சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 7 கம்பன் கண்ட தமிழகம் பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 7 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 304 = 312 படிகள் : 1000 விலை : உரு. 195/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலினை முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர்.சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள், சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தைக் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமைப் பாராட்டப்படும் கொடுமைகளுக்கு ஓங்கிக் குரலை கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தெளிவுபடுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழைமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தை கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும் பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை கம்பன் கண்ட தமிழகம் முன்னுரை 3 1. கம்பன் பெருமை 7 2. கம்பன் காலத் தமிழகம் 17 3. கம்பனுக்குமுன் இராமாயணம் 23 4. கம்பன் கருத்து 33 5. கம்பனும் மதமும் 39 6. ஒழுக்கமே உயர்குடி 45 7. மதுவும் மாமிசமும் 52 8. ஒருவனும் ஒருத்தியும் 60 9. இராவணன் இழிகுணம் 66 10. இராமனும் இராவணனும் 74 11. கம்பன் கண்ட தமிழர் பண்பு 85 12. கம்பனும் வள்ளுவரும் 95 13. கம்பன் தமிழ்க் காதல் 108 14. கம்பனும் நன்றியறிவும் 115 15. கம்பன் கண்ட அரசியல் 120 16. கருத்தில் சிறந்தவன் கம்பன் 128 தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு 133 பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் முன்னுரை 141 1. நூல் விளக்கம் 145 2. திணைமொழி ஐம்பது 153 3. ஐந்திணை ஐம்பது 159 4. ஐந்திணை அறுபது 164 5. ஐந்திணை எழுபது 169 6. திணைமாலை நூற்றைம்பது 175 7. கார்நாற்பது 181 8. களவழி நாற்பது 185 9. முதுமொழிக் காஞ்சி 190 10. திரிகடுகம் 194 11. இன்னா நாற்பது 202 12. இனியவை நாற்பது 207 13. நான்மணிக் கடிகை 213 14. சிறு பஞ்சமூலம் 220 15. ஏலாதி 229 16. ஆசாரக் கோவை 235 17. பழமொழி 243 18. நாலடியார் 259 உள்ளுறை கம்பன் கண்ட தமிழகம் முன்னுரை 3 1. கம்பன் பெருமை 7 2. கம்பன் காலத் தமிழகம் 17 3. கம்பனுக்குமுன் இராமாயணம் 23 4. கம்பன் கருத்து 33 5. கம்பனும் மதமும் 39 6. ஒழுக்கமே உயர்குடி 45 7. மதுவும் மாமிசமும் 52 8. ஒருவனும் ஒருத்தியும் 60 9. இராவணன் இழிகுணம் 66 10. இராமனும் இராவணனும் 74 11. கம்பன் கண்ட தமிழர் பண்பு 85 12. கம்பனும் வள்ளுவரும் 95 13. கம்பன் தமிழ்க் காதல் 108 14. கம்பனும் நன்றியறிவும் 115 15. கம்பன் கண்ட அரசியல் 120 16. கருத்தில் சிறந்தவன் கம்பன் 128 தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு 133 பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் முன்னுரை 141 1. நூல் விளக்கம் 145 2. திணைமொழி ஐம்பது 153 3. ஐந்திணை ஐம்பது 159 4. ஐந்திணை அறுபது 164 5. ஐந்திணை எழுபது 169 6. திணைமாலை நூற்றைம்பது 175 7. கார்நாற்பது 181 8. களவழி நாற்பது 185 9. முதுமொழிக் காஞ்சி 190 10. திரிகடுகம் 194 11. இன்னா நாற்பது 202 12. இனியவை நாற்பது 207 13. நான்மணிக் கடிகை 213 14. சிறு பஞ்சமூலம் 220 15. ஏலாதி 229 16. ஆசாரக் கோவை 235 17. பழமொழி 243 18. நாலடியார் 259 19. திருக்குறள் 277 கம்பன் கண்ட தமிழகம் (1955) முன்னுரை கம்பனைப்பற்றி எத்தனையோ பேர் எழுதியிருக்கின்றார்கள்; கம்பன் பெயரால் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. கம்பனைப் பற்றிப் பல்லாண்டு களாகப் பலர் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ நூல்கள் வெளிவரலாம்; வெளிவர வேண்டியதும் அவசியம்தான். கம்பனைப் படிக்கும் அறிஞர்கள் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள்; எழுதிக் கொண்டேதான் இருப்பார்கள். இவ்வளவுக்கும் தகுதியுடையவன் கம்பன். கம்பனைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல்கள் பல வெளிவரவேண்டும். அவனுடைய உயர்ந்த கருத்துக் களை உலகத்தார்க்கு எடுத்துச் சொல்லத்தான் வேண்டும். உயர்ந்த காவியங்களைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு மொழி யினரும் இப்படித்தான் செய்கின்றனர். அக்காவியங்களின் கருத்தைப்பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை. அக்காவியப் புலவனும், அக்காவியமும் தங்கள் மொழியின் வளர்ச்சிக்கு-பெருமைக்குத் துணை செய்திருக்கும் ஒன்றையே உயர்வாகக் கருதிப் போற்றுகின்றனர். அக்கவிகளையும் அவர் நூலையும் கொண்டாடுகின்றனர். தமிழுக்குக் கதியாவார் இருவர். ககரத்தைக் கம்பராகவும், திகரத்தைத் திருவள்ளுவராகவும் கொள்ளுக என்ற கருத்தை வெளியிட்டார் காலஞ்சென்ற செல்வக் கேசவராய முதலியார், எம்.ஏ, அவர்கள். இது மிகவும் பொருத்தமான பொய்யாமொழி. வள்ளுவரைப் போற்றுவது போலவே கம்பன் காவியத்தை - கவிதையைப் போற்றும் புலவர்களும் பலர்; ஆயினும் தூற்றும் புலவர்களும் சிலர் உண்டு. ஒரு நூலை ஆராய்ச்சி முறையிலே படித்து அதில் உள்ள குற்றங்குறைகளை நடுநிலைமையிலே நின்று எடுத்துக் கூறுவது தவறன்று; இந்த முறை இலக்கிய ஆராய்ச்சியில் சேர்ந்தது தான். இந்த முறையிலே கம்பனைப் பற்றி ஆராய்வதை அறிஞர்கள் வரவேற்க வேண்டும். இம்முறை மொழி வளர்ச்சிக்குத் துணை செய்யுமேயன்றித் தடை செய்யாது. சிலர் இலக்கிய ஆராய்ச்சி முறைக்கு மாறாகக் குறுக்கு வழியிலே புகுந்து கம்பனைப்பற்றி ஏதேதோ எழுதுகின்றனர்; பேசுகின்றனர். அரசியல் கொள்கை, இன வெறுப்பு, சாதி வெறுப்பு, மத வெறுப்பு, மொழி வெறுப்பு, பண்பாட்டு வெறுப்பு இவைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு கம்பன்மீது காய்ந்து விழுகின்றனர். கம்பன் தமிழர் நாகரிகத்தின் விரோதி; தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரி; தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை; நாட்டுப் பற்றில்லாதவன்; மொழிப் பற்றில்லாதவன்; கலாசாரப் பற்றில்லாதவன் என்றெல்லாம் ஒரு சிலர் ஓங்கிப் பேசுகின்றனர். இது உண்மைக்கு மாறான பேச்சென்பதே கம்பனை நடுநிலையிலிருந்து கற்றவர்களின் கருத்து. கம்பன் கண்ட தமிழகம் கம்பனுடைய கவிதையின் நயத்தைப்பற்றி ஆராய்வதன்று; அவன் எடுத்துக் கொண்ட கதையின் தெய்வீகத் தன்மையைப் பற்றி ஆராய்வதன்று. கம்பன் கவிச் சிறப்பை எடுத்துக்காட்டும் நூல்கள் எத்தனையோ வெளி வந்திருக்கின்றன; கட்டுரைகள் எவ்வளவோ வெளிவந்திருக் கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. அதைப் போலவே, இராம சரிதத்தின் சிறப்பைப் பற்றியும் பேசுவோர்; எழுதுவோர் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். ஆதலால் அந்த ஆராய்ச்சியிலே இந்நூல் தலையிடவில்லை. இந்நூல் கம்பன் பாடிய கதைப் பகுதியைப் போற்றுவதும் அன்று; தூற்றுவதும் அன்று. அந்தப் போற்றல்-தூற்றல் போராட்டம் எப்பொழுதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும்; அது தீராத சண்டை என்றுகூடச் சொல்லி விடலாம். கம்பன் ஒரு உயர்ந்த கவிஞன்; ஒப்பற்ற புலவன்; நாட்டு மக்களின் கருத்தை ஒட்டி நயமான கவிதை புனைவதிலே வல்லவன்; காலப்போக்கை உணர்ந்தவன்; மக்கள் மனப் பான்மையை அறிந்தவன்; சான்றோர்களின் கொள்கையைத் தழுவியவன்; தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் மறவாதவன்; தமிழ் அன்னைக்குச் சிறந்த காவியமென்னும் முடி சூட்டியவன்; தமிழ்த் தாயையும், தமிழ்நாட்டையும் போற்றிப் புகழ்ந்தவன்; தமிழ் மக்கள் தவறான வழிகளிலே சென்று தடுமாறாமல் உயர்ந்த ஒழுக்கத்தைப் பின்பற்றி ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற சிறந்த சிந்தை படைத்தவன். உயிரினும் ஒழுக்கமே சிறந்தது என்பதிலே உறுதியான பற்றுள்ளவன். தமிழ் மக்கள் மதம், சாதி, மொழி வெறுப்புக்கள் இல்லாமல் ஒனறாக இணைந்து வாழ வேண்டும் என்னும் கருத்துள்ளவன். இவ்வுண்மைகளை எடுத்துக்காட்டுவதே இந் நூலின் நோக்கம். கம்பன் காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த அரசியல், சமுதாய நிலை, சீர்திருத்தம், நாகரிக வளர்ச்சி இவைகள் எப்படியிருந்தனவென்பதை இந்நூலின் மூலம் அறியலாம். சுருங்கக் கூறினால் இந்நூல் கம்பன் இலக்கியத்தின் இனிமையை எடுத்துக்காட்டும் நோக்கமுள்ளதன்று. அவன் கால நாகரிக நிலைமையை எடுத்துக்காட்டும் வரலாற்று நூல் என்றே கொள்ளவேண்டும். இது கம்பன் காலத் தமிழகத்தைப்பற்றி முற்றும் ஆராய்ந் துரைக்கும் முழுநூல் அன்று. இன்னும் ஆராய வேண்டியவை எவ்வளவோ உண்டு. கம்பன் காலத்திலே தமிழகம் எந்நிலை யிலிருந்தது என்ற செய்தியை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. இந்த முறையிலே கம்பனை ஆராய்ந்தால் அவன் பெருமையை - அறிவை - உயர்ந்த கருத்தை - கவிதா சக்தியைக் காணமுடியும். இம்முறையிலே கம்பனை நெருங்குவதற்கு ஒரு வழிகாட்டியாக நிற்கவேண்டும் என்பதே இந்நூலின் கருத்து. இக்கருத்து நிறைவேறுமானால் கம்பனைக் கடிவோரும் அவன் அருமையை அறிந்து அமைதி அடைவார்கள். அறிஞர்கள் கம்பன் கண்ட தமிழகத்திற்கு ஆதரவளிப் பார்கள் என்பது என் நம்பிக்கை. சென்னை -24 அன்பன் 15.10.1955 சாமி. சிதம்பரனார். கம்பன் பெருமை கல்வியிற் சிறந்தவன் கம்பன் என்பது புதுமொழியன்று; தமிழ் நாட்டிலே தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி. சக்கரவர்த்திப் பட்டம் பெற்றவன் கம்பன். கம்ப நாடுடைய வள்ளல், கவிச் சக்கரவர்த்தி என்று பழம் புலவர் ஒருவர் கம்பனைப் பாராட்டினார். தமிழ்ப் புலவர்களிலே கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்றவர்கள் மூவர்; அவர்கள் கம்பர் ஓட்டக்கூத்தர், ஜெயங் கொண்டார் என்பவர்கள். இவர்களில் ஒட்டக்கூத்தரையும் ஜெயங்கொண்டாரையும் கவிச் சக்கரவர்த்திகள் என்று அழைப் பவர்கள் இன்றில்லை. கம்பனை மட்டுமே கவிச் சக்கரவர்த்தி என்று அழைக்கின்றனர். இது ஒன்றே கம்பன் பெருமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இவர்கள் ஏறக்குறையச் சமகாலத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கற்றோர்களின் உள்ளத்தைக் கவரும் வகையிலே காவியம் புனைந்த புலவர்களிலே தலைசிறந்தவன் கம்பன். கம்பனுக்கு இணையான கவிஞன் அவனுக்கு முன்னும் இருந்ததில்லை; இன்றும் இல்லை; பின்னும் தோன்றுவான் என்ற துணிவும் இல்லை. இத்தகைய ஒப்பற்ற உயர்ந்த தமிழ்க் கவிஞன் கம்பன். புலவர்கள் பாராட்டு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்பது புரட்சிப் புலவன்-சிந்தனைக் கவிஞன் - பாரதியின் வாக்கு. பாரதி தன் வாயார மனமாரப் பாராட்டிப் பாடிய தமிழ்ப் புலவர்கள் மூவர். அவர்கள் கம்பன், வள்ளுவர், இளங்கோ என்பவர்கள். யாம் அறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை; உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை என்று இம்மூன்று புலவர்களையும் முழுமனத்தோடு பாராட்டினான் பாரதி. இம்மூவரிலே முதலில் நிற்பவன் கம்பன். பாரதி பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கம்பன் கவிஞர்களால் பாராட்டப்பட்டான். கம்பநாடன் கவிதையிற்போல் கற்றோர்க்கு இதயம் களியாதே. என்பது ஒரு பழந் தமிழ்ப் புலவர் பாட்டு. கம்பன் கவியைப் படிப்பவர்க்குத்தான் அதன் அருமை தெரியும். தமிழின் அருமையை அறிந்தவர் - இனிமையை உணர்ந்தவர் - கம்பன் கவிதையிலே ஈடுபட்டால் கவலைகளையெல்லாம் மறந்து விடுவர். களிப்புக் கடலிலே நீந்தி விளையாடுவர். கம்பன் கவிக்கு நிகர் கம்பன் கவியேதான். மேலே காட்டிய பழந் தமிழ்ப் பாட்டின் பகுதி இவ் வுண்மையை உணர்த்தும். கம்பன் புலமையை விளக்க மற்றொரு பழமொழியும் வழங்குகின்றது. கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் என்பதுதான் அப்பழமொழி. கம்பனுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் கவிஞர் ஆகிவிடுவார். கம்பன் வீட்டிலே வாழ்கின்றவர்கள் எல்லோரும் இனிய தமிழ்க் கவிஞர்கள். எல்லோருக்கும் நல்ல தமிழ் அறிவையும், சிறந்த கவி உணர்ச்சியையும் உண்டாக்கு வதிலே வல்லவன் கம்பன். இவ்வுண்மையை விளக்குவதுதான் இப்பழமொழி. இதை ஒரு பழந்தமிழ்ச் செய்யுள் எடுத்துப் பாராட்டியுள்ளது. அரும்பெரும் சொற்சுவையுணரும் புலவர்களே! கம்பர் வீட்டிலேயுள்ள ஒரு சிறிய கட்டுத்தறியும் கவிதை பாடும்; இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் இவ்வாறு கூறுகின்றனர். இதைக் கேட்டு நாம் மகிழ்ச்சியடைந்தோம். கம்பர் வீட்டுள் ஒரு சிறு புன் கட்டுத் தறியும் கவிசெயும் என்று இம்பர் நாட்டு மன்பதை கூறும் இரும்சொல், புலவீர் கேட்டு உவந்தாம், இதுவே அத் தமிழ்ச் செய்யுள். கம்பன் காவியத்திலே ஈடுபட்டோர் கவிதை பாடும் வல்லமை பெறுவர் என்ற கருத்தும் இதில் அடக்கம். கம்பன் காலத்திலே தமிழ்மொழி வளர்ச்சி யடைந்திருந்தது. கம்பன் தமிழ் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தான். தன்னைச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுப்பதிலே அலுப்படையாமல் ஆர்வம் கொண்டிருந்தான். இவ்வுண்மையையும் இப் பாட்டு நமக்குக் காட்டுகின்றது. இணையற்ற இலக்கியம் கம்பன் கவிதை-காவியம்-இணையற்ற இலக்கியச் சிறப்புள்ளது. தமிழ் நாட்டிலே கம்பராமாயணத்தைப் பற்றியே சொற்பொழிவாற்றி வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பலர் இருந்தனர். இவர்களுக்குக் கம்பர் ராமாயணப் பிரசங்கிகள் என்றே பெயர். இவர்கள் கற்றவர்களும், மற்றவர்களும் நிறைந்த கழகங் களிலே கம்ப ராமாயணத்தைப் பற்றிப் பேசுவார்கள். கம்பன் கவிதைகளில் உள்ள கற்பனைகள், கருத்துக்கள், உவமைகள், சொல் நயம், பொருள் நயங்கள் இவைகளைப் பற்றி எடுத்துக் கூறுவார்கள். இவர்கள் சொற்பொழிவு எல்லா மக்கள் மனத்திலும் இன்பத் தேனைப் பாய்ச்சும். கம்பன் கவிதையைப் பற்றி இவ்வாறு சொற்பொழி வாற்றுவதையே பரம்பரைத் தொழிலாகக் கொண்ட புலவர்கள் தமிழகத்திலே பலர் இருந்தனர். தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாகக் கம்ப ராமாயணச் சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தன. எல்லா மக்களிடமும் இனிய தமிழ்ப் பற்றை வளர்ப்பதற்கே கம்ப ராமாயணம் பயன்பட்டு வந்தது. கம்பன் கவிதையை -- காவியத்தைக் கேட்டோர் அனைவரும் அரிய தமிழ் இலக்கியமாகவே போற்றிப் பாராட்டி வந்தனர். இராம பக்தியிலே ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் வான்மீகி ராமாயணக் காலட்சேபங்களையே கேட்டு வந்தனர். கம்பராமாயணம் பெரும்பாலும் இலக்கிய ஆராய்ச்சியாகவே வழங்கி வந்தது; காலட்சேபமாக நடைபெற்றது சிறிய அளவில் தான். கம்பன் காவியம் தமிழ்நாடெங்கும் பரவியதோடு மட்டும் நிற்கவில்லை. வெளிநாடுகளிலும் அவன் கவிதையின் புகழ் பரந்தது. இன்றும் தொலை கிழக்கு நாடுகளிலே அவன் காவியக் கருத்துக்கள் புகுந்து நிலைத்திருக்கின்றன. தூரக் கிழக்கு நாடுகளில் வழங்கும் இராமாயணக் கதைகள் கம்பன் காவியத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. தூரக் கிழக்கு நாடுகளிலேயுள்ள கோவில்களின் தூண் களிலே இராமாயணக் கதைகள் சிற்பமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன; சுவர்களிலே ஓவியமாக வரையப்பட்டி ருக்கின்றன. அவைகள் எல்லாம் கம்பன் காவியத்தை அடிப் படையாகக் கொண்டவைகள். இதனால் இராமாயணக் கதை பல நாட்டினரும் பாராட்டிப் போற்றும் ஒரு சிறந்த வரலாறாக வழங்கியிருந்தது என்ற உண்மையை அறியலாம். கம்பன் தன்னுடைய இராமாயணத்திற்கு இராமாவதாரம் என்று பெயர் வைத்தான். ஆனால், யாரும் அவன் விருப்பப்படி இராமாவதாரம் என்று வழங்கு வதில்லை. கம்பனுக்குப் பெருமை கொடுக்கும் வகையிலே கம்ப ராமாயணம் என்றே வழங்கி வந்தனர். கம்ப ராமாயணம் என்னும் இப்பெயர் அதன் தனிச் சிறப்பை விளக்கும். வால்மீகி ராமாயணம் உண்டு; பௌத்த ராமாயணம் உண்டு; சமண ராமாயணம் உண்டு; இன்னும் பல ராமாயணங்களும் இருக்கின்றன. அவைகளுக்கு இல்லாத தனிச் சிறப்பு கம்பன் பாடிய இராமாயணத்திற்கு உண்டு. கம்பன் சூட்டிய இராமாவதாரம் என்ற பெயர் உலக வழக்கில் இல்லை. செய்யுள் வழக்கில் மட்டும் இருக்கின்றது. இதற்கு மாறாகக் கம்பன் புனைந்து பாடிய இராமாயணம் என்ற பொருளில் கம்பராமாயணம் என்ற பெயரே நின்று நிலவுகின்றது. கம்பன் காலத்திலே தமிழகத்திலே ஐம்பெருங் காவியங்கள் வழக்கி லிருந்தன. சீவகசிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி, சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன ஐம்பெருங்காப்பியங்கள். ஐம்பெருங் காப்பியங்களுக்குப் பின்னே தோன்றியவை ஐஞ்சிறு காப்பியங்கள். அவைகள் சூளாமணி, உதயண காவியம், நீலகேசி, நாககுமார காவியம், யசோதர காவியம் என்பன. இக் காப்பியங்களில் சூளாமணி கம்பர் காலத்தில் வழங்கிய ஐஞ்சிறு காவியங்களில் ஒன்று. கம்பன் காலக் காவியங்கள் ஐம்பெரும் காவியங்களிலே சீவக சிந்தாமணி, குண்டல கேசி, வளையாபதி மூன்றும் மொழி பெயர்ப்பு நூல்கள். இவை மூன்றும் சமண மதக் கொள்கை களைப் பரப்பும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. சிலப்பதிகாரமும், மணிமே கலையும் மட்டும் தமிழ் நாட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. இவை இரண்டும் முதல் நூல்கள்; முன்னைய மூன்றும் வழி நூல்கள். வழி நூல்களாகிய மூன்று பெருங் காவியங்களிலே இரண்டு மறைந்து விட்டன. சீவக சிந்தாமணி ஒன்று மட்டுமே புலவர்களுக்கு அமுதமாய்ப் புகழ் பெற்று விளங்குகின்றது. சிறந்த கவிச்சுவை நிரம்பியிருக்கும் காரணத்தால்தான் சிந்தாமணி நந்தா விளக்காகச் சுடர் விட்டு நிற்கின்றது. கவிச் சுவையற்ற காரணத்தால்தான் குண்டலகேசியும், வளையாபதியும் மறைந்து விட்டன என்று கருதலாம். சிலப்பதிகாரம் மதக் கொள்கையை வலியுறுத்துவது; ஆயினும் மதக் கொள்கைகளைவிட அரசியல் நீதிகளும், தமிழர் பண்பும், கவிச்சுவையும், காவியச் சுவையும் நிறைந்திருக்கின்றன. தமிழ் இலக்கியத்தின் தனிப்பெருஞ் சிறப்பின் தலைமணியாகத் திகழ்வது சிலப்பதிகாரம். ஆதலால் அது கற்போர் நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் என்று கவிஞர் புகழக் கதிர் விட்டு நிற்கின்றது. மணிமேகலை முழுக்க முழுக்க பௌத்தமதக் கொள்கைகளை வலியுறுத்துவது. அதுவும் சிறந்த செந்தமிழ்ச் சோலையாகும். ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் மொழிபெயர்ப்பு நூல்களே. இவற்றுள் சூளாமணி ஒன்றே காலத்தால் முற்பட்டது. கம்பன் காலத்தில் நின்று நிலவியது. இந்நூலின் செய்யுட்கள் சிறந்தவை; இனிமையானவை; சிந்தாமணிச் செய்யுட்களுக்கு ஒப்பானவை; கம்பன் கருத்தைக் கவர்ந்தவை. இச்செய்யுட் களைப் பின்பற்றிக் கம்பன் பல பாடல்களைப் பாடியிருக்கின்றான். கம்பன் காலத்திலே பாரதமாகிய பெருங்காவியமும் தமிழிலே வழங்கியிருந்தது; அக்காலத்திலே வழங்கிய பாரதம் பெருந்தேவனார் பாரதமாகும். அது வெண்பா வடிவில் செய்யப் பட்டது. இராமாயணக் கதையும் தமிழிலே வழங்கி வந்தது. ஆசிரியப்பாவினாலும் வெண்பாவினாலும் இராமாயண நூல்களும் இருந்தன. இவைகள் கம்பன் காலத்தில் முழு உருவில் வழங்கி வந்தன என்று கூற முடியாது. பெரிய புராணம் என்னும் நூலும் கம்பர் காலத்திற்குச் சிறிது முன்பு தோன்றி நிலவியிருந்தது. இவைகளைக் கொண்டு கம்பன் காலத்தில் இருந்த தமிழ் மக்கள் கவிச்சுவை நிறைந்த காவியங்களைப் படிப்பதிலே ஆவல் கொண்டிருந்தனர் என்பதை அறியலாம். தமிழ்நாட்டில் அக் காலத்தில் வழக்கிலிருந்த காவியங்கள் மக்களின் ஆசையை நிறைவேற்றும் அளவுக்குப் போதுமானவைகளாக இல்லை. சிந்தாமணியைத் தவிர, சிலப்பதிகாரத்தைத் தவிர, சூளாமணி யைத் தவிர ஏனைய காவியங்கள் கருத்தைக் கவரும் கவிச் சுவை நிறைந்தவை அல்ல. பெரிய புராணம் காவியமாகாமல் சமய நூலாகவே போற்றப்பட்டது. மக்களின் இந்த மனோநிலையை அறிந்த கம்பன் ஒரு மகா காவியத்தைப் பாடி மன்பதைக்கு மகிழ்ச்சியூட்ட எண்ணினான். ஆதலால் கம்பன், தானே தன் இராமாயணத்தைப் பாட முடிவு செய்திருக்க வேண்டும்; பிறர் வேண்டுகோளின் படியோ, பிறர் உத்தரவுக்குக் கீழ்ப் படிந்தோ - பாடியிருக்க முடியாது. சடையப்ப வள்ளலின் வேண்டுகோளுக்காகக் கம்பன் இராமாயணம் பாடினான். குலோத்துங்க சோழன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இராமாயணம் பாடினான் என்று கதைகள் வழங்குகின்றன. இக் கதைகள் உண்மையானவைகளாக இருக்க முடியாது. எச்செயலானாலும் தானே முழு மனதோடு-ஊக்கமுடன் செய்யும் செயல்தான் சிறந்த வெற்றி பெறும்; உள்ளத்தில் உணர்ச்சியில்லாமல் - ஊக்கமில்லாமல் - பிறர் வலியுறுத்தலுக் காகச் செய்யப்படும் செயல் சிறப்படையாது. உள்ளத்திலே உணர்ச்சியில்லாமல் எழுதப்படும் எழுத்திலே உயிரோட்டம் இராது. பிறரால் தூண்டப்படாமல்-தானே துள்ளி யெழுந்த உள்ளத்துடன் எழுதப்படும் கவிதைகளிலே-காவியங்களிலே-கதைகளிலே-கட்டுரைகளிலேதான் உயிர்த் துடிப்பிருக்கும். கம்பன் பிறர் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து-பொருளுக்கோ புகழுக்கோ ஆசைப்பட்டு இராமாயணத்தைப் பாடியிருப் பானாயின், அது ஒரு செத்த காவியமாகவே போயிருக்கும். இன்றிருப்பது போல் உலகப் புகழ் பெற்ற-ஒப்பற்ற-உயிர்க் காவியமாக நின்று நிலவாது. ஆசைபற்றி அறையல் உற்றேன் மற்றுஇக் காசு இல்கொற்றத்து இராமன் கதைஅரோ என்று கம்பனே சொல்லி விட்டான். யாருடைய தூண்டு தலாலும் நான் இராமாயணத்தைப் பாடவில்லை. குற்றமற்ற வெற்றியையுடைய இராமன் வரலாற்றில் உள்ள ஆசையால் - அதைத் தமிழ் மக்கள் படிக்கும் இனிய சொற்சுவைக் காவியமாகச் செய்து தரவேண்டும் என்ற ஆசையால்-நானே தான் பாடினேன் என்று விளக்கமாகச் சொல்லி விட்டான். கம்பனைப் பற்றி கம்பன் சோழ நாட்டிலே வாழ்ந்தவன். தேரழுந்தூரிலே இருந்தவன். தேரழுந்தூருக்குச் சிறிது தொலைவிலே இருந்த வெண்ணெய் நல்லூரிலே வாழ்ந்த சடையப்ப வள்ளல் என்னும் பெரு நிலக்கிழவரின் ஆதரவு பெற்றவன். மன்னர்களாலும் கவிஞர்களாலும் மதிக்கப்பட்டவன். இவ்வளவுக்குத் தான் அவனுடைய உண்மை வரலாற்றை உணர முடிகின்றது. ஆதித்தன் குலத்திலே பிறந்தவன்; ஒச்சன் குடியிலே வளர்ந்தவன்; கம்ப நாட்டிலே செல்வத்தோடு வாழ்ந்தவன் என்று அவன் பிறப்பைப் பற்றிப் பலவாறு கூறுவோர் உண்டு. கம்பன் பிறந்த போது கம்பத்தின் அடியிலே கிடத்தப் பட்டான்; அவன் கையில் கம்பு வைத்திருந்தான்; அவன் இளம் வயதிலே கம்பங் கொல்லையைக் காத்திருந்தான். ஆதலால் கம்பன் என்று பெயர் பெற்றான் என்று கூறுவோரும் உண்டு. ஏகம்பன் என்பது சிவபெருமான் பெயர். ஏ என்ற எழுத்து மறைந்து கம்பன் என்ற பெயர் மட்டும் நிலைத்தது என்று உரைப்போரும் உண்டு. கம்பன் என்பது காரணப் பெயர் அன்று; கம்பனுடைய இயற்பெயர் கம்பன்தான். தமிழ் நாட்டிலே கம்பன் என்று பெயர் வைக்கும் வழக்கம் உண்டு என்று கல்வெட்டுகளால் தெரிகின்றது. ஆதலால் கம்பன் என்பதைக் காரணப் பெயராகக் கொள்ளாமல், இயற்பெயர்-அதாவது இடுகுறிப்பெயராகக் கொள்ளுவதே ஏற்றதாகும். கம்பன் வெண்ணெய் நல்லூரிலே தங்கி இருந்து இராமாயணம் பாடினான். அவன் இக் காவியத்தைப் பாடும் போது, அவனுக்கு எக் கவலையும் தோன்றாமல் சடையப்ப வள்ளல் உதவி செய்து வந்தார். தோமறு மாக்கதை, சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே. என்பது கம்பன் வாக்கு. சடையப்ப வள்ளல் வாழ்ந்த வெண்ணெய் நல்லூரிலே உறைந்து, குற்றமற்ற இப்பெருங் காவியத்தைப் பாடி முடித்தேன் என்பதே இதன் பொருள். இக்காவியம் சீரங்கத்திலே திருவரங்கப் பெருமாள் முன்னிலையிலே அரங்கேற்றப்பட்டதாகும். எண்ணிய சகாத்தம் எண்ணூற்று ஏழின்மேல், சடையன் வாழ்வு நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன் பண்ணிய இராம காதை, பங்குனி அத்த நாளில், கண்ணிய அரங்கர் முன்னே கவி அரங் கேற்றினானே என்ற தனிச் செய்யுள் இவ் வரலாற்றை விளக்கும். சடையப்ப வள்ளல் சிறந்து வாழ்ந்த வெண்ணெய் நல்லூரிலே இருந்து எண்ணப்பட்ட நூற்றாண்டு எண்ணூற்றேழிலே செய்த இராமகாதையைப் பங்குனி மாதம், அந்த நட்சத்திரத்திலே, சிறந்த அரங்கநாதர் முன்னிலையிலே, கவிஞனாகிய கம்பன் அரங்கேற்றினான் என்பதே இப்பாடலின் பொருள். அழியாத இலக்கியம் கம்பன் இராமாயணத்தைப் பன்னீராயிரம் பாடல்களால் பாடி முடித்தான் என்பர். இன்று அச்சிடப்பட்டுள்ள இராமாயணங்களிலே - ம.சண்முகம் பிள்ளை அவர்களால் பரிசோதித்து அச்சிடப்பட்டுள்ள இராமாயணத்திலே-12097 பாடல்கள் இருக்கின்றன. ஏழு காண்டங்களிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கையிது வாகும். ஏழாவது காண்டமாகிய உத்தர காண்டமும் கம்பனால் பாடப் பெற்ற தென்றே குறிப்பிடப் பட்டுள்ளது. கம்பன் உத்தர காண்டம் பாடவில்லை; பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்களை மட்டுமே பாடினான். இவைகளைப் பதினாயிரம் கவிகளிலே பாடி முடித்தான் என்பர். கம்பனைப் பற்றி வழங்கும் கதைகளும் இவ் வுண்மையை வலியுறுத்துகின்றன. உத்தர காண்டப் பாடல்கள் ஏனைய ஆறு காண்டப் பாடல்களைப் போல் அவ்வளவு சுவையுள்ள பாடல்களாக இல்லை என்பதும் இவ் வுண்மையை விளக்கும். கம்பன் பாடிய ஆறு காண்டங்களிலே இன்றுள்ள பாடல்கள் 10587 ஆகும். இவ்வெண் ம.சண்முகம் பிள்ளை பதிப்பில் கண்டவை. கம்பன்மீது இன்று சிலர் காய்ந்து விழுகின்றனர். தமிழின் சிறப்பைத் தரணியிலே விளக்கி நிற்கும் இக் காவியத்தைக் கொளுத்த வேண்டும் என்று கூடச் சிலர் கூறுகின்றனர். கம்பன் காவியத்தைக் கையினால் தொடக் கூடாது என்றும் பேசுகின்றனர். சிறந்த காவியங்கள் - உயர்ந்த இலக்கியங்கள் - எந்தக் காலத்திலும் மக்கள் உள்ளத்திலிருந்து ஓடிப் போய்விட மாட்டா. அவைகளை அழிக்க முயன்றவர்கள் யாராயினும் வெற்றி காண மாட்டார்கள். இந்த உண்மையை நாம் தமிழ் இலக்கிய வரலாற்றிலே காணலாம். தமிழ் இலக்கியங்களிலே சீவக சிந்தாமணி ஒரு சிறந்த காவியம். அது சமணமதக் காவியம். ஆயினும் அதன் கவிச் சுவை கருதித் தமிழ் நாட்டினர் அனைவரும் அந் நூலைப் பாராட்டி வந்தனர். மன்னர்களுடைய சபைகளிலே சிந்தாமணியைப் பற்றிப் புலவர்கள் சொற்பொழிவாற்றி வந்தனர். மதபேதமில்லாத சைவர்கள், வைணவர்கள், பௌத்தர்கள், சமணர்கள் அனைவரும் அந்நூலின் தமிழ்ச் சுவையை நுகர்ந்து வந்தனர். சைவ மதத்திலே பற்றுக்கொண்ட சேக்கிழார் சிந்தாமணிக்கு நிகராகச் சைவ காவியம் ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ணினார். தமிழ் மக்கள் சமண காவியத்தைக் கற்பதை விட்டுச் சைவ காவியத்தைக் கற்க வேண்டும் என்று கருதினார். இதற்காகப் பெரிய புராணத்தை இயற்றினார். சோழ மன்னன் அவையிலே நாள்தோறும் நடைபெற்ற இலக்கியச் சொற்பொழி வாகிய சிந்தாமணிச் சொற்பொழிவை நிறுத்தும்படி செய்தார். பெரியபுராணச் சொற்பொழிவை நடைபெறச் செய்தார். இவ் வரலாற்றை உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய சேக்கிழார் புராணம் கூறுகிறது. மதப் பற்றுக் காரணமாகச் சிந்தாமணி வெறுக்கப் பட்டாலும் அதன் மாண்பு சிதறிவிடவில்லை. சிந்தாமணிக்கு எதிராகப் பெரிய புராணம் பிறந்தாலும் அதன் பெருமை அழிந்துவிடவில்லை. கவிச் சுவை பொருந்திய சிறந்த நூலாகவே அது சிறந்து நிற்கின்றது. தமிழ் கற்ற அறிஞர் அனைவரும் அந் நூலின் இனிமையை நுகர்ந்து இன்புறுகின்றனர். கம்ப இராமாயணம் தமிழ் நாட்டிலே சிறந்த இலக்கியமாகப் பரந்து வருவதைக் கண்டு அந்தக் காலத்திலேயே சைவப் புலவர்களிலே சிலர் பொறாமை கொண்டனர். இராமாயணம் வைணவ காவியம்; அதற்கு எதிராகச் சைவ காவியம் ஒன்றைப் பாட வேண்டும் என்று எண்ணினர். இவ்வெண்ணத்தின் காரணமாகவே கந்த புராணம் தமிழிலே பாடப்பட்டது. உருவத்திலும் கம்பன் காவியத்தைப்போல் இருக்கும்படி பத்தாயிரம் பாடல்களிலே கந்தபுராணம் பாடப்பட்டது. இன்று அச்சிடப்பட்டுள்ள கந்த புராணத்திலே 10300 செய்யுட்கள் இருக்கின்றன. இதைப் பாடிய ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர் காஞ்சி நகரிலே வாழ்ந்தவர். கந்த புராணக் கதையும், இராமாயணக் கதையும் ஏறக்குறைய ஒரே போக்கில் உள்ளவை. இரண்டையும் படிப்போர் கந்த புராணத்திலிருந்து இராமாயணம் பிறந்ததா? இராமாயணத்தி லிருந்து கந்த புராணம் பிறந்ததா? என்ற ஐயத்திலே அகப்பட்டுத் தவிப்பார்கள். கம்பனுக்குப் போட்டியாகக் கந்த புராணம் தமிழிலே பாடப்பட்டாலும், கம்பன் பெருமை மங்கிவிடவில்லை; அவன் கவிதை வளம் குன்றிவிடவில்லை. முருகனிடத்திலே அன்புள்ளவர்கள் கந்த புராணத்தைப் படித்து இன்புறு கின்றனர். சிந்தாமணியைப் போல் - கம்பனைப் போல் - எல்லா மதத்தினராலும் படித்துக் கவியின்பம் நுகரும் நூலாகக் கந்தபுராணம் விளங்கவில்லை. உயிரோவியமாகச் சிறந்து விளங்கும் இலக்கியங்கள் ஒரு நாளும் அழிந்து போகமாட்டா. அவைகளை அழிக்க எவ்வளவு தான் முயன்றாலும் அம் முயற்சி வீண் முயற்சியாகவே முடியும்; இவ்வுண்மையை மேலே கண்ட வரலாறுகள் மெய்ப்பிக்கும். கம்பன் காலத் தமிழகம் கம்பன் காலத்திலே தமிழகம் எப்படியிருந்தது? தமிழ் மக்களின் சமுதாய வாழ்க்கை எப்படி யிருந்தது? தமிழர்களின் மனப்பான்மை என்ன? பெரும்பாலான தமிழர்கள் அக் காலத்தில் விரும்பியது என்ன? இவைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இவைகளைப் பற்றித் தெரிந்து கொண்டால் இராமாயணக் கதையைக் கம்பன் விரும்பியது ஏன்? அதனைச் சிந்தைக்கும், செவிக்கும் இனிமையூட்டும் பெருங்காவியமாகப் பாடியது ஏன்? என்ற உண்மைகள் விளங்கும். கதையும் கருத்தும் எந்தக் காலத்திலும் கதைகளைக் கேட்பதிலே மக்களுக்கு ஆர்வம் அதிகம். நகை, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வீரம், வெகுளி, உவகை, கருணை முதலிய நவரசம் பொருந்திய கதைகளைக் கேட்பதிலே அனைவருக்கும் ஆசையுண்டு. கதைகளின் வாயிலாக மக்கள் அறிவை வளர்க்க முடியும். மக்களிடம் வீர உணர்ச்சியை ஊட்டலாம்; நாட்டுப் பற்றைப் பெருக்கலாம்; இரக்கம், அன்பு, ஒற்றுமை முதலிய நல்லொழுக் கங்களை வளர்க்கலாம். உண்மை வரலாறு களாயினும் சரி, கட்டுக் கதைகளாயினும் சரி மக்கள் மனதைக் கவரும் வகை யிலே எழுதப்பட்டால் அவைகளால் மக்கள் நன்மையடைவார்கள். நமது முன்னோர்கள் கதைகளின் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் நன்மையை அறிந்திருந்தனர். ஆகையால் தான் கதை உருவிலே இதிகாசங்கள் புராணங்கள், காவியங்கள் எழுதி வந்தனர். கட்டுப்பாட்டை மீறி நடப்பவர்கள் தண்டனைக்கு ஆளாவார்கள்; நீதி முறையிலே தவறாதவர்கள் நிலைத்த புகழுடன் விளங்குவார்கள்; கல்வி, செல்வம், செல்வாக்கு முதலியவற்றிலே எவ்வளவுதான் சிறந்திருந்தாலும் அடாதவற்றைச் செய்பவர்கள் அழிந்தே போவார்கள். நீதியிலும், ஒழுக்கத்திலும் நிற்பவர்கள் எவ்வளவு தொல்லைக்கு ஆளானாலும் இறுதியில் இன்பமும், புகழும் பெறுவார்கள். இவ்வுண்மைகளைக் கதைகளின் மூலம் காட்டி வந்தார்கள். சமுதாயக் கட்டுப்பாட்டைச் சிதைப்பவன் அக்கிரமக் காரன்; சமுதாயக் கட்டுப்பாட்டை அழியாமல் காப்பாற்று கின்றவன் அனைவராலும் போற்றப்படுவான். அறநூற் கொள்கைக்குப் புறம்பாக நடப்பவன் யாராயினும் தூற்றப் படுவான்; அறநூற்கொள்கைகளைப் பின்பற்றி நடப்பவன் மனிதனாயினும் மக்களால் தெய்வமாகப் போற்றப்படுவான். நாட்டை ஆளுபவர்கள் தன்னலத்தைக் குறிக்கோளாகக் கொண்டு குடிகளைத் துன்புறுத்துவார்களாயின் அவர்கள் கொடுங் கோலர்கள். மக்கள் துன்பத்தைப் போக்கி அவர்களை இன்புறச் செய்வதே கடமை என்று எண்ணி நாட்டை ஆளுகின்றவர்களே சிறந்த அறிஞர்கள்; ஒப்பற்ற தியாகிகள். இத்தகைய நீதிகளைக் கதைகளிலே அமைத்து எழுதினார்கள். இக் கதைகளை மக்களும் விரும்பிப் படித்தனர். மதப் பற்றும், தெய்வப் பற்றும் மக்களிடம் தலை தூக்கி நின்ற காலத்தில் கதைகளின் மூலம் இவைகளை மக்களுக்குப் போதித்து வந்தனர். மக்களிடம் உள்ள தெய்வபக்தியையும், மதபக்தியையும் வலுப்படுத்தக் கதைகளிலே பல உறுப்புக்களை அமைத்தனர். தெய்வ-மத பக்தியுள்ளவர்களை நல்லவர்களாக-உயர்ந்த ஒழுக்கமுள்ளவர்களாக - வீரர்களாக - அறிஞர்களாக-குருமார்களாகச் சித்திரித்தனர்; அவர்களைச் சிறந்த மகான் களாக-அவதார புருஷர்களாகக் காட்டினர். தெய்வபக்தியும், மதபக்தியும் உள்ளவர்களையே தெய்வத் தண்டனைக்கு அஞ்சி அறத்தைப் பின்பற்றி நடப்பவர்களாகக் குறித்தனர். தெய்வபக்தி அற்றவர்களை - மத பக்தி அற்றவர்களை கொடுமையின் உருவமாகக் கற்பனை செய்தனர். அவர்கள் காமுகர்கள்-சமுதாயச் சட்டத்தை மதிக்காதவர்கள்-தங்கள் நன்மை ஒன்றையே குறியாகக் கொண்டவர்கள் -நம் இன்பத்திற்காக எத்தகைய கொடுமையையும் செய்வார்கள்; யாரையும் பலி கொடுப்பார்கள் என்று காவியங்களிலும் கதைகளிலும் எழுதினார்கள். இராமாயணம் பாடியது ஏன்? மனித சமுதாயத்தை ஒழுங்கு படுத்தும் உயர்ந்த எண்ணத்துடன் எழுதப்பட்ட இக் கதைகளை நல்ல சொல் நயமும் பொருள் நயமும் பொருந்திய கவிதைகளிலே எழுதினர். இதையே இயற்றமிழ் என்று கூறினர். இவைகளைப் பண்ணுடன் பக்கவாத்தியங்களுடன் பாடும் வகையிலே எளிய இனிய தமிழிலேயும் எழுதினர். இது இசைத் தமிழ் என்று பெயர் பெற்றது. இவைகளை மேடைகளிலே நடித்துக் காட்டினர். இது நாடகத் தமிழ் என்று பெயர் பெற்றது. இவ்வாறு இயல், இசை, நாடகம், என்னும் முத் தமிழும் வளர்ந்து வந்த காலத்திலேதான் கம்பன் வாழ்ந்தான். நல்ல நோக்கத்துடன் எழுந்த கதைகளும், இதிகாசங்களும், புராணங்களும் கம்பன் காலத்திலே மக்களிடையிலே மதிப்புப் பெற்றிருந்தன. படிக்காத பொதுமக்களும் இத்தகைய வரலாறு களை - கற்பனைச் சித்திரங்களைக் கேட்பதிலே காதல் கொண்டி ருந்தனர். அவர்கள் படித்தவர்களானாலும் சரி, படிக்காதவர் களானாலும் சரி, தாங்கள் படித்த கதைகளை - கேட்ட கதை களைப் பிறருக்குச் சொல்லுவதிலேயும் ஆசை கொண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலைதான் கம்பன் ஒரு காவியத்தைச் செய்யும் துறையிலே இழுத்துச் சென்றது. அவன் இராமாயண காவியத்தைப் பாடும் முயற்சியிலே ஈடுபட்டதற்கு இது முதற் காரணமாகும். கம்பன் காலத்திலே வழக்கிலிருந்த நூல்களையும் அறிஞர்கள் படித்துப் பாராட்டிக் கொண்டுதான் இருந்தனர். ஆயினும் அக்காலக் காவியங்கள் எல்லாம் சமண-பவுத்த மதக் கொள்கை களை வலியுறுத்துவன என்பதை மறந்துவிடக் கூடாது. கம்பன் காலத்திலே தமிழ் நாட்டிலே சமண-பவுத்த மதங்களின் செல்வாக்குக் குறைந்து விட்டது. அம் மதங்களைப் பெரும்பாலான தமிழர்கள் வெறுக்கவும் தொடங்கினர். சைவ, வைஷ்ணவ மதங்களே தமிழ் மக்களால் பாராட்டப்பட்டு வந்தன. தமிழின் சுவை கருதி மட்டுந்தான் ஐம்பெருங் காப்பியங் களைப் படித்தார்கள். அவைகளின் கொள்கைகளிலே அவர் களுக்குப் பற்றுதல் இல்லை. அவர்கள் சைவ, வைஷ்ணவக் கொள்கைகளைக் கொண்ட சிறந்த காவியங்களும், கவிதைகளும் வேண்டும் என்று விரும்பினர். இவ்விருப்பத்தின் காரணமாகவே பெரிய புராணம் எழுந்தது. மக்களின் இத்தகைய ஆசையை நிறைவேற்றவே கம்பன் இராமாயணத்தைப் பாடினான். இது இரண்டாவது காரணம். கம்பன் காலத்திலே அறிஞர்களின் உள்ளத்தைக் கவரும் உயர்ந்த சுவையுள்ள இனிய செந்தமிழ்ப் பெருங்காவியம் ஒன்றும் இல்லை. ஐம்பெருங்காவியங்கள் கருத்தில் பெருங் காப்பியங்களாக இருக்கலாம். உருவத்தில் பாரதம்போல், இராமாயணம்போல் பெருங்காவியம் அல்ல. அக் காலத்தில் பெருந்தேவனார் பாரதம் வழக்கிலிருந்தாலும் அதன் செய்யுட் கள் அறிஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்வனவாக இல்லை. இராமாயண காவியம் தமிழில் ஒரு உருவான காவிய மாக வழங்கவில்லை. கம்பன் இராமாயணக் காவியத்தைப் பாடுவதற்கு இது மூன்றாவது காரணம். கம்பன் காலத்திலே தமிழ் நாட்டிலே இராமாயணக் கதை மிகவும் புகழ்பெற்றிருந்தது. இராமாயணக் கதை வெறும் வரலாறாக மட்டும் வழங்கி வரவில்லை. பொழுது போக்குக் கதையாக மட்டும் வழங்கி வரவில்லை. தெய்வத் தன்மை பொருந்திய கதையாக வழங்கிற்று. புண்ணியக் கதையாக வழங்கிற்று. அறம் வெல்லுமா? பாவம் வெல்லுமா? நீதி வெல்லுமா? அநீதி வெல்லுமா? தந்நலம் வெற்றி பெறுமா? தியாகம் வெற்றி பெறுமா? என்ற கேள்விகளுக்கு ஏற்ற விடையளிக்கும் கதையாக வழங்கிற்று. இராமாயணக் கதையிலே ஏதேனும் ஒரு பாகத்தைக் கேட்டாலும் புண்ணியம் உண்டு. அதில் வழங்கும் கதைகளிலே ஏதேனும் ஒரு கதையைக் கேட்டாலும் நன்மையுண்டு என்று கம்பன் காலத்து மக்கள் நம்பி வந்தனர். இந்த நம்பிக்கை காரணமாக அவர்கள் இராமாயணக் கதையைக் கேட்டும், பாடியும், நடித்தும் வந்தனர். இவ்வுண்மையை இராமாயணத்தைப் புகழ்ந்து பாடி இருக்கும் ஒரு தனிப் பாடலிலே காணலாம். இலங்கையில் வாழ்ந்தவன் இராவணன்; அவனும் பல போர்களிலே வெற்றி கண்டவன்; அந்த வீரனை வென்றவன் இராமன், அந்த இராமன் திருமாலின் அவதாரம்; ஆதலால் இராவணனை அவனால் வெல்ல முடிந்தது. இந்தத் திருமால் அவதாரமாகிய இராமனுடைய வீரத்தை எடுத்துக் கூறுவதற்காகவே இராமாயணம் வழங்கி நிற்கின்றது. இந்த இராமாயணத்திலே உள்ள கதைகளிலே ஒரு கதையைப் படித்தாலும் போதும். அக் கதையைப் பிறர் சொல்லக் கேட்டாலும் போதும், உயர்ந்த கதை என்று பாராட்டினாலும் போதும். அவர்கள் நரகம் என்னும் துன்பத்தை அடையவே மாட்டார்கள் என்று கூறுகிறது அப்பாடல். வென்றிசேர் இலங்கை யானை வென்றமால் வீரம் ஓத. நின்ற ராமா யணத்தில் நிகழ்ந்திடு கதைகள் தம்மில், ஒன்றினைப் படித்தோர் தாமும் உரைத்திடக் கேட்டோர் தாமும் நன்றிது என்றோர் தாமும் நரகம் அதுஎய்தி டாரே. இதுவே மேலே கண்ட பொருளமைந்த பாடல் இராமாயணக் கதையைக் கேட்போர் நீதி வழியிலே நடப்பர்; நீதிக்கு மாறானவைகளை நெஞ்சிலே நினைக்க மாட்டார்கள்; கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடந்து வாழ்க்கையிலே களிப்படைவார்கள். வரைதுறையற்ற வாழ்க்கையிலே வீழ்ந்து வசை மொழிக்கும் துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். இக் கருத்துக்கள் இப்பாடலில் அமைந்திருப்பதைக் காணலாம். இக்கருத்தை மதித்துத் தன் கவிதா சக்தியை இராமாயண காவியம் இயற்றுவதிலே காட்டினான், கம்பன். இராமாயணத்தைப் பாடுவதற்கு இது நான்காவது காரணம். கம்பன் காலத்திலே தமிழ் நாட்டில் திருக்குறள் சிறந்த தொரு இலக்கியமாகத் திகழ்ந்து நின்றது. மக்கள் அனைவரும் அந்த அறநூலைப் போற்றிப் புகழ்ந்தனர். வாயளவிலேதான் வள்ளுவர் நீதி போற்றப்பட்டது; செயலிலே அதைப் பின்பற்று வோர் குறைந்து வந்தனர். கடவுள் ஒன்றே; ஒழுக்கமே உயர்ந்தது; குடிப்பிறப்பின் பெருமை ஒழுக்கங் கெடுவதனால் குன்றிவிடும். ஒழுக்கமற்ற பின் பிறப்பால் உயர்வு தாழ்வு பேசுவது பொருந்தாது. எக் குடியிலே பிறந்தவனாயினும் உயிரினும் உயர்ந்ததாக ஒழுக்கத்தைப் பின்பற்று வானாயின் அவன்தான் உயர் குடியினனாக எண்ணப்படுவான். இவை போன்ற உயர்ந்த திருக்குறள் நீதிகளைத் தமிழ் மக்கள் பின்பற்றவில்லை. அன்றியும் வள்ளுவர் அறத்தை அடிப்படை யாகக் கொண்ட காவியம் ஒன்றும் தமிழிலே இல்லை. இந்த நிலையைக் கண்டான் கம்பன். இராமாயணக் கதையின் வாயிலாக வள்ளுவர் வகுத்த நீதியை நிலை நாட்டலாம் என்று நினைத்தான். பிறப்பால் சாதியில்லை; தக்க இன்ன தகாதன இன்ன என்று உணர்ந்து நடப்பவர்கள் யாராயினும் அவர்கள் உயர்ந்த மனிதர்கள். அவர்கள் எக் குடியிலே பிறப்பினும் ஏற்றம் உள்ளவர்கள். உயர்குடியிலே பிறந்த அறிஞர்களுடன் ஒன்றாக ஒரு குடியிலே பிறந்தவர்களாக - எண்ணத் தகுதி வாய்ந்தவர்கள். இக் கொள்கையைத் தமிழ் மக்களிடையிலே மீண்டும் நிலவச் செய்ய வேண்டும் என்பது கம்பன் கருத்து. இவ்வாறு வள்ளுவர் அறத்தை இராமாயணக் கதையின் வாயிலாகத் தமிழகத்தில் வழங்கச் செய்யலாம் என்று உறுதி கொண்டதே கம்பன் இராமாயணத்தைப் பாடியதற்கு ஐந்தாவது காரணம். ஆரியர் - தமிழர் என்ற பிரிவினை கம்பன் காலத்தில் இல்லை. ஆசிரியர் நாகரிகம் இது; தமிழர் நாகரிகம் இது என்ற பேச்சும் அவன் காலத்தில் இல்லை. இராமன் சூரிய குலத் தோன்றல், சோழர்களும் சூரியர் குலத்திலே பிறந்தவர்கள்; சோழர் குல முன்னோர்களில் ஒருவன் சிபிச் சோழன் என்பவன்; இவன் ஒரு புறாவுக்காக அதை விரட்டி வந்த வேடனுக்குத் தன் உடம்பின் சதையை அறுத்து நிறுத்துக் கொடுத்தான். இறுதியில் தானே துலாத் தட்டில் ஏறி நின்றுவிட்டான். இக்கதை தமிழ் இலக்கியங்களிலே காணப்படுகின்றது. இந்தச் சிபிச் சோழன், சிபிச் சக்கரவர்த்தி என்னும் பெயரால் இராமனுடைய குல முன்னோனாகக் கூறப்படுகின்றான். சிபிச் சோழன் கதையும், சிபிச் சக்கரவர்த்தியின் கதையும் ஒன்றாகவே யிருக்கின்றன. ஆதலால் இராமனைத் தமிழர் மரபைச் சேர்ந்தவன் என்று எண்ணித் தான் கம்பன் இராமாயணத்தைப் பாடினான் என்று கூறுவோர் உண்டு. இதுவும் பொருத்த மாகத்தான் காணப்படு கின்றது. மக்கள் கருத்தை நிறைவேற்றுவதே ஒரு கவிஞன் கடமை; அவர்கள் விரும்பும் வழியிலே நின்று, பல நல்ல அறங்களை அவர்களுக்கு எடுத்துக்காட்டி, அவர்களைச் சீர்திருத்த முயற்சி செய்வதே-முன் வருவதே-மக்களோடு இணைந்து வாழும் ஒரு மாபெரும் கவிஞன் கடமை. இத்தகைய கடமையையே கம்பன் தான் பாடிய இராமாயணத்தின் வழியாகச் செய்தான். காலத்தின் நிலையறிந்து - மக்களின் மனப்போக்கறிந்து - என்றும் அழியாத இனிய தமிழ்க் காவியம் செய்த கம்பன் பெருமையே பெருமை! கம்பனுக்குமுன் இராமாயணம் கம்பன் வடநாட்டு இராமனைத் தமிழ் நாட்டிலே தெய்வமாக்கினான்; எல்லா நற்குணங்களும் நிரம்பிய நம்பியாக உத்தமனாக விளங்கச் செய்தான்; தென்னாட்டுத் திராவிடனாகிய இராவணனை அரக்கன் ஆக்கினான். திராவிடர்களையே வானரங்களாகவும் கூறினான். ஆழ்வார் பட்டம் பெறுவதற்கு ஆசைப்பட்டு இப்படிச் செய்தான். இதனால் கம்ப நாட்டாழ்வான் என்று பட்டம் பெற்றான் என்று கம்பனைப் பழிக்கின்றனர் சிலர். இவ்வாறு கம்பனைத் தூற்றுவோர் தமிழ் இலக்கியங் களை முற்றும் கற்றவர்கள் அல்லர். தமிழ் இலக்கியங்களைக் கற்று உண்மை உணர்ந்தவர்கள் இவ்வாறு பழிப்பார்களானால் அவர்கள் உள்ளத்திலே தூய்மை இருக்க முடியாது; வீண் வெறுப்புக் காரணமாகக் கம்பன் மீது பழி சுமத்துகிறவர்கள் என்றுதான் அவர்களைப் பற்றிக் கருத வேண்டும். இராமாயணக் கதை கம்பன் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் வழங்கியிருந்தது. தமிழர்கள் அக் கதையைப் பாராட்டினர். இராமன் தெய்வீகத் தன்மையுள்ளவன். இராவணன் கொடுமையின் மாற்றுருவம். இராமனுக்குத் துணை செய்தவர்கள் வானரர்கள். இந்த இராமாயணக் கதை தமிழ் நாட்டிலே வழங்கி வந்தது. இக்கதை யைக் கற்றவர்களும், மற்றவர்களும் போற்றிப் புகழ்ந்து வந்தனர். கம்பன் காலத்துக்கு முன்பே இராமாயணக் கதை நூல் வடிவிலும் இருந்தது. அது ஆசிரியப்பாவிலும், வெண்பாவிலும் அமைந்திருந்தது. பழந் தமிழ் நூல்கள் ஆசிரியப்பாவிலும் வெண்பாவிலுந்தான் ஆக்கப்பட்டன. ஆகையால் இச்செய்யுட் களால் ஆக்கப்பட்டிருந்த இராமாயணம் ஐம்பெருங் காப்பியங் களின் காலத்ததாகவோ, அதற்கு முற்பட்டதாகவோதான் இருந்திருக்க வேண்டும். அந்த ஆசிரியப்பா இராமாயணமோ, வெண்பா இராமாயணமோ இப்பொழுது நமக்குக் கிடைக்க வில்லை. இவைகள் கம்பன் காலத்திலேயே மறைந்திருக்க வேண்டும். ஆகையால்தான் இராமாயணக் கதை முழுவதையும் தொடர்ச்சியாகத் தெரிந்து கொள்வதற்குக் கம்பன் வால்மீகி இராமாயணக் கதையைக் கேட்க வேண்டியிருந்தது. சங்க நூல்களில் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று எண்ணப்படுவன சங்க இலக்கியங்கள். அச் சங்க இலக்கியங்களைச் சார்ந்த எட்டுத் தொகை நூல்களிலே இராமாயணக் கதைக் குறிப்புக்கள் காணப்படு கின்றன. இராமன், இராவணனுடன் போர் செய்வதற்காக இலங்கைக்குப் புறப்பட்டான். புறப்பட்ட வழியிலே தனுக் கோடியிலே ஒரு ஆலமரத்தின் அடியிலே தங்கியிருந்தான். வானரவீரர்களுடன் அமர்ந்து இலங்கையைப் பற்றிய செய்தி களை அவர்களுடன் ஆராய்ந்துகொண்டிருந்தான். அப்போது அந்த ஆலமரத்தின் மேல் பறவைகள் அமர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. அக்கூச்சல் ஆலோசனைக் கூட்டத்திற்கு இடையூறாயிருந்தது. அப்பறவைகளின் கூச்சல் அடக்கப் பட்ட பின்பே, இராமன் அமைதியாக இருந்து ஆலோசனை நடத்தினான். இது அகநானூற்றில் காணப்படும் இராமாயணக் குறிப்பு. வென்வேல் கவுரியர் தென்முது கோடி முழங்கு இரும்பௌவம் இரங்கும் முன்துறை வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த பல்வீழ் ஆலம். வெல்லுகின்ற வேற்படையைக் கொண்ட பாண்டியனுடைய பழமையான தனுக்கோடியிலே - முழங்கிக் கொண்டிருக்கும் பெரிய கடல் அலைகள் ஓசையிட்டுக் கொண்டிருக்கும் கடல் துறையிலே - வெல்லுகின்ற போர்த் திறமையுள்ள இராமன் தன் நண்பர்களுடன் ஆலோசனை செய்துகொண்டிருந்த போது பறவைகளின் ஓசையை அடக்கிய - பல விழுதுகளையுடைய ஆலமரம். இது மேலே காட்டிய அகநானூற்றுப் பாடற் பகுதியின் பொருள். இமயத்தை வில்லாக வளைத்த பரமசிவன் உமையாளுடன் கைலையிலே வீற்றிருந்தான். அப்பொழுது, பத்துத் தலைகளை யுடையவன் - அரக்கர்களின் தலைவன் - இராவணன் காப்புப் பொலியும் தன் வலிமையான கைகளை, மலையின் கீழே புகுத்தி அதை எடுக்க முயன்றான்; எடுக்க முடியவில்லை. மலையின் கீழ் மாட்டிக் கொண்டு வருந்தினான். இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் உமை அமர்ந்து உயர்மலை இருந்தனன் ஆக ஐயிருதலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தடக்கையின் கீழ்புகுந்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல. (38) இது கலித்தொகையிலே காணப்படும் இராமாயணக் கதைக் குறிப்பு. விரைந்து செல்லும் தேர் உள்ள இராமனுடன் சேர்ந்து காட்டுக்கு வந்த சீதையை வலிமை வாய்ந்த கைகளையுடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து சென்றான். அந்நாளில் சீதையால் சுழற்றி எறியப்பட்டு நிலத்தில் கிடந்து ஒளி வீசிய ஆபரணங்களைச் சிவந்த முகங்களையுடைய குரங்குகளின் பெரிய கூட்டங்கள் கண்டன. கடுந்தேர் இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலம்சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம்முகப் பெரும்பிளை (378) இது புறநானூற்றுப் பாடலில் காணப்படும் இராமாயணக் கதைக் குறிப்பு. இராமன் சீதையுடன் சேர்ந்து காட்டுக்குப் போனான்; இராவணன் சீதையைச் சிறைப் பிடித்துச் சென்றான். போகும் வழியில் சீதை தான் பூண்டிருந்த அணி கலன்களைக் கழற்றி எறிந்தாள். அவைகள் நிலத்திலே வீழ்ந்து மின்னிக் கொண்டிருந்தன. அவைகளைக் குரங்குகள் கண்டு கூடியிருந்து வியந்தன என்ற கதைப் பகுதி இந்தப் புறநானூற்று அடிகளிலே அடங்கிக் கிடக்கின்றது. இந்த அகநானூற்றுப் பகுதியும் கலித்தொகைப் பகுதியும் புறநானூற்றுப் பகுதியும் சங்க காலத்திற்கு முன்பே தமிழ் நாட்டில் இராமாயணக் கதை வழங்கி யிருந்ததைக் காட்டுகின்றன. காவியங்களில் ஆழ்வார்களுக்கும் - நாயன்மார்களுக்கும் முன்னே தோன்றி யவை ஐம்பெருங் காவியங்கள். அவைகளுள் மணிமேகலையிலும் – சிலப்பதி காரத்திலும் இராமாயணத்தைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. திருமால் மயக்கம் உற்று நில உலகிலே இராமனாகத் தோன்றினான். இராவணனைக் கொல்ல-சீதையைச் சிறைமீட்க - இலங்கைக்குப் போகும் பொருட்டு வலிமை சிறந்த கடலிலே அணை போட்டான். அந்நாளில் அணை போடுவதற்காகக் குரங்குகள் தூக்கிக் கொண்டு வந்து கடலிலே வீசிய பெரிய மலைகள் எல்லாம் வருத்தத்தைத் தரும் கடலின் வயிற்றிலே புகுந்தன. நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அருமுந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம் அணங்குடை அளக்கர் வயிறுபுக்கு (மணிமே, உலக அறவிபுக்க காதை. 9-12) இது இராமன் சேதுபந்தனம் செய்தான் என்பதை விளக்கும் பகுதி. மீட்சி அளவை என்பது இராமன் வென்றான் என்று கேட்டவுடன் பெருமையற்ற இராவணன் தோற்றான் என்று எண்ணுதலாகும். மீட்சி என்பது இராமன் வென்றான் என மாட்சியில் இராவணன் தோற்றமை மதித்தல் ( சமயக் கணக்கர் தந்திறம் கேட்ட காதை. 53-54) இவைகள் மணிமேகலையிலே இராமாயணத்தைப் பற்றிக் காணப்படும் குறிப்புக்கள். அருங்கான் அடைந்த அரும்திறல் பிரிந்த அயோத்திபோல (சிலப்.காதை.13.வரி 14-15) அரிய காட்டையடைந்த சிறந்த வல்லமையுள்ள இராமனைப் பிரிந்த அயோத்தி நகரத்தைப் போல என்பது சிலப்பதிகாரம். கோவலனும், கண்ணகியும் காவிரிப்பூம்பட்டினத்தை விட்டுப் பிரிந்தவுடன் அவ்வூரில் உள்ளவர்கள் வருந்தினார்கள். கோவலனை நினைத்து உரையாடித் துன்புற்றார்கள். இராமன் காட்டுக்குப் போனவுடன் அயோத்தியில் உள்ளவர்கள் இராமனைப் பற்றி எண்ணிப் பேசித் துக்க மடைந்ததைப் போல வருந்தினார்கள். தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடும்துயர் உழந்தோன் வேத முதல்வற் பயந்தோன் என்பது நீ அறிந்திலையோ நெடுமொழி அன்றோ! (சிலப்.காதை 14.வரி 46-49) தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவியாகிய சீதையுடன் காட்டுச் சென்று மனைவியைப் பிரிந்து கடுமைன துன்பத்தை யடைந்தான் இராமன். அவன் வேதங்களின் முதல்வனாகிய நான்முகனைப் பெற்றவன். இது உனக்குத் தெரியாதா? இது பலகாலமாக வழங்கிவரும் வார்த்தை யல்லவா? கோவல னுக்குக் கவுந்தியடிகள் இவ்வாறு கூறியதாகச் சிலப்பதிகாரம் உரைக்கின்றது. மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து சோஅரணம் போர்மடியத் தொல்இலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே (சிலப்.காதை17.படர்க்கைப் பரவல்) மூன்று உலகங்களையும் இரண்டு அடிகளால் மாபலியின் வாக்குறுதி நிரம்பாதபடி முழுவதும் தாவி அளந்தவன்; அவ் வடிகள் சிவக்கும்படி தம்பியாகிய இலக்குவனுடன் இணைந்து காட்டுக்குப் போனவன். அசுரர்களுடைய நகரத்தைப் போரிலே அழிந்தவன். பழமையான இலங்கையையும் அழித்தவன். இந்தச் சிறந்த வீரனாகிய இராமனுடைய புகழைக் கேட்காத காது என்ன காது? திருமாலின் சிறப்பைக் கேட்காத காது என்ன காது? ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்தாடும் போது இவ்வாறு பாடி ஆடுகின்றனர். செயிர்த் தொழில் முதியோன் செய்தொழில் பெருக உயிர்த்தொகை யுண்ட ஒன்பதிற்று இரட்டி என்று இயாண்டும், மதியும் நாளும் கடிகையும் ஈண்டுநீர் ஞாலம் கூட்டி எண்கொள (சிலப்.காதை27, வரி 7-10) உயிர்களைக் கவரும் காலனுடைய தொழில் பெருகும்படி, உயிர்களைக் கொள்ளை கொண்டு உண்ட போர்கள் எல்லாம் பதினெட்டு என்னும் எண்ணில் முடிந்தன. அவற்றை, தேவாசுர யுத்தம் பதினெட்டு ஆண்டுகளில் முடிந்தது; இராமராவண யுத்தம் பதினெட்டு மாதங்களில் முடிந்தது; பாண்டவர் துரியோதனர் யுத்தம் பதினெட்டு நாட்களில் முடிந்தது: செங்குட்டுவன்- கனக விசயர் போர் பதினெட்டு நாழிகைகளில் முடிந்தது என்று உலகினர் எண்ணிக் கொள்ளும்படி... இவ்வாறு உலகோர் யுத்தத்தைப் பற்றிப் பதினெட்டு என்னும் தொகையில் எண்ணும்படி செங்குட்டுவன் போர் செய்து முடித்தான் என்று கூறுகிறது சிலப்பதிகாரம். மேலே காட்டியவைகள் சிலப்பதிகாரத்தில் இராமாயணத் தைப் பற்றிக் காணப்படும் பகுதிகள். ஆழ்வார்கள் ஆழ்வார்கள் அனைவரும் கம்பன் காலத்திற்கு முன்னிருந் தவர்கள்; அவர்களுடைய பாடல்களின் தொகுதி நாலாயிர திவ்யப் பிரபந்தம். அவர்கள் திருமாலிடம் ஆழ்ந்த பக்தி கொண்டு அவர்மீது அன்புப் பாமாலை புனைந்தவர்கள். அவர்களுடைய பாடல்களிலே இராமனுடைய பெருமையைக் காணலாம். அவர்கள் அனைவரும் இராமனைத் திருமாலின் அவதாரமாகவே எண்ணிப் போற்றியிருக்கின்றனர். பிரபந்தத்தைப் படித்தோர்-படிப்போர்-எல்லோருக்கும் இவ்வுண்மை தெரியும். திவ்யப் பிரபந்தத்தில் வரும் இராமாயணப் பகுதிகளை யெல்லாம் தொகுத்தால் போதும். அவைகளை வரிசைப்படுத்தி வரைந்தால் இராமாயணம் முழுவதையும் எழுதிவிடலாம். அந்த அளவுக்கு இராம சரிதம் ஆழ்வார்களின் அன்பு சொட்டும் தமிழ்ப் பாடல்களிலே பரந்து கிடக்கின்றது. உதாரணமாகச் சில பகுதிகளை மட்டும் குறிப்பிடுகின்றோம். 1. மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே! தென் இலங்கைக் கோன் முடிகள் சிந்து வித்தாய்! 2. திண்திறலாள் தாடகைதன் உரம் உருவச்சிலை வளைத்தாய் 3. தங்குபெரும் புகழ்ச் சனகன் திருமருகா! 4. பாராளும் படர் செல்வம் பரதன் நம்பிக்கே அருளி ஆரா அன்புஇளையவனோடு அரும்கானம் அடைந்தவனே 5. வாலியைக் கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே. இவைகள் குலசேகரப்பெருமாள் திருமொழிகள். இராமன் கௌசலையின் குமாரன், இராவணனைக் கொன்றவன். தாடகையைக் கொன்றவன். சீதையை மணந்து ஜனக ராஜனுக்கு மரு மகனானவன். தனது அரசைப் பரதனுக்கு அளித்து, இலக்குவனுடன் காட்டுக்குச் சென்றவன். வாலியைக் கொன்று அவனுடைய அரசாட்சியை அவன் தம்பி யாகிய சுக்கிரீவனுக்குக் கொடுத்தவன். இவ்வரலாறுகளை இப்பாடல் பகுதிகள் காட்டுகின்றன. குலசேகரப் பெருமாள் பதினொரு பாடல்களில் இராமாயணத்தையே சுருக்கிப் பாடிவிட்டார். இது பெருமாள் திருமொழியில் பத்தாவது திருமொழியாக விளங்குகின்றது. இலங்கைக்குச் சென்ற அனுமான் சீதாபிராட்டியைக் கண்டான். இராமன் கூறிய சில அடையாளங்களை அவளிடம் உரைத்தான். இராமன் கொடுத்த கணையாழியையும் கொடுத் தான். அதன் பிறகுதான் அநுமானை உண்மையான இராம தூதன் என்று சீதா பிராட்டி நம்பினாள். இது இராமாயண வரலாற்றில் உள்ள ஒரு பகுதி. இந்த நிகழ்ச்சியைப் பெரியாழ்வார் பத்துப் பாடல்களிலே அமைத்துப் பாடியிருக்கிறார். பெரியாழ்வார் திருமொழியில் பத்தாவது திருமொழியாக விளங்குகின்றது இப்பகுதி. 1. பைங்கண் விறல் செம்முகத்து வாலிமாளப் படர்வனத்துக் கவந்தனொடும் படையார்திண்கை வெங்கண்விறல் விராதன் உக விற்குனித்த விண்ணவர்கோன் தாள் அணைவீர். 2. கலையிலங்கும் அகல் அல்குல் அரக்கர்குலக் கொடியைக் காதொடு மூக்குடன் அரியக்கதறி அவள்ஓடி தலையில் அங்கைவைத்து மலையிலங்கை புகச்செய்த தடந்தோளன். இவைகள் திருமங்கையாழ்வார் பாடல்களில் உள்ளவை. வாலி, கவந்தன், விராதன் இவர்கள் இராமன் வில்லுக்குப் பலியான வரலாறுகளையும், சூர்ப்பநகையின் உறுப்புக்கள் சிதைவுபட்டு அவள் இலங்கைக்கு ஓடிய கதையையும் இவைகள் குறிப்பிடு கின்றன. இராமனிடம் போர்செய்து தோற்றுப்போன அரக்கர்கள் இராமனிடமே சரணாகதி யடைகின்றனர். அவர்கள் இராவணன் செய்த குற்றத்தை-அடாத செயலை-எடுத்துக்காட்டி அபயம் வேண்டுகின்றனர். இக் கருத்தை அமைத்து இருபது பாடல் களைப் பாடியிருக்கின்றார் திருமங்கையாழ்வார். பெரிய திருமொழி பத்தாவது பகுதியிலே, இரண்டாந் திருமொழி யாகவும், மூன்றாந் திருமொழியாகவும் இப் பாடல்கள் அமைந்திருக்கின்றன. 1. மன்னுடைய யிலங்கை அரண்காய்ந்த மாயவனே 2. கற்பார் இராமனையல்லால் மற்றும் கற்பரோ! 3. கொம்புபோல் சீதை பொருட்டு இலங்கை நகர் அம்பெரி உய்த்தவர். இவைகள் திருவாய்மொழி நம்மாழ்வார் பாடல்களில் உள்ளவை. இவ்வாறு ஆழ்வார்கள் அனைவரும் இராமாவதாரத்தில் ஈடுபட்டுப் பாடியிருக்கின்றனர். இவர்கள் கம்பன் பாடிய இராமாயணத்தைப் படித்து அதன்பின் இராமன் மீது அன்பு செலுத்தியவர்கள் அல்லர். நாயன்மார்கள் ஆழ்வார்களுடைய பாடல்களில் இராமாயணம் காணப் படுவதுபோல நாயன்மார்களின் பாடல்களிலும் இராமாயணக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. நாயன்மார்களும் இராம காதையை அறிந்திருந்தனர். ஆழ்வார்கள் திருமாலைப் போற்றி யவர்கள். ஆதலால் அவர்கள் இராமாவதாரத்தைப் பற்றி விரிவாகப் பாடியிருக்கின்றனர். நாயன்மார்கள் சிவபெருமானைப் போற்றிப் பாடியவர்கள். ஆகையால் இராமனைப் போற்றிப் புகழவில்லை; சிவபிரானைப் புகழும் வகையிலே இராம சரித்திரத்தையும் இணைத்துக் கூறியிருக்கின்றனர். 1. எறியார் கடல்சூழ் இலங்கைக்கோன் தன்னை முறியார் தடக்கை அடர்ந்த மூர்த்தி (சம்பந்தர்) 2. தலைஒருபத்தும் தடக்கையது இரட்டிதான் உடைய அரக்கன் ஒண்கயிலை அலைவது செய்த அவன் திறல் கெடுத்த ஆதியார் (நாவுக்கரசு) 3. திண்தேர் நெடுவீதி இலங்கையர்கோன் திறள்தோள் இருபஃதும் நெரித்தருளி (சுந்தரர்) இவைகள் தேவாரத்திலுள்ளவை. இவ்வாறு மூவர் பாடல்களிலும் பலவிடங் களிலும் இராவணன் செய்கை கூறப்படுகின்றது. சிறப்பாகத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் இராவணன் கயிலையைப் பெயர்த்த செய்தி எல்லாப் பதிகங் களிலும் காணப்படுகின்றது. இராமன் இலங்கைக்குப் போனான்: அரக்கர்களுடன் எதிர்த்துப் போர் செய்தான்; அவர்களை அழித்தான்; இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்பினான்; போரிலே அரக்கர்களைக் கொன்ற பழிதீர இராமேச்சுரத்தில் சிவலிங்கம் வைத்துப் பூசித்தான். இது சைவ புராணங்கள் கூறும் கதை. இராமாயணத்தில் இவ் வரலாறு காணப்படவில்லை. இராமேச்சுரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு இராமலிங்கம் என்று பெயர். இராமனால் பூசிக்கப்பட்டதால் இராமலிங்கம் என்று பெயர் பெற்றது. இராமேச்சுரத்தைப் பற்றித் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடியிருக் கின்றனர். அந்தப் பாடல்களிலும் இராம சரிதம் காணப்படுகிறது. 1. மான் அன நோக்கி வைதேகி தன்னை மாயையால் கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் 2. அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன். இவைகள் திருஞானசம்பந்தர் தேவாரம், திருவிராமேச்சுரத்தைப் பாடிய பதிகத்தில் உள்ளவை. வஞ்சகத்தால் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான்; இராமன் அவனைக் கொன்றான். கடலிலே அணை போட்டு இலங்கைக்குப் போக வழிசெய்தான் என்ற இராமாயணக் கதைப் பகுதிகள் இவை. 1. கடலிடை மலைகள் தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி 2. குன்றுபோல் தோளுடைய குணம்இலா அரக்கர்தமைக் கொன்றுபோர் ஆழி அம்மால் வேட்கையால் செய்த கோயில் 3. வரைகள் ஒத்தே உயர்த்த மணிமுடி அரக்கர்கோன் விரைய முற்றஒடுக்கி மீண்டுமால் செய்த கோயில் இவைகள் திருநாவுக்கரசர் பாடல்கள். திருவிராமேச்சுரத்தைப் பற்றிய பாடல்களிலே இப் பகுதிகள் காணப்படுகின்றன. இராமன் இலங்கைக்குச் செல்ல மலைகளைக் கொண்டு கடலிலே அணைபோட்டான். தான் எண்ணிய கருமத்திலே வெற்றி பெற்றான். உருவத்திலே வளர்ந்திருந்தும் குணத்திலே வளராத அரக்கர்களையெல்லாம் கொன்றான். மலைகளைப் போல் உயர்ந்த மணிமுடிகளையுடைய அரக்கர் மன்னனாகிய இராவணனைக் கொன்றான். அவன் குலத்தையே அடியோடு அழித்தான் என்ற இராமாயண வரலாற்றுப் பகுதிகளை இப்பாடல்கள் குறிக்கின்றன. நாயன்மார்களும் கம்பர் காலத்துக்கு முன்னிருந்தவர்கள். அவர்கள் தங்கள் காலத்துக்கு முன் தமிழ் நாட்டில் வழங்கியிருந்த இராமாயண வரலாற்றையே தங்கள் பக்திப் பாடல்களிலே பல விடங்களிலும் குறிப்பிட்டனர். கம்பன் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, இராமாயணம் தமிழ் நாட்டில் பரவியிருந்தது என்பதற்கு இவைகளே சான்றுகளாம். கம்பன் கருத்து கம்பனுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நமக்குத் திட்டமாகத் தெரியவில்லை. செவி வழியாகக் கேட்கும் அவனுடைய வரலாறு அவன் வறுமையால் அடைந்த துன்பங் களை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அரசன் சினத்துக்கு ஆளானான்; பிறந்த நாட்டை விட்டுப் பிற நாடு புகுந்தான்; எண்ணற்ற அல்லல்களுக்கு இலக்கானான் என்று கூறுகின்றது. வறுமையின் கொடுமையை அவன் நன்கு அறிந்தவன்; இல்லாதவர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்; அவர்களுடைய ஒழுக்கங்களும் நடவடிக்கைகளும் எப்படி மாறுகின்றன என்பவைகளையெல்லாம் கம்பன் கண்கூடாகக் கண்டறிந்தவன். கம்பனிடத்தில் கல்விச் செல்வத்திற்குக் குறைவில்லை; கவிச் செல்வமும் குவிந்திருந்தது. கருத்துச் செல்வத்திற்கும் கணக்கில்லை. இருந்தும் பொருட்செல்வம் மட்டும் போதுமான அளவு இல்லை என்பது உண்மை. அதனால் தான் சடையப்ப வள்ளலின் ஆதரவில் வாழ வேண்டிய நிலையிலிருந்தான்; அவருடைய ஆதரவில்லாவிட்டால் அவன் இராம காதையைப் பாடியிருக்கவே முடியாது. இவ்வுண்மையைக் கம்பனே கூறிவிட்டான். கம்பன் வறுமையின் கொடுமையைக் கண்ணாற் கண்டவன்; தன் வாழ்க்கை யில் அனுபவித்தவன்; ஆகையால் தான் அதை மனித சமுதாயத்திலிருந்தே விரட்டவேண்டும் என்று நினைத் தான். எல்லா மக்களும் இன்னலுக்கு ஆளாகாமல் இன்புற்று வாழ்வதற்கான வழியைப்பற்றிச் சிந்தித்தான். மக்கட் சமுதாயத்திலே உயர்வு தாழ்வுகள் ஏன் நிலைத் திருக்கின்றன? வறுமைத் துன்பங்கள் வளர்ந்து வாழ்வதற்கான காரணங்கள் என்ன? என்பவைகளைப் பற்றி எண்ணினான். இவைகள் நிலைத்திருப்பதற்கான காரணங்களைக் களைந்து விட்டால் எல்லோரும் இன்ப வாழ்வில் நிலைக்க முடியும் என்று உறுதி கொண்டான். அவன் தன் உள்ளத்திலே கொண்ட உறுதியான கருத்தைத் தன் காவியத்திலே அமைத்துப் பாடி யிருக்கிறான். அவைகளிற் சில கருத்துக்களைக் காண்போம். பெண் கல்வி கம்பன் காலத்தில் தமிழகத்தில் ஆண்-பெண் சமத்துவம் இல்லை. பெண்கள் வீட்டுப் பிராணிகளாகவே நடத்தப்பட்டு வந்தனர். ஆண்கள் மட்டும் தங்கள் மனம்போன போக்கில் நடக்கும் உரிமையுடன் உறைந்தனர். பெண்கள் கல்வி கற்பது கூடத் தவறு என்ற கொள்கை தமிழ் மக்கள் பலரிடம் குடிகொண்டிருந்தது. இதைக் கண்ட கம்பன் தமிழர்க்கு அறிவுறுத்தும் முறையில் பெண் கல்வி இன்றியமையாதது என்று பாடினான். இல்லறம் இனிது நடைபெற வேண்டுமானால் இல்லாள் அறிவும் குணமும் அமைந்தவளாயிருக்க வேண்டும். அறிவுக்கும் குணத்திற்கும் அடிப்படை கல்வியாகும். கல்வி கற்ற பெண்கள் இல்லற தர்மத்தை உணர்ந்து அவைகளை முட்டுப் பாடில்லாமல் நடத்தி வைக்க முடியும். இவ்வுண்மையைத் தமிழர்களுக்குத் தன் கவிதையின் வாயிலாக நினைவூட்டினான். கம்ப ராமாயணத்தில் நாட்டுப் படலத்தில் உள்ள ஒரு பாடல் கம்பனுடைய இக் கருத்தை நமக்குக் காட்டுகின்றது. பெரும்தடம்கண் பிறைநுதலார்க் கெலாம் பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால், வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி, விளைவன யாவையே (பால.நாட்டு.36) நீண்ட அகன்ற கண்களையுடைய பெண்கள் - பிறை போன்ற நெற்றியை யுடைய பெண்கள் - அழகிலும் சிறந்தவர்கள். அவர்களுக்கு இல்லத்திற்கு வேண்டிய எல்லாச் செல்வங்களும் இருக்கின்றன. அவைகளோடு கல்வியும் இருக்கின்றது. இவ்விரண்டும் அவர்களிடம் மலர்ந்திருக்கின்றன. ஆதலால் ஒவ்வொரு இல்லத்திலும் வறுமையால் வாடி வந்தவர்க்கு வேண்டுவனவற்றைக் கொடுக்கின்றனர். விருந்தினர்களுக்கு உணவிட்டு உபசரிக்கின்றனர். நாள் தோறும் ஒவ்வொரு இல்லத்திலும் இவைகள் நடைபெறுகின்றன. இவைகளைத் தவிர வேறு ஒன்றும் நடை பெறவில்லை. கோசல நாட்டுக் குடும்பங்கள் இவ்வாறு குறைவின்றி வாழ்ந்தன; அந்நாட்டுப் பெண்கள் கல்வியும், செல்வமும் பெற்றிருந்தமையால் அவர்களுடைய இல்வாழ்வு இவ்வளவு சிறப்புடன் நடைபெற்றது என்று கூறினான் கம்பன். உண்மையில் கோசல நாட்டுப் பெண்கள் இந்த நிலையில் இருந்தனரோ இல்லையோ, அதைப்பற்றி நாம் ஆராய வேண்டிய தில்லை. பெண்கள் பணம் படைத்திருந்தால் மட்டும் போதாது; கல்வியும் கற்றிருக்கவேண்டும்; அப்பொழுது தான்இல்லறம் இனிது நடக்கும் என்று கம்பன் கருதினான். அக் கருத்தையே கோசல நாட்டுப் பெண்களோடு இணைத்துப் பாடினான். சாதி ஒழிப்பு கம்பன் காலத்திலே தமிழ் நாட்டில் சாதி வேற்றுமை தலைவிரித்தாடியது என்பதில் ஐயம் இல்லை. உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற பிரிவுகளும் நிலைத்திருந்தன. கம்பனுக்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முன்பே பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டும் நிலைமை தமிழ் நாட்டிலே வேரூன்றியிருந்தது. கம்பனுக்கு முன்னிருந்த அறிஞர்களும் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டும் கொள்கையை எதிர்த்து வந்தனர். அவர்கள் கல்வியைப் பரப்புவதன் மூலம் உயர்வு தாழ்வுகளை ஒழித்து விடலாம் என்று கருதினர். கல்வி கற்றவர்கள் எக் குடியிலேபிறந்தாலும் எல்லோராலும் உயர்வாக எண்ணப் படுவார்கள்; ஆதரிக்கப்படுவார்கள். உயர்ந்த குடியிலே பிறந்தாலும் கல்வி கற்காதவர்கள் இழிந்தவர்களாகவே எண்ணப் படுவார்கள். ஆகையால் கல்வி கற்க வேண்டும். கல்வி கற்றுவிட்டால் பிறப்பிலே வேற்றுமை பாராட்டும் பேதைமை ஒழிந்துவிடும் என்று கூறி வந்தனர். ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே (புறம்.183-வரி5-70) ஒரு குடியிலே பிறந்த பலருள்ளே வயதால் மூத்தவன் என்பதற்காக, மூத்தவனை வருக என்று அழைக்கமாட்டான் அரசன். அவருள் இளையவனாக இருந்தாலும், கற்று அறிவுள்ள வனாயிருந்தால் அவனை அழைப்பான்; அவனுடைய ஆலோசனையைக் கேட்பான். அவன் கூறும் அறிவுரையின் படி நடப்பான். உயர்வு தாழ்வு என்னும் வேற்றுமை காணப்பட்ட அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நான்கு குடியிலும் கீழ்க் குடியிலே பிறந்த ஒருவன் கல்வி கற்றிருப்பானாயின் அவன் உயர்ந்தவனாக மதிக்கப்படுவான். மேற்குடியிலே பிறந்த ஒருவனும் அவன் கீழ் அடங்கி நடப்பான். இது புறநானூற்றுப் பாட்டு. சங்க காலத்து அறிஞர்கள் கல்வியைப் பரப்பு வதன் மூலம் குடிப்பிறப்பின் உயர்வு தாழ்வு களை ஒழித்து விடலாம் என்று எண்ணினர். இதற்கு இப்பாடல் ஒன்றே போதுமானது. சமத்துவம் கம்பன் சங்க காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே இருந்தவன். உயர்வு தாழ்வுகள் ஒழிவதற்கு வழி காட்டு வதிலே இன்னும் ஒரு படி முன்னே சென்றான். உண்மையில் உயர்வு தாழ்வற்ற சமுதாயம் அமைய வேண்டு மானால் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தன் சிந்தனையால் - ஆராய்ச்சியால் - பகுத்தறிவால் - கண்டறிந்து கூறினான். வண்மையில்லை ஓர் வறுமை யின்மையால்; திண்மையில்லை, நேர் செறுநர் இன்மையால்; உண்மையில்லை, பொய்யுரை இலாமையால்; வெண்மையில்லை, பல் கேள்வி மேவலால் (பால.நாட்டு.53) கொடை என்பதே இல்லை; ஒரு வகையிலும் ஒருவரிடத் திலும் வறுமையென்பதே இல்லாத காரணத்தால். மக்களிடம் வீரம் என்பதே இல்லை; அவர்களுடன் நேரே எதிர்த்து நின்று போர் புரியும் பகைவர்கள் இல்லாத காரணத்தால். மக்கள் உண்மை பேசுவதே இல்லை. பொய் புகல்கின்றவர்கள் இல்லாத காரணத்தால். மக்களிடம் அறிவின்மை என்பதே இல்லை; எல்லா மக்களும் நூல்களைக் கற்றவர்களும் கேட்டவர்களுமா யிருப்பதனால். இது நாட்டுப் படலத்தில் உள்ள பாட்டு. கம்பன் காலத்திலோ அதற்கு முன்னோ, கோசலநாடு இந்த நிலையில் இருந்ததில்லை. வேறு எந்த நாடுங்கூட இந்த உயர்ந்த நிலையில் இருந்திருக்க முடியாது. எல்லா மக்களுக்கும் செல்வமும், கல்வியும் இருந்தால், அம் மக்கள் வாழும் நாட்டிலே சண்டை யிருக்காது. சமாதானம் நிலவும். பொய் பேசுவோர் இருக்க மாட்டார்கள்: எல்லா மக்களும் உண்மைகளையே உரைப்பார்கள்; எல்லா மக்களும் அறிவுள்ளவர்களா யிருப்பார்கள் என்பது கம்பன் கருத்து. இக்கருத்தையே கோசல நாட்டில் நடை முறையில் இருப்பதாகக் கூறினான். கோசல நாடே இப்படியிருந்தது என்றால் அந்நாட்டின் தலைநகராகிய அயோத்தி நகரம் எப்படியிருந்தது? அந்நகர மக்களின் வாழ்க்கை எப்படியிருந்தது? என்ற கேள்விகள் எழுவது இயல்பு. இக்கேள்விகளுக்கும் கம்பன் விடை கூறியிருக்கின்றான். கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ! அந்த நகரத்தில் திருடர்கள் இல்லை; ஆதலால் யாரும் பண்டங்களைக் கிட்டங்கிகளிலே பூட்டி வைத்துக் காவல் காப்பதில்லை. பிச்சையேற்பவர் யாருமே இல்லை. ஆதலால், பொருளைக் கொடுக்கும் கொடையாளிகளும் இல்லை. கல்லாது நிற்பார் பிறர் இன்மையின் கல்விமுற்ற வல்லாரும் இல்லை, அவை வல்லர் அல்லாரும் இல்லை; எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை உடையார்களும் இல்லை மாதோ. (பால.நகர.74) அந்த நகரத்தில் கல்வி கற்காமல் மரம்போல் வளர்ந்து நிற்பவர்கள் யாருமேயில்லை; தேர்ந்த கல்வி கற்றவரும் இல்லை; கல்வியிலே வல்லவர் அல்லர் என்று சொல்லக் கூடியவரும் இல்லை. எல்லா மக்களும் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாப் பெரும் செல்வங்களையும் எய்தியிருக்கின்றனர்; ஆதலால், செல்வமற்ற வறியவர்களும் இல்லை; பொருள் நிறைந்த செல்வர்களும் இல்லை. கம்பன் காலத்திலோ அவன் காலத்திற்கு முன்போ இந்த நிலையிலே எந்த நகரமும் இருந்ததில்லை. அயோத்தி நகரம் இப்படி யிருந்ததென்று கம்பன் சொல்வதை நாம் நம்ப முடியுமா? மக்கள் வாழும் எல்லா நகரங்களும் இம்மாதிரி இருக்க வேண்டும் என்பது கம்பன் கருத்து. ஏறக்குறையத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கம்பன் கண்ட இக்கனவு இன்று பல மக்கள் உள்ளத்திலும் பதிந்துவிட்டது. எல்லோருக்கும் கல்வி; எல்லோருக்கும் வாழ்க்கை வசதி; எல்லோரும் ஒன்றே யெனும் தன்மை; இவைகள் வேண்டும் என்பதே எல்லோருடைய ஆவலும். கம்பன் விரும்பிய இந்தச் சமதர்ம வாழ்வையே எல்லா அறிஞர்களும் இன்று விரும்பு கின்றனர். கம்பன் கவிதையிலே தனது சிந்தையைப் பறி கொடுத்த நமது செந்தமிழ் கவிஞன் பாரதி இவ்வுண்மையை விளக்கிக் கூறியிருக்கின்றான்; கம்பன் கருத்தை மிகவும் அழகாக இனிய தமிழிலே, எளிய சொற்களிலே, எல்லோர்க்கும் புரியும்படி பாடி வைத்தான். ஏழை யென்றும் அடிமை யென்றும் எவனும் இல்லை சாதியில் இழிவு கொண்ட மனிதர் என்பர் இந்தியாவில் இல்லையே; வாழி கல்வி செல்வம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே; மனிதர் யாரும் ஒருநிகர் சமானமாக வாழ்வமே. இப் பாடல் கம்பன் கருத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதாகும். இங்கே எடுத்துக் காட்டிய உதாரணங்களே ஒப்பற்ற உயர்ந்த கருத்துள்ளவன் கம்பன் என்பதைக் காட்டப் போது மானவை. எல்லா மக்களும் கல்வியும் செல்வமும் பெற்று வாழும் நாட்டிலே - நகரத்திலேதான் அமைதி நிலவும்; மக்களுக்குள் அன்பு நிலவும்; மக்கள் வாழ்வு உயர்ந்து விளங்கும். கம்பன் கருத்திலே எழுந்த இவ்வுண்மையை எந்தக் கலத்திலும் மறுக்க முடியாது; யாராலும் தள்ளிவிட முடியாது. இத்தகைய கருத்திற் சிறந்த கம்பனைத் தம் முன்னோராகப் பெற்ற தமிழர் சிறப்பை யார்தான் அளவிட்டு உரைக்க முடியும்? கம்பனும் மதமும் கம்பன் காலத்திலே தமிழ் நாட்டிலே மதச் சண்டைகள் மலிந்திருந்தன. கம்பன் காலத்திற்கு முன்பு தமிழ் நாட்டில் தழைத்திருந்த சமண - பவுத்த மதங்கள் ஒடுக்கப் பட்டன. ஆழ்வார்களும், நாயன்மார்களும் அன்பு நெறியைப் பரப்பி அம் மதங்களை ஒடுக்கினர். மக்களிடையிலே சைவமும், வைணவமும் வளர்ந்தன. தேவாரப் பாடல்களையும், பிரபந்தப் பாடல் களையும் மக்கள் மகிழ்ந்து பாடிப் பக்திப் பரவசமாயினர். சமண-பவுத்த மதங்களை ஒடுக்குவதில் சைவ சமயத் தினரும், வைணவ சமயத்தினரும் ஒன்றுபட்டு உழைத்தனர். அம் மதங்கள் ஒடுங்கியபின் சைவர்களும், வைணவர்களும் தங்கள் தங்கள் மதமே உயர்ந்தது என்று உரைக்கத் தொடங்கினர். இன்னும் பல மதத் தத்துவங்களும் தமிழகத்திலே தலை யெடுத்தன. ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் தங்கள் மதத்தை உயர்த்திப் பேசிய தோடு நின்று விடவில்லை. மற்றைய மதங்களை இழிந்தவை - பொய்யானவை - மக்களுக்கு நன்னெறி காட்டாதவை என்று வெறுத்துரைக்கவும் தொடங்கினர். வேதங்களை அடிப்படையாகக் கொண்ட மதத்தினர்க் குள்ளேயே ஒற்றுமை யில்லை. இவர்கள் உபநிடதங்களுக்கு வேறு வேறு பொருள்கள் எழுதித் தங்கள் தங்கள் மதக் கொள் கைகளே உயர்ந்தனவென்று காட்டினர். தாங்கள் வணங்கும் தெய்வங்களே உயர்ந்தவை; மற்றவர்கள் வழிபடும் தெய்வங்கள் இழிந்தவை; தாங்கள் கூறும் தத்துவங்களே உண்மையானவை; மற்றவர்கள் உரைக்கும் தத்துவங்கள் பொய்யானவை என்று வேதங்களிலிருந்தும் உபநிடதங் களிலிருந்தும் ஆதரவு காட்டிச் சண்டையிட்டனர். பலவேறுபட்ட மதக் கொள்கைகள் காரணமாகத் தமிழர் களிடையே ஒற்றுமை குலைந்து வந்தது. பல வேறுபட்ட மதக் கொள்கைகள், கடவுள் வணக்கம் காரணமாக அவர்களிடையே கலகத் தீ மூண்டுவந்தது. தனிப்பட்ட மக்களும் தங்களுக்குள் வாதிட்டு மோதிக் கொண்டனர். இதனால் ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றவனைக் கண்டால் மாற்றானாக மதிக்கத் தலைப் பட்டான். சங்க காலத்திலே தமிழகத்தில் பல தெய்வ வணக்கங்கள் இருந்தன. சிறப்பாகத் திருமால், முருகன், பலதேவன், சிவ பெருமான், இந்திரன் முதலிய தெய்வங்களை வணங்கி வந்தனர். ஆனால், அவர்களுக்குள் தெய்வ வணக்கம் காரணமாக எந்த விதமான ஒற்றுமைக் குறையும் உண்டாகவில்லை. அக் காலத்தில் சமணர் பவுத்தர்களும் தமிழகத்தில் சிறுபான்மையினரா யிருந்தனர். இருந்தும் மதச் சண்டையோ, மத வெறுப்போ தலைகாட்டியதில்லை. அந்த நிலையை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பது கம்பன் கருத்து. ஆதலால், எல்லா மதங்களும் ஒன்றே; எல்லோராலும் வணங்கப்படும் பல்வேறு கடவுள்களும் ஒரே கடவுளின் தோற்றந்தான்! என்ற உண்மையைத் தனது காவியத்தில் பலவிடங்களில் பாடிவைத்தான். சமரச நோக்கம் கம்பன் திருமாலிடம் அன்பு பூண்டவன்; ஆனால், அவன் பிற தெய்வங் களைப் பழிப்பவன் அல்லன். அவன் வைணவத் திலே ஆழ்ந்த அன்புள்ளவன்; ஆனால், ஏனைய மதங்களை இழிவாகப் பேசுகின்றவன் அல்லன். பல வேறுபட்ட மதத்தினரும், பலவேறு தெய்வங்களை வணங்குகின்றவர்களும் ஒன்றுபட்டு உடன் பிறந்தவர்கள் போல் வாழ முடியும் என்பதே அவன் கொள்கை. உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும் நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கலா அலகுஇலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே. உலகங்கள் யாவற்றையும் தாமே படைப்பதும், படைத்த அவ்வுலகங்களைக் காப்பதும், பிறகு அவற்றை அழிப்பதும் ஆகிய செயல்களை எப்பொழுதும் நீங்காத விளையாட்டாகக் கொண்டிருப்பவரே தலைவர். அத் தலைவரையே நாங்கள் சரணம் அடைகின்றோம். இது கம்ப இராமாயணத்தின் கடவுள் வாழ்த்துப்பாடல். எடுத்த எடுப்பிலேயே தன்னுடைய சமரச மனப்பான்மையைக் கம்பன் இவ்வாறு வெளியிட்டான். இதனால் கம்பன் மத வெறி கொண்டவன் அல்லன் என்பதைக் காணலாம். இப் பாடலில் எந்தக் கடவுள் பெயரும் குறிப்பிடப்படவில்லை. எல்லாம் வல்லவனே இறைவன் என்று இயம்பியிருக்கிறான். மதங்களால் ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளுவது தவறு. எங்கள் கடவுள்தான் பெரிது என்று வீணாக வழக்கிட்டுக் கொள்வதிலே பொருளில்லை. மதங்கள் வேறு வேறாக இருக்கலாம். பழக்க வழக்கங்கள் வேறு வேறாக இருக்கலாம். இறைவன் அருளைப் பெற அவை எடுத்துக் கூறும் வழிகள் வெவ்வேறாக இருக்கலாம். அவைகள் சொல்லும் தெய்வங்கள் வெவ்வேறாக இருக்கலாம் அவைகள் சொல்லும் தெய்வங்கள் வெவ்வேறு தோற்ற முடையனவாக இருக்கலாம். மக்கள் மயங்கும் வகையிலே மதங்கள் இவ்வாறு பற்பல தெய்வங் களைக் காட்டினாலும், தெய்வங்கள் எல்லாம் ஒன்றுதான், கடவுள் என்பது ஒன்றுதான், வெவ்வெறல்ல, எல்லாம் ஒன்றே தான். மக்கள் எந்நெந்த உருவில் எண்ணுகின்றார்களோ அந்தந்த உருவில் ஒரே கடவுள் தான் பலவாறாகக் காட்சியளிக்கின்றார். ஆதலால் மதவாதிகள் - சமயவாதிகள் - எங்கள் கடவுள் உயர்ந்தவர்; உங்கள் கடவுள் தாழ்ந்தவர். எங்கள் கடவுள் உண்மை; உங்கள் கடவுள் பொய் என்று மண்டையோடு மண்டை மோதிக் கொள்ள வேண்டாம். இவ்வாறு மக்களுக்கு உண்மையை எடுத்துக் காட்ட வேண்டும் என்பது கம்பன் கருத்து. இத்தகைய அறநெறி பேதம் கம்பன் காலத்தில் அவசியமாக இருந்தது. கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்; எல்லையின் மறை களாலும் இயம்பரும் பொருள் ஈது என்னத் தொல்லையின் ஒன்றே யாகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சி, பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்தது அன்றே (பால.ஆற்று. 19) ஆற்று வெள்ளம் மலையிலே பிறந்தது. நிலத்தின் வழியே நடந்தது; இந்தக் காட்சி கடவுளின் இயல்பை ஒத்திருந்தது. அளவற்ற வேதங்களாலும் இன்னது என்று குறித்துச் சொல்ல முடியாதது கடவுள். அந்தக் கடவுள் போல் ஆரம்பத்தில் ஓன்றாய் நின்று, பின்னர்ப் பல நீர்த்துறைகளிலும் பரந்து சென்றது அந்த வெள்ளம். அந்தத் தோற்றத்தை ஆராய்ந்தால் பல பெரிய மதங்களும் சொல்லுகின்ற பொருள் வெவ்வேறாகக் காணப்பட்டாலும், உண்மையில் அவர்கள் ஒரே கடவுளைக் குறிப்பது போலவே, அவ் வெள்ளமும் ஓரிடத்தில் தோன்றி, வெவ்வெறாகப் பிரிந்து, ஓரிடத்திலேயே சேர்ந்தது. கடவுள் ஒன்றே-மதங்கள் எல்லாம் ஒன்றே-ஒரு கடவுளைப் பற்றியே சமயங்கள் வெவ்வேறு விதமாகச் சொல்லுகின்றன-என்பதை மற்றொரு பாட்டிலும் காணலாம். தோள்காண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன தாள் கண்டார் தாளே கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே; வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்? ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரை ஒத்தார். (பால.உலாவியல்.19) இராமனுடைய தோளைப் பார்த்தவர்கள் அந்தத் தோளின் அழகையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுடைய பாதங்கள் தாமரை மலர் போன்றவை; வீர கண்டாமணி அணிந்தவை. அப் பாதங்களில் ஒன்றைப் பார்த்தவர்கள் அதன் அழகையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுடைய திரண்டு நீண்ட கைகளைக் கண்டவர்கள் அந்தக் கைகளையே கண்கொட் டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுடைய அழகைக் காண வந்த பெண்கள் அனைவரும் எந்த உறுப்பை முதலில் பார்த்தார்களோ அந்த உறுப்பின் அழகிலேயே ஆழ்ந்து நின்றனர். ஒருவராவது அவனுடைய அழகு முழுவதையும் காணவில்லை. பழமையான சமயங்களிலே ஈடுபட்டவர்கள் கடவுளின் ஒவ்வொரு உறுப்பை மட்டும் கண்டு, தாங்கள் கண்ட அதுதான் கடவுள் என்று எண்ணியிருப்பவர்களைப் போல இவர்கள் எல்லாரும் ஆனார்கள். இது இராமனை கண்ட பெண்கள் எந் நிலையிலிருந்தனர் என்பதை உரைப்பது. சமயவாதிகள் - தாங்கள் வணங்கும் தெய்வந்தான் உண்மைத் தெய்வம் என்று சண்டை யிடும் சமயவாதிகள், இராமனைக் கண்ட பெண்களைப் போன்றவர்கள்; முழு உருவையும் காணாதவர்கள். அவர்கள் கடவுளின் உண்மையை அறிந்திருந்தால் அவரவர்களுக்குள் சண்டை உண்டாகாது. இக் கருத்தையே மேலே காட்டிய பாடலில் சித்திரமாகத் தீட்டியிருக் கின்றான் கம்பன். சைவ-வைணவ பேதம் கம்பன் காலத்திலே, குறிப்பாகச் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் சண்டை வளர்ந்து வந்தது. சைவர்களும் வைணவர்களும், சமண பவுத்தர்களை எந்த அளவுக்கு வெறுத் தார்களோ, அந்த அளவுக்கு அவர்கள் தம்முள் ஒருவரை ஒருவர் வெறுக்கத் தொடங்கினார்கள். சைவ-வைணவச் சண்டை தோன்றிய காலத்தில் பல அறிஞர்கள் அவர்களிடையிலே ஒற்றுமையை நிலைநாட்ட முயன்றனர். ஒரே கடவுள்தான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் புரிந்து வருகின்றார். படைத்தல் தொழிலைப் புரியும்போது நான்முகனாகவும், காத்தல் தொழிலைச் செய்யும்போது திருமாலாகவும், அழித்தல் தொழிலை ஆற்றும் போது சிவனாகவும் பெயர் பெற்று நிற்கின்றார் என்று சமாதானம் கூறி வந்தனர். இக்கருத்தைச் சைவர்களும் ஒப்புக் கொண்டனர்; வைணவர்களும் ஒப்புக் கொண்டனர். இதை ஒப்புக் கொண்ட பின்னும் அவர்களுக்குள் ஒற்றுமை உண்டாகவில்லை. சிவபெரு மானே பிர்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்தியாக நின்று முத்தொழில்களையும் செய்கின்றார் என்று சைவர்கள் உரைத்தனர்; திருமால்தான் பிர்மா, விஷ்ணு, சிவனாக நின்று முத்தொழில்களைச் செய்து வருகின்றார் என்று வைணவர்கள் வாதித்தனர். இவ்வாறு திருமால் உயர்ந்தவரா, சிவன் உயர்ந்தவரா என்ற சண்டையும் கம்பன் காலத்திலே வளந்திருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கடவுளே உயர்ந்தது என்பதைக் காட்டப் புராணங்களும் - கதைகளும் எழுதிவந்தனர். சைவ வைணவச்சண்டை வலுத்து வந்தது. இக்காலத்தில்தான் அரியும் சிவனும் ஒன்று; அறியாதவன் வாயில்மண் என்ற பழமொழியும் தோன்றியிருக்க வேண்டும். கம்பன் இச் சண்டையை விரும்பவில்லை. சிவன்தான் உயர்ந்தவன். திருமால்தான் உயர்ந்தவன் என்று சொல்லி மக்கள் ஒருவரோடு ஒருவர் வழக்கிடுவதை வெறுத்தான். ஆதலால் இச் சண்டையைக் கடுமையாகக் கண்டித்தான். அரன் அதிகன், உலகளந்த அரிஅதிகன் என்றுரைக்கும் அறிவில்லோர்க்கும் பரகதி சென்று அடைவறிய பரிசேபோல் (கிட்கிந்தா.நாடவிட்ட,24) சிவன்தான் பெரியவன், இவ்வுலகை அளந்த திருமால் தான் பெரியவன் என்று சொல்லுகிறவர்கள் அறிவற்றவர்கள்; அவர்கள் கடவுளையே வெறுப்பவர்கள்; அவர்களுக்கு உயர்ந்த கதி இல்லை; உயர்ந்த கதியை அடைய முடியாது. தன் தெய்வத்தை உயர்த்தியும், பிறர் தெய்வத்தைத் தாழ்த்தியும் பேசுகின்றவர்கள் அறிவற்றவர்கள்; இவர்களால் தான் மனித சமுதாய ஒற்றுமைக்கு உலை வைக்கப்படுகின்றது. மதவெறியும், தெய்வ வெறியும் ஊட்டப்படுகின்றது. இவ்வெறி கள் காரணமாக அவர்கள் மிருகமாக மாறி ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக் கொள்ளுகின்றனர். இதுவே கம்பன் கருத்தாகும். கம்பன் காவியத்திலே ஓரிடத்திலாவது சிவபெருமான் இழிவாகக் கூறப்படவில்லை. சிவபெருமானைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் உயர்த்தியே கூறுகின்றான். கம்பன் கவிதையிலே எந்த இடத்திலும் பிறமத வெறுப்பையோ, பிற தெய்வப் பழிப்பையோ பார்க்க முடியாது. கம்பனுடைய உயர்ந்த சமரச மனப்பான்மை இதனால் தெளிவாகின்றது. கம்பன் திருமால் பக்தன் என்பதிலே ஐயமில்லை. அவன் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத் தக்கது. சடையன், சடையப்பன், சடையாண்டி என்பன சிவபெரு மானைக் குறிக்கும் பெயர்கள். சிவபெருமானைக் குறிக்கும் பெயரைக் கொண்ட சடையப்ப வள்ளல் சைவ சமயத்தைப் பின்பற்றுகின்றவராகவே இருந்திருக்க வேண்டும். இவர் வைணவனாகிய கம்பனை ஆதரித்ததிலிருந்தே கம்பன் எல்லா மதத்தாராலும் போற்றக்கூடிய சமரச நோக்கங் கொண்ட வைணவனாக இருந்தான் என்பதைக் காணலாம். கம்பன் தன் காலத்திலிருந்த சூழ்நிலையை நன்றாக அறிந்தவன் தமிழர்களுக்குள் மதம், தெய்வம் காரணமாக ஒற்றுமைக் குறைவு உண்டாகக் கூடாது என்று எண்ணியவன். இவ்வெண்ணத்தை அவன் தன் காவியத்திலேயே பல விடங் களிலே பாடிவைத்திருப்பதை யார்தான் பாராட்டா மலிருக்க முடியும்? ஒழுக்கமே உயர்குடி ஒழுக்கமுள்ளவர்களே உயர்ந்தவர்கள் என்ற தமிழர் கொள்கை கம்பன் காலத்திலே மங்கியிருந்தது. பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டும் போலித்தனம் தலைதூக்கியிருந்தது. பிறப்பினால் ஒருவரை உயர்வாகவோ தாழ்வாகவோ மதிப்பது தகாது. ஒழுக்கமே உயர்வுக்கும் தாழ்வுக்கும் அளவுகோல். ஆதலால் ஒவ்வொருவருடைய நடத்தையைக் கொண்டே அவர் களை உயர்ந்த குடிப் பிறப்புள்ளவராகவோ, தாழ்ந்த குடிப் பிறப்புள்ளவராகவோ கொள்ள வேண்டும். இதுவே வள்ளுவர் கொள்கை. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். நடத்தையே சிறந்த குடியிற் பிறந்தமைக்கு அடையாள மாகும்; நன்னடத்தையின்மை ஒருவன் உயர்ந்த குடியிலே பிறந்தவனாயினும் அவனை இழிபிறப்பனாக்கி விடும்- என்ற குறளால் இதைக் காணலாம். இக் குறள் நீதியை ஒப்புக் கொண்டவன் கம்பன். இந்த அறம் தமிழ் நாட்டில் நிலைத் திருக்க வேண்டும் என்பது அவன் கருத்து. கம்பன் கருத்துக்கு இராமன் நடத்தை ஆதரவளித்தது. இராமன் குகனுடன் நட்புக் கொண்டான். சுக்கிரீவனுடன் நட்புக் கொண்டான். விபீஷணனிடம் நட்புக் கொண்டான். இராமன் இவர்களிடம் கொண்ட நட்பு மிக உயர்ந்தது. இவர்களை வெறும் நட்பினராக மட்டும் கொள்ளவில்லை. உடன் பிறந்தவர்களாகவே கொண்டான். இவர்களுடைய பிறப்பைப் பற்றி இராமன் கவலைப் படவில்லை. சிறந்த பண்பைக் கருதியே இவர்களைத் துணைவர்களாக ஏற்றுக் கொண்டான். இராமனுடைய இந்தக் சகோதரத் தன்மை-உயர்ந்த நடத்தை -கம்பனுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.. சிறந்த மனிதத் தன்மைக்கு அடையாளமாக இராமனுடைய இந்தப் பண்பு தமிழர் சமுதாயத்திலே பரவவேண்டும் என்பது கம்பரின் கருத்து. வள்ளுவர் வகுத்த அறநெறியை நினைப்பூட்டுவதாக அமைந் திருந்த இராமனுடைய இத்தகைய நடத்தை இராமாயணக் கதையில் குறிப்பிடத் தகுந்த சிறந்த பகுதியாகும். குகனுடன் நட்பு நாட்டைத் துறந்து காட்டிற்குச் சென்ற இராமன் முதலில் குகனுடன் நட்புக் கொள்கிறான். இராமன் அரசகுலத்திலே பிறந்தவன்; செல்வத்திலே புரண்டு கிடந்தவன்; கல்வி அறிவிலே சிறந்தவன்; உயர்ந்த ஒழுக்க நெறியைப் பின்பற்றுகின்றவன். குகனோ வேடர் குலத்திலே பிறந்தவன்; அவன் குடி கல்வி அறிவற்றது; உயிர்களை வேட்டையாடிக் கொன்று தின்று வாழும் கொடுந்தொழிலே அவன் குலத்தொழில்; நன்மையிவை, தீமையிவை என்பதை அறியாத குலம் அவன் குலம். அத்தகைய குலத்திலே பிறந்த குகனும் இராமனும் சகோதர அன்பு கொண்டார்கள் என்பது வியப்புக்குரியது. குகனுடன் இராமன் சகோதரத் தன்மை கொண்டதற் கான காரணத்தை மிகவும் தெளிவாகக் கூறி இருக்கின்றான் கம்பன். குகன் மிகச் சிறந்த மனிதன்; அவன் தீயொழுக்கத்தைத் துறந்தவன்; தூயவன்; நல்ல மனம் படைத்தவன். அவன் மட்டுந்தான் இப்படி என்றில்லை; அவனுடைய சுற்றத்தினரும் அவனைப் போன்றவர்கள்; சுற்றமும் தானும் உள்ளம் தூயவன்; தாயின் நல்லான் (அயோத்தி, கங்கை. 39) என்று குகனுடைய குணச் சிறப்பை இலக்குவன் வாயால் எடுத்துக் காட்டுகிறான் கம்பன். இத்தன்மையுள்ள குகனை-அவன் குலத்தைக் கருதாமல்-குடிப் பிறப்பைக் கருதாமல் அவன் உள்ளத் தூய்மையைக் கருதி-தாயைக் காட்டிலும் அன்புடமை யைக் கருதி அவனை இராமன் தன் உடன் பிறத்தானாகக் கொண்டான். குகனையும், இராமனையும் உடன் பிறந்தவர்களாகப் பிணித்த அன்பு நிகழ்ச்சியைக் கம்பன் சித்திரம்போல எழுதிக் காட்டுகின்றான். இராமன் குகனுடைய உதவியால் கங்கையைக் கடந்தான். கடந்தபின் இராமன், சித்திரக்கூடத்திற்குச் செல்லும் வழியெது வென்று குகனிடம் கேட்டான். அப்பொழுது குகன் இராமன் பாதங்களிலே பணிந்து, ஐயனே நானும் என் சேனையுடன் உன்னோடு வருகிறேன். உனக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செய்கிறேன். உன்னைப் பிரிந்து வாழ என் உள்ளம் இடந்தர வில்லை என்று வேண்டிக் கொண்டான். குகனுடைய ஆராத அன்பைக் கண்டு இராமன் உள்ளங் கனிந்தான். அவனுடைய உள்ளத்திலே அமைதி ஏற்படும்படி இராமன் மிகவும் இனிய மொழிகளால் சமாதானங் கூறுகின்றான். இந்த இனிய மொழிகளைக் கம்பன் இரண்டு பாடல்களில் அமைத்துக் காட்டி இராமனுடைய அன்பையும் பெருந்தன்மை யையும் விளக்கியிருக்கிறான். அன்னவன் உரைகேளா அமலனும் உரைநேர்வான்; என் உயிர் அனையாய் நீ இளவல் உன் இளையான்; இந் நன்னுதலவள் நின்கேள்; நளிர்கடல் நிலமெல்லாம் உன்னுடையது; நான்உன் தொழில் உரிமையின் உள்ளேன் (அயோத்தி-கங்கை.68) என் உயிர் போன்றவன் நீ! என் இளைய சகோதரனாகிய இலக்குவன் உன் இளைய சகோதரன்; இந்தச் சீதையும் உனக்கு அண்ணி. இக்கடல் சூழ்ந்த உலகமெல்லாம் உனக்கு உரிமை யானது. நான் உன் சொற்படி நடப்பதற்கு உரியவன் என்பது ஒரு பாடல். துன்புளது எனின் அன்றோ சுகம் உளது; அது அன்றிப் பின்பு உளது இடைமன்னும் பிரிவு உளது என உன்னேல்! முன்பு உளெம் ஒரு நால்வேம்; முடிவு உளது என உன்னா அன்பு இனி நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம் (அயோத்தி-கங்கை.69) துன்பம் இருந்தால்தான் அதன் இன்பம் உண்டு; அதுவும் அல்லாமல் பின்பு நமக்குள் இடைவிடாத நட்பும் உண்டு. இடையிலே தோன்றும் பிரிவு நிலை யானது என்று நினைக்காதே; முன்பு நாங்கள் நான்கு பேர்கள் சகோதரர்களா யிருந்தோம்; இடையறாத அன்புள்ள நாம் இனி ஐந்து சகோதரர்களானோம் என்பது இரண்டாவது பாட்டு. அன்பும், தூய மனமும் சாதி வேற்றுமையை அடித்து வீழ்த்தின. இவ் வுண்மையை இப்பாடல்கள் காட்டுகின்றன. சுக்கிரீவன் இதன்பின் சுக்கிரீவனிடம் இராமன் பாராட்டிய சகோதரத்துவம் குறிப்பிடத் தக்கது. சுக்கிரீவன் நாகரிக மற்ற மிருகத்தன்மையுள்ள குலத்திலே பிறந்தவன். அவனும் பிறப்பால் இராமனுக்கு இணையாகாதவன். ஆயினும் அவனும் அவனுடைய சுற்றத்தினரும் குகனைப்போலவே இராமனிடம் அன்பு பூண்டனர். இராமனுடைய சேர்க்கையால் - கூட்டுறவால் நல்ல பலன் பெற்றனர். சுக்கிரீவனும் அவனைச் சேர்ந்தவர்களும் அன்புள்ளவர்கள்; அறிவுள்ளவர்கள்; நட்புக் கேற்றவர்கள் என்பதை இராமன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். ஆதலால் சுக்கிரீவனையும் தனது சகோதரனாகக் கொண்டான். மற்றுஇனி உரைப்பது என்னே? வானிடை மன்ணின் நின்னைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உன்னோடு உற்றவர் எனக்கும் உற்றார்; உன்கிளை எனது; என்காதல் சுற்றம் நின் சுற்றம்; நீயே இன்னுயிர்த் துணைவன் என்றான் (கிட்கிந்தா, நட்பு,27) மற்றும் இனி நான் சொல்வதற்கு என்ன உண்டு; வானுலகிலா னாலும் சரி, மண்ணுலகிலானாலும் சரி, உன்னைச் சினந்தவர் என்னைச் சினந்தவர் ஆவார்; உனக்குப் பகைவர் எனக்குப் பகைவர்; கெட்டவர்களாயிருந்தாலும் சரி, உன்னு டைய நட்பினர் எனக்கும் நட்பினர்; உன்னுடைய உறவினர் என்னுடைய உறவினர்; என்னால் அன்புடன் பாராட்டப்படும் சுற்றத்தார் அனைவரும் உன்னு டைய சுற்றத்தார்; நீயே எனது உயிர்த் துணைவன் என்றான். இதனால் மிருகத் தன்மையுள்ள குலத்திலே பிறந்த சுக்கிரீ வனை இராமன் தன் சகோதரனாகத் தழுவிக் கொண்டதைக் காணலாம். இங்கும் அன்பு, சாதி பேதத்தைத் தகர்த்தெறிந்தது. விபீடணன் இதன்பின், அறிவிருந்தும் அடாத செய்யும் அரக்கர் குலத்திலே பிறந்த இராவணன் சகோதரனாகிய விபீஷணனையும் அவனுடைய பிறப்பைக் கருதாமல் உடன் பிறந்தானாக ஏற்றுக் கொண்ட நிகழ்ச்சியைக் கம்பன் கூறு கின்றான். விபீஷணன் இராமன்பால் நெஞ்சங் கலந்த நேசங் கொண்டவன். அவனுடைய அன்பு உண்மையானது. தூய்மை யானது. இடையிலே எக்காரணத் தாலும் அறுந்து போகாது உறுதியுள்ளது. இவ்வுண்மையை உணர்ந்தான் இராமன். ஆதலால், அரக்கர் குலத்திலே பிறந்தவன்- கொடுமையே உருவான அரக்கர்களுடன் கூடி வாழ்ந்தவன்- என்று கருதாமல் அன்பின் காரணமாக அவனையும் தன் உடன் பிறந்தானாகக் கொண்டான். குகனொடும் ஐவ ரானேம் முன்பு, பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவர் ஆனேம்; எம் உழை அன்பின் வந்த அகன் அமர் காதல் ஐய! நின்னொடும் எழுவர் ஆனேம், புகல் அரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை (யுத்த, விபீஷணன் அடை. 146) முன்பு நான்கு சகோதரர்களாயிருந்த நாங்கள் குகனோடு நட்புக் கொண்டபின் ஐந்து சகோதரர்கள் ஆனோம். சூரிய குமாரனாகிய சுக்கிரீவனுடன் சேர்ந்தபின் ஆறு சகோதரர்கள் ஆனோம். எம்மிடத்தில் அன்பினால் இழுக்கப்பட்டு வந்த உள்ளம் நிறைந்த அன்புள்ளவனே! உன்னோடு இப்பொழுது சேர்ந்து ஏழு சகோதரர்கள் ஆனோம். உன் தந்தையாகிய தசரதன், முன்பு நான்கு புதல்வர் களையே பெற்றிருந்தான்; இப்பொழுது ஏழு புதல்வர்களைப் பெற்றுச் சிறப்படைந்தான். அன்பும் ஒழுக்கமுமே சகோதரத்துவத்திற்கு அடிப்படை என்பதை இந்தப் பாட்டும் விளக்கிக் காட்டுகின்றது. உண்மைக் கருத்து குகனை, சுக்கிரீவனை, விபீஷணனை இராமன் தன் உடன் பிறந்தவர்களாகக் கொண்ட நிகழ்ச்சிகளிலே உள்ள உண்மையை உற்று நோக்க வேண்டும். இவ்வுண்மையைக் காணும் அறிஞர் களுக்குக் கம்பன் ஏன் இராமாயணக் கதையைப் பாடினான் என்பது விளங்கும். குகன் பிறந்த குடி நாகரிகம் பெறாத குடி; நன்மை தீமை களைப் பகுத்தறியாத குடி; அக் குடியினர் நாட்டு வாழ்க்கையை நன்றாகக் கண்டறியாதவர்கள்; காட்டிலும், மலையிலும் வாழ்ந்து காலம் கழிப்பவர்கள்; வயிற்றை நிரப்பி உயிர் வாழும் வாழ்க்கை ஒன்றையே பெரிதாகக் கருதுகின்றவர்கள்; கொலை வினையாகிய வேட்டைத் தொழிலையே விரும்பி வாழுகின்ற வர்கள். இத்தகைய குடியிலே பிறந்த குகனை அவனுடைய உள்ளத் தூய்மை கருதி - அவன் சுற்றத்தாரும் அவனைப் போலவே மனத் தூய்மையுள்ளவர்கள் என்பதைக் கருதி-அவனைச் சகோதரனாகக் கொண்டான்; அவனுடைய உறவினரையும் தன்னுடைய உறவினராகக் கொண்டான். சுக்கிரீவன் முழு மனிதத் தன்மை பெறாத குடியிலே பிறந்தவன். குகனுடைய குடியைக் காட்டிலும் சுக்கிரீவன் பிறந்த குடி இன்னும் கீழ்த் தரமுள்ளது; மனிதத் தன்மையே பெறாத குடி. ஆயினும் அவன் சிறந்த உண்மையன்பு உள்ளவன்; நன்றி மறவாதவன்; வஞ்சகமில்லாமல் உயிரைக் கொடுத்தும் உதவி செய்யும் உயர்ந்த பண்புள்ளவன். அவனுடைய நண்பர்களும் உறவினர்களும் அப்படிப்பட்டவர்கள். ஆகையால் அவனுடைய குடிப் பிறப்பைக் கருதாமல் இராமன் அவனையும் தன் உடன் பிறந்தானாகக் கொண்டான். விபீஷணன், இராமனுக்குத் தீங்கு செய்த இராவணனோடு உடன் பிறந்தவன்; அரக்கர் குடியிலே பிறந்தவன்; குகன் பிறந்த குலத்தைவிட, விபீஷணன் பிறந்த குடி மிகவும் கீழ்த்தரமானது; வெறுக்கத் தக்கது. அறிந்தவர்கள் அறத்திற்கு மாறாக நடப்பார் களானால்-அறநெறியை அழிப்பார்களானால் மனமறிந்து மறநெறியைப் பின்பற்றி நடப்பார்கள் ஆனால் அவர்களே கொடுமையானவர்கள்; வெறுக்கத்தக்கவர்கள்; மக்கள் சமுதாயத்திலிருந்து விலக்கத் தக்கவர்கள். அரக்கர்கள் அறிவற்றவர்கள் அல்லர். அறிவுள்ளவர்கள். ஆற்றல் உள்ளவர்கள்; நன்மை தீமைகளைப் பகுத்தறியும் திறமையுள்ளவர்கள். ஆயினும் பிறர் நலத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காதவர்கள். தந்நலம் ஒன்றேதான் அவர்கள் வாழ்க்கை யின் குறிக்கோள்; தந்நலத்தின் பொருட்டு எதையும் துணிந்து செய்யும் இயல்புள்ளவர்கள். தந்நலத்தின் பொருட்டுப் பொது மக்களை அவதிக்குள்ளாக்கும் அகங்காரம் படைத்த கும்பலே அரக்கர்கள்; அசுரர்கள். ஆதலால் விபீஷணன் பிறந்த அரக்கர் குலம் வேடர் குலத்தை விட - குரங்கின் குலத்தைவிட-கொடுமை யான குலம். அப்படியிருந்தும் அன்புள்ளவன் என்பதற்காக-நீதிக்குப் போராடும் நேர்மையுள்ளவன் என்ற காரணத்திற்காக நீதிக்குப் போராடுவதுதான் மனிதத் தன்மை என்பதை உணர்ந்தவன் என்ற காரணத்திற்காக - விபீஷணனை இராமன் தன் உடன் பிறந்தானாகக் கொண்டான். பிறப்பினால் உயர்வு தாழ்வு இல்லை. ஒழுக்கமே உயர்வுக்குக் காரணம். அறிவே பெருமை தரும். அறிவும் அன்பும் நல்லொழுக்கமும் உள்ளவர்கள் எக்குடியிலே பிறந்தவர் களானாலும் அவர்கள் உயர்ந்தவர்கள். இவ்வுண்மையை இராமன் குகனிடத்திலும், சுக்கிரீவனிடத்திலும், விபீஷணனிடத்திலும் காட்டிய சகோதரத் தன்மையே மெய்ப்பித்துக் காட்டுகின்றது. இராமனுடைய சிறந்த நடத்தையைக் கருத்திலே கொண்டவன் கம்பன். யார் உயர்ந்தவர்கள், யார் தாழ்ந்தவர்கள் என்பதை இராமனுடைய வாழ்க்கை யிலிருந்து அறிந்த கம்பன் தன் உணர்ச்சியை ஒரு பாடலில் தெளிவாகக் கூறியிருக்கின்றான். தக்க இன்ன தகாதன இன்ன என்று ஒக்க உன்னலர் ஆயின் உயர்ந்துள மக்களும் விலங்கே; மநுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே (கிட்கிந்தா.வாலி.112) செய்யத் தக்க செயல்கள் இன்னவை. செய்யத் தகாத செயல்கள் இன்னவை என்று இருவகைச் செயல்களையும் நடுவு நிலையி லிருந்து ஆராய்ந்து செய்யாதவர்களானால், உயர்ந்த மக்கட் பிறவி எடுத்திருந்தாலும் அவர்கள் உண்மையான மக்கள் அல்லர்; விலங்குகளேயாவர். அற நூல்களின் வழியைப் பின்பற்றி நடப்பனவாயின் அத்தகைய விலங்குகள் உருவில் விலங்குகளாயிருப்பினும் ஒழுக்கத்தில்-பண்பில்-தேவர்களாகும். இச்செய்யுளின் கருத்தைக் குகன், சுக்கிரீவன் விபீஷணன் ஆகியவர்களின் பண்புகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். மதுவும் மாமிசமும் பண்டைக்காலத்தில் எந்த நாட்டிலும் மதுவருந்துதலும், புலால் புசித்தலும் பாவம் என்று எண்ணப்படவில்லை; தீமையென்று கருதப்படவில்லை; எல்லா நாட்டு மக்களும் இவைகளை உயர்ந்த உணவுப் பொருள்களாக உட்கொண்டனர். இன்றும் உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் புலால் புசிப்பவர்களாகத்தான் இருக்கின்றனர். மதுவருந்துதலையும் இன்ப நுகர்ச்சிக்கு ஏற்றதாக எண்ணுகின்றனர். மதுவுக்கு ஒரு கெட்ட குணம் உண்டு. அது அருந்தி யவனுக்கு மயக்கத்தை உண்டாக்கும். அவன் மன நிலையை மாற்றித் தடுமாற்றத்தை உண்டாக்கும்; இதுவே மதுவின் கெட்ட தன்மை. ஆதலால் மதுவுண்டு மகிழ்ந்து ஆடுவோரைக் குடிகாரர்கள் என்று நகைக்கின்றனர். காலா காலமின்றிக் கண்டபொழுதெல்லாம்-நினைத்த நேரமெல்லாம் மதுவுண்டு மயங்கித் திரிவோர் மனித சமூகத்திற்கே பயன்படாமல் போய் விடுகின்றனர். அவர்கள் மக்களால் வெறுக்கப்படுகின்றனர். இந்நிலை பண்டும் இருந்தது. இன்றும் உண்டு. இந்நாட்டிலும் உண்டு; எந்நாட்டிலும் உண்டு. சமண புத்த மதங்கள் நமது நாட்டில் சமண பௌத்த மதங்கள் தலையெடுத்த பின்பே மதுவும், மாமிசமும் வெறுக்கப்பட்டன. மாமிசம் உண்ணுவது பாவம்; சீவகாருண்யமற்ற செயல்; உயிர்க்கொலை வளர்வதற்கு அடிப்படை என்றெல்லாம் பேசப்பட்டன. எழுதப் பட்டன. மதுவுண்டல் பஞ்சமா பாதகங்களில் ஒன்றென்று அறநூல்களில் எழுதி வைத்தனர். சமண பௌத்த மதங்கள் பரவுவதற்கு முன்பு மதுவையும் மாமிசத்தையும் வெறுக்கும் கொள்கை இந்நாட்டில் இல்லை. வேதகாலத்தில் எல்லோரும் மது மாமிசங்கள் உண்டனர். வடமொழி நூல்களிலும், தமிழ் நூல்களிலும் இவ்வுண்மையைக் காணலாம். சங்க காலத் தமிழ் இலக்கியங்களிலே மதுவும் மாமிசமும் கலந்து மணம் வீசுவதைக் காணலாம். பெரு மன்னர்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள் அனைவரும் தம்மிடம் வந்த விருந்தினர்க்கும் - இரவலர்க்கும் வேண்டிய மட்டும் மதுவும் மாமிசமும் அளித்து அயர்வு தீர்த்தனர் என்று அந்நூல்களிலே காணப்படுகின்றன. கபிலர், ஔவையார் போன்ற அருந் தமிழ்ப் பேரறிஞர் களெல்லாம் மதுவும் உண்டு மகிழ்ந்தனர். மதுவுண்டல் பஞ்சமா பாதகத்துள் ஒன்று, மாமிசம் உண்டல் இரக்கமற்ற தன்மை என்ற கொள்கை சங்க காலத்திலோ - அதற்கு முன்போ தமிழ் நாட்டில் இருந்ததில்லை. பிற்காலத்தில்தான் மாமிச வெறுப்பும், மது விலக்கும் தமிழ் இலக்கியங் களிலே புகுந்தன. இவைகள் இடம்பெற்ற முதல் இலக்கியம் திருக்குறள். திருக்குறளுக்கு முற்பட்ட எந்த இலக்கியங்களிலும் மாமிசமும், மதுவும் விலக்கப்படவில்லை; வெறுக்கப்படவும் இல்லை. சமண புத்த மதங்களைச் சைவத்தின் பெயராலும் - வைணவத்தின் பெயராலும் எதிர்த்த காலத்தில்தான் மதுவையும் - மாமிசத்தையும் தமிழர்களில் ஒரு பிரிவினர் வெறுத்தனர்., விலக்கினர். சமண பவுத்த மதத் தத்துவங்கள் பலவற்றைச் சைவ வைணவர்கள் எடுத்துக் கொண்டு தங்கள் தத்துவ நூல்களை எழுதியது போலவே அவர்களுடைய ஒழுக்கங்களிலே சிறந்த உயர்ந்த ஒழுக்கங் களையும் ஒப்புக்கொண்டனர். மதுவிலக்கும் மாமிச விலக்கும் இச்சிறந்த ஒழுக்கங்களைச் சேர்ந்தனவாகும். சமண-புத்த மதங்களுக்குத் தமிழ்நாட்டிலிருந்து செல்வாக்குக் காரணமாக-மது மாமிச விலக்கைச் சைவ வைணவர்கள் ஏற்றுக் கொண்டதன் காரணமாக-தமிழ்நாட்டிலே மாமிசம் உண்ணா தவர்கள் உயர்ந்த நாகரிகம் உள்ளவர்களாகக் காணப்பட்டனர்; கள்ளுண்ணாதவர்கள் அறிவும் ஒழுக்கமும் அமைந்தவர்களாகக் கருதப்பட்டனர். கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். கொல்லா விரதத்தை மேற்கொண்டவனை - புலால் உணவை வெறுத்தவனை எல்லா உயிர்களும் கை குவித்து வணங்கும் என்ற வள்ளுவர் கொள்கைக்குத் தமிழ்நாட்டிலே பெரு மதிப்பிருந்தது. இந்தக் காலநிலையை ஒட்டியே கம்பன் காவியத்திலே இராமனைப் புலால் புசிக்காதவனாகக் காட்டினான். மதுவருந் தாதவனாக வைத்தான். எந்த அறிஞர்களாலும் ஆன்றோர் களாலும் மதுவும் - மாமிசமும் வெறுக்கப்படாத காலத்தில் எழுதப்பட்டது வால்மீகி ராமாயணம். அப்பொழுது மக்களி டையிலே பரவியிருந்த ஒழுக்கத்திற்கேற்ப இராமனுடைய நடவடிக்கைகளை எழுதி வைத்தான் வால்மீகி. வால்மீகி இராமாயணம் தோன்றிய காலத்தில் இந்நாட்டில்- இவ்வுலகில் தமிழர்களை உள்ளிட்ட எல்லோரும் மதுவும் - மாமிசமும் உண்டவர்கள்தாம். அக்காலத்தில் மதுமாமிச உணவு காரணமாக ஒருவர்க்கு உயர்வோ தாழ்வோ ஏற்பட்டதில்லை. அறிவு செயலாற்றுந் திறமை-நல்ல நடத்தை இவைகள் காரணமாகவே உயர்வு தாழ்வுகள் உண்டாயிருந்தன. வால்மீகியின் ராமனையே கம்பனும் தனது காவியத்தில் அப்படியே காட்டியிருப்பானாயின் தமிழ் நாட்டினர் அக் காவியத்தைக் கருத்தூன்றிப் படிக்கமாட்டார்கள். கம்பன் காலத்திலிருந்த மக்களின் மனநிலைக்கு ஏற்ப இராமனைக் காய்கறி உணவுண்பவனாகச் சித்திரித்தான். இராமன் உணவுண்ணும் நிகழ்ச்சியைச் சொல்லும்போதெல்லாம், காய் கனி, கிழங்குகளையே உண்டான் என்று மறந்துவிடாமல் சொல்லுகின்றான். மது-மாமிச ஒழிப்புக்குத் தமிழ் நாட்டில் பெருமதிப்பிருந்த காரணத்தால்தான் கதாநாயகனாகிய இராமனை இறுதிவரையிலும் மது - மாமிசம் உண்ணாத வனாகவே குறித்துச் சென்றான். இத்தகைய கம்பனுடைய கவித்திறமையை யார்தான் பாராட்டாமலிருக்க முடியும்? இராமன் உணவு இராமனும், சீதையும், இலக்குவனும் கங்கைக் கரையை அடைந்தனர். அவர்களை அங்கிருந்த முனிவர்கள் எதிர் கொண்டு வரவேற்றனர். அவர்கள் காயும் கிழங்கும் காட்டிலே தேடிக் கொண்டு வந்தனர். கங்கையிலே நீராடி நாட்கடன்களை முடித்தபின் அவற்றை அருந்த வேண்டும்என்று அவர்கள் இராமனை வேண்டிக்கொண்டனர். இராமனும் அவ்வாறே செய்தான். காயும் கானில் கிழங்கும் கனிகளும் தூய தேடிக்கொணர்ந்தனர்; தோன்றல் நீ ஆயகங்கை அரும்புனல் ஆடினை, தீயை ஓம்பினை செய்அமுது என்றனர் (அயோத்தி, கங்கை, 15) காட்டிலே கிடைக்கும் உண்பதற்குரிய காய்களையும், கிழங்குகளையும், கனிகளையும் நல்லனவாகத் தேடிக் கொண்டு வந்தனர். பெருமையுள்ள இராமனே நீ சிறந்த உயர்ந்த கங்கையிலே நீராடி வளர்த்து வேள்வியை முடித்த பின் இவை களை உண்டு களை தீர்க என்று வேண்டிக் கொண்டனர். இப் பாட்டு, இராமன் அயோத்தியை விட்டுக் காட்டை யடைந்தவுடன் உண்ட உணவைக் குறிப்பது. இதனையே மீண்டும் கம்பன் கூறுவதை மற்றொரு நிகழ்ச்சியிலும் காணலாம். குகன் இராமனைக் கண்டான்; அன்பின் வசமானான். இராமனும் குகனை அன்புடன் உட்காரும்படி உரைத்தான். குகன் உட்காரவில்லை. நின்றபடியே அளவுகடந்த அன்புடன் ஒரு விண்ணப்பம் செய்தான். இங்கே அமர்க! என்று இராமன் உரைத்தான். ஆயினும் குகன் உட்காரவில்லை. அளவற்ற அன்புள்ளவனாய், உண்பதற்கு ஏற்றதாகத் தேனையும் மீனையும் பக்குவம் செய்து கொண்டு வந்திருக்கிறேன். தங்கள் திருவுள்ளம் யாதோ? அரியவற்றை-நாம் உவக்கும்படி-உள்ளன்பு நிறைந்த காதலுடன் செய்து, கொண்டு வரப்பட்டன வென்றால் அவை அமுதத்தைவிடச் சிறந்தனவாகும்; அன்போடு அமைக்கப் பட்டது எதுவாயினும் அது குற்றமற்றது; பரிசுத்தமானது; எம்போன்றவர்களுக்கு ஏற்றதும் ஆகும்; இனிமையோடு நாம் உண்டது போன்றதாகும்; அல்லவா? என்று ஒரு கேள்வியோடு இராமன் தன உள்ளக் கருத்தை உரைத்தான். இப்பொருள் கொண்ட பாடல்களே கீழ்வரும் இரண்டு பாடல்களும். இருத்தி யீண்டு என்னலோடும் இருந்திலன், எல்லை நீத்த அருத்தியன்; தேனும் மீனும் அமுதினுக்கு அமைவதாகத் திருத்தினென்-கொணர்ந்தேன் என்கொல் திருஉளம்? என்ன, வீரன் விருத்த மாதவரை நோக்கி முறுவலன் விளம்பல் உற்றான் (அயோ, கங்கை.41) அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்த என்றால் அமுதினும் சீர்த்த அன்றே! பரிவினால் தழீஇய என்னில் பவித்திரம்; எம்மனோர்க்கும் உரியன; இனிதின் நாமும் உண்டனம் அன்றோ! என்றான் (அயோ, கங்கை.42) இவ்வாறு நயமாகக் கூறி, குகன் மனங்கோணாதபடி அவனுக்கு மகிழ்ச்சி யூட்டினான் இராமன். இக் கருத்தையே மீண்டும் கிஷ்கிந்தா காண்டத்தில், இலக்குவன் சொல்லால் எடுத்துக் காட்டுகின்றான் கம்பன். பச்சிலை கிழங்கு, காய் பரமன்நுங்கிய மிச்சிலே நுகர்வது, வேறுதான் ஒன்று நச்சிலேன்; (கிட்கிந்தா, கிட்கிந்தை. 144) இராமன் உண்ட பச்சிலை, கிழங்கு, காய்களின் மீதத்தையே நான் உண்பது வழக்கம். இதைத் தவிர வேறு ஒன்றையும் நான் விரும்புவதில்லை. கானிடைப் புகுந்து இரும்கனி காயோடு நுகர்ந்த ஊன்உடைப் போறை உடம்பினன் (யுத்த - வருணனை. 12) காட்டிலே புகுந்து மிகுந்த பழங்களையும், காய்களையும் உண்ட, ஊன் அமைந்த பாரமாகிய உடம்பை உடையவன். இவ்வாறே இராமன் மது மாமிசம் உண்ணாதவன் என்பதைப் பலவிடங்களிலும் காட்டிச் செல்கின்றான் கம்பன். விபீஷணன் நல்லொழுக்கமுள்ளவன்; நீதி நெறி தவறாதவன் என்பதை விளக்கும் இடத்தில் அவனும் மது மாமிசத்தை விலக்கியவன் என்றே கூறுகின்றான் கம்பன். இந்த உண்மையை அனுமன் வாயால் அறிவிக்கின்றான். நிந்தனை நறவமும் நெறியில் ஊண்களும் தந்தன கண்டிலென் (யுத்த. விபீடணன் அடை. 100) பழிக்கு ஆளாக்கும் மதுவும், நன்னெறிக்கு மாறான புலால் போன்ற உணவுகளையும் சேர்த்து வைத்திருப்பதை நான் காணவில்லை. இது விபீஷணனைப் பற்றி அனுமன் உரைத்தது. தான் இலங்கையிலேயே சீதையைத் தேடித் திரிந்தபோது விபீஷணனுடைய இல்லத்திலே கண்ட காட்சியைக் கூறினான். மதுவருந்துதலின் தீமையைப்பற்றிக் கம்பன் பலவிடங் களிலே கூறியிருக்கின்றான். அவைகளிற் சிலவற்றைக் கீழே காணலாம். இராமன் காட்டுக்குப் புறப்படும்போது பரதன் ஊரில் இல்லை. பாட்டன் வீட்டுக்குப் போயிருந்தான். இராமன் காட்டுக்குப் போன பின்புதான் அவன் அயோத்திக்கு வந்தான். தன் தாய் கைகேசியினால் நிகழ்ந்த விளைவை அறிந்து வருந்தினான். இராமனுடைய அன்னை கோசலையின் அடிகளை வணங்கினான். அவள் பரதன் உள்ளத்தைப் பரிசோதிக்கும் பொருட்டு கைகேயி செய்த வஞ்சனை உனக்குத் தெரியாதா? என்று கேட்டாள். உடனே பரதன், அவள் ஆற்றிய வஞ்சனையை நான் அறிந்திருப்பேனாயின் - நானும் அவ்வஞ்சனைக்கு உடந்தையாக இருந்திருப்பேனாயின் நான் மகாபாதகன்; பெரும் பெரும் பாவங்களைப் புரிந்தவர்கள் அடையும் நரகத்தை யடைவேன் என்று ஆத்திரத்துடன் அறைந்தான். அப்போது அவன் தொகுத் துரைத்த பாவங்களிலே மதுபானத்தையும் ஒரு பாவமாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. கன்னியை அழிசெயக் கருதினோன்; குரு பன்னியை நோக்கினோன்; பருகினோன் நறை; பொன்இகழ் களவினில் பொருந்தினோன் என இன்னவர் உறுகதி என்னது ஆகவே (அயோத்தி.பள்ளி.109) கன்னியை - மணமாகாத பெண்ணைக் கற்பழிக்க நினைத்தவன்; குருவின் மனைவியைக் கெட்ட எண்ணத்துடன் நோக்கியவன்; மதுவை அருந்தியவன்; பொன்னைத் திருடிச் சேர்க்கும் இழி தொழிலிலே ஈடுபட்டவன்; இவர்கள் அடையும் கதியை நானும் அடைவேன். இதனால் மதுவுண்டல் மகாபாவம் என்று கூறினான். பூவியல் நறவம் மாந்திப் புந்திவேறு உற்றபோது தீவினை இயற்றும் (கிட்கிந்தா. வாலிவ.127) மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட தேனை நுகர்ந்து அறிவு வேறுபட்டபோது-அவ்வறிவு தீவினைகளைச் செய்யத் தூண்டும் என்று வாலியின் வாயினால் மதுவின் தீமையைக் கூறினான். வஞ்சமும், களவும், பொய்யும் மயக்கமும், மரபில் கொட்பும், தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும், களிப்பும் தாக்கும் கஞ்சமெல் அணங்கும் தீரும் கள்ளினால்; அருந்தினாரை நஞ்சமும் கொல்வது அல்லால் நரகினை நல்காது அன்றே (கிட்கிந்தா-கிட்கிந்தை. 95) வஞ்சகம் செய்யத் தூண்டும்; களவு செய்யத் தூண்டும்; பொய்யுரைக்கத் தூண்டும்; மயக்கத்தை உண்டாக்கும்; முறையற்ற வழியிலே அறிவை அலையச் செய்யும்; சரணம் அடைந்தவரை உதைத்துத் தள்ளச் செய்யும்; நற்குணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்; செல்வமும் நீங்கிவிடும்; இத் தீமைகள் எல்லாம் மது பானத்தால் உண்டாகும். கள்ளுண்டவர் களை அக் கள்ளில் உள்ள நஞ்சே கொன்றுவிடும். அல்லாமலும் நரகத்தையும் நல்காமல் விட்டுவிடுமா? ஒருக்காலும் விடாது. இவ்வாறு சுக்கிரீவன் வாயினால் சொல்லிக் காட்டினான் கம்பன். கள்ளின் கொடுமையை அறிந்த சுக்கிரீவன், இனி மதுவருந்துவதில்லை, அதைக் கையாலும் தொடுவதில்லை; கருத்தாலும் எண்ணுவதில்லை என்று உறுதி கூறுகிறான். அய்யநான் அஞ்சினேன் இந் நறவினின் அரியகேடு கய்யினால் அன்றியேயும் கருதுதல் கருமம் அன்றால் (கிட்கிந்தா-கிட்கிந்தை.. 97) அய்யனே, நான் இந்த மதுவினால் வரும் பெருங் கேட்டுக்கு அஞ்சினேன். இனி என் கையால் மதுவைத் தீண்டவே மாட்டேன்; நெஞ்சத்தாலும் அதை நினைக்க மாட்டேன்; மதுவை நெஞ்சத் தால் நினைப்பதும் தீமையாகும்; நற் செயல் ஆகாது. மதுவுண்ணும் பழக்கமுள்ள சுக்கிரீவன் இவ்வாறு மது பானத்தைக் கடிந்து வெறுத்ததாகக் கூறுகின்றான் கம்பன். கம்பன் காலத்தில் மதுவிலக்கும், மாமிசம் உண்ணா மையும் நல்லொழுக்கத்திற்கு அடிப்படையென்று அறிஞர்கள் எண்ணினர். அவ்வெண்ணத்தைக் கம்பனும் ஒப்புக் கொண்டான். அதைத் தன் காவியத்திலே புகுத்திப் பாடி வைத்தான். இதனால் காலத்தின் போக்கறிந்த சிறந்த கவிஞன் கம்பன் என்பது தெளிவாகின்றது. ஒருவனும் ஒருத்தியும் மக்கள் காட்டுமிராண்டிகளாக-நாகரிகம் அற்றவர்களாக வாழ்ந்த காலத்திலே அவர்களிடம் இருந்த பழக்க வழக்கங்கள் வேறு. நாகரிகம் வளர்ந்த காலத்தில் அப்பழக்க வழக்கங்களிலே பல மாறுபாடுகள் உண்டாயின. தீயன பல தேய்ந்து மடிந்தன; நல்லன பல நிலைத்து வளர்ந்தன. நாகரிகம் இல்லாத காலத்தில் ஆண் பெண் உறவிலே கட்டுப்பாடுகள் இல்லை; மண வாழ்வு பற்றிய ஒழுங்கு முறைகள் இல்லை. ஒருவன் தன் சக்திக்கேற்றவாறு பல பெண்களை மனைவிகளாகக் கொண்டான். ஒருத்தி தன் பலத்திற்கேற்றவாறு பல ஆண்களைக் கணவர்களாகக் கொண்டாள். ஒருவனுக்கு ஒருத்திதான் மனைவி; ஒருத்திக்கு ஒருவன் தான் கணவன் என்ற கட்டுப்பாடு அக்காலத்தில் இல்லை. பழந் தமிழர் மணம் மக்கள் காட்டுமிராண்டிப் பருவத்திலிருந்து நாகரிக நிலைக்கு வந்த பின் ஆண் பெண் உறவிலே கட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு பெண் பல ஆண்களுடன் சேர்ந்து வாழும் வழக்கம் தடை செய்யப்பட்டது. ஆண்களே சமுதாயத் துறையில் ஆதிக்கம் பெற்றிருந்தனர். ஆதலால் ஒரு ஆண் பல பெண் களுடன் சேர்ந்து வாழ்வதைத் தடை செய்யவில்லை. பல பெண்களை மணப்பதற்கும் அனு மதித்தனர், பல தாரமணம் அறிஞர்களாலும், அறநூல்களாலும் ஒப்புக் கொள்ளப் பட்டது. பண்டைத் தமிழர் சமுதாயத்திலே பல தார மணம் வேரோடியிருந்தது. ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டு மானாலும் மணந்து கொள்ளலாம். மணந்து கொண்ட மனைவி மார்களைத் தவிர வேறு பல பெண்களையும் காதற் கிழத்தியர் களாக, வைப்பாட்டிமார்களாக வைத்துக் கொள்ளலாம்; விலைமாதர் வீடுகளுக்கும் ஆண்கள் சென்று வரலாம் - ஆண் களின் நன்மைக்காகவே - இன்ப வாழ்வுக்காகவே-பொதுமாதர், கணிகையர், விலைமகளிர், பரத்தையர் என்ற பெயர்களுடன் பல பெண்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் மணம் புரிந்து கொள்ளாத பெண்கள்; இவர்களுக்கு வரைவின் மகளிர் என்பது ஒரு பெயர், வரைவின் மகளிர் - மணமற்ற பெண்கள். ஆண்களின் இத்தகைய அடக்கமற்ற போக்கைப் பெண்கள் விரும்பவில்லை. தம்மைப்போல ஆண்களும் ஒருத்தியுடன் உறைந்து இன்புற வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். இதன் காரணமாகப் பெண்களுக்கும், ஆண்களுக்கும் அடிக்கடி குடும்பங்களிலே சண்டைகள் நடந்து வந்தன. பல பெண்களை மணந்து கொண்டவர்கள்-காதற் கிழத்தியர்களை வைத்திருப் பவர்கள்-விலைமாதர்களைத் தேடித் திரிபவர்கள் வீடுகளிலே அடிக்கடி பிணக்குகளும் போராட்டங்களும் நடந்தன. இவ்வாறு கணவன் மனைவிகளுக்குள் பிணக்குகளும் - போராட்டங்களும் நடைபெறும் போது புலவர்களும், பாணர்களும், நண்பர்களும் இவர்களுக்குள் சமாதானத்தை ஏற்படுத்துவார்கள். இந்த நிகழ்ச்சிகளைப் பழந்தமிழ் இலக்கியங்களிலே-அகப்பொருள் நூல்களிலே காணலாம். காதல் - இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம் என்பது நாகரிகம் நன்றாக வேரூன்றிய காலத்தில் தோன்றிய அறம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்த நல்லறம் தமிழ் நாட்டிலே வளர்ந்தோங்க வேண்டும் என்பதே கம்பன் கருத்து. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஏக தார மணமாகும். கம்பன் காலத்திலிருந்த அறிஞர்கள் ஏகதார விரதத்தையே உயர்வாகப் போற்றினர். கம்பன் காலத்தில் தமிழகத்தில் பலதார மணம்தான் நடைமுறையிலிருந்தது. ஏகதார மணம் உயர்ந்தது. அதுவே சமுதாயத்தில் நடைமுறைக்கு வர வேண்டும் என்று அறிஞர்கள் விரும்பினர். ஏகதார விரதம் உள்ளவர்கள் உத்தமர்களாகவும், உயர்ந்தவர்களாகவும் எல்லோராலும் கொண்டாடப்பட்டனர். இராமன் சிறப்பு கம்பன் காவியத்தின் தலைவனாகிய இராமன் ஏகதார விரதம் கொண்டவன். அவன் மக்களால் பாராட்டப்படும் உயர்வு பெற்றதற்கான காரணங்களிலே இந்த ஏகதார விரதமும் ஒன்று. இராமன் தந்தையாகிய தசரதன் சிறந்த நீதிமானாகவும், உயர்ந்த பண்புள்ளவனாகவும், மக்களால் பாராட்டப்பட்ட மன்னனாகவும் கூறப்படுகின்றான். ஆயினும் அவனுக்குப் பட்டத்து மனைவியர் மூவர்; அவர்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை என்பவர். இவர்களைத் தவிர இன்னும் அறுபதினாயிரம் மனைவியர் இருந்தனராம். அறுபதினாயிரம் ஆண்டுகள் அரசாட்சி புரிந்த தசரதன் ஆண்டுக்கொரு மனைவி வீதம் அறுபதினாயிரம் பெண்களை மணந்து கொண்டான். இந்தத் தசரதன் புதல்வனாகிய இராமன் ஏகபத்தினி விரதமுள்ளவனாக வாழ்ந்தான். தந்தை காலத்து வழக்கத்தைத் தன் காலத்திலே மாற்றினான். ஏகபத்தினி விரதமே சிறந்தது; ஒருவனும் ஒருத்தியும் உள்ளன்புடன் கூடி வாழும் இல்லற வாழ்க்கையே நல்லறமாகும்; இக்கொள்கையுள்ள கம்பன் இராம காதையில் தன் கருத்திற்கு ஆதரவிருப்பதைக் கண்டான்; தன் கருத்தைத் தமிழ் மக்களி டையிலே பரவச் செய்வதற்கு இவ்வரலாறே ஏற்றதாகும் என்று துணிந்தான். இலங்கையிலே சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை அனுமான் கண்டான். அனுமான் சீதையிடம் விடைபெற்றுத் திரும்பும் போது அவள் சில செய்திகளைக் கூறினாள். அப்பொழுது இராமனுடைய ஏகபத்தினி விரதத்தைப் பற்றியும் சீதை சிறப்பாகக் குறிப்பிட்டாள். இவ்வாறு சீதாபிராட்டியின் வாயிலாக ஏகபத்தினி விரதத்தின் பெருமையைக் கம்பன் வெளியிட்டிருக்கின்றான். வந்து எனைக் கரம்பற்றிய வைகல் வாய் இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை, திருச்செவி சாற்றுவாய். (சுந்தர, சூளாமணி. 43) இராமன் மிதிலைக்கு வந்து என்னை மணந்து என் கரத்தைப் பிடித்தபோது ஒரு உறுதி மொழியைக் கூறினான். இந்தப் பிறப்பிலே நான் என் உள்ளத்தால் கூட இரண்டு பெண்களைத் தொடமாட்டேன், உன்னை மட்டும் தான் என் உள்ளத்தாலும் தொட்டு வாழ்வேன் என்று வரந்தந்தான். இத்தகைய வரந்தந்த அவன் சொற்களை அவனுடைய திருச்செவியிலே கூறுவாயாக. இதனால் இராமனுடைய ஏகபத்தினி விரதத்தின் சிறப்பைக் காணலாம். இராமன் எல்லா மக்களாலும் போற்றப்பட்டதற்குக் காரணமானவைகளில் அவன் உறுதியாகக் கொண்டிருந்த ஏகபத்தினி விரதம் ஒன்றாகும். இராவணன் மக்களால் வெறுக்கப்பட்டதற்கான காரணங்களில் அவன் பல பெண்களை மணந்தவன் என்பது ஒன்றாகும். இராவணன் காமுகன் இராவணனிடம், சூர்ப்பநகை சீதையின் அழகையெல்லாம் புகழ்ந்து பேசுகிறாள். சீதையை அடைய வேண்டும் என்னும் காம வெறியை அவன் உள்ளத்திலே ஊட்டுகின்றாள். அப்பொழுது அவள் வாயிலாக இராவணன் பல பெண்களை மணந்தவன் என்பதைக் கம்பன் காட்டுகின்றான். வள்ளலே உனக்கு நல்லேன் மற்று நின்மனையில் வாழும் கிள்ளைபோல் மொழியார்க்கெல்லாம் கேடு சூழ்கின்றேன் அன்றே! (ஆரண்ய, மாரீசன் வதை,77) வள்ளலே, உனக்கு மட்டுந்தான் நான் நல்லவள்; உன்னுடைய அரண்மனையிலே வாழும் கிளியைப்போல் உரையாடும் உனது காதலிமார்களுக்கெல்லாம் நான் கேடு செய்கின்றவளாக ஆவேன். இதனால் இராவணன் பலதார மணங்கொண்ட காமுகன் என்று காட்டினான் கம்பன். இதன் பின் ஊர்தேடு படலத்திலும் இராவணன் பல பெண்களை விரும்பும் காமுகன் என்பதை விரித்துரைக்கின்றான் கம்பன். இராவணனுடைய மாளிகை சந்திரனைப்போல் காட்சி யளிக்கின்றது. அவனுடைய மாளிகையைச் சுற்றிலும் காதற் பெண்டிர் வாழும் பல மாளிகைகள் இருக்கின்றன. அவைகள் சந்திரனைச் சுற்றியிருக்கும் நட்சத்திரங்களைப் போல் காணப் படுகின்றன என்று கூறுகின்றான். போர் இயற்கை இராவணன் பொன்மனை சீர் இயற்கை நிரம்பிய திங்கள் ஆத் தாரகைக் குழுவில், தழுவித் தொடர் நாரியர்க்கு உறைவாம் இடம் நண்ணினான். (சுந்தர, ஊர்தேடு,167) போர் புரிவதையே இயற்கையாகக் கொண்ட இராவணனுடைய அழகிய பொன்மயமான மாளிகை சிறந்த அழகு பொருந்திய முழுமதியாக விளங்கிற்று. நட்சத்திரக் கூட்டங்களைப் போல் அந்த மாளிகைகள் இருந்தன; அவைகள் இராவணனால் விரும்பப்பட்ட காதற்கிழத்தியர்கள் உறைவிடமாகும். அந்த இடத்தை அடைந்தான் அனுமான். இதன் பின் ஒன்பது பாடல்களில் அம் மாதர்களின் இயல்பை எடுத்துக் காட்டுகிறான் கம்பன். இராவணன், சீதையின் மேல் மோகம்கொண்டு, அதே கவலையாகக் கிடக்கின்றான். அவன் இந்தக் காதற் கிழத்தியர்களைத் திரும்பிக்கூடப் பார்க்க வில்லை. ஆதலால், இவர்கள் அவன் மீது எழுந்த காதலால் உறங்காமல் வருந்தியிருக்கும் நிலையை அப்பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய மாதர் ஆயிரம், ஆயிரம் கோடியினர் இருந்தனர். இவர்கள் இயக்க மாதர்கள். இவர்களைத் தவிர, அரக்க மாதர்கள் நான்கு கோடியினர் இராவணன் காதலிகளாக இருந்தனர். சித்தியர்கள் பலர் இராவணன் காதற் கிழத்தியர்களாக இருந்தனர். விஞ்சை மாதர்கள் பன்னிரண்டு கோடியர் அவனுடைய காமக் கிழத்தியர் களாயிருந்தனர். இவர்களையெல்லாம் அனுமான் கண்டதாகக் கூறுகிறான் கம்பன். இயக்கியர் ஆயிரமாயிரம் கோடி; அரக்கிமார் நான்கு கோடியினர்; சித்தியர்கள் பலர்; விஞ்சை மாதர் பன்னிரண்டு கோடியினர்; இவர்கள் இராவணனுடைய காதற்கிழத்தியர்கள். இதைக் கேட்கும்போது நமக்கு வியப்பு உண்டாகிறது. ஒரு மனிதன் கோடிக்கணக்கான பெண்களை எப்படி மனைவி களாகக் கொண்டிருக்க முடியும் என்ற ஐயம் எழுகின்றது. இது -இந்த எண்ணிக்கை-கற்பனையாகத்தான் காணப்படுகின்றது. கற்பனையாகவே இருக்கட்டும். எண்ணிக்கையைப் பற்றிய ஆராய்ச்சி வேண்டாம்; உண்மையை மட்டும் உணர்வோம். இராவணன் காமவெறியன்; அவன் காமம் தீராத காமம். அளவற்ற பெண்களைக் காதலிப்பவன். எண்ணற்ற பெண்களின் இன்பத்தை நுகர்ந்து அவனுடைய காமவெறி அடங்கவில்லை. அழகுள்ள சீதைமேலும் - கற்புடைத் தெய்வமாகிய சீதையின் மேலும் காமம் கொண்டான். இந்தக் கருத்தை விளக்கவே-இத்தகைய காமவெறியே அவனுடைய அழிவுக்குக் காரணமாக இருந்தது என்பதைக் காட்டவே காமக் கிழத்தியர்களின் எண்ணிக்கையைக் கம்பன் கோடிக் கணக்கிலே கூறினான். இராவணனைப் போலவே அவன் மகன் இந்திரசித்தனும் பல தார மணம் பூண்டவன் என்பதைக் கம்பன் தன் வாயினாலேயே கூறுகின்றான். அனுமான் இலங்கையிலே சீதையிருக்கும் இடம் எதுவென்று தேடித் திரிந்தான்; தேடும்போது இந்திரசித்தன் அரண்மனையிலும் புகுந்தான். அங்கு இந்திரசித்தன் உறங்கிக் கொண்டிருந்தான். அதை அனுமான் பார்த்த நிலையைக் கம்பன் காட்டுகின்றான். ஒக்க நோக்கியர் குழாத்திடை உறங்குகின்றானைப் புக்கு நோக்கினன் புகைபுகா வாயிலும் புகுவான். (சுந்தர.ஊர்தேடு.14) ஒத்த பார்வையையுடைய பெண்கள் கூட்டத்தின் இடையிலே உறங்கிக் கொண்டிருந்தான் இந்திரசித்தன். புகை நுழைய முடியாத வழியிலும் நுழைந்து செல்லும் திறமையுள்ள அனுமான் அவன் அரண்மனையிலே புகுந்து அந்த இந்திர சித்தனைப் பார்த்தான். இது இந்திரசித்தனும் பலதார மணங்கொண்டவன் என்பதைக் காட்டுகிறது. பலதார மணம் புரிந்தவர்கள் காமுகர்கள். புலன் அடக்கம் அற்ற வெறியர்கள்; ஏகபத்தினி விரதம் உள்ளவர்களே நல்லொழுக்கத்திலே நடப்பவர்கள்; மக்களால் போற்றத் தக்கவர்கள். இதுவே கம்பன் கருத்து. இக்கருத்தை விளக்குவது இராமாயணம் என்பதை அறிந்தே அவன் அந்தக் காவியத்தைப் பாடினான். இராவணன் இழிகுணம் இராவணன் சிறந்த அறிவாளி, வீராதி வீரன்; நற்குணங்கள் எல்லாம் நிரம்பியவன்; திறமைசாலி; மானத்தையே உயிராக மதிக்கும் மாண்புள்ளவன்; வேதங்களைக் கரை கண்டவன்; சிவபக்தன்; தென்னாட்டவன்; தமிழன், திராவிடன் என்று புகழ்வோர் உண்டு. இராமன் அறிவில்லாதவன்; கோழை; திறமையற்றவன்; மானத்தை மதிக்காதவன்; தீய நடத்தையுள்ளவன்; வட நாட்டான்; ஆரியன்; தமிழர்களுக்குத் தீமை செய்தவன்; திராவிடர் இனத்தின் தீராப் பகைவன் என்றெல்லாம் இகழ் வோரும் உண்டு. இராவணனைப் பற்றியும், இராமனைப் பற்றியும் ஏறுமாறாகப் பேசுவோர் எந்த ஆதரவுகளைக் கொண்டு இப்படிக் கூறுகிறார்கள் என்பதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம். இத்தகைய ஆராய்ச்சி ஆரியர் - திராவிடர் என்ற வெறுப்பை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதென்பதில் ஐயமில்லை. இவர்கள் தங்கள் கூற்றுக்கு வால்மீகி இராமா யணத்திலே ஆதரவிருக்கின்றது. இன்னும் பல இராமாயணங் களிலே ஆதரவிருக்கின்றன என்றெல்லாம் சொல்லுகின்றனர். இராவணனைப்பற்றி - இராமனைப்பற்றி இப்படிப் புதிய ஆராய்ச்சியிலே புகுந்திருக்கும் புலவர்கள் எல்லாம் கம்பன் கருத்தைப் பற்றிக் கூறவில்லை. கம்பன் கருத்திலே-கம்பன் காவியத்திலே-இப் புலவர்களின் கூற்றுக்கு ஆதரவில்லை. இதை நாம் மறந்து விடக்கூடாது. தமிழர் நாகரிகம்-பண்பு-உலகமெல்லாம் பரவ வேண்டும் என்ற கருத்துள்ள கம்பன் இராவணனை எப்படி மதிக்கின்றான்? இராமனை எப்படி மதிக்கின்றான்? என்பதைத்தான் நாம் ஆராய வேண்டும். இராவணன் - எவ்வளவு சிறந்தவனாயிருந்தாலும் - தென்னாட்ட வனாயிருந்தாலும் - அவன் ஒரு சமுதாயத் துரோகி; மக்கட் சமுதாயம் வெறுக்கத்தக்க பெரிய குற்றவாளி-இராமன் யாராயிருந்தாலும் – வடநாட்ட வனாயிருந்தாலும் - உத்தம குணமுள்ளவன்; சமுதாயக் கட்டுப்பாட்டைச் சிதை யாமல் காக்கவந்த வீராதி வீரன். இவைகள் கம்பன் கவிதை யிலிருந்து நாம் காணும் உண்மை; இராமாயணத்திலிருந்து வடித்த சாரம். கம்ப இராமாயணத்தைக் கற்போர் இவ்வுண்மையை மறுக்க மாட்டார்கள். மண வாழ்க்கை என்பது நாகரிகமடைந்த மக்கள் சமுதாயத்தின் ஓர் உன்னதமான கொள்கை. மணவாழ்க்கையே மக்களிடம் தனித்தனிக் குடும்ப வாழ்க்கை முறையை ஏற்படுத்திற்று. இந்தக் குடும்ப வாழ்வு நன்றாக நடைபெறுவதற்காகவே அரசாங்கம் தோன்றியது. இது மக்கள் நாகரிக வரலாற்றில் உள்ள உண்மை. நாகரிகத்தின் படியிலே அடியெடுத்து வைக்காத காலத்தில் தான் ஆண்களும் பெண்களும் தங்கள் மனம் போன போக்கில் வாழ்ந்தனர். இப்படி இருந்த காலம், தமக்கென்று உடையோ, உறைவிடமோ, உடைமையோ இல்லாமல் வாழ்ந்த காலம். உணவுப் பொருள்களைக்கூட உற்பத்தி செய்யத் தெரியாமல், இயற்கை யாகவே விளையும் காய், கனி, கிழங்குகளையும், பச்சை மாமிசங் களையும் தின்று காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில்தான் மண வாழ்க்கையின்றி வாழ்ந்தனர். மக்கள் தங்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து கொள்ளும் திறமை பெற்றனர். நாகரிகப் படியிலே ஏறத் தொடங்கினர். இதன் பிறகுதான் மணவாழ்க்கை என்ற முறை ஏற்பட்டது. தனித் தனிக் குடும்ப வாழ்வும் ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒருவன் பல பெண்களை மணந்து கொண்டான்; ஒருத்தி பல ஆண்களை மணந்து கொண்டாள். ஆங்காங்கேயிருந்த ஆண் பெண்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும், அவரவர்களின் ஆதிக்கத்தைப் பொறுத்தும் இந்நிலைமை ஏற்பட்டிருந்தது. பிறன் இல் விழையாமை ஒருவனுக்கு ஒருத்தி அல்லது ஒருத்திக்கு ஒருவன் என்ற மணமுறை மிகப் பிற்காலத்தில்தான் ஏற்பட்டது. இந்தமுறை ஏற்படுவதற்கு முன்பே ஒருவன் மனைவியை மற்றொருவன் காதலிப்பதைக் கூடா ஒழுக்கமாகக் கருதினர். மணம் என்ற வாழ்க்கை முறை எப்போது தோன்றியதோ அப்பொழுதே பல தார மணம் தவறு என்ற கொள்கையும் தோன்றிவிட்டது. ஒருவன் மனைவியுடன் மற்றொருவன் கள்ள நட்புக் கொள் வதைக் கண்டித்தனர். பிறன் மனைவியைக் காதலிப்பவனை ஒழுக்கமற்றவன், சமுதாயக் கட்டுப்பாட்டைக் குலைப்பவன், அறத்தைச் சிதைப்பவன், மக்களோடு ஒன்று பட்டு வாழத்தகுதி யற்றவன் என்று அறிஞர்கள் கருதினர்; இப்படி நடப்பவனைச் சமுதாயத்திலே இழிந்தவனாக எண்ணினர். ஒருவன் மனைவியை மற்றொருவன் தன் வசப்படுத்திக் கொள்ள ஆசைப்படுவதனால் - இம்முயற்சியிலே ஈடுபடுவ தனால் - சமுதாயக் கட்டுப்பாடு என்பதற்குப் பொருள் இல்லாமல் போய்விடும்; இக்கூடா ஒழுக்கத்தினால் சமூகத்தில் சண்டை சச்சரவுகள் - அடிதடிகள் - குத்து வெட்டுக்கள் - கொலைகள் உண்டாகும்; இந்நிகழ்ச்சியை இன்றும் காண்கிறோம். முன்னோர் களும் கண்கூடாகக் கண்டறிந்தனர். ஆதலால்தான் பிறர் மனைவியை விரும்புவதைக் குற்றங்களில் எல்லாம் பெருங்குற்ற மாகக் குறித்து வைத்தனர். பிறன் மனைவியை விரும்புவது மன்னிக்க முடியாத பெருங்குற்றம். இதுவே வள்ளுவர் வகுத்த அறங்களிலே தலை சிறந்தது. திருக்குறளில் உள்ள பிறன் இல் விழையாமை என்னும் அதிகாரத்தைப் படித்தால் போதும். பிறர் மனைவியை விரும்புவது எவ்வளவு பெரிய சமூகத் துரோகம் என்பதைக் காணலாம். பிறன்பொருளாள் பெட்டுஒழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல் (குறள்.141) பிறனுக்கு உரிமையுள்ள மனைவியாகிய ஒருத்தியை விரும்பி ஒழுகுவது அறியாமை; இவ்வுலகிலே அறம் இன்னது பொருள் இன்னது என்பதை அறிந் தவர்களிடம் இத் தீயொழுக்கம் தோன்றுவதில்லை. இது அவ்வதிகாரத்தின் முதற் குறள். அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் (142) தீயொழுக்கத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்கள் எல்லா ருள்ளும் பிறன் மனைவியை விரும்பி அவன் வாயிற்படியிலே நின்றவர்களைப் போல மடையர்கள் ஒருவரும் இல்லை. பிறன் மனைவியை விரும்புகிறவனே கடைந்தெடுத்த மடையன் என்று கூறுகிறது. இக் குறள். பிறர் மனைவியை விரும்புகின்றவர் செத்தவர். (143) பிறர் மனைவியை விரும்புகின்றவர் எத்தனை சிறப்புள்ள வராயினும் இழிந்தவர். (144) பிறர் மனைவியை விரும்புவோன் எப்பொழுதும் அழியாத பெரும் பழியைப் பெறுவான். (145) பிறன் மனைவியை விரும்புகிறவனிடம் பகை, பாவம், அச்சம், பழி இந்நான்கும் என்றும் இணைந்திருக்கும். (146) பிறன் மனைவியை விரும்பாதவன் அறத்தைப் பின்பற்றி இல்வாழ்க்கை யிலே வாழ்கின்றவன் ஆவான். (147) பிறர் மனைவியை விரும்பாமையே சிறந்த ஆண்மை; உயர்ந்த நடத்தை. (148) பிறர் மனைவியைத் தீண்டாதவரே மக்களால் விரும்பத்தக்கவர். (149) அறம் புரியாமல் பாவம் செய்கின்றவனே ஆயினும் பிறன் மனைவியை விரும்பாமையே சிறந்தது. (150) இவைகளே ஏனைய குறள்களில் உள்ள கருத்துக்கள். பிறர்மனை விழைதல் பெரும் பாவம்; பிறர் மனை விரும்பாமை பேரறம் என்பதை நீதி நூல்களிலும் காணலாம். இந்தியப் பண்பாட்டிலே இது ஒரு சிறந்த உயர்ந்த ஒழுக்கம்; சமுதாயநீதி. இந்நீதியைக் காப்பாற்றினால்தான் சமுதாயத் தில் ஒற்றுமையும், அமைதியும் கூடி நிலைத்து வாழும் என்பது அறிஞர் முடிவு. இராவணனைப் புகழ்வோர், இராமனை இகழ்வோர், இந்தச் சமுதாய நீதியைச் சிதைத்தவன் இராவணனா இராமனா என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். வள்ளுவர் வகுத்த நல்லறத்தை இராம காதையின் வாயிலாக வலியுறுத்திக் காட்டுகின்றான் கம்பன். இதைக் கம்பன் கவிதை களால் காண்போம். வாலியின் குற்றம் வாலிக்கும் இராமனுக்கும் பழம் பகைமை ஒன்றும் இல்லை. வாலியால் இராமனுக்கு எந்தக் கெடுதியும் உண்டாக வில்லை. இருந்தும் சுக்கிரீவனுக்காக வாலியைக் கொன்றான். வாலி கொல்லப்படுவதற்குரிய குற்றவாளிதான் என்பதை வள்ளுவர் அறத்தைக் கொண்டு மெய்ப்பிக்கின்றான் கம்பன். வாலி பிறன் மனைவியைக் கவர்ந்தவன்; அதுவும் தன் தம்பியின் மனைவியைத் தன் மனைவியாக்கிக் கொண்டவன். இதுதான் வாலியின் மீது இராமன் வாயுரையால் கம்பன் சுமத்தும் பெருங் குற்றம். ஈரம் ஆவதும், இற்பிறப்பாவதும் வீரமாவதும், கல்வியின் மெய்ந்நெறி வாரமாவதும், மற்றொருவன்புணர் தாரம் ஆவதைத் தாங்கும் தருக்கரோ? (கிட்கிந்தா, வாலிவதை. 99) இரக்கம் என்று சொல்லப்படுவது-உயர்ந்த குடிப்பிறப்பு என்று கூறப்படுவது-வீரம் என்று விளம்புவது-கல்வியினால் அறிந்த உண்மை நெறி யென்று உரைக்கப்படுவது-அன்பு என்று கூறப்படுவது - இவைகள் எல்லாம் மற்றொருவனுடைய தாரத்தைத் தன்னுடைய தாரமாகக் கொள்ளும் கர்வமா? தருமம் இன்னதெனும் தகைத்தன்மையும் இருமையும், தெரிந்து எண்ணலை; எண்ணினால் அருமை உம்பிதன் ஆருயிர்த் தேவியைப் பெருமை நீங்கினை எய்தப் பெறுதியோ (கிட்கிந்தா, வாலிவதை.101) தருமம் என்றால் இன்னது என்று நீ எண்ணிப் பார்க்க வில்லை; அதனால் அடையும் இம்மை மறுமைப் பயன்களை ஆராய்ந்து பார்க்கவில்லை. இவைகளைப்பற்றி யெல்லாம் நீ நினைத்துப் பார்த்திருப்பாயானால், அருமை யான உன் தம்பியின் ஆருயிர் மனைவியை நீ கவர்ந்து கொள்வாயா? உன் பெருமையை இழப்பாயா? இவ்விரண்டு பாடல்களாலும் வாலி செய்த பெருங் குற்றம் பிறன் மனைவியைக் கவர்ந்ததுதான் என்பதை விளக்கினான் கம்பன். இராவணன் மீதும் அவன் பிறன் மனைவியைக் கவர்ந்த குற்றமே பெருங் குற்றமாகச் சுமத்தப் படுகின்றது. இக் குற்றத்தைக் கம்பன் தன் வாயினாற் கூறாமல், இராவணனுக்கு உற்ற உறவினர் வாயினாலேயே உரைத்திருக்கின்றான். இராவணன் குற்றம் இராவணன் தன் மாமனாகிய மாரீசனிடம் போனான். சீதையின் மீது தான் கொண்ட காதலைக் கூறினான். அவளைக் கவர்ந்து கொண்டு வருவதற்குத் தனக்குத் துணை செய்ய வேண்டும் என்று கேட்டான். அப்பொழுது மாரீசன் இராவணனுக்கு எடுத்துக் கூறும் அறம் பாராட்டத்தக்கது. நாரம் கொண்டார், நாடு கவர்ந்தார், நடையல்லா வாரம் கொண்டார், மற்றொரு வர்க்காய் மனைவாழும் தாரம் கொண்டார் என்றிவர் தம்மைத் தருமந்தான் ஈரும் கண்டாய்! கண்டகர் உய்ந்தார் எவர்ஐயா! (ஆரண்ய.மாரீசன் 180) நடுநிலைமை தவறிய அன்பு கொண்டவர்கள்; பிறர் நாட்டைப் பல வந்தமாகக் கவர்ந்தவர்கள்; ஒழுக்கமற்ற செயல் களிலே ஆசை கொண்டவர்கள்; மற்றொருவர்க்கு உரியவளாய் அவர் மனையிலே வாழும் தாரத்தைக் கவர்ந்தவர்கள்; இவர்களையெல்லாம் தருமமே அழித்து விடும். பிறருக்குத் தீமை செய்யும் முட்போன்ற கொடியவர்களிலே எவர்தான் தப்பிப் பிழைத்தவர்கள்? இது இராவணன்மீது அன்புகொண்ட மாரீசன் அவனுக்குக் கூறிய அறிவுரை. கும்பகருணன் இராவணனுடைய தம்பி. அவன் இறுதி வரையிலும் இராவணன் பக்கத்திலே நின்று போர் செய்தவன். அவனும் இராவணனை இடித்துக் கூறுகின்றான். சீதையைச் சிறையெடுத்த காரணத்தாலேயே அரக்கர்குலம் அழியக்கூடிய தீமைக்கு ஆளாயிற்று என்று அறிவுரை புகல்வதாகக் கம்பன் கூறுகின்றான். ஆயிரம் மறைப்பொருள் உணர்ந்து, அறிவமைந்தாய், தீவினை நயப்புறுதல் செய்தனை (யுத்த.மந்திரப்.48) ஆயிரக்கணக்கான வேதப் பொருள்களை அறிந்தவன்; அறிவிலே சிறந்தவன்; ஆயினும் தீவினையை விரும்புகின்ற காரியத்தைச் செய்துவிட்டாய். இதனால் இராவணன் தன் கல்விக்கும் அறிவுக்கும் தகுந்த வழியிலே நடக்கவில்லை யென்பதை வெளியிட்டான். ஓவியம் அமைந்த நகர் தீ உண உளைந்தாய், கோவியல் அழிந்தது என வேறொரு குலத்தோன் தேவியை நயந்து சிறைவைத்த செயல் நன்றோ? பாவியர் உறும்பழி, இதிற் பழியும் உண்டோ? (யுத்த.மந்திரப்.49) சித்திர வேலைப்பாடுகள் நிறைந்த சிறந்த இலங்கை மாநகர், அனுமான் வைத்த தீயினால் அழிந்ததைக் கண்டு மனம் வருந்தினாய். அரசியல் நீதியே அழிந்தது என்று சொல்லும்படி, வேறொரு குடியிலே பிறந்தவனுடைய மனைவியை விரும்பினாய்! அவளைக் கொண்டு வந்து சிறையிலே வைத்தாய்! இச்செயல் நல்லதா? நல்லொழுக்கமற்றவர்கள் செய்யும் பழிச் செயல் இது; இதைவிடப் பெரும்பழி வேறு ஏதேனும் உண்டோ? இவ்வாறு இராவன் செய்த கொடுஞ்செயலைப் பழித்துக் கூறி மேலும் அவன் நாணமடையும்படி பல நல்லுரை களைக் கூறுகின்றான் கும்பகருணன்; உன்னுடைய மனைவிமார்கள் - உன்னிடம் காதல் கொண்டிருக்கும் உயிர்த் துணைவியர்கள் - உன்னைக்கண்டு சிரிக்கின்றனர். நீ மற்றொருவன் மனைவியாகிய சீதையின் காலிலே வீழ்ந்து, காமத்தால் கெஞ்சுவதைக் கண்டு அவர்கள் எள்ளி நகைக்கின்றனர். இது உனக்குப் புகழ் ஆகுமா? (யுத்த.மந்திரப். 50) மற்றொருவன் மனைவியைச் சிறிதும் இரக்கம் இல்லாமல் பலவந்தமாக எடுத்துக் கொண்டு வந்து சிறையிலே வைத்தாய். என்று இந்த அடாத செயலைச் செய்தாயோ அன்றே அரக்கர் களின் புகழ் அழிந்துவிட்டது. அற்பச் செய்கையால் புகழ் அழியாமல் நிற்கும் என்று நினைப்பது அறிவுடைமையா? (யுத்த.மந்திரப். 51) என்று மேலும் இடித்துரை கூறினான். இவ்வளவையும் இராவணன் உணர்ந்ததாகவோ, தன் செய்கைக்கு வருந்திய தாகவோ தெரியவில்லை. ஆதலால் மேலும் அவன் செய்கையைப் பழித்துக் கூறுகின்றான் கும்பகருணன். ஆசில்பரதாரம் அவை அம்சிறை அடைப்பேம் மாசில்புகழ் காதல் உறுவோம்! வளமைகூரப் பேசுவது மானம்! இடை பேணுவது காமம்! கூசுவது மானுடரை! நன்றுநம கொற்றம்! (யுத்த.மந்திரப். 52) பிறர் மனைவிமார்களாக இருக்கின்ற குற்றமற்றவர்களை யெல்லாம் கொண்டுவந்து அழகிய சிறையிலே அடைத்து வைப்போம்; இக்கொடுமையைச் செய்துவிட்டு, மாசற்ற புகழ் வேண்டும் என்று மனத்தால் காதலிப்போம்; மிகவும் பெருமை யோடு, மானமே உயிரினும் சிறந்தது என்று உரையாடுவோம்; அறிஞர்கள் வெறுக்கத்தக்க காமத்தையே விரும்புகின்றோம். மனிதரைக் கண்டு நாணம் அடைகின்றோம். நமது வெற்றி-புகழ்-மிகவும் நன்று! நன்று! என்று இராவணன் நடத்தையை வெறுத் தான்; இகழ்ந்து நகைத்தான். அரக்கர் குலத் தலைவனாகிய இராவணன் செயலால் அக் குலத்தின் மானமே போய்விட்டது என்று எடுத்துக் கூறினான். இவ்வளவோடு கும்பகருணன் ஆத்திரம் அடங்க வில்லை. சிட்டர் செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய் (யுத்த.மந்திரப்.53) நல்லோர்க்குரிய செயலை நீ செய்யவில்லை. நமது குலத்துக்கே சிறுமை தரும் வினையைச் செய்தாய் என்று கடிந்து கூறினான் அவன். ஆசில் பரதாரம் அவை அம்சிறை அடைப்பேம் என்று கும்பகருணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இராவணன் சீதையைச் சிறைப்பிடித்தது முதற்குற்றம் அன்று. சீதையைச் சிறைப்பிடிப்பதற்கு முன்பே வேறு பல பெண்களையும் சிறைப் பிடித்திருக்கிறான். பிறர் தாரம் விழைவது பெருங்குற்றம் என்று அவன் கருதுவதேயில்லை. யாராயிருந்தாலும் சரி, அழகான பெண்களைக் கண்டால் காம வெறி கொண்டு அவர்களைச் சிறையெடுப்பது இராவணனுடைய பிறவிக் குணம் என்பதைக் கும்பகருணன் வாயால் குறிப்பிட்டான் கம்பன். இவைகளைக் கொண்டு இராவணன் எத்தகைய ஈனச் செயல் உள்ளவன் என்பதைக் காணலாம். அவன் வள்ளுவர் அறத்திற்கு மாறாக நடந்தவன்; இந்தியப் பண்பாட்டுக்கு எதிராக நின்றவன்; சமூகத் துரோகி; மனிதத் தன்மையில்லாதவன் என்பதை அறியலாம். இத்தகைய குற்றங்குறைகளை இராமனிடம் காணவே முடியாது. உயர்ந்த நடத்தைக்கு எடுத்துக்காட்டாக நிற்பவன் இராமன். கம்பன் கருத்தை அறிந்தவர்கள், இராவணன் உயர்ந்தவனா? இராமன் உயர்ந்தவனா? என்ற வழக்கில் தலையிடவே மாட்டார்கள். இராவணனைப் புகழ்ந்தும், இராமனை இகழ்ந்தும் பேசுவோரைச் சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். இராமனும் இராவணனும் கம்பன் தமிழனாயிருந்தும் அவனுக்கு இன உணர்ச்சி யில்லை. இராவணன் தென்னாட்டிலே பிறந்தவன்; அவனைத் தூற்றுகின்றான்; வட நாட்டிலே பிறந்த இராமனைப் போற்று கின்றான்; அவனைக் கடவுளாகக் கொண்டாடுகின்றான்; கம்பன் தமிழன் என்ற உணர்ச்சியை மறந்தான்; ஆரியக் கொள்கைக்கு அடிமையானான்; ஆதலால் ஆரிய நாட்டு இராமனைப் புகழ்ந்து பேசுகின்றான். இவ்வாறு சில புலவர்கள் - ஆராய்ச்சியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பேசுகின்றனர். இதை இதற்கு முன்னும் படித்தோம். இவர்களுடைய ஆராய்ச்சிக்கு இவர்களுடைய உள்ளத்தில் உலவும் வெறுப்புத்தான் அடிப்படை; வேறு தக்க அடிப்படை எதுவும் இல்லை. ஆரியர்கள் மேல் வெறுப்பு; வடமொழியின் மேல் வெறுப்பு; பார்ப்பனர்கள் மேல் வெறுப்பு; தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களான அந்தணர்களைக்கூட ஆரியப் பரம்பரை யினர் - ஆரியர்கள் - என்று தவறாக எண்ணியதனால் எழுந்த வெறுப்பு. இவைகளேதான் இவர்களுடைய விபரீத ஆராய்ச்சிக்கு அடிப்படை. பல மொழிகளிலே இராமாயணம் உண்டு; கதைப் போக்கிலே இவைகளுக்குள் பல வேறுபாடுகள் இருக்கின்றன. இவைகள் இராம சரிதம், நீதிக்கும் - அநீதிக்கும் நடந்த போராட்டம்; அறத்திற்கும் - பாவத்திற்கும் நடந்த சண்டை; சர்வாதிகாரத்திற்கும் - ஜனநாயகத்திற்கும் நடந்த யுத்தம் என்ற உண்மையை மறுப்பதில்லை. இராவணன் நீதியைச் சிதைத்தான்; அறநெறியை மீறினான்; அவன் செய்த செயல்கள் எல்லாம் தன்னலத்தையே நோக்கமாகக் கொண்டவை; தியாகம் என்பதைப் பற்றித் தினை அளவு கூட அவன் எண்ணவேயில்லை. தன்னுடைய இன்பத் திற்காகவே எல்லோரையும் பயன்படுத்திக் கொண்டான். பொதுநலங் கருதி உழைப்பவர்களுக்கெல்லாம் பொறுக்க முடியாத துன்பங்களைச் செய்தான். இந்த உண்மையைக் கம்பன் தன் காவியத்திலே தெளிவாகக் காட்டுகின்றான். இராமன் நீதிக்குப் பாடுபட்டான்; மக்கள் சமுதாயத்திலே ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நிலைநாட்டப் பாடுபட்டான்; தன்னலத்தைத் துறந்தான்; பிறர் நலத்திற்காக உழைத்த தியாகி; அறநெறி தவறி, யாருக்கும் தீங்கிழைக்காதவன்; தன்னை அடைந்தவரைக் காக்கும் கருணை வடிவானவன்; பாவத்தை அடக்கி அறத்தை நிலைநாட்டுவதே அவன் கொள்கை. இவ் வுண்மையைக் கம்பன் ஆதிமுதல் அந்தம் வரையிலும் தன் கவிதையிலே காட்டுகின்றான். அரக்கர்கள் யார்? இராமாயணச் சண்டையை - இராம - இராவண யுத்தத்தை அரக்கர் - இராமாதியர் போரை - அறத்திற்கும் பாவத்திற்கும் நடந்த போர் என்றே கம்பன் குறிப்பிடுகின்றான். இன்னல் உற்று அயரல்; வெல்லா தருமத்தைப் பாவம் என்றான் (யுத்த.நாகபாச,233) அறத்தினைப் பாவம் வெல்லாது (யுத்த.நிகும்பலை,175) அத்தனை அறத்தை வெல்லும் பாவம் என்று அறிந்தது உண்டோ? (யுத்த.மூலபல, 49) அறம் வெல்லும் பாவம் தோற்கும் (சுந்தர ஊர்தேடு.95) அருமை என்? இராமற்கு அம்மா அறம் வெல்லும் பாவம்தோற்கும் (யுத்த.வேலேற்ற.44) இவைகள் அறத்தின் உறுதியையும், பாவத்தின் அழிவையும் உணர்த்தின. அரக்கர்கள் பாவத்தின் பிரதிநிதிகள்; பாவமே உருவானவர்கள் என்பதே கம்பன் கருத்து. இதுதான் அறிஞர் களின் கருத்து ஆகும். புராணங்களும் அரக்கர் களைப் பாவத்தின் மறு பிறப்பாகவே புகல்கின்றன. அறமற்ற தன்மை என்னென்ன காரியங்களைச் செய்யும் என்பதைக் காட்டவே அரக்கர்களையும் அசுரர்களையும் முன்னோர்கள் உருவகம் செய்தனர். இக் கருத்தையே கம்பனும் பின்பற்றினான். இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர்; அரக்கர் என்று உளர் சிலர்; அறத்தின் நீங்கினார். (ஆரணிய.அகத்திய.12) இரக்கம் என்று சொல்லப்படும் ஒரு சிறந்த பொருள் இல்லாத மனமுள்ளவர்கள்; கல் மனத்தினர்; அரக்கர் என்ற பெயருடன் இருக்கின்றனர் சிலர்; அவர்கள் அறத்தின் தொடர்பே யில்லாதவர்கள். வஞ்சமும் களவும் வெட்கி வழி அலா வழிமேல் ஓடி நஞ்சினும் கொடியர் ஆகி, நவை செயற்கு உரிய நீரார், வெஞ்சின அரக்கர். (சுந்தர, அட்சகுமரன்.64) வஞ்சகத்தையும் களவையுமே விரும்புகின்றவர்கள்; பிறருக்குத் துன்பம் செய்வதிலே நஞ்சைவிடக் கொடுமை யுள்ளவர்கள். எப்பொழுதும் குற்றம் செய்வதையே குணமாகக் கொண்டவர்கள்; இவர்களே கடுஞ்சினம் கொண்ட கருணை யற்ற அரக்கர்கள். பாவந்தோன்றிய காலமே தோன்றிய பழையோர்; தீவந்தோன்றிய முழைத்துளை யெனத் தறுகண்ணர்; கோவந் தோன்றிடில் தாயையும் உயிர் உணும் கொடியர் (யுத்த. படைக்காட்சி.23) பாவம் என்பது எந்த நாளிலே பிறந்ததோ, அந்த நாளிலேயே பிறந்த பழமையானவர்கள்; நெருப்புப் பிடித்து எரிகின்ற மலைக்குகை போன்ற கண்களை யுடையவர்கள்; எதற்கும் அஞ்சாத இரக்கமற்ற கண்களை யுடையவர்கள்; கோபம் வந்துவிட்டால் இன்னது இனியது என்று பாராமல் தாயையும் கொன்று தின்னும் கொடியவர்கள். இவைகள் அரக்கர்களின் தன்மையை அப்படியே காட்டு கின்றன. அவர்கள் அநீதிகள் என்பவை எவ்வளவு உண்டோ அவ்வளவும் சேர்ந்து உருவாகி வந்தவர்கள். இவ்வுண்மையை இப்பாடல்களால் காணலாம். அரக்கர்களின் நடத்தையை எண்ணிப் பார்ப்போர் இந்த உண்மையை ஒப்புக்கொள்ளப் பின்வாங்க மாட்டார்கள். இராமன் தியாகம் அறந்தலை நிறுத்தி, வேதம் அருள் சுரந்து அறைந்த நீதித் திறந்தெரிந்து உலகம் பூணச் செந்நெறி செலுத்தித் தீயோர் இறந்துக நூறித், தக்கோர் இடர்தவிர்த்து ஏக ஈண்டுப் பிறந்தனன்; தன் பொற்பாதம் ஏத்துவார் பிறப்பு அறுப்பான். (சுந்தர. பிணிவீட்டு.81) அறத்தைச் சிறப்பாக நிலைநாட்டவும்; வேதங்கள் மக்களிடம் கருணை கொண்டு விளம்பியிருக்கின்ற நீதியின் மேன்மையை அறிந்து உலகம் அந்த நீதியைப் பின்பற்றவும், உலகை நல்வழியிலே நடக்கச் செய்யவும், கொடியோரை மடியும்படி நொறுக்கி நல்லோர்களின் துன்பத்தைப் போக்கவும் இவ்வுலகிலே பிறந்தான் இராமன். அவன் தன்னுடைய அழகான பாதங்களை வணங்கி வழிபடுகின்றவர்களின் பிறவித் துன்பத்தை அறுப்பான். இப்பாடல் இராமனுடைய கொள்கையைக் கூறியது. பாவத்தை அழித்து, அறத்தை நிலைநாட்டவே அவன் பிறந்தான் என்பதைக் குறித்தது. அறந்தலை நின்றவர்க்கு அன்பு பூண்டெனன் (யுத்த. வீடணன்.18) அறத்திலே சிறந்து நின்றவரிடம் அன்பு கொண்டேன். இதுவும் இராமனுடைய பெருமையைக் கூறியது. தருமமும் ஞானமும் தகவும் வேலியாய், மருவரும் பெருமையும் பொறையும் வாயிலாய், கருணையம் கோயிலுள் இருந்த கண்ணனை அருள்நெறி எய்திச் சென்று அடிவணங்கினான். (யுத்த.வீடணன்.50) தருமத்தையும் அறிவையும், தவத்தையும் வேலியாகக் கொண்டவன்; சிறந்த பண்புகளையும் பொறுமையையும் வாயிலாகக் கொண்டவன்; இத்தகைய கண்ணனாகிய இராமன் இரக்கம் என்னும் கோயிலுக்குள் இருந்தான். வீபீடணன் இந்த இராமனுடைய அருள் நெறியைப் பெற்று அதன் வழியே சென்று, அவனைக் கண்டு, அவன் அடிகளை வணங்கினான். இதனாலும் இராமனுடைய பண்பையும் செயலையும் காணலாம். தஞ்சமும், தருமமும், தகவுமே அவர் நெஞ்சமும், கருமமும், உறையுமே நெடும் வஞ்சமும், பாவமும், பொய்யும் வல்ல நாம் உஞ்சுமோ! அதற்கு ஒருகுறை உண்டாகுமோ? (யுத்த. கும்பகரு.85) அவர் தஞ்சமடைந்தவரை உதறித் தள்ளாமல் காப்பவர். நாமோ நெஞ்சத்திலே வஞ்சகமுள்ளோம்; செயலிலே பாவத்தையே செய்வோம்; சொல்லிலே பொய்யையே சொல்வோம்; இவை களில்தாம் நாம் வல்லவர்கள். இப்படிப்பட்ட நாம் எப்படித் தப்பிப் பிழைப்போம்? அறத்திற்கு எக் காலத்திலாவது குறைவோ அழிவோ உண்டாகுமோ? இல்லை. இவ்வாறு அரக்கர்களை மனம், மொழி, மெய்களால் எப்பொழுதும் தீமை செய்கின்றவர்களாகவும், இராமனை அறத்தின் உருவாகவும் கும்பகருணன் கூறுகின்றான். அறந் துணையாவது அல்லால் அருநரகு அமைய நல்கும் மறம் துணையாக மாயாப் பழியொடும் வாழ மாட்டேன். (யுத்த. நிகும்பலை.170) அறத்தைத் துணையாகக் கொண்டு வாழ்வேனேயல்லாமல், நரக வாழ்வைக் கொடுக்கும் பாவத்தைத் துணையாகக் கொண்டு, நீங்காத பழியுடன் வாழமாட்டேன். இது விபீடணன் கூறியதாகக் கம்பன் உரைத்த கவிதை. இராமனை அறமாகவும், இராவணனைப் பாவமாகவும் கூறியது இப்பாட்டு. இவைகளைக் கொண்டு அரக்கர் என்பவர்கள் யார்? இராம இலக்குவர் என்பவர்கள் யார்? என்பதை உணர்ந்து கொள்ளலாம். இராமன் மாண்பு கம்பன் இராமனுடைய சிறந்த பண்பை மீட்சிப் படலத்தில் எடுத்துக் காட்டுகின்றான். சீதையின் தீக் குளிப்புக் காட்சி முடிந்தவுடன், அங்கே தசரதன் தோன்றுகின்றான். அவன் வானுலகிலிருந்து வருகின்றான். அவனை இராமன் வணங்குகின்றான். அவன் இராமனைத் தழுவி மகிழ்ச்சி அடைகின்றான். சீதை தசரதனை வணங்குகின்றாள். அவளுக்குத் தசரதன் ஆறுதல் உரைகள் கூறு கின்றான். உனது கற்பை உலகுக்குக் காட்டவே இராமன் உன்னைத் தீயில் மூழ்கச் சொன்னான். ஆதலால் நீ வருந்தாதே. உன் கணவனிடமும் வெறுப்படையாதே என்று கூறினான். பின்னர் தசரதன் இராமனைத் தழுவிக் கொண்டு அவன் நற்பண்பை நாவாரப் பாராட்டினான். என்னிடம் நீ எந்த வரம் வேண்டுமானாலும் கேட்கலாம்; அதைத் தருகிறேன் என்றான் தசரதன். அதற்கு இராமன் நான் வானுலகத்தை அடைந்து உன்னைக் கண்டு துன்பந் தீர்வது என்று இருந்தேன்; ஆனால், இன்று நான் உன்னை இங்கேயே காணும் பேறு பெற்றேன். இதுவே எனக்குப் போதுமானது. இதை விட நான் பெறக்கூடிய வரம் வேறு என்ன இருக்கின்றது? என்றான். இராமன் இவ்வாறு சொல்லியும் தசரதன் விடவில்லை. ஆயினும் உனக்கு ஏற்ற நீ விரும்பிய வரம் ஒன்றைக் கேட்பாயாக என்று வற்புறுத்தினான். இவ்வற்புறுத்தலுக்குப் பின் அவன் கேட்ட வரந்தான் இராமனுடைய உயர்ந்த பண்பை உணர்த்து கின்றது. தசரதன் உயிர் விடும்போது, கைகேயி எனக்கு மனைவி அல்லள்; பரதன் எனக்கு மகன் அல்லன் என்று சொல்லி மாண்டான். இராமனைக் காட்டுக்குப் போகும்படி செய்து விட்டாள் கைகேயி என்ற ஆத்திரத்தால்தான் தசரதன் இவ்வாறு வெறுத்துப் பேசினான். இச்செயல் தவறு என்பது இராமன் கருத்து. இத் தவற்றைப் பரிகரிக்க வேண்டும் என்பது அவன் எண்ணம். இராமன் கைகேயியைத் தாயாகவே எண்ணுகின்றான்; இவ்வெண்ணத்தி லிருந்து இராமன் மாறவே இல்லை. பரதனைச் சிறந்த பண்புள்ள சோதரனாகவே கருதுகின்றான். தசரதன் கூற்றால் இராமனுடைய கொள்கைக்குச் சிறிது இழுக்கு ஏற்பட்டு விட்டது. அவ்விழுக்கைத் துடைப்பதே இராமன் எண்ணம். கைகேயி, தசரதன் மனைவி என்ற உரிமையால்தான், இராமன் அவளைத் தன் அன்னை என்று அன்பு பாராட்டினான். தன் அன்னையாகிய கைகேயியின் மகன் பரதன் - தன் தந்தையாகிய தசரதன் மகன் பரதன் என்ற காரணத்தால் தான் அவன் இராமனுக்கு உடன்பிறந்தான் ஆகின்றான். தசரதன் அந்தக் கைகேயியை யும் பரதனையும், தன் மனைவி அல்லள், மகன் அல்லன் என்று வெறுத்தாலும், இராமன் அவர்களிடம் வைத்த அன்பிலும் - மதிப்பிலும் குறையவில்லை. ஆயினும் உறவின் முறையிலே துண்டிப்பு ஏற்பட்டுவிடுகிறது. ஆகையால் தான், தசரதன் கூறிய மொழியை மாற்றிக் கொள்ளும்படி வரம் கேட்கிறான் இராமன். இதன் மூலம் இராமன் பண்பு மிக உயர்ந்த நிலையில் விளங்குகின்றது. ஆயினும் உனக்கு அமைந்தது ஒன்று உரை என அழகன், தீயள் என்றுநீ துறந்தஎன் தெய்வமும் மகனும் தாயும், தம்பியும் ஆம் வரம் தரு கெனத் தாழ்ந்தான்; வாய்திறந்து எழுந்து ஆர்த்தன உயிரெலாம் வழுத்தி. (யுத்த. மீட்சி.129) ஆயினும் உனக்கு விருப்பமான ஒரு வரத்தைச் சொல் என்று தசரதன் கேட்டான்; உடனே இராமன், கெட்டவன் என்று நீ வெறுத்த என் தெய்வமாகிய கைகேயியும் அவள் மகன் பரதனும் எனக்குத் தாயும், தம்பியும் ஆக இருக்கும்படி வரந் தருக என்று சொல்லி வணங்கினான். இதைக் கேட்டவுடன் உலகில் உள்ள எல்லாவுயிர்களும் எழுந்து இராமனை வாழ்த்தின; வாய் திறந்து ஆரவாரம் புரிந்தன நீ வெறுத்த கைகேயியை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள், பரதனை மகனாக ஏற்றுக்கொள் என்று நேரடியாக இராமன் வரம் கேட்கவில்லை, என் தெய்வமாகிய கைகேயியை எனக்குத் தாயாகும்படியும், அவள் மகனை எனக்குத் தம்பி யாகும் படியும், வரந் தருக என்று கேட்பதில் உள்ள நயம் நம் உள்ளத்தைக் கவர்கின்றது. மிகவும் சாதுர்யமான பேச்சு. தசரதன் உண்மையில் இராமனுக்கு வரந்தர விரும்பினால் இவ்வேண்டுகோளை எப்படி மறுக்க முடியும்? இறுதியில் இராமன் இவ்வரத்தைப் பெற்றான். இதன் மூலம் தசரதன் செய்த தவற்றையும் திருத்தினான். மேலே காட்டிய பாட்டு இராமன் விளக்குவதற்குக் கம்பனால் எழுதப்பட்ட ஒரு சித்திரம். இதன்பின் தேவர்கள் இராமனைப் பார்த்து உனக்கு வேண்டும் வரம் கேள் என்றனர். உடனே இராமன் இறந்த வானரங்கள் எல்லாம் உயிர் பெற்று எழ வேண்டும், என்று வரம் கேட்டான். அவ்வாறே தேவர்கள் வரம் தந்தனர். பின்னும், வானரங்கள் எங்குச் சென்றாலும் அங்கே காய், கனி கிழங்கு, தேன், நல்ல நீர் இவைகள் கிடைக்கும்படி வரம் கேட்டான்; அவ்வாறே வரம் தந்தனர் தேவர்கள். இதன்பின், இராமன் வெற்றி வீரனாய் அயோத்திக்குத் திரும்பும்போது, பரத்துவாச முனிவர் ஆசிரமத்திலே அவரது விருந்தினராய்த் தங்கினான். விருந்தெல்லாம் முடிந்தபின், பரத்துவாசன் இராமனை நோக்கி உனக்கு வேண்டும் வரம் கேள் என்றான். அரியினம் சென்ற சென்ற அடவிகள் அனைத்தும் வானம் சொரிதரு பருவம் போன்று கிழங்கொடு, கனி, காய் துன்றி, விரிபுனல் செழுந்தேன் மிக்கு வீங்கென விளம்பு கென்றான்; புரியும் மாதவனும் அஃதே ஆகெ னப் புகன்றிட் டானால் (யுத்த.மீட்சி.199) குரங்கினங்கள் எந்தக் காட்டிற்குச் சென்றாலும், அங்கெல்லாம் மாரிக் காலத்தைப்போல, கிழங்குகள், கனிகள், காய்கள் நிறைந்திருக்கவேண்டும் நல்ல தண்ணீரும் தேனும் மிகுதியாகக் கிடைக்க வேண்டும்; இதுதான் நான் வேண்டும் வரம்; இதைத் தருக என்றான். உடனே தவம்புரியும் மாதவனாகிய பரத்துவாசன் அப்படியே ஆகுக என்றும் வரம் அளித்தான். இராமன் தயரதனிடம் கேட்ட வரம், பரத்துவாசனிடம் வேண்டிய வரம் இரண்டும் அவனுடைய தன்னலமற்ற தன்மைக்கு எடுத்துக்காட்டு. அவன் பிறர் வாழவே வரம் கேட்டான்; கைகேயிக்கும் பரதனுக்கும் ஏற்பட்ட பழி தீர வரங் கேட்டான்; தனக்கு உதவி செய்த வானரங்கள் வாழ வரங் கேட்டான். இத்தகைய நிகழ்ச்சி ஒன்றைக்கூட இராவணனுடைய வாழ்க் கையிலே காண முடியாது. மீட்சிப் படலத்தில் காணப்படும் இந்நிகழ்ச்சிகள் கட்டுக் கதைகளாக இருக்கலாம். அந்நிகழ்ச்சிகளில் உள்ள தத்துவத் தைத் தான் - கருத்தைத்தான் நாம் காணவேண்டும். கம்பன் கவிதையிலே காணும் இராம-இராவணர்கள் நம் முன்னே எப்படிக் காட்சியளிக்கின்றார்கள் என்பதைக் காண்போம். ஏற்றமும் இழிவும் 1. இராமன் பாராளும் செல்வத்தைத் தன் தம்பி பரதனுக்குக் கொடுத்தவன்; இதன் பொருட்டு நாட்டை விட்டுக் காட்டுக்கு வந்தவன். இராவணன் தனக்கு அறநெறியைக் கூறினான் என்பதற் காகவே தனது அருமைத் தம்பி விபீடணனை விரட்டியவன். 2. இராமன் தன் உடன்பிறந்தவர்களாகக் கொண்ட குகன், சுக்கிரீவன், விபீடணன் ஆகியோர்க்கு நன்மை செய்தவன். இராவணன் தன் உடன்பிறந்தவர்களையும் பிள்ளை களையும், இனத்தாரையும் தன் காமவெறிக்காகப் போர்க் களத்திலே பலியிட்டவன். 3. இராமன் ஏக பத்தினி விரதம் உள்ளவன். இராவணன் பலதாரங்களை மணந்தவன். 4. இராமன் பிறன்இல் விழையாமை என்னும் வள்ளுவர் அறத்தை விடாப்பிடியாகக் கொண்டவன். இராவணன் இவ்வறத்தைப்பற்றியே எண்ணாதவன்; பிறர்மனை விழைந்த பெரும் பாதகன். 5. இராமன் புலன் அடக்கம் உள்ளவன்; கெட்டவழியிலே தன் உள்ளத்தையும் - செயலையும் போகவிடாதவன். காம வெறிக்கு இரையாகாதவன். சூர்ப்பநகையின் சூழ்ச்சிக்கு இராமன் ஏமாறாமல் இருந்ததே இதற்குச் சான்று. இலக்குவனும் இத்தகையவனே; அவனும் சூர்ப்பநகையை - அயோமுகியை வெறுத்தான். இராவணன் புலன் அடக்கம் இல்லாதவன்; காம வெறி கொண்டவன். வேதவதியென்னும் கன்னியைப் பலவந்தமாகக் கையைப் பிடித்தான்; அவள் சாபத்தையும் பெற்றான். அரம்பை யைப் பலவந்தப்படுத்தி அவளுடைய சாபத்தையும் பெற்றான்; இன்னும் தான் விரும்பிய பெண்களையெல்லாம் சிறைப்பிடித் தான். இறுதியில் சீதையைச் சிறையெடுத்ததனாலேயே அவன் மாண்டு மடிந்தான். 6. இராமன் மதுவையும் - மாமிசத்தையும் வெறுத்தவன். இராவணன் இவைகளையே விரும்பியவன். 7. இராமன், நல்ல நடத்தை, நீதி, கட்டுப்பாடு ஆகிய அறத்தை நிலை நாட்டுவதற்கே தன்னைத் தியாகம் செய்தான். இவைகளைச் சிதைப்பவர்களை அழிப்பதையே நோன்பாகக் கொண்டான். இராவணன், ஒழுக்கம், நீதி, கட்டுப்பாடு ஆகிய அறத்தை அறித்தவன். தன்னலத்துக்காகவே தன் மூச்சுள்ளவரையும் போராடிப் போர்களத்திலே இறந்தான். 8. இராமன் இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் என்னும் இரக்க சிந்தையுள்ளவன்; இதற்காகவே உழைத்தவன். இராவணன் தன்னுடைய பெருமைக்கும், புகழுக்குமே ஆசைப்பட்டவன்; இதற்காக மற்றவர்களையெல்லாம் தனக்கு அடிமையாக்கி ஆண்டவன். 9. இராமன் தன்னுடைய கல்வி, அறிவு, வீரம், ஆண்மை இவைகளை யெல்லாம் பிறர் நன்மைக்காகவே பயன் படுத்தியவன். இராவணன் தன்னுடைய கல்வி, அறிவு, வீரம், ஆண்மை இவைகளை யெல்லாம் தன் உடலின்பத்துக்காகவே பயன் படுத்தியவன். 10. இராமன், தந்நலம் துறந்து, உலக நன்மைக்காக நல்ல காரியங்களைச் செய்து வந்த முனிவர்கள், அந்தணர்கள் போன்றவர் களுக்கு ஆதரவளித்தான்; அவர்கள் துன்பத்தை நீக்கினான். இராவணன், யாருக்கும் எத்தீமையும் செய்யாமல் உலக நன்மையைக் கருதி நல்ல செயல்களைச் செய்து வந்த முனிவர் களையும், அந்தணர்களையும் வெறுத்தான்; அவர்களுடைய நல்ல காரியங்களுக்கெல்லாம் இடையூறு செய்து வந்தான். 11. இராமனுடன் சேர்ந்து வாழ்ந்த துணைவர்கள் அவ்வளவு பேரும் இராமனைப் போலவே சிறந்த பண்புள்ளவர்கள்; அவர்கள் எல்லோரும் இராமனால் இன்பமும், நன்மையும் அடைந்தனர். இராவணனுடன் இணைந்திருந்தவர்கள் அத்தனை பேரும் அவனுடைய அக்கிரமத்துக்கு ஆதரவளித்து வந்தனர். சீதையை இராவணன் சிறையெடுத்தது தவறு என்று தெரிந்துங்கூடக் கும்பகருணன், இந்திரசித்து போன்றவர்களும் இராவணனுக் காகவே போர் செய்து மடிந்தார்கள். இராவணனை ஆதரித்தவர்கள் அடைந்த பலன் பழியும் சாவுந்தான். இவ்வாறு உயர்ந்த பண்புக்கு ஓர் எடுத்துக்காட்டாக இராமன் காட்சியளிக் கின்றான்; இழிந்த பண்புக்கு எடுத்துக் காட்டாக இராவணன் காட்சியளிக் கின்றான். யாராயிருந்தாலும் - எக்குலத்திலே பிறந்தவராயிருந்த தாலும் – எவ் வினத்திலே தோன்றிய வராயிருந்தாலும்-எந்நாட்டிலே பிறந்தவராயிருந் தாலும் - ஒழுக்கம் உள்ளவர் உலகத்தாரால் போற்றப்படுவர்; ஒழுக்கம் அற்றவர் உலகத்தாரால் தூற்றப்படுவர். இதுவே பழந் தமிழர் கண்ட நீதி. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. அனைவரும் ஒழுக்கத்தினாலேயே மேன்மையடைவார்கள்; ஒழுக்க மில்லாமையால் பெரும் பழியை அடைவார்கள். இக்குறள் பழந்தமிழர் நீதியை உணர்த்துகின்றது. இக்குறளுக்கு எடுத்துக் காட்டாகக் கம்பனுடைய இராமனும் இராவணனும் நிற்பதைக் காணலாம். உயர்ந்த நெறியிலே உறுதியோடு நிற்பவன் தமிழனாயினும் சரி, அல்லாத வனாயினும் சரி-அவன் போற்றுவதற்கு உரியவன்; பின்பற்றுவதற்கு உரியவன். அறத்தைச் சிதைக்கும் அறிவற்றவன் யாராயிருந்தாலும், வெறுக்கத் தக்கவன்; விலக்கத்தக்கவன். இது கம்பன் கருத்து. இக்கருத்தில் தவறென்ன? கம்பன் கண்ட தமிழர் பண்பு இராமாயணம் வடநாட்டுக் கதை என்று சொல்லுகின்றனர் சிலர். இது முற்றிலும் உண்மையன்று. இராமாயணக் கதையிலே தமிழ்நாடும் இணைந்திருக்கின்றது; வேறு பல நாடுகளும் இணைந்திருக்கின்றன. ஆகையால் அதை உலகத்து மக்களுக்கு நல்லறிவு புகட்டும் பொதுக் கதை என்று கூறுவது தான் பொருத்தமாகும். இந்தப் பொது இதிகாசத்தைத் தமிழ்நாட்டிலே பிறந்த கம்பன் தமிழிலே தமிழர்க்காகப் பாடினான். அவன் தன் இலக்கியத்திலே - காவியத்திலே-ஆங்காங்கே தமிழர் பண்பாடு களை அமைத்துப் பாடியிருக்கின்றான். தமிழர் நாகரிகத்திற்கு மாறான தமிழ்க் காவியத்தைத் தமிழர்கள் அவ்வளவாகப் பாராட்டமாட்டார்கள். படிக்கமாட்டார்கள்; பின்பற்ற மாட்டார்கள். இது கம்பன் கண்ட உண்மை. ஆதலால் வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் தமிழர் பண்பாட்டை விரித்துக் கூற அவன் தவறியதே இல்லை. காதல் மணம் காதல் மணமே பழந் தமிழர் பண்பு; காதலற்ற திருமணம் தமிழரிடையிலே நடைபெற்றதில்லை. பழங்காலத்தில் மணம் புரிந்துகொள்ளும் பொறுப்பை மணமக்களே மேற் கொண்டி ருந்தனர். ஆண்களும் பெண்களும் தாமே தம் விருப்பப் படி, தாம் காதலித்தவர்களை மணம் புரிந்து கொண்டனர். இந்த வழக்கம் சிறிது சிறிதாக மாற்றம் அடைந்தது. பெண்களுக்கு மணம் செய்துவைக்கும் பொறுப்பு பெற்றோர்கள் தலையில் சுமந்தது. இதன்பின் ஆண்-பெண் இருவருக்கும் மணம் செய்து வைக்கும் பொறுப்பைப் பெற்றோர்களே ஏற்றுக் கொண்டனர். இந்தப் பழக்கம் கம்பனுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் நிலைத்துவிட்டது. இதற்குச் சிலப்பதி காரம் ஒரு சான்று. கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்த திருமணம் காதல் மணம் அன்று. இருவருடைய பெற்றோர் களும் பெருநிதி படைத்தவர்கள்; புகழ்பெற்ற வணிகர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துத் தங்கள் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மணம் செய்துவைக்கும் பொறுப்பைத் தாங்களே மேற்கொண்டனர். வேத விதிப்படி திருமணம் நடைபெற்றது. தமிழரின் காதல் மணமுறை இவ்வாறு நெடுங் காலத்துக்கு முன்பே மாற்றம் அடைந்துவிட்டாலும் காதல் மணமே சிறந்தது என்பது கம்பன் கருத்து. ஆதலால் இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நடப்பதற்கு முன்பே அவர்கள் இருவரையும் சந்திக்க வைக்கின்றான். இருவரும் ஒருவர்மேல் ஒருவர் காதல் கொள்ளு கின்றனர். இக் காதலுக்குப் பிறகு தான் இராமன் வில்லை முறித்துச் சீதையை மணக்கின்றான். இந்தச் சந்திப்பு வால்மீகி யில் இல்லை. இராமன் மிதிலையின் வீதியிலே வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான். அவனுடன் இலக்குவன், விசுவாமித்திரன் ஆகிய இருவரும் வருகின்றனர். அப்பொழுது சீதா பிராட்டி அழகே உருவெடுத்தாற்போல் உப்பரிகையின்மேல் நிற்கின்றாள். கீழே நடந்து சென்ற இராமன் தற்செயலாக மேலே நோக்கினான். மேலே நின்ற சீதாதேவியும் தற்செயலாகக் கீழே நோக்கினாள். இருவர் கண்களும் சந்தித்தன; இருவர் உள்ளமும் ஒன்று பட்டன. சீதையின் கண்கள் இராமனுடைய தோள்களிலே பாய்ந்தன; இராமனுடைய கண்கள் சீதையின் மார்பிலே பாய்ந்தன. இதன் பலன் இராமன் நெஞ்சத்திலே சீதை குடி புகுந்தாள்; சீதையின் உள்ளத்திலே இராமன் குடிபுகுந்தான். இவ்வளவும் சில விநாடிகளில் நடந்துவிட்டன. இலக்குவ னுக்கும், விசுவாமித்திரனுக்கும் தெரியாமலே நடந்து விட்டன. இந்த நிகழ்ச்சியைக் கம்பன் மூன்று பாடல்களிலே மொழி கின்றான். எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணோடு கண்இணை கவ்வி ஒன்றை ஒன்று உண்ணவும், நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். (பால.மிதிலைக்காட்சி. 37) எண்ணத்தகுந்த சிறந்த அழகும் குணங்களும் நிறைந்த சீதை இவ்வாறு தன்னை அலங்கரித்துக்கொண்டு நிற்கும்போது கண்களோடு கண்கள் ஒன்றாகப் பொருந்தின. ஒருவர் கண்களை மற்றொருவர் கண்கள் அப்படியே விழுங்கின. அவர்களுடைய உணர்ச்சியும் அவர்களிடம் நிற்கவில்லை. இருவர் உணர்ச்சி களும் ஒன்றுபட்டன. இப்படி நிகழும்படி இராமனும் அண்ணாந்து பார்த்தான். அதே சமயத்தில் சீதையும் குனிந்து நோக்கினாள். நோக்கிய நோக்குஎனும் நுதிகொள் வேல்இணை ஆக்கிய மதுகையான் தோளில் ஆழ்ந்தன. வீக்கிய கனைகழல் வீரன் செங்கணும் தாக்கணங்கு அனையவள் தனத்தில் தைத்தவே. (பால.மிதிலைக்காட்சி.36) சீதை பார்த்த பார்வையென்னும் கூர்மையான வேற்படைகள். சிறந்த வலிமையுள்ள இராமன் தோள்களிலே ஆழமாகப் பதிந்தன. கால்களிலே வீர கண்டாமணிகளைத் தரித்த வீரனாகிய இராமனுடைய செந்தாமரை போன்ற சிவந்த கண்களும், மோகினி போன்ற அழகுள்ள சீதையின் மார்பிலே பாய்ந்து ஊடுருவின. பருகிய நோக்குஎனும் பாசத்தால் பிணித்து ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும், வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார். (பால.மிதிலைக்காட்சி.37) ஒருவர் அழகை ஒருவர் உண்டு சுவைப்பதற்குக் காரணமான அந்தப் பார்வை. ஒரு பாசக் கயிறாக நின்றது. அதனால் ஒருவர் உள்ளத்தை மற் றொருவர் உள்ளம் இழுத்தது. இப்படி இழுக்கப் பட்டதால், வில்லைத் தோளிலே பூண்ட இராமனும், வாட்படைகளையே கண்களாகக் கொண்ட சீதையும் ஒருவர் உள்ளத்திலே மற்றொருவர் மாறிக்குடியேறினர். இராமனின் உள்ளத்திலே சீதையும் சீதையின் சிந்தையிலே இராமனும் குடிபுகுந்து நிலைத்துவிட்டனர். இந்த மூன்று பாடல்களும் தமிழர்களின் பண்டைக் காதல் மணத்தின் சிறப்பைக் கருத்திலே கொண்டு பாடப்பட்டவை. இதற்கு அடுத்தாற்போல் மற் றொரு நிகழ்ச்சியிலே கம்பன் தன் கவித்திறத்தைக்-கருத்தின் உயர்வைக் காட்டி யிருக்கின்றான். அதுவும் வால்மீகியில் இல்லாதது; வால்மீகியிலிருக்கும் நிகழ்ச்சிக்கு மாறுபட்டது. தமிழ் நாட்டுக் கற்பு சீதையைச் சிறையெடுத்து இராவணன், அவளைத் தன்கரங்களால் தொட்டுத் தூக்கினான்; தன் தோள்மீது சுமந்து கொண்டு இலங்கைக்குப் போனான். இது வால்மீகி கூறியிருப்பது. சீதை தெய்வத்தன்மையுள்ளவள்; கற்பினுக்கு அணிகலம்; அந்நியர் தீண்ட முடியாத சுடுநெருப்பு என்ற கருத்துள்ளவன் கம்பன். அத்தகைய கற்பரசியை இராவணன் தன் கைகளால் தொட்டுத் தூக்கிச் சென்றான் என்றால் அது தமிழர் பண்புக்கு ஒவ்வாதது என்று எண்ணினான் கம்பன். ஆதலால் இந்த நிகழ்ச்சியை அவன் வேறுவிதமாக மாற்றி அமைத்தான். வால்மீகி காலத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் மகன் தொட்டுவிடுவதனால் அவள் கற்பு அழிந்துவிடும் என்ற கொள்கை இருந்ததில்லை. ஆதலால் இராவணன் சீதையை எடுத்துச் சென்ற நிகழ்ச்சியை இயற்கையாகக் கூறினான். கம்பன் காலத்திலும் அவனுக்கு முன்னும் தமிழ் நாட்டிலிருந்த பழக்கம் வேறு. ஒரு பெண்ணை-பிறன் மனைவியை- மற்றொரு ஆடவன் தொடுவானாயின் அவளுடைய புனிதத் தன்மை போய்விட்டது என்று தமிழர்கள் நினைத்தனர். ஒரு பெண்ணை அயலான் ஒருவன் கெட்ட எண்ணத்துடன் பார்த்தாலே போதும். அப்பெண்ணின் கற்பு அழிந்து விட்டது என்ற கொள்கையைத் தமிழர்கள் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்த காலம் கம்பன் காலம். இத்தகைய காலத்தில் வால்மீகி சொல்லியபடியே கம்பனும் எழுதி யிருப்பானாயின் தமிழகத்திலே சீதைக்கு அவ்வளவு பெருமை ஏற்பட்டிருக்காது. தமிழர்கள் இராமகாதையை அவ்வளவு சிறப்பாக ஏற்றிப் போற்றியிருக்க மாட்டார்கள். இந்த உண்மையை உள்ளத்திற் கொண்டு தான் கம்பன் தன்னுடைய கற்புத் தெய்வமாகிய சீதாபிராட்டியை, இராவணன் சிறை யெடுத்த நிகழ்ச்சியை இயற்கைக்கு மாறாக மாற்றியமைத்தான். இராவணன் சீதாதேவியைக் கையினால் தொடவில்லை; அவள் இருந்த இடத்தை அப்படியே நிலத்தோடு பெயர்த்தான்; இலக்குவன் அமைத்த இலை வீட்டோடு குலையாமல் பெயர்த் தெடுத்தான்: தேரிலே வைத்துக்கொண்டு புறப் பட்டான். இதுவே கம்பன் காட்டும் மாறுதலான நிகழ்ச்சி தூண்தான் எனலாம் உயர்ந்தோன் வலியால் கீண்டான் நிலம் யோசனை கீழொடுமேல் கொண்டான் உயர்ந்தோள் மிசை. (ஆரண்ய, சடாயு உயிர்.75-76) தூண் என்று சொல்லத் தகுந்த புயவலிமையால் கீழும் மேலும் ஒரு யோசனை அளவுள்ள நிலத்தைச் சீதையுடன் சேர்ந்து அகழ்ந்தெடுத்தான். தனது உயர்ந்த தோள்மேல் தூக்கி வைத்துக் கொண்டான். இவ்வடிகளால் இராவணன் சீதையைத் தூக்கிய காட்சியைக் காணலாம். இந்த நிகழ்ச்சியை இன்னும் பலவிடங்களிலும் கம்பன் வலியுறுத்தியிருக்கிறான். இவ்வாறு தூக்கிய சீதையை இராவணன், அப்படியே அவள் இருந்த நிலத்தோடு தேரில் வைத்துக்கொண்டு சென்றான். இடைவழியிலே சடாயு வந்து இராவணனைத் தடுத்தான். அவனுக்கும் - இராவணனுக்கும் போர் நடந்தது. அப்போரிலே சடாயுவின் சிறகை இராவணன் வெட்டி வீழ்த்தினான். இராவணனுடைய தேரும் அழிந்துவிட்டது. ஆதலால் இராவணன் சீதையைத் தன் தோளின்மேல் சுமந்து செல்ல நேர்ந்தது. அப்பொழுதும் அவன் சீதையைத் தீண்டவில்லை. சீதை வீற்றிருந்த நிலத்தோடு அவளை எட்டிப் பெயர்த் தெடுத்துத் தேரில் வைத்துக்கொண்டு வந்தானே அப்படியே தன் தோளில் வைத்துக் கொண்டு போனான். ஏங்குவாள் தன்மையும், இறகு இழந்தவன் ஆங்குன்று தன்மையும் அரக்கன் நோக்கினான் வாங்கினன் தேரிடை வைத்த மண்ணொடும் வீங்குதோள் மீக்கோடு விண்ணின் ஏகினான். (ஆரண்ய.சடாயு உயிர்.137) ஏங்குகின்ற சீதையின் தன்மையையும் சிறகையிழந்த சடாயு அங்கே சோர்ந்து கிடக்கின்ற தன்மையையும் இராவணன் கண்டான். சீதை அமர்ந்திருந்த நிலத்துடன் சேர்த்து அவளைத் தூக்கினான். உயர்ந்த தோளின்மேல் வைத்துக் கொண்டு வான் வழியாகச் சென்றான். இதுவும் இராவணன் சீதையைத் தீண்டவில்லை என்ற உண்மையைக் கூறிற்று. இவ்வுண்மையை மீண்டும் சுந்தர காண்டத்தில் வலியுறுத்துகின்றான் கம்பன். சீதையைத் தேடி இலங்கைக்குப் போன அநுமன் அவளைக் காணு கின்றான். தன்னை இன்னான் என்று அறிவித்துக் கொள்கின்றான். சீதையும் அவனை இராம தூதன் என்று நம்புகின்றாள். அதன் பின் அவர்களுக்குள் நடந்த உரையாடலின் போது சீதா பிராட்டி தன்னுடைய தூய்மையை வெளியிட்டுக் கூறினாள். இராவணன் இன்னும் தன்னைத் தீண்டவில்லை என்பதைக் காட்சி அளவால் காட்டினாள். நான் அமர்ந்திருக்கும் இடம் இலங்கை அன்று. இலக்குவன் காட்டிய இலைக் குடிசையோடு கூடிய அந்த நிலப் பகுதியிலேயே அமர்ந்திருக்கின்றேன் என்று சொல்லிக் காட்டினாள். ஆண்டு நின்றும் அரக்கன் அகழ்ந்துகொண்டு ஈண்டு வைத்தது இளவல் இயற்றிய நீண்ட சாலையொடு நிலை நின்றது. காண்டி ஐய! நின் மெய் உணர் கண்களால். (சுந்தர. சூளாமணி.24) அந்த ஆரணியத்திலிருந்து இராவணன் என்னை நிலத்தோடு அகழ்ந்து அப்படியே கொண்டுவந்தான்; அந் நிலத்தில்தான் நான் உட்கார்ந்திருக்கின்றேன். அந் நிலம் இலக்குவன் இயற்றிய உயர்ந்த பர்ணசாலையோடு அப்படியே அழியாமல் இருக்கின்றது. உண்மையைக் கண்டறியும் தன்மையுள்ள உன் கண்களால் நன்றாகப் பார். இவ்வாறு புலமையிற் சிறந்த கம்பன் தமிழர் அனைவரும் சீதையைக் கற்பினுக்கணியாகப் போற்றிப் புகழுமாறு மூலக் கதையை மாற்றி அமைத்தான். தமிழர் பண்பு கம்பன் தமிழர் பண்பை மற்றோர் இடத்திலும் காட்டு கின்றான். குகப் படலத்திலே இதனைக் காணலாம். பரதன், குகனிடம் இராமன் படுத்துறங்கிய இடம் எது என்று கேட்டான். அவ்விடத்தைக் குகன் காட்டினான். பரதன் அவ் விடத்திலே வீழ்ந்து புரண்டு புலம்பினான். பின்னர் இலக்குவன் எவ்விடத்தில் இராப்பொழுதைக் கழித்தான் என்றான் பரதன். அதற்குக் குகன் கூறும் விடையிலே தமிழர் பண்பாடு அமைந்து கிடக்கின்றது. அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச வில்லை ஊன்றிய கையோடும் வெய்து உயிர்ப்போடும், வீரன் கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர்சொரியக், கங்குல் எல்லைகாண் பளவும் நின்றான்; இமைப்புஇலன் நயனம் என்றான். (அயோத்தி.குக.42) மலையின் தன்மையைக் கொண்ட உயர்ந்த தோள்களை உடையவனே! இருளைத் தன்னிடத்திலே கொண்ட அழகாக அமைந்த நிறத்தையுடைய இராமனும், சீதையும் உறங்கினர். வீரனாகிய இலக்குவன், கையிலே பிடித்த வில்லை நிலத்திலே ஊன்றியபடியே இரவு முழுதும் நின்றான்; பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றான்; கண்களிலே நீர் சொரியும் படி நின்றான்; விடியும் மட்டும் இப்படியே அவர்களைப் பாதுகாத்து நின்றான். நானும் கண்ணிமைக் காமல் இக்காட்சியைக் கண்டு நின்றேன் என்றான் குகன். இச்செய்யுளில் அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் என்பதில்தான் தமிழர் பண்பாடு அமைந்து கிடக்கின்றது. இராமனுடைய அழகை, இருண்ட நிறமுள்ள அழகன் என்றான் குகன். ஆனால் சீதையைப் பற்றிக்கூறும் போது அவளும் என்று மட்டும் குறிப்பிட்டான். இதற்குக் காரணம் என்ன? பிற பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பது தமிழர் பண்பன்று. பிற பெண்களைத் தாயாக, சகோதரியாக எண்ணினர் தமிழர். ஆயினும் பெண்களை உற்று நோக்கினால் அவர்கள் அழகு தம் உள்ளத்தில் தீய எண்ணத்தை உண்டாக்கவும் கூடும் என்று எண்ணினர். ஆதலால் தான் பிற பெண்களை உற்று நோக்குவது தவறு என்று கருதினர்; அவ் வழக்கத்தைப் பின்பற்றினர். குகன்பால் இப் பண்பாட்டை அமைத்துக் காட்டினான் கம்பன். குகன் இராமனுடைய அழகு முழுவதையும் கண்டு களித்தவன்; அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே பரவசமாகி நிற்பவன். சீதைபால் பக்தியுள்ளவன்; அவளை அன்னையாக மதிப்பவன்; ஆனால் அவள் உருவம் முழுவதையும் உற்றுப் பார்த்தவன் அல்லன்; ஆதலால் அவள் கோலத்தைப் புனைந்துரைக்க அவனால் ஆகவில்லை. குகன் தமிழர்களின் இச்சிறந்த பண்பாட்டைப் பின்பற்றியவன் என்பதை உணர்த்தவே அவன் வாயினால் சீதையின் உருவத்தை வர்ணித்துக் கூறவில்லை. சீதையைக் குறிப்பிட அவள் என்று மட்டும் கூறினான். தமிழர் வீரம் தமிழர் வீரத்தையும் இராமகாதையில் கம்பன் கண்டான். அதையும் விளக்கிச் சொல்லுகின்றான். தமிழர்கள் தம் வீரத்திலே நம்பிக்கையுள்ளவர்கள். தோல்வி மனப்பான்மை அவர்களிடம் தோன்றுவதில்லை. பகைவர்களுடைய கோட்டை அவர்களிடம் இருக்கும்போதே அதை இரவலர்க்கு இனாமாக வழங்கி விடுவார்கள். இனாமாக முதலில் வழங்கிய பிறகுதான் பகைவர்களுடன் போர் செய்து கோட்டையைப் பிடித்து வாக்குறுதி அளித்தவர்க்கு வழங்குவார்கள். இது தமிழரின் சிறந்த வீரப் பண்பு. ஒன்னார் ஆர்எயில் அவர்கட்கு ஆகவும் நமது எனப் பாண்கடன் இறுக்கும் வள்ளியோய் (புறநா.பா.203) பகைவர்களுடைய கோட்டை அவர்கள் வசத்தில் இருக்கும் போதே, அக்கோட்டையும் அதில் உள்ள செல்வங்களும் உமக்கு உரியவை; எடுத்துக் கொள்ளுங்கள் என்று உன்னைப் புகழ்ந்து பாடும் பாணர்களுக்குக் கொடுக்கும் வள்ளன்மை யுள்ளவன் நீ! இந்தச் சிறந்த தமிழர் வீரத்தை இராமனிடம் கண்டான் கம்பன். இவ் வீரத்தன்மையைக் கதை நிகழ்ச்சியிலே காட்டிச் சென்றான். இராமன் தன்னைச் சரணடைந்த சுக்கிரீவனுக்கு ஆதரவு அளித்தான். அவன் துன்பத்தைக் களைவதாக வாக்களித்தான். அவன் வரலாற்றைக் கேட்டு மனமிரங்கினான். அவன் அண்ணனாகிய வாலி அவனுக்கிழைத்த தீங்குக்காக அவனை வெறுத்தான். சுக்கிரீவனை நோக்கி ,கிட்கிந்தையின் அரசாட்சி உன்னுடையதே! நீ வருந்த வேண்டாம் என்று உறுதிமொழி யுரைத்தான். இச்செய்தியை அநுமான் வாய்மொழியாகக் கம்பன் கூறியிருக்கின்றான். எந்தச் சமயத்தில் - எந்த இடத்தில் - அநுமான் இச் செய்தியைக் கூறுகின்றான் என்பதுதான் குறிப்பிடத் தகுந்தது. அநுமான் இலங்கைக்குப் போயிருந்தபோது, இந்திர சித்தனால் இராவணன் சபைக்குக் கொண்டு போகப்பட்டான். அப்பொழுது இராவணனுக்கும், அநுமானுக்கும் பேச்சு நடக்கின்றது. அப்பேச்சிலே அநுமான் இராமனுடைய வீரத்தை இராவணனுக்கும் எடுத்துக் கூறுகின்றபோது இவ்வுண்மையை உரைக்கின்றான். தேவியை நாடிவந்த செங்கணாற்கு, எங்கள் கோமான் ஆவி ஒன்றாக நட்டான் அருந்துயர் துடத்தி என்ன: ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன்; உரிமையோடும் கோவியல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான். (சுந்தர.பிணிவீட்டு.86) செந்தாமரைக் கண்ணன் தன் தேவியைத் தேடிக்கொண்டு நாங்கள் இருந்த பக்கம் வந்தான். அப்பொழுது எங்கள் தலைவனாகிய சுக்கிரீவன் அவனுடன் உயிர் ஒன்றே என்று சொல்லும்படி நட்புக்கொண்டான். தன்னுடைய பெருந் துன்பத்தைப் போக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்; ஓவியர்களாலும் எழுத முடியாத அழகனான இராமன் சகோதர உரிமையுடன் கிட்கிந்தையின் அரசியல் செல்வத்தை முதலிலே கொடுத்தான்; அதன்பின்பே சகோதரத் துரோகியாக - பலதாரம் விழைந்தவனாகிய - வாலியைக் கொன்றான். இவ்வாறு அநுமான் வாயினால் இராமனுடைய வீரத்தை வெளியிட்டான் கம்பன். தன் வாயினாலேயே இராமனிடம் அமைந்திருந்த தமிழர் வீரத்தைப் புகழ்ந்து பேசுகின்ற மற்றொரு நிகழ்ச்சியும் பாராட்டுவதற்குரியது. விபீஷணன் இராவணனை விட்டு விலகிவந்து இராமனிடம் சரணம் அடைந்தான். அவன் உண்மை ஒழுக்கம் உள்ளவன்; நீதி நெறி தவறாத நேர்மை யுள்ளவன்; தன்னிடம் உண்மையான அன்புகொண்டவன்; சீதாதேவிக்குத் துணை யாகத் தன் புதல்வி திரிசடையை அமர்த்தியிருப்பவன்; இவ்வுண்மை இராமனுக்குத் தெரியும் ஆகையால் விபீஷணனுக்கு ஆதரவளித்தான். அவன் சரணம் அடைந்தவுடனேயே இலங்கை அரசு உன்னுடையதே என்று உறுதி கூறினான். உடனே விபீஷணனை இலங்கைக்கு அரசனாக இப்பொழுதே முடி சூட்டுக என்று இலக்குவனிடம் உரைத்தான். இராமனிடம் இருந்த வீரத்திற்கு இதுவும் ஓர் எடுத்துக் காட்டாகும். உஞ்சனன் அடியனேன் என்று ஊழ்முறை வணங்கி நின்ற அஞ்சன மேனி யானை அழகனும் அருளின் நோக்கித் தஞ்சம் நல் துணைவ னான தவறிலாப் புகழான் தன்னைத் துஞ்சல் இல் நயனத்து ஐய! சூட்டுதி மகுடம் என்றான். (யுத்த வீடணன். அடை. 144) நான் பிழைத்தேன் என்று சொல்லி முறைப்படி இராமனை வணங்கினான், விபீஷணன். இப்படி வணங்கி நின்ற அஞ்சனம் போன்ற நிறமுள்ள விபீடணனை இராமனும் இரக்கத்துடன் நோக்கினான். உடனே இலக்குவனைப் பார்த்து தூங்காத கண்களையுடைய இலக்குவனே இவன் நம்மைத் தஞ்சம் அடைந்தவன்; நல்ல துணைவன்; தவறு செய்யாதவன்,. ஆதலால் இவனை இப்பொழுதே இலங்கைக்கு அரசனாக முடிசூட்டுக என்று கூறினான். இவ்வாறு தமிழர் பண்புகள் பலவற்றைக் கம்பன் தன் காவியத்திலே அமைத்துப் பாடியிருப்பது தமிழ் உள்ள வரையிலும் தமிழர்க்குப் பெருமை தருவதாகும். கம்பனும் வள்ளுவரும் வள்ளுவரை எல்லோரும் வாயார வாழ்த்துகின்றனர்; உலகமெல்லாம் ஒப்புக்கொள்ளும் உயர்ந்த நீதியை உரைத்தவர் என்று போற்றுகின்றனர்; வள்ளுவர் மொழிகளிலே பலவற்றை எம் மதத்தினரும் சம்மதம் என்று ஏற்றுக் கொண்டாடுகின்றனர். எம்மொழியினரும் தம் மொழிக்கு ஏற்ற நூல் திருக்குறள் என்று பாராட்டுகின்றனர். இன்று தமிழர்களிலே பலர், வள்ளுவர் கூறும் அறமே தமிழர் மதம்; தமிழர் கொள்கை; தமிழர் நாகரிகம்; தமிழர் பண்பாடு என்று வான்முட்ட முழங்குகின்றனர். வள்ளுவர் அறம் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தொலி கூறுகின்றனர். படித்த தமிழர்கள் அனைவரும் இன்று வள்ளுவரைப் பாராட்டு கின்றனர். திருக்குறளைப் படிக்கின்றனர். பழைய தமிழ்ப் பற்று இன்று மீண்டும் தமிழரிடையிலே மலர்ந்திருப்பது மகிழ்ச்சிக் குரிய செய்தியாகும். வள்ளுவரைப் போற்றுவோர்களிலே சிலர் கம்பன் மீது காய்ந்து விழுகின்றனர்; வள்ளுவரை வாழ்த்தும் வாயால் கம்பன் மீது வசைமொழிகளை வாரிக் கொட்டுகின்றனர். கம்பன், வள்ளுவர் வாய்மொழியைப் பின்பற்றியவன்; அவர் கருத்தையே மேற்கொண்டு காவியம் செய்தவன்; இராமாவ தாரத்தின் மூலம் வள்ளுவர் அறத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம். வள்ளுவர் அறத்தையும் அவர் தம் வாய்மொழிகளையும் கம்பன் எவ்வாறு கண்ணும் கருத்து மாய்க் கட்டிப் பாதுகாக்கின்றான் என்பதை அறிந்தவர்கள் அவனைத் தூற்றும் தொழிலிலே இறங்க மாட்டார்கள். திருக்குறட் பாயிரம் கம்பன் தன் காவியத்தைத் தொடங்கும்போதே வள்ளுவர் வகுத்த வழியில் நின்றே தொடங்குகின்றான். உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும் நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுஉடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே என்று எடுத்த எடுப்பிலே கடவுள் வாழ்த்தைப் பாடுகின்றான். இவ்வுலகைப் படைத்துக் காத்து அழிப்பவர் கடவுள். இத்தொழில்கள் அவருக்கு விளையாட்டு. அவரே இவ்வுலகத் திற்குத் தலைவர் என்ற கருத்தை இப்பாடலில் காணுகின்றோம். இப்பாடலைப் படிக்கும்போது, அகரம் முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு என்ற வள்ளுவர் குறள்-திருக்குறளின் முதல்செய்யுள் கற்றவர் நினைவிலே தோன்றாமற் போகாது. எழுத்துக்கள் எல்லாம் அ என்னும் எழுத்தைத் தலைமையாகக் கொண்டிருக்கின்றன; அது போல் உலகம் கடவுளைத் தலைமையாகக் கொண்டிருக்கின்றது. இதுவே இக்குறளின் பொருள். கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கு அதிகாரங்களும் திருக்குறளுக்குப் பாயிரமாக அமைந்திருக்கின்றன; வாழ்த்து, ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப்படலம் இந்நான்கையும் தன் காவியத்திற்குப் பாயிரமாக அமைத்திருக்கின்றான் கம்பன். கம்பன் கடவுள் வாழ்த்திலே, வள்ளுவரைப்போலவே முதலில் பொதுக் கடவுளை வணங்கினான். ஆற்றுப் படலத்திலே மேகத்தின் சிறப்பை-மழையின் பெருமையைக் கூறுவதே வான் சிறப்பாகும். புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான் வெள்ளி வீழ்இடை வீழ்ந்தன தாரைகள்; உள்ளி உள்ளவெலாம் உவந்து ஈயும் அவ் வள்ளியோரின் வழங்கின மேகமே. (பால.ஆற்று.4) சிறந்த பெரிய இமயமலை பொன் என்பதைக் கண்டது வானுலகம். அதற்கும் தனக்கும் தொடர்பு இருக்கும்படி இடையிலே வெள்ளி விழுதைத் தொங்க விட்டதுபோல், மழைத் தாரைகளை மேகங்கள் வழங்கின. செல்வத்தின் நிலையாமையைக் கருதி அதை வறியோர்க்கு மனமுவந்து கொடுக்கும் கொடை யாளர்களைப் போல மேகம் மழைத் தாரைகளை வீழ்த்தின. இந்த மழைத் தாரைகளால் ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத் தோடியது. அவ்வெள்ளத்தால் நாடு செழித்தது; மக்களும் மற்ற உயிர்களும் மகிழ்ந்து வாழ்ந்தனர் என்று வான் சிறப்பைக் கூறினான் கம்பன். கூற்றம் இல்லை ஒர் குற்றம் இலாமையால்; சீற்றம் இல்லைதம் சிந்தையின் செய்கையால்; ஆற்றல் நல்லறம் அல்லது இல்லாமையால் ஏற்றம் அல்லது, இழிதகவு இல்லையே! (பால, நாட்டு. 39) கோசலநாட்டு மக்களிடத்திலே குற்றங்கள் ஒன்றும் இல்லை. ஆதலால் கூற்றுவன் செய்யும் கொடுமை அந்நாட்டில் இல்லை; ஆம் மக்கள் தூய்மையான உள்ளம் படைத்தவர்கள். ஆதலால் பல குற்றங்களுக்கும் காரணமான சினம் அவர்களிடம் இல்லை. அவர்கள் நல்ல அறங்களைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை; ஆதலால் அவர்களுக்குப் புகழ்தான் உண்டு; இகழ் என்பதே அவர்களிடம் இல்லை. இதனால், குற்றங்களைச் செய்யாமை, சிந்தையிலே சினமின்மை, நல்லறங்களையே செய்தல் ஆகிய அறங்களை வலியுறுத்தியதைக் காணலாம். அறன் வலியுறுத்தலுக்கு இப் பாடல் ஒரு எடுத்துக்காட்டு. தங்குபேர் அருளும் தருமமும் துணையாத் தம்பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும் பொங்கு மாதவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகல் இடம் (பால.நகர.6) என்றும் குன்றாமல் நிறைந்திருக்கும் கருணையுள்ளவர்கள்; அறத்தை மறவாதவர்கள்; இவர்களைத் துணையாகக் கொண்டு ஐம்புலன்களையும் அடக்கி ஆளுகின்றவர்கள்; நிறைந்த உயர்ந்த தவத்தையும், அறிவையும் உடையவர்கள்; உலகப் பற்றை விட்டவர்களான இத்தகைய முனிவர்கள் யாவர்க்கும் புகலிடமாக விளங்குவது அயோத்தி மாநகரம். இதனால் நீத்தார் பெருமையைக் கூறினான் கம்பன். கம்பனுடைய கடவுள் வாழ்த்து, ஆற்றுப்படலம், நாட்டுப் படலம், நகரப்படலம் ஆகியவைகளைக் கருத்தூன்றிக் கற்போர் அவைகளிலே வள்ளுவர் முறையைக் காணலாம். இராமன் பிறந்த மகிழ்ச்சியால் தசரதன் பல அறங்களைச் செய்கின்றான். இறை தவிர்ந்திடுக பார் யாண்டோர் ஏழ்நிதி நிறைதரு சாலை தாழ் நீக்கி, யாவையும் முறைகெட வறியவர் முகந்து கொள்க எனா அறை பறை; என்றனன் அரசர் கோமகன் (பால. திருஅவதா.113) ஏழாண்டுகளுக்கு யாரும் வரி கொடுக்கவேண்டாம்; பொருட்சாலையின் பூட்டைத் திறந்துவிடுங்கள்; இன்னோர் தாம் செல்வத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற முறையில்லை; ஏழைகளே எல்லாவற்றையும் வாரிக் கொண்டு போகலாம் என்று பறையடித்துத் தெரிவியுங்கள் என அரசர்க்கரசனாகிய தசரதன் கட்டளையிட்டான். இப்பாட்டைப் படிக்கும்போது வள்ளுவர் கூறிய அறம் நம் நினைவுக்கு வராமற் போகாது. வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற்றெல்லாம் குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. ஒரு பொருளும் இல்லாத ஏழைகளுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகையாகும்; மற்றைய கொடையெல்லாம் ஈகையல்ல; ஒரு குறிப்பிட்ட எதிர் உதவியைக் கருதும் தன்மை யுள்ளது; இந்தக் குறளின் கருத்தையே கம்பன் மேற்காட்டிய பாடலில் அமைத்திருக்கின்றான். பொறாமை மாபலிச் சக்கரவர்த்தியிடம் திருமால் வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டான். மாபலியும் கொடுக்கச் சம்மதித்தான். அப்பொழுது அவன் குரு சுக்கிரன் மாபலியைத் தடுத்து அறிவுரை கூறினான். இவ்வாறு தானத்தைத் தடுக்க முயன்ற சுக்கிரனுக்குப் பதில்கூறும் இடத்திலே கம்பன், வள்ளுவர் அறத்தை எடுத்துக் காட்டுகிறான். வெள்ளியை ஆதல் விளம்பினை; மேலோர் வள்ளியர் ஆக வழங்குவது அல்லால் எள்ளுவ என்சில, இன் உயிரேனும் கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்! (பால.வேள்வி. 29) அறிவற்றவனாதலால் தானத்தைத் தடுத்துக் கூறினை. உயர்ந்தவர்கள் வள்ளல்களாக இருந்து கொடுப்பார்களே யல்லாமல் கொடுப்பதை வெறுக்க மாட்டார்கள். தன் இனிய உயிராயினும் சரி, அதை இரந்து ஏற்றுக்கொள்வது தீது: கொடுப்பதே சிறந்ததாகும் என்பது மாபலியின் கூற்றாகக் கம்பன் மொழிந்தது. இதைப் படிக்கும் போது,. நல்லாறு எனினும் கொளல்தீது; மேல்உலகம் இல் எனினும் ஈதலே நன்று நல்வழியைக் காட்டுமாயினும் பிறரிடம் ஒரு பொருளை ஏற்றல் தீமையாகும்; மேல் உலகம் இல்லை யென்றாலும் ஈதலே சிறந்ததாகும் என்ற வள்ளுவர் அறம் நினைவுக்கு வராமலிருக்க முடியுமா? மாபலி குருவின் சொல்லைக் கேட்கவில்லை. வாமனனுக்கு மூன்றடி மண் கொடுக்கத் துணிகின்றான். மேலும் தடுக்கின்றான் சுக்கிரன். அதனால் சினமடைந்தான் மாபலி. எடுத்து ஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே தடுப்பது நினக்கு இது அழகோ! தகைவுஇல்வெள்ளி கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்! (பால.வேள்வி.33) ஒருவர் ஒரு பொருளை எடுத்து ஒருவர்க்குக் கொடுப் பதற்கு முன்பே அக்கொடையைத் தடுப்பது உனக்கு அழகாகுமா? நீ பெருமையற்றவன்; வெள்ளியென்ற பெயருக்கு ஏற்ப உனது அறியாமையைக் காட்டி விட்டாய்! கொடுப்பதைத் தடுக்கும் கொடியவனே! உனது சுற்றமும் நீயும் உடுக்கும் உடையும் உண்ணும் உணவும் இல்லாமல் வறியராகி விடுகின்ற செயலைச் செய்கின்றாய். இப் பாடலைப் படிக்கும்போது திருக்குறளைப் படித்தவர்க்குக், கீழ்வரும் பாடல் உள்ளத்திலே தோன்றா மலிருக்குமா? கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். பிறர்க்கு ஒருவன் கொடுக்கும் பொருளைக் கண்டு பொறாமைப்படுவது கூடாது; பொறாமைப்படுவானாயின் அவன் சுற்றம் உணவும், உடையும் இல்லாமல் வறுமையால் அழியும். இக் குறளின் சொற்களும் கருத்தும் அப்படியே கம்பன் பாட்டில் அமைந்திருப்பதைக் காணலாம். எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழி கண்ணோடு கண்இணை கவ்விஒன்றை யொன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் (பால.மிதிலை.35) இது மிதிலை நகர வீதியிலே இராமனும், சீதையும் முதல் முதலாகச் சந்தித்தபோது நிகழ்ந்த காட்சியைக் கூறிய பாடல். கண்ணோடு கண்இணை நோக்கு ஒக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல கண்களோடு கண்கள் பார்வையிலே ஒத்து ஒன்று படுமாயின், பின்னர் வாயிலிருந்து வரும் சொற்களால் ஒரு பயனும் இல்லை. இத் திருக்குறளின் கருத்து கம்பன் உள்ளத்தைக் கவர்ந்து நின்றது; மேற்கூறிய பாடலைப் பாடச் செய்தது. கண்ணோடு கண் இணை என்ற வள்ளுவர் வாய்மொழி கம்பன் பாடலில் அப்படியே அமைந்திருப்பதைக் காணலாம். அமைச்சர் கம்பன் தசரதனுடைய அமைச்சர்களின் திறமையைப் பற்றிக் கூறும்போது வள்ளுவர் கருத்தே கம்பன் கருத்தாகப் பிறந்திருப்பதைக் காணலாம். காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரியக் கற்ற நூல்உற நோக்கித் தெய்வம் நுனித்து அறம் குணித்தமேலோர் (அயோத்தி.மந்திர.8) காரியத்தை முடிப்பதற்கேற்ற காலத்தையும், அதைச் செய்வதற்கான இடத்தையும், அதை நிறைவேற்றுவதற்கு ஏற்ற கருவிகளையும் தெளிந்து கொள்ளுவதற்காகத் தாங்கள் கற்ற நூலறிவுடன் ஆராய்ந்து நோக்குவார்கள். அவர்கள் தெய்வத்தையும் துணையாகக் கொண்டு அறநெறியிலே நின்று, தாம் தொடங்கிய செயலைச் செய்து முடிக்கும் உயர்ந்த அறிவுள்ளவர்கள்; இப்பாடலைப் படிக்கும்போது அமைச்சரைப் பற்றி வள்ளுவர் கூறியுள்ள அருங் குறள் நினைவுக்கு வருகின்றது. கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. செய்வதற்குரிய கருவியையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையை யும், செய்யக் கூடிய சிறந்த செயலையும் சிறப்படை யும்படி செய்யும் திறமை யுள்ளவனே அமைச்சன். வள்ளுவர் வகுத்துக்கூறிய அமைச்சர் தகுதியும், கம்பன் காட்டிய அமைச்சர் இயல்பும் ஒத்திருக்கின்றன அன்றோ? அறம் தசரதன் இராமனுக்கு முடிசூட்டத் துணிந்தான். தன் கருத்தை அமைச்சர்களிடம் கூறினான். இராமனுக்கு முடி சூட்டி விட்டு நான் துறவை மேற்கொள்ளப் போகின்றேன் என்றான். இதற்கு முதல்மந்திரி சுமந்திரன் மறுமொழி புகல் கின்ற இடத்திலே கம்பன் காட்டியிருக்கும் கருத்துக் குறிப்பிடத்த குந்தது. உறத்தகும் அரசு இராமற்கு என்று உவக்கின்ற மனத்தைத் துறத்தி நீ என்னும் சொற்சுடும்; நின்குலத் தொல்லோர் மறுத்தல் செய்கிலாத் தருமத்தை மறுப்பதும் வழக்கன்று அறத்தின் ஊங்குஇனிக் கொடிது எனல் ஆவது ஓன்று யாவதோ (அயோத்தி.மந்திர.46) இராமனுக்கு அரசாட்சி ஏற்றதாகும் என்ற எண்ணத்தால் எங்கள் நெஞ்சம் மகிழ்ச்சி அடைகின்றது. இந்த மகிழ்ச்சியுள்ள மனத்தை நீ துறவை மேற்கொள்ளப் போகின்றாய் என்னும் சொல் சுடுகின்றது. ஆயினும் உன் முன்னோர்கள் மறவாமற் செய்த தருமத்தை மறப்பதும் முறையன்று; அப்படி மறப்பது அறத்தைச் செய்யாமல் விடுவதைவிடக் கொடுமையானதாகும்; அதைவிடக் கொடுமையானது ஒன்றும் இல்லை. இது சுமந்திரன் வாயினால் கம்பன் கூறிய பாடல். இப்பாடலைப் படிக்கும் போது, அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. அறத்தைப் பின்பற்றுவதைவிடச் செல்வமும் வேறில்லை; அதை மறப்பதை விடக் கெடுதியும் வேறு இல்லை என்ற குறள் கற்றவர் நினைவிலே எழாமற் போகாது. சுமந்திரன் கருத்தும், வள்ளுவர் கருத்தும் எவ்வளவு பொருத்தமாக இணைந்திருக்கின்றன என்பதை இவற்றைப் படிப்போர் அறிவர். தசரதன், இராமனுக்கு முடிசூட்டுவதைப் பற்றிச் சபை யோர் கருத்தைக் கேட்டான். அவர்கள் தங்கள் கருத்தையும் உரைத்தனர். ஊர்உணி நிறையவும் உதவும்; மாடு உயர் பார்கெழு பழுமரம் பழுத்து அற்றாகவும், கார்மழை பொழியவும், கழனிபாய் நதி வார்புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்? (அயோத்தி.மந்திர.82) ஊருணியிலே நீர் நிறைந்தால் அது எல்லோர்க்கும் உதவும்; உயர்ந்த மேடைக்குப் பக்கத்திலே நிலத்திலே முளைத்தெழுந்த கனிமரம் பழுத்திருந் தாலும் அவ்வாறு உதவி செய்யும் மேகம் மழை பொழிந்து உதவி செய்வதையும், வயல்களுக்குப் பாயும் ஆற்றிலே தண்ணீர் பெருகி வருவதையும், வேண்டாம் என்று யார்தான் கூறுவார்கள்? இவை போலவே இராமனுக்கு முடிசூட்டுவதை யாரும் மறுக்கமாட்டார்கள். தசரதனுடைய அவையிலிருந்தோர் தங்கள் கருத்தை இவ்வாறு வெளியிட்டனர். இப்பாடலைப் படிக்கும்போது இரண்டு குறட் பாடல்கள் படித்தவர்களின் உள்ளத்திலே தோன்றும். ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம் பேரறி வாளன் திரு. உலக நடையை விரும்பி ஒழுகுகின்ற சிறந்த அறிவுள்ள வனிடம் உண்டாகிய செல்வம் ஊருணியில் நீர் நிரம்பியிருப்பது போலாகும். பயன்மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால் செல்வம் நயன் உடையான்கண் படின். உதவி செய்கின்றவனிடம் செல்வம் சேர்ந்திருக்குமானால் அது பயன்தரும் மரம் நடுவூரிலே பழுத்திருப்பது போன்றதாகும். இவ்விரண்டு குறட் கருத்துக்களையும், ஒரே பாடலில் இரண்டோவரிகள் மூலம் கம்பன் அமைத்துக் காட்டியிருக்கும் சிறப்பு போற்றத்தக்கது. அவன் கவித்திறமையே திறமை! நல்லார் தொடர்பு கங்கைக் கரையிலே இராமன் பர்ணசாலையுள் இருக் கின்றான். அப்பொழுது குகன் அவனைக் காணவந்தான். இலக்கு வனிடம் தன் வருகையைக் கூறி இராமனிடம் தெரிவிக்கும்படி வேண்டிக்கொண்டான். இலக்குவன் குகனைக் கண்டபோதே அவனுடைய பண்பைத் தெரிந்துகொண்டான். அவன் இராமனிடம் சென்று குகனுடைய வருகையைப்பற்றி அறிவிக்கின்ற பகுதி தமிழர் அறத்தை வெளியிடுவதாகும். சுற்றமும் தானும் உள்ளம் தூயவன், தாயின் நல்லான் எற்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறை, குகன் ஒருவன் என்றான் (அயோ.கங்கை.39) அவனும் அவன் இனத்தாரும் உள்ளத்திலே ஒரு குற்றமும் இல்லாதவர்கள்; தூயவர்கள்; அலையெறிந்து அழகாகச் செல்லும் கங்கைத் துறையில் உள்ள ஓடங்களுக்குத் தலைவன்; குகன் என்ற பெயருள்ள ஒருவன் என்று உரைத்தான். இந்த இரண்டு வரிகளிலும் வள்ளுவரின் சிறந்த அறம் செறிந்திருப் பதைக் காணலாம். தீயொழுக்கம் உள்ளவர்களுடன் நல்லவர்கள் நட்புச் செய்தால் அந்த நல்லவரும் தீயொழுக்கத்தை மேற்கொள்ளுவர். சுற்றுச் சார்பினாலேயே ஒரு குணம் உருவாகின்றது. ஆதலால் நல்லவர்களின் கூட்டுறவே நன்மை தரும் என்பது வள்ளுவர் கூறும் அறம். இதைச் சிற்றினம் சேராமை என்ற அதிகாரத்திலே காணலாம். நிலத்து இயல்பால் நீர்திரிந்து அற்றுஆகும்; மாந்தர்க்கு இனத்து இயல்பது ஆகும் அறிவு. நிலத்தின் தன்மையால் தண்ணீரின் இயற்கைப் பண்பு மாறும். அது சேர்ந்துள்ள நிலத்தின் தன்மையைப் பெறும்; அதுபோல மக்கள் அறிவு அவர்கள் சேர்ந்திருக்கும் இனத்தின் தன்மையைப் பொருந்தியிருக்கும். மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவா வரும். உள்ளத்தின் தூய்மையும், செய்கின்ற செயலின் தூய்மையும் இவ்விரண்டும் அவர்கள் சேர்ந்துள்ள நிலத்தின் தூய்மையை ஆதரவாகக் கொண்டு வரும். இந்த இரண்டு குறட்பாக்களின் கருத்துக்களையும், குகனைப்பற்றி இலக்குவன் கொடுத்திருக்கும் விளக்கத்துடன் இணைத்துப் பார்க்கவேண்டும். இக்குறட்பாடல்களைக் கருத்தில் வைத்துக் கொண்டே கம்பன் அந்த இரண்டு அடிகளையும் பாடினான் என்பது விளங்கும். சுற்றுச் சார்பால் - பழக்க வாசனையால் - மக்கள் குணம் மாறுபடும் என்பதைக் கம்பன் மற்றோர் இடத்தில் குறிப்பிடு கின்றான். சீதாபிராட்டி, தனித்திருக்கும்போது அவளைக் கவர்ந்து செல்ல இராவணன் முனிவர் வேடத்தில் வந்தான். அவனைச் சீதை உபசரித்து, நீர் யார்? எங்கே வாழ்கின்றீர்? என்று கேட்டாள். அவன், நான் அரக்கர் வாழும் ஊரில் இருக்கிறேன் என்றான். உடனே சீதை கூறியதாக வரும் பாடல் குறிப்பிடத் தக்கது. வனத்திடை மாதவர் மருங்குவைகலீர்! புனத்திரு நாட்டிடைப் புனிதர் ஊர்புக நினைத்திலிர்; அறநெறி நினைக்கிலாதவர் இனத்திடை வைகினிர், என்செய்தீர்! என்றாள். (ஆரண்ய. சடாயு.உயிர்52) மாதவ வேடங்கொண்ட நீர் காட்டிலே முனிவர்கள் வாழும் இடத்திலே வாழவில்லை; சோலைகள் சூழ்ந்த நாட்டிலே நல்லோர்கள் வாழும் ஊரிலே புகுந்து வாழவும் நினைக்கவில்லை; அறநெறியைப் பற்றிச் சிறிதும் நினைக்காதவர்கள் கூட்டத்திலே வாழ்கின்றீர்; எவ்வளவு அடாத காரியத்தைச் செய்தீர் என்றாள். இந்தப் பாடலிலும் சிற்றினம் சேர்வதால் வரும் சிறுமையை எடுத்துரைத்தான் கம்பன். பாடலிலும் வள்ளுவர் அறம் விரவியிருப்பதைக் காணலாம். மேலே காட்டிய, நிலத்தியல் பால், மனந்தூய்மை என்று தொடங்கும் குறள்களுடன் இப்பாடலின் கருத்தும் இணைந்திருக்கின்றது. வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம் (ஆரண்ய.அகத்திய.8) உண்மையான தவம், வேண்டியவற்றையெல்லாம் வேண்டியவர்க்கு அளிக்கும் வல்லமையுள்ளது என்பது கம்பன் கருத்து. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும் விரும்பியவைகளை விரும்பியபடியே கொடுக்கும் ஆதலால் செய்யக்கூடிய தவத்தை இவ்வுலகிலேயே செய்ய வேண்டும் என்பது வள்ளுவர் காட்டும் அறம். தவத்தைப் பற்றி வள்ளுவர் கூறிய கருத்தைக் கம்பன் அப்படியே எடுத்துக் காட்டுகின்றான். வள்ளுவர் இரண்டடிகளிலே கூறியதைக் கம்பன் ஒரே வரியில் அழகாக அமைத்துக் கூறினான். இத் திருக்குறள் நம் நெஞ்சிலே நுழையாமல் இருக்க முடியுமா? உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைமாறாக மதவானை யனைய மைந்த! மற்றும் உண்டாக அன்றோ! (கிட்கிந்தா. கிட்கிந்தை.66) மதயானையைப் போன்ற வலிமையுள்ளவனே! தான் உதவி செய்யாமலே தனக்கு ஒருவன் செய்த உதவிக்கு எதிராகச் செய்யக்கூடிய உதவியும் ஏதேனும் உண்டோ? எத்தகைய உதவியும் அதற்கு நிகராகாது. இது அநுமான் இலக்குவனை நோக்கிக் கூறிய மொழி. இதைப் படிக்கும்போது, செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. தான் உதவி செய்யாவிட்டாலும், தனக்கு ஒருவன் உதவி செய்தானாயின், அவ் வுதவிக்கு ஒப்பாக எதையும் செய்ய முடியாது. இவ்வுலகையும், வானுலகையும் கொடுத்தாலும் அவ்வுதவிக்கு இணையாகாது என்பது திருக்குறள். இக்குறள் நம் நெஞ்சிலே நுழையாமல் இருக்க முடியுமா? குறிப்பறிதல் ஒருவனுடைய உள்ளக் கருத்தை அவர் உரையினால் தான் உணர முடியும் என்பதில்லை. முகத்தின் குறிப்பைக் கொண்டே உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். இது வள்ளுவர் கருத்து. பொருட்பாலில் உள்ள குறிப்பறிதல் என்னும் அதிகாரத்தில் இவ்வுண்மையை விளக்கிக் கூறுகிறார். அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். கண்ணாடி தன்னை அடுத்த பொருளை அப்படியே திருப்பிக் காட்டும்; அதுபோல் உள்ளத்தில் உள்ள சினத்தை முகம் காட்டிவிடும். முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ? உவப்பினும் காயினும் தான்முந் துறும் முகத்தைவிட அறிவுள்ளது வேறு ஒன்று உண்டோ? உவந்தாலும், சினந்தாலும் அவ்வுணர்ச்சியைத்தான் முன்னே காட்டி நிற்கும். இவ்விரண்டு குறள்களின் பொருளையும் கம்பன் அப்படியே தன் கவிதையில் அமைத்துக் காட்டுகின்றான். விபீடணன் இராமனிடம் சரண் அடைய வந்தபோது அவனைப்பற்றி உங்கள் கருத்தென்னவென்று இராமன் தன் தோழர்களைக் கேட்டான். பலர் பலவிதமாகக் கூறினர். அப்பொழுது அநுமான், விபீடணன் மாசற்ற மனமுள்ளவன். நான் சீதையைத் தேடிச் சென்றபோது அவனைக் கண்டேன். அவன் முகக் குறிப்பைக் கொண்டே அவன் உள்ளத்தை உணர்ந்து கொண்டேன் என்று கூறினான். வண்டுஉளர் அலங்கலாய்! வஞ்சர் வாண்முகம் கண்டதோர் பொழுதினில் தெரியும்; கைதவம் உண்டுஎனின், அஃது அவர்க்கு ஒளிக்க ஒண்ணுமோ? விண்டவர் பலபகல் மருவி வாழ்வரோ? (யுத்த. விபீடணன்.90) வண்டுகள் மொய்க்கின்ற மலர் மாலையை அணிந்தவனே! வஞ்சர் முகத்தைக் கண்டபோதே அவர்களை வஞ்சகர் என்று தெரிந்து கொள்ளலாம். உள்ளத்திலே வஞ்சகம் இருந்தால் அதை அவர்களால் ஒளிக்க முடியாது. மனம் வேறுபட்டவர் பல நாள் நம்முடன் சேர்ந்து வாழ மாட்டார்கள். உள்ளத்தின் உள்ளத்தை உரையின் முந்துற மெள்ளத்தன் முகங்களே விளம்பும் (யுத்த. விபீடணன்.91) உள்ளத்திலேயிருக்கும் எண்ணங்களைச்சொல்லால் வெளியிடுவதற்கு முன்பே பொதுவாகத் தம் முகங்களே சொல்லி விடும். அழிந்தது பிறவி என்னும் அகத்தியல் முகத்திற் காட்ட (யுத்த. விபீடணன். 141) இப் பாடல்களிலே வள்ளுவரின் குறிப்பறிதல் என்னும் அதிகாரப் பொருளைக் கம்பன் அமைத்துக் காட்டி விட்டான். உதவி இந்திரசித்து விடுத்த நாகபாசத்தால் இலக்குவன் முதலி யவர்கள் கட்டுண்டு கிடக்கின்றனர்; இராமன் வருந்துகின்றான். அப்பொழுது கருடன் தோன்றுகின்றான். நாகபாசக் கட்டவிழ்ந்து எல்லோரும் எழுகின்றனர். கருடன் புரிந்த இவ்வுதவியை இராமன் பாராட்டிப் புகழ்ந்தான். ஆரியன் அவனை நோக்கி ஆருயிர் உதவி, யாதும் காரியம் இல்லான் போனான்; கருணையோர் கடன்மை யீதால்; பேரியலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்; மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம்? என்றான் (யுத்த.நாகபாச.271) இராமன் அவன் செயலைப் பார்த்து நமது தோழர்களின் ஆருயிர் பிழைக்க அவன் செய்த உதவிக்கு எவ்வித எதிர் உதவியும் பெறாமல் போனான். இதுதான் இரக்கம் உள்ளோர் கடமை. சிறந்த பண்புள்ளவர்கள் தங்கள் செய்கைக்கு இலாபம் பிடிப்போம் என்று எண்ணமாட்டார்கள். மழையின் உதவியைப் பார்த்து அதற்கு இவ்வுலகம் எதிர் உதவி செய்வது உண்டோ? என்று கூறினான். கைம்மாறு வேண்டா கடப்பாடு; மாரிமாட்டு என் ஆற்றும் கொல்லோ உலகு (அதி.22.கு.1) எதிர் உதவியை விரும்பாமல் செய்யும் உதவியே கடமையறிந்து செய்யும் உதவி யாகும்; மழைக்கு இவ்வுலகம் செய்யும் எதிர் உதவி ஏதேனும் உண்டோ? இவ்வாறே பலவிடங்களிலும், கம்பன் வள்ளுவர் அறத்தையும், அவர் குறட்பாக்களையும், அவற்றின் கருத்துக் களையும் எடுத்தாளுவதைக் காணலாம். கம்பன் தமிழ்க் காதல் கம்பனுடைய தமிழ்க்காதல் கணக்கில் அடங்காதது. இடம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய தமிழ்ப்பற்றை வெளியிடுகின்றான். அவன் தமிழ்ப் புலவர்களிடத்திலே பெரு மதிப்புள்ளவன்; தமிழ்க் கவிதையிலே அளவற்ற அன்புள்ளவன்; தமிழ் மொழியிலே காதல் கொண்டவன். கம்பன் தன் தாய்நாட்டுப் பற்றையும் தன் கவிதையில் வெளியிட்டிருக் கிறான்; தாய்நாட்டின்மீதும், தாய் நாட்டை ஆளுவோர் மீதும் அவன் கொண்ட அன்புக்கு அளவில்லை. கவிஞர் முத்தமிழ்த் துறையின் முறைபோகிய உத்தமக் கவிஞர் (சிறப்புப் பாயிரம்.9) இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழிலும் தேர்ந்தவர்கள் உத்தமக் கவிஞர்கள்; உயர்ந்த கவிஞர்கள் என்பது கம்பன் கருத்து. செவ்விய மதுரம் சேர்ந்த நற்பொருளின் சீரிய கூரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர் (நாட்டுப்.1) நல்ல இனிமை பொருந்திய உயர்ந்த பொருளமைந்த சிறந்த தேர்ந்தெடுத்த இனிமையான சொற்கள் நிறைந்த கவிஞர். நல்இயல் நவையறு கவிஞர் நாவரும் சொல் எனத் தொலைவிலாத் தூணி தூக்கினான். (யுத்த. முதற்போர்.114) நல்ல இலக்கணத்துடன் குற்றமற்ற கவிகளைக் கூறும் கவிஞர் களின் நாவிலிருந்து இடையறாது வருகின்ற சொற்களைப் போல, எடுக்க எடுக்கக் குறையாத அம்புகளைக் கொண்ட அம்புப் புட்டியை இராமன் தன் முதுகிலே தூக்கினான். இதிலே இராமனுடைய அம்புப் புட்டிலுக்கு நல்ல கவிஞர்கள் நாவிலிருந்து வரும் சொற்களை உவமையாகக் கூறினான். கவிஞரின் அறிவின் மிக்காய் காலன் வாய்க் களிக்கின்றேம்பால் நவையிலை வந்தது என்நீ! அமுதுண்பாய் நஞ்சுண்பாயோ? (யுத்த. கும்பகருணன்.130) கவிஞரைவிட அறிவிற் சிறந்தவனே! காலன் வாயில் அகப்பட்டு மடிவதையே களிப்பாகக் கொண்டிருக்கும் எங்களிடம் குற்றமற்றவனாகிய நீ வந்த காரணம் என்ன? அமுதத்தை உண்ணும் நீ, நஞ்சை உண்ணத் துணியலாமா? கும்பகருணன் போருக்கு வந்தான். அவனுக்குப் புத்தி புகட்டி இராமன் பக்கம் இழுக்கலாம் என்று அவனிடம் விபீடணன் சென்றான். அப்பொழுது கும்பகருணன் கூறிய மொழிகள் இவை. இங்கே கவிஞரின் அறிவைக் கம்பன் புகழ்ந் திருப்பதைக் காணலாம். சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவிரியினை வீரர்கண்டார் (ஆரணிய, சூர்ப்பனகை. 1) அறிஞரால் ஆக்கப்பட்ட கவியைப் போலக் காட்சியளிக்கும் கோதாவிரியாற்றை இராம இலக்குவர்கள் கண்டனர். சான்றோர் கவிகள் பொருள் நிறைந்தவை; சிந்திக்கச் சிந்திக்கச் சிறந்த பொருள்களைத் தருபவை; அவைபோலக் கோதாவரி நதியும் ஆழமானது; அதன் அடியிலே பல இயற்கைச் செல்வங்கள் குவிந்திருக்கின்றன என்பதே இதன் கருத்து. இவ்வாறு கவிஞர்களைப் போற்றிப் புகழ்ந்த கவிதைகள் பலவுண்டு. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்பது தமிழர் வரலாறு. அகத்தியருக்குத் தமிழ் முனிவர் என்று பெயர். அகத்தியரால் ஆக்கப்பட்ட தமிழ் இலக்கணத்தின் பெயர் அகத்தியம். அது முத்தமிழுக்கும் இலக்கணம் உரைப்பது என்பது வழிவழியாகத் தமிழர் கூறிவரும் வழக்கு. கம்பன் அகத்தியரைப்பற்றி உரைக்கும் இடங்களில் எல்லாம் அவரையும், தமிழையும் இணைத்தே பாடுகின்றான். தமிழுக்குத் தொண்டு செய்த அகத்திய முனிவர் மேல் அவன் வைத்திருந்த அன்புக்கு அப் பாடல் சான்றாகும். தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன் (பால.தாடகை.38) தமிழ் என்று சொல்லப்படும் எல்லை காணமுடியாத கடலுக்கு இலக்கணம் செய்து தந்தவன். தமிழ் மிகவும் பரந்த மொழி; அளவற்ற இலக்கியங்கள் அமைந்த மொழி; கடல்போன்ற எல்லை காணமுடியாத மொழி என்று தமிழின் பெருமையையும் இதனால் எடுத்துக் காட்டினான் கம்பன். பரதன், இராமனை மீண்டும் அழைத்துவந்து நாடாளச் செய்வேன் என்று கூறிக் காட்டுக்குப் புறப்பட்டான். அவனுடன் அயோத்தியிலிருந்து படைகளும் புறப்பட்டன. அப்படைகளை அகத்திய முனிவருக்கு ஒப்பிட்டுப் பாடுகிறான் கம்பன். அலைநெடும் புனல் அறக்குடித்தலால், அகம் நிலைபெற நிலைநெறி நிறுத்தலால், நெடு மலைகளை மண்ணுற அழுத்தலால், தமிழ்த் தலைவனை நிகர்த்தது அத்தயங்கு தானையே. (அயோத்தி,ஆற்றுப்.44) கடல்நீர் வற்றும்படி குடித்தலால் - உள்ளத்திலே நிலைக்கும் படி நிலையான ஒழுக்க நெறிகளைக் கூறி நிலை நாட்டுவதால் - மலைகள் மண்ணிலே புதையும் படி அழுத்துவதால் - தமிழ்த் தலைவனாகிய அகத்தியனை ஒத்திருந்தது அச்சேனை. இப்பாட்டின் மூலம் அகத்தியர் பெருமையை விளக்கினான் கம்பன். நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் (ஆரண்ய.அகத்திய.35) திருமால் தனது அடியால் உலக முழுவதையும் அளந்தது போல, எல்லை காணமுடியாத தமிழ் மொழியை உலக மெல்லாம் பரவச் செய்தான். தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான். (ஆரண்ய.அகத்திய.41) நெருப்பைப் போன்ற ஒளியுள்ள கடவுளாகிய சிவபெருமான் கொடுத்த தமிழை இலக்கணத்துடன் பரவச் செய்தவன். என்றும் உள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் (ஆரண்ய.அகத்திய.47) மக்கள் தோன்றிய நாள் முதல் நிலைத்திருக்கின்ற அழகிய தமிழுக்கு இலக்கணம் அமைத்துப் புகழ் பெற்றவன். இவ்வாறு அகத்திய முனிவரைப் பல இடங்களில் பாராட்டிப்பாடியிருக் கின்றான். அவர் தமிழ்முனிவர்; தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் என்றஅன்பினா லேயே அவரைப் போற்றி மகிழ்கின்றான் கம்பன் தமிழ் வண்டு தமிழ்ப் பாட்டு இசைக்கும் தாமரையே (கிட்கிந்தா.பம்பாநதி.29) வண்டுகள் இனிய பாட்டுகளைப் பாடிக்கொண்டிருக்கும் தாமரை. தமிழ் - இனிமை. வண்தமிழ் உடைத்தென்திசை (கிட்கிந்தா.பிலநீங்கு. 2) சிறந்த தமிழ் மொழி வழங்கிக் கொண்டிருக்கும் தென்திசை. தமிழ்நிகர் நறவம் (கிட்கிந்தா.பிலநீங்கு 37) தமிழைப்போல் இனிமையளித்து உள்ளத்தைக் கவரும்தேன். தண்தமிழ்ப் பசுந்தென்றல் (சுந்தர.ஊர்தேடு.210) குளிர்ந்த தமிழ்மொழி வழங்கும் நாட்டிலிருந்து வீசும் இனிய தென்றற் காற்று. இவைகள் தமிழின் இனிமையையும் சிறப்பையும் எடுத்துக் காட்டும் பகுதிகள். தமிழ்ப் புலவர்களையும், தமிழ் மொழியையும் வாயாரப் புகழ்ந்த கம்பன் தமிழ்நாட்டின் சிறப்பை எடுத்துக் காட்டவும் மறந்துவிடவில்லை. தமிழ்நாடு தென்தமிழ் நாட்டு அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்பீரேல் என்றும் அவன் உறைவிடமாம்; ஆதலால் அம்மலையை இடத்திட்டு ஏகிப் பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை யெனும் திருநதி பின்புஒழிய, நாகக் கன்றுவளர் தடம்சாரல் மயேந்திரமா நெடுவரையும் கடலும் காண்டிர் (கிட்கிந்தா.நாடவிட்ட.31) தென் தமிழ்நாட்டிலே அகன்ற பொதியமலையிலே அகத்திய முனிவன் தலைமையிலே ஒரு தமிழ்ச் சங்கம் உண்டு; அங்கே போவீர் களானால் நீங்கள் மீள முடியாது; தமிழிலே ஈடுபட்டு அங்கேயே தங்கிவிடுவீர்கள்; ஆதலால் அதன் வலப்புறமாகச் செல்லுங்கள்; செம்பொன்னாகிய தாம்பிரம் நிரம்பிய நீர் நிறைந்த பொருநை என்னும் நதியைத் தாண்டிச் செல்லுங்கள். நாகமரக் கன்றுகள் வளர்ந் திருக்கின்ற சாரலையுடைய மகேந்திர மலையையும், கடலையும் காண்பீர்கள். இப்பாட்டில், தமிழின் சிறப்பு, தாம்பிரபரணி நதியோடும் பாண்டிநாட்டின் சிறப்பு இவைகள் கூறப்பட்டன. அத்திரு நாட்டினை அண்டர் நாடு ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ? எத்திறத்தினும் ஏழுலகும் புகழ் முத்து முத்தமிழும் தந்து முற்றுமோ? (கிட்கிந்தா, ஆறுசெல்.53) அந்தச் செல்வம் நிறைந்த நாட்டைத் தேவலோகத்தை ஒத்திருக்கும் என்றால், அவ்வுரை பொருந்தாது. எந்த வகையிலும், ஏழுலகழும் புகழ்ந்து போற்றும் பழமையான முத்தமிழையும் தந்து முற்றுப்பெற்ற செல்வமுடன் விளங்கும் தமிழ்நாட்டைத் தேவலோகம் ஒத்திருக்குமோ? ஒவ்வாது. இவ்வாறு தமிழ்நாட்டைத் தேவலோகத்திலும் சிறந்தது என்று புகழ்ந்து பாடினான். தான் பிறந்த நாட்டை - சோழ நாட்டை - கம்பன் தன் காவியத்திலே புகழ்ந்து பாட மறந்து விடவில்லை. கன்னியிள வாழை, கனியீவ; கதிர்வாலின் செந்நெல்உள, தேன் ஒழுகும்போதும் உள; தெய்வம் பொன்னி யெனலாய புனல் ஆறும் உள; போதா அன்னம் உள; பொன்னிவளோடு அன்பின் விளையாட (ஆரண்ய.அகத்திய. 58) அழகிய இளம் வாழைகள் கனிகள் தருகின்றன.; கதிரும் வாலும் உள்ள செந்நெல் உண்டு; தேன் சிந்தும் மலர்களும் இருக்கின்றன; தெய்வத்தன்மை பொருந்திய காவிரியென்று சொல்லும்படியான நீர் வற்றாத நதியும் உண்டு; சீதையுடன் சேர்ந்து விளையாடப் பெரு நாரை, அன்னம் முதலிய பறவைகளும் இருக்கின்றன. நளிநீர்ப் பொன்னிச் சேடுறு தண்புனல் தெய்வத் திருநதி (கிட்கிந்தா.நாடவிட்ட.29) குளிர்ந்த நீர் நிறைந்தோடும் பொன்னி, வெடித்த விளை நிலத்திலே பாயும் குளிர்ந்த நீர் உள்ள தெய்வத்தன்மையுள்ள ஆறு. துறக்கம் உற்றார் மனம் என்னத் துறைகெழுநீர்ச் சோணாடு (கிட்கிந்தா.நாடவிட்ட..30) சொர்க்கத்தை யடைந்தவர்களின் உள்ளத்தைப்போலத் தெளிந்த நீர்த் துறைகள் நிறைந்திருக்கின்றநீர்வளமுள்ளசோழநாடு. சோழ நாட்டின் இயற்கை வளம், காவரியாற்றின் பெருமை, சோணாட்டின் நீர்வளம் இவைகளை இப் பகுதிகள் விளக்கும். புவிபுகழ் சென்னிபேர் அமலன் தோள்புகழ் கவிகள்தம் மனையெனக் கனக ராசியும் சவியுடைத் தூசும், மென்சாந்து மாலையும், அவிர்இழைக் குப்பையும், அளவிலாதது (கிட்கிந்தா, பிலநீங்கு. 35) உலகம் புகழ்கின்ற சோழனாகிய சிறந்த அமலனுடைய புயவலிமை யைப் புகழ்ந்து பாடும் கவிஞர்கள் வறுமையற்று வாழ்வர். அவர்கள் இல்லத்திலே பொற்குவியலும், தூய்மை யான ஆடைகளும், மெல்லிய மணம்வீசும் வசனைச் சந்துகளும், மலர் மhலைகளும் ஒளிபருத்திய அணிகலன்களும் அளவி லாமற்குவிந்துகிடக்கும்.அதுபோல் அந்தப் பிலம் அளவற்ற செல்வத்தைப்பெற்றிருந்தது. அநுமானும், அவன் துணைவர்களும் சீதையைத் தேடித் தென்றிசையிலே சென்றனர். செல்லும் வழியிலே ஒரு சுரங்க வழியாக நிலத்திற்குள் போனார்கள். அங்கே காணப்பட்ட மனித சஞ்சாரமற்ற ஒரு நகரம் இத்தகைய செல்வம் பொருந்தியிருந்தது. இந் நிகழ்ச்சியிலே சோழ மன்னனுடைய கொடைத் தன்மையைக் கம்பன் புகழ்ந் திருப்பதைக் காணலாம்.சென்னி நாள் தெரியல் வீரன் தியாகமா விநோதன், தெய்வப் பொன்னி நாட்டு உவமை வைப்பைப் புலன்கொள நோக்கிப் போனான். (யுத்த.மருத்துவ. 58) சோழன் புதிய மலர் மாலையை அணிந்த வீரன்; தியாக மாவிநோதன் ஆளுகின்ற நாடு; தெய்வத்தன்மை பொருந்திய பொன்னி நதி பாயும் நாடு; சிறந்த நாட்டுக்கு உவமையாக எடுத்துக் கூறத் தகுந்த நாடு; இந்த நாட்டைத் தன் புலன்கள் மகிழ்ச்சியடையும்படி பார்த்துக்கொண்டு போனான். அநுமான் மருத்துவ மலையைக் கொண்டுவர வடக்கு நோக்கிச் சென்ற பொழுது வழியிலே கண்ட காட்சிகளில் இது ஒன்று. அநுமான் உள்ளத்தைக் கவரும்படி அவ்வளவு சிறப்புடன் இருந்தது சோழ நாடு. மேலே காட்டிய இரண்டு பாடல்களாலும் சோழ நாட்டின் பெருமையைக் கூறினான்; சோழ மன்னர்களின் கொடையைப் பாராட்டினான். தியாகமாவி நோதன்-தியாகத்தையே சிறந்த விளையாட்டாகக் கொண்டவன். மேலே கூறியவற்றைக் கொண்டு கம்பனுடைய தமிழ்ப் பற்றையும், தாய் நாட்டன்பையும் காணலாம். கம்பனும் நன்றியறிவும் தமிழர் நாகரிகத்திலே செய்ந்நன்றி மறவாமை ஒரு சிறந்த பண்பு. பிறர் செய்த நன்றியை மறவாதவனே சிறந்த மனிதன்; நன்றியை மறப்பவன் மனிதத் தன்மை உள்ளவன் அல்லன். நன்றி மறவாமையை ஒரு சிறந்த ஒப்பற்ற ஒழுக்கமாக வலியுறுத்திக் கூறுகிறார் வள்ளுவர். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு வேறு எந்த நன்மையை மறந்துவிட்டாலும் அக் குற்றத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள வழியுண்டு. பிறர் செய்த நன்றியை மறந்துவிட்டால் அக்குற்றத்தி லிருந்து தப்பித்துக் கொள்ள வழியேயில்லை என்பது வள்ளுவர் வாய்மொழி. வள்ளுவர் காட்டும் வழியே தமிழர் அறம், தமிழர் நெறி என்பவர்கள் இக் குறட்பாவின் கருத்தை மறுக்க மாட்டார்கள். இக்குறளுக்குக் கம்பன் தன் கவிதையில் ஒரு விளக்கம் எழுதி யிருக்கின்றான்; சிதைவகல் காதல் தாயைத், தந்தையைக், குருவைத், தெய்வப் பதவி அந்தணரை, ஆவைப், பாலரைப், பாவைமாரை, வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றலாம் ஆற்றல்; மாயா உதவி கொன்றார்க்கு என்றேனும் ஒழிக்கலாம் உபாயம் உண்டோ? (கிட்கிந்தா.கிட்கிந்தைப்.60) அழியாத அன்புள்ள தாயை - தந்தையை - குருவை - தெய்வம் போலிருந்து மக்களுக்கு நலம் புரியும் அந்தணரை - பசுவை - பாலர்களை - பெண்களைக் கொலை செய்கின்ற வர்களுக்கும் அப்பாவத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய பிராயச் சித்தங்கள் உண்டு; ஆனால் தான் பெற்ற என்றும் அழியாத உதவியை மற்றவர்களுக்கு அம் மறதியால் வந்த தீமையைப் போக்க வழியேயில்லை. இது மேலே காட்டிய குறளுக்குக் கம்பன் கூறிய விரிவுரை. கம்பன் இவ்வாறு செய்நன்றி மறவாமையை வாயால் வலியுறுத்திய தோடு மட்டும் நின்று விடவில்லை. தனக்கு அறிவூட்டிய தமிழ்க் கவிகளைப் போற்றினான்; தனக்குப் பெருமை தந்த தமிழைப் பாராட்டினான்; தான் பிறந்த வளர்ந்த சோழநாட்டைப் புகழ்ந்தான்; தான் நீந்தி விளையாடி, உண்டு மகிழ்ந்த காவிரியையும் கொண்டாடினான். இவ்வளவுக்கும் மேலாகத் தன் தமிழ்க் காவியத்தைப் பாடி முடிக்க உதவி செய்த வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலையும் மனமார வாயாரப் பாராட்டிப் பாடியிருக்கின்றான். பிறர் செய்த நன்றியை மறவாமலிருப்பவனே, தானும் பிறர்க்கு நன்மை செய்வான். இவ்வாறு ஒவ்வொருவரும் பிறருக்கு நன்றி செய்யும் பண்புள்ள வராயிருந்தால் மக்கள் அனைவரும் இன்புறுவர். அனைவரும் அன்போடு ஒன்றுபட்டு உயர்ந்த நிலையிலே வாழ்வார்கள். ஆதலால் தான் நன்றி மறவாமை என்பதை எல்லாவற்றினும் உயர்ந்த பண்பாக நீதிநூலோர் உரைத்தனர். கம்பனுக்குப் பலவகையிலும் ஆதரவளித்தவர் சடையப்ப வள்ளல். சடையப்ப வள்ளலின் ஆதரவில்லாவிட்டால் கம்பனால் சிறந்ததொரு தமிழ்க் காவியத்தைச் செய்திருக்க முடியாது. தோமறு மாக்கதை, சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே; குற்றமற்ற இப்பெரிய காவியம், சடையப்பவள்ளலின் ஆதரவால், வெண்ணெய் நல்லூரிலே உறைந்து, செய்து கொடுத்த தாகும் என்று கம்பனே இவ்வுண்மையை உரைக்கின்றான். இவ்வாறு வள்ளல் சடையப்பரைக் கம்பன் பாராட்டிப் பாடியிருக்கின்றான். தமிழ் உள்ளவரையிலும் கம்பன் காவியம் கதிரவனைப்போல் ஒளியிட்டு நிற்கும்; கம்பன் காவியம் உள்ள வரையிலும் சடையப்ப வள்ளலின் புகழ் குன்றாது. இந்த அளவுக்குக் கம்பன் நன்றியறிவுள்ளவன்; இதுவே உண்மைத் தமிழனுடைய உணர்ச்சி; பண்பு. இவ்வுணர்ச்சியும் பண்பும் போற்றத்தக்கவை. விசுவாமித்திரன் தன் வேள்வியைக் காப்பதற்காக இளம் பருவத்திலேயே இராமனையும் இலக்குவனையும் அழைத்துச் சென்றான். வேள்வி தொடங்குவதற்கு முன் அவன் இராமனுக்குப் படைக்கலங்களைக் கொடுத்தான். இதைப்பற்றிக் கூறும்போது கம்பன் சடையப்ப வள்ளலை ஒரு உவமானமாகக் காட்டிப் பாடுகின்றான். மண்ணவர் வறுமை நோய்க்கு மருந்தன சடையன் வெண்ணெய் அண்ணல் தன் சொல்லை யென்னப் படைக்கலம் அருளினானே இவ்வுலகில் உள்ளவர்கள் வறுமைப் பிணிக்கு மருந்து போன்றவன்; சடையன் என்ற பெயர் உள்ளவன்; வெண்ணெய் நல்லூரிலே வாழ்கின்றவன்; சிறந்த பெருமையுள்ளவன். அவனுடைய உறுதி மொழி, வாழ்க்கையை நாசமாக்கும் வறுமையை எப்படி அடித்து நொறுக்குமோ, அது போல், பகைவர் களை அடித்து நொறுக்கத் தகுந்த படைக்கலங்களை விசுவாமித்திரன் இராமனுக்குக் கொடுத்தான். இங்கே இராமன் பெற்ற படைக்கலங்களையும், சடையப்பன் உறுதிமொழி களையும் ஒப்பிட்டான். வண்ண மாலைக் கை பரப்பி உலகை வளைந்த இருள் எல்லாம் உண்ண வெண்ணித் தண்மதியத்து உதயத் தெழுந்த நிலாக்கற்றை, விண்ணும் மண்ணும் திசையனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநன்னீர்ப் பண்ணை வெண்ணெய்ச் சடையன் தன் புகழ்போல் எங்கும் பரந்ததே மாலைக் காலத்தின் பின் இருள் தன் கைகளை விரித்து இவ்வுலகை வளைத்துக் கொண்டது; அந்த இருளை உண்பதற்கு நினைத்துக் குளிர்ந்த சந்திரோயத்திலிருந்து நிலவொளி தோன்றிப் பரவிற்று; அது நல்ல நீர்வளம் பொருந்திய வயல்கள் நிறைந்த வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் புகழ் எங்கும் பரவியது போலிருந்தது; வானுலகம் மண்ணுலகம், ஏனைத்திசைகள் எல்லாவற்றிலும் உள்ள இருளை விழுங்கிக் கொண்டது. இப்பாடலினால் சடையப்ப வள்ளலின் புகழைப் போற்றினான்; எத் திசையிலும் அவன் புகழ் பரவியிருந்தது. நிலவொளி இருளை விழுங்குவதைப் போல் அவன் கொடை வறியவர் துன்பத்தைத் துடைத்தது; இதனால் இவன் புகழ் நிலவொளிபோல் எங்கும் பரந்தது என்று கூறினான் கம்பன். இலங்கைக்குச் செல்லச் சேது பந்தனம் நடைபெறுகின்றது; குரங்குப் படைகள் கடலிலே அணை கட்டுகின்றன. நளன் என்பவன்தான் அந்த அணையைக் கட்டும் சிற்பி. குரங்குகள் மலைகளைக் கொண்டுவந்து கொடுக்கின்றன. அவற்றை அலட்சியமாக வாங்கி அணை கட்டுகின்றான் நளன். இந்த நிகழ்ச்சியைக் கம்பன் பாடும்போது சடையப்ப வள்ளலைப் புகழ்ந்து போற்றுகின்றான். மஞ்சினில் நிகழ்தரு மலையை மாக்குரங்கு எஞ்சுறக் கடிதெடுத்து எறியவே, நளன் விஞ்சையால் தாங்கினன், சடையன் வெண்ணெய் தஞ்சம் என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல் (யுத்த, சேதுபந்தன. 9) மேகந் தவழ்கின்ற ஒரு மலையைப் பெரிய குரங்கு ஒன்று அப்படியே பெயர்த்தெடுத்து நளன் கையிலே வீசிற்று; அவன் தன் சிற்ப வித்தையினால் அதைத் தாங்கினான். சடையப்ப வள்ளல், தன்னூருக்கு வந்து தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களை எப்படித் தாங்குவானோ, அப்படி அம்மலையைத் தாங்கினான் நளன். தஞ்சம் என்று வந்தவர்களையெல்லாம் தளர்ச்சியடை யாமல் ஆதரிப்பவன் சடையப்ப வள்ளல் என்பதை இப்பாடலிலே எடுத்துக் காட்டினான். கம்பன் இவ்வாறு பலவிடங்களிலே சடையன் பெருமையைப் பாராட்டிக் கூறுகின்றான். இறுதியிலே எல்லாவற்றிலும் சிறப்பாக இராமனுக்கு முடிசூட்டும் நிகழ்ச்சியைக் கூறுமிடத்தில் சடையப்ப வள்ளலுக்கு என்றும் அழியாத பெருமையை அளித்திருக்கிறான். சடையப்ப வள்ளலின் முன்னோர்கள் முடியை எடுத்துக் கொடுத்தனர். வசிட்டன் அதை வாங்கி இராமன் சிரத்திலே சூட்டினான் என்று முடிக்கின்றான். தனக்கு நன்றி செய்த சடையப்ப வள்ளலை, இத்தகைய அழியாத புகழுக்கு ஆளாக்கிய கம்பன் பெருமையே பெருமை. அரியணை அநுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன் வெண்குடை கவிக்க, இருவரும் கவரி வீச, விரைசெறி குழலி ஓங்க, வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுஉளோர் கொடுக்க, வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி (யுத்த. முடிசூட்டு. 38) அநுமான் அரியணையைச் சுமந்து நிற்கின்றான்; அங்கதன் உடைவாளைத் தாங்கி நிற்கின்றான்; பரதன் வெண்பட்டுக் குடை பிடிக்கின்றான். இலக்குவன், சத்துருக்கனன் இருவரும் இருபுறத்திலிருந்து கவரி வீசுகின்றனர்; மணம் கமழும் கூந்தலை யுடைய சீதை மகிழ்ச்சியுடன் பக்கத்திலே அமர்ந்திருக்கின்றாள்; வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலின் முன்னோர்கள் முடியை எடுத்துக் கொடுத்தனர். வசிட்டன் அதை வாங்கி இராமன் தலையிலே சூட்டினான். கம்பனுடைய நன்றியுணர்ச்சி எவ்வளவு பெரிது என்பதைக் காட்ட இந்த ஒரு பாடலே போதுமானது. இவ்வாறு தன்னைப் புரந்த சடையப்பரின் சொல்லுறுதியை - கொடையை புகழை பரம்பரைப் பெருமையைப் பாராட்டியிருக்கின்றான். கம்பன் காட்டும் இவ்வழியே தமிழர் வழி; தமிழ் முன்னோர்கள் வழி. கம்பன் கண்ட அரசியல் ஒரு நாடு எப்படியிருக்க வேண்டும்; ஒரு நகரம் எப்படி யிருக்க வேண்டும்? என்று கம்பன் கருதுகின்றான் என்பதைப் பற்றிக் கம்பன் கருத்து என்ற பகுதியிலே கூறப்பட்டது. ஒரு நாட்டை நல்ல நிலையிலே சீர்திருத்தி அமைக்க வேண்டும் என்பது கம்பன் கருத்து. கம்பன் காலத்திலே மன்னர்களே அரசாட்சியின் தலைவர் களாயிருந்தனர்; மன்னர்களைத் தவறு செய்யாமல் தடுக்க-நல்வழியிலே நடத்திச் செல்ல மந்திரி கள் இருந்தனர். மந்திரிகள் நாட்டுமக்களின் மனப்போக்கறிந்து, அவ்வழியிலே ஆட்சி நடக்க அரசர்களுக்குத் துணைபுரிந்து வந்தனர். மன்னர்களும் மக்கள் உள்ளம் அறிந்து நடக்கும் மந்திரி களும் சேர்ந்து அரசாண்ட காலத்தில் பல அறநூல்கள் தோன்றின. மந்திரிகள் கடமை என்ன என்பதைப் பற்றி அவ்வற நூல்களிலே அறிஞர்கள் கூறிவைத்தனர். அவைகளைப் பின்பற்றியே அரசர் களும் மந்திரிகளும் நடந்து வந்தனர். இவைகளை ஒட்டியே கம்பனும் தன் கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றான். அரசும், குடிகளும் மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்பது முன்னோர் கொள்கை. உலகம் மன்னனை உயிராகக் கொண்டிருக்கின்றது என்பதே இதன் கருத்து. இது புறநானூற்றுப் பாட்டின் ஒருபகுதி. மன்னன் இல்லாவிட்டால் வாழமுடியாது என்பது முன்னோர் கருத்து. மன்னன் எல்லா அதிகாரங்களும் பெற்றிருந்த காலத்தில் எழுந்த கருத்து இது. கம்பன் காலத்தில் இக்கருத்து மாறிவிட்டது. குடிகள் தான் உயிர்; மன்னன் தான் உடம்பு. உயிரில்லாவிட்டால் உடம்பு இயங்க முடியாது. குடிகள் இல்லா விட்டால் குடிகளின் ஆதரவு, ஒத்துழைப்பு இல்லா விட்டால் - அரசாட்சி இயங்க முடியாது என்ற கருத்து, கம்பன் காலத்திலேயே தோன்றிவிட்டது. வய்யம் மன்னுயிராக அம்மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னனுக்கு அய்யம் இன்றி அறம்கடவாது; அருள் மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? (அயோத்தி.மந்தரை சூ.17) உலகத்தை உயிராகக் கொண்டு, அவ்வுயிர்களைத் தாங்கும் உடலாகத் தன்னை எண்ணிக்கொண்டு அதற்கேற்றபடி அரசு நடத்துகின்றவனே அரசன். ஐயம் இல்லாமல் அறம் என்பது அவனுக்குத் துணையாக நிற்கும், அரசன் இரக்கத்தையும், உண்மையையும் துணையாகக் கொண்டு நிற்பானாயின் அவன் வேள்வி செய்யவும் வேண்டுமோ? இச்செய்யுளிலே அரசன் கடமையைக் கூறினான். மக்கள் கருத்தறிந்து ஆள்வதுதான் அரசன் கடமையென்று மொழிந்தான். நாடு தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. நீங்காத விளைவும், அறவோர்-துறவோர் ஆகிய சிறந்தவர் களும், குறைவற்ற செல்வம் உள்ளவர்களும் சேர்ந்திருப்பதே சிறந்த நாடாகும் என்று வள்ளுவர் கூறினார். இல்லாதவர்களும், உள்ளவர்களும் இணைந்த சமுதாய அமைப்பிலே இந்த நிலைமை யிருப்பதே ஒரு நாட்டுக்குப் பெருமை என்று எண்ணினார் வள்ளுவர். கம்பன் காலத்திலும் இச்சமுதாய அமைப்புத்தான் நிலைத்திருந்தது. ஆதலால் கோசல நாடு வள்ளுவர் எடுத்துக் காட்டிய நாட்டைப் போலிருந்தது என்று காட்டுகின்றான் கம்பன். கதிர்பாடு வயலின் உள்ள; கடிகமழ் பொழிலின் உள்ள: முதிர்பல மரத்தின் உள்ள; முதிரைகள் புறவின் உள்ள; பதிபடு கொடியின் உள்ள; படிவளர் குழியின் உள்ள; மதுவனம் மலரில் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார்; (நாட்டு. 22) கதிர்முற்றி விளைந்திருக்கின்ற வயலில் உள்ள நெல்; மணம் வீசும் பொழில் உள்ள மலர்கள்; பல மரங்களிலும் முதிர்ந்திருக்கும் கனிகள்; பயறு வகைகள்; காட்டிலே உள்ள ஏனைய விளைபொருள்கள்; பதிக்கப்பட்ட கொடியிலே தோன்றிய பொருள்கள்; பூமிக்குள் வளர்ந்து ஆழத்தில் உள்ள கிழங்குகள் - இவைகளையெல்லாம், மதுவைக் காட்டு மலர்களிலே திரட்டும் வண்டுகளைப் போல உழவர்கள் திரட்டுவார்கள். கோசலநாடு தள்ளா விளையுளையுடையது என்பதற்கு இப்பாட்டு உதாரணம். அகில் இடும்புகை அட்டில் இடும்புகை நகரின் ஆலை நறும்புகை நான்மறை புகலும் வேள்வியின் பூம்புகையோடு அளாய் முகிலின் விம்மி முயங்கின எங்கணும் (நாட்டு.41) அகில் கட்டைகளிலிருந்து வரும் புகை, சமையல் வீடுகளி லிருந்து வரும் புகை, விளங்குகிற கரும்பாலைகளிலிருந்து வருகின்ற புகை, இவைகள், நான்கு வேதங்களும் கூறுகின்ற முறைப்படி செய்யும் வேள்விகளிலிருந்து எழும் புகைகளோடு கூடி மேகத்தைப் போல எங்கும் பரந்து நெருங்கியிருந்தன. இதனாலே வேள்வி செய்யும அந்தணர்கள், துறவிகள் இவர்களுக்கு உதவும் கொடையாளர் முதலியவர்கள் கோசல நாட்டிலே நிறைந்திருந்தனர் என்று கூறினான் கம்பன். தக்கார் அந்நாட்டிலே நிறைந்திருந்தனர் என்பதற்கு இப்பாட்டு உதாரணம். வண்மை யில்லை, ஒர் வறுமையின்மையால் திண்மையில்லை, நேர் செறுநர் இன்மையால்; உண்மையில்லை, பொய்யுரை இலாமையால்; வெண்மையில்லை, பல கேள்வி மேவலால் (நாட்டு.53) அந்நாட்டிலே எல்லோரும் பொருட்செல்வம் உள்ளவர்கள்; வீரச் செல்வம் உள்ளவர்கள்; மெய்யுரைக்கும் பண்புச் செல்வம் உள்ளவர்கள்; கல்விச்செல்வமும் கேள்விச் செல்வமும் உள்ளவர்கள் என்பதை இப் பாடலால் காணலாம். இத்தகைய தாழ்விலாச் செல்வரைக் கொண்டிருந்தது அந்நாடு. ஒரு நாடு எப்படியிருக்கவேண்டும் என்று வள்ளுவர் கூறியதையே கம்பன் தனது காவியத்தில் அமைத்துக் காட்டிய அருமையை மேலே காட்டிய மூன்று பாடல்கள் காட்டுகின்றன. ஆளுவோர் கடமை மக்களுக்கு நன்மை செய்வதே ஆளுவோர் கடமை; இதற்கு அடையாள மாகவே மன்னர்கள் வெண்பட்டுக் குடையின்கீழ் அமர்ந்திருப்பர் என்பது கம்பர் கருத்து. மண்ணுடை உயிர்தொறும் வளர்ந்து தேய்வின்றித் தண்ணிழல் பரப்பவும், இருளைத் தள்ளவும் அண்ணல்தம் குடைமதி அமையும் ஆதலால் விண்ணிடை மதியினை மிகை இது என்னவே (பால. அரசியல்.9) உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் இனிய நிழலைத் தருவது; உலகில் உள்ள - உலக மக்களிடம் உள்ள - அறியாமை யாகிய இருளை அகற்றிவிடவும் அண்ணலின் மதி போன்ற குடைநிழலே போதும். ஆதலால் வானத்திலே உள்ள மதி மிகையாகும் என்று சொல்லும்படிச் சிறந்திருந்தது தசரதன் குடை நிழல். இப்பாடலைப் படிக்கும்போது நமக்குச் சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடல் நினைவுக்கு வருகின்றது. திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! கொங்குஅலர் தார்ச்சென்னி குளிர்வெண்குடை போன்றுஇவ் அங்கண் உலகு அளித்தலால். மன்னனுடைய குளிர்ந்த வெண்பட்டுக் குடையைப் போல் நின்று இவ்வுலகைக் காப்பாற்றுவதனால் சந்திரனைப் போற்றுவோம்! என்று பாடினார் இளங்கோவடிகள். இக்கருத்தையே கம்பன் இன்னும் உயர்ந்த முறையிலே மாற்றியுரைத்தான். திங்களைவிடச் சிறந்த காரியங்களைத் தசரதன் குடை - ஆட்சி செய்து வருகின்றது. ஆதலால் சந்திரன் வேண்டியதேயில்லை என்று கூறினான். இளங்கோவடிகள் கருத்தும், கம்பன் கருத்தும் ஒன்றுதான். கருத்தை எடுத்துக் காட்டும் முறையிலே கம்பன் ஒரு படி உயர்ந்து விட்டான். தசரதனைப்பற்றி - அவன் குடிகளிடம் எவ்வளவு அன்பு வைத்து அவர்களைக் காத்துவந்தான் என்பதைப் பற்றிப் பேசும் போது, வய்யகம் முழுவதும் வறிஞன் ஓம்பும்ஓர் செய்எனக் காத்து இனிது அரசு செய்கின்றான். (பால. அரசியல். 12) என்று கூறுகின்றான். ஒரு சிறிய நிலத்தைத் தனக்கு உரிமையாகக் கொண்ட வறிஞன் ஒருவன் அதைக் கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாப்பான். அதைப்போலவே தசரதனும் தனது நாட்டைப் பாதுகாத்தான் என்று எடுத்துக் காட்டினான். ஒரு அரசன் தனது நாட்டை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பதை இதனால் அறியலாம். இராமனுக்கு முடிசூட்டுவதாகத் தீர்மானித்தபின் - வசிட்டன் அவனுக்குச் சில அரசியல் நீதிகளை எடுத்துரைக்கின்றான். இவ்விடத்திலே கம்பன் குறித்திருக்கும் அரசியல் நீதிகள் தமிழர் பண்பை ஒட்டியவை. யாரொடும் பகைகொள்இலன் என்றபின் போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது (அயோத்தி.மந்திரை. 13) ஆள்வோன் யாரோடும் பகைத்துக் கொள்ளாமலிருப் பானாயின் நாட்டிலே போர் தோன்றாது மறைந்துவிடும். ஆனால் புகழ் ஒடுங்காது: சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டு ஆளுகின்ற மன்னவன் புகழ் பரந்து நிற்கும். இதனால் போரினால்தான் புகழ் பெறமுடியும் என்ற பழைய மூட நம்பிக்கையைக் கல்லியெறிகின்றான் கம்பன். இது மிகச் சிறந்த கருத்தன்றோ! உமைக்கு நாதற்கும், ஓங்கு புள்ஊர்திக்கும், இமைப்பில் நாட்டம் ஒர் எட்டுடையானுக்கும், சமைத்த தோள்வலி தாங்கினர் ஆயினும் அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே. (அயோத்தி.மந்திரை.15) பரமசிவன், திருமால், நான்முகன் இவர்களைப்போன்ற புயவலிமையைப் பூண்டவனாயிருந்தாலும், அமைச்சர் சொல்வழி நடப்பதே ஆளுவோர்க்குச் சிறந்த வலிமையாகும். ஆளுவோர்க்கு எவ்வளவு ஆற்றலிருந்தாலும், அவர்கள் அறிவு நிரம்பிய அமைச்சர்களின் ஆலோசனைப்படிதான் நடக்கவேண்டும்; இன்றேல் அவர்களுடைய ஆற்றல் அழிந்து சிதையும் என்பதை இப்பாடல் விளக்கிற்று. இனிய சொல்லினன், ஈகையன் எண்ணினன், வினையன், தூயன், விழுமியன், வென்றியன் நினையும் நீதி நெறிகடவான் எனின் அனைய மன்னவற்கு அழிவும் உண்டாம் கொலோ? (அயோத்தி.மந்திரை. 18) இனிய மொழி, ஈகைக் குணம், ஆழ்ந்த சிந்தனை, வினைசெய்யும் வல்லமை, குற்றமற்ற பண்பு, சிறந்த குணம், செயலிலே வெற்றிபெறுந் தன்மை, நீதிநெறி கடவாமை இக்குணங்களை யுடையோனாக ஆளுவோன் இருப்பானாயின் அவனுக்கு எக்காலத்திலும் யாராலும் அழிவில்லை. இப்பாடலும் ஆளுவோர்க்கு அமைந்திருக்க வேண்டிய பண்புகளை எடுததுக் காட்டிற்று. ஆளுவோன், அமைச்சர்களுடன் - நிர்வாகிகளுடன் - கலந்து ஆலோசித்தே எக்காரியங்களையும் செய்ய வேண்டும் என்பது கம்பன் கருத்து. இக்கருத்தை இராமன் சுக்கிரீவனுக்கு அரசியல் போதனை செய்யும்போது வெளியிடுகிறான். வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும் தீமைதீர் ஒழுக்கின் வந்த திறத்தொழில் மறவரோடும் தூய்மைசால் புணர்ச்சி பேணித் துகள்அறு தொழிலையாகிச் சேய்மையோடு அணிமையின்றித் தேவரின் தெரிய நிற்றி! (கிட்கிந்தா. அரசியல்.28) உண்மையை ஆராய்ந்து உணரும் அறிவுள்ள அமைச்சர் களோடும் குற்றமற்ற ஒழுக்கத்துடன் திறமையாக நிர்வாகத்தை நடத்தும் வீரர்களுடனும் மனங்கலந்து ஆலோசித்த பின்பே செயல்களைச் செய்ய வேண்டும்; எல்லா மக்களோடும் நெருங்கியும் நெருங்காமலும் பழகவேண்டும்; விரும்புவோரிடம் நெருங்கியும், விரும்பாதோரிடம் நெருங்காமலும் தேவர்களைப் போல் வாழ வேண்டும். ஆளுவோன் எந்த நிலையிலிருந்து ஆட்சி நடத்த வேண்டும் என்பதை விளக்கிற்று இப்பாட்டு; பகையுடைச் சிந்தையார்க்கும் பயன் அறுபண்பில் தீரா நகையுடை முகத்தையாகி இன்னுரை நல்கு நாவால் (கிட்கிந்தா. அரசியல். 29) உன்னிடம் பகைகொண்ட உள்ளமுடையவராயினும் சரி. அவர்களிடம் கடுகடுத்துப் பேசாதே! மகிழ்ந்த முகத்துடன் பேசு! இனிய சொற்களைக் கூறு. இவைகளே பயன்தரும் சிறந்த குணமாகும் என்று மேலும் சுக்கிரீவனுக்கு அறிவுரை கூறினான் இராமன். ஆளுவோர்க்கு - ஆட்சிப் பீடத்திலே அமர்ந்திருப் போர்க்கு - இவை மிகவும் இன்றியமையாத பண்புகள். அமைச்சர்கள் அரசர்களுக்கு அறிவுரை கூறிய கம்பன் அமைச்சர்களையும் விட்டுவிட வில்லை. ஆளுகை வண்டி குடைசாயாமல் செல்வதற்கு அமைச்சர்கள்தாம் அடிப் படையானவர்கள். அந்த அமைச்சர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதைப்பற்றி விளக்கமாகச் சொல்லிருக்கின்றான். உற்றது கொண்டு மேல்வந்து உறுபொருள் உணரும் கோளார், மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரிய நூலும் கற்றவர்; மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார் (அயோத்தி,மந்திர 7) நடந்த நிகழ்ச்சியைக் கொண்டு, இனி நடக்கப்போகும் நிகழ்ச்சி யைத் தெரிந்து கொள்ளும் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள்; முன் வினையினால் மூண்ட தீமையாயினும் அதை மாற்றும் வல்லமையுள்ளவர்கள்; நல்லொழுக்கமுள்ள குடியிலே பிறந்தவர்கள்; சிறந்த நூல்களையெல்லாம் கற்றறிந்தவர்கள்; மானத்திலே தன் மயிர்போனாலும் உயிர் வாழ விரும்பாத கவரிமானைப் போன்றவர்கள். தம் உயிர்க்கு உறுதி எண்ணார்; தலைமகன் வெகுண்டபோதும் வெம்மையைத் தாங்கி, நீதி விடாதுநின்று உரைக்கும் வீரர்; செம்மையின் திறம்பல் செய்யாத் தேற்றத்தார்; தெரியும் காலம் மும்மையும் உணர வல்லார்; ஒருமையே மொழியும் நீரார். (அயோத்தி,மந்திர.9) தமக்குமட்டும் நன்மைவேண்டும் என்று கருதமாட்டார்கள்; அரசன் வெகுண்டாலும் அவன் கொடுமையைத் தாங்கிக் கொள் வார்கள்; நீதியை விடாமல் பின்பற்றுவார்கள்; அரசனையும் நீதிநெறியிலே நடக்கும்படி வலி யுறுத்தும் வீரர்கள்; நடுநிலை யிலிருந்து தவறாத தெளிந்த அறிவுள்ளவர்கள்; ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டிய இறந்தகாலம். நிகழ்காலம், எதிர்காலம் இவைகளைப்பற்றி அறிந்து கொள்ளும் மதிவன்மை படைத்தவர்கள்; தாம் நன்மையென்று கண்ட ஒன்றையே உறுதியுடன் உரைப்பவர்கள். இவ்வாறு அமைச்சர்களின் தகுதியைப் பற்றிக் கூறுகின்றான். வள்ளுவர் மொழிந்திருக்கும் அமைச்சர் இலக்கணத்தை இங்கே நினைவு கூரவேண்டும். தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு (அதி. 64.குறள்.4) செய்யத்தக்க செயல்களை ஆராய்ந்து அறிவதும், அச்செயல் முடிவதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்வதும், உறுதியாகத் தன் கருத்தை வெளியிடுவதும் ஆகியவற்றில் வல்லவனே அமைச்சனாவான். வள்ளுவர் அமைச்சர்களின் தகுதிபற்றிக் கூறிய இக்கருத்தே கம்பன் கருத்துக்கு அடிப்படையாக இருப்பதைக் காணலாம். அரசியல் திறம்பட நடக்கவேண்டுமானால் ஆளுவோரும், அறிவுள்ளவர் களாகயிருக்க வேண்டும்; ஆற்றல் உள்ளவர்களாகயிருக்க வேண்டும்; நடுநிலைமையுள்ளவர்களாயிருக்க வேண்டும்; பொறுமையுள்ளவர்களா யிருக்க வேண்டும்; இன்சொல்லும் நகை முகமுங் கொண்டு எல்லோரையும் தம் வசமாக்கும் தன்மையுள்ளவர்களா யிருக்க வேண்டும் என்ற கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றான் கம்பன். கருத்தில் சிறந்தவன் கம்பன் வடமொழியிலே காளிதாசனை உயர்ந்த கவிஞனாகப் போற்றுகின்றனர்; ஆங்கிலத்திலே ஷேக்பியரைச் சிறந்த புலவராகக் கொள்ளுகின்றனர். இந்தியிலே துளசிதாசரை நல்ல கவிஞராகக் கூறுகின்றனர். இதுபோலவே ஒவ்வொரு மொழி யிலும் ஒவ்வொரு புலவர் ஒப்பற்ற கவிஞராக விளங்குகின்றனர். இதுபோலத் தமிழிலே ஒப்பற்ற கவிஞனாக உயர்ந்து நிற்பவன் கம்பன் ஒருவனேயாவான். கல்வியில் சிறந்தவன் கம்பன்; கவியிலே உயர்ந்தவன் கம்பன்; விருத்தப் பாக்கள் பாடுவதில் வல்லவன் கம்பன்; இவை களோடு கருத்திலும் சிறந்தவன் கம்பன்; இக்காரணங்களாலே கம்பன் புகழ்பெற்று விளங்குகின்றான். இதற்கு முன்னே எடுத்துக் கூறியவற்றைக் கொண்டு கம்பன் எத்தகைய சிறந்த கருத்துக் களைக் கொண்டவன் என்பது விளங்கும். இதற்கு முன் கூறியவை கம்பன் காலத்திலே தமிழகத்தில் காவியங்கள் பல இருந்தன. ஆயினும் அவைகளால் மக்களுடைய காவியக் காதலை நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால் மக்கள் ஆவலை நிறைவேற்றவே அவன் ஒரு காவியத்தைச் செய்தான். கம்பன் தன் காவியத்தை யாருடைய வேண்டுகோளாலும் பாடவில்லை; தானே தான் மக்கள் எண்ணத்தை நிறைவேற்றும் ஆவலுடன் பாடினான். கம்பன் காலத்து மக்கள் கதைகள் கேட்பதிலே ஆவல் உள்ளவர்கள். அவர்கள் இராமாயண வரலாற்றிலே நம்பிக்கை கொண்டிருந்தனர். இராமனையும் சீதையை யும் தெய்வங்களாகவே கருதிவந்தனர். இராமனை நற்பண்புகளின் உருவ மாகவும், இராவணனைத் தீமைகளின் தோற்றமாகவும் எண்ணி வந்தனர். ஆதலால் தன் மக்கள் விரும்பிய இராமகாதையைத் தமிழிலே பாடினான். மறைந்து வந்த வள்ளுவர் அறத்தை மீண்டும் நினைப்பூட்ட இராமாயணத்தை ஒரு கருவியாகக் கொண்டான் கம்பன். திருக்குறள் ஒரு இலக்கணம்; அந்த இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டாக நிற்கும் இலக்கியம் கம்பராமாயணம். கம்பனுக்கும் முன்னே சங்க இலக்கியங்களில் இராமா யணத்தைப் பற்றிய குறிப்புக்கள் இருந்தன. ஆசிரியப்பாவிலும் வெண்பாவிலும் இராமாயணங்கள் இருந்தன. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இராமாவதாரத்தைப் பற்றிக் குறிப் பிட்டி ருக்கின்றனர். இவைகளையெல்லாம் அறிந்தே கம்பன் இராம காதையைப் பாடினான். கல்வியினால்தான் சமுதாய உயர்வு தாழ்வுகள் ஒழியும் என்ற முன்னோர் கருத்தைக் கம்பனும் ஆதரித்தான். பெண் களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டு மென்று விரும்பினான். எல்லார்க்கும் கல்வியும் செல்வமும் இருக்கும் வகையிலே மனித சமுதாயம் மாற்றமடைய வேண்டும் என்பது அவன் கருத்து. கம்பன் மதப்பற்றுள்ளவன். வைணவத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவன்; இராமனிடம் பக்தியுள்ளவன். ஆயினும் அவன் எந்த மதத்தையும் வெறுக்க வில்லை; எந்தக் கடவுளையும் இகழவில்லை. ஒழுக்கமே உயர்வு தாழ்வுக்குக் காரணம். பிறப்பினால் மட்டும் உயர்வு தாழ்வு பாராட்டுவது தவறு என்பது கம்பன் கருத்து. இவ்வுண்மையை இராமன் குகனிடத்திலும், சுக்கிரீவ னிடத்திலும், விபீடணனிடத்திலும் கொண்ட உடன் பிறப்புத் தன்மையைக் கொண்டு மெய்ப்பித்துக் காட்டுகின்றான். காலத்தையறிந்து கவி புனைந்தவர்களிலே கம்பன் சிறந்தவன்; கம்பன் காலத்திலே இருந்த அறிஞர்கள் மாமிசம் உண்ணலும், மதுவருந்துதலும் ஒழுக்கத் திற்கு விரோதம் என்று கருதினர். இக்கருத்தை அவன் தன் காவியத்திலே அமைத்துப் பாடினான். கம்பன் காலத்தில் பலதார மணந்தான் சமுதாயத்தில் நிலைத்திருந்தது. ஆனால் ஏகபத்தினி விரதமே சிறந்த தென்பது கம்பன் கருத்து. இக்கருத்துக்கு இராமன் வாழ்க்கை எடுத்துக்காட்டாகும். ஆகையால் இராமனை மக்கள் பின்பற்றும்படி செய்யவேண்டும் என்று ஆவல் கொண்டான். பிறர்மனை விழைதல் என்பது சமுதாயக் கட்டுப் பாட்டைச் சீர்குலைப்பது. மக்கள் சமுதாயம் நேர்மையுடன் வாழ வேண்டுமானால், பிறனுக்குரிய வளாயுள்ள ஒருத்தியை மற்றொருவன் விரும்புவது தகாது. அவ்வாறு செய்வதைப் போலச் சமுதாயக் கட்டுப்பாட்டைச் சிதைக்கும் கொடுஞ் செய்கை வேறொன்றில்லை. இத்தகைய கொடுஞ்செயல் புரிந்தவர்கள் வாலியும் இராவணனும் என்பது கம்பன் கருத்து. இதுவும் வள்ளுவர் அறத்தைப் பின் பற்றியதாகும். இராமன் தியாகத்திற்கு எடுத்துக்காட்டு; இராவணன் தன்னலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இராமன் செய்கைகள் அனைத்தும் பொதுநலங் கருதியவை; இராவணனுடைய செய்கைகள் எல்லாம் தன்னலங் கருதியவை. இவைகளை இராமாயணத்தின் மூலம் விளக்கமாகக் கூறினான் கம்பன். தமிழ் நாட்டின் காதல், கற்பு, வீரம் இவைகளையெல்லாம் தன் காவியத்திலே அமைத்துக் காட்டினான் கம்பன். திருக்குறள் நீதியை விளக்கும் ஒரு சிறந்த இலக்கிய மாகவே இராமாயணத்தைப் பாடினான்; ஆங்காங்கே திருவள்ளுவர் கருத்துக்களையும், திருக்குறள் சொற்களையும், சொற்றொடர்களையும் தன் பாடல்களில் அமைத் திருக்கின்றான் கம்பன். கம்பன் தமிழ் மொழியின்மேல் அளவற்ற பற்றுள்ளவன்; தமிழுக்குத் தொண்டுபுரிந்தவர்களைப் பாராட்டுகின்றான்; தமிழ் மொழியை - தமிழ் நாட்டை - தன் நாடாகிய சோழ நாட்டை - சோழ மன்னரைத் தன் காவியத்திலே பலவிடங் களில் பாராட்டுகின்றான். தமிழர்களின் சிறந்த பண்பாகிய செய்ந்நன்றி மறவாமை யைத் தலைமேற் கொண்டவன் கம்பன். தனக்கு உதவி செய்த சடையப்ப வள்ளலை அவன் தன் காவியத்திலே தொடக்க முதல் இறுதிவரையிலும் புகழ்ந்து போற்றுகின்றான். கம்பன் உயர்ந்த அரசியல் கருத்துக்களைக் கொண்டவன் ஆளுவோரும், அமைச்சர்களும் குடிமக்களின் போக்கறிந்து அரசியல் நடத்த வேண்டும் என்ற கருத்துள்ளவன்; சிறந்த - திறமையான - ஆட்சியின் மூலம்தான் மக்களும், நாடும் மகிழ்ந்து வாழ முடியும் என்பது அவன் கருத்து. இக்கருத்துக்களை யெல்லாம் இதற்கு முன்னுள்ள பகுதியிலே காணலாம். கம்பன் பண்பு கம்பனிடம் மதவெறுப்பைக் காணமுடியாது; சாதி வெறுப்பை பார்க்க முடியாது; இனவெறுப்பு உண்டென்று எண்ணவே முடியாது. இவைகளோடு மொழி வெறுப்பும் இல்லாதவன் என்பது குறிப்பிடத் தக்கது. இக்காலத்திலே தமிழர்களிலே சிலர் பிற மொழியை வெறுப்பதே தம் மொழிக்குச் செய்யும் பணி என்று எண்ணுகின்றனர். பிறமொழி வெறுப்பால் மட்டும் தமிழ்மொழி வளர்ந்து விடாது. இவ்வுண்மையை உள்ளத்திற் கொள்ளா தவர் களே பிறமொழியின்மீது எரிந்து விழுவார்கள். கம்பன் தமிழின்மேல் அளவற்ற அன்புள்ளவன். கம்பனைப் போல் தமிழுக்குப் பணிபுரிந்தவர் வேறு யாரும் இல்லை. தமிழ்மொழி நிலைத்திருக்கும் வரையிலும் அழியாமலிருக்கும் அரிய காவியத்தைச் செய்தவன் கம்பன். அவன் வட மொழியை வெறுக்கவில்லை. அவன் பாடல்களிலே வடமொழிச் சொற்கள் கலந் திருப்பதைக் காணலாம். வடமொழிகளில் உள்ள வால்மீகி இராமாயணத்தையே தான் தமிழிற் பாடியதாகக் கூறுகின்றான். வேறுமொழிகளில் உள்ள சிறந்த நூல்களைத் தமிழிலே பெயர்த்தெழுதுதல் இலக்கிய வளர்ச்சிக்குச் சிறந்த வழியென்று தொல்காப்பியங் கூறுகிறது. தொகுத்தல் விரித்தல் தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமரபினவே. ஒரு நூலைச் சுருக்கி எழுதுதல்; விரிவாக எழுதுதல்; சுருக்க வேண்டிய இடத்தில் சுருக்கியும், விரிக்க வேண்டிய இடத்தில் விரித்தும் எழுதுதல், வேறு மொழியிலிருந்து தமிழிலே பெயர்த்துத் தமிழ் முறையிலே செய்தல் - என்ற அத்தகைய நான்கு முறைகளைக் கொண்டது வழி நூல். இது வழிநூலுக்குத் தொல்காப்பியர் கூறிய இலக்கணம். முதனூல் என்பது தாமாகவே தோன்றியது. தொல்காப்பியர் கூறிய வழி நூல் இலக்கணத்தைப் பின்பற்றியே கம்பன் இராமாயணத்தைத் தமிழிலே பாடினான். இதனால் கம்பன் மொழி வெறுப்பின்றித் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உழைத்த தமிழன், கலைஞன், உயர்ந்த அறிஞன் என்று உணரலாம். கம்பன் ஆங்காங்கே எடுத்துக்காட்டும் உவமைகளின் சிறப்பை - இயற்கையை - எடுத்துக் காட்டினால் அதுவே ஒரு தனி நூலாகிவிடும். அவன் கூறும் அழகான - பொருள் நிறைந்த - நீதி மொழிகளை யெல்லாம் திரட்டி எழுதினால் அது ஒரு அரிய நூலாகத் திகழும். ஆங்காங்கே வள்ளுவர் கருத்தைக் கதை நிகழ்ச்சிகளிலே அமைத்துச் சொல்லும் இடங்களையெல்லாம் எடுத்துக்காட்டினால், அது ஒரு இராமாயணமாகவே ஆகிவிடும். கம்பனுடைய ஒவ்வொரு கருத்தையும் விளக்கிக் கூறத்தொடங்கினால் இன்றுள்ள கம்பராமாயணத்தைப் போல் பலமடங்கு பெருகிவிடும்; சான்றோர் கவி என்று அறிஞர் கவிதையைக் கம்பன் பாராட்டியிருப்பது அவன் கவிக்கே பொருந்தும். இத்தகைய கருத்திற் சிறந்த கம்பனைப் போற்றுவதே - அவன் காவியத்தில் - கவிதைகளில் - உள்ள உண்மையான உயர்ந்த கருத்துக்களை உணர்ந்து மகிழ்வதே தமிழர் கடமை, வாழ்க தமிழ்! வாழ்க தமிழர்! வாழ்க கம்பன் கண்ட தமிழகம்! வாழ்க கம்பன் புகழ்.!  தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு அறுபதாண்டு காலம் தமிழகத்தில் வாழ்ந்து அதில் நாற்பதாண்டுக் காலத்தைத் தமிழனுக்கும் தமிழுக்கும் அர்ப் பணித்துத் தூய தொண்டாற்றிய தொண்டர் இவர். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய வற்றோடு தொடர்புகொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாகச் சமுதாயச் சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, கலப்பு மணம், பகுத்தறிவு பரப்புதல் ஆகிய நற்பணி களிலே நாட்டம் கொண்டு நற்றொண்டாற்றியவர். பிற்காலத்தில் பொதுஉடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு ஆதரவு காட்டி மக்கள் வளர்ச்சியிலே மனத்தைச் செலுத்தியவர். தமிழ்மக்கள் மேலை நாட்டு மக்களைப் போன்றும், கீழை நாட்டு மக்களைப் போன்றும் இலக்கிய, சமுதாய, பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறவேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர். 1920 முதல் 1961 வரையுள்ள ஐம்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் தமிழகத்தில் வெளிவந்த முப்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகைகளில் இருபதுக்கும் மேற்பட்ட புனை பெயர்களில் எழுத்தாளராக விளங்கி எழுதித் தமிழ்த் தொண்டாற்றியவர். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை, வெற்றிமுரசு, லோகோபகாரி ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகவும், எழுத் தாளராகவும் பல்வேறு காலக்கட்டங்களில் பணியாற்றியவர்; பத்திரிகைத் துறையில் நாட்டம் கொண்டு அறிவுக்கொடி என்னும் பத்திரிகையை - 1936ல் - கும்பகோணத்திலிருந்து ஈராண்டுக்காலம் நடத்தி மகிழ்ந்தவர். தமிழர் தலைவர் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939லேயே முதன் முதலாக எழுதித் தமிழ்த் தரணிக்கு அளித்தவர். மேலும் திராவிடன் நாளேடு, தமிழரசி, தாருல் இலாம், சாந்தி, தொழிலரசு, தமிழ்ப்பொழில், செந்தாமரை, சரசுவதி, ஜனசக்தி, நவசக்தி, தாமரை, தமிழ்முரசு நாளேடு, பொன்னி, செந்தமிழ்ச் செல்வி, பாரதி, தினமணி, புதுஉலகம், கவிதா மண்டலம், புதுவை முரசு, நகரத்தூதன், சண்ட மாருதம், பார்க்கவகுலமித்திரன், சுயமரியாதை, போர்வாள், தமிழ்நாடு முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட இதழ்களிலும், ஆண்டு மலர்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டு வந்தவர். இவ்விதழ்களில் மெய்கண்டான், கதைக் காதலன், குருலூ,எ.சி..பரன், மிடர் திங்கர், சாமி.சி. இடிமுழக்கம், காலக்கவி, வாமிஜி, வம்பன், அரட்டை, சிகாமணி, நாதிகன், பொறுப்புள்ளவன், விளக்கொளி, கண்ணாடி, தமிழன், சல்லடசலிப்பு, அரசியல்வாதி, மெய்யன் என்னும் 20க்கும் மேற்பட்டபுiன பெயர்களில் எழுதி உள்ளார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை எழுத்தெண்ணிப் படித்தவர் இவர்; இக்கால இலக்கியங்களிலேயும் ஈடுபாடு கொண்டவர். வாழையடிவாழையென வந்த தமிழ்ப் புலவர் கூட்டத்தின் வழித்தோன்றல்; பழைமைக்கும் - புதுமைக்கும் பாலமாக நின்று தமிழ் இலக்கியத்தை ஆராய்ந்தவர். தமிழ் இலக்கியம் முழுவதையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடனும் முற்போக்குக் கண் ணோட்டத்துடனும் விருப்புவறுப்புக்கு இடம் கெடாமல் சமதர்ம உணர்வு தழுவத்தமிழனுக்கு அறிமுகப்படுத்திவைத்த ஆராய்ச்சியாளர் சங்க இலக்கியங் களைச் சாதாரணமானவர்களும் அறியும்படி செய்த தமிழறிஞர் படிப்புச் செருக்குக் கொண்டு தருக்கி நடக்காமல் - ஆரவாரத்தை நீக்கி அடக்கமாக வாழ்ந்து - மக்களுக்காக எழுதவேண்டும் என்னும் மகத்தான கருத்துடன் மக்களாட்சிக் காலத்திற்கு ஏற்பத் தம்மைப் பொருத்திக் கொண்டவர். தால்காப்பியர்கலத்தில் தமிழன் முதல்பரதி பரதிதாசன் கலத்தமிழன் வரையில் அனைத்துக் கவிஞரையும் தமிழனுக்கு அறிமுகப்படுத்தி வத்தவர். தஞ்சை மாவட்டத்தில் மாயவரத்தை அடுத்த கடகம் என்னும் அழகிய சிற்றூரில் வீரபத்திர மலையமான் என்னும் சைவப் பெருநிலக்கிழாரின் பேரனாகவும் சாமிநாத மலையமான் - கமலாம்மாள் அம்மையார் ஆகிய அன்புடைப் பெற்றோரின் செல்வ மகனாகவும் - சார்வரி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 16ஆம் நாளில் (1.12.1900) சாமி சிதம்பரனார் பிறந்தார். கிராமப் பள்ளிகளிலும், மாயவரத்திலும் இவர் கல்வி கற்றார். தஞ்சையில் தமிழ்ப்பெரும் புலவராக விளங்கிய கரந்தைக் கவியரசு ஆர்.வெங்கடாசலம் பிள்ளை அவர்களிடம் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் மாணவராக இருந்து கல்வி கற்றுத் தமிழறிவு பெற்றதற்குப் பிறகு மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து பயிலத் தொடங்கினார். முறையாகப் பயின்று 1923-ஆம் ஆண்டில் பண்டிதர்ப் பட்டம், வித்வான் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற உடனேயே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஓராண்டுக் காலத்திற்குள் தஞ்சை மாவட்டக் கழக (ஜில்லா போர்டு) உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர் வேலை கிடைக்கப் பெற்றுப் பணியில் சேர்ந்தார். தஞ்சை மாவட்டத்தில் இராசாமடம், ஒரத்தநாடு, திருவாரூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உட்பட எல்லாப் பகுதிகளிலும் பணியாற்றினார். அந்த நாட்களில் பள்ளிகளில் தமிழ் ஐயாக்களுக்கு நன்மதிப்புக் கிடைப்பது அரிது. ஆனால் சிதம்பரனாரோ, மாணவர்களுக்கு நூல்கள் பல எழுதியும் புதுமுறையில் அவர் களைப் பயிற்றுவித்தும் மாணவருலகின் நன்மதிப்புக்கிலக் காகினார். இலக்கணத்தை எளிய இனிய முறையில் கற்பித்தார். சீர்திருத்தக் கருத்துக்களைச் செந்தமிழோடு சேர்த்துக் கொடுத்தார். பள்ளியில் பகுத்தறிவுப் பிரசாரம் செய்த முதல் தமிழாசிரியர் சிதம்பரனாரே ஆவார். பெரியார் ஈ.வெ.ராமசாமியோடு நெருங்கிய தொடர்பு கொண்டு குடியரசு எழுத்தாளரானார். பெரியார் முதன் முதலாக மலாயா சென்றபோது சாமி சிதம்பரனாரும் உடன் சென்று வந்தார். கலப்புத் திருமணம் என்பது பஞ்சமாபாதகம் எனக் கருதப்பட்ட அக்காலத்தில் - சீர்திருத்த நோக்கமும் புரட்சி உள்ளமும் படைத்த சாமிசிதம்பரனார் கும்பகோணத்தில் பிரபல நீதிக்கட்சிக்காரராக விளங்கிய திரு.ஏ.குப்புசாமிப் பிள்ளையின் மூத்த மகளான சிவகாமி அம்மையாரை, சமூகத்தையும், சுற்றத்தையும் நெஞ்சுரத்தோடு எதிர்த்து நின்று கலப்புத் திருமணம் செய்து கொண்டார். சாமி சிதம்பரனார் இளமையிலேயே - பள்ளி மாணவராக இருந்த காலத் திலேயே - எதையும் புரிந்துகொண்டு எளிமையாக விளக்கி எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். தமது 21-ஆம் வயதிலேயே நளாயினி கதை முழுவதையும் வெண்பாவாக இயற்றியுள்ளார். அது இன்னும் நூல் வடிவத்தில் வெளிவராமல், எழுதிய படியே ஏட்டில் உள்ளது. அந்த வெண்பாக்கள் மிகச் சிறந்த கவிநயம் வாய்ந்தவை. 1940 வரையில் அவர் எழுதியவைகளில் பள்ளிப் பாடப் புத்தகங்களும் சேரும். பத்துப் புத்தகங்கள் வரை எழுதியுள்ளார். அரசாங்க அங்கீகாரம் பெற்றுப் பாடப் புத்தகங்களாக்க ஏற்பாடு செய்தார். அவை தமிழகத்துப் பள்ளிக்கூடங்களில் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்கள் பயன்பெற்றார்கள். இவரெழுதிய மணிமேகலை என்னும் உரைநடை நூலைச் சென்னைப் பல்கலைக்கழகம் 1934,35, 36 ஆகிய ஆண்டுகளில் பாடப் புத்தகமாக வைத்தது. பொதுத்தொண்டில் ஈடுபட வேண்டும் என்னும் ஆர்வத்தின் காரணமாக - மாணவர்களுடன் பழகிப் பாடம் சொல்லும் தமிழாசிரியர் பணியில் உற்சாகம் மிகுதியாக இருந்தும், முழுநேரமும் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வத்தினால் அவர் 41ஆம் வயதிலேயே ஆசிரியர் பணியி லிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டு தாம் விரும்பிய முழு நேர எழுத்துத்துறையில் ஈடுபட்டார். சாமி சிதம்பரனார் பல்வேறு கட்சிகளிலும் தொடர்பு கொண்டவர். முதலில் தமிழ்ப் பண்டிதர், நீதிக் கட்சிக்காரர்; தீவிர சுயமரியாதைக்காரர்; திராவிடக் கழகக்காரர். அதன் பின்னர் காங்கிரகாரர்; சமதர்மவாதி; 1949,50-இல் பொது உடைமை இயக்கம் நெருப்புக் குளியலுக்கு ஆளானபோது அதனிடம் நட்புப் பூண்டு போர்க்குரல் கொடுத்த ஆதரவாளர். விட்ட இடத்தில் தொடுவதைப் போல, தமிழ்ப் புலவராக வாழ்க்கையைத் தொடங்கிய சாமி சிதம்பரனார் 1948-இல் சென்னைக்கு வந்து பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் புதிய கண்ணோட்டத் துடன் விளக்கும் சங்க இலக்கியங்களின் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். இலக்கியம், சமுதாயம், அரசியல் ஆகிய துறைகளில் சாமி சிதம்பரனார் என்ற பெயருக்குத் தனிச்சிறப்புண்டு. தாம் சென்னையில் வசித்த காலத்தில் தமிழ் எழுத்தாளர் சங்கம், சமாதான இயக்கம், சீன - இந்திய நட்புறவுக் கழகம், சோவியத் நண்பர்கள் சங்கம், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஆகிய வற்றில் இடம் பெற்றுப் பணியாற்றினார். தமிழக முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தொடக்ககால முதலே குறிப்பிடத்தக்க பங்கு அவருக்குண்டு. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராக ஈராண்டுகள் பணியாற்றி உள்ளார். சென்னை மகாஜன சபை சங்கத் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் வரை பொறுப்புள்ள தலை வராக விளங்கினார். சாமி சிதம்பரனார் 1948-லிருந்து 1961 வரை உள்ள காலத்தில் இலக்கியத் துறையில் திட்டமிட்டு வேலை செய்தார். இலக்கியப்பணி ஒன்றுதான் தமக்குத் தகுந்த வேலை என முடிவு செய்த காலமுமிதுவே. தமிழகத்தின் மிகச் சிறந்த புலவர்களான கம்பன், வள்ளுவர், இளங்கோ ஆகிய முப்பெரும் புலவர்களின் படைப்புக்களையும் தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு ஆகியவற்றையும், சீத்தலைச் சாத்தனாரின் செந்தமிழ்க் காப்பியமான மணிமேகலையையும், குறுந்தொகைப் பெருஞ் செல்வம், நற்றிணைக் காட்சிகள், பழமொழி நானூறு, புகழேந்தியின் புலமை, நாலடியார், நான்மணிக்கடிகை, திருக்குறள் பொருள்விளக்கம், இவை போன்ற சாமி சிதம்பரனார் எழுதிய நூல்களைவிட அவர் எழுத நினைத்த நூல்கள் ஏராளம், ஏராளம். இலக்கியங்களைப் பண்டிதர்களின் துணைகொண்டே படிக்க முடியும் என்னும் நிலையை மாற்றி ஓரளவு தமிழறிவு உள்ளவர்களும், உணர்ந்து கற்றுப் பயன்பெறத்தக்க வகையில் தமக்கே உரிய எளிய இனிய நடையில் அவற்றின் அடிப்படையை ஆய்ந்து தமிழகத்திற்கு அறிவித்துள்ளார். சிதம்பரனாரது ஆய்வுத் தொண்டினைத் தமிழறிஞர்கள் பலர் சிறப்பித்துப் பாராட்டியுள்ளனர். சாமி சிதம்பரனாருடைய சங்க இலக்கியம் பற்றிய நூல்கள் ஆய்வுக் கண்ணோட்டம் உடையனவாய் விளங்குகின்றன. சிந்திப்பதற்குப் போதுமான நேரமும், வசதியும் உள்ளவர்களே சிறந்த நூல்களை ஆக்க முடியும். அத்தகைய நேரமும், வசதியும் தமிழ் அறிஞர் சாமி சிதம்பரனார் தம் வாழ்நாளில் பெற்று இருந்தார். பிற்காலத்தில் தமிழ் இலக்கியச் சுவையில் முற்றிலும் தோய்ந்துவிட்ட பேராசிரியர் சாமி. சிதம்பரனார் அவர்கள் அருள்நெறித் தொடர் வரிசையில் ஆறு புத்தகங்களுக்கு மேல் எழுதி வெளியிட்டு உள்ளார்கள். அதுதவிர, மூன்றாண்டுகள் மிகக் கடுமையான உழைப்பினை மேற்கொண்டு பன்னிரண்டாயிரம் பாடல்கள் உடைய கம்பராமாயணத்தி லிருந்து, இலக்கியத்தரம் அதிகம் வாய்ந்த நாலாயிரம் (4000) பாடல்களைத் தேர்ந்தெடுத்து, ஆறு காண்டங்களும் கொண்ட கம்பராமாயணத் தொகுப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளார். 1924 முதல் 1940 வரை பதினாறு ஆண்டுகள் தமிழாசிரிய ராகப் பணியாற்றி மாணவர்களுக்குத் தமிழறிவு ஊட்டியும், 1924 முதல் 1948 வரை இருபத்து நான்கு ஆண்டுகள் அரசியல் சமுதாயம், சீர்திருத்தம், இலக்கியம் என்று பல்வேறு பிரிவு களிலும் பணியாற்றியும் வந்த சாமி சிதம்பரனார் 1948-க்குப் பிறகு தம் கருத்து முழுவதையும் இலக்கியத் துறையிலேயே செலுத்தினார். 1948 முதல் அவர் மறைந்த 1961 வரை பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய ஆராய்ச்சி யில் ஈடுபட்டார். சிங்கப்பூர், தமிழ்முரசு நாளேட்டின் மூன்று பகுதி களுக்கு வாரத்துக்கு மூன்று கட்டுரைகள் வீதம் இடையறாமல் எழுதி அனுப்பி வந்தார். பாராட்டுதல்கள் குவிந்தன. இவரது புகழும் பெருமையும் பரவின. இதனால் இன்பமும் மனநிறைவும் பெற்று மெய்மறந்து உழைத்தார். இப்பணிதான் பிற் காலத்தில் தமக்கு நிலையான புகழ் தேடித் தரும் என்று நம்பினார். எதிர்காலத் தமிழ் மாணவர்கள் தம் பணியினால் நற்பயன் பெறுவர் என்று சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார். தமிழ்ப் பெரும்புலவர் - தமிழ் ஆராய்ச்சியாளர், தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் - தமிழ்ப் பாடநூல் ஆசிரியர் - தமிழ்ப் பாவலர், இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய சாமி சிதம்பரனார் அவர்கள் 17.01.1961-இல் இயற்கை எய்தினார். தமிழ்ப் பேரறிஞர் சீர்திருத்தச் செம்மல் சாமிசிதம்பரனார் புகழ் வாழ்க! வாழ்க! ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால் பொன்றாது நிற்பதுஒன்று இல்.  பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும் (1957) முன்னுரை சங்க நூல்கள் பெரும்பாலும், காதலைப் பற்றியும் அரசியலைப் பற்றியுமே வலியுறுத்திக் கூறுகின்றன. இவ் விரண்டைப் பற்றிக் கூறும் பாடல்களிலும் நூல்களிலும், அறநெறியைப் பற்றிய செய்தி களும் ஆங்காங்கே கலந்து காணப் படுகின்றன; நல்லொழுக்கத்தை வலியுறுத்தும் நீதி மொழிகளும் அமைந் திருக்கின்றன. ஆயினும் நீதிகளைப் பற்றி மட்டும் - ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் தனியாகக் கூறப்படும் சங்க நூல்கள் இல்லை. முதல் முதலில் ஒழுக்கத்தைப் பற்றித் தனித்தனியாக எழுதப்பட்ட நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தொகுதியிலே தான் காணப்படுகின்றன. பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினெட்டு நூல்களிலே நீதி நூல்கள் பதினொன்று; இது குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் ஒரு உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. சைன-பௌத்த மக்கள் தமிழ் நாட்டில் மிகுதியாகப் பரவிய பிறகுதான் ஒழுக்கத்தைப் பற்றித் தனியாகத் தமிழ் நூல்கள் எழுதப்பட்டன. சமணமும் பௌத்தமும் ஒழுக்க நெறியையே அடிப்படையாகக் கொண்டவைகள். அவைகள் கடவுள் நெறியைப் பற்றியோ பக்தி நெறியைப் பற்றியோ கவலைப்படுவதில்லை; ஆதலால் அக் காலத்தில அற நூல்கள் பல பிறந்தன. சமண----பௌத்த மதங்களுக்குத் தமிழகத்திலே எதிர்ப்புத் தோன்றிய காலத்தில் பக்தி மார்க்கத்தை வலியுறுத்தும் நூல்களே மிகுதியாகத் தோன்றின. பக்தி மார்க்கத்தைப் பரப்பியதன் மூலமே சமண பௌத்த மதங்களைத் தமிழகத்தில் முறியடித்தனர். நாயன்மார்களின் பாடல்களும் ஆழ்வார்களின் பாசுரங்களும் சமண பௌத்த மத எதிர்ப்புத் காலத்தில் எழுந்தவைகள், அவைகள், பக்தி நெறியையே சிறப்பாக வற்புறுத்துகின்றன. இவைகளுக்குப் பின் பிறந்த இராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற காவியங்களும் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் காவியங் களாகவே காணப்படுகின்றன. ஆகவே, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பிறந்து சில நூற்றாண்டுகள் வரையிலும் தமிழகத்தில் புதிய நீதி நூல்கள் தனியாக எழுதப்படவில்லை; தொகுக்கப்படவில்லை. பக்தி நூல்கள் மட்டுமே பெருகி வளர்ந்து வந்தன. பக்தி மாக்கம், பரவி, சமண----பௌத்த நெறிகளின் வேகம் குறைந்தபின் மீண்டும் சில நீதி நூல்கள் தோன்றின. அவைகள் அவ்வையாரால் இயற்றப்பட்ட ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, உலக நாதனார் இயற்றிய உலகநீதி போன்ற நூல்களே யாகும். இந்நூல்களுக்குப் பின்னே தோன்றிய நூல்கள் சில, அவைகளுள் அதிவீர ராம பாண்டியனால் இயற்றப்பட்ட வெற்றி வேற்கை, குமர குருபர சுவாமிகளால் இயற்றப்பட்ட நீதிநெறி விளக்கம், சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய நன்னெறி-இவைகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் நீதிநெறி விளக்கம் நூறு வெண்பாக்களைக் கொண்டது. இதைத் திருக்குறளின் சாரம் என்று சொல்லலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பின்னே தோன்றிய நீதி நூல்கள் எல்லாம், பெரும்பாலும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் களைப் பின்பற்றி எழுதப் பட்டவைகள்தாம். இவைகள் பொதுவான நீதிகளையே கூறுகின்றன. அனைவர்க் கும் பொதுவான அறங்களை உரைப்பதே தமிழ் நூல் மரபாகும். இவற்றுள் வெற்றிவேற்கை, உலகநீதி போன்ற சிலவற்றில் வருணாசிரம தரும வாசனையும் வீசுகின்றது; காரணம் அந்நூல்கள் பிறந்த காலத்துச் சூழ்நிலை யாக இருக்கலாம். அதிவீர ராம பாண்டியன், குமரகுருபரர், சிவப்பிரகாசர் முதலியவர்களும் பக்தி நெறியை வலியுறுத்தும் பாடல்களைத்தான் மிகுதியாக இயற்றியிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் ஒழுக்கத்தை வலியுறுத்தும் நூல்களையும் இயற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. பக்தி மார்க்கம் பரவிய பின் அவ்வையார் நீதி நூல்கள், குமரகுருபரர், சிவப்பிரகாசர், அதிவீர ராம பாண்டியன் நூல்கள் பிறந்தன. இந்நிலையை எண்ணிப்பார்த்தால், சமண---பௌத்தர் களின் அறநெறியும், வைதீகத்தின் பக்தியும் கலந்த நெறியே வைதீக சமயமாகப் பரவியது என்று கொள்ளலாம். தமிழ்ப் புலவர்கள் இடைக் காலத்திலே பக்தியும் ஒழுக்கமும் கலந்த நூல்களைத்தான் மிகுதியாக எழுதிக் குவித்தார்கள். இவைகள் புராணங்கள், அந்தாதிகள், கலம்பகங்கள், மாலைகள், பிள்ளைத் தமிழ்கள் என்ற பல பெயர் களிலே குவிந்து கிடக்கின்றன. பிற்காலத்திலே சதகங்கள் என்ற பெயரிலே பல நூல்கள் தோன்றின. அவைகள் பலவும் நீதிகளையே வலியுறுத்துகின்றன. ஆனால் இச்சதகங்கள் பெரும்பாலும் வடமொழியில் உள்ள மிருதிகளைப் பின்பற்றி எழுதப்பட்டவை. அறப்பளீசுர சதகம், குமரேச சதகம், தண்டலையார் முதலிய சதகம் நூல்களைப் படித்துப் பார்ப்போர்க்கு இவ்வுண்மை விளங்கும். சதகங்கள் நூறு பாட்டுக்கள் கொண்டவை; ஏதேனும் ஒரு தெய்வப் பெயரை இறுதியிலே வைத்துப் பாடப்பட்டவை. இதற்கு மாறாகப் பாடுவதும் உண்டு. இன்று தமிழில் உள்ள சதக நூல்கள் பெரும்பாலும் பொது அறங்களையும் வருணாசிரம தரும நீதிகளையும் கூறுகின்றவை. பழைய தமிழ்நூல் மரபுக்கு மாறுபட்டவை. ஆயினும் சிறந்த பல நீதிகளை இச் சதகங்களிலே காணலாம். ஆகவே, தமிழிலே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், இவைகளுக்குப் பின்னே தோன்றிய அவ்வையாரின் நூல்கள், அதன்பின் தோன்றிய அதிவீரராம பாண்டியன் நூல், அதன்பின் பிறந்த குமரகுருபரர் நூல், சிவப்பிரகாசர் நூல், அண்மையிலே பிறந்த சதகங்கள், இவைகளே அற நூல்களாக விளங்குகின்றன. பின்னே பிறந்த அற நூல்களுக்கெல்லாம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களே வழிகாட்டியவை. இந்நூல்களிலே கொல்லாமை, கள்ளுண்ணாமை, பொய்யாமை, காமம், இன்மை, கள்ளாமை என்னும் சீலங்கள் வலியுறுத்தப்படுகின்றன. சமணர் களும் பௌத்தர்களும் இவற்றை ஐவகைச் சீலம் என்பர். இவைகளே பஞ்சசீலம். இன்னும் பல சிறந்த அறநெறிகளும் அந்நூல்களிலே காணப்படுகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே கூறப்படும் அறங்கள் எல்லாம் தமிழர் அறமா? வேறிடத்திலிருந்து தமிழகத்தில் புகுந்த அறமா என்று வழக்கிட வேண்டியதில்லை. அவைகள் நெடுங் காலமாகத் தமிழ் மக்களால் போற்றப்பட்டு வருகின்றன. ஆகையால் அவைகள் தமிழர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட அறங்கள் என்று தான் கொள்ளவேண்டும். இத்தகைய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல்; இதைப் படிப்பதன் மூலம் பதினென்கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும் கொள்கையையும் உணர்ந்துகொள்ளலாம். பத்துப்பாட்டு, எட்டுத் தொகைபற்றிய நூல்களை வெளியிட்டதுபோலவே இந்நூலையும் வெளியிட்ட டார்பிரசுரத்தார்க்கு எனது நன்றி. சௌராஷ்டிர நகர் சென்னை-24 சாமி.சிதம்பரன் 1-5-1957 நூல் விளக்கம் பழந்தமிழ் இலக்கியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று வரிசையாக வழங்கப்படுகின்றன. இவை தொகை நூல்கள் என்று கூறப்படும். பல நூல்களின் தொகுப்பே தொகை நூல்கள். பத்து நூல்களைக் கொண்டது பத்துப் பாட்டு; எட்டு நூல்களைக் கொண்டது எட்டுத் தொகை; பதினெட்டு நூல்களைக் கொண்டது பதினெண் கீழ்க் கணக்கு. சங்க நூல்களா? இத்தொகை நூல்களிலே பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் சங்ககால இலக்கியங்கள்; பதினெண் கீழ்க்கணக்கு சங்க காலத்திற்குப் பின்தோன்றிய நூல்கள். சங்க காலம் என்பது ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலும் சங்ககாலம் என்று கருதப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன் தோன்றிய நூல்களே சங்க இலக்கியங்களாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் சங்க இலக் கியங்கள் என்று கூறுவோர் உண்டு. 1. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் தொகை நூல்களின் வரிசையிலே பதிணென் கீழ்க் கணக்கும் ஒன்று. 2. இறையனார் அகப் பொருளிலே காணப்படும் சங்க நூல்களின் வரிசையிலே பத்துப்பாட்டுக் காணப்படவில்லை. அவர்களால், (கடைச் சங்கப் புலவர்களால்) பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்ற இத் தொடக்கத்தன. இது இறையனார் அகப்பொருள் உரை. இது கடைச்சங்க காலத்து நூல்களைக் குறித்தது. இதனுள் வரும் இத்தொடக்கத்தன என்ற சொற்றொடரைக் கொண்டே பத்துப்பாட்டும் சங்கநூல் என்று கொள்ளுகின்றனர். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களும் சங்க நூல்களே யென்பதையும் அச்சொற் றொடராலேயே கொள்ளலாம். 3. கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்களிலே, கபிலர், கூடலூர் கிழார், பொய்கையார் முதலியவர்களும் காணப்படுகின்றனர். இவர்கள் சங்ககாலப் புலவர்கள். ஆகையால் இவர்களால் இயற்றப்பட்ட நூல்கள் சங்ககால நூல்களாகத் தான் இருக்க வேண்டும். 4. பதினெண் கீழ்க்கணக்கு நூல் பாடல்கள் எல்லாம் வெண்பாக்களே. சங்க காலத்தில் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா ஆகிய நால்வகைப் பாடல்களிலேதான் நூல்கள் இயற்றப்பட்டன. ஆதலால் பதினெண் கீழ்க்கணக்கும் சங்க நூல்கள்தாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் சங்ககால இலக்கியங்கள்தாம் என்பதற்கு இவ்வாறு காரணங் காட்டுகின்றனர். சங்கத் தொகை நூல்களோடு சேர்த்து எண்ணப்படுவ தனால் மட்டும் சங்க நூல்கள் என்று தீர்மானித்து விட முடியாது. பிற்காலத்தினர், தங்கள் காலத்திற்கு முன்னிருந்த நூல்களைக் குறிக்கவே, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று வரிசையாக வழங்கினர். சங்க நூல்களுக்குப் பிற்பட்டவை பத்துப் பாட்டிலே காணப்படும் பழக்க வழக்கங்களும், எட்டுத்தொகை நூல்களிலே காணப்படும் பழக்க வழக்கங்களும் ஒத்திருக்கின்றன. ஆதலால் அத் தொகுதி சங்ககால நூல் என்பதில் ஐயம் இல்லை. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலே சங்ககாலத் தமிழர்களின் பழக்கவழக்கங்களை ஏற்றுக் கொள்ளாத சில பகுதிகள் காணப்படுகின்றன. ஆதலால் இத்தொடக்கத்தன என்பதனால் பத்துப்பாட்டைச் சங்க இலக்கியம் என்று ஏற்றுக்கொள்ளுவது பொருந்தும்; பதினெண் கீழ்க்கணக்கையும் ஏற்றுக் கொள்ளுவது பொருந்தாது. பத்துப்பாட்டு எட்டுத் தொகை நூல்களிலே மது பானமும், புலால் உணவும் கண்டிக்கப்படவில்லை. பண்டைத் தமிழர்கள் இவற்றைச் சிறந்த உணவாகவே உண்டனர். ஆண்கள் பரத்தையர்களை விரும்பித் திரியும் வழக்கத்தைச் சங்க இலக்கியங்கள் கடிந்து கூறவில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே கள், புலால் உணவு, வேசையர் நட்பு இவைகள் வன்மையாகக் கண்டிக்கப்படுகின்றன. கொல்லா விரதம் போற்றப்படுகின்றது. இவை போன்ற பல செய்திகளைக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கின் காலம் சங்க காலத்திற்குப் பிற்பட்டதுதான் என்று முடிவு கட்டுகின்றனர். இதைப்பற்றிப் பின்னால் திருக்குறளைப் பற்றி எழுது மிடத்திலும் விளக்கப்பட்டிருக்கின்றது. ஒரே பெயருள்ள புலவர்கள் பல காலங்களில் இருந்திருக் கின்றனர். ஆதலால் பெயர் ஒற்றுமையைக் கொண்டு ஒரு நூலின் காலத்தைத் தீர்மானிக்க முடியாது. ஔவையார் என்ற பெயர் படைத்த புலவர்கள் மூவர்கள் இருந்ததாகக் கருதப் படுகின்றனர். கபிலர் என்ற பெயருள்ளவர் பலர் உண்டு. பொய்கையார் என்ற பெயர் படைத்தவர் பலர் உண்டு. ஆகையால் சங்ககாலத்துப் புலவர்களின் பெயர்கள் சில பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் ஆசிரியர்களாகக் காணப்படுவதனால் பதினெண்கீழ்க்கணக்கைச் சங்க நூல்கள் வரிசையிலே சேர்த்துவிட முடியாது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் ஒரே காலத்தில் தோன்றிய நூல்கள் அல்ல. அவைகள் சங்க காலத்திற்கு பின்னும் காவிய காலத்திற்கு முன்னும் தோன்றிய நூல்களாக இருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் வெண்பாவினாலேயே பாடப் பட்டிருக்கின்றன. காவியங்கள் தோன்றிய காலத்திலே விருத்தப்பாக்கள் பிறந்து விட்டன. சிலப்பதிகாரத்திலே விருத்தப்பாக்கள் உண்டு. சிந்தாமணி விருத்தப் பாக்களாலேயே ஆனது. வெண்பாவை விட விருத்தப்பாக்களினால் எடுத்துக் கொண்ட பொருளை விளக்கமாகக் கூறமுடியும். பதினெண் கீழ்க்கணக்கு நூலாசிரியர்கள் காலத்திலே, விருத்தப்பாக்கள் தமிழிலே பெருவழக்காக வழங்கவில்லை. வழங்கியிருக்குமானால், அவர்கள் விருத்தப்பாக்களிலும் நூல்கள் இயற்றியிருப்பார்கள். ஆதலால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற் றாண்டுக்குப் பின்னும், ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னும் என்று தீர்மானிக் கலாம். இந்த இடைக் காலமாகிய நானூறு ஆண்டுகளிலே பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் தோன்றி யிருக்கலாம். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே முன்னே தோன்றிய நூல் ஏது? பின்னே எழுந்த நூல் எது? என்று முடிவு கட்டுவது அவ்வளவு எளிதன்று. மேற்கணக்கு-கீழ்க்கணக்கு பிற்காலத்தினர் தொகை நூல்களை மேல்வரிசை நூல்கள் என்றும், கீழ்வரிசை நூல்கள் என்றும் பிரித்தனர். பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் மேல்வரிசை நூல்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கீழ்வரிசை நூல்கள். குறைந்த அடிகளைக் கொண்ட பாடல்களையுடைய நூல்களுக்குக் கீழ்க் கணக்கு நூல்கள் என்று பெயர்வைத்தனர். நிறைந்த அடிகள் அமைந்த பாடல் களைக் கொண்ட நூல்களை மேற்கணக்கு நூல்கள் என்று கூறினர். மேற்கணக்கு நூல்கள் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும், அவைகளின் எண்ணிக்கையும் பதினெட்டு, கீழ்க்கணக்கு நூல் களும் பதினெட்டு. மேற்கணக்கு நூல்கள் எல்லாம், பெரும்பாலும் மூன்றடி முதல் ஆயிரம் அடி வரையிலும் எழுதப்படும் ஆசிரியப் பாக்களால் ஆனவை. கலிப்பா, பரிபாட்டு, வஞ்சிப்பா ஆகிய பாடல்கள் கொண்ட நூல்களும் மேற்கணக்கில் உள்ளன. கீழ்க்கணக்கு நூல்கள் எல்லாம் இரண்டடி முதல் எட்டு அடி வரையிலும் உள்ள வெண்பாக்களால் ஆனவைகளே. பாட்டின் பெருக்கம், சுருக்கம் கருதியே கீழ்கணக்கு, மேற்கணக்கு என்று நூல்களைப் பிரித்தனர். நூல்களில் உள்ள பொருட்சிறப்பைக் கருதிக்கீழ், மேல் என்று பிரிக்கப்படவில்லை இது குறிப்பிடத்தக்கது. நூல்கள் யாவை? கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவை என்பதைக் குறிக்கும் வெண்பா ஒன்று உண்டு. நாலடி, நான்மணி, நால் நாற்பது, ஐந்திணை, முப் பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், இன்னிலைசொல் காஞ்சியுடன், ஏலாதி, என்பனவே கைந்நிலைய ஆம்கீழ்க் கணக்கு இதுவே அப்பாடல். நாலடியார், நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திணை ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை அறுபது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, முப்பால், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், இனிய நிலையை எடுத்துக் கூறுகின்ற முது மொழிக்காஞ்சி, ஏலாதி என்பவைகளே ஒழுக்க நிலையைக் கூறுகின்றனவாகிய கீழ்க்கணக்கு நூல்களாகும். இச்செய்யுளில் உள்ள ஐந்திணை என்பதற்கு ஐந்து திணை நூல்கள் என்பதே பொருள். இவ்வாறு பொருள் பண்ணாமல் ஐந்து திணைகளைப் பற்றிக் கூறுகின்ற நூல்கள்; அவை; திணைமொழி ஐம்பது; ஐந்திணை ஐம்பது; ஐந்திணை எழுபது; திணைமாலை நூற்றைம்பது என்று பொருள் பண்ணுவர். இவர்கள் இன்னிலை என்பது மற்றொரு நூல் என்றும், கைந்நிலை என்பது மற்றொரு நூல் என்றும் கூறுவர். இதனால் இந்நிலை பதினண்கீழ்க் கணக்கைச் சேர்ந்ததா? கைந்நிலை பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்ததா? என்ற ஐயம் எழுகின்றது. இன்னிலை என்றொரு நூல் உண்டு; அது அறம் பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறுவது. அதுவே பதினெண்கீழ்க்கணக்கு வகையைச் சேர்ந்தது என்று எண்ணினர். கைந்நிலை என்ற பெயருடன் ஐந்திணை அறுபது வெளியிடப்பட்டிருக் கின்றது. இந்நூல் வெளிவந்தபின், கைந்நிலைதான் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகும் என்பது பெரும்பாலோரின் முடிவு இதுவே சரியான முடிவு மாகும். இதைக் கைந்நிலை யென்று கூறுவதைவிட ஐந்திணை அறுபது என்று அழைத்துவிட்டால் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயத்திற்கே இடமில்லை. ஆதலால் ஐந்திணை என்பதற்கு ஐந்து திணை நூல்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தமானதாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் இந்த வெண்பா, நூல்களின் பெயர்களைக் குறிப்பதற்காகவே பாடப்பட்டதாகும். பதினெட்டு நூல்களையும் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளுவதற்காகவே எழுதப்பட்டதாகும். நூல் களின் சிறப்பைக் கருதி அவைகளை வரிசைப்படுத்திப் பாடவில்லை. நூல்களின் ஏற்றத் தாழ்வு கருதி ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக வைத்துப் பாடப் பட்டிருக்குமானால் முப்பால் என்பதையே முதலில் வைத்துப் பாடியிருப்பர். முப்பால் திருக்குறள். இதைவிடச் சிறந்த நூல் வேறில்லை. இது பதினொரு நூல் களுக்குப் பின் பன்னிரண்டாவதாக வைக்கப்பட்டிருக்கின்றது. ஆதலால் இப் பாட்டில் உள்ள வரிசையைக் கொண்டு நூலின் ஏற்றத் தாழ்வுகளை மதிப்பிடுதல் தவறாகும். இருவகை நூல்கள் இப்பதினெட்டு நூல்களிலே ஆறு நூல்கள் அகப்பொருள் பற்றியவை. ஏனைய பன்னிரண்டு நூல்களும் புறப்பொருள் பற்றியவை. இப்பன்னிரண்டு நூல்களிலே முப்பாலிலும்., நாலடியிலும் அகப்பொருள் பற்றியும் கூறப்பட்டி ருக்கின்றன. ஆயினும் இவைகளிலே புறப்பொருள் பற்றிய செய்திகளே மிகுதியாகச் சொல்லப்படுகின்றன. ஆதலால் இவற்றைப் புறப் பொருள் நூல்களின் தொகுதியிலே சேர்ப்பது தான் சிறந்ததாகும். 1. திணைமொழி ஐம்பது; 2. ஐந்திணை ஐம்பது; 3. ஐந்திணை அறுபது (கைந்நிலை); 4. ஐந்திணை எழுபது; 5. திணைமாலை நூற்றைம்பது; 6. கார் நாற்பது; இவ் ஆறு நூல்களும் அகப்பொருள் பற்றியவை. இவைகள் குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் என்ற ஐந்து நிலத்தின் இயல்களைக் கூறுவன; அந் நிலத்திலே நடைபெறும் காதலன் காதலிகளின் ஒழுக்கங்களைப்பற்றி உரைப்பன. இன்பப் பகுதி ஒன்றைப் பற்றியே இவைகள் உரைக்கின்றன. மற்றைய பன்னிரண்டு நூல்களிலே பதினொரு நூல்கள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களைப் பற்றியும் உரைப்பன. இப்பதினோரு நூல் களிலே தலை சிறந்தது முப்பால்; அதாவது திருக்குறள். இதற்கு அடுத்தபடியாக நாலடியும், பழமொழியும் ஆகும். இவைகள் உயர்ந்த அறங்களை எடுத்துரைக் கின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும், மனித சமுதாயமும் பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகளை விரிவாகக் கூறுகின்றன. இவைகளே அறநூல்கள், நீதிநூல்கள், ஒழுக்க நூல்கள் ஆகும். இந்நூல்களைப் படிப்பதன் மூலம் பண்டைத் தமிழர்களின் சிறந்த ஒழுக்கங் களைக் காணலாம். அவர்களுடைய சமுதாய அமைப்பை அறியலாம்; அவர் களுடைய அரசியல் முறை, பழக்க வழக்கங்கள் இவற்றைத் தெரிந்து கொள்ளலாம். தமிழர்களின் உயர்ந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும் அறி வதற்கு இந்தப் பதினொரு நூல்களும் துணை செய்கின்றன. 1. முதுமொழிக் காஞ்சி; 2. திரிகடுகம்; 3. இன்னா நாற்பது; 4. இனியவை நாற்பது; 5. நான்மணிக்கடிகை; 6. சிறுபஞ்சமூலம்; 7. ஏலாதி; 8. ஆசாரக் கோவை; 9. நாலடியார்; 10. பழமொழி நானூறு; 11. முப்பால் என்னும் திருக்குறள். இவைகளே அந்நூல்கள். களவழி நாற்பது என்பது போர்க்களத்தைப் பற்றி மட்டும் பாடப்பட்டிருப்பது. சோழ மன்னன் ஒருவன் போரிலே பெற்ற வெற்றியைப் புகழ்வது. இந்நூலைப் படிக்கும்போது போர்க் களத்தின் பயங்கரமான காட்சியைக் காணலாம்; வளர்ந்து வரும் மனித சமுதாயத்திலே போர் என்பது ஒரு அநாகரிகம் என்ற உணர்ச்சியை இந்நூல் ஊட்டாமல் போகாது. முப்பால் - திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்றாகக் குறிப் பிட்டிருக்கும் முப்பால் என்பது திருக்குறள் அன்று என்று கூறுவோர் சிலர். முப்பால் என்பது திருக்குறள் அன்று வேறு ஏதோ சிறு நூலாக இருக்க வேண்டும் என்பது இவர்கள் கருத்து. திருக்குறள் தமிழ் நூல்களிலே மிகப் பழமையான நூல். சங்க காலத்து நூல்; மிகச் சிறந்த நூல்; ஒப்புயர்வற்ற நூல்; ஆதலால் அதைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல் வரிசையிலே சேர்ப்பது தவறு; இது திருக்குறளுக்குப் பெருமையளிப்பதாகாது என்பதே இவர்கள் கருத்து. இக்கருத்து தவறானது என்பதைத் திருக்குறளைப் பற்றிக் கூறும் இடத்திலே விளக்கப்பட்டிருக் கின்றது. முப்பால் என்பது திருக்குறள் தான் என்பதிலே ஐயம் இல்லை. பண்டைப் புலவர்கள் பலரும் திருக்குறளை முப்பால் என்ற பெயராலேயே குறிப்பிட்டிருக்கின்றனர். இதற்குத் திருவள்ளுவ மாலை ஒன்றே போதுமான சான்றாகும். வள்ளுவனார், முப்பால் மொழிந்த மொழி (மாமூலனார்) பாமுறைதேர் வள்ளுவர் முப்பால் (சீத்தலைச் சாத்தனார்) வள்ளுவர் முப்பால் (மருத்துவன் தாமோதரனார்) வள்ளுவனார் முப்பால் மொழி (நாகன்தேவனார்) வள்ளுவனார் முப்பாலை (கோதமனார்) வள்ளுவனார் முப்பாலின் (முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்) முப்பால் மொழிந்த முதற்பாவலர் (ஆசிரியர் நல்லந்துவனார்) முப்பாலின் நாற்பால் மொழிந்தவர் (கீரந்தையார்) வள்ளுவர்தாம் செப்பவரு முற்பாற்கு (பாரதம் பாடிய பெருந்தேவனார்) பிணக்கிலா, வள்ளுவர் வாய்மொழி முப்பால் (உருத்திரசன்ம கண்ணர்) திருவள்ளுவர், குறள் வெண்பாவில் சிறந்திடு முப்பால் (உறையூர் முதுகூத்தனார்) முப்பாலின் ஓதும், தருமம் முதல் நான்கும் (களத்தூர் கிழார்) வள்ளுவர் முப்பால் (அக்காரக்கனி நச்சுமனார்) முப்பாலில் தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறள் (தேனீக்குடிக் கீரனார்) வண்தமிழின் முப்பால் (ஆலங்குடி வங்கனார்) இவைகள் திருவள்ளுவ மாலையில் காண்பவை. இவ்வாறு பதினைந்து புலவர்கள் திருக்குறளை முப்பால் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆதலால் முப்பால் என்பது திருக்குறளே என்பது உறுதி. திருக்குறள் சங்க காலத்திற்குப் பின் பிறந்தது என்பதனால் அதன் பெருமை குன்றிவிடாது. நூல்களின் சிறப்பு பத்துப் பாட்டு, எட்டுத்தொகை நூல்களைப் போலவே தமிழர்களின் பண்டை வரலாற்றைக் காணப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் துணை செய்கின்றன. தமிழர்களின் படிப்படியாக வளர்ந்து வந்த உயர்ந்த பண்பாட்டை இந்நூல் களிலே காணலாம். தமிழர்கள் தனித்தனிக் குடும்ப வாழ்விலே எவ்வளவு சிறந்திருந்தனர் என்பதற்கு அகப்பொருள் நூல்கள் சாட்சிகளாகும். அவர்கள் ஆத்மீகத் துறையிலும், அரசியல் முதலிய புறத் துறைகளிலும் எவ்வளவு உயர்ந்த முறையைப் பின்பற்றி வாழ்ந்தனர் என்பதற்குப் புறப்பொருள் பற்றிய நூல்கள் சாட்சிகளாகும். சுருங்கக் கூறினால் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மக்கள் வாழ்க்கைக்கு வழி காட்டும் உயர்ந்த நூல்கள் என்று உரைக்கலாம். தமிழர்களின் பண்டைப் பண்பாட்டை அறிவதற்கு இவைகளை விடச் சிறந்த சாதனங்கள் வேறு எவையும் இல்லை. ஆதலால் தமிழர்களின் பண்டைப் பண்பாட்டைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை யெல்லாம் படிக்க வேண்டும். அவைகளைப் படிப்பதன் மூலம் பல உண்மைகளை நாம் காணலாம். இனி அந்நூல்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியே சுருக்கமாகத் தெரிந்து கொள்ளுவோம். திணைமொழி ஐம்பது ஐந்து திணைகளைப் பற்றிக் கூறும் ஐம்பது பாடல்கள் அடங்கிய நூல் இது. இதற்கே திணைமொழி ஐம்பது என்று பெயர். இந்நூலை இயற்றியவர் கண்ணன் சேந்தனார் என்பவர். இவர் தந்தையார் பெயர் சாத்தந்தையார். இதைத் தவிர இவருடைய வரலாறு வேறு எதுவும் தெரியவில்லை. ஐந்திணைகளைப் பற்றிக் கூறும் மற்ற நூல்களைக் காட்டிலும் இதற்கொரு தனிச் சிறப்பு உண்டு. இந்நூலிலே ஐந்திணைகளையும் வரிசையாக அமைந் திருக்கும் முறை சிறந்ததாகும். முதலில் குறிஞ்சித்திணை; குறிஞ்சி நிலத்தில் தான் காதலனும் காதலியும் முதல் முதலாகச் சந்திப்பார்கள். அவர்களிடம் காதல் பிறக்கும்; மணமக்களாவ தென்று உறுதி செய்து கொள்ளுவார்கள். இரண்டாவது பாலைத்திணை: இது காதலன் காதலியை விட்டுப் பிரிவதைப் பற்றிப் பேசுவது. காதலன், மணம் புரிவதற்கு முன்போ மணம் புரிந்துகொண்ட பிறகோ பொருள் தேடப் பிரிவான். அவளை அவன் மணம் புரிவதற்கு முன்பே அவள் பெற்றோர் அறியாமல் தன்னுடன் அழைத்துச் செல்வான். இவ்வாறு பிரிவை உணர்த்துவதே பாலைத் திணையாகும். மூன்றாவது முல்லைத்திணை: காதலன் பிரிந்ததனால் வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருத்தல். தன் உள்ளத்திலே எவ்வளவு துயரம் பெருகினாலும் அதை அடக்கிக்கொண்டு காதலன் வருகையை எதிர்பார்த்திருப்பாள் கற்புள்ள காதலி. இந்த நிகழ்ச்சியை உரைப்பதே முல்லைத்திணை. நான்காவது மருதத்திணை: இத்திணையிலே இல்லறம் நடத்தும் காதலன் காதலிகளுக்குள் நிகழும் ஊடல் கூறப்படும். எந்தெந்தக் காரணங்களினால் அவர்களுக்குள் ஊடல் தோன்றுகிறது என்றெல்லாம் சொல்லப்படும். ஐந்தாவது நெய்தல் திணை: காதலன் பிரிவுக்காகக் காதலி வருந்துதல். தன் துன்பத்தைக் காதலி வெளிப்படையாகக் கூறுவாள். இவைகளே ஐந்திணை ஒழுக்கங்கள். இவற்றைச் சுருக்கமாகக் கூறினால், கூடல், பிரிதல், இருத்தல், ஊடல், இரங்கல் என்று கூறிவிடலாம். மேலே காட்டிய வரிசைப்படியே இந்நூலில் ஐந்திணை களும் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு திணையைப் பற்றியும் பத்துப்பத்து வெண்பாக்கள் பாடப்பட்டிருக்கின்றன. இவ்வெண் பாக்கள் படிப்பதற்கு இனிமை யானவை; எளிமையானவை; அழகிய கற்பனைகள் அமைந்தவை. அகப்பொருளைப் பற்றிச் சொல்லும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே இது ஒரு சிறந்த நூல். பாட்டின் சிறப்பு இந்நூற் செய்யுள்களின் சிறப்புக்குச் சில உதாரணங்களைக் காண்போம். ஒரு காதலனும், காதலியும், கள்ள நட்புக் கொண்டு வாழ் கின்றனர். இதற்குக் களவு மணம் என்று பெயர். கள்ள நட்புக்கு பிறகுதான் அவர்கள் ஊரார் அறிய மணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்துவார்கள். அப்பொழுது கற்பு மணம் என்று பெயர். இவர்கள் களவு மணத் தம்பதிகளாய் வாழும்போது, காதலன் இரவு நேரத்திலே வருவான்; ஒரு குறிப்பிட்ட இடத்திலே தலைவியைக் கண்டு அளவளாவிச் செல்லுவான். இப்படிப் பல நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. இந்தக் களவு மணத்திலிருந்து மாறிக் கற்பு மணம்புரிந்து கொள்ளவேண்டும் என்பது தலைவியின் ஆவல்; அவளுடைய தோழியின் எண்ணமும் இதுதான். இந்த எண்ணத்தை ஒருநாள் தலைவனிடம் தெரிவிக்கின்றாள் தோழி. இந்த நிகழ்ச்சியைக் கூறும் செய்யுள் ஒன்று. அச்செய்யுள் மிகவும் சிறந்த கருத்துடன் அமைந்திருக்கின்றது. நன்மணம் கமழும் மலைச்சாரலிலே தினைப்புனங் காப்பவர்கள் திரிந்து கொண்டிருப்பார்கள்; அந்த மலைப் பாதையிலே நீங்கள் இனிமேல் வரவேண்டாம்; ஏனென்றால் அவர்களுக்கு இனிய மொழிகள் பேசத் தெரியாது; அவர்கள் கொல்லுதற்கு உதவும் வில்லைக் கையிலே பிடித்திருப்பார்கள்; நெருங்குகிறவர் களைக் குத்திக் கொல்லும் வேலும் வைத்திருப்பார்கள்; விரைந்து பாயக்கூடிய கணைகளையும் வைத்திருப்பார்கள். அவர்கள் கல்லிலே (மலையிலே) வாழ்கின்றவர்கள்; ஆதலால் அவர்கள் நெஞ்சம் கல்லாகத்தான் இருக்கும்; அவர்கள் எங்களைச் சேர்ந்தவர்கள் தாம்; ஆயினும் கொடியவர்கள். விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்; வரையிடை வாரன்மின்! ஐயா! --உரைகடியர்; வில்லினர்;வேலர்; விரைந்துசெல் அம்பினர்; கல்லிடை வாழ்நர் எமர். (பா. 5) இச்செய்யுள் தலைவியின் கருத்தைத் தலைவனுக்குக் குறிப்பாக எடுத்துக் காட்டுகின்றது. இரவில் வந்து போவது ஆபத்து; வெளிப்படையாகக் கற்பு மணம் புரிந்து கொண்டு வாழ்வதே சிறந்தது என்று குறிப்பிடுகின்றது. அன்றியும், தலைவி தலைவன்மீது கொண்டுள்ள அன்பையும் அறிவிக்கின்றது. கற்புள்ள மனைவி தன் காதலுனுக்கு எவ்வித துன்பமும் உண்டாகக் கூடாது என்பதிலே எவ்வளவு கவலை கொண்டிருப்பாள் என்பதற்கு இச்செய்யுள் ஒரு எடுத்துக்காட்டு. களவு மணம் தமிழர் பரம்பரை வழக்கம்; களவு இல்லாமல் கற்பு நிகழாது; இதுவே தமிழர் கொள்கை. ஆயினும், நாளடைவில் கற்பு மணத்தையே சிறப்பாக மதித்தனர். களவு மணத்தைப் பழிக்கவும் தொடங்கினர். ஆதலால் கள்ள நட்புள்ள காதலர்கள் விரைவில் கற்பு மணத் தம்பதிகளாகிப் பழிப்பின்றி வாழவே விரும்பினர். இந்த நிலை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் தோன்றிவிட்டது. இவ்வுண்மையை விளக்கும் செய்யுட்களை அகத்திணை நூல்களிலே காணலாம். யாழும், குழலும், முழவும் இயைந்தென வீழும் அருவி விறன்மலை நன்னாட! மாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்; ஊர் அறி கெளவைதரும். (பா. 7) யாழும், புல்லாங்குழலும், மத்தளமும் தம்முன் ஒத்து இசைப்பன போல அருவி நீர் ஒலித்துக்கொண்டு விழுகின்றது. இத்தகைய சிறந்த மலைநாட்டை யுடையவனே! அழகிய கண்களையுடைய தலைவியும் நீ இரவு நேரத்திலே வருவதற்குப் பொறுக்கமாட்டாள்; நானும் சம்மதியேன்; உன் செய்கை ஊரார் அறியும் பழிப்பையும் உண்டாக்கும் உனக்கும் தலைவிக்கும் உள்ள கள்ள நட்பு வெளிப் பட்டால் ஊரார் பழிப்பர். ஆதலால் விரைவில் தலைவியைப் பலரும் அறிய மணம் புரிந்துகொள் என்ற கருத்தையே தோழி இவ்விதம் தலைவனிடம் உரைத்தாள். கற்புள்ள பெண்ணுக்கு கணவனே தெய்வம்; அவனை விட்டால் அவளுக்கு வேறு கதியில்லை; இதுவே பழந்தமிழர் கொள்கை. இக்கொள்கையை வற்புறுத்துகிறது இந்நூல். மனைவி ஊடியிருக்கின்றாள். அவள் ஊடலைத் தணிக்கும் படி, காதலன் தோழியிடம் வேண்டிக் கொள்ளுகின்றான். அப்பொழுது அவனுக்குத் தோழி விடையளிக்கின்றாள்; அவ் விடையிலே இக்கருத்து அடங்கியிருக்கின்றது. செந்தாமரைகள் பூத்திருக்கின்ற வயல்களையுடைய மருதநிலத் தலைவனே! நாங்கள் உன்மேல் வருத்தப்பட்டு என்ன செய்யமுடியும்? என்னுடைய தலைவிக்கு நல்ல அழகைத் தந்தவனும் நீதான்! அந்த அழகைத் திருப்பி எடுத்துக் கொண்ட வனும் நீயேதான்! ஆதலால் எங்களால் ஆவது ஒன்றும் இல்லை; உன் விருப்பத்தின்படியே செய். செந்தாமரை மலரும் செவ்வயல் நல்ஊர, நொந்தால் மற்றுஉன்னைச் செயப்படுவதுஎன் உண்டாம் தந்தாயும் நீயே! தரவல்ல நல்நலம் கொண்டாயும் நீ ஆயக் கால் (பா. 36) இவ்வாறு காதலன் காதலியின் அன்பு நிறைந்த வாழ்க்கை முறையை எடுத்துக்காட்டுவதே இந்நூலாகும். ஆணும், பெண்ணும் இணைந்து ஒன்றுபட்ட உள்ளமுடன் வாழும் நிலை ஏற்பட்ட பிறகுதான் மக்களிடையிலே நாகரிகம் தழைத்தது; அறம், பொருள் வீடு பற்றிய எண்ணங்கள் எல்லாம் தோன்றி வளர்ந்தன. இவ்வெண்ணங்கள் தோன்றி வளர்வதற்கு அடிப்படை ஆண்பெண்களின் அன்பிலே தோன்றிய குடும்ப வாழ்வுதான். தெய்வ வணக்கம். தேவர்கள் வானுலகிலே வாழ்கின்றவர்கள். அவர்கள் எல்லா வல்ல வல்லமையும் படைத்தவர்கள்; அவர்களை வணங்கி வழிபாடு செய்தால் நாம் விரும்புவதைப் பெறலாம். இந்த நம்பிக்கை தமிழர்களிடம் குடி கொண்டிருந்தது. தேவர்களைப் பல வகையிலே மக்கள் வணங்கி வந்தனர். அவைகளில் நறுமணப் புகையிட்டு வணங்கும் வழக்கம் ஒன்று. இதைத்தான் தூபமிட்டு வணங்குதல் என்று கூறுவர். இன்றும் சாம்பிராணி, தசாங்கம், குங்கிலியம், ஊதுவத்தி முதலிய தூபங்களால் தெய்வங்களை வணங்குவதைக் காண்கிறோம். இது பழந்தமிழர் பண்பாடுதான். புகழ் மிகு சாந்துஎரித்து, புல் எரி ஊட்டிப் புகை கொடுக்கப் பெற்ற புலவோர்,---துகள் பொழியும் வான் உயிர் வெற்ப இரவின் வரல்வேண்டா யானை உடைய சுரம் (பா. 1) நீ வரும் வழியிலே யானை உண்டு. ஆதலால் நீ இனி இரவிலே வரவேண்டாம் என்று தலைவனுக்குக் கூறுகின்றாள் தோழி. அப்பொழுது அவனுடைய மலையிலே நடைபெறும் தெய்வ வழிபாட்டை எடுத்துரைக் கின்றான். சந்தனக் கட்டையை வெட்டிக் குவித்து நெருப்பூட்டி அப்புகையால் தேவர்களை வணங்குகின்றனர். இப்புகையைப் பெற்ற தேவர்கள், மழையைப் பெய்யச் செய்கின்றனர் என்ற கருத்துள்ளதே இச்செய்யுள். இதனால் மழை வேண்டித் தெய்வத்தை வணங்கும் வழக்கம் பண்டைக்காலத்தில் இருந்ததைக் காணலாம். நீதி மொழி அகத்திணை நூல்களிலும் நீதிகளை அமைத்துக் காட்டும் வழக்கம் உண்டு. நீதிகளை உவமானங்களாக உரைப்பார்கள். கடைஆயார் நட்பே போல் காஞ்சிநல் ஊர! உடைய இள நலம் உண்டாய்! (பா. 31) பரத்தையர் வீடு சென்று திரும்பி தலைவனிடம் தோழி சொல்லியது இப்பாட்டு. அவன் தலைவியின் பெண்மை நலத்தை நுகர்ந்தான். அவளுடைய அழகையெல்லாம் கவர்ந்து விட்டான். அதன் பின் அவன் பரத்தையர்களின் அழகிலே மயங்கி அவர்களிடம் சென்று இன்பம் நுகர்ந்து திரும்பினான். அப்பொழுது தான் தோழி அவனைப் பார்த்து இப்படிப் பேசினாள். காஞ்சி மரங்கள் நிறைந்த நல்ல ஊரையுடையவனே, தலையாயாரிடம் நட்புக்கொண்டால் அவர்கள் நமக்கு வேண்டுவனவற்றை உதவுவார்கள்; நமக்கு உதவுவதே அவர்கள் நோக்கமாக இருக்கும்; நம்மிடம் சுரண்டமாட்டார்கள். கடைப் பட்டவர்களின் நட்போ இதற்கு எதிரானது. அவர்கள் நமக்கு உதவ மாட்டார்கள். நம்மை மொட்டையடிப்பதே அவர்கள் கருத்து. நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் சுரண்டிக் கொள்ளுவார்கள். இதைப் போல நீயும் என் தலைவியின் இளமைப் பருவ அழகு முழுமையும் கொள்ளை கொண்டு விட்டாய்! என்பதே இந்த அடிகளின் பொருள். தலைவன், தலைவியின் அழகைக் கவர்ந்ததற்கு எடுத்துக் காட்டியிருக்கும் இவ்வுதாரணம் மிகவும் பொருத்தமானது. கடைப்பட்டவர்களிடம் நட்புக் கொள்ளு வதனால் பயனில்லை; அது ஆபத்தானது; என்ற அறிவையும் நாம் பெறுகின்றோம். திணைமொழி ஐம்பதில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகவும் சுவை யுள்ளவை. எல்லா வெண்பாக்களும், மோனையும் எதுகையும் அமைந்த இனிய வெண்பாக்கள். ஐந்திணை ஐம்பது இது ஐம்பது பாடல்கள் கொண்டது. ஐந்துதிணை யொழுக்கங்களைப் பற்றிக் கூறுவது. முதலில் முல்லைத் திணை, இரண்டாவது குறிஞ்சித்திணை, மூன்றாவது மருதத்திணை, நாலாவது பாலைத்திணை, ஐந்தாவது நெய்தல் திணை என்ற வரிசையில் அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு திணையைப் பற்றியும் பத்துப் பத்து வெண்பாக்கள் பாடப்பட்டிருக்கின்றன. ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர் என்பது இந்நூலின் சிறப்புப் பாயிரம். செந்தமிழின் பயனைப் பெற வேண்டுவோர் இந்த ஐந்திணையில் உள்ள ஐம்பது பாடல்களையும் படித்தறிய வேண்டும். அப்பொழுது தான் செந்தமிழின் சிறந்த பயனடையலாம்; இன்பத்தை நுகரலாம். இதுவே இதில் அடங்கிய பொருள். இந்நூலாசிரியர் பெயர் மாறன் பொறையானார் என்பது. மாறன் - பாண்டியன்; பொறையன் - சேரன். பாண்டியன் பெயரையும், சேரன் பெயரையும் சேர்த்து வைத்துக் கொண்ட பெயர் இது. பொறை என்பதற்குப் பொறுமை என்ற பொருளும் உண்டு. பொறையனார் என்றால் பொறுமையை உடையவர். மாறன் என்னும் பொறையனார் என்றும் பொருள் கூறலாம். இவரைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. இவர் பாடிய வேறு நூல்களும் இல்லை. இந்நூலின் செய்யுட்கள் அவ்வளவு கடினமானவையும் அல்ல; மிக எளிமை யானவையும் அல்ல; நடுத்தரமானவை. படிக்கப் படிக்கச் சுவை பயப்பனவே. இவைகள் கற்பனையிலும், கருத்திலும் சிறந்த செய்யுட்கள். இந்நூலின் பாடல் களைக் கொண்டு பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் காணலாம். பாட்டுச் சிறப்பு மலைநாளில் திரும்பி வந்துவிடுவேன் என்று காதலியிடம் உறுதிமொழி உரைத்துவிட்டுப் பொருள் தேடப் போயிருந்தான் காதலன். மழைக்காலம் வந்து விட்டது. அதைக் கண்டான் அவன். நான் சொல்லிய கார்காலம் வந்துவிட்டது; காதலி என்னைக் காணாமல் நெஞ்சங் கலங்குவாள்; விரைந்து செல்ல வெண்டும் என்று எண்ணினான். உடனே தேர்ப்பாகனிடம் கீழ் வருமாறு உரைத்தான். தேர்ப்பாகனே, தேர் விரைவாகப் போகட்டும். அவள் மழையால் செழித்திருக்கும் காட்டின் அழகைக் காண்பாள். கற்பின் சிறப்பால் தன் துக்கத்தை அடக்கிக் கொள்ளுவாள். கன்னத்திலே கையை ஊன்றிக்கொண்டு கவலைபடிந்த முகத்துடன் என்னை எதிர்பார்த்து நிற்பாள். ஆகையால் தேரை விரைவாய் ஓட்டுக என்றான். நூல்நவின்ற பாக! தேர் நொவ்விதாச் சென்றீக! தேன்நவின்ற கானத்து எழில் நோக்கித்-தான்நவின்ற கற்புத்தாள் வீழ்த்துக், கவுண்மிசைக் கைஊன்றி, நிற்பாள், நிலை உணர்கம் யாம். (பா. 10) நூல்களைக் கற்றறிந்த பாகனே! தேரை விரைவாகச் செல்லும்படி செய்க. மலர்களிலிருந்து தேன் சிந்துகின்ற காட்டின் அழகைக் கண்டு, தான் இளமை முதல் பழகிய கற்பென்னும் தாளைப் போட்டுக் கொண்டு, கன்னத்தின்மேல் கையை ஊன்றிக்கொண்டு நிற்பாள். அவள் நிலைமையை நாம் சென்று காண்போம். தாம் கூறிய உறுதி மொழியைக் காப்பாற்ற வேண்டும் என்ற கவலை அக்கால மக்களுக்கு உண்டு. காதலன் எங்கு சென்றாலும் தன் காதலியை மறப்பதில்லை. இக்கருத்தை இப்பாடலிலே காண்கின்றோம். மற்றொரு சிறந்த கருத்தமைந்த பாடலைக் காண்போம். காதலிக்கு வயதேறிவிட்டது. அவள் தலைமயிர்கள் நரைத்து விட்டன; காதலனுக்கு மட்டும் இளமைப் பருவம் குறையவில்லை. ஆதலால் அவன் தன் ஆசையை நிறை வேற்றிக் கொள்ள வேசையர் சேரிக்குச் சென்றான். சில நாட்கள் அங்கே தங்கி யிருந்து திரும்பினான். காதலி தன்மீது கோபங் கொண்டிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் அவள் ஊடலைத் தணிப்பதற்காக அவளிடம் தூதனுப்பினான். அந்தத் தூதுவனிடம் தலைவி கூறுகின்றதாக அமைந்துள்ளது அச் செய்யுள். தலைவனிடம் கோபித்துக் கொள்ளுவதற்கு எனக்கென்ன தகுதியிருக் கின்றது? ஒரு காலத்திலே எனது கூந்தல் மெல்லிய கருமணலைப்போல அசைந்து தொங்கிக் கொண்டிருந்தது. கண்ணுக்கு அழகாகவும் இருந்தது. இன்றோ அக்கூந்தல் வெண்மணலைப் போல நிறம் மாறிவிட்டது. ஆகவே நான் கிழவியாகிவிட்டேன். இனி எனக்கென்ன கோபம்; நான் ஏன் தான் கோபிக்கப் போகின்றேன்? தண்வய லூரான் புலக்கும் தகையமோ! நுண் அறல் போல நுணங்கிய ஐம்கூந்தல், வெண்மணல் போல நிறந்திரிந்து வேறு ஆய வண்ணம் உடையேம், மற்று யாம். (பா.27) இப்பாடல் பண்டைக்காலப் பெண்ணின் இயல்பை உணர்த்துவது, தன் கணவன் செய்தது தவறு என்று தெரிந்தும், அவனைத் தவறு செய்யாமல் தடுக்கும் இயல்பு தன்னிடம் இல்லையே என்று வருந்தினாள் தலைவி. ஒவ்வொருவரும் தமது இரகசியம் வெளிப்படாமல் காப்பாற்றிக் கொள்வதிலே கவலையுள்ளவர்கள். தமது இரகசியத்தை மற்றவர்கள் கண்டு கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு நேர்ந்துவிட்டால் அப்பொழுதுகூட விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எதையாவது பொருத்தமாகச் சொல்லித் தப்பித்துக் கொள்ளுவார்கள். இது மனித இயல்பு. இப்படிச் செய்வதிலே ஆண்களைக் காட்டிலும் பெண்கள் மிகவும் திறமைசாலிகள். இவ்வுண்மையை இந் நூலின் செய்யுள் ஒன்றால் காணலாம். ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி ஒன்றைத் தலைவி, தன் தோழியிடம் உரைப்பதாக அமைந்திருப்பது அச்செய்யுள். அத் தலைவி தன் காதலனோடு கள்ள நட்புக் கொண்டிருப்பவள். இன்னும் அவளுக்குக் கற்பு மணம் நடைபெறவில்லை. கணவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்ச் சோலையைப் பார்த்து அழுது கொண்டிருந்தேன். அதனால் என் கண்கள் சிவந்து விட்டன. அப்பொழுது என் தாய் வந்தாள். எனது முகத்தைப் பார்த்தாள். ஒளியுடன் இருந்த என் முகம் வாடியிருப்பதைக் கண்டாள். உடனே, உனக்குண்டான துன்பம் யாது? ஏன் அழுதிருக்கின்றாய்? என்றாள். கடல் அலை வந்து எனது விளையாட்டு மணல் வீட்டை கலைத்து விட்டது என்றேன். கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில் நோக்கி உண்கண்சிவப்ப அழுதேன், ஒளிமுகம் கண்டு அன்னை எவ்வம் யாது என்னக் கடல்வந்து என் வண்டல் சிதைத்தது என்றேன். (பா. 44) இது பெண்களின் திறமையைக் காட்டும் சிறந்த பாடல், இது போன்ற இனிய பாடல்கள் இந்நூலிலே இன்னும் பல உண்டு. பழக்க வழக்கங்கள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந் நூலிலே காணலாம். கருமேகம் கண்ணனுடைய நிறத்தைக் கொண்டிருந்தது; மின்னல் முருகனுடைய வேற்படையின் ஒளியைப் போலிருந்தது; என்று கூறுகின்றது ஒரு செய்யுள். மல்லர்க் கடந்தான் நிறம்போன்று இருண்டு எழுந்து, செல்வக் கடம்பு அமர்ந்தான் வேல் மின்னி. மல்லர்களை வென்ற கண்ணனுடைய நிறத்தைப் போலக் கருத்து எழுந்து சிறந்த கடம்ப மலரை விரும்பிய முருகனுடைய வேலைப்போல மின்னி என்பதே அச்செய்யுள். முருகனுக்கு ஆடு வெட்டி, இரத்தத்தைச் சிந்திப் பூசை போடுவது பண்டைக் கால வழக்கம். மறியீர்த்து உதிரம்தூய் வேலன் தரீஇ வெறியோடு அலம் வரும் யாய். (பா.20) வேலைக் கையிலேந்தி ஆடுகின்ற பூசாரியை அழைத்து ஆட்டுக் குட்டியை அறுத்து, அதன் இரத்தத்தை நாற்றிசை களிலும் சிந்தி, இவ்வாறு முருகனுக்குப் பூசை போடுவதாகிய தொழிலில் ஈடுபட்டு வருந்துகின்றாள் எனது தாய். இறந்த வீரர்களுக்கு அவர்களின் நினைவாகக் கல் நடுவார்கள். இது பண்டை வழக்கம், இதனை நடுகல்-----விரிநிழல் கண்படுக்கும் வெம்கானம் என்பதனால் காணலாம். வீரர்களுக்காக நடப்பட்டிருக்கும் கல்லின் விரிந்த நிழலிலே பேய் படுத்துறங்கும் கொடிய கானகம் (பா. 35) என்பதே இதன் பொருள். காரமான மருந்தைப் போட்டுப் புண்ணை ஆற்றும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. இதனை இந்நூலின் 24-வது பாட்டிலே பார்க்கலாம். புகழுடன் வாழ்வது மக்கள் கடமை. பிறர் துன்பத்தைக் களைந்து உதவி செய்வதே நல்லறம். அந்த நல்லறமே புகழைத் தரும். இந் நீதியையும் இந்நூல் உணர்த்துகின்றது. மிக்க மிகுபுகழ் தாங்குபவோ? தற்சேர்ந்தார் ஒற்கம் கடைப்பிடி யாதார்? (பா. 48) “தன்னை அடைந்தவர்களின் தளர்ச்சியைத் தன்னுடைய தாகம் கொண்டு அதைக் களைய முன்வராதவர் மிகுந்த புகழைப் பெற முடியுமா?இதனால் ஒரு சிறந்த நீதியைக் காணலாம். இந்நூல் தமிழர்களின் தனிப்பட்ட வாழ்க்கைச் சிறப்பை காதலன் காதலிகளின் அன்பு வாழ்க்கையை எடுத்துரைக்கின்றது. ஐந்திணை அறுபது ஐந்து திணை ஒழுக்கங்களைப் பற்றிக் கூறும் அறுபது பாடல்கள் அடங்கியது. இதற்கே ஐந்திணை அறுபது என்று பெயர். இந்நூலைக் கைந்நிலை என்னும் பெயருடன் வெளி யிட்டிருக்கின்றனர். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்ற வரிசையிலே ஐந்து திணை ஒழுக்கங்களைப் பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றன. இந்நூலிலே இப்பொழுது சிதையாமல் முழு உருவில் 43 வெண்பாக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு திணையைப் பற்றியும் பன்னிரண்டு வெண்பாக்கள் இந்நூலில் பாடப்பட்டிருக்கின்றன. குறிஞ்சித் திணையைப் பற்றிய பன்னிரண்டு பாடல்களில் முதலும் எட்டாவதும் சிதைந்திருக்கின்றன; பத்து வெண்பாக்களே முழு உருவில் உள்ளவை. பாலைத் திணையைப் பற்றிய பன்னிரண்டு வெண்பாக்களில் 2, 5 எண்ணுள்ள வெண்பாக்கள் சிதைந் திருக்கின்றன. 3, 4, 8 ஆகிய மூன்று வெண்பாக்கள் இல்லை. 7 வெண்பாக்கள் தாம் முழு உருவில் இருக்கின்றன. முல்லைத் திணையைப்பற்றிய வெண்பாக்களில் மூன்றே வெண்பாக்கள் தாம் முழுசாக இருக்கின்றன. மூன்று முதல் பதினொன்று வரையில் உள்ள ஒன்பது வெண்பாக்கள் அழிந்து விட்டன. மருதத்திணை யிலே இரண்டாவது வெண்பா மட்டும் சிறிது சிதைந்திருக்கின்றது. ஏனைய பதினொன்றும் சிதைவின்றி அப்படியே இருக்கின்றன. நெய்தல் திணையைப்பற்றிய பன்னிரண்டு வெண்பாக்களும் அப்படியே யிருக்கின்றன. மூன்றாவது வெண்பாவில் இரண்டாவது அடியில் ந என்ற ஒரு எழுத்து மட்டும் சிதைந்திருக்கின்றது. ஆதலால் இதைச் சிதைவு என்று சொல்ல முடியாது. அகத்திணை நூல்களிலே இதுவும் ஒரு சிறந்த நூல்: ஒவ்வொரு நிலத்திலும் உள்ள இயற்கைக் காட்சிகளை அழகாக எடுத்துரைக்கின்றது. இந்நூற் பாடல்கள் முழுவதும் கிடைத்தால் நன்றாக இருக்கும். இந்த நூலை இயற்றிய ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இந்நூலின் அறுபதாவது பாட்டிலே தென்னவனும் கொற்கை நகரும் காணப்படுகின்றன. இச்செய்யுள் பாண்டியன் வெற்றியைப் பாராட்டுகின்றது. இதைக் கொண்டு இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்த ஒரு புலவர் என்று எண்ணலாம். வெந்த புனத்துக்கு வாசம் உடைத்தாகச் சந்தனம் ஏந்தி அருவி கொணர்ந்திடூஉம் (பா. 27) தீயால் வெந்த புனத்திலே, அத்தீயில் சிக்கி மடிந்த உயிர்களின் பிணநாற்றம் வீசுகின்றது. அந்தப் பிணநாற்றம் மறையும்படி, மலையிலிருந்து விழும் அருவிநீர் சந்தனத்தை ஏந்திக்கொண்டு வருகின்றது என்பது குறிஞ்சித் திணையின் சிறப்பைக் குறித்த பாடல். பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர் காய்சின மந்தி பயின்று கனிசுவைக்கும், பாசி படர்ந்து பசுமையாகக் காணப்படுகின்றன சுனை; அதன் பக்கத்தில் உள்ள பள்ளத்திலே ஊறிக் கிடக்கும் பழைய தண்ணீர்; அந்த நீரைச் சினமுள்ள குரங்கொன்று அள்ளி அருந்துகின்றது; மரத்தில் உள்ள கனியையும் பறித்துத் தின்று சுவைக்கின்றது; இதுவும் குறிஞ்சி நில இயற்கைக் காட்சி. இந்நூலில் காட்டப்படும் வருணனைகள் இவ்வாறு இயற்கை யாகவே அமைந்திருக்கின்றன. கருத்துள்ள செய்யுட்கள் காதலன் ஒவ்வொரு நாளும் இரவிலே காதலியைக் கண்டு கலந்துமகிழ வருகின்றான். அதுபற்றித் தலைவி கவலை அடை கின்றாள். அவள் இரவில் வருவதனால் அவனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் என்ன செய்வது என்பது தான் அவள் கவலை. அவள் தன் காதலன் வரும் வரையிலும் உறங்குவதில்லை. அவளுடைய உள்ளக் கவலை உறக்கத்தைக் கெடுத்து வந்தது. இனி வெளிப் படையாக மணம் புரிந்துகொண்டு வாழ்ந்தால் தான் கவலையற்று வாழ முடியும் என்று அவள் கருதினாள். ஆதலால் தன் உள்ளத்தை அவள் தன் தோழியிடம் உரைக்கின்றாள். இந்த முறையிலே அமைந்துள்ள ஒரு செய்யுள். தோழியே! நமது தலைவன் பொன்போன்ற பூங்கொத்துக் களையுடைய வேங்கை மரங்கள் நிறைந்த மலை நாட்டை யுடையவன். அவன் மின்னலைப் போல ஒளிவீசி இருளை ஓட்டுகின்ற வேலைக் கையிலேந்தி இந்த இருட்டிலே இப்பொழுது வந்து கொண்டிருப்பான். அவன் மலைக்காட்டு வழியிலே, வந்து கொண்டிருக்கும் இந்த நள்ளிரவிலே, எனது கண் இமைகள் ஒன்றோடு ஒன்று எப்படித்தான் பொருந்தும்? அவனை நினைத்து என் கண்கள் உறங்க மறுக்கின்றன. பொன் இணர் வேங்கைப் புனம்சூழ் மலைநாடன், மின்னின் அனையவேல் ஏந்தி, இரவினில் இன்னே வரும்கண்டாய் தோழி! இடையாமத்து என்னை இமைபொருந்து மாறு! (பா. 10) இச் செய்யுளிலே நெஞ்சிலே கவலையுள்ளவர்கள் நிம்மதியாகத் தூங்க மாட்டார்கள் என்ற உண்மை அடங்கி யிருக்கின்றது. மற்றொரு செய்யுள் மிகவும் அருமையானது. கணவன் மேல் கருத்து வேறுபட்ட காதலிக்குத் தோழி சமாதானம் கூறுவதாக அமைந்த செய்யுள் அது. கணவன் மனைவிகளுக்குள் கருத்து வேறுபாடு வளர்ந்தால் அவர்கள் வாழ்க்கையிலே இன்பம் இருக்காது. ஆகையால், காதலனுடைய நண்பர்களும், காதலியின் நண்பர்களும், அவர்கள் இருவருக்கும் சிறிது மனவேற்றுமை ஏற்பட்டால் கூட உடனே அதைப் போக்க முயற்சிப்பார்கள். இதுவே தமிழ் மக்களின் பண்பு. காதலன் பொருள் தேடப் போயிருக்கின்றான். அவன் பொருளைப் பெரியதாக மதித்துத் தன்னை விட்டுப் பிரிந்ததைப் பற்றிக் காதலியின் உள்ளத்திலே ஒரு ஐயம் உண்டாகின்றது. நம்மைப் பற்றி அவன் உள்ளத்திலே வைத்திருந்த அன்பு குறைந்து விட்டதோ என்று எண்ணினாள். தலைவியின் இக்கருத்தைக் கண்ட தோழி அவளுக்குச் சமாதானம் கூறினாள். கள்வர்கள் திரிந்துகொண்டிருக்கும் பாலைவனத்தைக் கடந்து பொருள் தேடச் சென்றார் காதலர். அவர் உள்ளம் வேறுபட்ட காலத்தில்தான் நம்மைவிட்டுப் பிரியத் துணிந்தார், என்று நினைக்கின்றாய் நீ! ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த தலைவியே! நீ அப்படி நினைக்காதே! அவர் நம்மிடம் கொண்ட அன்பில் சிறிதும் குறைந்தவர் அல்லர். துன்பந்தரும் மலைப் பிளவுகளைக் கடந்து பொருள்தேடச் சென்றவர், நாம் காணும்படி விரைவில் வருதலை நீ காண்பாய். கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர் உள்ளம் பிரிந்தமை நீ அறிதிஒள் இழாய்! தொல்லை விடர் அகம் நீந்திப் பெயர்ந்தவர், வல்லை நாம் காணும் வரவு. (பா. 22) இச்செய்யுளிலே உன்னுடன் சேர்ந்து இல்லறத்தை இன்பமுடன் நடத்து வதற்காகவே பொருளீட்டச் சென்றார். ஆதலால், அவர் அன்பிலே ஐயங் கொள்ளாதே என்று கூறும் கருத்தும் அமைந்திருப்பதைக் காணலாம். பொய்யை வெறுத்தல் பொய் சொல்வது தவறு. பொய் சொல்வதை நல்லவர்கள் வெறுப்பார்கள். பொய்யர்களை மக்கள் மதிப்பதில்லை. அவர் களோடு முகங்கொடுத்துப் பேசவும் முன்வரமாட்டார்கள். இன்றும் பொய் புகல்வோரைப் பொதுமக்கள் இகழ்ந்துரைப் பதைப் பார்க்கின்றோம். இது பண்டைத் தமிழர் பண்பாகும். காதலன் பரத்தையர் வீட்டுக்குப் போய்விட்டான். சில நாட்கள் கழித்து வீட்டிற்குத் திரும்ப நினைத்தான். திடீரென்று திரும்பிவந்து வீட்டுக்குள் புகுந்தால் காதலியின் வரவேற்பைப் பெறமுடியாது என்பது அவனுக்குத் தெரியும். ஆதலால் அவன் பாணனை அனுப்பிக் காதலிக்குச் சமாதானம் கூறும்படி செய்தான். தலைவனால் தூதாக அனுப்பப்பட்டு வந்த பாணன், தலைவியை அடைந்து ஏதோதோ பொய்யும் புளுகும் அளந்தான். தலைவன் இனித் தவறு செய்ய மாட்டான். அவன் இப்பொழுது செய்த குற்றத்திற்காக வருந்துகின்றான்; இக் குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டுகின்றான். இனி வேசையர் வாழும் திக்கைத் திரும்பிப் பார்ப்பதே இல்லையென்று உறுதி கூறுகின்றான் என்றெல்லாம் சொன்னான் பாணன். பாணன் இப்படிச் சொல்வது புதிதன்று. இதற்கு முன் எத்தனையோ தடவை தலைவன் இவ்வாறு வாக்குறுதி தந்தது உண்டு. இது தலைவிக்குத் தெரியும். ஆதலால் பாணன் கூறுவது பொய்யுரை என்றே அவள் நினைத்தாள். நினைத்ததும் அப்பாணனைக் கடிந்து கொள்ளுகின்றான். பயம்இல் யாழ்ப்பாண! பழுதாய கூறாது எழு! நீபோ, நீடாது மற்று! (பா. 46) பயனற்ற சொற்களைப் பேசும் யாழ் வாசிக்கும் பாணனே! குற்றமுள்ள பொய்மொழிகளைப் பேசாமல் நீ எழுந்து போ! இங்கே தாமதிக்காதே. பொய்ப்பாண! இருக்க! எம் இல் உள் வரல் (பா. 47) பொய் சொல்லும் பாணனே! அப்படியே இரு! எம் வீட்டுக்குள்ளே வர வேண்டாம். இவ்விரண்டு செய்யுட்களும் பொய் பேசுவதைத் தமிழர்கள் எவ்வளவு வெறுத்தனர் என்பதைக் காட்டும். பல்லி சொல்வதைத் தமிழர்கள் நம்பினர். பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு என்று எண்ணினர்; இதனை இந்நூலின் 18-வது செய்யுளில் அறியலாம். இத்தகைய பல கருத்துக்கொண்ட சிறந்த நூல் ஐந்திணை அறுபது. ஐந்திணை எழுபது இது ஐந்து திணைகளைப் பற்றியும் கூறும் எழுபது வெண்பாக்கள் கொண்டது. ஆதலால் ஐந்திணை எழுபது என்ற பெயர் பெற்றது. குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசையிலே ஐந்து திணைகளைப் பற்றியும் கூறுகின்றது; ஒவ்வொரு திணையைப் பற்றியும் பதினான்கு பாடல்கள் அமைந்திருக்கின்றன. இந்நூலில் இன்றுள்ள வெண்பாக்கள் அறுபத்தாறு தான். முல்லையைப் பற்றிய பாடல்களில் இரண்டு வெண்பாக்கள் இல்லை. நெய்தல் பற்றிய பாடல் களிலே இரண்டு வெண்பாக்கள் இல்லை. இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உண்டு. இது விநாயகரைப் பற்றியது. இக் கடவுள் வாழ்த்துச் செய்யுளின் நடையும், போக்கும். பார்த்தால் நூலாசிரியரால் பாடப்பட்டது அன்று எனத் தெரிகின்றது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய காலத்தில் விநாயகர் என்ற தெய்வம் இருந்ததாகத் தெரிய வில்லை. ஆதலால் பிற்காலத்தார் யாரோ இந்த வாழ்த்துப் பாடலைச் செய்து இதனுடன் இணைத்து விட்டனர். இந் நூலைச் செய்த ஆசிரியர் பெயர் மூவாதியர். இவரைப் பற்றிய வரலாறு ஒன்றும் தெரியவில்லை. இவர் பாடிய வேறு நூல்களைப் பற்றியோ, செய்யுட் களைப் பற்றியோ ஒன்றும் காணக் கூடவில்லை. இந்நூற் பாடல்களிலே, இயற்கைக் காட்சிகளையும், இனிமைகளையும் காணலாம். அழகிய கற்பனை களும் அமைந்திருக்கின்றன. செய்யுட் சிறப்பு தலைவியிடம், அவள் காதலனைப் பழித்துப் பேசினாள் தோழி. அதைத் தலைவியால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. தலைவன் இரக்க சிந்தை படைத்தவன்; அவன் என்னை என்றும் கைவிட்டுவிட மாட்டான்; அவன் தம்மைக் கைவிட்டாலும், நாமாக அவனை விட்டுப் பிரியமாட்டோம் என்று கூறினாள். காட்டுப் பசு ஒன்று மேய்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு குரங்கு, தானே பழுத்து முதிர்ந்த பலாப் பழத்தின் சுவைகளை நன்றாக தின்றது. பழம் சாப்பிட்டபின் பால் சாப்பிட வேண்டும் அல்லவா? ஆகையால் அந்த மந்தி, அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுவின் மடியிலே வாய் வைத்துப் பால் குடிக்கத் தொடங்கியது. பசு, அந்தக் குரங்கைத் திரும்பிப் பார்க்கவில்லை. தன் கன்றுதான் பால் குடிக்கிறது என்று நினைத்துக்கொண்டு பாலைச் சுரந்து நின்றது. இத்தகைய பார்க்கத் தகுந்த காட்சியமைந்த அழகிய மலைநாடன் அவன். அவனை எக்காலத்திலும் நம் உயிருள்ள வரையிலும் விட்டுப் பிரிவதில்லை என்றாள் தலைவி. இப்பொருள் பொதிந்த பாட்டுத்தான் கீழ் வருவது. மன்றப் பலவின் சுளைவிளை தீம்பழம் உண்டுவந்து மந்தி, முலைவருடக், கன்று அமர்ந்து ஆமா சுரக்கும் அணிமலை நாடனை யாமாப் பிரிவது இலம் (பா. 4) இச் செய்யுளில் பசுவின் தன்மை குறிக்கப்பட்டுள்ளது. அது விரும்பினால் தான் தன் கன்றுக்குப் பால் தரும்; விரும்பா விட்டால், கன்று ஊட்டினால்கூட, பாலைச் சுரக்காமல் அடக்கிக் கொள்ளும்; இத்தன்மை பசுவுக்கு உண்டு. மற்றொரு பாட்டு மருத நிலத்தில் நடக்கும் நிகழ்ச்சியை உரைப்பது. கணவன் மனைவியை விட்டுச் சென்று பரத்தையர் வீட்டில் வாழ்கின்றான். அவன் தன் இல்லத்திற்குத் திரும்ப நினைத்தான். தன் பிரிவால் மனைவி கோபங் கொண்டிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். திடீரென்று வீட்டுக்குள் நுழைந்தால் இல்லக் கிழத்தியின் சினத்திற்கு இலக்காக வேண்டும் என்று எண்ணினான். மனைவியின் சினத்தைத் தணித்து அவள் உள்ளத்திலே சாந்தம் பிறந்த பின்பே வீட்டுக்குள் நுழையலாம் என்று முடிவு செய்தான். ஊடியிருக்கும் காதலியின் ஊடலைத் தணிக்க அக்காலத்திலே பாணர்களைத் தூதாக அனுப்புவார்கள். அவ்வழக்கபடி காதலன் தனக்கு வேண்டிய ஒரு பாணனைக் காதலியிடம் சமாதானத் தூதாக அனுப்பினான். தூதாக வந்த பாணன், அவளிடம் ஏதேதோ சமாதானப் பேச்சுப் பேசினான். தலைவனைப் பற்றி அவன் சொல்லியதை அவள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை அறிவிக்கும் வகையிலே அவள் தூதனிடம் பேசினாள். யாணர்நல் லூரன் திறம்கிளப்பல்! என்னுடைய பாண! இருக்க; அதுகளை; நாண் உடையான்! தன்உற்ற எல்லாம் இருக்க, இரும்பாண! நின்உற்றது உண்டேல் உரை. (பா. 48) என்பதே அச் செய்யுள். இச் செய்யுளிலே, கணவன் மேல் சினங் கொண்ட மனைவி, தன் வெறுப்பை வெளியிடும் அழகைக் காணலாம். எனது அருமையான பாணனே! புதிய செல்வங்கள் வளரும் சிறந்த ஊர்களை யுடைய தலைவனது மேன்மையைப் பற்றி என்னிடம் அளக்கவேண்டாம்! சும்மா இரு! அந்தப் பேச்சை விட்டு தள்ளு! அவன் பிற பெண்களைப் பார்க்க வெட்கப் படுகிறவன்தான்! அவன் அடைந்த துன்பமெல்லாம் இருக்கட்டும்! பெரிய யாழை உடையவனே! அவனைப் பற்றிச் சொன்னது போதும்! உனக்கு ஏதேனும் குறையிருந்தால் கூறு! உன்மீது எனக்கு வெறுப்பில்லை. உன் குறையைத் தீர்க்கின்றேன். அவனைப்பற்றி மட்டும் சொல்ல வேண்டாம்! இதுவே இப் பாட்டில் அமைந்துள்ள பொருள். இச்செய்யுளிலே தமிழர்களின் சிறந்த பண்பொன்றைக் காணலாம். எய்தவனிருக்க அம்பை நோவது அறியாமை என்றொரு பழமொழியுண்டு. குற்ற வாளியை விட்டு விட்டுக் குற்றவாளியால் தூண்டப்பட்டவனைக் கோபித்துக் கொள்வது அறியாமை என்பதே இப் பழமொழியின் கருத்து. இக்கருத்துக்கு இலக்காகாதவர்கள் நல்ல குடியிலே பிறந்த பெண்கள். அறிவுள்ள பெண்களும் இக்கருத்துக்கு இலக்காக நிற்க மாட்டார்கள். இந்த உண்மையை இப்பாடலிலே காணலாம். அறியாத பெண்களாயிருந்தால், தூது வந்த பாணன் மேல் சீறி விழுவார்கள். இந்தத் தலைவி அப்படிச் செய்யவில்லை. பாணன்மீது பரிவு காட்டினாள். குற்றம் புரிந்த கொழுநனையே கோபித்துக் கொண்டாள். இச் சிறந்த கருத்தமைந்த செய்யுள் இது. இதுபோன்ற இன்னும் பல செய்யுட்களை இந்நூலிலே காணலாம். சிறந்த பல செய்திகள் அறிவுள்ளவர்களின் நட்பே சிறந்தது. அது எப்பொழுதும் அழியாமல் நிலைத்து நிற்கும். அவர்கள் நட்பே என்றும் வலிமை யுள்ள துணையாக நிற்கும். மேலும் மேலும் பல நன்மைகளைத் தரும். சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி வலியாகிப் பின்னும் பயக்கும். (பா. 5) கற்புள்ள பெண்கள் கணவனையே உயிர் என்று கருதி யிருந்தனர். அவன் உயிர் வாழ்ந்தால்தான் தாம் உயிர் வாழ்வர். அவன் வீழ்ந்தால் தாமும் வீழ்வர். இதை விளக்கும் செய்யுள் கீழ்வருவது: குறை ஒன்று உடையேன்மன் தோழி! நிறையில்லா மன்உயிர்க்கும் ஏமம் செய்ய வேண்டும்! இன்னே அராவழங்கும் நீள்சோலை நாடனை, நம் இல் இராவாரல் என்பது உரை! (பா. 14) தோழியே எனக்கு ஒரு குறையுண்டு; அது நின்னால் தான் முடியவேண்டும்; என்பால் நிலையில்லாமல் இருக்கும் தோழியே எனக்கு ஒரு குறையுண்டு, அது நின்னால் தான் முடியவேண்டும்; என்பால் நிலையில்லாமல் இருக்கும் என்னு யிர்க்கு ஒரு பாதுகாவலைச் செய்யவேண்டும். இப்பொழுதே அதைச் செய்ய வேண்டும். நமது தலைவன் பாம்புகள் திரிந்து கொண்டிருக்கின்ற நீண்ட சோலை யையுடைய நாட்டின் தலைவன்; அவளிடம் அச்சோலையை இரவிலே கடந்து நம் வீட்டுக்கு வரவேண்டாம் என்று கூறவேண்டும் என்றாள். இதனால் காதலும் கற்பும் நிறைந்த மாதரின் இயல்பைக் காணலாம். முயற்சியினாலேயே செல்வம் உண்டாகும். பெரிய சிறந்த முயற்சிக்கு ஏற்றாற்போல் சிறந்த செல்வம் கைகூடும். இதுவே பண்டைத்தமிழர் நம்பிக்கை. பெருந்தகு தாளாண்மைக் கேற்ப அரும்பொருள் ஆகும். (பா. 29) என்பது இவ்வுண்மையைத் தெரிவிக்கின்றது. செல்வத்திலேயே சிந்தையைச் செலுத்தியவர்கள் எப்பொழுதும் அதைச் சேர்ப்பதிலேயே குறியாய் இருப்பார்கள்; அவர்கள் சிறிதும் இரக்கம் காட்டமாட்டார்கள்; தயவு தாட்சண்யம் என்பது எள்ளளவும் அவர்களிடம் இராது. தாட்சண்யம் தனநாசம் என்பதைப் பின்பற்றி நடப்பர். மெல்லியல் கண்ணோட்டம் இன்றிப் பொருட்கு நில்லாத உள்ளத் தவர் (பா. 30) இரக்கத் தன்மையாகிய கருணை சிறிதும் இல்லாமல், பொருள் தேடுவதிலேயே விருப்பங்கொண்டு, நம்மிடம் அன்பு நிலைபெறாத உள்ளம் உடையவர் என்பதால் இவ்வுண்மையைக் காணலாம். இல்லறமே சிறந்ததாகும். அறிஞர்கள், ஆராய்ச்சியுள்ளவர் கள், இல்லறம், துறவறம் இரண்டிலே இல்லறமே சிறந்தது என்று கூறினர். ஆதலால் அதுவே அன்புடன் விரும்பத்தக்கதாகும். உள்நாட்டம் சான்றவர் தந்த நசையிற்று (பா. 53) ஆழ்ந்த ஆராய்ச்சி நிறைந்த அறிஞர்கள் சிறந்தது என்று ஏற்படுத்தியது; அன்புடன் கூடியது என்பது இவ்வுண்மையை விளக்கும். பழக்க வழக்கங்கள் பண்டைக்காலப் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலால் அறியலாம்: பசுக்கள் இடையர்கள் ஊதும் கொன்றைக் குழலின் இனிய ஓசையைச் சுவைக்கும். அவர்கள் அக்குழலை ஊதினால் பசுக்கள் கூடும்; அவர்கள் ஊதிக்கொண்டே சென்றால், அவர்களைத் தொடர்ந்து அவைகள் செல்லும். கொன்றைக் குழல் ஊதிக் கோவலர் பின் நிரைத்துக் கன்று அமர் ஆயம் புகுதர (பா. 22) கொன்றைக்குழலை ஊதிக்கொண்டு போகும் இடையர் கள் பின்னே, வரிசையாக, கன்றை விரும்பும் பசுமந்தை ஊர்க்குள் நுழைய என்பதனால் பசுக்களின் இசை உணர்ச்சியை அறியலாம். தும்மல் இயல்பாக வருவதன்று, யாரோ நம்மை நினைப்ப தனால்தான் தும்மல் வருகின்றது என்பது நம்பிக்கை. இந் நம்பிக்கையுள்ளவர்கள் இன்றும் இருக்கின்றனர். பண்டைத் தமிழர்களிடமும் இந்த நம்பிக்கை இருந்தது. இதனை இந்நூலின் நாற்பதாவது செய்யுளால் அறியலாம். பெண்களுக்கு இடது கண் துடித்தால் நன்மையுண்டு. கனவுக்குப் பலன் உண்டு. நெஞ்சத்திலே எழும் நினைப்புக் காரணமாக உடம்பின் உறுப்புக்களிலே மாற்றம் ஏற்படும். பல்லி சொல்லுக்குப் பலன் உண்டு. இத்தகைய நம்பிக்கைகள் பழந் தமிழர்களிடம் இருந்தன. பூம்கண் இடம்ஆடும்; கனவும் திருந்தின ஓங்கிய குன்றம் இறந்தாரையாம் நினைப்ப வீங்கிய மென்தோள் கவினிப் பிணிதீரப் பாங்கத்துப் பல்லி படும். (பா. 41) உயர்ந்த மலையைக் கடந்து சென்ற நம் காதலரைப் பற்றி நாம் நினைத்த உடனே, அழகிய கண்களிலே இடக்கண் துடிக்கின்றது; கண்ட கனவுகளும் நல்ல கனவுகளாக இருந்தன; இளைத்துப்போன மெல்லிய தோள்கள் அழகுடன் பருத்தன; துன்பம் தீரும்படி பக்கத்திலே பல்லியும் சொல்லும். இதனால் மேலே கூறிய நம்பிக்கைகளைக் காணலாம். இத்தகைய பல சிறந்த கருத்துக்களையுடையது ஐந்திணை எழுபது என்னும் நூல். திணைமாலை நூற்றைம்பது ஐந்திணைகளைப்பற்றியும் வரிசையாகச் சொல்லுவது; நூற்று ஐம்பது பாடல்கள் அடங்கியது; திணை மாலை நூற்றைம்பதாகும். பெயர், திணைமாலை நூற்றைம்பது; ஆனால் இதிலிருக்கும் வெண்பாக்களின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இதன் இறுதியிலே பாயிரச் செய்யுள் ஒன்று காணப்படுகின்றது. ஆக இந்நூலில் இன்றுள்ள பாடல்கள் 154 ஆகும். படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்று ஒரு பழமொழி உண்டு. பழங்காலத்திலே நூல்கள் எல்லாம் பனையோலையில் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது ஒருவர் படிப்பார்; மற்றொருவர் எழுதுவார். படிப்பவர் தப்பாகப் படிப்பதும் உண்டு; எழுதுகிறவர் தப்பாக எழுதுவதும் உண்டு. இது மட்டும் அன்று, அவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவற்றைச் சேர்த்தும் எழுதிவிடுவார்கள்; பிடிக்காத வற்றை தள்ளியும் எழுதி விடுவார்கள். இந்த உண்மையைக் குறிப்பதுதான் மேலே காட்டிய பழமொழி. இந்நூலுள் அளவுக்குமேல் உள்ள மூன்று பாடல்கள் பிற்காலத்தினரால் சேர்க்கப்பட்டிருக்கலாம். பாயிரச் செய்யுள் ஆசிரியர் பாடியதன்று. வேறொரு வரால் நூலைச் சிறப்பித்தும் பாடப்பட்டதாகும். குறிஞ்சியில் 31 வெண்பா, நெய்தலில் 31 வெண்பா, பாலையில் 30 வெண்பா, முல்லையில் 31 வெண்பா, மருதத்தில் 30 வெண்பா. திணையும் இந்த வரிசையிலே அமைந் திருக்கின்றது. குறிஞ்சியிலும், நெய்தலிலும், முல்லையிலும் ஒவ்வொரு வெண்பா மிகுந்திருக்கின்றது. இந்நூலாசிரியர் பெயர் கணிமேதாவியார். கணி என்றால் சோதிடர்; மேதாவியார் என்றால் வல்லுநர்; கணிமேதாவியார் என்றால் சோதிடத்திலே வல்லுநர் என்று பொருள் கொள்ளலாம். இவரைப்பற்றிய வரலாறு வேறு ஒன்றும் தெரியவில்லை. இந்நூலின் வெண்பாக்கள் சிறிது கடினமானவைதாம்; எல்லோரும் படித்து எளிதில் பொருள் தெரிந்துகொள்ள முடியாது; எல்லா வெண்பாக்களிலும் மோனையும் எதுகையும் அழகாக அமைந்திருக்கின்றன. ஆயினும் அவ்வளவு இனிமை யான நடையென்று நவில முடியாது. பல பாடல்களுக்கு நேராகப் பொருள் கூறலாம்; சில பாடல்களுக்கு நேராகப் பொருள் சொல்ல முடியாது. பதங்களை மாற்றியமைத்துப் பொருள் சொன்னால்தான் தெளிவாக விளங்கும். பழந்தமிழ்ச் சொற்கள் பல இந்நூல் பாடல்களிலே பயின்று வருகின்றன. இப்பாடல்களிலே குறிப்பிடப்படும் சில மலர்கள், மரங்களைப் பற்றி இன்று அடையாளம் காண முடியாது. போதுமான தமிழ்ப் பயிற்சியில்லாதார் இந்நூலைப் படிக்கும்போது, சிறிது பொறுமையும் முயற்சியும் காட்டித்தான் ஆக வேண்டும். ஒவ்வொரு திணையைப் பற்றிய பாடல்களும், அந்தந்த நிலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்தது போல எடுத்துக்காட்டும். இயற்கை நிகழ்ச்கிளை எடுத்துரைப் பதிலே இந்நூலாசிரியர் மிகவும் வல்லுநர். தமிழர் பண் பாட்டையும், பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். பாடல்கள் இந்நூற் பாடல்களின் பொருட் சிறப்பைக் காண இரண்டொரு வெண்பாக்களே போதும். உதாரணமாகச் சில பாடல்களைக் காண்போம். மணமாகாத மங்கை ஒருத்தி; குறிஞ்சி நிலப் பெண்; தினைப்புனங் காத்திருந்தாள். நாளடைவில் அவளுடைய தோற்றத்திலே மாறுதல் காணப் பட்டது. அதனால் அவளுடைய நடத்தையிலே ஐயமுற்றனர் பெற்றோர். உடனே தினைப்புனம் காத்தது போதும், வீட்டுக்கு வந்துவிடு என்று சொல்லி அந்தப் பெண்ணை வீட்டிலேயே வைத்து விட்டனர். வைத்ததும் அவளிடம் ஏற்பட்ட மாற்றம் மட்டும் மறையவில்லை. மேலும் மாறிக்கொண்டே வந்தாள். அவளுடைய மாறுதல் வளர்ந்து கொண்டே வந்தது. அந்த மங்கையை வளர்த்த செவிலித்தாய், அவளுடைய மாறுதலுக்குக் காரணத்தை அறிய விரும்பினாள். அக்காரணம் தோழிக்குத் தெரியும்; அவள் தனக்குத் தெரிந்ததை மறைக்காமல் செவிலித்தாயிடம் சொல்லுகின்றாள். நமது மலையுள் பலா மரங்கள் நிறைந்திருக்கின்றன. இன்னும் பல வளங்களும் நிறைந்திருக்கின்றன. அதன் அண்டையிலே உள்ள தினைப் புனத்திலே நானும் என் தலைவியும் பரண் மேலே அமர்ந்து காவல் காத்துக் கொண்டிருந்தோம். அச் சமயத்தில் பருத்த துதிக்கையையுடைய ஒரு யானை-அதுவும் மதம் பிடித்த யானை-எங்களை நோக்கிச் சினத்துடன் ஓடி வந்தது. உடனே ஒரு கட்டிளங்காளை தோன்றினான்: அந்த யானையை அலறிக்கொண்டு ஓடும்படி அடித்து விரட்டினான். எங்களைக் காப்பாற்றினான். அவனையே என் தலைவியின் தோள்கள் தழுவிக் கொள்ளும்; வேறொருவன் தோள்களைத் தொடுவதற்குச் சம்மதிக்கமாட்டா என்றாள் தோழி. இதன் மூலம் தன் தலைவியின் மாறுதலுக் கான காரணத்தைக் கூறினாள். எங்கள் உயிரைக் காப்பாற்றிய அவனுடைய நன்றியை எம் தலைவி மறக்கமாட்டாள். நன்றி மறத்தல் தமிழர் பண்பாடன்று என்ற தமிழர் நெறியையும் உரைத்தாள் தோழி. இதை உணர்த்தும் செய்யுள் கீழ் வருமாறு: வருக்கை வளமலையுள், மாதரும் யானும் இருக்கை இதன் மேலேம் ஆகப்;--பருக்கைக் கடாஅ மால் யானை கடிந்தானை அல்லால், தொடாஅ ஆல், என் தோழி தோள். (பா. 14) இச் செய்யுளின் வழியாகத் தமிழரின் நன்றி மறவாத உயர்ந்த பண்பாட்டைக் காணலாம். தமிழரின் பண்பாட்டைக் குறிக்கும் மற்றொரு பாடலையும் கீழே காண்போம். களவு மணவாழ்க்கையிலே வாழும் தம்பதிகள் இருவர். அவர்கள் தம் களவு வெளிப்படுவதற்கு முன்பு கற்பு மணத் தம்பதிகளாகிவிட வேண்டும் என்று முடிவு செய்தனர்; இதன் பின் தலைவன், தன் காதலியை அவளுடைய பெற்றோர் அறியாமல் தன்னுடன் அழைத்துக் கொண்டுபோய் விட்டான். கருத்து ஒருமித்த காதலர்கள் மணம் புரிந்து கொள்ளுவதற்கு ஏதேனும் தடை ஏற்பட்டால், இவ்வாறு செய்வது பண்டைக் கால வழக்கம். தலைவியை வீட்டிலே காணாத செவிலித்தாய், அவளைத் தேடிக்கொண்டு புறப்பட்டாள். பாலை நிலத்தின் வழியே அவள் போகும்போது எதிரிலே வந்த மற்றொரு தம்பதிகளைப் பார்த்தாள். அவர்களிடம் உங்களைப்போல் இருவரை இவ்வழியிலே கண்டீரோ என்று கேட்டாள். அவள் கேள்விக்கு ஆடவன் விடையளித்தான். விரைவாக நீங்கள் நடந்து போங்கள்; அவர்கள் நம்மிடம் அகப்பட்டுக் கொள்ளுவார்கள்; நீங்கள் எண்ணும் எண்ணமும் விரைவில் கைகூடும்; நீங்கள் நினைத்துக் கொண்டு வந்த சூரியனைப் போன்ற அந்த ஆடவனை நான் பார்த்தேன்; சந்திரனைப் போன்ற அந்த மங்கையை என் துணைவி பார்த்தாளாம் என்றான் அவன். நண்ணிநீர் செல்மின்! நமர் அவர் ஆபவேல் எண்ணிய எண்ணம் எளிது அரோ! --எண்ணிய வெம்சுடர் அன்னானை யான்கண்டேன், கண்டாளாம் தண்சுடர் அன்னாளைத் தான். (பா. 89) இச் செய்யுள் ஒரு உயர்ந்த பண்பை எடுத்துரைக்கின்றது. ஒரு ஆடவன் பிற பெண்களைக் கண்ணால் நோக்குதலும் தவறு என்பதே அப்பண்பு. இது தமிழர்களின் சிறந்த பண்பாடுகளுள் ஒன்று. பெண்களைப் போலவே ஆண்களும், பிற பெண்களைப் பார்க்காத கற்புள்ளவர்களாயிருக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. பண்டைக் காலத் தமிழர் ஒழுக்கத்திற்கு இச் செய்யுள் ஒரு சிறந்த உதாரணம். இயற்கைக் காட்சிகளை இந்நூலாசிரியர் எவ்வாறு எடுத்துக் காட்டுகிறார் என்பதற்கு ஒரு உதாரணம். மருத நிலத்தின் காட்சியைக் கூறும் ஒரு வெண்பா; மிகவும் தெளிவும், இயற்கையை அப்படியே சித்தரிக்கும் அழகும் அமைந்தது அது. ஒரு எருமை; சிவந்த கண்கள்; வலிமையான கொம்புகள். அது, நீர் நிறைந்த வயல்களையும் அவற்றை அடுத்த பள்ளங் களையும் பார்த்தது. மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஆனந்தமாகக் கனைத்துக் கொண்டது. அழகான கழனிகளிலும் பள்ளங்களிலும் பாய்ந்த நெடுநேரம் கிடந்தது. பிறகு கரையேறி வரும்போது அதன் முதுகின்மேல் குவளைப் பூக்கள் இருந்தன; சிவந்த கயல் மீன்கள் இருந்தன; தவளைகளும் உட்கார்ந்து கொண்டிருந்தன. இவைகளைச் சுமந்து கொண்டு அந்த எருமை கரையேறி வருகின்றது. செம்கண் கரும் கோட்டு எருமை, சிறு கனையால் அம் கண் கழனிப் பழனம் பாய்ந்து---அங்கண் குவளை அம் பூவொடு, செம் கயல் மீன் சூடித் தவளையும் மேல் கொண்டு வரும். (பா. 147) என்பதே மேல் உள்ள பொருள் அமைந்த வெண்பா. நீர் நிறைந்த வயல்கள்; குளங்கள்; குவளை மலர்கள்; மீன்கள்; எருமைகள்; இவைகள் மருத நிலத்தில் எங்கும் உள்ளவை. இந்த இயற்கையை எடுத்துரைத்தது இவ் வெண்பா. தெய்வங்கள் திருமால், பலதேவன், முருகன் ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடுகின்றார் இவ்வாசிரியர். மாயவனும் தம்முனும் (பா. 56) என்பது திருமாலையும் பலதேவனையும் குறிப்பது. ஆழியான் (பா. 96) என்பதும் திருமாலைக் குறித்தது. மாயவன் (பா. 97) என்பதும் திருமால். இரும் கடல் மா கொன்றான் வேல் (பா. 93) என்பது முருகனைக் குறித்தது. பெரிய கடலிலே மா மர வடிவாகி நின்ற சூரனைக் கொன்ற முருகனது வேல் என்பதே இதன் பொருள். நம்பிக்கைகளும் பழக்கங்களும் நல்வினையால்தான் ஒருவருக்குச் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை பண்டைத் தமிழரிடம் இருந்தது. `வினை விளையச் செல்வம் விளைவது போல் (பா. 5) என்பது உதாரணம். நல்ல நாளிலே தொடங்கும் காரியம் இடையூறில்லாமல் வெற்றி பெறும் என்பது பழந்தமிழர் நம்பிக்கை. பெண் கேட்கச் செல்வார் நல்ல நாள் பார்த்து அந் நாளிலே புறப்படுவார்கள். நாள் கேட்டுத் தாழாது வந்தால் நீ எய்துதல் வாயால் (பா. 46)- நல்லநாள் கேட்டுக் கொண்டு தாமதமில்லாமல் வந்தால் இப்பெண்ணை அடைவது உண்மை என்பது இதன் பொருள். நாள் பார்த்து நல்ல நேரத்திலே திருமணம் புரியும் வழக்கமும் பழந்தமிழர் வழக்கமாகும். நாள் ஆய்ந்து வரைதல் அறம் (பா. 52) என்பதனால் இதனைக் காணலாம். சோதிடர்களே நல்ல நாட்களைக் குறித்துக் கொடுப்பார் கள். அந்த நல்ல நாளிலே திருமணம் முதலிய மங்கலமான செயல்களை நடத்துவார்கள். இவ்வழக்கம் தமிழகத்தில் இருந்தது. குறிஅறிவார்க் கூஉய்க் கொண்டு ஓர், நாள் நாடி நல்குதல் நன்று (பா. 54) நல்ல குறிகளை அறிந்து சொல்லும் சோதிடர்களை அழைத்து, ஓர் நல்ல நாளைத் தேர்ந்தெடுத்து மணம் புரிந்து கொடுத்தால் நலமாகும் என்பதே இதன் பொருள். இதனால் சோதிடர்களைக் கொண்டு நாள் பார்க்கும் செய்தியைக் காணலாம். குறிகேட்கும் வழக்கமும் பண்டைக் காலத்தில் இருந்தது. குறி சொல்வார் கழங்குக் காய்களை வைத்துக் கொண்டு, அவற்றை எண்ணிக் குறி சொல்லுவார்கள். குறி சொல்லு கின்றவர்கள் தெய்வத்தின் உதவியினாலேயே உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என்று நம்பி வந்தனர். இதனை இந் நூலின் 90-வது வெண்பாவால் காணலாம். மக்கள்மேல் தெய்வம் ஏறி நிற்பதாக நம்பினார்; முருகனுக்குப் பூசை செய்யும் பூசாரி, கையில் வேலேந்தி ஆவேசங் கொண்டு ஆடுவான்; குறி சொல்வான். வேலைக் கையிலேந்தி ஆடுவோனுக்கு வேலன் என்று பெயர். தெய்வத்திற்கு ஆட்டுக் குட்டிகளையும் பலி கொடுப்பர். கள்ளும் வைத்துப் படைப்பார்கள். இது பழந்தமிழர் வழக்கம். வேலனார் போக, மறிவிடுக்க, வேரியும் பாலனார்க்கு ஈக, (பா. 21) வெறியாடுவதற்காக வந்த வேலேந்திய பூசாரி போகட்டும்; ஆட்டுக் குட்டியையும் விட்டு விடுங்கள்; மணமுள்ள மதுவை அதை விரும்பும் தன்மை யுள்ள வர்களுக்குக் கொடுத்து விடுங்கள் என்பதே இதன் பொருள். இது தமிழர்கள் தெய்வத்தைப் பூசித்த முறையைக் கூறிற்று. இவ்வுலகத்திற்கு அப்பால் இன்பம் நுகரக் கூடிய சுவர்க்கலோகம் ஒன்று உண்டென்று நம்பினர். இதனை 62-வது வெண்பாவிலே காணலாம். சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு என்பவை திருமாலின் படைகள். பொன்னால் இப்படைகளைச் செய்து குழந்தைகளின் கழுத்திலே கட்டியிருப்பார் கள். இதற்கு ஐம்படைத்தாலி என்று பெயர். இத்தகைய ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் இந்நூலில் கூறப்படுகின்றது. இதை இந்நூலின் 66-வது வெண்பாவால் அறியலாம். குழந்தைகள் பூணும் நகையையே பண்டைக் காலத்தில் தாலி என்று கூறி வந்தனர். பிற்காலத்தில் தான் தாலி என்பது, கணவனால் மனைவியின் கழுத்திலே கட்டப்படும் ஒரு குறிப்பிட்ட அணியைச் சுட்டி வந்தது. இந்நூலிலே கூறப்பட்டிருக்கும் ஒரு உண்மை நமக்கு வியப்பைத் தருகின்றது. சூரிய வெப்பத்தால் தான் நிலத்தில் உள்ள நீர் ஆவியாக மேலெழுந்து மேகமாகி மழை பெய்கின்றது என்பதுதான் அவ்வுண்மை. எல்லை தருவான், கதிர் பருகி ஈன்ற கார் (பா. 105) பகலைத் தருகின்ற சூரியனுடைய கிரணங்கள், நிலத்தில் உள்ள நீரைப் பருகிப் பெற்ற மேகங்கள் என்பதே அவ்வரியின் பொருள். மேகங்கள் தனிப்பொருள்கள், இந்திரன் ஆணைக்கு அடங்கியவை; உயிர் உள்ளவை; என்று மக்கள் நம்பியிருந்த அக்காலத்தில் இவ்வாசிரியர் இவ்வுண்மை யைக் கூறியிருப்பது வியப்புக் குரியதல்லவா? கார்நாற்பது கார் காலத்தைப் பற்றிக் கூறுவது; நாற்பது வெண்பாக் களைக் கொண்டது; கார் நாற்பதாகும். கார், கருமை நிறம். மழை பெய்யும் மேகம் கருமை நிறம் உள்ளது. கருமை நிறம் உள்ள மேகம் மழை பெய்யும் காலம் கார் காலம். கார் காலம் முல்லை நிலத்திற்கு உரியது. ஆகவே இது முல்லைத் திணையைப் பற்றி உரைப்பதாகும். ஒரு தலைவன் ஏதேனும் ஒரு காரணத்தால் மனைவியை விட்டுப் பிரிந்து செல்லுகின்றான்; செல்லும்போது நான் கார் காலம் வருவதற்குள் வந்துவிடுவேன் என்று உறுதி கூறிச் செல்கின்றான். கார் காலமும் வந்துவிட்டது. கணவன் வரவில்லை. அப்பொழுது மனைவி, அவன் வருவான் என்று நம்பித் தன் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கின்றாள். இதுவே முல்லைத் திணை நிகழ்ச்சியாகும். காட்டின் காட்சி; மழை நாளின் இயற்கை; காதலியின் அன்பு; கணவனுடைய காதல்; இவைகளை யெல்லாம் முல்லைத் திணையிலே காணலாம். இந்த நூலின் ஆசிரியர் மதுரைக் கண்ணங்கூத்தனார் என்பவர். இவர் பெயர் கூத்தனார்; இவர் தந்தையார் பெயர் கண்ணன், தந்தையார் பெயரையும் தன் பெயரோடு சேர்த்து வைத்துக் கொண்டார். இப்படிப் பெயர் வைத்துக்கொள்வது பண்டை மரபு. இவர் மதுரையில் வாழ்ந்த வராகவோ அங்கே பிறந்தவராகவோ இருக்க வேண்டும். ஆதலால் தான் மதுரைக் கண்ணங் கூத்தனார் என்று அழைக்கப் பட்டார். இவர் இந் நூலைத் தவிர வேறு எந் நூலையும் இயற்றியதாகத் தெரியவில்லை. செய்யுட் சிறப்பு இந்நூலின் செய்யுட்கள் படிப்பதற்கு இனிமையானவை. இயற்கைக் காட்சி களை நம் கண் முன்னே நிறுத்திக் காட்டுவன. இந்நூலாசிரியர் எடுத்துக் காட்டும் உவமானங்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். இயற்கையோடு இணைந்து காணப்படும். இந்நூல் பாடல்களின் சிறப்பைச் சில உதாரணங்கள் மூலம் காண்போம். கார் காலம் வந்துவிட்டது; பிரிந்து சென்ற காதலன் இன்னும் வரவில்லை. காதலி பசலை நோயால் வருந்து கின்றாள். இந்த நிலையைக் கண்டாள் தோழி. காதலன் வந்துவிடுவான்; கார் காலத்தைக் கண்டால் அவன் சென்ற இடத்திலே தாமதிக்கமாட்டான். நீ வருந்த வேண்டாம் என்று ஆறுதல் கூறினாள். இந்த முறையில் பல பாடல்கள் அமைந்திருக் கின்றன. அவற்றுள் ஒரு பாடல் கீழ்வருவது: ஆடும் மகளிரின் மஞ்சை அணிகொளக் காரும் கடுக்கை கவின்பெறப் பூத்தன; பாடுவண்டு ஊதும் பருவம் பணைத்தோளி! வாடும் பசலைக்கு மருந்து. (பா.4) நடனமாடும் பெண்களைப்போல மயில்கள் அழகாக ஆடுகின்றன. காடெல்லாம் கொன்றை மலர்கள் கவினுடன் பூத்திருக்கின்றன; பாடுகின்ற வண்டுகள் எல்லாம் மலர்களிலே உட்கார்ந்து ஊதுகின்றன; இதுதான் காதலர் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம்; மூங்கில் போன்ற அழகிய தோளை யுடையவளே! இப்பருவந்தான் நீ வருந்துகின்ற பசலை நோய்க்கு மருந்துமாகும். இந்தப் பாடலில் கூறப்பட்டிருக்கும் காட்சி, இயற்கைக் காட்சி. காட்டிலே இக்காட்சியைக் கார் காலத்தில் இன்றும் காணலாம். மற்றொரு அருமையான செய்யுள். இச் செய்யுளும், தலைவிக்குத் தோழி கூறும் ஆறுதல் மொழியாக அமைந்திருப்பது. கல்பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே நல்இசை ஏறொடு வானம் நடுநிற்பச், செல்வர் மனம்போலக் கவின்ஈன்ற; நல்கூர்ந்தார் மேனிபோல் புல்என்ற காடு. (பா. 8) மலை நெருங்கிய காட்டைக் கடந்து சென்ற தலைவர் திரும்பி வருவதனால், அவர் வரும் வழியிலே மிகுந்த இடியோடு கூடிய மேகம் வானத்தின் உச்சியிலே நின்று மழையைப் பொழிந்தது. அதனால் வறுமையுள்ளவர்களின் உடம்பைப் போல வாடி வதங்கியிருந்த காடுகள் செல்வம் உள்ளவர்களின் உள்ளம்போல அழகைத் தந்தன. மழையில்லாத காலத்தில் காட்டில் உள்ள மரம் செடி கொடிகள் வாடிச் சோர்ந்து கிடந்தன; வெயில் அக்காட்டை வாட்டி வதக்கிக்கொண்டிருந்தது. ஆதலால் அந்தக் காடு பார்ப்பதற்கு அழகில்லாமல் பொலிவிழந்து கிடந்தது. மழை பெய்தபின் காடு செழித்தது. மரம், செடி, கொடிகள் தழைத்துக் காய்த்துக் குலுங்கியிருந்தன. இது கண்ணுக்கினிய காட்சியாக இருந்தது. கோடையால் வாடியிருந்த காடு வறுமையால் வாடுகின்றவன் உடம்பைப்போல வற்றியி ருந்தது; மழையால் செழிப்புற்ற காடு செல்வமுள்ளவன் நெஞ்சம்போல் செழித்தி ருந்தது; என்று இக்காட்சியை உவமையுடன் விளக்கியிருப்பது மிகவும் பொருத்த மானது. செல்வச் சிறப்பு செல்வம் உள்ளவர்களே வாழ்க்கையில் இன்பம் அடைய முடியும்; புகழ் உள்ளவர்களாக வாழ முடியும்; செல்வம் இருந்தால் தான் வறியோர்க்கு வழங்கி உதவி செய்யலாம். ஆதலால் இல்லறத்தில் வாழ்வோர் பொருளீட்டுவதை முதன்மையாகக் கொள்ள வேண்டும். இது இவ்வாசிரியர் கருத்து. புணர்தரு செல்வம் தருபார்க்குச் சென்றார் (பா. 11) இம்மை மறுமை இன்பங்கள் பொருந்துவதற்குரிய செல்வத்தை தேடிக் கொண்டு வரும் பொருட்டுச் சென்றார். கெடா அப் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போல் படாஅ மகிழ் வண்டு பாண்முரலும் (பா. 32) அழியாத புகழை விரும்புகின்ற செல்வர்களின் சிந்தை யைப் போல, கெடாத மகிழ்ச்சியை உடைய வண்டு இசை பாடிக் கொண்டிருக்கும். இவைகள் செல்வத்தால் பெறும் இன்பத்திற்கு எடுத்துக் காட்டுக்கள். நச்சியார்க்கு ஈதலும் நண்ணார்த் தெறுதலும் தன்செய்வான் சென்றார். (பா. 7) தம்மை நாடி வந்தவர்க்குக் கொடுப்பதும், பகைவரை அழிப்பதும் தமக்குப் புகழ்தரும் என்று நினைத்துப் பொருள் தேடச் சென்றார். மண்இயல் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்இயல் நல்லாய், பிரிந்தார். (பா. 8) பெண் தன்மை நிறைந்த சிறந்தவளே! அவர் இவ்வுலகிலே நிலையான புகழைப்பெற விரும்பியே பொருள் தேடப் பிரிந்தார். இவைகள் செல்வமே புகழுக்குக் காரணம் என்பதை எடுத்துக் காட்டின. பழக்க வழக்கங்கள் இந்நூலாசிரியர் காலத்திலே தமிழ் நாட்டிலே வேள்விகள் நடைபெற்று வந்தன. புகழ் வேள்வித் தீப்போல எச்சாரும் மின்னும் மழை. புகழுக்குரிய யாகாக்கனி போல, மேகம் எப்பக்கமும் ஒளிவீசும்படி மின்னுகின்றது. திருமால், பலதேவன் ஆகிய தெய்வங்களைப் பற்றியும் இந்நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். பொரு கடல் வண்ணன் (பா.1) என்பது திருமால். நாஞ்சில் வலவன் (பா. 19) என்பது பலதேவன் கார்த்திகை நாளிலே வரிசையாக விளக்கு வைத்து விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்தது. இதனை நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி. (பா. 26) நன்மை மிகுந்த கார்த்திகைத் திருநாளில் நாட்டினர் கொளுத்தி வைத்த முதல் நாள் விளக்குகளைப் போல, தோன்றிப் பூக்கள், எல்லா இடங்களிலும் அழகுடன் பூத்திருந்தன. இத்தகைய சிறந்த செய்திகளைக் கார் நாற்பதிலே காணலாம். களவழி நாற்பது களவழி நாற்பது என்றால் களத்தைப் பற்றி பாடிய நாற்பது என்று பொருள். இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும். ஆனால் இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றன. எப்படியோ ஒரு வெண்பா வந்து சேர்ந்து விட்டது. வெண்பா விலே நாலு அடிகளுக்குமேல் வருமாயின் அதைப் பஃறொடை வெண்பா என்பர். இந்நூலில் பஃறொடை வெண்பாக்களும் இருக்கின்றன. பஃறொடை - பல்தொடை; பல அடிகள் தொடர்ந்திருப்பவை. களவழிப் பாடல்களிலே இரண்டு வகையுண்டு. உழவர்கள் நெற்கதிரை அறுத்துக் களத்திலே கொண்டு வந்து சேர்த்து, அடித்து, நெல்லைக் குவிக்கும் ஏர்க்களத்தைப் பாடுவது ஒன்று. நால்வகைப் படைகளையும் கொண்டு போர் செய்யும் போர்க் களத்தைப் பாடுவது மற்றொன்று. ஏர்க்களம், போர்க்களம், இந்த இரண்டைப் பற்றியும் பாடும் பாடல்களுக்கும் களவழிப் பாடல்கள் என்று பெயர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய இந்தக் களவழி நாற்பது போர்க்களத்தைக் குறித்துப் பாடப்பட்டது. சோழன் செங்கண்ணான் என்பவன், சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவனுடன் போர் புரிந்தான். இந்தப் போர் கழுமலம் என்னும் ஊரிலே நடந்தது. இப்போரில் சேரன் தோற்றான்; சோழன் வென்றான்; தோற்ற சேரன் சோழனால் சிறைப்படுத்தப்பட்டான். சேரனுடைய நண்பர் பொய்கையார் என்னும் புலவர். அவர் சோழனுடைய வெற்றியைப் புகழ்ந்து பாடிச் சேரனைச் சிறையிலிருந்து விடுதலை செய்தார். இதுவே இந்நூல் தோன்றுவதற்குக் காரணமாகக் கூறப்படும் வரலாறு. புறநானூற்றில் உள்ள 74-வது பாட்டு சேரமான் கணைக் கால் இரும்பொறை பாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அச்செய்யுளின் அடியிலே ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. சேரமான் கணைக்கால் இரும்பொறை, சோழன் செங்கணானோடு போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக், குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக்கைக் கொண்டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்பதே அக்குறிப்பு. செங்கண்ணானுடன் போர் செய்து தோற்ற சேரன், குடவாயிற் கோட்டத்திலே சிறைப்பட்டிருந்தான். தண்ணீர் கேட்டான். காவலர்கள் அவமதித்துப் பேசினர். பிறகு தண்ணீர் தந்தனர். அதை உண்ண விரும்பாமல் இப்பாடலைப் பாடி உயிர் துறந்தான் என்பதே இக்குறிப்பின் பொருளாகும். களவழியின் வரலாறு சேரமான் சிறையிலிருந்து விடப் பட்டான் என்று கூறுகின்றது. புறநானூற்று அடிக்குறிப்பு சேரன் சிறையிலேயே மாண்டான் என்று கூறுகின்றது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண். ஆதலால் புறநானூற்றுப் பாடல் பாடிய சேரன் கணைக்கால் இரும்பொறை வேறு; களவழியின் மூலம் விடுதலை பெற்ற சேரன் வேறு என்று கருதுவதற்கே இடம் தருகின்றது. இவ்வாறே சில அறிஞர்கள் கருதுகின்றனர். பொய்கையார் என்னும் இப்புலவர், பொய்கை என்னும் ஊரிலோ, அல்லது பொய்கை என்னும் நாட்டிலோ பிறந்த வராதல் வேண்டும். ஆதலால் இப்பெயர் பெற்றார். ஆனால் இவர் தொண்டி என்ற ஊரினர் என்று ஆராய்ச்சியாளர் கருது கின்றனர். தொண்டியென்பது சேரநாட்டுத் துறைமுகம். மேற்குக்கடற்கரையில் இருந்தது. பொய்கை ஆழ்வார் என்பவர் முதலாழ்வார்களில் ஒருவர். இந்த ஆழ்வாரும், இப்பொய்கையாரும் ஒருவர் என்று சிலர் எண்ணுகின்றனர். பொய்கையாழ்வார் வேறு; இந்தப் புலவர் வேறு. பொய்கையார் பெயரால் உள்ள பாடல்கள், புறநானூற்றில் இரண்டும், நற்றிணையில் ஒன்றும் காணப்படுகின்றன. அவர் வேறு, இவர் வேறு என்று எண்ணத்தான் இடம் உண்டு. பாடற் பெருமை இந்நூலிலே யானைப் போரைப் பற்றிய பாடல்களே மிகுதியாகக் காணப் படுகின்றன. சேரமானிடம் யானைப் படைகளே அதிகம். சேரநாட்டில்தான் யானை கள் மிகுதி. ஆதலால், சேரனுக்கும் சோழனுக்கும் நடந்த போரிலே யானைப் படை களின் சிதைவைப் பற்றிக் கூறுவது வியப்பன்று. போர்க்களத்தில் நடைபெறும் கொடுமை; போரால் மக்கள் மாண்டு மடியும் பயங்கரக் காட்சி; பார்ப்போர் உள்ளத்திலே அச்சத்தை ஊட்டும் போர்க்களக் காட்சி; இவைகளை இக்களவழிப் பாடல்களிலே காணலாம். இந்நூலைப் படிப்போர் போரை வெறுப்பார்கள்; அமைதியையே விரும்புவார்கள். போரினால், மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பல பண்டங்கள் பாழாகும். இது ஒருபுறம் இருக்கட்டும், போரிலே பல வீரர்கள் மடிவதன் காரணமாகப் பல மக்கள் ஆதரவற்ற அநாதைகளாகின்றனர். போர் நடந்தால்----போர்க்களத்திலே வீரர்கள் மாண்டால்-----பிள்ளைகளை யிழந்து தவிக்கும் பெற்றோர்கள் பலர்; காதலர்களை இழந்து கவலைப்படும் மனைவிகள் பலர்; தந்தைகளை யிழந்து தவிக்கும் பிள்ளைகள் பலர்; ஆதலால்தான் மக்கள் சமுதாயத்திலே ஒற்றுமையை யும், நல்வாழ்வையும் விரும்புகின்றவர்கள் போரை வெறுக்சின்றனர்; சமு தாயத்தை விரும்புகின்றனர். இக்கருத்தை இந்நூலின் பாடல்களிலே காணலாம். சோழன் புரிந்த போர்க்களத்திலே தங்கள் உறவினர்களாகிய வீரர்களை யிழந்த மக்கள் நாற்றிசையும் கேட்கும்படி அலறி அழுகின்றனர்; ஓடுகின்றனர். இப்படி அழுகிறவர்களில் பெண்களே பெரும்பாலோராகக் காணப்படுகின்றனர். இக் காட்சி, மரங்கள் அடர்ந்த சோலையிலே, பெருங்காற்றுப் புகுந்து வீசுவதைக் கண்டு, அஞ்சிய மயிலினங்கள், வெவ்வேறு திசைகளிலே சிதறி ஓடுவதைப்போல இருந்தது; என்று கூறுகின்றது ஒரு செய்யுள். கடிநாவில் காற்று உற்று எறிய, வெடிபட்டு வீற்றுவீற்று ஓடும் மயில் இனம்போல்----நாற்றிசையும் கேளிர் இழந்தார் அலறுபவே, செங்கண் சினமால் பொருத களத்து. (பா. 23) செங்கட் சோழன் போர் செய்த போர்க்களத்திலே, மரங்கள் அடர்ந்த சோலை யில் காற்றுப் புகுந்து கடுமையாக வீச, அதைக் கண்டு பயந்து பிரிந்து பிரிந்து ஓடு கின்ற மயிற் கூட்டத்தைப்போல, தம் உறவினரை இழந்தவர்கள் நான்கு திசை களிலும் ஓடி ஓடி அலறி அழுகின்றனர். இச்செய்யுளைப் படிப்பவர்கள், போர் எவ்வளவு கொடுமையானது; மக்களுக்கு எவ்வளவு மனவேதனையைத் தரக்கூடியது என்பதை உணராமல் இருக்க முடி யாது. மற்றொரு பாட்டிலே தச்சன் வேலை செய்யும் இடத்தையும், போர்க் களத்தையும் ஒப்பிட்டுக்காட்டியுள்ளார். இக்காட்சியைக் காணும்போது யாருடைய உள்ளமும் உருகாமல் இருக்காது. தச்சன் வேலை செய்யும் இடத்தைப் பார்த்தால் அலங் கோலமாகத்தான் காணப்படும். வேலை செய்யும் ஆயுதங்கள் பல இடங்களிலே கிடக்கும்; வெட்டப் பட்ட மரங்கள்; அறுபட்ட மரங்கள்; துண்டு போடப்பட்ட மரங்கள்; துளை போடப் பட்ட மரங்கள்; மரங்களிலே செதுக்கிய இழைத்த சிறியவும் பெரியவுமான சிறாய்த் தூள்கள்; இவைகள் எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடக்கும். போர்க்களத்திலும் ஆயுதங்கள் பல சிதறிக் கிடக்கும்; பல பிணங்கள் குவிந்து கிடக்கும்; தனித்தனியாகவும் கிடக்கும்; வீரர்களின் கால் கைகள் துண்டிக்கப்பட்டுக் கிடக்கும்; உடல்கள் சிதைந்து உருமாறி எங்கும் கிடக்கும். யானை, தேர், குதிரை முதலியவைகளும் சிதைந்து கிடக்கும். இத்தகைய போர்க்களத்திற்கு தச்சுப் பட்டரையை ஒப்பிட்டது மிகவும் பொருத்தமானது. கொல்யானை பாயக் குடைமுருக்கி எவ்வாயும் புக்கவாய் எல்லாம் பிணம் பிறங்கத், தச்சன் வினைபடு பள்ளியில் தோன்றுமே செங்கண் சினமால் பொருத களத்து. கோபத்தையுடைய செங்கட்சோழன் போர்செய்த களத்திலே, எவ்விடத்திலும், குடைகளையழித்துக் கொல்லுகின்ற யானைகள் பாய்ந்து பொருகின்றன. அவைகள் புகுந்த இடமெல்லாம் பிணங்களே குவிந்து கிடக்கின்றன. அவைகள் தச்சன் வேலை செய்கின்ற இடத்தைப் போலத் தோற்றம் அளிக்கின்றன. இச்செய்யுள் போர்க்களத்தின் பயங்கரக் காட்சியை நமக்குக்காட்டுகின்றது. இதுபோல் போர்க்களத்தின் காட்சியைக் காட்டும் பாடல்கள் பல. பழக்க வழக்கங்கள் தமிழ்நாட்டிலே கார்த்திகை விழாக் கொண்டாடிய செய்தி இந்நூலிலும் காணப்படுகின்றது. கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கைப் போன்ற (பா. 17) கார்த்திகை திருவிழாவின்போது கொளுத்தி வைக்கப்பட்ட மிகுதியான விளக்குகளைப் போலக் காணப்பட்டன. பாம்பு பிடிப்பதனால் சந்திரகிரகணம், சூரியகிரகணம் ஏற்படுகிறதென்ற நம்பிக்கை பண்டைத் தமிழர்களிடம் இருந்தது. கோடுகொள் ஒண்மதியை நக்கும்பாம்பு ஒக்குமே (பா. 22) கலை நிரம்பிய ஒளி பொருந்திய சந்திரனை நக்கி விழுங்கும் பாம்பை ஒத்திருந்தது. ஐந்து தலைப்பாம்பு உண்டு என்ற நம்பிக்கையும் அக்காலத் தமிழர்களிடம் இருந்தது. இதனை ஐவாய் வயநாயகம் என்ற தொடரால் அறியலாம். (பா. 26) நிலத்தைப்பூமிதேவி என்று, பெண்ணாகக் கருதும் வழக்கும் அக்காலத்தி லிருந்தது. மையில் மாமேனி நிலம் என்னும் நல்லவள் குற்றமற்ற அழகானமேனியை யுடைய நிலமென்னும் நல்ல மாது. மந்திரத்திலும் தமிழர்களுக்கு நம்பிக்கையிருந்தது. மாநிலம் கூறும் மறை கேட்ப போன்றவே பூமிதேவி கூறுகின்ற மந்திரத்தைக் கேட்பதுபோல இருக்கிறது. (பா. 41) மேலே காட்டியவைகள் தமிழர்களின் பழைய நம்பிக்கை களையும் பழக்க வழக்கங்களையும் காட்டுகின்றன. இவ்வாசிரியர் கூறும் உவமானங்கள் மிகவும் அழகாகவும், பொருத்தமாகவும் அமைந்திருக்கின்றன. இந்நூலைப் படிப்போர் இவற்றின் அருமைகளை அறியலாம். முதுமொழிக்காஞ்சி முதுமொழிக் காஞ்சி; அறிவு நிறைந்த மொழியாகிய காஞ்சி, முதுமொழி----பழமொழி என்றும் கூறுவர். காஞ்சி யென்பது நிலையாமையைப் பற்றிக் கூறுவது; முதுமொழிக் காஞ்சி என்பது காஞ்சியின் ஒரு பகுதி. அறம் பொருள் இன்பங்களை அறிவுறுத்துதல் முதுமொழிக் காஞ்சியாகும். இந்நூலின் செய்யுட்கள் வெண்செந்துறை என்னும் ஒருவகைச் செய்யுள். இரண்டடிகள் கொண்டது; ஒவ்வொரு அடியிலும் நான்கு சீர்கள் அமைந்திருப்பது. இதுவே வெண் செந்துறை. இந்நூலின் ஒவ்வொரு செய்யுளின் முதல் அடி ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் என்பது. 1. சிறந்த பத்து 2. அறிவுப்பத்து. 3. பழியாப்பத்து. 4. துவ்வாப் பத்து. 5. அல்லபத்து. 6. இல்லைப்பத்து. 7. பொய்ப்பத்து. 8. எளியபத்து. 9. நல்கூர்ந்த பத்து. 10. தண்டாப்பத்து, என்னும் பத்துப் பிரிவுகளையுடையது. ஒவ்வொரு பகுதி யிலும் பத்துப் பத்துப் பாடல்கள். நீதி நூல் களிலே மிகவும் சிறியதொரு நூல். மற்றைய நீதி நூல்கள் நோக்க இது அவ்வளவு சிறப்புடையதன்று. பண்டைக் காலத்திலே தமிழர்கள் சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாயிருந்தனர், வாழ வழி யறிந் திருந்தனர், பல உண்மைகளைத் தெரிந்து கொண்டிருந்தனர் என்பதை விளக்க இந்நூலும் துணை செய்கின்றது. இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர் கூடலூர் கிழார் என்பது. இவரைப் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்று அழைப்பர். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றைத் தொகுத்தவர் இவரேதான். மலை நாட்டிலேயுள்ள கூடலூரிலே வாழ்ந்தவர். ஆதலால் இப்பெயர் பெற்றார். குறுந்தொகையிலே மூன்று பாட்டுக்களும், புறநானூற்றிலே ஒரு பாட்டும் இவர் பெயரால் காணப்படுகின்றன. இந்தக் கூடலூர் கிழார் வேறு; முதுமொழிக் காஞ்சியைச் செய்த கூடலூர் கிழார் வேறு என்று கூறுவோரும் உண்டு. நீதிகளின் சிறப்பு இந்நூலிலே கூறப்பட்டிருக்கும் அறங்களிலே புதுமை யில்லை. தமிழில் உள்ள நீதி நூல்களில் காணப்படும் அறங்கள் தாம் இந்நூலில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன. ஆனால் அவ்வறங்கள் மக்கள் பின்பற்ற வேண்டியவை என்பதை வலியுறுத்திக் கூறுகின்றார் இவ்வாசிரியர். வலியுறுத்திச் சொல்லுவது ஒன்றுதான் இதில் உள்ள சிறப்பு. ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் எல்லா மக்களுக்கும் கல்வியைக் காட்டிலும் ஒழுக்கமே சிறந்ததாகும் (பா. 1) ஒழுக்கத்தின் உயர்வையும் அவசியத்தையும் வலியுறுத்தியது இச்செய்யுள். ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று உயர்ந்த குடிப் பிறப்பைக் காட்டிலும் கல்வியே சிறந்த தாகும். (பா. 7) கல்வி கற்றவர்கள் எக்குடியினராயினும் உயர்ந்தவர்கள்; கல்லாதவர்கள் எக்குடியினரா யினும் இழிந்தவர்கள். ஆதலால் எல்லா மக்களும் கல்வி கற்பராயின் உயர்வு தாழ்வு வேற்றுமைகள் ஒழிந்து போகும். கல்வியினால் உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ முடியும் என்பதே முன்னோர் கொள்கை. தேசங்கள் தோறும் ஆசாரங்கள் வேறுபட்டிருக்கும். ஒரு நாட்டினரின் ஆசாரத்தை மற்றொரு நாட்டினர் பழிப்பது தவறு. பழிப்பதனால் ஒரு நாட்டினர்க் கும் மற்றொரு நாட்டினர்க்கும் உள்ள உறவு கெட்டுப் போகும். ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் அறியாத் தேசத்து ஆசாரம் பழியார் (3-ஆம் பத்து. பா. 8) உலகத்து மக்களுக்கு வேண்டிய சிறந்த குணம், தாம் அறியாத நாட்டின் ஆசாரத்தைப் பழிக்காமல் இருப்பதாகும். மறு பிறப்பிலே தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். வயது முதிர்வதன் பலன், மறுபிறப்பு உண்டென்பதை அறிவது. மறுமையில் இன்பம் பெறும் வகையிலே அறத்தையும், ஒழுக்கத்தையும் பின்பற்றி நடப்பதே சிறந்த அறமாகும். ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று இவ்வுலகிலே பிறந்த மக்கள் அனைவருக்கும் மறுபிறப்பு உண்டு என்பதை அறியாமல் முதிர்ந்த பருவம் அடைவது மூப்பாகாது. (5-ஆம் பத்து. பா. 10) எவ்வளவு செல்வம் இருந்தாலும் இன்னும் செல்வம் வேண்டும் என்று ஆசைப்படுவோர் செல்வர்கள் அல்லர்; வறியவர்கள் ஆவார்கள். ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் நசையில் பெரியதோர் நல்குரவு இல்லை ஆசையைக்காட்டிலும் பெரியதொரு வறுமைஇல்லை (6-ஆம் பத்து பா. 7) என்பதனால் இதைக் காணலாம்! பொருளிலே அளவுக்கு மீறிய ஆசையுள்ளவன் நீதி முறை களையும் பேணமாட்டான். பொருள் கருதி எந்த அக்கிரமத்தையும் துணிந்து செய்வான். அவன் நீதி முறைப்படி எதையாவது செய்கிறேன் என்று சொல்லுவானாயின் அச்சொல் பொய்யாகும். பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய் (7-ஆம் பத்து பா. 9) பொருள் விருப்பத்திலே ஊன்றிய உள்ளமுடையவன் நீதி முறையின்படி ஒன்றைச் செய்தல் இல்லை. இன்பதுன்பங்களைப் பற்றி இவ்வாசிரியர் கூறுவது போற்றத்தக்கது. துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது. துன்பத்தைப் பொருட்படுத்தாமல் முயற்சியை விரும்பு வோர்க்கு இன்பம் எளிதாகும். (8. பா. 5) இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது. இன்பத்தையே விரும்பி நிற்பவர்களுக்குத் துன்பம் வருவது எளிதாகும். (8. பா. 6) இவை இன்ப துன்பந் தோன்றுவதற்கான காரணங்களைக் கூறின. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான். இன்பத்தை விரும்புகின்றவன் துன்பத்தைப்பொருட்படுத்தமாட்டான். (10.பா. 7) இவை துன்பம் எய்தும் வழியைக் கூறின. முறையில் அரசன்நாடு நல்கூர்ந்தன்று மக்கள் எல்லார்க்கும் சம நீதி வழங்காத நாடு வறுமையால் வாடும். (9. பா. 1) முறையில் அரசர் நாட்டிருந்து பழியார் செங்கோல் முறையில்லாத நாட்டிலே இருந்துகொண்டு அவர் கொடுங் கோன்மையைப் பழிக்கமாட்டார்கள் (3.பா.9) இவை அரசியலைப் பற்றிக் கூறியவை. கொடுங்கோலன் நாட்டில் குடியிருப்பதைவிட அந்நாட்டை விட்டு வெளியேறுவதே நலம் என்பது பண்டைத் தமிழர் கொள்கை. இது அரசன் சர்வாதிகாரியாகப் பலம் பெற்றிருந்த காலத்தில் எழுந்த நீதி. மது விலக்கைப் பற்றியும் இந்நூலில் கூறப்படுகின்றது. இத்தகைய அறிவுரை களைக் கொண்டதே இந்நூல். இதில் உள்ள பல சொற்கள் வழக்கில் இல்லாத பழைய சொற்கள். திரிகடுகம் திரிகடுகம் நூறு வெண்பாக்களைக் கொண்டது. புறப் பொருள்பற்றிக் கூறும் நூல். இதை அறநூல், நீதி நூல் என்றே சொல்லி விடலாம். இந்த வெண்பாக்கள் அவ்வளவு கடின மானவை யல்ல. எளிதில் பொருள் தெரிந்து கொள்ளக்கூடியன. தமிழர்களின் ஒழுக்கம்----பழக்க வழக்கம்---- நேர்மையாக நடக்க வேண்டும் என்பதிலே அவர்கள் காட்டிய கவலை-----இவைகளை யெல்லாம் இந்நூலிலே காணலாம். சுக்கு, மிளகு, திப்பிலிகளைத் திரிகடுகம் என்று நாட்டு வைத்தியர்கள் கூறுவார்கள். இந்த மூன்று மருந்துகளைக் கொண்டே, உடல் நோயைத் தடுத்துக் கொள்ள முடியும்; இது நாட்டு வைத்தியர்களின் நம்பிக்கை. இன்றும் திரிகடுகச் சூரணம் என்னும் மருந்து பல நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டு வருகின்றது. இந்த மருந்தின் பெயரையே இந்நூலுக்கு வைத்தனர். இதற்குக் காரணம் உண்டு. இந்நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று மூன்று அறங்கள் சொல்லப் படுகின்றன. இம்மூன்று நீதிகளையும் பின்பற்றி நடப்போர் உள்ளத்திலே ஒரு நோயும் இன்றி உவகையுடன் வாழ முடியும்; வாழ்விலே குற்றம் வளராமல் மாசற்ற வாழ்வு நடத்த முடியும். இந்த உண்மையைக் கருதித்தான் இந்நூலுக்குத் திரிகடுகம் என்ற பெயர் வைத்தனர். இந்நூலில் கூறப்படும் அறங்கள் எல்லாம் இக்காலத்திற்கு ஏற்றவை என்று சொல்ல முடியாது. கொள்ளத்தக்கவை பல; தள்ளத்தக்கவையும் சில உண்டு. இவ்வுண்மையை உணர்ந்து படிப்பதே அறிவுள்ளவர் கடமை. இந் நூலாசிரியர் பெயர் நல்லாதனார். இவருடைய பெயரால், வேறு நூல் களோ செய்யுட்களோ காணப்பட வில்லை. நூறு வெண்பாக்களோடு, கடவுள் வாழ்த்து வெண்பா ஒன்றும் காணப்படு கின்றது. இது திருமால் வணக்கம். இக் கடவுள் வாழ்த்து நூலாசிரியரால் இயற்றப் பட்டதா? அல்லது பிற்காலத்தாரால் பாடிச் சேர்க்கப்பட்டதா என்பது ஆராயத் தக்கது. இந்நூலில் உள்ள பாடல்களில் பல, சிறந்த கருத்துள்ளவை. நன்மை தராதவை இந்நூலில் கூறப்படும் அறங்கள் பல; அவை ஒவ்வொரு மக்களும் பின்பற்றக் கூடிய வகையிலே அமைந்திருக்கின்றன; மக்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டு வனவாக இருக்கின்றன; அநுபவத்திலே கண்டறிந்த உண்மைகளாகவும் காணப்படு கின்றன. கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும், பாத்து உண்ணும் தன்மை யிலாளர் அயல் இருப்பும் - இம்மூன்றும் நன்மை பயத்தல் இல (பா. 10) கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊர், வழக்கைத் தீர்த்து வைக்கின்ற அறிவு முதிர்ந்தவர் இல்லாத சபை; தமக்கு உள்ளதைப் பிறருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணும் தன்மை யில்லாதவர்களின் பக்கத்திலே வாழ்வது; இம்மூன்றும் நன்மை தருவதில்லை. மூன்று அருமையான செய்திகள் இவ் வெண்பாவிலே அடங்கியிருக்கின்றன. ஒரு ஊர் என்றால் அந்த ஊரிலே கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இருக்கவேண்டும். ஆசிரியர் இருந்தால்தான் ஊரில் உள்ள பிள்ளைகள் கல்வி கற்க முடியும். இல்லாவிட்டால் மக்கள் தற்குறிகளாகத்தான் இருக்க முடியும். அக்காலத்திலே ஊர்ப் பொதுக் காரியங்களைக் கூட ஆசிரியர்கள்தான் முன்னின்று நடத்தி வைத்தனர். ஒரு சபையென்றால் அதில் கல்வி கேள்விகளிலே சிறந்தவர்கள் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் சபையில் உள்ளவர்கள் பயனுள்ள பொருள்களைத் தெரிந்துகொள்ள முடியும். சபையினர்க்குள் கருத்து வேற்றுமை ஏற்படும் போது, சரியான கருத்து இதுவென்பதையும் கண்டறிய முடியும். அறிஞர் இல்லாத சபையால் யாருக்கும் எப்பயனும் இல்லை. அது வெறும் வம்பர் மகா சபையாகத்தான் இருக்கும். நமது பக்கத்திலே குடியிருப்போர் உதவி செய்யும் தன்மை யுள்ளவர்களாயிருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களா யிருந்தால் தான் ஒருவர்க் கொருவர் உதவி செய்து கொண்டு வாழலாம். அவர்களால் நமக்கும் நன்மையுண்டு, நம்மால் அவர்களுக்கும் நன்மை யுண்டு. பக்கத்தில் இருப்பவர்கள் தந்நலமே குறியாகக் கொண்டவர்களாயிருந்தால் நமக்கு யாதொரு பயனும் இல்லை. செல்வத்தைச் சிதைப்பன ஒருவனுடைய செல்வத்தைச் சிதைக்கும் படைகள் இன்னின்னவை என்று ஒரு வெண்பாவிலே கூறப்படுகின்றது. தன்னை வியந்து தருக்கலும், தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும்----முன்னிய பல் பொருள் வெஃகும் சிறுமையும், இம் மூன்றும் செல்வம் உடைக்கும் படை (பா. 38) தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு கர்வ மடைதல்; எடுத்ததற்கெல்லாம் திடீரென்று வீணாகக் கோபித்துக் கொள்ளுதல்; தன் முன்னே காணப்படும் பல பொருள்களின் மேலும் ஆசை வைக்கும் சிறுமைக் குணம்; இவைகள் ஒருவனுடைய செல்வத்தைக் கெடுக்கும் ஆயுதங்களாகும். ஒருவன் தன் செல்வத்தைச் சிதையாமல் பாதுகாத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டுமானால் மேலே கூறிய மூன்று குணங்களையும் விட்டுவிட வேண்டும். தற்பெருமை கூடாது; கோபம் கூடாது; கண்ட பொருள்கள் மேலெல்லாம் ஆசைப் படக் கூடாது; என்ற உண்மையைக் கூறிய செய்யுள் இது. மனைவியின் மாண்பு இல்லறத்திலே இன்பம் தவழ வேண்டுமாயின் இல்லாள் கற்புடையவளா யிருக்க வேண்டும். தன் காதலனுக்குக் கூட்டாளியாகவும், தாயாகவும், மனைவி யாகவும் இருந்து உதவி செய்வதே கற்புள்ள பெண்ணின் கடமை என்று கூறு கின்றது ஒரு செய்யுள். நல்விருந்து ஓம்பலின் நட்டாளாம்; வைகலும் இல்புறம் செய்தலின் ஈன்றதாய்---தொல்குடியின் மக்கள் பெறலின் மனைக்கிழத்தி, இம் மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். (பா. 64) நல்ல விருந்தினரைப் பாதுகாப்பதனால் கணவனுக்கு நட்பினளாம்; இல்லறத்தை வழுவாது நடத்தலால் பெற்ற தாயாவாள்; தன் பழமையான குடும்பம் விளங்குதற்குரிய மக்களைப் பெறுவதனால் மனையாள்; இம் மூன்றும் கற்புள்ள மனைவி கொண்ட கடமையாகும். இச் செய்யுள் ஒரு பெண்ணின் கடமை இன்னது என்று எடுத்துக் காட்டு கின்றது. விருந்தினரைப் பேணுதல், இல்லறத்தை நன்றாக நடத்தல், பிள்ளை பெறுதல், இதுவே கற்புள்ள மங்கையின் கடமை என்று கூறப்பட்டது. இது பண்டைத் தமிழர் இல்லறத்திலே மகிழ்ச்சியும் இன்பமும், தழைப்பதற்குக் கண்டறிந்த வழியாகும். அறமுணர்வோர் பண்பு அறநெறியே சிறந்தது; அந்நெறியிலே நடப்பதே நமது கடமை; என்று நினைப்பவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களிடம் மூன்று பண்புகள் முதன்மையாகக் காணப்படும். அவர்கள் நம் செல்வத்தைத் தமக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். வீணாகச் சேர்த்து வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டார்கள். இல்லாமையால் வருந்தும் எளியோர்க்கு வழங்குவார்கள்; அவர்கள் துன்பத்தை நீக்கி இன்பம் அடைவார்கள். இதற்கே தங்கள் செல்வத்தை செலவழிப்பார்கள். அவர்கள் இவ்வுலக இயல்பை நன்றாக அறிந்திருப்பார்கள். உலகில் தோன்றும் பொருள்கள் எல்லாம் என்றும் நிலைத் திருப்பன அல்ல; அழிந்துவிடக் கூடியன; என்ற உண்மையை அறிந்திருப்பார்கள். நிலைத்து நில்லாதவைகளை நிலைத்து நிற்பன என்று எண்ணும் புல்லறிவு அவர்களிடம் இல்லை. இத்தகைய உண்மை யறிவு காரணமாகத் தாமும் என்றோ ஒருநாள் மாண்டு மடிவது உறுதி என்பதை மறக்க மாட்டார்கள். ஆகையால் இறப்பதற்கு முன் நல்லறங்களைச் செய்யவேண்டும் என்ற உணர்ச்சி அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும். அவர்கள் எவ்வுயிர்க்கும் தீமை செய்ய மாட்டார்கள். பிற உயிர்களைத் துன்புறுத்தி அதனால் மகிழ்ச்சியடையும் மடமைக் குணம் அவர்களிடம் இருக்காது. பிறருடைய உழைப்பைச் சுரண்ட மாட்டார்கள். செல்வத்தைக் கொள்ளை கொள்ள மாட்டார்கள். மற்ற மக்கள் மனம் வேதனையடையும்படி எச் செயல்களையும் செய்ய மாட்டார்கள். இத்தகைய பண்பே குற்றமற்ற குணமாகும்; தூய தன்மையாகும். இந்த மாசற்ற குணம் அவர்களிடம் அமைந்திருக்கும். வறியோர்க்கு உதவும் செல்வம்; உலகப் பொருள்கள் நிலையற்றவை என்று அறியும் அறிவு; எவ்வுயிர்க்கும் கொடுமை செய்யாதிருத்தல்; இம் மூன்றும் அறநெறியை அறிந்தவர்களின் பண்பாகும். இதனை ஒரு செய்யுள் விளக்கமாகக் கூறுகின்றது. அச்செய்யுள் கீழ்வருவது : இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ்வுலகில் நில்லாமை உள்ளும் நெறிப்பாடும்-----எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும், இம்மூன்றும் நன்று அறியும் மாந்தர்க்கு உள. (பா. 68) வறியவர்க்கு அவர் விரும்பும் ஒன்றைக் கொடுக்கும் செல்வம்; இவ்வுலகில் உள்ள பொருள்களின் நிலையாமையைப் பற்றி நினைக்கும் நல்லொழுக்கம்; எவ்வுயிர்க்கும், அவைகள் துன்புறும்படியான கொடுமையைச் செய்யாத நற் குணம்; ஆகிய இம்மூன்று தன்மைகளும் அறத்தின் உயர்வை அறிந்தவர்களிடம் உள்ளவை. அரசியல் அரசன் நீதியுடன் நடந்தால்தான் நாடு செழிக்கும்; குடிகள் இன்புறுவர்; என்ற கருத்தை இந்நூலாசிரியர் வற்புறுத்திக் கூறுகின்றனார். தான் வாங்கிக்கொள்ளும் பொருளுக்கு ஆசைப்பட்டுக் குடிகளைக் கொடுமைப் படுத்தும் அரசன் உள்ள நாட்டிலே மழை பெய்யாது (பா. 50). கொடுங்கோல் அரசன் பெருமையடையமாட்டான் (பா. 66) கொடுமைகளை நீக்கிக் குடிகளுக்கு நன்மை செய்கின்ற வனே அரசன் ஆவான் (பா. 96). நம்பிக்கையுள்ள சேனை; எதிரிகள் பலர் முற்றுகை யிட்டாலும் எளிதில் அழிக்கமுடியாத எல்லைப்புறப் பாதுகாப்பு; நிறைந்த செல்வச் சேமிப்பு; இவை களே அரசர்க்குச் சிறந்த உறுப்புக்களாகும். (பா. 100). இவ்வாறு அரசாட்சியைப் பற்றிக் கூறுகிறது இந்நூல். பார்ப்பார் பார்ப்பாரைப்பற்றி இந்நூலிலே பலவிடங்களில் கூறப்பட்டிருக்கின்றன. நன்கு உணர்வின் நான்கறையாளர் (பா. 2) அறத்தை நன்றாக உணரும் அறவினையுடையவர்கள்; நான்கு வேதங்களை யும் கற்றவர்கள். மூன்று கடன் கழித்த பார்ப்பானும் (பா. 34) தேவர், முனிவர், பிதிரர் ஆகிய மூவருக்கும் செய்யும் மூன்று கடமைகளை யும் செய்து முடித்த பார்ப்பான். செந்நீர் முதல்வர் அறம் நினைந்து வாழ்தல் (பா. 98) வேள்வியிலே செந்தீயை வளர்க்கும் அந்தணர்கள் தமக்குரிய அறத்தை மறவாமல் பின்பற்றி வாழ்தல், மாதம் மும்மாரி பெய்வதற்கு விதையாகும். வேதம் ஓதல், மூன்று கடன்களையும் செய்தல், வேள்வி செய்தல், அறநெறி தவறாமை இவைகள் அந்தணர் கடமை யாகும் என்பதை மேலே காட்டிய பகுதிகள் அறிவித்தன. பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல் எவ்வளவு நாட்கள்தான் பழகியிருந்தாலும் பார்ப்பாரை நெருப்பைப்போல் நினைத்துப் பழகவேண்டும். நெருப்பு இன்றி யமையாதது, அதைப்போல அவர்களும் அவசியமானவர்கள்; ஆதலால், அவர்களிடம் நெருங்காமலும், நீங்கா மலும் பழக வேண்டும். இப்பகுதி, பண்டைக் காலத்திலே பார்ப்பார்கள் தமிழர் சமுதாயத்திலே பெற்றி ருந்த செல்வத்தைக் காட்டுவதாகும். பழக்க வழக்கங்கள் மனைவியைக் கோல்கொண்டு அடிப்பது அறியாமை யாகும். (பா. 3) மாட்டு மந்தைக்குள், கையில் கோல் இல்லாமல் செல்லக் கூடாது. (பா. 4) தேவர், முனிவர், பிதிரர் இவர்களுக்கான கடன்களைச் செய்பவரே அறிவுடைய பார்ப்பார் ஆவார். (பா. 34) முயற்சியுள்ளவன் சூதாட்டத்தால் பொருள் சேர்க்க விரும்ப மாட்டான்; விளையாட்டுக்காகச் சூதாடினாலும் அதிலே இலாபம் கிடைத்தால் அப்பொருளை யும் ஏற்றுக் கொள்ள மாட்டான். (பா. 42) குடிகாரன் குடும்பம் வாழாது. வாழ்வது போலக் காணப்பட்டாலும் விரைவில் அழிந்து விடும். (பா. 59) பார்ப்பார் கடமை, வேதங்களைக் கற்றிருத்தல். வேதங் களை கற்றறிந்த பார்ப்பனரே சிறந்த செல்வம் உள்ளவர்கள். (பா. 70) கொடுக்கும் பணத்திற்கு வட்டி வாங்குவோன் பேராசைக் காரன்; ஆசைக் கடலில் அழுந்தியிருப்பவன் ஆவான். (பா. 81) நூல்களை எழுதும் புலவர்கள்-----எழுத்தாளர்கள்-----அறநெறிகளைக் கூறும் நூல்களையே செய்ய வேண்டும்; மக்களை நன்னெறிப் படுத்தும் நூல்களையே எழுதவேண்டும்; இதுவே மக்களுக்கு நன்மை செய்வதாகும்; நூலாசிரியர்களும் நன்மை பெறும் வழியாகும். இதனை அறநெறி, சேர்தற்குச் செய்க பெருநூலை என்று கூறியிருப்பதனால் காணலாம். செய்க என்பதற்குக் கற்க என்று பொருள் கூறுவர். இதைவிட இயற்றுக என்று பொருள் கூறுதல் சிறந்ததாகும். விலைமாதர்களின் சொற்களை நம்பக் கூடாது. அவர்களின் இன்பத்தை விரும்புவதால் துன்பந்தான் உண்டாகும். பிறர் மனைவியை விரும்புதல் குற்றமாகும். இவை போன்ற கருத்துக்களும் பல பாடல்களிலே காணப்படுகின்றன. நம்பிக்கைகள் அருந்ததியே சிறந்த கற்புடையவள்; கற்புள்ள மகளிர்க்கு அருந்ததியே உதாரணம். நான்கு வேதங்களை அறிந்த வேதியர்கள் சொல்லும் அறங்களைப் பின்பற்றி நடப்பதே நல்லொழுக்கமாகும். கூற்றுவன் ஒரு தெய்வம்; அவன் உயிர்களைக் கவர்ந்து செல்வான். குடிகளைத் துன்புறுத்தி வரி வாங்கும் அரசன்; பொய் பேசும் மக்கள்; குடும்பத்திலிருந்து கொண்டே விபசாரம் செய்யும் பெண்; இவர்கள் உள்ள நாட்டில் மழை பெய்யாது. செய்ந்நன்றி மறந்தவன்; அறிஞர்கள் முன்னே பொய் புகல்வோன்; அடைக்கல மாக வைத்த பொருளைத் திருப்பிக் கொடுக்காதவன்; இம்மூவரும் மக்கள் பேற்றை இழப்பார்கள். கணவன் குறிப்பறிந்து நடக்கும் மனைவி; நெறி தவறாத தவசி; செங்கோல் செலுத்தும் அரசன்; இவர்கள் மழை பெய் என்று சொன்னால் மழை பெய்யும். அறநெறியிலே தவறாமல் வேள்வி செய்யும் அந்தணர்கள்; செங்கோல் செலுத்தும் அரசன்; கணவன் கருத்தின்படி ஒழுகும் பெண்கள்; இவர்கள் உள்ள நாட்டிலே மாதம் மும்மாரி பெய்யும். அறம் புரியாதவர்கள் நரகத்தை அடைவார்கள்; பழவினை யினால்தான் ஒவ்வொருவர்க்கும் இன்பதுன்பங்கள் உண்டு. உயிர்க்கொலை செய்தால் பாவம்; புலால் உண்ணுதல் அறநெறிக்கு ஏற்றதன்று. இவைபோன்ற பல நம்பிக்கைகள் தமிழ் மக்களிடம் குடி கொண்டிருந்தன. இவைகளைத் திரிகடுகப் பாடல்களிலே காணலாம். திருக்குறளின் கருத்துக்கள் பல, திரிகடுகப் பாடல்களிலே காணலாம். திருக்குறளின் கருத்துக்கள் பல, திரிகடுகப் பாடல்களிலே சுருக்கமாகக் கூறப்படுகின்றன. மறுமைக்கு அணிகலம் கல்வி (பா. 52) என்பது, ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு, எழுமையும் ஏமாப்பு உடைத்தது என்ற குறளின் கருத்தாகும். இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமை (பா. 68) என்பது வறியோர்க்கென்று ஈவதே ஈகை மற்றெல்லாம் குறி எதிர்ப்பை நீரது உடைத்து என்ற குறளின் கருத்தாகும். கொண்டான்,குறிப்பறிவாள்பெண்டாட்டி ..... பெய்யெனப் பெய்யும் மழை (பா. 96) என்பது தெய்வந் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள், பெய்எனப் பெய்யும் மழை என்ற திருக்குறளின் கருத்தாகும். இவ்வாறு திருக்குறளின் கருத்துக்கள் பல, திரிகடுக வெண்பாக்களிலே காணப் படுகின்றன. பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்களையும் சமூக வாழ்க்கை யையும் தெரிந்து கொள்ளு வதற்கு இந்நூல் மிகவும் உதவி செய்கின்றது. இன்னா நாற்பது மக்களுக்குத் துன்பந்தருவன இவை என்று கூறும் நாற்பது வெண்பாக்கள் இந்நூலில் உண்டு. இதனாலேயே இதற்கு இன்னா நாற்பது என்று பெயர் வைத்தனர். இந்நூல் வெண்பாக்கள் ஒவ்வொன்றிலும் இன்னா என்னும் சொல் திரும்பத் திரும்ப வருகின்றது. இன்னா துன்பம். இன்று இந்நூலில் காணப்படும் செய்யுட்கள் 41. ஒரு செய்யுள் கடவுள் வாழ்த்து. அது சிவன், பலராமன், திருமால், முருகன் நால்வரையும் வணங்காதவர் துன்பம் அடைவர் என்று கூறுகின்றது. இக்கடவுள் வாழ்த்துப் பாட்டு நூலாசிரிய ரால் பாடியிருக்க முடியாது. இவ்வாழ்த்தும் நூலோடு பிறந்ததா யிருந்தால் இன்னா நாற்பது என்ற பெயர் வைத்திருக்க மாட்டார்கள். இந் நூலாசிரயர் கபிலர். இப்பெயர் படைத்த புலவர்கள் பலர். அவர்களுள் இந் நூலாசிரியர் எக் கபிலர் என்று துணிந்து கூற முடியவில்லை. சங்கப் பாடல்களிலே கபிலரது பாட்டு என்றால் அதற்கொரு தனிச் சிறப்பு. பாட்டின் சிறப்புக்கு உதாரணமாகக் கபிலரது பாட்டை எடுத்துக் கூறுவது பழந் தமிழ்ப் புலவர்கள் வழக்கம். பத்துப் பாட்டிலே குறிஞ்சிப் பாட்டைப் பாடியவர் கபிலர். ஐங்குறு நூற்றிலே மூன்றாம் நூறு கபிலர் பாடியது. பதிற்றுப் பத்திலே 7-வது பத்து கபிலர் இயற்றியது. கலித்தொகையிலே குறிஞ்சிக் கலி கபிலர் செய்தது. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு முதலிய நூல்களிலும் இவருடைய பாடல்கள் பல உண்டு. இக்கபிலர் அந்தணர்; பாரியின் நண்பர். மாமிச உணவு உண்டவர். புறநானூற்றில் 14-வது பாடல் இவர் பாடியது. அதில் இவர் மாமிச உணவு உண்பவர் என்பதைக் குறிப்பிட்டிருக் கின்றார். சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனைக் காணச் சென்றார் கபிலர். அவன் கபிலர்க்குக் கை கொடுத்து வரவேற்றான். கபிலர் கை, பூப்போல மென்மையாக, வழவழ வென்றிருந்ததை உணர்ந்தான் ஆதன். என் கை மட்டும் கடினமாக இருக்கிறது, உம் கை மென்மையுடன் இருப்பது ஏன்? என்றான் ஆதன். உன் கை குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்கும் கை; கணையை எடுத்து வில்லிலே தொடுத்து விடும் கை; இரவலர்க்கு நல்ல அணிகலன்களை அள்ளி வழங்கும் கை; ஆகையால் காய்ச்சிப் போய்க் கரடு முரடாக இருக்கின்றது. என் கை நன்றாகச் சமைத்த ஊனையும், துவையலையும், கறியையும், சோற்றையும் அள்ளி அள்ளி உண்ணுகின்ற கை; உண்டசோறு செறிமானம் ஆகவில்லையே என்று வருந்தி வயிற்றைத் தடவிக் கொண்டிருக்கும் கை. ஆகையால் உன் கை கடினம்; என் கை மென்மை என்று கூறினார். இதனால் சங்ககாலக் கபிலர் புலால் உணவை வெறுத்தவர் அல்லர் என்று காணலாம். இன்னாநாற்பதில் புலால் உணவு வெறுக்கப்படுகின்றது. புலைஉள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா (பா. 13) புலால் உணவை விரும்பி வாழ்வது மக்கள் உயிர்க்குத் துன்பம் தருவதாகும். ஊனைத்தின்று ஊனைப்பெருக்குதல் முன்இன்னா (பா. 23) மற்றொரு உயிரின் ஊனைத் தின்று, தன் உடம்பை வளர்த்தல் துன்பமாகும். இவை புலால் உணவைக் கடிந்து கூறும் பகுதிகள். ஆதலால் இவர் பாரியின் நண்பராக வாழ்ந்த அந்தக் கபிலராக இருக்க முடியாது. கபிலர் அகவல் என்னும் நூல் ஒன்று உண்டு. அது சாதி வேற்றுமையை வன்மையாகக் கண்டிப்பது. சங்க நூல்களின் கருத்துகளுக்கு மாறாக, ஆரியர்களே, நால்வகைச் சாதிப்பிரி வினையை இந்நாட்டிலே புகுத்தியவர்கள் என்று கூறு கின்றது. அது பிற்காலத்திலே எழுந்த நூல். கபிலர் அகவல் பாடிய கபிலர், சாதி வேற்றுமையை ஒத்துக் கொள்ளாதவர் இன்னா நாற்பது பாடிய கபிலர் சாதி என்று சொல்லாவிட்டாலும் குடிப்பிறப்பில் உயர்வு தாழ்வு உண்டு என்று ஒத்துக் கொள்ளுகிறார். குலத்தில் பிறந்தவன் கல்லாமை இன்னா உயர்ந்த குலத்திலே பிறந்தவன் கல்வி கற்காமல் இருப்பது அவனுக்குத் துன்பமாகும். குலம் இல்வழிக் கலத்தல் இன்னா நல்ல குலம் இல்லாத குடியிலே மணம் செய்து கொள்ளுதல் துன்பம் தரும். இவைகள் இன்னாநாற்பதில் உள்ளவை. இவைகள் பிறப்பிலே உயர்வு தாழ்வு உண்டு என்பதை ஒத்துக் கொள்ளுகின்றன. ஆதலால் இக்கபிலர் சங்ககாலக் கபிலரும் அல்லர். கபிலர் அகவல் பாடிய கபிலரும் அல்லர். வேறு யாரோ ஒரு கபிலர். இவர் வரலாறு தெரியவில்லை. செய்யத் தகாதவை இன்னா நாற்பதில் கூறப்படும் நீதிகள் மிகவும் சிறந்தவை. இக்காலத்திற்குப் பொருந்தாதவை சில காணப்படலாம். பெரும்பாலான கருத்துக்கள் மக்களுக்கு அறிவையும் அறத்தையும் போதிப்பவை. அவைகளில் சிலவற்றைக் காண்போம். பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா; இருள் கூர் சிறுநெறி தாம்தனிப் போக்கு இன்னா; அருள் இலார் தம்கண் செலவு இன்னா; இன்னா பொருள் இலார் வண்மை புரிவு. (பா. 11) பாட்டின் பொருளை அறிந்து சுவைக்கும் அறிவுள்ளவர் இல்லாத இடத்தில் செய்யுளைக் கூறுதல் துன்பம். இருள் நிறைந்த சிறிய வழியிலே தனியே செல்லு தல் துன்பம். இரக்க மில்லாதவரிடம் சென்று ஒன்றைக் கேட்பது துன்பந்தரும். செல்வம் இல்லாதவர் பிறருக்குப் பொருள் கொடுக்க விரும்புதல் துன்பந்தரும். பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா; அரியவை செய்தும் எனஉரைத்தல் இன்னா; பரியார்க்குத் தாம்உற்ற கூற்றுஇன்னா; இன்னா பெரியார்க்கு தீய செயல். (பா. 25) பெரியரோடு கொண்ட நட்பை விடுவது துன்பம். தம்மால் செய்ய முடியாத காரியங்களைச் செய்து முடிப்போம் என்று கூறுவது துன்பமாகும். தம்மிடம் அன்பில்லாதவர் பால் தாம் அடைந்த துன்பத்தை உரைத்தல் துன்பமாகும். பெருமை யுள்ளவர்களுக்குத் தீமை செய்யத் தொடங்குதல் துன்பமாகும். இந்த இரண்டு பாடல்களில் உள்ள அறங்கள் சிறந்தவை; என்றும் மக்களால் பின்பற்றக் கூடியவை. பழக்க வழக்கங்கள் பண்டைத் தமிழகத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் சிலவற்றையும் இந் நூலிலே காணலாம். பண்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் சில வற்றையும் காணலாம். பார்ப்பார் இல் கோழியும்நாயும் புகல்இன்னா பார்ப்பார் வீட்டிலே கோழியும் நாயும் நுழைவது துன்பம் தரும். (பா. 3) பார்ப்பார்கள் கோழியையும் நாயையும் அருவெறுத்தனர். இரண்டும் மலந் தின்பவை; ஆதலால் அவைகள் வீட்டில் நுழைந்தால் ஆசாரத்திற்குக் குறைவு என்று கருதினர். இன்னா ஒத்துஇலாப் பார்ப்பான் உரை (பா. 22) வேதத்தை ஓதாத பார்ப்பான் அறிவில்லாதவன். ஆதலால் அவன் கூறுவதை நம்பினால் துன்பந்தான். இவைகள் பார்ப்பாரைப் பற்றிக் கூறப்பட்டிருப்பவை. இன்னா காப்பாற்றா வேந்தன் உலகு (பா. 3) குடிகளைக் காப்பாற்றாத வேந்தன் உள்ள நாட்டிலே வாழ்வது துன்பந்தரும். கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா (பா. 4) கொடுங்கோல் செலுத்தும், கொலைத்தொழிலையுடைய மன்னர்களின் ஆட்சி யின் கீழே வாழ்வது துன்பம். முறை யின்றிஆளும் அரசு இன்னா நீதி யில்லாமல் ஆளுகின்ற அரசாட்சியின் கீழ் வாழ்வது துன்பம் தரும். (பா. 6) இவைகள் அரசு முறையைப் பற்றிக் கூறியவை. திருவுடை யாரைச் செறல் இன்னா (பா. 5) செல்வம் உள்ளவரைப் பகைத்துக் கொள்வதால் துன்பம் வரும். அக்காலத்திலே செல்வர்களுக்கே சமுதாயத்தில் மதிப்பு மிகுதி. அவர்களைப் பகைத்துக்கொண்டால் அவர்களால் எந்தத் தீமையையும் செய்யமுடியும். ஆதலால் அவர்களுக்கு அடங்கியே வாழவேண்டும் என்று நம்பினர். குறி அறியான் மாநாகம்ஆட்டுவித்தல் இன்னா (பா. 30) பாம்பாட்டுவதற்குரிய மந்திரம் முதலியவற்றை அறியாதவன்பெரிய பாம்பை ஆட்டுவது துன்பம் தரும். பாம்புகளை மந்திரத்தால் ஆட்டுவிக்கலாம் என்ற நம்பிக்கை பண்டைக்காலத் திலும் இருந்தது என்பதைக் காட்டு கின்றது இது. ஒடுங்கி அரவு உறையும்இல் இன்னா (பா. 31) பாம்புபதுங்கியிருக்கின்றவீட்டில் வசிப்பது துன்பந்தரும். சில கிராமங்களில் பழைய வீடுகளிலே பாம்பு உண்டு. அதை மலைப்பாம்பு என்பர்; அடிக்கக் கூடாது என்றும் கூறுவர். இது மூடநம்பிக்கை, இந்த நம்பிக்கையைக் கண்டிக்கின்றது இது. இவ்வாறு பல நீதிகளை இந்நூலிலே காணலாம். ஒவ்வொரு வெண்பாவிலும் நான்கு நான்கு நீதிகள் கூறப்பட்டிருக்கின்றன. இந் நீதிகளில் பல நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டியவை. இனியவை நாற்பது நாற்பது வெண்பாக்கள் கொண்ட நூல்; நல்லவை இவை இவை என்று எடுத்துரைக்கின்றன. ஆகையால் இந்நூலுக்கு இனியவை நாற்பது என்று பெயர். இன்று 41 வெண்பாக்கள் இருக்கின்றன. முதற் பாட்டுக் கடவுள் வாழ்த்து. சிவன், திருமால், நான்முகன் மூவரையும் வாழ்த்துகின்றது. இவ்வாழ்த்துப் பிற்காலத் தாரால் பாடிச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்நூலைச் செய்த ஆசிரியர் பெயர் பூதஞ்சேந்தனார். இவர் இயற்பெயர் சேந்தனார்; இவர் தந்தை பெயர் பூதனார். இந்தப் பூதனார் மதுரையில் வாழ்ந்தவர். இவர் தமிழ் ஆசிரியர். ஆதலால் இந்த நூலாசிரியரை மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் என்று அழைத்தனர். இந்நூல் வெண்பாக்கள் ஒவ்வொன்றும் மக்கள் நலம் பெற்று வாழ்வதற்கான நல்லறங்களைக் கூறுகின்றன. பெரும் பாலான வெண்பாக்களில் மூன்று செய்தி கள் தாம் சொல்லப் படுகின்றன. சில சிறந்த நீதிகள் இதில் உண்டு. இவ் வெண்பாக்கள் அவ்வளவு கடினமானவை யல்ல. எளிதில் பொருள் தெரிந்து கொள்ளக் கூடியவை. மோனையும், எதுகையும் அமைந்த அழகிய வெண்பாக்கள். சில பஃறொடை வெண்பாக்களும் இதில் உண்டு. பாடல் சிறப்பு மெய், வாய், கண். மூக்கு, செவி யென்பன ஐம்பொறிகள். இவைகளை அடக்கி ஆளும் மனிதனே மன அமைதியுடன் வாழ முடியும். கல்லாத மூடர்களின் சேர்க்கையால் செல்வங் கிடைப்ப தாயினும் அச்சேர்க்கையைக் கைவிடுதல்தான் நலம். நிலைத்த அறிவும், நெஞ்சிலே உரமும் இல்லாத மனிதருடன் சேர்ந்து வாழாமைதான் நன்மை தரும். இவ்வாறு அறவுரை கூறுகின்றது ஒரு செய்யுள். ஐவாய் வேட்கை அவர் அடக்கல் முன்இனிதே; கைவாய்ப் பொருள்பெறினும் கல்லார்கண் தீர்வுஇனிதே; நில்லாத காட்சி நிறையில் மனிதரைப் புல்லா விடுதல் இனிது. ஐம்பொறிகளின் வழியால் வரும் நினைப்பையும் ஆசையையும் அடக்கிக் கொள்வதே மிகவும் சிறந்தது; கையிலே பொருள் கிடைப்பதா யிருப்பினும் கல்லாதவரை விட்டுப் பிரிதலே நன்று; நிலையில்லாத அறிவும், நெஞ்சிலே உறுதியும் இல்லாத மனிதரைச் சேராமல் இருப்பதே நலம். (பா. 26) நன்மைகள் இவை என்று எடுத்துரைக்கும் மற்றொரு செய்யுளும் மனத்திலே பதிய வைத்துக்கொள்ளத் தக்கதாகும். கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே, உயர்வுஉள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே; எளியர் இவர்என்று இகழ்ந்துரையார் ஆகி ஒளிபட வாழ்தல் இனிது. கீழ்த்தரமானவர்களுடன் சேராமல் வாழ்வது நலம்; தான் மேலும் உயர்வதற்கு எண்ணி, அதற்காக ஊக்கம் பெற்று உழைத்தல் நலம்; இவர் வறியவர் என்று ஒருவரையும் இகழ்ந்து பேசாமல் புகழுடன் வாழ்வதே நலம். தன்மானம் தன்மானத்துடன் வாழாதவன் மனிதன் அல்லன். தன்மானமே உயிர் எனக் கொண்டவன்தான் மக்களால் மதிக்கப்படுவான். தன்மான உணர்ச்சி எல்லா மக்களிடமும் உண்டு. சிலர் அவ்வுணர்ச்சியை எச்சமயத்திலும் இழந்து விடுவதில்லை. சிலர் ஆபத்தும் மனச்சோர்வும் ஏற்படும்போது, அவ்வுணர்ச்சியை விட்டுவிடுகின்றனர். எச்சமயத்திலும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதே மனிதத்தன்மை என்று கூறுகின்றது இந்நூல். உயிர்சென்று தான்படினும் உண்ணார் கைத்துஉண்ணாப் பெருமை போல் பீடுஉடையது இல் (பா. 12) பசியினால் உயிரே போவதானாலும், உண்ணத்தகாதவர் கையிலிருந்து உணவைப் பெற்று உண்ணாத பெருமையே சிறந்தது; அதைப் போன்ற பெருமை வேறு ஒன்றும் இல்லை. மானம் அழிந்தபின் வாழாமை முன்இனிதே (பா. 14) மானங்கெட்ட பின் உயிர் வாழ்வதைவிடச் செத்து மடிவதே சிறந்ததாகும். மானம் படவரின் வாழாமை முன்இனிதே (பா. 28) மானம் கெடும்படியான நிலைமை வருமாயின், அந்நிலைமை வருவதற்கு முன்பே இறந்துபடுதல் நன்று. இவைகள், தன்மானத்தின் பெருமையை எடுத்துக்காட்டின. அரசன் கடமை நாடாளும் மன்னவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் இந்நூல் எடுத்துரைக்கின்றது. அரசனுக்குக் கூறப் பட்டிருக்கும் அந்த அறிவுரை, அரசன் அற்ற குடி அரசுக்கும் ஏற்றதாகும். ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே; முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே; பற்றுஇலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கு அறிதல் வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது. (பா. 36) ஒற்றர்களைக்கொண்டும் நாட்டிலே நடைபெறும் நிகழ்ச்சி களைத் தெரிந்து கொள்ளுதல் சிறந்தது; நீதி வழங்குவதற்கு முன்பே, தான் நன்றாக ஆராய்ந்து உண்மை யறிந்து நீதி வழங்குவதே சிறந்தது; ஒரு சார்பிலே நிற்காதவனாய், எல்லா வுயிர்களிடத்தும் சமமான நிலையில் நின்று, எல்லாரிடத்திலும் உள்ள நன்மை தீமைகளை அறிந்து கொள்ளுவதே வேந்தர்களின் கடமை. இந்த அறிவுரையைப் பின்பற்றி நடக்கும் அரசாங்கம் எப்பொழுதும் நிலைத்து நிற்கும்; மக்களால் தூற்றப்படாது; போற்றப்படும். சிறந்த அறங்கள் இன்னும் பல சிறந்த அறங்களும் இந்நூலிலே கூறப் பட்டுள்ளன. அவைகளில் சிலவற்றைக் காண்போம். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று நாம் படித்திருக்கின்றோம்; தந்தையைத் தெய்வமாகப் போற்ற வேண்டும் என்பதே இதன் கருத்து. தந்தை மொழியைத் தட்டவே கூடாது என்று இன்றும் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுக் கின்றோம். இதற்கு மாறான கருத்தை இந்நூலிலே காணலாம். தந்தை ஒழுக்கம் அற்றவனாயிருந்தால் நீதி இது, அநீதி இது என்று அறியாதவனாயிருந்தால் அவனுடைய சொல்லைக் கேட்கக் கூடாது. கேட்பதனால் யாதும் பயன் இல்லை என்று கூறுகிறது இந்நூல். தந்தையே ஆயினும்தான் அடங்கான் ஆகுமேல் கொண்டு அடையான் ஆகல் இனிது (பா. 8) தந்தையா யிருந்தாலும் சரி அவன் அடக்க மற்றவனா யிருப்பின், அவன் சொல்லைக் கேட்டு நடக்காமல் இருப்பதே நலம். பிச்சை புக்காயினும் கற்றல் இனிதே (பா. 2) பிச்சை யெடுத்தாவது கல்வி கற்றல் மிகவும் சிறந்தது. இது அனைவரும் போற்றக்கூடிய சிறந்த அறிவுரையாகும். பற்பலநாளும் பழுதுஇன்றிப் பாங்குடைய கற்றலின் காழ்இனிது இல். பல நாட்களும் சோர்வில்லாமல் சிறப்பு நூல்களைக் கற்பதைவிட மிகச் சிறந்தது வேறொன்றும் இல்லை. இவை கல்வியின் சிறப்பை வலியுறுத்தின. ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிதே வேறு ஒரு உயிரின் உடம்பைத் தின்று, தன் உடம்பை வளர்க்காமல் இருப்பதே சிறந்த அறம் (பா. 5) என்று சொல்லி, மாமிச உணவைக் கூடாது என்று மறுக்கின்றது. கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே (பா. 11) கடன் வாங்கி உண்டு வாழாத முறையைக் கண்டறிந்து வாழ்தலோ சிறந்தது. கடன் கொண்டு செய்வன செய்தல் இனிதே பணம் இல்லை என்று செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமல் விட்டு விடக்கூடாது; கடன் வாங்கியாவாது அவற்றைச் செய்து முடிப்பதே நன்று. (பா. 43) இவைகள் கடன் வாங்குவதை மறுத்தும், அவசியமானால் கடன் வாங்கலாம் என்றும் கூறின. விளையுடையான் வந்து அடைந்து வெய்துறும் போழ்து மனன் அஞ்சான் ஆகல் இனிது ஊழ்வினை தன்னை அடைந்து, அதனால் துன்பம் அடையும் பொழுதும், உள்ளத்திலே அச்சமும் சோர்வும் இன்றி உரிய கடமைகளைச் செய்வதே சிறந்தது. (பா. 15) ஊழ்வினை ஒன்று உண்டு; ஆயினும், உள்ளத்திலே ஊக்கமும், ஆண்மையும் உள்ளவர் அவ்வினையை முறியடிக்கலாம் என்று உரைத்தது இது. ஊர் முனியா செய்தொழுகும் ஊக்கம் மிக இனிதே தான் இருக்கும் ஊரார் வெறுக்கத்தகாத செயல்களைச் செய்து வாழும் ஊக்கமே சிறந்தது; ஊரார் வெறுக்கும் செயல் களைச் செய்பவன் துன்பத்திற்கு ஆளாவான். (பா. 34) இது ஊருடன் ஒத்துவாழ வேண்டும் என்று அறிவுறுத்தியது. எத்துணையும் ஆற்ற இனிது என்ப பால்படும் கற்றா உடையான் விருந்து எந்த அளவிலும் மிகவும் பால் கறக்கும் கன்றோடு கூடிய பசுவை உடையவன் செய்யும் விருந்தே சிறந்தது (பா. 39) என்பர். யார் செய்யும் விருந்து சிறந்தது என்பதை எடுத்துரைத்தது இச்செய்யுள். மற்றவர்கள் செய்யும் விருந்தைக் காட்டிலும் கறவைப் பசுவை வைத்திருக் கின்றவன் செய்யும் விருந்தே சிறந்ததாம். நல்ல பால், நல்ல நெய், நல்ல தயிர் இவை விருந்திற்கு வேண்டியவை. விலைக்கு வாங்கினால் அவ்வளவு நல்லதாகக் கிடைக்காது. சொந்தமாக மாடிருந்தால்தான், கலப்பற்ற பால், தயிர், நெய் கிடைக்கும். ஆதலால் கறவைப் பசுவை யுடையவன் செய்யும் விருந்தே சிறந்த சுவையுள்ள விருந்தாகும் என்று கூறிற்று. திருக்குறள் இனியவை நாற்பதிலே திருக்குறளின் கருத்துக்கள் பல காணப்படுகின்றன. ஊனைத்தின்று ஊனைப் பெருக்காமை முன் இனிது என்பது தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிதின் ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள் என்ற திருக்குறளின் கருத்தைக் கொண்டதாகும். ஆற்றுந் துணையால் அறம் செய்கை முன் இனிதே (பா. 7) என்பது, ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் என்ற திருக்குறளின் கருத்தாகும். மானம் அழிந்த பின் வாழமை முன் இனிதே (பா. 14) என்பது மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் என்ற குறளின் கருத்தைக் கொண்டதாகும். நட்டார்க்கு நல்ல செயலின் இனிது எத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன் இனிதே (பா. 18) என்பது நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல் என்ற திருக்குறளின் பொருளை அப்படியே எடுத்துரைக்கின்றது. இவ்வாறே பல பாடல்களிலே திருக்குறளின் கருத்துகள் காணப்படுகின்றன. இனியவை நாற்பதிலே உள்ள வெண்பாக்கள் அனைத்தும் சிறந்த கருத்தமைந்தவை; படிப்போர் மனத்திலே அப்படியே பதியக் கூடியவை; தமிழ் மக்கள் வாழ்கைச் சிறப்பை காண்பதற்கு இந்நூல் உதவி செய்கின்றது; அவர்களுடைய ஒழுக்கச் சிறப்பை விளக்கி உரைக்கின்றது. நான்மணிக் கடிகை நான்மணிக் கடிகை ஒரு சிறந்த நூல். இதனுள் இன்று 106 வெண்பாக்கள் காணப்படுகின்றன. நூறு வெண்பாக்கள் தாம் நூலாசிரியரால் பாடப்பட்டிருக்க வேண்டும். ஆறு வெண் பாக்கள் எப்படியோ வந்து சேர்ந்துவிட்டன. இவற்றுள் இரண்டு வெண்பாக்கள் கடவுள் வாழ்த்தாக இருக்கின்றன. இரண்டும் திருமாலைப் பற்றியே கூறுகின்றன. இந்த இரண்டும் நூலினுள் நான்கும் இந்நூலாசிரியரால் பாடப்பட்டவை அல்ல என்றே கொள்ள வேண்டும். நான்மணிக் கடிகை---- நான்கு மணிகள் பதித்த ஆபரணம். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு அணிகலன். அந்த அணிகலன் களிலே நான்கு நான்கு இரத்தினங்கள் பதித்து வைக்கப்பட்டிருக் கின்றன. இதுவே நான்மணிக்கடிகை என்பதன் விளக்கம். நான்மணிக் கடிகையின் ஒவ்வொரு வெண்பாவும் நந் நான்கு நீதிகளைத் தெளிவாகக் கூறுகின்றன. படிப்பவர்களுக்கு நன்றாக விளங்கும் விதத்தில் நறுக்கு நறுக்கென்று நீதியைச் சொல்லுகின்றன. திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் நூல்களின் வெண்பாக்களைவிட இந்நூல் வெண்பாக்கள் இனிமையானவை; தெளிவானவை; விளக்கமானவை; திரிகடுகம், சிறுபஞ்ச மூலம், ஏலாதி மூன்றும் மருந்தின் பெயரைக் கொண்டவை; ஆதலால் அவைகளின் நடையிலும் கொஞ்சம் கசப்பும் காரமும் அமைந் திருப்பது இயற்கை. நான்மணிக் கடிகையோ ஒளிபொருந்திய மணியாரம்; ஆதலால் இதன் செய்யுட்கள் அவைகளைவிட ஒளிபெற்று விளங்குவதும் இயல்புதான். இந் நூலாசிரியர் பெயர் விளம்பி நாகனார். இவர் பெயர் நாகனார். இவர் வாழ்ந்த ஊர் அல்லது பிறந்த ஊர் விளம்பியாக இருக்கலாம். ஆதலால் ஊர்ப்பெயரும் சேர்ந்து விளம்பி நாகனார் என்று பெயர் பெற்றார். இவரைப் பற்றிய வேறு வரலாறு ஒன்றும் தெரியவில்லை. பாடல்களின் சிறப்பு எதையும் தெளிவாகக் கூறுவதே இந்நூல் வெண்பாக் களின் சிறப்பாகும். சில வெண்பாக்களைப் படித்தாலே இந்த உண்மையைக் காணலாம். கள்ளி வயிற்றின் அகில் பிறக்கும்; மான்வயிற்றின் ஒன் அரி தாரம்பிறக்கும்; பெரும் கடலுள் பல்விலைய முத்தம் பிறக்கும்; அறிவார் யார் நல்ஆள் பிறக்கும் குடி. (பா. 4) புகைத்தால் நறுமணம் தரும் அகில் கட்டை கள்ளியின் நடுவிலே உண்டாகும். மானின் வயிற்றிலே ஒளியுள்ள அரிதாரம் பிறக்கும்; உப்புச்சுவையுள்ள பெரிய கடலிலே மிகுந்த விலையுள்ள முத்து உண்டாகும். ஆதலால் நல்ல மக்கள் பிறக்கும் குடி இன்ன குடிதான் என்று யார் அறிவார்? ஒருவனுடைய குடிப் பிறப்பைக்கண்டு அவனை உயர்வாகவோ தாழ் வாகவோ எண்ணக்கூடாது; அவனுடைய கல்வி அறிவு ஒழுக்கங்களைக் கொண்டே அவனை மதிக்க வேண்டும்; இழிந்த குடியிலே பிறந்தாலும் கல்வி அறிவு, ஒழுக்க முள்ளவன் உயர்ந்தவன்; இவைகள் இல்லாதவன் உயர்ந்த குடியிலே பிறந்தவனாயினும் இழிந்தவன்; என்ற கருத்தை வலியுறுத்துகின்றது இச்செய்யுள். உறக்கம் இல்லாமல் துன்புறுகின்றவர்கள் யார் யார்? என்று உரைக்கின்றது ஒரு செய்யுள். கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள் செல்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள் காப்பார்க்கும் இல்லை துயில் திருடுவோம் என்று எண்ணிக் காலம் பார்த்திருக்கும் கள்வர்களுக்கும் தூக்கம் இல்லை; எப்பொழுதும் காதலியிடமே உள்ளத்தை அடிமையாக்கி யிருப்பவர்களுக்கும் உறக்கம் இல்லை. சிறந்த செல்வப் பொருளை விரைவிலே பெருக்குவோம்.. என்று எண்ணி உழைப்பவர்களும் தூங்கமாட்டார்கள்; உழைத்துச் சேர்த்த பொருளைக் காப்பாற்றுகின்றவர்களுக்கும் உறக்கம் இல்லை. (பா. 7) இந்நால்வகையினரும் தங்கள் நினைப்பை வேறு இடத்திலே செலுத்தி யிருப்பார்கள்; ஆகையினால் மன அமைதியுடன் உறங்க மாட்டார்கள். சிலருக்குத் தம்மூர், வேற்றூர் என்ற வேறுபாடே தோன்றாது; எல்லா வூரையும் தம்மூர் போலவே எண்ணுவார்கள். அவர் களுக்குத் தம்மூரிலே கிடைக்கும் அத்தனையும் வேற்றூரிலும் கிடைக்கும். இத்தகையோர் யார் என்று சொல்லுகிறது ஒரு பாட்டு. நல்லார்க்கும் தம்ஊர் என்று ஊர் இல்லை; நன்னெறிச் செல்வார்க்கும் தம்ஊர் என்று ஊர் இல்லை; ---- அல்லாக் கடைகட்கும் தம் ஊர்என்று ஊர் இல்லை; தம் கைத்து உடையார்க்கும் எவ்வூரும் ஊர். (பா. 82) கல்வி அறிவு., ஒழுக்கங்களிலே சிறந்த நல்லவர்களுக்கும் தம்முடைய ஊர் என்று ஓர் ஊர் இல்லை; நன்னெறியிலே நடப்போர்க்கும் தம்முடைய ஊர் என்று ஓர் ஊர் இல்லை; உயர்ந்தவர்கள் அல்லாத கீழ்மக்கட்கும் தம்முடைய ஊர் என்று ஓர் ஊர் இல்லை; தம் கையிலே செல்வம் உள்ளவர்களுக்கும் எல்லா ஊரும் சொந்த ஊர்தான். நல்லவர்கள் எல்லா ஊர்களிலும் பாராட்டப்படுவார்கள். உண்மை ஒழுக்கமுள்ள உயர்ந்தவர்கள் எல்லா ஊர்களிலும் வரவேற்கப்படுவார்கள். தீமை செய்யும் கீழ்மக்கள் உள்ளூரிலும், வெளியூர்களிலும் வெறுக்கப்படுவார்கள். செல்வம் உள்ளவர் எங்கு சென்றாலும், பணத்தைக்கொண்டு சொந்த ஊர்போல் வசதி செய்து கொண்டு வாழலாம். இக்கருத்தையே இப்பாடல் தெளிவாக உரைத்திருக்கின்றது. அரசியலைப் பற்றி அரசாள்வோருக்கு அறிவுறுத்தும் அறவுரைகள் இந் நூலிலே பலன் உண்டு. அவை ஆளூவோர் தங்கள் உள்ளத்திலே மறவாமல் கொள்ள வேண்டியவை. நாட்டு ஆக்கம் நல்லன் இவ்வேந்து என்றல் (பா. 18) ஒரு நாட்டுக்கு உயர்வு, இந்நாட்டை ஆளும் வேந்தன் நல்லவன் என்று குடிமக்களால் பாராட்டப்படுவதாகும். மண் அதிர்ப்பின் மன்னவன் கோல் அதிர்க்கும் (பா. 19) நாட்டில் உள்ள குடிமக்கள் கலங்குவார்களாயின் மன்னவனது ஆட்சியும் கலங்கி விடும்; நிலைக்காது. கோல்நோக்கி வாழும் குடி எல்லாம் (பா. 27) குடிகள் எல்லாம் அரசனது செங்கோலை நோக்கியே உயிர் வாழ்வார்கள்; ஆதலால் நீதி தவறாது ஆட்சி புரிய வேண்டும். மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை; மழையும் தவம்இலார் இல்வழியில்லை; தவமும் அரசன் இலாவழி யில்லை; அரசனும் இல்வாழ்வார் இல்வழி இல். (பா. 47) மழையில்லாவிட்டால் இவ்வுலகில் வாழ்வோருக்கு வாழ் வில்லை; மழையும் தவம் இல்லாதவர்கள் வாழும் இடங்களில் இல்லை; தவமும் அறநெறியைக் காக்கும் அரசன் இல்லாத விடத்தில் இல்லை; அரசனும் குடிமக்கள் இல்லாதவிடத்தில் இல்லை. இச்செய்யுளிலே தவத்தோரால்தான் மழை பெய்கின்றது. தவசிகளைக் காப்பாற்றுவது அரசன் கடமை; என்று கூறியிருப்பது பழங்கால மக்கள் நம்பிக்கை. குடிமக்கள் நன்றாக வாழா விட்டால், அரசன்----அரசாட்சி----இல்லை என்று கூறியிருக்கும் உண்மை என்றும் அழியாதது. மேலே கூறப்பட்டிருப்பவை அரசியலைப் பற்றி அறிவுறுத்தும் உண்மைகள். அறவுரைகள் சினம் கொள்வதால் நன்மையில்லை, ஆத்திரம் அறிவைச் சிதைக்கும். உண்மையைக் காணவிடாது. சினத்தை அடக்கு வதே அறிஞர் கடமை. இவ்வுண்மையை வலியுறுத்துகிறார் இவ்வாசிரியர். எல்லாம், வெகுண்டார் முன் தோன்றா கெடும் (பா. 8) எல்லா நன்மைகளும் கோபங்கொள்கின்றவர்களிடம் காணப்படாமல் அழிந்துவிடும். என்றும், விடல்வேண்டும் தம்கண் வெகுளி (பா. 11) எப்பொழுதும், தம்மிடம் உள்ள கோபத்தை விட்டுவிட வேண்டும்; கோபமே கூடாது. வெல்வது வேண்டின் வெகுளி விடல் பிறரை வெல்ல வேண்டினால், வெகுளியை----அதாவது கோபத்தை- விட்டு விட வேண்டும்; அப்பொழுதுதான் ஆழ்ந்து சிந்தித்து அவரைத் தோற்கடிக்கலாம். (பா. 15) இவைகள் சினத்தைப் பற்றிக் கூறியவை. புலவர் தேவர்களுக்குச் சமமானவர்கள். தேவர் அனையர் புலவரும் - புலவர்கள் தேவர்களைப் போன்றவர்கள். (பா. 74) இல்லத்திலே இருந்துகொண்டு விபச்சாரம் செய்கின்றவள் எமன் ஆவாள். கூற்றமே இல்லத்துத் தீங்கு ஒழுகுவாள் இல்லத்திலே இருந்து கெட்டவழியிலே நடக்கின்ற பெண், தன் கணவனுக்கு எமன் ஆவாள். (பா. 83) என்றும் நன்மைகளைச் சிந்திப்பவர்களே அந்தணர் ஆவார். என்றும் நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம் - எப்பொழுதும் நல்ல செயல்களிலே கருத்தைச் செலுத்துவதே அந்தணர்களின் எண்ணமாக இருக்க வேண்டும் (பா. 85) பலதார மணம் தவறு; பல மனைவிகளை மணந் திருப்பவன் வறுமையால் வாடுவான். நிரப்பிடும்பை பல் பெண்டிர் ஆளன் அறியும் - வறுமைத் துன்பத்தைப் பல பெண்களை மணந்தவனே அறிவான். (பா. 95) கொள்கைகளும் நம்பிக்கைகளும் மாந்திரிகர் மந்திரத்தினால் பாம்பின் கோபத்தை அடக்கி விடுவார்கள்; அதைத் தன் வசப்படுத்திக்கொள்வார்கள் (பா. 10) தான் இறந்தபின் தன்னுடன் வருவது தான்செய்த அறத்தின் பயனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. (பா. 15) தன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஆளும் தன்மையுள்ளவனே தவம் புரிவதற்குத் தகுதியுள்ளவன். (பா. 16) கொல்லுவதற்காகவே பிற உயிர்களை வளர்ப்பது குற்ற மாகும்: விலைக்குப் புலால் வாங்கிச் சமைத்துச் சாப்பிடுவதும் குற்றமாகும். (பா. 26) அந்தணர்கள் உயர்ந்த பிறப்புள்ளவர்கள். (பா. 33) மையிட்டுக் கொள்வதனால் கண்கள் அழகாகக் காணப்படும். ஆதலால்தான் பெண்கள் கண்ணுக்கு மையிட்டுக் கொள்ளும் வழக்கம் நீண்ட காலமாக நிலவி வருகின்றது. (பா. 36) தெய்வத்தை அடைந்து வாழ்த்தி வணங்கினால் வேண்டும் வரங்களைப் பெறலாம் (பா. 61) திருமகள் கருணையினால்தான் ஒருவனுக்குச் செல்வம் உண்டாகும். (பா. 65) தந்தையின் பெருமையையும், பண்பையும் அவனுடைய மகனால் அறிந்து கொள்ளலாம்; பூர்வ வினையை வெல்ல முடியாது; அது தன் பலனைத் தந்தே தீரும். புலால் உண்ணல் அறமன்று; கள்ளுண்டல் தீமை தரும். போர் செய்வதற் குரிய படைகளிலே யானைப்படைகளே சிறந்தவை. கல்வி கற்பது மக்கள் கடமை; கற்றவர்களே சிறந்தவர். இக்கருத்துக்கள் பல பாடல்களிலே காணப்படுகின்றன. திருக்குறள் கருத்துக்கள் நான்மணிக் கடிகையிலே திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றைக் காணலாம். கெட்டறிய கேளிரால் ஆய பயன் - தமக்குக் கேடுவந்தபோது உறவினரால் ஆகும் பயனைக் கண்டறிக; (பா. 3) என்பது நான்மணிக் கடிகை. கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை, நீட்டி அளப்பது ஓர் கோல் என்பது திருக்குறள். இரண்டும் ஒத்த கருத்துடையன. பிறர் செய்த நன்றியை நன்றாகக் கொளல்வேண்டும் - பிறர் செய்த நன்றியை மறவாமல் என்றும் மனத்திலே கொள்ள வேண்டும்; (பா. 11) இது நான்மணிக் கடிகை. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக், கொள்வர் பயன் தெரிவார் என்பது திருக்குறள். இவை இரண்டிலும் கருத்தொற்றுமை காணப்படுகின்றது. பொருள் பெறினும் நாடாதி நட்டார் கண் விட்ட வினை. பெரும் பொருள் கிடைப்பதாயினும் நண்பர்களின் பொறுப்பிலே செய்வதற்கு விட்டிருக்கும் தொழிலிலே தலையிடாதே. அதைப்பற்றி ஆராயாதே (பா. 25) என்பது நான்மணிக்கடிகை : தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும் என்பது திருக்குறள் இவ்விரண்டிலும் ஒத்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. எற்றுள்ளும், இன்மையின் இன்னாதது இல்லை - எதனுள்ளும், வறுமையைப் போலத் துன்பந்தருவது வேறு ஒன்றுமேயில்லை (பா. 30) என்பது நான்மணிக்கடிகை. இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின் இன்மையே இன்னாதது என்பது திருக்குறள். இவையிரண்டும் ஒத்த கருத்துடையன. முன்னம் முகம்போல முன் உரைப்பது இல் ஒருவனுடைய உள்ளத்தில் இருப்பதை அவனுடைய முகத்தைப் போல முதலில் தெரிவிப்பது வேறொன்றும் இல்லை; (பா. 46) என்பது நான்மணிக்கடிகை. அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் என்பது திருக்குறள். இவை இரண்டும் ஒரே கருத்துடையன. சுருக்குக செல்லா இடத்துச் சினம் - தன் சினம் செல்லாத இடத்திலே அச்சினத்தைச் செல்லாமல் சுருக்கிக் கொள்ளுக; என்பது நான்மணிக் கடிகை. (பா. 87) தன்னைக் காட்டினும் வலியாரைச் சினந்து கொள்வதால் தனக்குத்தான் தீமையுண் டாகும். தன்னை விட வலியாரிடம் தன் சினம் செல்லாது. ஆதலால் அச்சினத்தை அடக்கிக் கொள்ளுவதே அறிவுடைமையாகும். இக்கருத்து, செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான் அல் இடத்துக், காக்கின் என் காவாக்கால் என்? என்ற திருக்குறளிலே அமைந்திருப்பதைக் காணலாம். திருக்குறளின் கருத்தைக் கொண்ட இவை போன்ற பல பாடல்கள் நான்மணிக் கடிகையிலே அமைந்திருக்கின்றன. நான்மணிக் கடிகையைப் படிப்போர் அவற்றைக் காணலாம். இந்நூல் தமிழரின் பண்பாட்டை விளக்கும் சிறந்த நூலாகும். அறநெறியிலே நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தும் அழகான வெண்பாக்களைக் கொண்ட அருமையான நூல். சிறு பஞ்சமூலம் சிறு பஞ்சமூலம் என்பது ஒரு மருந்தின் பெயர். மூலம் ---வேர். சிறிய ஐந்து வேர்கள் என்பதே சிறு பஞ்சமூலம் என்பதன் பொருள். கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறு மல்லிவேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் இவைகளே சிறு பஞ்சமூலம். இந்த ஐந்து வேர்களும் மருந்துப் பண்டங்கள். இவற்றால் உடல் நோய்கள் பலவற்றைப் போக்க முடியும். இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து பொருள்கள் கூறப்படுகின்றன. அந்த ஐந்து வேர்களும் உடல் நோயை ஒழிக்கும்; உடம்பை நன்றாக வைத்திருக்க உதவி செய்யும். இந்நூலில் ஒவ்வொரு வெண்பாவிலும் சொல்லப் படும் ஐந்து பொருள்களும் மக்களின் மனப் பிணியை மாய்க்கும்; உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துப் பாதுகாக்கும். இந்தக் கருத்தில் தான் இந் நூலுக்குச் சிறு பஞ்ச மூலம் என்று பெயர் வைக்கப்பட்டது. சிறு பஞ்சமூலம் - சிறுமை, பஞ்சம் மூலம் என்ற மூன்று மொழிகளைக் கொண்டது. இந்த மூன்று சொற்களில் சிறுமை என்னும் ஒரு சொல்தான் தமிழ்ச் சொல் பஞ்சம், மூலம் என்னும் இரண்டு சொற்களும் வடசொற்கள் . நூலின் பெயரிலேயே ஒருபாகம் தமிழ்ச் சொல்லாகவும், இரண்டு பாகம் வட சொல்லாகவும் அமைந்திருப்பது உற்று நோக்கத்தக்கது. இதைக் கொண்டு இந்நூலாசிரியர் வடமொழிப் பயிற்சியுள்ளவர், வடநூல்களின் பொருள்களையும் இந்நூலிலே கூறியிருக்கின்றார்; என்று எண்ணலாம். இதில் தவறில்லை. சிறுபஞ்ச மூலத்தின் ஆசிரியர் காரியாசான்; இவருடைய ஆசிரியர் மாக்காயனார். ஆதலால் இந்நூலாசிரியர் பெயரை மாக்காயனார் மாணாக்கன் காரியாசான் என்று அழைப்பர். இந்நூலிலே இன்று 97 வெண்பாக்கள் தாம் இருக்கின்றன. முதலில் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று. இறுதியில் பாயிரப் பாடல் ஒன்று. இரண்டையும் சேர்த்துக் கொண்டால் 99 வெண்பாக்கள். நூலின் பாடல்கள் மிகவும் எளியவை; இனியவை; என்று சொல்லிவிட முடியாது. மிகவும் கரடு முரடானவை என்று கூறிவிடவும் முடியாது. நடுத்தரமானவை. நூலின் பெயரில் மூன்றில் இரண்டு சொல் வடமொழியாக இருந்தாலும், நூலில் உள்ள வெண்பாக்களில் வடசொற்கள் அதிகம் இல்லை. இது இவ்வாசிரியரின் தமிழ்ப் புலமையின் சிறப்பைக் காட்டுவது. சிறந்த பாடல்கள் சிறுபஞ்ச மூலத்திலே பல சிறந்த கருத்துள்ள பாடல் களைக் காணலாம். மக்களுக்கு அழகைத் தருவன இன்னின்னவை என்று இரண்டு வெண்பாக்களிலே கூறப்படுகின்றன. அழகைப் பற்றிக் கூறும் அவ்வெண்பாக்கள் மிகவும் அழகாகவே அமைந்திருக்கின்றன. கண்வனப்புக் கண்ணோட்டம்; கால்வனப்புச் செல்லாமை; எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்;---பண்வனப்புக் கேட்டார் நன்றுஎன்றல்; கிளர்வேந்தன் தன்நாடு வாட்டான் நன்றுஎன்றல் வனப்பு. (பா. 9) கண்ணுக்கு அழகு கண்ணாடி அன்று; அல்லது மை தீட்டிக் கொள்வது அன்று; துன்பப்படும் மக்களிடம் இரங்கங் காட்டுவதே கண்ணுக்கு அழகு. மதியாதார் தலைவாசலை மிதிப்பதற்கு செல்லாமைதான் காலுக்கு அழகு; இத்துணை என்று தவறாமல் கணக்கிட்டுக் கூறுதலே கணக்குக்கு அழகாகும்; கேட்பவர்கள், நன்று! நன்று! என்று சொல்லிச் சுவைக்கும்படி பாடுவதுதான் பாட்டுக்கு அழகாகும்; அரசனுக்கு அழகு தனது நாட்டு மக்களைத் துன்புறுத்த மாட்டான் என்று சொல்லப் படுவதாகும். மயிர்வனப்பும்; கண்கவரும் மார்பின் வனப்பும்; உகிர்வனப்பும்; காதின்வனப்பும்; செயிர் தீர்ந்த பல்லின்வனப்பும்; வனப்பல்ல; நூற்குஇயைந்த சொல்லின்வனப்பே வனப்பு. (பா. 37) தலைமயிரை அழகு செய்துகொள்வது வனப்பன்று; பார்ப்போர் உள்ளத்தைக் கவரும்படியான அகன்ற எடுப்பான மார்பும் அழகன்று; சொத்தையில்லாமல் ---- அழகாக ---- உருண்டு திரண்டிருக்கும் நகமும் வனப்பன்று; காதின் அழகும் அழகன்று; சிறிதும் பழுது சொல்ல முடியாமல் முத்துப்போல் வரிசையாக அமைந்திருக்கும் பல்லும் அழகன்று; தான் படித்திருக்கும் நூல்களுக்குத் தகுந்தவாறு, அவைகளின் கருத்துக்களைக் கேட்போர்க்கு விளங்கும்படி எடுத்துரைக்கும் சொல்லின் அழகே அழகாகும். (பா. 37) இவை இரண்டு வெண்பாக்களும் மக்களுக்கு அழகைத் தருவன இவையிவை யென்று தெளிவாகத் தெரிவிக்கின்றன. ஆள்வோர் கடமை அரசாள்வோர் கடமையைப் பற்றிப் பல பாடல்களிலே கூறப்படுகின்றன. அவற்றுள் ஒரு சிறந்த வெண்பா கீழ் வருவது. வார்சான்ற கூந்தல்! வரம்புஉயர; வைகலும் நீர்சான்று உயரவே; நெல்உயரும்;---சீர்சான்ற தாவாக் குடிஉயரத்; தாங்கரும்சீர்க் கோஉயரும்; ஓவாது உரைக்கும் உலகு. (பா. 46) நீண்ட கூந்தலை யுடைய பெண்ணே! நிலத்திலே நீர் தங்கும்படி கரை உயர்ந்திருக்கவேண்டும்; கரை உயரமாயிருந் தால்தான் நிலத்திலே தண்ணீர் தங்கி நிற்கும்; தண்ணீர் தேங்கி நின்றால்தான் பயிர் செய்யப்படும். நெற்பயிர் ஓங்கி வளரும்; நெற்பயிர் ஓங்கி வளர்ந்தால்தான் குடிமக்கள் உணவுப் பஞ்சமின்றிச் செல்வங்கள் எல்லாம் பெற்று உயர்ந்து வாழ்வார்கள்; குடிமக்கள் உயர்வாக வாழ்ந்தால்தான் அரசன் உயர்வாக வாழ்வான். (அரசாட்சி சிறப்படையும்). நாட்டிலே உணவுப் பொருள் உற்பத்தி பெருகுவதற்கான முயற்சியிலேயே அரசாங்கம் முதலிலே ஈடுபட வேண்டும். அப்பொழுதுதான் பஞ்சம் தலைகாட்டாது; நாட்டில் அமைதி நிலைக்கும்; மக்களிடம் ஒற்றுமைக் குறைவும், ஒழுக்கக் கேடும் தோன்ற மாட்டா; மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்வார்கள். இது எக்காலத்திலும் எந்த அரசாங்கமும் கண்ணும் கருத்து மாகச் செய்யவேண்டிய கடமையாகும். தேசத் தொண்டு மழை குறைந்த நாடுகளில் மரம் வளர்க்கவேண்டும் என்னும் கிளர்ச்சி இன்று வலுத்து வருகின்றது. இருக்கும் காடுகளை அழித்துவிடக்கூடாது; அவைகளைப் பாதுகாக்க வேண்டும்; நாடெங்கும் புதிய மரங்களை வளர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி எல்லா நாடுகளிலும் தலையெடுத்திருக்கின்றது. பண்டைய இலக்கியங்களிலே செடி நட்டு மரம் வளர்ப்பதை ஒரு கடமையாகக் கூறியிருக்கின்றனர். திருமணச் சடங்கில், இறுதியில் மரம் நடுவதையும் ஒரு சடங்காக வைத்திருக்கின்றனர்; கல்யாணத்திலே அரசாணிக்காலாக இருந்த ஒதிய மரத்தை நட்டுப் பயிர் செய்வது வழக்கம். ஒவ்வொரு மனிதனும் தன் ஆயுள் காலத்திலே பால் தரும் ஐந்து மரங்களையாவது நட்டுப் பயிர் செய்யவேண்டும் என்பதை முன்னோர்கள் ஒரு கடமையாகக் கொண்டிருந்தனர். நாட்டிலே மழை வளம் குறையாமலிருப் பதற்கே இந்த ஏற்பாடு. நாடு நன்றாக வாழ ----- நாட்டிலே நீர்வளம் குறையா மலிருக்க---உணவுப் பொருள் உற்பத்தி பெருக----என்னென்ன காரியங்கள் செய்யவேண்டும் என்பதைச் சிறு பஞ்சமூல ஆசிரியர் தெளிவாகக் கூறியிருக்கின்றார். குளம்தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து, உளம்தொட்டு உழுவயல் ஆக்கி---வளம்தொட்டுப், பாகுபடும் கிணற்றோடு, என்றுஇல் ஐம்பால் படுத்தான் ஏகும் சுவர்க்கத்து இனிது. (பா. 66) தண்ணீர்த் தட்டு ஏற்படாமல் இருப்பதற்காகப் பெரிய ஆழமான குளம் தோண்டவேண்டும்; தளிர்த்து வளரக்கூடிய மரக்கிளைகளை நிலத்திலே நட்டு நீர்விட்டு வளர்க்க வேண்டும்; மக்கள் நடப்பதற்கான வழிகளை முட்புதர்களோ மேடு பள்ளங்களோ இல்லாமல் நன்றாகச் செப்பனிட்டு வைக்க வேண்டும்; தரிசு நிலத்தை வெட்டிப் பண்படுத்தி உழுது பயிர் செய்யத்தக்க நன்செய் நிலமாக்குவதோடு நன்றாக விளையும்படி செழிப்புள்ள நிலமாக்க வேண்டும்; சுற்றிலும் கரை கட்டப்பட்ட கிணறுகளையும் தோண்ட வேண்டும். இந்த ஐந்து பகுதிகளையும் செய்தவனே இனிய சுவர்க்கத்தை அடைவான். இவ்வெண்பாவிலே சொல்லியிருக்கும் ஐந்து செய்திகளும் என்றும் போற்றத்தக்கவை. இதைப் பின்பற்றி நடக்கும் நாட்டிலே பஞ்சம் ஏற்படாது. நாய்கள் இவ்வாசிரியர் ஒழுக்கமற்றவர்களின் மேல் காய்ந்து விழுகிறார். ஒழுக்கமற்றவன் மனிதனே அல்லன்; அவனும் சரி; நாயும் சரி; என்பதே இவர் கொள்கை. நாண்இலன் நாய், நன்கு நள்ளாதவன் நாய், பெரியார்ப் பேணிலன் நாய், பிறர் சேவகன் நாய் ---- ஏண் இல் பொருந்திய பூண்முலையார் சேரிகைத்து இல்லான் பருத்தி பகர்வுழி நாய். (பா. 88) வெட்கங்கெட்டவன் நாய்; பிறரோடு நன்றாக நட்புக் கொள்ளாதவன் நாய்; பெரியார்களைப் பாதுகாக்காதவன் நாய்; பிறருடைய பணியாளனாய் இருந்து வயிறு வளர்க்கின்றவன் நாய்; அழகற்ற ஆபரணங்களை அணிந்த பரத்தையார் சேரியிலே பணமில்லாமல் திரிகின்றவன் பருத்தி விற்பனை செய்யும் இடத்திலே அலைந்து கொண்டிருக்கும் நாய். ஒழுக்கமற்றவனை நாயைப் போன்றவன் என்று கூடச் சொல்லவில்லை இவ்வாசிரியர்; நாய்தான் என்று உருவகமாகவே உரைத்துவிட்டார். இதனால் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக மதிக்கிறார் இவ்வாசிரியர் என்பதைக் காணலாம். மனைவியின் கடமை இல்லாளின் கடமையைப் பற்றி இவ்வாசிரியர் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது. குடும்பத்தை நடத்தும் பொறுப்பு முழுவதும் பெண்களைச் சேர்ந்தது என்ற கருத்தையே இவர் வலியுறுத்து கிறார். வருவாய்க்குத் தக்க வழக்கு அறிந்து, சுற்றம் வெருவாமை வீழ்ந்து, விருந்து ஓம்பித்---திரு ஆக்கும் தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே, பெண்டிர் சிறப்பு. (பா. 43) தன் கணவனுடைய வருமானத்தின் அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும்; அந்த வருமானத்திற்குத் தகுந்த அளவிலே செலவு செய்யவேண்டும்; சுற்றத்தார் கள் மேல் சீறி விழாமல் அவர்களை அன்புடன் ஆதரிக்க வேண்டும்; விருந்தினர் களை உபசரிக்க வேண்டும்; செல்வத்தைக் கொடுக்கும் தெய்வத்தை எந்நாளும் வணங்கவேண்டும்; இவைகளே பெண்களின் சிறப்பாகும். பெண்கள் படித்திருக்கவேண்டும் என்னும் கருத்தும் இவ்வெண்பாவில் அடக்கம். பெண்களுக்குப் படிப்பில்லா விட்டால், கணவன் வருவாய்க்குத் தக்க வாறு செலவு செய்யும் கணக்கு அவர்களுக்கு எப்படித் தெரியும்? இச் செய்யுள் செல்வம் கொடுக்கும் தெய்வத்தை வணங்கச் சொல்லுகிறது; வள்ளுவர் கணவனையே தெய்வமாக வணங்கச் சொல்லுகிறார். இது குறிப்பிடத்தக்கது. சிறந்த கருத்துக்கள் சில இன்னும் பல சிறந்த கருத்துக்கள் இந்நூலிலே உண்டு. அவைகளில் சிலவற்றைக் காண்போம். நன்றாகத் தமிழ்மொழியைப் படிக்காதவன் தமிழ் இலக்கிய இலக்கணங் களிலே தேர்ச்சி பெறாதவன் கவிகள் எழுதுவானாயின் அது சிரிப்புக்கிடமாகும். அச்செய்யுளிலே இனிய சொற்களோ, அரிய பொருளோ அமைந்திருக்க முடியாது. ஆதலால் அப்பாடலைப் படிப்போர் இதுவும் பாட்டுத்தானா? என்று எண்ணி நகைப்பார்கள். செந்தமிழ் தேற்றான் கவிசெயலும் நாவகமே நாடின் நகை. (பா. 12) செந்தமிழ் நூல்களைக் கல்லாதவன் கவி இயற்றுவதை நாவிலே வைத்து ஆராய்ந்தால் சிரிப்புக்கு இடமாகும். தங்கள் பழம் பெருமையைப் பற்றிப் பிதற்றுகின்றவர்கள்; தங்கள் அழகைத் தாமே வியந்து கொள்ளுகின்றவர்கள்; இவ்விருவரும் இரண்டு கால்களைக் கொண்ட எருதுகளாகும். துன்பம் இலேம் பண்டு, யாமே வனப்புடையேம் என்பார் இருகால் எருது (பா. 20) முன்பு துன்பமில்லாமல் இன்பமாக வாழ்ந்தோம்; நாங்கள் தாம் அழகிலே சிறந்தவர்கள்; என்று சொல்லிக்கொள்ளுவோர் இரண்டுகால் எருதுகள். உழவுத் தொழில் செய்கின்றவன், தன் கீழ் வேலை பார்க்கும் உழவனுடன் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அவனுடன் பகைத்துக்கொள்ளக் கூடாது; பகைத்துக் கொண்டால் விவசாயம் பாழ்படும்; வருமானம் குறையும்; என்று அறிவுரை கூறுகின்றது இந்நூல். தொழில்மகன் தன்னோடு மாறாயின் என்றும் உழுமகற்குக் கேடு என்று உரை. (பா. 50) வேலை செய்யும் தொழிலாளியுடன் பகைத்துக் கொண்டால் அதனால் தொழிலாளிக்குக் கெடுதியில்லை. உழுவிப்போனாகிய நிலக்காரனுக்குத் தான் கெடுதி என்று தெரிந்து கொள். நிலச் சொந்தக்காரர்கள் இந்த உண்மையை உணர்த்திருப்பார்களாயின் உற்பத்தி குறையாது; விவசாயிகளும், நிலக்காரர்களும் இன்புற்று வாழ்வார்கள். சென்னை போன்ற நகரங்களிலே ஒரு அதிசயத்தைக் காணலாம். பால் கறப்பவர்கள் தங்கள் தோளிலே தோலால் செய்த கன்றுக்குட்டியைச் சுமந்து கொண்டு வருவார்கள். அவர்கள் பின்னே மாடு வந்துகொண்டிருக்கும். பின்னே வரும் மாடு, பால்காரனுடைய தோளிலேயுள்ள வைக்கோல் திணிக்கப்பட்ட அந்த கன்றைத் தன் கன்றாகவே நினைத்துக் கொண்டு வரும். கன்று உயிரோடிருந்தால், பால் வீணாகும் என்பதற்காகவே, பால்காரர்கள் இப்படிச் செய்கின்றனர். காசுக்கு ஆசைப்பட்டுக் கன்றைக் கொன்று விடுகின்றனர். இந்த மாபாதகச் செயல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நாட்டில் இருந்ததென்று இந் நூலால் தெரிகின்றது. தோல்கன்று காட்டிக் கறவார் (பா. 84) என்பதனால் இதனைக் காணலாம். நம்பிக்கைகள் கடவுளால் சொல்லப்பட்ட நூல்கள் முதல் நூல்கள்; அந்நூல்களில் கூறப்படும் அறங்களைப் பின்பற்றி நடப்பவனே தவசியாவான். (பா. 8) ஒருவர்க்காகப் பரிந்து பொய்ச்சாட்சி சொல்லுகின்றவர் களுடைய நாக்கு அறுந்துவிடும். ஆதலால் பொய்ச் சான்று கூறுதல் தீமை. (பா. 10) பெண் இன்பத்தை விரும்பாத பிரமச்சாரியே சிறந்த ஆசிரியன் ஆவான். (பா. 29) தவம் புரிவதால் சுவர்க்கம் பெறலாம்; ஞானத்தால் வீடு பெறலாம். (பா. 36) நாள், முகூர்த்தம், கிரகம், யோகம் இவைகளைப் பார்த்து, இவைகளின் பலனையும், அறிந்து திருமணம் முதலிய நல்ல காரியங்களைச் செய்யவேண்டும். (பா. 44) குடிப்பதற்கு நீர், தங்குவதற்கு நிழல், இருப்பதற்கு இடம், உண்பதற்கு உணவு, ஆகியவைகளைக் கொடுப்போரும், அன்னசாலை அமைப்போரும் பேரின்பத்தை அடைவார்கள். (பா. 63) முன் பிறப்பிலே, மற்றவர்களுடைய தலைநோய், பைத்தியம், வாய்ப்புற்று, க்ஷயநோய், மூலநோய் இவைகளைத் தீர்த்தவர்களே இப்பிறப்பில் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள். (பா. 76) பஞ்சகாலத்தில் பிறர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்பவன்; தன் செல்வத்தால் பிறர்க்கு உதவி செய்கின்றவன்; போர்க்களத்திலே அஞ்சாமல் நின்று, பகைவர்களை அழித்துத் தன் படையைக் காப்பவன்; ஒவ்வொரு நாளும் பிறருக்கு உணவிட்ட பின்பே தான் உண்பவன்; பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிப்பவன்; இந்த ஐவரும் எண்பது வயதுக்கு மேலும் உயிர்வாழ்வார்கள். (பா. 79) இவை போன்ற இன்னும் பல கருத்துக்கள் இந்நூலிலே காணப்படுகின்றன. திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றை இந்நூல் வெண்பாக்களிலே பார்க்கலாம். சிறு பஞ்சமூலம் முழுவதையும் படிப்போர் அவற்றைக் காணலாம். புலால் உண்ணாமையைப் பற்றிப் பல பாடல்களில் கூறப்படுகின்றது. புலால் உண்ணாதவர்கள்தாம் சுவர்க்கம் பெறுவார்கள். மோட்சம் பெறுவார்கள் என்று கூறுகின்றன. கொலை செய்வது கூடாது; கள்ளுண்டல் தீது; பொய் புகலக்கூடாது; சூதாடு வதால் கெடுதியுண்டாகும்; என்ற நீதிகள் பல பாடல்களிலே காணப்படுகின்றன. வேசையர் நட்பை வெறுக்கவேண்டும்; பிறர் மனைவியை விரும்புதல் கூடாது; பெண்கள் கற்புள்ளவர்களாய் வாழ வேண்டும். இந்த அறங்களையும் பல பாடல்களிலே காணலாம். துறவிகள் ஒழுக்கமுடன் நடந்து கொள்ள வேண்டும்; ஞானநெறியைப் பின்பற்றி நடக்கவேண்டும்; சடைமுடி போன்ற வெளி வேடத்தால் பயன் இல்லை; பிறர் வசை கூறினாலும் பொறுத்துக் கொள்ளும் பொறுமைக் குணம் வேண்டும்; துறவற நெறியைப் பின்பற்றி நடக்க முடியாதவர்கள் துறவறம் பூணுவதை விட இல்லறத்தில் வாழ்வதே ஏற்றதாகும். சிறு பஞ்சமூலச் சிறப்பு நான்கு வரிகள் கொண்ட பாடலிலே ஐந்து பொருள்களை அமைத்துப் பாடுவதற்கு ஆற்றலும் புலமையும் வேண்டும். இவ்வகையில் நூறு பாடல்களைப் பாடிய இவ்வாசிரியர் திறம் போற்றத்தக்கது. இவ்வாசிரியர் பெருமையையும், இந்நூலின் சிறப்பையும் பாராட்டிக் கூறும் பாயிரச் செய்யுள் ஒன்று இந்நூலின் இறுதியிலே அமைந்திருக்கின்றது. மல் இவர்தோள் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப் பல்லவர் நோய்நீக்கும் பாங்கினால்----கல்லா மறுபஞ்சம் தீர்மழைக்கை மாக்காரி ஆசான் சிறுபஞ்ச மூலம் செய்தான். வலிமை நிறைந்த தோள்களையுடைய மாக்காயன் என்பவருடைய மாணாக்கன்; இம்மாநிலத்திலே உள்ள மக்கள் பலருடைய அறியாமையாகிய நோயை நீக்கும் தன்மை யுடையவன்; பஞ்சத்தை நீக்கும் மழையைப் போல, கைம்மாறு கருதாது உதவி செய்யும் குணமுள்ளவன்; மாக்காரியாசான் என்னும் பெயருள்ளவன்; பல நூல்களைக் கற்காத மக்கள் மனத்திலே உள்ள குற்றங்கள் நீங்கும்படி, சிறு பஞ்சமூலம் என்னும் இந்நூலைச் செய்தான். இதுவே இந்நூலின் சிறப்பை உணர்த்துவதற்குப் போது மானதாகும். பழந்தமிழ் மக்களின் சமுதாய நிலையை அறிவதற்கு இந்நூல் பெருந்துணையாக நிற்கின்றது. ஏலாதி ஏலாதி என்பது ஒரு மருந்தின் பெயர். அந்த மருந்தின் பெயரே இந்த நூலுக்குப் பெயராயிற்று. திரிகடுகம், சிறு பஞ்சமூலம் என்பவை போன்ற பெயரே ஏலாதி என்னும் பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவல்பூ, மிளகு திப்பிலி, சுக்கு இந்த ஆறும் ஏலாதியாம். இதுவே பண்டை மருத்துவ நூலார் கொள்கை. இந்த ஆறு சரக்குகளையும் சேர்த்துச் செய்த சூரணம் உடல் நோய்க்கு மருந்தாகும். ஏலாதி என்னும் இந்நூலிலே ஒவ்வொரு பாட்டிலும் ஆறு செய்திகள் கூறப்படுகின்றன. இந்த ஆறு செய்திகளையும் அறிந்து பின்பற்றி வாழ்வோர் மன நோயில்லாமல் வாழ்வார்கள். இந்தக் கருத்தில்தான் இந்நூலுக்கு ஏலாதி என்று பெயர் வைத்தனர். இந்நூலாசிரியர் பெயர் கணிமேதையார் என்பது. கணிமேதாவியார் என்றும் வழங்குவர். இப்பெயர் காரணப் பெயராகவே காணப்படுகின்றது. கணியாகிய மேதையார் என்று பொருள்கொண்டால் கணக்கிடுகின்றவராகிய பேரறிவு படைத்தவர் என்பது பொருள். கணக்கிலே வல்லவர். தமிழிலும் பேரறிவு படைத்தவர் இவ்வாசிரியர். ஏலாதியில் உள்ள வெண்பாக்கள் எண்பது. சிறப்பும் பாயிரம், கடவுள் வாழ்த்து வெண்பாக்கள் இரண்டும் ஆக 82 வெண்பாக்கள் இருக்கின்றன. ஏலாதியின் பாடல்கள் படிப்பதற்குக் கொஞ்சம் கடபுடா வென்றுதான் இருக்கும். செய்திகளையும் சொற்களையும் எண்ணி எண்ணி எடுத்துக் கோத்திருப்பது போலவே காணப் படும். சில பாடல்களுக்கு மிகவும் முயன்றுதான் பொருள்காண வேண்டும். ஒவ்வொரு வெண்பாவிலும் ஆறு செய்திகளைச் சொல்லவேண்டும் என்னும் எண்ணத்துடன் பாடப்பட்ட பாடல்கள் இவை. ஆதலால் சரளமாகப் பாட முடியவில்லை. மிகவும் முயன்றுதான் இந்நூலாசிரியர் இவ்வெண்பாக்களைப் பாடியிருக்கின்றார். ஆயினும் சில பாடல்கள் சரளமாக அமைந்திருக்கின்றன. அவை இந்நூலாசிரியரின் ஆற்றலுக்கு அடையாளமாகும். நாலு வரிகளிலே ஆறு பொருள்களைக் கூறுவதற்குச் சிறந்த அறிவும் ஆற்றலும் வேண்டும். ஏலாதியில் கூறப்படும் சில செய்திகள் இக்காலத்திற்கு ஏலாதன. வடமொழி நூல் வழக்குகள் பலவற்றை இவ்வாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றனர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே வட சொற்கள் மிகுதியாகக் கலந்திருக்கும் நூல் இது ஒன்று தான். சொல்லியவற்றையே பல பாடல்களில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன; அவை நீதியை வலியுறுத்துவதற்காகக் கூறப்படுகின்றன என்று சொல்லப்படலாம்; ஆயினும் படிப்போர்க்கு அலுப்புத் தட்டாமற் போகாது. போற்றத்தக்க பல உண்மைகளும் இந்நூலிலே காணப்படுகின்றன. போற்றத்தக்க பாடல்கள் ஒரு நாட்டின் பிரதிநிதியாக மற்றொரு நாட்டிலே சென்று அவ் வரசாங்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பவர் அரசாங் கத்தின் தூதர். ஒரு நாட்டின் பிரதிநிதியாகச் சென்று மற்றொரு அரசாங்கத்துடன் பேசுவோரும் தூதராவார். இத்தகைய தூதர்களுக்கு வேண்டிய தகுதிகளைப் பற்றி ஒரு வெண்பாவிலே கூறப்படுகின்றது. மாண்டு அமைந்து ஆராய்ந்த மதி, வனப்பே, வன்கண் ஆண்டு அமைந்த கல்வியே, சொல்லாற்றல்,----பூண்டு அமைந்த காலம் அறிதல், கருதுங்கால் தூதுவர்க்கு ஞாலம் அறிந்த புகழ். ஒழுக்கத்திலே சிறந்து, நூலறிவு பெற்று, தன் நாட்டு நிலைமையையும் அந்நிய நாட்டு நிலைமையையும் ஆராயத்தக்க அறிவு நிறைந்திருக்க வேண்டும். பார்த்தவர்கள் உள்ளத்தைக் கவரத்தக்க --- மற்றவர்கள் கண்டவுடனேயே மதிக்கத்தக்க ----- அழகிய தோற்றம் வேண்டும். பகைவர்க்கு பயந்து நடுங்காமல், உண்மையை எடுத்துக் கூறி வழக்கிடத்தக்க அஞ்சாமைக் குணம் அமைந்திருக்க வேண்டும். சிறந்த கல்வி --- அதாவது பல துறைகளைப் பற்றியும் படித்து -- அவைகளைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டி ருக்கும் கல்வியும் வேண்டும். அன்பர்கள் பகைவர்கள் அனைவர் உள்ளத்தைக் கவரும் படியும், எதிரிகள் பதில் கூறுவதற்கு அஞ்சும் படியும் ஆணித்தர மாகக் காரண காரியங்களை விளக்கிப் பேசும் சொல்வன்மையும் வேண்டும். இன்ன காலத்தில் இன்ன காரியத்தைச் செய்தால் வெற்றி பெறலாம். இன்ன சமயத்தில்தான் இன்ன காரியத்தைச் செய்ய வேண்டும்; என்று துணிந்து காலமறியும் குணம் வேண்டும். இத்தகைய ஆறு குணங்களும் அமைந்தவர்களே தூதரா வதற்குத் தக்கவர்கள். தூதுவர்க்கு இத் தகுதி இன்றும் ஏற்றனவா யிருப்பதைக் காணலாம். தமிழர்கள் அந்நிய அரசாங்கங்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதற்கு இச்செய்யுள் ஒரு உதாரணம். மக்கள் அனைவரும் திடமாக வாழவேண்டும்; உடற் பயிற்சி உரம் அளிக்கும்; உரம் உள்ளவர்கள் நோயின்றி வாழலாம். இக்கருத்தைக் கொண்ட செய்யுள் ஒன்று உடற்பயிற்சியைப் பற்றி உரைக்கின்றது. எந்தெந்த வகையிலே உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்றும் அச் செய்யுள் விளக்கிச் சொல்லுகின்றது. எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே, படுத்தலோடு, ஆடல், பகரின்----அடுத்துஉயிர் ஆறுதொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர் வேறு தொழிலாய் விரித்து. கையை ஊன்றி உடம்பை மேலே தூக்குவதாகிய தண்டால், கை கால்களை முடக்கியிருத்தலாகிய ஆசனம், நிமிர்ந்து நிற்றல், தலைகீழாக நிற்றல், படுத்துச் செய்யும் பயிற்சி, குதித்தல் இவைகள் உடற்பயிற்சிகளாகும். இவைகளின் சிறப்பைக் கூறவேண்டுமானால், பெரியோர்கள் உடம்பில் உயிர் அமைதி யோடு வாழ்வதற்கான தொழில்கள் என்று, இவைகளையே வேறு வேறு தொழில்களாகத் தனித்தனியே கூறினார்கள். (பா. 69) இச் செய்யுள்களைக் கொண்டு தமிழர்கள் நெடுங்காலமாக உடற்பயிற்சி செய்து வந்தனர்; அதைச் சிறந்ததாக எண்ணி வந்தனர் என்று தெரிந்து கொள்ளலாம். உதவி பெறுவதற்கு உரியவர்கள் இந்நூலிலே இன்னின்னார்க்கு உதவி செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகக் கூறப்படுகின்றது. இதைப் பல பாடல்களிலே காணலாம். தமிழர்களின் இரக்க சிந்தையை இவைகளின் மூலம் அறியலாம். சிறப்பாக 35, 36, 52, 53, 54, 55, 56, 57, 71, 78, 80 ஆகிய பதினோரு பாடல்கள் உதவி பெறுவதற்கு உரியவர்கள் யாவர் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. அநாதைகள், வலிமையற்றவர்கள், சிறுவர்கள், வீடற்றவர்கள், கண் இல்லாதவர்கள், செல்வமற்றவர்கள், உணவுப்பொருள் இல்லாதவர்கள், கடன்பட்டுச் செல்வத்தை யிழந்தவர்கள், கால் முடம் பட்டவர்கள், சம்பாதிக்க முடியாத முதியவர்கள், தம்மைத் தாம் காத்துக்கொள்ளும் வலிமை யற்றவர்கள், பிள்ளை பெறும் பெண்கள், கர்ப்பிணிகள், பித்தர்கள், வாத நோய்க்காரர்கள், விலங்கிடப் பட்டவர்கள் உணவு பெறாமல் திண்டாடுகின்றவர்கள், வழி நடப்போர், சுமை தூக்கிச் செல்வோர், நோயாளிகள், தாயற்ற பிள்ளைகள், கணவனை யிழந்த பெண்கள், வியாபாரத்தால் செல்வம் இழந்து வருந்துகிறவர்கள்; இவர்களுக்கெல்லாம் உணவளிக்க வேண்டும்; உதவி செய்ய வேண்டும்; இப்படிச் செய்வதே செல்வர்களின் கடமை என்று அப்பாடல்களிலே காணப்படுகின்றன. புத்திரர்கள் புத்திரர்கள் பன்னிரண்டு வகைப்படுவர் என்று இவ்வாசிரியர் கூறுகின்றார். இது தமிழ் நூல்களிலே காணப்படாதவை. வடமொழி மிருதிகளில் உள்ள முறையையே இவ்வாசிரியர் எடுத்துக் கூறுகின்றார் என்றுதான் முடிவு செய்யவேண்டும். 30, 31, ஆகிய இரண்டு வெண்பாக்களில் இந்தப் புத்திரர்கள் பன்னிரண்டு வகையினரின் பெயர்களும் காணப்படுகின்றன. அப்பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள். ஔரதன், கேத்திரசன், கானீனன், கூடன், கிரீதன், பௌநற் பவன், தத்தன், சகோடன், கிருத்திரமன், புத்திரி புத்திரன், அபவித்தன், உபகிருதன் என்பவைகளே அப்பன்னிரண்டு பெயர்கள். கணவனுக்குப் பிறந்தவன் ஔரதன். கணவன் இருக்கும் போது மற்றொருவனுக்குப் பிறந்தவன் கேந்திரன். திருமணம் ஆகாத பெண்ணுக்குப் பிறந்தவன் கானீனன். விபசாரத்திலே பிறந்தவன் கூடன். விலைக்கு வாங்கப்பட்டவன் கிரீதன். கணவன் இறந்தபின் மறுமணம் புரிந்துகொண்ட இரண்டாம் கணவனுக்குப் பிறந்தவன் பௌநற்பவன். சுவீகாரம் எடுத்துக் கொள்ளப் பட்டவன் தத்தன். கல்யாணம் செய்து கொள்ளும் போதே கர்ப்பத்திலிருந்து பிறந்தவன் சகோடன். கண்டெடுத்து வளர்க்கப்பட்டவன் கிருத்திரமன். மகள் வயிற்றுப் பிள்ளை புத்திரி புத்திரன். பெற்றவர்களால் கைவிடப்பட்டு மற்றவரால் வளர்க்கப்பட்டவன் அபவித்தன். காணிக்கையாக வந்தவன் கிருதன். இவர்கள் அனைவரும் புத்திரர்கள் ஆவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இச்செய்தி பண்டைக்கால மக்களின் நாகரிகத்தைக் காண இடந்தருகின்றது. மக்கள் தொகை குறைந் திருந்த அக்காலத்திலே, எந்த வகையிலே பிள்ளைகள் பிறந்தாலும், அவைகளைக் குற்றம் என்று கடியவில்லை. புத்திரர்களாகவே ஏற்றுக் கொண்டனர். மக்களின் எண்ணிக்கை வளரவேண்டும் என்பதே அவர்கள் கருத்து. விருந்தோம்பல் விருந்தோம்பல் தமிழரின் சிறந்த பண்பாடு. விருந்தினர் என்பவர் முன்பின் அறியாத புதியவர்கள். எந்நாட்டினராயினும், எம்மொழியினராயினும் நட்புக் கொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடுதேடி வருவார்களாயின் அவர்களை வரவேற்பார்கள் தமிழர்கள். விருந்தினரை வரவேற்று உபசரிப்பவர்கள் தாம் மறுமை யின்பத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கையும் தமிழரிடம் குடிகொண்டிருந்தது. விருந்தினரை எவ்வாறு வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதைப் பற்றி ஏலாதியின் செய்யுள் ஒன்று விளக்கிக் கூறுகின்றது. இன்சொல், அளாவல், இடம், இனிது ஊன் யாவர்க்கும் வன்சொல் களைந்து வகுப்பானேல், ---- மென்சொல் முருந்து ஏய்க்கும் முட்போல் எயிற்றினாய்! நாளும் விருந்து ஏற்பர் விண்ணோர் விரைந்து. (பா. 7) மென்மையான சொல்லையும், மயிற்பீலியின் அடியை ஒத்த கூர்மையும் வெண்மையும் அமைந்த பற்களையும் உடைய பெண்ணே! விருந்தினராக வருகின்றவர்கள் அனைவரிடமும் இனிய சொற்களையே பேசவேண்டும்; அவர்களுடன் உள்ளம் கலந்து உறவாடவேண்டும்; தங்குவதற்கு வசதியான இடம் கொடுக்கவேண்டும்; ஆடை அணி முதலியவைகளையும் அளிக்க வேண்டும்; இனிய உணவும் இடவேண்டும்; கடுஞ்சொல்லற்ற இனிய மொழிகளையே எந்நாளும் பேச வேண்டும்; இவ்வாறு விருந்தினர்களை உபசரிப்பவனைத் தேவர்கள் தமது விருந்தினனாக ஏற்றுக் கொள்வார்கள். இச்செய்யுள் விருந்தினர்க்குச் செய்யவேண்டிய கடமைகள் இன்னின்னவை என்பதை எடுத்துரைத்தது. கள்ளருந்துவது ஒழுக்கக்கேடான செயல்; புலால் உண்ணு வதைக் கைவிடவேண்டும்; கொல்லா விரதத்தை மேற்கொள்ள வேண்டும்; கொலை செய்வாருடன் கூட்டுறவே கூடாது; இக்கருத்து பல பாடல்களில் காணப்படுகின்றன. பெண்டிர் சொல்வதைப் பின்பற்றக் கூடாது; அவர்களிடம் இரகசியங் களை வெளியிடக்கூடாது; என்று உரைக்கின்றது ஒரு செய்யுள். பொதுமகளிர்----வேசையர்-----பாடும் பாடலைக் கேட்கக் கூடாது; அவர்கள் ஆடும் நாடகத்தையும் பார்க்கக் கூடாது; அவர்கள் பாடி ஆடுகின்ற இடத்தை யடைவோர் பகையைப் பெறுவார்கள்; பழிச்சொல்லை அடைவார்கள்; பாவத்திற்கு ஆளாவார்கள்; மற்றவர்கள் அவர்களை வெறுத் துரைப்பார்கள்; சாக்காட்டுக்கும் ஆளாவார்கள் என்று கூறுகிறது ஒரு செய்யுள். திருக்குறளின் கருத்துக்களும் இந்நூலில் பல பாடல்களில் காணப்படுகின்றன. இந்நூலைப் படிப்போர் அவைகளைக் கண்டறியலாம். தமிழர் நாகரிகத்தை அறிவதற்கு இந்நூலும் துணை செய்கின்றது. ஆசாரக் கோவை ஆசாரம், கோவை என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்து ஆசாரக் கோவை என்று ஆயிற்று. ஆசாரம் வடமொழி; கோவை தமிழ்ச் சொல். ஆசாரம் என்றால் பின்பற்றக் கூடியவை; கோவை என்றால் தொகுப்பு. பின்பற்றக் கூடிய ஒழுக்கங்களைத் தொகுத்துக் கூறுவது என்பதே ஆசாரக் கோவை என்பதன் பொருள். இன்ன காரியங்களைச் செய்; இன்ன காரியங்களைச் செய்யாதே; என்று கட்டளையிடும் நூல்களுக்கு வடமொழி யிலே ஸ்மிருதிகள் என்று பெயர். இந்த ஆசாரக் கோவையும் ஒரு ஸ்மிருதி போலவே காணப்படுகின்றது. இன்னின்ன செயல்கள் செய்யத்தக்கவை; இன்னின்ன செயல்கள் செய்யத்தகாதவை என்று கண்டிப்பாக உத்தரவு போடுவது போலவே பல பாடல்கள் காணப்படுகின்றன. வடமொழி ஸ்மிருதியில் உள்ள பல கருத்துக்களை இந்நூலிலே காணலாம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல். ஆதலால் இதில் கூறப்படும் ஒழுக்கங் களிலே சிலவற்றை இக்காலத்தார் பின்பற்ற முடியாமலி ருக்கலாம். வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளிலே இன்னின்ன வருணத்தார் இன்னின்ன ஆசாரங்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டிருக் கின்றன. இந்த ஆசாரக் கோவையிலே சாதிக்கொரு நீதியென்று பிரித்துக் கூறப்படவில்லை. மக்கள் அனைவரும் ஆசாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்றே பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த முறையே தமிழுக்குள்ள ஒரு தனிச் சிறப்பு. சாதிக்கொரு நீதி கூறும் முறையைத் தமிழ் நூலார் பின்பற்ற வில்லை. பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த எல்லா நீதி நூல்களும் பெரும்பாலும் எல்லோர்க்கும் பொதுவான நீதிகளையே கூறுகின்றன; அறங்களையே அறிவிக் கின்றன. ஒரு சில பாடல்களில் மட்டும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் கடமைகளைத் தனித்தனியே வலியுறுத்துகின்றன. ஆசாரக் கோவையை ஒரு பொதுச் சுகாதார நூல் என்றே சொல்லிவிடலாம். எல்லா மக்களும் நோயற்ற வாழ்வு வாழ்வது எப்படி? ஊரும், நாடும், பொது இடங்களும் சுகாதாரக் கேடின்றி இருப்பது எப்படி? என்பவைகளை இந்நூலிலே காணலாம். புறத்திலே தூய்மையுடன் வாழ்வதற்கு வழி கூறுவதோடு மட்டும் நின்று விடவில்லை. அகத்திலே அழுக்கின்றி வாழ்வதற்கு வழி காட்டுகின்றது இந்நூல். இது இந்நூலுக்குள்ள பெருமை. இந்நூலாசிரியர் பெயர் பெருவாயின் முள்ளியார் என்பது. இவர் வடமொழி யிலும் புலமையுள்ளவர். ஆயினும் இவர் பாடல்களிலே வடமொழிச் சொற்கள் அதிகமாகக் கலக்கவில்லை. வெண்பாக்கள் நீரோட்டம் போலவே சரளமாக அமைந்திருக்கின்றன. இரண்டடி முதல் ஐந்தடி வரையில் உள்ள வெண்பாக்கள் இதில் காணப்படுகின்றன. ஆசாரக் கோவையில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை நூறு. ஆசாரத்திற்கு விதை மக்களுடைய நல்லொழுக்கங்களுக்கு அடிப்படையான குணங்கள் இவைகள் தாம் என்று முதற் பாட்டிலே கூறப்படு கின்றது. ஆசாரத்திற்கு விதை எட்டுக் குணங்கள்; அவைகளைப் பின்பற்றுவோரே ஒழுக்கந் தவறாமல் வாழ முடியும்; அவைகள் தாம் நல்லொழுக்கத்தை வளர்க்கும் என்று விளம்புகிறது அச்செய்யுள். நன்றி அறிதல்; பொறை உடைமை; இன்சொல்லோடு; இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை; கல்வியோடு; ஒப்புரவு ஆற்ற அறிதல்; அறிவுடைமை நல் இனத்தாரோடு நட்டல்; இவை எட்டும் சொல்லிய ஆசார வித்து. (பா. 1) பிறர் தனக்குச் செய்த நன்மையை மறவாமல் இருத்தல்; அறியாமை காரணமாகப் பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வது; யாரிடமும் கடுஞ்சொற் கூறாமல் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுதல்; எந்த உயிர்களுக்கும் அவை வருந்தும்படி தீமை செய்யாதிருத்தல்; சிறந்த கல்வியை மறக்காமல் கற்றல்; உலக நடையை அறிந்து அதைத் தவறாமல் பின்பற்றுவது; எதைப்பற்றியும் தானே சிந்தித்து உண்மை காணும் அறிவுடைமை; கல்வி, அறிவு, நல்லொழுக்கமுள்ள கூட்டத்தாரோடு சேர்ந்து வாழ்தல்; ஆகிய இந்த எட்டுக் குணங்களும் நல்லொழுக்கத்தை வளரச் செய்யும் விதைகளாகும். இந்த எட்டுப் பண்புகளையும் பெற்றவர்கள் எந்நாளும் சிறந்து வாழ்வார்கள். இது எக்காலத்திற்கும் ஏற்ற உண்மை யாகும். ஒன்றையும் விடவில்லை காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையில் படுப்பது வரையில் என்னென்ன செய்யவேண்டும் என்று இந்நூல் கட்டளையிடுகிறது. பல் விளக்குவது எப்படி? வெளிக்குப் போவது எப்படி? குளிப்பது எப்படி? உடுத்துவது எப்படி? உண்பது எப்படி? படிப்பது எப்படி? யார் யாருக்கு எவ்வெவ் விதம் மரியாதை காட்டுவது? யார் யாருக்கு உதவி செய்ய வேண்டும்? யார் யாரிடம் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும்? படுக்கையிலிருந்து எழும்போது என்ன செய்ய வேண்டும்? படுக்கப் போகும் போதுதான் என்ன செய்ய வேண்டும்? என்பவைகளை யெல்லாம் ஒன்றுவிடாமல் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது இந்நூலிலே. இதைப் படிக்கும்போது நமக்கு வியப்புண்டாகும். ஆயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்னே வாழ்ந்த மக்கள் பின்பற்றிய ஒழுக்கம் இன்றைய விஞ்ஞான முறையோடு ஒத்திருப்பதைக் கண்டால் யார்தான் வியக்கமாட்டார்கள்? விடியற்காலமாகிய நாலாம் சாமத்திலேயே தூக்கத்தி லிருந்து விழித்தெழ வேண்டும்; அதாவது கதிரவன் புறப்படு வதற்கு முன்பே கண் விழிக்கவேண்டும். அன்றைக்குத் தான் செய்யவேண்டிய நல்லறங்களைப் பற்றியும் பொருள் தேடும் முயற்சிக்கான வேலையைப் பற்றியும் சிந்தித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்; அதாவது இன்றைக்கு இன்னின்ன காரியங் களைச் செய்வது என்று திட்டம் வகுத்துக் கொள்ளவேண்டும். பிறகு தந்தை தாயரை வணங்கித் தன் காரியங்களைப் பார்க்கத் தொடங்க வேண்டும் (பா. 4) இவ்வாறு படுக்கையை விட்டு எழுந்தபின் செய்ய வேண்டியவைகளைப் பற்றி கூறுகிறது. படுக்கும்பொழுது தம் வழிபடு தெய்வத்தைக் கைகூப்பி வணங்கவேண்டும்; வடதிசையிலோ, மூலைகளிலோ தலை வைத்துப் படுக்கக்கூடாது; போர்வையால் போர்த்திக் கொண்டு படுக்கவேண்டும். (பா. 30) இவ்வாறு படுக்கவேண்டிய முறையைப் பற்றிக் கூறு கின்றது. இன்றும் பலர் இம்முறையைப் பின்பற்றி வருகின்றனர். உண்ணும்போது இனிப்பான பண்டங்களை முதலில் உண்க; கசப்பான கறிகளை இறுதியில் உண்க; ஏனைய சுவையுள்ள பண்டங்களை இடையில் உண்க. (பா. 25) என்று சாப்பாட்டைப் பற்றி உத்தரவு போடுகிறது ஒரு செய்யுள். காலையிலே எழுந்தவுடன், வீட்டு வேலையை எந்த முறைப்படி செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது ஒரு செய்யுள். காலையிலே துயில் எழ வேண்டும்; வீடு விளங்கும்படி வீட்டைக் கூட்டிச் சுத்தம் பண்ணவேண்டும்; பாத்திரங்களைத் துலக்கவேண்டும்; பசுவின் சிறுநீரைத் தெளித்து வீட்டைப் புனிதமாக்க வேண்டும்; தண்ணீர் சாலுக்கும், குடத்துக்கும் பூச்சூட்ட வேண்டும்; இதன் பிறகுதான் அடுப்பிலே தீ மூட்டிச் சமைக்க தொடங்க வேண்டும்; இப்படிச் செய்யும் இல்லங்களில் தான் நன்மை நிறைந்திருக்கும். (பா. 46) குடித்தனம் பண்ணும் பெண்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து கிறது இச்செய்யுள். தலையிலே தடவிக்கொண்ட எண்ணெயால் வேறு எவ்வுறுப்பையும் தொடக் கூடாது. பிறர் கட்டிக்கழித்த அழுக்குத் துணியையும் தொடக்கூடாது. எவ்வளவு அவசரமானாலும் பிறர்தரித்தசெருப்பைமாட்டிக்கொண்டு நடத்தல் கூடாது. (பா. 12) இவ்வாறு கூறுகிறது ஒரு செய்யுள். சுகாதாரத்தை வலியுறுத்தும் சிறந்த செய்யுள் இது. தலையிலே தடவிக் கொண்ட எண்ணெயை வலித்து எந்த இடத்தில் தடவிக்கொண்டாலும் சுகாதாரக் கேடு தான். தலையின் அழுக்கும் எண்ணெயுடன் கலந்து உடம்பிலே படியும். பிறர் உடுத்திய அழுக்காடையைத் தொடுவதால் அவர் நோய் நம்மையும் பற்றும். பிறர் செருப்பை மிதித்தல், அவர் காலிலிருந்து அச் செருப்பிலே படிந்திருக்கும் அழுக்கு நமது காலிலும் படியும். இது நோய்க்கு இடமாகும். இக்கருத்துடன் தான் இம் மூன்று செயல்களும் தடுக்கப்பட்டிருக் கின்றன. நீராடும்போது என்னென்ன காரியங்களைச் செய்யக் கூடாது என்று கட்டளை யிடுகிறது ஒரு செய்யுள். நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும் நீந்தார், உமியார், திளையார், விளையாடார், காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே, ஆய்ந்த அறிவி னவர். (பா. 14) ஒழுக்க நெறியிலே நின்றவர்கள் தினந்தோறும் குளிக்கும் போது தண்ணீரிலே நீந்த மாட்டார்கள்; நீரை வாயில் கொப்பளித்து உமிய மாட்டார்கள்; நீரைக் கலக்க மாட்டார்கள்; நீரிலே விளையாட மாட்டார்கள்; உடம்புக்குக் காய்ச்சலா யிருந்தாலும் தலை முழுகாமல் உடம்பு மட்டும் குளிக்க மாட்டார்கள். இச்செய்யுள் நகர மக்களுக்குத் தேவையில்லை. பெரும் பாலும் குளத்தில் குளிக்கும் கிராமாந்தர மக்கள் பின்பற்ற வேண்டிய செய்யுளாகும். குளிப்போர் குளிக்கும் நீர் நிலையைத் தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்பதே இச்செய்யுளில் கூறப்பட்டுள்ளது. இதில் காய்ந்தது எனினும் தலை ஒழிந்து ஆடாரே என்பது மருத்துவ நூலார்க்கு மாறு பட்டதாகும். தலையை நனைத்துக் கொள்ளாமல் உடம்பு மட்டும் குளிக்கலாம் என்பது மருத்துவர் முடிவு. இதை கண்ட ஸ்நானம் என்பர். தம் அழகு கெடாமல் இருக்க வேண்டுவோர் என்ன செய்யவேண்டும் என்று ஒரு செய்யுள் குறிப்பிடுகின்றது. மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும் தம் ஒளி வேண்டுவோர் நோக்கார்; பகல் கிழவோன் முன் ஒளியும் பின் ஒளியும் அற்று. (பா. 51) மின்னல் ஒளியைப் பார்க்கக்கூடாது; எரிந்து விழுகின்ற நட்சத்திரத்தைப் பார்க்கக் கூடாது; விலைமாதர்களின் அழகிலே ஈடுபட்டு விடக்கூடாது; இவைகளைப் போலவே காலைக் கதிரவன் ஒளியையும், மாலைக் கதிரவன் ஒளியையும் காணக் கூடாது. தம் உடல் வனப்புக் கெடாமலிருக்க விரும்புவோர் இவ்வாறு செய்வார்கள். இன்றும் பல மக்கள் இச்செய்யுளில் கூறியிருப்பதை நம்புகின்றனர். மின்னலைப் பார்த்தால் கண்பார்வை குன்றும்; எரிந்து விழும் நட்சத்திரத்தைப் பார்த்தால் மறதி உண்டாகும்; வேசையர்களின் கோலத்தை உற்று நோக்கினால் மனம் அவர்கள் பால் செல்லும்; காலைக் கதிரையோ மாலைக் கதிரையோ கண்களால் உற்று நோக்கினால் கண்ணொளி குறையும். இவ்வாறு நம்புகின்றனர். ஆகவே இச்செய்யுளில் கூறுவன இன்னும் வழக்கத்தில் இருப்பதைக் காணலாம். ஆசாரத்தைப் பின்பற்றுவோர் யார்? சோம்பேறிகள் ஆசாரம் உள்ளவர்களாயிருக்க முடியாது. அவர்கள் எக்காரியத்திலும் வெற்றிபெற மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையே துன்ப வாழ்க்கையாகத்தான் இருக்கும். முயற்சியுள்ளவர்களே எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையிலும் இன்பம் பெறுவார்கள். ஆதலால் ஒவ்வொரு வரும் தங்கள் கடமையை உணர வேண்டும். அக்கடமையைத் தவறாமல் ஊக்கத்துடன் செய்யவேண்டும். இவர்களிடந்தான் ஆசாரம் நிலைத்து நிற்கும். இச்செய்தியை உதாரணத்துடன் உரைக்கின்றது ஒரு வெண்பா. நந்தெரும்பு தூக்கணம்புள் காக்கை என்றிவைபோல் தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத்---தம் கருமம் அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம் எப்பெற்றியானும் படும். (பா. 96) சுறு சுறுப்புள்ள எறும்பு, தூக்கணங்குருவி, காக்கை என்ற இவைகளைப்போல் ஒவ்வொருவரும் தங்களுடைய நல்ல கடமைகளைப் பின்பற்றி அவைகளைச் சோர்வில்லாமல் செய்யவேண்டும்; தமது கடமைகளை அவ்வாறு செய்பவர் களிடந்தான் எவ்வகையிலும் ஆசாரம் பெருகி நிற்கும். ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களை எறும்பைப் போல் சுறு சுறுப்புடன் முயன்று முடிக்கவேணடும். தூக்கணங்குருவி, தன் கூட்டைத் திறமையுடன் கட்டும்; கூடுகட்டத் தொடங் கினால் அரைகுறையாக விட்டுவிடாது; முடித்தே தீரும். காக்கை கூடி வாழும் குணம் உள்ளது; தனித்துண்ணாது; தன் இனத்தையும் கரைந்து அழைத்து ஒன்றுகூடி உண்ணும். இந்த மூன்று பிராணிகளின் பண்பை மக்கள் பின்பற்ற வேண்டும். சுறுசுறுப்பு, தொட்டதை நிறைவேற்றுதல், ஏனை மக்களுடன் இணைந்து வாழ்தல், இந்த முக்குணமும் பொருந்தியவர்களிடமே ஆசாரம் வளரும். ஆசாரத்திற்கு விலக்கானவர்கள் யார் யார் ஆசாரத்திற்கு விலக்கானவர்கள்; ஆசாரத்தைப் பின்பற்ற முடியாதவர்கள்; என்று இந்நூலின் இறுதி வெண்பாவில் கூறப்பட்டுள்ளது. ஆசாத்தைப் பின்பற்ற முடியாதவர்கள் ஒன்பது பேர். அவர்கள் : அந்நிய நாட்டான், வறியவன், மூத்தோன், சிறுவன், உயிர் இழந்தோன், பயந்தவன், அளவுக்கு மேல் உண்பவன், அரசாங்க அலுவல் பார்ப்போன், மணமகன், ஆகிய இவர்கள். அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான், இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான், அரசன் தொழில்தலை வைத்தான், மணாளன், என்று ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான ஆசாரம் வீடு பெற்றார். (பா. 100) இந்த ஒன்பதின்மரும் ஆசாரத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள். இந்த நாட்டு ஆசாரங்களை அறியாத அந்நிய நாட்டான் இந்த நாட்டு ஆசாரங்களை அறிந்து பின்பற்ற முடியாது. வறுமையுள்ளவனும் இந்நூலிலே கூறப்பட்டுள்ள ஆசாரங்களைப் பின்பற்ற முடியாது. வயிற்றுப் பிழைப்பிற்காக உழைப்பதற்கே அவனுக்கு நேரம் போதாது. மறதி, உடல் சோர்வு, சுறுசுறுப்பாக நடந்தும் காரியம் செய்ய முடியாமை, இவைகள் எல்லாம் வயதேறியவன் இயல்பு. இவைகள் முதுமையின் துணைகள். ஆகையால் முதியவனாலும் ஆசாரத்தைப் பின்பற்ற முடியாது. ஆசாரம் இன்னது, அநாசாரம் இன்னது என்று பகுத்தறிய முடியாத சிறுவர்களாலும் ஆசாரத்தைப் பின்பற்ற முடியாது. உயிர்போன பிணத்தினால் எந்த ஆசாரத்தைத் தான் பின்பற்ற முடியும்? பயந்தாங் கொள்ளியும், ஆசாரத்தைக் கைவிட்டு விடுவான். அவனால் ஒன்றையும் உருப்படியாகச் செய்ய முடியாது. மிகுதியாகச் சாப்பிடுகின்றவன் எப்பொழுதும் உண்பதி லேயே நாட்டங் கொண்டிருப்பான். உணவு கிடைத்தால் போதும். ஆசாரங்களைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை. அரசாங்க வேலையில் ஈடுபட்டிருப்பவனுக்கும் போது மான ஓய்வு கிடக்காது. ஆதலால் அவனாலும் ஆசாரத்தைப் பின்பற்ற முடியாது. மணமகனாக இருப்பவனும், ஆசாரத்திலே கருத்தைச் செலுத்த முடியாது. மற்றவர்கள் விருப்பப்படி தான் ஆடவேண்டும். இவ்வாறு ஒன்பது பேரை ஆசாரத்தைப் பின்பற்ற முடியாதவர்கள்; ஆசாரத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள்; என்று குறித்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும். இந்த நூலில் கூறப்படும் ஒழுக்கங்களில் ஒரு சிலவற்றைத் தவிர மற்றவையெல்லாம் உண்மையானவை; பின்பற்றக் கூடியவை; இதில் ஐயம் இல்லை. ஆனால் இக்காலத்தில் எல்லா மக்களும், ஆசாரக் கோவையில் சொல்லுகிறபடியே நடக்க முடியாது. ஓயாது உழைப்பவர்களுக்கு ஆசாரத்தைப் பற்றி நினைக்க நேரம் ஏது? நகரில் வாழ்வோர் பலர்க்கு ஆசாரக் கோவையில் உரைகள் ஒத்து வராமல் இருக்கலாம். ஆயினும், இந்நூலிலே உள்ளவைகளிலே பல, விஞ்ஞானத்திற்கு ஒத்து வருவன. இவ்வுண்மையை ஆசாரக் கோவையை ஒருமுறை படித்தாலே உணர்ந்து கொள்ளலாம். பழமொழி பழமொழி அல்லது பழமொழி நானூறு என்பது இத்நூலின் பெயர். நானூறு பாட்டுக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாட்டும் ஒரு பழமொழியை வைத்துக் கொண்டு பாடப்பட்டது. எல்லாம் வெண்பாக்களே. ஒவ்வொரு பாட்டின் முடிவும் ஒரு பழமொழியைக் கொண்டு முடிகிறது. இப் பழமொழிகளிலே பல இக்காலத்தில் விளங்கவில்லை; அவைகள் வழக் கிழந்து விட்டன. ஆயினும் பல பழமொழிகள் இன்றும் வழக்கத்தில் உள்ளவை. இந்நூலாசிரியர் பெயர் முன்றுறையர் என்பது. இவர் வரலாற்றைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே மூன்று நூல்கள் சிறந்தனவென்று கருதப்படுகின்றன. அவை முப்பால், நாலடி, பழமொழி என்பன. இம்மூன்றும் மற்ற நூல்களைவிட உருவில் பெரியவை; பாட்டுக்களின் தொகை அதிகம். அறம், பொருள், இன்பம், வீட்டு நெறி இவைகளைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன. இம்மூன்று நூல்களில் பழமொழியை மூன்றாவதாகக் கூறலாம். பழமொழியைப் பற்றி வழங்கும் கதை ஒன்று உண்டு. அது நாலடியாரோடு ஒட்டிய கதை. சமண முனிவர்களின் பாடல்களிலே சிறந்த நானூறு வெண் பாக்களை நாலடியாராகத் தொகுத்தனர். ஏனைய நானூறு வெண்பாக்களைப் பழமொழி யாகத் தொகுத்தனர். இவ்வரலாற்றை நாலடியாரைப் பற்றிக் கூறும் இடத்திலே காணலாம். சிறப்பிலே நாலடியாருக்கு அடுத்தபடி தான் பழமொழி என்பதைக் காட்டுவதற்கே இக் கதை வழங்குகின்றது. பழமொழிப் பாடல்கள் அனைத்தும் ஒருவரால் பாடப்பட்ட பாடல்கள் போலவே காணப்படுகின்றன. இதன் ஆசிரியர் பெயரும் முன்றுரையர் என்று குறிக்கப்பட்டுள்ளது. ஆதலால் பழமொழி நூலைப்பற்றி வழங்கும் அக்கதை புனைந்துரையே ஆகும். இந்நூலின் வெண்பாக்கள் கொஞ்சம் கடினமானவை; பல வெண்பாக்களுக்கு எளிதிலே பொருள் தெரிந்து கொள்ள முடியாது. முயன்றுதான் பொருள் கண்டு பிடிக்க வேண்டும். நாலடியார் வெண்பாக்களைப் போல நயமுள்ளவை அல்ல. ஆகையால்தான் இந்நூல் நாலடியாரைப்போல் அவ்வளவு பெருமையடைய வில்லை. திருக்குறளில் கூறப்படுவது போலவே சிறந்த பல அறங்கள் இந்நூலிலே கூறப்படுகின்றன. திருக்குறளின் கருத்துக்களும் நிரம்பப் காணப்படுகின்றன. பல பாடல்களிலே கதைகளும் உதாரணமாகக் காட்டப்படுகின்றன. இராமாயணம், பாரதம் முதலிய கதைக்குறிப்புகளை இந்நூலிலே காணலாம். தமிழ் நாட்டு வரலாறுகள் பலவற்றைக் காணலாம். கதைகள் மாபலிச் சக்கரவர்த்தி, அகங்காரத்தால் தன் அரசை யிழந்தான். வாமனனுக்கு மூன்றுபடி மண் கொடுக்காதே; அது உன்னால் முடியாத காரியம் என்று அவனுடைய குரு தடுத்தும் கேட்கவில்லை; என்னால் ஆகும் என்று அகங்காரம் கொண்ட தால் அழிந்து போனான். கண்ணைப் பற்றிய குறிப்பும், பலராமனைப் பற்றிய குறிப்பும் இந்நூலிலே காணப்படுகின்றன. இந்நூலிலே பாரதக் கதைகள் குறிக்கப்பட்டிருக்கின்றது. துரியோதனாதி யரும், பாண்டவர்களும், சூதாடினார்கள்; தங்கள் தாயபாகத்தையே பணையப் பொருளாக வைத்துச் சூதாடினார்கள். இதன் காரணமாகச் சகோதரர்களான, நூற்று வரும், ஐவரும்! பகைவர்களாயின; போர் செய்தனர். ஆதலால் உறவினருடன் சூதாடக்கூடாது என்று கூறுகிறது ஒரு செய்யுள். பெரியோரைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் பயன் பெறுவார்கள். இக்கருத்தை விளக்க இராமாயணம் வரலாறு குறிப்பிடப்பட்டி ருக்கின்றது. பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து இலங்கைக் கிழவற்கு இளையான் ----இலங்கைக்கே போந்து இறை ஆயதூஉம் பெற்றான்; பெரியாரைச் சார்ந்து கெழீஇ இலார் இல் இலங்கைக்குரியவன் இராவணன்; அவன் தம்பி விபீஷணன்; அவன் இராமனே தனக்குத் துணையாவான் என்று எண்ணி அவனிடம் வந்தான். பின்பு இலங்கைக்கே அந்த இளையவன் மன்னவனாகி விட்டான். ஆகையால் பெரியோரைச் சார்ந்து பயன் பெறாதவர்கள் யாரும் இல்லை. இச் செய்யுள் இராமாயணத்தின் ஒரு பகுதி. இதிலே விபீஷணன் இராமனைச் சேர்ந்ததன் நோக்கம் இன்னதென்று குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இத்தகைய கதைக் குறிப்புகள் பல பழமொழிப் பாடல்களிலே காணப்படுகின்றன. தமிழ் நாட்டு வரலாறுகள் குலத்தொழில் போதிக்கப்பட வேண்டாம்; தானே வந்துவிடும். இதைக் குறிக்கும் பழமொழி குலவிச்சை கல்லாமல் பாகம் படும் என்பது. மீன் குஞ்சுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா? என்பதும் இக்கருத்துள்ள பழமொழி தான். குலவித்தை கல்லாமலே வந்துவிடும் என்பதற்கு உதாரணமாகக் கரிகாற்சோழனுடைய வரலாறு ஒன்று ஒரு வெண்பாவில் எடுத்துக் காட்டப்பட்டிருக் கின்றது. உரை முடிவு காணான் இளமையோன், என்ற நரைமுது மக்கள் உவப்ப,----நரை முடித்துச் சொல்லால் முறைசெய்தான் சோழன், குலவிச்சை கல்லாமல் பாகம் படும். இவன் இளமைப் பருவம் உள்ளவன்; நாம் உரைக்கும் வழக்கைக் கேட்டுச் சரியான முடிவு கூறுவதற்குத் திறமை யற்றவன் என்று நினைத்தனர் நரைத்த முதியவர்கள்; அவர்கள் சரியான நீதிதான் என்று உவக்கும்படி, நரை முடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்து அவர்கள் வழக்கைக் கேட்டுத் தீர்ப்புக் கூறினான் சோழன். ஆதலால் தம் குலத்திற்குரிய வித்தைகள், கற்பதற்கு முன்பே நன்றாக வந்துவிடும். இச்செய்யுளிலே கரிகாற் சோழனுடைய வரலாறு கட்டப் படுகின்றது. கரிகாற் சோழன் இளம் பருவத்திலே பட்டத்திற்கு வந்துவிட்டான். அக்காலத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. வயதேறிய இருவர் தங்களுக்குள் மாறுபட்டனர். கரிகாலனிடம் வழக்குரைக்க வந்தனர். அவன் இளைஞனா யிருப்பதைக் கண்டனர். இவனால் நமது வழக்கிலே நீதி காணமுடியுமா என்று ஐயுற்றனர். அவர்கள் ஐயத்தை குறிப்பால் அறிந்த கரிகாலன், அந்தப்புரம் சென்றான். நரைத்த, தாடி, மீசை, தலைமயிருடன் திரும்பி வந்தான். அவர்கள் வழக்கைக் கேட்டான். சரியான தீர்ப்பளித்தான். அவர்களும் மகிழ்ந்தனர். பிறகு அவ்வாறு தீர்ப்பளித்தவன் கரிகாலனே என்பது கண்டு வியந்தனர். இவ்வரலாற்றையே இந்நூல் குறித்தது. கரிகாற் சோழனுடைய மற்றொரு வரலாறும் இந்நூலிலே காணப்படுகின்றது. பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாமல் உயிர் தப்பினவர்கள், முயற்சியுடையவர்களா யிருந்தால் தம் காரியத்திலே வெற்றி பெறுவார்கள். இக்கருத்துடைய பழமொழியை விளக்கும் பாடல் அது. சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்,. பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்----கடைத்தலை செயிர் அறு செங்கோல் செலீஇனான், இல்லை உயிர் உடையார் எய்தா வினை. பகைவரால்தான் இருந்த மாளிகை கொளுத்தப்பட்டது; ஆனால் அதில் அகப்பட்டு மாளாமல் உயிர் தப்பினான் கரிகால் சோழன். அவன் தன் முயற்சியினால், தன் மாமனாகிய இரும் பிடர்த் தலையார் என்பவனுடைய துணையைக் கொண்டு, தன் அரசாட்சியைப் பெற்றான்; குற்றமற்ற நெறியிலே செங்கோல் செலுத்தினான். ஆதலால் உயிருள்ளவர் வெற்றி பெறாத வினையில்லை. இதுவும் கரிகாற்சோழனுடைய சிறப்பைக் காட்டும் வரலாறு. சோழ மன்னர்களின் வரலாற்றிலே தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் என்பவன் பெயர் காணப்படுகின்றது. இவன் வரலாற்றுக் குறிப்பு பழமொழியிலும் காணப்படுகின்றது. அசுரர்களுக்கு ஒரு கோட்டை யிருந்தது. அதன் மதில்கள் மிகவும் அழுத்தமானவை. அக்கோட்டை வானத்தில் உலவுந் தன்மை யுள்ளது. அதிலே அசுரர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் வேண்டுகோளின்படி தொடித் தோள் செம்பியன் அக் கோட்டையை அழித்தான்; தேவர்களைக் காப்பாற்றினான். இதனால் அவன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்று பெயர் பெற்றான். வீங்கு தோள் செம்பீயன் சீற்றம், விறல் விசும்பில் தூங்கும் எயிலும் தொலைத்தலால் உயர்ந்த தோள்களையுடைய சோழனது கோபம் வலிமையுடன் வானத்தில் அசைந்து கொண்டிருக்கும் மதில் பொருந்திய கோட்டையைத் தொலைத்தலால் இச் செய்யுட் பகுதி இக்கதையைக் கூறுகின்றது. மநுநீதிகண்ட சோழன் வரலாறும் இப் பழமொழியில் கூறப்படுகின்றது. குற்றவாளிக்கு மன்னிப்பில்லை. அவன் மீதுள்ள வழக்கிற்குக் காலக்கெடு கிடையாது. குற்றவாளியின் மேல் உள்ள குற்றம் எவ்வளவு காலம் கழித்து வெளிப்பட்டாலும் அவனைத் தண்டிக்கலாம். இதற்கு உதாரணமாகவே மநுநீதி கண்ட சோழன் வரலாறு சொல்லப்படுகிறது. பெரிய புராணத்தில் கூறப்படும் மனுநீதிகண்ட சோழன் வரலாற்றுக்கும் பழமொழி யிலே சொல்லப்படும் இவ் வரலாற்றுக்கும் மிகுந்த வேறுபாடு காணப்படுகின்றது. மனுநீதிகண்ட சோழன் திருவாரூரிலே அரசாட்சி செய்தவன். அவன் மகன் வீதிவிடங்கள் ஒரு நாள் தேரில் ஏறிக்கொண்டு போனான். அப்போது ஒரு பசுங்கன்று துள்ளி ஓடிவந்து அவனுடைய தேர்ச்சக்கரத்திலே மாட்டிக்கொண்டு மாண்டது. அதைக் கண்ட தாய்ப்பசு துக்கந் தாங்க முடியாமல் அரண்மனை வாயிலை யடைந்தது; ஆராய்ச்சி மணியைக் கொம்பினால் ஆட்டியது. அந்த மணியோசை கேட்ட மன்னவன் வெளியில் வந்தான்; பசுவின் துயரைக் கண்டான்; உடனே மந்திரிகளை அழைத்து உண்மையைத் தெரிந்து கொண்டான். இப் பசுவைப்போலவே நானும் என் மகனை இழந்து வருந்துவேன் என்று முடிவு செய்தான். மந்திரிகள் எவ்வளவு தடுத்தும் கேட்க வில்லை. தன் மகனைக் கிடத்தி அவன்மீது தேரையேற்றிக் கொன்றான் இதுதான் பெரிய புராண வரலாறு. சோழன் மகன் தன் தேர்ச்சக்கரத்தால் ஒரு பசுங்கன்றைக் கொன்றுவிட்டான். அமைச்சர்களும் மற்றவர்களும் சேர்ந்து இச்செய்தியை அரசனுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டனர்.. பல்லாண்டுகள் கடந்தபின் எப்படியோ மன்னவனுக்குத் தெரிந்து விட்டது. உடனே அவன் தன் மகன் மீது தேர்ச் சக்கரத்தை யேற்றிக் கொன்றான். நீதி செய்வதற்குக் காலக்கேடு இல்லை என்பதை மெய்ப்பிக்கவே இவ்வாறு செய்தான். இதுவே பழமொழியில் கூறப்படும் வரலாறு. சால மறைத்துஓம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் பின்றையும் ---- மேலைக் கறவைக் கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் முறைமைக்கு மூப்புஇளமை இல். மிகவும் பாதுகாத்து அறிவுள்ள மந்திரிகள் ஒளித்து விட்டதனால், அதிக நாள் கடந்த பிறகும், முன்பு பசுவின் கன்றின் மேல் தேரைச் செலுத்திக் கொன்ற தன் மகனைத் தந்தையும் தேரை ஓட்டிக் கொன்றான் (ஆகையால்) நீதிக்கு அதிக நாள் குறைந்த நாள் என்ற எல்லையில்லை. முல்லைக்குத் தேர் கொடுத்தவன் பாரி வள்ளல்; மயிலுக்குப் போர்வை தந்தவன் பேகன் என்னும் வள்ளல்; இவர்கள் சங்க நூல்களில் பாராட்டப்பட்டிருக்கின்றனர். கொடுப்பதையே கடமையாகக் கொண்டவர்கள். இன்னார்க்கு இன்னது கொடுக்கவேண்டும் என்று எண்ணமாட்டார்கள். பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற பழமொழியை அவர்கள் பின்பற்றமாட்டார்கள். யார் எது வேண்டுமானாலும் கொடுப் பார்கள். இவர்கள் செயலைக் கொடை மடம் என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன. படர்வதற்கு ஆதரவில்லாமல் தனித்துத் தளர்ந்து கொண்டிருந்த ஒரு முல்லைக்கொடியைக் கண்டான் பாரி வள்ளல். அவன் தேரில் வந்து கொண்டிருக்கும்போது இது அவன் கண்ணில் பட்டது. உடனே முன்பின் எண்ணாமல் தான் ஏறி வந்த தேரையே அக்கொடி படரும்படி நிறுத்தினான். சிறிது யோசனை செய்திருப்பானாயின், அதற்கு ஒரு கொம்பைத் துணையாக நட்டிருப்பான். உடனே உதவி செய்யவேண்டும் என்ற அவன் கருணையுள்ளம் சிறிதும் காலந் தாழ்த்தவில்லை, ஆதலால் இதைச் செய்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவனுடைய கொடை மடமே இவ்வாறு அவனைச் செய்யத் தூண்டியது. பேகன் என்பவனும், துன்புறுவோர்க்கு உடனே உதவி செய்யவேண்டும் என்னும் கொள்கையுடையவன். அவன் காட்டின் வழியே வரும்போது அங்கே குளிர்காலத்தில் ஆடிக் கொண்டிருந்த ஒரு மயிலைக் கண்டான். அது குளிரால் நடுங்குவதாக நினைத்துக்கொண்டான். மயிலுக்குக் குளிரைத் தாங்கும் வல்லமையுண்டு; குளிர்காலத்தில் மயில் ஆடுவது இயற்கை; என்பதை எண்ணிப் பார்க்க அவனுக்கு நேரமில்லை. மயில் குளிரால் நடுங்குகிறதென்று நினைத்த உடனேயே தன்னுடைய போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தினான். இதுதான் கொடை மடமாகும். பாரியும் பேகனும் அறிவுள்ளவர்கள்தாம். ஆனால் அவர் களுடைய கருணை யுள்ளம் கொடுக்கும் தன்மை உண்மையை உணரவில்லை. அறியாதவர்களாய் நடந்து கொண்டனர். அத்தகைய அறியாமையும் அவர்களுக்கு ஒரு அழகாக அணியாக அமைந்து விட்டது. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரைக் கேட்டறிதும்;----சொல்லில் நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச்சேர்ப்ப! அறிமடமும் சான்றோர்க்கு அணி நெருங்கிய மடல்களையும், பூக்களையும் உடைய தாழைகள் நிறைந்த கடற்கரையின் தலைவனே! முல்லைக் கொடி படர்வதற்காகத் தான் ஏறிவந்த தேரினையும், குளிர்காலத்திலே மயிலுக்குப் போர்வையையும், முன்பு கொடையாகக் கொடுத்தவர் களைப் பற்றி நாம் கேட்டறிந்திருக்கின்றோம். இதைப் பற்றிச் சொல்லப்போனால் அறிவிலே மடமையும் சான்றோர்க்கு அணியாகும். இச்செய்யுள் பாரியின் பெருமையையும், பேகனுடைய பெருமையையும் எடுத்துக்காட்டியது. அவர்கள் செய்கை அறியாமை நிறைந்தது; ஆயினும் அது அவர்களுக்குப் பெருமை அளித்தது. அச்செயல் அவர்களுடைய சிறந்த பண்பின் அடையாளமாகத் திகழ்கின்றது. இவ்வுண்மையை உணர்த்தியது இச்செய்யுள். ஒரு செய்யுளிலே, பாரி வள்ளல் மனைவியின் கொடைத் தன்மையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. மாரி வறண்டு போன காலத்தில், பாண் மகன் ஒருவன் பாரியின் மனைவியிடம் வந்து இரந்தான். அவனுக்குச் சோறுபோடுவதைப் போலவே, உலைப்பானையுள் பொன்னை நிறைத்து, அதைச் சோறாகப் போட்டாள். இவ் வரலாறு ஒரு வெண்பாவிலே காணப்படு கின்றது. இதுபோல் இன்னும் சில வரலாறுகளும் இந்நூலிலே காணப்படுகின்றன. பழமொழிகள் சிறந்த பழமொழிகள் பலவற்றை இந்நூலிலே காணலாம். அப்பழமொழிகள் இன்னும் மக்களால் வழங்கப்பட்டு வருகின்றன. அவைகளிற் சிலவற்றை மட்டும் பார்த்தால் போதும்; இந்நூலின் பெருமை விளங்கும். இருதலைக் கொள்ளி என்பது ஒரு பழமொழி. இரண்டு பக்கமும் நெருப்புள்ள கட்டை இருதலைக் கொள்ளி. அது எப்பக்கம் பட்டாலும் சுடும். ஆதலால் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இந்த இருதலைக் கொள்ளியைப் போன்ற மனிதர்களும் சிலர் இருப்பார்கள். அவர்களிடம் நாம் அளவோடு பழக வேண்டும். இன்றேல் அவரால் நாம் தீமையடைவோம். இத்தகைய இருதலைக் கொள்ளிகள் யார் என்பதை எடுத்துரைக்கின்றது வெண்பா. அது கீழ்வருமாறு : தம்முடைய நட்பினரிடம் போவது; அவர்கள் மகிழும்படி பேசுவது; குற்றமில்லாதவர் போல நடிப்பது; இதைப் போலவே பகைவர்களிடமும் போவார்; அவர்களிடமும் பேசுவார்; குற்றமற்றவர்களைப் போல நடிப்பார்; இவர்கள் இருவருள் யாருடனும் ஒட்டமாட்டார்; ஒருவரிடமும் ஒன்றுபட்டிருக்க மாட்டார். இவர்தான் இருதலைக் கொள்ளியாவார். பெரிய நட்டார்க்கும் பகைவர்க்கும் சென்று திரிவுஇன்றித் தீர்ந்தார்போல் சொல்லி, அவருள் ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே இருதலைக்கொள்ளி என்பார். கிணற்றுத் தவளை நாட்டு வளப்பம் அறியாது என்பது ஒரு பழமொழி. குறுகிய அறிவு கூடாது, பரந்த அறிவு பெற வேண்டும் என்பதே இப்பழமொழியின் கருத்து. மக்கள் கிணற்றுத் தவளையாக வாழக்கூடாது என்று கூறுகிறது ஒரு வெண்பா. உண்ணுதற்கினிய தண்ணீர் இதுதான், இது போன்ற தண்ணீர் வேறிடத்தில் இல்லை என்று கிணற்றிலே உள்ள தவளை சொல்லிக்கொண்டிருக்கும்; மக்களும் அத்தவளை போல் ஆகிவிடக்கூடாது. ஒரே புத்தகத்தை நாள் முழுவதும், வெறுப்பில்லாமல் ஓதிக்கொண்டிருப்பதனால் பயன் இல்லை. அந்நூலை மட்டுமே ஆராய்ந்து ஆராய்ந்து கற்பதனால் மட்டும் பரந்த அறிவு வளர்ந்து விடாது. இவ்வாறு ஒரு நூலை மட்டும் எப்பொழுதும் படித்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் பல நூல்களையும் கற்றவர்களிடமிருந்து அரும்பொருள்கள் பலவற்றைக் கேட்பதே சிறந்ததாகும். உணற்குஇனிய இந்நீர் பிறிதுழி இல் என்னும் கிணற்றகத்துத் தேரைபோல் ஆகார்;---கணக்கினை முற்றப் பகலும் முனியாது இனிது ஓதிக் கற்றலில், கேட்டலே நன்று. பல நூல்களையும் படிக்க வேண்டும்; பல நூல்களைக் கற்றவர்களிடமிருந்து பல செய்திகளையும் கேட்டறிந்து கொள்ள வேண்டும்; அப்பொழுதுதான் அறிவு வளரும்; உலக வாழ்க்கையைப்பற்றி நன்றாக அறியலாம். இப்படியில்லாமல் ஒன்றைமட்டும் திருப்பித் திருப்பி மனப்பாடம் பண்ணிக் கொண்டும், துருவித் துருவி ஆராய்ந்து கொண்டும் இருப்பவர் பரந்த அறிவைப் பெற முடியாது. கிணற்றுத் தவளை போல் தான் இருப்பர். தமிழிலே உள்ள பல நூல்களை மட்டும் படிப்பது போதாது. வேறு மொழிகளில் உள்ள சிறந்த பல நூல்களையும் படித்தறிய வேண்டும். இதுவே சிந்தனா சக்தி சிறப்படைவதற்கு வழி செய்வதாகும். அறிவுச் செல்வத்தை ஈட்டுவதற்கு அருந்துணை புரிவதாகும். இக்கருத்தும் இப்பழமொழி வெண்பாவில் அமைந்திருக்கின்றது. சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல் என்றொரு பழமொழி உண்டு. குற்றமற்றவர்கள் மேல் அற்பர்கள் பழி பேசும்போது இப் பழமொழியைச் சொல்லுவார்கள். நல்லவர்கள் மேல் எரிந்து வீழ்ந்து எந்தப் பழியைச் சுமத்தினாலும், அது அவர்களை ஒன்றும் செய்து விடமுடியாது. நல்லவர்களை நல்லவர்கள் என்றுதான் உலகம் கூறும். சந்திரனைப் பார்த்து நாய்கள் குரைத்தால் அதனால் நிலவொளி குறைந்து விடாது. இந்தப் பழமொழியைக் கொண்ட செய்யுள் ஒன்று இந்நூலிலே உண்டு. சிறியவர்கள் பெரியவர்களை முறைப்படி தெரிந்து கொள்ளமாட்டார்கள்; தெரிந்து கொள்ளக்கூடிய தகுதியும் அவர்களிடம் இருக்காது; பெரியவர்கள் எளியவர்கள் போலத் தான் காணப்படுவார்கள். ஆதலால் அவர்களை எளியவர்கள் என்று நினைத்துக்கொண்டு தங்களுக்குச் சமமாகக் கருதுவர்; தகாத சொற்களை அவர்களிடம் பேசுவர். இப்படிப் பேசுதல், சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போன்றதாகும். நெறியால் உணராது நீர்மையும் இன்றிச் சிறியார் எளியார்ஆல் என்று பெரியாரைத் தங்கள் நேர் வைத்துத் தகவுஅல்ல கூறுதல் திங்களை நாய்குரைத்து அற்று. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது ஒரு பழமொழி. இதனை உயர்ந்தோர்க்கு உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றார் இந்நூலாசிரியர். உயர்ந்தவன் வறுமையால் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் தமது நிலையிலே தவற மாட்டார்கள். இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள். புலி எவ்வளவு பசியால் வாடினாலும் தனது நிலையிலே தவறாது. வழக்கமாகத் தான் உண்ணும் புலால் கிடைத்தால் தான் உண்ணும்; புல்லைத் தின்னாது. நாய்க்கு முழுத்தேங்காய் கிடைத்ததுபோல் என்றொரு பழமொழி உண்டு. முழுத்தேங்காயை நாயிடம் போட்டால் அதனை அது என்ன செய்யும்? தானும் அதை தின்னாது; பிறரையும் அதை எடுக்கவிடாது; சும்மா காத்துக் கொண்டு தான் கிடக்கும். ஒருவன் செல்வத்தை நிரம்பச்சேர்த்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அவன் அச்செல்வத்தை பிறர்க்கும் உதவுவதில்லை; தானும் அனுபவிப்பதில்லை. ஆதலால் அச்செல்வம் நாய்க்குக் கிடைத்த முழுத்தேங்காயைப் போன்றது தான் என்று கூறுகிறது ஒரு செய்யுள். நாய் பெற்ற தெங்கம் பழம் என்று பண்டைக்காலத்தில் வழங்கியது இப்பழமொழி. நுணலும் தன் வாயால் கெடும் என்பது ஒரு பழமொழி. தவளை தன் வாயினாலேயே கெட்டுப்போகும் என்பதே இதன் பொருள். மழை பெய்து தண்ணீர் நிரம்பிவிட்டால் தவளைக்கு ஆனந்தம். அது தானாகவே கத்திக் கொண்டிருக்கும். தவளையை உணவுக்காகத் தேடித் திரியும் பாம்பு, அது இருக்கும் இடத்தை எளிதிலே தெரிந்து கொள்ளும்; சென்று அதைப் பிடித்து விழுங்கிவிடும். இதனால்தான் நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி உண்டாயிற்று. பிறர் மேல் பொல்லாங்கு சொல்லிக்கொண்டு ஒளிந்து திரியும் அறிவிலிகள் சிலர் உண்டு. அவர்களை யாரும் தேடிப் பிடிக்க வேண்டுவதே யில்லை. அவர்களே அகப்பட்டுக் கொள்ளுவார்கள். அவர்களுடைய சொற்களே அவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும். நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்றவர்கள் இவர்கள்தாம் என்று கூறுகிறது அச்செய்யுள். இவ்வாறு பல சிறந்த பழமொழிகள் அமைந்த பாடல்களை இந்நூலிலே படித்தறியலாம். நம்பிக்கைகள் கனவிலே, காணப்படுவது பொய்யன்று. அது பின்னால் நடைபெறுவதை முன்னே அறிவிக்கும் அறிகுறியேயாகும் என்பது ஒரு பழமொழிப் பாட்டின் கருத்து. கனவில்லாமல் ஒரு நிகழ்ச்சியும் நடைபெறாது என்றே இந்நூல் கூறுகிறது. வினா முந்றாத உரையில்லை; இல்லைக் கனா முந்துறாத வினை கேள்வியில்லாமல் விடை பிறக்காது; அதுபோல கனா நிகழாமல் எந்தக் காரியமும் நடைபெறுவதில்லை. பெண்கள் தம்முடைய கற்பைத் தாமே தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நாயின் வாலை நிமிர்த்த முடியாது. அதுபோலத் தமது கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எண்ணாத பெண்களைக் காவலிலே வைத்து அவர்களைக் கற்புள்ளவர் களாக்கிவிட முடியாது என்று நம்பி வந்தனர். நிறையான் மிகுகில்லா நேரிழையாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா;----அறையோ வருந்த வலிதினின் யாப்பினும், நாய்வால் திருந்துதல் என்றுமே இல். கற்பினால் சிறந்து நிற்காத பெண்களைக் காவலிலே பிடித்து வைத்துக் கற்புள்ளவர்களாக ஆக்கிவிடுதல் என்பது ஆகாத காரியம்; நான் இதை அறைகூவிச் சொல்லுகின்றேன். வருந்தும்படி உறுதியாக நிமிர்த்திக் கட்டி வைத்தாலும் நாய் வால் எந்தக் காலத்திலும் நேராகி விடாது. பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கையை இந்நூல் வலியுறுத்துகின்றது. கல்வியினால் வரும் சிறப்பைக் காட்டிலும் குடிப்பிறப்பால் உள்ள குணமே உயர்ந்தது என்று கூறுகிறது ஒரு பாட்டு. கற்றது ஒன்று இன்றிவிடினும், குடிப்பிறந்தார் மற்றொன்று அறிவாரின் மாணமிகநல்லர் நற்குடியிலே பிறந்தவர் கல்வி கற்றிருப்பதாகிய சிறப்பு ஒன்று இல்லாவிடினும், தாழ்ந்த குடியிலே பிறந்த கற்றாரைக் காட்டினும் மிகவும் உயர்ந்தவர்கள். நிரந்து வழிவந்த நீசருள் எல்லாம் பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார். தொன்று தொட்டுக் கீழான பரம்பரையிலே பிறந்து வந்த நீசர்களுக்குள் எவ்வளவு தேடினாலும் நற்குணம் உடையவர் காணப்படமாட்டார். பிறப்பில் சிறியார்; பிறப்பினால் சாலவும் மிக்கவர்; என்ற தொடர்கள் பழமொழி வெண்பாவிலே காணப்படுகின்றன. இவைகளைக் கொண்டு இந்நூலாசிரியர் காலத்திலேயே பிறப்பிலே உயர்வு தாழ்வு உண்டு என்ற கொள்கை தமிழகத்திலே நிலைத்து வேரூன்றி விட்டதென்று தெரிந்து கொள்ளலாம். ஊழ்வினையிலும் இந்நூலாசிரியர்க்கு நம்பிக்கையுண்டு. ஊழ்வினையை வலியுறுத்தும் வெண்பாக்கள் பல உண்டு. ஆனால் முயற்சியினால் ஊழ்வினையின் கொடுமையைத் தவிர்க்க முடியும் என்ற கொள்கையும் பழமொழி நூல் ஒப்புக் கொள்கிறது. திருக்குறளும் பழமொழியும் பழமொழியின் பாடல்களிலே பலவற்றில் திருக்குறளின் கருத்துக்கள் காணப்படுகின்றன. பழமொழிப் பாடல்களின் அமைப்பு சங்கநூல் பாடல்களைப்போல காணப்படுகின்றது. இதைக்கொண்டு, பழமொழி திருக்குறளுக்கு முன் பிறந்த நூலாக இருக்குமோ என்று ஐயுறவும் இடம் உண்டு. இது நன்றாக ஆராயத்தக்கது. நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச் சிறையால் அகப்படுத்தல் ஆகா. கற்பிலே சிறந்து நின்று, தம்மைத்தாமே காத்துக் கொள்ளாத பெண்களைச் சிறையிலே வைத்து அவர்கள் கற்பைக் காப்பாற்றிவிட முடியாது. இது பழமொழிப் பாட்டு. இப்பாட்டின் பொருள் கீழ்வரும் திருக்குறளோடு ஒத்திருக்கின்றது. சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை. (கு. 57) பெண்களைக் காவல் வைத்துக் காப்பதால் எண்ண பயன் உண்டாகும்? அவர்கள் தங்கள் கற்பால் தம்மைத் தாமே காத்துக் கொள்வதுதான் சிறந்தது. மேலே காட்டிய பழமொழிப் பாட்டும், இத்திருக்குறளும் ஒரே கருத்துடன் அமைந்திருப்பதைக் காணலாம். பழமொழி ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை---அந்நாடு வேற்று நாடாகா; தமவேயாம்; ஆயினால் ஆற்றுணா வேண்டுவது இல். மிகவும் கற்றவர்கள் அறிவுள்ளவர்கள்; அவ்வறிவுள்ள வர்களின் பெருமை நான்கு திசைகளில் உள்ள நாடுகளிலும் செல்லும்; எந்நாடும் அவர்களை ஏற்றுக்கொள்ளும்; அவர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அந்நாடு அவர்களுக்கு வேற்று நாடாகக் காணப்படாது; தம்முடைய நாடாகவே காணப்படும். அப்படி யானால் அவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் கட்டுச் சோறு கட்டிக்கொண்டு போக வேண்டாம். இது கல்வியின் பெருமையைக் குறித்தது. கற்றவர்கள் நாடு, மொழி, இனபேதம் பாராட்டமாட்டார்கள். இந்த உண்மையை எடுத்துரைத்தது இப்பழமொழிச் செய்யுள். யாதானும் நாடாமால், ஊர் ஆமால் என் ஒருவன் சாந்துணையும் கல்லாத ஆறு. கற்றவனுக்கு எந்நாடும் தன்நாடே; எவ்வூரும் தன்னூரே; இவ்வாறிருக்க ஒருவன் இறக்கும் வரையிலும் கல்வி கற்காமல் காலம் கடத்துவது ஏன்? இத்திருக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாடலும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கின்றன. இக்குறளின் விரிவுரைபோல் அமைந்திருக்கின்றது இப்பழ மொழிப் பாட்டு. இப்பழமொழிப் பாட்டின் கருத்துப்போல காணப்படுகின்றது குறள். கறுத்தாற்றித் தம்மை கடிய செய்தாரைப் பொறுத்தாற்றிச் சேறல் புகழ்ஆல்----ஒறுத்துஆற்றின் வான் ஓங்கு மால்வரை வெற்ப பயன் இன்றே தான்நோன்றிட வரும் சால்பு. வானை முட்டிய உயர்ந்த மலையையுடைய மன்னவனே சினந்து நின்று தமக்குக் கொடுமை செய்தவர்களின் குற்றங்களைப் பொறுத்துக் கொண்டு நேர்மையான நெறியிலே நடப்பதுதான் பெருமையாகும்; புகழாகும், அப்படி யில்லாமல் தாமும் சினங்கொண்டு அவர்களைத் தண்டிப்பதனால் பயன் இல்லை. பொறுமையினால்தான் நல்ல பண்புகள் வளரும். இது பழமொழிச் செய்யுள். ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். தமக்குத்தீமை செய்தவரை எதிர்த்துத் தண்டித்தவர்க்கு ஒரே நாள் இன்பந்தான் உண்டு. தீமையைப் பொறுத்துக் கொண்டவர்க்கு உலகம் அழியும் வரையினும் புகழ் உண்டு. இத் திருக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாடலும் ஒரே கருத்தமைந்தவை. முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார் பிற்பெரிய செல்வம் பெறலாமோ? முன் பிறப்பிலே நல்ல வினைகளைத் தாராளமாகச் செய்யாதவர்கள், பின்வரும் பிறப்பிலே பெரிய செல்வத்தைப் பெற முடியுமா? முன் பிறப்பிலே நல்லறங்களைச் செய்தவர்கள் தாம், இப்பிறப்பிலே செல்வங்களைப் பெற்றுச் சிறந்து வாழ முடியும்; என்று கூறியது இப் பழமொழிப் பாட்டு. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர், பலர் நோலா தவர். (கு. 270) இவ்வுலகில் தவம் புரிவோர் சிலர்; தவம் புரியாதவர்கள் பலர்; ஆதலால்தான் செல்வம் உள்ளவர்கள் சிலராகவும், வறுமை யுள்ளவர்கள் பலராகவும் இருக்கின்றனர். முன் பிறப்பில் செய்த தவமே இப்பிறப்பில் செல்வம் எய்திச் சிறந்து வாழ்வதற்குக் காரணம். முன் பிறப்பிலே தவம் செய்யாமையே இப்பிறப்பில் வறுமையுற்று வருந்தி வாழ் வதற்குக் காரணம்; என்று கூறுகிறது. இக்குறள். இக்குறளும், மேலே காட்டிய பழமொழிப் பாட்டும், ஒத்த கருத்துள்ளவை. இவ்வாறு திருக்குறள் கருத்துடன் ஒத்துக் காணப்படும் பழமொழிப் பாடல்கள் பல உண்டு. பழக்க வழக்கங்கள் இந்த நூலிலே ஒரு வெண்பாவில் நாய்கொண்டால் பார்ப்பாரும் தின்பார் உடும்பு என்ற பழமொழி காணப்படு கின்றது. கீழோரிடமிருந்து நல்ல சொற்கள் பிறந்தால் அதை இகழாமல் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது அச்செய்யுள். நாய் கௌவிய உடும்பை நாய் கவ்வியது என்று இகழாமல், பார்ப்பாரும் தின்பார்கள். ஆதலால் கீழோர் வாயிலிருந்து பிறந்தது என்பதற்காக நல்ல சொல்லை இகழாமல் ஒப்புக்கொள்ள வேண்டும். இதனை, எள்ளல் கயவர்வாய் இன்உரையைத்---தெள்ளிதின் ஆர்க்கும், அருவி மலைநாட! நாய்கொண்டால் பார்ப்பாரும் தின்பார் உடும்பு. என்பதனால் காணலாம். நாய்கொண்ட உடும்பினைப் பார்ப்பாரும் தின்பர் அது போல என்றது, வேட்டைநாய் பற்பதியக் கௌவிப்பிடித்த தாயினும் உடும்பின் தசை உண்பார்க்கு நன்மை பயத்தலால், அதனை நாய் வாய்ப்பட்டதென்று இகழாது, பார்ப்பாரும் விரும்பிக் கொள்வர்; அதுபோலக் கயவர் ஒரு செய்தி சொல்லு மிடமித்து நல்லுரை தோன்றின் அதனைக் கயவர் வாய்ப்பட்டது என்று இகழாது உயர்ந்தோரும் விரும்பிக் கொள்வர் என்றவாறு. பார்ப்பாரும் என்னும் உயர்வுச் சிறப்பும்மையால் எல்லோரும் என்பது குறிப்பு இவ்வாறு வடமொழியிலும் தமிழிலும் வல்லுநரான-----மதுரைத் தமிழ்ச் சங்கக் கல்லூரியின் தலைமை யாசிரியராயிருந்த திரு நாராயணய்யங்கார் அவர்கள் கூறுகின்றார். பழமொழியின் பழையவுரைக்கு அவர் எழுதி யிருக்கும் விளக்க உரையிலே இவ்வாறு எழுதியுள்ளார். .இதனால் தமிழர்கள் உடும்புக் கறியைச் சிறந்த கறியாகக் கருதி வந்தனர் என்று தெரிகின்றது. எருமையை அடித்து அதைக் கறி சமைத்துச் சாப்பிடும் வழக்கமும் தமிழ் நாட்டில் இருந்தது. இதை இந்நூலின் வெண்பாவினால் அறியலாம். பழங்காலத்திலே குற்றங்களுக்குக் கடுமையான தண்டணைகள் விதிக்கப்பட்டன. கடன் பெற்றவன், அக்கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் - தான் கடன் வாங்கவில்லை என்று மறுத்தால் ---- அவனை நல்லபாம்பை அடைத்த குடத்திலே கைவிடச் சொல்லுவார்கள். அவன் உண்மையிலே கடன் வாங்காவிட்டால், குடத்தில் உள்ள பாம்பு அவன் கையை கடிக்காது; அவன் கடன் வாங்கியிருந்து, வாங்கவில்லை என்று பொய் புகல்வானாயின் அப்பாம்பு அவன் கையைக் கடித்து விடும். இதுவே அக்கால மக்கள் நம்பிக்கை. இதனைக். கடம் பெற்றான் பெற்றான் குடம் என்ற பழமொழியில் முடியும் பாட்டால் அறியலாம். அக்காலத்திலே மன்னர்கள் தனி அதிகாரம் செலுத்தி வந்தனர். அவர்கள் அநீதி செய்தாலும்கூட அவர்கள் நெஞ்சிலே சினம் உண்டாகும்படி எக்காரியமும் செய்யக்கூடாது. மன்னர் களின் மனத்திலே சினம் மூளும்படி நடந்து கொள்ளுவது, தூங்குகின்ற புலியைத் தூக்கத்திலிருந்து எழுப்புவது போல் ஆகிவிடுமாம். வெஞ்சின மன்னவன் வேண்டாதவே செயினும் நெஞ்சத்துள் கொள்வ சிறிதும் செயல் வேண்டா; என்செய்து அகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ துஞ்சு புலியைத் துயில் கடுங்கோபத்தையுடைய அரசன், நாம் வெறுக்கத்தக்க செயல்களைச் செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும். அவன் நெஞ்சிலே கோபம் கொள்ளும் படியான செயல்களைச் சிறிதாவது செய்யக்கூடாது. என்ன தந்திரங்களைச் செய்து, தம்மிடத்திலே அகப்பட்டபோதும், தூங்குகின்ற புலியைத் தூக்கத்திலிருந்து எழுப்புவார்களா? எழுப்பமாட்டார்கள். எழுப்பினால் அதற்குக் கோபம் வரும்; தீமை செய்யும். இவ்வாறு அரசர்களைப் பற்றிப் பத்தொன்பது பாடல்கள் காணப்படுகின்றன. அவை அனைத்தும் அரசர்களுடைய சர்வாதிகாரத்தை- தனி அதிகாரத்தை ஆதரிக்கும் செய்யுட்களாகவே இருக்கின்றன. இதனால் பழமொழி நூல் தோன்றிய காலத்தில் மன்னர்களின் ஆட்சியே நிலைத்திருந்தது; அவர்கள் சர்வதிகாரம் படைத்தவர்களாகவே விளங்கினார்கள் என்று எண்ண இடம் இருக்கின்றது. பழைய பழக்க வழக்கங்கள் பலவற்றைப் பற்றியும் பழமொழியிலே படித்தறியலாம். இந்நூலிலே காணப்படும் பழமொழிகளிலே பல, நகைச்சுவை யுடையனவாகவும் காணப் படுகின்றன. படித்தறிய வேண்டிய நீதி நூல்களிலே பழமொழி நானூறும் ஒரு சிறந்த நூல். பழந்தமிழர் பண்பாட்டைக் காணுவதற்கு இந்நூல் பெருந்துணை செய்யும். நாலடியார் நாலடியார் ஒரு சிறந்த நூல். இது ஒரு நீதி நூல். நானூறு வெண்பாக்கள் அமைந்திருக்கின்றன. நாலடி நானூறு என்ற மற்றொரு பெயரும் இதற்கு உண்டு. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி : நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி. இப்பழமொழி நாலடியாரின் பெருமையை காட்டும், திருக்குறளின் சிறப்பையும் உணர்த்தும். நாலு என்பது நாலடியார்; இரண்டு என்பது திருக்குறள். பழகு தமிழ்ச்சொல் அருமை நாலிரண்டில் என்பதும் நாலடியின் சிறப்பையும், திருக்குறளின் பெருமையையும் காட்டும். இந்த நாலடியாரின் மாண்பை விளக்கும் மற்றொரு கதையும் உண்டு. ஒரு காலத்திலே வட நாட்டிலே பெரும் பஞ்சம் உண்டாயிற்று; எண்ணாயிரம் சமண முனிவர்கள் பஞ்சம் பிழைக்கப் பாண்டிய நாட்டுக்கு வந்தனர். அவர்கள் மதுரை யிலேயே தங்கினர். பாண்டிய மன்னன் அவர்களை ஆதரித்து வந்தான். பஞ்சம் தீர்ந்தது; நாடு செழித்தது; முனிவர்கள் தங்கள் நாட்டிற்குப் போக விரும்பினர். பாண்டியன் அவர்கள் செல்வதை விரும்பவில்லை. தன்னுடைய நாட்டிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று விரும்பினான். அந்தச் சமண முனிவர்கள் தமிழ் நாட்டில், பாண்டியன் பாதுகாப்பில் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தனர். இதற்குள் அவர்கள் தமிழை நன்றாகக் கற்றிருந்தனர். கவிபாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். இறுதியில் அவர்கள், தாங்கள் தங்கியிருந்த குடிசைகளில், தங்கள் ஆசனங்களுக்கு அடியில் ஒவ்வொரு வெண்பாக்களை எழுதி வைத்தனர். இரவோடு இரவாகப் பாண்டியனிடம் சொல்லிக்கொள்ளாமலே புறப்பட்டுப் போய் விட்டனர். அவர்கள் போய்விட்டதை அறிந்தான் பாண்டியன். அவர்கள் இருந்த குடிசைகளைச் சோதனையிட்டான். அவர்கள் எழுதி வைத்த ஏடுகள் கிடைத்தன. எல்லாவற்றையும் படித்துப் பார்க்கும்படி புலவர்களுக்குக் கட்டளையிட்டான். அப்பாடல்கள் ஒன்றிற்கு ஒன்று தொடர் பில்லாமல் தனித்தனிப் பாடல்களாகக் காணப்பட்டன. இதை அறிந்த பாண்டியன் அவைகளை வைகை யாற்றிலே போட்டு விடும்படி கூறினான். அரசன் கட்டளைப்படி அவைகள் வைகை வெள்ளத்தில் விடப்பட்டன. அவைகளில் நானூறு வெண்பாக்கள் வெள்ளத் தோடு போகாமல் எதிர்த்து வந்தன. அந்த நானூறு ஏடுகளையும் பொறுக்கினர். அவைகளில் இருந்த நானூறு பாடல்களையும் சேர்த்தனர். நாலடியார் என்ற நூலாக்கினர். இதுதான் நாலடியாரைப் பற்றிய கதை. அந்த எண்ணாயிரம் ஏடுகளில், வெள்ளத்திலே போய் விடாமல் அங்கங்கே பல ஏடுகள் தங்கிக் கிடந்தன. அவை களையும் ஒன்று சேர்த்தனர்; நானூறு ஏடுகள் தேறின. அந்த நானூறு ஏடுகளில் இருந்த நானூறு வெண்பாக்களையும் சேர்த்துப் பழமொழி என்ற நூலாக்கினர். இக்கதை, பழமொழியைவிட நாலடியார் சிறந்த நூல் என்பதற்காகவே எழுந்தது. நாலடியாரைப் பற்றிய இக்கதை கட்டுக் கதை தான். ஆனால் நாலடியாரின் பெருமையை விளக்கவே இக்கதை பிறந்திருக்க வேண்டும். இக்கதையில் உள்ள இரண்டு உண்மைகளை மறுக்க முடியாது. ஒன்று, நாலடியாரில் உள்ள வெண்பாக்கள் சமண சமயத்தவரால் செய்யப்பட்டவை. இரண்டு, நாலடியார் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல் அன்று; பல ஆசிரியர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு. இந்த இரண்டு உண்மைகளும் அக்கதையிலிருந்து விளங்குகின்றன. திருக்குறளிலே உள்ள பல கருத்துக்களை நாலடியாரிலே காணலாம். திருக்குறளைப் போலவே நாலடியாரும் மூன்று பாடல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்பவை. துறவறத்தைப் பாராட்டிப் பேசுதல்; உலக இன்பத்தை வெறுத்துரைத்தல்; பெண்ணின்பத்தை நிலையற்றதென்று மறுத்துப் பேசுதல்; ஊழ்வினை, மறு பிறப்பு, புலால் உண்ணாமை, உயிர்க்கொலை புரியாமை முதலியவைகளை வலியுறுத்துதல்; இவைகள் சமண சமயத்தாரின் சிறந்த கொள்கைகள். நாலடியாரிலே இக்கொள்கைகள் வலியுறுத்திக் கூறப்படுவதைக் காணலாம். நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார் என்னும் புலவர். இவரும் சமண சமயத்தவர். இவர் நாலடியாரைப் பால், இயல், அதிகாரங்களாக வகுத்தார். அதற்கொரு பொழிப்புரையும் இயற்றினார். அறத்துப்பாலில் முதலில் துறவறத்தைப் பற்றிய பாடல்களே தொகுக்கப்பட்டிருக்கின்றன. முதல் அதிகாரம் செல்வம் நிலையாமை; இரண்டாவது அதிகாரம் இளமை நிலையாமை; மூன்றாவது அதிகாரம் யாக்கை நிலையாமை. செல்வம் நிலைக்காது; அழிந்துவிடும்; இளமைப் பருவமும் சில நாட்கள் தாம்; இளவைப் பருவம் கழிந்தால் கிழப்பருவம் வந்துவிடும்; நீர்மேல் குமிழி போன்றது உடம்பு; திடீரென்று மறைந்துவிடும். ஆகையால் செல்வம் உள்ளபோதே----இளமைப்பருவம் இருக்கும் போதே----உயிரோடு வாழும் போதே---உலக மக்களுக்கு நன்மை செய்யுங்கள். தந்நலந்துறந்து வாழுங்கள். இந்தக் கருத்தையே முதல் மூன்று அதிகாரங்களிலும் உள்ள முப்பது பாடல்களும் மொழிகின்றன. திருக்குறளில் ஒரு அதிகாரத்தில் பத்துப் பாடல்கள் இருப்பது போலவே நாலடியாரிலும் ஒரு அதிகாரத்தில் பத்துப் பாடல்கள் இருக்கின்றன. இவ்வாறு நாற்பது அதிகாரங்களைக் கொண்ட நானூறு பாடல்களே நாலடியார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் தலைப்பெயர்கள் உண்டு. பழைய நூல்களிலே----சிறப்பாகப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே உள்ள வெண்பாக்களில் நாலடியாரின் வெண்பாக்கள் மிகவும் இனிமையானவை. இந்நூலை இரண்டு மூன்று பொருள் உணர்த்து படித்தால் போதும்; அவ்வளவு வெண்பாக்களும் மனப்பாடமாகிவிடும். இதுதான் உயர்ந்த பாடல்களின் தன்மை. சொல்லும் திறமை சொல்லும் பொருளைத் தெளிவாக விளக்கிக் கூறுவதிலே நாலடிப் பாடல்கள் மிகவும் சிறந்தவை. அப்பாடல்களிலே காட்டப்படும் உவமானங்கள் அப்படியே உள்ளத்தைக் கவர்வனவாக இருக்கும். ஒரு மாமரம். அது நன்றாகக் காய்த்துப் பழுத்துக் குலுங்கி யிருக்கின்றது. ஒரே கிளையில் பழங்களும் இருக்கின்றன; காய்களும் இருக்கின்றன. இச்சமயத்தில் ஒரு பெருங்காற்று வீசுகின்றது. இந்தக் காற்றிலே கனிகள் உதிர்ந்து விடும்; காய்கள் உதிராமல் கிளைகளில் தங்கி விடும்; என்று எதிர்பார்க்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லை. கனிகளிலே சில உதிராமல் தங்கிவிட்டன; காய்கள் பல உதிர்ந்துவிட்டன, இந்த இயற்கை நிகழ்ச்சியை மனித வாழ்வோடு இணைத்துக் காட்டுகின்றது ஒரு பாட்டு மற்று அறிவாம் நல்வினை யாம் இளையம்; என்னாது கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின் முற்றிருந்த கனி ஒழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு நல்வினைகள் செய்வதைப் பற்றிப் பிறகு எண்ணிக் பார்க்கலாம். இப்பொழுது நாம் இளமைப் பருவம் உள்ளவராகத் தானே இருக்கின்றோம். இப்பொழுதென்ன அவசரம் என்று நினைக்காதீர்கள்! கையில் பொருள் உள்ள போதே ஒளிக்காமல் நல்லறங்களைச் செய்யுங்கள். முற்றியிருந்த கனி உதிராமல் அப்படியே தங்கியிருக்கும்; கொடுங்காற்றால், பழுக்காத நல்லகாய் உதிர்ந்து போவதும் உண்டு (பாட்டு 19) இச் செய்யுள் மிகவும் அருமையான செய்யுள். வயதேறியவர்கள் வாழ்வதும், இளையவர்கள் இறப்பதும் இயற்கை என்பதை எடுத்துக் காட்டிற்று. இதன் மூலம் இளமைப் பருவத்தை நம்ப வேண்டாம் என்றும் உரைத்தது. மற்றொரு பாடல், மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியை உதாரணமாகக் காட்டி ஒரு நீதியை உணர்த்து கின்றது. நாய் கடித்தால் அதைத் திருப்பிக் கடிப்பவர் யாரும் இல்லை. கடித்த நாயைத் திருப்பிக் கடிக்க வேண்டும் என்று எந்தப் பைத்தியக்காரனும் கருதமாட்டான். கெட்ட குணம் உள்ள சில அற்பர்கள். மனிதத் தன்மை யின்றிச் சில நல்ல மனிதர்களின் மேல் வசைமாரி பொழியலாம். நல்ல மனிதர்கள் அவர்களுக்கு எதிர்மாற்றம் கொடுக்க மாட்டார்கள்; ஒதுங்கித்தான் போவார்கள். இக்கருத்தை விளக்குகிறது அச் செய்யுள். கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம் வாயால் பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை---நீர்த் தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்கால் சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு கோபங்கொண்டு நாய் தன் வாயால் கடிப்பதைக் கண்டும், மீண்டும் அந்த நாயை நம் வாயினால் கடிப்பவர் யாரும் இல்லை. அதுபோல மனிதத் தன்மை யில்லாமல், கீழ்ப்பட்ட மக்கள் கீழான வார்த்தைகளைக் கூறினால், உயர்ந்தவர்கள், அவை களுக்கு மாறாகத் தாமும் கீழான சொற்களைச் சொல்ல மாட்டார்கள். மனிதத் தன்மையற்ற முறையில் வசை மொழிகளை அள்ளி இறைப்பவர்களை, நாய்கள், என்று சொல்லிற்று இச்செய்யுள் மற்றொரு பாட்டு உலக இயற்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது. மக்களுடைய சுயநலத் தன்மையைத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றது. கால் ஆடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து மேல் ஆடு மீனில் பலர் ஆவார்;----ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட! தொடர்பு உடையேம் என்பார் சிலர். (பா. 13) ஒருவர் செல்வம் உள்ளவராய்த் திரியும்போது, அவருக்கு உறவினர்கள் மிகுதியாக இருப்பார்கள். அவர்கள் வானில் மின்னுகின்ற நட்சத்திரங்களைக் காட்டிலும் அதிகமா யிருப்பார்கள். குளிர்ந்த குன்றுகளையுடைய பாண்டியனே ஒருவர் தாங்க முடியாத துன்பங்களை அடைந்தபோது அவருக்கு உறவினர்கள் மிகுதியாக இருக்கமாட்டார்கள்; ஒரு சிலர்தான் உறவினர் என்று சொல்லிக் கொள்ளுவார்கள். இன்றைய உலகிலே தமக்கென்று ஏதாவது சேர்த்து வைத்துக் கொண்டிருக் கும் மக்கள் தாம் வாழமுடியும். ஒன்றுமில்லா ஏழைகள் வாழமுடியாது. செல்வம் படைத் தவர்களைத் தான் பலர் உறவு முறை பாராட்டிச் சுற்றிக் கொண்டி ருப்பார்கள். ஏழைகளை எவரும், தங்கள் உறவினர் என்று சொல்லிக் கொள்ளமாட்டார்கள். இந்த இயற்கை உண்மையை எடுத்துக்காட்டிற்று இவ்வெண்பா. நட்பைப்பற்றிச் சொல்லும் மற்றொரு அழகான பாட்டு குறிப்பிடத்தக்கது. அச்செய்யுளில் உள்ள உவமானம் படிப்போர் உள்ளத்திலே அப்படியே படிந்துவிடும். நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கு அணியர் ஆயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பு என்னாம் சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்வினைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு. (பா. 218) நாயின் கால்களில் உள்ள சிறிய விரல்கள் இடைவெளி யின்றி நெருங்கியிருக்கும். அதுபோல நன்றாக நெருங்கிப் பழகினாலும், ஈயின் சிறுகால் அளவுகூட உதவி செய்யாதவர் களின் நட்பினால் பயன் இல்லை. வயல்களிலே பாய்ந்து அவைகளிலே தானியங்களை விளையச் செய்கின்ற வாய்க்கால் போன்றவர்களின் நட்பையே தேடிக்கொள்ள வேண்டும். அவர்கள் தொலை தூரத்தில் இருந்தாலும் தேடிக் கொண்டு போய் அவர்களுடைய நட்பைப் பெற வேண்டும். இச்செய்யுளிலே நெருங்கிப் பழகுவதற்கு, நாயின் கால் விரல்களும், சிறிய உதவிக்கு ஈயின்காலும் உவமானங்களாகக் காட்டப்பட்டன. பொருத்தமான உவமானங்கள். கல்வி கற்பதின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக, கற்காதவனைப்பற்றி இழித்துரைக்கும் செய்யுட்கள் எல்லாம் மிகச் சிறந்தவைகள். கல்லாதவனுக்குக் காட்டும் உவமானங்கள் படிப்போர்க்கு நகைப்பை ஊட்டுவன. அவற்றுள் ஒரு செய்யுள் கீழ் வருவது. கல்லாது நீண்ட ஒருவன், உலகத்து நல் அறிவாளர் இடைப்புக்கு---மெல்ல இருப்பினும் நாய் இருந்து அற்றே; இராஅது உரைப்பினும் நாய்குரைத்து அற்று. கல்வி கற்காமல் மரம்போல் நீண்டு வளர்ந்த ஒருவன் நல்ல அறிஞர்கள் நடுவிலே இருப்பதற்குத் தகுதி அற்றவன், அவன் நல்லறிஞர்களின் நடுவிலே புகுந்து மெல்ல உட்கார்ந்தி ருந்தாலும், ஒரு நாய் உட்கார்ந்திருப்பதுபோல ஆகும். சும்மா இருக்காமல் ஏதேனும் சொல்லத் தொடங்கி விடுவானாயின், நாய் குரைத்தது போல ஆகிவிடும். இச்செய்யுள் மூடனை நாய்க்கு ஒப்பிட்டது. அவன் பேசுவதை நாய் குரைப்பதற்கு ஒப்பாக உரைத்தது. நாய் குரைப்பதிலும் பொருள் இருக்காது; வெறும் ஒலி தான் உண்டு. கல்லாதான் சொற்களிலும் பொருள் இராது; வெறும் ஓசை தான் நிரம்பியிருக்கும்; நகைப்பை யூட்டும் மற்றொரு சிறந்த வெண்பா குறிப்பிடத் தக்கது. பலராலும் இழக்கத்தக்க மனிதர்கள் இன்னார் என்று சுட்டிக் காட்டுகின்றது. அவ்வெண்பா. ஆழ்ந்த சிந்தனையும், அறிவும், பெருந்தன்மையுள்ள குணமும் உடையவர்கள் எப்பொழுதும் மற்றவர்களின் மதிப்புக்குரியவர்களா யிருப் பார்கள். தற்பெருமையும், வெகுளித் தன்மையும் உள்ளவர்கள் பிறர் பழிப்புக்குத்தான் உரியவர்களா யிருப்பார்கள். இது உலகில் நடக்கும் உண்மை நிகழ்ச்சி. உறவினர்களிலே அதிகமாகப் பரிகசிப்பதற்கு உரிமை பெற்றவர்கள் மைத்துனர்கள்; மச்சான் முறையிலே உள்வர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பரிகாசம் பண்ணலாம். தற்பெருமை யுள்ளவர்களுக்கு இத்தகைய மைத்துனர்கள் பெருகி விடுவார்களாம். கற்றனவும், கண் அகன்ற சாயலும், இற்பிறப்பும் பக்கத்தார் பாராட்டப் பாடுஎய்தும்; தான் உரைப்பின் மைத்துனர் பல்கி, மருந்தில் தணியாத பித்தன், என்று எள்ளப் படும். (பா. 340) ஒருவனுடைய கல்வியைப் பற்றியும், தாராள குணத்தைப் பற்றியும், அவனுடைய குடும்பப் பெருமையைப் பற்றியும் பக்கத்தில் உள்ளவர்கள் பாராட்டிப் பேச வேண்டும். அப்பொழுதுதான் அவனுக்குப் பெருமை உண்டு. இப்படி யில்லாமல் தானே தன்னுடைய கல்வியைப் பற்றியும், குடும்பப் பெருமையைப் பற்றியும் புகழ்ந்து பேசிக்கொண்டிருப்பனாயின் அவனுக்கு மைத்துனர்கள் பெருகி விடுவார்கள். அவனுக்குப் பைத்தியம் முற்றிவிட்டது; எவ்வளவு மருந்து கொடுத்தாலும் அவன் பைத்தியம் தணியாது என்று கேலி பண்ணுவார்கள். தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுகின்றவன் பைத்தியக் காரன்; அவன் பலர் நகைப்புக்குப் பாத்திரமாக இருப்பான்; என்ற உண்மையை இவ் வெண்பா எடுத்துக் காட்டிற்று தெரிந்த செய்திகள்; விளங்கக்கூடிய உவமானங்கள்; நகைச்சுவை தரும் பொருள்கள்; இவைகளைக் காட்டி உண்மை களை உணர்த்துவதிலே நாலடிப் பாட்டுக்கள் சிறந்தவை. மேலே எடுத்துக் காட்டியவை போன்ற பல பாடல்கள் நாலடியிலே இருக்கின்றன. அவைகள் படித்துச் சுவைக்கத் தக்கவை. ஆகையால் தான் நாலடியாரைத் திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நூலாகப் போற்றுகின்றனர்; பாராட்டுகின்றனர். தன்னம்பிக்கை தன்னம்பிக்கை யில்லாதவர்கள் எந்தக் காரியத்திலும் வெற்றிபெற மாட்டார்கள். வெற்றி யளிக்கும் கருவி தன்னம் பிக்கையே யாகும். நம்மால் என்ன செய்ய முடியும்? எல்லாம் ஆண்டவன் செயல். அவனன்றி அணுவும் அசையாது. நாம் நினைப்பது ஒன்று; நடப்பது ஒன்று; இவ்வாறு வேதாந்தம் பேசும் சில மனிதர்களைப் பார்க்கின்றோம். இப்படிச் சலிப்படைந்து பேசுகின்றவர்கள் நடப்பது நடக்கட்டும் என்று சும்மா உட்கார்ந்திருப்பார்களாயின் அவர்கள் வாழ்க்கையே பாழாகும். அவர்கள் ஒரு காரியத்திலும் வெற்றி பெற மாட்டார்கள். தன்னம்பிக்கையும், அறிவும், முயற்சியுமே ஒரு மனிதனுடைய வெற்றி நிறைந்த வாழ்வுக்குக் காரணம். இவை இன்மையே ஒரு மனிதனுடைய தோல்விக் கும் வாழ்வின்மைக்கும் காரணம். இக்கருத்தை ஒரு பாடல் எடுத்துக் காட்டு கின்றது. நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழ்இடு வானும், நிலையிலும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான் தன்னை நல்ல நிலையிலே வாழ வைத்துக் கொள்ளுகின்ற வனும் தானேதான். தன்னுடைய நிலைமையைக் கெடுத்துத் தன்னைக் கீழ் நிலையிலே தள்ளிக் கொள்ளுகின்றவனும் தானே தான். தான் இருக்கும் நிலையைக் காட்டினும் இன்னும் உயர்ந்த நிலையிலே தன்னை வாழ வைத்துக் கொள்ளுகின்றவனும் தானேதான். தன்னைத் தலைமைப் பதவியிலிருக்கும்படி முதன்மையாகச் செய்து கொள்ளுகின்றவனும் தானேதான். வாழ்க்கைக்கு அடிப்படை தன்னம்பிக்கைதான் என்பதை இச் செய்யுள் உணர்த்தியது. வணிகர்கள், அரசியல்வாதிகள், வேறு துறைகளில் ஈடுபட்டி ருப்பவர்கள் அனைவர்க்கும் தன்னம் பிக்கையே வெற்றிப்பாதைக்கு வழிகாட்டும் விளக்காகும். இவ்வுண்மை நாலடிச்செய்யுள் நமக்கு அறிவிக்கின்றது. செல்வத்தின் பயன் ஒரு மனிதன் தன்னுடைய நன்மைக்காக மட்டும் செல்வம் சேர்ப்பதை நாலடிப்பாட்டுக்கள் வெறுத்துரைக்கின்றன. உறவினர், ஊரினர், நாட்டினர் நன்மைக்காகவே பொருள் சேர்க்கவேண்டும்; என்று பல பாடல்களிலே கூறப் படுகின்றன. பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க. (பா. 2) ஏர் உழுது பெற்ற செல்வத்தைப் பலரோடும் பகிர்ந்து உண்ண வேண்டும். ஆற்றப், பெருகும் பொருள் வைத்தீர் வழங்குமின். மிகவும் நிறைந்த செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்ற வர்களே அவைகளை வறியர்களுக்கு கொடுங்கள். தூய்த்துக் கழியான், துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக் கழியும் மடவோன். தானும் அனுபவித்துக் கழிக்கமாட்டான்; செல்வம் அற்ற வறியோர்க்கும் ஒன்றும் உதவமாட்டான்; பயனின்றிப் பொருளைச் சேர்த்து வைத்து விட்டு இறப்பான்; இவன் அறிவற்ற மடையன். இவ்வாறு செல்வத்தைப் பற்றிப் பல பாடல்களிலே கூறப்படுகின்றன. செல்வம் அனுபவிப்பதற்கே யன்றிச் சேர்த்து வைத்துப் பார்த்து மகிழ்வதற்காக அன்று என்பதை ஒரு பாட்டு தெளிவாகக் கூறுகின்றது. செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு சும்மா பார்த்துக்கொண்டிருப்பவனும், செல்வம் இல்லாத வனும் சமமானவர்கள் என்று அச் செய்யுள் எடுத்து காட்டுகிறது. எனது எனது என்றிருக்கும் ஏழை பொருளை, எனது எனது என்றிருப்பன் யானும், ----- தனதாயின் தானும் அதனை வழங்கான் பயன் துவ்வான், யானும் அதனை அது. அறிவில்லாதவன் தான் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை என்னுடையது, என்னுடையது என்று நினைத்துக் கொண்டி ருப்பான், அவனைப் போலவே யானும் அச் செல்வத்தை என்னுடையது, என்னுடையது என்று எண்ணிக் கொண்டிருப் பேன். அது அவனுடைய செல்வமாயிருக்குமானால் அவன் அதை எடுத்து அனுப விப்பான்; பிறருக்கும் கொடுப்பான். அப்படி அவன் தானும் அதனைப் பிறருக்கும் வழங்குவதில்லை; அதன் பயனை நுகர்தலும் இல்லை. யானும் அச்செல்வத்தை அவனைப் போலவே, பிறருக்குக் கொடுக்காமலும், அனுபவிக் காமலும் வைத்திருக்கின்றேன். இச்செய்யுள், வழங்காமலும், அனுபவிக்காமலும் வைத்திருக்கின்ற வனுடைய செல்வம் அவனுக்கு உரியது அன்று என்பதை விளக்கி உரைத்தது. இவை போன்ற பல செய்யுட்கள் செல்வப் பொருளை வீணாகச் சேர்த்து வைத்திருப்பதனால் பயனில்லை என்று கூறுகின்றன. வாழ்வதற்கும், வழங்கு வதற்குந்தான் செல்வம் வேண்டும் என்று கூறுகின்றன. பெண்ணுரிமை நாலடியார் காலத்திலே பெண்களுக்கு உரிமையிருந்த தில்லை. அவர்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்கும் அடிமை களாகத்தான் கருதமாட்டார்கள். ஆயினும் இல்லற வாழ்வு தழைக்கப் பெண்கள்தாம் காரணம் என்று கருதப்பட்டனர். ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்ற கொள்கை தமிழகத்தில் நீண்டகாலமாக உண்டு. அன்பும், அறிவும், நற்பண்பும், திறமையும் உள்ள பெண்களால்தான் குடும்பங்கள் சிறப்படையும்; இவையற்ற பெண்கள் வாழும் குடும்பத்திலே எந்த இன்பமும் இராது; அக்குடும்பமும் பாழாகும். மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம் காண்டற்கு அரியதுஓர் காடு. (பா. 361) சிறந்த குணங்கள் அமைந்த மனையாளைப் பெறாத வனுடைய வீடு பார்ப்பதற்கு பயங்கரமான ஒரு காடாகும். இதனால் இல்வாழ்வு இனிது நடைபெற வேண்டுமானால் பெண்கள் நற்பண்புள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று கூறுப்பட்டது. இவ்வாழ்வுக்குத் தகுதியற்ற பெண்டிர் ---- கணவனுக்கும், குடும்பத்திற்கும் தீமை விளைக்கும் பெண்டிர் -- எவர் என்பதை ஒரு பாட்டு விளக்கிக் கூறுகின்றது. விரும்பத் தகாத கொடுங்குணம் படைத்த பெண்ணை மனையாளாகக் கொண்டவன் என்றும் துன்புறுவான். எறிஎன்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை உண்டி உதவாதாள் இல்வாழ்பேய்; இம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை. அடி என்று சொல்லிக்கொண்டு கணவனை எதிர்த்து நிற்பவள் எமன்; விடியற்காலத்திலேயே சமையல் கட்டை யடைந்து உணவுப் பொருள்களைச் சமைக்காதவள் ஒரு பெரிய நோய்; சமைத்த உணவைப் பசி நேரத்தில் பரிமாறாதவள் வீட்டில் வாழும் பேய்; இக்குணமுள்ள பெண்கள் தம்மைக் கொண்ட கணவனைக் கொல்லும் ஆயுதம் ஆவர். கணவன் சொல்லுக்குக் கீழ்ப்படிவது; காலதாமதம் இன்றிச் சமையல் செய்வது; சமைத்ததை அன்புடன் பரிமாறு வது; இவை மனைவியின் சிறந்த கடமை என்று வற்புறுத்துகிறது இச்செய்யுள். கணவனுக்குப் பணிவிடை செய்யவேண்டியதே மனைவியின் கடமை என்பது பழந்தமிழ் நாட்டுப் பண்பு. வீட்டிலிருந்து கொண்டு இல்லறத்தை நன்றாக நடத்த வேண்டுவதுதான் பெண்கள் கடமை. ஆயினும் அவர்களும் கல்வி கற்றிருக்கவேண்டும்.. ஆண்களைப் போலவே கல்வி கற்கும் உரிமை பெண்களுக்கும் உண்டு. இக்கொள்கையை நாலடியார் ஒப்புக்கொள்ளுகிறது. குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டு அழகும், மஞ்சள் அழகும் அழகல்ல; நெஞ்சத்து நல்லம் யாம், என்னும் நடுவுநிலைமையால் கல்வி அழகே அழகு. (பா. 131) தலைமையிரின் அழகும், வளைந்து கொடுக்கும் துணியின் கரையழகும், மஞ்சள் பூசிக்கொள்ளுவதனால் உண்டாகும் அழகும் அழகல்ல. உள்ளத்திலே, நாம் நல்ல வழியில் நடக்கின்றோம்; நடுவு நிலைமையில் வாழ்கின்றோம் என்னும் குற்றமற்ற நிலைமையை உண்டாக்குவதனால், கல்வியின் அழகு தான் சிறந்த அழகாகும். இச்செய்யுள் ஆண்களுக்கும் கல்வி வேண்டும்; பெண் களுக்கும் கல்வி வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. குஞ்சி - என்பது ஆண்களின் தலைமயிர்; உடுக்கும் ஆடையிலே கண்ணைக் கவரும் கரை அமைந்திருக்க வேண்டும் என்று ஆண்களும் விரும்புவர்; பெண்களும் விரும்புவர்; மஞ்சள் பூசிக்கொண்டு குளிப்பது பெண்கள் வழக்கம். ஆகையால் இது இருபாலார்க்கும் பொதுவான செய்யுள். மானமுள்ள வாழ்வு எவ்வளவு துன்பம் வந்தாலும் மானங்கெடாமல் வாழ வேண்டும். பசிப்பிணியால் சாவதா யிருந்தாலும் தன்னை இழிவாக மதிப்பவர்களின் இல்லத்திலே உணவருந்தக் கூடாது. இதுவே தமிழர்களின் சிறந்த பண்பாடு. இந்தப் பண்பாட்டை நாலடிப் பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. தன் உடம்பின் ஊன் கெடிதும் உண்ணார்கைத்து உண்ணற்க. தன் உடம்பில் உள்ள சதை வற்றிப் போனாலும் உடம்பு எலும்புந் தோலுமாக இளைத்துப் போனாலும், உண்ணத்தகாத பகைவர் கையிலிருந்து உணவு பெற்று உண்ணக் கூடாது. பொற்கலத்துப் பெய்த புலி உகிர் வான்புழுக்கல் அக்காரம், பாலோடு, அமரார் கைத்து உண்டலின் உப்புஇலி புற்கை, உயிர்போல் கிளைஞர்மாட்டு, எக்காலத்தானும் இனிது. பொன் பாண்டத்திலே புலிநகம் போன்ற வெண்மையான சோறு, சர்க்கரை, பால் இவைகளைத் தம்மை மதியாதாரிடம் பெற்று உண்பதனால் இன்பம் இல்லை. இதைவிட உயிர் போன்ற உறவு பூண்டவரிடம், உப்பில்லாத கூழை மண்பாண் டத்திலே பெற்று உண்டாலும் இனிமையுண்டு. நாள்வாய்ப் பெறினும் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெங்கருணை வேம்பாகும் (பா. 206) நாள்தோறும் குறித்த நேரத்திலே கிடைப்பதாயினும், தன்னை விரும்பாதார் இல்லத்திலே அவர்கள் உதவும் பொரிக்கறியோடு கூடிய சோறு இனிமை தராது; உண்டால் வேம்பு போலவே கசக்கும், இவைகள் விரும்பாதார் -- மதியாதார் -- பகைவர் இல்லத்திலே உணவுண்பது தீமை என்பதை எடுத்துக் காட்டின. அவ்வாறு செய்வது மனிதத் தன்மையற்ற செயல்; மானங்கெட்ட நடத்தை என்பதையும் உணர்த்தின. சாதி வேற்றுமை நாலடியார் காலத்திலே தமிழ் நாட்டிலே சாதி வேற்றுமை நிலைத்திருந்தது. வருணாசிரம தருமக் கொள்கைகள் வேரூன்றி யிருந்தன. பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற கருத்துப் பரவி யிருந்தது. தோணி இயக்குவான் தொல்லை வருணத்துக் காணில் கடைப்பட்டான் தோணி ஓட்டுகின்றவன், பழமையான நால்வகை வருணங் களிலே, ஆராய்ந்து பார்த்தால் கடைப்பட்ட வருணத்தைச் சேர்ந்தவன். தமிழகத்திலே பிரம்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நான்கு வருணங்களும் இருந்தன. கடைப்பட்ட சூத்திர வருணத்தைச் சேர்ந்தவர்களே தோணிகள் ஓட்டும் தொழில் செய்துவந்தனர். மேற்கண்ட வரிகள் இவ்வுண்மை யைக் கூறின. சான்றாண்மை, சாயல், ஒழுக்கம், இவைமூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க்கு அல்லது ---- வான்தோயும் மைதவழ் வெற்ப! படாஅ பெரும்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு. (பா. 142) வானை அளாவிய----மேகங்கள் தவழும் மலைகளை யுடைய பாண்டியனே நிறைந்த நற்பண்புகள், அடக்கம். நல்லொழுக்கம் இவை மூன்றும் உயர்ந்த குடியிலே பிறந்தவர் களிடம் மட்டுமே காணப்படும். உயர்ந்த குடியிலே பிறந்தவர்கள் செல்வத்தைப் பெற்றாலும், இக்குணங்களை பெறமாட்டார்கள். செல்லா விடத்தும் குடிப்பிறந்தார் செய்வன செல்இடத்தும் செய்யார் சிறியவர் (பா. 149) நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் செல்வாக்கை யிழந்த வறுமைக்காலத்திலும் பிறர்க்கும் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். கீழ்ப்பட்ட குடியிலே பிறந்தவர்கள், செல்வாக்குள்ள---பணம் படைத்த காலத்திலும் பிறருக்கு உதவி செய்யமாட்டார்கள். இவைகள் குடிப்பிறப்பால் மக்கள் குணங்கள் வேறு பட்டிருக்கின்றன என்பதை உணர்த்தின. உயர்ந்த குடும்பத்திலே பிறந்தவர்களிடம் உயர்ந்த குணங்கள் இருக்கும். இழிந்த குடியிலே பிறந்தவர்களிடம் தாழ்ந்த குணங்கள் காணப்படும். இவை முன்னோர் நம்பிக்கை. ஆயினும் பிறப்பைக் கொண்டு மட்டும் ஒருவரை உயர்வாகவோ தாழ்வாகவோ எண்ணிவிடக்கூடாது. எக்குடியிலே பிறந்தோராயினும் கற்றறிந்தவர் சிறந்தவர். அவர்களைச் சிறந்த வராகப் பாராட்ட வேண்டும். அறிவும் ஒழுக்கமுமே மக்களுக்கு மதிப்பைத் தருவன; பிறப்பு மட்டும் அன்று. இச் சிறந்த கொள்கையும் நாலடியார் எடுத்துரைக்கின்றது. களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர் விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்; கடைநிலத்தோர் ஆயினும், கற்றறிந்தோரைத் தலைநிலத்து வைக்கப்படும். களர் நிலத்திலே ஒன்று விளையாது; மட்டமான நிலம். ஆயினும் அந்த நிலத்திலே விளைந்த உப்பை அறிஞர்கள் ஒதுக்கிவிடமாட்டார்கள். நல்ல விளைநிலத்திலே பிறந்த நெல்லைக் காட்டிலும் சிறந்ததாகக் கொள்ளுவார்கள். அதைப் போலக் கடைப்பட்ட குடியிலே பிறந்தவராயினும், கற்றறிந்தோர் உயர்ந்த இடத்திலே பிறந்தவர் போல் வைத்துப் பாராட்டப் படுவார்கள். இச்செய்யுள் கல்வி கற்றவர்கள் உயர்ந்தவர்களாக மதிக்கப் படுவார்கள் என்பதை எடுத்துக்காட்டிற்று. மேற்காட்டியவை களால் கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் பிறப்பினால் ஏற்படும் உயர்வு தாழ்வுகள் ஒழியும் என்பதை அறியலாம். வடக்கும் தெற்கும் வடநாடு புண்ணியபூமி; தென்னாடு பாவ பூமி என்று கொள்கையுண்டு. வட நாட்டில் உள்ளவர்கள் புண்யம் செய்வார்கள்; சுவர்க்கம் பெறுவார்கள்; தென்னாட்டினர் வட நாட்டிற்குச் சென்றால் ஒழுக்கத்திலே உயர்ந்து உத்தமராக மாறுவர். வடநாட்டினர் தென்னாட்டிற்கு வந்தால் ஒழுக்கங் கெடுவார்கள்; கீழ்மைக்குணம் அடைவார்கள். இத்தகைய நம்பிக்கை பண்டைக்காலத்திலிருந்து. இக்கொள்கையை நாலடியார் பாட்டு ஒன்று மறுத் துரைக்கின்றது. அவரவர்கள் தன்மைக் கேற்றபடியே நன்மை தீமை பெறுவார்கள்; அவர்கள் பெறும் நன்மை தீமைகளுக்கு அவர்கள் வாழும் நாடு காரணம் அன்று என்று கூறுகின்றது அச்செய்யுள். எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரம்காழ் தெங்குஆகா தென்னாட்டவரும் சுவர்க்கம் புகுலால்; தன் ஆற்றான் ஆகும் மறுமை; வடதிசையும் கொன் ஆளர் சாலப் பலர். (பா. 243) எந்த நிலத்திலே விதையைக் கொண்டுபோய்ப் போட்டாலும் காஞ்சிரம் விதை தென்னை மரமாக முளைத்து விடாது. தென்னாட்டில் உள்ளவர்களும், நற்கருமங்களைச் செய்கின்றனர்; சுவர்க்கம் அடைகின்றனர். வடநாட்டிலும் வீண் பொழுது போக்குவோர் பலர் உண்டு. அவர்கள் நற்கதி பெறுவதில்லை; நரகத்தையே அடைகின்றனர். ஆதலால் ஒருவன் மறுமையிலே பெறும் நன்மைக்கு நாடு காரணம் அன்று; தன் ஒழுக்கமே --- நடத்தையே காரணமாகும். இச்செயுள் வடநாடு புண்ணிய பூமி; தென்னாடு பாவ பூமி என்னும் கொள்கை தவறு என்பதை எடுத்துக் காட்டிற்று. திருக்குறள் கருத்துக்கள் நாலடியார் பாடல்களிலே பல, திருக்குறளின் கருத்துக் களைக் விளக்கிக் கூறுகின்றன. திருக்குறளை நன்றாகக் கற்ற ஆசிரியர்களால் பாடப்பட்ட பாடல் களே நாலடிப் பாடல்கள் என்று எண்ணலாம். குடம்பை தனித்தொழியப் புள்பறந்து அற்றே உடம்போடு உயிரிடை நட்பு. கூடு தனித்திருக்கும்படி, அதில் உள்ள பறவை பறந்து போவது போன்றதாகும் உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு என்பது திருக்குறள். இக்குறளின் கருத்து. கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள்; --- வாளாதே சேக்கைமரன் ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. என்ற நாலடிப் பாட்டிலே காணப்படுகின்றது. சேக்கை கூடு தவம்செய்வார் தம் கருமம் செய்வார் மற்று எல்லாம் அவம் செய்வார் ஆசையுள் பட்டு. தவம் செய்பவரே தம்முடைய கடமையைச் செய்கின்றவர்; தவம் செய்யாதவர்கள் இவ்வுலக இன்ப ஆசையிலே அகப்பட்டுக் கொண்டு வீண் செயல்களைச் செய்கின்றவர் ஆவர். இத் திருக்குறளின் கருத்தை நிலையாமை நோய்மூப்புச் சாக்காடு என்றெண்ணித் தலைஆயார் தம்கருமம் செய்வார் என்ற நாலடி வெண்பாவிலே காணலாம்; பகை, பாவம், அச்சம், பழி யென நான்கும் இகவாஆம் இல்இறப்பான் கண் பிறன் மனையாளிடம் நெறிதவறிச் செல்கின்றவனிடம், பகை, பாவம், பயம், பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் நீங்காமல் நிலைத்திருக்கும் என்பது திருக்குறள். அறம், புகழ், கேண்மை, பெருமை இந்நான்கும் பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா -- பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம் என்று அச்சத்தோடு இந்நாற் பொருள் என்பது நாலடியார். இவை இரண்டும் ஒரே கருத்துடையன. இந்நாலடி வெண்பா மேலேகாட்டிய திருக்குறளுக்கும் பொருள் கூறுவது போல் அமைந் திருக்கிறது. ஒண்பொருழ் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. சிறந்த செல்வத்தை மிகுதியாகச் சேர்த்து வைத்திருப் பவர்களுக்கு, மற்ற அறம், இன்பம் இரண்டும் எளிதிலே கிடைக்கும் பொருள்களாம். இது திருக்குறள். வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும்; நடுவணது எய்தா தான் எய்தும் வையத்து அடுவது போலும் துயர். இது நாலடி வெண்பா. மேலே காட்டிய திருக்குறளும், இந்த நாலடியும் ஒரே பொருளைக் கூறுகின்றன. உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்னும் திருக்குறளும், விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ ஒருவன் அழித்துப் பிறக்கும் பிறப்பு என்ற நாலடியும் ஒத்திருக்கின்றன. கண்ணை மூடுவதைச் சாவுக்கும் கண்ணைத் திறப்பதைப் பிறப்புக்கும் உவமானமாகக் கூறியிருக்கின்றன. தினைத்துணை நன்றிசெயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரிவார் என்பது திருக்குறள் தினை அனைத்தே ஆயினும் செய்த நன்று உண்டால் பனை அனைத்தா உள்ளுவர் சான்றோர். என்பது நாலடியார். இவைகள் இரண்டும் ஒரே கருத்தைக் கொண்ட செய்யுட்கள். இவ்வாறு நாலடியாரிலே திருக்குறளின் கருத்துக்கள் பலவற்றைக் காண லாம். நாலடியாரைப் படிப்போர் அவைகளைக் கண்டுணரலாம். நம்பிக்கை, பழக்க வழக்கங்கள் நாலடியார் காலத்திலே தமிழகத்து மக்களிடம் குடிகொண்டிருந்த பல நம்பிக் கைகளையும், பழக்க வழக்கங் களையும் இந்நூலிலே காணலாம். தர்க்கமும், சோதிடமும் பயனற்றவை, அவைகளிலே நம்பிக்கை வைப்பதால் பயன் இல்லை. தர்க்க நூலைப் படித்துக் கொண்டு பொழுது போக்குவதனால் எந்த நன்மையையும் அடைந்துவிட முடியாது; சோதிடம் பார்த்துத் தம் வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாது. சோதிடம் பார்ப்பதால்----அதை நம்புவதால்----தம் வாழ்க்கை யிலே இன்ப துன்பங்களைத் தேடிக்கொள்ள முடியாது. தருக்கத்தையும், சோதிடத்தையும் நம்புகின்றவர்கள் பைத்தியக்காரர்கள்; அவர்களைக் காட்டிலும் அறிவற்றவர்கள் எவரும் இல்லை. சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும் பித்தரில் பேதையார் இல் (பா. 52) என்பது மேலே கூறிய கொள்கையை வலியுறுத்துகின்றது. பாம்பு மந்திரத்திற்குக் கட்டுப்படும் என்று நம்பினர். மந்திரித்த திருநீற்றை வீசினால் படமெடுத்தாடும் பாம்பு அடங்கிவிடுமாம்; படத்தைச் சுருக்கிக் கொள்ளுமாம். இடுநீற்றால் பை அவிந்த நாகம்; (பா. 66) முன்னே போட்ட திருநீற்றால் படம் அடங்கிய பாம்பு என்பது இதை உணர்த்துகின்றது. நாலடியார் காலத்திலே நல்ல நாள் பார்த்து அந்நாளிலே திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது. திருமணக் காலத்தில் பலரும் அறியும்படி வாத்தியங்கள் முழங்கும். பல்லார் அறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணம் செய்து கடிபுக்க மெல்இயல். பலரும் அறியும்படி பறையடித்து, நல்ல நாள் கேட்டு, கல்யாணம் புரிந்துகொண்டு மனைக்குள் புகுந்த மெல்லிய தன்மையுடையவள். பறையடிப்பதிலே மணப்பாறை, பிணப்பறை என்று இரண்டு வகைப் பறைகள் உண்டு; மணம் செய்யும்போது அடிக்கும் பறை மணப்பறை; இறந்தவர்க்காக அடிக்கப்படும் பறை பிணப்பறை. மன்றம் கறங்க மணப்பறை ஆயின அன்று அவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப் பின்றை ஒலித்தலும் உண்டாம். கல்யாண மண்டபம் முழுதும் ஒலிக்கும்படி மணப்பறை யாக அடிக்கப்பட்ட பறை, அன்றே, அவருக்கு, அவ்விடத்திலே பிணப்பறையாக மாறி ஒலிக்கவும் கூடும். தீவினை செய்தவர்கள் தாம் செய்த தீவினைகளின் பயனை மீண்டும் பிறந்து அனுபவிப்பார்கள். இந்த நம்பிக்கை நாலடியார் பாடல்களில் காணப்படுகின்றது. அக்கே போல் அங்கை ஒழிய விரல் அழுகித் துக்கத் தொழுநோய் எழுபவே,----அக்கால் அலவனைக் காதலித்துக் கால்முரித்துத் தின்ற பழவினை வந்தடைந்தக் கால் சங்குமணியைப் போன்ற வெள்ளையான எலும்புடன் உள்ளங்கை மாத்திரம் இருக்க, ஏனைய விரல்கள் எல்லாம் அழுகித் துன்பத்தைத் தரும் தொழுநோயால் வருந்துவர். முன் பிறப்பிலே நண்டைக் காதலித்து அதன் காலை முரித்துத் தின்ற பழவினையின் கொடுமை வந்தால் இவ்வாறு துன்புறுவர். தொழுநோய் குட்ட நோய். தொழு நோய்க்குக் காரணம் பழந்தீவினைதான் என்று உரைத்தது இச் செய்யுள். சீதேவி, மூதேவி கலைமகள், இலக்குமி, இந்திராணி, சிவன், திருமால், கூற்றுவன் முதலிய தெய்வங்கள் நாலடியாரிலே காணப்படுகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே இன்றும் நாலடியார் ஒரு சிறந்த நூலாகக் காணப்படுகின்றது. இந்நூலிலே கூறப்படும், நீதிகளும், அறங்களும், அனைவர்க்கும் பொதுவானவை. திருக்குறள் திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர்; பதினெண்கீழ்க் கணக்கு நூல்களிலே தலை சிறந்து விளங்குவது திருக்குறள் இந்நூல் வரிசையால் முப்பால் என்ற பெயரால் திருக்குறள் குறிக்கப்பட்டிருக்கிறது; இந்நூல் வரிசையிலே முதலில் தோன்றியது திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக் கடிகை, திரிகடுகம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, பழமொழி, நாலடியார் ஆகியவைகள் எல்லாம் திருக்குறளுக்குப் பின் தோன்றிய நூல்களாகத்தான் இருக்க வேண்டும். திருக்குறளின் கருத்துக்கள் பல இந்நூல்களிலே காணப்படுகின்றன. இன்று தமிழில் உள்ள நூல்களிலேயே திருக்குறள்தான் உலகப் புகழ்பெற்ற நூலாக விளங்குகின்றது. உலக மக்கள் அனைவரும் திருக்குறளைப் போற்று கின்றனர். அதில் உள்ள உயர்ந்த கருத்துக்களைப் பாராட்டுகின்றனர். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்தோன்றிய திருக்குறளில் உள்ள பல அறங்கள் இன்றைக்கும் பொருந்துவனாவாயிருப்பது இதற் கொரு காரணம். அன்றியும் திருக்குறளின் பெருமைக்கு மற்றொரு சிறந்த காரணம் உண்டு. இந்நூலிலே கூறப்படும் கருத்துக்கள் உலக மக்கள் அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடியவை. இந்நூல் குறிப்பிட்ட ஒரு மதத்தினர்க்கோ, ஒரு இனத்தினர்க்கோ, ஒரு நாட்டினர்க்கோ, ஒரு மொழியினர்க்கோ என்று செய்யப்பட வில்லை. மனித சமூகம் முழுவதற்கும்----உலக மக்கள் எல் லோருக்கும் பொதுவாகச் செய்யப்பட்டதாகும். இதனாலேயே இன்று திருக்குறள் உலகப் பொது நூல் என்று கொண்டாடும் படி சிறந்து விளங்குகின்றது. தமிழிலே முதன் முதல் தோன்றிய நீதி நூல் திருக்குறள் தான். வட மொழியிலே ஸ்மிருதிகள் பல உண்டு. அவைகள் மக்கள் இன்னின்ன காரியங்களைச் செய்ய வேண்டும்; இன்னின்ன காரியங்களைச் செய்யக்கூடாது; என்று கட்டளை யிடுகின்றன. அந்நூல்களிலே, இல்லறத்தான் கடமை, துறவிகளின் கடமை, அரசியல் அறங்கள் முதலியவைகள் கூறப்படுகின்றன. அவை போன்ற நூல் தமிழிலே திருக்குறளுக்கு முன் ஒன்றேனும் இல்லை. திருக்குறளை வட மொழியிலேயுள்ள ஸ்மிருதிகளுக்கு ஒப்பிடலாம். ஆனால் ஒருவகையிலே அவைகளை விட உயர்ந்து நிற்கின்றது திருக்குறள். ஸ்மிருதிகளில் கூறப்படும் நீதிகள் அனைத்தும் வருணாஸ்ரம தருமத்தை அடிப்படையாகக் கொண்டவை. சாதிக்கொரு நீதி கூறுவன, திருக்குறளோ மனித சமுதாயத்தை ஒன்றெனக் கருதி, மக்கள் அனைவர்க்கும் பொது வான நீதிகளையே கூறுகின்றது. இதுதான் திருக் குறளுக்குள்ள தனிச் சிறப்பு. திருக்குறளின் மாண்பைக் காட்ட அதற்கு அமைந்திருக்கும் பெயர்களே போதும். திருக்குறளுக்கு ஒன்பது பெயர்கள் அமைந்திருக்கின்றன. வேறு எந்த அற நூல்களுக்கும் இத்தனை பெயர்கள் இல்லை. 1. திருக்குறள், 2. உத்தரவேதம், 3. திருவள்ளுவர், 4. பொய்யா மொழி, 5. வாயுறை வாழ்த்து, 6 தெய்வ நூல், 7. பொதுமறை, 8. முப்பால், 9. தமிழ் மறை. இவைகளே திருக்குறளைக் குறிக்கும் ஒன்பது பெயர்கள். சீரார் திருக்குறள், உத்தர வேதம், திருவள்ளுவர், பேரார் பொய் யாமொழி, வாயுறை வாழ்த்துப், பெருந் தெய்வநூல். ஊரார் பொதுமறை, முப்பால் தமிழ் மறை, ஒன்பதும் நல் காராளர் கற்றுணர் செய்யுட்கு நாமங்கள் கார்குழலே இப்பழம் பாட்டினால் அவ்வொன்பது பெயர்களையும் காணலாம். திருக்குறள் அமைப்பு திருக்குறள், குறள் வெண்பாக்களால் அமைந்தது. இரண்டே அடிகளால் அமைந்த ஒருவகை வெண்பாவுக்குக் குறள் வெண்பா என்று பெயர். பெரிய செய்யுட்களைவிடச் சிறிய செய்யுட்கள் மக்கள் மனத்திலே அப்படியே ஒட்டிக் கொள்ளும். ஆதலால்தான், மக்கள் பின்பற்றி நடக்க வேண்டிய நல்லுரை களை நவில வந்த வள்ளுவர், சிறிய குறள் வெண்பாக்களால் தமது நூலை இயற்றினார். இதுவே அவரது உயர்ந்த அறிவுக்கு ஒரு எடுத்துக் காட்டு. திருக்குறளிலே ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள் வெண்பாக்கள் அமைந் திருக்கின்றன. இவைகள் பத்துப் பத்துப் பாடல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பத்துப் பாடல்கள் கொண்டது ஒரு அதிகாரம். அவைகள் நூற்று முப்பது மூன்று அதிகாரங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு அதிகாரத் திற்கும் தலைப் பெயர்கள் உண்டு; 1. கடவுள் வாழ்த்து. 2. வான் சிறப்பு. 3. நீத்தார் பெருமை. 4. அறன் வலியுறுத்தல். 5. இல் வாழ்க்கை. 6. வாழ்க்கைத் துணை நலம். 7. மக்கட்பேறு. 8. அன்புடைமை என்று இவ்வாறு 133 அதிகாரங்களுக்கும் தலைப் பெயர்கள் உண்டு. திருக்குறள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் இதற்கு முப்பால் என்று பெயர். முதற் பகுதி அறத்துப்பால். இதில் இல்லறம், துறவறம் இரண்டைப் பற்றியும் முப்பத்தெட்டு அதிகாரங்களில் கூறப்படுகின்றன. இரண்டாவது பகுதி பொருட்பால். இதிலே, அரசாள் வோர்க்கு வேண்டிய தகுதிகள்; அமைச்சர்க்கு வேண்டிய தகுதிகள்; அரசாங்கத்திற்கு வேண்டிய அங்கங்கள்; பொருளீட்ட வேண்டிய முறை; அரசாட்சியின் கடமை; குடி மக்களின் கடமை; ஆகிய அனைத்தும் வலியுறுத்தப்படுகின்றன. எழுபது அதிகாரங் களில் இச் செய்திகள் கூறப்படுகின்றன. மூன்றாவது பகுதி காமத்துப்பால். இதிலே பண்டைத் தமிழர்களின் குடும்ப வாழ்க்கை முறையைப் பற்றிக் கூறப் படுகின்றது. ஒரு ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் கண்டு காதல் கொள்வது; அவர்கள் உள்ளம் ஒன்றுபட்டுக் காதலனும், காதலியுமாய் மறைந்து வாழ்வது; பிறகு அவர்கள் எல்லோரும் காண மணம் புரிந்துகொண்டு இல்லறம் நடத்துவது. இதுவே பழந்தமிழர் வாழ்க்கை முறை. இப் பண்பாட்டையே, களவியல், கற்பியல் என்று இரண்டு பகுதியாகப் பிரித்துக் கூறுகின்றது. காமத்துப் பாலில் உள்ள அதிகாரங்கள் இருப்பத்து ஐந்து. இவ்வாறு அமைந்துள்ள திருக்குறளிலே, வள்ளுவர் தம் காலத்திலிருந்த எல்லாப் பொருள்களைப்பற்றியும் விளக்கி யிருக்கின்றார். இவ்வுண்மையை, எல்லாப் பொருளும் இதன் பால் உள இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லையால் என்று ஒரு புலவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். மற்றொரு புலவர் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்களையும் படித்தால் போதும்; சிறந்த தமிழ்ப் புலவராகி விடலாம். மற்றொருவரிடத்திலே வேறொரு நூலையும் பாடங் கேட்க வேண்டியதில்லை என்று திருக்குறளைப் போற்றி யிருக்கின்றார். திருக்குறளைப் போன்ற அதிகார அமைப்பும்; பால் அமைப்பும் கொண்ட நூல் திருக்குறளுக்கு முன் வேறு ஒன்றுமேயில்லை. திருவள்ளுவர் திருக்குறளின் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் ஒரு மாபெரும் புலவர்; பல நூல்களையும் கற்றறிந்தவர்; உலகச் செய்திகள் பலவற்றையும் உணர்ந்தவர். அவர் காலத்திலிருந்த சமுதாய நிலை; அரசியல் அமைப்பு; எல்லாவற்றையும் நன்றாக அறிந்தவர். மனித சமுதாயம் நன்றாக வாழ வேண்டும் என்னும் அன்பும் கருணையும் உள்ளவர்; தனித்தனி ஆண் பெண்கள் அனைவரும், மனித தன்மையுடன், ஒழுக்கங் குன்றாமல் உயர்ந்த நிலையிலே வாழவேண்டும் என்னும் கருத்துள்ளவர். திருவள்ளுவருடைய பிறப்பு வளர்ப்பு வரலாற்றைப் பற்றி இறுதியாக ஒன்றும் கூறு முடியவில்லை. யாளிதத்தன் என்னும் அந்தணன், ஒரு சண்டாளப் பெண்ணை மணந்து திருவள்ளுவர் முதலிய எழுவரைப் பெற்றான் என்பது ஒரு கதை. இது ஞானாமிர்தம் என்னும் நூலில் காணப்படுகின்றது பகவன் என்னும் அந்தணன், ஆதி என்னும் புலைச்சியை மணந்தான். ஏழு மக்களைப் பெற்றான். அவன் ஆதியுடன் யாத்திரை போகும்போது வழியிலேயே மக்களைப் பெற்றான். ஒவ்வொரு பிள்ளையையும் பிறந்த விடத்திலே அப்படி அப்படியே போட்டுவிட்டு ஆதியும், பகவனும் போய்விட்டனர். அப்பிள்ளைகளைப் பார்த்தவர்கள் எடுத்து வளர்த்தனர். இவ்வாறு பிறந்த பிள்ளையே வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் போடப்பட்டார்; ஒரு வள்ளுவன் அவரை எடுத்து வளர்த்தான். அதனால் வள்ளுவர் என்று பெயர் பெற்றார். இது ஒரு கதை. இதற்குப் கபிலர் அகவல் என்னும் பிற்காலத்துச் சிறு நூலே ஆதாரம். திருவள்ளுவர் மதுரையிலிருந்தவர் என்று திருவள்ளுவர் மாலையில் ஒரு செய்யுளில் காணப்படுகின்றது திருவள்ளுவர், வள்ளுவர் மரபைச் சேர்ந்தவர்தான். வள்ளுவர் மரபைச் சேர்ந்தவர் என்று இகழ்ந்துரைப்பவன் அறிவற்றவன்; அவர் அறிவாளி, ஒழுக்கத்தால் உயர்ந்தவர்; ஆதலால் அவரைப் போற்றுவதே அறிஞர் கடமை என்ற கருத்து திருவள்ளுவ மாலைச் செய்யுள் ஒன்றிலே காணப்படுகின்றது. இவ்வாறு திருவள்ளுவர் வரலாற்றைப் பற்றி முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. அவருடைய உண்மை வரலாற்றை அறிவதற்கு இடமில்லை. அவர் பிறப்பு வளர்ப்பு எப்படியாயினும், அவர் தமிழ் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தெய்வப் புலவர் என்ற பெயர் பெற்று வாழ்கின்றார். திருவள்ளுவரை நான்முகன் என்று போற்றி யிருக்கின்றனர். அவரைப் பொய்யா மொழியார் என்று பாராட்டி யிருக்கின்றனர். திருக்குறளைத் தமிழ் வேதம் என்று கொண்டாடி வருகின்றனர். திருக்குறளையும் பொய்யா மொழி என்று பாராட்டினர்; பாராட்டுகின்றனர். திருவள்ளுவர் தமிழ் நாட்டிலே பிறந்தவர்; சாதி மத பேதம் பாராட்டாதவர்; மனித சமுதாயத்தையும், உலகையும் ஒன்றாகக் கருதிய ஒரு உத்தமத் தமிழ்ப் பெரியார்; இதுதான் நாம் அவரைப் பற்றி அறியும் உண்மை வரலாறு. பல நூல்களின் சாரம் உயர்ந்த அறங்களை யெல்லாம் ஒன்று திரட்டி உரைக்கும் நூல் திருக்குறள். பண்டைத் தமிழ்ப் புலவர்கள் பலர் திருக்குறளின் மாண்பைப் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். திருக்குறளின் பெருமையைத் தெரிந்து கொள்வதற்கு அவர்கள் வாய் மொழிகளே போதுமானவை. சாற்றிய பல்கலையும் தப்பா அருமறையும் போற்றி உரைத்த பொருள்எல்லாம்----தோற்றவே முப்பால் மொழிந்த முதற்பாவலர் ஒப்பார் எப்பா வலரினும் இல் பல சாத்திரங்களும், வேதங்களும் கூறியிருக்கின்ற பொருள்களை யெல்லாம், எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி மூன்று பகுதியாக வகுத்துக் கூறிய திருவள்ளுவர் முதற்பாவலர் ஆவார். அவரைப் போன்ற கவிஞர் வேறு எம் மொழிக் கவிஞர் களிலும் இல்லை. (ஆசிரியர் நல்லந்துவனார்.) செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிங்கும் பொருள் ஒன்றே வேதத்திற்கும், திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கும் பொருள் ஒன்றுதான். (வெள்ளி வீதியார்) எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செம்பிய வள்ளுவர்தாம் செப்பவரும்----முப்பாற்குப் பாரதம், சீராம கதை, மனுப் பண்டைமறை நேர்வன; மற்றில்லை நிகர். எல்லாப் பொருள்களையும் எல்லோரும் அறிந்து கொள்ளும்படி சொல்லி யிருக்கின்ற திருவள்ளுவருடைய திருக்குறளுக்கு பாரதம், இராமாயணம், மநுதர்மம், வேதம் இவைகளையே ஒத்த நூல்களாகக் கூறலாம்; இவைகளைத் தவிர வேறு ஒன்றையும் திருக்குறளுக்குச் சமமாகக் கூறமுடியாது. (பாரதம் பாடிய பெருந்தேவனார்) வேத விழுப்பொருளை வெண்குறளால்; வள்ளுவனார் ஓத வழுக்கற்றது உலகு வேதத்தில் உள்ள பொருள்களை உலகத்தார் தெரிந்து கொள்ளும்படி திறமையுடன் விரிவாகத் தமிழிலே எழுதினார் திருவள்ளுவர். (மதுரைப் பெருமருதனார்) மேலே காட்டியவைகள் அனைத்தும் பழந்தமிழ்ப் பாடல்கள். திருக்குறளை ஆராய்ந்து கற்றறிந்த புலவர்களால் பாடப்பட்டவை. இவைகள் திருவள்ளுவர் மாலை என்னும் நூலிலே காணப்படுகின்றன. தேவர் குறளும் திருநான் மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்---கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவாசகம் என்று உணர். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்; வேதங்களின் முடிவு களைக் கூறும் உபநிடதங்கள்; சம்பந்தர், அப்பர், சுந்தரர் இம்மூவரும் பாடிய தேவாரங்கள்; வேதாந்த சூத்திரம் என்று சொல்லப்படும் வியாச சூத்திரம்; திருக்கோவையார்; திருவாசகம்; திடருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம் ஆகிய இவைகள் எல்லாம் ஒரே பொருளைப்பற்றிக் கூறும் நூல்கள் என்று; தெரிந்து கொள்ளுக. இது அவ்வையார் பாடல். இப்பாடலுக்கு வேறு விதமாகவும் பொருள் கூறுவோர் உண்டு. மேலே காட்டியவைகளிலிருந்து ஒரு உண்மையை நாம் காணலாம். திருவள்ளுவர் பல நூல்களையும் கற்றறிந்தவர்; வடமொழி நூல்களையும் கற்றறிந்தவர் என்பதுதான் அவ்வுண்மை. வள்ளுவர் பல நூல்களையும் கற்றறிந்தவர். பல நூல்களின் கருத்துக்களை யெல்லாம் திரட்டியே திருக்குறளை இயற்றினார். இவ்வுண்மையை அவருடைய வாய்மொழிகளே காட்டுகின்றன. ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு (கு, 21) நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்று, துறந்தவர்களின் பெருமையைச் சிறப்பாகப் புகழ்ந்துரைப்பதே நூல்களின் முடிவாகும். பகுத்துண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (கு. 322) பலருக்கும் பகுத்துக் கொடுத்து தானும் உண்டு, பல உயிர்களையும் கொல்லாமல் காப்பாற்றுவதே அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்கள் அனைத்திலும் சிறந்த அறமாகும். மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. (கு. 241) மருத்துவ நூலோரால் வாதம், பித்தம், சிலேத்துமம் என்று எண்ணப்பட்ட மூன்றும் தம் அளவில் அதிகமானாலும், குறைந்து போனாலும் நோயைத் தரும். இந்த மூன்று குறள்களுமே, வள்ளுவர் பல நூல்களையும் கற்றறிந்தவர் என்பதற்குச் சான்றாகும். திருவள்ளுவர் எந்த நூல்களையும் படிக்கவில்லை; எந்த நூல் பொருள்களையும் பின்பற்றவில்லை; எல்லாப்பொருள்களைப்பற்றியும் தானே முழுதுணர்ந்து திருக்குறளை இயற்றினார் என்று கூறுவோர்க்குச் சரியான விடையளிக்கின்றன. பழந்தமிழ் முறை திருவள்ளுவர் தமது நூலைப்பழந்தமிழர் பண்பைப் பின்பற்றியே செய்திருக் கின்றார். முன்னோர் முறைக்கு மாறாக நூலியற்றும் வழக்கம் பழக்கத்தில் இல்லை. அறம், பொருள், இன்பம் மூன்றும் பொருந்தச் செய்யுள் இயற்றுவர்; இம் மூன்றைப் பற்றியும் நூலியற்றுவர்; இதுவே பழந்தமிழர் முறை. திருவள்ளுவர் இந்த முறையைப் பின்பற்றியே திருக்குறளை முப்பாலாக இயற்றினார். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்று மூன்று பகுதி யாகத் திருக்குறள் அமைந்திருக்கின்றது. இம்மூன்றும் அறம் பொருள் இன்பங்களைப் பற்றிக் கூறுவன. பழந்தமிழ் நூல் முறையை அறியாதவர்கள், திருவள்ளுவர் காமத்துப்பாலை ஏன் பாடினார் என்று ஒரு ஐயத்தைக் கிளப்புவர். காமத்துப்பாலில் என்ன இருக்கின்றது? அறமா? அரசியலா? ஒன்றுமையில்லையே; பேரறிஞரான வள்ளுவர் காமத்தைப் பற்றி இருபத்தைந்து அதிகாரங்களிலே கூறுகின்றார். இவற்றால் என்ன பயன்? இவ்வாறு கேட்போர் சிலர் உண்டு. காமத்துப்பாலில் தமிழர்கள் உயர்ந்த பண்பாடு அமைந்து கிடக்கின்றது. ஆணும், பெண்ணும் அன்புடன் இணைந்து வாழ்வதால்தான் உலகம் நிலைத்து நிற்கின்றது; உலக மக்கள் வாழ்கின்றனர்; வளர்கின்றனர்; மக்களிடையிலே அன்பும், கட்டுப்பாடும், சமுதாய நீதிகளும் நிலைத்து வளர்ந்து வருகின்றன. ஆண் பெண்களின் ஒன்றுபட்ட உண்மையான உறவினால் தான் தனித்தனிக் குடும்பங்கள் தோன்றின. தனித்தனி குடும்ப வாழ்வு மக்களிடையே நிலைத்த பிறகு தான் அறமும் அரசியலும் தோன்றின. மக்களுடைய குடும்ப வாழ்விலே இன்பமும், ஒழுக்கமும் வளர்வதற்கே அறநெறியும், அரசியலும் வேண்டி யிருந்தன. அறநெறியிலே நிற்பதற்கும், இன்பத்துடன் வாழ்வதற்கும் செல்வம் இன்றியமையாதது. இத்தகைய செல்வத்தை ஈட்டுவதற்கும் உண்டாக்குவதற்கும் துணை செய்வது அரசியல் தான், அரசியல் இன்றேல் செல்வம் இல்லை; பொருள் இல்லை. அறம், பொருள் அனைத்தும் மக்கள், இன்ப வாழ்வுக்குத் தாம் என்பதே தமிழர் கொள்கை. ஆதலால்தான் தமிழ் நூல்கள் அனைத்தும் அறம் பொருள் இன்பங்களைப் பற்றியே கூறு கின்றன. சங்க நூல்களே இன்பத்தைப்பற்றிக் கூறும் நூல்களிலே ஏராளம்; அகப்பொருளைப் பற்றிக் கூறும் செய்யுட்களே அதிகம். வள்ளுவரும், அறமும் பொருளும் இன்பத்தைப் பெறுவதற்கே என்ற கருத்தில்தான் திருக்குறளை இயற்றினார். அதனால்தான் இன்பத்தைப் பற்றிக் கூறும். காமத்துப்பாலை மூன்றாவது பகுதியாகக் கூறினார். இவ்வுண்மையையும், தமிழ் நூல் மரபையும் அறியாதவர்களே, வள்ளுவர் காமத்துப்பாலை ஏன் இயற்றினார் என்று கேட்பர். இவர்கள் கேள்வி தவறு; தமிழர் பண்பாட்டை அறியாமல் எழுந்தது என்று விட்டுவிட வேண்டும். உலகப் பொது நூல் திருக்குறளிலே கூறப்படும் அறங்கள் உலகோர் அனைவருக்கும் பொது வானவை. எல்லா மக்களும் ஒப்புக் கொள்ளக்கூடியவை. இவ்வுண்மையைக் காட்டும் சில குறட் பாக்களை மட்டும் பார்ப்போம். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் (கு. 50) இவ்வுலகில் இல்லறத்திலே இருந்து வாழவேண்டிய முறைப்படி வாழ் கின்றவன் சிறந்தவன்; அவன் வானுலகிலே உள்ள தேவர்களிலே ஒருவனாக வைத்து மதிக்கப்படுவான். அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (கு. 72) அன்பில்லாதவர்கள் பொருள்களையும் தம்முடைய இன்பத்திற்கே உரிய தாகக் கொள்ளுவார்கள்; அன்புள்ளவர் தமது எலும்பையும் பிறர் நன்மைக்கு உரிமை யாக்குவார். ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம் பேர் அறிவாளன் திரு (கு, 215) உலகத்தார் தன்னை விரும்பும்படி நடந்து கெள்ளுகின்ற பெரிய அறிவுள்ள வனுடைய செல்வம், ஊராரால் உண்ணப்படும் குளத்திலே நீர் நிறைந்திருப்பது போலாகும். பயன்மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால் செல்வம் நயம் உடையான்கண் படின். (கு. 216) நல்ல பண்புகளை உடையவனிடத்திலே செல்வம் சேர்ந்திருக்குமாயின்; அது பயன் தரும் மரம் ஒன்று ஊர் நடுவிலே பழுத்திருப்பதுபோல ஆகும். மருந்து ஆகித் தப்பா மரத்து அற்றால் செல்வம் பெருந்தகையான்கண் படின் (கு. 217) சிறந்த குணம் உள்ளவனிடம் செல்வம் தோன்றியிருக்கு மாயின், அது எல்லா உறுப்புகளும் மருந்தாகி நின்று தவறாமல் மக்களுக்குப் பயன்படும் மரம் போன்ற தாகும். இல்லற வாழ்க்கை நடத்துவோன், இல்லறத்திலே செய்ய வேண்டிய கடமை களையெல்லாம் தவறாமல் செய்ய வேண்டும்; அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட வேண்டும்; அவனுடைய செல்வம் ஊருணிபோல்----நடுவூரில் பழுத்தி ருக்கும் மரம்போல்-----எல்லா உறுப்புகளும் மருந்துக்குப் பயன்படும் மரம்போல்-----அனைவருக்கும் பயன்பட வேண்டும். இவ்வுண்மை களையே மேற்காட்டிய குறட்பாக்கள் கூறின. இல்லறத்தார்க்கு உரைத்த இல்லறங்களை ஏற்றுக் கொள்ளா தவர்கள் யார்? உற்றநோய்நோன்றல், உயிர்க்கு உறுகண்செய்யாமை, அற்றே தவத்திற்கு உரு. (கு. 261) தமக்கு வந்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல், மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை; அவ்வளவே தவத்தின் உருவமாகும். தவமும் தவம் உடையார்க்கு ஆகும்; அவம் அதனை அஃது இலார் மேற்கொள்வது. (கு. 262) உண்மையான தவநெறியில் வாழ்வோர்க்கே தவக்கோலம் தகுந்ததாகும். தநெறியைப் பின்பற்றாதவர் தவக்கோலம் பூண்பதால் பயன் இல்லை. மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின். (கு. 280) உயர்ந்தவர்களால் வெறுக்கப்பட்ட தீயொழுக்கங்களை விட்டுவிட்டால், தலையை மழுங்கச் சிதைத்துக் கொள்ளுவதும், தலைமயிரைச் சடையாக்கி நீட்டி வளர்த்துக் கொள்ளுவதும் ஆகிய வெளி வேடங்கள் வேண்டாம். தம்முடைய துன்பத்தைத் தாங்கி கொள்வது; ஏனைய உயிர்களுக்குத் துன்பம் செய்யாமை; உண்மையான தவம்; வெளி வேடங்கொண்டு மக்களை ஏமாற்றாமல் உண்மை ஒழுக்கமுடன் வாழ்வது; இவைகளே துறவிகளுக்கு வேண்டிய ஒழுக்கங்கள்; என்று மேற்காட்டிய குறள்கள் உரைத்தன. இவைகளை மறுக்கும் அறிஞர் ஒருவரும் இல்லை. முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும். (கு. 398) நீதிமுறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்குக் கடவுள் என்று சிறப்பாக வைக்கப்படுவான். செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு. காது வெறுக்கும்படி, மக்களால் குறை கூறப்படும் சொற் களையும் பொறுத்துக் கொண்டிருக்கும் வேந்தனுடைய குடை நிழலில்தான் உலகம் நிலைத்திருக்கும். குறைகூறுவோர் மீது கடுமையான அடக்குமுறையை ஏவி விடுகின்ற மன்னவன் ஆட்சி நிலைக்காது. குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. குடிகளின் கருத்தை ஆதரித்து நின்று, செங்கோல் செலுத்தும் பெரிய நாட்டின் மன்னனுடைய அடியை உலகம் ஆதரித்து நிற்கும். இவைகள் தனிப்பட்ட அரசனுக்குக் கூறப்பட்ட அறங்கள். வள்ளுவர் காலத்திலே குடிமக்கள் அரசாங்கம் இல்லை. மன்னர் களின் தனி அதிகார ஆட்சி தான் நிலவியிருந்தது. ஆதலால் அரசனுக்கு அறவுரைகள் கூறுயிருக்கின்றார். அரசன் மக்களிடம் நீதி முறை தவறாமல் நடந்து கொள்ள வேண்டும்; குடிகள் கூறும் குறைகளைக் கண்டு சீறிவிழக் கூடாது; பொறுமையோடு கேட்டு, அக்குறை களைப் போக்க வேண்டும்; குடிகளின் கருத்தைத் தழுவி ஆட்சி நடத்த வேண்டும்; இக் கருத்துக்களையே மேலே காட்டிய குறள்கள் வலியுறுத்தின. இக்கருத்துக்கள் குடி அரசுக்கும் ஏற்றவை. எல்லா நாட்டு அறிஞர்களும் ஒத்துக்கொள்ளக் கூடியவை. இவற்றைத் தவறு என்று மறுக்கும் அரசியல் அறிஞர்கள் ஒருவரும் இல்லை. எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு. (கு. 423) எப்பொருளை யார் யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளை அப்படியே ஒப்புக்கொள்ளாமல் அதன் உண்மைப் பொருளை ஆராய்ந்து, உண்மையானால் ஒப்புக் கொள்ள வேண்டும்; பொய்மையானால் தள்ளிவிட வேண்டும்; இது தான் சிறந்த அறிவாகும். எண்பொருள வாகச் செலச் சொல்லித் தான் பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. (கு. 424) தான் உரைப்பனவற்றை, எளிதாகக் கேட்போர் உள்ளத்திலே பதியும்படி உரைத்து, பிறர் வாயிலிருந்து வரும் அரிய பொருளைத் தான் தெரிந்து கொள்ளு வதே அறிவுடைமை யாகும். எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. (கு. 426) உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அவ்வாறு உலகத்தோடு ஒன்றுபட்டு வாழ்வதே அறிவுடைமையாகும். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் இவ்வாறு சிறந்த அறிவுடன் விளங்குவார் களானால் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முடியாது; மக்களை மக்கள் எந்தத் துறையிலும் அடிமைப் படுத்தி ஆள முடியாது. அறிவுடைய மக்கள் ஏமாற மாட்டார்கள்; ஏமாற்றவும் மாட்டார்கள். அறிவைப்பற்றி வள்ளுவர் கூறியிருக்கும் கருத்து உலக மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. (கு. 634) செய்வதற்குரிய காரியத்தைத் தேர்ந்தெடுத்தல், அக்காரியம் வெற்றி பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்து செய்தல், ஒன்றைப்பற்றி இன்றைக் கொன்று, நாளைக்கொன்று என்று பேசாமல், இன்னதுதான் என்று முடிவாகத் துணிந்து கூறுதல் ஆகிய இவற்றில் வல்லவனே அமைச்சனாவான். இது அமைச்சர்க்கு வேண்டிய தகுதியைப் பற்றிக் கூறியது. நட்டார்க்கு நல்லசெயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். (கு. 679) நண்பர்க்கு உதவி செய்வதைவிட எதிரிகளோடு சேராதவர் களைத் தம்முடன் சேர்த்துக்கொள்ளுவது விரைந்து செய்ய வேண்டிய காரியமாகும். இது சிறந்த அரசியல் தந்திரமாகும். ஆளுவோருக்கு உரைத்தது. உறுபசியும், ஓவாப்பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு. (கு. 734) மிகுந்த பசியும், நீங்காத நோயும், அழிக்கின்ற பகையும் தன்னிடம் சேராமல் காத்துக்கொண்டு வாழும் நாடே சிறந்த நாடாகும். பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. (கு. 735) பல கருத்துள்ள கூட்டங்களும், உறவாடிக் கெடுக்கும் பகையும், ஆளு வோனைத் துன்புறுத்திக் கொல்லும் சிற்றரசர் களும் இல்லாத நாடே சிறந்த நாடாகும். பிணியின்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம் அணிஎன்ப நாட்டிற்குஇவ் ஐந்து. (கு. 738) மக்கள் நோயில்லாமல் வாழ்வது, வேண்டிய செல்வப் பொருள், நல்ல உற்பத்தி, எல்லோரும் இன்புற்று வாழ்தல், சரியான பாதுகாப்பு இவ்வைந்தும் நிறைந்திருப்பதே ஒரு நாட்டிற்கு அழகாகும். ஒரு நால்ல நாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இக்குறள்கள் விளக்கி யிருக்கின்றன. செல்வமும், அமைதியும் குடிகொண்ட நாட்டு மக்கள்தான் இன்பமாக வாழ்வார்கள் என்ற கருத்தை இக் குறள்களிலே காணலாம். வெண்மை எனப்டுவது யாதுஎனின்; ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. (கு. 844) அறியாமை என்று அழைக்கப்படுவது யாதென்றால், நாமே சிறந்த அறிவுடையோம் என்று தம்மைத் தாமே பெரிதாக எண்ணிக்கொள்ளும் செருக்காகும். ஏவவும் செய்கலான்; தான்தேறான்; அவ்வுயிர் போஒம் அளவும் ஓர் நோய். (கு. 848) பிறர் சொல்வதையும் கேட்டுச் செய்யமாட்டான்; தானே அறிந்தும் செய்யமாட்டான்; அவ்வுயிர் ஒழியும் வரையிலும் இவ்வுலகிற்கு ஓர் நோயாகும். சொற்புத்தியும், சுயபுத்தியும் இல்லாதவனை மனிதன் என்று குறிப்பிடாமல் அவ்வுயிர் என்று அஃறிணையாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவைகள் அறிவற்றவன் யாவன் என்பதை குறித்துரைக்கும் குறள்கள். இவ்வுண்மையை உலகினர் அனைவரும் ஏற்றுக் கொள்ளுகின்றனர். செல்லாமை உண்டேல் எனக்குரை; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. பிரிந்து செல்லாமல் இருப்பதனால், அதைப்பற்றி என்னிடம் சொல். பிரிந்து போய் விரைந்து வருகிறேன் என்று சொல்வாயானால், நீ வரும் வரையிலும் யார் உயிரோடு வாழ்ந்திருப்பார்களோ அவர்களிடம் அதைப்பற்றிச் சொல். இக்குறள் கற்புள்ள ஒரு பெண் தன் காதலனிடம் கொண்டி ருக்கும் அன்பைக் காட்டும் குறள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தால் உயிர் வாழ முடியாது என்ற முதிர்ந்த அன்புள்ளவர்கள் தான் சிறந்த காதலர்கள்; இல்லறத்திலே இன்பம் நுகர்வார்கள்; இல்லறத்தையும் நல்லறமாக இனிது நடத்துவார்கள். இக் கருத்தைக் கொண்டதே மேலே காட்டிய குறள். மேலே காட்டிய அறங்கள் அனைத்தும் உலகத்தார் ஒப்புக் கொள்ளும் பொது நீதிகள். எந்நாட்டினரும், எம்மதத்தினரும், எவ்வினத்தினரும், எம் மொழியினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே இவ்வறங்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய பொது நீதிகள் நிரம்பியிருப்பதானால்தான் திருக்குறள் உலகப் பொது நூல் என்று பாராட்டப்படுகின்றது; திருவள்ளுவர் உலகப் புலவர் என்று போற்றப்படுகிறார். வள்ளுவர் காலத் தமிழ் நாடு திருவள்ளுவர் காலத்திலே தமிழ் மக்களிடம் கடவுள் நம்பிக்கை குடி கொண்டிருந்தது. உருவ வணக்கமும் இருந்தது. சாதி வேற்றுமைகள் இருந்தன. தமிழ் நாட்டில் வேத வேள்விகள் நடைபெற்றன. மறுபிறப்பு, நல்வினை, தீவினை, ஊழ்வினை, சுவர்க்கம், நரகம், மோட்சம் முதலியவைகளிலே மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து, கடவுள் வாழ்த்தில் உள்ள பத்துக் குறள்களும் கடவுளை வணங்க வேண்டியது மக்கள் கடமை என்று வலியுறுத்துகின்றன. அகர முதல எழுத்தெல்லாம், ஆதி பகவன் முதற்றே உலகு. எழுத்துக்கள் எல்லாம் அ என்ற எழுத்தைத் தலைமை யாகக் கொண்டிருக் கின்றன. அதுபோல உலகம் முதல்வனாகிய கடவுளைத் தலைமையாகக் கொண்டிருக்கின்றது. என்பது முதற் குறள். இது உலகம் கடவுள் படைப்பால் தோன்றியது. கடவுள் சக்தியாலேயே உலகம் இயங்கி வருகின்றது; என்ற கருத்தைக் கொண்டதாகும். இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகு இயற்றி யான். (கு. 1062) இவ்வுலகைப் படைத்த கடவுள், பிச்சை யெடுத்தாவது உயிர் வாழவேண்டும் என்று விரும்பி உயிர்களைப் படைத்திருப் பானாயின், அவனும் அவ் வுயிர்களை யும் போலவே அலைந்து அழிக. இக்குறளும் இவ்வுலகைப் படைத்தவன் கடவுள்தான் என்ற கருத்தை வலியுறுத்துகின்றது. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (கு. 18) மழை பெய்யாவிட்டால் இவ்வுலகிலே தெய்வங்களுக்கும் திருவிழாவும் தினப்பூசையும் நடைபெறாது. குறிப்பிட்ட சில நாட்களில் கொண்டாடுவது திருவிழா. இதற்கே சிறப்பு என்று பெயர். நாள்தோறும் நடைபெறுவது பூசனை. திருவிழாவை நைமித்திகம் என்றும், பூசனையை நித்தியம் என்றும் கூறுவர். வள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் உருவ வணக்கம் இருந்தது என்பதற்கு இக்குறள் ஒன்றே போதுமான சான்றாகும். மறப்பினும் ஒத்துக் கொளல் ஆகும், பார்ப்பான் பிறப் பொழுக்கம் குன்றக் கெடும். (கு. 134) வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம்; வேதம் கற்பவன் தன் பிறப்பிற்குரிய ஒழுக்கத்திலே தவறுவானாயின், அவன் குடிப் பெருமை அழியும். வள்ளுவர் காலத்திலே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால் வகைப்பிரிவுகளும், இன்னும் பல பிரிவுகளும் தமிழர் சமுதாயத்தில் இருந்தன. பிறப்பினால் உயர்வு தாழ்வு வேற்றுமைகளும் இருந்தன. இவ்வுண்மையை இக்குறளால் காணலாம். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். (கு. 543) அந்தணருடைய வேதத்திற்கும் அறத்திற்கும் அடிப்படையாகி நின்று உலகத்தைக் காப்பாற்றுவது அரசனது செங்கோல்தான். ஆபயன் குன்றும்; அறு தொழிலோர் நூல் மறப்பர்; காவலன் காவான் எனின். (கு. 560) அரசன் நீதி முறைப்படி நாட்டைக் காப்பாற்றாவிட்ல் பசுக்களின் பயன் குன்றும்; அந்தணர்கள் அறநூலை மறந்துவிடுவர். தமிழகத்தில் வேதங்களும், வேள்விகளும் வழங்கி வந்தன; அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர்; வேள்விகளையும், வேதியர் களையும் காப்பாற்ற வேண்டியது அரசாட்சியின் கடமை; இக் கருத்தை இவ்விரண்டு குறள்களும் கூறின. அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று (கு. 259) நெருப்பில்நெய் முதலிய அவிகளைச் சொரித்து ஆயிரம் யாகம் செய்வதைக் காட்டிலும் ஒரு பிராணியின் உயிரைக் கொன்று தின்னாமிலிருத்தல் சிறந்தது. இக்குறளை எடுத்துக்காட்டி திருவள்ளுவர் யாகத்தைக் கண்டிக்கிறார் என்று கூறுவோர் உண்டு. புலால் உண்ணாமையின் சிறப்பைக் கூற வந்ததே இக்குறள் யாகம் தீமையானது; அதைச் செய்யக்கூடாது என்று இக்குறள் சொல்லவில்லை. யாகத்தால் வரும் புண்ணியத்தைவிடப் புலால் உண்ணாமையால் வரும் புண்ணியமே சிறந்தது என்றுதான் இக்குறள் உரைக்கின்றது. ஆதலால் இது வேதவேள்வியைக் கண்டிக்கும் குறளாகாது. கற்று ஈண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப்படுவர் மற்று ஈண்டு வாரா நெறி. (கு. 356) கற்க வேண்டிய நூல்களைக் கற்று இவ்வுலகிலே உண்மைப் பொருள்களை உணர்ந்தவர் மீண்டும் இவ்வுலகிலே வந்து பிறக்காத நெறியை உணர்வர். மறு பிறப்பு உண்டென்பதைத் திருக்குறள் ஒப்புக் கொள்ளுகிறது. இதற்கு இக்குறளே போதுமானதாகும். அறத்தாறு இது என வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (கு. 37) அறத்தின் பயன் இதுவென்று வாயால் சொல்ல வேண்டாம். பல்லக்கில் ஏறி இருப்பவனோடு, அதைத் தூக்கிச் செல்கின்றவன் இடையே உள்ள வேற்றுமை யால் தெரிந்து கொள்ளலாம். இப்பிறப்பிலே நன்மை செய்தவன், வரும் பிறப்பிலே நன்மையடைவான்; இப் பிறப்பிலே தீவினை செய்தவன் வரும் பிறப்பிலே தீமை யடைவான்; சென்ற பிறப்பிலே அறம் புரிந்தவர்களே இப் பிறப்பிலே இன்புற்று வாழ்கின்றனர்; சென்ற பிறப்பிலே பாவம் செய்தவர்கள் தாம் இப் பிறப்பிலே துன்புற்று வாழ்கின்றனர். இக்கொள்கையையே மேலே காட்டிய குறள் வலியுறுத்திற்று. நல்வினை தீவினை என்னும் இருவினைகளின் பயனையும் எடுத்துக் காட்டிய குறள் இதுவாகும். ஊழில் பெருவலி யாஉள மற்று ஒன்று சூழினும் தான் முந்துறும் (கு. 38) ஊழ்வினையை விட மிகுந்த வலிமை யுள்ளவை வேறு எவை யுண்டு? அதன் வலிமையை அழிக்க வேறு வழியை எண்ணினாலும், அவ்வழியிலும் அவ் வூழ்வினையே முன் வந்து நிற்கும். எல்லாம் முன்னைய ஊழ்வினையின்படிதான் நடை பெறும்; நம்மால் ஒன்றையும் மாற்ற முடியாது; இக் கருத்தை வலியுறுத்தியது இக்குறள். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான், என்று ஆங்கு ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (கு. 43) பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தாரையும் அறநெறி பிழையாமல் காப்பாற்றுவது இல் வாழ்வோன் கடமையாகும். பிதிர்க்கள் தென்றிசையில் வாழ்பவர்கள்; இல்லறத்தில் உள்ளவர்கள் செய்யும் சிரார்த்தங்களின் மூலமே அவர்கள் நன்மை யடைவார்கள். இக்கருத்தை இக் குறளால் காணலாம். அடக்கம் அமரர்உள் உய்க்கும், அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும். (கு. 121) அடக்கம் ஒருவனை இன்பந் தரும் தேவர் உலகத்தில் சேர்க்கும்; அடங்காமை துன்பந்தரும் நிறைந்த இருட்டாகிய நரகத்தில் சேர்த்துவிடும். தேவர் உலகம் - சுவர்க்கம்; ஆர் இருள் - நரகம்; சுவர்க்கம், நரகம் என்பவை இவ்வுலகத்திற்கு அப்பாற்பட்டவை; தனி உலகங்கள்; இக் கருத்தை அறிவிக்கும் குறள் இது. யான் எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம்புகும் (கு. 346) யான் என்னும் அகப்பற்றையும், எனது என்னும் புறப்பற்றை யும் ஒழிப்பவன் தேவர்களாலும் அடைய முடியாத உயர்ந்த வீட்டுலகத்தை அடைவான். தேவலோகத்தைவிட சுவர்க்கத்தைவிட உயர்ந்தது மோட்சலோகம். அது அழியாதது. ஆசையற்றவனே அந்த மோட்சத்தை அடையமுடியும். இக் கருத்து இக்குறளில் அடங்கி யிருக்கின்றது. இவ்வாறு, கடவுள், உருவ வழிபாடு, சாதிவேற்றுமை, வேத வேள்விகள், அந்தணர், மறுபிறப்பு, நல்வினை, தீவினை, ஊழ்வினை, சுவர்க்க நரகம் மோட்சம் முதலியவைகளை ஒப்புக் கொள்ளும் குறள் வெண்பாக்கள் பல உள்ளன. திறக்குறளைப் படிப்போர் அவைகளைக் காணலாம். இந்திரன், திருமால், கூற்றுவன், சீதேவி, மூதேவி, வானோர் முதலிய தெய்வங்கள் திருக்குறளிலே காணப்படுகின்றன. பேய் பிசாசுகளும் காணப் படுகின்றன. முன்னேற்றத்திற்கு வழி வள்ளுவர் காலத்தில் தமிழ் நாட்டில் சாதிகள் இருந்தன; பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்ற நம்பிக்கை இருந்தது. ஆயினும் வள்ளுவர் பிறப்பினால் உயர்வு தாழ்வு உண்டு என்னும் கொள்கையை ஒப்புக் கொள்ளவில்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையால் (கு. 972) எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒரு தன்மையாகும்; பிறப்பிலே வேற்றுமை யில்லை. ஆனால் அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமைகளால் சிறப்பின் தன்மை ஒத்திராது; வெவ்வேறாக இருக்கும். இக்குறள் மக்களுக்குள் பிறப்பால் உயர்வு தாழ்வில்லை; அவரவர்கள் செய்யும் தொழிலால்தான் உயர்வு தாழ்வுகள் ஏற்படுகின்றன என்று கூறிற்று. மக்கள் அனைவரும் பிறப்பிலே ஒரு தன்மையுள்ளவர்கள் தாம் என்ற உண்மை யைக் கூறிற்று. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய்விடும். (கு. 133) ஒழுக்கம் உடைமையே சிறந்த குடிப்பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கமற்ற செயல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும். ஒழுக்கம் உடைமையே சிறந்த குடிப்பிறப்பின் தன்மையாகும். ஒழுக்கமற்ற செயல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும். ஒருவன் உயர்ந்த குடியிலே பிறந்தவன் ஆயினும் ஒழுக்க மற்றவனாயின் அவன் தாழ்ந்த குடியினன் ஆகிவிடுவான். ஒருவன் தாழ்ந்த குடியிலே பிறந்த வனாயினும் நல்லொழுக்கம் உடையவனாக இருந்தால் அவன் உயர்ந்த குடியில் பிறந்தவனாகி விடுவான். இக்கருத்தை இக்குறளில் காணலாம். ஒழுக்கத்தினால் தான் உயர்ந்த குடி, தாழ்ந்த குடி என்ற பெருமை சிறுமைகள் ஏற்படுகின்றன. ஒழுக்கமுடையவன் உயர்ந்தவன்; ஒழுக்கமற்றவன் தாழ்ந்தவன்; பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டுவதால் பயனில்லை. இதுவே வள்ளுவர் கருத்தாகும். ஊழில் பெருவலி யாஉள மற்றொன்று சூழினும் தான் முந்துறும் (கு. 620) என்று ஊழ்வினையின் வலிமையைக் கூறிய வள்ளுவர், அதை மாற்றுவதற்கும் வழி கூறுகின்றார். ஊழையும் உப்பக்கம் காண்பர்; உலைவஇன்றித் தாழாது உஞற்று பவர். (கு. 620) எந்தக் காரியத்திலும் சோர்வில்லாமல், காலந் தாழ்த்தாமல் முயற்சி செய்கின்றவர்கள், ஊழ்வினையையும் புறமிட்டு ஓடும் படி செய்வார்கள். இதனால் ஊழ்வினையை விரட்டியடிக்க வழி கூறினார். முயற்சியினால் ஊழ்வினையை விரட்டியடிக்க முடியும் என்பதே வள்ளுவர் கருத்து. ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில் உள்ளது இக்குறள். தலைவிதி என்று எண்ணிக் கொண்டு சோம்பித் திரியாதே; ஊழ்வினையை நினைத்துக் கொண்டு உறங்கிக் கிடக்காதே; முயற்சி செய்! இடைவிடாமல் உழைப்பாய்! சோர்வடையாதே! வெற்றி பெறுவாய் இருக்கருத்தையே இவ்வதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களும் கூறுகின்றன. யாதானும் நாடாமல்; ஊராமால்; என்ஒருவன் சாமதுணையும் கல்லாத ஆறு. கல்வி கற்றவனுக்கு எந்நாடும் தன்னாடு; எவ்வூரும் தன்னூர். இவ்வாறாயின் ஒருவன்தான் சாகும் அளவும் கல்வி கற்காமல் காலங்கடத்துவது ஏன்? உலக மக்கள் அனைவரும் கல்வி கற்றிருப்பார்களாயின் அவர்கள் ஒன்று பட்டு வாழ முடியும். கற்றவர்கள் சாதி மதவேற்று மைகளைப் பாராட்ட மாட்டார்கள். மொழி, இனம், நிறம், நாடு என்ற வேற்றுமைகளையும் பொருட் படுத்த மாட்டார்கள்; மனிதத்தன்மை ஒன்றையே பாராட்டி ஒற்றுமையுடன் வாழ் வார்கள். ஆதலால் உலக ஒற்றுமை தழைத்தோங்க அனைவரும் கல்வி கற்க வேண்டும். இக்கருத்தை எடுத்துரைத்தது இக்குறள். இவ்வாறு மக்கள் முன்னேறுவதற்கான உயர்ந்த கருத்துக் களை வள்ளுவர் கூறியிருக்கின்றார். பலவாறு பிரிவுபட்டுக் கிடக்கும் மனித சமூகம் அன்புடன் ஒன்றுபட்டு வாழ்வதற்கான உயர்ந்த கருத்துக்கள் பல வள்ளுவர் வாய்மொழி யிலே காணப் படுகின்றன. வள்ளுவர் காலம் வள்ளுவர் காலத்தைப் பற்றி- திருக்குறள் தோன்றிய காலத்தைப் பற்றி - பல திறப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இன்றுள்ள தமிழ் நூல்களில் எல்லாம் காலத்தால் முற்பட்டது திருக்குறள் என்போர் உண்டு. பத்துப் பாட்டு எட்டுத்தொகை போன்ற சங்க இலக்கியங்கள் எல்லாம் திருக்குறளுக்குப் பின்னே தோன்றியவை என்போர் உண்டு. இவர்கள் கூறுவது உண்மை தானா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இறையனார் அகப்பொருள் முதலிய தமிழ் நூல்களில் முச்சங்க வரலாறுகள் கூறப்படுகின்றன. அவற்றுள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் இருந்த காலங்களில் இயற்றப்பட்ட நூல்கள் இன்னின்னவை என்று சொல்லப்படுகின்றன; அக்காலத்தில், வழங்கி யிருந்த நூல்கள் இவை இவை யென்றும் சொல்லப் படுகின்றன. திருக்குறள் சங்க கால நூலாகவோ, அதற்கு முற்பட்ட நூலாகவோ இருந்தால் சங்க நூல்களின் வரிசையிலே இச் சிறந்த நூலின் பெயரைச் சொல்லாமல் விட்டிருக்கமாட்டார்கள். ஆதலால் கடைச்சங்க காலத்துக்குப் பின்னர்தான் திருக்குறள் தோன்றியிருக்க வேண்டும். சங்கால நூல்களிலே காணப்படும் கொள்கைகளிலே பல, திருக்குறளிலே ஒப்புக் கொள்ளப்படவில்லை; சங்க காலத்து மக்களைவிடத் திருக்குறள் காலத்து மக்கள் ஆத்மீகத் துறையிலே சிறந்து விளங்கினர். ஆதலால் சங்க காலத்தமிழர் பழக்க வழக்கங்கள் சிலவற்றை வள்ளுவர் கண்டித்துக் கூறுகின்றார். அவை களைக் கூடா ஒழுக்கம் என்றும் சொல்லியிருக்கின்றார். சங்க இலக்கியங்களிலே புலால் உண்ணுவதைப் பற்றிக் கண்டிக்கப் படவில்லை. மதுபானமும் விலக்கப்படவில்லை. சங்க காலத்துத் தமிழர்கள் பெரும்பாலும் புலால் உணவைப் போற்றி உண்டவர்கள். வள்ளல்கள் எல்லாம் மாமிசம் உண்டவர்கள்; மதுவருந்தியவர்கள்; கபிலர், ஔவையார் போன்ற புலவர் பெருமக்கள் எல்லோரும், புலாலும் மதுவும் அருந்தினர்கள். புலாலும் மதுவும் சிறந்த உணவுப் பொருளாகக் கருதப்பட்டன. வள்ளல்களும், வசதியுள்ள செல்வர்களும். தம்மிடம் வந்த விருந்தினர்க்குப் புலால் உணவும், மதுவும் கொடுத்து மகிழ்ச்சி யூட்டுவார்கள். இந்நிகழ்ச்சிகளைப் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை முதலிய சங்க இலக்கியங்களிலே காணலாம். புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, கொல்லாமை, ஆகிய ஒழுக்கங்கள் சங்க நூல்களில் வலியுறுத்தப்படவில்லை. இவ்வொழுக்கங்கள் திருக்குறளிலே வலி யுறுத்திக் கூறப்படுகின்றன. புலால் மறுத்தல் என்பது ஒரு தனி அதிகாரம்; கொல்லாமை என்பது ஒரு தனி அதிகாரம்; கள்ளுண்ணாமை என்பது ஒரு தனி அதிகாரம். சங்க காலத்து நூல்களிலே பலதார மணம் மறுக்கப்பட வில்லை. ஆண்கள் விலைமகளிரை நாடித் திரிவதையும் கண்டிக்கவில்லை. மணம் புரிந்துகொண்ட பெண்கள்தான் ஒருவனைப் பற்றி ஓரகத்தில் இருக்க வேண்டும்; ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வழக்கத்தைக் கூறுகின்றன. திருக்குறள், ஏக தார மணமே சிறந்தது என்ற கருத்தை வெளியிடுகின்றது. வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். ஆண்கள் விலைமகளிரை நாடித் திரிவதைத் திருக்குறள் கண்டிக்கின்றது. வரைவின் மகளிர் என்ற அதிகாரத்தைப் படிப்போர் இவ்வுண்மையைக் காணலாம். பெண்களுக்குக் கற்பு வேண்டும் என்பது போலவே ஆண்களுக்கும் கற்பு வேண்டும் என்னும் கருத்தும் திருக்குறளில் காணப்படுகின்றது. இதனைப் பிறன்இல் விழையாமை என்னும் அதிகாரத்தால் அறியலாம். மேலே காட்டிய காரணங்களை ஆராய்ந்தால் திருக்குறள் சங்க இலக்கியங் களுக்குப் பின்னே தோன்றியதாகத்தான் இருக்க முடியும். சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்களுக்கு முன்னும், பத்துப் பாட்டு எட்டுத் தொகை முதலிய சங்க இலக்கியங்களுக்குப் பின்னும் உள்ள இடைக் காலத்தில் தான் திருக்குறள் பிறந்திருக்க வேண்டும்; திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்று தொகை நூல்களை வரிசையாக வைத்து வழங்குகின்றனர். இவ்வரிசையிலும் பதினெண் கீழ்க்கணக்கு என்று தொகை நூல்களை வரிசையாக வைத்து வழங்குகின்றனர். இவ்வரிசை யிலும் பதினெண் கீழ்க்கணக்கு மூன்றாவதாக- சங்க நூல்களுக்குப் பின் தோன்றியதாக- வழங்கப்படுகின்றன. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலே ஒன்றுதான் திருக்குறள். ஆதலால் இவ்வழக்கும், திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின்னே தோன்றியது என்ற கருத்தையே வலியுறுத்துகின்றது. காலத்தால் முற்பட்டது என்பதால் மட்டும் ஒரு நூலுக்குப் பெருமை வந்துவிடாது, காலத்தால் பிற்பட்டது என்பதால் ஒரு நூலின் பெருமை குறைந்துவிட்டது. நூலின் சிறப்புக் கருதியே மக்களால் அந்நூல் கொண்டாடப்படும். திருக்குறளுக்கு இணை யான நூல் எம்மொழியினும் இல்லை. எந்நாட்டினும் இல்லை. ஆதலால் அந்நூல் உலகமக்களால் போற்றப்படுகின்றது. திருக்குறள் சங்க இலக்கியங்களுக்குப் பின் பிறந்த நூல் என்பதனால், அந்நூலின் மாண்பை யாரும் குறைத்து விட முடியாது. இவ்வுண்மையை உணர்ந்தவர்கள், வள்ளுவர் காலத்தைச் சங்க இலக்கியங்களுக்கு முன் வைத்துக் கூறுவதில் காலங் கடத்திக் கொண்டிருக்க மாட்டார்கள். வயிரமும் பொன்னும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நிலத்திலிருந்து எடுக்கப்பட்டால் என்ன? நேற்றோ அல்லது அதற்கு முன்தினமோ நிலத்திலிருந்து புதிதாக எடுக்கப் பட்டால்தான் என்ன? வயிரம் வயிரந்தான்; தங்கம் தங்கந்தான். ஆதலால் திருக்குறள் எக்காலத்திலே தோன்றிய நூலாயினும் அதற்கு ஒப்பான நூலும் இல்லை; அதைவிட உயர்ந்த நூலும் இல்லை; இது உண்மை. உலகம் போற்றும் உத்தமர் உலக மக்கள் அனைவர்க்கும் பொது நூலாக விளங்கும் திருக்குறளை ஒரு சிலர் சாதிச்சிறைக்குள் அடைக்க விரும்பு கின்றனர்; சமயச் சிறைக்குள் அடைக்கமுன் வருகின்றனர்; மொழி வெறுப்புக்கும், இன வெறுப்புக்குங் கூட இதைக் கருவியாகக் கொள்ளுகின்றனர். திருவள்ளுவர் நாத்திகர்; அவர் ஆரிய நாகரித்தை வெறுப் பவர்; திராவிட நாகரித்தைப் போற்றுகின்றவர்; திருக்குறளே தமிழர் சமயநூல்; என்று கூறுகின்றனர். இவர்கள் திருக்குறளில் உள்ள சில வெண்பாக்கள் தங்கள் கருத்திற்கு முரணாயிருப்பதைக் கண்டு திகைக்கின்றனர். அச்செய்யுட்களுக்குத் தங்கள் மனம் போனவாறு பொருள் பண்ணுகின்றனர். பழந்தமிழர் நாகரித்துக்கும், பண்பாட்டுக்கும் முரணாகப் பொருள் பண்ணுகின்றனர். இவர்கள், திருக்குறள்தான் தமிழர் சமயநூல்; திருவள்ளுர் கூறுவது தமிழர் பண்பாடு; தமிழர் நாகரிகம்; என்று உண்மையாக நம்புகின்றவர்களாயிருந்தால், யாரையும் வெறுக்க மாட்டார்கள்; எந்த மொழியையும் தூற்றமாட்டார்கள். திருக்குறளிள் உள்ள கருத்துக்களை எல்லா மதத்தினரும் போற்று கின்றனர். எல்லா இனத்தினரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். வடமொழி நூல்களும், ஏனைய மொழி நூல்களும் ஒப்புக் கொள்ளுகின்றன. இவ்வுண்மையை மறந்துவிட்டு, தமக்குப் பிடிக்காத இனத்தினரையும், மொழியினரையும் திருக்குறளின் பெயரால் எதிர்ப்பதிலே பொருளில்லை. திருக்குறளையும், திருவள்ளுவரையும், இனவெறுப்புக்கும், மொழி வெறுப்புக்கும் பயன்படுத்துவோர் திருக்குறளுக்குப் பெருமை தருகின்றவர்கள் அல்லர்; திருவள்ளுவரைப் போற்று கின்றவர்கள் அல்லர். திருக்குறளுக்கும், திருவள்ளுவர்க்கும் மாசு தேடுகின்றவர்களே ஆவார்கள். திருக்குறளுக்கும், திருவள்ளுவர்க்கும் பெருமை தருவதாக நினைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் காரியங்கள் தவறானவை; தமிழுக்கும், தமிழர்க்கும் இழுக்குத் தரும் செயல்களாகும். திருவள்ளுவர் கூறுவதுதான் தமிழர் பண்பாடு; திருக்குறள்தான் தமிழர் சமயநூல் என்பதிலே தவறில்லை. இது உண்மைதான்; மறுக்கமுடியாத கொள்கை. இக் கொள்கையை உறுதியாகப் பின்பற்றுவோர் உலகமக்களுடன் ஒன்றுபட்டு வாழத்தான் முயற்சிப்பார்கள். மக்கள் சமுதாயத்திலே வெறுப் பையும், கலகத்தையும் கிளப்பிவிட முயற்சிக்க மாட்டார்கள். திருக்குறளை நன்றாக நடுநிலையிலிருந்து படிப்போர் இந்த முடிவுக்குத்தான் வருவார்கள். திருவள்ளுவர் மனித சமுதாயத்திற்குப் பொதுவான நீதிகளையே கூறுகின்றார்; உலக மக்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய அறங்களையே உரைக்கின்றார்; அவர் இன்ன இனத்தினர்க்கு, இன்ன மதத்தினர்க்கு இன்ன நீதி என்று பிரித்துக் கூறவில்லை. இந்த உண்மையைத் திருக்குறளைப் படித்தோர் - படிப்போர், எல்லோரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். இதையும் திருக்குறளைப் படிப்போர் உள்ளத்திலே கொள்ளுவார்களாயின், திருவள்ளுவர் உலக மக்கள் எல்லோருக்கும் பொது வானவர்; திருவள்ளுவர் உலகம் போற்றும் உத்தமர்; திருக்குறள் உலக மக்களுக்கெல்லாம் பொதுநூல்; என்றுதான் உறுதியாக எண்ணுவார்கள். சாமி.சிதம்பரனார் படைப்புகள் தொகுதி - 1 1. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் முதற்பாகம் 1929 2. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் இரண்டாம் பாகம் 1929 3. கதாவாசக பாடமும் செய்யுட் பாடமும் மூன்றாம் பாகம் 1931 4. தமிழ்ப் பாடத் தொகை நான்காம் பாகம் 1938 தொகுதி - 2 1. தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) 1939 தொகுதி - 3 1. அணைந்த விளக்கு (கதைச் செய்யுள்) 1944 2. அணைந்த விளக்கு (அரசியல் சமூக சீர்திருத்த நாடகம்) 1948 தொகுதி - 4 1. திருக்குறள் பொருள் விளக்கம் 1959 தொகுதி - 5 1. நாலடியார் பாட்டும் உரையும் 1959 2. நான்மணிக்கடிகை (பாட்டும் உரையும்) 1960 தொகுதி - 6 1. பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும் 1956 2. எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும் 1957 தொகுதி - 7 1. கம்பன் கண்ட தமிழகம் 1955 2. பதிணென்கீழ்க் கணக்கும் தமிழர் வாழ்வும் 1957 தொகுதி - 8 1. சிலப்பதிகாரத் தமிழகம் 1958 2. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு 1960 தொகுதி - 9 1. இலக்கியச் சோலை (புறநானூறு) 1958 2. பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை 1967 தொகுதி - 10 1. வள்ளுவர் காட்டிய வைதீகம் 1949 2. வள்ளுவர் வாழ்ந்த தமிழகம் 1956 தொகுதி - 11 1. பெண்மக்கள் பெருமை (அ) மாதர் சுதந்திரம் 1929 2. காரல் ஹென்றி மார்க் 1937 3. ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன் 1940 4. முன்சீப் வேதநாயகம் பிள்ளை 1955 தொகுதி - 12 1. சிதம்பரனார் சீர்திருத்தப் பாடல்கள் 1929 2. இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு 1935 3. உமர்கய்யாம் 1946 4. சிந்தனைச் செய்யுள் 1956 5. சாமி சிதம்பரனார் புதுக்குறள் 1960 6. அறிவு (கவிதை) 1964 தொகுதி - 13 1. தேவாரத் திருமொழிகள் 1959 2. ஆழ்வார்கள் அருள்மொழி 1959 தொகுதி - 14 1. வடலூரார் வாய்மொழி 1959 2. சங்கப் புலவர் சன்மார்க்கம் 1960 3. பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை 1963 தொகுதி - 15 1. அருணகிரியார் குருபரர் அறிவுரைகள் 1960 2. மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் 1961 தொகுதி - 16 1. புதிய தமிழகம் 1952 2. வளரும் தமிழ் 1954 3. தொல்காப்பியத் தமிழர் 1956 தொகுதி - 17 1. பழந்தமிழர் அரசியல் 1959 2. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும் 1960 3. தமிழர் வீரம் 1964 தொகுதி - 18 1. சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் - தத்துவம் 1960 2. இலக்கியம் என்றால் என்ன? 1, 2 1963 3. சிறுகதைச் சோலை (தொகுப்பு) 1964 தொகுதி - 19 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 20 1. கம்பராமாயணத் தொகுப்பு 1962 தொகுதி - 21 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955 தொகுதி – 22 1. குறுந்தொகைப் பெருஞ்செல்வம் 1955