நூல்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்ச் சிறப்பையும் அதிலே காணலாம். இதைப் போல் முத்தமிழுக்கும் தலைமை தாங்கும் தமிழ்க் காவியம் வேறு எதுவும் இல்லை. சிலப்பதிகாரம் முழுவதற்கும் பழைய அரும்பத உரை ஒன்று உண்டு; சிறந்த உரை. இந்நூலுக்குத் தெளிவான விரிவுரை எழுதியிருப்பவர் அடியார்க்கு நல்லார். இவர் உரை, முதல் 19 காதைக் களுக்குத்தான் இருக்கின்றது. பழைய உரையாசிரியர் களுள் அடியார்க்கு நல்லார் மிகச் சிறந்த உரையாசிரியர். அடியார்க்கு நல்லார் முத்தமிழ் வல்லுநர். அடியார்க்கு நல்லாரின் உரையின்றேல் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளைப்பற்றிக் கூறும் அரங்கேற்று காதைக்கு உரை காண முடியாது. ஓரும் தமிழ் ஒருமூன்றும் உலகு இன்புற வகுத்துச் சேரன் தெரித்த சிலப்பதிகாரத்தில் சேர்ந்த பொருள் ஆரும் தெரிய, விரித்துரைத்தான் அடியார்க்கு நல்லான்; காரும், தருவும் அனையான் நிரம்பையர் காவலனே இது அடியார்க்கு நல்லாரைப் பாராட்டும் பாடல். சிலப்பதிகாரம் முத்தமிழ் நூல் ; இந்த முத்தமிழ் நூலைச் செய்தவன் சேரர்குலத்துச் செம்மல்; அதன் பொருளை அனை வரும் அறியும்படி உரை எழுதியவன் அடியார்க்கு நல்லான். அவன் நிரம்பையர் காவலன்; மேகத்தையும், கற்பகத்தருவையும் போன்றவன். இதுவே இச்செய்யுளின் கருத்து. இந்த அடியார்க்கு நல்லாரைப் பற்றிய வரலாறு ஒன்றும் தெரியவில்லை. இன்று சிலப்பதிகாரத்தின் பொருளைத் தெரிந்து கொள்ளு வதற்கு – சிலப்பதி காரத்திற்குப் புத்துரைகள், தெளிவுரைகள் விளக்க உரைகள் கூறுவதற்கு - அடியார்க்கு நல்லார் உரையும், பழைய அரும்பத உரையுமே துணை செய் கின்றன. இளங்கோ அடிகள் - சிலப்பதிகார ஆசிரியர் - சமணரா? சைவரா? வைணவரா? என்று வாதிப்போர் உண்டு, அவரைச் சமணர் என்றுதான் பலர் எண்ணுகின்றனர். இதற்கான ஆதரவு களே சிலப்பதிகாரத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இளங்கோவடிகள் தன்னை இன்ன மதத்தினர் என்று வெளிப் படையாகத் தெரிவித்துக்கொள்ளவில்லை. எந்தத் தெய்வத்தைப் பற்றி உரைத்தாலும், அந்தத் தெய்வத்திற்கு ஏற்றம் கொடுத்தே பாடு கின்றார். மத வெறுப்போ, தெய்வ நிந்தனையோ இவரிடம் காணப் படவே இல்லை. இது இளங்கோவடிகளின் ஒரு தனிப் பெருமை. மக்களுக்கு நல்லறங்களைப் போதிக்கவேண்டும் என்று எண்ணுகின்ற ஒரு ஆசிரியர் எப்படி நூல் எழுதவேண்டும் என்பதற்குச் சிலப்பதிகாரம் ஒரு வழிகாட்டியாகும் சிலப்பதிகாரம் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்போர் உண்டு; கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தான் பிறந்தது என்போர் உண்டு. இவற்றுள் எது சரி, எது தவறு என்ற வழக்கில் இந்நூல் தலையிடவில்லை. சிலப்பதிகாரம் எக்காலத்தில் பிறந்ததாயினும் சரி; அக்காலத் திலிருந்த தமிழ்நாட்டு அரசியல் - சமுதாய - பழக்க வழக்கங்களை அதிலே காணலாம். சிலப்பதிகாரக் கவிதை நயம்பற்றிக் கூறவந்த நூல் இது அன்று. சிலப்பதிகாரப் பெருமையைப்பற்றி-கவிதை நயம் பற்றி-கதைச் சிறப்புப்பற்றி - பலர் எழுதியிருக்கின்றனர்; பலர் பேசு கின்றனர்; பேசிக்கொண்டே யிருக்கின்றனர். ஆதலால், சிலப்பதி கார காலத்துத் தமிழக நாகரிகத்தை எடுத்துக்காட்டுவது ஒன்றுதான் சிலப்பதிகாரத் தமிழகத்தின் கருத்தாகும். ஒரு வரலாற்று நூல்போலவே இது எழுதப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் கட்டுகதையா, வரலாறா? இரண்டும் கலந்ததா? இளங்கோ அடிகளால் சிலப்பதிகாரம் முழுவதும் செய்யப்பட்டதா? இளங்கோவடிகளைப் பற்றிச் சொல்லும் கதை உண்மைதானா என்பவைகளைப்பற்றிச் சிந்தனைக் குரிய செய்திகள் என்ற பகுதியிலே ஆராயப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத் தமிழகம் என்னும் இப் புத்தகம் சிலப்பதி காரம் முழுவதை யும் இளங்கோவடிகள்தான் பாடினார் என்று வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளது. எத்தகைய விருப்பு வெறுப்பும் இன்றி, நடுவுநிலையிலிருந்து எழுதப்பட்டதே இந்நூல். புத்தகத்தைப் படிப்போர்க்கு இவ்வுண்மை புலனாகும். இப் புத்தகத்திலே சிலப்பதிகார காலத் தமிழகத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிவிட்டதாகச் சொல்ல முடியாது. பார்த்த வரையிலும் படம் எடுத்திருக் கின்றோம். பார்க்காமல் மறைந்திருப்பவை பல. சிலப்பதிகாரத்தைப் படிப்போர், இந் நூலிலே, காணாத பல செய்திகளையும் கண்டறியலாம். இப் புத்தகத்தில் உள்ள குற்றங்குறைகளையும், விடுபட்ட பொருள்களையும் எடுத்துக்காட்டுவோர்க்கு நன்றி; அவைகள் அன்புடன் வரவேற்கப்படும். சென்னை அன்பன் 10.4.1958 சாமி.சிதம்பரன் அணிந்துரை டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி. தமிழ்த்துணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம். நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் என்று கவியரசர் பாரதி யாரால் உள நெகிழ்வோடு பாராட்டப் பெற்ற சிலப்பதிகாரம், தமிழின் முதற்பெருங் காப்பிய மும் தனிப் பெருங் காப்பியமுமாகும். முத்தமிழ்க் காப்பியம் என்றும், உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பாகப் பேசப் பெறும் சிலப்பதிகாரம் குறித்து இதுகாறும் தமிழ் மொழியின் கண் எழுந்த நூல்கள் பலவாகும். குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த சேரன் தம்பி இசைத்த சிலம்பின் தகுதிகளைத் தரம்பிரித்துத் தரம் உணர்ந்து தண்டமிழ் உலகிற்குத் தந்த இலக்கியச் சான்றோர் பலராவர். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்றே போல், சிலப்பதிகாரம் கற்றறிந்தவாளர்தம் அறிவுக்கு விருந்தாய் அமைந்து, புதுப்புதுக் கருத்துக்கள் துலங்கக் காரணமாக ஒளிர்கின்றது. இம்முறையில் இந்நூற்றாண்டில் செந்தமிழ் இலக்கியத் திற்குச் சீரிய தொண்டாற்றியுள்ள அறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்கள் சிலம்பு என்னும் தித்திக்கும் தேனமுதக்கடலில் மூழ்கி ஒளி காலும் நன் மணி முத்துக்களை வாரிக் கொணர்ந்து வண்டமிழர்க்கு வரையாது வழங்கி மகிழ்கிறார். சிலப்பதிகாரத் தமிழகம் என்னும் பெயரால் அப்பெருந்தகை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூல் இலக்கிய இன்பமும் அறிவும் ஆராய்ச்சியும் வேண்டு வோர் ஒவ் வொருவருக்கும் விருந்தாய் அமையும் பெற்றியுடையதாகும். சிலப்பதிகாரம் காட்டும் தமிழகத்தினை இருபத்தெட்டுத் தலைப்புகளில் தொகுத்து நிரல் படச் சுவைபடத் தந்துள்ளார் சங்க இலக்கியச் சான்றாளர் சாமி. சிதம்பரனார். சிலப்பதிகார ஆய்விற்கு அறிஞர் அவர்கள் அமைத்துக் கொண்ட தலைப்புகள் அறிஞர் உலகம் ஏற்றுக் கொண்ட பாராட்டுகின்ற பான்மையில் அமைந்திலங்கக் காணலாம். சிலப்பதிகார அமைப்பினையும், கதையினையும் முதற் கண் கூறிப் பின்னர் சிலம்பு அறங் கூறும் நூல் என்பதனை நிறுவிப் பதிகம் கூறும் முப்பெரும் உண்மை களை முறையே நிறுவுகின்றார் ஆசிரியர். அரசியல், பத்தினித் தெய்வம், ஊழ்வினை, மறுபிறப்பு முதலியனவற்றைத் திறம்பட ஆசிரியர் ஆராய்ந்து விளக்கியுள்ளார். காவிரிப்பூம் பட்டினத்தின் கவினையும், மாநகர் மதுரையின் மாண்பினையும் வடித்துத்தந்து மூவேந்தர் பெருமையினை முறையே கிளத்திக்கூறி, தெய்வீக நிகழ்ச்சிகளைச் சுட்டி சிலம்பில் இடம் பெற்றுள்ள சிறு கதைகளை எடுத்து மொழிந்து, தமிழர் போற்றிய வடமொழி நூல்களையும் காட்டியுள்ளார் ஆசிரியர். சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருள் களைப் பாங்குறக் காட்டும் திறத்தினால் ஆசிரியர் ஆடியின் மாண்புக்கு உவமை கூறத் தக்க நிலையில் உள்ளார். அடுத்து, தெய்வங்களும் கோவில்களும், வேதமும் வேள்வியும், திருமறை, முறை, பொதுமகளிர், சாதி வேற்றுமை, மத ஒற்றுமை முதலியவற்றினை விளக்கி, மன்னரும் மக்களும் வாழ்ந்த வகையினை வகையுறக் காட்டிப் பாரத நாட்டுப் பண்பாடு இதுதான் என்பதனையும் இனிதுறக் கிளத்துகின்றார். ஆரியர் - தமிழர் தொடர்பு, சமுதாய நிலை, அறவுரைகள், சிலம்புக்கும் குறளுக்கும் உள்ள தொடர்பு, சிலம்பு புரட்சிக் காவியம் ஆகும் தகுதிப்பாடு, சிலம்பில் காணப்பெறும் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் ஆகியகுனவற்றையெல்லாம் அழகுறக் காட்டிவந்து, இறுதியில் சிந்தனைக்குரிய சில செய்திகளையும் பெய்து ஆராய்ச்சி யுலகிற்குக் கொடையாக அளித்துள்ளார். சிலப்பதிகார காலத்துத் தமிழக நாகரிகத்தை எடுத்துக் காட்டுவது ஒன்று தான் சிலப்பதிகாரத் தமிழகத்தின் கருத் தாகும் என்று, எத்தகைய விருப்பு வெறுப்பும் இன்றி, நடுவு நிலையிலிருந்து எழுதப்பட்டதே இந்நூல் என்றும், சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இந் நூலிலே, காணாத பல செய்திகளையும் கண்ட றியலாம் என்றும் ஆசிரியர் முன்னுரையில் மொழிந்திருக்கும் கருத்துக்கள் நூலாசிரியர் தம் சீரிய நோக்கத்தினையும் நடுவு நிலைசார்ந்த நன்னெஞ்சத் தினையும் அமரருள் உய்க்கும் அடக்கத்தினையும் ஒருங்கே புலப்படுத்த வல்லன வாம். இந்நூலின் தனிப்பெருஞ் சிறப்பாக யான் கருதுவது, சிலப்பதிகாரக் காப்பியத் தில் கருக்கொண்டுள்ள அரிய செய்திகள் பலவற்றை இந்நூல் மிக எளிதில் நமக்கு வழங்குவதுஆகும். சிலம்பு பயிலும் மாண்புநிறை மாணவர்தம் உழைப்பு மேன்மையினையும், முயற்சி அருமையினையும் இந்நூல் எளிதாக்கிநிற் கின்றது எனலாம். சிலப்பதிகார இலக்கியக் கருவூலங்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் பண்டார சாலையாக அறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களின் அரிய ஆராய்ச்சிப் படைப்பான சிலப்பதிகாரத் தமிழகம் நின்றொளிர்கின்றது. அறிஞர் சாமி சிதம்பரனார்க்கு வாய்த்த மனைவிளக்கு வீட்டரசியார் வணக் கத்திற்குரிய அம்மா சிவகாமி சிதம்பரனார் அவர்கள் மறைந்த தம் ஆருயிர்க் கேள் வரின் ஆராய்ச்சி நூல் களைத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தருவதனையே தவ வேள்வியாகக் கொண்டு வாழ்வு நடத்திவருகிறார்கள். அவர்களின் முயற்சி வெல் வதாகுக; தமிழ்ப்பணி சிறப்பதாகுக! தமிழுலகு இந்நூலைப் பயன்படுத்தி மகிழ்வ தாகுக. தமிழகம் 8-12-1973 சென்னை - 29 டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் சிலப்பதிகாரத் தமிழகம் இஃது ஒர் அற்புத ஆராய்ச்சி நூல். ஐம்பெருங்காப்பி யத்தில் ஒன்றான சிலப்பதிகாரம் என்பதைப் படிக்க இயலாதார் இதனை வாசித்தால் போதும். சிலப்பதிகாரத்தின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம். ஆசிரியரின் ஆராய்ச்சித் திறனுக்கும் ஆழ்ந்த தமிழறிவினுக்கும் இஃது ஏற்ற எடுத்துக் காட்டாகும். நூலை வகுத்துள்ள அதிகார வைப்பை உரைப்போம்; ஆறு வகையான உண்டியை இல்லாள் விரும்பி ஊட்டுவதே போல் ஒவ்வொரு தலைப்பிலும் சிலப்பதிகார விசயத்தை ஆசிரியர் எடுத்துரைத்தல் ஓர் அலாதி மாதிரியாகும். ஆராய்ச்சியில் கண்ட விசயங்களைக் கதையேபோல் ஆசிரியர் கூறுவதை நாம் பாரட்ட வேண்டும். காய்தல் உவத்தில் இன்றி, உள்ளது உள்ளபடி விசயங்களை ஆசிரியர் வரைந்திருத்தல் அவரது மனவிரிவைக் காட்டும். அறவுரைகள் அனைவருக்கும் நல்விருந்தாகும். புரட்சிக் காவியம் என்பதில் ஆசிரியர் தந்துள்ள அம்சங்கள் அறிவாளி களையும் ஆனந்திக்கச் செய்யும். ஆசிரியர், இந்த ஆராய்ச்சி நூலின் முடிவிலே தமிழர் களின் நாகரீகத்தை யும், பண்பாட்டையும் விளக்கும் நூல்களிலே சிலப்பதிகாரம் தலைசிறந்தது. சிலப்பதிகாரம் செந்தமிழ்த் தேனை சிந்தையில் நிரப்பும் இனிய பாடல்கள் கொண்டது. நல்ல அறங்களைப் போதிப்பது, உள்ளத்திலே உணர்ச்சியை எழுப்பு வது, நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியார் பாடியிருப்பதை மறுக்க முடியாது. என்பன குறிப்பிடத்தக்கன. சிலப்பதிகாரத்தில் காணும் வண்ணம் தமிழகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எல்லோருக்கும் உரைத்திருப் பதை நந்தமிழ் மக்கள் வரவேற்பர், ஆசிரியரை வாழ்த்துவர். அவருக்கு பல்லாண்டும் பாடுவர். சுதேசமித்திரன் : எம். எஸ். எஸ். ஐயர். சிலப்பதிகார அமைப்பு பண்டைக்காலக் கதைகளில் குடும்பக் கதைகளைக் காண்பது அரிது. அக்காலக் கதைகள் எல்லாம் தெய்வங்களைப்பற்றிக் கூறும் கதைகளாகவே அமைந்திருக்கும்; அல்லது மன்னர் வரலாறுகளைச் சொல்லும் கதைகளாகவே காணப்படும். சிலப்பதிகாரம் நேரடியாக மன்னர்களைப்பற்றிச் சொல்லும் கதை அன்று; கடவுளரைப்பற்றிய கதையும் அன்று; ஒரு பணக்காரக் குடும்பத்தைப்பற்றிக்கூறும் கதைதான் சி லப்பதிகாரம். அன்றியும், இக்கதை வேறுமொழியிலிருந்து பெயர்த்து எழுதிய கதையும் அன்று, சிலப்பதிகாரம் முதல்நூல்; தமிழ் நாட்டிலே நடந்த நிகழ்ச்சியாக வைத்துத் தமிழிலேயே எழுதப் பட்ட கதை. ஆதலால் இதை ஒரு தனித் தமிழ்க் கவிதை என்று சொல்லுவது பொருந்தும். இதைப்போன்ற தனித் தமிழ்க் காவியம், இதன் தொடர்ச்சிக் கதையான மணிமேகலை ஒன்றுதான். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தனித் தமிழ்க்கதைகள்; தமிழர் நாகரிகத்தைச் சித்தரிக்கும் கதைகள்; தமிழர் பண்பாட்டை விளக்கும் கதைகள்; தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் கதைகள். இவை இரண்டும் தமிழ் மகளுக்கு அணிசெய்யும் அரிய செந்தமிழ் நூல்கள். சிலப்பதிகாரம் ஒரு குடும்பக் கதைதான்; ஆயினும் அக்கதை அக்காலத்து மக்கள் மனப்பான்மையைத் தழுவியே அமைக்கப் பட்டிருக்கின்றது, அக்காலத்து மக்கள் அரசரிடம் அசைக்க முடியாத அன்புகொண்டவர்கள்; தெய்வ பக்தி நிரம்பியவர்கள்; தெய்வீகத் தொடர்புள்ள கதைகளையே பாராட்டுபவர்கள்; இக் கதைகளிலேதான் அவர்களுக்குப் பற்றுண்டு. ஆதலால் சிலப்பதி காரத்திலே அரசர்கள் தொடர்பும் உண்டு; தெய்வங்களின் கதைகளும் இணைந்திருக்கின்றன. இவைகளின் கலப்பின்றிச் சிலப்பதிகாரம் எழுதப்பட்டிருக்கு மானால் சிலப்பதிகார காலத்து மக்கள் அந்நூலைப் பாராட்டி யிருக்க மாட்டார்கள்; சிறப்பாகப் போற்றிக் கொண்டாடி இருக்க மாட்டார்கள். காலத்தை ஒட்டி, மக்கள் மனப்பான்மையை அறிந்து, நூல்களை எழுதுவதே சிறந்த முறை. இவ்வாறு எழுதப்படும் இலக்கியங்களே போற்றப்படும்; நூல் தோன்றிய காலத்திலும் மக்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும்; பிற்காலத் திலும் பெரிதும் பாராட்டப்படும், இத்தகைய நூல்களே சிரஞ்சீவி நூல்களாக நின்று விளங்கும். சிறந்த புலவர்கள்-கவிஞர்கள் - இத்தகைய நூல்களையே இயற்று வார்கள், இவ்வுண்மையை உணர்ந்தே சிலப்பதிகார ஆசிரியர் தமது நூலை அமைத்திருக் கின்றார். நூலின் பிரிவுகள் சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாக அமைந்திருக் கின்றது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்பனவே அம் மூன்று காண்டங்கள். புகார் என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு; இது சோழநாட்டின் தலைநகரம். காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு; அங்கு நடந்த நிகழ்ச்சி; சோழநாட்டின் வளம் இவற்றை விளக்குவதே புகார்க் காண்டம். மதுரை பாண்டிய நாட்டின் தலைநகரம். மதுரையின் மாண்பு; பாண்டிய நாட்டின் பண்பு; மதுரையில் நடந்த நிகழ்ச்சி இவைகளை விளக்குவது மதுரைக் காண்டம். வஞ்சிமாநகரம் சேரநாட்டின் தலைநகர்; வஞ்சியில் நடந்த நிகழ்ச்சியை விளக்குவது வஞ்சிக் காண்டம் புகார்க் காண்டம் பத்துக் காதைகளாக அமைந்திருக் கின்றது. அவை: 1. மங்கல வாழ்த்துப் பாடல்; 2. மனைஅறம் படுத்த காதை; 3. அரங்கேற்றுக் காதை; 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை; 5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 6.கடல் ஆடு காதை; 7.கானல்வரி; 8.வேனில் காதை; 9.கனாத் திறம் உரைத்த காதை; 10. நாடுகாண் காதை என்பன. மதுரைக் காண்டம் பதின்மூன்று காதைகளாக அமைந் திருக்கின்றது. அவை: 1.காடுகாண் காதை; 2. வேட்டுவவரி; 3. புறஞ்சேரி இறுத்த காதை; 4. ஊர்காண் காதை; 5. அடைக்கலக் காதை; 6. கொலைக்களக் காதை; 7. ஆய்ச்சியர் குரவை; 8. துன்பமாலை; 9. ஊர்சூழ்வரி; 10. வழக்குரை காதை; 11. வஞ்சின மாலை; 12. அழல்படு காதை; 13. கட்டுரை காதை என்பன. வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளாக அமைந்திருக்கின்றது, அவை: 1. குன்றக் குரவை; 2. காட்சிக் காதை; 3. கால்கோள் காதை; 4. நீர்ப்படைக் காதை; 5. நடுகல் காதை; 6. வாழ்த்துக் காதை; 7. வரந்தரு காதை என்பன. சிலப்பதிகாரத்தில் இவ்வாறு மூன்று பெரும்பகுதிகளும், முப்பது சிறு பிரிவுகளும் காணப்படுகின்றன. இப்பிரிவுகள் நூலாசிரியராலேயே அமைக்கப் பட்டவை. இவை தவிர, நூலின் முதலிலே, சிலப்பதிகார அமைப்பை விளக்கிச் சொல்லும் பதிகம் என்னும் பகுதியும், உரைபெறு கட்டுரை என்னும் பகுதியும் அமைந்திருக்கின்றன, நூலின் இறுதி யிலே நூற் கட்டுரை என்னும் பகுதியும் அமைந்திருக்கின்றது. செய்யுள் அமைப்பு சிலப்பதிகாரம் பெரும்பாலும் ஆசிரியப்பாவால் அமைந் திருக்கின்றது. ஆனால் மணிமேகலைபோல, பெருங்கதை போல நூல் முழுவதும் ஆசிரியப் பாவால் ஆனது அன்று, சிலப்பதி காரம் தனிச்சிறப்புடன் விளங்குவதற்கான காரணங்களில் அதன் செய்யுள் அமைப்பும் ஒன்றாகும். ஒரு நூல் ஒரே வகையான - ஒரே இசையுள்ள-பாடல் களால் ஆகியிருந்தால், அதைப் படிப்போர்க்குச் சோர்வு தட்டுவது இயல்பு. பல சந்தப் பாடல்கள் கலந்த நூலைப் படிப்பதிலே ஒரு தனி இன்பம் உண்டு. பொருள் இன்பத்தை விட, பாவின் ஒசையின்பத்துக்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் அதிகம் உண்டு. இவ்வுண்மையை நன்றாக உணர்ந்தவர் சிலப்பதிகார ஆசிரியர். ஆதலால்தான் அவர் பல சந்தமுள்ள பாடல்களிலே சிலப்பதி காரத்தைச் செய்திருக்கின்றார். சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல் வெண்பாவிலே தொடங்குகின்றது. முதலில் உள்ள நான்கு பாடல்களும் மூன்றடிகள் கொண்ட வெண்பாக்கள். இவைகளுக்குச் சிந்தியல் வெண்பாக்கள் என்று பெயர். புகார்க் காண்டத்தில் உள்ள கானல்வரிப் பாடல்கள் மிகுந்த சுவை உள்ளவை. கானல்வரி, பல சந்தங்களிலே அமைந்த பாக்களைக் கொண்டவை. மதுரைக் காண்டத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவை, துன்ப மாலை, ஊர்சூழ் வரி என்ற காதைகளும் பலசந்தப் பாக்களால் அமைந்தவை. வஞ்சிக் காண்டத்தில் உள்ள குன்றக்குரவை, வாழ்த்துக் காதை ஆகிய பகுதிகளும் பலசந்தப் பாக்கள் கொண்டவை. இங்கே குறித்த பகுதிகளில் உள்ள பாடல்களிலே பல இசையுடன் பாடுவதற்கு ஏற்றவை. முப்பது காதைகளிலே ஆறு காதைகள் பலசந்தப் பாடல் களைக் கொண்டவை. இது குறிப்பிடத்தக்கது, இக் காதைகளைப் படிப்போர் பொருளின்பமும் காண்பர்; ஒசையின்பத்திலும் ஆழ்ந்து தம்மை மறப்பர். சிலப்பதிகாரத்திலே வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா முதலியவைகளும், அவற்றின் இனங்களும் கலந்து கிடக்கின்றன. சீவக சிந்தாமணிக்குப் பிறகுதான் தமிழிலே விருத்தப்பாக்கள் புகுந்தன; அதற்குமுன் விருத்தப்பாக்களில் நூல்கள் எழுதப்பட வில்லை; விருத்தப் பாக்கள் வடமொழியைப் பின்பற்றி எழுந்தன என்பர். சிலப்பதிகாரத்தைக் காண்போர் இக்கூற்றை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சிலப்பதிகாரத்திலே விருத்தப் பாக்களும் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விருத்தப்பாக்களில் நூல் இயற்ற முதலில் வழிகாட்டியவர் சிலப்பதிகார ஆசிரியர் என்றே சொல்லி விடலாம். விருத்தப் பாக்கள் தமிழில் உள்ள, நால்வகைப் பாக்களின் இனமே என்பதை மறந்துவிடக்கூடாது. சிலப்பதிகார அமைப்பிலே மற்றொரு சிறப்பும் குறிப்பிடத் தக்கது. பழைய கதை ஒன்றை, உரையும் பாட்டும் கலந்து செய்வ தற்குத் தொன்மை என்று பெயர். தொல்காப்பியர் இவ்வாறு தொன்மைக்கு இலக்கணம் வகுத்துள்ளார். உரையும் பாட்டும் கலந்த நூலுக்கு உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பெயர். சிலப்பதிகாரம் இவ்வகைச் சேர்ந்த நூல். பாடல்களின் இடையிலே உரைநடையும் கலந்திருப்பதால் அதில் ஒரு தனிச்சுவை தட்டும். படிப்போர் அதனால் ஒரு தனிமகிழ்ச்சியடைவர். செய்யுளை விட உரைநடையிலே குறித்த பொருளை விளக்கிக் கூறமுடியும். ஆதலால் உரை நடையும் இடையிடையே அமைத்துச் செய்யுள் நூல் செய்வதைச் சிறப்பாகப் போற்றினர். உரைநடையிலே தனித்த உரை நடையாக-அதாவது வசனரூபமாக இருப்பது ஒன்று; செய்யுள் வடிவில் இருக்கும் உரைநடை ஒன்று. செய்யுள் உருவில் இருக்கும் உரைநடைக்கு உரைப்பாட்டு என்று பெயர், இந்த உரைநடையிலே செய்யுள் போல மோனை எதுகைகள் அமைந்திருக்கும்; ஆனால் செய்யுளுக்குரிய கட்டுத்திட்டம் இல்லாமல், கடிவாளமற்ற குதிரைபோல் ஓடும். இவ்வாறு எழுதப்படுவதே உரைப்பாட்டு. சிலப்பதிகாரத்தில் தனித்த உரைநடையும், உரைப்பாட்டும் பலவிடங்களில் கலந்து வருகின்றன. இவ்வாறு பல வகையிலே சிலப்பதிகாரத்தின் செய்யுள் அமைப்புச் சிறந்து விளங்குகின்றது. இது நூல் எழுதுவோர்க்கு ஒரு வழிகாட்டி யாகத் திகழ்கின்றது. சிலப்பதிகாரக் கதை மிக நீண்டகதை அன்று. குறுகிய கதைதான். அதை ஒரு சிறுகதை உருவத்திலே அமைத்து எழுதி விடலாம். ஆனார் சிலப்பதிகார ஆசிரியர் அச் சிறுகதையை ஒரு பெரும்காப்பியமாக அமைத்துவிட்டார்.ஆசிரியரின் இத்திறம் வியக்கத்தக்கது. இது அவருடைய ஒப்புயர்வற்ற புலமைத் திறத்திற்கு ஒரு சான்றாகும். நமது கால மகாகவி பாரதியார், சிலப்பதிகாரத்தை `நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று போற்றினார். அதை `ஓர் மணி ஆரம் என்று பாரட்டிப் பாடினார், சிலப்பதிகாரச் செய்யுள் இன்பம், அறங்கள், காட்சிகள் எல்லாவற்றை யும் படித்துச் சுவைத்தவர் அவர், ஆதலால் அதை அவர் நவரத்தின மாலையாக உருவகம் செய்தார். சிலப்பதிகாரம் ஒரு நவரத்தின மாலை என்ற கருத்திலேயே `ஓர் மணி ஆரம் என்று பாரதியார் குறிப்பிட்டார். சிலப்பதிகாரம் அதன் அமைப்பினாலேயே படிப்போர் நெஞ்சை அள்ளும் கவிதையாக விளங்குகின்றது; ஓர் மணி ஆரமாக விளங்குகின்றது. இது உண்மை. சிலப்பதிகாரக் கதை சிலப்பதிகாரத்தைப் படிக்கத் தொடங்கும்போதே அது நம் உள்ளத்தைக் கவர்கின்றது. ஆசிரியர் அதைத் தொடங்கியிருக்கும் முறைதான் இதற்குக் காரணம். பெரும்பாலான காவியங்கள் எடுத்தவுடன் கதையைத் தொடங்குவதில்லை, காவியப்புலவர்கள். கடவுள் வாழ்த்து, நாட்டுப் படலம், நகரப் படலம், ஆற்றுப் படலம் என்று அடி போட்டுக் கொண்டுதான் நூலைப் பாடத் தொடங்குவார்கள். நாட்டுப் படலத்திலே ஒவ்வொரு திணையைப்பற்றியும் பாடுவார்கள்; நகரப்படத்திலே ஒவ்வொரு தெருவைப் பற்றியும் பாடுவார்கள், வேசையர் வீதிகளைப்பற்றிக் கூறும்போது புலவர்கள், வீடுதோறும் புகுந்து புறப்படுவார்கள். இவர்கள் நாடு நகரங்களிலே அலைந்து திரிந்து கதையைத் தொடங்கு வதற்கு முன் அப்பாடா என்று ஆகிவிடும். திருத்தக்கதேவர், கவிச் சக்கரவர்த்தி கம்பர், சேக்கிழார் முதவியவர்களும் நாட்டுப் படலம், நகரப் படலம் சொல்லித் தான் கதையைத் தொடங்குகின்றனர். எடுத்தவுடன் பல பக்கங்களில் இயற்கை வர்ணனைகளை எழுதுவது; பிறகு கதையைத் தொடங்குவது - இம்முறையில் எழுதப்பட்டிருக்கும் நூல் கற்பவர் மனத்தைக் கவராது. எடுத்தவுடன் கதையைத் தொடங்குவது; இடையிடையே இயற்கை வர்ணனைகளையும், அறநெறிகளையும் அமைத்துக்காட்டுவது - இந்த முறையில் எழுதப்படும் நூல்கள்தான் கற்போர் உள்ளத்தைக் கவரும் இம் முறையில் எழுதப்படுவதே சிறந்ததாகவும் கருதப்படுகின்றது. சிலப்பதிகாரம் இந்த முறையிலேதான் எழுதப்பட்டிருக் கின்றது, சந்திரன், சூரியன், மழை, பூம்புகார் ஆகிய நான்கையும் வாழ்த்தியபின் கதை தொடங்கிவிடுகின்றது. இடையிடையே நகரச் சிறப்பு, நாட்டுப் பெருமை, ஆற்றுச் சிறப்பு முதலியவைகள் அமைந்திருக்கின்றன. மணிமேகலையும் எடுத்த எடுப்பிலேயே கதையைத்தான் தொடங்குகின்றது. கதையை எப்படி எழுதத் தொடங்குவது என்பதற்குச் சிலப்பதிகாரம் ஒரு வழிகாட்டியாகக் காட்சியளிக் கின்றது, சிலப்பதிகாரத்திற்குப்பின் தோன்றிய நூல்கள் இம்முறை யைப் பின்பற்ற வில்லை. நாடு - நகர - ஆறு வர்ணனைகளைப் பாடியபிறகே கதையைத் தொடங்கு கின்றன, காவியங்களும், புராணங்களும் இந்தப் போக்கிலேயே போகின்றன. இந்நூல்களை இயற்றிய புலவர்கள் சிலப்பதிகார முறையைப் பின்பற்றாமல் விட்டது ஏனோ? இந்நூலின் கதையைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுவது நலம். அதை நினைவில் வைத்துக்கொள்ளுவது சிறந்தது. பின்னால் சொல்லப்படும் செய்தியை எளிதிலே புரிந்து கொள்ளுவதற்குத் துணை செய்யும். புகார்க் காண்டம் சோழநாட்டின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம். இதற்குப் புகார் என்றும் பெயர். இந்நகரில் வாழ்ந்த வணிகருள் முப்பிரிவினர் இருந்தனர். அவர்கள் இப்பர், கவிப்பர், பெருங் குடியர் என்போர். மாசாத்துவான் என்னும் வணிகன் பெருங்குடியர் மரபிலே பிறந்தவன். மாநாய்கன் என்பவனும் அம்மரபிலே தோன்றியவன். இருவரும் பெருநிதி படைத்தவர்கள், மாசாத்துவான் மகன் கோவலன்; மாநாய்கன் மகள் கண்ணகி. இருவர்தம் பெற்றோர் களும் தங்கள் நிலைமைக்கு ஏற்பக் கொள்வினை, கொடுப்பினை செய்து கொள்ள விரும்பினர், அவர்கள் ஒரு நல்லநாளிலே வைதீகச் சடங்குகளுடன் கோவலனுக்கும், கண்ணகிக்கும் திருமணம் செய்து வைத்தனர். கோவலன் கண்ணகியுடன் அன்போடு இணைந்து வாழ்ந் தான், கோவலன் அன்னை பெருமனைக்கிழத்தி என்பவள் அவள் மகனையும், மருமகளையும் தனிக் குடித்தனமாக வைத்தாள். இல்லறம் நடத்து வதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தாள், கோவலன், கண்ணகி இருவரும் இல்லற தருமத்தை இனிது பின்பற்றி வாழ்ந்து வந்தனர். இக்காலத்தில் கோவலன், மாதவி என்னும் கணிகையின் மேல் காதல் கொண்டு, அவளோடு சேர்ந்து வாழ்ந்தான். கண்ணகி கோவலன் பிரிவால் வருந்தினள். ஆயினும் அவள் தன் துன்பத்தைப் பிறர் அறியாதவாறு பொறுத்திருந்தாள். அக்கால வழக்கப்படி புகார் நகரிலே இந்திரனுக்குத் திருவிழா நடந்தது. விழாவின் முடிவில் நகரமக்கள் கடல் ஆடச் சென்றனர். கோவலனும் மாதவியுடன் கடலாடச் சென்றான். அவனும் மாதவியும் கடற்கரையிலே ஒருபுறத்தில் அமர்ந்தனர்; வீணை வாசித்து மகிழ்ந்தனர். கோவலன் மற்றொரு பெண்ணைக் காதலிப்பதுபோன்ற கருத்துள்ள வரிப்பாடலைப் பாடினான்; மாதவியும் அக்குறிப்புத் தோன்றப்பாடினாள். உடனே கோவலன் மாதவியின்பால் ஐயுற்று அவளை விட்டுப் பிரிந்தான். கோவலன் நேரே கண்ணகியின் இல்லத்தை அடைந்தான். அப்பொழுது கண்ணகி தேவந்தி என்னும் பார்ப்பனத்தோழி யுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். அவள் கோவலனை வரவேற்றாள். கோவலன் கண்ணகியின் உடல் சோர்வையும், உள்ளத் துயரையும் உணர்ந்தான். தன் தீச்செயல் குறித்து வருந்தினான், பொய்யொழுக்கப் பரத்தையோடு சேர்ந்து என் முன்னோர் ஈட்டிய செல்வங்களையெல்லாம் இழந்தேன்; இச்செய்கையால் வெட்கம் அடைகின்றேன் என்றான். மாதவிக்குக் கொடுக்கப் பொருள் இல்லாமையால்தான் இவ்வாறு கூறுகின்றான் என்று எண்ணினாள் கண்ணகி. அவள், என்னிடம் இரண்டு சிலம்புகள் இருக்கின்றன; அவற்றைக் கொள்க என்றாள். மதுரைக்குச் சென்று இச்சிலம்பை முதலாக வைத்துக் கொண்டு வாணிகம் செய்ய எண்ணினேன்; நீயும் உடன் வருக என்றான் கோவலன்; கண்ணகியும் உடன்பட்டாள். கோவலன் அன்று இரவின் கடையாமத்திலே கண்ணகி யுடன் புறப்பட்டான். ஒருவரும் காணாதபடி காவிரியின் வடகரை வழியே மேற்கே சென்றான். ஒரு பூஞ்சோலையை அடைந்தான். அங்கே தவம் புரிந்துகொண்டிருந்த அருக மதத் தவசியான கவுந்தியடிகளைக் கண்டான். அவளும் மதுரைக்கு வருவதாக உரைத்தாள்; அவர்களுடன் புறப்பட்டாள். அவர்கள் அரங்கத்தை அடைந்தனர், அங்கே வந்த சாரணர்களை வணங்கினர். காவிரியின் தென் கரையை அடைந்து ஒரு சோலையிலே தங்கியிருந்தனர். அப்பொழுது அங்கே ஒரு பரத்தையும், தூர்த்தனும் வந்தனர். அவர்கள் கோவலனையும், கண்ணகியையும் கண்டு பரிகசித்தனர். கவுந்தி அடிகள் அவர்களை நரிகளாகும்படி சபித்தாள். அது கண்ட கோவலன், அவர்கள்பால் இரக்கம் காட்டும்படி வேண்டினான். ஓராண்டின்பின் அவர்கள் நல்லுருப் பெறுக என்று சாபத்தை நீக்கினாள் கவுந்தியடிகள், பின்னர் மூவரும் உறையூருக்குச் சென்றனர். இதுவே புகார்க் காண்டத்தில் கூறப்படும் கதையாகும், மதுரைக் காண்டம் கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் உறையூரிலே ஒரு நாள் தங்கியிருந்தனர். அடுத்த நாள் காலையிலே புறப் பட்டுச் சிறிதுதொலை நடந்தனர். ஓர் அந்தணனால் மதுரைக்குப் போகும் வழியை அறிந்து மேலும் நடந்து சென்றனர் அப்பொழுது ஒருநாள் காலையில் கோவலன் காலைக்கடன் கழிக்கப் போனான். கவுந்தியும் கண்ணகியும் தனித்திருந்தனர். கோவலன் குளத்தில் நிற்கும்போது கௌசிகன் என்னும் அந்தணனைக் கண்டான். அவன், கோவலன் பிரிவால் வருந்தும் மாதவியால் அனுப்பப்பட்டவன். அவன் வாயிலாகத் தன் பெற்றோர்களின் துன்பத்தையும், மாதவியின் துயரத்தையும் உணர்ந்தான்; வருந் தினான். தான் மதுரைக்குப் புறப்பட்ட காரணத்தைத் தன் பெற்றோர் களுக்குக் கூறி அவர்களைப் பாதுகாக்கும்படி அந்தணனிடம் உரைத்தான். அவனைப் பூம்புகாருக்கு அனுப்பிவிட்டான். பின்னர், கோவலன், கண்ணகி கவுந்தி அடிகளுடன் புறப்பட்டான், வழியிலே கண்ட பாணர்களால், மதுரைக்குச் செல்லும் வழியின் அளவை அறிந்தான். வையையாற்றை அடைந்தான். புணையால் வையையைக் கடந்தான். மதுரையின் புறத்தின் உள்ள முனிவர் இருக்கையை அடைந்து அங்கே தங்கினான். மறுநாள் காலையில், கோவலன் கவுந்தியடிகளை வணங்கினான். கண்ணகியை அவள் பாதுகாப்பில் வைத்துவிட்டு மதுரை நகருக்குள் சென்றான். வாணிகம் புரிவதற்கான இடத்தை நாடினான், மீண்டு வந்து மதுரை நகரின் சிறப்பைக் கவுந்தி அடிகளிடம் கூறினான். அப்பொழுது அங்கு வந்த மாடலன் என்னும் மறையோனிடம் உரையாடிக்கொண்டிருந்தான். அச்சமயம் அங்கு இடைச்சியர் தலைவியாகிய மாதரி என்பவள் வந்தாள். அவளை நல்லவள் என்று கண்ட கவுந்தி யடிகள் அவளை அருகில் அழைத்தாள். கண்ணகியின் கற்பு மேம்பாட்டைக் கூறினாள். கண்ணகியை அவளிடம் அடைக் கலப் பொருளாகக் கொடுத்தாள். மாதரியும் மகிழ்ச்சியுடன் கோவலனையும், கண்ணகியையும் ஆயர்பாடியில் உள்ள தன் மனைக்கு அழைத்துப் போனாள். மாதரி, விருந்தினர் இருவரையும் ஒரு புதிய மனையிலே அமர்த்தினாள். தன் மகள் ஐயை என்பவளைக் கண்ணகிக்குத் துணையாக வைத்தாள். அவர்கள் சமைத்துச் சாப்பிடுவதற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் கொடுத்தாள். கண்ணகி நன்றாகச் சமைத்தாள்; கணவனுக்குப் பரிமாறினாள். அதனைச் சுவைத்து உண்ட கோவலன், கண்ணகியை அருகில் அழைத்தான்; அணைத்துக்கொண்டான். தனது மதியற்ற நடத்தைக்காக மனம் வருந்தினான். கண்ணகியின் மாண்பைப் பாராட்டிப் புகழ்ந்தான். கண்ணகியின் சிலம்புகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டான். `நான் விரைவில் இச் சிலம்பை விற்று வருகின்றேன் என்று சொல்லிப் புறப்பட்டான். அவள் தனித்திருப்பதைக் கண்டு சிந்தை வருந்திச் சென்றான். கோவலன் நகருக்குள் செல்லும்போது தீச் சகுனங்கள் பல காணப்பட்டன. அவற்றைக் கவனிக்காமல் கடைத்தெருவினுள் புகுந்தான். அவன் எதிரில், நூறு பொற்கொல்லர்கள் பின்வர ஒரு பொற்கொல்லன் முன்வந்தான். அவனிடம் அரசி அணிவதற்கு ஏற்ற சிலம்பின் விலையை மதிப்பிடுவாயோ? என்றான் கோவலன். பொற்கொல்லனும் பணிவுடன் `ஆம் என்ற குறிப்பைக் காட்டினன். கோவலன் தன்னிடமிருந்த சிலம்பை அவனிடம் காட்டினான். பொற்கொல்லன், இதை அரசனிடம் காட்டி வருகிறேன்; அதுவரை நீர் இங்கே இரும் என்று ஒரு இடத்தைக் காட்டிப்போனான். கோவலன் அவ்விடத்தில் காத்திருந்தான். அந்தப் பொற்கொல்லன் அரசியின் சிலம்பு ஒன்றைத் திருடியவன். கோவலன் கொடுத்த சிலம்பும், அரசியின் சிலம்பும் ஒத்திருந்ததைக் கண்டான்; இப் புதியவனைத் திருடன் என்று காட்டித் தான் தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டான். பொற்கொல்லன் போனபோது, பாண்டியன் தன் மனைவியின் ஊடலைத் தணிப்பதற்காக அந்தப்புரத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். பொற்கொல்லன் அவனை வணங்கி, என் குடிசையிலிருந்து சிலம்பைத் திருடிய கள்வன் அகப்பட்டான். கையும் களவுமாகப் பிடித்து விட்டேன் என்றான். மன்னன், காவலர்களை அழைத்து, அவனைக் கொன்று, அச்சிலம்பைக் கொண்டுவாருங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றான். பொற்கொல்லன் அக் காவலர்களுடன், கோவலன் இருந்த இடத்தை அடைந்தான். காவலர்கள், கோவலனைக் கள்வன் என்று நம்ப மறுத்தனர். பொற்கொல்லன், கள்வர்களின் இலக்கணத்தை எடுத்துரைத்தான். காவலர்களை இகழ்ந்தான். உடனே காவலர்களிலே கொடியோன் ஒருவன் விரைந்து கோவலனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினான். இதன்பின் கண்ணகியிருந்த ஆயர் சேரியிலே பல அபாய அறிகுறிகள் நிகழ்ந்தன. மாதரி முதலியோர் அதற்குப் பரிகார மாகக் குரவைக் கூத்தாடினர். மாதரி வையைக்கு நீராடச் சென்றபோது, கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்தாள். இதைக் கண்ணகி உணர்ந்தவுடன் பதைத்து மூர்ச்சித்தாள். கண்ணகி உயிர்விடத் துணிந்தாள். சூரியனை நோக்கி, என் கணவன் கள்வனோ? என்றாள். அவன் உன் கணவன் கள்வன் அல்லன்; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீ உண்ணும் என்றான். கண்ணகி மிகுந்த சினங்கொண்டாள். மற்றொரு சிலம்பைக் கையில் ஏந்திக் கொண்டு மதுரை நகருக்குள் புகுந்தாள். பலவாறு புலம்பினாள், என் கணவனைக் காண்பேன்; அவன் வாய் மொழியைக் கேட்பேன்; இன்றேல் என்னை இகழுமின் என்று சூள் உரைத்தாள். கணவன் வெட்டுண்டு கிடந்த இடத்தை அடைந்தாள்; கீழே விழுந்து புலம்பினாள்; அவன் உடம்பைத் தழுவிக்கொண்டாள்; கோவலன் முன்போல் உயிர்பெற்று எழுந்தான், அவன் பாதங்களைப் பணிந்தாள். நீ இங்கு இரு என்று சொல்லி அவன் சுவர்க்கம் புகுந்தான். இச்சமயத்தில் பாண்டியன் மனைவி தீக் கனாக்கள் பல கண்டாள். அவற்றைப் பாண்டியனிடம் சொல்லிக்கொண்டிருந் தாள், அப்பொழுது கண்ணகி, சினத்துடன் அரண்மனை வாயிலை அடைந்தாள். தன் வரவை அரசனுக்கு அறிவித்தாள். அவன் அனுமதிப்படி அவள் அரசன்முன்போய் நின்றாள். கண்ணகி தன்னை இன்னார் என்று அறிவித்தான். கோவலன் கள்வன் அல்லன் என்றாள். தன் சிலம்பினுள் இருக்கும் பரல் மாணிக்கம் என்றாள். அரசன் தன் மனைவியின் சிலம்பினுள் இருக்கும் பரல் முத்து என்றான். உடனே கோவலனிடமிருந்து கவர்ந்த சிலம்பை வருவித்தான். கண்ணகி அதை எடுத்து உடைத்தாள். அதிலிருந்த மாணிக்கப் பரல் தெறித்து வீழ்ந்தது. அதுகண்ட அரசன் நடுநடுங்கிப்போனான். அறத்தைச் சிதைத்த என் ஆயுள் அழிக என்று சொல்லி அரியாசனத்தில் சாய்ந்தான்; அப்படியே மாண்டு போனான். பாண்டியன் மனைவி, `காத்தருள்க என்று சொல்லிக் கண்ணகியின் அடிகளிலே வீழ்ந்தாள்; அப்படியே அவளும் வானுலகடைந்தாள். கண்ணகி, நான் பத்தினியானால், இவ்வூரை அழிப்பேன் என்று உரைத்தாள். தனது இடது மார்பை வலது கரத்தால் திருகி எடுத்தாள்; மதுரை நகரின் மேல் வீசினாள்; தீப்பற்றியது. அக்கினிதேவன், கண்ணகியின் கட்டளைப்படி நல்லோரை நலியாமல் விட்டான். அந்நகரைப்பற்றி எரித்தான். தீயோர் களைச் சுட்டுப் பொசுக்கினான். மதுரையைக் காத்திருந்த வருணபூதங்கள் நான்கும் பெயர்ந்து சென்றன; அந்நகர தேவதை கண்ணகியிடம் வந்தாள்; அவளிடம் பேசினாள். நான் இந்நகரின் தெய்வம். பாண்டியர்கள் கொடுங்கோலர் அல்லர். இந் நெடுஞ்செழியனும் நல்லவனே. நான் ஒரு வரலாற்றைக் கூறுகின்றேன், கேள். வசு என்பவன் கலிங்க நாட்டுச் சிங்கபுரத்து வேந்தன். குமரன் என்பவன் கபிலபுரத்து வேந்தன். இருவரும் பகைவர்கள். ஒருநாள் சிங்கபுரத்துக் கடைத் தெருவிலே, சங்கமன் என்ற வணிகன் ஒருவன் பண்டங்களை விற்பனை செய்து கொண் டிருந்தான். பரதன் என்பவன் அவ் வணிகனைப் பகைவனுடைய ஒற்றன் என்று அரசனுக்குக் காட்டிக் கொலைசெய்துவிட்டான். கொலையுண்ட சங்கமன் மனைவி நீலி என்பவள். அவள் ஆறாத் துயருடன் பதினான்கு நாட்கள் பல இடங்களிலும் அலைந்து திரிந்தாள். பின்பு ஒரு மலைமீது ஏறித் தன் உயிரை நீத்துக் கணவனுடன் சேரத் துணிந்தாள். `எமக்குத் துயர் இழைத்தோர், மறுபிறப்பில் இத்துன்பத்தை அடைக என்று சாபம் இட்டு இறந்தாள். அப் பரதனே கோவலனாகப் பிறந்தான். ஆகையால் இத்துன்பத்தை அடைந்தீர்கள். நீயும் பதினான்காவது நாளில் உன் கணவனைக் காண்பாய்; அவனுடன் செல்வாய் என்று கூறிச் சென்றனள். பின்பு கண்ணகி, மதுரையைவிட்டு வையைக்கரைவழியே மேற்கு நோக்கிச் சென்றாள். மலைநாட்டை அடைந்தாள். திருச்செங்குன்றைச் சேர்ந்தாள். பதினான்காவது நாளின் மாலையிலே ஒரு வேங்கை மர நிழலிலே நின்ற அவள்முன்பு கோவலன் தெய்வ வடிவோடு வந்தான். கண்ணகி அவனுடன் சேர்ந்து விமானம் ஏறிச் சுவர்க்கம் சென்றாள். இதுவே மதுரைக் காண்டத்தில் உள்ள கதை. வஞ்சிக் காண்டம் வேங்கை மர நிழலிலே கண்ணகி கோவலனுடன் வானுலகை யடைந்ததை வேடர்கள் கண்டனர்; வியப்புற்றனர். தங்கள் குறிஞ்சியிலே ஒரு குரவைக் கூத்து நடத்தினர். அப்பொழுது பேரியாற்றங்கரையிலே சேரன் செங்குட்டுவன் வந்து தங்கி யிருந்தான். அவன் மனைவி வேண்மாள், இளவல் இளங்கோ அடிகள், ஏனைய பரிவாரங்களும் அவனுடன் வந்திருந்தனர். குறவர்கள் காணிக்கைப் பொருள்களுடன் சென்றனர். தங்கள் மன்னன் செங்குட்டுவனைக் கண்டனர். தாங்கள் பார்த்த அதிசயத்தை அவனிடம் உரைத்தனர். வேந்தனும் வியப்புற்றான். அப்பொழுது அங்கு வந்த மதுரைத் தமிழாசிரியர் சாத்தனார் கண்ணகியின் வரலாற்றை உரைத்தார். செங்குட்டுவன் பாண்டியன் இறந்தமைக்கு வருந்தினான். தன் மனைவியின் விருப்பப்படி, கண்ணகிக்குச் சிலைநாட்டிக் கோயிலெடுத்து விழாச் செய்ய விழைந்தான். செங்குட்டுவன், கண்ணகியின் உருவம் செய்வதற்குக்கல் கொணரக் கருதினான். அதுபற்றி அமைச்சர்களுடன் ஆலோ சித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது இமயத்திலிருந்து வந்த முனிவர்கள், ஆரிய மன்னர்களான கனகனும், விசயனும் தமிழக வேந்தர்களைப் பழித்தனர் என்று கூறிச் சென்றனர். உடனே செங்குட்டுவன், அம்மன்னர்களை வெல்வேன்; அவர்கள் தலையிலே இமயக்கல்லை ஏற்றிக் கொணர்வேன் என்று சபதம் கூறினான். செங்குட்டுவன், வடதிசை நோக்கிப் படையெடுத்துப் புறப்பட்டான். நீலகிரியை அடைந்தான். இமயத்திலிருந்து வந்த முனிவர்களின் வாழ்த்தைப் பெற்றான். கங்கைக் கரையை அடைந்தான். தனது நட்பு அரசர்களான கன்னர்கள் கொணர்ந்த நாவாய்களின் மூலம் கங்கையைக் கடந்தான். எதிர்த்த கனக - விசயர்களையும், அவர்களுக்குத் துணைவந்த மன்னர்களையும் வென்றான். தன் அமைச்சன் வில்லவன் கோதையையும், சேனை களையும் இமயத்திற்கு அனுப்பினான். கண்ணகி சிலைக்கான கல்லைக் கொணர்ந்தான். அதைக் கனக - விசயர்களின் தலை யிலேற்றிக் கங்கையிலே நீர்ப்படை செய்தான். கங்கையின் தென்கரையை எய்திச் சிலநாட்கள் தங்கியிருந்தான். அப்பொழுது கங்கையாடி வந்த மாடலன் என்னும் மறையோன் கோவலன் வரலாறு முதலியவற்றைச் செங்குட்டு வனுக்குக் கூறினான். செங்குட்டுவன், அவனுக்கு ஐம்பது துலாம் பொன்னைத் தானம் செய்தான். செங்குட்டுவன், தன்னால் வெல்லப்பட்ட கனக - விசயர் களைப் பாண்டியனுக்கும், சோழனுக்கும் காட்டும்படி நீலன் என்னும் படைத்தலைவனுடன் அவர்களைச் செல்லவிட்டான் அதன்பின், படைகளும் தானும் புறப்பட்டு வஞ்சிமா நகரை அடைந்தான். அப்பொழுது நீலன் என்னும் படைத்தலைவன் வந்தான். தோற்றோடிய கனக - விசயரைப் பிணித்து வந்தது பற்றிச் சோழனும் பாண்டியனும் பரிகசித்தனர் என்றான். செங்குட்டுவன் சினங்கொண்டான். அருகிலிருந்த மாடலன் அறவுரைகள் கூறி அவன் சினத்தை ஆற்றினான். செங்குட்டுவனும் சினந் தணிந்தான். சிறைப்பிடித்துவந்த வேந்தர்களை விடுதலை செய்தான். பின்னர், சிறந்த வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட கோயிலிலே இமயக் கல்லால் ஆக்கிய கண்ணகியின் உருவத்தை நாட்டினான். அந்தப் பத்தினித் தெய்வத்துக்குத் தினப்படி பூசைகள் நடக்க ஏற்பாடு செய்தான். கோவலன் கொலையுண்ட செய்தியைத் தேவந்தி, கண்ணகியின் செவிலித்தாய், அவள் அடித்தோழி ஆகியோர் மாடலனால் அறிந்தனர். அவர்கள் புகாரை விட்டு மதுரை அடைந்தனர். அங்கே ஐயையைக் கண்டனர். அவளுடன் மலைநாடு புகுந்தனர். கண்ணகியின் கோயிலை அடைந்து செங்குட்டுவனைக் கண்டனர். தங்களை இன்னார் என்று அறிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாமையால் புலம்பினர். அப்பொழுது கண்ணகி தெய்வ உருவுடன் தோன்றினாள். செங்குட்டுவனுக்குக் காட்சி கொடுத்தாள்; வாழ்த்துரைத்தாள். பின்பு செங்குட்டுவன், மணிமேகலையின் துறவைப் பற்றித் தேவந்தி சொல்லக் கேட்டான். தேவந்தியின்மேல் சாத்தன் என்னும் தெய்வம் ஆவேசித்தது. சாத்தன் கட்டளைப்படி, மாடலன் தன் கையில் உள்ள கமண்டலநீரை அங்கு வந்திருந்த மூன்று சிறுமிகளின் மேல் தெளித்தான். அம்மூவரும் உடனே கண்ணகியைக் குறித்துப் புலம்பினர். கண்ணகியின் தாய், கோவலன் தாய், மாதரி ஆகிய மூவருமே அப்பெண்களாகப் பிறந்திருப்பவர்கள் என்பதை மாடலன் அறிந்தான். அப்படிப் பிறத்தற்கான காரணத்தையும் அவன் அரசனுக்கு உரைத்தான். பின்னர் தேவந்தியைக் கண்ணகிக்குப் பூசைபண்ணும் படி அமர்த்திச் செங்குட்டுவன், மகிழ்ந்தான். அப்பொழுது ஆரிய மன்னர்களும், மாளவநாட்டு மன்னரும், இலங்கைக் கயவாகு வேந்தனும் வந்தனர்; பத்தினிக் கடவுளை வணங்கினர்; எங்கள் நாட்டிலும் எழுந்தருளவேண்டும் என்று வேண்டினர். அப்படியே வரந் தந்தேன்என்றொரு குரல் எழுந்தது. அதைக் கேட்ட செங்குட்டுவனும் ஏனைய மன்னர் களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் செங்குட்டுவன், தான் ஏற்பாடு செய்திருந்த வேள்விச்சாலைக்கு மாடலனுடன் சென்றான். இளங்கோ அடிகள் கண்ணகியின் கோயிலை அடைந்தார். பத்தினிக் கடவுள் தேவந்தியின்மேல் ஆவேசித்தாள். இளங்கோடிகளின் வரலாற்றைக் கூறினாள். கோவலன் கொலையுண்டநாள்முதல் பாண்டி நாட்டிலே மழையில்லை, பஞ்சமும் பிணியும் பரவின, ஆதலால், கொற்கை நகர மன்னன் இளம்செழியன் ஆயிரம் பொற் கொல்லர்களைப் பத்தினிக் கடவுளுக்குப் பலியிட்டான். மழை பெய்தது; பசியும் பிணியும் பறந்தன. கொங்கு மண்டல மன்னரும், இலங்கைக் கயவாகு வேந்தனும், உறையூர்ப் பெருநற்கிள்ளியும் இச்செய்தி யைக் கேட்டனர். அவர்களும் தங்கள் நாட்டிலே கண்ணகிக்குக் கோயில் எடுத்தனர்; பூசனையும், விழாவும் புரிந்தனர். அவர்கள் நாடுகளும் வளம் பெற்று வாழ்ந்தன. இதுவே சிலப்பதிகாரக் கதை. இக்கதையின் இடையே பல சிறுகதைகளும் கலந்து கிடக்கின்றன. அக் கதைகளைப் பற்றிச் சிறுகதைகள் என்ற பகுதியிலே காணலாம். இக்கதை ஒரு விருவிருப்பான நாடகம்போல் அமைந்திருப் பதைக் காணலாம். கதையின் இடையிலே இன்பம் அளிக்கும் நிகழ்ச்சிகள் பல அமைந்திருக்கின்றன. அவைகளில் நகைச்சுவை யளிக்கும் நிகழ்ச்சிகளும் உண்டு. இவ்வாறு பல்வகைச் சுவையும் பொருந்தி ஒரு உயர்ந்த நாடகம்போல் அமைந்திருப்பது சிலப்பதிகாரக் கதையாகும். அறம் கூறும் நூல் இலக்கியத்தைப்பற்றி இன்று ஒரு புதிய கருத்து நிலவுகின்றது. இலக்கியம் இலக்கியத்திற்காகவே எழுதப்பட வேண்டும்; கொள்கை களைப் பரப்புவதாக அமையக் கூடாது; கொள்கைப் பரப்பை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் நூல்கள் இலக்கியம் அல்ல; அவைகள் பிரச்சார நூல்களாகத் தான் இருக்க முடியும் என்று சொல்வோர் உண்டு. இது இலக்கியத்தைப்பற்றிச் சொல்லப் படும் புதுக்கருத்தாகும். இவர்கள் கூற்று, பொருள் அற்றது. இது இலக்கியம் என்ற சொல்லுக்கே பொருள் அறியாதார் கூற்று. இலக்கியம் என்னும் சொல் லட்சியம் - குறிக்கோள் - நோக்கம் என்ற பொருளைக் கொண்ட சொல்லாகும். குறிக்கோள் அற்ற எந்த நூலையும் இலக்கியம் என்று இயம்பமுடியாது. ஒரு நோக்கமும் இல்லாமல் எப்படித்தான் ஒரு நூலை எழுத முடியும்? எந்த நூலை எழுது வோரும் ஒரு கருத்தை வைத்துக்கொண்டுதான் எழுதுவார்கள். ஆதலால் இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்று சொல்லுவது வீண் வறட்டுவாதம். தமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியம், இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றித் தெளிவாகக் கூறு கின்றது. தொல்காப்பிய காலத்திலும், அதற்கு முன்பும் இலக்கியங்கள் நால்வகைப் பாடல்களிலே இயற்றப்பட்டன. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்பனவே அந்நால்வகைப் பாடல்கள். இதனை, ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியே நால்இயற்று என்ப பாவகை விரியே (தொ.பொ.செய்.) என்ற சூத்திரத்தால் அறியலாம். இந்த நால்வகைப் பாடல்களால் இயற்றப்படும் நூல்கள் மூன்று பொருள்களை உணர்த்துவதாக இருக்கவேண்டும். அறம், பொருள், இன்பம் என்பனவே அம் மூவகைப் பொருள்கள். இதனை, அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதல் பொருட்கும் உரிய என்ப (தொ.பொ.செய்.) என்ற சூத்திரத்தால் அறியலாம். இந்த இரண்டு சூத்திரங்களும் இலக்கியம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கு வதாகக் கொள்ளலாம் நால்வகையான பாடல்களால் ஆவது; மூன்றுவகைப் பொருள்களை உணர்த்தும் குறிக்கோளை உடையது; இதுவே இலக்கியம் என்பதுதான் தொல்காப்பியம் கூறுவது. இலக்கியம் ஆவது யாது? என்ற கேள்விக்குத் திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகர் விளக்கங் கூறுகின்றார். இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம்இல் இன்பத்து அழிவுஇல் வீடும், நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு; அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலின், துறவறமாகிய காரணவகையால் கூறப்படுவது அல்லது, இலக்கண வகையால் கூறப்படாமையின், நூல் களால் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம். இது பரிமேலழகர் இலக்கியத்தைப்பற்றிக் கூறும் விளக்கம். தொல்காப்பியக் கொள்கையைத் தழுவியே பரிமேலழகர் கூறினார். அறம், பொருள், இன்பம் மூன்றைப்பற்றி மட்டும் தான் நூல்களால் கூறமுடியும் என்பது பழந்தமிழர் கொள்கை. சமண, புத்த மதங்கள் தமிழகத்திலே பரவித் தழைத்துநின்ற காலத்தில் வீட்டைப் பற்றியும் நூல்கள் எழுதத் தொடங்கினர். வீட்டுநெறி யையும் நூல்களின் வாயிலாக விளம்பலாம் என்ற கொள்கையும் பிறந்தது. வீடு-அதாவது, முத்திநெறியிலே செல்வதுபற்றியும் சமணர்களும் புத்தர்களும் நூல்கள் எழுதினர். அவற்றைப் பின் பற்றியே வேறு பல சமயநூல்களும், மதநூல்களும், தத்துவ நூல்களும் பிறந்தன. அறம், பொருள், இன்பம், வீடு, அடைதல் நூல்பயனே என்று நன்னூல் ஆசிரியர் கூறினார். இது பின்னாளில் எழுந்த கருத்தை ஒட்டிய இலக்கணமாகும். அறம், பொருள், இன்பம், வீடு இவைகளை அடைவதற்கு வழிகாட்டுவதே நூல் ஆகும் என்ற கொள்கை சமண, புத்த மதங்கள் தமிழகத்தில் பரவியபின் பிறந்த கொள்கையாகும், இந்த உண்மைகளை மறந்தவர்கள் - அல்லது மறைப்பவர்கள் அல்லது அறியாதவர்கள்தாம் இலக்கியம் இலக்கியத் திற்காகவே என்று கூச்சலிடுவார்கள். இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்று சொல்லுவோர் பிற்போக்கு வாதிகள். நாட்டிலே தோன்றும் புதிய சமுதாய-அரசியல் கருத்துக்களைக் கண்டு அஞ்சுகின்றவர்கள். இன்றுள்ள சமுதாய அமைப்பு மாறினால், அரசியல் அமைப்பு மாறினால் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சுகின்றவர்கள். இவர்கள் தங்களுக்குப் பிடிக்காத கொள்கைகள் இலக்கியங்களில் இடம்பெறு வதைக் கண்டு நடுங்குகின்றனர். இவர்கள் எழுப்பும் கூச்சல்தான் இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்பது. பண்டை இலக்கியங்ளை எடுத்துக்கொண்டால், குறிக்கோள் அற்ற இலக்கியம் ஒன்றையும் காணமுடியாது. சில இலக்கியங்கள் அரசியல் கருத்துக்களைப் பரப்புகின்றன; சில இலக்கியங்கள் அறநெறிகளைப் போதிக்கின்றன; சில இலக்கி யங்கள் வேதாந்தங்களை உபதேசிக்கின்றன; சில இலக்கியங்கள் பக்திச் சுவையை மக்கள் மனத்திலே எழுப்புகின்றன; சில இலக்கியங்கள் உலகில் உயர்வுடன் வாழ்வதற்கு வழி காட்டு கின்றன; சில இலக்கியங்கள் மத - சமய - தர்மங்களைப் பரப்பு கின்றன. பண்டை இலக்கியங்கள் எல்லாம் இவ்வாறு தான் பல துறைகளைப்பற்றியும் கூறிச்செல்கின்றன. இந்த முறையிலே சிலப்பதிகாரம் ஒரு சரியான-சிறந்த-ஒப்புயர்வற்ற-இலக்கியமாக உலவுகின்றது. இந்நூல் எதற்காக எழுதப்பட்டது என்பதை இதன் பதிகத்தில் தெளிவாகக் காணலாம். அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள் (பதிகம் 55-60) அரசியலிலே தவறு செய்தோரை அறமே எமனாகத் தோன்றிக் கொல்லும்; புகழ்பொருந்திய கற்புள்ள பெண்ணை உயர்ந்தோர் போற்றிக் கொண்டாடுவார்கள்; முன்செய்த இருவினையும், செய்தவனைத் தேடிஉருக்கொண்டு வந்து தம் பலனைத்தரும். இம்மூன்றும் சிலம்பு காரணமாக விளைந்தன. ஆதலின் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாம் ஒரு காப்பியத்தைச் செய்வோம். இது சிலப்பதிகார ஆசிரியரே கூறுவதாக அமைந்திருக் கின்றது இதனால் சிலப்பதிகாரம் எழுதப்பட்டதன் நோக்கம் இன்னது என்பதைக் காணலாம். அரசியல், பத்தினிப் பெண்டிர் பெருமை, ஊழ்வினையின் விளைவு இவற்றைப்பற்றி மக்கள் உணரும்படி செய்வதே சிலப்பதிகாரத்தின் கருத்து. இந்த மூன்று கருத்துக்களைத் தவிர இன்னும் பல அறங் களையும் சிலப்பதிகாரத்தில் காணலாம். சிலப்பதிகாரத்தை ஊன்றிப் படிப்போர், அது கருத்தோவியமாக - கருத்துக் கருவூலமாக விளங்குவதைக் காண்பார்கள். இலக்கியம் கொள்கைகளைப் பரப்புவதாக இருக்கக் கூடாது என்போர்க்கு வேறு எதையும் காட்டவேண்டாம். சிலப்பதிகாரம் ஒன்றைக் காட்டினாலே போதும்; உண்மையை உணர்வார்கள். இனி, சிலப்பதிகாரத்தின் நோக்கம் என்று கூறப்படும் மூன்று கருத்துக்களையும் முறையே காண்போம். அரசியல் சிலப்பதிகாரத்தின் ஆரம்பமே அரசியல்தான். நல்லதோர் ஆட்சியில்லாத நாட்டிலே எந்த நன்மையும் வளர முடியாது. சமுதாயக் கட்டுப்பாடு, மக்கள் முன்னேற்றம், மக்கள் வாழ்வு, கலை வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, நாட்டிலே அமைதி - இவைகள் எல்லாம் உண்மையான மக்களாட்சி நிலவும் நாட்டிலே தான் நிலைத்திருக்கும், இந்த உண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் நன்றாக உணர்ந்தவர். ஆதலால் தான் எடுத்த எடுப்பிலேயே - மங்கல வாழ்த்திலேயே - அரசியலை அமைத்துக் காட்டுகின்றார். மங்கல வாழ்த்துப் பாடல்கள் நான்கு. நான்கு பாடல் களிலும் அரசியல் கொள்கை இடம்பெற்று விளங்குகின்றது. முதல் வெண்பா திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று தொடங்குகின்றது; இரண்டாவது, சூரியனைப் போற்றுகின்றது; மூன்றாவது, மழையைப் போற்று கின்றது; நான்காவது, புகார் நகரத்தைப் போற்றுகின்றது. சந்திரன், சூரியன், மழை, புகார் இவற்றை ஏன் போற்று கிறோம் என்று ஆசிரியர் புகல்கின்றார்; இதைத்தான் நாம் கருத்தூன்றிக் கவனிக்கவேண்டும். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர் தார்ச்சென்னி குளிர்வெண்குடைபோன்று, இவ் அம்கண் உலகு அளித்தலான். சந்திரனை வணங்குவோம்! சந்திரனை வணங்குவோம்! ஏன் என்றால், மகரந்தங்கள் சிந்துகின்ற மலர்மாலையை அணிந்த சோழனுடைய குடை இவ்வுலகுக்குக் குளிர்ச்சியைத் தருகின்றது. அதுபோல சந்திரனும் இவ்வுலகுக்குக் குளிர்ச்சியைத் தந்து காப்பாற்றுகின்றான். சோழ மன்னன் குடைநிழலைப்போல் சந்திரனும் உலகுக்கு நன்மை செய்கின்றது. ஆதலால்தான் சந்திரனுக்கு வணக்கம்; இன்றேல் வணக்கம் இல்லை உயர்ந்ததைத்தான் உவமானமாக எடுத்துக்காட்டுதல் மரபு. இங்கே சந்திரனுக்குச் சோழன் ஆட்சி உவமை. ஆகவே, இச்செய்யுள் சோழ மன்னனுடைய ஆட்சிப் பெருமையைச் சொல்லுவதாகவே அமைந்திருப்பதைக் காணலாம். நாட்டு மக்களைத் துன்புறாமல் காப்பதே நல்ல - சிறந்த - ஆட்சியாகும் என்னும் கருத்தும் இதில் பொதிந்து கிடப்பதைக் காணலாம். ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு மேருவலம் திரிதலால் நாம் சூரியனை வணங்குவோம்! நாம் சூரியனை வணங்கு வோம்! ஏன் என்றால், சோழ மன்னனுடைய ஆட்சி அவனுடைய நாட்டிலே எங்கும் தடையின்றி நடந்துகொண்டிருக்கின்றது. அதுபோல, சூரியன் தங்குதடையில்லாமல், ஒளிபொருந்திய, சிகரத்தையுடைய மேருமலையை வலமாக வருகின்றது. இதுவும் சோழ மன்னனுடைய ஆட்சிப்பெருமையையே விளக்கிற்று, சோழ மன்னனுடைய ஆளுகையிலே நல்லோர் துன்புறல் இல்லை; தீயோர் இன்புறல் இல்லை. நல்லோர் காப்பும், தீயோர் ஒழிப்பும் சிறந்த செங்கோல் ஆட்சியாகும். சோழன் ஆட்சி நிலவும் பகுதியில் இவ் வறமுறை ஆட்சி முட்டின்றி நடந்து வருகின்றது. இக்கருத்தைக் காட்டுவதே இப்பாட்டு. மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாமநீர்வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலால் நாம் சிறந்த மழையைப் போற்றுவோம்! நாம் சிறந்த மழையைப் போற்றுவோம்! ஏன் என்றால், அச்சந் தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகை அச் சோழ மன்னன் கைம்மாறு கருதாமல் பாதுகாக் கின்றான். அதுபோல மழையும் பயன்கருதாமல் வானத்திலிருந்து பெய்து உலகுக்கு நன்மை செய்கின்றது. இச்செய்யுளும் சோழ மன்னனுடைய ஆட்சிப்பெருமை யையே எடுத்துரைத்தது. சோழ மன்னன் எந்தப் பலனையும் எதிர்பார்க்க வில்லை. நாட்டு மக்களைக் காப்பாற்றுகின்றான். அவனைப் போலவே, நாடாள்வோர், தந்நலம் அற்றவர்களாய் மக்கள் நன்மைக்காகப் பணி செய்யவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது. மழையும் சோழனைப்போலப் பலனை எதிர்பார்க்காமல் பெய்வதால்தான் அதற்கு வணக்கம் என்று கூறுகின்றது. பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்! வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான். காவிரிப்பூம்பட்டினத்தை வணங்குவோம்! காவிரிப் பூம்பட்டினத்தை வணங்குவோம்! ஏன் என்றால், கடல்சூழ்ந்த இவ்வுலகிலே, சோழன் குலத்தோடு ஒத்துப் புகழ்பெற்று வாழ்வதனால். சோழன் குலத்தினர் நாட்டுமக்களுக்கு நன்மை செய்வதையே நோக்கமாகக்கொண்டவர்கள். பழம்பெரும் தமிழ்க்குடியினர். பூம்புகாரும் நாட்டு மக்களின் நல்வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டது; பழமையானது. ஆதலால் பூம்புகாரைப் போற்று கிறோம் என்றார். மங்கல வாழ்த்துப் பாடல்கள் நான்கிலும் இவ்வாறு சிறந்த அரசியல் கருத்துக்கள் அமைந்துகிடப்பதைக் காணுகின்றோம். சிலப்பதிகாரம் எடுத்துரைக்கும் சிறந்த அரசியல் நீதிகள் பல. அவற்றைக் காண்போம். வரிச்சுமைக் கொடுமை குடிமக்கள் தலையிலே தாங்கமுடியாத வரியைச் சுமத்தும் அரசு வாழமுடியாது. அவ்வரசு குடிமக்களால் கவிழ்க்கப்படும். அந்த அரசின் தலைவன் எவ்வளவு ஆற்றல் படைத்தவனா யிருப்பினும், அவனால் ஆட்சியிலே நிலைத்து நிற்க முடியாது. மக்கள் வரிகொடுக்க மறுப்பார்கள்; வரிகொடுக்க மறுப்போரின் துணைகொண்டு ஒரு சிற்றரசன் அந்தப் பேரரசைக் கைப்பற்றிக் கொள்வான். இவ்வாறு, ஆளுவோர்க்கு அறிவுரை கூறப்படு கின்றது. கறைகெழு குடிகள் கைதலை வைப்ப, அறைபோகு குடிகளொடு, ஒருதிறம் பற்றி, வலம்படு தானை மன்னர் இல்வழி புலம்பட இறுத்த விருந்தின் மன்னர் (அந்திமாலை 9-12) வரி மிகுதியால் துன்புறும் குடிகள், என்செய்வோம் என்று ஆற்றாமல், கையைத் தலையிலே வைத்துச் சோர்ந்திருப்பர்; வரிகொடுக்க மறுப்போர் மறைவாக நின்று ஆட்சிக்கு முடிவு தேடுவார்கள். இவர்களைத் துணையாகக்கொண்டு, அரசன் இல்லாத சமயத்தில், புதிய மன்னர் அந்நாட்டிலே புகுந்து விடுவர். குடிமக்களின் தலையிலே அவர்கள் தாங்கக்கூடிய வரிகளைத் தான் சுமத்தவேண்டும். தாங்கமுடியாத வரிகளைச் சுமத்தும் அரசு கொடுங்கோல் அரசு; அவ்வரசு, அந்நாட்டு மக்களாலேயே அழிக்கப் படும். இவ்வுண்மையை மேலே காட்டிய அடிகளால் காணலாம். ஆட்சியிலே உள்ள அலுவலர்களும், ஆட்சித் தலைவனும் நேர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். மக்கள் வாழ்வையும், நாட்டின் நன்மையையும் நோக்கமாகக் கொண்டு ஆளவேண்டும். இத்தகைய ஆட்சியுள்ள நாடுதான் சிறப்புறும். இத்தகைய நாட்டு மக்கள்தான் குளிர்ந்த நறும்பொழிலிலே வாழும் மக்களைப் போல் இன்புறுவார்கள். உத்தியோக வர்க்கத்தினர் - அலுவலர்கள் - அனைவரும் தந்நலமே குறியாகக் கொண்டவர்கள். குடிமக்கள் நலனைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காதவர்கள்; நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிய கருத்தேயில்லாதவர்கள்; அதிகார வெறியால் மக்களை மதிக்காதவர்கள்; அவர்களை ஆட்டி அலைக்கழிப்பவர்கள். இவர்கள் சொல்லுகின்ற படி ஆட்சித் தலைவனும் ஆடுகின்றான். இத்தகைய ஆட்சியுள்ள நாடு பாலைவனம் ஆகும். இந்நாட்டு மக்கள் எத்தகைய இன்பத்தையும் காணமாட்டார்கள். இவ்வுண்மையை இளங்கோ அடிகள் விளக்கமாகக் கூறுகின்றார். கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி வேத்துஇயல் இழந்த வியன்நிலம் போல ... ... ... ...பாலை என்பது (காடுகாண். 60-61) இவ்வடிகள் மேலேகாட்டிய உண்மையை உணர்த்துகின்றன. தந்நலத்தையே பெரிதாகக் கருதும் அலுவலர்களைக்கொண்ட அரசு செங்கோல் அரசாக வாழமுடியாது. ஆதலால் நல்ல ஒழுக்கமும் பொதுப்பணியிலே ஆவலும் உள்ளவர்களையே அரசியல் அலுவல் துறைகளிலே அமர்த்தவேண்டும். அப்பொழுது தான் உண்மையான நல்லாட்சி ஒழுங்காக நடைபெறும். இக் கருத்தை nமலேகட்டியஅடிகள்அறிவித்தன. கொடுங்கோலர் நாட்டுக்குத் தீங்கு செய்யும் ஆட்சியாளரை மக்கள் விரும்ப மாட்டார்கள். அவர்கள் எப்பொழுது தொலைவார்கள்; நன்மை புரியும் நல்லோர் ஆட்சிபீடத்தில் எப்பொழுது அமர்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். வாய்ப்பு நேரும்போது, அதிகாரவெறிபிடித்த ஆட்சியாளரை மக்கள் விரட்டியடிப்பார்கள். மக்கள் கருத்தறிந்தது ஆளுவோரையே ஆட்சிமனையில் அமர்த்து வார்கள். இதை இன்றும் நாம் கண்கூடாகக் கணுகின்றோம்.இந்த உண்மையை இளங்கோ அடிகள் எடுத்துக்காட்டுகின்றார். கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல படும்கதிர் அமையம் பார்த்து இருந்தோர்க்கு (புறஞ்சேரி. 15-16) கொடுங்கோல் வேந்தன்கீழ் வாழும் குடிமக்கள், அவன் எப்போழுது தொலைவான், நல்லோன் எப்பொழுது ஆட்சிக்கு வருவான் என்று எதிர்பார்த்திருப்பார்கள். அதுபோல; கதிரவன் மேற்றிசையிலே அடங்குவதையும், சந்திரன் புறப்படுவதையும் எதிர்பார்த்திருந்தனர். இவ்வடிகள் கொடுங்கோல் ஆட்சியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்ற உண்மையை உணர்த்தின. அரசியல் தியாகிகள் இக்காலத்திலே ஆட்சிபீடம் ஏறுவதைப் பலர் பெருமை யாக நினைக்கின்றனர்; இன்பம் என்று எண்ணுகின்றனர்; ஆட்சியில் செல்வாக்குப் பெறுவதன் மூலம் செல்வமும் சிறப்பும் பெறலாம் என்று சிந்திக்கின்றனர். ஆதலால், அரசியல் ஆதிக்கம் பெறப் பலர் படாதபாடு படுகின்றனர். அரசியல்வாதிகளிலே பலர் இதன் பொருட்டுச் செய்யும் சூழ்நிலைகளைக் கணக்கிட முடியாது. பதவி பெறுவதற்காக மனிதத்தன்மையற்ற முறை களையெல்லாம் கையாளுகின்றனர். உண்மையில் அரசியலை ஏற்று நடத்துவது என்பது பெரிய பொறுப்புள்ள வேலை; மிகவும் தொல்லையான காரியம். பசி நோக்காமல், கண்ணுறங்காமல், அல்லும் பகலும் உழைக்க வேண்டிய செயல். அரசியல் பொறுப்பை ஏற்பதனால் தொல்லை களும், மனக்கவலையும், ஓய்வின்மையும்தான் பெருகும். அமைதியுடன் அமர்ந்திருக்க முடியாது. இதுதான் உண்மை, மக்கள் நலத்திலே - நாட்டின் முன்னேற்றத்திலே - கவலை கொண்ட ஒரு அரசியல்வாதி இவ்வுண்மையை உணராமல் இருக்கமாட்டான். உணர்ந்து, உண்மையான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளுவானாயின் அவனே சிறந்த தியாகி; தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். நாட்டிலே எந்தத் தீய நிகழ்ச்சிகள் தோன்றினாலும், மக்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தாலும், அரசியலைத்தான் குறைகூறுவார்கள்; ஆளுவோரைத்தான் இகழ்ந்து பேசுவார்கள்; ஆட்சியின்மீதுதான் பழிசுமத்துவார்கள். இது இன்று நேற்றைய பழக்கம் அல்ல; ஆயிரங்காலத்துப் பழக்கம். ஆதலால், ஆளு வோர் எக்குறையும் உண்டாகாமல் ஆளவேண்டும். நாட்டிலே பஞ்சம், பிணி முதலியன பரவாமல் பாதுகாக்கவேண்டும். இத்தகைய ஆட்சிதான் மக்களால் மதிக்கப்படும் ஆட்சியாக விளங்கும். இந்த அரசியல் உண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் எடுத்துரைக் கின்றார். மழைவளம் காப்பின் வான்பேர் அச்சம்; பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்; குடிபுர வுண்டும், கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவுஇல் (காட்சி. 100-104) மழைவளங் குறைந்தால் அஞ்சவேண்டும்; ஏனென்றால், மழை பெய்யாவிட்டால் மக்கள் அரசனையே குறைசொல்லு வார்கள். மக்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தாலும் மிகப் பெரும் பயம்தான்; ஏன் என்றால், துன்புறும் மக்கள், ஆட்சியின்மீதே பழிசுமத்து வார்கள். குடிகளைப் பாதுகாத்தும், கொடுங்கோன்மைக்கு அஞ்சியும் மக்களைப் பாதுகாக்கும் நல்ல அரசர் குடியிலே பிறத்தலால் இன்பம் இல்லை; துன்பந்தான் உண்டு; போற்றத்தக்க பெருமை ஒன்றும் இல்லை. நாடாள்வோர் தந்நலம் இல்லாமல் நல்ல முறையிலே ஆள வேண்டும்; குடிமக்களால் குறைகூறப்படாத வகையிலே ஆள வேண்டும். தியாகபுத்தியுள்ளவர்களே ஆட்சிபீடத்தில் அமர வேண்டும். அதிகாரவெறியுடனோ, புகழ்விருப்புடனோ, இலாப நோக்குடனோ ஆட்சிபீடத்தைக் கைப்பற்றுவோரால் நாட்டுக்கு நன்மையில்லை; தீமைதான் ஏற்படும் இவ்வுண்மையை மேலே காட்டிய அடிகளின்வாயிலாக அறியலாம். கொடுங்கோன்மை பகைவர்களால் நாட்டுக்கு ஆபத்து உண்டாகாமல் பாது காக்கவேண்டும்; குடிமக்கள் கூறும் குறைகளைக் கேட்டறிந்து அவைகளைப் போக்கவேண்டும். இதுவே செங்கோல் அரசு; நல்ல ஆட்சியாகும். இவ்வாறு இல்லாமல் குடிகளைத் துன்புறுத்தும் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகும். இந்த நீதியை எடுத்துக்காட்டு கின்றார் இளங்கோ அடிகள். செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகைஅரசு நடுக்காது, பயம்கெழு வைப்பின் குடிஅரசு நடுக்கு றூஉம் கோலேன் ஆகுக (கால்கோள். 16-18) வீரக்கழலையணிந்த, போர்க்கோலத்தையுடைய, பகை மன்னர் களைப் போரிலே நடுங்கும்படி செய்யும் ஆற்றல் இல்லாமல், வளம் நிறைந்த எனது நாட்டின் குடிமக்களை அஞ்சி நடுங்கும்படி செய்யும் கொடுங்கோல் உடையேன் ஆவேன். இவ்வடிகளால் கொடுங்கோன்மை இன்னது என்பதை அறியலாம். கூட்டாட்சி தனிமனிதன் ஆட்சியிலே தவறு நேராமல் இருக்க முடியாது; அதிகாரம் அறிவுக்கண்ணை மறைக்கும் என்பது உண்மை. ஆளுவோன் தவறு செய்யாமல் இருக்கவேண்டுமானால், அவன் அறிஞர்களுடன்கூடி ஆட்சி நடத்தவேண்டும்; அவர்களை ஆலோசனையைக் கேட்டு அரசியல் காரியங்களைச் செய்ய வேண்டும். தனியாட்சியாக இல்லாமல் இத்தகைய கூட்டாட்சி யாக இருந்தால்தான் தவறுகள் உண்டாகாமல் காக்கமுடியும். தனிமனிதன் ஆட்சியைவிட இத்தகைய கூட்டாட்சிதான் சிறந்தது என்பது இளங்கோ அடிகளின் கொள்கை. சிலப்பதிகார காலத்திலே மன்னர்களுக்கு இரண்டு சபைகள் இருந்தன. அவைகள் சிறுகுழுவும் பெரும்சபையும் ஆகும். ஐம்பெரும் குழு, எண்பேர் ஆயம் என்பன அக்குழுக்களின் பெயர். இக் குழுவினரின் துணைகொண்டே - இவர்களின் ஆலோசனை களைக்கேட்டே-அக்கால மன்னர்கள் ஆட்சி நடத்திவந்தனர். சங்க காலத்திலே இத்தகைய குழுக்கள் இருந்தன என்று தெரியவில்லை. சங்க கால மன்னர்கள் எல்லாம், மக்கள் மனம்போல ஆட்சிபுரிந்த தனியதிகாரம் படைத்தவர் களாகத்தான் இருந்திருக்கின்றனர். அரைசொடு பட்ட ஐம்பெரும் குழு (அரங்கேற்று. 126) ஐம்பெரும் குழுவும் எண்பே ராயமும் (இந்திர விழவு. 157-கால்கோள். 38) இவ்வடிகள் ஐம்பெரும் குழுவையும், எண்பேராயத்தையும் குறிக்கின்றன. ஐம்பெரும் குழு: அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் (ஒற்றர்) என்பவர்கள். எண்பேர் ஆயம்: கரணத்து இயல்வர் (கணக்கர்), கரும காரர் (நிர்வாகத் தலைவர்), கனகச் சுற்றம் (நிதிக் காப்பாளர்கள்), கடைகாப்பாளர் (காவல்காரர்கள்), நகரமாந்தர், படைத் தலைவர், யானைவீரர், குதிரைவீரர் என்பவர்கள். இந்த இருவகைக்குழுவும் அரசனுக்கு ஆலோசனை கூறும் சபைகளாக இருந்தன. இதனால் சிலப்பதிகார காலத்தில் மன்னர்களின் தனியதிகார ஆட்சி கட்டுப்படுத்தப்பட்டது; மக்கள் ஆட்சிக்கு அடிகோலப்பட்டது என்பதைக் காணலாம். சிலப்பதிகாரம் இவ்வாறு சிறந்த அரசியல் அறங்களை எடுத்துக்காட்டு கின்றது. அரசியலில் தவறு செய்வோர் தண்டனை அடைவார்கள் என்பதைக் கதை நிகழ்ச்சியிலும் எடுத்துக்காட்டுகின்றது. வழக்குரை காதையைப் படிப்போர் இந்த உண்மையைக் காணலாம். இதைப்பற்றி விரிவாகப் பின்னர் காணலாம். இங்கே சுருக்கமாகக் காண்போம். கண்ணகி வழக்குரைப்பதற்காகப் பாண்டியன் முன்போய் நின்றாள். அவன் நீர்வார் கண்ணை என்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடிபோய் என்றான். அவள் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பதுஎன் பெயரே என்றாள். உடனே, பாண்டியன் பெண்அணங்கே! கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண்! என்றான் அதற்குக் கண்ணகி நல்திறம் படராக் கொற்கை வேந்தே! என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே என்றாள். உடனே மன்னன் தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி! யாம்உடைச் சிலம்பு முத்துஉடை அரியே என்று கூறினான். உடனே கோவலனிடமிருந்து கவர்ந்த சிலம்பைக் கொண்டுவரச் செய்தான். அதைக் கண்ணகிமுன் வைத்தான். அவள் அதை எடுத்து உடைத்தாள். அதிலிருந்த மாணிக்கப் பரல் மன்னவன் வாயிலேபோய் அடித்தது. அவ்வளவு தான்! அரசன் தன் பிழையை உணர்ந்தான். அவன் குடை தாழ்ந்தது; அவன் செங்கோல் நழுவிற்று. பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என்று புலம்பிக்கொண்டே அரியாசனத்தில் சாய்ந்தான்; மாண்டுபோனான். அதை அறியாத கோப்பெருந்தேவி, கண்ணகியின் அடிகளிலே வீழ்ந்து வருந்தினாள், அப்பொழுது கண்ணகி கூறுகின்றாள்: அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் பல்அவையோர் சொல்லும் பழுதுஅன்றே;-பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் தேவி! கடுவினையேன் செய்வதூஉம் காண் அறமற்ற கொடுமையைச் செய்தார்க்கு அறமே எமனாகத் தோன்றும்; அவரைக் கொல்லும். இவ்வாறு அறிஞர் பலரும் சொல்வதில் தவறில்லை, பொல்லாத குற்றத்தைச் செய்த பாண்டியன் தேவியே! தீவினையாட்டியாகிய நான் இனிச் செய்யப்போவதைப் பார் என்று சினத்துடன் கூறினாள். பாண்டியன் நெடுஞ்செழியன் பொற்கொல்லன் சொல்லை நம்பினான்; கோவலனைக் கள்வன் என்று தீர்மானித்தான். அறமுறைப் படி கோவலன் கள்வனா என்று ஆராயவில்லை; அறிஞர்களிடம் ஆலோசனை கேட்கவும் இல்லை; ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்ற குழுவினரையும் கலந்துகொள்ள வில்லை, காமத்தால் அறிவிழந்து, அவசரப்பட்டுக் கோவலனைக் கொல்லும்படி கட்டளையிட்டான்; அதன் பயனை அவன் உடனே பெற்றான். அரசிழந்தான்; மாண்டான்; பழி பூண்டான். பிறர் சொல்லுவதை நம்பி ஒருவனைக் குற்றவாளியென்று முடிவுசெய்யக் கூடாது. ஒருவனைக் குற்றவாளியா அல்லவா என்று ஆராய்ந்தபின்னரே தண்டனையைப்பற்றி முடிவுசெய்ய வேண்டும். எந்த வழக்கையும் நன்றாக ஆராய்ந்த பின் முடிவு கூறுவதே அறமாகும். ஆராயாமல் ஒருவரைக் குற்றவாளி யென்று முடிவுகட்டுவது; கைதியாக்குவது, சிறையில் வைப்பது, தண்டனை விதிப்பது - இவைகள் எல்லாம் அநீதியாகும்; அறநெறிக்கு மாறானதாகும். இவ்வாறு அறநெறியைச் சிதைப் போர், அதற்கேற்ற தண்டனைக்கு ஆளாகித்தான் தீரவேண்டும். அரசியல் முறையைப்பற்றியும், அரசியலில் தவறு செய்வோர் அடையும் தண்டனையைப்பற்றியும், இவ்வளவு அழகாகச் சிலப்பதிகாரம் சித்திரித்துக் காட்டுகின்றது. பத்தினித் தெய்வம் பத்தினிப் பெண்டிர் மாண்பைக் கூறுவதும் சிலப்பதிகார நோக்கங்களில் ஒன்று. கண்ணகி ஒரு பத்தினித் தெய்வம். ஆரம்பத்தி லிருந்து முடிவுவரையில் கண்ணகியை ஒரு பத்தினித் தெய்வம் என்றே சிலப்பதிகாரம் கூறிச் செல்கின்றது. கற்பின் இலக்கணம் பத்தினி என்றால் யார்? அவள் ஒழுக்கம் யாது? அவள் எப்படி வாழவேண்டும்? என்பவை ஆராய்ச்சிக்குரியது. தனக் கென்ற தனி உரிமை எதுவும் இல்லாமல், கணவன் வாழ்வே தன் வாழ்வு என்று வாழ்கின்றவள்தான் பத்தினிப் பெண் ஆவாள். இதுவே பழங்காலக் கொள்கை. பத்தினிப் பெண்ணாக இருப்பவள் கணவனையே தெய்வ மாகக் கருதுவாள்; அவனையே வணங்குவாள்; அவனுக்கே பணிபுரிவாள்; வேறொரு தெய்வத்தையும் வணங்கமாட்டாள். மணாளன் சொல்லை மறுத்துப் பேசமாட்டாள். கணவன் எதிரில் தான் தன்னை அழகு செய்துகொள்ளுவாள்; கணவன் இல்லாத போது தன்னை அலங்கரித்துக்கொள்ளமாட்டாள். கணவன் மாண்டால், தானும் ஏங்கிப் பெருமூச்சு விடும்போதே மாண்டு போவாள். அப்படி உயிர்போகாவிட்டால் உடன்கட்டை ஏறி உயிர்விடுவாள். இன்றேல் குழந்தைகளைக் காப்பாற்றும்பொருட்டுக் கைம்மை நோன்பு நோற்று உயிர் வாழ்வாள். இதுவே பத்தினிப் பெண்ணின பண்பு என்று தமிழ்நூல்கள் கூறுகின்றன. ஒரு பெண்ணைக் கெட்ட எண்ணத்துடன் மற்றொருவன் பார்த்தாலே அவள் கற்பிழந்தவள்; அதாவது பிறர் உள்ளத்திலே நுழைகின்றவள் கற்பற்றவள். என்ற கருத்தைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். கற்பின், இந்த இலக்கணத்தைக் கேட்கும் இக்கால நாகரிகப் பெண்கள் இதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். பெண்ணுரிமையை விரும்புவோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இத்தகைய கற்பு, பெண்ணை அடிமையாக்கும் தளையைத் தவிர வேறில்லை என்பார்கள், பண்டைக்காலத்தினர் மேலே கூறிய தைத்தான் கற்பொழுக்கம் என்று கொண்டனர். கண்ணகியை இத்தகைய கற்புத் தெய்வம் என்றே சிலப்பதிகாரம் காட்டு கின்றது. போதில்ஆர் திருவினாள் புகழ்உடை வடிவுஎன்றும் தீதுஇலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும் மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெரும்குணத்துக் காதலாள்; பெயர்மன்னும் கண்ணகிஎன்பாள் மன்னோ இது மங்கல வாழ்த்தில் கண்ணகியைப்பற்றிச் சொல்லப் படும் செய்தி; கண்ணகியை முதல்முதல் அறிமுகம் செய்து வைக்கும் பகுதி. இதில் அவளுடைய அழகு, கற்பு, குணம் மூன்றும் கூறப்படுகின்றன. அழகில் இலக்குமியின் உருவமே இவள் உருவம்; அருந்ததியின் கற்பே இவள் கற்பு. பெண்கள் அனைவரும் போற்றும் படியான சிறந்த குணங்களை உடையவள் என்பதே இச்செய்யுளின் பொருள். இதில், கண்ணகி அருந்ததி போன்ற கற்புள்ளவள் என்று சொல்லப்படுகிறது அவளுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே அவளைக் கற்பிலே சிறந்தவள் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. கணவனைப் பிரிந்த கண்ணகி கோவலன் மாதவியை விரும்பிச் சென்றுவிட்டான்.; அவள் இல்லத்திலேயே இன்பம் நுகர்ந்து வாழ்கின்றான். கண்ணகியோ காதலன் பிரிவால் வருந்தியிருக்கின்றாள். கணவனைப் பிரிந்த கண்ணகியின் இந்நிலையை அப்படியே படம்போல் எழுதிக்காட்டுகிறது சிலப்பதிகாரம். அம்செம் சீறடி அணிசிலம்பு ஒழிய மெல்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் கொடும்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரிய செம்கயல் நெடும்கண் அஞ்சனம் மறப்ப பவள வாள்நுதல் திலகம் இழப்ப தவள வாள்நகை கோவலன் இழப்ப மைஇரும் கூந்தல் நெய் அணி மறப்ப கையறு நெஞ்சத்துக் கண்ணகி காதலைப் பிரிந்த கண்ணகி காலிலே சிலம்பணியவில்லை; ஆடம்பரமான மேகலாபரணத்தை இடையிலே பூணவில்லை; கொங்கைகளிலே குங்குமம் பூசவில்லை. தாலியைத் தவிர வேறு அணிகலன்களைத் தரிக்கவில்லை. காதுகள் காதணிகள் இல்லாமல் சும்மா தொங்குகின்றன. முகத்திலே வியர்வையில்லை. கண் களுக்கு மை தீட்டவில்லை. நெற்றியிலே பொட்டு வைக்கவில்லை, முகத்திலே மகிழ்ச்சியில்லை. கூந்தலுக்குத் தைலம் தடவவில்லை. செயலற்ற உள்ளத்துடன் வருந்தியிருந்தாள். இவைகள் அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் உள்ள அடிகள், இது ஒரு சுவைமிகுந்த பகுதி, நயம் நிறைந்த தொடர்கள். நாம் இப்பகுதியின் பொருளைமட்டும் நோக்குவோம். ஒரு பத்தினிப்பெண், தன் கணவனைப் பிரிந்தபோது எப்படி இருப்பாள் என்பதையே இவ்வடிகள் குறித்தன, கண்ணகி பத்தினிப் பெண்ணுக் குரிய பண்புடன் இருந்தாள் என்பதையே இவ்வடிகளின் வாயிலாகக் காட்டினார் இளங்கோவடிகள். தெய்வம் தொழாள் கண்ணகி கணவனையே தெய்வமாக வணங்குகின்றவள். கணவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்கியறியாதவள். இவ்வுண்மையைக் கதைநிகழ்ச்சியிலேயே அமைத்துக் காட்டு கிறார் ஆசிரியர், கனாத்திறம் உரைத்த காதையிலே இதைக் காணலாம். தேவந்தி என்பவள் கண்ணகியின் பார்ப்பனத் தோழி, அவள், கண்ணகி தன் கணவனைப் பிரிந்து வருந்துவதை அறிந்தாள், தான் நாள்தோறும் வணங்கும் சாத்தன் கோட்டத்தை அடைந்தாள். கண்ணகி, பிரிந்த தன் கணவனைப் பெற்று வாழவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அறுகு, சிறு பூளைப்பூ இவைகளை நெல்லுடன் கலந்து தூவி வணங்கினாள். அதன்பின் கண்ணகியிடம் சென்றாள், உன் கணவனோடு சேர்ந்து வாழ்க என்று வாழ்த்தினாள். அப்பொழுது கண்ணகி, தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் உரைத்தாள், யான் காதலுடன் ஒரு புதிய நகரத்தையடைந்தேன். கோவலற்குத் தீங்கு நேர்ந்ததை ஊரார் உரைத்தனர், அரசன்முன் சென்றேன்; அஞ்சாமல் வழக்காடினேன்; அரசனுக்கும், ஊருக்கும் தீங்கு உண்டாயிற்று. பின்னர், நான் என் காதலனுடன் அடைந்த நன்மையைக் கேட்டால் உனக்கு நகைப்புத் தோன்றும் என்று கண்ணகி உரைத்தாள். கண்ணகியே! நீ கோவலனால் வெறுக்கப்பட்டவள் அல்லள்; முன்பிறப்பிலே கணவன் பொருட்டுச் செய்யவேண்டிய ஒரு நோன்பைச் செய்யாமல் விட்டாய், அதனால் உனக்கு இத்துன்பம் நேர்ந்தது, காவிரி கடலொடு கலக்கும் இடத்திலே சோமகுண்டம், சூரியகுண்டம் என்று இரண்டு தடாகங்கள் இருக்கின்றன. அவற்றில் மூழ்கிக் காமன் கோயிலைப் பணிந்தவர்கள் இவ்வுலகிலே கணவனைப் பிரியாமல் வாழ்வர். சுவர்க்கம் புகுந்தும் கணவனுடன் இணைந்து வாழ்வர், நாம் ஒருநாள் அவற்றிலே போய் மூழ்குவோம் என்றாள் தேவந்தி. உடனே கண்ணகி, கற்புடைய மங்கைக்கு இச்செய்கை பெருமை தருவது அன்று என்று கூறிவிட்டாள். இதைப்பீடு அன்று எனக் கண்ணகி சுருக்கமான சொற்றொடரால் கூறியதாக எழுதுகிறார் இளங்கோ அடிகள். கண்ணகி, கணவனையன்றி வேறு தெய்வத்தை வணங்காத கற்புள்ளவள் என்பதை இந்நிகழ்ச்சி தெரிவிக்கின்றது. இதனை அடுத்துவரும் மற்றொரு நிகழ்ச்சியின் வாயிலா கவும் கண்ணகியின் கற்புடைமை விளக்கப்பட்டுள்ளது. எதிர் பேசாதவள் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்தவுடன் நேரே தன் இல்லத்தை அடைந்தான். கண்ணகியின் படுக்கை அறையுள் புகுந்தான்; அவளுடைய வாடிய மேனியைக் கண்டான்; வருந்தினான். பொய்யொழுக்கம் உள்ள பரத்தையுடன் கூடி விளையாடினேன்; என் முன்னோர் தேடிவைத்த பெருநிதிக் குன்றைக் கரைத்தேன்; இச்செய்கையால் நான் நாணம் அடை கின்றேன் என்றான். பரத்தைக்குக் கொடுக்க மேலும் பொருள் இல்லாமையால் தான் கோவலன் இவ்வாறு கூறுவதாக எண்ணிக்கொண்டாள் கண்ணகி, கணவனையே தெய்வமாகப் போற்றுவது; அவன் செய்வனவற்றை யெல்லாம் பொறுத்துக்கொள்ளுவது; அவன் மனம் கோணாமல் நடந்துகொள்ளுவது; இவைகள் பத்தினியின் பண்பல்லவா? ஆதலால் அவள் கோவலன் கூறியதைக் கேட்டு வருந்தவில்லை; ஆத்திரப்படவும் இல்லை; முகத்திலே வெறுப்பு யணச்சியும் காட்டவில்லை. புன்சிரிப்புக் காட்டினாள். சிலம்பு உள; கொண்மி என்றாள். என்னுடைய இரண்டு சிலம்புகள் உண்டு அவைகள் விலை உயர்ந்தவை; அவற்றை எடுத்துக் கொண்டு செல்லுங்க என்றாள். இவ்வாறு கதை அமைந்திருக்கின்றது. இந்நிகழ்ச்சியும் கண்ணகியின் சிறந்த கற்பை விளக்குவதாகும்; பத்தினிப் பெண்ணின் பண்பைக் காட்டுவதாகும். பத்தினித் தெய்வம் இதன்பின் கவுந்தியடிகளின் வாயினால் கண்ணகியின் தெய்வக் கற்பைப் புகழ்ந்து பேசுகிறது காவியம். கவுந்தியடிகள், இடைச்சியர் தலைவியாகிய மாதிரியிடம் கண்ணகியை ஒப்படைக்கின்றாள்.; அப்பொழுது கண்ணகியின் தெய்வக் கற்பை மாதரியிடம் வாய் விட்டுப் புகழ்ந்து பேசுகின்றாள். என்னொடு போந்த இளம்கொடி நங்கை, தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலன்; கடும்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு நடுங்கு துயர் எய்தி, நாப்புலர வாடி தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி; இன்துணை மகளிர்க்கு இன்றி அமையாக் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம். கண்ணகி இதற்குமுன் மண்ணிலே நடந்தறியாதவள். ஆயினும் அவள் வழி நடந்து வரும்போது தன் துயரைப்பற்றிச் சிறிதும் எண்ணவேயில்லை. கதிரின் வெம்மையால் தன் காதலன் அடையும் துன்பத்தைக் கண்டு நடுங்கினாள். நாவுலர்ந்து வாடினாள், வாழ்க்கைத் துணையான மகளிர்க்கு வேண்டிய கற்பையே கடமையாகக் கொண்டவள். இவளே தெய்வம். இத்தெய்வத்தைத் தவிர வேறு சிறந்த தெய்வத்தை யாம் அறியோம். இவ்வாறு கவுந்தி அடிகள் கூறினாள். இது அடைக்கலக் காதையில் வரும் பகுதி. கண்ணகியைப் பத்தினித் தெய்வம் என்று கூறுவதை இதனால் காணலாம். இதனை அடுத்து. பத்தினிப் பெண்டிர் வாழும் நாடே சிறந்தது; பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில்தான், எல்லா நலங்களும் நிரம்பியிருக்கும் என்று கூறுகிறாள் கவுந்தி. வானம் பொய்யாது; வளம்பிழைப்பு அறியாது; நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு. பத்தினிப் பெண்டிர் இருக்கும் நாட்டிலே மழைவளம் குறையாது; வேறு எந்த வளமும் குறையாது; அரசர்களின் வெற்றியும் அழியாது; அதாவது அரசு நிலைத்து நடைபெறும். இவ்வாறு பத்தினிப் பெண்டிரின் பொதுச் சிறப்பைக் கூறினாள். அடைக்கலக் காதையில் உள்ள இப் பகுதிகள் பத்தினிப் பெண்டிரின் தெய்வத்தன்மையை விளக்கின. கண்ணகியின் கற்பு மாண்பு இவ்வாறு பலவிடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவைகளின்மூலம், கற்பின் தன்மை, கற்புடைய மகளிரின் கடமை இவைகள் குறிக்கப்பட்டன. இதன்பின், உரை சால் பத்தினி உயர்ந்தோர் ஏத்தலும் என்று பதிகத்திலே கூறிய உண்மை, கட்டுரைக் காதையின் இறுதியிலே காட்டப்படுகின்றது. உயர்ந்தோர் ஏத்தல் கணவனை இழந்த பதினான்காம் நாள்; பிற்பகல்; ஒரு வேங்கை மரத்தின் நிழல்; அங்கே கோவலன் தெய்வ விமானத்தில் வந்தான். கண்ணகி அவனைக் கண்டாள், தேவர்கள் வணங்க அவனுடன் சேர்ந்து விண்ணகம் புகுந்தாள். இதனை, வாடா மாமலர் மாரிபெய்து, ஆங்கு அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்த, கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான ஊர்தி ஏறினள் மாதோ கான் அமர் புரிகுழல் கண்ணகிதான் என் (கட்டுரை. 196-200) என்று அழகாகக் கூறுகிறார் ஆசிரியர். இதன்பின் ஆசிரியர் கூற்றாக அமைந்த வெண்பாவிலும் கண்ணகியின் தெய்வத் தன்மை பாராட்டப்படுகின்றது. தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும்தகைமை திண்ணிதுஆல் - தெய்வம் ஆய் மண்ணக மாந்தர்க்கு அணிஆய கண்ணகி விண்ணக மாந்தர்க்கு விருந்து தெய்வத்தை வணங்காமல் தன் கணவனையே தெய்வமாகப் போற்றி வணங்குகின்றவளே பத்தினிப் பெண், அவளைத் தேவர்கள் எல்லோரும் வணங்குவார்கள். இத்தன்மையுள்ளவள் அவள். இவ்வுண்மை உறுதியானது. இப் பண்புள்ள கண்ணகி தெய்வம் ஆனாள், இவ்வுலக மாந்தர்க்கு அணிகலமாயிருந்தவள் தேவர்களுக் கெல்லாம் விருந்தாகச் சென்றாள். கண்ணகி தெய்வமான செய்தி, இவ்வாறு புகார்க் காண்டத்தில் தொடங்கி மதுரைக் காண்டத்தில் முடித்துக் காட்டப்படுகின்றது. கண்ணகி சேர நாட்டில் மட்டும் அல்ல, மற்றும் பல நாடு களிலும் தெய்வமாகப் போற்றப்பட்டாள். இச் செய்தி வஞ்சிக் காண்டத்தின் இறுதியிலே கூறப்படுகின்றது. சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் சிலைக்காக இமயக் கல்லை எடுத்து வந்தான். சிலை செய்தான்; கோயில் கட்டினான்; கண்ணகியின் உருவத்தை நாட்டினான். தேவந்தியைப் பூசை செய்பவளாக அமர்த்தினான் என்று கண்ணகி பத்தினித் தெய்வமாகக் கோயில்கொண்ட செய்தி கூறப்படுகின்றது. செங்குட்டுவன் சிறையிலிருந்து விடுதலை பெற்ற வடநாட்டு வேந்தர்கள், ஏனைய மன்னர்கள், குடநாட்டுக் கொங்கு வேந்தர், மாளவநாட்டு மன்னர்கள், இலங்கைக் கயவாகு மன்னன் ஆகியோர் கண்ணகித் தெய்வத்தை வணங்கினர். எங்கள் நாட்டிலும் எழுந்தருள்க என்று வேண்டினர். தந்தேன்வரம் என்று எழுந்தது ஒருகுரல் (வரம்தரு. 164) அவர்களும் தங்கள் நாடுகளிலே கண்ணகிக்குக் கோயில் எடுத்து விழாச் செய்தனர். கோவலன் கொலையுண்ட நாள்முதல் பாண்டிநாட்டிலே மழையில்லை; பஞ்சம் பரவிற்று. கொற்கையை ஆண்ட வெற்றி வேல் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைக் கண்ணகிக்குப் பலி யிட்டான்; பத்தினித் தெய்வத்தை வழிபட்டான்; நாடு செழித்தது. உறையூரிலே இருந்த சோழன் பெருங்கிள்ளி கண்ணகிக்குக் கோயில் எடுத்தான்; விழாச் செய்தான். இச்செய்திகளும் கண்ணகி ஒரு பத்தினித் தெய்வமாக இந்நாட்டிலே போற்றப்பட்டாள் என்பதைக் குறிக்கின்றன. பத்தினிப் பெண்டிரைத் தேவர்களும் வணங்குவார்கள்; அவர்கள் தெய்வம் ஆவார்கள் என்பதைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறிச் செல்கின்றது. இதனால், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என்ற உண்மையைக் காணலாம். பத்தினிப் பெண்டிர் பண்பைப்பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் இக்காலத்திற்கு ஏற்றன அல்ல; சிலப்பதிகாரக் கூற்றின் படி பார்த்தால் ஒரு அடிமைப்பெண்தான் பத்தினி என்ற பெயர் வாங்க முடியும். பெண்ணுரிமையை விரும்பும் எப்பெண்ணும் பத்தினியாக இருக்க முடியாது என்று சொல்வோர் உண்டு. சிலப்பதிகார காலத்திலே கற்புடைமை என்பது எந்த முறையிலே இருந்தது? பத்தினிப் பெண்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? சிலப்பதிகார காலத்து மக்கள் எத்தகைய பெண்ணைப் பத்தினித் தெய்வமாக எண்ணினார்கள்? இவை களைக் காணச் சிலப்பதிகாரம் நமக்குத் துணை செய்கின்றது; பண்டைத் தமிழர்கள் எத்தகைய பண்புள்ள பெண்களைப் பத்தினிப் பெண்கள் என்று நம்பினார்கள் என்ற உண்மையையும் நமக்குக் கூறுகின்றது. இது பற்றிச் சிலப்பதிகார காலத்து மக்களின் மனப்பான்மை, அதற்கு முன்னிருந்த மக்களின் நம்பிக்கை இவைகளையும் அறிவிக்கின்றது. இவ்வாறு உண்மையை உரைக்கும் நூல்களே உயர்ந்த இலக்கியங்களாக விளங்குகின்றன; இவைகள் வரலாற்று நூல் போல என்றும் நிலைத்து நிற்கின்றன. ஊழ்வினை ஊழ்வினை என்பது முன்பிறப்பிலே செய்த நல்வினை, தீவினை, ஒவ்வொருவரும் சென்ற பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளின் பலனை இப்பிறப்பிலே அனுபவித்துத் தான் தீரவேண்டும். இது மிகப் பழங்காலக் கொள்கை. சமண மதம் இக்கொள்கையைச் சிறப்பாக வலியுறுத்துகின்றது. கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் ஊழ்வினை தான்; கோவலனைக் கொல்லும்படி பாண்டியன் நெடுஞ் செழியன் கூறியதற்குக் காரணம் ஊழ்வினைதான். இவ்வாறு சிலப்பதிகாரக் கதையே ஊழ்வினையை அடிப்படையாகக் கொண்டதுதான் என்று எழுதுகிறார் இளங்கோ அடிகள். சமண மதம் தமிழகத்திலே பரவி நிலைப்பதற்கு முன்பும், தமிழர்கள் ஊழ்வினையிலே நம்பிக்கையுள்ளவர்கள் தாம். இதைச் சங்க இலக்கியங்களிலே காணலாம். கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆர்உயிர் முறைவழிப் படூஉம் என்பது, திறவோர் காட்சியில் தெளிந்தனம் (புறநா, 192) கல்லை அலைத்து ஒலித்துக்கொண்டு ஓடுகின்ற வளம் பொருந்திய பேராற்று நீரின் வழியே மிதந்து செல்லும் தெப்பம் போல, அரிய உயிர் ஊழ்வினையின் வழியே செல்லும். இதனை அறிஞர்களின் நூலின் வாயிலாகத் தெளிந்தோம். என்பது புறநானூற்றுப் பாட்டு. கணியன் பூங்குன்றன் என்னும் புலவரால் பாடப்பட்ட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் பாட்டின் பகுதி. இதனால் பண்டைத் தமிழ் மக்களும் ஊழ்வினையை நம்பினர் என்பதைக் காணலாம். திருவள்ளுவரும் ஊழைப்பற்றி உரைக்கின்றார். ஆனால் முயற்சியால் அதனை முறியடிக்கலாம் என்று கூறுகின்றார். ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித் தாழாது உஞற்று பவர் என்று தெளிவாகக் கூறுகின்றார். எந்தக் காரணத்தாலும் ஊழ்வினையை மீறமுடியாது; அது உருக்கொண்டு வந்து தன் பயனை ஊட்டியே தீரும் என்பது சமணர் கொள்கை. இக்கொள்கையை சிலப்பதிகாரம் வலியுறுத்து கின்றது. இக் கொள்கையை மக்கள் மனத்தில் ஊன்றச் செய்வதற்கே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது என்பதை அதன் பதிகத்திலே காணலாம். சிலப்பதிகாரத்திலே பல இடங்களில் ஊழ்வினை வலியுறுத்தப் படுகின்றது. ஊழ்வினை காரணமாக நடந்தவை என்று பல நிகழ்ச்சி களும் குறிக்கப்படுகின்றன. கானல்வரியிலே ஊழ்வினையைப் பற்றிக் கூறத் தொடங்கிய ஆசிரியர், இறுதிவரையிலும் அதனை விடாமல் இழுத்துச் செல்கின்றார். கோவலன் மாதவியின் நடத்தையிலே ஐயமுற்றான்; அவளை விட்டுப் பிரிந்தான். இதற்குக் காரணம் ஊழ்வினை தான்; ஊழ்வினை தான் உருக்கொண்டு வந்து, கோவலனை மாதவியை விட்டுப் பிரித்தது. இதுவே இளங்கோ அடிகள் கூற்று, கானல்வரியான் பாடத்-தான் ஒன்றின்மேல் மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் என யாழ்இசைமேல் வைத்து, தன்ஊழ்வினைவந்து உருத்தது ஆகலின், உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனனாய், பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது ஏவலாளர் உடன்சூழ்தரக் கோவலன்தான் போனபின் என்பது கோவலன் பிரிவைப்பற்றிக் கூறியது. இதில் ஊழ் வினைதான், கோவலனை மாதவியை விட்டுப் பிரித்தது என்று கூறியிருப்பதைக் காணலாம். கோவலன் கண்ணகியை அழைத்துக்கொண்டு, மதுரைக்குப் புறப்பட்டான் என்று கனாத்திறம் உரைத்த காதையின் இறுதி யிலே காணப்படுகின்றது. வினைகடை கூட்ட வியம்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சீயா முன் விடியற்காலத்திலே கதிரவன் புறப்படுவதற்கு முன்பே புறப் பட்டான்; ஊழ்வினைவந்து சேர, அவன் ஏவலை மேற் கொண்டான் என்பதே அது. இதனை அடுத்த வெண்பாவின், பின் இரண்டடிகளும் இவ்வாறே முடிகின்றன. ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப முன்செய்த தீவினை வந்து இவன் உள்ளத்தைச் செலுத்து தலால் என்பது நாடுகாண் காதை. கோவலன் தானாக ஒன்றும் செய்யவில்லை; ஊழ்வினையின்படியே நடக்கின்றான் என்பதை உணர்த்திற்று இது. பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோல் வேந்தன்; கொடுமை செய்ய எண்ணாதவன்; அறநெறி தவறாதவன், அவன் பொற்கொல்லன் சொல்லை நம்பினான். கோவலனைக் கொல்லப் பணித்தான். இதற்குக் காரணம் ஊழ்வினைதான் என்று கூறுகிறார் இளங்கோ அடிகள், கொலைக்களக் காதையிலே ஊழ்வினைதான் ஆட்சிபுரி கின்றது. வினைவிளை காலம் ஆதலின், யாவதும் சினை அலர் வேம்பன் தேரான் ஆகி ஊர்காப்பாளரைக் கூவி ஈங்கு என் தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கு என அவனது ஊழ்வினையின் பயன் விளையும் காலம் வந்து விட்டது; ஆதலால் வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன் ஒன்றையும் ஆராய்ந்து பார்க்கவில்லை, ஊர்க்காவலரை அழைத்தான், என் மனைவியின் சிலம்பு அக்கள்வன் கையில் இருக்குமானால், அவனைக்கொன்று அச்சிலம்பைக் கொண்டு வாருங்கள் என்று கூறினான். இவ்வாறு பாண்டியன் கூறிய தற்குக் காலம் வினைவிளை காலம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். அரசன் இவ்வாறு உத்தரவு போட்டவுடன், பொற் கொல்லன், அக்காவலர்களுடன், கோவலன் இருக்கும் இடத்தை அடைகின்றான். இதைக் குறிக்கும் இளங்கோ அடிகள், இங்கும் ஊழ்வினையை இணைத்துக்காட்டுகின்றார். கருந்தொழில் கொல்லனும் ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்தும் என தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் தன்னைக் குறுகினன் பொற்கொல்லனும் அரசன் ஏவலால், நாம் நினைத்ததை நிறைவேற்றுவோம் என்று எண்ணிக்கொண்டான். தீவினை சூழ்ந்த வலையிலே அகப்பட்டிருந்த கோவலனை அடைந்தான். இவ்வாறு, கோவலன் வினைவசமாகியிருந்தான்; வினை யின் பயனை அடையப்போகும் நிலையில் இருந்தான் என்று கூறினார் ஆசிரியர். கோவலன் ஒரு காவலனால் வெட்டுண்டு வீழ்ந்தான். இளங்கோவடிகள் இதைப் பண்டைவினை என்றே கூறுகின்றார்; ஊழ்வினைதான் உருக்கொண்டுவந்து அவனை வெட்டுண்டு விழும்படி செய்தது என்று உரைக்கின்றார். கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது; காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து ; என் அறிவற்றவன்; கொலைக்கு அஞ்சாதவன்; குடிவெறியன் ஒருவன் தன் கையிலிருந்த வாளால் வெட்டினான், அது குறுக்கே துணித்தது. பாண்டியன் செங்கோல் கொடுங்கோல் ஆகும்படி, முன்னைத் தீவினையின் முதிர்ச்சியால் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான். இவ்வாறு கோவலனுடைய இறுதிப் பயணத்தைக் கூறினார். மேலேகாட்டிய மூன்று நிகழ்ச்சிகளையும் கொலைக்களக் காதையில் வினையின் விளைவாக வைத்து விளக்கினார் ஆசிரியர். கோவலன் கொலையுண்டதைக் கேட்டாள் கண்ணகி; வாய்விட்டு அரற்றுகின்றாள்; அழுது புலம்பிக்கொண்டு ஊரைச் சுற்றி வருகின்றாள். அவள் புலம்பும்போதும் ஊழ்வினையின் கொடுமையைக் கூறியே புலம்புவதாக எழுதுகிறார் ஆசிரியர். மன்உறுதுயர் மறவினை அறியாதேற்கு என்உறு வினைகாண்! ஆ! இது! என உரையாரோ! மன்னனால் செய்யப்பட்டது இக் கொலைத்தொழில். இன்ன காரணத்தால் இக்கொலை நிகழ்ந்தது என்பது அறியேன். ஆயினும் நான் முன்செய்த தீவினைதான் இவ்வாறு எனக்குத் துன்பத்தைத் தந்தது என்று இந்நாட்டிலே சொல்லமாட்டார் களோ! பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறுஇழைப்ப ஈர்வது ஓர்வினைகாண்! ஆ! இது என உரையாரோ! உலகில் உள்ளார் பழிதூற்றுமாறு, பாண்டியன் தவறு செய்யும் படி கோவலனை வெட்டுண்டு மடியச்செய்தது ஒரு தீவினை தான் என்று நாட்டிலே சொல்லமாட்டார்களோ! மன்பதை பழிதூற்ற, மன்னவன் தவறு இழைப்ப உண்பது ஓர்வினைகாண்! ஆ! இது! என உரையாரோ! உலகில் உள்ளோர் பழிக்கும்படி மன்னவனைத் தவறிழைக்கச் செய்து, அவன் உயிரையும் உண்டது ஓர் தீவினைதான் என்று நாட்டினர் உரைக்கமாட்டார்களோ! இவ்வாறு கண்ணகி புலம்புகின்றாள், பாண்டியன், கோவலனைக் கொல்லும்படி செய்தது தீவினையின் பயன்தான் என்பதை இப்பகுதிகள் வலியுறுத்தின. வழக்காடப் பாண்டியன் முன்னே போய் நின்றாள் கண்ணகி; கண்டான் அவளை மன்னவன். அவள்தோற்றம் கண்டு திடுக்கிட்டான், நீ யார்? என்று கேட்டான். வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்ப சூழ்கழல் மன்னா! நின்நகர்ப் புகுந்து, இங்கு என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என்பெயரே ஊழ்வினையினால், அது செலுத்தியதனால், உனது நகரை அடைந்தான் கோவலன்; என் கால்சிலம்பை விற்பதற்காக வந்தான்; உன்னால் கொலைக்களத்திலே மாண்டான்; அவன் மனைவி நான்; என் பெயர் கண்ணகி என்றாள் கண்ணகி, இவ்வாறு கூறி ஊழ் வினையின் செயலை விளக்கினாள், இது வழக்குரை காதையிலே வருவது, கட்டுரைக் காதையிலே மதுராபதித் தெய்வம் கண்ணகி யிடம் வந்து பேசுவதாகக் கதை அமைந்திருக்கின்றது, ஊழ்வினையாலேயே பாண்டியன் தவறு செய்தான்; ஊழ் வினையாலேயே கோவலன் கொலையுண்டான் என்று அத் தெய்வம் கண்ணகியிடம் கூறுகின்றது. தோழிநீ ஈதுஒன்று கேட்டி எம் கோமாற்கு ஊழ்வினை வந்தக் கடை, மாதராய் ஈதுஒன்று கேள்! உன் கணவற்குத் தீதுஉற வந்த வினை இவைகள் மதுராபதித் தெய்வத்தின் கூற்றாக வருவன. உம்மை வினைவந்து உருத்த காலைச் செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது முன்வினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகரச்செய்யும் போது அத்தீவினையாளர்க்கு எந்தத் தவமும் பயன்படாது; அவ்வூழின் செயலைத் தடுக்க முடியாது என்று பின்னும் உரைக் கின்றது மதுராபதித் தெய்வம். வஞ்சிக் காண்டத்தில் ஆரம்பத்திலேயே ஊழ்வினை தொடங்கி விடுகின்றது, வேங்கைமர நிழலிலே கண்ணகி வந்து நின்றாள். அவளைக் கண்ட குறவர்கள் வேங்கை நறுநிழலின், வள்ளிபோல்வீர்! மனம் நடுங்க, முலையிழந்து வந்து நின்றீர் யாவிரோ? என்று கேட்டனர். மணமதுரை யோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்த காலை கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன யான் முன்னைவினையால் மதுரையும் அரசனும் அழியும்படி கணவனை யிழந்தேன். தீவினையை உடையேன் என்று விடை யிறுத்தாள் கண்ணகி, தன் துன்பத்துக்குக் காரணம் ஊழ்வினை தான் என்றே கண்ணகி கூறினாள். இங்கு ஊழ்வினை உறுதி செய்யப்பட்டது இதன்பின் நீர்ப்படைக் காதையிலும் ஊழ்வினையின் விளைவு உறுதிசெய்யப்படுகின்றது, செங்குட்டுவன், கனகவிசயர் களைப் போரிலே புறமிடச் செய்தான். அவர்கள் தலையிலே இமயக் கல்லை ஏற்றி நீர்ப்படை செய்தான்; அதன் பின் தென்கரையை அடைந்து பாடிவீட்டிலே அமர்ந்திருந்தான். அப்பொழுது மாடலன் என்னும் மறையோன் அங்கே வந்தான். வாழ்க எம்கோ மாதவி மடந்தை கானல் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது; முதுநீர் ஞாலம் அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க! எமது அரசனே வாழ்க! மாதவி என்னும் கணிகைப்பெண் கடற்கரைச் சோலையிலே பாடிய பாட்டு, கனக - விசயர்களின் முடித்தலையை நெரித்தது; கடல்சூழ்ந்த உலகம் முழுவதையும் அடிமையாக்கி ஆளும் அரசனே வாழ்க! என்று இவ்வாறு வாழ்த்துரைத்தான் அவன். செங்குட்டுவனுக்கு இதன் பொருள் விளங்கவில்லை. அவன் மாடலனைப் பார்த்து, நீ கூறியதன் கருத்து என்ன? என்றான். கானல்அம் தண்துறைக் கடல் விளையாட்டினுள், மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு ஊடல் காலத்து ஊழ்வினை ஊருத்துஎழ, கூடாது பிரிந்து, குலக்கொடி தன்னுடன் மாட மூதூர் மதுரைபுக்கு, ஆங்கு இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்த கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி, குடவர் கோவே! நின்னோடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள் குடவர் கோவே! காவிரிப்பூம்பட்டினத்திலே நிகழ்ந்த கடல் விளையாட்டிற்கு மாதவி கோவலனுடன் சென்றிருந்தாள், அவள் கருத்துவேற்றுமை தோன்றும்படி பாடிய கானல்வரிப் பாட்டுடன் ஊழ்வினையும் உருக்கொண்டு வந்தது, அதனால் கோவலன் மாதவியை வெறுத்துப் பிரிந்தான், தன் மனைவி யாகிய கண்ணகியை உடன் அழைத்துக்கொண்டு மதுரை மாநகரம் புகுந்தான், புகுந்தவன், அங்கே பாண்டியன் உயிர்விட்டு வானுலகு எய்தும்படி கொலைக் களப்பட்டான். அக்கோவலன் மனைவியாகிய கண்ணகி உனது நாட்டை அடைந்தாள், அப் பத்தினி இப்போது வடதிசை மன்னர் களின் முடித் தலையிலே ஏறி விளங்குகின்றாள். இவ்வாறு மாடலன் தான் உரைத்தை விளக்கிக் கூறினான், மாடலன் கூறிய இவ்வுரையாலும் ஊழ்வினையின் செய்கை யால் தான் கோவலன் மாதவியைப் பிரிந்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இறுதியான வாழ்த்துக் காதையிலும் ஊழ்வினை வலியுறுத்தப் பட்டிருப்பதைக் காணலாம், தொல்வினையால் துயர் உழந்தான் கண்ணின் நீர் கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ! பழவினையால் கணவனை யிழந்து துன்புற்றாள் கண்ணகி, அவளுடைய கண்ணீர் கொன்றதனால் உயிர் இழந்தான் பாண்டியன்; அவன் வாழ்க என்று ஆயமகளிர் வாழ்த்து கின்றனர். இது கண்ணகி துயருக்குக் காரணம் ஊழ்வினைதான் என்று உறுதி செய்கின்றது. கோவலன் மாதவியை விட்டுப் பிரியும்படி செய்தது ஊழ்வினை; அவனை மனைவியுடன் மதுரைக்குப் புறப்படும்படி செய்தது ஊழ்வினை; பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலனைக் கொல்லும்படி கூறியது ஊழ்வினை; கல்லாக்களிகாமகன் கோவலனை வாளால் வெட்டி வீழ்த்தியது ஊழ்வினை; கண்ணகி தன் கணவனை இழந்தது ஊழ்வினை; இவ்வாறு ஊழ்வினைதான் சிலப்பதிகாரக் கதையை நடத்திச் செல்கின்றது. ஊழ்வினை மாதவியின் வரிப்பாட்டின் வாயிலாக வந்து புகுந்தது; கனக - விசயர்களின் தலையிலே கல்லாக வந்து அழுத்தியது என்று நீர்ப்படைக் காதையில் குறித்திருப்பது எல்லாம் ஊழ்வினையின் செயலே என்பதை உறுதி செய்து ஒப்பம் வைப்பதாக உள்ளது. ஊழ்வினையைத் தடுக்கமுடியாது, அது பயனை ஊட்டியே தீரும் என்ற கருத்து இன்னும் பலவிடங்களில் கூறப்படுகின்றது. நாடுகாண் காதையிலே (170-173) சாரணர்கள் வாயிலாக ஊழ்வினை வலியுறுத்தப்படுகிறது, ஊர் காண் காதையிலே கவுந்தியடிகளின் வாயுரையால் ஊழ்வினையின் உறுதி கூறப்படு கின்றது, இவைகளை அறவுரைகள் என்ற பகுதியிலே காணலாம். ஒவ்வொருவரும் தாம் செய்த தீவினை நல்வினைப் பயன்களை அனுபவித்துத்தான் தீரவேண்டும்; அனுபவிக்காமல் தப்பிப் பிழைக்கமுடியாது, இவ்வுண்மையைச் சிலப்பதிகாரம் அழுத்தமாகக் கூறுகின்றது, அருக சமயத்தோரால் பெரிதும் பாராட்டப்பட்ட இவ்வூழ்வினையை இந்துமத வேதாந்தங்களும் மறுக்கவில்லை. ஊழ்வினையைத்தான் பிராரத்துவ கன்மம் என்பர். இதனை வேதாந்த - சித்தாந்த - தத்துவ நூல்கள் எல்லாம் ஒப்புக் கொள்ளு கின்றன, தாம் செய்த வினையின் பயனைத் தாம் அனுபவித்தாக வேண்டும் என்பதை வேத வழிப்பட்ட மதங்கள் மறுக்கவில்லை, நாம் செய்த வினையின் பயனை நாம் அனுபவிக்காமல் இருக்கமுடியாது; கட்டாயம் அனுபவித்தே தீரவேண்டும் என்ற நம்பிக்கையுள்ள மக்கள் தீவினைகளைச் செய்யமாட்டார்கள், ஒழுக்கந் தவறமாட்டார்கள், அறநெறியையே பின்பற்றி வாழ்வார்களானால் மக்கட் சமுதாயம் அமைதியுடன் வாழும்; அன்புடன் இணைந்து வாழும்; இன்பத்திலே நிலைத்து வாழும். இந்த உயர்த்த நோக்கத்துடன்தான், சமணர், பவுத்தர் முதலியோரும், ஏனைய சமயத்தினரும், ஊழ்வினையை ஒப்புக் கொண்டு வலியுறுத்தி வந்தனர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதைக் கூறுவதும் சிலப்பதிகார நோக்கங்களில் ஒன்று எனப் பதிகத்தில் கூறப் பட்டுள்ளது, அவ்வுண்மையைச் சிலப்பதிகாரம் விளக்கிக் கூறுவதை மேலே காட்டியவைகளைக்கொண்டு அறியலாம். மறுபிறப்பு ஊழ்வினையை ஒப்புக்கொண்டால் மறுபிறப்பையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இப்பிறப்பிலே ஒருவர் அடையும் இன்ப துன்பங்களுக்கு முன்பிறப்பில் செய்த வினைதான் காரணம். முன்பு நல்வினை செய்தோர் இப்பொழுது இன்புறு கின்றனர், முன்பு தீவினை செய்தோர் இப்பொழுது துன்புறு கின்றனர். இப்பிறப்பில் நல்வினை செய்வோர் அடுத்த பிறப்பில் இன்புறுவார்கள்; தீவினை செய்வோர் துன்புறு வார்கள், இது ஊழ்வினைபற்றி உரைக்கும் கொள்கை, இத்தகைய ஊழ்வினை யோடு மறுபிறப்புக்கொள்கையும் ஒன்றுபட்டிருப்பதைக் காணலாம். மீண்டும் பிறப்பு வேண்டாம் என்றால் பற்றில்லாமல் வாழ வேண்டும்; ஒன்றிலும் பற்றில்லாமல் - பயன் கருதாமல் - செயல் களைச் செய்யவேண்டும். உலக இன்பங்களையும் ஆசைகளையும் அடியோடு துறக்கவேண்டும். பற்று இல்லாமல் செய்யும் பணிக்கே நிஷ்காமிய கர்மம் என்று பெயர். நிஷ்காமியவாதிதான் பிறவா நெறியை- முத்தியை - அடையமுடியும். இது வேதாந்த சித்தாந்தங் களின் முடிவு. சமண பவுத்த மதங்களும் இந்த முடிவை ஒப்புக் கொள்ளுகின்றன. பலன் கருதிச் செய்யும் நல்வினை தீவினைகளால் பிறவி உண்டு; மீண்டும் பிறந்துதான் அவ்வினைகளின் பயனை அனுபவிக்க வேண்டும், இக்கொள்கையை ஊழ்வினையை ஒப்புக்கொள்வார் அனைவரும் நம்புகின்றனர்; ஊழ்வினையை ஏற்றுக்கொள்ளும் சமய நூல்கள் எல்லாம் ஒப்புக்கொள்ளு கின்றன. சிலப்பதிகாரத்திலே இத்தகைய மறுபிறப்புக் கொள்கை பலவிடங்களில் எடுத்துக்காட்டப்படுகின்றது; கதை நிகழ்ச்சியிலும் அமைத்துக் காட்டப்படு கின்றது, கணவற்கு ஒருநோன்பு பொய்த்தாய் பழம்பிறப்பில் கணவன் பொருட்டுச் செய்யவேண்டிய ஒரு நோன்பை முன் பிறவியிலே நீ செய்யவில்லை என்று தேவந்தி கண்ணகியைப் பார்த்துச் சொல்லுகின்றான். பவம்தரு பாசம் கவுந்தி கெடுக பிறப்பைத் தரும் பாசம் கவுந்தியை விட்டு ஒழிக என்று சாரணர் கவுந்தியை வாழ்த்துகின்றனர். ஏழ்பிறப்பு அடியேம் ஏழு பிறப்பிலும் யாங்கள் உனக்கு அடிமை என்று குறவர்கள் செங்குட்டுவனை நோக்கிக் கூறுகின்றனர். விண்ணோர் உருவின் எய்தியநல் உயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்; மக்கள் யாக்கை பூண்ட மன்உயிர் மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்; விலங்கின் யாக்கை விலங்கிய இன்உயிர் கலங்கு அயர் நரகரைக் காணினும் காணும் ஆடும் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழி கூடிய கோலத்து ஒருங்குநின்று இயலாது, செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது பொய்இல் காட்சியோர் பொருள் உரை சிறந்தவனே! தெய்வப் பிறப்படைந்த ஒரு நல்ல உயிர் அதை விடத் தாழ்ந்த மக்கள் பிறவிக்குத் திரும்பினாலும் திரும்பும்; மனிதப் பிறவியை எடுத்த ஒரு உயிர் விலங்கின் பிறப்பை அடைந்தாலும் அடையும்; விலங்காகப் பிறந்த அவ்வுயிர் மிகுந்த துக்கத்துக்கு இடமான நரகர் பிறப்பை அடைந்தாலும் அடையும்; ஆடும் கூத்தர் போன்றது. ஒரு வழியிலே ஒரு கோலம்கொண்டு நிற்காது. தான் செய்கின்ற வினைக்குத் தகுந்த பிறப்பை அடையும். இது குற்றமற்ற அறிஞர்களின் உண்மை உரையாகும். இவ்வாறு மாடலன் என்போன், உயிரின் தன்மையைச் செங்குட்டுவனுக்கு எடுத்துரைத்தான், நல்திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும், அற்புஉளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும், அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும், பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் புதுவது அன்றே; தொன்றுஇயல் வாழ்க்கை நல்லறம் புரிந்தோர் பொன்னுலகை அடைவது; ஒன்றிலே பற்றுக்கொண்டோர் அப்பற்றுள்ள இடத்திலே பிறப்பது; அறம் பாவங்களின் பயன் உடனே பலிப்பது; பிறந்தவர் இறப்பது; இறந்தவர் பிறப்பது; இவைகள் எல்லாம் புதியன அல்ல. பழமை யானவை. இதுவும் மாடலன் கூற்று. மறுபிறப்பு உண்டு என்பதை இப்பகுதிகள் வலியுறுத்துகின்றன. பண்டைப் பிறவியர் ஆகுவர் பழம் பிறப்பை உணர்வோர் ஆவார். ஒளித்த பிறப்பினர் ஆகுவர் ஒளித்திருக்கும் பழம் பிறப்பை உணர்ந்தோர் ஆவார். இவை தேவந்தியின் கூற்று; ஆவேசம் கொண்டு உரைத்தவை. ஒளித்த பிறப்புவந்து உற்றது பழம்பிறப்பு உணர்ச்சி- நினைவு - வந்து சேர்ந்தது. இது பழம்பிறப்பை உணர்ந்த சிறுமியரைப்பற்றிச் சொல்லியது. மேலேகாட்டிய பகுதிகள் எல்லாம் மறுபிறப்பு உண்டு என்னும் கொள்கையை எடுத்துக்காட்டின. இக்கொள்கை தமிழகத்திலே நிலவிய நீண்டகாலக் கொள்கை; சமண மதத்திற்கு முன்னும் தமிழர்கள் இக்கொள்கையை நம்பி வந்தனர்; இவ்வுண்மையை மாடலன் வாயாலும் உரைத்திருக்கின்றது சிலப்பதிகாரம். மதுராபதித் தெய்வம் கோவலன் முற்பிறப்பைப்பற்றிக் கூறும் கதை; ஒருகையைக் குரங்கின் கையாகக்கொண்ட தெய்வ குமாரனைப் பற்றிக் கூறும் கதை; இவைகள் மறு பிறப்பை வலியுறுத்தும் கதைகள். கோவலன் தாயும், கண்ணகியின் தாயும், கோவலன் அடைந்த கொடுந்துயர் கேட்டு மாண்டனர். அவர்கள் கண்ணகி யிடம் கொண்ட அன்பால், வஞ்சிமாநகரில் அரட்டன் செட்டியின் மனைவியின் வயிற்றிலே பெண்களாகப் பிறந்தனர். கண்ணகியின்பால் அன்பு கொண்ட இடைச்சியாகிய மாதரி திருமாலிடம் பற்றுக்கொண்டு குரவைக்கூத்து நிகழ்த் தினாள். ஆதலால் அவள் திருவநந்தபுரத்திலே திருமாலுக்குப் பணிசெய்யும் சேடக்குடும்பியின் மகளாகப் பிறந்தாள். இவ்வாறு கோவலன் - கண்ணகியின் தாயரும், மாதரியும் மறுபிறப்பு எடுத்த செய்தி கூறப்படுகின்றது. இக்கதைகள் மறுபிறப்பு உண்டு என்பதை விளக்கின. காவிரிப்பூம்பட்டினம் பட்டினம் என்பதும். புகார் என்பதும் காவிரிப் பூம்பட்டினத் தைக் குறிக்கும். வேறு பெயர்களும் உண்டு. சிலப்பதிகார காலத்திலே இந்நகரம் எப்படியிருந்தது என்பதை இளங்கோவடிகள் தெளிவாகக் கூறியிருக்கிறார். காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பு, அதில் வாழ்ந்த மக்கள், அவர்களுடைய வாழ்வு, ஒழுக்கம், நகரத்தின் மாண்பு இவைகளைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். காவிரிப்பூம்பட்டினத்தை எக்காலத்திலும் பகைவர்கள் கைக்கொண்டதே யில்லை; ஆதலால் அந்நகர மக்கள் வேற்றூர் களில் குடிபுகுந்து அறிய மாட்டார்கள். அவர்கள் பரம்பரையாக அவ்வூரிலேயே வாழும் பழங்குடி மக்கள், பொதியமலை, இமய மலை, ஒப்பற்ற புகழ்படைத்த புகார் நகரம் - இவை மூன்றும், எப்பொழுதும் அழியாமல் நிலைத்திருப்பவை; இவைகளுக்கு இறுதிக்காலம் உண்டு என்று உரைப்போர் ஒருவரும் இல்லை. பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும் நடுக்குஇன்றி நிலைஇய, என்பது அல்லதை, ஒடுக்கம் கூறார் என்று மங்கல வாழ்த்தில் கூறப்படுகின்றது. இத்தகைய அழியாத புகழ்பெற்ற அந்நகரம் இன்று அழிந்துவிட்டது. ஆயினும் அதன் புகழ்மட்டும் மறையவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பு, அங்கு நடந்த வாணிகம், தொழில்கள், அங்கிருந்த மக்கள் வாழ்வு முதலியன இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே விரிவாகக் கூறப்படு கின்றன. அவைகளைக் கீழே காணலாம். காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு பிரிவாக அமைந்திருப்பது. மருவூர்ப்பாக்கத்தைப் புறநகர் என்றும், பட்டினப்பாக்கத்தை அகநகர் என்றும் கூறலாம். மருவூர்ப்பாக்கம் மருவூர்ப்பாக்கத்திலே நிலாமுற்றம் (மொட்டைமாடி) அமைந்த பல வீடுகள் இருந்தன. பலவேறுவகையான அணி கலன் களைக் குவித்திருக்கும் சரக்கறைகள் இருந்தன. மான் கண்களைப் போல் அமைக்கப்பட்ட சாளரங்களையுடைய மாளிகைகள் இருந்தன. நீர்த்துறையின் பக்கங்களிலே யவனர்கள் வாழ்ந்தனர். அவர்களிடம், காண்போர் கண்களைக் கவரும் அளவற்ற செல்வங்கள் இருந்தன. இவர்கள் கிரேக்க நாட்டிலிருந்து வந்த வணிகர்கள். கடற்கரையிலே அந்நிய நாட்டிலிருந்து வந்த வணிகர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் பல நாட்டினர்; பல மொழி பேசுவோர். அவர்கள் தமிழர்களுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். நகர வீதியிலே பலர் பல பண்டங்களை விலைகூறித் திரிவார்கள். தடவிக்கொள்ளத்தக்க நிறமுள்ள வாசனைக் குழம்பு, வாசனைப் பொடி, மணம் கமழும் சந்தனம், நறுமலர், மற்றும் பல வாசனைப் பண்டங்கள் இவைகள் அவர்கள் விலைகூறி விற்கும் பண்டங்கள். பட்டுச்சாலியர் ஒரு புறத்திலே வாழ்கின்றனர்; அவர்கள் பட்டினாலும், எலிமயிராலும், பருத்தி நூலாலும் ஊசியின் உதவி கொண்டு பல நுட்பமான தொழில்களைச் செய்து வாழ்கின்றனர். பட்டு, பவளம், சந்தனம், அகில், முத்து, இரத்தினங்கள், பொன், பொன்னாபரணங்கள் இவைகள் எண்ணிக்கை காண முடியாத அளவுக்கு நிரம்பியிருந்தன. இச் செல்வக் குவியல் களைக் கொண்ட பெரிய வீதிகள் இருந்தன. தானியங்களைத் தனித்தனியே பிரித்துவைத்து விற்பனை செய்கின்ற கடைத்தெரு இருந்தது. இதற்குக் கூலவீதி என்று பெயர். மாமிசங்களை விற்பனை செய்யும் தனி இடம் இருந்தது. அங்கே பிட்டுச் சுட்டு விற்கும் வணிகர்கள் இருந்தனர். இவர் களுக்குக் காழியர் என்று பெயர். அப்பம் சுட்டு விற்போர் இருந்தனர்; இவர்களுக்குக் கூவியர் என்று பெயர், வலைச்சி யர்கள் கள் விற்பனை செய்து வந்தனர். பரதவர் மீன் விற்பனை செய்து வந்தனர். உப்பு விற்பனை செய்வோர் இருந்தனர். பச்சை மாமிசம், வெந்த மாமிசம் இவைகளை விற்போர் இருந்தனர்; இவர்களுக்குப் பாசவர் என்று பெயர். வாசனைப் பொருள் விற்போரும் இருந்தனர். ஆட்டிறைச்சி விற்போரும் இருந்தனர். குறிப்பிட்ட ஒரு தனி இடத்திலே இத்தகைய வியாபாரங்கள் நடைபெற்றன. பலவகைப்பட்ட தொழில்களைச் செய்வோர், தனித்தனி இடங்களிலே வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் தொகுதியாக இருந்தன. இதைத் தொழிலாளர் பகுதி என்று சொல்லலாம். வெண்கலக் கன்னார், செம்பினால் வேலை செய்வோர், மர வேலை செய்யும் தச்சர்கள், இரும்பு வேலை செய்யும் கொல்லர்கள், சித்திரம் தீட்டுவோர், சிற்பம் செதுக்குவோர், பொன்னால் நகைகள் செய்வோர், தையல்காரர்கள், தோலினால் பண்டங்கள் செய்வோர், துணியினாலும், நெட்டியாலும் பல பண்டங்களைச் செய்யும் பல வேலைக்காரர்கள், குழல், யாழ் முதலிய கருவிகளிலே ஏழிசை களையும் இணைத்துத் தங்கள் திறமையைக் காட்டும் பாணர்கள் இவர்கள் எல்லாம் ஒரு புறத்திலே வாழ்ந்தனர். அங்கே ஒழுக்கம் குன்றியவர்களாய்ப் பிறர்க்குக் குற்றேவல் செய்து வாழும் மக்களும் இருந்தனர். மேலே கூறிய பலதிறப்பட மக்கள் மருவூர்ப்பாக்கத்திலே வாழ்ந்து வந்தனர். இவைகள் இந்திரவிழவு ஊர் எடுத்த காதை யிலே 6 முதல் 39 வரையுள்ள அடிகளிலே சொல்லப்படுகின்றன. இதன்பின் பட்டினப்பாக்கத்தின் அமைப்பு கூறப்படுகின்றது. பட்டினப்பாக்கம் பட்டினப்பக்கத்திலே அரச வீதிகள் தனியாக இருந்தன; திருவிழாக் காலத்திலே தேரோடும் தெருக்கள் தனியாக இருந்தன; கடைத் தெருக்களும் இருந்தன. சிறந்த குடியிலே பிறந்த வணிகர்கள் வாழும் வீதி தனியாக இருந்தது. அவ்வீதியிலே உயர்ந்த மாடமாளிகைகள் காணப் பட்டன. மறையோர் வீதி தனியாக இருந்தது. அங்கே வேதம் உணர்ந்த அந்தணர்கள் வாழந்தனர். உழவுத் தொழில் செய்யும் குடிகள், உழவர்கள், மருத்துவ நூல் உணர்ந்த வைத்தியர்கள், சோதிட நூல் உணர்ந்தோர் இவர்கள் தனித்தனியே வாழும் வீதிகள் இருந்தன. இரத்தினங்களை இழைத்துச் சீர்செய்வோர், நுண்ணறி வுடன் சங்குகளை அறுத்து வளையல்கள் செய்வோர் இவர்கள் வாழும் அகலமான தெருக்கள் இருந்தன. நின்றுகொண்டு புகழும் சூதர்கள், உட்கார்ந்துகொண்டு புகழும் மாகதர்கள், வேதநெறிப்படி கூத்தாடும் வைதாளிகர்கள், நாழிகை அறிந்து சொல்வோர், காண்போர் விரும்பும்படி கோலம் புனைந்து கூத்தாடும் சாந்திக் கூத்தர்கள், பலர் காணக் களத்திலே கூத்தாடும் கூத்தியர், உள் அரங்கங்களிலே கூத்தாடும் கூத்தியர், மலர் விற்பனை செய்யும் மாதர்கள், ஏவின வேலை களைச் செய்யும் பெண்கள். தோற் கருவி இசைப்போர், பலவகையான இசைக் கருவிகளையும் பயின்றவர்கள் இவர்கள் தனித்தனி தெருக்களிலே வாழ்ந்து வந்தனர். குதிரை வீரர்கள், யானைப் பாகர்கள், தேர்ப் பாகர்கள், காலாட்படைத் தலைவர்கள் கோயிலைச் சூழ்ந்த பெரிய வீதிகளிலே வாழ்ந்தனர். பட்டினப்பாக்கத்திலே மேலே கூறப்பட்ட வீதிகளும் அமைந்திருந்தன. இதனை இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே 40 முதல் 58 வரையில் உள்ள அடிகளிலே காணலாம். பட்டினப்பாக்கத்துக்கும், மருவூர்ப்பாக்கத்துக்கும் இடை யிலே ஒரு வெட்ட வெளியுண்டு. அங்கே பகலில் வாணிகம் செய்வோர் கூடும் இடம் இருந்தது; இதற்கு நாள் அங்காடி என்று பெயர், இரவிலே வாணிகம் செய்வோர் கூடும் இடமும் இருந்தது; அல் அங்காடி என்று பெயர். நாளங்காடியிலே ஒரு காவல்பூதம் உண்டு. மறக்குடியிலே பிறந்த மகளிர் அங்குள்ள பூதத்துக்குப் பூசை போடுவார்கள். சித்திரை மாதத்திலே, சித்திரை நட்சத்திரம் சேர்ந்த பௌர்ணமி யிலே, அவர்கள் நாளங்காடிப் பூதத்துக்குப் பலியிட்டு வணங்கு வார்கள்; பொங்கல், எள்ளால் செய்த கசிவு என்னும் பணியாரம், மாமிசம் கலந்த சோறு, மலர், புகை, கள் இவைகளை வைத்துப் படைப்பார்கள். கையை முடக்கிக் கொண்டு ஆடுகின்ற ஒருவகைக் கூத்தான துணங்கைக் கூத்து, கைகோத்துக்கொண்டு ஆடும் குரவைக் கூத்து முதலிய கூத்துக்கள் ஆடுவார்கள். தெய்வ ஆவேசம் கொண்டும் ஆடுவார்கள். அவர்கள் சோழ மன்னனது பெரிய நாடு முழுவதும் பசி பிணி, பகையின்றி வாழ்க! மழையும் பெருகி வாழ்க! என்று வாழ்த்து வார்கள். மறக்குடியிலே பிறந்த வீரர்கள், வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க. வெற்றியையுடைய வேந்தன் மேலும் மேலும் வெற்றி பெறுக! பகைவரை வெல்க! என்று வாழ்த்துவார்கள், மன்னனுடைய வெற்றிக்காகத் தங்கள் தலைகளைத் தாங்களே அறுத்துப் பலி பீடத்திலே வைப்பார்கள். இச் செய்திகளால் காவிரிப்பூம்பட்டினத்து மக்களின் சிறந்த ஒழுக்கத்தைக் காணலாம் தங்கள் நாடு செழிக்க வேண்டும்; அரசு செழிக்க வேண்டும் என்று அவர்கள் தெய்வத்தை வேண்டிக் கொள்ளுவார்கள்; தெய்வங்களுக்குப் பலியிடு வார்கள்; சிறந்த ராஜபக்தியும், தேசபக்தியும் வாய்ந்தவர்கள் அவர்கள் என்ற உண்மைகளையும் உணரலாம். ஐவகை மன்றம் காவிரிப்பூம்பட்டினத்திலே ஐந்துவகை மன்றங்கள் இருக்கின்றன. அவற்றின் இயல்பை அறிந்தால் சிலப்பதிகார காலத்தில் அந்நகரில் எத்தகைய சிறந்த ஆட்சி நடைபெற்றது என்பதை அறியலாம். வெள்ளிடை மன்றம் : வெட்ட வெளியிலே ஒரு குறிப்பிட்ட இடத்திலே ஒரு பொது இடம் உண்டு. அங்கு ஒரு மண்டபமும் உண்டு. அம்மண்டபம் எப்பொழுதும் திறந்தே இருக்கும். காவல் காரர்களும் இருக்க மாட்டார்கள். பண்டங் களின் அளவு, நிறை, எண் இவைகளைக் குறித்து, எப்பண்டங் களானாலும் அவைகளை மூட்டைகளாகக் கட்டி அங்கே வைத்துவிட்டுப் போகலாம். அவைகளை யாரும் களவாட மாட்டார்கள். அந்நகருக்குப் புதிதாக வந்தவர்கள் யாரேனும் திருடினால், அவர்கள் அகப்பட்டுக்கொள்ளுவார்கள். அங்கேயுள்ள பூதம், சும்மாவிடாது. களவாடியவர் கழுத்து நோகும்படி அவர் களவாடிய மூட்டையை அவர் தலையிலே வைக்கும். ஊரைச் சுற்றி அடிக்கும். ஆதலால் அவ்வூரில் உள்ளோர் களவைப்பற்றி எண்ணவே மாட்டார்கள். இது வெள்ளிடை மன்றத்தின் இயல்பு: இதனால் அவ்வூரில் திருட்டுப் பயம் இல்லை. யாரும் திருடமாட்டார்கள் யாரேனும் திருடினாலும் காவலர்களிடம் அகப்பட்டுக்கொள்ளுவார்கள். களவாடியவர்கள் ஊரார் சிரிக்கும்படியான அவமானத்திற்கு ஆளாவார்கள். இவ்வுண்மையை வெள்ளிடை மன்றம் உணர்த்து கின்றது. இலஞ்சி மன்றம் : இலஞ்சி என்பது ஒரு குளம். கூனர்கள், குள்ளர்கள், ஊமையர்கள், செவிடர்கள், பெருநோய் பிடித்தவர்கள் அக்குளத்திலே நீராடுவார்களானால் தங்கள் நோய் நீங்குவர்; நல்ல தோற்றத்தை அடைவர். அப்பொய்கையை வலம் வந்து அதிலே மூழ்கிப் போவோர் இத்தகைய நலம் பெறுவர். இதுவே இலஞ்சி மன்றத்தின் சிறப்பு. காவிரிப்பூம்பட்டினத்திலே சிலப்பதிகார காலத்திலே சிறந்த பொது வைத்தியசாலை இருந்தது. சிறந்த மருத்துவர்கள் இருந்தனர். கூன், குறள், ஊமை, செவிடு, பெருநோய் முதலிய தீராத நோய் களுக்கும் வைத்தியம் செய்யப்பட்டது. அந்நோய்கள் மருந்து களாலும், இயற்கை வைத்திய முறைகளாலும் நீக்கப் பட்டன. தண்ணீரின்மூலம் நோய்களை ஒழித்தல் இயற்கை வைத்திய முறையாகும். நெடுங்கல் மன்றம் : பிறர் இட்ட மருந்தினால் பித்தேறிய வர்கள், நஞ்சுண்டு துன்புற்றோர், பாம்பினால் கடியுண்டோர், பேய் பிடிக்கப்பட்டோர் இவர்கள் நோயை நெடுங்கல் மன்றம் குணப் படுத்தும். இந்நோயாளிகள் அங்கே நாட்டப்பட்டிருக்கும் நீண்ட கல்லை ஒருமுறை வலம் வந்தால் போதும், அதிலிருந்து ஓர் ஒளி வீசும். அதனால் அவர்கள் நோய் நீங்கும். நீண்ட கல் நிற்பதனால் இதற்கு நெடுங்கல் மன்றம் என்று பெயர். விஷ நோய்களை நீக்கும் மருத்துவசாலையும் இருந்தது; மக்கள் எந்த நோயால் பீடிக்கப்பட்டாலும் அதற்கான சிகிச்சை பெற்று வாழ்ந்தனர். இதையே நெடுங்கல் மன்றம் குறித்தது. பூதசதுக்க மன்றம் : பூதசதுக்க மன்றம் என்பது ஒன்று. நான்கு தெருக்கள் கூடும் சந்தியிலே ஒரு பூதம் உண்டு. போலித் தவக்கோலம் பூண்டோர், பொய்யொழுக்கம் உள்ள பெண்கள், அரசுக்குக் கேடு சூழும் அமைச்சர், பிறர் மனைவியை விரும்பு வோர், பொய்ச் சாட்சி கூறுவோர் இவர்களையெல்லாம் என் கையில் உள்ள கயிற்றால் கட்டுவேன்; நிலத்தில் அறைந்து அவர்கள் உயிரைக் குடிப்பேன் என்று அப்பூதம் ஓங்கிய குரலில் முழங்கிக் கொண்டே யிருக்கும். அம்முழக்கம் சுற்றிலும் நான்கு காததூரம் வரையிலும் ஒலிக்கும். இதுதான் பூத சதுக்கம் என்பது. காவிரிப்பூம்பட்டினத்திலே திறமையுள்ள துப்பறியும் அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் மறைவாகக் குற்றம் புரிவோர் களையெல்லாம் கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்களுக்குக் கடுந்தண்டனை விதிக்கப்படும். போலித் துறவிகள், பொய் யொழுக்க மகளிர், தேசத்துரோக அமைச்சர்கள், பிறர்மனை விரும்பும் ஆண்கள், பொய்க்கரி புகல்வோர், புறங் கூறுவோர் இவர்களுக் கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்கப்பட்டது. இவர்கள் பெரிய குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இத்தகைய குற்றங்கள் நிகழாமல் முன்னறிவிப்பும் செய்துவந்தனர். இவ் வுண்மையை விளக்குவதே பூத சதுக்க மன்றம். பாவை மன்றம்: பலரும் காணும் இடத்திலே ஒரு பதுமை நின்றுகொண்டிருக்கும். அரச நீதி தவறினாலும்,நீதிமன்றத்தோர் அறநூல் முறைக்கு மாறாக நீதி உரைத்தாலும் அப்பதுமை கண்ணீர் விட்டு அழும். நாவினால் கூறாமல் இவ்வாறு அடையாளத்தால் அநீதியை அறிவிக்கும். இதுவே பாவை மன்றம். அரசன் அநீதி செய்தாலும், நீதிமன்றத்தோர் அறந்த வறினாலும், பொதுமக்கள் பொறுக்கமாட்டார்கள்; தங்கள் துன்பத்தை எல்லோரும் அறியும்படி வெளிப்படையாகச் சொல்லிக் கண்டிப்பார்கள். ஆதலால் ஆட்சியும், நீதிமன்றமும் தவறு செய்யாமல் அறநெறியிலே செல்லும். இவ்வுண்மையை விளக்குவதே பாவை மன்றமாகும். ஐவகை மன்றம் பற்றிக் கூறப்படும் இச்செய்திகள் காவிரிப் பூம்பட்டினத்தின் சிறந்த ஆட்சியையே காட்டும். அந்நகரத்தில் திருட்டில்லை; மக்கள் நோயின்றி வாழ்ந்தனர்; மக்கள் நல்லொழுக்க முடன் வாழ்ந்தனர்; அரசும், நீதிமன்றமும் அற நெறியிலே நின்றன. இவ்வுண்மைகளையே ஐவகை மன்றங்கள் அறிவித்தன. ஐவகை மன்றம்பற்றிய இச்செய்திகள் இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே 111 முதல் 138 வரையில் உள்ள அடிகளில் கூறப்படுகின்றன. மேலே கூறியவைகளைக்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பை அறியலாம். அந்நகரில் வாழ்ந்த மக்கள், அவர்கள் ஆற்றிய தொழில்கள், அந்நகரில் நடந்த வாணிகம், பட்டினத்தின் சிறந்த தோற்றம், மக்கள் ஒழுக்கம் அரசாட்சியின் சிறப்பு இவைகளை யெல்லாம் காணலாம். சிலப்பதிகார காலத்திலே இவ்வளவு சிறப்புடன் இருந்த நகரம் இன்று உருவில் இல்லை; பெயரில்தான் சிறந்து நிற்கின்றது. காவிரிப்பூம்பட்டினத்தைப்பற்றிப் பத்துப் பாட்டில் உள்ள பட்டினப்பாலையிலும் காணலாம். பட்டினப்பாலை காட்டும் காவிரிப்பூம்பட்டினமும், சிலப்பதிகாரம் காட்டும் காவிரிப் பூம்பட்டினமும் ஏறக்குறைய ஒன்றாகவே காணப்படுகின்றன. ஒற்றுமை மிகுதி; வேற்றுமை குறைவு; அவ்வளவுதான். மதுரை மாநகரம் சிலப்பதிகார காலத்திலே மதுரை ஒரு சிறந்த நகரமாக விளங்கிற்று. அந்நகரில் செல்வம் குவிந்திருந்தது; பல தொழில்கள் நடைபெற்றன; பல வாணிகங்கள் நடைபெற்றன. மக்கள் மகிழ்ச்சி யுடன் வாழ்ந்தனர். செல்வக்குடியினர் பலர்இருந்தனர். மக்கள் தெய்வபக்தியுள்ளவர்களாக வாழ்ந்தனர். இக்காட்சியைப் புறஞ்சேரி இறுத்த காதையிலும், ஊர்காண் காதையிலும் காணலாம். மதுரை நகரைச் சுற்றிலும் கோட்டைமதில் சூழ்ந்திருந்தது; ஆழமான அகழியும் இருந்தது. கோட்டைமதிலின்மேல் வெற்றிக் கொடிகள் பல பறந்துகொண்டிருந்தன. நகரைச் சுற்றிலும் பறவைகள், பறந்தும் படிந்தும் காட்சி தரும் நீர்வளம் நிறைந்த கழனிகள் பல இருந்தன; சோலைகள் இருந்தன; நீர்வளம் நிரம்பிய பயிர்செய்த வயல்கள் இருந்தன; நீர் நிறைந்த தோட்டங்கள் இருந்தன; மூங்கில் குத்துக்கள் பந்தல்களைப் போல் வளர்ந்து செழித்திருந்தன. அங்கே அறநெறியைத் தவிர வேறுயாரும் அங்கில்லை. இந்த இடத்திற்குப் புறஞ்சேரி என்று பெயர். இச்செய்தி புறஞ்சேரி இறுத்த காதையின் இறுதியிலே காணப்படுகின்றது. (புறஞ்சேரி. 189-196) மதுரை நகரிலே பலதிறப்பட்ட தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன. காலைப்பொழுதிலே அரசன்கோயிலிலும், கடவுளர் கோவில்களிலும் வாத்தியங்கள் பல முழங்கும். நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர்கள் வேதங்களை ஒதுவார்கள் அம் முழக்கம் பலர் காதிலும் விழும்; இந்த வேதமுழக்கம் ஒருபுறம். வீரர்கள் அரசன் வெற்றியைப் பாராட்டி விழாச் செய்வார்கள்; அந்த ஒசை ஒருபக்கம். போரிலே பிடித்துவந்த யானைகள் ஒருபுறத்தில் பிளிறிக் கொண்டிருக்கும்; வெற்றி கொண்ட யானைகளும் பிளிறும்; வரிசையாகக் கட்டப் பட்டிருக்கின்ற குதிரைகள் அசைவதனால் எழும்பும் ஒசை ஒருபுறம். பாணர்கள், வைகறைப் பொழுதிலே கிணை என்னும் வாத்தியத்தை வாசித்துப் பாடிக் கொண்டிருப்பார்கள். இம்முழக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கடல் ஒலிபோல் அடங்கும். காலைப்பொழுதிலே மதுரைமாநகர் இவ்வாறு காணப்படும். (புறஞ்சேரி. 137-150) மதுரைக் கோட்டை வாசலிலே காவலர்கள் இருந்தனர். அவர்கள் வாள் யுத்தத்திலே வல்லவர்கள்; யவன தேசத்து வீரர்கள். (ஊர்காண். 66-67) அங்காடி வீதி தனியாக இருந்தது. அங்கே வண்டிகள், வண்டிச் சக்கரங்கள், வண்டியின் மேல்பாகத்திற்கு வேண்டிய கருவிகள் முதலியன விற்பனை செய்யப்படும். வீரர்களுக்கான கவசம், அங்குசம், இடுப்பில் அணியும் பட்டிகை (பெல்ட்), தலையில் அணியும் குழியம் (தொப்பி), வெண்சாமரம், பலவகையான கேடயங்கள், குத்துக் கோல்கள் இவைகள் எல்லாம் விற்பனை செய்யப்படும். செம்பு, முறி, வேறு புதிய உலோகங்கள் இவைகளால் செய்யப்பட்ட சங்கிலிகள் விற்கப்படும். வெட்டவும் அறுக்கவும் பயன்படும் கருவிகள், யானைத் தந்தம் முதலியவைகளைக் கடைவதற்கான கருவிகள் இவைகளும் விற்பனை செய்யப்படும். பூவால் புனைந்த பலவகைப்பட்ட மாலைகள் விற்பனை செய்யப்படும். அந்த அங்காடியிலே இந்தப் பண்டம், இன்னதற்குப் பயன்படும் என்று அறியமுடியாத பல பண்டங்கள் குவிந்திருக்கும். அரசரும் காணவிரும்பும் செல்வம் நிறைந்த அங்காடி வீதி இவ்வாறு காட்சியளிக்கும். இது நாள் அங்காடியாகும். (ஊர்காண். 168-179) இரத்தினங்கள் விற்பனை செய்யும் கடைவீதி தனியாக இருந்தது. அங்கே நவரத்தினங்களும் கிடைக்கும். எந்தவித உயர்ந்த இரத்தினங்களையும் பெறலாம். (ஊர் காண் 180-200) பொன் வியாபாரம் செய்யும் கடைத்தெரு-காசுக்கடைகள்-தனியாக இருந்தன. அங்கே காசுக்கடைகள் மட்டுந்தான் இருந்தன. காசுக்கடை; பொன்கடை. (ஊர்காண். 201-204) துணிகள் - அறுவைகள் - விற்பனை செய்யும் கடைத் தெரு தனியாக இருந்தது. அங்கே நூலாடை - மயிராடை - பட்டாடை ஆகியவைகள் விற்பனை செய்யப்பட்டன. (ஊர்காண் 205-207) உணவுப் பொருள் விற்பனை செய்யப்படும் கடைவீதி தனியாக இருந்தது. அதற்குக் கூலவீதி என்று பெயர். நிறுத்தும் அளந்தும் கொடுக்கும தரகர்கள் அக் கடைவீதியிலே திரிந்து கொண்டிருப்பார்கள். இக் கடைவீதியில் உள்ள கடைகள் இரவு பகல் எப்பொழுதும் திறந்திருக்கும். எச்சமயத்திலும் உணவுப் பண்டங்களை வாங்கலாம். (ஊர்காண். 208-211) அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை வருணத்தோரும் தனித்தனி வீதிகளிலே வாழ்ந்தனர். முச்சந்தி களும், நாற்சந்திகளும் இருந்தன. மக்கள் தெய்வங்களுக்குப் பலியிட்டு வணங்கும் மன்றங்களும் இருந்தன. சந்துகளும் பெருந்தெருக்களும் இருந்தன. (ஊர்காண். 212-214) சிலப்பதிகார காலத்திலே மதுரை நகரத்தின் கடைவீதிகள் ஏறக்குறைய இன்றைய கடைவீதிகளைப்போலவே இருந்தன. மேலே கூறப்பட்ட சிலப்பதிகாரக் காட்சியையும், மதுரையின் இன்றைய கடைவீதிகளின் அமைப்பையும் ஒத்திட்டுப் பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். சில ஆண்டுகளுக்குமுன் வரையிலும் சொக்கநாதர் கோவில் சந்நிதியின் வடபுறம் ஒரு வெட்டவெளியாகக் கிடந்தது. அதை அந்திக்கடைப் பொட்டல் என்று மக்கள் வழங்கி வந்தனர். இங்கு மாலை நேரங்களில் அங்காடி வியாபாரம் நடைபெற்று வந்தது; அதனால் இப்பெயரால் வழங்கினர். இன்று அந்த இடம் கடைத் தெருவாகவும், இளமரக்கா (பார்க்) வாகவும் காட்சி அளிக்கின்றது. இந்த இடத்தைச் சிலப்பதிகார ஆசிரியர் ஆவண வீதி என்று குறிப்பிட்டுள்ளார். ஆவண வீதி என்பதற்கு, கோயில் அங்காடி என்று அடியார்க்கு நல்லார் பொருள் கூறியிருக்கின்றார். ஆதலால், அந்த அந்திக்கடைப் பொட்டல் தான் கோயில் அங்காடி என்று வழங்கியிருக்க வேண்டும் என்று எண்ண இடந்தருகின்றது. மதுரையிலே சிலப்பதிகார காலத்திலே பொதுமகளிர் கூட்டம் நிறைந்திருந்தது. அவர்கள், செல்வம் நிறைந்த காமுகர் களோடு கூடி வாழ்வர். அவர்கள் நா ணம் அற்றவர்கள். வையைத் துறையிலே அவர்கள், காமுகர்களுடன் சேர்ந்து ஓடம்விட்டு விளையாடு வார்கள். இது அவர்களுடைய காலைப் பொழுது விளையாட்டு. நடுப்பகலிலே, தலையிலே, முல்லை, குவளை, நெய்தல் மலர்களை வெளியிலே தெரியும்படி, கொண்டையிலே மிகுதியாக வைத்துக் கொள்ளுவார்கள். மலர்மாலைகளையும், முத்து மாலை களையும் கழுத்திலே பூண்பார்கள். உடம்பிலே சந்தனக் குழம்பைப் பூசிக்கொள்ளுவார்கள். பொருளை அள்ளிக் கொடுக்கும் காமுகர்களுடன் கூடிப் பொழில்களிலே விளையாடுவார்கள். மாலைக்காலத்திலே அவர்கள் நன்றாகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளுவார்கள், காமுகர்கள், தங்கள் அழகைப் பார்த்துப் பாராட்டும்படி நிலாமுற்றத்திலே பஞ்சணைமீது அமர்ந்திருப்பார்கள். தங்களை நாடிவந்த காமுகர்களை மயக்கிப் பொருள் பறிப்பார்கள். இப் பொதுமகளிர், கார்காலத்திலே எப்படிப் பொழுது போக்குவார்கள்? கூதிர்காலத்திலே எப்படிப் பொழுது போக்குவர்? முன்பனிக்காலம், பின்பனிக்காலங்களிலே எப்படிப் பொழுது போக்குவர்? இளவேனிற்காலம், வேனிற்காலக் கடை நாள் - இந்நாட்களிலே எப்படிப் பொழுதுபோக்குவர்? என்பதைச் சிலப்பதிகாரத்திலே விளக்கமாகக் காணலாம். இவர்கள் செல்வர்களாலும், அரசர்களாலும் விரும்பப்பட்டனர். ஊர்காண் காதையில் 70 முதல் 145 வரையில் உள்ள அடி களை இப் பொதுமகளிர் கவர்ந்துகொண்டிருக்கின்றனர். மேலும் இவர்களுடைய திறமையும் சிறப்பும் கூறப்பட்டிருக்கின்றன. மதுரை நகரில் இருந்த கணிகையர்-பொதுமகளிர்-விலை மகளிர்-கதியிலார்-நடனத்திலே சிறந்தவர்கள்-அரசர்க்காடும் கூத்தான வேத்தியலையும், பொதுமக்களுக்கு ஆடும் கூத்தான பொதுவியலையும் நன்றாக உணர்ந்தவர்கள். வாய்ப்பாட்டிலும் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் தேர்ந்தவர்கள். அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்த உண்மையான கலைஞர்கள். இவர்கள் தம் கண்பார்வையாலும், இனிய சொற்களாலும், எவரையும் ஏமாற்றிவிடுவார்கள். தவநெறிச் செல்வோரையும், வாலிபர்களையும், காமுகர்களையும் தம் வசப்படுத்தும் திறமை யுள்ளவர்கள். இவர்களிலே பெருந்தனம் படைத்தவர்கள், சிறுதனம் படைத்தவர்கள் என இருவகையினர் உண்டு. பெருஞ்செல்வம் படைத்த கணிகையர் வீதி தனியாக இருந்தது; குறைந்த செல்வம் உள்ள கணிகையர் வீதி தனியாக இருந்தது. (ஊர்காண். 146-167) இவ்வாறு கணிகையர் வாழ்வையும், அவர்கள் திறமை யையும், அவர்கள் வாழும் தெருக்களையும் சிலப்பதிகாரம் விரித்துரைக் கின்றது. இதிலிருந்து நாம் காணும் உண்மை ஒன்றுண்டு. சிலப்பதிகார காலத்திலே மதுரை நகரிலே செல்வர்கள் நிறைந்திருந்தனர்; அவர்கள் கணிகையர் கூட்டுறவை நாடி இன்பமாகப் பொழுது போக்கினர் என்பதுதான் அவ்வுண்மை. சிலப்பதிகார காலத்திலே மதுரைநகர்ப்புறம் நல்ல வளமுடன் இருந்தது. நகரைச் சுற்றிக் கோட்டைமதிலும், அகழும் இருந்தன. நகருள் பல வீதிகள் இருந்தன; வாணிகம் விரிவாக நடைபெற்றது; செல்வர்கள் நிறைந்திருந்தனர்; கணிகையர்கள் கூட்டமும் நிறைந்திருந்தது; பல கோயில்களும் இருந்தன. மதுரை நகரில் காலை முதல் மாலை வரை கடல்ஒலி போன்ற முழக்கம் இருந்தது. இச்செய்திகளைச் சிலப்பதிகாரம் அறிவிக்கின்றது. மேலே எடுத்துக் காட்டியவைகளைக் கொண்டு இவைகளைக் காணலாம். சிலப்பதிகார காலத்திலே இருந்ததைவிட மதுரைமாநகரம் இன்று பெருஞ்சிறப்புடன் விளங்குகின்றது. பெரிய நகரமாகவும் இருக்கின்றது. மதிலும், அகழும் மறைந்துவிட்டாலும்கூட அந்நாள் அழகைவிட இந்நாள் அழகு குறைந்து விடவில்லை. இது தமிழர் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய செய்தியாகும். சிலப்பதிகார காலத்திற்கு முன்னிருந்த மதுரையின் தோற்றத்தை மதுரைக்காஞ்சியிலே காணலாம். மதுரைக் காஞ்சியிலே காணப்படும் மதுரையும், சிலப்பதிகாரத்தில் காணப் படும் மதுரையும் பெரும் பாலும் ஒத்திருக்கின்றன; சிறிதளவுதான் வேற்றுமை காணமுடியும். மூவேந்தர் பெருமை சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களின் பெருமையையும் சிலப்பதிகாரத்திலே காணலாம். அவர்களுடைய வீரம், கொடை, அறந் தவறாத நடத்தை இவைகள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாகத் தமிழர் பெருமை குறிக்கப்படுகின்றது. மூவேந்தர்களின் பெருமை, நூலின் முதலிலிருந்து முடிவு வரையிலும் கலந்து கிடக்கின்றது. முதலில் சோழர் சிறப்பைக் காண்போம். சோழர் முதலில் திங்களைப் போற்றுதும் என்று தொடங்கும் மங்கல வாழ்த்துப் பாடல்கள் நான்கிலே முதல் மூன்று பாடல்கள் சோழர் பெருமையைக் கூறுகின்றன. இவைகள் சோழர்களின் செங்கோன்மையை விளக்குகின்றன. இதன்பின் முதல்முதல் பெயர் சுட்டிக் குறிக்கப்படும் மன்னன் கரிகால் வளவன், இவனுடைய புகழும், வீரமும் போற்றப்படு கின்றன. கரிகாற்சோழன் போர்புரிவதிலே பேராசையுள்ளவன், தமிழக எல்லையுள் அவனை எதிர்ப்போர் யாரும் இல்லை. தன்னிகர் இல்லாத வீரனாக விளங்கினான். வடதிசை பெருந்திசை யாதலால் அங்கே பகைவரைப் பெறலாம் என்று கருதினான். நல்லநாளிலே, வாள், குடை, முரசுகளை முன் செல்ல விட்டான். என் புயங்கள் பகைவர்களைப் பெறுக என்று வழிபடு தெய்வத்தை வணங்கினான். வடதிசை நோக்கிப் போர் முழக்கத்துடன் புறப்பட்டான். வடக்கே செல்லும்போது இமயமலை குறுக்கிட்டது. அதற்கு மேல் போக முடியவில்லை. மனஞ் சலித்துத் திரும்பினான். இமயமலை தனது செலவைத் தடுத்ததற்காக அதன் மேல் சினங் கொண்டான். அம்மலையின்மேல் தனது புலி முத்திரையைப் பொறித்து மீண்டான். திரும்பி வரும்போது, கடலையே தனது நாட்டுக்குக் காவலாகக் கொண்ட வச்சிரநாட்டு வேந்தன் கரிகாலனுக்குப் பணிந்தான்; அவனுடைய முத்துப் பந்தரைக் கப்பமாகக் கொடுத்தான். மகதநாட்டு மன்னன் வாட்போரிலே வல்லவன். அவன் கரிகாலனை எதிர்த்துப் பொருதான்; தோல்வியடைந்தான். அவன் தன் பட்டிமண்டபத்தைத் திறையாகக் கொடுத்துப் பணிந்தான். அவந்தி நாட்டு அரசன், கரிகாலனுடன் போர் செய்ய வில்லை; நண்பனாக நின்று வரவேற்றான். தனது நட்புக்கு அடையாள மாக வாயில்தோரணம் ஒன்றைக் கொடுத்தான். முத்துப்பந்தல், பட்டிமண்டபம், வாயில்தோரணம் இவைகள் எல்லாம் மயன் என்னும் தெய்வத் தச்சனால் ஆக்கப்பட்டவை. இருநில மருங்கின் பெருநரைப் பெறாஅ செருவெம் காதலின், திருமா வளவன் வாளும், குடையும், மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம் மண்அக மருங்கின் என் வலிகெழு தோள் என புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழிய பகைவிலக்கியது இப்பயம்கெழு மலை, என, இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை கொடுவரி ஒற்றிக், கொள்கையின் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக் கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகதநல் நாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும் (இந்திர விழவு. 89 -104) இவ்வடிகள் கரிகாலன் வரலாற்றைக் கூறின. இதன்பின் கடலாடு காதையிலே முசுகுந்தச் சக்கரவர்த்தி என்னும் சோழனுடைய வரலாறு சொல்லப்படுகின்றது. இவ் வரலாற்றைச் சிறுகதை யென்னும் பகுதியிலே காணலாம். பொன்இமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ஆண்டான் மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன் என்று பின்னும் ஆய்ச்சியர் குரவையிலே கரிகால் வளவன் வரலாறு காணப்படுகின்றது. இதுவும் அவன் இமயத்திலே புலிமுத்திரையிட்ட செய்தியைச் சுட்டுகின்றது. இதன்பின் வாழ்த்துக் காதையிலும் கரிகாலன் பெருமை காணப்படுகின்றது. வடவரைகள் ஓர்எட்டும் கண்இமையா காண, வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானை, வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன், திக்குஎட்டும் குடைநிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண்! அம்மானை; கொற்றவன் பூம்புகார் பாடேலோர் அம்மானை. இதுவும் கரிகாலன் இமயத்திலே முத்திரையிட்டதைக் குறித்தது. நீர்ப்படைக் காதையிலும், வாழ்த்துக் காதையிலும் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன், சிபிச்சோழன் இவர்கள் வரலாறுகள் காணப் படுகின்றன. மூன்று மதில்கள் பொருந்திய ஒரு நகரம்; அது வானத்தில் அசைந்து செல்லும் தன்மையுள்ளது. அந்நகரில் அசுரர்கள் வாழ்ந்து வந்தனர். சோழ மன்னன் தேவர்கள் வியக்கும் படி அந்நகரை அழித்தான். அசுரர்களை வென்றான். இவன் பெயர் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன். சிபிச்சோழன் கொடையில் சிறந்த வள்ளல். அவன் தன்னைச் சரண் அடைந்த ஒரு புறாவின் உயிரைப் பாதுகாத் தான். அதைத் துரத்தி வந்த பருந்துக்கு அப் புறாவின் எடையுள்ள சதையைத் தன் உடம்பில் இருந்து அரிந்து கொடுத்தான். இதன் மூலம் புகழ் பெற்றான் அவன். வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில்மூன்று எறிந்த இகல்வேல் கொற்றமும், குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர, எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்துஉடம்பு இட்டோன் அறந்தரு கோலும் (நீர்ப்படை. 164-169) இவ்வடிகள் மேலே குறிப்பிட்ட இரண்டு சோழர்கள் வரலாற்றையும் கூறின. வீங்குநீர்வேலி உலகு ஆண்டு விண்ணவர்கோன் ஓங்குஅரணம் காத்த உரவோன்யார் அம்மானை, ஓங்குஅரணம் காத்த உரவோன், உயர்விசும்பில் தூங்குஎயில் மூன்றுஎறிந்த சோழன்காண்! அம்மானை; சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை. புறவு நிறைபுக்குப், பொன்உலகம் ஏத்த, குறைவுஇல் உடம்புஅரிந்த கொற்றவன்யார் அம்மானை, குறைவுஇல் உடம்புஅரிந்த கொற்றவன், முன்வந்த கறவை முறைசெய்த காவலன்காண்! அம்மானை; காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை. இவ்விரண்டு பாடல்களும் மேலே காட்டிய சோழர்களின் கதைகளையே கூறின. சிபியைக் குறிக்கும் செய்யுளில் குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன், முன்வந்த கறவை முறைசெய்த காவலன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இது, சிபியும், பசுவுக்கு நீதி வழங்கிய சோழனும் ஒருவன்தான் என்னும் பொருள்படும் படி அமைந்திருக்கின்றது. குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன், கறவைக்கு நீதி வழங்கிய காவலன் மரபிலே வந்தவன் என்று பொருள் கொண்டால் தான் இருவரும் வெவ்வேறு சோழர்கள் என்று கருதலாம். கறவை: பசு. வழக்குரை காதையிலும் சிபிச் சோழன் வரலாறு சொல்லப் படுகின்றது. பசுவுக்கு நீதி வழங்கிய சோழன் வரலாறும் சொல்லப் படுகின்றது. இங்கே புறாவுக்கு அருளினோன் வேறு, ஆவுக்கு முறை செய்தோன் வேறு என்றுதான் காணப்படுகின்றது. எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும் வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட, தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்ப் புகார் (வழக்குரை 51-56) இவ்வடிகள் சிபியின் வரலாற்றையும், கறவைக்கு முறை செய்த சோழன் வரலாற்றையும் குறித்தன. கறவைக்கு முறை செய்த சோழனையே பிற்காலத்தார் மனுநீதி கண்ட சோழன் என்று பெயர் குறித்தனர். கரிகால் சோழன், முசுகுந்தன், தூங்கெயில் எறிந்த சோழன், சிபிச் சோழன், கறவைக்கு முறைசெய்த சோழன் ஆகியவர்களின் பெருமையைச் சிலப்பதிகாரம் பலவிடங்களில் பாராட்டிப் பேசுகின்றது. அவைகளே மேலே எடுத்துக் காட்டப் பட்டன. பாண்டியர் பாண்டியர் புகழும் பெருமையும் பலவிடங்களில் பாராட்டப் படுகின்றன. அவர்களுடைய ஆட்சிமுறையும் போற்றப்படுகின்றது. அந்திமாலை சிறப்புச்செய் காதையிலே சந்திரோதயத்தைப் பற்றிக் கூறும் இடத்திலே பாண்டியர் குலப் பெருமையைக் காணலாம். பாண்டியன் வயதால் இளைஞனாயினும், பகை வேந்தரைப் போரிலே அழிக்கும் ஆற்றல் உள்ளவன். இத்தகைய தென்னர்குல முதல்வனே சந்திரன். அச் சந்திரன், அந்தி நேரத்திலே செவ்வானத்திலே வெண்பிறையாகத் தோன்றினான். காதலரைக் கவலைக்குள்ளாக்கும் மாலைப்போதாகிய குறுநில வேந்தரைக் கடிந்தான். தனது அரசியலிலே தவறாமல் வெண்மையான கதிர்களைப் பரப்பினான். இளையர் ஆயினும் பகைஅரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின், அந்தி வானத்து வெண்பிறை தோன்றி, புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டி பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி (அந்திமாலை 21-25) இவ்வடிகள் பாண்டியர் பெருமையைப் பாடின. இவற்றால் அவர்கள் புகழை அறியலாம். பாண்டியர் ஆளும் நாட்டிலே யாரும் துன்புறமாட்டார்கள்; எவருக்கும், யாரும் துன்பம் செய்யமாட்டார்கள். இயற்கையிலே ஒன்றோடு ஒன்று பகைமை பாராட்டும் உயிர்களும் பகையின்றி ஒன்றுபட்டு வாழும் என்று மற்றோர் இடத்திலே கூறப்படு கின்றது. கரடியும் புற்றுத் தோண்டாது; மான்கூட்டத்தைக் கண்டால் புலி பகைக்காது; பாம்பும், அச்சந்தரும் வேறு பிராணிகளும், இரைதேடும் முதலையும், இடியும் தம்மைச் சார்ந்தவர்க்குத் துன்பந் தரமாட்டா. செங்கோல் தவறாமல் தென்னவர் காக்கும் நாடு இத்தகைய சிறப்புற்றது. கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா; வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா; அரவும், சூரும், இரைதேர் முதலையும் உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடு (புறஞ்சேரி 5-10) இவ்வடிகளும் பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பெருமையை விளக்கின. பாண்டியன் நெடுஞ்செழியன், தான் குற்றவாளி என்பதை உணர்ந்தவுடன் வருந்தி உயிர் துறந்தான். இது பாண்டியர் பெருமையை - நீதிமுறையை - உணர்த்தும். செங்கோல் வளைய உயிர்வாழார் பாண்டியர் என்று வாழ்த்துக் காதையிலே பாராட்டப்படுகின்றது. ஒரு பாண்டியன் கடல் வற்றும்படி வேலாயுதத்தை விட்டெறிந்தான். அப்பகை காரணமாகக் கடல் கொதித்து எழுந்தது. பஃறுளி ஆறு, பல பக்கமலைகளையுடைய குமரிக்கோடு இவைகளுக்கிடையிலிருந்த நிலத்தை விழுங்கிற்று. அதனால் அப்பாண்டியன் அப்பகுதியைவிட்டு வெளியேறினான். வட திசையிலே கங்கையையும், இமயத்தையும் எல்லையாகக் கொண்டு தென்னகத்தை ஆண்டான். இவனை நிலம்தரு திருவில் பாண்டியன் என்பர். சந்திரகுலமாகிய பாண்டியர் பரம்பரை மேம்படும்படி, இந்திரனுடைய வலிமை பொருந்திய, ஆரத்தைத் தன் மார்பிலே அணிந்து விளங்கினான் மற்றொரு பாண்டியன். ஒரு பாண்டியன் இந்திரன் முடியில் உள்ள வளையத்தை உடைத்தான். அதனால் இந்திரன் ஆணைக்கு அடங்கிய மழை, பாண்டிய நாட்டிலே பெய்யவில்லை. இதைக் கண்ட பாண்டியன் சினங்கொண்டான். மேகங்களைப் பிடித்துச் சிறையிலிட்டான். அதன்பின் மழை பெய்தது; நாடு செழித்தது. இவ்வரலாறுகள் பாண்டியரின் பழம்பெருமையைக் கூறின. வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடும்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி! திங்கள் செல்வன் திருக்குலம் விளங்க செங்கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி! முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று இடிஉடைப் பெருமழை எய்தாது ஏக, பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க! (காடுகாண் 18-29) இவ்வடிகள் மேலே கூறிய பாண்டியர்களின் வரலாற்றைக் கூறுவன. கடல் சுவற வேல் விட்டவன், இந்திரன் ஆரத்தைப் பூண்டவன், இந்திரன் முடிமேல் வளையெறிந்தவன், மேகங் களைச் சிறைப் படுத்தியவன் உக்கிர வன்மன் என்ற ஒரே பாண்டியன் என்று திருவிளையாடல் புராணம் கூறும். கீரந்தை யென்னும் பார்ப்பனன் தன் மனைவியைத் தனியாக விட்டுத் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான். அப்பொழுது அவள், பாதுகாவலற்ற இவ்வீட்டிலே எனக்கு யார் துணை! என்றாள். அவன், அரசவேலி காக்கும் என்று சொல்லிச் சென்றான். இதை மறைவிலே நின்று கேட்ட பாண்டியன், நாள்தோறும் அப் பார்ப்பனிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் கீரந்தை யாத்திரையிலிருந்து திரும்பி வந்தான். அன்றிரவு, அவனும் அவன் மனைவியும் வீட்டிற்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். பரிசோதனைக்குச் சென்ற பாண்டியன் அவ்வீட்டின் கதவைத் தட்டினான். அதனால் ஐயமுற்ற அந்தணன் இது என்ன? என்று கேட்டான். அவன் `நீர் கூறியபடி அரசவேலி காவாதோ? என்றாள். இதைக்கேட்ட அரசன் துணுக்குற்றான். அந்தணனுக்குத் தன் மனைவியின் மேல் ஐயம் பிறக்காதிருக்க அவ்வரிசையிலிருந்த அந்தணர்கள் வீட்டுக் கதவுகளை யெல்லாம் தட்டிவிட்டுப் போய்விட்டான். அனைவரும், யாரோ திருடன்தான் இவ்வாறு இரவிலே கதவைத் தட்டினான் என்று எண்ணிக்கொண்டனர். மறுநாள் அரசவையில் இதுபற்றிய பேச்சு நடந்தது. இக்குற்றம் புரிந்த வனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று கேட்டான் அரசன் அத்திருடன் கையை வெட்டவேண்டும். என்றனர். உடனே பாண்டியன், தன் வாளை உருவினான்; தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான். அனைவரும் வியந்தனர். பின்னர் மன்னனுடைய வெட்டுண்ட கை, பொன்கையாக வளர்ந்தது. இவனுக்குப் பொற்கைப் பாண்டியன் என்று பெயர். இப் பொற்கைப்பாண்டியனைப் பற்றிய குறிப்பும் சிலப்பதி காரத்திலே காணப்படுகின்றது. கட்டுரை காதையிலே இவ் வரலாற்றைச் சிறிது வேறுபடக் காணலாம். பராசரன் என்னும் அந்தணன் சேரமன்னனிடம் பெரும் பரிசு பெற்றுப் பாண்டி நாட்டின் வழியாக வந்தான். அவன் வரும் வழியில் தங்கால் என்னும் ஊரில் தங்கினான். அவன் எதிரில் பிராமணச் சிறுவர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர், அவர்களைப் பார்த்து, என்முன் தவறு இல்லாமல் வேதம் ஓதுவோர், நான் வைத்திருக்கும் இச் செல்வப் பொதியைப் பெறலாம் என்றான். அப்பொழுது வார்த்திகன் என்னும் அந்தணன் மகனாகிய தக்கிணன் என்னும் சிறுவன் தவறு இல்லாமல் - சந்தம் கெடாமல் வேதம் ஓதினான். பராசரன் மகிழ்ச்சியடைந்து தன் செல்வப் பொதியை அவனிடம் கொடுத்துப் போய்விட்டான். தக்கிணன் அதைத் தன் தந்தையிடம் கொண்டு போய்க் கொடுத்தான். இதன் மூலம் வார்த்திகன் நல்ல ஆடை ஆபரணங்களும், செல்வமும் பெற்றுச் சிறந்து விளங்கினான். இதைக்கண்ட அரசன் பணியாளர் சிலர் பொறாமை கொண்டனர், வார்த்தி கனைத் திருடன் என்று சொல்லிச் சிறையில் இட்டனர்; அவன் செல்வத்தைக் கவர்ந்தனர். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் துக்கம் தாங்காமல் நிலத்திலே வீழ்ந்து புரண்டு புலம்பினாள். அவ்வூர் ஐயை கோயில் கதவு தானே அடைத்துக்கொண்டது, யாராலும் அதைத் திறக்க முடியவில்லை. இதை அறிந்த பாண்டியன் ஏதோ அநீதி நேர்ந்த தனால்தான் ஐயை கோயில் கதவு அடைத்தது என்று கருதினான். பணியாளரை விசாரித்தான், வார்த்திகன் மீது குற்றம் சுமத்திச் சிறையிலிட்ட செய்திகேட்டான். வார்த்தி கனை அழைத்து உண்மையை உணர்ந்தான். வார்த்திகனுக்குச் செய்த தீமையால்தான் கோயில் கதவு அடைத்தது என்பதை அறிந்தான். அதற்குப் பிராயச்சித்தமாகத் தங்கால் என்னும் ஊரையும், வயலூர் என்னும் ஊரையும் வார்த்தி கனுக்கு இனாமாக வழங்கினான். தன் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று நிலத்திலே வீழ்ந்து வணங்கினான். அதன் பிறகு தான் ஐயை கோட்டத்தின் கதவு திறந்தது. பொற்கைப் பாண்டியன், வார்த்திகனுக்கு நீதி வழங்கிய பாண்டியன் - இவ்விரு கதைகளும் கட்டுரை காதையிலே காணப் படுகின்றன. இவ்வாறு பாண்டிய மன்னர்களின் வரலாறுகளும், அம்மன்னர்களின் புகழும், பெருமையும், அறநெறியும் சிலப்பதி காரத்திலே பல இடங்களில் சொல்லப்படுகின்றன. சேரர் சேரமன்னர்கள் வீரத்திலே சிறந்தவர்கள்; செங்கோல் தவறாமல் அரசாட்சி செய்தவர்கள். அவர்கள் சிறப்பும், செயலும் சிலப்பதி காரத்தில் சொல்லப்படுகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவைப் பற்றிச் செங்குட்டுவன் கேட்டான். உடனே மன்னர்களின் நிலையைப் பற்றிய எண்ணமே அவன் நிலைவுக்கு வந்தது. அரசர்களின் கடமையைப்பற்றிக் கருதினான். அவன் கருதியதை வெளிப் படையாக உரைத்தான். பாண்டியனது செங்கோல், ஊழ்வினையால் கொடுங் கோலாக்கப்பட்டது; அதனை அவன் விட்ட உயிர் நிமிர்த்து, மீண்டும் செங்கோலாகச் செய்தது, நாட்டிலே மழைவளம் குறைந்தாலும் அரசர்களுக்கு அச்சம்; உயிர்கள் துன்புற்றாலும் அச்சம், குடிகளைக் காத்துக் கொடுங்கோலுக்கு அஞ்சி அரசாளும் குடியிலே பிறப்பதால் துன்பந்தான்; பிறர் பாராட்டும் படியான இன்பம் எதுவும் இல்லை. வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது; மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்; பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்; குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவுஇல் (காட்சி 98-105) இவ்வடிகள் செங்குட்டுவன் கருத்தை விளக்கின; சேர மன்னர்களின் சிறப்பையும் குறித்தன. நாடு செழிப்படையவும், குடிகள் இன்புறவும், ஆவன செய்து ஆளுவதே அரசர் கடமை என்று சேரர்கள் எண்ணினர்; இதையே தங்கள் கொள்கையாகக் கொண்டிருந்தனர். இவ்வுண்மையையும் இவ்வடிகளால் அறியலாம். பகைவர்களால் தமது நாட்டுக்கு எத்தகைய இடையூறும் நேரக்கூடாது; அவர்களால் தமது குடிமக்கள் துன்பத்திற்கு ஆளாகக் கூடாது; பகைவர்களைப் பணியவைத்துக் குடி மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதுவே அரசர்கள் கடமை என்பது சேரமன்னர்களின் சிறந்த கொள்கை. பகை அரசு நடுக்காது, பயம்கெழு வைப்பின் குடி நடுக்குறூஉம் கோலேன் ஆகுக பகை அரசர்களை நடுங்கிப் பணியவைக்காமல், குடிகளை நடுங்கச் செய்கின்ற கொடுங்கோலேன் ஆவேன் என்று செங் குட்டுவன் உரைக்கின்றான். எம்மை இகழ்ந்த வடதிசை மன்னர் முடித்தலையிலே கண்ணகிச் சிலைக்கான இமயக்கல்லை ஏற்றி வருவேன்; இன்றேல் மேற்கண்ட செயலையுடைய கொடுங் கோல் மன்னன் ஆவேன் என்று செங்குட்டுவன் உரைத்ததாகக் கால்கோள் காதையிலே காணப்படுகின்றது. இதுவும் சேர மன்னர்களின் சிறப்பைக் காட்டுவதாகும். சேரமன்னர்களின் சிறந்த செயல்கள் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் பாராட்டப்பட்டிருக்கின்றன. பதிற்றுப்பத்திலே மூன்றாம்பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். அவனைப் பாலைக்கௌதமனார் என்னும் புலவர் பத்துப் பாடல்களால் பாராட்டினார். அப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த குட்டுவன், நீர், வேண்டியதைப் பெறுமின்! என்றான். புலவர், யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புக வேண்டும் என்றார். உடனே குட்டுவன், பார்ப்பாரில் பெரியோர் களைக் கேட்டு, அவர்கள் காட்டிய வழிநின்று ஒன்பது பெரு வேள்விகளைச் செய்து முடித்தான். பத்தாவது வேள்வியைச் செய்து கொண்டிருக்கும் போது பாலைக்கௌதமனாரும், அவர் மனைவியும் மறைந்தனர். இக்கதை பதிற்றுப்பத்து, மூன்றாம் பத்தின் பதிகத்து இறுதியிலே காணப்படுகின்றது. வண்தமிழ் மறையோற்கு வான்உறை கொடுத்த திண்திறல் நெடுவேல் சேரலன் வளம் நிறைந்த தமிழ்ப் புலவனாகிய வேதியனுக்குச் சுவர்க் கத்தைக் கொடுத்தவன்; வலிமை பொருந்திய நீண்ட வேற் படையையுடைய சேரன் என்று சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலே இவ்வரலாறு காணப்படுகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன் சிறந்த வீரன்: ஒரு தீவிலே வசித்த பகைவேந்தர்கள் கடல்வழியாகப் படையெடுத்து வந்தனர். இவன் அவர்களுடைய கடற்படையை அழித்தான். அவர்கள் வாழ்ந்த தீவில் இருந்த அவர்களுடைய காவல்மரமாகிய கடம்ப மரத்தையும் வெட்டி வீழ்த்தினான். இந்த நெடுஞ்சேரலாதன் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். அங்கிருந்த மன்னர்களை எல்லாம் வென்றான். இமயத்தின் மேல் வில் முத்திரையிட்டு மீண்டான். இவன் தமிழகம் முழுவதையும் ஆட்சி புரிந்தான், யவனர் களைவென்று, அவர்களைப் பிணித்து, அவர்கள் தலையிலே நெய்விளக்கேற்றிவைத்துக் கொணர்ந்தான். அவர்களிடமிருந்த செல்வங்களையெல்லாம் பறித்துத் தன் ஊர்க்குக் கொண்டு வந்தான். அவைகளைப் பிறர்க்கு உதவினான். இவ்வரலாறு பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் காணப்படுகின்றது. இவனுடைய வரலாறு சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றது. கடலைக் காவலாக உடைய நாட்டின் காவல்மரமான கடம்பை வெட்டி வீழ்த்தினான். வானோர் அஞ்சும்படி இமய மலையின் மேல் வில்லின் முத்திரையை வைத்தான். இவன் சேரர்குலத் தோன்றல். மாநீர் வேலிக் கடம்புஎறிந்து, இமயத்து வானவர் மருள, மலைவில் பூட்டிய வானவர் தோன்றல் இவ்வடிகள் காட்சிக் காதையிலே காணப்படுகின்றன. இவை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறிப்பவை. கடம்பு முதல் தடிந்த காவலன். என்று, இவன், வாழ்த்துக் காதையிலும் குறிக்கப்படுகின்றான். இந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கிரேக்க நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான்; தன்னை எதிர்த்த கடற்படை களைத் தோற்கடித்தான்; கிரேக்கர்களின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வந்தான் என்று சிலர் கூறுகின்றனர். பாரதப் போர் நடந்தபோது உதியலாதன் என்னும் சேர மன்னன் தமிழகம் முழுவதையும் ஆண்டான். அவன் பாண்டவர், கௌரவர் ஆகிய இருபுறத்துப் படைகளுக்கும் சோறிட்டான். ஆதலால் அவன் பெருஞ்சோற்று உதியலாதன் என்று பெயர் பெற்றான். இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இவன் வரலாறும் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ஓர்ஐவர், ஈர்ஐம்பதின்மர் உடன்று எழுந்த போரில் பெரும்சோறு போற்றாது தான் அளித்த சேரன், பொறையன், மலையன் திறம்பாடி கார்செய் குழல்ஆட ஆடாமோ ஊசல் கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல்! என்று வாழ்த்துக் காதையிலே கூறப்படுகின்றது. இது பெருஞ் சோற்று உதியலாதன் பெருமையை உரைத்தது. இதில் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும் குறிக்கப்பட்டுள்ளான். சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் பெரும்பாலும் சேரன் செங்குட்டுவன் சிறப்பையே கூறிச் செல்கின்றது. சிலப்பதிகாரத்திலே இவ்வாறு மூவேந்தர்களின் புகழ், ஆட்சி, வரலாறு ஆகியவைகள் பல இடங்களில் கூறப்பட்டிருப் பதைக் காணலாம். தெய்வீக நிகழ்ச்சிகள் சிலப்பதிகாரக் கதையைப் படிக்கும்போது, நம் கண் முன்னே பல காட்சிகள் நடப்பனபோலவே காணப்படுகின்றன. இளங்கோவடி களின் வாக்கு வலிமை, செய்யுள் இயற்றும் திறன், கதை சமூகத்தைத் தழுவிய வரலாறாக அமைந்திருப்பது இவைகள் தான் இதற்குக் காரணம். கோவலன் கணிகையின் கூட்டுறவால் செல்வத்தையிழந் தான். மனைவி கண்ணகியுடன் மதுரைக்குப் போனான். சிலம்பு விற்கச் சென்ற இடத்திலே பொற்கொல்லன் சூழ்ச்சிக்கு இரை யானான். அரசனால் கொலைத் தண்டனைக்கு ஆளானான். இதையறிந்த கண்ணகி சினந்து எழுந்தாள். அரசன் அக்கிரமத்தை ஊராருக்கு அறிவித்தாள். ஊர் அவள் பக்கம் திரண்டு நின்றது, அரசனைக் கண்டு அவன் புரிந்த அநீதியை எடுத்துக்காட்டி வழக்குரைத்தாள். பாண்டியன் தன் குற்றத்தை உணர்ந்தான். தற்கொலை செய்து கொண்டான். அரசனுக்குத் துணை செய்தவர்கள் தண்டிக்கப் பட்டனர். நல்லவர்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டனர். மதுரை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. கணவனை இழந்த கண்ணகி, துன்பந் தாங்காமல் ஒரு மலையின் மேல் ஏறி வீழ்ந்து உயிர்விட்டாள். அவள் வீரத்தையும், செயலையும் மக்கள் போற்றினர். என்று இவ்வாறு கதை முடிந்திருத்தால் சிலப்பதிகாரம் ஒப்பற்ற ஒரு அரசியல் புரட்சி இலக்கியமாகவே விளங்கும். ஆயினும் சிலப்பதிகாரக் கதையிலே இக்கருத்து அடங்கித் தான் இருக்கின்றது. இதைப் பின்னால் புரட்சிக் காவியம் என்ற பகுதியிலே விரிவாகக் காணலாம். இக்கருத்து சிலப்பதிகாரத்தில் ஊடுருவி நிற்பதால்தான் அது படிப்போர் உள்ளத்தைக் கவருகின்றது. சிறந்த காவியமாகத் திகழ்கின்றது. ஆனால் சிலப்பதிகாரக் கதை மேலே எடுத்துக்காட்டியபடி வெளிப்படையாக அமைந்திருக்கவில்லை. இக்கதையின் இடை யிடையே தெய்வீக நிகழ்ச்சிகள் - இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் - பல புகுத்தப்பட்டிருக்கின்றன. ஆதலால் அதைப் படித்தால் அது புராணக் கதைபோலவே காட்சியளிப்பதையும் காணலாம். புரட்சிகரமான அரசியல் கருத்தமைந்தது சிலப்பதிகாரம் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அதில் இயற்கைக்கு முரணான நிகழ்ச்சிகள் பல புகுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் உண்டு. சிலப்பதிகாரம் பிறந்த காலத்திலே - அந்நூல் எழுதப்பட்ட காலத்திலே - நம் நாட்டு மக்கள் தெய்வீக சம்பந்தம் உள்ள கதைகளைத்தான் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். அக் காலத்தில் தெய்வீகத் தொடர்பற்ற கதைகளுக்கு - காவியங் களுக்கு - மக்களிடம் மதிப்பில்லை. ஆதலால்தான் சிறந்த கருத்துக்களை மக்களிடையிலே பரவச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளங்கோ அடிகள் தெய்வீக நிகழ்ச்சிகள் பலவற்றை சிலப்பதிகாரத்திலே இணைத்தார். காலத்தை ஒட்டி மக்கள் மனப்பான்மையை அறிந்து - கவிதைகளை அமைப்பது, காவியங்களை எழுவது, அவைகளின் வாயிலாக மக்களுக்கு அறநெறிகளை அறிவிப்பது இவைகளே சிறந்த புலவர்களின் தன்மை; கடமை. இத்தகைய உயர்ந்த புலவர் கால்வழியைச் சேர்ந்த இளங்கோவடிகள், தம் கால நிலைக்கேற்பக் கதையை அமைத்திருக்கின்றார். இவ்வாறு கொள்ளுவதுதான் ஏற்றதாகும்; உண்மையுமாகும். 1. கோவலனையும், கண்ணகியையும், ஒரு பரத்தையும் தூர்த்தனும் பரிகசித்துப் பேசினர். அவர்களை, முள்ளு டைக் காட்டில் முதுநரி ஆகுக என்று கவுந்தி அடிகள் சபித்தார். பிறகு கோவலன் வேண்டுகோளால், ஓராண்டில் அவர்கள் சாபம் நீங்கும்படி சாபவிடை கொடுத்தார். 2. வனதேவதை ஒன்று வசந்தமாலை வடிவத்திலே சென்று கோவலன் அடியிலே வீழ்ந்து மாதவியின் மனவேதனையை உரைத்தது. கோவலன் ஐயம் உற்று, வஞ்சம் பெயர்க்கும் துர்க்கை மந்திரத்தால் வனதேவதையின் சூழ்ச்சியை முறியடித்தான். 3. கோவலன் கொலையுண்டது கேட்ட கண்ணகி, அழுது புலம்பி வானத்தைப் பார்த்துச் செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா என்று கேட்டாள்; இல்லை; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீ உண்ணும் என்று அசரீரியாகச் சூரியன் உரைத்தான். 4. கோவலன் வெட்டுண்டு இறந்தபின், அவன் உடம்பைக் கண்ணகி தழுவிக்கொண்டாள்; அவன் பழைய உருவில் உயிர் பெற்று எழுந்து, அவளுடன் உரையாடினான். 5. கண்ணகி தனது இடது மார்பை வலது கையால் திருகி எடுத்து மதுரைவீதியிலே வீசினாள். உடனே அக்கினி தேவன் பார்ப்பன வடிவில் வந்தான்; முன்னமே, மதுரையை அழிப்பதற்குத் தனக்குக் கட்டளை உண்டு என்று கூறினான்; கண்ணகியின் உத்தரவுப்படி அவன் நல்லோரை ஒன்றும் செய்யாமல்விட்டான்; தீயோரைத் துன்புறுத்தி மதுரையை அழித்தான். 6. பிராமணபூதம், அரசபூதம், வணிகபூதம், வேளாளபூதம் என்று நான்கு பூதங்கள் மதுரையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தன. அவைகள் மதுரையைவிட்டு நீங்கின. 7. கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றிற்று; பாண்டியர் மரபின் மாண்பைக் கூறிற்று; கோவலனது, பழம்பிறப்புக் கதையைச் சொல்லிற்று. 8. கண்ணகி செங்குன்றின்மீது ஏறி அங்கிருந்த வேங்கை மர நிழலில் நின்றபோது கோவலன் தெய்வ உருவில் வந்தான்; அவள் தேவர்கள் போற்ற, அவனுடன் விமானத்தில் ஏறி விண் புகுந்தாள். 9. கண்ணகி, தெய்வ உருவிலே தோன்றிச் செங்குட்டுவனை வாழ்த்தினாள். 10. மாடலன் மூன்று சிறுமியர்களின்மேல் கமண்டல நீரைத் தெளித்தான். அவர்கள் தம்முடைய பழம் பிறப்பை உணர்ந்து கொண்டனர். 11. கண்ணகி, அசரீரியாகத் தோன்றி ஆரிய மன்னர்கள், குடநாட்டுக் கொங்கு மன்னர். மாளுவ வேந்தர், கயவாகு வேந்தன் முதலியோர்க்கு வரம் கொடுத்தாள். இவை போன்ற இன்னும் பல தெய்வீக நிகழ்ச்சிகளையும் கதையுடன் கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் புராணக் கதைகளையே நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. இயற்கையோடு பொருந்தாத இத்தகைய கதைநிகழ்ச்சி களை மறந்துவிடுவோம்; இயற்கையோடு இணைந்த கதை நிகழ்ச்சிகளை மட்டும் எண்ணிப் பார்ப்போம். இப்படி எண்ணும்போதுதான் சிலப்பதிகாரத்தின் ஒப்புயர்வு அற்ற பெருமை விளங்கும்; அது புரட்சிக் காவியமாக அமைந்திருப்பது புலப்படும். சிறுகதைகள் சிறுகதைகள் எழுதுவது புது வழக்கம் அன்று; பழைய வழக்கம்தான். பண்டை நூல்களைப் படிப்போர் இவ்வுண்மையை உணர்வார்கள். இக்காலத்திலே தனித்தனியாகச் சிறுகதைகள் எழுது கின்றனர். எல்லா நாடுகளிலும் இவ்வழக்கம் போற்றப்படுகின்றது. எல்லா நாட்டு மக்களும் சிறுகதைகளைப் படிப்பதிலே ஆவல் காட்டு கின்றனர். பண்டைநாளில் பெருங் கதைகளின் இடையிலே சிறுகதை களைக் கலந்து எழுதினர். பாரதத்திலே பல சிறுகதைகள் உண்டு; இராமாயணத்திலே பல சிறுகதைகள் உண்டு. பெருநூல்களிலே வரும் சிறுகதைகளுக்குக் கிளைக்கதைகள் என்று பெயர். இதை உபாக்கியானங்கள் என்று வடமொழியிலே சொல்லுவார்கள். சிறுகதைகள் பலவற்றின் தொகுதி என்று சொல்லத்தக்க பஞ்சதந்திரக் கதைகளைப் பலரும் அறிவார்கள். விக்கிர மாதித்தியன் கதை, தெனாலிராமன் கதை போன்ற கதைகள் தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக வழங்கி வருகின்றன. பண்டை நூல்களில் காணப்படும் சிறுகதைகளை வைத்துக் கொண்டு சிறுகதைகளின் இலக்கணம் என்ன என்பதைக்கூட நாம் சொல்லிவிடலாம். ஏதேனும் ஒரு கருத்தை - ஒரு உண்மையை - ஒரு அறத்தை - விளக்குவதே சிறுகதைகளின் நோக்கம். இவற்றையே பழஞ் சிறுகதைகளிலே பார்க்கின்றோம். நமது நாட்டிலே எழுத்தில் இல்லாத பல சிறுகதைகள் வழங்குகின்றன. கதை சொல்வதிலே வல்ல பாட்டிமார்கள் பலர் உண்டு; தாத்தாமார்கள் பலர் உண்டு. அவர்களிடம் விதவிதமான வேடிக்கைக் கதைகள் பலவற்றைக் கேட்கலாம்; அவர்களிடம் புதுப்புதுக் கற்பனைக் கதைகள் பலவற்றைக் கேட்கலாம். அவர்கள் சொல்லும் கதைகளில் எல்லாம் ஒவ்வொரு கருத்துப் பொதிந்து காணப்படும். கருத்துக்களைப் பரப்புவதற்கே சிறுகதைகள் தோன்றின; சிறுகதைகளைப் புனைந்தனர்; இலக்கியங்களிலும் ஏற்றினர்; சிறுகதைகளைப்பற்றி முன்னோர் களின் கொள்கை இதுதான். இந்த உண்மையை அடிப்படையாகக்கொண்டே சிலப்பதிகாரச் சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. இனி அச்சிறுகதைகளின் சிறப்பைக் காண்போம். முசுகுந்தன் கதை அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர். இந்திரன் சோழ மன்னனாகிய முசுகுந்தனிடம் வந்து முறையிட்டான். முசுகுந்தன், இந்திரன் தலைநகராகிய அமராபதிக்கு அசுரர்களால் அழிவு வராமல் பாதுகாத்தான்; எதிர்த்த அசுரர்களைத் தோற்கடித்தான். தோற்ற அசுரர்கள் ஒன்று கூடினர்; முசுகுந்தன் கண்ணும் மனமும் இருளும்படி ஒரு கணையை எய்தனர். அச்சமயத்திலே ஒரு பூதந் தோன்றி முசுகுந்தனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தது. அந்த மந்திரத்தால் அசுரர்களின் மாயத்தை ஒழித்தான்; அவர்களை வென்றான். இவ்வாறு வெற்றி பெற்ற முசுகுந்தனிடம், அசுரர்களை நீ எவ்வாறு வென்றாய்? என்று இந்திரன் கேட்டான். முசுகுந்தன், பூதம் தனக்குப் புரிந்த உதவியை உரைத்தான். அப்பூதத்திற்கு, முசுகுந்தனிடன் சென்று, காவிரிப்பூம்பட்டினத்தைக் காக்கும்படி இந்திரன் கட்டளையிட்டான். அப்பூதம் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தது. நாளங்காடியிலே அமர்ந்தது. காவிரிப்பூம்பட்டினத் தைக் காத்து வருகின்றது. முசுகுந்தன் செய்த உதவிக்குக் கைம்மாறாக இந்திரன் ஐவகை மன்றங்களை அளித்தான். அவை: வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் என்பவை. இம்மன்றங்களின் இயல்பு காவிரிப்பூம்பட்டினம் என்ற பகுதியிலே கூறப்பட்டுள்ளது. நல்லோர்க்குத் துணையாக நிற்போர் - நல்லோர்க்கு உதவுவோர் - நன்மை பெறுவர் என்ற உண்மை இக்கதை யினால் உணர்த்தப்படுகின்றது. நாரதர் சபதம் இந்திரன் சபையிலே உருப்பசி நடனம் ஆடுகின்றாள். நாரதர் வீணை வாசிக்கின்றார். அப்பொழுது இந்திரன் மகன் சயந்தனை, உருப்பசி கண்டாள்; காதல் உற்றாள்; அவனும் காதலித்தான். இதனால் உருப்பசியின் ஆடல் பாடலிலே தவறு நேர்ந்தது; நாரதர் வீணையும் மங்கலத்தை இழந்தது. இது கண்டு நாரதர் வெகுண்டார்; உருப்பசியையும், சயந்தனையும் சபித்தார். உருப்பசி மாதவியாகவும், சயந்தன் மூங்கிலாகவும் மண்ணுலகில் பிறந்தனர். அந்த மாதவியின் பரம்பரையிலே பிறந்தவள்தான் சிலப்பதிகார மாதவி. கடமை தவறுவோர் தீமை அடைவர் என்ற கருத்துள்ளதே இக்கதை. மேலே காட்டிய கதைகள் இரண்டும் கடலாடு காதையிலே உள்ளவை. தேவந்தியின் கதை மாலதி என்பவள் ஒரு பார்ப்பனி. அவள், தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் ஊட்டினாள். பால் விக்கி அக்குழந்தை இறந்தது. அவள் மாற்றாளும், கணவனும் தன்மேல் பழி சுமத்து வார்களே என்று பயந்தாள். பல கோயில்களுக்கும் குழந்தை யுடன் சென்று புலம்பினாள். இறுதியிலே சாத்தன் கோயிலை அடைந்து குழந்தையைப் பிழைக்க வைக்கவேண்டி வரம் கிடந்தாள். நள்ளிரவிலே சுடுகாட்டுக் கோட்டத்திலேயுள்ள பிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று பெண் உருவில் வந்தது. மாலதியிடமிருந்த குழந்தைப் பிணத்தை வாங்கி விழுங்கிவிட்டது. அதுகண்ட மாலதி மனங்கலங்கி வாய்விட்டு அழுதாள். அவள் துயர் கண்ட சாத்தன் இரக்கமுற்றான்; அவள் முன் தோன்றினான். நீ செல்லும் வழியில் உள்ள சோலையிலே குழந்தை உயிருடன் கிடக்கின்றது என்றான். தானே குழந்தை உருக்கொண்டு கிடந்தான். மாலதி அக்குழந்தையைத் தன் குழந்தை என்று நம்பினாள். எடுத்துச் சென்று ஈன்றாளிடம் கொடுத்தாள். அக்குழந்தை வளர்ந்து கல்வி கற்றான். தந்தை தாயர் இறந்தபின் அவர்களுக்கான இறுதிக் கடன்களையெல்லாம் இயற்றினான். தேவந்தி என்பவளை மணந்து எட்டு ஆண்டுகள் இல்லறம் நடத்தினான். அதன்பின் ஒரு நாள். அவள் தேவந்திக்குத் தன் உண்மை உருவத்தைக் காட்டினான். தான் தீர்த்த யாத்திரைக்குப் போவதாகச் சொல்லித் தன் கோவிலை அடைந்தான். தேவந்தி அச் சாத்தன் கோவிலை அடைந்து, சாத்தனுக்கு பூசை செய்து கொண்டிருந்தாள். இவளே கண்ணகியின் தோழியான தேவந்தி என்பவள். இறந்தவர் பிழைப்பதில்லை; தெய்வத்தை நம்பினோர் பாதுகாக்கப் படுவர் என்ற கருத்தைக்கொண்டதே இக்கதை. அழகர்மலை அழகர்மலைக்குத் திருமால் இரும்குன்றம் என்து பழம் பெயர். இதுபற்றிச் சிலப்பதிகாரம் சொல்லும் கதை வியப்புக்கு உரியது. திருமாலிருங்குன்றத்தில் ஒரு பிலம் - சுரங்கம் - இருக்கின்றது. அதனுள் புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என மூன்று பொய்கைகள் உண்டு. புண்ணிய சரவணத்திலே நீராடினால் இந்திர வியாகரணத் தைக் கற்கலாம்; பவகாரிணியில் நீராடினால் பழம் பிறப்பை அறியலாம்; இட்டசித்தியிலே மூழ்கினால் நினைத்தவைகளை யெல்லாம் பெறலாம். பிலத்தினுள் செல்ல விரும்பினால் திருமாலை எண்ணிக் கொண்டு குன்றத்தை மும்முறை வலம் வரவேண்டும். வலம் வந்தால் சிலம்பாற்றின் கரையிலே ஒரு இயக்கி தோன்றுவாள்; அவள் பெயர் வரோத்தமை என்பது. அவள், இம்மையில் இன்பம் யாது? மறுமையில் இன்பம் யாது? எக்காலத்தும் அழியாத இன்பம் யாது? இவ்வினாக் களுக்கு விடை கூறினால் பிலத்தின் கதவைத் திறப்பேன் என்பாள். விடையிறுத்தோர்க்குக் கதவைத் திறந்து, உள்ளே போகும் வழி இதுவென்று காட்டுவாள். அவ்வழியே சென்றால், பல வாயில்களையும் கடந்து இரட்டைக் கதவு போட்ட வாயில் ஒன்றைக் காணலாம், அதையும் தாண்டிச் சென்றால் பதுமை போன்ற அழகான பெண் ஒருத்தி தோன்றுவாள். அவள், அழிவற்ற இன்பம் யாது? என்று கேட்பாள். இதற்கு விடை அளித்தால், இம்மையின்பம், மறுமையின்பம், அழிவில் இன்பம் இம்மூன்றில் ஒன்றைப் பெறலாம் என்பாள். விடையளிக்காவிட்டாலும் துன்புறுத்த மாட்டாள், வந்த வழியே அனுப்பி விடுவாள். விடையளிப் போரை, மேலே சொல்லிய பொய்கைகளின் கரையிலே கொண்டுபோய் விடுவாள். நீங்கள் விரும்பியதைப் பெறுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவாள். இக்கதையை மாங்காட்டு மறையோன் என்பவன் கோவலனிடம் கூறினான். இக்கதை ஒரு சினிமாக் கதை போல் அமைந்திருக்கின்றது. சமண மத தர்மத்தின் உண்மையை விளக்க இக்கதை கூறப்பட்டது, இதைக் கேட்ட கவுந்தியடிகள், அம் மறையோனைப் பார்த்துக் கூறுவதன் வாயிலாகச் சமண மத உண்மையைக் காணலாம். எனது அருக குமரன் அருளிச்செய்த ஆகமங்களிலே இந்திர வியா கரணத்தைக் காணலாம்; ஆதலால் புண்ணிய சரவணத்திலே பொருந்த வேண்டிய தில்லை. முன்பிறப்பிலே செய்த வினையின் பலனை இப்பிறப்பிலே அனுபவிப் பதன்மூலம் கண்கூடாகக் காண்கின்றோம்; ஆதலால் பவகாரிணியில் படிய வேண்டியதில்லை. வாய்மை, கொல்லாமை இவ்விரண்டையும் பின்பற்றி வாழ் வோர்க்கு எல்லா நலமும் உண்டு; ஆதலால் இட்டசித்தியிலே நீராட வேண்டியதில்லை. இது கவுந்தியடிகள் மறையோனுக்குத் தந்த விடை. இதிலே அருக தர்மத்தைப் பின்பற்றுவதன்மூலம் எல்லா நன்மைகளையும் பெறலாம் என்று கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அருகமத மாண்பை விளக்கவே காடுகாண் காதையிலே இக்கதை அமைக்கப் பட்டது என்பதில் ஐயம் இல்லை. மணிமேகலா தெய்வம் கோவலன் குலமுன்னோன் ஒருவன் கடலிலே செல்லும் போது நள்ளிரவிலே அவனுடைய மரக்கலம் உடைந்து விட்டது. அவன் முன்பிறப்பிலே புண்ணியமும், தானமும் புரிந்தவன். ஆதலால் ஆபத்தின்றிச் சில நாள் கடலிலேயே நீந்திக் கொண்டி ருந்தான். அப்பொழுது ஒரு தெய்வம் அவன்முன் தோன்றிற்று. நான் இத்தீவில் உள்ளவர்களை அரக்கர்கள் துன்புறுத்தாமல், இந்திரன் ஏவலின்படி பாதுகாத்து வருகின்றேன். உன் துன்பத்தைக் கண்டேன். அதை ஒழிப்பதற்காக வந்தேன், இனி நீ அஞ்சவேண்டாம். என் பெயர் மணிமேகலை. நீ முன்செய்த தானத்தால் உண்டான புண்ணியமும், உன்னைவிட்டு ஒழிய வில்லை, ஆதலால் நீ இத்துன்பத்திலிருந்து விடுதலை பெறுக. இக்கடலிலிருந்து கரை ஏறுக என்று சொல்லி அவன் துன்பத்தைத் தீர்த்தது, அவனைத் தன் மந்திரசக்தியால் ஒரு திடலிலே கரையேறச் செய்து காப்பாற்றியது. அன்றுமுதல் அந்த மணிமேகலா தெய்வமே கோவலன் குலதெய்வம் ஆயிற்று. இப்பெயரே மாதவியின் மகளுக்கு வைக்கப்பட்டது. அடைக்கலக் காதையிலே உள்ள இக்கதை தருமம் தலை காக்கும் என்ற உண்மையை உணர்த்துகின்றது. பார்ப்பனியும் கீரிப்பிள்ளையும் பார்ப்பனி ஒருத்தி கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்து வந்தாள். அதைத் தன் குழந்தைக்குக் காவலாக வைத்து விட்டு வெளியிலே சென்றாள். குழந்தையண்டை வந்த பாம்பு ஒன்றை அக்கீரிப் பிள்ளை கடித்துக் கொன்றுவிட்டது. பார்ப்பனி வரும்போது இரத்தம் வடியும் வாயுடன் கீரிப்பிள்ளை எதிர்கொண்டது, அதைக் கண்ட பார்ப்பனி கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் கடித்துக் கொன்று விட்டதாகவே நினைத்தாள்; தன் கையிலிருந்த மணையால் அதை அடித்துக் கொன்றாள். அவள் செய்த குற்றத்தை அறிந்த கொழுநன் கங்கையாட வடதிசை நோக்கிப் புறப்பட்டான், மனைவியும் அவனைத் தொடர்ந்தாள், கணவன், உயிர்க்கொலை செய்த உன்னுடன் இனி இல்லறம் நடத்த இயலாது என்று கூறினான். வடமொழி வாசகம் எழுதிய ஏடு ஒன்றை அவள் கையிலே கொடுத்தான், இவ்வேட்டை இதன் பொருளை அறிவார் கையிலே கொடுக்க என்று சொல்லி விட்டு அவன் போய் விட்டான். அவள் அவ் ஏட்டை எடுத்துக்கொண்டு வருந்திப் பல இடங்களிலும் சுற்றினாள், கோவலன் அவளை அழைத்தான், ‘நீ வருந்தி அலைவதற்குக் காரணம் என்ன? என்றான். தான் கொலை செய்த காரணத்தால் கொழுநன் தன்னை விட்டுப் பிரிந்த செய்தியைச் சொன்னாள். கொழுநன் கொடுத்த ஏட்டையும் கொடுத்தாள். கோவலன் அவளுக்குக் கைப்பொருள் தந்து ஏட்டைப் பெற்றான், அவளுக்கு ஆறுதல் உரைத்தான், அவள் செய்த கொலை - பாவம் நீங்குவதற்கான தான தருமங்களைச் செய்தான். அவள் துயர் களைந்தான், யாத்திரை சென்ற அவள் கணவனையும் தேடிப்பிடித்து அழைத்துவந்தான், அவடரகள் இருவரும் சேர்ந்து இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தான். இதுவும் அடைக்கலக் காதையிலே உள்ள கதை. கோவலன் கொடைச் சிறப்பைக் கூறுவது. உயிர்க்கொலை செய்வது பெரும் பாவம்; உயிர்க்கொலை செய்தவரோடு சேர்ந்து வாழுவதும் பாவம் என்ற தத்துவத்தை விளக்குவதே இக்கதை, இதுவும் சமணமதக் கொள்கையை வலியுறுத்திவதாகும். பொய்சாட்சி புகன்றவன் அறிவிலான் ஒருவன், பத்தினி ஒருத்தியின்மேல் பொய்ப்பழி சுமத்த நினைத்தான், அவள் நடத்தையிலே ஐயம் கொள்ளும்படி அவள் கணவனிடம் பொய்யுரைகள் புகன்றான், பொய்க்கரி புகன்றோரைப் புடைத்துண்ணும் பூதம் அவனைப் பாசத்தால் பிணித்தது, நிலத்திலே அடித்துத் தின்னத் தொடங்கியது, அவனுடைய தாய் பெருந்துயர் உற்றாள், அதுகண்ட கோவலன் அப் பூதத்தின் பாசத்துள் நுழைந்தான், எனது உயிரை உனக்கு உணவாகக் கொள்; இவனுடைய உயிரை விட்டுவிடு என்று வேண்டினான். இக்கீழ்மகன் உயிருக்காக உனது நல்லுயிரை நான் கொள்ள மாட்டேன், இப்படிச் செய்து நான் என் நிலையிலிருந்து தவற மாட்டேன் என்று சொல்லிற்று அப்பூதம். கோவலன் கண்முன் பாகவே அப்பூதம் பொய்க்கரி புகன்றவனை அடித்து விழுங்கி விட்டது, அதுகண்டு வருந்திய அக்கயவன் தாயுடன் கோவலன் மீண்டான், மாண்டவன் சுற்றத்தினர்க்கெல்லாம் அன்புடன் உதவி செய்தான்; அவர்கள் பசியின்றி வாழும்படி பாதுகாத்தான். இதுவும் அடைக்கலக் காதையில் உள்ள கதை, அவர் அவர் செய்த வினையின் பயனை அவரவர்கள்தாம் அனுபவித்துத்தீர வேண்டும் என்ற கருத்தை விளக்குவதே இக்கதை. தேவகுமாரன் கதை காவிரிப்பூம்பட்டினத்திலே-பிண்டிமரத்தின் நிழலிலே-சிலாதலத்திலே - சாரணர் அமர்ந்து அறநெறிகளைக் கூறிக் கொண்டிருந்தனர், அப்பொழுது அழகு அமைந்த திருமேனியும் அலங்காரமும் கொண்ட தேவன் ஒருவன் வந்து நின்றான், அறங்கேட்டிருந்த சாவகர்கள் அவனைக் கண்டனர்; சாரணரைப் பார்த்து, ‘இவன் யார்? என்று கேட்டனர், சாரணர் அவன் வரலாற்றை உரைத்தனர். எட்டிப்பட்டம் பெற்ற சாயலன் என்னும் வணிகன் ஒருவன் இனிது இல்லறம் நடத்தி வந்தான், உண்ணாவிரதிகள் பலரும் அவன் மனை தேடி வருவர். அவர்களை அவன் மனைவி அன்புடன் உபசரிப்பாள், ஒருநாள் ஒரு தவமுதல்வனை அவள் உபசரித்துக் கொண்டிருந்தாள், அப்பொழுது ஊராரால் துரத்தப்பட்ட கருங்குரங்கு ஒன்று அச்சத்துடன் அந்த வீட்டிலே வந்து பதுங்கிற்று; அது மாதவன் பாதங்களை வணங்கிற்று, அவன் உண்ட மிச்சிலையும், அவன் கைகழுவிய நீரையும் அருந்திற்று, மாதவன் அக் கருங்குரங்கின்பால் இரக்கம் கொண்டான். அதனை அவ்வில்லத் தலைவியிடம் ஒப்படைத்தான், உன் மக்களைப் போலவே இதையும் காப்பாற்றுக என்று சொல்லிச் சென்றான் அவளும் மாதவன் வாய்மொழிப்படி அதைப் பாதுகாத்து வந்தாள். அக்குரங்கு மரித்தபின் அதன்பொருட்டுப் பல அறங்களை ஆற்றினாள்; இது நல்ல பிறப்பை அடைக என்று வேண்டினாள். அக்குரங்கு மத்திம தேசத்திலே வாரணவாசி என்னும் நகரிலே உத்தரகௌத்தன் என்னும் அரசனுக்கு மகனாகப் பிறந்தது, நல்ல அறியும், தானம் புரியும் தன்மையும், அரசுரிமையும் பெற்று முப்பதிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான், பின்பு இறந்து தெய்வப் பிறவியைப் பெற்றான். என்னைப் பாதுகாத்த சாயலன் மனைவி செய்த தானத் தால் இழிபிறவி நீங்கினேன்; என் பழம்பிறப்பை அறிவிப்பதற்கே ஒரு கையைக் குரங்கின் கையாகப் பெற்றேன்; சாயலன் மனைவியின் தானத்தாலேயே நான் இத்தெய்வப் பிறப்பைப் பெற்றேன் என்பதைத் தெரிவிப்பதற்காகவே இத்தேவகுமாரன் இங்கே தோன்றினான் என்று சாரணர் கூறினார். இதுவும் அடைக்கலக் காதையில் உள்ள கதை. தானம் செய்வதால் - தருமம் செய்வதால் - அறம் புரிவதால் - நன்மை யுண்டு என்பதை விளக்கவே இக்கதை எழுந்தது. பத்தினிப் பெண்டிர் எழுவர் 1. காவிரிப்பூம்பட்டிணத்திலே ஒரு வணிகன் இருந்தான், அவனுக்கு ஒரே மகள், அவளை மதுரையிலுள்ள தன் மருமகனுக்கு மணம் செய்துகொடுக்க முடிவு செய்திருந்தான், அவ்வாறு மணம் முடிப்பதற்கு முன்பே அவனும், அவன் மனைவியும் மாண்டனர், ஊரார், மதுரையில் உள்ள அவன் மருமகனுக்குச் செய்தி விடுத்தனர், அம்மருமகன் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்தான், தன் மாமன் மகளை மதுரைக்கு அழைத்துச் சென்று மணம் புரிந்துகொள்ளத் தீர்மானித்தான், மாமன் சொத்துக் களுடன் மாமன் மகளையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டான், சுற்றத்தாரும் சூழ்ந்து சென்றனர். அவன் போகும் வழியிலே திருப்புறம்பியத்திலே இரவிலே தங்கியிருந்தான், அவன் கோவில்படியிலே தலை வைத்துப் படுத்து உறங்கும்போது அவனை நாகம் ஒன்று தீண்டிற்று; அவன் இறந்தான். அதுகண்ட சுற்றத்தார் அலறி அழுதனர், அவன் மாமன் மகளும் துக்கம் தாங்காமல் புலம்பினாள். அப்பொழுது அங்கு வந்த திருஞானசம்பந்தர் அவளுக்கு ஆறுதல் கூறி, மாண்ட வணிகனை உயிர்ப்பித்தார், அப்பொழுது அவனை மாமன் மகளை மணந்துகொள்ளும்படி உரைத்தார், அவன், சுற்றத்தார்களின் சாட்சியங்கள் இல்லையே, என் செய்வேன் என்றான், இங்குள்ள வன்னிமரம், கிணறு, இலிங்கம் இவைகளைச் சாட்சிகளாகக்கொள்க என்றார், அவன் அவ்வாறே மணந்து கொண்டு மதுரை சென்று வாழ்ந்தான். அவ்வணிகனுக்கு ஏற்கெனவே முதல்மனைவி இருந்தாள், அவளுக்குப் பிள்ளைகள் இருந்தனர், இந்த இரண்டாவது மனைவிக்கு ஒரே பிள்ளை, இவனும், முதல்மனைவியின் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடி வருவார்கள். ஒருநாள் முதல்மனைவியின் பிள்ளைகள், இளையாளின் பின்ளையை அடித்துவிட்டனர். அதற்காக இளையாள் அப் பிள்ளைகளைக் கடிந்து பேசினாள். அதுகண்ட மூத்தாள், இளையாளை இழிவாகப் பேசினாள். என் கணவனை முறைப்படி மணந்து கொள்ளாதவள்; இன்னாள் இனியாள் என்று குலம் கோத்திரம் தெரியாதவள்; உனக்கேன் இந்த வாய்க்கெழுப்பு - என்று கேட்டு விட்டாள். இதைக் கேட்ட இளையாள் உள்ளம் துடித்தாள், என் மணத்திற்கு வன்னியும், கிணறும், இலிங்கமும் சாட்சி உண்டு என்றாள். மூத்தாள் நகைத்து, இதை நான் நம்பமாட்டேன்; அவைகள் இங்கே வந்து சாட்சி பகருமானால் நம்புவேன் என்றாள், இளையாள் மனம் நொந்து இறைவனை வேண்டினாள்; தன் கற்பைக் காக்கும்படி பிராத்தனை செய்தனள், திருப்புறம்பி யத்திலே இருந்த வன்னியும், கிணறும், இலிங்கமும் மதுரைக் கோயிலின் வடகீழ்ப்பகுதியிலே வந்து தோன்றின. அதுகண்டு மூத்தாள் அஞ்சி வாயடங்கினாள். 2. பெண்கள் பலர் காவிரிக் கரையிலே விளையாடிக் கொண்டிருந்தனர், அப்பெழுது அவர்கள் மணலால் ஒரு பதுமை அமைத்தனர்; அதனை ஒரு பெண்ணிடம் காட்டி இதுதான் உன் கணவன் என்றனர். அப்பெண் அச்சொல்லை நம்பினாள், அப்பெழுது அலை மோதி அடித்தது, அந்தப் பெண் அம் மணற்பாவையைக் காத்து நின்றாள், அலைநீர், அப் பாவையைக் கரைக்காமல் அதைச் சுற்றிக் கொண்டு ஒடியது, இவள் தன் கற்பினால் தன் கணவன் என்ற மணல்பதுமையைக் காப்பாற்றினாள், 3. கரிகால் வளவன் மகள் தன் கணவனுடன் கடலாடினாள், அப்பொழுது கடல் கணவனை இழுத்துச் சென்று விட்டது, அவள் அந்நீரின் பின்னே சென்றாள், என் கணவனைக் காட்டாயோ என்று புலம்பினாள், உடனே கடல் அலை அவள் கணவனைக் கெண்டு வந்து நிறுத்திற்று, அவள் அவனை மகிழ்ச்சியுடன் தழுவிச் சென்றாள், 4. கற்புடைப் பெண் ஒருத்தியின் கணவன் பொருள் தேடப் பொனான், அவன் மீண்டும் வரும்வரையில் அவன் மனைவி கல்லுருவிலே நின்றாள், அவன் வரும்வரையிலே, கடற்கரைச் சோலையிலே கப்பல்களை எதிர்பார்த்துக் கொண்டே நின்றாள், அவன் பொருள் தேடிக்கொண்டு வந்தவுடன் கல்லுருவை நீத்தாள்; கணவனுடன் கூடி மகிழ்ந்தாள். 5. மற்றொரு கற்புடையப் பெண், மாற்றான் குழந்தை கிணற்றில் விழுந்த தைக் கண்டு வருந்தினாள், தன் குழந்தையை யும் கிணற்றிலே போட்டாள், மீண்டும் தன் கற்பின் சிறப்பால் இரண்டு குழந்தைகளையும் பெற்று மகிழ்ந்தாள். 6. மற்றொரு பத்தினிப் பெண் தன் கணவன் பிரிந்து போன சமயத்தில் வேறொரு ஆடவன் தன்னை உற்றுப் பார்ப்பதைக் கண்டாள், உடனே தன் முகத்தைக் குரங்குமுகமாக ஆக்கிக் கொண்டாள். தன் காதலன் வந்தபின், குரங்கு முகத்தைப் போக்கி நன் முகம் கொண்டாள். 7. இரண்டு பெண்கள் ஒற்றுமையாக இருக்கும்போது ஒருத்தி, மற்றொருத் தியைப் பார்த்து, நான் பெண்மகவைப் பெற்றால், நீ பெறும் ஆண்மகனுக்கே அப்பெண்ணை மணம் புரிந்து கொடுப்பேன் என்று உறுதிகூறினாள். இவளும் பெண்ணைப் பெற்றாள்; அவளும் ஆணைப் பெற்றாள், இரு மகவுகளும் வளர்ந்தனர்; மணப்பருவம் அடைந் தனர், அப்பொழுது ஏதோ காரணத்தால் பெண்மகவைப் பெற்றவளுடைய கணவன், அம்மகளை வேறு ஒருவனுக்கு மணம் முடிக்கத் தீர்மானித்தான். அப்பொழுது மனைவி, நான் பெண்புத்தியால் முன்பு உரைத்த உறுதிமொழி என் சிந்தையைத் துன்புறுத்துகின்றது என்றாள், இதைக் கேட்டுக்கொண்டிருந்த அச்சிறுமி-பெண்மகள் - தானே புத்தாடை அணிந்தாள், கூந்தலைச் சீவி முடித்துக் கொண்டாள், தன் அன்னையால் வாக்களிக்கப்பட்ட கணவனை நாடிச் சென்றாள். வஞ்சினமாலையிலே கூறப்பட்டுள்ள இந்த ஏழு கதைகளும் பத்தினிப் பெண்டிர் பெருமையை விளக்குகின்றன, இவற்றுள் வன்னியும், கிணறும், இலிங்கமும் சாட்சியாக வந்த கதை திருவிறையாடந் புராணத்துள் காணப்படுகின்றது, இதுவே சிறு மாறுதலுடன் சிலப்பதிகாரத்தில் உள்ளது. பொற்கைப் பாண்டியன் கதை வார்த்திகன் கதை ஆகிய கதைகளும் காணப்படுகின்றன. பசுவுக்கு நீதி வழங்கியோன் கதை, சிபி, தொடித்தோள் செம்பியன், பெருஞ்சோற்று உதியலாதன் முதலியோர் கதைகளும் கூறப்படுகின்றன. இவை களை மூவேந்தர் பெருமை என்ற பகுதியிலே காணலாம். இக்கதைகள் எல்லாம் கருத்தை விளங்கும் நோக்கம் உடையவை. இவைகளால் சிறுகதைகளின் நோக்கத்தைக் காணலாம். தமிழர் போற்றிய வடமொழி நூல்கள் சிலப்பதிகார காலத்திலே, தமிழ்நாட்டிலே இராமாயணம் போற்றப்பட்டு வந்தது; பாரதம் தமிழர்களால் கொண்டப்பட்டு வந்தது. நளன் கதையைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். மற்றும் பல புராணக் கதைகளையும் தமிழர்கள் உணர்ந்திருந்தனர், இராமன் தசரதனுடைய கட்டளையைப் பெரிது என்று எண்ணினான். அவன் அரசாட்சியைப்பற்றிக் கவலைப்பட வில்லை; அராசட்சியைப் பெறுவது மிகவும் எளிதானது என்று கருதினான். ஆதலால் அவன் தசரதன் கட்டளைப்படி கானகத்தை அடைந்தான். அப்பொழுது அந்த இராமனைப் பிரிந்த அயோத்தி நகர், இன்னது செய்வது என்று தெரியாமல் திகைத்தது. அதுபோலவே கோவலனைப் பிரிந்த காவிரிப்பூம் பட்டினத்து மக்கள் திகைத்தனர். பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று அரும்கான் அடைந்த அரும்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும்ம் (புறஞ்சேரி. 63-66) இவ்வடிகள் தசரதன் ஏவலால். இராமன் அரசாட்சியைத் துறந்து காடு சென்றான் என்ற வரலாற்றைக் குறித்தன. இராமன் தன் தந்தையின் ஏவலால், தன் மனைவி சீதையுடன் காட்டுக்குப் போனான்; சீதையைப் பிரிந்தான்; அதனால் பெருந் துன்பத்தை அடைந்தான். அந்த இராமன் வேதனைகளைப் படைத்த பிரம்மாவின் தந்தையாவான்; இதை நீ அறியாயோ? இது நீண்ட காலாமாக வழங்கும் வரலாறு அல்லவா? தாதை ஏவலின் மாதுடன் போகி காதலி நீங்கக் கடும்துயர் உழந்தோன் வேத முதல்வன் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ? நெடு மொழி அன்றோ? (ஊர்காண். 46-49) இது இராமன் சீதையுடன் காட்டுக்குச் சென்றதையும், அவன் இராவணணால் சீதையைப் பிரிந்து துன்புற்றதையும் குறித்தது. இராமன் திருமாலின் அவதாரம் என்பதையும் சுட்டிற்று. இராமன் தம்பியுடன் காட்டுக்குப் போனான். அசுரர் நகரமும், அதில் உள்ளவர்களும் போரிலே மடியும்படி அழித்தான்; பழமையான இலங்கையின் பாதுகாவலையும் தகர்த்து வெற்றி பெற்றான். இத்தகைய வீரானாகிய இராமன் பெருமையைக் கேட்டு மகிழாத காது என்ன காது? இத் திருமாலின் புகழைக் கேட்டு இன்புறாத காது என்ன காது? மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து, சோஅரணம போர்மடியத் தொல்இலங்கை கட்டுஅழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே! திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே! (ஆய்ச்சியர் குரவை) இராமன் இலக்குவனுடன் காட்டுக்குச் சென்றான்; இலங்கையை அழித்தான் என்ற வரலாற்றை இதனால் காணலாம். இராமன் திருமாலின் அவதாரம் என்பதையும் அறியலாம். கடலை அழகாகக் கொண்ட இலங்கையிலே நிகழ்ந்த இராம - ராவண யுத்தமும். கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும் (கால்கோள். 237-238) இது இராமாயணக் கதையைக் குறித்தது. சூரியனைத் தன் சக்கரத்தால் மறைத்து, இன்னும் பொழுது விடியவில்லை என்பதைக் காட்டினான் கண்ணன். கதிர் திகிரியால் மறைத்த கடல்வண்ணன் (ஆய்ச்சியர் குரவை) இது மகாபராதக் கதையைக் குறித்தது. துரியோதனாதியர்பால், நாற்றிசையும் போற்றும்படி, வேதங்கள் முழங்கிக்கொண்டு பின்வர, பாண்டவர்க்காகத் தூது சென்ற கண்ணனைப் போற்றாத நாக்கு என்ன நாக்கு? நாராயணா என்று சொல்லி ஏத்தான நாக்கு என்ன நாக்கு? மடந்தாழும் செஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை, நூற்றுவர்பால் நால்திசையும் போற்ற, படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவோ? நாராயணா என்னா நாஎன்ன நாவோ? (ஆய்ச்சியர் குரவை) இதுவும் மகாபாரதக் கதையைக் குறித்ததாகும். வலிமையுள்ள குரங்கை (அனுமானை)க் கொடியாக உயர்த்தியவன், சிறந்த வில்வீரனாகிய அருச்சுனன், காண்டவ வனத் தைத் தீக்கிரையாக்கிய காலத்தில் அவ்வனத்தில் வாழ்ந்த உயிர்கள் எல்லாம் கலக்கம் அடைந்தன. அது போலக் கண்ணகி வைத்த, மறவர் சேரியிலே பரவியவுடன் அஞ்குறைந்தவர்கள் கலங்கினர். உரக்குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன் காஎரி ஊட்டிய நாள்போல் கலங்க (அழல்படு 111-112) இவ்வடிகளும் பாரதக் கதையை நினைவூட்டின. கூற்றுவன் தன் தொழில் பெருகும்படி உயிர்த்தொகுதிகளை உண்ட ஆண்டு, மாதம், நாள், நாழிகை இவைகள் பதினெட்டு என்னும் எண்களைக்கொண்டவை என எண்ணிக்காணும்படி செங்குட்டுவன் - கனக - விசயர் போர் நடைபெற்று முடிந்தது. செயிர்த் தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட, ஒன்பதிற்று இரட்டி என்று யாண்டும், மதியும், நாளும், கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் காட்டி எண்கொள (நீர்ப்படை. 7-10) இவ்வடிகளிலும் இராமாயண - பாரதக் கதைகள் குறிக்கப் பட்டன. தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டுகள் நடந்தன; இராம - இராவணப் போர் பதினெட்டு மாதங்கள் நடந்தது. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது; செங்குட்டுவன் - கனகவிசயர் சண்டை பதினெட்டு நாழிகையில் முடிந்துவிட்டது. மேலே காட்டிய சிலப்பதிகார அடிகள் இச்செய்தியைக் குறித்தவை. நளன் புட்கரனோடு சூதாடியதனால் தனது நாட்டையும், அரசையும் இழந்தான்; தன் மனைவி தமயந்தியுடன் கொடிய காட்டை அடைந்தான். அவன் தன் மனைவியை விட்டு வேறு ஒரு பொருள்மேலும் காதல் கொண்டு பிரியவில்லை. தமயந்தியும் தீமை அடையக் கூடிய குற்றம் எதையும் செய்தவளும் அல்லள். இருந்தும், கானகத்திலே, நள்ளிரவிலே அவளை விட்டுப் பிரிந்தான். இதற்குக் காரணம் தீவினையைத் தவிர வேறு என்ன? இதைத் தமயந்தியின் தவறு என்று சொல்வது உண்டோ? வல்ஆடு ஆயத்து மண்அரசு இழந்து மெல்இயல் தன்னுடன் வெம்கான் அடைந்தோன் காதலின் பிரிந்தோன் அல்லன்; காதலி தீதொடும் படூஉம் சிறுமையள் அல்லள்; அடவிக் கானகத்து ஆயிழை தன்னை இடையிருள் யாமத்து இட்டு நீங்கியது எல்வினை அன்றோ! மந்தைதன் பிழை எனச் சொல்லும் உண்டோ? (ஊர்காண்: 50-57) இது நளன் வரலாற்றைக் குறித்தது. இந்திரன் மலைகளின் சிறகுகளை அறுத்தான் என்னும் கதை, கந்தபுராணக் கதைக் குறிப்புகள், சிவபெருமானைப் பற்றிய புராணக் கதைக் குறிப்புகள், வடமொழி வேதம், வேத ஒழுக்கம். வேள்வி முதலியவைகளைப்பற்றிய குறிப்புக்கள் எல்லாம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. இதனால் சிலப்பதிகார காலத்து மக்கள் மொழிவெறுப்பற்றவர்களா யிருந்தனர்; வடமொழி நூல்களைப் போற்றினர். பாராட்டினர் என்றே கருதலாம். தெய்வங்களும் கோவில்களும் சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டு மக்கள் பல தெய்வங் களை வணங்கிவந்தனர். பல சிறுதெய்வங்களையும், பல பெருந் தெய்வங்களையும் தமிழ் மக்கள் போற்றிவந்தனர். தமிழகம் எங்கும் தெய்வங்களுக்குத் தினப்படி பூசைகள் நிகழ்ந்தன; அடிக்கடி திருவிழாக்களும் நடத்தப்பட்டன. இந்திரன் தமிழகம் முழுவதும் தெய்வமாகப் போற்றப் பட்டான். மருதநிலத்தெய்வம் இந்திரன், ஆதலால், நல்ல வளம் பொருந்திய ஊர்களில் எல்லாம் இந்திரனுக்குக் கோவில்கள் இருந்தன. ஆண்டுதோறும் காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திர விழா நடைபெற்றது, அந்த இந்திர விழாவைக் காண, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் வந்து கூடுவார்கள், இந்த இந்திரவிழாச் சிறப்பைச் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே காணலாம். இந்திரன் பாரதநாட்டு மக்கள் அனைவராலும் போற்றப் பட்டுவந்த தெய்வம், வேதங்களிலே இந்திரனைப்பற்றிய தோத்திரப் பாடல்கள் ஏராளமாக உண்டு. மோகினிப் பிசாசு என்று ஒரு தெய்வம் உண்டு. இது அழகான பெண்உருவில் வந்து ஆண்களைக் காமவிகாரம் கொள்ளச் செய்யுமாம், இவ்வாறு இத்தெய்வத் தைப் பற்றிப் பல கதைகள் சொல்லுவார்கள். இத்தெய்வத்தைப்பற்றியும் சிலப்பதி காரத்தில் சொல்லப்படு கின்றது. ஆர்அஞர்த் தெய்வம், கான் உறை தெய்வம் என்ற பெயர்களால் இத்தெய்வம் சுட்டப்படு கின்றது. வனதேவதை என்றும் இதைக் கூறுவர். கடத்தற்கு அரிய வழியிலே மிகுந்த துன்பத்தைத் தரும் தெய்வம் ஒன்று உண்டு; அத்தெய்வம் தோன்றி இடையூறு செய்யாது; அச்சம் விளைக்காத நயமான முறையிலே வழிப் போவாரைத் தடுக்கும். ஆர்இடை உண்டுஒர் ஆர்அஞர்த் தெய்வம் நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும் (காடுகாண். 144-146) இவ்வாறு இத்தெய்வத்தின் தன்மை கூறப்படுகின்றது. இத்தெய்வம் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றும் காணக் கிடக்கின்றது. கோவலன் ஒரு பொய்கையிலே காலைக்கடன் கழித்து நின்றான், அப்போது இத்தெய்வம் மாதவியின் தோழியாகிய வசந்தமாலை வடிவிலே வந்தது; கோவலனை மயக்கும் பொருட்டு, மாதவி சொல்லியதாகச் சில சொற்களை மொழிந்தது; கோவலன் பாதங்களில் வீழ்ந்து வணங்கிற்று. கோவலன், அது வனதேவதை என்று ஐயுற்றான், உடனே அவன் துர்க்கையின் மந்திரத்தைச் சொல்லி அத்தெய்வத்தின் சூழ்ச்சியை அகற்றினான், இந்த நிகழ்ச்சியைக் காடுகாண் காதையிலே 165 முதல் 200 வரையுள்ள அடிகளிலே காணலாம். ஐயை பாலைநிலத்தின் தெய்வம், வேட்டுவர்கள் இத் தெய்வத்தைக் கொண்டாடுவார்கள், பாய்கலைப் பாவை, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, சங்கரி, அந்தரி முதலிய பல பெயர்களால் இத்தெய்வம் வழங்கப்படுகின்றது, துர்க்கை, காளி என்ற பெயர்களும் இத்தெய்வத்தைக் குறிக்கும். வேட்டுவர்களும், அவர்கள் பெண்களும் இத்தெய்வத்திற்குப் பலியிட்டுப் போற்றுவார்கள். இதை வேட்டுவ வரி என்னும் பகுதியிலே காணலாம். கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் பாலைவன வழியிலே செல்லும்போது வெப்பத்தால் களைத்தனர், களைப்புத் தீர ஐயைக் கோட்டத்தின் ஒருபுறத்திலே ஒதுங்கினர், அப்பொழுது அங்கு நிகழ்ந்த விழாவை அவர்கள் கண்டனர், இவ்வாறு தொடங்குகின்றது வேட்டுவ வரிக் காதை. ஐயை சிவபெருமான் வடிவாகவும் திருமால் உருவாகவும் போற்றப்படு கின்றாள், அவளை வேடர்கள் எவ்வாறு வணங்கு கின்றனர் என்பதைப்பற்றி வேட்டுவ வரியிலே விரிவாகக் கூறப் படுகின்றது. கண்ணன் சரிதம் சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றது, ஆய்ச்சியர் குரவையிலே இதைக் காணலாம். ஆயர் முல்லைநில மக்கள். அந்நிலத் தெய்வம் மாயோன்; செயல்களும் விரிவாகக் கண்ணன் திருமாலின் அவதாரம். ஆய்ச்சியர் குரவையிலே திருமாலின் அவதாரங்கள் பல குறிப்பிடப்பட் டுள்ளன. கண்ணன் பால லீலைகளும் ஏனைய செயல்களும் விரிவாகக் காணப் படுகின்றன. பாம்பு கயிறாகக் கடல்கடைந்த மாதவன் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாண்ஆக்கிக் கடல்வண்ணன் பண்டுஒருநாள் கடல் வயிறு கலக்கினையே! இவைகள், தேவர்கள் பாற்கடலைக் கடையத் திருமால் உதவி செய்த கதையைக் குறித்தன. திரண்டு அமரர் தொழுதுஏத்தும் திருமால்! நின்செம்கமல இரண்டு அடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே! இது, திருமால் வாமனாவதாரம் எடுத்ததையும், மாவலிபால் மண்பெற்றுத் திரிவிக்கிரம அவதாரமாகத் திகழ்ந்ததையும் குறித்தது. மூவுலகும் ஈர் அடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவியசேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து சோ அரணம் போர்மடியத் தொல் இலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே! திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே! இது திரிவிக்கிரம அவதாரத்தையும், இராமாவதாரத்தையும் குறித்தது. பெரியகோவில் என்று வைணவர்களால் பாராட்டபடும் திருவரங்கம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. திருமால் திருவரங்கத்திலே பொன்னிற உருவுள்ள-ஆயிரம் தலைகளையுடைய - ஆதிசேடனாகிய பாம்புப்படுக்கை யிலே பள்ளிகொண்டிருக்கின்றார், அக்காட்சி, நீலமேகம் ஒன்று, பொற் குன்றம் ஒன்றின்மேல் அடைத்துப் படுத்திருப்பதுபோல் காணப்படு கின்றது. நீலமேகம் நெடும்பொன் குன்றத்துப் பால்விரிந்து அகலாது படிந்தது போல, ஆயிரம் விரித்துஎழு தலைஉடை அரும்திறல் பாயல் பள்ளி பலர்தொழுது ஏத்த விரிதிரைக் காவிரி வியன்பெரும் துருத்தி திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும் (காடுகாண். 35-40) இவ்வடிகள் திருவரங்கத்தின் காட்சியைக் காட்டுகின்றன, திருவேங்கடத்தின் காட்சி கீழ்வருமாறு சித்திரிக்கப்பட்டிருக் கின்றது. வேங்கடமலையிலே சிறந்த அருவி உண்டு, அந்த மலையின் உச்சியிலே, சூரியனும் சந்திரனும், இருபுறமும் உயர்ந்து காணப்படும் நடுஇடம் ஒன்றுன்டு. அந்த இடத்திலே, திருமால் சங்கு சக்கரங் களை முறையே வலக்கரத்திலும், இடக்கரத்திலும் ஏந்தி நிற்கின்றார்; அழகிய ஆரத்தை மார்பிலே பூண்டிருக் கின்றார்; பொன்னாடையை உடுத்தியிருக்கின்றார். இவ்வாறு செந்தாமரைக் கண்ணனாகிய திருமால், நின்றகோலத்திலே காட்சியளிக்கின்றார், இத்தோற்றம், நல்ல நீலநிறமுள்ள மேகம் ஒன்று, தன் மின்னலாகிய புத்தாடை யணிந்து, தன் ஒளியாகிய அணிகலம் பூண்டு, நின்று காட்சி தருவதைப்போல் காணப்படு கின்றது. வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குஉயர் மலயத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து விளங்குவில் பூண்டு நல்நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங்கண் நெடி யோன் நின்ற வண்ணமும் (காடுகாண். 41-51) இவ்வடிகளிலே வேங்கடத்தின் விழுப்புகழ் பேசப்பட்டன. திருமால் குன்றம் என்ற பெயரால் அழகர்மலை கூறப்படு கின்றது. அதன் பெருமை, அதில் உள்ள சிலம்பாறு, புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்னும் தீர்த்தங்களின் மகிமை இவைகள் எல்லாம் காடுகாண் காதை 91 முதல் 140 வரையில் உள்ள அடிகளிலே காணப்படுகின்றன. இதைச் சிறுகதை என்னும் பகுதியிலே காணலாம், சிலப்பதிகாரத்தில் இன்னும் பலவிடங்களில் திருமாலைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம், சிலப்பதிகார காலத்திலே பலதேவனும் தெய்வமாகப் போற்றப்பட்டான். நாளங்காடிப் பூதம், வெள்ளிடைமன்றப் பூதம், பூதசதுக்கப் பூதம், பாசண்டச் சாத்தன், வசுக்கள் எண்மர், பன்னிருதிவாகரர், பதினோரு உருத்திரர், மருத்துவர் இருவர் ஆகிய நால்வகைத் தேவர்கள், பதினெண்வகைத் தேவகணங்கள் இந்திரவிழவு ஊர்எடுத்த காதையிலே காணப்படுகின்றன. நால்வகை வருண பூதங்கள் மதுராபதித் தெய்வம், அக்கினி தேவன் இவைகள் அழல்படு காதையிலும், கட்டுரை காதையிலும் காணப்படுகின்றன. இன்னும் திருமகள், கலைமகள், மன்மதன், கூற்றம் முதலிய தெய்வங்களைப் பற்றியும் காணலாம். முருகனைப் பற்றிப் பலவிடங்களில் சிலப்பதிகாரத்திலே காணலாம். முருகன் குறிஞ்சிநிலத் தெய்வம். குறவர்கள் முருகனைப் போற்றி விழா எடுத்ததைப்பற்றிக் குன்றக்குரவையிலே கூறப்படு கின்றது. சரவணப் பூம்பள்ளி அணைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான் இது, முருகன் சரவணப் பொய்கையிலே, தாமரைப் பள்ளியிலே, கார்த்திகைப் பெண்கள் அறுவராலும் பால் கொடுத்து வளர்க்கப் பட்டான் என்னும் கதையைக் குறித்தது. அணிமுகங்கள் ஈர்ஆறும் ஈர்ஆறு கையும் இணையின்றித் தான் உடையான் எய்தியவேல், அன்றே பிணிமுகம்மேற் கொண்டு, அவுணர் பீடுஅழியும் வண்ணம் மணிவிசும்பின் கோன்ஏத்த மாறுஅட்ட வெள்வேலே இவ்வடிகளில் முருகன் வரலாறு சுருக்கமாகக் காணப்படுகின்றது. முருகனுக்கு ஆறு முகங்கள், பன்னிரண்டு கைகள், மயில் வாகனம், வேலாயுதம் இவைகள் உண்டு. அவன் இந்திரன் வணங்கும்படி-அவன் துயர் தீர-தன் வேற்படையால் அசுரர்களை அழித்தான். இது மேலே காட்டிய அடிகளில் உள்ள வரலாறு. பார்இரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டுஒருநாள் சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே என்று முருகன் கடலுள் புகுந்து மறைந்த சூரனைக்கொன்ற கதை கூறப்படு கின்றது. குருகு பெயர்க் குன்றம் கொன்றான் என, முருகன் கிரவுஞ்ச கிரியைப் பிளந்த கதை சுட்டப்படு கின்றது. ஆல்அமர் செல்வன் புதல்வன் கயிலை நன்மலை இறைமகன் மலைமகள் மகன் என, முருகன் பரமசிவன் - பார்வதி புத்திரனாகக் குறிக்கப்படு கின்றான். நீலப் பறவைமேல் நேர்இழை தன்னோடும் ஆல்அமர் செல்வன் புதல்வன் வரும் மயிலின்மேல் வள்ளியம்மையுடன், சிவபெருமான் புதல்வன் வருவான். குறமகள் அவள்எம் குலமகள் அவளொடும் அறுமுக ஒருவ! நின் அடியினை தொழுதேம் எமது குலமகளாம் குறமகளாகிய வள்ளியுடன் காணப்படும் ஆறுமுகங் களையுடைய ஒப்பற்றவனே! உனது இரண்டு அடிகளையும் பணிகின்றோம். இவ்வாறு முருகன் போற்றப்படுகின்றான். இங்கே வள்ளியை மட்டுந்தான் முருகன்மனைவி யென்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு மனைவியாகிய தெய்வயானையைப்பற்றிய குறிப்பு குன்றக் குரவையிலே காணப்படவில்லை. திருச்செந்தூர், திருச்செங்கோடு, வெண்குன்றம், ஏரகம் என்பவை முருகன் உறையும் திருப்திகளாகக் கூறப்பட்டிருக் கின்றன. வெண்குன்றம் என்பது சுவாமிமலை எனச் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் கூறியுள்ளார். திருவேரகம் என்பது ஒரு மலைநாட்டுத் திருப்பதி என நச்சினார்க்கினியர் நவின்றுள்ளார். ஆதலால் அது ஒரு மலைநாட்டுத் திருப்பதியாகத்தான் இருக்க வேண்டும் பிற்காலத்தினர், திருவேரகம் என்பது சுவாமிமலை என்று கொண்டனர், இது தவறு என்பதில் ஐயம் இல்லை. சிவபெருமானைப்பற்றிச் சிலப்பதிகாரத்திலே பல இடங்களிலே காணப்படு கின்றன. பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலம் (காடுகாண். 73-74) பரமசிவன் பிறைச்சந்திரனையும், மலர்மாலையையும் முடியில் அணிந்தவன்; கருக்கான முனையையுடைய சூலாயுதத்தை ஏந்தியவன். இதனால் சிவபெரு மான் தோற்றத்தைக் காணலாம். சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உண்டு; தேவர்களுக்காக நஞ்சுண்டு, நீலகண்டன் ஆனான்; வாசுகியை நாணாகவும், இமயத்தை வில்லாகவும் கொண்டு திரிபுரத்தை எரித்தான்; யானைத் தோலைப் போர்த்தியவன்; புலித் தோலை உடுத்தியவன்; கொன்றை மாலையைத் தரித்தவன், இவையெல்லாம் வேட்டுவ வரியிலே காணலாம். உமையவள் ஒருதிறன் ஆக, ஓங்கிய இமையவள் ஆடிய கொடுகொட்டி ஆடலும் என்று, சிவபெருமானுடைய நடனத்தைப் பற்றிக் கடலாடு காதையிலே காணப் படுகின்றது. உமைஒரு பாகத்து ஒருவன் என்றும், இமையவர் உறையும் இமையச் செல்வரைச் சிமையத் தெய்வம் என்றும் நடுகற் காதையிலே சிவபெருமானைப்பற்றிக் காணப் படுகின்றன. சிவமூர்த்தங்களில் ஒன்றாகிய தட்சிணாமூர்த்தி என்னும் பெயர் சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் வழங்கியிருந்தது. சங்க இலக்கியங்களிலே இப்பெயர் காணப்படவில்லை சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் ஆல்அமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் (கட்டுரை.90-91) சிறந்த வார்த்திகன் என்பவன் மகன். கல்லாவின் கீழ் இருந்து நால்வர்க்கு உபதேசித்த சிவபெருமான் பெயர் கொண்டு வளர்ந்தவன். தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து (கட்டுரை 95) அந்த வார்த்திகன் புதல்வன் பெயர் தக்கிணன் என்பது, தக்ஷிணன்; தக்ஷிணா மூர்த்தி என்ற பெயரே இவ்வாறு தக்கிணன் என நின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் இருந்த கோவில் களைக் குறிப்பிடும்போது, சிவபெருமான் கோவிலையே சிலப்பதிகாரம் முதன்மையாகக் குறிப்பிடுகின்றது. இதனால் சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் சிவவழிபாடு சிறந்திருந்தது என்று கூறலாம். சிலப்பதிகாரத்துத் தமிழ்மக்கள் அருகக் கடவுளையும் வணங்கி வந்தனர். அருகமத தத்துவங்கள் சாரணர்களால் தமிழ்நாட்டில் உபதேசிக்கப்பட்டன. இவ்வாறே புத்தமத தத்துவங்களும் போற்றப் பட்டன. காவிரிப்பூம்பட்டினம், மதுரை முதலிய இடங்களிலும், வேறு பல இடங்களிலும் அருகப் பள்ளிகளும், புத்தர் பள்ளிகளும் இருந்தன. அருகரும், புத்தரும் தமிழ்மக்களால் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். இவைகளைத் தவிர பேய், பிசாசு, பூதம் என்று சொல்லப் படும் சிறு தெய்வங்களை யெல்லாம் கூடத் தமிழர்கள் வணங்கி வந்தனர். தமிழ்நாட்டில் எங்கும் தெய்வ நம்பிக்கையில் மூழ்கிய மக்களே வாழ்ந்துவந்தனர். இவ்வுண்மை களையெல்லாம் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. சிலப்பதிகார ஆசிரியர் எத்தகைய வெறுப்பும் விருப்பும் இல்லாதவர். அவர் காலத்தில் தமிழத்தில் இருந்த மக்கள்நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். தமிழகத்திலே பல தெய்வங்கள் வாழ்ந்தன. அவைகளைத் தமிழர்கள் பல முறைகளில் வணங்கினர்; அவைகளுக்கு விழாச் செய்து கொண்டாடிக் குதூகலித்தனர். இந்திர வணக்கம், ஐயை வணக்கம், திருமால் வணக்கம், சிவ பெருமாள் வழிபாடு, முருகன் வணக்கம், அருகர் வணக்கம், புத்தர் வணக்கம் இவைகள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தன. ஆனால், விநாயகர் வணக்கம்மட்டும் சிலப்பதிகாரத்தில் காணப்படவில்லை. நெய்தல் நிலத்து மக்கள் வருணனைத் தெய்வமாகக் கொண்டவர்கள். சிலப்பதிகார காலத்திலே வருணனை வழிபடும் வழக்கம் குறைந்துவிட்டது, அல்லது மறைந்துவிட்டது என்று எண்ண இடந்தருகின்றது. பட்டினப்பாலையிலே, பரதவர்கள் கடற்கரையிலே சுறா மீன் எலும்பை நட்டு அதற்குப் பூசை செய்தனர் என்ற செய்தி காணப்படுகின்றது. இது வருணன் என்னும் நெய்தல் நிலத் தெய்வத்தைப் பரதவர்கள் வணங்கும் பண்டைக்கால முறை. சிலப்பதிகாரத்தில் இவ்வழிபாடு காணப்படவில்லை. புகார் நகரக் கோவில்கள் சிலப்பதிகார காலத்திலே தமிழகத்திலே பல கோவில்கள் இருந்தன. அவைகள் பல தெய்வங்களுக்கான கோவில்களாக இருந்தன. அவைகளை இந்நூல் தெளிவாக உரைக்கின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திரனுக்குத் தனிக்கோவில் இருந்தது. இந்திரன் படையான வச்சிராயுதம் நிற்கும் கோவில், அவன் வாகனமாகிய ஐராவதம் என்னும் யானை நிற்கும் கோவில், கற்பகத்தரு நிற்கும் கோவில் இவைகள் தனித்தனியே இருந்தன. வஞ்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்துக் காள்கோள் விழவின் கடைநிலை சாற்றித், தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து மங்கல நெடும்கொடி வான்உற எடுத்து (இந்திர விழவு. 141-146) வச்சிரக் கோட்டத்திலிருந்த முரசை ஐராவதம் நிற்கும் கோட்டத்துக்குக் கொண்டுவந்தனர்; யானையின்மீது ஏற்றினர்; இந்திர விழாவின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவித்தனர்; கற்பகத்தருக் கோட்டத்திலிருந்த கொடியை வானிலே பறக்கும் படி ஏற்றினர். இவ்வாறு இந்திர விழாவிலே கொடியேற்று விழாவைப் பற்றிக் கூறப்பட் டுள்ளது. இதனால், வச்சிரக் கோட்டம் ஐராவதக் கோட்டம், கற்பகத் தருக் கோட்டம் முதலிய கோவில்களைக் காணலாம். சிவபெருமான் கோவில், முருகன் கோவில், பலதேவன் கோவில், திருமால் கோவில் இவைகள் எல்லாம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தன. பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் (இந்திர விழவு. 169-172) இவ்வடிகளால் மேலே குறித்த கோவில்களைக் காணலாம். அருகர் கோவிலுக்கு ஸ்ரீ கோவில் என்று பெயர். காவிரிப் பூம்பட்டினத்திலே இக்கோவில் இருந்தது. அருகர் பள்ளிகளும், புத்தர் பள்ளிகளும் இருந்தன, தருமங்களைப் போதிக்கும் வேறு இடங்களும் இருந்தன. அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும் புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் (இந்திர விழவு. 179-180) என்பதனால் இதைக் காணலாம். புறநிலைக் கோட்டம் என்பது ஸ்ரீ கோவில், ஸ்ரீ கோவில்: அருகன் கோவில். நாடுகாண் காதையிலே புத்த விகாரங்கனைப்பற்றியும், அருகர்க்குரிய சிலாதலங்களைப்பற்றியும் கூறப்படுகின்றன. பணை ஐந்து ஒங்கிய பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர விகாரம் ஏழ்உடன் போகி (நாடுகாண். 11-14) ஐந்து கிளைகள் பொருந்திய மகாபோதி மரத்தின் கீழே ஞானம் பெற்றவர் புத்தர். அவருடை அறவுரைகளைப் போதிக்கும் அந்தரசாரிகள் வந்து அமர்ந்து புத்த தர்மங்களைப் போதிப் பார்கள். இத்தகைய இந்திர விகாரம் ஏழையும் கோவலன் வணங்கினான். இதனால் பௌத்த மதப் பள்ளிகள் காவிரிப்பூம் பட்டினத்திலே இருந்தனவென்பதைக் காணலாம். கோவலன் பௌத்தப் பள்ளிகளை வணங்ககியபின், அருகர்களின் சிலாதலத்தையும் வணங்கினான். பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல் நீர் அணி விழவினும், நெடும்தேர் விழவினும் சாரணர் வரூஉம் தகுதிஉண்டாம் என உலக நோன்பிகன் ஒருங்குடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு (நாடுகாண். 21-25) அழகு மிகுந்த மலர்களையுடைய பிண்டியின் நிழலிலே, சாரணர்கள் அமரும் சிலாதலம் இருந்தது. அது, நீராட்டு விழா வின்போதும், பெரிய தேர் விழா வின்போதும் சாரணர்கள் வந்து மக்களுக்கு அருக தர்மத்தை உபதேசிப்பார்கள் என்று கருதிச் சாவகர்களால் இடப்பட்டதாகும். இதனையும் கோவலன் வணங்கி வலம்கொண்டான். சாவகர்: அருக தர்மத்தைப் பின்பற்றி நடக்கும் இல்லறத்தார். இவர்களுக்கு உலகநோன்பிகள் என்றும் பெயர். புகாரில் அருகர் பள்ளிகளும் இருந்தன என்பதை மேலே காட்டிய அடிகளால் அறியலாம். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த கோவில்களைப் பற்றிக் கனாத்றிம் உரைத்த காதையிலும் காணப்படுகின்றன. கற்பகத்தருக் கோவில், ஐராவதக் கோவில், பலதேவர் கோவில், சூரியன் கோவில், கைலாயக் கோவில், முருகன் கோவில், இந்திரன் கோவில், அருகன் கோவில், சந்திரன் கோவில் முதலிய கோவில்கள் காணப்படுகின்றன. அமரர்தருக் கோட்டம்; வெள்யானைக் கோட்டம்; புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்; பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம்; ஊர்க்கோட்டம்; வேல்கோட்டம்; வச்சிரக் கோட்டம்; புறம்பணையான் வாழ்கோட்டம்; நிகந்தக் கோட்டம்; நீவரக் கோட்டம் (கனாத்திறம், 9-13) இவ்வடிகளும் காவிரிப்பூம்பட்டினத்திலே இன்னின்ன கோவில்கள் இருந்தன என்பதைக் காட்டுகின்றன. காவிரிப்பூம்பட்டினத்திலே பள்ளிகொண்ட பெருமாள் கோவில் இருந்தது. இதனை. அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து (நாடுகாண். 9-10) அழகிய பாம்புப்படுக்கையிலே யோக நித்திரை செய்து கொண்டிருக்கும். நீலமணிபோன்ற நிறத்தையுடைய திருமால் கோவிலை வலம்செய்து நீங்கி என்பதனால் காணலாம். கோவலன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்ட போது புகார் நகரிலே திருமால் கோவிலையும் வணங்கிப் புறப்பட்டான். இச்செய்தியையே மேலேகாட்டிய அடிகள் குறித்தன. ஐயைக்குத் தனிக் கோவில் இருந்தது, இதனை, ஐயைக் கோட்டத்து எய்யா ஒரு சிறை வருந்து நோய் தணிய இருந்தனர் (வேட்டுவரி. 4-5) கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும், ஐயைக் கோட்டத்திலே, யாரும் போகாத ஒரு பக்கத்திலே, வழி நடந்த வருத்தம் தீரத் தங்கியிருந்தனர் என்ற அடிகளர்ல் அறியலாம். மதுரை நகரக்கோவில்கள் மதுரை நகரத்திலே அக்காலத்திலிருந்த கோவில்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் சொல்லுகின்றது. சிவபெருமான் கோவில், திருமால் கோவில், பலதேவன் கோவில், முருகன் கோவில், அறத்துறைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி அறிவுறுத்தும் சமணர், புத்தர் முதலியவர்களின் பள்ளிகள் இருந்தன. நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும், உவணச் சேவல் உயர்ந்தோன் நியமமும், மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவல் கொடி யோன் கோட்டமும், அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும். (ஊர்காண். 7-11) என்ற அடிகள் மதுரையிலிருந்த கோவில்களைக் குறித்தன. ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன். எனக் கால்கோள் காதையிலே திருவநந்தபுரத்துக் கோவிலும், திருமாலின் பள்ளிகொண்ட கோலமும் கூறப்பட்டுள்ளன. மேலே காட்டியவைகளைக்கொண்டு, சிலப்பதிகார காலத்திலே தமிழகம் முழுவதும் பரவிக்கிடந்த கோவில்களைக் காணலாம். சிவன் கோவில், திருமால் கோவில், அருகன் கோவில், இந்திரன் கோவில், ஐராவதக் கோவில், பலதேவன் கோவில், சூரியன் கோவில், சந்திரன் கோவில், சாத்தன் கோவில்; இன்னும் பேய், பிசாசு, பூதங்களுக்கான கோவில்கள்; மன்மதன் கோவில், திருமகள் - கலைமகள் கோயில்கள் - இவைகள் தமிழகத்திலே இருந்தன. புத்தர் பள்ளிகளும், அருகர் பள்ளி களும், வேறு அறம் போதிக்கும் இடங்களும் தமிழகத்திலே இருந்தன. இவைகளைத் தமிழ் மக்கள் வணங்கி வழிபாடு செய்துவந்தனர். காவிரிப்பூம்பட்டினம், சீரங்கம், உரையூர், திருவேங்கடம், மதுரை, திருச்செந்தூர், திருமாலிருங்குன்றம், திருச்செங்குன்று, சுவாமிமலை, திருவேரகம், கச்சிநகர், திருவநந்தபுரம் முதலிய தலங்களின் பெயர்களும் சிலப்பதிகாரத்திலே காணப்படு கின்றன. வேதமும் வேள்வியும் சங்க காலத்திலேயே தமிழகத்தில் வடமொழி வேதங்கள் வழங்கிவந்தன. வேதங் கற்ற மறையோர்கள் மக்களால் பாராட்டப் பட்டுவந்தனர், நாட்டிலே வேதமுறைப்படி வேள்விகள் நடை பெற்று வந்தன. மன்னர்களும், மற்றவர்களும் வேத வேள்விகளை ஆதரித்து வந்தனர். இவ்வுண்மைகளைச் சங்க இலக்கியங் களிலே காணலாம். பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் சேர மன்னன் வேள்விகள் பல செய்தான். தன்னைப் பாடிய பாலைக் கௌதமனார் என்னும் புலவர்பொருட்டுப் பத்துப் பெரிய வேள்விகள் செய்தான். பத்தாவது வேள்வியைச் செய்து கொண்டிருக்கும்போது கௌத மனாரும், அவர் பத்தினியும் சுவர்க்கம் அடைந்தனர். இச்செய்தி, பதிற்றுப்பத்திலே மூன்றாம் பத்தின் பதிகத்தில் காணப் படுகின்றது. இவ்வரலாற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னைப்பற்றிப் புறநானூற்றிலே காண்கிறோம். இவன் பல யாகங்களைச் செய்த பாண்டியன். தொல்காப்பியர் வேதங்களைப்பற்றிக் கூறியிருக்கின்றார். சங்க நூல்களை நடுநிலையிலே நின்று ஆராய்வோர், சங்க காலத்திற்கு முன்பே வடமொழி வேதங்கள் தமிழ்நாட்டிலே வழங்கின என்பதை உணர்வார்கள். பாரதநாட்டு நாகரிகம் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருந்தது என்ற உண்மையை உணர் வார்கள். இன்று சிலர் சொல்வதுபோல் வடவர் தென்னவர் என்ற வேற்றுமைகள் அக்காலத்தில் இல்லை என்பதையும் காண முடியும். சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாடெங்கும் வேதங்கள் ஓதப்பட்டு வந்தன; வேதமறிந்த மறையோர்கள் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் வேதம் ஒதினர்; நாட்டு நலங் கருதி வேள்விகள் செய்தனர்; மன்னர்களுக்கும், மக்களுக்கும் அறநெறி களைப் போதித்துவந்தனர்; உயர்ந்த ஒழுக்கம் உள்ளவர்களாய்ப் பலரும் போற்ற வாழ்ந்தனர். மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் மரபின் தீமுறை ஒருபால் (இந்திர விழவு. 174-175) மிகுந்த முதுமையையுடைய முதல்வனாகிய நான்முகனால் அருளப்பட்டவை; உண்மையில் தவறாதவை; நான்காக அமைந்தவை. இவ்வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி வேள்விகள் ஒரு பக்கம் நடைபெற்றன. காவிரிப்பூம் பட்டினத்திலே யாகங்கள் நடைபெற்றதை இவ்வடிகள் காட்டுகின்றன. மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும் மங்கல மறையோர் இருக்கையும் (நாடுகாண். 143-147) மழைக்குக் கருவையுண்டாக்கும் யாகத்தீ விளங்கும் வேள்விச் சாலை; அவ் வேள்விச்சாலையிலே, வேதியர்கள் தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கும் வேள்வித்தீயில் நறும்புகை எழும். இப்புகை மிக உயர்ந்த மாளிகைகளை எல்லாம் மூடிக் கொள்ளும். அதனால் அம் மாளிகைகள் மேகத்தால் சூழப்பட்ட மலைகள் போலக் காணப்படும். மறையோர்கள் வாழும் இடம் இவ்வாறு காட்சியளிக்கும். கவுந்தி, கண்ணகி, கோவலன் மூவரும் மதுரைக்குச் செல்லும் வழியிலே இத்தகைய ஊர்களைக் கண்டனர் என்று கூறப்படுகின்றது. நான்மறை அந்தணர் நவின்ற ஒதையும் (புறஞ்சேரி. 141) நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர்கள் அவ்வேதங் களைச் சுருதி குன்றாமல் நவில்கின்றனர்; வைகறைப்போதில் இவ்வோசை கேட்கின்றது. விடியற்காலத்திலே மதுரை நகரத்திலே என்னென்ன ஓசைகள் கேட்கின்றன என்பதைச் சிலப்பதிகார ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அப்பொழுது வேதம் ஓதும் ஒசையும் கேட்கின்றது என்பதை மேலே காட்டியவாறு குறித்தார். ஒத்துடை அந்தணர் உரைநூல் கிடக்கையின் தீத்திறம் புரிந்தோன் செய் துயர் நீங்க, தானம் செய்து, அவள்தன் துயர்நீக்கி, கானம் போன கணவனைக் கூட்டி, ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து, நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ! (அடைக்கல. 70-75) தீமை செய்த பார்ப்பனியின் துயர் நீங்கும்படி, வேதத்தையுடைய அந்தணர்களின் அறநூல் முறையிலே பலவகையான தானங் களைச் செய்தாய்! அவள் துன்பத்தை அகற்றி, காட்டுக்குப் போன அவள் கணவனை அழைத்துவந்தாய்! அவர்கள் வாழ் வதற்குப் வேண்டிய செல்வங்களைக் கொடுத்தாய்! அவர்களை நன்றாக வாழச்செய்த அழியாத செல்வத்தையுடையவனே இது கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியின் கதையைக் குறித்தது. கோவலன் அவள் துன்பத்தைப் போக்கிய செய்தியை உரைத்தது. இங்கும் வேதம் பாராட்டப்பவதைக் காணலாம். இக்கதை சிறுகதைகள் என்னும் பகுதியிலும் காட்டப்பட்டது. காதின் மறைநா ஓசை அல்லது யாவதும் மணிநா ஓசை கேட்டதும் இலனே (கட்டுரை. 30-32) வேதம் ஓதும் ஓசையைத்தான் எப்பொழுதும் காதிலே கேட்டுக்கொண்டிருப்பான்; ஒருசமயமாவது, குறை சொல்லும் பொருட்டு அடிக்கப்படும். ஆராய்ச்சிமணியின் ஒசையை அவன் கேட்டதேயில்லை. இவ்வாறு பாண்டியன் நெடுஞ்செழியன் பாராட்டப்படு கின்றான். தமிழ்ப் பாண்டியர்கள் வேதநூலில் வைத்திருந்த அன்பையே இது காட்டுகின்றது. கோவலன், கண்ணகி, கவுந்தி மூவரும் மதுரைக்குப் போகும் பழியிலே உறையூரில் ஒரு சோலையிலே தங்கியிருந்தனர். அப்பொழுது மாங்காடு என்னும் ஊரைச் சேர்ந்த மறையோன் ஒருவன் அவர்களைச் சந்திக்கின்றான் அவன் மாமுது மறையோன் மாமறையாளன் தீத்திறம் புரிந்தோன் மாமறை முதல்வ மாமறையோன் நலம்புரி கொள்கை நான்மறையாள என்று பாராட்டப்படுகின்றான். அந்த மாங்காட்டு மறையோன் வேதங்களை அறிந்தவன்; வேள்விகளைச் செய்தவன்; சிறந்த ஒழுக்கம் உள்ளவன். ஆவான். மாடலன் என்னும் மறையோன் தலைச்செங்கானம் என்னும் ஊரினன். அவன் மதுரைப் புறஞ்சேரியிலே கோவலனைக் கண்டான். அவன் செய்த அறங்களைப் பாராட்டினான். கோவலன் நிலை கண்டு வருந்தினான். இச்செய்தி அடைக்கலக் காதையிலே சொல்லப்படுகின்றது. இந்த மாடல மறையோன், செங்குட்டுவன் வெற்றி வீரனாகக் கங்கைக்கரையிலே வீற்றிருக்கும்போது அவனைச் சந்திக்கின்றான். செங்குட்டுவன் தமிழகத்திலே இல்லாதபோது அங்கு நடந்த நிகழ்ச்சிகளை அறிவிக்கின்றான். செங்குட்டுவனுடன் வஞ்சி நகருக்குத் திரும்பி வருகின்றான் மாடலன். செங்குட்டுவன், சோழ-பாண்டியர்கள்மேல் சினம் கொண்டபோது அச் சினத்தை ஆற்றுகின்றான். அவனுக்கு நல்லறங் களை நவின்று அறக்கள வேள்வி செய்யும்படி அறிவுறுத்திகின்றான். கண்ணகிக்குக் கோவில் எடுத்து விழாச் செய்யும்போது இவன் செங்குட்டுவனுடன் இருக்கின்றான். இறுதியில் மாடலன் அறிவுரையின்படி செங்குட்டுவன் வேத வேள்வி செய்கின்றான். அடைக்கலக் காதை, நீர்ப்படைக் காதை, நடுகற் காதை வரந்தரு காதை நான்கிலும் மாடலன் செய்தி கூறப்படுகின்றது. மாடலன் என்னும் மறையோன். சிலப்பதிகாரத்திலே, சிறந்து விளங்கும் பாத்திரங்களில் ஒருவன். தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் (அடைக்கல. 11-13) நீர்சூழ்ந்த தலைச்செங்கானம் என்னும் ஊரான்; நான்கு வேதங் களையும் முற்றக் கற்றவன்; நல்லொழுக்கம் நிறைந்தவன்; வேதம் அறிந்தவர்களுள் சிறந்தவன்; மாடலன் என்னும் பெயருள்ளவன். அருமறை முதல்வன் குறையாக் கேள்வி மாடலன் என்றெல்லாம் மாடலமறையோன் பாராட்டப்படுகின்றான். ஞான நல்நெறி நல்வரம்பு ஆயோன் தானம் கொள்ளும் தகைமையின் வருவோன், தளர்ந்த நடையன், தண்டுகால் ஊன்றி வளைந்த யாக்கை மறையோன் (அடைக்கல. 42-45) சிறந்த அறிவு ஒழுக்கத்துக்கு எல்லையாக இருப்பவன். ஓர் அந்தணன் தானம் வாங்குவதற்கு வந்தான்; அவன் தளர்ந்த நடையை உடையவன்; ஒரு தடியைக் கால்போல் ஊன்றி நடந்து வந்தான். அவன் முதுகு வளைந்த, வயதேறிய வேதியன். கோவலனிடம் தானம் வாங்கவந்த வேதியன் தோற்றம் இவ்வாறு கூறப்படுகின்றது. இதனால், தானம் வாங்கும் வேதியர்கள் சிலப்பதிகார காலத்திலே இருந்தனர் என்று அறிகின்றோம். சிலப்பதிகார காலத்திலே நல்லொழுக்கம் உள்ள அந்தணர்கள் தமிழ்நாடெங்கும் வாழ்ந்தனர். அவர்கள் வேதம் ஓதினர்; வேள்விகள் செய்தனர்; தங்களுக்குரிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல். வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்களையும் ஆற்றி வந்தனர். இவர்களைத் தவிர ஓழுக்கங் கெட்ட அந்தணர்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். அவர்கள் வேதநூல்களைக் கற்றவர்கள் அல்லர். காதற் பாட்டுக் களைப் பாடிக்கொண்டுதிரிவார்கள். வேதங்கள் கூறும்ஒழுக்க நெறிகளைப் பின்பற்றாதவர்கள்; ஆனால், முப்பிரிநூலைமட்டும் விடாமல் மார்பிலே அணிந் திருப்பார்கள். இவர்கள் தங்களை வேதியர்கள் என்றே சொல்லிக் கொள்ளு வார்கள். இத்தைகயோர் வாழும் இடங்களும் தமிழ் நாட்டில் இருந்தன. வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து (புறஞ்சேரி. 36-39) என்ற அடிகளால் இதைக் காணலாம். வேதநெறியைப் பின்பற்றா தவர்களை-வேதங்களைக் கல்லாதவர்களை - அந்தணர் என்றோ, வேதியர் என்றோ சிலப்பதிகார ஆசிரியர் குறிக்கவில்லை. புரிநூல் மார்பர் - அதாவது பூணுல் பூண்டோர் - என்று மட்டுந்தான் குறித்திருக்கின்றார். மேலே கூறியவைகளைக்கொண்டு, சிலப்பதிகார காலத்திலே தமிழ் நாட்டிலே வடமொழி வேதங்கள் போற்றப் பட்டன, வேதநெறிகள் பாராட்டப் பட்டன, வேதியர்கள் சிறந்து வாழ்ந்தனர் என்பவைகளைக் காணலாம். திருமண முறை சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் புரோகித மணந்தான் பெரும்பாலும் நடைபெற்றுவந்தது. உயர்ந்த வகுப்பினர்களும், செல்வர்களும் புரோகித மணத்தையே ஆதரித்து வந்தனர். வேதவிதிப் படி, தெய்வசாட்சியாகப் பல சடங்குகளுடன் செய்து முடித்து வைக்கும் மணத்தையே சிறந்தது என்று நம்பினர். இந்நிலைதான் சிலப்பதிகாரத் தமிழகத்தில் இருந்தது என்று உறுதியாக உரைக்கலாம். நாகரிகம் தோன்றாத காலத்தில் இவ்வுலகில் திருமணம் என்ற ஒன்று இருந்ததேயில்லை. ஆணும் பெண்ணும் அவரவர்கள் விருப்பப்படிக் கூடிக்கலந்து வாழ்ந்தனர். நாளடைவில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசித்தால், அவர்கள் தம்பதி களாக ஒன்று சேர்ந்து வாழ்வது என்ற முறையை ஏற்படுத்திக் கொண்டனர். பெற்றோர்கள் சம்மதத்தை எதிர் பார்க்காமல், ஆசைப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. இந்த வழக்கம் உலகம் எங்கும் இருந்தது. தமிழ்மக்கள் இவ்வழக்கத்தையே ஒரு காலத்தில் மணவாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஒன்றுகூடி வாழும் தம்பதிகள் தங்களுக்குள் மனவேற்றுமை ஏற்பட்டால், ஒருவரைவிட்டு மற்றொருவர் பிரிந்துவிடவும் செய்தனர். இவ்வாறு ஆண் பெண் உறவிலே அடிக்கடி பிரிவினை ஏற்பட்டதனால் சமுதாயக் கட்டுப்பாடு குலைந்தது. ஒழுக்கக் குறைவும் ஏற்பட்டது, சமுதாயத்திலே சண்டை சச்சரவுகளும் பிறந்தன. ஊரார் அறியாமல் - உற்றார் பெற்றார் உணராமல் - தாங்களாகவே ஒன்றுபட்ட ஆண் பெண்கள் தங்கள் உறவை அறுத்துக்கொள்ளவும் தொடங்கினர். வாக்குறுதியை மீறி நடக்கவும் துணிந்தனர். உன்னை என் வாழ்க்கைத் துணைவி யாகக்கொள்ளுகிறேன் என்று ஒரு பெண்ணிடம் உறுதி சொல்லிய ஆண்மகன், பின்னர் மனத்தாங்கல் ஏற்பட்டவுடன், நான் எப்பொழுது வாக்குறுதி அளித்தேன்? என்று பொய் சொல்லவும் தொடங்கினான். யாராவது தடுத்துக்கேட்டால், நான் இப்பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சாதிக்கவும் துணிந்தான். ஆடவர்கள் மட்டும் அல்ல, பெண்களும் இவ்வாறு தவறு செய்யத் துணிந்தனர். ஆண் பெண் கூட்டுறவு வெளிப்படையாக இல்லாமல், மறைவாக ஏற்பட்ட காரணத்தால்தான் இத்தகைய பொய்யும் குற்றங்களும் நிகழ்ந்தன. காதல் கொண்ட ஆண் பெண்கள், பலர் அறிய வெளிப்படையாக வாழ்ந்தால் போதும், அதுவே கற்புத் திருமணம்; மறைந்து வாழ்வது களவுத் திருமணம் என்ற முறை யைப் பின்பற்றிய காலத்திலும் இத்தகைய தவறு நிகழ்ந்தது. இத்தவறு உண்டாகாமல் பாதுகாப்பதற்காகவே, சமுதாயத் தலைவர்கள், திருமணத்திற்கென்று சில சடங்குகளை ஏற்படுத் தினார்கள். அச்சடங்குகளிலே, புரோகிதமோ, வேத முறையைப் பின்பற்றித் தீ வளர்த்தலோ, அக்கினியைத் தம்பதிகள் வலம் வருதலோ, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தலோ இல்லை. பெண்கள் கூடி மணமகளை வாழ்த்தினர். கணவனுக்குக் கீழ்ப் படிந்து நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறிப் பெண்ணை ஆண்மகனிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியை நல்ல நாளிலே, சுற்றத்தார் சூழ்ந்திருக்க நடத்தினர். இந் நிகழ்ச்சியின் போது வாத்தியங்கள் முழங்கும். நிகழ்ச்சி முடிந்தபின் விருந்துண்டு மகிழ்வார்கள். இத்தகைய திருமணச் சடங்கு ஏற்பட்டதற்கான காரணத்தை, பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்று தொல்காப்பியம் கூறுகின்றது. ஆரம்பகாலத் திருமணச் சடங்குகள் எப்படி நடைபெற்றன என்பதை அகநானூற்றில் 86, 136 ஆகிய இரண்டு பாடல்களிலே காணலாம். இவைகள்தான் சங்ககால நூல்களிலே நாம் காணும் திருமணமுறை. காதல் நிகழாமல் திருமணம் நடைபெறுவ தில்லை என்ற கருத்தைச் சங்க நூல்களிலே காணலாம். ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்ட பிறகுதான் - அக் காதலின்மூலம் அவர்களுக்குள் கள்ளக் கூட்டுறவு தொடங்கிய பிறகுதான் - திருமணம் நடைபெறும். இக்கருத்தையே பழந்தமிழ் நூல்களிலே காண் கின்றோம். களவுமணம் நிகழாமல் கற்புமணம் இல்லை என்பதே பண்டையோர் கொள்கை. நாளடைவிலே மக்கள் களவுமணத்தை இழிவாகக் கருதத் தொடங்கிவிட்டனர். இக்கருத்தைச் சங்க இலக்கியங்களிலேயே காணலாம் களவு மண வாழ்வு நடைபெறும் காலத்தில், தலைவி, தன்னை விரைவில் மணந்துகொள்ளும்படி தலைவனை வற்புறுத்து வாள். தலைவியின் தோழி, தலைவனிடம். தலைவியை மணந்து கொள்ளும்படி கட்டயப்படுத்துவாள். தங்கள் கள்ளநட்பு ஊரார்க்குத் தெரியாமல் இருக்கவேண்டும் என்று தலைவனும், தலைவியும் கவலைப்படுவார்கள்; தங்கள் கள்ளநட்பை ஊரார் உணர்ந்தால் பழிப்பார்களே என்று பயப்படுவார்கள். தோழியும் கவலைப்படுவாள். இச்செய்தி களைக் குறிக்கும் பாடல்களை அகப்பொருள் நூல்களிலே காண்கின்றோம். காதல் களவுமணம் பாராட்டப்பட்ட காலத்தில்கூட களவு மணம்கொண்ட மணமகன், மணமகளின் பெற்றோரை அணுகுவான்; பெண் கேட்டு மணந்து கொள்வான். இம்முறையையே சிறந்தது என்று கொண்டனர். பெற்றோர் பெண் கொடுக்க மறுத்தால்தான். பெண்ணின் கற்பைக் காக்கும்பொருட்டுக் காதலன் ஊரார் உறவினர் அறியாமல் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விடுவான். அதன் பின்னும் அவர்களுக்கு ஊரார் அறியத் திருமணம் செய்து வைக்கப்படும். சங்க காலத்திலேயே கள்ளக் காதல்மணம் பொது மக்களால் பழிக்கப்பட்டது. பெற்றோர் சம்மதத்தின்மேல் செய்யப்படும் திருமணமே சிறந்தது என்று கருதப்பட்டது என்பதை மேலே கூறியவற்றால் உணரலாம். ஆனால் சிலப்பதிகார காலத்தில் பெண்ணின் பெற்றோரும் ஆணின் பெற்றோருமே கொள்வினை கொடுப்பனை செய்து கொண்டனர். மணமக்களாகப்போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனரா? இல்லையா? என்பதைப்பற்றிக் கூட அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழகத்திலிருந்த இந்த உண்மை நிலையைச் சிலப்பதிகார ஆசிரியர் அப்படியே எடுத்துக்காட்டுகின்றார். போதில் ஆர்திருவினாள் புகழ்உடை வடிவு என்றும் தீதுஇலா வடமீனின் திறம் இவள்திறம் என்றும், மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும்குணத்துக் காதலாள்; பெயர்மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ என்று கண்ணகியின் சிறப்புப் பாராட்டப்படுகின்றது. பெண்கள் எல்லாம் கண்ணகியைத் தொழுது ஏத்துவார்கள். இலக்குமியின் வடிவமே இவன் வடிவம்; குற்றமற்ற அருந்ததியின் கற்பே இவன் கற்பு என்று அவர்கள் கொண்டாடுவார்கள்; இவள் சிறந்த குணங்களையெல்லாம் விரும்புகின்றவளாயிருந்தாள். இவள் தான் கண்ணகி என்னும் பெயர் உள்ளவள். இவ்வாறு கண்ணகி என்னும் பெயர் உள்ளவன். இவ்வாறு கண்ணகியின் அழகு, கற்பு, குணம் இவைகள் பாராட்டப்படுகின்றன. மண்தேய்த்த புகழினான், மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி, கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால் கொண்டுஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான்மனனோ என்பது கோவலனைப்பற்றிய பாராட்டுரை. உலகம் சிறிது என்று சொல்லும்படி பரந்த புகழை உடையவன்; இசையினும் இனிய மொழியையுடைய பெண்கள், தம் கூட்டத்திலே, அவனைச் செவ்வேள் என்று சொல்லிப் புகழ்ந்து பாராட்டுவர்; அவன்மீது காதல்கொள்வர்; அவன்தான் கோவலன் என்பவன்; என்று கோவலனைப் பாராட்டுகிறார் ஆசிரியர். கண்ணகியைப் பாராட்டும் பகுதியில் உள்ள ஒரு உண்மையை உற்று நோக்க வேண்டும். கோவலனைப் பாராட்டும் பகுதியில் உள்ள ஒரு உண்மையையும் உற்று நோக்கவேண்டும். கண்ணகி அழகும் கற்பும் உடையவள் மட்டும் அல்லள்; சிறந்த குணங்களை யும் உடையவள்; சிறந்த குணங்களையே காதலித்து வாழ்பவள் என்று கூறப் பட்டுள்ளது. இதனை, வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் என்ற தொடராமல் காணலாம். கோவலன் பெண்கள் விரும்பத்தக்க அழகுள்ளவன்; காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் என்பதனால் இதைக் காணலாம். கண்ணகியைப்போலச் சிறந்த குணங்களை உடையவன் கோவலன் என்று கூறப்படவில்லை. இது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு முன்பு, கண்ணகி கோவலனைக் காதலித்தாள் என்றோ, கோவலன் கண்ணகியைக் காதலித்தான் என்றோ சிலப்பதிகாரத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. காதலுக்குப் பின்னர்தான் கற்புத் திருமணம் நடைபெறும் என்பது தமிழ்நாட்டு இலக்கிய மரபு. சிலப்பதிகார ஆசிரியருக்குப் பின்னிருந்த கம்பர் இந்த மரபை ஒட்டியே காவியம் செய்தார். இராமனும் சீதையும் திருமணத்துக்கு முன்பே - இராமன் வில்லை முறிப்பதற்கு முன்பே - ஒருவரை ஒருவர் கண்டனர்; காதல் கொண்டனர் என்று பாடுகின்றார். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத செய்தியைத் தமிழ் நாட்டு மரபை ஒட்டிச் சேர்த்துச் சொல்லுகிறார் கம்பர். ஆனால், தமிழ் இலக்கிய மரபை - தமிழ்நாட்டு வழக்கத்தை - அறிந்த சிலப்பதிகார ஆசிரியர் அம்மரபைப் பின் பற்றவில்லை. இதற்குக் காரணம், தன் காலத்தில் தமிழகத்தில் இருந்த நாகரிகத்தை ஒளிவுமறைவில்லாமல் உரைக்க வேண்டும் என்பதே அவர் எண்ணமாகும். கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்வதைப் பற்றி அவர்களுடைய பெற்றோர்கள்தான் முடிவு செய்தனர். கண்ணகியின் தந்தையான மாநாய்கனும் பெருநிதி படைத்தவன்; கோவலன் தந்தையான மாசாத்துவானும் பெருநிதி படைத்தவன். இருவரும் செல்வத்திலும் சிறப்பிலும் ஒத்தவர்கள். இவர்கள், கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்தபிறகுகூட, மணமக்கள் சம்மதத்தைக் கேட்டதாகத் தெரியவில்லை. இருபெரும் குரவரும் ஒரு பெரு நாளில் மணஅணி காண மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி யானை எருத்தத்து அணியிழையார் மேல்இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம் இரண்டு பெற்றோர்களும் ஒரு சிறந்த நாளிலே தங்கள் பிள்ளை களுக்கு மணம் செய்து, அவ்விழாவைக் காண மகிழ்ச்சியுடன் விரும்பினர். உடனே அவர்கள் யானையின்மேல் பெண்களை அமர்த்தி, அவர்கள் மூலம் நகரத்தார்க்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்தனர். பெற்றோர்களின் விருப்பப்படிதான் கோவலன் - கண்ணகி திருமணம் முடிவு செய்யப்பட்டது என்பதில் ஐயம் இல்லை. இவ்வுண்மையை மேலே காட்டிய சிலப்பதிகார அடிகள் தெளிவுறுத்துகின்றன. கோவலன்-கண்ணகி திருமணம் வைதீக முறைப்படி தான் நடைபெற்றது. வேதங்களின் முறைகளை நன்றாக அறிந்த வயது ஏறிய புரோகிதரால் இத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது; நல்ல நாளிலே நடந்தது. வான்ஊர் மதியம் சகடுஅணைய, வானத்துச் சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்காண் நோன்பு என்னை? உரோகிணி நட்சத்திரத்திலே, வயதேறிய புரோகிதன், வேத முறைப்படி சடங்குகளைச் செய்து காட்டினன். கோவலன் அருந்ததிபோன்ற கண்ணகியின் கையைப் பிடித்துக்கொண்டு தீயை வலம் வருகின்றான். இக்காட்சியைக் காண்பவர்களின் கண்கள்தாம் செய்த தவத்தின் சிறப்பு எத்தகையது? இதனால், கோவலன்-கண்ணகி திருமணம் வேத விதிப்படி நடைபெற்ற புரோகித மணம் என்றே அறிகின்றோம். இத் திருமணத்தில் நடைபெற்ற சடங்குகளும் இன்று நடைமுறையி லிருக்கும் திருமணச் சடங்குகளை ஒட்டியே காணப்படுகின்றன. இவைகள் மங்கல வாழ்த்துக் காதையிலே காணப்படும் செய்திகள். பின்னால் தேவந்தியின் திருமணத்தைப்பற்றிக் குறிப்பிடும் இடத்திலும் புரோகித மணமே குறிப்பிடப் பட்டுள்ளது. தேவந்திகை யைத் தீவலம் செய்து நால்ஈர் ஆண்டு நடந்தன் பின்னர் (வரந்தரு. 84-85) தேவந்திகை என்பவளைத் தீயை வலம்செய்து மணந்து கொண்டு, எட்டாண்டுகள் கழிந்த பிறகு. இவ்வடிகளும் புரோகித மணத்தையே குறித்தது. இதுவும் தமிழகத்தில் நடந்த திருமணம். சிலப்பதிகார காலத்திலே தமிழகத்து மக்கள் தங்கள் உறவினரிடையே பெண் கொண்டனர்; கொடுத்தனர். செல்வர்கள் தங்களுக்குள் கொள்வினை கொடுப்பனை செய்து கொள்வதையே பெருமை யாகக் கருதினர். பெற்றோர்களே தங்களுடைய பெண்களுக்கும், பிள்ளை களுக்கும் மணம்புரிந்து வைக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந் தனர். இன்னும் பெற்றோர்களால் மணம் செய்து வைக்கப்படும் தம்பதிகள், பின்னர் காதலுடன் - அன்புடன் - கோவலனும் கண்ணகியும் மணம் செய்துவைக்கப்பட்டபின் அன்புடன் இல்லறம் நடத்திவந்தனர். சிலப்பதிகார காலத்தில் நாகரிகம் பெற்ற சமூகத்திலே நடைபெற்ற மணங்கள் எல்லாம் வேத முறையை ஒட்டிய வைதீக மணங்களாகவே நடைபெற்றன. புரோகிதர்களாலேயே மணச் சடங்குகள் செய்துவைக்கப்பட்டன. காதல் மணமோ, களவு மணமோ சமூகத்தாரால் விரும்பப் படவில்லை. களவுமண ஒழுக்கத்தை மிக இழிவாகக் கருதினர்; அவ்வழியிலே ஆண்பெண்கள் செல்லாமல் இருப்பதற்கான தடைகளையும் விதித்திருந்தனர். ஆனால் நாகரிகம் பெறாதவர்கள் என்று கருதப்பட்ட தமிழர்களிடையே, பண்டைக் களவு, கற்பு மணமுறைகள் தாராளமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன. நாகரிகம் பெற்ற மக்கள் எற்றுக்கொண்ட சிலப்பதிகாரத் திருமண முறை அக்காலத்தில் இன்றியமையாததாக இருந்தது. ஆதலால்தான் அம்முறையை ஏற்றுக்கொண்டனர். தம் மக்களின் பிற்கால வாழ்வைக் கருதியே பெற்றோர்கள் திருமணப் பொறுப்பை மேற்கொண்டனர். மணம் செய்துவைத்த தம்பதிகள் என்றும் பிரியாமல் இன்புற்று வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே தெய்வீகத் தன்மையுள்ள பல சடங்கு களையும் ஏற்படுத்தினர். சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் இந்த முறை அவசியமாக இருந்தது. ஆதலால்தான் தமிழ்மக்கள் இந்த முறை களைப் பின்பற்றினர். இவ்வாறு எண்ணுவதுதான் பொருத்தமானதாகும். பொது மகளிர் பொதுமகளிர், கணிகையர்; விலைமகளிர்; பரத்தையர், பதியிலார், வரைவின்மகளிர் இவைகள் ஒருபொருட் சொற்கள். வரைவு இல் மகளிர் - மணம் இல்லாத பெண்கள். சங்க இலக்கியங்களிலே பொதுமகளிர் கூட்டுறவைப்பற்றி அவ்வளவாகக் கண்டிக்கப்படவில்லை. அக்காலத்தில் செல்வக் குடியினர் பரத்தையருடன் கூடி வாழ்ந்தனர். காதல்பரத்தையர், சேரிப்பரத்தையர் எனப் பரத்தையரிலே இருவகை யினர். காதல் பரத்தையர் என்போர் ஒருவனுடன் நிலையாகச் சேர்ந்து வாழ்வோர். சேரிப்பரத்தையர் யார் பொருள் கொடுத்தாலும் அவருடன் சேர்ந்து வாழும் விலைமகளிர். இத்தகைய இருவகைப் பரத்தையர்களும் சங்க காலத்திலே இருந்தனர். இவர்களுடன் கூடிக்குலாவும் உரிமை ஆண் மக்களுக்கு இருந்தது. பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பிய காதலனுடன் மனைவி ஊடுவாள். அவன் பலவகையில் அவளைச் சமாதானம் செய்வான். அவள் ஊடலைத் தணிக்க முயல்வான். ஊடல் நீங்கியபின் கூடுவான். மனைவியின் ஊடலைத் தணிக்கக் காதலன் தூதுவிடுவான். பாணர், தோழி முதலியோர் தூதுவர்களா யிருப்பர். இவர்களால் மனைவியின் ஊடலைத் தணிக்க முடியாவிட்டால், காதலன், விருந்தினர்களுடன் வருவான். அவள் ஊடல்நீங்கி விருந்தினரை உபசரிப்பாள். ஊடியிருக்கும் மனைவியின் முன்னே அவள்காணும் படி, குழந்தையை எடுத்துக் கொஞ்சுவான் காதலன். அவள் ஊடல் நீங்குவாள். காதலன் பரத்தையர் வீட்டுக்குச் சென்ற காரணத்தால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும். இவைபற்றிய பாடல்களைச் சங்ககால அகப்பொருள் நூல்களிலே காணலாம். சங்க காலத்தில் பரத்தையர் நட்பைக் குலமகளிர்தான் வெறுத்தனர்; பொதுமக்கள் வெறுத்தனர் என்று சொல்ல இடம் இல்லை. ஆனால், வள்ளுவர், வரைவின்மகளில் என்று ஒரு அதிகாரத்தைத் திருக்குறளில் வகுத்தார். வரைவின் மகளிர் கூட்டுறவு தீங்கு தரும்; அக் கூட்டுறவால் இன்பம் இல்லை; துன்பந்தான் உண்டு; அறிவுள்ளவர்கள் வரைவின் மகளிரை விரும்பமாட்டார்கள்; அவர்கள் தோள், அற்பர்கள் அழுந்தும் நரகமாகும் என்றெல்லாம் கண்டித்துப் பேசுகின்றார். இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும், திரு நீக்கப்பட்டார் தொடர்பு ஒருவனைப் பற்றி உறுதியுடன் வாழாத வரைவின்மகளிரும், கள்ளும், சூதும் ஆகிய இம்மூன்றும் இலக்குமியால் வெறுக்கப் பட்ட வர்களின் தொடர்பாகும். இது வள்ளுவர் கூற்று. பொதுமகளிர், கள், சூது இம் மூன்றும் செல்வத்தைச் சிதைக்கும். இம்மூன்றுள் எது ஒன்றில் பற்று வைத்தாலும், அது தன்னைப் பற்றியவர்களை ஓட்டாண்டிய களாக்கிவிடும். இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர் புள்ளவை. இவ்வாறு, பொதுமகளிர் நட்பு ஆபத்தானது என்ற அறிஞர்கள் உபதேசித்து கூடச் செல்வர்கள் அதைக்கைவிட வில்லை. அவர்களுக் காகவே பொதுமகளிர் என்ற பெயரில் ஒரு வகுப்பு வளர்ந்துவந்தது. அவர்கள் நடனம் இசை, இசைக் கருவிப் பயிற்சி முதலிய கலை களைக் கற்றிருந்தனர்; செல்வர்களை மயக்கிப் பொருள்பறிக்கும் வித்தையிலே இவர்கள் கைதேர்ந் தவர்கள். சிலப்பதிகார காலத்திலே இந்த நிலைமை தமிழ் நாட்டில் ஓங்கி உரம்பெற்றிருந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே கணிகையர் வீதி தனியாக இருந்ததைப்பற்றிக் கூறப்படுகின்றது. இந்திர விழாவின் போது அவர்கள் தம்மை அலங்கரித்துக் கொண்டு தெருக்களிலே திரிந்தனர் என்று சொல்லப்படுகின்றது. மதுரையிலே பணக்காரக் கணிகையர் வீதி தனியாகவும், ஏழைக் கணிகையர் தெரு தனி யாகவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பெறுமானம் உள்ள மாலையை வாங்குவோர் மாதவிக்குக் காதலர் ஆவர் என்று மாதவியின் தோழி, கடைவீதியிலே நின்று கூவினாள். கோவலன் அந்த மாலையை வாங்கினான். மாதவி இல்லம் புகுந்தான். இந்த நிகழ்ச்சி பணம்பறிப்பதே பரத்தையர் தொழில் என்பதைக் காட்டும். கோவலன் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்கொடுத்து மாதவியின் மாலையை வாங்காமலிருந்தால் கதை எப்படி முடியும்? அப்பொன்னைக் கொடுத்து மாலையை வாங்கும் மற்றொருவனே மாதவியை அடைந்திருப்பான்; சிலப்பதிகாரமே தோன்றியிருக் காது. மாதவி பரத்தைதான்; ஆனால் அவள் காதற்பரத்தை யாவாள். அவள் கோவலனைத்தவிர மற்றொருவனை விரும்ப வில்லை. கோவலன் கொலை யுண்டவுடன் அவள் பௌத்தமதத் துறவியானாள். இது குறிப்பிடத்தக்கது. ஆயினும் பரத்தை பரத்தைதான்; மாதவியால்தான் கோவலன் செல்வம் இழந்தான்; அவள் முன்னோர் தேடி வைத்த நிதிக்குவியலைத் தொலைத்தான்; வறுமையடைந்தான்; உள்ளூரிலே வாழ்வதற்கு நாணம் அடைந்து, அயலூருக்குப் புறப்பட்டான்; மதுரைக்குச் சென்றான்; மனைவியின் சிலம்பை விற்று வாணிகஞ் செய்ய எண்ணினான். ஆனால், அவன் எண்ணியது ஒன்று; நடந்தது வேறு. சிலப்பதிகாரப் பதிகத்திலே மூன்று கருத்துக்களை வலியுறுத்து வதே நூலின்நோக்கம் என்று சொல்லப்படுகின்றது. இதனை அறம் கூறும் நூல் என்ற பகுதியிலே காணலாம், அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றும்; பத்தினியைத் தேவர் களும் போற்றுவார்கள்; ஊழ்வினையின் பயனை அனுபவித்தே தீரவேண்டும். இவைகளே மூன்று கருத்துக்கள். இவைகளுடன் இன்னும் பல சிறந்த கருத்துக் களையும் சிலப்பதிகாரத்திலே காணலாம். அவற்றுள் பரத்தையர் வலைப்பட்டோர் பாழாவார்கள் என்ற கருத்தும் ஒன்றாகும். கோவலன் மாதவியின் நட்பை நாடியிரா விட்டால் சிலப்பதிகாரமே பிறந்திருக்காது. இராமன் காட்டுக்குச் செல்லாவிட்டால் இராமாயணமே இல்லை, தருமன் சகுனியுடன் சூதாடாவிட்டால் பாரதமேயில்லை; இவைபோலக் கோவலன் - மாதவி நட்பு ஏற்பட்டிராவிட்டால் சிலப்பதிகாரமே இல்லை. சிலப்பதிகாரத்தைப் படிப்போர் அனைவரும் இவ்வுண்மையை உணர்வார்கள். வேசையர் நட்பால் தீமைதான் விளையும். அறிவுள்ளோர் ஒழுக்கம் உள்ளோர் அவர்களை விருப்பக்கூடாது என்ற உண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் சொல்லாமல் விடவில்லை. கானல்வரியிலே கோவலன் பாடியபின், மாதவியும் பாடுகின்றாள்; அவளும் கோவலனைப்போலவே வேறுகுறிப்புத் தோன்றப் பாடினாள். அதனால் கோவலன் சினமுற்றான். என்ன இருந்தாலும் மாதவி ஒரு பரத்தைதானே என்ற நினைப்பு அவன் நெஞ்சிலே பிறந்தது. மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள். வஞ்சனையன பொய்கள் பலகூறிப் பொருள்பறிக்கும் வஞ்சகி யான பரத்தை பாடினாள் என்று கோவலன் நினைத்தான். அந்த நினைப்புத்தான் அவனை மாதவியைவிட்டுப் பிரித்தது. இவ்விடத்தில் பரத்தையின் இயல்பு விளக்கப்பட்டது; அவர்கள் நடப்பெல்லாம் பொருள்பறிப்பதற்கான பொய் நடிப்புக்கள் என்று உணர்த்தப்பட்டது. கணவன் வேறு பெண்ணைக் காதலிப்ப தாகக் கூறலாம்; பாடலாம் ஆனால், குலமகள் ஒருத்தி அவ்வாறு சொல்லமாட்டாள்; கோவலன் வேறு பெண்ணைக் காதலிப்பது போல் பாடியதுகண்டு, தானும் வேறு ஆடவனைக் காதலிக்கும் குறிப்புத்தோன்றப் பாடினாள். இது நம் நினைவில் வைக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். மாதவியைப் பிரிந்த கோவலன், கண்ணகியின் இல்லத்தை அடைந்தான் அவன் கண்ணகியிடம், பரத்தையாகிய மாதவி யால் தனக்கு நேர்ந்த துன்பத்தை வாய்விட்டு உரைக்கின்றான். அவள் நட்பால் தனது மானம் பறிபோயிற்று என்று சொல்லி வருந்துகின்றான். சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடி குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு நாணுத் தரும் பொய்யை மெய்யாகக் காட்டி ஒழுகும் பொய்மகளான பரத்தை யுடன்கூடி விளையாடினேன். அதனால் என் முன்னோர் தேடி வைத்த பொருட்குவியல் முழுவதும் தொலைந்து போயிற்று. வறுமைக்கு ஆளானேன். இந்த நிலை எனக்கு நாணத்தைத் தருகின்றது. கனாத்திறம் உரைத்த காதையிலே காணப்படும் இச்செய்தி பரத்தையர்வலை யில் பட்டோர் வறுமைக் குழியிலே வீழ்வர் என்ற உண்மையைக் குறித்தது. கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் கணிகையர் வாழ்வு கடைப்பட்ட வாழ்வு என்ற, மாதவிதன் வாழ்வைத் தானே வெறுத்துரைத்தாள் என்று கூறப்படுகின்றது. இது காடுகாண் காதையிலே வனதேவதையின் வாயினால் சொல்லப்பட்டது. கோவலன் கண்ணகியை மணந்தவுடன், அவளோடு அன்புடன் இருந்தது இல்லறம் நடத்தினான். ஆனால், மாதவியின் நட்பைப் பெற்றவுடன் அவன் நடத்தையே மாறிவிட்டது. பரத்தையின் நட்புறவுதான் அவனுடைய நடத்தையை மாற்றியது. இந்த உண்மையை இளங்கோவடிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நகைஆடு ஆயத்து நல்மொழி திளைத்து, குரல்வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு திரிதரு மரபின் கோவலன் சிரித்து விளையாடும் வீணர் கூட்டத்துடன் சேர்த்தான்; அவர்கள் பேசும் காமக் குறிப்புள்ள பேச்சுக்களிலே மூழ்கினான்; குரல் என்னும் இசையைப் பாடும் பாணர்களோடும், நகரில் திரியும் காமுகர்களுடனும் கூடித் திரிந்தான் கோவலன். இவ்வாறு இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே கூறப் பட்டுள்ளது. மற்றோர் இடத்திலே, கோவலன், தன்னைத்தானே ஒழுக்கம் கெட்டவன் என்று செல்லிக்கொள்ளுகின்றான். நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி, நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த அறியாத் தேயத்து ஆர்இடை உழந்து சிறுமை உற்றேன்; செய்தவத்தீர்! (ஊர்காண். 17-20) அறநெறியைக் கைவிட்டவர்களின் தன்மைனைய அடைந்தேன் - மலர்பேன்ற மேனியை உடைய கண்ணகி வருந்தும்படி, இதற்குமுன் கண்டறியாத இடங்களிலே - நடத்தற்கு அரிய வழியிலே - நடந்துவந்து துன்பம் அடைந்தேன் கோவலன் கவுந்தியடிகளிடம் இவ்வாறு சொல்லி வருந்தினான். இதில் பரத்தையின் நட்புத்தான் கோவலனை ஒழுக்கங் கெட்ட வனாகச் செய்தது என்னும் கருத்தைக் காண்கின்றோம். பின்னும் பரத்தையர் நட்பால் கோவலன் அடைந்த தீமையை அவனே சொல்லுவதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. வறுமொழி யாளரொடு, வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்கு பொச்சாப்பு உண்டு, பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு நல்நெறி உண்டோ? (கொலைக்கள, 66-69) வீணரோடும், பரத்தரோடும் கூடினேன்; பிறரைப் பழித்துப் பேசும் கூட்டத்திலே சேர்ந்து அவர்களுடையே வெடிச்சிரிப்பில் மயங்கிக்கிடந்தேன்; நல்லொழுக்த்தை மறந்தேன; நல்லுரை களைக் கூறுவோரின் விரும்பத்தக்க மொழிகளை ஏற்காமல் விட்டேன். இத்தகைய எனக்கு நல்ல கதியும் உண்டோ? கோவலன் இவ்வாறு கண்ணகியிடமே தன் குற்றத்தை எடுத்துரைத்தான். நடந்தவைப்பற்றி மனம் வருந்தினான். கோவலன் உரைத்த இம்மொழிகள், மாதவியின் நட்பினால் அவன் அடைந்த தீமைகளையே காட்டுகின்றன. மாதவியாகிய பரத்தையின் கூட்டுறவு காரணமாகத் தான் கோவலன் செல்வத்தை யிழந்தான்; ஒழுக்கங் கெட்டான்; வீணர்களுடன் கூடி வீண்பொழுது போக்கினான்; வறுமை காரணமாகப் பரம்பரையாக வாழ்ந்த ஊரைவிட்டு ஒடினான்; அவதிக்கு ஆளானான்; கொலையுண்டான். இவ்வுண்மைகளைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. வள்ளுவர் வகுத்திருக்கும் வரைவின் மகளிர் என்னும் அதிகாரத்தின் உண்மைக் கருத்தை மெய்ப்பித்துக் காட்டுகின்றது. பரத்தையர் நட்பின் தீமையை விளக்குவதும் சிலப்பதிகார நோக்கங்களில் ஒன்றாகும். சாதி வேற்றுமை பிறப்பினால் மக்களுக்குள் வேற்றுமையில்லை. ஒற்றுமை யாக வாழ்ந்த மக்கள், தொழிலால்தான் நாளடைவில் வேறு வேறு வகுப்பினராகப் பிரிந்தனர். இவ்வாறு பிறந்த வகுப்புப் பிரிவினை தான், பிறப்பிலேயே வேற்றுமை பாராட்டும் சாதிப் பிரிவினையாக மாறிவிட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பது தான் உண்மை. தொழிலில் உயர்வு தாழ்வு பாராட்டியதன் காரணமாகத் தான் உயர்ந்த வகுப்பு, தாழ்ந்த வகுப்பு என்ற பிரிவுகள் பிறந்தன; தொழில்களிலே, சில உயர்ந்தவை என்று கருதப்பட்டன; சில இழிந்தவை என்று எண்ணப்பட்டன. உயர்ந்த தொழில்களைச் செய்வோர் உயர்ந்தவர் ஆயினர்; இழிந்த தொழில்களைச் செய்வோர் தாழ்ந்தவர் ஆயினர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் உயர்ந் தோர் ஆயினர்; கல்வி, அரசு காவல், வாணிம், வேளாண்மை இவைகள் உயர்ந்த தொழில்களாக எண்ணப்பட்டன; இத் தொழில்களில் ஈடுபட்டோர் உயர்ந்ததோர் ஆயினர். இந் நால்வகைத் தொழில்களையும் செய்துவந்தோர் தனித்தனிப் பிரிவாகப் பிரிந்தனர்; நாளடைவில் அவர்கள் நால்வகை வருணத்தாராக நிலைத்தனர். இந் நால்வகை வருணத்தாரைத் தவிர வேறு பல வகுப்பினரும் இருந்தனர். நெய்தல்நில மக்கள், குறிஞ்சிநில மக்கள், முல்லைநில மக்கள். பாலைநில மக்கள் இவர்கள் எல்லாம் நால்வகை வருணத்துள் அடங்காதவர்கள். மருத நிலத்திலே - அதாவது நாகரிகம் வளர்ந்த நிலத்திலே தான் பலவகையான தொழில்களும் நடைபெறும், சிறப்பாக, விவசாயம் நடைபெறும் இடத்திலேதான் பலவகையான தொழில்களும் நடைபெறுவதற்கு இடம் உண்டு. ஆதலால், மருத நிலத்திலேதான் பலவகையான வகுப்புப் பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளும் தொழில் காரணமாகத் தோன்றியவைகள்தாம். இவ்வுண்மையைத் தொல்காப்பியத்திலே காணலாம். சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டிலே நால்வகை வருணம் நிலைத்திருந்தது. இவ்வருணங்களில் அடங்காத பிரிவினரும் தமிழகம் எங்கும் வாழ்ந்திருந்தனர். சிலப்பதி காரத்தைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணாமலிருக்க முடியாது. காவிரிப்பூம்பட்டினத்திலே அரச வீதி தனியாக இருந்தது; வணிகர் தெரு தனியாக இருந்ததது; மறையோர் வாழுமிடம் தனியாக இருந்தது; உழவர் உறையும் இடம் தனியாக இருந்தது என்று சொல்லப்படுகின்றது. இந்திரவிழவு ஊர்எடுத்த காதை யிலே இதைக் காணலாம். இச்செய்தி கடலாடு காதையிலும் காணப்படுகின்றது. இந்திர விழாவின் இறுதியிலே, கடற்கரையிலே, காவிரித் துறைமுகத்திலே நால்வகை வருணத்தனரும் கூடியிருந்தனர். அவர்கள் பேசும் பேச்சொலியை வேறு எந்த ஒசையினாலும் அடக்க முடியாது. அவ்வளவு திரளாக அவர்கள் குழுமி யிருந்தனராம். கடற்கரை மெலிக்கும் காவிரி பேர்யாற்று இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப (கடலாடு. 63-65) என்ற அடிகள் இவ்வுண்மையை உணர்த்தின. இந் நால்வகை வருணத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; வேறு பல பிரிவினர்கள்; அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர் என்ற உண்மையையும் இந்திரவிழவு ஊர்எடுத்த காதையிலே காணலாம். மருத்துவர், சோதிடர், முத்துக் கோப்பார், சங்கறுப்போர், சூதர், மாகதர், வைதாளிகர், நாழிகைக் கணக்கர், வேடம் புனைந்து சாந்திக் கூத்தாடுவோர், கணிகையர், இசைவாணர், கழைக் கூத்தாடிகள் இவர்கள் தனித்தனி இடங்களில் வாழ்ந்து வந்தனர். பாணர்கள் தனித்து வாழ்ந்தனர். கணிகையர், விலை மாதர், இவர்கள் நால்வகை வருணத்துள் அடங்காதவர்கள். இவைகளைக் காணும்போது சிலப்பதிகாரகாலத்திலே பலவகையான சாதிப் பிரிவுகள் இருந்தன; ஏறக்குறைய இன்றுள்ள பலவகையான சாதிப் பிரிவுகளும் அக்காலத்தில் இருந்தனன என்பதில் ஐயம் இல்லை. மதுரை நகரிலும் நால்வகை வருணப் பிரிவைக் காட்டும் நால்வகைத் தெருக்கள் தனித்தனியே இருந்தன. பால்வேறு தெரிந்த நால்வகைத் தெருவும் (ஊர்காண். 212) என்பதனால் இதனை அறியலாம். மன்னர் பின்னோர், அரசர் பின்னோர் என்று வணிகர்கள் சுட்டப்படுகின்றனர். இதனாலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகள் தமிழகத்தில் இருந்ததைக் காணலாம். பூதங்களில்கூட நால்வகை வருண பூதங்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் சொல்லுகின்றது. இதனை அழற்படு காதையினால் அறியலாம். அந்தணப் பூதம், அரசப் பூதம், வணிகப் பூதம், வேளாளப் பூதம் நான்கும் மதுரை நகரத்தைக் காத்துவந்தன. கண்ணகியால் மதுரை தீக்கு இரையானபோது இப்பூதங்கள் அந்நகரைக் காக்க வில்லை; காவலை விட்டு நீங்கின. அந்தணப்பூதம் வெண்மை நிறம் உள்ளது. குடை, முக்கோல், கமண்டலம், சமித்து, தருப்பை இவைகள் அதன் கைகளில் இருந்தன; மார்பிலே பூணுல் இருந்தது; நாவினால் வேதங்களை நவின்று கொண்டிருந்தது. அரசப் பூதம் கதிரவன் போன்ற நிறமுள்ளது. அணிகலன் களும், முடியும் அணிந்திருந்தது; மார்பிலே மலர்மாலை, இடையிலே பட்டாடை அணிந்திருந்தது; முரசம், வெண்பட்டுக் குடை, வெண்சாமரம், நீண்ட கொடி, அங்குசம், வடிவேல், கயிறு இவைகளைக் கையிலே ஏந்தியிருந்தது. வணிகப் பூதம் பொன்னிற மேனியை உடையது. முடி ஒன்றைத் தவிர அரசர்க்குரிய அணிகலன்களை யெல்லாம் பூண்டிருந்தது. வணிகர்க்கு வேளாண்மையும், வாணிகமும், உரிய தொழில்கள். ஆதலால் கலப்பையும், தராசும் வாணிகப் பூதத்தினிடம் இருந்தன. தலையிலே மலர்மாலைகளையும், மார்பிலே கலவைச் சந்தனமும் அப்பூதம் அணிந்திருந்தது. அது சிவபெருமானைப் போன்ற தோற்றமுடன் காணப்பட்டது. வேளாளப்பூதம் கருநிறம் உள்ளது. வேலைப்பாடமைந்த வெள்ளிப்பூண்களை அணிந்திருந்தது; கருமை நிறமுள்ள ஆடையை உடுத்தியிருந்தது; மார்பிலே அகிலும் சந்தனமும் அணிந்திருந்தது; கோட்டுப்பூ. கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகிய நால்வகை மலராலும் தொடுத்த மாலையத் தரித்திருத்து; கையிலே கலப்பையை ஏந்தியிருந்தது. இவ்வாறு நால்வகை வருணபூதங்களைப்பற்றியும் கூறப் பட்டுள்ள. இவை களால் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் இவர்களின் தோற்றங்களைக் காணலாம். ஆகவே சிலப்பதிகார காலத்தில் தமிழ்நாட்டில் பல வகைப் பட்ட சாதிகள் இருந்தன; பலவகைப்பட்ட பழக்க வழக்கங்கள் இருந்தன. ஆயினும், மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். இவ் வுண்மையை மேலே கூறியவைகளால் அறியலாம். மத ஒற்றுமை சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டிலே பல மதங்கள் இருந்தன. தமிழ்மக்கள் பல மதங்களைப் பின்பற்றி வாழ்ந்தனர். மதவேற்றுமை காரணமாக வெறுப்போ, வெறியோ தமிழ் மக்களிடம் இருக்கவில்லை. அவர்கள் பல்வேறு மதங்களைப் பின்பற்றினாலும் தமிழர் என்ற முறையில் அனைவரும் ஒன்று பட்டு வாழ்ந்தனர். காவிரிப்பூம்பட்டினத்தைப்பற்றிக் கூறும்போது, அங்கே சிவன் கோவில், திருமால் கோவில், புத்தர் பள்ளி, அருகர் பள்ளி முதலியன இருந்தன என்று கூறப்படுகின்றது. மதுரையைப்பற்றிச் சொல்லும்போது, அங்கும் மேற்கண்ட கோவில்கள் இருந்தன வென்று சொல்லப்படுகின்றது. மதுரைப் புறஞ்சேரியிலே அருகர், புத்தர் முதலியோரின் பள்ளிகள் இருந்திருக்கின்றன. சிலப்பதிகார காலத்தில் சமண - பௌத்தங்களாகிய அறமார்க்கங்களும் தமிழகத்தில் பரவியிருந்தன. சைவ - வைண வங்களாகிய பக்தி மார்க்கங்களும் தமிழகத்தில் பரவியிருந்தன. கோவலன் சைன மதத்தைச் சேர்ந்தவனாகக் கருதப்படு கின்றான். அவனும் கண்ணகியும் கவுந்தியடிகளைக் கண்டு கைதொழுதனர். அழகும், குடிப்பிறப்பும், ஓழுக்கமும், இறைவன் நூலிற் கூறிய விரதந் தப்பாமையும் என்னும் இவற்றை யெல்லாம் உடைய நீங்கள் தீவினையாளரைப்போல உமது இடத்தைவிட்டு நீங்கி வருவதற்குக் காரணம் என்ன? உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்! என்னோ உறுகணாளரின் கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறு? (நாடுகாண். 46-49) என்று கவுந்தியடிகள் கேட்டார். பெருமக்கள் என்பது அருகனைக் குறித்ததாகும், கோவலன். கண்ணகி இருவரும் அருகதர்மத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் என்பதை இதனால் காணலாம். கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி, கோவலனை யும், அவளையும் தனது ஆயர்பாடிக்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் இருக்கச் செம்மண்பூசிய புதுமனை ஒன்றைக் காட்டினாள். கண்ணகியை நீராட்டினாள். தன் மகய் ஐயை என்பவனைப் பணிமகளாக அமர்த்தினாள். பின்னர், கோவலனார் சாவக நோன்புடையார். ஆதலால் கண்ணகி பகல்உணவு சமைப்பதற்காகப் புதிய கலங்களை விரவில் கொண்டுவந்து கொடுங்கள். சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் நாத்தூண் நங்கையோடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள் நெடியாது அளிமின் நீர் (கொலைக்கள. 18-21) என்று கூறினாள். மாதரியின் இச்கூற்றும், கோவலன் சைன மதத்தினன் என்பதையே குறிக்கும். கோவலன் சமணனாயிருந்தும் மதவெறுப்பு இல்லாதவன்; எம்மதமும் சம்மதம் எனக் கொண்டவன். கோவலன் வைகறைப் போதிலே புகாரை விட்டு மதுரைக்குப் புறப்படுகின்றான். புறப் பட்டவன், முதலில் மணிவண்ணன் கோவிலை வலம் செய்தான். அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக கழிந்து (நாடுகாண். 9-10) மணிவண்ணன் கோட்டம்: திருமால் கோவில். இதன்பின் புத்தர்பிரான் அறவுரைகளை அந்தரசாரிகள் வந்திருந்து சாற்றும் இந்திர விகாரங்கள் ஏழையும் வணங்கிப் போனான். ... ... ... அறவோன் திருமொழி அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர விகாரம் ஏழுடன் போகி (நாடுகாண். 12-14) இதன்பின் நீராட்டுவிழாக்களின்போதும், பெரிய தேர் விழாக்களின்போதும் அருகதர்மத்தை உபதேசிக்கும் சாரணர்கள் வருவார்கள் என்று கருதி, அவர்களுக்காகச் சாவக நோன்பி களால் இடப்பட்ட சிலாதலத்தை வணங்கி வலங்கொண்டு புறப்பட்டான் கோவலன். நீர்அணி விழாவினும் நெடுந்தேர் விழாவினும் சாரணர் வரூஉம் தகுதி உண்டாம், என உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு (நாடுகாண். 22-25) மேலே காட்டியவைகளால் கோவலனுடைய மதவெறுப் பற்ற தன்மையைக் காணலாம். வலம் செயாக் கழிந்து என்பதற்கு வலத்திட்டு ஏகி என்றும், இந்திர விகாரம் ஏழுடன் போகி என்பதற்கு இந்திர விகாரங்கள் ஏழினையும் அடைவே கண்டு அவற்றைக் கழிந்துபோய் என்றும் அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகின்றார். இப்பொருளை வைத்துக்கொண்டு கோவலன் மணிவண்ணன் கோவிலை வணங்கவில்லை; இந்திர விகாரங்களையும் வணங்கவில்லை; சிலாதலத்தை மட்டுந்தான் வணங்கினான் என்று பொருள் கூறுவர். அடியார்க்கு நல்லார் கருத்து இதுவானால், அது சிறந்த பொருளன்று. திருமால் கோவிலையும், இந்திர விகாரங்களையும் கோவலன் வணங்கினான் என்று கூறுவதே சிறந்த பொருளாகும். கோவலன், கண்ணகி கவுந்தி மூவரும் காட்டு வழியாக மதுரை நோக்கிச் செல்லுகின்றனர். எதிரிலே மாங்காட்டு மறையோன் என்பவன் பாண்டியனை வாழ்த்திக்கொண்டு வருகின்றான். அவன் வைணவ பக்தன். கோவலன் அவனை நோக்கி யாது நும் ஊர்? ஈங்கு என்வரவு? என்று கேட்டான். அப்பொழுது மாங்காட்டு மறையோன் திருவரங்கத்தின் பெருமையையும், திருவேங்கடத்தின் சிறப்பையும் எடுத்துரைத் தான். அந்த மறையோனிடம் மதுரைக்குப் போக வழி சொல்லும் படி கேட்டான் கோவலன். அவன் மதுரைக்குச் செல்லும் வழிகளைப்பற்றிக் கூறினான். அவை இடப்பக்கத்து வழி? வலப்பக்கத்து வழி, நடுவழி என்ப. அவற்றுள் இடப்பக்கத்து வழியைப்பற்றிச் சொல்லும்போது திருமாலிருங்குன்றம் என்னும் அழகர்மலை, அதில் உள்ள பிலம், அப் பிலத்து வழியே சென்றால் அங்குக் காணக்கூடிய புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்னும் பொய்கைகள், அவற்றில் நீராடுவதால் அடையும் பயன் இவற்றையெல்லாம் விரிவாக எடுத்துரைத்தான். வைணவனாகிய மறையோன், கோவலனிடம்இவ்வாறு திருமாலின் சிறப்பை விளக்கினான். கோவலன் பொறுமையுடன் கேட்டான். கோவலனுடன் கவுந்தி அடிகளும் இருந்தார். அவர் சமண சந்நியாசிக் கோலத்துடன்தான் இருந்தார்; கவுந்தி யடிளுடன் இருந்த கோவலனும் சாவகனாகத்தான் இருக்க முடியும் என்பதை மறையவன் அறியாதவன் அல்லன். இருந்தும் அவன் திருமாலின் மாண்பை எடுத்துரைத்தான். சிலப்பதிகார காலத்தில், ஒரு மதத்தினர் உரைக்கும் கொள்கை களைப் பறி மதத்தினரும் பொறுமையுடன் கேட்டனர்; மதங் காரணமாக ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதில்லை என்ற உண்மையை இதனால் காணலாம். தானம் வாங்குவதற்காக வயது முதிர்ந்த வேதியன் ஒருவன் வந்தான். அவனை மதங்கொண்ட யானை ஒன்று கைக்கொண்டது. உடனே கோவலன் பாய்ந்து அவ்வந்தணனை விடுவித்தான். (அடைக்கல. 42-53) கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியின் பாவம் தொலையக் கோவலன் பலவகையான தானங்களைச் செய்தான்; அவன் துன்பத்தை ஒழித்தான். (அடைக்கல 55-75) இக்கதைகளும் கோவலனுடைய சமய சமரசத்தை விளக்குகின்றன. கோவலன். கண்ணகி, கவுந்தி மூவரும் மதுரைப் புறஞ் சேரியிலே தங்கியிருந்தனர். அங்கே இடைச்சியர் தலைவி மாதரி வந்தாள். இடையர்கள் திருமாலை வணங்குவோர். அருகனை வணங்கும் கவுந்தி, திருமாலை வழிபடும் மாதரியின் உயர்ந்த பண்பை உள்ளத்தால் பாராட்டினார். பசுவைக் காத்து. அதன் பயனை மக்களுக்கு அளிப்போர் இடையர்கள். அவர்கள் வாழ்க்கையிலே கொடுமை என்பதே இல்லை. அக்குடியிலே பிறந்த இவள் குற்றம் அற்றவள்; பெரியவள்; நல்லவள்; அன்புள்ளவள். இந்த மாதரியிடத்தில் கண்ணகியை அடைக்கலமாக வைப்பதனால் குற்றம் இல்லை என்று எண்ணினார் கவுந்தி. ஆகாத்து ஒம்பி ஆபயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கைஓர் கொடும்பாடு இல்லை; தீதுஇலள்; முதுமகள்; செவ்வியள்; அளியள்; மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதும் இன்றுஎன எண்ணினள் (அடைக்கல. 120-124) இதனால் கவுந்தியடிகளின் தூய உள்ளம், பிற மதத்தினரிடம் வெறுப்புக் காட்டாத தன்மை இவற்றைக் காணலாம். கவுந்தியடிகள் சமண சந்நியாசினி; மாதரி திருமால்பக்தை. கவுந்தியடிகள் தந்த கண்ணகியை மாதரி அன்புடன் ஏற்றுக் கொண்டதும் மத ஒற்றுமையையே காட்டும். சேரன் செங்குட்டுவன் சிவபக்தன்; அவன் சிவபெருமான் அருளுடன் பிறந்தவன் என்றே சிலப்பதிகாரம் சொல்லுகின்றது. செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய் (கால்கோள். 98-99) ஆன்ஏறு உயர்த்தோன் அருளினில் விளங்க மாநிலம் விளக்கிய மன்னவன். (வரத்தரு. 141-142) செஞ்சடை வானவன்: சிவபெருமான். ஆனேறு உயர்த்தோன் சிவபெருமான். மேலேகாட்டிய அடிகள் செங்குட்டுவனைக் குறிப்பவை. செங்குட்டுவன் வடநாடு நோக்கிப் புறப்படும்போது சிவபெருமானை வணங்கிப் புறப்பட்டான் என்று கூறுகிறது சிலப்பதிகாரம். இளம்பிறையைத் தலையிலே முடித்தவன்: உலகத்தைத் தன்னிடத்திலே அடக்கியவன்; உயர்ந்தோன் ஆகிய சிவபெரு மானுடைய பாதங்களைத் தலையிலே தரித்தான்; வீரத்திற்கு அடையாளமான வஞ்சி மாலையையும் அணிந்தான்; யாருக்கும் வணங்காத முடியினால் சிவபெருமானை வணங்கினான். அவன் கோவிலை வலம் வந்தான். நிலவுக் கதிர் நீள்இரும் சென்னி உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி மறம்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலம்கொண்டு (கால்கோள். 54-57) இவ்வடிகள் செங்குட்டுவன் சிவபக்தன் என்பதைக் குறிப்பன. செங்குட்டுவன் சிவபெருமானை வணங்கி வடநாட்டுக்குப் புறப்பட்ட சமயத்திலே மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. சேரநாட்டு மன்னன் வெற்றிபெறுக என்று வாழ்த்திக் கொண்டு சிலர் வந்தனர்; திருவநந்தபுரத்திலே ஆடக மாடத்திலே, அரவணையிலே அறிதுயில் கொண்டிருக்கும் திருமாலின் பிரசாதத்தை அவர்கள் கொண்டுவந்தனர். அதை அவர்கள் வணக்கத்துடன் அரசனிடம் அளித்தனர். அரசனும் அன்புடன் வாங்கிக்கொண்டான். கங்காதரனாகியசிவபெருமானுடைய அழகிய சேவடிமலரை முடியிலே சூடியிருந்தான்; ஆதலால் திருமால் பிரசாதத்தைத் தோளிலே தாங்கிச் சென்றான். குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்க! என ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர்நின்று ஏத்த, தெள்நீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கு அது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வழி (கால்கோள். 61-67) செங்குட்டுவன் சிவபக்தன்; ஆயினும் திருமாலையும் பணியும் பண்புள்ளவன் என்ற உண்மையை இவ்வடிகள் காட்டுகின்றன. இச்செங்குட்டுவன் புத்தமதத்தினராகிய தண்டமிழ்ச் சாத்தன் என்னும் புலவருடன் நட்புக்கொண்டிருந்தான். அவர்தான் கண்ணகியின் வீரச் செயலைச் செங்குட்டுவனுக்கு உரைத்தார் என்று காட்சிக் காதையிலே காணப்படுகின்றது. சைனமதத்தைச் சேர்ந்த கோவலன் மனைவியான கண்ணகி யை இச்செங்குட்டுவன் பத்தினித் தெய்வமாகப் போற்றினான். இச்செயலும் செங்குட்டுவனுடைய மத சமரசத்தையே காட்டும். செங்குட்டுவன் சிவபக்தன், ஆயினும் திருமாலை வணங்கினான்; புத்த மதத்தினரிடம் நட்புப் பாராட்டினான்; அருக மதத்தவரையும் போற்றினான். இவ்வுண்மைகளை மேலே கூறியவைகளைக் கொண்டு உணரலாம். சமணமதத்தைச் சேர்ந்தவனாகிய கோவலனுடைய காதற்பரத்தை மாதவி; கோவலன் கொலையுண்டபின் அவள் பௌத்த சந்நியாசியானாள், தன் மகள் மணிமேகலையையும் பௌத்தமதத்திலே ஈடுபடுத்தினாள். கோவலன் இறந்த செய்தி அவன் தந்தை மாசாத்து வானுக்கு எட்டிற்று. தன் மைந்தனுக்கும், மருகிக்கும் நேர்ந்த துன்பத்தை அவனால் தாங்கமுடியவில்லை; இல்லறத்தை வெறுத்தான், தனது பெரும்பொருள் முழுவதையும் தானம் செய்தான். பௌத்த சங்கத்தார் வாழும் இந்திர விகாரத்தை அடைந்தான். அங்கே தவம் புரிந்துகொண்டிருந்த முனிவர் முந்நூற்றுவரை வணங்கித் துறவியானான். கண்ணகியின் தந்தையான மாநாய்கன் சமணமத முனிவரான ஆசீவகரை அடைந்தான்; தனது செல்வம் அனைத்தையும் தானம் செய்து துறவியானான். இச்செய்திகள் நீர்ப்படைக் காதையிலே காணப்படுகின்றன. இதுவரையிலும் எடுத்துக்காட்டியவைகளை ஆராய்ந்தால் நாம் பல உண்மைகளைக் காணலாம். சமணமதத்தைச் சேர்ந்த கோவலன் திருமால் கோவிலை யும் இந்திர விகாரங்களையும் வணங்கினான். கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும், மாங்காட்டு மறையோன் திருமாலின் மாண்பை உரைக்கும்போது, அதைப் பொறுமையுடன் கேட்டனர். திருமாலை வணங்கும் மாதரியைக் கவுந்தியடிகள் மனமாரப் பாராட்டினார்! அவளிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தார். மாதரி சமணமதத் துறவியாகிய கவுந்தியடிகள் சொல்லை ஏற்றாள். சமணமதத்தைச் சேர்ந்த கோவலனையும், கண்ணகி யையும் தன் இல்லத்துக்கு இட்டுச்சென்றாள்; அவர்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செய்தான். சிவபக்தனாகிய செங்குட்டுவன் திருமால் பிரசாதத்தை அன்புடன் பெற்றான்; புத்தமதத்தினரான தண்டமிழ்ச் சாத்தனாரிடம் நட்புக்கொண்டிருந்தான்; சைனமதத்தைச் சேர்ந்த கண்ணகிக்குக் கோவில் கட்டினான். மாதவியும், மணிமேகலையும் பௌத்த மதத்தைத் தழுவினர். கோவலன் தந்தை புத்தமதத்தைக் தழுவினான்; கண்ணகியின் தந்தை சைனமதத்தைத் தழுவினான். இவைகள் சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டில் பல மதங்கள் இருந்தன; ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தைத் தழுவினர்; அவர்களுக்குள் மத சம்பந்தமான சண்டை சச்சரவுகள் இல்லை என்ற உண்மையையே காட்டின. இந்திர விழாக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள எல்லாக் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெற்றன. பல நாட்டினரும், பல மதத்தினரும் அவ்விழாவைக் காண வந்தனர். பாலைநிலத்திலே ஐயையைக் கும்பிடும் வேடர்கள் தங்கள் பழக்கப்படி பலியிட்டுப் பூசித்தனர்; மது மாமிசங்களை வைத்துப் படைத்தனர்; அவர்கள் பூசையிலே சைனர்கள் வெறுக்கும் உயிர்ப்பலியும் இடம் பெற்றிருந்தது. மாயோனும், சிவனும் ஐயைதான் என்று அவர்கள் பாடிப்போற்றுகின்றனர். ஆய்ச்சியர் குரவையிலே திருமால்தான் உயர்ந்த கடவுளாகப் போற்றப்படு கின்றார். குன்றக்குரவையிலே முருகன்தான் ஒப்பற்ற தெய்வமாகப் போற்றப் படுகின்றான். காவிரிப்பூம்பட்டினத்து கோவில்களைக் குறிப்பிடும் போது. பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் என்று சிவன்கோவில்தான் முதலில் குறிக்கப்படுகின்றது. மதுரையில் உள்ள கோவில்களைக் குறிப்பிடும்போது, நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயில் என்று சிவன்கோவில்தான் முதலில் குறிக்கப்படுகின்றது. இவைகள் சிலப்பதிகார காலத்தில், தமிழகத்தில் சிவ பெருமான் தான் உயர்ந்த கடவுளாகப் போற்றப்பட்டார்; சிவனை வணங்குவோர் தான் பெருகியி ருந்தனர் என்ற உண்மையைக் குறிப்பன. கவுந்தியடிகளின் வாயிலாக அருகமதக் கொள்கை, அருகன் பெருமை விளக்கப்படுகின்றன. சிலப்பதிகார காலத்திலே பக்தி மார்க்கமும், அறமார்க்கமும் தமிழகத்தில் பரவியிருந்தன; இருபாலாரும் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ளவில்லை; ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப் படி எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்; தந்தை ஒரு மதம், தநயன் ஒரு மதம்; மனைவி ஒருமதம், கணவன் ஒரு மதம் என வேறுவேறு மதத்தினராயிருந்து ஒன்றபட்டு ஒரேகுடும்பமாக வாழலாம்; எவருக்கும் எந்தத்தெய்வத்தையும் வணங்க உரிமை யுண்டு; ஒருவரே பல தெய்வங்களையும் வணங்கலாம்; மத ஒழுக்கமும், தெய்வ வழிபாடும் அவரவர் களின் தனிப்பட்ட உரிமையாக எண்ணப்பட்டு வந்தன. இவ்வுண்மை களைச் சிலப்பதிகாரம் நமக்குத் தெளிவாகச் சொல்லுகின்றது; மக்கள் ஒன்று பட்டு வாழ்வதற்கு வழிகாட்டு கின்றது. மன்னரும் மக்களும் சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் குடிமக்கள் ஆட்சி இருந்ததில்லை, மன்னர் ஆட்சி தான் நிலவியிருந்தது. மன்னர் களுக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு. ஆயினும் நீதிமுறையுடன் ஆளும் மன்னர்கள்தான் மக்களால் மதிக்கப்பட்டனர். அறநெறி தவறாமல் ஆளவேண்டும்; நாட்டு மக்களுக்கு எவ்வித இடையூறும் உண்டாகாமல் பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அரசாளும் மன்னர்களை மக்கள் அனைவரும் தெய்வம் என்றே போற்றிவந்தனர். இத்தகைய மன்னர்கள் தெய்வங்களின் அவதார மாகவே மக்களால் மதிக்கப்பட்டனர். இதுதான் பண்டைக்கால மன்னர்களின் நிலைமை. வள்ளுவரும் இதைத்தான் கூறுகின்றார். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப்படும் நீதிமுறை தவறாமல் ஆட்சிபுரிந்து குடிகளைக் காப்பாற்றும் மன்னவன், பிறப்பிலே மனிதனாயினும், செயலால் மக்களுக்கு நன்மை செய்யத் தோன்றிய ஒரு தெய்வம் என்றே வைக்கப் படுவான் என்று வள்ளுவர் வழங்கும் இந்த முறைதான் சிலப்பதிகார காலத்தில் நிலைத்திருந்தது. ஆய்ச்சியர் குரவையிலே, குரவைக் கூத்தாடுவோர் மூவேந்தர் களையும் வாழ்த்துகின்றனர். அவ்வாழ்த்துக்களைப் படித்தால் இந்த உண்மையை உணரலாம். கோவா மலைஆரம்; கோத்த கடல்ஆரம்; தேவர்கோன் பூண்ஆரம் தென்னர்கோன் மார்பினவே; தேவர்கோன் பூண்ஆரம் பூண்டான் செழும்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருத்துஒசித்தான என்பரால் கோக்கப்படாத ஆரமாகிய மலைச்சந்தனம், கோத்த ஆரமாகிய கடல்முத்து, இந்திரன் மார்பிலே பூண்டிருந்த மாலை இவைகள் பாண்டிய மன்னன் மார்பிலே உள்ளன என்பர். தேவேந்திரனு டைய மார்பின் மாலையைப் பூண்ட பாண்டியன் தான் பசு மந்தையை மேய்த்தவன் குருந்தமரத்தை ஒடித்தவன், கண்ணன் என்று கூறுவார்கள். ஆரம்: சந்தனம்: முத்து. பாண்டியன் வேறல்லன், கண்ணன் வேறு அல்லன்; பாண்டியன்தான் கண்ணன் என்று கூறுகிறது இச்செய்யுள். பொன்இமயக் கோட்டுப் புலிபொறித்து மண் ஆண்டான் மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன் பொன்அம் திகிரிப் பொருபடையான் என்பரால் பொன்னொளி வீசும் இமயத்தின் சிகரத்திலே புலிமுத்திரை யிட்டான்; இவ்வுலகம் முழுவதையும் ஆண்டான்; அவன் சிறந்த சோழமன்னன்; அவன் மதில்சூழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்கின்ற வேந்தன். அந்தச் சோழ மன்னனாகிய புகார் நகர வேந்தன்தான், போர் செய்கின்ற, பொன்னொளி வீசும் அழகிய சக்கராயுதத்தையுடைய திருமால் என்பார்கள். இது, சோழ மன்னன் திருமாலின் உருவாகவே விளங்கு கின்றான் என்று கூறிற்று. முந்நீரின் உள்புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் மன்னர் கோச்சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்; மன்னர் கோச்சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கல்நவில் தோள்ஓச்சிக் கடல்கடைந்தான் என்பரால் கடலிலே சென்று பகையரசின் காவல்மரமாகிய அழியாத கடம்பமரத்தை வெட்டி வீழ்த்தியவன் அரசர்களுக்கு அரசனான சேரமன்னவன்; அவன் செழிப்புள்ள வஞ்சி நகரத்திலே வாழ்கின்ற மன்னவன். அந்தச் சேரமன்னனாகிய வஞ்சிமாநகர வேந்தன்தான், மலையென்று சொல்லத்தக்க தோளை அசைத்துக் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் அளித்த திருமால் என்பார்கள். இச்செய்யுள் சேரமன்னன்தான் திருமால் என்று உரைத்தது. ஆய்ச்சியர் குரவையில் உள்ள இம்மூன்று பாடல்களும் சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் திருமாலின் அவதாரமே என்ற கருத்தை வெளியிட்டிருக்கின்றன. இதுதான் மன்னர்களைப் பற்றிச் சிலப்பதிகார காலத்து மக்கள் கொண்டிருந்த கொள்கை. சிலப்பதிகார காலத்து மக்கள், அரசர்களிடம் அளவற்ற அன்பு செலுத்திவந்தனர்; பெருமதிப்பு வைத்திருந்தனர். மன்னர்களின் பொருட்டு மக்கள் எந்தத் தியாகமும் செய்யத் துணிந்திருந்தனர்; அரசர்கள் வாழ்வே தங்கள் வாழ்வு என்று எண்ணியிருந்தனர். இவ்வுண்மையைச் சிலப்பதிகாரம் தெளிவாக உரைக்கின்றது. படைவீரர்கள் மன்னனுக்கு எவ்வித ஆபத்தும் வரக் கூடாது என்று தெய்வங் களுக்குப் பலியிடுவார்கள்; மன்னனுக்கு வந்த இடையூறு நீங்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ளு வார்கள். வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என்று வாழ்த்தித் தங்கள் தலைகளைத் தாங்களே அறுத்துப்பலிபீடத்திலே வைப்பார்கள். படைவீரர்கள் இத்தகைய ராஜபக்தி படைத் திருந்தனர். இதனை இந்திரவிழவு ஊர் எடுத்த காதையில் 78 முதல் 88 வரையுள்ள அடிகளிலே காணலாம். சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டு வேந்தர்கள் தனியதிகாரம் படைத் திருந்தனர் என்பதில் ஐயம் இல்லை. அதனால்தான், சிலம்பு கவர்ந்த கள்வன் பிடிபட்டான் என்று பொற்கொல்லன் புகன்றவுடன், அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வாருங்கள் என்று பாண்டியன் பணித்தான். மன்னனுக்கு இருந்த தனியதிகாரம், பொற்கொல்லன் சொல்லியது உண்மையா? பொய்யா? என்பதை ஆராயாமல் இவ்வாறு ஏவும்படி செய்தது. சிலப்பதிகார காலத்தில் மன்னர்களுக்காக இரண்டு குழுக்கள் இருந்தன. ஒன்று ஐம்பெரும்குழு; மற்றொன்று எண்பேராயம். இந்த இரண்டு குழுவினரையும் கலந்து ஆலோசித்து அரசியல் நடத்தும் மன்னர்கள் தவறு செய்வ தில்லை. ஆயினும் இக்குழுக்களைக் கலந்து கொண்ட பிறகுதான், மன்னன் ஒரு வழக்கில் முடிவு சொல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பாண்டியன் செயலே இதை விளக்கும். ஆனால், தனியாட்சிமுறை ஒழிந்து, கூட்டாட்சிமுறை தோன்றிய காலம் சிலப்பதிகார காலம் என்று சொல்லலாம். ஐம்பெரும்குழு என்பது ஐவர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் கழகம். அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர் என்ற ஐவர்கள் இக்குழுவின் உறுப்பினர். எண்பேர் ஆயம் என்பது எட்டுவகை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபை. கணக்கர்கள் (அல்லது தொழிலாளர் தலைவர்கள், நிர்வாகத் தலைவர்கள், பொருள்காப்பாளர்கள், காவல்காப்போர், நகர மக்கள், படைத் தலைவர்கள், யானை வீரர்கள், குதிரைவீரர்கள். இவர்கள் இந்தச் சபையின் உறுப்பினர்கள். இவ்விருவகைச் சபையினரும், மன்னன் தவறு செய்யாமல் ஆள அவனுக்கு ஆலோசனை கூறிவந்தனர். பாண்டியன் நெடுஞ் செழியன் இக்குழுவினருடன் கலந்து ஆலோசிக்கவில்லை; ஆத்தரப்பட்டுக் கோவலனைக் கொல்லும்படி கூறிவிட்டான். ஆதனால்தான் அவன் அழிந்தான். அவன் ஆட்சியும், நகரமும் வீழ்ந்தன. சிலப்பதிகார காலத்து மக்கள் மிகுந்த தேசபக்தியள்ளவர்கள். தங்களுடைய வாழ்வைமட்டும் கருதாமல், நாடு நன்றாகச் சிறந்து வாழவேண்டும் என்னும் நாட்டம் உள்ளவர்கள். மறக்குடி மகளிர் புகாரிலே நாளங்காடிப் பூதத்திற்குப் பலியிட்டு வணங்குகின்றனர். வணங்கும்போது, எங்கள் குறைகளைத் தீர்க்கவேண்டும்ம் என்று அவர்கள் வேண்டிக் கொள்ளவில்லை; சோழ மன்னர் ஆளும் பெரிய நாடு முழுவதும் வாழவேண்டும்; நாட்டிலே பசி, பிணி, பகை ஒன்றும் தலைகாட்டக் கூடாது; மழையும், செல்வமும் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றனர். பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி (இந்திர விழவு. 71-73) இவ்வடிகள் தமிழ்மக்களின் தேசபத்தியை உணர்த்தின. மன்னர்கள் எவ்வளவுதான் உரிமை படைத்திருந்தாலும் முறைதவறிய மன்னர்களை மக்கள் மதிப்பதில்லை; அவர் களுடைய ஆட்சியை நிலைக்க விடுவதும் இல்லை. கொடுங்கோல் மன்னர்களின் வாழ்வைக் குலைப்பதிலே மக்கள் ஒன்றுபட்டனர்; கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தினர். இத்தகைய உணர்ச்சி மக்கள் உள்ளத்திலே குடிபுகுந்த காலம் சிலப்பதிகார காலம் என்று சொல்லிவிடலாம். இதற்குச் சான்று, கண்ணகியின் வழக்கும் நடத்தையும் ஆகும். இதைப்பற்றிப் புரட்சிக் காவியம் என்றும் பகுதியிலே விரிவாகக் காணலாம். சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டு மன்னர்கள் தனி அதிகாரம் படைத்திருந்தனர். அவர்கள் தெய்வப்பிறவிகளாக மதிக்கப்பட்டனர். அவர்கள் மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டுதான் அரசாட்சி புரிந்துவந்தனர். ஆதலால்தான் மக்கள் அவர்களிடம் அளவற்ற அன்புகொண்டிருந்தனர். மன்னர்களுக்கு ஆலோசனை கூற ஐம்பெரும்குழு, எண்பேராயம் என்ற இரண்டு சபைகள் இருந்தன. ஒன்று செயல்குழு போன்றது; மற்றொன்று சட்டசபை போன்றது. தவறு செய்தனர். சிலப்பதிகார காலத்து மக்கள் சிறந்த நாட்டுப்பற் றுள்ளவர்கள். மன்னர்கள் தனிஉரிமை படைத்தவர்களாயினும், அவர்கள் தவறு செய்யும்போது, மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அறந் தவறிய ஆட்சியை மாற்றியமைக்கப் பின்வாங்கமாட்டார்கள். இவ்வுண்மைகளை யெல்லாம் மேலே கூறியவைகளிலிருந்து காணலாம். பாரத நாட்டுப் பண்பாடு சிலப்பதிகாரத்தை வைத்துக்கொண்டு சிலர், வேற்றுமைப் பேச்சுப் பேசுகின்றனர். தமிழர் நாகரிகம் தனிப்பட்டது; தென்னாட்டு நாகரிகம் வேறு; ஆரியர் நாகரிகம் வேறு; வடநாட்டு நாகரிகம் வேறு என்றெல்லாம் வேசுகின்றனர். இவ்வாறு வேசி, அமைதியுள்ளம் படைத்த தமிழ் மக்கள் உள்ளத்திலே ஆத்திரத்தையும் வெறுப்பையும் திணிக்க முயல்கின்றனர். சிலப்பதிகாரத்தைப் படிப்போர், இத்தகையோரின் முயற்சிக்கு இரையாகமாட்டார்கள் என்பது உறுதி. சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையிலும் பிரிவினைப் பேச்சுக்கு இடமேயில்லை, பாரதநாட்டு மக்கள் அனைவரும் ஒரே பண்பாடுள்ளவர்கள் என்பதற்குத்தான் சிலப்பதிகாரம் ஆதரவு அளிக்கின்றது. இந்த ஒற்றுமைப் பண்பாட்டைத்தான் சிலப்பதிகார ஆசிரியர் உரைக்கின்றார். இந்நூலின் மங்கல வாழ்த்து முதலில் திங்களையும், இரண்டாவது ஞாயிற்றையும், மூன்றாவது மழையையும் போற்று கின்றது. சந்திரன், சூரியன், மழை இவைகளை இந்தியநாட்டு மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டார்கள். வட நூல் களிலும் வேதங்களிலும், சந்திர, சூரிய, வருண வணக்கப் பாடல்களைக் காணலாம். வருணனை வணங்குவது, மழையை வணங்குவதும் ஒன்றேதான். சிலப்பதிகார காலத்திலே இந்திர விழவைப்பற்றிக் கூறப் படுகின்றது. தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனைப் பற்றி வடமொழி நூல்களும் வேதங்களும் கூறுகின்றன. இந்திரனைக் குறித்த விழாக்கள் வேதங்களும் கூறுகின்றன. இந்திரனைக் குறித்த விழாக்கள், வேள்விகள் வடநாட்டிலும் நடைபெற்றன; தென்னாட்டிலும் நடைபெற்றன. இந்திரன் மருத நிலத்து மக்களின் வழிபடு தெய்வம். இந்திரனையே வழிபடு தெய்வ மாகக்கொண்ட மக்கள் தங்களை இந்திர குலத்தோர் என்று சொல்லிக்கொண்டனர். இன்றும் தமிழகத்தில் இந்திர குலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திரன் தமிழர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; வடவர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; பாரத நாட்டுப் பழந்தெய்வம். மற்றும் சிவபெருமான், திருமால், முருகன், பலதேவன், காளி, மன்மதன், இலக்குமி, நாமகள், பிரமன், இராமன், கிருஷ்ணன், வாமனன், திரிவிக்கிரமன் முதலிய தெய்வங்களும் வடநாட்டிலும் உண்டு; தென்னாட்டிலும் உண்டு. இத்தெய்வங் களைத் தமிழரும் வணங்கினர்; ஆரியர் என்று சொல்லப்படும் வடவரும் வணங்கினர். இராமாயணம், பாகவதம், பாரதம், கந்த புரணம் போன்ற கதைகளை வடவரும் போற்றிப் பாராட்டுகின்றனர்; சிலப்பதி காரத் தமிழர்களும் போற்றிப் பாராட்டியிருக்கின்றனர். சமணமதம், பௌத்தமதம் வடநாட்டில் தோன்றியவை. அம் மதகுருமார்கள், வடவர்கள் என்னும் ஆரியர்கள்தாம். தமிழர் களும் இம்மதங்களைப் போற்றினார்கள்; பின்பற்றினார்கள். இம்மதங்களின் அறநெறிகளைப் பாரதநாட்டு மக்கள் அனைவரும் போற்று கின்றனர்; அறிஞர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். சமண, பௌத்தமத இலக்கியங்களும், அம்மதக் கொள்கை களைப் பரப்பும் இலக்கியங்களும், தமிழ்மொழியிலும் உண்டு; வடமொழியிலும் உண்டு. சிறப்பாகப் பாலிமொழியிலே ஏராளமான இலக்கியங்கள் இருக்கின்றன. பாரத நாட்டில் உள்ள மற்றும் பல பழமையான மொழிகளிலும் இவ்விலக்கியங்கள் இருக்கின்றன. ஊழ்வினையைப் பாரதநாட்டில் பிறந்த மதங்கள் அனைத்தும் ஒப்புக்கொள்ளுகின்றன; மறுபிறப்பையும் ஒப்புக் கொள்ளுகின்றன. தமிழர் வடவர் அனைவருக்கும் இவற்றில் நம்பிக்கையுண்டு. நல்லநாள் கெட்டநாள் பார்த்தல், சகுனம் பார்த்தல். கனவு காண்பதில் உள்ள உண்மை, நல்ல செயல்களை நல்ல நேரத்திலே செய்தல் இவைகளிலே தமிழர்களுக்கும் நம்பிக்கை உண்டு; வடவர்களுக்கும் நம்பிக்கை உண்டு. வடதிசையைத் தமிழர்கள் புண்ணியதிசை யென்று போற்றியிருக்கின்றனர். புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் (இந்திர விழவு. 94) என்பதனால் இதைக் காணலாம். பொதியத்தையும், இமயத்தையும் தமிழர்கள் ஒன்றாகவே கருதினர். காவிரியாறும், கங்கை நதியும் ஒரேவிதமான புனித நதிகள் என்ற போற்றினர். அழியாத சிறப்பையுடைய பொதியமலையிலே கல் எடுத்தாலும் சரி, சேரர்களின் வில் முத்திரையைப் பெற்ற பெரிய இமயமலையிலே கல் எடுத்தாலும் சரி - அது கண்ணகியின் உருவம் அமைப்பதற்கு ஏற்றதாகும். கங்கையாகிய பெரிய ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும், காவிரி ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும் ஒரே சிறப்புடையதுதான். ஒல்கா மரபின் பொதியில் அன்றியும் வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக் கல்கால் கொள்ளினும் கடவுள்ஆகும்; கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து (காட்சி. 116-120) இவ்வடிகள் மேலே கூறிய உண்மையை விளக்கின. தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்கப் பட்டாலும், அச் சிவ பெருமான் இருக்கும் இடம் திருக்கைலாயம். அது வடநாட்டில் உள்ளது; இமயமலையின் மேல் இருப்பது என்ற நம்பிக்கை தமிழரிடமும் உண்டு; வடவரிடமும் உண்டு. மந்திரத்திலே தமிழர்க்கும் நம்பிக்கையுண்டு; வடவருக்கும் நம்பிக்கை உண்டு. நால்வகை வருணங்கள் வடநாட்டிலும் உண்டு; அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தமிழ் நாட்டிலும் உண்டு. வடநாட்டில் வடமொழி வேதங்கள் தெய்வீகத்தன்மை யுள்ளவைகளாக மதிக்கப்பட்டன; நான்முகனால் இயற்றப் பட்டவனாக எண்ணப்பட்டன; தென்னாட்டிலும் அவ்வாறே எண்ணப்பட்டன. வட நாட்டிலும் வேதங்கள் ஒதப்பட்டன; தென்னாட்டிலும் வேதங்கள் ஒதப்பட்டன. வடநாட்டிலே வேத வேள்விகள் நடைபெற்றன; தமிழ கத்திலும் வேத வேள்விகள் நடைபெற்றன. பார்ப்பார், துறவிகள், பசுக்கள், பத்தினிப்பெண்டிர் (பெண்கள்), வயதேறியவர், குழந்தைகள் இவர்களுக்கு எவ்விதத் துன்பமும் செய்யக்கூடாது. போர்க்காலங் களில்கூட முன்னறி விப்புக் கொடுத்து இவர்களை அப்புறப்படுத்திய பிறகுதான் போர் தொடங்க வேண்டும். இது ஒரு பொதுவான நீதி. இந்த நீதியைச் சிலப்பதி காரம் போற்றுகின்றது; பழந்தமிழர்களும் பாராட்டிப் பின்பற்றி வந்தனர். தமிழ் நாட்டு மன்னர்கள் போர் செய்யத் தொடங்கும்போது இந்த அறத்தைப் பின்பற்றி வந்தனர். இது பாரதநாட்டு மன்னர்கள் எல்லோராலும் போற்றப்பட்ட பொது தர்மமாகும். பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டு தீத்திறந்தார் பக்கமே சேர்க என்று வஞ்சினமாலையிலே கூறப்படுகிறது. கண்ணகி, அக்கினி தேவனைப் பார்த்து இவ்வாறு கட்டனையிடுகின்றாள். படைக்கலம் இல்லாதவர்களுடன் போர் புரிவது வீரம் அன்று; தோற்று ஒடுகின்றவர்களை விரட்டிப்பிடித்துக் கட்டித் தொல்லை கொடுப்பது வீரம் அன்று; இவை யுத்த தர்மம் அல்ல. இக்கொள்கையைப் பாரதநாட்டு அறநூல்கள் அனைத்தும் ஒத்துக் கொள்ளுகின்றன. இது வடவரும் தென்னவரும் ஒத்துக்கொள்ளும் பொது அறமாகும். இப்பொழுது அறம் சிலப்பதிகாரத்திலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. செங்குட்டுவன் வடநாட்டிலே தன்னுடன் போரிலே தோற்றுப் போன மன்னர்களைச் சிறைபிடித்தான். மாறுவேடம் கொண்டு ஒடி ஒளிந்த மன்னர்களையும் சிறை பிடித்தான். அவர்களைப் பாண்டியனுக்கும், சோழனுக்கும் காட்டிவிட்டு வருமாறு, நீலன் என்னும் படைத்தலைவனுடன் அனுப்பி வைத்தான். பாண்டியனும் சோழனும் அவர்களைப் பார்த்த போது செங்குட்டுவனுடைய வீரத்தை எள்ளி நத்தனர். இது வீரத்திற்கு அறிகுறியான செயல் அன்று எனப்பரிகசித்தனர். இச்செய்தியை நீலன் செங்குட்டு வனிடம் கூறினான். இந்த நிகழ்ச்சிகள் மூலம் யுத்த தர்மம் வடநாட்டினர்க்கும் தென்னாட்டினர்க்கும் ஒன்றுதான் என்பதைக் காணலாம். சோழனுடைய புகாரை அடைந்தோம்; அங்கே சித்திர மண்டபத்தே சோழ மன்னனைக் கண்டோம்; போரிலே தோற்றுப் போன ஆரிய மன்னர்களை அவ்வேந்தனுக்குக் காட்டி அவன் அடிகளை வணங்கினோம்; அம்மன்னன், பெரிய போர்க் களத்திலே மிகுந்த ஆண்மையுடன் போர்செய்து தோற்றவர்கள், வாள்படை, குடை இவைகளைப் போர்க்களத்திலே இழந்தவர்கள், படைவீரர் கோலத்தை மாற்றி மாறுவேடம் புனைந்துகொண்டு உயிர்தப்பி ஒடியவர்கள் இவர்களைப் போரிலே சிறைப்படுத்துதல் வெற்றியா காது என்று தன்படைத் தலைவனைப் பார்த்துக் கூறினான்; என் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசவில்லை! என்று நீலன் கூறினான். இதனை, செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு ... ... ... ... ஆங்கு சித்திர மண்டபத்து இருக்க, வேந்தன் அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு தமரின் சென்று தகைஅடி வணங்க, நீள் அமர் அழுவத்து நெடும்போர் ஆண்மையொடு வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று (நடுகல். 85-93) என்ற அடிகளால் அறியலாம். இதன்பின், பாண்டியன் பரிகசித்ததையும் நீலன் கூறுகின்றான். போர்க்களத்தின் வெற்றியானது. பகையரசன் வெற்றி யாகும் படி ஒடிப்போனவர்கள் - தவக்கோலம்பூண்டு உயிர் பிழைத்துப் போனவர்கள் - இவர்களின்மேல் கோபங்கொண்டு. இவர்களைச் சிறைபிடித்த வெற்றி மிகவும் புதுமையாக இருக்கின்றது. அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து தவப்பெரும் கோலம் கொண்டோர் தம்மேல் கொதிஅழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் புதுவது என்றனன் போர்வேல் செழியன் (நடுகல் 104-107) இவ்வடிகள் பாண்டியன் கூற்றை உணர்த்தின, சோழன், பாண்டியன் இருவர் கூறிய அறங்களும் பாரத நாட்டின் பொது அறமாகும். கணவனையே தெய்வம் எனக் கொண்டு, அவனுக்கு அடங்கி நடக்க வேண்டியதே பத்தினிப் பெண்டிர் கடமை. இது, வடவர்க்கும் தென்னவர்க்கும் உடன்பாடான கொள்கை. காதலன் மாண்டால், மனைவி உடன்கட்டை ஏறவேண்டும்; இன்றேல் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழவேண்டும். இதுவும், வடக்கும் தெற்கும் ஒத்துக்கொள்ளும் கொள்கை. இவைபோன்ற, வடவர்க்கும் தென்னவர்க்கும் ஒத்த பண்பாடுகள் பல சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன. ஆகவே சிலப்பதிகாரத்தை வைத்துக் கொண்டு, வடக்கு - தெற்கு வேற்றுமை பாராட்ட முடியாது. சிலப்பதிகாரம் தமிழர் நாகரிகத்தை - பண்பாட்டை - மட்டும் எடுத்துரைக்கும் நூல் என்று சொல்ல முடியாது. பாரத நாட்டுப் பண்பாட்டை விளக்கும் நூல்தான் சிலப்பதிகாரம், சிலப்பதிகார காலத்திலே. இது தமிழர் பண்பு, இது ஆரியர் பண்பு என்று பிரிக்கமுடியாமல், இருவர்பண் பாடும் ஒரே பண்பாடாகத்தான் திகழ்ந்தது. வடவரும் தென்னவரும் பழக்கவழக்கங்களிலே வேறு பட்டிருக்கலாம்; மொழியிலே வேறுபட்டிருக்கலாம்; நடை உடைகளிலே வேறுபட்டிருக்கலாம். ஆனால், உள்ளத்திலே - நம்பிக்கை களிலே - அறநெறியிலே வேறுபட்டவர்கள் அல்லர். இவ்வுண்மை யைச் சிலப்பதிகாரத்தைப் படிப்போர் தெளிவாகக் காணலாம். செப்பும் மொழி பதினெட்டு உடையாள் - எனின் சிந்தனை ஒன்று உடையான் என்று பாரதியார் சொல்லியிருப்பது உண்மை. சிலப்பதிகாரத்தைப் பார்த்த பின் - படித்த பின்தான் இவ்வாறு பாடினாரோ என்று எண்ணுவதிலே தவறில்லை. ஆரியர் - தமிழர் சேரன் செங்குட்டுவன் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். தமிழரை இகழ்ந்து பேசிய மன்னர்களின் மேல் சினங் கொண்டு சென்றான்; எதிர்த்த ஆரிய மன்னர்களைப் போரிலே புறமிட்டு ஓடும்படி செய்தான்; அவர்களை அவமானப் படுத்தினான். இச் செய்தி சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தில் காணப்படுகின்றது. இதை வைத்துக்கொண்டு வடவர் - தமிழர் வெறுப்பை வளர்க்க அடிகோலுகின்றனர் சிலர்; ஆரியர்-தமிழர் என்ற வேற்றுமையைக் கிளப்பி விட முயலுகின்றனர். வடவரும், தமிழரும் ஆயிரங்காலப் பகைவர்கள். இருவரும், நாகரிகத்தினும் பண்பாட்டிலும் வேறுபட்டவர்கள். இதனால்தான் வடவர் - தமிழர் வேற்றுமை நெடுங்காலமாக வளர்ந்து வந்ததிருக்கின்றது; வடவரும் தமிழரும் ஒத்துவாழ முடியாது என்று பேசுகின்றனர். இப்படிப் பேசுவது பொருளற்ற வழக்கு; அடிப்படையில்லாத கட்டிடம். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையை உணர்வார்கள். பாரதநாட்டு மக்களின் பண்பாடு ஒன்றுதான்; அவர்கள் உள்ளமும் உணர்ச்சியும் ஒன்றுதான். இதில் ஐயம் இல்லை. சிலப்பதிகார காலத்திற்கு முன்பே ஒரேவிதமான பண்பாடுதான் பாரத நாடு முழுவதும் பரவியிருந்தது. சிலப்பதிகார காலத்தில் பண்பாட்டிலே வடவர் - தமிழர் என்ற வேற்றுமை காணப்படவே யில்லை. இந்த உண்மையை மறைக்க முடியாது. இந்த உண்மையை மறைக்க முயல்கின்றனர் சிலர். செங்குட்டுவனுடைய வடநாட்டுப் படையெடுப்பைத் தமிழர் - ஆரியர் வேற்றுமைக்குச் சிலர் ஆதரவாகக் கொள் கின்றனர். இப் படையெடுப்பு தமிழர் - ஆரியர் பண்பாட்டுப் போராட்டம் என்று புனைந்துரைக்கின்றனர். இது வெறுப்பி லிருந்து பிறந்த வீண்வாதமேயாகும். தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் முடியரசர் களாக இருந்து ஆண்டுவந்தனர். சேர நாட்டுத் தமிழர்கள் பண்பாடு வேறு, சோழ நாட்டுத் தமிழர்கள் பண்பாடு வேறு, பாண்டிய நாட்டுத் தமிழர்கள் பண்பாடு வேறு என்று சொல்ல முடியாது, மத, சமுதாய, பழக்க வழக்கங்களிலே மூன்று நாட்டுத் தமிழர்களும் ஒற்றுமை யுள்ளவர்கள்தாம் சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் தமிழர்கள்தாம். இவர்கள், தமிழ்ப் புலவர்களைப் போற்றினார்கள்; தமிழ் இலக்கியங்களை வளர்த்தார்கள்; தமிழ்க் கலைகளைப் பெருக்கினார்கள்; தமிழ்மக்களின் பாதுகாவலர்களாக விளங்கினார்கள். ஒரே பண்பாடு; ஒரே இனம்; ஒரே நாடு; ஒரே மொழி இவைகளைக்கொண்ட மூவேந்தர்கள் எப்பொழுதும் ஒன்று பட்டு வாழ்ந்தார்களா? மூன்று முடியரசர்களும் ஒற்றுமையாக வாழ்ந்த காலம் மிகக் குறைவாகும். இவரகள் அடிக்கடி சண்டை யிட்டுக் கொண்டே யிருந்திருக்கின்றனர். இவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்த காலத்தை விடப் போரிட்டுக்கொண்டிருந்த காலந்தான் மிகுதி. இவ்வுண்மையைச் சங்க இலக்கியங்களால் காணலாம். புறநானூறு ஒன்றே இவ்வுண்மையை விளக்கப் போதுமான சான்றாகும். ஒரே நாட்டினரான - மொழியினரான - பண்பாட்டைக் கொண்டவர்களான - சேர, சோழ, பாண்டியர்கள் இவ்வாறு போரிட்டுக்கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன? பண்பாட்டு வேற்றுமையா? மொழி வேற்றுமையா? மத வேற்றுமையா? இல்லை... தனது நாட்டை விரிவுபடுத்திக்கொள்வது, எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெறுவது, வீரன் என்ற பெயருடன் விளங்குவது இவைகள் மன்னர்களின் கடமை என்று கருதினர். இது பண்டைக் கால மன்னர்களின் எண்ணம். தனி அதிகாரம் காரணமாக, ஒவ்வொரு வேந்தர்களும், தன்னிகர் அற்ற தலைவர்களாக வாழ விரும்பினர் இவ்விருப்பம் காரணமாகத் தமக்கு அடங்காத அரசர்களுடன் போர் செய்தனர்; தம்மை மதிக்காத மன்னர்களை எதிர்த்து வென்றனர் அல்லது தோற்று மாண்டனர் அம்மன்னர்களை வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. போர்க் களத்தில் வென்றாலும் புகழ்; தோற்று மடிந்தாலும் பெருமை; வீரசுவர்க்கம் உண்டு என்று நினைத்தனர். தமிழ் மன்னர்களுடன் அடிக்கடி போர் நடந்தது போலவே, சில சமயங்களில் தமிழ்நாட்டு மன்னர்களுக்கும் வடநாட்டு வேந்தர்களுக்கும் போர் நிகழ்ந்திருக்கின்றது. தமிழ்நாட்டு வேந்தர்களுக்குள் சண்டை நடக்கக் காரணம் என்னவோ, அக்காரணங்கள் தாம் வடநாட்டு மன்னர்களுக்கும், தமிழ்நாட்டு மன்னர்களுக்கும் சண்டை நடக்க காரணமாயிருந்தன, இச் சண்டைக்குக் காரணம், மொழியோ, மதமோ, பண்பாடோ அல்ல என்பது உறுதி. செங்குட்டுவனுக்கும், வடவேந்தர்களுக்கும் நடந்த போர் பண்பாட்டுப் போர் என்று சிலப்பதிகாரத்தில் ஒரிடத்திலும் காணப்படவில்லை, செங்குட்டுவன் தன் தாயைக் கங்கையிலே நீராட்டி வைக்கும் பொருட்டு ஒருமுறை வடநாடு வென்றான். அப்பொழுது ஆயிரம்மன்னர்கள் அவனை எதிர்த்தனர், அவர்களை வென்று வெற்றியுடன் திரும்பினான். இச்செய்தியைக் காட்சிக் காதையில் காணலாம், கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எம்கோ மகளை ஆட்டிய அந்நாள் ஆரிய மன்னர் ஈர்ஐஞ் ஞூற்றுவர்க்கு ஒருநீ ஆகிய செருவெம் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம் (காட்சி. 160-164) இவ்வாறு வில்லவன்கோதை என்னும் படைத் தலைவன் செங்குட்டுவனிடம் கூறினான், இதில் தமிழர்கள் கங்கையை புனிதமான புண்ணிய நதி என்று கருதியிருந்தனர் என்னும் உண்மை அடங்கியிருக்கின்றது, செங்குட்டுவன், கண்ணகி சிலைக்குக் கல் கொண்டுவர இமயம் செல்வது என்று எண்ணிய போது வில்லவன் கோதை இவ்வாறு சொன்னான், மேலும் அவன் கூறுகின்றான்: இப்பெழுது இமயமலையை நோக்கிச் செல்வது, பத்தினித் தெய்வத்தின் உருவம் சமைப்பதற்காக, ஒரு கல் கொண்டுவரும் பொருட்டுத்தான், ஆதலால் இச்செய்தியை வடநாட்டில் வாழும் அரசர்க்கெல்லாம் அறிவித்துவிடவேண்டும். வில், மீன், புலி அடையாளமிட்ட உன் திருமுகத்தை வடநாட்டு வேந்தர் களுக்கு அனுப்பிவிடுக. இமய மால்வரைக்கு எம்கோன் செல்வது கடவுள் எழுதஓர் கற்கே; ஆதலின், வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நல்நாட்டுச் செழுவில், கயல், புலி மண்தலை யேற்ற வரைக ஈங்கு (காட்சி. 168-172) இது வில்லவன்கோதை கூறியது, இதிலே இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே என்று குறித்திருப்பது சிந்தித்தற்குரியது. இமயக் கல்லை எடுத்துவரும் ஒரே நோக்குடன்தான் செங்குட்டுவன் வட நாட்டின் மேல படையெடுத்துப்போக நினைத்தான் என்று குறித்திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரத்தில் உள்ள மற்றொரு நிகழ்ச்சியும் குறிப்பிடத் தக்கது, வடநாட்டிலே நடந்த ஒரு சுயம்வரத்திலே ஆரிய மன்னர்கள் பலர் குழுமியிருந்தனர், அப்பொழுது அவர்கள் பலரும், தமிழ்நாட்டு வேந்தர்கள் வடநாட்டின்மேல் படை யெடுத்துவந்து, இமயத்தின் நெற்றியிலே வில், கயல், புலி முத்திரைகளைப் பொறித்துச் சென்றபோது எம்போன்ற முடி மன்னர்கள் இந்நாட்டில் இல்லைபோலும் என்று சொல்லி நகைத்தனர், இச்செய்தியை இமயத்திலிருந்து தீர்த்தயாத்திரை செய்துகொண்டு வந்த தவசிகள் அறிவித்தனர். அந்த நகை மொழி நம்மிடம் தங்குமாயின், அது எம்போன்ற தமிழ் வேந்தர்க் கெல்லாம் இகழ்ச்சிதரும். ஆதலால் அவ்வாறு இகழ்ந்த வேந்தர் களின் முடித்தலையிலே பத்தினித் தெய்வம் சமைப்பதற்கான கல்லை ஏற்றிக்கொண்டு வருவேன் என்று செங்குட்டுவன் உரைத்தான். (கால்கோள். 9-15) தமிழ்வேந்தர்களின் வீரத்தை இகழ்ந்துரைத்த வேந்தர்களை அடக்குவேன் என்றுதான் செங்குட்டுவன் கூறினான்; வேறு அவர்களுடைய பண்பாட்டைப்பற்றி இகழ்ந்து பேசவில்லை, வெங்குட்டுவன் வடதிசை நோக்கிச் செல்லும்போது, வழியிலே நீலகிரியிலே தங்கியிருந்தான், அப்பொழுது செங்குட்டுவனுடைய தூதர்தலை வனாகிய சஞ்சயன் என்பவன் வந்தான்; மன்னனைக் கண்டான். வேந்தே, நீங்கள் வடநாடு செல்வது, பத்தினிக் கடவுளைச் செய்வதற்குரிய கல் ஒன்றுக்காகமட்டுந்தான் என்றால், அதற்காக நீங்கள் போகவேண்டிய அவசியம் இல்லை, உங்களுடன் வேற்று மையின்றி ஒன்றுபட்டுக்கலந்த நட்பரசர்களாகிய நூற்றுவர் கன்னர்கள், தாங்களே இதைச் செய்வதாகக் கூறினர். இமயத்திலே கல்வெடுத்துக் கங்கையிலே நீர்ப்படை செய்து தருகின்றோம் என்றனர் என்று சஞ்சயன் இச்செய்தியைக் கூறினான், (கால்கோள். 148-155) அப்பொழுது செங்குட்டுவன் உரைத்த மறுமொழியாவது: வடநாட்டு வேந்தன் பாலகுமரன் மக்களான கனகனும் விசயனும் நாவடக்கம் அற்றவர்கள். விருந்து ஒன்றிலே, வடநாட்டு மன்னர்கள் பலருடன் கூடித் தமிழ்வேந்தர்களை இகழ்ந்து பேசினாராம், அவர்கள் எம்முடைய ஆற்றலை அறியாமல் இகழ்ந்தனர், ஆகையால், பத்தினிக்குக் கல் கொணரமட்டும் அன்று; அம்மன்னர்களுக்கு நமது வீரத்தை அறிவிப்பதற்காகவும் கூற்றத்தையும் கூட்டிக்கொண்டு இப்படை செல்கிறது, இச் செய்தியை நமது நட்பினராகிய கன்னர்களுக்குத் தெரிவிப்பாயக. கங்கைப் பேராற்றைக் கடப்பதற்கான மரக்கலங்களை அவர்கள் உதவியால் ஏற்பாடு செய்க. இதற்காக நீ முன்னே செல்க. (கால்கோள். 158-165) சஞ்சயனுக்கும் செங்குட்டுவனுக்கும் நடைபெற்ற இந்த உரையாடல்களிலும் செங்குட்டுவன் - கனக-விசயர் போர், பண்பாட்டுப் போர் என்பதற்கான ஆதரவில்லை, கண்ணகிக் காகக் கல் கொண்டுவரவும், தமிழ்வேந்தர்களின் வீரத்தை எள்ளிய கனக-விசயர்களை அடக்கவுந்தான் செங்குட்டுவன் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான், நூற்றுவர் கன்னர்கள் செங்குட்டுவனுடைய நண்பர்கள், இந்த வடநாட்டு மன்னர்கள் செங்குட்டுவனுக்கு உதவி செய்தனர், ஆதலால் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களிடமும் நட்புக் கொண்டிருந்தான் என்பதைக் காணலாம். செங்குட்டுவன் நீலகிரியிலே தங்கியிருந்தபோது நடந்த மற்றொரு நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்கது. வான்வழியாக மலயத்தை நோக்கிச் சென்ற முனிவர்கள் கீழே இறங்கினர். அரசன் எழுந்து முன்வந்து வணங்கினான், அப்பொழுது அம்முனிவர்கள் செங் குட்டுவனிடம் கூறிய செய்தி, தமிழர் - பண்பாடு ஒன்றென்பதையே விளக்கு வதாகும், சிவபெருமான் திருவருளால் வஞ்சிமாநகரில் தோன்றிய வேந்தனே! நாங்கள் இமயமலையிலிருந்து பொதியமலைக்குப் போகின்றோம்; இமயமலை வரையில் செல்வது உன் கருத்தானால், ஆங்குள்ள அருமறை அந்தணர்களுக்கு யாதோரு துன்பமும் வராமல் காப்பது நின் கடமை. செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்! மலயத்து ஏகுதும்; வான்பேர் இமய நிலயத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின் அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்னன்! காத்தல் நின்கடன் (கால்கோள்.98-103) இவ்வாறு முனிவர் உரைத்தனர்; செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர். முனிவர்களின் இவ்வேண்டுகோளைச் செங்குட்டுவன் மறக்க வில்லை, இமயத்திலிருந்த அந்தணர்களுக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் பாதுகாத்தான், கனக - விசயர் போர் முடிந்தபின்-ஆரியப்படைகளைத் தோல்வியடைச் செய்தபின்-தன் சேனைத் தலைவனாகிய வில்லவன்கோதையைப் பார்த்துச் செங்குட்டுவன் கூறிய செய்தி இதனை விளக்கும். வடதிசையிலே வேதநெறியை வளர்ப்பவர்களும், நாள் தோறும் அக்கினியைப் பேணுவதையே சிறந்த வாழ்க்கையாகக் கொண்டவர் களும் ஆகிய அந்தணர்களைப் போற்றிப் பாதுகாப்பீர்களாக, வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர் தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை காற்றூதாளரைப் போற்றிக் காமின் (கால்கோள். 248-250) இவ்வடிகள் செங்குட்டுவன் சிறப்பையும், பண்பையும் விளக்கின. செங்குட்டுவன் வடநாட்டின்மீது படையெடுத்துச்சென்ற தற்குக் காரணம் பண்பாட்டுப் பகை அன்று; பண்பாட்டு வேற்றுமையும் அன்று. இவ்வுண்மையை மேலே காட்டிய நிகழ்ச்சி களைக் கொண்டு தெளிவாகக் காணலாம், இவ்வுண்மை களை மறப்பவர்கள் - அல்லது மறைப்பவர்கள்தான் சிலப்பதிகாரத்தை ஆரியர் - தமிழர் வேற்றுமைக்கு ஆதரவாகக் கொள்ளுவார்கள். வடக்கில் வாழ்வோரைத் தமிழ் நூல்களில் ஆரியர் என்று குறித்தனர், ஆரியர்கள் என்றால் புண்ணிய திசையில் இருப்பவர்கள் என்று பொருள் கொண்டனர், உயர்ந்தவர்கள் என்ற பொருளும் கொண்டனர். நாட்டின் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு நடைஉடை பாவனைகளிலே தான் பாரத மக்களிடம் வேற்றுமையுண்டு, கொள்கையிலே வேற்றுமையில்லை; நம்பிக்கைகளிலே வேற்றுமை யில்லை, மொழிகளால் வேறுபட்டிருக்கின்றனர் ஆயினும் கருத்தால் ஒன்றுபட்டிருக்கின்றனர். பண்டைநாளில் வடமொழியைப் பாரதநாட்டின் பொது மொழியாகக் கொண்டனர், பாரதநாட்டு மக்களுக்கான சட்ட திட்டங்களையெல்லாம் அம்மொழியிலே எழுதி வைத்தனர். பாரதநாட்டு மக்கள் போற்றும் கடவுள் சம்பந்தமான கதைகளை யெல்லாம் அம்மொழியிலே அமைத்துக் கொண்டனர், பாரத நாட்டு மக்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அறநூல்கள் பலவற்றை அம்மொழியிலே எழுதினர், மந்திரங்கள் பொதுவான வடமொழியிலே செய்து வைத்தனர், இவைகள் பாரதநாட்டு மக்களின் பண்பாடு ஒன்று என்பதையே உணர்த்தும், சிலப்பதிகார காலத்தில் இந்த நிலைதான் இருந்தது என்பது உண்மை. சிலப்பதி காரத்தை நடுநிலையிலிருந்து படிப்போர் இவ்வுண்மையை உணர்வார்கள். சமுதாய நிலை சிலப்பதிகார காலத்திலே, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை ஏறக்குறைய இன்றுள்ளதுபோலத்தான் இருந்தது, நாடெங்கும் எல்லா இன்பங்களையும் நுகரும் செல்வம் படைத் தவர்களும் இருந்தனர்; பலவிதமான தொழில்களைச் செய்து உயிர்வாழும் தொழிலாளர்களும் இருந்தனர்; நிலத்திலே உழுது பிழைக்கும் உழவர்களும் இருந்தனர்; உழவர்களைக்கொண்டு நிலத்திலே பயிர்செய்து வாழ்ந்த நிலக்கிழவர்களும் இருந்தனர், செல்வர்களின் குதூகல வாழ்க்கை ஒருபுறம் இருந்தது; வறியோர்களின் அவலமான வாழ்க்கை மற்றொருபுறம் இருந்தது. சிலப்பதிகாரத்தில் உள் அரங்கேற்று காதை ஒன்றே செல்வர்களின் இன்ப வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதற்குப் போதுமான சான்றாகும், உடல் உழைப்பு மிகுதியாக இல்லாதவர்கள், சிறிது நேரம் அறிவைப் பயன்படுத்திப் பெரும் பொருள் சேர்ப்பவர்கள் - இவர்களுக்குதான் இன்பமாகப் பொழுதுபோக்கப் போதுமான நேரம் இருக்கும், நிலத்திலோ, தொழிற்சாலைகளிலோ உடலால் உழைக்கும் மக்களுக்குப் போதுமான ஓய்வுநேரம் இல்லை, ஆதலால் அவர்களால், சிறந்த சங்கீதம், உயர்ந்த நடனம் ஆகியவைகளைச் சுவைக்கக் கூடத் தெரியாது. இவைகளைச் சுவைத்துப் பொழுதுபோக்க அவர்களுக்கு நேரந்தான் ஏது? சிலப்பதிகார காலத்திலே சிறந்த இசையும், உயர்ந்த நடனமும் வளர்ந்திருந்தன, அவைகளை அரசர்களும் செல்வர் களும் அனுபவித்து மகிழ்ந்தனர், சிறந்த நடன ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் நடன வகைகளையெல்லாம் அறிந்தவர்கள்; இசைக் கருவிகளின் அமைப்புக்களை யெல்லாம் உணர்ந்தவர்கள்; ஒவ்வொரு வகைக் கூத்தையும், அதனதன் இலக்கணம் தவறாமல் கற்பிக்கும் திறமை யுள்ளவர்கள். சிறந்த இசைப் புலவர்கள் இருந்தனர். இவர்கள் பலவகைக் கூத்துக்களின் இலக்கணங்களையும் அறிந்தவர்கள்; அக் கூத்துக் களுக்கேற்ற பாடல்களையும், அப் படல்களுக்கேற்ற அசை களையும் உணர்ந்தவர்கள்; வேறு பல மொழிகளில் உள்ள பாடல்களையும், இசைகளையும் அறிந்தவர்கள். முத்தமிழிலும் தேர்ச்சிபெற்ற புலவர்கள் இருந்தனர், அவர்கள் நாடகநூல் இலக்கணங்களை அறிந்தவர்கள்; நல்ல இசைப் பாடல்களை இயற்றும் ஆற்றல் உள்ளவர்கள்; இவர்கள் சிறந்த நாடகநூல்களை எழுதுவதிலே வல்லவர்கள். மத்தளம் வாசிப்போர் இருந்தனர், இவர்கள் எல்லாக் கூத்துக் களையும், எல்லாப் பாட்டுக்களையும், எல்லா இசை களையும் ஏற்றவாறு, அவைகளோடு இசையும்படி அழகாக வாசிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். குழல் வாசிப்பதிலே வல்லவர்கள் இருந்தனர், இவர்கள் யாழ், மத்தளம், இசைப்பட்டு இவைகளோடு பொருந்த நன்றாக ஊதுவார்கள்; ஏழு பண்களையும் நன்றாக விளங்கும்படி எழுத்தற வாசிப்பதிலே வல்லவர்கள், யாழ் வாசிப்பதிலே வல்லவர்கள் இருந்தனர். இவர்கள் பண்களின் வகைகளையெல்லாம் நன்றாக அறிந்தவர்கள்; எல்லா இசைகளையும் இனிமையுடன் வாசிப்பதிலே வல்லவர்கள். இசை, நடனம், நாடகம் முதலியவைகள், நல்ல நாகரிகம் பெற்ற சமுதாயத்திலேதான் வளர்ச்சியடைந்திருக்கும். இவை களை வளர்ப்பதற்குத் துணைசெய்கின்றவர்கள் நிதிபடைத்தவர்கள் தாம். பண்டைக்காலத்திலே இக்கலைகள், மன்னர்களாலும் நிலத் தலைவர்களாலுமே வளர்க்கப்பட்டு வந்தன. சிலப்பதிகார காலத்திலும் இந்த நிலைமைதான் இருந்தது. சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டில் பலதெய்வ வணக்கம் குடிகொண்டி ருந்தது; தெய்வங்களுக்குப் பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வந்தன; பெரும்பாலான மக்கள் தெய்வபக்தியுள்ளவர்களாகவே விளங்கினர், எங்கும் அறவுரை களும், நல்லொழுக்கமும் போதிக்கப்பட்டன. ஆயினும் விபசாரம், பொய், திருட்டு முதலிய குற்றங்களும் நடந்துகொண்டுதான் இருந்தன. ஆறுகளிலே தேனும் பாலும் பெருக்கெடுத்து ஒடின; மானும் புலியும் ஒருதுறையிலே தண்ணீர் குடித்தன; மக்கள் அனைவரும் பசிப்பிணி அறியாமல் இன்புற்று வாழ்ந்தனர் என்று சிலப்பதிகால காலத்தைப்பற்றிச் சொல்ல முடியாது. தமிழ்நாட்டு வணிகர்கள் பெருநிதி படைத்தவர்களாக வாழ்ந்தனர். மாகவான் நிகர் வண்கை மாநாய்கன் வானத்து மேகம்போன்ற எதிர்பாராத வள்ளன்மையுள்ள மாநாய்கன், வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் வருகின்ற செல்வத்தால் பிறரை உண்பிக்கும் மாசாத்துவான் என்று மங்கல வாழ்த்திலே கூறப்படுவதால் செல்வர்களின் சிறப்பைக் காணலாம். வணிகர்கள் அரசர்களுக்கு அடுத்தவர்களாகப் போற்றப் பட்டனர், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்திலே, வணிகர், அசரசருக்கு அடுத்தவராக இருப்பது ஒன்று. இரண்டாவது, அவர்கள் செல்வத்திலும், செல்வாக்கிலும் அரசர்களுக்கு அடுத்தபடியாக இருந்தனர், அரச காரியங்களைப் பார்க்கும் உரிமை வணிகர்களுக்கு உண்டு என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இவ்வுரிமை அவர் களுக்குச் சிலப்பதிகார காலத்திலும் இருந்தது, ஆதலால்தான் சிலப்பதிகார ஆசிரியர் அவர்களை, மன்னர் பின்னோர் என்று குறிக்கின்றார். தொல்நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு (ஊர்காண்.21) அரைசர் பின்னோர் (அடைக்கல.109) அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின் உரிய எல்லாம் ஒருமுறை கழித்து (கொலைக்கள.44-45) மன்னர் பின்னோர், அரைசர் பின்னோர் என்ற இரண்டு தொடர்களும் பொதுவாக வணிகர்களைக் குறித்தன, அரசர் பின்னோர்க்கு என்று கொலைக்களக் காதையிலே குளிக்கும் தொடர் கோவலனையே குறித்தது. இவைகள் செல்வர்களின் சிறப்பைக் குறித்தன. நிலத்திற்கு உரிமையாளர்கள் இருந்தனர்; இவர்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி உழுபவர்கள் அல்லர், வீழ் குடி உழவர் என்று இவர்களைக் குறிக்கின்றார் இளங்கோ அடிகள். (இந்திரவிழவு.43) வீழ்குடி : காணியாளர், வேளாண்சாமந்தர் என்பாரும் உளர் என்பது அடியார்க்கு நல்லார் விளக்கம், வேளான் சாமந்தர் என்போர் சிற்றரசர், நிலக்கிழவர்கள் - நிலத்தலைவர்கள் தாம் - பெரும்பாலும் சிற்றரசர்களாக இருந்தனர் என்று தெரிகின்றது, வேளாளரைக் கங்கையின் புத்திரர்கள் என்று கூறுவது மரபு, உழுவித்துண்ணும் வேளாளரையே கங்கா புத்திரர்கள் என்றனர், இவர்கள் வறியோர்க்கு வழங்குவர்; நாடாளும் மன்னர்க்கு வெற்றிதேடித் தருவர், இத்தகையோர் சிற்றரசர் களாய் வாழும் பழமையான ஊர்களும் தமிழகத்தில் இருந்தன. பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும் (நாடுகாண். 148-150) இவ்வடிகள் மேற்கூரிய செய்தியை உணர்த்தின. காவிரி நீர் கங்கை நீர் ஆதலின் கங்கையின் புதல்வரைக் காவிரியின் புதல்வர் என்றார் என அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கம் குறிப்பிடத்தக்கது, இச்செய்திகள் உழுவித்துண்ணும் வேளாளர்கள் இருந்தனர்; அவர்கள் நில உடைமையாளர் காளக வாழ்ந்தனர்; சிற்றரசர்களாகவும் வாழ்ந்தனர் என்பதைக் காட்டின, உழவர்கள் ஏர் பிடித்து உழுதனர். அரிந்த நெற்கதிர்களின் மேல் கடாக்களை ஓட்டி மிதித்து நெல்லைப் பிரித்தனர்; உழவர் வீட்டுப் பெண்கள் வயலிலே நாற்று நட்டனர்; களைப்புத் தீர மதுவுண்டு மகிழ்ந்தனர். மதுவுண்ட மாதர்கள் மகிழ்ந்து பாடினர்; ஏர் உழுவோர் ஏர் மங்கலப் பாட்டுப் பாடினர், கடாவடிக்கும்போது முகவைப் பாட்டுப் பாடினர் (நாடுகாண். 127-137) என்று கூறப்படுகின்றது, நேரடியாக வயலிலே பயிர்செய்யும் உழவர்கள் இருந்தனர், அவர்கள் சொந்த நிலம் இல்லாதவர்கள்; வறுமையிலே வாழ்ந்த வர்கள் என்று எண்ணலாம். சிலப்பதிகார காலத்திலே நிலக்கிழவர்களும் இருந்தனர்; நிலத்திலே உழைத்துப் பாடுபடும் நிலமற்ற உழவர்களும் இருந்தனர், நிலமற்ற உழவர்கள், சமுதாயத்திலே இழிந்தவர் களாகக் கருதப் பட்டனர்; நிலத்தலைவர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டனர், இவ்வுண்மைமைகளை மேலே கூறியவைகள் உணர்த்துகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிச் சொல்லப்படும் செய்திகளிலும், மதுரையைப்பற்றிக் கூறப்படும் செய்திகளிலும் பல சிறு வணிகர்களையும், தொழிலாளர்களையும் காணலாம். கூடைகளிலும், தட்டுகளிலும் பண்டங்களை வைத்துக் கொண்டு சுற்றித்திரியும் வணிகர்கள் இருந்தனர். இவர்கள் ஏழைமக்கள்; அன்றாடம் பொழுதுபோனால் போதும் என்ற எண்ணத்துடன் வாணிகம் செய்வோர், இன்னும் பலவகையான தொழிலாளர்கள் இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. இதுபற்றிக் காவிரிப்பூம் பட்டினம், மதுரைமாநகரம் என்ற பகுதிகளிலே கூறப்பட்டுள்ளன, இவைகள் எளிய வாழ்க்கை நடத்தும் பலவகைத் தொழிலாளர்கள் சிலப்பதிகார காலத்தில் இருந்தனர் என்பதைக் குறிக்கப் போது மானவை. சிலப்பதிகார காலத்திலே, ஆண்களைப்பொறுத்தவரையில் விபசார வாழ்வு அவ்வளவு பெரிய குற்றமாகக் கொள்ளப்பட வில்லை. செல்வர்களுக்கு அது ஒரு உரிமையாக இருந்தது, அவர்கள் காதற் பரத்தையர்களுடனும், சேரிப் பரத்தையர் களுடனும் சேர்ந்து இன்புற்று வந்தனர். கணிகையர் என்னும் கூட்டத்தார் இன்பக் கலைகளில் வல்லுநர்களா யிருந்தனர். அவர்களை அரசர்களும், செல்வர் களும் ஆதரித்து வந்தனர், அவரகள் தொழில் நடனம், கூத்து, சங்கீதம் முதலியன. இவைகளுடன் விபசாரத்தையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். இதைச் சிலப்பதிகாரத்திலே விளக்கமாகக் காண முடிகிறது, காவிரிப்பூம்பட்டினத்தைப்பற்றியும், மதுரையைப் பற்றியும் கூறும்போது, இவர்கள் துறவியாகிய இளங்கோவடிகளின் கருத்தையே கவர்ந்துவிடுகின்றனர், கணிகையர், ஆடல் மகளிர், விலைமகளிர், பதியிலார் என்று வழங்கும் இவர்களைப்பற்றி இளங்கோவடிகள் தெளிவாகக் கூறுகின்றார். அவர்கள் அழகு, அவர்கள் கற்றிருக்கும் கலைகள், அவர்கள் பொழுதுபோக்கு இவைகளைப் பற்றியெல்லாம் விரிவாக உரைத்திருக்கின்றார், இவைகளை இந்திரவிழவு ஊர்எடுத்த காதையிலும், ஊர்காண் காதையிலும் காணலாம். கோவலன் சைனமதப் பற்றுடையவன்; அருக தர்மங்களை அறிந்தவன்; உருவும் திருவும், உயிர்பேர் ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் என்று கவுந்தி அடி களால் பாராட்டப்பட்டவன். இவனே மாதவியின் அழகிலே மயங்கினான் : மனைவியை விட்டுப் பிரிந்தான் : மாதவியுடன் கூடி வாழ்ந்தான்: ஒழுக்கம் இழந்தான்: செல்வத்தைத் தொலைத்தான் என்று கூறப்படுகின்றது. சிலப்பதிகார காலத்தில் செல்வர்கள் தங்கள் மனம்போன போக்கில் நடந்தனர்; ஒழுக்கத் தைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்று கோவலன் நடத்தையைக் கொண்டே கூறலாம், செல்வம் படைத்தவர்கள் இம்மாதிரி கெட்டுப் போவதற்கான சூழ்நிலை தமிழகத்தில் இருந்தது என்பதிலும் ஐயம் இல்லை. ஒரு பரத்தையும் தூர்த்தனும், கோவலன்-கண்ணகியைக் கண்டு எள்ளினர். அவர்களை நரிகளாகும்படி கவுந்தியடிகள் சபித்தார். இச்செய்தியால், ஒழுக்கங்கெட்ட ஆண் பெண்கள் தமிழ்நாட்டில் திரிந்தனர் என்று எண்ண இடம் உண்டு. கோவலனைக் காட்டிக்கொடுத்த பொற்கொல்லன் செய்கையும் தமிழ்நாட்டு நிலையை விளக்கும். பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடினான். கோவலன்மேல் பொய்ப்பழி சுமத்தினான், இப்பொற்கொல்லன். நூறு பொற்கொல்லர் களுக்குத் தலைவன்; அவர்களை வைத்து வேலை வாங்கும் தலைவன், இவனே பொய்யுந் திருட்டும் உள்ளவனாயிருந்தால், ஏனைய வறியோர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? மக்களைக் குற்றம் புரியத் தூண்டும்படியாரன வாழ்க்கைநிலை தமிழத்தில் இருந்தது என்பதில் ஐயம் இல்லை. வறுமை காரணமாகத் திருட்டுத்தொழில் புரிந்து வாழ வேண்டிய நிலையிலே பல மக்கள் தமிழகத்தில் இருந்தனர். இதைப் பொற்கொல்லன் வாயால் வெளியிடுகிறார் இளங்கோ அடிகள். இவ்வுண்மையைக் கொலைகளக் காதையிலே 172 முதல் 201 வரையில் உள்ள அடிகளால் காணலாம், அவைகள் திருடர்களைப் பற்றியும், அவர்கள் நடத்தையைப் பற்றியும் உரைப்பவை, மேலே கூறியவைகள் சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டில் சமுதாய நிலை எப்படியிருந்தத என்பதை விளக்கப் போது மானவை. சிலப்பதிகாரத்திலே தமிழத்தில் பெரிய செல்வர்கள் இருந்தனர்; ஏழை மக்களும் இருந்தனர், பெரிய நிலத்தலைவர்கள் இருந்தனர்; நிலமற்ற ஏழை உழவர்களும் இருந்தனர், விபசாரம், பொய், திருட்டு, குடி முதலிய கூடாஒழுக்கங்கள் இருந்தன. செல்வர்களுக்கு விபசாரப் பெண்கள் தேவையாக இருந்தனர், ஏழை மக்களிலும் இத்தகையவர்கள் இருந்தனர். நகரத்திலும், நாட்டிலும் ஒருபுறம் இன்ப வாழ்வு குடி கொண்டிருந்தது; மற்றொருபுறம் வறுமையாலான துன்ப வாழ்வு குடிகொண்டிருந்தது. வறுமை காரணமாகப் பலர் உழைத்தும், திருடியும் வாழவேண்டிய நிலையிலிருந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலைத்திருந்த காரணத்தால்தான் சமுதாயத்திலே இக்குற்றங்கள் குடியேறியிருந்தன. ஏற்றத்தாழ்வுள்ள ஒரு சமுதாயத்தில் என்னென்ன குறைபாடுகள் இருக்குமோ அவைகள் எல்லாம் சிலப்பதிகார காலத்துத் தமிழகத்திலே இருந்தன. இவ்வுண்மையைச் சிலப்பதிகாரம் தெளிவாகக் காட்டுகின்றது. அறவுரைகள் சிலப்பதிகாரத்திலே சிறந்த அறவுரைகள் பலவற்றைக் காணலாம். மக்களுக்கு அறநெறியைக் காட்டவே சிலப்பதிகாரம் எழுந்தது என்று கூறுவதில் தவறு இல்லை. கதை நிகழ்ச்சியிலே அறிநெறிகள் அடங்கிக் கிடக்கின்றன. சிறப்பாகக் கவுந்தி அடிகளின் வாயிலாகப் பல அறநெறிகள் போதிக்கப்படுகின்றன. அறநெறிகளைப் பின்பற்றி வாழ்வதன்மூலமே மக்கள் வாழ்வு சிறப்படையவேண்டும் என்பது சமணர் கொள்கை. பௌத்தர் களும் இக்கொள்கையுள்ளவர்கள்தாம். நன்னெறியில் நடப்பதால் தான் மக்கள் முன்னேற முடியும்; மக்கள் வாழ்வு சிறக்கும்; மக்கள் ஒன்றுபட்டு உறைவர் என்ற உறுதியான கொள்கை சைனர்களுக்கும் உண்டு; பௌத்தர்களுக்கும் உண்டு. பக்திமார்க்கமே சிறந்தது; எத்தகைய பாவத்தையும் ஆண்டவனைப் போற்றுவதன்மூலம் போக்கிக்கொள்ளலாம்; எத்தகைய இழிசெயலைச் செய்தாலும் பக்தி செய்வதன் மூலம் அச்செயலால் வந்த பழியைப் போக்கிவிடலாம்; பக்தர்களுக்கு இறைவன் எல்லா உதவியும் செய்வான்; அன்பினால் ஆகாத செயல்கள் ஒன்றும் இல்லை; ஆதலால் பக்தி மார்க்கமே சிறந்தது என்பது சைன, புத்த மதங்களை எதிர்ப்பவர்களின் கொள்கை. வைதீக சமயங்கள் பக்திமார்க்கத்தையே பெரிதாகப் பாராட்டு கின்றன. பக்தியினால் பரமபதம் பெற்றவர்களின் வரலாறுகள் பல, இலக்கியங்களாக விளங்குகின்றன. சைன, புத்த தர்மங்கள் தமிழகத்திலே செல்வாக்குப் பெற்றிருந்ததன் காரணமாக வைதீக மதங்களும் ஒழுக்க நெறிகளை ஏற்றுக் கொண்டன; பக்தியையும், ஒழுக்கத்தையும் சேர்த்துப் போதித்தன. இக்காரணத் தால்தான் வைதீக மதங்கள் வளர்ந்தன; அறநெறியை மட்டும் போதித்த சைன, பௌத்த மதங்கள் தமிழகத்திலே தேய்ந்தன. அறநெறியைப் போதிப்பது - பரப்புவது - ஒன்றே சைன, பௌத்த மதங்களின் குறிக்கோள் என்பதில் ஐயம் இல்லை. இவ்வுண்மைகளை உள்ளத்திலே வைத்துக்கொண்டு சிலப்பதி காரத்தைப் படிக்கவேண்டும். இம்முறையிலே படித்தால், அது எந்த மதத்தைச்சார்ந்த நூல் என்பது விளங்கும். சிலப்பதி காரத்தை இயற்றிய ஆசிரியர் எக்கொள்கையினர் என்பதும் தெளிவாகும். சிலப்பதிகாரப் பாத்திரங்களில் ஒருவரான கவுந்தியடிகள் சைன மத சந்நியாசினி. இது ஐயத்திற்கு இடமில்லாத உறுதியான உண்மை. கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் போகப் புறப்பட்டனர். காவிரியின் வடகரை வழியாக மேற்கு நோக்கிப் போயினர். ஒரு காவதம் கடந்தபின் கவுந்தியடிகள் இருந்த அறப்பள்ளியை அடைந்தனர். கவுந்தியடிகளை வணங்கினார். அவரிடம், பொருள் திரட்ட மதுரைக்குப் போவதாகக் கோவலன் கூறினான். அறவுரைகளைக் கேட்டு அருகனை வணங்கும் பொருட்டுத் தானும் மதுரைக்கு வருவதாகக் கவுந்தியடிகள் கூறினார். கோவலன் மகிழ்ந்தான். அப்பொழுது, மதுரைக்குப் போகும் வழியைப்பற்றிக் கவுந்தியடிகள் சொல்லு கின்றார். அவர் கூற்றில் அடங்கிக் கிடக்கும் அறவுறைகள் குறிப்பிடத்தக்கவை. 1. மதுரைக்குப் போகும் வயல்வழியிலே, கரும்புப் பயிர் செய்யப்பட்டிருக்கும் இடங்கள் பல உண்டு. கரும்பிலே தேன் அடைகள் நிறைந்திருக்கும். அவ்வடைகள் சிதைந்து அவற்றி லிருந்தது தேன் சிந்தும். அத் தேன் வண்டுகள் சூழ்ந்த பொய் கையின் நல்ல நீரோடு கலந்திருக்கும். இதை அறியாமல், தண்ணீர்த் தாகத்தால், அந்த நீரை இக் கண்ணகி தன் கைகளால் அள்ளிப் பருகவும் கூடும். 2. களை எடுப்பவர்கள் குவளை மலர்களை அடியோடு களைந்து வரப்பின்மேல் போட்டிருப்பார்கள். உடம்பிலே புள்ளிகளையும் கோடுகளையும் உடைய வண்டினங்கள் மது மயக்கத்தால் அம்மலர்களுடன் கலந்து கிடக்கும். நீங்கள் வழி நடந்து செல்லும் களைப்பால், அக் குவளைமலர்களை வெறும் பூக்கள்தாம் என்று நினைத்து அவைகளின்மேல் அடி வைத்து விடுவீர்கள். 3. இந்த வழியில் போகாமல். நீரோடும் பெரிய வாய்க்காலின் வழியே செல்லுவோமாயின் அதிலும் துன்பம் உண்டு. நீரில் வாழும், புள்ளிகளையுடைய நண்டுகளும், நத்தை களும் கரையில் ஊர்ந்து கொண்டிருக்கும். அவைகளை அறியாமல் அடிவைத்து விடுவோ மானால், அவ்வுயிர்கள் துன்புற்று மடியும். இவ்வாறு அவைகள் நம்மால் துன்பத்தை அடைந்தால், அதனால் வரும் கொலைப்பாவத்தை நம்மால் தாங்க முடியாது. 4. இத்தகைய வயலும் சோலையும் அமைந்த வழியைத் தவிர மதுரைக்குப் போக வேறுவழியில்லை. ஆதலால் நீ உன் அன்புக் குரிய மனைவியுடன். அவ்விடங்களை உற்று நோக்கி யாதொரு குற்றமும் உண்டாகாமல் பாதுகாத்து வழி நடக்க வேண்டும். 1. ஆங்கண் கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் தூதீர் கலக்கும்; அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்தி குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும். 2. குறுநா இட்ட குவளை அம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய இடக்கை நெறிசெல் வருத்தத்து நீர் அஞர் எய்தி அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும். 3. எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில் பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழ் அடி ஒதுக்கத்து உறுநோய் காணின் தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா. 4. வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை; நெறிஇரும் குஞ்சி ! நீ வெய்யோளொடு குறிஅறிந்து அவை அவை குறுகாது ஒம்பு. (நாடுகாண். 81-97) இவ்வறவுரைகள் அவ்வளவும் சமண மதத்தின் சிறந்த கொள்கையாகும். தேன் அருந்துதல் பாவம்; நாம் அறியாமல் நம்மால் உயிர்கள் கொலையுண்டலும் பாவம்; நமது கவனக் குறைவால் உயிர்களைக் கொல்லுதலும் பாவம் என மூன்று அறங்கள் கவுந்தி அடிகளால் கூறப்பட்டன. இவைகள் சமணர் களின் கொள்கை; அவர்களால் போற்றப்படும் அறங்கள். திருவரங்கத்திலே ஒரு சோலையிலே சமண முனிவர் இருவர் தோன்றினர். அவர்களைக் கவுந்தியடிகள், கண்ணகி கோவலன் மூவரும் வணங்கினர். மிகுந்த தவப்பெருமையுள்ள கவுந்தியே! தன் பயனை ஊட்ட முன்வந்து நிற்கும் தீவினையை, நீ போ என்று சொன்னால் போய்விடாது. அது தன் பலனை ஊட்டித்தான் போகும். இதை நீ அறிக! விளைநிலத்திலே போட்ட விதை முளைத்து, வளர்ந்து, பயன் தருவதுபோல, நல்வினை நம் எதிரில் வந்து அதன் பயனைத் தரும்போது அதை விலக்கவும் முடியாது. கழிபெரும் சிறப்பின் கவுந்தி காணாய்! ஒழிக என ஒழியாது ஊட்டும் வல்வினை; இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா. (நாடுகாண். 170-173) இவ்வாறு சமண முனிவர்கள் உரைத்தனர். ஊழ்வினையின் பயனை ஒவ்வொரு வரும் அனுபவித்துத்தான் தீரவேண்டும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்ற சைனமதக் கொள்கை இதனால் வலியுறுத்தப்பட்டது. வேத முதல்வனால் அருளப்பட்ட ஆகமம் ஆகிய விளக் கொளியைப் பெற்றால்தான் பிறவியாகிய சிறையிலிருந்து வெளியேற முடியும். விண்ணவன் வேதமுதல் விளங்கு ஒளி ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது போதார் பிறவிப்பொதி அறையோர் (நாடுகாண். 189-191) இதுவும் அச் சமண முனிவர்கள் கூறிய அறவுரை. சமண மத தத்துவங்களாகிய ஊழ்வினை, ஆகம அறங்களைப் பின்பற்றல் ஆகிய உண்மைகள் இவ்வாறு சமண முனிவர்கள் மூலம் வலியுறுத்தப்பட்டன. கவுந்தியடிகள், கண்ணகி, கோவலன் மூவரும் காட்டின் வழியாக மதுரை நோக்கிச் சென்றனர். செல்லும் வழியிலே மாங்காட்டு மறையோன் ஒருவன் இவர்களைச் சந்திக்கின்றான். அவனிடம் மதுரைக்குப் போகும் வழியைப்பற்றிக் கோவலன் கேட்டான். அதற்கு மறையோன் மூன்று வழிகளைக் கூறினான். அவற்றுள் இடப்பக்கத்து வழியிலே சென்றால் அழகர்மலையிலே உள்ள புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்ற மூன்று பொய்கைகளைப் பற்றியும், அவற்றை அடையும் வழியைப்பற்றியும் கூறினான். புண்ணிய சரவணத்தில் படிந்தால் இந்திர வியா கரணத்தை அறியலாம்; பவகாரிணியில் படிந்தால் பழம்பிறப்பை அறியலாம்; இட்டசித்தியில் ஆடினால் நினைத்தவை களை யெல்லாம் அடையலாம் என்றான். இந்த மறையோனுக்குக் கவுந்தியடிகள் தந்த மறுமொழி குறிப்பிடத் தக்கது. நன்மையை விரும்பும் கொள்கையையுடைய நான்மறை யாளனே! நீ சொல்லிய பிலத்துள் புகுந்து, அப் பொய்கைளைச் சேரவேண்டிய முறைமை எங்களுக்கு இல்லை. நீண்ட ஆயுளை யுடைய இந்திரன் இயற்றிய வியாகரணத்தை எமது பரமா கழத்தில் தெளிவாகக் காண்பாய்! ஆதலால் நாங்கள் புண்ணிய சரவணத்தில் பொருந்தவேண்டியதில்லை. சென்ற பிறப்பிலே செய்தவைகளின் பலனை இந்தப் பிறப்பிலே அறிய வில்லையா நீ? அதலால் பவகாரிணியில் மூழ்கவேண்டிய தில்லை. உண்மையைத் தவறாமல் பின்பற்றிக் கொல்லா விரதத்தையும் மேற்கொண்டு ஒழுகுவார்க்குக் கைகூடாதிருக்கும் பொருள் யாதொன்றும் இல்லை. ஆதலால் நாங்கள் இட்ட சித்தியிலே இறங்கி நீராடவேண்டியதில்லை. நீ விரும்பும் தெய்வத்தைக் கண்டு வணங்க நீ போ! நாங்கள் எங்கள் நீண்ட வழியிலே செல்லுகின்றோம். நலம்புரி கொள்கை நான்மறையாள! பிலம் புகவேண்டும் பெற்றி ஈங்கு இல்லை; கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்கக் காணாய்! இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் பிறந்த பிறப்பில் காணாயோ நீ! வாய்மையின் வழாது மன்உயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள்? காமுறு தெய்வம் கண்டு அடிபணிய நீபோ! யாங்களும் நீள்நெறிப் படர்குதும் (நாடுகாண். 152-161) இவ்வாறு மாங்காட்டு மறையோனுக்குக் கவுந்தியடிகள் விடை யளித்தார். இவ்வடிகள் அவ்விடையைத் தெரிவிக்கின்றன. அருக ஆகமத்தில் மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய எல்லாப் பொருள்களும் அடங்கியிருக்கின்றன. முன்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளின் பலனையே இப்பிறப்பில் அனுபவிக்கின்றோம். வாய்மையைப் பின்பற்றுவதும், கொல்லா விரதத்தைப் போற்றுவதும் உயர்ந்த ஒழுக்கம். இந்த மூன்று அறங்களையும் கவுந்தி அடிகள் தம் வாயால் கூறினார். கவுந்தி அடிகள், கண்ணகி, கோவலன் மூவரும் மதுரைப் புறஞ்சேரியிலே போய்த் தங்கினர். மறுநாள் பொழுது விடிந்தபின் கோவலன் கவுந்தி அடிகளை வணங்கினான். நான் நகருட் சென்று இடம் தேடி வருகின்றேன்; அதுவரையிலும் கண்ணகியைப் பாதுகாக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டான் அப் பொழுது கவுந்தி அடிகள் அவனுக்கு ஆறுதல் மொழிகள் உரைத்தார். இவ் ஆறுதல் மொழிகளில் உள்ள அறவுரைகளும் குறிப்பிடத்தக்கவை. 1. பிற உயிர்களுக்குத் தீமை செய்யும் மறநெறியை விட்டு விலகுங்கள். விலகாவிட்டால், அதன் விளைவாகிய துன்பத்தைத் தீவினை உருக்கொண்டு வந்து ஊட்டும்.இவ்வாறு அறநெறி யிலே ஒழுகுவோர், நன்மை - தீமை அறிந்து கூறுவர். நாவைக் கோலாகவும், வாயைப் பறையாகவும் கொண்டு பறையறைந்து உரைப்பர், இவ்வாறு கூறினும் உறுதியற்றவர்கள் இதனை உமயாகக் கொள்ள மாட்டார்கள். தீமையைத் தரும் ஊழ்வினை உருக் கொண்டு வந்து துன்புறுத்தும் போது அறியாமையால் வருந்தி நிற்பர். 2. எவ்விதத்திலும் தட்டிக்கழிக்க முடியாத தீவினையின் பயனை அனுபவிக்கும்போது கற்றறிந்தவர்கள் செயலற்று வருந்தமாட்டார்கள். 3. மகளிரைப் பிரிவதால் வரும் துன்பம், அவர்களை அடை வதற்கான முயற்சியில் வரும் துன்பம், மன்மதன் வருத்துவதால் வரும் துன்பம்-இவைகள் எல்லாம் மாதரைப் புணர்ந்து மயங்குவோர்க்கேயுண்டு; பற்றற்ற தனிவாழ்க்கையை உடைய பெரியயோர்க்கு இல்லை. 4. பெண்டிரும் உண்டியுமே இவ்வுலகில் இன்பவாழ்வு என்று கொண்டவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவர். இதை உணர்ந்துதான் முனிவர்கள் இவற்றை ஒழித்தனர். இத்தகைய காமத்தை விரும்பினோர், கரைகாண முடியாத துன்பத்தை அடைந்தனர். இத்தகையோர் இன்றும் முன்பும் பலர். 1. மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும் என்று அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி நாக்கடிப்பாக வாய்ப்பறை அறையினும், யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்; தீதுஉடை வெவ்வினை உருத்தகாலை பேதைமை கந்தாப் பெரும்பேது உறுவர். 2. ஒய்யா வினைப்பயன் உண்ணும்காலை கையாறு கொள்ளார் கற்றுஅறி மாக்கள், 3. பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும், உருஇலாளன் ஒறுக்கும் துன்பமும் புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது ஒருதனி வாழ்க்கை உரவோற்கு இல்லை. 4. பெண்டிரும் உண்டியும் இன்பம், என்று உலகில் கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம் கண்டனர் ஆகில், கடவுளர் வரைந்த காமம் சார்பாக் காதலீன் உழந்து ஆங்கு ஏமம் சாரா இடும்பை எய்தினர், இன்றே அல்லால், இறந்தோர் பலரால். (ஊர்காண்.27-44) இவ்வாறு கவுந்தி அடிகள் கூறினார். இராமன் சீதையுடன் வனத்தில் புகுந்து வருந்தியது ; நளன் மனைவியுடன் காட்டுக்கு வந்து துன்புற்றது - இரண்டையும் மாதரால் உண்டான துன்பத்திற்கு உதாரணங்களாக எடுத்துக்காட்டினார். பிற உயிர்களுக்குத் தீமை செய்தல் மறநெறி; அத் தீவினையின் பயனை அனுபவித்தே தீரவேண்டும். பெண்டிர்மீது கொண்ட காமத்தால்தான் மக்கள் இவ்வுலகில் துன்புறு கின்றனர். அறிஞர்கள் பெண்ணாசை, உணவாசை இரண்டையும் துறப்பார்கள். இவ்வறங்களையே கவுந்தியடிகள் எடுத்துரைத்தார். கவுந்தியடிகள், கண்ணகியை மாதரியிடம் ஒப்படைக்கும் போது, தானத்தின் சிறப்பை ஒரு கதையின் மூலம் விளக்கிக் கூறுகின்றார். சாயலன் மனைவி செய்த தானத்தால் ஒரு குரங்கு தேவ வடிவம் பெற்ற கதையை எடுத்துக்காட்டினார், இக்கதையை, அடைக்கலக் காதை 163 முதல் 189 வரையுள்ள அடிகளிலே காணலாம். இக்கதை சிறுகதைகள் என்னும் பகுதியிலே கூறப்பட்டுள்ளது இக்கதையின்வாயிலாகத் தானத்தின் சிறப்பு, நல்வினையின் பெருமை இவைகள் வலியுறுத்தப்பட்டன, மேலே எடுத்துக் காட்டப்பட்டவை அனைத்தும் சைன மதத்தின் சிறந்த அறங்கள். நடுகல் காதையிலே யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகிய அறங்கள் வலியுறுத்தப் படுகின்றன. தோற்றுப்போன மன்னர்களைச் செங்குட்டுவன் சிறை பிடித்து வந்ததுபற்றிச் சோழ, பாண்டியர்கள் நகைத்தனர், இச்செய்தி கேட்ட செங்குட்டுவனுக்குச் சினம் வந்தது, அப்பொழுது அருகில் இருந்த மாடலன், செங்குட்டுவன் சினத்தைத் தணித்தான்; அறவுரைகள் கூறினான். புகழ்பெற்ற மன்னர்கள் யாவரும் மறைந்தனர்; அதனால் உடல் நிலையற்றது என்பதை உணர்ந்திருக்கின்றாய், இவ்வுலகத்தாரிடம் செல்வம் நிலைத்திராது; இதைப் போர்க் களத்திலே உன்னை எதிர்த்த ஆரிய மன்னர்களிடம் கண்டாய். இளமை நிலையற்றது என்பதை அறிவுடையோர் யாரும் இங்கு எடுத்துக்காட்டவேண்டியதில்லை, அழகு நிறைந்த மார்பையுடைய செங்கோல் வேந்ததே! நீயே உன்னிடத்திலேயே நரைத்து முதிர்ந்த உடலைக் காண்கின்றாய்! மீக் கூற்றாளர் யாவரும் இன்மையின் யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்! மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் செல்வம் நில்லாது என்பதை வெல்போர்த் தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் கண்டனை அல்லையோர் காவல் வேந்தே! இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு உணர்வுடை மாக்கள் உரைக்கல் வேண்டா; திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே! நரைமுதிர் யாக்கை நீயும் கண்டனை. (நடுகல்.149-158) இவ்வடிகள் யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலை யாமை என்னும் மூன்று அறங்களையும் மொழிந்தன. ஒவ்வொருவரும் தாம்தாம் செய்த நல்வினை, தீவினைக் கேற்ப உயர்ந்த பிறப்பையோ, தாழ்ந்த பிறப்பையோ அடைவார்கள் என்ற அறத்தையும் மாடலன் உரைத்தான். நல்திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும், அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும், அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும், பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் புதுவது அன்றே; தொன்றுஇயல் வாழ்க்கை. (வரந்தரு. 136-140) நல்ல தருமங்களைப் புரிந்தோர் துறக்கம் புகுந்து இன்புறுவர்; உள்ளத்திலே ஒரு ஆவலைக் கொண்டவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திலே போய்ப் பிறப்பர்; அறத்தின் பயன் உருக்கொண்டு வந்து ஊட்டும்; பாவத்தின் பயனும் உருக்கொண்டு வந்து ஊட்டும்; பிறந்தவர் அனைவரும் இறந்தே போவார்கள்; இறந்தவர்கள் மீண்டும் பிறந்தே தீர்வார்கள், இவைகள் புதுமை யல்ல; பழமைதொட்டு நடைபெறும் இயற்கையாகும். இவ்வாறு பின்னும் அறவுரைகள் புகன்றான் மாடலன், மேலே காட்டிய அறவுரைகளுள், கவுந்தியடிகளின் மொழிகள் சிறப்பாகச் சமணமத தர்மத்தைக் கூறுகின்றன, பொது நெறி களும் அவர் மொழிகளில் காணப்படுகின்றன, மாடலமறையோன் மொழியும் அறவுரைகளிலே யாக்கை, செல்வம், இளமை நிலையாமையைப்பற்றிக் கூறியிருப்பன சைனர்களின் சிறந்த கொள்கைகள், ஆயினும் அவற்றை வைதீக மதத்தினரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர், ஆகவே மாடலன் மொழிகள் சமணர், பௌத்தர், வைதீக மதத்தினர் அனைவரும் ஒப்புக்கொள்ளும் பொது அறமாகவே காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்திலே சைனமத அறங்கள்தாம் சிறப்பாகக் கூறப்படுகின்றன. கவுந்தி அடிகளின் மொழிகளிலே சமண தருமங் களைக் காணுகின்றோம், மற்ற மத தர்மங்கள் எந்த இடத்திலும் இவைபோலக் கூறப்படவில்லை. ஆதலால் சிலப்பதிகார ஆசிரியர் ஒரு சைனத் துறவி என்பது உறுதி, சிலப்பதிகாரம் சைன தருமத்தை விளக்குவதற்காக எழுதப்பட்ட ஒரு நூல், ஆயினும் அனைவரும் போற்றும் வகையிலே அருமை யாக எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற இலக்கியம் என்பது திண்ணம். சிலப்பதிகார காலத்திலே சைன மத தர்மங்களும், வைதீக மதத்திலே புகுந்து ஒன்றுபோலவே வழங்கின. ஊழ்வினை, மறு பிறப்பு தானதர்மம், வாய்மை, கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, பெரியாரைத் துணைக்கோடல், காமத்தின் தீமை, பிறர்மனை நயவாமை, புறஞ்சொற் கூறாமை போன்ற அறங்களைச் சைவர், வைணவர் முதலியவர்களும் போற்றினர். சிலப்பதிகாரத்தில் வரந்தரு காதையின் இறுதியிலே ஆசிரியர் கூற்றாக அமைந்திருக்கும் அறங்கள் போற்றத்தக்கவை, 186 முதல் 202 வரை அமைந்திருக்கும் அடிகள் சைனர், பௌத்தர், வைதீக மதத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலே அமைந்திருக்கின்றன, இவ்வடிகளை சிலம்பும் குறளும் என்னும் பகுதியிலே காணலாம். அனைவரும் ஒப்புக்கொள்ளும் முறையிலே அறங்களை எடுத்துரைக்கும் இதுபோன்ற ஒரு சிறந்த நூல் வேறு ஒன்றும் இல்லை, ஆகையால்தான் சிலப்பதிகாரத்தை எச்சமயத்தோரும் போற்றுகின்றனர்; சிறந்த இலக்கியமாக எண்ணிப் பாராட்டு கின்றனர். சிலம்பும் குறளும் சிலப்பதிகாரத்திலே திருக்குறளின் கருத்துக்கள் பல விடங்களில் காணப் படுகின்றன, திருக்குறளின் சொற்றொடர்களும் காணப்படுகின்றன, திருக்குறளுக் கான விளக்கங்களும் காணப் படுகின்றன, சுருங்கச் சொல்லவேண்டுமானால் திருக்குறள் அறத்தைத் தழுவிய கதையாகவே சிலப்பதிகாரம் அமைந்திருக் கின்றது என்று சொல்லிவிடலாம். திருக்குறளில் வான்சிறப்பு என்னும் அதிகாரம் அமைந் திருக்கின்றது; கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரம் இதுதான், திருக்குறளைத் தவிர ஏனைய அறநூல்களில் இவ்வாறு மழைக்குத் தனிச்சிறப்புக் காணப்படவில்லை. ஆனால் சிலப்பதி காரம் மழையையும் கடவுள் வாழ்த்தாகக் கொண்டிருக்கின்றது, மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும் என்று வானையும் வணங்குகிறார் சிலப்பதிகார ஆசிரியர். இது திருக்குறளைப் பின்பற்றிய முறையாகும். கோவலன் தந்தையைப் பற்றிச் சொல்லும்போது வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் இருநிதிக் கிழவன் என்று காணப்படுகின்றது, நல்ல வழியிலே வருகின்ற செல்வத்தைச் சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் உதவி உண்பிக்கும் குணம் உள்ளவன்; மாசாத்துவான் என்னும் பெயர் உள்ளவன்; பெரிய செல்வம் உள்ளவன் என்பதே இதன் பொருள். மங்கல வாழ்த்திலே சொல்லப்படும் இச்செய்தி சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன் (குறள். 524) ஒருவன் செல்வம் பெற்றதால் அடையும் பயனாவது, சுற்றத்தார் சூழும்படி அவர்களிடம் அன்புகாட்டி ஒழுகுதலாம் என்ற குறளின் கருத்தைக் தழுவியதாகும். இத் திருக்குறளின் கொள்கையை மாசாத்துவான் பின்பற்றி வாழ்ந்தான் என்று சிலப்பதிகாரம் உரைத்தது. தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்எனப் பெய்யும் மழை (குறள். 55) வேறு தெய்வத்தை வணங்காமல் தன் கணவனையே தெய்வ மாகக்கொண்டு வணங்கி எழுகின்றவளே சிறந்த கற்புள்ளவள்; அவள், பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்பது திருக்குறள், இக்குறளுக்கு இலக்கியமாகவே கண்ணகியைக் காட்டுகிறது சிலப்பதிகாரம். சோமகுண்டம், சூரியகுண்டம் என்று இரண்டு தடாகங்கள் இருக்கின்றன, அவற்றில் மூழ்கிக் காமவேள்கோட்டத்தை வணங்கு வோர் தம் கணவருடன் இன்புற்று இருப்பர் இறந்த பின்னும் தம் கணவருடன் சுவர்க்கம் புகுந்து இன்புருவர், ஆதலால் நாம் ஒரு தினத்தில் சென்று அக்குண்டங்களில் நீராடிக் காமனை வணங்குவோம் என்று தேவந்தி, கணவனைப் பிரிந்திருக்கும் கண்ணகியிடம் உரைத்தாள், அப்பொழுது கண்ணகி பீடு அன்று என்றாள்; பத்தினிப் பெண்டிர்க்கு அது பெருமை தருவது அன்று என்று சொல்லிவிட்டாள், மேலே காட்டிய தெய்வம் தொழாள் என்ற குறளுக்குக் கண்ணகி ஒரு இலக்கியம் என்பது இதனால் விளங்குகின்றது. கோவலன் கொலையுண்ட பதினான்காம் நாள், கண்ணகி திருச்செங்குன்றிலே, வேங்கை மரத்தின் நிழலிலே நின்றாள்- வானத்திலிருந்து அவள் கணவன் வந்தான்; அவனுடன் கூடி விண்ணுற்றாள், இந்த நிகழ்ச்சியைச் சொல்லிமுடித்த ஆசிரியர் தன் கூற்றாகக் கண்ணகியின் மாண்பை எடுத்துரைக்கின்றார். அக் கூற்றிலே திருக்குறள் வாக்கியம் அப்படியே அமைந்திருக் கின்றது, தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும்தகைமை திண்ணிதுஆல்-தெவ்வமாய் மண்ணக மாந்தர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து தெய்வத்தை வணங்காமல் கணவனையே தெய்வமாகக் கொண்டு வணங்குகின்றவளைத் தேவர்கள் வணங்குவார்கள் என்பது திண்ணம், தெய்வமாய் - நிலவுலகப் பெண்களுக்கெல்லாம் அணி கலமான - கண்ணகி வானுலக மகளிர்க்கு விருந்தாகச் சென்றாள். கட்டுரை காதையின் முடிவிலே காணப்படுவது இவ் வெண்பா, கோவலன், கண்ணகி, கவுந்தி மூவரும் மதுரைக்குப் போகும் வழியில், உறையூரின் பக்கத்தில், ஒரு பூம்பொழிலில் தங்கி யிருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு பரத்தையும், தூர்த்தனும் வந்தனர். அவர்கள் காமனும் ரதியும் போல, விளங்கும் கோவலனையும் கண்ணகியையும் கண்டனர். கவுந்தி அடிகளை அணுகி இவர்கள் யார் என்று கேட்டனர், இவர்கள் என் மக்கள் என்று கவுந்தியடிகள் கூறினார். உடனே அவர்கள், உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ கற்று அறிந்தீர்! (நாடுகாண். 227-228) கற்றறிந்தவரே; ஒரு வயிற்றிலே பிறந்த சகோதரனும் சகோதரியும் ஒன்றாகக் கூடி வாழ்வது உண்டோ, என்று நாத்துடுக்குடன் பேசினர், இத் தீமொழியைக் கேட்ட கவுந்தியடிகள் அவர்களை முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆக என்று சபித்தார். இவ்வாறு ஒரு நிகழ்ச்சி காணப்படுகின்றது, இந்நிகழ்ச்சியிலே யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால் சோகப்பர் சொல்இழுக்கப் பட்டு (குறள். 127) வேறு எவற்றைக் காத்துக்கொள்ளாவிட்டாலும் நாவைக் காத்துக்கொள்ள வேண்டும்; காத்துக் கொள்ளாவிட்டால் சொற்குற்றத்திலே அகப்பட்டுச் சோர்வடைவர் என்னும் திருக்குறளின் கருத்து அமைந்திருக்கின்றது, வடநாட்டு மன்னர்களான கனக - விசயர்கள், நாவடக்கம் இல்லாமல் தமிழ் வேந்தரை இகழ்ந்தனர். ஆதலால் செங் குட்டுவன் அவர்கள்மேல் சீற்றங்கொண்டான். கண்ணகிக்குக் கல் கொணர் வதோடு அவர்கள் நாவை அடக்கவும் வடநாட்டின் மேல் படை யெடுத்துச் சென்றான், கனக - விசயர்கள் போரிலே தோற்றதற்கும், கல்லைத் தலையிலே சுமந்ததற்கும் காரணம் நாவடக்கம் இன்மைதான். இக்கருத்தே சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது, காவா நாவின் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு எனக் கூற்றக் கொண்டு இச்சேனை செல்வது (கால்கோள். 159-162) நாவடக்கம் அற்ற கனகனும் விசயனும், தமிழ் வேந்தர் ஆற்றல் அறியாத புதிய மன்னர்களுடன் கூடியிருந்து தமிழ் மன்னர் களின் ஆற்றலை அறியாது எள்ளினர். அதற்காக அவர்களை அடக்கும் பொருட்டுக் கூற்றுவனை அழைத்துக் கொண்டு இச்சேனை அவர்கள் இருக்கும் திசை நோக்கிச் செல்கின்றது. இதுவும் யாகவார் ஆயினும் என்ற திருக்குறளின் கருத்தே உட்கொண்டதாகும். கோவலன் மாண்ட துக்கம் தாளாமல் புலம்புகின்றாள் கண்ணகி. ஒற்றைச் சிலம்பைக் கையிலே ஏந்திக்கொண்டு மதுரைநகரத் தெருவிலே திரிகின்றாள், என் கணவனை மீண்டும் காண்பேன்; அவன் வாய்மொழியைக் கேட்டறிவேன்; இன்றேல் என்னைத் தீவினையாட்டி என்று இகழ்க என்று புலம்பிக் கொண்டு போகின்றாள். இக்காட்சியைக் கண்டு மதுரைநகர மக்கள் எல்லோரும் திகைத்தனர் களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது; இது என்கொல்? மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது; இது என்கொல்? (ஊர்சூழ்வரி. 17-20) யாராலும் நீக்கமுடியாத துன்பத்தை இக் காரிகை அடையும்படி செய்து, என்றும் வளையாத செங்கோல் இன்று கொடுங் கோல் ஆயிற்று; இது என்ன காரணம்? வேந்தர்களுக்கு வேந்தன்; மதிபோன்ற குளிர்ந்த குடையை உடையவன்; வாளைத் தரித்த வேந்தன்; இத்தகைய பாண்டியன் வெற்றி சிதைந்து அழிந்துபோயிற்று; இதற்குக் காரணம் என்ன? இவ்வாறு பொது மக்கள் பேசுகின்றனர். இப்பேச்சிலே அருமையான திருக்குறள் ஒன்று அமிழ்ந்து கிடக்கின்றது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555) நீதி தவறியவனுடைய செல்வத்தைச் சிதைக்கும் படை, அவனால் துன்பத்துக்கு ஆளானவர்கள். அத்துன்பம் பொறுக்க முடியாமல் விட்ட கண்ணீர் அன்றோ? இக்குறளின் கருத்தை மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில் தெளிவாகக் காணலாம். முற்பகல் செய்தான் பிறன்கேடு; தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண் (வஞ்சினமாலை 3-4) முற்பகலிலே பிறருக்குத் துன்பம் செய்தவன் பிற்பகலிலே தான் அத்துன்பத்தை அடைவான். இச்சிலப்பதிகார அடிகள், பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் (குறள் 319) என்ற குறளோடு ஒத்திருக்கின்றன. இமயத்திலிருந்து மலையத்திற்குச் சென்ற முனிவர்கள் நீலகிரியிலே செங்குட்டுவனைக் கண்டனர். அவன் இமயம் நோக்கிப் போவதை அறிந்தனர். அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்ன! காத்தல் நின்கடன் (கால்கோள். 102-103) அரிய வேதங்களை அறிந்த அந்தணர்கள் அங்கு வாழ்கின்றனர். அவர்களைக் காத்தல் உன் கடமை என்று அரசனது கடமையை அறிவித்தனர். இந்த அறிவுரை. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் (குறள். 543) அந்தணருடைய வேதத்துக்கும், அறத்திற்கும் அடிப்படை யாக நின்று உலகத்தைக் காப்பது மன்னவன் செங்கோல் என்ற திருக்குறளாகவே அமைந்திருக்கின்றது. ஆசையே பிறப்புக்கு விதையாகும் என்பது வள்ளுவர் கருத்து. அவாஎன்ப பல்லா உயிர்க்கும், எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து (குறள்.361) எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் தவறாமல் பிறப்பைத் தரும் விதை ஆசையே என்று சொல்வர்ர் இக்குறளின் கருத்தைச் சிலப்பதிகாரம் பல நிகழ்ச்சிகளிலே அமைத்துக் காட்டுகின்றது. கோவலன் அன்னையும், கண்ணகியின் அன்னையும் கண்ணகியின்பால் நீங்காத அன்புள்ளவர்கள். ஆதலால் அவர்கள் இறந்தபின் வஞ்சிமாநகரத்தில் அரட்டன்செட்டியின் மனைவி வயிற்றிலே இரட்டைப் பெண்களாகப் பிறந்தனர். கண்ணகியின்மேல் மிகுந்த அன்பு வைத்த மாதரி என்னும் ஆய்ச்சியர் தலைவி, அவள்பொருட்டுக் குரவைக் கூத்து நடத்தினாள். ஆதலால் அவள் திருமாலுக்குப் பணிபுரியும் சேடக்குடுமியின் மகளாகப் பிறந்து வஞ்சியை அடைந்தாள் பொற்கொடி தன்மேல் பொருந்திய காதலின் அன்புஉளம், சிறந்தாங்கு, அரட்டன்செட்டி, மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின், உடன்வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்; ஆயர் முதுமகள், ஆயிழை தன்மேல் போய பிறப்பின் பொருந் திய காதலின், ஆடிய குரவையின், அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின், சிறுமகள் ஆயினள் (வரந்தரு 128-135) இவ்வடிகள் மேலே காட்டிய செய்திகளை உரைத்தன. அன்புளம் சிறந்தோ பற்றுவழிச் சேறலும் (வரந்தரு 137) அன்புடைய உள்ளத்தால் சிறந்தவர்கள்தாம் இவ்வுலகிலே பற்றுவைத்த இடத்திலே சென்று பிறப்பதும்: என்ற அடியும் குறிப்பிடத்தக்கது. இதுவும் திருக்குறளின் கொள்கையைத் தழுவியதுதான். சிலப்பதிகாரத்தின் இறுதி, திருக்குறள் பலவற்றின் கருத்துக்களைத் தொகுத்துக்காட்டி முடிகின்றது. இது, வேறு எந்நூலிலும் காணப்படாத ஒரு சிறப்பாகும். தெய்வம் தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்! பொய்உரை அஞ்சுமின்! புறஞ்செல் போற்றுமின்! ஊன்ஊண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்! தானம் செய்ம்மின்! தவம்பல தாங்குமின்! செய்நன்றி கொல்லன்மின்! தீநட்பு இகழ்மின்! பொய்க்கரி போகல்மின்! பொருள்மொழி நீங்கல்மின்! அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்! பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்! பிறன்மனை அஞ்சுமின்! பிழைஉயிர் ஓம்புமின்! அறமனை காமின்! அல்லவை கடிமின்! கள்ளும் களவும் காமும், பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்! இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்! மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு; என் சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ் இலக்கியத்தின் குறிக்கோள் என்ன என்பதை இவ்வடிகளிலே காணலாம். சிலப்பதிகாரத்தின் சிறந்த கருத்துக்களைத் திரட்டி வைத் திருக்கும் அடிகள் இவை. இக்கருத்துக்களே சிலப்பதி காரத்தின் சிகரமாகத் திகழ்கின்றன. சிலப்பதிகாரத்தின் முடிவில் மொழியப்பட்டவை அனைத்தும் அப்படியே திருக்குறளைக் குறிப்பதாகவே அமைந் திருக்கின்றன. இக்கருத்துக்களின் விளக்கத்தைத் திருக்குறளைத் தவிர வேறு எதிலும் காண இயலாது. தெய்வம் தெளிமின் என்பது திருக்குறள். கடவுள் வாழ்த்தை நினைப்பூட்டுகின்றது. தெளிந்தோர்ப் பேணுமின் என்பது நீத்தார் பெருமையை நினைவூட்டுகின்றது. பொய்யுரை அஞ்சுமின் என்பதன் பெருமையை வாய்மை என்னும் அதிகாரத்தால் அறியலாம். புறங்கூறாமை என்னும் அதிகாரத்தால் புறஞ்சொற் போற்ற வேண்டியதன் அவசியத்தை அறியலாம். ஊன்ஊண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின் என்பவை களின் அறங்களைப் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தாலும், கொல்லாமை என்னும் அதிகாரத்தாலும் அறியலாம். தானம் செய்ம்மின்! தவம் பல தாங்குமின் என்பவைகளின் விளக்கங்களை இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தாலும் தவம் என்னும் அதிகாரத்தாலும் அறியலாம். செய்ந்நன்றி கொல்லன்மின்! தீநட்பு இகழ்மின் என்பவை களின் விளக்கத்தை, செய்நன்றி அறிதல், கூடா நட்பு ஆகிய அதிகாரங்களில் காணலாம். பொய்க்கரி போகல்மின், பொருள்மொழி நீங்கல்மின் என்பவைகளின் சிறப்பை நடுவுநிலைமை, பயனில சொல்லாமை, கேள்வி என்னும் அதிகாரங்களால் அறியலாம். அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் என்பதன் இன்றியமையாமையைப் பெரியாதைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் அறியலாம். பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் என்பதைப் பற்றிச் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் விளக்கமாகக் காணலாம். பிறர்மனை அஞ்சுமின்! பிழை உயிர் ஓம்புமின் என்பவை களைப்பற்றிப் பிறன்இல் விழையாமை, ஒழுக்கம் உடைமை என்னம் அதிகாரங்களில் கூறப்படுகின்றன. அறமனை காமின் (இல்லறம் போற்றுமின்), அல்லவை கடிமின், கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும் (வீண்பேச்சாளர் கூட்டம்) விரகினில் ஒழிமின் என்பவைகளைப்பற்றி இல்வாழ்க்கை, குற்றம் கடிதல், தீவினை அச்சம், கள்ளுண்ணாமை , கள்ளாமை , வரைவின் மகளிர் முதலிய அதிகாரங்களால் அறியலாம். இறுதியில் உள்ள அடிகள் அப்படியே திருக்குறளை எடுத்துக்காட்டுகின்றன. வளம் பொருந்திய உலகில் வாழ்கின்ற மக்களே! இளமைப் பருவமும், செல்வமும், உடம்பும் நிலைத்வை அல்ல; என்றேனும் ஒருநாள் அழிந்து சிதைவது உறுதி; ஆதலால் வாழ்நாளை வீணாக்கவேண்டாம் செய்யமுடிந்த நன்மைகளைச் செய்யாமல் முடக்கி வைக்கவேண்டாம். இயன்ற நன்மையைச் செய்து நீங்கள் இறந்தபின் செல்லும் இடத்துக்கு உங்களுடன் துணையாக வருவதற்கு வழிதேடிக் கொள்ளுங்கள். இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா உளநாள் வரையாது, ஒல்லுவது ஒழியாது செல்லும் தேஏத்துக்கு உறுதுணை தேடுமின்! மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு; என் என்பதே சிலப்பதிகாரத்தின் இறுதி மொழிகள். இம்மொழிகள், வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல் (குறள். 38) என்ற திருக்குறளாக அமைந்திருக்கின்றன. அறம்புரியாமல் வீணாகக் கழிக்கின்ற நாள், ஒன்றுகூட இல்லாமல், ஒருவன் நாள்தோறும் அறம் புரிவானாயின். அதுவே, அவன் மீண்டும் பிறந்து வாழும் நாள் தோன்றும் வழியை அடைக்கும் கல்லாகும். இதுவை இக்குறளின் பொருள். இக்குறளும், மேலே காட்டிய சிலப்பதிகார இறுதி அடிகளும் ஒரே கொள்கையுடன் இருக்கின்றன. சிலப்பதிகாரம் மழையை வாழ்த்தும் வான்சிறப்பிலே தொடங்கிற்று. இடையிடையே திருக்குறளின் கருத்துக்களைப் பல நிகழ்ச்சிகளிலே அமைத்துக் காட்டிற்று. இறுதியிலே திருக்குறளிலே உள்ள பல அதிகாரங்களின் கருத்துக்களை அறவுரைகளாகத் தொகுத்துக் கூறிற்று. முடிவில் பிறவா நெறிக்கு வழிகாட்டும், வீழ்நாள் படாஅமை என்னும் அருமைக் குறளின் பொருளைக் கொண்டு முடிந்தது. சிலப்பதிகார காலத்திலே திருக்குறள் ஒரு புகழ்பெற்ற நூலாகப் பரவியிருந்தது. அதில் காணப்படும் அறங்களைத் தமிழ்மக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டினர். திருக்குறள் அறத்தைப் போற்றாமல் எழுதப்படும் நூல்களுக்கு அக்காலத்தில் மதிப்பில்லை. அந்த நூல்களை அறிஞர்கள் போற்றுவதில்லை. இந்த உண்மையையும் சிலப்பதிகாரம் நமக்கு எடுத்துரைத்தது. மேலே காட்டியவைகளைக்கொண்டு சிலம்பும் குறளும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி பின்னிக் கிடக்கும் சிறந்த இலக்கியங்கள் என்பதை உணரலாம். புரட்சிக் காவியம் சிலப்பதிகாரம் ஒரு புரட்சிக் காவியம்; அரசியல் உணர்ச்சி யூட்டும் அருந்தமிழ்ச்சோலை; அறத்தை நிலைநாட்ட அஞ்சாமல் போராடுவதற்கு வழிகாட்டும் அணையா விளக்கு; அறந் தவறி நடப்போர் யாராயினும் அவர்கள் செய்கையை அம்பலப்படுத்த வேண்டும் என்ற துணிவை ஊட்டும் வீர முரசு; கொடுங்கோல் ஆட்சியை ஒழிப்பதற்குத் தயங்காதீர் என்ற தட்டிக்கொடுக்கும் தண்தமிழ்க் கவிதை. மக்களுக்குக் கொடுங் கோன்மையின் கொடுமையை எடுத்துக் கூறவேண்டும்; அவர் களை ஒன்று திரட்டவேண்டும்; அறநெறி தவறிய ஆட்சியையும், அதைத் தாங்கி நிற்பவர்களையும் விரட்டி அடிக்கவேண்டும் என்னும் வீர உணர்ச்சியைப் படிப்போர் உள்ளத்திலே பிறக்கச் செய்யும் காவியம் செந்தமிழ்ச் சிலப்பதிகாரம் ஒன்றுதான். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் - கண்ணகியின் வீரச் செயல்களைக் காண்போர் - இத்தகைய முடிவுக்குத்தான் வருவார்கள். மக்கள் மனத்திலே இத்தகைய அரசியல் புரட்சிக் கருத்து வளரும்படி, கண்ணகியின் செயல்களைச் சித்தரித்துக் காட்டுகின்றது இந்நூல். இதனாலேயே அந்நூல் அரசியல் வாதிகளின் உள்ளத்தை அப்படியே கொள்ளை கொள்ளு கின்றது. புரட்சி அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் இந்நூலைப் போற்று கின்றனர்; ஏனைய பொதுமக்களும் படித்து இன்புறுகின்றனர். கவிஞர்கள் எவ்வளவோ பேர் உண்டு. எல்லாக் கவிஞர் களாலும் மக்கள் மனத்தை அள்ளிக்கொள்ளும் கவிதைகளைக் கட்டிவிட முடியாது; காவியங்களை இயற்றிவிட முடியாது உயர்ந்த புலமை, சிறந்த ஒழுக்கம், உலக மக்களை நேசிக்கும் பண்பு, மக்கள் மனப்பான்மையை அறியும் தன்மை, ஒப்பற்ற கவிதாசக்தி இவைகள் அமைந்த புலவர்களால்தான் அழியாத கவிதைகளை ஆக்கமுடியும். இறவாத இலக்கியங்களைப் படைக்க முடியும்; சிறந்த காவியங்களைச் செய்ய முடியும், சிலப்பதிகார ஆசிரியர் இத்தகைய ஒப்பற்ற கவிஞர்களிலே தலைசிறந்த ஒருவர். இளங்கோவடிகள், கண்ணகியை ஒரு புரட்சிகார வீராங் கனையாக நிறுத்திக் காட்டுகின்றார். கண்ணகியின் வாயிலாக அரசியல் உணர்ச்சியை ஊட்டுகின்றார். இந்த முறையை வேறு எந்தத் தமிழ்ப்புலவரும் கையாளவில்லை. சிலப்பதிகாரத்தைச் சிலர் கோவலன் கதை என்பர். கோவலன் கதை என்ற பெயரிலே பிற்காலத்தில் சில புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகள் சிலப்பதிகாரத்தை முழுவதும் படிக்காதவர்களால் எழுதப்பட்ட கதைகள்; சிலப்பதிகாரக் கதையைத் தப்பும் தவறுமாகச் செவி வழியாகக் கேட்டதை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட கதைகள். இப்படித்தான் அக் கதைகளைப் பற்றி நாம் முடிவு செய்யவேண்டும். சிலப்பதிகாரம் சிலம்பின் விளைவால் எழுந்த கதை. ஆயினும் அதைக் கண்ணகியின் கதை என்று சொல்லுவது பொருத்தமாகும். கண்ணகிதான் சிறந்த கதாநாயகியாக விளங்கு கின்றாள். கண்ணகியின் வீரச்செயல்தான் கற்போர் உள்ளத்தைக் கவர்கின்றது. நூலில் தொடக்க முதல் முடிவுரையில் அவள் பெருமைதான் பேசப்படுகின்றது. கண்ணகிதான் முன்னின்று ஒரு கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்கின்றாள். அரசியல் புரட்சியை ஒரு பெண் முன்னின்று நடத்துவதாக கதை அமைந்திருப்பதே ஒரு புரட்சிதான். கோவலன் கொலையுண்டான் என்று கேட்டபின் கண்ணகி சினத்துடன் பொங்கி எழுந்தாள், சந்திரன் நிலத்திலே மேகத்துடன் வீழ்ந்ததுபோல, துக்கம் தாங்காமல் வீழ்ந்தாள். சினத்தால் சிவந்த கண்கள் மேலும் சிவப்பேறும்படி அழுதாள். தன் கணவனைக் குறித்து எவ்விடத்தில் உள்ளாய்! என்று கூவினாள்; வருந்தினாள்; ஏங்கினாள்; அழுதாள். பொங்கி எழுந்தாள்; விழுந்தாள்; பொழிகதிர்த் திங்கள் முகிலோடும் சேண்நிலம் கொண்டென; செம்கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை எங்கணாஅ என்னா இணைந்து ஏங்கி மாழ்குவாள் கணவன் கொலையுண்டான் என்பதைக் கேட்டதும் கண்ணகிக்கு முதலில் கோபந்தான் வந்தது. தன் கணவன் குற்றம் அற்றவன் என்ற உறுதியான எண்ணம் அவளுக்கு உண்டு. ஆதலால் அந்த மாசற்றவனைக் கொன்றவர்கள்மேல் ஆத்திரம் உண்டாவது இயற்கை. இதன் பிறகுதான் அவளுக்குத் துக்கம் தோன்றுகிறது. இவ்வாறு வருந்திய கண்ணகி மீண்டும் கொலைகரார் களின்மேல் கோபங்கொள்ளுகின்றாள். ஏனைய பத்தினிப் பெண்டிர்களைப்போல நான் கைம்மை நோன்பு நோற்றுக் கொண்டு வாழமாட்டேன்; அறந் தவறிய ஆட்சியை அப்படியே விட்டுவிட்டு அழுதுகொண்டிருக்க மாட்டேன் என்று உறுதி கொள்ளுகின்றாள். தம் உறுபெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க, கைம்மைகூர் துறைமூழ்கும் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகழ்ந்தகோல் தென்னவன் தவறு இழைப்ப, இம்மையும் இசை ஒரீஇ, இணைந்து, ஏங்கி அழுவளோ? தம்மோடு ஒத்த அன்புள்ள சிறந்த கணவன் இறந்தால் அவனுடன் தீயிலே மூழ்குவதுதான் பத்தினிப் பெண்டிர் பண்பு. அவ்வாறு உடன்கட்டை ஏறாதவர்கள், கைம்மை நோன்பு என்னும் நீர்த்துறையிலே மூழ்கி வாழ்வர். செம்மை தவறிய கோலையுடைய மன்னவன் தவறு செய்ததைக் கண்டேன் கண்டும் கவலையுடன் வாழும் அந்தக் கைம்பெண்களைப்போல் இம்மையும் புகழ் இன்றி வருந்தி ஏங்கி அழுது கொண்டிருப் பேனோ நான் என்று கண்ணகி கூறினாள். துன்பமாலையிலே காணப்படும் இச்செய்திகள் கண்ணகி யின் வீர உணர்ச்சியை விளக்கின. கொடுங்கோலர்களைச் சும்மா விட்டுவைத்திருப்பது அறிவுள்ள மக்களுக்கு அழகன்று; அவர் களை வீழ்த்துவதுதான் மக்கள் கடமை என்ற உணர்ச்சியை இந்நிகழ்ச்சிகள் ஊட்டுவிக்கின்றன. கொடுமை செய்த மன்னவனைப் பழிக்குப் பழிவாங்கு வேன்! என்று கண்ணகி உறுதிகொண்டாள்; இச்செய்தியையும் இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இவ்வாறு உறுதிகொண்ட கண்ணகி அங்கு கூடியிருந்த ஆயர் மகளிரை நோக்கினாள். குரவைக்கூத்தின் பொருட்டு வந்து குழுமியிருக்கும் ஆயர்குல மடந்தையர்களே! நீங்கள் எல்லோரும் கேளுங்கள் என்று உரைத்தாள். உடனே சூரியனைப் பார்த்து காய்கதிர் செல்வனே! உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் நீ அறிவாய்! நீ சொல்! என் கணவன் கள்வனோ? என்று கேட்டாள். உடனே ஓர் அசரீரி வாக்குப்பிறந்தது. பெண்ணே! உன் கணவர் கள்வன் அல்லன்; இந்த ஊரைத் தீ உண்ணும் என்பது தான் அந்த அசரீரி வாக்கு. அசரீரி வாக்கைப் பொதுமக்கள் தீர்ப்பு என்று வைத்துக் கொண்டு மேலே நடக்கும் நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அரசன் இழைத்த அநீதி கேட்டுப் பொதுமக்கள் எவ்வளவு ஆத்திரம் கொண்டனர் என்பது விளங்கும். இம்முறை யிலே எண்ணிப்பார்த்தால் கதையும் இயற்கையாகக் காணப்படும். கோவலன் கள்வன் அல்லன் என்று கூறியது பொதுமக்கள் மொழிதான் என்று எண்ணும்படியே இளங்கோஅடிகளின் வாகசம் அமைந்திருக்கின்றது. இதுதான் கவிதா சக்தி என்பது. ஆயமகளிரை நோக்கி: வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டீமின்! ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டைக்க கதிரவனைப் பார்த்து : பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன் கதிரவன் விடை : கள்வனோ அல்லன் ; கரும்கயல்கண் மாதராய் ! ஒள்எரி உண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் மேலே உரைத்த செய்திகளை இவ்வடிகளிலே காணலாம். இவ் வடிகள் மிகவும் அழகாக அமைந்திருக்கின்றன; உட்கருத்துடன் விளங்குகின்றன. கோவலன் கொலையுண்டான் என்று கேட்டவுடன் கண்ணகி ஆத்திரம் பொங்கினாள். பின்னர்த் துன்புற்றாள். அதன்பின் கொலை செய்தவர்களைப் பழிக்குப் பழிவாங்குவது என்று உறுதிகொண்டாள். அநீதி இழைத்த அர சாங்கத்தை அப்படியே விட்டுவைக்கப்போவதில்லை என்று முடிவெடுத் தாள். தன் கணவன் கள்வன் அல்லன் ; குற்றவாளி அல்லன் ; அக்கிரமமாகத்தான் அரசனால் கொலையுண்டான் என்பதைப் பொதுமக்கள் தீர்ப்பாலும் உணர்ந்தாள். இவைகளே மேலே எடுத்துரைக்கப்பட்டன. இவைகளைத் துன்ப மாலையிலே காணலாம். இதற்குமேல் கண்ணகியின் புரட்சி நடவடிக்கை விரை வாகத் தொடங்கு கின்றது. தனக்கு ஆதரவாகப் பொதுமக்களைத் திரட்டு கின்றாள். அறநெறி பிழைத்த அரசுக்கு எதிரான எண்ணங் கொள்ளும் படி பொதுமக்களிடம் பேசு கின்றாள். தன் கணவனுடைய மாசற்ற தன்மையையும், அரசன் இழைத்த கொடுமையையும், தான் செய்யப்போகும் செயலையையும் ஊரார் அறிய உரைக்கின்றாள். கோவலன் கள்வன் அல்லன் என்று சூரியன் கூறியதும் கண்ணகி ஒருசிறிதும் காலங் கடத்தவில்லை. தன்னிடம் மீதமிருந்த ஒரு சிலம்பைக் கையில் ஏந்திக்கொண்டாள். நீதியற்ற மன்னன் இருக்கும் ஊரிலே வாழும் பத்தினிப் பெண்காள்! ஈது எனது மற்றொரு சிலம்பு என்று காட்டிச் சொல்லுகின்றாள். கீழ்வரும் அடிகள் இச்செய்தியை உணர்த்துகின்றன. என்றனன் வெய்யோன் ; இலங்குஈர் வளைத்தோளி நின்றிலள் ; நின்ற சிலம்புஒன்று கையேந்தி முறையில் அரசன்தன் ஊர்இருந்து வாழும் நிறைஉடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈதுஒன்று (ஊர்சூர்வரி. 1-4) இவ்வடிகள் கண்ணகியின் புரட்சி நடவடிக்கையின் தொடக்கத்தைக் காட்டுவன. பெண்டிர்களின் ஆதரவைப்பெற்ற எந்த இயக்கமும் தோல்வி அடையாது. இவ்வுண்மை கண்ணகி யின் கூற்றிலே அடங்கியிருக்கின்றது. இதன்பின் கண்ணகி தன் துன்பத்தை சொல்லுகிறாள்; தான் இன்னது செய்யப்போ கிறேன் என்பதையும் உரைக்கின்றாள். 1. இவ்வுலகில் பிறந்தோர் யாரும் படாத துன்பத்தைப் பட்டேன் ; ஒருவரும் அடையாத துன்பத்தை அடைந்தேன். இதுவரையிலும் நான் அடைந்த துன்பத்தைவிட இனி வேறு என்ன துன்பத்தைத்தான் அடையப்போகின்றேன்? இது ஒன்று. 2. என் கணவன் கள்வன் அல்லன் ; எனது கால் சிலம்பின் விலையைத் தாம் கவர்ந்துகொள்ளும் பொருட்டு கள்வன் என்று குற்றம் சாற்றிக் கொன்று விட்டார்கள் ; இது ஒன்று. 3. கற்புள்ள மாதர்களின் எதிரிலே என் கணவனை முன் போலக் காண்பேன்; இது ஒன்று. 4. என் காதல்கணவனைக் கண்டால் அவன் வாயிலிருந்து குற்றமற்ற நன்மொழியைக் கேட்பேன்; இது ஒன்று. 5. குற்றம் அற்ற நன்மொழியை அவன் வாக்கால் கேளேன் ஆயின் நாம் வருந்தத்தக்க செயலைச் செய்தாள். கள்வன் மனைவி என்று இகழ்ந்து பேசுங்கள்; இது ஒன்று. 1. பட்டேன் படாத துயரம் ; படுகாலை உற்றேன் உறாதது; உறுவனே; ஈதுஒன்று 2. கள்வனோ அல்லன் கணவன்; என்கால் சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே; ஈதுஒன்று 3. மாதர்த் தகைய மடவார்கள் முன்னரே தீதுஅறு நல்உரை கேட்பேனே; ஈதுஒன்று 4. தீதுஅறு நல்உரை கேளாது ஒழிவனேல் நோதக்க செய்தாள் என்று எள்ளல்; ஈதுஒன்று (ஊர்சூழ்வரி. 5-14) கேட்போர் உள்ளத்தை இழுக்கும்படி அவ்வளவு அழகும் உணர்ச்சியும் பொருந்திய அடிகள் இவை. கண்ணகியின் உணர்ச்சி பொருந்திய இவ்வுரைகளால், மதுரை நகர மக்கள் அவள்பக்கம் சேர்ந்துவிட்டனர் ; அவள் பால் இரக்கம் காட்டினர் ; அவள் கட்சியை ஆதரித்தனர். அரசன் ஆட்சியை வெறுத்தனர் ; அவர்கள் அரசன் இழைத்த கொடுமையைப்பற்றிக் கூடிக்கூடிப்பேசத் தொடங்கிவிட்டனர். இறக்கும் வரையிலும் ஒழியாத துன்பத்தை இக் காரிகைக்குக் காட்டி என்றும் வளையாத செங்கோல் இன்று வளைந்தது; இனி என்ன நேருமோ ? மன்னர்க்கு மன்னன்; சந்திரன்போலக் குளிர்ந்த குடையை உடையவன்; வாட்படையைக் கொண்டவன்; இத்தென்னவன் அரசுமுறை அழிந்தது; இனி என்ன நேருமோ ? உலகுக்கு நன்மையையும், பகைவர்க்குத் தின்மையையும் செய்யும் வேலையுடைய மன்னவனது குளிர்ந்த குடை இன்று வெம்மையை விளைத்தது ; இனி என்ன நேருமோ ? செம்பொன்னால் செய்த சிலம்பு ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு, நமக்கு உண்மையை உணர்த்தும்பொருட்டுப் புதுமை யான பெரிய தெய்வம் ஒன்று இங்கு வந்தது; இனி என்ன நேருமோ? அழகிய கண்களையுடையவள் விம்மி விம்மி அழுகின்றாள்; தெய்வ ஆவேசம் கொண்டவள் போலக் காணப்படுகின்றாள்; இனி என்னதான் விளையுமோ ? மக்கள் இவைபோன்ற மொழிகளை உரைத்தனர்; வருந்தி ஏங்கினர்; அரசன் செய்கையை மிகவும் பழித்துப் பேசினார். மதுரை நகரின் குடிமக்கள் எல்லாம் இந்நிலையினர் ஆயினர். சளையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது; இதுஎன்கொல்? மன்னவர் மன்னன் ; மதிக்குடை வாள்வேந்தன்; தென்னவன் கொற்றம் சிதைந்தது; இதுஎன்கொல்? மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்தது; இதுஎன்கொல்? செம்பொன் சிலம்பு ஒன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்தது; இதுஎன்கொல்? ஐஅரி உண்கண் அழுதுஏங்கி அரற்றுவாள் தெய்வம் உற்றாள் போலும் தகையள்; இதுஎன்கொல்? என்பன சொல்லி இணைந்துஏங்கி ஆற்றவும் வன்பழி தூற்றும் குடியதே மாமதுரை (ஊர் சூழ்வரி. 17-28) பொதுமக்களின் இக்கூற்றை ஆசிரியரே கூறிச் செல்கின்றார். இவ்வடிகள், கண்ணகியின் முறையீட்டைக் கேட்டதும் பொது மக்கள் கொண்ட கருத்தை உணர்த்துகின்றன; உணர்ச்சியைக் காட்டுகின்றன. பொதுமக்களின் கருத்து கண்ணகிக்குச் சார்பாக இருந்தது என்பதை அறிவிக்கின்றன. இதன்பின் கண்ணகி இந்நகரிலே பெண்கள் இல்லையா? அறிவுள்ளவர்கள் இல்லையா? தெய்வங்கள்கூட இல்லையா? இருந்தால் அநீதி நடக்குமா! என்று புலம்பிக் கொண்டு போகின்றாள். பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்? கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? இவை கண்ணகியின் புலம்பல், கேட்போர் உள்ளத்தைக் கனிவிக்கும் கவிதைகள். அறிவும் கற்பும் உள்ள பெண்கள் அநீதிக்கு இடந் தரமாட்டார்கள்; அறிவுடையயோர் தீமையைக் கண்டால் சும்மாவிடமாட்டார்கள்; இவர்கள்தான் ஏனோ தானோ வென்றிருந்தாலும் தெய்வம் அக்கிரமத்தைப் பொறுத்துக் கொண்டிருக்காது ஆகையால் இந்நகரில் இவர்கள் இல்லையா? என்று கேட்பது மிகவும் இயற்கையாகக் காணப்படுகிறன்றது; கேட்போர் உள்ளத்தைத் தட்டி எழுப்புகின்றது. இவ்வாறு புலம்பிக்கொண்டு போன கண்ணகி, காதலன் வெட்டுண்டு கிடந்த இடத்தை அடைந்தாள். அவன் உடம்பைத் தழுவிக்கொண்டாள். அவன் முன்போல் உயிருடன் எழுந்தான். கண்ணகியின் கண்ணீரைத் துடைத்தான். நீ இரு என்று சொல்லி விட்டு வான்உலகு எய்தினான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளுடைய சினம் இன்னும் வளர்ந்தது ; உயர்ந்தது. ஆவேசங்கொண்டவள் ஆனாள். பழிக்குப் பழிவாங்கி. என் சீற்றந் தணிந்தபிறகுதான் கணவனுடன் கூடுவேன். அரசனைக் கண்டு அவன் புரிந்த கொடுமையைப்பற்றிக் கேட்காமல் விடமாட்டேன்! என்று உறுதிபூண்டாள். தான் முன்பு கண்ட தீக்கனாவைப்பற்றியும் நினைத்தாள்; கண்ணீர் விட்டாள்; அரண்மனை வாயிலை அடைந்தாள். இதன் பிறகு பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் நடைபெறும் நேரடியான வழக்கு படிப்போர் நெஞ்சத்தைக் கவரும். இந்த வகையிலே இதை ஒரு வீரக் காட்சியாக அமைத்துக்காட்டு கிறார் இளங்கோ அடிகள். வாயில் காவலனே ! வாயில் காவலனே ! அறிவு வறண்டு போன - புண்ணியம் அற்ற நெஞ்சத்தையுடைய - அரசநீதியைக் கொன்ற மன்னனுடைய - வாயில் காவலனே ! இரண்டு சிலம்பு களிலே ஒன்றைப் பறிகொடுத்தாள்; அரி அமைந்த ஒரு சிலம்பை மட்டும் கையில் ஏந்தியிருக்கின்றாள்; கணவனை இழந்தவள் ; வாசலில் வந்து நிற்கிறாள் என்று உன் அரசனிடம் போய்ச் சொல் ! வாயிலோயே! வாயிலோயே! அறிவு அறை போகிய பொறிஅறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே! இணைஅரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்; கணவனை இழந்தாள்; கடைஅகத்தாள் என்று அறிவிப்பாயே? அறிவிப்பாயே! (வழக்குரை. 24-29) கண்ணகியின் இவ்வுரையிலே அவளுடைய அடங்காத சினத்தைக் காணலாம். அவள் அரசனுடைய அறிவற்ற அடாத செயலைக் கண்டிப்பதோடு நிற்கவில்லை. அந்தக்கொடுங்கோல் வேந்தனிடம் வேலைபார்க்கும் காவலனுக்கும் சாட்டையடி கொடுக்கின்றாள். அக்கிரமக்காரனை ஆதரிப்பது அறிவற்ற செயல் என்பதையும் எடுத்துக்காட்டினாள். காவலன் போய் அரசனிடம் அவள் செய்தியை உரைத்தான். அரசன், வர விடுங்கள் என்றான். கண்ணகியும் அரசன் எதிரிலே போய் நின்றாள். பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் நேரடியாக வழக்கு நடக்கின்றது. கண்ணகியின் உரை, உண்மைக்கு போராடும் வீரப் பேச்சாக விளங்குகின்றது. நீர்வார் கண்ணை என்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய்! என்றான் மன்னன், உடனே கண்ணகி, சிறிதும் தயக்கம் இல்லாமல் தேரா மன்னா செப்புவது உடையேன் என்று தொடங்குகின்றாள். அறிவற்ற அரசனே! உண்மை யுணராத வேந்தனே! சொல்லுகிறேன் கேள் என்று தொடங்கிச் சோழ மன்னர்களின் செங்கோல்முறையைப் புகழ்ந்தாள். அற்பப் புறாவின் துன்பத்தை அகற்றிக் காத்த சோழன், ஒரு பசுங்கன்றுக்காகத் தன் மகன் உயிரை வாங்கிய சோழன் - இவர்கள் வாழ்ந்த புகார் நகரம் எனது ஊர் ; எனது கால்சிலம்பை விற்பதற்காக வந்து, உன்னால் கொலையுண்ட கோவலன் மனைவி நான் என்று தலைநிமிர்ந்து நின்று பேசினாள். இப் பேச்சிலே பாண்டியனுக்குச் சரியான சூடு கொடுக்கப்பட்டிருக் கின்றது. இந்தக் குத்தல்பேச்சின் உண்மையைப் பாண்டியன் உணர வில்லை; தான் செய்தது தவறு என்பதை அறியவில்லை. ஆதலால் அவன் இறுமாப்புடனேயே விடை அளிக்கின்றான். பெண் அணங்கே! கள்வனைக் கோறல் கடும்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண்! என்றான். இதற்குமேல் கண்ணகி வழக்கை வளர்க்க விரும்ப வில்லை; வீண்பேச்சுக்கு இடந்தர எண்ணவில்லை. பட்டென்று பதில் அறைகின்றாள். நல்திறம் படராக் கொற்கை வேந்தே என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே நல்ல கொள்கையைப் பின்பற்றாத கொற்கை வேந்தனே! எனது கால்சிலம்புக்குள் இருக்கும் கல் மாணிக்கம் என்றாள். வேந்தனால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள் சொல்லை ஒத்துக்கொண்டான். எனது சிலம்புக்குள் இருக்கும் அரி, முத்துக்கள் என்றான். கோவலனிடமிருந்து கவர்ந்த சிலம்பைக் கொண்டுவரக் கட்டளையிட்டான். சிலம்பு வந்தது. அச் சிலம்பைக் கண்ணகி எடுத்தாள். அனைவரும் காண அதை உடைத்தாள். அதனுள்ளிருந்த மாணிக்கம் அரசன் வாயிலே போய் அடித்தது. அவ்வளவுதான்! தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன், பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என்று சொல்லிக்கொண்டு மயங்கி வீழ்ந்தான் மன்னன். கண்ணகியின் வழக்கு வென்றது; உண்மை வென்றது; பொய்மை மடிந்தது. ஒளி வீசிற்று; இருட்டு மங்கிற்று. கோவலன் குற்றமற்றவன் என்று மெய்ப்பிக்கப்பட்டான்; அரசன் அநீதியிழைத்தான் என்பதை அனைவரும் கண்டனர். இந்த நிகழ்ச்சியை ஒரு அழகான வெண்பாவில் அமைத்துக் காட்டு கிறார் ஆசிரியர். மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும், கண்ணீரும் - வையைக்கோன் கண்டளவே தோற்றான்; அக்காரிகைதன் சொல்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். (மெய் - உடம்பு. பொடி - புழுதி. வையைக்கோன் - பாண்டியன். உண்டளவே - பருகியஉடன்; கேட்டவுடன்) கண்ணகியின் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. அரசனுக்கு ஆதரவாயிருந்தோரையும் அழிக்க உறுதி கொண் டாள். கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கும் தந்நலவாதிகளால் குடிமக்கள் துன்புறுவார்கள். தந்நலவாதிகள்தாம் கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்பார்கள். ஆதலால் அவர்களுடைய செல்வாக்கையும் சிதற அடிக்கவேண்டியது தான் மக்கள் கடமை. இதற்காகவேதான் மதுரை நகரைத் தீக்கு இரையாக்கினாள் கண்ணகி. நம் உள்ளத்திலே இக்கருத்துப் பிறக்கும்படி தான் கதை நிகழ்ச்சியை அமைத்திருக் கிறார் இளங்கோ அடிகள். மதுரையைப் பற்றிய தீயைப்பார்த்துக் கண்ணகி கூறுவதைக் காண்போர் இந்த முடிவுக்குத்தான் வருவர். பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர் மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க! என்று கட்டளையிடுகின்றாள் கண்ணகி. நல்லவர்களைத் துன்புறுத்தாதே! தீயோரைமட்டும்-கொடுங்கோல் மன்னவனைத் தாங்கிநின்றவர்களை மட்டும்-அநீதியை ஆதரித்தோரை மட்டும்-சுட்டுப்பொசுக்கு! என்று உத்தரவிட்டாள். இதுவரையிலும் எடுத்துக்காட்டிய நிகழ்ச்சிகளே போது மானவை; சிலப்பதிகாரம் ஒரு அரசியல் புரட்சிக் காவியம் என்பதை விளக்கக்கூடியவை. கொடுங்கோன்மையை ஒழிப்பதற்கு வழிகாட்டும் ஒப்பற்ற இலக்கியம் சிலப்பதிகாரம் என்பதை மெய்ப்பிப்பவை. சிலப்பதிகாரத்திலே, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரைகாதை, வஞ்சினமாலை ஆகிய நான்கு காதைகளைப் படித்தால் போதும், இவைகளைப் படிப்போர் உண்மைக்குப் போராடப் பின்வாங்க மாட்டார்கள். அரசியலைப்பற்றிக் கவலையில்லை என்போரும், அரசியல் உணர்ச்சி பெறுவார்கள். பிற்போக்கு அரசியல்வாதிகள் முற்போக்கு அரசியல் வாதிகளாக மாறிவிடுவார்கள். இளங்கோடிகளின் கவி முழுவதும் நெஞ்சை அள்ளு கின்றது. சிலப்பதிகாரம் முழுவதும் சொல்நயம் பொருள் நயம் பெருக்கெடுத்து ஒடுகின்றன. எந்தப் பகுதியைப் படித்தாலும் செந்தமிழ்ச் சுவையை நுகரலாம். ஆயினும் மேல்குறித்த நான்கு காதைகளிலும் இளங்கோவடிகள் தீட்டியிருக்கும் சித்திரங்கள் நம் நெஞ்சைக் கவர்கின்றன; உணர்ச்சியைத் தட்டி எழுப்பு கின்றன. இந்த நான்கு காதைகளில் அமைந்திருக்கும் ஒவ்வொரு சொல்லும், சொற் றொடரும் உயிருடன் நமது எதிரில் நின்று உரையாடுகின்றன. இக்காதைகளை எத்தனை தடவை படித்தாலும் சலிப்புத் தோன்றாது; அலுப்புத் தட்டாது! பொய்யல்ல; வெறும் புகழ்ச்சி அல்ல! படித்துப் பார்த்தால்தான் அருமை தெரியும். இளங்கோவடிகள் தலைசிறந்த புரட்சிப் புலவர் என்பதற்கு மேலேகாட்டிய நான்கு காதைகளே போதுமானவை. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் 1. சிலப்பதிகார காலத்து மக்களிடம் தெய்வ நம்பிக்கை குடிகொண்டிருந்தது. அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்யத் தொடங்குமுன் தெய்வத்தை வணங்குவார்கள்; அதன் பின்னரே காரியத்தைத் தொடங்குவார்கள். நடனம் அல்லது கூத்து ஆடத் தொடங்குபோது முதலில் தெய்வத்தை வணங்குவார்கள். வணக்கப் பாடல்களைப் பாடுவர்; அதன் பிறகுதான் கூத்தைத் தொடங்குவர். திருமால் வணக்கம், நால்வகை வருணப்பூதர் வணக்கம், சந்திர வணக்கம்-இம் மூன்று வணக்கப் பாடல்கள் பாடிய பிறகுதான் கூத்துத் தொடங்கப்படும். மாயோன் பாணியும், வருணப்பூதர் நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை வான்ஊர் மதியமும் பாடி (கடல் ஆடு. 35-37) இவ்வடிகள் இதனைக் காட்டும். 2. தெய்வங்களைப்பற்றிய வரலாறுகளே கூத்துக்களாக நடிக்கப்பட்டன; நடனங்களாக ஆடப்பட்டு வந்தன. தெய்வங் களின் கூத்துக்கள் 11 வகை. கொடுகொட்டி ஆடல் என்பது ஒரு கூத்து. இது பரமசிவன் திரிபுரத்தை எரித்தபின் ஆடியது. சுடுகாட்டிலே பார்வதி பக்கத்திலே நிற்கப் பரமசிவன் கைகொட்டிக் கொண்டு ஆனந்தமாக ஆடிய ஆடலாகும். பாண்டரங்கம் என்பது ஒரு வகைக் கூத்து. இதுவும் பரம சிவனது நடனம். நான்முகன் எதிரில் பரமசிவன் வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு ஆடிய கூத்தாகும். அல்லியத் தொகுதி என்பது ஒருவகைக் கூத்து, கம்சன் கண்ணனைக் கொல்வதற்காக, யானையை அனுப்பினான்; அதன் தந்தங்களை ஒடிப்பதற்காகக் கண்ணன் அதன் எதிரில் நின்று ஆட்டங் காட்டினான்; இதை ஆடிக்காட்டும் கூத்தே அல்லியத் தொகுதியாகும். மல்லாடல் என்பது ஒருவகைக் கூத்து. வாணாசூரனுடன் திருமால் மல்யுத்தம் செய்து அவனை வென்றறைத் காட்டும் நடனம். துடிக்கூத்து என்பது ஒன்று. கடல்நடுவிலே நின்ற சூரனைக் கொல்வதற்கு முருகன், கடலையே அரங்கமாகக் கொண்டு ஆடிய கூத்தாகும். குடைக்கூத்து என்பது ஒன்று. அசுரர்கள் தம் போர்ப் படை களை இழந்து வருந்தியபோது, அவர்கள் எதிரில் முருகன், குடையைத் திரையாகக்கொண்டு ஆடிய ஆட்டம் குடைக் கூத்தாகும். குடக்கூத்து என்பது ஒருவகை. வாணாசூரன், காமன் மகன் அநிருத்தனைச் சிறை வைத்தபோது திருமால் அவனுடையநகர வீதியிலே சென்று குடத்தை வைத்துக்கொண்டு வேடிக்கைக் கூத்தாடினான். இதுபோல் ஆடிக்காட்டுவது குடக்கூத்தாகும். பேடிக்கூத்து என்பது ஒன்று. மன்மதன் தன் ஆண்மையில் மாறிப் பொண்ணுருவிலே நின்று ஆடிய கூத்து. மரக்கால் கூத்து என்பது ஒருவகை. அசுரர்களின் வஞ்சனைச் செயல்களைக் கண்டு சினந்த துர்க்காதேவி மரக்கால் மீது நின்று ஆடிய கூத்து. போர் செய்வதற்கெழுந்த அவுணர்களை மயக்குவதற்காகத் திருமகள் கொல்லிப்பாவை (மோகினி) உருவிலே வந்து ஆடிய நடனத்துக்குப் பாவைக் கூத்து என்று பெயர். இந்திராணி ஆடிய நடனத்துக்குக் கடையம் என்று பெயர்; அவள் வாணனுடைய வடக்கு வாயிலிடத்தே நின்று ஆடிய கூத்து இது. இந்தப் பதினோருவகைக் கூத்துக்களும் அந்தந்தத் தெய் வங்களுக்குரிய கோலத்துடன் ஆடப்பட்டன. இக் கூத்துக்களின் விளக்கத்தைக் கடலாடு காதையில் 39 முதல் 64 வரையுள்ள அடிகளிலே காணலாம். 3. கூத்துக்கள் இருவகையாக ஆடப்பட்டு வந்தன. ஒன்று வேத்தியல்; மற்றொன்று பொதுவியல். அரசர்களுக்காக மண்ட பங்களிலே ஆடும்கூத்து வேத்து இயல்; இதனை அகக்கூத்து என்றும் உரைப்பர். பலருக்கும் பொதுவாக ஆடும் கூத்து பொதுஇயலாகும்; இதனைப் புறக்கூத்து என்றும் உரைப்பர். கடல்ஆடு காதையிலும், ஊர்காண் காதையிலும் இவற்றைக் காணலாம். 4. கதை தழுவிய கூத்துக்களும் நடைபெற்றன; கதையற்ற - கருத்தமைந்த - நடனங்களும் நடைபெற்றன; இக் கூத்துக்களை நடத்துவதற்கான மேடைகள் இருந்தன. அம்மேடைகளில் - அரங்கங்களில் - முன்திரை, பக்கத்திரை முதலியவைகள் இருந்தன. 5. ஒரு செயலைத் தொடங்கும்போது, நல்ல நாளிலே நல்ல நேரத்திலே தொடங்கவேண்டும் என்று நம்பினர்; அவ்வாறே செய்தனர். நல்ல நேரத்திலே தொடங்கும் செயல் தான் வெற்றி பெறும் என்பது அவர்கள் நம்பிக்கை. கோவலன் - கண்ணகி திருமணம் நல்ல நாள் - நட்சத்திரத்திலே செய்யப்பட்டது. இருபெரும் குரவரும் ஒருபெரு நாளால் மண அணி காண மகிழ்ந்தனர் கோவலன் - கண்ணகி இருவருடைய பெற்றோர்களும் ஒரு நல்ல நாளிலே, தங்கள் பிள்ளைக்ளுக்குத் திருமணம் செய்து வைத்து கண்டு மகிழ விரும்பினர். வான்ஊர் மதியம் சகடு அணைய சந்திரன் உரோகணி நட்சத்திரத்தைத் தழுவும் நாளிலே அவர்கள் திருமணம் நடைபெற்று. இவை மங்கல வாழ்த்திலே காணப்படுகின்றவை. வடநாட்டின்மேல் படையெடுத்துச் செல்வது பற்றிச் சேரன் செங்குட்டுவன் ஆலோசனை செய்கொண்டிருக் கின்றான் அப்பொழுது நிமித்திகன் இதுதான் நல்ல முகூர்த்தம்; இப்பொழுதே படையெடுத்துப் புறப்படு என்று மன்னனுக்குக் கூறுகின்றான். ஆறு இரு மதியினும் காருக அடிப்பயின்று ஐந்து கேள்வியும் அழைத்தோன் எழுந்து வெம்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்! இருநில மருங்கின் மன்னர் எல்லாம் நின் திருமலர்த் தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்குஇது; முன்னிய திசைமேல் எழுச்சிப் பாலை ஆக; என்று ஏத்த (கால்கோள் 25-31) பன்னிரண்டு ராசிகளிலும் கிரகங்கள் நிற்கும் நிலையை அறிந்தவன்; திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்து வகைகளையும் அறிந்தவன். இத்தகைய மௌத்திகன் எழுந்தான். ஆற்றல் நிறைந்த அரசனே! நின் வெற்றி வாழ்க! இப் பெரிய உலகில் உள்ள மன்னர்கள் எல்லாம் உன்னுடைய பாதங்களை வணங்கும்படி வெற்றிபெறும் நேரம் இது. ஆதலால் நீ நினைத்த திக்கு நோக்கி இப்பொழுதே புறப்படுக! என்று சொல்லி வணங்கினான். இவைகள் நல்லநாள், நாழிகை பார்க்கும் நம்பிக்கையும், பழக்கத்தையும் விளக்கின. 6. சிலப்பதிகார காலத்திலே பஞ்சாங்கம் இருந்தது; அதை வைத்துக்கொண்டு நாள்குறிக்கும் வழக்கமும் இருந்தது; பஞ்சாங்கம் என்பது ஐந்து உறுப்புக்களைக் கொண்டது. அவை: திதி, வாரம், நட்சத்திரம் யோகம், கரணம் என்பவை. 7. சகுணம் பார்க்கும் வழக்கம் சிலப்பதிகார காலத்தில் இருந்தது. சகுனங்களிலே மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்; நல்ல சகுனங்கள் நன்மையைத் தரும், தீய சகுனங்கள்; தீமையைத் தரும் என்று நம்பினர்கள். கோவலன் கண்ணகியின் சிலம்பை எடுத்துக்கொண்டு மதுரைக்குள் சென்றான்; வீதியிலே நடந்தான். அப்பொழுது திமிலையுடைய ஒரு பெரிய காளை அவனை எதிர்த்துப் பாய வந்தது. அவன் அதைத் தீய சகுனம் என்று அறியாமல் நடந்தான். இமில்எறு எதிர்ந்து இழுக்குஎன அறியாள் (கொலைக்கள. 100) என்று கூறுகிறார் ஆசிரியர். திருடச் செல்வோர்கூட நல்ல சகுணம் பார்த்துக் கொண்டு தான் புறப்படுவார்கள். நல்ல சகுனம் இல்லாவிட்டால், எவ்வளவு சிறந்த பொருளாயிருந்தாலும், அவை தாமாகவே வந்து கையில் புகுவாதாயிருந்தாலும் அவற்றை விரும்பமாட்டார்கள். நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும் புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகுதினும் (கொலைக்கள. 178-179) குடத்திலே பிறையிட்ட பால், உறையாமல்இருத்தல், காளையின் கண்ணில் நீர் வடிதல், உறியிலே வைத்த வெண்ணெய் உருகாமலிருத்தல், ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடாமல் சோர்ந்து கிடத்தல், பெரிய மணிகள் தாமே அறுந்து விழுதல், பசுமந்தை பயந்து கத்துதல் இவைகள் எல்லாம் பின்வரும் கேட்டை முன்உணர்த்தும் கெட்ட சகுனங்கள் என்று ஆயர்கள் நம்பினர். இவற்றை ஆய்ச்சியர் குரவையிலே காணலாம். 8. ஆடவர்களுக்கு இடது கண் துடித்தால் தீமை; வலது கண் துடித்தால் நன்மை, பெண்களுக்கு வ லது கண் துடிப்பது தீமைக்கு அறிகுறி; இடது கண் துடிப்பது நன்மை வருவதற்கு முன்அறிவிப்பு என்பர். இந்த நம்பிக்கை சிலப்பதிகார காலத்து மக்களிடம் இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திர விழா நடைபெற்ற போது, கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகியின் இடது கண் துடித்தது; அவனுடன் சேர்ந்திருந்த மாதவியின் வலது கண் துடித்தது. கோவலன் மாதவியை வெறுப்பான், கண்ணகியை அடைவான் என்பதைக் காட்டும் அடையாளமாகவே இந்நிகழ்ச்சி காணப்பட்டது. கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உள்நிறை கரந்து அகத்து ஒளித்துநீர் உகுத்தன; எண்ணும் முறை இடத்தினும் வலத்தினம் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநான். அகத்து (இந்திர விழவு. 237-240) கண்ணகியின் கருமையான கண்ணும், மாதவியின் செந்நிற முள்ள கண்ணும் தங்கள் உள்ளத்திலிருப்பதை ஒளித்து மறைத்து வைத்திருப்பதனால் நீரைச் சிந்தின. இந்திர விழாவின்போது கண்ணகியின் இடது கண்ணும், மாதவியின் வலது கண்ணும் துடித்தன. இவ்வடிகள் மேலே சொல்லிய உண்மையை விளக்கின. 9. சிலப்பதிகார காலத்து மக்கள் மந்திரத்திலே நம்பிக்கை வைத்திருந்தணர். வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இவ் ஐம்சில் ஓதியை அறிகுவன் யான் (காடுகாண். 194-195) வஞ்சனையை மாற்றும் மந்திரத்தின்மூலம் இந்த அழகிய கூந்தலை உடையவளை மானிடப்பெண்ணா தெய்வப்பெண்ணா என்று அறிவேன் நான். வனதேவதை, மாதவியின் தோழியான வசந்தமாலை வடிவிலே வந்தபோது கோவலன் கூறிய இவ்வாறு கூறினான், இச் சமயத்திலே கோவலன் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரம்; அதாவது துர்க்கை மந்திரம். திருடர்கள் விழித்துக்கெண்டிருப்போரை மந்திரத்தால் தூங்கும்படி செய்துவிடுவார்கள். துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு வாயில் ஆளரை மயக்குதுயில் உறுத்து (கொலைகள 143-144) என்பது திருடர் செயலைக் குறித்தது. இவைகள் மந்திரத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைக் குறித்தன. 10. தங்கள் குறைகளைப் போக்கிக்கொள்ள, தெய்வங் களுக்குப் பலியிடும் வழக்கமும், வேண்டிக்கொள்ளும் வழக்கமும் சிலப்பதிகார காலத்து மக்களிடம் இருந்தது. மணமாகாத மகளிடத்திலே ஏதேனும் வேறுபாடு கண்டால் தாய் வருந்துவாள்; அவ் வேறுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறிய தெய்வத்துக்குப் பூசை போடுவாள். மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக், கடவுள் வரைந்து ஆர்இக் கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என்செய்கோ! மாரிக்காலத்துப் பீர்க்கம்பூப் போன்ற நிறத்தை மகள் அடைந்த வுடன் அன்னை வருந்தினாள், தெய்வத்திற்குப் பலியிட்டு, இக்கொடுமை செய்தவர் ஆர் என்று அன்னை அறிந்து விட்டால் என் செய்வேன்! இவ்வாறு கானல்வரியிலே காணப்படுவதனால் மேலே கூறிய செய்தியை அறியலாம். 11. மக்கள்மேல் தெய்வங்கள் ஏறும்; அவர்கள் ஆவேசம் கொண்டு ஆடுவார்கள்; மக்கள் செய்யும் தவறுகளையும், அவர் களுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளையும் எடுத்துரைப்பார்கள், இச்செய்தியை வேட்டுவரி, வரந்தரு காதை ஆகியவைகளிலே காணலாம். 12. தவசிகள் சாபம் கொடுக்கும் ஆற்றலும், அதைக் தவிர்க்கும் சக்தியும் படைத்தவர்கள், இதைக் கவுந்தியடிகளின் செயலால் காணலாம். 13. நடவு நடும் மகளிர் கள்ளுண்டு களித்துப் பாடுவார்கள், உழவர்கள் முதலிலே ஏர் உழத் தொடங்கும்போது செந்நெற் கதிர், அறுகு, குவளைமலர் இவைகள் கலந்து தொடுத்த மாலையை மேழிக்குச் சூட்டுவார்கள்; ஏர் மங்கலப் பாட்டுப் பாடுவார்கள், நெற்பயிறை அறுத்துப் போராகக் குவிப்பர்; அதைக் கடாக்களைப் பிணைத்து மிதிக்கச் செய்து, நெல் வேறு, வைக்கோல் வேறாகப் பிரிப்பர், அப்போது அவர்கள் பாட்டுப் பாடிக் கொண்டே இவ்வேலையைச் செய்வார்கள். அப் பாட்டுக்கு முகவைப் பாட்டு என்று பெயர். இவைகளை நாடுகாண் காதையில் 127 முதல் 137 வரையில் உள்ள அடிகளிலே காணலாம், 14. விலைமகளிர் மதுவருந்தும் வழக்கம் உள்ளவர்கள் பொன்தொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அம்தீந் தேறல் மாந்தினர் மயங்கி (ஊர்காண். 131-133) இவ்வடிகள் அவர்கள் மதுவுண்ணும் வழக்கத்தைக் குறித்தன. 15. சிலப்பதிகார காலத்திலே கள்வர்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கும் வழக்கம் இருந்தது, கள்வனைக் கோறல் கடும்கோல் அன்று (வழக்குரை.64) என்பது இதைக் காட்டுகிறது. 16. மன்னர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்போது, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்வார்கள், குற்றவாளி களை மட்டும் அல்லாமல், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வார்கள், கொடித்தேர் மன்னனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சுரந்து ஒருபால் (இந்திர விழவு. 182-183) அரசனுடன் பகைத்த காரணத்தால் சிறையிலிருக்கும் மன்னர் களின் கால்விலங்கை நீக்கவேண்டும் என்று மன்னன் இரக்கங் கொண்டான். இதனால் நேர்ந்த செய்கை ஒருபுறம். இந்திர விழாச் செய்யும்போது, பகைமன்னர்கள் சிறையி லிருந்து விடுதலை செய்யப்பட்டனர், சிறைப்படு கோட்டம் சீமின்; யாவதும் சறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் (கட்டுரை. 126-127) சிறைச்சாலையைத் திறந்து விடுங்கள்; வரி கொடுக்க முடியாமல் துன்புறுகின்றவர்களின் வரிச்சுமையைத் தள்ளி விடுங்கள். இது, அடைத்திருந்த காளிதேவியின் கோவில் திறந்த போது, பாண்டிய மன்னன் இட்ட கட்டளை. சிறையோர் கோட்டம் சீமின்; யாங்கணும் கறைகெழுநாடு கறைவீடு செய்ம்ம் (நடுகல். 203-204) சிறைக் கதவுகளைத் திறந்துவிடுங்கள்; வரி மிகுந்த நாட்டிலே வரிகளைத் தள்ளுபடி செய்யுங்கள். வேள்வி செய்யத் துணிந்த செங்குட்டுவன் இவ்வாறு உத்திரவு செய்தான், இவைகள் நல்ல செயல்கள் நடக்கும்போது, குற்றவாளிகளையும், அரசியல் பகைவர்களையும் சிறையிலிருந்து விடுதலை செய்யும் வழக்கம் தமிழகத்தில் உண்டு என்பதைக் குறித்தன, 17. அறநெறியிலே நிற்போர்க்கு உதவி செய்தல், அந்தணர் களைப் பாதுகாத்தல், துறவிகளை எதிர்கொண்டு உபசரித்தல், விருந்தினர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உணவளித்தல், இவைகள் இல்லறத்தார் கடமைகளாகக் கருதப்பட்டன. அறவோர்க்கு அளித்தாலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை (கொலைக்கள. 171-173) இவ்வாறு கண்ணகி உரைக்கின்றாள், இவ்வடிகள் இல்லறத்தார் கடமையை உணர்த்தின. 18. தெய்வங்களுக்கு உயிர்ப்பலி யிட்டனர்; கள், புலால் முதலியவைகளை வைத்துப் படைத்தனர், புழுக்கலும், நோலையும், விழுக்குஉடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து (இந்திர விழவு. 68-69) (புழுக்கல் - வேகவைத்த தானியங்கள், நோலை-எள்ளுருண் டை விழுக்கு உடை மடை-மாமிசங் கலந்து சமைத்த சோறு, பொங்கல்-கள்.) வண்ணமும், சுண்ணமும், தண்நறும் சாந்தமும் புழுக்கலும், நோலையும், விழுக்குஉடை மடையும், பூவும், புகையும், மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர (வேட்டுவரி. 36-39) (வண்ணம்-பூசிக்கொள்ளும் வாசனைக் குழம்பு, சுண்ணம் வாசனைப் பொடி, விரை-வாசனைத் திரவியங்கள்) அடல்வலி எயினர்நின் அடிதொழு கடன்இது மிடறுஉகு குருதிகொள் விறல்தரு விலையே பகைவரைக் கொல்லத்தக்க வலிமையுள்ள வேடர்கள் உன் அடியை வணங்கிச் செய்யும் கடமை இதுதான்; நீ எங்களுக்கு வெற்றியைத் தருவதாக விலையாக, கழுத்திலிருந்து சிந்தும் இரத்ததைப் பலியாக ஏற்ளுக்கொள். நிணன் உகு குருதி கொள் நிணத்துடன் கலந்து சிந்துகின்ற இரத்தப் பலியாகிய இதனை ஏற்றுக்கொள். இவைகளும் வேட்டுவவரியிலே உள்ளவை, இவைகளால், தெய்வங்களை எப்படி வணங்கி வழிபட்டனர் என்பதைக் காணலாம், சிலப்பதிகார காலத்தில் தமிழ் நாடெங்கும் விக்கிரக வணக்கம் பரவியிருந்தது என்பதிலும் ஐயம் இல்லை, 19. திருவிழாக் காலங்களை வீண் பொழுதுபோக்காகக் கழியும்படி விடமாட்டார்கள். நகரை அலங்கரிப்பார்கள்; தெய்வங் களுக்கெல்லாம் பூசை போடுவார்கள்; சிறந்த வாத்தியங்களை முழக்குவார்கள்; இவைகளோடுமட்டும் நின்று விடமாட்டார்கள். மக்கள் அறிவை-ஒழுக்கத்தை-வளர்ப்பதற்கான சொற்பொழிவு களையும், கூட்டங்களையும் நடத்துவார்கள், நல்ல நூல்களைப் படித்தவர்கள் அந்நூல்களிலே கண்ட அறநெதி களை மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்; பழைய நூல்களிலே உள்ள உண்மைகளை யெல்லாம் அனைவரும் அறியும்படி விரிவுரை ஆற்றுவார்கள். அருகர் பள்ளி புத்தர் பள்ளி, தருமங்களைப் போதிக்கும் பிற இடங்கள், ஸ்ரீ கோவில், மற்றும் உள்ள அறநிலையங்கள் ஆகிய இடங்களிலே நல்லோர்கள் கூடுவார்கள்; அவர்கள் பல உயர்ந்த உண்மைகளைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப் பார்கள்; இச்செயல் ஒரு பக்கம். அறவோர் பள்ளியும், அறன்ஒம் படையும், புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால் (இந்திர விழவு. 179-181) இவ்வடிகள் திருவிழாக் கால நிகழ்ச்சியை உணர்த்தின. 20. கற்புக்கு அருந்ததியை எடுத்துக்காட்டாகக் கொண்டனர், வடமீனிள் திறம் இவள் திறம் அருந்ததியின் கற்பே இவள் கற்பு. வானத்துச் சாலி ஒருமின் தகையாளை வானத்தில் உள்ள அருந்ததியைப் போன்ற கற்புடையவளை. வடமீன் கற்பின் மனைஉறை மகளிர் அருந்ததிபோன்ற கற்புள்ள இல்லத்தில் வாழும் மகளிர். இவைகள் கற்புக்கு எடுத்துக்காட்டாக அருந்ததியையே போற்றினர் என்பதைக் காட்டும். 21. தமிழ்மக்களுக்குக் கனவிலே நம்பிக்கையுண்டு. எச்செயலும் கனவுக்குப் பின்னர்தான் நடைபெறும்; பின்னால் நிகழப்போவதை முன்னால் அறிவிப்பதே கனவு என்று நம்பினார். கண்ணகி தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் கூறுவது; கோவலன் தான் கண்ட கனவைப்பற்றி மாடலனிடம் கூறுதல் (அடைக்கல. 95-106) பாண்டியன் மனைவிதான் கண்ட கனவைப் பாண்டியனிடம் கூறுவது-இவைகள் கனவின் உண்மையை விளக்குவன. 22. போரிலே பகைவர்களுடன் சண்டையிட்டு மாண்டு போன வீரர்களின் மைந்தர்களுக்கு அரசன் பரிசளிப்பான்; வெற்றி பெற்றுத் திரும்பிய வீரர்களுக்கும் பரிசளிப்பான், (நீர்ப்படை. 25-44) 23. மன்னர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவார்கள், அப்பொழுது அவர்கள் படைவீரர்கள் முதலிய பலருக்கும் பரிசளிப்பார்கள், (நீர்ப்படை. 44) 24. பெண்கள் பலவிதமான அணிகளைப் பூண்டனர். அவர்கள் ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொருவிதமான அணி கலன்களை அணிந்தனர். கால்விரல்களில் மோதிரம்; காலிலே பரியகம், சிலம்பு, பாடகம், சதங்கை என்னும் அணிகள்; துடையிலே கவான் என்னும் அணி; உடையின்மேல் முப்பத்திரண்டு முத்துவடங் களால் செய்யப்பட்ட விரிசிகை என்னும் ஆபரணம் - இவைகளை அணிவார்கள். தோளிலே மாணிக்கம் முத்து இவைகளை வைத்துப் பொன்னால் செய்யப்பட்ட தோள்வளைகள்; முன்கையிலே கல்லிழைத்த சூடகம், பொன் வளையல், நவரத்தின வளையல், சங்க வளையல், பவழ வளையல்; கைவிரல்களிலே சிவப்பு, வயிரம், பச்சை ஆயி கற்கள் பதித்த மோதிரங்கள - இவைகளை அணிவார்கள். கழுத்திலே தங்கச் சங்கிலி, சிறிய நீண்ட சங்கிலி, கயிறு போன்ற சங்கிலி, வேலைப்பாடு அமைந்த வேறு பல அணி கலன்கள், முத்துமாலைகள் இவைகளை அணிவார்கள். கழுத்தின் பின்புறம் மறையும்படியும் அணி பூண்பர். இவ்வணிக்குப் பின்தாலி என்று பெயர். நீலமும், வயிரமும் வைத்துக் கட்டிய குதம்பை என்னும் அணியைக் காதிலே பூண்பர். தெய்வ உத்தி, வலம்புரி, தொய்யகம், புல்லகம் என்னும் அணிகலன்களைத் தலைமயிரிலே அணிவர். இவ்வாறு பல வகை யான நகைக்ள சிலப்பதிகார காலத்தில் இருந்தன. இத்தகைய அணிகலன்களைச் செய்துகொடுக்கும் கைதேர்ந்த வேலைக்காரர் களும் இருந்தனர். இவைபோன்ற பல பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் சிலப்பதிகார காலத்திலே இருந்தன. சிந்தனைக்குரிய செய்திகள் சிலப்பதிகாரம் உண்மை வரலாறா அல்லது கற்பனைக் கதையா: அல்லது உண்மையும் கற்பனையும் கலந்த கதையா? என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன இத்தகைய ஐயம் எழுவதும் கேள்விகள் பிறப்பதும் இயற்கை. இக்கேள்விகளுக்கு விடை காணவேண்டியதும் அவசியம். அன்றியும் சிலப்பதிகாரம் சங்க காலத்து இலக்கியமா? அல்லது பிற்காலத்தில் பிறந்த இலக்கியமா? என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இக்கேள்விகளுக்கு விடைகாணுவதும் அவசியமாகும். இக்கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் விடைகள் யாவை என்பதைப் பற்றி ஆராயவேண்டியதும் அறிஞர்கள் கடமை. உண்மை வரலாறு பல்லாண்டுகளாகச் சிலப்பதிகாரத்தை ஒரு உண்மை வரலாறு என்றே பலர் நம்பி வருகின்றனர். சிலப்பதிகாரத்தைப் படிக்கும் போது அது ஒரு உண்மை நிகழ்ச்சி போலவே காணப்படுகின்றது. ஆராய்ச்சிக் கண்ணோட்டம் இன்றி அதன் சுவையில் மூழ்கிப் படிக்கின்றவர்கள் அதை உண்மை வரலாறு என்றுதான் எண்ணுவார்கள்; அவர்கள் இடையிடையே வரும் கற்பனைக் கதைகளையெல்லாம் மறந்து விடுவார்கள். கண்ணகி யின் வீரச் செயலும், செங்குட்டுவன் வீரச் செயலும் அவர்கள் மனத்தைக் கவரும், கதையோ தங்குதடை யில்லாமல் பள்ளத்தில் ஒடும் வெள்ளம்போல் விரைந்து செல்லுகின்றது. இந்த வகையிலே சிலப்பதிகாரப்பாக்களும் அமைந்திருக்கின்றன. சிலப்பதிகாரத்தின் முதலில் உள்ள பதிகம், அது ஒரு உண்மை வரலாறு என்று உரைக்கின்றது. கூலவாணிகன் சாத்தனார் கண்ணகியின் வரலாற்றைச் செங்குட்டுவன் இளவலாகிய இளங்கோவடிகளிடம் கூறினார்; பிறகு அக்கதையை உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இளங்கோ அடிகள் அரளினார். அதை மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் என்று முடிகிறது பதிகம். உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள, மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் என்பது பதிகத்தின் முடிவு. இதன்பின் வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதையிலும் இச்செய்தி வருகின்றது. சேரன் செங்குட்டுவனிடம், குறவர்கள், கண்ணகி விண்ணுற்ற செய்தியைக் கூறினர்; அவன் ஒன்றும் விளங்காமல் திகைத்தான்; அப்பொழுது தண்டமிழ்ச் சாத்தன் ஒண்தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் திண்திறல் வேந்தே செப்பக் கேளாய்! என்று தொடங்கிக் கண்ணகியின் வரலாற்றை உரைத்தார் காட்சிக் காதையிலே 67 முதல் 90 வரையில் உள்ள அடிகள் தண்டமிழ்ச் சாத்தன் வாய்மொழியாக அமைந்திருக்கின்றன. சாத்தனார் தான் நேரில் கண்ட காட்சிகளைச் சொல்வதுபோல இப்பகுதி அமைநிதிருக்கின்றது. பதிகத்தில், இளங்கோவடிகளிடம், சாத்தனார் கண்ணகி வரலாற்றைக் கூறினார் என்று காணப்படுகின்றது. காட்சிக் காதையில், செங்குட்டுவனிடம் கண்ணகி வரலாற்றைச் சாத்தனார். கூறினார் என்று காணப்படுகின்றது. இதில் எது உண்மை என்பது சிந்திக்கத் தக்கது. இதன்பின் வஞ்சிக் காண்டத்தில் நீர்ப்படை காதையிலே சிலப்பதிகார வரலாறு காணப்படுகின்றது. மாடல மறையோன், செங்குட்டுவனைச் கண்டு கூறும் செய்திகள் உண்மை வரலாறு போலவே காணப்படுகின்றன. 56 முதல் 111 வரையில் உள்ள அடிகளிலே சிலப்பதிகாரக் கதை முழுவதையும் காணலாம். இவ்வடிகள் மாடலன் வாயால் வந்தவைபோல் அமைந்தவை, சிலப்பதிகாரத்தின் இறுதியில் வரந்தரு காதையில் காணப்படும் செய்திகள், சிலப்பதிகாரம் ஒரு சரித்திரம் என்று எண்ணும்படி அமைந்திருக்கின்றன. இப்பகுதிகளைப் படிப்போர் சிலப்பதிகாரம் ஒரு வரலாறு என்றுதான் நம்புவர். சிந்தையைச் செய்யுள் நயத்திலே பறிகொடுக் காமல், கதையின் போக்கிலே விட்டுவிடாமல் படிப்போர்க்குத் தான், சிலப்பதிகாரம் சரித்திரமா, கதையா என்ற ஐயம் தோன்றும். பண்டைப் புலவர்கள் பெரும்பாலும் இத்தகைய ஐயம் எழும்பு வதற்கு இடந் தரவில்லை, சிலப்பதிகாரச் செந்தமிழ்த்தாயின் அன்பினால் அணைக்கப்பட்டனர். அதை நடந்ததொரு வரலாறாகவே நம்பிவந்தனர், இவ்வாறு நம்புவோர் இன்னும் உண்டு. கற்பனைக் கதை மற்றொரு சார்பார் சிலப்பதிகாரம் முழுவதும் கற்பனைக் கதை என்றே கருதுகின்றனர். கோவலன்-கண்ணகி வரலாற்றிலே இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் நிறைந்து கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் கிளைக்கதைகள் சிறுகதைகள் எல்லாம் புராணக்கதைகள் போலவே காணப்படுகின்றன. கண்ணகி தன் மார்பைத் திருகி வீசினாள், மதுரை பற்றிக் கொண்டது என்பது வெறும் கற்பனை. இதை எப்படி உண்மையென்று ஒப்புக்கொள்ள முடியும்? செங்குட்டுவன் வடநாட்டினரோடு போர் செய்தான் என்பதற்கான சரித்திர ஆதரவே இல்லை: அதுவும் கட்டுக்கதை தான் என்று சொல்லு கின்றனர். நல்ல கருத்துக்களைப் பரப்புவதற்காகப் பல புதுக்கதைகள் எழுதப்படும் வழக்கம் என்றும் உண்டு. அவ்வழக்கத்தை ஒட்டியே நல்ல கருத்துக்களைப் பரப்புவதற்காகச் சிலப்பதிகாரம் எழுதப் பட்டது. அதை எழுதிய ஆசிரியர் கவித்திறமையினால் அது ஒரு நடந்த நிகழ்ச்சிபோல அமைந்துவிட்டது. இதுதான் உண்மை என்று உரைக்கின்றனர். பழமையும் புதுமையும் மற்றொரு பகுதியினர், சிலப்பதிகாரம், உண்மை வரலாறு என்றும் அன்று, முழுவதும் கற்பனையும் அன்று: சிறு வரலாறும் பெருங்கற்பனையும் கலந்த கதை என்று கூறுகின்றனர். சிலப்பதிகாரம் ஒரு உண்மை வரலாறு என்பதைவிட அது முழுவதும் கற்பனைக் கதைதான் என்பதைவிட உண்மையும் கற்பனையும் கலந்த கதை என்பதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது. இவ்வாறு கதை எழுதும் வழக்கம் பண்டும் உண்டு; இன்றும் உண்டு. பழைய கதையை உரையும் பாட்டும் கலந்த நூலாகச் செய்யும் வழக்கம் உண்டு. இவ்வாறு இயற்றப்படும் நூலுக்குத் தொன்மை என்று பெயர். தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே (தொல். செய். 237) என்பது தொல்காப்பியம், தொன்மை என்பது, உரைவிராய்ப், பழைமையவாகிய கதைப்பொருளாகச் செய்யப் படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாரால் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன என்பது பேராசியர் உரை. சிலப்பதிகாரமும் இதன்பாற்படும்ம் என்று நச்சினார்கினியர் அவர் உரையிலே காட்டுகின்றார். சிலப்பதிகாரம் தொன்மை என்ற இலக்கியத்திற்குச் சான்றாக நிற்பது; பழைய கதையை ஆதரவாகக்கொண்டது; உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யு ள் என்பது உண்மை. மேலே எடுத்துக்காட்டிய தொல்காப்பியச் செய்தி இதை உறுதி செய்கிறது. சிலப்பதிகாரம் பழைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இதற்கான ஆதரவுகள் சில காணப்படுகின்றன; அவற்றையும் காண்போம். எதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமா உண்ணி (நற்றிணை. 216) பகைவன் செய்த கொடுமையால் நேர்ந்த கவலை காரணமாக ஒரு முலையை அறுத்துக்கொண்ட திருமா உண்ணி என்பது நற்றிணை. இதனால், சிலப்பதிகாரத்திற்கு முன்பே கண்ணகி என்று ஒரு பெண் இருந்தாள்; அவள் பகைவன் செய்த கொடுமை காரணமாகத் தனது ஒரு மார்பை அறுத்துக் கொண்டாள்; அதனால் அவள் திருமா உண்ணி என்று போற்றப்பட்டாள் என்ற வரலாறு ஒன்றைக் காணலாம். வையாவிக்கோப் பெரும்பேகன் என்பவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் மனைவி பெயர் கண்ணகி. அவன் அவளைத் துறந்து மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்தான். அதனால் கண்ணகி மனம் உடைந்திருந்ததாள். இச்செய்தி புறநானூற்றின் 144-வது செய்யுளில் காணப்படுகின்றது. இந்த நற்றிணைச் செய்தி, புறநானூற்றுச் செய்தி இரண்டும் கண்ணகியின் வரலாற்றோடு ஒட்டியிருப்பதைக் காணலாம். என் மகன் முதுகிலே புண்பட்டு மடிந்திருப்பானாயின் அவனுக்குப் பாலூட்டிய என் முலையை அறுப்பேன் என்று ஒரு பெண் கூறியதாகப் புறநானூற்றின் 278-வது செய்யுளில் காணப் படுகின்றது. என்னைப்பற்றிக் கவலைப்படாத என் காதலனைக் கண்டால் சும்மா இருக்கமாட்டேன். அவனால் பயன்பெறாத கொங்கையை அடியோடு திருகிப் பறிப்பேன்; அவன் மார்பில் எறிவேன்; என் சினத்தைத் தணித்துக்கொள்ளுவேன் என்று ஆண்டாள் பாடுகின்றாள். உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயன்ஒன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன்மார்பில் எறிந்தென் அழலைத் தீர்ப்பேனே (நாச்சியார் திருமொழி 13-7) இவைகளால், பெண்கள் கொடுஞ்சினங் கொண்டால், தங்கள் மார்பைத் திருகி எடுத்தெறிவார்கள் என்ற செய்தியைக் காணலாம். கோவலன் கொலையுண்டைத் கேட்டவுடன் கண்ணகி சினத்தால் பொங்கினாள் என்ற செய்தியையே சிலப்பதிகார ஆசிரியர் சிறப்பாக எடுத்துச் சொல்லுகின்றார். சீற்றந்தணியாத கண்ணகி தனது இடது மார்பை வலது கரத்தால் திருகி எடுத்தாள்; மதுரையை மும்முறை வலம் வந்தாள்; வருந்தினாள்; அந்த முலையைச் சுழற்றி வீதியிலே விட்டெறிந்தாள். இடமுலை கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா, அலமந்து மட்டுஆர் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள், எறிந்தாள்விளங்கு இழையாள் (வஞ்சினமாலை. 43-46) இவ்வாறு கூறும் அடிகள் இயற்கை நிகழ்ச்சிபோலவே காணப் படுகின்றன. சினமிகுந்தவர் எதையும் செய்வர். இது உண்மை; இயற்கையும் ஆகும். மேலே காட்டிய வரலாற்றுச் செய்திகளும், வழக்கங்களும் சிலப்பதிகாரக் கதையில் அமைந்திருக்கின்றன; சிறப்பாகக் கதாநாயகி யாகிய கண்ணகியின் நடத்தையிலே இணைந் திருக்கின்றன. சிலப்பதிகாரம் காதால்கேட்ட சில பழங்கதை நிகழ்ச்சி களைக் கொண்டது; பண்டைப் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கொண்டது; காலத்திற்கேற்ற தெய்வீக நிகழ்ச்சி களையும் ஏற்றுக்கொண்டிருப்பது; புதிய கருத்துக்களையும், பழைய கருத்துக்களையும் தழுவியிருப்பது; கற்பனை நிகழ்ச்சிகள் பலவற்றைக்கொண்டது; உண்மை வரலாறு சிலவற்றை அடிப் படையாகக் கொண்டது. சிலப்பதிகாரத்தைப்பற்றி இவ்வாறு முடிவு செய்வதுதான் பொருந்தும் என்று தோன்றுகின்றது. மேலே காட்டியவை இக் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றன. இளங்கோ அடிகள் இளங்கோ அடிகள்தான் சிலப்பதிகார ஆசிரியர் என்பதே புலவர்கள் கொள்கை. அறிஞர்கள் பலரும் இதை ஒப்புக் கொள்ளுகின்றனர். ஆனால் ஒரு சிலர் இளங்கோ அடிகள் என்று ஒருவர் இருந்ததே இல்லை என்பர். அப்படியானால் சிலப்பதிகார ஆசிரியர்தான் யார் என்றால் தக்க விடையில்லை. இளங்கோவடிகள் என ஒருவர் இருந்ததில்லை என்பதற்கு இவர்கள் உரைக்கும் காரணங்களைக் காண்போம். இளங்கோவடிகளைப்பற்றிய வரலாறு சிலப்பதிகாரம் ஒன்றில்தான் காணப்படுகின்றது; வேறு எந்த நூல்களிலும் காணப்படவில்லை. குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு என்று தொடங்கும் பதிக அடிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை; வரந்தரு காதையிலே, தேவந்தியின்மேல் கண்ணகி யின் ஆவி ஏறிக்கொண்டு, இளங்கோவடிகளின் வரலாற்றைச் சொல்வதாக வரும் கதை - இவைகள்தாம் இளங்கோவடிகளின் வரலாற்றுக்கு ஆதரவு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மக்கள் இருவர். முத்தோன் செங்குட்டுவன்; இளையோன் இளங்கோ. ஒரு நாள், அவன் இவ்விரு மக்களுடனும் அரசவையில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு சோதிடன் வந்தான். அவன் இளங்கோவை உற்றுநோக்கி, இவனே நாடாளும் வேந்தன் என்றான். செங்குட்டுவன் முகம் சுருங்கிற்று; கண்கள் சிவந்தன. அவை கண்ட இளங்கோ. சோதிடன் சொல் பொய்! நான் துறவை மேற்கொண்டேன்! என்று மொழிந்தான்; உடனே துறவி யானான். இளங்கோ அடிகள் என்ற பெயருடன் குணவாயில் கோட்டத்திலே தங்கியிருந்தான். இதுவே சிலப்பதிகாரத்தில் காணப்படும் கதை. பதிற்றுப்பத்திலே இரண்டாம்பத்து இயமவரம்பன் நெடுஞ்சேரலாதனைப்பற்றிப் பாடியது. அவனுக்கு இரண்டு மக்கள் இருந்தனர் என்று அப்பாடல்களில் காணப்படவில்லை. ஐந்தாம்பத்து, செங்குட்டுவன்மீது பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அதில் உள்ள பத்துப் பாடல்களில் ஒன்றிலேனும் செங்குட்டுவன் என்ற பெயரே காணப்படவில்லை; சிலப்பதிகாரச் செய்தியும் குறிக்கப்படவில்லை. இப்பத்தின் பதிகத்திலேதான் கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி செங்குட்டுவன் வடநாட்டின்மேல் படையெடுத்துப் போனான் என்ற செய்தி குறிக்கப்படுகின்றது. இவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று குறிக்கப்படுகின்றான். பதிப்பற்றுப்பத்தின் பதிகங்கள் எல்லாம் நூலாசிரியர் களால் பாடப்பட்டவை அல்ல; அவைகள் பிற்காலத்துப் புலவர்களால் பாடிச் சேர்க்கப்பட்டவைகளாகும். அவைகளும் சிலப்பதிகார காலத்துக்குப்பின் எழுதி இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலர் கருத்து. மேலே காட்டியவைகளைக் கொண்டு இளங்கோவடி களைப் பற்றி வழங்கும் கதைக்கு வேறு ஆதரவுகள் இல்லை; சிலப்பதிகாரம் ஒன்றுதான் ஆதரவு; ஆதலால் அக்கதை பொய்; இளங்கோவடிகள் என ஒருவர் இருந்திருக்க முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். இத்தகைய வரலாற்றுக்கு உரிய இளங்கோ அடிகள் ஒருவர் இருந்திருக்க முடியாது என்பது உண்மையாகத்தான் காணப்படு கின்றது ஆதலால் இந்த இளங்கோவடிகள் வெறும் கற்பனை; இப்படி ஒருவர் இல்லை என்றே வைத்துக் கொள் வோம். சிலப்பதிகார ஆசிரியர் யார் என்பதற்கு விடை காண வேண்டும். ஒருநூல் இருந்தால் அதை இயற்றிய ஆசிரியர் ஒருவரோ, பலரோ இருக்கத்தானே வேண்டும்? கண்ணகியின் வரலாற்றைக் கூறிய தண்டமிழ்ச் சாத்தன்தான் சிலப்பதிகாரத்தைச் செய்திருக்கவேண்டும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தொடர்புள்ள கதைகள். இரண்டும் சேர்ந்தால் ஒரு காவியமாகவே காட்சியளிக்கும். ஆதலால், மணிமேகலை ஆசிரியர்தான் சிலப்பதிகாரத்தையும் செய்திருக்கலாம் என்பர். இது சிறிதும் பொருந்தாத வாதம். சிலப்பதிகாரம் சைனக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட நூல். இதனை அறவுரைகள் என்ற பகுதியில் காணலாம். மணிமேகலை பௌத்தமதத்தை அடிப்படையாகக்கொண்ட நூல். சிலப்பதிகார ஆசிரியரின் பண்பு வேறு; மணிமேகலை ஆசிரியின் பண்பு வேறு. சிலப்பதிகார ஆசிரியர் எந்த மதத்தையும் வெறுத்துப் பேச வில்லை. எல்லா மக்களுடைய கொள்கைகளையும், பழக்க வழக்கங்களையும் அப்படி அப்படியே எடுத்துரைக்கின்றார்; அவைகளைச் சிறிதும் மாற்றாமல், மறைக்காமல் கூறிச் செல் கின்றார். மணிமேகலை ஆசிரியர், புத்தமதம் ஒன்றே சிறந்தது என்று நிலைநாட்டுகின்றார்; மற்ற மதங்களைக் கண்டித்துப் பேசுகின்றார்; மற்ற மதக்கொள்கைகளை ஏளனம் செய்கின்றார். இரண்டு நூல்களையும் படிப்போர் இவ்வுண்மையைக் காண்பர். ஒரே ஆசிரியர், ஒன்றக்கொன்று முரணான இரண்டு நூல்களைச் செய்திருக்க முடியாது. புத்தமதக கொள்கை யினரான சாத்தனார், சமரச சன்மார்க்கம் போதிக்கும் சைன மத இலக்கியமான நிலப்பதிகாரத்தை இயற்றியிருக்க முடியவே முடியாது மணிமேகலை ஆசிரியர் வேறு; சிலப்பதிகார ஆசிரியர் வேறு. இதை மறுப்பதற்கு இடமே இல்லை. ஆனால், சிலப்பதிகார ஆசிரியர் பெயர்தான் என்ன? அரும்பெருத் தமிழ் நூலான சிலப்பதிகார ஆசிரியரின் பெயர் கூடவா மறந்துவிட்டது? அப்பெயரைக் கூடவாத் தமிழர்கள் மறந்துவிட்டனர்? இல்லை; சிலப்பதிகார ஆசிரியர் பெயர் மறையவில்லை; மறைக்கப்படவும் இல்லை; வழங்கிக்கொண்டு தான் இருக்கின்றது. சிலப்பதிகாரத்தைச் செய்தவர் பெயர் இளங்கோவடிகள்; அந்தக் கவிஞர் பெயர் இளங்கோவடிகள். இந்த இளங்கோ அடிகள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகன் அல்லர்; சேரன் செட்குட்டுவன் தம்பியும் அல்லர் இளங்கோ அடிகள் யாரோ ஒரு அரசகுமாரர்தான். அவர் ஒரு சமண சந்தியாசி; உண்மைத்துறவி; எந்த மதத்திலும் வெறுப்புக் காட்டாத சிறந்த தமிழர்; தமிழர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ஒப்புயர்வற்ற செந்தமிழ்ப்புலவர்; முத்தமிழ் அறிஞர். அவர் யாராயிருந்தாலும் அவர் பெயர் இளங்கோ அடிகள்தான். இவ்வாறு சிலப்பதிகார ஆசிரியரைப்பற்றி முடிவுகட்டுவதில் என்ன தவறு? பின்னால் புகுந்தவையா? சிலப்பதிகாரப் பதிகமும், வஞ்சிக்காண்டமும் இளங்கோ வடிகளால் இயற்றப்பட்டனவா? அவைகள் பிற்காலத்தில் வேறு தமிழ்ப்புலவரால் பாடி இணைக்கப்பட்டனவா? இக் கேள்விகளைச் சிலர் எழுப்புகின்றனர். இது நல்ல கேள்வி. இக்கேள்விகளுக்கு ஏற்ற விடைகாண்போமாயின் இளங்கோ வடிகளைப்பற்றிய குழப்பமும் தீர்ந்துவிடும். புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் இவைகளுடன் வஞ்சிக்காண்டம் இணைந்ததுன் காணப்படுகின்றது. கதைத் தொடர்பு கெடவில்லை; அவ்வளவு அழகாக வஞ்சிக்காண்டம் அமைந்திருக்கின்றது. செய்யுள் நடையும் ஏறக்குறைய இளங்கோவடிகளின் வாக்குப்போலவே அமைந்திருக்கின்றது. ஆனால், புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் இரண்டுமே கண்ணகியின் வரலாற்றை விளக்கப் போதுமானதாகும். இதுபற்றித் தெய்வீக நிகழ்ச்சிகள் என்னும் பகுதியிலும், புரட்சிக் காவியம் என்னும் பகுதியிலும் விளக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத் தோடு கதை மிகவும் அழகாக முடிகின்றது. கண்ணகி, கோவலன் கொலையுண்ட பதினான்காம் நாள் திருச்செங்குன்றிலே, வேங்கை மரத்தின் நிழவிலே தன் கணவனுடன் சேர்ந்து, தேவர்கள் போற்ற வானுலகடைந்தாள் என்று கதை முடிகின்றது. கண்ணகி திருச்செங்குன்றிலே அடிவைத்து ஏறினாள்; பூத்திருக்கும் ஒரு வேங்கைமரத்தின் நிழலை அடைந்தாள். தீவினையுடையேன் யான் என்று ஏங்கி நின்றாள். பதினான்கு நாட்கள் கழிந்தன; பத்தினித் தெய்வத்தைத் தொழும் நாள் இதுதான் என்று தோன்றும்படி தேவர்கள் வாழ்த்தினர். கண்ணகியின் பெயரைச் சொல்லி வணங்கினர்; வாடாத மலர்மாரி பெய்தனர். இவ்வாறு இந்திரன் தமர்களான தேவர்கள் வந்து வணங்கினர். தலை நகரிலிருந்து நீங்கிய கோவலனுடன், வானவூர்தியிலே ஏறிச் சென்றாள் கண்ணகி என்று கதை நன்றாக முடிகின்றது. இவ்வளவு அழகாக முடித்துக் காட்டி யிருக்கிறார் இளங்கோ அடிகள். நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ்ஒர் தீத்தொழிலாட்டியேன் யான் என்று ஏங்கி எழுநாள் இரட்டி எல்லை சென்றபின் தொழுநான் இதுஎனத் தோன்ற வாழ்த்திப் பீடுகெழு நங்கைப் பெரும்பெயர் ஏத்தி வாடா மாமலர் மாரிபெய்து ஆங்கு அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக் கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான வூர்தி ஏறினன் மாதோ கான்அமர் புரிகுழர் கண்ணகிதான் என் இவ்வடிகளே மேலே காட்டிய நிகழ்ச்சியைக் கூறுவன; மதுரைக் காண்டத்தின் முடிவு; கட்டுரை காதையின் இறுதி. ஒரு கதைக்குரிய முழு இலக்கணத்தோடு துக்க நிகழ்ச்சி யாகவும், இறுதியில் மங்களகரமாகவும் கதை முடிந்திருக்கிறது, துக்ககரமாக முடியும் கதைகளையும் ஈறுதியில் மங்கலமாக அமைத்து முடிப்பதே நமது நாட்டுப் பரம்பரைப் பண்பு. இந்த வழக்கத்தில் மாறுபடாமல் மதுரைக் காண்டத்தோடு சிலப்பதிகாரக் கதை முடித்திருக்கின்றது. இதன் பிறகு தொடங்கும் வஞ்சிக் காண்டத்தைச் சிலப்பதி காரக் கதையோடு இணைக்காமல் ஒரு தனிக் கதையாகவும் வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் வஞ்சிக் காண்டத்தின் கதையமைப்புக் காணப்படுகின்றது. வஞ்சிக் காண்டம் இளங்கோ அடிகளால் இயற்றப் பட்டிருக்க முடியாது என்பதற்கு வேறு சில ஆதரவுகளும் காணப்படுகின்றன. இவைகள் வஞ்சிக் காண்டத்திலேயே உள்ளவை. புகார்க்காண்டத்திலே காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்புச் சொல்லப்படுகின்றது. அங்கு நடக்கும் தொழில்கள், வாணிகம், வாழும் மக்கள், அவர்கள் பொழுது போக்கு, நகர வீதிகளின் அமைப்பு, அவைகளின் சிறப்பு-இவைகள் எல்லாம் தெளிவாகக் கூறப்படுகின்றன. இதுபோலவே மதுரைக் காண்டத்திலும், மதுரை நகர மாண்பு, அங்கு நடைபெறும் வாணிகம், அங்கு வாழும் மக்கள், வீதிகளின் அமைப்பு ஆகியவைகள் சொல்லப்படுகின்றன. வஞ்சிக் காண்டத்திலே, வஞ்சி நகரைப்பற்றி இந்த முறை யிலே சொல்லப்படவில்லை. புகாரைப்பற்றியும், மதுரையைப் பற்றியும் காண்பதுபோல வஞ்சியைப்பற்றிக் காண முடிய வில்லை. வஞ்சிக் காண்டம் இளங்கோ அடிகளால் இயற்றப் பட்டிருக்குமானால் புகாரைப்போலவே, மதுரையைப்போலவே வஞ்சியைப்பற்றியும் படம்பிடித்துக் காட்டியிருப்பார். வஞ்சிக் காண்டத்திலே காணப்படும் மற்றொரு கதையைச் சிலப்பதிகாரம் படிப்போர் ஊன்றிப் பார்க்கவேண்டும். கொற்கை நகரத்திலே இளவரசனாக இருந்த வெற்றி வேல் செழியன் தனது நாட்டுக்கு நேர்ந்த கேட்டை அறிந்தான்; பொற்கொல்லர்களின்மேல் சினங் கொண்டான். ஒரு முலையைக் குறைத்த சிறந்த பத்தினியாகிய கண்ணகிக்கு ஒரே நாளில் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டான்; தனது அரசனை இழந்து வருந்தும் மதுரை மூதூரில் அரசுக்கட்டில் ஏறினான்; தென்னாட்டு ஆட்சிக்குரியதான அரியணையில் அமர்ந்தான்; சந்திர குலத்தோனாகிய அவன், காலைக் கதிரவன் ஒற்றை ஆழித் தேரின்மேல் ஏறியதுபோல அரியணை ஏறினான். கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் பொன்தொழில் கொல்லர் ஈர்ஐஞ் ஞூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி, உரைசெல வெறுத்த மதுரை மூதூர் அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை, தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் நிரைமணிப் புரவி ஒர்ஏழ் பூண்ட ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என, மாலைத்திங்கள் வழியோன் ஏறினன் (நீர்ப்படை 127-138) நீர்ப்படை காதையிலே கூறப்படும் இச்செய்தி உண்மையாக இருக்க முடியுமா என்பதைச் சிந்திக்வேண்டும். ஒரு பொற்கொல்லன் கோவலனைக் காட்டிக்கொடுத் தான் என்பதற்காக ஆயிரம் பொற்கொல்லர்களைக் கொல்லுவது எந்த நீதியைச் சேர்ந்தது? இதை ஒரு நீதி - அறம் - நியாயத் தீர்ப்பு என்று எடுத்துக்கொண்டால் இதன் விளைவு என்ன? ஒரு குற்றவாளிக்குப் பதிலாக அவனைச் சேர்ந்த-அவன் வகுப்பைச் சேர்ந்த-குற்ற மற்றவர்கள் ஆயிரம் பேர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். இது அறமாகுமா? வெற்றிவேல் செழியன் இத்தகைய கொடுஞ் செயலைச் செய்திருக்க முடியுமா? செய்திருந்தால் அவன் ஒரு செங்கோல் வேந்தனா? ஒழுக்கொடு புணர்ந்தஇவ் விழுக்குடிப் பிறந்தோர் (கட்டுரை காதை 40) என்று பாண்டியர்குலப் பெருமை பாராட்டப்படுகின்றது, பாண்டியர்கள் ஒழுக்கங் குன்றாதவர்கள்; நீதி தவறாதவர்கள்; சிறந்த குடியிலே பிறந்தவர்கள் என்றெல்லாம் இளங்கோவடிகள் பாராட்டுகின்றார். கட்டுரை காதையிலே பாண்டியர்களின் அறநெறியை விளக்கும் பல வரலாறுகள் காணப்படுகின்றன. இத்தகைய பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்த வெற்றி வேல் செழியன், குற்றமற்ற பொற்கொல்லர்களுக்குக் கொடுமை செய்திருக்க முடியுமா? இதைத்தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வஞ்சிக்காண்டம் இளங்கோவடிகளால் பாடப்பட்டிருக்கு மாயின் இத்தகைய அநாகரிகச் செயலை அவர் குறிப்பிட்டிருக்க மாட்டார்; பாண்டியன் தலையிலே சுமத்தியிருக்க மாட்டார். இது உறுதி. வஞ்சிக் காண்டத்தில் உள்ள மற்றொரு செய்தியும் ஊன்றிக் காணவேண்டியதாகும். நான் பத்தினிக்கோட்டத்தை அடைந்தேன்; கண்ணகி தேவந்தியின்மேல் தோன்றினாள். நான் துறவு பூண்ட நிகழ்ச்சியை எடுத்துரைத்தால் என்று இளங்கோவடிகளே சொல்லிக்கொள்ளு வதாக வரந்தரு காதையிலே காணப்படு கின்றது (வரந்தரு. 171-188) இது ஒரு சுவையற்ற நிகழ்ச்சியாகும். தெய்வம் தோன்றி ஒரு செய்தியைச் சொல்லுகிறதென்றால், அது நாம் அறியாத செய்தியாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் அது தெய்வம் தெரிவித்த செய்தியாக மதிக்கப்படும். கண்ணகித் தெய்வம் இளங்கோ அடிகளுக்குக் கூறிய செய்தி அவர் அறியாதது அன்று. அவருக்குத் தெரிந்த செய்தி யையே தெய்வம் முன்வந்து திருப்பிச் சொல்லியதில் என்ன புதுமை இருக்கிறது? இச்செய்தியையும் இளங்கோவடிகள் தாமே எழுதிக் கொள்ளுவது சிறிதும் பொருத்தமற்றதாகும். இந்தச் செய்தியிலே எந்தச் சுவையும் அமையவில்லை. உண்மையில் வஞ்சிக் காண்டம் இளங்கோ அடிகளால் பாடப் பட்டதாயிருந்தால் இச் செய்தி அதில் இடம் பெற்றிருக்காது. வஞ்சிக் காண்டத்திலே, வஞ்சி நகரைப்பற்றி விளக்கமாகக் கூறப்படாமை, பாண்டியர் மரபுக்கு மாசு கற்பிக்கும் முறையிலே வெற்றிவேற்செழியன் தலையிலே சுமத்தப்பட்ட பழியான கொலைக்குற்றம், இளங்கோவடிகள் தனது கதையைத் தானே சொல்லிக்கொள்வது, வஞ்சிக் காண்டக் கதை சோழ-பாண்டியர் களைவிட சேரமன்னர்களையே மிகுதியாகப் போற்றுவதாக அமைந்திருப்பது, சிலம்பால் விளைந்த கதை யைப்பற்றிய தொடர்பு அதிகமாகக் காணப்படாமை-இவைகளை யெல்லாம் எண்ணிப் பார்ககவேண்டும். எண்ணிப்பார்த்தால்,புகார்க் காண்டத்தையும், மதுரைக் காண்டத்தையும் பாடிய புலவரால் வஞ்சிக்காண்டம் பாடியிருக்க முடியுமா என்ற ஐயம் பிறக்காமல் போகாது இந்த ஐயத்துக்குத் தெளிவு காணவேண்டியது மிகமிக அவசியமாகும். வஞ்சிக் காண்டம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது அன்று என்பது உறுதியானால் பதிகத்தைப்பற்றியும் முடிவு கட்டி விடலாம். அது வஞ்சிக் காண்டம் பாடிய பின்னரே பாடப்பட்டது என்று தீர்மானிப்பது எளிது. இவ்வாறு பதிகமும், வஞ்சிக் காண்டமும் இளங்கோவடிகளின் படைப்பல்ல; வேறு யாரோ ஒரு புலவரால் செய்யப்பட்டவை என்ற முடிவை ஏற்றுக்கொண்டால், சிலப்பதிகாரம்பற்றிய சில குழுப்பங்கள் தெறிவடைகின்றன. சிலப்பதிகாரக் கதை அந்நூலாசிரியர் காலத்தில் நடந்த கதை அன்று; பழங்செய்திகள் சிலவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு எழுதப்பட்டது; புதிய கற்பனைகளைக் கலந்து எழுதப் பட்டது; பல நல்லறங்களை மக்களுக்குப் போதிக்கும் கருத்துடன் எழுதப்பட்டது; சிறப்பாகஅரசியல் உணர்ச்சியை ஊட்டுவதற்காகவே சிலப்பதிகார காவியம் எழுதப் பட்டது. இளங்கோவடிகளைப்பற்றி காவியம் எழுதப்பட்டது. இளங்கோவடிகளைப்பற்றி வழங்கும் கதை கற்பனை; அவர் வரலாற்றை அறிய முடியவில்லை. இவ்வாறு முடிவுகட்டுவதற்குப் பதிகமும், வஞ்சிக் காண்டமும் தாம் தடைகளாக இருக்கின்றன. அவைகளைப் பிரித்து வைத்துப் பார்த்தால் மேலேகண்ட முடிவுகள் உண்மை என்று நிலைபெறும். ஆதலால் ஆராய்ச்சியாளர்கள் இதைப்பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டியது இன்றியமையாதது. சங்க நூலா? பிற்கால நூலா? சிலப்பதிகாரம் சங்ககால இக்கியமா அல்லது பிற்கால இலக்கியமா என்ற ஆராய்ச்சி இன்னும் முடிவு பெறவில்லை. பழந்தமிழ்ப் புலவர் பலரும் சிலப்பதிகாரம் சங்ககால இலக்கியம் என்றுதான் நம்புகின்றனர். ஆராய்ச்சியாளர்களில் சிலரும்இப்படித்தான் இயம்புகின்றனர். பதிற்றுப்பத்தின் ஐந்தாம்பத்துக்குரிய குட்டுவனே சிலப்பதிகாரச் செங்குட்டுவன்; அவன் தம்பிதான் இளங்கோ அடிகள் என்ற நம்பிக்கை. மணிமேகலை ஆசிரியரான மதுரைக் கூலவாணிகன் சாத்தன் என்பவரும், கடைச்சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனார் என்பவரும் ஒருவர்தான்; இவரும் இளங்கோவடி களும் சம காலத்தவர்கள் என்ற நம்பிக்கை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியம் என்று சங்கநூல் வரிசையுள் சிலப்பதி காரத்தையும் வைத்து வழங்கும் வழக்கு. இலங்கைக் கயவாகு மன்னன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டி லிருந்தவன்; அவன் கண்ணகியின் கல்நாட்டு விழாவுக்கு வந்திருந்தான் என்று வஞ்சிக் காண்டத்தில் காணப்படும் செய்தி. இவைகளையெல்லாம் வைத்துக்கொண்டே சிலப்பதிகாரம் சங்ககால இலக்கியம் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சி அறிஞர்கள் இதை ஒத்துக்கொள்ளவில்லை. சிலப்பதிகாரம் கடைச்சங்க கால நூல் அன்று என்பதைக் காரணங்களுடன் விளக்கியிருக்கின்றனர். சிலப்பதிகாரத்தில் உள்ள சோதிடக் குறிப்புக்களைக் கொண்டு, காலஞ்சென்ற எல். டி. சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் சிலப்பதிகார காலத்தை ஆராய்ந்திருக்கின்றார். கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேதான் இந்நூல் தோன்றி யிருக்கவேண்டும் என்று முடிவுகட்டுகின்றார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் சிலப்பதிகாரம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் பிறந்த நூல்தான் என்பதைத்தக்க காரணங்களுடன் தெளிவு படுத்தியிருக்கிறார். காவிய காலமே கி.பி. 750 முதல் 1200 வரையில் என்பதுதான் பேராசிரியர் கருத்து. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் காவிய காலம் என்னும் நூலிலே சிலப்பதிகார காலத்தைப்பற்றிய அவர் முடிவைத் தெளிவாகக் காணலாம். வள்ளுவர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு; வள்ளுவர் குறளும், கருத்தும் சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன. நான்மணிக்கடிகை, பழமொழி, ஆசாரக்கோவை முதலிய நூல்களின் கருத்துக்கள். சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன. இந்நூல்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப்பின் பிறந்தவை. சங்க நூல்களிலே திருவேங்கடம் ஒரு வைணவத்தலமாகக் காணப்படவில்லை; சீரங்கமும் காணப்படவில்லை. இவைகள் வைணவத் தலங்களாக சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. சங்க நூல்களிலே கலைமகளைப்பற்றிய குறிப்புக்கள் இல்லை. இத்தெய்வம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. சங்க காலத்திலே பத்தினித்தெய்வ வழிபாடு காணப்பட வில்லை; பத்தினிப் பெண்டிர்க்குக் கல்நாட்டும் வழக்கமும் காணப்படவில்லை; சிலப்பதிகார-வஞ்சிக் காண்டம் பத்தினித் தெய்வ வழிபாட்டைப்பற்றியே கூறுகின்றது. சங்க கால நூல்களிலே புரோகிதத் திருமணம் காணப்பட வில்லை; சிலப்பதிகாரத்திலே புரோகித மணமே காணப்படு கின்றது; கண்ணகி-கோவலன் திருமணம் புரோகித மணமாகும். சங்க கால நூல்களிலே மதப்பிரசாரம் காணப்படவில்லை; சிலப்பதிகாரம் சைனமதப் பிரசார நூலாகக் காணப்படுகின்றது. சங்க கால இலக்கியங்களிலே புலால் மறுத்தல், கள்ளுண் ணாமை வலியுறுத்தப்படவில்லை. ஔவையார், கபிலர் போன்ற பெரும் புலவர்கள் எல்லாம் மாமிசமும் மதுவும் அருந்தியிருக் கின்றனர். சிலப்பதிகாரம். ஊன் ஊண் துறமின், கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின! என்று மது மாமிசங்களைக் கண்டிக்கிறது. சங்ககால நூல்களிலே பாணர், கூத்தர், விறலியர், பாடினி என்பவர்களே இசை, நடனம் முதலிய கலைகளிலே வல்லுநர்களா யிருந்தனர்; இவர்கள் பாணர் என்னும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்திலே விலைமாதர்கள் இசை, நடனம் முதலிய கலைகளிலே தேர்ந்திருந்தனர்; இவர்கள் அரசர்களால் பரிசளிக்கப்பட்டனர்;பாராட்டப்பட்டனர் என்று காணப்படுகின்றது. பதிற்றுப்பத்துக் குட்டுவன் எந்தக்கடவுளை வழிபட்டான் என்று சொல்லப்படவில்லை. சிலப்பதிகாரச் செங்குட்டுவன் சிவபெருமான் அருளால் தோன்றினான்; சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. சங்க காலத்திலே வழக்கத்தில் இல்லாத வடமொழிப் பெயர்களும். சொற்களும் சிலப்பதிகாரத்தில் நிரம்பக் காணப் படுகின்றன. சிலப்பதிகாரம் சங்ககால நூல் அன்று; பிற்கால நூல் தான் என்பதை மேலே காட்டிய சான்றுகள் வலியுறுத்துகின்றன. இவைகள் எல்லாம் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்க செய்திகள். சிலப்பதிகாரம் பழங்கதையாக இருக்கலாம்; அல்லது புதுக்கதையாக இருக்கலாம். அல்லது பழமையும், புதுமையும் கலந்த கதையாக இருக்கலாம். சிலப்பதிகாரத்தின் பதிகமும், வஞ்சிக் காண்டமும் இளங்கோவடிகளால் பாடப் படாதவை களாக இருக்கலாம். சிலப்பதிகாரம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலே தோன்றியதாக இருக்கலாம்; அல்லது சங்ககால நூலாகவே இருக்கலாம். கதை நிகழ்ச்சியிலே இயற்கைக்கு மாறான தெய்வீக நிகழ்ச்சிகள் பல கலந்து கிடக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, அது ஒரு உயர்ந்த நூல் என்பதை எவரும் மறுப்பதில்லை. சிலப்பதிகாரம் சிற்றிலக்கியமா பேரிலக்கியமா? அது ஒரு காவியமா அல்லது நாடகமா? என்ற வழக்கும் நமக்கு வேண்டாம். அது சிற்றிலக்கியமாக இருக்கட்டும்; அல்லது பேரிலக்கியமாக இருக்கட்டும்; அது ஒரு காவியமாக இருக்கட்டும் அல்லது நாடகமாகவே இருக்கட்டும். இதைப் பற்றியும் நாம் கவலைப் படவேண்டாம். தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் விளக்கும் நூல்களிலே சிலப்பதிகாரம் தலைசிறந்த ஒரு நூல். சிலப்பதிகாரம் செந்தமிழ்த்தேனைச் சிந்தையில் நிரப்பும் இனிய பாடல்களைக் கொண்ட நூல்; நல்ல அறங்களைப் போதிக்கும் நூல்; உள்ளத்திலே உணர்ச்சியை எழுப்பும் நூல்; இது அதைப் படித்தவர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற உண்மை. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாரதியார் பாராட்டியிருப்பது மறுக்க முடியாத உண்மை. சிலப்பதிகாரத்தைப் பாராட்டுவதற்கு இதைத்தவிர வேறு சொற்களையோ சொற்றொடர்களையோ தேர்ந்தெடுக்க இயலாது. வாழ்க செந்தமிழ்ச் சிலப்பதிகாரம்! முன்னுரை செந்தமிழ்ச் சிலப்பதிகாரம் பலராலும் பாராட்டப்படும் பழந்தமிழ் நூல்; தலைசிறந்த தமிழ்க் காவியம். இதன் ஆசிரியர் இளங்கோவடிகள் இணையற்ற முத்தமிழ்ப் புலவர், இவருக்குத் தமிழுலகில் ஒரு தனிச் சிறப்பு உண்டு. இளங்கோ அடிகள் துறவியென்பதால் அவரைப் பாராட்டுகிறோமா? இல்லை; அல்லது, அரசிளங்குமரர் - சேரர் குடித் தோன்றல் - செங்குட்டுவன் இளவல் - என்பதற்காகப் போற்றுகிறோமா? இல்லைத் கற்போர் நெஞ்சைக் கவரும் காவியம் புனைந்தார்; கவிதை பாடினார்; கருத்துக்களைத் தொகுத்துத் தந்தார் என்பதற்காகவே, தமிழ் அறிந்த அனைவரும் அவரைப் போற்றுகின்றனர். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள்;அவர் சேரன் செங்குட்டுவன் தம்பி என்பதே புலவர்களின் நம்பிக்கை. சிலப்பதிகாரம் செய்தவர் சேரன் தம்பி அல்லர்; இளங்கோ அடிகள் அல்லர் என்போர் உண்டு. ஆனால் சிலப்பதிகாரம் செய்தவர்தான் யார் என்றால் தக்க விடையில்லை. சிலப்பதிகாரம் நெடுங்காலமாக நிலவுகின்றது; ஒப்புயர் வற்ற நூலாக விளங்குகின்றது. அதைச் செய்த-பாடிய-ஆசிரியர் ஒருவர் இருக்கத்தான் வேண்டும். அந்த ஆசிரியர் யாராயிருந் தாலும் சரி; அவர் பெயர் இளங்கோ அடிகள். இப்படிச் சொல்வதிலே ஏதும் தப்பில்லை. ஆதலால் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் தான் என்று முடிவு கட்டுவோம். சிலப்பதிகாரம் முத்தமிழ் நூல்; இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ்ச் சிறப்பையும் அதிலே காணலாம். இதைப் போல் முத்தமிழுக்கும் தலைமை தாங்கும் தமிழ்க் காவியம் வேறு எதுவும் இல்லை. சிலப்பதிகாரம் முழுவதற்கும் பழைய அரும்பத உரை ஒன்று உண்டு; சிறந்த உரை. இந்நூலுக்குத் தெளிவான விரிவுரை எழுதியிருப்பவர் அடியார்க்கு நல்லார். இவர் உரை, முதல் 19 காதைக் களுக்குத்தான் இருக்கின்றது. பழைய உரையாசிரியர் களுள் அடியார்க்கு நல்லார் மிகச் சிறந்த உரையாசிரியர். அடியார்க்கு நல்லார் முத்தமிழ் வல்லுநர். அடியார்க்கு நல்லாரின் உரையின்றேல் இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளைப்பற்றிக் கூறும் அரங்கேற்று காதைக்கு உரை காண முடியாது. ஓரும் தமிழ் ஒருமூன்றும் உலகு இன்புற வகுத்துச் சேரன் தெரித்த சிலப்பதிகாரத்தில் சேர்ந்த பொருள் ஆரும் தெரிய, விரித்துரைத்தான் அடியார்க்கு நல்லான்; காரும், தருவும் அனையான் நிரம்பையர் காவலனே இது அடியார்க்கு நல்லாரைப் பாராட்டும் பாடல். சிலப்பதிகாரம் முத்தமிழ் நூல் ; இந்த முத்தமிழ் நூலைச் செய்தவன் சேரர்குலத்துச் செம்மல்; அதன் பொருளை அனை வரும் அறியும்படி உரை எழுதியவன் அடியார்க்கு நல்லான். அவன் நிரம்பையர் காவலன்; மேகத்தையும், கற்பகத்தருவையும் போன்றவன். இதுவே இச்செய்யுளின் கருத்து. இந்த அடியார்க்கு நல்லாரைப் பற்றிய வரலாறு ஒன்றும் தெரியவில்லை. இன்று சிலப்பதிகாரத்தின் பொருளைத் தெரிந்து கொள்ளு வதற்கு - சிலப்பதிகாரத்திற்குப் புத்துரைகள், தெளிவுரைகள் விளக்க உரைகள் கூறுவதற்கு - அடியார்க்கு நல்லார் உரையும், பழைய அரும்பத உரையுமே துணை செய்கின்றன. இளங்கோ அடிகள் - சிலப்பதிகார ஆசிரியர் - சமணரா? சைவரா? வைணவரா? என்று வாதிப்போர் உண்டு, அவரைச் சமணர் என்றுதான் பலர் எண்ணுகின்றனர். இதற்கான ஆதரவு களே சிலப்பதிகாரத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இளங்கோவடிகள் தன்னை இன்ன மதத்தினர் என்று வெளிப் படையாகத் தெரிவித்துக்கொள்ளவில்லை. எந்தத் தெய்வத்தைப் பற்றி உரைத்தாலும், அந்தத் தெய்வத்திற்கு ஏற்றம் கொடுத்தே பாடு கின்றார். மத வெறுப்போ, தெய்வ நிந்தனையோ இவரிடம் காணப் படவே இல்லை. இது இளங்கோவடிகளின் ஒரு தனிப் பெருமை. மக்களுக்கு நல்லறங்களைப் போதிக்கவேண்டும் என்று எண்ணுகின்ற ஒரு ஆசிரியர் எப்படி நூல் எழுதவேண்டும் என்பதற்குச் சிலப்பதிகாரம் ஒரு வழிகாட்டியாகும். சிலப்பதிகாரம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியது என்போர் உண்டு; கி. பி. எட்டாம் நூற்றாண்டில் தான் பிறந்தது என்போர் உண்டு. இவற்றுள் எது சரி, எது தவறு என்ற வழக்கில் இந்நூல் தலையிடவில்லை. சிலப்பதிகாரம் எக்காலத்தில் பிறந்ததாயினும் சரி; அக்காலத் திலிருந்த தமிழ்நாட்டு அரசியல் - சமுதாய - பழக்க வழக்கங்களை அதிலே காணலாம். சிலப்பதிகாரக் கவிதை நயம்பற்றிக் கூறவந்த நூல் இது அன்று. சிலப்பதிகாரப் பெருமையைப்பற்றி-கவிதை நயம் பற்றி-கதைச் சிறப்புப்பற்றி - பலர் எழுதியிருக்கின்றனர்; பலர் பேசு கின்றனர்; பேசிக்கொண்டே யிருக்கின்றனர். ஆதலால், சிலப்பதி கார காலத்துத் தமிழக நாகரிகத்தை எடுத்துக்காட்டுவது ஒன்றுதான் சிலப்பதிகாரத் தமிழகத்தின் கருத்தாகும். ஒரு வரலாற்று நூல்போலவே இது எழுதப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் கட்டுகதையா, வரலாறா? இரண்டும் கலந்ததா? இளங்கோ அடிகளால் சிலப்பதிகாரம் முழுவதும் செய்யப்பட்டதா? இளங்கோவடிகளைப் பற்றிச் சொல்லும் கதை உண்மைதானா என்பவைகளைப்பற்றிச் சிந்தனைக்குரிய செய்திகள் என்ற பகுதியிலே ஆராயப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத் தமிழகம் என்னும் இப் புத்தகம் சிலப்பதி காரம் முழுவதையும் இளங்கோவடிகள்தான் பாடினார் என்று வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள்ளது. எத்தகைய விருப்பு வெறுப்பும் இன்றி, நடுவுநிலையிலிருந்து எழுதப்பட்டதே இந்நூல். புத்தகத்தைப் படிப்போர்க்கு இவ்வுண்மை புலனாகும். இப் புத்தகத்திலே சிலப்பதிகார காலத் தமிழகத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டிவிட்டதாகச் சொல்ல முடியாது. பார்த்த வரையிலும் படம் எடுத்திருக்கின்றோம். பார்க்காமல் மறைந்திருப்பவை பல. சிலப்பதிகாரத்தைப் படிப்போர், இந் நூலிலே, காணாத பல செய்திகளையும் கண்டறியலாம். இப் புத்தகத்தில் உள்ள குற்றங்குறைகளையும், விடுபட்ட பொருள்களையும் எடுத்துக்காட்டுவோர்க்கு நன்றி; அவைகள் அன்புடன் வரவேற்கப்படும். சென்னை அன்பன் 10.4.1958 சாமி.சிதம்பரன் அணிந்துரை டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் எம்.ஏ.,எம்.லிட்.,பிஎச்.டி. தமிழ்த்துணைப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம். நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் என்று கவியரசர் பாரதி யாரால் உள நெகிழ்வோடு பாராட்டப் பெற்ற சிலப்பதிகாரம், தமிழின் முதற்பெருங் காப்பிய மும் தனிப் பெருங் காப்பியமுமாகும். முத்தமிழ்க் காப்பியம் என்றும், உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்பாகப் பேசப் பெறும் சிலப்பதிகாரம் குறித்து இதுகாறும் தமிழ் மொழியின் கண் எழுந்த நூல்கள் பலவாகும். குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த சேரன் தம்பி இசைத்த சிலம்பின் தகுதிகளைத் தரம்பிரித்துத் தரம் உணர்ந்து தண்டமிழ் உலகிற்குத் தந்த இலக்கியச் சான்றோர் பலராவர். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்றே போல், சிலப்பதிகாரம் கற்றறிந்தவாளர்தம் அறிவுக்கு விருந்தாய் அமைந்து, புதுப்புதுக் கருத்துக்கள் துலங்கக் காரணமாக ஒளிர்கின்றது. இம்முறையில் இந்நூற்றாண்டில் செந்தமிழ் இலக்கியத் திற்குச் சீரிய தொண்டாற்றியுள்ள அறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்கள் சிலம்பு என்னும் தித்திக்கும் தேனமுதக்கடலில் மூழ்கி ஒளி காலும் நன் மணி முத்துக்களை வாரிக் கொணர்ந்து வண்டமிழர்க்கு வரையாது வழங்கி மகிழ்கிறார். சிலப்பதிகாரத் தமிழகம் என்னும் பெயரால் அப்பெருந்தகை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூல் இலக்கிய இன்பமும் அறிவும் ஆராய்ச்சியும் வேண்டுவோர் ஒவ்வொருவருக்கும் விருந்தாய் அமையும் பெற்றியுடையதாகும். சிலப்பதிகாரம் காட்டும் தமிழகத்தினை இருபத்தெட்டுத் தலைப்புகளில் தொகுத்து நிரல் படச் சுவைபடத் தந்துள்ளார் சங்க இலக்கியச் சான்றாளர் சாமி. சிதம்பரனார். சிலப்பதிகார ஆய்விற்கு அறிஞர் அவர்கள் அமைத்துக் கொண்ட தலைப்புகள் அறிஞர் உலகம் ஏற்றுக் கொண்ட பாராட்டுகின்ற பான்மையில் அமைந்திலங்கக் காணலாம். சிலப்பதிகார அமைப்பினையும், கதையினையும் முதற் கண் கூறிப் பின்னர் சிலம்பு அறங் கூறும் நூல் என்பதனை நிறுவிப் பதிகம் கூறும் முப்பெரும் உண்மை களை முறையே நிறுவுகின்றார் ஆசிரியர். அரசியல், பத்தினித் தெய்வம், ஊழ்வினை, மறுபிறப்பு முதலியனவற்றைத் திறம்பட ஆசிரியர் ஆராய்ந்து விளக்கியுள்ளார். காவிரிப்பூம் பட்டினத்தின் கவினையும், மாநகர் மதுரையின் மாண்பினையும் வடித்துத்தந்து மூவேந்தர் பெருமையினை முறையே கிளத்திக்கூறி, தெய்வீக நிகழ்ச்சிகளைச் சுட்டி சிலம்பில் இடம் பெற்றுள்ள சிறு கதைகளை எடுத்து மொழிந்து, தமிழர் போற்றிய வடமொழி நூல்களையும் காட்டியுள்ளார் ஆசிரியர். சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருள்களைப் பாங்குறக் காட்டும் திறத்தினால் ஆசிரியர் ஆடியின் மாண்புக்கு உவமை கூறத் தக்க நிலையில் உள்ளார். அடுத்து, தெய்வங்களும் கோவில்களும், வேதமும் வேள்வியும், திருமறை, முறை, பொதுமகளிர், சாதி வேற்றுமை, மத ஒற்றுமை முதலியவற்றினை விளக்கி, மன்னரும் மக்களும் வாழ்ந்த வகையினை வகையுறக் காட்டிப் பாரத நாட்டுப் பண்பாடு இதுதான் என்பதனையும் இனிதுறக் கிளத்துகின்றார். ஆரியர் - தமிழர் தொடர்பு, சமுதாய நிலை, அறவுரைகள், சிலம்புக்கும் குறளுக்கும் உள்ள தொடர்பு, சிலம்பு புரட்சிக் காவியம் ஆகும் தகுதிப்பாடு, சிலம்பில் காணப்பெறும் நம்பிக்கை களும் பழக்க வழக்கங்களும் ஆகியகுனவற்றையெல்லாம் அழகுறக் காட்டிவந்து, இறுதியில் சிந்தனைக்குரிய சில செய்திகளையும் பெய்து ஆராய்ச்சியுலகிற்குக் கொடையாக அளித்துள்ளார். சிலப்பதிகார காலத்துத் தமிழக நாகரிகத்தை எடுத்துக் காட்டுவது ஒன்றுதான் சிலப்பதிகாரத் தமிழகத்தின் கருத் தாகும் என்று, எத்தகைய விருப்புவெறுப்பும் இன்றி, நடுவு நிலையிலிருந்து எழுதப்பட்டதே இந்நூல் என்றும், சிலப்பதி காரத்தைப் படிப்போர் இந் நூலிலே, காணாத பல செய்திகளை யும் கண்டறியலாம் என்றும் ஆசிரியர் முன்னுரையில் மொழிந் திருக்கும் கருத்துக்கள் நூலாசிரியர்தம் சீரிய நோக்கத்தினையும் நடுவு நிலைசார்ந்த நன்னெஞ்சத்தினையும் அமரருள் உய்க்கும் அடக்கத்தினையும் ஒருங்கே புலப்படுத்த வல்லனவாம். இந்நூலின் தனிப்பெருஞ் சிறப்பாக யான் கருதுவது, சிலப்பதிகாரக் காப்பியத்தில் கருக்கொண்டுள்ள அரிய செய்திகள் பலவற்றை இந்நூல் மிக எளிதில் நமக்கு வழங்குவது ஆகும். சிலம்பு பயிலும் மாண்புநிறை மாணவர்தம் உழைப்பு மேன்மை யினையும், முயற்சி அருமையினையும் இந்நூல் எளிதாக்கி நிற்கின்றது எனலாம். சிலப்பதிகார இலக்கியக் கருவூலங்களைத் தன்னகத்தே தாங்கி நிற்கும் பண்டார சாலையாக அறிஞர் சாமி. சிதம்பரனார் அவர்களின் அரிய ஆராய்ச்சிப் படைப்பான சிலப்பதிகாரத் தமிழகம் நின்றொளிர்கின்றது. அறிஞர் சாமி சிதம்பரனார்க்கு வாய்த்த மனைவிளக்கு வீட்டரசியார் வணக்கத்திற்குரிய அம்மா சிவகாமி சிதம்பரனார் அவர்கள் மறைந்த தம் ஆருயிர்க் கேள்வரின் ஆராய்ச்சி நூல் களைத் தமிழ்கூறு நல்லுலகிற்குத் தருவதனையே தவ வேள்வி யாகக் கொண்டு வாழ்வு நடத்திவருகிறார்கள். அவர்களின் முயற்சி வெல்வதாகுக; தமிழ்ப்பணி சிறப்பதாகுக! தமிழுலகு இந்நூலைப் பயன்படுத்தி மகிழ்வதாகுக. தமிழகம் 8-12-1973 சென்னை - 29 டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் சிலப்பதிகாரத் தமிழகம் இஃது ஒர் அற்புத ஆராய்ச்சி நூல். ஐம்பெருங்காப்பி யத்தில் ஒன்றான சிலப்பதிகாரம் என்பதைப் படிக்க இயலாதார் இதனை வாசித்தால் போதும். சிலப்பதிகாரத்தின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம். ஆசிரியரின் ஆராய்ச்சித் திறனுக்கும் ஆழ்ந்த தமிழறிவினுக்கும் இஃது ஏற்ற எடுத்துக்காட்டாகும். நூலை வகுத்துள்ள அதிகார வைப்பை உரைப்போம்; ஆறு வகையான உண்டியை இல்லாள் விரும்பி ஊட்டுவதே போல் ஒவ்வொரு தலைப்பிலும் சிலப்பதிகார விசயத்தை ஆசிரியர் எடுத்துரைத்தல் ஓர் அலாதி மாதிரியாகும். ஆராய்ச்சியில் கண்ட விசயங்களைக் கதையேபோல் ஆசிரியர் கூறுவதை நாம் பாரட்ட வேண்டும். காய்தல் உவத்தில் இன்றி, உள்ளது உள்ளபடி விசயங்களை ஆசிரியர் வரைந்திருத்தல் அவரது மனவிரிவைக் காட்டும். அறவுரைகள் அனைவருக்கும் நல்விருந்தாகும். புரட்சிக் காவியம் என்பதில் ஆசிரியர் தந்துள்ள அம்சங்கள் அறிவாளி களையும் ஆனந்திக்கச் செய்யும். ஆசிரியர், இந்த ஆராய்ச்சி நூலின் முடிவிலே தமிழர் களின் நாகரீகத்தையும், பண்பாட்டையும் விளக்கும் நூல்களிலே சிலப்பதிகாரம் தலைசிறந்தது. சிலப்பதிகாரம் செந்தமிழ்த் தேனை சிந்தையில் நிரப்பும் இனிய பாடல்கள் கொண்டது. நல்ல அறங்களைப் போதிப்பது, உள்ளத்திலே உணர்ச்சியை எழுப்புவது, நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியார் பாடியிருப்பதை மறுக்க முடியாது. என்பன குறிப்பிடத்தக்கன. சிலப்பதிகாரத்தில் காணும் வண்ணம் தமிழகத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எல்லோருக்கும் உரைத்திருப் பதை நந்தமிழ் மக்கள் வரவேற்பர், ஆசிரியரை வாழ்த்துவர். அவருக்கு பல்லாண்டும் பாடுவர். சுதேசமித்திரன் : எம். எஸ். எஸ். ஐயர். சிலப்பதிகார அமைப்பு பண்டைக்காலக் கதைகளில் குடும்பக் கதைகளைக் காண்பது அரிது. அக்காலக் கதைகள் எல்லாம் தெய்வங்களைப்பற்றிக் கூறும் கதைகளாகவே அமைந்திருக்கும்; அல்லது மன்னர் வரலாறுகளைச் சொல்லும் கதைகளாகவே காணப்படும். சிலப்பதிகாரம் நேரடியாக மன்னர்களைப்பற்றிச் சொல்லும் கதை அன்று; கடவுளரைப்பற்றிய கதையும் அன்று; ஒரு பணக்காரக் குடும்பத்தைப்பற்றிக்கூறும் கதைதான் சி லப்பதிகாரம். அன்றியும், இக்கதை வேறுமொழியிலிருந்து பெயர்த்து எழுதிய கதையும் அன்று, சிலப்பதிகாரம் முதல்நூல்; தமிழ் நாட்டிலே நடந்த நிகழ்ச்சியாக வைத்துத் தமிழிலேயே எழுதப் பட்ட கதை. ஆதலால் இதை ஒரு தனித் தமிழ்க் கவிதை என்று சொல்லுவது பொருந்தும். இதைப்போன்ற தனித் தமிழ்க் காவியம், இதன் தொடர்ச்சிக் கதையான மணிமேகலை ஒன்றுதான். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தனித் தமிழ்க்கதைகள்; தமிழர் நாகரிகத்தைச் சித்தரிக்கும் கதைகள்; தமிழர் பண்பாட்டை விளக்கும் கதைகள்; தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டும் கதைகள். இவை இரண்டும் தமிழ் மகளுக்கு அணிசெய்யும் அரிய செந்தமிழ் நூல்கள். சிலப்பதிகாரம் ஒரு குடும்பக் கதைதான்; ஆயினும் அக்கதை அக்காலத்து மக்கள் மனப்பான்மையைத் தழுவியே அமைக்கப் பட்டிருக்கின்றது, அக்காலத்து மக்கள் அரசரிடம் அசைக்க முடியாத அன்புகொண்டவர்கள்; தெய்வ பக்தி நிரம்பியவர்கள்; தெய்வீகத் தொடர்புள்ள கதைகளையே பாராட்டுபவர்கள்; இக் கதைகளிலேதான் அவர்களுக்குப் பற்றுண்டு. ஆதலால் சிலப்பதி காரத்திலே அரசர்கள் தொடர்பும் உண்டு; தெய்வங்களின் கதைகளும் இணைந்திருக்கின்றன. இவைகளின் கலப்பின்றிச் சிலப்பதிகாரம் எழுதப்பட்டிருக்கு மானால் சிலப்பதிகார காலத்து மக்கள் அந்நூலைப் பாராட்டி யிருக்க மாட்டார்கள்; சிறப்பாகப் போற்றிக் கொண்டாடி இருக்க மாட்டார்கள். காலத்தை ஒட்டி, மக்கள் மனப்பான்மையை அறிந்து, நூல்களை எழுதுவதே சிறந்த முறை. இவ்வாறு எழுதப்படும் இலக்கியங்களே போற்றப்படும்; நூல் தோன்றிய காலத்திலும் மக்களால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்படும்; பிற்காலத்திலும் பெரிதும் பாராட்டப்படும், இத்தகைய நூல்களே சிரஞ்சீவி நூல்களாக நின்று விளங்கும். சிறந்த புலவர்கள்-கவிஞர்கள் - இத்தகைய நூல்களையே இயற்றுவார்கள், இவ்வுண்மையை உணர்ந்தே சிலப்பதிகார ஆசிரியர் தமது நூலை அமைத்திருக் கின்றார். நூலின் பிரிவுகள் சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களாக அமைந்திருக் கின்றது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்பனவே அம் மூன்று காண்டங்கள். புகார் என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு; இது சோழநாட்டின் தலைநகரம். காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு; அங்கு நடந்த நிகழ்ச்சி; சோழநாட்டின் வளம் இவற்றை விளக்குவதே புகார்க் காண்டம். மதுரை பாண்டிய நாட்டின் தலைநகரம். மதுரையின் மாண்பு; பாண்டிய நாட்டின் பண்பு; மதுரையில் நடந்த நிகழ்ச்சி இவைகளை விளக்குவது மதுரைக் காண்டம். வஞ்சிமாநகரம் சேரநாட்டின் தலைநகர்; வஞ்சியில் நடந்த நிகழ்ச்சியை விளக்குவது வஞ்சிக் காண்டம் புகார்க் காண்டம் பத்துக் காதைகளாக அமைந்திருக் கின்றது. அவை: 1. மங்கல வாழ்த்துப் பாடல்; 2. மனைஅறம் படுத்த காதை; 3. அரங்கேற்றுக் காதை; 4. அந்திமாலைச் சிறப்புச்செய் காதை; 5. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 6.கடல் ஆடு காதை; 7.கானல்வரி; 8.வேனில் காதை; 9.கனாத் திறம் உரைத்த காதை; 10. நாடுகாண் காதை என்பன. மதுரைக் காண்டம் பதின்மூன்று காதைகளாக அமைந் திருக்கின்றது. அவை: 1.காடுகாண்காதை;2.வேட்டுவவரி;3. புறஞ்சேரி இறுத்த காதை; 4. ஊர்காண் காதை; 5. அடைக்கலக் காதை; 6. கொலைக்களக் காதை; 7. ஆய்ச்சியர் குரவை; 8. துன்பமாலை; 9. ஊர்சூழ்வரி; 10. வழக்குரை காதை; 11. வஞ்சின மாலை; 12.அழல்படு காதை; 13. கட்டுரை காதை என்பன. வஞ்சிக் காண்டம் ஏழு காதைகளாக அமைந்திருக்கின்றது, அவை: 1. குன்றக் குரவை; 2. காட்சிக் காதை; 3. கால்கோள் காதை; 4. நீர்ப்படைக் காதை; 5. நடுகல் காதை; 6. வாழ்த்துக் காதை; 7. வரந்தரு காதை என்பன. சிலப்பதிகாரத்தில் இவ்வாறு மூன்று பெரும்பகுதிகளும், முப்பது சிறு பிரிவுகளும் காணப்படுகின்றன. இப்பிரிவுகள் நூலாசிரியராலேயே அமைக்கப் பட்டவை. இவை தவிர, நூலின் முதலிலே, சிலப்பதிகார அமைப்பை விளக்கிச் சொல்லும் பதிகம் என்னும் பகுதியும், உரைபெறு கட்டுரை என்னும் பகுதியும் அமைந்திருக்கின்றன, நூலின் இறுதி யிலே நூற் கட்டுரை என்னும் பகுதியும் அமைந்திருக்கின்றது. செய்யுள் அமைப்பு சிலப்பதிகாரம் பெரும்பாலும் ஆசிரியப்பாவால் அமைந் திருக்கின்றது. ஆனால் மணிமேகலைபோல, பெருங்கதை போல நூல் முழுவதும் ஆசிரியப் பாவால் ஆனது அன்று, சிலப்பதி காரம் தனிச்சிறப்புடன் விளங்குவதற்கான காரணங்களில் அதன் செய்யுள் அமைப்பும் ஒன்றாகும். ஒரு நூல் ஒரே வகையான - ஒரே இசையுள்ள-பாடல் களால் ஆகியிருந்தால், அதைப் படிப்போர்க்குச் சோர்வு தட்டுவது இயல்பு. பல சந்தப் பாடல்கள் கலந்த நூலைப் படிப்பதிலே ஒரு தனி இன்பம் உண்டு. பொருள் இன்பத்தை விட, பாவின் ஒசையின்பத்துக்கு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் ஆற்றல் அதிகம் உண்டு. இவ்வுண்மையை நன்றாக உணர்ந்தவர் சிலப்பதிகார ஆசிரியர். ஆதலால்தான் அவர் பல சந்தமுள்ள பாடல்களிலே சிலப்பதி காரத்தைச் செய்திருக்கின்றார். சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடல் வெண்பாவிலே தொடங்குகின்றது. முதலில் உள்ள நான்கு பாடல்களும் மூன்றடிகள் கொண்ட வெண்பாக்கள். இவைகளுக்குச் சிந்தியல் வெண்பாக்கள் என்று பெயர். புகார்க் காண்டத்தில் உள்ள கானல்வரிப் பாடல்கள் மிகுந்த சுவை உள்ளவை. கானல்வரி, பல சந்தங்களிலே அமைந்த பாக்களைக் கொண்டவை. மதுரைக் காண்டத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவை, துன்ப மாலை, ஊர்சூழ் வரி என்ற காதைகளும் பலசந்தப் பாக்களால் அமைந்தவை. வஞ்சிக் காண்டத்தில் உள்ள குன்றக்குரவை, வாழ்த்துக் காதை ஆகிய பகுதிகளும் பலசந்தப் பாக்கள் கொண்டவை. இங்கே குறித்த பகுதிகளில் உள்ள பாடல்களிலே பல இசையுடன் பாடுவதற்கு ஏற்றவை. முப்பது காதைகளிலே ஆறு காதைகள் பலசந்தப் பாடல் களைக் கொண்டவை. இது குறிப்பிடத்தக்கது, இக் காதைகளைப் படிப்போர் பொருளின்பமும் காண்பர்; ஒசையின்பத்திலும் ஆழ்ந்து தம்மை மறப்பர். சிலப்பதிகாரத்திலே வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா முதலியவைகளும், அவற்றின் இனங்களும் கலந்து கிடக்கின்றன. சீவக சிந்தாமணிக்குப் பிறகுதான் தமிழிலே விருத்தப்பாக்கள் புகுந்தன; அதற்குமுன் விருத்தப்பாக்களில் நூல்கள் எழுதப்பட வில்லை; விருத்தப் பாக்கள் வடமொழியைப் பின்பற்றி எழுந்தன என்பர். சிலப்பதிகாரத்தைக் காண்போர் இக்கூற்றை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சிலப்பதிகாரத்திலே விருத்தப்பாக் களும் கலந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், விருத்தப்பாக்களில் நூல் இயற்ற முதலில் வழிகாட்டியவர் சிலப்பதிகார ஆசிரியர் என்றே சொல்லி விடலாம். விருத்தப் பாக்கள் தமிழில் உள்ள, நால்வகைப் பாக்களின் இனமே என்பதை மறந்துவிடக்கூடாது. சிலப்பதிகார அமைப்பிலே மற்றொரு சிறப்பும் குறிப்பிடத் தக்கது. பழைய கதை ஒன்றை, உரையும் பாட்டும் கலந்து செய்வ தற்குத் தொன்மை என்று பெயர். தொல்காப்பியர் இவ்வாறு தொன்மைக்கு இலக்கணம் வகுத்துள்ளார். உரையும் பாட்டும் கலந்த நூலுக்கு உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று பெயர். சிலப்பதிகாரம் இவ்வகைச் சேர்ந்த நூல். பாடல்களின் இடையிலே உரைநடையும் கலந்திருப்பதால் அதில் ஒரு தனிச்சுவை தட்டும். படிப்போர் அதனால் ஒரு தனிமகிழ்ச்சியடைவர். செய்யுளைவிட உரைநடையிலே குறித்த பொருளை விளக்கிக் கூறமுடியும். ஆதலால் உரைநடையும் இடையிடையே அமைத்துச் செய்யுள் நூல் செய்வதைச் சிறப்பாகப் போற்றினர். உரைநடையிலே தனித்த உரை நடையாக-அதாவது வசனரூபமாக இருப்பது ஒன்று; செய்யுள் வடிவில் இருக்கும் உரைநடை ஒன்று. செய்யுள் உருவில் இருக்கும் உரைநடைக்கு உரைப்பாட்டு என்று பெயர், இந்த உரைநடையிலே செய்யுள் போல மோனை எதுகைகள் அமைந்திருக்கும்; ஆனால் செய்யுளுக்குரிய கட்டுத்திட்டம் இல்லாமல், கடிவாளமற்ற குதிரைபோல் ஓடும். இவ்வாறு எழுதப்படுவதே உரைப்பாட்டு. சிலப்பதிகாரத்தில் தனித்த உரைநடையும், உரைப்பாட்டும் பலவிடங்களில் கலந்து வருகின்றன. இவ்வாறு பல வகையிலே சிலப்பதிகாரத்தின் செய்யுள் அமைப்புச் சிறந்து விளங்குகின்றது. இது நூல் எழுதுவோர்க்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றது. சிலப்பதிகாரக் கதை மிக நீண்டகதை அன்று. குறுகிய கதைதான். அதை ஒரு சிறுகதை உருவத்திலே அமைத்து எழுதி விடலாம். ஆனார் சிலப்பதிகார ஆசிரியர் அச் சிறுகதையை ஒரு பெரும்காப்பியமாக அமைத்துவிட்டார்.ஆசிரியரின் இத்திறம் வியக்கத்தக்கது. இது அவருடைய ஒப்புயர்வற்ற புலமைத் திறத்திற்கு ஒரு சான்றாகும். நமது கால மகாகவி பாரதியார், சிலப்பதிகாரத்தை `நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று போற்றினார். அதை `ஓர் மணி ஆரம் என்று பாரட்டிப் பாடினார், சிலப்பதிகாரச் செய்யுள் இன்பம், அறங்கள், காட்சிகள் எல்லாவற்றையும் படித்துச் சுவைத்தவர் அவர், ஆதலால் அதை அவர் நவரத்தின மாலையாக உருவகம் செய்தார். சிலப்பதிகாரம் ஒரு நவரத்தின மாலை என்ற கருத்திலேயே `ஓர் மணி ஆரம் என்று பாரதியார் குறிப்பிட்டார். சிலப்பதிகாரம் அதன் அமைப்பினாலேயே படிப்போர் நெஞ்சை அள்ளும் கவிதையாக விளங்குகின்றது; ஓர் மணி ஆரமாக விளங்குகின்றது. இது உண்மை. சிலப்பதிகாரக் கதை சிலப்பதிகாரத்தைப் படிக்கத் தொடங்கும்போதே அது நம் உள்ளத்தைக் கவர்கின்றது. ஆசிரியர் அதைத் தொடங்கியிருக்கும் முறைதான் இதற்குக் காரணம். பெரும்பாலான காவியங்கள் எடுத்தவுடன் கதையைத் தொடங்குவதில்லை, காவியப்புலவர்கள். கடவுள் வாழ்த்து, நாட்டுப் படலம், நகரப் படலம், ஆற்றுப் படலம் என்று அடி போட்டுக் கொண்டுதான் நூலைப் பாடத் தொடங்குவார்கள். நாட்டுப் படலத்திலே ஒவ்வொரு திணையைப்பற்றியும் பாடுவார்கள்; நகரப்படத்திலே ஒவ்வொரு தெருவைப் பற்றியும் பாடுவார்கள், வேசையர் வீதிகளைப்பற்றிக் கூறும்போது புலவர்கள், வீடுதோறும் புகுந்து புறப்படுவார்கள். இவர்கள் நாடு நகரங்களிலே அலைந்து திரிந்து கதையைத் தொடங்கு வதற்கு முன் அப்பாடா என்று ஆகிவிடும். திருத்தக்கதேவர், கவிச் சக்கரவர்த்தி கம்பர், சேக்கிழார் முதவியவர்களும் நாட்டுப் படலம், நகரப் படலம் சொல்லித் தான் கதையைத் தொடங்குகின்றனர். எடுத்தவுடன் பல பக்கங்களில் இயற்கை வர்ணனைகளை எழுதுவது; பிறகு கதையைத் தொடங்குவது - இம்முறையில் எழுதப்பட்டிருக்கும் நூல் கற்பவர் மனத்தைக் கவராது. எடுத்தவுடன் கதையைத் தொடங்குவது; இடையிடையே இயற்கை வர்ணனைகளையும், அறநெறிகளையும் அமைத்துக்காட்டுவது - இந்த முறையில் எழுதப்படும் நூல்கள்தான் கற்போர் உள்ளத்தைக் கவரும் இம் முறையில் எழுதப்படுவதே சிறந்ததாகவும் கருதப்படுகின்றது. சிலப்பதிகாரம் இந்த முறையிலேதான் எழுதப்பட்டிருக் கின்றது, சந்திரன், சூரியன், மழை, பூம்புகார் ஆகிய நான்கையும் வாழ்த்தியபின் கதை தொடங்கிவிடுகின்றது. இடையிடையே நகரச் சிறப்பு, நாட்டுப் பெருமை, ஆற்றுச் சிறப்பு முதலியவைகள் அமைந்திருக்கின்றன. மணிமேகலையும் எடுத்த எடுப்பிலேயே கதையைத்தான் தொடங்குகின்றது. கதையை எப்படி எழுதத் தொடங்குவது என்பதற்குச் சிலப்பதிகாரம் ஒரு வழிகாட்டியாகக் காட்சியளிக்கின்றது, சிலப்பதிகாரத்திற்குப்பின் தோன்றிய நூல்கள் இம்முறை யைப் பின்பற்றவில்லை. நாடு - நகர - ஆறு வர்ணனைகளைப் பாடியபிறகே கதையைத் தொடங்குகின்றன, காவியங்களும், புராணங்களும் இந்தப் போக்கிலேயே போகின்றன. இந்நூல்களை இயற்றிய புலவர்கள் சிலப்பதிகார முறையைப் பின்பற்றாமல் விட்டது ஏனோ? இந்நூலின் கதையைச் சுருக்கமாகத் தெரிந்துகொள்ளுவது நலம். அதை நினைவில் வைத்துக்கொள்ளுவது சிறந்தது. பின்னால் சொல்லப்படும் செய்தியை எளிதிலே புரிந்து கொள்ளுவதற்குத் துணை செய்யும். புகார்க் காண்டம் சோழநாட்டின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம். இதற்குப் புகார் என்றும் பெயர். இந்நகரில் வாழ்ந்த வணிகருள் முப்பிரிவினர் இருந்தனர். அவர்கள் இப்பர், கவிப்பர், பெருங் குடியர் என்போர். மாசாத்துவான் என்னும் வணிகன் பெருங்குடியர் மரபிலே பிறந்தவன். மாநாய்கன் என்பவனும் அம்மரபிலே தோன்றியவன். இருவரும் பெருநிதி படைத்தவர்கள், மாசாத்துவான் மகன் கோவலன்; மாநாய்கன் மகள் கண்ணகி. இருவர்தம் பெற்றோர் களும் தங்கள் நிலைமைக்கு ஏற்பக் கொள்வினை, கொடுப்பினை செய்து கொள்ள விரும்பினர், அவர்கள் ஒரு நல்லநாளிலே வைதீகச் சடங்குகளுடன் கோவலனுக்கும், கண்ணகிக்கும் திருமணம் செய்து வைத்தனர். கோவலன் கண்ணகியுடன் அன்போடு இணைந்து வாழ்ந் தான், கோவலன் அன்னை பெருமனைக்கிழத்தி என்பவள் அவள் மகனையும், மருமகளையும் தனிக் குடித்தனமாக வைத்தாள். இல்லறம் நடத்து வதற்கான எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தாள், கோவலன், கண்ணகி இருவரும் இல்லற தருமத்தை இனிது பின்பற்றி வாழ்ந்து வந்தனர். இக்காலத்தில் கோவலன், மாதவி என்னும் கணிகையின் மேல் காதல் கொண்டு, அவளோடு சேர்ந்து வாழ்ந்தான். கண்ணகி கோவலன் பிரிவால் வருந்தினள். ஆயினும் அவள் தன் துன்பத்தைப் பிறர் அறியாதவாறு பொறுத்திருந்தாள். அக்கால வழக்கப்படி புகார் நகரிலே இந்திரனுக்குத் திருவிழா நடந்தது. விழாவின் முடிவில் நகரமக்கள் கடல் ஆடச் சென்றனர். கோவலனும் மாதவியுடன் கடலாடச் சென்றான். அவனும் மாதவியும் கடற்கரையிலே ஒருபுறத்தில் அமர்ந்தனர்; வீணை வாசித்து மகிழ்ந்தனர். கோவலன் மற்றொரு பெண்ணைக் காதலிப்பதுபோன்ற கருத்துள்ள வரிப்பாடலைப் பாடினான்; மாதவியும் அக்குறிப்புத் தோன்றப்பாடினாள். உடனே கோவலன் மாதவியின்பால் ஐயுற்று அவளை விட்டுப் பிரிந்தான். கோவலன் நேரே கண்ணகியின் இல்லத்தை அடைந்தான். அப்பொழுது கண்ணகி தேவந்தி என்னும் பார்ப்பனத்தோழி யுடன் உரையாடிக் கொண்டிருந்தாள். அவள் கோவலனை வரவேற்றாள். கோவலன் கண்ணகியின் உடல் சோர்வையும், உள்ளத் துயரையும் உணர்ந்தான். தன் தீச்செயல் குறித்து வருந்தினான், பொய்யொழுக்கப் பரத்தையோடு சேர்ந்து என் முன்னோர் ஈட்டிய செல்வங்களையெல்லாம் இழந்தேன்; இச்செய்கையால் வெட்கம் அடைகின்றேன் என்றான். மாதவிக்குக் கொடுக்கப் பொருள் இல்லாமையால்தான் இவ்வாறு கூறுகின்றான் என்று எண்ணினாள் கண்ணகி. அவள், என்னிடம் இரண்டு சிலம்புகள் இருக்கின்றன; அவற்றைக் கொள்க என்றாள். மதுரைக்குச் சென்று இச்சிலம்பை முதலாக வைத்துக் கொண்டு வாணிகம் செய்ய எண்ணினேன்; நீயும் உடன் வருக என்றான் கோவலன்; கண்ணகியும் உடன்பட்டாள். கோவலன் அன்று இரவின் கடையாமத்திலே கண்ணகி யுடன் புறப்பட்டான். ஒருவரும் காணாதபடி காவிரியின் வடகரை வழியே மேற்கே சென்றான். ஒரு பூஞ்சோலையை அடைந்தான். அங்கே தவம் புரிந்துகொண்டிருந்த அருக மதத் தவசியான கவுந்தியடிகளைக் கண்டான். அவளும் மதுரைக்கு வருவதாக உரைத்தாள்; அவர்களுடன் புறப்பட்டாள். அவர்கள் அரங்கத்தை அடைந்தனர், அங்கே வந்த சாரணர்களை வணங்கினர். காவிரியின் தென் கரையை அடைந்து ஒரு சோலையிலே தங்கியிருந்தனர். அப்பொழுது அங்கே ஒரு பரத்தையும், தூர்த்தனும் வந்தனர். அவர்கள் கோவலனையும், கண்ணகியையும் கண்டு பரிகசித்தனர். கவுந்தி அடிகள் அவர்களை நரிகளாகும்படி சபித்தாள். அது கண்ட கோவலன், அவர்கள்பால் இரக்கம் காட்டும்படி வேண்டினான். ஓராண்டின்பின் அவர்கள் நல்லுருப் பெறுக என்று சாபத்தை நீக்கினாள் கவுந்தியடிகள், பின்னர் மூவரும் உறையூருக்குச் சென்றனர். இதுவே புகார்க் காண்டத்தில் கூறப்படும் கதையாகும், மதுரைக் காண்டம் கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் உறையூரிலே ஒரு நாள் தங்கியிருந்தனர். அடுத்த நாள் காலையிலே புறப் பட்டுச் சிறிதுதொலை நடந்தனர். ஓர் அந்தணனால் மதுரைக்குப் போகும் வழியை அறிந்து மேலும் நடந்து சென்றனர் அப்பொழுது ஒருநாள் காலையில் கோவலன் காலைக்கடன் கழிக்கப் போனான். கவுந்தியும் கண்ணகியும் தனித்திருந்தனர். கோவலன் குளத்தில் நிற்கும்போது கௌசிகன் என்னும் அந்தணனைக் கண்டான். அவன், கோவலன் பிரிவால் வருந்தும் மாதவியால் அனுப்பப்பட்டவன். அவன் வாயிலாகத் தன் பெற்றோர்களின் துன்பத்தையும், மாதவியின் துயரத்தையும் உணர்ந்தான்; வருந் தினான். தான் மதுரைக்குப் புறப்பட்ட காரணத்தைத் தன் பெற்றோர் களுக்குக் கூறி அவர்களைப் பாதுகாக்கும்படி அந்தணனிடம் உரைத்தான். அவனைப் பூம்புகாருக்கு அனுப்பிவிட்டான். பின்னர், கோவலன், கண்ணகி கவுந்தி அடிகளுடன் புறப்பட்டான், வழியிலே கண்ட பாணர்களால், மதுரைக்குச் செல்லும் வழியின் அளவை அறிந்தான். வையையாற்றை அடைந்தான். புணையால் வையையைக் கடந்தான். மதுரையின் புறத்தின் உள்ள முனிவர் இருக்கையை அடைந்து அங்கே தங்கினான். மறுநாள் காலையில், கோவலன் கவுந்தியடிகளை வணங்கினான். கண்ணகியை அவள் பாதுகாப்பில் வைத்துவிட்டு மதுரை நகருக்குள் சென்றான். வாணிகம் புரிவதற்கான இடத்தை நாடினான், மீண்டு வந்து மதுரை நகரின் சிறப்பைக் கவுந்தி அடிகளிடம் கூறினான். அப்பொழுது அங்கு வந்த மாடலன் என்னும் மறையோனிடம் உரையாடிக்கொண்டிருந்தான். அச்சமயம் அங்கு இடைச்சியர் தலைவியாகிய மாதரி என்பவள் வந்தாள். அவளை நல்லவள் என்று கண்ட கவுந்தி யடிகள் அவளை அருகில் அழைத்தாள். கண்ணகியின் கற்பு மேம்பாட்டைக் கூறினாள். கண்ணகியை அவளிடம் அடைக் கலப் பொருளாகக் கொடுத்தாள். மாதரியும் மகிழ்ச்சியுடன் கோவலனையும், கண்ணகியையும் ஆயர்பாடியில் உள்ள தன் மனைக்கு அழைத்துப் போனாள். மாதரி, விருந்தினர் இருவரையும் ஒரு புதிய மனையிலே அமர்த்தினாள். தன் மகள் ஐயை என்பவளைக் கண்ணகிக்குத் துணையாக வைத்தாள். அவர்கள் சமைத்துச் சாப்பிடுவதற்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் கொடுத்தாள். கண்ணகி நன்றாகச் சமைத்தாள்; கணவனுக்குப் பரிமாறினாள். அதனைச் சுவைத்து உண்ட கோவலன், கண்ணகியை அருகில் அழைத்தான்; அணைத்துக்கொண்டான். தனது மதியற்ற நடத்தைக்காக மனம் வருந்தினான். கண்ணகியின் மாண்பைப் பாராட்டிப் புகழ்ந்தான். கண்ணகியின் சிலம்புகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டான். `நான் விரைவில் இச் சிலம்பை விற்று வருகின்றேன் என்று சொல்லிப் புறப்பட்டான். அவள் தனித்திருப்பதைக் கண்டு சிந்தை வருந்திச் சென்றான். கோவலன் நகருக்குள் செல்லும்போது தீச் சகுனங்கள் பல காணப்பட்டன. அவற்றைக் கவனிக்காமல் கடைத்தெருவினுள் புகுந்தான். அவன் எதிரில், நூறு பொற்கொல்லர்கள் பின்வர ஒரு பொற்கொல்லன் முன்வந்தான். அவனிடம் அரசி அணிவதற்கு ஏற்ற சிலம்பின் விலையை மதிப்பிடுவாயோ? என்றான் கோவலன். பொற்கொல்லனும் பணிவுடன் `ஆம் என்ற குறிப்பைக் காட்டினன். கோவலன் தன்னிடமிருந்த சிலம்பை அவனிடம் காட்டினான். பொற்கொல்லன், இதை அரசனிடம் காட்டி வருகிறேன்; அதுவரை நீர் இங்கே இரும் என்று ஒரு இடத்தைக் காட்டிப்போனான். கோவலன் அவ்விடத்தில் காத்திருந்தான். அந்தப் பொற்கொல்லன் அரசியின் சிலம்பு ஒன்றைத் திருடியவன். கோவலன் கொடுத்த சிலம்பும், அரசியின் சிலம்பும் ஒத்திருந்ததைக் கண்டான்; இப் புதியவனைத் திருடன் என்று காட்டித் தான் தப்பித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டான். பொற்கொல்லன் போனபோது, பாண்டியன் தன் மனைவியின் ஊடலைத் தணிப்பதற்காக அந்தப்புரத்தை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தான். பொற்கொல்லன் அவனை வணங்கி, என் குடிசையிலிருந்து சிலம்பைத் திருடிய கள்வன் அகப்பட்டான். கையும் களவுமாகப் பிடித்து விட்டேன் என்றான். மன்னன், காவலர்களை அழைத்து, அவனைக் கொன்று, அச்சிலம்பைக் கொண்டுவாருங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றான். பொற்கொல்லன் அக் காவலர்களுடன், கோவலன் இருந்த இடத்தை அடைந்தான். காவலர்கள், கோவலனைக் கள்வன் என்று நம்ப மறுத்தனர். பொற்கொல்லன், கள்வர்களின் இலக்கணத்தை எடுத்துரைத்தான். காவலர்களை இகழ்ந்தான். உடனே காவலர்களிலே கொடியோன் ஒருவன் விரைந்து கோவலனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினான். இதன்பின் கண்ணகியிருந்த ஆயர் சேரியிலே பல அபாய அறிகுறிகள் நிகழ்ந்தன. மாதரி முதலியோர் அதற்குப் பரிகார மாகக் குரவைக் கூத்தாடினர். மாதரி வையைக்கு நீராடச் சென்றபோது, கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்தாள். இதைக் கண்ணகி உணர்ந்தவுடன் பதைத்து மூர்ச்சித்தாள். கண்ணகி உயிர்விடத் துணிந்தாள். சூரியனை நோக்கி, என் கணவன் கள்வனோ? என்றாள். அவன் உன் கணவன் கள்வன் அல்லன்; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீ உண்ணும் என்றான். கண்ணகி மிகுந்த சினங்கொண்டாள். மற்றொரு சிலம்பைக் கையில் ஏந்திக் கொண்டு மதுரை நகருக்குள் புகுந்தாள். பலவாறு புலம்பினாள், என் கணவனைக் காண்பேன்; அவன் வாய் மொழியைக் கேட்பேன்; இன்றேல் என்னை இகழுமின் என்று சூள் உரைத்தாள். கணவன் வெட்டுண்டு கிடந்த இடத்தை அடைந்தாள்; கீழே விழுந்து புலம்பினாள்; அவன் உடம்பைத் தழுவிக்கொண்டாள்; கோவலன் முன்போல் உயிர்பெற்று எழுந்தான், அவன் பாதங்களைப் பணிந்தாள். நீ இங்கு இரு என்று சொல்லி அவன் சுவர்க்கம் புகுந்தான். இச்சமயத்தில் பாண்டியன் மனைவி தீக் கனாக்கள் பல கண்டாள். அவற்றைப் பாண்டியனிடம் சொல்லிக்கொண்டிருந் தாள், அப்பொழுது கண்ணகி, சினத்துடன் அரண்மனை வாயிலை அடைந்தாள். தன் வரவை அரசனுக்கு அறிவித்தாள். அவன் அனுமதிப்படி அவள் அரசன்முன்போய் நின்றாள். கண்ணகி தன்னை இன்னார் என்று அறிவித்தான். கோவலன் கள்வன் அல்லன் என்றாள். தன் சிலம்பினுள் இருக்கும் பரல் மாணிக்கம் என்றாள். அரசன் தன் மனைவியின் சிலம்பினுள் இருக்கும் பரல் முத்து என்றான். உடனே கோவலனிடமிருந்து கவர்ந்த சிலம்பை வருவித்தான். கண்ணகி அதை எடுத்து உடைத்தாள். அதிலிருந்த மாணிக்கப் பரல் தெறித்து வீழ்ந்தது. அதுகண்ட அரசன் நடுநடுங்கிப்போனான். அறத்தைச் சிதைத்த என் ஆயுள் அழிக என்று சொல்லி அரியாசனத்தில் சாய்ந்தான்; அப்படியே மாண்டு போனான். பாண்டியன் மனைவி, `காத்தருள்க என்று சொல்லிக் கண்ணகியின் அடிகளிலே வீழ்ந்தாள்; அப்படியே அவளும் வானுலகடைந்தாள். கண்ணகி, நான் பத்தினியானால், இவ்வூரை அழிப்பேன் என்று உரைத்தாள். தனது இடது மார்பை வலது கரத்தால் திருகி எடுத்தாள்; மதுரை நகரின் மேல் வீசினாள்; தீப்பற்றியது. அக்கினிதேவன், கண்ணகியின் கட்டளைப்படி நல்லோரை நலியாமல் விட்டான். அந்நகரைப்பற்றி எரித்தான். தீயோர் களைச் சுட்டுப் பொசுக்கினான். மதுரையைக் காத்திருந்த வருணபூதங்கள் நான்கும் பெயர்ந்து சென்றன; அந்நகர தேவதை கண்ணகியிடம் வந்தாள்; அவளிடம் பேசினாள். நான் இந்நகரின் தெய்வம். பாண்டியர்கள் கொடுங்கோலர் அல்லர். இந் நெடுஞ்செழியனும் நல்லவனே. நான் ஒரு வரலாற்றைக் கூறுகின்றேன், கேள். வசு என்பவன் கலிங்க நாட்டுச் சிங்கபுரத்து வேந்தன். குமரன் என்பவன் கபிலபுரத்து வேந்தன். இருவரும் பகைவர்கள். ஒருநாள் சிங்கபுரத்துக் கடைத் தெருவிலே, சங்கமன் என்ற வணிகன் ஒருவன் பண்டங்களை விற்பனை செய்து கொண் டிருந்தான். பரதன் என்பவன் அவ் வணிகனைப் பகைவனுடைய ஒற்றன் என்று அரசனுக்குக் காட்டிக் கொலைசெய்துவிட்டான். கொலையுண்ட சங்கமன் மனைவி நீலி என்பவள். அவள் ஆறாத் துயருடன் பதினான்கு நாட்கள் பல இடங்களிலும் அலைந்து திரிந்தாள். பின்பு ஒரு மலைமீது ஏறித் தன் உயிரை நீத்துக் கணவனுடன் சேரத் துணிந்தாள். `எமக்குத் துயர் இழைத்தோர், மறுபிறப்பில் இத்துன்பத்தை அடைக என்று சாபம் இட்டு இறந்தாள். அப் பரதனே கோவலனாகப் பிறந்தான். ஆகையால் இத்துன்பத்தை அடைந்தீர்கள். நீயும் பதினான்காவது நாளில் உன் கணவனைக் காண்பாய்; அவனுடன் செல்வாய் என்று கூறிச் சென்றனள். பின்பு கண்ணகி, மதுரையைவிட்டு வையைக்கரைவழியே மேற்கு நோக்கிச் சென்றாள். மலைநாட்டை அடைந்தாள். திருச்செங்குன்றைச் சேர்ந்தாள். பதினான்காவது நாளின் மாலையிலே ஒரு வேங்கை மர நிழலிலே நின்ற அவள்முன்பு கோவலன் தெய்வ வடிவோடு வந்தான். கண்ணகி அவனுடன் சேர்ந்து விமானம் ஏறிச் சுவர்க்கம் சென்றாள். இதுவே மதுரைக் காண்டத்தில் உள்ள கதை. வஞ்சிக் காண்டம் வேங்கை மர நிழலிலே கண்ணகி கோவலனுடன் வானுலகை யடைந்ததை வேடர்கள் கண்டனர்; வியப்புற்றனர். தங்கள் குறிஞ்சியிலே ஒரு குரவைக் கூத்து நடத்தினர். அப்பொழுது பேரியாற்றங்கரையிலே சேரன் செங்குட்டுவன் வந்து தங்கி யிருந்தான். அவன் மனைவி வேண்மாள், இளவல் இளங்கோ அடிகள், ஏனைய பரிவாரங்களும் அவனுடன் வந்திருந்தனர். குறவர்கள் காணிக்கைப் பொருள்களுடன் சென்றனர். தங்கள் மன்னன் செங்குட்டுவனைக் கண்டனர். தாங்கள் பார்த்த அதிசயத்தை அவனிடம் உரைத்தனர். வேந்தனும் வியப்புற்றான். அப்பொழுது அங்கு வந்த மதுரைத் தமிழாசிரியர் சாத்தனார் கண்ணகியின் வரலாற்றை உரைத்தார். செங்குட்டுவன் பாண்டியன் இறந்தமைக்கு வருந்தினான். தன் மனைவியின் விருப்பப்படி, கண்ணகிக்குச் சிலைநாட்டிக் கோயிலெடுத்து விழாச் செய்ய விழைந்தான். செங்குட்டுவன், கண்ணகியின் உருவம் செய்வதற்குக்கல் கொணரக் கருதினான். அதுபற்றி அமைச்சர்களுடன் ஆலோ சித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது இமயத்திலிருந்து வந்த முனிவர்கள், ஆரிய மன்னர்களான கனகனும், விசயனும் தமிழக வேந்தர்களைப் பழித்தனர் என்று கூறிச் சென்றனர். உடனே செங்குட்டுவன், அம்மன்னர்களை வெல்வேன்; அவர்கள் தலையிலே இமயக்கல்லை ஏற்றிக் கொணர்வேன் என்று சபதம் கூறினான். செங்குட்டுவன், வடதிசை நோக்கிப் படையெடுத்துப் புறப்பட்டான். நீலகிரியை அடைந்தான். இமயத்திலிருந்து வந்த முனிவர்களின் வாழ்த்தைப் பெற்றான். கங்கைக் கரையை அடைந்தான். தனது நட்பு அரசர்களான கன்னர்கள் கொணர்ந்த நாவாய்களின் மூலம் கங்கையைக் கடந்தான். எதிர்த்த கனக - விசயர்களையும், அவர்களுக்குத் துணைவந்த மன்னர்களையும் வென்றான். தன் அமைச்சன் வில்லவன் கோதையையும், சேனை களையும் இமயத்திற்கு அனுப்பினான். கண்ணகி சிலைக்கான கல்லைக் கொணர்ந்தான். அதைக் கனக - விசயர்களின் தலை யிலேற்றிக் கங்கையிலே நீர்ப்படை செய்தான். கங்கையின் தென்கரையை எய்திச் சிலநாட்கள் தங்கியிருந்தான். அப்பொழுது கங்கையாடி வந்த மாடலன் என்னும் மறையோன் கோவலன் வரலாறு முதலியவற்றைச் செங்குட்டு வனுக்குக் கூறினான். செங்குட்டுவன், அவனுக்கு ஐம்பது துலாம் பொன்னைத் தானம் செய்தான். செங்குட்டுவன், தன்னால் வெல்லப்பட்ட கனக - விசயர் களைப் பாண்டியனுக்கும், சோழனுக்கும் காட்டும்படி நீலன் என்னும் படைத்தலைவனுடன் அவர்களைச் செல்லவிட்டான் அதன்பின், படைகளும் தானும் புறப்பட்டு வஞ்சிமா நகரை அடைந்தான். அப்பொழுது நீலன் என்னும் படைத்தலைவன் வந்தான். தோற்றோடிய கனக - விசயரைப் பிணித்து வந்தது பற்றிச் சோழனும் பாண்டியனும் பரிகசித்தனர் என்றான். செங்குட்டுவன் சினங்கொண்டான். அருகிலிருந்த மாடலன் அறவுரைகள் கூறி அவன் சினத்தை ஆற்றினான். செங்குட்டுவனும் சினந் தணிந்தான். சிறைப்பிடித்துவந்த வேந்தர்களை விடுதலை செய்தான். பின்னர், சிறந்த வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட கோயிலிலே இமயக் கல்லால் ஆக்கிய கண்ணகியின் உருவத்தை நாட்டினான். அந்தப் பத்தினித் தெய்வத்துக்குத் தினப்படி பூசைகள் நடக்க ஏற்பாடு செய்தான். கோவலன் கொலையுண்ட செய்தியைத் தேவந்தி, கண்ணகியின் செவிலித்தாய், அவள் அடித்தோழி ஆகியோர் மாடலனால் அறிந்தனர். அவர்கள் புகாரை விட்டு மதுரை அடைந்தனர். அங்கே ஐயையைக் கண்டனர். அவளுடன் மலைநாடு புகுந்தனர். கண்ணகியின் கோயிலை அடைந்து செங்குட்டுவனைக் கண்டனர். தங்களை இன்னார் என்று அறிவித்துக் கண்ணகியின் பிரிவாற்றாமையால் புலம்பினர். அப்பொழுது கண்ணகி தெய்வ உருவுடன் தோன்றினாள். செங்குட்டுவனுக்குக் காட்சி கொடுத்தாள்; வாழ்த்துரைத்தாள். பின்பு செங்குட்டுவன், மணிமேகலையின் துறவைப் பற்றித் தேவந்தி சொல்லக் கேட்டான். தேவந்தியின்மேல் சாத்தன் என்னும் தெய்வம் ஆவேசித்தது. சாத்தன் கட்டளைப்படி, மாடலன் தன் கையில் உள்ள கமண்டலநீரை அங்கு வந்திருந்த மூன்று சிறுமிகளின் மேல் தெளித்தான். அம்மூவரும் உடனே கண்ணகியைக் குறித்துப் புலம்பினர். கண்ணகியின் தாய், கோவலன் தாய், மாதரி ஆகிய மூவருமே அப்பெண்களாகப் பிறந்திருப்பவர்கள் என்பதை மாடலன் அறிந்தான். அப்படிப் பிறத்தற்கான காரணத்தையும் அவன் அரசனுக்கு உரைத்தான். பின்னர் தேவந்தியைக் கண்ணகிக்குப் பூசைபண்ணும் படி அமர்த்திச் செங்குட்டுவன், மகிழ்ந்தான். அப்பொழுது ஆரிய மன்னர்களும், மாளவநாட்டு மன்னரும், இலங்கைக் கயவாகு வேந்தனும் வந்தனர்; பத்தினிக் கடவுளை வணங்கினர்; எங்கள் நாட்டிலும் எழுந்தருளவேண்டும் என்று வேண்டினர். அப்படியே வரந் தந்தேன்என்றொரு குரல் எழுந்தது. அதைக் கேட்ட செங்குட்டுவனும் ஏனைய மன்னர் களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் செங்குட்டுவன், தான் ஏற்பாடு செய்திருந்த வேள்விச்சாலைக்கு மாடலனுடன் சென்றான். இளங்கோ அடிகள் கண்ணகியின் கோயிலை அடைந்தார். பத்தினிக் கடவுள் தேவந்தியின்மேல் ஆவேசித்தாள். இளங்கோடிகளின் வரலாற்றைக் கூறினாள். கோவலன் கொலையுண்டநாள்முதல் பாண்டி நாட்டிலே மழையில்லை, பஞ்சமும் பிணியும் பரவின, ஆதலால், கொற்கை நகர மன்னன் இளம்செழியன் ஆயிரம் பொற் கொல்லர்களைப் பத்தினிக் கடவுளுக்குப் பலியிட்டான். மழை பெய்தது; பசியும் பிணியும் பறந்தன. கொங்கு மண்டல மன்னரும், இலங்கைக் கயவாகு வேந்தனும், உறையூர்ப் பெருநற்கிள்ளியும் இச்செய்தி யைக் கேட்டனர். அவர்களும் தங்கள் நாட்டிலே கண்ணகிக்குக் கோயில் எடுத்தனர்; பூசனையும், விழாவும் புரிந்தனர். அவர்கள் நாடுகளும் வளம் பெற்று வாழ்ந்தன. இதுவே சிலப்பதிகாரக் கதை. இக்கதையின் இடையே பல சிறுகதைகளும் கலந்து கிடக்கின்றன. அக் கதைகளைப் பற்றிச் சிறுகதைகள் என்ற பகுதியிலே காணலாம். இக்கதை ஒரு விருவிருப்பான நாடகம்போல் அமைந்திருப் பதைக் காணலாம். கதையின் இடையிலே இன்பம் அளிக்கும் நிகழ்ச்சிகள் பல அமைந்திருக்கின்றன. அவைகளில் நகைச்சுவை யளிக்கும் நிகழ்ச்சிகளும் உண்டு. இவ்வாறு பல்வகைச் சுவையும் பொருந்தி ஒரு உயர்ந்த நாடகம்போல் அமைந்திருப்பது சிலப்பதிகாரக் கதையாகும். அறம் கூறும் நூல் இலக்கியத்தைப்பற்றி இன்று ஒரு புதிய கருத்து நிலவுகின்றது. இலக்கியம் இலக்கியத்திற்காகவே எழுதப்பட வேண்டும்; கொள்கை களைப் பரப்புவதாக அமையக் கூடாது; கொள்கைப் பரப்பை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் நூல்கள் இலக்கியம் அல்ல; அவைகள் பிரச்சார நூல்களாகத் தான் இருக்க முடியும் என்று சொல்வோர் உண்டு. இது இலக்கியத்தைப்பற்றிச் சொல்லப் படும் புதுக்கருத்தாகும். இவர்கள் கூற்று, பொருள் அற்றது. இது இலக்கியம் என்ற சொல்லுக்கே பொருள் அறியாதார் கூற்று. இலக்கியம் என்னும் சொல் லட்சியம் - குறிக்கோள் - நோக்கம் என்ற பொருளைக் கொண்ட சொல்லாகும். குறிக்கோள் அற்ற எந்த நூலையும் இலக்கியம் என்று இயம்பமுடியாது. ஒரு நோக்கமும் இல்லாமல் எப்படித்தான் ஒரு நூலை எழுத முடியும்? எந்த நூலை எழுது வோரும் ஒரு கருத்தை வைத்துக்கொண்டுதான் எழுதுவார்கள். ஆதலால் இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்று சொல்லுவது வீண் வறட்டுவாதம். தமிழ் முதல் நூலாகிய தொல்காப்பியம், இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப்பற்றித் தெளிவாகக் கூறு கின்றது. தொல்காப்பிய காலத்திலும், அதற்கு முன்பும் இலக்கியங்கள் நால்வகைப் பாடல்களிலே இயற்றப்பட்டன. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்பனவே அந்நால்வகைப் பாடல்கள். இதனை, ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியே நால்இயற்று என்ப பாவகை விரியே (தொ.பொ.செய்.) என்ற சூத்திரத்தால் அறியலாம். இந்த நால்வகைப் பாடல்களால் இயற்றப்படும் நூல்கள் மூன்று பொருள்களை உணர்த்துவதாக இருக்கவேண்டும். அறம், பொருள், இன்பம் என்பனவே அம் மூவகைப் பொருள்கள். இதனை, அந்நிலை மருங்கின் அறம் முதலாகிய மும்முதல் பொருட்கும் உரிய என்ப (தொ.பொ.செய்.) என்ற சூத்திரத்தால் அறியலாம். இந்த இரண்டு சூத்திரங்களும் இலக்கியம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதை விளக்கு வதாகக் கொள்ளலாம் நால்வகையான பாடல்களால் ஆவது; மூன்றுவகைப் பொருள்களை உணர்த்தும் குறிக்கோளை உடையது; இதுவே இலக்கியம் என்பதுதான் தொல்காப்பியம் கூறுவது. இலக்கியம் ஆவது யாது? என்ற கேள்விக்குத் திருக்குறளின் உரையாசிரியர் பரிமேலழகர் விளக்கங் கூறுகின்றார். இந்திரன் முதலிய இறையவர் பதங்களும், அந்தம்இல் இன்பத்து அழிவுஇல் வீடும், நெறி அறிந்து எய்துதற்கு உரிய மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரால் எடுக்கப்பட்ட பொருள் நான்கு; அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன அவற்றுள் வீடு என்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து ஆதலின், துறவறமாகிய காரணவகையால் கூறப்படுவது அல்லது, இலக்கண வகையால் கூறப்படாமையின், நூல் களால் கூறப்படுவன ஏனை மூன்றுமேயாம். இது பரிமேலழகர் இலக்கியத்தைப்பற்றிக் கூறும் விளக்கம். தொல்காப்பியக் கொள்கையைத் தழுவியே பரிமேலழகர் கூறினார். அறம், பொருள், இன்பம் மூன்றைப்பற்றி மட்டும் தான் நூல்களால் கூறமுடியும் என்பது பழந்தமிழர் கொள்கை. சமண, புத்த மதங்கள் தமிழகத்திலே பரவித் தழைத்துநின்ற காலத்தில் வீட்டைப் பற்றியும் நூல்கள் எழுதத் தொடங்கினர். வீட்டுநெறி யையும் நூல்களின் வாயிலாக விளம்பலாம் என்ற கொள்கையும் பிறந்தது. வீடு-அதாவது, முத்திநெறியிலே செல்வதுபற்றியும் சமணர்களும் புத்தர்களும் நூல்கள் எழுதினர். அவற்றைப் பின் பற்றியே வேறு பல சமயநூல்களும், மதநூல்களும், தத்துவ நூல்களும் பிறந்தன. அறம், பொருள், இன்பம், வீடு, அடைதல் நூல்பயனே என்று நன்னூல் ஆசிரியர் கூறினார். இது பின்னாளில் எழுந்த கருத்தை ஒட்டிய இலக்கணமாகும். அறம், பொருள், இன்பம், வீடு இவைகளை அடைவதற்கு வழிகாட்டுவதே நூல் ஆகும் என்ற கொள்கை சமண, புத்த மதங்கள் தமிழகத்தில் பரவியபின் பிறந்த கொள்கையாகும், இந்த உண்மைகளை மறந்தவர்கள் - அல்லது மறைப்பவர்கள் அல்லது அறியாதவர்கள்தாம் இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்று கூச்சலிடுவார்கள். இலக்கியம் இலக்கியத்திற்காகவே என்று சொல்லுவோர் பிற்போக்குவாதிகள். நாட்டிலே தோன்றும் புதிய சமுதாய-அரசியல் கருத்துக்களைக் கண்டு அஞ்சுகின்றவர்கள். இன்றுள்ள சமுதாய அமைப்பு மாறினால், அரசியல் அமைப்பு மாறினால் தங்கள் நிலை என்ன ஆகுமோ என்று அஞ்சுகின்றவர்கள். இவர்கள் தங்களுக்குப் பிடிக்காத கொள்கைகள் இலக்கியங்களில் இடம்பெறு வதைக் கண்டு நடுங்குகின்றனர். இவர்கள் எழுப்பும் கூச்சல்தான் இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்பது. பண்டை இலக்கியங்ளை எடுத்துக்கொண்டால், குறிக்கோள் அற்ற இலக்கியம் ஒன்றையும் காணமுடியாது. சில இலக்கியங்கள் அரசியல் கருத்துக்களைப் பரப்புகின்றன; சில இலக்கியங்கள் அறநெறிகளைப் போதிக்கின்றன; சில இலக்கி யங்கள் வேதாந்தங்களை உபதேசிக்கின்றன; சில இலக்கியங்கள் பக்திச் சுவையை மக்கள் மனத்திலே எழுப்புகின்றன; சில இலக்கியங்கள் உலகில் உயர்வுடன் வாழ்வதற்கு வழி காட்டு கின்றன; சில இலக்கியங்கள் மத - சமய - தர்மங்களைப் பரப்பு கின்றன. பண்டை இலக்கியங்கள் எல்லாம் இவ்வாறு தான் பல துறைகளைப்பற்றியும் கூறிச்செல்கின்றன. இந்த முறையிலே சிலப்பதிகாரம் ஒரு சரியான-சிறந்த-ஒப்புயர்வற்ற-இலக்கியமாக உலவுகின்றது. இந்நூல் எதற்காக எழுதப்பட்டது என்பதை இதன் பதிகத்தில் தெளிவாகக் காணலாம். அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாக சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம்ஒர் பாட்டுடைச் செய்யுள் (பதிகம் 55-60) அரசியலிலே தவறு செய்தோரை அறமே எமனாகத் தோன்றிக் கொல்லும்; புகழ்பொருந்திய கற்புள்ள பெண்ணை உயர்ந்தோர் போற்றிக் கொண்டாடுவார்கள்; முன்செய்த இருவினையும், செய்தவனைத் தேடிஉருக்கொண்டு வந்து தம் பலனைத்தரும். இம்மூன்றும் சிலம்பு காரணமாக விளைந்தன. ஆதலின் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாம் ஒரு காப்பியத்தைச் செய்வோம். இது சிலப்பதிகார ஆசிரியரே கூறுவதாக அமைந்திருக் கின்றது இதனால் சிலப்பதிகாரம் எழுதப்பட்டதன் நோக்கம் இன்னது என்பதைக் காணலாம். அரசியல், பத்தினிப் பெண்டிர் பெருமை, ஊழ்வினையின் விளைவு இவற்றைப்பற்றி மக்கள் உணரும்படி செய்வதே சிலப்பதிகாரத்தின் கருத்து. இந்த மூன்று கருத்துக்களைத் தவிர இன்னும் பல அறங் களையும் சிலப்பதிகாரத்தில் காணலாம். சிலப்பதிகாரத்தை ஊன்றிப் படிப்போர், அது கருத்தோவியமாக - கருத்துக் கருவூலமாக விளங்குவதைக் காண்பார்கள். இலக்கியம் கொள்கைகளைப் பரப்புவதாக இருக்கக் கூடாது என்போர்க்கு வேறு எதையும் காட்டவேண்டாம். சிலப்பதிகாரம் ஒன்றைக் காட்டினாலே போதும்; உண்மையை உணர்வார்கள். இனி, சிலப்பதிகாரத்தின் நோக்கம் என்று கூறப்படும் மூன்று கருத்துக்களையும் முறையே காண்போம். அரசியல் சிலப்பதிகாரத்தின் ஆரம்பமே அரசியல்தான். நல்லதோர் ஆட்சியில்லாத நாட்டிலே எந்த நன்மையும் வளர முடியாது. சமுதாயக் கட்டுப்பாடு, மக்கள் முன்னேற்றம், மக்கள் வாழ்வு, கலை வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, நாட்டிலே அமைதி - இவைகள் எல்லாம் உண்மையான மக்களாட்சி நிலவும் நாட்டிலே தான் நிலைத்திருக்கும், இந்த உண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகள் நன்றாக உணர்ந்தவர். ஆதலால் தான் எடுத்த எடுப்பிலேயே - மங்கல வாழ்த்திலேயே - அரசியலை அமைத்துக் காட்டுகின்றார். மங்கல வாழ்த்துப் பாடல்கள் நான்கு. நான்கு பாடல் களிலும் அரசியல் கொள்கை இடம்பெற்று விளங்குகின்றது. முதல் வெண்பா திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் என்று தொடங்குகின்றது; இரண்டாவது, சூரியனைப் போற்றுகின்றது; மூன்றாவது, மழையைப் போற்று கின்றது; நான்காவது, புகார் நகரத்தைப் போற்றுகின்றது. சந்திரன், சூரியன், மழை, புகார் இவற்றை ஏன் போற்று கிறோம் என்று ஆசிரியர் புகல்கின்றார்; இதைத்தான் நாம் கருத்தூன்றிக் கவனிக்கவேண்டும். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர் தார்ச்சென்னி குளிர்வெண்குடைபோன்று, இவ் அம்கண் உலகு அளித்தலான். சந்திரனை வணங்குவோம்! சந்திரனை வணங்குவோம்! ஏன் என்றால், மகரந்தங்கள் சிந்துகின்ற மலர்மாலையை அணிந்த சோழனுடைய குடை இவ்வுலகுக்குக் குளிர்ச்சியைத் தருகின்றது. அதுபோல சந்திரனும் இவ்வுலகுக்குக் குளிர்ச்சியைத் தந்து காப்பாற்றுகின்றான். சோழ மன்னன் குடைநிழலைப்போல் சந்திரனும் உலகுக்கு நன்மை செய்கின்றது. ஆதலால்தான் சந்திரனுக்கு வணக்கம்; இன்றேல் வணக்கம் இல்லை உயர்ந்ததைத்தான் உவமானமாக எடுத்துக்காட்டுதல் மரபு. இங்கே சந்திரனுக்குச் சோழன் ஆட்சி உவமை. ஆகவே, இச்செய்யுள் சோழ மன்னனுடைய ஆட்சிப் பெருமையைச் சொல்லுவதாகவே அமைந்திருப்பதைக் காணலாம். நாட்டு மக்களைத் துன்புறாமல் காப்பதே நல்ல - சிறந்த - ஆட்சியாகும் என்னும் கருத்தும் இதில் பொதிந்து கிடப்பதைக் காணலாம். ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு மேருவலம் திரிதலால் நாம் சூரியனை வணங்குவோம்! நாம் சூரியனை வணங்கு வோம்! ஏன் என்றால், சோழ மன்னனுடைய ஆட்சி அவனுடைய நாட்டிலே எங்கும் தடையின்றி நடந்துகொண்டிருக்கின்றது. அதுபோல, சூரியன் தங்குதடையில்லாமல், ஒளிபொருந்திய, சிகரத்தையுடைய மேருமலையை வலமாக வருகின்றது. இதுவும் சோழ மன்னனுடைய ஆட்சிப்பெருமையையே விளக்கிற்று, சோழ மன்னனுடைய ஆளுகையிலே நல்லோர் துன்புறல் இல்லை; தீயோர் இன்புறல் இல்லை. நல்லோர் காப்பும், தீயோர் ஒழிப்பும் சிறந்த செங்கோல் ஆட்சியாகும். சோழன் ஆட்சி நிலவும் பகுதியில் இவ் வறமுறை ஆட்சி முட்டின்றி நடந்து வருகின்றது. இக்கருத்தைக் காட்டுவதே இப்பாட்டு. மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்! நாமநீர்வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலால் நாம் சிறந்த மழையைப் போற்றுவோம்! நாம் சிறந்த மழையைப் போற்றுவோம்! ஏன் என்றால், அச்சந் தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகை அச் சோழ மன்னன் கைம்மாறு கருதாமல் பாதுகாக் கின்றான். அதுபோல மழையும் பயன்கருதாமல் வானத்திலிருந்து பெய்து உலகுக்கு நன்மை செய்கின்றது. இச்செய்யுளும் சோழ மன்னனுடைய ஆட்சிப்பெருமை யையே எடுத்துரைத்தது. சோழ மன்னன் எந்தப் பலனையும் எதிர்பார்க்க வில்லை. நாட்டு மக்களைக் காப்பாற்றுகின்றான். அவனைப் போலவே, நாடாள்வோர், தந்நலம் அற்றவர்களாய் மக்கள் நன்மைக்காகப் பணி செய்யவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது. மழையும் சோழனைப்போலப் பலனை எதிர்பார்க்காமல் பெய்வதால்தான் அதற்கு வணக்கம் என்று கூறுகின்றது. பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும்! வீங்குநீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான். காவிரிப்பூம்பட்டினத்தை வணங்குவோம்! காவிரிப் பூம்பட்டினத்தை வணங்கு வோம்! ஏன் என்றால், கடல்சூழ்ந்த இவ்வுலகிலே, சோழன் குலத்தோடு ஒத்துப் புகழ்பெற்று வாழ்வதனால். சோழன் குலத்தினர் நாட்டுமக்களுக்கு நன்மை செய்வதையே நோக்கமாகக்கொண்டவர்கள். பழம்பெரும் தமிழ்க்குடியினர். பூம்புகாரும் நாட்டு மக்களின் நல்வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டது; பழமையானது. ஆதலால் பூம்புகாரைப் போற்று கிறோம் என்றார். மங்கல வாழ்த்துப் பாடல்கள் நான்கிலும் இவ்வாறு சிறந்த அரசியல் கருத்துக்கள் அமைந்துகிடப்பதைக் காணுகின்றோம். சிலப்பதிகாரம் எடுத்துரைக்கும் சிறந்த அரசியல் நீதிகள் பல. அவற்றைக் காண்போம். வரிச்சுமைக் கொடுமை குடிமக்கள் தலையிலே தாங்கமுடியாத வரியைச் சுமத்தும் அரசு வாழமுடியாது. அவ்வரசு குடிமக்களால் கவிழ்க்கப்படும். அந்த அரசின் தலைவன் எவ்வளவு ஆற்றல் படைத்தவனா யிருப்பினும், அவனால் ஆட்சியிலே நிலைத்து நிற்க முடியாது. மக்கள் வரிகொடுக்க மறுப்பார்கள்; வரிகொடுக்க மறுப்போரின் துணைகொண்டு ஒரு சிற்றரசன் அந்தப் பேரரசைக் கைப்பற்றிக் கொள்வான். இவ்வாறு, ஆளுவோர்க்கு அறிவுரை கூறப்படு கின்றது. கறைகெழு குடிகள் கைதலை வைப்ப, அறைபோகு குடிகளொடு, ஒருதிறம் பற்றி, வலம்படு தானை மன்னர் இல்வழி புலம்பட இறுத்த விருந்தின் மன்னர் (அந்திமாலை 9-12) வரி மிகுதியால் துன்புறும் குடிகள், என்செய்வோம் என்று ஆற்றாமல், கையைத் தலையிலே வைத்துச் சோர்ந்திருப்பர்; வரிகொடுக்க மறுப்போர் மறைவாக நின்று ஆட்சிக்கு முடிவு தேடுவார்கள். இவர்களைத் துணையாகக்கொண்டு, அரசன் இல்லாத சமயத்தில், புதிய மன்னர் அந்நாட்டிலே புகுந்து விடுவர். குடிமக்களின் தலையிலே அவர்கள் தாங்கக்கூடிய வரிகளைத் தான் சுமத்தவேண்டும். தாங்கமுடியாத வரிகளைச் சுமத்தும் அரசு கொடுங்கோல் அரசு; அவ்வரசு, அந்நாட்டு மக்களாலேயே அழிக்கப் படும். இவ்வுண்மையை மேலே காட்டிய அடிகளால் காணலாம். ஆட்சியிலே உள்ள அலுவலர்களும், ஆட்சித் தலைவனும் நேர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். மக்கள் வாழ்வையும், நாட்டின் நன்மையையும் நோக்கமாகக் கொண்டு ஆளவேண்டும். இத்தகைய ஆட்சியுள்ள நாடுதான் சிறப்புறும். இத்தகைய நாட்டு மக்கள்தான் குளிர்ந்த நறும்பொழிலிலே வாழும் மக்களைப் போல் இன்புறுவார்கள். உத்தியோக வர்க்கத்தினர் - அலுவலர்கள் - அனைவரும் தந்நலமே குறியாகக் கொண்டவர்கள். குடிமக்கள் நலனைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காதவர்கள்; நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிய கருத்தேயில்லாதவர்கள்; அதிகார வெறியால் மக்களை மதிக்காதவர்கள்; அவர்களை ஆட்டி அலைக்கழிப்பவர்கள். இவர்கள் சொல்லுகின்ற படி ஆட்சித் தலைவனும் ஆடுகின்றான். இத்தகைய ஆட்சியுள்ள நாடு பாலைவனம் ஆகும். இந்நாட்டு மக்கள் எத்தகைய இன்பத்தையும் காணமாட்டார்கள். இவ்வுண்மையை இளங்கோ அடிகள் விளக்கமாகக் கூறுகின்றார். கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி வேத்துஇயல் இழந்த வியன்நிலம் போல ... ... ... ...ghiy என்பது (காடுகா©. 60-61) இவ்வடிகள் மேலேகாட்டிய உண்மையை உணர்த்துகின்றன. தந்நலத்தையே பெரிதாகக் கருதும் அலுவலர்களைக்கொண்ட அரசு செங்கோல் அரசாக வாழமுடியாது. ஆதலால் நல்ல ஒழுக்கமும் பொதுப்பணியிலே ஆவலும் உள்ளவர்களையே அரசியல் அலுவல் Jறைகளிலேmமர்த்தவேண்டும். அப்பொழுது தான் உண்மையான eல்லாட்சிxழுங்காகeடைபெறும்.இக் கருத்தை மேலே காட்டிய அடிகள் அறிவித்தன. கொடுங்கோலர் நாட்டுக்குத் தீங்கு செய்யும் ஆட்சியாளரை மக்கள் விரும்ப மாட்டார்கள். அவர்கள் எப்பொழுது தொலைவார்கள்; நன்மை புரியும் நல்லோர் ஆட்சிபீடத்தில் எப்பொழுது அமர்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள். வாய்ப்பு நேரும்போது, அதிகாரவெறிபிடித்த ஆட்சியாளரை மக்கள் விரட்டியடிப்பார்கள். மக்கள் கருத்தறிந்தது ஆளுவோரையே ஆட்சிமனையில் அமர்த்து வார்கள். இதை இன்றும் நாம் கண்கூடாகக் காணுகின்றோம். இந்த உண்மையை இளங்கோ அடிகள் எடுத்துக்காட்டுகின்றார். கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல படும்கதிர் அமையம் பார்த்து இருந்தோர்க்கு (புறஞ்சேரி. 15-16) கொடுங்கோல் வேந்தன்கீழ் வாழும் குடிமக்கள், அவன் எப்போழுது தொலைவான், நல்லோன் எப்பொழுது ஆட்சிக்கு வருவான் என்று எதிர்பார்த்திருப்பார்கள். அதுபோல; கதிரவன் மேற்றிசையிலே அடங்குவதையும், சந்திரன் புறப்படுவதையும் எதிர்பார்த்திருந்தனர். இவ்வடிகள் கொடுங்கோல் ஆட்சியை யாரும் விரும்ப மாட்டார்கள் என்ற உண்மையை உணர்த்தின. அரசியல் தியாகிகள் இக்காலத்திலே ஆட்சிபீடம் ஏறுவதைப் பலர் பெருமை யாக நினைக்கின்றனர்; இன்பம் என்று எண்ணுகின்றனர்; ஆட்சியில் செல்வாக்குப் பெறுவதன் மூலம் செல்வமும் சிறப்பும் பெறலாம் என்று சிந்திக்கின்றனர். ஆதலால், அரசியல் ஆதிக்கம் பெறப் பலர் படாதபாடு படுகின்றனர். அரசியல்வாதிகளிலே பலர் இதன் பொருட்டுச் செய்யும் சூழ்நிலைகளைக் கணக்கிட முடியாது. பதவி பெறுவதற்காக மனிதத்தன்மையற்ற முறை களையெல்லாம் கையாளுகின்றனர். உண்மையில் அரசியலை ஏற்று நடத்துவது என்பது பெரிய பொறுப்புள்ள வேலை; மிகவும் தொல்லையான காரியம். பசி நோக்காமல், கண்ணுறங்காமல், அல்லும் பகலும் உழைக்க வேண்டிய செயல். அரசியல் பொறுப்பை ஏற்பதனால் தொல்லை களும், மனக்கவலையும், ஓய்வின்மையும்தான் பெருகும். அமைதியுடன் அமர்ந்திருக்க முடியாது. இதுதான் உண்மை, மக்கள் நலத்திலே - நாட்டின் முன்னேற்றத்திலே - கவலை கொண்ட ஒரு அரசியல்வாதி இவ்வுண்மையை உணராமல் இருக்கமாட்டான். உணர்ந்து, உண்மையான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளுவானாயின் அவனே சிறந்த தியாகி; தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன். நாட்டிலே எந்தத் தீய நிகழ்ச்சிகள் தோன்றினாலும், மக்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தாலும், அரசியலைத்தான் குறைகூறுவார்கள்; ஆளுவோரைத்தான் இகழ்ந்து பேசுவார்கள்; ஆட்சியின்மீதுதான் பழிசுமத்துவார்கள். இது இன்று நேற்றைய பழக்கம் அல்ல; ஆயிரங்காலத்துப் பழக்கம். ஆதலால், ஆளு வோர் எக்குறையும் உண்டாகாமல் ஆளவேண்டும். நாட்டிலே பஞ்சம், பிணி முதலியன பரவாமல் பாதுகாக்கவேண்டும். இத்தகைய ஆட்சிதான் மக்களால் மதிக்கப்படும் ஆட்சியாக விளங்கும். இந்த அரசியல் உண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் எடுத்துரைக் கின்றார். மழைவளம் காப்பின் வான்பேர் அச்சம்; பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்; குடிபுர வுண்டும், கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவுஇல் (காட்சி. 100-104) மழைவளங் குறைந்தால் அஞ்சவேண்டும்; ஏனென்றால், மழை பெய்யாவிட்டால் மக்கள் அரசனையே குறைசொல்லு வார்கள். மக்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தாலும் மிகப் பெரும்பயம்தான்; ஏன் என்றால், துன்புறும் மக்கள், ஆட்சியின் மீதே பழிசுமத்து வார்கள். குடிகளைப் பாதுகாத்தும், கொடுங் கோன்மைக்கு அஞ்சியும் மக்களைப் பாதுகாக்கும் நல்ல அரசர் குடியிலே பிறத்தலால் இன்பம் இல்லை; துன்பந்தான் உண்டு; போற்றத்தக்க பெருமை ஒன்றும் இல்லை. நாடாள்வோர் தந்நலம் இல்லாமல் நல்ல முறையிலே ஆள வேண்டும்; குடிமக்களால் குறைகூறப்படாத வகையிலே ஆள வேண்டும். தியாகபுத்தி யுள்ளவர்களே ஆட்சிபீடத்தில் அமர வேண்டும். அதிகாரவெறியுடனோ, புகழ்விருப்புடனோ, இலாப நோக்குடனோ ஆட்சிபீடத்தைக் கைப்பற்றுவோரால் நாட்டுக்கு நன்மையில்லை; தீமைதான் ஏற்படும் இவ்வுண்மையை மேலே காட்டிய அடிகளின்வாயிலாக அறியலாம். கொடுங்கோன்மை பகைவர்களால் நாட்டுக்கு ஆபத்து உண்டாகாமல் பாது காக்கவேண்டும்; குடிமக்கள் கூறும் குறைகளைக் கேட்டறிந்து அவைகளைப் போக்கவேண்டும். இதுவே செங்கோல் அரசு; நல்ல ஆட்சியாகும். இவ்வாறு இல்லாமல் குடிகளைத் துன்புறுத்தும் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகும். இந்த நீதியை எடுத்துக்காட்டு கின்றார் இளங்கோ அடிகள். செறிகழல் புனைந்த செருவெம் கோலத்துப் பகைஅரசு நடுக்காது, பயம்கெழு வைப்பின் குடிஅரசு நடுக்கு றூஉம் கோலேன் ஆகுக (கால்கோள். 16-18) வீரக்கழலையணிந்த, போர்க்கோலத்தையுடைய, பகை மன்னர் களைப் போரிலே நடுங்கும்படி செய்யும் ஆற்றல் இல்லாமல், வளம் நிறைந்த எனது நாட்டின் குடிமக்களை அஞ்சி நடுங்கும்படி செய்யும் கொடுங்கோல் உடையேன் ஆவேன். இவ்வடிகளால் கொடுங்கோன்மை இன்னது என்பதை அறியலாம். கூட்டாட்சி தனிமனிதன் ஆட்சியிலே தவறு நேராமல் இருக்க முடியாது; அதிகாரம் அறிவுக்கண்ணை மறைக்கும் என்பது உண்மை. ஆளுவோன் தவறு செய்யாமல் இருக்கவேண்டுமானால், அவன் அறிஞர்களுடன்கூடி ஆட்சி நடத்தவேண்டும்; அவர்களை ஆலோசனையைக் கேட்டு அரசியல் காரியங்களைச் செய்ய வேண்டும். தனியாட்சியாக இல்லாமல் இத்தகைய கூட்டாட்சி யாக இருந்தால்தான் தவறுகள் உண்டாகாமல் காக்கமுடியும். தனிமனிதன் ஆட்சியைவிட இத்தகைய கூட்டாட்சிதான் சிறந்தது என்பது இளங்கோ அடிகளின் கொள்கை. சிலப்பதிகார காலத்திலே மன்னர்களுக்கு இரண்டு சபைகள் இருந்தன. அவைகள் சிறுகுழுவும் பெரும்சபையும் ஆகும். ஐம்பெரும் குழு, எண்பேர் ஆயம் என்பன அக்குழுக்களின் பெயர். இக் குழுவினரின் துணைகொண்டே - இவர்களின் ஆலோசனை களைக்கேட்டே-அக்கால மன்னர்கள் ஆட்சி நடத்திவந்தனர். சங்க காலத்திலே இத்தகைய குழுக்கள் இருந்தன என்று தெரியவில்லை. சங்க கால மன்னர்கள் எல்லாம், மக்கள் மனம்போல ஆட்சிபுரிந்த தனியதிகாரம் படைத்தவர் களாகத்தான் இருந்திருக்கின்றனர். அரைசொடு பட்ட ஐம்பெரும் குழு (அரங்கேற்று. 126) ஐம்பெரும் குழுவும் எண்பே ராயமும் (இந்திர விழவு. 157-கால்கோள். 38) இவ்வடிகள் ஐம்பெரும் குழுவையும், எண்பேராயத்தையும் குறிக்கின்றன. ஐம்பெரும் குழு: அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் (ஒற்றர்) என்பவர்கள். எண்பேர் ஆயம்: கரணத்து இயல்வர் (கணக்கர்), கரும காரர் (நிர்வாகத் தலைவர்), கனகச் சுற்றம் (நிதிக் காப்பாளர்கள்), கடைகாப்பாளர் (காவல்காரர்கள்), நகரமாந்தர், படைத் தலைவர், யானைவீரர், குதிரைவீரர் என்பவர்கள். இந்த இருவகைக்குழுவும் அரசனுக்கு ஆலோசனை கூறும் சபைகளாக இருந்தன. இதனால் சிலப்பதிகார காலத்தில் மன்னர்களின் தனியதிகார ஆட்சி கட்டுப்படுத்தப்பட்டது; மக்கள் ஆட்சிக்கு அடிகோலப்பட்டது என்பதைக் காணலாம். சிலப்பதிகாரம் இவ்வாறு சிறந்த அரசியல் அறங்களை எடுத்துக் காட்டுகின்றது. அரசியலில் தவறு செய்வோர் தண்டனை அடைவார்கள் என்பதைக் கதைநிகழ்ச்சியிலும் எடுத்துக்காட்டுகின்றது. வழக்குரை காதையைப் படிப்போர் இந்த உண்மையைக் காணலாம். இதைப்பற்றி விரிவாகப் பின்னர் காணலாம். இங்கே சுருக்கமாகக் காண்போம். கண்ணகி வழக்குரைப்பதற்காகப் பாண்டியன் முன்போய் நின்றாள். அவன் நீர்வார் கண்ணை என்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடிபோய் என்றான். அவள் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பதுஎன் பெயரே என்றாள். உடனே, பாண்டியன் பெண்அணங்கே! கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண்! என்றான் அதற்குக் கண்ணகி நல்திறம் படராக் கொற்கை வேந்தே! என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே என்றாள். உடனே மன்னன் தேமொழி உரைத்தது செவ்வை நன்மொழி! யாம்உடைச் சிலம்பு முத்துஉடை அரியே என்று கூறினான். உடனே கோவலனிடமிருந்து கவர்ந்த சிலம்பைக் கொண்டுவரச் செய்தான். அதைக் கண்ணகிமுன் வைத்தான். அவள் அதை எடுத்து உடைத்தாள். அதிலிருந்த மாணிக்கப் பரல் மன்னவன் வாயிலேபோய் அடித்தது. அவ்வளவு தான்! அரசன் தன் பிழையை உணர்ந்தான். அவன் குடை தாழ்ந்தது; அவன் செங்கோல் நழுவிற்று. பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்; மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள்! என்று புலம்பிக்கொண்டே அரியாசனத்தில் சாய்ந்தான்; மாண்டுபோனான். அதை அறியாத கோப்பெருந்தேவி, கண்ணகியின் அடிகளிலே வீழ்ந்து வருந்தினாள், அப்பொழுது கண்ணகி கூறுகின்றாள்: அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும் பல்அவையோர் சொல்லும் பழுதுஅன்றே;-பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் தேவி! கடுவினையேன் செய்வதூஉம் காண் அறமற்ற கொடுமையைச் செய்தார்க்கு அறமே எமனாகத் தோன்றும்; அவரைக் கொல்லும். இவ்வாறு அறிஞர் பலரும் சொல்வதில் தவறில்லை, பொல்லாத குற்றத்தைச் செய்த பாண்டியன் தேவியே! தீவினையாட்டியாகிய நான் இனிச் செய்யப்போவதைப் பார் என்று சினத்துடன் கூறினாள். பாண்டியன் நெடுஞ்செழியன் பொற்கொல்லன் சொல்லை நம்பினான்; கோவலனைக் கள்வன் என்று தீர்மானித்தான். அறமுறைப் படி கோவலன் கள்வனா என்று ஆராயவில்லை; அறிஞர்களிடம் ஆலோசனை கேட்கவும் இல்லை; ஐம்பெருங் குழு, எண்பேராயம் என்ற குழுவினரையும் கலந்துகொள்ள வில்லை, காமத்தால் அறிவிழந்து, அவசரப்பட்டுக் கோவலனைக் கொல்லும்படி கட்டளையிட்டான்; அதன் பயனை அவன் உடனே பெற்றான். அரசிழந்தான்; மாண்டான்; பழி பூண்டான். பிறர் சொல்லுவதை நம்பி ஒருவனைக் குற்றவாளியென்று முடிவுசெய்யக் கூடாது. ஒருவனைக் குற்றவாளியா அல்லவா என்று ஆராய்ந்தபின்னரே தண்டனையைப்பற்றி முடிவுசெய்ய வேண்டும். எந்த வழக்கையும் நன்றாக ஆராய்ந்த பின் முடிவு கூறுவதே அறமாகும். ஆராயாமல் ஒருவரைக் குற்றவாளி யென்று முடிவுகட்டுவது; கைதியாக்குவது, சிறையில் வைப்பது, தண்டனை விதிப்பது - இவைகள் எல்லாம் அநீதியாகும்; அறநெறிக்கு மாறானதாகும். இவ்வாறு அறநெறியைச் சிதைப் போர், அதற்கேற்ற தண்டனைக்கு ஆளாகித்தான் தீரவேண்டும். அரசியல் முறையைப்பற்றியும், அரசியலில் தவறு செய்வோர் அடையும் தண்டனையைப்பற்றியும், இவ்வளவு அழகாகச் சிலப்பதிகாரம் சித்திரித்துக் காட்டுகின்றது. பத்தினித் தெய்வம் பத்தினிப் பெண்டிர் மாண்பைக் கூறுவதும் சிலப்பதிகார நோக்கங்களில் ஒன்று. கண்ணகி ஒரு பத்தினித் தெய்வம். ஆரம்பத்தி லிருந்து முடிவுவரையில் கண்ணகியை ஒரு பத்தினித் தெய்வம் என்றே சிலப்பதிகாரம் கூறிச் செல்கின்றது. கற்பின் இலக்கணம் பத்தினி என்றால் யார்? அவள் ஒழுக்கம் யாது? அவள் எப்படி வாழவேண்டும்? என்பவை ஆராய்ச்சிக்குரியது. தனக் கென்ற தனி உரிமை எதுவும் இல்லாமல், கணவன் வாழ்வே தன் வாழ்வு என்று வாழ்கின்றவள்தான் பத்தினிப் பெண் ஆவாள். இதுவே பழங்காலக் கொள்கை. பத்தினிப் பெண்ணாக இருப்பவள் கணவனையே தெய்வ மாகக் கருதுவாள்; அவனையே வணங்குவாள்; அவனுக்கே பணிபுரிவாள்; வேறொரு தெய்வத்தையும் வணங்கமாட்டாள். மணாளன் சொல்லை மறுத்துப் பேசமாட்டாள். கணவன் எதிரில் தான் தன்னை அழகு செய்துகொள்ளுவாள்; கணவன் இல்லாத போது தன்னை அலங்கரித்துக்கொள்ளமாட்டாள். கணவன் மாண்டால், தானும் ஏங்கிப் பெருமூச்சு விடும்போதே மாண்டு போவாள். அப்படி உயிர்போகாவிட்டால் உடன்கட்டை ஏறி உயிர்விடுவாள். இன்றேல் குழந்தைகளைக் காப்பாற்றும்பொருட்டுக் கைம்மை நோன்பு நோற்று உயிர் வாழ்வாள். இதுவே பத்தினிப் பெண்ணின பண்பு என்று தமிழ்நூல்கள் கூறுகின்றன. ஒரு பெண்ணைக் கெட்ட எண்ணத்துடன் மற்றொருவன் பார்த்தாலே அவள் கற்பிழந்தவள்; அதாவது பிறர் உள்ளத்திலே நுழைகின்றவள் கற்பற்றவள். என்ற கருத்தைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். கற்பின், இந்த இலக்கணத்தைக் கேட்கும் இக்கால நாகரிகப் பெண்கள் இதை ஒத்துக்கொள்ளமாட்டார்கள். பெண்ணுரிமையை விரும்புவோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இத்தகைய கற்பு, பெண்ணை அடிமையாக்கும் தளையைத் தவிர வேறில்லை என்பார்கள், பண்டைக்காலத்தினர் மேலே கூறிய தைத்தான் கற்பொழுக்கம் என்று கொண்டனர். கண்ணகியை இத்தகைய கற்புத் தெய்வம் என்றே சிலப்பதிகாரம் காட்டு கின்றது. போதில்ஆர் திருவினாள் புகழ்உடை வடிவுஎன்றும் தீதுஇலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும் மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெரும்குணத்துக் காதலாள்; பெயர்மன்னும் கண்ணகிஎன்பாள் மன்னோ இது மங்கல வாழ்த்தில் கண்ணகியைப்பற்றிச் சொல்லப் படும் செய்தி; கண்ணகியை முதல்முதல் அறிமுகம் செய்து வைக்கும் பகுதி. இதில் அவளுடைய அழகு, கற்பு, குணம் மூன்றும் கூறப்படுகின்றன. அழகில் இலக்குமியின் உருவமே இவள் உருவம்; அருந்ததியின் கற்பே இவள் கற்பு. பெண்கள் அனைவரும் போற்றும் படியான சிறந்த குணங்களை உடையவள் என்பதே இச்செய்யுளின் பொருள். இதில், கண்ணகி அருந்ததி போன்ற கற்புள்ளவள் என்று சொல்லப்படுகிறது அவளுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே அவளைக் கற்பிலே சிறந்தவள் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. கணவனைப் பிரிந்த கண்ணகி கோவலன் மாதவியை விரும்பிச் சென்றுவிட்டான்.; அவள் இல்லத்திலேயே இன்பம் நுகர்ந்து வாழ்கின்றான். கண்ணகியோ காதலன் பிரிவால் வருந்தியிருக்கின்றாள். கணவனைப் பிரிந்த கண்ணகியின் இந்நிலையை அப்படியே படம்போல் எழுதிக்காட்டுகிறது சிலப்பதிகாரம். அம்செம் சீறடி அணிசிலம்பு ஒழிய மெல்துகில் அல்குல் மேகலை நீங்க கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் கொடும்குழை துறந்து வடிந்துவீழ் காதினள் திங்கள் வாள்முகம் சிறுவியர்ப்பு இரிய செம்கயல் நெடும்கண் அஞ்சனம் மறப்ப பவள வாள்நுதல் திலகம் இழப்ப தவள வாள்நகை கோவலன் இழப்ப மைஇரும் கூந்தல் நெய் அணி மறப்ப கையறு நெஞ்சத்துக் கண்ணகி காதலைப் பிரிந்த கண்ணகி காலிலே சிலம்பணியவில்லை; ஆடம்பரமான மேகலாபரணத்தை இடையிலே பூணவில்லை; கொங்கைகளிலே குங்குமம் பூசவில்லை. தாலியைத் தவிர வேறு அணிகலன்களைத் தரிக்கவில்லை. காதுகள் காதணிகள் இல்லாமல் சும்மா தொங்குகின்றன. முகத்திலே வியர்வையில்லை. கண் களுக்கு மை தீட்டவில்லை. நெற்றியிலே பொட்டு வைக்கவில்லை, முகத்திலே மகிழ்ச்சியில்லை. கூந்தலுக்குத் தைலம் தடவவில்லை. செயலற்ற உள்ளத்துடன் வருந்தியிருந்தாள். இவைகள் அந்திமாலைச் சிறப்புச்செய் காதையில் உள்ள அடிகள், இது ஒரு சுவைமிகுந்த பகுதி, நயம் நிறைந்த தொடர்கள். நாம் இப்பகுதியின் பொருளைமட்டும் நோக்குவோம். ஒரு பத்தினிப்பெண், தன் கணவனைப் பிரிந்தபோது எப்படி இருப்பாள் என்பதையே இவ்வடிகள் குறித்தன, கண்ணகி பத்தினிப் பெண்ணுக் குரிய பண்புடன் இருந்தாள் என்பதையே இவ்வடிகளின் வாயிலாகக் காட்டினார் இளங்கோவடிகள். தெய்வம் தொழாள் கண்ணகி கணவனையே தெய்வமாக வணங்குகின்றவள். கணவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்கியறியாதவள். இவ்வுண்மையைக் கதைநிகழ்ச்சியிலேயே அமைத்துக் காட்டு கிறார் ஆசிரியர், கனாத்திறம் உரைத்த காதையிலே இதைக் காணலாம். தேவந்தி என்பவள் கண்ணகியின் பார்ப்பனத் தோழி, அவள், கண்ணகி தன் கணவனைப் பிரிந்து வருந்துவதை அறிந்தாள், தான் நாள்தோறும் வணங்கும் சாத்தன் கோட்டத்தை அடைந்தாள். கண்ணகி, பிரிந்த தன் கணவனைப் பெற்று வாழவேண்டும் என்று வேண்டிக்கொண்டாள். அறுகு, சிறு பூளைப்பூ இவைகளை நெல்லுடன் கலந்து தூவி வணங்கினாள். அதன்பின் கண்ணகியிடம் சென்றாள், உன் கணவனோடு சேர்ந்து வாழ்க என்று வாழ்த்தினாள். அப்பொழுது கண்ணகி, தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் உரைத்தாள், யான் காதலுடன் ஒரு புதிய நகரத்தையடைந்தேன். கோவலற்குத் தீங்கு நேர்ந்ததை ஊரார் உரைத்தனர், அரசன்முன் சென்றேன்; அஞ்சாமல் வழக்காடினேன்; அரசனுக்கும், ஊருக்கும் தீங்கு உண்டாயிற்று. பின்னர், நான் என் காதலனுடன் அடைந்த நன்மையைக் கேட்டால் உனக்கு நகைப்புத் தோன்றும் என்று கண்ணகி உரைத்தாள். கண்ணகியே! நீ கோவலனால் வெறுக்கப்பட்டவள் அல்லள்; முன்பிறப்பிலே கணவன் பொருட்டுச் செய்யவேண்டிய ஒரு நோன்பைச் செய்யாமல் விட்டாய், அதனால் உனக்கு இத்துன்பம் நேர்ந்தது, காவிரி கடலொடு கலக்கும் இடத்திலே சோமகுண்டம், சூரியகுண்டம் என்று இரண்டு தடாகங்கள் இருக்கின்றன. அவற்றில் மூழ்கிக் காமன் கோயிலைப் பணிந்தவர்கள் இவ்வுலகிலே கணவனைப் பிரியாமல் வாழ்வர். சுவர்க்கம் புகுந்தும் கணவனுடன் இணைந்து வாழ்வர், நாம் ஒருநாள் அவற்றிலே போய் மூழ்குவோம் என்றாள் தேவந்தி. உடனே கண்ணகி, கற்புடைய மங்கைக்கு இச்செய்கை பெருமை தருவது அன்று என்று கூறிவிட்டாள். இதைப்பீடு அன்று எனக் கண்ணகி சுருக்கமான சொற்றொடரால் கூறியதாக எழுதுகிறார் இளங்கோ அடிகள். கண்ணகி, கணவனையன்றி வேறு தெய்வத்தை வணங்காத கற்புள்ளவள் என்பதை இந்நிகழ்ச்சி தெரிவிக்கின்றது. இதனை அடுத்துவரும் மற்றொரு நிகழ்ச்சியின் வாயிலா கவும் கண்ணகியின் கற்புடைமை விளக்கப்பட்டுள்ளது. எதிர் பேசாதவள் கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்தவுடன் நேரே தன் இல்லத்தை அடைந்தான். கண்ணகியின் படுக்கை அறையுள் புகுந்தான்; அவளுடைய வாடிய மேனியைக் கண்டான்; வருந்தினான். பொய்யொழுக்கம் உள்ள பரத்தையுடன் கூடி விளையாடினேன்; என் முன்னோர் தேடிவைத்த பெருநிதிக் குன்றைக் கரைத்தேன்; இச்செய்கையால் நான் நாணம் அடை கின்றேன் என்றான். பரத்தைக்குக் கொடுக்க மேலும் பொருள் இல்லாமையால் தான் கோவலன் இவ்வாறு கூறுவதாக எண்ணிக்கொண்டாள் கண்ணகி, கணவனையே தெய்வமாகப் போற்றுவது; அவன் செய்வனவற்றை யெல்லாம் பொறுத்துக்கொள்ளுவது; அவன் மனம் கோணாமல் நடந்துகொள்ளுவது; இவைகள் பத்தினியின் பண்பல்லவா? ஆதலால் அவள் கோவலன் கூறியதைக் கேட்டு வருந்தவில்லை; ஆத்திரப்படவும் இல்லை; முகத்திலே வெறுப்பு யணச்சியும் காட்டவில்லை. புன்சிரிப்புக் காட்டினாள். சிலம்பு உள; கொண்மி என்றாள். என்னுடைய இரண்டு சிலம்புகள் உண்டு அவைகள் விலை உயர்ந்தவை; அவற்றை எடுத்துக் கொண்டு செல்லுங்க என்றாள். இவ்வாறு கதை அமைந்திருக்கின்றது. இந்நிகழ்ச்சியும் கண்ணகியின் சிறந்த கற்பை விளக்குவதாகும்; பத்தினிப் பெண்ணின் பண்பைக் காட்டுவதாகும். பத்தினித் தெய்வம் இதன்பின் கவுந்தியடிகளின் வாயினால் கண்ணகியின் தெய்வக் கற்பைப் புகழ்ந்து பேசுகிறது காவியம். கவுந்தியடிகள், இடைச்சியர் தலைவியாகிய மாதிரியிடம் கண்ணகியை ஒப்படைக்கின்றாள்.; அப்பொழுது கண்ணகியின் தெய்வக் கற்பை மாதரியிடம் வாய் விட்டுப் புகழ்ந்து பேசுகின்றாள். என்னொடு போந்த இளம்கொடி நங்கை, தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலன்; கடும்கதிர் வெம்மையின் காதலன் தனக்கு நடுங்கு துயர் எய்தி, நாப்புலர வாடி தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி; இன்துணை மகளிர்க்கு இன்றி அமையாக் கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலம். கண்ணகி இதற்குமுன் மண்ணிலே நடந்தறியாதவள். ஆயினும் அவள் வழி நடந்து வரும்போது தன் துயரைப்பற்றிச் சிறிதும் எண்ணவேயில்லை. கதிரின் வெம்மையால் தன் காதலன் அடையும் துன்பத்தைக் கண்டு நடுங்கினாள். நாவுலர்ந்து வாடினாள், வாழ்க்கைத் துணையான மகளிர்க்கு வேண்டிய கற்பையே கடமையாகக் கொண்டவள். இவளே தெய்வம். இத்தெய்வத்தைத் தவிர வேறு சிறந்த தெய்வத்தை யாம் அறியோம். இவ்வாறு கவுந்தி அடிகள் கூறினாள். இது அடைக்கலக் காதையில் வரும் பகுதி. கண்ணகியைப் பத்தினித் தெய்வம் என்று கூறுவதை இதனால் காணலாம். இதனை அடுத்து. பத்தினிப் பெண்டிர் வாழும் நாடே சிறந்தது; பத்தினிப் பெண்டிர் வாழும் நாட்டில்தான், எல்லா நலங்களும் நிரம்பியிருக்கும் என்று கூறுகிறாள் கவுந்தி. வானம் பொய்யாது; வளம்பிழைப்பு அறியாது; நீள்நில வேந்தர் கொற்றம் சிதையாது; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு. பத்தினிப் பெண்டிர் இருக்கும் நாட்டிலே மழைவளம் குறையாது; வேறு எந்த வளமும் குறையாது; அரசர்களின் வெற்றியும் அழியாது; அதாவது அரசு நிலைத்து நடைபெறும். இவ்வாறு பத்தினிப் பெண்டிரின் பொதுச் சிறப்பைக் கூறினாள். அடைக்கலக் காதையில் உள்ள இப் பகுதிகள் பத்தினிப் பெண்டிரின் தெய்வத்தன்மையை விளக்கின. கண்ணகியின் கற்பு மாண்பு இவ்வாறு பலவிடங்களில் விளக்கப்பட்டுள்ளது. அவைகளின்மூலம், கற்பின் தன்மை, கற்புடைய மகளிரின் கடமை இவைகள் குறிக்கப்பட்டன. இதன்பின், உரை சால் பத்தினி உயர்ந்தோர் ஏத்தலும் என்று பதிகத்திலே கூறிய உண்மை, கட்டுரைக் காதையின் இறுதியிலே காட்டப்படுகின்றது. உயர்ந்தோர் ஏத்தல் கணவனை இழந்த பதினான்காம் நாள்; பிற்பகல்; ஒரு வேங்கை மரத்தின் நிழல்; அங்கே கோவலன் தெய்வ விமானத்தில் வந்தான். கண்ணகி அவனைக் கண்டாள், தேவர்கள் வணங்க அவனுடன் சேர்ந்து விண்ணகம் புகுந்தாள். இதனை, வாடா மாமலர் மாரிபெய்து, ஆங்கு அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்த, கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான ஊர்தி ஏறினள் மாதோ கான் அமர் புரிகுழல் கண்ணகிதான் என் (கட்டுரை. 196-200) என்று அழகாகக் கூறுகிறார் ஆசிரியர். இதன்பின் ஆசிரியர் கூற்றாக அமைந்த வெண்பாவிலும் கண்ணகியின் தெய்வத் தன்மை பாராட்டப்படுகின்றது. தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும்தகைமை திண்ணிதுஆல் - தெய்வம் ஆய் மண்ணக மாந்தர்க்கு அணிஆய கண்ணகி விண்ணக மாந்தர்க்கு விருந்து தெய்வத்தை வணங்காமல் தன் கணவனையே தெய்வமாகப் போற்றி வணங்குகின்றவளே பத்தினிப் பெண், அவளைத் தேவர்கள் எல்லோரும் வணங்குவார்கள். இத்தன்மையுள்ளவள் அவள். இவ்வுண்மை உறுதியானது. இப் பண்புள்ள கண்ணகி தெய்வம் ஆனாள், இவ்வுலக மாந்தர்க்கு அணிகலமாயிருந்தவள் தேவர்களுக் கெல்லாம் விருந்தாகச் சென்றாள். கண்ணகி தெய்வமான செய்தி, இவ்வாறு புகார்க் காண்டத்தில் தொடங்கி மதுரைக் காண்டத்தில் முடித்துக் காட்டப்படுகின்றது. கண்ணகி சேர நாட்டில் மட்டும் அல்ல, மற்றும் பல நாடு களிலும் தெய்வமாகப் போற்றப்பட்டாள். இச் செய்தி வஞ்சிக் காண்டத்தின் இறுதியிலே கூறப்படுகின்றது. சேரன் செங்குட்டுவன் கண்ணகியின் சிலைக்காக இமயக் கல்லை எடுத்து வந்தான். சிலை செய்தான்; கோயில் கட்டினான்; கண்ணகியின் உருவத்தை நாட்டினான். தேவந்தியைப் பூசை செய்பவளாக அமர்த்தினான் என்று கண்ணகி பத்தினித் தெய்வமாகக் கோயில்கொண்ட செய்தி கூறப்படுகின்றது. செங்குட்டுவன் சிறையிலிருந்து விடுதலை பெற்ற வடநாட்டு வேந்தர்கள், ஏனைய மன்னர்கள், குடநாட்டுக் கொங்கு வேந்தர், மாளவநாட்டு மன்னர்கள், இலங்கைக் கயவாகு மன்னன் ஆகியோர் கண்ணகித் தெய்வத்தை வணங்கினர். எங்கள் நாட்டிலும் எழுந்தருள்க என்று வேண்டினர். தந்தேன்வரம் என்று எழுந்தது ஒருகுரல் (வரம்தரு. 164) அவர்களும் தங்கள் நாடுகளிலே கண்ணகிக்குக் கோயில் எடுத்து விழாச் செய்தனர். கோவலன் கொலையுண்ட நாள்முதல் பாண்டிநாட்டிலே மழையில்லை; பஞ்சம் பரவிற்று. கொற்கையை ஆண்ட வெற்றி வேல் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களைக் கண்ணகிக்குப் பலி யிட்டான்; பத்தினித் தெய்வத்தை வழிபட்டான்; நாடு செழித்தது. உறையூரிலே இருந்த சோழன் பெருங்கிள்ளி கண்ணகிக்குக் கோயில் எடுத்தான்; விழாச் செய்தான். இச்செய்திகளும் கண்ணகி ஒரு பத்தினித் தெய்வமாக இந்நாட்டிலே போற்றப்பட்டாள் என்பதைக் குறிக்கின்றன. பத்தினிப் பெண்டிரைத் தேவர்களும் வணங்குவார்கள்; அவர்கள் தெய்வம் ஆவார்கள் என்பதைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறிச் செல்கின்றது. இதனால், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என்ற உண்மையைக் காணலாம். பத்தினிப் பெண்டிர் பண்பைப்பற்றிச் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள் இக்காலத்திற்கு ஏற்றன அல்ல; சிலப்பதிகாரக் கூற்றின் படி பார்த்தால் ஒரு அடிமைப்பெண்தான் பத்தினி என்ற பெயர் வாங்க முடியும். பெண்ணுரிமையை விரும்பும் எப்பெண்ணும் பத்தினியாக இருக்க முடியாது என்று சொல்வோர் உண்டு. சிலப்பதிகார காலத்திலே கற்புடைமை என்பது எந்த முறையிலே இருந்தது? பத்தினிப் பெண்கள் எப்படி நடந்து கொண்டார்கள்? சிலப்பதிகார காலத்து மக்கள் எத்தகைய பெண்ணைப் பத்தினித் தெய்வமாக எண்ணினார்கள்? இவை களைக் காணச் சிலப்பதிகாரம் நமக்குத் துணை செய்கின்றது; பண்டைத் தமிழர்கள் எத்தகைய பண்புள்ள பெண்களைப் பத்தினிப் பெண்கள் என்று நம்பினார்கள் என்ற உண்மையையும் நமக்குக் கூறுகின்றது. இது பற்றிச் சிலப்பதிகார காலத்து மக்களின் மனப்பான்மை, அதற்கு முன்னிருந்த மக்களின் நம்பிக்கை இவைகளையும் அறிவிக்கின்றது. இவ்வாறு உண்மையை உரைக்கும் நூல்களே உயர்ந்த இலக்கியங்களாக விளங்குகின்றன; இவைகள் வரலாற்று நூல் போல என்றும் நிலைத்து நிற்கின்றன. ஊழ்வினை ஊழ்வினை என்பது முன்பிறப்பிலே செய்த நல்வினை, தீவினை, ஒவ்வொருவரும் சென்ற பிறப்பிலே செய்த நல்வினை தீவினைகளின் பலனை இப்பிறப்பிலே அனுபவித்துத் தான் தீரவேண்டும். இது மிகப் பழங்காலக் கொள்கை. சமண மதம் இக்கொள்கையைச் சிறப்பாக வலியுறுத்துகின்றது. கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் ஊழ்வினை தான்; கோவலனைக் கொல்லும்படி பாண்டியன் நெடுஞ் செழியன் கூறியதற்குக் காரணம் ஊழ்வினைதான். இவ்வாறு சிலப்பதிகாரக் கதையே ஊழ்வினையை அடிப்படையாகக் கொண்டதுதான் என்று எழுதுகிறார் இளங்கோ அடிகள். சமண மதம் தமிழகத்திலே பரவி நிலைப்பதற்கு முன்பும், தமிழர்கள் ஊழ்வினையிலே நம்பிக்கையுள்ளவர்கள் தாம். இதைச் சங்க இலக்கியங்களிலே காணலாம். கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆர்உயிர் முறைவழிப் படூஉம் என்பது, திறவோர் காட்சியில் தெளிந்தனம் (புறநா, 192) கல்லை அலைத்து ஒலித்துக்கொண்டு ஓடுகின்ற வளம் பொருந்திய பேராற்று நீரின் வழியே மிதந்து செல்லும் தெப்பம் போல, அரிய உயிர் ஊழ்வினையின் வழியே செல்லும். இதனை அறிஞர்களின் நூலின் வாயிலாகத் தெளிந்தோம். என்பது புறநானூற்றுப் பாட்டு. கணியன் பூங்குன்றன் என்னும் புலவரால் பாடப்பட்ட யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் பாட்டின் பகுதி. இதனால் பண்டைத் தமிழ் மக்களும் ஊழ்வினையை நம்பினர் என்பதைக் காணலாம். திருவள்ளுவரும் ஊழைப்பற்றி உரைக்கின்றார். ஆனால் முயற்சியால் அதனை முறியடிக்கலாம் என்று கூறுகின்றார். ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித் தாழாது உஞற்று பவர் என்று தெளிவாகக் கூறுகின்றார். எந்தக் காரணத்தாலும் ஊழ்வினையை மீறமுடியாது; அது உருக்கொண்டு வந்து தன் பயனை ஊட்டியே தீரும் என்பது சமணர் கொள்கை. இக்கொள்கையை சிலப்பதிகாரம் வலியுறுத்து கின்றது. இக் கொள்கையை மக்கள் மனத்தில் ஊன்றச் செய்வதற்கே சிலப்பதிகாரம் எழுதப்பட்டது என்பதை அதன் பதிகத்திலே காணலாம். சிலப்பதிகாரத்திலே பல இடங்களில் ஊழ்வினை வலியுறுத்தப் படுகின்றது. ஊழ்வினை காரணமாக நடந்தவை என்று பல நிகழ்ச்சி களும் குறிக்கப்படுகின்றன. கானல்வரியிலே ஊழ்வினையைப் பற்றிக் கூறத் தொடங்கிய ஆசிரியர், இறுதிவரையிலும் அதனை விடாமல் இழுத்துச் செல்கின்றார். கோவலன் மாதவியின் நடத்தையிலே ஐயமுற்றான்; அவளை விட்டுப் பிரிந்தான். இதற்குக் காரணம் ஊழ்வினை தான்; ஊழ்வினை தான் உருக்கொண்டு வந்து, கோவலனை மாதவியை விட்டுப் பிரித்தது. இதுவே இளங்கோ அடிகள் கூற்று, கானல்வரியான் பாடத்-தான் ஒன்றின்மேல் மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் என யாழ்இசைமேல் வைத்து, தன்ஊழ்வினைவந்து உருத்தது ஆகலின், உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்ந்தனனாய், பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது ஏவலாளர் உடன்சூழ்தரக் கோவலன்தான் போனபின் என்பது கோவலன் பிரிவைப்பற்றிக் கூறியது. இதில் ஊழ் வினைதான், கோவலனை மாதவியை விட்டுப் பிரித்தது என்று கூறியிருப்பதைக் காணலாம். கோவலன் கண்ணகியை அழைத்துக்கொண்டு, மதுரைக்குப் புறப்பட்டான் என்று கனாத்திறம் உரைத்த காதையின் இறுதி யிலே காணப்படுகின்றது. வினைகடை கூட்ட வியம்கொண்டான் கங்குல் கனைசுடர் கால்சீயா முன் விடியற்காலத்திலே கதிரவன் புறப்படுவதற்கு முன்பே புறப் பட்டான்; ஊழ்வினைவந்து சேர, அவன் ஏவலை மேற் கொண்டான் என்பதே அது. இதனை அடுத்த வெண்பாவின், பின் இரண்டடிகளும் இவ்வாறே முடிகின்றன. ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப முன்செய்த தீவினை வந்து இவன் உள்ளத்தைச் செலுத்து தலால் என்பது நாடுகாண் காதை. கோவலன் தானாக ஒன்றும் செய்யவில்லை; ஊழ்வினையின்படியே நடக்கின்றான் என்பதை உணர்த்திற்று இது. பாண்டியன் நெடுஞ்செழியன் செங்கோல் வேந்தன்; கொடுமை செய்ய எண்ணாதவன்; அறநெறி தவறாதவன், அவன் பொற்கொல்லன் சொல்லை நம்பினான். கோவலனைக் கொல்லப் பணித்தான். இதற்குக் காரணம் ஊழ்வினைதான் என்று கூறுகிறார் இளங்கோ அடிகள், கொலைக்களக் காதையிலே ஊழ்வினைதான் ஆட்சிபுரி கின்றது. வினைவிளை காலம் ஆதலின், யாவதும் சினை அலர் வேம்பன் தேரான் ஆகி ஊர்காப்பாளரைக் கூவி ஈங்கு என் தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு கன்றிய கள்வன் கையது ஆகின் கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கு என அவனது ஊழ்வினையின் பயன் விளையும் காலம் வந்து விட்டது; ஆதலால் வேப்பமலர் மாலையை அணிந்த பாண்டியன் ஒன்றையும் ஆராய்ந்து பார்க்கவில்லை, ஊர்க்காவலரை அழைத்தான், என் மனைவியின் சிலம்பு அக்கள்வன் கையில் இருக்குமானால், அவனைக்கொன்று அச்சிலம்பைக் கொண்டு வாருங்கள் என்று கூறினான். இவ்வாறு பாண்டியன் கூறிய தற்குக் காலம் வினைவிளை காலம் என்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். அரசன் இவ்வாறு உத்தரவு போட்டவுடன், பொற் கொல்லன், அக்காவலர்களுடன், கோவலன் இருக்கும் இடத்தை அடைகின்றான். இதைக் குறிக்கும் இளங்கோ அடிகள், இங்கும் ஊழ்வினையை இணைத்துக்காட்டுகின்றார். கருந்தொழில் கொல்லனும் ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்தும் என தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் தன்னைக் குறுகினன் பொற்கொல்லனும் அரசன் ஏவலால், நாம் நினைத்ததை நிறைவேற்றுவோம் என்று எண்ணிக்கொண்டான். தீவினை சூழ்ந்த வலையிலே அகப்பட்டிருந்த கோவலனை அடைந்தான். இவ்வாறு, கோவலன் வினைவசமாகியிருந்தான்; வினை யின் பயனை அடையப்போகும் நிலையில் இருந்தான் என்று கூறினார் ஆசிரியர். கோவலன் ஒரு காவலனால் வெட்டுண்டு வீழ்ந்தான். இளங்கோவடிகள் இதைப் பண்டைவினை என்றே கூறுகின்றார்; ஊழ்வினைதான் உருக்கொண்டுவந்து அவனை வெட்டுண்டு விழும்படி செய்தது என்று உரைக்கின்றார். கல்லாக் களிமகன் ஒருவன் கையில் வெள்வாள் எறிந்தனன்; விலங்கூடு அறுத்தது; காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து ; என் அறிவற்றவன்; கொலைக்கு அஞ்சாதவன்; குடிவெறியன் ஒருவன் தன் கையிலிருந்த வாளால் வெட்டினான், அது குறுக்கே துணித்தது. பாண்டியன் செங்கோல் கொடுங்கோல் ஆகும்படி, முன்னைத் தீவினையின் முதிர்ச்சியால் கோவலன் வெட்டுண்டு வீழ்ந்தான். இவ்வாறு கோவலனுடைய இறுதிப் பயணத்தைக் கூறினார். மேலேகாட்டிய மூன்று நிகழ்ச்சிகளையும் கொலைக்களக் காதையில் வினையின் விளைவாக வைத்து விளக்கினார் ஆசிரியர். கோவலன் கொலையுண்டதைக் கேட்டாள் கண்ணகி; வாய்விட்டு அரற்றுகின்றாள்; அழுது புலம்பிக்கொண்டு ஊரைச் சுற்றி வருகின்றாள். அவள் புலம்பும்போதும் ஊழ்வினையின் கொடுமையைக் கூறியே புலம்புவதாக எழுதுகிறார் ஆசிரியர். மன்உறுதுயர் மறவினை அறியாதேற்கு என்உறு வினைகாண்! ஆ! இது! என உரையாரோ! மன்னனால் செய்யப்பட்டது இக் கொலைத்தொழில். இன்ன காரணத்தால் இக்கொலை நிகழ்ந்தது என்பது அறியேன். ஆயினும் நான் முன்செய்த தீவினைதான் இவ்வாறு எனக்குத் துன்பத்தைத் தந்தது என்று இந்நாட்டிலே சொல்லமாட்டார் களோ! பார்மிகு பழிதூற்ற பாண்டியன் தவறுஇழைப்ப ஈர்வது ஓர்வினைகாண்! ஆ! இது என உரையாரோ! உலகில் உள்ளார் பழிதூற்றுமாறு, பாண்டியன் தவறு செய்யும் படி கோவலனை வெட்டுண்டு மடியச்செய்தது ஒரு தீவினை தான் என்று நாட்டிலே சொல்லமாட்டார்களோ! மன்பதை பழிதூற்ற, மன்னவன் தவறு இழைப்ப உண்பது ஓர்வினைகாண்! ஆ! இது! என உரையாரோ! உலகில் உள்ளோர் பழிக்கும்படி மன்னவனைத் தவறிழைக்கச் செய்து, அவன் உயிரையும் உண்டது ஓர் தீவினைதான் என்று நாட்டினர் உரைக்கமாட்டார்களோ! இவ்வாறு கண்ணகி புலம்புகின்றாள், பாண்டியன், கோவலனைக் கொல்லும்படி செய்தது தீவினையின் பயன்தான் என்பதை இப்பகுதிகள் வலியுறுத்தின. வழக்காடப் பாண்டியன் முன்னே போய் நின்றாள் கண்ணகி; கண்டான் அவளை மன்னவன். அவள்தோற்றம் கண்டு திடுக்கிட்டான், நீ யார்? என்று கேட்டான். வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்ப சூழ்கழல் மன்னா! நின்நகர்ப் புகுந்து, இங்கு என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி, நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என்பெயரே ஊழ்வினையினால், அது செலுத்தியதனால், உனது நகரை அடைந்தான் கோவலன்; என் கால்சிலம்பை விற்பதற்காக வந்தான்; உன்னால் கொலைக்களத்திலே மாண்டான்; அவன் மனைவி நான்; என் பெயர் கண்ணகி என்றாள் கண்ணகி, இவ்வாறு கூறி ஊழ் வினையின் செயலை விளக்கினாள், இது வழக்குரை காதையிலே வருவது, கட்டுரைக் காதையிலே மதுராபதித் தெய்வம் கண்ணகி யிடம் வந்து பேசுவதாகக் கதை அமைந்திருக்கின்றது, ஊழ்வினையாலேயே பாண்டியன் தவறு செய்தான்; ஊழ் வினையாலேயே கோவலன் கொலையுண்டான் என்று அத் தெய்வம் கண்ணகியிடம் கூறுகின்றது. தோழிநீ ஈதுஒன்று கேட்டி எம் கோமாற்கு ஊழ்வினை வந்தக் கடை, மாதராய் ஈதுஒன்று கேள்! உன் கணவற்குத் தீதுஉற வந்த வினை இவைகள் மதுராபதித் தெய்வத்தின் கூற்றாக வருவன. உம்மை வினைவந்து உருத்த காலைச் செம்மை யிலோர்க்குச் செய்தவம் உதவாது முன்வினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகரச்செய்யும் போது அத்தீவினையாளர்க்கு எந்தத் தவமும் பயன்படாது; அவ்வூழின் செயலைத் தடுக்க முடியாது என்று பின்னும் உரைக் கின்றது மதுராபதித் தெய்வம். வஞ்சிக் காண்டத்தில் ஆரம்பத்திலேயே ஊழ்வினை தொடங்கி விடுகின்றது, வேங்கைமர நிழலிலே கண்ணகி வந்து நின்றாள். அவளைக் கண்ட குறவர்கள் வேங்கை நறுநிழலின், வள்ளிபோல்வீர்! மனம் நடுங்க, முலையிழந்து வந்து நின்றீர் யாவிரோ? என்று கேட்டனர். மணமதுரை யோடு அரசு கேடுற வல்வினை வந்து உருத்த காலை கணவனை அங்கு இழந்து போந்த கடுவினையேன யான் முன்னைவினையால் மதுரையும் அரசனும் அழியும்படி கணவனை யிழந்தேன். தீவினையை உடையேன் என்று விடை யிறுத்தாள் கண்ணகி, தன் துன்பத்துக்குக் காரணம் ஊழ்வினை தான் என்றே கண்ணகி கூறினாள். இங்கு ஊழ்வினை உறுதி செய்யப்பட்டது இதன்பின் நீர்ப்படைக் காதையிலும் ஊழ்வினையின் விளைவு உறுதிசெய்யப்படுகின்றது, செங்குட்டுவன், கனகவிசயர் களைப் போரிலே புறமிடச் செய்தான். அவர்கள் தலையிலே இமயக் கல்லை ஏற்றி நீர்ப்படை செய்தான்; அதன் பின் தென்கரையை அடைந்து பாடிவீட்டிலே அமர்ந்திருந்தான். அப்பொழுது மாடலன் என்னும் மறையோன் அங்கே வந்தான். வாழ்க எம்கோ மாதவி மடந்தை கானல் பாணி கனக விசயர்தம் முடித்தலை நெரித்தது; முதுநீர் ஞாலம் அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க! எமது அரசனே வாழ்க! மாதவி என்னும் கணிகைப்பெண் கடற்கரைச் சோலையிலே பாடிய பாட்டு, கனக - விசயர்களின் முடித்தலையை நெரித்தது; கடல்சூழ்ந்த உலகம் முழுவதையும் அடிமையாக்கி ஆளும் அரசனே வாழ்க! என்று இவ்வாறு வாழ்த்துரைத்தான் அவன். செங்குட்டுவனுக்கு இதன் பொருள் விளங்கவில்லை. அவன் மாடலனைப் பார்த்து, நீ கூறியதன் கருத்து என்ன? என்றான். கானல்அம் தண்துறைக் கடல் விளையாட்டினுள், மாதவி மடந்தை வரிநவில் பாணியோடு ஊடல் காலத்து ஊழ்வினை ஊருத்துஎழ, கூடாது பிரிந்து, குலக்கொடி தன்னுடன் மாட மூதூர் மதுரைபுக்கு, ஆங்கு இலைத்தார் வேந்தன் எழில்வான் எய்த கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி, குடவர் கோவே! நின்னோடு புகுந்து வடதிசை மன்னர் மணிமுடி ஏறினள் குடவர் கோவே! காவிரிப்பூம்பட்டினத்திலே நிகழ்ந்த கடல் விளையாட்டிற்கு மாதவி கோவலனுடன் சென்றிருந்தாள், அவள் கருத்துவேற்றுமை தோன்றும்படி பாடிய கானல்வரிப் பாட்டுடன் ஊழ்வினையும் உருக்கொண்டு வந்தது, அதனால் கோவலன் மாதவியை வெறுத்துப் பிரிந்தான், தன் மனைவி யாகிய கண்ணகியை உடன் அழைத்துக்கொண்டு மதுரை மாநகரம் புகுந்தான், புகுந்தவன், அங்கே பாண்டியன் உயிர்விட்டு வானுலகு எய்தும்படி கொலைக் களப்பட்டான். அக்கோவலன் மனைவியாகிய கண்ணகி உனது நாட்டை அடைந்தாள், அப் பத்தினி இப்போது வடதிசை மன்னர் களின் முடித் தலையிலே ஏறி விளங்குகின்றாள். இவ்வாறு மாடலன் தான் உரைத்தை விளக்கிக் கூறினான், மாடலன் கூறிய இவ்வுரையாலும் ஊழ்வினையின் செய்கை யால் தான் கோவலன் மாதவியைப் பிரிந்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. இறுதியான வாழ்த்துக் காதையிலும் ஊழ்வினை வலியுறுத்தப் பட்டிருப்பதைக் காணலாம், தொல்வினையால் துயர் உழந்தான் கண்ணின் நீர் கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ! பழவினையால் கணவனை யிழந்து துன்புற்றாள் கண்ணகி, அவளுடைய கண்ணீர் கொன்றதனால் உயிர் இழந்தான் பாண்டியன்; அவன் வாழ்க என்று ஆயமகளிர் வாழ்த்து கின்றனர். இது கண்ணகி துயருக்குக் காரணம் ஊழ்வினைதான் என்று உறுதி செய்கின்றது. கோவலன் மாதவியை விட்டுப் பிரியும்படி செய்தது ஊழ்வினை; அவனை மனைவியுடன் மதுரைக்குப் புறப்படும் படி செய்தது ஊழ்வினை; பாண்டியன் நெடுஞ்செழியன், கோவலனைக் கொல்லும்படி கூறியது ஊழ்வினை; கல்லாக்களி காமகன் கோவலனை வாளால் வெட்டி வீழ்த்தியது ஊழ்வினை; கண்ணகி தன் கணவனை இழந்தது ஊழ்வினை; இவ்வாறு ஊழ்வினைதான் சிலப்பதிகாரக் கதையை நடத்திச் செல்கின்றது. ஊழ்வினை மாதவியின் வரிப்பாட்டின் வாயிலாக வந்து புகுந்தது; கனக - விசயர்களின் தலையிலே கல்லாக வந்து அழுத்தியது என்று நீர்ப்படைக் காதையில் குறித்திருப்பது எல்லாம் ஊழ்வினையின் செயலே என்பதை உறுதி செய்து ஒப்பம் வைப்பதாக உள்ளது. ஊழ்வினையைத் தடுக்கமுடியாது, அது பயனை ஊட்டியே தீரும் என்ற கருத்து இன்னும் பலவிடங்களில் கூறப்படுகின்றது. நாடுகாண் காதையிலே (170-173) சாரணர்கள் வாயிலாக ஊழ்வினை வலியுறுத்தப்படுகிறது, ஊர் காண் காதையிலே கவுந்தியடிகளின் வாயுரையால் ஊழ்வினையின் உறுதி கூறப்படு கின்றது, இவைகளை அறவுரைகள் என்ற பகுதியிலே காணலாம். ஒவ்வொருவரும் தாம் செய்த தீவினை நல்வினைப் பயன்களை அனுபவித்துத்தான் தீரவேண்டும்; அனுபவிக்காமல் தப்பிப் பிழைக்கமுடியாது, இவ்வுண்மையைச் சிலப்பதிகாரம் அழுத்தமாகக் கூறுகின்றது, அருக சமயத்தோரால் பெரிதும் பாராட்டப்பட்ட இவ்வூழ்வினையை இந்துமத வேதாந்தங்களும் மறுக்கவில்லை. ஊழ்வினையைத்தான் பிராரத்துவ கன்மம் என்பர். இதனை வேதாந்த - சித்தாந்த - தத்துவ நூல்கள் எல்லாம் ஒப்புக் கொள்ளு கின்றன, தாம் செய்த வினையின் பயனைத் தாம் அனுபவித்தாக வேண்டும் என்பதை வேத வழிப்பட்ட மதங்கள் மறுக்கவில்லை, நாம் செய்த வினையின் பயனை நாம் அனுபவிக்காமல் இருக்கமுடியாது; கட்டாயம் அனுபவித்தே தீரவேண்டும் என்ற நம்பிக்கையுள்ள மக்கள் தீவினைகளைச் செய்யமாட்டார்கள், ஒழுக்கந் தவறமாட்டார்கள், அறநெறியையே பின்பற்றி வாழ்வார்களானால் மக்கட் சமுதாயம் அமைதியுடன் வாழும்; அன்புடன் இணைந்து வாழும்; இன்பத்திலே நிலைத்து வாழும். இந்த உயர்த்த நோக்கத்துடன்தான், சமணர், பவுத்தர் முதலியோரும், ஏனைய சமயத்தினரும், ஊழ்வினையை ஒப்புக் கொண்டு வலியுறுத்தி வந்தனர். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதைக் கூறுவதும் சிலப்பதிகார நோக்கங்களில் ஒன்று எனப் பதிகத்தில் கூறப் பட்டுள்ளது, அவ்வுண்மையைச் சிலப்பதிகாரம் விளக்கிக் கூறுவதை மேலே காட்டியவைகளைக்கொண்டு அறியலாம். மறுபிறப்பு ஊழ்வினையை ஒப்புக்கொண்டால் மறுபிறப்பையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இப்பிறப்பிலே ஒருவர் அடையும் இன்ப துன்பங்களுக்கு முன்பிறப்பில் செய்த வினைதான் காரணம். முன்பு நல்வினை செய்தோர் இப்பொழுது இன்புறு கின்றனர், முன்பு தீவினை செய்தோர் இப்பொழுது துன்புறு கின்றனர். இப்பிறப்பில் நல்வினை செய்வோர் அடுத்த பிறப்பில் இன்புறுவார்கள்; தீவினை செய்வோர் துன்புறு வார்கள், இது ஊழ்வினைபற்றி உரைக்கும் கொள்கை, இத்தகைய ஊழ்வினை யோடு மறுபிறப்புக்கொள்கையும் ஒன்றுபட்டிருப்பதைக் காணலாம். மீண்டும் பிறப்பு வேண்டாம் என்றால் பற்றில்லாமல் வாழ வேண்டும்; ஒன்றிலும் பற்றில்லாமல் - பயன் கருதாமல் - செயல் களைச் செய்யவேண்டும். உலக இன்பங்களையும் ஆசைகளையும் அடியோடு துறக்கவேண்டும். பற்று இல்லாமல் செய்யும் பணிக்கே நிஷ்காமிய கர்மம் என்று பெயர். நிஷ்காமியவாதிதான் பிறவா நெறியை- முத்தியை - அடையமுடியும். இது வேதாந்த சித்தாந்தங் களின் முடிவு. சமண பவுத்த மதங்களும் இந்த முடிவை ஒப்புக் கொள்ளுகின்றன. பலன் கருதிச் செய்யும் நல்வினை தீவினைகளால் பிறவி உண்டு; மீண்டும் பிறந்துதான் அவ்வினைகளின் பயனை அனுபவிக்க வேண்டும், இக்கொள்கையை ஊழ்வினையை ஒப்புக்கொள்வார் அனைவரும் நம்புகின்றனர்; ஊழ்வினையை ஏற்றுக்கொள்ளும் சமய நூல்கள் எல்லாம் ஒப்புக்கொள்ளு கின்றன. சிலப்பதிகாரத்திலே இத்தகைய மறுபிறப்புக் கொள்கை பலவிடங்களில் எடுத்துக்காட்டப்படுகின்றது; கதை நிகழ்ச்சியிலும் அமைத்துக் காட்டப்படுகின்றது, கணவற்கு ஒருநோன்பு பொய்த்தாய் பழம்பிறப்பில் கணவன் பொருட்டுச் செய்யவேண்டிய ஒரு நோன்பை முன் பிறவியிலே நீ செய்யவில்லை என்று தேவந்தி கண்ணகியைப் பார்த்துச் சொல்லுகின்றான். பவம்தரு பாசம் கவுந்தி கெடுக பிறப்பைத் தரும் பாசம் கவுந்தியை விட்டு ஒழிக என்று சாரணர் கவுந்தியை வாழ்த்துகின்றனர். ஏழ்பிறப்பு அடியேம் ஏழு பிறப்பிலும் யாங்கள் உனக்கு அடிமை என்று குறவர்கள் செங்குட்டுவனை நோக்கிக் கூறுகின்றனர். விண்ணோர் உருவின் எய்தியநல் உயிர் மண்ணோர் உருவின் மறிக்கினும் மறிக்கும்; மக்கள் யாக்கை பூண்ட மன்உயிர் மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்; விலங்கின் யாக்கை விலங்கிய இன்உயிர் கலங்கு அயர் நரகரைக் காணினும் காணும் ஆடும் கூத்தர்போல் ஆருயிர் ஒருவழி கூடிய கோலத்து ஒருங்குநின்று இயலாது, செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது பொய்இல் காட்சியோர் பொருள் உரை சிறந்தவனே! தெய்வப் பிறப்படைந்த ஒரு நல்ல உயிர் அதை விடத் தாழ்ந்த மக்கள் பிறவிக்குத் திரும்பினாலும் திரும்பும்; மனிதப் பிறவியை எடுத்த ஒரு உயிர் விலங்கின் பிறப்பை அடைந்தாலும் அடையும்; விலங்காகப் பிறந்த அவ்வுயிர் மிகுந்த துக்கத்துக்கு இடமான நரகர் பிறப்பை அடைந்தாலும் அடையும்; ஆடும் கூத்தர் போன்றது. ஒரு வழியிலே ஒரு கோலம்கொண்டு நிற்காது. தான் செய்கின்ற வினைக்குத் தகுந்த பிறப்பை அடையும். இது குற்றமற்ற அறிஞர்களின் உண்மை உரையாகும். இவ்வாறு மாடலன் என்போன், உயிரின் தன்மையைச் செங்குட்டுவனுக்கு எடுத்துரைத்தான், நல்திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும், அற்புஉளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும், அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும், பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் புதுவது அன்றே; தொன்றுஇயல் வாழ்க்கை நல்லறம் புரிந்தோர் பொன்னுலகை அடைவது; ஒன்றிலே பற்றுக்கொண்டோர் அப்பற்றுள்ள இடத்திலே பிறப்பது; அறம் பாவங்களின் பயன் உடனே பலிப்பது; பிறந்தவர் இறப்பது; இறந்தவர் பிறப்பது; இவைகள் எல்லாம் புதியன அல்ல. பழமை யானவை. இதுவும் மாடலன் கூற்று. மறுபிறப்பு உண்டு என்பதை இப்பகுதிகள் வலியுறுத்துகின்றன. பண்டைப் பிறவியர் ஆகுவர் பழம் பிறப்பை உணர்வோர் ஆவார். ஒளித்த பிறப்பினர் ஆகுவர் ஒளித்திருக்கும் பழம் பிறப்பை உணர்ந்தோர் ஆவார். இவை தேவந்தியின் கூற்று; ஆவேசம் கொண்டு உரைத்தவை. ஒளித்த பிறப்புவந்து உற்றது பழம்பிறப்பு உணர்ச்சி- நினைவு - வந்து சேர்ந்தது. இது பழம்பிறப்பை உணர்ந்த சிறுமியரைப்பற்றிச் சொல்லியது. மேலேகாட்டிய பகுதிகள் எல்லாம் மறுபிறப்பு உண்டு என்னும் கொள்கையை எடுத்துக்காட்டின. இக்கொள்கை தமிழகத்திலே நிலவிய நீண்டகாலக் கொள்கை; சமண மதத்திற்கு முன்னும் தமிழர்கள் இக்கொள்கையை நம்பி வந்தனர்; இவ்வுண்மையை மாடலன் வாயாலும் உரைத்திருக்கின்றது சிலப்பதிகாரம். மதுராபதித் தெய்வம் கோவலன் முற்பிறப்பைப்பற்றிக் கூறும் கதை; ஒருகையைக் குரங்கின் கையாகக்கொண்ட தெய்வ குமாரனைப் பற்றிக் கூறும் கதை; இவைகள் மறு பிறப்பை வலியுறுத்தும் கதைகள். கோவலன் தாயும், கண்ணகியின் தாயும், கோவலன் அடைந்த கொடுந்துயர் கேட்டு மாண்டனர். அவர்கள் கண்ணகி யிடம் கொண்ட அன்பால், வஞ்சிமாநகரில் அரட்டன் செட்டியின் மனைவியின் வயிற்றிலே பெண்களாகப் பிறந்தனர். கண்ணகியின்பால் அன்பு கொண்ட இடைச்சியாகிய மாதரி திருமாலிடம் பற்றுக்கொண்டு குரவைக்கூத்து நிகழ்த் தினாள். ஆதலால் அவள் திருவநந்தபுரத்திலே திருமாலுக்குப் பணிசெய்யும் சேடக்குடும்பியின் மகளாகப் பிறந்தாள். இவ்வாறு கோவலன் - கண்ணகியின் தாயரும், மாதரியும் மறுபிறப்பு எடுத்த செய்தி கூறப்படுகின்றது. இக்கதைகள் மறுபிறப்பு உண்டு என்பதை விளக்கின. காவிரிப்பூம்பட்டினம் பட்டினம் என்பதும். புகார் என்பதும் காவிரிப் பூம்பட்டினத் தைக் குறிக்கும். வேறு பெயர்களும் உண்டு. சிலப்பதிகார காலத்திலே இந்நகரம் எப்படியிருந்தது என்பதை இளங்கோவடிகள் தெளிவாகக் கூறியிருக்கிறார். காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பு, அதில் வாழ்ந்த மக்கள், அவர்களுடைய வாழ்வு, ஒழுக்கம், நகரத்தின் மாண்பு இவைகளைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். காவிரிப்பூம்பட்டினத்தை எக்காலத்திலும் பகைவர்கள் கைக்கொண்டதேயில்லை; ஆதலால் அந்நகர மக்கள் வேற்றூர் களில் குடிபுகுந்து அறியமாட்டார்கள். அவர்கள் பரம்பரையாக அவ்வூரிலேயே வாழும் பழங்குடி மக்கள், பொதியமலை, இமய மலை, ஒப்பற்ற புகழ்படைத்த புகார் நகரம் - இவை மூன்றும், எப்பொழுதும் அழியாமல் நிலைத்திருப்பவை; இவைகளுக்கு இறுதிக்காலம் உண்டு என்று உரைப்போர் ஒருவரும் இல்லை. பொதியில் ஆயினும், இமயம் ஆயினும், பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும் நடுக்குஇன்றி நிலைஇய, என்பது அல்லதை, ஒடுக்கம் கூறார் என்று மங்கல வாழ்த்தில் கூறப்படுகின்றது. இத்தகைய அழியாத புகழ்பெற்ற அந்நகரம் இன்று அழிந்துவிட்டது. ஆயினும் அதன் புகழ்மட்டும் மறையவில்லை. காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பு, அங்கு நடந்த வாணிகம், தொழில்கள், அங்கிருந்த மக்கள் வாழ்வு முதலியன இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே விரிவாகக் கூறப்படு கின்றன. அவைகளைக் கீழே காணலாம். காவிரிப்பூம்பட்டினம் மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என இரண்டு பிரிவாக அமைந்திருப்பது. மருவூர்ப்பாக்கத்தைப் புறநகர் என்றும், பட்டினப்பாக்கத்தை அகநகர் என்றும் கூறலாம். மருவூர்ப்பாக்கம் மருவூர்ப்பாக்கத்திலே நிலாமுற்றம் (மொட்டைமாடி) அமைந்த பல வீடுகள் இருந்தன. பலவேறுவகையான அணி கலன் களைக் குவித்திருக்கும் சரக்கறைகள் இருந்தன. மான் கண்களைப் போல் அமைக்கப்பட்ட சாளரங்களையுடைய மாளிகைகள் இருந்தன. நீர்த்துறையின் பக்கங்களிலே யவனர்கள் வாழ்ந்தனர். அவர்களிடம், காண்போர் கண்களைக் கவரும் அளவற்ற செல்வங்கள் இருந்தன. இவர்கள் கிரேக்க நாட்டிலிருந்து வந்த வணிகர்கள். கடற்கரையிலே அந்நிய நாட்டிலிருந்து வந்த வணிகர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் பல நாட்டினர்; பல மொழி பேசுவோர். அவர்கள் தமிழர்களுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். நகர வீதியிலே பலர் பல பண்டங்களை விலைகூறித் திரிவார்கள். தடவிக்கொள்ளத்தக்க நிறமுள்ள வாசனைக் குழம்பு, வாசனைப் பொடி, மணம் கமழும் சந்தனம், நறுமலர், மற்றும் பல வாசனைப் பண்டங்கள் இவைகள் அவர்கள் விலைகூறி விற்கும் பண்டங்கள். பட்டுச்சாலியர் ஒரு புறத்திலே வாழ்கின்றனர்; அவர்கள் பட்டினாலும், எலிமயிராலும், பருத்தி நூலாலும் ஊசியின் உதவி கொண்டு பல நுட்பமான தொழில்களைச் செய்து வாழ்கின்றனர். பட்டு, பவளம், சந்தனம், அகில், முத்து, இரத்தினங்கள், பொன், பொன்னாபரணங்கள் இவைகள் எண்ணிக்கை காண முடியாத அளவுக்கு நிரம்பியிருந்தன. இச் செல்வக் குவியல் களைக் கொண்ட பெரிய வீதிகள் இருந்தன. தானியங்களைத் தனித்தனியே பிரித்துவைத்து விற்பனை செய்கின்ற கடைத்தெரு இருந்தது. இதற்குக் கூலவீதி என்று பெயர். மாமிசங்களை விற்பனை செய்யும் தனி இடம் இருந்தது. அங்கே பிட்டுச் சுட்டு விற்கும் வணிகர்கள் இருந்தனர். இவர் களுக்குக் காழியர் என்று பெயர். அப்பம் சுட்டு விற்போர் இருந்தனர்; இவர்களுக்குக் கூவியர் என்று பெயர், வலைச்சி யர்கள் கள் விற்பனை செய்து வந்தனர். பரதவர் மீன் விற்பனை செய்து வந்தனர். உப்பு விற்பனை செய்வோர் இருந்தனர். பச்சை மாமிசம், வெந்த மாமிசம் இவைகளை விற்போர் இருந்தனர்; இவர்களுக்குப் பாசவர் என்று பெயர். வாசனைப் பொருள் விற்போரும் இருந்தனர். ஆட்டிறைச்சி விற்போரும் இருந்தனர். குறிப்பிட்ட ஒரு தனி இடத்திலே இத்தகைய வியாபாரங்கள் நடைபெற்றன. பலவகைப்பட்ட தொழில்களைச் செய்வோர், தனித்தனி இடங்களிலே வாழ்ந்து வந்தனர். அவர்கள் வாழ்ந்த இடங்கள் தொகுதியாக இருந்தன. இதைத் தொழிலாளர் பகுதி என்று சொல்லலாம். வெண்கலக் கன்னார், செம்பினால் வேலை செய்வோர், மர வேலை செய்யும் தச்சர்கள், இரும்பு வேலை செய்யும் கொல்லர்கள், சித்திரம் தீட்டுவோர், சிற்பம் செதுக்குவோர், பொன்னால் நகைகள் செய்வோர், தையல்காரர்கள், தோலினால் பண்டங்கள் செய்வோர், துணியினாலும், நெட்டியாலும் பல பண்டங்களைச் செய்யும் பல வேலைக்காரர்கள், குழல், யாழ் முதலிய கருவிகளிலே ஏழிசை களையும் இணைத்துத் தங்கள் திறமையைக் காட்டும் பாணர்கள் இவர்கள் எல்லாம் ஒரு புறத்திலே வாழ்ந்தனர். அங்கே ஒழுக்கம் குன்றியவர்களாய்ப் பிறர்க்குக் குற்றேவல் செய்து வாழும் மக்களும் இருந்தனர். மேலே கூறிய பலதிறப்பட மக்கள் மருவூர்ப்பாக்கத்திலே வாழ்ந்து வந்தனர். இவைகள் இந்திரவிழவு ஊர் எடுத்த காதை யிலே 6 முதல் 39 வரையுள்ள அடிகளிலே சொல்லப்படுகின்றன. இதன்பின் பட்டினப்பாக்கத்தின் அமைப்பு கூறப்படுகின்றது. பட்டினப்பாக்கம் பட்டினப்பக்கத்திலே அரச வீதிகள் தனியாக இருந்தன; திருவிழாக் காலத்திலே தேரோடும் தெருக்கள் தனியாக இருந்தன; கடைத் தெருக்களும் இருந்தன. சிறந்த குடியிலே பிறந்த வணிகர்கள் வாழும் வீதி தனியாக இருந்தது. அவ்வீதியிலே உயர்ந்த மாடமாளிகைகள் காணப் பட்டன. மறையோர் வீதி தனியாக இருந்தது. அங்கே வேதம் உணர்ந்த அந்தணர்கள் வாழந்தனர். உழவுத் தொழில் செய்யும் குடிகள், உழவர்கள், மருத்துவ நூல் உணர்ந்த வைத்தியர்கள், சோதிட நூல் உணர்ந்தோர் இவர்கள் தனித்தனியே வாழும் வீதிகள் இருந்தன. இரத்தினங்களை இழைத்துச் சீர்செய்வோர், நுண்ணறி வுடன் சங்குகளை அறுத்து வளையல்கள் செய்வோர் இவர்கள் வாழும் அகலமான தெருக்கள் இருந்தன. நின்றுகொண்டு புகழும் சூதர்கள், உட்கார்ந்துகொண்டு புகழும் மாகதர்கள், வேதநெறிப்படி கூத்தாடும் வைதாளிகர்கள், நாழிகை அறிந்து சொல்வோர், காண்போர் விரும்பும்படி கோலம் புனைந்து கூத்தாடும் சாந்திக் கூத்தர்கள், பலர் காணக் களத்திலே கூத்தாடும் கூத்தியர், உள் அரங்கங்களிலே கூத்தாடும் கூத்தியர், மலர் விற்பனை செய்யும் மாதர்கள், ஏவின வேலை களைச் செய்யும் பெண்கள். தோற் கருவி இசைப்போர், பலவகையான இசைக் கருவிகளையும் பயின்றவர்கள் இவர்கள் தனித்தனி தெருக்களிலே வாழ்ந்து வந்தனர். குதிரை வீரர்கள், யானைப் பாகர்கள், தேர்ப் பாகர்கள், காலாட்படைத் தலைவர்கள் கோயிலைச் சூழ்ந்த பெரிய வீதிகளிலே வாழ்ந்தனர். பட்டினப்பாக்கத்திலே மேலே கூறப்பட்ட வீதிகளும் அமைந்திருந்தன. இதனை இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே 40 முதல் 58 வரையில் உள்ள அடிகளிலே காணலாம். பட்டினப்பாக்கத்துக்கும், மருவூர்ப்பாக்கத்துக்கும் இடை யிலே ஒரு வெட்ட வெளியுண்டு. அங்கே பகலில் வாணிகம் செய்வோர் கூடும் இடம் இருந்தது; இதற்கு நாள் அங்காடி என்று பெயர், இரவிலே வாணிகம் செய்வோர் கூடும் இடமும் இருந்தது; அல் அங்காடி என்று பெயர். நாளங்காடியிலே ஒரு காவல்பூதம் உண்டு. மறக்குடியிலே பிறந்த மகளிர் அங்குள்ள பூதத்துக்குப் பூசை போடுவார்கள். சித்திரை மாதத்திலே, சித்திரை நட்சத்திரம் சேர்ந்த பௌர்ணமி யிலே, அவர்கள் நாளங்காடிப் பூதத்துக்குப் பலியிட்டு வணங்கு வார்கள்; பொங்கல், எள்ளால் செய்த கசிவு என்னும் பணியாரம், மாமிசம் கலந்த சோறு, மலர், புகை, கள் இவைகளை வைத்துப் படைப்பார்கள். கையை முடக்கிக் கொண்டு ஆடுகின்ற ஒருவகைக் கூத்தான துணங்கைக் கூத்து, கைகோத்துக்கொண்டு ஆடும் குரவைக் கூத்து முதலிய கூத்துக்கள் ஆடுவார்கள். தெய்வ ஆவேசம் கொண்டும் ஆடுவார்கள். அவர்கள் சோழ மன்னனது பெரிய நாடு முழுவதும் பசி பிணி, பகையின்றி வாழ்க! மழையும் பெருகி வாழ்க! என்று வாழ்த்து வார்கள். மறக்குடியிலே பிறந்த வீரர்கள், வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க. வெற்றியையுடைய வேந்தன் மேலும் மேலும் வெற்றி பெறுக! பகைவரை வெல்க! என்று வாழ்த்துவார்கள், மன்னனுடைய வெற்றிக்காகத் தங்கள் தலைகளைத் தாங்களே அறுத்துப் பலி பீடத்திலே வைப்பார்கள். இச் செய்திகளால் காவிரிப்பூம்பட்டினத்து மக்களின் சிறந்த ஒழுக்கத்தைக் காணலாம் தங்கள் நாடு செழிக்க வேண்டும்; அரசு செழிக்க வேண்டும் என்று அவர்கள் தெய்வத்தை வேண்டிக் கொள்ளுவார்கள்; தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; சிறந்த ராஜபக்தியும், தேசபக்தியும் வாய்ந்தவர்கள் அவர்கள் என்ற உண்மைகளையும் உணரலாம். ஐவகை மன்றம் காவிரிப்பூம்பட்டினத்திலே ஐந்துவகை மன்றங்கள் இருக்கின்றன. அவற்றின் இயல்பை அறிந்தால் சிலப்பதிகார காலத்தில் அந்நகரில் எத்தகைய சிறந்த ஆட்சி நடைபெற்றது என்பதை அறியலாம். வெள்ளிடை மன்றம் : வெட்ட வெளியிலே ஒரு குறிப்பிட்ட இடத்திலே ஒரு பொது இடம் உண்டு. அங்கு ஒரு மண்டபமும் உண்டு. அம்மண்டபம் எப்பொழுதும் திறந்தே இருக்கும். காவல் காரர்களும் இருக்க மாட்டார்கள். பண்டங் களின் அளவு, நிறை, எண் இவைகளைக் குறித்து, எப்பண்டங் களானாலும் அவைகளை மூட்டைகளாகக் கட்டி அங்கே வைத்துவிட்டுப் போகலாம். அவைகளை யாரும் களவாட மாட்டார்கள். அந்நகருக்குப் புதிதாக வந்தவர்கள் யாரேனும் திருடினால், அவர்கள் அகப்பட்டுக்கொள்ளுவார்கள். அங்கேயுள்ள பூதம், சும்மாவிடாது. களவாடியவர் கழுத்து நோகும்படி அவர் களவாடிய மூட்டையை அவர் தலையிலே வைக்கும். ஊரைச் சுற்றி அடிக்கும். ஆதலால் அவ்வூரில் உள்ளோர் களவைப்பற்றி எண்ணவே மாட்டார்கள். இது வெள்ளிடை மன்றத்தின் இயல்பு: இதனால் அவ்வூரில் திருட்டுப் பயம் இல்லை. யாரும் திருடமாட்டார்கள் யாரேனும் திருடினாலும் காவலர்களிடம் அகப்பட்டுக்கொள்ளுவார்கள். களவாடியவர்கள் ஊரார் சிரிக்கும்படியான அவமானத்திற்கு ஆளாவார்கள். இவ்வுண்மையை வெள்ளிடை மன்றம் உணர்த்து கின்றது. இலஞ்சி மன்றம் : இலஞ்சி என்பது ஒரு குளம். கூனர்கள், குள்ளர்கள், ஊமையர்கள், செவிடர்கள், பெருநோய் பிடித்தவர்கள் அக்குளத்திலே நீராடுவார்களானால் தங்கள் நோய் நீங்குவர்; நல்ல தோற்றத்தை அடைவர். அப்பொய்கையை வலம் வந்து அதிலே மூழ்கிப் போவோர் இத்தகைய நலம் பெறுவர். இதுவே இலஞ்சி மன்றத்தின் சிறப்பு. காவிரிப்பூம்பட்டினத்திலே சிலப்பதிகார காலத்திலே சிறந்த பொது வைத்தியசாலை இருந்தது. சிறந்த மருத்துவர்கள் இருந்தனர். கூன், குறள், ஊமை, செவிடு, பெருநோய் முதலிய தீராத நோய் களுக்கும் வைத்தியம் செய்யப்பட்டது. அந்நோய்கள் மருந்து களாலும், இயற்கை வைத்திய முறைகளாலும் நீக்கப் பட்டன. தண்ணீரின்மூலம் நோய்களை ஒழித்தல் இயற்கை வைத்திய முறையாகும். நெடுங்கல் மன்றம் : பிறர் இட்ட மருந்தினால் பித்தேறிய வர்கள், நஞ்சுண்டு துன்புற்றோர், பாம்பினால் கடியுண்டோர், பேய் பிடிக்கப்பட்டோர் இவர்கள் நோயை நெடுங்கல் மன்றம் குணப் படுத்தும். இந்நோயாளிகள் அங்கே நாட்டப்பட்டிருக்கும் நீண்ட கல்லை ஒருமுறை வலம் வந்தால் போதும், அதிலிருந்து ஓர் ஒளி வீசும். அதனால் அவர்கள் நோய் நீங்கும். நீண்ட கல் நிற்பதனால் இதற்கு நெடுங்கல் மன்றம் என்று பெயர். விஷ நோய்களை நீக்கும் மருத்துவசாலையும் இருந்தது; மக்கள் எந்த நோயால் பீடிக்கப்பட்டாலும் அதற்கான சிகிச்சை பெற்று வாழ்ந்தனர். இதையே நெடுங்கல் மன்றம் குறித்தது. பூதசதுக்க மன்றம் : பூதசதுக்க மன்றம் என்பது ஒன்று. நான்கு தெருக்கள் கூடும் சந்தியிலே ஒரு பூதம் உண்டு. போலித் தவக்கோலம் பூண்டோர், பொய்யொழுக்கம் உள்ள பெண்கள், அரசுக்குக் கேடு சூழும் அமைச்சர், பிறர் மனைவியை விரும்பு வோர், பொய்ச் சாட்சி கூறுவோர் இவர்களையெல்லாம் என் கையில் உள்ள கயிற்றால் கட்டுவேன்; நிலத்தில் அறைந்து அவர்கள் உயிரைக் குடிப்பேன் என்று அப்பூதம் ஓங்கிய குரலில் முழங்கிக் கொண்டே யிருக்கும். அம்முழக்கம் சுற்றிலும் நான்கு காததூரம் வரையிலும் ஒலிக்கும். இதுதான் பூத சதுக்கம் என்பது. காவிரிப்பூம்பட்டினத்திலே திறமையுள்ள துப்பறியும் அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் மறைவாகக் குற்றம் புரிவோர் களையெல்லாம் கண்டுபிடித்துவிடுவார்கள். அவர்களுக்குக் கடுந்தண்டனை விதிக்கப்படும். போலித் துறவிகள், பொய் யொழுக்க மகளிர், தேசத்துரோக அமைச்சர்கள், பிறர்மனை விரும்பும் ஆண்கள், பொய்க்கரி புகல்வோர், புறங் கூறுவோர் இவர்களுக் கெல்லாம் கொலைத் தண்டனை கொடுக்கப்பட்டது. இவர்கள் பெரிய குற்றவாளிகளாகக் கருதப்பட்டனர். இத்தகைய குற்றங்கள் நிகழாமல் முன்னறிவிப்பும் செய்துவந்தனர். இவ் வுண்மையை விளக்குவதே பூத சதுக்க மன்றம். பாவை மன்றம்: பலரும் காணும் இடத்திலே ஒரு பதுமை நின்றுகொண்டிருக்கும். அரச நீதி தவறினாலும்,நீதிமன்றத்தோர் அறநூல் முறைக்கு மாறாக நீதி உரைத்தாலும் அப்பதுமை கண்ணீர் விட்டு அழும். நாவினால் கூறாமல் இவ்வாறு அடையாளத்தால் அநீதியை அறிவிக்கும். இதுவே பாவை மன்றம். அரசன் அநீதி செய்தாலும், நீதிமன்றத்தோர் அறந்த வறினாலும், பொதுமக்கள் பொறுக்கமாட்டார்கள்; தங்கள் துன்பத்தை எல்லோரும் அறியும்படி வெளிப்படையாகச் சொல்லிக் கண்டிப்பார்கள். ஆதலால் ஆட்சியும், நீதிமன்றமும் தவறு செய்யாமல் அறநெறியிலே செல்லும். இவ்வுண்மையை விளக்குவதே பாவை மன்றமாகும். ஐவகை மன்றம் பற்றிக் கூறப்படும் இச்செய்திகள் காவிரிப் பூம்பட்டினத்தின் சிறந்த ஆட்சியையே காட்டும். அந்நகரத்தில் திருட்டில்லை; மக்கள் நோயின்றி வாழ்ந்தனர்; மக்கள் நல்லொழுக்க முடன் வாழ்ந்தனர்; அரசும், நீதிமன்றமும் அற நெறியிலே நின்றன. இவ்வுண்மைகளையே ஐவகை மன்றங்கள் அறிவித்தன. ஐவகை மன்றம்பற்றிய இச்செய்திகள் இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே 111 முதல் 138 வரையில் உள்ள அடிகளில் கூறப்படுகின்றன. மேலே கூறியவைகளைக்கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அமைப்பை அறியலாம். அந்நகரில் வாழ்ந்த மக்கள், அவர்கள் ஆற்றிய தொழில்கள், அந்நகரில் நடந்த வாணிகம், பட்டினத்தின் சிறந்த தோற்றம், மக்கள் ஒழுக்கம் அரசாட்சியின் சிறப்பு இவைகளை யெல்லாம் காணலாம். சிலப்பதிகார காலத்திலே இவ்வளவு சிறப்புடன் இருந்த நகரம் இன்று உருவில் இல்லை; பெயரில்தான் சிறந்து நிற்கின்றது. காவிரிப்பூம்பட்டினத்தைப்பற்றிப் பத்துப் பாட்டில் உள்ள பட்டினப்பாலையிலும் காணலாம். பட்டினப்பாலை காட்டும் காவிரிப்பூம்பட்டினமும், சிலப்பதிகாரம் காட்டும் காவிரிப் பூம்பட்டினமும் ஏறக்குறைய ஒன்றாகவே காணப்படுகின்றன. ஒற்றுமை மிகுதி; வேற்றுமை குறைவு; அவ்வளவுதான். மதுரை மாநகரம் சிலப்பதிகார காலத்திலே மதுரை ஒரு சிறந்த நகரமாக விளங்கிற்று. அந்நகரில் செல்வம் குவிந்திருந்தது; பல தொழில்கள் நடைபெற்றன; பல வாணிகங்கள் நடைபெற்றன. மக்கள் மகிழ்ச்சி யுடன் வாழ்ந்தனர். செல்வக்குடியினர் பலர்இருந்தனர். மக்கள் தெய்வபக்தியுள்ளவர்களாக வாழ்ந்தனர். இக்காட்சியைப் புறஞ்சேரி இறுத்த காதையிலும், ஊர்காண் காதையிலும் காணலாம். மதுரை நகரைச் சுற்றிலும் கோட்டைமதில் சூழ்ந்திருந்தது; ஆழமான அகழியும் இருந்தது. கோட்டைமதிலின்மேல் வெற்றிக் கொடிகள் பல பறந்துகொண்டிருந்தன. நகரைச் சுற்றிலும் பறவைகள், பறந்தும் படிந்தும் காட்சி தரும் நீர்வளம் நிறைந்த கழனிகள் பல இருந்தன; சோலைகள் இருந்தன; நீர்வளம் நிரம்பிய பயிர்செய்த வயல்கள் இருந்தன; நீர் நிறைந்த தோட்டங்கள் இருந்தன; மூங்கில் குத்துக்கள் பந்தல்களைப் போல் வளர்ந்து செழித்திருந்தன. அங்கே அறநெறியைத் தவிர வேறுயாரும் அங்கில்லை. இந்த இடத்திற்குப் புறஞ்சேரி என்று பெயர். இச்செய்தி புறஞ்சேரி இறுத்த காதையின் இறுதியிலே காணப்படுகின்றது. (புறஞ்சேரி. 189-196) மதுரை நகரிலே பலதிறப்பட்ட தெய்வங்களுக்கும் கோயில்கள் இருந்தன. காலைப்பொழுதிலே அரசன்கோயிலிலும், கடவுளர் கோவில்களிலும் வாத்தியங்கள் பல முழங்கும். நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர்கள் வேதங்களை ஒதுவார்கள் அம் முழக்கம் பலர் காதிலும் விழும்; இந்த வேதமுழக்கம் ஒருபுறம். வீரர்கள் அரசன் வெற்றியைப் பாராட்டி விழாச் செய்வார்கள்; அந்த ஒசை ஒருபக்கம். போரிலே பிடித்துவந்த யானைகள் ஒருபுறத்தில் பிளிறிக் கொண்டிருக்கும்; வெற்றி கொண்ட யானைகளும் பிளிறும்; வரிசையாகக் கட்டப் பட்டிருக்கின்ற குதிரைகள் அசைவதனால் எழும்பும் ஒசை ஒருபுறம். பாணர்கள், வைகறைப் பொழுதிலே கிணை என்னும் வாத்தியத்தை வாசித்துப் பாடிக் கொண்டிருப்பார்கள். இம்முழக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கடல் ஒலிபோல் அடங்கும். காலைப்பொழுதிலே மதுரைமாநகர் இவ்வாறு காணப்படும். (புறஞ்சேரி. 137-150) மதுரைக் கோட்டை வாசலிலே காவலர்கள் இருந்தனர். அவர்கள் வாள் யுத்தத்திலே வல்லவர்கள்; யவன தேசத்து வீரர்கள். (ஊர்காண். 66-67) அங்காடி வீதி தனியாக இருந்தது. அங்கே வண்டிகள், வண்டிச் சக்கரங்கள், வண்டியின் மேல்பாகத்திற்கு வேண்டிய கருவிகள் முதலியன விற்பனை செய்யப்படும். வீரர்களுக்கான கவசம், அங்குசம், இடுப்பில் அணியும் பட்டிகை (பெல்ட்), தலையில் அணியும் குழியம் (தொப்பி), வெண்சாமரம், பலவகையான கேடயங்கள், குத்துக் கோல்கள் இவைகள் எல்லாம் விற்பனை செய்யப்படும். செம்பு, முறி, வேறு புதிய உலோகங்கள் இவைகளால் செய்யப்பட்ட சங்கிலிகள் விற்கப்படும். வெட்டவும் அறுக்கவும் பயன்படும் கருவிகள், யானைத் தந்தம் முதலியவைகளைக் கடைவதற்கான கருவிகள் இவைகளும் விற்பனை செய்யப்படும். பூவால் புனைந்த பலவகைப்பட்ட மாலைகள் விற்பனை செய்யப்படும். அந்த அங்காடியிலே இந்தப் பண்டம், இன்னதற்குப் பயன்படும் என்று அறியமுடியாத பல பண்டங்கள் குவிந்திருக்கும். அரசரும் காணவிரும்பும் செல்வம் நிறைந்த அங்காடி வீதி இவ்வாறு காட்சியளிக்கும். இது நாள் அங்காடியாகும். (ஊர்காண். 168-179) இரத்தினங்கள் விற்பனை செய்யும் கடைவீதி தனியாக இருந்தது. அங்கே நவரத்தினங்களும் கிடைக்கும். எந்தவித உயர்ந்த இரத்தினங்களையும் பெறலாம். (ஊர் காண் 180-200) பொன் வியாபாரம் செய்யும் கடைத்தெரு-காசுக்கடைகள்-தனியாக இருந்தன. அங்கே காசுக்கடைகள் மட்டுந்தான் இருந்தன. காசுக்கடை; பொன்கடை. (ஊர்காண். 201-204) துணிகள் - அறுவைகள் - விற்பனை செய்யும் கடைத் தெரு தனியாக இருந்தது. அங்கே நூலாடை - மயிராடை - பட்டாடை ஆகியவைகள் விற்பனை செய்யப்பட்டன. (ஊர்காண் 205-207) உணவுப் பொருள் விற்பனை செய்யப்படும் கடைவீதி தனியாக இருந்தது. அதற்குக் கூலவீதி என்று பெயர். நிறுத்தும் அளந்தும் கொடுக்கும தரகர்கள் அக் கடைவீதியிலே திரிந்து கொண்டிருப்பார்கள். இக் கடைவீதியில் உள்ள கடைகள் இரவு பகல் எப்பொழுதும் திறந்திருக்கும். எச்சமயத்திலும் உணவுப் பண்டங்களை வாங்கலாம். (ஊர்காண். 208-211) அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகை வருணத்தோரும் தனித்தனி வீதிகளிலே வாழ்ந்தனர். முச்சந்தி களும், நாற்சந்திகளும் இருந்தன. மக்கள் தெய்வங்களுக்குப் பலியிட்டு வணங்கும் மன்றங்களும் இருந்தன. சந்துகளும் பெருந்தெருக்களும் இருந்தன. (ஊர்காண். 212-214) சிலப்பதிகார காலத்திலே மதுரை நகரத்தின் கடைவீதிகள் ஏறக்குறைய இன்றைய கடைவீதிகளைப்போலவே இருந்தன. மேலே கூறப்பட்ட சிலப்பதிகாரக் காட்சியையும், மதுரையின் இன்றைய கடைவீதிகளின் அமைப்பையும் ஒத்திட்டுப் பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். சில ஆண்டுகளுக்குமுன் வரையிலும் சொக்கநாதர் கோவில் சந்நிதியின் வடபுறம் ஒரு வெட்டவெளியாகக் கிடந்தது. அதை அந்திக்கடைப் பொட்டல் என்று மக்கள் வழங்கி வந்தனர். இங்கு மாலை நேரங்களில் அங்காடி வியாபாரம் நடைபெற்று வந்தது; அதனால் இப்பெயரால் வழங்கினர். இன்று அந்த இடம் கடைத் தெருவாகவும், இளமரக்கா (பார்க்) வாகவும் காட்சி அளிக்கின்றது. இந்த இடத்தைச் சிலப்பதிகார ஆசிரியர் ஆவண வீதி என்று குறிப்பிட்டுள்ளார். ஆவண வீதி என்பதற்கு, கோயில் அங்காடி என்று அடியார்க்கு நல்லார் பொருள் கூறியிருக்கின்றார். ஆதலால், அந்த அந்திக்கடைப் பொட்டல் தான் கோயில் அங்காடி என்று வழங்கியிருக்க வேண்டும் என்று எண்ண இடந்தருகின்றது. மதுரையிலே சிலப்பதிகார காலத்திலே பொதுமகளிர் கூட்டம் நிறைந்திருந்தது. அவர்கள், செல்வம் நிறைந்த காமுகர் களோடு கூடி வாழ்வர். அவர்கள் நா ணம் அற்றவர்கள். வையைத் துறையிலே அவர்கள், காமுகர்களுடன் சேர்ந்து ஓடம்விட்டு விளையாடு வார்கள். இது அவர்களுடைய காலைப் பொழுது விளையாட்டு. நடுப்பகலிலே, தலையிலே, முல்லை, குவளை, நெய்தல் மலர்களை வெளியிலே தெரியும்படி, கொண்டையிலே மிகுதியாக வைத்துக் கொள்ளுவார்கள். மலர்மாலைகளையும், முத்து மாலை களையும் கழுத்திலே பூண்பார்கள். உடம்பிலே சந்தனக் குழம்பைப் பூசிக்கொள்ளுவார்கள். பொருளை அள்ளிக் கொடுக்கும் காமுகர்களுடன் கூடிப் பொழில்களிலே விளையாடுவார்கள். மாலைக்காலத்திலே அவர்கள் நன்றாகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளுவார்கள், காமுகர்கள், தங்கள் அழகைப் பார்த்துப் பாராட்டும்படி நிலாமுற்றத்திலே பஞ்சணைமீது அமர்ந்திருப்பார்கள். தங்களை நாடிவந்த காமுகர்களை மயக்கிப் பொருள் பறிப்பார்கள். இப் பொதுமகளிர், கார்காலத்திலே எப்படிப் பொழுது போக்குவார்கள்? கூதிர்காலத்திலே எப்படிப் பொழுது போக்குவர்? முன்பனிக்காலம், பின்பனிக்காலங்களிலே எப்படிப் பொழுது போக்குவர்? இளவேனிற்காலம், வேனிற்காலக் கடை நாள் - இந்நாட்களிலே எப்படிப் பொழுதுபோக்குவர்? என்பதைச் சிலப்பதிகாரத்திலே விளக்கமாகக் காணலாம். இவர்கள் செல்வர்களாலும், அரசர்களாலும் விரும்பப்பட்டனர். ஊர்காண் காதையில் 70 முதல் 145 வரையில் உள்ள அடி களை இப் பொதுமகளிர் கவர்ந்துகொண்டிருக்கின்றனர். மேலும் இவர்களுடைய திறமையும் சிறப்பும் கூறப்பட்டிருக்கின்றன. மதுரை நகரில் இருந்த கணிகையர்-பொதுமகளிர்-விலை மகளிர்-கதியிலார்-நடனத்திலே சிறந்தவர்கள்-அரசர்க்காடும் கூத்தான வேத்தியலையும், பொதுமக்களுக்கு ஆடும் கூத்தான பொதுவியலையும் நன்றாக உணர்ந்தவர்கள். வாய்ப்பாட்டிலும் இசைக்கருவிகளை வாசிப்பதிலும் தேர்ந்தவர்கள். அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்த உண்மையான கலைஞர்கள். இவர்கள் தம் கண்பார்வையாலும், இனிய சொற்களாலும், எவரையும் ஏமாற்றிவிடுவார்கள். தவநெறிச் செல்வோரையும், வாலிபர்களையும், காமுகர்களையும் தம் வசப்படுத்தும் திறமை யுள்ளவர்கள். இவர்களிலே பெருந்தனம் படைத்தவர்கள், சிறுதனம் படைத்தவர்கள் என இருவகையினர் உண்டு. பெருஞ்செல்வம் படைத்த கணிகையர் வீதி தனியாக இருந்தது; குறைந்த செல்வம் உள்ள கணிகையர் வீதி தனியாக இருந்தது. (ஊர்காண். 146-167) இவ்வாறு கணிகையர் வாழ்வையும், அவர்கள் திறமை யையும், அவர்கள் வாழும் தெருக்களையும் சிலப்பதிகாரம் விரித்துரைக் கின்றது. இதிலிருந்து நாம் காணும் உண்மை ஒன்றுண்டு. சிலப்பதிகார காலத்திலே மதுரை நகரிலே செல்வர்கள் நிறைந்திருந்தனர்; அவர்கள் கணிகையர் கூட்டுறவை நாடி இன்பமாகப் பொழுது போக்கினர் என்பதுதான் அவ்வுண்மை. சிலப்பதிகார காலத்திலே மதுரைநகர்ப்புறம் நல்ல வளமுடன் இருந்தது. நகரைச் சுற்றிக் கோட்டைமதிலும், அகழும் இருந்தன. நகருள் பல வீதிகள் இருந்தன; வாணிகம் விரிவாக நடைபெற்றது; செல்வர்கள் நிறைந்திருந்தனர்; கணிகையர்கள் கூட்டமும் நிறைந்திருந்தது; பல கோயில்களும் இருந்தன. மதுரை நகரில் காலை முதல் மாலை வரை கடல்ஒலி போன்ற முழக்கம் இருந்தது. இச்செய்திகளைச் சிலப்பதிகாரம் அறிவிக்கின்றது. மேலே எடுத்துக் காட்டியவைகளைக் கொண்டு இவைகளைக் காணலாம். சிலப்பதிகார காலத்திலே இருந்ததைவிட மதுரைமாநகரம் இன்று பெருஞ்சிறப்புடன் விளங்குகின்றது. பெரிய நகரமாகவும் இருக்கின்றது. மதிலும், அகழும் மறைந்துவிட்டாலும்கூட அந்நாள் அழகைவிட இந்நாள் அழகு குறைந்து விடவில்லை. இது தமிழர் பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய செய்தியாகும். சிலப்பதிகார காலத்திற்கு முன்னிருந்த மதுரையின் தோற்றத்தை மதுரைக்காஞ்சியிலே காணலாம். மதுரைக் காஞ்சியிலே காணப்படும் மதுரையும், சிலப்பதிகாரத்தில் காணப் படும் மதுரையும் பெரும் பாலும் ஒத்திருக்கின்றன; சிறிதளவுதான் வேற்றுமை காணமுடியும். மூவேந்தர் பெருமை சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களின் பெருமையையும் சிலப்பதிகாரத்திலே காணலாம். அவர்களுடைய வீரம், கொடை, அறந் தவறாத நடத்தை இவைகள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாகத் தமிழர் பெருமை குறிக்கப்படுகின்றது. மூவேந்தர்களின் பெருமை, நூலின் முதலிலிருந்து முடிவு வரையிலும் கலந்து கிடக்கின்றது. முதலில் சோழர் சிறப்பைக் காண்போம். சோழர் முதலில் திங்களைப் போற்றுதும் என்று தொடங்கும் மங்கல வாழ்த்துப் பாடல்கள் நான்கிலே முதல் மூன்று பாடல்கள் சோழர் பெருமையைக் கூறுகின்றன. இவைகள் சோழர்களின் செங்கோன்மையை விளக்குகின்றன. இதன்பின் முதல்முதல் பெயர் சுட்டிக் குறிக்கப்படும் மன்னன் கரிகால் வளவன், இவனுடைய புகழும், வீரமும் போற்றப்படு கின்றன. கரிகாற்சோழன் போர்புரிவதிலே பேராசையுள்ளவன், தமிழக எல்லையுள் அவனை எதிர்ப்போர் யாரும் இல்லை. தன்னிகர் இல்லாத வீரனாக விளங்கினான். வடதிசை பெருந்திசை யாதலால் அங்கே பகைவரைப் பெறலாம் என்று கருதினான். நல்லநாளிலே, வாள், குடை, முரசுகளை முன் செல்ல விட்டான். என் புயங்கள் பகைவர்களைப் பெறுக என்று வழிபடு தெய்வத்தை வணங்கினான். வடதிசை நோக்கிப் போர் முழக்கத்துடன் புறப்பட்டான். வடக்கே செல்லும்போது இமயமலை குறுக்கிட்டது. அதற்கு மேல் போக முடியவில்லை. மனஞ் சலித்துத் திரும்பினான். இமயமலை தனது செலவைத் தடுத்ததற்காக அதன் மேல் சினங் கொண்டான். அம்மலையின்மேல் தனது புலி முத்திரையைப் பொறித்து மீண்டான். திரும்பி வரும்போது, கடலையே தனது நாட்டுக்குக் காவலாகக் கொண்ட வச்சிரநாட்டு வேந்தன் கரிகாலனுக்குப் பணிந்தான்; அவனுடைய முத்துப் பந்தரைக் கப்பமாகக் கொடுத்தான். மகதநாட்டு மன்னன் வாட்போரிலே வல்லவன். அவன் கரிகாலனை எதிர்த்துப் பொருதான்; தோல்வியடைந்தான். அவன் தன் பட்டிமண்டபத்தைத் திறையாகக் கொடுத்துப் பணிந்தான். அவந்தி நாட்டு அரசன், கரிகாலனுடன் போர் செய்ய வில்லை; நண்பனாக நின்று வரவேற்றான். தனது நட்புக்கு அடையாள மாக வாயில்தோரணம் ஒன்றைக் கொடுத்தான். முத்துப்பந்தல், பட்டிமண்டபம், வாயில்தோரணம் இவைகள் எல்லாம் மயன் என்னும் தெய்வத் தச்சனால் ஆக்கப்பட்டவை. இருநில மருங்கின் பெருநரைப் பெறாஅ செருவெம் காதலின், திருமா வளவன் வாளும், குடையும், மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார்ப் பெறுகஇம் மண்அக மருங்கின் என் வலிகெழு தோள் என புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் அசைவுஇல் ஊக்கத்து நசைபிறக்கு ஒழிய பகைவிலக்கியது இப்பயம்கெழு மலை, என, இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலை கொடுவரி ஒற்றிக், கொள்கையின் பெயர்வோற்கு மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக் கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும், மகதநல் நாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும் (இந்திர விழவு. 89 -104) இவ்வடிகள் கரிகாலன் வரலாற்றைக் கூறின. இதன்பின் கடலாடு காதையிலே முசுகுந்தச் சக்கரவர்த்தி என்னும் சோழனுடைய வரலாறு சொல்லப்படுகின்றது. இவ் வரலாற்றைச் சிறுகதை யென்னும் பகுதியிலே காணலாம். பொன்இமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ஆண்டான் மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன் என்று பின்னும் ஆய்ச்சியர் குரவையிலே கரிகால் வளவன் வரலாறு காணப்படுகின்றது. இதுவும் அவன் இமயத்திலே புலிமுத்திரையிட்ட செய்தியைச் சுட்டுகின்றது. இதன்பின் வாழ்த்துக் காதையிலும் கரிகாலன் பெருமை காணப்படுகின்றது. வடவரைகள் ஓர்எட்டும் கண்இமையா காண, வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார் அம்மானை, வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன், திக்குஎட்டும் குடைநிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண்! அம்மானை; கொற்றவன் பூம்புகார் பாடேலோர் அம்மானை. இதுவும் கரிகாலன் இமயத்திலே முத்திரையிட்டதைக் குறித்தது. நீர்ப்படைக் காதையிலும், வாழ்த்துக் காதையிலும் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன், சிபிச்சோழன் இவர்கள் வரலாறுகள் காணப்படுகின்றன. மூன்று மதில்கள் பொருந்திய ஒரு நகரம்; அது வானத்தில் அசைந்து செல்லும் தன்மையுள்ளது. அந்நகரில் அசுரர்கள் வாழ்ந்து வந்தனர். சோழ மன்னன் தேவர்கள் வியக்கும் படி அந்நகரை அழித்தான். அசுரர்களை வென்றான். இவன் பெயர் தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன். சிபிச்சோழன் கொடையில் சிறந்த வள்ளல். அவன் தன்னைச் சரண் அடைந்த ஒரு புறாவின் உயிரைப் பாதுகாத் தான். அதைத் துரத்தி வந்த பருந்துக்கு அப் புறாவின் எடையுள்ள சதையைத் தன் உடம்பில் இருந்து அரிந்து கொடுத்தான். இதன் மூலம் புகழ் பெற்றான் அவன். வெயில் விளங்கு மணிப்பூண் விண்ணவர் வியப்ப எயில்மூன்று எறிந்த இகல்வேல் கொற்றமும், குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர, எறிதரு பருந்தின் இடும்பை நீங்க அரிந்துஉடம்பு இட்டோன் அறந்தரு கோலும் (நீர்ப்படை. 164-169) இவ்வடிகள் மேலே குறிப்பிட்ட இரண்டு சோழர்கள் வரலாற்றையும் கூறின. வீங்குநீர்வேலி உலகு ஆண்டு விண்ணவர்கோன் ஓங்குஅரணம் காத்த உரவோன்யார் அம்மானை, ஓங்குஅரணம் காத்த உரவோன், உயர்விசும்பில் தூங்குஎயில் மூன்றுஎறிந்த சோழன்காண்! அம்மானை; சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை. புறவு நிறைபுக்குப், பொன்உலகம் ஏத்த, குறைவுஇல் உடம்புஅரிந்த கொற்றவன்யார் அம்மானை, குறைவுஇல் உடம்புஅரிந்த கொற்றவன், முன்வந்த கறவை முறைசெய்த காவலன்காண்! அம்மானை; காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை. இவ்விரண்டு பாடல்களும் மேலே காட்டிய சோழர்களின் கதைகளையே கூறின. சிபியைக் குறிக்கும் செய்யுளில் குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன், முன்வந்த கறவை முறைசெய்த காவலன் என்று குறிக்கப்பட்டுள்ளது. இது, சிபியும், பசுவுக்கு நீதி வழங்கிய சோழனும் ஒருவன்தான் என்னும் பொருள்படும் படி அமைந்திருக்கின்றது. குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன், கறவைக்கு நீதி வழங்கிய காவலன் மரபிலே வந்தவன் என்று பொருள் கொண்டால் தான் இருவரும் வெவ்வேறு சோழர்கள் என்று கருதலாம். கறவை: பசு. வழக்குரை காதையிலும் சிபிச் சோழன் வரலாறு சொல்லப் படுகின்றது. பசுவுக்கு நீதி வழங்கிய சோழன் வரலாறும் சொல்லப் படுகின்றது. இங்கே புறாவுக்கு அருளினோன் வேறு, ஆவுக்கு முறை செய்தோன் வேறு என்றுதான் காணப்படுகின்றது. எள்அறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்உறு புன்கண் தீர்த்தோன்; அன்றியும் வாயில் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுட, தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும் பெயர்ப் புகார் (வழக்குரை 51-56) இவ்வடிகள் சிபியின் வரலாற்றையும், கறவைக்கு முறை செய்த சோழன் வரலாற்றையும் குறித்தன. கறவைக்கு முறை செய்த சோழனையே பிற்காலத்தார் மனுநீதி கண்ட சோழன் என்று பெயர் குறித்தனர். கரிகால் சோழன், முசுகுந்தன், தூங்கெயில் எறிந்த சோழன், சிபிச் சோழன், கறவைக்கு முறைசெய்த சோழன் ஆகியவர்களின் பெருமையைச் சிலப்பதிகாரம் பலவிடங்களில் பாராட்டிப் பேசுகின்றது. அவைகளே மேலே எடுத்துக் காட்டப் பட்டன. பாண்டியர் பாண்டியர் புகழும் பெருமையும் பலவிடங்களில் பாராட்டப் படுகின்றன. அவர்களுடைய ஆட்சிமுறையும் போற்றப்படுகின்றது. அந்திமாலை சிறப்புச்செய் காதையிலே சந்திரோதயத்தைப் பற்றிக் கூறும் இடத்திலே பாண்டியர் குலப் பெருமையைக் காணலாம். பாண்டியன் வயதால் இளைஞனாயினும், பகை வேந்தரைப் போரிலே அழிக்கும் ஆற்றல் உள்ளவன். இத்தகைய தென்னர்குல முதல்வனே சந்திரன். அச் சந்திரன், அந்தி நேரத்திலே செவ்வானத்திலே வெண்பிறையாகத் தோன்றினான். காதலரைக் கவலைக்குள்ளாக்கும் மாலைப்போதாகிய குறுநில வேந்தரைக் கடிந்தான். தனது அரசியலிலே தவறாமல் வெண்மையான கதிர்களைப் பரப்பினான். இளையர் ஆயினும் பகைஅரசு கடியும் செருமாண் தென்னர் குலமுதல் ஆகலின், அந்தி வானத்து வெண்பிறை தோன்றி, புன்கண் மாலைக் குறும்புஎறிந்து ஓட்டி பான்மையில் திரியாது பால்கதிர் பரப்பி (அந்திமாலை 21-25) இவ்வடிகள் பாண்டியர் பெருமையைப் பாடின. இவற்றால் அவர்கள் புகழை அறியலாம். பாண்டியர் ஆளும் நாட்டிலே யாரும் துன்புறமாட்டார்கள்; எவருக்கும், யாரும் துன்பம் செய்யமாட்டார்கள். இயற்கையிலே ஒன்றோடு ஒன்று பகைமை பாராட்டும் உயிர்களும் பகையின்றி ஒன்றுபட்டு வாழும் என்று மற்றோர் இடத்திலே கூறப்படு கின்றது. கரடியும் புற்றுத் தோண்டாது; மான்கூட்டத்தைக் கண்டால் புலி பகைக்காது; பாம்பும், அச்சந்தரும் வேறு பிராணிகளும், இரைதேடும் முதலையும், இடியும் தம்மைச் சார்ந்தவர்க்குத் துன்பந் தரமாட்டா. செங்கோல் தவறாமல் தென்னவர் காக்கும் நாடு இத்தகைய சிறப்புற்றது. கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா; வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா; அரவும், சூரும், இரைதேர் முதலையும் உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடு (புறஞ்சேரி 5-10) இவ்வடிகளும் பாண்டிய மன்னர்களின் ஆட்சிப் பெருமையை விளக்கின. பாண்டியன் நெடுஞ்செழியன், தான் குற்றவாளி என்பதை உணர்ந்தவுடன் வருந்தி உயிர் துறந்தான். இது பாண்டியர் பெருமையை - நீதிமுறையை - உணர்த்தும். செங்கோல் வளைய உயிர்வாழார் பாண்டியர் என்று வாழ்த்துக் காதையிலே பாராட்டப்படுகின்றது. ஒரு பாண்டியன் கடல் வற்றும்படி வேலாயுதத்தை விட்டெறிந்தான். அப்பகை காரணமாகக் கடல் கொதித்து எழுந்தது. பஃறுளி ஆறு, பல பக்கமலைகளையுடைய குமரிக்கோடு இவைகளுக்கிடையிலிருந்த நிலத்தை விழுங்கிற்று. அதனால் அப்பாண்டியன் அப்பகுதியைவிட்டு வெளியேறினான். வட திசையிலே கங்கையையும், இமயத்தையும் எல்லையாகக் கொண்டு தென்னகத்தை ஆண்டான். இவனை நிலம்தரு திருவில் பாண்டியன் என்பர். சந்திரகுலமாகிய பாண்டியர் பரம்பரை மேம்படும்படி, இந்திரனுடைய வலிமை பொருந்திய, ஆரத்தைத் தன் மார்பிலே அணிந்து விளங்கினான் மற்றொரு பாண்டியன். ஒரு பாண்டியன் இந்திரன் முடியில் உள்ள வளையத்தை உடைத்தான். அதனால் இந்திரன் ஆணைக்கு அடங்கிய மழை, பாண்டிய நாட்டிலே பெய்யவில்லை. இதைக் கண்ட பாண்டியன் சினங்கொண்டான். மேகங்களைப் பிடித்துச் சிறையிலிட்டான். அதன்பின் மழை பெய்தது; நாடு செழித்தது. இவ்வரலாறுகள் பாண்டியரின் பழம்பெருமையைக் கூறின. வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடும்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி! திங்கள் செல்வன் திருக்குலம் விளங்க செங்கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி! முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று இடிஉடைப் பெருமழை எய்தாது ஏக, பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க! (காடுகாண் 18-29) இவ்வடிகள் மேலே கூறிய பாண்டியர்களின் வரலாற்றைக் கூறுவன. கடல் சுவற வேல் விட்டவன், இந்திரன் ஆரத்தைப் பூண்டவன், இந்திரன் முடிமேல் வளையெறிந்தவன், மேகங் களைச் சிறைப் படுத்தியவன் உக்கிர வன்மன் என்ற ஒரே பாண்டியன் என்று திருவிளையாடல் புராணம் கூறும். கீரந்தை யென்னும் பார்ப்பனன் தன் மனைவியைத் தனியாக விட்டுத் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டான். அப்பொழுது அவள், பாதுகாவலற்ற இவ்வீட்டிலே எனக்கு யார் துணை! என்றாள். அவன், அரசவேலி காக்கும் என்று சொல்லிச் சென்றான். இதை மறைவிலே நின்று கேட்ட பாண்டியன், நாள்தோறும் அப் பார்ப்பனிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் கீரந்தை யாத்திரையிலிருந்து திரும்பி வந்தான். அன்றிரவு, அவனும் அவன் மனைவியும் வீட்டிற்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். பரிசோதனைக்குச் சென்ற பாண்டியன் அவ்வீட்டின் கதவைத் தட்டினான். அதனால் ஐயமுற்ற அந்தணன் இது என்ன? என்று கேட்டான். அவன் `நீர் கூறியபடி அரசவேலி காவாதோ? என்றாள். இதைக்கேட்ட அரசன் துணுக்குற்றான். அந்தணனுக்குத் தன் மனைவியின் மேல் ஐயம் பிறக்காதிருக்க அவ்வரிசையிலிருந்த அந்தணர்கள் வீட்டுக் கதவுகளை யெல்லாம் தட்டிவிட்டுப் போய்விட்டான். அனைவரும், யாரோ திருடன்தான் இவ்வாறு இரவிலே கதவைத் தட்டினான் என்று எண்ணிக்கொண்டனர். மறுநாள் அரசவையில் இதுபற்றிய பேச்சு நடந்தது. இக்குற்றம் புரிந்த வனுக்கு என்ன தண்டனை விதிக்கலாம் என்று கேட்டான் அரசன் அத்திருடன் கையை வெட்டவேண்டும். என்றனர். உடனே பாண்டியன், தன் வாளை உருவினான்; தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான். அனைவரும் வியந்தனர். பின்னர் மன்னனுடைய வெட்டுண்ட கை, பொன்கையாக வளர்ந்தது. இவனுக்குப் பொற்கைப் பாண்டியன் என்று பெயர். இப் பொற்கைப்பாண்டியனைப் பற்றிய குறிப்பும் சிலப்பதி காரத்திலே காணப்படுகின்றது. கட்டுரை காதையிலே இவ் வரலாற்றைச் சிறிது வேறுபடக் காணலாம். பராசரன் என்னும் அந்தணன் சேரமன்னனிடம் பெரும் பரிசு பெற்றுப் பாண்டி நாட்டின் வழியாக வந்தான். அவன் வரும் வழியில் தங்கால் என்னும் ஊரில் தங்கினான். அவன் எதிரில் பிராமணச் சிறுவர்கள் பலர் விளையாடிக்கொண்டிருந்தனர், அவர்களைப் பார்த்து, என்முன் தவறு இல்லாமல் வேதம் ஓதுவோர், நான் வைத்திருக்கும் இச் செல்வப் பொதியைப் பெறலாம் என்றான். அப்பொழுது வார்த்திகன் என்னும் அந்தணன் மகனாகிய தக்கிணன் என்னும் சிறுவன் தவறு இல்லாமல் - சந்தம் கெடாமல் வேதம் ஓதினான். பராசரன் மகிழ்ச்சியடைந்து தன் செல்வப் பொதியை அவனிடம் கொடுத்துப் போய்விட்டான். தக்கிணன் அதைத் தன் தந்தையிடம் கொண்டு போய்க் கொடுத்தான். இதன் மூலம் வார்த்திகன் நல்ல ஆடை ஆபரணங்களும், செல்வமும் பெற்றுச் சிறந்து விளங்கினான். இதைக்கண்ட அரசன் பணியாளர் சிலர் பொறாமை கொண்டனர், வார்த்தி கனைத் திருடன் என்று சொல்லிச் சிறையில் இட்டனர்; அவன் செல்வத்தைக் கவர்ந்தனர். வார்த்திகன் மனைவி கார்த்திகை என்பவள் துக்கம் தாங்காமல் நிலத்திலே வீழ்ந்து புரண்டு புலம்பினாள். அவ்வூர் ஐயை கோயில் கதவு தானே அடைத்துக்கொண்டது, யாராலும் அதைத் திறக்க முடியவில்லை. இதை அறிந்த பாண்டியன் ஏதோ அநீதி நேர்ந்த தனால்தான் ஐயை கோயில் கதவு அடைத்தது என்று கருதினான். பணியாளரை விசாரித்தான், வார்த்திகன் மீது குற்றம் சுமத்திச் சிறையிலிட்ட செய்திகேட்டான். வார்த்தி கனை அழைத்து உண்மையை உணர்ந்தான். வார்த்திகனுக்குச் செய்த தீமையால்தான் கோயில் கதவு அடைத்தது என்பதை அறிந்தான். அதற்குப் பிராயச்சித்தமாகத் தங்கால் என்னும் ஊரையும், வயலூர் என்னும் ஊரையும் வார்த்தி கனுக்கு இனாமாக வழங்கினான். தன் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும் என்று நிலத்திலே வீழ்ந்து வணங்கினான். அதன் பிறகு தான் ஐயை கோட்டத்தின் கதவு திறந்தது. பொற்கைப் பாண்டியன், வார்த்திகனுக்கு நீதி வழங்கிய பாண்டியன் - இவ்விரு கதைகளும் கட்டுரை காதையிலே காணப் படுகின்றன. இவ்வாறு பாண்டிய மன்னர்களின் வரலாறுகளும், அம்மன்னர்களின் புகழும், பெருமையும், அறநெறியும் சிலப்பதி காரத்திலே பல இடங்களில் சொல்லப்படுகின்றன. சேரர் சேரமன்னர்கள் வீரத்திலே சிறந்தவர்கள்; செங்கோல் தவறாமல் அரசாட்சி செய்தவர்கள். அவர்கள் சிறப்பும், செயலும் சிலப்பதி காரத்தில் சொல்லப்படுகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன் மறைவைப் பற்றிச் செங்குட்டுவன் கேட்டான். உடனே மன்னர்களின் நிலையைப் பற்றிய எண்ணமே அவன் நிலைவுக்கு வந்தது. அரசர்களின் கடமையைப்பற்றிக் கருதினான். அவன் கருதியதை வெளிப் படையாக உரைத்தான். பாண்டியனது செங்கோல், ஊழ்வினையால் கொடுங் கோலாக்கப்பட்டது; அதனை அவன் விட்ட உயிர் நிமிர்த்து, மீண்டும் செங்கோலாகச் செய்தது, நாட்டிலே மழைவளம் குறைந்தாலும் அரசர்களுக்கு அச்சம்; உயிர்கள் துன்புற்றாலும் அச்சம், குடிகளைக் காத்துக் கொடுங்கோலுக்கு அஞ்சி அரசாளும் குடியிலே பிறப்பதால் துன்பந்தான்; பிறர் பாராட்டும் படியான இன்பம் எதுவும் இல்லை. வல்வினை வளைத்த கோலை மன்னவன் செல் உயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது; மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம்; பிழைஉயிர் எய்தின் பெரும்பேர் அச்சம்; குடிபுரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவுஇல் (காட்சி 98-105) இவ்வடிகள் செங்குட்டுவன் கருத்தை விளக்கின; சேர மன்னர்களின் சிறப்பையும் குறித்தன. நாடு செழிப்படையவும், குடிகள் இன்புறவும், ஆவன செய்து ஆளுவதே அரசர் கடமை என்று சேரர்கள் எண்ணினர்; இதையே தங்கள் கொள்கையாகக் கொண்டிருந்தனர். இவ்வுண்மையையும் இவ்வடிகளால் அறியலாம். பகைவர்களால் தமது நாட்டுக்கு எத்தகைய இடையூறும் நேரக்கூடாது; அவர்களால் தமது குடிமக்கள் துன்பத்திற்கு ஆளாகக் கூடாது; பகைவர்களைப் பணியவைத்துக் குடி மக்களைக் காப்பாற்ற வேண்டும். இதுவே அரசர்கள் கடமை என்பது சேரமன்னர்களின் சிறந்த கொள்கை. பகை அரசு நடுக்காது, பயம்கெழு வைப்பின் குடி நடுக்குறூஉம் கோலேன் ஆகுக பகை அரசர்களை நடுங்கிப் பணியவைக்காமல், குடிகளை நடுங்கச் செய்கின்ற கொடுங்கோலேன் ஆவேன் என்று செங் குட்டுவன் உரைக்கின்றான். எம்மை இகழ்ந்த வடதிசை மன்னர் முடித்தலையிலே கண்ணகிச் சிலைக்கான இமயக்கல்லை ஏற்றி வருவேன்; இன்றேல் மேற்கண்ட செயலையுடைய கொடுங் கோல் மன்னன் ஆவேன் என்று செங்குட்டுவன் உரைத்ததாகக் கால்கோள் காதையிலே காணப்படுகின்றது. இதுவும் சேர மன்னர்களின் சிறப்பைக் காட்டுவதாகும். சேரமன்னர்களின் சிறந்த செயல்கள் சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் பாராட்டப்பட்டிருக்கின்றன. பதிற்றுப்பத்திலே மூன்றாம்பத்தின் தலைவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன். அவனைப் பாலைக்கௌதமனார் என்னும் புலவர் பத்துப் பாடல்களால் பாராட்டினார். அப்பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த குட்டுவன், நீர், வேண்டியதைப் பெறுமின்! என்றான். புலவர், யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புக வேண்டும் என்றார். உடனே குட்டுவன், பார்ப்பாரில் பெரியோர் களைக் கேட்டு, அவர்கள் காட்டிய வழிநின்று ஒன்பது பெரு வேள்விகளைச் செய்து முடித்தான். பத்தாவது வேள்வியைச் செய்து கொண்டிருக்கும் போது பாலைக்கௌதமனாரும், அவர் மனைவியும் மறைந்தனர். இக்கதை பதிற்றுப்பத்து, மூன்றாம் பத்தின் பதிகத்து இறுதியிலே காணப்படுகின்றது. வண்தமிழ் மறையோற்கு வான்உறை கொடுத்த திண்திறல் நெடுவேல் சேரலன் வளம் நிறைந்த தமிழ்ப் புலவனாகிய வேதியனுக்குச் சுவர்க் கத்தைக் கொடுத்தவன்; வலிமை பொருந்திய நீண்ட வேற் படையையுடைய சேரன் என்று சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலே இவ்வரலாறு காணப்படுகின்றது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன் சிறந்த வீரன்: ஒரு தீவிலே வசித்த பகைவேந்தர்கள் கடல்வழியாகப் படையெடுத்து வந்தனர். இவன் அவர்களுடைய கடற்படையை அழித்தான். அவர்கள் வாழ்ந்த தீவில் இருந்த அவர்களுடைய காவல்மரமாகிய கடம்ப மரத்தையும் வெட்டி வீழ்த்தினான். இந்த நெடுஞ்சேரலாதன் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். அங்கிருந்த மன்னர்களை எல்லாம் வென்றான். இமயத்தின் மேல் வில் முத்திரையிட்டு மீண்டான். இவன் தமிழகம் முழுவதையும் ஆட்சி புரிந்தான், யவனர் களைவென்று, அவர்களைப் பிணித்து, அவர்கள் தலையிலே நெய்விளக்கேற்றிவைத்துக் கொணர்ந்தான். அவர்களிடமிருந்த செல்வங்களையெல்லாம் பறித்துத் தன் ஊர்க்குக் கொண்டு வந்தான். அவைகளைப் பிறர்க்கு உதவினான். இவ்வரலாறு பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் காணப்படுகின்றது. இவனுடைய வரலாறு சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றது. கடலைக் காவலாக உடைய நாட்டின் காவல்மரமான கடம்பை வெட்டி வீழ்த்தினான். வானோர் அஞ்சும்படி இமய மலையின் மேல் வில்லின் முத்திரையை வைத்தான். இவன் சேரர்குலத் தோன்றல். மாநீர் வேலிக் கடம்புஎறிந்து, இமயத்து வானவர் மருள, மலைவில் பூட்டிய வானவர் தோன்றல் இவ்வடிகள் காட்சிக் காதையிலே காணப்படுகின்றன. இவை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறிப்பவை. கடம்பு முதல் தடிந்த காவலன். என்று, இவன், வாழ்த்துக் காதையிலும் குறிக்கப்படுகின்றான். இந்த இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கிரேக்க நாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான்; தன்னை எதிர்த்த கடற்படை களைத் தோற்கடித்தான்; கிரேக்கர்களின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு வந்தான் என்று சிலர் கூறுகின்றனர். பாரதப் போர் நடந்தபோது உதியலாதன் என்னும் சேர மன்னன் தமிழகம் முழுவதையும் ஆண்டான். அவன் பாண்டவர், கௌரவர் ஆகிய இருபுறத்துப் படைகளுக்கும் சோறிட்டான். ஆதலால் அவன் பெருஞ்சோற்று உதியலாதன் என்று பெயர் பெற்றான். இவ்வாறு தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இவன் வரலாறும் சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ஓர்ஐவர், ஈர்ஐம்பதின்மர் உடன்று எழுந்த போரில் பெரும்சோறு போற்றாது தான் அளித்த சேரன், பொறையன், மலையன் திறம்பாடி கார்செய் குழல்ஆட ஆடாமோ ஊசல் கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல்! என்று வாழ்த்துக் காதையிலே கூறப்படுகின்றது. இது பெருஞ் சோற்று உதியலாதன் பெருமையை உரைத்தது. இதில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் குறிக்கப்பட்டுள்ளான். சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் பெரும்பாலும் சேரன் செங்குட்டுவன் சிறப்பையே கூறிச் செல்கின்றது. சிலப்பதிகாரத்திலே இவ்வாறு மூவேந்தர்களின் புகழ், ஆட்சி, வரலாறு ஆகியவைகள் பல இடங்களில் கூறப்பட்டிருப் பதைக் காணலாம். தெய்வீக நிகழ்ச்சிகள் சிலப்பதிகாரக் கதையைப் படிக்கும்போது, நம் கண் முன்னே பல காட்சிகள் நடப்பனபோலவே காணப்படுகின்றன. இளங்கோவடி களின் வாக்கு வலிமை, செய்யுள் இயற்றும் திறன், கதை சமூகத்தைத் தழுவிய வரலாறாக அமைந்திருப்பது இவைகள் தான் இதற்குக் காரணம். கோவலன் கணிகையின் கூட்டுறவால் செல்வத்தையிழந் தான். மனைவி கண்ணகியுடன் மதுரைக்குப் போனான். சிலம்பு விற்கச் சென்ற இடத்திலே பொற்கொல்லன் சூழ்ச்சிக்கு இரை யானான். அரசனால் கொலைத் தண்டனைக்கு ஆளானான். இதையறிந்த கண்ணகி சினந்து எழுந்தாள். அரசன் அக்கிரமத்தை ஊராருக்கு அறிவித்தாள். ஊர் அவள் பக்கம் திரண்டு நின்றது, அரசனைக் கண்டு அவன் புரிந்த அநீதியை எடுத்துக்காட்டி வழக்குரைத்தாள். பாண்டியன் தன் குற்றத்தை உணர்ந்தான். தற்கொலை செய்து கொண்டான். அரசனுக்குத் துணை செய்தவர்கள் தண்டிக்கப் பட்டனர். நல்லவர்கள் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டனர். மதுரை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. கணவனை இழந்த கண்ணகி, துன்பந் தாங்காமல் ஒரு மலையின் மேல் ஏறி வீழ்ந்து உயிர்விட்டாள். அவள் வீரத்தையும், செயலையும் மக்கள் போற்றினர். என்று இவ்வாறு கதை முடிந்திருத்தால் சிலப்பதிகாரம் ஒப்பற்ற ஒரு அரசியல் புரட்சி இலக்கியமாகவே விளங்கும். ஆயினும் சிலப்பதிகாரக் கதையிலே இக்கருத்து அடங்கித் தான் இருக்கின்றது. இதைப் பின்னால் புரட்சிக் காவியம் என்ற பகுதியிலே விரிவாகக் காணலாம். இக்கருத்து சிலப்பதிகாரத்தில் ஊடுருவி நிற்பதால்தான் அது படிப்போர் உள்ளத்தைக் கவருகின்றது. சிறந்த காவியமாகத் திகழ்கின்றது. ஆனால் சிலப்பதிகாரக் கதை மேலே எடுத்துக்காட்டியபடி வெளிப்படையாக அமைந்திருக்கவில்லை. இக்கதையின் இடை யிடையே தெய்வீக நிகழ்ச்சிகள் - இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் - பல புகுத்தப்பட்டிருக்கின்றன. ஆதலால் அதைப் படித்தால் அது புராணக் கதைபோலவே காட்சியளிப்பதையும் காணலாம். புரட்சிகரமான அரசியல் கருத்தமைந்தது சிலப்பதிகாரம் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் அதில் இயற்கைக்கு முரணான நிகழ்ச்சிகள் பல புகுத்தப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் உண்டு. சிலப்பதிகாரம் பிறந்த காலத்திலே - அந்நூல் எழுதப்பட்ட காலத்திலே - நம் நாட்டு மக்கள் தெய்வீக சம்பந்தம் உள்ள கதைகளைத்தான் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். அக் காலத்தில் தெய்வீகத் தொடர்பற்ற கதைகளுக்கு - காவியங் களுக்கு - மக்களிடம் மதிப்பில்லை. ஆதலால்தான் சிறந்த கருத்துக்களை மக்களிடையிலே பரவச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ள இளங்கோ அடிகள் தெய்வீக நிகழ்ச்சிகள் பலவற்றை சிலப்பதிகாரத்திலே இணைத்தார். காலத்தை ஒட்டி மக்கள் மனப்பான்மையை அறிந்து - கவிதைகளை அமைப்பது, காவியங்களை எழுவது, அவைகளின் வாயிலாக மக்களுக்கு அறநெறிகளை அறிவிப்பது இவைகளே சிறந்த புலவர்களின் தன்மை; கடமை. இத்தகைய உயர்ந்த புலவர் கால்வழியைச் சேர்ந்த இளங்கோவடிகள், தம் கால நிலைக்கேற்பக் கதையை அமைத்திருக்கின்றார். இவ்வாறு கொள்ளுவதுதான் ஏற்றதாகும்; உண்மையுமாகும். 1. கோவலனையும், கண்ணகியையும், ஒரு பரத்தையும் தூர்த்தனும் பரிகசித்துப் பேசினர். அவர்களை, முள்ளு டைக் காட்டில் முதுநரி ஆகுக என்று கவுந்தி அடிகள் சபித்தார். பிறகு கோவலன் வேண்டுகோளால், ஓராண்டில் அவர்கள் சாபம் நீங்கும்படி சாபவிடை கொடுத்தார். 2. வனதேவதை ஒன்று வசந்தமாலை வடிவத்திலே சென்று கோவலன் அடியிலே வீழ்ந்து மாதவியின் மனவேதனையை உரைத்தது. கோவலன் ஐயம் உற்று, வஞ்சம் பெயர்க்கும் துர்க்கை மந்திரத்தால் வனதேவதையின் சூழ்ச்சியை முறியடித்தான். 3. கோவலன் கொலையுண்டது கேட்ட கண்ணகி, அழுது புலம்பி வானத்தைப் பார்த்துச் செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா என்று கேட்டாள்; இல்லை; அவனைக் கள்வன் என்ற இவ்வூரைத் தீ உண்ணும் என்று அசரீரியாகச் சூரியன் உரைத்தான். 4. கோவலன் வெட்டுண்டு இறந்தபின், அவன் உடம்பைக் கண்ணகி தழுவிக்கொண்டாள்; அவன் பழைய உருவில் உயிர் பெற்று எழுந்து, அவளுடன் உரையாடினான். 5. கண்ணகி தனது இடது மார்பை வலது கையால் திருகி எடுத்து மதுரைவீதியிலே வீசினாள். உடனே அக்கினி தேவன் பார்ப்பன வடிவில் வந்தான்; முன்னமே, மதுரையை அழிப்பதற்குத் தனக்குக் கட்டளை உண்டு என்று கூறினான்; கண்ணகியின் உத்தரவுப்படி அவன் நல்லோரை ஒன்றும் செய்யாமல்விட்டான்; தீயோரைத் துன்புறுத்தி மதுரையை அழித்தான். 6. பிராமணபூதம், அரசபூதம், வணிகபூதம், வேளாளபூதம் என்று நான்கு பூதங்கள் மதுரையைப் பாதுகாத்துக் கொண்டிருந்தன. அவைகள் மதுரையைவிட்டு நீங்கின. 7. கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றிற்று; பாண்டியர் மரபின் மாண்பைக் கூறிற்று; கோவலனது, பழம்பிறப்புக் கதையைச் சொல்லிற்று. 8. கண்ணகி செங்குன்றின்மீது ஏறி அங்கிருந்த வேங்கை மர நிழலில் நின்றபோது கோவலன் தெய்வ உருவில் வந்தான்; அவள் தேவர்கள் போற்ற, அவனுடன் விமானத்தில் ஏறி விண் புகுந்தாள். 9. கண்ணகி, தெய்வ உருவிலே தோன்றிச் செங்குட்டுவனை வாழ்த்தினாள். 10. மாடலன் மூன்று சிறுமியர்களின்மேல் கமண்டல நீரைத் தெளித்தான். அவர்கள் தம்முடைய பழம் பிறப்பை உணர்ந்து கொண்டனர். 11. கண்ணகி, அசரீரியாகத் தோன்றி ஆரிய மன்னர்கள், குடநாட்டுக் கொங்கு மன்னர். மாளுவ வேந்தர், கயவாகு வேந்தன் முதலியோர்க்கு வரம் கொடுத்தாள். இவை போன்ற இன்னும் பல தெய்வீக நிகழ்ச்சிகளையும் கதையுடன் கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் எல்லாம் புராணக் கதைகளையே நம் நினைவுக்குக் கொண்டு வருகின்றன. இயற்கையோடு பொருந்தாத இத்தகைய கதைநிகழ்ச்சி களை மறந்துவிடுவோம்; இயற்கையோடு இணைந்த கதை நிகழ்ச்சிகளை மட்டும் எண்ணிப் பார்ப்போம். இப்படி எண்ணும்போதுதான் சிலப்பதிகாரத்தின் ஒப்புயர்வு அற்ற பெருமை விளங்கும்; அது புரட்சிக் காவியமாக அமைந்திருப்பது புலப்படும். சிறுகதைகள் சிறுகதைகள் எழுதுவது புது வழக்கம் அன்று; பழைய வழக்கம்தான். பண்டை நூல்களைப் படிப்போர் இவ்வுண்மையை உணர்வார்கள். இக்காலத்திலே தனித்தனியாகச் சிறுகதைகள் எழுது கின்றனர். எல்லா நாடுகளிலும் இவ்வழக்கம் போற்றப்படுகின்றது. எல்லா நாட்டு மக்களும் சிறுகதைகளைப் படிப்பதிலே ஆவல் காட்டு கின்றனர். பண்டைநாளில் பெருங் கதைகளின் இடையிலே சிறுகதை களைக் கலந்து எழுதினர். பாரதத்திலே பல சிறுகதைகள் உண்டு; இராமாயணத்திலே பல சிறுகதைகள் உண்டு. பெருநூல்களிலே வரும் சிறுகதைகளுக்குக் கிளைக்கதைகள் என்று பெயர். இதை உபாக்கியானங்கள் என்று வடமொழியிலே சொல்லுவார்கள். சிறுகதைகள் பலவற்றின் தொகுதி என்று சொல்லத்தக்க பஞ்சதந்திரக் கதைகளைப் பலரும் அறிவார்கள். விக்கிர மாதித்தியன் கதை, தெனாலிராமன் கதை போன்ற கதைகள் தமிழ்நாட்டில் பல்லாண்டுகளாக வழங்கி வருகின்றன. பண்டை நூல்களில் காணப்படும் சிறுகதைகளை வைத்துக் கொண்டு சிறுகதைகளின் இலக்கணம் என்ன என்பதைக்கூட நாம் சொல்லிவிடலாம். ஏதேனும் ஒரு கருத்தை - ஒரு உண்மையை - ஒரு அறத்தை - விளக்குவதே சிறுகதைகளின் நோக்கம். இவற்றையே பழஞ் சிறுகதைகளிலே பார்க்கின்றோம். நமது நாட்டிலே எழுத்தில் இல்லாத பல சிறுகதைகள் வழங்குகின்றன. கதை சொல்வதிலே வல்ல பாட்டிமார்கள் பலர் உண்டு; தாத்தாமார்கள் பலர் உண்டு. அவர்களிடம் விதவிதமான வேடிக்கைக் கதைகள் பலவற்றைக் கேட்கலாம்; அவர்களிடம் புதுப்புதுக் கற்பனைக் கதைகள் பலவற்றைக் கேட்கலாம். அவர்கள் சொல்லும் கதைகளில் எல்லாம் ஒவ்வொரு கருத்துப் பொதிந்து காணப்படும். கருத்துக்களைப் பரப்புவதற்கே சிறுகதைகள் தோன்றின; சிறுகதைகளைப் புனைந்தனர்; இலக்கியங்களிலும் ஏற்றினர்; சிறுகதைகளைப்பற்றி முன்னோர்களின் கொள்கை இதுதான். இந்த உண்மையை அடிப்படையாகக்கொண்டே சிலப்பதிகாரச் சிறுகதைகள் அமைந்திருக்கின்றன. இனி அச்சிறுகதைகளின் சிறப்பைக் காண்போம். முசுகுந்தன் கதை அசுரர்கள் தேவர்களைத் துன்புறுத்தினர். இந்திரன் சோழ மன்னனாகிய முசுகுந்தனிடம் வந்து முறையிட்டான். முசுகுந்தன், இந்திரன் தலைநகராகிய அமராபதிக்கு அசுரர்களால் அழிவு வராமல் பாதுகாத்தான்; எதிர்த்த அசுரர்களைத் தோற்கடித்தான். தோற்ற அசுரர்கள் ஒன்று கூடினர்; முசுகுந்தன் கண்ணும் மனமும் இருளும்படி ஒரு கணையை எய்தனர். அச்சமயத்திலே ஒரு பூதந் தோன்றி முசுகுந்தனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தது. அந்த மந்திரத்தால் அசுரர்களின் மாயத்தை ஒழித்தான்; அவர்களை வென்றான். இவ்வாறு வெற்றி பெற்ற முசுகுந்தனிடம், அசுரர்களை நீ எவ்வாறு வென்றாய்? என்று இந்திரன் கேட்டான். முசுகுந்தன், பூதம் தனக்குப் புரிந்த உதவியை உரைத்தான். அப்பூதத்திற்கு, முசுகுந்தனிடன் சென்று, காவிரிப்பூம்பட்டினத்தைக் காக்கும்படி இந்திரன் கட்டளையிட்டான். அப்பூதம் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தது. நாளங்காடியிலே அமர்ந்தது. காவிரிப்பூம்பட்டினத் தைக் காத்து வருகின்றது. முசுகுந்தன் செய்த உதவிக்குக் கைம்மாறாக இந்திரன் ஐவகை மன்றங்களை அளித்தான். அவை: வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் என்பவை. இம்மன்றங்களின் இயல்பு காவிரிப்பூம்பட்டினம் என்ற பகுதியிலே கூறப்பட்டுள்ளது. நல்லோர்க்குத் துணையாக நிற்போர் - நல்லோர்க்கு உதவுவோர் - நன்மை பெறுவர் என்ற உண்மை இக்கதை யினால் உணர்த்தப்படுகின்றது. நாரதர் சபதம் இந்திரன் சபையிலே உருப்பசி நடனம் ஆடுகின்றாள். நாரதர் வீணை வாசிக்கின்றார். அப்பொழுது இந்திரன் மகன் சயந்தனை, உருப்பசி கண்டாள்; காதல் உற்றாள்; அவனும் காதலித்தான். இதனால் உருப்பசியின் ஆடல் பாடலிலே தவறு நேர்ந்தது; நாரதர் வீணையும் மங்கலத்தை இழந்தது. இது கண்டு நாரதர் வெகுண்டார்; உருப்பசியையும், சயந்தனையும் சபித்தார். உருப்பசி மாதவியாகவும், சயந்தன் மூங்கிலாகவும் மண்ணுலகில் பிறந்தனர். அந்த மாதவியின் பரம்பரையிலே பிறந்தவள்தான் சிலப்பதிகார மாதவி. கடமை தவறுவோர் தீமை அடைவர் என்ற கருத்துள்ளதே இக்கதை. மேலே காட்டிய கதைகள் இரண்டும் கடலாடு காதையிலே உள்ளவை. தேவந்தியின் கதை மாலதி என்பவள் ஒரு பார்ப்பனி. அவள், தன் மாற்றாள் குழந்தைக்குப் பால் ஊட்டினாள். பால் விக்கி அக்குழந்தை இறந்தது. அவள் மாற்றாளும், கணவனும் தன்மேல் பழி சுமத்து வார்களே என்று பயந்தாள். பல கோயில்களுக்கும் குழந்தை யுடன் சென்று புலம்பினாள். இறுதியிலே சாத்தன் கோயிலை அடைந்து குழந்தையைப் பிழைக்க வைக்கவேண்டி வரம் கிடந்தாள். நள்ளிரவிலே சுடுகாட்டுக் கோட்டத்திலேயுள்ள பிணம் தின்னும் இடாகினிப் பேய் ஒன்று பெண் உருவில் வந்தது. மாலதியிடமிருந்த குழந்தைப் பிணத்தை வாங்கி விழுங்கிவிட்டது. அதுகண்ட மாலதி மனங்கலங்கி வாய்விட்டு அழுதாள். அவள் துயர் கண்ட சாத்தன் இரக்கமுற்றான்; அவள் முன் தோன்றினான். நீ செல்லும் வழியில் உள்ள சோலையிலே குழந்தை உயிருடன் கிடக்கின்றது என்றான். தானே குழந்தை உருக்கொண்டு கிடந்தான். மாலதி அக்குழந்தையைத் தன் குழந்தை என்று நம்பினாள். எடுத்துச் சென்று ஈன்றாளிடம் கொடுத்தாள். அக்குழந்தை வளர்ந்து கல்வி கற்றான். தந்தை தாயர் இறந்தபின் அவர்களுக்கான இறுதிக் கடன்களையெல்லாம் இயற்றினான். தேவந்தி என்பவளை மணந்து எட்டு ஆண்டுகள் இல்லறம் நடத்தினான். அதன்பின் ஒரு நாள். அவள் தேவந்திக்குத் தன் உண்மை உருவத்தைக் காட்டினான். தான் தீர்த்த யாத்திரைக்குப் போவதாகச் சொல்லித் தன் கோவிலை அடைந்தான். தேவந்தி அச் சாத்தன் கோவிலை அடைந்து, சாத்தனுக்கு பூசை செய்து கொண்டிருந்தாள். இவளே கண்ணகியின் தோழியான தேவந்தி என்பவள். இறந்தவர் பிழைப்பதில்லை; தெய்வத்தை நம்பினோர் பாதுகாக்கப்படுவர் என்ற கருத்தைக்கொண்டதே இக்கதை. அழகர்மலை அழகர்மலைக்குத் திருமால் இரும்குன்றம் என்து பழம் பெயர். இதுபற்றிச் சிலப்பதிகாரம் சொல்லும் கதை வியப்புக்கு உரியது. திருமாலிருங்குன்றத்தில் ஒரு பிலம் - சுரங்கம் - இருக்கின்றது. அதனுள் புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என மூன்று பொய்கைகள் உண்டு. புண்ணிய சரவணத்திலே நீராடினால் இந்திர வியாகரணத் தைக் கற்கலாம்; பவகாரிணியில் நீராடினால் பழம் பிறப்பை அறியலாம்; இட்டசித்தியிலே மூழ்கினால் நினைத்தவைகளை யெல்லாம் பெறலாம். பிலத்தினுள் செல்ல விரும்பினால் திருமாலை எண்ணிக் கொண்டு குன்றத்தை மும்முறை வலம் வரவேண்டும். வலம் வந்தால் சிலம்பாற்றின் கரையிலே ஒரு இயக்கி தோன்றுவாள்; அவள் பெயர் வரோத்தமை என்பது. அவள், இம்மையில் இன்பம் யாது? மறுமையில் இன்பம் யாது? எக்காலத்தும் அழியாத இன்பம் யாது? இவ்வினாக் களுக்கு விடை கூறினால் பிலத்தின் கதவைத் திறப்பேன் என்பாள். விடையிறுத்தோர்க்குக் கதவைத் திறந்து, உள்ளே போகும் வழி இதுவென்று காட்டுவாள். அவ்வழியே சென்றால், பல வாயில்களையும் கடந்து இரட்டைக் கதவு போட்ட வாயில் ஒன்றைக் காணலாம், அதையும் தாண்டிச் சென்றால் பதுமை போன்ற அழகான பெண் ஒருத்தி தோன்றுவாள். அவள், அழிவற்ற இன்பம் யாது? என்று கேட்பாள். இதற்கு விடை அளித்தால், இம்மையின்பம், மறுமையின்பம், அழிவில் இன்பம் இம்மூன்றில் ஒன்றைப் பெறலாம் என்பாள். விடையளிக்காவிட்டாலும் துன்புறுத்த மாட்டாள், வந்த வழியே அனுப்பி விடுவாள். விடையளிப் போரை, மேலே சொல்லிய பொய்கைகளின் கரையிலே கொண்டுபோய் விடுவாள். நீங்கள் விரும்பியதைப் பெறுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய் விடுவாள். இக்கதையை மாங்காட்டு மறையோன் என்பவன் கோவலனிடம் கூறினான். இக்கதை ஒரு சினிமாக் கதை போல் அமைந்திருக்கின்றது. சமண மத தர்மத்தின் உண்மையை விளக்க இக்கதை கூறப்பட்டது, இதைக் கேட்ட கவுந்தியடிகள், அம் மறையோனைப் பார்த்துக் கூறுவதன் வாயிலாகச் சமண மத உண்மையைக் காணலாம். எனது அருக குமரன் அருளிச்செய்த ஆகமங்களிலே இந்திர வியாகரணத்தைக் காணலாம்; ஆதலால் புண்ணிய சரவணத்திலே பொருந்த வேண்டியதில்லை. முன்பிறப்பிலே செய்த வினையின் பலனை இப்பிறப்பிலே அனுபவிப்பதன்மூலம் கண்கூடாகக் காண்கின்றோம்; ஆதலால் பவகாரிணியில் படிய வேண்டியதில்லை. வாய்மை, கொல்லாமை இவ்விரண்டையும் பின்பற்றி வாழ்வோர்க்கு எல்லா நலமும் உண்டு; ஆதலால் இட்டசித்தியிலே நீராட வேண்டியதில்லை. இது கவுந்தியடிகள் மறையோனுக்குத் தந்த விடை. இதிலே அருக தர்மத்தைப் பின்பற்றுவதன்மூலம் எல்லா நன்மைகளையும் பெறலாம் என்று கூறப்பட்டிருப்பதைக் காணலாம். அருகமத மாண்பை விளக்கவே காடுகாண் காதையிலே இக்கதை அமைக்கப் பட்டது என்பதில் ஐயம் இல்லை. மணிமேகலா தெய்வம் கோவலன் குலமுன்னோன் ஒருவன் கடலிலே செல்லும் போது நள்ளிரவிலே அவனுடைய மரக்கலம் உடைந்து விட்டது. அவன் முன்பிறப்பிலே புண்ணியமும், தானமும் புரிந்தவன். ஆதலால் ஆபத்தின்றிச் சில நாள் கடலிலேயே நீந்திக் கொண்டி ருந்தான். அப்பொழுது ஒரு தெய்வம் அவன்முன் தோன்றிற்று. நான் இத்தீவில் உள்ளவர்களை அரக்கர்கள் துன்புறுத்தாமல், இந்திரன் ஏவலின்படி பாதுகாத்து வருகின்றேன். உன் துன்பத்தைக் கண்டேன். அதை ஒழிப்பதற்காக வந்தேன், இனி நீ அஞ்சவேண்டாம். என் பெயர் மணிமேகலை. நீ முன்செய்த தானத்தால் உண்டான புண்ணியமும், உன்னைவிட்டு ஒழிய வில்லை, ஆதலால் நீ இத்துன்பத்திலிருந்து விடுதலை பெறுக. இக்கடலிலிருந்து கரை ஏறுக என்று சொல்லி அவன் துன்பத்தைத் தீர்த்தது, அவனைத் தன் மந்திரசக்தியால் ஒரு திடலிலே கரையேறச் செய்து காப்பாற்றியது. அன்றுமுதல் அந்த மணிமேகலா தெய்வமே கோவலன் குலதெய்வம் ஆயிற்று. இப்பெயரே மாதவியின் மகளுக்கு வைக்கப்பட்டது. அடைக்கலக் காதையிலே உள்ள இக்கதை தருமம் தலை காக்கும் என்ற உண்மையை உணர்த்துகின்றது. பார்ப்பனியும் கீரிப்பிள்ளையும் பார்ப்பனி ஒருத்தி கீரிப்பிள்ளை ஒன்றை வளர்த்து வந்தாள். அதைத் தன் குழந்தைக்குக் காவலாக வைத்து விட்டு வெளியிலே சென்றாள். குழந்தையண்டை வந்த பாம்பு ஒன்றை அக்கீரிப் பிள்ளை கடித்துக் கொன்றுவிட்டது. பார்ப்பனி வரும்போது இரத்தம் வடியும் வாயுடன் கீரிப்பிள்ளை எதிர்கொண்டது, அதைக் கண்ட பார்ப்பனி கீரிப்பிள்ளை தன் குழந்தையைக் கடித்துக் கொன்று விட்டதாகவே நினைத்தாள்; தன் கையிலிருந்த மணையால் அதை அடித்துக் கொன்றாள். அவள் செய்த குற்றத்தை அறிந்த கொழுநன் கங்கையாட வடதிசை நோக்கிப் புறப்பட்டான், மனைவியும் அவனைத் தொடர்ந்தாள், கணவன், உயிர்க்கொலை செய்த உன்னுடன் இனி இல்லறம் நடத்த இயலாது என்று கூறினான். வடமொழி வாசகம் எழுதிய ஏடு ஒன்றை அவள் கையிலே கொடுத்தான், இவ்வேட்டை இதன் பொருளை அறிவார் கையிலே கொடுக்க என்று சொல்லி விட்டு அவன் போய் விட்டான். அவள் அவ் ஏட்டை எடுத்துக்கொண்டு வருந்திப் பல இடங்களிலும் சுற்றினாள், கோவலன் அவளை அழைத்தான், நீ வருந்தி அலைவதற்குக் காரணம் என்ன? என்றான். தான் கொலை செய்த காரணத்தால் கொழுநன் தன்னை விட்டுப் பிரிந்த செய்தியைச் சொன்னாள். கொழுநன் கொடுத்த ஏட்டையும் கொடுத்தாள். கோவலன் அவளுக்குக் கைப்பொருள் தந்து ஏட்டைப் பெற்றான், அவளுக்கு ஆறுதல் உரைத்தான், அவள் செய்த கொலை - பாவம் நீங்குவதற்கான தான தருமங்களைச் செய்தான். அவள் துயர் களைந்தான், யாத்திரை சென்ற அவள் கணவனையும் தேடிப்பிடித்து அழைத்துவந்தான், அவடரகள் இருவரும் சேர்ந்து இல்லறம் நடத்துவதற்கு வேண்டிய செல்வங்களையும் கொடுத்தான். இதுவும் அடைக்கலக் காதையிலே உள்ள கதை. கோவலன் கொடைச் சிறப்பைக் கூறுவது. உயிர்க்கொலை செய்வது பெரும் பாவம்; உயிர்க்கொலை செய்தவரோடு சேர்ந்து வாழுவதும் பாவம் என்ற தத்துவத்தை விளக்குவதே இக்கதை, இதுவும் சமணமதக் கொள்கையை வலியுறுத்திவதாகும். பொய்சாட்சி புகன்றவன் அறிவிலான் ஒருவன், பத்தினி ஒருத்தியின்மேல் பொய்ப்பழி சுமத்த நினைத்தான், அவள் நடத்தையிலே ஐயம் கொள்ளும்படி அவள் கணவனிடம் பொய்யுரைகள் புகன்றான், பொய்க்கரி புகன்றோரைப் புடைத்துண்ணும் பூதம் அவனைப் பாசத்தால் பிணித்தது, நிலத்திலே அடித்துத் தின்னத் தொடங்கியது, அவனுடைய தாய் பெருந்துயர் உற்றாள், அதுகண்ட கோவலன் அப் பூதத்தின் பாசத்துள் நுழைந்தான், எனது உயிரை உனக்கு உணவாகக் கொள்; இவனுடைய உயிரை விட்டுவிடு என்று வேண்டினான். இக்கீழ்மகன் உயிருக்காக உனது நல்லுயிரை நான் கொள்ள மாட்டேன், இப்படிச் செய்து நான் என் நிலையிலிருந்து தவற மாட்டேன் என்று சொல்லிற்று அப்பூதம். கோவலன் கண்முன் பாகவே அப்பூதம் பொய்க்கரி புகன்றவனை அடித்து விழுங்கி விட்டது, அதுகண்டு வருந்திய அக்கயவன் தாயுடன் கோவலன் மீண்டான், மாண்டவன் சுற்றத்தினர்க்கெல்லாம் அன்புடன் உதவி செய்தான்; அவர்கள் பசியின்றி வாழும்படி பாதுகாத்தான். இதுவும் அடைக்கலக் காதையில் உள்ள கதை, அவர் அவர் செய்த வினையின் பயனை அவரவர்கள்தாம் அனுபவித்துத்தீர வேண்டும் என்ற கருத்தை விளக்குவதே இக்கதை. தேவகுமாரன் கதை காவிரிப்பூம்பட்டினத்திலே-பிண்டிமரத்தின் நிழலிலே-சிலாதலத்திலே - சாரணர் அமர்ந்து அறநெறிகளைக் கூறிக் கொண்டிருந்தனர், அப்பொழுது அழகு அமைந்த திருமேனியும் அலங்காரமும் கொண்ட தேவன் ஒருவன் வந்து நின்றான், அறங்கேட்டிருந்த சாவகர்கள் அவனைக் கண்டனர்; சாரணரைப் பார்த்து, இவன் யார்? என்று கேட்டனர், சாரணர் அவன் வரலாற்றை உரைத்தனர். எட்டிப்பட்டம் பெற்ற சாயலன் என்னும் வணிகன் ஒருவன் இனிது இல்லறம் நடத்தி வந்தான், உண்ணாவிரதிகள் பலரும் அவன் மனை தேடி வருவர். அவர்களை அவன் மனைவி அன்புடன் உபசரிப்பாள், ஒருநாள் ஒரு தவமுதல்வனை அவள் உபசரித்துக் கொண்டிருந்தாள், அப்பொழுது ஊராரால் துரத்தப்பட்ட கருங்குரங்கு ஒன்று அச்சத்துடன் அந்த வீட்டிலே வந்து பதுங்கிற்று; அது மாதவன் பாதங்களை வணங்கிற்று, அவன் உண்ட மிச்சிலையும், அவன் கைகழுவிய நீரையும் அருந்திற்று, மாதவன் அக் கருங்குரங்கின்பால் இரக்கம் கொண்டான். அதனை அவ்வில்லத் தலைவியிடம் ஒப்படைத்தான், உன் மக்களைப் போலவே இதையும் காப்பாற்றுக என்று சொல்லிச் சென்றான் அவளும் மாதவன் வாய்மொழிப்படி அதைப் பாதுகாத்து வந்தாள். அக்குரங்கு மரித்தபின் அதன்பொருட்டுப் பல அறங்களை ஆற்றினாள்; இது நல்ல பிறப்பை அடைக என்று வேண்டினாள். அக்குரங்கு மத்திம தேசத்திலே வாரணவாசி என்னும் நகரிலே உத்தரகௌத்தன் என்னும் அரசனுக்கு மகனாகப் பிறந்தது, நல்ல அறியும், தானம் புரியும் தன்மையும், அரசுரிமையும் பெற்று முப்பதிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான், பின்பு இறந்து தெய்வப் பிறவியைப் பெற்றான். என்னைப் பாதுகாத்த சாயலன் மனைவி செய்த தானத் தால் இழிபிறவி நீங்கினேன்; என் பழம்பிறப்பை அறிவிப்பதற்கே ஒரு கையைக் குரங்கின் கையாகப் பெற்றேன்; சாயலன் மனைவியின் தானத்தாலேயே நான் இத்தெய்வப் பிறப்பைப் பெற்றேன் என்பதைத் தெரிவிப்பதற்காகவே இத்தேவகுமாரன் இங்கே தோன்றினான் என்று சாரணர் கூறினார். இதுவும் அடைக்கலக் காதையில் உள்ள கதை. தானம் செய்வதால் - தருமம் செய்வதால் - அறம் புரிவதால் - நன்மை யுண்டு என்பதை விளக்கவே இக்கதை எழுந்தது. பத்தினிப் பெண்டிர் எழுவர் 1. காவிரிப்பூம்பட்டிணத்திலே ஒரு வணிகன் இருந்தான், அவனுக்கு ஒரே மகள், அவளை மதுரையிலுள்ள தன் மருமகனுக்கு மணம் செய்துகொடுக்க முடிவு செய்திருந்தான், அவ்வாறு மணம் முடிப்பதற்கு முன்பே அவனும், அவன் மனைவியும் மாண்டனர், ஊரார், மதுரையில் உள்ள அவன் மருமகனுக்குச் செய்தி விடுத்தனர், அம்மருமகன் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வந்தான், தன் மாமன் மகளை மதுரைக்கு அழைத்துச் சென்று மணம் புரிந்துகொள்ளத் தீர்மானித்தான், மாமன் சொத்துக் களுடன் மாமன் மகளையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குப் புறப்பட்டான், சுற்றத்தாரும் சூழ்ந்து சென்றனர். அவன் போகும் வழியிலே திருப்புறம்பியத்திலே இரவிலே தங்கியிருந்தான், அவன் கோவில்படியிலே தலை வைத்துப் படுத்து உறங்கும்போது அவனை நாகம் ஒன்று தீண்டிற்று; அவன் இறந்தான். அதுகண்ட சுற்றத்தார் அலறி அழுதனர், அவன் மாமன் மகளும் துக்கம் தாங்காமல் புலம்பினாள். அப்பொழுது அங்கு வந்த திருஞானசம்பந்தர் அவளுக்கு ஆறுதல் கூறி, மாண்ட வணிகனை உயிர்ப்பித்தார், அப்பொழுது அவனை மாமன் மகளை மணந்துகொள்ளும்படி உரைத்தார், அவன், சுற்றத்தார்களின் சாட்சியங்கள் இல்லையே, என் செய்வேன் என்றான், இங்குள்ள வன்னிமரம், கிணறு, இலிங்கம் இவைகளைச் சாட்சிகளாகக்கொள்க என்றார், அவன் அவ்வாறே மணந்து கொண்டு மதுரை சென்று வாழ்ந்தான். அவ்வணிகனுக்கு ஏற்கெனவே முதல்மனைவி இருந்தாள், அவளுக்குப் பிள்ளைகள் இருந்தனர், இந்த இரண்டாவது மனைவிக்கு ஒரே பிள்ளை, இவனும், முதல்மனைவியின் பிள்ளைகளும் ஒன்றாக விளையாடி வருவார்கள். ஒருநாள் முதல்மனைவியின் பிள்ளைகள், இளையாளின் பின்ளையை அடித்துவிட்டனர். அதற்காக இளையாள் அப் பிள்ளைகளைக் கடிந்து பேசினாள். அதுகண்ட மூத்தாள், இளையாளை இழிவாகப் பேசினாள். என் கணவனை முறைப்படி மணந்து கொள்ளாதவள்; இன்னாள் இனியாள் என்று குலம் கோத்திரம் தெரியாதவள்; உனக்கேன் இந்த வாய்க்கெழுப்பு - என்று கேட்டு விட்டாள். இதைக் கேட்ட இளையாள் உள்ளம் துடித்தாள், என் மணத்திற்கு வன்னியும், கிணறும், இலிங்கமும் சாட்சி உண்டு என்றாள். மூத்தாள் நகைத்து, இதை நான் நம்பமாட்டேன்; அவைகள் இங்கே வந்து சாட்சி பகருமானால் நம்புவேன் என்றாள், இளையாள் மனம் நொந்து இறைவனை வேண்டினாள்; தன் கற்பைக் காக்கும்படி பிராத்தனை செய்தனள், திருப்புறம்பி யத்திலே இருந்த வன்னியும், கிணறும், இலிங்கமும் மதுரைக் கோயிலின் வடகீழ்ப்பகுதியிலே வந்து தோன்றின. அதுகண்டு மூத்தாள் அஞ்சி வாயடங்கினாள். 2. பெண்கள் பலர் காவிரிக் கரையிலே விளையாடிக் கொண்டிருந்தனர், அப்பெழுது அவர்கள் மணலால் ஒரு பதுமை அமைத்தனர்; அதனை ஒரு பெண்ணிடம் காட்டி இதுதான் உன் கணவன் என்றனர். அப்பெண் அச்சொல்லை நம்பினாள், அப்பெழுது அலை மோதி அடித்தது, அந்தப் பெண் அம் மணற்பாவையைக் காத்து நின்றாள், அலைநீர், அப் பாவையைக் கரைக்காமல் அதைச் சுற்றிக் கொண்டு ஒடியது, இவள் தன் கற்பினால் தன் கணவன் என்ற மணல்பதுமையைக் காப்பாற்றினாள், 3. கரிகால் வளவன் மகள் தன் கணவனுடன் கடலாடினாள், அப்பொழுது கடல் கணவனை இழுத்துச் சென்று விட்டது, அவள் அந்நீரின் பின்னே சென்றாள், என் கணவனைக் காட்டாயோ என்று புலம்பினாள், உடனே கடல் அலை அவள் கணவனைக் கெண்டு வந்து நிறுத்திற்று, அவள் அவனை மகிழ்ச்சியுடன் தழுவிச் சென்றாள், 4. கற்புடைப் பெண் ஒருத்தியின் கணவன் பொருள் தேடப் பொனான், அவன் மீண்டும் வரும்வரையில் அவன் மனைவி கல்லுருவிலே நின்றாள், அவன் வரும்வரையிலே, கடற்கரைச் சோலையிலே கப்பல்களை எதிர்பார்த்துக் கொண்டே நின்றாள், அவன் பொருள் தேடிக்கொண்டு வந்தவுடன் கல்லுருவை நீத்தாள்; கணவனுடன் கூடி மகிழ்ந்தாள். 5. மற்றொரு கற்புடையப் பெண், மாற்றான் குழந்தை கிணற்றில் விழுந்ததைக் கண்டு வருந்தினாள், தன் குழந்தையை யும் கிணற்றிலே போட்டாள், மீண்டும் தன் கற்பின் சிறப்பால் இரண்டு குழந்தைகளையும் பெற்று மகிழ்ந்தாள். 6. மற்றொரு பத்தினிப் பெண் தன் கணவன் பிரிந்து போன சமயத்தில் வேறொரு ஆடவன் தன்னை உற்றுப் பார்ப்பதைக் கண்டாள், உடனே தன் முகத்தைக் குரங்குமுகமாக ஆக்கிக் கொண்டாள். தன் காதலன் வந்தபின், குரங்கு முகத்தைப் போக்கி நன் முகம் கொண்டாள். 7. இரண்டு பெண்கள் ஒற்றுமையாக இருக்கும்போது ஒருத்தி, மற்றொருத்தியைப் பார்த்து, நான் பெண்மகவைப் பெற்றால், நீ பெறும் ஆண்மகனுக்கே அப்பெண்ணை மணம் புரிந்து கொடுப்பேன் என்று உறுதிகூறினாள். இவளும் பெண்ணைப் பெற்றாள்; அவளும் ஆணைப் பெற்றாள், இரு மகவுகளும் வளர்ந்தனர்; மணப்பருவம் அடைந் தனர், அப்பொழுது ஏதோ காரணத்தால் பெண்மகவைப் பெற்றவளுடைய கணவன், அம்மகளை வேறு ஒருவனுக்கு மணம் முடிக்கத் தீர்மானித்தான். அப்பொழுது மனைவி, நான் பெண்புத்தியால் முன்பு உரைத்த உறுதிமொழி என் சிந்தையைத் துன்புறுத்துகின்றது என்றாள், இதைக் கேட்டுக்கொண்டிருந்த அச்சிறுமி-பெண்மகள் - தானே புத்தாடை அணிந்தாள், கூந்தலைச் சீவி முடித்துக் கொண்டாள், தன் அன்னையால் வாக்களிக்கப்பட்ட கணவனை நாடிச் சென்றாள். வஞ்சினமாலையிலே கூறப்பட்டுள்ள இந்த ஏழு கதைகளும் பத்தினிப்பெண்டிர் பெருமையை விளக்குகின்றன, இவற்றுள் வன்னியும், கிணறும், இலிங்கமும் சாட்சியாக வந்த கதை திருவிறையாடந் புராணத்துள் காணப்படுகின்றது, இதுவே சிறு மாறுதலுடன் சிலப்பதிகாரத்தில் உள்ளது. பொற்கைப் பாண்டியன் கதை வார்த்திகன் கதை ஆகிய கதைகளும் காணப்படுகின்றன. பசுவுக்கு நீதி வழங்கியோன் கதை, சிபி, தொடித்தோள் செம்பியன், பெருஞ்சோற்று உதியலாதன் முதலியோர் கதைகளும் கூறப்படுகின்றன. இவை களை மூவேந்தர் பெருமை என்ற பகுதியிலே காணலாம். இக்கதைகள் எல்லாம் கருத்தை விளங்கும் நோக்கம் உடையவை. இவைகளால் சிறுகதைகளின் நோக்கத்தைக் காணலாம். தமிழர் போற்றிய வடமொழி நூல்கள் சிலப்பதிகார காலத்திலே, தமிழ்நாட்டிலே இராமாயணம் போற்றப்பட்டு வந்தது; பாரதம் தமிழர்களால் கொண்டப்பட்டு வந்தது. நளன் கதையைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். மற்றும் பல புராணக் கதைகளையும் தமிழர்கள் உணர்ந்திருந்தனர், இராமன் தசரதனுடைய கட்டளையைப் பெரிது என்று எண்ணினான். அவன் அரசாட்சியைப்பற்றிக் கவலைப்பட வில்லை; அராசட்சியைப் பெறுவது மிகவும் எளிதானது என்று கருதினான். ஆதலால் அவன் தசரதன் கட்டளைப்படி கானகத்தை அடைந்தான். அப்பொழுது அந்த இராமனைப் பிரிந்த அயோத்தி நகர், இன்னது செய்வது என்று தெரியாமல் திகைத்தது. அதுபோலவே கோவலனைப் பிரிந்த காவிரிப்பூம் பட்டினத்து மக்கள் திகைத்தனர். பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று அரும்கான் அடைந்த அரும்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும்ம் (புறஞ்சேரி. 63-66) இவ்வடிகள் தசரதன் ஏவலால். இராமன் அரசாட்சியைத் துறந்து காடு சென்றான் என்ற வரலாற்றைக் குறித்தன. இராமன் தன் தந்தையின் ஏவலால், தன் மனைவி சீதையுடன் காட்டுக்குப்போனான்; சீதையைப் பிரிந்தான்; அதனால் பெருந் துன்பத்தை அடைந்தான். அந்த இராமன் வேதனைகளைப் படைத்த பிரம்மாவின் தந்தையாவான்; இதை நீ அறியாயோ? இது நீண்ட காலாமாக வழங்கும் வரலாறு அல்லவா? தாதை ஏவலின் மாதுடன் போகி காதலி நீங்கக் கடும்துயர் உழந்தோன் வேத முதல்வன் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ? நெடு மொழி அன்றோ? (ஊர்காண். 46-49) இது இராமன் சீதையுடன் காட்டுக்குச் சென்றதையும், அவன் இராவணணால் சீதையைப் பிரிந்து துன்புற்றதையும் குறித்தது. இராமன் திருமாலின் அவதாரம் என்பதையும் சுட்டிற்று. இராமன் தம்பியுடன் காட்டுக்குப் போனான். அசுரர் நகரமும், அதில் உள்ளவர்களும் போரிலே மடியும்படி அழித்தான்; பழமையான இலங்கையின் பாதுகாவலையும் தகர்த்து வெற்றி பெற்றான். இத்தகைய வீரானாகிய இராமன் பெருமையைக் கேட்டு மகிழாத காது என்ன காது? இத் திருமாலின் புகழைக் கேட்டு இன்புறாத காது என்ன காது? மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து, சோஅரணம போர்மடியத் தொல்இலங்கை கட்டுஅழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே! திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே! (ஆய்ச்சியர் குரவை) இராமன் இலக்குவனுடன் காட்டுக்குச் சென்றான்; இலங்கையை அழித்தான் என்ற வரலாற்றை இதனால் காணலாம். இராமன் திருமாலின் அவதாரம் என்பதையும் அறியலாம். கடலை அழகாகக் கொண்ட இலங்கையிலே நிகழ்ந்த இராம - ராவண யுத்தமும். கடல் அகழ் இலங்கையில் எழுந்த சமரமும் (கால்கோள். 237-238) இது இராமாயணக் கதையைக் குறித்தது. சூரியனைத் தன் சக்கரத்தால் மறைத்து, இன்னும் பொழுது விடியவில்லை என்பதைக் காட்டினான் கண்ணன். கதிர் திகிரியால் மறைத்த கடல்வண்ணன் (ஆய்ச்சியர் குரவை) இது மகாபராதக் கதையைக் குறித்தது. துரியோதனாதியர்பால், நாற்றிசையும் போற்றும்படி, வேதங்கள் முழங்கிக்கொண்டு பின்வர, பாண்டவர்க்காகத் தூது சென்ற கண்ணனைப் போற்றாத நாக்கு என்ன நாக்கு? நாராயணா என்று சொல்லி ஏத்தான நாக்கு என்ன நாக்கு? மடந்தாழும் செஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை, நூற்றுவர்பால் நால்திசையும் போற்ற, படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாஎன்ன நாவோ? நாராயணா என்னா நாஎன்ன நாவோ? (ஆய்ச்சியர் குரவை) இதுவும் மகாபாரதக் கதையைக் குறித்ததாகும். வலிமையுள்ள குரங்கை (அனுமானை)க் கொடியாக உயர்த்தியவன், சிறந்த வில்வீரனாகிய அருச்சுனன், காண்டவ வனத் தைத் தீக்கிரையாக்கிய காலத்தில் அவ்வனத்தில் வாழ்ந்த உயிர்கள் எல்லாம் கலக்கம் அடைந்தன. அது போலக் கண்ணகி வைத்த, மறவர் சேரியிலே பரவியவுடன் அஞ்குறைந்தவர்கள் கலங்கினர். உரக்குரங்கு உயர்ந்த ஒண்சிலை உரவோன் காஎரி ஊட்டிய நாள்போல் கலங்க (அழல்படு 111-112) இவ்வடிகளும் பாரதக் கதையை நினைவூட்டின. கூற்றுவன் தன் தொழில் பெருகும்படி உயிர்த்தொகுதிகளை உண்ட ஆண்டு, மாதம், நாள், நாழிகை இவைகள் பதினெட்டு என்னும் எண்களைக்கொண்டவை என எண்ணிக்காணும்படி செங்குட்டுவன் - கனக - விசயர் போர் நடைபெற்று முடிந்தது. செயிர்த் தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை உண்ட, ஒன்பதிற்று இரட்டி என்று யாண்டும், மதியும், நாளும், கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் காட்டி எண்கொள (நீர்ப்படை. 7-10) இவ்வடிகளிலும் இராமாயண - பாரதக் கதைகள் குறிக்கப் பட்டன. தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டுகள் நடந்தன; இராம - இராவணப் போர் பதினெட்டு மாதங்கள் நடந்தது. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்தது; செங்குட்டுவன் - கனகவிசயர் சண்டை பதினெட்டு நாழிகையில் முடிந்துவிட்டது. மேலே காட்டிய சிலப்பதிகார அடிகள் இச்செய்தியைக் குறித்தவை. நளன் புட்கரனோடு சூதாடியதனால் தனது நாட்டையும், அரசையும் இழந்தான்; தன் மனைவி தமயந்தியுடன் கொடிய காட்டை அடைந்தான். அவன் தன் மனைவியை விட்டு வேறு ஒரு பொருள்மேலும் காதல் கொண்டு பிரியவில்லை. தமயந்தியும் தீமை அடையக் கூடிய குற்றம் எதையும் செய்தவளும் அல்லள். இருந்தும், கானகத்திலே, நள்ளிரவிலே அவளை விட்டுப் பிரிந்தான். இதற்குக் காரணம் தீவினையைத் தவிர வேறு என்ன? இதைத் தமயந்தியின் தவறு என்று சொல்வது உண்டோ? வல்ஆடு ஆயத்து மண்அரசு இழந்து மெல்இயல் தன்னுடன் வெம்கான் அடைந்தோன் காதலின் பிரிந்தோன் அல்லன்; காதலி தீதொடும் படூஉம் சிறுமையள் அல்லள்; அடவிக் கானகத்து ஆயிழை தன்னை இடையிருள் யாமத்து இட்டு நீங்கியது எல்வினை அன்றோ! மந்தைதன் பிழை எனச் சொல்லும் உண்டோ? (ஊர்காண்: 50-57) இது நளன் வரலாற்றைக் குறித்தது. இந்திரன் மலைகளின் சிறகுகளை அறுத்தான் என்னும் கதை, கந்தபுராணக் கதைக் குறிப்புகள், சிவபெருமானைப் பற்றிய புராணக் கதைக் குறிப்புகள், வடமொழி வேதம், வேத ஒழுக்கம். வேள்வி முதலியவைகளைப்பற்றிய குறிப்புக்கள் எல்லாம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. இதனால் சிலப்பதிகார காலத்து மக்கள் மொழிவெறுப்பற்றவர்களா யிருந்தனர்; வடமொழி நூல்களைப் போற்றினர். பாராட்டினர் என்றே கருதலாம். தெய்வங்களும் கோவில்களும் சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டு மக்கள் பல தெய்வங் களை வணங்கிவந்தனர். பல சிறுதெய்வங்களையும், பல பெருந் தெய்வங்களையும் தமிழ் மக்கள் போற்றிவந்தனர். தமிழகம் எங்கும் தெய்வங்களுக்குத் தினப்படி பூசைகள் நிகழ்ந்தன; அடிக்கடி திருவிழாக்களும் நடத்தப்பட்டன. இந்திரன் தமிழகம் முழுவதும் தெய்வமாகப் போற்றப் பட்டான். மருதநிலத்தெய்வம் இந்திரன், ஆதலால், நல்ல வளம் பொருந்திய ஊர்களில் எல்லாம் இந்திரனுக்குக் கோவில்கள் இருந்தன. ஆண்டுதோறும் காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திர விழா நடைபெற்றது, அந்த இந்திர விழாவைக் காண, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திரளான மக்கள் வந்து கூடுவார்கள், இந்த இந்திரவிழாச் சிறப்பைச் சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே காணலாம். இந்திரன் பாரதநாட்டு மக்கள் அனைவராலும் போற்றப் பட்டுவந்த தெய்வம், வேதங்களிலே இந்திரனைப்பற்றிய தோத்திரப் பாடல்கள் ஏராளமாக உண்டு. மோகினிப் பிசாசு என்று ஒரு தெய்வம் உண்டு. இது அழகான பெண்உருவில் வந்து ஆண்களைக் காமவிகாரம் கொள்ளச் செய்யுமாம், இவ்வாறு இத்தெய்வத்தைப் பற்றிப் பல கதைகள் சொல்லுவார்கள். இத்தெய்வத்தைப்பற்றியும் சிலப்பதி காரத்தில் சொல்லப்படு கின்றது. ஆர்அஞர்த் தெய்வம், கான் உறை தெய்வம் என்ற பெயர்களால் இத்தெய்வம் சுட்டப்படு கின்றது. வனதேவதை என்றும் இதைக் கூறுவர். கடத்தற்கு அரிய வழியிலே மிகுந்த துன்பத்தைத் தரும் தெய்வம் ஒன்று உண்டு; அத்தெய்வம் தோன்றி இடையூறு செய்யாது; அச்சம் விளைக்காத நயமான முறையிலே வழிப் போவாரைத் தடுக்கும். ஆர்இடை உண்டுஒர் ஆர்அஞர்த் தெய்வம் நடுக்கம் சாலா நயத்தின் தோன்றி இடுக்கண் செய்யாது இயங்குநர்த் தாங்கும் (காடுகாண். 144-146) இவ்வாறு இத்தெய்வத்தின் தன்மை கூறப்படுகின்றது. இத்தெய்வம் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றும் காணக் கிடக்கின்றது. கோவலன் ஒரு பொய்கையிலே காலைக்கடன் கழித்து நின்றான், அப்போது இத்தெய்வம் மாதவியின் தோழியாகிய வசந்தமாலை வடிவிலே வந்தது; கோவலனை மயக்கும் பொருட்டு, மாதவி சொல்லியதாகச் சில சொற்களை மொழிந்தது; கோவலன் பாதங்களில் வீழ்ந்து வணங்கிற்று. கோவலன், அது வனதேவதை என்று ஐயுற்றான், உடனே அவன் துர்க்கையின் மந்திரத்தைச் சொல்லி அத்தெய்வத்தின் சூழ்ச்சியை அகற்றினான், இந்த நிகழ்ச்சியைக் காடுகாண் காதையிலே 165 முதல் 200 வரையுள்ள அடிகளிலே காணலாம். ஐயை பாலைநிலத்தின் தெய்வம், வேட்டுவர்கள் இத் தெய்வத்தைக் கொண்டாடுவார்கள், பாய்கலைப் பாவை, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, சங்கரி, அந்தரி முதலிய பல பெயர்களால் இத்தெய்வம் வழங்கப்படுகின்றது, துர்க்கை, காளி என்ற பெயர்களும் இத்தெய்வத்தைக் குறிக்கும். வேட்டுவர்களும், அவர்கள் பெண்களும் இத்தெய்வத்திற்குப் பலியிட்டுப் போற்றுவார்கள். இதை வேட்டுவ வரி என்னும் பகுதியிலே காணலாம். கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் பாலைவன வழியிலே செல்லும்போது வெப்பத்தால் களைத்தனர், களைப்புத் தீர ஐயைக் கோட்டத்தின் ஒருபுறத்திலே ஒதுங்கினர், அப்பொழுது அங்கு நிகழ்ந்த விழாவை அவர்கள் கண்டனர், இவ்வாறு தொடங்குகின்றது வேட்டுவ வரிக் காதை. ஐயை சிவபெருமான் வடிவாகவும் திருமால் உருவாகவும் போற்றப்படுகின்றாள், அவளை வேடர்கள் எவ்வாறு வணங்கு கின்றனர் என்பதைப்பற்றி வேட்டுவ வரியிலே விரிவாகக் கூறப் படுகின்றது. கண்ணன் சரிதம் சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றது, ஆய்ச்சியர் குரவையிலே இதைக் காணலாம். ஆயர் முல்லைநில மக்கள். அந்நிலத் தெய்வம் மாயோன்; செயல்களும் விரிவாகக் கண்ணன் திருமாலின் அவதாரம். ஆய்ச்சியர் குரவையிலே திருமாலின் அவதாரங்கள் பல குறிப்பிடப்பட்டுள்ளன. கண்ணன் பால லீலைகளும் ஏனைய செயல்களும் விரிவாகக் காணப்படுகின்றன. பாம்பு கயிறாகக் கடல்கடைந்த மாதவன் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாண்ஆக்கிக் கடல்வண்ணன் பண்டுஒருநாள் கடல் வயிறு கலக்கினையே! இவைகள், தேவர்கள் பாற்கடலைக் கடையத் திருமால் உதவி செய்த கதையைக் குறித்தன. திரண்டு அமரர் தொழுதுஏத்தும் திருமால்! நின்செம்கமல இரண்டு அடியால் மூவுலகும் இருள்தீர நடந்தனையே! இது, திருமால் வாமனாவதாரம் எடுத்ததையும், மாவலிபால் மண்பெற்றுத் திரிவிக்கிரம அவதாரமாகத் திகழ்ந்ததையும் குறித்தது. மூவுலகும் ஈர் அடியால் முறைநிரம்பா வகை முடியத் தாவியசேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து சோ அரணம் போர்மடியத் தொல் இலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவிஎன்ன செவியே! திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே! இது திரிவிக்கிரம அவதாரத்தையும், இராமாவதாரத்தையும் குறித்தது. பெரியகோவில் என்று வைணவர்களால் பாராட்டபடும் திருவரங்கம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. திருமால் திருவரங்கத்திலே பொன்னிற உருவுள்ள-ஆயிரம் தலைகளையுடைய - ஆதிசேடனாகிய பாம்புப்படுக்கை யிலே பள்ளிகொண்டிருக்கின்றார், அக்காட்சி, நீலமேகம் ஒன்று, பொற் குன்றம் ஒன்றின்மேல் அடைத்துப் படுத்திருப்பதுபோல் காணப்படு கின்றது. நீலமேகம் நெடும்பொன் குன்றத்துப் பால்விரிந்து அகலாது படிந்தது போல, ஆயிரம் விரித்துஎழு தலைஉடை அரும்திறல் பாயல் பள்ளி பலர்தொழுது ஏத்த விரிதிரைக் காவிரி வியன்பெரும் துருத்தி திருஅமர் மார்பன் கிடந்த வண்ணமும் (காடுகாண். 35-40) இவ்வடிகள் திருவரங்கத்தின் காட்சியைக் காட்டுகின்றன, திருவேங்கடத்தின் காட்சி கீழ்வருமாறு சித்திரிக்கப்பட்டிருக் கின்றது. வேங்கடமலையிலே சிறந்த அருவி உண்டு, அந்த மலையின் உச்சியிலே, சூரியனும் சந்திரனும், இருபுறமும் உயர்ந்து காணப்படும் நடுஇடம் ஒன்றுன்டு. அந்த இடத்திலே, திருமால் சங்கு சக்கரங் களை முறையே வலக்கரத்திலும், இடக்கரத்திலும் ஏந்தி நிற்கின்றார்; அழகிய ஆரத்தை மார்பிலே பூண்டிருக் கின்றார்; பொன்னாடையை உடுத்தியிருக்கின்றார். இவ்வாறு செந்தாமரைக் கண்ணனாகிய திருமால், நின்றகோலத்திலே காட்சியளிக்கின்றார், இத்தோற்றம், நல்ல நீலநிறமுள்ள மேகம் ஒன்று, தன் மின்னலாகிய புத்தாடை யணிந்து, தன் ஒளியாகிய அணிகலம் பூண்டு, நின்று காட்சி தருவதைப்போல் காணப்படு கின்றது. வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குஉயர் மலயத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து விளங்குவில் பூண்டு நல்நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங்கண் நெடி யோன் நின்ற வண்ணமும் (காடுகாண். 41-51) இவ்வடிகளிலே வேங்கடத்தின் விழுப்புகழ் பேசப்பட்டன. திருமால் குன்றம் என்ற பெயரால் அழகர்மலை கூறப்படு கின்றது. அதன் பெருமை, அதில் உள்ள சிலம்பாறு, புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்னும் தீர்த்தங்களின் மகிமை இவைகள் எல்லாம் காடுகாண் காதை 91 முதல் 140 வரையில் உள்ள அடிகளிலே காணப்படுகின்றன. இதைச் சிறுகதை என்னும் பகுதியிலே காணலாம், சிலப்பதிகாரத்தில் இன்னும் பலவிடங்களில் திருமாலைப் பற்றிய குறிப்புக்களைக் காணலாம், சிலப்பதிகார காலத்திலே பலதேவனும் தெய்வமாகப் போற்றப்பட்டான். நாளங்காடிப் பூதம், வெள்ளிடைமன்றப் பூதம், பூதசதுக்கப் பூதம், பாசண்டச் சாத்தன், வசுக்கள் எண்மர், பன்னிருதிவாகரர், பதினோரு உருத்திரர், மருத்துவர் இருவர் ஆகிய நால்வகைத் தேவர்கள், பதினெண்வகைத் தேவகணங்கள் இந்திரவிழவு ஊர்எடுத்த காதையிலே காணப்படுகின்றன. நால்வகை வருண பூதங்கள் மதுராபதித் தெய்வம், அக்கினி தேவன் இவைகள் அழல்படு காதையிலும், கட்டுரை காதையிலும் காணப்படுகின்றன. இன்னும் திருமகள், கலைமகள், மன்மதன், கூற்றம் முதலிய தெய்வங்களைப் பற்றியும் காணலாம். முருகனைப் பற்றிப் பலவிடங்களில் சிலப்பதிகாரத்திலே காணலாம். முருகன் குறிஞ்சிநிலத் தெய்வம். குறவர்கள் முருகனைப் போற்றி விழா எடுத்ததைப்பற்றிக் குன்றக்குரவையிலே கூறப்படு கின்றது. சரவணப் பூம்பள்ளி அணைத் தாய்மார் அறுவர் திருமுலைப்பால் உண்டான் இது, முருகன் சரவணப் பொய்கையிலே, தாமரைப் பள்ளியிலே, கார்த்திகைப் பெண்கள் அறுவராலும் பால் கொடுத்து வளர்க்கப் பட்டான் என்னும் கதையைக் குறித்தது. அணிமுகங்கள் ஈர்ஆறும் ஈர்ஆறு கையும் இணையின்றித் தான் உடையான் எய்தியவேல், அன்றே பிணிமுகம்மேற் கொண்டு, அவுணர் பீடுஅழியும் வண்ணம் மணிவிசும்பின் கோன்ஏத்த மாறுஅட்ட வெள்வேலே இவ்வடிகளில் முருகன் வரலாறு சுருக்கமாகக் காணப்படுகின்றது. முருகனுக்கு ஆறு முகங்கள், பன்னிரண்டு கைகள், மயில் வாகனம், வேலாயுதம் இவைகள் உண்டு. அவன் இந்திரன் வணங்கும்படி-அவன் துயர் தீர-தன் வேற்படையால் அசுரர்களை அழித்தான். இது மேலே காட்டிய அடிகளில் உள்ள வரலாறு. பார்இரும் பௌவத்தின் உள்புக்குப் பண்டுஒருநாள் சூர்மா தடிந்த சுடர் இலைய வெள்வேலே என்று முருகன் கடலுள் புகுந்து மறைந்த சூரனைக்கொன்ற கதை கூறப் படுகின்றது. குருகு பெயர்க் குன்றம் கொன்றான் என, முருகன் கிரவுஞ்ச கிரியைப் பிளந்த கதை சுட்டப்படு கின்றது. ஆல்அமர் செல்வன் புதல்வன் கயிலை நன்மலை இறைமகன் மலைமகள் மகன் என, முருகன் பரமசிவன் - பார்வதி புத்திரனாகக் குறிக்கப்படு கின்றான். நீலப் பறவைமேல் நேர்இழை தன்னோடும் ஆல்அமர் செல்வன் புதல்வன் வரும் மயிலின்மேல் வள்ளியம்மையுடன், சிவபெருமான் புதல்வன் வருவான். குறமகள் அவள்எம் குலமகள் அவளொடும் அறுமுக ஒருவ! நின் அடியினை தொழுதேம் எமது குலமகளாம் குறமகளாகிய வள்ளியுடன் காணப்படும் ஆறுமுகங் களையுடைய ஒப்பற்றவனே! உனது இரண்டு அடிகளையும் பணிகின்றோம். இவ்வாறு முருகன் போற்றப்படுகின்றான். இங்கே வள்ளியை மட்டுந்தான் முருகன்மனைவி யென்று கூறப்பட்டுள்ளது. மற்றொரு மனைவியாகிய தெய்வயானையைப்பற்றிய குறிப்பு குன்றக் குரவையிலே காணப்படவில்லை. திருச்செந்தூர், திருச்செங்கோடு, வெண்குன்றம், ஏரகம் என்பவை முருகன் உறையும் திருப்திகளாகக் கூறப்பட்டிருக் கின்றன. வெண்குன்றம் என்பது சுவாமிமலை எனச் சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர் கூறியுள்ளார். திருவேரகம் என்பது ஒரு மலைநாட்டுத் திருப்பதி என நச்சினார்க்கினியர் நவின்றுள்ளார். ஆதலால் அது ஒரு மலைநாட்டுத் திருப்பதியாகத்தான் இருக்க வேண்டும் பிற்காலத்தினர், திருவேரகம் என்பது சுவாமிமலை என்று கொண்டனர், இது தவறு என்பதில் ஐயம் இல்லை. சிவபெருமானைப்பற்றிச் சிலப்பதிகாரத்திலே பல இடங்களிலே காணப் படுகின்றன. பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலம் (காடுகாண். 73-74) பரமசிவன் பிறைச்சந்திரனையும், மலர்மாலையையும் முடியில் அணிந்தவன்; கருக்கான முனையையுடைய சூலாயுதத்தை ஏந்தியவன். இதனால் சிவபெரு மான் தோற்றத்தைக் காணலாம். சிவபெருமானுக்கு நெற்றிக்கண் உண்டு; தேவர்களுக்காக நஞ்சுண்டு, நீலகண்டன் ஆனான்; வாசுகியை நாணாகவும், இமயத்தை வில்லாகவும் கொண்டு திரிபுரத்தை எரித்தான்; யானைத் தோலைப் போர்த்தியவன்; புலித் தோலை உடுத்தியவன்; கொன்றை மாலையைத் தரித்தவன், இவையெல்லாம் வேட்டுவ வரியிலே காணலாம். உமையவள் ஒருதிறன் ஆக, ஓங்கிய இமையவள் ஆடிய கொடுகொட்டி ஆடலும் என்று, சிவபெருமானுடைய நடனத்தைப் பற்றிக் கடலாடு காதையிலே காணப்படுகின்றது. உமைஒரு பாகத்து ஒருவன் என்றும், இமையவர் உறையும் இமையச் செல்வரைச் சிமையத் தெய்வம் என்றும் நடுகற் காதையிலே சிவபெருமானைப்பற்றிக் காணப் படுகின்றன. சிவமூர்த்தங்களில் ஒன்றாகிய தட்சிணாமூர்த்தி என்னும் பெயர் சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் வழங்கியிருந்தது. சங்க இலக்கியங்களிலே இப்பெயர் காணப்படவில்லை சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் ஆல்அமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் (கட்டுரை.90-91) சிறந்த வார்த்திகன் என்பவன் மகன். கல்லாவின் கீழ் இருந்து நால்வர்க்கு உபதேசித்த சிவபெருமான் பெயர் கொண்டு வளர்ந்தவன். தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து (கட்டுரை 95) அந்த வார்த்திகன் புதல்வன் பெயர் தக்கிணன் என்பது, தக்ஷிணன்; தக்ஷிணா மூர்த்தி என்ற பெயரேஇவ்வாறுதக் கிணன் என நின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் இருந்த கோவில் களைக் குறிப்பிடும்போது, சிவபெருமான் கோவிலையே சிலப்பதிகாரம் முதன்மையாகக் குறிப்பிடுகின்றது. இதனால் சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் சிவவழிபாடு சிறந்திருந்தது என்று கூறலாம். சிலப்பதிகாரத்துத் தமிழ்மக்கள் அருகக் கடவுளையும் வணங்கி வந்தனர். அருகமத தத்துவங்கள் சாரணர்களால் தமிழ்நாட்டில் உபதேசிக்கப்பட்டன. இவ்வாறே புத்தமத தத்துவங்களும் போற்றப் பட்டன. காவிரிப்பூம்பட்டினம், மதுரை முதலிய இடங்களிலும், வேறு பல இடங்களிலும் அருகப் பள்ளிகளும், புத்தர் பள்ளிகளும் இருந்தன. அருகரும், புத்தரும் தமிழ்மக்களால் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். இவைகளைத் தவிர பேய், பிசாசு, பூதம் என்று சொல்லப் படும் சிறு தெய்வங்களை யெல்லாம் கூடத் தமிழர்கள் வணங்கி வந்தனர். தமிழ்நாட்டில் எங்கும் தெய்வ நம்பிக்கையில் மூழ்கிய மக்களே வாழ்ந்துவந்தனர். இவ்வுண்மைகளையெல்லாம் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. சிலப்பதிகார ஆசிரியர் எத்தகைய வெறுப்பும் விருப்பும் இல்லாதவர். அவர் காலத்தில் தமிழத்தில் இருந்த மக்கள்நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். தமிழகத்திலே பல தெய்வங்கள் வாழ்ந்தன. அவைகளைத் தமிழர்கள் பலமுறைகளில் வணங்கினர்; அவைகளுக்கு விழாச் செய்து கொண்டாடிக் குதூகலித்தனர். இந்திர வணக்கம், ஐயை வணக்கம், திருமால் வணக்கம், சிவ பெருமாள் வழிபாடு, முருகன் வணக்கம், அருகர் வணக்கம், புத்தர் வணக்கம் இவைகள் தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்தன. ஆனால், விநாயகர் வணக்கம்மட்டும் சிலப்பதிகாரத்தில் காணப்படவில்லை. நெய்தல் நிலத்து மக்கள் வருணனைத் தெய்வமாகக் கொண்டவர்கள். சிலப்பதிகார காலத்திலே வருணனை வழிபடும் வழக்கம் குறைந்துவிட்டது, அல்லது மறைந்துவிட்டது என்று எண்ண இடந்தருகின்றது. பட்டினப்பாலையிலே, பரதவர்கள் கடற்கரையிலே சுறா மீன் எலும்பை நட்டு அதற்குப் பூசை செய்தனர் என்ற செய்தி காணப்படுகின்றது. இது வருணன் என்னும் நெய்தல் நிலத் தெய்வத்தைப் பரதவர்கள் வணங்கும் பண்டைக்கால முறை. சிலப்பதிகாரத்தில் இவ்வழிபாடு காணப்படவில்லை. புகார் நகரக் கோவில்கள் சிலப்பதிகார காலத்திலே தமிழகத்திலே பல கோவில்கள் இருந்தன. அவைகள் பல தெய்வங்களுக்கான கோவில்களாக இருந்தன. அவைகளை இந்நூல் தெளிவாக உரைக்கின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திரனுக்குத் தனிக்கோவில் இருந்தது. இந்திரன் படையான வச்சிராயுதம் நிற்கும் கோவில், அவன் வாகனமாகிய ஐராவதம் என்னும் யானை நிற்கும் கோவில், கற்பகத்தரு நிற்கும் கோவில் இவைகள் தனித்தனியே இருந்தன. வஞ்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம் கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்துக் காள்கோள் விழவின் கடைநிலை சாற்றித், தங்கிய கொள்கைத் தருநிலைக் கோட்டத்து மங்கல நெடும்கொடி வான்உற எடுத்து (இந்திர விழவு. 141-146) வச்சிரக் கோட்டத்திலிருந்த முரசை ஐராவதம் நிற்கும் கோட்டத்துக்குக் கொண்டுவந்தனர்; யானையின்மீது ஏற்றினர்; இந்திர விழாவின் தொடக்கத்தையும் முடிவையும் அறிவித்தனர்; கற்பகத்தருக் கோட்டத்திலிருந்த கொடியை வானிலே பறக்கும் படி ஏற்றினர். இவ்வாறு இந்திர விழாவிலே கொடியேற்று விழாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதனால், வச்சிரக் கோட்டம் ஐராவதக் கோட்டம், கற்பகத் தருக்கோட்டம் முதலிய கோவில்களைக் காணலாம். சிவபெருமான் கோவில், முருகன் கோவில், பலதேவன் கோவில், திருமால் கோவில் இவைகள் எல்லாம் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்தன. பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும், வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் (இந்திர விழவு. 169-172) இவ்வடிகளால் மேலே குறித்த கோவில்களைக் காணலாம். அருகர் கோவிலுக்கு ஸ்ரீ கோவில் என்று பெயர். காவிரிப் பூம்பட்டினத்திலே இக்கோவில் இருந்தது. அருகர் பள்ளிகளும், புத்தர் பள்ளிகளும் இருந்தன, தருமங்களைப் போதிக்கும் வேறு இடங்களும் இருந்தன. அறவோர் பள்ளியும், அறன் ஓம்படையும் புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் (இந்திர விழவு. 179-180) என்பதனால் இதைக் காணலாம். புறநிலைக் கோட்டம் என்பது ஸ்ரீ கோவில், ஸ்ரீ கோவில்: அருகன் கோவில். நாடுகாண் காதையிலே புத்த விகாரங்கனைப்பற்றியும், அருகர்க்குரிய சிலாதலங்களைப்பற்றியும் கூறப்படுகின்றன. பணை ஐந்து ஒங்கிய பாசிலைப் போதி அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர விகாரம் ஏழ்உடன் போகி (நாடுகாண். 11-14) ஐந்து கிளைகள் பொருந்திய மகாபோதி மரத்தின் கீழே ஞானம் பெற்றவர் புத்தர். அவருடை அறவுரைகளைப் போதிக்கும் அந்தரசாரிகள் வந்து அமர்ந்து புத்த தர்மங்களைப் போதிப் பார்கள். இத்தகைய இந்திர விகாரம் ஏழையும் கோவலன் வணங்கினான். இதனால் பௌத்த மதப் பள்ளிகள் காவிரிப்பூம் பட்டினத்திலே இருந்தனவென்பதைக் காணலாம். கோவலன் பௌத்தப் பள்ளிகளை வணங்ககியபின், அருகர்களின் சிலாதலத்தையும் வணங்கினான். பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல் நீர் அணி விழவினும், நெடும்தேர் விழவினும் சாரணர் வரூஉம் தகுதிஉண்டாம் என உலக நோன்பிகன் ஒருங்குடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு (நாடுகாண். 21-25) அழகு மிகுந்த மலர்களையுடைய பிண்டியின் நிழலிலே, சாரணர்கள் அமரும் சிலாதலம் இருந்தது. அது, நீராட்டு விழா வின்போதும், பெரிய தேர்விழாவின்போதும் சாரணர்கள் வந்து மக்களுக்கு அருக தர்மத்தை உபதேசிப்பார்கள் என்று கருதிச் சாவகர்களால் இடப்பட்டதாகும். இதனையும் கோவலன் வணங்கி வலம்கொண்டான். சாவகர்: அருக தர்மத்தைப் பின்பற்றி நடக்கும் இல்லறத்தார். இவர்களுக்கு உலகநோன்பிகள் என்றும் பெயர். புகாரில் அருகர் பள்ளிகளும் இருந்தன என்பதை மேலே காட்டிய அடிகளால் அறியலாம். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த கோவில்களைப் பற்றிக் கனாத்றிம் உரைத்த காதையிலும் காணப்படுகின்றன. கற்பகத்தருக் கோவில், ஐராவதக் கோவில், பலதேவர் கோவில், சூரியன் கோவில், கைலாயக் கோவில், முருகன் கோவில், இந்திரன் கோவில், அருகன் கோவில், சந்திரன் கோவில் முதலிய கோவில்கள் காணப்படுகின்றன. அமரர்தருக் கோட்டம்; வெள்யானைக் கோட்டம்; புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்; பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம்; ஊர்க்கோட்டம்; வேல்கோட்டம்; வச்சிரக் கோட்டம்; புறம்பணையான் வாழ்கோட்டம்; நிகந்தக் கோட்டம்; நீவரக் கோட்டம் (கனாத்திறம், 9-13) இவ்வடிகளும் காவிரிப்பூம்பட்டினத்திலே இன்னின்ன கோவில்கள் இருந்தன என்பதைக் காட்டுகின்றன. காவிரிப்பூம்பட்டினத்திலே பள்ளிகொண்ட பெருமாள் கோவில் இருந்தது. இதனை. அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து (நாடுகாண். 9-10) அழகிய பாம்புப்படுக்கையிலே யோக நித்திரை செய்து கொண்டிருக்கும். நீலமணிபோன்ற நிறத்தையுடைய திருமால் கோவிலை வலம்செய்து நீங்கி என்பதனால் காணலாம். கோவலன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்ட போது புகார் நகரிலே திருமால் கோவிலையும் வணங்கிப் புறப்பட்டான். இச்செய்தியையே மேலேகாட்டிய அடிகள் குறித்தன. ஐயைக்குத் தனிக் கோவில் இருந்தது, இதனை, ஐயைக் கோட்டத்து எய்யா ஒரு சிறை வருந்து நோய் தணிய இருந்தனர் (வேட்டுவரி. 4-5) கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும், ஐயைக் கோட்டத்திலே, யாரும் போகாத ஒரு பக்கத்திலே, வழி நடந்த வருத்தம் தீரத் தங்கியிருந்தனர் என்ற அடிகளர்ல் அறியலாம். மதுரை நகரக்கோவில்கள் மதுரை நகரத்திலே அக்காலத்திலிருந்த கோவில்களைப் பற்றியும் சிலப்பதிகாரம் சொல்லுகின்றது. சிவபெருமான் கோவில், திருமால் கோவில், பலதேவன் கோவில், முருகன் கோவில், அறத்துறைகளை மக்களுக்கு எடுத்துக் கூறி அறிவுறுத்தும் சமணர், புத்தர் முதலியவர்களின் பள்ளிகள் இருந்தன. நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும், உவணச் சேவல் உயர்ந்தோன் நியமமும், மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவல் கொடி யோன் கோட்டமும், அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும். (ஊர்காண். 7-11) என்ற அடிகள் மதுரையிலிருந்த கோவில்களைக் குறித்தன. ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன். எனக் கால்கோள் காதையிலே திருவநந்தபுரத்துக் கோவிலும், திருமாலின் பள்ளிகொண்ட கோலமும் கூறப்பட்டுள்ளன. மேலே காட்டியவைகளைக்கொண்டு, சிலப்பதிகார காலத்திலே தமிழகம் முழுவதும் பரவிக்கிடந்த கோவில்களைக் காணலாம். சிவன் கோவில், திருமால் கோவில், அருகன் கோவில், இந்திரன் கோவில், ஐராவதக் கோவில், பலதேவன் கோவில், சூரியன் கோவில், சந்திரன் கோவில், சாத்தன் கோவில்; இன்னும் பேய், பிசாசு, பூதங்களுக்கான கோவில்கள்; மன்மதன் கோவில், திருமகள் - கலைமகள் கோயில்கள் - இவைகள் தமிழகத்திலே இருந்தன. புத்தர் பள்ளிகளும், அருகர் பள்ளி களும், வேறு அறம் போதிக்கும் இடங்களும் தமிழகத்திலே இருந்தன. இவைகளைத் தமிழ் மக்கள் வணங்கி வழிபாடு செய்துவந்தனர். காவிரிப்பூம்பட்டினம், சீரங்கம், உரையூர், திருவேங்கடம், மதுரை, திருச்செந்தூர், திருமாலிருங்குன்றம், திருச்செங்குன்று, சுவாமிமலை, திருவேரகம், கச்சிநகர், திருவநந்தபுரம் முதலிய தலங்களின் பெயர்களும் சிலப்பதிகாரத்திலே காணப்படு கின்றன. வேதமும் வேள்வியும் சங்க காலத்திலேயே தமிழகத்தில் வடமொழி வேதங்கள் வழங்கிவந்தன. வேதங் கற்ற மறையோர்கள் மக்களால் பாராட்டப் பட்டுவந்தனர், நாட்டிலே வேதமுறைப்படி வேள்விகள் நடை பெற்று வந்தன. மன்னர்களும், மற்றவர்களும் வேத வேள்விகளை ஆதரித்து வந்தனர். இவ்வுண்மைகளைச் சங்க இலக்கியங்களிலே காணலாம். பல்யானைச் செல்கெழு குட்டுவன் என்னும் சேர மன்னன் வேள்விகள் பல செய்தான். தன்னைப் பாடிய பாலைக் கௌதமனார் என்னும் புலவர்பொருட்டுப் பத்துப் பெரிய வேள்விகள் செய்தான். பத்தாவது வேள்வியைச் செய்து கொண்டிருக்கும்போது கௌத மனாரும், அவர் பத்தினியும் சுவர்க்கம் அடைந்தனர். இச்செய்தி, பதிற்றுப்பத்திலே மூன்றாம் பத்தின் பதிகத்தில் காணப் படுகின்றது. இவ்வரலாற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னைப்பற்றிப் புறநானூற்றிலே காண்கிறோம். இவன் பல யாகங்களைச் செய்த பாண்டியன். தொல்காப்பியர் வேதங்களைப்பற்றிக் கூறியிருக்கின்றார். சங்க நூல்களை நடுநிலையிலே நின்று ஆராய்வோர், சங்க காலத்திற்கு முன்பே வடமொழி வேதங்கள் தமிழ்நாட்டிலே வழங்கின என்பதை உணர்வார்கள். பாரதநாட்டு நாகரிகம் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருந்தது என்ற உண்மையை உணர் வார்கள். இன்று சிலர் சொல்வதுபோல் வடவர் தென்னவர் என்ற வேற்றுமைகள் அக்காலத்தில் இல்லை என்பதையும் காண முடியும். சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாடெங்கும் வேதங்கள் ஓதப்பட்டு வந்தன; வேதமறிந்த மறையோர்கள் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் வேதம் ஒதினர்; நாட்டு நலங் கருதி வேள்விகள் செய்தனர்; மன்னர்களுக்கும், மக்களுக்கும் அறநெறிகளைப் போதித்துவந்தனர்; உயர்ந்த ஒழுக்கம் உள்ளவர்களாய்ப் பலரும் போற்ற வாழ்ந்தனர். மாமுது முதல்வன் வாய்மையின் வழாஅ நான்மறை மரபின் மரபின் தீமுறை ஒருபால் (இந்திர விழவு. 174-175) மிகுந்த முதுமையையுடைய முதல்வனாகிய நான்முகனால் அருளப்பட்டவை; உண்மையில் தவறாதவை; நான்காக அமைந்தவை. இவ்வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி வேள்விகள் ஒரு பக்கம் நடைபெற்றன. காவிரிப்பூம்பட்டினத்திலே யாகங்கள் நடைபெற்றதை இவ்வடிகள் காட்டுகின்றன. மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில் மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும் மங்கல மறையோர் இருக்கையும் (நாடுகாண். 143-147) மழைக்குக் கருவையுண்டாக்கும் யாகத்தீ விளங்கும் வேள்விச் சாலை; அவ் வேள்விச்சாலையிலே, வேதியர்கள் தேவர்களுக்கு அவிர்ப்பாகம் கொடுக்கும் வேள்வித்தீயில் நறும்புகை எழும். இப்புகை மிக உயர்ந்த மாளிகைகளை எல்லாம் மூடிக் கொள்ளும். அதனால் அம் மாளிகைகள் மேகத்தால் சூழப்பட்ட மலைகள் போலக் காணப்படும். மறையோர்கள் வாழும் இடம் இவ்வாறு காட்சியளிக்கும். கவுந்தி, கண்ணகி, கோவலன் மூவரும் மதுரைக்குச் செல்லும் வழியிலே இத்தகைய ஊர்களைக் கண்டனர் என்று கூறப்படுகின்றது. நான்மறை அந்தணர் நவின்ற ஒதையும் (புறஞ்சேரி. 141) நான்கு வேதங்களையும் அறிந்த அந்தணர்கள் அவ்வேதங் களைச் சுருதி குன்றாமல் நவில்கின்றனர்; வைகறைப்போதில் இவ்வோசை கேட்கின்றது. விடியற்காலத்திலே மதுரை நகரத்திலே என்னென்ன ஓசைகள் கேட்கின்றன என்பதைச் சிலப்பதிகார ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அப்பொழுது வேதம் ஓதும் ஒசையும் கேட்கின்றது என்பதை மேலே காட்டியவாறு குறித்தார். ஒத்துடை அந்தணர் உரைநூல் கிடக்கையின் தீத்திறம் புரிந்தோன் செய் துயர் நீங்க, தானம் செய்து, அவள்தன் துயர்நீக்கி, கானம் போன கணவனைக் கூட்டி, ஒல்காச் செல்வத்து உறுபொருள் கொடுத்து, நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ! (அடைக்கல. 70-75) தீமை செய்த பார்ப்பனியின் துயர் நீங்கும்படி, வேதத்தை யுடைய அந்தணர்களின் அறநூல் முறையிலே பலவகையான தானங் களைச் செய்தாய்! அவள் துன்பத்தை அகற்றி, காட்டுக்குப் போன அவள் கணவனை அழைத்துவந்தாய்! அவர்கள் வாழ் வதற்குப் வேண்டிய செல்வங்களைக் கொடுத்தாய்! அவர்களை நன்றாக வாழச்செய்த அழியாத செல்வத்தையுடையவனே இது கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியின் கதையைக் குறித்தது. கோவலன் அவள் துன்பத்தைப் போக்கிய செய்தியை உரைத்தது. இங்கும் வேதம் பாராட்டப்பவதைக் காணலாம். இக்கதை சிறுகதைகள் என்னும் பகுதியிலும் காட்டப்பட்டது. காதின் மறைநா ஓசை அல்லது யாவதும் மணிநா ஓசை கேட்டதும் இலனே (கட்டுரை. 30-32) வேதம் ஓதும் ஓசையைத்தான் எப்பொழுதும் காதிலே கேட்டுக்கொண்டிருப்பான்; ஒருசமயமாவது, குறை சொல்லும் பொருட்டு அடிக்கப்படும். ஆராய்ச்சிமணியின் ஒசையை அவன் கேட்டதேயில்லை. இவ்வாறு பாண்டியன் நெடுஞ்செழியன் பாராட்டப்படு கின்றான். தமிழ்ப் பாண்டியர்கள் வேதநூலில் வைத்திருந்த அன்பையே இது காட்டுகின்றது. கோவலன், கண்ணகி, கவுந்தி மூவரும் மதுரைக்குப் போகும் பழியிலே உறையூரில் ஒரு சோலையிலே தங்கியிருந்தனர். அப்பொழுது மாங்காடு என்னும் ஊரைச் சேர்ந்த மறையோன் ஒருவன் அவர்களைச் சந்திக்கின்றான் அவன் மாமுது மறையோன் மாமறையாளன் தீத்திறம் புரிந்தோன் மாமறை முதல்வ மாமறையோன் நலம்புரி கொள்கை நான்மறையாள என்று பாராட்டப்படுகின்றான். அந்த மாங்காட்டு மறையோன் வேதங்களை அறிந்தவன்; வேள்விகளைச் செய்தவன்; சிறந்த ஒழுக்கம் உள்ளவன். ஆவான். மாடலன் என்னும் மறையோன் தலைச்செங்கானம் என்னும் ஊரினன். அவன் மதுரைப் புறஞ்சேரியிலே கோவலனைக் கண்டான். அவன் செய்த அறங்களைப் பாராட்டினான். கோவலன் நிலை கண்டு வருந்தினான். இச்செய்தி அடைக்கலக் காதையிலே சொல்லப்படுகின்றது. இந்த மாடல மறையோன், செங்குட்டுவன் வெற்றி வீரனாகக் கங்கைக்கரையிலே வீற்றிருக்கும்போது அவனைச் சந்திக்கின்றான். செங்குட்டுவன் தமிழகத்திலே இல்லாதபோது அங்கு நடந்த நிகழ்ச்சிகளை அறிவிக்கின்றான். செங்குட்டுவனுடன் வஞ்சி நகருக்குத் திரும்பி வருகின்றான் மாடலன். செங்குட்டுவன், சோழ-பாண்டியர்கள்மேல் சினம் கொண்டபோது அச் சினத்தை ஆற்றுகின்றான். அவனுக்கு நல்லறங் களை நவின்று அறக்கள வேள்வி செய்யும்படி அறிவுறுத்திகின்றான். கண்ணகிக்குக் கோவில் எடுத்து விழாச் செய்யும்போது இவன் செங்குட்டுவனுடன் இருக்கின்றான். இறுதியில் மாடலன் அறிவுரையின்படி செங்குட்டுவன் வேத வேள்வி செய்கின்றான். அடைக்கலக் காதை, நீர்ப்படைக் காதை, நடுகற் காதை வரந்தரு காதை நான்கிலும் மாடலன் செய்தி கூறப்படுகின்றது. மாடலன் என்னும் மறையோன். சிலப்பதிகாரத்திலே, சிறந்து விளங்கும் பாத்திரங்களில் ஒருவன். தாழ்நீர் வேலித் தலைச்செங் கானத்து நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் (அடைக்கல. 11-13) நீர்சூழ்ந்த தலைச்செங்கானம் என்னும் ஊரான்; நான்கு வேதங் களையும் முற்றக் கற்றவன்; நல்லொழுக்கம் நிறைந்தவன்; வேதம் அறிந்தவர்களுள் சிறந்தவன்; மாடலன் என்னும் பெயருள்ளவன். அருமறை முதல்வன் குறையாக் கேள்வி மாடலன் என்றெல்லாம் மாடலமறையோன் பாராட்டப்படுகின்றான். ஞான நல்நெறி நல்வரம்பு ஆயோன் தானம் கொள்ளும் தகைமையின் வருவோன், தளர்ந்த நடையன், தண்டுகால் ஊன்றி வளைந்த யாக்கை மறையோன் (அடைக்கல. 42-45) சிறந்த அறிவு ஒழுக்கத்துக்கு எல்லையாக இருப்பவன். ஓர் அந்தணன் தானம் வாங்குவதற்கு வந்தான்; அவன் தளர்ந்த நடையை உடையவன்; ஒரு தடியைக் கால்போல் ஊன்றி நடந்து வந்தான். அவன் முதுகு வளைந்த, வயதேறிய வேதியன். கோவலனிடம் தானம் வாங்கவந்த வேதியன் தோற்றம் இவ்வாறு கூறப்படுகின்றது. இதனால், தானம் வாங்கும் வேதியர்கள் சிலப்பதிகார காலத்திலே இருந்தனர் என்று அறிகின்றோம். சிலப்பதிகார காலத்திலே நல்லொழுக்கம் உள்ள அந்தணர்கள் தமிழ்நாடெங்கும் வாழ்ந்தனர். அவர்கள் வேதம் ஓதினர்; வேள்விகள் செய்தனர்; தங்களுக்குரிய ஓதல், ஓதுவித்தல், வேட்டல். வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுவகைத் தொழில்களையும் ஆற்றி வந்தனர். இவர்களைத் தவிர ஓழுக்கங் கெட்ட அந்தணர்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்தனர். அவர்கள் வேதநூல்களைக் கற்றவர்கள் அல்லர். காதற் பாட்டுக்களைப் பாடிக்கொண்டுதிரிவார்கள். வேதங்கள் கூறும்ஒழுக்க நெறிகளைப் பின்பற்றாதவர்கள்; ஆனால், முப்பிரிநூலைமட்டும் விடாமல் மார்பிலே அணிந் திருப்பார்கள். இவர்கள் தங்களை வேதியர்கள் என்றே சொல்லிக் கொள்ளுவார்கள். இத்தைகயோர் வாழும் இடங்களும் தமிழ் நாட்டில் இருந்தன. வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து (புறஞ்சேரி. 36-39) என்ற அடிகளால் இதைக் காணலாம். வேதநெறியைப் பின்பற்றா தவர்களை-வேதங்களைக் கல்லாதவர்களை - அந்தணர் என்றோ, வேதியர் என்றோ சிலப்பதிகார ஆசிரியர் குறிக்கவில்லை. புரிநூல் மார்பர் - அதாவது பூணுல் பூண்டோர் - என்று மட்டுந்தான் குறித்திருக்கின்றார். மேலே கூறியவைகளைக்கொண்டு, சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டிலே வடமொழி வேதங்கள் போற்றப் பட்டன, வேதநெறிகள் பாராட்டப்பட்டன, வேதியர்கள் சிறந்து வாழ்ந்தனர் என்பவைகளைக் காணலாம். திருமண முறை சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் புரோகித மணந்தான் பெரும்பாலும் நடைபெற்றுவந்தது. உயர்ந்த வகுப்பினர்களும், செல்வர்களும் புரோகித மணத்தையே ஆதரித்து வந்தனர். வேதவிதிப் படி, தெய்வசாட்சியாகப் பல சடங்குகளுடன் செய்து முடித்து வைக்கும் மணத்தையே சிறந்தது என்று நம்பினர். இந்நிலைதான் சிலப்பதிகாரத் தமிழகத்தில் இருந்தது என்று உறுதியாக உரைக்கலாம். நாகரிகம் தோன்றாத காலத்தில் இவ்வுலகில் திருமணம் என்ற ஒன்று இருந்ததேயில்லை. ஆணும் பெண்ணும் அவரவர்கள் விருப்பப்படிக் கூடிக்கலந்து வாழ்ந்தனர். நாளடைவில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் நேசித்தால், அவர்கள் தம்பதி களாக ஒன்று சேர்ந்து வாழ்வது என்ற முறையை ஏற்படுத்திக் கொண்டனர். பெற்றோர்கள் சம்மதத்தை எதிர் பார்க்காமல், ஆசைப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி வாழ்ந்த காலம் ஒன்றுண்டு. இந்த வழக்கம் உலகம் எங்கும் இருந்தது. தமிழ்மக்கள் இவ்வழக்கத்தையே ஒரு காலத்தில் மணவாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஒன்றுகூடி வாழும் தம்பதிகள் தங்களுக்குள் மனவேற்றுமை ஏற்பட்டால், ஒருவரைவிட்டு மற்றொருவர் பிரிந்துவிடவும் செய்தனர். இவ்வாறு ஆண் பெண் உறவிலே அடிக்கடி பிரிவினை ஏற்பட்டதனால் சமுதாயக் கட்டுப்பாடு குலைந்தது. ஒழுக்கக் குறைவும் ஏற்பட்டது, சமுதாயத்திலே சண்டை சச்சரவுகளும் பிறந்தன. ஊரார் அறியாமல் - உற்றார் பெற்றார் உணராமல் - தாங்களாகவே ஒன்றுபட்ட ஆண் பெண்கள் தங்கள் உறவை அறுத்துக்கொள்ளவும் தொடங்கினர். வாக்குறுதியை மீறி நடக்கவும் துணிந்தனர். உன்னை என் வாழ்க்கைத் துணைவி யாகக்கொள்ளுகிறேன் என்று ஒரு பெண்ணிடம் உறுதி சொல்லிய ஆண்மகன், பின்னர் மனத்தாங்கல் ஏற்பட்டவுடன், நான் எப்பொழுது வாக்குறுதி அளித்தேன்? என்று பொய் சொல்லவும் தொடங்கினான். யாராவது தடுத்துக்கேட்டால், நான் இப்பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சாதிக்கவும் துணிந்தான். ஆடவர்கள் மட்டும் அல்ல, பெண்களும் இவ்வாறு தவறு செய்யத் துணிந்தனர். ஆண் பெண் கூட்டுறவு வெளிப்படையாக இல்லாமல், மறைவாக ஏற்பட்ட காரணத்தால்தான் இத்தகைய பொய்யும் குற்றங்களும் நிகழ்ந்தன. காதல்கொண்ட ஆண் பெண்கள், பலர் அறிய வெளிப்படையாக வாழ்ந்தால் போதும், அதுவே கற்புத் திருமணம்; மறைந்து வாழ்வது களவுத் திருமணம் என்ற முறையைப் பின்பற்றிய காலத்திலும் இத்தகைய தவறு நிகழ்ந்தது. இத்தவறு உண்டாகாமல் பாதுகாப்பதற்காகவே, சமுதாயத் தலைவர்கள், திருமணத்திற்கென்று சில சடங்குகளை ஏற்படுத் தினார்கள். அச்சடங்குகளிலே, புரோகிதமோ, வேத முறையைப் பின்பற்றித் தீ வளர்த்தலோ, அக்கினியைத் தம்பதிகள் வலம் வருதலோ, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தலோ இல்லை. பெண்கள் கூடி மணமகளை வாழ்த்தினர். கணவனுக்குக் கீழ்ப் படிந்து நடக்கவேண்டும் என்று அறிவுரை கூறிப் பெண்ணை ஆண்மகனிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியை நல்ல நாளிலே, சுற்றத்தார் சூழ்ந்திருக்க நடத்தினர். இந்நிகழ்ச்சியின் போது வாத்தியங்கள் முழங்கும். நிகழ்ச்சி முடிந்தபின் விருந்துண்டு மகிழ்வார்கள். இத்தகைய திருமணச் சடங்கு ஏற்பட்டதற்கான காரணத்தை, பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்று தொல்காப்பியம் கூறுகின்றது. ஆரம்பகாலத் திருமணச் சடங்குகள் எப்படி நடைபெற்றன என்பதை அகநானூற்றில் 86, 136 ஆகிய இரண்டு பாடல்களிலே காணலாம். இவைகள்தான் சங்ககால நூல்களிலே நாம் காணும் திருமணமுறை. காதல் நிகழாமல் திருமணம் நடைபெறுவ தில்லை என்ற கருத்தைச் சங்க நூல்களிலே காணலாம். ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்ட பிறகுதான் - அக் காதலின்மூலம் அவர்களுக்குள் கள்ளக் கூட்டுறவு தொடங்கிய பிறகுதான் - திருமணம் நடைபெறும். இக்கருத்தையே பழந்தமிழ் நூல்களிலே காண்கின்றோம். களவுமணம் நிகழாமல் கற்புமணம் இல்லை என்பதே பண்டையோர் கொள்கை. நாளடைவிலே மக்கள் களவுமணத்தை இழிவாகக் கருதத் தொடங்கிவிட்டனர். இக்கருத்தைச் சங்க இலக்கியங்களிலேயே காணலாம் களவு மண வாழ்வு நடைபெறும் காலத்தில், தலைவி, தன்னை விரைவில் மணந்துகொள்ளும்படி தலைவனை வற்புறுத்து வாள். தலைவியின் தோழி, தலைவனிடம். தலைவியை மணந்து கொள்ளும்படி கட்டயப்படுத்துவாள். தங்கள் கள்ளநட்பு ஊரார்க்குத் தெரியாமல் இருக்கவேண்டும் என்று தலைவனும், தலைவியும் கவலைப்படுவார்கள்; தங்கள் கள்ளநட்பை ஊரார் உணர்ந்தால் பழிப்பார்களே என்று பயப்படுவார்கள். தோழியும் கவலைப்படுவாள். இச்செய்திகளைக் குறிக்கும் பாடல்களை அகப்பொருள் நூல்களிலே காண்கின்றோம். காதல் களவுமணம் பாராட்டப்பட்ட காலத்தில்கூட களவு மணம்கொண்ட மணமகன், மணமகளின் பெற்றோரை அணுகு வான்; பெண் கேட்டு மணந்துகொள்வான். இம்முறையையே சிறந்தது என்று கொண்டனர். பெற்றோர் பெண்கொடுக்க மறுத்தால்தான். பெண்ணின் கற்பைக் காக்கும்பொருட்டுக் காதலன் ஊரார் உறவினர் அறியாமல் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விடுவான். அதன் பின்னும் அவர்களுக்கு ஊரார் அறியத் திருமணம் செய்து வைக்கப்படும். சங்க காலத்திலேயே கள்ளக் காதல்மணம் பொது மக்களால் பழிக்கப்பட்டது. பெற்றோர் சம்மதத்தின்மேல் செய்யப்படும் திருமணமே சிறந்தது என்று கருதப்பட்டது என்பதை மேலே கூறியவற்றால் உணரலாம். ஆனால் சிலப்பதிகார காலத்தில் பெண்ணின் பெற்றோரும் ஆணின் பெற்றோருமே கொள்வினை கொடுப்பனை செய்து கொண்டனர். மணமக்களாகப்போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனரா? இல்லையா? என்பதைப்பற்றிக் கூட அவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தமிழகத்திலிருந்த இந்த உண்மை நிலையைச் சிலப்பதிகார ஆசிரியர் அப்படியே எடுத்துக்காட்டுகின்றார். போதில் ஆர்திருவினாள் புகழ்உடை வடிவு என்றும் தீதுஇலா வடமீனின் திறம் இவள்திறம் என்றும், மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும்குணத்துக் காதலாள்; பெயர்மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ என்று கண்ணகியின் சிறப்புப் பாராட்டப்படுகின்றது. பெண்கள் எல்லாம் கண்ணகியைத் தொழுது ஏத்துவார்கள். இலக்குமியின் வடிவமே இவன் வடிவம்; குற்றமற்ற அருந்ததியின் கற்பே இவன் கற்பு என்று அவர்கள் கொண்டாடுவார்கள்; இவள் சிறந்த குணங்களையெல்லாம் விரும்புகின்றவளாயிருந்தாள். இவள் தான் கண்ணகி என்னும் பெயர் உள்ளவள். இவ்வாறு கண்ணகி என்னும் பெயர் உள்ளவன். இவ்வாறு கண்ணகியின் அழகு, கற்பு, குணம் இவைகள் பாராட்டப்படுகின்றன. மண்தேய்த்த புகழினான், மதிமுக மடவார்தம் பண்தேய்த்த மொழியினார் ஆயத்துப் பாராட்டி, கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசைபோக்கிக் காதலால் கொண்டுஏத்தும் கிழமையான்; கோவலன் என்பான்மனனோ என்பது கோவலனைப்பற்றிய பாராட்டுரை. உலகம் சிறிது என்று சொல்லும்படி பரந்த புகழை உடையவன்; இசையினும் இனிய மொழியையுடைய பெண்கள், தம் கூட்டத்திலே, அவனைச் செவ்வேள் என்று சொல்லிப் புகழ்ந்து பாராட்டுவர்; அவன்மீது காதல்கொள்வர்; அவன்தான் கோவலன் என்பவன்; என்று கோவலனைப் பாராட்டுகிறார் ஆசிரியர். கண்ணகியைப் பாராட்டும் பகுதியில் உள்ள ஒரு உண்மையை உற்று நோக்கவேண்டும். கோவலனைப் பாராட்டும் பகுதியில் உள்ள ஒரு உண்மையையும் உற்று நோக்கவேண்டும். கண்ணகி அழகும் கற்பும் உடையவள் மட்டும் அல்லள்; சிறந்த குணங்களையும் உடையவள்; சிறந்த குணங்களையே காதலித்து வாழ்பவள் என்று கூறப்பட்டுள்ளது. இதனை, வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் என்ற தொடராமல் காணலாம். கோவலன் பெண்கள் விரும்பத்தக்க அழகுள்ளவன்; காதலால் கொண்டு ஏத்தும் கிழமையான் என்பதனால் இதைக் காணலாம். கண்ணகியைப்போலச் சிறந்த குணங்களை உடையவன் கோவலன் என்று கூறப்படவில்லை. இது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு முன்பு, கண்ணகி கோவலனைக் காதலித்தாள் என்றோ, கோவலன் கண்ணகியைக் காதலித்தான் என்றோ சிலப்பதிகாரத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. காதலுக்குப் பின்னர்தான் கற்புத் திருமணம் நடைபெறும் என்பது தமிழ்நாட்டு இலக்கிய மரபு. சிலப்பதிகார ஆசிரியருக்குப் பின்னிருந்த கம்பர் இந்த மரபை ஒட்டியே காவியம் செய்தார். இராமனும் சீதையும் திருமணத்துக்கு முன்பே - இராமன் வில்லை முறிப்பதற்கு முன்பே - ஒருவரை ஒருவர் கண்டனர்; காதல் கொண்டனர் என்று பாடுகின்றார். வால்மீகி இராமாயணத்தில் இல்லாத செய்தியைத் தமிழ் நாட்டு மரபை ஒட்டிச் சேர்த்துச் சொல்லுகிறார் கம்பர். ஆனால், தமிழ் இலக்கிய மரபை - தமிழ்நாட்டு வழக்கத்தை - அறிந்த சிலப்பதிகார ஆசிரியர் அம்மரபைப் பின் பற்றவில்லை. இதற்குக் காரணம், தன் காலத்தில் தமிழகத்தில் இருந்த நாகரிகத்தை ஒளிவுமறைவில்லாமல் உரைக்க வேண்டும் என்பதே அவர் எண்ணமாகும். கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்வதைப் பற்றி அவர்களுடைய பெற்றோர்கள்தான் முடிவு செய்தனர். கண்ணகியின் தந்தையான மாநாய்கனும் பெருநிதி படைத்தவன்; கோவலன் தந்தையான மாசாத்துவானும் பெருநிதி படைத்தவன். இருவரும் செல்வத்திலும் சிறப்பிலும் ஒத்தவர்கள். இவர்கள், கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்தபிறகுகூட, மணமக்கள் சம்மதத்தைக் கேட்டதாகத் தெரியவில்லை. இருபெரும் குரவரும் ஒரு பெரு நாளில் மணஅணி காண மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி யானை எருத்தத்து அணியிழையார் மேல்இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மணம் இரண்டு பெற்றோர்களும் ஒரு சிறந்த நாளிலே தங்கள் பிள்ளை களுக்கு மணம் செய்து, அவ்விழாவைக் காண மகிழ்ச்சியுடன் விரும்பினர். உடனே அவர்கள் யானையின்மேல் பெண்களை அமர்த்தி, அவர்கள் மூலம் நகரத்தார்க்கு இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொடுத்தனர். பெற்றோர்களின் விருப்பப்படிதான் கோவலன் - கண்ணகி திருமணம் முடிவு செய்யப்பட்டது என்பதில் ஐயம் இல்லை. இவ்வுண்மையை மேலே காட்டிய சிலப்பதிகார அடிகள் தெளிவுறுத்துகின்றன. கோவலன்-கண்ணகி திருமணம் வைதீக முறைப்படி தான் நடைபெற்றது. வேதங்களின் முறைகளை நன்றாக அறிந்த வயது ஏறிய புரோகிதரால் இத்திருமணம் நடத்தி வைக்கப்பட்டது; நல்ல நாளிலே நடந்தது. வான்ஊர் மதியம் சகடுஅணைய, வானத்துச் சாலி ஒருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்காண் நோன்பு என்னை? உரோகிணி நட்சத்திரத்திலே, வயதேறிய புரோகிதன், வேத முறைப்படி சடங்குகளைச் செய்து காட்டினன். கோவலன் அருந்ததிபோன்ற கண்ணகியின் கையைப் பிடித்துக்கொண்டு தீயை வலம் வருகின்றான். இக்காட்சியைக் காண்பவர்களின் கண்கள்தாம் செய்த தவத்தின் சிறப்பு எத்தகையது? இதனால், கோவலன்-கண்ணகி திருமணம் வேத விதிப்படி நடைபெற்ற புரோகித மணம் என்றே அறிகின்றோம். இத் திருமணத்தில் நடைபெற்ற சடங்குகளும் இன்று நடைமுறையி லிருக்கும் திருமணச் சடங்குகளை ஒட்டியே காணப்படுகின்றன. இவைகள் மங்கல வாழ்த்துக் காதையிலே காணப்படும் செய்திகள். பின்னால் தேவந்தியின் திருமணத்தைப்பற்றிக் குறிப்பிடும் இடத்திலும் புரோகித மணமே குறிப்பிடப் பட்டுள்ளது. தேவந்திகை யைத் தீவலம் செய்து நால்ஈர் ஆண்டு நடந்தன் பின்னர் (வரந்தரு. 84-85) தேவந்திகை என்பவளைத் தீயை வலம்செய்து மணந்து கொண்டு, எட்டாண்டுகள் கழிந்த பிறகு. இவ்வடிகளும் புரோகித மணத்தையே குறித்தது. இதுவும் தமிழகத்தில் நடந்த திருமணம். சிலப்பதிகார காலத்திலே தமிழகத்து மக்கள் தங்கள் உறவினரிடையே பெண் கொண்டனர்; கொடுத்தனர். செல்வர்கள் தங்களுக்குள் கொள்வினை கொடுப்பனை செய்து கொள்வதையே பெருமை யாகக் கருதினர். பெற்றோர்களே தங்களுடைய பெண்களுக்கும், பிள்ளை களுக்கும் மணம்புரிந்து வைக்கும் பொறுப்பை மேற்கொண்டிருந் தனர். இன்னும் பெற்றோர்களால் மணம் செய்து வைக்கப்படும் தம்பதிகள், பின்னர் காதலுடன் - அன்புடன் - கோவலனும் கண்ணகியும் மணம் செய்துவைக்கப்பட்டபின் அன்புடன் இல்லறம் நடத்திவந்தனர். சிலப்பதிகார காலத்தில் நாகரிகம் பெற்ற சமூகத்திலே நடைபெற்ற மணங்கள் எல்லாம் வேத முறையை ஒட்டிய வைதீக மணங்களாகவே நடைபெற்றன. புரோகிதர்களாலேயே மணச் சடங்குகள் செய்துவைக்கப்பட்டன. காதல் மணமோ, களவு மணமோ சமூகத்தாரால் விரும்பப் படவில்லை. களவுமண ஒழுக்கத்தை மிக இழிவாகக் கருதினர்; அவ்வழியிலே ஆண்பெண்கள் செல்லாமல் இருப்பதற்கான தடைகளையும் விதித்திருந்தனர். ஆனால் நாகரிகம் பெறாதவர்கள் என்று கருதப்பட்ட தமிழர்களிடையே, பண்டைக் களவு, கற்பு மணமுறைகள் தாராளமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன. நாகரிகம் பெற்ற மக்கள் எற்றுக்கொண்ட சிலப்பதிகாரத் திருமண முறை அக்காலத்தில் இன்றியமையாததாக இருந்தது. ஆதலால்தான் அம்முறையை ஏற்றுக்கொண்டனர். தம் மக்களின் பிற்கால வாழ்வைக் கருதியே பெற்றோர்கள் திருமணப் பொறுப்பை மேற்கொண்டனர். மணம் செய்துவைத்த தம்பதிகள் என்றும் பிரியாமல் இன்புற்று வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்துடனேயே தெய்வீகத் தன்மையுள்ள பல சடங்கு களையும் ஏற்படுத்தினர். சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் இந்த முறை அவசியமாக இருந்தது. ஆதலால்தான் தமிழ்மக்கள் இந்த முறை களைப் பின்பற்றினர். இவ்வாறு எண்ணுவதுதான் பொருத்தமானதாகும். பொது மகளிர் பொதுமகளிர், கணிகையர்; விலைமகளிர்; பரத்தையர், பதியிலார், வரைவின்மகளிர் இவைகள் ஒருபொருட் சொற்கள். வரைவு இல் மகளிர் - மணம் இல்லாத பெண்கள். சங்க இலக்கியங்களிலே பொதுமகளிர் கூட்டுறவைப்பற்றி அவ்வளவாகக் கண்டிக்கப்படவில்லை. அக்காலத்தில் செல்வக் குடியினர் பரத்தையருடன் கூடி வாழ்ந்தனர். காதல்பரத்தையர், சேரிப்பரத்தையர் எனப் பரத்தையரிலே இருவகையினர். காதல் பரத்தையர் என்போர் ஒருவனுடன் நிலையாகச் சேர்ந்து வாழ்வோர். சேரிப்பரத்தையர் யார் பொருள் கொடுத்தாலும் அவருடன் சேர்ந்துவாழும் விலைமகளிர். இத்தகைய இருவகைப் பரத்தையர்களும் சங்க காலத்திலே இருந்தனர். இவர்களுடன் கூடிக்குலாவும் உரிமை ஆண் மக்களுக்கு இருந்தது. பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பிய காதலனுடன் மனைவி ஊடுவாள். அவன் பலவகையில் அவளைச் சமாதானம் செய்வான். அவள் ஊடலைத் தணிக்க முயல்வான். ஊடல் நீங்கியபின் கூடுவான். மனைவியின் ஊடலைத் தணிக்கக் காதலன் தூதுவிடுவான். பாணர், தோழி முதலியோர் தூதுவர்களா யிருப்பர். இவர்களால் மனைவியின் ஊடலைத் தணிக்க முடியாவிட்டால், காதலன், விருந்தினர்களுடன் வருவான். அவள் ஊடல்நீங்கி விருந்தினரை உபசரிப்பாள். ஊடியிருக்கும் மனைவியின் முன்னே அவள்காணும் படி, குழந்தையை எடுத்துக் கொஞ்சுவான் காதலன். அவள் ஊடல் நீங்குவாள். காதலன் பரத்தையர் வீட்டுக்குச் சென்ற காரணத்தால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும். இவைபற்றிய பாடல்களைச் சங்ககால அகப்பொருள் நூல்களிலே காணலாம். சங்க காலத்தில் பரத்தையர் நட்பைக் குலமகளிர்தான் வெறுத்தனர்; பொதுமக்கள் வெறுத்தனர் என்று சொல்ல இடம் இல்லை. ஆனால், வள்ளுவர், வரைவின்மகளில் என்று ஒரு அதிகாரத்தைத் திருக்குறளில் வகுத்தார். வரைவின் மகளிர் கூட்டுறவு தீங்கு தரும்; அக் கூட்டுறவால் இன்பம் இல்லை; துன்பந்தான் உண்டு; அறிவுள்ளவர்கள் வரைவின் மகளிரை விரும்பமாட்டார்கள்; அவர்கள் தோள், அற்பர்கள் அழுந்தும் நரகமாகும் என்றெல்லாம் கண்டித்துப் பேசுகின்றார். இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும், திரு நீக்கப்பட்டார் தொடர்பு ஒருவனைப் பற்றி உறுதியுடன் வாழாத வரைவின்மகளிரும், கள்ளும், சூதும் ஆகிய இம்மூன்றும் இலக்குமியால் வெறுக்கப் பட்ட வர்களின் தொடர்பாகும். இது வள்ளுவர் கூற்று. பொதுமகளிர், கள், சூது இம் மூன்றும் செல்வத்தைச் சிதைக்கும். இம்மூன்றுள் எது ஒன்றில் பற்று வைத்தாலும், அது தன்னைப் பற்றியவர்களை ஓட்டாண்டிய களாக்கிவிடும். இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர் புள்ளவை. இவ்வாறு, பொதுமகளிர் நட்பு ஆபத்தானது என்ற அறிஞர்கள் உபதேசித்துகூடச் செல்வர்கள் அதைக்கைவிட வில்லை. அவர்களுக் காகவே பொதுமகளிர் என்ற பெயரில் ஒரு வகுப்பு வளர்ந்துவந்தது. அவர்கள் நடனம் இசை, இசைக்கருவிப் பயிற்சி முதலிய கலை களைக் கற்றிருந்தனர்; செல்வர்களை மயக்கிப் பொருள்பறிக்கும் வித்தையிலே இவர்கள் கைதேர்ந் தவர்கள். சிலப்பதிகார காலத்திலே இந்த நிலைமை தமிழ் நாட்டில் ஓங்கி உரம்பெற்றிருந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே கணிகையர் வீதி தனியாக இருந்ததைப்பற்றிக் கூறப்படுகின்றது. இந்திர விழாவின் போது அவர்கள் தம்மை அலங்கரித்துக் கொண்டு தெருக்களிலே திரிந்தனர் என்று சொல்லப்படுகின்றது. மதுரையிலே பணக்காரக் கணிகையர் வீதி தனியாகவும், ஏழைக் கணிகையர் தெரு தனி யாகவும் இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பெறுமானம் உள்ள மாலையை வாங்குவோர் மாதவிக்குக் காதலர் ஆவர் என்று மாதவியின் தோழி, கடைவீதியிலே நின்று கூவினாள். கோவலன் அந்த மாலையை வாங்கினான். மாதவி இல்லம் புகுந்தான். இந்த நிகழ்ச்சி பணம்பறிப்பதே பரத்தையர் தொழில் என்பதைக் காட்டும். கோவலன் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன்கொடுத்து மாதவியின் மாலையை வாங்காமலிருந்தால் கதை எப்படி முடியும்? அப்பொன்னைக் கொடுத்து மாலையை வாங்கும் மற்றொருவனே மாதவியை அடைந்திருப்பான்; சிலப்பதிகாரமே தோன்றியிருக் காது. மாதவி பரத்தைதான்; ஆனால் அவள் காதற்பரத்தை யாவாள். அவள் கோவலனைத்தவிர மற்றொருவனை விரும்ப வில்லை. கோவலன் கொலையுண்டவுடன் அவள் பௌத்தமதத் துறவியானாள். இது குறிப்பிடத்தக்கது. ஆயினும் பரத்தை பரத்தைதான்; மாதவியால்தான் கோவலன் செல்வம் இழந்தான்; அவள் முன்னோர் தேடி வைத்த நிதிக்குவியலைத் தொலைத்தான்; வறுமையடைந்தான்; உள்ளூரிலே வாழ்வதற்கு நாணம் அடைந்து, அயலூருக்குப் புறப்பட்டான்; மதுரைக்குச் சென்றான்; மனைவியின் சிலம்பை விற்று வாணிகஞ் செய்ய எண்ணினான். ஆனால், அவன் எண்ணியது ஒன்று; நடந்தது வேறு. சிலப்பதிகாரப் பதிகத்திலே மூன்று கருத்துக்களை வலியுறுத்து வதே நூலின்நோக்கம் என்று சொல்லப்படுகின்றது. இதனை அறம் கூறும் நூல் என்ற பகுதியிலே காணலாம், அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றும்; பத்தினியைத் தேவர் களும் போற்றுவார்கள்; ஊழ்வினையின் பயனை அனுபவித்தே தீரவேண்டும். இவைகளே மூன்று கருத்துக்கள். இவைகளுடன் இன்னும் பல சிறந்த கருத்துக் களையும் சிலப்பதிகாரத்திலே காணலாம். அவற்றுள் பரத்தையர் வலைப்பட்டோர் பாழாவார்கள் என்ற கருத்தும் ஒன்றாகும். கோவலன் மாதவியின் நட்பை நாடியிரா விட்டால் சிலப்பதிகாரமே பிறந்திருக்காது. இராமன் காட்டுக்குச் செல்லாவிட்டால் இராமாயணமே இல்லை, தருமன் சகுனியுடன் சூதாடாவிட்டால் பாரதமேயில்லை; இவைபோலக் கோவலன் - மாதவி நட்பு ஏற்பட்டிராவிட்டால் சிலப்பதிகாரமே இல்லை. சிலப்பதிகாரத்தைப் படிப்போர் அனைவரும் இவ்வுண்மையை உணர்வார்கள். வேசையர் நட்பால் தீமைதான் விளையும். அறிவுள்ளோர் ஒழுக்கம் உள்ளோர் அவர்களை விருப்பக்கூடாது என்ற உண்மையைச் சிலப்பதிகார ஆசிரியர் சொல்லாமல் விடவில்லை. கானல்வரியிலே கோவலன் பாடியபின், மாதவியும் பாடுகின்றாள்; அவளும் கோவலனைப்போலவே வேறுகுறிப்புத் தோன்றப் பாடினாள். அதனால் கோவலன் சினமுற்றான். என்ன இருந்தாலும் மாதவி ஒரு பரத்தைதானே என்ற நினைப்பு அவன் நெஞ்சிலே பிறந்தது. மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள். வஞ்சனையன பொய்கள் பலகூறிப் பொருள்பறிக்கும் வஞ்சகி யான பரத்தை பாடினாள் என்று கோவலன் நினைத்தான். அந்த நினைப்புத்தான் அவனை மாதவியைவிட்டுப் பிரித்தது. இவ்விடத்தில் பரத்தையின் இயல்பு விளக்கப்பட்டது; அவர்கள் நடப்பெல்லாம் பொருள்பறிப்பதற்கான பொய் நடிப்புக்கள் என்று உணர்த்தப்பட்டது. கணவன் வேறு பெண்ணைக் காதலிப்ப தாகக் கூறலாம்; பாடலாம் ஆனால், குலமகள் ஒருத்தி அவ்வாறு சொல்லமாட்டாள்; கோவலன் வேறு பெண்ணைக் காதலிப்பது போல் பாடியதுகண்டு, தானும் வேறு ஆடவனைக் காதலிக்கும் குறிப்புத்தோன்றப் பாடினாள். இது நம் நினைவில் வைக்கத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும். மாதவியைப் பிரிந்த கோவலன், கண்ணகியின் இல்லத்தை அடைந்தான் அவன் கண்ணகியிடம், பரத்தையாகிய மாதவி யால் தனக்கு நேர்ந்த துன்பத்தை வாய்விட்டு உரைக்கின்றான். அவள் நட்பால் தனது மானம் பறிபோயிற்று என்று சொல்லி வருந்துகின்றான். சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடி குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த இலம்பாடு நாணுத் தரும் பொய்யை மெய்யாகக் காட்டி ஒழுகும் பொய்மகளான பரத்தை யுடன்கூடி விளையாடினேன். அதனால் என் முன்னோர் தேடி வைத்த பொருட்குவியல் முழுவதும் தொலைந்து போயிற்று. வறுமைக்கு ஆளானேன். இந்த நிலை எனக்கு நாணத்தைத் தருகின்றது. கனாத்திறம் உரைத்த காதையிலே காணப்படும் இச்செய்தி பரத்தையர்வலையில் பட்டோர் வறுமைக் குழியிலே வீழ்வர் என்ற உண்மையைக் குறித்தது. கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் கணிகையர் வாழ்வு கடைப்பட்ட வாழ்வு என்ற, மாதவிதன் வாழ்வைத் தானே வெறுத்துரைத்தாள் என்று கூறப்படுகின்றது. இது காடுகாண் காதையிலே வனதேவதையின் வாயினால் சொல்லப்பட்டது. கோவலன் கண்ணகியை மணந்தவுடன், அவளோடு அன்புடன் இருந்தது இல்லறம் நடத்தினான். ஆனால், மாதவியின் நட்பைப் பெற்றவுடன் அவன் நடத்தையே மாறிவிட்டது. பரத்தையின் நட்புறவுதான் அவனுடைய நடத்தையை மாற்றியது. இந்த உண்மையை இளங்கோவடிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றார். நகைஆடு ஆயத்து நல்மொழி திளைத்து, குரல்வாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு திரிதரு மரபின் கோவலன் சிரித்து விளையாடும் வீணர் கூட்டத்துடன் சேர்த்தான்; அவர்கள் பேசும் காமக் குறிப்புள்ள பேச்சுக்களிலே மூழ்கினான்; குரல் என்னும் இசையைப் பாடும் பாணர்களோடும், நகரில் திரியும் காமுகர்களுடனும் கூடித் திரிந்தான் கோவலன். இவ்வாறு இந்திரவிழவு ஊர் எடுத்த காதையிலே கூறப் பட்டுள்ளது. மற்றோர் இடத்திலே, கோவலன், தன்னைத்தானே ஒழுக்கம் கெட்டவன் என்று செல்லிக்கொள்ளுகின்றான். நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி, நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த அறியாத் தேயத்து ஆர்இடை உழந்து சிறுமை உற்றேன்; செய்தவத்தீர்! (ஊர்காண். 17-20) அறநெறியைக் கைவிட்டவர்களின் தன்மைனைய அடைந்தேன் - மலர்பேன்ற மேனியை உடைய கண்ணகி வருந்தும்படி, இதற்குமுன் கண்டறியாத இடங்களிலே - நடத்தற்கு அரிய வழியிலே - நடந்துவந்து துன்பம் அடைந்தேன் கோவலன் கவுந்தியடிகளிடம் இவ்வாறு சொல்லி வருந்தினான். இதில் பரத்தையின் நட்புத்தான் கோவலனை ஒழுக்கங் கெட்ட வனாகச் செய்தது என்னும் கருத்தைக் காண்கின்றோம். பின்னும் பரத்தையர் நட்பால் கோவலன் அடைந்த தீமையை அவனே சொல்லுவதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. வறுமொழி யாளரொடு, வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்கு பொச்சாப்பு உண்டு, பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு நல்நெறி உண்டோ? (கொலைக்கள, 66-69) வீணரோடும், பரத்தரோடும் கூடினேன்; பிறரைப் பழித்துப் பேசும் கூட்டத்திலே சேர்ந்து அவர்களுடையே வெடிச்சிரிப்பில் மயங்கிக்கிடந்தேன்; நல்லொழுக்த்தை மறந்தேன; நல்லுரை களைக் கூறுவோரின் விரும்பத்தக்க மொழிகளை ஏற்காமல் விட்டேன். இத்தகைய எனக்கு நல்ல கதியும் உண்டோ? கோவலன் இவ்வாறு கண்ணகியிடமே தன் குற்றத்தை எடுத்துரைத்தான். நடந்தவைப்பற்றி மனம் வருந்தினான். கோவலன் உரைத்த இம்மொழிகள், மாதவியின் நட்பினால் அவன் அடைந்த தீமைகளையே காட்டுகின்றன. மாதவியாகிய பரத்தையின் கூட்டுறவு காரணமாகத் தான் கோவலன் செல்வத்தை யிழந்தான்; ஒழுக்கங் கெட்டான்; வீணர்களுடன் கூடி வீண்பொழுது போக்கினான்; வறுமை காரணமாகப் பரம்பரையாக வாழ்ந்த ஊரைவிட்டு ஒடினான்; அவதிக்கு ஆளானான்; கொலையுண்டான். இவ்வுண்மைகளைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. வள்ளுவர் வகுத்திருக்கும் வரைவின் மகளிர் என்னும் அதிகாரத்தின் உண்மைக் கருத்தை மெய்ப்பித்துக் காட்டுகின்றது. பரத்தையர் நட்பின் தீமையை விளக்குவதும் சிலப்பதிகார நோக்கங்களில் ஒன்றாகும். சாதி வேற்றுமை பிறப்பினால் மக்களுக்குள் வேற்றுமையில்லை. ஒற்றுமை யாக வாழ்ந்த மக்கள், தொழிலால்தான் நாளடைவில் வேறு வேறு வகுப்பினராகப் பிரிந்தனர். இவ்வாறு பிறந்த வகுப்புப் பிரிவினை தான், பிறப்பிலேயே வேற்றுமை பாராட்டும் சாதிப் பிரிவினையாக மாறிவிட்டது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பது தான் உண்மை. தொழிலில் உயர்வு தாழ்வு பாராட்டியதன் காரணமாகத் தான் உயர்ந்த வகுப்பு, தாழ்ந்த வகுப்பு என்ற பிரிவுகள் பிறந்தன; தொழில்களிலே, சில உயர்ந்தவை என்று கருதப்பட்டன; சில இழிந்தவை என்று எண்ணப்பட்டன. உயர்ந்த தொழில்களைச் செய்வோர் உயர்ந்தவர் ஆயினர்; இழிந்த தொழில்களைச் செய்வோர் தாழ்ந்தவர் ஆயினர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் உயர்ந் தோர் ஆயினர்; கல்வி, அரசு காவல், வாணிம், வேளாண்மை இவைகள் உயர்ந்த தொழில்களாக எண்ணப்பட்டன; இத் தொழில்களில் ஈடுபட்டோர் உயர்ந்ததோர் ஆயினர். இந் நால்வகைத் தொழில்களையும் செய்துவந்தோர் தனித்தனிப் பிரிவாகப் பிரிந்தனர்; நாளடைவில் அவர்கள் நால்வகை வருணத்தாராக நிலைத்தனர். இந் நால்வகை வருணத்தாரைத் தவிர வேறு பல வகுப்பினரும் இருந்தனர். நெய்தல்நில மக்கள், குறிஞ்சிநில மக்கள், முல்லைநில மக்கள். பாலைநில மக்கள் இவர்கள் எல்லாம் நால்வகை வருணத்துள் அடங்காதவர்கள். மருத நிலத்திலே - அதாவது நாகரிகம் வளர்ந்த நிலத்திலே தான் பலவகையான தொழில்களும் நடைபெறும், சிறப்பாக, விவசாயம் நடைபெறும் இடத்திலேதான் பலவகையான தொழில்களும் நடைபெறுவதற்கு இடம் உண்டு. ஆதலால், மருத நிலத்திலேதான் பலவகையான வகுப்புப் பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளும் தொழில் காரணமாகத் தோன்றியவைகள்தாம். இவ்வுண்மையைத் தொல்காப்பியத்திலே காணலாம். சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டிலே நால்வகை வருணம் நிலைத்திருந்தது. இவ்வருணங்களில் அடங்காத பிரிவினரும் தமிழகம் எங்கும் வாழ்ந்திருந்தனர். சிலப்பதி காரத்தைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணாமலிருக்க முடியாது. காவிரிப்பூம்பட்டினத்திலே அரச வீதி தனியாக இருந்தது; வணிகர் தெரு தனியாக இருந்ததது; மறையோர் வாழுமிடம் தனியாக இருந்தது; உழவர் உறையும் இடம் தனியாக இருந்தது என்று சொல்லப்படுகின்றது. இந்திரவிழவு ஊர்எடுத்த காதை யிலே இதைக் காணலாம். இச்செய்தி கடலாடு காதையிலும் காணப்படுகின்றது. இந்திர விழாவின் இறுதியிலே, கடற்கரையிலே, காவிரித் துறைமுகத்திலே நால்வகை வருணத்தனரும் கூடியிருந்தனர். அவர்கள் பேசும் பேச்சொலியை வேறு எந்த ஒசையினாலும் அடக்க முடியாது. அவ்வளவு திரளாக அவர்கள் குழுமி யிருந்தனராம். கடற்கரை மெலிக்கும் காவிரி பேர்யாற்று இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப (கடலாடு. 63-65) என்ற அடிகள் இவ்வுண்மையை உணர்த்தின. இந் நால்வகை வருணத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; வேறு பல பிரிவினர்கள்; அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர் என்ற உண்மையையும் இந்திரவிழவு ஊர்எடுத்த காதையிலே காணலாம். மருத்துவர், சோதிடர், முத்துக் கோப்பார், சங்கறுப்போர், சூதர், மாகதர், வைதாளிகர், நாழிகைக் கணக்கர், வேடம் புனைந்து சாந்திக் கூத்தாடுவோர், கணிகையர், இசைவாணர், கழைக் கூத்தாடிகள் இவர்கள் தனித்தனி இடங்களில் வாழ்ந்து வந்தனர். பாணர்கள் தனித்து வாழ்ந்தனர். கணிகையர், விலை மாதர், இவர்கள் நால்வகை வருணத்துள் அடங்காதவர்கள். இவைகளைக் காணும்போது சிலப்பதிகாரகாலத்திலே பலவகையான சாதிப் பிரிவுகள் இருந்தன; ஏறக்குறைய இன்றுள்ள பலவகையான சாதிப் பிரிவுகளும் அக்காலத்தில் இருந்தனன என்பதில் ஐயம் இல்லை. மதுரை நகரிலும் நால்வகை வருணப் பிரிவைக் காட்டும் நால்வகைத் தெருக்கள் தனித்தனியே இருந்தன. பால்வேறு தெரிந்த நால்வகைத் தெருவும் (ஊர்காண். 212) என்பதனால் இதனை அறியலாம். மன்னர் பின்னோர், அரசர் பின்னோர் என்று வணிகர்கள் சுட்டப்படுகின்றனர். இதனாலும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகள் தமிழகத்தில் இருந்ததைக் காணலாம். பூதங்களில்கூட நால்வகை வருண பூதங்கள் இருந்தன என்று சிலப்பதிகாரம் சொல்லுகின்றது. இதனை அழற்படு காதையினால் அறியலாம். அந்தணப் பூதம், அரசப் பூதம், வணிகப் பூதம், வேளாளப் பூதம் நான்கும் மதுரை நகரத்தைக் காத்துவந்தன. கண்ணகியால் மதுரை தீக்கு இரையானபோது இப்பூதங்கள் அந்நகரைக் காக்க வில்லை; காவலை விட்டு நீங்கின. அந்தணப்பூதம் வெண்மை நிறம் உள்ளது. குடை, முக்கோல், கமண்டலம், சமித்து, தருப்பை இவைகள் அதன் கைகளில் இருந்தன; மார்பிலே பூணுல் இருந்தது; நாவினால் வேதங்களை நவின்று கொண்டிருந்தது. அரசப் பூதம் கதிரவன் போன்ற நிறமுள்ளது. அணிகலன் களும், முடியும் அணிந்திருந்தது; மார்பிலே மலர்மாலை, இடையிலே பட்டாடை அணிந்திருந்தது; முரசம், வெண்பட்டுக் குடை, வெண்சாமரம், நீண்ட கொடி, அங்குசம், வடிவேல், கயிறு இவைகளைக் கையிலே ஏந்தியிருந்தது. வணிகப் பூதம் பொன்னிற மேனியை உடையது. முடி ஒன்றைத் தவிர அரசர்க்குரிய அணிகலன்களை யெல்லாம் பூண்டிருந்தது. வணிகர்க்கு வேளாண்மையும், வாணிகமும், உரிய தொழில்கள். ஆதலால் கலப்பையும், தராசும் வாணிகப் பூதத்தினிடம் இருந்தன. தலையிலே மலர்மாலைகளையும், மார்பிலே கலவைச் சந்தனமும் அப்பூதம் அணிந்திருந்தது. அது சிவபெருமானைப் போன்ற தோற்றமுடன் காணப்பட்டது. வேளாளப்பூதம் கருநிறம் உள்ளது. வேலைப்பாடமைந்த வெள்ளிப்பூண்களை அணிந்திருந்தது; கருமை நிறமுள்ள ஆடையை உடுத்தியிருந்தது; மார்பிலே அகிலும் சந்தனமும் அணிந்திருந்தது; கோட்டுப்பூ. கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகிய நால்வகை மலராலும் தொடுத்த மாலையத் தரித்திருத்து; கையிலே கலப்பையை ஏந்தியிருந்தது. இவ்வாறு நால்வகை வருணபூதங்களைப்பற்றியும் கூறப் பட்டுள்ள. இவைகளால் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் இவர்களின் தோற்றங்களைக் காணலாம். ஆகவே சிலப்பதிகார காலத்தில் தமிழ்நாட்டில் பல வகைப் பட்ட சாதிகள் இருந்தன; பலவகைப்பட்ட பழக்க வழக்கங்கள் இருந்தன. ஆயினும், மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். இவ் வுண்மையை மேலே கூறியவைகளால் அறியலாம். மத ஒற்றுமை சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டிலே பல மதங்கள் இருந்தன. தமிழ்மக்கள் பல மதங்களைப் பின்பற்றி வாழ்ந்தனர். மதவேற்றுமை காரணமாக வெறுப்போ, வெறியோ தமிழ் மக்களிடம் இருக்கவில்லை. அவர்கள் பல்வேறு மதங்களைப் பின்பற்றினாலும் தமிழர் என்ற முறையில் அனைவரும் ஒன்று பட்டு வாழ்ந்தனர். காவிரிப்பூம்பட்டினத்தைப்பற்றிக் கூறும்போது, அங்கே சிவன் கோவில், திருமால் கோவில், புத்தர் பள்ளி, அருகர் பள்ளி முதலியன இருந்தன என்று கூறப்படுகின்றது. மதுரையைப்பற்றிச் சொல்லும்போது, அங்கும் மேற்கண்ட கோவில்கள் இருந்தன வென்று சொல்லப்படுகின்றது. மதுரைப் புறஞ்சேரியிலே அருகர், புத்தர் முதலியோரின் பள்ளிகள் இருந்திருக்கின்றன. சிலப்பதிகார காலத்தில் சமண - பௌத்தங்களாகிய அறமார்க்கங்களும் தமிழகத்தில் பரவியிருந்தன. சைவ - வைண வங்களாகிய பக்தி மார்க்கங்களும் தமிழகத்தில் பரவியிருந்தன. கோவலன் சைன மதத்தைச் சேர்ந்தவனாகக் கருதப்படு கின்றான். அவனும் கண்ணகியும் கவுந்தியடிகளைக் கண்டு கைதொழுதனர். அழகும், குடிப்பிறப்பும், ஓழுக்கமும், இறைவன் நூலிற் கூறிய விரதந் தப்பாமையும் என்னும் இவற்றை யெல்லாம் உடைய நீங்கள் தீவினையாளரைப்போல உமது இடத்தைவிட்டு நீங்கி வருவதற்குக் காரணம் என்ன? உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும் பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்! என்னோ உறுகணாளரின் கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறு? (நாடுகாண். 46-49) என்று கவுந்தியடிகள் கேட்டார். பெருமக்கள் என்பது அருகனைக் குறித்ததாகும், கோவலன். கண்ணகி இருவரும் அருகதர்மத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் என்பதை இதனால் காணலாம். கண்ணகியை அடைக்கலமாகப் பெற்ற மாதரி, கோவலனை யும், அவளையும் தனது ஆயர்பாடிக்கு அழைத்துச் சென்றாள். அவர்கள் இருக்கச் செம்மண்பூசிய புதுமனை ஒன்றைக் காட்டினாள். கண்ணகியை நீராட்டினாள். தன் மகய் ஐயை என்பவனைப் பணிமகளாக அமர்த்தினாள். பின்னர், கோவலனார் சாவக நோன்புடையார். ஆதலால் கண்ணகி பகல்உணவு சமைப்பதற்காகப் புதிய கலங்களை விரவில் கொண்டுவந்து கொடுங்கள். சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் நாத்தூண் நங்கையோடு நாள் வழிப்படூஉம் அடிசில் ஆக்குதற்கு அமைந்த நல் கலங்கள் நெடியாது அளிமின் நீர் (கொலைக்கள. 18-21) என்று கூறினாள். மாதரியின் இச்கூற்றும், கோவலன் சைன மதத்தினன் என்பதையே குறிக்கும். கோவலன் சமணனாயிருந்தும் மதவெறுப்பு இல்லாதவன்; எம்மதமும் சம்மதம் எனக் கொண்டவன். கோவலன் வைகறைப் போதிலே புகாரை விட்டு மதுரைக்குப் புறப்படுகின்றான். புறப் பட்டவன், முதலில் மணிவண்ணன் கோவிலை வலம் செய்தான். அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக கழிந்து (நாடுகாண். 9-10) மணிவண்ணன் கோட்டம்: திருமால் கோவில். இதன்பின் புத்தர்பிரான் அறவுரைகளை அந்தரசாரிகள் வந்திருந்து சாற்றும் இந்திர விகாரங்கள் ஏழையும் வணங்கிப் போனான். ... ... ... அறவோன் திருமொழி அந்தரசாரிகள் அறைந்தனர் சாற்றும் இந்திர விகாரம் ஏழுடன் போகி (நாடுகாண். 12-14) இதன்பின் நீராட்டுவிழாக்களின்போதும், பெரிய தேர் விழாக்களின்போதும் அருகதர்மத்தை உபதேசிக்கும் சாரணர்கள் வருவார்கள் என்று கருதி, அவர்களுக்காகச் சாவக நோன்பி களால் இடப்பட்ட சிலாதலத்தை வணங்கி வலங்கொண்டு புறப்பட்டான் கோவலன். நீர்அணி விழாவினும் நெடுந்தேர் விழாவினும் சாரணர் வரூஉம் தகுதி உண்டாம், என உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு (நாடுகாண். 22-25) மேலே காட்டியவைகளால் கோவலனுடைய மதவெறுப் பற்ற தன்மையைக் காணலாம். வலம் செயாக் கழிந்து என்பதற்கு வலத்திட்டு ஏகி என்றும், இந்திர விகாரம் ஏழுடன் போகி என்பதற்கு இந்திர விகாரங்கள் ஏழினையும் அடைவே கண்டு அவற்றைக் கழிந்துபோய் என்றும் அடியார்க்கு நல்லார் பொருள் கூறுகின்றார். இப்பொருளை வைத்துக்கொண்டு கோவலன் மணிவண்ணன் கோவிலை வணங்கவில்லை; இந்திர விகாரங்களையும் வணங்கவில்லை; சிலாதலத்தை மட்டுந்தான் வணங்கினான் என்று பொருள் கூறுவர். அடியார்க்கு நல்லார் கருத்து இதுவானால், அது சிறந்த பொருளன்று. திருமால் கோவிலையும், இந்திர விகாரங்களையும் கோவலன் வணங்கினான் என்று கூறுவதே சிறந்த பொருளாகும். கோவலன், கண்ணகி கவுந்தி மூவரும் காட்டு வழியாக மதுரை நோக்கிச் செல்லுகின்றனர். எதிரிலே மாங்காட்டு மறையோன் என்பவன் பாண்டியனை வாழ்த்திக்கொண்டு வருகின்றான். அவன் வைணவ பக்தன். கோவலன் அவனை நோக்கி யாது நும் ஊர்? ஈங்கு என்வரவு? என்று கேட்டான். அப்பொழுது மாங்காட்டு மறையோன் திருவரங்கத்தின் பெருமையையும், திருவேங்கடத்தின் சிறப்பையும் எடுத்துரைத் தான். அந்த மறையோனிடம் மதுரைக்குப் போக வழி சொல்லும் படி கேட்டான் கோவலன். அவன் மதுரைக்குச் செல்லும் வழிகளைப்பற்றிக் கூறினான். அவை இடப்பக்கத்து வழி? வலப்பக்கத்து வழி, நடுவழி என்ப. அவற்றுள் இடப்பக்கத்து வழியைப்பற்றிச் சொல்லும்போது திருமாலிருங்குன்றம் என்னும் அழகர்மலை, அதில் உள்ள பிலம், அப் பிலத்து வழியே சென்றால் அங்குக் காணக்கூடிய புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்னும் பொய்கைகள், அவற்றில் நீராடுவதால் அடையும் பயன் இவற்றையெல்லாம் விரிவாக எடுத்துரைத்தான். வைணவனாகிய மறையோன், கோவலனிடம்இவ்வாறு திருமாலின் சிறப்பை விளக்கினான். கோவலன் பொறுமையுடன் கேட்டான். கோவலனுடன் கவுந்தி அடிகளும் இருந்தார். அவர் சமண சந்நியாசிக் கோலத்துடன்தான் இருந்தார்; கவுந்தி யடிளுடன் இருந்த கோவலனும் சாவகனாகத்தான் இருக்க முடியும் என்பதை மறையவன் அறியாதவன் அல்லன். இருந்தும் அவன் திருமாலின் மாண்பை எடுத்துரைத்தான். சிலப்பதிகார காலத்தில், ஒரு மதத்தினர் உரைக்கும் கொள்கை களைப் பறி மதத்தினரும் பொறுமையுடன் கேட்டனர்; மதங் காரணமாக ஒருவரோடு ஒருவர் பகைத்துக் கொள்வதில்லை என்ற உண்மையை இதனால் காணலாம். தானம் வாங்குவதற்காக வயது முதிர்ந்த வேதியன் ஒருவன் வந்தான். அவனை மதங்கொண்ட யானை ஒன்று கைக்கொண்டது. உடனே கோவலன் பாய்ந்து அவ்வந்தணனை விடுவித்தான். (அடைக்கல. 42-53) கீரிப்பிள்ளையைக் கொன்ற பார்ப்பனியின் பாவம் தொலையக் கோவலன் பலவகையான தானங்களைச் செய்தான்; அவன் துன்பத்தை ஒழித்தான். (அடைக்கல 55-75) இக்கதைகளும் கோவலனுடைய சமய சமரசத்தை விளக்குகின்றன. கோவலன். கண்ணகி, கவுந்தி மூவரும் மதுரைப் புறஞ் சேரியிலே தங்கியிருந்தனர். அங்கே இடைச்சியர் தலைவி மாதரி வந்தாள். இடையர்கள் திருமாலை வணங்குவோர். அருகனை வணங்கும் கவுந்தி, திருமாலை வழிபடும் மாதரியின் உயர்ந்த பண்பை உள்ளத்தால் பாராட்டினார். பசுவைக் காத்து. அதன் பயனை மக்களுக்கு அளிப்போர் இடையர்கள். அவர்கள் வாழ்க்கையிலே கொடுமை என்பதே இல்லை. அக்குடியிலே பிறந்த இவள் குற்றம் அற்றவள்; பெரியவள்; நல்லவள்; அன்புள்ளவள். இந்த மாதரியிடத்தில் கண்ணகியை அடைக்கலமாக வைப்பதனால் குற்றம் இல்லை என்று எண்ணினார் கவுந்தி. ஆகாத்து ஒம்பி ஆபயன் அளிக்கும் கோவலர் வாழ்க்கைஓர் கொடும்பாடு இல்லை; தீதுஇலள்; முதுமகள்; செவ்வியள்; அளியள்; மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதும் இன்றுஎன எண்ணினள் (அடைக்கல. 120-124) இதனால் கவுந்தியடிகளின் தூய உள்ளம், பிற மதத்தினரிடம் வெறுப்புக் காட்டாத தன்மை இவற்றைக் காணலாம். கவுந்தியடிகள் சமண சந்நியாசினி; மாதரி திருமால்பக்தை. கவுந்தியடிகள் தந்த கண்ணகியை மாதரி அன்புடன் ஏற்றுக் கொண்டதும் மத ஒற்றுமையையே காட்டும். சேரன் செங்குட்டுவன் சிவபக்தன்; அவன் சிவபெருமான் அருளுடன் பிறந்தவன் என்றே சிலப்பதிகாரம் சொல்லுகின்றது. செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய் (கால்கோள். 98-99) ஆன்ஏறு உயர்த்தோன் அருளினில் விளங்க மாநிலம் விளக்கிய மன்னவன். (வரத்தரு. 141-142) செஞ்சடை வானவன்: சிவபெருமான். ஆனேறு உயர்த்தோன் சிவபெருமான். மேலேகாட்டிய அடிகள் செங்குட்டுவனைக் குறிப்பவை. செங்குட்டுவன் வடநாடு நோக்கிப் புறப்படும்போது சிவபெருமானை வணங்கிப் புறப்பட்டான் என்று கூறுகிறது சிலப்பதிகாரம். இளம்பிறையைத் தலையிலே முடித்தவன்: உலகத்தைத் தன்னிடத்திலே அடக்கியவன்; உயர்ந்தோன் ஆகிய சிவபெரு மானுடைய பாதங்களைத் தலையிலே தரித்தான்; வீரத்திற்கு அடையாளமான வஞ்சி மாலையையும் அணிந்தான்; யாருக்கும் வணங்காத முடியினால் சிவபெருமானை வணங்கினான். அவன் கோவிலை வலம் வந்தான். நிலவுக் கதிர் நீள்இரும் சென்னி உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி மறம்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலம்கொண்டு (கால்கோள். 54-57) இவ்வடிகள் செங்குட்டுவன் சிவபக்தன் என்பதைக் குறிப்பன. செங்குட்டுவன் சிவபெருமானை வணங்கி வடநாட்டுக்குப் புறப்பட்ட சமயத்திலே மற்றொரு நிகழ்ச்சி நடந்தது. சேரநாட்டு மன்னன் வெற்றிபெறுக என்று வாழ்த்திக் கொண்டு சிலர் வந்தனர்; திருவநந்தபுரத்திலே ஆடக மாடத்திலே, அரவணையிலே அறிதுயில் கொண்டிருக்கும் திருமாலின் பிரசாதத்தை அவர்கள் கொண்டுவந்தனர். அதை அவர்கள் வணக்கத்துடன் அரசனிடம் அளித்தனர். அரசனும் அன்புடன் வாங்கிக்கொண்டான். கங்காதரனாகியசிவபெருமானுடைய அழகிய சேவடிமலரை முடியிலே சூடியிருந்தான்; ஆதலால் திருமால் பிரசாதத்தைத் தோளிலே தாங்கிச் சென்றான். குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்க! என ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன் சேடம் கொண்டு சிலர்நின்று ஏத்த, தெள்நீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கு அது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன் ஆகி, தகைமையின் செல்வழி (கால்கோள். 61-67) செங்குட்டுவன் சிவபக்தன்; ஆயினும் திருமாலையும் பணியும் பண்புள்ளவன் என்ற உண்மையை இவ்வடிகள் காட்டுகின்றன. இச்செங்குட்டுவன் புத்தமதத்தினராகிய தண்டமிழ்ச் சாத்தன் என்னும் புலவருடன் நட்புக்கொண்டிருந்தான். அவர்தான் கண்ணகியின் வீரச் செயலைச் செங்குட்டுவனுக்கு உரைத்தார் என்று காட்சிக் காதையிலே காணப்படுகின்றது. சைனமதத்தைச் சேர்ந்த கோவலன் மனைவியான கண்ணகி யை இச்செங்குட்டுவன் பத்தினித் தெய்வமாகப் போற்றினான். இச்செயலும் செங்குட்டுவனுடைய மத சமரசத்தையே காட்டும். செங்குட்டுவன் சிவபக்தன், ஆயினும் திருமாலை வணங்கினான்; புத்தமதத்தினரிடம் நட்புப் பாராட்டினான்; அருக மதத்தவரையும் போற்றினான். இவ்வுண்மைகளை மேலே கூறியவைகளைக் கொண்டு உணரலாம். சமணமதத்தைச் சேர்ந்தவனாகிய கோவலனுடைய காதற்பரத்தை மாதவி; கோவலன் கொலையுண்டபின் அவள் பௌத்த சந்நியாசியானாள், தன் மகள் மணிமேகலையையும் பௌத்தமதத்திலே ஈடுபடுத்தினாள். கோவலன் இறந்த செய்தி அவன் தந்தை மாசாத்து வானுக்கு எட்டிற்று. தன் மைந்தனுக்கும், மருகிக்கும் நேர்ந்த துன்பத்தை அவனால் தாங்கமுடியவில்லை; இல்லறத்தை வெறுத்தான், தனது பெரும்பொருள் முழுவதையும் தானம் செய்தான். பௌத்த சங்கத்தார் வாழும் இந்திர விகாரத்தை அடைந்தான். அங்கே தவம் புரிந்துகொண்டிருந்த முனிவர் முந்நூற்றுவரை வணங்கித் துறவியானான். கண்ணகியின் தந்தையான மாநாய்கன் சமணமத முனிவரான ஆசீவகரை அடைந்தான்; தனது செல்வம் அனைத்தையும் தானம் செய்து துறவியானான். இச்செய்திகள் நீர்ப்படைக் காதையிலே காணப்படுகின்றன. இதுவரையிலும் எடுத்துக்காட்டியவைகளை ஆராய்ந்தால் நாம் பல உண்மைகளைக் காணலாம். சமணமதத்தைச் சேர்ந்த கோவலன் திருமால் கோவிலை யும் இந்திர விகாரங்களையும் வணங்கினான். கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும், மாங்காட்டு மறையோன் திருமாலின் மாண்பை உரைக்கும்போது, அதைப் பொறுமையுடன் கேட்டனர். திருமாலை வணங்கும் மாதரியைக் கவுந்தியடிகள் மனமாரப் பாராட்டினார்! அவளிடம் கண்ணகியை அடைக்கலமாகக் கொடுத்தார். மாதரி சமணமதத் துறவியாகிய கவுந்தியடிகள் சொல்லை ஏற்றாள். சமணமதத்தைச் சேர்ந்த கோவலனையும், கண்ணகி யையும் தன் இல்லத்துக்கு இட்டுச்சென்றாள்; அவர்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செய்தான். சிவபக்தனாகிய செங்குட்டுவன் திருமால் பிரசாதத்தை அன்புடன் பெற்றான்; புத்தமதத்தினரான தண்டமிழ்ச் சாத்தனாரிடம் நட்புக்கொண்டிருந்தான்; சைனமதத்தைச் சேர்ந்த கண்ணகிக்குக் கோவில் கட்டினான். மாதவியும், மணிமேகலையும் பௌத்த மதத்தைத் தழுவினர். கோவலன் தந்தை புத்தமதத்தைக் தழுவினான்; கண்ணகியின் தந்தை சைனமதத்தைத் தழுவினான். இவைகள் சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டில் பல மதங்கள் இருந்தன; ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான மதத்தைத் தழுவினர்; அவர்களுக்குள் மத சம்பந்தமான சண்டை சச்சரவுகள் இல்லை என்ற உண்மையையே காட்டின. இந்திர விழாக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள எல்லாக் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெற்றன. பல நாட்டினரும், பல மதத்தினரும் அவ்விழாவைக் காண வந்தனர். பாலைநிலத்திலே ஐயையைக் கும்பிடும் வேடர்கள் தங்கள் பழக்கப்படி பலியிட்டுப் பூசித்தனர்; மது மாமிசங்களை வைத்துப் படைத்தனர்; அவர்கள் பூசையிலே சைனர்கள் வெறுக்கும் உயிர்ப்பலியும் இடம் பெற்றிருந்தது. மாயோனும், சிவனும் ஐயைதான் என்று அவர்கள் பாடிப்போற்றுகின்றனர். ஆய்ச்சியர் குரவையிலே திருமால்தான் உயர்ந்த கடவுளாகப் போற்றப்படுகின்றார். குன்றக்குரவையிலே முருகன்தான் ஒப்பற்ற தெய்வமாகப் போற்றப்படுகின்றான். காவிரிப்பூம்பட்டினத்து கோவில்களைக் குறிப்பிடும் போது. பிறவா யாக்கைப் பெரியோன் கோயில் என்று சிவன்கோவில்தான் முதலில் குறிக்கப்படுகின்றது. மதுரையில் உள்ள கோவில்களைக் குறிப்பிடும்போது, நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயில் என்று சிவன்கோவில்தான் முதலில் குறிக்கப்படுகின்றது. இவைகள் சிலப்பதிகார காலத்தில், தமிழகத்தில் சிவ பெருமான் தான் உயர்ந்த கடவுளாகப் போற்றப்பட்டார்; சிவனை வணங்குவோர் தான் பெருகியிருந்தனர் என்ற உண்மையைக் குறிப்பன. கவுந்தியடிகளின் வாயிலாக அருகமதக் கொள்கை, அருகன் பெருமை விளக்கப்படுகின்றன. சிலப்பதிகார காலத்திலே பக்தி மார்க்கமும், அறமார்க்கமும் தமிழகத்தில் பரவியிருந்தன; இருபாலாரும் ஒருவரை ஒருவர் பகைத்துக்கொள்ளவில்லை; ஒவ்வொருவரும் அவரவர் விருப்பப் படி எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்; தந்தை ஒரு மதம், தநயன் ஒரு மதம்; மனைவி ஒருமதம், கணவன் ஒரு மதம் என வேறுவேறு மதத்தினராயிருந்து ஒன்றபட்டு ஒரேகுடும்பமாக வாழலாம்; எவருக்கும் எந்தத்தெய்வத்தையும் வணங்க உரிமை யுண்டு; ஒருவரே பல தெய்வங்களையும் வணங்கலாம்; மத ஒழுக்கமும், தெய்வ வழிபாடும் அவரவர் களின் தனிப்பட்ட உரிமையாக எண்ணப்பட்டு வந்தன. இவ்வுண்மைகளைச் சிலப்பதிகாரம் நமக்குத் தெளிவாகச் சொல்லுகின்றது; மக்கள் ஒன்று பட்டு வாழ்வதற்கு வழிகாட்டு கின்றது. மன்னரும் மக்களும் சிலப்பதிகார காலத்தில் தமிழகத்தில் குடிமக்கள் ஆட்சி இருந்ததில்லை, மன்னர் ஆட்சி தான் நிலவியிருந்தது. மன்னர் களுக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு. ஆயினும் நீதிமுறையுடன் ஆளும் மன்னர்கள்தான் மக்களால் மதிக்கப்பட்டனர். அறநெறி தவறாமல் ஆளவேண்டும்; நாட்டு மக்களுக்கு எவ்வித இடையூறும் உண்டாகாமல் பாதுகாக்கவேண்டும். இவ்வாறு அரசாளும் மன்னர்களை மக்கள் அனைவரும் தெய்வம் என்றே போற்றிவந்தனர். இத்தகைய மன்னர்கள் தெய்வங்களின் அவதார மாகவே மக்களால் மதிக்கப்பட்டனர். இதுதான் பண்டைக்கால மன்னர்களின் நிலைமை. வள்ளுவரும் இதைத்தான் கூறுகின்றார். முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறைஎன்று வைக்கப்படும் நீதிமுறை தவறாமல் ஆட்சிபுரிந்து குடிகளைக் காப்பாற்றும் மன்னவன், பிறப்பிலே மனிதனாயினும், செயலால் மக்களுக்கு நன்மை செய்யத் தோன்றிய ஒரு தெய்வம் என்றே வைக்கப் படுவான் என்று வள்ளுவர் வழங்கும் இந்த முறைதான் சிலப்பதிகார காலத்தில் நிலைத்திருந்தது. ஆய்ச்சியர் குரவையிலே, குரவைக் கூத்தாடுவோர் மூவேந்தர் களையும் வாழ்த்துகின்றனர். அவ்வாழ்த்துக்களைப் படித்தால் இந்த உண்மையை உணரலாம். கோவா மலைஆரம்; கோத்த கடல்ஆரம்; தேவர்கோன் பூண்ஆரம் தென்னர்கோன் மார்பினவே; தேவர்கோன் பூண்ஆரம் பூண்டான் செழும்துவரைக் கோகுலம் மேய்த்துக் குருத்துஒசித்தான என்பரால் கோக்கப்படாத ஆரமாகிய மலைச்சந்தனம், கோத்த ஆரமாகிய கடல்முத்து, இந்திரன் மார்பிலே பூண்டிருந்த மாலை இவைகள் பாண்டிய மன்னன் மார்பிலே உள்ளன என்பர். தேவேந்திரனு டைய மார்பின் மாலையைப் பூண்ட பாண்டியன் தான் பசு மந்தையை மேய்த்தவன் குருந்தமரத்தை ஒடித்தவன், கண்ணன் என்று கூறுவார்கள். ஆரம்: சந்தனம்: முத்து. பாண்டியன் வேறல்லன், கண்ணன் வேறு அல்லன்; பாண்டியன்தான் கண்ணன் என்று கூறுகிறது இச்செய்யுள். பொன்இமயக் கோட்டுப் புலிபொறித்து மண் ஆண்டான் மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன்; மன்னன் வளவன் மதில்புகார் வாழ்வேந்தன் பொன்அம் திகிரிப் பொருபடையான் என்பரால் பொன்னொளி வீசும் இமயத்தின் சிகரத்திலே புலிமுத்திரை யிட்டான்; இவ்வுலகம் முழுவதையும் ஆண்டான்; அவன் சிறந்த சோழமன்னன்; அவன் மதில்சூழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்திலே வாழ்கின்ற வேந்தன். அந்தச் சோழ மன்னனாகிய புகார் நகர வேந்தன்தான், போர் செய்கின்ற, பொன்னொளி வீசும் அழகிய சக்கராயுதத்தையுடைய திருமால் என்பார்கள். இது, சோழ மன்னன் திருமாலின் உருவாகவே விளங்கு கின்றான் என்று கூறிற்று. முந்நீரின் உள்புக்கு மூவாக் கடம்பு எறிந்தான் மன்னர் கோச்சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்; மன்னர் கோச்சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கல்நவில் தோள்ஓச்சிக் கடல்கடைந்தான் என்பரால் கடலிலே சென்று பகையரசின் காவல்மரமாகிய அழியாத கடம்பமரத்தை வெட்டி வீழ்த்தியவன் அரசர்களுக்கு அரசனான சேரமன்னவன்; அவன் செழிப்புள்ள வஞ்சி நகரத்திலே வாழ்கின்ற மன்னவன். அந்தச் சேரமன்னனாகிய வஞ்சிமாநகர வேந்தன்தான், மலையென்று சொல்லத்தக்க தோளை அசைத்துக் கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமுதம் அளித்த திருமால் என்பார்கள். இச்செய்யுள் சேரமன்னன்தான் திருமால் என்று உரைத்தது. ஆய்ச்சியர் குரவையில் உள்ள இம்மூன்று பாடல்களும் சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் திருமாலின் அவதாரமே என்ற கருத்தை வெளியிட்டிருக்கின்றன. இதுதான் மன்னர்களைப் பற்றிச் சிலப்பதிகார காலத்து மக்கள் கொண்டிருந்த கொள்கை. சிலப்பதிகார காலத்து மக்கள், அரசர்களிடம் அளவற்ற அன்பு செலுத்திவந்தனர்; பெருமதிப்பு வைத்திருந்தனர். மன்னர்களின் பொருட்டு மக்கள் எந்தத் தியாகமும் செய்யத் துணிந்திருந்தனர்; அரசர்கள் வாழ்வே தங்கள் வாழ்வு என்று எண்ணியிருந்தனர். இவ்வுண்மையைச் சிலப்பதிகாரம் தெளிவாக உரைக்கின்றது. படைவீரர்கள் மன்னனுக்கு எவ்வித ஆபத்தும் வரக் கூடாது என்று தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; மன்னனுக்கு வந்த இடையூறு நீங்கவேண்டும் என்று வேண்டிக் கொள்ளு வார்கள். வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என்று வாழ்த்தித் தங்கள் தலைகளைத் தாங்களே அறுத்துப்பலிபீடத்திலே வைப்பார்கள். படைவீரர்கள் இத்தகைய ராஜபக்தி படைத் திருந்தனர். இதனை இந்திரவிழவு ஊர் எடுத்த காதையில் 78 முதல் 88 வரையுள்ள அடிகளிலே காணலாம். சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டு வேந்தர்கள் தனியதிகாரம் படைத்திருந்தனர் என்பதில் ஐயம் இல்லை. அதனால்தான், சிலம்பு கவர்ந்த கள்வன் பிடிபட்டான் என்று பொற்கொல்லன் புகன்றவுடன், அவனைக் கொன்று சிலம்பைக் கொண்டு வாருங்கள் என்று பாண்டியன் பணித்தான். மன்னனுக்கு இருந்த தனியதிகாரம், பொற்கொல்லன் சொல்லியது உண்மையா? பொய்யா? என்பதை ஆராயாமல் இவ்வாறு ஏவும்படி செய்தது. சிலப்பதிகார காலத்தில் மன்னர்களுக்காக இரண்டு குழுக்கள் இருந்தன. ஒன்று ஐம்பெரும்குழு; மற்றொன்று எண்பேராயம். இந்த இரண்டு குழுவினரையும் கலந்து ஆலோசித்து அரசியல் நடத்தும் மன்னர்கள் தவறு செய்வ தில்லை. ஆயினும் இக்குழுக்களைக் கலந்து கொண்ட பிறகுதான், மன்னன் ஒரு வழக்கில் முடிவு சொல்லவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பாண்டியன் செயலே இதை விளக்கும். ஆனால், தனியாட்சிமுறை ஒழிந்து, கூட்டாட்சிமுறை தோன்றிய காலம் சிலப்பதிகார காலம் என்று சொல்லலாம். ஐம்பெரும்குழு என்பது ஐவர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் கழகம். அமைச்சர், புரோகிதர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர் என்ற ஐவர்கள் இக்குழுவின் உறுப்பினர். எண்பேர் ஆயம் என்பது எட்டுவகை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சபை. கணக்கர்கள் (அல்லது தொழிலாளர் தலைவர்கள், நிர்வாகத் தலைவர்கள், பொருள்காப்பாளர்கள், காவல்காப்போர், நகர மக்கள், படைத் தலைவர்கள், யானை வீரர்கள், குதிரைவீரர்கள். இவர்கள் இந்தச் சபையின் உறுப்பினர்கள். இவ்விருவகைச் சபையினரும், மன்னன் தவறு செய்யாமல் ஆள அவனுக்கு ஆலோசனை கூறிவந்தனர். பாண்டியன் நெடுஞ் செழியன் இக்குழுவினருடன் கலந்து ஆலோசிக்கவில்லை; ஆத்தரப்பட்டுக் கோவலனைக் கொல்லும்படி கூறிவிட்டான். ஆதனால்தான் அவன் அழிந்தான். அவன் ஆட்சியும், நகரமும் வீழ்ந்தன. சிலப்பதிகார காலத்து மக்கள் மிகுந்த தேசபக்தியள்ளவர்கள். தங்களுடைய வாழ்வைமட்டும் கருதாமல், நாடு நன்றாகச் சிறந்து வாழவேண்டும் என்னும் நாட்டம் உள்ளவர்கள். மறக்குடி மகளிர் புகாரிலே நாளங்காடிப் பூதத்திற்குப் பலியிட்டு வணங்குகின்றனர். வணங்கும்போது, எங்கள் குறைகளைத் தீர்க்கவேண்டும்ம் என்று அவர்கள் வேண்டிக் கொள்ளவில்லை; சோழ மன்னர் ஆளும் பெரிய நாடு முழுவதும் வாழவேண்டும்; நாட்டிலே பசி, பிணி, பகை ஒன்றும் தலைகாட்டக் கூடாது; மழையும், செல்வமும் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றனர். பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும் பசியும், பிணியும், பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க! என வாழ்த்தி (இந்திர விழவு. 71-73) இவ்வடிகள் தமிழ்மக்களின் தேசபத்தியை உணர்த்தின. மன்னர்கள் எவ்வளவுதான் உரிமை படைத்திருந்தாலும் முறைதவறிய மன்னர்களை மக்கள் மதிப்பதில்லை; அவர் களுடைய ஆட்சியை நிலைக்கவிடுவதும் இல்லை. கொடுங்கோல் மன்னர்களின் வாழ்வைக் குலைப்பதிலே மக்கள் ஒன்றுபட்டனர்; கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தினர். இத்தகைய உணர்ச்சி மக்கள் உள்ளத்திலே குடிபுகுந்த காலம் சிலப்பதிகார காலம் என்று சொல்லிவிடலாம். இதற்குச் சான்று, கண்ணகியின் வழக்கும் நடத்தையும் ஆகும். இதைப்பற்றிப் புரட்சிக் காவியம் என்றும் பகுதியிலே விரிவாகக் காணலாம். சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டு மன்னர்கள் தனி அதிகாரம் படைத்திருந்தனர். அவர்கள் தெய்வப்பிறவிகளாக மதிக்கப்பட்டனர். அவர்கள் மக்கள் நலனையே குறிக்கோளாகக் கொண்டுதான் அரசாட்சி புரிந்துவந்தனர். ஆதலால்தான் மக்கள் அவர்களிடம் அளவற்ற அன்புகொண்டிருந்தனர். மன்னர்களுக்கு ஆலோசனை கூற ஐம்பெரும்குழு, எண்பேராயம் என்ற இரண்டு சபைகள் இருந்தன. ஒன்று செயல்குழு போன்றது; மற்றொன்று சட்டசபை போன்றது. தவறு செய்தனர். சிலப்பதிகார காலத்து மக்கள் சிறந்த நாட்டுப்பற்றுள்ளவர்கள். மன்னர்கள் தனிஉரிமை படைத்தவர்களாயினும், அவர்கள் தவறு செய்யும்போது, மக்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அறந் தவறிய ஆட்சியை மாற்றியமைக்கப் பின்வாங்கமாட்டார்கள். இவ்வுண்மைகளை யெல்லாம் மேலே கூறியவைகளிலிருந்து காணலாம். பாரத நாட்டுப் பண்பாடு சிலப்பதிகாரத்தை வைத்துக்கொண்டு சிலர், வேற்றுமைப் பேச்சுப் பேசுகின்றனர். தமிழர் நாகரிகம் தனிப்பட்டது; தென்னாட்டு நாகரிகம் வேறு; ஆரியர் நாகரிகம் வேறு; வடநாட்டு நாகரிகம் வேறு என்றெல்லாம் வேசுகின்றனர். இவ்வாறு வேசி, அமைதியுள்ளம் படைத்த தமிழ் மக்கள் உள்ளத்திலே ஆத்திரத்தையும் வெறுப்பையும் திணிக்க முயல்கின்றனர். சிலப்பதிகாரத்தைப் படிப்போர், இத்தகையோரின் முயற்சிக்கு இரையாகமாட்டார்கள் என்பது உறுதி. சிலப்பதிகாரத்தைப் பொறுத்தவரையிலும் பிரிவினைப் பேச்சுக்கு இடமேயில்லை, பாரதநாட்டு மக்கள் அனைவரும் ஒரே பண்பாடுள்ளவர்கள் என்பதற்குத்தான் சிலப்பதிகாரம் ஆதரவு அளிக்கின்றது. இந்த ஒற்றுமைப் பண்பாட்டைத்தான் சிலப்பதிகார ஆசிரியர் உரைக்கின்றார். இந்நூலின் மங்கல வாழ்த்து முதலில் திங்களையும், இரண்டாவது ஞாயிற்றையும், மூன்றாவது மழையையும் போற்று கின்றது. சந்திரன், சூரியன், மழை இவைகளை இந்தியநாட்டு மக்கள் அனைவரும் வணங்கி வழிபட்டார்கள். வட நூல் களிலும் வேதங்களிலும், சந்திர, சூரிய, வருண வணக்கப் பாடல்களைக் காணலாம். வருணனை வணங்குவது, மழையை வணங்குவதும் ஒன்றேதான். சிலப்பதிகார காலத்திலே இந்திர விழவைப்பற்றிக் கூறப் படுகின்றது. தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனைப் பற்றி வடமொழி நூல்களும் வேதங்களும் கூறுகின்றன. இந்திரனைக் குறித்த விழாக்கள் வேதங்களும் கூறுகின்றன. இந்திரனைக் குறித்த விழாக்கள், வேள்விகள் வடநாட்டிலும் நடைபெற்றன; தென்னாட்டிலும் நடைபெற்றன. இந்திரன் மருத நிலத்து மக்களின் வழிபடு தெய்வம். இந்திரனையே வழிபடு தெய்வ மாகக்கொண்ட மக்கள் தங்களை இந்திர குலத்தோர் என்று சொல்லிக்கொண்டனர். இன்றும் தமிழகத்தில் இந்திர குலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். இந்திரன் தமிழர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; வடவர்களாலும் வணங்கப்பட்ட தெய்வம்; பாரத நாட்டுப் பழந்தெய்வம். மற்றும் சிவபெருமான், திருமால், முருகன், பலதேவன், காளி, மன்மதன், இலக்குமி, நாமகள், பிரமன், இராமன், கிருஷ்ணன், வாமனன், திரிவிக்கிரமன் முதலிய தெய்வங்களும் வடநாட்டிலும் உண்டு; தென்னாட்டிலும் உண்டு. இத்தெய்வங் களைத் தமிழரும் வணங்கினர்; ஆரியர் என்று சொல்லப்படும் வடவரும் வணங்கினர். இராமாயணம், பாகவதம், பாரதம், கந்த புரணம் போன்ற கதைகளை வடவரும் போற்றிப் பாராட்டுகின்றனர்; சிலப்பதி காரத் தமிழர்களும் போற்றிப் பாராட்டியிருக்கின்றனர். சமணமதம், பௌத்தமதம் வடநாட்டில் தோன்றியவை. அம் மதகுருமார்கள், வடவர்கள் என்னும் ஆரியர்கள்தாம். தமிழர் களும் இம்மதங்களைப் போற்றினார்கள்; பின்பற்றினார்கள். இம்மதங்களின் அறநெறிகளைப் பாரதநாட்டு மக்கள் அனைவரும் போற்று கின்றனர்; அறிஞர்கள் அனைவரும் பாராட்டுகின்றனர். சமண, பௌத்தமத இலக்கியங்களும், அம்மதக் கொள்கை களைப் பரப்பும் இலக்கியங்களும், தமிழ்மொழியிலும் உண்டு; வடமொழியிலும் உண்டு. சிறப்பாகப் பாலிமொழியிலே ஏராளமான இலக்கியங்கள் இருக்கின்றன. பாரத நாட்டில் உள்ள மற்றும் பல பழமையான மொழிகளிலும் இவ்விலக்கியங்கள் இருக்கின்றன. ஊழ்வினையைப் பாரதநாட்டில் பிறந்த மதங்கள் அனைத்தும் ஒப்புக்கொள்ளுகின்றன; மறுபிறப்பையும் ஒப்புக் கொள்ளுகின்றன. தமிழர் வடவர் அனைவருக்கும் இவற்றில் நம்பிக்கையுண்டு. நல்லநாள் கெட்டநாள் பார்த்தல், சகுனம் பார்த்தல். கனவு காண்பதில் உள்ள உண்மை, நல்ல செயல்களை நல்ல நேரத்திலே செய்தல் இவைகளிலே தமிழர்களுக்கும் நம்பிக்கை உண்டு; வடவர்களுக்கும் நம்பிக்கை உண்டு. வடதிசையைத் தமிழர்கள் புண்ணியதிசை யென்று போற்றியிருக்கின்றனர். புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் (இந்திர விழவு. 94) என்பதனால் இதைக் காணலாம். பொதியத்தையும், இமயத்தையும் தமிழர்கள் ஒன்றாகவே கருதினர். காவிரியாறும், கங்கை நதியும் ஒரேவிதமான புனித நதிகள் என்ற போற்றினர். அழியாத சிறப்பையுடைய பொதியமலையிலே கல் எடுத்தாலும் சரி, சேரர்களின் வில் முத்திரையைப் பெற்ற பெரிய இமயமலையிலே கல் எடுத்தாலும் சரி - அது கண்ணகியின் உருவம் அமைப்பதற்கு ஏற்றதாகும். கங்கையாகிய பெரிய ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும், காவிரி ஆற்றிலே நீர்ப்படை செய்தாலும் ஒரே சிறப்புடையதுதான். ஒல்கா மரபின் பொதியில் அன்றியும் வில்தலைக் கொண்ட வியன்பேர் இமயத்துக் கல்கால் கொள்ளினும் கடவுள்ஆகும்; கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும் தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து (காட்சி. 116-120) இவ்வடிகள் மேலே கூறிய உண்மையை விளக்கின. தென்னாடுடைய சிவனே போற்றி என்று வணங்கப் பட்டாலும், அச் சிவபெருமான் இருக்கும் இடம் திருக்கைலாயம். அது வடநாட்டில் உள்ளது; இமயமலையின் மேல் இருப்பது என்ற நம்பிக்கை தமிழரிடமும் உண்டு; வடவரிடமும் உண்டு. மந்திரத்திலே தமிழர்க்கும் நம்பிக்கையுண்டு; வடவருக்கும் நம்பிக்கை உண்டு. நால்வகை வருணங்கள் வடநாட்டிலும் உண்டு; அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைப் பிரிவுகள் தமிழ் நாட்டிலும் உண்டு. வடநாட்டில் வடமொழி வேதங்கள் தெய்வீகத்தன்மை யுள்ளவைகளாக மதிக்கப்பட்டன; நான்முகனால் இயற்றப் பட்டவனாக எண்ணப்பட்டன; தென்னாட்டிலும் அவ்வாறே எண்ணப்பட்டன. வட நாட்டிலும் வேதங்கள் ஒதப்பட்டன; தென்னாட்டிலும் வேதங்கள் ஒதப்பட்டன. வடநாட்டிலே வேத வேள்விகள் நடைபெற்றன; தமிழ கத்திலும் வேத வேள்விகள் நடைபெற்றன. பார்ப்பார், துறவிகள், பசுக்கள், பத்தினிப்பெண்டிர் (பெண்கள்), வயதேறியவர், குழந்தைகள் இவர்களுக்கு எவ்விதத் துன்பமும் செய்யக்கூடாது. போர்க்காலங்களில்கூட முன்னறி விப்புக் கொடுத்து இவர்களை அப்புறப்படுத்திய பிறகுதான் போர் தொடங்க வேண்டும். இது ஒரு பொதுவான நீதி. இந்த நீதியைச் சிலப்பதிகாரம் போற்றுகின்றது; பழந்தமிழர்களும் பாராட்டிப் பின்பற்றி வந்தனர். தமிழ் நாட்டு மன்னர்கள் போர் செய்யத் தொடங்கும்போது இந்த அறத்தைப் பின்பற்றி வந்தனர். இது பாரதநாட்டு மன்னர்கள் எல்லோராலும் போற்றப்பட்ட பொது தர்மமாகும். பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டு தீத்திறந்தார் பக்கமே சேர்க என்று வஞ்சினமாலையிலே கூறப்படுகிறது. கண்ணகி, அக்கினி தேவனைப் பார்த்து இவ்வாறு கட்டனையிடுகின்றாள். படைக்கலம் இல்லாதவர்களுடன் போர் புரிவது வீரம் அன்று; தோற்று ஒடுகின்றவர்களை விரட்டிப்பிடித்துக் கட்டித் தொல்லை கொடுப்பது வீரம் அன்று; இவை யுத்த தர்மம் அல்ல. இக்கொள்கையைப் பாரதநாட்டு அறநூல்கள் அனைத்தும் ஒத்துக் கொள்ளுகின்றன. இது வடவரும் தென்னவரும் ஒத்துக்கொள்ளும் பொது அறமாகும். இப்பொழுது அறம் சிலப்பதிகாரத்திலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. செங்குட்டுவன் வடநாட்டிலே தன்னுடன் போரிலே தோற்றுப் போன மன்னர்களைச் சிறைபிடித்தான். மாறுவேடம் கொண்டு ஒடி ஒளிந்த மன்னர்களையும் சிறை பிடித்தான். அவர்களைப் பாண்டியனுக்கும், சோழனுக்கும் காட்டிவிட்டு வருமாறு, நீலன் என்னும் படைத்தலைவனுடன் அனுப்பி வைத்தான். பாண்டியனும் சோழனும் அவர்களைப் பார்த்த போது செங்குட்டுவனுடைய வீரத்தை எள்ளி நத்தனர். இது வீரத்திற்கு அறிகுறியான செயல் அன்று எனப்பரிகசித்தனர். இச்செய்தியை நீலன் செங்குட்டு வனிடம் கூறினான். இந்த நிகழ்ச்சிகள் மூலம் யுத்த தர்மம் வடநாட்டினர்க்கும் தென்னாட்டினர்க்கும் ஒன்றுதான் என்பதைக் காணலாம். சோழனுடைய புகாரை அடைந்தோம்; அங்கே சித்திர மண்டபத்தே சோழ மன்னனைக் கண்டோம்; போரிலே தோற்றுப் போன ஆரிய மன்னர்களை அவ்வேந்தனுக்குக் காட்டி அவன் அடிகளை வணங்கினோம்; அம்மன்னன், பெரிய போர்க் களத்திலே மிகுந்த ஆண்மையுடன் போர்செய்து தோற்றவர்கள், வாள்படை, குடை இவைகளைப் போர்க்களத்திலே இழந்தவர்கள், படைவீரர் கோலத்தை மாற்றி மாறுவேடம் புனைந்துகொண்டு உயிர்தப்பி ஒடியவர்கள் இவர்களைப் போரிலே சிறைப்படுத்துதல் வெற்றியா காது என்று தன்படைத் தலைவனைப் பார்த்துக் கூறினான்; என் முகத்தைப் பார்த்துக் கூடப் பேசவில்லை! என்று நீலன் கூறினான். இதனை, செம்பியன் மூதூர்ச் சென்று புக்கு ... ... ... ... ஆங்கு சித்திர மண்டபத்து இருக்க, வேந்தன் அமர் அகத்து உடைந்த ஆரிய மன்னரொடு தமரின் சென்று தகைஅடி வணங்க, நீள் அமர் அழுவத்து நெடும்போர் ஆண்மையொடு வாளும் குடையும் மறக்களத்து ஒழித்து கொல்லாக் கோலத்து உயிர் உய்ந்தோரை வெல்போர்க் கோடல் வெற்றம் அன்று (நடுகல். 85-93) என்ற அடிகளால் அறியலாம். இதன்பின், பாண்டியன் பரிகசித்ததையும் நீலன் கூறுகின்றான். போர்க்களத்தின் வெற்றியானது. பகையரசன் வெற்றி யாகும் படி ஒடிப்போனவர்கள் - தவக்கோலம்பூண்டு உயிர் பிழைத்துப் போனவர்கள் - இவர்களின்மேல் கோபங்கொண்டு. இவர்களைச் சிறைபிடித்த வெற்றி மிகவும் புதுமையாக இருக்கின்றது. அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து தவப்பெரும் கோலம் கொண்டோர் தம்மேல் கொதிஅழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் புதுவது என்றனன் போர்வேல் செழியன் (நடுகல் 104-107) இவ்வடிகள் பாண்டியன் கூற்றை உணர்த்தின, சோழன், பாண்டியன் இருவர் கூறிய அறங்களும் பாரத நாட்டின் பொது அறமாகும். கணவனையே தெய்வம் எனக் கொண்டு, அவனுக்கு அடங்கி நடக்கவேண்டியதே பத்தினிப் பெண்டிர் கடமை. இது, வடவர்க்கும் தென்னவர்க்கும் உடன்பாடான கொள்கை. காதலன் மாண்டால், மனைவி உடன்கட்டை ஏறவேண்டும்; இன்றேல் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழவேண்டும். இதுவும், வடக்கும் தெற்கும் ஒத்துக்கொள்ளும் கொள்கை. இவைபோன்ற, வடவர்க்கும் தென்னவர்க்கும் ஒத்த பண்பாடுகள் பல சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன. ஆகவே சிலப்பதிகாரத்தை வைத்துக்கொண்டு, வடக்கு - தெற்கு வேற்றுமை பாராட்ட முடியாது. சிலப்பதிகாரம் தமிழர் நாகரிகத்தை - பண்பாட்டை - மட்டும் எடுத்துரைக்கும் நூல் என்று சொல்ல முடியாது. பாரத நாட்டுப் பண்பாட்டை விளக்கும் நூல்தான் சிலப்பதிகாரம், சிலப்பதிகார காலத்திலே. இது தமிழர் பண்பு, இது ஆரியர் பண்பு என்று பிரிக்கமுடியாமல், இருவர்பண் பாடும் ஒரே பண்பாடாகத்தான் திகழ்ந்தது. வடவரும் தென்னவரும் பழக்கவழக்கங்களிலே வேறு பட்டிருக்கலாம்; மொழியிலே வேறுபட்டிருக்கலாம்; நடை உடைகளிலே வேறுபட்டிருக்கலாம். ஆனால், உள்ளத்திலே - நம்பிக்கை களிலே - அறநெறியிலே வேறுபட்டவர்கள் அல்லர். இவ்வுண்மை யைச் சிலப்பதிகாரத்தைப் படிப்போர் தெளிவாகக் காணலாம். செப்பும் மொழி பதினெட்டு உடையாள் - எனின் சிந்தனை ஒன்று உடையான் என்று பாரதியார் சொல்லியிருப்பது உண்மை. சிலப்பதிகாரத்தைப் பார்த்த பின் - படித்த பின்தான் இவ்வாறு பாடினாரோ என்று எண்ணுவதிலே தவறில்லை. ஆரியர் - தமிழர் சேரன் செங்குட்டுவன் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். தமிழரை இகழ்ந்து பேசிய மன்னர்களின் மேல் சினங் கொண்டு சென்றான்; எதிர்த்த ஆரிய மன்னர்களைப் போரிலே புறமிட்டு ஓடும்படி செய்தான்; அவர்களை அவமானப் படுத்தினான். இச் செய்தி சிலப்பதிகாரத்தில் வஞ்சிக் காண்டத்தில் காணப்படுகின்றது. இதை வைத்துக்கொண்டு வடவர் - தமிழர் வெறுப்பை வளர்க்க அடிகோலுகின்றனர் சிலர்; ஆரியர்-தமிழர் என்ற வேற்றுமையைக் கிளப்பி விட முயலுகின்றனர். வடவரும், தமிழரும் ஆயிரங்காலப் பகைவர்கள். இருவரும், நாகரிகத்தினும் பண்பாட்டிலும் வேறுபட்டவர்கள். இதனால்தான் வடவர் - தமிழர் வேற்றுமை நெடுங்காலமாக வளர்ந்து வந்ததிருக்கின்றது; வடவரும் தமிழரும் ஒத்துவாழ முடியாது என்று பேசுகின்றனர். இப்படிப் பேசுவது பொருளற்ற வழக்கு; அடிப்படையில்லாத கட்டிடம். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையை உணர்வார்கள். பாரதநாட்டு மக்களின் பண்பாடு ஒன்றுதான்; அவர்கள் உள்ளமும் உணர்ச்சியும் ஒன்றுதான். இதில் ஐயம் இல்லை. சிலப்பதிகார காலத்திற்கு முன்பே ஒரேவிதமான பண்பாடுதான் பாரத நாடு முழுவதும் பரவியிருந்தது. சிலப்பதிகார காலத்தில் பண்பாட்டிலே வடவர் - தமிழர் என்ற வேற்றுமை காணப்படவே யில்லை. இந்த உண்மையை மறைக்க முடியாது. இந்த உண்மையை மறைக்க முயல்கின்றனர் சிலர். செங்குட்டுவனுடைய வடநாட்டுப் படையெடுப்பைத் தமிழர் - ஆரியர் வேற்றுமைக்குச் சிலர் ஆதரவாகக் கொள் கின்றனர். இப் படையெடுப்பு தமிழர் - ஆரியர் பண்பாட்டுப் போராட்டம் என்று புனைந்துரைக்கின்றனர். இது வெறுப்பி லிருந்து பிறந்த வீண்வாதமேயாகும். தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டியர்கள் முடியரசர் களாக இருந்து ஆண்டுவந்தனர். சேர நாட்டுத் தமிழர்கள் பண்பாடு வேறு, சோழ நாட்டுத் தமிழர்கள் பண்பாடு வேறு, பாண்டிய நாட்டுத் தமிழர்கள் பண்பாடு வேறு என்று சொல்ல முடியாது, மத, சமுதாய, பழக்க வழக்கங்களிலே மூன்று நாட்டுத் தமிழர்களும் ஒற்றுமை யுள்ளவர்கள்தாம் சேர, சோழ, பாண்டியர்கள் மூவரும் தமிழர்கள்தாம். இவர்கள், தமிழ்ப் புலவர்களைப் போற்றினார்கள்; தமிழ் இலக்கியங்களை வளர்த்தார்கள்; தமிழ்க் கலைகளைப் பெருக்கினார்கள்; தமிழ்மக்களின் பாதுகாவலர்களாக விளங்கினார்கள். ஒரே பண்பாடு; ஒரே இனம்; ஒரே நாடு; ஒரே மொழி இவைகளைக்கொண்ட மூவேந்தர்கள் எப்பொழுதும் ஒன்று பட்டு வாழ்ந்தார்களா? மூன்று முடியரசர்களும் ஒற்றுமையாக வாழ்ந்த காலம் மிகக் குறைவாகும். இவரகள் அடிக்கடி சண்டை யிட்டுக் கொண்டே யிருந்திருக்கின்றனர். இவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்த காலத்தை விடப் போரிட்டுக்கொண்டிருந்த காலந்தான் மிகுதி. இவ்வுண்மையைச் சங்க இலக்கியங்களால் காணலாம். புறநானூறு ஒன்றே இவ்வுண்மையை விளக்கப் போதுமான சான்றாகும். ஒரே நாட்டினரான - மொழியினரான - பண்பாட்டைக் கொண்டவர்களான - சேர, சோழ, பாண்டியர்கள் இவ்வாறு போரிட்டுக்கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன? பண்பாட்டு வேற்றுமையா? மொழி வேற்றுமையா? மத வேற்றுமையா? இல்லை... தனது நாட்டை விரிவுபடுத்திக்கொள்வது, எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெறுவது, வீரன் என்ற பெயருடன் விளங்குவது இவைகள் மன்னர்களின் கடமை என்று கருதினர். இது பண்டைக் கால மன்னர்களின் எண்ணம். தனி அதிகாரம் காரணமாக, ஒவ்வொரு வேந்தர்களும், தன்னிகர் அற்ற தலைவர்களாக வாழ விரும்பினர் இவ்விருப்பம் காரணமாகத் தமக்கு அடங்காத அரசர்களுடன் போர் செய்தனர்; தம்மை மதிக்காத மன்னர்களை எதிர்த்து வென்றனர் அல்லது தோற்று மாண்டனர் அம்மன்னர்களை வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. போர்க் களத்தில் வென்றாலும் புகழ்; தோற்று மடிந்தாலும் பெருமை; வீரசுவர்க்கம் உண்டு என்று நினைத்தனர். தமிழ் மன்னர்களுடன் அடிக்கடி போர் நடந்தது போலவே, சில சமயங்களில் தமிழ்நாட்டு மன்னர்களுக்கும் வடநாட்டு வேந்தர்களுக்கும் போர் நிகழ்ந்திருக்கின்றது. தமிழ்நாட்டு வேந்தர்களுக்குள் சண்டை நடக்கக் காரணம் என்னவோ, அக்காரணங்கள் தாம் வடநாட்டு மன்னர்களுக்கும், தமிழ்நாட்டு மன்னர்களுக்கும் சண்டை நடக்க காரணமாயிருந்தன, இச் சண்டைக்குக் காரணம், மொழியோ, மதமோ, பண்பாடோ அல்ல என்பது உறுதி. செங்குட்டுவனுக்கும், வடவேந்தர்களுக்கும் நடந்த போர் பண்பாட்டுப் போர் என்று சிலப்பதிகாரத்தில் ஒரிடத்திலும் காணப்படவில்லை, செங்குட்டுவன் தன் தாயைக் கங்கையிலே நீராட்டி வைக்கும் பொருட்டு ஒருமுறை வடநாடு வென்றான். அப்பொழுது ஆயிரம்மன்னர்கள் அவனை எதிர்த்தனர், அவர்களை வென்று வெற்றியுடன் திரும்பினான். இச்செய்தியைக் காட்சிக் காதையில் காணலாம், கங்கைப் பேர்யாற்றுக் கடும்புனல் நீத்தம் எம்கோ மகளை ஆட்டிய அந்நாள் ஆரிய மன்னர் ஈர்ஐஞ் ஞூற்றுவர்க்கு ஒருநீ ஆகிய செருவெம் கோலம் கண்விழித்துக் கண்டது கடுங்கண் கூற்றம் (காட்சி. 160-164) இவ்வாறு வில்லவன்கோதை என்னும் படைத் தலைவன் செங்குட்டுவனிடம் கூறினான், இதில் தமிழர்கள் கங்கையை புனிதமான புண்ணிய நதி என்று கருதியிருந்தனர் என்னும் உண்மை அடங்கியிருக்கின்றது, செங்குட்டுவன், கண்ணகி சிலைக்குக் கல் கொண்டுவர இமயம் செல்வது என்று எண்ணிய போது வில்லவன் கோதை இவ்வாறு சொன்னான், மேலும் அவன் கூறுகின்றான்: இப்பெழுது இமயமலையை நோக்கிச் செல்வது, பத்தினித் தெய்வத்தின் உருவம் சமைப்பதற்காக, ஒரு கல் கொண்டுவரும் பொருட்டுத்தான், ஆதலால் இச்செய்தியை வடநாட்டில் வாழும் அரசர்க்கெல்லாம் அறிவித்துவிடவேண்டும். வில், மீன், புலி அடையாளமிட்ட உன் திருமுகத்தை வடநாட்டு வேந்தர் களுக்கு அனுப்பிவிடுக. இமய மால்வரைக்கு எம்கோன் செல்வது கடவுள் எழுதஓர் கற்கே; ஆதலின், வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம் தென்தமிழ் நல்நாட்டுச் செழுவில், கயல், புலி மண்தலை யேற்ற வரைக ஈங்கு (காட்சி. 168-172) இது வில்லவன்கோதை கூறியது, இதிலே இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே என்று குறித்திருப்பது சிந்தித்தற்குரியது. இமயக் கல்லை எடுத்துவரும் ஒரே நோக்குடன்தான் செங்குட்டுவன் வட நாட்டின் மேல படையெடுத்துப்போக நினைத்தான் என்று குறித்திருப்பதைக் காணலாம். சிலப்பதிகாரத்தில் உள்ள மற்றொரு நிகழ்ச்சியும் குறிப்பிடத் தக்கது, வடநாட்டிலே நடந்த ஒரு சுயம்வரத்திலே ஆரிய மன்னர்கள் பலர் குழுமியிருந்தனர், அப்பொழுது அவர்கள் பலரும், தமிழ்நாட்டு வேந்தர்கள் வடநாட்டின்மேல் படை யெடுத்துவந்து, இமயத்தின் நெற்றியிலே வில், கயல், புலி முத்திரைகளைப் பொறித்துச் சென்றபோது எம்போன்ற முடி மன்னர்கள் இந்நாட்டில் இல்லைபோலும் என்று சொல்லி நகைத்தனர், இச்செய்தியை இமயத்திலிருந்து தீர்த்தயாத்திரை செய்துகொண்டு வந்த தவசிகள் அறிவித்தனர். அந்த நகை மொழி நம்மிடம் தங்குமாயின், அது எம்போன்ற தமிழ் வேந்தர்க் கெல்லாம் இகழ்ச்சிதரும். ஆதலால் அவ்வாறு இகழ்ந்த வேந்தர் களின் முடித்தலையிலே பத்தினித் தெய்வம் சமைப்பதற்கான கல்லை ஏற்றிக்கொண்டு வருவேன் என்று செங்குட்டுவன் உரைத்தான். (கால்கோள். 9-15) தமிழ்வேந்தர்களின் வீரத்தை இகழ்ந்துரைத்த வேந்தர்களை அடக்குவேன் என்றுதான் செங்குட்டுவன் கூறினான்; வேறு அவர்களுடைய பண்பாட்டைப்பற்றி இகழ்ந்து பேசவில்லை, வெங்குட்டுவன் வடதிசை நோக்கிச் செல்லும்போது, வழியிலே நீலகிரியிலே தங்கியிருந்தான், அப்பொழுது செங்குட்டுவனுடைய தூதர்தலைவனாகிய சஞ்சயன் என்பவன் வந்தான்; மன்னனைக் கண்டான். வேந்தே, நீங்கள் வடநாடு செல்வது, பத்தினிக் கடவுளைச் செய்வதற்குரிய கல் ஒன்றுக்காகமட்டுந்தான் என்றால், அதற்காக நீங்கள் போகவேண்டிய அவசியம் இல்லை, உங்களுடன் வேற்று மையின்றி ஒன்றுபட்டுக்கலந்த நட்பரசர்களாகிய நூற்றுவர் கன்னர்கள், தாங்களே இதைச் செய்வதாகக் கூறினர். இமயத்திலே கல்வெடுத்துக் கங்கையிலே நீர்ப்படை செய்து தருகின்றோம் என்றனர் என்று சஞ்சயன் இச்செய்தியைக் கூறினான், (கால்கோள். 148-155) அப்பொழுது செங்குட்டுவன் உரைத்த மறுமொழியாவது: வடநாட்டு வேந்தன் பாலகுமரன் மக்களான கனகனும் விசயனும் நாவடக்கம் அற்றவர்கள். விருந்து ஒன்றிலே, வடநாட்டு மன்னர்கள் பலருடன் கூடித் தமிழ்வேந்தர்களை இகழ்ந்து பேசினாராம், அவர்கள் எம்முடைய ஆற்றலை அறியாமல் இகழ்ந்தனர், ஆகையால், பத்தினிக்குக் கல் கொணரமட்டும் அன்று; அம்மன்னர்களுக்கு நமது வீரத்தை அறிவிப்பதற்காகவும் கூற்றத்தையும் கூட்டிக்கொண்டு இப்படை செல்கிறது, இச் செய்தியை நமது நட்பினராகிய கன்னர்களுக்குத் தெரிவிப்பாயக. கங்கைப் பேராற்றைக் கடப்பதற்கான மரக்கலங்களை அவர்கள் உதவியால் ஏற்பாடு செய்க. இதற்காக நீ முன்னே செல்க. (கால்கோள். 158-165) சஞ்சயனுக்கும் செங்குட்டுவனுக்கும் நடைபெற்ற இந்த உரையாடல்களிலும் செங்குட்டுவன் - கனக-விசயர் போர், பண்பாட்டுப் போர் என்பதற்கான ஆதரவில்லை, கண்ணகிக் காகக் கல் கொண்டுவரவும், தமிழ்வேந்தர்களின் வீரத்தை எள்ளிய கனக-விசயர்களை அடக்கவுந்தான் செங்குட்டுவன் வடநாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான், நூற்றுவர் கன்னர்கள் செங்குட்டுவனுடைய நண்பர்கள், இந்த வடநாட்டு மன்னர்கள் செங்குட்டுவனுக்கு உதவி செய்தனர், ஆதலால் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்களிடமும் நட்புக் கொண்டிருந்தான் என்பதைக் காணலாம். செங்குட்டுவன் நீலகிரியிலே தங்கியிருந்தபோது நடந்த மற்றொரு நிகழ்ச்சியும் குறிப்பிடத்தக்கது. வான்வழியாக மலயத்தை நோக்கிச் சென்ற முனிவர்கள் கீழே இறங்கினர். அரசன் எழுந்து முன்வந்து வணங்கினான், அப்பொழுது அம்முனிவர்கள் செங்குட்டுவனிடம் கூறிய செய்தி, தமிழர் - பண்பாடு ஒன்றென்பதையே விளக்குவதாகும், சிவபெருமான் திருவருளால் வஞ்சிமாநகரில் தோன்றிய வேந்தனே! நாங்கள் இமயமலையிலிருந்து பொதியமலைக்குப் போகின்றோம்; இமயமலை வரையில் செல்வது உன் கருத்தானால், ஆங்குள்ள அருமறை அந்தணர்களுக்கு யாதோரு துன்பமும் வராமல் காப்பது நின் கடமை. செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ கேளாய்! மலயத்து ஏகுதும்; வான்பேர் இமய நிலயத்து ஏகுதல் நின்கருத்து ஆகலின் அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்னன்! காத்தல் நின்கடன் (கால்கோள்.98-103) இவ்வாறு முனிவர் உரைத்தனர்; செங்குட்டுவனை வாழ்த்திச் சென்றனர். முனிவர்களின் இவ்வேண்டுகோளைச் செங்குட்டுவன் மறக்க வில்லை, இமயத்திலிருந்த அந்தணர்களுக்கு எவ்விதத் துன்பமும் நேராமல் பாதுகாத்தான், கனக - விசயர் போர் முடிந்தபின்-ஆரியப்படைகளைத் தோல்வியடைச் செய்தபின்-தன் சேனைத் தலைவனாகிய வில்லவன்கோதையைப் பார்த்துச் செங்குட்டுவன் கூறிய செய்தி இதனை விளக்கும். வடதிசையிலே வேதநெறியை வளர்ப்பவர்களும், நாள் தோறும் அக்கினியைப் பேணுவதையே சிறந்த வாழ்க்கையாகக் கொண்டவர் களும் ஆகிய அந்தணர்களைப் போற்றிப் பாதுகாப்பீர்களாக, வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர் தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை காற்றூதாளரைப் போற்றிக் காமின் (கால்கோள். 248-250) இவ்வடிகள் செங்குட்டுவன் சிறப்பையும், பண்பையும் விளக்கின. செங்குட்டுவன் வடநாட்டின்மீது படையெடுத்துச்சென்ற தற்குக் காரணம் பண்பாட்டுப் பகை அன்று; பண்பாட்டு வேற்றுமையும் அன்று. இவ்வுண்மையை மேலே காட்டிய நிகழ்ச்சி களைக் கொண்டு தெளிவாகக் காணலாம், இவ்வுண்மைகளை மறப்பவர்கள் - அல்லது மறைப்பவர்கள்தான் சிலப்பதிகாரத்தை ஆரியர் - தமிழர் வேற்றுமைக்கு ஆதரவாகக் கொள்ளுவார்கள். வடக்கில் வாழ்வோரைத் தமிழ் நூல்களில் ஆரியர் என்று குறித்தனர், ஆரியர்கள் என்றால் புண்ணிய திசையில் இருப்பவர்கள் என்று பொருள் கொண்டனர், உயர்ந்தவர்கள் என்ற பொருளும் கொண்டனர். நாட்டின் தட்பவெப்ப நிலைக்குத் தக்கவாறு நடைஉடை பாவனைகளிலேதான் பாரத மக்களிடம் வேற்றுமையுண்டு, கொள்கையிலே வேற்றுமையில்லை; நம்பிக்கைகளிலே வேற்றுமை யில்லை, மொழிகளால் வேறுபட்டிருக்கின்றனர் ஆயினும் கருத்தால் ஒன்றுபட்டிருக்கின்றனர். பண்டைநாளில் வடமொழியைப் பாரதநாட்டின் பொது மொழியாகக் கொண்டனர், பாரதநாட்டு மக்களுக்கான சட்ட திட்டங்களையெல்லாம் அம்மொழியிலே எழுதி வைத்தனர். பாரதநாட்டு மக்கள் போற்றும் கடவுள் சம்பந்தமான கதைகளை யெல்லாம் அம்மொழியிலே அமைத்துக் கொண்டனர், பாரத நாட்டு மக்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அறநூல்கள் பலவற்றை அம்மொழியிலே எழுதினர், மந்திரங்கள் பொதுவான வடமொழியிலே செய்து வைத்தனர், இவைகள் பாரதநாட்டு மக்களின் பண்பாடு ஒன்று என்பதையே உணர்த்தும், சிலப்பதிகார காலத்தில் இந்த நிலைதான் இருந்தது என்பது உண்மை. சிலப்பதி காரத்தை நடுநிலையிலிருந்து படிப்போர் இவ்வுண்மையை உணர்வார்கள். சமுதாய நிலை சிலப்பதிகார காலத்திலே, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை நிலை ஏறக்குறைய இன்றுள்ளதுபோலத்தான் இருந்தது, நாடெங்கும் எல்லா இன்பங்களையும் நுகரும் செல்வம் படைத் தவர்களும் இருந்தனர்; பலவிதமான தொழில்களைச் செய்து உயிர்வாழும் தொழிலாளர்களும் இருந்தனர்; நிலத்திலே உழுது பிழைக்கும் உழவர்களும் இருந்தனர்; உழவர்களைக்கொண்டு நிலத்திலே பயிர்செய்து வாழ்ந்த நிலக்கிழவர்களும் இருந்தனர், செல்வர்களின் குதூகல வாழ்க்கை ஒருபுறம் இருந்தது; வறியோர்களின் அவலமான வாழ்க்கை மற்றொருபுறம் இருந்தது. சிலப்பதிகாரத்தில் உள் அரங்கேற்று காதை ஒன்றே செல்வர்களின் இன்ப வாழ்க்கையை எடுத்துக்காட்டுவதற்குப் போதுமான சான்றாகும், உடல் உழைப்பு மிகுதியாக இல்லாதவர்கள், சிறிது நேரம் அறிவைப் பயன்படுத்திப் பெரும் பொருள் சேர்ப்பவர்கள் - இவர்களுக்குதான் இன்பமாகப் பொழுதுபோக்கப் போதுமான நேரம் இருக்கும், நிலத்திலோ, தொழிற்சாலைகளிலோ உடலால் உழைக்கும் மக்களுக்குப் போதுமான ஓய்வுநேரம் இல்லை, ஆதலால் அவர்களால், சிறந்த சங்கீதம், உயர்ந்த நடனம் ஆகியவைகளைச் சுவைக்கக் கூடத் தெரியாது. இவைகளைச் சுவைத்துப் பொழுதுபோக்க அவர்களுக்கு நேரந்தான் ஏது? சிலப்பதிகார காலத்திலே சிறந்த இசையும், உயர்ந்த நடனமும் வளர்ந்திருந்தன, அவைகளை அரசர்களும் செல்வர் களும் அனுபவித்து மகிழ்ந்தனர், சிறந்த நடன ஆசிரியர்கள் இருந்தனர். அவர்கள் நடன வகைகளையெல்லாம் அறிந்தவர்கள்; இசைக் கருவிகளின் அமைப்புக்களை யெல்லாம் உணர்ந்தவர்கள்; ஒவ்வொரு வகைக் கூத்தையும், அதனதன் இலக்கணம் தவறாமல் கற்பிக்கும் திறமை யுள்ளவர்கள். சிறந்த இசைப் புலவர்கள் இருந்தனர். இவர்கள் பலவகைக் கூத்துக்களின் இலக்கணங்களையும் அறிந்தவர்கள்; அக் கூத்துக் களுக்கேற்ற பாடல்களையும், அப் படல்களுக்கேற்ற அசை களையும் உணர்ந்தவர்கள்; வேறு பல மொழிகளில் உள்ள பாடல்களையும், இசைகளையும் அறிந்தவர்கள். முத்தமிழிலும் தேர்ச்சிபெற்ற புலவர்கள் இருந்தனர், அவர்கள் நாடகநூல் இலக்கணங்களை அறிந்தவர்கள்; நல்ல இசைப் பாடல்களை இயற்றும் ஆற்றல் உள்ளவர்கள்; இவர்கள் சிறந்த நாடகநூல்களை எழுதுவதிலே வல்லவர்கள். மத்தளம் வாசிப்போர் இருந்தனர், இவர்கள் எல்லாக் கூத்துக் களையும், எல்லாப் பாட்டுக்களையும், எல்லா இசை களையும் ஏற்றவாறு, அவைகளோடு இசையும்படி அழகாக வாசிக்கும் ஆற்றல் உள்ளவர்கள். குழல் வாசிப்பதிலே வல்லவர்கள் இருந்தனர், இவர்கள் யாழ், மத்தளம், இசைப்பட்டு இவைகளோடு பொருந்த நன்றாக ஊதுவார்கள்; ஏழு பண்களையும் நன்றாக விளங்கும்படி எழுத்தற வாசிப்பதிலே வல்லவர்கள், யாழ் வாசிப்பதிலே வல்லவர்கள் இருந்தனர். இவர்கள் பண்களின் வகைகளையெல்லாம் நன்றாக அறிந்தவர்கள்; எல்லா இசைகளையும் இனிமையுடன் வாசிப்பதிலே வல்லவர்கள். இசை, நடனம், நாடகம் முதலியவைகள், நல்ல நாகரிகம் பெற்ற சமுதாயத்திலேதான் வளர்ச்சியடைந்திருக்கும். இவை களை வளர்ப்பதற்குத் துணைசெய்கின்றவர்கள் நிதிபடைத்தவர்கள் தாம். பண்டைக்காலத்திலே இக்கலைகள், மன்னர்களாலும் நிலத் தலைவர்களாலுமே வளர்க்கப்பட்டு வந்தன. சிலப்பதிகார காலத்திலும் இந்த நிலைமைதான் இருந்தது. சிலப்பதிகார காலத்திலே தமிழ்நாட்டில் பலதெய்வ வணக்கம் குடிகொண்டிருந்தது; தெய்வங்களுக்குப் பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வந்தன; பெரும்பாலான மக்கள் தெய்வபக்தியுள்ளவர்களாகவே விளங்கினர், எங்கும் அறவுரை களும், நல்லொழுக்கமும் போதிக்கப்பட்டன. ஆயினும் விபசாரம், பொய், திருட்டு முதலிய குற்றங்களும் நடந்துகொண்டுதான் இருந்தன. ஆறுகளிலே தேனும் பாலும் பெருக்கெடுத்து ஒடின; மானும் புலியும் ஒருதுறையிலே தண்ணீர் குடித்தன; மக்கள் அனைவரும் பசிப்பிணி அறியாமல் இன்புற்று வாழ்ந்தனர் என்று சிலப்பதிகால காலத்தைப்பற்றிச் சொல்ல முடியாது. தமிழ்நாட்டு வணிகர்கள் பெருநிதி படைத்தவர்களாக வாழ்ந்தனர். மாகவான் நிகர் வண்கை மாநாய்கன் வானத்து மேகம்போன்ற எதிர்பாராத வள்ளன்மையுள்ள மாநாய்கன், வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் வருகின்ற செல்வத்தால் பிறரை உண்பிக்கும் மாசாத்துவான் என்று மங்கல வாழ்த்திலே கூறப்படுவதால் செல்வர்களின் சிறப்பைக் காணலாம். வணிகர்கள் அரசர்களுக்கு அடுத்தவர்களாகப் போற்றப் பட்டனர், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகை வருணத்திலே, வணிகர், அசரசருக்கு அடுத்தவராக இருப்பது ஒன்று. இரண்டாவது, அவர்கள் செல்வத்திலும், செல்வாக்கிலும் அரசர்களுக்கு அடுத்தபடியாக இருந்தனர், அரச காரியங்களைப் பார்க்கும் உரிமை வணிகர்களுக்கு உண்டு என்று தொல்காப்பியம் கூறுகின்றது. இவ்வுரிமை அவர் களுக்குச் சிலப்பதிகார காலத்திலும் இருந்தது, ஆதலால்தான் சிலப்பதிகார ஆசிரியர் அவர்களை, மன்னர் பின்னோர் என்று குறிக்கின்றார். தொல்நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு (ஊர்காண்.21) அரைசர் பின்னோர் (அடைக்கல.109) அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின் உரிய எல்லாம் ஒருமுறை கழித்து (கொலைக்கள.44-45) மன்னர் பின்னோர், அரைசர் பின்னோர் என்ற இரண்டு தொடர்களும் பொதுவாக வணிகர்களைக் குறித்தன, அரசர் பின்னோர்க்கு என்று கொலைக்களக் காதையிலே குளிக்கும் தொடர் கோவலனையே குறித்தது. இவைகள் செல்வர்களின் சிறப்பைக் குறித்தன. நிலத்திற்கு உரிமையாளர்கள் இருந்தனர்; இவர்கள் நேரடியாக நிலத்தில் இறங்கி உழுபவர்கள் அல்லர், வீழ் குடி உழவர் என்று இவர்களைக் குறிக்கின்றார் இளங்கோ அடிகள். (இந்திரவிழவு.43) வீழ்குடி : காணியாளர், வேளாண்சாமந்தர் என்பாரும் உளர் என்பது அடியார்க்கு நல்லார் விளக்கம், வேளான் சாமந்தர் என்போர் சிற்றரசர், நிலக்கிழவர்கள் - நிலத்தலைவர்கள் தாம் - பெரும்பாலும் சிற்றரசர்களாக இருந்தனர் என்று தெரிகின்றது, வேளாளரைக் கங்கையின் புத்திரர்கள் என்று கூறுவது மரபு, உழுவித்துண்ணும் வேளாளரையே கங்கா புத்திரர்கள் என்றனர், இவர்கள் வறியோர்க்கு வழங்குவர்; நாடாளும் மன்னர்க்கு வெற்றிதேடித் தருவர், இத்தகையோர் சிற்றரசர் களாய் வாழும் பழமையான ஊர்களும் தமிழகத்தில் இருந்தன. பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர் இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும் (நாடுகாண். 148-150) இவ்வடிகள் மேற்கூரிய செய்தியை உணர்த்தின. காவிரி நீர் கங்கை நீர் ஆதலின் கங்கையின் புதல்வரைக் காவிரியின் புதல்வர் என்றார் என அடியார்க்கு நல்லார் கூறும் விளக்கம் குறிப்பிடத்தக்கது, இச்செய்திகள் உழுவித்துண்ணும் வேளாளர்கள் இருந்தனர்; அவர்கள் நில உடைமையாளர் காளக வாழ்ந்தனர்; சிற்றரசர்களாகவும் வாழ்ந்தனர் என்பதைக் காட்டின, உழவர்கள் ஏர் பிடித்து உழுதனர். அரிந்த நெற்கதிர்களின் மேல் கடாக்களை ஓட்டி மிதித்து நெல்லைப் பிரித்தனர்; உழவர் வீட்டுப் பெண்கள் வயலிலே நாற்று நட்டனர்; களைப்புத் தீர மதுவுண்டு மகிழ்ந்தனர். மதுவுண்ட மாதர்கள் மகிழ்ந்து பாடினர்; ஏர் உழுவோர் ஏர் மங்கலப் பாட்டுப் பாடினர், கடாவடிக்கும்போது முகவைப் பாட்டுப் பாடினர் (நாடுகாண். 127-137) என்று கூறப்படுகின்றது, நேரடியாக வயலிலே பயிர்செய்யும் உழவர்கள் இருந்தனர், அவர்கள் சொந்த நிலம் இல்லாதவர்கள்; வறுமையிலே வாழ்ந்தவர்கள் என்று எண்ணலாம். சிலப்பதிகார காலத்திலே நிலக்கிழவர்களும் இருந்தனர்; நிலத்திலே உழைத்துப் பாடுபடும் நிலமற்ற உழவர்களும் இருந்தனர், நிலமற்ற உழவர்கள், சமுதாயத்திலே இழிந்தவர் களாகக் கருதப் பட்டனர்; நிலத்தலைவர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப்பட்டனர், இவ்வுண்மைமைகளை மேலே கூறியவைகள் உணர்த்துகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றிச் சொல்லப்படும் செய்திகளிலும், மதுரையைப்பற்றிக் கூறப்படும் செய்திகளிலும் பல சிறு வணிகர்களையும், தொழிலாளர்களையும் காணலாம். கூடைகளிலும், தட்டுகளிலும் பண்டங்களை வைத்துக் கொண்டு சுற்றித்திரியும் வணிகர்கள் இருந்தனர். இவர்கள் ஏழைமக்கள்; அன்றாடம் பொழுதுபோனால் போதும் என்ற எண்ணத்துடன் வாணிகம் செய்வோர், இன்னும் பலவகையான தொழிலாளர்கள் இருந்தனர் என்றும் கூறப்படுகின்றது. இதுபற்றிக் காவிரிப்பூம் பட்டினம், மதுரைமாநகரம் என்ற பகுதிகளிலே கூறப்பட்டுள்ளன, இவைகள் எளிய வாழ்க்கை நடத்தும் பலவகைத் தொழிலாளர்கள் சிலப்பதிகார காலத்தில் இருந்தனர் என்பதைக் குறிக்கப் போது மானவை. சிலப்பதிகார காலத்திலே, ஆண்களைப்பொறுத்தவரையில் விபசார வாழ்வு அவ்வளவு பெரிய குற்றமாகக் கொள்ளப்பட வில்லை. செல்வர்களுக்கு அது ஒரு உரிமையாக இருந்தது, அவர்கள் காதற் பரத்தையர்களுடனும், சேரிப் பரத்தையர் களுடனும் சேர்ந்து இன்புற்று வந்தனர். கணிகையர் என்னும் கூட்டத்தார் இன்பக் கலைகளில் வல்லுநர்களாயிருந்தனர். அவர்களை அரசர்களும், செல்வர் களும் ஆதரித்து வந்தனர், அவரகள் தொழில் நடனம், கூத்து, சங்கீதம் முதலியன. இவைகளுடன் விபசாரத்தையும் தொழிலாகக் கொண்டிருந்தனர். இதைச் சிலப்பதிகாரத்திலே விளக்கமாகக் காண முடிகிறது, காவிரிப்பூம்பட்டினத்தைப்பற்றியும், மதுரையைப் பற்றியும் கூறும்போது, இவர்கள் துறவியாகிய இளங்கோவடிகளின் கருத்தையே கவர்ந்துவிடுகின்றனர், கணிகையர், ஆடல் மகளிர், விலைமகளிர், பதியிலார் என்று வழங்கும் இவர்களைப்பற்றி இளங்கோவடிகள் தெளிவாகக் கூறுகின்றார். அவர்கள் அழகு, அவர்கள் கற்றிருக்கும் கலைகள், அவர்கள் பொழுதுபோக்கு இவைகளைப் பற்றியெல்லாம் விரிவாக உரைத்திருக்கின்றார், இவைகளை இந்திரவிழவு ஊர்எடுத்த காதையிலும், ஊர்காண் காதையிலும் காணலாம். கோவலன் சைனமதப் பற்றுடையவன்; அருக தர்மங்களை அறிந்தவன்; உருவும் திருவும், உயிர்பேர் ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் என்று கவுந்தி அடி களால் பாராட்டப்பட்டவன். இவனே மாதவியின் அழகிலே மயங்கினான் : மனைவியை விட்டுப் பிரிந்தான் : மாதவியுடன் கூடி வாழ்ந்தான்: ஒழுக்கம் இழந்தான்: செல்வத்தைத் தொலைத்தான் என்று கூறப்படுகின்றது. சிலப்பதிகார காலத்தில் செல்வர்கள் தங்கள் மனம்போன போக்கில் நடந்தனர்; ஒழுக்கத் தைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்று கோவலன் நடத்தையைக் கொண்டே கூறலாம், செல்வம் படைத்தவர்கள் இம்மாதிரி கெட்டுப் போவதற்கான சூழ்நிலை தமிழகத்தில் இருந்தது என்பதிலும் ஐயம் இல்லை. ஒரு பரத்தையும் தூர்த்தனும், கோவலன்-கண்ணகியைக் கண்டு எள்ளினர். அவர்களை நரிகளாகும்படி கவுந்தியடிகள் சபித்தார். இச்செய்தியால், ஒழுக்கங்கெட்ட ஆண் பெண்கள் தமிழ்நாட்டில் திரிந்தனர் என்று எண்ண இடம் உண்டு. கோவலனைக் காட்டிக்கொடுத்த பொற்கொல்லன் செய்கையும் தமிழ்நாட்டு நிலையை விளக்கும். பொற்கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடினான். கோவலன்மேல் பொய்ப்பழி சுமத்தினான், இப்பொற்கொல்லன். நூறு பொற்கொல்லர் களுக்குத் தலைவன்; அவர்களை வைத்து வேலை வாங்கும் தலைவன், இவனே பொய்யுந் திருட்டும் உள்ளவனாயிருந்தால், ஏனைய வறியோர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? மக்களைக் குற்றம் புரியத் தூண்டும்படியாரன வாழ்க்கைநிலை தமிழத்தில் இருந்தது என்பதில் ஐயம் இல்லை. வறுமை காரணமாகத் திருட்டுத்தொழில் புரிந்து வாழ வேண்டிய நிலையிலே பல மக்கள் தமிழகத்தில் இருந்தனர். இதைப் பொற்கொல்லன் வாயால் வெளியிடுகிறார் இளங்கோ அடிகள். இவ்வுண்மையைக் கொலைகளக் காதையிலே 172 முதல் 201 வரையில் உள்ள அடிகளால் காணலாம், அவைகள் திருடர்களைப் பற்றியும், அவர்கள் நடத்தையைப் பற்றியும் உரைப்பவை, மேலே கூறியவைகள் சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டில் சமுதாய நிலை எப்படியிருந்தத என்பதை விளக்கப் போது மானவை. சிலப்பதிகாரத்திலே தமிழத்தில் பெரிய செல்வர்கள் இருந்தனர்; ஏழை மக்களும் இருந்தனர், பெரிய நிலத்தலைவர்கள் இருந்தனர்; நிலமற்ற ஏழை உழவர்களும் இருந்தனர், விபசாரம், பொய், திருட்டு, குடி முதலிய கூடாஒழுக்கங்கள் இருந்தன. செல்வர்களுக்கு விபசாரப் பெண்கள் தேவையாக இருந்தனர், ஏழை மக்களிலும் இத்தகையவர்கள் இருந்தனர். நகரத்திலும், நாட்டிலும் ஒருபுறம் இன்ப வாழ்வு குடி கொண்டிருந்தது; மற்றொருபுறம் வறுமையாலான துன்ப வாழ்வு குடிகொண்டிருந்தது. வறுமை காரணமாகப் பலர் உழைத்தும், திருடியும் வாழவேண்டிய நிலையிலிருந்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலைத்திருந்த காரணத்தால்தான் சமுதாயத்திலே இக்குற்றங்கள் குடியேறியிருந்தன. ஏற்றத்தாழ்வுள்ள ஒரு சமுதாயத்தில் என்னென்ன குறைபாடுகள் இருக்குமோ அவைகள் எல்லாம் சிலப்பதிகார காலத்துத் தமிழகத்திலே இருந்தன. இவ்வுண்மையைச் சிலப்பதிகாரம் தெளிவாகக் காட்டுகின்றது. அறவுரைகள் சிலப்பதிகாரத்திலே சிறந்த அறவுரைகள் பலவற்றைக் காணலாம். மக்களுக்கு அறநெறியைக் காட்டவே சிலப்பதிகாரம் எழுந்தது என்று கூறுவதில் தவறு இல்லை. கதை நிகழ்ச்சியிலே அறிநெறிகள் அடங்கிக் கிடக்கின்றன. சிறப்பாகக் கவுந்தி அடிகளின் வாயிலாகப் பல அறநெறிகள் போதிக்கப்படுகின்றன. அறநெறிகளைப் பின்பற்றி வாழ்வதன்மூலமே மக்கள் வாழ்வு சிறப்படையவேண்டும் என்பது சமணர் கொள்கை. பௌத்தர் களும் இக்கொள்கையுள்ளவர்கள்தாம். நன்னெறியில் நடப்பதால் தான் மக்கள் முன்னேற முடியும்; மக்கள் வாழ்வு சிறக்கும்; மக்கள் ஒன்றுபட்டு உறைவர் என்ற உறுதியான கொள்கை சைனர்களுக்கும் உண்டு; பௌத்தர்களுக்கும் உண்டு. பக்திமார்க்கமே சிறந்தது; எத்தகைய பாவத்தையும் ஆண்டவனைப் போற்றுவதன்மூலம் போக்கிக்கொள்ளலாம்; எத்தகைய இழிசெயலைச் செய்தாலும் பக்தி செய்வதன் மூலம் அச்செயலால் வந்த பழியைப் போக்கிவிடலாம்; பக்தர்களுக்கு இறைவன் எல்லா உதவியும் செய்வான்; அன்பினால் ஆகாத செயல்கள் ஒன்றும் இல்லை; ஆதலால் பக்தி மார்க்கமே சிறந்தது என்பது சைன, புத்த மதங்களை எதிர்ப்பவர்களின் கொள்கை. வைதீக சமயங்கள் பக்திமார்க்கத்தையே பெரிதாகப் பாராட்டு கின்றன. பக்தியினால் பரமபதம் பெற்றவர்களின் வரலாறுகள் பல, இலக்கியங்களாக விளங்குகின்றன. சைன, புத்த தர்மங்கள் தமிழகத்திலே செல்வாக்குப் பெற்றிருந்ததன் காரணமாக வைதீக மதங்களும் ஒழுக்க நெறிகளை ஏற்றுக் கொண்டன; பக்தியையும், ஒழுக்கத்தையும் சேர்த்துப் போதித்தன. இக்காரணத் தால்தான் வைதீக மதங்கள் வளர்ந்தன; அறநெறியை மட்டும் போதித்த சைன, பௌத்த மதங்கள் தமிழகத்திலே தேய்ந்தன. அறநெறியைப் போதிப்பது - பரப்புவது - ஒன்றே சைன, பௌத்த மதங்களின் குறிக்கோள் என்பதில் ஐயம் இல்லை. இவ்வுண்மைகளை உள்ளத்திலே வைத்துக்கொண்டு சிலப்பதி காரத்தைப் படிக்கவேண்டும். இம்முறையிலே படித்தால், அது எந்த மதத்தைச்சார்ந்த நூல் என்பது விளங்கும். சிலப்பதி காரத்தை இயற்றிய ஆசிரியர் எக்கொள்கையினர் என்பதும் தெளிவாகும். சிலப்பதிகாரப் பாத்திரங்களில் ஒருவரான கவுந்தியடிகள் சைன மத சந்நியாசினி. இது ஐயத்திற்கு இடமில்லாத உறுதியான உண்மை. கோவலனும் கண்ணகியும் மதுரைக்குப் போகப் புறப்பட்டனர். காவிரியின் வடகரை வழியாக மேற்கு நோக்கிப் போயினர். ஒரு காவதம் கடந்தபின் கவுந்தியடிகள் இருந்த அறப்பள்ளியை அடைந்தனர். கவுந்தியடிகளை வணங்கினார். அவரிடம், பொருள் திரட்ட மதுரைக்குப் போவதாகக் கோவலன் கூறினான். அறவுரைகளைக் கேட்டு அருகனை வணங்கும் பொருட்டுத் தானும் மதுரைக்கு வருவதாகக் கவுந்தியடிகள் கூறினார். கோவலன் மகிழ்ந்தான். அப்பொழுது, மதுரைக்குப் போகும் வழியைப்பற்றிக் கவுந்தியடிகள் சொல்லுகின்றார். அவர் கூற்றில் அடங்கிக் கிடக்கும் அறவுறைகள் குறிப்பிடத்தக்கவை. 1. மதுரைக்குப் போகும் வயல்வழியிலே, கரும்புப் பயிர் செய்யப்பட்டிருக்கும் இடங்கள் பல உண்டு. கரும்பிலே தேன் அடைகள் நிறைந்திருக்கும். அவ்வடைகள் சிதைந்து அவற்றி லிருந்தது தேன் சிந்தும். அத் தேன் வண்டுகள் சூழ்ந்த பொய் கையின் நல்ல நீரோடு கலந்திருக்கும். இதை அறியாமல், தண்ணீர்த் தாகத்தால், அந்த நீரை இக் கண்ணகி தன் கைகளால் அள்ளிப் பருகவும் கூடும். 2. களை எடுப்பவர்கள் குவளை மலர்களை அடியோடு களைந்து வரப்பின்மேல் போட்டிருப்பார்கள். உடம்பிலே புள்ளிகளையும் கோடுகளையும் உடைய வண்டினங்கள் மது மயக்கத்தால் அம்மலர்களுடன் கலந்து கிடக்கும். நீங்கள் வழி நடந்து செல்லும் களைப்பால், அக் குவளைமலர்களை வெறும் பூக்கள்தாம் என்று நினைத்து அவைகளின்மேல் அடி வைத்து விடுவீர்கள். 3. இந்த வழியில் போகாமல். நீரோடும் பெரிய வாய்க்காலின் வழியே செல்லுவோமாயின் அதிலும் துன்பம் உண்டு. நீரில் வாழும், புள்ளிகளையுடைய நண்டுகளும், நத்தை களும் கரையில் ஊர்ந்து கொண்டிருக்கும். அவைகளை அறியாமல் அடிவைத்து விடுவோ மானால், அவ்வுயிர்கள் துன்புற்று மடியும். இவ்வாறு அவைகள் நம்மால் துன்பத்தை அடைந்தால், அதனால் வரும் கொலைப்பாவத்தை நம்மால் தாங்க முடியாது. 4. இத்தகைய வயலும் சோலையும் அமைந்த வழியைத் தவிர மதுரைக்குப் போக வேறுவழியில்லை. ஆதலால் நீ உன் அன்புக் குரிய மனைவியுடன். அவ்விடங்களை உற்று நோக்கி யாதொரு குற்றமும் உண்டாகாமல் பாதுகாத்து வழி நடக்க வேண்டும். 1. ஆங்கண் கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் தூதீர் கலக்கும்; அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்தி குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும். 2. குறுநா இட்ட குவளை அம் போதொடு பொறிவரி வண்டினம் பொருந்திய இடக்கை நெறிசெல் வருத்தத்து நீர் அஞர் எய்தி அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும். 3. எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில் பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது ஊழ் அடி ஒதுக்கத்து உறுநோய் காணின் தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா. 4. வயலும் சோலையும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை; நெறிஇரும் குஞ்சி ! நீ வெய்யோளொடு குறிஅறிந்து அவை அவை குறுகாது ஒம்பு. (நாடுகாண். 81-97) இவ்வறவுரைகள் அவ்வளவும் சமண மதத்தின் சிறந்த கொள்கையாகும். தேன் அருந்துதல் பாவம்; நாம் அறியாமல் நம்மால் உயிர்கள் கொலையுண்டலும் பாவம்; நமது கவனக் குறைவால் உயிர்களைக் கொல்லுதலும் பாவம் என மூன்று அறங்கள் கவுந்தி அடிகளால் கூறப்பட்டன. இவைகள் சமணர் களின் கொள்கை; அவர்களால் போற்றப்படும் அறங்கள். திருவரங்கத்திலே ஒரு சோலையிலே சமண முனிவர் இருவர் தோன்றினர். அவர்களைக் கவுந்தியடிகள், கண்ணகி கோவலன் மூவரும் வணங்கினர். மிகுந்த தவப்பெருமையுள்ள கவுந்தியே! தன் பயனை ஊட்ட முன்வந்து நிற்கும் தீவினையை, நீ போ என்று சொன்னால் போய்விடாது. அது தன் பலனை ஊட்டித்தான் போகும். இதை நீ அறிக! விளைநிலத்திலே போட்ட விதை முளைத்து, வளர்ந்து, பயன் தருவதுபோல, நல்வினை நம் எதிரில் வந்து அதன் பயனைத் தரும்போது அதை விலக்கவும் முடியாது. கழிபெரும் சிறப்பின் கவுந்தி காணாய்! ஒழிக என ஒழியாது ஊட்டும் வல்வினை; இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி ஒட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா. (நாடுகாண். 170-173) இவ்வாறு சமண முனிவர்கள் உரைத்தனர். ஊழ்வினையின் பயனை ஒவ்வொருவரும் அனுபவித்துத்தான் தீரவேண்டும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்ற சைனமதக் கொள்கை இதனால் வலியுறுத்தப்பட்டது. வேத முதல்வனால் அருளப்பட்ட ஆகமம் ஆகிய விளக் கொளியைப் பெற்றால்தான் பிறவியாகிய சிறையிலிருந்து வெளியேற முடியும். விண்ணவன் வேதமுதல் விளங்கு ஒளி ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது போதார் பிறவிப்பொதி அறையோர் (நாடுகாண். 189-191) இதுவும் அச் சமண முனிவர்கள் கூறிய அறவுரை. சமண மத தத்துவங்களாகிய ஊழ்வினை, ஆகம அறங்களைப் பின்பற்றல் ஆகிய உண்மைகள் இவ்வாறு சமண முனிவர்கள் மூலம் வலியுறுத்தப்பட்டன. கவுந்தியடிகள், கண்ணகி, கோவலன் மூவரும் காட்டின் வழியாக மதுரை நோக்கிச் சென்றனர். செல்லும் வழியிலே மாங்காட்டு மறையோன் ஒருவன் இவர்களைச் சந்திக்கின்றான். அவனிடம் மதுரைக்குப் போகும் வழியைப்பற்றிக் கோவலன் கேட்டான். அதற்கு மறையோன் மூன்று வழிகளைக் கூறினான். அவற்றுள் இடப்பக்கத்து வழியிலே சென்றால் அழகர்மலை யிலே உள்ள புண்ணிய சரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்ற மூன்று பொய்கைகளைப்பற்றியும், அவற்றை அடையும் வழியைப்பற்றியும் கூறினான். புண்ணிய சரவணத்தில் படிந்தால் இந்திர வியா கரணத்தை அறியலாம்; பவகாரிணியில் படிந்தால் பழம்பிறப்பை அறியலாம்; இட்டசித்தியில் ஆடினால் நினைத்தவைகளை யெல்லாம் அடையலாம் என்றான். இந்த மறையோனுக்குக் கவுந்தியடிகள் தந்த மறுமொழி குறிப்பிடத் தக்கது. நன்மையை விரும்பும் கொள்கையையுடைய நான்மறை யாளனே! நீ சொல்லிய பிலத்துள் புகுந்து, அப் பொய்கைளைச் சேரவேண்டிய முறைமை எங்களுக்கு இல்லை. நீண்ட ஆயுளை யுடைய இந்திரன் இயற்றிய வியாகரணத்தை எமது பரமா கழத்தில் தெளிவாகக் காண்பாய்! ஆதலால் நாங்கள் புண்ணிய சரவணத்தில் பொருந்தவேண்டியதில்லை. சென்ற பிறப்பிலே செய்தவைகளின் பலனை இந்தப் பிறப்பிலே அறியவில்லையா நீ? அதலால் பவகாரிணியில் மூழ்கவேண்டிய தில்லை. உண்மையைத் தவறாமல் பின்பற்றிக் கொல்லா விரதத்தையும் மேற்கொண்டு ஒழுகுவார்க்குக் கைகூடாதிருக்கும் பொருள் யாதொன்றும் இல்லை. ஆதலால் நாங்கள் இட்ட சித்தியிலே இறங்கி நீராடவேண்டியதில்லை. நீ விரும்பும் தெய்வத்தைக் கண்டு வணங்க நீ போ! நாங்கள் எங்கள் நீண்ட வழியிலே செல்லுகின்றோம். நலம்புரி கொள்கை நான்மறையாள! பிலம் புகவேண்டும் பெற்றி ஈங்கு இல்லை; கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்கக் காணாய்! இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் பிறந்த பிறப்பில் காணாயோ நீ! வாய்மையின் வழாது மன்உயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள்? காமுறு தெய்வம் கண்டு அடிபணிய நீபோ! யாங்களும் நீள்நெறிப் படர்குதும் (நாடுகாண். 152-161) இவ்வாறு மாங்காட்டு மறையோனுக்குக் கவுந்தியடிகள் விடை யளித்தார். இவ்வடிகள் அவ்விடையைத் தெரிவிக்கின்றன. அருக ஆகமத்தில் மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய எல்லாப் பொருள்களும் அடங்கியிருக்கின்றன. முன்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளின் பலனையே இப்பிறப்பில் அனுபவிக்கின்றோம். வாய்மையைப் பின்பற்றுவதும், கொல்லா விரதத்தைப் போற்றுவதும் உயர்ந்த ஒழுக்கம். இந்த மூன்று அறங்களையும் கவுந்தி அடிகள் தம் வாயால் கூறினார். கவுந்தி அடிகள், கண்ணகி, கோவலன் மூவரும் மதுரைப் புறஞ்சேரியிலே போய்த் தங்கினர். மறுநாள் பொழுது விடிந்தபின் கோவலன் கவுந்தி அடிகளை வணங்கினான். நான் நகருட் சென்று இடம் தேடி வருகின்றேன்; அதுவரையிலும் கண்ணகியைப் பாதுகாக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டான் அப் பொழுது கவுந்தி அடிகள் அவனுக்கு ஆறுதல் மொழிகள் உரைத்தார். இவ் ஆறுதல்மொழிகளில் உள்ள அறவுரைகளும் குறிப்பிடத்தக்கவை. 1. பிற உயிர்களுக்குத் தீமை செய்யும் மறநெறியை விட்டு விலகுங்கள். விலகாவிட்டால், அதன் விளைவாகிய துன்பத்தைத் தீவினை உருக்கொண்டு வந்து ஊட்டும்.இவ்வாறு அறநெறி யிலே ஒழுகுவோர், நன்மை - தீமை அறிந்து கூறுவர். நாவைக் கோலாகவும், வாயைப் பறையாகவும் கொண்டு பறையறைந்து உரைப்பர், இவ்வாறு கூறினும் உறுதியற்றவர்கள் இதனை உமயாகக் கொள்ள மாட்டார்கள். தீமையைத் தரும் ஊழ்வினை உருக் கொண்டு வந்து துன்புறுத்தும் போது அறியாமையால் வருந்தி நிற்பர். 2. எவ்விதத்திலும் தட்டிக்கழிக்க முடியாத தீவினையின் பயனை அனுபவிக்கும்போது கற்றறிந்தவர்கள் செயலற்று வருந்தமாட்டார்கள். 3. மகளிரைப் பிரிவதால் வரும் துன்பம், அவர்களை அடை வதற்கான முயற்சியில் வரும் துன்பம், மன்மதன் வருத்துவதால் வரும் துன்பம்-இவைகள் எல்லாம் மாதரைப் புணர்ந்து மயங்குவோர்க்கேயுண்டு; பற்றற்ற தனிவாழ்க்கையை உடைய பெரியயோர்க்கு இல்லை. 4. பெண்டிரும் உண்டியுமே இவ்வுலகில் இன்பவாழ்வு என்று கொண்டவர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவர். இதை உணர்ந்துதான் முனிவர்கள் இவற்றை ஒழித்தனர். இத்தகைய காமத்தை விரும்பினோர், கரைகாண முடியாத துன்பத்தை அடைந்தனர். இத்தகையோர் இன்றும் முன்பும் பலர். 1. மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும் என்று அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி நாக்கடிப்பாக வாய்ப்பறை அறையினும், யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார்; தீதுஉடை வெவ்வினை உருத்தகாலை பேதைமை கந்தாப் பெரும்பேது உறுவர். 2. ஒய்யா வினைப்பயன் உண்ணும்காலை கையாறு கொள்ளார் கற்றுஅறி மாக்கள், 3. பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும், உருஇலாளன் ஒறுக்கும் துன்பமும் புரிகுழல் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது ஒருதனி வாழ்க்கை உரவோற்கு இல்லை. 4. பெண்டிரும் உண்டியும் இன்பம், என்று உலகில் கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம் கண்டனர் ஆகில், கடவுளர் வரைந்த காமம் சார்பாக் காதலீன் உழந்து ஆங்கு ஏமம் சாரா இடும்பை எய்தினர், இன்றே அல்லால், இறந்தோர் பலரால். (ஊர்காண்.27-44) இவ்வாறு கவுந்தி அடிகள் கூறினார். இராமன் சீதையுடன் வனத்தில் புகுந்து வருந்தியது ; நளன் மனைவியுடன் காட்டுக்கு வந்து துன்புற்றது - இரண்டையும் மாதரால் உண்டான துன்பத்திற்கு உதாரணங்களாக எடுத்துக்காட்டினார். பிற உயிர்களுக்குத் தீமை செய்தல் மறநெறி; அத் தீவினையின் பயனை அனுபவித்தே தீரவேண்டும். பெண்டிர்மீது கொண்ட காமத்தால்தான் மக்கள் இவ்வுலகில் துன்புறுகின்றனர். அறிஞர்கள் பெண்ணாசை, உணவாசை இரண்டையும் துறப்பார்கள். இவ்வறங்களையே கவுந்தியடிகள் எடுத்துரைத்தார். கவுந்தியடிகள், கண்ணகியை மாதரியிடம் ஒப்படைக்கும் போது, தானத்தின் சிறப்பை ஒரு கதையின் மூலம் விளக்கிக் கூறுகின்றார். சாயலன் மனைவி செய்த தானத்தால் ஒரு குரங்கு தேவ வடிவம் பெற்ற கதையை எடுத்துக்காட்டினார், இக்கதையை, அடைக்கலக் காதை 163 முதல் 189 வரையுள்ள அடிகளிலே காணலாம். இக்கதை சிறுகதைகள் என்னும் பகுதியிலே கூறப்பட்டுள்ளது இக்கதையின்வாயிலாகத் தானத்தின் சிறப்பு, நல்வினையின் பெருமை இவைகள் வலியுறுத்தப்பட்டன, மேலே எடுத்துக் காட்டப்பட்டவை அனைத்தும் சைன மதத்தின் சிறந்த அறங்கள். நடுகல் காதையிலே யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை ஆகிய அறங்கள் வலியுறுத்தப் படுகின்றன. தோற்றுப்போன மன்னர்களைச் செங்குட்டுவன் சிறை பிடித்து வந்ததுபற்றிச் சோழ, பாண்டியர்கள் நகைத்தனர், இச்செய்தி கேட்ட செங்குட்டுவனுக்குச் சினம் வந்தது, அப்பொழுது அருகில் இருந்த மாடலன், செங்குட்டுவன் சினத்தைத் தணித்தான்; அறவுரைகள் கூறினான். புகழ்பெற்ற மன்னர்கள் யாவரும் மறைந்தனர்; அதனால் உடல் நிலையற்றது என்பதை உணர்ந்திருக்கின்றாய், இவ்வுலகத்தாரிடம் செல்வம் நிலைத்திராது; இதைப் போர்க் களத்திலே உன்னை எதிர்த்த ஆரிய மன்னர்களிடம் கண்டாய். இளமை நிலையற்றது என்பதை அறிவுடையோர் யாரும் இங்கு எடுத்துக்காட்டவேண்டியதில்லை, அழகு நிறைந்த மார்பையுடைய செங்கோல் வேந்ததே! நீயே உன்னிடத்திலேயே நரைத்து முதிர்ந்த உடலைக் காண்கின்றாய்! மீக் கூற்றாளர் யாவரும் இன்மையின் யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய்! மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் செல்வம் நில்லாது என்பதை வெல்போர்த் தண்தமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின் கண்டனை அல்லையோர் காவல் வேந்தே! இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு உணர்வுடை மாக்கள் உரைக்கல் வேண்டா; திருஞெமிர் அகலத்துச் செங்கோல் வேந்தே! நரைமுதிர் யாக்கை நீயும் கண்டனை. (நடுகல்.149-158) இவ்வடிகள் யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, இளமை நிலையாமை என்னும் மூன்று அறங்களையும் மொழிந்தன. ஒவ்வொருவரும் தாம்தாம் செய்த நல்வினை, தீவினைக் கேற்ப உயர்ந்த பிறப்பையோ, தாழ்ந்த பிறப்பையோ அடைவார்கள் என்ற அறத்தையும் மாடலன் உரைத்தான். நல்திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும், அற்புளம் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும், அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும், பிறந்தவர் இறத்தலும், இறந்தவர் பிறத்தலும் புதுவது அன்றே; தொன்றுஇயல் வாழ்க்கை. (வரந்தரு. 136-140) நல்ல தருமங்களைப் புரிந்தோர் துறக்கம் புகுந்து இன்புறுவர்; உள்ளத்திலே ஒரு ஆவலைக் கொண்டவர்கள் தாங்கள் விரும்பிய இடத்திலே போய்ப் பிறப்பர்; அறத்தின் பயன் உருக்கொண்டு வந்து ஊட்டும்; பாவத்தின் பயனும் உருக்கொண்டு வந்து ஊட்டும்; பிறந்தவர் அனைவரும் இறந்தே போவார்கள்; இறந்தவர்கள் மீண்டும் பிறந்தே தீர்வார்கள், இவைகள் புதுமை யல்ல; பழமைதொட்டு நடைபெறும் இயற்கையாகும். இவ்வாறு பின்னும் அறவுரைகள் புகன்றான் மாடலன், மேலே காட்டிய அறவுரைகளுள், கவுந்தியடிகளின் மொழிகள் சிறப்பாகச் சமணமத தர்மத்தைக் கூறுகின்றன, பொது நெறி களும் அவர் மொழிகளில் காணப்படுகின்றன, மாடலமறையோன் மொழியும் அறவுரைகளிலே யாக்கை, செல்வம், இளமை நிலையாமையைப்பற்றிக் கூறியிருப்பன சைனர்களின் சிறந்த கொள்கைகள், ஆயினும் அவற்றை வைதீக மதத்தினரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர், ஆகவே மாடலன் மொழிகள் சமணர், பௌத்தர், வைதீக மதத்தினர் அனைவரும் ஒப்புக்கொள்ளும் பொது அறமாகவே காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்திலே சைனமத அறங்கள்தாம் சிறப்பாகக் கூறப்படுகின்றன. கவுந்தி அடிகளின் மொழிகளிலே சமண தருமங் களைக் காணுகின்றோம், மற்ற மத தர்மங்கள் எந்த இடத்திலும் இவைபோலக் கூறப்படவில்லை. ஆதலால் சிலப்பதிகார ஆசிரியர் ஒரு சைனத் துறவி என்பது உறுதி, சிலப்பதிகாரம் சைன தருமத்தை விளக்குவதற்காக எழுதப்பட்ட ஒரு நூல், ஆயினும் அனைவரும் போற்றும் வகையிலே அருமை யாக எழுதப்பட்ட ஒப்புயர்வற்ற இலக்கியம் என்பது திண்ணம். சிலப்பதிகார காலத்திலே சைன மத தர்மங்களும், வைதீக மதத்திலே புகுந்து ஒன்றுபோலவே வழங்கின. ஊழ்வினை, மறு பிறப்பு தானதர்மம், வாய்மை, கொல்லாமை, புலால் உண்ணாமை, கள்ளுண்ணாமை, பெரியாரைத் துணைக்கோடல், காமத்தின் தீமை, பிறர்மனை நயவாமை, புறஞ்சொற் கூறாமை போன்ற அறங்களைச் சைவர், வைணவர் முதலியவர்களும் போற்றினர். சிலப்பதிகாரத்தில் வரந்தரு காதையின் இறுதியிலே ஆசிரியர் கூற்றாக அமைந்திருக்கும் அறங்கள் போற்றத்தக்கவை, 186 முதல் 202 வரை அமைந்திருக்கும் அடிகள் சைனர், பௌத்தர், வைதீக மதத்தினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலே அமைந்திருக்கின்றன, இவ்வடிகளை சிலம்பும் குறளும் என்னும் பகுதியிலே காணலாம். அனைவரும் ஒப்புக்கொள்ளும் முறையிலே அறங்களை எடுத்துரைக்கும் இதுபோன்ற ஒரு சிறந்த நூல் வேறு ஒன்றும் இல்லை, ஆகையால்தான் சிலப்பதிகாரத்தை எச்சமயத்தோரும் போற்றுகின்றனர்; சிறந்த இலக்கியமாக எண்ணிப் பாராட்டு கின்றனர். சிலம்பும் குறளும் சிலப்பதிகாரத்திலே திருக்குறளின் கருத்துக்கள் பல விடங் களில் காணப்படுகின்றன, திருக்குறளின் சொற்றொடர்களும் காணப்படுகின்றன, திருக்குறளுக்கான விளக்கங்களும் காணப் படுகின்றன, சுருங்கச் சொல்லவேண்டுமானால் திருக்குறள் அறத்தைத் தழுவிய கதையாகவே சிலப்பதிகாரம் அமைந்திருக் கின்றது என்று சொல்லிவிடலாம். திருக்குறளில் வான்சிறப்பு என்னும் அதிகாரம் அமைந் திருக்கின்றது; கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரம் இதுதான், திருக்குறளைத் தவிர ஏனைய அறநூல்களில் இவ்வாறு மழைக்குத் தனிச்சிறப்புக் காணப்படவில்லை. ஆனால் சிலப்பதி காரம் மழையையும் கடவுள் வாழ்த்தாகக் கொண்டிருக்கின்றது, மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும் என்று வானையும் வணங்குகிறார் சிலப்பதிகார ஆசிரியர். இது திருக்குறளைப் பின்பற்றிய முறையாகும். கோவலன் தந்தையைப் பற்றிச் சொல்லும்போது வருநிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் இருநிதிக் கிழவன் என்று காணப்படுகின்றது, நல்ல வழியிலே வருகின்ற செல்வத்தைச் சுற்றத்தார்க்கும், பிறர்க்கும் உதவி உண்பிக்கும் குணம் உள்ளவன்; மாசாத்துவான் என்னும் பெயர் உள்ளவன்; பெரிய செல்வம் உள்ளவன் என்பதே இதன் பொருள். மங்கல வாழ்த்திலே சொல்லப்படும் இச்செய்தி சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன் (குறள். 524) ஒருவன் செல்வம் பெற்றதால் அடையும் பயனாவது, சுற்றத்தார் சூழும்படி அவர்களிடம் அன்புகாட்டி ஒழுகுதலாம் என்ற குறளின் கருத்தைக் தழுவியதாகும். இத் திருக்குறளின் கொள்கையை மாசாத்துவான் பின்பற்றி வாழ்ந்தான் என்று சிலப்பதிகாரம் உரைத்தது. தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்எனப் பெய்யும் மழை (குறள். 55) வேறு தெய்வத்தை வணங்காமல் தன் கணவனையே தெய்வ மாகக்கொண்டு வணங்கி எழுகின்றவளே சிறந்த கற்புள்ளவள்; அவள், பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்பது திருக்குறள், இக்குறளுக்கு இலக்கியமாகவே கண்ணகியைக் காட்டுகிறது சிலப்பதிகாரம். சோமகுண்டம், சூரியகுண்டம் என்று இரண்டு தடாகங்கள் இருக்கின்றன, அவற்றில் மூழ்கிக் காமவேள்கோட்டத்தை வணங்கு வோர் தம் கணவருடன் இன்புற்று இருப்பர் இறந்த பின்னும் தம் கணவருடன் சுவர்க்கம் புகுந்து இன்புருவர், ஆதலால் நாம் ஒரு தினத்தில் சென்று அக்குண்டங்களில் நீராடிக் காமனை வணங்குவோம் என்று தேவந்தி, கணவனைப் பிரிந்திருக்கும் கண்ணகியிடம் உரைத்தாள், அப்பொழுது கண்ணகி பீடு அன்று என்றாள்; பத்தினிப் பெண்டிர்க்கு அது பெருமை தருவது அன்று என்று சொல்லிவிட்டாள், மேலே காட்டிய தெய்வம் தொழாள் என்ற குறளுக்குக் கண்ணகி ஒரு இலக்கியம் என்பது இதனால் விளங்குகின்றது. கோவலன் கொலையுண்ட பதினான்காம் நாள், கண்ணகி திருச்செங்குன்றிலே, வேங்கை மரத்தின் நிழலிலே நின்றாள்- வானத்திலிருந்து அவள் கணவன் வந்தான்; அவனுடன் கூடி விண்ணுற்றாள், இந்த நிகழ்ச்சியைச் சொல்லிமுடித்த ஆசிரியர் தன் கூற்றாகக் கண்ணகியின் மாண்பை எடுத்துரைக்கின்றார். அக் கூற்றிலே திருக்குறள் வாக்கியம் அப்படியே அமைந்திருக் கின்றது, தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத் தெய்வம் தொழும்தகைமை திண்ணிதுஆல்-தெவ்வமாய் மண்ணக மாந்தர்க்கு அணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து தெய்வத்தை வணங்காமல் கணவனையே தெய்வமாகக் கொண்டு வணங்குகின்றவளைத் தேவர்கள் வணங்குவார்கள் என்பது திண்ணம், தெய்வமாய் - நிலவுலகப் பெண்களுக்கெல்லாம் அணி கலமான - கண்ணகி வானுலக மகளிர்க்கு விருந்தாகச் சென்றாள். கட்டுரை காதையின் முடிவிலே காணப்படுவது இவ் வெண்பா, கோவலன், கண்ணகி, கவுந்தி மூவரும் மதுரைக்குப் போகும் வழியில், உறையூரின் பக்கத்தில், ஒரு பூம்பொழிலில் தங்கி யிருந்தனர். அப்பொழுது அங்கு ஒரு பரத்தையும், தூர்த்தனும் வந்தனர். அவர்கள் காமனும் ரதியும் போல, விளங்கும் கோவலனையும் கண்ணகியையும் கண்டனர். கவுந்தி அடிகளை அணுகி இவர்கள் யார் என்று கேட்டனர், இவர்கள் என் மக்கள் என்று கவுந்தியடிகள் கூறினார். உடனே அவர்கள், உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவதும் உண்டோ கற்று அறிந்தீர்! (நாடுகாண். 227-228) கற்றறிந்தவரே; ஒரு வயிற்றிலே பிறந்த சகோதரனும் சகோதரியும் ஒன்றாகக்கூடி வாழ்வது உண்டோ, என்று நாத்துடுக்குடன் பேசினர், இத் தீமொழியைக் கேட்ட கவுந்தியடிகள் அவர்களை முள்ளுடைக் காட்டில் முதுநரி ஆக என்று சபித்தார். இவ்வாறு ஒரு நிகழ்ச்சி காணப்படுகின்றது, இந்நிகழ்ச்சியிலே யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால் சோகப்பர் சொல்இழுக்கப் பட்டு (குறள். 127) வேறு எவற்றைக் காத்துக்கொள்ளாவிட்டாலும் நாவைக் காத்துக்கொள்ள வேண்டும்; காத்துக் கொள்ளாவிட்டால் சொற்குற்றத்திலே அகப்பட்டுச் சோர்வடைவர் என்னும் திருக்குறளின் கருத்து அமைந்திருக்கின்றது, வடநாட்டு மன்னர்களான கனக - விசயர்கள், நாவடக்கம் இல்லாமல் தமிழ் வேந்தரை இகழ்ந்தனர். ஆதலால் செங் குட்டுவன் அவர்கள்மேல் சீற்றங்கொண்டான். கண்ணகிக்குக் கல் கொணர் வதோடு அவர்கள் நாவை அடக்கவும் வடநாட்டின் மேல் படை யெடுத்துச் சென்றான், கனக - விசயர்கள் போரிலே தோற்றதற்கும், கல்லைத் தலையிலே சுமந்ததற்கும் காரணம் நாவடக்கம் இன்மைதான். இக்கருத்தே சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது, காவா நாவின் கனகனும் விசயனும் விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி அருந்தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு எனக் கூற்றக் கொண்டு இச்சேனை செல்வது (கால்கோள். 159-162) நாவடக்கம் அற்ற கனகனும் விசயனும், தமிழ் வேந்தர் ஆற்றல் அறியாத புதிய மன்னர்களுடன் கூடியிருந்து தமிழ் மன்னர் களின் ஆற்றலை அறியாது எள்ளினர். அதற்காக அவர்களை அடக்கும் பொருட்டுக் கூற்றுவனை அழைத்துக் கொண்டு இச்சேனை அவர்கள் இருக்கும் திசை நோக்கிச் செல்கின்றது. இதுவும் யாகவார் ஆயினும் என்ற திருக்குறளின் கருத்தே உட்கொண்டதாகும். கோவலன் மாண்ட துக்கம் தாளாமல் புலம்புகின்றாள் கண்ணகி. ஒற்றைச் சிலம்பைக் கையிலே ஏந்திக்கொண்டு மதுரைநகரத் தெருவிலே திரிகின்றாள், என் கணவனை மீண்டும் காண்பேன்; அவன் வாய்மொழியைக் கேட்டறிவேன்; இன்றேல் என்னைத் தீவினையாட்டி என்று இகழ்க என்று புலம்பிக் கொண்டு போகின்றாள். இக்காட்சியைக் கண்டு மதுரைநகர மக்கள் எல்லோரும் திகைத்தனர் களையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது; இது என்கொல்? மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது; இது என்கொல்? (ஊர்சூழ்வரி. 17-20) யாராலும் நீக்கமுடியாத துன்பத்தை இக் காரிகை அடையும்படி செய்து, என்றும் வளையாத செங்கோல் இன்று கொடுங் கோல் ஆயிற்று; இது என்ன காரணம்? வேந்தர்களுக்கு வேந்தன்; மதிபோன்ற குளிர்ந்த குடையை உடையவன்; வாளைத் தரித்த வேந்தன்; இத்தகைய பாண்டியன் வெற்றி சிதைந்து அழிந்துபோயிற்று; இதற்குக் காரணம் என்ன? இவ்வாறு பொது மக்கள் பேசுகின்றனர். இப்பேச்சிலே அருமையான திருக்குறள் ஒன்று அமிழ்ந்து கிடக்கின்றது. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555) நீதி தவறியவனுடைய செல்வத்தைச் சிதைக்கும் படை, அவனால் துன்பத்துக்கு ஆளானவர்கள். அத்துன்பம் பொறுக்க முடியாமல் விட்ட கண்ணீர் அன்றோ? இக்குறளின் கருத்தை மேலே காட்டிய சிலப்பதிகார அடிகளில் தெளிவாகக் காணலாம். முற்பகல் செய்தான் பிறன்கேடு; தன்கேடு பிற்பகல் காண்குறூஉம் பெற்றியகாண் (வஞ்சினமாலை 3-4) முற்பகலிலே பிறருக்குத் துன்பம் செய்தவன் பிற்பகலிலே தான் அத்துன்பத்தை அடைவான். இச்சிலப்பதிகார அடிகள், பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும் (குறள் 319) என்ற குறளோடு ஒத்திருக்கின்றன. இமயத்திலிருந்து மலையத்திற்குச் சென்ற முனிவர்கள் நீலகிரியிலே செங்குட்டுவனைக் கண்டனர். அவன் இமயம் நோக்கிப் போவதை அறிந்தனர். அருமறை அந்தணர் ஆங்குளர் வாழ்வோர் பெருநில மன்ன! காத்தல் நின்கடன் (கால்கோள். 102-103) அரிய வேதங்களை அறிந்த அந்தணர்கள் அங்கு வாழ்கின்றனர். அவர்களைக் காத்தல் உன் கடமை என்று அரசனது கடமையை அறிவித்தனர். இந்த அறிவுரை. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் (குறள். 543) அந்தணருடைய வேதத்துக்கும், அறத்திற்கும் அடிப்படை யாக நின்று உலகத்தைக் காப்பது மன்னவன் செங்கோல் என்ற திருக்குறளாகவே அமைந்திருக்கின்றது. ஆசையே பிறப்புக்கு விதையாகும் என்பது வள்ளுவர் கருத்து. அவாஎன்ப பல்லா உயிர்க்கும், எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து (குறள்.361) எல்லா உயிர்களுக்கும் எக்காலத்தும் தவறாமல் பிறப்பைத் தரும் விதை ஆசையே என்று சொல்வர்ர் இக்குறளின் கருத்தைச் சிலப்பதிகாரம் பல நிகழ்ச்சிகளிலே அமைத்துக் காட்டுகின்றது. கோவலன் அன்னையும், கண்ணகியின் அன்னையும் கண்ணகியின்பால் நீங்காத அன்புள்ளவர்கள். ஆதலால் அவர்கள் இறந்தபின் வஞ்சிமாநகரத்தில் அரட்டன்செட்டியின் மனைவி வயிற்றிலே இரட்டைப் பெண்களாகப் பிறந்தனர். கண்ணகியின்மேல் மிகுந்த அன்பு வைத்த மாதரி என்னும் ஆய்ச்சியர் தலைவி, அவள்பொருட்டுக் குரவைக் கூத்து நடத்தினாள். ஆதலால் அவள் திருமாலுக்குப் பணிபுரியும் சேடக்குடுமியின் மகளாகப் பிறந்து வஞ்சியை அடைந்தாள் பொற்கொடி தன்மேல் பொருந்திய காதலின் அன்புஉளம், சிறந்தாங்கு, அரட்டன்செட்டி, மடமொழி நல்லாள் மனமகிழ் சிறப்பின், உடன்வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர்; ஆயர் முதுமகள், ஆயிழை தன்மேல் போய பிறப்பின் பொருந் திய காதலின், ஆடிய குரவையின், அரவணைக் கிடந்தோன் சேடக் குடும்பியின், சிறுமகள் ஆயினள் (வரந்தரு 128-135) இவ்வடிகள் மேலே காட்டிய செய்திகளை உரைத்தன. அன்புளம் சிறந்தோ பற்றுவழிச் சேறலும் (வரந்தரு 137) அன்புடைய உள்ளத்தால் சிறந்தவர்கள்தாம் இவ்வுலகிலே பற்றுவைத்த இடத்திலே சென்று பிறப்பதும்: என்ற அடியும் குறிப்பிடத்தக்கது. இதுவும் திருக்குறளின் கொள்கையைத் தழுவியதுதான். சிலப்பதிகாரத்தின் இறுதி, திருக்குறள் பலவற்றின் கருத்துக்களைத் தொகுத்துக்காட்டி முடிகின்றது. இது, வேறு எந்நூலிலும் காணப்படாத ஒரு சிறப்பாகும். தெய்வம் தெளிமின்! தெளிந்தோர்ப் பேணுமின்! பொய்உரை அஞ்சுமின்! புறஞ்செல் போற்றுமின்! ஊன்ஊண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்! தானம் செய்ம்மின்! தவம்பல தாங்குமின்! செய்நன்றி கொல்லன்மின்! தீநட்பு இகழ்மின்! பொய்க்கரி போகல்மின்! பொருள்மொழி நீங்கல்மின்! அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்! பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்! பிறன்மனை அஞ்சுமின்! பிழைஉயிர் ஓம்புமின்! அறமனை காமின்! அல்லவை கடிமின்! கள்ளும் களவும் காமும், பொய்யும் வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்! இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்! மல்லல்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு; என் சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ் இலக்கியத்தின் குறிக்கோள் என்ன என்பதை இவ்வடிகளிலே காணலாம். சிலப்பதிகாரத்தின் சிறந்த கருத்துக்களைத் திரட்டி வைத் திருக்கும் அடிகள் இவை. இக்கருத்துக்களே சிலப்பதி காரத்தின் சிகரமாகத் திகழ்கின்றன. சிலப்பதிகாரத்தின் முடிவில் மொழியப்பட்டவை அனைத்தும் அப்படியே திருக்குறளைக் குறிப்பதாகவே அமைந் திருக்கின்றன. இக்கருத்துக்களின் விளக்கத்தைத் திருக்குறளைத் தவிர வேறு எதிலும் காண இயலாது. தெய்வம் தெளிமின் என்பது திருக்குறள். கடவுள் வாழ்த்தை நினைப்பூட்டுகின்றது. தெளிந்தோர்ப் பேணுமின் என்பது நீத்தார் பெருமையை நினைவூட்டுகின்றது. பொய்யுரை அஞ்சுமின் என்பதன் பெருமையை வாய்மை என்னும் அதிகாரத்தால் அறியலாம். புறங்கூறாமை என்னும் அதிகாரத்தால் புறஞ்சொற் போற்ற வேண்டியதன் அவசியத்தை அறியலாம். ஊன்ஊண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின் என்பவை களின் அறங்களைப் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தாலும், கொல்லாமை என்னும் அதிகாரத்தாலும் அறியலாம். தானம் செய்ம்மின்! தவம் பல தாங்குமின் என்பவைகளின் விளக்கங்களை இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தாலும் தவம் என்னும் அதிகாரத்தாலும் அறியலாம். செய்ந்நன்றி கொல்லன்மின்! தீநட்பு இகழ்மின் என்பவை களின் விளக்கத்தை, செய்நன்றி அறிதல், கூடா நட்பு ஆகிய அதிகாரங்களில் காணலாம். பொய்க்கரி போகல்மின், பொருள்மொழி நீங்கல்மின் என்பவைகளின் சிறப்பை நடுவுநிலைமை, பயனில சொல்லாமை, கேள்வி என்னும் அதிகாரங்களால் அறியலாம். அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின் என்பதன் இன்றியமையாமையைப் பெரியாதைத் துணைக்கோடல் என்னும் அதிகாரத்தில் அறியலாம். பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் என்பதைப் பற்றிச் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தில் விளக்கமாகக் காணலாம். பிறர்மனை அஞ்சுமின்! பிழை உயிர் ஓம்புமின் என்பவை களைப்பற்றிப் பிறன்இல் விழையாமை, ஒழுக்கம் உடைமை என்னம் அதிகாரங்களில் கூறப்படுகின்றன. அறமனை காமின் (இல்லறம் போற்றுமின்), அல்லவை கடிமின், கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும் (வீண்பேச்சாளர் கூட்டம்) விரகினில் ஒழிமின் என்பவைகளைப்பற்றி இல்வாழ்க்கை, குற்றம் கடிதல், தீவினை அச்சம், கள்ளுண்ணாமை , கள்ளாமை , வரைவின் மகளிர் முதலிய அதிகாரங்களால் அறியலாம். இறுதியில் உள்ள அடிகள் அப்படியே திருக்குறளை எடுத்துக்காட்டுகின்றன. வளம் பொருந்திய உலகில் வாழ்கின்ற மக்களே! இளமைப் பருவமும், செல்வமும், உடம்பும் நிலைத்வை அல்ல; என்றேனும் ஒருநாள் அழிந்து சிதைவது உறுதி; ஆதலால் வாழ்நாளை வீணாக்கவேண்டாம் செய்யமுடிந்த நன்மைகளைச் செய்யாமல் முடக்கி வைக்கவேண்டாம். இயன்ற நன்மையைச் செய்து நீங்கள் இறந்தபின் செல்லும் இடத்துக்கு உங்களுடன் துணையாக வருவதற்கு வழிதேடிக் கொள்ளுங்கள். இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையா உளநாள் வரையாது, ஒல்லுவது ஒழியாது செல்லும் தேஏத்துக்கு உறுதுணை தேடுமின்! மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு; என் என்பதே சிலப்பதிகாரத்தின் இறுதி மொழிகள். இம்மொழிகள், வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின், அஃது ஒருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல் (குறள். 38) என்ற திருக்குறளாக அமைந்திருக்கின்றன. அறம்புரியாமல் வீணாகக் கழிக்கின்ற நாள், ஒன்றுகூட இல்லாமல், ஒருவன் நாள்தோறும் அறம் புரிவானாயின். அதுவே, அவன் மீண்டும் பிறந்து வாழும் நாள் தோன்றும் வழியை அடைக்கும் கல்லாகும். இதுவை இக்குறளின் பொருள். இக்குறளும், மேலே காட்டிய சிலப்பதிகார இறுதி அடிகளும் ஒரே கொள்கையுடன் இருக்கின்றன. சிலப்பதிகாரம் மழையை வாழ்த்தும் வான்சிறப்பிலே தொடங்கிற்று. இடையிடையே திருக்குறளின் கருத்துக்களைப் பல நிகழ்ச்சிகளிலே அமைத்துக் காட்டிற்று. இறுதியிலே திருக்குறளிலே உள்ள பல அதிகாரங்களின் கருத்துக்களை அறவுரைகளாகத் தொகுத்துக் கூறிற்று. முடிவில் பிறவா நெறிக்கு வழிகாட்டும், வீழ்நாள் படாஅமை என்னும் அருமைக் குறளின் பொருளைக் கொண்டு முடிந்தது. சிலப்பதிகார காலத்திலே திருக்குறள் ஒரு புகழ்பெற்ற நூலாகப் பரவியிருந்தது. அதில் காணப்படும் அறங்களைத் தமிழ்மக்கள் அனைவரும் போற்றிப் பாராட்டினர். திருக்குறள் அறத்தைப் போற்றாமல் எழுதப்படும் நூல்களுக்கு அக்காலத்தில் மதிப்பில்லை. அந்த நூல்களை அறிஞர்கள் போற்றுவதில்லை. இந்த உண்மையையும் சிலப்பதிகாரம் நமக்கு எடுத்துரைத்தது. மேலே காட்டியவைகளைக்கொண்டு சிலம்பும் குறளும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதபடி பின்னிக் கிடக்கும் சிறந்த இலக்கியங்கள் என்பதை உணரலாம். புரட்சிக் காவியம் சிலப்பதிகாரம் ஒரு புரட்சிக் காவியம்; அரசியல் உணர்ச்சி யூட்டும் அருந்தமிழ்ச்சோலை; அறத்தை நிலைநாட்ட அஞ்சாமல் போராடுவதற்கு வழிகாட்டும் அணையா விளக்கு; அறந் தவறி நடப்போர் யாராயினும் அவர்கள் செய்கையை அம்பலப்படுத்த வேண்டும் என்ற துணிவை ஊட்டும் வீர முரசு; கொடுங்கோல் ஆட்சியை ஒழிப்பதற்குத் தயங்காதீர் என்ற தட்டிக்கொடுக்கும் தண்தமிழ்க் கவிதை. மக்களுக்குக் கொடுங் கோன்மையின் கொடுமையை எடுத்துக் கூறவேண்டும்; அவர் களை ஒன்று திரட்டவேண்டும்; அறநெறி தவறிய ஆட்சியையும், அதைத் தாங்கி நிற்பவர்களையும் விரட்டி அடிக்கவேண்டும் என்னும் வீர உணர்ச்சியைப் படிப்போர் உள்ளத்திலே பிறக்கச் செய்யும் காவியம் செந்தமிழ்ச் சிலப்பதிகாரம் ஒன்றுதான். சிலப்பதிகாரத்தைப் படிப்போர் - கண்ணகியின் வீரச் செயல்களைக் காண்போர் - இத்தகைய முடிவுக்குத்தான் வருவார்கள். மக்கள் மனத்திலே இத்தகைய அரசியல் புரட்சிக் கருத்து வளரும்படி, கண்ணகியின் செயல்களைச் சித்தரித்துக் காட்டுகின்றது இந்நூல். இதனாலேயே அந்நூல் அரசியல் வாதிகளின் உள்ளத்தை அப்படியே கொள்ளை கொள்ளு கின்றது. புரட்சி அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரும் இந்நூலைப் போற்று கின்றனர்; ஏனைய பொதுமக்களும் படித்து இன்புறுகின்றனர். கவிஞர்கள் எவ்வளவோ பேர் உண்டு. எல்லாக் கவிஞர் களாலும் மக்கள் மனத்தை அள்ளிக்கொள்ளும் கவிதைகளைக் கட்டிவிட முடியாது; காவியங்களை இயற்றிவிட முடியாது உயர்ந்த புலமை, சிறந்த ஒழுக்கம், உலக மக்களை நேசிக்கும் பண்பு, மக்கள் மனப்பான்மையை அறியும் தன்மை, ஒப்பற்ற கவிதாசக்தி இவைகள் அமைந்த புலவர்களால்தான் அழியாத கவிதைகளை ஆக்கமுடியும். இறவாத இலக்கியங்களைப் படைக்க முடியும்; சிறந்த காவியங்களைச் செய்ய முடியும், சிலப்பதிகார ஆசிரியர் இத்தகைய ஒப்பற்ற கவிஞர்களிலே தலைசிறந்த ஒருவர். இளங்கோவடிகள், கண்ணகியை ஒரு புரட்சிகார வீராங் கனையாக நிறுத்திக் காட்டுகின்றார். கண்ணகியின் வாயிலாக அரசியல் உணர்ச்சியை ஊட்டுகின்றார். இந்த முறையை வேறு எந்தத் தமிழ்ப்புலவரும் கையாளவில்லை. சிலப்பதிகாரத்தைச் சிலர் கோவலன் கதை என்பர். கோவலன் கதை என்ற பெயரிலே பிற்காலத்தில் சில புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவைகள் சிலப்பதிகாரத்தை முழுவதும் படிக்காதவர்களால் எழுதப்பட்ட கதைகள்; சிலப்பதிகாரக் கதையைத் தப்பும் தவறுமாகச் செவி வழியாகக் கேட்டதை வைத்துக்கொண்டு எழுதப்பட்ட கதைகள். இப்படித்தான் அக் கதைகளைப் பற்றி நாம் முடிவு செய்யவேண்டும். சிலப்பதிகாரம் சிலம்பின் விளைவால் எழுந்த கதை. ஆயினும் அதைக் கண்ணகியின் கதை என்று சொல்லுவது பொருத்தமாகும். கண்ணகிதான் சிறந்த கதாநாயகியாக விளங்கு கின்றாள். கண்ணகியின் வீரச்செயல்தான் கற்போர் உள்ளத்தைக் கவர்கின்றது. நூலில் தொடக்க முதல் முடிவுரையில் அவள் பெருமைதான் பேசப்படுகின்றது. கண்ணகிதான் முன்னின்று ஒரு கொடுங்கோல் ஆட்சியை ஒழிக்கின்றாள். அரசியல் புரட்சியை ஒரு பெண் முன்னின்று நடத்துவதாக கதை அமைந்திருப்பதே ஒரு புரட்சிதான். கோவலன் கொலையுண்டான் என்று கேட்டபின் கண்ணகி சினத்துடன் பொங்கி எழுந்தாள், சந்திரன் நிலத்திலே மேகத்துடன் வீழ்ந்ததுபோல, துக்கம் தாங்காமல் வீழ்ந்தாள். சினத்தால் சிவந்த கண்கள் மேலும் சிவப்பேறும்படி அழுதாள். தன் கணவனைக் குறித்து எவ்விடத்தில் உள்ளாய்! என்று கூவினாள்; வருந்தினாள்; ஏங்கினாள்; அழுதாள். பொங்கி எழுந்தாள்; விழுந்தாள்; பொழிகதிர்த் திங்கள் முகிலோடும் சேண்நிலம் கொண்டென; செம்கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை எங்கணாஅ என்னா இணைந்து ஏங்கி மாழ்குவாள் கணவன் கொலையுண்டான் என்பதைக் கேட்டதும் கண்ணகிக்கு முதலில் கோபந்தான் வந்தது. தன் கணவன் குற்றம் அற்றவன் என்ற உறுதியான எண்ணம் அவளுக்கு உண்டு. ஆதலால் அந்த மாசற்றவனைக் கொன்றவர்கள்மேல் ஆத்திரம் உண்டாவது இயற்கை. இதன் பிறகுதான் அவளுக்குத் துக்கம் தோன்றுகிறது. இவ்வாறு வருந்திய கண்ணகி மீண்டும் கொலைகரார் களின்மேல் கோபங்கொள்ளுகின்றாள். ஏனைய பத்தினிப் பெண்டிர்களைப்போல நான் கைம்மை நோன்பு நோற்றுக் கொண்டு வாழமாட்டேன்; அறந் தவறிய ஆட்சியை அப்படியே விட்டுவிட்டு அழுதுகொண்டிருக்க மாட்டேன் என்று உறுதி கொள்ளுகின்றாள். தம் உறுபெரும் கணவன் தழல் எரிஅகம் மூழ்க, கைம்மைகூர் துறைமூழ்கும் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகழ்ந்தகோல் தென்னவன் தவறு இழைப்ப, இம்மையும் இசை ஒரீஇ, இணைந்து, ஏங்கி அழுவளோ? தம்மோடு ஒத்த அன்புள்ள சிறந்த கணவன் இறந்தால் அவனுடன் தீயிலே மூழ்குவதுதான் பத்தினிப் பெண்டிர் பண்பு. அவ்வாறு உடன்கட்டை ஏறாதவர்கள், கைம்மை நோன்பு என்னும் நீர்த்துறையிலே மூழ்கி வாழ்வர். செம்மை தவறிய கோலையுடைய மன்னவன் தவறு செய்ததைக் கண்டேன் கண்டும் கவலையுடன் வாழும் அந்தக் கைம்பெண்களைப்போல் இம்மையும் புகழ் இன்றி வருந்தி ஏங்கி அழுது கொண்டிருப் பேனோ நான் என்று கண்ணகி கூறினாள். துன்பமாலையிலே காணப்படும் இச்செய்திகள் கண்ணகி யின் வீர உணர்ச்சியை விளக்கின. கொடுங்கோலர்களைச் சும்மா விட்டுவைத்திருப்பது அறிவுள்ள மக்களுக்கு அழகன்று; அவர் களை வீழ்த்துவதுதான் மக்கள் கடமை என்ற உணர்ச்சியை இந்நிகழ்ச்சிகள் ஊட்டுவிக்கின்றன. கொடுமை செய்த மன்னவனைப் பழிக்குப் பழிவாங்கு வேன்! என்று கண்ணகி உறுதிகொண்டாள்; இச்செய்தியையும் இந்நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இவ்வாறு உறுதிகொண்ட கண்ணகி அங்கு கூடியிருந்த ஆயர் மகளிரை நோக்கினாள். குரவைக்கூத்தின் பொருட்டு வந்து குழுமியிருக்கும் ஆயர்குல மடந்தையர்களே! நீங்கள் எல்லோரும் கேளுங்கள் என்று உரைத்தாள். உடனே சூரியனைப் பார்த்து காய்கதிர் செல்வனே! உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் நீ அறிவாய்! நீ சொல்! என் கணவன் கள்வனோ? என்று கேட்டாள். உடனே ஓர் அசரீரி வாக்குப்பிறந்தது. பெண்ணே! உன் கணவர் கள்வன் அல்லன்; இந்த ஊரைத் தீ உண்ணும் என்பது தான் அந்த அசரீரி வாக்கு. அசரீரி வாக்கைப் பொதுமக்கள் தீர்ப்பு என்று வைத்துக் கொண்டு மேலே நடக்கும் நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அரசன் இழைத்த அநீதி கேட்டுப் பொதுமக்கள் எவ்வளவு ஆத்திரம் கொண்டனர் என்பது விளங்கும். இம்முறை யிலே எண்ணிப்பார்த்தால் கதையும் இயற்கையாகக் காணப்படும். கோவலன் கள்வன் அல்லன் என்று கூறியது பொதுமக்கள் மொழிதான் என்று எண்ணும்படியே இளங்கோஅடிகளின் வாகசம் அமைந்திருக்கின்றது. இதுதான் கவிதா சக்தி என்பது. ஆயமகளிரை நோக்கி: வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டீமின்! ஆய மடமகளிர் எல்லீரும் கேட்டைக்க கதிரவனைப் பார்த்து : பாய்திரை வேலிப் படுபொருள் நீ அறிதி காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன் கதிரவன் விடை : கள்வனோ அல்லன் ; கரும்கயல்கண் மாதராய் ! ஒள்எரி உண்ணும் இவ்வூர் என்றது ஒருகுரல் மேலே உரைத்த செய்திகளை இவ்வடிகளிலே காணலாம். இவ் வடிகள் மிகவும் அழகாக அமைந்திருக்கின்றன; உட்கருத்துடன் விளங்குகின்றன. கோவலன் கொலையுண்டான் என்று கேட்டவுடன் கண்ணகி ஆத்திரம் பொங்கினாள். பின்னர்த் துன்புற்றாள். அதன்பின் கொலை செய்தவர்களைப் பழிக்குப் பழிவாங்குவது என்று உறுதிகொண்டாள். அநீதி இழைத்த அரசாங்கத்தை அப்படியே விட்டுவைக்கப்போவதில்லை என்று முடிவெடுத் தாள். தன் கணவன் கள்வன் அல்லன் ; குற்றவாளி அல்லன் ; அக்கிரமமாகத்தான் அரசனால் கொலையுண்டான் என்பதைப் பொதுமக்கள் தீர்ப்பாலும் உணர்ந்தாள். இவைகளே மேலே எடுத்துரைக்கப்பட்டன. இவைகளைத் துன்ப மாலையிலே காணலாம். இதற்குமேல் கண்ணகியின் புரட்சி நடவடிக்கை விரை வாகத் தொடங்குகின்றது. தனக்கு ஆதரவாகப் பொதுமக்களைத் திரட்டு கின்றாள். அறநெறி பிழைத்த அரசுக்கு எதிரான எண்ணங் கொள்ளும் படி பொதுமக்களிடம் பேசுகின்றாள். தன் கணவனுடைய மாசற்ற தன்மையையும், அரசன் இழைத்த கொடுமையையும், தான் செய்யப்போகும் செயலையையும் ஊரார் அறிய உரைக்கின்றாள். கோவலன் கள்வன் அல்லன் என்று சூரியன் கூறியதும் கண்ணகி ஒருசிறிதும் காலங் கடத்தவில்லை. தன்னிடம் மீதமிருந்த ஒரு சிலம்பைக் கையில் ஏந்திக்கொண்டாள். நீதியற்ற மன்னன் இருக்கும் ஊரிலே வாழும் பத்தினிப் பெண்காள்! ஈது எனது மற்றொரு சிலம்பு என்று காட்டிச் சொல்லுகின்றாள். கீழ்வரும் அடிகள் இச்செய்தியை உணர்த்துகின்றன. என்றனன் வெய்யோன் ; இலங்குஈர் வளைத்தோளி நின்றிலள் ; நின்ற சிலம்புஒன்று கையேந்தி முறையில் அரசன்தன் ஊர்இருந்து வாழும் நிறைஉடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈதுஒன்று (ஊர்சூர்வரி. 1-4) இவ்வடிகள் கண்ணகியின் புரட்சி நடவடிக்கையின் தொடக்கத்தைக் காட்டுவன. பெண்டிர்களின் ஆதரவைப்பெற்ற எந்த இயக்கமும் தோல்வி அடையாது. இவ்வுண்மை கண்ணகி யின் கூற்றிலே அடங்கியிருக்கின்றது. இதன்பின் கண்ணகி தன் துன்பத்தை சொல்லுகிறாள்; தான் இன்னது செய்யப்போ கிறேன் என்பதையும் உரைக்கின்றாள். 1. இவ்வுலகில் பிறந்தோர் யாரும் படாத துன்பத்தைப் பட்டேன் ; ஒருவரும் அடையாத துன்பத்தை அடைந்தேன். இதுவரையிலும் நான் அடைந்த துன்பத்தைவிட இனி வேறு என்ன துன்பத்தைத்தான் அடையப்போகின்றேன்? இது ஒன்று. 2. என் கணவன் கள்வன் அல்லன் ; எனது கால் சிலம்பின் விலையைத் தாம் கவர்ந்துகொள்ளும் பொருட்டு கள்வன் என்று குற்றம் சாற்றிக் கொன்றுவிட்டார்கள் ; இது ஒன்று. 3. கற்புள்ள மாதர்களின் எதிரிலே என் கணவனை முன் போலக் காண்பேன்; இது ஒன்று. 4. என் காதல்கணவனைக் கண்டால் அவன் வாயிலிருந்து குற்றமற்ற நன்மொழியைக் கேட்பேன்; இது ஒன்று. 5. குற்றம் அற்ற நன்மொழியை அவன் வாக்கால் கேளேன் ஆயின் நாம் வருந்தத்தக்க செயலைச் செய்தாள். கள்வன் மனைவி என்று இகழ்ந்து பேசுங்கள்; இது ஒன்று. 1. பட்டேன் படாத துயரம் ; படுகாலை உற்றேன் உறாதது; உறுவனே; ஈதுஒன்று 2. கள்வனோ அல்லன் கணவன்; என்கால் சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே; ஈதுஒன்று 3. மாதர்த் தகைய மடவார்கள் முன்னரே தீதுஅறு நல்உரை கேட்பேனே; ஈதுஒன்று 4. தீதுஅறு நல்உரை கேளாது ஒழிவனேல் நோதக்க செய்தாள் என்று எள்ளல்; ஈதுஒன்று (ஊர்சூழ்வரி. 5-14) கேட்போர் உள்ளத்தை இழுக்கும்படி அவ்வளவு அழகும் உணர்ச்சியும் பொருந்திய அடிகள் இவை. கண்ணகியின் உணர்ச்சி பொருந்திய இவ்வுரைகளால், மதுரை நகர மக்கள் அவள்பக்கம் சேர்ந்துவிட்டனர் ; அவள் பால் இரக்கம் காட்டினர் ; அவள் கட்சியை ஆதரித்தனர். அரசன் ஆட்சியை வெறுத்தனர் ; அவர்கள் அரசன் இழைத்த கொடுமையைப்பற்றிக் கூடிக்கூடிப்பேசத் தொடங்கிவிட்டனர். இறக்கும் வரையிலும் ஒழியாத துன்பத்தை இக் காரிகைக்குக் காட்டி என்றும் வளையாத செங்கோல் இன்று வளைந்தது; இனி என்ன நேருமோ ? மன்னர்க்கு மன்னன்; சந்திரன்போலக் குளிர்ந்த குடையை உடையவன்; வாட்படையைக் கொண்டவன்; இத்தென்னவன் அரசுமுறை அழிந்தது; இனி என்ன நேருமோ ? உலகுக்கு நன்மையையும், பகைவர்க்குத் தின்மையையும் செய்யும் வேலையுடைய மன்னவனது குளிர்ந்த குடை இன்று வெம்மையை விளைத்தது ; இனி என்ன நேருமோ ? செம்பொன்னால் செய்த சிலம்பு ஒன்றைக் கையில் ஏந்திக் கொண்டு, நமக்கு உண்மையை உணர்த்தும்பொருட்டுப் புதுமை யான பெரிய தெய்வம் ஒன்று இங்கு வந்தது; இனி என்ன நேருமோ? அழகிய கண்களையுடையவள் விம்மி விம்மி அழுகின்றாள்; தெய்வ ஆவேசம் கொண்டவள் போலக் காணப்படுகின்றாள்; இனி என்னதான் விளையுமோ ? மக்கள் இவைபோன்ற மொழிகளை உரைத்தனர்; வருந்தி ஏங்கினர்; அரசன் செய்கையை மிகவும் பழித்துப் பேசினார். மதுரை நகரின் குடிமக்கள் எல்லாம் இந்நிலையினர் ஆயினர். சளையாத துன்பம் இக்காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்தது; இதுஎன்கொல்? மன்னவர் மன்னன் ; மதிக்குடை வாள்வேந்தன்; தென்னவன் கொற்றம் சிதைந்தது; இதுஎன்கொல்? மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்தது; இதுஎன்கொல்? செம்பொன் சிலம்பு ஒன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்தது; இதுஎன்கொல்? ஐஅரி உண்கண் அழுதுஏங்கி அரற்றுவாள் தெய்வம் உற்றாள் போலும் தகையள்; இதுஎன்கொல்? என்பன சொல்லி இணைந்துஏங்கி ஆற்றவும் வன்பழி தூற்றும் குடியதே மாமதுரை (ஊர் சூழ்வரி. 17-28) பொதுமக்களின் இக்கூற்றை ஆசிரியரே கூறிச் செல்கின்றார். இவ்வடிகள், கண்ணகியின் முறையீட்டைக் கேட்டதும் பொது மக்கள் கொண்ட கருத்தை உணர்த்துகின்றன; உணர்ச்சியைக் காட்டுகின்றன. பொதுமக்களின் கருத்து கண்ணகிக்குச் சார்பாக இருந்தது என்பதை அறிவிக்கின்றன. இதன்பின் கண்ணகி இந்நகரிலே பெண்கள் இல்லையா? அறிவுள்ளவர்கள் இல்லையா? தெய்வங்கள்கூட இல்லையா? இருந்தால் அநீதி நடக்குமா! என்று புலம்பிக் கொண்டு போகின்றாள். பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்? கொண்ட கொழுநர் உறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல்? பெண்டிரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? வைவாளின் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? இவை கண்ணகியின் புலம்பல், கேட்போர் உள்ளத்தைக் கனிவிக்கும் கவிதைகள். அறிவும் கற்பும் உள்ள பெண்கள் அநீதிக்கு இடந் தரமாட்டார்கள்; அறிவுடையயோர் தீமையைக் கண்டால் சும்மாவிடமாட்டார்கள்; இவர்கள்தான் ஏனோ தானோ வென்றிருந்தாலும் தெய்வம் அக்கிரமத்தைப் பொறுத்துக் கொண்டிருக்காது ஆகையால் இந்நகரில் இவர்கள் இல்லையா? என்று கேட்பது மிகவும் இயற்கையாகக் காணப்படுகிறன்றது; கேட்போர் உள்ளத்தைத் தட்டி எழுப்புகின்றது. இவ்வாறு புலம்பிக்கொண்டு போன கண்ணகி, காதலன் வெட்டுண்டு கிடந்த இடத்தை அடைந்தாள். அவன் உடம்பைத் தழுவிக்கொண்டாள். அவன் முன்போல் உயிருடன் எழுந்தான். கண்ணகியின் கண்ணீரைத் துடைத்தான். நீ இரு என்று சொல்லி விட்டு வான்உலகு எய்தினான். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளுடைய சினம் இன்னும் வளர்ந்தது ; உயர்ந்தது. ஆவேசங்கொண்டவள் ஆனாள். பழிக்குப் பழிவாங்கி. என் சீற்றந் தணிந்தபிறகுதான் கணவனுடன் கூடுவேன். அரசனைக் கண்டு அவன் புரிந்த கொடுமையைப்பற்றிக் கேட்காமல் விடமாட்டேன்! என்று உறுதிபூண்டாள். தான் முன்பு கண்ட தீக்கனாவைப்பற்றியும் நினைத்தாள்; கண்ணீர் விட்டாள்; அரண்மனை வாயிலை அடைந்தாள். இதன் பிறகு பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் நடைபெறும் நேரடியான வழக்கு படிப்போர் நெஞ்சத்தைக் கவரும். இந்த வகையிலே இதை ஒரு வீரக் காட்சியாக அமைத்துக்காட்டு கிறார் இளங்கோ அடிகள். வாயில் காவலனே ! வாயில் காவலனே ! அறிவு வறண்டு போன - புண்ணியம் அற்ற நெஞ்சத்தையுடைய - அரசநீதியைக் கொன்ற மன்னனுடைய - வாயில் காவலனே ! இரண்டு சிலம்பு களிலே ஒன்றைப் பறிகொடுத்தாள்; அரி அமைந்த ஒரு சிலம்பை மட்டும் கையில் ஏந்தியிருக்கின்றாள்; கணவனை இழந்தவள் ; வாசலில் வந்து நிற்கிறாள் என்று உன் அரசனிடம் போய்ச் சொல் ! வாயிலோயே! வாயிலோயே! அறிவு அறை போகிய பொறிஅறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே! இணைஅரிச் சிலம்பு ஒன்று ஏந்திய கையள்; கணவனை இழந்தாள்; கடைஅகத்தாள் என்று அறிவிப்பாயே? அறிவிப்பாயே! (வழக்குரை. 24-29) கண்ணகியின் இவ்வுரையிலே அவளுடைய அடங்காத சினத்தைக் காணலாம். அவள் அரசனுடைய அறிவற்ற அடாத செயலைக் கண்டிப்பதோடு நிற்கவில்லை. அந்தக்கொடுங்கோல் வேந்தனிடம் வேலைபார்க்கும் காவலனுக்கும் சாட்டையடி கொடுக்கின்றாள். அக்கிரமக்காரனை ஆதரிப்பது அறிவற்ற செயல் என்பதையும் எடுத்துக்காட்டினாள். காவலன் போய் அரசனிடம் அவள் செய்தியை உரைத்தான். அரசன், வர விடுங்கள் என்றான். கண்ணகியும் அரசன் எதிரிலே போய் நின்றாள். பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் நேரடியாக வழக்கு நடக்கின்றது. கண்ணகியின் உரை, உண்மைக்கு போராடும் வீரப் பேச்சாக விளங்குகின்றது. நீர்வார் கண்ணை என்முன் வந்தோய் யாரையோ நீ மடக்கொடியோய்! என்றான் மன்னன், உடனே கண்ணகி, சிறிதும் தயக்கம் இல்லாமல் தேரா மன்னா செப்புவது உடையேன் என்று தொடங்குகின்றாள். அறிவற்ற அரசனே! உண்மை யுணராத வேந்தனே! சொல்லுகிறேன் கேள் என்று தொடங்கிச் சோழ மன்னர்களின் செங்கோல்முறையைப் புகழ்ந்தாள். அற்பப் புறாவின் துன்பத்தை அகற்றிக் காத்த சோழன், ஒரு பசுங்கன்றுக்காகத் தன் மகன் உயிரை வாங்கிய சோழன் - இவர்கள் வாழ்ந்த புகார் நகரம் எனது ஊர் ; எனது கால்சிலம்பை விற்பதற்காக வந்து, உன்னால் கொலையுண்ட கோவலன் மனைவி நான் என்று தலைநிமிர்ந்து நின்று பேசினாள். இப் பேச்சிலே பாண்டியனுக்குச் சரியான சூடு கொடுக்கப்பட்டிருக் கின்றது. இந்தக் குத்தல்பேச்சின் உண்மையைப் பாண்டியன் உணர வில்லை; தான் செய்தது தவறு என்பதை அறியவில்லை. ஆதலால் அவன் இறுமாப்புடனேயே விடை அளிக்கின்றான். பெண் அணங்கே! கள்வனைக் கோறல் கடும்கோல் அன்று வெள்வேல் கொற்றம் காண்! என்றான். இதற்குமேல் கண்ணகி வழக்கை வளர்க்க விரும்ப வில்லை; வீண்பேச்சுக்கு இடந்தர எண்ணவில்லை. பட்டென்று பதில் அறைகின்றாள். நல்திறம் படராக் கொற்கை வேந்தே என்கால் பொன்சிலம்பு மணிஉடை அரியே நல்ல கொள்கையைப் பின்பற்றாத கொற்கை வேந்தனே! எனது கால்சிலம்புக்குள் இருக்கும் கல் மாணிக்கம் என்றாள். வேந்தனால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள் சொல்லை ஒத்துக்கொண்டான். எனது சிலம்புக்குள் இருக்கும் அரி, முத்துக்கள் என்றான். கோவலனிடமிருந்து கவர்ந்த சிலம்பைக் கொண்டுவரக் கட்டளையிட்டான். சிலம்பு வந்தது. அச் சிலம்பைக் கண்ணகி எடுத்தாள். அனைவரும் காண அதை உடைத்தாள். அதனுள்ளிருந்த மாணிக்கம் அரசன் வாயிலே போய் அடித்தது. அவ்வளவுதான்! தாழ்ந்த குடையன், தளர்ந்த செங்கோலன், பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்! யானே கள்வன்! மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது; கெடுக என் ஆயுள் என்று சொல்லிக்கொண்டு மயங்கி வீழ்ந்தான் மன்னன். கண்ணகியின் வழக்கு வென்றது; உண்மை வென்றது; பொய்மை மடிந்தது. ஒளி வீசிற்று; இருட்டு மங்கிற்று. கோவலன் குற்றமற்றவன் என்று மெய்ப்பிக்கப்பட்டான்; அரசன் அநீதியிழைத்தான் என்பதை அனைவரும் கண்டனர். இந்த நிகழ்ச்சியை ஒரு அழகான வெண்பாவில் அமைத்துக் காட்டு கிறார் ஆசிரியர். மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும், கண்ணீரும் - வையைக்கோன் கண்டளவே தோற்றான்; அக்காரிகைதன் சொல்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். (மெய் - உடம்பு. பொடி - புழுதி. வையைக்கோன் - பாண்டியன். உண்டளவே - பருகியஉடன்; கேட்டவுடன்) கண்ணகியின் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை. அரசனுக்கு ஆதரவாயிருந்தோரையும் அழிக்க உறுதி கொண் டாள். கொடுங்கோல் ஆட்சியை ஆதரிக்கும் தந்நலவாதிகளால் குடிமக்கள் துன்புறுவார்கள். தந்நலவாதிகள்தாம் கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்பார்கள். ஆதலால் அவர்களுடைய செல்வாக்கையும் சிதற அடிக்கவேண்டியது தான் மக்கள் கடமை. இதற்காகவேதான் மதுரை நகரைத் தீக்கு இரையாக்கினாள் கண்ணகி. நம் உள்ளத்திலே இக்கருத்துப் பிறக்கும்படி தான் கதை நிகழ்ச்சியை அமைத்திருக் கிறார் இளங்கோ அடிகள். மதுரையைப் பற்றிய தீயைப்பார்த்துக் கண்ணகி கூறுவதைக் காண்போர் இந்த முடிவுக்குத்தான் வருவர். பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப்பெண்டிர் மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க! என்று கட்டளையிடுகின்றாள் கண்ணகி. நல்லவர்களைத் துன்புறுத்தாதே! தீயோரைமட்டும்-கொடுங்கோல் மன்னவனைத் தாங்கிநின்றவர்களை மட்டும்-அநீதியை ஆதரித்தோரை மட்டும்-சுட்டுப்பொசுக்கு! என்று உத்தரவிட்டாள். இதுவரையிலும் எடுத்துக்காட்டிய நிகழ்ச்சிகளே போது மானவை; சிலப்பதிகாரம் ஒரு அரசியல் புரட்சிக் காவியம் என்பதை விளக்கக்கூடியவை. கொடுங்கோன்மையை ஒழிப்பதற்கு வழிகாட்டும் ஒப்பற்ற இலக்கியம் சிலப்பதிகாரம் என்பதை மெய்ப்பிப்பவை. சிலப்பதிகாரத்திலே, துன்பமாலை, ஊர்சூழ்வரி, வழக்குரைகாதை, வஞ்சினமாலை ஆகிய நான்கு காதைகளைப் படித்தால் போதும், இவைகளைப் படிப்போர் உண்மைக்குப் போராடப் பின்வாங்க மாட்டார்கள். அரசியலைப்பற்றிக் கவலையில்லை என்போரும், அரசியல் உணர்ச்சி பெறுவார்கள். பிற்போக்கு அரசியல்வாதிகள் முற்போக்கு அரசியல் வாதிகளாக மாறிவிடுவார்கள். இளங்கோடிகளின் கவி முழுவதும் நெஞ்சை அள்ளு கின்றது. சிலப்பதிகாரம் முழுவதும் சொல்நயம் பொருள் நயம் பெருக்கெடுத்து ஒடுகின்றன. எந்தப் பகுதியைப் படித்தாலும் செந்தமிழ்ச் சுவையை நுகரலாம். ஆயினும் மேல்குறித்த நான்கு காதைகளிலும் இளங்கோவடிகள் தீட்டியிருக்கும் சித்திரங்கள் நம் நெஞ்சைக் கவர்கின்றன; உணர்ச்சியைத் தட்டி எழுப்பு கின்றன. இந்த நான்கு காதைகளில் அமைந்திருக்கும் ஒவ்வொரு சொல்லும், சொற் றொடரும் உயிருடன் நமது எதிரில் நின்று உரையாடுகின்றன. இக்காதைகளை எத்தனை தடவை படித்தாலும் சலிப்புத் தோன்றாது; அலுப்புத் தட்டாது! பொய்யல்ல; வெறும் புகழ்ச்சி அல்ல! படித்துப் பார்த்தால்தான் அருமை தெரியும். இளங்கோவடிகள் தலைசிறந்த புரட்சிப் புலவர் என்பதற்கு மேலேகாட்டிய நான்கு காதைகளே போதுமானவை. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் 1. சிலப்பதிகார காலத்து மக்களிடம் தெய்வ நம்பிக்கை குடிகொண்டிருந்தது. அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்யத் தொடங்குமுன் தெய்வத்தை வணங்குவார்கள்; அதன் பின்னரே காரியத்தைத் தொடங்குவார்கள். நடனம் அல்லது கூத்து ஆடத் தொடங்குபோது முதலில் தெய்வத்தை வணங்குவார்கள். வணக்கப் பாடல்களைப் பாடுவர்; அதன் பிறகுதான் கூத்தைத் தொடங்குவர். திருமால் வணக்கம், நால்வகை வருணப்பூதர் வணக்கம், சந்திர வணக்கம்-இம் மூன்று வணக்கப் பாடல்கள் பாடிய பிறகுதான் கூத்துத் தொடங்கப்படும். மாயோன் பாணியும், வருணப்பூதர் நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை வான்ஊர் மதியமும் பாடி (கடல் ஆடு. 35-37) இவ்வடிகள் இதனைக் காட்டும். 2. தெய்வங்களைப்பற்றிய வரலாறுகளே கூத்துக்களாக நடிக்கப்பட்டன; நடனங்களாக ஆடப்பட்டு வந்தன. தெய்வங் களின் கூத்துக்கள் 11 வகை. கொடுகொட்டி ஆடல் என்பது ஒரு கூத்து. இது பரமசிவன் திரிபுரத்தை எரித்தபின் ஆடியது. சுடுகாட்டிலே பார்வதி பக்கத்திலே நிற்கப் பரமசிவன் கைகொட்டிக் கொண்டு ஆனந்தமாக ஆடிய ஆடலாகும். பாண்டரங்கம் என்பது ஒரு வகைக் கூத்து. இதுவும் பரம சிவனது நடனம். நான்முகன் எதிரில் பரமசிவன் வெண்ணீற்றைப் பூசிக்கொண்டு ஆடிய கூத்தாகும். அல்லியத் தொகுதி என்பது ஒருவகைக் கூத்து, கம்சன் கண்ணனைக் கொல்வதற்காக, யானையை அனுப்பினான்; அதன் தந்தங்களை ஒடிப்பதற்காகக் கண்ணன் அதன் எதிரில் நின்று ஆட்டங் காட்டினான்; இதை ஆடிக்காட்டும் கூத்தே அல்லியத் தொகுதியாகும். மல்லாடல் என்பது ஒருவகைக் கூத்து. வாணாசூரனுடன் திருமால் மல்யுத்தம் செய்து அவனை வென்றறைத் காட்டும் நடனம். துடிக்கூத்து என்பது ஒன்று. கடல்நடுவிலே நின்ற சூரனைக் கொல்வதற்கு முருகன், கடலையே அரங்கமாகக் கொண்டு ஆடிய கூத்தாகும். குடைக்கூத்து என்பது ஒன்று. அசுரர்கள் தம் போர்ப் படை களை இழந்து வருந்தியபோது, அவர்கள் எதிரில் முருகன், குடையைத் திரையாகக்கொண்டு ஆடிய ஆட்டம் குடைக் கூத்தாகும். குடக்கூத்து என்பது ஒருவகை. வாணாசூரன், காமன் மகன் அநிருத்தனைச் சிறை வைத்தபோது திருமால் அவனுடையநகர வீதியிலே சென்று குடத்தை வைத்துக்கொண்டு வேடிக்கைக் கூத்தாடினான். இதுபோல் ஆடிக்காட்டுவது குடக்கூத்தாகும். பேடிக்கூத்து என்பது ஒன்று. மன்மதன் தன் ஆண்மையில் மாறிப் பொண்ணுருவிலே நின்று ஆடிய கூத்து. மரக்கால் கூத்து என்பது ஒருவகை. அசுரர்களின் வஞ்சனைச் செயல்களைக் கண்டு சினந்த துர்க்காதேவி மரக்கால் மீது நின்று ஆடிய கூத்து. போர் செய்வதற்கெழுந்த அவுணர்களை மயக்குவதற்காகத் திருமகள் கொல்லிப்பாவை (மோகினி) உருவிலே வந்து ஆடிய நடனத்துக்குப் பாவைக் கூத்து என்று பெயர். இந்திராணி ஆடிய நடனத்துக்குக் கடையம் என்று பெயர்; அவள் வாணனுடைய வடக்கு வாயிலிடத்தே நின்று ஆடிய கூத்து இது. இந்தப் பதினோருவகைக் கூத்துக்களும் அந்தந்தத் தெய் வங்களுக்குரிய கோலத்துடன் ஆடப்பட்டன. இக் கூத்துக்களின் விளக்கத்தைக் கடலாடு காதையில் 39 முதல் 64 வரையுள்ள அடிகளிலே காணலாம். 3. கூத்துக்கள் இருவகையாக ஆடப்பட்டு வந்தன. ஒன்று வேத்தியல்; மற்றொன்று பொதுவியல். அரசர்களுக்காக மண்ட பங்களிலே ஆடும்கூத்து வேத்து இயல்; இதனை அகக்கூத்து என்றும் உரைப்பர். பலருக்கும் பொதுவாக ஆடும் கூத்து பொதுஇயலாகும்; இதனைப் புறக்கூத்து என்றும் உரைப்பர். கடல்ஆடு காதையிலும், ஊர்காண் காதையிலும் இவற்றைக் காணலாம். 4. கதை தழுவிய கூத்துக்களும் நடைபெற்றன; கதையற்ற - கருத்தமைந்த - நடனங்களும் நடைபெற்றன; இக் கூத்துக்களை நடத்துவதற்கான மேடைகள் இருந்தன. அம்மேடைகளில் - அரங்கங்களில் - முன்திரை, பக்கத்திரை முதலியவைகள் இருந்தன. 5. ஒரு செயலைத் தொடங்கும்போது, நல்ல நாளிலே நல்ல நேரத்திலே தொடங்கவேண்டும் என்று நம்பினர்; அவ்வாறே செய்தனர். நல்ல நேரத்திலே தொடங்கும் செயல் தான் வெற்றி பெறும் என்பது அவர்கள் நம்பிக்கை. கோவலன் - கண்ணகி திருமணம் நல்ல நாள் - நட்சத்திரத்திலே செய்யப்பட்டது. இருபெரும் குரவரும் ஒருபெரு நாளால் மண அணி காண மகிழ்ந்தனர் கோவலன் - கண்ணகி இருவருடைய பெற்றோர்களும் ஒரு நல்ல நாளிலே, தங்கள் பிள்ளைக்ளுக்குத் திருமணம் செய்து வைத்து கண்டு மகிழ விரும்பினர். வான்ஊர் மதியம் சகடு அணைய சந்திரன் உரோகணி நட்சத்திரத்தைத் தழுவும் நாளிலே அவர்கள் திருமணம் நடைபெற்று. இவை மங்கல வாழ்த்திலே காணப்படுகின்றவை. வடநாட்டின்மேல் படையெடுத்துச் செல்வது பற்றிச் சேரன் செங்குட்டுவன் ஆலோசனை செய்கொண்டிருக் கின்றான் அப்பொழுது நிமித்திகன் இதுதான் நல்ல முகூர்த்தம்; இப்பொழுதே படையெடுத்துப் புறப்படு என்று மன்னனுக்குக் கூறுகின்றான். ஆறு இரு மதியினும் காருக அடிப்பயின்று ஐந்து கேள்வியும் அழைத்தோன் எழுந்து வெம்திறல் வேந்தே வாழ்கநின் கொற்றம்! இருநில மருங்கின் மன்னர் எல்லாம் நின் திருமலர்த் தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்குஇது; முன்னிய திசைமேல் எழுச்சிப் பாலை ஆக; என்று ஏத்த (கால்கோள் 25-31) பன்னிரண்டு ராசிகளிலும் கிரகங்கள் நிற்கும் நிலையை அறிந்தவன்; திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்து வகைகளையும் அறிந்தவன். இத்தகைய மௌத்திகன் எழுந்தான். ஆற்றல் நிறைந்த அரசனே! நின் வெற்றி வாழ்க! இப் பெரிய உலகில் உள்ள மன்னர்கள் எல்லாம் உன்னுடைய பாதங்களை வணங்கும்படி வெற்றிபெறும் நேரம் இது. ஆதலால் நீ நினைத்த திக்கு நோக்கி இப்பொழுதே புறப்படுக! என்று சொல்லி வணங்கினான். இவைகள் நல்லநாள், நாழிகை பார்க்கும் நம்பிக்கையும், பழக்கத்தையும் விளக்கின. 6. சிலப்பதிகார காலத்திலே பஞ்சாங்கம் இருந்தது; அதை வைத்துக்கொண்டு நாள்குறிக்கும் வழக்கமும் இருந்தது; பஞ்சாங்கம் என்பது ஐந்து உறுப்புக்களைக் கொண்டது. அவை: திதி, வாரம், நட்சத்திரம் யோகம், கரணம் என்பவை. 7. சகுணம் பார்க்கும் வழக்கம் சிலப்பதிகார காலத்தில் இருந்தது. சகுனங்களிலே மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்; நல்ல சகுனங்கள் நன்மையைத் தரும், தீய சகுனங்கள்; தீமையைத் தரும் என்று நம்பினர்கள். கோவலன் கண்ணகியின் சிலம்பை எடுத்துக்கொண்டு மதுரைக்குள் சென்றான்; வீதியிலே நடந்தான். அப்பொழுது திமிலையுடைய ஒரு பெரிய காளை அவனை எதிர்த்துப் பாய வந்தது. அவன் அதைத் தீய சகுனம் என்று அறியாமல் நடந்தான். இமில்எறு எதிர்ந்து இழுக்குஎன அறியாள் (கொலைக்கள. 100) என்று கூறுகிறார் ஆசிரியர். திருடச் செல்வோர்கூட நல்ல சகுணம் பார்த்துக் கொண்டு தான் புறப்படுவார்கள். நல்ல சகுனம் இல்லாவிட்டால், எவ்வளவு சிறந்த பொருளாயிருந்தாலும், அவை தாமாகவே வந்து கையில் புகுவாதாயிருந்தாலும் அவற்றை விரும்பமாட்டார்கள். நிமித்தம் வாய்த்திடின் அல்லது யாவதும் புகற்கிலர் அரும்பொருள் வந்துகைப் புகுதினும் (கொலைக்கள. 178-179) குடத்திலே பிறையிட்ட பால், உறையாமல்இருத்தல், காளையின் கண்ணில் நீர் வடிதல், உறியிலே வைத்த வெண்ணெய் உருகாமலிருத்தல், ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடாமல் சோர்ந்து கிடத்தல், பெரிய மணிகள் தாமே அறுந்து விழுதல், பசுமந்தை பயந்து கத்துதல் இவைகள் எல்லாம் பின்வரும் கேட்டை முன்உணர்த்தும் கெட்ட சகுனங்கள் என்று ஆயர்கள் நம்பினர். இவற்றை ஆய்ச்சியர் குரவையிலே காணலாம். 8. ஆடவர்களுக்கு இடது கண் துடித்தால் தீமை; வலது கண் துடித்தால் நன்மை, பெண்களுக்கு வ லது கண் துடிப்பது தீமைக்கு அறிகுறி; இடது கண் துடிப்பது நன்மை வருவதற்கு முன்அறிவிப்பு என்பர். இந்த நம்பிக்கை சிலப்பதிகார காலத்து மக்களிடம் இருந்தது. காவிரிப்பூம்பட்டினத்திலே இந்திர விழா நடைபெற்ற போது, கோவலனைப் பிரிந்திருந்த கண்ணகியின் இடது கண் துடித்தது; அவனுடன் சேர்ந்திருந்த மாதவியின் வலது கண் துடித்தது. கோவலன் மாதவியை வெறுப்பான், கண்ணகியை அடைவான் என்பதைக் காட்டும் அடையாளமாகவே இந்நிகழ்ச்சி காணப்பட்டது. கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உள்நிறை கரந்து அகத்து ஒளித்துநீர் உகுத்தன; எண்ணும் முறை இடத்தினும் வலத்தினம் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநான். அகத்து (இந்திர விழவு. 237-240) கண்ணகியின் கருமையான கண்ணும், மாதவியின் செந்நிற முள்ள கண்ணும் தங்கள் உள்ளத்திலிருப்பதை ஒளித்து மறைத்து வைத்திருப்பதனால் நீரைச் சிந்தின. இந்திர விழாவின்போது கண்ணகியின் இடது கண்ணும், மாதவியின் வலது கண்ணும் துடித்தன. இவ்வடிகள் மேலே சொல்லிய உண்மையை விளக்கின. 9. சிலப்பதிகார காலத்து மக்கள் மந்திரத்திலே நம்பிக்கை வைத்திருந்தணர். வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் இவ் ஐம்சில் ஓதியை அறிகுவன் யான் (காடுகாண். 194-195) வஞ்சனையை மாற்றும் மந்திரத்தின்மூலம் இந்த அழகிய கூந்தலை உடையவளை மானிடப்பெண்ணா தெய்வப்பெண்ணா என்று அறிவேன் நான். வனதேவதை, மாதவியின் தோழியான வசந்தமாலை வடிவிலே வந்தபோது கோவலன் கூறிய இவ்வாறு கூறினான், இச் சமயத்திலே கோவலன் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரம்; அதாவது துர்க்கை மந்திரம். திருடர்கள் விழித்துக்கெண்டிருப்போரை மந்திரத்தால் தூங்கும்படி செய்துவிடுவார்கள். துன்னிய மந்திரம் துணைஎனக் கொண்டு வாயில் ஆளரை மயக்குதுயில் உறுத்து (கொலைகள 143-144) என்பது திருடர் செயலைக் குறித்தது. இவைகள் மந்திரத்தில் மக்களுக்கிருந்த நம்பிக்கையைக் குறித்தன. 10. தங்கள் குறைகளைப் போக்கிக்கொள்ள, தெய்வங் களுக்குப் பலியிடும் வழக்கமும், வேண்டிக்கொள்ளும் வழக்கமும் சிலப்பதிகார காலத்து மக்களிடம் இருந்தது. மணமாகாத மகளிடத்திலே ஏதேனும் வேறுபாடு கண்டால் தாய் வருந்துவாள்; அவ் வேறுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறிய தெய்வத்துக்குப் பூசை போடுவாள். மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக், கடவுள் வரைந்து ஆர்இக் கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என்செய்கோ! மாரிக்காலத்துப் பீர்க்கம்பூப் போன்ற நிறத்தை மகள் அடைந்த வுடன் அன்னை வருந்தினாள், தெய்வத்திற்குப் பலியிட்டு, இக்கொடுமை செய்தவர் ஆர் என்று அன்னை அறிந்து விட்டால் என் செய்வேன்! இவ்வாறு கானல்வரியிலே காணப்படுவதனால் மேலே கூறிய செய்தியை அறியலாம். 11. மக்கள்மேல் தெய்வங்கள் ஏறும்; அவர்கள் ஆவேசம் கொண்டு ஆடுவார்கள்; மக்கள் செய்யும் தவறுகளையும், அவர் களுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளையும் எடுத்துரைப்பார்கள், இச்செய்தியை வேட்டுவரி, வரந்தரு காதை ஆகியவைகளிலே காணலாம். 12. தவசிகள் சாபம் கொடுக்கும் ஆற்றலும், அதைக் தவிர்க்கும் சக்தியும் படைத்தவர்கள், இதைக் கவுந்தியடிகளின் செயலால் காணலாம். 13. நடவு நடும் மகளிர் கள்ளுண்டு களித்துப் பாடுவார்கள், உழவர்கள் முதலிலே ஏர் உழத் தொடங்கும்போது செந்நெற் கதிர், அறுகு, குவளைமலர் இவைகள் கலந்து தொடுத்த மாலையை மேழிக்குச் சூட்டுவார்கள்; ஏர் மங்கலப் பாட்டுப் பாடுவார்கள், நெற்பயிறை அறுத்துப் போராகக் குவிப்பர்; அதைக் கடாக்களைப் பிணைத்து மிதிக்கச் செய்து, நெல் வேறு, வைக்கோல் வேறாகப் பிரிப்பர், அப்போது அவர்கள் பாட்டுப் பாடிக் கொண்டே இவ்வேலையைச் செய்வார்கள். அப் பாட்டுக்கு முகவைப் பாட்டு என்று பெயர். இவைகளை நாடுகாண் காதையில் 127 முதல் 137 வரையில் உள்ள அடிகளிலே காணலாம், 14. விலைமகளிர் மதுவருந்தும் வழக்கம் உள்ளவர்கள் பொன்தொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து செம்பொன் வள்ளத்துச் சிலதியர் ஏந்திய அம்தீந் தேறல் மாந்தினர் மயங்கி (ஊர்காண். 131-133) இவ்வடிகள் அவர்கள் மதுவுண்ணும் வழக்கத்தைக் குறித்தன. 15. சிலப்பதிகார காலத்திலே கள்வர்களுக்குக் கொலைத் தண்டனை கொடுக்கும் வழக்கம் இருந்தது, கள்வனைக் கோறல் கடும்கோல் அன்று (வழக்குரை.64) என்பது இதைக் காட்டுகிறது. 16. மன்னர்கள் நல்ல காரியங்களைச் செய்யும்போது, சிறையிலிருப்பவர்களை விடுதலை செய்வார்கள், குற்றவாளி களை மட்டும் அல்லாமல், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வார்கள், கொடித்தேர் மன்னனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சுரந்து ஒருபால் (இந்திர விழவு. 182-183) அரசனுடன் பகைத்த காரணத்தால் சிறையிலிருக்கும் மன்னர் களின் கால்விலங்கை நீக்கவேண்டும் என்று மன்னன் இரக்கங் கொண்டான். இதனால் நேர்ந்த செய்கை ஒருபுறம். இந்திர விழாச் செய்யும்போது, பகைமன்னர்கள் சிறையி லிருந்து விடுதலை செய்யப்பட்டனர், சிறைப்படு கோட்டம் சீமின்; யாவதும் சறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் (கட்டுரை. 126-127) சிறைச்சாலையைத் திறந்து விடுங்கள்; வரி கொடுக்க முடியாமல் துன்புறுகின்றவர்களின் வரிச்சுமையைத் தள்ளி விடுங்கள். இது, அடைத்திருந்த காளிதேவியின் கோவில் திறந்த போது, பாண்டிய மன்னன் இட்ட கட்டளை. சிறையோர் கோட்டம் சீமின்; யாங்கணும் கறைகெழுநாடு கறைவீடு செய்ம்ம் (நடுகல். 203-204) சிறைக் கதவுகளைத் திறந்துவிடுங்கள்; வரி மிகுந்த நாட்டிலே வரிகளைத் தள்ளுபடி செய்யுங்கள். வேள்வி செய்யத் துணிந்த செங்குட்டுவன் இவ்வாறு உத்திரவு செய்தான், இவைகள் நல்ல செயல்கள் நடக்கும்போது, குற்றவாளிகளையும், அரசியல் பகைவர்களையும் சிறையிலிருந்து விடுதலை செய்யும் வழக்கம் தமிழகத்தில் உண்டு என்பதைக் குறித்தன, 17. அறநெறியிலே நிற்போர்க்கு உதவி செய்தல், அந்தணர் களைப் பாதுகாத்தல், துறவிகளை எதிர்கொண்டு உபசரித்தல், விருந்தினர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உணவளித்தல், இவைகள் இல்லறத்தார் கடமைகளாகக் கருதப்பட்டன. அறவோர்க்கு அளித்தாலும், அந்தணர் ஓம்பலும், துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்துஎதிர் கோடலும் இழந்த என்னை (கொலைக்கள. 171-173) இவ்வாறு கண்ணகி உரைக்கின்றாள், இவ்வடிகள் இல்லறத்தார் கடமையை உணர்த்தின. 18. தெய்வங்களுக்கு உயிர்ப்பலி யிட்டனர்; கள், புலால் முதலியவைகளை வைத்துப் படைத்தனர், புழுக்கலும், நோலையும், விழுக்குஉடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து (இந்திர விழவு. 68-69) (புழுக்கல் - வேகவைத்த தானியங்கள், நோலை-எள்ளுருண் டை விழுக்கு உடை மடை-மாமிசங் கலந்து சமைத்த சோறு, பொங்கல்-கள்.) வண்ணமும், சுண்ணமும், தண்நறும் சாந்தமும் புழுக்கலும், நோலையும், விழுக்குஉடை மடையும், பூவும், புகையும், மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர (வேட்டுவரி. 36-39) (வண்ணம்-பூசிக்கொள்ளும் வாசனைக் குழம்பு, சுண்ணம் வாசனைப் பொடி, விரை-வாசனைத் திரவியங்கள்) அடல்வலி எயினர்நின் அடிதொழு கடன்இது மிடறுஉகு குருதிகொள் விறல்தரு விலையே பகைவரைக் கொல்லத்தக்க வலிமையுள்ள வேடர்கள் உன் அடியை வணங்கிச் செய்யும் கடமை இதுதான்; நீ எங்களுக்கு வெற்றியைத் தருவதாக விலையாக, கழுத்திலிருந்து சிந்தும் இரத்ததைப் பலியாக ஏற்ளுக்கொள். நிணன் உகு குருதி கொள் நிணத்துடன் கலந்து சிந்துகின்ற இரத்தப் பலியாகிய இதனை ஏற்றுக்கொள். இவைகளும் வேட்டுவவரியிலே உள்ளவை, இவைகளால், தெய்வங்களை எப்படி வணங்கி வழிபட்டனர் என்பதைக் காணலாம், சிலப்பதிகார காலத்தில் தமிழ் நாடெங்கும் விக்கிரக வணக்கம் பரவியிருந்தது என்பதிலும் ஐயம் இல்லை, 19. திருவிழாக் காலங்களை வீண் பொழுதுபோக்காகக் கழியும்படி விடமாட்டார்கள். நகரை அலங்கரிப்பார்கள்; தெய்வங் களுக்கெல்லாம் பூசை போடுவார்கள்; சிறந்த வாத்தியங்களை முழக்குவார்கள்; இவைகளோடுமட்டும் நின்று விடமாட்டார்கள். மக்கள் அறிவை-ஒழுக்கத்தை-வளர்ப்பதற்கான சொற்பொழிவு களையும், கூட்டங்களையும் நடத்துவார்கள், நல்ல நூல்களைப் படித்தவர்கள் அந்நூல்களிலே கண்ட அறநெதி களை மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்; பழைய நூல்களிலே உள்ள உண்மைகளை யெல்லாம் அனைவரும் அறியும்படி விரிவுரை ஆற்றுவார்கள். அருகர் பள்ளி புத்தர் பள்ளி, தருமங்களைப் போதிக்கும் பிற இடங்கள், ஸ்ரீ கோவில், மற்றும் உள்ள அறநிலையங்கள் ஆகிய இடங்களிலே நல்லோர்கள் கூடுவார்கள்; அவர்கள் பல உயர்ந்த உண்மைகளைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருப் பார்கள்; இச்செயல் ஒரு பக்கம். அறவோர் பள்ளியும், அறன்ஒம் படையும், புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் திறவோர் உரைக்கும் செயல்சிறந்து ஒருபால் (இந்திர விழவு. 179-181) இவ்வடிகள் திருவிழாக் கால நிகழ்ச்சியை உணர்த்தின. 20. கற்புக்கு அருந்ததியை எடுத்துக்காட்டாகக் கொண்டனர், வடமீனிள் திறம் இவள் திறம் அருந்ததியின் கற்பே இவள் கற்பு. வானத்துச் சாலி ஒருமின் தகையாளை வானத்தில் உள்ள அருந்ததியைப் போன்ற கற்புடையவளை. வடமீன் கற்பின் மனைஉறை மகளிர் அருந்ததிபோன்ற கற்புள்ள இல்லத்தில் வாழும் மகளிர். இவைகள் கற்புக்கு எடுத்துக்காட்டாக அருந்ததியையே போற்றினர் என்பதைக் காட்டும். 21. தமிழ்மக்களுக்குக் கனவிலே நம்பிக்கையுண்டு. எச்செயலும் கனவுக்குப் பின்னர்தான் நடைபெறும்; பின்னால் நிகழப்போவதை முன்னால் அறிவிப்பதே கனவு என்று நம்பினார். கண்ணகி தான் கண்ட கனவைத் தேவந்தியிடம் கூறுவது; கோவலன் தான் கண்ட கனவைப்பற்றி மாடலனிடம் கூறுதல் (அடைக்கல. 95-106) பாண்டியன் மனைவிதான் கண்ட கனவைப் பாண்டியனிடம் கூறுவது-இவைகள் கனவின் உண்மையை விளக்குவன. 22. போரிலே பகைவர்களுடன் சண்டையிட்டு மாண்டு போன வீரர்களின் மைந்தர்களுக்கு அரசன் பரிசளிப்பான்; வெற்றி பெற்றுத் திரும்பிய வீரர்களுக்கும் பரிசளிப்பான், (நீர்ப்படை. 25-44) 23. மன்னர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவார்கள், அப்பொழுது அவர்கள் படைவீரர்கள் முதலிய பலருக்கும் பரிசளிப்பார்கள், (நீர்ப்படை. 44) 24. பெண்கள் பலவிதமான அணிகளைப் பூண்டனர். அவர்கள் ஒவ்வொரு உறுப்பிலும் ஒவ்வொருவிதமான அணி கலன்களை அணிந்தனர். கால்விரல்களில் மோதிரம்; காலிலே பரியகம், சிலம்பு, பாடகம், சதங்கை என்னும் அணிகள்; துடையிலே கவான் என்னும் அணி; உடையின்மேல் முப்பத்திரண்டு முத்துவடங் களால் செய்யப்பட்ட விரிசிகை என்னும் ஆபரணம் - இவைகளை அணிவார்கள். தோளிலே மாணிக்கம் முத்து இவைகளை வைத்துப் பொன்னால் செய்யப்பட்ட தோள்வளைகள்; முன்கையிலே கல்லிழைத்த சூடகம், பொன் வளையல், நவரத்தின வளையல், சங்க வளையல், பவழ வளையல்; கைவிரல்களிலே சிவப்பு, வயிரம், பச்சை ஆயி கற்கள் பதித்த மோதிரங்கள - இவைகளை அணிவார்கள். கழுத்திலே தங்கச் சங்கிலி, சிறிய நீண்ட சங்கிலி, கயிறு போன்ற சங்கிலி, வேலைப்பாடு அமைந்த வேறு பல அணி கலன்கள், முத்துமாலைகள் இவைகளை அணிவார்கள். கழுத்தின் பின்புறம் மறையும்படியும் அணி பூண்பர். இவ்வணிக்குப் பின்தாலி என்று பெயர். நீலமும், வயிரமும் வைத்துக் கட்டிய குதம்பை என்னும் அணியைக் காதிலே பூண்பர். தெய்வ உத்தி, வலம்புரி, தொய்யகம், புல்லகம் என்னும் அணிகலன்களைத் தலைமயிரிலே அணிவர். இவ்வாறு பல வகை யான நகைக்ள சிலப்பதிகார காலத்தில் இருந்தன. இத்தகைய அணிகலன்களைச் செய்துகொடுக்கும் கைதேர்ந்த வேலைக்காரர் களும் இருந்தனர். இவைபோன்ற பல பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் சிலப்பதிகார காலத்திலே இருந்தன. சிந்தனைக்குரிய செய்திகள் சிலப்பதிகாரம் உண்மை வரலாறா அல்லது கற்பனைக் கதையா: அல்லது உண்மையும் கற்பனையும் கலந்த கதையா? என்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன இத்தகைய ஐயம் எழுவதும் கேள்விகள் பிறப்பதும் இயற்கை. இக்கேள்விகளுக்கு விடை காணவேண்டியதும் அவசியம். அன்றியும் சிலப்பதிகாரம் சங்க காலத்து இலக்கியமா? அல்லது பிற்காலத்தில் பிறந்த இலக்கியமா? என்ற கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இக்கேள்விகளுக்கு விடைகாணுவதும் அவசியமாகும். இக்கேள்விகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் அளிக்கும் விடைகள் யாவை என்பதைப் பற்றி ஆராயவேண்டியதும் அறிஞர்கள் கடமை. உண்மை வரலாறு பல்லாண்டுகளாகச் சிலப்பதிகாரத்தை ஒரு உண்மை வரலாறு என்றே பலர் நம்பி வருகின்றனர். சிலப்பதிகாரத்தைப் படிக்கும் போது அது ஒரு உண்மை நிகழ்ச்சி போலவே காணப்படுகின்றது. ஆராய்ச்சிக் கண்ணோட்டம் இன்றி அதன் சுவையில் மூழ்கிப் படிக்கின்றவர்கள் அதை உண்மை வரலாறு என்றுதான் எண்ணுவார்கள்; அவர்கள் இடையிடையே வரும் கற்பனைக் கதைகளையெல்லாம் மறந்து விடுவார்கள். கண்ணகி யின் வீரச் செயலும், செங்குட்டுவன் வீரச் செயலும் அவர்கள் மனத்தைக் கவரும், கதையோ தங்குதடை யில்லாமல் பள்ளத்தில் ஒடும் வெள்ளம்போல் விரைந்து செல்லுகின்றது. இந்த வகையிலே சிலப்பதிகாரப்பாக்களும் அமைந்திருக்கின்றன. சிலப்பதிகாரத்தின் முதலில் உள்ள பதிகம், அது ஒரு உண்மை வரலாறு என்று உரைக்கின்றது. கூலவாணிகன் சாத்தனார் கண்ணகியின் வரலாற்றைச் செங்குட்டுவன் இளவலாகிய இளங்கோவடிகளிடம் கூறினார்; பிறகு அக்கதையை உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக இளங்கோ அடிகள் அரளினார். அதை மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் என்று முடிகிறது பதிகம். உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள, மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் என்பது பதிகத்தின் முடிவு. இதன்பின் வஞ்சிக் காண்டம்-காட்சிக் காதையிலும் இச்செய்தி வருகின்றது. சேரன் செங்குட்டுவனிடம், குறவர்கள், கண்ணகி விண்ணுற்ற செய்தியைக் கூறினர்; அவன் ஒன்றும் விளங்காமல் திகைத்தான்; அப்பொழுது தண்டமிழ்ச் சாத்தன் ஒண்தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் திண்திறல் வேந்தே செப்பக் கேளாய்! என்று தொடங்கிக் கண்ணகியின் வரலாற்றை உரைத்தார் காட்சிக் காதையிலே 67 முதல் 90 வரையில் உள்ள அடிகள் தண்டமிழ்ச் சாத்தன் வாய்மொழியாக அமைந்திருக்கின்றன. சாத்தனார் தான் நேரில் கண்ட காட்சிகளைச் சொல்வதுபோல இப்பகுதி அமைநிதிருக்கின்றது. பதிகத்தில், இளங்கோவடிகளிடம், சாத்தனார் கண்ணகி வரலாற்றைக் கூறினார் என்று காணப்படுகின்றது. காட்சிக் காதையில், செங்குட்டுவனிடம் கண்ணகி வரலாற்றைச் சாத்தனார். கூறினார் என்று காணப்படுகின்றது. இதில் எது உண்மை என்பது சிந்திக்கத் தக்கது. இதன்பின் வஞ்சிக் காண்டத்தில் நீர்ப்படை காதையிலே சிலப்பதிகார வரலாறு காணப்படுகின்றது. மாடல மறையோன், செங்குட்டுவனைச் கண்டு கூறும் செய்திகள் உண்மை வரலாறு போலவே காணப்படுகின்றன. 56 முதல் 111 வரையில் உள்ள அடிகளிலே சிலப்பதிகாரக் கதை முழுவதையும் காணலாம். இவ்வடிகள் மாடலன் வாயால் வந்தவைபோல் அமைந்தவை, சிலப்பதிகாரத்தின் இறுதியில் வரந்தரு காதையில் காணப்படும் செய்திகள், சிலப்பதிகாரம் ஒரு சரித்திரம் என்று எண்ணும்படி அமைந்திருக்கின்றன. இப்பகுதிகளைப் படிப்போர் சிலப்பதிகாரம் ஒரு வரலாறு என்றுதான் நம்புவர். சிந்தையைச் செய்யுள் நயத்திலே பறிகொடுக் காமல், கதையின் போக்கிலே விட்டுவிடாமல் படிப்போர்க்குத் தான், சிலப்பதிகாரம் சரித்திரமா, கதையா என்ற ஐயம் தோன்றும். பண்டைப் புலவர்கள் பெரும்பாலும் இத்தகைய ஐயம் எழும்பு வதற்கு இடந் தரவில்லை, சிலப்பதிகாரச் செந்தமிழ்த்தாயின் அன்பினால் அணைக்கப்பட்டனர். அதை நடந்ததொரு வரலாறாகவே நம்பிவந்தனர், இவ்வாறு நம்புவோர் இன்னும் உண்டு. கற்பனைக் கதை மற்றொரு சார்பார் சிலப்பதிகாரம் முழுவதும் கற்பனைக் கதை என்றே கருதுகின்றனர். கோவலன்-கண்ணகி வரலாற்றிலே இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகள் நிறைந்து கிடக்கின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் கிளைக்கதைகள் சிறுகதைகள் எல்லாம் புராணக்கதைகள் போலவே காணப்படுகின்றன. கண்ணகி தன் மார்பைத் திருகி வீசினாள், மதுரை பற்றிக் கொண்டது என்பது வெறும் கற்பனை. இதை எப்படி உண்மையென்று ஒப்புக்கொள்ள முடியும்? செங்குட்டுவன் வடநாட்டினரோடு போர் செய்தான் என்பதற்கான சரித்திர ஆதரவே இல்லை: அதுவும் கட்டுக்கதை தான் என்று சொல்லு கின்றனர். நல்ல கருத்துக்களைப் பரப்புவதற்காகப் பல புதுக்கதைகள் எழுதப்படும் வழக்கம் என்றும் உண்டு. அவ்வழக்கத்தை ஒட்டியே நல்ல கருத்துக்களைப் பரப்புவதற்காகச் சிலப்பதிகாரம் எழுதப் பட்டது. அதை எழுதிய ஆசிரியர் கவித்திறமையினால் அது ஒரு நடந்த நிகழ்ச்சிபோல அமைந்துவிட்டது. இதுதான் உண்மை என்று உரைக்கின்றனர். பழமையும் புதுமையும் மற்றொரு பகுதியினர், சிலப்பதிகாரம், உண்மை வரலாறு என்றும் அன்று, முழுவதும் கற்பனையும் அன்று: சிறு வரலாறும் பெருங்கற்பனையும் கலந்த கதை என்று கூறுகின்றனர். சிலப்பதிகாரம் ஒரு உண்மை வரலாறு என்பதைவிட அது முழுவதும் கற்பனைக் கதைதான் என்பதைவிட உண்மையும் கற்பனையும் கலந்த கதை என்பதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது. இவ்வாறு கதை எழுதும் வழக்கம் பண்டும் உண்டு; இன்றும் உண்டு. பழைய கதையை உரையும் பாட்டும் கலந்த நூலாகச் செய்யும் வழக்கம் உண்டு. இவ்வாறு இயற்றப்படும் நூலுக்குத் தொன்மை என்று பெயர். தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே (தொல். செய். 237) என்பது தொல்காப்பியம், தொன்மை என்பது, உரைவிராய்ப், பழைமையவாகிய கதைப்பொருளாகச் செய்யப் படுவது என்றவாறு. அவை பெருந்தேவனாரால் பாடப்பட்ட பாரதமும், தகடூர் யாத்திரையும் போல்வன என்பது பேராசியர் உரை. சிலப்பதிகாரமும் இதன்பாற்படும்ம் என்று நச்சினார்கினியர் அவர் உரையிலே காட்டுகின்றார். சிலப்பதிகாரம் தொன்மை என்ற இலக்கியத்திற்குச் சான்றாக நிற்பது; பழைய கதையை ஆதரவாகக்கொண்டது; உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யு ள் என்பது உண்மை. மேலே எடுத்துக்காட்டிய தொல்காப்பியச் செய்தி இதை உறுதி செய்கிறது. சிலப்பதிகாரம் பழைய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இதற்கான ஆதரவுகள் சில காணப்படுகின்றன; அவற்றையும் காண்போம். எதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமா உண்ணி (நற்றிணை. 216) பகைவன் செய்த கொடுமையால் நேர்ந்த கவலை காரணமாக ஒரு முலையை அறுத்துக்கொண்ட திருமா உண்ணி என்பது நற்றிணை. இதனால், சிலப்பதிகாரத்திற்கு முன்பே கண்ணகி என்று ஒரு பெண் இருந்தாள்; அவள் பகைவன் செய்த கொடுமை காரணமாகத் தனது ஒரு மார்பை அறுத்துக் கொண்டாள்; அதனால் அவள் திருமா உண்ணி என்று போற்றப்பட்டாள் என்ற வரலாறு ஒன்றைக் காணலாம். வையாவிக்கோப் பெரும்பேகன் என்பவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். இவன் மனைவி பெயர் கண்ணகி. அவன் அவளைத் துறந்து மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்தான். அதனால் கண்ணகி மனம் உடைந்திருந்ததாள். இச்செய்தி புறநானூற்றின் 144-வது செய்யுளில் காணப்படுகின்றது. இந்த நற்றிணைச் செய்தி, புறநானூற்றுச் செய்தி இரண்டும் கண்ணகியின் வரலாற்றோடு ஒட்டியிருப்பதைக் காணலாம். என் மகன் முதுகிலே புண்பட்டு மடிந்திருப்பானாயின் அவனுக்குப் பாலூட்டிய என் முலையை அறுப்பேன் என்று ஒரு பெண் கூறியதாகப் புறநானூற்றின் 278-வது செய்யுளில் காணப் படுகின்றது. என்னைப்பற்றிக் கவலைப்படாத என் காதலனைக் கண்டால் சும்மா இருக்கமாட்டேன். அவனால் பயன்பெறாத கொங்கையை அடியோடு திருகிப் பறிப்பேன்; அவன் மார்பில் எறிவேன்; என் சினத்தைத் தணித்துக்கொள்ளுவேன் என்று ஆண்டாள் பாடுகின்றாள். உள்ளே உருகி நைவேனை உளளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த்தனனைக் கண்டக்கால் கொள்ளும் பயன்ஒன்று இல்லாத கொங்கை தன்னை கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு அவன்மார்பில் எறிந்தென் அழலைத் தீர்ப்பேனே (நாச்சியார் திருமொழி 13-7) இவைகளால், பெண்கள் கொடுஞ்சினங் கொண்டால், தங்கள் மார்பைத் திருகி எடுத்தெறிவார்கள் என்ற செய்தியைக் காணலாம். கோவலன் கொலையுண்டைத் கேட்டவுடன் கண்ணகி சினத்தால் பொங்கினாள் என்ற செய்தியையே சிலப்பதிகார ஆசிரியர் சிறப்பாக எடுத்துச் சொல்லுகின்றார். சீற்றந்தணியாத கண்ணகி தனது இடது மார்பை வலது கரத்தால் திருகி எடுத்தாள்; மதுரையை மும்முறை வலம் வந்தாள்; வருந்தினாள்; அந்த முலையைச் சுழற்றி வீதியிலே விட்டெறிந்தாள். இடமுலை கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா, அலமந்து மட்டுஆர் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள், எறிந்தாள்விளங்கு இழையாள் (வஞ்சினமாலை. 43-46) இவ்வாறு கூறும் அடிகள் இயற்கை நிகழ்ச்சிபோலவே காணப் படுகின்றன. சினமிகுந்தவர் எதையும் செய்வர். இது உண்மை; இயற்கையும் ஆகும். மேலே காட்டிய வரலாற்றுச் செய்திகளும், வழக்கங்களும் சிலப்பதிகாரக் கதையில் அமைந்திருக்கின்றன; சிறப்பாகக் கதாநாயகி யாகிய கண்ணகியின் நடத்தையிலே இணைந் திருக்கின்றன. சிலப்பதிகாரம் காதால்கேட்ட சில பழங்கதை நிகழ்ச்சி களைக் கொண்டது; பண்டைப் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் கொண்டது; காலத்திற்கேற்ற தெய்வீக நிகழ்ச்சி களையும் ஏற்றுக்கொண்டிருப்பது; புதிய கருத்துக்களையும், பழைய கருத்துக்களையும் தழுவியிருப்பது; கற்பனை நிகழ்ச்சிகள் பலவற்றைக்கொண்டது; உண்மை வரலாறு சிலவற்றை அடிப் படையாகக் கொண்டது. சிலப்பதிகாரத்தைப்பற்றி இவ்வாறு முடிவு செய்வதுதான் பொருந்தும் என்று தோன்றுகின்றது. மேலே காட்டியவை இக் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றன. இளங்கோ அடிகள் இளங்கோ அடிகள்தான் சிலப்பதிகார ஆசிரியர் என்பதே புலவர்கள் கொள்கை. அறிஞர்கள் பலரும் இதை ஒப்புக் கொள்ளுகின்றனர். ஆனால் ஒரு சிலர் இளங்கோ அடிகள் என்று ஒருவர் இருந்ததே இல்லை என்பர். அப்படியானால் சிலப்பதிகார ஆசிரியர்தான் யார் என்றால் தக்க விடையில்லை. இளங்கோவடிகள் என ஒருவர் இருந்ததில்லை என்பதற்கு இவர்கள் உரைக்கும் காரணங்களைக் காண்போம். இளங்கோவடிகளைப்பற்றிய வரலாறு சிலப்பதிகாரம் ஒன்றில்தான் காணப்படுகின்றது; வேறு எந்த நூல்களிலும் காணப்படவில்லை. குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு என்று தொடங்கும் பதிக அடிகளுக்கு அடியார்க்கு நல்லார் எழுதும் உரை; வரந்தரு காதையிலே, தேவந்தியின்மேல் கண்ணகி யின் ஆவி ஏறிக்கொண்டு, இளங்கோவடிகளின் வரலாற்றைச் சொல்வதாக வரும் கதை - இவைகள்தாம் இளங்கோவடிகளின் வரலாற்றுக்கு ஆதரவு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மக்கள் இருவர். முத்தோன் செங்குட்டுவன்; இளையோன் இளங்கோ. ஒரு நாள், அவன் இவ்விரு மக்களுடனும் அரசவையில் அமர்ந்திருந்தான். அப்பொழுது ஒரு சோதிடன் வந்தான். அவன் இளங்கோவை உற்றுநோக்கி, இவனே நாடாளும் வேந்தன் என்றான். செங்குட்டுவன் முகம் சுருங்கிற்று; கண்கள் சிவந்தன. அவை கண்ட இளங்கோ. சோதிடன் சொல் பொய்! நான் துறவை மேற்கொண்டேன்! என்று மொழிந்தான்; உடனே துறவி யானான். இளங்கோ அடிகள் என்ற பெயருடன் குணவாயில் கோட்டத்திலே தங்கியிருந்தான். இதுவே சிலப்பதிகாரத்தில் காணப்படும் கதை. பதிற்றுப்பத்திலே இரண்டாம்பத்து இயமவரம்பன் நெடுஞ்சேரலாதனைப்பற்றிப் பாடியது. அவனுக்கு இரண்டு மக்கள் இருந்தனர் என்று அப்பாடல்களில் காணப்படவில்லை. ஐந்தாம்பத்து, செங்குட்டுவன்மீது பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. அதில் உள்ள பத்துப் பாடல்களில் ஒன்றிலேனும் செங்குட்டுவன் என்ற பெயரே காணப்படவில்லை; சிலப்பதிகாரச் செய்தியும் குறிக்கப்படவில்லை. இப்பத்தின் பதிகத்திலேதான் கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டி செங்குட்டுவன் வடநாட்டின்மேல் படையெடுத்துப் போனான் என்ற செய்தி குறிக்கப்படுகின்றது. இவன் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று குறிக்கப்படுகின்றான். பதிப்பற்றுப்பத்தின் பதிகங்கள் எல்லாம் நூலாசிரியர் களால் பாடப்பட்டவை அல்ல; அவைகள் பிற்காலத்துப் புலவர்களால் பாடிச் சேர்க்கப்பட்டவைகளாகும். அவைகளும் சிலப்பதிகார காலத்துக்குப்பின் எழுதி இணைக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலர் கருத்து. மேலே காட்டியவைகளைக் கொண்டு இளங்கோவடி களைப் பற்றி வழங்கும் கதைக்கு வேறு ஆதரவுகள் இல்லை; சிலப்பதிகாரம் ஒன்றுதான் ஆதரவு; ஆதலால் அக்கதை பொய்; இளங்கோவடிகள் என ஒருவர் இருந்திருக்க முடியாது என்று சொல்லிவிடுகின்றனர். இத்தகைய வரலாற்றுக்கு உரிய இளங்கோ அடிகள் ஒருவர் இருந்திருக்க முடியாது என்பது உண்மையாகத்தான் காணப்படு கின்றது ஆதலால் இந்த இளங்கோவடிகள் வெறும் கற்பனை; இப்படி ஒருவர் இல்லை என்றே வைத்துக் கொள் வோம். சிலப்பதிகார ஆசிரியர் யார் என்பதற்கு விடை காண வேண்டும். ஒருநூல் இருந்தால் அதை இயற்றிய ஆசிரியர் ஒருவரோ, பலரோ இருக்கத்தானே வேண்டும்? கண்ணகியின் வரலாற்றைக் கூறிய தண்டமிழ்ச் சாத்தன்தான் சிலப்பதிகாரத்தைச் செய்திருக்கவேண்டும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தொடர்புள்ள கதைகள். இரண்டும் சேர்ந்தால் ஒரு காவியமாகவே காட்சியளிக்கும். ஆதலால், மணிமேகலை ஆசிரியர்தான் சிலப்பதிகாரத்தையும் செய்திருக்கலாம் என்பர். இது சிறிதும் பொருந்தாத வாதம். சிலப்பதிகாரம் சைனக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட நூல். இதனை அறவுரைகள் என்ற பகுதியில் காணலாம். மணிமேகலை பௌத்தமதத்தை அடிப்படையாகக்கொண்ட நூல். சிலப்பதிகார ஆசிரியரின் பண்பு வேறு; மணிமேகலை ஆசிரியின் பண்பு வேறு. சிலப்பதிகார ஆசிரியர் எந்த மதத்தையும் வெறுத்துப் பேச வில்லை. எல்லா மக்களுடைய கொள்கைகளையும், பழக்க வழக்கங்களையும் அப்படி அப்படியே எடுத்துரைக்கின்றார்; அவைகளைச் சிறிதும் மாற்றாமல், மறைக்காமல் கூறிச் செல் கின்றார். மணிமேகலை ஆசிரியர், புத்தமதம் ஒன்றே சிறந்தது என்று நிலைநாட்டுகின்றார்; மற்ற மதங்களைக் கண்டித்துப் பேசுகின்றார்; மற்ற மதக்கொள்கைகளை ஏளனம் செய்கின்றார். இரண்டு நூல்களையும் படிப்போர் இவ்வுண்மையைக் காண்பர். ஒரே ஆசிரியர், ஒன்றக்கொன்று முரணான இரண்டு நூல்களைச் செய்திருக்க முடியாது. புத்தமதக கொள்கை யினரான சாத்தனார், சமரச சன்மார்க்கம் போதிக்கும் சைன மத இலக்கியமான நிலப்பதிகாரத்தை இயற்றியிருக்க முடியவே முடியாது மணிமேகலை ஆசிரியர் வேறு; சிலப்பதிகார ஆசிரியர் வேறு. இதை மறுப்பதற்கு இடமே இல்லை. ஆனால், சிலப்பதிகார ஆசிரியர் பெயர்தான் என்ன? அரும்பெருத் தமிழ் நூலான சிலப்பதிகார ஆசிரியரின் பெயர் கூடவா மறந்துவிட்டது? அப்பெயரைக் கூடவாத் தமிழர்கள் மறந்துவிட்டனர்? இல்லை; சிலப்பதிகார ஆசிரியர் பெயர் மறையவில்லை; மறைக்கப்படவும் இல்லை; வழங்கிக்கொண்டு தான் இருக்கின்றது. சிலப்பதிகாரத்தைச் செய்தவர் பெயர் இளங்கோவடிகள்; அந்தக் கவிஞர் பெயர் இளங்கோவடிகள். இந்த இளங்கோ அடிகள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மகன் அல்லர்; சேரன் செட்குட்டுவன் தம்பியும் அல்லர் இளங்கோ அடிகள் யாரோ ஒரு அரசகுமாரர்தான். அவர் ஒரு சமண சந்தியாசி; உண்மைத்துறவி; எந்த மதத்திலும் வெறுப்புக் காட்டாத சிறந்த தமிழர்; தமிழர் பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ஒப்புயர்வற்ற செந்தமிழ்ப்புலவர்; முத்தமிழ் அறிஞர். அவர் யாராயிருந்தாலும் அவர் பெயர் இளங்கோ அடிகள்தான். இவ்வாறு சிலப்பதிகார ஆசிரியரைப்பற்றி முடிவுகட்டுவதில் என்ன தவறு? பின்னால் புகுந்தவையா? சிலப்பதிகாரப் பதிகமும், வஞ்சிக்காண்டமும் இளங்கோ வடிகளால் இயற்றப்பட்டனவா? அவைகள் பிற்காலத்தில் வேறு தமிழ்ப்புலவரால் பாடி இணைக்கப்பட்டனவா? இக் கேள்விகளைச் சிலர் எழுப்புகின்றனர். இது நல்ல கேள்வி. இக்கேள்விகளுக்கு ஏற்ற விடைகாண்போமாயின் இளங்கோ வடிகளைப்பற்றிய குழப்பமும் தீர்ந்துவிடும். புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் இவைகளுடன் வஞ்சிக்காண்டம் இணைந்ததுன் காணப்படுகின்றது. கதைத் தொடர்பு கெடவில்லை; அவ்வளவு அழகாக வஞ்சிக்காண்டம் அமைந்திருக்கின்றது. செய்யுள் நடையும் ஏறக்குறைய இளங்கோவடிகளின் வாக்குப்போலவே அமைந்திருக்கின்றது. ஆனால், புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் இரண்டுமே கண்ணகியின் வரலாற்றை விளக்கப் போதுமானதாகும். இதுபற்றித் தெய்வீக நிகழ்ச்சிகள் என்னும் பகுதியிலும், புரட்சிக் காவியம் என்னும் பகுதியிலும் விளக்கப்பட்டுள்ளது. மதுரைக்காண்டத் தோடு கதை மிகவும் அழகாக முடிகின்றது. கண்ணகி, கோவலன் கொலையுண்ட பதினான்காம் நாள் திருச்செங்குன்றிலே, வேங்கை மரத்தின் நிழவிலே தன் கணவனுடன் சேர்ந்து, தேவர்கள் போற்ற வானுலகடைந்தாள் என்று கதை முடிகின்றது. கண்ணகி திருச்செங்குன்றிலே அடிவைத்து ஏறினாள்; பூத்திருக்கும் ஒரு வேங்கைமரத்தின் நிழலை அடைந்தாள். தீவினையுடையேன் யான் என்று ஏங்கி நின்றாள். பதினான்கு நாட்கள் கழிந்தன; பத்தினித் தெய்வத்தைத் தொழும் நாள் இதுதான் என்று தோன்றும்படி தேவர்கள் வாழ்த்தினர். கண்ணகியின் பெயரைச் சொல்லி வணங்கினர்; வாடாத மலர்மாரி பெய்தனர். இவ்வாறு இந்திரன் தமர்களான தேவர்கள் வந்து வணங்கினர். தலை நகரிலிருந்து நீங்கிய கோவலனுடன், வானவூர்தியிலே ஏறிச் சென்றாள் கண்ணகி என்று கதை நன்றாக முடிகின்றது. இவ்வளவு அழகாக முடித்துக் காட்டி யிருக்கிறார் இளங்கோ அடிகள். நெடுவேள் குன்றம் அடிவைத்து ஏறிப் பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ்ஒர் தீத்தொழிலாட்டியேன் யான் என்று ஏங்கி எழுநாள் இரட்டி எல்லை சென்றபின் தொழுநான் இதுஎனத் தோன்ற வாழ்த்திப் பீடுகெழு நங்கைப் பெரும்பெயர் ஏத்தி வாடா மாமலர் மாரிபெய்து ஆங்கு அமரர்க்கு அரசன் தமர்வந்து ஏத்தக் கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு வான வூர்தி ஏறினன் மாதோ கான்அமர் புரிகுழர் கண்ணகிதான் என் இவ்வடிகளே மேலே காட்டிய நிகழ்ச்சியைக் கூறுவன; மதுரைக் காண்டத்தின் முடிவு; கட்டுரை காதையின் இறுதி. ஒரு கதைக்குரிய முழு இலக்கணத்தோடு துக்க நிகழ்ச்சி யாகவும், இறுதியில் மங்களகரமாகவும் கதை முடிந்திருக்கிறது, துக்ககரமாக முடியும் கதைகளையும் ஈறுதியில் மங்கலமாக அமைத்து முடிப்பதே நமது நாட்டுப் பரம்பரைப் பண்பு. இந்த வழக்கத்தில் மாறுபடாமல் மதுரைக் காண்டத்தோடு சிலப்பதிகாரக் கதை முடித்திருக்கின்றது. இதன் பிறகு தொடங்கும் வஞ்சிக் காண்டத்தைச் சிலப்பதி காரக் கதையோடு இணைக்காமல் ஒரு தனிக் கதையாகவும் வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் வஞ்சிக் காண்டத்தின் கதையமைப்புக் காணப்படுகின்றது. வஞ்சிக் காண்டம் இளங்கோ அடிகளால் இயற்றப் பட்டிருக்க முடியாது என்பதற்கு வேறு சில ஆதரவுகளும் காணப்படுகின்றன. இவைகள் வஞ்சிக் காண்டத்திலேயே உள்ளவை. புகார்க்காண்டத்திலே காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்புச் சொல்லப்படுகின்றது. அங்கு நடக்கும் தொழில்கள், வாணிகம், வாழும் மக்கள், அவர்கள் பொழுது போக்கு, நகர வீதிகளின் அமைப்பு, அவைகளின் சிறப்பு-இவைகள் எல்லாம் தெளிவாகக் கூறப்படுகின்றன. இதுபோலவே மதுரைக் காண்டத்திலும், மதுரை நகர மாண்பு, அங்கு நடைபெறும் வாணிகம், அங்கு வாழும் மக்கள், வீதிகளின் அமைப்பு ஆகியவைகள் சொல்லப்படுகின்றன. வஞ்சிக் காண்டத்திலே, வஞ்சி நகரைப்பற்றி இந்த முறை யிலே சொல்லப்படவில்லை. புகாரைப்பற்றியும், மதுரையைப் பற்றியும் காண்பதுபோல வஞ்சியைப்பற்றிக் காண முடிய வில்லை. வஞ்சிக் காண்டம் இளங்கோ அடிகளால் இயற்றப் பட்டிருக்குமானால் புகாரைப்போலவே, மதுரையைப்போலவே வஞ்சியைப்பற்றியும் படம்பிடித்துக் காட்டியிருப்பார். வஞ்சிக் காண்டத்திலே காணப்படும் மற்றொரு கதையைச் சிலப்பதிகாரம் படிப்போர் ஊன்றிப் பார்க்கவேண்டும். கொற்கை நகரத்திலே இளவரசனாக இருந்த வெற்றி வேல் செழியன் தனது நாட்டுக்கு நேர்ந்த கேட்டை அறிந்தான்; பொற்கொல்லர்களின்மேல் சினங் கொண்டான். ஒரு முலையைக் குறைத்த சிறந்த பத்தினியாகிய கண்ணகிக்கு ஒரே நாளில் ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டான்; தனது அரசனை இழந்து வருந்தும் மதுரை மூதூரில் அரசுக்கட்டில் ஏறினான்; தென்னாட்டு ஆட்சிக்குரியதான அரியணையில் அமர்ந்தான்; சந்திர குலத்தோனாகிய அவன், காலைக் கதிரவன் ஒற்றை ஆழித் தேரின்மேல் ஏறியதுபோல அரியணை ஏறினான். கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் பொன்தொழில் கொல்லர் ஈர்ஐஞ் ஞூற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபகல் எல்லை உயிர்ப்பலி ஊட்டி, உரைசெல வெறுத்த மதுரை மூதூர் அரைசு கெடுத்து அலம் வரும் அல்லல் காலை, தென்புல மருங்கின் தீதுதீர் சிறப்பின் மன்பதை காக்கும் முறைமுதல் கட்டிலின் நிரைமணிப் புரவி ஒர்ஏழ் பூண்ட ஒருதனி ஆழிக் கடவுள் தேர்மிசைக் காலைச் செங்கதிர்க் கடவுள் ஏறினன் என, மாலைத்திங்கள் வழியோன் ஏறினன் (நீர்ப்படை 127-138) நீர்ப்படை காதையிலே கூறப்படும் இச்செய்தி உண்மையாக இருக்க முடியுமா என்பதைச் சிந்திக்வேண்டும். ஒரு பொற்கொல்லன் கோவலனைக் காட்டிக்கொடுத் தான் என்பதற்காக ஆயிரம் பொற்கொல்லர்களைக் கொல்லுவது எந்த நீதியைச் சேர்ந்தது? இதை ஒரு நீதி - அறம் - நியாயத் தீர்ப்பு என்று எடுத்துக்கொண்டால் இதன் விளைவு என்ன? ஒரு குற்றவாளிக்குப் பதிலாக அவனைச் சேர்ந்த-அவன் வகுப்பைச் சேர்ந்த-குற்ற மற்றவர்கள் ஆயிரம் பேர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். இது அறமாகுமா? வெற்றிவேல் செழியன் இத்தகைய கொடுஞ் செயலைச் செய்திருக்க முடியுமா? செய்திருந்தால் அவன் ஒரு செங்கோல் வேந்தனா? ஒழுக்கொடு புணர்ந்தஇவ் விழுக்குடிப் பிறந்தோர் (கட்டுரை காதை 40) என்று பாண்டியர்குலப் பெருமை பாராட்டப்படுகின்றது, பாண்டியர்கள் ஒழுக்கங் குன்றாதவர்கள்; நீதி தவறாதவர்கள்; சிறந்த குடியிலே பிறந்தவர்கள் என்றெல்லாம் இளங்கோவடிகள் பாராட்டுகின்றார். கட்டுரை காதையிலே பாண்டியர்களின் அறநெறியை விளக்கும் பல வரலாறுகள் காணப்படுகின்றன. இத்தகைய பாண்டியர் பரம்பரையைச் சேர்ந்த வெற்றி வேல் செழியன், குற்றமற்ற பொற்கொல்லர்களுக்குக் கொடுமை செய்திருக்க முடியுமா? இதைத்தான் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வஞ்சிக்காண்டம் இளங்கோவடிகளால் பாடப்பட்டிருக்கு மாயின் இத்தகைய அநாகரிகச் செயலை அவர் குறிப்பிட்டிருக்க மாட்டார்; பாண்டியன் தலையிலே சுமத்தியிருக்க மாட்டார். இது உறுதி. வஞ்சிக் காண்டத்தில் உள்ள மற்றொரு செய்தியும் ஊன்றிக் காணவேண்டியதாகும். நான் பத்தினிக்கோட்டத்தை அடைந்தேன்; கண்ணகி தேவந்தியின்மேல் தோன்றினாள். நான் துறவு பூண்ட நிகழ்ச்சியை எடுத்துரைத்தால் என்று இளங்கோவடிகளே சொல்லிக்கொள்ளு வதாக வரந்தரு காதையிலே காணப்படு கின்றது (வரந்தரு. 171-188) இது ஒரு சுவையற்ற நிகழ்ச்சியாகும். தெய்வம் தோன்றி ஒரு செய்தியைச் சொல்லுகிறதென்றால், அது நாம் அறியாத செய்தியாக இருக்கவேண்டும். அப்பொழுது தான் அது தெய்வம் தெரிவித்த செய்தியாக மதிக்கப்படும். கண்ணகித் தெய்வம் இளங்கோ அடிகளுக்குக் கூறிய செய்தி அவர் அறியாதது அன்று. அவருக்குத் தெரிந்த செய்தி யையே தெய்வம் முன்வந்து திருப்பிச் சொல்லியதில் என்ன புதுமை இருக்கிறது? இச்செய்தியையும் இளங்கோவடிகள் தாமே எழுதிக் கொள்ளுவது சிறிதும் பொருத்தமற்றதாகும். இந்தச் செய்தியிலே எந்தச் சுவையும் அமையவில்லை. உண்மையில் வஞ்சிக் காண்டம் இளங்கோ அடிகளால் பாடப் பட்டதாயிருந்தால் இச் செய்தி அதில் இடம் பெற்றிருக்காது. வஞ்சிக் காண்டத்திலே, வஞ்சி நகரைப்பற்றி விளக்கமாகக் கூறப்படாமை, பாண்டியர் மரபுக்கு மாசு கற்பிக்கும் முறையிலே வெற்றிவேற்செழியன் தலையிலே சுமத்தப்பட்ட பழியான கொலைக்குற்றம், இளங்கோவடிகள் தனது கதையைத் தானே சொல்லிக்கொள்வது, வஞ்சிக் காண்டக் கதை சோழ-பாண்டியர் களைவிட சேரமன்னர்களையே மிகுதியாகப் போற்றுவதாக அமைந்திருப்பது, சிலம்பால் விளைந்த கதை யைப்பற்றிய தொடர்பு அதிகமாகக் காணப்படாமை-இவைகளை யெல்லாம் எண்ணிப் பார்ககவேண்டும். எண்ணிப்பார்த்தால்,புகார்க் காண்டத்தையும், மதுரைக் காண்டத்தையும் பாடிய புலவரால் வஞ்சிக்காண்டம் பாடியிருக்க முடியுமா என்ற ஐயம் பிறக்காமல் போகாது இந்த ஐயத்துக்குத் தெளிவு காணவேண்டியது மிகமிக அவசியமாகும். வஞ்சிக் காண்டம் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது அன்று என்பது உறுதியானால் பதிகத்தைப்பற்றியும் முடிவு கட்டி விடலாம். அது வஞ்சிக் காண்டம் பாடிய பின்னரே பாடப்பட்டது என்று தீர்மானிப்பது எளிது. இவ்வாறு பதிகமும், வஞ்சிக் காண்டமும் இளங்கோவடிகளின் படைப்பல்ல; வேறு யாரோ ஒரு புலவரால் செய்யப்பட்டவை என்ற முடிவை ஏற்றுக்கொண்டால், சிலப்பதிகாரம்பற்றிய சில குழுப்பங்கள் தெறிவடைகின்றன. சிலப்பதிகாரக் கதை அந்நூலாசிரியர் காலத்தில் நடந்த கதை அன்று; பழங்செய்திகள் சிலவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு எழுதப்பட்டது; புதிய கற்பனைகளைக் கலந்து எழுதப் பட்டது; பல நல்லறங்களை மக்களுக்குப் போதிக்கும் கருத்துடன் எழுதப்பட்டது; சிறப்பாகஅரசியல் உணர்ச்சியை ஊட்டுவதற்காகவே சிலப்பதிகார காவியம் எழுதப் பட்டது. இளங்கோவடிகளைப்பற்றி காவியம் எழுதப்பட்டது. இளங்கோவடிகளைப்பற்றி வழங்கும் கதை கற்பனை; அவர் வரலாற்றை அறிய முடியவில்லை. இவ்வாறு முடிவுகட்டுவதற்குப் பதிகமும், வஞ்சிக் காண்டமும் தாம் தடைகளாக இருக்கின்றன. அவைகளைப் பிரித்து வைத்துப் பார்த்தால் மேலேகண்ட முடிவுகள் உண்மை என்று நிலைபெறும். ஆதலால் ஆராய்ச்சியாளர்கள் இதைப்பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரவேண்டியது இன்றியமையாதது. சங்க நூலா? பிற்கால நூலா? சிலப்பதிகாரம் சங்ககால இக்கியமா அல்லது பிற்கால இலக்கியமா என்ற ஆராய்ச்சி இன்னும் முடிவு பெறவில்லை. பழந்தமிழ்ப் புலவர் பலரும் சிலப்பதிகாரம் சங்ககால இலக்கியம் என்றுதான் நம்புகின்றனர். ஆராய்ச்சியாளர்களில் சிலரும்இப்படித்தான் இயம்புகின்றனர். பதிற்றுப்பத்தின் ஐந்தாம்பத்துக்குரிய குட்டுவனே சிலப்பதிகாரச் செங்குட்டுவன்; அவன் தம்பிதான் இளங்கோ அடிகள் என்ற நம்பிக்கை. மணிமேகலை ஆசிரியரான மதுரைக் கூலவாணிகன் சாத்தன் என்பவரும், கடைச்சங்கப் புலவரான சீத்தலைச் சாத்தனார் என்பவரும் ஒருவர்தான்; இவரும் இளங்கோவடி களும் சம காலத்தவர்கள் என்ற நம்பிக்கை. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியம் என்று சங்கநூல் வரிசையுள் சிலப்பதி காரத்தையும் வைத்து வழங்கும் வழக்கு. இலங்கைக் கயவாகு மன்னன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டி லிருந்தவன்; அவன் கண்ணகியின் கல்நாட்டு விழாவுக்கு வந்திருந்தான் என்று வஞ்சிக் காண்டத்தில் காணப்படும் செய்தி. இவைகளையெல்லாம் வைத்துக்கொண்டே சிலப்பதிகாரம் சங்ககால இலக்கியம் என்று கூறுகின்றனர். ஆராய்ச்சி அறிஞர்கள் இதை ஒத்துக்கொள்ளவில்லை. சிலப்பதிகாரம் கடைச்சங்க கால நூல் அன்று என்பதைக் காரணங்களுடன் விளக்கியிருக்கின்றனர். சிலப்பதிகாரத்தில் உள்ள சோதிடக் குறிப்புக்களைக் கொண்டு, காலஞ்சென்ற எல். டி. சாமிக்கண்ணுப்பிள்ளை அவர்கள் சிலப்பதிகார காலத்தை ஆராய்ந்திருக்கின்றார். கி.பி. 8-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேதான் இந்நூல் தோன்றி யிருக்கவேண்டும் என்று முடிவுகட்டுகின்றார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் சிலப்பதிகாரம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டில் பிறந்த நூல்தான் என்பதைத்தக்க காரணங்களுடன் தெளிவு படுத்தியிருக்கிறார். காவிய காலமே கி.பி. 750 முதல் 1200 வரையில் என்பதுதான் பேராசிரியர் கருத்து. பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் காவிய காலம் என்னும் நூலிலே சிலப்பதிகார காலத்தைப்பற்றிய அவர் முடிவைத் தெளிவாகக் காணலாம். வள்ளுவர் காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு; வள்ளுவர் குறளும், கருத்தும் சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன. நான்மணிக்கடிகை, பழமொழி, ஆசாரக்கோவை முதலிய நூல்களின் கருத்துக்கள். சிலப்பதிகாரத்திலே காணப்படுகின்றன. இந்நூல்கள் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப்பின் பிறந்தவை. சங்க நூல்களிலே திருவேங்கடம் ஒரு வைணவத்தலமாகக் காணப்படவில்லை; சீரங்கமும் காணப்படவில்லை. இவைகள் வைணவத் தலங்களாக சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. சங்க நூல்களிலே கலைமகளைப்பற்றிய குறிப்புக்கள் இல்லை. இத்தெய்வம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. சங்க காலத்திலே பத்தினித்தெய்வ வழிபாடு காணப்பட வில்லை; பத்தினிப் பெண்டிர்க்குக் கல்நாட்டும் வழக்கமும் காணப்படவில்லை; சிலப்பதிகார-வஞ்சிக் காண்டம் பத்தினித் தெய்வ வழிபாட்டைப்பற்றியே கூறுகின்றது. சங்க கால நூல்களிலே புரோகிதத் திருமணம் காணப்பட வில்லை; சிலப்பதிகாரத்திலே புரோகித மணமே காணப்படு கின்றது; கண்ணகி-கோவலன் திருமணம் புரோகித மணமாகும். சங்க கால நூல்களிலே மதப்பிரசாரம் காணப்படவில்லை; சிலப்பதிகாரம் சைனமதப் பிரசார நூலாகக் காணப்படுகின்றது. சங்க கால இலக்கியங்களிலே புலால் மறுத்தல், கள்ளுண் ணாமை வலியுறுத்தப்படவில்லை. ஔவையார், கபிலர் போன்ற பெரும் புலவர்கள் எல்லாம் மாமிசமும் மதுவும் அருந்தியிருக் கின்றனர். சிலப்பதிகாரம். ஊன் ஊண் துறமின், கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின! என்று மது மாமிசங்களைக் கண்டிக்கிறது. சங்ககால நூல்களிலே பாணர், கூத்தர், விறலியர், பாடினி என்பவர்களே இசை, நடனம் முதலிய கலைகளிலே வல்லுநர்களா யிருந்தனர்; இவர்கள் பாணர் என்னும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்திலே விலைமாதர்கள் இசை, நடனம் முதலிய கலைகளிலே தேர்ந்திருந்தனர்; இவர்கள் அரசர்களால் பரிசளிக்கப்பட்டனர்;பாராட்டப்பட்டனர் என்று காணப்படுகின்றது. பதிற்றுப்பத்துக் குட்டுவன் எந்தக்கடவுளை வழிபட்டான் என்று சொல்லப்படவில்லை. சிலப்பதிகாரச் செங்குட்டுவன் சிவபெருமான் அருளால் தோன்றினான்; சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. சங்க காலத்திலே வழக்கத்தில் இல்லாத வடமொழிப் பெயர்களும். சொற்களும் சிலப்பதிகாரத்தில் நிரம்பக் காணப் படுகின்றன. சிலப்பதிகாரம் சங்ககால நூல் அன்று; பிற்கால நூல் தான் என்பதை மேலே காட்டிய சான்றுகள் வலியுறுத்துகின்றன. இவைகள் எல்லாம் மிகவும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்க செய்திகள். சிலப்பதிகாரம் பழங்கதையாக இருக்கலாம்; அல்லது புதுக்கதையாக இருக்கலாம். அல்லது பழமையும், புதுமையும் கலந்த கதையாக இருக்கலாம். சிலப்பதிகாரத்தின் பதிகமும், வஞ்சிக் காண்டமும் இளங்கோவடிகளால் பாடப் படாதவை களாக இருக்கலாம். சிலப்பதிகாரம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டிலே தோன்றியதாக இருக்கலாம்; அல்லது சங்ககால நூலாகவே இருக்கலாம். கதை நிகழ்ச்சியிலே இயற்கைக்கு மாறான தெய்வீக நிகழ்ச்சிகள் பல கலந்து கிடக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, அது ஒரு உயர்ந்த நூல் என்பதை எவரும் மறுப்பதில்லை. சிலப்பதிகாரம் சிற்றிலக்கியமா பேரிலக்கியமா? அது ஒரு காவியமா அல்லது நாடகமா? என்ற வழக்கும் நமக்கு வேண்டாம். அது சிற்றிலக்கியமாக இருக்கட்டும்; அல்லது பேரிலக்கியமாக இருக்கட்டும்; அது ஒரு காவியமாக இருக்கட்டும் அல்லது நாடகமாகவே இருக்கட்டும். இதைப் பற்றியும் நாம் கவலைப் படவேண்டாம். தமிழர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் விளக்கும் நூல்களிலே சிலப்பதிகாரம் தலைசிறந்த ஒரு நூல். சிலப்பதிகாரம் செந்தமிழ்த்தேனைச் சிந்தையில் நிரப்பும் இனிய பாடல்களைக் கொண்ட நூல்; நல்ல அறங்களைப் போதிக்கும் நூல்; உள்ளத்திலே உணர்ச்சியை எழுப்பும் நூல்; இது அதைப் படித்தவர்கள் அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற உண்மை. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாரதியார் பாராட்டியிருப்பது மறுக்க முடியாத உண்மை. சிலப்பதிகாரத்தைப் பாராட்டுவதற்கு இதைத்தவிர வேறு சொற்களையோ சொற்றொடர்களையோ தேர்ந்தெடுக்க இயலாது. வாழ்க செந்தமிழ்ச் சிலப்பதிகாரம்! மணிமேகலை காட்டும் மனித வாழ்வு (1960) முன்னுரை சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பவை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்கள். பல்லாண்டுகளாக இவைகளை ஐம்பெருங் காப்பியங்கள் என்று தமிழ்ப் புலவர்கள் வழங்கி வருகின்றனர். இவைகளில் ஒன்றேனும் இந்துமதம் - அதாவது வேதத்தை அடிப்படையாகக் கொண்ட மதத்தைப் பற்றிக் கூறவில்லை. ஐம்பெருங் காப்பியங்களிலே, சிலப்பதிகாரம், சிந்தாமணி, வளையாபதி மூன்றும் சமண மதக் கொள்கையை வலியுறுத்தும் காவியங்கள். மணிமேகலையும் குண்டலகேசியும் புத்தமதக் கொள்கைகளைக் கூறும் காவியங்கள். ஐம்பெரும் காப்பியங்களுள், இன்று நமக்குக் கிடைபபன மூன்றுதான். அவை சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பவை. இவற்றுள் சிலம்பும் மணிமேகலையும் கதைத் தொடர் புள்ளவை; தமிழிலேயே தோன்றிய காவியங்கள். சிலம்பு சமணக் கொள்கையைப் பிறமத வெறுப்பில்லாமல் சொல்லுகின்றது. மணிமேகலை, பிற மதக் கொள்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்கிறது; புத்தமதமே உயர்ந்ததென்று சொல்லுகிறது. இரண்டு நூல்களும் ஏறக்குறைய ஒரே காலத்தில் தோன்றியவை. சிலப்பதிகாரத்தைப் பெருங் காப்பிய வரிசையிலே சேர்க்க முடியாது; பூரணமான காவியத்தன்மை அதில் இல்லை என்போர் உண்டு. சிலப்பதிகாரத்தையே காவியமாக ஒப்புக் கொள்ளாதவர்கள் மணிமேகலையையும் காவிய வரிசையிலே சேர்க்கத் துணியமாட்டார்கள். இவைகள் காவியங்களோ, காவியங்கள் அல்லவோ, முன்னோர்கள் பெருங்காப்பிய வரிசை யிலே வைத்துப் போற்றி வந்திருக்கின்றனர். ஆதலால், நாமும் இவைகளைக் காப்பியங்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். இதனால் நமக்கு நட்டம் ஒன்றுமே இல்லை. ஐம்பெருங் காப்பியங்கள் எல்லாம் சங்க காலத்து நூல்கள்; கடைச்சங்க காலம் என்று கருதப்படுகின்ற கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்திய நூல்கள் என்று பிடிவாதமாக சாதிப் போர் உண்டு. ஐம்பெருங் காப்பியங்களின் கவியமைப்பு, நடைப்போக்கு, கொள்கைகள், அவைகள் போதிக்கும் பொருள்கள் இவைகளை கவனிக்கவேண்டும். சங்க நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத் தொகை நூல்களின் போக்கையும் கவனிக்க வேண்டும். இரண்டை யும் ஒப்பிட்டுப் பார்ப்போர் இரண்டும் ஒரு காலத்தவை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஐம்பெருங் காப்பியங்கள் சங்க காலத்திற்குப் பின் பிறந்தவை என்று தான் எண்ணுவார்கள். காலத்தால் முற்பட்டவைகள்தாம் சிறந்தவை. பிற்பட்டவை அவ்வளவு சிறந்தவை அல்ல என்ற எண்ணமுடையோர் பலர் உண்டு. இவர்கள்தாம், பழந்தமிழ் நூல்களைக் கிறிதுவின் காலத்திற்கு முன்னே பிறந்தவை, கலியுகம் பிறப்பதற்கு முன்னே பிறந்தவை என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சிறந்த கவிதைகள்-காவியங்கள்-நூல்கள் எக்காலத்தில் பிறந்தால்தான் என்ன? தங்கத்துக்கும், வயிரத்துக்கும் பழமை புதுமை காரணமாக உயர்வு தாழ்வு ஏற்படுவதில்லை. அவற்றின் தூய தன்மையைப் பொறுத்தே உயர்வு தாழ்வுகள் உண்டாகின்றன. இவை இலக்கியங்களுக்கும் பொருந்தும். இவ்வுண்மையை மறந்தவர்களே பழமைக்குத்தான் உயர்வு உண்டு என்று கருது வார்கள். நடுநிலையில் நின்று ஆராய்ந்து நூல்களின் காலத்தைக் காண்பது தான் பயன் தருவதாகும். சிறந்த ஆசிரியர்கள் தாம் எழுதும் நூல்களிலே, அவர்கள் காலத்திலிருந்த நாட்டின் நிலையையும், மக்களின் வாழ்வையும் சித்தரிக்காமலிருக்க மாட்டார்கள். இவ்வாறு எழுதப்படும் நூல்கள் தாம் சிறந்த இலக்கியங்களாகவும் நிலைத்திருக்கும். ஆதலால், இலக்கியங்கள் தோன்றிய காலத்தைக் கணக்கிட்டுக் காண்பதன் மூலம், அக்காலத்து மக்கள் நிலை, அவர்களின் பண்பாடு, நாட்டு நிலைமை இவைகளையெல்லாம் அறியலாம். இது சரித்திர ஆராய்ச்சிக்கு துணை செய்வதாகும். மணிமேகலையும், சிலப்பதிகாரமும் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குச் சற்று முன்னோ பின்னோ தோன்றியதாகும் என்பதே பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்களின் கொள்கை. அவருடைய காவிய காலம் என்னும் நூலிலே இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆகவே மணிமேகலை கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே, தமிழ் நாட்டின் சமுதாய-அரசியல் நிலைமைகள் எப்படியிருந்தன என்பதை அறிவதற்கு உதவும் நூலாகும். மணிமேகலை நூலின் கருத்துக்கள், கொள்கைகள் அதில் கூறப்படும் புத்தமத தத்துவங்கள், தமிழ்நாட்டு நிலை, மக்களின் பழக்க வழக்கங்கள், அரசியல் கொள்கை போன்ற செய்திகள், இந்நூல் தனித்தனித் தலைப்பின் கீழ் ஆராயப்பட்டிருக்கின்றன. மணிமேகலை முழுக்க முழுக்கப் புத்தமதப் பிரச்சாரம் செய்யும் நூல்தான். ஆயினும் இதில் இலக்கியச் சுவையும் இணைந்து கிடக்கின்றது. இதனாலேயே இது இலக்கியமாகவும் போற்றப்படுகின்றது. இலக்கியச் சுவை பகுதியிலே இதைக் காணலாம். மணிமேகலை புத்தமதத்தைப் போதிக்கும் நூலாயினும், மனித சமூக நல்வாழ்வைக் குறியாகக் கொண்ட ஒரு நூல் என்றே கூறலாம். இத்தகைய சிறந்த நூலின் கொள்கையைத் தமிழ் மக்கள் அறியவேண்டியது அவசியமாகும். சென்னை, 5-2-1960 மணிமேகலையின் மாண்பு மணிமேகலை என்னும் இத்தொடர் சிந்தைக்கும் செவிக் கும் இனிமை தருவது. இன்று பலர் தங்கள் பெண் குழந்தை களுக்கு மணிமேகலை என்று பெயர் வைப்பதைக் காண்கின் றோம். சொற்சுவை கருதியே இப் பெயரிட்டு அழைக்கின்றனர். இது ஒரு தெய்வப்பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப் பெயரிலே உள்ள காவியத்திலும் இனிமை நிரம்பியிருக்கும் என்பதில் ஐயம் இல்லை. புரட்சிக் காவியம் மணிமேகலை ஒரு புரட்சிக் காவியம். சிலப்பதிகாரத்தைப் போலவே புரட்சிக்கு வழிகாட்டும் காவியம். ஆனால் சிலப்பதி காரம் காட்டும் புரட்சி வழி வேறு; மணிமேகலை காட்டும் புரட்சி வழி வேறு. சிலப்பதிகாரம் அரசியல் புரட்சியை மக்க ளுக்கு அறிவுறுத்துவது; மணிமேகலை சமுதாயப் புரட்சியை மக்களுக்கு அறிவுறுத்துவது. இதுதான் இரண்டுக்கும் உள்ள வேற்றுமை. மணிமேகலையின் காவிய அமைப்பிலேயே புரட்சித் தன்மை அமைந்திருக்கின்றது. பழங்காலத்துக் காவியங்கள் பெரும்பாலும் அரச குடும்பத்தைத் தழுவிய கதைகளாகத் தான் இருக்கும்; அல்லது தெய்வத்தை தழுவிய கதைகளாக இருக்கும். காவியத்தின் கதாநாயகர்கள் அரசர்களாகவே, அல்லது கடவுளர்களாகவோதான் இருப்பார்கள். இந்த முறைக்கு மாறானது மணிமேகலைக் காவியம். சிலப்பதிகாரமாவது ஒரு பணக்காரக் குடும்பத்தின் கதை. மணிமேகலையோ ஒரு பரத்தையின் மகளைப் பற்றிய கதை. மணிமேகலைக் காவியத்தின் கதாநாயகி ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்ணிலும் ஒரு சாதாரணப் பரத்தையின் பெண். ஒரு பரத்தையின் மகளைக் கதைத் தலைவியாக வைத்துக் காவியம் எழுவது ஒரு புரட்சிமுறையல்லவா? யாரையும் கதைத் தலைவராக வைத்து காவியம் எழுதலாம். எழுதமுடியும் என்பதை மணிமேகலை நமக்கு உணர்த்துகின்றது. இது மணி மேகலைக்குள்ள ஒரு தனிச் சிறப்பாகும். மணிமேகலை முதல் நூல்; தமிழிலேயே, தமிழ்ப் புலவரால் எழுதப்பட்ட நூல். வேறு எந்த நூலில் இருந்தும் தொகுத்தோ விரித்தோ எழுதப்பட்டதன்று; வேறு எந்த மொழி யிலிருந்தும் அப்படியே பெயர்த்து எழுதப்பட்டதும் அன்று. மணிமேகலைக்குரிய மாண்புகளில் இதுவும் ஒன்று. சிலம்பும் மேகலையும் சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலைக்கும் கதைத் தொடர்பு உண்டு. கோவலனது காதற் பரத்தை மாதவி; அவள் மகள் மணி மேகலை. கோவலன் பரத்தையின் நட்பால் செல்வத்தை யிழந்தான். மனைவியுடன் சேர்ந்து மதுரைக்குப் போனான். அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான். அதனால் அரசும் மதுரையும் அழிந்தன. கோவலன் மனைவி கண்ணகியின் துன்பம் இவ்வழி வுக்குக் காரணம். காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாதவி இச்செய்திகளைக் கேட்டதும் தாங்கமுடியாத துக்கம் கொண்டாள். புத்த சங்கத்தை அடைந்தாள். பிக்குணியானாள். தன் மகள் மணிமேகலையையும் பிக்குணியாக்கினாள். இந்த மணிமேகலையின் வரலாற்றைக் கூறுவது தான் இந்நூல். ஆதலால் இது சிலப்பதிகாரத்தின் பின் நடந்த நிகழ்ச்சிகளை நவில்வதாகவே அமைந்திருக்கின்றது. சிலப்பதிகாரத்தின் கதைப்போக்கு வேறு; மணிமேகலை யின் கதைப்போக்கு வேறு. சிலப்பதிகாரம், அரசியல் பிழைத் தோர்க்கு அறம் கூற்றம் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு வீரநடை போட்டு செல்கின்றது. கொடுங்கோலை எதிர்த்துப் போராட வேண்டும் என்னும் வீர உணர்ச்சியை விதைக்கின்றது. மணிமேகலையிலும் அரசியல் அறிவுரைகள் உண்டு. நீதியிலே நின்று ஆளவேண்டும் ஆட்சி அறநெறியிலே நிற்கா விட்டால் நாடு நலிவுறும்; நன்மையான எச்செயலும் நடை பெறாது; மக்களின் ஒழுக்கப் பண்பு மறைத்தொழியும்; நாட்டிலே வறுமைப் பேய் புகுந்து எல்லா நன்மைகளையும் சிதறடித்து விடும். இக் கருத்துக்கள் மணிமேகலையில் அமைந்திருக்கின்றன. ஆயினும் அதன் முதன்மையான நோக்கம் மக்கள் அனைவரும் பட்டினியின்றி வயிறார உண்டு வாழ வேண்டும்; ஏனைய உயிர்களும் உணவுண்டு இனிது வாழவேண்டும்; வறுமையற்ற சமுதாயத்திலேதான் மனிதத்தன்மை நிலைத்து நிற்கும்; பசிப்பிணி என்னும் பாவி ஆட்சிபுரியும் சமுதாயத்திலே ஒழுக்கம் நிலைத்திருக்காது; இன்பத்திற்கு இடம் இல்லை; மகிழ்சசிக்கு வாழ்வில்லை; சாந்தி, சமாதானம் ஒழிபும், ஆதலால் எல்லாவுயிர் களையும் பட்டினிக்கு ஆளாகாமல் காத்தலே அறிஞர் கடமை; ஆட்சியின் பொறுப்பு. இவ்வுண்மைகளையே எடுத்துக்காட்டு கின்றது மணிமேகலை. துறவு பூண்ட மணிமேகலை சோம்பித் திரியவில்லை. பசியால் வருந்துவோர்க்கு உணவிடுவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தாள். சுருங்கச் சொன்னால் சிலப்பதிகாரம் அரசியலைப் போதிப்பது; மணிமேகலை அறத்தை போதிப்பது என்று சொல்லி விடலாம். மணிமேகலையின் பெயர் மணிமேகலைத் துறவு என்பது இந் நூலுக்கு மற்றொரு பெயர். மணிமேகலை குலமகனாகிய கோவலன் புதல்வி தான்; ஆயினும் பரத்தையாகிய மாதவியின் மகள். இளம் பெண்; அழகு நிறைந்தவன். அவளை அரசகுமாரன் காதலிக்கிறான். சித்திரா பதி என்பவள் மாதவியின் தாய்; மணிமேகலையின் பாட்டி. அவண் மணிமேகலையை அரசகுமாரனுக்குக் காதலியாக்க முயல்கின்றாள். இம்முயற்சிக்கு மாதவி இடந்தரவில்லை. இளவரசனுடைய முயற்சிகளும் பலிக்கவில்லை. மணிமேகலையும், தனது தூய்மையைப் பிறர் உதவியின்றித் தானே பாதுகாத்துக் கொள்கின்றாள். இந்நூலாசிரியர் மணிமேகலையை மாதவியின் மகள் என்று குறிப்பிடவில்லை; கண்ணகியின் மகள் என்றே குறிப்பிடுகின்றார். மணிமேகலை யை மாசற்றவள் என்று காட்டவே இவ்வாறு குறிப்பிட்டார். காவலன் பேர்ஊர்க் கனை எரி ஊட்டிய மாபெரும் பத்தினி மகள் மணிமேகலை (காதை 2, வரி 54-55) பத்தினித் தெய்வமாகிய கண்ணகியின் மகள் மணி மேகலை. ஆதலால் அவள் பரத்தமைத் தொழிலுக்கு உரியவள் அல்லள்; அரிய தவநெறியில் செல்லுவதற்குத்தான் தகுதியுள்ள வள் என்று கூறினார். மணிமேகலை எதிரிகளின் இடையூறு களால் தனது நிலை தவறவில்லை; துறவு நிலையிலே உறுதி யுடன் நின்று ஒழுகுகின்றாள். ஆதலால் தான் இந்நூலை மணிமேகலைத் துறவு என்று கூறினர். மணிமேகலையைப் பற்றி உரைக்கும் பழைய வெண்பா ஒன்று. இதன் பெயர் மணிமேகலைத் துறவு என்றே சொல் கின்றது. பூத்தபுனல் பூம்பொய்கைப் பூம்புகார் மாதவிக்கு வாய்த்த மணிமேலைத் துறவை என்பது அவ் வெண்பாவின் தொடக்கம். சிவஞானசித்தி யார்க்கு உரை எழுதிய ஞானப்பிரகாசர் என்பவரும் இந் நூலை மணிமேகலைத் துறவு என்றே குறிப்பிடுகின்றார். இவைகளால் பண்டைக் காலத்தினர் இந்நூலை மணிமேகலைத் துறவு என்றே வழங்கினர் என்று கருதலாம். மணிமேகலையின் மாண்பு மணிமேகலை நாடு, மொழி, இன பேதம் இல்லாமல் எல்லா மக்களையும் பட்டினிக் கொடுமையிலிருந்து காக்க வேண்டும் என்றுதான் சொல்கின்றது; ஆயினும் புத்தமதக் கொள்கைகளையே போதிக்கின்றது. மற்ற மதங்கள் பொய்ம் மதங்கள், அவைகள் கூறுவன பொய்யுரைகள், படிற்றுரைகள் என்று வன்மையாகக் கண்டிக்கின்றது புத்தரையும் புத்தமதக் கொள்கைகளையுமே பாராட்டிப் போற்றுகின்றது. மக்கள் அனைவரும் பிறப்பினால் ஒன்றுதான்; பிறப்பி னால் மக்களிடையே உயர்வு தாழ்வு பாராட்டுவதில் பொருள் இல்லை. பட்டினியால் வாடி வதங்குவோர் யாராயி னும் சரி. நாடு, மொழி, இனபேதம் இன்றி அவர்களையெல்லாம் காப்பாற்ற வேண்டும். உயர்களுக்கெல்லாம் உணவளிப்பதே உயர்ந்த அறம். இது புத்தர் கொள்கை. புத்தர் தர்மம் என்று வலியுறுத்துகின்றது மணிமேகலை. ஆதலால் மணிமேகலை புத்த தருமத்தைப் போதிக்க பிறந்த நூல் என்பது உறுதி. மணிமேகலையின் அமைப்பு மணிமேகலை அழகிய ஆசிரியப்பாவால் ஆகிய நூல்; முப்பது காதைகளாக அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு காதைக்கும் தலைப்பெயர் உண்டு. இந்நூலின் இறுதி மூன்று காதைகளும் மத சம்பந்தமான செய்திகளைக் கூறுவன. 27-வது காதையின் தலைப்புப் பெயர் சமயக் கணக்கர் தந்திரம் கேட்ட காதை என்பது. இதில் புத்த மதம் அல்லாத ஏனைய மதங்களின் கொள்கைகள் கூறப்படுகின்றன. 29-வது காதையின் தலைப்புப் பெயர் தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை. 30-வது காதையின் தலைப்புப் பெயர் பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற கதை. இவ்விரண்டு பாதைகளிலும் புத்தமதத் தத்து வங்கள் கூறப்படுகின்றன. இந்த மூன்று காதைகளும் தவிர மற்ற 27 காதைகளும், கற்பனைகளும், அறவுரைகளும், கதைகளும், கதைக் குறிப்புக்களும் நிரம்பியவை. படிக்கப்படிக்க மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் செந்தமிழ்ச் சுவை நிறைந்தவை. மணிமேகலை மக்கள் பணிதான் உயர்ந்த தர்மம் என்பதை வலியுறுத்தும் நூல்தான்; உலக இன்பத்தைப் பழித்து ரைக்கும் நூல்தான்; துறவறமே உயர்ந்ததென்று உரைக்கும் நூல்தான். ஆயினும், இந்நூலிலே ஆங்காங்கே அமைந்து கிடக்கும் இயற்கை வருணனைகள், உவமைகள், கதைப்போக்கு இவைகள் எல்லாம் சிந்தைக்கு இனிமை தரும் வகையில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. நாட்டின் சிறப்பு, நகரங்களின் காட்சி, மக்கள் ஒழுக்கம், இந்நூலாசிரியர் தமது காலத்திலிருந்த அரசியல், சமூகநீதி, தொழில்கள், கலைவளர்ச்சி, மக்கள் மனப்பான்மை, தமிழ கத்துக்கும் மற்ற நாடுகளுக்கும் இருந்த தொடர்பு இவற்றை யெல்லாம் இந்நூலிலே கண்டறியலாம். பழவினை, மறுபிறப்பு, ஆன்மா, சீவகாருண்யம், புண்ணிய-பாவம், சுவர்க்கம்-நரகம், துறவு, அன்னதானம், மதத் தத்து வங்கள், தெய்வீக நிகழ்ச்சிகள் இவைகள் எல்லாம் மணிமேக லையில் நிறைந்து கிடைக்கின்றன. இச் செய்திகளை மிகுதியாக வலியுறுத்தும் நூல்கள் படிப்பதற்கு அவ்வளவு இன்பம் பயப்பன அல்ல; இவைகளில் இலக்கியச் சுவைகளைக் காண்பதும் அரிது. ஆனால் இச் செய்திகளை மிகுதியாகக் கூறும் மணிமேகலை இலக்கியச் சுவையுடன் அமைந்திருக் கின்றது. மணிமேகலையின் தமிழ் நடையும் கற்பனைகளும் படிப் போர் உள்ளத்தை அள்ளிக் கொள்ளும் முறையிலே அமைந் திருக்கின்றன. இது மணிமே கலையின் ஆசிரியர் திறமைக்கு எடுத்துக் காட்டாகும். மணிமேகலையின் ஆசிரியர் இச் சிறந்த நூலின் ஆசிரியர் பெயர் சாத்தன் என்பது. சாத்தனார் என்றும் வழங்குவர். இவரைத் தண்டமிழ்ச் சாத்தன், கூலவாணிகன் சாத்தன் என்று சிலப்பதிகாரப் பதிகம் குறிப்பிடு கின்றது. தண்தமிழ் ஆசான் சாத்தன், நல்நூல் புலவன் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. இப்பெயர்களை, வஞ்சிக் காண்டம் காட்சிக் காதையிலே காணலாம். கூலவாணிகன் சாத்தன் என்ற பெயர் மணிமேகலைப் பதிகத்திலும் காணப்படுகின்றது. இவைகளால் மணிமேகலை ஆசிரியர் பெயர் கூலவாணிகன் சாத்தன் என்பதில் ஐயமில்லை. இவருடைய தமிழ்ப்புலமையின் சிறப்புக் கருதியே இவர் தண்டமிழ்ச் சாத்தன், தண்டமிழ் ஆசான் சாத்தன் என்றும் வழங்கப்பட்டார்; நல்நூல் புலவன் என்றும் பாராட்டப்பட்டார். மணிமேகலை ஆசிரியராகிய கூலவாணிகன் சாத்தனார் என்பவர் வேறு; சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவராகிய சீத்தலைச் சாத்தனார் என்பவர் வேறு இருவரும் ஒருவர் அல்லர். இவ்வுண்மை இந்நூலின் இறுதியில் உள்ள சிந்திக்க வேண்டி யவை என்னும் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் புத்த மதத்தினர் என்பதில் ஐயமில்லை. புத்தர் பெருமையையும் புத்த மதக் கொள்கைகளையும் இவர் பாராட்டிப் பேசும் முறையிலிருந்தே இவ்வுண்மையை உணரலாம். கூலவாணிகள் சாத்தனாரால் இயற்றப்பட்ட இச் செந்தமிழ்க் காவியம் படிப்போர் சிந்தையைக் கவரும் சிறந்த காவியம். தமிழ் நாட்டின் பழக்க வழக்கங்களையும், தமிழர்கள் பண்பாட்டையும், தமிழின் இனிமையையும் எடுத்துரைக்கும் எழில் மிகுந்த காவியம். மணிமேகலைப் படிப்போர் இவ்வுண்மை களை உணர்ந்து உள்ளம் மகிழ்வார்கள். கதைச் சுருக்கம் மணிமேலையின் துறவு மணிமேகலை என்பவன் கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள். கோவலன் மதுரைக்குச் சென்று கொலையுண்டான். அவன் மனைவி கண்ணகி மதுரை மன்னனிடம் வழக்காடி னாள். கோவலன் குற்றமற்றவன் என்று மெய்ப்பித்தாள். மதுரையை எரித்தாள். அதன்பின் பத்தினித் தெய்வமாகப் போற்றப் பட்டாள். இதை அறிந்தாள் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாதவி. உடனே வாழ்க்கையில் வெறுப்படைந்தாள். அறவண அடிகளி டம் உபதேசம் பெற்றுப் புத்த சங்கத்தை அடைந்தாள்; தன் மகள் மணிமேகலையையும் கணிகையர் தொழிலில் ஈடுபடாமல் காத்தாள். அவளையும் புத்த தருமத்தை மேற்கொள்ளும்படி செய்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் ஒவ்வோராண்டும் இந்திர விழா நடைபெறும். இவ்விழா இருபத்தெட்டு நாட்கள் நிகழும். வழக்கப்படி இந்திர விழா தொடங்கிற்று. இந்திர விழாக் காலத்தில் மாதவியின் குடும்பத்தினர் நடனம் ஆடி மக்களை மகிழ்விப்பது வழக்கம். இவ்வாண்டு மாதவி நடனம் ஆடவில்லை. மணிமேகலையையும் நடனத்துக்கு அனுப்பவில்லை. இதனால் ஊரார் பலவாறு உரையாடினர். அது கேட்டு மாதவியின் தாயான சித்திராபதி மனவருத்தம் அடைந்தாள். அவள் தன் தோழி வயந்தமாலையை அழைத்தாள். ஊரார் உரைக்கும் பழிமொழியை மாதவியிடம் உரைப்பாய் என்றாள். வயந்தமாலை மாதவியிருந்த மலர் மண்டபத்தை அடைந்தாள். சித்திராபதியின் செய்தியைக் கூறினாள். கண்ணகியின் மகள் மணிமேகலை, தவ வழியில் செல்லுவதற்கே தகுந்தவள்; பரத்தமைத் தொழிலுக்கு உரியவள் அல்லள்; யானும் அறவண அடிகளின் உபதேசம் பெற்றேன்; தவநெறியை மேற்கொண்டேன்; ஆதலால் அங்கு வருவதற் கில்லை என்று மாதவி வயந்தமாலையிடம் கூறிவிட்டாள். வயந்தமாலை சித்திராபதியிடம் சென்று மாதவியின் செய்தியைக் கூறினாள். இதைக் கேட்ட சித்திராபதி திகைத்துப் போனாள். மணிமேகலை மலர்வனம் புகுதல் வயந்தமாலையும் மாதவியும் உரையாடிக் கொண்டிருந்த போது மணிமேகலை மலர் தொடுத்துக் கொண்டிருந்தாள். கோவலன் உற்ற கொடும் துயரை எண்ணிக் கண்ணீர் விட்டாள். அவளுடைய கண்ணீர்த் துளிகள் அவள் தொடுத்துக் கொண்டிருந்த மலர் மாலையிலே விழுந்தன. அதுகண்ட மாதவி, மணிமேகலையின் கண்ணீரைத் துடைத்தாள். இம் மலர்மாலை உன் கண்ணீரால் தூய்மை இழந்தது; ஆதலால் நீ சோலைக்குப் போய் புது மலர் பறித்து வா என்றாள். உடனே மாதவியின் உயிர்த்தோழியாகிய சுதமதி, வயதுப் பெண் தனியே செல்வது தகாது. ஆதலால் நான் துணையாகப் போகிறேன். உவவனம் என்பது ஒன்று உண்டு. அங்கே ஒரு பளிங்கு மண்டபம் இருக்கின்றது. அதன் உள்ளிருந்து பேசினால் வெளியில் கேட்காது.அம் மண்டபத்துள் ஒரு பதுமபீடம் இருக்கின்றது. அது தெய்வத் தச்சனால் இயற்றப்பட்டது. இந்த வனத்துக்கு மணிமேகலையை மலர் கொய்ய அழைத்துப் போகிறேன் என்று சொன்னாள். மணிமேகலையும் அவளும் அவ் வனத்துக்குப் புறப்பட்டனர். போகும்போது, வீதிகளில் நடந்த வேடிக்கைகள் பலவற்றையும் பார்த்துக் கொண்டு போனார்கள். உவவனத்தை அடைந்தனர். மணிமேகலை அச்சோலையின் அழகைக் கண்டு வியந்தாள். இச்சமயத்தில் காலவேகன் என்னும் யானை மதங் கொண்டு மக்களைத் துன்புறுத்திற்று. இளவரசன் உதயகுமரன் அந்த யானையை அடக்கி விட்டுத் தேரிலே திரும்பிக் கொண்டிருந் தான். மணிமேகலை உவவனத்திற்குப் போயிருப்பதை உணர்ந் தான். அவன் மணிமேகலையின் மேல் காதல் கொண்டிருந்தான். ஆதலால் தனது தேரை உவவனத்தை நோக்கி ஓட்டிக் கொண்டு வந்தான். மணிமேகலை உதயகுமரன் ஊர்ந்து வரும் தேர் ஒலியைக் கேட்டாள். அவன் விருப்பத்தை அவள் அறிந்தவள். ஆதலால் என் செய்வேன் என்று வருந்தினாள். உடனே சுதமதி, மணிமேகலையை அந்தப் பளிங்கு மண்டபத்தில் புகுந்து தாளிட் டுக் கொள்ளும்படி செய்தாள். பளிக்கறைக்கு வெளியிலே சுதமதி நின்று கொண்டிருந்தாள். அங்கு வந்த உதயகுமரன் மணிமேகலையுடன் வந்தாய் என்பது எனக்குத் தெரியும். மணிமேகலை புத்த சங்கத்தை விட்டு இங்கு தனித்துவரக் காரணம் என்ன? என்று சுதமதியை நோக்கிக் கேட்டான். சுதமதி அவனுக்கு உடம்பின் நிலையாமையை எடுத்து ரைத்தாள். அவள் சொல்வதை அவன் கேட்பதற்கு முன்பே, அவன் அவ்வறையினுள் செல்ல நினைத்தான். உள்ளே நுழைய வழியறியாமல் அதன் சுவரைக் கையால் தடவிக்கொண்டு சுற்றி வந்தான். மணிமேகலை தவ ஒழுக்கம் பூண்டவள். நீ அவளை விரும்புதல் தகாது என்று சுதமதி அவனுக்கு அறிவுரை புகன்றாள். அவன் சுதமதியின் வரலாற்றைக் கேட்டுத் தெரிந்து கொண்டான். அதன்பின், நான் மணிமேகலையைச் சித்திரா பதியின் மூலம் அடைவேன் என்று சொல்லிவிட்டுச் சென்றான். உதயகுமரன் போனபின் மணிமேகலை அவ்வறையை விட்டு வெளிவந்தாள். என் மனம் உதயகுமரன் பின் சென்றதற்கு காரணம் யாதோ? என்று சொல்லிக் கொண்டு நின்றாள். மணிமேகலா தெய்வம் வருதல் இச்சமயத்தில் இந்திர விழாவைக் காண மணிமேகலா தெய்வம் ஒரு பெண்ணுருவில் அங்கு வந்தது. பளிக்கறையில் இருந்த பாத பீடத்தை வணங்கி வாழ்த்திற்று. அப்பொழுது அந்திநேரம். அதுவும் நீங்கிச் சந்திரன் புறப்பட்டான். மணிமேகலா தெய்வம் சுதமதியிடம், நீங்கள் இங்கே வந்த காரணம் என்ன? என்றாள். சுதமதி நடந்த நிகழ்ச்சியை நவின்றாள். மணிமேகலா தெய்வம் நீங்கள் இச்சோலைக்கு வெளியே சென்றால், வீதியிலே உதயகுமரன் மணிமேகலையைப் பிடித்துக் கொள்வான். ஆதலால் இச்சோலையின் மேற்குத் திசையில் உள்ள சக்கரவாளக் கோட்டத்தின் வழியே செல்லுங்கள் என்றது. சுடுகாட்டுக் கோட்டத்தைச் சக்கரவாளக் கோட்டம் என்று நீ கூறுவதற்குக் காரணம் என்ன? என்று சுதமதி கேட்டாள். அதற்கான காரணத்தை மணிமேகலா தெய்வம் விளக்கிக் கூறிற்று. இச்சமயத்தில் சுதமதி தூங்கி விட்டாள். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மயங்கும்படி செய்தது. அவனை தூக்கிக் சென்று மணிபல்லவம் என்னும் சிறிய தீவிலே வைத்து விட்டு மறைந்தது. அதன்பின், மணிமேகலா தெய்வம், காமத்தில் துன்புற்றுத் தூங்காமலிருந்த உதயகுமரன் முன் சென்றது. அவனுக்கு அரசநீதியை அறிவுறுத்திற்று. பின்பு உவவனத்தில் உறங்கிக் கொண்டிருந்த சுதமதியிடம் சென்றது. அவளை எழுப்பிற்று. அவளிடம், நான் கோவலனது குலதெய்வம். என் பெயர் மணிமேகலா தெய்வம். என்னைப் பற்றி மாதவி அறிவாள். மணிமேகலையை மணிபல்லவத் தீவில் கொண்டு போய் வைத்திருக்கிறேன். அவள் தனது பழம் பிறப்பை அறிந்து கொண்டு இன்றைக்கு ஏழாம் நாளில் இங்கு வருவாள். அவள் வேற்று உருவத்துடன் வந்தாலும் உன்னுடன் எப்பொழுதும் போலவே இருப்பாள். இச்செய்தியை மாதவியிடம் சொல்லுக என்று கூறிச் சென்றது. இதன்பின், சுதமதி மிகவும் வருத்தத்துடன் சக்கரவாளக் கோட்டத்தைச் சார்ந்தாள். உலக அறவி என்னும் பொது மன்றத்திலே தங்கினாள். அங்கே தூணில் குடிகொண்டிருந்த தெய்வம் ஒன்று, மணிமேகலை தன் பழம் பிறப்பையும், உனது பழம் பிறப்பையும் உணர்ந்து வருவாள். நீ வருந்தாதே என்று சுதமதியைப் பார்த்துக் கூறிற்று. விடியும் வரையிலும் அவள் அங்கேயே தங்கியிருந்தாள். விடிந்த பின் புறப்பட்டு மாதவி யிடம் வந்தாள். நடந்த நிகழ்ச்சிகளை உரைத்தாள். அது கேட்ட மாதவி மனம் வருந்தியிருந்தாள். மணிபல்லவத்தில் மணிமேகலை மணிபல்லவத் தீவிலே மணிமேகலை, கடலருகே மணலில் உறங்கிக் கொண்டிருந்தாள். கதிரவன் புறப்பட்ட போது கண்விழித்தாள். அது புதிய இடமாக இருந்ததைக் கண்டு திகைத்தாள். பல இடங்களிலும் ஓடிப் பார்த்தாள். சுதமதியைக் கூறி அழைத்துக் கூக்குரலிட்டாள். அப்பொழுது அவள்முன் பழம்பிறப்பை உணர்த்தும் புத்த பீடிகை தோன்றியது. அதனால் அவள் தன் பழம் பிறப்பை அறிந்தாள். தானும், சுதமதியும், மாதவியும் முற்பிறப்பில் சகோதரிகளாகப் பிறந்திருந்ததை உணர்ந்தாள். அவளை அங்கே கொண்டு வந்த மணிமேகலா தெய்வம் அவள்முன் தோன்றும்; அது அவளது பழம்பிறப்பு சம்பந்தமான வேறு செய்திகளையும் கூறும் என்பதையும் உணர்ந்தாள். மணிமேகலா தெய்வத்தை இன்னும் காணவில்லை யே என்று வருந்தியிருந்தாள். அப்பொழுது மணிமேகலா தெய்வம் வானத்திலிருந்து இறங்கி வந்தது. புத்த பீடிகையை வலம் வந்து வணங்கிற்று. மணிமேகலையைப் பார்த்து, பழம்பிறப்பிலே உனது கணவனாக இருந்த இராகுலன் என்பவனே இப்பிறப்பில் உதயகுமரனாகப் பிறந்துள்ளான் என்று உரைத்தது. நீ தவநெறியை மேற்கொள்ள வேண்டும். பல சமய உண்மைகளையும் சமயவாதிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள். உன் இளமைப் பருவத்தைக் காணும் சமயகுரவர்கள், உனக்கு உண்மைகளை உரைக்க மாட்டார்கள். ஆதலால் மாறுவேடம் பூண்டு சமயவாதிகளிடம் செல். அவர்கள் உரைக்கும் உண்மை களை அறிந்தபின் புத்த தர்மத்தைப் பின்பற்றுவாய். இது நிச்சயம் என்று மொழிந்தது மணிமேகலா தெய்வம். வேற்றுருக் கொள்ளும் மந்திரம், வான்வழியே செல்லும் மந்திரம், பசியில்லாமல் வாழும் மந்திரம் இம் மூன்று மந்திரங்களையும் மணிமேகலைக்கு அறிவித்துச் சென்றது. மணிமேகலை அமுதசுரபி பெற்றது அதன்பின் மணிமேகலை புத்த பீடிகையை வணங்கினாள். அத்தீவைச் சுற்றிப் பார்த்தாள். அதன் இயற்கை அழகைக் கண்டு இன்புற்றாள். அப்பொழுது அத்தீவின் தெய்வமாகிய தீவ திலகை மணிமேகலையின் முன் வந்து நின்றாள். அவள் மணிமேகலையை நீ யார்? என்று கேட்டாள். மணிமேகலை, நான் காவிரிப் பூம்பட்டினத்தின் உவவனத்திலிருந்து அங்கு வந்தது முதல் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள். நான் இந்திரன் ஏவலால் புத்த பீடிகையைக் காத்து வருகின்றேன். என் பெயர் தீவதிலகை. இங்கே கோமுகி என்னும் பொய்கை ஒன்று உண்டு. அதிலே அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரம் ஒன்று அமிழ்ந்து கிடக்கின்றது. அது புத்தர் அவதார தினமாகிய வைசாக சுத்த பூர்ணிமையன்று வெளித்தோன்றும். இன்று அந்த நன்னாள். அப் பாத்திரத்தில் இட்ட அன்னம் எடுக்க எடுக்கக் குறையாது. அதன் வரலாற்றை உனது ஊரில் உள்ள அறவண அடிகள் உரைப்பார். இப்பொழுது அப் பாத்திரம் உன் கையில் கிடைக் கலாம் என்று நினைக்கிறேன் என்றாள் தீவதிலகை. உடனே மணிமேகலை அந்த அமுதசுரபியை அடைய ஆவல் உற்றாள். புத்த பீடிகையை வலம் வந்து வணங்கி அப் பொய்மையண்டை வந்தாள். தீவதிலகையும் அவளுடன் இருந்தாள். மணிமேகலை கோமுகிக் குளத்தை வலம் வந்து நின்றாள். அமுதசுரபி அப் பொய்கையிலிருந்து புறப்பட்டு அவள் கையிலே வந்து அமர்ந்தது. அது கண்ட மணிமேகலை புத்த தேவனைப் போற்றி வணங்கினாள். பசிப்பிணியின் கொடுமையையும் மக்களின் பசிப்பிணியை ஓட்டுவதே ஒப்பற்ற அறம் என்பதையும் தீவதிலகை மணிமேகலைக்கு எடுத்துரைத்தாள். மணிமேகலையும், ஏழை மக்களின் பசிப்பிணியைப் போக்குவதையே என் கடமையாகக் கொள்வேன் என்று கூறினாள். தீவதிலகை சிறிது நேரம் அவளுடன் உரையாடியிருந்தாள். அதன்பின், நீ உன் ஊருக்குச் செல்க என்று உரைத்து மறைந்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் மணிமேகலை மணிமேகலை புத்த பீடிகையை வணங்கினாள். மணி மேகலா தெய்வம் கொடுத்த மந்திர சக்தியால் வான் வழியே காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தாள். மாதவியும் சுதமதியும் இருந்த இடத்திற்கு சென்றாள். அவர்களுடைய பழம்பிறப்பை அறிவித்தாள். அவர்களை அழைத்துக் கொண்டு அறவண அடிகளைத் தரிசிக்கப் போனாள். மணிமேகலை அறவண அடிகளை மும்முறை வலம் வந்து வணங்கினாள். தான் உவவனம் சென்றது முதல் மணிபல்லவத் தீவிலிருந்து திரும்பியது வரையில் நடந்த நிகழ்ச்சிகளை யெல்லாம் நவின்றாள். அறவண அடிகளும், மாதவி, சுதமதி ஆகியவர்களின் பழம்பிறப்பை அறிவித்தார். மணிமேகலையை நோக்கிப் புத்த பெருமான் அவதாரம் செய்யப் போவதையும், அவரால் மக்கள் அடையப் போகும் நன்மைகளையும் எடுத்துரைத்தார். அமுத சுரபியால் மக்கள் பசிப்பிணியைப் போக்குக; வருந்தும் உயிர்களைக் காப்பாற்றுக என்று உரைத்தார். ஆபுத்திரன் வரலாறு, அமுதசுரபியின் பிறப்பு, அது கோமுகிப் பொய்கை யில் புகுந்ததன் காரணம் இவைகளையெல்லாம் எடுத்துரைத் தார். உயிர்களுக்கு உதவி செய்யும் இந்த அமுதசுரபியை நீ சும்மா வைத்திருத்தல் கூடாது என்றும் கூறினார். உடனே, மணிமேகலை பிக்குணிக் கோலம் பூண்டாள். அறவண அடிகளை வணங்கி விட்டு வீதியிலே வந்தாள். பிச்சைப் பாத்திரத்துடன் அவளைக் கண்ட மக்கள் பலர் அவளைச் சூழ்ந்து கொண்டனர். மணிமேகலை முதலில் பத்தினிப் பெண்டிர் இடும் பிச்சையை அந்தப் பாத்திரத்தில் ஏற்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட அடங்காத பசி நோய் உள்ள காயசண்டிகை என்பவள், ஆதிரை என்பவளே கற்பில் சிறந்தவள். அவள் வீடு இதுதான் என்று சுட்டிக் காட்டினாள்; ஆதிரையின் வரலாற்றையும் அறிவித்தாள். மணிமேகலை ஆதிரையின் மனையில் புகுந்தாள். வாய் பேசாமல் சித்திரம் போல் அமுதசுரபியை ஏந்தி நின்றாள். ஆதிரை மணிமேகலையை வணங்கி அமுதசுரபியிலே அன்னம் இட்டாள். அவ்வன்னம் அப்பாத்திரத்திலிருந்து எடுக்க எடுக்கக் குறையவில்லை; வளர்ந்து கொண்ட இருந்தது. காயசண்டிகை யானைத்தீ என்னும் தனது தீராப் பசி நோயைத் தீர்க்கும்படி வேண்டிக் கொண்டாள். மணிமேகலை அமுதசுரபியிலிருந்து ஒரு பிடி அன்னத்தை அள்ளினாள். காயசண்டிகையின் கையில் இட்டாள். அதை உண்டபின் அவள் பசிநோய் பறந்தது. காயசண்டிகை தனது வரலாற்றைக் கூறினாள். மணிமேகலையிடம் சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள உலக அறவி என்னும் அம்பலத்தை அடைந்து அன்ன தானம் செய்து கொண்டிரு என்று சொல்லி விட்டுத் தனது ஊருக்குப் போய்விட்டாள். மணிமேகலையின் அறவினை மணிமேகலை உலக அறவியை அடைந்தாள். சம்பாபதித் தெய்வத்தையும் கந்தில் பாவையையும் வணங்கினாள். தனது அமுதசுரபியின் பெருமையை அறிவித்துப் பலரையும் உணவுண்ண அழைத்தாள். பலரும் வந்து அவளிடம் உணவு பெற்று உண்ணுவாராயினர். மணிமேகலையின் செய்தியை அறிந்த சித்திராபதி மனம் கொதித்தாள். அவள், மாதவியின் செயலும், மணிமேகலையின் நடத்தையும் கணிகையர் குலத்திற்கு ஏற்றவையல்ல என நாடகக் கணிகையரிடம் நவின்றாள். உதயகுமரன் அரண்மனையை அடைந்தாள். மணிமேகலை உலக அறவியில் இருக்கும் செய்தியை உரைத்தாள். அவனது உள்ளத்தைக் குழப்பிவிட்டுப் போனாள். உதயகுமரன் தேரில் ஏறிக் கொண்டு உலக அறவியை உற்றான். பலருக்கும் உணவு கொடுத்துக் கொண்டிருக்கும் மணிமேகலையைப் பார்த்தான். மணிமேகலை அவனை வணங்கி விட்டு சம்பாபதி கோயிலுக்குள் புகுந்தாள். மந்திரத் தால் தன் உருவத்தைக் காயசண்டிகையாக மாற்றிக் கொண் டாள். பிச்சைப் பாத்திரத்துடன் வெளியில் வந்தாள். அதைக் கண்ட உதயகுமரன், மணிமேகலை உள்ளே ஒளிந்து கொண்டாள். காயசண்டிகை கையிலே பிச்சைப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பி விட்டாள் என்று கருதினான். அவன் சம்பாபதித் தெய்வத்தை வணங்கி, நீ எனக்கு மணிமேகலையைக் காட்டாவிட்டால் எத்தனை நாட்கள் ஆனாலும் நான் இங்கேயே கிடப்பேன் என்று சூள் உரைத்தான். அப்பொழுது அங்கே பதுமையிலிருந்த தெய்வம் ஒன்று, நீ சூள் உரைப்பதால் பயன் இல்லை என்றது. உதயகுமரன் அதைக் கேட்டு வியப்புற்றான். காம வசத்தனாய் வருந்திக் கொண்டு தன் அரண்மனையை அடைந்தான். அன்று முதல் மணிமேகலை, காயசண்டிகையின் உருவத்து டனேயே இருந்தாள். அமுதசுரபியைக் கரத்திலேந்திக்கொண்டு எங்கும் சென்றாள். பசித்தோர்க்கு உணவளித்து வந்தாள். சிறைச்சாலையில் அன்னதானம் ஒருநாள் அவள் அந்நகரத்தில் உள்ள சிறைச்சாலையை அடைந்தாள். அங்கே பசித்திருந்த பலருக்கும் அன்புடன் அன்னம் அளித்தாள். அதைக் கண்ட காவலர்கள் அதிசயித் தனர். அரசனும் அரசியும் அமர்ந்திருக்கும் சமயம் பார்த்து அவர்களிடம் சென்றனர். காயசண்டிகையின் உருவிலிருக்கும் மணிமேகலையின் அற்புதச் செயலை அறிவித்தனர். அரசன் அவளை அழைத்து வர ஆணையிட்டான். காவலர்கள் அரசன் ஆணையை மணிமேகலையிடம் அறிவித் தனர். அவளும் அமுதசுரபியுடன் சென்று அரசனை வணங்கி னாள். அரசன், நீ யார்? என்றான். அரசே! யான் விஞ்சை மகள். இது பிச்சைப் பாத்திரம். அம்பலத்தில் உள்ள தெய்வம் ஒன்று இதை எனக்கு அளித்தது. இது யானைத் தீ என்றும் பசி நோயை ஒழித்தது. தெய்வத் தன்மை உள்ளது என்றாள். நான் உனக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? என்றான் அரசன். சிறைச்சாலையை அறச்சாலையாக்க வேண்டும் என்றாள் அவள். அரசன் அவ்வாறே ஆணையிட்டான். அன்றுமுதல் சிறைச்சாலை அறச்சாலை ஆயிற்று. அவள் அனைவர்க்கும் அன்னம் அளித்து வந்தாள். உதயகுமரன் கொலையுண்டது இச்செய்தியை உதயகுமரன் அறிந்தான். அவன் மணி மேகலை உலக அறவியிலிருந்து வெளிவரும் போது அவளைக் கைப்பற்றிக் கொண்டு வருவேன் என்று எண்ணி உலக அறவியை அடைந்தான். அப்பொழுது காயசண்டிகையின் கணவனாகிய காஞ்ச னன் என்னும் வித்தியாதரன் அவளைத் தேடி வந்தான். அவன் நகரில் பலவிடங்களிலும் அவளைத் தேடியலைந்து இறுதியில் உலக அறவியை அடைந்தான். அங்கே காயசண்டிகையின் உருவில் இருக்கும் மணிமேகலையைக் கண்டான். அவளைத் தன் மனைவி காயசண்டிகை என்றே எண்ணிக்கொண்டான். அவளிடம் அணுகினான். அவளது பிச்சைப் பாத்திரத்தையும் அவள் உணவளிப்பதையும் பாராட்டினான். மணிமேகலை அவன் சொற்களைச் சிறிதும் மதிக்கவில்லை. உதயகுமரன் அருகிலே சென்று, அவனுக்கு இளமையின் நிலையாமையை அறிவுறுத்தினாள். இதைக் கண்ட காஞ்சன், காயசண்டிகை இந்த உதய குமரன் மேல் காதல் கொண்டாள். ஆதலால்தான் இங்கேயே தங்கிவிட்டாள் என்று எண்ணிக் கொண்டான். அவன் அங் கேயே ஒரு புறத்தில் ஒளிந்திருந்தான். உதயகுமரனைப் பழிவாங்க வேண்டும் என்பதை அவன் கருத்து. காயசண்டிகை உருவில் இருப்பவள் மணிமேகலைதான். அயலான் ஒருவன் இங்கிருப்பதால் அவள் இரவிலே எங்கும் போகமாட்டாள். இன்றிரவிலே வந்து இவள் செய்தியைக் காண்போம் என்று எண்ணிக் கொண்டு உதயகுமரன் போய் விட்டான். மணிமேகலையும் காயசண்டிகை உருவுடன் சம்பா பதிக் கோவிலில் தங்கியிருந்தாள். உதயகுமரன் நள்ளிரவிலே உலக அறவியிலே புகுந்தான். அங்கே ஒளிந்திருந்த காஞ்சனன், உதயகுமரன் காயசண்டிகை யைத் தேடி வந்தான் என்றே கருதினான். உடனே விரைந்து எழுந்தான். உதயகுமரனை வெட்டி வீழ்த்தினான். காயசண்டி கையைக் கைப் பற்றிக் செல்லக் கருதி அவளிடம் அணுகினான். அப்போது கந்தில் பாவை, இவள் காயசண்டிகை அல்லள்; மணிமேகலை. காயசண்டிகை படும் பசி நீங்கி உன்னைக் காண வந்தாள். வரும் போது விந்தமலையில் துர்க்காதேவி எழுந்தருளி யிருக்கும் கோயிலுக்கு நேராக ஆகாய மார்க்கமாக வந்து கொண்டிருந்தாள். அப்பொழுது விந்தாகடிகை என்னும் காவல் தெய்வம் அவளை இழுத்து விழுங்கிவிட்டது. நீ உண்மை உணராமல் கொடுமை செய்தாய். இத் தீவினை உன்னைச் சும்மா விடாது என்று உரைத்தது. இதைக் கேட்ட காஞ்சனன் உள்ளம் வருந்தித் தனது ஊருக்குப் போய்விட்டான். மணிமேகலை சிறைப்படல் இந்த நிகழ்ச்சிகளைக் கண்ட மணிமேகலை தான் கொண்ட மாறுவேடத்தை மாற்றிக் கொண்டாள். தன் வடிவில் நின்றாள். உதயகுமரன் கதியைக் கண்டு கலங்கினான். வெட்டுண்டு கிடப்போனிடம் நெருங்கிய அவளை, கந்தில் பாவை தடுத்தது. உதயகுமரன் வெட்டுண்டது பழவினையின் பயன் என்று அறிவித்தது. இனி நடக்கப் போகும் நிகழ்ச்சிகளையும் அவளுக்கு அறிவித்தது. நான் தெய்வ கணங்களைச் சேர்ந்தவள்; என் பெயர் துவதிகன்; நான் எப்பொழுதும் இத்தூணிலேயே இருப்பேன் என்று தன் வரலாற்றையும் சொல்லிற்று. மணிமேகலையின் வேண்டு கோளுக்கு இணங்கி, அவள் மரணம் வரையிலும் இனி நிகழப் போகும் செய்திகளையும் சொல்லிற்று. இனி வரும் பிறவியிலே நீ ஆண் பிள்ளையாகத்தான் பிறப்பாய் என்றும் உரைத்தது. அது கேட்ட மணிமேகலை அறியாமை நீங்கியிருந் தாள். பொழுதும் விடிந்தது. விடிந்தபின் சம்பாபதியையும் கந்தில் பாவையையும் வழிபட வந்தவர்கள் உதயகுமரன் வெட்டுண்டு கிடப்பதைக் கண்டனர். அவர்கள் சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள முனிவர் களுக்கு அச்செய்தியை அறிவித்தனர். அவர்கள் மணிமேகலையின் மூலம் நடந்த நிகழ்ச்சியை அறிந்தனர். அரசனி டம் சென்றனர். அவர்களுள் ஒருவர் பத்தினிப் பெண்டிரை விரும்பி உயிரிழந் தோரின் கதைகளை எடுத்துரைத்தார். சுகந்த னுடைய இளைய மகன் மருதி என்னும் பார்ப்பனியை விரும்பிய தனால் அடைந்த கதி, சுசுந்தனுடைய மூத்த மகன் விசாகை என்னும் பத்தினிப் பெண்ணை விரும்பியதனால் அடைந்த கதி, அவர்களை இவர் களின் தந்தையை செட்டிக் கொன்று நீதியை நிலைநாட்டினான் என்ற செய்தி, இவைகளை எல்லாம் எடுத்துரைத்தார். காமத்தின் காரணமாக உதயகுமரன் கொலையுண்ட செய்தியையும் கூறினார். அது கேட்ட அரசன் உதயகுமரனுக்காக உள்ளம் வருந்த வில்லை. அவனுக்குத் தக்க தண்டனையே கிடைத்தது என்றான். உடனே அவன், தன் மகன் செய்த காரியம் வெளிப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினான். ஆதலால் தன் அமைச்சர்களுள் ஒருவனான சோழிக ஏனாதி யைப் பார்த்து, மணிமேகலையைச் சிறைப்படுத்தும்படி உத்தர விட்டான். மணிமேகலை சிறைப்பட்டாள். இராசமாதேவியின் கொடுமை புத்திரசோகத்தால் வருந்திய இராசமாதேவியை வாசந்தை என்னும் முதியவன் ஒருத்தி சமாதானப்படுத்தினாள். இராசமா தேவி, தன் மகன் கொலைக்குக் காரணமாயிருந்த மணிமே கலையை துன்புறுத்தத் துணிவு கொண்டாள். தன் எண்ணத்தை வெளியிடாமல் உதயகுமரனை இகழ்ந்து மணிமேகலையைப் புகழ்ந்தாள். அவளைச் சிறைவீடு செய்து தன்னிடம் ஒப்புவிக்கும் படி அரசனிடம் வேண்டினாள். அரசன் அவ்வாறே செய்தான். இராசமாதேவி மணிமேகலையைப் பைத்தியக்காரியாக்க மருந்தூட்டச் செய்தாள். அவளைக் கற்பழிந்தவள் என்று பழி சுமத்த முயன்றாள். புழுக்கறையிலே அடைத்துப் பட்டினி போட்டாள். இவை ஒன்றாலும் மணிமேகலைக்கு ஆபத்து உண்டாகவில்லை. இது கண்ட இராசமாதேவி அஞ்சினாள். மணிமேகயிடம் மன்னிப்புக் கேட்டாள். மணிமேகலை உதயகுமரனது பழம்பிறப்பை உரைத்தாள். இராசமாதேவியை வணங்கினாள். உதயகுமரன் இறந்த செய்தியை அறிந்த சித்திராபதி இராசமாதேவியை அடைந்தாள். மணிமேகலையால் அந்நக ருக்கு வரப்போகும் தீமைகளைக் கூறினாள். இந்திர விழாச் செய்யாமல் மறக்கப்படும் நாளில் இந்நகரைக் கடல் கொள்ளும் என்பதையும் எடுத்தியம்பினாள். மணிமேகலையைத் தன்னுடன் அனுப்பி வைக்கும்படி வேண்டினாள். இராசமா தேவி, மணி மேகலை உன்னுடன் வருவதற்கு உரியவள் அல்லள்; என்னிடமே இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள். இச்சமயத்திலே மணிமேகலையின் நிலையை அறிந்த மாதவி சுதமதியுடன் அறவண அடிகளிடம் போனாள். அவரிடம் மணிமேகலையின் நிலைமையை உரைத்தாள். அவருடன் இராச மாதேவியிடம் வந்தாள். இராசமாதேவி அறவண அடிகளை வணங்கினாள். ஆசனத்தில் அமரச் செய்தாள். உபசரித்து வணங்கினாள். அறவண அடிகள் அவளுக்குப் புத்த மத உண்மை களைப் போதித்தார். எப்பொழு தும் நல்லறத்தைப் பின்பற்றி நடக்கும்படி நவின்றார். மணிமேக லையைப் பார்த்து, மற்ற மததர்மங்களையெல்லாம் நீ கேட்டறிந்த பின், உனக்குப் புத்த தர்மத்தை உணர்த்துவேன் என்று சொல்லிவிட்டுத் தனது இடத்திற்குப் போகப் புறப்பட்டார். மணிமேகலை ஆபுத்திரனைக் காணல் அப்பொழுது மணிமேகலை அறவண அடிகளை வணங் கினாள். இராசமாதேவி முதலியவர்களைப் பார்த்து, நான் இவ்வூரில் உறைந்தால், என்னை உதயகுமரனைக் கொன்றவள் என்று இவ்வூரார் பழித்துரைப்பார்கள். ஆதலால் நான் ஆபுத்திரன் நாட்டுக்குச் செல்வேன். மணிபல்லவத் தீவிலேயுள்ள புத்த வீடிகையை வணங்குவேன். பின்னர் வஞ்சிநகர் புகுந்து பத்தினித் தெய்வத்தை வழிபடுவேன். அதன்பின் நாடெங்கும் சென்று நல்லறம் புரிவேன் என்று கூறிப் புறப்பட்டாள். அவள் அந்தி நேரத்திலே போய், உலக அறவியையும், சம்பாபதியையும், கந்தில் பாவையையும் வணங்கினாள். ஆகாய மார்க்கமாகப் புறப்பட்டுப் போனாள். சாவகத் தீவை அடைந் தாள். புண்ணியராசனாகப் பிறந்திருக்கும் ஆபுத்திரன் அரசு செலுத்தும் நகரின் புறத்திலே ஒரு சோலையிலே இறங்கினாள். அங்கிருந்த ஒரு முனிவரை வணங்கினாள். இந்நகரின் பெயர் என்ன? அரசன் யார்? என்றாள். இது நாகபுரம்; இதன் அரசன் பூமிசந்திரன் புதல்வன் புண்ணிய ராசன் என்று கூறி, அதன் பெருமையையும் அறிவித்தார் முனிவர். அப்பொழுது புண்ணியராசன் தன் மனைவியுடன் அங்கு வந்தான். தருமசாவகன் என்னும் முனிவனை வணங்கினான். அங்கே பிச்சைப் பாத்திரத்துடன் நிற்கும் மணிமேகலையைப் பார்த்து இவள் யார்? என்று கேட்டான். அருகில் நின்ற அவனுடைய பிரதானி ஒருவன், அவளை இன்னவள் என்று அறிவித்தான். மணிமேகலை புண்ணியராசனைப் பார்த்து, என் கையிலிருக்கும் அமுதசுரபி உன்னுடையது. மணி பல்லவத்தில் புத்த பீடிகையால் உன் பழம்பிறப்பை அறியலாம். அங்கு வருக என்று சொல்லி வான்வழியாகப் புறப்பட்டாள். சூரியன் மறைவதன்முன் அவள் மணிபல்லவத் தீவை அடைந்தாள். புத்தபீடிகையை வலம் வந்து வணங்கினாள். அது மீண்டும் அவளது பழம்பிறப்பை அவளுக்கு அறிவித்தது. புண்ணியராசன் அச்சோலையை விட்டு நகருக்குள் புகுந்தான். தனது வளர்ப்புத் தாயான அமரசுந்தரியின் மூலம் தன் வரலாற்றை அறிந்தான். அரசாட்சியில் வெறுப்படைந்தான். சனமித்திரன் என்னும் மந்திரியை ஒரு மாதம் வரையிலும் அரசாளும்படி நியமித்தான். கப்பலேறி மணிபல்லவத் தீவை அடைந்தான். மணிமேகலை அவனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றாள். தீவை வலம் செய்வித்துப் புத்த பீடிகையைக் காட்டி னாள். அரசன் அதை வலம் வந்து வணங்கிப் போற்றினான். அது அவனது பழம்பிறப்பை அறிவித்தது. அவன் முன் பிறப்பில் ஆபுத்திரனாயிருந்ததை அறிந்தான். ஆபுத்திரனும் மணிமேகலையும் அங்கிருப்பதை அறிந்த தீவதிலகை என்னும் தெய்வம் வந்தது. ஆபுத்திரனது பழங்கதை யைக் கூறி மணலால் மூடப்பட்டுக் கிடந்த அவனது பழைய உடம்பைக் காட்டிற்று. மணிமேகலையை நோக்கி, இந்திர விழாச் செய்யத் தவறியதால் காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் கொண்டது. அறவண அடிகளும், மாதவியும், சுதமதியும் ஆபத்தின்றி வஞ்சி நகரம் புகுந்தனர் என்று சொல்லிச் சென்றது. அதன் பின் புண்ணியராசன் தன் பழைய உடம்பின் எலும்பைக் கண்டு வருந்தினான். மணிமேகலை அவனைத் தேற்றினாள். அறிவுரைகள் பல சொல்லி அறிவுறுத்தினாள். அவனை அவனது நகருக்கு அனுப்பிய பின், அவள் வானத்தின் வழியே வஞ்சி நகருக்குப் புறப்பட்டாள். மணிமேகலை வஞ்சி நகர் அடைதல் வஞ்சிநகருக்கு வந்து கண்ணகி கோயிலுள் புகுந்து வணங்கினாள். மதுரையை எரித்ததற்குக் காரணம் கூற வேண்டும் என்று கண்ணகியை வேண்டிக் கொண்டாள். கண்ணகி, மதுராபதித் தெய்வம் தனக்குரைத்த பழம்பிறப்புக் கதையைக் கூறினாள். கோபத்தால் மதுரையை எரித்தேன். நல்வினையால் யானும் கணவனும் தேவரானோம். ஆயினும் கோபத்தின் பயனை நுகரப் பல பிறப்புகள் எடுப்போம். இறுதியில் மகதநாட்டில் கபிலை நகரில் புத்த ஞாயிறு தோன்றியபின் அவரது அறவுரை களைக் கேட்டு நிர்வாணம் அடைவோம் என்றாள். அதன்பின் மணிமேகலை தன் மந்திர சக்தியால் ஒரு முனிவன் வடிவம் கொண்டாள். வஞ்சியின் புறநகரை அடைந் தாள். பல சமயவாதிகளிடமும் சென்றாள். அவர்களுடைய கொள்கைகளைக் கேட்டறிந்தாள். மணிமேகலை அறவண அடிகளையும், மாதவியையும், சுதமதியையும் காண விரும்பி நகருக்குள் நுழைந்தாள். அங்கே கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் புத்த முனிவர்கள் இருக்கும் இடத்திலே தவம் புரிந்து கொண்டிருப்பதைக் கண்டாள். அவனை வணங்கினாள். தான் மணி பல்லவத் தீவு சென்றிருந்தது, புண்ணியராசனைக் கண்டது, காவிரிப்பூம் பட்டினம் கடல் கொண்டதைத் தீவதிலகையால் அறிந்தது, அறவண அடிகளைத் தேடி வந்தது ஆகிய செய்திகளைக் கூறினாள். மாசாத்துவான், தான் அந்நகருக்கு வந்த வரலாற்றை உரைத்தான். உன் தந்தையாகிய கோவலனுக்கு ஒன்பது தலை முறைக்கு முன்னே ஒரு கோவலன் இருந்தான். அவனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் இந்நகரத்து மன்னனும் நண்பர்கள். அக் கோவலன் தன் செல்வத்தைத் தருமம் செய்துவிட்டு இந்நகரிலே ஒரு புத்த சைத்தியம் கட்டி வைத்தான். அதைத் தரிசிக்கவே நான் வந்தேன். தீவினையால் கொலையுண்ட உன் தந்தை புத்த தேவன் அவதரித்தபின் அவர் உபதேசங் கேட்டு வீடு பெறுவான் என்று அறிஞர்கள் சொல்லக் கேட்டேன்; நானும் அவ்வறமொழிகளைக் கேட்டு வீடு பெறுவேன். உன் செய்தியை அறவண அடிகளால் அறிந்தேன். அறவண அடி களும், மாதவியும், சுதமதியும் காஞ்சிநகருக்குச் சென்றனர். அங்கே பஞ்சம் தலைவிரித்தாடுகின்றது. நீ சென்று அந் நகர மக்களைக் காப்பாற்ற வேண்டும். இது உனது கடமை என்று கூறினான். மணிமேகலை காஞ்சியை அடைதல் மணிமேகலை மாசாத்துவானை வணங்கினாள். அப் பொழுதே காஞ்சி நகருக்கு வானவழியாகப் புறப்பட்டாள். காஞ்சிநகரின் நடுவிலே இறங்கினாள். அங்கே இளங்கிள்ளியால் கட்டப்பட்டிருந்த புத்தர் ஆலயத்தை வணங்கினாள். அதன் தென்மேற்கில் இருந்த ஒரு சோலைக்குச் சென்று தங்கினாள். அதைக் கண்ட ஒருவன், மணிமேகலை அமுதசுரபியுடன் வந்திருப்பதை அரசனிடம் சென்று அறிவித்தான். உடனே அரசன், மந்திரிகளுடன் மணிமேகலை இருந்த இடத்தை அடைந்தான். அவளை நோக்கி, முன்பு என்னிடம் ஒரு தெய்வம் உரைத்தபடி உனக்காக இந்நகரில் ஒரு பொய்கையும் பொழிலும் அமைத்திருக்கிறேன். அவற்றைக் காண வேண்டும் என்று அழைத்தான். மணிமேகலையும் அங்கே சென்றாள். அப் பொழிலிலே புத்த பீடம் ஒன்றைக் கட்டுவித்தாள். மணிமேகலா தெய்வத்திற்கும் கோயில் கட்டுவித்தாள். அரசனைக் கொண்டு திருவிழாவும் தினப் பூசையும் செய்வித்தாள். மணிமேகலை அங்கே அமர்ந்து எல்லா வுயிர்களுக்கும் அமுதசுரபியால் அன்னம் அளித்துக் காத்து வந்தாள். அதன்பின் மழை பெய்தது; நாடு செழித்தது. இந்த நிகழ்ச்சி களை அறிந்த அறவண அடிகளும், மாதவி, சுதமதிகளுடன் அங்கு வந்தார். மணிமேகலைக்குக் காவிரிப்பூம் பட்டினம் கடல் கொண்ட வரலாற்றைக் கூறினார். உனக்காகவே நாங்கள் இந் நகரத்தை அடைந்தோம் என்றார். மணிமேகலை, தீவதிலகை யால் காவிரிப்பூம்பட்டினம் கடல்கொண்டதை அறிந்தேம். நான் வஞ்சி நகரம் புகுந்தேன். வேற்றுருவத்துடன் பல சமய வாதி களையும் சந்தித்தேன். அவர்கள் கொள்கைகளை எல்லாம் கேட்டறிந்தேன். அவைகளில் ஒன்றும் என் உள்ளத்திற்கு ஒத்துவரவில்லை. தாங்களே உண்மைப் பொருளை உபதேசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்டாள். அறவண அடிகள் புத்தமத உண்மைகளை மணிமேக லைக்குப் போதித்தார். அவள் புத்தமதத் தத்துவங்களை உணர்ந்தாள். பிறவித் துன்பம் ஒழிய வேண்டி அந் நகரிலேயே தங்கித் தவம் புரிந்து கொண்டிருந்தாள். இதுவே மணிமேகலையின் கதைச் சுருக்கமாகும் மணிமேகலையில் சிறுகதைகள் கதைகள் கேட்பதில் மக்களுக்கு ஆவல் அதிகம். ஆதலால் கற்பனையும் கருத்தும் நிறைந்த பல கதைகள் நாட்டிலே வழங்கி வருகின்றன. கதைகளிலே சிறு கதைகளும் உண்டு. பெருங் கதைகளும் உண்டு. தமிழகத்தில் வாய் மூலமாக வழங்கும் கதை கள் பல உண்டு. இக் கதைகளிலே மறைந்து போனவை பல. தமிழ்நாட்டில் மட்டுமன்று; எல்லா நாடுகளிலும் கதை சொல்லும் வழக்கம் உண்டு. இன்று எழுத்துருவில் காணப்படும் பழங்கதைகள் எல்லாம் முதலில் வாய்மூலம் வழங்கப்பட்ட வைகள் தாம். இக்கதைகளைத்தான் கர்ண பரம்பரைக் கதைகள் என்பர். பெரிய புராணம், பக்த விஜயம், திருவிளையாடல் புராணம், பஞ்சதந்திரக் கதை, விக்கிரமாதித்தன் கதை போன்ற வைகள் எல்லாம் சிறுகதைத் தொகுதிகள் தாம். கருத்துக்களை வலியுறுத்தவே--(மக்கள் மனத்தில் ஒரு கொள்கையை, ஒரு அறிவை, ஒரு படிப்பினையை நிலை நாட்டவே)--சிறு கதைகள் சொல்லி வந்தனர். எழுதி வந்தனர். இதுவே பண்டைக்காலச் சிறுகதைகளின் போக்கு. சமணர்களால் -- புத்தர்களால் -- எழுதப்பட்ட புராணங் களிலும் காவியங்களிலும் சிறுகதைகள் பலவற்றைப் பார்க்கலாம். பெருங் கதைகளிலே சிறுகதைகளைத் தொடுத்து எழுதுவது அவர்கள் வழக்கம். மகாபாரதத்தில் பல சிறு கதைகள் அமைந்தி ருப்பது போலவே, சமணர்களின் காவியங்களிலும் புத்தர்களின் காவியங்களிலும் அமைந்திருக்கின்றன. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இதற்கு உதாரணமாகும். மணிமேகலையில் உள்ள பல சிறுகதைகள், ஒன்றற் கொன்று தொடர்புள்ளவைக.ள் அச் சிறுகதைகளை யெல்லாம் தெரிந்து கொண்டால்தான் மணிமேகலைக் கதையைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆதலால் அச் சிறு கதைகள் அல்லது கிளைக் கதைகளை யெல்லாம் காண்போம். சுதமதியின் கதை சுதமதி என்பவள் சண்டை நகரத்திலிருந்த கௌசிகன் என்னும் அந்தணன் மகள். இளம் பருவத்திலேயே அன்னையை இழந்தாள். தந்தையால் அன்புடன் வளர்க்கப்பட்டாள். அவள் தனியாக ஒரு பூஞ்சோலையில் மலர் கொய்து கொண்டிருந்தாள். அப்பொழுது வித்தியாதரன் ஒருவன் அவளைத் தூக்கிச் சென்றாள். காமம் நுகர்ந்தவின் அவளைக் காவிரிப்பூம்பட்டி னத்தில் விட்டு சென்றான். அவள் ஒரு சமணப் பள்ளியில் வாழ்ந்து வந்தாள். அவள் தந்தை கௌசிகன் மகளைக் காணாமல் மனம் வருந்தினான். கன்னியாகுமரிக்கு நீராடச் செல்லும் அந்தணர் களுடன் சேர்ந்து அவனும் சென்றான். செல்லும் வழியிலே காவிரிப்பூம் பட்டினத்தையடைந்தான். சங்கமுகத் துறையிலே நீராடிவிட்டு வரும்போது வழியிலே சுதமதியைக் கண்டான். அவளிடம் கொண்ட அன்பினால் அவன் சுதமதியுடனேயே தங்கி விட்டான். கௌசிகன் பிச்சை எடுத்துவரும் உணவைக் கொண்டு சுதமதியைக் காத்துவந்தான். ஒருநாள் அவன் பிச்சைக்குப் போகும்போது இளம் கன்றையுடைய பசு ஒன்று அவனை முட்டி விட்டது. அவன் வயிறு கிழிந்து குடல் சரிந்தது. அவன் சரிந்த குடலைக் கையிலே தாங்கிக்கொண்டு சுதமதி தங்கியிருந்த சமணப் பள்ளியிலே புகுந்தான். தன்னைக் காக்கும்படி முறை யிட்டான். சமண முனிவர்கள் அவன் முறையீட்டைக் கேட்க வில்லை. அவனையும், சுதமதியையும் வெளியிலே தள்ளி விட்டனர். இதனால் துக்கம் அடைந்த கௌசிகனும் சுதமதியும் வாய்விட்டுப் புலம்பிக்கொண்டு வீதி வழியே சென்றனர். அப்பொழுது பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி வந்து சங்கதருமன் என்னும் பௌத்த முனிவன் அவர்களைக் கண்டு மனம் வருந்தினான். அவர்களை நெருங்கினான். பிச்சைப் பாத்திரத்தைச் சுதமதியின் கையிலே கொடுத்தான். கௌசி கனைத் தோளிலே தூக்கிச் சென்றான். புத்த சங்கத்திலே சேர்த்துக் காப்பாற்றினான். அது முதல் சுதமதியும், கௌசிகனும் பௌத்த சங்கத்திலே இருந்தனர். மாதவி பௌத்த சங்கத்தில் சேர்ந்தபின் சுதமதி அவளுடைய உயிர்த் தோழியானாள். இக்கதை புத்தர்களுக்கும் சமணர்களுக்கும் உள்ள வேற்றுமையைக் கூறிற்று; புத்தர்களைப் புகழ்ந்தது. கோதமையின் கதை காவிரிப்பூம்பட்டினத்தில் பழம் பெயர் சம்பாபதி என்பது. பாரத நாட்டின் பழம் பெயர் சம்புத் தீவு என்பது. சம்புத் தீவின் தெய்வம் சம்பாபதி. அவள் வீற்றிருக்கும் நகரம் சம்பாபதி ஆகும். சம்பாபதி என்பவள் ஒரு பெண் தெய்வம். சர்வ வல்லமையும் படைத்த தெய்வம். இந்தச் சம்பாபதியிலே முதுமை பருவம் அடைந்த ஒரு பார்ப்பானும் பார்ப்பனியும் வாழ்ந்தனர். பார்ப்பனியின் பெயர் கோதமை. அவர்களுக்கு சார்ங்கலன் என்னும் பெயருள்ள மகன் ஒருவன் இருந்தான். ஒருநாள் சார்ங்கலன் அந்நகரின் சுடுகாட்டைக் கண்டான். அதை ஒரு நகரம் என்றே நினைத்துக் கொண்டான். அங்கே சென்றான். ஆடிக்கொண்டிருந்த பேய் ஒன்றைக் கண்டு அஞ்சி விட்டான். அவன் அலறிக்கொண்டு தாயிடம் ஓடிவந்து தன்னைப் பேய் அறைந்து விட்டது என்று சொல்லி வீழ்ந்து இறந்தான். கோதமை அழுதுபுலம்பினாள். இறந்த மகனைக் கையில் ஏந்திக் கொண்டு சம்பாபதியின் கோயிலை அடைந்தாள். சம்பாபதியை வேண்டி, நீ என் மகனைக் காப்பாற்றாமல் விட்டதற்கு காரணம் என்ன? என்று கேட்டாள். அவள் முன் சம்பாதித் தெய்வம் தோன்றி, அவனது அறியாமை காரணமாக வந்த தீவினையே அவன் உயிரை உண்டது என்று கூறினாள். கோதமை, என் உயிரை எடுத்துக் கொள்; இவன் உயிரைக் கொடு; இவன் கண்ணிழந்த தந்தையைக் காப்பான் என்று இரந்தாள். சம்பாபதி, போன உயிர் மீளாது. தன் வினையின்படி மறுபிறப்புப் பெற்று விடும். நீ சொல்வது என்னால் முடியும் காரியம் அன்று என்றாள். கோதமை, நீ கேட்ட வரங்களை யெல்லாம் தருவாய் என்று நூல்கள் கூறும். நான் கேட்பதைத் தராவிட்டால் இங்கேயே இறப்பேன் என்றாள். மாண்ட உயிரை மீட்பது ஆராலும் ஆகாது. வேண்டு மானால் எல்லாத் தெய்வங்களையும் கேட்டுபார் என்றாள். எல்லாத் தெய்வங்களையும் அழைத்துக் கோதமையின் எதிரில் நிறுத்தினாள். அத்தெய்வங்கள் எல்லாம் இறந்த உயிர் மீளாது என்றே இயம்பின. கோதமை உண்மை உணர்ந்தாள். ஒருவாறு துயரம் நீங்கித் தன் மகனைச் சுடுகாட்டிலே சேர்த்துவிட்டுத் தானும் இறந்து போனாள். இது ஊழ்வினையையும் மறுபிறப்பையும் உணர்த்தும் கதை. இலக்குமியின் கதை அசோதர நகரத்து மன்னன் இரவிவன்மன். அவனது மனைவி அமுதபதி. அவர்களுக்குத் தரை, வீரை, இலக்குமி என்று மூன்று பெண்கள். இவர்களுள் இலக்குமி என்பவள் இராகுலன் என்னும் வேந்தனுக்கு வாழ்க்கைப்பட்டாள். அவள் சாது சக்கரன் என்னும் முனிவனுக்கு உச்சிப் பொழுதில் உணவிட்டு உபசரித்தாள். அவள் கணவன் இராகுலன் திட்டி விடத்தால் மாண்டான். அவனுடன் தீப்புகுந்து மாண்டாள். இவளே காவிரிப்பூம் பட்டனத்தில் மாதவிக்கும் கோவலனுக்கும் மகளாகப் பிறந்தவள்; மணிமேகலை எனப் பெயர் பெற்றாள். தாரையும் வீரையும் அங்க நாட்டுச் சச்சய நகரத்து அரசன் துச்சயன். அவன் இலக்குமியின் மூத்தசகோதரிகளாகிய தாரையையும், வீரையை யும் மணந்தான். ஒருநாள் அவன் தன் மனைவியருடன் கங்கைக் கரையை அடைந்தான். அங்கிருந்த அழகிய காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தான். அங்கே அறவண அடிகள் வரக்கண்டான். அவரை வணங்கினான். தாங்கள் யார்? என்று வினவினான். அறவண அடிகள், நான் பாதபங்கய மலையைத் தரிசிக்க வந்தேன். ஆதிகாலத்தில் புத்தர் பெருமான் அம்மலையின் மேல் நின்று மக்களுக்கு நல்லறம் போதித்தார். அதனால் அம் மலையைப் பாதபங்கயமலை என்று அழைத்தனர். நீங்களும் அம்மலையைக் கண்டு வணங்குங்கள் என்று கூறிச் சென்றார். துச்சயனும், தாரையும், வீரையும் சென்று அம்மலையைத் தரிசித்துத் திரும்பினர். அதன்பின் ஒருநாள் வீரை, மதுவுண்ட மயக்கத்தால் ஒரு யானை முன் சென்று வீழ்ந்து மாண்டாள். தங்கையிறந்த துக்கத்தை தாங்காமல் தாரையும் ஒரு மாடத்தின் மீதேறி வீழ்ந்து மாண்டாள். இதனால் துச்சயன் துக்கம் அடைந்தான். பாத பங்கய மலையைத் தரிசித்த புண்ணியத்தாலேயே தாரையும், வீரையும் முறையே மாதவியாகவும் சுதமதியாகவும் பிறந்தனர். இராகுலன் கதை அத்திபதி என்றும் அரசனுக்கும் நீலபதி என்னும் அரசிக்கும் மகனாகப் பிறந்தவன் இராகுலன் என்பவன். அவன் இரவிவன்மன் மகள் இலக்குமியை மணந்தான். அவனும் அவளும் ஒருநாள் சோலையிலே தங்கியிருந் தனர். அப்பொழுது இலக்குமி அவனுடன் ஊடியிருந்தாள். ஊடலைத் தீர்க்க இராகுலன் அவள் அடியில் வீழ்ந்து பணிந்தான். அப்பொழுது நல்ல உச்சி வேளை. சாதுசக்கரன் என்னும் பௌத்த சாரணமுனிவன் வானத்திலிருந்து அங்கே யிறங்கினான். அவனைக் கண்ட இராகுலன், இங்கே வந்தவன் யார்? என்று சினந்தான். உடனே இலக்குமி அவன் வாயைப் பொத்தினாள். முனிவனை வணங்கும்படிக் கூறினாள். அவளும் அவனும் முனிவனை வணங்கினர். அவனை உபசரித்து உணவு உண்பித்தனர். பிரம தருமன் என்னும் முனிவன் காயங்கரை என்னும் ஆற்றங்கரையில் அமர்ந்து புத்த தேவரின் வருகையை அறிவித்துக் கொண்டிருந்தான். அவனை இலக்குமியும் இராகுலனும் வழிபட்டனர். அவனுக்கு அமுது செய்விக்க எண்ணி விரும்பி அழைத்தனர். அவனும் அமுதருந்துவதற்கு ஒப்புக் கொண்டான். இராகுலன் சமையற்காரனிடம் விடியற்காலத்திலேயே உணவு ஆக்கும்படி உத்தரவிட்டான். சமையற்காரன் சிறிது காலந் தாழ்ந்து வந்தான் அச்சத்தால் விரைந்து அடுக்களையில் புகும்போது கால் வழுக்கிச் சமையல் பாண்டம் சிதையும் படி விழுந்தான். அது கண்ட இராகுலன் கோபங்கொண்டான். அவன் கழுத்தை வாளால் வெட்டித் துண்டாக்கினான். இத்தீவினை காரணத்தால்தான் இராகுலன் திட்டிவிடத்தால் இறந்தான். அவனுடன் இலக்குமியும் தீப்பாய்ந்து இறந்தாள். இந்த இராகுலனே உதயகுமாரனாகப் பிறந்தான். முன் செய்த தீவினையால், காஞ்சனன் என்னும் வித்தியாதரனுடைய வாளுக்கு இரையானான். ஆபுத்திரன் கதை வாரணாசியில் அபஞ்சிகன் என்னும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி பெயர் சாலி. ஒழுக்கந் தவறிக் கருவுற்றாள். தனது பாவம் தீரக் கன்னியாகுமரிக்கு நீராடப் போனாள். போகும் வழியிலே ஒரு புதல்வனைப் பெற்றாள். அவனை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டாள். அக் குழந்தையின் அழுகுரலைக் கேட்டது ஒரு பசு. அது குழந்தையண்டை வந்தது. அதை நக்கிக் கொடுத்தது. ஏழு நாள் வரையிலும் பாலூட்டிப் பாதுகாத்து வந்தது. அப்பொழுது வயனம்கோடு என்னும் ஊரைச் சேர்ந்த அந்தணன் ஒருவன் தன் மனைவியுடன் அவ்வழியே வந்தான். குழந்தையின் அழுகுரல் கேட்டுச் சென்று அதை எடுத்தான். தன் மனைவியின் கையில் கொடுத்தான். குழந்தையில்லாத அவன் அப்பிள்ளையைத் தன் பிள்ளை போலவே வளர்த்தான். அவனுக்கு அந்தணர்க்குரிய கலைகளையெல்லாம் கற்பித்து வளர்த்தான். ஒருநாள் அவ்வூரில் ஓர் அந்தணன் வீட்டில் யாகம் ஒன்று நடந்தது. அதற்காகப் பலியிடும் பொருட்டுக் கட்டப்பட்டிருந்த பசு கதறிக் கொண்டிருந்தது. அதைக்கண்ட அச்சிறுவன் மனம் இறங்கினான். இரவில் அவ்வீட்டில் புகுந்து அப் பசுவைத் திருடிச் சென்றான். பசுவைக் காணாத அந்தணர்கள் அதைத் தேடிச் சென்றனர். அச் சிறுவனைப் பிடித்துக் கொண்டனர். அவனை அடித்துத் துன்புறுத்தினர். அவனைக் கோலால் அடிக்கும் அந்தணர் உவாத்தியின் வயிற்றை அப் பசு தன் கொம்பால் குத்திக் கிழத்து விட்டு ஓடிப்போயிற்று. அவர்கள் அவனை நோக்கி, நீ ஏன் வேள்விப் பசுவைக் கவர்ந்தாய்? என்று சினந்தனர். அவன், பசுவைக் கொல்லுதல் பாவம் என்று பரிந்து பேசினான். அவனைப் பசுமகன் என்று இகழ்ந்தனர். அவன் முனிவர்கள் சிலரின் பிறப்பை எடுத்துரைத்துப் பிறப்பினால் இழிவில்லை என்றான். அப்பொழுது அவர் களிலே ஓர் அந்தணன், அவனுடைய பிறப்பை எடுத்துரைத்து இகழ்ந்தான். அதன்பின் அவனை வளர்த்த பூதி என்னும் அந்தணனும் அவனை வீட்டைவிட்டுத் துரத்தி விட்டான். ஆபுத்திரனும் பிச்சையெடுத்துப் பிழைக்கத் தொடங்கினான். அவனைப் பசுத் திருடி என்று அந்தணர்கள் இகழ்ந்தனர். அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் கற்களை இட்டனர். ஆதலால் அவன் அவ்விடத்தை விட்டுத் தென்மதுரையை அடைந்தான். அங்கே சிந்தாதேவியிர் கோயிலின் முன்னுள்ள அம்பலத்தில் தங்கினான். கையில் பிச்சைக் கலன் ஏந்தி வீடு தோறும் சென்று பிச்சை ஏற்றான். கிடைத்த உணவை வறியோர்களுக்கு இட்டு, மிகுந்தததைத் தான் உண்டு வாழ்ந்தான். ஒருநாள் இரவிலே அவன் அம்பலத்திலே உறங்கும் போது சிலர் வந்து எழுப்பினர்; உணவு கேட்டனர். அவர்களுக்கு உணவளிக்க வழியறியாமல் வருந்தினான். அப்பொழுது சிந்தா தேவி அவன் முன் தோன்றினாள். தன் கையிலிருந்த அட்சய பாத்திரம் ஒன்றை அவன் கையில் அளித்தாள். இதில் உள்ள உணவு எடுக்க எடுக்க குறையாது என்று கூறி மறைந்தாள். அவன் சிந்தாதேவியை வாழ்த்தினான். தன் கையிலிருந்த பாத்திரத்தைக் கொண்டு, பசிச்தோர்க்கு உணவளித்து மகிழ்நதான். அன்று முதல் அவன் பசித்தோர் அனைவர்க்கும் தாராளமாக உணவளித்து வந்தான். ஆபுத்திரன் ஆற்றிவரும் அறத்தை இந்திரன் தனது பாண்டு கம்பளத்தின் நடுக்கத்தால் அறிந்தான். உடனே அவன் ஒரு கிழப்பிராமண உருவுடன் ஆபுத்திரன் பால் அணுகினான். நான் இந்திரன். உன் தானத்தின் பயனைத் தருவதற்கு வந்தேன் என்றான் ஆபுத்திரன், எனக்கு இத் தெய்வீகப் பாத்திரம் ஒன்றே போதும். பசித்தோர் துயர் களைந்து அவர்களின் இனிய முகத்தைப் பார்ப்பதே யான் அடையும் இன்பம் என்று சொல்லி விட்டான். இதனால் சினம் அடைந்த இந்திரன், நாடெங்கும் நல்ல மழை பெய்யச் செய்தான். நாடு செழித்தது. உணவுப் பஞ்சம் ஒழிந்தது. ஆபுத்திரனிடம் உணவு தேடி வருவோர் ஒருவரும் இல்லை. இதனால் மனம் வருந்திய ஆபுத்திரன் ஊர்தோறும் சென்று மக்களை உணவுண்ண அழைத்தான். அவனை அனைவரும் பரிகசித்தனர். இந்நாளில் கப்பலிலிருந்து வந்த சிலர் ஆபுத்திரனைக் கண்டனர். சாவக நாட்டில் மக்கள் பஞ்சத்தால் மடியும் செய்தியைக் கூறினர். அவன் சாவகம் செல்லக் கப்பலேறினான். அவன் ஏறிச் சென்ற கப்பல், போகும் வழியிலேயே மணிபல்லவத் தீவிலே ஒருநாள் தங்கிற்று. விடியற் காலத்து இருட்டில் கப்பல் புறப்பட்டது. ஆபுத்திரன் கப்பலில் ஏறவில்லை. உறங்கிவிட்டான். அவன் கப்பலில் ஏறிவிட்டான் என்று எண்ணிக் கொண்டு, மீகாமன் கப்பலை ஓட்டிக் கொண்டு போய்விட்டான். அதன்பின் விழித்தெழுந்த ஆபுத்திரன், கப்பல் போய் விட்டதை அறிந்து வருந்தினான். பலருக்கும் உணவளிக்கும் இப் பாத்திரத்துடன் நான் தனித்திருந்து என்ன பயன் என்று ஏங்கினான். இரக்கத்துடன் எல்லா உயிர்களையும் காப்போர் எவரேனும் வந்தால் அவர் கையில் ஏறுக என்று சொல்லி அந்தப் பிச்சைப் பாத்திரத்தை அங்கிருந்த கோமுகி என்னும் குளத்தில் விட்டான்; பட்டினி கிடந்து உயிர் துறந்தான். சாவக நாட்டிலே தவள மாமலையிலே மண்முக முனிவன் என்பவன் தவம் புரிந்து கொண்டிருந்தான். அவனிடம் பொன்மயமான கொம்புகளும் குளம்புகளும் அமைந்த பசு ஒன்று இருந்தது. அது போன பிறப்பிலே ஆபுத்திரனைப் பாலூட்டிக் காப்பாற்றி பசுவாகும் ஆபுத்திரன் மணிபல்லவவத் திலே இறக்கும் போது தன்னைக் காத்த பசுவை எண்ணிக் கொண்டே இறந்தான். ஆதலால் அவன் இறந்த பின் அந்தப் பசுவினால் இடப்பட்ட பொன்மயமான முட்டையிலிருந்து மகனாகப் பிறந்தான். சாவக நாட்டு மன்னன் பூமிச்சந்திரன். அவனுக்குப் புத்திரன் இல்லை. அவன் மண்முக முனிவனை வணங்கிப் பசுவீன்ற புதல்வனைப் பெற்றுச் சென்றான். அவனையே அரசனாக்கினான். அவன் புண்ணியரசன் என்னும் பெயருடன் சாவக நாட்டை ஆண்டு வந்தான். ஒருநாள் புண்ணியரசன் தன் தேவியுடன் ஒரு சோலையை அடைந்தான். அங்கிருந்த தரும சாவக முனிவனிடம் அறங் கேட்டறிந்தான். அவன் அங்கு வந்த மணிமேகலையைக் கண்டான். அவள் இன்னாள் என்று அறிந்தான். தனது வளர்ப்புத் தாயாகிய அமரசுந்தரியின் மூலம் தன் பிறப்பை உணர்ந்தான். சனமித்திரன் என்னும் மந்திரியிடம் அரசை ஒப்படைத்து, மணிபல்லவத் தீவை அடைந்தான். அங்கே மணிமேகலை புத்த பீடிகையைக் காட்டக் கண்டான். அதன் வாயிலாகத் தனது பழம்பிறப்பை உணர்ந்தான். ஆபுத்திரன் சாவகநாடு செல்லும்போது அவனுடன் வந்த செட்டிகள் ஒன்பதின்மர். அவர்கள் அவன் அளித்த உணவை உண்டவர்கள். அவர்கள் கப்பல் சாவகம் சென்றபின் ஆபுத்திரனைக் காணாமல் வருந்தினர். அவனைத் தேடிக் கொண்டு மீண்டும் மணிபல்லவத்துக்குத் திரும்பி வந்தனர். ஆபுத்திரன் இறந்ததை அறிந்து அவர்களும் உயிர் விட்டனர். அவ்வொன்பது செட்டிகளின் எலும்புகளையும் தீவதிலகை யென்னும் தெய்வம் காட்டக் கண்டான். அவனது பழைய உடம்பின் எலும்பும் புன்னைமரத்து நிழலிலே மணலால் மூடப் பட்டிருந்ததையும் கண்டான்; வருந்தினான். மணிமேகலை அவனைத் தேற்றித் தருமோபதேசம் செய்தான். அவனைத் திரும்பவும் அவனுடைய நகருக்கு அனுப்பி வைத்தான். காயசண்டிகையின் கதை வடக்கில் வித்தியாதரர் உலகில் காஞ்சனம் என்பது ஓர் ஊர். அவ்வூரிலிருந்த காயசண்டிகை என்பளும் அவள் கணவனும் பொதியமலை வளம் காணப் புறப்பட்டு வந்தனர். வரும் வழியில் ஒரு காட்டாற்றங் கரையில் தங்கினர். அங்கே விருச்சிகன் ஒன்ற முனிவன் ஒருவன் பனம்பழம் போன்ற நாவல் கனி ஒன்றை ஒரு தேக்கிலையிலே வைத்துவிட்டு நீராடப் போயிருந்தான். அக் கனியைக் காயசண்டிகை காலால் மிதித்துக் கெடுத்து விட்.டாள். நீராடி மீண்டுவந்த முனிவன் அக்கனி சிதைந்திருப்பதைக் கண்டான், கோபங் கொண்டான். காயசண்டிகையைப் பார்த்து, இக்கனி பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் கிடைக்கும். நான் பன்னிரெண்டு ஆண்டுகள் பட்டினியிருந்து இக்கனி கிடைக்கும்போது உண்பேன். இதை நீ சிதைத்து விட்டாய் நான் இன்னும் பன்னிரெண்டு ஆண்டுகள் பசித்திருக்க வேண்டும். ஆதலால், நான் மீண்டும் இக்கனியைப் பெறும் வரையிலும் நீ ஆனைத்தீ என்னும் பசி நோயால் வருந்தக் கடவது; வான்வழிச் செல்லும் மந்திரத்தையும் மறப்பாயாக. என் பசி நீங்கும்போது என் பசியும் ஒழிவதாக என்று சாபம் இட்டான். அப்பொழுதே காயசண்டிகையைப் பசி பிடுங்கித் தின்றது. அவள் கணவன் காய், கனி,. கிழங்குகளை ஏராளமாகத் தேடித்தந் தான். அவற்றை உண்டும் அவள் பசி அடங்கவில்லை. அவள் வான்வழிச் செல்லும் மந்திரத்தையும் மறந்தாள். ஆதலால் அவன் தன்னுடன் அவளை அழைத்துச் செல்ல முடியவில்லை, நீ நடந்து சென்று காவிரிப்பூம்பட்டினத்தில் இரு. அங்கே உள்ள மக்கள் உணவிடுவார்கள். நான் ஆண்டுதோறும் இந்திர விழா நடக்கும்போது அங்கு வருவேன் என்று சொல்லிப் போய்விட்டான். காயசண்டிகை காவிரிப்பூம்பட்டிணத்தில் வந்து தங்கியிருந் தாள். மணிமேகலையிடம் அமுதசுரபியிலிருந்து உணவு பெற்று உண்டாள். பசி நீங்கினாள். பன்னிரெண்டு ஆண்டு கழிந்ததால், விருச்சிக முனிவன் தந்து சாபமும் விலகிற்று. அவள் மணிமேகலையிடம் விடைபெற்று தன்னூர்க்குத் திரும்பினாள். போகும் வழியில் விந்தாகடிகை என்னும் தெய்வத்தால் விழுங்கப் பட்டாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் இச் செய்தியை அறியான். காயசண்டிகையைத் தேடிக்கொண்டு காவிரிப்பூம் பட்டினத்தை யடைந்தான். மணிமேகலை காயசண்டிகை உருவில் உலக அறவில் உறைந்தாள். அவளை நாடிவந்த உதயகுமரன் மேல் காஞ்சனன் ஐயங்கொண்டு அவனை வாளால் வெட்டி வீழ்த்தினான். அவன் காயசண்டிகை உருவில் இருந்த மணிமேகலையிடம் நெருங்கும்போது அங்கிருந்த கந்தில்பாவை அவனைத் தடுத்தது. காயசண்டிகையின் கதியை உரைத்தது. அவன் உள்ளம் வருந்தித் தனது ஊருக்குச் சென்றான். ஆதிரையின் கதை ஆதிரை கற்பிலே சிறந்த காரிகை. காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தவள். அவள் கணவன் சாதுவன் என்பவன். அவன் பரத்தையின் இணக்கத்தால் செல்வத்தை இழந்தான். பொருள் தேடும் பொருட்டுச் சில வணிகருடன் கப்பலேறி வேற்று நாட்டுக்குப் புறப்பட்டான். கடும் புயலில் கப்பல் கடலில் விழுந்தது. அதன் பாய்மரத் துண்டு ஒன்றின்ணை கொண்டு, சாதுவன், நாகர்கள் வாழும் தீவில் உள்ள ஒரு மலைப் பக்கத்தை அடைந்தான். நாகர்கள் உடையில்லாமல் வாழ்பவர்கள், நர மாமிசம் புசிப்பவர்கள். சாதுவனுடன் சென்ற வணிகர்களில் சிலர் தப்பிப் பிழைத்துக் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தனர். அவர்கள் ஆதிரையைக் கண்டு, சாதுவன் கடலில் மூழ்கி இறந்தான் என்று கூறினர். ஆதிரை மிகவும் வருந்தினாள். தீ மூட்டி, கணவன் அடைந்த உலகை யானும் அடைவேன் என்று கூறி, அத் தீயிலே இறங்கினாள். தீ அவளை எரிக்கவில்லை. உன் கணவன் நாகர் மலையில் உயிருடன் உள்ளான். இன்னும் சில தினங்களில் திரும்புவான் என்று ஆகாசவாணி அறிவித்தாள். ஆதிரையும் மனம் தேறிக் கணவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். நாகர் மலையை அடைந்த சாதுவன் ஒரு மரநிழலிலே படுத்து அயர்ந்து உறங்கினான். அவன் உடம்பை உண்பதற்காக நாகர்கள் அவனை எழுப்பினர். அவன் எழுந்து நாகர்களின் மொழியிலே அவர்களுடன் பேசினான். அவர்கள் அவனைத் துன்புறுத்தவில்லை. எங்கள் குருவினிடம் வா என்று கூட்டிச் சென்றனர். மாமிச உணவுகளுக்கு மத்தியிலே, பெண்டுடன் கூடியிருந்த நாகர் குருவை சாதுவன் கண்டான். அவனைத் தன் பேச் சால் தன் வயப்படுத்திக் கொண்டான். சாதுவன், தான் அங்கு வந்து சேர்ந்த வரலாற்றைக் கூறினான். நாகர் குரு தன் ஊழியரைப் பார்த்து, இவனுக்குக் கள்ளும் ஊனும் கொடுத்து இளைய மங்கை ஒருத்தியையும் கொடுங்கள் என்று உத்தரவிட்டான். சாதுவன் அவைகள் வேண்டாம் என்று மறுத்தான்., ஊன், கள், காமம் இவற்றின் தீமைகளை எடுத்துரைத்தான். புண்ணிய-பாவங்களின் தன்மை களைப் புகன்றான். நல்லொழுக்கங்களைப் பற்றிப் போதித்தான். சாதுவன் மொழிகளைக் கேட்டு மகிழ்ந்த நாகர் தலைவன், சாதுவனுக்குப் பல பரிசுகளை அளித்தான். சந்தனம், அகில், துகில், ஏனைய செல்வங்கள் அவன் அளித்த பரிசுகள். அதன் பின் சாதுவன், அங்கு வந்த சந்திர தத்தன் என்னும் வணிகனது கப்பலிலே ஏறிக் காவிரிபூம்பட்டினத்தை அடைந்தான். தன் மனைவி ஆதிரையுடன்கூடித்தானதர்மங்கள் செய்து வாழ்ந்தி ருந்தான்.. இந்த ஆதிரையின் கையால்தான் முதன் முதலில் மணிமேகலை அமுதசுரபியில் பிச்சையேற்றாள். சுகந்தன் கதை காந்தன் என்னும் அரசன் காவிரிபூம்பட்டினத்தை ஆண்ட காலத்தில், பரசுராமன் அவனுடன் போர்புரிய வந்தான். காந்தனும் அவனுடன் போரிடப் புறப்பட்டான். அப்பொழுது துர்காதேவி, நீர் இப்பொழுது பரசுராமனுடன் போர் செய்யப் புகுதல் தகாது என்றாள். ஆதலால் அவன் அந்த நகரைவிட்டு வேறு இடம் செல்லத் துணிந்தான். தான் சென்றபின் இந்நகரை ஆளத்தக்கவர் ஆர் என்று ஆராய்ந்தான். காவல் கணிகையின் மகன் சுகந்தன் என்பவன் சிறந்த வீரன். அரசகுலத்தான் அல்லன்; அவன் அரசு புரிந்தால் பரசுராமன் பூம்புகாரின்மேல் போருக்கு வரமாட்டான் என்று துணிந்தான் காந்தன். உடனே சுகந்தனை அழைத்து, தன் கருத்தை அவனிடம் கூறினான். நான் அகத்தியரின் அருள் பெற்று மீண்டும் வரும் வரையில் நீயே இந்த நகரத்தை ஆளவேண்டும் என்று உரைத் தான். நீ ஆள்வதனால் இந்நகருக்குக் காகந்தி என்று பெயர் வழங்குவதாக என்று சொல்லிவிட்டுத் தான் செல்ல நினைத்த இடத்துக்குச் சென்றுவிட்டான். சுகந்தனுக்கு இரண்டு பிள்ளைகள். சுகந்தன் அறநெறி தவறாமல் ஆட்சி புரிந்தான். அவனது பிள்ளைகளில் இளை யவன், காவிரியில் நீராடிவிட்டுத் தனித்துவந்த மருதி என்னும் பார்ப்பனியைக் கண்டு காதல் கொண்டான். இச் செய்தியை அறிந்த சுகந்தன் அவனை வெட்டிக் கொன்றான். சுகந்தனது மூத்த மகன் விசாகை என்னும் பத்தினிப் பெண்ணைத் தெருவிலே கண்டான். அவள்மேல் மோகங் கெண்டான். தன் தலையிலிருந்த மலர் மாலையை எடுத்து அவள் கழுத்தில் போடுவதற்கு எண்ணினான். தன் கையைத் தன் குடுமியிலே உள்ள மாலையை எடுக்கக் குடுமியில் வைத்தான் அவன் கை அப்படியே நின்று விட்டது. இதை அறிந்த சுகந்தன் அவனையும் மகனென்று பாராமல் வெட்டி மடித்தான். இவ்வாறு மாதர்களின் கற்பைக் காப்பதிலே தலைநின்றான் சுகந்தன். மருதியின் கதை மருதி என்னும் பார்ப்பணி காவிரியில் நீராடிவிட்டு தனியாக வந்தாள். சுகந்தனது இளைய மகன், அவளைக் கண்டு காமங் கொண்டான். இதை அறிந்த மருதி வருந்தினாள். நான் பிறர் நெஞ்சு புகுந்தேன். பத்தினிப் பெண்டிர் பிறர்நெஞ்சு புகார். இனி நான் என் கணவனுடன் வாழத் தகுதியுள்ளவள் அல்லேன் என்று துன்புற்றாள். தன் வீட்டுக்குச் செல்லாமல் பூத சதுக்கத்தை அடைந்தாள். நான் எக்குற்றமும் இழைத்திலேன். பிறர் நெஞ்சு புகுந்த காரணம் அறியேன். தெய்வமே நீதான் எனக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்று அழுது புலம்பினாள். அவள்முன் சதுக்கபூதம் தோன்றிற்று. நீ, தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெய்யும் மழை என்ற தெய்வப் புலவன் மொழியை மறந்தாய். நகைச்சுவை தரும் கதைகளையும், பொய்க் கதைகளையும் கேட்பதில் நாட்டங் கொண்டாய். திருவிழாக்களை விரும்பினாய். தெய்வங்களைப் பணிந்தாய். ஆதலால் தான் பிறர் நெஞ்சு புகுந்தனை. ஆயினும் உன்பால் தவறு புரிந்த அரசகுமாரனை ஏழு தினங்களுக்குள் அரசன் தண்டிப்பான். இன்றேல் நான் தண்டிப்பேன் என்று கூறிற்று. அரசகுமாரன் ஏழு தினங்களுக்குள், தந்தையால் வெட்டி வீழ்த்தப்பட்டான். விசாகையின் கதை காவிரிப்பூம்பட்டினத்திலே தருமதத்தன் என்னும் வணிகன் ஒருவன் வாழ்ந்தான். அவனது மாமன் மகள் விசாகை என்பவள். இருவரும் அழகுள்ளவர்கள். அவர்கள் அடிக்கடி சேர்ந்து அன்புடன் உரையாடிக் கொண்டிருந்தனர். அது கண்ட ஊரார் அவர்கள் காந்தர்வ மணம் புரிந்து கொண்டார்கள் என்று கதை கட்டினர். அப் பழியைப் பொறுக்க முடியாத விசாகை உலக அறவியை அடைந்தாள். என் மேல் ஊரார் சுமத்தும் பழியை நீக்குவாய் என்று கந்தில் பாவையிடம் முறையிட்டாள். அத் தெய்வத் விசாகை குற்றமற்றவள் என்று ஊரார்க்கு உரைத்தது. ஊராரும் அவளைப் புகழ்ந்தனர். கந்தில்பாவை சொல்லாவிட்டால் என்மேல் ஊரார் கொண்ட ஐயம் ஒழியாது. இப் பிறப்பில் நான் மணம் புரிந்து கொள்ள மாட்டேன். மறுபிறப்பில் எனது மைத்துனையே மணப்பேன் என்று விசாகை தனது தாயினிடம் கூறினாள். கன்னிமாடம் புகுந்து தவம் புரிந்து கொண்டிருந்தாள். தருமதத்தனும் தன் மீது உண்டான பழியைப் போக்கிய கந்தில் பாவையைப் போற்றினான். அந் நகரை விட்டு தென்மதுரையை அடைந்தாள். விசாகையைத் தவிர வேறு மங்கையை மணக்க மாட்டேன் என்று விரதம் பூண்டான். மதுரையிலே வணிகம் புரிந்து அறநெறியிலே அளவற்ற பொருள் சேர்த்தான். அரசனால் எட்டி என்னும் பட்டமும் பெற்றுப் புகழுடன் வாழ்ந்தான். தருமதத்தனுக்கு வயது அறுபது முடிந்தது. அப்போது ஓர் அந்தணன் அவனிடம் வந்தான். நீ மனையில்லாமல் செய்யும் தருமத்தால் பயன் இல்லை. உனது ஊருக்குச் செல்லுக என்று கூறினான். தருமதத்தனும் மதுரையை விட்டுக் காவிரிபூம் பட்டினத்தை அடைந்தான். தருமதத்தன் வந்திருந்ததை அறிந்த விசாகை அவனிடம் வந்தாள். முன்பு மயக்கிய அழகு இப்பொழுது எங்கே? உனக்கு வயது அறுபது. நானும் நரை கொண்டேன். மறுபிறப்பில் நாம் இருவரும் மணமக்களாவது உறுதி. இளமையும் செல்வமும் நிலையற்றவை. புதல்வரால் தேவலோகப் பதவி கிடைக்கும் என்பது பொய். நாம் செய்யும் அறமே நமக்குத் துணையாகும். ஆதலால் அறம் புரிக என்றாள். தருமதத்தனும் தன் செல்வங் களை அறநெறியிலே செலவு செய்து வாழ்ந்தான். இந்த விசாகை, தன் பழி நீங்கி, உலக அறவியிலிருந்து திரும்பி வரும்போதுதான் சுகந்தனது மூத்தமகன் இவள் மேல் மோகமுற்றான். அக் குற்றத்திற்காகக் கொலையுண்டான். பரதன் கதை கலிங்க நாட்டில் உள்ள சிங்கபுரத்து அரசன் வசு என்பவன். கபிலபுரத்து அரசன் குமரன் என்பவன். இருவரும் பகைவர்கள். சங்கமன் என்னும் வணிகன் தன் மனைவியுடன் சிங்க புரத்திற்குச் சென்றான். கடைவீதியிலே வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அதைக் கண்ட பரதன் என்பவன் பொறாமை கொண்டான். பரதன் சிங்கபுரத்து வேந்தனிடம் வேலை பார்ப்பவன். அவன் சங்கமனைப்பற்றி கபிலபுரத்து அரசனது ஒற்றன் என்று கோள் மூட்டி விட்டான். குற்றமற்ற சங்கமனைக் கொலைபுரியும்படி சதி செய்து விட்டான். சங்கமனும் அரசனால் கொலையுண்டான். சங்கமன் கொலையுண்டதால், அவன் மனைவி நீலி என்பவள் அளவற்ற துன்பத்தால் வருந்தினாள். அவள் ஒரு மலையின் மேற் ஏறி நின்று, எனக்கு துயர் இழைத்தோர் மறுபிறப்பில் இத்துன்பத்தை அடைவார்களாக என்று சபித்து விட்டு கீழே விழுந்து இறந்தாள். சங்கமன் கொலைக்குக் காரணமாயிருந்த பரதனே மறு பிறப்பில் கோவலனாகப் பிறந்து கொலையுண்டான். அவன் மனைவியே கண்ணகியாய்ப் பிறந்து துன்புற்றாள். பழங் கோவலன் கதை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் வேந்தன் முற்காலத்தில் வஞ்சிநகரத்தை ஆண்டுவந்தான். அவனும் அவன் மனைவியும், ஒருநாள் ஒரு சோலையிலே உறைந்தனர். அப்பொழுது புத்த சாரணர்கள் சிலர் வந்தனர். அவர்கள் இலங்கையில் உள்ள சமனொளி என்னும் மலையை வலம் செய்து வணங்கிவிட்டு ஆகாய வழியாயக அங்கு வந்தனர். அங்கிருந்த சிலாதலத்தில் அமர்ந்தனர். அவர்களைச் சேரலாதன் வணங்கி அமுது செய்வித்தான். அவர்கள் அரசனுக்குப் புத்த தருமத்தை போதித்தனர். சிலப்பதிகாரக் கோவலனுக்கு ஒன்பது தலை முறைக்கு முன்னே அவன் குலத்தில் கோவலன் என்று ஒருவன் இருந்தான். அவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு நெருங்கிய நண்பன். சாரணர்கள் புத்த தர்மம் போதிக்கும் போது அவனும் அரசனுடன் இருந்தான். சாரணர்கள் சாற்றிய தர்மங்களை அவனும் கேட்டான். அவன் தன் பெரும் செல்வத்தை ஏழு தினங்களுக்குள் இரவலர்களுக்கு ஈந்தான். பின்பு தவம் புரிந்தான். அக்கோவலன் அக்காலத்தில் வஞ்சிநகரத்தில் புத்த தேவனுக்காக பீடம் ஒன்றைக் கட்டுவித்தான். அந்தப் புத்த சைத்தம் மணிமேகலை காலத்திலும் நிலைத்திருந்தது. சிலப்பதிகாரக் கோவலனுடைய தந்தை மாசாத்துவான் அப் புத்த சைத்தத்தைத் தரிசிப்பதற்காக வஞ்சிநகரம் சென்றான். அதைத் தரிசித்தான். அந் நகரிலேயே புத்த சங்கத்தில் இருந்தான். காவிரிப்பூம்பட்டினம் கடல் கொண்ட கதை மணிமேகலை காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்ட அரசன் நெடுமுடிக்கிள்ளி. இவனுக்கு மாவண்கிள்ளி, கிள்ளிவளவன், வடிவேற்கிள்ளி, வெண்வேற்கிள்ளி என்ற பெயர்களும் உண்டு. இவன் உதயகுமரன் தந்தை. நெடுமுடிக்கிள்ளி ஒருநாள் காவிரிப்பூம்பட்டினத்துக் கடற்கரையிலே புன்னை மரச்சோலை ஒன்றிலே இருந்தான். அப்பொழுது அழகு நிறைந்த மங்கை ஒருத்தியைக் கண்டான். அவளுடன் ஒரு மாதம் அச் சோலையிலேயே தங்கியிருந்தான். அவள் ஒருநாள் திடீர் என்று அரசனிடம் சொல்லாமல் மறைந்து விட்டாள். அரசன் அவளைத் தேடி அலைந்தான். அப்பொழுது அற்புத சக்தி படைத்த சாரணன் ஒருவன் அங்கு வந்தான். அவனை அரசன் வணங்கி, என் உயிர் போன்ற காதலியை அடிகள் கண்டதுண்டோ? என்று கெஞ்சிக் கேட்டான். நாக நாட்டரசன் வளைவணன். அவன் மனைவி வாச மயிலை. அவர்கள் பெற்றெடுத்த மகள் பீலிவளை. அவள் பிறந்தபோது, இவள் சூரியகுல அரசன் ஒருவனை அணைந்து கருவுற்று வருவாள் என்று கணிகள் கூறினர். அவள் தான் உனது காதலியாக இருந்தவள். அவளை இனி நீ காண முடியாது. அவள் வயிற்றில் பிறக்கும் மகன்தான் வருவான். நீ வருந்தாதே என்று சாரணன் கூறினான். ஆண்டுதோறும் தவறாமல் இந்திரா விழா நடைபெற வேண்டும். இவ்விழா நடைபெறாத ஆண்டில் இந் நகரத்தை மணிமேகலா தெய்வத்தின் ஏவலால் கடல் கொள்ளும். இவ்வாறு இந்திரனுடைய சாபமும் உண்டு. ஆதலால் மறவாமல் ஆண்டுதோறும் இந்திரவிழாச் செய்து வருக என்றும் அந்தச் சாரணன் சொல்லிவிட்டுச் சென்றான். அரசனை விட்டுச் சென்ற பீலிவளை ஓர் ஆண்மகனைப் பெற்றெடுத்தாள். ஒரு நாள் அவள் தன் பிள்ளையுடன், மணி பல்லவத் தீவை அடைந்தாள். புத்த பீடிகையை வலம் வந்து வணங்கினாள். அச் சமயம் காவிரிப்பூம்பட்டினத்துக் கம்பளச் செட்டி என்பவனது கப்பல் அங்கு வந்தது. பீலிவளை அவனிடம் அணுகி, தன் பிள்ளையை அவனிடம் கொடுத்து, அரசன் மகன் இவன். அரசனிடம் சேர்த்து விடு என்று சொல்லிச் சென்றாள். கம்பளச் செட்டியின் கப்பல் காவிரிப்பூம்பட்டினத்தை நோக்கி வரும்போது நடுக்கடலில் உடைந்து போயிற்று. செட்டியும் அரசகுமாரனும் கடலில் ஆழ்ந்தனர். கப்பலிலிருந்து தப்பிவந்த சிலர் நெடுங்கிள்ளியை நெருங்கி இச் செய்தியைக் கூறினர். அரசன் துன்பத்தால் மனங் கலங்கினான். கடற்கரையை அடைந்து மகனைத் தேடி அலைந்து கொண்டிருந்தான். ஆதலால் இந்திர விழாச் செய்வதை மறந்தான். அரசனுடைய - கலக்கத்தால் - மறதியால் - உரிய காலத்தில் இந்திர விழா நடைபெறவில்லை. மணிமேகலா தெய்வம் கோபங் கொண்டாள். காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் விழுங்குக என்று சபித்தாள். நகரத்தைக் கடல் மூடி விட்டது. அரசன் எங்கேயோ போய் விட்டான். அந் நகரிலிருந்த அறவண அடிகள் மாதவி, சுதமதி ஆகியோர் தப்பித்து வஞ்சி நகரத்தை அடைந்தனர். இவைகள் மணிமேகலையில் காணப்படும் சிறு கதைகள். இன்னும் பல கதைக் குறிப்புக்களும் காணப்படுகின்றன. அரசியல் மணிமேகலை, சிலப்பதிகாரத்தைப் போல அரசியல் புரட்சியை வலியுறுத்தும் காவியம் அன்று. இந்நூல் புத்த மதக் கொள்கைகளைப் போதிப்பதற்கென்றே எழுதப்பட்டதாகும். மக்கள் அனைவரும் பட்டினியின்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். ஒழுக்கந் தவறாமல் உறைய வேண்டும். உலக நிலைமையை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறவா நிலையைப் பெறுவதற்கான நல்லறங்களைப் புரிய வேண்டும். இவைகள் புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகள். இக் கொள்கைகள் அழியாமல் நிலைபெற வேண்டுமானால், அறநிலையைக் காக்கும் அரசாட்சி நிலைத்திருக்க வேண்டும். இதனை மணிமே கலை வலியுறுத்துகின்றது. ஆதலால், அரசியல், ஆட்சிமுறை, ஆட்சியின் கடமை இவைகளைப்புற்றி இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கின்றது. தவமும் கற்பும் மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றுஎனின் இன்றாம் அரசனுடைய பாதுகாப்பு இல்லாவிட்டால் - நீதி நிறைந்த ஆட்சியில்லாவிட்டால் - தவசிகளின் நோன்பு சரிவர நடை பெறாது. பெண்களின் கற்புக்கும் ஆபத்துண்டாகும். (காதை 2 வரி 208-209) ஒரு நாட்டிலே தவத்தோர் இல்லாவிட்டால் - கற்புடை மகளிர் இல்லாவிட்டால் - அந்நாட்டில் மழை பெய்யாது. மழையின்றேல் நாட்டின் வளம் குன்றும்; நாட்டின் வளட் குறைந்தால் பஞ்சம் பிறக்கும்; பஞ்சம் வளர்ந்தால் மக்கள் ஒழுக்கம் குறையும்; மாண்டு மடிவர். இது முன்னோர் கொள்கை; நம்பிக்கையுங் கூட. ஆதலால் தவசிகளையும் பத்தினிப் பெண்டிரையும் காப்பாற்ற வேண்டியது காவலன் கடமை. இவ்வுண்மையை மேலே காட்டிய அடிகள் அறிவுறுத்தின. நல்லாட்சி அற்ற நாட்டிலே மாதர்களின் கற்பு நிலைக்காது. மக்களிடம், ஒழுக்கம் குடி கொள்ளாது. இதற்கு ஒரு கதையை உதாரணம் காட்டுகிறது மணிமேகலை. ஆட்சியாளர் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்தனர். அதனால் அந்நாட்டிலே ஒழுக்கம் கட்டுப்பாடுகள் எல்லாம் ஒழிந்துவிட்டன. இல்லறத்துக்குரிய மனையாள் ஒருத்தியை அவள் கணவன் கைவிட்டான். கைவிடப்பட்ட அப்பெண் மகனையும் கைவிட்டாள். அவள் வேற்றூரை அடைந்தாள். வயிறு வளர்க்க விபசார வாழ்க்கையை மேற்கொண்டாள். அவளால் கைவிடப்பட்ட புதல்வனை ஓர் அந்தணன் வளர்த்தான். அவன் பிறப்பைப்பற்றி ஊரார் அறியாமல் மறைத்துத் தன் மகனைப் போலவே வளர்த்தான். அப் புதல்வன், வயது வந்தபின் விபசாரத் தொழில் நடத்தி வந்த தன் தாயைக் கண்டான். அவளைத் தன் அன்னையென்று அறியாமல் அவளுடன் கூடி இன்புற்றான். பிறகு அவள் தான் தன்னைப் பெற்றவள் என்று அறிந்தவுடன் உயிர் விட்டான். இதுவே மணிமேகலை காட்டும் கதை. ஆள்பவர் கலக்குற மயங்கிய நல்நாட்டுக் காருக மடந்தை கணவனும் கைவிட ஈன்ற குழவியோடு தான்வேறு ஆகி, மான்று ஓர் திசைபோய் வரையாள் வாழ்வுழிப் புதல்வன் தன்னைஓர் புரிநூல் மார்பன் பதியோர் அறியாப் பான்மையின் வளர்க்க, ஆங்குஅப் புதல்வன் அவள்திறம் அறியான் தான்புணர்ந்து அறிந்தபின் தன்உயிர் நீத்ததும் (காதை 23, வரி 104-111) இவ்வடிகளால் மேற்காட்டிய கதையைக் காணலாம். கொடுங்கோல் நிலவும் நாட்டிலே மக்களின் குடும்ப வாழ்வு நன்றாக நடைபெறாது. பெண்கள் ஒழுக்கம் குன்றுவர். தாய், தான் பெற்ற குழந்தையையும் கை விடுவாள். தாயை மகன் பெண்டாளும் நிலையும் ஏற்படும். இவ்வுண்மையை இக்கதை எடுத்துக் காட்டிற்று. வறுமையினால் வாடித் திரியும் மக்களி டையிலே இன்றும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளைக் காணலாம். பெண்களின் கற்பைக் காப்பது ஆட்சியின் முதற் கடமை, பெண்களைக் கற்பழிக்க முயல்வோர்க்குக் கொலைத் தண்டனை கொடுக்க வேண்டும். இக் கருத்துக்களைக் கதைகளின் வாயிலாக வலியுறுத்துகின்றது மணிமேகலை. காவிரிப்பூம்பட்டினத்து வேந்தன் காந்தன் என்பவன் பெண்களின் கற்பைக் கெடுக்க முயன்ற தன் மக்களைக் கொன்றான். இதனை மருதியின் கதையாலும், விசாகையின் கதையாலும் காணலாம். மணிமேகலையின் கற்பைக் கெடுக்க முயன்ற உதயகுமரன் விஞ்சையனால் வெட்டுண்டான். முனிவர்கள் இச் செய்தியை, அவன் தந்தையான மாவண் கிள்ளி யிடம் சொல்லியபோது அவன் மகனுக்காக மனம் வருந்த வில்லை. மகன் பெற்ற தண்டனை சரியானது தான் என்று மகிழ்ந்தான். இந் நிகழ்ச்சிகளின் மூலம் பெண்களின் கற்பைக் காத்தல் காவலன் கடமை என்பதை மணிமேகலை வலியுறுத்தியிருக்கின்றது. மக்களும் மன்னரும் மணிமேகலை நூல் எழுதப்பட்ட காலத்திலே இந் நாட்டில் மக்கள் ஆட்சி இல்லை. மன்னர் ஆட்சிதான் இருந்தது. ஆயினும் அரசர்கள் சர்வாதிகாரிகளாக இல்லை. மக்களுடன் கலந்துதான் - அவர்களின் மனக் கருத்தை அறிந்துதான் - ஆட்சி நடத்தினர். இந்த உண்மையை மணிமேகலையால் உணர் கின்றோம். காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற இந்திர விழாவைப் பற்றி மணிமேகலையில் கூறப்படுவதை ஆராய்ந்தால் மேலே சொல்லிய உண்மை விளங்கும். இந்திர விழாவை எப்படி நடத்துவது என்பதைப் பற்றிப் பொது மக்களும், ஆட்சியாளரும் ஒன்று கூடிப் பேசி முடிவு செய்தனர் என்று காணப்படுகின்றது. சமயவாதிகள், தம்முடைய கலையிலே கைதேர்ந்த சோதிடர்கள் ஒன்று கூடினர். ஒளி பொருந்திய தமது உருவத்தை மறைத்து மக்கள் உருவில் வந்திருந்த தேவர்கள், ஏராளமாகக் கூடிவந்த பல மொழி பேசும் மக்கள், அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவர், சாரணர் என்னும் ஐம்பெரும் குழு கணக்கர்கள், நிர்வாக அதிகாரிகள், நிதிக் காப்பாளர்கள், காவலர்கள், நகரமக்கள், படைத்தலைவர், யானை வீரர்கள், குதிரை வீரர்கள் என்போர் அடங்கிய எண்பேர் ஆயம் - இவர்கள் எல்லாம் ஒன்று திரண்டனர். இவ்வுலக மன்னர்கள் எல்லாம் வந்து கூடுகின்ற இந்திர விழாவைத் தொடங்குகு என்று முடிவு செய்தனர் என்று கூறுகின்றது மணிமேகலை. இதனை, சமயக் கணக்கரும், தம்துறைபோகியஅமயக்கணக்கரும்,அகலார்ஆகிக்கரந்துஉருவெய்தியகடவுளாரும்,பரந்துஒருங்குஈண்டியபாடைமாக்களும், ஐம்பெரும்குழுவும்,எண்பேர்ஆயமும் வந்துஒருங்குகுழீஇவான்பதிதன்னுள் ........................................................... மாயிரு ஞாலத்து அரசுதலை யீண்டும் ஆயிரம் கண்ணோன் விழாக்கால் கொள்கஎன (கhதை 1, வரி13-26) என்ற அடிகளால் அறியலாம். நாட்டில் நடக்கவேண்டிaசெயல்கsமக்கŸதலைவர்களும்,மன்dர்சபையினUம்கலªதுபேசிnயமுoவுசெய்தன®. இதற்கு மேலே காட்டிய அடிகளே சான்றாகும். மன்னருக்கு ஆலோசனைகூறஆட்சியைநடத்தஇரண்டுசபைகள்இருந்தன.ஒன்று ஐம்பெருங்குழு, மற்றொன்று எண்பேர்ஆயம்.இச்சபைகளில் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள் இருந்தனர்;மக்களின்jலைவர்களும்இருந்தனர்.பண்டைத் தமிழகத்தில் மன்னனே மக்களின் உயிராகக் கருதப்பட்டான். மன்னன் இன்றேல் மக்கள் வாழ முடியாது என்று எண்ணினர். மன்னனே தெய்வம் அவன் வார்த்தைக்கு மறு வார்த்தையில்லை. அவன் இடும் கட்டளைகள் எவை யாயினும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நினைத்தனர்; நடந்தனர். ஆயினும் மக்களைக் கொடுமைப்படுத்திய மன்னர் கள் நிலைத்து வாழ்ந்ததில்லை. மணிமேகலை காலத்தில் மன்னன் உடலாகக் கருதப் பட்டான். மக்கள் உயிராக எண்ணப்பட்டனர். மக்கள் துன்புற்றால் மன்னன் வாழமுடியாது; ஆட்சி நடைபெறாது; அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்ற கொள்கை நிலவியிருந்தது. இதனால் மக்களைக் காக்க வேண்டியது மன்னன் கடமை, ஆட்சியின் பொறுப்பு என்ற நீதி நிலைத்து நின்றது. கோன்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்; கோள்நிலை திரிந்திடின் மாரி வறம்கூரும்; மாரி வறங்கூரின் மன்உயிர் இல்லை; மன்உயிர் எல்லாம் மண்ஆள் வேந்தன் தன்உயிர் என்னும் தகுதியின்று ஆகும். அரசன் தனது நீதியிலே வழுவிக் கொடுங்கோலனாயின், கிரகங்களின் நிலை மாறும், கிரகங்களின் நிலையிலே மாறுதல் ஏற்பட்டால், மழையில்லாமல் வறட்சி மிகுந்துவிடும். மழை யில்லாவிட்டால் இவ்வுலகில் உயிர்கள் வாழ முடியாது. இவ்வுலகில் நிலைத்து வாழும் உயிர்கள் தாம், உலகாளும் மன்னனுடைய உயிர் என்று சொல்லுவதற்குரிய தகுதியில் லாமற் போய்விடும் (காதை 7, வரி 8-12) இவ்வடிகள் அரசனுடைய கடமையையும், அவன் கடமை தவறுவதனால் ஏற்படும் தீமையையும் எடுத்துக் காட்டின. மக்களுக்காகவே மன்னன் மக்கள் நலங் கருதுவோரே ஆட்சி புரிதல் வேண்டும். தந்நலந் துறந்து பொதுநலம் புரியும் உள்ளம் படைத்தவர்களே உலகாள வேண்டும் இக்கருத்தை வெளியிடுகிறது மணிமே கலை. சாவக நாட்டை ஆண்ட புண்ணியராசன், அரசை விட்டுத் துறவுபூண நினைத்தான். அப்பொழுது அவனது அமைச்சர் களின் ஒருவனாகிய சனிமித்திரன் அரசனுக்கு உரைத்த அறிவுரை குறிப்பிடத்தக்கது. அது அரசனுடைய கடமையை வலியுறுத்துகின்றது. உனது அரசன் உன்னை மகனாகப் பெறுவதற்கு முன்பு ஊர்கள் நிறைந்த இந்த நல்ல நாட்டிலே பன்னிரண்டு ஆண்டுகள் மழைவளம் இல்லை. அதனால் எழுந்த பஞ்சத்திலே உயிர்கள் மடிந்தன. பெற்ற தாயும் பிள்ளையிடம் இரக்கங்காட்டாமல், அதைத் தின்னும் நிலை ஏற்பட்டது. அக்காலத்தில் காய்ந்த கடுங்கோடையிலே நல்ல மழை பெய்தது போல நீ பிறந்தாய் நீ தோன்றிய பின்னர் இந் நாட்டிலே பிறந்த உயிர்களுக்கு எத்தகைய துன்பமும் இல்லை. தவறாமல் மழை பெய்தது. நிலத்திலே விளையும் செல்வத்துக்குக் குறையவில்லை. உடம்பைப் பெற்ற உயிர்கள் எல்லாம் பசியைக் காணாமல் வாழ்ந்தன; வாழ் கின்றன. நீ ஆட்சியைத் துறப்பாயானால், உனது நாட்டில் உள்ள உயிர்கள் எல்லாம் தாயைப் பிரிந்த குழந்தைகளைப் போலக் கூவி அழும். இத்தகைய துன்பத் தோன்றக்கூடிய உலகைக் காப்பதே உனது கடமை. காக்காமல் கைவிட்டு நீ மட்டும் உயர்ந்த உலகடைய விரும்புவாயானால் அது நீதி அன்று. உயிர்கள் எல்லாம் மாண்டுமடியும்படி விட்டு நீ மட்டும் இலாபத்தை விரும்பியவனாக ஆவாய். இச்செயல் தன் உயிர் படும் துன்பத்திற்கு இரங்காமல், பிறவுயிர்களின் துன்பத்தைப் போக்கிக் காப்பாற்றும் புத்தருடைய அறநெறியா காது; அதற்கு மாறானதாகும். இவ்வாறு, அமைச்சன் அரசனுக்கு உரைத் தான். இதனை, நுங்கோன் உன்னைப் பெறுவதன் முன்னாள் பன்னீ ராண்டுஇப் பதிகெழு நல்நாடு மன்உயிர் மடிய மழைவளம் கரந்து, ஈங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகித் தான்தனி தின்னும் தகைமையது ஆயது; காய்வெம் கோடையில் கார்தோன் றியதுஎன நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்! தோன்றிய பின்னர்த் தோன்றிய உயிர்கட்கு வானம் பொய்யாது; மண்வளம் பிழையாது; ஊன்உடை உயிர்கள் உறுபசி அறியா; நீஒழி காலை, நின்நாடு எல்லாம் தாய்ஒழி குழவி போலக் கூஉம் துயர்நிலை உலகம் காத்தல் இன்றி, நீ உயர்நிலை உலகம் வேட்டனை அயின், இறுதி உயிர்கள் எய்தவும், இறைவ! பெறுதி விரும்பினை ஆகுவை அன்றே; தன் உயிர்க்கு இரங்கான் பிறஉயிர் ஓம்பும் மன்உயிர் முதல்வன் அறமும்ஈது அன்று (காதை 25. வரி 100-117) என்ற அடிகளால் அறியலாம். இவ்வடிகள் மன்னன் கடமையை ஆளுவோர் பொறுப்பை அறிவித்தன. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து ஆட்சி புரிந்த சோழ மன்னர்கள் அறநெறி தவறாமல் ஆண்டு வந்தனர். அரசர்களுக் குரிய கடமைகளை அறிந்து அவ் வழியில் நடந்தனர். இதைக் கரிகாற்சோழன், மனுநீதி கண்ட சோழன் இவர்களின் செயல் களை எடுத்துக காட்டி மெய்ப்பிக்கிறது மணிமேகலை. இருவர் தம்மும் பகைத்து, கரிகாற்சோழனிடம் வழக்கு ரைக்க வந்தனர். அவர்கள் அரசனது இளமைப் பருவத்தைக் கண்டனர். இவனால் எப்படி நீதி காணமுடியும் என்று நினைத்தனர். அவர்கள் கருத்தறிந்த கரிகாலன் தனது இளமைப் பருவத்திற்கு நாணம் அடைந்தான். முதியவனைப் போல் கோலம் பூண்டான். வழக்குரைக்க வந்தவர்களின் வாய்மொழிகளைக் கேட்டான். அவர்கள் ஒப்புக் கொள்ளும்படி நேர்மையாகத் தீர்ப்பளித்தான்: இத்தகைய வல்லமையுள்ளவன் கரிகாலன். இளமை நாணி முதுமை எய்தி உரைமுடிவு காட்டிய உரவோன் (காதை 4, வரி 107-108) தன் மகன் ஏறிச் சென்ற தேர்க்காலில் ஒரு பசுங்கன்று துள்ளிக் குதித்து ஓடி வந்து வீழ்ந்து இறந்தது. இதை அறிந்த அரசன் தானும் தன் மகனைத் தேர்க் காலில் கிடத்தி அரைத்துக் கொன்றான். அறத்தை நிலைநாட்டினான். மகனை முறைசெய்த மன்னவன் (காதை 22, வரி 210) இவ்விரண்டு உதாரணங்களாலும் மணிமேகலை அரச நீதியை வலியுறுத்துவதைக் காணலாம். மன்னர்க்கு வாழ்த்து இவ்வாறு மன்னர்கள் நீதி தவறாமல் அரசு புரிந்த காரணத்தால்தான் அவர்கள் மக்களால் வாழ்த்தப்பட்டனர். மக்கள் நல்ல காரியங்களைச் செய்யும் போதெல்லாம் மன்னர் களை வாழ்த்தினர். அரசாங்கத்தை வாழ்த்தினர். நாடு நலம் பெறவேண்டும் என்று பிரார்த்தனை புரிந்தனர். பழங்குடியிலே பிறந்தோன் இந்திர விழா நடக்கப் போவதை மக்களுக்கு முரசறைந்து தெரிவிக்கத் தொடங்கினான். முதலில், செல்வம் காரணமாக அனைவராலும் விரும்பப்படும் பழமையான காவிரிப்பூம்பட்டினர் வாழ்க என்று தெய்வத்தை வணங்கினான். அதன் பின், வானம் மும்மாரி பெய்க; வேந்தன் அரசநீதியில் மாறுபடக்கூடிய கொடுங்கோலனாக இல்லாமல் செங்கோலனாக வாழ்க என்றும் வாழ்த்தினான். முரசுகடிப்பு இடூஉம் முதுகுடிப் பிறந்தோன், திருவிழை மூதூர் வாழ்க என்று ஏத்தி, வானம் மும்மாரி பொழிக; மன்னவன் கோன்நிலை திரியாக் கோலோன் ஆகுக. (காதை 1, வரி 31-34) புலிக் கூட்டம் போன்ற வீரர்கள் பூத சதுக்கத்திலே கூடினர். வெற்றிக் கொடி பறக்கும் தேரையுடைய நமது வேந்தன் வெற்றி பெறுக என்று இடியின் குரல்போல முழங்கினர். சதுக்க பூதத்துக்குப் பலியிட்டு வணங்கினர். புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்துக் கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்கஎன இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும் (காதை 7, வரி 78-80) அரசன் நீதியுடன் ஆளவேண்டும். வெற்றி பெற்று வாழ வேண்டும் என மக்கள் வேண்டினர்; வாழ்த்தினர். இவ்வுண்மையை மேலே காட்டிய இரண்டு உதாரணங்களாலும் அறியலாம். அரசு அறநெறியில் வாழ்வோரைக் காக்க வேண்டும்; பெண்களின் கற்பைக் காக்கவேண்டும். பெண்களிடம் இழிவாக நடந்து கொள்ளும் காமுகர்களுக்குக் கடுந் தண்டனை கொடுக்க வேண்டும். ஆளுவோர் நாட்டு மக்கள் நலம் ஒன்றையே கருத வேண்டும். தந்நலம் துறந்து பிறர் நலம் பெற உழைப்பவர்களே ஆட்சி பீடத்திலே அமரத் தகுதியுள்ளவர்கள். இத்தகைய ஆட்சியையே மக்கள் ஆதரிப்பார்கள்; வாழ்த்து வார்கள். இவ்வுண்மைகளை மணிமேகலை தெளிவாக கூறுகின்றது. மேலே காட்டிய உதாரணங்களைக் கொண்டு இவற்றைக் காணலாம். அறவுரைகள் பண்டைத் தமிழர்கள் இவ்வுலக இன்பத்தையே உண்மை யென்று நினைத்தனர். உண்டு களித்துப் பெண்களுடன் உறவாடுவதே இவ்வுலகில் மக்கள் அடையும் இன்பம் என்று எண்ணினர். ஆதலால் அவர்கள் மதுவை விலக்கவில்லை; மாமிசத்தை வெறுக்கவில்லை; பெண் இன்பத்தையும் ஒதுக்க வில்லை. சங்க இலக்கியங்களிலே இவற்றைக் காணலாம். ஆனால் மணிமேகலை இக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வில்லை. உடல் அழியும், இளமை நீங்கும். அழகு சிதையும், இன்பம் நிலைக்காது, அறம் ஒன்றே அழியாதது. ஆதலால் நல்லறங் களைச் செய்து, இறந்தபின் நல்வாழ்வு பெற வழி தேட வேண் டும். இக்கொள்கையை வலியுறுத்துகின்றது மணிமேகலை. எல்லாத் துனபங்களுக்கும் காரணம் ஆசை. ஆசை யில்லாவிட்டால் துன்பமும் இல்லை. இறப்பும் இல்லை. பிறப்பும் இல்லை. ஆசையற்றவர்களே நல்லறம் புரிவார்கள்; துன்பம் இல்லாமல் வாழ்வார்கள். இவ் வுண்மையை எடுத்துக் காட்டு கின்றது மணிமேகலை. மறுஉலகம் என்பது ஒன்றும் இல்லை. அதற்காக மனிதன் இவ்வுலக இன்பத்தை இழக்க வேண்டாம்; இவ்வுலகில் உண்டு களித்து இன்புற்று வாழ்வதே மனித வாழ்க்கையின் பயன் என்போர்க்கு மணிமேகலை மறுப்புக் கூறுகின்றது. மணிமேகலையில் கூறப்படும் அறவுரைகள் கற்பனைகள் அல்ல. இயற்கையான நிகழ்ச்சிகளையே அறவுரைகளாக எடுத்துரைக்கின்றன. அவைகளைக் காண்போம். ஆக்கை நிலையாமை இவ்வுடம்பு முன்செய்த வினையால் பிறந்தது. நல்வினை தீவினைகளைச் செய்வதற்குக் காரணமாக இருப்பது. வாசனைத் திரவியங்களால் அலங்கரிக்கப்படா விட்டால் புலால் நாற்றம் வீசுவது. எப்பொழுதும் இளமையுடன் இருக்காது; மூப்பும் சாக்காடும் உள்ளது. கொடிய நோய்களுக்கு உறைவிடமானது. ஆசை பற்றிருக்கும் இடம். குற்றங்கள் நிறைந்திருக்கும் ஒரு பாண்டம். புற்றிலே தங்கியிருக்கும் பாம்பைப் போலக் கோபம் குடியிருக்கும் இடம். துன்பம், என்ன செய்வேன் என்ற கவலை, துன்பத்தால் மூர்ச்கையடைதல், வாய்விட்டு அழுதல் போன்ற நன்மைகளை எப்பொழுதும் கொண்டிருக்கும் உள்ளத்தை யுடையது. மக்கள் உடம்பின் இயல்பு இதுதான். வினையின் வந்தது, வினைக்கு விளைவு ஆயது. புனைவன நீங்கின் புலால்புறத்து இடுவது, மூப்புவிளிவு உடையது தீப்பிணி இருக்கை, பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம், புற்று அடங்கு அரவின் செற்றக் சேக்கை, அவலம், கவலை, கையாறு, அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது, மக்கள் யாக்கை இது. (காதை 4, வரி 113-120) இவ்வடிகள் உடம்பின் தன்மையை எடுத்துக் காட்டின. மக்கள் தம் உடம்பை எவ்வளவுதான் பேணிப் பாதுகாத்தாலும் இந்த இயற்கையைத் தடுக்க முடியாது. பிறப்பதும், வயது முதிர்ந்து கிழப்பருவம் அடைவதும், நோய்வாய்ப்பட்டு வருந்துவதும், இறுதியில் இறப்பதும் இவ்வுடலின் இயல்பு; இவ்வுடம்பு துன்பங்கள் எல்லாம் நிறைந்திருக்கும் ஒரு பாண்டம். இதுவே மக்கள் உடம்பாகும். பிறத்தலும், மூத்தலும், பிணிப்பட்டு இரங்கலும் இறத்தலும் உடையது, இடும்பைக் கொள்கலம், மக்கள் யாக்கை இது. (காதை 18, வரி 36-38) இவ்வடிகளும் உடம்பின் நிலையற்ற தன்மையை எடுத்துக் காட்டின. இளமை நிலையாமை மங்கையரின் அழகிலே மயங்காத ஆடவர்கள் ஒருவரும் இல்லை. பெண்ணின்பமே பெரிதெனக் கருதி வாழ்வோர் பலன் உண்டு. இதன் பொருட்டு எல்லாச் செல்வங்களையும் இழந்து பரிதவிப்போர் உண்டு. தமக்கென்ற உரிமை உணர்ச்சி ஒன்றும் இல்லாமல், பெண்கள் சொற்படி ஆடுவோர் உண்டு. பெண் களின் இளம் பருவ அழகிலும்., இன்பத்திலும் ஈடுபட்டு மயங்கியவர்கள் இந்நிலையை அடைவார்கள். அவர்களுடைய அழகும், இன்பமும் அழியக்கூடியவை என்பதை அறிந்தவர்கள்--மறவாதவர்கள்--அவர்களுக்கு அடிமைப்பட மாட்டார்கள்; அறிவிழக்க மாட்டார்கள்; இது மணிமேகலையின் கொள்கை. இதனை மணிமேகலை தெளிவாகக் கூறுகின்றது. கருமணல் போன்ற கூந்தலைக் கண்டு மயங்குகின்றவனே! இதோ பார்! கருமணல் போன்ற கூந்தல் வெண்மணல் போல் நரைத்து விட்டது. பிறை போன்ற அழகிய நெற்றியைப் பார்! இப்பொழுது வெளுத்துச் சுருங்கி அழகிழந்தது. வெற்றி தரும் வில்லைப் போல் விளங்கிய புருவங்களைப் பார்! இறால் மீனின் வற்றலைப் போல அழகழிந்தன. செங்கழுநீர் போன்ற கண்களில் இப்பொழுது நீர் நிறைந்து வடிந்து கொண்டிருக்கின்றது. குமிழம் பூப்போன்ற மூக்கைப் பார்! தானே ஒழுகுகின்ற சீழ் போன்ற சளி நிறைந்திருக்கின்றது. வரிசையாக முத்துப் போல் இருந்த பற்கள், இப்பொழுது கரை விதையைப்போல மாறி அழகையிழந்தன. இலவம் இதழைப் போலச் சிவந்திருநத வாயைப் பார்! இப்பொழுது நாறிப்போன புண்ணைப்போல் புலால் நாற்றம் வீசுகின்றது. வள்ளைக்கொடி போன்ற காதுகள் காய்ந்து வ.ற்றிய மாமிசத் துணடு போலக் காணப்படுகின்றன. வியக்கத்தக்க அழகு நிரம்பிய தனங்களைப் பார்! அவைகள் இப்பொழுது உள்ளே ஒன்றும் இல்லாத வெறும் பைகளைப் போலத் தொங்குகின்றன. முன்னிருந்த அழகு போய்விட்டது. அழகிய மூங்கில் குருத்தைப் போன்ற, குளிர்ச்சியும் வழ வழப்பும் திரட்சியும் அமைந்திருந்த தோள்களைப் பார்! ஒடிந்து, தாழ்ந்து தொங்குகின்ற தென்னை மட்டை போலச் சுருங்கி அழகிழந்தன. விரல்களைப் பார்! அவைகள் நரம்பு, தோல், நகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியே காணும்படி சுருங்கி வற்றிப் போயின. வாழைத் தண்டைப்போல் வனப்புடன் இருந்த இரு துடைகளும் இப்பொழுது வற்றிக் காய்ந்த தாழைத்தண்டைப் போல மாறிவிட்டன. அம்புப்புட்டி என்று வருணிக்கப்பட்ட கணைக்கால் களைப் பார்! இப்பொழுது நரம்புகளையும் வெளியில் காட்டிக் கொண்டிருக்கின்றன. தளிர்போல இருந்த பாதங்களின் அழகைப் பார்! முற்றி முதிர்ந்து தானே உதிர்கின்ற நெற்றுத் தேங்காய் போல வற்றி விட்டன. இத்தகைய உடம்பைத்தான் முன்பு பூவாலும், சந்தனத் தாலும் நாற்றம் வீசாமல் மறைத்தனர். ஆடைகளாலும், அணி களாலும், காண்போர் மனத்தைக் கவரும்படி முன்னை யோர் அழகு செய்து கொண்டனர். இந்த வஞ்சகக் செயலை நீ அறிவாயாக. (காதை 20, வரி 40-69) இவை மணிமேகலையால் உதயகுமரனுக்கு உரைக்கப் பட்டவை. தன்னைக் காதலித்த உதயகுமரனுக்கு அவள் நரைத்து முதிர்ந்த கிழவியைக் காட்டி, இவ்வாறு இயம்பினாள். இவ்வடிகள் பெண்களின் அழகைக் கண்டு மயங்கு வோர்க்கு உண்மையை அறிவுறுத்தின. அவர்கள் அழகு நிலை யுள்ளதன்று என்பதை எடுத்துக் காட்டின. சாவது உறுதி இவ்வுலகில் பிறந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் இறப்பது நிச்சயம். பெண்கள், குழந்தைகள், முதியோர், இளையோர் யாராயிருந்தாலும் சரி, எமனுக்கு இரையாவர். தவத்துறையிலே வாழும் மக்கள், மிகப் பெரிய செல்வம் படைத்தவர்கள். கருவுயிர்த்த இளம் பெண்கள், நடப்பதற்கு வலுவற்ற இளங் குழந்தைகள் இவர்களெல்லாம் இறந்து மடிவதைக் காண்கின்றோம். கொடுந் தொழிலையுடைய எமன், முதியவர், இளையவர் என்று பார்க்க மாட்டான்; எல்லோ ரையும், காலம் முடிந்தபின் கொன்று குவிப்பான். இவ்வாறு எமனால் உயிர் குடிக்கப்பட்ட உடம்புகளை நெருப்பாகிய வாயையுடைய இச்சுடுகாடு சாப்பிடுவதைக் கண்கூடாகக் காண்கின்றனர். கண்டும், மிகப் பெரும் செல்வமாகிய கள்ளை உண்டு விளையாடுகின்றனர். மிகச் சிறந்த நல்லறங்களைச் செய்யாமல் வாழ்கின்றனர். இத்தகைய மக்களைக் காட்டிலும் பெரிய மடையர்கள் எவரேனும் உண்டோ? தவத்துறை மாக்கள், மிகப்பெரும் செல்வர், ஈற்றுஇளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர், முதியோர் என்னான்; இளையோர் என்னான்; கொடும்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும், கழிபெரும் செல்வக் கள்ஆட்டு அயர்ந்து, மிக்க நல்அறம் விரும்பாது வாழும், மக்களின் சிறந்த மடவார் உண்டோ? (காதை 6, வரி 97-104) இவ்வடிகள், எல்லோர்க்கும் இறப்பு நிச்சயம். இறப்பைத் தவிர்க்க எவராலும் இயலாது என்ற உண்மையை உரைத்தன. அறமே துணையாகும் உலக வாழ்வு நிலையற்றது என்ற உண்மையை உணர்ந்த வர்கள் காலங் கடத்தாமல் நல்லறங்களை செய்வார்கள். இன்று போகட்டும்; நாளைச் செய்வோம் என்று காத்திருக்க மாட்டார்கள். நல்வினைகளைச் செய்தவர்களே செல்வர் களாகப் பிறந்து சிறப்புறுவர். தீவினைகளைச் செய்தவர்கள் ஏழைகளாகப் பிறந்து ஏக்கம் உறுவார்கள்; செல்வர்களின் வாசல்களிலே சென்று பிச்சைக்குக் காத்துக் கிடப்பர் என்பது மணிமேகலை காலத்து மக்கள் நம்பிக்கை. நல்லறத்தை விதைத்தவர்களே அதனால் விளைந்த பலவகையான செல்வங்களையும் துய்ப்பார்கள். முன்பு நல்லற நெறியைப் பின்பற்றி நடக்காதவர்கள் இப்பொழுது கந்தைத் துணியைக் கட்டியிருப்பர். வயிற்றைச் சுடுகின்ற பெரிய பசித் துன்பத்தால் பதைப்பார்கள். வெயில் என்று வெறுக்காமல், மழையென்று மறுக்காமல் செல்வர்களின் வீட்டு வாயிலுக்குச் செல்வார்கள். அவர்கள் இடும் பிச்சையை எதிர்பார்த்து ஏங்கி நிற்பர். வித்தி நல்அறம் விளைத்த அதன்பயன் துய்ப்போர் தம்மனைத் துணிச்சிதர் உடுத்து, வயிறுகாய் பெரும்பசி அலைத்தற்கு இரங்கி, வெயில்என முனியாது, புயல்என மடியாது, புறம்கடை நின்று, புன்கண் கூர்ந்து, முன் அறம்கடை நில்லாது அயர்வோர் பலர் (காதை 11, வரி 108-113) இவ்வடிகள் நல்லறம் செய்தோர் இயல்பையும், செய்யா தோர் நிலையையும் எடுத்துக் காட்டின. ஒழுக்கத்தின் உயர்வு முடிவான உண்மைப் பொருளை உணர்ந்தவர்களால் இவ்வுலகில் வெறுத்து ஒதுக்கப்பட்டவை ஐந்து. அவை, கள் உண்ணல், பொய் புகலுதல், களவாடுதல், கொலை செய்தல், காமவெறி கொள்ளுதல் என்பவை. காமவெறியானது கள், பொய், களவு, கொலை இந்நான்குடன் இணைந்தே நிற்கும். ஆதலால் காமத்தை ஒழித்தவனே தீவினைகளே ஒழித்தவன் ஆவான். முடிபொருள் உணர்ந்தோர் முதுநீர் உலகில் கடியப் பட்டன ஐந்துஉள: அவற்றில் கள்ளும், பொய்யும், களவும், கொலையும், தள்ளா தாகும் காமம்; தம்பால் ஆங்கது கடிந்தோர் அல்லவை கடிந்தோர் (காதை 22, வரி 169-173) இவ்வடிகள் ஐந்து பெரும் பாவங்கள் இவை என்பதை எடுத்துரைத்தன. இவைகளைத்தான் பஞ்சமா பாதகங்கள் என்பர். இவ் ஐந்து பாவங்களிலும் அடிப்படையாக நிற்பது காமம் ஒன்றேதான். கல்வி கற்றிருப்பார்கள். ஆனால் ஒழுக்கம் என்பதைப் பின்பற்ற மாட்டார்கள். பிறருக்கு மட்டும் ஒழுக்கத்தைப் பற்றிப் போதனை புரிவார்கள். இவர்கள் அறிவுள்ளவர்கள் அல்லர்; ஒழுக்கம் உள்ளவர்கள் அல்லர்; உண்மை உணர்ந்தவர்கள் அல்லர்; கல்வி வேறு; அறிவும் ஒழுக்கமும் வேறு. இவ்வுண்மையை மணிமேகலை ஒப்புக் கொள்ளுகிறது. தாம் கற்ற கல்வி மட்டும் மக்களுக்கு அழகை அளிக்காது. கோபத்தைக் கடிந்தவர்களே அனைத்தையும் அறிந்தவர்கள். வளம் நிறைந்த இவ்வுலகிலே சிறந்து வாழ்வோர் என்போர், வறுமையில் வாடும் மக்களுக்கு, அவர்களிடம் இல்லாத செல்வத்தைக் கொடுத்து அவர்களை வாழ வைப்பவர்களே ஆவார்கள். அழகான ஒளி பொருந்திய வளையலை அணிந்த வளே! இவ்வுலகிலே பசியால் வருந்தி வந்தவர்களின் கொடிய பசியை நீக்குவோரே, இறந்தபின் செல்லும் உலகிலே இன்புற்று வாழும் வழியை அறிந்தவர்கள். தம் பிறவித் துன்பத்தை ஒழிக்கும் உண்மைப் பொருளை உணர்ந்தவர்கள். அவனைத் துயிர்பாலும் அன்பு காட்டுவர், உதவி செய்வர். கற்ற கல்வி அன்றால், காரிகை: செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர், மல்லல்மா ஞாலத்து வாழ்வோர் என்போர் அல்லல் மாக்கட்கு இல்லது நிரப்புநர்; திருந்துஏர் எல்வளை! செல்உலகு அறிந்தோர் வருந்தி வந்தோர் அரும்பசி களைந்தோர்; துன்பம் அறுக்கும் துணிபொருள் உணர்ந்தோர் மன்பதைக் கெல்லாம் அன்பு ஒழியார் (காதை 23, வரி 130-137) இவ்வடிகள் கற்றவர்கள் பின்பற்ற வேண்டிய கடமை களைக் காட்டின. புண்ணியமும் பாவமும் கள் உண்டல், பிற உயிரைக் கொன்று அதன் உடம்பை உண்டல், நல்லறம் அல்ல. இவை தீய செயல்கள்; பாவச் செயல்கள். அறம் புரிவோர் சுவர்க்கம் புகுவர்; பாவம் புரிவோர் நரகம் அடைவர். ஆதலால் பாவத்தை ஒழித்துப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று உபதேசிக்கின்றது மணிமேகலை. பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் உண்மை. இது உறங்குவதும் விழிப்பதும் போன்றதாகும். நல்லறம் புரிவோர் இறந்தபின் நல்லுலகடைவர். பாவத்தைப் புரிவோர் இறந்தபின் நரகத்தை அடைவர். இது உண்மை என்பதை உணர்ந்ததால் அறிவுள்ளோர் மதுவையும், உயிரைக் கொன்று தின்பதையும் பாவம் என்று கைவிட்டனர். பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின், நல் அறம் செய்வோர் நல்உலகு அடைதலும் அல்லது செய்வோர் அருநரகு அடைதலும் உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர் (காதை 16, வரி 86-90) மேலே காட்டியவைகள் மணிமேகலை காலத்திலே நல்லறங்களாகக் கருதப்பட்டன. உடல் நிலைக்காது, அழகு நிலைக்காது. இறப்பது உறுதி என்னும் உண்மைகளை அறிஞர்கள் வலியுறுத்தி வந்தனர். இது மக்கள் வாழ்வைக் கெடுப்பதற்காக அன்று; மக்களை உயர்த்த பண்புடன் வாழ வைப்பதற்கே யாகும். உடலும், அழகும், இளமையும், செல்வமும் நிலையுள்ளவை, அழியாதவை என்று நினைக்கும் மனிதன் பிறருக்கு உதவி புரிய மாட்டான். தான் மட்டுமே - தனக்கு உதவியாக இருப்பவர்கள் மட்டுமே - வாழ விரும்புவான். மனித சமுதாயம் முழுவதும் இன்புற்று வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் பிறக்காது. வாழ்வு நிலையற்றது என்ற உண்மையை உணரும் மக்கள்தாம், பேராசை கொள்ள மாட்டார்கள்; தந்நலம் மிகுந்து பிறருக்குத் தீங்கு செய்ய மாட்டார்கள். எல்லோரும் இன்புற் றிருக்கப் பணிபுரிவோம் என்ற எண்ணம் கொள்ளுவார்கள். இக் கருத்துடன்தான் அறிஞர்கள் உடல், இளமை, செல்வம் இவை களின் நிலையாமையை வலியுறுத்தினர். மக்கள் ஒவ்வொருவரும் பொதுப்பணி புரிவதில் விருப்பம் கொள்ள வேண்டும் என்பதே அவர்கள் கருத்து. மணிமேகலையில் காணப்படும் அறிவுரைகளும் இந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டவைகள்தாம். பசிக் கொடுமை பசிப்பிணி ஒரு பாவி கொடிது கொடிது! வறுமை கொடிது! என்றார் ஒரு புலவர். வறுமையால் பீடிக்கப்பட்ட மனிதன் துன்புறுவான்; மக்கள் பட்டினியால் பரிதவிப்பர். பட்டினிச் சூழல் வீசும் நாட்டிலே, சமுதாயக் கட்டுப்பாடுகள் சரியும். அரசியல் நீதிகள் அழியும். ஒழுக்க முறைகள் ஓடி ஒளிக்கும். இந்த உண்மையைப் படிப்போர் உள்ளத்திலே பதியும்படி உரைக்கின்றது மணிமேகலை. பசிப்பிணி என்பது ஒரு பாவி. அதைப் போலக் கொடுமை செய்வது வேறு ஒன்றுமேயில்லை. உயர்ந்த குடியிலே பிறந்தவர் ஆயினும் அவர்களைப் பசி பற்றிக் கொண்டால் மனிதத் தன்மையை மாற்றிவிடும். அவர்கள் குடிபிறப்பைக் கெடுத்து விடும். பரம்பரைப் பெருமையைச் சிதைத்துவிடும். தீமைகளைக் கடப்பதற்குத் தெப்பமாகத் துணை செய்வது கல்வி, பசிப்பிணி உற்றோர் அந்தக் கல்வியாகிய தெப்பத்தைக் கைவிடுவார்கள். தீமைக் கடலில் மூழ்கித் தவிப்பார்கள். மக்களுக்கு அழகுதரும் ஆபரணம் நாணம். பசித் துன்பம் அந்த நாணத்தையும் நாசமாக்கி விடும். வெட்கம் இன்றி எந்த இழிசெயல்களையும் இயற்றத் தூண்டும். இவ்வளவோடு நின்று விடாது, துன்பங் களில் எல்லாம் கொடிய துன்பம் பிறரிடம் ஒன்றைக் கெஞ்சிக் கேட்டு இரப்பதாகும். பசிப்பிணி இத்துன்பத்தையும் தரும். மனைவியுடன் பிறர் வீட்டு வாயலிலே போய் நின்று பிச்சை கேட்கும்படிச் செய்துவிடும். இவ்வளவு கொடுமைகளைச் செய்யும் இயல்புள்ளது பசிப்பிணி. குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்; நாண் அணி களையும்; மாண்எழில் சிதைக்கும்; பூண்முலை மாதரொடு புறம்கடை நிறுத்தும் பசிப்பிணி என்னும் பாவி (காதை 11, வரி 76-80) இவ்வடிகள் பசிக் கொடுமையின் செயலைக் கூறின. பசியைப் பாவி என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. பசியால் நேரும் பாதகம் மனிதன், பசிக் கொடுமை காரணமாக எதையும் செய்யத் தொடங்குவான். அவன் தின்னத்தகாத பண்டங்களையும் தின்பான். இன்றும் பசிப் பிணியால் பரிதவிப்போர் நாய் நக்கும் எச்சில் இலைக்குக் காத்திருப்பதைக் காண்கின்றோம். உயர்ந்த நிலையில் வாழ்ந்த மக்கள் கூடப் பசிக்கொடுமையால் இத்தகைய இழிந்த நிலைக்கு இறங்கி விடுவார்கள். இதை ஒரு உதாரணத் தால் உரைக்கின்றது மணிமேகலை. ஒரு காலத்திலே பல்லாண்டுகள் மழை பெய்யவில்லை. அதனால் புல் மரம் முதலியவைகளும் புகைந்து போயின. எங்கும் ஒரே வெப்பம். உலகத்து உயிர்கள் அனைத்தும் பட்டினியால் மடிந்தன. அரசாட்சியைத் துறந்து தவம் புரிந்து, அந்தணனாக மாறி கோசிகன் என்னும் விசுவாமித்திர முனிவனும் பசியால் வாடி வதங்கினான். உணவு தேடி உலகில் எல்லாவிடங்களிலும் ஓடித் திரிந்தான். பெரும் பசியைப் போக்கும் உணவுப்பண்டம் ஒன்றும் கிடைக்கவில்லை. பசித் துன்பத்தைப் பொறுக்க முடியாத அவன் செத்துக் கிடக்கும் நாய் ஒன்றைக் கண்டான். அதை அருந்திப் பசியாறத் துணிந்தான். அந்த நாய்க் கறியை அவன் உண்ணத் தொடங்குமுன், இந்திரனுக்குப் பலியிட்டான். அப் பொழுது அவன் முன்வந்து தோன்றிய இந்திரன் மழை பெய்யும் படி செய்தான். அதனால் நாடு செழித்தது; பஞ்சம் பறந்தது. புல்மரம் புகையப் புகைஅழல் பொங்கி மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின், அரசுதலை நீங்கிய அருமறை அந்தணன், இருநில மருங்கின் யாங்கணும் திரிவோன், அரும்பசி களைய ஆற்றுவது காணான் திருந்தா நாய்ஊன் தின்னுதல் உறுவோன் இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் வந்து தோன்றிய வானவர் பெருந்தகை மழைவளம் தருதலின், மன்உயிர் ஓங்கிப் பிழையா விளையுளும் பெருகிறது. (காதை 11, வரி 82-91) இவ்வடிகள் பசித் துன்பத்தால், விசுவாமித்திர முனிவன் நாய்க் கறியை உண்ணத் தொடங்கிய கொடுமையைக் கூறின. பசியால் ஒழுக்கம் கெடும் பசிக் கொடுமை மக்களுடைய மனத்தைக் கல்லாக மாற்றி விடும். உள்ளத்திலே உள்ள அன்பு என்னும் ஈரத்தை அடியோடு வற்றும்படி செய்து விடும். தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்புக்கு நிகராக எதையும் எடுத்துக்காட்ட முடியாது. தாய், தன் குழந்தையிடம் காட்டும் அன்புதான் தந்நலமற்ற அன்பாகும். ஈன்ற குழந்தையின் பொருட்டு எல்லாவற்றையும் தியாகம் செய்யும் தாய்மார்கள் எத்தனையோ பேர் உண்டு. விலங்கு, பறவை முதலியவைகளும் தந்நலம் கருதாமல், தாம் பெற்ற பிள்ளைகளிடம் அன்பு காட்டுகின்றன. அவைகள் தாமே இரைதேடி இயங்கத் தொடங்கும் வரையிலும், அவைகளைக் காப்பாற்றி விடுகின்றன. இந்த அன்பைத் கூட அழிக்கும் கொடு மையுள்ளது பசிப்பிணி என்று இயம்புகின்றது மணிமேகலை. ஒரு காலத்திலே சாவக நாட்டிலே பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மழை பெய்யவில்லை. அந் நாட்டில் உள்ள உயிர்த்தொகைகள் எல்லாம் மடிந்தன. அப்பொழுது அந்நாட்டில் தாயன்பும் ஒழிந்து விட்டது. பிள்ளையைப் பெற்ற தாய், அதனிடம் அன்பு காட்டுவதில்லை. அதைப் பாராட்டிப் பாலூட்டி வளர்ப்பதும் இல்லை. தன் பசிப்பிணி தாங்க முடியாமல் பெற்ற பிள்ளையையே அப்பொழுது எடுத்துத் தின்று விடுவாள். பிறருக்குச் சிறிதும் உதவாமல் தானே தின்று விடுவாள். பஞ்சத்தால் வளர்ந்த பசிக்கொடுமை இத்தகைய அலங்கோலத்தை செய்தது. இதனை, பன்னீர் ஆண்டுஇப் பதிகெழு நல்நாடு மன்உயிர் மடிய மழைவளம் சுரந்து, ஈங்கு ஈன்றாள் குழவிக்கு இரங்காள் ஆகித் தான்தனி தின்னும் தகைமையது ஆயது (காதை 25, வரி 101-104) என்ற அடிகள் விளக்குகின்றன. பசிப்பிணியின் கொடுமையைப் படிப்போர் உள்ளத்திலே பதியும்படி இவ்வளவு தெளிவாக வேறு யாரும் எடுத்துரைக்க வில்லை. நாட்டிலே பசிப்பிணி தோன்றாமல் பாதுகாக்க வேண்டியது நாடாள்வோர் கடமை. உணவுப் பஞ்சத்தை ஒழிப்பது தான் உலகாள்வோர் முதலில் செய்ய வேண்டிய வேலை. உணவுப் பஞ்சத்தால் மக்கள் மடிவார்களானால், மக்கள் நாகரிகமே அழிந்து சிதைந்துவிடும். இந்த உண்மையை வலியுறுத்தத்தான் மணிமேகலை பசிப்பிணி என்னும் பாவியின் கொடுமையைக் கூறிற்று. உயிர்களுக்கெல்லாம் உணவு அறங்களிலே சிறந்தது உயிர்களுக்கெல்லாம் உணவளிப் பதுதான். எவ்வுயிரும் பட்டினியால் மடியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த உண்மையை வலியுறுத்துகின்றது மணிமேகலை. உணவின்மையால் உண்டாகும் துன்பம் மக்கள் உழைப்பெல்லாம் வயிற்றுப் பிழைப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டதாகும். வயிற்றுப் பசி என்பது இல்லாவிட்டால் உலகில் நாகரிகம் என்பதே வளர்ந்திருக்க முடியாது. பசிக் கொடுமையைப் போக்கிக் கொள்ளு வதற்காகவே மக்கள் பாடுபடுகின்றனர். மக்கள் மட்டுமா? மற்றைய விலங்குகளும், பறவைகளும் ஓடியாடுவதும் பசித் துன்பத்தை நீக்கிக் கொள்ளத்தான். மக்கள் அனைவரும் வயிறார உண்டு, உயிர்வாழும் நிலைமை ஏற்பட்டால்தான் உலகில் சமாதானம் நிலைக்கும். மதச்சண்டை, சாதிச்சண்டை, நாட்டுக்கலகம், மொழிச் சண்டை போன்ற சச்சரவுகள் எல்லாம் ஒழியும். ஆழ்ந்து சிந்தித்தால், கலகங்களுக்கெல்லாம் காரணம் உணவுப் பஞ்சந்தான் என்பதை உணரலாம். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக இவ்வுலகிலே ஏற்றத் தாழ்வுகள் இருந்து வருகின்றன. அவைகள் பணத்தால் - குலத்தால் - அதிகாரத்தால் - ஏற்பட்டவை. பணத்திலே, குலத்திலே, அதிகாரத்திலே உயர்ந்தவர்கள் சிறுபான்மையின்ர் தாம். அவர்கள் பண்டைக் காலத்தில் மக்களைப் பட்டினிக்கு இரையாகாமல் பாதுகாத்து வந்தனர். ஆதலால் பெரும்பான் மையான மக்கள் அச் சிறுபான்மையினருக்கு அடங்கி நடந்து வந்தனர். இந்த நிலைமை இன்று மாறிவிட்டது. சிறுபான் மையினர் பெரும்பான்மையோரைப் பற்றிக் கவலைப்படுவதில் லை. ஆகையால்தான் பெரும்பான்மையோர் சிறுபான்மை யாரின் ஆதிக்கத்தை வெறுக்கின்றனர். பண்டைக் காலத்தில் அரசர்கள், பெருநிலக்கிழவர்கள், வசதி படைத்த வணிகர்கள் அனைவரும் ஏழைகள்பால் இரக்கங் காட்டினர்; தந்நலமற்றவர்களாயிருந்தனர். நமது செல்வத்தால் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்; நாமும் அனுபவிக்க வேண்டும். இப்பிறப்பில் பிறருக்கு உதவுவதாகிய நல்வினையைச் செய்தால்தான் மறுபிறப்பில் செல்வம் உள்ளவர்களாகப் பிறக்கலாம். சென்ற பிறப்பில் நல்வினை செய்தவர்களே இவ்வுலகில் செல்வர்களாகப் பிறந்திருக்கின்றனர். போன பிறப்பில் நல்வினை செய்யாதவர்களே இவ்வுலகில் வறியவர் களாகப் பிறந்து வாடுகின்றனர் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. மதங்களும் அற நூல்களும் இவ்வாறே அவர்களுக்கு அறிவுறுத்தி வந்தன. சமூகத்தில் தலைவர்களாயிருந்த சான் றோர்களும் இவ்வாறு உபதேசம் செய்து வந்தனர். உணவளிப்போர் உயிர் காப்போர் பசித்தோர்க்கு உணவு கொடுக்க வேண்டும் என்னும் நல்லறத்தையே பண்டை நூல்கள் எல்லாம் வலியுறுத்துகின்றன. மணிமேகலை நூல் இந்த ஒரே கொள்கையைத்தான் எல்லா வற்றிலும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. கதாநாயகியாகிய மணிமேகலை பசித்த உயிர்களுக்கெல்லாம் உணவிட்டுக் காப்பதையே கடமையாகக் கொண்டாள். தன் ஆயுள் முழுவதும் இந்த அறத்தையே ஆற்றி வந்தாள். இது மணிமேகலை வரலாற்றின் உயிர்நாடி. இதனால், மக்களுக்கு உணவளிப்பதே சிறந்த தர்மம்; உயர்ந்த சமூக ஊழியம்; தேசத் தொண்டு; மக்கள் சமுதாயத்தை அமைதியுடன் வாழச் செய்யும் வழி என்பதை அறியலாம். அணுக்களின் நெருக்கத்தால் தோன்றியது இவ்வுலகம். இவ்வுலகில் வாழும் மக்கள் அனைவர்க்கும் அவர்கள் பட்டினி யால் வருந்திச் சாகாமல் உணவளிக்க வேண்டும். இவ்வாறு உணவளிப்பவர்கள்தாம் மக்களுக்கு உயிர் கொடுத்துக் காப்போர் ஆவார். மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே (காதை 11, வரி 95-96) என்பது, மணிமேகலையின் கொள்கை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பது, புறநானூற்றின் 18-ஆவது செய்யுளில் காணப்படும் அடி. இவ் வடியிலே உணவால்தான் உயிர் வாழ முடியும். உணவின் றேல் உயிர் வாழ முடியாது. உணவு கொடுப்போர்தான் உயிரைக் கொடுப்போர் ஆவார் என்ற கருத்தைக் காணலாம். பண்டைத் தமிழரின் இக் கொள்கையை மணிமேகலை அப்படியே பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது. ஆருயிர் மருந்து மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் உணவுக்கு அமைத் திருக்கும் பெயர் மிகவும் பொருத்தமானது. ஆருயிர் மருந்து என்பது அவர் உணவைக் குறிப்பிடும் பெயர். மணிமேகலையில் ஏழு இடங்களில், உணவைக் குறிப்பிடும்போது ஆருயிர் மருந்து என்னும் தொடரால் அழைக்கின்றார். மேலே காட்டிய புறநானூற்று அடியின் கருத்தைக் கொண்டுதான், சாத்தனார், இத்தகைய அருமையான பெயரை அமைத்திருக்க வேண்டும். உணவுக்கு ஆருயிர் மருந்து என்னும் பெயரை அமைத் திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது. இத் தொடர் பொருள் நிறைந்தது. இதன் பொருளை எண்ண எண்ண எவர்தான் வியப்படைய மாட்டார்கள்? மக்கள், தேவர் என்ற இருவர்க்கும் ஏற்ற ஒரு முடிவான அறம் இன்னது என்பதைக் கூறுகின்றேன் கேள். அவ்வறம் உயிர் களின் பசிப்பிணியை நீக்குவதுதான் என்று அறவண அடிகள் கூறினார். இதுவே மிகப் பெரிய நல்ல தர்மம் என்று நவின்றார். மக்கள் தேவர் எனஇரு சார்க்கும் ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்; பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும் தவப்பெரு நல்அறம் சாற்றினர் (காதை 12, வரி 115-118) இவ்வாறு அறவண அடிகள் மணிமேகலைக்குக் கூறினார். பசியால் வருந்தி வந்தோரின் கொடிய பசியைப் போக்கும்; அவருடைய துக்கம் நிறைந்த சோர்ந்த முகத்தின் நிலையை மாற்றும்; இன்புற்று மகிழும் முகத்தை எனக்குக் காட்டும்; இதைக் கண்டு யானும் மகிழ்ச்சி அடைவேன். இத்தகைய சிறப்புள்ளது என் கையில் உள்ள அமுதசுரபி என்னும் தெய்வத் தன்மையுள்ள பாத்திரம். வருந்தி வந்தோர் அரும்பசி களைந்து, அவர் திருந்துமுகம் காட்டும்என் தெய்வக் கடிஞை (காதை 14, வரி 44-45) இவ்வாறு ஆபுத்திரன் என்பவன், இந்திரனிடம் கூறினான். அறத்திலே சிறந்தது அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாதென்று கேட்டால், சொல்லுகிறேன். நான் சொல்லும் இதனை மறவாமல் கேட்டு மனத்தில் வைத்துக்கொள். உலகில் உறையும் உயிர்களுக்கெல்லாம் உணவு, உடை, உறையுள் இவைகளைக் கொடுத்து உதவுவதுதான் சிறந்த அறம். இதைத் தவிர உயர்ந்த அறம் ஒன்று இருப்பதாக நான் அறிந்ததில்லை. அறம்எனப் படுவது யாதுஎனக் கேட்பின், மறவாது இதுகேள்; மன்உயிர்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும் அல்லது கண்டது இல் (காதை 25, வரி 228-231) இவ்வடிகள் உணவளித்தலே தலைசிறந்த தர்மம் என்று உரைத்தன. உடையற்றோர்க்கு உடை, இடம் இல்லாதவர்க்கு இடம் அளிப்பதும் உணவளிப்பதுடன் ஒட்டிய அறமாகும். வறியோர்க்கு உதவுதல் உண்மையில் உணவில்லாமல் தவிக்கும் வறியோர்க்கே உணவளிக்க வேண்டும். வேறு வேலை செய்து பிழைக்க முடியாத நோயாளிகள், அங்கம் பழுதடைந்தோர் போன்றவர்களைக் காப்பதுதான் நல்லறம். நான் செய்யும் உதவிக்கு, மாற்றுதவி செய்யும் ஆற்றல் படைத்தோர்க்கு உதவுவது அறம் என்ற துறையில் அடங்காது. இவ்வுண்மையை மணிமேகலை எடுத்துக் காட்டுகின்றது. ஆபுத்திரன் தனது பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்திக் கொள்ளுவான். குற்றமற்றோர் வாழும் சிறந்த வீடுகள் தோறும் சுற்றித் திரிந்து பிச்சை ஏற்பான். கண் தெரியாதவர்களே! காது கேட்காதவர்களே! கால் முடம் பட்டு நீண்ட வழி நடக்க முடியாதவர்களே! ஆதரவற்ற அநாதைகளே! பிணியால் வருந்துகின்றவர்களே! அனைவரும் உணவுஉண்ண வாருங்கள் என்று கூவி அழைப்பான். அவனிடம் வந்து கூடுகின்றவர்களுக் கெல்லாம் அன்னம் இடுவான். மீதப்பட்ட உணவைத் தான் உண்பான். அந்தப் பிச்சைக் கலனைத் தலைக்கு அணையாக வைத்துக் கொண்டு படுத்து உறங்குவான். ஐயக் கடிஞை கையில் ஏந்தி, மைஅறு சிறப்பின் மனைதொறும் மறுகிக், காணார், கேளார், கால்முடம் பட்டோர், பேணுநர் இல்லோர், பிணிநடுக் குற்றோர் யாவரும் வருக என்று இசைத்து, உடன் ஊட்டி, உண்டுஒழி மிச்சில்உண்டு, ஓடுதலை மடுத்துக், கண்படை கொள்ளும் காவலன் (காதை 13. வரி 109-115) இவ்வடிகள் ஆபுத்திரன் செயலைக் கூறின. இதனால் உதவி பெறத்தக்கவர் யார் என்பதை அறியலாம். காஞ்சி நகரத்தில் பஞ்சம் குடி கொண்டது. மக்கள் பஞ்சத்தால் பட்டினிக்கு இரையானார்கள். மற்றைய உயிர்களும் மடிந்தன. இக்காலத்தில் மணிமேகலை அந்நகரில் அவளுக் கென்றே அரசனால் அமைக்கப்பட்ட ஒரு சோலையில் தங்கி யிருந்தாள். தனது அமுதசுரபியின் மூலம் அனைவர்க்கும் உணவளித்தாள். இச்செய்தியை மணிமேகலை ஆசிரிய அழகாக எடுத்துக் காட்டுகிறார். அமுதசுரபியே உள்ளங் கையிலே ஏந்நி நிற்பாள். எல்லா உயிர்களும் உணவுண்ண வருக என்று அழைப்பாள். அவ்வூரிலே பதினெட்டு மொழிகளைப் பேசும் பல நாட்டு மக்களும் இருந்தனர். அவர்களிலே கண் தெரியாதவர்கள், காது கேட்கா தவர்கள், கால் நொண்டியானவர்கள், அநாதைகள், ஊமைகள், நோயாளிகள், தவக்கோலமும் விரதமும் உடையவர்கள், பசிநோயால் வருந்தியவர்கள், சோம்பலால் வறுமையுற்றவர்கள் யாவரும் வந்து கூடுவார்கள். பல நூறாயிரம் விலங்கினமும் வந்து சூழும். ஏனைய உயிர்களும் வந்து சுற்றிக் கொள்ளும். இவர்களுக் கெல்லாம் மணிமேகலை உணவிடுவாள். அவள் அளிக்கும் உணவை அவர்கள் உண்பார்கள். அவ்வுணவு அவர்கள் உயிரைக் காக்கும் மருந்தாக இருந்தது. பெரிய தவசிகளுக்குப் பிச்சையிட்டால் அதன் பயன் பெருகி வளரும். இது போலவும்,-- நீர்வளம், நிலத்தின் தன்மை, விதைப்பதற்கேற்ற காலம், பயிர் செழித்து வளர்ந்து பலன் கொடுப்பதற்கான வழிகள் இவற்றை அறிந்து நிலத்திலே விதைக்க வேண்டும். இவ்வாறு சிறந்த முறையறிந்து விதைத்த விதை நன்றாக முளைத்து வளர்ந்து பெரும் பலன் தரும். இதைப் போலவும், நாட்டிலே சிறந்த செல்வம் கொழிக்க வேண்டுமானால் மழை பெய்ய வேண்டும். மழை பெய்தால் எல்லா வளமும் பெருகும். இதைப் போலவும், பசித்தோர் மேலும் மேலும் நாலா திசைகளிலிருந்தும் வந்து குவிந்து கொண்டே யிருந்தனர்; மணிமேகலை அவர்கள் அனைவர்க்கும் வேண்டுமட்டும் அன்னம் இட்டுக் காத்தாள். சோறு கொடுப்பதில் அவள் சோர்வடையவே இல்லை. அவளிடம் உணவுபெற்று உண்ட அனைவரும் அவளைப் புகழ்ந்து போற்றி விட்டுப் போனார்கள். இச்செய்தியைக் கூறும் அடிகள் கீழ்வருவன: அங்கையின் ஏந்திய அமுத சுரபியை வைத்துநின்று, எல்லா உயிரும் வருக என பைத்து அரவு அல்கும் பாவைதன் கிளவியின் மொய்த்த மூவறு பாடை மாக்களில் காணார், கேளார், கால்முடம் பட்டோர், பேணா மாக்கள், பேசார், பிணிந்தோர், படிவ நோன்பியர், பசிநோய் உற்றோர், மடி நல்கூர்ந்த மாக்கள், யாவரும், பல்நூறு ஆயிரம் விலங்கின் தொகுதியும், மன்உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி, அருந்தியோர்க் கெல்லாம் ஆர்உயிர் மருந்தாய்ப், பெருந்தவர் கைபெய் பிச்சையின் பயனும், நீரும், நிலமும், காலமும், கருவியும் சீர்பெற வித்திய வித்தின் விளைவும் பெருகியது என்னப் பெருவளம் சுரப்ப, வசித்தொழில் உதவி வளம் தந்ததுஎனப், பசிப்பிணி தீர்த்த பாவையை ஏத்திச் செல்லும். (காதை 28, வரி 218-235) மணிமேகலை, நாடு, மொழி, வேறுபாடு இல்லாமல் வறியோர் அனைவர்க்கும் உணவளித்தாள். விலங்கு, பறவை முதலிய உயிர்களுக்கும் உணவிட்டாள். இவ்வுண்மையைக் கண்ணாடிபோல் இவ்வடிகள் காட்டின. தாம் செய்த உதவிக்கு எதிர் உதவி செய்யும் இயல்புள் ளவர்களுக்கு உணவளிப்பது உண்மையான அறமாகாது. அது அறம் என்றும் பெயரால் செய்யப்படும் வியாபாரம் ஆகும். ஏழை மக்களின் கொடிய பசியைப் போக்குவதே உண்மையான அறம். இத்தகைய அறத்தைச் செய்கின்றவர்களால்தான், உலகிலே உண்மையான ஒழுக்கநெறி காப்பாற்றப்படுகின்றது. ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை. (காதை 11, வரி 92-94) இவ்வடிகள் பரம ஏழைகளுக்கு உணவளிப்பதே உண்மை யான அறம் என்பதை எடுத்துக் காட்டின. உணவளிப்பதன் பயன் பசித்தோர்க்குச் சோறு கொடுப்பவர்களே மறுபிறப்பில் நல்லொழுக்கத்தைப் பின்பற்றுவோராகப் பிறப்பார்கள்; அவர்கள் எல்லாப் பிறவிகளிலும் நல்லறங்களையே புரிவார்கள்; இறுதியில் பிறவா நெறியை அடைவார்கள் என்று கூறுகின்றது மணிமேகலை. சென்ற பிறப்பிலே மணிமேகலை இராகுலன் என்ப வனுக்கு மனைவியாக இருந்தாள். அப்பொழுது அவள் சாதுசக் கரன் என்னும் முனிவனை உபசரித்து உணவளித்தாள். அப்புண் ணியம் அவளைத் தொடர்ந்து நின்று, இறுதியில் அவள் பிறப்பின்றி முத்தி பெறுவதற்கு மூலமாயிற்று. இச்செய்தியை, மணிபல்லவத் தீவிலே, மணிமேகலையின் முன் தோன்றிய மணிமேகலா தெய்வம் உரைத்தது. அறத்திற்கு எதிரானவைகளை எல்லாம் அறுத்தவன்; புத்தனுடைய பாதங்களை மறவாத அன்பன்; அந்தச் சாதுசக்கர முனிவனை, நீயும் இராகுலனும் பணிந்தீர்கள். தேவனே, எம் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்தருளுக. நாங்கள் உமக்குச் சிறந்த அன்பர்கள் அல்லர். ஆயினும், இனிய நீரும் உணவும் கொண்டு வருகின்றோம். அவற்றை உண்டருள வேண்டும். யாம் உம் கருத்தின்படியே நடக்கின்றோம் உமது உத்தரவு யாது? என்று கேட்டனை. அம் முனிவன், எம் அன்னையே, அவ் வுணவை இங்கே கொண்டு வருக என்றான். நீ அவ்வாறே உணவு கொண்டு போய் கொடுத்தாய். அதை அவன் உண்டருளினான். அந்த அறமே உன்னைவிட்டு நீங்காமல் உன்னுடன் தொடர்ந்து உன் பிறப்பை ஒழிப்பதற்கு மூலமாக நின்றது என்பது மணிமேகலா தெய்வத்தின் பேச்சு. இதனை, பகைஅறு பாத்தியன் பாதம் பணிந்து, ஆங்கு அமர கேள் நின் தமர் அலம் ஆயினும் அம தீம் தண்ணீர் அமுதோடு கொணர்கேம் உண்டி! யாம்உன் குறிப்பினம்; என்றலும், எம்அனை! உண்கேம்! ஈங்குக் கொணர்க என அந்நாள் அவன்உண்டு அருளிய அவ்வறம் நின்ஆங்கு ஒழியாது, நின்பிறப்பு அறுத்திடும் (காதை 10, வரி 35-41) என்ற அடிகளால் அறியலாம். இது அன்னதானத்தால் அடையம் பயனைக் குறிக்கும் கதை. இச்செய்தியை மணிமேகலை, தானே கூறுவதாக மற்றோர் இடத்தில் சொல்லப்படுகின்றது. மணிமேகலை, மணிபல்லவத் தீவிலே தீவதிலகை என்னும் தெய்வத்தைச் சந்தித்தாள். அவள் தனக்கு அமுதசுரபி என்னும் பிச்சைப் பாத்திரம் கிடைத்ததற்குக் காரணம் முன்பிறப்பிலே செய்த அன்னதானந்தான் என்று அறிவித்தாள். சென்ற பிறப்பிலே நான் விரும்பிய காதலன், திட்டி விடத்தால் உயிர் உண்ணப்பட்டான். நானும் அவனுடன் தீப்பாய்ந்து வெந்தேன். என் உணர்வு மறையும்போது, உச்சிப் போதிலே என்முன் தோன்றிய சாதுசக்கர முனிவனுக்கு உணவளித்த காலத்தைப்போல ஒரு கனவால் மயங்கினேன். அதன் பயனால்தான், அரிய உயிர்களைக் காக்கும் மருந்தாக இந்த அமுதசுரபி என் கையில் புகுந்தது. விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் திட்டி விடம்உணச் செல்உயிர் போஉழி உயிரோடு வேவேன், உணர்வுஒழி காலத்து வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய சாது சக்கரன் தனையான் ஊட்டிய காலம் போல்வது ஓர் கனாமயக்கு உற்றேன்; ஆங்கதன் பயனே ஆர்உயிர் மருந்தாய் ஈங்குஇப் பாத்திரம் என்கைப் புகுந்தது. (காதை 11, வரி 99-106) இவ்வடிகள் மணிமேகலையே கூறியதாக அமைந்தவை. இவ்வடிகளும் அன்னதானத்தின் பயனை அறிவித்தன. பசியால் வருந்துவோர்க்கு உணிவிடுவதே உயர்ந்த தர்மம். உணவு பெறத் தகுதியுள்ளவர்கள் இன்னார், உணவிடும் அறத்தால் அடையும் பயன் இது என்பவற்றை மணிமேகலை விளக்கமாகக் கூறுகின்றது. மேலே காட்டியவைகளைக் கொண்டு இவற்றை அறியலாம். பத்தினிப் பெண்டிர் பழமையும் புதுமையும் பெண்களும், ஆண்களும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்பது இக்காலக் கொள்கை. ஆடவர்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் உண்டு. எந்த வகையிலும் பெண்கள் ஆண்களுக்கு இளைத்தவர்கள் அல்லர். தோட்டி முதல் தொண்டைமான் வரையில் உள்ள பலதிறத் தினரும் பார்த்துவரும் வேலைகளைப் பெண்கள் செய்ய முடியும்; செய்தும் வருகின்றனர். மனித சமூக வளர்ச்சியிலே தோன்றிய இக்கொள்கையையும் நிகழ்ச்சியையும் யாரும் தவறு என்று சொல்ல முடியாது. ஆண்களுக்குப் பெண்கள் அடிமையாகத்தான் அடங்கி நடக்க வேண்டும் என்பது பண்டைக்கால நீதி. இன்று அந்த நீதி அநீதியாகத்தான் எண்ணப்படுகின்றது. பயனற்றுப் போன பண்டைக்கால நீதியை மீண்டும் புகுத்த முடியாது. அது நீதியாகவும் நிற்காது. அநீதியாகத்தான் ஆகும். ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு வழக்கம் சமூகத்திற்கு நன்மை தருவதாக அமைந்திருக்கலாம். ஒரு வழக்கம் தீமை யானது என்று மக்களால் கருதப்படும்போது, அது பழமை யானாலும் தானாகவே மறைந்து விடும். வழக்கழிந்து போகும். எவ்வளவுதான் இழுத்துப் பிடித்து நிறுத்தினாலும் நிற்காது. கற்புடை மகளிர் பழைய இலக்கியங்களில் கூறப்படும் பத்தினிப் பெண்டிர் பற்றிய கொள்கையை இக்கால நாகரிக மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆயினும் பண்டைக்கால மக்கள் பெண்களை எப்படி வைத்திருந்தனர்? பெண்களும் எப்படி நடந்து வந்தனர்? குறிப்பாக ஒருவனை மணம் புரிந்து கொண்ட பெண், தன் வாழ்க்கையை எப்படி நடத்தி வந்தாள்? எந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்த பெண், மக்களால் மதிக்கப் பட்டாள்? இவைகளை வரலாற்று முறையிலே அறிந்து கொள்ள வேண்டும். பத்தினிப் பெண்டிரைப் பற்றிப் பழந்தமிழ் நூல்கள் கூறும் செய்திகளைத் தெரிந்து கொண்டாலே இவ்வுண்மைகளை உணரலாம். மணிமேகலை பத்தினிப் பெண்டிரின் பண்பைப் பற்றி விரிவாக விளம்புகின்றது. பத்தினிப் பெண்டிர், கணவன் இறந்தான் என்ற சொல்லைக் கேட்டவுடனேயே இறந்து விடுவர். கொல்லன் உலையில் நெருப்பை மூட்ட ஊதுகின்ற துருத்தியைப்போல அனல் கக்கும் பெருமூச்சு விடுவர். உயிர் உடம்பினுள் அடங்கி நிற்காது: அந்த முதல் மூச்சிலேயே தமது உயிரைத் துறப்பர். கணவர் சாவைக் கேட்டவுடன் இவ்வாறு உயிர் விடாதவர்கள் தீ மூட்டுவர். அந்தத் தீ நன்றாக எரியும்போது குளிர்ந்த பொய்கையிலே குளிப்பதற்குப் புகுவதுபோல அத்தீ யிலே புகுந்து உயிர் விடுவர். இப்படித் தீக்குளித்து உயிர் துறக்காதவர்கள், கைம்மை நோன்பு என்பதைக் கைக்கொள்ளுவார்கள். இறந்தபின், கணவன் அடைந்திருக்கும் உலகிலே சென்று அவனுடன் உறையக் கருதியே அந்த நோன்பை மேற் கொண்டு உயிர் வாழ்வார்கள். இவைகளே பத்தினிப் பெண்டிரின் இயல்பாகும். காதலர் இறப்பின் கனைஎரி பொத்தி ஊதுவலைக் குருகின் உயிர்த்து அகத்து அடங்காது இன்உயிர் ஈவர்; ஈயார் ஆயின் நல்நீர்ப் பொய்கையின் நளிஎரி புகுவர்; நளிஎரி புகாஅர் ஆயின், அன்பரோடு உடன்உறை வாழ்க்கைக்கு நோற்றுஉடம் படுவர் பத்தினிப் பெண்டிர். (காதை 2, வரி 42-48) இவ்வடிகள், கோவலன் இறந்த செய்தியைக் கேட்டதும், வருந்தித் துறவு பூண்ட மாதவியின் வாயால் கூறப்பட்டவை. இதே செய்தியை மாதவியின் தாயாகிய சித்திராபதியும் கூறுவதாக மணிமேகலை ஆசிரியர் காட்டுகின்றார். காதலன் இறந்தவுடன் தாங்க முடியாத துக்கம் அடைந்து உடனே உயிர் விடுதல் இயல்பு. இவ்வாறு உயிர் விடாவிட்டால், அவ்வுருயிடன் பகைத்து, குளிர்ந்த பெரிய குளத்து நீரில் இறங்குவது போலக் காயும் நெருப்பிலே புகுந்து உயிர் துறப்பர். இதுவே பழமையான குடியிலே பிறந்த பத்தினிப் பெண்டிர் இயல்பு. காதலன் வீயக் கடும்துயர் எய்திப் போதல் செய்யா உயிரொடு புலந்து நளிஇரும் பொய்கை ஆடுநர் போல முளிஎரி புகூஉம்; முதுகுடிப் பிறந்த பத்தினிப் பெண்டிர். (காதை 18, 11-15) இவ்வடிகளில், மாதவியின் கூற்றையே சுருக்கமாகக் கூறியிருப்பதைக் காண்கிறோம். பத்தினித் தன்மை நிறைந்த நல்ல குணங்களால் தன்னைத் தானே காத்துக் கொள்வதுதான் கற்பாகும். இதனால் தான் கற்புக்கு நிறை என்று பெயர் வைத்தனர். இத்தகைய கற்புள்ளவர்களே பத்தினிப் பெண்கள். இவர்களைப் பிறரும் கெடு நினைப்புடன் பார்க்க மாட்டார்கள்; இவர்களும் பிறரைக் கெடு நினைப்புடன் பார்க்க மாட்டார்கள். இவர்கள் தம் கணவரைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் வணங்க மாட்டார்கள். கணவரையே தெய்வ மாகத் தொழுவார்கள். பத்தினித் தன்மையை பற்றிப் பழந்தமிழ் நூல்கள் உரைப்பன இவை. இவைகளை மணிமேகலையும் வலியுறுத்திச் சொல்லுகின்றது. நிறையின் காத்துப் பிறர்பிறர்க் காணாது கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப் பெண்டிர் (காதை 18, வரி 100-102) கற்பினால் தம்மைத் தாமே காத்துக் கொள்ளுவர். பிறர் தம்மைக் கெட்ட நினைப்புடன் பார்க்காமலும், தாம் பிறரைத் தீயநினைப்புடன் நோக்காமலும் ஒழுகுவர். கணவனைத் தவிர வேறு தெய்வத்தையும் வணங்காத பெண்கள். வேறு தெய்வத்தை வணங்காமல் தன் கணவனையே தெய்வமாக வைத்து வணங்கி எழுகின்றவளே பத்தினிப்பெண். அவள், பெய் என்று சொன்னால், பெரிய மழை பெய்யும். இவ்வாறு பொய்யாமொழியார் புகன்றுள்ளார். அச் சிறந்த பொருள் பொருந்திய மொழியை அறிவாயாக. (காதை 22, வரி 59-61) மேலே காட்டியவை, கணவனைத் தவிர வேறு தெய்வத்தை வணங்காதவளே பத்தினிப் பெண், கற்புள்ளவள் என்பதை உணர்த்தின. கணவனைத் தவிர வேறு தெய்வத்தை வணங்குவோள் சரியான கற்புள்ளவள் அல்லள் என்பதை இந் நூலில் உள்ள மருதியின் கதை விளக்குகின்றது. மருதி என்னும் பார்ப்பனியை, சுகந்தன் என்னும் வேந்தனு டைய இளைய மகன் காதலித்தான். அதைக் கண்ட மருதி மனம் வருந்தினாள். மண்திணி ஞாலத்து மழைவளம் தரூஉம் பெண்டிர் ஆயின் பிறர்நெஞ்சு புகாஅர்; புக்கேன் பிறன்உளம்; புரிநூல் மார்பன் முத்துப் பேணும் முறைஎனக்கு இல் (காதை 22, வரி 46-48) இவ்வுலகுக்கு மழைவளம் தரும் பத்தினிப் பெண்டி ரானால் அவர், பிறர் நெஞ்சிலே புக மாட்டார் - நானோ அயலான் நெஞ்சிலே நுழைந்தேன்; கற்பிழந்தேன். முப்புரி நூல் தரித்த மார்புடைய என் கணவனுக்குத் தினசரி எக்கியங்களில் உதவி செய்யும் இயல்பை இழந்தேன். இவ்வடிகள், பிறர்நெஞ்சு புகுந்தவள் கற்புள்ளவள் அல்லள், கற்பிழந்தவள் என்பதை உணர்த்தின. இந்த மருதியின் கதை. இவள் பிறர் நெஞ்சு புகுந்த காரணத்தையும் விளக்கு கின்றது. சுகந்தன் மகனால் காதலிக்கப்பட்ட மருதி மனம் வருந்திச் சதுக்கபூதத்தின் முன் சென்றாள். நான் பிறர் நெஞ்சு புகுந்த காரணத்தைக் கூற வேண்டும் என்று குறையிரந்தாள். சதுக்க பூதம் அக்காரணத்தை உரைத்தது. தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்எனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்இல் புலவன் பொருள்உரை தேறாய் பிசியும் நொடியும் பிறர்வாய்க் கேட்டு விசிபிணி முழவின் விழாக்கோள் விரும்பிக் கடவுள் பேணல் கடவியை, ஆகலின் மடவரல்! ஏவ மழையும் பெய்யாது; நிறைஉடைப் பெண்டிர் தம்மே போலப் பிறர்நெஞ்சு சுடூஉம் பெற்றியும் இல்லை; அங்கவை ஒழிகுவை ஆயின், ஆயிழை ஓங்கு இரு வானத்து மழையும்நின் வழியது (காதை 22, வரி 59-69) தெய்வந் தொழாஅள் என்ற பொய்யா மொழியாரின் சிறந்த மொழியை நீ அறியவில்லை. பொய்க் கதைகளையும், விடுகதைகளையும் பிறர் சொல்ல நீ விரும்பிக் கேட்டனை. மத்தளம் வாசிக்கப்படும் திருவிழாக்களைக் காண விருப்பம் கொண்டாய். கடவுளை வணங்குவதைக் கடமையாகக் கொண்டாய். ஆதலால் நீ ஏவினால் மழை பெய்யாது. கற்புள்ள பத்தினிப் பெண்டிரைப்போல, தம்மைப் பற்றி நினைப்போர் நெஞ்சைச் சுடும் தன்மையை நீ பெறவில்லை. கதைகள், அப்படிக் கதைகள் கேட்பதையும், கடவுளை வணங்குவதையும் விட்டொழிப்பாயானால், வானத்தில் உள்ள மழை உன் சொல்லின்படி நடக்கும். இவ்வடிகள் சதுக்க பூதம் கூறியவையாக அமைந்தவை. இந்த மருதியின் கதை தெய்வத் தொழா அள் என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக அமைக்கப்பட்டது போலவே காணப்படுகின்றது. தன் கணவனை மட்டுமே தெய்வமாக வணங்க வேண்டும். கதைகள் கேட்பது, திருவிழாக்களுக்குச் செல்வது, நாடகம், சினிமா, இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது, தெய்வ வழிபாடு செய்வது, இவைகளைப் பின்பற்றும் பெண்கள் வள்ளுவர் கருத்துக்கு மாறானவர்கள். இக்கருத்தை மருதியின் கதை வலியுறுத்துகின்றது. கற்புள்ள பெண்களின் பெண்மையை விளக்குவதற்கு ஆதிரையின் கதையும், விசாகையின் கதையும் இந் நூலில் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இவ்வாறு பத்தினிப் பெண்கள் இயல்பைப் பற்றிக் கூறுவனவும், அவர்களின் பெருமையை விளக்கும் கதைகளும் பண்டைத் தமிழ்ப் பெண்களின் நிலையை விளக்குவன. இவற்றைத் தமிழரின் சிறந்த பண்பாடு என்று பாராட்டுகின்றனர். இவை பெண்களின் அடிமைத் தன்மையை விளக்குவன என்று சொல்லிப் பழிபோரும் உண்டு. பண்டைக் காலத்தில், பத்தினித் தன்மை பெண்களின் உயர்ந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது. இத்தகைய பத்தினிப் பெண்டிர் அனைவராலும் போற்றப்படு கின்றனர். இதில் ஐயம் எதுவும் இல்லை. பரத்தையர் தமிழரும் பரத்தையரும் சங்க இலக்கியங்களிலே பரத்தையர் நட்பு கண்டிக்கப் படவில்லை. வசதி படைத்த ஆண்கள் பரத்தையர்களுடன் கூடி வாழ்ந்தனர். இது நாகரிகமாகவே கருதப்பட்டது. தமிழர்கள் பல மனைவிகளை மணந்தனர். மணந்த மனைவிகளைத் தவிரப் பரத்தையர்களுடனும் கூடி வாழ்ந்தனர். காதலன் பரத்தையர் சேரியிலே சென்று தங்குவான். மீண்டும் தன் மனைக்குத் திரும்புவான். மனைவி அவன்மீது சினங் கொள்ளுவாள். இதற்கு ஊடல் என்று பெயர். அவ்வூடலைப் பாணன், பாங்கள், பாங்கி முதலியோர் நீக்கிச் சமாதானப் படுத்துவர். இவை போன்ற துறைகள் அகப்பொருள் நூல் களிலே காணப்படுகின்றன. இவைகளால் பண்டைத் தமிழர்கள் பரத்தையர்-கணிகையர்-விலைமாதர்-வேசையர்-வரைவின் மகளிர் என்று சொல்லப்படும் பொது மாதர்களுடன் நட்பு வைத்துக் கொண்டிருந்தனர் என்று சொல்லலாம். இது குற்றமாகக் குறிக்கப்படவில்லை. பரத்தையரை வெறுத்தல் பழந்தமிழ் நூல்களிலே திருக்குறள் ஒன்றில்தான் முதல் முதலாகப் பரத்தையர் நட்புக் கண்டிக்கப்படுகின்றது. பரத்தையர் நட்பின் தீமையை வரைவின் மகளிர் என்னும் அதிகாரத்தால் விளக்கிக் காட்டுகிறார் வள்ளுவர். இதன் பின் எழுந்த நூல்களில் எல்லாம் பரத்தையர் நட்பு, பல துன்பங்களுக்குக் காரணம் என்பதை எடுத்துக்காட்டி யிருக்கின்றனர். சிலப்பதிகாரக் கதையே இதற்குப் போதுமான சான்றாகும். மாதவி என்னும் பரத்தையின் கூட்டுறவால்தான் கோவலன் வாழ்வு சிதைந்தது. இவ் வுண்மையைச் சிலப்பதிகாரம் படிப்போர் அறிவர். சிலப்பதிகாரத்திற்குப் பின்னர் நடந்த கதையாகக் கூறப்படும் மணிமேகலையிலே பரத்தையரின் நட்பு பலமாகக் கண்டிக்கப்படுகின்றது. அவர்களுடைய தந்திரங்களும், தம்மை அடைந்தோரின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு அவர்களை ஓட்டாண்டிகளாகக் கைவிடும் சூழ்ச்சிகளும் விளக்கப்பட்டிருக்கின்றன. கணிகையர் கலைகள் பரத்தையர்கள் அறுபத்துநான்கு கலைகளும் கற்றவர்கள். அவர்கள் ஆண்மக்களை மயக்குவதற்காகவே அக் கலைகளைக் கற்றிருந்தார்கள். அவர்கள் கற்றிருந்த கலைகள் பற்றி மணி மேகலை தெளிவாக தெரிவிக்கின்றது. மாதவி அறிந்திருந்த கலைகள் இவை இவை என்பதை அவளுடைய நற்றாய சித்திரா பதி கூறுவதாக மணிமேகலை ஆசிரியர் சொல்லுகின்றார். அரசர்க்கு ஆடும் கூத்து, எல்லோர்க்கும் பொதுவாக ஆடும் கூத்து என்றும் இருவகைக் கூத்துகளையும் ஆடக் கற்றவள். இசை தாளங்களுக்குரிய சீர், தாளம்., யாழ் வாசிக்கும் முறை, நாடகங்களுக்குரிய பாடல்கள் இவைகளையெல்லாம் அறிந்தவள். மத்தளம் வாசிப்பாள். புல்லாங் குழல் வாசிப்பாள். பந்தாடக் கற்றவள். சமையல் செய்யும் முறைகளை எல்லாம் கற்றவள். நல்ல நீர் விளையாட்டை அறிந்தவள். பாயிலே பள்ளி கொள்ளும் முறையைக் கற்றவள். சமயத்துக்கேற்றபடி நடந்து கொள்ளும் இங்கீதம் தெரிந்தவள். உடம்பால் செய்யப்படும் அறுபத்து நான்கு லீலைகளையும் உணர்ந்தவள். பிறர் கருத்தை அறிந்து கொள்ளும் அறிவு படைத்தவள். பிறர் மனத்தைக் கவரும்படி இனிமையான சொற்களைத் தொடுத்துக்கூறும் சொல்வன்மை வாய்ந்தவள். தன் உள்ளத்தைப் பிறர் காணாமல் மறைத்து ஒழுகும் திறமை படைத்தவள். எழுதுகோல் பிடித்துச் சித்திரம் தீட்டத் தெரிந்தவள். மலர்களால் பலவிதமான மாலைகளைத் தொடுப்பாள். காலத்திற்கேற்றவாறு ஆடவர் நெஞ்சைக் கவரும்படி அலங்கரித்துக் கொள்ளுவாள். மலர் மாலைகள் கோப்பாள். சோதிடம் அறிவாள். பரத்தையர் அறிய வேண்டிய எல்லாக் கலைகளையும் அறிவாள். நாடக மகளிர் கற்பதற்கென்றே நன்றாக எழுதப்பட்டது. ஓவியச் செந்நூல் என்பது. அதில் கூறப்படும் நுண்பொருள்களையெல்லாம் கற்றுத் தேர்ந்தவள் மாதவி. அவள் பொன் வளையல்களை அணிந்து அழகாக விளங்குகின்றவள். இத்தகைய சிறந்த பரத்தையாகிய மாதவி நல்ல தவம் புரிந்தது என் குலத்துக்கே நாணம் தரும் செய்தியாகும். இவைகளைக் கீழ்வரும் அடிகளால் அறியலாம்: வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்துக் கூத்தும், பாட்டும், தூக்கும், துணிவும் பண்யாழ்க் கரணமும், பாடைப் பாடலும், தண்ணுமைக் கருவியும், தாழ்தீம் குழலும், கந்துகக் கருத்தும் மடைநூல் செய்தியும், சுந்தரச் சுண்ணமும், தூநீர் ஆடலும், பாயல் பள்ளியும், பருவத்து ஒழுக்கமும், காயக் கரணமும், கண்ணியது உணர்தலும், கட்டுரை வகையும், கரந்துறை கணக்கும், வட்டிகைச் செய்தியும், மலர் ஆய்ந்து தொடுத்தலும், கோலம் கோடலும், கோவையின் கோப்பும், காலக் கணிதமும் கலைகளின் துணிவும், நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த, ஓவியச் செந்நூல் உரைநூல் கிடக்கையும், கற்றுத் துறைபோகிய பொற்றொடி நங்கை நற்றவம் புரிந்தது நாண் உடைத்து. (காதை 2, வரி 18-33) இவ்வடிகள், மணிமேகலை நூல் எழுதப்பட்ட காலத்திலே தமிழ்நாட்டுப் பரத்தையர்களின் கலைத் திறமையை எடுத்துக் காட்டின. பரத்தையர் பண்பு இத்தகைய பரத்தையரின் இயல்பை பற்றியும் மணிமே கலையில் தெளிவாகக் கூறப்படுகின்றது. இதையும் பரத்தையர் குலத்தைச் சேர்ந்த சித்திராபதியின் வாய் மூலமாகவே விளக்கு கிறார் சாத்தனார். நாங்கள் பத்தினிப் பெண்களைச் சேர்ந்தவர்கள் அல்லேம். பலருடைய கைப் பொருளைக் கவர்ந்து உண்டு வாழும் வாழ்க்கையை உரிமையாகக் கொண்டிருக்கிறோம். யாழ் வாசிப்போர் இறந்து விட்டால், அந்த யாழ் அவருடன் அழிந்து விடுவதில்லை; மற்றொருவர் கைப்படும் தன்மையுடையது. அந்த யாழைப் போன்ற இயல்புடையேம். அன்றியும், மணம் பொருந்திய தேனை உண்டு, பசையற்ற போது, அந்த வறும்பூவை துறந்து தேன் உள்ள வேறு பூவைத் தேடிச் செல்வது வண்டின் இயல்பு. அந்த வண்டு போன்ற தன்மையுள்ளவர்கள் நாம். ஒருவனுடைய நல்வினை நீங்கியபோது திருமகள் அவனை விட்டு ஒதுங்குவாள். அதுபோலவே நம்மை நம்பி வந்த வனுடைய செல்வந் தீர்ந்தபின், நாமும் அவனைக் கைவிடுவோம். இத்தகைய இயல்புள்ள நாம், தவக்கோலம் தாங்கினோம் என்று சொல்லப்படுவது யாவரும் எள்ளி நகைக்கத் தக்க செயலாகும். பத்தினிப் பெண்டிர் அல்லேம், பலர்தம் கைத்தூண் வாழ்க்கை கடவியம் அன்றே; பாண்மகன் பட்டுழிப் படூஉம் பான்மையின் யாழ்இனம் போலும் இயல்பினம்; அன்றியும் நறும்தாது உண்டு நயன்இல் காலை வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவம்; வினைஒழி காலைத் திருவின் செல்வி அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்; தாபதக் கோலம் தாங்கினம் என்பது யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே. (காதை 18, வரி 15-24) பரத்தையரின் செயலைப் பற்றிப் பரத்தைக் குலத்தில் பிறந்தவளே கூறுவதாகப் பாடப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. பரத்தையரின் உண்மையான நடத்தை இதுவென்பதை அவர்களிடம் ஆசை கொள்ளுவோர் அறிய வேண்டும்; அவர்கள் வலையில் விழாமல் தப்பித்துக்கொள்ள வேண்டும். திருந்த வேண்டும். இக் கருத்துடன்தான், இவைகளையெல்லாம் சித்திராபதியின் சொற்களாக அமைத்திருக்கிறார் ஆசிரியர். மேலும், பரத்தையரின் சூழ்ச்சியைப் பற்றி மணிமேகலை யின் வாயால் கூறுவதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆடவர்கள் காணும்படி, இலக்கண முறைப்படி அமைக் கப்பட்ட நாடக அரங்கிலே ஏறுவர்; தங்கள் நடனத் திறமை, இசைத் திறமை, உடல் அழகு இவைகளைக் காட்டி நடிப்பார்கள். ஆடவர்களின் மேல், மன்மதனால், வண்டுகளாகிய நாணை உடைய கரும்பு வில்லிலே, மலர்களைத் தொடுத்துத் தூவவும் செய்வார்கள். களித்த சேல்மீன் போன்ற நீண்ட கண்களாகிய சுருக்கு வலையிலே ஆடவர்களைப் பிடிப்பார்கள். தம்மைக் கண்டவர்களின் உள்ளத்தைக் கவர்ந்து அவர்களைத் தமது மனைக்கு அழைத்துச் செல்வர். இசை போன்ற இனிய மொழி களைப் பேசி ஏமாற்றி, அவர்களுடைய பல செல்வங்களையும் பறித்துக் கொள்ளுவார்கள். வண்டு ஒரு மலரில் உள்ள தேனைக் குடித்தபின், அம்மலரைத் துறந்து, தேன் உள்ள வேறு மலரைத் தேடிச் செல்லும். அதுபோலப் பரத்தையரும், செல்வம் உள்ள வேற்றாளைத் தேடிச் செல்வர். பரத்தையரின் பான்மை இதுதான். ஆடவர் காண நல் அரங்கு ஏறி ஆடலும் பாடலும் அழகும் காட்டிச் சுருப்புநாண் கருப்புவில் அருப்புக் கணை தூவச் செருக்கயல் நெடும்கண் சுருக்குவலைப் படுத்துக் கண்டோர் நெஞ்சம் கொண்டு, அகம்புக்குப் பண்தேர் மொழியின் பயன்பல வாங்கி, வண்டின் துறக்கும் கொண்டி மகளிர் (காதை 18, வரி 103-109) இவ்வடிகள் பரத்தையர் தன்மையை விளக்கின. ஆதிரையின் கதையிலும் (பக்கம் 43) பரத்தையரை நம்பினோர் பல துன்பங்களுக்கு ஆளாவர் என்ற உண்மை கூறப்படுகின்றது: ஆதிரையின் கணவன் பெயர் சாதுவன். அவன் கூடா ஒழுக்கத்தை மேற் கொண்டான். தன் மனைவியாகிய ஆதிரையைத் துறந்தான். நாடகக் கணிகை ஒருத்தியின் வலையில் வீழ்ந்தான். அவள் கையால் இட்ட உணவை உண்டான். வட்டாடுவதிலும், சூதாடுவதிலும் தனது பெரும் பொருளை இழந்தான். அவனுடைய செல்வம் எல்லாம் அவனைவிட்டு நீங்கிற்று. செல்வமுள்ளபோது அவனை ஆதரித்த கணிகையும், செல்வமுள்ள பிறரைக் காட்டி பொன்னில்லாதவன் போ என்று கையசைத்து விரட்டி விட்டாள். அதன் பின் அவன் நாணம் அடைந்து, பொருளீட்டக் கப்பல் ஏறிப் புறப்பட்டான் என்று கூறுகிறது. சாதுவன் என்போன், தகவு இலன் ஆகி அணியிழை தன்னை அகன்றனன் போகிக் கணிகை ஒருத்தி கைத்துஊண் நல்க, வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக் கெட்ட பொருளின் கிளைகேடு உறுதலின் பேணிய கணிகையும் பிறர் நலம் காட்டிக் காணம் இலி எனக் ககைஉதிர்க் கோடலும் வங்கம் போகுடத வணிகர் தம்முடன் தங்கா வேட்கையில் தானும் செல்வுழி. (காதை 16, வரி 4-12) இவ்வாதிரை கதையினாலும் பரத்தையர் தீமையை விளக்கிற்று மணிமேகலை. மேலே காட்டியவைகளால், காமவெறி கொண்ட ஆடவர் களுக்கு அறிவுரை கூறித் திருத்துவதும் மணிமேகலையின் கொள்கைகளுள் ஒன்றென்பதில் ஐயம் இல்லை. புத்தர் பெருமை மணிமேகலை காலத்திலே, பாரத நாட்டிலே, பல விடங்களில் புத்த சங்கங்கள் இருந்தன. புத்தர் கோவில்களும் கட்டப்பட்டிருந்தன. புத்தர் கோவிலுக்குச் சயித்தம் என்று பெயர். சிலப்பதிகாரக் கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னே அவன் குலத்தில் கோவலன் என்பவன் ஒருவன் இருந்தான். அவன் வஞ்சி நகரத்தின் கக்கத்தில் ஒரு மலை உச்சியிலே புத்தசயித்தம் ஒன்றைக் கட்டினான் (காதை 28) என்று கூறப்பட்டுள்ளது. புத்த பீடிகை புத்தருடைய பாதம் அமைந்துள்ள பீடத்துக்குப் பாத பீடிகை என்று பெயர். இப் பீடிகைகளுக்குத் தருமபீடிகை, தாமரப் பீடிகை, புத்த பீடிகை, மாமணிப் பீடிகை என்ற பெயர்கள் வழங்கி வந்தன. காவிரிப்பூம்பட்டினத்திலும் மணி பல்லவத்திலும் பாத பீடிகை இருந்தது. இலங்கைக்கு இரத்தினத் தீவகம் என்ற பெயர் வழங்கி வந்தது. இத் தீவிலே ஒரு மலை உச்சியிலே புத்தருடைய பாத பீடம் ஒன்று அமைந்திருந்தது. இம்மலைக்குச் சமந்த கூடம், சமனொளி, சமந்தம் என்ற பெயர்கள் வழங்கி வந்தன. இப்பொழுது இம்மலை (ஆடம்பீக்) ஆதம் மலை என்ற பெயருடன் விளங்குகின்றது. இந்த மலையில் உள்ள பாதபீடத்தை இன்று சிங்களவர்கள் ஸ்ரீபாதம் என்று வழங்குகின்றனர். சைவர்கள் சிவனொளி பாதம் என்றும் வைஷ்ணவர்கள் விஷ்ணு பாதம் என்றும் சொல்லுகின்றனர். மகத நாட்டின் தலைநகரம் இராஜக்கிருகம். அந்நகரத்தின் பக்கத்திலே பாதபங்கய மலை என்ற ஒரு மலை உண்டு. புத்தர் பெருமான் இந்த மலையின் மேல் நின்று கொண்டு, எல்லா உயிர்களும் இன்புறுவதற்கான அறநெறிகளைப் போதித்தார். அவருடைய பாதச் சுவடு இம்மலையிலே படிந்தது. அதனால் இம்மலை பாதபங்கய மலை எனப் பெயர் பெற்றது. பாதபங்கயம் என்றும் அழைப்பர். இக்காலத்தில் இம்மலை கிருத்திர கூடம் என்று வழங்கப்படுகின்றது. புத்தருடைய பெருமைக்கு அறிகுறியான இவைகள் எல்லாம் மக்களால் போற்றப்பட்டன. பௌத்தர்களால் வணங்கப்பட்டன. பௌத்தர்களின் புனிதமான பிரயாணத் திருப்பதிகளாகக் கருதப்பட்டன. புத்தர் தன்மை மணிமேகலையில் புத்தர் பெருமை விளக்கமாகக் கூறப்படு கின்றது. புத்தரை - அவர் கொள்கையை - மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே, புத்தர் பெருமை இந்நூலில் பலவிடங்களில் பேசப்படுகின்றது. எம்கோன் இயல்குணன், ஏதம்இல் குணப்பொருள்; உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன்; இன்பச் செல்வி மன்பதை எய்த அருள் அறம்பூண்ட ஒருபெரும் பூட்கையின் அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி, காமன் கடந்த வாமன் பாதம் தகைபா ராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன். (காதை 5, வரி 71-79) எமது தலைவன், தாமாகவே தோன்றிய சிறந்த குணங்களை யுடையவன். குற்றமற்ற குணங்களுக்கெல்லாம் இலக்காக இருப்பவன். உலகில் உள்ள பல பிறவிகளிலும் பிறந்து அப்பிறவி களின் துன்பங்களை உணர்ந்தவன். தனக்கென்று வாழாமல், பிறர் நன்மைக்காகவே உயிர் வாழ்கின்றவன். இன்பமாகிய நன்மையை உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் அடையும்படி, நல்லறம் புரிவதையே கொள்கையாகக் கொண்டவன். அறம் என்னும் ஒளி பொருந்திய சக்கரத்தைப் பல துறையிலும் செலுத்தியவன். காமனை வென்ற அழகிய புத்தர் பெருமான். எனது நா அவனுடைய பெருமையைப் பாராட்டிப் பேசுமே அல்லாமல் வேறு ஒன்றையும் பாராட்டிப் பேசாது. இவ்வடிகள் புத்தர் புகழைக் கூறின. சுதமதி என்பவள் கூற்றாக அமைந்துள்ளவை. புலவன் தீர்த்தன், புண்ணியன், புராணன் உலக நோன்பின் உயர்ந்தோய் என்கோ! குற்றம் கெடுத்தோய்! செற்றம் செறுத்தோய்! முற்ற உணர்ந்த முதல்வா என்கோ! காமன் கடந்தோய்! ஏமம் ஆயோய்! தீநெறிக் கடும்பகை கடிந்தோய் என்கோ! ஆயிர ஆரத்து ஆழிஅம் திருந்துஅடி நாஆ யிரம்இலேன் ஏத்துவது எவன்? (காதை 5, வரி 98-105) அறிஞன்; பரிசுத்தன்; அறத்தின் உரு; பழமையானவன்; உலகச் சீலத்தை உணர்ந்து உயர்ந்தவன் என்றெல்லாம் புகழ்வேனோ! குற்றங்களையெல்லாம் அழித்தவனே! கோபத் தைச் சினந்து ஒழித்தவனே! எல்லாவற்றையும் உணர்ந்த முதல்வனே என்று போற்றுவேனோ! காமனை வென்றவனே! மக்களைத் தீநெறியில் செல்லாமல் பாதுகாப்பவனே! தீய நெறிகளாகிய கொடிய பகையை விலக்கியவனே என்று கொண்டாடுவேனோ! ஆயிரம் வரி பொருந்திய சக்கர ரேகையையுடையது உனது அழகிய சிறந்த பாதத்தை ஆயிரம் நா இல்லாத நான் போற்றுவது எவ்வாறு? இவ்வாறு மணிமேகலா தெய்வம், காவிரிப்பூம்பட்டி னத்தில் இருந்த புத்த பீடிகையைப் போற்றி வணங்கிற்று. புத்தர் பிறக்குங் காலம் உயிர்கள் எல்லாம் உணர்வு பாழாகிப் பொருள் வழங்கு செவத்துளை தூர்ந்து அறிவிழந்த வறம்தலை உலகத்து அறம்பாடு சிறக்கச் சுடர்வழக்கு அற்றுத் தடுமாறு காலைஓர் இளவள ஞாயிறு தோன்றியது என்ன நீயோ தோன்றினை! நின் அடி பணிந்தேன்! நீயே ஆகி நிற்கு அமைந்தஇவ் ஆசனம் நாமிசை வைத்தேன்! தலைமிசைக் கொண்டேன்! பூமிசைப் போற்றினேன்! புலம்பு அறுக! (காதை 10, வரி 7-15) உயிர்கள் எல்லாம், அறிவு பாழாகி, தரும உணர்ச்சியை உள்ளத்திலே செலுத்தும் காது செவிடாகி. அறிவிழந்த, வறுமை யடைந்த உலகத்திலே தரும உற்பத்தி அதிகரித்து வளரும்படி புத்தர் பெருமானாகிய நீ தோன்றினை; சூரியன் புறப்பட்டு இயங்காமல் இருள் சூழ்ந்து தடுமாறும் காலத்தில், ஒப்பற்ற சிறந்த இளம் கதிர் தோன்றியது போல நீ தோன்றினை. உன்னுடைய பாதங்களைப் பணிந்தேன். உனது உருவாகி, உனக்காக அமைந்த இப்பாத பீடிகையை நாவில் வைத்துப் போற்றினேன். நிலத்தின்மேல் விழுந்து பணிந்தேன். எனது பிறவித் துன்பம் நீங்குக. இவ்வாறு மணிபல்லவத் தீவில் உள்ள புத்த பீடிகையை மணிமேகலா தெய்வம் வாழ்த்தி வணங்கிற்று. புத்தர்கள் போற்றும் புனித இடங்கள் ஆதி முதல்வன், அற ஆழி ஆள்வோன், மாதுயர் எவ்வம் மக்களை நீக்கி, விலங்கு தம்முள் வெரூஉம்பகை நீக்கி, உடங்கு உயிர் வாழ்க என்று உள்ளம் கசிந்துகத் தொன்று காலத்து நின்று அறம் உரைத்த குன்ற மருங்கில் குற்றம் கெடுக்கும் பாதபங்கயம் கிடத்தலின் ஈங்குஇது பாதபங் கயமலை எனும் பெயர்த்தது ஆயது. (காதை 10, வரி 61-68) ஆதியிலே தோன்றிய முதல்வன். தரும நெறியைக் கையாள்வோன். மக்களைப் பிறப்பு இறப்பு என்றும் பெரிய துன்பத்திலிருந்து நீக்குவோன். விலங்குகளும், தம்முள் ஒன்றை ஒன்று கண்டு அஞ்சும் பகையை விலக்குவோன். எல்லா வுயிர்களும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்று கருதுவோன். இத்தகைய இரக்க சிந்தையுடன், உள்ளங்கனிந்து, பண்டைக் காலத்தில் ஏறி நின்று அறம் உரைத்த குன்றத்திலே அவனுடைய பாதபங்கயங்கள் படிந்து கிடந்தன. அவை காண்போர் குற்றங்களைப் போக்கும். அதனால் அம்மலை பாதபங்கய மலை எனப் பெயர் பெற்றது. இது அறவண அடிகளால் கூறப்பட்டது. ஈங்குஇதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து ஓங்குஉயர்சமந்தத்து உச்சி மீமிசை அறவி அம் கிழவோன் அடியினை ஆகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்குளது, ஆதலின் தொழுது வலங்கொண்டு வந்தேன் (காதை 11, வரி 21-26) இந்த மணிபல்லவத் தீவின் பக்கத்திலே இரத்தினத் தீவகம் என்னும் தீவு ஒன்று உண்டு. அத்தீவிலே உயரமான சமந்தம் என்னும் மலையின் உச்சியிலே, அறத்திலே நிலைத்து நிற்கும் உரிமையுள்வனாகிய புத்தர் பெருமானுடைய அடியிணைகள் உண்டு. அது பிறவியென்னும் பெரிய கடலிலிருந்து நம்மைக் கரையேற்றும் அறக் கப்பலாகும். ஆதலால் அதை வலங் கொணடு வணங்கி வந்தேன். இது தீவதிலகை என்னும் தெய்வத்தால் கூறப்பட்ட செய்தி புத்தர் வணக்கம் மாரனை வெல்லும் வீர நின் அடி தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின் அடி பிறர்க்கு அறம் முயலும் பெரியோய் நின் அடி துறக்கம் வேண்டாத் தொல்லோய் நின் அடி எண்பிறக்கு ஒழிய இறந்தோய் நின் அடி தீமொழிக்கு அடைத்த செவியோய் நின் அடி வாய்மொழி சிறந்த நாவோய் நின் அடி நரகர் துயர்கெட நடப்போய் நின் அடி உரகர் துயரம் ஒழிப்போய் நின் அடி வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு அடங்காது. (காதை 11, வரி 61-71) காமனை வெல்லும் வீரனே! கொடிய வழிகளாகிய பெரிய பகையை ஒழித்தவனே! மற்றவர்களுக்குப் புண்ணியம் உண்டாகும்படி முயலும் பெரியோனே! நிலையற்ற சுவர்க் கத்தை விரும்பாமல் நிலையான வீட்டை விரும்புகின்ற பழமை யானவனே! மக்கள் நினைப்புக்கு எட்டாத உயர்ந்த நிலையிலே உள்ளவனே! உயிர்களுக்கு அறிவுக் கண்ணை அளிக்கும் ஞானியே! தீமொழிகளைக் கேட்காமல் அடைத்த காதுகளை யுடையவனே! உண்மையை உரைக்கின்ற நாவை உடையவனே! நரகர்களின் துன்பம் கெடும்படி அவர் உலகுக்கு நடந்தவனே! பாம்புகளுக்கு கருடனால் துன்பம் உண்டாகாதபடி தடுப்பவனே! உன்னுடைய பாதங்களை வணங்கத்தான் என்னால் முடியும். உனது பெருமையை உரைத்து வாழ்த்துவதற்கு என் நாவிற்கு வலிமையில்லை. இவ்வாறு தீவதிலகை புத்தரைப் புகழ்ந்து போற்றினாள். மேற்கூறியவைகளால் புத்தர் பெருமான் பெருமையைக் காணலாம். புத்தர் வரலாறு புத்தர் உலகில் உள்ள பல பிறவிகளிலும் பிறந்தவர். அப் பிறவிகளின் துன்பங்களையெல்லாம் உணர்ந்தவர். உலக மக்கள் அறிவிழந்து தீநெறியிலே சென்று பாழாகும் போது புத்தர் தோன்றுவார். அறிவிழந்த உயிர்களுக்கெல்லாம் அறநெறியைப் போதிப்பார். அவருடைய தோற்றம், உலக மக்கள் இருளிலே வழி தெரியாமல் தடுமாறும் போது இளம் கதிர் தோன்றியதைப்போல மக்களுக்கு நன்மை தருவதாக இருக்கும். ஆதிமுதல்வன் என்பவர் புத்தர் பெருமானே. அவர் மக்கள் அனைவரும் துன்பம் இல்லாமல் ஒன்று பட்டு வாழ உபதேசிப் பார். விலங்குகளும் தம்முள் பகையின்றி வாழ வழி காட்டுவார். புத்தர் பெருமான் இவ்வுலகில் வாழும் உயிர்களின் துன்பத்தைப் போக்குவதையே கடமையாகக் கொண்டவர்; அவர் கூறுவன அனைத்தும் உண்மையான நல்லறடேயாகும். அவர் நமத்கென வாழாப் பிறர்க்குரியானார். அவருடைய பாதம் பணிவோர் - அறவுரைகளைப் பின்பற்றி நடப்போர் - பிறவிக் கடலைக் கடப்பார்கள். புத்தர் பெருமான் காமனை வென்றவர். இயற்கையாகவே நல்ல குணங்களையுடையவர். அவர் அறியாதவை ஒன்றுமே இல்லை. எல்லாவற்றையும் உணர்ந்தவர். இவ் வுண்மைகளை மேலே காட்டிய மணிமேகலை மொழிகளைக் கொண்டே காணலாம். இவைகள் புத்தர் பெருமையை - புத்த தருமத்தை - மக்களிடையிலே பரவச் செய்வதே மணிமேகலையின் நோக்கம் என்பதற்கு இவைகள் சான்றாகும். புத்தமதக் கொள்கை மணிமேகலையிலே புத்தமதக் கொள்கைகள் பல வகைகளில் கூறப்படுகின்றன; சிறுகதைகள் மூலம் வலியுறுத்தப் படுகின்றன; நேரடியாக வலியுறுத்தப்படுகின்றன. பல பாத் திரங்கள் வாயிலாக வலியுறுத்தப்படுகின்றன. இறுதியில் உள்ள இரண்டு காதைகள் புத்த மத தத்துவங்களைப் போதிக்கின்றன. பிறப்பும் ஒழுக்கமும் மணிமேகலையில் கூறப்படும் புத்த மதத் தத்துவத்தின் சுருக்கம் கீழ்வருமாறு: 1. ஆன்மா - உயிர் என்பது ஒரு தனிப் பொருள். அது தன்வினைக்கேற்றபடிப் பிறவி எடுக்கின்றது. நல்வினைக்கேற்ற படி நல்ல பிறப்பையும் தீவினைக்கேற்றபடி தீய பிறப்பையும் அடைகின்றது. ஆதலால் மக்கள் நல்வினையைத் தான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. இதனைச் சாதுவன் கதையின் மூலம் தெளிவாகக் காணலாம். சாதுவனை நாகர்கள் தங்கள் தலைவன் முன்னே கொண்டு போய் நிறுத்தினர். அவன் நாகர் தலைவனுடன் அவன் மொழி யில் பேசினான். அதனால் நாகர் தலைவன் சாதுவனிடம் ஈடுபட் டான்; மகிழ்ச்சி அடைந்தான். உடனே தன் பணியாளர்களை பார்த்து, அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன் வருன்தினன் அளியன்; வம்மின் மாக்காள்! நம்பிக்கு இளையன் ஓர் நங்கையைக் கொடுத்து வெம்களும் ஊனும் வேண்டுவ கொடும். (காதை 16, வரி 14-17) உணவின்றிக் கடலில் அலைந்து வருந்தினான். இவன் இரக்கத்திற்கு உரியவன். பணியாளர்களே வாருங்கள். இந்த அழகனுக்குப் பணி செய்ய இளமை பொருந்திய அழகுள் நங்கை ஒருத்தியைக் கொடுங்கள். அதன் பின் விரும்பத்தக்க கள்ளும், மாமிசமும் வேண்டும் அளவு கொடுங்கள் என்று கூறினான். இதைக் கேட்ட சாதுவன் கவலையுற்றான். நாகர் தலை வனைப் பார்த்து, நீ கூறியவை கொடிய மொழிகள். அவைகளை நான் விரும்பவில்லை என்றான். உடனே அந்தக் குருமகன், பெண்டிரும் உண்டியும் இன்று எனின் மாக்கட்கு உண்டோ ஞாலத்து உறுபயன்? உண்டுஎனில் காண்குலம் யாங்களும் காட்டுவா யாக. (காதை 16, வரி 80-82) பெண்டிரால் பெறும் இன்பமும், உணவால் உறும் இன்பமும் மக்களுக்கு இல்லையானால், அவர்கள் இவ்வுலகில் பிறந்துதான் என்ன பயன்? இவைகளைத் தவிர வேறு பயனுள்ளவை இருந்தால் அவற்றை நாங்களும் தெரிந்து கொள் கின்றோம். காட்டுவாயாக என்று மிகுந்த கோபத்துடன் கேட்டான். மயக்கும் கள்ளும் மன்உயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்! பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது; உண்மையின் நல்அறம் செய்வோர் நல்உலகு அடைதலும் அல்அறம் செய்வோர் அருநரகு அடைதலும் உண்டுஎன உணர்தலின், உரவோர் களைந்தனர் (காதை 16, வரி 84-90) அறிவை மயக்கும் கள்ளையும், பிறவுயிரைக் கொல்லு வதையும் அறிவுள்ளோர் வெறுத்து அகற்றினர். இன்னும் கேள்! பிறந்தவர் சாவதும், செத்தவர் பிறப்பதும், உறங்குவதும் கண்விழித்து எழுவதும் போன்றதாம். இது உண்மை. நல்லறம் புரிவோர் துறக்கம் பெறுவர். பாவம் புரிவோர் கொடிய நகரத்தை அடைவர். இது உண்மையென்று அறிந்தமையால் அறிவுள்ளோர் கள்ளையும் கொலையையும் கடிந்தனர். இவ்வாறு நாகர் தலைவன் கேள்விக்குச் சாதுவன் விடையளித் தான். நாகர் தலைவன்: இவ்வுடம்பை விட்டுப் பிரியும் உயிர் வேறு வடிவில் மற்றொரு உடம்பிலே புகுந்துவிடும் என்றனை, அந்த உயிர் மற்றொரு உடம்பில் நுழைவது எப்படி? விளங்கும் படி கூறுக. சாதுவன்: நமது உடம்பிலே உயிர் உறையும் போது தான், உடம்புக்கு நேர்ந்த துன்பத்தை உயிர் உணர்கிறது. உயிர் போய் விட்டால் உடம்பை நெருப்பில் வைத்து எரித்தாலும் அதை உடம்பு உணர்வதில்லை. ஆதலால் உடம்பை விட்டு ஏதோ ஒன்று ஓடிவிட்டது என்பதை நீ தெரிந்து கொள். உடம்பை விட்டுப் பிரிந்த உயிருக்கு வேறொரு உறை விடம் உண்டு என்பதை, நான் மட்டும் அன்று அனைவரும் அறிவர். நமது உடம்பு இங்கேயே இருக்கும்போது உயிர் மட்டும் பலகாத தூரம் செல்லுகின்றது. உலவுகின்றது. மீண்டும் வருகின்றது. இந்த உண்மையை நீ கனவிலே காண்கின்றாய்! ஆதலால் உடம்பை விட்டு நீங்கிய உயிர் அது செய்த வினைக்கு ஏற்ப, மற்றொரு உடம்பில் புகும் என்பதை உணர்க. இவ்வாறு சாதுவன் கூறியதும், நாகர் தலைவன், உண்மையை உணர்ந்தான். சாதுவன் அடிகளில் வீழ்ந்தான். கள்கையும், ஊனையும் கைவிடுவேனாயின், நான் உயிர் வாழ மாட்டேன். நான் சாகும் வரையிலும் செய்யக்கூடிய எனக்கேற்ற நல்லறத்தைக் கூறியருள்க என்று வேண்டினான். (காதை 16, வரி 92-111). உடனே, சாதுவன் நாகர் தலைவனுக்கேற்ற நல்லறத்தைக் கூறினான்: நன்று சொன்னாய் நல்நெறிப் படர்குவை! உன்தனக்கு ஒல்லும் நெறிஅறம் உரைக்கேன்; உடைகல மாக்கள் உயிர் உய்ந்து ஈங்கு உறின் அடுதொழில் ஒழிந்து, அவர் ஆர் உயிர் ஓம்பி மூத்து விளிமா ஒழித்து எவ்வுயிர் மாட்டும் தீத்திறம் ஒழிக. (காதை 16, வரி 112-117) நன்றாகக் கூறினாய்; இனி நீ நல்வழியிலே நடப்பாய்! உனக்கு ஏற்ற அறநெறியை உரைக்கின்றேன். உடைந்த கப்பலில் இருந்த மக்கள் உயிர் தப்பி இங்கே வருவார்களானால் அவர் களைக் கொன்று தின்னக்கூடாது. அவர்களுடைய உயிரைப் பாதுகாக்க வேண்டும். தானே மூத்து இறந்த விலங்கின் உடலை மட்டும் தின்னலாம்; வேறு எவ்வுயிரையும் உண்ணும் பொருட்டுக் கொல்லுவதைவிட்டு விடுக என்று கூறினான். நாகர் தலைவன் சாதுவனுடைய அறிவுரைகளை ஏற்றுக் கொண்டான். இதனால் மாமிசம் உண்ணாமல் உயிர் வாழ முடியா விட்டால், அதை உண்ண அனுமதிக்கின்றது புத்த மதம் என்பதைக் காணலாம். புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை களை ஒப்புக் கொண்டால் போதும். பழக்க வழக்கங்களிலே அந்தந்த நாட்டுப் பழக்க வழக்கங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பழக்கவழக்கங்கள் முதன்மையானவை அல்ல; பொது தர்மமே முதன்மையாகும். இவ்வுண்மையையே சாதுவனுடைய கதை உணர்த்துகின்றது. புத்த மதம் பல நாடுகளிலும் பரவியதற்கு, பல இனத்தினரி டையிலும் பரவியதற்கு, இத்தகைய விட்டுக் கொடுக்கும் தன்மையே காரணமாகும். நால்வகை வாய்மை ஐவகைச் சீலம் புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளிலே நால்வகை வாய்மை, ஐவகைச் சீலம் முதன்மையானவை. இவைகளைப் பௌத்தர்கள் மறவாமல் மனங் கொள்ள வேண்டும். பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்; பிறவார் உறுவது பெரும்பேர் இன்பம்; பற்றின் வருவது முன்னது; பின்னது அற்றோர் உறுவது அறிக. (காதை 2, வரி 64-67) இவ்வுலகில் பிறந்தவர்கள் மிகுந்த துக்கத்தைத்தான் அடைவார்கள். பிறக்காதவர்கள் தாம் பெரிய இன்பத்தை அடைவார்கள். ஆசை காரணமாகப் பிறப்பு உண்டாகும். ஆசையற்றவர்கள் பிறப்பெய்த மாட்டார்கள். இவற்றைத் தான் நால்வகை வாய்மை என்பர். பிறப்பு துக்கம், பிறவாமை துக்க நிவாரணம்: பற்று துக்கோற்பத்தி; பற்றின்மை துக்க நிவாரண மார்க்கம் என்று கூறும் புத்த மதம். கள்ளும், பொய்யும், காமமும், கொலையும் உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தவை. (காதை 24, வரி 77-78) கள்ளுண்டல், பொய்யுரைத்தல், காமம் கொள்ளுதல், கொலை செய்தல், உள்ளத்தால் களவாட எண்ணுதல் என்று கூறப்பட்ட ஐந்தையும் அறிவுள்ளோர் கை விட்டனர். இவ் வைந்தும் பஞ்சசீலம் என்று கூறப்படும். மணிமேகலை இவற்றை ஐவகைச் சீலம் என்று பல இடங்களில் குறிப்பிடு கின்றது. இவ் வைந்தையும் செய்தல் பஞ்சமா பாதகம்; கைவிடுதல் பஞ்சசீலம். பலன் கருதாப் பணி ஆசையின்றிச் செய்யப்படும் அறம் சிறந்தது. ஒரு பலனை யும் எதிர்பாராமல் செய்யும் தர்மம் உயர்ந்தது. இதனையே நிஷ்காமிய கர்மம் என்பர். பலன் கருதாமல் நல்லறம் புரிவோரே நிர்வாணம் அடைவர். இந்த நிஷ்காமிய கர்மம் புத்தமதத்திற்கு உடன்பாடானது. இதனால் பிறவா நெறியைப் பெற முடியும். உவவனத்தில் உள்ள புத்த பீடிகையின் தன்மையை உரைப்பதன் வாயிலுக இதை உணர்த்துகிறது மணிமேகலை. அந்தப் புத்த பீடிகையிலே ஒரு தெய்வத்தை நினைத்துக் கொண்டு மலரை வைத்தால், அம்மலர் அத் தெய்வத்தை அடையும். ஒன்றையும் எண்ணாமல் மலரை வைத்தால். அது வைத்தது வைத்தபடியே இருக்கும். இது உள்ளத்தால் ஒன்றையும் நினைக்கா விட்டாலும், செய்த வினைக்குப் பயன் உண்டு என்போர் துன்புறவும், உள்ளத்தில் ஒன்றையும் கருதாமல் செய்யும் காரியத்துககுப் பயன் இல்லை என்போர்க்கு எடுத்துக் காட்டாகவும் உள்ளது. (காதை 3, வரி 70-77) இது நிஷ்காமிய கர்மம் புத்தமதக் கொள்கை என்பதை விளக்கிற்று. நல்வினை தீவினைகள் தீவினைகள் இவை, நல்வினைகள் இவை என்பவற்றை மணிமேகலையில் விளக்கமாகக் காணலாம். உடல், மொழி, உள்ளம் இவற்றால் ஏற்படும் தீமைகள் தீவினைகளாம். இவற்றைக் காயம், வாக்கு, மனம் என்பர். இவை மூன்றும் தூய்மையாக இருக்க வேண்டும். கொலை செய்தல், களவாடுதல், காமமாகிய தீமையை விரும்புதல் இம்மூன்றும் உடம்பால் நிகழும் தீமை. பொய் சொல்லுவது, கோள் சொல்லுவது, கடுஞ்சொல் கூறுவது, பயனற்ற வீண்பேச்சுப் பேசுவது இந் நான்கும் சொல்லால் வரும் தீமைகள். கண்ட பொருள்களின் மேல் எல்லாம் ஆசைப்படுவது, கோபித்தல், தீமைகளைக் காண விரும்புவது இம்மூன்றும் மனத்தால் நிகழும் தீமை. உடம்பால் நிகழ்வன மூன்று; சொல்லால் நிகழ்வன நான்கு; மனத்தால் நிகழ்வன மூன்று, ஆகப் பத்தும் தீவினை யாகும். இத் தீவினைகளின் விளைவை அறிந்த அறிஞர்கள், இவை களைச் செய்ய மாட்டார்கள். செய்வார்களாயின், அவர்கள், விலங்குகளாகவும், பேய்களாகவும், நரகராகவும் பிறந்து துன்புறு வார்கள். நல்வினை என்பது, மேலே காட்டிய பத்துத் தீமைகளையும் கைவிடுவது. பஞ்ச சீலத்தைப் பின்பற்றுவது, தானம் செய்வதில் தலைசிறந்து நிற்பது ஆகியவைகளாம். இம் மூன்றையும் பின்பற்றுவோர் உயர்ந்த பிறவி என்று மூன்று வகையாகச் சொல்லப்பட்ட தேவர்களாகவும், மக்களாகவும், பிரமர் களாகவும் பிறப்பார்கள். மகிழ்ச்சியுடன் நல்வினைப் பயனை நுகர்ந்து வாழ்வார்கள். இவற்றைக் காதை 24-ல், 123 முதல் 140 வரை உள்ள அடிகளிலே காணலாம். துவாதச நிதானம் புத்த மதத்தினர் பன்னிரண்டு பொருள்களை மறவாமல் மனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைத் துவாதச நிதானம் என்பர். இப் பன்னிரண்டு பொருளைப்பற்றியும் மணிமேகலையில் விளக்கமாகக் காணலாம். பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில், ஊறு, நுகர்வு, வேட்கை, பற்று, பலம், தோற்றம், வினைப்பயன் என்னும் பன்னிரண்டும் துவாதச நிதானமாகும். இவற்றின் உண்மைகளை உணர்ந்தவர்கள் மனிதப் பிறப்பால் அடைய வேண்டிய பயனை அறிவார்கள்; அறியாதவர்கள் மீளா நரகுக்கு ஆளாவார்கள். பேதைமை என்பது, முயலுக்கு கொம்பு உண்டு என்றால் அதை நம்பும் அறியாமை. செய்கை என்பது நல்லினை தீவினைகள். (இவற்றை மேலே காண்க). உணர்வு என்பது ஒரு பொருளின் நிகழ்ச்சியை உணராமல், அப்பொருளைச் சும்மா பார்த்துக் கொண்டிருப்பது. அருவுரு என்பது, உணர்வோடு கூடிய உயிரும் உடம்பும் ஆகும். உயிருக்கு உருவில்லை. உடம்புக்கு உரு உண்டு. வாயில் என்பது விஷயங்களை அறியும் வழிகள். அவை மெய், வாய், கண், மூக்கு, செவி, மனம் என்னும் ஆறு ஆகும். ஊறு என்பது, மனமும், மெய் முதலிய பொறிகளும் விஷயங்களை அறிவது. நுகர்வு என்பது விஷயங்களை அனுபவிப்பது. வேட்கை என்பது எவ்வளவுதான் விஷயங்களை அனுபவித்தாலும் திருப்தி அடையாமை. கிட்டாத பொருள் களின் மேலும் ஆசைப்பட்டு அலைதல். பற்று என்பது ஒரு பொருளை விடாமல் பிடித்துக் கொள்ளுவது. பலம் என்பது செய்த கருமங்களின் தொகுதியாம்; செய் வினைகளின் பயன் ஒன்றாகக் கூடுவது. தோற்றம் என்பது பிறப்பு. கருமத்தின் பயனுக்குத் தக்கபடி வெவ்வேறு இனங்களில் பிறப்பது. வினைப்பயன் என்பது கர்ம பலன், தாம் செய் வினை களின் பயனை அனுபவித்தல். இவற்றைத் துக்கம் என்பர். இப் பன்னிரண்டும் ஒரு தொகுதி; ஒன்றற்கொன்று தொடர்புள்ளவை. பேதைமையால் செய்கையென்னும் வினை பிறக்கும் வினையின் அடியாக உணர்ச்சி தோன்றும்; உணர்ச்சியின் அடியாக அருவுரு தோன்றும்; அருவுருவின் அடியாக வாயில் தோன்றும்; வாயிலின் அடியாக ஊறு தோன்றும்; ஊறின் அடியாக நுகர்ச்சி தோன்றும்; நுகர்ச்சியின் அடியாக வேட்கை பிறக்கும்; வேட்கையின் மூலம் பற்று உண்டாகும்; பற்றின் மூலம் பலம் உண்டாகும்; பலத்தின் வாயிலாகத் தோற்றம் என்னும் பிறப்பு உண்டாகும்; பிறப்பின் வாயிலாக வினைப்பயன் உண்டாகும். இவற்றைத் துக்கோற்பத்தி, அதாவது துக்கத்தின் பிறப்பிடம் என்பர். இத் துக்கத்திலிருந்து மீளுவதற்கான வழியையும் காட்டு கிறது மணிமேகலை. பேதைமை நீங்கினால் வினை நீங்கும். வினை விலகினால் உணர்ச்சி ஒழியும். உணர்ச்சி ஒழிந்தால் அருவுரு அகலும். அருவுரு அகன்றால் வாயில் ஒழியும். வாயில் நீங்கினால் ஊறு ஒழியும். ஊறு ஒழிந்தால் நுகர்ச்சி நீங்கும். நுகர்ச்சி நீங்கினால் வேட்கை விலகும். வேட்கை விலகினால் பற்று அறும். பற்று அற்றால் பாவம் என்னும் கருமத் தொகுதி நீங்கும். பாவம் நீங்கினால் தோற்றம் தொலையும். தோற்றம் தொலைந்தால், பிறவா நெறியில் நின்று பேரின்பம் அடையலாம். இதனை மீட்சி என்பர். இது துக்க நிவாரணமாகும். துக்கம், துக்கோற்பத்தி, துக்க நிவாரணம் மூன்றும் துவாதச நிதானத்தில் அடங்கிக் கிடக்கின்றன. இவற்றைக் காதை 30-ல் 45 முதல் 130 வரையில் உள்ள அடிகளில் காணலாம். புத்தர்களின் கடமை புத்தரை வணங்குவது, புத்த தர்மத்தைப் பின்பற்றுவது, புத்த சங்கத்தை வணங்குவது மூன்றும் புத்தர்களின் கடமை யாகும. புத்தம் சரணம் கச்சாமி, தன்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி என்று மும்முறை கூறி வணங்குவர். இம் மூன்றையும் முத்திற மணி என்று கூறுகிறது மணிமேலை. இதை த்ருமணி என்பர். (காதை 30, வரி 3-4) சங்கம் என்பது பௌத்தத் துறவிகளின் கூட்டம். இதில் துறவை மேற்கொண்ட ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே இருப்பர். ஆண்களுக்குப் பிக்ஷுக்கள் என்று பெயர்; பெண் களுக்குப் பிக்ஷுணிகள் என்று பெயர். இவர்கள் பதின்மருக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் அதற்குச் சங்கம் என்று பெயர். புத்தன் எல்லாம் உணர்ந்தவன். சர்வக்ஞன். ஆன்மா என்பது ஒன்று உண்டு. ஆன்மா வேறு; உடம்பு வேறு. இறந்த உயிர் இதன் செய்வினைக்குத் தக்கவாறு மீண்டும் பிறக்கும் மக்களிடம் வேற்றுமை பாராட்டாமல், துன்புறுவோர் அனைவர்க்கும் உதவி செய்ய வேண்டும். யாருக்கும் எவ்விதத் தீமையும் செய்யக் கூடாது. இது புத்தமதத்தின் பொதுத் தர்மம். ஒரு நாட்டினர், ஒரு சமூகத்தினர், தங்கள் பழக்க வழக்கங் களைக் கைவிட முடியாவிட்டாலும் இந்தப் பொதுத் தர்மத்தைப் பின்பற்றினால் போதும். அவர்கள் புத்தர்கள் ஆவார்கள். நல்வினை தீவினைகளைஅறிந்து நடந்து கொள்ள வேண்டும். பலன் கருதாமல் நல்வினைகளைச் செய்தால் தான் பிறவா நெறியைப் பெற முடியும். நால்வகை வாய்மை, ஐவகைச் சீலங்களைப் பின்பற்ற வேண்டும். பன்னிரு நிதானங்களையும் அறிந்து துக்கத்திலிருந்து மீள வேண்டும். புத்தரையும், தன்மத்தையும், சங்கத்தையும் வழிபட வேண்டும். முத்திறமணிகளை மும்முறை கூறி வணங்க வேண்டும். இவைகளை மணிமேகலை தெளிவாகக் கூறியிருக்கின்றது. இவ் வுண்மைகளே மேலே சுருக்கமாகச் சொல்லப்பட்டன. பிற மத வெறுப்பு பழந்தமிழர் பண்பு பழந்தமிழர் இலக்கியங்களிலே மத வெறுப்பைக் காண முடியாது. சங்க காலத்தில் தமிழ்நாட்டில் பல மதங்கள் பரவியிருந்தன. பல மதக் கொள்கைகளைப் பின்பற்றுவோர் இருந்தனர்; பல தெய்வங்களை வணங்குவோர் இருந்தனர். ஆனால், அவர்களுக்குள் மதம் காரணமாக - மதக் கொள்கை காரணமாக தெய்வ வழிபாடு காரணமாக - சண்டைச் சச்சரவுகள் இருந்ததில்லை. பல மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்தனர். பத்துப்பாட்டில் உள்ள பட்டினப்பாலை, மதுரைக் காஞ்சி இரண்டையும் படிப்போர் இவ் வுண்மையைக் காண்பர். சமண மதக் கொள்கைகளை வலியுறுத்துவது சிலப்பதி காரம். அந்நூலில் மத வெறுப்பைக் காண முடியாது. ஒரு மதத்தைப் பற்றியாவது, ஒரு தெய்வத்தைப் பற்றியாவது அந்நூல் இழிவபாகப் பேசவில்லை. சிலப்பதிகார ஆசிரியரின் உயர்ந்த பண்பாட்டுக்கு அந்நூலே போதிய சான்றாகும். அவர் சமணராக இருந்தாலும் மற்றவர்களை வெறுக்க வில்லை. அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கூட ஆராய்ந்து தான் கண்டுபிடிக்க வேண்டும். இது சிலப்பதிகார ஆசிரியரின் சிறப்பு. சாத்தனாரின் மதப் பற்று மணிமேகலை ஆசிரியர் புத்த சமயத்தவர் என்பதில் ஐயம் இல்லை. புத்த சமயம் ஒன்றே உயர்ந்தது; உண்மையானது. ஏனைய சமயங்கள் எல்லாம் உண்மையற்றவை; பொய்க் கொள் கைகளைக் கொண்டவை; இழிவானவை என்ற கருத்துள்ளவர் மணிமேகலை ஆசிரியர். ஆதலால் மற்ற மதக் கொள்கைகளை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறார். மணிமேகலை புத்த சமயத்தை வலியுறுத்த எழுந்த நூல், ஆதலால் அது மற்றச் சமயங்களைத் தாக்குவதில் வியப்பில்லை. சமய நூல்கள் எல்லாம் பிற மதங்களைக் கண்டித்துக் கூறும். தமது சமயமே உயர்ந்தது என்று உரைக்கும். இந்த முறையிலேயே நமது நாட்டு மதத் தத்துவ நூல்கள் மிகவும் எழுதப்பட்டி ருக்கின்றன. தமது மதக் கொள்கை களைக் கூறுவதற்குச் சுபக்கம் என்று பெயர். பிற மதக் கொள்கைகளை எடுத்துச் காட்டிக் கண்டிக்கும் பகுதிக்குப் பரபக்கம் என்று பெயர். மணி மேலையிலே இவ்விரு பகுதிகளையும் காணலாம். ஆனால் சுபக்கம் தனியாகவும், பரபக்கம் தனியாகவும் சொல்லப்பட வில்லை. இரண்டும் நூல் முழுவதும் கலந்தே காணப்படுகின்றன. சமண மத வெறுப்பு இப் பகுதியிலே மற்ற மதக் கொள்கைகளை மணிமேகலை எவ்வாறு கண்டிக்கிறது என்பதைக் காண்போம். மற்ற மதங்களைக் காட்டிலும், சமண மதத்தைத்தான் இந்நூல் வன்மையாகக் கண்டிக்கின்றது. இதற்குக் காரணம், இந்நூல் எழுதப்பட்ட காலத்தில், தமிழகத்தில் சமணமதம் பரவி வேரூன்றி யிருந்திருக்க வேண்டும். இதனால் சமண மதத்தைப் பரிகசித்தும், தாக்கியும் எழுதுகிறார் சாத்தனார். உவ வனத்தில் உள்ள புத்த பீடிகையின் பெருமையைப் பேசும் போது சமணர் கொள்கையைத் தாக்குகிறது. அந்தப் புத்த பீடிகையிலே ஒரு தெய்வத்தை நினைத்துக் கொண்டு இடும் மலர் அத் தெய்வத்தை அடையும் ஒன்றையும் நினைக்காமல் வைக்கும் மலர் அப்படியே இருக்கும். இது ஒரு உண்மையை விளக்கி உரைக்கின்றதாம். அவ்வுண்மை என்ன என்பதையும் எடுத்துரைக்கின்றது. ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல், சிந்தை யின்றியும் செய்வினை உறும்எனும் வெம்திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும், செய்வினை சிந்தை யின்றுஎனின் யாவதும் எய்தாது என்போர்க்கு ஏது வாகவும் பயம்கெழு மாமலர் இட்டுக் காட்ட மயன்பண்டு இழைத்த மரபினது, அதுதான், (காதை3, வரி 37-39) ஈங்கே இப் பீடம் இவ்வாறு அமைத்திருப்பதன் காரணம் என்னவென்று கேட்பாயானால், கூறுகிறேன்; மனம் இல்லா விட்டாலும் அறமும் பாவமும் உண்டாகும். இவ்வாறு கொடிய தன்மையுள்ள விரதிகள் கூறுவர். இவர்கள் துன்புறும்படியும்; மனம் இல்லையானால், அறமும் பாவமும் சிறிதும் உண்டாவ தில்லை என்போர் உண்டு. இவர்களுக்கு ஆதரவாகவும்; பயன் உள்ள சிறந்த மலரை இட்டுக்காட்ட, மயன் என்னும் தெய்வத் தச்சனால், பண்டைக் காலத்தில் இயற்றப்பட்ட சிறந்த பீடமாகும் அது. வெந்திறல் நோன்பிகள் என்பது சமண சமயத் துறவிகளைக் குறிப்பிடுகிறது. ஆதலால் இது அவர்களுடைய கொள்கையைக் கண்டிப்பதாகும். மணிமேகலை மலர் கொய்வதற்காக, சுதமதியுடன் உவவனத்திற்குப் போகின்றாள். அவள் செல்லும் வழியிலே, வீதியிலே பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அவற்றுள் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. உறியிலே வைத்த குண்டிகையை உடையவன். சிறிய உருண்டையான பிரம்பை உடையவன். கெடாத சிறப்புள்ள அருகர் ஆலயத்தில் இருப்பவன்; நாணத்தையும், உடையையும் முழுசாகக் கைவிட்டவன்; கண்ணால் காணாத உயிர்களுக்கா கவும் இரக்கப்படுகின்றவன்; உண்ணா நோன்பை உடையவன்; வருந்துகின்ற யானையைப் போலக் கழுவாத அழுக்குப் படிந்த உடம்புள்ளவன் - இத்தகைய சமண சந்நியாசி ஒருவன் வந்து கொண்டிருந்தான். இவனைக் குடித்து வெறித்திருந்த குடியன் ஒருவன் கண்டான். இவன் அந்தச் சமண சந்நியாசியின் எதிரில் போய் நின்று வந்தவராகி அடிகளே! உமது மலர்ப் பாதங்களை வணங்குகின்றேன். எமது அடிகளே! எம்முடைய சொற்களை சிறிது கேளுங்கள். அழுக்கடைந்த உடம்பிலே புகுந்திருக்கும் உமது உயிர், புழுக்கம் உள்ள அறையிலே அடைக்கப்பட்ட வரைப் போல வருந்தாமல் இருக்கும். அவ்வுயிர்க்கு இம்மை, மறுமை இன்பங்களையும், அழியாத இன்பத்தையும் தரும். என் குருநாதன் கூறிய உண்மை இது. செழித்த மட்டையுள்ள தென்னையிலே விளையும் கள்ளால் கொலை செய்த பாவமும் உண்டாகுமோ? இல்லை. ஆதலால் உண்மையான தவத்தை யுடையவரே! கள்ளை உண்டு அதன் இனிமையை அறிந்து இந்த தவநெறியால் வரும் பயனைக் காணுங்கள். பயன் இன்றேல், அதன்பின், இக் கள்ளையும் என்னையும் வேண்டாம் என்று கையசைத்து விடுங்கள். இவ்வாறு சமண சந்நியாசியுடன் வழக்குப் பேசிக் கள்ளை உண்ணுமின்! என்று ஒரு களிமகன் இரக்கின்றான். இவ் வேடிக்கையைப் பலர் பார்த்துக் கொண்டு நின்றனர். (காதை 3, வரி 86-103) இந்த நிகழ்ச்சி, சமணர்களின் கொள்கையைப் பரிகசிப்பதற் காகவே அமைக்கப்பட்டதாகும். சுதமதியுடன் கதையிலும் சமண சமயத்தவர்களைப் பழித்துப் பேசப்படுகின்றது. சுதமதியுடன் தந்தை பிச்சை யேற்று வரும்போது அவனது வயிற்றிலே பசுமாடு ஒன்று முட்டிற்று. அதனால் அவன் குடல் சரிந்தது. அவன் சுதமதி தங்கியிருந்த சமணர் பள்ளியை அடைந்தான். சமணர்களே, உம்மைச் சரணம் அடைந்தேன் என்று புலம்பினான். சமணர்கள் அவனிடம் இரக்கங் காட்ட வில்லை. சுதமதியையும் அவனை வீதியிலே பிச்சையேற்றுவிட்டு வெளியேற்றி விட்டனர். அப்பொழுது வீதியிலே பிச்சையேற்று வந்த சங்கதருமன் என்னும் பௌத்த முனிவன் அவனைக் கண்டான். தன் கையில் உள்ள பிச்சைப் பாத்திரத்தைச் சுதமதியின் கையிலே கொடுத்தான். அவ் வந்தணனைத் தழுவி எடுத்து தோளிலே தூக்கிச் சென்று பௌத்த முனிவர்கள் உறைவிடத்திலே சேர்த்துக் காப்பாற்றினான். இச்செய்தி ஐந்தாவது காதையிலே கூறப்படுகின்றது. இக் கதை சமணர்களைப் பழித்தும், புத்தர்களைப் புகழ்ந்தும் கூறுகின்றது. மேலே காட்டிய மூன்று உதாரணங் களும் சமணர்களைப் பழிப்பதற்கும் புத்தர்களைப் போற்று வதற்கும் போதுமானவை. பொய்யுரைக்கும் சமயங்கள் மணிபல்லவத் தீவிலே, மணிமேகலா தெய்வம் மணிமே கலைக்கு மூன்று மந்திரங்களை உபதேசித்தது. அப்பொழுது அத்தெய்வம் கூறியதாவது:- அறிபிறப்பு உற்றனை; அறம்பாடு அறிந்தனை; பிற அறம் உரைப்போர் பெற்றியும் கேட்குவை: பல்வேறு சமயப் படிற்றுரை எல்லாம் அல்லிஅம் கோதை கேட்குறும் அந்நாள் இளையள், வளையோள் என்று உனக்கு யாரும் விளைபொருள் உரையார்; வேற்றுரு எய்தவும் அந்தரம் திரியவும் ஆக்கும், இவ் அருந்திறல் மந்திரம் கொள்க- (காதை 10, வரி 75-82) உன் பழம் பிறப்பை அறிந்தாய்! அறநெறி பிறக்கும் இடத்தையும் அறிந்தாய். மற்றைச் சமயத் தருமங்களைச் சொல் வோரிடம் அச் சமயங்களின் தன்மையையும் கேட்டறிவாய். பல வேறுபட்ட சமயங்கள் கூறும் பொய்யுரைகளை எல்லாம் நீ கேட்கப் புகும் அந்நாளில், உன்னை, இளையவள், வளையல்களை அணிந்தவள் என்று எண்ணி உண்மைகளை உரைக்க மாட்டார்கள். ஆதலால் வேறு வடிவம் பூணவும், வானத்தின் வழியே செல்லவும் உதவும் இம் மந்திரங்களை ஏற்றுக் கொள்க. மணிமேகலா தெய்வத்தின் இக்கூற்றிலே மற்றச் சமயங் களையெல்லாம் - சமய தருமங்களையெல்லாம் படிற்றுரை - அதாவது பொய்யுரை என்று வெறுத்துரைப்பதைக் காணலாம். பல்வேறு சமயப் படிற்றுரை எல்லாம் அல்லிஅம் கோதை கேட்குறும் அந்நாள் (காதை 21, வரி 101-102) என்று கந்தில்பாவை, மணிமேகலைக்கு கூறுவதாகப் பின்னும் வருகின்றது. இந்து மதக் கண்டனம் காவிரிப்பூம்பட்டினித்திலிருந்த தருமதத்தன் என்னும் வணிகன், தன் தந்தை தாயாருடன் மதுரைக்குச் சென்றான். வாணிகம் செய்தான். பெரும் பொருள் சேர்த்துப் புகழுடன் வாழ்ந்தான். அவன் தான் காதலித்த விசாகையைத் தவிர வேறு எப்பெண்ணையும் மணப்பதில்லையென்று உறுதி கொண் டிருந்தான். அப்பொழுது ஓர் அந்தணன் அவனிடம் வந்தான். பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும் புத்தேன் உலகம் புகா அர் என்பது கேட்டும் அறிதயோ! கேட்டனை ஆயின் நீட்டித் திராது நின்நிகர் அடைக. (காதை 22, வரி, 117-120) பத்தினியைக் கூடிப் பிள்ளை பெறாதவர்கள் பல தருமங்களைச் செய்யினும் தேவர் உலகைப் பெறமாட்டார்கள். இதை நீ கேட்டதில்லையோ? கேட்டனையானால் காலந் தாழ்த்தாமல் உனது நகருக்குச் சென்று மணம் புரிந்து கொண்டு வாழ்க என்று கூறினான் அந்தணன். இது, இந்து மதப் புராணக் கொள்கை. இதை மறுத்துக் கூறுகிறது மணிமேகலை. இத் தருமதத்தன் உடனே மதுரையை விட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தை அடைந்தான். அவன் வந்திருப்பதை அறிந்த விசாகை, அவனிடம் வந்தாள். அவனை நோக்கி இளமையும் நில்லா; யாக்கையும் நில்லா; வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா; புத்தேன் உலகம் புதல்வரும் தாரார்; மிக்க அறமே விழுத்துணை யாவது; தானம் செய்க! (காதை 23, வரி 135-139) இளமையும் நிலைக்காது; உடம்பும் நிலைக்காது; வளம் பொருந்திய பெரிய செல்வமும் நிலைக்காது. புதல்வர்கள் தாம் தேவருலகைத் தருவார், நரகம் செல்வதைத் தடுப்பார் என்பது பொய்யுரை. உயர்ந்த தருமந்தான் சிறந்த துணையாகும். ஆதலால் உனது செல்வத்தைத் தானம் செய்க என்று கூறினான் விசாகை. விசாகையின் இக்கூற்று மேலே காட்டிய அந்தணர் கூற்றை மறுத்தது. விசாகையின் கூற்று புத்த மதக் கொள்கை. அந்தணன் கூற்று வைதீகப் புராண மதக் கொள்கை. பௌத்தமே உயர்ந்தது மணிமேகலை வஞ்சிமாநகர் சென்று கண்ணகியின் கோயிலை அடைந்து வணங்கினாள். கண்ணகித் தெய்வத் தினிடம், கோவலன் அடைந்த கொடுந்துயரின் காரணத்தைக் கூறவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். கண்ணகித் தெய்வம் கோவலன் அடைந்த துன்பத்திற்கான காரணத்தைக் கூறிவிட்டு, மணிமேகலையின் எதிர்காலத்தைப் பற்றியும் எடுத்துரைத்தது. நறைகமழ் கூந்தல் நங்கை நீயும் முறைமையின் இந்த மூதூர் அகத்தே அவ்வவர் சமயத்து அறிபொருஐள் கேட்டு மெய்வகை யின்மை நினக்கே விளங்கிய பின்னர்ப் பெரியோன் பிடகநெறி கடவாய். (காதை 26, வரி 62-66) தேன் மணம் கமழும் கூந்தலையுடைய நங்கையே! நீயும் முறைப்படி, இந்தப் பழமையான ஊரிலே வாழும் ஒவ்வொரு சமயத்தினரும் அறிந்துள்ள உண்மையை உரைக்கக் கேட்ட பின், அவைகள் எல்லாம் உண்மையல்லவென்பது உனக்கே விளங்கும். அதன்பின், புத்தனாகிய பெரியோன் அருளிச் செய்த திரிபிடக நூல் உரைக்கும் தரும நெறியைப் பின்பற்றுவாய். இவ்வடிகள், புத்த தர்மத்தைத் தவிர ஏனைய மத தர்மங்கள் எல்லாம் பொய் என்று கூறியிருப்பதைக் காணலாம். மேலே காட்டியவைகளைக் கொண்டு மணிமேகலை சிறந்த இலக்கியமாக விளங்குவதோடு, புத்த மத நூலாகவும் விளங்குகிறது; மற்ற மதங்களை வெறுத்துத் தன் மதமே உண்மையென்று எடுத்துரைக்கும் உறுதியான சமய நூலாகவும் திகழ்கின்றது என்று காணலாம். ஊழ்வினையும் பிறப்பும் மக்கள் இப் பிறப்பிலே செய்யும் நல்வினைகளின் பயனை மறுபிறப்பிலே அனுபவிப்பர். நல்வினைகளைச் செய்வோர் உயர் பிறப்படைவர்; இன்பத்தை நுகர்வர். தீவினைகளைச் செய்வோர் மனிதர்களாகப் பிறப்பதே அரிது. விலங்கு, பறவை முதலிய உயிரினங்களிலே ஒன்றாகப் பிறந்து உழல்வர். மனிதராகப் பிறந்தாலும், வறுமையாளராய், நோயாளராய்த் தோன்றி மனம் வருந்துவர். நல்வினை செய்தோரின் தயவை நாடி வாழ்வார்கள். இது, வேதத்தை அடிப்படையாகக் கொண்ட மதங்களின் தத்துவம், சமண மதமும், பௌத்த மதமும் வேதங்களை ஒப்புக் கொள்ளவில்லை. ஆயினும் ஊழ்வினையையும், மறுபிறப்பையும் ஒப்புக்கொள்கின்றன. இவ்வுண்மையைச் சமண நூல்களாலும், பௌத்த நூலாகிய மணிமேகலையாலும் அறியலாம். சமணக் காவியங்களிலும் கதைகளிலும், பௌத்தக் காவியங்களிலும் கதைகளிலும் இக் கொள்கை வலியுறுத்தப் படுகின்றது. ஐயம் உண்டோ ஆர்உயிர் போனால் செய்வினை மருங்கின் சென்று பிறப்பு எய்துதல்? (காதை 6, வரி 158-159) அரிய உயிர் மாண்டுபோனால், அவ்வுயிர் தான் செய்த வினையின்படி சென்று மறுபிறப்பு அடையும் என்பதில் ஐயம் உண்டோ? தீப்பிறப்பு உழந்தோர் செய்வினைப் பயத்தால் யாப்புடை நற்பிறப்பு எய்தினர் போல (காதை 20, வரி 3-4) கொடிய பிறப்பிலே பிறந்து வருந்தினவர்கள், நல்வினை களைச் செய்த பயனால், அந் நல்வினைகளுக்குத் தகுந்த நல்ல பிறப்பை அடைவார்கள்; அதுபோல தீவின உறுத்தலும் செத்தோர் பிறத்தலும் வாயே என்று மயக்குஒழி. (காதை 21, வரி 113, 114) தான் முன் செய்த தீவினை தன்னை வந்து அடைந்து துன்புறுத்துவதும், செத்தவர் மீண்டும் பிறப்பதும் உண்மை என்று உணர்க. அறியாமை ஒழிக. இவ்வாறு ஊழ்வினையும் மறுபிறப்பும் வலியுறுத்தப் படுகின்றன. மணிமேகலையில் வரும் கதைகளும் இக் கொள் கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. கதாநாயகியாகிய மணிமேகலையைப் பற்றிக் கூறும் போது, அவளுடைய செயல்களுக்கெல்லாம் காரணம் முன்வினைதான் என்று மொழிகின்றது மணிமேகலை. மாதவியும் மணிமேகலையும் பௌத்த சங்கத்தில் இருக்கும் போது, சித்திராபதியின் தோழி வசந்தமாலை வந்தாள். இந்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்பதாகக் கூறினாள். மாதவி நானும் வரமுடியாது; பத்தினிக் கண்ணகியின் புதல்வி மணிமேகலையும், நமது குலத் தொழிலில் ஈடுபட முடியாது என்று சொல்லிவிட்டாள். இம் மொழியைக் கேட்ட மணிமேகலை வருந்தினாள். மாமலர் நாற்றம்போல் மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள்ளது ஆதலின் தந்தையும் தாயும் தாம்நனி உழந்த வெம்துயர் இடும்பை செவி அகம் வெதுப்ப. (காதை 3, வரி 3-6) சிறந்த மலரிலிருந்து மணம் வெளிப்படுவதைப் போல, மணிமேகலைக்கு அவள் செய்த முன்வினைப் பயன் அவளை அடையும் காலம் வந்து விட்டது. ஆதலால் அவள் தன் தந்தை யாகிய கோவலனும், தாயாகிய கண்ணகியும் அடைந்த மிகுந்த துன்பச் செய்தி அவளது செவியின் வழியே புகுந்து உள்ளத்தை வேதனையால் வேக வைத்தது. இது மணிமேகலையப் பற்றிய செய்தி. இதிலே அவளுக்குத் துன்பம் உண்டானதற்குக் காரணம் பழவினை தான் என்று கூறப்பட்டது. சுதமதியுடன் தூங்கும்போது, மணிமேகலா தெய்வம், மணிமேகலையை மணிபல்லவத் தீவுக்கு எடுத்துச் சென்றது. மீண்டும் சுதமதியிடம் வந்தது. புத்தர் பெருமானின் அறநெறி யிலே செல்லும் வினைப்பயன் மணிமேகலைக்கு வந்து விட்டது. ஆதலால் அவளை மந்திர சக்தியால் தூக்கிச் சென்றேன். மணிபல்லவத் தீவில் வைத்திருக்கின்றேன். அவள் தம் பழம் பிறப்புணர்ந்து இன்னும் ஏழு நாட்களில் இந் நகருக்குத் திரும்பி விடுவாள். ஆதிசால் முனிவன் அறவழிப் படூஉம் ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு, ஆதலின் விஞ்சையின் பெயர்த்து, நின் விளங்கு இழை தன்னை ஓர் வஞ்சம்இல் மணிபல் லவத்திடை வைத்தேன்; பண்டைப் பிறப்புப் பண்புற உணர்ந்துஈங்கு இன்றுஏழ் நாளின் இந்நகர் மருங்கே வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள். (காதை 7, வரி 19-25) இவ்வடிகள் மணிமேகலை மணிபல்லவத் தீவை அடைந்த தற்குக் காரணம் பழவினைதான் என்று காட்டின. மணிமேகலை பரத்தையர் குலத்திலே பிறந்தும் அத் தொழிலைச் செய்யவில்லை. புத்த சங்கத்தை அடைந்தாள். புத்த தருமத்தை மேற்கொண்டாள். பசியால் வருந்தும் உயிர்களுக்கு உணவளித்துக் காக்கும் உயர்ந்த தருமத்தைச் செய்து வந்தாள். இதற்குக் காரணம், அவள் முன் பிறப்பிலே சாதுசக்கரன் என்னும் பௌத்த சாரணனுக்கு உணவிட்டது தான். இந் நல்வினையால்தான், அவள் பரத்தையின் குலத்தில் பிறந்தும் நல்லற நெறியிலே தலை நின்றாள். இச் செய்தியைப் பத்தாவது காதையில் காணலாம். கோதமையின் கதையும் பழவினையை வலியுறுத்துகின்றது. கோதையின் மகன் சார்ங்கலன் என்பவன் அவன் சுடுகாட்டுக் கோட்டத்திலே ஆடிக் கொண்டிருந்த பேயைக் கண்டு அஞ்சி ஓடி வந்தான். என்னைப் பேய் அறைந்து விட்டது என்று அன்னையிடம் கூறி விழுந்து உயிர்விட்டான். மகன் மாண்டது கண்டு வருந்திய கோதமை சம்பாபதியின் சந்நிதியை அடைந்து முறையிட்டாள். ஆரும்இல் ஆட்டி, என் அறியாப் பாலகன் ஈமப் புறங்காட்டு எய்தினோன் தன்னை, அணங்கோ, பேயோ, ஆர்உயிர் உண்டது; உறங்குவான் போலக் கிடந்தனன் காண். (காதை 6, வரி 146-149) கண் இழந்த என் கணவனைத் தவிர வேறு துணையற்றவள் நான். எனது அறியாத பாலகன், சுடுகாட்டை ஒரு நகரம் என்று நினைத்து அங்கே சென்றான். தீண்டி வருத்தும் தெய்வமோ அல்லது பேயோ அவனது உயிரை உண்டது. இதோ பார்! உறங்குவோனைப் போலக் கிடந்தனன் என்று கூறினாள். இதற்குப் பதிலாகச் சம்பாபதித் தெய்வம் உரைத்தது குறிப்பிடத் தக்கது. அணங்கும் பேயும் ஆர்உயிர் உண்ணா பிணங்குநூல் மார்பன் பேது கந்தாக ஊழ்வினை வந்துஇவன் உயிர்உண்டு கழிந்தது மாபெரும் துன்பம்நீ ஒழிவாய் (காதை 6, வரி 150-153) அணங்கோ, பேயோ உயிரைக் கவராது. பூணூல் தரித்த மார்பையுடைய உன் மகன் புத்தியில்லாதவன். அறியாமை காரணமாக ஊழ்வினை வந்து உயிரைக் கவர்ந்து சென்றது. ஆதலால் நீ மிகப் பெருந் துன்பத்தை அடையாதே. இவ்வாறு சொல்லி, ஊழ்வினையின் பயனை உரைத்தது. இவைகள் ஊழ்வினையின் செயலை உரைத்தன. துச்சயன் என்னும் அரசனுக்கு இரு மனைவியர். இருவரும் சகோதரிகள். மூத்தவள் பெயர் தாரை. இளையவள் பெயர் வீரை. அவ்வரசனை ஒரு நாள் அறவண அடிகள் கண்டார். நீயும் நின் மனைவியரும் நலந்தானா? என்று வினவினார். அரசன் வீரை மதுவுண்ட புதிதாகப் பிடிக்கப்பட்ட யானை முன் சென்றாள். கொல்லப்பட்டாள். அத் துக்கத்தை தாங்க மாட்டாத தாரை ஒரு மாடியின் மேல் ஏறிக் கீழே விழுந்து மாண்டாள் என்று சொல்லி வருந்தினான். அதற்கு, பழவினைப் பயன்; நீ வருந்தல் (காதை 12, வரி 50) ஊழ்வினையால் இவ்வாறு நடந்தது. இதற்காக நீ வருந்தாதே என்று கூறினார் அறவண அடிகள். ஆனைத்தீ என்னும் பசிநோயால் வருந்திய காயசண்டிகை மணிமேகலையிடம் உணவு தரும்படி வேண்டினள். இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும்பசிப் பட்டேன், என்தன் பழவினைப் பயத்தால்; அன்னை கேள் நீ! ஆர் உயிர் மருத்துவி! துன்னிய என்நோய் துடைப்பாய். (காதை 17, வரி 13-16) அன்னையே கேட்பாயாக! எனது பழவினையின் காரண மாக, எவ்வளவு தான் உண்டாலும் தணியாத கொடும்பசியால் வருந்தினேன். உயிர்களுக்கு மருத்துவச்சியாக விளங்கும் நீ என்னை அடைந்த பசி நோயை ஒழிப்பாயாக. காயசண்டிகை விருச்சிய முனிவன் உண்பதற்கு வைத்தி ருந்த நாவல் கனியைச் சிதைத்தாள். அதனால் பன்னிரண்டு ஆண்டுகள் யானைத்தீ என்னும் பசிநோயால் வருந்தும் படி சாபம் பெற்றாள். அவள் இச்சாபம் பெற்றதற்குக் காரணம் பழவினைதான். மழைசூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக் கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தால் மாதவன் மாதர்க்கு இட்ட சாபம் ஈர்ஆறு ஆண்டு வந்தது. (காதை 20, வரி 22-25) மேகங்கள் படிந்திருக்கின்ற உச்சியையுடைய பொதிகை மலை யிலே, மூங்கில்கள் வளர்ந்திருக்கின்ற காட்டாற்றங் கரையிலே, விருச்சிக முனிவன் காயசண்டிகைக்குக் கொடுத்த சாபத்தின் பன்னிரண்டு ஆண்டு முடிவு இப்பொழுது வந்தது. மேலே காட்டியவைகள் ஊழ்வினையின் நிகழ்ச்சியை உரைத்தன. காயசண்டிகையின் கணவனாகிய காஞ்சனன் உதய குமரனை வெட்டி வீழ்த்தினான். அதன் பின், பதுமைத் தெய்வம் ஒன்றால் உணர்ந்து வருந்தினான். அப்பொழுது அத்தெய்வம், ஊழ்வினை வந்துஇங்கு உதயகுமரனை ஆர்உயிர் உண்டது; ஆயினும் அறியாய் வெல்வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன! அவ்வினை நின்னையும் அகலாது; ஆங்றூஉம். (காதை 20, வரி 132 - 136) வித்தியாதரனாகிய காஞ்சனனே! ஊழ்வினை வந்து தான் இந்த உதயகுமரனது அரிய உயிரை உண்டது. ஆயினும் உண்மை உணராமல் நீ கொடுங் செயலைச் செய்தாய். இத் தீவினை உன்னை விட்டு ஒழியாது. நீ செல்லும் இடத்திற்கு வந்து துன்புறுத்தும் என்று கூறிற்று. காலந் தாழ்த்து வந்த சமையல்காரன் பயந்து தடுமாறி, பாத்திரம் சிதையும்படி வீழ்ந்தான். அவன்மீது சினந்து, இராகுலன் அவனை வாளால் வெட்டினான். அதனால்தான் அவன் அப் பிறப்பில் திட்டி விடத்தால் மாண்டான். மறுபிறப்பில் உதயகுமரனாகப் பிறந்து காஞ்சனன் வாளுக்கு இரையானான். மடைக்கலம் சிதைய வீழ்ந்த மடையனை உடல் துணிசெய்து ஆங்கு உருத்துஎழும் வல்வினை நஞ்சுவிழி அரவின் நல்உயிர் வாங்கி விஞ்சையன் வாளால் வீட்டியது. (காதை 23, வரி 82 - 85) இது இராகுலன் செய்த தீவினையே ஊழ்வினையாக நின்று அவன் உயிரை உண்டது என்று உரைத்தது. இராகுலன் தன் சமையல்காரனை வெட்டிக் கொன்ற தீவினைதான். அவள் உதயகுமரனாகப் பிறந்த பின்னும் காஞ்சனன் வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டான் என்ற செய்தி காதை 21-லும் சொல்லப்படுகிறது. கோவலன், தன் மனைவியுடன் மதுரைக்குச் சென்று அரசன் ஆணையால் வெட்டுண்டு மாண்டதற்குக் காரணம் பழவினைதான் என்று மணிமேகலையில் கூறப்படுகின்றது. எம் இதில் படுத்தும் வெல்வினை உருப்பக் கோல்தொடி மாதரொடு வேற்றுநாடு அடைந்து வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ! (காதை 8, வரி 40-43) எம்மை இத்துன்பத்துள் வீழ்த்தும் தீவினை உருக்கொண்டு வந்தது. அதனால் மனைவியுடன் வேற்று நாடு புகுந்தாய். கூர்மையான வாளால் துன்புற்றாய். இரத்தினாபரணங்களை யணிந்த மார்பையுடைய தந்தையே. இவ்வாறு மணிமேகலை கோவலனை நினைத்துப் புலம் பினாள். மணிமேகலை வஞ்சிமா நகரத்தை யடைந்தாள். கண்ணகி யின் கோவிலுக்குச் சென்று கண்ணகியை வணங்கினாள். நீ வீரக் கற்புள்ளவளாகி உன் கடமையை முடித்ததற்குக் காரணம் கூறவேண்டும் என்று வேண்டினாள். அப்பொழுது கண்ணகி, மதுராபதித் தெய்வம் தனக்குரைத்த செய்தியைக் கூறினாள். கோவலன் முன் பிறப்பில் பரதன் என்னும் பெயர் உள்ளவன் (பக்கம் 48). அவன் குற்றமற்ற சங்கமனை அரசனால் கொலை செய்வித்தான். அந்தப் பரதனே கோவலனாகப் பிறந்து வினைப் பயனை அடைந்தான். இச் செய்தியைக் கண்ணகி கூறினாள். (காதை 26, வரி 1-34) மேலே கூறியவைகளைக் கொண்டு மணிமேகலை, ஊழ் வினையையும், மறுபிறப்பையும் வலியுறுத்துவதைக் காணலாம். ஊழ்வினையும் மறுபிறப்பும் இல்லாவிட்டால் மணிமேகலையே இல்லை. இவ்விரண்டையும் மக்கள் உள்ளத்திலே பதியும்படி உரைப்பதே மணிமேகலையின் நோக்கம். பண்டைக் காலத்தில் ஊழையும் மறுபிறப்பையும் பல மதங்களும் ஏற்று வலியுறுத்தின. இதற்குக் காரணம் மக்கள் அறநெறி தவறாமல் அன்பு நெறியிலே வாழவேண்டும் என்பது தான். இவ் விரண்டையும் உண்மையென்று நம்பும் மக்கள் நல்வினைகளைத்தான் செய்வார்கள்; தீவினைகளைச் செய்ய அஞ்சுவார்கள். மற்றவர்களிடம் அன்பு காட்டி அவர்கள் துன்புறாமல் காப்பது தமது கடமை என்றும் கருதுவார்கள். யாரிடமும் வெறுப்புக் காட்டமாட்டார்கள். மக்கள் அனைவரும் ஒன்றே என்னும் உள்ளத்துடன் உயர்ந்த ஒழுக் கத்தைப் பின்பற்றி வாழ்வார்கள். இத்தகைய நல்லெண்ணத்துடன்தான், முன்னோர் ஊழையும் மறுபிறப்பையும் வலியுறுத்தினர். சாதி ஒழிப்பு சாதி வேற்றுமை போன்ற கொடுமை வேறு ஒன்றும் இல்லை. சாதி வேற்றுமை மனிதத் தன்மையையே மாற்றி விடுகின்றது. மக்கள் சமுதாயத்தில் கலகமும் வெறுப்பும் தாண்டவம் புரிவதற்குக் காரணம் சாதி வேற்றுமைதான். சாதி வேற்றுமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை மறுப்பவர் யாரும் இல்லை. மக்களுக்குள் பிறப்பினால் பேதம் பாராட்டுவது மடமை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். சாதி ஒழிப்பு முயற்சி பல்லாண்டுகளாக நடந்தும் வருகின்றது. ஆயினும் இன்னும் சாதி ஒழிந்த பாடில்லை. மக்களுள் பிறப்பினால் வேற்றுமை இல்லை யென்பது புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்று. இக் கொள்கையைப் புத்த மதமும் புத்த நூல்களும் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும், எந்த நூல்களும் வலியுறுத்த வில்லை என்பதை துணிந்து சொல்லலாம். புத்த தருமத்தைப் பரப்பும் மணிமேகலை, சாதி வேற்றுமை இல்லை என்பதை மிகவும் தெளிவாகக் கூறுகின்றது. தமிழகத்தில் சாதி வேற்றுமை மணிமேகலை நூல் தோன்றிய காலத்திலே தமிழகத்திலே சாதி வேற்றுமை வேரோடியிருந்தது. நான்கு சாதிகள் மட்டும் இல்லை; தொழில்கள் காரணமாகத் தோன்றிய பலவகைச் சாதிகள் இருந்தன. வருணாசிரம தர்மத்திலும் மக்களுக்கு நம்பிக்கையிருந்தது. பிறப்பினால் சாதி வேற்றுமை உண்டு என்ற கொள்கையும் நிலைத்திருந்தது. சாதி வேற்றுமை நிலைத்திருந்த காலத்திலே பிறந்த மணிமேகலை அவ் வேற்றுமையை அழுத்தமாகக் கண்டிக் கின்றது. மக்களிடையே சாதிப் பிரிவு, சாதி வேற்றுமை ஆண்ட வனாலேய படைக்கப்பட்டது என்ற எண்ணம். சாதிப் பிரிவிலே நம்பிக்கை - இவைகள் குடிகொண்டிருந்த காலத்தில் அதைக் கண்டித்துப் பேசுவதற்கு ஆண்மை வேண்டும்; மறுத்து எழுது வதற்கு மனத்திலே துணிவு வேண்டும். மக்களால் நம்பப்படும் சில கொள்கைகள் உண்மையற்றவைகளாயிருப்பினும் அவற்றைக் கண்டித்துரைப்போர் மக்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள். இந்த நிலைய இன்றும் காணலாம். இவ்வாறு கண்டித்த சீர் திருத்தவாதிகள் பட்ட பாட்டை வரலாற்று நூல்கள் எடுத்துக் காட்டுகின்றன. மணிமேகலை ஆசிரியர், அவர் காலத்திலே, தமிழகத்திலே நிலைத்திருந்த சாதி வேற்றுமையை மிக மிக வன்மையாகக் கண்டித்திருப்பது அவருடைய துணிவையே காட்டும். செத்தும் சாதி உண்டு காவிரிப்பூம்பட்டினத்துச் சுடுகாட்டைப் பற்றி மணிமே கலை விரிவாகச் சொல்லுகின்றது. அங்கு பல சமாதிகள் அமைந்திருந்தனவாம். இந்தச் சமாதி இந்த வருணத்தார்க்குரியது என்று காணும்படி அவைகள் கட்டப்பட்டிருந்தனவாம். அருந்தவர்க்கு ஆயினும், அரசர்க்கு ஆயினும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும் நால்வேறு வருணப் பால்வேறு காட்டி இறந்தோர் மருங்கின் சிறந்தோர் செய்த குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும் (காதை 6, வரி 54 - 59) அரசர்களாயினும் சரி, அரிய தவசிகளாயினும் சரி, கணவர் களுடன் இறந்த பெண்டிர்களாயினம் சரி, அவர்களுடைய சாதி விளங்கும்படி சமாதிகள் கட்டப்பட்டிருந்தன.அச் சமாதிகள் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நால்வகை யான வருண பேதத்தையும் அறியும்படி தனித்தனி அமைப்புடன் ஆக்கப்பட்டிருந்தன. இறந்தோர் பொருட்டுப் பணம் படைத்தோரால் கட்டப்பட்டிருந்த இச் சமாதிகள் சிறியவும் பெரியவுமாக மலைகளைப்போல விளங்கின. அவைகள் செங்கற் களால் கட்டப்பட்டவை. இவ்வடிகள் செத்தும் சாதி ஒழியவில்லை என்ற உண்மையை உணர்த்தின. சாதி ஒழுக்கம் வஞ்சிமா நகரத்தைப் பற்றிக் கூறும்போது சாதிப் பிரிவுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பலதிறப்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். அவர்கள் தொழில்வாரியாகத் தனித்தனி வீதி களிலே வாழ்ந்து வந்தனர். தொழிலாளர்களுக்குத் தனி வீதிகள், அந்தணர்களுக்குத் தனி வீதிகள், அரசர்களுக்குத் தனி வீதிகள், வணிகர்களுக்குத் தனி வீதிகள், கணிகையர்க்குத் தனித் தெருக்கள் இருந்தன. இவற்றை மணிமேகலையின் 28-வது காதையில் காணலாம். இந்நூலில் வஞ்சிமா நகரம் என்ற தலைப்பில் குறிக்கப்பட்டுள்ளது. தனது குலத்தொழிலை விட்டுத் தவநெறியை மேற் கொண்ட மணிமேகலையைப் பற்றி உதயகுமரன் பேசும் போது அவள் வருண தர்மத்தை மீறியவள் என்று குறை கூறுகின்றாள். கற்புத் தான்இலள்; நல்தவ உணர்வுஇலன்; வருணக் காப்பு இலன்; பொருள்விலை யாட்டி. (காதை 5, வரி 86-87) கற்பும் இல்லாதவள். நல்ல தவ உணர்ச்சியும் இல்லாதவள். தன் வருணத்திற்குரிய ஒழுக்கத்தைப் பின்பற்றாதவள் விலைமகள். இவ்வடிகளும் தமிழகத்தில் வருணபேதம் இருந்ததை உணர்த்துகின்றன. வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப் பான்மையில் திரியாது படிற்றுரை அடக்குதல் கோல்முறை அன்றோ. (காதை 18, வரி 109-111) தேனை உண்டபின் அம்மலரை விட்டு வேறு மலரைத் தேடிச் செல்வது வண்டின் இயல்பு. பரத்தையரும் இது போன்ற இயல்புள்ளவர். தம்மைச் சேர்ந்தவர்களின் செல்வத்தை உறிஞ்சிய பின் அவரைக் கைவிட்டு, செல்வம் நிறைந்த வேற்றாரை நாடிச் செல்வதே பரத்தையர் தன்மை. அவர்களை அந்த நெறியிலே வாழ வைப்பதும், அதற்கு மாறாக அவர்கள் பேசும் பொய்யுரை களை அடக்குவதும் செங்கோல் முறை யாகும். இவ்வடிகள் சித்திராபதி உதயகுமரனிடம் உரைத்தவை. இவ்வடிகள் வருண தர்மத்தைக் காப்பது அரசாட்சியின் கடமை என்பதை அறிவித்தன. மேலே காட்டிய மூன்று உதாரணங்களும் மணிமேகலை காலத்தில் தமிழகத்தில் வேரோடியிருந்த சாதி வேற்றுமை யையும், வருணாசிரம தர்மத்தையும் உணர்த்துகின்றன. சாதி வேற்றுமையைக் காப்பாற்றுதல் அரசாங்கத்தின் கடமை என்று அக்காலத்து மக்கள் நம்பினர். தமிழகத்து மன்னர்கள் வருணா சிரம தர்மத்திற்கு ஆதரவளித்து வந்தனர் என்று உண்மை களையும் உணர்த்தின. பிறப்பால் வேற்றுமையில்லை இத்தகைய தமிழகத்திலே, மணிமேகலை, சாதி வேற்று மையின் பொருளற்ற தன்மையை விளக்கமாக எடுத்துக் காட்டுகின்றது. மணிமேகலையில் கூறப்படும் சாதி ஒழிப்புக் கொள்கைய விளக்க ஆபுத்திரன் கதை ஒன்றே போதுமான தாகும். சாதி வேற்றுமையைக் கண்டிப்பதற்காகவே இக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயம் இல்லை. இக் கதையைச் சிறுகதைகள் என்ற தலைப்பிலே காணலாம். ஆபுத்திரன் அந்தணர்களின் யாகப் பசுவை, அவர்கள் காணாமல் பிடித்துக் கொண்டு போய்விட்டான். அவனையும் பசுவையும் தேடிப் பிடித்த அந்தணர்கள் அவனைத் துன்புறுத்தினர். மன்உயிர் முதல்வன் மகன்எமக்கு அருளிய அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை தெருமரல் உள்ளத்துச் சிறியை நீ! அவ் ஆமகன் ஆதற்கு ஒத்தனை; அறியா நீமகன் அல்லாய்! (காதை 13, வரி 58-62) நீ நான்முகனால் அருளிச் செய்யப்பட்ட சிறந்த வேத நூல் கொள்கையை அறியாமல் இகழ்ந்தாய். நீ அறிவற்ற சிறுவன். நீ அந்த மிருகமாகிய பசுவின் மகன் என்பதற்குத் தகுந்த புத்தி படைத்தவனாகத்தான் இருக்கின்றாய். வேதத்தின் உண்மையை உணராத நீ மனிதன் அல்ல. இவ்வாறு அந்தணர்கள் ஆபுத்திரனை இகழ்ந்தனர். அவன் பசுமகன் என்று பரிகசித்தனர். உடனே ஆபுத்திரன் அவ்வந்தணர்களைப் பார்த்துப் பிறப்பால் வேற்றுமையில்லை. யாருக்குப் பிறந்தால் என்ன? அறிவும் அன்பும் உள்ளவனே உயர்ந்த மனிதன் என்ற கருத்துப் படப் பதில் உரைத்தான். ஆன்மகன் அசலன், மான்மகன் சிருங்கி, புலிமகன் விரிஞ்சி, புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன்? ஈங்குஇவர் நும்குலத்து இருடி கணங்கள் என்று ஓங்குஉயர் பெரும்சிறப்பு உரைத்தலும் உண்டால்; ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ? நான்மறை மாக்காள் நன்னூல் அகத்து. (காதை 13, வரி 63-69) அசலன் என்பவன் பசுவின் புதல்வன்; சிருங்கி என்பவன் மானின் மகன்; விரிஞ்சி என்பவன் புலியின் புத்திரன்; பெரியோர்களால் போற்றப்படும் கேசகம்பளன் என்பவன் நரியின் மகன். இவர்கள் எல்லாம் உமது குலத்து முதல்வர்களான முனிவர் கூட்டங்கள். இவர்களைப் பெருமையாகப் புகழ்ந்து கொண்டாடுகின்றீர்கள். பசுவின் வழியே வந்த இழிந்த குலம் என்பது ஒன்று உண்டோ? ஏ, வேதியர்களே! இதைப்பற்றி உங்கள் வேதத்தில் கூறப்படு கின்றதா? இவ்வாறு எதிர்த்துப் பேசினான் ஆபுத்திரன். ஆபுத்திர னுடைய இம்மொழிகள் பிறப்பிலே உயர்வு தாழ்வில்லை என்ற உண்மையை உணர்த்தின. ஒழுக்கமே உயர்குலம் ஆபுத்திரன் சொல்லைக் கேட்டவுடன், ஒரு அந்தணன் முன் வந்தான். இவன் பசுவின் மகன் அல்லன். சாலி என்னும் பார்ப்பனியின் மகன்தான். சாலி, வாரணாசியில் உள்ள அபஞ்சிகன் என்னும் வேத உவாத்தியின் மனைவி. அவள் விபச்சாரத்தால் பெற்றெடுத்த மகன் இவன். ஆதலால் இவனைத் தொடாதீர்கள். இவன் பிறப்பு இழிவானது என்று ஆபுத்திரன் பிறப்பைச் சொல்லி இகழ்ந்தான். இதைக் கேட்ட ஆபுத்திரன் கோபம் இல்லாமல் அன்புடன் சிரித்தான். வேதியர் பிறந்த குலத்தைக் கேளுங்கள் நான் முகனிடத்திலே பிறந்த வேதங்களை அறிந்த முதல்வர்களாகிய வசிட்டரும் அகத்தியரும் யார்? தேவதாசியாகிய திலோத்த மையின் பிள்ளைகள். பூணூலை அணிந்த வேதியர்களே! இது பொய்யா? ஆதலால் சாலியிடம் என்ன குற்றத்தைக் கண்டீர்கள்? என்று சொல்லி அந்தணர்கப் பார்த்துப் பரிகசித்துச் சிரித்துக் கொண்டு நின்றான். இவ்வடிகளும், பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை, ஒழுக்கமே உயர்குலம் என்பதை உணர்த்தின. மணிமேகலையும் ஆபுத்திரனும், வறுமையால் வாடுவோர் அனைவரும் உணவளித்தனர். மொழி வேற்றுமை, நாட்டு வேற்றுமை, இன வேற்றுமை, சாதி வேற்றுமை பார்க்காமல் பசியால் வருந்தும் பலரையும் பாதுகாத்தனர். இச் செய்தி, வருந்துவோர் யாராயினும் சரி, அவர்களை காப்பாற்ற வேண்டுவது மக்கள் கடமை என்று வலியுறுத்துகின்றது. சாதிப்பற்றை - சாதி உணர்ச்சியைப் போக்குவதற்கு வழி காட்டு கின்றது. ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் அவனது நடத்தையாகும். தன்னலமற்றவன், மக்கள் வாழப் பணி செய்பவன், துன்புறுவோர் அனைவருக்கும் மொழி, இன, நிறபேதம் பாராட்டாமல் உதவி செய்கின்றவன் உயர்ந்த மனிதன்! உயிர்களிடம் இரக்கம் காட்டாதவன், வருந்துவோர்க்கு உதவு செய்யாதவன், தன்னலம் ஒன்றையே குறியாகக் கொண் டவன் இழிந்த மனிதன்! இம்மனிதன் யாருக்குப் பிறந்தவன்? இவனைப் பெற்றவள் யார்? பெற்றவன் யார்? இவன் பிறந்த குலம் யாது? என்று ஆராய்வது அறிவீனம். பிறப்பைக் கொண்டு ஒருவனை உயர்வா கவோ, தாழ்வாகவோ மதிப்பது தகாது. அறிவும் ஒழுக்கமும் உள்ளவனையே உயர்ந்தவனாக - மனிதத் தன்மையுள்ளவனாக - மதிக்க வேண்டும். இக்கருத்துக்களை மணிமேகலை எடுத்துக் காட்டுகின்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது பண்டைத் தமிழர் கொள்கை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யால் என்பது வள்ளுவர் வாய்மொழி. இக்கொள்கைகளை தமிழ் மக்களிடையில் பரப்புவதே மணிமேகலை ஆசிரியரின் நோக்கம். தெய்வீக நிகழ்ச்சிகள் தெய்வீக நிகழ்ச்சிகள் என்பவை இயற்கைக்கு மாறானவை. இயற்கை நிகழ்ச்சிகளைத் தெய்வத் தன்மை பொருந்தியவை என்று சொல்லுவதில்லை. மத சம்பந்தமான நூல்களிலே இயற்கைக்கு மாறான நிகழ்ச்சிகளை மிகுதியாகக் காணலாம். சமண நூல்களிலும் பௌத்த நூல்களிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. தெய்வீகத் தன்மையுள்ள நிகழ்ச்சிகள் மணிமேகலை முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. 1. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஐந்து வனங்களிலே இரண்டு வனங்கள் தெய்வத் தன்மை பொருந்தியவை. அவை உய்யான வனம், கவேர வனம் என்பவை. உய்யான வனத்து மரங்களிலே வாடாமலர் மாலைகள் தொங்கிக் கொண்டி ருக்கும். அங்கு வண்டுகள் மொய்ப்பதில்லை. கையிலே பாசத்தைக் கொண்ட பூதம் அவ்வனத்தைக் காக்கும். கவேர வனத்தில் பிறரைத் தொட்டுத் துன்புறுத்தும் தாக்கணங்கு என்னும் தெய்வம் உண்டு. ஆகையால் அவ்வனங்களுக்கு மக்கள் போக மாட்டார்கள். 2. காவிரிபூம்பட்டினத்து உவ வனத்தில் ஒரு பதும பீடம் உண்டு. அப்பீடத்தில் அரும்புகளை வைத்தால் மலரும்; மலர்ந்தவை வாடுவதில்லை; எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். அம்மலர்களில் வண்டுகளும் மொய்க்க மாட்டா. அந்த பீடத்தில் ஒரு தெய்வத்தை நினைத்துக் கொண்டு மலரையிட்டால் அம்மலர் அத்தெய்வத்தை அடையும். ஒன்றை யும் நினைக்காமல் வைத்த மலர்கள் அப்படி யே இருக்கும். இவ்விரண்டு செய்திகளையும் மூன்றாவது காதையில் காணலாம். 3. மணிபல்லவத் தீவிலே தருமபீடிகை என்ற பெயருடன் புத்த பீடிகை ஒன்றுண்டு. அப்பீடிகையை நாகநாட்டு அரசர்கள் இருவர் கண்டனர். ஒவ்வொருவரும் அதைத் தமது என்று உரிமை பாராட்டி அதை எடுக்கத் தொடங்கினர். அவர்களால் எடுக்க இயலவில்லை. அதனால் அவர்கள் இருவரும் பகைத்துப் போர் புரிந்தனர். அப்பொழுது புத்தர் பிரான் தோன்றி, இப் பீடிகை எம்முடையது, நீங்கள் போர் புரிவதைக் கைவிடுங்கள் என்று கூறினார். அவர்களும் போரைக் கைவிட்டனர். அப்பீடிகையிலே நறுமலர் பூத்த மரங்கள் தாமே மலர்களைச் சொரியும். ஏனைய மரங்கள் சிந்தமாட்டா. அதன் அருகிலே பறவைகள் சென்று சிறகை உதிர்ப்பதில்லை. அது தேவேந்திரனால் வைக்கப்பட்ட பீடமாகும். அதைக் காண் போர் தமது பழம்பிறப்புச் செய்திகளை அறிவர். இச்செய்தி 8ஆவது காதையிலே காணப்படுகிறது. 4. சம்பாபபதி என்னும் பெண் தெய்வம் மிகவும் சக்தி வாய்ந்தது. அது காவிரிப்பூம்பட்டினத்தின் முதல் பழந் தெய்வம். தனது உயிரை எடுத்துக் கொண்டு மாண்டுபோன மகன் உயிரைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்ட கோதையின் எதிரில் எல்லாத் தெய்வங்களையும் அழைத்து நிறுத்தியது. இறந்த உயிர் மீண்டும் பிழைப்பதில்லை என்ற உண்மையைக் கூறும்படி செய்தது. இக்கதை 6ஆவது காதையில் காணப்படுகின்றது. 5. மணிமேகலை தெய்வம் சுதமதியை உறங்கும்படி செய்தது. மணிமேகலையை வானத்தின் வழியே மணி பல்லவத் தீவுக்கு தூக்கிச் சென்றது. இதுவும் 6ஆவது காதையில் உள்ள செய்தி. 6. சக்கரவாளக் கோட்டத்தில் சம்பாபதிக் கோயில் மண்ட பத்தில்தூணில் உள்ள ஒரு பதுமைக்குக் கந்தில் பாவை என்று பெயர். இது மயன் என்னும் தெய்வத் தச்சனால் செய்யப் பட்டது. இப்படிவத்தில் துவந்திகன் என்னும் தேவன் குடி கொண்டிருந்தான். இந்தக் கந்தில் பாவையை வணங்குவோர் முக்கால நிகழ்ச்சிகளையும் உணர்வார்கள். இப்பதுமை வாய் திறந்து பேசும். இதைப் பற்றி மணிமேகலையில் பலவிடங்களில் படிக்கலாம். 7. அமுதசுரபி என்பது ஒரு பிச்சைப் பாத்திரம். அது, முதன் முதல் மதுரையில் உள்ள சிந்தாதேவி (சரவதி) என்னும் தெய்வத்தால் ஆபுத்திரனுக்கு அளிக்கப்பட்டது. பின்பு அதனை, மணிபல்லவத் தீவில் உள்ள கோமுகியென்னும் குளத்திலிருந்து மணிமேகலை பெற்றாள். அப்பாத்திரத்திலிருந்து எடுக்க எடுக்கக் குறையாமல் சோறு சுரந்துகொண்ட யிருக்கும். ஆங்கதில் பெய்த ஆருயிர் மருந்து வாங்குநர் கையகம் வருத்துவது அல்லது தான்தொலைவு இல்லாத் தகைமையது ஆகும் (காதை 11, வரி 48 - 50) என்ற அடிகள் இச்செய்தியைக் கூறுகின்றன. 8. சாவக நாட்டில் உள்ள நாகபுரத்து மன்னன் புண்ணிய ராசன் என்பவன். ஆபுத்திரனே புண்ணியராசனாகப் பிறந்தான். ஆபுத்திரனாக இருக்கும்போது அவனைப் பாலூட்டிக் காத்த பசு மறுபிறப்பிலே பொன் குளம்பும், பொன் கொம்பும் உடைய தாகப் பிறந்தது. சாவக நாட்டில் தவளமால் வரையில் இருந்த மண்முக முனிவனிடம் வளர்ந்து வந்தது. அந்தப் பசு இட்ட பொன் முட்டையிலிருந்து புண்ணியராசன் பிறந்தான். இக்கதை 15ஆவது காதையில் காணப்படுகின்றது. 9. ஆதிரையார் நெருப்பில் மூழ்கினான். அவளை நெருப்பு எரிக்கவில்லை. 10. மருதி என்னும் பார்ப்பனியிடம் சதுக்க பூதம் பேசியது. அது அவளுக்குச் செய்தி கூறியது. 11. விசாகை என்பவளைக் காதலித்த மன்னன் மகன் அவதிப்பட்டான். 12. மணிமேகலைக்கு, மணிமேகலா தெய்வம் மூன்று மந்திரங்களை உபதேசித்த செய்தி: மந்திரத்தால் மாறு வேடம் கொள்ளுதல், வான்வழியே செல்லுதல், பசியின்றி இருத்தல் ஆகிய செய்திகள். 13. விந்தமலையில் உள்ள துர்க்கையின் கோயிலுக்கு மேலே வான்வழியே செல்லுதல் கூடாது. யாரேனும் செல்வார்களாயின், அவர்களை விந்தாகடிகை என்னும் தெய்வம் இழுத்து விழுங்கி விடும். 14. ஒவ்வொருவருடைய பழம்பிறப்பைப் பற்றிக் கூறுப்படும் கதைகள். 15. காவிரிப் பாவை, குடமலையில் உள்ள அகத்தியரின் கரகத்திலிருந்து புறப்பட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தை அடைந் தான். அவளைச் சம்பாபதித் தெய்வம் தன் மடியிலே எடுத்து வைத்துக் கொண்டு பாராட்டினான். இனி சம்பாபதி என்னும் இவ்வூர் உன் பெயரால் காவிரிப்பூம்பட்டினம் என்று வழங்குக என்று வரம் கொடுத்தாள். 16. மணிமேகலா தெய்வத்தின் கோபத்தால், காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் விழுங்கியது. இந்திர விழாச் செய்யாத காரணத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்னும் கதை. 17. பௌத்த சாரணர்கள் வான்வழியாகச் சென்று நாடெங்கும் புத்தர் தர்மத்தைப் போதித்து வருவார்கள் என்று கூறப்படும் செய்தி. 18. புத்தர் பலவகையான உயிரினங்களிலும் பிறந்தார்; அவ்வினங்களின் இன்ப துன்ப வாழ்க்கையை அனுபவத்து அறிந்தார்; புத்தர் மீண்டும் அவதாரம் செய்வார். என்று கூறு கின்றனர் புத்தர்கள். இது மணிமேகலையிலும் காணப்படுகின்றது. இதுவும் இயற்கைக்கு முரண்பட்ட தெய்வீகச் செயலாகும். இவை போன்ற பல செய்திகள் மணிமேகலையில் வருகின்றன. இவை உண்மையான புத்தமதக் கொள்கைகளுக்கு முரண்பட்டவை என்பர். இவை இந்துமதப் புராணக் கொள்கை களைப் பின்பற்றி வளர்ந்து வந்த புத்த மதக் கொள்கைகள் என்பதே அறிஞர்கள் பலர் கருத்து. மக்களிடம் அன்பு காட்டுதல், எல்லா மக்களையும் சகோதரர்களாக எண்ணுதல், யாராயிருந்தாலும் துன்புறு வோர்க்கு உதவி செய்து அவர்களின் துயர் களைதல், தந்நலம் துறந்து பிறர்நலம் பேணுதல் இவைகள் புத்தமதத்தின் அடிப் படைக் கொள்கைகள். இவைகளை மக்கள் ஒப்புக் கொண்டால் போதும். நாகரிகமற்ற மக்களிடம் அவர்களுடைய பழைய நம்பிக்கைகளை அடியோடு மாற்றும்படி கூறினால், புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளைக் கூட அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்; அவர்களிடம் பரவச் செய்ய முடியாது. மூடநம்பிக்கைகளும் அநாகரிகமும் நிறைந்த மக்களைப் படிப்படி யாகத்தான் சீர்திருத்த வேண்டும். இத்தகைய நம்பிக்கையுள்ள வர்களால் பின்பற்றப்படும் புத்தந் தான் இன்று வழக்கத்தில் இருப்பது. புத்த மதம் மகா யானம், ஹீன யானம் என்று இரண்டு வகையாக வழங்கப்படுகின்றது. மகா யானம் பெரும்பாலோர் பின்பற்றும் மார்க்கம்; ஹீன யானம் என்பது சிறுபான்மையினர் பின்பற்றும் மார்க்கம்; சீனா, ஐப்பான், திபேத்து, பர்மா முதலிய நாடுகளில் உள்ள புத்தமதம் மகா யானம்; பாரதம், இலங்கை முதலிய தென்பாகத்தில் உள்ள புத்த மதம் ஹீன யானம். மகா யானத்தினர் புத்த மதத்தின் அடிப்படைக் கொள்கை களை மட்டுந்தான் ஒப்புக் கொண்டு நடக்கின்றனர். அவர்க ளுடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் புத்தர் கொள்கைக்கு மாறானவை. மாமிசம், மது, விக்கிரக வணக்கம், பலியிடுதல், மந்திரம் போன்றவை புத்த மதத்திற்கு மாறானவை. இவைகளை மகா யானம் பின்பற்றுகிறது. ஹீன யானத்தினர் மாமிசம், மது முதலியவைகளை வெறுக்கின்றனர். விக்கிரகங்களுக்குப் பலியிடுவதையும் வெறுக் கின்றனர். ஹீன யானத்தினர், அதாவது தென் பகுதியில் உள்ளவர் கள் ஓரளவு பகுத்தறிவுக் கொள்கையைப் பின்பற்றுகின்றனர். புத்தர் பகுத்தறிவுவாதி; மூடநம்பிக்கைகளை வெறுப்பவர். கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர்; ஒழுக்கத்தையே உயிரினும் சிறந்ததென்று போற்றியவர். இன்றைய புத்த மதத்தினர், விக்கிரக ஆராதனம், மந்திரம், சடங்குகள் போன்ற புத்தர் கொள்கை களுக்கு மாறான கொள்கைகளையும் பின்பற்றி வருகின்றனர் என்பது உலகறிந்த உண்மை. இதற்கு மணிமேகலையில் கூறப் படும் தெய்வீக நிகழ்ச்சிகளே சான்றாகும். மணிமேகலையில் கூறப்படும் கொள்கைகள் ஹீன யானத்தைப் பின்பற்றியவை என்பதில் ஐயம் இல்லை. காவிரிப்பூம் பட்டினம் மணிமேகலை காலத்திலே, சோழ நாட்டின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினம். பாண்டி நாட்டின் தலைநகரம் மதுரை. சேர நாட்டின் தலைநகரம் வஞ்சி நகரம். தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சி நகரம். இந்த நான்கு நகரங்களைப் பற்றியும் மணிமேகலையில் காணலாம். மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினத்தைப்பற்றி விரி வாகக் கூறப்படுகின்றது. வஞ்சி மாநகரைப் பற்றியும் விளக்க மாகக் கூறப்படுகின்றது. மதுரை நகரைப்பற்றி விரிவாகக் கூறப்படவில்லை. சில வரிகளில் மதுரையின் சிறப்பைக் கூறுவதோடு விட்டு விடுகின்றது. இவ்வாறு குறிப்பிடும் மதுரையும் மணிமேகலை காலத்து மதுரை அன்று. காஞ்சி நகரத்தைப் பற்றியும் காணப் படவில்லை. சிலப்பதிகாரத்தில் புகார், மதுரை இரு நகரைப் பற்றியுமே விரிவாகக் காணப்படுகின்றது. வஞ்சி நகரைப் பற்றிய விளக்கம் இல்லை. இது குறிப்பிடத்தக்கது. காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி மணிமேகலை கூறுவது பின்வருவது: சம்புத் தீவிலே, தமிழகத்திலே ஒரு நகரம் உண்டு. அழியாத மிகப் பெரும் செல்வம் படைத்தவர்கள் அந்நகரிலே வாழ் கின்றனர். அவர்கள் வறியவர்களுக்கு உதவி செய்யும் துணைவர் களாக வாழ்வதற்கான தவத்தை முன் பிறப்பிலே செய்தவர்கள். இத்தகைய மக்கள் வாழ்கின்ற வலிமையுள்ள காவிரிப்பூம் பட்டினம் அதுவாகும். சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் கம்பம் இல்லாக் கழிபெரும் செல்வர் ஆற்றா மாக்கட்கு ஆற்றம் துணையாகி நோற்றார் உறைவதுஓர் நோன்நகர் உண்டு (காதை 17, வரி 62-65) இவ்வடிகள் காவிரிப்பூம்பட்டினத்தின் பழமையையும் சிறப்பையும் உணர்த்தின. பெயர்க் காரணம் காவிரிப்பூம்பட்டினத்தின் பழம்பெயர் சம்பாபதி என்பது. இமயத்திலே தோன்றிய சம்பாபதி என்னும் பெண் தெய்வம் தென் திசைக்கு வந்தாள். நாவல் மரத்தின் கீழ் நின்று தவம் புரிந்தாள். அவளே நாவலந் தீவின் அதாவது சம்புத் தீவின் தெய்வம். அவள் இந் நகரத்திலே குடிகொண்டதனால் இது சம்பாபதி என்னும் பெயர் பெற்றது. காந்தமன் என்னும் சோழ மன்னன் வேண்டுகோளால் காவிரி நதி, அகத்தியரின் கரகத்திலிருந்து பெருகி வந்தாள். அவளைச் சம்பாபதி தெய்வம் வரவேற்றது. அதுமுதல்தான் சம்பாபதி காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர் பெற்றது. இக் கதை மணிமேகலையின் பதிகத்தில் காணப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டின அமைப்பு காவிரிப்பூம்பட்டினத்திலே செங்கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த பல வீடுகள் உண்டு. அவ் வீடுகளின் வெளிப்புறச் சுவர் களிலே தெய்வங்கள், மக்கள், ஏனைய உயிர்கள் ஆகியவைகளின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களாகவும் தீட்டப் பட்டிருக்கும். (காதை 3, வரி 127-131) காவிரிப்பூம்பட்டினத்திலே ஐந்து சிறந்த மலர்ச் சோலைகள் உண்டு. அவை, இலவந்திகைச் சோலை, உய்யான வனம், சம்பாதி வனம், கவேர வனம், உவ வனம் என்பவை. இலவந்திகைச் சோலை சுற்றிலும் மதிலால் சூழப்பட்டது. சோழ மன்னனது பணியாளர்கள் அதைக் காவல் புரிந்து வருவர். பொது மக்கள் அச்சோலைக்குப் போக முடியாது. அரசனுக் காகவே அது அமைந்தது., உய்யான வனத்திற்கு, இந்திர விழாக் காலத்திலே மக்கள் எவரும் போகமாட்டார்கள். தேவர்கள் மட்டுந் தான் செல்வர். அங்குள்ள மலர்களில் வண்டுகளும் மொய்த்து முழங்கமாட்டா. மரங்களிலே மலர்மாலைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அவ்வனம் கையிலே பாசத்தையுடைய பூதத்தால் காக்கப் படுவது. இதை அறிந்த மக்கள் அந்த வனத்துக்குள் அடியெடுத்து வைக்கமாட்டார்கள். சூரிய வெப்பத்தால் பெரிய சிறகை இழந்தவன் சம்பாதி என்பவன். இவன் சடாயுவுடன் பிறந்தவன். இவன் இருந்த வனத்துக்குச் சம்பாதி வனம் என்று பெயர். காவிரிப்பாவையின் தந்தையின் பெயர் கவேரன். அவன் தவம் செய்து கொண்டிருந்த வனத்துக்குக் கவேர வனம் என்று பெயர். அங்கே பழமையான தாக்கணங்கு என்னும் தெய்வம் உண்டு. ஆதலால், அறிந்தவர் அவ்வனத்துள் செல்ல மாட்டார் கள். உவ வனம் என்பதிலே புத்தபிரான் கட்டளையினால் பல மரங்கள் பூத்திருக்கும். பளிங்கு மண்டபம் ஒன்று உண்டு. அதன் உள்ளேயிருந்து பேசினால் ஓசை வெளிப்படாது; உருவத்தை மட்டும் வெளியிலிருந்து காணமுடியும். அவ் வனத்தில் புத்த ருடைய பாதபீடம் ஒன்று உண்டு. இவ்வனத்திற்குப் பொது மக்கள் தாராளமாகப் போய் வருவார்கள். ஐவகை வனங்களைப் பற்றிய இச்செய்திகள், மூன்றாவது காதையில் 44 முதல் 66 வரையில் உள்ள அடிகளில் கூறப்படு கின்றன. கோயில்கள் காவிரிப்பூம்பட்டினத்திலே புத்தர் கோயில் உண்டு. அதில் இந்திரனால் அமைக்கப்பட்ட ஏழு அரங்குகள் உண்டு. அவைகளுக்கு இந்திர விகாரம் என்று பெயர். கலை நியமம் என்னும் சரவதி கோயில், குச்சரக் குடிகை என்று பெயர் பெற்ற சம்பாபதியின் கோயில், தருநிலை என்னும் கற்பகத் தருக்கோயில், தீவுத்திலகைக் கோயில், மணிமேகலா தெய்வக் கோயில், புத்தபீடிகைக் கோயில், சதுக்க பூதக் கோயில், வச்சிரக் கோட்டம் என்னும் வச்சிராயுதம் நிற்கும் கோயில் ஆகிய கோயில்கள் இருந்தன. நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக (காதை 1, வரி 54-55) என்பது மணிமேகலை. இதனால், சிவன்கோயில், திருமால் கோயில், முருகன் கோயில் முதலியவைகளும் காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்தனவென்று அறியலாம். விடியற்காலை நிகழ்ச்சிகள் காவிரிப்பூம்பட்டினத்திலே விடியற்காலத்திலே நடை பெறும் நிகழ்ச்சிகளை மணிமேகலை விளக்கமாக உரைக் கின்றது. இரவில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. இவைகளால், அந்நகர மக்களின் நடத்தை, வளர்ச்சியடைந்திருந்த கலைகள், தொழில்கள் அரசாட்சியின் சிறப்பு முதலியவைகளை அறியலாம். இரவிலே நகரைச் சுற்றிக் காவல் புரிந்த காவலர்கள் விடியற்காலத்திலே தூங்குகின்றனர். இரவிலே மெல்லிய படுக்கையிலே படுத்துறங்கிய ஆண்களும் பெண்களும் கண் விழித்து எழுகின்றனர். வலம்புரிச் சங்கும் பொருள் இன்றி முழங்குகின்றது. புலவர் பெருமக்கள் பொருள் பொதிந்த சொற் பொழிவாற்றுகின்றனர். யானைகள் நெடுநேரம் பிளிறுகின்றன. கோழிகள் கூவுகின்றன. குதிரைகள் விழித்து எழுந்து சுழல் கின்றன. மரக்கிளைகளிலே பறவைகள் அமர்ந்து ஒலிக்கின்றன. மலர்ச்சோலைகளிலே பறவைகள் எல்லாம் கூடி முழங்குகின்றன. தெய்வங்களுக்குரிய பல பீடங்கள் மலர் இட்டுப் படைக்கும் பலிகளை ஏற்றுக் கொள்ளுகின்றன. அணிகலங்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் பூவினால் அர்ச்சிக்கப்படுகின்றன. மத்தளம் போன்ற தோற்கருவிகளை வாசிப்போர் வாழும் இடங்களில் இசையும் வாத்தியமும் முழங்குகின்றன. இரவலர் களுக்குக் கொடுப்போர்களுடைய வாயில் கடைகளில் பல பண்டங்கள் நிறைந்திருக்கின்றன. ஊரார் உறக்கத்திலிருந்து விழித்தெழும்படி கதிரவன் புறப்பட்டான். இது காவிரிப்பூம் பட்டினத்தின் காலைக் காட்சி. இதை 7 ஆவது காதையில் 111 முதல் 126 வரையில் உள்ள அடிகளிலே காணலாம். காவிரிப்பூம்பட்டினத்திலே சிறந்த புலவர்கள் பலர் வாழ்ந்தனர்; இசையிலே வல்லுநர் பலர் இருந்தனர். பெரிய பொன் வணிகர்கள் வாழ்ந்தனர். கொடையாளர் பலர் உறைந்தனர். அந் நகர மக்கள் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுப்பதில்லை. இவ்வுண்மைகளை மேலே காட்டிய கலைக் காட்சியால் காணலாம். இரவு நேரக் காட்சி இரவுக் காலத்திலே காவிரிப்பூம்பட்டினம் எவ்வாறு காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய இடமாகிய நாடக அரங்கிலே நடனம், இசை வாத்தியங்கள் பயின்ற மகளிரும் ஆசிரியர்களும் உறங்கினர்; தோற் கருவிகளின் ஓசை அடங்கிற்று. கணவனுடைய பரத்தமைக்காக அவனுடன் ஊடிய மாதர்கள், அவன் சமாதானப்படுத்தியும் சமாதானம் அடை யாமல் தனியாகப் படுத்துறங்கினர். விழி சிவந்து சினத்துடன் உறங்கிய அவர்கள் விரைவாகத் தம் கணவரைத் தழுவிக் கொண்டனர். கூட்டாளிகளுடன் சேர்ந்து சிறு தேர் இழுத்து விளை யாடிய குழந்தைகள் களைத்துத் தூங்குகின்றன. செவிலித் தாயர் அக்குழந்தைகளுக்கு, வேப்பிலை, வெண்சிறு கடுகளால் கண்ணேறு கழிக்கின்றனர். தூபங்காட்டிச் தூங்கச் செய்கின்றனர். வீட்டு இறைப்பிலே வாழும் புறாக்கள், நீர்ப்பறவைகள், சோலைப்பறவைகள் எல்லாம் ஒலி அடங்கி உறங்கின. திருவிழாக் கூத்துக்கள் அடங்கின. மத்தளங்களின் ஓசை ஒடுங்கிற்று. ஊரே உறங்கிற்று. இந்த நள்ளிரவிலே நாழிகை வட்டிலின் மூலம், நாழிகை கண்டு தெரிவிப்போரின் முழக்கம் கேட்கின்றது. உணவு கொள்ளாமல் வருந்திக் கிடக்கும் மதங்கொண்ட யானையின் நீண்ட கூப்பாடு கேட்கின்றது. ஊர்க்காவலர்கள் தெருக்களிலும் சந்துக்களிலும் அடிக்கின்ற பறையொலி கேட்கின்றது. கப்பலிலே சென்று திரும்பிய மீகாமன்கள் அரிசியால் ஆக்கிய தொப்பி என்னும் சாராயத்தை அருந்தி மயங்கி உறங்கும் குறட்டை ஒலி கேட்கின்றது. குழந்தை பெற்ற பெண்கள், சூதகம் கழிந்தபின் காவல் மகளிருடன் சென்று குளத்தில் நீராடும் ஒலி கேட்கின்றது. வீரர்கள் அரசன் வெற்றி பெறுக என்று சொல்லிச் சதுக்கப்பூதத்துக்குப் பலியிடுகின்றனர். மந்திரவாதிகள் பேய் களுக்குப் பலி கொடுக்கின்றனர். இவ்வோசைகள் கேட்கின்றன. இவை காவிரிப்பூம்பட்டினத்து இராப்பொழுது காட்சி, இவற்றை ஏழாவது காதையில் 42ஆவது அடி முதல் 85 ஆவது அடி வரையில் உள்ள பகுதியில் காணலாம். நகரின் பெருமை காவிரிப்பூம்பட்டினம் காவிரி ஆறு கடலொடு கலக்கும் இடத்தில் உள்ளது. காவிரியின் அந் நகர மக்களும், வெளி நாட்டிலிருந்து வருவோரும் நீராடுவார்கள். காவிரியில் எப்பொழுது வற்றாமல் நீர் ஓடிக்கொண்டே யிருக்கும். அது புண்ணிய நதிகளிலே ஒன்று. நூல்களால் மிகவும் புகழப்பட்ட பரத கண்டத்திலே, வளையாத உயர்ந்த செங்கோலையுடையவர்கள் சோழ மன்னர்கள். அவர்களின் குலக்கொடி காவிரி. கிரகங்களின் நிலை மாறுபட்டு, மழையின்றிக் கோடைக்காலம் நீடித்தாலும் அதன் நீர் வற்றாது. தனது நிலை மாறாமல் தண்ணீரைத் தரும். தண்டமிழ்ப் பாவை என்னும் பெயருடையது காவிரி நதி. பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்தமிழ்ப் பாவை. (பதிகம் 22 - 25) இவ்வடிகள், நகரின் பெயருக்குக் காரணமான, காவிரியின் மாண்பை எடுத்துக் காட்டின. காவிரிப்பூம்பட்டினம், காவிரியின் முகத்துவாரத்தில் இருந்தது. ஆதியில் அந்நகரத்தின் பெயர் சம்பாபதி என்பது. பின்னர்தான் காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர் பெற்றது. இந் நகரில் மலர்ச்சோலைகள் பல இருந்தன. கோயில்கள் பல இருந்தன. வணிகர்களும் செல்வர்களும் வாழ்ந்து வந்தனர். வறியோர்க்கு வழங்கும் வள்ளல்கள் பலர் வாழ்ந்தனர். இசை வல்லுநர், சிற்பிகள், ஓவியம் தீட்டுவோர் ஆகிய கலைஞர்கள் வாழ்ந்தனர். பலதிறப்பட்ட தொழிலாளர்கள் இருந்தனர். மக்களுக்கு அறிவுரை கூறும் புலவர்கள் பலர் இருந்தனர். நகரத்திலே பெரிய பெரிய மாளிகைகள் இருந்தன. சோழ மன்னன் செங்கோல் கோணாமல் ஆட்சி புரிந்து வந்தான். இவைகளை மேலே கூறியவற்றால் அறியலாம். சக்கரவாளக் கோட்டம் காவிரிப்பூம்பட்டினத்துச் சுடுகாட்டுக்குச் சக்கரவாளக் கோட்டம் என்று பெயர். காவிரிப்பூம்பட்டினம் மிகப் பெரிய நகரம். அதில் பல நாட்டு மக்கள் வாழ்ந்தனர். இதைச் சக்கர வாளக் கோட்டத்தைப்பற்றிக் கூறும் செய்திகளால் அறியலாம். சுடுகாட்டைப் பற்றி மணிமேகலையில் சொல்லப்பட்டிருப் பதைப்போல வேறு எந்நூல்களிலும் சொல்லப்படவில்லை. சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையில் 219 அடிகள் இருக்கின்றன. மக்கள் வாழ்வு நிலை யற்றது என்பதை விளக்கு வதற்கே ஒரு தனிக் காதையாக அமைத்திருக்கிறார் சாத்தனார். காவிரிப்பூம்பட்டினத்துச் சுடுகாட்டு மதிலின் புறத்திலே ஒரு கோயில் உண்டு. அந்தக் கோயில், இவ்வுலகம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாகும். நடுவிலே மேருமலை. அதைச் சுற்றிலும் ஏழு மலைகள், நான்கு பெரிய தீவுகள். இரண்டாயிரம் சிறு தீவுகள். மற்றும் பல இடங்கள். அவ்விடங்களில் வாழும் உயிர் வகைகள். இவைகள் எல்லாம் அக்கோயிலில் அமைந்திருந்தன. இவைகள் தெய்வத் தச்சனால் சுண்ணாம்பால் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. இக்கோயில் அமைந்திருந்ததனால்தான், அதைச் சிலர் சக்கரவாளக் கோட்டம் என்று அழைத்தனர். ஆயினும் பெரும்பாலான மக்கள் அதைச் சுடுகாட்டுக் கோட்டம் என்றுதான் அழைப்பார்கள். இதை 6ஆவது காதையில் 192 முதல் 204 வரையில் உள்ள அடிகளாலே அறியலாம். இந்தச் சுடுகாடு காவிரிப்பூம்பட்டினம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதே தோன்றிற்று. சுடுகாட்டின் அமைப்பு சுடுகாட்டைச் சுற்றிலும் மதில்சுவர் அமைந்திருந்தது. அதற்கு நான்கு வாசல்கள் உண்டு. ஒன்று தேவர்கள் நுழையும் வாயில். மற்றொன்று நெல், கரும்பு, நீர், சோலை இவைகள் அழகாக எழுதப்பட்டிருக்கும் வாயில். வேறொன்று சுண்ணச் சாந்தால் சிற்பங்கள் செய்து வைக்கப்பட்டிருக்கும் வாயில். இன்னொன்று மடித்த செவ்வாய், விழித்த கண்கள், பிறரைக் கட்டும் கயிறு, பிடித்த சூலம் இத் தோற்றத்துடன் பூதச்சிலை ஒன்று நிற்கும் வாயில். இவ்வாறு சுடுகாட்டின் நான்கு வாயில் களும் அமைந்திருந்தன. இதை 6 ஆவது காதையில் 37 முதல் 47 வரையில் உள்ள அடிகள் காட்டுகின்றன. அந்தச் சுடுகாட்டிலே துர்க்காதேவியின் கோயில் உண்டு. நால்வகைச் சாதியினர்க்கும் அமைக்கப்பட்ட சமாதிகள் இருந்தன. கற்களால் கட்டப்பட்ட திண்ணைகள் இருந்தன. காவற்காரர்கள் உண்டு உறங்குவதற்கான குடிசைகள் இருந்தன. ஆங்காங்கே தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. நிழல் தரும் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. இதனை 50 முதல் 65 வரை யுள்ள அடிகளிலே காணலாம். அங்கே இரவு பகல் எந்நேரமும் பிணங்கள் வந்து கொண்டே யிருக்கும். சாப்பறை முழக்கம், துறவிகளை வணங்குவோர் கூச்சல், இறந்தவர்கள் பொருட்டு வாய் விட்டு அழுவோர் குரல், நரியின் ஊளை, ஆந்தையின் அலறல், கோட்டான் குரல், ஆண் தலைப் பறவைகளின் ஆரவாரம் இவைகள் கடல் ஓசைபோல் முழங்கும். இம் முழக்கம் கேட்போர்க்கு அச்சம் விளைவிக்கும். 66 முதல் 79 வரையில் உள்ள அடிகளிலே இதைக் காணலாம். ஐவகை மன்றங்கள் அச் சுடுகாட்டிலே ஐந்து மன்றங்கள் இருந்தன. அவை வாகை மன்றம், வெள்ளில் மன்றம், வன்னி மன்றம், இரத்தி மன்றம், வெள்ளிடை மன்றம் என்பவை. வாகை மன்றத்தில் மேகங்கள் படியும் பெரிய கிளைகளை யுடைய வாகை மரம் நிற்கும். அங்கே பேய்க் கூட்டங்களும் வாழும். தான்றி, ஒடுவை, உழிஞ்சில் ஆகிய மரங்கள் உயர்ந்து வளர்ந்திருக்கும். கான்றை, சூரை, கள்ளி முதலியவைகள் அடர்ந்திருக்கும். விளாமரம் நிற்கும் மன்றம் வெள்ளில் மன்றமாகும். அங்கே பறவைகள், நிணத்தையும், கொழுப்பையும் தின்று மகிழ்ந்து வாழும். வன்னி மரம் வளர்ந்திருக்கும் இடம் வன்னி மன்றம். அங்கே சுடலை நோன்பிகள் என்று சொல்லப்படும் காபாலிக மதத்தினர் சமையல் செய்து கொண்டிருப்பார்கள். இலந்தை மரம் நிற்கும் இடம் இரத்தி மன்றம். அங்கே விரதத்தால் இளைத்த உடம்பினரான ஒருவகையினர் இருந்தனர். அவர்கள் சிதறிக் கிடக்கும் தலைகளையெல்லாம் சேர்த்துத் தொகுத்து மாலையாகக் கட்டி மரத்தில் தொங்க விடுவார்கள். வெட்ட வெளியாக உள்ள இடத்திற்கு வெள்ளிடை மன்றம் என்று பெயர். அங்கே பிணந் தின்னும் மக்கள் குழுமியிருப்பர். அவர்கள் பிணங்களைப் பானையிலே இட்டுச் சமைத்து விருந்துண்டு களித்திருப்பார்கள். இந்த ஐவகை மன்றங் களையும் 80 முதல் 91 வரையில் உள்ள அடிகளில் காணலாம். பயங்கரக் காட்சி நெருப்புச் சட்டிகள், உடைந்த மண்டை ஓடுகள், பிணத் தைக் கொண்டு வந்த பாடைகள், பண்டங்கள் முடிந்த துணிகள், அறுத்து எறியப்பட்ட மாலைகள், உடைந்த குடங்கள், நெல், பொரி, பலியிட்ட அரிசி இவைகள் சுடுகாட்டிலே எங்குப் பார்த்தாலும் சிதறிக் கிடக்கும். (வரி 92 - 96) உலக அறவியும் சம்பாபதிக் கோயிலும் இச் சுடுகாட்டின் பக்கத்தில்தான் இருந்தன. சுடுகாட்டின் காட்சியை இவ்வாறு காட்டும் ஆசிரியர் அங்கே நிகழ்ந்த கதை ஒன்றையும் கூறுகின்றார். அதுதான் கோதமையின் கதை. இக்கதையைச் சிறுகதைகள் என்னும் பகுதியிலே காணலாம். மாண்டவர் மீள்வதில்லை என்னும் கருத்தை விளக்குவதே அக் கதை. மக்களுக்கு அறிவுரை சுடுகாட்டின் பயங்கரத் தோற்றத்தை எடுத்துக் காட்டிய ஆசிரியர் மக்களுக்கு அறிவுரையும் கூறுகின்றார். காலன் என்பவன் கொடுந்தொழிலாளன். இவர் தவம் செய்வோர்; இவர் மிகப் பெரிய செல்வர்; இவர் இப்பொழுது தான் பிள்ளை பெற்ற பெண்டிர்; இவர் பால் மணம் மாறாப் பாலகர்; இவர் முதியவர்; இவர் இளையவர் என்று எண்ண மாட்டான். அனைவரையும் கொன்று குவிப்பான்; அப்பிணங் களைத் தீ மூண்டு எரியும் இச் சுடுகாடு தின்று விடுகின்றது. இதை மக்கள் கண்கூடாகக் காண்கின்றனர். கண்டும், சிறந்த நல்லறம் செய்து உய்வதற்கு வழி தேடுவதில்லை. செல்வச் செருக்கில் மூழ்கிக் களியாட்டயர்கின்றனர். இத்தகைய மக்களைவிடப் பெரிய மடையர்கள் உண்டோ? என்று பாடுகின்றார் சாத்தனார். தவத்துறை மாக்கள், மிகப்பெரும் செல்வர் ஈற்றிளம் பெண்டிர், ஆற்றாப் பாலகர் முதியோர் என்னான்; இளையோர் என்னான்; கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்ப, இவ் அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும், கழிபெரும் செல்வக் கள்ளாட்டு அயர்ந்து மிக்க நல்அறம் விரும்பாது வாழும் மக்களின், சிறந்த மடவோர் உண்டோ? (வரி 97-104) என்ற அடிகளால் காணலாம். செல்வத்தையும், வாழ்வையும் நிலையென்று கருதி நல்லறம் புரியாமல் வீண் பொழுது போக்கும் மக்களை மடையர்கள் என்று கூறி வருந்துகின்றார் ஆசிரியர். சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதையைப் படிப்போர் வியப்படைவர். மக்களுக்கு அறிவூட்டும் வகையிலே அக் காதை அமைந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது. மதுரை நகரம் மதுரை நகரத்தைப் பற்றி மணிமேகலையில் விரிவாகக் காணப்படவில்லை. மணிமேகலை காலத்திலிருந்த மதுரையைப் பற்றிச் சுருக்கமாகத் தான் இந்நூலில் காணப்படுகின்றது. விசாகையின் மைத்துனன் தருமதத்தன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டு மதுரைக்குச் சென்றான்; வாணிகம் செய்து பெரும் பொருளீட்டினான்; அரசனால் எட்டிப்பூ பெற்றுப் புகழுடன் வாழ்ந்தான். (பக்கம் 46) என்று கூறப்படும் கதையால் மதுரையைப் பற்றி அறிய முடிகின்றது. மிக்கோர் உறையும் விழுப்பெரும் செல்வத்துத் தக்கண மதுரை. (காதை 22, வரி 105 - 106) அறிவிலே, கல்வியிலே, ஒழுக்கத்திலே, செல்வத்திலே, கொடை யிலே சிறந்தவர்கள் வாழ்கின்ற தென் மதுரை; மிகப் பெரிய பலவகையான செல்வங்களும் நிறைந்திருக்கின்ற மதுரை. இவ்வாறு தருமதத்தன் காலத்து மதுரை குறிக்கப்பட் டிருக்கின்றது. ஆபுத்திரன் வரலாற்றைக் குறிப்பிடும் இடத்திலும் (பக்கம் 38) மதுரையைப் பற்றிக் கூறப்படுகின்றது. மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும் தக்கண மதுரை. (காதை 13, வரி 10 - 105) மிகுந்த செல்வத்தையீட்டி, அறநெறியிலே செலவு செய்து புகழ் பெற்ற மக்கள் பலர் வாழ்கின்ற தென்மதுரை. இவ்வடிகள் ஆபுத்திரன் காலத்தில் இருந்த மதுரையைத் தான் குறித்தன. ஆபுத்திரன் புண்ணியராசனாகப் பிறந்தான். மணி பல்லவத் தீவை அடைந்து தன் பழம்பிறப்பை அறிந்தான். அப்பொழுது மதுரையிலே தனக்கு அமுதசுரபியைத் தந்த சிந்தாதேவியை நினைத்தான். என்பிறப்பு அறிந்தேன் என் இடர் தீர்ந்தேன் தென்தமிழ் மதுரைச் செழும்கலைப் பாவாய் (காதை 25, வரி 138 - 139) என்று போற்றினான். இவ்வாறு மதுரையைப் பற்றி மூன்று இடங்களில் மணிமேகலையில் காணப்படுகின்றன. இம்மூன்றில் இரண்டு மணிமேகலை காலத்துக்கு முன்னிருந்த மதுரையையே சுட்டு கின்றன. பண்டைகாலத்து மதுரை செல்வம் பொருந்திய சிறந்த நகரமாக விளங்கிற்று. அந்நகரத்திலே பணம் படைத்தவர் பலர் வாழ்ந்தனர். அறம் புரிவோர் பலர் வாழ்ந்தனர். அது ஒரு பெரிய வியாபார தலமாக விளங்கிற்று. அங்கே பாண்டியர் அரசாட்சி நன்றாக நடைபெற்றது. இவ்வுண்மைகளை மேலே காட்டப்பட்ட மணிமேகலை அடிகளைக் கொண்டு அறியலாம். தென் தமிழ் மதுரை என்று குறிப்பிட்டிருப்பதும், அந்நகரில் கலைமகள் கோயில் இருந்தது என்று குறிப்பிட்டிருப்பதும், மதுரையிலே தமிழ்ச் சங்கம் இருந்தது. கல்வியிலே சிறந்தவர்கள் பலர் இருந்தனர் என்று ஊகிக்கவும் இடந் தருகின்றது. ஆனால் இவைகள் மணிமேகலை காலத்துக்கு முன்னிருந்த மதுரையையே குறிப்பிடுகின்றன. மணிமேகலை காலத்திலும் மதுரை நகரம் பெரிய நகரமாக இருந்தது; செல்வம் நிறைந்த சிறந்த நகரமாக இருந்தது என்பது உண்மை. கதாநாயகியாகிய மணிமேகலையின் நடவடிக்கையிலே மதுரை நகரம் சம்பந்தப்படவில்லை; ஆதலால், மதுரையைப் பற்றி விரிவாகச் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்று கூறுவது பொருந்தும். வஞ்சிமா நகரம் சிலப்பதிகாரத்திலே புகார் நகரைப் பற்றியும், மதுரையைப் பற்றியும் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. வஞ்சிமாநகரைப் பற்றிய விளக்கம் இல்லை. மணிமேகலையில் வஞ்சியைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இருபத்தாறு, இருபத்தேழு, இருபத்தெட்டு ஆகிய மூன்று காதைகளில் இந்நகரைப் பற்றி விளக்கமாகக் காணலாம். புறநகரம் வஞ்சிமா நகரம் புறநகர், அகநகர் என்று இரு பிரிவாக இருந்தன. கோட்டைக்கு வெளியில் உள்ள பகுதி புறநகரம்; கோட்டைக்கு உள்ளிருந்த பகுதி அகநகரம்; புறநகருக்குப் புறஞ்சேரி என்றும் பெயர். வஞ்சியின் புறநகரிலே தெய்வங்களுக்கான கோயில்கள் இருந்தன. வேதம் ஓதுவோர் அமரும் திண்ணைகள், அதாவது மேடைகள் இருந்தன. துறவிகள் அமர்ந்து அறம் கூறும் பள்ளிகள் இருந்தன. பூமலர்ச் சோலைகளும், நல்ல பொய்கைகளும் இருந்தன. நல்ல தவம் புரியும் முனிவர்கள், கற்றறிந்து புலன் அடக்க முடன் வாழும் அறிஞர்கள், நன்னெறிகளைக் கண்டறியும் பொருட்டுப் பழமையான பல நூல்களையும் ஆராயும் புலவர்கள் அப் புறநகரிலே எங்கும் பரவியிருந்தனர். இதனை, தேவ குலமும், தெற்றியும், பள்ளியும் பூமலர்ப் பொழிலும், பொய்கையும் மிடைந்து நற்றவ முனிவரும், கற்றுஅடங் கினரும், நல்நெறி காணிய தொல்நூல் புலவரும் எங்கணும் விளங்கிய, எயில்புற இருக்கை (காதை 26, வரி 72 - 76) என்ற அடிகளால் அறியலாம். அந்தப் புறஞ்சேரியிலே சமயவாதிகள் பலர் இருந்தனர். அவர்கள் மதத்தைப்பற்றி நன்றாக ஆராய்ந்து அறிந்தவர்கள். தங்கள் தங்கள் மதக் கொள்கைகளிலே உறுதியான நம்பிக்கை யுள்ளவர்கள். யார் கேட்டாலும் தங்கள் கொள்கைகளை விளக்கிச் சொல்லும் திறமையுள்ளவர்கள். அவர்கள் அளவை வாதி, சைவ வாதி, பிரம்ம வாதி, வைணவ வாதி, வேத வாதி, ஆசீவக வாதி, நிகண்ட வாதி, சாங்கிய வாதி, வைசேடிக வாதி, பூத வாதி எனப் பெயர் பெற்ற சமய வாதிகள். இதை 27 ஆவது காதையிலே காணலாம். மணிமேகலை ஆண் உருக்கொண் டாள; இச் சமய வாதகளின் கொள்கைகளைக் கேட்டறிந்தாள் என்று இக்காதையில் காணப்படுகின்றது. அகழியின் தோற்றம் அகநகரைச் சுற்றி மதில் இருந்தது. மதிலின் வெளிப் புறத்தில் அகழியிருந்தது. செல்வர்கள் வீட்டுப் பெண்கள் நீராடிய வாசனை நீர் சுருங்கை என்னும் தூம்பின் வழியே அகழியிலே பாயும். தண்ணீரை நிரப்பவும், கழிக்கவும் ஆன இயந்திரம் அமைந்த குளத்திலே ஆடவரும் மகளிரும் நீராடுவர். அவர்கள் அணிந்த கலவைச் சாந்து அந்நீருடன் கலந்து அந்த அகழியிலே வந்து விழும். அரசனுடைய பிறந்த நாள் விழாவிரே, நீரை வீசும் கருவிகளாகிய விசிறிகளின் மூலமும், கொம்புகளின் மூலமும் வீசிய வாசனை நீர் அந்த அகழியில் கலந்திருக்கும். பஞ்சசீல உபாசகர்கள், மாதவர்களின் பாதங்கடிளக் கழுவி அவர்களை உபசரிப்பார்கள். அவர்கள் கையிலிருந்து விழும் தூய்மையான நீரும் அந்த அகழியில் கலந்திருக்கும். அறம் புரிவோர், தண்ணீர்ப் பந்தரிலே குடங்களிலே நீரை நிரப்பி வைத்திருப்பார்கள். அப் பந்தரிலே அகில் முதலியவற்றால் வாசனைப் புகையிடுவார்கள். ஆதலால் அங்குள்ள நீர் நறு மணங்க கமழும். இந்த நீரும் அந்த அகழிநீருடன் கலந்திருக்கும். வாசனைத் திரவியங்களை அரைத்துக்கலவை செய்வோர் மனையிலிருந்து வரும் நீரும் அந்த அகழி நீருடன் கலந்திருக்கும் இத்தகைய பலவகையான நறுமணமுள்ள நீர் சுருங்கையின் வழியே வந்து அந்த அகழியில் விழுந்து கலந்திருக்கும். இக்காரணத்தால் அவ்வகழியில் உள்ள காரம், இடக்கர் என்னும் முதலை வகைகளின் உடம்பிலே புலால் நாற்றம் வீசாது. மீன்களின் உடம்பிலும் புலால் நாற்றம் வீசாது. தாமரை, குவளை, செங்கழுநீர், அல்லி முதலிய மலர்கள் பூத்து விளங்கும். அவைகளிலே புள்ளிகளையுடைய வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்கும். அவ்வகழி பார்ப்பதற்கு இந்திர வில்லைப் போல் அதாவது வானவில்லைப் போலப் பல நிறங்களுடன் காணப்படும். இது வஞ்சி மாநகரத்து மதிலைச் சுற்றியுள்ள அகழியின் காட்சி. (காதை 28, வரி 5 - 22) அகநகர்க் காட்சி வஞ்சியின் கோட்டை வாசல் மிகவும் உயரமானது. அதன் உச்சியில் கொடிகள் பறந்து கொண்டிருக்கும. அந்த வாசல், வெள்ளிமலையின் நடுவிலே குடைந்து வழி செய்தது போன்ற தோற்றம் உள்ளது. அகநகருள் பல வீதிகள் அமைந்திருந்தன. தொழிலாளர் கள், கலைஞர்கள், அரசர்கள், அந்தணர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், அரசர்கள்,அந்தணர்கள் இவர்களுக்குத் தனித்தனி வீதிகள் இருந்தன. கடைவீதிகள் தனியாக இருந்தன. சோலைகள், நீர்நிலைகள், அறச்சாலைகள், செய் குன்றுகள் எல்லாம் அந் நகரிலே அமைந்திருந்தன. கண்ணகியின் கோயில் அகநகருள்தான் அமைக்கப்பட்டி ருந்தது. சிலப்பதிகாரக் கோவலனுக்கு ஒன்பது தலைமுறைக்கு முன்னே, அவன் குலத்திலே பிறந்த கோவலன் என்பவனால், வஞ்சி நகரிலே புத்த விகாரம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதுவும் அகநகருள்தான் அமைந்திருந்தது. அகநகருள் அமைந்திருந்த வீதிகளைப் பற்றி மணிமேகலை யில் விளக்கமாகக் காணப்படுகின்றது. நகர வாயில்களையும், நகரையும் காக்கும் காவலாளர்கள் நிறைந்து வாழ்கின்ற பெரிய வீதி. பலவகையான மீன்களை விற்பனை செய்வோர், உப்பு விற்போர், கள் விற்போர், பிட்டு வணிகர், அப்ப வணிகர், மாமிசம் விற்போர், கீரைகள் விற்போர், வாசனைப் பண்டங்கள் விற்போர் இவர்கள் வாழும் வீதிகள். குயவர்கள், செம்பு வேலை செய்வோர், வெண்கல வேலைக்காரர்கள், பொன்னால் ஆபரணங்கள் செய்வோர், பொன்னை உருக்குவோர், மரவேலை செய்யும் தச்சர்கள், சிற்ப வேலைகள் செய்வோர், சித்திரம் எழுதும் ஓவியர்கள், தோல் தைப்பவர்கள், தையல் காரர்கள், மாலை தொடுக்கின்றவர்கள், சோதிடர்கள், இசையின் நுணுக்கங்களை - வகைகளை - அறிந்து யாழ் வாசிக்கும் பாணர்கள் ஆகியோர் வாழ்கின்ற பல வகைப் பட்ட வீதிகள். சங்குகளால் அணிகலம் செய்வோர், முத்துக் கோக்கின் றவர்கள் வாழும் வீதிகள். அரசர்க்கு ஆடும் கூத்து, பொது மக்களுக்காக ஆடும் கூத்து என்னும் கூத்து வகைகளை அறிந்த கூத்தியர்கள் வாழும் வீதி. எண்வகைத் தானியங்களையும் தனித்தனியே குவித்து வைத்து, விற்பனை செய்யும் கூல வீதி. உட்கார்ந்து பாடிப்புகழும் மாகதர்கள், நின்று பாடிப் புகழும் சூதர்கள், பலவகைத் தாளங்களுக்குத் தக்கபடி ஆடும் வேதாளிகர்கள் வாழ்கின்ற வீதிகள். பொது மகளிர் வாழும் வீதி மெல்லிய நூல் கொண்டு பல நிற ஆடைகளை நெய்யும் செல்வம் மிகுந்த நெசவாளர்கள் வீதி. பொன்னை உரைத்துப் பார்த்து அதன் தரத்தை மதிப்பிடு வோர் பொன் வாணிகர்கள், அவர்கள் வாழும் நல்ல வீடுகள் அமைந்த வீதி. பலவகைப்பட்ட மாணிக்கங்களையும் விற்பனை செய்யும் இரத்தின வியாபாரிகள் வாழும் வீதி. தமது சிறந்த செய்லகளிலே குறைவில்லாத வேதியர்கள் வாழும் வீதி. அரசாட்சியை நடத்துவோர், அமைச்சர்கள், வேறு பல வினைகளைச் செய்யும் மற்றவர்கள் வாழ்கின்ற தனித்தனி வீதிகள் அந்நகரத்துள் அமைந்திருந்தன. மக்கள் கூடும் மரநிழல், பொது இடம், முச்சந்தி, நாற் சந்திகள் நகருள் நிறைந்திருந்தன. புதிதாகப் பிடித்து வந்த யானைகளையும், அழகிய மாலை அணிந்த குதிரைகளையும், நன்றாக நடக்கும்படி அடித்துப் பழக்குவோர் வாழ்கின்ற வீதிகள். உயரத்திலிருந்து அருவிநீர் வந்து விழுகின்ற செய்குன்று, இன்பத்தை நுகர வேண்டும் என்னும் ஆசையை வளர்க்கின்ற மணம் வீசும் மலர்ச்சோலைகள், தேவர்களும் தங்கள் நாட்டை மறந்து வந்து வாழ விரும்பும் நல்ல நீர் நிலைகள், அந்நகருள் இருந்தன. தருமச்சாலைகள், பெரிய கட்டிடங்கள், பொன்னொளி வீசும் பொதுச் சபைகள், அறங்கூறுவோர் அமர்ந்து தமது கொள்கைகளைக் கூறும்பொருட்டு அழகாகக் கட்டப்பட் டிருக்கும் இடங்கள் அந்நகரில் இருந்தன. இவைகளை 28ஆவது காதையில் 29 முதல் 67 வரையுள்ள அடிகளிலே காணலாம். வஞ்சியின் சிறப்பு மேலே கூறியவைகளை கொண்டு மணிமேகலை காலத்தில் வஞ்சிமா நகரம் எந்த நிலையிலிருந்தது என்பதை அறியலாம். சேர நாட்டின் தலைநகரமாகிய வஞ்சி பெரிய நகரமாக விளங் கிற்று. அந்நகரில் பலவிதமான தொழிலாளர்கள் வாழ்ந்தனர். அறிஞர்கள் இருந்தனர். நல்ல முறையில் வாணிகம் நடைபெற்று வந்தது. அது உன்னதமான நாகரிகம் பொருந்திய நகரமாக இருந்தது. இவ்வுண்மையை மணிமேகலையால் அறிய முடிகிறது. மணிமேகலைக காலத்தில், வஞ்சிமா நகரம், மதவாதிகள் வாழ்கின்ற ஒரு பெரும்பதியாக விளங்கிற்று. அறிஞர்கள் நிறைந்த ஒரு கலாநிலையமாகக் காட்சி அளித்தது. பல நாட்டு மக்களும் வந்து போகும் யாத்திரைக்குரிய ஒரு புனிதத் தன்மை பொருந்திய நகரமாகவும் விளங்கிற்று. மணிமேகலையில் அந்நகரைப் பற்றிக் கூறியிருப்பவற்றைக் கொண்டு இவ்வாறு தீர்மானிக்கலாம். காஞ்சி நகரம் மணிமேகலை காலத்தில், தொண்டை நாட்டின் தலை நகரமாகிய காஞ்சியும் பெரிய நகரமாகவே விளங்கிற்று. தேவலோகந்தான் மண்ணுலகில் வந்து கிடந்ததோ என்று மதிக்கும்படியான செழிப்புள்ள நகரம் காஞ்சி என்று மணிமேகலையில் காணப்படுகிறது. தேவர் கோடான் காவல் நெடுநகர் மிண்மிசைக் கிடந்தென வளந்தலை மயங்கிய பொன்னகர் தேவேந்திரனுடைய காவல் பொருந்திய பெரிய நகரமாகிய அமராவதி மண்ணுலகில் வந்து கிடந்தது போன்ற செல்வம் நிறைந்த காஞ்சி நகர் என்றதனால் இந்நகரத்தின் சிறப்பைக் காணலாம். காஞ்சி என்பது பொன்; காஞ்சி நகர் - பொன் நகர். இப்பெயரே இதன் அழகையும் வளத்தையும் வைத்து அமைக்கப் பட்டதாகும். இந்த நகரம் மணிமேகலை காலத்திலே ஒரு சிறந்த வியாபாரதலமாக விளங்கிற்று. பல நாட்டு மக்களும் வந்து பார்த்துத் தங்கி செல்லும் புனிதமான யாத்திரைப் பதியாகவும் விளங்கிற்று. இந்த நகரத்திலே பல தேசத்து மக்களும் குழுமி யிருந்தனர். பல மொழிகள் பேசும் மக்களும் வாழ்ந்து வந்தனர். மணிமேகலை காலத்தில் இந்த நகரம் சோழ மன்னர்களின் ஆட்சியில் இருந்தது. இந்நகரத்து வேந்தன் பெயர் இளங்கிள்ளி என்பது. இவன் தொடுகழற் கிள்ளி என்பவனது தம்பி. தொடுகழற் கிள்ளிக்குப்பின் இவன் காஞ்சி நகர ஆட்சியை மேற்கொண்டான். காஞ்சியிலே மாதவர்களும், சமயவாதிகளும் நிறைந் திருந்தனர். சமயங்களுக்கும், கலைகளுக்கும் அந் நகரம் சிறந்த உறைவிடமாக இருந்தது. இளங்கிள்ளியின் காலத்திலே, காஞ்சியிலும், காஞ்சியைச் சேர்ந்த நாட்டிலும் மழைவளம் குறைந்தது. அதனால் பெரும் பஞ்சம் நேர்ந்தது. அப்பொழுது அந்நகரில் இருந்த மாதவர் களும், மதவாதிகளும் அந்நகரை விட்டு வெளியேறினர். வஞ்சி நகரத்தையடைந்து தங்கினார்கள். மாதவர்க்குப் பிச்சையிடு வோர்கள் கூட அந்நகரைத் துறந்து வெளியேறி விட்டனர். பொன்எயில் காஞ்சி நாடுகவின் அழிந்து மன்உயிர் மடிய மழைவளம் கரத்தலின் அந்நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர் இன்மையின் இந்நகர் எய்தினர். (காதை 28, வரி 156 - 159) என்ற அடிகளால் இதனை அறியலாம். இச்செய்தியை வஞ்சி நகரிலே மணிமேகலையைச் சந்தித்த மாசாத்துவான் அவளிடம் உரைத்தான். காஞ்சி நகரின் நடுவிலே புத்தர் கோயில் ஒன்று இருந்தது. இது இளங்கிள்ளியினால் கட்டப்பட்டது. அக் கோயிலில் கந்தில்பாலைவ என்னும் தெய்வமும் இருந்தது. இளங்கிள்ளி, தனது நாடு பஞ்சத்தால் வாடுவதைக் கண்டு வருந்தினான். நகரம் பாழ்பட்டு வெறிச்சென்று கிடந்ததைக் கண்டு உள்ளம் வெதும்பினான். அப்பொழுது அவன்முன் கந்தில்பாவை தோன்றி, மணிமேகலையின் வருகையை உரைத்தது. மன்னவனே, மனம் கலங்காதே! உன்னுடைய தவப் பயனால்; இந்நகருக்குத் தவத் திறம் பீண்ட காரிகை ஒருத்தி வருவாள். அவள் கையில் உள்ள பிச்சைப் பாத்திரத்தால் இந்நாடும், நகரமும் பிழைக்கும். அவள் அருளால் மழை வளம் சுரக்கும். அதன்பின் இந்நகரிலே அறங்கள் பல நடைபெறும். கார்வளம் குறைந்தாலும் நீர்வளம் குறையாது. நீ மணிபல்லவம் போன்றதொரு சோலையும், கோமுகி போன்றதொரு குளமும் அமைப்பாயாக. என்றும் உரைத்தது. அவ்வாறே இளங்கிள்ளி, ஒரு பூஞ்சோலையும் பொய்கையும் அமைத்தான். இவன், நகரத்தின் தென்மேற்கில் இருந்தன. காஞ்சியை அடைந்த மணிமேகலை, முதலில் நகரின் நடுவில் இருந்த புத்தர் கோயிலுக்குச் சென்று வணங்கினான். அவன் வந்திருக்கும் செய்தியை அறிந்த அரசன் அங்கு வந்து அவளை வரவேற்றான். அவளுக்காக அமைக்கப்பட்டிருந்த சோலையிலே அவள் தங்கினாள். அங்கே புத்த பீடிகை ஒன்றை யும் அமைத்தாள். மணிமேகலை அவ்விடத்திலே தங்கியிருந்து, பசித்து வந்தோர் அனைவருக்கும் மொழி, நாடு, இன பேதம் பாராமல் உணவளித்து வந்தாள். இவைகள் 28-வது காதையில் காணப்படும் செய்திகள். மணிமேகலை காலத்தில் காஞ்சி பெரிய நகரமாக இருந்தது. காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்ட நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டு வந்தனர். அந்த நகரத்திலே தவம் புரிவோர், சமயவாதிகள் கலர் இருந்தனர். இதனாலே தொன்டை நாடு சான்றோர் உடைத்து என்னும் பெருமை பெற்றது. பதினெட்டு மொழிகளைப் பேசும் பல நாட்டு மக்களும் அந்நகரத்திலிருந்தனர். அந்நகரின் நடுவிலே புத்தர் கோயில் இருந்தது. நகரின் தென் மேற்கில் ஒரு பூஞ்சோலை, குளம், சோலையில் புத்த பீடிகை, இவகைள் அமைக்கப்பட்டிருந்தன. இவைகள் மணிமேகலையில் காணப்படுகின்றன. இவைகளே மேலே எடுத்துக் காட்டப் பட்டன. வள்ளுவரும் சாத்தனாரும் மணிமேகலையில் பலவிடங்களில் திருக்குறளின் கருத்துக் களைக் காணலாம்; சொற்களைக் காணலாம்; சொற்றொடர் களைக் காணலாம்; முழுக் குறளையும் அப்படியே காணலாம். வள்ளுவர் கருத்துக்களை சாத்தனார் மணிமேகலை ஆசிரியர் - முழுவதும் ஒப்புக்கொண்டவராகவே காணப்படு கின்றார். இதனால், மணிமேகலை தோன்றிய காலத்தில் தமிழகத்திலே திருக்குறள் மிகவும் புகழ்பெற்ற நூலாக விளங்கிற்று; அனை வராலும் படித்துப் பாராட்டப்படும் அறநூலாக விளங்கிற்று என்ற உண்மையை உணரலாம். இன்சொலால் ஈரம் அனைஇப் படிறுஇலஆம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (கு. 91) அறநெறியை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள் இனிய சொற்களால் ஆகி, அன்பு கலந்து, வஞ்சனையற்றவைகளாக இருக்கும் என்பது திருக்குறள். இக் குறளின் கருத்தைச் சுதமதியின் சொற்களிலே அமைத்துக் காட்டுகிறார் சாத்தனார். என் உற்றனிரோ? என்று எமை நோக்கி அன்புடன் அனைஇய அருண்மொழி அதனால் அம்செவி நிறைத்து நெஞ்சம் குளிர்ப்பித்து. (காதை 5, வரி 62 - 64) நீங்கள் என்ன துன்பத்தை அடைந்தீர்கள் என்று எம்மைப் பார்த்துக் கேட்டான். அன்போடு கலந்த இரக்கம் பொருந்திய மொழிகளால் எமது அழகிய செவியை நிரப்பினான். எமது உள்ளத்தைக் குளிரச் செய்தான். இவ்வாறு சுதமதி தன் தந்தையின் துன்பத்தை நீக்கிய சங்கதருமன் என்னும் புத்த சந்நியாசியைப் பற்றிக் கூறினான். பிறவிப் பெருங்கடல் நீந்துவர்: நீத்தார் இறைவன் அடி சேரா தார். (கு. 10) இறைவன் அடியை வணங்குவோர் பிறவி என்னும் பெரிய கடலைக் கடப்பார்கள். இறைவன் அடியை வணங்காதவர்கள், அக் கடலைக்கடக்க மாட்டார்கள் என்பது திருக்குறள். ஓங்குயர் சமந்தத்து உச்சி மீமிசை அறவியம் கிழவோன் அடியி ஆகிய பிறவி என்னும் பெருங்கடல் விடூஉம் அறவி நாவாய் ஆங்குளது (காதை 11, வரி 22-25) உயர்ந்த சமந்தம் என்னும் மலை உச்சியிலே, அறநெறியிலே நிற்கும் உரிமையுள்ள புத்தனது அடிகள் இருக்கின்றன. அவைகள் பிறவி என்னும் பெரிய கடலை விடடுக் கரையேற்றும் அறமாகிய கப்பலாகும். இக் கப்பல் அந்த மலையில் உண்டு. இவ்வடிகள் இலங்கையில் உள்ள சமந்தம் என்னும் மலை உச்சியில் உள்ள புத்தருடைய பாத பீடிகையைப் பற்றிக் கூறப்பட்டவை. இவ்வடிகளின் கருத்தும், மேலே காட்டிய திருக்குறளும் ஒன்றுபட்டிருக்கின்றன. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை (கு. 1043) வறுமை என்று சொல்லப்படும் ஆசையானது பழமையான குடிப் பெருமையையும், புகழையும் ஒன்றாக அழித்துவிடும் என்பது திருக்குறள். குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும். (காதை 11, வரி 76) குடிப்பிறப்பின் பெருமையை அழிக்கும்; சிறப்பையும் கொன்று விடும். மணிமேகலையின் இவ்வடி மேலே காட்டிய திருக்குறளைப் பின்பற்றியதுதான். நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். (கு. 1046) நல்ல நூல்களின் பொருள்களை நன்றாக ஆராய்ந்து சொன்னாலும், வறியவர்கள் கூறும் பொருள் யாராலும் கேட்கப் படாமல் வீணாகும் என்பது திருக்குறள். இத் திருக்குறளின் கருத்தை, பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம். (காதை 11, வரி 77) உயிர்க்கு உறுதியாகப் பிடித்த கல்வியென்னும் பெரிய தெப்பத்தையும் நீக்கும் என்ற அடியிலே அமைத்தார் சாத்தனார். அணிஅன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல் பிணி அன்றோ பீடுநடை (கு 1014) பெரியோர்க்கு நாணம் உடைமை ஒரு ஆபரணம் அன்றோ? அந்த ஆபரணம் இல்லையானால், பெருமிதமான நடைநோய் அன்றோ? என்பது திருக்குறள். இக்குறளில் உள்ள அணி அன்றோ நாண் உடைமை சான்றோக்கு என்பதன் கருத்தை நாண்அணி களையும், மாண்எழில் சிதைக்கும் (காதை 11, வரி 78) நாணமாகிய ஆபரணத்தை நீக்கும்; சிறந்த அழகை அழிக்கும் என்ற மணிமேகலை அடியிலே காணலாம். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யால். (கு 972) எல்லா மக்களின் உயிர்க்கும் பிறப்பின் தன்மையை ஒத்திருக்கும். அவரவர்செய்யும் தொழில் வேற்றுமையால் சிறப்பின் தன்மை வெவ்வேறாக இருக்கும் என்பது திருக்குறள். ஆன்மகன் அசலன், மான்மகன் சிருங்கி, புலிமகன் விரிஞ்சி, புரையோர் போற்றும் நரிமகன் அல்லனோ கேச கம்பளன், ஈங்கு இவர் நும்குலத்து இருடிகள் என்று ஓங்கு உயர் பெரும்சிறப்பு உரைத்தலும் உண்டால் ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ? (காதை 13, வரி 63-68) இது ஆபுத்திரன் அந்தணர்களைப் பார்த்துக் கூறியது. இவ்வடிகளிலே மேலே காட்டிய திருக்குறளின் கருத்து அமைந்திருப்பதைக் காணலாம். வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. (கு. 221) ஏழைகளுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகையாகும். வேறுகொடைகள் எல்லாம் ஏதேனும் ஒரு பயனை எதிர் பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையதாகும் என்பது திருக்குறள். காணார், கேளார், கால்முடப் பட்டோர், பேணுநர் இல்லோர், பிணிநடுக் குற்றோர் யாவரும் வருகஎன்று இசைத்துடன் ஊட்டி. (காதை 13, வரி 111-113) கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள், கால் ஒடிந்தவர்கள், அநாதைகள், நோயாளிகள் அனைவரும் வாருங்கன் என்று அழைத்து அவர்களுக்கு உணவளித்து இவ்வடிகள் மேலே காட்டிய திருக்குறளின் பொருளைக் கொண்டவை. அற்றார்க்குஒன்று ஆற்றுதான் செல்வம், மிகநலம் பெற்றாள் தமியன்மூத்து அற்று (கு. 1007) வறியோர்க்கு ஒன்று உதவாதவனது செல்வமானது மிகவும் அழகு பெற்ற ஒரு பெண், கணவன் இல்லாமல் தனியாக இருந்து கிழவியானதைப்போல் ஆகும். இது திருக்குறள். அமரர்கோன் ஆணையின் அருந்துவேர்ப் பெறாது குமரி மூத்த என் பாத்திரம் ஏந்தி ஆங்குஅந் நாட்டுப் புகுவதுஎன் கருத்து (காதை 14, வரி 76-78) இந்திரன் ஆணையால், நாடு செழித்ததால். உணவருந்து வோரைக் கிடைக்கப் பெறாமையால், கணவன் இல்லாத குமரியைப் போல எனது பாத்திரத்தின் நாட்கள் வீணாகக் கழிந்தன. ஆதலால் இப்பாத்திரத்தை ஏந்திக் கொண்டு, பஞ்சம் குடி புகுந்த அந்தச் சாவக நாட்டுக்கு செல்வது என் கருத்து. இவ்வடிகள் ஆபுத்திரன் உரைப்பதாக அமைந்தவை. இவ்வடிகளிலே மேலே காட்டிய திருக்குறளின் கருத்தும் உவமையும் அமைந்து கிடக்கின்றன. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை (கு. 55) தெய்வத்தை வணங்காதவனாய், கணவனையே வணங்கி எழுந்திருப்பவள், பெய் என்று சொன்னால் மழை பெய்யும் என்பது திருக்குறள். வான்தரு கற்பின் மனைஉறை மகளிரின் தான்தனி ஓங்கிய தகைமையன். (காதை 16, வரி 77-78) மழையைப் பெய்விக்கும் கற்பினையுடைய இல்லத்தில் வாழும் பெண்களிலே, தான் தனித்த சிறப்புடன் விளங்கும் பெருமை யுள்ளவள், இவ்வடிகளிலே மேலே உள்ள திருக்குறளின் கருத்து அமைந்திருக்கின்றது. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுழ எழுவாள் பெய்எனப் பெய்யும் பெருமழை என்ற, அப் பொய்யில் புலவன் பொருள்உரை தேறாய் (காதை 22, வரி 59-61) இவ்வடிகள் திருக்குறளை அப்படியே எடுத்துக் காட்டின. திருவள்ளுவரைப் பொய்மொழி புகலாத உண்மைப் புலவன் என்று புகழ்ந்துரைத்தன. நிறையில் காத்துப் பிறர்பிறர்க் காணாது கொண்டோன் அல்லது தெய்வம் பேணாப் பெண்டிர் தம்குடி. (காதை 18, வரி 100-102) கற்பு நெறியிலே தன்னைக் காத்துக்கொண்டு, பிறர் தன்னைன் காணாமலும், பிறரைத் தான் காணாமலும் வாழும் பெண்கள், கொண்ட கணவனைத் தவிர தெய்வத்தையும் வணங்காத பெண்கள் என்பவை மணிமேகலை அடிகள். இவ்வடிகளிலே இரண்டு குறட்பாக்களின் கருத்துக்கள் அடங்கிக் கிடக்கின்றன. சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. (கு. 57) சிறை வைத்துக் காக்கும் காவலால் பயன் இல்லை. மகளிர் கற்பு நெறியில் நின்று தம்மைத்தாம் காத்துக் கொள்ளுவதே சிறந்தது என்ற குறளும், தெய்வந்த தொழா அள் என்ற குறளும், மேலே காட்டிய மணிமேகலை அடிகளில் அடங்கியிருக்கின்றன. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (கு. 339) என்பது திருக்குறள். இதனை, பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது. (காதை 16, வரி 86 - 87) என்ற மணிமேகலை அடிகளிலே காணலாம். பகுத்துண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (கு. 322) கிடைத்த உணவைப் பங்கிட்டு உண்டு பல உயிர்களையும் பாதுகாப்பதுதான், அறநூலோர் தொகுத்துரைத்த தர்மங்களில் எல்லாம் சிறந்த தர்மமாகும் என்பது திருக்குறள். அறம் எனப்படுவது யாதுஎனக் கேட்பின் மறவாது இதுகேள்; மன்உயிர்க் கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும் அல்லது கண்டது இல் (காதை 26, வரி 228-231) என்ற மணிமேகலை அடிகளிலே மேலே காட்டிய திருக் குறளின் பொருள் அமைந்திருக்கின்றது. ஆபுத்திரன் மதுரையில் உறைந்து, ஏழைகளுக்கு உணவளித்தபின் மிகுந்ததைத் தான் உண்டு வாழ்ந்தான். அவன் சாவகநாட்டில் பஞ்சம் என்று கேள்விப்பட்டவுடன் அந் நாட்டுக்குப் புறப்பட்டான். அந்நாட்டு மக்களுக்கு உணவளித்து அவர்களைக் காக்க வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம். மணிமேகலை காவிரிப்பூம்பட்டினத்தில் சக்கரவாளக் கோட்டத்தில் உள்ள உலக அறவியில் தங்கினாள். அங்கு வந்த அனைவர்க்கும் உணவளித்தாள். காவிரிப்பூம்பட்டினத்துச் சிறைச்சாலையுள், அரசன் ஆணைபெற்றுச் சென்று அனை வர்க்கும் வயிறார உணவளித்து வந்தாள். இதனால் சிறைச் சாலையை அறச்சாலையாக்கினாள். அவள் காஞ்சி நகருக்கும் போனாள். பஞ்சத்தால் வாடிய அந்நகரில் வாழ்ந்த ஏழை மக்கள் அனைவர்க்கும் உணவளித்து வந்தாள். இந்நிகழ்ச்சிகள், பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல் என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக அமைந்திருக்கின்றன. அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து (கு. 36) எல்லா வுயிர்களுக்கும், எக்காலத்திலும், தவறாமல் பிறப்பைத் தருகின்ற விதை ஆசையே யாகும் என்பது திருக் குறள். இத் திருக்குறளுக்கு இலக்கியமாக ஆபுத்திரன் கதை அமைந்திருக்கின்றது. ஆபுத்திரன் இறக்கும்போது தன்னைப் பிள்ளைப் பருவத்திலே பாலூட்டிப் பாதுகாத்த பசுவை எண்ணிக் கொண்டே உயிர் விட்டான். ஆதலால், அடுத்த பிறவியிலே, அவன் சாவகத் தீவில் மண்முக முனிவன் ஆசிரமத்தில் இருந்த பசுவின் வயிற்றில் மகனாகப் பிறந்தான். அந் நாட்டு அரசனுக்குத் தத்துப்புத்திரன் ஆனான். சாவக நாட்டு மன்னனாகி மக்களைப் பாதுகாத்து வந்தான். பிணநோய் இன்றியும் பிறந்து அறம்செய்ய மணிபல் லவத்திடை மன்உயிர் நீத்தோன், தன்காத்து அளித்த தகைஆ அதனை ஒற்கா உள்ளத்து ஒழியான்; ஆதலின் ஆங்குஅவ் ஆவயிற்று அமரர்கணம் உவப்பத் தீம்கனி நாவல் ஓங்கும்இத் தீவினுக்கு ஒருதான் ஆகி உலகுதொழத் தோன்றினன் (காதை 15, வரி 15-21) என்ற அடிகளிலே ஆபுத்திரன் செய்தி கூறப்படுகின்றது. இச் செய்தியில் மேலே காட்டிய அவா என்ப என்று தொடங்கும் குறளின் கருத்து அமைந்திருப்பதை அறியலாம். இவ்வாறே மணிமேகலையில், திருக்குறளின் கருத்துக்கள், சொற்றொடர்கள் முதலியவை நிறைந்திருப்பதை அதைக் கற்போர் அறிவார்கள். மணிமேகலை திருக்குறளை விளக்கும் ஒரு சிறந்த நூலாக அமைந்திருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை. சாத்தனாரும் இளங்கோவும் மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் ஒன்றாகக் காணப்படும் பகுதிகள் பல உண்டு. வர்ணனைகள், உவமைகள், சொற்றொடர்கள், கருத்துக்கள் பல ஒன்றாக அமைந்திருப் பதைக் காணலாம். 1. தொடர் ஒற்றுமை உருவிலாளன் (சில. காதை 5, வரி 4; மணி. காதை 5 வரி 6) வம்ப மாக்கள் (சில. காதை 5, வரி 111; மணி. காதை 3, வரி 126) சுந்தரச் சுண்ணத்து (சில. காதை 5, வரி 155; மணி. காதை 2, வரி 23) விளையா மழலை (சில. காதை 8, வரி 67; மணி. காதை 4, வரி 99) நிகர் மலர் (சில. காதை 9, வரி 2; மணி. காதை 3, வரி 15) நாறைங் கூந்தல் (சில. காதை 10, வரி 43; மணி. காதை 22, வரி 130) கண்மணி அனையாற்கு (சில. காதை 13, வரி 75; மணி. காதை 16, வடி 48) பெரும்பெயர் மன்னவன் (சில. காதை 13, வரி 138; மணி. காதை 19, வரி 134) நுதழ்விழி நாட்டத்து இறையோன் (சில. காதை 14, வரி; மணி. காதை 1, வரி 54) கம்பலை மாக்கள் (சில. காதை 19, வரி 29; மணி. காதை 3, வரி 147) நிறையருந் தானை (சில. காதை 25, வரி 178; மணி. காதை 9, வரி 26) 2. வருணனை ஒற்றுமை வாணன் பேரூர் மறுகிடை நடந்து, நீள்நிலம், அளந்தோன் ஆடிய குடமும் (சில. காதை 6, வரி 54-55; மணி. காதை 3, வரி 123) காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள் (சில. காதை 15, வரி 151; மணி. காதை 6, வரி 10) திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் (சில. காதை 15, வரி 156; மணி. காதை 6, வரி 10) கடைமணி உகுநீர் (சில. காதை 20, வரி 54; மணி. காதை 3, வரி 22) நாவலந் தண்பொழில் நண்ணார் (சில. காதை 25, வரி 173; மணி. காதை 22, வரி 29) தலைத்தார்ச் சேனை (சில. காதை 26, வரி 80; மணி, காதை 19, வரி 123) இந்திர திருவன் (சில. காதை 25, வரி 94; மணி. காதை 19, வரி 116) குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன (சில. காதை 27, வரி 153; மணி. காதை 6, வரி 18) சுருள் இடு தாடி மருள்படு பூங்குழல் (சில. காதை 27, வரி 181; மணி. காதை 3, வரி 116) விடர்ச்சிலை பொறித்த விறலேன் (சில. காதை 28, வரி 136; மணி. காதை 28, வரி 104) 3. உவமை ஒற்றுமை ஊதுலைக் குருகின் உயிர்த்தனன் ஒடுங்கி (சில. காதை 4, வரி 59; மேற்படி 22, வரி 152; மணி. காதை 2, வரி 43) அருமணி இழந்த நாகம் போன்றதும் (சில. காதை 13, வரி 58; மணி. காதை 7, வரி 131) இன்னுயிர் இழந்த யாக்கை என்ன (சில. காதை 13, வரி 59; மணி. காதை 7, வரி 133) ஓங்கிய நன்மணி உறுகடல் வீழ்த்தோர் தம்மின் (சில. காதை 30, வரி 30-31; மணி. காதை 2, வரி 72-73) காமக் கள்ளாட்டு (சில. காதை 22, வரி 127; மணி. காதை 25, வரி 91) 4. கருத்து ஒற்றுமை அந்தரத் துள்ளோர் அறியா மரபின், வந்து காண் குறூஉம் (சில. காதை 6, வரி 72-73; மணி. காதை 1, வரி 15) பசியும் பிணியும் பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி (சில. காதை 5, வரி 72-73; மணி. காதை 1, வரி 70-71) கணிகையர் வாழ்க்கை கடையே போன்மென (சில. காதை 11, வரி 183; மணி. காதை 24, வரி 89-90) சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் (சில. காதை 14, வரி 146; மணி. காதை 26, வரி 78) கற்புக்கடம் பூண்ட (சில. காதை 15, வரி 143; மணி. காதை 26, வரி 8) தாரன், மாலையன், தமனியப் பூணினன், பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் (சில. காதை 15, வரி 157-158; மணி. காதை 3, வரி 36-37) செய்வினை வழித்தாய் உயிர்செலும் என்பது, பொய்யில் காட்சியோர் (பொருள் உரை) (சில. காதை 28, வரி 67-68; மணி. காதை 6, வரி 158-159) அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது பெரும் பெயர்ப் பெண்டிற்கு கற்புச் சிறவாது (சில. காதை 28, வரி 207-208; மணி. காதை 22, வரி 208) பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி (சில. காதை 26, வரி 50; மணி. காதை 20, வரி 78) இவ்வாறு, மணிமேகலைக்கும் சிலப்பதிகாரத்திற்கும் பலவகையில் ஒற்றுமை காணப்படுகின்றது. சிலப்பதிகாரத் திற்கும் மணிமேகலைக்கும் கதைத் தொடர்பும் உண்டு. கருத்தும், தொடர்களும் ஒன்றுபட்டுக் காணப்படுகின்றன. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகள் வரலாற்றுக்கோ ஆதரவில்லை. அப்படி ஒரு புலவர் இருந்தார் என்று கொள்வதற்கு இடம் இல்லை. ஆதலால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்ட நூல் என்று கூறுவோர் சிலர் உண்டு. இது பொருத்தமற்ற கூற்று. இதை இறுதியில் உள்ள சிந்திக்க வேண்டியவை என்னும் பகுதியில் காணலாம். நல்ல சொற்களையும் சொற்றொடர்களையும், உவமை களையும் பழந்தமிழ்ப் பேராசிரியர்கள் முன்னோர் நூல்களி லிருந்து எடுத்தாளுவது வழக்கம். இதனை முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும் பொன்னே போல் போற்றுவம் என்று பிற்காலத்துப் புலவர்களும் போற்றினர். இந்த முறையை மணிமேகலை ஆசிரியரும் பின்பற்றியுள்ளார். மணிமேகலை ஆசிரியர் சாத்தனார், திருக்குறளையும் அதன் கருத்துக்களையும் ஏராளமாக எடுத்துக் கொண்டிருப்பதை வள்ளுவரும் சாத்தனாரும் என்னும் பகுதியிலே காணலாம். உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே என்னும் புறநானூற்றுச் செய்யுளின் தொடரை அப்படியே எடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். வெயில் நுழைபு அறியாக் குயில் நுழை பொதும்பர் என்பது பெரும்பாண் ஆற்றுப்படை. இவ்வடி அப்படியே மணி. காதை 4-ல், 5ஆவது அடியாக அமைந்துள்ளது. மடைமாண் செப்பில் தமிய வைகிய பொய்யாப் பூவின் மெய்சா யினளே என்பது குறுந்தொகை 9. இதன் கருத்தை, வகைவரிச் செப்பினுள் வாடிய மலர்போல் தகைநலம் வாடி (மணி. காதை 4, வரி 65-66) என்று மணிமேகலையில் அப்படியே அமைத்துக் காட்டுகிறார் ஆசிரியர். இவ்வாறு சாத்தனார், பழ நூல்களிலிருந்து கருத்துக் களையும் தொடர்களையும் தமது கவிதையிலே அமைத்துக் காட்டுகிறார். இதை ஆதரவாக வைத்துக் கொண்ட புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை., குறுந்தொகை முதலிய நூல்களை யெல்லாம் சாத்தனார்தான் இயற்றினார் என்று கூறுவத பொருந்துமா? இக் கூற்றுக்கும், சிலப்பதிகாரத்தையும் சாத்தனார் தான் இயற்றினார் என்னும் கூற்றுக்கும் வேற்றுமையில்லை. இங்கே நாம் காணவேண்டிய உண்மை, சிலப்பதிகாரத் திலிருந்து சொற்களையும், தொடர்களையும் கருத்துக்களையும் சாத்தனார் எடுத்துக் கொண்டாரா? அல்லது மணிமேகலை யிலிருந்து இவைகளை இளங்கோவடிகள் எடுத்துக் கொண் டாரா? என்பது தான். மணிமேகலை முதலில் எழுதப் பட்ட காவியமா? சிலப்பதிகாரம் முதலில் எழுதப்பட்ட காவியமா? என்பதை முடிவு கட்டினால் போதும். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட பிறகு தான் மணிமேகலை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே உண்மை. இதனைப் பின்வரும் சிந்திக்க வேண்டியவை என்ற பகுதியில் விளக்கமாகக் காணலாம். ஆதலால் சிலப்பதிகாரத்துத் தொடர்களையும் கருத்துக்களையும், சாத்தனார் முன்னோர் முறையைப் பின்பற்றி எடுத்தாண்டார் என்பதில் ஐயமில்லை. சிலப்பதிகாரம் மணிமேகலையிலே சிலப்பதிகாரக் கதை முழுவதும் காணப்படுகின்றது. கோவலன் கண்கியின் முற்பிறப்புச் செய்தி கூடக் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலும் மணிமே கலையைப் பற்றிய குறிப்பைக் காணலாம். சிலப்பதி காரத்தில் அடைக்கலக் காதை, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை ஆகிய மூன்று காதைகளிலும் மணிமேகலையைப் பற்றிய குறிப்புக் காணப்படுகின்றது. மணிமேகலையைக் கொண்டு சிலப்பதிகாரக் கதை முழு வதையும் உணரலாம். ஆனால் சிலப்பதிகாரத்தைக் கொண்டு மணிமேகலைக்கதை முழுவதையும் காணமுடியாது. கோவலன் உற்ற கொடுந்துயர் கேட்டதும் மாதவி துறவு பூண்டாள்; மணிமேகலையையும் புத்த சங்கத்தில் சேர்த்துத் துறவு பூணச் செய்தாள். இச்செய்தி மட்டுந்தான் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றது. கணவர்க்கு உற்ற கடுந்துயர் பொறாஅள் மணம்மலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக் கண்ணீர் ஆடிய கதிர்இள வனமுலை திண்ணிதின் திருகித் தீஅழல் பொத்திக் காவலன் பேரூர்க் கனைஎரி ஊட்டிய மாபொரும் பத்தினி மகள் மணிமேகலை. (காதை 2, வரி 50-55) கண்ணகி, தன் கணவனுக்கு நேர்ந்த கடுந்துன்பத்தைக் கேட்டுத் தாங்காத துயரங் கொண்டாள். மணம் நிறைந்த கூந்தல் பிடரியை மறைக்கும்படி குலைந்து விழ ஓடினாள். கண்ணீரில் முழுகிய முலைகளிலே இடது முலையை வலது கையால் பிடித்து திருகி எடுத்தாள். அழலை மூட்டினாள். அதனால் பாண்டியனது மதுரை நகரைப் பெருநெருப்புக்கு இரையாக் கினாள். அச் சிறந்த பத்தினியாகிய கண்ணகியின் மகள் மணிமேகலையாவாள். இவ்வடிகள் கோவலன் கொலையுண்டது, அதனால் கண்ணகி சினம் மூண்டு சென்று பாண்டியனிடம் வழக்கு ரைத்தது, மதுரையை எரியூட்டியது முதலிய நிகழ்ச்சிகளை நினைவூட்டுகின்றன. இவ்வடிகள் மாதவியின் வாய்மொழியாக அமைந்தவை. கோற்றொடி மாதரொடு வேற்றுநாடு அடைந்து வைவாள் உழந்த மணிப்பூண் அகலத்து ஐயாவோ. (காதை 8, வரி 41-43) மனைவியுடன், தனது நாட்டைத் துறந்து, வேற்று நாட்டை யடைந்து கூர்மையான வாளால் துன்புற்ற இரத்தினா பரணங் களை அணிந்த மார்புடைய தந்தையே! கோவலன், கண்ணகியுடன் சோழ நாட்டைத் துறந்து, பாண்டி நாட்டை அடைந்தான். பொற்கொல்லனால் கள்வன் என்று காட்டிக் கொடுக்கப்பட்டான். பாண்டியனது கட்டளைப் படி அவனது காவலன் ஒருவனால் வெட்டுண்டு மாண்டான். இவ்வரலாற்றை இவ் வடிகள் காட்டுகின்றன. இது மணி பல்லவத் தீவிலே தனித்து வருந்திய மணிமேகலையின் வாய் மொழியாக அமைந்துள்ளது. மணிமேகலை வஞ்சிமாநகரை அடைந்தாள். கண்ணகியைப் பணிந்தாள். அவளுடைய உயர்ந்த பண்புகளைப் போற்றிப் புகழ்ந்தாள். அன்னையே! ஏனைய பத்தினிப் பெண்டிரைப் போல் நடந்து கொள்ளாமல் பாண்டியனைப் பழிவாங்கி, மதுரையை எரித்துக் கற்பு நெறியிலே நின்ற காரணத்தை அருள் செய்யவேண்டும் என்று பிரார்த்தித்தாள். கண்ணகியும், தான் மதுரையை எரித்த காரணத்தை உரைத்தாள். இச் செய்தியைக் காதை 26-ல் 11 முதல் 35 வரையில் உள்ள அடிகளிலே காணலாம். இவ்வாறு சிலப்பதிகாரத்து வஞ்சி காண்டத்துக் கதை முழுவதும் சுருக்கமாக மணிமேகலையில் காணப்படுகின்றது. செங்குட்டுவன் என்னும் செங்கோல் வேந்தன் வஞ்சி மாநகரத்தில் வாழ்ந்த சேர மன்னன். போர்த் தொழிலிலே சிறந்த அவனடை சேனைகள் வஞ்சி மாநகரத்தில் இருந்தபடியே எதிரிகளின் மேல் சூள் உரைத்து வஞ்சி மலரைச் சூடின. சேரமன்னன், இந்த நிலத்தில் உள்ள நாடுகள் அனைத்தும் மலைநாடு என்று சொல்லும்படி, அதாவது சேரநாடு என்று சொல்லும்படி படை திரட்டிச் சென்றான். யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் ஒன்றாகக் கலந்து கருங்கடல் முழக்கம்போல ஓசையெழச் செலுத்திக் கொண்டு போய்க் கங்கையாற்றின் கரையிலே தங்கினான். கப்பலிலே கங்கையைக் கடந்து வடக்குக் கரையை அடைந்தான். கனக விசயர் முதலிய பல மன்னர்களைப் போரிலே வென்றான். இமயமலைக் கல்லைக் கண்ணகியின் உருவச்சிலை செய்வ தற்காகத் தேர்ந்தெடுததான். அக்கல்லை அவ்வரசர்களின் தலைமேல் சுமத்தித் தமிழகத்துக்குக் கொண்டு வந்தான். தனது திருமுடியிலே, தனது வெற்றிக்கு அடையாளமாகப் பொன்னாற் செய்த வாகைப் பூவை அணிந்தான். விற்போரில் சிறந்த வனாகிய சேரன் இத்தகைய வல்லமையுள்ளவன். இவ்வரலாறு மணிமேகலையில் 26-ஆவது காதையில் 77 முதல் 91 வரையில் உள்ள அடிகளில் காணப்படுகிறது. இவ்வாறு சிலப்பதிகாரக் கதை முழுவதும் மணிமேகலையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், மணிமேகலைக்கு முன்னே சிலப்பதிகாரம் எழுதப்பட்டிருக் கலாம். சாத்தனார் சிலப்பதிகாலம் முழுவதையும் படித்தவர். மணிமேகலை சிலப்பதிகாரம் எழுதிய பிறகு எழுதப்பட்டது. ஆகையால் மணிமேகலை வரலாற்றுப் பகுதிகள் சிலப்பதி காரத்தில் மிகுதி யாகக் காணப்படவில்லை என்று கூற இடம் உண்டு. பாரதநாட்டுப் பண்பாடு பொதுச் செய்திகள் மணிமேகலையில் கூறப்படும் செய்திகள் பாரத நாட்டினர் அனைவர்க்கும் பொதுவான செய்திகள். இந்நூலில் சொல்லப் படும் பொருள்களை இன்ன நாட்டிற்கு உரியவை, இன்ன மொழியினர்க்கு உரியவை என்று பிரித்துக் கூற இயலாது. இப் பரதகண்டத்தில் உள்ள அனைவர்க்கும் பொதுவான அறங் களையும், புத்த தர்மத்தையும் போதிப்பதே இந்நூலின் கருத் தாகும். இவ்வுண்மையை மணிமேகலையைப் படிப்போர் எளிதிலே காணலாம். மணிமேகலை புத்தமதக் கொள்கைகளைப் போதிக்க அவைகளைத் தமிழகத்திலே பரப்ப - எழுதப்பட்ட நூல். புத்த மதம் தென்னாட்டில் பிறந்தது அன்று; தமிழகத்தில் தோன்றியது அன்று; வடநாட்டில் பிறந்ததுதான். புத்தர் தமிழர் அல்லார். வடநாட்டினர் அனைவரும் ஆரியர் என்றால் புத்தரும் ஆசிரியர் தான். பண்டைத் தமிழர்கள் கொள்கைகளுக்குத்தான் மதிப்புக் கொடுத்தார்கள். எந்த நாட்டில் பிறந்ததாயினும் எந்த இனத்தாரால் சொல்லப்பட்டதாயினும், எந்த மொழியிலே இருப்பதாயினும், உயர்ந்த கருத்தை ஒப்புக் கொண்டனர். உயர்ந்த கொள்கைகளைப் போற்றுவது, அவைகளைத் தம்முடைய கொள்கைகளாக ஏற்றுக் கொள்ளுவது தமிழர் களின் பரம்பரைப் பண்பாகும். இதற்கு மணிமேகலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மணிமேகலையில் காணப்படும் கதைகளும், கருத்துக்களும் இவ்வுண்மையை வலியுறுத்துகின்றன. பொதுத் தெய்வங்கள் மணிமேகலையின் முதல் காதை விழாவறை காதை. இந்திர விழாவைப் பற்றி எடுத்துரைக்கும் கதைக்கு விழா அறை காதை என்று பெயர். காவிரிப்பூம்பட்டினத்தில், அந் நகரை கடல் கொள்ளுவதற்கு முன் ஒவ்வோராண்டும் இந்திரவிழா நடை பெறுவது வழக்கம் இந்த விழா இருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்திரவிழா நடக்கும்போது அந் நகரில் உள்ள எல்லாக் கோவில்களிலும் திருவிழா நடைபெறும். இந்திரவிழா முதன்முதலில் அகத்திய முனிவரின் கட்டளைப்படி, தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என்னும் சோழ மன்னனால் தொடங்கப்பட்டது. ஒவ்வோ ராண்டும் சோழ மன்னர்கள் இவ் விழாவை நடத்தி வந்தனர். இவ் விழாவுக்கு ஆயிரங் கண்ணோன் விழா, இந்திர கோடணை விழா, தீவகச்சாந்தி, இந்திரவிழா என்ற பெயர்கள் உண்டு. இந்திரன் பண்டைக் காலத்தில் பாரத நாட்டு மக்களின் பொதுக் கடவுள். இந்திரனைப் பற்றிய செய்திகள் வடமொழி வேதங்களிலே மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்திரனைப் பற்றிய கதைகளைப் பாரதநாட்டினர் அனைவரும் அறிவார்கள். அவன் வானுலகில் வாழும தேவர்களுக்கு அரசன். மழைக்கு அதிபதி. அவனுடைய கருணையில்லா விட்டால் நாட்டிலே மழை பெய்யாது. இது பாரத நாட்டு மக்களின் பொதுவான நம்பிக்கை. ஆதலால் இந்திரனைப் போற்றி வந்தனர். தமிழகத்தின் தலைநகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்திலே ஒவ்வோராண்டம் இந்திர விழாக் கொண்டாடி வந்தனர். இந்திரவிழாக் காலத்திலே காவிரிப்பூம்பட்டினத்திலே பல நாட்டு மக்களும் வந்து கூடுவார்கள். பதினெட்டு மொழிகளைப் பேசும் மக்களும் வந்து அவ்விழாவிலே கலந்து கொள்ளுவார்கள். பல சமயவாதிகளும் வந்து குழுமியிருப்பார்கள். தேவர்களும் மக்கள் உருவிலே வந்து மக்களுடன் கலந்திருப்பார்கள். தமிழகத்து இந்திரவிழா இவ்வாறு பாரத நாட்டுப் பொது விழாவாக நடைபெற்று வந்தது. சிவபெருமான் முதல், சதுக்கபூதம் ஈறாக உள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் திருவிழாச் செய்யுங்கள். ஆறு அங்கங் களையும் அறிந்த அந்தணர்களே! அவ்வத் தெய்வங்களின் வெவ்வேறு சிறப்பிற்கு தகுந்தபடி வ்வேறு காரியங்களைச் செய்யுங்கள். குளிர்ந்த மணல் பரப்பிய பந்தர்களிலும், அம்பலத் திலும் திரிபிடகத்தில் உள்ள தருமத்தை அறிந்தவர்களே! நீங்கள் அமர்ந்து மக்களுக்கு அறிவுரை கூறுங்கள்; எமது கொள்கை களே உண்மையானவை என்று சூளுரைக்கின்ற சமயவாதிகளே! சமய உண்மைகளை அறிந்தவர்களே! நீங்கள் பல கலைகளைப் பற்றியும் ஆராயும் இடமான பட்டி மண்டபத்தில் அமர்ந்து உங்கள் கொள்கைகளைக் கூறுங்கள்! பகைவர்களாயிருப்பினும் அவர்களிடம் கோபம் காட்டாதீர்கள்! சண்டையும் பிடிக்கா தீர்கள்! ஒதுங்கியிருங்கள். இவ்வாறு திருவிழாக் காலத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறையைப் பற்றி முரசறைவோன் கூறுகின்றான். நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறா வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை ஆறுஅறி மரபின் அறிந்தோர் செய்மின்! தண்மணல் பந்தரும், தாழ்தரு பொதியிலும் புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின்! ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள் பட்டிமண் டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின்! பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும் செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்! (காதை 1, வரி 54-63) இவ்வடிகளால், இந்திரவிழாக் காலத்திலே, காவிரிப்பூம் பட்டினத்திலே பல மதத்தினரும் கூடியிருந்தனர் என்பதை அறியலாம். இந்திரவிழா நடத்துவது பற்றி ஆலோசித்து முடிவு செய்த கூட்டத்திலே பல மொழி பேசும் மக்களும் கூடியிருந்தனர். இதனால் மொழி வேற்றுமையும் பாராட்டப்படவில்லை என்பதை உணரலாம். காவிரிப்பூம்பட்டினத்தின் பழம்பெயர் சம்பாபதி. இமயத்திலே இருந்த சம்பாபதி என்னும் தெய்வம் தென்றி சைக்கு வந்தாள். இந்நகரத்தில் நாவல் மரத்தின்கீழ் நின்று தவம் புரிந்தாள். இந் நகரத்திலேயே குடி கொண்டாள். பிற்காலத்தில் தான் காவிரி நதி தோன்றியபின், காவிரிப்பூம்பட்டினம் என்ற பெயர் உண்டாயிற்று. இச்செய்தி மணிமேகலையின் பதிகத்தில் காணப்படுகின்றது. இதுவும் பாரதநாட்டு ஒற்றுமையைக் காட்டும் செய்தியாகும். வடநாட்டிலிருந்து வந்த தெய்வத்தைத் தமிழக மக்கள் தம் தெய்வமாகப் போற்றினர் அன்றோ? வடநாடும் தென்னாடும் மாருதவேகன் என்பவன் ஒரு விஞ்சையன். அவன் காவிரிப்பூம்பட்டினத்திற்று இந்திர விழாவைக் காண வந்தான் இச்செய்தியை, மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன் திருவிழை மூதூர் தேவர்கோற்கு எடு;தத பொருவிழாக் காணும் பெற்றியின் வருவோன் (காதை 3, வரி 33-35) என்ற அடிகளில் காணலாம். மாதவியின் தோழி சுதமதி. அவள் வட நாட்டினன், வடநாட்டு அந்தணன் ஒருவனது மகள். அவள் தந்தை குமரி முனைக்குச் சென்று கடலாடுவதற்காகத் தென்னாட்டுக்கு வந்தான். காவிரிப்பூம்பட்டினத்தை அடைந்தான். காவிரியிலும் நீராடினான். இச்செய்தி ஐந்தாவது காதையில் கூறப்பட்டுள்ளது. வாரணாசியிலே அபஞ்சிகன் என்னும் அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் வேதம் ஓதுவிக்கும் உவாத்தியன். அவன் மனைவி சாலி என்பவள் கணவனுக்குத் துரோகம் செய்து கற்பிழந்தாள். கருவுற்றாள். அவள் தன் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளக் குமரி நீராடும் பொருட்டு தமிழ்நாட்டை நோக்கி வந்தாள். இக்கதை 13-ஆவது காதையிலே காணப்படுகின்றது. இமயமலையில் சேடி என்னும் வித்தியாதரர் உலகம் உண்டு. அவ்வுலகில் காஞ்சனபுரம் என்னும் நகரில் வாழ்ந்த காஞ்சனன் என்பவனும் அவன் மனைவி காயசண்டிகை என்ப வளும் தமிழநாட்டுப் பொதியமலை வளத்தைக் காண வந்தனர். இக் கதை பதினேழாவது காதையில் காணப் படுகின்றது. இக்கதைகளால், கங்கையையும், இமயத்தையும் தமிழர்கள் புனிதமானவைகளாகக் கருதியதைப் போலவே தமிழகத்தையும்., பொதியத்தையும், குமரியையும், காவிரியையும் வடநாட்டினர் புனிதமானவைகளாகக் கருதினர் என்பதை அறியலாம். உதயகுமரனுடைய பழம்பிறப்புக் கதை, கோவலன் கண்ணகி யின் பழம் பிறப்புக் கதை இவைகள் வடநாட்டு தென்னாட்டுத் தொடர்புகளைக் குறிப்பவைகள். மணிமேகலை, மாதவி, சுதமதி, இவர்களின் பழம்பிறப்புக் கதைகளும் வடநாட்டுத் தென்னாட்டுத் தொடர்புள்ளவைகள்தாம். வடமொழிக் காவியங்கள் பாரதநாடு முழுவதும் அறிந்த வடமொழிக் கதைகளும் வடநாட்டுக் கதைகளும் மணிமேகலையில் காணப்படுகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஐந்து வனங்களில் சம்பாதி வனம் ஒன்று. வெம்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த சம்பாதி இருந்த சம்பாதி வனமும், (காதை 3, வரி 53-54) சூரியனது கொடிய வெப்பத்தால், விரித்த சிறகுகளை இழந்த சம்பாதி என்பவன் இருந்த சம்பாதி வனமும், குரங்கு செய்கடல் குமரிஅம் பெருந்துறை (காதை 5, வரி 37) குரங்குகளால் அணை கட்டப்பட்ட கடலாகிய குமரி என்னும் அழகிய பெரிய துறை. நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல்அரு முந்நீர் அடைத்த ஞான்று. (காதை 17, வரி 9-10) திருமால் மயக்கமுற்று, நிலத்திலே மனிதனாகப் பிறந்து, இலங்கைக்குச் செல்வதற்காக, வலிமை பொருந்திய கடலை அணையிட்டு அடைத்த காலத்தில், மீட்சி என்பது இராமன் வென்றான் என மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல் (காதை 27, வரி 53 - 54) மீட்சியென்பது யாதென்றால், இராமன் வெற்றி பெற்றான் என்று கூறியதனால், பெருமையற்ற இராவணன் தோற்றான் என்பதை உணர்வதாகும். இவைகள் இராமாயணக் கதைப் பகுதிகளை உணர்த்தும் மணிமேகலை அடிகள். வாணன் பேரூர் மருகிடைத் தோன்றி நீள்நிலம் அளந்தோன் மகன்முன் ஆடிய பேடிக் கோலத்துப் பேடு. (காதை 3, வரி 123-125) வாணாசுரனது பெரிய ஊரின் வீதியிலே இப்பெரிய நிலத்தை ஒரே அடியால் அளந்த திருமாலின் மகன் காமன். பேடிக் கோலத்துடன் தோன்றினான். பேடு என்னும் ஒருவகைக் கூத்தாடினான். இது பிரத்தியும்நன், பேடிக்கோலம் பூண்டு வானாசுரனது நகர வீதியிலே சென்று அடியதைக் குறித்தது. நெடியோன் குறள்உரு ஆகி நிமிர்ந்துதன் அடியால் படியை அடக்கி அந்நாள் (காதை 19, வரி 51-52) திருமால் வாமன வடிவமாகி வந்து, திரிவிக்கிரமனாக வளர்ந்து தனது ஓரடியால் இந்நில முழுவதையும் அடக்கிய அக்காலத்தில், மேலே காட்டிய இரண்டு கதைகளும், பாகவத புராணத்தை நினைப்பூட்டுகின்றன. விராடன் பேரூர் விசயனாம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின். (காதை 3, வரி 146-147) விராடனது பெரிய ஊரிலே அருச்சுனனாகிய பேடியைக் காணுவதற்காக வந்து சுற்றிக் கொண்டு ஓவென்று முழங்கும் மக்களைப்போல. இவ்வடிகள் பாரதக் கதையைக் குறித்தன. கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய உஞ்சையில் தோன்றி ஊகி அந்தணன் உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு பரிவுறு மாக்களின் - (காதை 15, வரி 61-66) வெற்றிக்கொடி பறக்கும் கோசம்பி நகரத்து மன்னன், சிறந்த வீரன். சிறந்த தேர்ப்படையை உடையவன்; உதயணன் என்பவன். அவனை அவந்தி நாட்டு உச்சியினி நகரத்து மன்னன் பிரச்சோதனன் என்பவன் வஞ்சகத்தால் சிறைப்படுத்தினான். உதயணனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக அவனுடைய அமைச்சன் யூகி என்னும் அந்தணன் மாறு வேடங் கொண்டு உச்சயினியில் தோன்றினான். அவனுடைய உருவத்துக்கு ஒவ்வாத துன்பநோயைக் கண்டு அவனிடம் இரக்கங்காட்டிய மக்களைப்போல. இது உதயண குமார காவியத்தில் உள்ள கதை. மேலே காட்டியவைகளால், மணிமேகலை காலத்திலே இராமாயணம், பாகவதம், பாரதம், உதயணன் கதை முதலி யவைகள் பாரத நாடெங்கும் வழங்கின. தமிழ் நாட்டினர் அக்கதைகளைப் படித்தனர். பாராட்டினர் என்பதை அறியலாம். பிறநாட்டுத் தொடர்புகள் முந்தை முதல்வி முதியாள் இருந்த குச்சரக் குடிசை தன்அகம் புக்கு. (காதை 18, வரி 144-145) ஆதிகாலத்துப் பழந் தெய்வமாகிய சம்பாபதி இருந்த கூர்ச்சர தேசத்துச் சிற்ப வேலைப்பாடு பொருந்திய குச்சரக் குடிசை என்னும் கோயிலுள் புகுந்தது. குச்சரக் குடிசை குமரியை மரீஇ (காதை 18, வரி 152) குச்சரக் குடிசை என்னும் பெயர்பெற்ற கோயிலிலே உள்ள சம்பாபதித் தெய்வத்தை அடைந்து, மகத வினைஞரும், மராட்டக் கம்மரும், அவந்திக் கொல்லரும், யவனத் தச்சரும், தண்டமிழ் வினைஞர் தம்மொடும் கூடிக் கொண்டுஇனிது இயற்றிய கண்கவர் செய்வினை ........................... மண்டபத்து. (காதை 19, வரி 107-111) மகத நாட்டிலிருந்து வந்த இரத்தின வேலைக்காரர்கள், மகாராஷ்டிர தேசத்திலிருந்து வந்த சிற்ப வேலைக்காரர்கள், அவந்தி நாட்டிலிருந்து வந்த கொல்லர்கள், யவன தேசத்தி லிருந்து வந்த தச்சர்கள், இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு வேலைக்காரர்களுடன் சேர்ந்து வேலை செய்தனர். பல கருவி களைக் கொண்டு காண்போர் கண்களைக் கவரும்படி நன்றாகக் கட்டப்பட்ட மண்டபம். மேலே கூறியவைகளைக் கொண்டு, தமிழகத்திலே காவிரிப்பூம்பட்டினத்திலே பல நாட்டுக் கலைஞர்களும் கூடி யிருந்தனர் என்பதை அறியலாம். கூர்ச்சர நாட்டுச் சிற்பிகள், மகத நாட்டு மாணிக்க வேலைக்காரர்கள், மராட்டிய நாட்டுக் கம்மாளர்கள், அவந்தி நாட்டு கொல்லர்கள், யவன தேசத்துத் தச்சர்கள் ஆகியோர் தமிழகத்தில் வாழ்ந்ததைக் காண்கின்றோம். பல மொழியினர் தொடர்பு பரந்துஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும். (காதை 1, வரி 16) எங்கும் பரந்து ஒன்றாகக் கூடியிருக்கின்ற பல மொழி பேசும் மக்களும், அங்கையின் ஏந்திய அமுத சுரபியை வைத்துநின்று எல்லா உயிரும் வருகஎனப் பைத்துஅரவு அல்குல் பாவைதன் கிளவியின் மொய்த்த மூஅறு பாடை மாக்களின். (காதை 28, வரி 218-221) மணிமேகலை தன் உள்ளங்கையிலே அமுதசுரபியை ஏந்தி நின்றாள். எல்லா உயிர்களும் உணவுண்ண வருக என்று கூவினாள். உடனே பதினெட்டு மொழிகளைப் பேசும் பல திறப்பட்ட மக்களும் வந்து மொய்த்தனர். மேலே காட்டிய இரண்டு உதாரணங்களும், காவிரிப் பூம்பட்டினத்திலும் காஞ்சியிலும் பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர் என்பதை அறிவித்தன. இவைகள் மணிமேகலை காலத்திலே, தமிழகத்திலே பல நாட்டு மக்கள் வாழ்ந்தனர்; பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்ந்தனர்; பல்வேறு கொள்கை யுடையவர்கள் வாழ்ந்தனர்; நாகரிகத்திலே வேறு பட்டவர்கள் வாழ்ந்தனர்; ஆனால் அவர்கள் அனைவரும் சண்டை சச்சர வின்றி மனிதத் தன்மையுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தனர் என்ற உண்மையையும் உணர்த்துகின்றன. ஆதிரையின் கணவனாகிய சாதுவன் என்னும் வணிகன், வாணிகம் செய்யக் கப்பலேறிச் சென்றான். அவன் நாகர் பேசும் பாஷையை நன்றாக அறிந்திருந்தான். ஆபுத்திரன், சாவக நாட்டு மக்கள் பசியால் மடிகின்ற செய்தியைக் கேட்டான். அந்நாட்டு மக்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டுப் போனான். அவன் வியாபாரத்தின் பொருட்டுப் பிறநாடு செல்லும் வணிகர்கள் செல்லும் கப்பலிலே போனான். மணிமேகலை மணிபல்லவத் தீவுக்குச் சென்றாள். புண்ணியராசனைக் காணச் சாவகம் சென்றாள். இக்குறிப்புகள் தமிழர்கள் பல மொழிகளை அறிந்தி ருந்தனர்; பல நாட்டினருடன் வியாபாரம் புரிந்து வந்தனர் என்பதை உணர்த்துகின்றன. புத்தருடைய பாதங்கள் அமைந்த பீடிகை காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்தது. இலங்கைத் தீவிலே இருந்தது. மணி பல்லவத் தீவிலே இருந்தது. இவைகளைப் புத்தர்கள் வழிபாடு செய்தனர். புத்த சாரணர்கள் பாரத நாடு முழுவதும் சுற்றி வந்தனர். புத்த தருமத்தை மக்களுக்குப் போதித்து வந்தனர். மணிமேகலையில் காணப்படும் இச் செய்திகள் பாரதநாட்டு ஒற்றுமையைக் காட்டுகின்றன. புத்த மதம், நாடு மொழி இன பேதம் இல்லாம் பல நாடுகளிலும் பரவியிருந்த உண்மையையும் உணர்த்துகின்றன. தமிழும் வடமொழியும் பழைய தமிழ் நூல்களிலே, மணிமேகலையில் உள்ள அளவு வடசொற்கள் கலந்த வேறு நூல்களைக் காண முடியாது; வடமொழிக் கருத்துக்களும், கதைகளும் கலந்து கிடக்கின்றன. தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை, பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை ஆகிய இரண்டு காதைகளைப் படித்தாலே போதும்; வடசொற்கள் பலவற்றையும், வடநூல் கருத்துக்கள் பலவற்றையும் காணலாம். நாம் காண்பவை இதுவரையிலும் சொல்லியவைகளைக் கொண்டு கீழ் வரும் உண்மைகளை அறியலாம்: தமிழ் நாட்டிலே பாரதநாட்டுப் பொதுத் தெய்வமாகிய இந்திரனுக்கு விழா நடைபெற்றது. பாரத நாட்டினரால் பொதுவாகப் போற்றப்படும் தெய்வங்கள் தமிழ் நாட்டினராலும் வணங்கப்பட்டன. வடநாட்டினர் தமிழ்நாட்டுக்குத் தீர்த்த யாத்திரிகர் களாகவும் தலயாத்திரிகளாகவும் வந்தனர். வடநாட்டுக் கதைகள் பலவற்றையும் தமிழ் நாட்டினர் அறிந்திருந்தனர். பாரத நாட்டினர் அனைவராலும் போற்றப் பட்ட இராமாயணம் முதலிய கதைகள் தமிழ் நாட்டிலும் வழங்கி வந்தன. பல நாட்டுக் கலைஞர்களும், பல மொழியினரும் தமிழ் நாட்டில் கூடியிருந்தனர்; உழைத்தனர்; ஒன்றுபட்டு வாழ்ந்தனர். தமிழர்கள் பல மொழிகளை அறிந்திருந்தனர். பல நாட்டினருடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; பல நாடுகளுக்கும் சென்று வந்தனர். புத்த தர்மம் பாரதநாடு முழுவதும் பரவியிருந்தது; பரப்பப் பட்டும் வந்தது. தமிழகத்திலும் புத்த மதம் பரவி யிருந்தது. வடமொழி நூல்களைத் தமிழர்கள் வெறுக்கவில்லை; வடமொழியின் மேலும் தமிழர்கள் வெறுப்புக் காட்டவில்லை. தமிழர்கள் யாரையும் வெறுக்காமல் எல்லோருடனும் ஒன்றுபட்டு வாழ்ந்தனர். மணிமேகலையால் இவ்வுண்மைகளை அறியலாம். மணிமேகலை காலத்தில் தமிழகத்தில் இந்த ஒற்றுமை குடி கொண்டிருந்தது. இதில் ஐயத்திற்கு இடம் இல்லை. நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் மணிமேகலை காலத்திலே இந் நாட்டிலே பல தெய்வங் களை மக்கள் வணங்கி வந்தனர். அந்தரி என்னும் பெயருள்ள துர்க்கை, சம்பாபதி, மதுராபதி, கன்னியாகுமரியில் உள்ள குமரித்தெய்வம், சிந்தாதேவி (சரவதி), மணிமேகலா தெய்வம், தீவதிலகை, விந்தா கடிகை, இந்திரன், கந்தில்பாவை, சிவபெரு மான், திருமால், பலதேவன், பிரமன், முருகன், மன்மதன், மகாப் பிரம்மா, சதுக்கபூதம், அருவப் பிரம்மர் நால்வகையினர், உருவப் பிரம்மர் பதினாறு வகையினர் ஆகிய தெய்வங்கள் மக்களால் வணங்கப்பட்டன. மக்களால் வணங்கப்பட்ட தெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன; உருவச் சிலைகள் இருந்தன. அவைகளுக்குத் தினப் பூசைகளும், ஆண்டு விழாக்களும் நடைபெற்று வந்தன. ஆண் தெய்வங்களை விடப் பெண் தெய்வங்களே மிகுந்த சக்தி படைத்தவைகளாக இருந்தன. மக்களும் பெண் தெய்வங் களையே மிகுதியாக வணங்கி வந்தனர் எனறு ஊகிக்க இடம் உண்டு. இவைகளை மணிமேகலையிலிருந்து அறியலாம். 2. நகரங்கள், தீவுகள், மலைகள், ஆறுகள் இவற்றைத் தெய்வங்கள் காத்து வந்தனர். சம்பாபதி, காவிரிப்பூம் பட்டினத்தக் காவல் தெய்வம், மதுராபதி, மதுரையின் காவல் தெய்வம், தீவதிலகை, மணிபல்லவத்தின் காவல் தெய்வம், விந்தாகடிகை, விந்தமலையின் காவல் தெய்வம், குமரி, குமரியாற்றின் காவல் தெய்வம், காவல் தெய்வங்கள் எல்லாம் பெரும்பாலும் பெண் தெய்வங்களாகவே இருந்தன. 3. அந்தணர்கள் வேத வேள்விகளைச் செய்வதால் தான் மழை பெய்கின்றது என்ற நம்பிக்கை இருந்தது. மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் (காதை 5) என்பது மணிமேகலை. அழல் என்பது வேத வேள்வியைக் குறிக்கும். தமிழகத்தில் வேத வேள்விகள் நடைபெற்று வந்தன. புத்த மதத்தினர் அவ் வேள்விகளை ஆதரிக்கவில்லை; எதிர்த்தனர். இதனை ஆபுத்திரன் கதையால் அறியலாம். 4. ஒரு பெண்ணை, அவள் கணவனைத் தவிர மற்றொ ருவன் கண்டு காதலிப்பானாயின் அப்பெண், கற்பிழந்தவள். கற்புள்ள மகளிர் பிறர் நெஞ்சு புகார். இதுவே தமிழ் மகளிரின் சிறந்த கற்பு என்று நம்பப்பட்டது. இதனை மருதியின் கதையால் எடுத்துக் காட்டுகிறது மணிமேகலை. 5. மணம் புரிந்து கொண்டு, இல்லறத்தில் வாழ்ந்து புத்திரனைப் பெறாதவர் புண்ணிய லோகத்தை அடைய மாட்டார். இது தமிழகத்து மக்களின் நம்பிக்கை. பத்தினி இல்லோர் பலஅறம் செயினும் புத்தேள் உலகம் புகாஅர். (காதை 22) என்பதனால் இதை அறியலாம். புத்த மதத்தினர் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. வானுலகைப் புதல்வர் தருவதில்லை; தாம் செய்யும் அறமே தமக்குத் துணை செய்வதாகும் என்று கூறி வந்தனர். இதனை, புத்தேள் உலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுத்துணை யாவது (காதை 22) என்ற அடிகளால் அறியலாம். 6. தேவர்கள் தம்முடைய உருவை மறைத்துக் கொள்ளு வார்கள். மக்கள் உருவின் தோன்றி மாநிலத்தில் நடமாடுவர். கரந்து உருவெய்திய கடவுளாளர் (காதை 1) என்ற தொடரால் இதனை அறியலாம். தேவர்கள் உருவம் ஒளியுடன் விளங்கும். 7. செங்கற்களைக் கொண்டுதான் பெரிய கட்டிடங்களைக் கட்டி வந்தனர். காவிரிப்பூம்பட்டினத்துக் கட்டிடங்கள் எல்லாம் செங்கற்களால்தான் கட்டப்பட்டிருநதன. சுடுமண் ஓங்கிய நெடுயீநலை மனை (காதை 3) என்பதனால் இதனை அறியலாம். 8. பெரிய வீடுகளின் முகப்பிலே பலவிதமான சிற்ப வேலைகள் செய்யப்பட்டிருக்கும். அவைகள் சுண்ணாம்பால் செய்யப்பட்டிருக்கும் பலவகையான உயிர்களின் உருவங்களை அச் சிற்பங்களிலே காணலாம். கைதேர்ந்த சிற்பிகளால், காண் போர் கண்களைக் கவருமாறு வீடுகளிலே சிற்ப வேலைகளைச் செய்து வைக்கும் வழக்கம் உண்டு. இதனை 3ஆவது காதையில் காணலாம். 9. செல்வம் படைத்தவர்கள், பரத்தையரின் நட்பை விரும்பி வாழ்ந்தனர். இவ்வழக்கத்தை அவர்கள் பெருமையாகவே எண்ணினர். இழிவாகக் கருதவில்லை. (காதை 4) 10. பணம் படைத்த வணிகர்கள் - வைசியர்கள் - அரசனால் எட்டி என்னும் பட்டம் பெற்றுப் பெருமையுடன் வாழ்ந்தனர். அந்தப் பட்டம் பெற்றதற்கு அடையாளமாக அவர்களுக்குப் பொன்னால் செய்த மலர் அளிக்கப்படும். (காதை 4-22) 11. சுடுகாட்டிலே அவரவர்கள் பிறந்த வருணத்திற்கு ஏற்றபடி, அருந்தவர், அரசர், பத்தினிப் பெண்டிர் இவர்களுக் காகச் சமாதிகள் எழுப்பப்பட்டன. (காதை 6) 12. காவிரிப்பூம்பட்டினத்துச் சுடுகாட்டிலே, இறந்து போன பிணங்களைச் சுட்டெரிப்பார்கள்; ஆழக் குழி தோண்டி, அதிலே போட்டுப் புதைப்பார்கள். பள்ளம் கண்ட இடத்திலே பதுக்கி வைப்பார்கள்; தாழியில் வைத்து மூடிப் புதைப்பார்கள். இத்தகைய வழக்கங்கள் இருந்தன. இதனால் பலதிறப்பட்ட நாகரிகம் உள்ள மக்கள் காவிரிப்பூம்பட்டினத்திலே இருந்தனர் என்று தெரிகிறது. (காதை 6) 13. தம்முயிரைத் தாமே பலி கொடுக்கும் காபாலிக மதத்தினரும் செத்த பிணத்தைத் தின்னும் மக்களும தமிழகத்தில் இருந்தனர். (காதை 6) 14. நாகர் தீவிலே வாழ்ந்த மக்கள் நாகரிகம் அற்றவர்கள்; உடை உடுத்தாதவர்கள்; நரமாமிசம் உண்போர்; மனிதர்களை அடித்துக் கொன்று தின்று விடுவார்கள். இவர்களை நக்க சாரணர் நாகர் என்று குறிக்கிறது மணிமேகலை. நக்கம் என்றால் நிருவாணம் என்று பொருள். நக்க சாரணர் நாகர் - உடையில்லாமல் திரியும் நாகர்கள். (காதை 16) 15. ஆண்கள் பரத்தையர் நட்பை நாடித் திரிவதைப் பெண்கள் விரும்பவில்லை; வெறுத்தனர். ஆயினும் அவர்களால் ஆண்களின் செய்கையைத் தடுக்க முடியவில்லை. பரத்தையர் மீது காதல் கொண்டு திரிவோர் தம் செல்வத்தையிழந்து வறுமையால் வாடுவார்கள். இவ் வுண்மையைச் சாதுவன் கதையும், கோவலன் கதையும் எடுத்துக் காட்டுகின்றன. 16. செல்வர் வீட்டுக் குழந்தைகள் பகல் பொழுதிலே சிறு தேர் இழுத்து விளையாடுவார்கள். அவர்கள் விளையாட்ட யர்ந்த களைப்பால், படுக்கையிலே படுத்து நன்றாக உறங்கு வார்கள். அப்பொழுது செவிலித்தாயர் பேய்க்கு பகையான வேப்பிலை, வெண்சிறு கடுகு இவைகளைக் குழந்தைகளின் தலையைச் சுற்றி எறிவார்கள்; வாசனைப் புகை காட்டுவார்கள். (காதை 7) 17. குழந்தைகளுக்கு ஐம்படைத் தாலி என்னும் ஆபரணத் தை அணிவிப்பார்கள். ஐம்படைத் தாலி என்பது காத்தல் கடவுளாகிய திருமாலின் ஐந்து படைகளும் அமைந்தவை. சங்கு, சக்கரம், தண்டு, வாள், வில் இவைகளே திருமாலின் ஐம்படைகள் (காதை 3-7) 18. வடநாட்டிலே பாபம் செய்தவர்கள், தங்கள் பாவத்தைக் கழுவிக்கொள்ளத் தென்னாட்டுக் குமரிக்கு வந்து நீராடுவார்கள். 19. விபச்சாரத்தால் பெற்ற குழந்தைகளை எங்கேயாவது எறிந்து விடுவதன் மூலம் தங்கள் விபசாரம் வெளிப்படாமல் மறைக்க முயல்வார்கள். 20. குழந்தைகள் பிறந்தால் அதை உறவினர்க்கு அறிவித்துக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. 21. பசுக்கள் மேய்வதற்காக அரசாங்கத்தால் தனியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. பால் தரும் பசுக்கள், நன்றாக மேய்ந்து கொழுத்திருந்தால்தான் நல்ல பால் ஏராளமாகக் கிடைக்கும். பாலும், நல்ல சுவையும் சத்தும் நிறைந்ததாக இருக்கும். இதற்காகவே அரசாங்கத்தால் மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப் பட்டிருந்தன. 22. மக்களுக்குச் சிறந்த உணவாக இருப்பது பசும் பால். இதற்காகவே பசுக்கள் புனிதமாகக் கருதப்பட்டன. போற்றி வளர்க்கப்பட்டன. இத்தகைய பசுக்களைக் கொன்று வேள்வி செய்வது இரக்கமற்ற செயல். மேலே காட்டிய 18,19,20,21,22 ஆகிய செய்திகளைப் பற்றிக் காதை 13-ல் காணலாம். 23. நாட்டிலே செல்வம் கொழித்திருக்கும் காலத்தில் சோம்பேறிகள் மிகுந்திருப்பர். தீய நடத்தையுள்ள காம வெறி யர்கள், பரத்தையரை நாடித் திரிவோர். பிறரை இகழ்ந்து கடுஞ்சொற் பேசுவோர், வேலையில்லாமல் சும்மா சுற்றிக் கொண்டிருப்போர், இவர்கள் எல்லாம் கவலையின்றி வாழ்வார் கள். இவர்கள் பிறரை இகழ்ந்து பரிகசித்துப் பேசி மகிழ்வார்கள். சூதாடிக் கூட்டங்களும் பெருகி யிருக்கும்; வீண் பேச்சுப் பேசும் வம்பர் கூட்டங்களும் வளர்ந்திருக்கும். (காதை 14) 24. தமிழ் நாட்டினர், கப்பலேறிக் கடல் கடந்து, பிற நாடு களுக்குச் சென்று வாணிகம் புரிந்து பொருளீட்டி வாழ்ந்தனர். (காதை 14) 25. அரச குலத்திலே பிறந்தவர்கள் போரிலேதான் மடிய வேண்டும். பகையரசர்களை வென்று அவர்கள் நாட்ட்த் தமது நாடாக்கிக் கொண்ட வீரம் பொருந்திய மன்னர் களாயினும், அவர்கள் தமது இல்லத்தில் இயற்கையாக இறந்தால், அவர் களுடைய உடம்பை வாளால் பிளந்த பின்பே அடக்கம் செய்வார்கள். சும்மா அப்படியே உடலை அடக்கம் செய்தால் அவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைக்காது. வயதேறி மூத்துச் சாவது அரசர் குடிக்கு ஏற்றதன்று. இத்தகைய நம்பிக்கை குடிகொண்டிருந்தது. (காதை 23) 26. பத்தினிப் பெண்டிர்க்குக் கோயில் கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அவர்கள் பத்தினிப் பெண்டிரின் உருவச் சிலையை கோயிலில் வைத்து வணங்கி வந்தனர். (காதை 26) 27. கோயில்களுக்குத் திருவிழா நடைபெறும் காலங்களில் பரத்தையர் நடனம் ஆடுவார்கள். மதவாதிகளும், புலவர்களும மக்களுக்கு அறிவுரைகளைப் போதிப்பார்கள். (காதை 1) 28. மணிமேகலை காலத்தில் பெண்கள் இழிவாகத் தான் எண்ணப்பட்டனர். அவர்களுடைய சொற்களுக்கு மதிப்பில்லை. அவர்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டியவர்கள் என்றே எண்ணப்பட்டனர். அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ? (காதை 4) புத்திமதி, அமைதி, அரச நீதி இவைகளைப் பற்றி வளையலை அணிந்த பெண்கள் எடுத்துக் கூறும் வழக்கம் உண்டோ? மண்டமர் முறுக்கும் களிறுஅனை யார்க்குப் பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ? (காதை 18) போரிலே பகைவரை அழிக்கும் ஆண் யானை போன்ற ஆண் களுக்குப் பெண்கள் கூறத்தகுந்த பெரிய அறிவுரைகள் உண்டோ? இவைகளால், பெண்கள் பிறருக்கு அறிவுரை கூறத் தகுந்தவர்களல்லர்; அரசியலில் கலந்து கொள்ளுவதற்கும் உரிமையுள்ளவர்கள் அல்லர்; அவர்கள் ஆண்களைக் காட்டிலும் இழிந்தவர்கள் என்ற கொள்கை நிலவியிருந்ததைக் காணலாம். 29. பண்டைத் தமிழர்கள் காதல் மணத்தையே சிறந்தது என்று கருதினர். முதலில் காதலர்கள் களவு மணம் புரிந்து கொள்ளுவர். (காந்தருவம் போன்றது). அவர்களுடைய களவொ ழுக்கம் வெளிப்பட்டால் அது கற்பு மணமாகும். அல்லது களவு வெளிப்படுவதற்கு முன், காதலர் இருவரும் பலரும் அறிய மணம் புரிந்து கொள்ளுவர்; அல்லது அவர்களுக்குப் பெற்றோரால் மணம் செய்து வைக்கப்படும். காதல் மணம் என்னும் களவு மணம் இல்லாமல் கற்பு மணம் நடைபெறுவதில்லை. இது பழந் தமிழ்நாட்டு வழக்கம். மணிமேகலை காலத்தில் களவு மணம் வெறுக்கப்பட்டது. மணம் புரிந்து கொள்ளுவதற்கு முன், பருவமடைந்த ஒரு பெண்ணும், ஒரு ஆணும், அவர்கள் உறவினராயிருந்தாலும் நெருங்கிப் பழகுவதை மக்கள் பழித்தனர்; வெறுத்தனர். காந்தர்வ மணமுறையை மக்கள் இகழ்ந்தனர். தருமதத்தன் என்பவனும் அவனுடைய மாமன் மகள் விசாகையும் இளம் பருவத்தினர். நெருங்கிப் பழகினர். அதனால் அவர்களைக் காந்தருவ விவாகம் செய்து கொண்டனர் என்று ஊரார் பழித்தனர். ஆதலால் விசாகை இப் பிறப்பில் தருமதத் தனை மணந்து கொள்வதில்லை என்று உறுதி பூண்டாள். தருமதத்தனும் விசாகையைத் தவிர வேறு பெண்ணை மணப்பதில்லை என்று விரதம் பூண்டான். இருவரும் மணம் இல்லாமலே பிரிந்து வாழ்ந்தனர் (காதை 22) இக் கதையால் பழந்தமிழர் நாகரிகம் பழிக்கப்பட்டது. 30. தெய்வங்களுக்கு உயிர்ப் பலியிடுவதை மணிமேகலை ஆதரிக்கவில்லை. மலர்ப் பலியிட்டு வணங்கியதாகவே கூறப்படு கின்றது. 31. மக்கள் மந்திரத்திலே நம்பிக்கை கொண்டிருந்தனர். நரகம், சுவர்க்கம் உண்டென்று நம்பினர். பாவம் புரிந்தோர் நரகம் பெறுவர். ஒழுக்கந் தவறி நடப்போர் தெய்வ தண்டனைக்கு ஆளாவார்கள். வினைப்பயன் அனுபவித்து ஆக வேண்டும். மறு பிறப்பு உண்டு. இந் நம்பிக்கைகள் மக்களிடம் குடிகொண்டிருந்தன. இவை போன்ற பல செய்திகளை மணிமேகலையின் வாயிலாக அறியலாம். மணிமேகலை காலத்தில் இந்நாட்டு மக்களிடையிலே பரவியிருந்த கொள்கைகள் என்னென்ன? இந்நாட்டில் நிலவியிருந்த நாகரிகம் யாது? என்பவைகளை இந்நூல் நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இலக்கியச் சுவை காவிய அமைப்பு மணிமேகலை மதக் கொள்கைகளை கூறும் நூல்தான்; அறநெறிகளை மக்களுக்கு அறிவுறுத்தும் நூல்தான்; ஆயினும் இனிமை நிறைந்த தமிழ் இலக்கியம்; சிந்தையைக் கவரும் செந்தமிழ்க் காவியம். மணிமேகலையின் ஆசிரியர் தமிழ்ச் சுவை அறிந்தோர் அனைவரும் பாராட்டும் வகையிலே தம் கவிதையை அமைத்திருக்கின்றார். கதை எழுதுகின்ற எழுத்தாளன் தொடக்கத்தில் கதையை தொடங்காமல், அல்லது கதை சம்பந்தமான நிகழ்ச்சியைத் தொடங்காமல். வேறு எதைப் பற்றியாவது எழுதிக் கொண்டு போனால் அக்கதையைப் பலர் படிக்க விரும்புவதில்லை. இரண்டொரு பக்கங்களைப் படிப்பதற்குள்ளேயே அலுப்புத் தட்டிப் புத்தகத்தை மூடிவைத்து விடுவார்கள். வாசகர்களின் மனப்போக்கைஅறிந்த எழுத்தாளன் எடுத்த எடுப்பில் கதையைத் தொடங்குவான். அல்லது கதையுடன் தொடர்புள்ள செய்தியைத் தான் சொல்லுவான். தனது கற்பனைகளை-கருத்து களை - கதைகளின் இடையிடையே பொருத்தமான இடத்திலே புகுத்துவான். படிப்போர் மனத்திலே படிய வைப் பான். இது இக்காலத்தில் உள்ள திறமையுள்ள எழுத்தாளன் இயல்பாகும். பழைய காவியங்களையோ, புராணங்களையோ பார்த் தால் இந்த முறையைக் காண முடியாது. முதலிலே கடவுள் வாழ்த்து, அதன்பின் நாட்டு வளம், அதை அடுத்து நகரச் சிறப்பு, நகரத்தில் உள்ள ஒவ்வொரு வீதியின் அமைப்பு இவைகளைக் கூறும். இவைகள் கூறி முந்த பிறகு தான் கதை தொடங்கும். சிந்தாமணி, கம்பன் காவியம் போன்ற சிறந்த நூல்கள் கூட இந்த முறையில்தான் அமைந்திருக்கின்றன. புராண நூல்கள் அனைத்தும் இந்த முறையில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இந்தப் பழைய முறையைப் பின்பற்றவில்லை. புதிய முறைக்கு வழிவகுத்து விட்டன. பார்த்த, கேட்ட ஒன்றையே மீண்டும் மீண்டும் பார்க்க, கேட்க நாம் விரும்புவதில்லை. இதைப்போலவே கதையிலே ஆர்வம் உள்ளவர்கள் நாடு நகர வர்ணனைகளைப் படித்துக் கொண்டிருப்பதில் சலிப்படைவார்கள். மக்களின் இத்தகைய மனப்பான்மையை மணிமேகலை ஆசிரியரும், சிலப்பதிகார ஆசிரியரும் நன்றாக அறிந்தவர்கள். ஆதலால் அவர்கள் இக் கால எழுத்தாளர்களைப் போலவே எடுத்தவுடன் கதையைத் தொடங்கியிருக்கின்றனர். சிலப்பதிகாரத்திலாவது முதலில் திங்கள், ஞாயிறு, புகார் நகரம் மூன்றையும் வாழ்த்தும் பாடல்கள் அமைந்திருக்கின்றன. இது கடவுள் வாழ்த்தைப் போன்றது என்று கூறலாம். மணிமேகலையில் இது கூட இல்லை. கதை நிகழ்ச்சிதான் தொடங்கப்படுகிறது. முதல் காதை விழாவறை காதை. (பறை அடிப்போன், இந்திர விழாவைப் பற்றிப் பறையறைந்து ஊரார்க்கு அறிவிக்கும் செய்தியே இக் காதையில் பேசப் படுகின்றது.) இந்திர விழா நடத்துவதற்கு ஊரார் முடிவு செய்கின்றனர். அச் செய்தியை முரசறைவோன் யானை மீதிருந்து, முரசறைந்து ஊரார்க்கு அறிவிக்கின்றான்; இந்திரவிழாக்காலத்தில் நகர மக்கள் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றான். இதுவே விழாவறை காதையில் விளம்பும் செய்தி. இவ்வாறு தொடங்குகின்றது மணிமேகலைக் கதை. இத்தகைய புதிய முறை செந்தமிழாசான் சாத்தனாரின் சிறந்த புலமையைக் காட்டுவதாகும்; மக்கள் மனப்பான்மையை உணர்ந்திருக்கும மாண்பைக் காட்டுவதாகும்; தாம் கூறத் தொடங்கிய கதையை, மக்கள் மனங்கொள்ளும் வகையிலே எவ்வாறு எடுத்துரைப்பது என்று எண்ணித் துணிந்த பேர் அறிவைக் காட்டுவதாகும். சாத்தனார் கற்பனைத் திறமை படைத்தவர்; இயற்கை நிகழ்ச்சிகளைப் படிப்போர் மனத்திலே பதியும்படி இனிய மொழிகளால் எடுத்துரைக்கும் ஆற்றல் படைத்தவர்; தமது கருத்துக்களை மக்கள் மனத்திலே ஒட்டிக் கொள்ளும்படி தெளிவாக உரைக்கும் சொல்வன்மையுள்ளவர். இவைகளை இந்நூலின் இடையிடையே காணலாம். உவமை நயம் ஒரு கவிஞனுடைய நுண்ணறிவைக் காண, அவன் கூறும் உவமைகளே அளவுகோல். தெரியாத ஒரு பொருளை விளக்கு வதற்குத் தெரிந்த ஒரு பொருளை எடுத்துக் காட்டுவதே உவமையாகும். சிறந்த புலவர்கள் தாம், உவமைகாட்டும் போது இக்கருத்தை மறக்காமல் கையாளுவார்கள். இத்தகைய உவமைகள் நிறைந்த நூல்களே சிறந்த இலக்கியங்களாக இயங்கும். மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் உவமைகள் கூறுவதில் ஒப்பற்றவர். மண்மேகலை சிறந்த இலக்கியச் சுமை அமைந்த காவியமாயிருப்பதற்கு இது ஒரு காரணம். தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர்செங் கையின் கண்ணீர் மாற்றி (காதை 3, வரி 12-13) இவ்வடிகளில், முகத்தைச் சந்திரனுக்கும், கையைத் தாமரைக்கும் உவமிக்கப்பட்டுள்ளது. மாதவி, தன் மகள் மணிமேகலையின் கண்ணீரைத் துடைத்தாள். இதைத்தான், தாமரை மலரானது, குளிர்ந்த சந்திரனை அடைந்தது போல், அழகிய சிவந்த கையினால் முகத்தில் உள்ள கண்ணீரை மாற்றினாள் என்று கூறினார் ஆசிரியர். மதங்கொண்ட யானை ஒன்று; யாருக்கும் அடங்க வில்லை; பாகனையும் மீறித் தன் விருப்பப்படி அலைகின்றது. இதனை காற்றால் பாய் சிதைந்து, மீகாமனுக்கு அடங்காமல், கண்ட திசையில் ஓடும் கப்பலுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர். (காதை 4, 29-40) இருபுறமும் உயர்ந்த மாளிகை வரிசை அமைந்த தெரு; அத் தெருவின் நடுவிலே அரச குமாரனுடைய தேர் ஓடுகின்றது. இதனை, கோடு மழை கிழியும் மதியம்போல மாட வீதியின் மணித்தேர் கடைஇ (காதை 4, வரி 75-56) என்று வர்ணிக்கின்றார் ஆசிரியர். உச்சியிலே மேகத்தைப் பிளந்து கொண்டு செல்லும் சந்திரனைப் போல, மாட வீதியின் நடு வீதியிலே அழகிய தேரைச் செலுத்தினான். இவ் வுவமை பொருத்தமானது. சிறையும் உண்டோ செழும்புனல் மிக்குழீஇ; நிறையும் உண்டோ காமம் காழ்க்கொளின்? (காதை 5, வரி 19-20) வெள்ளம் மிகுந்து விட்டால் அதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது; அதுபோல் காமம் மிகுந்து விட்டால் அதையும் தடுதது நிறுத்திவிட முடியாது. பெருவெள்ளம் அணையை உடைத்துக்கொண்டு வெளியேறுவது போல மிகுந்த காமம் வெட்கத்தைத் தகர்த்து விட்டு வெளிப்படும். இது வெள்ளத்தைக் காமத்துக்கு உவமானமாக எடுத்து ரைத்தது. இயற்கையான உவமை. குணதிசை மருங்கின் நாள்முதிர் மதியமும், குடதிசை மருங்கின் சென்றுவீழ் கதிரும், வெள்ளிவெண் தோட்டுப் பொன்தோ டாக எள்அறு திருமுகம் பொலியப் பெய்தலும். (காதை 5, வரி 119-122) கீழ்த் திசையிலே சந்திரன் தோற்றம்; மேற்றிசையிலே கதிரவன் மறையும் காட்சி. இது வான மங்கையின் முகம் அழகுற விளங்கும் படி, முறையே வெள்ளித் தோட்டையும், பொற்றோட்டையும் அணிந்தது போலக் காணப்படுகிறது. இது வானத்தை முகமாகவும், கீழ்த் திசையிலே தோன்றும் சந்திரனை வெள்ளித் தோடாகவும், மேற்குத் திசையில் மறையும் சூரியனைப் பொன்தோடாகவும் உவமித்துக் கூறிற்று. இக் காட்சியைக் கணகூடாகக் காண விரும்புவோர், கன்னியாகுமரி முனையிலே பௌர்ணமி நாளிலே இன்றும் காணலாம். ஆசு அற விளங்கிய அம்தீம் தண்கதிர் வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல் கள்அவிழ் பூம்பொழில் இடை இடைச் சொரிய. (காதை 6, வரி 6-8) நன்றாக ஒளிவிடும அழகிய இனிய நிலாக்கதிர் வெள்ளிக் குடத்திலே பாலை ஊற்றுவது போல, தேன் பொருந்திய மலர்கள் பூத்திருக்கும் சோலையிலே இடையிடையே சொரிந்தது. இவ் வடிகளில் நிலவைப் பாலாகவும், மலர்கள் பூத்த சோலையை வெள்ளிக் குடமாகவும் உவமிக்கப்பட்டன. ஈன்ற குழவி முகங்கண்டு இரங்கித் தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே, நெஞ்சுவழிப் படூஉம் விஞ்சைப் பாத்திரத்து அகன்சுரைப் பெய்த ஆரூயிர் மருந்து, அவர் முகம்கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன். (காதை 13, வரி 114 - 118) பெற்ற பிள்ளையின் பசியைக் கண்டால், தாய் இரக்கம் காட்டுவாள். உடனே தன் மார்பிலே பால் சுரக்கும்படி செய்து அக் குழந்தைக்கு ஊட்டுவாள். அதுபோல், என் எண்ணத் தின்படி இந்த மந்திர சக்தியுள்ள பாத்திரத்திலே நடுவிடத்திலே போட்ட உணவு, பசித்தவர்களின் முகத்தைக் கண்டு வளரும். அதை அவர்களுக்கு அளித்து, அவர்களின் மகிழ்ந்த முகத்தைக் காண்பதே எனது ஆசை. இவ் வடிகளிலே பசித்தவர்களைக் கண்டால் உணவு சுரகும் பிச்சைப் பாத்திரத்துக்குத் தாயின் முலை உவமானமாகக் கூறப்பட்டுள்ளது. குளன் அணிதாமரை கொழுமலர் நாப்பண் ஒருதனி ஓங்கிய திருமலர் போன்று, வான்தரு கற்பின் மனைஉறை மகளிரில், தான்தனி ஓங்கிய தகைமையள். (காதை 15, வரி 75-78) குளத்தை அழகுபடுத்தும் செழித்த தாமரை மலர்களின் மத்தியிலே, ஒப்பற்று உயர்ந்து காணப்படும் அழகுள்ள ஒரு தாமரை மலரைப் போன்றவள்; மழையைப் பெய்விக்கும் சிறந்த கற்புள்ளவள்; இல்வாழ் பெண்டிருள் உயர்ந்து விளங்கும் மாண்புள்ளவள். இவ் வடிகள் ஆதிரை என்னும் கற்புடையாளின் பெருமை யைக் குறித்தன. சிறந்த தாமரை மலர்களின் இடையிலே உயர்ந்து விளங்கும் ஒரு தாமரை மலர் அவளுக்கு உவமையாக உரைக்கப் பட்டது. இவை போன்றே இன்னும் பல சிறந்த உவமைகளைச் சாத்தனார் கூறுகின்றார். இனி அவர் எடுத்துரைக்கும் இயற்கை யான வருணனைகளைக் காண்போம். கற்பனைத் திறமை ஒரு பெண்ணின் அழகைப் புனைந்துரைக்கும் புலவர்கள், அப் பெண்ணின் ஒவ்வொரு உறுப்பையும் பாரட்டுவார்கள்; அவ்வுறுப்புகளுக்கு உவமை காட்டிப் புகழுவார்கள். கண்ணால் காண முடியாதபடி ஆடைக்குள் மறைந்திருக்கும் அங்கத்தையுட் உவமை காட்டிப் போற்றுவார்கள். இப்படி வர்ணிப்பது அரிதல்ல; எல்லோராலும் எடுத்துரைக்க இயலும். ஆனாலும் அதிகமான சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், சில வரிகளிலே, ஒரு பொருளின் உயர்வைக் கூறுவது அரிது. படிப் போர் உள்ளத்திலே பதியும்படி சுருங்கச் சொல்வது அரிதினும் அரிது. சாத்தனார் ஆறு அடிகளிலே மணி மேகலையின் ஒப்பற்ற அழகைப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார். மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள் அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஒட்டிய கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின் படையிட்டு நடுங்கும் காமன், பாவையை ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ? பேடியர் அன்ற பெற்றியின் நின்றிடின்? (காதை 3, வரி 20 - 23) மணிமேகலையின் முகம் மதி போன்றது; அவள் கண்கள் நீலோற்பல மலரையும் தோற்கடித்த அழகு பொருந்தியவை. அவள் கடைக்கண்களிலிருந்து நீர் சிந்துவதைக் கண்டால் மன்மதன் தனது படையை எறிந்து விட்டு நடுங்குவான். ஆண்கள் இவளைக் கண்டால் அப்பால் அடிபெயர்த்துச் செல்வார்களா? தம் உணர்ச்சி யிழப்பர்; இவள் மேல் வைத்த கண்ணை வாங்க மாட்டார்கள். யாரேனும் ஆடவர்கள் இவள் வசமாகாமல் தம் உணர்ச்சியுடன் நிற்பார்களாயின் அவர்கள் ஆண் தன்மை யுள்ளவர்கள் அல்லர்; பேடிகள் தாம். ஒரு பெண்ணின் அழகை இதைவிடச் சிறப்பாக எவரும் எடுத்துக் காட்டிவிட முடியாது. முதலில் பிறரைக் கவர்வது முகம்; அந்த முகம் பூரணச் சந்திரனைப்போல் பொலிகின்றது. இரண்டாவது, பார்ப்போர் நெஞ்சைப் பறிமுதல் செய்வது கண்கள்; அக் கண்கள் அழகுள்ள நீலோற்பல மலர்களையும் விரட்டி அடித்தவை. மன்மதன் அவள் அழகில் ஈடுபட்டவன்; அவள் வருந்துவதைக் கண்டால், அவனும் தன் செயலிழந்து வருந்துவான். ஆண் தன்மையுள்ளவர்கள் அவளைப் பார்த்தால் அவளை விட்டு அப்பால் நகரமாட்டார்கள்; அவள் வசமாகி விடுவர். அவள் வசப்படாத ஆடவர்கள் பேடிகள் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு ஒரு அழகுள்ள மங்கையைச் சித்திரமாகத் தீட்டியிருக்கிறார் சாத்தனார். இது போன்ற சுருக்கமான சிறந்த வருணனையே வேறு எங்கும் காண முடியாது. கவிதைச் சிறப்பு சாத்தனாரின் கவிதைச் சிறப்பையும், மணிமேகலையின் இலக்கியச் சுவையையும் விளக்கும் மற்றோர் உதாரணத்தைக் காண்போம். ஒரு பைத்தியக்காரன்; அவன் நடுத்தெருவிலே ஆட்டம் போடுகிறான். அவனைச் சுற்றிப் பல மக்கள், சிலர் அவன் நிலையைக் கண்டு பரிதாப்படுகின்றனர். இந்த நிகழ்ச்சியை நாம் கண்ணெதிர் காணும்படி சொல்லோவியமாகக் காட்டியிருக் கின்றார் சாத்தனார். அலரி மலர் மாலையைப் புயத்திலே கட்டியிருக்கின்றான்; எருக்கம் மொட்டுக்களை மாலையாகக் கோத்துப் பூண்டிருக் கின்றான்; கிழிந்து சிதைந்து நாலா பக்கமும் பறக்கும் உடையை உடுத்தியிருக்கின்றான். அந்த உடையின் மேல் காய்ந்த சிறு சுள்ளிகளை ஒடித்துக் கட்டியிருக்கின்றான். உடம்பு முழுவதும் சாம்பல் பூச்சு; ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பண்பற்ற சொற்கள்; காரணமற்ற அழுகை; கீழே விழுகின்றான்; புலம்பு கின்றான்; எழுகின்றான்; சுற்றுகின்றான்; ஓடுகின்றான்; ஒருபக்கம் ஒதுங்கி நிற்கின்றான்; தனது நிழலுடன் தானே சண்டை போடுகின்றான். இவன் ஒரு பைத்தியக்காரன்! கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்; குவிமுகிழ் எருக்கில் கோத்த மாலையன்; சிதவல் துணியொடு, சேண்ஓங்கு நெடும்சினைத் ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்; வெண்பலி சாந்தம் மெய்ம்முழுது உறீஇப் பண்புஇல் கிளவி பலரொடும் உரைத்து, ஆங்கு அழூஉம், எழூஉம்; அரற்றும், கூஉம், தொழூஉம், எழூஉம், சுழலலும் சுழலும், ஓடலும் ஓடும், ஒரு சிறை ஒதுங்கி நீடலும் நீடும், நிழலொடு மறலும், மையல் உற்ற மகன். (காதை 3, வரி 104-114) இதைப் படிக்கும்போது பைத்தியக்காரன் உருவம் அப்படியே நம் கண்முன் காணப்படுகின்றது. இவ்வடிகளை வைத்துக் கொண்டு பல படங்களைத் தீட்டலாம். இயற்கைக் காட்சிகள் குளிர்ந்த சோலை; அங்கொரு தடாகம்; அங்கே காணப் படும் இயற்கைக் காட்சியைச் சாத்தனார் அழகாகக் கூறுவதைக் கீழே காணலாம். சூரியனுடைய ஒளியாகிய சேனைக்குப் பயந்து கொண்டு இருள் கூட்டம் இச்சோலைக்கு ஓடிவந்து ஒளிந்து கொண்டிருக் கின்றது. இங்கே தும்பிகள் புல்லாங்குழலைப் போல் இசைக் கின்றன; வண்டுகள் யாழ்போல் ஒலிக்கின்றன; மயில் நடனம் ஆடுகின்றது; அதனை மந்தி பார்த்துக் கொண்டிருக்கின்றது. இக் காட்சியைப் பார்! இக் குளத்தின் நீர் நீலமணிபோல் தெளிந்திருக்கின்றது. இலைகளுக்கு இடையே தாமரைகள் பூத்திருக்கின்றன. அம் மலர்களின் மத்தியிலே ஒரு மலர் உயர்ந்த மணம் வீசிக் காட்சி யளிக்கின்றது. அந்த மலரிலே அரச அன்னம் ஒன்று அமர்ந்திருக் கின்றது. கரையிலே ஒரு மயில் நடனம் ஆடுகின்றது. அந்த மயலின் ஆட்டத்திற்கேற்றவாறு, சம்பங் கோழி மத்தளம்போல் முழங்குகின்றது. மரக்கிளையில் அமர்ந்துள்ள குயில், இதைக் கண்டு ஆனந்தமாகக் கூவுகின்றது. இந்த காட்சியையும் பார்! இதோ இந்தத் தாமரையைப் பார்! இதன் மேல், கரையில் உள்ள தாழையின் மகரந்தம் சிந்தியிருக்கின்றது. ஆதலால், வீதியில் பறக்கும் தூசி படிந்த உனது முகத்தைப் போல இம் மலரின் ஒளி மங்கியிருக்கின்றது. அழகிய உனது கண்களை மலர்கள் என்று கருதி வண்டுகள் மொய்க்கின்றன. அவ் வண்டுகளை உன் கைகள் ஓட்டுகின்றன. இதைப்போல, மலர்ந்த தாமரை மலர்களின் மேல் கயல்மீன்கள் பாய்ந்து புரளுகின்றன. சிச்சிலிப் பறவை, அக் கயல் மீன்களைக் கவரப் பாய்கின்றது. அக் கயல் மீன்கள் அதற்கு அகப்படவில்லை. ஆதலால் வருந்தி மேலே பறக்கின்றது. இக் காட்டிசயையும் காண்க! சோலையும் குளுமும் - உள்ள ஒரு இடத்தை, இவ்வாறு மணிமேகலை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இதனைக் காதை 4-ல், 1 முதல் 24 வரையில் உள்ள அடிகளில் காணலாம். இவ்வர்ணனை இயற்கையானது; இயற்கையாக நிகழ்வது. இந்த இயற்கையைக் கற்பனைக் கருத்தமையக் கூறியிருப்பதுதான் கவிஞரின் இலக்கியத் திறமையாகும். இது மணிமேகலைக்கு அவள் தோழி கூறுவதாக அமைந்திருக்கின்றது. பகற்காலம் மறைந்தது; மாலைக்காலம் புகுந்தது. அப்பொழுதுள்ள தோற்றத்தைச் சாத்தனார் இலக்கியச் சுவை நிரம்பும்படி எடுத்துரைக்கின்றார். அந்திக்கால நிகழ்ச்சியை அழகாக எழுதிக் காட்டுகின்றார். சூரியன் மறைந்தான்; தாமரை குவியத் தொடங்கிற்று. அப்பொழுது தாமரைப் பூவில் விளையாடிக் கொண்டிருந்த பெண் அன்னம் ஒன்றை அம் மலர் குவிந்து மூடிக்கொண்டது. உடனே சேவல் அன்னம் அம் மலரைக் கிழித்தது. தனது பெடை அன்னத்தை அழைத்துக் கொண்டு ஒரு உயர்ந்த தென்னை மரத்தின் மேல் ஏறிக் கொண்டது. பெண் அன்றில் பறவை, பொழுது மறைவதைப் பார்த்தது. அது தன் மெல்லிய குரலால், அதைத் தன் சேவலுக்கு அறிவித்தது. அன்னப்பறவைகள் நிறைந்த வயல்களிலே குவளை மலர் களை மேய்ந்த பசுக்கள் வீட்டுக்குத் திரும்புகின்றன. அவைகள் தம்முடைய கன்றை நினைத்துக் கத்துகின்றன. அதனால் அவைகள் மடியிலிருந்து, பால் தானே சிந்துகின்றது. அந்தப் பால், அவைகள் நடப்பதால் கிளம்பும் புழுதியை அடக்கிற்று. இவ்வாறு அப் பசுக்கள் தமது உறைவிடத்தை உற்றன. அந்திக் காலத்திலே அந்தணர்கள் செந்தீ வளர்க்கின்றனர்; வளையலை அணிந்த மகளிர் விளக்கேற்றுகின்றனர்; யாழ் வாசிப்போர் மருத யாழை வாசிக்கின்றனர்; கோவலர்கள் முல்லைக் குழலை ஊதுகின்றனர். இவை அந்திக்காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள். இவற்றைக் காதை 5-ல், 123 முதல் 136 வரையில் உள்ள அடி களிலே காணலாம். இவ்வாறு மணிமேகலை முழுவதும் உவமைகளும், கற்பனை களும், வருணனைகளும் காட்சியளிக்கின்றன. இலக்கியச் சுவை என்னும் இன்பத்தேன் சொட்டிக் கொண்டிருக்கின்றது. மணிமேகலையின் ஆசிரியப்பா எளிய சொற்களால் இனிமை பொருந்தத் தொடுக்கப்பட்டது. குற்றால அருவியைப் போலத் தங்குதடையின்றி செல்லுகின்றது. பதங்களை அப்படியும் இப்படியும் மாற்றிப் பொருள் கொள்ள வேண்டிய தில்லை. நேரே பொருள் தெரிந்து படிக்கலாம். இத்தகைய செய்யுள் அமைப்பே படிப்போர்க்கு இன்பம் பயக்கும். மேலே கூறியவைகளைக் கொண்டு, மணிமேகலையின் இலக்கியச் சிறப்பை அறியலாம்; மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரின் செந்தமிழப் புலமையைக் காணலாம்; காவியம் இயற்றும் அவருடைய கவிதா சக்தியையும் உணரலாம். மதக் கொள்கைகளைப் பரப்புவதற்கென்றே எழுதப் பட்டது மணிமேகலை. ஒருவகையில் பார்த்தால், இது மத நூல்தான். மணிமேகலையைப் போல இலக்கியச் சுவை ததும்படி எழுதப்பட்ட மத நூல்கள் வேறு எதுவும் இல்லை, எவையானாலும், அவைகள் எப்பொருள்களைப் பற்றிக் கூறுவன வாயினும், அவைகளையெல்லாம் இலக்கிய வரிசையிலே சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு மணிமேகலை ஒரு எடுத்துக் காட்டாக நிற்கின்றது. சிந்திக்க வேண்டியவை மணிமேகலையின் காலம் மணிமேகலை கடைச்சங்க காலத்து நூல். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்பவர் கடைச்சங்க காலத்துப் புலவர். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களிலே இப் புலவரின் பாடல்கள் காணப்படுகின்றன. ஆதலால் இப் புலவர் கடைச்சங்க காலத்துப் புலவர் என்பதில் ஐயம் இல்லை. இப் புலவரால் இயற்றப்பட்ட மணிமேகலையும் கடைச்சங்க காலத்து நூல் என்பதே உறுதி என்று பெரும்பாலான புலவர்கள் நினைக்கின்றனர்; நம்பு கின்றனர். இது உண்மையானால் மணிமேகலை கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலாகும். மணிமேகலையைப் படிப்போர், அதன் நடையைக் கூர்ந்து காண்போர், அதில் கூறப்படும் செய்திகளை உற்று நோக்கு வோர். ‘இது கடைச்சங்க காலத்து நூல்தானா? என்று ஐயப் படாமல் இருக்கமாட்டார்கள். மணிமேகலையிலே வடமொழிச் சொற்கள் ஏராளமாகக் கலந்து கிடக்கின்றன. மணிமேகலையில் அமைந்திருக்கும் பாத்திரங்களின் பெயர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர் களாகவே அமைந்திருக்கின்றன. மணிமேகலையில் காணப்படும் அளவுக்கு வேறு சங்க நூல்கள் எவற்றிலும் வடசொற்கைளைக் காண முடியாது. இவைகள், மணிமேகலை சங்க காலத்து நூல்தானா என்ற ஐயத்தை வலுப்படுத்துகின்றன. மணிமேகலையின் இருபத்தொன்பதாவது காதை தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட கதை என்பது. இது அறவண அடிகள், மணிமேகலைக்கு புத்த தருமத்தை உபதேசித்ததைப் பற்றி உரைப்பது. தர்க்கநூல் முறையிலே புத்த தர்மம் விளக்கப் படுகின்றது. இப் பகுதியில் கூறப்படும் தர்க்க முறையில் வடமொழியில் இருப்பவை. திங்நாகர் இயற்றிய நியாயப் பிரவேசம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. அல்லது தர்மகீர்த்தி என்பவரால் இயற்றப்பட்ட நியாயபிந்து என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். நியாயப் பிரவேசம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. ஆதலால் மணிமேகலை தோன்றிய காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் என்பர். சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளும், மணிமே கலை ஆசிரியர் சாத்தனாரும் ஒருகாலத்தவர் என்று சொல்லப் படுகின்றது. சிலப்பதிகாரப் பதிகத்தாலும், மணிமேகலைப் பதிகத்தாலும் இவ் வுண்மையைக் காணலாம். உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள, மதுரைக், கூலவாணிகன் சாத்தன் கேட்டனன். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் கூற, அதனை மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டான். இது சிலப்பதிகாரப் பதிகம். இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப, வளம்கெழு கூல வாணிகன் சாத்தன், மாவண் தமிழ்த்திறம் மணிமேகலைத் துறவு ஆறுஐம் பாட்டினுள் அறிய வைத்தனன். இளங்கோவடிகள் அருள் புரிந்து கேட்க, வளம் நிறைந்த தானியங்களை வாணிகம் புரியும் சாத்தன். தனது சிற்ந்த தமிழ்ப் புலமையின் திறமை விளங்கும்படி மணிமேகலை துறவைப் பாடினார். முப்பது காதைகளிலே மணிமேகலைக் கதையை விளங்க உரைத்தார். இது மணிமேகலைப் பதிகம். இவை சாத்தனாரும் இளங்கோவும் ஒரு காலத்தவர் என்ற உண்மையை உரைத்தன. சாத்தனாரும் இளங்கோவும் ஒரு காலத்தவரானால் சாத்தனார் சங்க காலத்துச் சீத்தலைச் சாத்தனாராக இருக்க முடியாது. இளங்கோ சங்கப் புலவர் அல்லர். சங்க காலத்துத் தொகை நூல்களிலே இளங்கோ பெயரால் ஒரு செய்யுள் கூடக் காணப்படவில்லை. சங்கப் புலவர் வரிசையிலே இளங்கோ இடம் பெற வில்லை. இளங்கோவும் சேரன் செங்குட்டுவனும் உடன் பிறந்த வர்கள் என்னும் கதை சிலப்பதிகாரத்தைத் தவிர வேறு நூல் களில் இல்லை. சங்க நூலாகிய பதிற்றுப்பத்திலே இரண்டாம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மேல் பாடப்பட்டது. அவன் மைந்தன் செங்குட்டுவன். அதில் செங்குட்டுவனும், இளங்கோவும் உடன்பிறந்தவர்கள் என்பதற்கான குறிப்பு ஒன்றுமேயில்லை. பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்து கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்மேல் பாடப்பட்டது. இவளே சேரன் செங்குட்டுவன் என்று கருதப்படுகின்றான். இப்பாடல்களிலும் இளங்கோ செங்குட்டுவன் பின் பிறந்தார் என்பதற்கான குறிப்பே இல்லை. இவைகள் இளங்கோ சங்க காலத்துப் புலவர் அல்லர் என்பதைக் காட்டும். இதனால் சிலப்பதிகாரம் சங்க காலத்து நூல் அன்று; பிற்காலத்து நூல்தான் என்பதே ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்து. சிலப்பதிகாரம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய நூலாக இருக்க வேண்டும் என்றே ஆராய்ச்சி அறிஞர்கள் கருது கின்றனர். ஆறாம் நூற்றாண்டு என்று கருதுவோரும் உண்டு. இளங்கோவும், சாத்தனாரும் ஒரு காலத்தவர், சிலம்பும் மேகலையும் ஒரு காலத்தில் தோன்றியவை என்பவை உண்மை யானால், மணிமேகலை சங்ககாலத்து நூல் அன்று, சங்க காலத்துக்குப் பின் பிறந்த நூலாகத் தான் இருக்க வேண்டும். கி.பி. ஆறாம் நூற்றாண்டோ, எட்டாம் நூற்றாண்டோதான் மணிமேகலையின் காலமாக இருக்க வேண்டும். சங்க காலத்து நூல்களாகிய குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு ஆகியவைகளில் சாத்தனாரால், பாடப்பட்ட பாடல்கள் காணப்படுகின்றன. அவைகள் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரால் பாடப்பட்டவை. திருவள்ளுவ மாலையிலும் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பெயரால் வெண்பா ஒன்று காணப்படுகின்றது. இந்தச் சாத்தனார்தான் மணிமேகலையைப் பாடினார். ஆதலால் மணிமேகலை சங்க காலத்து நூல்தான். அதன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதுதான் என்று பிடிவாத மாகச் சாதிப்போர் உண்டு. இவர்கள் கூற்றைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மணிமேகலைச் சாத்தனார் மணிமேகலை ஆசிரியர் சாத்தன், கூலவாணிகன் சாத்தன், தண்டமிழ்ச் சாத்தன், தன்னூல் புலவன் என்று தான் மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்திலும் காணப்படுகின்றன. சீத்தலைச் சாத்தன் என்ற பெயர் காணப்படவில்லை. சங்க நூல்களிலே சீத்தலைச் சாத்தனார் பெயரில் பத்துப் பாடல்கள் காணப்படுகின்றன. குறுந்தொகையில் ஒன்று (154); நற்றிணையுள் மூன்று (36, 127, 339); அகநானூற்றில் ஐந்து (53, 134, 229, 306, 320); புறநானூற்றில் ஒன்று (59). இவற்றுள் புறநானூற்றுப் பாடலும், அகநானூற்றில் 229. 306. 320 ஆகிய மூன்று பாடல்களும் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியதாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஏனைய ஆறு பாடல்கள் சீத்தலைச் சாத்தனார் பாடியவை என்றே குறிக்கப் பட்டிருக்கின்றன. சங்க நூல்களில் காணப்படும் பாடல்கள் மற்றும் சீத்தலைச் சாத்தனார் பாடல்களாகத்தான் இருக்க வேண்டும். மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்ற பெயர் தவறாகக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் ஏடெழுதுவோ ரால் நேர்ந்த பிழையாக இருத்தல் வேண்டும். இவைகளைக் கொண்டு, சீத்தலைச் சாத்தனார் வேறு, கூலவாணிகன் சாத்தனார் வேறு என்று முடிவு செய்யலாம். சீத்தலைச் சாத்தனார் சங்க காலத்துப் புலவர். சாத்தனார், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் என்று வழங்கும் மணிமே கலை ஆசிரியர் பிற்காலத்துப் புலவர் என்று தீர்மானிக்கலாம். திருவள்ளுவ மாலை என்பது சங்கப் புலவர்களின் பெயரால் பிற்காலத்துப் புலவர்களால் பாடித் தொகுக்கப் பட்டதாகும். ஆதலால் அதை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டுவதில்லை. சங்க நூல்களில் காணப்படும் சாத்தனார் பாடல்களின் நடைக்கும் மணிமேகலையின் நடைக்கும் வேறுபாடு உண்டு. சங்கநூற் பாடல் சங்க காலத்துச் செந்தமிழ் நடை; மணிமேகலை பிற்காலத்துச் செந்தமிழ் நடை. மற்றொரு செய்தியும் குறிப்பிடத்தக்கது. மணிமேகலை ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார் காதல் களவு மணத்தை வெறுத்துரைக்கின்றார். இதை காதை 22-ல் தருமதத்தன் விசாகையார் கதையால் காணலாம். மணிமேகலைச் சாத்தனார் அறம், பொருள் இன்பம், வீடு என்னும் நான்கிலே அறத்தையும் வீட்டையுமே போற்றிக் புகழ்கின்றார்; பொருளையும் இன்பத்தையும் வெறுக்கின்றார். சீத்தலைச் சாத்தனார் பெயரில் உள்ள சங்கச் செய்யுட் களில் ஒன்பது பாடல்கள் அகப்பொருள் பற்றியவை. புறநானூற் றுப் பாடல் ஒன்றுதான் புறப்பொருள் பற்றியது. சாத்தனாரின் அகப்பொருள் பற்றிய ஒன்பது செய்யுட் களிலே குறிஞ்சித்திணை பற்றிய பாடல்கள் இரண்டு; அவை நற்றிணையின் 36, 339 பாடல்கள். பாலைத்திணை பற்றிய பாடல்கள் மூன்று; அவை குறுந்தொகையின் 154-வது பாட்டும், அகநானூற்றின் 53, 229 பாடல்களும் ஆகும். நெய்தல் திணை பற்றிய பாடல்கள் இரண்டு; அவை நற்றிணையின் 127-வது பாட்டும், அகநானூற்றின் 320-வது பாட்டும் ஆகும். முல்லைத் திணை பற்றிய பாடல் ஒன்று; அது அகநானூற்றின் 134-வது பாட்டு. மருதத்திணை பற்றிய பாட்டு ஒன்று; அகநானூற்றின் 306-வது பாட்டு. இவ்வாறு சங்க காலத்துச் சாத்தனார் அகத்திணை ஒழுக்கமாகிய ஐந்திணையைப் பற்றியும் பாடியிருக்கின்றார்; மணிமேகலைச் சாத்தனார் புறப்பொருளைப் பற்றியே பாடியுள் ளார். மணிமேகலைச் சாத்தனார் புத்த மதத்தினர் என்பதில் ஐயம் இல்லை. புத்த மதக் கொள்கைகளை வலியுறுத்தவே மணிமேகலையைப் பாடினார் என்பது வெளிப்படை. சங்க காலத்துச் சாத்தனார் மதம் இன்னதென்று அவர் பாடல் களிலிருந்து காண முடியவில்லை. மணிமேலைச் சாத்தனார் புத்த மதத்திலே பெரும் பற்றுள்ளவர்; ஏனைய மதங்களை வெறுப்பவர். இத்தகைய மதப்பற்றும் மதவெறுப்பும் உள்ள புலவர்கள் யாரும் சங்க காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. இவை போன்ற காரணங்கள் சங்ககாலச் சாத்தனார் வேறு, மணிமேகலைச் சாத்தனார் வேறு; சங்ககாலத்துச் சாத்தனார் பெயர் சீத்தலைச் சாத்தனார், மணிமேகலைச் சாத்தனார் பெயர் கூலவாணிகன் சாத்தனார் என்பதை விளக்குகின்றன. ஆசிரியர் காலத்துக் கதையா? சிலப்பதிகாரமும் மணிமேகலையும், இளங்கோவடிகள் காலத்திலும் சாத்தனார் காலத்திலும் நடந்த கதைகள் என்று கூறப்படுகின்றன. சாத்தனார்தான் கண்ணகி வரலாற்றை இளங்கோவடிகளுக்கு எடுத்துரைத்ததாகச் சிலப்பதிகாரப் பதிகத்தில் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தின் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் ஆகிய இரண்டு காண்டங்களின் நிகழ்ச்சிகளைச் சாத்தனார் இளங்கோவடிகளுக்கு எடுத்து ரைத்தார். இதுதான் பதிகத்தில் காணப்படும் சிலப்பதிகாரக் கதை. சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்தில் காட்சிக் காதையில் வேறுவிதமாகக் காணப்படுகின்றது. சாத்தனார் கண்ணகியின் கதையைச் சேரன் செங்குட்டுவனிடம் உரைத்தார். மதுரைக் காண்டக் கதை நிகழ்ச்சி மட்டுந்தான் அவர் உரைத்ததாகக் காணப்படுகின்றது. இந்த முரண்பாடு குறிப்பிடத் தக்கதாகும். சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் காலத்தில் நடந்ததாக இருக்க முடியாது. அது பழையதொரு கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட கதைதான். இதனைச் சிந்தனைக்குடிரிய செய்திகள் என்ற தலைப்பிலே சிலப்பதிகாரத் தமிழகம் என்னும் நூலிலே காணலாம். சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் காலத்தில் நடந்த வரலாறு அன்று என்பது உறுதிப்படும்போது, மணிமேகலை யும், சாத்தனார் காலத்தில் நடந்த கதையன்று என்பது திண்ணம். மணிமேகலை நூல் இயற்றப்பட்ட காலம் என்று கருதப்படும் ஆறு அல்லது அதற்குப் பிந்திய நூற்றாண்டிலே காஞ்சியில் பல்லவர் அரசு சிறந்து விளங்கிற்று. மணிமேகலைக் கதையில், மணிமேகலை காஞ்சி நகரம் சென்ற போது அங்கு சோழர் அரசு நிலவியிருந்தததாகக் காணப்படுகின்றது. பல்லவர் காலத்துக்கு முன் திருவேங்கடம் வரையிலும் சோழர் ஆட்சி தான் இருந்தது என்பதற்கும், காஞ்சி நகரில் சோழ மன்னர் இருந்து அரசியற்றினர் என்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உண்டு. புத்தர் காலம் 2500 ஆண்டுகளுக்கு முன்பு என்று சரித்திரம் சொல்லுகிறது. மணிமேகலையில் புத்தர் தோன்றுவதற்கு முன்பு சிலப்பதிகாரம் நடந்ததாகக் காணப்படுகின்றது. மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினம் கடல் கொண்ட வுடன் வஞ்சி நகரம் சென்றாள். கண்ணகியின் கோயிலை யடைந்து பத்தினித் தெய்வத்தை வணங்கினாள். தாயே! நீ அறக் கற்பை மேற்கொள்ளாமல் மறக் கற்பை மேற்கொண்டு வீரச் செயல் புரிந்த காரணத்தை அறிவித்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். கண்ணகித் தெய்வம் மணிமேகலை யிடம், மதுராபதித் தெய்வம் தனக்கு உரைத்த முற்பிறப்புக் கதையைக் கூறினாள். தானும் கோவலனும் துன்புற்றதற்குக் காரணம் முன் செய்த தீவினை என்பதை விளக்கினாள். இதற்கு மேலும் கண்ணகி மணிமேகலைக்குச் சொல்லியதாக அமைந்திருக்கும் செய்தி தான் ஆராய்ச்சிக்கு உரியது. மதுராபதி தெய்வம், பழவினைதான் கோவலன் உற்ற கொடுந் துயருக்குக் காரணம் என்று கூறிய பின்னும் எனது கோபம் தணியவில்லை. மதுரை நகரை அழித்தேன். முன் செய்த நல்வினையின் பயனால் நானும் கோவலனும் தேவர்களி டையே சென்றோம். நல்வினைப் பயன் முடிந்த பின் சினத்தால் நேர்ந்த பாவம் மீண்டும் எம்மை யடையும். ஆதலால் மண்ணு லகில் பலபிறவிகள் எடுப்போம். நல்வினை தீவினைகளின் பயனால் பலவிடங்களில் பிறந்தும் இறந்தும் துன்புறுவோம். பின்னர், மழைவளம் குன்றாத மகதநாட்டிலே இப் பாரத நாட்டின் திலகம் என்று சான்றோர் போற்றும் கபிலையம் பதியிலே அளப்பரும் புகழ் வாய்ந்த புத்தர் பெருமானாகிய ஞாயிறு தோன்றும். போதி மரத்தின் அடியிலே அமர்ந்து, நால்வகை வாய்மை, பன்னிரு நிதானங்கள் ஆகிய தர்மங்களைப் பற்றி விளக்கிக் கூறுவர். குற்றமற்றவராய் இவ்வுலகமெங்கும் அறம் என்னும் கதிரைப் பரப்புவர். நானும் உன் தந்தையும் (கோவலனும்) காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த இந்திர விகாரம் ஏழையும் ஏத்திப் போற்றிய புண்ணியத்தைப் பெற்றுள்ளோம். அதன் பயனால், துன்பந்தரும் பிறவியைப் பெறாமலிருக்க, அன்புள்ளத்துடன் அந்தப் புத்தர் பெருமான் கூறும் தர்மங் களைக் கேட்போம். உள்ளத்தில் பற்றற்றவர் களாய்ப் பிறவியி ஒழிப்போம் என்று கண்ணகித் தெய்வம் உரைத்தது. (காதை 26, வரி 32-59) இச்செய்தி சிலப்பதிகாரக் கதை புத்தர் பிறப்பதற்கு முன் நடைபெற்றது என்பதைக் காட்டுகிறது. இச்செய்தி மணிமேகலையில் பின்னும் வலியுறுத்தப் படுகின்றது. மணிமேகலை, வஞ்சி நகரில் கோவலன் தந்தை யாகிய மாசாத்துவனைக் கண்டு வணங்கினாள். மாசாத்துவான், கோவலன் மாண்டபின் வஞ்சி நகரை அடைந்தான். கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முன்னே அவன் குலத்திலே கோவலன் என்ற பெயருள்ள ஒருவன் இருந்தான். அவனால் கட்டப்பட்ட புத்த சயித்தம் ஒன்று வஞ்சி மாநகரில் இருந்தது. அதை வணங்கும் பொருட்டே மாசாத்துவான் வஞ்சி நகரை அடைந்தான். அவன் மணிமேலையிடம் கூறிய செய்தி கீழ்வருமாறு: தீவினை உருப்பச் சென்றநின் தாதையும் தேவரின் தோன்றி முன்தவப் பயத்தால் ஆங்கத் தீவினை யின்னும் துய்த்துப் பூங்கொடி! முன்னவன் போதியின் நல்லறம் தாங்கிய தவத்தால் தான்தவம் தாங்கி காதலி தன்னொடு கபிலை அம் பதியில் நாதன் நல்லறம் கேட்டு வீடு எய்தும். (காதை 28, வரி 138 - 144) தீவினையால் கொலையுண்டிறந்த உனது தந்தையும் தேவர் களிடையே பிறந்திருப்பான். நல்வினை முடிந்தபின் தீவினைப் பயனை அடைவான். மீண்டும் தன் தவப் பயனால் தவக்கோலம் பூண்பான். காதலியுடன் கபிலையம்பதியை அடைவான். முதல்வனாகிய புத்தர்பிரான் போதியின் அடியலிருந்து கூறும் நல்லறங்களைக் கேட்டு வீடு பெறுவான். இவ்வடிகளும் கோவலன் கதை புத்தர் தோன்றுவதற்கு முன்னே நிகழ்ந்தது என்பதையே காட்டுகின்றது. சிலப்பதிகாரம் புத்தர் பிறப்பதற்கு முன் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் நடந்ததென்றால், மணிமேகலையும் அக் காலத்ததாகத்தான் இருக்கவேண்டும். இளங்கோ அடிகளோ, கூலவாணிக;ன சாத்தனாரோ 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்கள் என்று சொல்வதற்கு இடமே இல்லை. ஆதலால் மணிமேகலையும் சிலப்பதிகாரத்தைப்போலப் பழங்கதை ஒன்றை ஆதரவாகக் கொண்டு எழுதப்பட்டதே யாகும். சாத்தனார் தனது புத்தமதக் கொள்கையைத் தமிழ் மக்களுக்குப் போதிக்க பழைய கதை ஒன்றை எடுத்துக் கொண்டார். துறவறத்தை மேற்கொண்ட ஒரு பெண்ணின் கதையை அடிப்படையாக வைத்துக் கொண்டார் என்றுதான் முடிவு கட்டவேண்டும். மேலே கூறியவைகளைக் கொண்டு மணிமேகலை சாத்தனார் காலத்தில் நடைபெற்ற உண்மை வரலாறு அன்று என்பது விளங்கும். மணிமேகலையில் இவ்வாறு சொல்லப்பட்டிருப்பதைப் பற்றி வேறுவிதமாகக் கூறுவோரும் உண்டு. புத்தர் பல பிறப்பு களிலே பிறந்தார் என்பது மணிமேகலையிலே காணப்படு கின்றது. மீண்டும் புத்தர் பிறப்பார் என்பதும் புத்தர்களின் நம்பிக்கை. ஆதலால் கோவலன், மீண்டும் பிறக்கப் போகும் புத்தரிடம் உபதேசம் பெற்று நிர்வாணம் அடைவான் என்று தான் மணிமேகலையில் காணப்படும் செய்திக்குப் பொருள் கொள்ள வேண்டும் என்பர். இது ஒன்றைக் கொண்டு சிலப்பதி காரமும் மணிமேகலையும், அவற்றின் ஆசிரியர்கள் காலத்தில் நடைபெற்ற உண்மை நிகழ்ச்சிகள் என்று மெய்பித்துவிட முடியாது. சிலம்பாசிரியரும் மேகலை ஆசிரியரும் சிலர் மணிமேகலை ஆசிரியரும் சிலப்பதிகார ஆசிரியரும் தனித்தனி அல்லர்; ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்பர். இதற்கு இவர்கள் காட்டும் காரணங்கள் பின் வருகின்றன; சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் பல சொற்கள் ஒத்து வருகின்றன. பல தொடர்கள் ஒரு தன்மையாக அமைந் திருக்கின்றன; பல உவமைகள், பல வருணனைகள் ஒன்றாக அமைந்திருக்கின்றன. பல கருத்துக்கள் ஒன்றுபட்டுக் காணப்படு கின்றன. சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளைப் பற்றி வழங்கும் வரலாறு உண்மையற்றது; அதற்கு ஆதரவில்லை. இளங்கோ அடிகள் என்று ஒருவர் இருந்திருக்கவே முடியாது. ஆதலால் சிலப்பதிகாரத்தையும், அதன் தொடர்ச்சியான மணிமேகலையையும் சாத்தனாரே இயற்றியிருக்க வேண்டும்., மணிமேகலை ஆசிரியர் சாத்தனார் புத்த மதப் பற்றுள்ளவர். பிற மதத்தில் வெறுப்புள்ளவர். சமண மதத்தைப் பழிப்பவர். ஆதலால் அவர் சமணரைப் பழிப்பதற்காகவே சிலப்பதிகாரத்தைச் செய்தார். சமண சமயத்தானாகிய கோவலன் காமுகனாகத் திரிந்தான்; ஒழுக்கங்கெட்டான். அதனால், பிறந்த நாட்டைத் துறந்தான். வேற்று நாடு புகுந்தான். கொலையுண்டான். சமணர்களே இப்படித்தான். சொல் வேறும் செயல் வேறுமாக உள்ளவர்கள். இவ்வுண்மையை உணர்த்து வதற்காகவே சிலப்பதி காரத்தை இயற்றினார். இக் காரணங்களைக் காட்டிச் சிலப்பதிகார ஆசிரியரும் மணிமேகலை ஆசிரியரும் ஒருவரே என்று வழக்காடுகின்றனர். சிலம்பின் ஆசிரியரும் மணிமேகலையின் ஆசிரியரும் ஒருவர் என்று நினைப்பதற்குச் சிறிதும் இடமே இல்லை. சிலப்பதிகாரம் சமண மதக் கருத்துக்களை வலியுத்துகின்றது. ஆயினும் வேறு எந்த மதத்தையும் வெளிப்படையாக வெறுக்க வில்லை. சிலப்பதிகார ஆசிரியர் எந்தத் தெய்வத்தைப்பற்றிப் பாடினாலும் அந்தத் தெய்வத்தைப் புகழ்ந்தே பாடுகின்றார். இது சிலப்பதிகார ஆசிரியரின் தனிச் சிறப்பு. இது பழந்தமிழர் பண்பாடுமாகும். சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படிப்போர்தான் இளங்கோ சமணர் என்பதைக் காண முடியும். சிலப்பதிகாரம் சமணமதக் கொள்கையை விளக்கும் நூல் என்றும் தெரிந்து கொள்ளுவர். மணிமேகலை ஆசிரியரோ மற்ற மதங்களையெல்லாம் கண்டிக்கிறார். புத்த தர்மம் ஒன்றுதான் உயர்ந்தது என்று போற்றுகிறார். மணிமேகலையை மேம்போக்காகப் பார்ப்ப வர்கள் கூட அதன் ஆசிரியர் புத்த சமயத்தினர், அது புத்த மதத்தைப் பரப்பவே தோன்றிய நூல் என்பதை ஒப்புக் கொள்ளு வார்கள். சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல வகையான செய்யுள் வேறுபாடுகள் மணிமேகலையில் காணப்படவில்லை. மணிமேகலை முதலிலிருந்து இறுதி வரையிலும் ஆசிரியப் பாவாலேயே அமைந்திருக்கின்றது. உலக இன்பத்தை வெறுக்கும் சாத்தனார், சிலப்பதி காரத்தில் உள்ள வரிப்பாடல்கள் போன்ற அகத்திணைச் சுவை அமைந்த பாடல்களைப் பாடியிருக்க முடியாது. சிலப்பதிகார ஆசிரியரின் பண்பாடு வேறு; மணிமேகலை ஆசிரியரின் பண்பாடு வேறு. இருவரும் ஒருவர் என்று எண்ண இடமே இல்லை. சிலப்பதிகார ஆசிரியர் மூவேந்தர்களையும் பாராட்டிப் பாடியிருக்கின்றார்; மணிமேகலை ஆசிரியர் சோழ மன்னர் களை மட்டுமே பாராட்டிப் பாடியிருக்கின்றார். இளங்கோவடிகளைப் பற்றி வழங்கும் வரலாறு கற்பனைக் கதையானாலும் சிலப்பதிகாரத்தைப் பாடிய செந்தமிழ்ப்புலவர் ஒருவர் இருந்திருக்க வேண்டும். அவர் சாத்தனார் அல்லர்; சிலப்பதிகாரத்தை இயற்றிய புலவர் யாரோ? அவரை இளங்கோவடிகள் என்று அழைப்பதில் தவறில்லை. சிலப்பதிகாரத்தை படிக்கும்போது அது நமது நெஞ்சை அள்ளிக் கொள்ளுகிறது. அதில் உள்ள நிகழ்ச்சிகள் நம் கண் முன்னே நடப்பனவாகவே காணப்படுகின்றன. சிலப்பதிகாரக் கதைபோல, மணிமேகலைக் கதை அவ்வளவு விறுவிறுப்பாக இல்லை. மணிமேகலைக் கதையின் அமைப்பு பஞ்ச தந்திரக் கதைபோல அமைந்திருக்கின்றது; பல சிறுகதைகளும், கதைக் குறிப்புகளும் ஒன்றற்கொன்று தொடர்புடன் அமைந்திருப்பதே இதற்குச் சான்றாகும். இலக்கியத்தில் சிலம்பை முதல் தரமாகவும், மணிமேகலை யை இரண்டாந்த தரமாகவுந்தான் சொல்ல வேண்டும். சொற்கள், தொடர்கள், கற்பனைகள், கருத்துக்கள் முதலியவை ஒத்துவருவன என்ற காரணம் காட்டி, சிலம்பும் மேகலையும் ஒருவரால் இயற்றப்பட்டவை என்று சொல்லி விட முடியாது. பழந்தமிழ்ப் புலவர்கள் பிற நூல்களில் உள்ள சிறந்த சொற்களையும், தொடர்களையும், கருத்துக்களையும், கற்பனை களையும் தமது நூல்களில் எடுத்துக் கையாளும் வழக்கம் உண்டு. இதை மறந்தவர்களே, சிலம்புக்கும் மணிமேக லைக்கும் உள்ள சில ஒற்றுமைகளைக் கொண்டு இரண்டின் ஆசிரியர்களும் ஒருவரே என்பர். அன்றியும், இளங்கோவும் சாத்தனாரும் ஒருவர்தான் என்று உரைப்பது பண்டைத் தமிழ்ப் புலவர்களை ஒழுக்க மற்றவர்கள், கொள்கையற்றவர்கள் என்று இகழ்வதாகவும் முடியும். ஒரே ஆசிரியர் புத்தராகவும் நடிப்பார். சமணராகவும் நடிப்பார். பிறமத வெறுப்பாளராகவும் நடிப்பார். சமரச ஞானியாகவும் நடிப்பார் என்று வசை கூறுவதாகவே முடியும். பழந்தமிழ்ப் புலவர்களின் பண்பாட்டிலே மதிப்பும் நம்பிக் கையும் உள்ளவர்கள் மணிமேகலை ஆசிரியரும் சிலப்பதிகார ஆசிரியரும் ஒருவர் என்று சொல்லத் துணியவே மாட்டார்கள். எது முந்தியது? சிலப்பதிகாரம் முந்தியதா மணிமேகலை முந்தியதா? என்ற கேள்வி ஒன்று உலவுகிறது. சிலப்பதிகாரப் பதிகத்தில் சாத்தனார் கேட்க இளங்கோவடிகள் சிலம்பைப் பாடினார் என்று காணப் படுகின்றது. மணிமேகலைப் பதிகத்தில் இளங்கோ அடிகள் கேட்கச் சாத்தனார் மணிமேகலையைச் செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவைகளைக் கொண்டு எது முதலில் எழுந்தது என்று தீர்மானிக்க முடியவில்லை. இரண்டும் சமகாலத் தவை என்றுதான் கொள்ளலாம். சம காலத்தவை ஆயினும், முதலில் எழுதப்பட்ட நூல் எது என்பதைக் காணவேண்டும். சிலம்பையும் மேகலையும் துருவிப் பார்த்தால் எது முதலில் பாடப்பட்டது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையைப் பற்றிய குறிப்பைக் காணலாம். மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்தைப் பற்றிய குறிப்பைக் காணலாம். இவ்விரண்டையும் ஆராய்ந்தால் முதலில் பாடப்பட்ட நூல் எது என்பதைப்பற்றி ஒருவாறு முடிவு செய்யலாம். சிலப்பதிகாரத்தில் மணிமேகலை துறவு பூண்டாள் என்ற செய்தி மட்டுந்தான் காணப்படுகின்றது. போதி அறவோன் தன்முன் மணிமேகலையை மாதவி அளிப்பவும் (அடைக்கல காதை 103-4) மாதவி- மணிமேகலையை வான் துயர் உறுக்கும் கணிகையர் கோலம் காணாது ஒழிக எனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து போதித் தானம் புரிந்துஅறம் கொள்ளவும். (நீர்ப்படைக் காதை 103-7) மாதவி தன் துறவும் கேட்டாயோ தோழி! மணிமேகலை துறவும் கேட்டடாயோ தோழி! (வாழ்த்துக் காதை) மணிமே கலை யார்? யாது அவள் துறத்தற்கு ஏதுஈங்கு உரை. (வரந்தரு காதை 4-5) மணிமேகலை தன் வான்துறவு உரைக்கும் (மேற்படி 9) வருக என் மடமகள்மணிமேகலைஎன்று........................ கோதைத் தாமம்குழலொLகளைந்Jபோதி¤தான«புரிந்Jஅற«படுததன‹ (nk‰படி24-28) பருவ« அன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கினள். (வரந்தரு காதை, 35-36) இவைகள் சிலப்பதிகாரத்தில் காண்பவை. இவைகள் மணிமேகலை துறவறம் பூண்ட ஒரு செய்தியை மட்டுந்தான் குறிப்பிடுகின்றன. மணிமேகலையைப் பற்றிய வேறு செய்திகள் எவையும் சிலப்பதிகாரத்தில் காணப்படவில்லை. காவிரிப்பூம் பட்டினம் கடல்கொண்ட செய்திகூடக் காணப்படவில்லை. மணிமேகலையிலே சிலப்பதிகாரக் கதை முழுவதையும் அப்படியே காண முடிகிறது. இதைச் சிலப்பதிகாரம் என்ற தலைப்பிலே காணலாம். சிலப்பதிகார அடிகளைப் படிக்கும்போது, இளங்கோஅடிகள் மணிமேகலைக்கதைமுழுவதையும் படித்தார் என்றோ,கட்டார் என்றோஎண்ண முடியவில்லை. மணிமேகலையைப் பார்க்கும்போது சிலப்பதிகார்ம் முழுவதை யும் சாத்தனார் படித்தவர்; அல்லது கேட்டவர் என்று உறுதியாக நம்பலாம். ஆதலால் சிலப்பதிகாரமே மணிமேகலைக்கு முன் தோன்றிய தாக இருக்க வேண்டும். மணிமேகலை ஆசிரியர்தான் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களையும், தொடர்களையும், கருத்துக்களையும், கற்பனைகளையும் தமது கவிதையில் கலந்து கொண்டிருக்க வேண்டும். இது தான் உண்மை. முடிவுரை மணிமேகலை சங்க கால - நூல் அன்று, 6-ஆம் நூற்றாண் டுக்குப்பின் 8-ஆம் நூற்றாண்டுக்குள்தான் தோன்றியிருக்க வேண்டும். சங்க காலத்துச் சாத்தனார் வேறு; மணிமேகலைச் சாத்தனார் வேறு. சங்க காலத்துச் சாத்தனார் பெயர் சீத்தலைச் சாத்தனார். சீத்தலை யென்னும் ஊரிலே பிறந்தவர்; ஆதலால் இப்பெயர் பெற்றார். மணிமேகலைச் சாத்தனார் மதுரைக் கூலவாணிகன் சாத்தானர்; மதுரையிலே பதிணெண்வகைத் தானியங்களை வியாபாரம் செய்து கொண்டிருந்தவர்; ஆதலால் இப்பெயர் பெற்றார். மணிமேகலைக் கதை, சாத்தனார் காலத்தில் நடந்தது அன்று. பழங்காலத்தில் நடந்த கதை ஒன்றை வைத்துக் கொண்டே மணிமேகலையைப் பாடினார். மணிமேகலைக் கதை புத்தர் காலத்துக்கு முன், அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக இருக்க வேண்டும். புத்தர் பிறப்பதற்கு முன்னும் புத்தமதம் இருந்தது. சிலப்பதிகார ஆசிரியர் வேறு; மணிமேகலை ஆசிரியர் வேறு. இரண்டு நூல்களின் ஆசிரியரும் ஒருவரே என்பது தவறு; உண்மையும் அன்று. சிலப்பதிகாரந்தான் முதலில் பாடப்பட்டது. கூலவாணிகன் சாத்தனார் அந் நூலை நன்றாகப் படித்தவர்; அதன் தமிழ்ச் சுவையிலே ஈடுபட்டவர். மேலே கூறியவைகளைக் கொண்டு இச் செய்திகளை அறியலாம். இவைகள் உண்மையானவை, உறுதியானவை, முடிவானவை என்று சொல்லவில்லை. இவ்வாறு செல்வதற்கு இடம் உண்டா இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வருவது அறிவுள்ளோர் கடமை.