சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் 4 திருக்குறள் பொருள் விளக்கம் ஆசிரியர் தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. பேசி : 24339030 நூற்குறிப்பு நூற்பெயர் : சாமி.சிதம்பரனார் நூற் களஞ்சியம் - 3 ஆசிரியர் : தமிழறிஞர் சாமி.சிதம்பரனார் பதிப்பாளர் : இ.வளர்மதி மறு பதிப்பு : 2013 தாள் : 16.0 கி. மேப்லித்தோ அளவு : 1/8 தெம்மி எழுத்து : 11.5 புள்ளி பக்கம் : 8 + 408 = 416 படிகள் : 1000 விலை : உரு. 260/- நூலாக்கம் : டெலிபாய்ண்ட் சென்னை - 5. அட்டை வடிவமைப்பு : கா.பாத்திமா அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர் இராயப்பேட்டை, சென்னை - 14. கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்) வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம் பி-11, குல்மோகர் குடியிருப்பு, 35, தெற்கு போக்கு சாலை, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே : 24339030 நூல்கிடைக்கும் இடம் : தமிழ்மண் பதிப்பகம் தொ.பே : 044 2435 3580. பதிப்புரை இருபதாம் நூற்றாண்டு தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்த நூற்றாண்டாகும். இந் நூற்றாண்டில் தமிழுக்கு அருந் தொண்டாற்றியவர்கள் வரிசையில் அறிஞர் சாமி. சிதம் பரனாரும் ஒருவர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை 1939ஆம் ஆண்டு தமிழர் தலைவர் எனும் நூலாக முதன் முதலில் எழுதி அவரிடமே ஒப்புதல் பெற்று வெளியிட்டவர் அறிஞர் சாமி.சிதம்பரனார். தந்தை பெரியாரின் தலைமையில் கலப்புமணம் செய்து கொண்ட சீர்திருத்த முன்னோடி. இவர் எழுதி வெளிவந்த நூல்கள் 65 என்று அறிஞர்கள் பதிவில் காணப்படுகிறது. இதில் எங்கள் கைக்குக் கிடைத்த நூல் களை காலவரிசையில் பொருள்வழிப் பிரித்து சாமி.சிதம்பரனார் நூற்களஞ்சியம் எனும் தலைப்பில் தமிழ் உலகம் பயன்பெறும் வகையில் வெளியிட்டுள்ளோம். கைக்குக் கிடைக்கப் பெறாத ஏனைய நூல்களைத் தேடியெடுத்து எதிர்வரும் ஆண்டில் வெளியிட முயலுவோம். தம் எழுதுகோலை பொழுதுபோக்குக்காகவோ பிழைப்புக் காகவோ கையாளாத தன்மானத் தமிழறிஞர். தம் எழுத்தை இலட்சிய நோக்குடன் தமிழர்களின் நலனுக்காக எழுதியவர். தனித்தமிழியக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழக ஈடுபாடு கொண்டவர். பன்முகப் படைப்பாளி. புதிய பார்வையுடன் திருக்குறளின் அருமை பெருமைகளை ஆழ்ந்து அகழ்ந்து காட்டி யவர். சங்க நூல்களில் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படவில்லை என்பதையும், திருக்குறள் ஒன்றில்தான் முதன்முதலாகப் பரத்தையர் நட்பு கண்டிக்கப்படுகிறது என்பதையும் தம் நூல் களில் பதிவு செய்தவர். சித்தர்களின் வாழ்க்கை முறைகளும், சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளும் இவர் நூல்களில் மிகுந்து காணப்படுகின்றன. பட்டமும் - பதவியும், செல்வமும் - செல்வாக்கும், இளமை யும் - அழகும், பொன்னும் - பொருளும் மாந்த வாழ்வில் நிலையற்றது. கல்வி அறிவு ஒன்றுதான் நிலைத்து நின்று மாந்த வாழ்வில் புகழ் சேர்ப்பது என்பதை படிப்பவர் நெஞ்சில் பதியும் வண்ணம் எளிய தமிழில் தம் நூல்களில் பதிவு செய்தவர். சிலப்பதிகாரம் - அரசியல் புரட்சியை அறிவுறுத்த எழுந்த நூல். மணிமேகலை - சமுதாயப் புரட்சியை அறிவுறுத்த எழுதப்பட்ட நூல். ஐம்பெருங்காப்பியங்கள் புலவர்கள் போற்றும் பெருமைக்குரிய பழந்தமிழர் பண்பாட்டுச் செல்வங்கள். சாதி வேற்றுமையையும், பெண்ணடிமைத்தனத்தையும் கண்டித்தும். பிறப்பால் வேற்றுமை பாராட்டப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும் ஓங்கிக் குரல் கொடுத்தவர். பகுத்தறிவுப் பார்வையுடன் பழந்தமிழ் இலக்கி யங்கள் வாயிலாகத் தமிழ் மக்களின் வாழ்க்கையை யும் பழக்க - வழக்கங்களையும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் தெளிவுபடுத்தியவர் இவர். முற்போக்கு இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவராய்த் திகழ்ந்தவர். புலமை மிக்க தமிழ் அறிஞராக இருந்தபோதும் அவர் பழமைவாதி யாக இருக்கவில்லை. சமுதாய மாற்றத்தையும் பரிணாம வளர்ச்சியையும் கணக்கில் கொண்டு தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவர். பிற்போக்கு வாதிகளால் உருவாக்கி விடப்பட்ட பல கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் இவருடைய கட்டுரைகள் தவிடுபொடியாக்கின. என்று திரு.டி.செல்வராஜ் அவர்கள் இப்படி பதிவு செய்கிறார். (நூல் - சாமி.சிதம்பரனார் - வெளியீடு - சாகித்திய அகாதெமி) காலமாற்றத்தைக் கணக்கில் கொண்டு பண்டைத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்யும் இவரின் பகுத்தறிவுப் பார்வை அறிஞர் உலகம் எண்ணத்தக்கது. இவருடைய எழுத்துக்களில் ஆழ்ந்த சமூக அக்கறையும், தொலைநோக்குப் பார்வையும் படிந்து கிடக்கிறது. தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம், தமிழர்களின் தொன்மை முதலியவை பற்றி ஆய்வு செய்ய முனைபவர் களுக்கு இந்நூற் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும் என்ற நோக்கில் இதனைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். இதனைத் தொகுத்தும், பகுத்தும் இந்நூற் களஞ்சியங்கள் வெளிவருவதற்கு எமக்குத் துணையாயிருந்த எம் பதிப்பகப் பணியாளர்கள், நூல்கள் கொடுத்துதவியவர்கள், கணினி, மெய்ப்பு, அச்சு, நூல் கட்டமைப்பு செய்து உதவிய அனைவருக்கும் எம் நன்றி. - பதிப்பகத்தார் உள்ளுறை திருக்குறள் பொருள் விளக்கம் முன்னுரை 3 திருவள்ளுவர், திருக்குறள் பெயர்கள் 7 1. அறத்துப்பால் பாயிரம்* 9 இல்லற இயல்* 20 துறவற இயல்* 74 2. பொருட்பால் அரசியல்* 112 அங்கவியல்* 180 ஒழிபியல்* 268 3. காமத்துப்பால் களவியல்* 303 கற்பியல்* 323 திருவள்ளுவ மாலை 374 அதிகார அகராதி 390 செய்யுள் முதற்குறிப்பு 392 திருக்குறள் பொருள் விளக்கம் (1959) முன்னுரை திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற நூல்; மக்கள் வாழ வேண்டிய விதத்தைப்பற்றிக் கூறும் நூல். அது ஒரு இனத்தாரைக் கருதியோ, ஒரு மதத்தினரைக் கருதியோ, ஒரு மொழியினரைக் கருதியோ, ஒரு நாட்டினரைக் கருதியோ இயற்றப்பட்ட நூல் அன்று; எல்லா மக்களுக்கும் பொதுவாக இயற்றப்பட்டது. உலக மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டும் நோக்கத்துடன் எழுதப்பட்டது. இதுதான் திருக்குறளுக்கு உள்ள தனிச் சிறப்பு. ஆதலால் அதனைச் சாதி, மத, நிற, இன, மொழி வேற்றுமையின்றி அனைவரும் பாராட்டுகின்றனர். திருக்குறள் ஆசிரியர் திருவள்ளுவர். அவர் வரலாற்றைப் பற்றிய உண்மை தெரியவில்லை. வள்ளுவர், பகவன் என்ற அந்தணனுக்கும் ஆதி என்ற புலைச்சிக்கும் பிறந்தார்; மயிலையில் வள்ளுவர் வீட்டில் வளர்ந்தார்; வாசுகி என்னும் வேளாளப் பெண்ணை மணந்தார்; நெசவுத் தொழில் செய்து வாழ்ந்தார்; திருக்குறளை இயற்றினார்; மதுரையிலிருந்த கடைச் சங்கத்தில் அரங்கேற்றினார் என்று ஒரு கதை வழங்குகின்றது. வள்ளுவர் மதுரையில் வாழ்ந்ததாக ஒரு வரலாறு உண்டு. திருவள்ளுவ மாலையில் நல்கூர் வேள்வியார் பெயரில் உள்ள வெண்பா இதற்கு ஆதரவு. இது திருவள்ளுவ மாலையின் 21- வது வெண்பா. இன்று கேரளத்தைச் சேர்ந்த ஷோரனூர் என்று வழங்கும் சேரனூர் வட்டாரத்திற்கு வள்ளுவநாடு என்பது பண்டைப் பெயர். வள்ளுவர் என்ற அரச பரம்பரையினர் ஆண்டதால் அப் பெயர் பெற்றதென்று கூறுகின்றனர். இந்த அரச பரம்பரையில் தோன்றியவராக இருக்கலாம் திருவள்ளுவர் என்பது சிலர் கருத்து. ஆதலால் திருவள்ளுவர் வரலாற்றைப் பற்றி நாம் திட்டமாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இன்று வழங்கும் கதைக்கு வரலாற்று ஆதரவில்லை. திருவள்ளுவர் காலத்தைப் பற்றியும் முடிவாகச் சொல்லு வதற்கில்லை. வள்ளுவர் காலம் கிறிதுவுக்குமுன் என்று சொல்லுவதுதான் பெருமை என்று நினைக்கின்றனர் சிலர். கிறிதுவுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் வள்ளுவர் பிறந்தார் என்று வைத்துக்கொண்டு திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட்டு வருகின்றனர். திருவள்ளுவர் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும். திருக்குறள் அப்பொழுதுதான் தோன்றியிருக்க வேண்டும் என்பது சில ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இவ்வாறு, திருவள்ளுவர் வரலாற்றைப் பற்றியும், அவர் காலத்தைப் பற்றியும் கருத்து வேற்றுமைகள் உண்டு. இதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டாம். அவர் செய்துள்ள குறள் ஒப்பற்ற, அரிய, அரசியல், சமுதாயக் கருத்துக்கள் நிறைந்தது என்பதில் கருத்து வேற்றுமையே இல்லை. திருவள்ளுவரின் புலமைச் சிறப்பைக் கருதி அவரை நான்முகன் அவதாரம் என்று பாடியிருக்கின்றனர்; திருக்குறளைத் தமிழ்வேதம் என்று கூறியிருக்கின்றனர். அவருடைய வரலாறு நமக்குத் தெரியாவிட்டாலும், அவர் தமிழ் நாட்டில், பன்னூறு ஆண்டுகளுக்குமுன் தோன்றிய ஒரு ஒப்பற்ற மாபெரும் புலவர் ஆவார். இத்தகைய திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளுக்கு எத்தனையோ உரைகள் உண்டு. பழைய உரைகள் பல; புத்துரைகள் பல. சிலச் சில குறள்களுக்குத்தான் ஒருவரோடு ஒருவர் மாறு பட்டு உரைகள் கூறிவருகின்றனர். பெரும்பாலான குறள்களுக்குப் பெரும்பாலும் ஒரே கருத்துள்ள உரைகள்தாம் எழுதியிருக் கின்றனர். உரையாசிரியர்களுக்குள் கருத்து வேற்றுமை தோன்றுவது இயற்கை. காலத்திற்கு ஏற்றவாறு கருத்துக்கள் மாறிவருவதும் இயல்பாகும். வேதாந்த சூத்திரத்துக்கு, ஒவ்வொரு மதத் தலைவர்களும் வெவ்வேறு உரைகள் கூறியிருக்கின்றனர். உயர்ந்த நூலுக்கு, அவரவர் கொள்கைக்கு ஏற்ப உரை கூறுவது தொன்றுதொட்ட வழக்கம். இந்த முறையைப் பின்பற்றித்தான் திருக்குறளுக்கும் பல உரைகள் தோன்றியிருக்கின்றன. பழைய உரைகளிலே பரிமேலழகர் உரைதான் சிறந்த தென்று போற்றப்படுகின்றது. பரிமேலழகர் உரையைப் பற்றிச் சிலர்க்குக் கருத்து வேற்றுமை உண்டு. ஆனால் அவரிடம் மாறுபடுகின்றவர்கள்கூட அவருடைய உரைச்சிறப்பைப் பாராட்டாமல் இருப்பதில்லை. பரிமேலழகர் வேண்டும் என்றே தமது கொள்கையைத் திருக்குறளில் புகுத்தியிருக்கிறார் என்று கூறுவோர் உண்டு. அவர் காலத்தில் தமிழகத்தில் மக்களிடம் இருந்த நம்பிக்கை, பழக்க - வழக்கங்கள், கொள்கைகள் இவைகளுக்குத் தகுந்தாற் போலவே அவர் உரை வகுத்தார் என்றுதான் கொள்ள வேண்டும். இந்த முறையில் உரை வகுப்பதே ஒரு சிறந்த உரையாசிரியரின் இயல்பாகும். எத்தனைபேர், எவ்வளவுதான் பரிமேலழகரின் மேல் வசைமாரி பொழிந்தாலும் அவர் பெருமையோ, அவர் உரையின் சிறப்போ தேய்ந்து விடவில்லை. இந்த உரை, பரிமேலழகரின் உரையைப் பின்பற்றியதுதான். திருக்குறளின் பொருளைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்; ஒவ்வொரு பதத்திற்கும் பொருள் தெரிந்துகொள்ள வேண்டும்; மற்றவர் உதவியின்றித் தாமே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனேயே இவ்வுரை எழுதப்பட்டது. ஒவ்வொரு குறளுக்கும் தெளிவாகப் பொருள் தெரிந்து கொண்டால், அதன் பிறகு அதைப்பற்றிய ஆராய்ச்சிகளை நடத்தலாம். ஆதலால் திருக்குறளை ஆராய விரும்புவோர்க்கு, அதன் பொருள் எளிதில் விளங்க வேண்டும் அல்லவா? ஆதலால் தான் பதவுரை, கருத்துரை மட்டும் இருந்தால் போதும் என்ற கருத்துடன் இவ்வுரை எழுதப்பட்டது. சிறப்பாக, மாணவர்களுக்குத் திருக்குறளின் பொருள் எளிதில் விளங்க வேண்டும் என்பதே இவ்வுரை எழுதியதன் நோக்கம். எந்த அளவு இந்த நோக்கம் வெற்றிபெற்றிருக்கின்றது என்பதைப் படிப்பவர்கள்தாம் சொல்லவேண்டும். திருக்குறளின் இறுதியிலே திருவள்ளுவ மாலை என்னும் நூல் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இது சங்கப் புலவர்கள் திருக்குறளைப் பாராட்டிப் பாடிய பாடல்கள் என்று சொல்லு கின்றனர். ஆராய்ச்சியாளர்க்கு இதிலும் கருத்து வேற்றுமையுண்டு. திருவள்ளுவ மாலையில் உள்ள வெண்பாக்கள் பிற்காலத்துப் புலவர்களால் சங்கப் புலவர்களின் பெயரால் பாடப்பட்டவை என்பதே பலர் கருத்து. திருவள்ளுவ மாலையில் உள்ள வெண்பாக்கள் எப் பொழுது பாடப்பட்டவை யானாலும் சரி, அவைகள் திருக்குறளை நன்றாக ஆராய்ந்து படித்தவர்களால் பாடப்பட்டவை; பல நூறு ஆண்டுகளுக்கு முன் பாடப்பட்டவை; திருக்குறளின் பெருமையைக் காணத் துணை செய்பவை. இக்கருத்து எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. ஆதலால் இதனுடன் திருவள்ளுவமாலையும், குறிப்புரையுடன் சேர்க்கப்பட்டிருக்கின்றது. திருக்குறளை எல்லோரும் படித்துணரும்படி, எளிய உரையுடன் வெளியிட வேண்டும் என்பது பலர் அவா. சென்னை 15-1-1959 சாமி. சிதம்பரன் திருவள்ளுவர் பெயர்கள் 1. நாயனார் 5. நான்முகனார் 2. தேவர் 6. மாதானுபங்கி 3. முதற்பாவலர் 7. செந்நாப் போதார் 4. தெய்வப் புலவர் 8. பெருநாவலர் திருக்குறளின் பெயர்கள் 1. முப்பால் நூல் 5. பொய்யாமொழி 2. உத்தர வேதம் 6. வாயுரை வாழ்த்து 3. தெய்வ நூல் 7. தமிழ் மறை 4. திருவள்ளுவம் 8. பொதுமறை 1 அறத்துப்பால் பாயிரம்* 1. கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல். 1. அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு. பதவுரை: எழுத்து எல்லாம் - எழுத்துக்கள் எல்லாம். அகரம் - அ என்னும் எழுத்தை. முதல - தலைமையாகக் கொண்டவை. உலகம் - அதுபோல இவ்வுலகம் - ஆதி பகவன் - முதன்மையான கடவுளை. முதற்று - தலைமையாகக் கொண்டதாகும். கருத்து: இவ்வுலகத்தின் தலைவர் கடவுளே ஆவார். 2. கற்றதனால் ஆய பயன்என்கொல்? வால்அறிவன் நல்தாள் தொழாஅர் எனின். (ப-உ) வால் அறிவன் - பரிசுத்தமான அறிவையுடைய கடவுளின். நல்தாள்- நல்ல பாதங்களை. தொழாஅர் எனின்- வணங்கார் ஆயின். கற்றதனால் - கல்வி கற்றதனால். ஆய- உண்டான. பயன் என் கொல் - பலன் என்ன? (க-து) கல்வி கற்றதன் பயன் கடவுளை வணங்குவதாகும். 3. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். (ப-உ) மலர் மிசை - அன்பர்களின் நெஞ்சமாகிய மலரிலே. ஏகினான்- சென்று தங்கிய கடவுளின். மாண் அடி- பெருமை யுள்ள பாதங்களை. சேர்ந்தார் - சேர்ந்து வணங்கியவர். நிலமிசை - மோட்சமாகிய உலகையடைந்து. நீடு வாழ்வார் - அழியாமல் வாழ்வார்கள். (க-து) கடவுள் அடிகளை வணங்குவோர் மோட்சம் பெறுவார்கள். 4. வேண்டுதல், வேண்டாமை இலான்,அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. (ப-உ) வேண்டுதல்- ஒரு பொருளை விரும்புதலும். வேண்டாமை - ஒரு பொருளை வெறுத்தலும். இலான்- இல்லாதவனாகிய கடவுளின். அடி சேர்ந்தார்க்கு- பாதங்களை அடைந்து வணங்கியவர்களுக்கு. யாண்டும்- எப்பொழுதும். இடும்பை- துன்பங்கள். இல- இல்லை. (க-து) கடவுளை வணங்குவோர்க்கு எப்பொழுதும் துன்பங்கள் இல்லை. 5. இருள்சேர் இருவினையும் சேரா; இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (ப-உ) இறைவன்- கடவுளின். பொருள்சேர்- உண்மையான. புகழ்- கீர்த்தியை. புரிந்தார்மாட்டு- விரும்பிப் போற்றியவர்களிடம். இருள்சேர்- அறியாமையால் வருகின்ற. இரு வினையும் - நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும். சேரா- அடையமாட்டா. (க-து) கடவுளைப் போற்றுகின்றவர்களிடம் நல்வினை தீவினைகள் சேரமாட்டா. 6. பொறிவாயில் ஐந்துஅவித்தான், பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார், நீடுவாழ் வார். (ப-உ) பொறிவாயில்- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளிடம் உள்ள. ஐந்து- உணர்ச்சி, சுவை, ஒளி, மணம், ஓசை என்னும் ஐந்து ஆசைகளையும். அவித்தான்- அடக்கிய கடவுளின். பொய்தீர்- பொய்யற்ற. ஒழுக்க நெறி-நல்லொழுக்க வழியிலே. நின்றார்- தவறாமல் நின்றவர். நீடுவாழ்வார்- அழியாத வாழ்வைப் பெறுவர். (க-து) கடவுள் நெறியிலே நடப்பவர் அழியாமல் வாழ்வர்.. 7. தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல்அரிது. (ப-உ) தனக்கு உவமை இல்லாதான்- தனக்கு வேறு யாரும் ஒப்பில்லாத கடவுளின். தாள்- அடிகளை. சேர்ந்தார்க்கு அல்லால்- சேர்ந்து வணங்கியவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு. மனக் கவலை- மனத்தில் உண்டாகும் துன்பங்களை. மாற்றல்- நீக்குதல். அரிது- முடியாத செயல். (க-து) கடவுள் பாதங்களை வணங்காதவர்களால் மனக்க வலையை நீக்கிக்கொள்ள முடியாது. 8. அறஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால், பிறஆழி நீந்தல் அரிது. (ப-உ) அறம் ஆழி- தருமக்கடலாகிய. அந்தணன்- இரக்க முள்ள கடவுளின். தாள்- பாதமாகிய (மரக் கலத்தை). சேர்ந்தார்க்கு அல்லால்- சேர்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்களால். பிறஆழி- பொருளும் இன்பமும் ஆகிய வேறு கடல்களை. நீந்தல்- நீந்திக் கரை ஏறுவது. அரிது- முடியாத செயல். (க-து) கடவுளின் பாதங்களை வணங்காதவர்கள் பொருள், இன்பம் ஆகிய கடல்களைக் கடக்க மாட்டார்கள். 9. கோள்இல் பொறியில், குணம்இலவே, எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. (ப-உ) கோள் இல்- தனக்குரிய தன்மைகளைக் கொண்டி ராத. பொறியில் - ஐம்பொறிகளைப்போல. எண் குணத்தான்- *எட்டு வகையான குணங்களையுடைய கடவுளின். தாளை- பாதங்களை. வணங்காத்தலை- வணங்காத தலைகள். குணம் இலவே- பயன் உள்ளவை அல்ல. (க-து) கடவுள் பாதங்களை வணங்காத தலைகளால் பயன் இல்லை. 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார் இறைவன் அடிசேரா தார். (ப-உ) பிறவிப் பெருங்கடல்- (கடவுள் பாதத்தை வணங்குவோர்) பிறவியாகிய பெரிய கடலை. நீந்துவர்- நீந்திக் கடப்பார்கள். இறைவன் அடி சேராதார்- கடவுள் பாதத்தை அடையாதவர்கள். நீந்தார்- (பிறவியாகிய பெரிய கடலை) நீந்திக் கடக்கமாட்டார்கள். (க-து) கடவுள் பாதத்தை வணங்காதார் பிறவிக் கடலைக் கடக்கமாட்டார்கள். 2. வான்சிறப்பு வான் சிறப்பு- மழையின் பெருமை. வான் - மழை. சிறப்பு- பெருமை. 1. வான்நின்று உலகம், வழங்கி வருதலால், தான்,அமிழ்தம் என்று உணரல்பாற்று. (ப-உ) வான் - மழையானது. நின்று - நிலைத்து நின்று. உலகம்- இவ்வுலகிலே. வழங்கி வருதலால்- நீரை வழங்கி வருவ தால். தான் - அம்மழைதான். அமிழ்தம் என்று - உயிர்களுக்கு உணவு என்று. உணரல்பாற்று- அறியப்படும் தன்மை யுடையதாகும். (க-து) மழைதான் இவ்வுலகுக்கு உணவாகும். 2. துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கித், துப்பார்க்குத் துப்புஆய தூஉம் மழை. (ப-உ) துப்பார்க்கு- உண்பவர்க்கு. துப்பு ஆய- நன்மை யாகிய. துப்பு ஆக்கி- உணவுகளை உண்டாக்கி. துப்பார்க்கு- அவ்வுணவுகளை உண்போர்க்கு. துப்பு ஆய தூஉம்- தானும் உணவாக இருப்பதும். மழை- மழைதான். (க-து) உணவுகளை உண்டாக்குவதும், உணவாக இருப்பதும் மழைதான். 3. விண்இன்று பொய்ப்பின், விரிநீர் வியன்உலகத்துள், நின்று உடற்றும் பசி. (ப-உ) விண் இன்று- மழையில்லாமல். பொய்ப்பின்- வறண்டுபோய் விடுமானால். விரிநீர்- கடல் அமைந்த. வியன் உலகத்துள்- இப்பெரிய உலகிலே. பசி- பசி நோயானது. நின்று - நிலைத்து நின்று. உடற்றும்- உயிர்களைத் துன்புறுத்தும். (க-து) மழையின்றேல் இவ்வுலகைப் பசிநோய் துன்புறுத்தும். 4. ஏரின் உழாஅர் உழவர்; புயல்என்னும் வாரி வளம்குன்றிக் கால். (ப-உ) புயல் என்னும் - மழை என்னும். வாரி- வருமான மாகிய. வளம்- செல்வம். குன்றிக்கால்- குறைந்து விட்டால். உழவர் - பயிர் செய்வோர். ஏரின் உழாஅர்- ஏரால் உழுது பயிர் செய்ய மாட்டார்கள். (க-து) மழை பெய்யாவிட்டால் உழவுத்தொழில் நடை பெறாது. 5. கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்றுஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. (ப-உ) கெடுப்பதூஉம்- பெய்யாமல் நின்று கெடுப்பதும். கெட்டார்க்கு - அவ்வாறு கெட்டுப்போனவர்க்கு. சார்வாய்- துணையாய் நின்று பெய்து. மற்று ஆங்கே- முன் கெடுத்தது போல. எடுப்பதூஉம்- அவரை உயர்த்துவதும். எல்லாம் மழை - இவையெல்லாம் வல்லது மழையாகும். (க-து) கெடுப்பதும், கெட்டுப் போனவர்களை உயர்த்து வதும் மழைதான். 6. விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றுஆங்கே, பசும்புல் தலைகாண்பு அரிது. (ப-உ) விசும்பின்- மேகத்தின். துளி- மழைத்துளிகள். வீழின்- நிலத்திலே வீழ்ந்தால். அல்லால்- பசும்புல்லின் தலையைக் காண்போமே அல்லாமல். மற்று ஆங்கே- வீழாவிட்டால் அப்பொழுது. பசும்புல் தலை- பசும் புல்லின் தலையை. காண்பு அரிது- காண முடியாது. (க-து) மழை பெய்யாவிட்டால் பசுமையான புல்லும் வளராது. 7. நெடும்கடலும் தன்நீர்மைகுன்றும்; தடிந்து,எழிலி தான், நல்காது ஆகி விடின். (ப-உ) எழிலிதான்-மேகம். தடிந்து -கடல் நீரைக் குறைத்து. நல்காது ஆகிவிடின்- அக்கடலில் பெய்யாமல் போய்விடுமானால். நெடும்கடலும்- நீண்ட கடலும். தன் நீர்மை- தனது தன்மையிலே. குன்றும்- குறையும். (க-து) மழை பெய்யாவிட்டால் கடல் வளமும் குறையும். 8. சிறப்பொடு பூசனை செல்லாது, வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. (ப-உ) வானம் வறக்குமேல்- மழை பெய்யாவிட்டால். வானோர்க்கும்- தேவர்களுக்கும். ஈண்டு- இவ்வுலகில். சிறப்பொடு - திருவிழாவோடு. பூசனை- தினந்தோறும் செய்யும் பூசையும். செல்லாது- நடக்காது. (க-து) மழை பெய்யாவிட்டால் இவ்வுலகில் தெய்வங் களுக்குத் திருவிழாவும், பூசையும் நடைபெறமாட்டா. 9. தானம் தவம்இரண்டும் தங்கா, வியன்உலகம் வானம் வழங்காது எனின். (ப-உ) வியன்உலகம்- பெரிய உலகிலே. வானம்-மேகம். வழங்காது எனின்- மழையைத் தராவிட்டால். தானம்- பெரி யோர்க்கு உதவும் தானமும். தவம்- தவமும். இரண்டும்- ஆகிய இரண்டு அறங்களும். தங்கா- இவ்வுலகில் நிலைபெறமாட்டா. (க-து) மழை பெய்யாவிட்டால் இவ்வுலகில் தானம், தவம் இரண்டும் நடைபெறமாட்டா. 10. நீர்இன்று அமையாது உலகு;எனில் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. (ப-உ) நீர்இன்று - நீர் இல்லாமல். உலகு- இவ்வுலக வாழ்வு. அமையாது- நிலைபெறாது. எனில்- ஆயின். யார்யார்க்கும்- எப்படிப்பட்டவர்க்கும். வான் இன்று- மழை இல்லாமல். ஒழுக்கு - அவர்கள் ஒழுக்கம். அமையாது- நிலைத்திராது. (க-து) மழையின்றேல் இவ்வுலகில் ஒழுக்கமும் இல்லை. 3. நீத்தார் பெருமை முனிவர்களின் பெருமையைக் கூறுவது. 1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை, விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. (ப-உ) ஒழுக்கத்து- சிறந்த ஒழுக்கமுடன் வாழ்ந்து. நீத்தார் - துறந்தவர்களின். பெருமை- பெருமையை. விழுப்பத்து- சிறந்ததாக. வேண்டும்- புகழ்ந்து கூறுவதே. பனுவல் துணிவு- நூல்களின் முடிவாகும். (க-து) துறவிகளின் பெருமையைப் பேசுவதே நூல்களின் முடிவாகும். 2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று. (ப-உ) துறந்தார்- துறவை மேற்கொண்டவர்களின். பெருமை - மகிமையை. துணைக்கூறின்- அளவிட்டுக் கூறப்புகுந்தால் அது. வையத்து- இவ்வுலகிலே. இறந்தாரை- பிறந்து இறந்தவர்களை. எண்ணிக் கொண்டு- எண்ணிக் கொண்டிருக்கின்ற. அற்று- அச் செய்கைபோல ஆகும். (க-து) துறந்தவர்களின் பெருமையை அளவிட்டுக் கூற முடியாது. 3. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. (ப-உ) இருமை- இம்மை மறுமை என்னும் இரண்டின். வகைதெரிந்து- இன்ப துன்பங்களை ஆராய்ந்து. ஈண்டு- இவ்வுலகிலே. அறம்- துறவறத்தை. பூண்டார்- மேற்கொண்டவர் களின். பெருமை- மகிமையே. உலகு- உலகில். பிறங்கிற்று- உயர்ந்து நின்றது. (க-து) துறவு பூண்டார் பெருமையே இவ்வுலகில் உயர்ந்து நின்றது. 4. உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து. (ப-உ) உரன் என்னும் - அறிவு என்னும். தோட்டியான்- அங்குசத்தால். ஓர் ஐந்தும்- ஓர் ஐந்து பொறிகளாகிய யானை களையும். காப்பான்- அடக்கிக் காப்பவன். வரன் என்னும்- மேலானது என்று சொல்லப்படுகின்ற. வைப்புக்கு - மோட்ச நிலத்துக்கு. ஓர் வித்து- ஒரு விதையாவான். (க-து) ஐம்பொறிகளையும், புலன்கள்மேல் செல்லாமல் அடக்கிக் காப்பவனே மோட்சம் பெறுவான். 5, ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமான் இந்திரனே சாலும் கரி. (ப-உ) ஐந்து அவித்தான்- ஐவகை ஆசைகளையும் ஒழித்த வனது. ஆற்றல்- வல்லமைக்கு. அகல் விசும்பு உளார்- பெரிய வானுலகில் உள்ளவர்களின். கோமான்- அரசனாகிய. இந்திரனே - தேவேந்திரனே. சாலும்- போதுமான. கரி- சாட்சியமாகும். (க-து) துறவியின் வல்லமைக்கு இந்திரனே சாட்சி. 6. செயற்குஅரிய செய்வார் பெரியர்; சிறியர் செயற்குஅரிய செய்கலா தார். (ப-உ) பெரியர்- பெரியோர்கள். செயற்கு அரிய- பிறரால் செய்ய முடியாதவைகளை. செய்வார்- செய்வார்கள். சிறியர்- சிறியோர். செயற்கு அரிய - செய்ய முடியாத காரியங்களை. செய்கலாதார்- செய்ய மாட்டாதவர்கள். (க-து) பெரியோர்கள் பிறர் செய்ய முடியாத சிறந்த காரியங்களைச் செய்வார்கள்; சிறியோர் அக்காரியங்களைச் செய்ய மாட்டார்கள். 7. சுவை,ஒளி, ஊறு,ஓசை, நாற்றம்என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. (ப-உ) சுவை- ருசி. ஒளி- உருவம். ஊறு- தொடுதல் உணர்ச்சி. ஓசை- சப்தம். நாற்றம்- மணம். என்று ஐந்தின்- என்ற ஐந்து புலன்களின். வகை- விதங்களை. தெரிவான்கட்டே- ஆராய்ந்து அறிபவனிடத்திலேயே. உலகு- உலகம் அடங்கியிருக்கும். (க-து) ஐம்புலன்களையும் அறிந்தவனிடத்திலேயே உலகம் அடங்கும். 8. நிறைமொழி மாந்தர் பெருமை, நிலத்து மறைமொழி காட்டி விடும். (ப-உ) நிறைமொழி- பயன் நிறைந்த சொல்லையுடைய. மாந்தர்- முனிவர் களின். பெருமை- மகிமையை. நிலத்து- இவ் வுலகில். மறைமொழி- அவர் கூறிய மந்திரங்களே. காட்டிவிடும்- வெளிப்படுத்திவிடும். (க-து) முனிவர்களின் பெருமையை அவர்கள் கூறிய மந்திரங்களே காட்டிவிடும். 9. குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி, கணமேயும், காத்தல் அரிது. (ப-உ) குணம் என்னும்- நல்ல குணங்கள் என்னும். குன்று - மலையின்மேல். ஏறிநின்றார்- ஏறி நின்ற முனிவர்களின். வெகுளி- கோபம். கணமேயும்- ஒரு கண நேரந்தான் இருக்கும் ஆயினும். காத்தல்- அதனால் தீமை வராமல் தடுத்தல். அரிது- முடியாது. (க-து) முனிவர் கோபம் சிறிது நேரம் நின்றாலும், அதனால் வரும் தீமையைத் தடுக்க முடியாது. 10. அந்தணர் என்போர் அறவோர், மற்றுஎவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டுஒழுக லான். (ப- உ) எவ்வுயிர்க்கும்- எல்லா உயிர்களின் மேலும். செந் தண்மை- நல்ல அருளை. பூண்டு- மேற்கொண்டு. ஒழுகலான்- நடப்பதனால். அந்தணர் என்போர்- அந்தணர் என்று சொல்லப் படுவோர். அறவோர்- துறவிகளே ஆவார்கள். (க-து) இரக்கமுடைய - முற்றத்துறந்த முனிவர்களே அந்தணர்கள் ஆவார்கள். 4. அறன் வலியுறுத்தல் அறம் இன்னது என்பதை வலியுறுத்திக் கூறுவது. 1. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. (ப-உ) சிறப்புஈனும் - பெருமையையும் தரும். செல்வமும் ஈனும்- செல்வத்தையும் கொடுக்கும். அறத்தின் ஊங்கு- இத்தகைய அறத்தைக் காட்டினும். உயிர்க்கு- மனிதர்களுக்கு. ஆக்கம்- செய்யத்தகும் சிறந்த காரியம். எவன்ஓ- வேறு யாது? (க-து) தருமத்தைத் தவிர மக்கள் உயிர்க்கு நலந்தருவது வேறு ஒன்றும் இல்லை. 2. அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை; அதனை மறத்தலின்ஊங் கில்லை கேடு. (ப-உ) அறத்தின்ஊங்கு- தருமம் செய்வதைவிட மேலான. ஆக்கமும் இல்லை- செல்வமும் இல்லை. அதனை- அத்தருமத்தை. மறத்தலின் ஊங்கு- மறந்துவிடுவதை விடப் பெரிய. கேடுஇல்லை- தீமையும் இல்லை. (க-து) அறம் புரிவதே சிறந்த செல்வம்; அதை மறப்பது தீமை. 3. ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல். (ப-உ) ஒல்லும் வகையால்- முடிந்த வகையில் எல்லாம். அறவினை- தருமமாகிய நற்செயலை. ஓவாது ஏ- இடைவிடாமல். செல்லும்வாய் எல்லாம்- அது செல்லும் இடங்களில் எல்லாம். செயல்- செய்தல் வேண்டும். ஏ - அசை.* (க-து) மனம், சொல், செயல் இம்மூன்றாலும் இடை விடாமல் அறம் செய்க. 4. மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்; ஆகுல நீர பிற. (ப-உ) மனத்துக்கண்- நெஞ்சில். மாசு இலன் ஆதல்- குற்ற மில்லாதவனாயிருக்கவேண்டும். அனைத்து அறன்- அவ்வளவு தான் அறம் என்பது. பிற - வேறுவேடங்கள். ஆகுல நீர- வெறும் ஆடம்பரத்தன்மையாகும். (க-து) அறம் புரிவோனுக்கு மாசற்ற மனம் வேண்டும். 5. அழுக்காறு, அவா,வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். (ப-உ) அழுக்காறு- பொறாமை. அவா- பேராசை. வெகுளி- கோபம். இன்னாச்சொல்- கடுஞ்சொல். நான்கும்- ஆகிய இந்நான்கு குற்றங்களையும். இழுக்கா- நீக்கி. இயன்றது- நடந்ததே. அறம்- தருமமாகும். (க-து) பொறாமை, பேராசை, கோபம், கடுஞ்சொல் இந்நான்கும் இன்றிச் செய்யப்படுவதே அறம். 6. அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க; மற்றது பொன்றும்கால் பொன்றாத் துணை. (ப-உ) அன்று - நாம் இறக்கும் அப்பொழுது. அறிவாம்- ஆலோசிப்போம். என்னாது- என்று இராமல். அறம்- தருமத்தை. செய்க- நாள்தோறும் செய்க. மற்றது - அவ்வறம். பொன்றும்கால் - இறக்கும்போது. பொன்றாத் துணை- நீங்காமல் துணை வருவதாகும். (க-து) இறக்கும்போது நமக்குத் துணையாவது அறம் ஒன்றுதான்; ஆதலால் அதைத் தினந்தோறும் செய்க. 7. அறத்துஆறு இதுஎன வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. (ப-உ) அறத்து ஆறு- தருமத்தின் பயன். இது என- இது என்று. வேண்டா- நூல்களால் கூற வேண்டியதில்லை. சிவிகை- பல்லக்கை. பொறுத்தானோடு- சுமந்தவனோடு. ஊர்ந்தான் இடை- செலுத்துவோனிடம் உள்ள வேற்றுமையால் காணலாம். (க-து) தருமத்தின் பயனைப் பல்லக்கைச் சுமப்பவனிடமும், அதில் ஏறிச் செல்வோனிடமும் கண்டு கொள்ளலாம். 8. வீழ்நாள் படாமை நன்றுஆற்றின், அஃது,ஒருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல். (ப-உ) வீழ்நாள்- வீணாகக் கழியும் நாள். படாமை- உண்டாகாமல். நன்று ஆற்றின்- தருமத்தையே செய்தால். அஃது- அச்செயல். ஒருவன்- ஒருவனுடைய. வாழ்நாள் - மீண்டும் பிறந்து வாழும் நாள். வழி அடைக்கும் - வருகின்ற வழியை அடைக்கின்ற. கல்- கல்லாகும். (க-து) ஒருவன் எந்நாளும் தருமம் செய்தால், அது அவன் பிறவியை நீக்கும். 9. அறத்தான் வருவதே இன்பம், மற்றுஎல்லாம் புறத்த; புகழும் இல. (ப-உ) அறத்தான் - அறநெறியிலே வாழ்வதன் மூலம். வருவதே- வரும் பயனே. இன்பம்- இன்பம் ஆகும். மற்று எல்லாம் - அறநெறிக்கு மாறுபட்டவற்றால் வருவனவெல்லாம். புறத்த- துன்பம் உடையவை. புகழும் இல- அவைகளால் புகழும் இல்லை. (க-து) தருமத்தால் அடையும் பயனே இன்பமாகும். 10. செயல்பாலது ஓரும் அறனே; ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி. (ப-உ) ஒருவற்கு- ஒருவனுக்கு. செயல்பாலது- செய்யத் தக்கது. அறனே- தருமமேயாகும். உயற் பாலது- செய்யாமல் தப்பித்துக் கொள்ளத்தக்கது. பழி- தீவினையாகும். ஓரும் என்பன அசைச் சொற்கள். (க-து) ஒருவன் செய்யத்தக்கது நல்வினை; செய்யத் தகாதது தீவினை. இல்லற இயல்* 5. இல்வாழ்க்கை மனையாளோடு கூடி வாழும் இல்லற வாழ்வு. 1. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்ஆற்றின் நின்ற துணை. (ப-உ) இல்வாழ்வான் என்பான்- இல்லறத்தில் வாழ்கின்றவன் என்பவன். இயல்பு உடைய- நல்ல தன்மையையுடைய. மூவர்க்கும்- பிரமச்சாரி, வானப்பிரதன், சந்நியாசி என்னும் மூவர்க்கும். நல் ஆற்றின்- நல்ல வழியிலே. நின்ற- நிலைபெற்ற. துணை- துணையாவான். (க-து) இல்லறத்தில் வாழ்பவன், ஏனைய பிரமச்சாரி, வானப்பிரதன், சந்நியாசி ஆகிய மூவர்க்கும் உதவி செய்பவன் ஆவான். 2. துறந்தார்க்கும் துவ்வா தவக்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (ப-உ) துறந்தார்க்கும்- ஆதரவின்றி விடப்பட்டோர்க்கும். துவ்வாதவர்க்கும்- ஏழைகளுக்கும். இறந்தார்க்கும்- அநாதையாக இறந்தார்க்கும். இல்வாழ்வான் என்பான்- இல்லறத்தில் வாழ் கிறவன் என்பவனே. துணை- துணையாவான். (க-து) ஆதரவற்றவர்க்கும், ஏழைகட்கும், இறந்தவர்க்கும் இல்வாழ்பவனே துணையாவான். 3. தென்புலத்தார், தெய்வம், விருந்து,ஒக்கல், தான்என்றுஆங்கு ஐம்புலத்துஆறு ஓம்பல் தலை. (ப-உ) தென்புலத்தார்- பிதிர்க்கள். தெய்வம்- தேவர். விருந்து- அதிதிகள். ஒக்கல்- சுற்றத்தார். தான்- தான். என்று ஆங்கு- என்று சொல்லப்பட்ட. ஐம்புலத்து- ஐந்திடத்தில் உள்ளவர்களையும். ஆறு ஓம்பல் - அறநெறி தவறாமல் பாது காத்தல். தலை - சிறந்ததாகும். (க-து) பிதிரர், தெய்வம், விருந்து, உறவினர், தான் என்ற ஐவரையும் காத்தல் இல்லறத்தான் கடமை. 4. பழிஅஞ்சிப் பாத்துஊண் உடைத்தாயின், வாழ்க்கை, வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல். (ப-உ) பழி அஞ்சி- பாவத்துக்கு அஞ்சிப் பொருள் சம்பாதித்து. பாத்து- அப்பொருளை முன் கூறியவர்களுக்குப் பகுத்துக் கொடுத்து. ஊண் - உண்பதாக. வாழ்க்கை- ஒருவனுடைய வாழ்க்கை. உடைத்து ஆயின்- அமைந்திருக்கு மானால். வழி-அவன்சந்ததி. எஞ்சுல்-குறைதல். எஞ்ஞான்றும் இல்- ஒருநாளும் இல்லை. (க-து) நல்வழியிலே சம்பாதித்துப் பிறர்க்கும் உதவி உண்பவன் சந்ததி அழியாது. 5. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது. (ப-உ) இல்வாழ்க்கை- ஒருவனுடைய இல்வாழ்க்கை யானது. அன்பும் - அன்பையும். அறனும்- அறத்தையும். உடைத்து ஆயின்- கொண்டிருக்குமானால். அது- அதுவே அந்த இல் வாழ்க்கையின். பண்பும்- தன்மையும். பயனும்- பலனும் ஆகும். (க-து) அன்பும், தருமமுமே இல்வாழ்க்கையின் இயல்பும் பயனும் ஆகும். 6. அறத்துஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்துஆற்றின் போஓஒய்ப் பெறுவது எவன்? (ப-உ) அறத்து ஆற்றின்- தரும நெறியிலே. இல்வாழ்க்கை- இல்லறத்தை. ஆற்றின்- நடத்தினால். புறத்து ஆற்றின்- வேறு வழியிலே. போஓஒய்- சென்று. பெறுவது- அடையும் பயன். எவன்- யாது? (க-து) தரும நெறியிலே இல்லறத்தை நடத்துவதைவிடச் சிறந்த வழி வேறு ஒன்றும் இல்லை. 7. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. (ப-உ) இயல்பினான்- இல்லறத்திற்குரிய தன்மையுடன். இல்வாழ்க்கை- இல்லறத்திலே வாழ்பவன். என்பான்- வாழ் கின்றவன் என்பவனே. முயல்வாருள் எல்லாம்- நன்மைபெற முயல்கின்றவர்கள் எல்லாருள்ளும். தலை- சிறந்தவன் ஆவான். (க-து) தருமநெறியிலே இல்வாழ்க்கையில் வாழ்கின்றவனே சிறந்தவன் ஆவான். 8. ஆற்றின் ஒழுக்கி, அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. (ப-உ) ஆற்றின்- பிறரையும் நல்வழியிலே. ஒழுக்கி- நடக்கச் செய்து. அறன் இழுக்கா- தானும் அறநெறியில் தவறாமல் வாழ்கின்ற. இல்வாழ்க்கை- இல்லற வாழ்வே. நோற்பாரின்- தவஞ் செய்கின்றவர்களின் வாழ்க்கையைவிட. நோன்மை உடைத்து- சிறப்புடையதாகும். (க-து) அறநெறிப்படி இல்வாழ்க்கை நடத்துகின்றவன் வாழ்வு தவத்தைவிடச் சிறந்ததாகும். 9. அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும் பிறன்பழிப்பது இல்ஆயின் நன்று. (ப-உ) அறன் எனப்பட்டது- நூல்களால் அறம் என்று பெருமையாகச் சொல்லப்பட்டது. இல்வாழ்க்கை - இல்லற மேயாகும். அஃதும்- அதுவும். பிறன் பழிப்பது- பிறனால் பழிக்கப்படும் தன்மை. இல்ஆயின்- இல்லாமலிருந்தால். நன்று- சிறந்ததாகும். (க-து) பிறரால் பழிக்கப்படாமல் இல்லறம் நடத்துவதே சிறந்தது; உயர்ந்த தர்மம். 10. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப்படும். (ப-உ) வையத்துள்- இவ்வுலகிலே. வாழ்வு ஆங்கு- வாழும் முறைப்படி. வாழ்பவன்- இல்லறத்தில் வாழ்பவன். வான் உறையும்- விண்ணுலகில் இருக்கின்ற. தெய்வத்துள்- தேவருள் ஒருவனாக. வைக்கப்படும்- எண்ணப்படுவான். (க-து) இல்லறத்தைக் குற்றமின்றி நடத்துவோன், தேவருள் ஒருவனாக மதிக்கப்படுவான். 6. வாழ்க்கைத் துணைநலம் இல்வாழ்வுக்குத் துணையாகிய மனையாளின் நல்ல பண்புகள். 1. மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித் தன்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (ப-உ) மனைத்தக்க- குடும்ப வாழ்வுக்குத் தகுந்த. மாண்பு உடையள் ஆகி- சிறந்த குணங்களை உடையவளாய். தன் கொண்டான்- தன்னை மணந்துகொண்ட கணவனது. வளம் தக்காள்- செல்வத்துக்குத் தக்கவாறு செலவு செய்பவள். வாழ்க்கைத் துணை- மனைவியாவாள். (க-து) கணவனது செல்வத்துக்குத் தக்கவாறு செலவு செய்பவளே மனைவியாவாள். 2. மனைமாட்சி இல்லாள்கண் இல்ஆயின், வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல். (ப-உ) மனைமாட்சி - இல்லறத்துக்குத் தகுந்த சிறந்த குணங்கள். இல்லாள்கண் - மனைவியிடம். இல் ஆயின்- இல்லை யானால். வாழ்க்கை - அந்த இல்வாழ்க்கை. எனை- எவ்வளவு. மாட்சித்து ஆயினும் - சிறந்த செல்வத்தையுடையதாயினும். இல்- அதனால் பெருமையில்லை. (க-து) மனைவியிடம் நற்குணம் இல்லாவிட்டால், அக் குடும்பத்துக்குப் பெருமையில்லை. 3. இல்லதுஎன் இல்லவள் மாண்புஆனால்; உள்ளதுஎன் இல்லவள் மாணாக் கடை. (ப-உ) இல்லவள்- மனைவி. மாண்பு ஆனால்- சிறந்த குணங்களை உடையவளாயிருந்தால். இல்லது என்- அவனுக்கு இல்லாத செல்வம் யாது? இல்லவள்- மனையாள். மாணாக் கடை- சிறப்பற்றவளாயிருந்தால். உள்ளது என்- அவனுக்கு உள்ள செல்வந்தான் யாது? (க-து) சிறந்த குணமுள்ள மனைவியே ஒருவனுக்குச் செல்வம் ஆவாள். 4. பெண்ணின் பெரும்தக்க யாஉள? கற்புஎன்னும் திண்மைஉண் டாகப் பெறின். (ப-உ) கற்பு என்னும்- கற்பு என்று சொல்லப்படும். திண்மை- வலிமை. உண்டாகப்பெறின்- இருக்கப்பெற்றால், பெண்ணின்- அந்த மனைவியைக் காட்டிலும். பெரும்தக்க - உயர்ந்த செல்வம். யாஉள- எவை இருக்கின்றன? (க-து) ஒருவன் அடையும் செல்வங்களில், கற்புள்ள மனைவியே சிறந்த செல்வம். 5. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதுஎழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. (ப-உ) தெய்வம் தொழாஅள்- தெய்வத்தை வணங்காத வளாய். கொழுநன்- கணவனையே. தொழுது- வணங்கி. எழுவாள்- எழுந்திருப்பவள். பெய் என- பெய் என்று சொன்னால். பெய்யும் மழை - மழை பொழியும். (க-து) கணவனையே தெய்வமாக வணங்குகின்றவள், மழை பெய் என்றால் மழை பெய்யும். 6. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்வுஇலாள் பெண். (ப-உ) தன்காத்து- தன்னைக் காப்பாற்றிக் கொண்டு. தன் கொண்டான் பேணி- தன்னைக் கொண்ட கணவனையும் பாது காத்து. தகைசான்ற - பெருமை நிறைந்த. சொல் காத்து- சொல் உண்டாகும்படி காப்பாற்றி. சோர்வு இலாள்- நல்ல செயல்களை மறக்காதவளே. பெண்- இல்லறத்திற்குரிய பெண்ணாவாள். (க-து) நற்குணமும், நல்ல செய்கையும் உடையவளே சிறந்த மனைவியாவாள். 7. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. (ப-உ) சிறை- பாதுகாவலில் வைத்து. காக்கும்- காப்பாற்றும். காப்பு- காவல். என் செய்யும்- என்ன பயனைத் தரும்? மகளிர்- பெண்கள். நிறை- கற்பினால். காக்கும்- தம்மைத் தாமே காத்துக்கொள்ளும். காப்பே - காவலே. தலை- சிறந்ததாகும். (க-து) பெண்கள் தம் கற்பைத் தாமே காத்துக்கொள்வது தான் சிறந்தது. அவர்கள் கற்பைக் காவல் வைத்துக் காப்பதால் பயன் இல்லை. 8. பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெரும்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. (ப-உ) பெற்றான்- தம்மை மனைவியாகப் பெற்ற கணவனை. பெறின்- வணங்குந் தன்மையைப் பெறுவாராயின். பெண்டிர்- அப்பெண்கள். புத்தேளிர்- தேவர்கள். வாழும் உலகு- வாழ்கின்ற உலகத்தில். பெரும் சிறப்பு- பெரிய சிறப்பை. பெறுவர் - அடைவார்கள். (க-து) கணவனை வணங்கி வாழும் மனைவியர் தேவருலகில் தேவர்களால் போற்றப்படுவார்கள். 9. புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. (ப-உ) புகழ்- கீர்த்தியை. புரிந்த- விரும்பிய. இல் இல்லோர்க்கு- மனைவி இல்லாதவர்க்கு. இகழ்வார் முன்- தம்மை இகழ்ந்து பேசும் பகைவர் முன். ஏறுபோல்- ஆண்சிங்கம் போல். பீடு நடை- கெம்பீரமாக நடக்கும் நடை. இல்லை- உண்டாகாது. (க-து) மனைவி கற்பில்லாதவளாயின், பகைவர் முன் தலைநிமிர்ந்து நடக்க முடியாது. 10. மங்கலம் என்ப மனைமாட்சி, மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு. (ப-உ) மனைமாட்சி- மனைவியின் சிறந்த குணங்களே. மங்கலம் என்ப- நன்மை என்று சொல்வர். நன் மக்கள் பேறு- நல்ல மக்களைப் பெறுதல். மற்றுஅதன்- அந்த நன்மையின். நன்கலம்- நல்ல ஆபரணமாகும். (க-து) மனைவியின் சிறந்த குணங்களே நன்மை. அந் நன்மையின் ஆபரணம் மக்களைப் பெறுதல். 7. மக்கள் பேறு மக்களைப் பெறுவது. 1. பெறும்அவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த மக்கள்பேறு அல்ல பிற. (ப-உ) பெறும் அவற்றுள்- பெறத் தகுந்த செல்வங்களில். அறிவு அறிந்த- அறிய வேண்டியவைகளை அறிந்த. மக்கள் பேறு அல்ல- மக்களைப் பெறுவதைத் தவிர. பிற- வேறு செல்வங்களை. யாம் அறிவது இல்லை- நாம் மதிப்பதில்லை. (க-து) ஒருவன் அடையும் செல்வங்களில் மக்களைப் பெறுதலே சிறந்த செல்வமாம். 2. எழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின். (ப-உ) பழிபிறங்கா - பிறரால் பழிக்கப்படாத. பண்பு உடை- நற்குணங்களையுடைய. மக்கள் பெறின்- மக்களைப் பெற்றால். எழுபிறப்பும்- அவனை ஏழு பிறப்பிலும். தீயவை தீண்டா- துன்பங்கள் தொடமாட்டா. (க-து) நற்குணங்கள் உள்ள மக்களைப் பெற்றவனை ஏழு பிறப்பிலும் துன்பங்கள் சேரா. 3. தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள் தம்தம் வினையான் வரும். (ப-உ) தம் மக்கள்- தமது மக்களை. தம் பொருள்- தம்முடைய பொருள்கள். என்ப- என்று அறிஞர் சொல்வர். அவர் பொருள்- அம் மக்களின் பொருள். தம்தம் வினையான்- அவரவர்களின் வினையின் பயனால். வரும்- உண்டாகும். (க-து) தந்தையின் செல்வம் மக்கள்; மக்களின் செல்வம் அவர்கள் செய்யும் வினை. 4. அமிழ்தினும் ஆற்ற இனிதே, தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ். (ப-உ) தம் மக்கள்- தம்முடைய மக்களின். சிறுகை- சிறிய கைகளால். அளாவிய- குழப்பப்பட்ட. கூழ்- உணவு. அமிழ்தினும்- அமுதத்தைவிட. ஆற்ற- மிகவும். இனிது ஏ- இனிமையாக இருக்கும். ஏ; அசை. (க-து) குழந்தைகளின் சிறு கையால் பிசைந்த உணவு, பெற்றோர்க்கு அமுதைவிட இனிமையாக இருக்கும். 5. மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம்; மற்றுஅவர் சொல்கேட்டல் இன்பம் செவிக்கு. (ப-உ) மக்கள்- தாம் பெற்ற மக்களின். மெய்- உடம்பை. தீண்டல்- தொடுதல். உடற்கு இன்பம்- உடம்புக்கு இன்பம். மற்று அவர்- அக்குழந்தைகளின். சொல் கேட்டல்- சொற்களைக் கேட்பது. செவிக்கு இன்பம்- காதுக்கு இன்பம் ஆகும். (க-து) மக்களின் உடம்பைத் தொடுவது உடம்புக்கும், சொற்களைக் கேட்பது காதுக்கும் இன்பமாகும். 6. குழல்இனிது யாழ்இனிது என்ப, தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர். (ப-உ) தம் மக்கள்- தம்முடைய மக்களின். மழலைச் சொல்- குதலைச் சொற்களை. கேளாதவர்- கேட்டு மகிழாதவர்களே. குழல் இனிது- புல்லாங்குழல் ஓசை இனிமையானது. யாழ் இனிது- யாழ்ஒலி இனிமையானது. என்ப- என்று சொல்வர். (க-து) தம் மக்களின் குதலைமொழிகளைக் கேட்கா தவர்களே, குழலோசையும் யாழ்ஒலியும் இனிமையானவை என்பர். 7. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல். (ப-உ) தந்தை- தகப்பன். மகற்கு ஆற்றும்- மகனுக்குச் செய்யும். நன்றி- நன்மையாவது. அவையத்து- கற்றவர் சபையிலே. முந்தி இருப்ப- முதலிடத்தில் இருக்கும்படி. செயல்- செய்வதாகும். (க-து) தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை அவனைக் கற்றவர் கூட்டத்தில் முதலிடத்தில் இருக்கும் படி கல்லியறி வுள்ளவனாக்குதல். 8. தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்உயிர்க் கெல்லாம் இனிது. (ப-உ) தம் மக்கள்- தனது மக்களின். அறிவுடைமை- அறிவுச் செல்வம். தம்மின்- தமக்கு இன்பந் தருவதை விட. மாநிலத்து- பெரியஉலகில். மன்- நிலைத்து வாழும். உயிர்க்கு எல்லாம்- உயிர்களுக்கெல்லாம். இனிது- அதிக இன்பந் தருவதாகும். (க-து) தம் மக்களின் அறிவு, தம்மைவிட உலகினர்க்கு அதிக இன்பம் தரும். 9. ஈன்ற பொழுதில் பெரிதுஉவக்கும், தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். (ப-உ) தன் மகனை- தனது மகனைப்பற்றி. சான்றோன் என - அறிவுடையவன் என்று சொல்வதை. கேட்ட தாய்- கேட்ட தாயானவள். ஈன்றபொழுதில்- அவனைப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சியைவிட. பெரிது உவக்கும்- மிகவும் மகிழ்ச்சியடைவாள். (க-து) தாய் தன் மகனை அறிஞன் என்று சொல்வதைக் கேட்டால், அவள் அவனைப் பெற்ற காலத்தைவிட மிகவும் மகிழ்ச்சியடைவாள். 10. மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி, இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல். (ப-உ) மகன் தந்தைக்கு- மகன் தன் தகப்பனுக்கு. ஆற்றும் உதவி- செய்யும் உதவியாவது. இவன் தந்தை- இவனுடைய தகப்பன். என் நோற்றான்கொல்- இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ. எனும் சொல்- என்னும் சொல்லைப் பெறுவதாம். (க-து) இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் புரிந்தானோ என்று பிறர் சொல்லும்படி நடப்பதே மகன் தந்தைக்குச் செய்யும் உதவி. 8. அன்புடைமை உள்ளத்தில் அன்பு என்னும் பண்புடன் வாழ்வது. 1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர் புன்கண்நீர் பூசல் தரும். (ப-உ) அன்பிற்கும்- அன்புக்கும். அடைக்கும்தாழ்- அதைப் பிறர் காணாமல் அடைத்து வைக்கும் தாழ்ப்பாள். உண்டோ- இருக்கின்றதோ? ஆர்வலர்- அன்புள்ளவர்களின். புன்கண்நீர்- சிறிய கண்ணீரே. பூசல் தரும்- உள்ளிருக்கும் அன்பை வெளிப் படுத்தும் (க-து) அன்புள்ளவரைக் காணும்போது அவர் விடும் கண்ணீர் அன்பை வெளிப்படுத்தும். 2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. (ப-உ) அன்பு இலார்- அன்பு இல்லாதவர்கள். எல்லாம்- எல்லாச் செல்வங்களையும். தமக்கு உரியர்- தமக்கே உரிமையாகக் கொள்ளுவார்கள். அன்புடையார்- அன்புள்ளவர்கள். என்பும்- தம் உடம்பையும். பிறர்க்கு உரியர்- பிறர் நன்மைக்கு உரிமையாக்குவர். (க-து) அன்பில்லார், எல்லாச் செல்வத்தையும் தமக்காகவே வைத்திருப்பவர்; அன்புள்ளவர், தம் உடலையும் பிறர்க்கு உரிமை ஆக்குவர். 3. அன்போடு இயைந்த வழக்குஎன்ப ஆர்உயிருக்கு என்போடு இயைந்த தொடர்பு. (ப-உ) ஆர் உயிர்க்கு- அருமையான மக்கள் உயிர்க்கு. என்போடு- உடம்போடு. இயைந்த- பொருந்திய. தொடர்பு- சம்பந்தத்தை. அன்போடு இயைந்த- அன்புடன் பொருந்திய. வழக்கு- வாழ்வின் பயன். என்ப- என்று கூறுவர். (க-து) அன்புடன் அமைந்து வாழும் வாழ்வின் பயனே உடலுக்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தமாகும். 4. அன்புஈனும் ஆர்வம் உடைமை; அதுஈனும் நண்புஎன்னும் நாடாச் சிறப்பு. (ப-உ) அன்பு- அன்பானது. ஆர்வம் உடைமை- பிறரிடம் அன்பு காட்டும் தன்மையை. ஈனும் - அளிக்கும். அது- அந்த அன்பு. நண்பு என்னும்- நட்பு என்று சொல்லப்படும். நாடாச் சிறப்பு- அளவற்ற சிறப்பை. ஈனும்- தரும். (க-து) அன்பு ஆசையை உண்டாக்கும்; அது நட்பையும் உண்டாக்கும். 5. அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. (ப-உ) வையகத்து - உலகத்தில். இன்பு உற்றார்- இன்பம டைந்து வாழ்கின்றவர். எய்தும்- அடையும். சிறப்பு- பெருமையை. அன்பு உற்று- அன்பை உடையவராய். அமர்ந்த- வாழ்ந்த. வழக்கு என்ப- வாழ்வின் பயன் என்பர். (க-து) அன்புடன் வாழும் வாழ்வின் பயனே- உலகில் இன்புற்று வாழ்வோர் அடையும் சிறப்பாகும். 6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் மறத்திற்கு அஃதே துணை. (ப-உ) அறியார்-அறியாதவர். அறத்திற்கே- அறத்திற்கு மட்டுந்தான். அன்பு சார்பு- அன்பு துணையாகும். என்ப - என்பார்கள். மறத்திற்கும்- பாவத்தை நீக்குவதற்கும். அஃதே துணை- அந்த அன்பே துணையாகும். (க-து) தருமத்துக்கு அன்பு துணையாவதோடு, பாவத்தை நீக்கவும் அதுவே துணையாகும். 7. என்பு இலதனை வெயில்போலக் காயுமே அன்பு இலதனை அறம். (ப-உ) என்பு இலதனை- எலும்பில்லாத புழுவை. வெயில் போல- வெய்யில் சுடுவதுபோல. அன்பு இலதனை - அன்பு இல்லாத உயிரை. அறம் காயும்ஏ- தருமம் துன்புறுத்தும். ஏ- அசை. (க-து) எலும்பில்லாத புழுக்களை வெயில் சுடுவது போல், அன்பில்லாத உயிர்களை அறம் துன்புறுத்தும். 8. அன்புஅகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம்தளிர்த்து அற்று. (ப-உ) அன்பு அகத்து இல்லா- அன்பு உள்ளத்தில் இல்லாமல். உயிர் வாழ்க்கை- உயிர் வாழும் வாழ்வானது. வன்பால் கண்- கடினமான பாலைநிலத்திலே. வற்றல் மரம்- பட்டுப்போன மரம். தளிர்த்து அற்று- துளிர் விட்டதுபோல் ஆகும். (க-து) அன்பில்லாத வாழ்வு, பாலைவனத்தில் பட்ட மரம் தளிர்த்ததுபோல் ஆகும். 9. புறத்துஉறுப் பெல்லாம் எவன்செய்யும், யாக்கை அகத்துஉறுப்பு அன்பில் அவர்க்கு. (ப-உ) யாக்கை அகத்து உறுப்பு- உடம்பின் உள் அவயவ மாகிய. அன்பு இல்அவர்க்கு- அன்பு இல்லாதவர்க்கு. புறத்து உறுப்பு- வெளி அவயவங்கள். எல்லாம்- எல்லாம் இருந்தும். எவன் செய்யும்- என்ன பயன் உண்டு? (க-து) உள்ளத்திலே அன்பு இல்லாதவர்க்கு வெளி உறுப்புக்களால் பயன் இல்லை. 10. அன்பின் வழியது உயிர்நிலை; அஃதுஇலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. (ப-உ) அன்பின் வழியது- அன்புநெறியில் வாழ்வதே. உயிர் நிலை- உயிர் வாழும் உடம்பாகும். அஃது இலார்க்கு- அந்த அன்பு இல்லாதவர்க்கு. உடம்பு- உடம்பானது. என்பு தோல் போர்த்த- வெறும் எலும்பைத் தோலால் மூடப்பட்ட வெற்றுடம்புதான். (க-து) அன்புள்ள உடம்பே உயிருள்ள உடம்பு; அன்பில்லாத உடம்பு உயிர் இல்லாத உடம்பு. 9. விருந்து ஓம்பல் விருந்தினரைப் பாதுகாப்பது. 1. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம், விருந்துஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு. (ப-உ) இல்- வீட்டிலே. இருந்து ஓம்பி- இருந்து பொருள் களைக் காப்பாற்றி. வாழ்வது எல்லாம்- இல்லறத்தில் வாழ்வ தெல்லாம். விருந்து- விருந்தினரை. ஓம்பி- உபசரித்து. வேளாண்மை- உதவி செய்தல். பொருட்டு - செய்வதற்கேயாம். (க-து) இல்லறத்தில் வாழ்வது விருந்தினரைக் காப்பாற்று வதற்காகத்தான். 2. விருந்து புறத்ததாத் தான்உண்டல், சாவா மருந்துஎனினும், வேண்டல்பாற்று அன்று. (ப-உ) விருந்து- விருந்தினர். புறத்ததுஆ- வெளியில் இருக்க. தான் உண்டல்- தான் மட்டும் சாப்பிடுவது. சாவா மருந்து எனினும் - அமுதமாயினும். வேண்டல்பாற்று அன்று- அது விரும்புந்தன்மையுள்ளது அன்று. (க-து) விருந்தினரை வெளியில் வைத்துவிட்டுத் தான் மட்டும் உள்ளிருந்து உண்ணுதல் வெறுக்கத்தக்கது. 3. வருவிருந்து, வைகலும் ஓம்புவான் வாழ்க்கை, பருவந்து பாழ்படுதல் இன்று. (ப-உ) வருவிருந்து- தன்னிடம் வரும் விருந்தினரை. வைகலும்- தினந்தோறும். ஓம்புவான்- உபசரிப்பவனுடைய. வாழ்க்கை- வாழ்வானது. பருவந்து- வருந்தி. பாழ்படுதல் இன்று - கெடுவதில்லை. (க-து) விருந்தினரைக் காப்பாற்றுவோன் வறுமையால் அழியமாட்டான். 4. அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன்அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். (ப-உ) முகன் அமர்ந்து- முகத்தால் விரும்பி. நல்விருந்து- நல்ல விருந்தினரை. ஓம்புவான்- காப்பாற்றுகின்றவனுடைய. இல்- வீட்டில். அகன் அமர்ந்து- மன விருப்பத்துடன். செய்யாள்- இலக்குமி. உறையும்- வாழ்வாள். (க-து) விருந்தினரை மகிழ்ச்சியுடன் உபசரிப்பவன் வீட்டிலேதான் செல்வம் நிறைந்திருக்கும். 5. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ? விருந்துஓம்பி மிச்சில் மிசைவான் புலம். (ப-உ) விருந்து ஓம்பி- விருந்தினரை உபசரித்த பின். மிச்சில்- மீதமானதை. மிசைவான்- உண்பவனுடைய. புலம்- விளைநிலத்திலே. வித்தும்- விதையும். இடல் வேண்டும் கொல்ஓ- போடவேண்டுமோ? (வேண்டுவதில்லை.) (க-து) விருந்தினரை உபசரிப்பவனது விளை நிலம் தானே விளையும். 6. செல்விருந்து ஓம்பி, வருவிருந்து பார்த்திருப்பான், நல்விருந்து வானத் தவர்க்கு. (ப-உ) செல்விருந்து- வந்த விருந்தினரை. ஓம்பி- உபசரித்து. வருவிருந்து- வருகின்ற விருந்தினரையும். பார்த்து இருப்பான்- எதிர்பார்த்துக்கொண்டிருப்பவன். வானத்தவர்க்கு- வானத்தில் உள்ள தேவர்களுக்கு. நல்விருந்து- நல்ல விருந்தினன் ஆவான். (க-து) விருந்தினரை உபசரிப்பவன் தேவர்களுக்குச் சிறந்த விருந்தினனாகச் செல்வான். 7. இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை, விருந்தின் துணைத்துணை, வேள்விப் பயன். (ப-உ) வேள்விப் பயன்- விருந்தினரை உபசரிக்கும் வேள்வியின் பயன். இனைத்துணைத்து- இவ்வளவு தான். என்பது ஒன்று இல்லை- என்பதாகிய அளவு ஒன்றும் இல்லை. விருந்தின்- விருந்தினரின். துணை- தகுதியாகிய அளவே. துணை- அளவாகும். (க-து) விருந்தே வேள்வி. அதன் பயனை அளவிட முடியாது. விருந்தினர் தகுதியே அதன் அளவாகும். 8. பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர், விருந்துஓம்பி வேள்வி தலைப்படா தார். (ப-உ) விருந்து ஓம்பி- விருந்தினரை உபசரித்து. வேள்வி- அந்த யாகத்தில். தலைப்படாதார்- ஈடுபடாதவர். பரிந்து ஓம்பி- பொருள்களை வருந்திப் பாதுகாத்து பின்பு அதை இழந்தபின். பற்று அற்றேம்- ஆசையற்றோம். என்பர்- என்று கூறி வருந்துவர். (க-து) விருந்தினரை உபசரிக்காதவர்கள், செல்வத்தை இழந்தபின், செல்வத்தில் எங்களுக்கு ஆசையில்லை என்பர். 9. உடைமையுள் இன்மை, விருந்தோம்பல் ஓம்பா மடமை; மடவார்கண் உண்டு. (ப-உ) உடைமையுள்- செல்வம் உள்ள காலத்தில். இன்மை - வறுமையாவது. விருந்து ஓம்பல்- விருந்தினரை உபசரிப்பதை. ஓம்பா- விரும்பாத. மடமை- அறியாமையாகும். மடவார்கண்- அறிவில்லாதவரிடமே. உண்டு- அம் மடமை உண்டு. (க-து) செல்வத்துள் வறுமை விருந்தினரை இகழ்தல்; அறிவற்றவரிடமே இச்செயல் உண்டு. 10. மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து. (ப-உ) அனிச்சம்- அனிச்சப்பூ. மோப்ப - முகர்ந்தவுடன். குழையும்- வாடிப்போகும்; அதுபோல். முகம் திரிந்து- முகம் வேறுபட்டு. நோக்க - பார்த்தவுடன். விருந்து- விருந்தினர் உள்ளம். குழையும்- வாடிப் போகும். (க-து) முகர்ந்தால்தான் அனிச்சப்பூ வாடும்; அன்பின்றிப் பார்த்தாலே விருந்தினர் உள்ளம் வருந்தும். 10. இனியவை கூறல் இனிய மொழிகளைப் பேசுவது. 1. இன்சொலால், ஈரம் அளைஇப், படிறுஇலவாம், செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். (ப-உ) செம்பொருள்- அறநெறியை. கண்டார்- அறிந்தவர் களின். வாய்ச்சொல்-வாய்ச்சொற்கள். இன்சொல்லால்- இனிய சொற்களால் ஆகி. ஈரம் அளைஇ - அன்பு கலந்து. படிறு இலஆம் - வஞ்சனையற்றவைகளாக இருக்கும். (க-து) அறநெறியை அறிந்தவர்கள் இனிமையுடன், அன்புடன், வஞ்சனையற்ற தன்மையுடன் உரையாடுவார்கள். 2. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே, முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். (ப-உ) முகன் அமர்ந்து- முகமலர்சியுடன். இன்சொலன் ஆக- இனியசொல்லை உடையவனாக. பெறின்- இருக்கும் தன்மை யைப் பெற்றால் அது. அகன் அமர்ந்து- மனத்தால் விரும்பி. ஈதலின்- பொருள் கொடுப்பதைவிட. நன்றே- சிறந்ததாம். (க-து) மனமகிழ்ந்து பொருள் கொடுப்பதைவிட இன் சொற்களைக் கூறுவதே சிறந்ததாம். 3. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தான்ஆம் இன்சொலின் அதே அறம். (ப-உ) முகத்தான் அமர்ந்து- முகத்தால் விரும்பி. இனிது நோக்கி- மகிழ்ச்சியுடன் பார்த்து. அகத்தான் ஆம்- உள்ளத்தி லிருந்து தோன்றி வருகின்ற. இன்சொலின் அதே- இனிய சொல்லில் உள்ளதே. அறம்- தருமமாகும். (க-து) உள்ளன்புடன் கூறும் இனிய சொல்லே அறமாகும். 4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும், யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொல் அவர்க்கு. (ப-உ) யார்மாட்டும்- எல்லோரிடத்திலும். இன்பு உறூஉம்- இன்பம் அடையத்தக்க. இன்சொல் அவர்க்கு- இனிய மொழி களைப் பேசுவோர்க்கு. துன்புஉறூஉம்- துன்பத்தைத் தரும். துவ்வாமை- வறுமை. இல்ஆகும்-இல்லையாம். (க-து) இனிய சொற்களைப் பேசுவோர் வறுமையால் வாடமாட்டார்கள். 5. பணிவுடையன், இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி, அல்ல மற்றுப் பிற. (ப-உ) பணிவு உடையன்- வணக்கம் உள்ளவனாய். இன் சொலன்- இனிய சொல்லை உடையவனாய். ஆதல்- இருத்தலே. ஒருவற்கு- ஒருவனுக்கு. அணி- ஆபரணங்களாம். அல்ல மற்று- பணிவும் இன்சொல்லும் அல்லாத மற்றவை. பிற- வேறாகும். (க-து) பணிவும், இனிய சொல்லுமே ஒருவனுக்கு ஆபரண மாகும். 6. அல்லவை தேய, அறம்பெருகும்; நல்லவை நாடி இனிய சொலின். (ப-உ) நல்லவை- நன்மைதரும் சொற்களை. நாடி- ஆராய்ந்து. இனிய- இனிமையாக. சொலின்- பேசுவானாயின். அல்லவை- பாவங்கள். தேய- தேய்ந்து அழிய. அறம் பெருகும்- தருமம் வளரும். (க-து) நன்மை தரும் இனிய மொழிகளைக் கூறுவதனால் பாவம் தேயும்; தருமம் வளரும். 7. நயன்ஈன்று நன்றி பயக்கும், பயன்ஈன்று பண்பில் தலைப்பிரியாச் சொல். (ப-உ) பயன் ஈன்று- நல்ல பலனைக் கொடுத்து. பண்பில்- நன்மையிலிருந்து. தலைப்பிரியா- நீங்காத. சொல்- இனிய சொற்கள். நயன்ஈன்று- இன்பத்தைத் தந்து. நன்றி பயக்கும்- நன்மையையும் கொடுக்கும். (க-து) இனிய சொற்கள் இன்பத்தையும், நன்மையையும் தரும். 8. சிறுமையுள் நீங்கிய இன்சொல், மறுமையும், இம்மையும், இன்பம் தரும். (ப-உ) சிறுமையுள் நீங்கிய- பிறர்க்குத் துன்பம் தராத. இன்சொல்- இனிய சொற்கள். மறுமையும்- மறுபிறப்பிலும். இம்மையும்- இப்பிறப்பிலும். இன்பம் தரும்- இன்பத்தைத் தரும். (க-து) இனிய சொற்கள் இருபிறப்பிலும் இன்பந் தரும். 9. இன்சொல் இனிதுஈன்றல் காண்பான், எவன்கொலோ வன்சொல் வழங்கு வது? (ப-உ) இன்சொல்- இனிமையான சொற்கள். இனிது ஈன்றல்- இன்பம் தருவதை. காண்பான்- அநுபவித்து அறிகின்றவன். வன்சொல்- கடுஞ்சொற்களை. வழங்குவது- சொல்வது. எவன் கொல்ஓ- என்ன பயனை எண்ணியோ? (க-து) இன்சொல் இன்பத்தைத் தருவதைக் கண்டும் கடுஞ்சொற் பேசுவது ஏன்? 10. இனிய உளஆக இன்னாத கூறல், கனிஇருப்பக் காய்கவர்ந்து அற்று. (ப-உ) இனிய- இனிய மொழிகள். உளஆக- இருக்கும்போது. இன்னாத- கடுஞ்சொற்களை. கூறல்- பேசுவது. கனிஇருப்ப- இனிய பழம் இருக்கவும். காய்- அதைத் தின்னாமல் காயை. கவர்ந்துஅற்று- எடுத்துத் தின்பதைப் போலாம். (க-து) இன்சொற் பேசாமல் கடுஞ்சொற் கூறுதல், பழத்தைத் தின்னாமல் காயைத் தின்பதுபோலாம். 11. செய்ந்நன்றி அறிதல் பிறர் செய்த நன்மையை அறிதல். 1. செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும், வானகமும் ஆற்றல் அரிது. (ப-உ) செய்யாமல்- தான் ஒரு உதவியும் செய்யாதிருக்கும் போது. செய்த- தனக்குப் பிறர் செய்த. உதவிக்கு- நன்றிக்குப் பதிலாக. வையகமும்- மண்ணுலகையும். வான் அகமும்- விண்ணுலகையும். ஆற்றல்- ஈடாகக் கொடுத்தாலும். அரிது- அவ்வுதவிக்கு ஒப்பாகாது. (க-து) தான் உதவி செய்யாதபோது தனக்கு ஒருவன் செய்த உதவிக்கு ஈடான உதவி ஒன்றும் இல்லை. 2. காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. (ப-உ) காலத்தினால்- தகுந்த சமயத்திலே. செய்த நன்றி- செய்த உதவி. சிறிது எனினும்- சிறிதாக இருந்தாலும் அது. ஞாலத்தின்- உலகத்தைவிட மாணப்பெரிது- மிகவும் பெரிதாகும். (க-து) தக்க சமயத்தில் செய்த நன்மை உலகை விடப் பெரிதாகும். 3. பயன்தூக்கார் செய்த உதவி, நயன்தூக்கின், நன்மை, கடலின் பெரிது. (ப-உ) பயன்தூக்கார்- தமக்கு வரும் பலனை ஆராயாமல். செய்த உதவி- செய்த உதவியின். நயன்- சிறப்பை. தூக்கின்- ஆராய்ந்தால். நன்மை- அதன் நன்மை. கடலின் பெரிது- கடலின் அளவைவிடப் பெரிதாகும். (க-து) பயன் கருதாமல் செய்யும் உதவி கடலினும் பெரிதாகும். 4. தினைத்துணை நன்றி செயினும், பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். (ப-உ) தினைத்துணை- ஒருவன் தினை அளவு. நன்றி செயினும்- நன்மையைச் செய்தாலும். பயன் தெரிவார்- அதன் பயனை ஆராய்கின்றவர். பனைத் துணையா - அச்சிறிய உதவியைப் பனை அளவாக. கொள்வர்- நினைத்துக் கொள்வார்கள். (க-து) பெரியோர் தினையளவு நன்மையையும் பனை யளவு பெரிதாகக் கொள்வர். 5. உதவி வரைத்து அன்றுஉதவி; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. (ப-உ) உதவி- உதவியானது. உதவி வரைத்து அன்று- உதவியின் அளவையுடையதன்று. உதவி செயப்பட்டார்- உதவியைப் பெற்றுக்கொண்டவரின். சால்பின்- தகுதியின். வரைத்து- அளவுடையதாம். (க-து) உதவியைப் பெற்றுக்கொண்டவரின் தகுதியே உதவியின் அளவாம். 6. மறவற்க மாசற்றார் கேண்மை; துறவற்க துன்பத்துள் துப்புஆயார் நட்பு. (ப-உ) மாசு அற்றார்- குற்றமற்றவர்களின். கேண்மை- உறவை. மறவற்க- மறக்கக்கூடாது. துன்பத்துள் - துன்பம் வந்தபோது. துப்புஆயார்- உதவியாக இருந்தவர்களின். நட்பு- சினேகத்தை. துறவற்க- விடக்கூடாது. (க-து) குற்றமற்றவர் நட்பை மறக்கக்கூடாது; ஆபத்தில் உதவி செய்தவர் நட்பை விடக்கூடாது. 7. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர், தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. (ப-உ) தம்கண்- தம்முடைய. விழுமம்- துன்பத்தை. துடைத்தவர்- நீக்கியவர்களின். நட்பு- சினேகத்தை. எழுமை- உண்டாகும். எழுபிறப்பும்- ஏழு பிறப்பிலும். உள்ளுவர்- நினைப் பார்கள். (க-து) பெரியோர், தம் துன்பத்தை நீக்கியவர்களை ஏழு பிறப்பிலும் மறக்கமாட்டார். 8. நன்றி மறப்பது நன்றுஅன்று; நன்றுஅல்லது அன்றே மறப்பது நன்று. (ப-உ) நன்றி மறப்பது- ஒருவர் செய்த நன்மையை மறப்பது. நன்று அன்று- அறம் அன்று. நன்று அல்லது- தீமையை. அன்றே மறப்பது- செய்த அப்பொழுதே மறப்பது. நன்று- அறமாகும். (க-து) பிறர் செய்த நன்மையை மறந்துவிடக் கூடாது; தீமையை உடனே மறந்துவிட வேண்டும். 9. கொன்றுஅன்ன இன்னா செயினும், அவர்செய்த ஒன்றுநன்று, உள்ளக் கெடும். (ப-உ) கொன்று அன்ன- கொன்றதைப்போன்ற. இன்னா செயினும்- துன்பத்தைச் செய்தாலும். அவர் செய்த- அவர் முன்பு செய்த. ஒன்று நன்று- ஒருநன்மையை. உள்ள- நினைக்க. கெடும்- அத்துன்பம் கெடும். (க-து) ஒருவர் நமக்குத் தீமை செய்யினும், அவர் முன் செய்த நன்மை ஒன்றை நினைத்தாலே அத் தீமை அழியும். 10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வுஇல்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (ப-உ) எந்நன்றி கொன்றார்க்கும்- எந்த அறத்தை அழித்தவர்க்கும். உய்வு- தப்பிக்கும் வழி. உண்டு ஆம்- உண்டு. செய்நன்றி- பிறர் செய்த உதவியை. கொன்ற மகற்கு- கெடுத்த மனிதனுக்கு. உய்வு இல்லை- அப்பாவத்திலிருந்து தப்பிக்க வழி யில்லை. (க-து) எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்பிக்க வழி உண்டு; செய் நன்றியை அழித்தோர்க்குத் தப்பிக்க வழியில்லை. 12. நடுவு நிலைமை அறத்திலே தவறாமல் நடத்தல். 1. தகுதி எனஒன்று நன்றே, பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். (ப-உ) பகுதியால்- ஒவ்வொரு வகையிலும். பாழ்பட்டு- நீதி முறையை விடாமல். ஒழுகப்பெறின்- பின்பற்றி நடப்பதாயின். தகுதி என- நடுவுநிலைமை என்று சொல்லப்பட்ட. ஒன்று- ஒரு அறமே. நன்றே- சிறந்ததாகும். (க-து) யாரிடமும் நடுவுநிலைமையுடன் நடப்பதே சிறந்த அறமாகும். 2. செப்பம் உடையவன் ஆக்கம், சிதைவுஇன்றி, எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. (ப-உ) செப்பம் உடையவன்- நடுவு நிலைமை உள்ளவனது. ஆக்கம்- செல்வமானது. சிதைவு இன்றி- அழிந்து போகாமல். எச்சத்திற்கும்- அவன் சந்ததிக்கும். ஏமாப்பு- உறுதியான. உடைத்து- நன்மை தருவதாக இருக்கும். (க-து) நடுவுநிலைமையுள்ளவன் செல்வம் அழியாது அவன் சந்ததிக்கும் பயன்தரும். 3. நன்றே தரினும், நடுவுஇகந்துஆம் ஆக்கத்தை, அன்றே ஒழிய விடல். (ப-உ) நன்றே தரினும்- நன்மையையே தருவதானாலும். நடுவு இகழ்ந்து ஆம்- நடுவுநிலைமை தவறுவதால் வரும். ஆக்கத்தை- செல்வத்தை. அன்றே- அப்போதே. ஒழியவிடல்- நீங்கும்படி கைவிடுக. (க-து) நடுவுநிலைமை தவறுவதால் வரும் செல்வம் நன்மை தருவதாயினும் அதைக் கைவிடுக. 4. தக்கார் தகவுஇலர் என்பது, அவர்அவர் எச்சத்தால் காணப்படும். (ப-உ) தக்கார்- நடுவுநிலைமை உள்ளவர். தகவு இலர்- நடுவுநிலைமை இல்லாதவர். என்பது- என்னும் செய்தி. அவர் அவர் எச்சத்தால்- அவர்களின் பிள்ளைகளால். காணப்படும்- அறியத்தகும். (க-து) நடுவுநிலைமை உள்ளவர் அல்லது இல்லாதவர் என்பதை அவர்கள் சந்ததியால் அறியலாம். 5. கேடும் பெருக்கமும் இல்அல்ல. நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி. (ப-உ) கேடும்- செல்வம் அழிவதும். பெருக்கமும்- செல்வம் வளர்வதும். இல் அல்ல- இல்லாதவை அல்ல; இயற்கை. நெஞ்சத்து - உள்ளத்திலே. கோடாமை- நடுவுநிலைமை தவறாமல் வாழ்வதே. சான்றோர்க்கு- அறிவுள்ளோர்க்கு. அணி- அழகாகும். (க-து) நடுவுநிலைமை தவறாமையே அறிவுடையோர்க்கு அழகாகும். 6. கெடுவல் யான்என்பது அறிக, தன்நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். (ப-உ) தன் நெஞ்சம்- தனது மனம். நடுவு ஒரீஇ - நடுவு நிலைமை தவறி. அல்ல செயின்- தீமை செய்ய நினைக்குமாயின்; அப்பொழுது. கெடுவல் யான்- அழிவேன் நான். என்பது அறிக- என்பதை அறிய வேண்டும். (க-து) ஒருவன் கெடுவதற்குமுன் அறிவிப்பு, அவன் மனம் நடுவுநிலைமையிலிருந்து தவறுதலாகும். 7. கெடுவாக வையாது உலகம், நடுவாக நன்றிக்கண் தங்கியான் வாழ்வு. (ப-உ) நடுவாக- நடுவுநிலைமையிலே இருந்து. நன்றிக்கண்- அறநெறியிலே. தங்கியான்- நிலைத்திருப்பவனுடைய. தாழ்வு- வறுமையை. கெடுவாக- கெடுதியானது என்று. உலகம்- உலக மானது. வையாது- வைத்துக்கொள்ளாது. (க-து) நடுவுநிலைமையுள்ளோரின் வறுமையை உலகம் தீமை என்று கொள்ளாது. 8. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து,ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. (ப-உ) சமன்செய்து- தன்னைச் சமமாகச்செய்து கொண்டு. சீர்தூக்கும்- பொருளை அளவாக நிறுக்கும். கோல்போல் அமைந்து- தராசுக் கோல்போல் இருந்து. ஒருபால்- ஒரு பக்கத்திலே. கோடாமை- சாயாமல் இருப்பதே. சான்றோர்க்கு- அறிவுள்ளவர்க்கு. அணி- அழகாகும். (க-து) ஒரு பக்கமாக இல்லாமல் நடுவுநிலைமையில் இருப்பதே அறிவுள்ளோர்க்கு அழகாகும். 9. சொல்கோட்டம் இல்லது செப்பம், ஒருதலையா உள்கோட்டம் இன்மை பெறின். (ப-உ) ஒருதலையா- உறுதியாக. உள்- மனத்தில். கோட்டம் இன்மை- கோணுதல் இல்லாமையை. பெறின்- பெற்றால். சொல்- சொல்லிலும். கோட்டம் இல்லது- இல்லாமலிருப்பது. செப்பம்- நடுவுநிலைமையாம். (க-து) சொல்லில் கோணுதல் இல்லாமையே நடுவுநிலை மையாம். 10. வாணிகம் செய்வார்க்கு வாணிகம்; பேணிப் பிறவும் தம்போல் செயின். (ப-உ) பிறவும்- பிற பொருள்களையும். தம்போல்- தம்முடைய பொருள்போல். பேணி- பாதுகாத்து. செயின்- செய்தால். வாணிகம் செய்வார்க்கு- வியாபாரம் செய்வார்க்கு. வாணிகம் - நல்ல வியாபாரமாம். (க-து) பிறர் பொருளையும் தமது பொருள்போல் பாதுகாத்து வியாபாரம் செய்வதே சிறந்த வியாபாரம். 13. அடக்கம் உடைமை கெட்ட வழிகளில் செல்லாமல் அடங்கி நடத்தல்.. 1. அடக்கம் அமரர்உள் உய்க்கும், அடங்காமை ஆர்இருள் உய்த்து விடும். (ப-உ) அடக்கம் - அடக்கமானது. அமரர்உள்- தேவர் உலகத்துள். உய்க்கும் - சேர்க்கும். அடங்காமை - அடங்காமை யானது. ஆர்இருள் - நிறைந்த இருட்டாகிய நரகத்தில். உய்த்து விடும்- சேர்த்துவிடும். (க-து) அடக்கம் தேவலோகத்தைத் தரும்; அடங்காமை நரகத்தைத் தரும். 2. காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் ஆதனின்ஊஉங்கு இல்லை உயிர்க்கு. (ப-உ) அடக்கத்தை - அடங்கி நடப்பதை. பொருளா - சிறந்த பொருளாக. காக்க - காப்பாற்றுக. உயிர்க்கு - மக்களுக்கு. அதனின்ஊஉங்கு - அதைவிடச் சிறந்த. ஆக்கம் - செல்வம். இல்லை- வேறு இல்லை. (க-து) நல்வழியில் அடங்கி வாழ்வதே சிறந்த செல்வமாகும். 3. செறிவுஅறிந்து சீர்மை பயக்கும், அறிவுஅறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். (ப-உ) அறிவு அறிந்து - அறியவேண்டியவற்றை அறிந்து. ஆற்றின் - நல்வழியில். அடங்கப்பெறின் - அடங்கி நடக்கும் தன்மையைப் பெற்றால். செறிவு - அந்த அடக்கமானது. அறிந்து - நல்லோரால் அறியப்பட்டு. சீர்மை பயக்கும் - சிறப்பைத் தரும். 4. நிலையில் திரியாது, அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. (ப-உ) நிலையில்- தனது நிலைமையிலிருந்து. திரியாது - வேறுபடாமல். அடங்கியான் - அடங்கி நடப்பவனது. தோற்றம் - உயர்வு. மலையினும் - மலையைவிட. மாணப் பெரிது - மிகவும் உயர்ந்ததாகும். (க-து) அடங்கி வாழ்கின்றவன் உயர்வு மலையைவிட மிகவும் பெரிது. 5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல், அவர்உள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. (ப-உ) பணிதல் - அடக்கமுடன் வாழ்தல். எல்லார்க்கும் - எல்லோர்க்கும். நன்று ஆம் - நல்லதாகும். அவர் உள்ளும் - அவர்களுக்குள். செல்வர்க்கே- செல்வம் உள்ளவர்களுக்கு. செல்வம் - மற்றொரு செல்வம்போன்ற. தகைத்து - சிறப்புள்ள தாகும். 6. ஒருமையுள், ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து. (ப-உ) ஒருமையுள் - ஒரு பிறப்பில். ஆமைபோல் - ஆமையைப்போல. ஐந்து - ஐம்பொறிகளையும். அடக்கல் ஆற்றின் - அடக்கி ஆளும் வல்லமையைப் பெறுவானாயின் அது. எழுமையும் - ஏழு பிறப்பிலும். ஏமாப்பு உடைத்து - பாதுகாப்பை உடையதாம். (க-து) ஒரு பிறப்பிலே ஒருவன் தனது பொறிகளை அடக்கியாள்வானாயின், அது அவனுக்கு ஏழு பிறப்பிலும் நன்மைதரும். 7. யாகாவார் ஆயினும் நாகாக்க, காவாக்கால் சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு. (ப-உ) யா - யாவற்றையும். காவார் ஆயினும் - காத்துக் கொள்ளாவிட்டாலும். நா - நாக்கையாவது. காக்க - காத்துக் கொள்க. காவாக்கால் - காத்துக்கொள்ளா விட்டால். சொல் இழுக்குப்பட்டு - சொற் குற்றத்தில் அகப்பட்டு. சோகாப்பர் - துன்பப்படுவார்கள். (க-து) எவற்றைக் காக்காவிடினும் சொல்லைக் காத்துக் கொள்ளவேண்டும். இன்றேல் சொற்சோர்வால் வருந்துவர். 8. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றுஆகாது ஆகி விடும். (ப-உ) தீச்சொல்- தீய சொற்களின். பொருள் பயன்- பொருளால் உண்டாகும் தீமை. ஒன்றானும்- ஒன்றாவது. உண்டாயின் - ஒருவனிடம் தோன்றுமாயின் அதனால். நன்று - வேறு நன்மையும். ஆகாது ஆகிவிடும்- தீமையாகிவிடும். (க-து) ஒருவன் சொல்லால் ஒரு தீமை உண்டாயினும் அதனால் அவன் நன்மையெல்லாம் தீமையாகிவிடும். 9. தீயினால் சுட்டபுண் உள்ஆறும்; ஆறாதே நாவினால் சுட்ட வடு. (ப-உ) தீயினால்- நெருப்பால். சுட்டபுண்- சுட்டபுண் உடம்பிலிருந்தாலும். உள்ஆறும்- மனத்துள் ஆறிவிடும். நாவினால் - சொற்களையுடைய நாவினாலே. சுட்ட வடு- சுட்ட வடுவானது. ஆறாதுஏ- என்றும் ஆறாது. ஏ; அசை. (க-து) தீயால் சுட்டபுண் ஆறும்; சொல்லால் சுட்டபுண் ஆறாது. 10. கதம்காத்து கற்றுஅடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (ப-உ) கதம்- கோபத்தை. காத்து - தோன்றாமல் காத்து. கற்று- கல்வி கற்று. அடங்கல்- அடங்கி நடப்பதிலும். ஆற்றுவான்- வல்லவனாயிருப்பவனை. செவ்வி- அடையும் சமயத்தை. அறம்- அறமானது. ஆற்றின்- அவன் செல்லும் வழியிலே. நுழைந்து- புகுந்து. பார்க்கும்- பார்த்திருக்கும். (க-து) சினம் இல்லாதவனை, கல்வி கற்று அடக்கம் உள்ளவனை அறம் தானே தேடி அடையும். 14. ஒழுக்கம் உடைமை நல்லொழுக்கத்துடன் வாழ்வது. 1. ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். (ப-உ) ஒழுக்கம்- நல்லொழுக்கமே. விருப்பம்- சிறப்பை. தரலான்- தருவதால். ஒழுக்கம்- ஆசாரம். உயிரினும்- உயிரை விடச் சிறந்ததாக. ஓம்பப்படும்- காப்பாற்றத் தகும். (க-து) ஒழுக்கம் உயிரைக் காட்டிலும் சிறந்ததாகும். 2. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம், தெரிந்துஓம்பித் தேரினும் அஃதே துணை. (ப-உ) ஒழுக்கம்- ஒழுக்கத்தை. பரிந்து- வருந்தியும். ஓம்பி- அழியாமல். காக்க- காப்பாற்றுக. தெரிந்து- ஆராய்ந்து. ஓம்பி-போற்றி. தேரினும்- அறிந்தாலும். அஃதே- அந்த ஒழுக்கமே. துணை- துணையாய் நிற்கும். (க-து) ஒழுக்கமே சிறந்த துணை; ஆதலால் அதனைக் காப்பாற்றுக. 3. ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். (ப-உ) ஒழுக்கம் உடைமை- ஆசாரம் உடைமையே. குடிமை- உயர்ந்த குடியின் தன்மை. இழுக்கம்- ஒழுக்கந் தவறுதல். இழிந்த பிறப்பு ஆய்விடும்-தாழ்ந்த குடிப்பிறப்பாக முடிந்துவிடும். (க-து) ஒழுக்கம் உயர்ந்த குடியின் தன்மை; ஒழுக்க மில்லாமை தாழ்ந்த குடியின் இயல்பு. 4. மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும், பார்ப்பான் பிறப்புஒழுக்கம் குன்றக் கெடும். (ப-உ) ஒத்து- கற்ற வேதத்தை. மறப்பினும்- மறந்தாலும். கொளல் ஆகும்- பின்னும் கற்றுக்கொள்ளலாம். பார்ப்பான்- பார்ப்பானுடைய. பிறப்பு- பிறப்பின் உயர்வு. ஒழுக்கம் குன்ற - ஒழுக்கம் கெடுவதனால். கெடும் - அழிந்துபோகும். (க-து) பார்ப்பான் வேதத்தை மறந்தாலும் கற்றுக் கொள்ளலாம்; ஒழுக்கம் கெட்டால் அவன் உயர்வு அழியும். 5. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்கம் இலான்கண் உயர்வு. (ப-உ) அழுக்காறு - பொறாமை. உடையான் கண் - உள்ளவனிடம். ஆக்கம்போன்று - செல்வம் இல்லாதது போல. ஒழுக்கம் - ஆசாரம். இலான்கண் - இல்லாதவனிடம். உயர்வு இல்லை - முன்னேற்றம் இல்லை. (க-து) ஒழுக்கமற்றவன் உயர்வடையமாட்டான். 6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து. (ப-உ) இழுக்கத்தின் - ஒழுக்கம் தவறுவதால். ஏதம் - குற்றம். படுபாக்கு - உண்டாவதை. அறிந்து - உணர்ந்து. உரவோர் - மன வலிமையுள்ளவர். ஒழுக்கத்தின் - ஆசாரத்தில். ஒல்கார் - குறையமாட்டார்கள். (க-து) ஆசாரத்தில் குறைவது இழிவாகும் என்பதை அறிந்து பெரியோர்கள் அதைக் கைவிடமாட்டார்கள். 7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. (ப-உ) ஒழுக்கத்தின் - ஆசாரத்தினால் அனைவரும். மேன்மை - உயர்வை. எய்துவர் - அடைவார்கள். இழுக்கத்தின் - ஒழுக்கத் தவறுவதால். எய்தாப் பழி - அடைய முடியாத பெரிய பழியை. எய்துவர் - அடைவார்கள். (க-து) ஒழுக்கம் உயர்வு தரும்; ஒழுக்கமின்மை இழிவைத் தரும். 8. நன்றிக்கு வித்துஆகும் நல்லொழுக்கம், தீஓழுக்கம் என்றும் இடும்பை தரும். (ப-உ) நல்ஒழுக்கம் - நல்ல நடத்தை. நன்றிக்கு - நன்மைக்கு. வித்து ஆகும் - விதை ஆகும். தீ ஒழுக்கம் - கெட்ட நடத்தை. என்றும் - எப்பொழுதும். இடும்பை தரும் - துன்பத்தையே கொடுக்கும். (க-து) நன்னடத்தை நன்மை தரும்; கெட்ட நடத்தை துன்பந்தரும். 9. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே, தீய வழுக்கியும் வாயால் சொலல். (ப-உ) தீய - கெட்ட சொற்களை. வழுக்கியும் - தவறியும். வாயால் சொலல் - வாயினால் சொல்லுதல். ஒழுக்கம் உடை யவர்க்கு - நல்லொழுக்கம் உள்ளவர்களுக்கு. ஒல்லாஏ - பொருந்தாது. ஏ: அசை. (க-து) தீய சொற்களைக் கூறுதல் ஒழுக்கமுடையவர்க்குப் பொருந்தாது. 10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல், பலகற்றும் கல்லார் அறிவிலா தார். (ப-உ) பல கற்றும் - பல நூல்களைப் படித்திருந்தாலும். உலகத்தோடு - உலகத்தாருடன். ஒட்ட ஒழுகல் - பொருந்த நடப்பதை. கல்லார் - கற்காதவர். அறிவு இலாதார் - அறிவில்லா தவர். (க-து) கற்றவராயினும் - உலகத்தோடு ஒத்து வாழக் கற்காதவர் அறிவற்றவர். 15. பிறன்இல் விழையாமை பிறர் மனையாளின்மேல் ஆசை கொள்ளாமை. 1. பிறன்பொருளான் பெட்டுஒழுகும் பேதமை, ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். (ப.-உ) பிறன் பொருளாள் - பிறன் உடைமையான மனைவியை. பெட்டு - விரும்பி. ஒழுகும் - நடக்கின்ற. பேதைமை- அறியாமை. ஞாலத்து- உலகில். அறம்- அறத்தையும். பொருள்-பொருளையும். கண்டார்கள்- ஆராய்ந்தவர்களிடம். இல்- இல்லை. (க-து) பெரியோர்கள் பிறன் மனைவியை விரும்ப மாட்டார்கள். 2. அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். (ப-உ) அறன்கடை- பாவத்திலே. நின்றாருள் எல்லாம்- நிற்கின்றவர் எல்லோருள்ளும். பிறன்கடை- பிறன் மனைவியை விரும்பி அவன் வீட்டுவாசலில். நின்றாரின்- நின்றவரைவிட. பேதையார்- அறிவில்லாதவர். இல்- யாரும் இல்லை. (க-து) பிறன் மனைவியை விரும்புகின்றவர்களைப் போன்ற மூடர்கள் ஒருவரும் இல்லை. 3. விளிந்தாரின் வேறுஅல்லர், மன்ற தெளிந்தார்இல், தீமை புரிந்துஒழுகு வார். (ப-உ) மன்ற- ஐயம் இல்லாமல். தெளிந்தார்- நம்பியவரின். இல்- மனை யாளரிடம். தீமை புரிந்து- தீமை செய்து. ஒழுகுவார்- நடப்பவர். விளிந்தாரின்- செத்தவரைவிட. வேறு அல்லர்- வேறானவர் அல்லர். (க-து) தம்மை நம்பியவரின் மனைவியிடம் பாவம் செய்பவர் உயிரோடிருந்தாலும் இறந்தவரே ஆவார். 4. எனைத்துணையர் ஆயினும் என்னாம், தினைத்துணையும் தேரான், பிறன்இல் புகல். (ப-உ) தினைத்துணையும்- தினை அளவும். தேரான்- தன் குற்றத்தை எண்ணாமல். பிறன்இல்- பிறன் மனையாளரிடம். புகல்- செல்லும் தன்மை உள்ளவன். எனைத் துணையர்- எவ்வளவு துணைவர்களை. ஆயினும்- கொண்டவன் ஆயினும். என்ஆம்- அதனால் என்ன பயன் உண்டு? (க-து) பிறன் மனைவியை இச்சிப்பவனுக்கு எவ்வளவு துணைவர்கள் இருந்தும் பெருமையில்லை. 5. எளிதுஎன இல்இறப்பான் எய்தும், எஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. (ப-உ) எளிது என- இது சுலபமானது என்று நினைத்து. இல்- பிறன் மனைவியிடம். இறப்பான்- செல்லுகின்றவன். எஞ்ஞான்றும்- எப்பொழுதும். விளியாது- அழியாமல். நிற்கும்- நிலைத்திருக்கும். பழி- இழிவை. எய்தும்- அடைவான். (க-து) பிறன் மனைவியிடம் செல்லுவோன் எப்பொழுதும் அழியாத பழியை அடைவான். 6. பகை,பாவம் அச்சம் பழிஎன நான்கும் இகவாஆம் இல்இறப்பான் கண். (ப-உ) பகை- விரோதம். பாவம்- பாவம். அச்சம்- பயம். பழி- அவதூறு. என நான்கும் - என்ற நான்கு குற்றங்களும். இல்- பிறன்மனைவியிடம். இறப்பான் கண்- செல்கின்றவனிடம். இகவா ஆம்- நீங்காமல் நிற்பனவாம். (க-து) பிறன் மனைவியைச் சேர்வோனிடம் பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கு குற்றங்களும் நீங்காமல் நிற்கும். 7. அறன்இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன்இயலாள் பெண்மை நயவா தவன். (ப-உ) அறன் இயலான்- அறத்தின் இயல்புடன். இல் வாழ்வான்- இல்லறத் திலே வாழ்கின்றவன். என்பான்- என்பவன். பிறன் இயலாள்- பிறனுக்கு உரிமையுள்ள மனைவியின். பெண்மை- பெண் தன்மையை. நயவாதவன்- விரும்பாதவனே ஆவான். (க-து) பிறன் மனைவியை விரும்பாதவனே அறநெறியிலே இல்லறம் நடத்துவோன் ஆவான். 8. பிறன்மனை நோக்காதபேர் ஆண்மை, சான்றோர்க்கு அறன்ஒன்றோ? ஆன்ற ஒழுக்கு. (ப-உ) பிறன்மனை- பிறன் மனைவியை. நோக்காத - விரும்பிப் பார்க்காத. பேர்ஆண்மை- சிறந்த ஆண்மை. அறன் ஒன்றோ- உயர்ந்த அறம் ஒன்று மட்டுமா? ஆன்ற ஒழுக்கு- நிறைந்த ஒழுக்கமும் ஆகும். (க-து) பிறர் மனைவியை விரும்பாமையே அறிவுடை யோரின் சிறந்த ஒழுக்கமாகும். 9. நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில், பிறற்குஉரியாள் தோள்தோயா தார். (ப-உ) நாமநீர் வைப்பில்- அச்சந்தரும் கடல்சூழ்ந்த உலகில். நலக்கு உரியார்- நன்மைக்கு உரியவர். யார் எனின்- யார் என்றால். பிறற்கு உரியாள்- பிறனுக்கு உரிய மனைவியின். தோள்- தோளை. தோயாதார்- தழுவாதவரே ஆவர். (க-து) பிறன் மனைவியைத் தழுவாதவர்களே எல்லா நன்மைகளுக்கும் உரியவர்கள். 10. அறன்வரையான் அல்ல செயினும், பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. (ப-உ) அறன்- அறநெறியை. வரையான்-மேற்கொள்ளா தவனாய். அல்ல- பாவங்களையே. செயினும்- செய்வான் ஆயினும். பிறன் வரையாள்- பிறனுக்கு உரியவளின். பெண்மை- பெண் தன்மையை. நயவாமை நன்று - விரும்பாமல் இருத்தல் நல்லது. (க-து) பாவமே செய்பவனாயினும், பிறன் மனைவியை விரும்பாமல் வாழ்தல் நன்மையாகும். 16. பொறை உடைமை பொறுமையைப் பின்பற்றும் தன்மை. 1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வாரைப் பொறுத்தல் தலை. (ப-உ) அகழ்வாரை- தன்னை வெட்டுகின்றவரை. தாங்கும்- சுமக்கும். நிலம்போல- பூமியைப்போல. தம்மை இகழ்வாரை- தம்மை நிந்திப்பவரின் குற்றத்தை. பொறுத்தல்- பொறுத்துக் கொள்ளுதல். தலை- சிறந்த அறமாகும். (க-து) தம்மைப் பழிப்பவரின் குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளுவதே சிறந்த தருமம். 2. பொறுத்தல், இறப்பினை என்றும்; அதனை மறத்தல், அதனினும் நன்று. (ப-உ) இறப்பினை - ஒருவனுடைய வரம்பு மீறிய குற்றத்தை. என்றும் - எப்பொழுதும். பொறுத்தல் - பொறுத்துக் கொள்ளுக. அதனை மறத்தல் - அக்குற்றத்தை மறந்து விடுதல். அதினினும் - அப்பொறுமையைவிட. நன்று - நல்லது. (க-து) பிறர் செய்த பிழையைப் பொறுத்துக் கொள்ளுதல் நலம்; அதை மறந்துவிடுதல் அதைவிடச் சிறந்தது. 3. இன்மையுள் இன்மை, விருந்துஓரால்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை (ப-உ) இன்மையுள் இன்மை- வறுமையுள் வறுமையாவது. விருந்து ஓரால்- விருந்தினரை இகழ்தல். வன்மையுள் வன்மை- வல்லமையுள் வல்லமையாவது. மடவார்- அறிவிலாதார் செய்த தீமையை. பொறை- பொறுத்துக் கொள்ளுதல். (க-து) வறுமையுள் வறுமை விருந்தினரைப் போற்றாமை. வல்லமையுள் வல்லமை அறியாதார் பிழையைப் பொறுத்தல். 4. நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறைஉடைமை போற்றி ஒழுகப் படும். (ப-உ) நிறை உடைமை- நிறைந்த குணங்களாகிய செல்வம். நீங்காமை- தன்னை விட்டு நீங்காமலிருப்பதை. வேண்டின்- ஒருவன் விரும்பினால். பொறை உடைமை- பொறுமை என்னும் செல்வத்தை. போற்றி- பாதுகாத்து. ஒழுகப்படும்- வாழவேண்டும். (க-து) நிறைந்த குணங்களை விரும்புகின்றவன் பொறுமை யுடன் வாழவேண்டும். 5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே; வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து. (ப-உ) ஒறுத்தாரை- துன்பம் செய்தவரை. ஒன்றாக- ஒருபொருளாக. வையார்ஏ- அறிவுள்ளோர் தம் மனத்துள் வைக்கமாட்டார். பொறுத்தாரை- பொறுத்துக் கொண்டவர் களை. பொன்போல்- பொன்னைப்போல். பொதிந்து- பாதுகாத்து. வைப்பர்- மனத்துள் வைப்பர். ஏ; அசை. (க-து) பெரியோர்கள் பொறுமையுள்ளவர்களை மறக்க மாட்டார்கள். 6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ். (ப-உ) ஒறுத்தார்க்கு- தீமை செய்தவரைத் தண்டித்தவர்க்கு. ஒருநாளை- ஒருநாள்தான். இன்பம்- இன்பம் உண்டு. பொறுத் தார்க்கு- பொறுத்துக் கொண்டவர்க்கு. பொன்றும் துணையும்- இறக்கும் வரையிலும். புகழ்- பெருமையுண்டு. (க-து) தண்டித்தவர்க்கு ஒருநாள்தான் இன்பம்; பொறுத் தவர்க்கு இறக்கும் வரையிலும் புகழ் உண்டு. 7. திறன்அல்ல தற்பிறர் செய்யினும்; நோ,நொந்து, அறன்அல்ல செய்யாமை நன்று. (ப-உ) திறன் அல்ல- தகாத தீமைகளை. தன்- தனக்கு. பிறர் செய்யினும்- பிறர் செய்தாலும். நோ- அத்துன்பத்துக்காக. நொந்து- வருந்தி. அறன் அல்ல- அறமற்ற தீமைகளை. செய்யாமை- செய்யாமலிருப்பதே. நன்று - நன்மையாகும். (க-து) பிறர் தனக்குத் தீமை செய்தாலும் தான் தீமை செய்யாமலிருப்பதுதான் நல்லது. 8. மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியால் வென்று விடல். (ப-உ) மிகுதியால்- கர்வத்தினால். மிக்கவை- தீமைகளை. செய்தாரை- செய்தவர்களை. தாம்தம்- தாம் தமது. தகுதியால் - பொறுமையினால். வென்றுவிடல்- வெல்வாராக. (க-து) கர்வத்தால் பிறர் செய்யும் தீமையைப் பொறுமை யால் வெல்லவேண்டும். 9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். (ப-உ) இறந்தார்- நல்வழியைக் கடந்தவரது. வாய்- வாயிலிருந்து வரும். இன்னாச்சொல்- கொடுஞ் சொற்களை. நோற்கிற்பவர்- பொறுத்துக் கொள்ளுகின்றவர். துறந்தாரின் -துறந்தவரைப் போன்ற. தூய்மை உடையர்- பரிசுத்தம் உள்ளவர் ஆவார். (க-து) கெட்டவர்களின் கொடுஞ் சொற்களைப் பொறுப் போர் துறவிகள் போன்ற பரிசுத்தமுள்ளவர் ஆவர். 10. உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும், இன்னாச்சொல் நோற்பாரின் பின். (ப-உ) உண்ணாது- சாப்பிடாமல். நோற்பார்- தவம் கிடப்பவர். பிறர் சொல்லும் - பிறர் கூறும். இன்னாச் சொல்- கொடுஞ் சொற்களை. நோற்பாரின்- பொறுத்துக் கொள்ளு கின்றவர்களின். பின்- அடுத்தபடிதான். பெரியர்- பெரியோர் ஆவர். (க-து) பசிநோயைப் பொறுக்கும் தவசிகளைவிட பிறர் பேசும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவரே பெரியவர். 17. அழுக்காறாமை பிறரைக் கண்டு பொறாமைப்படாமல் இருத்தல். 1. ஒழுக்குஆறாக் கொள்க ஒருவன், தன்நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. (ப-உ) ஒருவன் தன் நெஞ்சத்து- ஒருவன் தனது மனத்திலே. அழுக்காறு - பொறாமை. இலாத இயல்பு- இல்லாமல் வாழும் தன்மையை. ஒழுக்கு- ஒழுக்கத் தின். ஆறாஆ- சிறந்த வழியாக. கொள்க- கொள்ளுக. (க-து) பொறாமையின்றி வாழ்வதையே சிறந்த ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும். 2. விழுப்பேற்றின் அஃதுஒப்பது இல்லை; யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். (ப-உ) யார்மாட்டும்- யாவரிடத்திலும். அழுக்காற்றின் அன்மை- பொறாமை யில்லாமல். பெறின்- வாழப் பெற்றால். விழு- சிறந்த. பேற்றின்- செல்வங்களில். அஃது ஒப்பது- அதைப் போன்றது. இல்லை- வேறு ஒன்றும் இல்லை. (க-து) ஒருவரிடமும் பொறாமை கொள்ளாமல் வாழ்வதே சிறந்த செல்வம். 3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம் பேணாது அழுக்கறுப் பான். (ப-உ) அறன்- தருமத்தையும். ஆக்கம்- செல்வத்தையும். வேண்டாதான் என்பான்- விரும்பாதவன் என்பவனே. பிறன் ஆக்கம்- பிறருடைய செல்வத்தைக் கண்டு. பேணாது - மகிழாமல். அழுக்கறுப்பான்- பொறாமைப்படுவான். (க-து) பிறன் செல்வங் கண்டு பொறாமைப்படுகின்றவன் அறத்தையும் செய்யான்; பொருளையும் அடையமாட்டான். 4. அழுக்காற்றின் அல்லவை செய்யார், இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. (ப-உ) இழுக்கு ஆற்றின்- பொறாமையாகிய குற்றச் செயலால். ஏதம்- துன்பம். படுபாக்கு- உண்டாவதை. அறிந்து- தெரிந்து. அழுக்காற்றின்- பொறாமையினால். அல்லவை- தீமைகளை. செய்யார்- செய்ய மாட்டார்கள் அறிஞர்கள். (க-து) பெரியோர் பொறாமையால் பாவங்களைச் செய்ய மாட்டார்கள். 5. அழுக்காறு உடையாருக்கு அதுசாலும்; ஒன்னார் வழுக்கியும், கேடுஈன் பது. (ப-உ) அழுக்காறு- பொறாமை. உடையார்க்கு- உள்ளவர்க்கு. அது சாலும்-அதுவே போதும். ஒன்னார்- பகைவர்கள். வழுக்கியும் - தீமை செய்யத் தவறினாலும். கேடு ஈன்பது- பொறாமையே கெடுதியைத் தரும். (க-து) பகைவர் தீமை செய்யத் தவறினாலும் பொறாமை தீமை செய்யத் தவறாது. 6. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம், உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். (ப-உ) கொடுப்பது- ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு. அழுக்கறுப்பான்- பொறாமைப்படுகின்றவனுடைய. சுற்றம்- உறவினர் கூட்டம். உடுப்பதூஉம்- உடையும். உண்பதூஉம் - உணவும். இன்றி- இல்லாமல். கெடும்- அழியும். (க-து) பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகின்றவனது சுற்றம் வறுமையால் அழியும். 7. அவ்வித்து அழுக்காறு உடையானைச், செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். (ப-உ) அழுக்காறு உடையானை- பொறாமையுள்ள வனைக் கண்டு. செய்யவள்- திருமகள். அவ்வித்து- பொறாமைப் பட்டு. தவ்வையை- தன் தமக்கைக்கு. காட்டி- காண்பித்து. விடும்- அவனை விட்டு நீங்குவாள். (க-து) பொறாமையுள்ளவனை மூதேவிக்குக் காட்டி விட்டு, இலக்குமி நீங்குவாள். 8. அழுக்காறு எனஒரு பாவி, திருச்செற்றுத், தீஉழி உய்த்து விடும். (ப-உ) அழுக்காறு என- பொறாமை என்று கூறப்படும். ஒரு பாவி- ஒப்பில்லாத பாவி. திருச்செற்று- செல்வத்தையும் அழித்து. தீ உழி- நரகில். உய்த்து விடும்- செலுத்திவிடும். (க-து) பொறாமை என்னும் பாவி செல்வத்தையும் அழிப்பான்; நரகத்திற்கும் செலுத்துவான். 9. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும், நினைக்கப் படும். (ப-உ) அவ்விய நெஞ்சத்தான் - பொறாமை படைத்த மனமுள்ளவனது. ஆக்கமும் - செல்வமும். செவ்வியான் - பொறா மையில்லாத நல்லவனது. கேடும் - வறுமையும். நினைக்கப்படும் - ஆராயத்தக்கவையாம். (க-து) பொறாமையுள்ளவனது செல்வமும், பொறாமை யற்றவனது வறுமையும் பழவினையால் ஆனவை. 10. அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதுஇல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல். (ப-உ) அழுக்கற்று - பொறாமைப்பட்டு. அகன்றாரும் - செல்வத்தில் பெரு கினவர்களும். இல்லை - இல்லை. அஃது இல்லார் - அப் பொறாமை இல்லாதவர் களில். பெருக்கத்தின் - செல்வத்திலிருந்து. தீர்ந்தாரும் - நீங்கினவர்களும். இல் - இல்லை. (க-து) பொறாமையால் செல்வம் பெற்றவர்களும், பொறாமையில்லாமை யால் செல்வம் அற்றவர்களும் இல்லை. 18. வெஃகாமை பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள நினைக்காமல் இருத்தல். 1. நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின், குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். (ப-உ) நடுவு இன்றி - ஒருவன் அநியாயமாக. நன்பொருள் - பிறருடைய நல்ல பொருளை. வெஃகின் - கைப்பற்ற விரும் பினால். குடிபொன்றி - அதனால் அவன் குடி அழிந்து. குற்றமும் - பல குற்றங்களையும். ஆங்கே - அப்பொழுதே. தரும் - கொடுக்கும். (க-து) அநியாயமாகப் பிறர்பொருளை விரும்புகின்றவன் குடி அழியும்; அவன் பல குற்றங்களுக்கும் ஆளாவான். 2. படுபயன் வெஃகிப், பழிபடுவ செய்யார், நடுவுஅன்மை நாணு பவர். (ப-உ) நடுவு அன்மை - நடுநிலையற்றவைகளைக் கண்டு. நாணுபவர் - அஞ்சி நாணுகின்றனர். படுபயன் - பிறர் செல் வத்தைக் கவர்வதால் வரும் பயனை. வெஃகி - விரும்பி. பழிபடுவ - இழிவுண்டாகும் செயல்களை. செய்யார் - செய்ய மாட்டார்கள். (க-து) அநீதிக்கு அஞ்சுவோர். பிறர் பொருளைக் கவரும் பழிச் செயலைச் செய்யமாட்டார். 3. சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே மற்றுஇன்பம் வேண்டு பவர். (ப-உ) மற்று இன்பம் - நிலையான இன்பத்தை. வேண்டு பவர் - விரும்புகின்றவர். சிற்று இன்பம் - சிறிய இன்பத்தை. வெஃகி - விரும்பி. அறன் அல்ல - அதர்மமான செயலை. செய்யார் ஏ - செய்யமாட்டார்கள். ஏ; அசை. (க-து) பேரின்பத்தை விரும்புவோர் சிற்றின்பத்தை விரும்பி அதர்மத்தைச் செய்யமாட்டார்கள். 4. இலம்என்று வெஃகுதல் செய்யார், புலம்வென்ற புன்மைஇல் காட்சி யவர். (ப-உ) புலம் வென்ற - ஐம்புலன்களையும் வென்ற. புன்மை இல் - குற்றம் இல்லாத. காட்சியவர் - அறிவுள்ளவர். இலம் என்று - நாம் ஏழையானோம் என்று நினைத்து. வெஃகுதல் - பிறர் பொருளை விரும்பும் காரியத்தை. செய்யார் - செய்ய மாட்டார்கள். (க-து) அறிவுள்ளவர் வறுமையடைந்தாலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள். 5. அஃகி, அகன்ற அறிவுஎன்னாம்? யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். (ப-உ) யார் மாட்டும்- யாவரிடத்தும். வெஃகி- பொருளை விரும்பி. வெறிய - அறிவற்ற காரியங்களை. செயின்- செய்தால். அஃகி- நுட்பமானதாகி. அகன்ற- விரிந்த. அறிவு- அறிவினால். என்ஆம்- என்ன பயனுண்டாகும்? (க-து) பொருளை விரும்பி, அறிவுள்ளோர் தீமை செய்ய மாட்டார்கள். 6. அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான், பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். (ப-உ) அருள் வெஃகி- அருளை விரும்பி. ஆற்றின் கண்- அறநெறியிலே. நின்றான்- நின்றவன். பொருள் வெஃகி- பிறர் பொருளை விரும்பி. பொல்லாத- குற்றங்களைச் செய்ய. சூழ- எண்ணினால். கெடும்- அவன் அழிவான். (க-து) அருளை விரும்புவோன் பொருளை விரும்பிக் குற்றம் செய்ய நினைப்பானாயின் அவன் அழிவான். 7. வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம்; விளைவயின் மாண்டற்கு அரிதாம் பயன். (ப-உ) வெஃகி- பிறர் பொருளை விரும்பி. ஆம்- அதனால் வரும். ஆக்கம்- செல்வத்தை. வேண்டற்க- கைவிடுக. விளைவயின்- அதன் பயன் தரும்போது. பயன்- அப்பயன். மாண்டற்கு - நன்மையளித்து. அரிதுஆம்- இல்லையாம். (க-து) பிறரிடம் கவர்ந்த பொருளை அனுபவித்தலால் நன்மை விளைவதில்லை. 8. அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின், வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். (ப-உ) செல்வத்திற்கு- பொருளுக்கு. அஃகாமை- குறையா திருக்கும் வழி. யாது எனின்- என்னவென்றால். பிறன்கைப் பொருள்- பிறனுடைய செல்வத்தை. வெஃகாமை வேண்டும்- விரும்பாதிருக்கவேண்டும். (க-து) பிறன் பொருளை விரும்பாதவன் செல்வம் குறையாது. 9. அறன்அறிந்து, வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந்து ஆங்கே திரு. (ப-உ) அறன் அறிந்து- தருமம் இது என்று உணர்ந்து. வெஃகா - பிறர்பொருளை விரும்பாத. அறிவுடையார்- அறிவுள்ள வரை. திரு- திருமகள். திறன் அறிந்து- அவர் தகுதியை அறிந்து. ஆங்கே- அவரிடம். சேரும்- அடைவாள். (க-து) பிறர் பொருளை விரும்பாதவர்களையே இலக்குமி அடைவாள். 10. இறல்ஈனும் எண்ணாது வெஃகின்; விறல்ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு. (ப-உ) எண்ணாது- ஆலோசிக்காமல். வெஃகின் - பிறர் பொருளை விரும்பினால். இறல் ஈனும்- அது அழிவைத் தரும். வேண்டாமை- பிறர் பொருளை விரும்பாமை. என்னும் செருக்கு- என்னும் மகிழ்ச்சியானது. விறல் ஈனும்- வெற்றியைத் தரும். (க-து) பிறர்பொருளை விரும்புவது அழிவைத் தரும். விரும்பாமை வெற்றியைத் தரும். 19. புறம் கூறாமை பிறர் இல்லாத இடத்தில் அவரை இகழ்ந்து பேசாதிருத்தல். 1. அறம்கூறான் அல்ல செயினும், ஒருவன், புறம்கூறான் என்றல் இனிது. (ப-உ) ஒருவன் அறம் கூறான்- ஒருவன் தருமம் என்று வாயினாலும் சொல்லாமல். அல்ல- பாவங்களை. செயினும்- செய்தாலும். புறம் கூறான்- புறம் பேசமாட்டான். என்றல்- என்று பெயரெடுத்தல். இனிது- நல்லது. (க-து) ஒருவன் பாவங்களையே செய்பவன் ஆயினும் புறம் பேசாதிருத்தல் நல்ல புண்ணியம். 2. அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே புறன் அழீஇப் பொய்த்து நகை. (ப-உ) அறன் அழீஇ- தருமத்தைக் கெடுத்து. அல்லவை செய்தலின்- பாவங்களைச் செய்வதைவிட. புறன் அழீஇ- காணாதபோது பழித்துப் பேசி. பொய்த்து நகை- கண்டபோது பொய்யாகச் சிரித்தல். தீதுஏ- தீமையாகும். ஏ:அசை. (க-து) காணாதபோது பழித்துக் கண்டபோது மகிழ்ந்து பேசுதல் பாவங்கள் செய்வதைவிடத் தீமையாகும். 3. புறம்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல் அறம்கூறும் ஆக்கம் தரும். (ப-உ) புறம்கூறி- காணாதபோது இகழ்ந்து பேசி. பொய்த்து- கண்டபோது பொய்யாக மகிழ்ந்து பேசி. உயிர் வாழ்தலின்- உயிர் வாழ்வதைவிட. சாதல்- உயிர் விடுதல். அறம் கூறும்- தரும நூல்களில் சொல்லப்பட்ட. ஆக்கம்- பயனை. தரும்- கொடுக்கும். (க-து) காணாதபோது பழித்து, கண்டபோது புகழ்ந்து உயிர் வாழ்வதைவிட இறத்தலே நலம். 4. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். (ப-உ) கண்நின்று - எதிரில் நின்று. கண் அற- இரக்கம் இல்லாமல். சொல்லினும்- கடுஞ்சொற்களைக் கூறினாலும். முன் இன்று- எதிரில் இல்லாதபோது. பின் நோக்கா- பின்வருவதை எண்ணாத. சொல்- சொல்லை. சொல்லற்க- சொல்லாதிருக்க வேண்டும். (க-து) ஒருவனை எதிரிலே பழித்தாலும் அவன் இல்லாத போது அவனைப் பழிக்கக்கூடாது. 5. அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும் புன்மையால் காணப் படும். (ப-உ) அறம் சொல்லும்- ஒருவன் அறம் சிறந்தது என்று கூறும். நெஞ்சத்தான்- மனமுள்ளவன். அன்மை- அல்லன் என்பது. புறன் சொல்லும்- அவனுடைய புறம் பேசும். புன்மை யால்- அற்பச் செயலால். காணப்படும்- காணத்தகும். (க-து) புறம் பேசுவோன், தருமத்தை வாயால் பாராட்டினாலும் உள்ளத்தால் அதை விரும்பாதவன் ஆவான். 6. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன் தெரிந்து கூறப்படும். (ப-உ) பிறன்- மற்றவனை. பழி கூறுவான்- பழித்துப் புறம் பேசுகின்றவன். தன் பழியுள்ளும்-தனது குற்றங்கள் பலவற்றிலும். திறன்- வலிமையுள்ள குற்றங்களை. தெரிந்து- தேர்ந்தெடுத்து. கூறப்படும்- பழித்துப் பேசப்படுவான். (க-து) பிறர் குற்றம் பேசிப் பழிப்பவன், பிறராலும் குற்றங் கூறிப் பழிக்கப்படுவான். 7. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்; நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். (ப-உ) நகச்சொல்லி- மகிழும்படி பேசி. நட்பு ஆடல்- சினேகங் கொள்வதை. தேற்றாதவர்- அறியாதவர். பகச்சொல்லி- பிரியும்படி புறம் சொல்லி. கேளிர்- உறவினரையும். பிரிப்பர்- பிரியும்படி செய்வர். (க-து) சினேகம் செய்துகொள்ளத் தெரியாதவர்கள் தம் உறவினரையும் பகைத்துக்கொள்ளுவர். 8. துன்னியார் குற்றமும், தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. (ப-உ) துன்னியார்- நண்பர்களின். குற்றமும்- குற்றத்தையும். தூற்றும் - புறம்பேசிப் பழிக்கும். மரபினார்- தன்மையுள்ளவர். ஏதிலார்மாட்டு- அயலாரிடம். என்னை கொல்- எப்படி நடந்து கொள்ளுவார்களோ? (க-து) நண்பர்களையே பழித்துப் பேசுவோர், அயலாரைப் பழிக்காமலிருக்க மாட்டார்கள். 9. அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம்; புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. (ப-உ) புறன் நோக்கி- ஒருவன் இல்லாத சமயம் பார்த்து. புன் சொல் உரைப்பான்- பழி கூறுகின்றவனுடைய. பொறை- உடல் பாரத்தை. வையம்- உலகமானது. அறன் நோக்கி- தருமத்தை எண்ணி. ஆற்றும் கொல்- சுமக்கின்றதோ? (க-து) தருமத்தை எண்ணியே புறம்பேசுவோனை இவ் வுலகம் சுமக்கின்றது. 10. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு? (ப-உ) ஏதிலார் - அயலாருடைய. குற்றம்போல்- குற்றத்தைக் காண்பதுபோல. தம்குற்றம்- தமது குற்றத்தையும். காண்கிற் பின்- காண வல்லவரானால். மன்னும் உயிர்க்கு- அவரது நிலைத்த உயிருக்கு. தீது உண்டோ- தீமை உண்டாகுமோ? (க-து) பிறர் குற்றம் காண்பதுபோலத் தம் குற்றமும் காண வல்லார்க்குத் தீமையில்லை. 20. பயன்இல சொல்லாமை பயன்அற்ற வீண்சொற்களைப் பேசாமல் இருத்தல். 1. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான், எல்லாரும் எள்ளப் படும். (ப-உ) பல்லார்- பலரும். முனிய- வெறுக்கும்படி. பயன்இல- வீண் சொற்களை. சொல்லுவான்- பேசுகின்றவன். எல்லாரும்- யாவராலும். எள்ளப்படும்- பழிக்கப்படுவான். (க-து) வீண்சொற்கள் பேசுவோன் அனைவராலும் இகழப்படுவான். 2. பயன்இல, பல்லார்முன் சொல்லல்; நயன்இல நட்டார்கண் செய்தலின் தீது. (ப-உ) பயன்இல- பயனற்ற வார்த்தைகளை. பல்லார்முன்- பலர் எதிரில். சொல்லல்- பேசுதல். நட்டார்கண்- நண்பர்களிடம். நயன்இல- விரும்பாத செயல்களை. செய்தலின்- செய்வதைவிட. தீது- குற்றமாகும். (க-து) நண்பர்களுக்குத் தீமை செய்வதைவிட, பயனற்ற வார்த்தைகளைப் பேசுதல் பெரிய தீமையாகும். 3. நயன்இலன் என்பது சொல்லும் பயன்இல பாரித்து உரைக்கும் உரை. (ப-உ) பயன்இல- ஒருவன் பயனற்ற பொருள்களைப்பற்றி. பாரித்து- விரிவாக. உரைக்கும் உரை- பேசும் சொற்கள். நயன்இலன்- அவன் நீதியில்லாதவன். என்பது சொல்லும்- என்பதை அறிவிக்கும். (க-து) பயனில்லாதவைகளை விரிவாகப் பேசுகின்றவன் நீதியற்றவன் என்பதை அவன் சொல்லால் காணலாம். 4. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப் பண்புஇல்சொல் பல்லார் அகத்து. (ப-உ) பயன் சாரா- பயன் அற்ற. பண்புஇல் சொல்- நல்ல தன்மையில்லாத சொற்களை. பல்லார் அகத்து- பலரிடம் பேசுவது. நயன் சாரா- தருமத்தோடு பொருந்தாமல். நன்மையின்- நன்மையிலிருந்து. நீக்கும்- பிரித்துவிடும். (க-து) பயனற்ற மொழி பேசுவோன் நல்ல செயல்களைச் செய்யமாட்டான். 5. சீர்மை, சிறப்பொடு நீங்கும்; பயன்இல நீர்மை உடையார் சொலின். (ப-உ) நீர்மை உடையார்- நல்ல குணங்களை உடையவர். பயன்இல- பயனற்ற சொற்களை. சொலின்- கூறுவார்களானால். சீர்மை- அவருடைய மேன்மை. சிறப்பொடு- மதிப்புடன் சேர்ந்து. நீங்கும்- நீங்கிவிடும். (க-து) நற்குணமுள்ளவர் பயனற்ற சொற்களைக் கூறுவார் களாயின் அவர்களின் உயர்வும் மதிப்பும் ஒழியும். 6. பயன்இல்சொல் பாராட்டு வானை, மகன்எனல்; மக்கள் பதடி எனல். (ப-உ) பயன்இல் சொல்- வீண் சொற்களை. பாராட்டு வானை- பலமுறை பேசுகின்றவனை. மகன் எனல்- மனிதன் என்று சொல்லாதே. மக்கள்- மனிதர்க்குள். பதடி- பதர். எனல்- என்று கூறுக. (க-து) பயனற்ற சொற்களையே பேசிக்கொண்டிருப்பவன் மனிதப் பதர் ஆவான். 7. நயன்இல சொல்லினும் சொல்லுக; சான்றோர், பயன்இல சொல்லாமை நன்று. (ப-உ) நயன்இல- நீதி அற்ற சொற்களை. சொல்லினும்- பேசினாலும். சொல்லுக- பேசுக. சான்றோர்- அறிவுள்ளவர். பயன்இல்- பயன் அற்ற சொற்களை. சொல்லாமை- பேசாதிருப்பது. நன்று - நல்லது. (க-து) அறிவுள்ளவர் நீதியற்ற மொழிகளைக் கூறினாலும், பயன் அற்ற சொற்களைக் கூறாமலிருப்பது நல்லது. 8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். (ப-உ) அரும்பயன்- சிறந்த பலன்களை. ஆயும்- ஆராயவல்ல. அறிவினார்- அறிவுள்ளவர். பெரும்பயன் இல்லாத- மிகுந்த பயனற்ற. சொல்- சொற்களை. சொல்லார்- பேசமாட்டார்கள். (க-து) அறிவுள்ளோர் வீண்பேச்சுப் பேசமாட்டார்கள். 9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்; மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். (ப-உ) மருள்தீர்ந்த- அறியாமை நீங்கிய. மாசு அறு- குற்றமில்லாத. காட்சியவர்- அறிவுள்ளவர். பொருள் தீர்ந்த- பயனற்ற சொற்களை. பொச்சாந்தும்- மறந்தும். சொல்லார்- பேசமாட்டார்கள். (க-து) நல்ல அறிவுள்ளவர்கள் மறந்துங்கூட வீண்பேச்சுப் பேசமாட்டார்கள். 10. சொல்லுக, சொல்லில் பயன்உடைய; சொல்லற்க, சொல்லில் பயன்இலாச் சொல். (ப-உ) சொல்லில்- சொற்களிலே. பயன் உடைய- பயன் உள்ள சொற்களையே. சொல்லுக- கூறுக. சொல்லில்- சொற்களில். பயன் இலாச் சொல்- பயன் இல்லாத வார்த்தைகளை. சொல்லற்க- சொல்லாதிருக்க. (க-து) பயன்தரும் சொற்களைச் சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லாமல் கைவிடுக. 21. தீவினை அச்சம் பாவச் செயல்களைச் செய்ய அஞ்சுதல் 1. தீவினையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர், தீவினை என்னும் செருக்கு. (ப-உ) தீவினை என்னும்- பாவங்கள் என்னும். செருக்கு- அறியாமைக்கு. தீவினையார்- பாவிகள். அஞ்சார்- பயப்பட மாட்டார்கள். விழுமியார்- மேலோர். அஞ்சுவர் - பயப்படுவார்கள். (க-து) பாவிகள் தீவினைக்குப் பயப்படமாட்டார்கள்; நல்லோர் பயப்படு வார்கள். 2. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். (ப-உ) தீயவை- பாவச் செயல்கள். தீய- துன்பங்களை. பயத்தலால்- தருவதால். தீயவை- பாவச் செயல்களைக் கண்டால். தீயினும்- நெருப்பைவிட. அஞ்சப் படும்- பயந்து விலகவேண்டும். (க-து) பாவச் செயல்கள் துன்பங்களைத் தரும்; அவை நெருப்பைவிட அஞ்சத்தக்கவை. 3. அறிவினுள் எல்லாம் தலைஎன்ப, தீய செறுவார்க்கும், செய்யா விடல். (ப-உ) செறுவார்க்கும்- தம்மைத் துன்புறுத்துவோர்க்கும். தீய- தீமைகளை. செய்யா விடல்- செய்யாமல் விடுவது. அறிவினுள் எல்லாம்- அறிவுகள் எல்லாவற்றிலும். தலை என்ப- சிறந்தது என்பர். (க-து) தம்மைத் துன்புறுத்துவோர்க்கும் தீமை செய்யாமல் விடுவதே சிறந்த அறிவு. 4. மறந்தும் பிறன்கேடு சூழற்க; சூழின், அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (ப-உ) பிறன் கேடு- பிறனுக்குக் கேடு தரும் தீமையை. மறந்தும்- மறந்துங்கூட. சூழற்க- நினைக்கக் கூடாது. சூழின்- நினைப்பானாயின். சூழ்ந்தவன்- அப்படி நினைத்தவனுக்கு. அறம்- தரும தேவதையே. கேடு சூழும் - தீமை செய்ய நினைத்துவிடும். (க-து) பிறனுக்குக் கெடுதி நினைப்பவனுக்குத் தரும தேவதையே தீமை செய்யும். 5. இலன்என்று தீயவை செய்யற்க; செய்யின், இலன்ஆகும், மற்றும் பெயர்த்து. (ப-உ) இலன்- நான் வறியவன் என்று நினைத்து. தீயவை- தீமைகளை. செய்யற்க- ஒருவன் செய்யக் கூடாது. செயின்- செய்தால். மற்றும் பெயர்த்து- மீண்டும் பின்னும். இலன் ஆகும்- வறுமையுள்ளவன் ஆவான். (க-து) வறுமை காரணமாகத் தீமைகளைச் செய்கின்றவன் மேலும் வறுமையடைவான். 6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க; நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். (ப-உ) நோய்ப்பால- துன்பந்தரும் தீமைகள். தன்னை- தன்னைச் சேர்ந்து. அடல்- துன்புறுத்துவதை. வேண்டாதான்- விரும்பாதவன். தீப்பால்- தீமைகளை. தான் பிறர்கண்- தான் பிறரிடம். செய்யற்க- செய்யாதிருக்கவேண்டும். (க-து) பாவங்களால் துன்புறாதிருக்க விரும்புகின்றவன், பிறரிடம் பாவங்களைச் செய்யக் கூடாது. 7. எனைப்பகை உற்றாரும் உய்வர், வினைப்பகை வீயாது பின்சென்று அடும். (ப-உ) எனைப் பகை உற்றாரும்- எவ்வளவு பெரிய பகையை உடையவரும். உய்வர்- தப்பித்துக் கொள்ளுவர். வினைப் பகை- தீவினையால் வரும் பகை. வீயாது- அழியாமல். பின்சென்று -பிரியாமல் பின்னே தொடர்ந்து. அடும்- கொல்லும். (க-து) எவ்வளவு பெரிய பகைக்கும் தப்பித்துக் கொள்ளலாம்; தீவினையாகிய பகையிடமிருந்து தப்பிக்க முடியாது. 8. தீயவை செய்தார் கெடுதல்நிழல், தன்னை வீயாது அடிஉறைந்து அற்று. (ப-உ) தீயவை செய்தார்- பாவங்களைச் செய்தவர். கெடுதல்- கெட்டுப்போவது. நிழல்- ஒருவன் நிழல். தன்னை- அவனை விட்டு. வீயாது- நீங்காமல். அடி- அவன் அடியிலேயே. உறைந்து அற்று- தங்கியிருப்பது போலாகும். (க-து) தன்னிழல் தன்னைவிட்டு நீங்காததுபோல ஒருவன் செய்த தீமை அவனை விட்டு நீங்காது. 9. தன்னைத்தான் காதலன் ஆயின், எனைத்தொன்றும் துன்னற்க, தீவினைப் பால். (ப-உ) தன்னை- ஒருவன் தன்னை. தான் காதலன் ஆயின்- தான் விரும்பு வானாயின். எனைத்து ஒன்றும்- எவ்வளவு சிறியதொன்றாயினும். தீவினைப் பால்- பாவச் செயலிடம். துன்னற்க- நெருங்காதிருக்க வேண்டும். (க-து) தன்னைக் காத்துக்கொள்ள விரும்பினால் பாவச் செயல் இருக்கும் திசையை அணுகவே கூடாது. 10. அரும்கேடன் என்பது அறிக, மருங்குஓடித் தீவினை செய்யான் எனின். (ப-உ) மருங்கு ஓடி - பாவத்தின் பக்கம் சென்று. தீவினை செய்யான் எனின்- தீமைகளைச் செய்யாதிருப்பானாயின். அரும் கேடன்- அவன் கேடு இல்லாதவன். என்பது அறிக- என்பதைத் தெரிந்துகொள்ளுக. (க-து) பாவம் செய்யாதவனே கேடில்லாதவன்; நல்லவன் ஆவான். 22. ஒப்புரவு அறிதல் உலகப் போக்கறிந்து வாழ்வது. 1. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு? (ப-உ) கைம்மாறு - பதில் உதவியை. வேண்டா- விரும்பாமல். கடப்பாடு- தன் கடமையைச் செய்யும். மாரிமாட்டு- மழைக்கு. உலகு- இவ்வுலகம். என் ஆற்றும் கொல்ஓ- என்ன உதவியைச் செய்கின்றது? ஓ : அசை. (க-து) மழை தன் கடமையைச் செய்கின்றது; அதுபோல பெரியோர்களும் பயன் கருதாமல் உதவி செய்வர். 2. தாள்ஆற்றித் தந்தபொருள் எல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. (ப-உ) தாள் ஆற்றி- முயற்சி செய்து. தந்த- சம்பாதித்த. பொருள் எல்லாம்- செல்வம் எல்லாம். தக்கார்க்கு- தகுதி யுள்ளவர்க்கு. வேளாண்மை செய்தல் பொருட்டு- உதவி செய்வதற்கே யாகும். (க-து) முயன்று சம்பாதிப்பது பிறருக்கு உதவி செய்வதற் கேயாம். 3. புத்தேள் உலகத்தும், ஈண்டும், பெறல்அரிதே, ஒப்புரவின் நல்ல பிற. (ப-உ) புத்தேள் உலகத்தும்- தேவருலகிலும். ஈண்டும்- இவ்வுலகிலும். ஒப்புரவின் - உதவிசெய்வதைவிட. நல்ல- நன்மைகளாகிய. பிற- வேறு செயல்களை. பெறல் அரிதுஏ- பெறமுடியாது. ஏ; அசை. (க-து) உதவி செய்வதுபோல சிறந்தது வானுலகிலும் மண்ணுலகிலும் வேறு ஒன்றும் இல்லை. 4. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்; மற்றையான், செத்தாருள் வைக்கப் படும். (ப-உ) ஒத்தது அறிவான்- உலக நடையை அறிகின்றவனே. உயிர் வாழ்வான்- உயிருடன் வாழ்கின்றவன் ஆவான். மற்றை யான் - உலக நடையை அறியாதவன். செத்தார்உள் - இறந்தவருள் ஒருவனாக. வைக்கப்படும்- வைக்கப்படுவான். (க-து) உலகியல்பை உணர்ந்து நடப்பவனே உயிர் வாழ்பவன்; அதை அறியாதவன் செத்தவனுக்குச் சமம். 5. ஊருணி நீர்நிறைந்து அற்றே, உலகுஅவாம் பேர்அறி வாளன் திரு. (ப-உ) உலகுஅவாம்- உலகத்தார் விரும்பும்படி வாழும். பேர் அறிவாளன்- சிறந்த அறிவுள்ளவன். திரு- படைத்த செல்வம். ஊர்உணி- தடாகத்திலே. நீர் நிறைந்து அற்று- தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போல ஆகும். (க-து) அறிவுள்ளவன் செல்வம், ஊர்க்குப் பொதுவான குளத்தில் நீர் நிறைந்தது போல ஆகும். 6. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால், செல்வம் நயன்உடை யான்கண் படின். (ப-உ) செல்வம்- செல்வமானது. நயன் உடையான்கண்- நன்மை உள்ளவனிடம். படின்- உண்டாகுமாயின் அது. உள்ஊர்- ஊரின் உள்ளே. பயன்மரம்- பயன் தரத்தக்க மரம். பழுத்து அற்று- பழுத்திருப்பது போலாம். (க-து) நல்லவனிடம் உள்ள செல்வம், பயன் உள்ள மரம் ஊர்நடுவிலே காய்த்துப் பழுத்திருப்பது போல் ஆகும். 7. மருந்துஆகித் தப்பா மரத்துஅற்றால், செல்வம் பெருந்தகை யான்கண் படின். (ப-உ) செல்வம்- செல்வமானது. பெருந்தகை யான்கண்- உதவி செய்யும் பெருங்குணம் உள்ளவனிடம். படின்- உண்டாகு மானால் அது. மருந்துஆகி- எல்லா உறுப்புக்களும் மருந்தாகி. தப்பா- தவறாமல் பயன்படும். மரத்துஅற்றுஆல்- மரம் போன்றதாகும். (க-து) செல்வம் பெரியோரிடம் இருக்குமானால் அது மருந்தாகப் பயன்படும் மரம் போன்றதாகும். 8. இடன்இல் பருவத்தும், ஒப்புரவிற்கு ஒல்கார் கடன்அறி காட்சி யவர். (ப-உ) கடன்அறி- தம் கடமையை அறிந்த. காட்சியவர்- அறிவுள்ளவர். இடன்இல்- செல்வத்திற்கு இடம் இல்லாத. பருவத்தும்- காலத்திலும். ஒப்புரவிற்கு- உதவி செய்வதற்கு. ஒல்கார்- தளர்ச்சியடையமாட்டார்கள். (க-து) அறிவுள்ளோர் வறியவரான காலத்திலும் உதவி செய்யப் பின்வாங்கமாட்டார். 9. நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல், செயும்நீர செய்யாது அமைகலா ஆறு. (ப-உ) நயன் உடையான்- உதவி செய்யும் தன்மை யுள்ளவன். நல்கூர்ந்தான் ஆதல்- வறுமையுள்ளவனாவது. செயும் நீர்மை- செய்யத்தக்க உதவிகளை. செய்யாது- செய்யாமல். அமைகலாஆறு- வருந்தியிருக்கும் தன்மையாம். (க-து) உதவி செய்ய முடியாமல் வருந்துவதே, உதவி செய்பவனுடைய வறுமையாகும். 10. ஒப்புரவினால் வரும் கேடுஎனில், அஃதுஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. (ப-உ) ஒப்புரவினால்- உதவி செய்வதனால். வரும் கேடு எனில்- கெடுதி வரும் ஆயின். அஃது - அக்கேடானது. ஒருவன்- ஒருவன் தன்னை. விற்றுக்கோள் தக்கது உடைத்து- விற்றாவது பெற்றுக்கொள்ளும் தன்மையுள்ளதாகும். (க-து) உதவியினால் கேடு வரும் என்றால், அக்கேட்டை ஒருவன் தன்னை விற்றாயினும் வாங்கிக்கொள்ள வேண்டும். 23. ஈகை வறியவர்க்கு வழங்குவது. 1. வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்றுஎல்லாம், குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. (ப-உ) வறியார்க்கு- ஏழைகளுக்கு. ஒன்று - ஒரு பொருளை. ஈவதே- கொடுப்பதே. ஈகை- ஈகையாகும். மற்று எல்லாம்- வேறு கொடைகள் எல்லாம். குறி எதிர்ப்பை- பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும். நீரது - தன்மையை. உடைத்து- உடையதாகும். (க-து) பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதுதான் ஈகை. 2. நல்ஆறு எனினும் கொளல்தீது; மேல்உலகம் இல்எனினும் ஈதலே நன்று. (ப-உ) நல்ஆறு எனினும்- நல்வழி காட்டும் என்பாரா யினும். கொளல்- பொருளைப் பெற்றுக் கொள்ளுதல். தீது- தீமையாகும். மேல்உலகம்- மேல் உலகத்தை அடைதல். இல் எனினும்- இல்லை என்றாலும். ஈதலே- கொடுப்பதே. நன்று - நல்லது. (க-து) நல்வழிதான் என்றாலும் யாசித்தல் கெட்டது; மேல் உலகம் இல்லையென்றாலும் கொடுப்பதே சிறந்தது. 3. இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல், குலம்உடையான் கண்ணே உள. (ப-உ) இலன் என்னும்- நான் வறியவன் என்னும். எவ்வம்- துன்பச் சொல்லை. உரையாமை- சொல்லாமையும். ஈதல்- கொடுத்தலும். குலன்உடையான் கண்ணே- குடியில் பிறந்த வனிடந்தான். உள- உள்ளன. (க-து) நான் ஏழை என்று சொல்லாமையும், கொடுப்பதும் நற்குடியில் பிறந்தவரிடமே உண்டு. 4. இன்னாது, இரக்கப் படுதல்; இரந்தவர் இன்முகம் காணும் அளவு. (ப-உ) இரந்தவர்- யாசிப்பவரின். இன்முகம்- மகிழ்ச்சியான முகத்தை. காணும் அளவு- காணும்வரையிலும். இரக்கப்படுதல்- யாசிப்பதைக் காண்பதும். இன்னாது- துன்பமேயாம். (க-து) யாசிப்பவர் பொருள்பெற்று மகிழும்வரையிலும், அவர் யாசிப்பதைப் பார்ப்பதும் துன்பமாகும். 5. ஆற்றுவார் ஆற்றல், பசியாற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். (ப-உ) ஆற்றுவார்- தவம் புரிகின்றவரின். ஆற்றல்- வல்லமை. பசி ஆற்றல்- பசியைப் பொறுத்துக் கொள்வது. அதுவும் அப்பசியை- அந்தப் பசியை. மாற்றுவார்- ஒழிக்கின்றவரின். ஆற்றலின்- வல்லமைக்கு. பின்- அடுத்ததுதான். (க-து) தவசிகளின் பசி பொறுக்கும் வல்லமை, பசியை ஆற்றுவோரின் வல்லமைக்கு அடுத்ததுதான். 6. அற்றார், அழிபசி தீர்த்தல் அஃது,ஒருவன், பெற்றான் பொருள்வைப் புழி. (ப-உ) அற்றார்- ஏழையரின். அழிபசி- எல்லா நன்மை களையும் அழிக்கும் பசியை. தீர்த்தல்- நீக்குவதாகிய. அஃது- அச் செயலே. பொருள் பெற்றான் ஒருவன்- செல்வத்தைப் பெற்ற ஒருவன். வைப்பு உழி- செல்வத்தை வைத்திருக்கும் இடமாம். (க-து) வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தன்செல்வத்தைச் சேர்த்துவைக்கும் இடமாகும். 7. பாத்துஊண் மரீஇ யவனைப், பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது. (ப-உ) பாத்து- பிறருக்கும் பகுத்துக் கொடுத்து. ஊண்- உண்பதற்கு. மரீஇயவனை- பழகியவனை. பசி என்னும்- பசி என்று சொல்லப்படும். தீப்பிணி- கொடிய நோய். தீண்டல் அரிது- தொடுவது இல்லை. (க-து) பிறருக்கும் கொடுத்துத் தானும் உண்பவனைப் பசிநோய் அணுகாது. 8. ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்துஇழக்கும் வன்கண் அவர். (ப-உ) தாம் உடைமை- தம்முடைய பொருளை. வைத்து- பிறர்க்கு உதவாமல் சேர்த்துவைத்து. இழக்கும்- பின்னே அதை இழந்துவிடும். வன்கண் அவர்- இரக்கம் அற்றவர். ஈத்து- வறியோர்க்குக் கொடுத்து. உவக்கும் - மகிழும். இன்பம்- இன்பத்தை. அறியார் கொல்- அறிய மாட்டார்களோ? (க-து) பொருளைச் சேர்த்துவைத்து இழப்பவர், கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார். 9. இரத்தலின் இன்னாது மன்ற, நிரப்பிய, தாமே தமியர் உணல். (ப-உ) நிரப்பிய- பொருளைச் சேர்க்கும்பொருட்டு. தாமே-பிறருக்கு உதவாமல் தாமாகவே. தமியர்- தனித்திருந்து. உணல்- உண்பது. மன்ற -நிச்சயமாக. இரத்தலின்- யாசிப்பதைவிட. இன்னாது- துன்பமுள்ளதாகும். (க-து) பிறருக்குக் கொடாமல் தாமே உண்பது இரப்பதை விடத் துன்பமானது. 10. சாதலின் இன்னாதது இல்லை;இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை. (ப-உ) சாதலின்- சாவதைவிட. இன்னாதது- துன்ப முள்ளது. இல்லை- வேறு ஒன்றும் இல்லை. அதூஉம்- அதுவும். ஈதல் இயையாக்கடை- வறியோர்க்குக் கொடுக்க முடியாத போது. இனிது- இன்பமாகும். (க-து) சாவது துன்பம் ஆயினும், பிறருக்குப் பொருள் கொடுக்க முடியாதபோது இறத்தல் இன்பமாகும். 24. புகழ் புகழ் உண்டாகும்படி நற்செயல்களைச் செய்து வாழ்வது. 1. ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. (ப-உ) ஈதல்- வறியோர்க்குப் பொருள் கொடுப்பதன் மூலம். இசைபட- புகழ் உண்டாகும்படி. வாழ்தல்- வாழ்வதே சிறந்தது. அது அல்லது- அப்புகழைத் தவிர. உயிர்க்கு- மக்களுயிர்க்கு. ஊதியம் இல்லை- வேறு பயன் ஒன்றும் இல்லை. (க-து) வறியோர்க்குக் கொடுத்துப் புகழுடன் வாழ்வதே பயன் உள்ள வாழ்வாகும். 2. உரைப்பார் உரைப்பவைஎல்லாம், இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். (ப-உ) உரைப்பார்- புகழ்ந்து பேசுவோர். உரைப்பவை எல்லாம்- சொல்வன யாவும். இரப்பார்க்கு- யாசிப்பவர்க்கு. ஒன்று- ஒரு பொருளை. ஈவார்மேல்- கொடுப்பவர் இடம். நிற்கும்- உள்ள. புகழ்- புகழ் மொழிகளேயாம். (க-து) புகழ்ந்து பேசுவோரின் மொழிகள் எல்லாம் கொடுப்பவரைப் பற்றியவைகள்தாம். 3. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால், பொன்றாது நிற்பது ஒன்றுஇல். (ப-உ) உலகத்து- இவ்வுலகில். ஒன்றா- ஒப்பில்லாமல். பொன்றாது- அழியாமல். நிற்பது- நிலைத்திருப்பது. உயர்ந்த புகழ் அல்லால்- உயர்ந்த புகழைத் தவிர. ஒன்று இல்- வேறு ஒன்றும் இல்லை. (க-து) உலகத்தில் அழியாமல் நிற்பது புகழ் ஒன்றுதான். 4. நிலவரை நீள்புகழ் ஆற்றின், புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. (ப-உ) நிலவரை- பூமியின் எல்லையில். நீள்புகழ்- அழியாத புகழ் உள்ள காரியங்களை. ஆற்றின்- செய்வானாயின். புத்தேள் உலகு- தேவலோகம் அவனைப் போற்றுமேயல்லாமல். புலவரை-தேவர்களை. போற்றாது- பாராட்டாது. (க-து) இவ்வுலகில் அழியாத புகழுக்குரிய காரியங்களைச் செய்தவனையே தேவலோகம் பாராட்டும. 5. நத்தம்போல் கேடும், உளதாகும் சாக்காடும், வித்தகர்க்கு அல்லால் அரிது. (ப-உ) வித்தகர்க்கு அல்லால்- அறிவுள்ளோரைத் தவிர மற்றவர்க்கு. நத்தம்போல்- புகழ்உடம்பு வளர்வது போன்ற. கேடும்- வறுமையும். உளது ஆகும்- அப்புகழ் உடம்பு நிலை பெறுவதான. சாக்காடும்- மரணமும். அரிது- இல்லை. (க-து) புகழ்உடம்பு வளர்வதற்கான வறுமையும் அது நிலைபெறுவதான மரணமும் அறிவற்றவர்க்கு இல்லை. 6. தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதுஇலார், தோன்றலின் தோன்றாமை நன்று. (ப-உ) தோன்றின்- மனிதராய்ப் பிறந்தால். புகழொடு -புகழுடன். தோன்றுக- பிறக்க. அஃது இலார்- அப்புகழ் இல்லாதவர். தோன்றலின்- பிறத்தலினும். தோன்றாமை- பிறவாமையே. நன்று- நல்லது. (க-து) மக்களாய்ப் பிறந்தவர் புகழுடன் வாழ வேண்டும். 7. புகழ்பட வாழாதார் தம்நோவார், தம்மை இகழ்வாரை நோவது எவன்? (ப-உ) புகழ்பட- புகழ் உண்டாகும்படி. வாழாதார்- வாழ முடியாதவர். தம்நோவார்- தம்மை நொந்து கொள்ளாமல். தம்மை இகழ்வாரை- தம்மை நிந்திப்பவரை. நோவது எவன்- நொந்துகொள்வது ஏன்? (க-து) புகழுடன் வாழ முடியாதவர் தம்மை நொந்து கொள்ளாமல் தம்மைப் பழிப்பவரை நொந்து கொள்வதால் பயன் இல்லை. 8. வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம்; இசைஎன்னும் எச்சம் பெறாஅ விடின். (ப-உ) இசை என்னும் -புகழ் என்னும். எச்சம்- தமக்குப்பின் மீதமாயிருக்கும் செல்வத்தை. பெறாஅ விடின்- அடையா விட்டால். வையத்தார்க்கு எல்லாம்- உலகத்தார் அனைவருக்கும். வசை என்ப- அது பழிப்புக்குரியதாகும். (க-து) புகழ் பெறாமல் வாழ்பவன் உலகத்தாரின் பழிப்புக்கு ஆளாவான். 9. வசையிலா வண்பயன் குன்றும், இசையிலா யாக்கை பொறுத்த நிலம். (ப-உ) இசையிலா- புகழ் இல்லாத. யாக்கை- உடம்பை. பொறுத்த- சுமந்த. நிலம்- நிலத்திலே. வசையிலா- பழிப்பில்லாத. வண்பயன்- வளமான விளைவு. குன்றும்- குறையும். (க-து) புகழ் அற்ற மக்கள் வாழும் நிலத்தில் விளைவு குறையும். 10. வசைஒழிய வாழ்வாரே வாழ்வார்; இசைஒழிய வாழ்வாரே வாழா தவர். (ப-உ) வசை ஒழிய- பழிப்பின்றிப் புகழுடன். வாழ்வாரே- வாழ்கின்றவரே. வாழ்வார்- உயிர் வாழ்கின்றவர். இசை ஒழிய- புகழ் நீங்க. வாழ்வாரே- வாழ்கின்றவரே. வாழாதவர்- உயிர் வாழாதவர். (க-து) புகழுடன் வாழ்வோர் உயிருடன் வாழ்கின்றவர்; வசையுடன் வாழ்வோர் இறந்தவர். துறவற இயல்* 25. அருள் உடைமை எல்லா உயிர்களிடமும் கருணை காட்டுதல். 1. அருள்செல்வம் செல்வத்துள் செல்வம்; பொருள் செல்வம் பூரியார் கண்ணும்உள. (ப-உ) அருள் செல்வம்- கருணையாகிய செல்வமே. செல்வத்துள் செல்வம்- செல்வங்களில் உயர்ந்த செல்வமாகும். பொருள் செல்வம்- பொருளாகிய செல்வம். பூரியார் கண்ணும்- அற்பர்கள் இடமும். உள- இருக்கின்றன. (க-து) கருணையே சிறந்த செல்வம்; பொருள் இழிந்தவர் களிடமும் உண்டு. 2. நல்ஆற்றால் நாடி, அருள்ஆள்க; பல்ஆற்றால் தேரினும் அஃதே துணை (ப-உ) நல் ஆற்றால்- நல்வழியிலே நின்று. நாடி- ஆராய்ந்து. அருள் ஆள்க- கருணை உள்ளவர்களாக வாழ்க. பல் ஆற்றால்- பல வழிகளால். தேரினும்- ஆராய்ந்து பார்த்தாலும். அஃதே- அந்தக் கருணைதான். துணை- துணையாக நிற்கும். (க-து) கருணையுடன் வாழ்வதே சிறந்தது; அதுதான் உயிருக்குத் துணை செய்யும். 3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை; இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். (ப-உ) இருள் சேர்ந்த- இருள் அமைந்த. இன்னா உலகம்- துன்ப உலகத்தை. புகல்- அடைதல். அருள் சேர்ந்த- அருள் அமைந்த. நெஞ்சினார்க்கு- மனம் உள்ளவர்க்கு. இல்லை- இல்லையாம். (க-து) கருணை பொருந்திய மனம் உள்ளவர்களுக்கு நரகம் இல்லை. 4. மன்உயிர் ஓம்பி அருள்ஆள்வாற்கு இல்என்ப தன்உயிர் அஞ்சும் வினை. (ப-உ) மன்உயிர்- நிலைபெற்ற உயிர்களை. ஓம்பி- பாதுகாத்து. அருள் ஆள்வாற்கு- அருளுடையவனாயிருப்ப வனுக்கு. தன் உயிர்- தனது உயிர். அஞ்சும்- பயப்படுவதற்குக் காரணமான. வினை- பாவச் செயல்கள். இல் என்ப- உண்டாகா என்று கூறுவர். (க-து) பிற உயிர்களிடம் கருணை உள்ளவனுக்கு அவன் உயிருக்குத் தீமை தரும் பாவங்கள் உண்டாகா. 5. அல்லல்அருள் ஆள்வார்க்கு இல்லை; வளிவழங்கும் மல்லல்மா ஞாலம் கரி. (ப-உ) அருள் ஆள்வார்க்கு- கருணை உள்ளவர்க்கு. அல்லல் இல்லை- ஒரு துன்பமும் இல்லை. வளி வழங்கும்- காற்று வீசுகின்ற. மல்லல்- வளம் உள்ள. மாஞாலம்- பெரிய உலகில் வாழ்வோரே. கரி- இதற்குச் சாட்சி. (க-து) கருணையுள்ளவர் எந்நாளும் துன்பம் இல்லாமல் வாழ்வர். 6. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர், அருள்நீங்கி அல்லவை செய்து ஒழுகுவார். (ப-உ) அருள் நீங்கி- கருணையில்லாமல். அல்லவை- நன்மையில்லாதவை களை. செய்து ஒழுகுவார்- செய்து நடப்பவர். பொருள் நீங்கி- உறுதிப் பொருளாகிய அறத்தி லிருந்து நீங்கி. பொச்சாந்தார்- தம்மை மறந்தவர் ஆவர். என்பர்- என்று சொல்லுவர். (க-து) இரக்கம் இல்லாமல் பாவம் செய்பவர், தமது நன்மையை மறந்தவர் ஆவர். 7. அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள்இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு. (ப-உ) பொருள் இல்லார்க்கு- செல்வம் இல்லாதவர்க்கு. இவ் உலகம்- இவ் வுலக இன்பம். இல்ஆகி ஆங்கு- இல்லாதது போல. அருள் இல்லார்க்கு- கருணை யில்லாதவர்க்கு. அவ்வுலகம்- மறு உலக இன்பம். இல்லை- இல்லையாம். (க-து) செல்வம் அற்றவர்க்கு இவ்வுலகில் இன்பம் இல்லை. அதுபோல கருணையற்றவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை. 8. பொருள்அற்றார் பூப்பர் ஒருகால்; அருள்அற்றார் அற்றார்; மற்று ஆதல் அரிது. (ப-உ) பொருள் அற்றார்- வறுமை அடைந்தவர். ஒருகால்- பின் ஒரு காலத்தில். பூப்பர்- செல்வத்தால் விளங்குவார். அருள் அற்றார்- அருள் இல்லாதவர். அற்றார்- அழிந்தே போவார். மற்று- பின்னர். ஆதல் அரிது- சிறந்து விளங்குதல் இல்லை. (க-து) பொருளிழந்தவர் மீண்டும் பொருள் பெற்று விளங்குவர். கருணையற்றவர் அழிந்தே போவார். 9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டுஅற்றால், தேரின் அருளாதான் செய்யும் அறம். (ப-உ) தேரின்- ஆராய்ந்து பார்த்தால். அருளாதான்- அருள் இல்லாதவன். செய்யும் அறம்- செய்கின்ற அறமானது. தெருளாதான்- அறிவற்றவன். மெய்ப்பொருள்- ஒரு நூலின் உண்மைப் பொருளை. கண்டு அற்று ஆல்- கண்டது போன்றதாம். ஆல்: அசை. (க-து) அருளற்றவன் செய்யும் தருமம், அறிவற்றவன் ஒரு நூலின் உண்மைப்பொருளைக் கண்டது போன்றதாகும். 10. வலியார்முன் தன்னை நினைக்க; தான்,தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. (ப-உ) தான் தன்னின்- அருளற்றவன் தன்னை விட. மெலியார்மேல்- மெலிந்தவர்மேல். செல்லும் இடத்து- துன்புறுத்தப் போகும்போது. வலியார்முன் - தன்னைவிட வலியவர் முன்னே. தன்னை- தான் பயந்து நிற்கும் நிலையைப்பற்றி. நினைக்க- நினைத்துப் பார்க்க வேண்டும். (க-து) வலியவன் மெலியவனைத் துன்புறுத்தத் தொடங்கும் போது, தன்னை வலியவன் துன்புறுத்தியதை எண்ணிப் பார்க்க வேண்டும். 26. புலால் மறுத்தல் மாமிசம் உண்பதை விட்டுவிடுவது. 1. தன்ஊன் பெருக்கற்குத், தான்பிறிது ஊன்உண்பான், எங்ஙனம் ஆளும் அருள்? (ப-உ) தன்ஊன்- தனது உடம்பை. பெருக்கற்கு- வளர்க்கும் பொருட்டு. தான் பிறிதுஊன்- தான் மற்றொன்றின் உடம்பை. உண்பான்- தின்கின்றவன். எங்ஙனம் - எப்படி. அருள் ஆளும்- அருளுடையவனாக இருப்பான்? (க-து) தன் உடம்பை வளர்க்க மற்ற உடம்பைத் தின்பவன், அருளுடையவனாக இருக்க மாட்டான். 2. பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை; அருள்ஆட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. (ப-உ) பொருள் ஆட்சி- பொருளால் பயன் அடைதல். போற்றாதார்க்கு- அதைக் காப்பாற்றாதவர்க்கு. இல்லை- இல்லையாம். ஆங்கு- அதுபோல. ஊன் தின்பவர்க்கு- மாமிசம் உண்பவர்க்கு. அருள் ஆட்சி- அருளின் பயன். இல்லை- இல்லையாம். (க-து) பொருளைக் காப்பாற்றாதவர்க்குப் பொருளால் இன்பம் இல்லை. அதுபோல அருளைக் காப்பாற்றாதவர்க்கு அருள் இன்பம் இல்லை. 3. படைகொண்டார் நெஞ்சம்போல், நன்றுஊக்காது, ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். (ப-உ) ஒன்றன் - ஓர் உயிரின். உடல்- உடம்பை. சுவை உண்டார்-சுவையுடன் உண்டவர். மனம்- நெஞ்சம். படை கொண்டார்- கொலைக் கருவியைக் கையிலே கொண்டவர். நெஞ்சம்போல்- மனம்போல். நன்று ஊக்காது- நல்ல அருளின் மேல் செல்லாது. (க-து) ஊன் உண்போர் மனம் அருளை நினைக்காது. 4. அருள்,அல்லது யாதுஎனில் கொல்லாமை; கோறல் பொருள்அல்லது அவ்வூன் தினல். (ப-உ) அருள் யாதுஎனில்- அருள் யாது என்றால். கொல்லாமை- உயிர்களைக் கொல்லாமை. அல்லது யாது எனில்- பாவம் எதுவென்றால். கோறல்- கொல்லுதல். அவ்வூன் தினல்- அவ்வுடம்பைத் தின்னுதல். பொருள்அல்லது- பாவமாகும். (க-து) கொல்லாமை அருள்; கொல்லுதல் பாவம். ஆதலால் ஊன் உண்டல் பாவமாகும். 5. உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன்உண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. (ப-உ) உயிர் நிலை- உயிர்கள் நிலைத்து வாழும் தன்மை. உண்ணாமை உள்ளது- ஊன் உண்ணாமை என்னும் அறத்தில் அடங்கியுள்ளது. ஊன் உண்ண- ஊனை உண்டால். அளறு- நரகம். அண்ணாத்தல் செய்யாது- அவனை விழுங்கி வாய்திறவாமல் இருக்கும். (க-து) ஊன் உண்போன் மீளா நரகத்தை அடைவான். 6. தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின், யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். (ப-உ) தினல் பொருட்டால்- தின்னும்பொருட்டு. உலகு- உலகத்தார். கொல்லாது எனின்- உயிர்களைக் கொல்லாமல் இருப்பார்களானால். விலைப்பொருட்டால்- விலைக்காக. ஊன் தருவார்- மாமிசம் விற்போர். யாரும் இல்- எவரும் இல்லை. (க-து) மாமிசம் உண்போர் இன்றேல் அதை விற்பவரும் இருக்க மாட்டார். 7. உண்ணாமை வேண்டும், புலாஅல் பிறிதுஒன்றன் புண்அது, உணர்வார்ப் பெறின். (ப-உ) புலால்- மாமிசமானது. பிறிது ஒன்றன்- வேறு ஒரு உடம்பின். புண் அது- புண்ணாகும் என்பதை. உணர்வார்ப் பெறின்- ஆராய்ந்து அறிவோரைப் பெற்றால். உண்ணாமை- அப் புலாலை உண்ணாமல். வேண்டும்- கைவிட வேண்டும். (க-து) மாமிசம், பிற உயிரின் புண்ணாகும். ஆதலால் அதை உண்பதைக் கைவிட வேண்டும். 8. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார், உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். (ப-உ) செயிரின் தலை- குற்றத்திலிருந்து. பிரிந்த- நீங்கிய. காட்சியார்- அறிவுள்ளவர். உயிரின் தலை- ஓர் உயிரிலிருந்து. பிரிந்த ஊன்- நீங்கிய உடம்பை. உண்ணார்- உண்ணமாட்டார். (க-து) குற்றமற்ற அறிவுள்ளோர் ஊன் உண்ணமாட்டார். 9. அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (ப-உ) அவி- நெய் முதலிய பொருள்களை. சொரிந்து- தீயிலே கொட்டி. ஆயிரம் வேட்டலின்- ஆயிரம் யாகம் செய்வதைவிட. ஒன்றன் உயிர்- ஒரு பிராணியின் உயிரை. செகுத்து - கொன்று. உண்ணாமை- அவ்வுடம்பை உண்ணா திருப்பதே. நன்று - நல்லது. (க-து) ஆயிரம் யாகங்கள் செய்வதைவிடப் புலால் உண்ணாமையே சிறந்தது. 10. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும். (ப-உ) கொல்லான்- ஓர் உயிரையும் கொல்லாமல். புலாலை - மாமிசத்தையும். மறுத்தானை- உண்ணாமல் விட்டவனை. எல்லா உயிரும்- எல்லா உயிர்களும். கைகூப்பித் தொழும்-கைகுவித்து வணங்கும். (க-து) கொலையையும் ஊனையும் கைவிட்டவனை எல்லா உயிர்களும் வணங்கும். 27. தவம் தம் துன்பங்களைத் தாங்கிப் பிற உயிர்களுக்கு நலம் புரிதல். 1. உற்றநோய் நோன்றல், உயிர்க்குஉறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. (ப-உ) உற்றநோய்- தமக்கு நேர்ந்த துன்பத்தை. நோன்றல்- பொறுத்துக் கொள்ளுதல். உயிர்க்கு- பிற உயிர்க்கு. உறுகண் செய்யாமை- துன்பம் செய்யாமை. அற்றே- அவ்வளவே. தவத்திற்கு உரு- தவத்திற்கு வடிவமாகும். (க-து) தமது துன்பத்தைப் பொறுத்துக் கொள்வதும், பிறவுயிர்க்குத் தீங்கு செய்யாமையும் தவமாகும். 2. தவமும் தவம்உடையார்க்கு ஆகும்; அவம்,அதனை அஃதுஇலார் மேற்கொள் வது. (ப-உ) தவமும்- தவமும். தவம் உடையார்க்கு- முன்செய்த தவம் உள்ளவர்க்கே. ஆகும்- உண்டாகும். அஃது இலார்- அந்த முன்னைத் தவம் இல்லாதவர். அதனை மேற் கொள்வது- அத் தவத்தை மேற்கொள்வது. அவம்- வீணாகும். (க-து) முற்பிறப்பில் தவம் புரிந்தோர்க்கே இப் பிறப்பில் தவம் கைகூடும். 3. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். (ப-உ) துறந்தார்க்கு- துறந்தவர்களுக்கு. துப்புரவு- உணவு முதலியன கொடுத்து. வேண்டி- உதவ விரும்பி. மற்றையவர்கள்- இல்லறத்தில் உள்ளோர். தவம்- தவம் செய்வதை. மறந்தார் கொல்- மறந்து விட்டனரோ? (க-து) துறவிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற் காகவே இல்லறத்தார் தவம் புரிவதில்லை. 4. ஒன்னார்த் தெறலும், உவந்தாரை ஆக்கலும், எண்ணின், தவத்தால் வரும். (ப-உ) ஒன்னார்- பகைவரை. தெறலும்- அழித்தலையும். உவந்தாரை- விரும்பினவரை. ஆக்கலும்- உயரச் செய்வதையும். எண்ணின்- நினைத்தால். தவத்தான் வரும்- அவை தவ வலிமை யால் உண்டாகும். (க-து) தவத்தால் ஆக்கவும் அழிக்கவும் வலிமை பெறலாம். 5. வேண்டிய, வேண்டியாங்கு எய்தலால், செய்தவம் ஈண்டு முயலப் படும். (ப-உ) வேண்டிய- விரும்பியவைகளை. வேண்டி ஆங்கு- விரும்பியவாறே. எய்தலால்- அடையலாம் ஆதலால். செய்தவம்- செய்கின்ற தவத்தை. ஈண்டு- இவ்வுலகிலேயே. முயலப்படும்- முயன்று செய்யத்தகும். (க-து) தவம் புரிவதால் எண்ணியவைகளையெல்லாம் எளிதில் பெறலாம். 6. தவம்செய்வார் தம்கருமம் செய்வார்; மற்றுஅல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு. (ப-உ) தவம் செய்வார்- தவம் செய்கின்றவரே. தம் கருமம்- தமக்குரிய காரியத்தை. செய்வார்- செய்கின்றவர் ஆவார். மற்று அல்லார்- மற்றவர்கள். ஆசையுள் பட்டு- ஆசைவலையுள் அகப் பட்டு. அவம் செய்வார்- வீண் காரியம் செய்கின்றவர் ஆவர். (க-து) தவம் புரிவோரே தம்முயிர்க்கு நன்மை தேடுவார்; மற்றவர் வீண்காரியம் புரிகின்றவர் ஆவர். 7. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும், துன்பம் சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (ப-உ) சுட- புடம் இட்டுச் சுடுவதனால். சுடரும்- ஒளி வீசுகின்ற. பொன்போல்- பொன்னைப்போல. நோற்கிற்பவர்க்கு- தவம் செய்வோர்க்கு. துன்பம் சுடச் சுட- துன்பம் தோன்றி வருத்த வருத்த. ஒளிவிடும்- அவர் ஞானம் பெருகும். (க-து) புடத்தால் பொன் பிரகாசிப்பதுபோல், தவத்தால் அறிவு பிரகாசிக்கும். 8. தன்உயிர், தான் அறப் பெற்றானை ஏனைய மன்உயிர் எல்லாம் தொழும். (ப-உ) தன்உயிர்- தனது உயிர். தான்- தான் என்னும் செருக்கு. அறப்பெற்றானை- நீங்கப் பெற்றவனை. ஏனைய- மற்றைய. மன்உயிர் எல்லாம்- நிலைத்த உயிர்கள் எல்லாம். தொழும்- வணங்கும். (க-து) செருக்கற்றவனை எல்லா உயிர்களும் வணங்கும். 9. கூற்றம் குதித்தலும் கைகூடும், நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (ப-உ) நோற்றலின்- தவத்தினால் வரும். ஆற்றல்- வலிமை. தலைப்பட்டவர்க்கு- கைகூடினவர்க்கு. கூற்றம்- எமனிடமிருந்து. குதித்தலும்- தப்பித்துக் கொள்ளுதலும். கைகூடும் -உண்டாகும். (க-து) தவவலிமையுள்ளவர் எமனிடமிருந்தும் தப்பித்துக் கொள்ளுவார். 10. இலர்பலர் ஆகிய காரணம், நோற்பார் சிலர்;பலர் நோலா தவர். (ப-உ) இலர்- வறியவர். பலர் ஆகிய காரணம்- பலராக இருப்பதற்குக் காரணம். நோற்பார் சிலர்- தவஞ் செய்கின்றவர் சிலர். நோலாதவர்- தவம் புரியாதவர். பலர்- பலர் ஆவர். (க-து) தவம் புரிந்தோர் செல்வராகவும், தவம் புரியாதவர் வறியராகவும் இருக்கின்றனர். 28. கூடா ஒழுக்கம் பொருந்தாத கெட்ட நடத்தை. 1. வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம், பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். (ப-உ) வஞ்ச மனத்தான்- வஞ்சக எண்ணம் உள்ளவனது. படிற்று ஒழுக்கம்- பொய் ஒழுக்கத்தைக் கண்டு. பூதங்கள் ஐந்தும்- அவனோடு உள்ள *பூதங்கள் ஐந்தும் அகத்தே- தமக்குள்ளேயே. நகும்- சிரிக்கும். (க-து) வஞ்சகனது பொய்யொழுக்கத்தைக் கண்டு அவனிடம் உள்ள ஐம்பூதங்களும் சிரிக்கும். 2. வான்உயர் தோற்றம் எவன்செய்யும்? தன்நெஞ்சம் தான்அறி குற்றப் படின். (ப-உ) தன் நெஞ்சம்- தனது மனம். தான் அறி குற்றம்- தான் அறிந்த குற்றத்தில். படின்- ஈடுபடுமாயின். வான் உயர்- வான்போல் உயர்ந்த. தோற்றம்- தவ வேடம். எவன் செய்யும்- என்ன பயனைத் தரும்? (க-து) அறிந்தும் தன் மனம் குற்றம் செய்யுமானால் தவ வேடத்தால் என்ன பயன்? 3. வலியில் நிலைமையான் வல்உருவம், பெற்றம், புலியின்தோல் போர்த்துமேய்ந்து அற்று. (ப-உ) வலிஇல்- மனவலிமை இல்லாத. நிலைமையான்- தன்மையுள்ளவன். வல்உருவம்- வலிய தவ வேடம் கொள்ளுதல். பெற்றம்- பசுவானது. புலியின் தோல் போர்த்து- புலித்தோலைப் போர்த்திக்கொண்டு. மேய்ந்து அற்று- பயிரை மேய்ந்தது போலாம். (க-து) மனதை அடக்கும் வலிமையற்றவன் தவவேடம் பூணுவதால் பயன் இல்லை; அவன் மனம் தீமையைத்தான் நாடும். 4. தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று. (ப-உ) தவம் மறைந்து- தவ வேடத்தில் ஒளிந்து நின்று. அல்லவை செய்தல்- தீமைகளைச் செய்வது. புதல் மறைந்து-புதரிலே மறைந்து நின்று. வேட்டுவன்- வேடன். புள் சிமிழ்த்து அற்று- பறவைகளைப் பிடிப்பது போன்றதாகும். (க-து) தவ வேடம் பூண்டு தீமை செய்தல், வேடன் புதரிலே மறைந்து நின்று பறவைகளைப் பிடிக்கும் செய்கை போன்ற தாகும். 5. பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம், எற்றுஎற்று என்று ஏதம் பலவும் தரும். (ப-உ) பற்று அற்றேம்- ஆசைகளை விட்டோம். என்பார்- என்பவரின். படிற்று ஒழுக்கம்- பொய்யொழுக்கமானது. எற்று எற்று- என்ன செய்தோம் என்ன செய்தோம். என்று- என்று தாமே வருந்தும்படியான. ஏதம் பலவும்- துன்பங்கள் பலவற்றையும். தரும்- கொடுக்கும். (க-து) பொய்யொழுக்கம் உள்ளோர் தாமே வருந்தும்படி அவ்வொழுக்கம் அவர்க்குப் பல துன்பங்களைத் தரும். 6. நெஞ்சில் துறவார், துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின், வன்கணார் இல். (ப-உ) நெஞ்சில்- உள்ளத்தில். துறவார்- ஆசையை விடாமல். துறந்தார்போல- துறந்தாரைப் போல். வஞ்சித்து- ஏமாற்றி. வாழ்வாரின்- வாழ்கின்றவரைப்போல. வன்கணார்- இரக்கம் அற்றவர். இல்- யாரும் இல்லை. (க-து) துறந்தவர்போல் நடிப்பவர்கள் கொடியவர்கள். 7. புறங்குன்றி கண்டனைய ரேனும், அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து. (ப-உ) புறம்- வெளியில். குன்றி- குன்றிமணியை. கண்டு அனையரேனும்- பார்ப்பது போன்ற செம்மையராயினும். அகம்- உள்ளே. குன்றி மூக்கின்- அக்குன்றிமணியின் மூக்குப்போல். கரியார்- கறுத்திருப்பவரை. உடைத்து- இவ்வுலகம் கொண்டிருக் கின்றது. (க-து) வெளியில் குன்றிமணிபோல் சுத்தமும், உள்ளத்தில் அதன் மூக்குப்போல் குற்றமும் உள்ளவர்கள் இவ்வுலகில் உள்ளனர். 8. மனத்தது மாசாக, மாண்டார் நீராடி மறைந்தொழுகும் மாந்தர் பலர். (ப-உ) மனத்தது- மனத்திலே. மாசு ஆக- குற்றம் இருக்க. மாண்டார்- தவத்தில் சிறந்தவர்போல். நீராடி- நீரில் மூழ்கி. மறைந்து ஒழுகும்- வேடத்தில் மறைந்து வாழும். மாந்தர் பலர்- மனிதர் பலர் உள்ளனர். (க-து) உள்ளத்தில் வஞ்சனையுடன், உடலைமட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு வாழ்வோர் பலர். 9. கணைகொடிது; யாழ்கோடு செவ்விது; ஆங்குஅன்ன, வினைபடு பாலால் கொளல். (ப-உ) கணை- அம்பு ஒழுங்காக இருந்தாலும். கொடிது - கொடுமையானது. யாழ்- யாழின் தண்டு. கோடு- வளைவா யிருந்தாலும். செவ்விது- நன்மையானது. ஆங்கு அன்ன- அவை போல. வினைபடுபாலால்- அவரவர்கள் செயலின் விளைவைக் கொண்டு. கொளல்- அவர்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். (க-து) ஒருவர் ஒழுக்கத்தைக்கொண்டே அவரை நல்லவரா, கெட்டவரா என்று காணவேண்டும். 10. மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின். (ப-உ) உலகம்- பெரியோரால். பழித்தது- பழிக்கப்பட்ட கூடாத ஒழுக்கத்தை. ஒழித்துவிடின்- விட்டுவிட்டால். மழித்தலும்- தலைமயிரை மழுங்கச் சிறைப்பதும். நீட்டலும்- நீட்டி வளர்ப்பதும். வேண்டா- வேண்டாம். (க-து) பழிக்கத்தக்க குற்றங்களை விட்டுவிட்டால் மொட்டையும் வேண்டாம், சடையும் வேண்டாம். 29. கள்ளாமை பிறர் பொருளைக் களவு செய்யாமை. 1. எள்ளாமை வேண்டுவான் என்பான், எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (ப-உ) எள்ளாமை- பிறரால் பழிக்கப்படாமல். வேண்டுவான் என்பான்- வாழ விரும்புகின்றவன் என்பவன். எனைத்து ஒன்றும்- யாதொரு பொருளையும். கள்ளாமை- களவு செய்ய நினைக்காத படி. தன் நெஞ்சு - தன் மனத்தை. காக்க- காக்கவேண்டும். (க-து) களவாட நினைக்காதவனே பிறரால் இகழப்பட மாட்டான். 2. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறர்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். (ப-உ) உள்ளத்தால்- மனத்தால். உள்ளலும்- குற்றத்தை நினைப்பதும். தீதே- தீமையாகும்; ஆதலால். பிறர் பொருளை- பிறர் பண்டத்தை. கள்ளத்தால்- வஞ்சனையால். கள்வேம்- களவாடுவோம். எனல்- என்று நினையாதிருக்க வேண்டும். (க-து) தீமைகளை நினைப்பதும் குற்றம். ஆதலால் பிறர் பொருளைக் களவாட எண்ணக்கூடாது. 3. களவினால் ஆகிய ஆக்கம், அளவுஇறந்து, ஆவது போலக் கெடும். (ப-உ) களவினால்- களவாடுவதால். ஆகிய-உண்டாகிய. ஆக்கம்- செல்வம். ஆவதுபோல- வளர்வது போலத் தோன்றி. அளவுஇறந்து- பின்னர் அளவுக்கு மேல். கெடும்- அழியும். (க-து) களவால் வரும்செல்வம் வளர்வதுபோல் காணப் பட்டாலும் பின்னர் அளவுக்குமேல் அழியும். 4. களவின்கண் கன்றிய காதல், விளைவின்கண் வீயா விழுமம் தரும். (ப-உ) களவின்கண்- களவாடுவதிலே. கன்றிய- மிகுந்த. காதல்- ஆசையானது. விளைவின்கண்- தன்பயனைத் தரும் போது. வீயா- அழியாத. விழுமம் தரும்- துன்பத்தைத் தரும். (க-து) களவை விரும்பினால், அது தொலையாத துன்பத்தைத் தரும். 5. அருள்கருதி அன்புடையர் ஆதல், பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். (ப-உ) அருள் கருதி- அருளின் பெருமையை நினைத்து. அன்புடையர் ஆதல்- அன்புள்ளவராய் நடத்தல். பொருள் - பிறர் பொருளை. கருதி- களவாட நினைத்து. பொச்சாப்பு- அவர் சோர்ந்திருக்கும் காலத்தை. பார்ப்பார்கண்- பார்ப்பவர்களிடம். இல்- இல்லை. (க-து) பிறர்பொருளைக் களவாட எண்ணுவோரிடம் அருளும், அன்பும் இல்லை. 6. அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார், களவின்கண் கன்றிய காத லவர். (ப-உ) களவின்கண்- களவில். கன்றிய- மிகுந்த. காதலவர்- ஆசையுள்ளவர். அளவின்கண்-ஒழுக்கமாகிய எல்லையிலே. நின்று- நிலைத்து நின்று. ஒழுகல் ஆற்றார்- வாழமாட்டார். (க-து) களவிலே ஆசையுள்ளவர் ஒழுக்கமுடன் வாழ மாட்டார். 7. களவுஎன்னும் கார்அறி வாண்மை, அளவுஎன்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். (ப-உ) களவு என்னும்- களவு என்று சொல்லப்படும். கார் அறிவு ஆண்மை- இருண்ட அறிவுள்ளவராயிருத்தல். அளவு என்னும்- ஒழுக்கத்தின் அளவிலே நின்று வாழ்தல் என்னும். ஆற்றல்- பெருமையை. புரிந்தார்கண்- விரும்பின வரிடம். இல்- இல்லை. (க-து) ஒழுக்கந் தவறாமல் வாழ விரும்புவோரிடம் களவு செய்ய நினைக்கும் அறியாமை இல்லை. 8. அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும் களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு (ப-உ) அளவு அறிந்தார்- ஒழுக்கத்தின் அளவை அறிந்தவர்களின். நெஞ்சத்து- மனத்தில். அறம்போல- அறம் வளர்ந்திருப்பதுபோல. களவு அறிந்தார்- களவு செய்து பழகி யவர்களின். நெஞ்சில்- மனத்துள். கரவு- வஞ்சனை. நிற்கும்- பெருகி நிற்கும். (க-து) ஒழுக்கம் உள்ளோர் நெஞ்சில் அறம் வளர்வது போல், களவாடுவோர் நெஞ்சில் வஞ்சகம் வளரும். 9. அளவுஅல்ல செய்து,ஆங்கே வீவர்; களவுஅல்ல மற்றைய தேற்றா தவர். (ப-உ) களவு அல்ல- களவாடுவதைத் தவிர. மற்றைய- மற்ற நன்மைகளை. தேற்றாதவர்- அறியாதவர். அளவு அல்ல செய்து- அளவற்ற தீமைகளைச் செய்து. ஆங்கே வீவர்- அப்பொழுதே கெடுவார்கள். (க-து) களவுசெய்வோர், அளவற்ற தீமைகளைச் செய்து அழிவார்கள். 10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தேள் உலகு. (ப-உ) கள்வார்க்கு - களவு செய்வோருக்கு. உயிர் நிலை- உடம்புக்கு வரும் இன்பம். தள்ளும்- தவறும். கள்ளார்க்கு- களவு செய்யாதவருக்கு. புத்தேள் உலகு- தேவர் உலக இன்பமும். தள்ளாது- தவறாமல் கிடைக்கும். (க-து) களவு செய்வோருக்கு இவ்வுலகில் இன்பம் இல்லை. களவு செய்யாதவர்க்கு இவ்வுலகிலும் தேவர் உலகிலும் இன்பம் உண்டு. 30. வாய்மை உண்மையின் பெருமை. 1. வாய்மை எனப்படுவது யாதுஎனின்? யாதுஒன்றும் தீமை இலாத சொலல். (ப-உ) வாய்மை எனப்படுவது - உண்மை என்று சொல்லப் படுவது. யாது எனின்- என்னவென்றால். யாதுஒன்றும்- மற்றவர்க்குச் சிறிதும். தீமை இலாத- தீமை தராத. சொலல்- சொற்களைக் கூறுதல். (க-து) பிறருக்குத் தீமை தராத சொற்களைக் கூறுவதே உண்மைச் சொற்கள். 2. பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். (ப-உ) பொய்ம்மையும் - பொய்யான சொற்களும். புரைதீர்ந்த- குற்றமற்ற. நன்மை- நன்மையை. பயக்கும் எனின்- தருமானால். வாய்மை- உண்மை என்று கருதத்தக்க. இடத்த- நிலையை உடையனவாம். (க-து) நல்ல நன்மையைத் தருமாயின், பொய்யும் உண்மை போன்றதாகும். 3. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின், தன்நெஞ்சே தன்னைச் சுடும். (ப-உ) தன் நெஞ்சு அறிவது- தன் மனமறிந்த உண்மையைப் பற்றி. பொய்யற்க- பொய் கூறக்கூடாது. பொய்த்த பின்- பொய் கூறியபின். தன் நெஞ்சே - தன் மனமே. தன்னைச் சுடும்- தன்னைத் துன்புறுத்தும். (க-து) மெய்யை அறிந்தும் பொய் சொல்லக்கூடாது. அதனால், தானே வருந்த நேரிடும். 4. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன். (ப-உ) உள்ளத்தால்- ஒருவன் தன் மனம் அறிய. பொய்யாது- பொய் பேசாமல். ஒழுகின்- நடப்பானாயின் அவன். உலகத்தார்- பெரியோர்களின். உள்ளத்துள் எல்லாம்- மனங்களில் எல்லாம். உளன்- இருப்பவன் ஆவான். (க-து) பொய் பேசாதவன் பெரியோர்களால் பாராட்டப் படுவான். 5. மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு தானம்செய் வாரின் தலை. (ப-உ) மனத்தொடு- ஒருவன் தன் மனத்துடன் பொருந்த. வாய்மை மொழி யின்- உண்மை பேசுவானாயின், அவன். தவத் தொடு- தவத்துடன். தானம் செய்வாரின்- தானமும் செய்கின்ற வரைவிட. தலை- சிறந்தவன் ஆவான். (க-து) உண்மையுரைப்போன் தவமும் தானமும் செய்கின்றவரைவிடச் சிறந்தவன். 6. பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை எல்லா அறமும் தரும். (ப-உ) பொய்யாமை அன்ன- பொய் பேசாமையைப் போன்ற. புகழ் இல்லை- புகழ் வேறு ஒன்றும் இல்லை. எய்யாமை- வருந்தாமலே. எல்லா அறமும்- எல்லா அறங்களையும். தரும்- அது கொடுக்கும். (க-து) பொய் சொல்லாதிருப்பது புகழ்; அது எல்லா நன்மைகளையும் தரும். 7. பொய்யாமை; பொய்யாமை ஆற்றின், அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. (ப-உ) பொய்யாமை- பொய் சொல்லாதிருத்தலை. பொய் யாமை- உண்மையாகவே. ஆற்றின்- பின்பற்றினால். அறம்பிற- பிற அறங்களை. செய்யாமை செய்யாமை- செய்யாமையும். நன்று- நல்லது. (க-து) பொய் சொல்லாமல் வாழ்ந்தால், பிற தருமங்களைச் செய்யாவிடினும் நன்மை உண்டாகும். 8. புறம்தூய்மை நீரால் அமையும்; அகம்தூய்மை வாய்மையால் காணப் படும். (ப-உ) புறம்- வெளியிலே. தூய்மை - பரிசுத்தமாக இருப்பது. நீரால்- தண்ணீரால். அமையும்- உண்டாகும்; அதுபோல். அகம்- மனம். தூய்மை- பரிசுத்தமாக இருப்பது. வாய்மையால் - உண்மையால். காணப்படும்- உண்டாகும். (க-து) உடம்பு, நீரால் பரிசுத்தமாகும்; உள்ளம், உண்மை யால் பரிசுத்தமாகும். 9. எல்லா விளக்கும் விளக்குஅல்ல; சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (ப-உ) எல்லா விளக்கும்- இருட்டை நீக்கும் விளக்குகள் எல்லாம். விளக்கு அல்ல- விளக்குகள் அல்ல. சான்றோர்க்கு- அறிவு நிறைந்தோர்க்கு. பொய்யா விளக்கே- உண்மையாகிய விளக்கே. விளக்கு- விளக்காகும். (க-து) பொய் சொல்லாமையே அறியாமையை நீக்கும் விளக்காகும். 10. யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை, எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. (ப-உ) யாம்- நாம். மெய்யா- உண்மையாக. கண்டவற்றுள்- பார்த்தவைகளிலே. எனைத்து ஒன்றும்- எவ்வகையிலும். வாய்மையின்- உண்மையைவிட. நல்ல - நல்லவை. பிற இல்லை- வேறு இல்லை. (க-து) உண்மையைவிடச் சிறந்தது வேறு எவையும் இல்லை. 31. வெகுளாமை கோபம் கொள்ளாமை. 1. செல்இடத்துக் காப்பான் சினம்காப்பான், அல்இடத்துக் காக்கின்என்? காவாக்கால் என்? (ப-உ) செல்இடத்து- கோபம் பலிக்கும் இடத்தில். காப்பான்- வராமல் தடுப்பவனே. சினம் காப்பான்- கோபத்தைத் தடுப்பவன். அல்இடத்து- கோபம் பலிக்காத இடத்தில். காக்கின் என்- தடுத்தால் என்ன? காவாக்கால் என்- தடுக்கா விட்டால்தான் என்ன? (க-து) எளியார்மேல் வரும் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனே சினத்தைக் காப்பவன் ஆவான். 2. செல்லா இடத்துச் சினம்தீது; செல்இடத்தும் இல்அதனின் தீய பிற. (ப-உ) செல்லா இடத்து- பலிக்காத இடத்தில். சினம் தீது- கோபம் கொள்ளுதல் தீமையாம். செல்இடத்தும்- பலிக்கும் இடத்திலும். அதனின்- அக்கோபத்தைவிட. தீய- தீமை உள்ளவை. பிறஇல்- வேறுஇல்லை. (க-து) யாரிடம் கோபங்கொண்டாலும் அது குற்றமாகவே முடியும். 3. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய பிறத்தல் அதனால் வரும். (ப-உ) யார் மாட்டும்- யாவர் இடத்தும். வெகுளியை- கோபத்தை. மறத்தல்- மறக்கவேண்டும். தீய பிறத்தல்- தீமைகள் தோன்றுதல். அதனால் வரும்- அக்கோபத்தால் வரும். (க-து) கோபத்தால் தீமைகள் பல உண்டாகும். அதனால் அதனை மறத்தல் நலம். 4. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற? (ப-உ) நகையும்- முகமலர்ச்சியையும். உவகையும்- மனமகிழ்ச்சியையும். கொல்லும்- அழிக்கின்ற. சினத்தின்- கோபத்தைவிட. பிற-வேறு. பகையும் உளவோ- ஒருவனுக்குப் பகையும் உண்டோ? (க-து) முகமலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும் கோபம் கெடுக்கும். ஆதலால் அதைவிட ஒருவனுக்கு வேறு பகையில்லை. 5. தன்னைத்தான் காக்கின், சினம்காக்க; காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். (ப-உ) தன்னை- ஒருவன் தன்னை. தான் காக்கின்- தானே காப்பாற்றிக்கொள்ள நினைத்தால். சினம்காக்க- கோபம் வராமல் காத்துக்கொள்ளுக. காவாக்கால்- காக்காவிட்டால். சினம்- கோபமானது. தன்னையே- அதைக் கொண்டவனையே. கொல்லும்- அழித்துவிடும். (க-து) கோபமே ஒருவனை அழித்துவிடும். ஆதலால் ஒருவன் தன்னைக் காக்கவேண்டினால் கோபத்தைத் தடுத்துக் கொள்ளவேண்டும். 6. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி, இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். (ப-உ) சினம் என்னும்- கோபம் என்னும். சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பானது. இனம் என்னும்- உறவினர் என்று சொல்லப்படும். ஏமம்- பாது காப்பாகிய. புணையை- தெப்பத்தை. சுடும்- எரித்து விடும். (க-து) கோபத்தீ தன்னையும் தன் இனத்தையும் சுட்டழிக்கும். 7. சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று. (ப-உ) சினத்தை- கோபத்தை. பொருள் என்று- ஒரு பொருள் என்று. கொண்டவன்- பற்றிக்கொண்டிருப்பவனது. கேடு -துன்புறுதல். நிலத்து- பூமியில். அறைந்தான்- அறைந்த வனுடைய. கை பிழையாது அற்று- கை தப்பாது அடிபடுவது போன்றதாகும். (க-து) நிலத்திலே அடித்தவன் கை வருந்துவது போல், கோபம் கொண்டவன் துன்புறுவான். 8. இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. (ப-உ) இணர்எரி- பல சுடர்களையுடைய நெருப்பிலே. தோய்வு அன்ன- படிவதுபோன்ற. இன்னா- துன்பங்களை. செயினும்- ஒருவன் செய்தாலும். புணரின்- கூடுமானால். வெகுளாமை- அவன் மேல் கோபம் கொள்ளாமை. நன்று- நல்லது. (க-து) ஒருவன் தீப்போல் துன்புறுத்தினாலும் அவன்மேல் கோபம் கொள்ளாதிருத்தல் நல்லது. 9. உள்ளிய எல்லாம் உடன்எய்தும்; உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். (ப-உ) உள்ளத்தால்- ஒருவன் தன் மனத்தால். வெகுளி- கோபத்தை. உள்ளான் எனின்- நினைக்காதிருப்பான் ஆயின் அவன். உள்ளிய எல்லாம்- தான் நினைத்தவைகளையெல்லாம். உடன் எய்தும்- உடனே பெறுவான். (க-து) கோபத்தை மனத்தாலும் நினையாதவன்தான் எண்ணிய நன்மைகளையெல்லாம் அடைவான். 10. இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. (ப-உ) இறந்தார்- சினம்மிகுந்தவர். இறந்தார் அனையர்- செத்தாரைப் போன்றவர். சினத்தைத் துறந்தார்- கோபத்தை விட்டவர். துறந்தார் துணை- துறவி களுக்கு ஒப்பாவார். (க-து) கோபங் கொண்டவர் செத்தவரையும், கோபத்தை விட்டவர் துறவி களையும் ஒப்பார். 32. இன்னா செய்யாமை ஓர் உயிர்க்கும் துன்பம் செய்யாமை. 1. சிறப்புஈனும் செல்வம் பெறினும், பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். (ப-உ) சிறப்பு ஈனும்- பெருமையைத் தருகின்ற. செல்வம் பெறினும்- செல்வத்தை அடைவதாயினும். பிறர்க்கு- மற்றவர்க்கு. இன்னா செய்யாமை- துன்பம் செய்யாமலிருப்பதே. மாசு அற்றார்- குற்றமற்றவர்களின். கோள்- கொள்கையாகும். (க-து) பெருமை தரும் செல்வம் கிடைப்பதாயினும் பிறர்க்குத் துன்பம் செய்யாமையே நல்லோர் கொள்கை. 2. கறுத்துஇன்னா செய்தஅக் கண்ணும், மறுத்துஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். (ப-உ) கறுத்து- ஒருவன் கோபித்து. இன்னா- தனக்குத் துன்பத்தை. செய்த அக்கண்ணும்- செய்த அப்பொழுதும். மறுத்து- மீண்டு. இன்னா செய்யாமை- அவனுக்குத் துன்பம் செய்யாமையே. மாசுஅற்றார்- குற்றமற்றவர்களின். கோள்- கொள்கை. (க-து) தனக்குத் துன்பம் செய்தவனுக்கும் தான் துன்பம் செய்யாமலிருப்பதே குற்றமற்றவர் கொள்கை. 3. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின், உய்யா விழுமம் தரும். (ப-உ) செய்யாமல்- தான் துன்பம் செய்யாதிருக்க. செற்றார்க்கும்- தனக்குத் தீமை செய்தவர்க்கும். இன்னாத- துன்பங்களை. செய்தபின்- செய்த பிறகு அவை. உய்யா- தப்பிக்க முடியாத. விழுமம்- துன்பத்தை. தரும்- கொடுக்கும். (க-து) தனக்குத் துன்பம் செய்தவர்க்கும், தான் துன்பம் செய்வதால் தனக்குத் தீமைதான் உண்டாகும். 4. இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர்நாண நன்னயம் செய்து விடல். (ப-உ) இன்னா செய்தாரை- துன்பம் செய்தவரை. ஒறுத்தல்- தண்டிப்பதாவது. அவர் நாண- அவர் வெட்கம் அடையும்படி. நல்நயம்- நல்ல நன்மைகளை. செய்து-புரிந்து. விடல்- அவர் செய்த தீமைகளை மறந்து விடுதலாம். (க-து) துன்பம் செய்தாரைத் தண்டித்தல், அவர் நாணும் படி நன்மை செய்வதாம். 5. அறிவினான் ஆகுவது உண்டோ? பிறிதின்நோய் தம்நோய்போல் போற்றாக் கடை. (ப-உ) பிறிதின் நோய்- மற்ற உயிரின் துன்பத்தை. தம் நோய்போல்- தமக்கு வந்த துன்பம்போல் எண்ணி. போற்றாக் கடை- காப்பாற்றாவிட்டால். அறிவினான்- தாம்பெற்றிருக்கும் அறிவால். ஆகுவது உண்டோ- பயன்படுவது உண்டோ? (க-து) பிறவுயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதி, அதை நீக்குவதே அறிவின் பயன். 6. இன்னா எனத்தான் உணர்ந்தவை, துன்னாமை வேண்டும், பிறன்கண் செயல். (ப-உ) இன்னாஎன- துன்பம் என்று. தான் உணர்ந்தவை- தான் அறிந்தவைகளை. பிறன்கண்- பிறனிடம். செயல்- செய்வதை. துன்னாமை வேண்டும்- கைவிட வேண்டும். (க-து) தான் துன்பம் என்று அறிந்தவைகளைப் பிறருக்குச் செய்யக்கூடாது. 7. எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான்ஆம் மாணா செய்யாமை தலை. (ப-உ) எனைத்தானும்- எவ்வளவு சிறியதாயினும். எஞ்ஞான்றும்- எந்நாளும். யார்க்கும்- யாருக்கும். மனத்தான் ஆம்- மனத்தில் உண்டாகின்ற. மாணா- தீமைகளை. செய்யாமை- செய்யாதிருத்தலே. தலை- சிறந்ததாகும். (க-து) யாருக்கும் எப்பொழுதும் சிறு துன்பத்தையும் செய்யாதிருப்பதே சிறந்த தருமம். 8. தன்உயிர்க்கு இன்னாமை தான்அறிவான், என்கொலோ மன்உயிர்க்கு இன்னா செயல். (ப-உ) தன் உயிர்க்கு- தனது உயிருக்கு. இன்னாமை- துன்பந் தருவன இவையென்று. தான் அறிவான்- தான் அறிந்தவன். மன்உயிர்க்கு- நிலையுள்ள பிற உயிர்களுக்கு. இன்னாசெயல்- துன்பம் செய்வது. என்கொல்ஓ- என்ன காரணத்தால்? ஓ: அசை. (க-து) தனக்குத் துன்பம் தரும் என்று அறிந்தவற்றைப் பிறருக்குச் செய்வது ஏன்? 9. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின், தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். (ப-உ) முற்பகல்- முன்பொழுதில். பிறர்க்கு- மற்றவர்க்கு. இன்னா செயின்- துன்பம் செய்தால். பிற்பகல்- பின்பொழுதில். தமக்கு இன்னா- தமக்குத் துன்பம். தாமே வரும்- தாமே உண்டாகும். (க-து) முன்பு பிறருக்குச் செய்யும் தீமை, பின்பு தமக்கே உண்டாகும். 10. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம், நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். (ப-உ) நோய் எல்லாம்- துன்பம் எல்லாம். நோய் செய்தார் மேலஆம்- துன்பம் செய்பவரையே அடைவனவாம்; ஆதலால். நோய் இன்மை- துன்பம் இன்றி வாழ. வேண்டுபவர்- விரும்பு கின்றவர். நோய் செய்யார்- துன்பம் செய்ய மாட்டார். (க-து) தான் துன்பமின்றி வாழ விரும்புவோர் பிறருக்குத் துன்பம் செய்ய மாட்டார். 33. கொல்லாமை பிற உயிர்களைக் கொலை செய்யாதிருத்தல். 1. அறவினை யாதுஎனின் கொல்லாமை; கோறல், பிறவினை எல்லாம் தரும். (ப-உ) அற வினை- தரும காரியம். யாது எனின்- என்னவென்றால். கொல்லாமை - ஓர் உயிரையும் கொல்லாமை. கோறல்- கொல்லுதல். பிறவினை- பாவங்கள். எல்லாம் தரும்- எல்லாவற்றையும் தரும். (க-து) கொல்லாமையே அறம்; கொல்லுதல் பாவம். 2. பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (ப-உ) பகுத்து- கிடைத்ததைப் பங்கிட்டு. உண்டு- சாப்பிட்டு. பல்உயிர்- பல உயிர்களையும். ஓம்புதல்- காப்பாற்றுதல். நூலோர் - அறநூலோர். தொகுத்தவற்றுள் எல்லாம்- சேர்த்துக் கூறிய அறங்களில் எல்லாம். தலை- சிறந்ததாகும். (க-து) கிடைத்த உணவைப் பலருக்கும் பங்கிட்டுக் கொடுத்து உண்ணுவதே சிறந்த அறம். 3. ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்றுஅதன் பின்சாரப் பொய்யாமை நன்று. (ப-உ) ஒன்றாக- சிறப்பாக. கொல்லாமை- கொலை செய்யாமை. நல்லது- நன்மையாகும். மற்று அதன்- அக்கொல்லா மையின். பின்சார- பின்னே நிற்கும்படி. பொய்யாமை- பொய் பேசாதிருத்தல். நன்று - நல்லது. (க-து) கொல்லாமை சிறந்தது; அதற்கு அடுத்தபடி பொய் பேசாமை நல்லது. 4. நல்லாறு எனப்படுவது யாதுஎனின்? யாதுஒன்றும் கொல்லாமை சூழும் நெறி. (ப-உ) நல்ஆறு- நல்ல வழி. எனப்படுவது- என்று சொல்லப்படுவது. யாது எனின்- என்னவென்றால். யாது ஒன்றும்- எந்த உயிரையும். கொல்லாமை- கொல்லாமல் இருக்கும் தருமத்தை. சூழும்- காக்க நினைக்கும். நெறி- வழியாகும். (க-து) எவ்வுயிரையும் கொல்லாமையே நல்ல நெறியாம். 5. நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. (ப-உ) நிலை அஞ்சி- மீண்டும் பிறக்கும் நிலைக்குப் பயந்து. நீத்தாருள் எல்லாம்- துறந்தவர்கள் எல்லோரினும். கொலை அஞ்சி- கொலை பாவத்திற்குப் பயந்து. கொல்லாமை- கொல்லா மையாகிய தருமத்தை. சூழ்வான்- மறவாமல் நினைப்பவனே. தலை- உயர்ந்தவன். (க-து) கொல்லாமையாகிய தருமத்தை மறவாதவனே துறவிகளில் சிறந்தவன். 6. கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்,மேல் செல்லாது உயிர் உண்ணும் கூற்று. (ப-உ) கொல்லாமை- கொல்லாமையாகிய விரதத்தை. மேற்கொண்டு- பின்பற்றி. ஒழுகுவான்- நடப்பவனது. வாழ்நாள் மேல்- ஆயுளின்மேல். உயிர் உண்ணும்- உயிரைக் கவரும். கூற்று- எமன். செல்லாது- போக மாட்டான். (க-து) கொலை செய்யாத விரதமுள்ளவன், நீடூழி வாழ்வான். 7. தன்உயிர் நீப்பினும் செய்யற்க, தான்பிறிது இன்உயிர் நீக்கும் வினை. (ப-உ) தன் உயிர்- தனது உயிர். நீப்பினும்- தனது உடம்பை விட்டு நீங்குவதாயினும். தான் பிறிது - தான் வேறு ஒன்றின். இன்உயிர்- இனிய உயிரை. நீக்கும் வினை- நீக்குவதாகிய காரியத்தை. செய்யற்க- செய்யக்கூடாது. (க-து) தனது உயிர் போவதாயினும், தான் மற்றொரு உயிரைக் கொல்லக் கூடாது. 8. நன்றுஆகும் ஆக்கம் பெரிது,எனினும், சான்றோர்க்கு கொன்றுஆகும் ஆக்கம் கடை. (ப-உ) நன்று ஆகும்- நன்மையுண்டாகும். ஆக்கம்- செல்வம். பெரிதுஎனினும்- கொலையால் மிகுதியாகவரும் என்றாலும். சான்றோர்க்கு- அறிவுள்ளோர்க்கு. கொன்று ஆகும்- கொல்வதனால் உண்டாகும். ஆக்கம்- செல்வம். கடை- இழிவானதாகும். (க-து) கொலையால் வரும் செல்வத்தை அறிஞர்கள் இழிவாகவே எண்ணுவர். 9. கொலைவினையர் ஆகிய மாக்கள், புலைவினையர், புன்மை தெரிவார் அகத்து. (ப-உ) கொலைவினையர் ஆகிய- கொலைத் தொழிலை உடையவர்களாகிய. மாக்கள்- மனிதர்கள். புன்மை- அதன் இழிவை. அறிவார்- உணர்கின்றவர்களின். அகத்து- உள்ளத்து. புலைவினையர்- இழிந்த தொழிலுடையவர்களாகவே எண்ணப் படுவர். (க-து) கொலை செய்வோரை அறிவுள்ளோர் அற்பர் களாகவே எண்ணுவர். 10. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். (ப-உ) செயிர் உடம்பின்- நோய் பொருந்திய உடம்புடன். செல்லா- வறுமையுள்ள. தீவாழ்க்கையவர்- கொடிய வாழ்க்கை யுள்ளவரை. உயிர் உடம்பின்- உயிர்களை உடம்புகளிலிருந்து. நீக்கியார்- நீக்கினவர்கள். என்ப- என்பார்கள். (க-து) கொலை செய்தவர்கள் நோயினாலும் வறுமை யினாலும் துன்புறுவார்கள். 34. நிலையாமை உலகப் பொருள்கள் நிலையற்றவை என்பதை அறிதல். 1. நில்லா தவற்றை; நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. (ப-உ) நில்லாதவற்றை- நிலையில்லாத பொருள்களை. நிலையின- நிலைத்திருப்பவை. என்று உணரும்- என்று நினைக் கின்ற. புல்அறிவு ஆண்மை- அற்பபுத்தியுடையவராயிருத்தல். கடை- இழிவாகும். (க-து) அழியும் பொருள்களை நிலைத்திருப்பவை என்று நினைத்தல் இழிவாகும். 2. கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெரும்செல்வம் போக்கும் அதுவிளிந்து அற்று. (ப-உ) பெரும் செல்வம்- பெரிய செல்வம் உண்டாவது. கூத்து ஆட்டு- கூத்தாடுகின்ற. அவை- சபையிலே. குழாத்து அற்று - கூட்டம் கூடுவது போன்றது. போக்கும்- அச்செல்வம் நீங்குவதும். அது- அக்கூட்டம். விளிந்து அற்று- கலைவதைப் போன்றது. (க-து) கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வது போல் செல்வம் சேரும்; கூத்து முடிந்தபின் கூட்டம் கலைவதுபோல் செல்வம் அழியும். 3. அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். (ப-உ) செல்வம்- செல்வமானது. அற்கா- நிலைக்காத. இயல்பிற்று- தன்மையுள்ளது. அது பெற்றால்- அச்செல்வத்தைப் பெற்றால். அற்குப- நிலையான தருமங்களை. ஆங்கே- அப்பொழுதே. செயல்- செய்ய வேண்டும். (க-து) செல்வம் நிலையற்றது. ஆதலால் செல்வம் கிடைத்தபோதே அறம் செய்க. 4. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாள்அது உணர்வார்ப் பெறின். (ப-உ) உணர்வார்ப் பெறின்- உண்மையை உணர்வாராயின். உயிர்- உயிரானது. நாள்என- நாள் என்று சொல்லப்படும். ஒன்றுபோல்- ஒரு கால அளவைப் போல். காட்டி- தன்னைக் காட்டி. ஈரும்- அறுக்கின்ற. வாள்அது- வாள் முனையில் உள்ளது என்று அறிவர். (க-து) நம் உடம்பு, நாள் என்னும் வாள் முனையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். 5. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன், நல்வினை மேற்சென்று செய்யப்படும். (ப-உ) நாச்செற்று- பேச்சை அடக்கி. விக்குள்- விக்கலானது. மேல்வாரா முன்- எழுவதற்கு முன்பே (இறக்குமுன்). நல்வினை- நல்ல அறம். மேற்சென்று- விரைந்து. செய்யப்படும்- செய்யத் தக்கதாகும். (க-து) இறப்பதற்கு முன்பே அறம் செய்ய வேண்டும். 6. நெருநல் உளன்ஒருவன், இன்றுஇல்லை; என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. (ப-உ) இவ்வுலகு- இந்த உலகம். நெருநல்- நேற்று. உளன் ஒருவன்- இருந்த ஒருவன். இன்று இல்லை- இன்று இறந்தான். என்னும்- என்று சொல்லப்படும். பெருமை உடைத்து- பெருமையை உடையது. (க-து) நேற்று இருந்தான்; இன்று இல்லை என்னும் பெருமையை உடையது இவ்வுலகம். 7. ஒருபொழுதும் வாழ்வது அறியார், கருதுப கோடியும் அல்ல பல. (ப-உ) ஒருபொழுதும்- ஒருநாள் அளவுகூட. வாழ்வது- தாம் உயிர் வாழ்வதை. அறியார்- அறியாதவர்கள். கோடியும் அல்ல- கோடி அளவும் அல்ல. பல- எண்ணற்றவைகளை. கருதுப- நினைப்பார்கள். (க-து) ஒருநாள்கூட உயிர் வாழ்வோம் என்பதை அறியாதவர்கள் அளவற்ற எண்ணங்களை எண்ணுகின்றனர். 8. குடம்பை தனித்தொழிய புள்பறந்து அற்றே உடம்போடு உயிர்இடை நட்பு. (ப-உ) உடம்போடு- உடம்புடன். உயிர் இடை- உயிருக்குள்ள. நட்பு- தொடர்பு. குடம்பை- முட்டையானது. தனித்து ஒழிய- தனித்துக் கிடக்க. புள்- அதனுள்ளிருந்த பறவை. பறந்து அற்று- பருவம் வந்தவுடன் பறந்து போவதைப் போன்றது. (க-து) முட்டைக்கும் பறவைக்கும் உள்ள சம்பந்தமே உடம்புக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு. 9. உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. (ப-உ) உறங்குவது போலும்- தூங்குவது போன்றதாகும். சாக்காடு- சாவு. உறங்கி- தூங்கி. விழிப்பது போலும்- விழிப்பது போன்றதாகும். பிறப்பு- பிறவி. (க-து) சாவு தூக்கத்தையும், பிறப்பு தூங்கி விழிப்பதையும் போன்றவை. 10. புக்கில் அமைந்தின்று கொல்லோ, உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. (ப-உ) உடம்பின் உள்- உடம்பின் ஒரு புறத்தில். துச்சில் இருந்த- ஒண்டுக் குடியாக இருந்த. உயிர்க்கு- உயிருக்கு. புக்குஇல்- புகுந்து நிலைத்திருக்கும் வீடு. அமைந்தின்று கொல்ஓ- அமைய வில்லைபோலும். ஓ: அசை. (க-து) ஒண்டுக்குடியிருந்த உயிர்க்கு நிலையான வீடு கிடைக்கவில்லைபோலும். 35. துறவு உலக ஆசைகளை ஒழித்தல் 1. யாதனின் யாதனின் நீங்கியான்; நோதல் அதனின் அதனின் இலன். (ப-உ) யாதனின் யாதனின்- எந்தெந்தப் பொருள்களின் மேல் வைத்த ஆசையிலிருந்து. நீங்கியான்- விடுபட்டவன். அதனின் அதனின்- அந்தந்தப் பொருளால். நோதல் இலன்- துன்புறமாட்டான். (க-து) பொருள்களின்மேல் ஆசையில்லாதவன் துன்புற மாட்டான். 2. வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின், ஈண்டு இயற்பால பல. (ப-உ) வேண்டின்- இன்பத்தை விரும்பினால். உண்டு ஆக- செல்வம் இருக்கும்போதே. துறக்க - அவைகளைத் துறக்க வேண்டும். துறந்தபின்- துறந்த பிறகு. ஈண்டு இயல்பால- இங்கு உண்டாகும் இன்பங்கள். பல- பலவாகும். (க-து) செல்வம் உள்ளபோதே ஆசையை நீக்க வேண்டும்; அதனால் வரும் இன்பம் பல. 3. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை; விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு. (ப-உ) ஐந்தன்- *ஐம்பொறிகளுக்கும் உரிய. புலத்தை- ஐம்புலன்களையும். அடல் வேண்டும்- கெடுக்கவேண்டும். வேண்டிய எல்லாம்- அவை விரும்பியவைகளை எல்லாம். ஒருங்கு- ஒன்றாக. விடல் வேண்டும்- விட்டுவிட வேண்டும். (க-து) ஐம்புல ஆசையை விட்டவர்களே நன்மை பெறுவார்கள். 4. இயல்பாகும், நோன்பிற்குஒன்று இன்மை; உடைமை மயல்ஆகும் மற்றும் பெயர்த்து. (ப-உ) நோன்பிற்கு- தவத்துக்கு. ஒன்று இன்மை- ஒரு பொருளின்மேலும் ஆசையில்லாமையே. இயல்பு ஆகும்- இயற்கையாகும். உடைமை- ஆசையுடைமை. மற்றும் பெயர்த்து- மீண்டும். மயல் ஆகும்- மனக் கலக்கத்துக்கு இடமாகும். (க-து) ஆசையில்லாமையே தவத்திற்கு இயல்பு; பற்றுடைமை கலக்கத்துக்கு இடமாகும். 5. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை (ப-உ) பிறப்பு- பிறவியை. அறுக்கல் உற்றார்க்கு- நீக்கும் முயற்சியுள்ளவர்க்கு. உடம்பும்- சரீரமும். மிகை- அதிகமாகும் ஆதலால். மற்றும்- அதற்கு மேலும். தொடர்ப்பாடு- பற்றுக் கொள்ளுதல். எவன்கொல் - என்? (க-து) பிறவியை நீக்க முயல்வோர்க்கு உடம்பும் பாரமாகும். அதற்கு மேலும் ஆசை கொள்ளுவதால் அதிகத் துன்பந்தான். 6. யான், எனதுஎன்னும் செருக்குஅறுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். (ப-உ) யான், எனது- இவ்வுடல் யான், இப்பொருள் எனது. என்னும்- என்று நினைக்கும். செருக்கு- அறியாமையை. அறுப்பான்- கெடுப்பவன். வானோர்க்கு- தேவர்க்கும் கிடைக்காத. உயர்ந்த உலகம்- உயர்ந்த மோட்ச லோகத்தில். புகும்- புகுவான். (க-து) நான், எனது என்னும் அறியாமை அற்றவனே மோட்சம் அடைவான். 7. பற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. (ப-உ) பற்றினை- யான், எனது என்னும் ஆசைகளை. பற்றி- பிடித்துக்கொண்டு. விடாதவர்க்கு- அவைகளை விடாதவர்களை. இடும்பைகள்- துன்பங்கள். பற்றி விடா- பிடித்துக்கொண்டு விடாமலிருக்கும். (க-து) யான், எனது என்னும் ஆசையை விடாதவர்களைத் துன்பங்களும் விடமாட்டா. 8. தலைப்பட்டார் தீரத் துறந்தார்; மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். (ப-உ) தீரத் துறந்தார்- முற்றத் துறந்தவரே. தலைப் பட்டார்- முத்தியை அடைந்தவர். மற்றையவர்- அவ்வாறு துறக்காதவர். மயங்கி- அறியாமையால். வலைப்பட்டார்- பிறவி வலையில் அகப்பட்டவர் ஆவார். (க-து) முற்றுந் துறந்தவரே முத்தி பெறுவர்; துறவாதவர் பிறவி வலையில் அகப்படுவர். 9. பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று நிலையாமை காணப் படும். (ப-உ) பற்று அற்ற கண்ணே- ஆசையற்ற பொழுதே. பிறப்பு அறுக்கும்- பிறவியை ஒழிக்கும். மற்று- ஆசை அறாதபோது. நிலையாமை- மாறி மாறி வரும் பிறவித் துன்பம். காணப்படும்- உண்டாகும். (க-து) ஆசையற்றால்தான் பிறவி நீங்கும். ஆசை, பல பிறவிகளைத் தரும். 10. பற்றுக, பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (ப-உ) பற்று அற்றான்- பற்றில்லாத கடவுளிடம் மட்டும். பற்றினை- ஆசையை. பற்றுக- கொள்ளுக. அப் பற்றை - அந்த ஆசையையும். பற்று விடற்கு- மற்ற ஆசைகளை விடுவதற்காக. பற்றுக- கொள்ளுக. (க-து) மற்ற ஆசைகளை ஒழிப்பதற்காக கடவுளிடம் மட்டும் அன்பு கொள்ளவேண்டும். 36. மெய் உணர்தல் உண்மையை அறிவது. 1. பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும் மருளான்ஆம், மாணாப் பிறப்பு. (ப-உ) பொருள் அல்லவற்றை- உண்மைப்பொருள் அல்லாதவைகளை. பொருள் என்று- உண்மைப் பொருள் என்று. உணரும்- எண்ணுகின்ற. மருளான்- மயக்கத்தால். மாணாப் பிறப்பு- சிறப்பில்லாத பிறப்பு. ஆம்- உண்டாகும். (க-து) பொய்ப்பொருளை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தால்தான் பிறப்பு உண்டாகின்றது. 2. இருள்நீங்கி இன்பம் பயக்கும்; மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. (ப-உ) மருள் நீங்கி- மயக்கம் நீங்கி. மாசு அறு- குற்றமற்ற. காட்சியவர்க்கு- உண்மையறிவை உடையவர்க்கு. இருள்நீங்கி- அறியாமை நீங்கி. இன்பம் பயக்கும்- முத்தியைத் தரும். (க-து) உண்மை அறிவைப் பெற்றவரே முத்தி பெறுவர். 3. ஐயத்தின் நீங்கித், தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணியது உடைத்து. (ப-உ) ஐயத்தின் நீங்கி- சந்தேகத்திலிருந்து நீங்கி. தெளிந்தார்க்கு- உண்மை தெரிந்தவர்க்கு. வையத்தின்- நில உலகைவிட. வானம்- வானுலகமாகிய வீடு. நணியது- சமீபத்தில். உடைத்து- உள்ளதாகும். (க-து) சந்தேகம் இன்றி உண்மை ஞானம் பெற்றவர்க்கு மோட்ச உலகம் அருகில் உள்ளது. 4. ஐயுணர்வு எய்தியக் கண்ணும், பயம்இன்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. (ப-உ) மெய் உணர்வு இல்லாதவர்க்கு- உண்மை ஞானம் இல்லாதவர்க்கு. ஐ உணர்வு- ஐந்து புலனும். எய்தியக்கண்ணும்- தமது வசமானபோதிலும். பயன் இன்றுஏ- பயனில்லை. ஏ; அசை. (க-து) உண்மையறியாதவர் புலன் அடக்கமுள்ள வரானாலும் பயன் இல்லை. 5. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (ப-உ) எப்பொருள் - எந்தப் பொருள். எத்தன்மைத்து- எந்தத் தன்மையுள்ளதாய். ஆயினும்- இருந்தாலும். அப் பொருள்- அந்தப் பொருளின். மெய்ப்பொருள- உண்மையான தன்மையை. காண்பது- அறிவதே. அறிவு- உண்மை அறிவாகும். (க-து) எந்தப் பொருளாயினும் அதன் உண்மைத் தன்மை யைக் கண்டறிவதே அறிவாகும். 6. கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், மற்றுஈண்டு வாரா நெறி. (ப-உ) ஈண்டு- இப்பிறப்பிலே. கற்று- கற்க வேண்டி யவைகளைக் கற்று. மெய்ப்பொருள் கண்டார்- உண்மைப் பொருளை உணர்ந்தவர். மற்று ஈண்டு- மீண்டும் இவ்வுலகில். வாரா நெறி- பிறவாத நெறியை. தலைப்படுவர்- அடைவார்கள். (க-து) கற்று உண்மைப்பொருளை உணர்ந்தவர்களே மீண்டும் பிறக்கமாட்டார்கள். 7. ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின், ஒருதலையாப் பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு. (ப-உ) உள்ளம்- ஒருவன் மனம். ஓர்த்து- ஆராய்ந்து. உள்ளது- உண்மையை. உணரின்- அறியுமாயின். ஒருதலையா- நிச்சயமாக. பேர்த்து- மீண்டும். பிறப்பு- பிறப்பு உண்டு என்று. உள்ள வேண்டா- நினைக்க வேண்டாம். (க-து) உண்மையை ஆராய்ந்து அறிந்தவனுக்கு மீண்டும் பிறப்பில்லை. 8. பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும் செம்பொருள் காண்பது அறிவு. (ப-உ) பிறப்பு என்னும்- பிறவிக்குக் காரணம் என்னும். பேதைமை நீங்க- அறியாமை நீங்குவதற்கு. சிறப்பு என்னும்- சிறந்தது என்று சொல்லப்படும். *செம்பொருள்- அழியாத பொருளை. காண்பது- அறிவதே. அறிவு - உண்மை அறிவாகும். (க-து) பிறவிக்குக் காரணமான அறியாமை கெட, அழியாத பொருளை அறிய வேண்டும். 9. சார்புஉணர்ந்து, சார்புகெட ஒழுகின்; மற்றுஅழித்துச் சார்தரா சார்தரு நோய். (ப-உ) சார்பு உணர்ந்து- எல்லாவற்றுக்கும் சார்பான செம்பொருளை அறிந்து. சார்பு கெட - யான், எனது என்னும் பற்று நீங்கும்படி. ஒழுகின்- நடந்தால். மற்று அழித்து- அவன் ஒழுக்கத்தைக் கெடுத்து. சார்தரும்- அடைகின்ற. நோய்- துன்பங்கள். சார்தரா- அவனை அடையமாட்டா. (க-து) உண்மையுணர்ந்து பற்றின்றி வாழ்வானாயின் அவன் துன்புறமாட்டான். 10. காமம், வெகுளி, மயக்கம் இவைமூன்றின் நாமம் கெடக், கெடும் நோய். (ப-உ) காமம்- விருப்பு. வெகுளி- வெறுப்பு. மயக்கம்- அறியாமை என்னும். இவை மூன்றின்- இம்மூன்றினுடைய. நாமம் கெட- பெயரும் இல்லாமல் ஒழுகினால். நோய் கெடும்- துன்பங்கள் அழியும். (க-து) காமம், வெகுளி, மயக்கங்களாகிய குற்றங்களைக் கைவிட்டவரே இன்புற்று வாழ்வர். 37. அவா அறுத்தல் ஆசையை ஒழிப்பது. 1. அவாஎன்ப எல்லா உயிர்க்கும், எஞ்ஞான்றும், தவாஅப் பிறப்புஈனும் வித்து. (ப-உ) எல்லா உயிர்க்கும்- எல்லா உயிர்களுக்கும். எஞ்ஞான்றும்- எக்காலத்திலும். தவா- தவறாமல். பிறப்பு ஈனும்- பிறவியைத் தருகின்ற. வித்து- விதை. அவா என்ப- ஆசைதான் என்று கூறுவர். (க-து) எவ்வுயிர்களுக்கும் பிறவியைத் தரும் விதை ஆசை தான். 2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை; மற்றது வேண்டாமை வேண்ட வரும். (ப-உ) வேண்டும்கால்- ஒன்றை விரும்பினால். பிறவாமை-பிறக்காதிருப்பதையே. வேண்டும்- விரும்ப வேண்டும். மற்றுஅது- அப் பிறவாமை. வேண்டாமை- ஆசையின்மையை. வேண்ட- விரும்புவதனால். வரும்- உண்டாகும். (க-து) பிறக்காமலிருப்பதையே ஒருவன் விரும்ப வேண்டும். ஆசையில்லாமையே பிறவாமைக்கு வழி. 3. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை; ஆண்டும் அஃதுஒப்பது இல். (ப-உ) வேண்டாமை அன்ன- ஆசைப்படாமை போன்ற. விழுச் செல்வம்- சிறந்த செல்வம். ஈண்டு இல்லை- இவ்வுலகில் இல்லை. ஆண்டும்- அவ்வுலகிலும். அஃதுஒப்பது- அதுபோன்ற செல்வம். இல்- இல்லை. (க-து) ஆசையின்மைக்கு ஒப்பான செல்வம் இவ்வுலகிலும் இல்லை; அவ்வுலகிலும் இல்லை. 4. தூஉய்மை என்பது அவாஇன்மை; மற்றது வாஅய்மை வேண்ட வரும். (ப-உ) தூய்மை என்பது- பரிசுத்தம் என்று சொல்லப் படுவது. அவா இன்மை- ஆசையில்லாமை. மற்றது- அந்த ஆசையில்லாமை. வாய்மை- உண்மையை. வேண்ட- விரும்புவ தனால். வரும்- உண்டாகும். (க-து) ஆசையின்மையே பரிசுத்தம். அது, உண்மையை விரும்புவதனால் உண்டாகும். 5. அற்றவர் என்பார் அவாஅற்றார்; மற்றையார் அற்றாக அற்றது இலர். (ப-உ) அற்றவர் என்பார்- பிறவியற்றவர் என்பவர். அவா அற்றார்- ஆசை அற்றவரே. மற்றையார்- ஆசையறாத மற்றவர். அற்றாக- அவர்போல். அற்றது இலர்- பிறவி அற்றவர் அல்லர். (க-து) ஆசையற்றவரே பிறவியற்றவர்; ஆசையுள்ளவர் அடிக்கடி பிறப்பார்கள். 6. அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை வஞ்சிப்பது ஓரும் அவா. (ப-உ) அஞ்சுவது- ஆசைக்கு அஞ்சுவதே. ஓரும்- சிறந்தது என்று உணரத்தக்க. அறன் - அறமாகும். ஒருவனை வஞ்சிப்பது- ஒருவனை ஏமாற்றுவது. ஓரும்- தீயதென்று உணரத்தக்க. அவா- ஆசையேயாகும். (க-து) ஆசைக்கு அஞ்சுவதே அறம்; ஒருவனைக் கெடுப்பது ஆசைதான். 7. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டும் ஆற்றான் வரும். (ப-உ) அவா இல்லார்க்கு- ஆசையற்றவர்க்கு. துன்பம் இல் ஆகும்- துன்பம் இல்லை. அஃது உண்டேல்- ஆசையிருக்குமாயின். தவாது- தவறாமல். மேல்மேல் வரும்- மேலும் மேலும் துன்பம் உண்டாகும். (க-து) ஆசையற்றவர்க்குத் துன்பம் இல்லை; ஆசை யுள்ளவர்க்குத் துன்பம் பெருகும். 9. இன்பம் இடையறாது ஈண்டும்; அவாஎன்னும் துன்பத்துள் துன்பம் கெடின். (ப-உ) அவா என்னும்- ஆசை என்னும். துன்பத்துள் துன்பம்- துன்பங்களுள் மிகுந்த துன்பமானது. கெடின்- கெடுமானால். ஈண்டும்- இவ்வுலகிலும். இன்பம்- இன்பமானது. இடைஅறாது- நீங்காமல் நிற்கும். (க-து) ஆசையற்றோர்க்கு இவ்வுலகில் எந்நாளும் இன்பம் உண்டு. 10. ஆரா இயற்கை அவாநீப்பின், அந்நிலையே பேரா இயற்கை தரும். (ப-உ) ஆரா இயற்கை- என்றும் நிரம்பாத தன்மையுள்ள. அவா நீப்பின்- ஆசையை விட்டால். அந்நிலையே- அப்போதே. பேரா இயற்கை- நீங்காத தன்மையுள்ள இன்பத்தை. தரும்- கொடுக்கும். (க-து) ஆசையில்லாமையே பிறவாமையைத் தரும். 38. ஊழ் முன் செய்த நல்வினை- தீவினைப் பயன். 1. ஆகுஊழால் தோன்றும் அசைவுஇன்மை; கைப்பொருள் போகுஊழால் தோன்றும் மடி. (ப-உ) ஆகுஊழால்- பொருள் சேர்வதற்குக் காரணமாகிய ஊழால். அசைவு இன்மை- முயற்சி. தோன்றும்- உண்டாகும். கைப்பொருள்- கையிலிருக்கும் பொருள். போகுஊழால்- அழிவதற்குக் காரணமாகிய ஊழால். மடி தோன்றும்- சோம்பல் உண்டாகும். (க-து) ஊழ்வினையால்தான் முயற்சியும், சோம்பலும் பிறக்கும். 2. பேதைப் படுக்கும் இழவுஊழ்; அறிவுஅகற்றும் ஆகல்ஊழ் உற்றக் கடை. (ப-உ) இழவு ஊழ்- செல்வத்தை இழப்பதற்கான ஊழ். பேதைப் படுக்கும்- அறிவின்மையை உண்டாக்கும். ஆகல் ஊழ்- செல்வம் சேர்வதற்கான ஊழ். உற்றக்கடை- வந்தபோது. அறிவு அகற்றும்- அறிவை விரிவடையச் செய்யும். (க-து) போக்கும் ஊழ் அறியாமையைத் தரும்; ஆக்கும் ஊழ் அறிவைத் தரும். 3. நுண்ணிய நூல்பல கற்பினும், மற்றும்தன் உண்மை அறிவே மிகும். (ப-உ) நுண்ணிய- சிறந்த பொருள்களையுடைய. நூல் பல- நூல்கள் பலவற்றை. கற்பினும்- ஒருவன் கற்றான் ஆயினும். மற்றும் தன்- பின்னும் அவனுடைய. உண்மை அறிவே- ஊழால் ஆன இயற்கை அறிவே. மிகும்- சிறந்து நிற்கும். (க-து) ஒருவன் எவ்வளவு கற்றிருந்தாலும், அவனுடைய இயற்கை அறிவுதான் முன்நிற்கும். 4. இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு, தெள்ளியர் ஆதலும் வேறு. (ப-உ) உலகத்து இயற்கை- உலகத்தின் இயல்பு. இரு வேறு- இரண்டு வேறுபட்ட தன்மையுள்ளது. திரு- செல்வம் உள்ளவரா யிருப்பது. வேறு- வேறாகும். தெள்ளியர் ஆதலும்- அறிவுள்ளவரா யிருப்பதும். வேறு- வேறாகும். (க-து) உலகில், ஊழினால் செல்வம் உடைமை, அறிவுடைமை என இரண்டு வேற்றுமைகள் உண்டு. 5. நல்லவை எல்லாம் தீயவாம், தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. (ப-உ) செல்வம் - செல்வத்தை. செயற்கு- உண்டாக்குவதற்கு. நல்லவை எல்லாம்- நல்லவைகள் எல்லாம். தீயஆம்- தீமைகளாம். தீயவும்- தீமைகளும். நல்லஆம்- நல்லவைகளாகும். (க-து) செல்வம் சேர்க்கும் முயற்சிக்கு நன்மைகள் தீமையாவதும், தீமைகள் நன்மையாவதும் உண்டு. 6. பரியினும் ஆகாவாம் பால்அல்ல; உய்த்துச் சொரியினும் போகா தம. (ப-உ) பால் அல்ல- ஊழினால் தமக்கு உரிமையல்லாதவை களை. பரியினும்- வருந்திக் காத்தாலும். ஆகாஆம்- நில்லாமல் நீங்கும். தம- ஊழால் தமக்கு உரியவைகளை. உய்த்து - கொண்டு போய். சொரியினும்- கொட்டி விட்டாலும். போகா- தம்மை விட்டு நீங்கமாட்டா. (க-து) தமக்கு உரியது அல்லாத பொருளைக் காத்தாலும் நிலைக்காது; தமக்கு உரியதை வேண்டாம் என்று விலக்கினாலும் போகாது. 7. வகுத்தான் வகுத்த வகைஅல்லால், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. (ப-உ) கோடி தொகுத்தார்க்கும்- கோடிக்கணக்கான பொருளைச் சேர்த்தவர்க்கும். வகுத்தான்- தெய்வத்தால். வகுத்த - இவ்வளவுதான் என்று ஏற்படுத்திய. வகை அல்லாமல்- வகையைத் தவிர. துய்த்தல் அரிது- அதிகமாக அனுபவித்தல் இல்லை. (க-து) கோடிக்கணக்கான பொருளைத் தொகுத்தவரும் ஊழ்வினை தந்த அளவுதான் அனுபவிப்பர். 8. துறப்பார்மன் துப்புரவு இல்லார், உறற்பால ஊட்டா கழியும் எனின். (ப-உ) உறற்பால- வருவதற்குரிய துன்பங்கள் வந்து. ஊட்டா- துன்புறுத்தாமல். கழியும் எனின்-நீங்குமாயின். துப்புரவு இல்லார்- செல்வம் இல்லாதவர். துறப்பார்மன்- துறவறத்தை மேற்கொள்ளுவர். மன்- அசை. (க-து) ஊழ்வினை துன்பங்களைத் தராவிட்டால், வறியவர் துறவை மேற்கொள்ளுவர். 9. நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர், அன்றுஆம்கால் அல்லல் படுவது எவன்? (ப-உ) நன்றுஆம்கால் - நல்வினை உண்டாகும்போது. நல்லஆ- நல்லவைகளாக. காண்பவர்- கண்டு மகிழ்கின்றவர். அன்று ஆம்கால்- தீவினை வரும்போது. அல்லல்படுவது- துன்பப்படுவது. எவன்- ஏன்? (க-து) நன்மைக்கு மகிழ்வது போல, தீமையையும் அனுபவிக்க வேண்டும். 10. ஊழின் பெருவலி யாஉள? மற்றொன்று சூழினும் தான்முந் துறும். (ப-உ) ஊழின்- ஊழைவிட. பெருவலி- மிகுந்த வலிமை உள்ளவை. யாஉள- எவை உண்டு? மற்று ஒன்று- அதை அழிக்க வேறொரு தந்திரத்தை. சூழினும்- நினைத்தாலும். தான் முந்துறும் - அவ்வூழே முதலில் நிற்கும். (க-து) எவ்வழியாலும் ஊழ்வினையை அடக்க முடியாது. பொருட்பால் அரசியல்* 39. இறை மாட்சி அரசன் பெருமை. 1. படை,குடி, கூழ்,அமைச்சு, நட்பு,அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. (ப-உ) படை- சேனையும். குடி- சிறந்த குடிமக்களையுடைய நாடும். கூழ்- உணவுப் பொருளும். அமைச்சு- நல்ல அமைச்சர் களும். நட்பு- நட்பினர்களும். அரண்- பாதுகாப்பும். ஆறும்- ஆகிய ஆறு அங்கங்களையும். உடையவன்- உடையவனே. அரசருள் ஏறு- அரசர்க்குள் ஆண்சிங்கம் போல்வான். (க-து) படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு அங்கங்களும் உடையவனே சிறந்த அரசன். 2. அஞ்சாமை, ஈகை, அறிவு,ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு. (ப-உ) அஞ்சாமை- அஞ்சாத வலிமை. ஈகை- கொடை. அறிவு - அறிவுடைமை. ஊக்கம்- மனஎழுச்சி. இந் நான்கும்- இந்த நான்கு குணங்களும். எஞ்சாமை- குறையாமலிருப்பதே. வேந்தர்க்கு - அரசனுக்கு. இயல்பு- சிறந்த தன்மையாகும். (க-து) அரசனுக்கு வேண்டிய சிறந்த குணங்கள் அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய நான்காகும். 3. தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவற்கு. (ப-உ) தூங்காமை- காலந் தாழ்த்தாமை. கல்வி- படிப்பு. துணிவுடைமை- ஆண்மை உடைமை. இம்மூன்றும்- இம் மூன்று குணங்களும். நிலன் ஆள்பவற்கு- நாட்டை ஆளும் அரசனுக்கு. நீங்காமை- நீங்காமலிருக்க வேண்டிய குணங்கள். (க-து) காலந் தாழ்த்தாமை, கல்வி, வலிமை இம்மூன்றும் அரசனுக்கு எப்பொழுதும் அமைந்திருக்க வேண்டிய குணங்கள். 4. அறன்இழுக்காது அல்லவை நீக்கி, மறன்இழுக்கா மானம் உடையது அரசு. (ப-உ) அறன் இழுக்காது- அறத்தில் தவறாமல். அல்லவை நீக்கி- பாவங்களை நீக்கி. மறன் இழுக்கா- வீரத்தில் தவறாத. மானம் உடையது - உயர்வை உடையவனே. அரசு - அரசனாவான். (க-து) அறநெறியில் நின்று, பாவங்களை நீக்கி, வீரம் குன்றாத உயர்வுள்ளவனே அரசன். 5. இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த வகுத்தலும் வல்லது அரசு. (ப-உ) இயற்றலும்- வருவாய்க்கு வழி செய்தலும். ஈட்டலும்- பொருளைத் தொகுத்தலும். காத்தலும்- அதைப் பாதுகாத்தலும். காத்த வகுத்தலும்- காத்த பொருளை அளவறிந்து செலவு செய்தலும். வல்லது- வல்லவன். அரசு- அரசனாவான். (க-து) பொருளைத் தேடல், சேர்த்தல், காத்தல், அளவறிந்து செலவு செய்தல் இவற்றில் தேர்ந்தவனே அரசனாவான். 6. காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம். (ப-உ) காட்சிக்கு எளியன்- காணுவதற்கு எளியவனாகி. கடுஞ்சொல்லன் அல்லனேல்- கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருப்பானாயின். மன்னன் நிலம்- அந்த அரசனது நாட்டை. மீக்கூறும்- உலகம் உயர்த்திப் பேசும். (க-து) எளிதில் காணக்கூடியவனாகவும், இனிய சொல்லை உடையவனாகவும் இருக்கும் அரசனது நாடு புகழ்பெற்று விளங்கும். 7. இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத், தன்சொலால் தான்கண்ட அனைத்துஇவ் வுலகு. (ப-உ) இன்சொலால் - இனிய சொல்லுடன். ஈத்து- கொடுத்து. அளிக்கவல்லாற்கு- காக்கவல்ல அரசனுக்கு. இவ்உலகு- இந்த உலகம். தன் சொலால்- தன் புகழைக் கூறுவதுடன். தான் கண்ட அனைத்து- தான் நினைத்தபடியெல்லாம் நடக்கும். (க-து) இன்சொல், கொடை, காக்குந் திறமை இவைகளை உடைய அரசன் புகழ்பெறுவான்; உலகம் அவனுக்கு அடங்கி வாழும். 8. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன், மக்கட்கு இறைஎன்று வைக்கப் படும். (ப-உ) முறைசெய்து- நீதிமுறை செய்து. காப்பாற்றும்- நாட்டைக் காக்கும். மன்னவன்- அரசன். மக்கட்கு- மனிதர்களுக்கு. இறை என்று- கடவுள் என்று. வைக்கப்படும் - சிறப்பாக வைக்கப் படுவான். (க-து) நீதி தவறாமல் குடிகளைக் காக்கும் அரசன் கடவு களாக எண்ணப்படுவான். 9. செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. (ப-உ) செவிகைப்ப- காது வெறுக்கும்படி கூறப்படும். சொல் பொறுக்கும்- சொற்களையும் பொறுத்துக்கொள்ளும். பண்பு உடை- குணமுள்ள. வேந்தன் கவிகைக்கீழ்- அரசனது குடைநிழலின் கீழ். உலகு தங்கும்- உலகம் நிலைத்திருக்கும். (க-து) பிறர் கூறும் கடுஞ்சொற்களைப் பொறுக்கும் அரசனே உலகம் முழுவதையும் ஆள்வான். 10. கொடை,அளி, செங்கோல், குடிஓம்பல் நான்கும் உடையான்ஆம் வேந்தர்க்கு ஒளி. (ப-உ) கொடை- கொடுத்தல். அளி- கருணை. செங்கோல்- நீதிமுறை. குடி ஓம்பல்- குடிகளைப் பாதுகாத்தல். நான்கும் உடையான்- இந்நான்கு குணங்களை யும் உடையவன். வேந்தர்க்கு - அரசர்களுக்கு. ஒளி ஆம்- விளக்காவான். (க-து) ஈகை, இரக்கம், நீதி, குடிகளைப் பாதுகாத்தல் இவைகளை உடைய அரசனே அரசர்களுக்குள் உயர்ந்தவன். 40. கல்வி படிப்பின் பெருமை. 1. கற்க கசடுஅறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக. (ப-உ) கற்பவை- கற்றுக்கொள்ளும் நூல்களை. கசடுஅற- குற்றம் இல்லாமல். கற்க- கற்றுக்கொள்ள வேண்டும். கற்றபின்- படித்தபின். அதற்குத் தக- அக் கல்விக்குத் தகுந்தபடி. நிற்க- நடந்துகொள்ள வேண்டும். (க-து) குற்றமறக் கற்கவேண்டும். கற்றபடி நடக்க வேண்டும். 2. எண்என்ப, ஏனை எழுத்துஎன்ப, இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு. (ப-உ) எண் என்ப - கணக்கு நூல்கள் என்று சொல்லப் படுவன. ஏனை- மற்றைய. எழுத்து என்ப- இலக்கண நூல்கள் என்று சொல்லப்படுவன. இவ்விரண்டும்- இக்கலைகள் இரண்டும். வாழும் உயிர்க்கு- உயிர்வாழும் மக்களுக்கு. கண்என்ப- இரண்டு கண்கள் என்று கூறுவர். (க-து) கணக்கும் இலக்கணமும் மக்களுக்குக் கண்களாகும். 3. கண்உடையர் என்பவர் கற்றோர்; முகத்துஇரண்டு புண்உடையர் கல்லா தவர். (ப-உ) கற்றோர்- கல்வி கற்றவர்களே. கண் உடையர்- கண்களை உடையவர்கள். என்பவர்- என்று உயர்வாகச் சொல்லப்படுவார்கள். கல்லாதவர்- படிக்காதவர்கள். முகத்து- முகத்திலே. இரண்டு புண் உடையர்- இரண்டு புண்களை உடையவர் ஆவர். (க-து) கற்றவர்களுக்கே கண்கள் உண்டு; கல்லாதவர் கண்கள், புண்கள் ஆகும். 4. உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல், அனைத்தே, புலவர் தொழிதல். (ப-உ) உவப்ப- மகிழும்படி. தலைக்கூடி- சேர்ந்திருந்து. உள்ள- இனி இவரை எப்பொழுது காண்போம் என்று நினைக்கும்படி. பிரிதல்- பிரிவதாகிய. அனைத்தே- அவ்வளவே. புலவர் தொழில்- கற்றவர் செயலாகும். (க-து) படித்தவரோடு பழகியவர் அவர் பிரிந்தால் வருந்துவர். 5. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்; கடையரே, கல்லா தவர். (ப-உ) உடையார்முன்- செல்வர் முன்னே. இல்லார் போல்- ஏழைகள் வணங்கி நிற்பதுபோல். ஏக்கற்றும்- கற்றவர் முன் பணிந்து நின்றும். கற்றார்- கற்றவரே சிறந்தவர். கல்லாதார்- படிக்காதவர். கடையர்ஏ- இழிந்தவர்ஆவர். ஏ- அசை. (க-து) கற்றவர் உயர்ந்தவர்; கல்லாதவர் தாழ்ந்தவர். 6. தொட்டஅனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக் கற்றஅனைத்து ஊறும் அறிவு. (ப-உ) மணல்கேணி- மணற்கேணியிலே. தொட்ட அனைத்து - தோண்டிய அளவுக்கு. ஊறும்- தண்ணீர் ஊறும்; அதுபோல. மாந்தர்க்கு- மக்களுக்கு. கற்ற அனைத்து- கல்வி கற்றிருக்கும் அளவுக்கு. அறிவு ஊறும்- அறிவு வளரும். (க-து) மணல் கிணற்றில் ஆழத்தின் அளவு தண்ணீர் சுரக்கும்; மக்களிடம் கல்வியின் அளவு அறிவு வளர்ந்திருக்கும். 7. யாதானும் நாடுஆம்ஆல்; ஊர்ஆம்ஆல்; என்ஒருவன் சாம்துணையும் கல்லாத ஆறு? (ப-உ) யாதானும்- கற்றவனுக்கு எந்த நாடும். நாடு ஆம்- தனது நாடாகும். ஊர்ஆம்- எந்த ஊரும்; தனது ஊர் ஆகும். ஒருவன்- இவ்வாறாயின் ஒருவன். சாம் துணையும்- இறக்கும் அளவும். கல்லாத ஆறு- கல்வி கற்காமல் இருப்பது. என்- ஏன்? ஆல்; அசைகள். (க-து) கற்றவனுக்கு எல்லா நாடும், எல்லா ஊரும் சொந்தம் என்று அறிந்தும் பலர் கல்வி கற்காமலிருப்பது அறியாமையே. 8. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து. (ப-உ) ஒருமைக்கண் - ஒரு பிறப்பில். தான் கற்ற கல்வி- தான் படித்த படிப்பு. ஒருவற்கு- ஒருவனுக்கு. எழுமையும்- ஏழு பிறப்பிலும். ஏமாப்பு- துணை செய்யும் தன்மை. உடைத்து- உள்ளதாகும். (க-து) ஒருவன் ஒரு பிறப்பிலே கற்ற கல்வி அவனுக்கு ஏழு பிறப்பிலும் உதவி செய்யும். 9. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு காமுறுவர் கற்று அறிந்தார். (ப-உ) தாம் இன்புறுவது- தாம் இன்பம் அடைவதற்குக் காரணமான கல்வியால். உலகு- உலகம். இன்புறக் கண்டு- இன்பம் அடைவதைப் பார்த்து. கற்று அறிந்தார்- படித்து அறிந்தவர்கள். காமுறுவர்- மேலும் கற்க விரும்புவர். (க-து) கற்றவரின் கல்வியால் உலகம் இன்பம் அடைவது கண்டு, கற்றவர் மேலும் மேலும் கற்க விரும்புவர். 10. கேடுஇல் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு மாடுஅல்ல மற்றை யவை. (ப-உ) ஒருவற்கு- ஒருவனுக்கு. கேடுஇல்- அழிவு இல்லாத. விழுச்செல்வம்- சிறந்த செல்வம். கல்வி- கல்வியேயாகும். மற்றையவை- வேறு செல்வங்கள். மாடு அல்ல- செல்வம் அல்ல. (க-து) ஒருவனுக்குக் கல்வி ஒன்றுதான் அழியாத செல்வம். 41. கல்லாமை கல்வி கற்காமையின் இழிவு. 1. அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே; நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல். (ப-உ) நிரம்பிய- நிறைந்த. நூல் இன்றி- நூல் அறிவில்லாமல். கோட்டி- சபையிலே. கொளல்- ஒன்றைக் கூறத் துணிதல். அரங்கு இன்றி- சூதாடும் பலகையில்லாமல். வட்டு- சூதாடும் கருவியை. ஆடி அற்று- உருட்டி ஆடியதுபோல் ஆகும். (க-து) நூல்அறிவு இல்லாதவன் சபையில் ஒன்றைக் கூறத் துணிதல், சூதாடும் அரங்கம் இல்லாமல் காயை உருட்டுவது போல் ஆகும். 2. கல்லாதான் சொல் காமுறுதல், முலைஇரண்டும் இல்லாதாள் பெண்காமுற்று அற்று. (ப-உ) கல்லாதான்- கல்வி இல்லாதவன் ஒருவன். சொல் காமுறுதல்- கற்றார் சபையிலே ஒன்றைச் சொல்ல விரும்புதல். முலை இரண்டும் இல்லாதாள்- முலை இரண்டும் இல்லாத ஒருத்தி. பெண்- பெண் தன்மையை. காமுற்று அற்று- விரும்பியது போன்றதாகும். (க-து) கல்லாதவன் கற்றோர் சபையில் பேசவிரும்புதல், பேடி பெண் தன்மையை விரும்புவது போலாம். 3. கல்லா தவரும் நனிநல்லர், கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின். (ப-உ) கற்றார்முன்- கற்றவர் சபையிலே. சொல்லாது- ஒன்றும் உரைக்காமல். இருக்கப்பெறின்- அமைதியுடன் இருப்பா ராயின். கல்லாதவரும்- படிக்காதவரும். நனிநல்லர்- மிகவும் நல்லவர் ஆவர். (க-து) படித்தோர்முன் ஒன்றும் உரைக்காமல் இருப்பா ராயின், படிக்காத வரும் நல்லவர் ஆவர். 4. கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். (ப-உ) கல்லாதவன்- படிக்காதவனுடைய. ஒட்பம்- அறிவுடைமை. கழிய நன்று ஆயினும்- ஒரு சமயம் மிகவும் நன்றாக இருந்தாலும். அறிவுடையார்- அறிவுள்ளவர். கொள்ளார்- அதை அறிவுடைமையாகக் கொள்ளமாட்டார்கள். (க-து) கல்லாதவன் அறிவு ஒரு சமயம் நன்றாயிருந்தாலும், அறிவுள்ளவர் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார். 5. கல்லா ஒருவன் தகைமை, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். (ப-உ) கல்லா ஒருவன்- படிக்காத ஒருவனுடைய. தகைமை- மதிப்பானது. தலைப்பெய்து- கற்றவன் அவனைக் கண்டு. சொல் ஆட- வார்த்தையாடினால். சோர்வுபடும்- கெட்டுவிடும். (க-து) கல்லாதவனுடைய மதிப்பு கற்றவன் முன் பேசும் போது அழிந்துவிடும். 6. உளர்என்னும் மாத்திரையார் அல்லால், பயவாக் களர் அனையர் கல்லாதவர். (ப-உ) கல்லாதவர்- படிக்காதவர். உளர் என்னும்- உருவமாக உள்ளவர் என்று சொல்லும். மாத்திரையர்- அளவினர். அல்லால்- அல்லாமல். பயவா- விளையாத. களர் அனையர்- களர்நிலத்தைப் போல்வர். (க-து) கல்லாதவர், ஒன்றும் விளையாத உப்புநிலம் போன்றவர். 7. நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை அற்று. (ப-உ) நுண்- நுண்ணறிவு. மாண்- சிறப்பறிவு. நுழைபுலம்- ஆராய்ந்து காணும் அறிவு. இல்லான்- இல்லாதவனுடைய. எழில்நலம்- மிகுந்த உடலழகு. மண்- மண்ணால். மாண்- சிறப்பாக. புனைபாவை- செய்யப்பட்ட பதுமை. அற்று - போன்றதாகும். (க-து) அறிவும் ஆராய்ச்சியும் இல்லாதவன் அழகு, மண் பதுமையின் அழகு போன்றதாம். 8. நல்லார்கண் பட்ட வறுமையின், இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. (ப-உ) கல்லார்கண்- கல்லாதவர்களிடம். பட்ட- சேர்ந்த. திரு- செல்வமானது. நல்லார்கண்- நல்லவர்களிடம். பட்ட- சேர்ந்த. வறுமையின்- தரித்திரத்தை விட. இன்னாதுஏ- கொடுமை யானதாகும். ஏ:அசை. (க-து) கல்லாதவர் செல்வம் கற்றவர் வறுமையை விடக் கொடியதாகும். 9. மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துஇலர் பாடு. (ப-உ) கல்லாதார்- படிக்காதவர். மேல் பிறந்தார் ஆயினும்- உயர்குடியிலே பிறந்தவராயினும். கீழ்ப்பிறந்தும்- தாழ்ந்த குடியிலே பிறந்தும். கற்றார் அனைத்து- கற்றவர் அவ்வளவு. பாடுஇலர்- பெருமை இல்லாதவர் ஆவர். (க-து) கல்லாதவர் மேற்குடியினராயினும், கீழ்க்குடியில் பிறந்த கற்றவர்க்கு ஒப்பாகமாட்டார். 10. விலங்கொடு மக்கள் அனையர், இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். (ப-உ) இலங்குநூல்- சிறந்த நூல்களை. கற்றாரோடு- படித்தவர்களுடன் ஒப்பிட்டால். ஏனையவர்- படிக்காதவர். விலங்கொடு- மிருகங்களோடு. மக்கள் அனையர்- மக்களை ஒப்பிடுவதைப்போல் ஆவர். (க-து) கற்றவரே மக்கள்; கல்லாதவர் மிருகங்களை ஒப்பார். 42. கேள்வி கற்றவரிடம் பல பொருள்களைக் கேட்டறிதல். 1. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. (க-து) செல்வத்துள் - செல்வத்திலே. செல்வம்- சிறந்த செல்வம். செவிச்செல்வம்- காதால் கேட்கப்படும் செல்வமாகும். அச்செல்வம்- அந்தக் கேள்விச் செல்வம். செல்வத்துள் எல்லாம்- செல்வங்களில் எல்லாம். தலை- சிறந்ததாகும். (க-து) கேள்விச் செல்வமே எல்லாவற்றினும் சிறந்த செல்வமாகும். 2. செவிக்கு உணவு இல்லாதபோழ்து, சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். (ப-உ) செவிக்கு உணவு- காதுக்கு உணவாகிய கேள்வி. இல்லாதபோழ்து- இல்லாத காலத்தில். சிறிது- கொஞ்சம் உணவு. வயிற்றுக்கும் ஈயப்படும்- வயிற்றுக்கும் கொடுக்கப்படும். (க-து) காதுக்கு உணவில்லாதபோதுதான் வயிற்றுக்கு உணவளிக்க வேண்டும். 3. செவிஉணவில் கேள்வி உடையார், அவிஉணவின் ஆன்றோரோடு ஒப்பர் நிலத்து. (ப-உ) செவி உணவில்- காதுக்கு உணவாகிய. கேள்வி- கேள்வியை. உடையார்- உடையவர். நிலத்து- பூமியில் வாழ்கின்ற வராயினும். அவிஉணவின்- யாகத்தில் கொடுக்கப்படும் அவி உணவையுடைய. ஆன்றோரோடு- தேவரோடு. ஒப்பர்-ஒப்பாவார். (க-து) கேள்விச் செல்வத்தையுடையவர் சிறந்த தேவரைப் போன்றவர். 4. கற்றிலன் ஆயினும் கேட்க, அஃது,ஒருவற்கு ஒற்கத்தின் ஊற்றாம் துணை. (ப-உ) கற்றிலன் ஆயினும்- படிக்காதவன் ஆனாலும். கேட்க- கற்றாரிடம் நூல் பொருள்களைக் கேட்டறிய வேண்டும். அஃது-அக் கேள்வி. ஒருவற்கு- ஒருவனுக்கு. ஒற்கத்தின்- சோர்வுண்டானபோது. ஊற்று ஆம் துணை- தாங்கும் துணையாகும். (க-து) படிக்காவிட்டாலும் கேள்விச் செல்வம், தளர்ச்சி வந்தபோது தாங்கும் துணையாகும். 5. இழுக்கல் உடையுழி, ஊற்றுக்கோல் அற்றே, ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். (ப-உ) ஒழுக்கம் உடையார்- நல்லொழுக்கம் உள்ளவரின். வாய்ச்சொல்- வாய்மொழியானது. இழுக்கல் உடை உழி- வழுக்கும் சேற்று நிலத்திலே. ஊற்றுக் கோல் அற்றுஏ- ஊன்று கோல்போல் உதவி செய்யும். ஏ: அசை. (க-து) சேற்று நிலத்திலே நடக்க ஊன்றுகோல் உதவுவது போல், நல்லோர் மொழி உதவி செய்யும். 6. எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். (ப-உ) எனைத்து ஆனும்- எவ்வளவு சிறிது ஆயினும். நல்லவை- நல்ல விஷயங்களை. கேட்க- கேட்டறியவேண்டும். அனைத்து ஆனும்- அவ்வளவினாலும். ஆன்ற- நிறைந்த. பெருமை தரும்- பெருமையைக் கொடுக்கும். (க-து) சிறிதாயினும் நல்லவைகளைக் கேட்டறிந்தால், அவ்வளவும் அவனுக்குப் பெருமை தரும். 7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார், இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர். (ப-உ) இழைத்து உணர்ந்து- ஆராய்ந்து அறிந்து. ஈண்டிய- மேலும் நிறைந்த. கேள்வியர்- கேள்விச் செல்வத்தையும் உடையவர். பிழைத்து உணர்ந்தும்- ஒன்றைத் தவறாக உணர்ந்து கொண்டாலும். பேதைமை- அறிவற்ற மொழிகளை. சொல்லார்- பேச மாட்டார்கள். (க-து) கற்றவர்கள் எச்சமயத்திலும் அறிவற்ற வார்த்தை களை வழங்கமாட்டார்கள். 8. கேட்பினும் கேளாத் தகையவே, கேள்வியால் தோட்கப் படாத செவி. (ப-உ) கேள்வியால்- அறநூல்களின் கேள்வியால். தோட்கப்படாத- துளைக்கப்படாத. செவி- காதுகள். கேட்பினும்- நன்றாகக் கேட்கக்கூடியவையாயினும். கேளாத் தகையவே- கேளாத செவிட்டுக் காதுகளை ஒத்தவையாம். (க-து) அறநூல் உண்மைகளைக் கேட்காத காதுகள் செவிட்டுக் காதுகள். 9. நுணங்கிய கேள்வியர் அல்லார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது. (ப-உ) நுணங்கிய - நுட்பமான, சிறந்த. கேள்வியர் அல்லார்- பொருள்களைக் கேட்டறியாத மக்கள். வணங்கிய- வணக்கத்தைக் காட்டுகின்ற. வாயினர் ஆதல்- வார்த்தைகளை உடையவர்கள் ஆதல். அரிது- இல்லை. (க-து) சிறந்த பொருள்களைக் கேட்டறியாதவர்கள் பணிவுடன் பேசமாட்டார்கள். 10. செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள், அவியினும் வாழினும் என்? (ப-உ) செவியின் சுவை- காதுகளால் அறியப்படும் சுவையை. உணரா- அறியாத. வாய்- வாயினால் உண்ணப்படும் சுவையை மட்டும். உணர்வின்- அறியும் அறிவினையுடைய. மாக்கள்- மக்கள். அவியினும்- இறந்தாலும். வாழினும்- வாழ்ந்தாலும். என்- யாருக்கு என்ன பயன்? (க-து) கேள்விச் சுவையை அறியாத மக்கள் செத்தால்தான் என்ன? வாழ்ந்தால்தான் என்ன? 43. அறிவுடைமை உண்மை அறிவுடையவன் ஆதல். 1. அறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள்அழிக்கல் ஆகா அரண். (ப-உ) அறிவு - அறிவுதான். அற்றம்- முடிவு வராமல். காக்கும் கருவி- காப்பாற்றும் ஆயுதமாகும். செறுவார்க்கும் - பகைவர்களாலும். அழிக்கல் ஆகா- அழிக்க முடியாத. உள் அரண்- உள்பாதுகாப்புமாகும். (க-து) தன்னைக் காப்பதும், பகைவரால் அழிக்க முடியாததும் அறிவேயாகும். 2. சென்ற இடத்தால் செலவிடாது, தீதுஒரீஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு. (ப-உ) சென்ற இடத்தால்- மனத்தை அது சென்றவிடத்திலே. செலவிடாது- போகவிடாமல். தீது ஒரீஇ- தீமையிலிருந்து நீக்கி, நன்றின்பால்- நன்மையினிடம். உய்ப்பது- செலுத்துவது. அறிவு- அறிவாகும். (க-து) மனத்தைக் கண்டவிடங்களில் போகவிடாமல் நல்வழியில் செலுத்துவது அறிவாகும். 3. எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. (ப-உ) எப்பொருள்- எந்தப் பொருளை. யார் யார்வாய்- யார் யார் சொல்ல. கேட்பினும்- கேட்டாலும். அப்பொருள்- அப்பொருளின். மெய்ப்பொருள்- உண்மைப் பொருளை. காண்பது- ஆராய்ந்து காண்பதே. அறிவு- அறிவாகும். (க-து) யார் எதைச் சொன்னாலும் அதன் உண்மையை அறிவதே அறிவாகும். 4. எண்பொருள் ஆகச் செலச்சொல்லித், தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு. (ப-உ) எண்பொருள் ஆக- எளிய பொருளாக. செலச் சொல்லி- பிறர் மனத்தில் பதியும்படி சொல்லி. தான்பிறர் வாய்- தான் பிறர் வாயிலிருந்து வரும். நுண்பொருள்- அரிய பொருளையும். காண்பது - கண்டறிவதே. அறிவு- அறிவாகும். (க-து) பிறர்க்கு விளங்கும்படி சொல்வதும், பிறர் கூறுவதைப் புரிந்து கொள்வதுமே அறிவாகும். 5. உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. (ப-உ) உலகம்- பெரியோரை. தழீஇயது- நட்பாக்கிக் கொள்வதே. ஒட்பம்- அறிவுடைமை. மலர்தலும்- அவரிடம் முகமலர்தலும். கூம்பலும்- பின்னர் குவிதலும். இல்லது- இல்லாத ஒரு நிலையே. அறிவு- அறிவாகும். (க-து) முகமலர்தலும், முகங்கோணுதலும் இல்லாத அறிவே உயர்ந்தோரை நட்பாக்கும் சிறந்த அறிவாகும். 6. எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. (ப-உ) உலகம்- உலகமானது. எவ்வது- எவ்வாறு. உறைவது- நடக்கின்றதோ. அவ்வது- அவ்வாறு. உலகத்தோடு- உலகத்தோடு ஒட்டி. உறைவது -வாழ்வதே. அறிவு- அறிவாகும். (க-து) உலகத்தோடு ஒட்டி வாழ்வதே அறிவாகும். 7. அறிவுடையார் ஆவது அறிவார்; அறிவிலர் அஃதுஅறி கல்லா தவர். (ப-உ) ஆவது- வரப்போவதை. அறிவார்- அறிந்து கொள்ளுகின்றவரே. அறிவுடையார்- அறிவுள்ளவர். அஃது- அதனை. அறிகல்லாதவர்- முன்கூட்டி அறிந்து கொள்ளாதவர். அறிவிலார்- அறிவற்றவர். (க-து) பின் வருவதை முன் அறியும் திறமையுள்ளவரே அறிவுள்ளவர். 8. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். (ப-உ) அஞ்சுவது- அஞ்சத்தக்க தீமைக்கு. அஞ்சாமை- பயப்படாதிருத்தல். பேதைமை- அறிவில்லாமையாம். அஞ்சுவது - அஞ்சத்தக்க தீமைக்கு. அஞ்சல்- பயப்படுதல். அறிவார் தொழில்- அறிவுள்ளவர் செய்கை. (க-து) அறிவுள்ளவர், அஞ்சத்தக்க தீமையைச் செய்ய அஞ்சுவார்; அறிவில்லார் அஞ்சமாட்டார். 9. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு, இல்லை அதிர வருவது ஓர் நோய். (ப-உ) எதிரதாக் காக்கும்- வரப்போகும் தீமையை முன்னறிந்து காக்கவல்ல. அறிவினார்க்கு- அறிவுள்ளவர்க்கு. அதிர- அவர் நடுங்கும்படி. வருவது ஓர் நோய்- வருகின்ற ஒரு துன்பமும். இல்லை- உண்டாகாது. (க-து) பின்வரும் தீமையை முன் அறிந்து காக்கும் அறிவுள்ளவர்க்குத் துன்பம் இல்லை. 10. அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார் என்உடையர் ஏனும் இலர். (ப-உ) அறிவு உடையார்- அறிவுள்ளவர். எல்லாம்- எல்லாச் செல்வங்களை யும். உடையார்- உடையவர் ஆவார். அறிவுஇலார்- அறிவில்லாதவர்கள். என் உடையர் ஏனும்- எல்லாச் செல்வங்களையும் உடையவர் ஆயினும். இலர்- ஒன்றும் இல்லாதவர் ஆவார். (க-து) அறிவுள்ளவர்க்கு எல்லாச் செல்வமும் உண்டு; அறிவற்றவர்க்கு ஒரு செல்வமும் இல்லை. 44. குற்றம் கடிதல் குற்றங்களை நீக்குதல். 1. செருக்கும், சினமும், சிறுமையும் இல்லார் பெருக்கம், பெருமித நீர்த்து. (ப-உ) செருக்கும் - கர்வமும். சினமும்- கோபமும். சிறுமையும் - கெட்ட குணமும். இல்லார் - இல்லாதவர்களின். பெருக்கம்- செல்வமானது. பெருமித நீர்த்து- உயர்ந்த தன்மை யுள்ளதாகும். (க-து) செருக்கு, சினம், கெட்ட குணம் இல்லாதவர்களின் செல்வமே சிறந்தது. 2. இவறலும், மாண்புஇறந்த மானமும், மாணா உவகையும் ஏதம் இறைக்கு. (ப-உ) இவறலும் - கருமித்தனமும். மாண்பு இறந்த மானமும்- பெருமையற்ற மானமும். மாணா உவகையும் - அளவு கடந்த மகிழ்ச்சியும். இறைக்கு- அரசனுக்கு. ஏதம்- குற்றங்களாகும். (க-து) கெடாமை, கீழ்மைக் குணம், அளவற்ற மகிழ்ச்சி இவைகள் குற்றங் களாம். 3. தினைத்துணையாம் குற்றம் வரினும், பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். (ப-உ) பழிநாணுவார்- பழிக்குப் பயப்படுகின்றவர். தினைத் துணை ஆம்- தினையளவாகிய. குற்றம்வரினும்- குற்றம் தம்மிடம் உண்டானாலும். பனைத் துணைஆ- அதைப் பனை அளவு பெரிய குற்றமாக. கொள்வர்- கொள்ளுவார்கள். (க-து) பாவத்துக்கு அஞ்சுவோர், சிறிய குற்றத்தையும் பெரிய குற்றமாக எண்ணி வருந்துவர். 4. குற்றமே, காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை. (ப-உ) குற்றமே- குற்றந்தான். அற்றம் தரூஉம்- அழிவைத் தருகின்ற. பகை - பகையாகும் (ஆதலால்). குற்றமே- குற்றம் தன்னிடம் உண்டாகாமலிருக்க வேண்டும் என்பதையே. பொருளாக - சிறந்த பயனாகக் கொண்டு. காக்க- காத்துக் கொள்ள வேண்டும். (க-து) குற்றமே அழிவைத் தரும் பகையாகும். ஆதலால் குற்றம் செய்தல் கூடாது. 5. வரும்முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். (ப-உ) வரும்முன்னர்- குற்றம் வரும்முன்பே. காவாதான்- அதை வராமல் தடுத்துக்கொள்ளாதவன். வாழ்க்கை- வாழ் வானது. எரிமுன்னர்- நெருப்பின் முன். வைத்தூறுபோல- வைக்கோல்போர்போல. கெடும்- அழிந்துவிடும். (க-து) குற்றம் வராமல் காத்துக்கொள்ளாதவன் வாழ்வு, நெருப்பின்முன் வைக்கோல்போர் அழிவதுபோல் அழிந்துவிடும். 6. தன்குற்றம் நீக்கிப், பிறர்குற்றம் காண்கின்,பின் என்குற்றம் ஆகும் இறைக்கு. (ப-உ) தன்குற்றம் நீக்கி- முதலில் தனது குற்றத்தை ஒழித்து. பிறர்குற்றம்- பிறர் குற்றத்தை. பின் காண்கின்- பிறகு காணவல்ல வனாயின். இறைக்கு- அந்த அரசனுக்கு. ஆகும்- உண்டாகும். குற்றம்என்- குற்றந்தான் என்ன? (ஒன்று மில்லை.) (க-து) தன் குற்றத்தை ஒழித்தபின் பிறர் குற்றத்தைக் காணும் அரசனே குற்றமற்றவன். 7. செயற்பால செய்யாது இவறியான் செல்வம், உயல்பாலது அன்றிக் கெடும். (ப-உ) செயல்பால- செய்யக் கூடியவைகளை. செய்யாது- செய்யாமல். இவறியான்- கருமித்தனம் செய்தவனது. செல்வம்- செல்வமானது. உயல்பாலது அன்றி- நிலைத்து நிற்காமல். கெடும்- அழியும். (க-து) செய்யத்தக்க செலவுகளையும் செய்யாமல் சேர்த்து வைப்பவன் செல்வம் அடியோடு அழிந்துவிடும். 8. பற்றுள்ளம் என்னும் இவறன்மை, எற்றுள்ளும் எண்ணப் படுவதுஒன்று அன்று. (ப-உ) பற்றுஉள்ளம் என்னும்- பொருளாசை என்னும். இவறன்மை- கருமித்தனம். எற்று உள்ளும்- எல்லாக் குற்றங் களையும் போல. எண்ணப்படுவது - நினைக்கத்தக்கதாகிய. ஒன்று அன்று- ஒரு குற்றம் அன்று. (பெருங் குற்றமாகும்.) (க-து) குற்றங்களில் கருமித்தனமே பெரும் குற்றமாகும். 9. வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க நன்றி பயவா வினை. (ப-உ) எஞ்ஞான்றும்- எக்காலத்திலும். தன்னை- தன்னைத் தானே. வியவற்க- உயர்வாக எண்ணிக்கொள்ளக் கூடாது. நன்றி பயவா வினை- நன்மை தராத செய்கையை. நயவற்க- மனத்தாலும் விரும்பக்கூடாது. (க-து) தன்னைத்தான் பாராட்டிக் கொள்வதும், நன்மை தராத செயலைச் செய்வதும் கூடாது. 10. காதல, காதல், அறியாமை உய்க்கின்பின், ஏதில ஏதிலார் நூல். (ப-உ) காதல- தான் காதலித்த பொருள்களையும். காதல்- தன் விருப்பத்தையும். அறியாமை- பிறர் அறியாமல். உய்க்கின் பின்- அனுபவிக்க வல்லவனாயின். ஏதிலார் நூல்- பகைவர்களின் சூழ்ச்சி. ஏதில- பயன்படாமல் போகும். (க-து) தன் செல்வங்களையும் ஆசையையும் பிறர் அறியாமல் காக்க வல்லவனைப் பகைவரால் ஒன்றும் செய்ய முடியாது. 45. பெரியாரைத் துணைக்கோடல் அறிவுள்ளவரைத் துணையாகக் கொள்ளுதல். 1. அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை, திறன்அறிந்து தேர்ந்து கொளல். (ப-உ) அறன் அறிந்து- அறத்தின் உண்மை அறிந்து. மூத்த- சிறந்த. அறிவு உடையார்- அறிவுள்ளவரின். கேண்மை- நட்பை. திறன் அறிந்து- தேடிக்கொள்ளும் வகையை அறிந்து. தேர்ந்து கொளல்- ஆராய்ந்து கொள்ளவேண்டும். (க-து) எவ்வகையிலாவது அறிவுள்ளவர்களின் நட்பைப் பெறவேண்டும். 2. உற்றநோய் நீக்கி, உறாமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (ப-உ) உற்ற- வந்த. நோய் நீக்கி- துன்பத்தை நீக்கி. உறாமை- இனித் துன்பம் வராதபடி. முன்காக்கும்- முன்னறிந்து காக்க வல்ல. பெற்றியார்- தன்மையுள்ளவரை. பேணிக்கொளல்- போற்றித் துணையாகக் கொள்ளவேண்டும். (க-து) வந்த துன்பத்தை நீக்கி, மேலும் துன்பம் வராமல் காப்பவரையே துணையாகக் கொள்ளவேண்டும். 3. அரியவற்றுள் எல்லாம் அரிதே, பெரியாரைப் பேணித் தமராக் கொளல். (ப-உ) பெரியாரை - அறிவுள்ளவரை. பேணி- அவர் மகிழத்தக்கவைகளைச் செய்து. தமராக் கொளல்- துணை வராகக் கொள்வது. அரியவற்றுள் எல்லாம் - சிறந்த செல்வங்கள் எல்லாவற்றிலும். அரிதுஏ- சிறந்ததாகும். ஏ: அசை. (க-து) பெரியோர் நட்பே எல்லாவற்றிலும் சிறந்ததாகும். 4. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. (ப-உ) தம்மின் பெரியார்- தம்மைவிடச் சிறந்தவரை. தமரா- தமக்குத் துணை வராகக் கொண்டு. ஒழுகுதல்- அவர் காட்டும் வழியில் நடத்தல். வன்மையுள் எல்லாம்- வல்லமைகள் பலவற்றிலும். தலை- முதன்மையான வல்லமையாகும். (க-து) தம்மைவிடச் சிறந்தவரிடம் நட்புக் கொள்ளுவதே சிறந்த வன்மையாகும். 5. சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன், சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். (ப-உ) சூழ்வார்- ஆராய்கின்றவர்களையே. கண்ணாக- கண்ணாகக்கொண்டு. ஒழுகலான்- உலகம் நடப்பதால். மன்னவன் - அரசன். சூழ்வாரை- அறிவுள்ளவர்களையே. சூழ்ந்து- ஆராய்ந்து. கொளல்- துணையாகக் கொள்ள வேண்டும். (க-து) அரசன் அறிவுள்ளவர்களையே அமைச்சர்களாகக் கொள்ளவேண்டும். 6. தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுகவல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல் (ப-உ) தக்கார்- தகுதியுள்ளவர்களின். இனத்தன் ஆய்- துணையை உடையவனாய். தான் ஒழுக- தானும் அறிவுள்ள வனாய் நடக்க. வல்லானை- வல்லவனை. செற்றார்- பகைவர். செயக் கிடந்தது- செய்யக்கிடந்த துன்பம். இல்- ஒன்றும் இல்லை. (க-து) பெரியோர் துணையும், அறநெறியும் உள்ளவனைப் பகைவரால் ஒன்றும் செய்யமுடியாது. 7. இடிக்கும் துணையாரை ஆள்வாரை, யாரே கெடுக்கும் தகைமை யவர். (ப-உ) இடிக்கும்- கோபித்துப் புத்திசொல்லும். துணை யாரை- தன்மை யுள்ளவரை. ஆள்வாரை- துணையாகக் கொண்டவரை. கெடுக்கும் தகைமையவர்- அழிக்கும் பெருமையுள்ள பகைவர். யாரே- எவர்? (ஒருவரும் இல்லை). (க-து) அஞ்சாமல் புத்திகூறும் துணைவரைப் பெற்றவரை யாராலும் அழிக்க முடியாது. 8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், கெடுப்பார் இலானும் கெடும். (ப-உ) இடிப்பாரை- கண்டித்து புத்தி புகட்டுகின்றவரை. இல்லாத - துணை யாகக் கொண்டில்லாத. ஏமரா- பாதுகாப்பாற்ற. மன்னன்- அரசன். கெடுப்பார்- அழிக்கும் எதிரிகள். இலானும்- இல்லாவிட்டாலும். கெடும்- அழிந்துவிடுவான். (க-து) கண்டித்துப் புத்தி புகட்டுவோரைத் துணைக் கொள்ளாத வேந்தன் தானே அழிந்துபோவான். 9. முதல்இலார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம் சார்புஇலார்க்கு இல்லை நிலை. (ப-உ) முதல் இலார்க்கு- முதல் இல்லாத வணிகர்க்கு. ஊதியம் இல்லை- வியாபாரத்தில் இலாபம் இல்லை (அது போல்). மதலையாம்- தாங்குகின்ற. சார்பு இலார்க்கு- துணை இல்லாதவர்க்கு. நிலை இல்லை- நிலைத்த வாழ்வில்லை. (க-து) முதல் இல்லாத வியாபாரிக்கு இலாபம் இல்லை. தம்மைக் காக்கும் துணையற்றவர்க்கு நிலைத்த வாழ்வில்லை. 10. பல்லார் பகைகொளலின், பத்துஅடுத்த தீமைத்தே, நல்லார் தொடர்கை விடல். (ப-உ) நல்லார் தொடர்- பெரியவர் நட்பை. கைவிடல்- கைவிடுவது. பல்லார்- பலரோடும். பகை கொளலின்- பகைத்துக் கொள்வதைவிட. பத்து அடுத்த- பத்து மடங்கு. தீமைத்துஏ- தீமையுடையதாகும். ஏ :அசை. (க-து) பெரியோர் நட்பைக் கைவிடுவது, பலருடைய பகையைக் காட்டினும் பத்து மடங்கு தீமையாகும். 46. சிற்றினம் சேராமை கெட்டவர்களுடன் சேராதிருத்தல். 1. சிற்றினம் அஞ்சும் பெருமை; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். (ப-உ) சிற்றினம்- கெட்டவர் கும்பலைக் கண்டு. அஞ்சும்- பயந்து ஒதுங்குவதே. பெருமை- பெரியோர் இயல்பாகும். சுற்றமா- அவர்களை உறவாக. சூழ்ந்து விடும்- எண்ணிக்கொண்டு விடுவது. சிறுமைதான் - சிறியோர் தன்மையாகும். (க-து) பெரியோர் கெட்டவர்களுடன் சேரமாட்டார்கள்; சிறியோர் கெட்டவர்களைத் துணையாகக் கொள்ளுவர். இது அவர்கள் தன்மை. 2. நிலத்துஇயல்பால், நீர்திரிந்து, அற்றுஆகும்; மாந்தர்க்கு இனத்து இயல்பது ஆகும்அறிவு. (ப-உ) நிலத்து இயல்பால்- நிலத்தின் தன்மையால். நீர்திரிந்து- நீரின் தன்மை மாறி. அற்றுஆகும்- அந்நிலத்தின் தன்மையைப் பெறும் (அதுபோல). மாந்தர்க்கு- மனிதர்க்கு. அறிவு- அறிவானது. இனத்து- தாம் சேர்ந்திருக்கும் இனத்தின். இயல்பு தன்மையினால் வேறுபட்டு. அது ஆகும்- அந்த இனத்தின் தன்மையாகும். (க-து) நிலத்தினால் நீரின் தன்மை மாறுபடுவது போல, சேர்ந்திருக்கும் இனத்தால் அறிவும் மாறுபடும். 3. மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல். (ப-உ) மாந்தர்க்கு- மக்களுக்கு. உணர்ச்சி- பொதுஅறிவு. மனத்தான்ஆம்- மனத்தினால் உண்டாகும். இன்னான்- இவன் இப்படிப்பட்டவன். எனப்படும் சொல்- என்று கூறப்படும் வார்த்தை. இனத்தான்ஆம்- அவன் சேர்ந்திருக்கும் இனத்தால் உண்டாகும். (க-து) அறிவுக்குக் காரணம் மனம். ஒருவனை இப்படிப் பட்டவன் என்று கூறுவதற்குக் காரணம் அவன் சேர்ந்திருக்கும் கூட்டம். 4. மனத்துஉளது போலக் காட்டி, ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு. (ப-உ) ஒருவற்கு- ஒருவனுக்கு. அறிவு- சிறப்பறிவானது. மனத்துஉளதுபோல- மனத்திலே உள்ளது போல. காட்டி- தன்னைக் காட்டி. இனத்து- அவன் சேர்ந்திருக்கும் இனத்தின் தன்மையையே. உளதுஆகும்- கொண்டதாக இருக்கும். (க-து) ஒருவனுடைய அறிவு, அவன் சேர்ந்திருக்கும் இனத்தைப் பொருத்த தாகும். 5. மனம்தூய்மை, செய்வினை தூய்மை, இரண்டும், இனம்தூய்மை தூவா வரும். (ப-உ) மனம் தூய்மை- மனச்சுத்தம். செய்வினை தூய்மை- செய்கைச் சுத்தம். இரண்டும்- இவ்விரண்டும். இனம் தூய்மை- சேர்ந்திருக்கும் இனத்தின் சுத்தத்தை. தூவா- துணையாகக் கொண்டு. வரும் - உண்டாகும். (க-து) ஒருவன் சேர்ந்த இனத்தைப் பொறுத்தே அவன் எண்ணமும் செயலும் இருக்கும். 6. மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும்; இனம்தூயார்க்கு இல்லை நன்றுஆகா வினை. (ப-உ) மனம் தூயார்க்கு- மனச்சுத்தம் உள்ளவர்க்கு. எச்சம்- மக்கட்பேறு. நன்றுஆகும்- நன்றாக இருக்கும். இனம் தூயார்க்கு- இனச்சுத்தம் உள்ளவர்க்கு. நன்று ஆகா- நன்மை இல்லாத செய்கை. இல்லை- ஒன்றும் இல்லை. (க-து) மனச்சுத்தம் உள்ளவர்க்கு நல்ல மக்கட்பேறு உண்டு; இனச்சுத்தம் உள்ளவர்களிடம் தீவினை இல்லை. 7. மனநலம் மன்உயிர்க்கு ஆக்கம்; இனநலம் எல்லாப் புகழும் தரும். (ப-உ) மனநலம்- மனத்தின் நன்மை. மன்உயிர்க்கு- நிலையுள்ள உயிர் களுக்கு. ஆக்கம்- செல்வத்தைத் தரும். இன நலம்- சேர்ந்திருக்கும் இனத்தின் நன்மை. எல்லாப் புகழும்- எல்லாப் பெருமைகளையும். தரும்- கொடுக்கும். (க-து) சுத்தமுள்ள மனம் செல்வத்தைத் தரும்; நல்ல இனத்துடன் சேர்தல் புகழைத் தரும். 8. மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு, இனநலம் ஏமாப்பு உடைத்து. (ப-உ) நன்கு - நன்றாக. மனநலம் - மனத்தில் நன்மையை. உடையவர் ஆயினும்- உடையவராயிருந்தாலும். சான்றோர்க்கு- அறிவுள்ளவர்க்கு. இனநலம்- இனத்தின் நன்மையே. ஏமாப்பு உடைத்து - சிறந்த வலிமையாகும். (க-து) மனநலம் இருந்தாலும், பெரியோர்க்கு இனநலமே சிறந்த வலிமை யாகும். 9. மனநலத்தின் ஆகும் மறுமை; மற்றுஅஃதும் இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. (ப-உ) மனநலத்தின்- மனச் சுத்தத்தால். மறுமை ஆகும்- மறுமையின்பம் உண்டாகும். மற்று அஃதும்- அந்த இன்பமும். இனநலத்தின்- இனத்தின் நன்மை யால். ஏமாப்பு உடைத்து- வலிமையுள்ளதாகும். (க-து) மனச்சுத்தம் மறுமையின்பத்தைத் தரும்; இனச்சுத்தம் அதற்கு உறுதி யளிக்கும். 10. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை; தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல். (ப-உ) நல்இனத்தின் ஊங்கும்- நல்ல இனத்தைவிடச் சிறந்த. துணை இல்லை- உதவி இல்லை. தீ இனத்தின் - கெட்டவர் கும்பலைவிட. அல்லல் படுப்பதூஉம்- துன்பத்தைத் தரும் பகையும். இல்-வேறு இல்லை. (க-து) நல்ல இனத்தைவிடச் சிறந்த துணையில்லை; கெட்ட இனத்தைவிடத் துன்பந்தரும் பகை ஒன்றும் இல்லை. 47. தெரிந்து செயல்வகை செய்வனவற்றை நன்றாக ஆராய்ந்து செய்யும்விதம். 1. அழிவதூஉம், ஆவதூஉம், ஆகி வழிபயக்கும் ஊதியமும், சூழ்ந்து செயல். (ப-உ) அழிவதும்- ஒன்றைச் செய்யும்போது வரும் அழிவும். ஆவதும்- அதன்பின் வருவதும். ஆகி- ஆகிநின்று. வழிபயக்கும்- அதன் வழியில் விளையும். ஊதியமும்- இலாபத்தையும். சூழ்ந்து- ஆராய்ந்து. செயல்- ஒன்றைச் செய்ய வேண்டும். (க-து) ஒருவன் ஒன்றைச் செய்யும்போது செலவு, அதன் வரவு, இலாபம் இவைகளை ஆராய்ந்தபின் செய்ய வேண்டும். 2. தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச்செய்வார்க்கு, அரும்பொருள் யாதொன்றும் இல். (ப-உ) தெரிந்த இனத்தொடு- துணையாக ஆராய்ந்து கொள்ளப்பட்ட இனத்துடன். தேர்ந்து- கலந்து ஆராய்ந்து. எண்ணி- தாமும் நன்றாக நினைத்து. செய்வார்க்கு- ஒன்றைச் செய்கின்றவர்க்கு. அரும் பொருள்- ஆகாத பொருள். யாது ஒன்றும் இல்- ஒன்றும் இல்லை. (க-து) நன்றாக ஆராய்ந்து செய்வோர்க்கு ஆகாத காரியம் ஒன்றும் இல்லை. 3. ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை, ஊக்கார் அறிவுடை யார். (ப-உ) ஆக்கம் கருதி- பின்வரும் இலாபத்தை எண்ணி. முதல்இழக்கும்- கைம்முதலை இழக்கின்ற. செய்வினை- தொழிலை. அறிவுடையார்- அறி வுள்ளவர். ஊக்கார்- மேற்கொள்ளமாட்டார். (க-து) அறிவுள்ளோர், இலாபத்தை எண்ணி முதலை யிழக்கும் காரியத்தைச் செய்யமாட்டார். 4. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். (ப-உ) இழிவு என்னும்- இழிவு என்னும். ஏதப்பாடு- குற்றம் உண்டாவதற்கு. அஞ்சுபவர்- பயப்படுகின்றவர். தெளிவுஇலதனை- ஆராய்ந்து தெளியப்படாத செயலை. தொடங்கார்- தொடங்க மாட்டார். (க-து) குற்றத்திற்கு அஞ்சுவோர், ஆராய்ந்து முடிவு கட்டாமல் ஒரு காரியத்தையும் தொடங்கமாட்டார்கள். 5. வகையறச் சூழாது எழுதல், பகைவரைப் பாத்திப் படுப்பதுஓர் ஆறு. (ப-உ) வகைஅற- காரியத்தைச் செய்து முடிக்கும் விதங்களை எல்லாம். சூழாது- எண்ணாமல். எழுதல் - செய்யத் தொடங்குதல். பகைவரை - பகைவரை. பாத்தி- அவர் வளரும் நிலத்திலே. படுப்பது- அவரை நிலைபெறச் செய்வதாகிய. ஓர் ஆறு- ஒரு வழியாகும். (க-து) ஆராயாமல் காரியத்தைச் செய்யத் தொடங்குதல் பகைவர்க்கு இடங்கொடுப்பதாகும். 6. செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும். (ப-உ) செய்தக்க அல்ல- செய்யத் தகாதவைகளை. செய- செய்வதனாலும். கெடும்- ஒருவன் கெடுவான். செய்தக்க- செய்யத் தகுந்தவைகளை. செய்யாமை யானும்- செய்யாத காரணத்தாலும். கெடும்- ஒருவன் கெடுவான். (க-து) ஒருவன், செய்யவேண்டியவைகளைச் செய்யாத காரணத்தாலும், செய்யவேண்டாதவைகளைச் செய்வதனாலும் கெடுவான். 7. எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. (ப-உ) கருமம்- செய்யத்தக்க காரியத்தை. எண்ணி- அதை முடிக்கும் வழியை ஆராய்ந்து. துணிக- தொடங்குக. துணிந்தபின்- தொடங்கியபின். எண்ணுவம் என்பது- ஆராய்வோம் என்று நினைப்பது. இழுக்கு- குற்றமாகும். (க-து) செய்து முடிக்கும் வழியை ஆராய்ந்து, ஒன்றைத் தொடங்கவேண்டும். தொடங்கியபின் எண்ணுவோம் என்பது குற்றமாகும். 8. ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். (ப-உ) ஆற்றின்- முடியும் வழியிலே நின்று. வருந்தா வருத்தம் - காரியத்தை முடிக்க முடியாத முயற்சி. பலர் நின்று- பலர் துணையாக நின்று. போற்றினும்- காப்பாற்றினாலும். பொத்துப் படும்- பொத்தலாகிவிடும். (க-து) முடிக்கும் வழியிலே முயலாத முயற்சிக்குப் பலர் துணை செய்தாலும் பயன் இல்லை. 9. நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு; அவர்அவர் பண்புஅறிந்து ஆற்றாக் கடை. (ப-உ) அவர் அவர் பண்பு அறிந்து- அவரவர்களின் குணம் அறிந்து. ஆற்றாக்கடை- செய்யாவிட்டால். நன்று ஆற்றல் உள்ளும்- நன்மை செய்வதிலும். தவறு உண்டு- குற்றம் உண்டாகும். (க-து) அவரவர்களின் குணமறிந்து அதற்கிசைய நடக்கா விட்டால், நன்மை செய்வதிலும் குற்றம் உண்டாகும். 10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்; தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு. (ப-உ) தம்மொடு கொள்ளாத-தமது நிலைமைக்குப் பொருந்தாத காரியங்களை. உலகு கொள்ளாது- உலகம் ஒத்துக் கொள்ளாது (ஆதலால்). எள்ளாத- உலகத்தார் இகழாத செயல்களை. எண்ணி- ஆராய்ந்து. செயல் வேண்டும்- செய்ய வேண்டும். (க-து) ஒருவர் தமது நிலைக்குப் பொருந்தாத காரியங் களைச் செய்தால் உலகம் ஏற்றுக்கொள்ளாது. ஆதலால், உலகம் ஒப்புக்கொள்ளும் காரியங் களையே செய்ய வேண்டும். 48. வலி அறிதல் வலிமையைத் தெரிந்துகொள்ளுதல். 1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். (ப-உ) வினை வலியும்- செயலின் வலிமையையும். தன் வலியும்- தனது வலிமையையும். மாற்றான் வலியும்- பகைவனது வலிமையையும். துணை வலியும்- இருவர்க்கும் துணைபுரிவோர் வலிமையையும். தூக்கி- ஆராய்ந்து. செயல்- ஒரு தொழிலைச் செய்க. (க-து) பகைவனது வலிமையைவிடத் தனது வலிமை அதிகமாக இருந்தால்தான் ஒரு தொழிலைச் செய்யவேண்டும். 2. ஒல்வது, அறிவதுஅறிந்து, அதன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். (ப-உ) ஒல்வது- தம்மால் முடிவதையும். அறிவது- அறிய வேண்டியவற்றையும். அறிந்து- தெரிந்து கொண்டு. அதன்கண் தங்கி - அதில் மனம் வைத்து. செல்வார்க்கு- முயல்கின்றவர்க்கு. செல்லாதது இல் - முடியாத காரியம் இல்லை. (க-து) தம்மால் செய்யக்கூடிய காரியத்தை அறிந்து அதனை முயற்சியுடன் செய்கின்றவர்க்கு வெற்றி கிடைக்கும். 3. உடைத்தம் வலிஅறியார், ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். (ப-உ) உடைத்தம் - தம்முடைய. வலி அறியா- வலிமையை அறியாதவராய். ஊக்கத்தின்- ஊக்கத்தினால். ஊக்கி- ஒரு தொழிலிலே தள்ளப்பட்டு. இடைக்கண்- நடுவிலே. முரிந்தார்- கெட்டுப்போனவர்கள். பலர்- பலராவர். (க-து) தமது வலிமையை அறியாமல் ஊக்கத்தால் ஒன்றில் தலையிட்டு, அது நிறைவேறாமல் தோற்றவர் பலர். 4. அமைந்துஆங்கு ஒழுகான், அளவறியான், தன்னை வியந்தான், விரைந்து கெடும். (ப-உ) ஆங்கு - மற்றவரோடு. அமைந்து ஒழுகான்- ஒத்து நடக்காமல். அளவு அறியான்- தன் வலிமையின் அளவையும் அறியாமல். தன்னை வியந்தான்- தன்னை மெச்சிக்கொண்டவன். விரைந்து கெடும்- விரைவில் அழிவான். (க-து) தன் வலிமையை அறியாமல் தன்னைப் புகழ்ந்து கொண்டவன் விரைவில் அழிவான். 5. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும், அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். (ப-உ) பீலிபெய்- மயில் இறகை ஏற்றிய. சாகாடும்- வண்டியும். அப்பண்டம் - அந்தப் பண்டம். சாலமிகுத்து- அளவுக்கு மேல். பெயின்- ஏற்றப்படுமாயின். அச்சு இறும்- அச்சு முறியும். (க-து) மயில் இறகானாலும் அளவுக்குமேல் ஏற்றினால் வண்டியின் அச்சு முறியும். 6. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின் உயிர்க்குஇறுதி ஆகி விடும். (ப-உ) நுனிக்கொம்பர்- மரத்தின் உச்சிக் கிளையிலே. ஏறினார்- ஏறி நின்றவர். அஃது இறந்து- அது தாங்கும் அளவைக் கடந்து. ஊக்கின்- மேலும் ஏற முயன்றால் அம்முயற்சி. உயிர்க்கு- அவர் உயிருக்கு. இறுதி ஆகிவிடும்- முடிவாகிவிடும். (க-து) நுனிக்கிளையில் ஏறினவர் அதற்கு மேலும் ஏறினால் கீழே விழுந்து உயிர் துறப்பர். 7. ஆற்றின் அளவு அறிந்துஈக, அதுபொருள் போற்றி வழங்கும் நெறி. (ப-உ) ஆற்றின்- கொடுக்கும் வழியில். அளவு அறிந்து - தன் பொருளின் அளவையும் அறிந்து. ஈக- கொடுக்க வேண்டும். அது- அதுதான். பொருள்போற்றி- செல்வத்தைப் பாதுகாத்து. வழங்கும் நெறி- வாழும் முறையாகும். (க-து) தன் செல்வத்தின் அளவறிந்து கொடுப்பதே பொருளைக் காப்பாற்றி வாழும் வழியாகும். 8. ஆகாறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை. (ப-உ) ஆகு ஆறு- செல்வம் சேரும் வழி. அளவு- அளவினால். இட்டிது ஆயினும்- சிறியதாயிருந்தாலும். போகுஆறு- அது செலவாகும் வழி. அகலாக்கடை- பெரிதாகாமல் இருந்தால். கேடு இல்லை- செல்வத்துக்கு அழிவில்லை. (க-து) வரவு குறைந்தாலும், செலவு அதிகமாகாவிட்டால் செல்வத்திற்கு அழிவில்லை. 9. அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை, உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். (ப-உ) அளவு அறிந்து- தன் செல்வத்தின் அளவைத் தெரிந்து. வாழாதான்- அதற்குத் தகுந்தபடி வாழாதவனுடைய. வாழ்க்கை- வாழ்வானது. உளபோல- பல செல்வங்களும் இருப்பனபோலத் தோன்றி. இல்ஆகி- பின்பு இல்லாமல். தோன்றாக் கெடும்- மறைந்து விடும். (க-து) அளவறிந்து வாழாதான் வாழ்வு, செல்வம் உள்ளது போல் காணப்பட்டு அழிந்துவிடும். 10. உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். (ப-உ) உளவரை- தமக்குள்ள செல்வத்தின் அளவை. தூக்காத- ஆராயாத. ஒப்புரவு ஆண்மை- உதவிச் செயலால். வளவரை- செல்வத்தின் அளவு. வல்லை கெடும்- விரைவில் அழிந்துவிடும். (க-து) தன் செல்வத்தின் அளவறியாமல் உதவி செய்பவன் செல்வம் விரைவில் அழியும். 49. காலம் அறிதல் காரியம் செய்வதற்கு ஏற்ற காலத்தை அறிதல். 1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை; இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. (ப-உ) பகல்- பகலிலே. கூகைகளை- தன்னைவிட வலிமை யுள்ள கோட்டானை. காக்கை வெல்லும்- காக்கை வென்றுவிடும் (அதுபோல). இகல் வெல்லும்- பகைவரை வெல்ல நினைக்கும். வேந்தர்க்கு- அரசர்க்கு. பொழுது வேண்டும்- அதற்கேற்ற காலம் வேண்டும். (க-து) பகலில் கோட்டானைக் காக்கை வெல்லும். அரசர்க்குப் பகைவரை வெல்லத் தக்க காலம் வேண்டும். 2. பருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. (ப-உ) பருவத்தோடு ஒட்ட- காலத்தோடு பொருந்த. ஒழுகல்- காரியம் செய்து வாழ்தல். திருவினை- செல்வத்தை. தீராமை- தன்னை விட்டு நீங்காமல். ஆர்க்கும்- கட்டுகின்ற. கயிறு- கயிறாகும். (க-து) காலம் அறிந்து செயல் செய்தல் செல்வத்தை நீங்காமல் கட்டும் கயிறாகும். 3. அருவினை என்ப உளவோ கருவியால் காலம் அறிந்து செயின்? (ப-உ) கருவியால்- தக்க கருவிகளுடன். காலம் அறிந்து- காலத்தையும் அறிந்து. செயின்- தொழிலைச் செய்தால். அருவினை - முடியாத காரியங்கள். என்ப- என்பவை. உளவோ- உண்டோ? (க-து) கருவியும் காலமும் அறிந்து வினை செய்தால் முடியாத காரியங்கள் ஒன்றுமில்லை. 4. ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இடத்தால் செயின். (ப-உ) காலம் கருதி- காலத்தை ஆராய்ந்து. இடத்தால்- ஏற்ற இடத்திலே. செயின்- காரியத்தைச் செய்தால். ஞாலம்- உலகம் முழுவதையும். கருதினும்- ஆளக் கருதினாலும். கைகூடும்- நிறைவேறும். (க-து) காலத்தையும் இடத்தையும் எண்ணிச் செய்கின்றவர், உலகத்தை ஆள நினைத்தாலும் வெற்றி பெறுவர். 5. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். (ப-உ) ஞாலம்- உலகத்தை. கருதுபவர்- தன் வசமாக்க எண்ணுகின்றவர். கலங்காது- தவறாமல். காலம்- அதற்கு ஏற்ற காலத்தை. கருதி இருப்பர்- எண்ணி யிருப்பார்கள். (க-து) உலகம் முழுவதையும் ஆள நினைப்போர், அதற்கேற்ற காலத்தை எதிர்பார்த்திருப்பர். 6. ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. (ப-உ) ஊக்கம் உடையான்- மிக்க வலிமையுள்ளவன். ஒடுக்கம்- காலத்தை நோக்கி அடங்கியிருத்தல். பொருதகர்- சண்டைக் கடா. தாக்கற்கு- எதிர்த்துப் பாய்வதற்காக. பேரும் தகைத்து- பின்வாங்குவது போன்றதாகும். (க-து) வலிமையுள்ளவன் அடங்கியிருப்பது, எதிர்த்துப் பாய்வதற்காக ஆட்டுக்கடா பின்வாங்குவது போன்றதாகும். 7. பொள்ளென ஆங்கே புறம்வேரார், காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (ப-உ) ஒள்ளியவர்- அறிவுள்ளவர். பொள்என- திடீரென்று. ஆங்கே- அப்பொழுதே. புறம் வேரார்- கோபத்தை வெளியில் காட்டமாட்டார். காலம் பார்த்து- வெல்லும் காலத்தை எதிர் பார்த்து. உள் வேர்ப்பர்- உள்ளத்தில் கோபங் கொண்டிருப்பார். (க-து) அறிவுள்ளவர் பகைவரை வெல்லும் காலத்தை எதிர்பார்த்துக் கோபத்தை அடக்கிக்கொண்டிருப்பார். 8. செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை காணின் கிழக்காம் தலை. (ப-உ) செறுநரை- பகைவரை. காணின்- கண்டால். சுமக்க- அவர் அழியும் காலம் வரும் வரையிலும் பணிக. இறுவரை- அவர் அழியும் கால அளவு. காணின்- தோன்றுமாயின். தலை- அப்பகைவர் தலை. கிழக்கு ஆம்- கீழே விழும். (க-து) பகைவர் அழியும் காலம் வரும்வரையிலும் அவர்க்குப் பணிதலே நன்மையாகும். 9. எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல். (ப-உ) எய்தற்கு அரியது- கிடைப்பதற்கு அருமையான காலம். இயைந்தக் கால்- கிடைத்து விட்டால். அந்நிலையே- அப்பொழுதே. செய்தற்கு அரிய- முன்பு செய்ய முடியாமலிருந்த செயல்களை. செயல்- செய்ய வேண்டும். (க-து) காலங் கிடைக்கும்போது செய்ய முடியாமல் கிடந்த செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். 10. கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன் குத்துஒக்க சீர்த்த இடத்து. (ப-உ) கூம்பும் பருவத்து- அடங்கியிருக்கும் காலத்தில். கொக்கு ஒக்க- கொக்குபோல் இருக்க வேண்டும். சீர்த்த இடத்து- சிறந்த காலம் வரும்போது. மற்று அதன்- அந்தக் கொக்கின். குத்து ஒக்க- குத்தைப் போல் இருக்க வேண்டும். (க-து) பெருமீனை எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கும் கொக்கைப்போலிருந்து காரியத்தில் வெற்றிபெற வேண்டும். 50. இடன் அறிதல் காரியத்தை முடிப்பதற்கு ஏற்ற இடத்தை அறிதல். 1. தொடங்கற்க எவ்வினையும், எள்ளற்க, முற்றும் இடம்கண்ட பின் அல்லது. (ப-உ) முற்றும்- பகைவரை வளைத்துக் கொள்ளுவதற்கு ஏற்ற. இடம்- இடத்தை. கண்டபின் அல்லது- தெரிந்து கொண்டபின் அல்லாமல். எவ்வினையும்- எக்காரியத்தையும். தொடங்கற்க- தொடங்கக் கூடாது. எள்ளற்க- பகைவரையும் இகழக்கூடாது. (க-து) பகைவரை வெல்வதற்கேற்ற இடத்தை அறிந்த பிறகுதான் எதையும் தொடங்க வேண்டும். 2. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவும் தரும். (ப-உ) முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும்- மிகுந்த வலிமையுள்ளவர்க் கும். அரண்சேர்ந்து- தக்க பாதுகாப்புக்குள் இருப்பதனால். ஆம்- வெற்றியாம். ஆக்கம் பலவும்- அது செல்வம் பலவற்றையும். தரும்- கொடுக்கும். (க-து) எவ்வளவு வலிமையுள்ளவர்க்கும் தக்க பாதுகாப்பு வேண்டும்; அதனால் பல நன்மைகள் கிடைக்கும். 3. ஆற்றரும் ஆற்றி அடுப, இடன்அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். (ப-உ) இடன் அறிந்து- தக்க இடங் கண்டு. போற்றார்கண்- பகைவரிடம். போற்றி- தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, செயின்- தம் காரியத்தைச் செய்வா ராயின். ஆற்றரும்- வலிமை யில்லாதவரும். ஆற்றி- வலிமையுள்ளவராய். அடுப- வெற்றி பெறுவார். (க-து) இடமறிந்து காரியம் செய்கின்றவர், வலிமையற்ற வராயினும் வெற்றி பெறுவர். 4. எண்ணியார் எண்ணம் இழப்பர், இடன்அறிந்து துன்னியார் துன்னிச் செயின். (ப-உ) இடன் அறிந்து- தக்க இடத்தை அறிந்து. துன்னியார்- சென்றவர். துன்னி- தாமும் பாதுகாப்புடன் நின்று. செயின்- காரியத்தைச் செய்தால். எண்ணியார்- அவரை வெல்ல நினைத்திருந்த பகைவர். எண்ணம்- தமது நினைப்பை. இழப்பர்- விட்டுவிடுவார்கள். (க-து) தக்க இடத்தில் பாதுகாப்புடன் நின்று காரியம் புரிந்தால் பகைவர் எண்ணம் பலிக்காது. 5. நெடும்புனலுள் வெல்லும் முதலை; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. (ப-உ) நெடும்புனலுள்- ஆழமான நீரில் இருக்கும்போது. முதலை வெல்லும்- முதலை மற்ற உயிர்களை வெல்லும். புனலின் நீங்கின்- நீரைவிட்டு நீங்கித் தரையிலிருக்கும்போது. அதனை- அம் முதலையை. பிற அடும்- மற்ற பிராணிகள் கொல்லும். (க-து) நீரில் இருக்கும்போதுதான் முதலைக்கு வெற்றி; கரையில் இருந்தால் அது தோல்வியடையும். 6. கடல்ஓடா கால்வல் நெடும்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. (ப-உ) கால்வல்- வலிமையான சக்கரங்களையுடைய. நெடும்தேர்- பெரிய தேர்கள். கடல்ஓடா- கடலில் ஓடமாட்டா. கடல் ஓடும்- கடலில் ஓடுகின்ற. நாவாயும்- கப்பல்களும். நிலத்து ஓடா- பூமியில் ஓடமாட்டா. (க-து) நிலத்தில் ஓடும் தேர்கள் கடலில் ஓடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் நிலத்தில் ஓடமாட்டா. 7. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். (ப-உ) எஞ்சாமை எண்ணி- குறையாமல் ஆராய்ந்து. இடத்தால் - தக்க இடத்திலே. செயின்- காரியத்தைச் செய்தால். அஞ்சாமை அல்லால்- அஞ்சாமையைத் தவிர. துணைவேண்டா- வேறு துணை வேண்டியதில்லை. (க-து) நன்றாக ஆராய்ந்து ஒன்றைச் செய்வார்க்கு அஞ்சாமையைத் தவிர வேறு துணை வேண்டியதில்லை. 8. சிறுபடையான் செல்இடம் சேரின், உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். (ப-உ) உறுபடையான்- பெரும் படையை உடையவனாயினும். சிறுபடை யான்- சிறு சேனையை உடையவனது. செல்இடம்- தங்கும் இடத்தை. சேரின்- அடைவானாயின். ஊக்கம் அழிந்துவிடும்- பெருமை அழிந்து விடுவான். (க-து) பெரிய படையை உடையவனும், சிறுபடையை உடையவன் இருக்கும் இடத்தை அடைந்தால் பெருமை குறைவான். 9. சிறைநலனும், சீரும் இலார்எனினும், மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. (ப-உ) சிறை நலனும்- பாதுகாப்பின் உயர்வும். சீரும்- சிறந்த வலிமையும். இலார் எனினும்- இல்லாதவர் ஆயினும். மாந்தர் - அந்த மனிதரை. உறைநிலத்தோடு- அவர் இருக்கும் இடத்தில் சென்று. ஓட்டல்- அவரை வெல்லுதல். அரிது- முடியாத காரியம். (க-து) பகைவர் தக்க பாதுகாப்பும், வலிமையும் இல்லாத வராயினும், அவர் இருக்கும் இடத்திலே புகுந்து அவரை வெல்ல முடியாது. 10. கால்ஆழ் களரின் நரிஅடும், கண்அஞ்சா வேல்ஆள் முகத்த களிறு. (ப-உ) கண் அஞ்சா- பாகர்க்கும் அடங்காத. வேல்ஆள்- முகத்த- வேற்படை வீரரைத் தம் கொம்புகளில் கோத்திருக்கின்ற. களிறு- ஆண் யானைகளை. கால் ஆழ்- கால்கள் புதைகின்ற. களரின்- சேற்று நிலத்திலே. நரி அடும்- நரிகள் கொன்று விடும். (க-து) சேற்று நிலத்தில் நிற்கும் யானைகளை நரிகளும் கொன்றுவிடும். 51. தெரிந்து தெளிதல் ஆராய்ந்து தெளிவடைதல். 1. அறம், பொருள்,இன்பம், உயிர்அச்சம் நான்கின் திறம்தெரிந்து தேறப் படும். (ப-உ) அறம் - அறமும். பொருள்- பொருளும். இன்பம்- இன்பமும். உயிர் அச்சம்- உயிருக்கு அஞ்சுதலும் ஆகிய. நான்கின் திறம்- இந்த நான்கின் வகை யாலும். தெரிந்து- ஆராய்ந்து. தேறப்படும் - ஒருவன் காரியத்துக்கு உரியவனாகத் தெளியப்படுவான். (க-து) அறம், பொருள், இன்பம், உயிருக்கு அஞ்சுதல் இந் நான்கு வகையிலும் ஆராய்ந்த பிறகே ஒருவன் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும். 2. குடிப்பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப்பரியும் நாண்உடையான் கட்டே தெளிவு. (ப-உ) குடிப்பிறந்து- நல்ல குடியிலே பிறந்து. குற்றத்தின் நீங்கி- குற்றங்களை ஒழித்து. வடு பரியும்- பழிக்கு அஞ்சும். நாண்உடையான் கட்டே - நாணம் உள்ளவனிடமே. தெளிவு- தெளிந்து நம்பிக்கை வைக்க வேண்டும். (க-து) உயர்குடிப் பிறப்பு, குற்றமின்மை, குற்றத்திற்கு அஞ்சல், நாணம் உடைமை இவைகளை உடையவனையே நம்பவேண்டும். 3. அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும், தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. (ப-உ) அரியகற்று - சிறந்த நூல்களைக் கற்று. ஆசு- குற்றங்கள். அற்றார் கண்ணும்- இல்லாதவர்களிடமும். தெரியும் கால்- ஆராய்ந்து பார்த்தால். வெளிறு- அறியாமை. இன்மை- இல்லாதிருத்தல். அரிது- அருமை. (க-து) சிறந்த நூல்களைக் கற்றுக் குற்றமில்லாமல் வாழ் வோரிடமும் அறியாமை உண்டு. 4. குணம்நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகைநாடி, மிக்க கொளல். (ப-உ) குணம் நாடி- ஒருவனுடைய குணங்களையும் ஆராய்ந்து. குற்றமும்- ஏனைய குற்றங்களையும். நாடி- ஆராய்ந்து. அவற்றுள்- அவைகளில். மிகை நாடி- மிகுந்தது எது என்பதை ஆராய்ந்து. மிக்க- மிகுந்தவைகளால். கொளல்- அவனைத் தெரிந்து கொள்ளுக. (க-து) ஒருவனுடைய நன்மை - தீமைகளை ஆராய்ந்து அவற்றைக் கொண்டு அவனை இன்னான் என்று அறியவேண்டும். 5. பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தத்தம் கருமமே கட்டளைக் கல். (ப-உ) பெருமைக்கும் - உயர்ந்த பெருமைக்கும். ஏனைச் சிறுமைக்கும்- தாழ்ந்த சிறுமைக்கும். தம்தம்- தங்கள் தங்கள். கருமமே- செயல்களே. கட்டளைக் கல்- உரைகல்லாகும். (க-து) மக்கள் செய்யும் தொழில்களைக் கொண்டு அவர்கள் பெருமையையும், சிறுமையையும் அறியலாம். 6. அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றவர் பற்றுஇலர்; நாணார் பழி. (ப-உ) அற்றாரை- சுற்றம் இல்லாதவரை. தேறுதல் ஓம்புக- நம்பித் தெளியக்கூடாது. மற்று அவர்- அவர்கள். பற்று இலர்- உலகத்துடன் சம்பந்தம் இல்லாதவர். பழி நாணார்- பழிக்கு அஞ்சமாட்டார். (க-து) சுற்றம் அற்றவர்கள் உலகத்தோடு சம்பந்தம் இல்லாதவர்கள். ஆதலால் அவர்களை நம்பக்கூடாது. 7. காதன்மை கந்தா, அறிவுஅறியார்த் தேறுதல்; பேதைமை எல்லாம் தரும். (ப-உ) காதன்மை- அன்புடைமையை. கந்தா- ஆதரவாகக் கொண்டு. அறிவு அறியார்- அறியவேண்டியவற்றை அறியா தவர்களை. தேறுதல்- தெளிதல் (நம்புதல்). பேதைமை எல்லாம்- அறியாமையால் வரும் தீமைகளை எல்லாம். தரும்- கொடுக்கும். (க-து) அன்பு காரணமாக அறியாதவரை நம்புதல் தீமை களுக்கே இடமாகும். 8. தேரான் பிறனைத் தெளிந்தான், வழிமுறை தீரா இடும்பை தரும். (ப-உ) பிறனை- மற்றவனை. தேரான்- ஆராயாமல். தெளிந்தான்- நம்பித் தெளிந்தவன். வழிமுறை- சந்ததிக்கும். தீராத- நீங்காத. இடும்பை- துன்பம். தரும்- கொடுக்கும். (க-து) பிறனை ஆராயாமல் நம்புகின்றவன் தான் கெடுவதோடும், அவன் பரம்பரையும் துன்பம் அடையும். 9. தேறற்க யாரையும் தேராது; தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். (ப-உ) யாரையும்- ஒருவரையும். தேராது- ஆராயாமல். தேறற்க- நம்பக்கூடாது. தேர்ந்தபின்- ஆராய்ந்த பின். தேறும் பொருள்- அவர் வல்லமைக்கு ஏற்றது என்று தெளிந்த காரியத்தை. தேறுக- நம்பி அவரிடம் விடுக. (க-து) யாரையும் ஆராயாமல் நம்பக்கூடாது; நம்பியபின் அவர் வல்லமைக்கு ஏற்ற செயலை அவரிடம் விடவேண்டும். 10. தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும். (ப-உ) தேரான்- ஆராயாமல். தெளிவும்- ஒருவனை நம்புதலும். தெளிந்தான்- ஆராய்ந்து நம்பியவனிடம். ஐயுறவும்- சந்தேகப்படுதலும். தீரா- நீங்காத. இடும்பை தரும்- துன்பத்தையே தரும். (க-து) ஆராயாமல் ஒருவனை நம்புவதும், ஆராய்ந்து நம்பியவனிடம் சந்தேகம் கொள்ளுவதும் துன்பத்தைக் கொடுக்கும். 52. தெரிந்து வினையாடல் தெளிந்தவர்களை, அவர்களுக்கேற்ற காரியங்களை மேற் கொள்ளச் செய்தல். 1. நன்மையும் தீமையும் நாடி, நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். (ப-உ) நன்மையும்- நன்மையையும். தீமையும்- தீமையையும். நாடி- ஆராய்ந்து. நலம்- அவற்றுள் நன்மையை. புரிந்த - செய்ய விரும்பிய. தன்மை யான் - குணமுள்ளவனே. ஆளப்படும்- அரசனால் சிறந்தவனாகக் கொள்ளப் படுவான். (க-து) நன்மை தீமைகளை ஆராய்ந்து நன்மையைச் செய்ய விரும்பு கின்றவனே அரசனால் ஏற்றுக் கொள்ளப்படுவான். 2. வாரி பெருக்கி வளம்படுத்து, உற்றவை ஆராய்வான் செய்க வினை. (ப-உ) வாரி பெருக்கி- வருமானத்தை வளர்த்து. வளம் படுத்து- செல்வங்களை வளர்த்து. உற்றவை- அவைகளுக்கு வந்த இடையூறுகளை. ஆராய்வான்- ஆராய்ந்து நீக்க வல்லவனே. வினை செய்க- அரசன் வினையைச் செய்ய வேண்டும். (க-து) வருமானத்தையும் செல்வத்தையும் வளர்த்துக் காக்க வல்லவனே அரசனுக்குத் தொழில் செய்யவேண்டும். 3. அன்பு,அறிவு, தேற்றம், அவாஇன்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. (ப-உ) அன்பு- அன்பு. அறிவு- கூர்மையான அறிவு. தேற்றம்- ஐயமற்ற அறிவு. அவா இன்மை- ஆசை இல்லாமை. இந்நான்கும் - இந்நான்கு குணங்களையும். நன்கு உடையான் கட்டே- நன்றாக உடையவனிடத்திலேயே. தெளிவு- தெளிந்த நம்பிக்கை வைக்க வேண்டும். (க-து) அன்பு, அறிவு, தெளிவு, ஆசையில்லாமை இந்த நான்கு பண்பும் உடையவனையே நம்பவேண்டும். 4. எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால் வேறாகும் மாந்தர் பலர். (ப-உ) எனை வகையால்- எல்லா வகைகளாலும். தேறியக் கண்ணும்- ஆராய்ந்து தெளிந்த பின்னும். வினை வகையால்- தொழிலின் இயல்பினால். வேறு ஆகும்- வேறுபடும். மாந்தர் பலர்- மனிதர் பலர் உண்டு. (க-து) பலவகையால் ஆராய்ந்து தெளிந்தவர்களிலும், தொழில்வகையால் தம் குணம் வேறுபடுகின்ற மனிதர்கள் பலர் உள்ளனர். 5. அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால், வினைதான் சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. (ப-உ) வினைதான்- தொழில்தான். அறிந்து - அதை முடிக்கும் வழிகளை அறிந்து. ஆற்றி- துன்பங்களைப் பொறுத்து. செய்கிற்பாற்கு அல்லால்- செய்கின்றவனிடம் விடப்படுமே அல்லாமல். சிறந்தான் என்று- அன்புடையான் என்று நினைத்து. ஏவல்பாற்று அன்று- தகுதியற்றவனைச் செய்யும்படி ஏவுந் தன்மையுள்ளது அன்று. (க-து) ஒரு காரியத்தை அதைச் செய்யவல்லவனிடம் கொடுக்கவேண்டும்; அன்பு காரணமாகச் செய்யத் தகுதி யற்றவனிடம் தரக்கூடாது. 6. செய்வானை நாடி, வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். (ப-உ) செய்வானை- செய்பவன் தன்மையை. நாடி- ஆராய்ந்து. வினைநாடி- செய்யப்படும் தொழிலின் தன்மையை ஆராய்ந்து. காலத்தோடு எய்த- காலத் தோடு பொருந்த. உணர்ந்து- ஆராய்ந்து. செயல்- பிறகு அவனைக்கொண்டு அச் செயலைச் செய்யவேண்டும். (க-து) செய்பவனையும், தொழிலையும், காலத்தையும் ஆராய்ந்த பிறகே ஒருவனிடம் ஒரு செயலை ஒப்படைக்க வேண்டும். 7. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல். (ப-உ) இதனை- இத்தொழிலை. இதனால்- இக்கருவியால். இவன் முடிக்கும் என்று - இவன் செய்து முடிக்க வல்லவன் என்று. ஆய்ந்து- ஆராய்ந்த பிறகே. அதனை- அத்தொழிலை. அவன்கண்- அவனிடம். விடல்- விடவேண்டும். (க-து) இவனால் இத்தொழிலை முடிக்க இயலும் என்பதை அறிந்த பிறகே அவனிடம் அத்தொழிலை விட வேண்டும். 8. வினைக்கு உரிமை நாடியபின்றை, அவனை அதற்குஉரியன் ஆகச் செயல். (ப-உ) வினைக்கு- தொழிலைச் செய்வதற்கு. உரிமை- உரிமை உள்ளவனாயிருப்பதை. நாடியபின்றை- ஆராய்ந்த பிறகு. அவனை அதற்கு- அவனை அத்தொழிலைச் செய்வதற்கு. உரியன் ஆக- உரிமையுள்ளவனாக. செயல்- உயர்த்தவேண்டும். (க-து) ஒருவனை ஒன்றைச் செய்வதற்குத் தகுதியுள்ளவன் என்று கண்டபின், அச்செயலை அவனிடமே ஒப்புவிக்க வேண்டும். 9. வினைக்கண் வினையுடையான் கேண்மை, வேறாக நினைப்பானை நீங்கும் திரு. (ப-உ) வினைக்கண்- தனது தொழிலிலே. வினை உடை யான்- முயற்சியுடன் இருப்பவனது. கேண்மை- உறவைப்பற்றி. வேறாக - வேறுவிதமாக. நினைப் பானை- எண்ணிச் சந்தேகப் படுகின்றவனை விட்டு. திரு நீங்கும்- செல்வம் ஒழியும். (க-து) உண்மையாக உழைப்பவனிடம் சந்தேகங்கொள்ளு கின்றவனை விட்டுச் செல்வம் நீங்கும். 10. நாள்தோறும் நாடுக மன்னன்; வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு. (ப-உ) வினை செய்வான்- தொழில் செய்பவன் (உத்தி யோகதன்). கோடாமை- தவறு செய்யாமலிருப்பானாயின். உலகு- உலகமானது. கோடாது- கெடாது (ஆதலால்). நாள் தோறும்- தினந்தோறும். மன்னன்- அரசன். நாடுக- அவன் செயலை ஆராயவேண்டும். (க-து) உத்தியோகம் செய்வோரின் காரியங்களை அரசன் மேற்பார்வை பார்த்து வரவேண்டும். 53. சுற்றம் தழால் சுற்றத்தாரை நீங்காமல் தழுவிக்கொள்ளுதல். 1. பற்றுஅற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. (ப-உ) பற்று அற்றகண்ணும்- செல்வம் தொலைந்து வறுமை வந்தபோதும். பழைமை- பழய உதவியை. பாராட்டுதல்- கொண்டாடுதல். சுற்றத்தார்கண்ணே- உறவினரிடத்தே. உள- உள்ள குணமாகும். (க-து) ஒருவன் வறுமைக்கு ஆளானாலும், அவன் சுற்றத்தார், அவனுடைய பழைய உதவியைப் பாராட்டுவார்கள். 2. விருப்புஅறாச் சுற்றம் இயையின், அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும். (ப-உ) விருப்பு அறா- அன்பு நீங்காத. சுற்றம்- சுற்றமானது. இயையின்- அமையுமானால் அது ஒருவனுக்கு. அருப்புஅறா- வளர்கின்ற. ஆக்கம்- செல்வம். பலவும் தரும்- பலவற்றையும் கொடுக்கும். (க-து) ஒருவனுக்கு அன்புள்ள சுற்றத்தினர் கிடைத்தால், அவன் பல செல்வங்களையும் பெறுவான். 3. அளவுஅளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந்து அற்று. (ப-உ) அளவுஅளாவு இல்லாதான்- சுற்றத்தாருடன் மனங்கலந்து வாழாத வனது. வாழ்க்கை- வாழ்வானது. குளவளா- குளப் பரப்பிலே. கோடுஇன்றி- கரை இல்லாமல். நீர்நிறைந்து அற்று- நீர் நிரம்பியதைப்போல் ஆகும். (க-து) சுற்றத்தாருடன் கலந்து பழகாதவன் வாழ்வு, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததுபோல ஆகும். 4. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல், செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். (ப-உ) செல்வம்- செல்வத்தை. தான்- ஒருவன்தான். பெற்றத்தால்- அடைந்த தால். பெற்ற பயன்- பெற்ற பயனாவது. சுற்றத்தால்- உறவினரால். சுற்றப்பட- சூழப் படும்படி. ஒழுகல்- வாழ்வதாகும். (க-து) செல்வத்தின் பயன் சுற்றத்தாரைக் காப்பதாகும். 5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின், அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். (ப-உ) கொடுத்தலும்- வேண்டுவன கொடுப்பதையும். இன்சொல்லும்- இனிய சொற்கள் பேசுவதையும். ஆற்றின்- செய்வானாயின். அடுக்கிய- தொடர்ந்த. சுற்றத்தால்- பலவகைச் சுற்றத்தாலும். சுற்றப்படும்- சூழப்படுவான். (க-து) கொடையும், இன்சொலும் உடையவன், சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான். 6. பெரும்கொடையான், பேணான் வெகுளி, அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல். (ப-உ) பெரும் கொடையான்- மிகுதியாகக் கொடுப்ப வனாகவும். வெகுளி பேணான்- சினமில்லாதவனாகவும் இருப் பானாயின். அவனின்- அவனைப்போல. மருங்கு உடையார்- சுற்றத்தை உடையவர்கள். மாநிலத்துஇல்- இவ்வுலகில் ஒருவரும் இல்லை. (க-து) கொடையும், கோபமில்லாமையும் உடையவனுக்குச் சுற்றத்தார் மிகுதியாக இருப்பார்கள். 7. காக்கை கரவா கரைந்துண்ணும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள. (ப-உ) காக்கை- காக்கைகள். கரவா- தமக்குக் கிடைத்த உணவை மறைக்காமல். கரைந்து- தம் இனத்தை அழைத்து. உண்ணும்- அதனோடு கூடி உண்ணும். ஆக்கமும்- சுற்றமாகிய செல்வமும். அன்ன நீரார்க்கே- அத்தகைய தன்மையுள்ள வர்க்கே. உள- உண்டு. (க-து) காகம் போன்ற தன்மையுள்ளவர்க்கே சுற்றமாகிய செல்வம் உண்டு. 8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர். (ப-உ) வேந்தன்- அரசன். பொது நோக்கான்- எல்லோரை யும் ஒன்றாகப் பார்க்காமல். வரிசையா- அவரவர் தகுதிக்கு ஏற்ற படி. நோக்கின்- நோக்குவானாயின். அதுநோக்கி- அதைக் கருதி. வாழ்வார்- அவனை விட்டு நீங்காமல் வாழ்கின்ற சுற்றத்தார். பலர்- பலராவார். (க-து) அரசன் அவரவர் தகுதியறிந்து நடப்பானாயின், அவனை விட்டு நீங்காமல் இருக்கும் சுற்றத்தார் பலராவர். 9. தமர்ஆகித் தன்துறந்தார், சுற்றம், அமராமைக் காரணம் இன்றி வரும். (ப-உ) தமர் ஆகி- சுற்றத்தாராயிருந்து. தன் துறந்தார்- தன்னைவிட்டுப் பிரிந்துபோனவர். சுற்றம்- மீண்டும் சுற்றத்தா ராகுதல். அமராமைக் காரணம்- முன்பு பிரிந்து போனதற்கான காரணம். இன்றி- ஒழிந்தால். வரும்- மீண்டும் உண்டாகும். (க-து) சுற்றத்தாராயிருந்து பிரிந்தவர், அவர் பிரிந்ததற் கான காரணம் ஒழிந்தால் மீண்டும் சுற்றத்தாராவார். 10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை. வேந்தன் இழைத்துஇருந்து எண்ணிக் கொளல். (ப-உ) உழைப்பிரிந்து- காரணமில்லாமல் தன்னை விட்டுப் பிரிந்துபோய். காரணத்தின்- ஒரு காரணத்தின் பொருட்டு. வந்தானை- மீண்டும் தன்னிடம் வந்தவனை. வேந்தன்- அரசன். இழைத்து இருந்து- அவன் விரும்பியதைச் செய்து. எண்ணி- ஆராய்ந்து. கொளல்- அவனைத் தழுவிக்கொள்ள வேண்டும். (க-து) பிரிந்தவன், மீண்டும் ஒரு காரணம் கருதி வருவானாயின், அவன் விரும்பியதைச் செய்து அவனை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது அரசன் கடமை. 54. பொச்சாவாமை மறதியின்மையின் அவசியம். 1. இறந்த வெகுளியின் தீதே, சிறந்த உவகை மகிழ்ச்சியில் சோர்வு. (ப-உ) சிறந்த- மிகுந்த. உவகை- உள்ளக் களிப்பால். மகிழ்ச்சியில்- மகிழ்ந்திருக்கும்போது. சோர்வு- ஏற்படும் மறதி. இறந்த வெகுளியின்- அளவு கடந்த கோபத்தினும். தீதே - தீமையாகும். (க-து) மிகுந்த மகிழ்ச்சியால் ஏற்படும் மறதி, அளவு கடந்த கோபத்தினும் தீமையாகும். 2. பொச்சாப்புக் கொல்லும் புகழை; அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. (ப-உ) அறிவினை- அறிவை. நிச்ச நிரப்பு- நித்திய தரித்திரம். கொன்றுஆங்கு- கெடுப்பதுபோல. புகழை- ஒருவன் கீர்த்தியை. பொச்சாப்பு- மறதியானது. கொல்லும்- அழிக்கும். (க-து) தரித்திரம் அறிவைக் கெடுப்பதுபோல, மறதி புகழைக் கெடுக்கும். 3. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அதுஉலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு. (ப-உ) பொச்சாப்பார்க்கு- மறந்து நடப்பவர்க்கு. புகழ்மை இல்லை- புகழுடைமை இல்லை. அது- அவ்வுண்மை. உலகத்து- உலகத்தில் உள்ள. எப்பால் நூலோர்க்கும் - எவ்வகைப்பட்ட அறநூலோர்க்கும். துணிவு - சம்மதமாகும். (க-து) மறதியுள்ளவர்க்குப் புகழ் இல்லை; இது எவ்வகை நூலோர்க்கும் சம்மதமாகும். 4. அச்சம் உடையார்க்கு அரண்இல்லை; ஆங்குஇல்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. (ப-உ) அச்சம் உடையார்க்கு- பயம் உள்ளவர்க்கு. அரண்- பாதுகாவல்களால். இல்லை- பயன் இல்லை. ஆங்கு- அதுபோல. பொச்சாப்பு உடையார்க்கு- மறதியுள்ளவர்க்கு. நன்கு இல்லை- செல்வம் இருந்தும் நன்மையில்லை. (க-து) பயம் உள்ளவர்க்குப் பாதுகாப்புக்களால் பயன் இல்லை. அதுபோல, மறதியுள்ளவர்க்குச் செல்வத்தால் பயன் இல்லை. 5. முன்உறக் காவாது இழுக்கியான், தன்பிழை, பின்ஊறு இரங்கி விடும். (ப-உ) முன்உற - வரும் துன்பங்களை முன்னதாகவே. காவாது- காக்காமல். இழுக்கியான்- மறந்திருந்தவன். பின்ஊறு- பின் துன்பம் வருவதைக் கண்டு. தன்பிழை- தான் செய்த குற்றத்தை நினைத்து. இரங்கிவிடும்- வருந்துவான். (க-து) தனக்கு வருந் துன்பத்தை முன்னறிந்து தடுத்துக் கொள்ளாதவன், பின் அத்துன்பம் வரும்போது தன் பிழையை நினைத்து வருந்துவான். 6. இழுக்காமை, யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின், அதுஒப்பது இல். (ப-உ) இழுக்காமை- மறவாத தன்மை. யார் மாட்டும் - யாரிடத்திலும். என்றும்- எப்பொழுதும். வழுக்காமை - தவறாமல். வாயின்- அமைந்திருக்குமானால். அதுஒப்பதுஇல்- அதைப்போன்ற நன்மை ஒன்றும் இல்லை. (க-து) மறதி இல்லாமையைவிடச் சிறந்தது ஒன்றும் இல்லை. 7. அரியவென்று ஆகாத இல்லை, பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின். (ப-உ) பொச்சாவா- மறவாமை என்னும். கருவியால்- மனத்தினால். போற்றி- ஆராய்ந்து. செயின்- காரியத்தைச் செய்தால். அரிய என்று- அரியவை என்று சொல்லப்பட்டு. ஆகாத- முடியாத காரியங்கள். இல்லை- ஒன்றும் இல்லை. (க-து) மறக்காமல் ஆராய்ந்து செய்தால் முடியாத காரியங்கள் ஒன்றும் இல்லை. 8. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும்; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். (ப-உ) புகழ்ந்தவை - நீதி நூலோரால் புகழப்பட்ட காரியங்களை. போற்றி- ஆராய்ந்து. செயல் வேண்டும்- செய்ய வேண்டும். செய்யாது இகழ்ந்தார்க்கு- அவைகளைச் செய்யாமல் மறந்தவர்க்கு. எழுமையும் இல்- ஏழு பிறப்பிலும் நன்மையில்லை. (க-து) உயர்ந்த செயல்களையே ஆராய்ந்து செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாதவர்க்கு ஏழு பிறப்பிலும் நன்மை யில்லை. 9. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக, தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போது. (ப-உ) தாம்தம் மகிழ்ச்சியுன்- தாம் தமது மகிழ்ச்சியினால். மைந்து உறும்போது - கர்வங்கொள்ளும்போது. இகழ்ச்சியின்- மறதியினால். கெட்டாரை- கெட்டுப் போனவர்களை. உள்ளுக- நினைத்துக் கொள்ள வேண்டும். (க-து) செல்வத்தால் செருக்கடையும்போது, மறதியால் கெட்டுப்போனவரை எண்ணிப்பார்க்க வேண்டும். 10. உள்ளியது எய்தல் எளிதுமன், மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெரின். (ப-உ) மற்றும்தான்- ஒருவன் தான். உள்ளியது- நினைத்ததை. உள்ளப்பெறின்- மறவாமல் நினைத்திருப்பானாயின். உள்ளியது- அவன் நினைத்ததை. எய்தல்- நினைத்தபடி அடைதல். எளிதுமன்- எளிதாகும். மன்- அசை. (க-து) ஒருவன் தான் நினைத்ததை மறவாமல் நினைப் பானாயின், அவன் எண்ணியதை எளிதில் அடைவான். 55. செங்கோன்மை நீதிமுறையுடன் அரசாளும் தன்மை. 1. ஓர்ந்துகண் ணோடாது, இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. (ப-உ) ஓர்ந்து- குற்றத்தை உணர்ந்து. யார்மாட்டும்- யாவரிடத்தும். கண்ஓடாது- தயவு காட்டாமல். இறைபுரிந்து- நடுநிலைமையில் இருந்து. தேர்ந்து- ஆராய்ந்து. செய்வஃதே - நீதி செய்வதே. முறை- செங்கோலாகும். (க-து) குற்றத்தை அறிந்து, தயவு தாட்சண்யமின்றி நடுநிலையிலிருந்து நீதி செய்வதே செங்கோலாகும். 2. வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம், மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. (ப-உ) உலகு எல்லாம்- உலகில் உள்ள உயிர்கள் எல்லாம். வான்நோக்கி- மழையை எதிர்பார்த்து. வாழும்- உயிர்வாழும். குடி- குடிமக்கள். மன்னவன்- அரசனுடைய. கோல்நோக்கி-செங்கோல் முறையை எதிர்பார்த்து. வாழும்- வாழ்வார்கள். (க-து) உயிர்கள் மழையை எதிர்பார்த்து வாழும்; குடிமக்கள் அரசன் செங்கோலை எதிர்பார்த்து வாழ்வர். 3. அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய் நின்றது மன்னவன் கோல். (ப-உ) மன்னவன் கோல்- அரசனது செங்கோல். அந்தணர் நூற்கும்- அந்தணர்க்குரிய வேதத்துக்கும். அறத்திற்கும்- அதில் கூறப்பட்ட தருமத்துக்கும். ஆதியாய்- காரணமாக. நின்றது- நிலைத்து நின்றது. (க-து) வேதத்திற்கும், தருமத்திற்கும் காரணமாகி நின்றது அரசனது செங்கோலாம். 4. குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன், அடிதழீஇ நிற்கும் உலகு. (ப-உ) உலகு- உலகத்தார். குடிதழீஇ- குடிகளை ஆதரித்து. கோல்ஓச்சும்- செங்கோல் செலுத்தும். மாநில மன்னன்- பெருநில வேந்தனது. அடிதழீஇ- அடியை ஆதரித்து. நிற்கும்- நிற்பார்கள். (க-து) குடிமக்களை ஆதரித்துச் செங்கோல் செலுத்தும் மன்னவனையே உலகத்தார் ஆதரிப்பார்கள். 5. இயல்புஉளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. (ப-உ) பெயலும்- பருவமழையும். விளையுளும்- குறையாத விளைவும். தொக்கு- ஒன்றுகூடி. இயல்பு உளி- நீதி நூல்களின் இயல்பறிந்து. கோல்ஓச்சும்- செங்கோல் செலுத்தும். மன்னவன் - அரசனது. நாட்ட- நாட்டில் இருப்பனவாம். (க-து) நீதியோடு ஆளும் அரசனது நாட்டிலே பருவ மழையும் விளைவும் கூடியிருக்கும். 6. வேல்அன்று வென்றி தருவது; மன்னவன் கோல்; அதூஉம் கோடாதுஎனின். (ப-உ) மன்னவன்- அரசனுக்கு. வென்றி தருவது- சண்டை யில் வெற்றி தருவது. வேல்அன்று- வேலாயுதம் அன்று. கோல்- அவனது செங்கோலேயாகும். அதூஉம்- அவ்வாறு உண்டாகும் வெற்றியும். கோடாது எனின்- அக்கோல் கோணாமல் இருக்கு மானால்தான் உண்டு. (க-து) அரசனுக்கு வெற்றி தருவது செங்கோல்; வேலாயுதம் அன்று. 7. இறைகாக்கும் வையகம் எல்லாம்; அவனை முறைகாக்கும், முட்டாச் செயின். (ப-உ) இறை- அரசன். வையகம் எல்லாம்- பூமி முழுவதையும். காக்கும்- காப்பாற்றும். முட்டாச்செயின்- அதைத் தவறாமல் செய்வானாயின். அவனை- அவ்வரசனை. முறை காக்கும்- செங்கோலே காப்பாற்றும். (க-து) அரசன் நாட்டைக் காப்பான்; அவன் செங்கோல் அவனைக் காக்கும். 8. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தால் தானே கெடும். (ப-உ) எண்பதத்தான்- யாரும் எளிதில் காண நின்று. ஓரா- ஆராய்ந்து. முறை செய்யா- நீதி செய்யாத. மன்னவன்- அரசன். தண்பதத்தால்- தாழ்ந்த நிலையடைந்து. தானே கெடும்- தானே அழிவான். (க-து) நீதியுடன் அரசாட்சி செய்யாத மன்னன் தானே அழிவான். 9. குடிபுறம் காத்துஓம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று; வேந்தன் தொழில். (ப-உ) குடி -குடிகளை. புறம் காத்து- பிறர் துன்புறுத்தாமல் காத்து. ஓம்பி- தானும் பாதுகாத்து. குற்றம்- அவர்களுடைய குற்றத்தை. கடிதல்- தண்டனையால் ஒழித்தல். வடு அன்று- குற்றம் அன்று. வேந்தன் தொழில் - அரசன் கடமையாகும். (க-து) குடிகளைக் காத்து, அவர்களுடைய குற்றத்தை நீக்குதல் அரசன் கடமையாகும். 10. கொலையின் கொடியாரை வேந்துஒறுத்தல், பைங்கூழ் களைகட் டதனொடு நேர். (ப-உ) வேந்து- அரசன். கொடியாரை - கொடுமையுள்ள வர்களை. கொலையின்- கொலையால். ஒறுத்தல்- தண்டித்தல். பைம்கூழ்- உழவன் பசுமையான பயிருக்கு. களைகட்டதனொடு - களையை எடுத்துக் காப்பாற்றுவதோடு. நேர் -ஒப்பாகும். (க-து) அரசன் கொடியாரைக் கொலையால் தண்டித்தல், உழவன் பயிரைக் களையெடுத்துக் காப்பாற்றுவது போலாம். 56. கொடுங்கோன்மை நீதி தவறிய அரசு முறையின் கொடுமை. 1. கொலைமேல் கொண்டாரின் கொடிதே, அலைமேல்கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து. (ப-உ) அலை- துன்புறுத்துவதை. மேல்கொண்டு- தொழி லாகக் கொண்டு. அல்லவை- தீமைகளை. செய்து ஒழுகும்வேந்து- செய்து வாழும் அரசன். கொலை- கொலைத் தொழிலையே. மேல் கொண்டாரின் - மேற்கொண்டு நடப்பவரைவிட. கொடிது ஏ- கொடியவன் ஆவான். ஏ- அசை. (க-து) தீமை செய்யும் அரசன் கொலைகாரனைவிடக் கொடியவன். 2. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. (ப-உ) கோலொடுநின்றான்- கொடுங்கோல் வேந்தன். இரவு- குடிகளிடம் பொருள் கேட்டல். வேலொடு நின்றான்- வேலுடன் நின்ற கள்வன் ஒருவன். இடு - வழிப்போக்கனிடம் உன் பொருளைக் கொடு. என்றது போலும்- என்று கேட்டது போலாகும். (க-து) கொடுங்கோலன் குடிகளிடம் பொருள்கேட்டல், வேல்கொண்ட திருடன் ஒருவன் வழிப்போக்கனைப் பொருள் கேட்டது போலாகும். 3. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும். (ப-உ) நாள்தொறும் - ஒவ்வொரு நாளும். நாடி- நன்மை தீமைகளை ஆராய்ந்து. முறை செய்யா- நீதி செய்யாத. மன்னவன்- அரசன். நாள்தொறும்- ஒவ்வொரு நாளும். நாடு கெடும்- தனது நாட்டை இழந்து வருவான். (க-து) தனது நாட்டில் நிகழும் குற்றங்களை ஆராய்ந்து நீதி செய்யாத அரசன் தனது நாட்டை இழப்பான். 4. கூழும்குடியும் ஒருங்கு இழக்கும், கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. (ப-உ) கோல்கோடி- நீதி தவறும்படி. சூழாது- பின்வரும் தீமையை நினைக் காமல். செய்யும் அரசு- தவறுசெய்யும் அரசன். கூழும்- உணவையும். குடியும்- குடிகளின் ஆதரவையும். ஒருங்கு இழக்கும்- ஒன்றாக இழந்து விடுவான். (க-து) நீதி தவறி ஆளும் அரசன் உணவையும், குடிகளின் ஆதரவையும் இழப்பான். 5. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. (ப-உ) அல்லல்பட்டு- துன்பம் அடைந்து. ஆற்றாது- பொறுக்க முடியாமல். அழுத கண்ணீர்- அழுத கண்ணீரே. செல்வத்தை- அரசனது செல்வத்தை. தேய்க்கும்- அழிக்கும். படைஅன்றே- ஆயுதம் அல்லவோ? (க-து) குடிகளின் கண்ணீரே கொடுங்கோல் வேந்தன் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகும். 6. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை, அஃதுஇன்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி. (ப-உ) மன்னர்க்கு- அரசர்க்கு. மன்னுதல்- புகழ் நிலைப் பதற்குக் காரணம். செங்கோன்மை- செங்கோல் ஆட்சிதான். அஃது இன்றேல்- செங்கோல் ஆட்சியின்றேல். மன்னர்க்கு- அரசர்க்கு. ஒளிமன்னா ஆம்- புகழ் நிலைபெறாதாம். (க-து) செங்கோல் ஆட்சியே அரசர்க்குப் புகழ் தருவது; அது இல்லாவிடில் அரசர்க்குப் புகழ் இல்லை. 7. துளியின்மை ஞாலத்திற்கு எற்று? அற்றே, வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. (ப-உ) துளிஇன்மை- மழையில்லாமையால், ஞாலத்திற்கு- உலகில் வாழும் உயிர்க்கு. எற்று- எத்தகைய துன்பமுண்டாகுமோ. அற்றே- அத்தகைய துன்பமே. வேந்தன்- அரசனது. அளிஇன்மை- அன்பில்லாமையால். வாழும் உயிர்க்கு- இவ்வுலகில் வாழும் உயிர்க்கு உண்டாகும். (க-து) மழையில்லாமையால் உலகம் துன்புறுவது போல, அரசனது அன்பில்லாமையால் மக்கள் துன்புறுவர். 8. இன்மையின் இன்னாது உடைமை, முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின். (ப-உ) முறைசெய்யா- நீதியுடன் ஆளாத. மன்னவன்- அரசனது. கோல்கீழ்- கொடுங்கோலின் கீழே. படின்- வாழ்ந்தால். இன்மையின் - வறுமையைக் காட்டிலும். உடைமை- செல்வம் உடைமையே. இன்னாது - துன்பந்தரும். (க-து) கொடுங்கோல் ஆட்சியின்கீழ் வாழ்ந்தால், வறுமை யைவிடச் செல்வமே துன்பந்தரும். 9. முறைகோடி மன்னவன் செய்யின், உறைகோடி ஒல்லாது வானம் பெயல். (ப-உ) மன்னவன்- அரசன். முறைகோடி- நீதி தவறும்படி. செய்யின்- பொருளைச் சேர்ப்பானாயின், அவனது நாட்டில். உறைகோடி - பருவமழை தவறி. வானம்- மேகம். பெயல் ஒல்லாது- மழை பெய்யாது. (க-து) கொடுங்கோல் மன்னன் நாட்டிலே மழை பெய்யாது. 10. ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர், காவலன் காவான் எனின். (ப-உ) காவலன் - அரசன். காவான் எனின்- நீதி முறைப்படி நாட்டைக் காக்காவிட்டால். ஆ- பசுக்களும். பயன் குன்றும்- பால் குறையும். அறுதொழிலோர் - அந்தணர். நூல்மறப்பர்- நூல் களை மறந்துவிடுவர். (க-து) அரசன் குடிமக்களைக் காக்காவிட்டால், பசுக்களின் பால்குறையும்; அந்தணர்கள் வேதங்களை மறந்து விடுவர். 57. வெருவந்த செய்யாமை குடிமக்கள் அஞ்சத்தக்க காரியங்களைச் செய்யாதிருத்தல். 1. தக்கஆங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால், ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து. (ப-உ) தக்கஆங்கு- குற்றம் புரிந்தவனை நடு நிலையிலிருந்து. நாடி - ஆராய்ந்து. தலைச்செல்லா வண்ணத்தால்- மீண்டும் அக்குற்றத்தில் செல்லாதபடி. ஒத்து ஆங்கு- குற்றத்திற்கு ஏற்றபடி. ஒறுப்பது- தண்டிப்பவனே. வேந்து- அரசனாவான். (க-து) நடுநிலையிலிருந்து குற்றத்திற்குத் தகுந்த தண்டனை கொடுப்பவனே அரசன். 2. கடிதுஓச்சி மெல்ல ஏறிக நெடிதுஆக்கம் நீங்காமை வேண்டு பவர். (ப-உ) ஆக்கம்- செல்வமானது. நெடிது- நெடுங்காலம். நீங்காமை- நீங்காமல் தம்மிடமே இருக்க வேண்டும் என்று. வேண்டுபவர்- விரும்புகின்றவர். கடிதுஓச்சி- வேகமாக ஓங்கி. மெல்ல எறிக- மெதுவாக அடிக்க வேண்டும். (க-து) செல்வம் அழியாதிருக்க விரும்புவோர் குற்றவாளி களுக்குக் குறைந்த தண்டனை அளிக்க வேண்டும். 3. வெருவந்த செய்துஒழுகும் வெம்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். (ப-உ) வெருவந்த- அஞ்சத்தக்க செயல்களை. செய்து ஒழுகும்- செய்து வாழும். வெம்கோலன் ஆயின்- கொடுங் கோலனாக இருந்தால் அவன். ஒரு வந்தம்- நிச்சயமாக. ஒல்லை- விரைவிலே. கெடும்- அழிவான். (க-து) குடிகள் அஞ்சும் கொடுமைகளைச் செய்யும் அரசன், விரைவில் அழிவது நிச்சயம். 4. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். (ப-உ) இறை- அரசன். கடியன்- பொல்லாதவன். என்று உரைக்கும்- என்று குடிகளால் சொல்லப்படுகின்ற. இன்னாச் சொல்- துன்பந்தரும் சொல்லையுடைய. வேந்தன்- அரசன். உறை- ஆயுள். கடுகி- குறைந்து. ஒல்லை- விரைவில். கெடும்- தன் செல்வத்தையும் இழப்பான். (க-து) குடிகளால் கொடியவன் என்று வெறுக்கப்படும் அரசன் விரைவில் ஆயுள் குறைந்து செல்வத்தையும் இழப்பான். 5. அரும்செல்வி, இன்னா முகத்தான் பெரும்செல்வம் பேஎய்கண்டு அன்னது உடைத்து. (ப-உ) அரும்செல்வி- எளிதில் காண முடியாதவனும். இன்னா முகத்தான்- கடுகடுத்த முகத்தையுடையவனும் ஆகியவனது. பெரும் செல்வம்- பெரிய செல்வம். பேஎய் கண்டு அன்னது- பேயால் கண்டு காக்கப்படுவது போன்ற. உடைத்து- குற்றம் உடையதாகும். (க-து) பிறரால் காண முடியாதவனும், கடுத்த முகத்தையுடை யவனுமான ஒருவன் செல்வம் பேய் காத்த புதையலாகும். 6. கடும்சொல்லன், கண்இலன் ஆயின், நெடும்செல்வம் நீடுஇன்றி ஆங்கே கெடும். (ப-உ) கடும் சொல்லன்- கடிய சொல்லையுடையவனும். கண்இலன்- இரக்கம் அற்றவனும். ஆயின்- ஆனால். நெடும் செல்வம்- அவனது பெரிய செல்வம். நீடு இன்றி- நிலைக்காமல். ஆங்கே- அப்பொழுதே. கெடும்- அழியும். (க-து) கடுஞ்சொல்லும், இரக்கமின்மையும் உடையவனது செல்வம் நிலைக்காமல் அழியும். 7. கடுமொழியும் கையிகந்த தண்டமும், வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். (ப-உ) கடுமொழியும்- கடுஞ்சொல்லும். கை இகந்த- அளவுகடந்த. தண்டமும்- தண்டனையும். வேந்தன்- அரசனது. அடும்முரண்- பகைவரைக் கொல்லும் வலிமையை. தேய்க்கும்- தேய்க்கின்ற. அரம்- அரமாகும். (க-து) கடுஞ்சொல்லும், அளவுகடந்த தண்டனையும் அரசனுடைய ஆற்றலைத் தேய்க்கின்ற அரமாகும். 8. இனத்துஆற்றி எண்ணாத வேந்தன், சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு. (ப-உ) இனத்து ஆற்றி- மந்திரிகளின் முன்வைத்து. எண்ணாத- ஆராய்ந்து காரியத்தைச் செய்யாத. வேந்தன்- அரசன். சினத்து ஆற்றி- கோபங்கொண்டு. சீறின்- அவர்களைக் கோபிப்பானாயின். திரு- அவன் செல்வம். சிறுகும்- நாள்தோறும் சுருங்கும். (க-து) அமைச்சர்களுடன் ஆலோசித்துக் காரியம் செய்யாத அரசன், அவர்களைக் கோபித்துக் கொள்வானாயின், அவன் செல்வம் குறையும். 9. செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். (ப-உ) சிறை செய்யா- தனக்குப் பாதுகாப்புச் செய்து கொள்ளாத. வேந்தன்- அரசன். வெருவந்த போழ்தில்- போர் வந்த காலத்தில். வெருவந்து- பயந்து. வெய்து- விரைவில். கெடும்- அழிவான். (க-து) தக்க பாதுகாப்பைத் தேடிக்கொள்ளாத அரசன், போர் மூண்டால் விரைவில் அழிவான். 10. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல், அதுஅல்லது இல்லை நிலக்குப் பொறை. (ப-உ) கடும்கோல்- கொடுங்கோலன். கல்லார்- நீதி நூல்கள் கல்லாதவர்களை. பிணிக்கும்- அமைச்சர்களாகச் சேர்த்துக் கொள்வான். அது அல்லது- அக் கூட்டத்தைத் தவிர. நிலக்கு- பூமிக்கு. பொறை இல்லை- வேறு பாரம் இல்லை. (க-து) கொடுங்கோல் அரசன் கல்லாதவரை மந்திரிகளாக ஆக்கிக் கொள்வான். அதுவே பூமிக்குப் பாரமாகும். 58. கண்ணோட்டம் பழகியவர்களின் சொற்களை மறக்காமை. 1. கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை உண்மையான் உண்டுஇவ் வுலகு. (ப-உ) கண்ணோட்டம் என்னும்- தாட்சண்யம் என்று சொல்லப்படும். கழி பெரும்- மிகவும் பெரிய. காரிகை- அழகு. உண்மையான்- இருப்பதனால்தான். இவ்வுலகு- இவ்வுலக மானது. உண்டு- நிலைத்து இருக்கின்றது. (க-து) தாட்சண்யம் என்னும் அழகு இருப்பதனால்தான் உலகம் அழியாம லிருக்கின்றது. 2. கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதுஇலார் உண்மை நிலக்குப் பொறை. (ப-உ) உலகுஇயல்- உலக நடை. கண்ணோட்டத்து- தாட்சண்யத்தினால்தான். உள்ளது - நிலைத்திருக்கின்றது. அஃதுஇலார் - அத்தாட்சண்யம் இல்லாதவர். உண்மை- உயிருடன் இருப்பது. நிலக்கு- பூமிக்கு. பொறை- பாரமாகும். (க-து) தாட்சண்யத்தால்தான் உலகு வாழ்கிறது; ஆதலால் தாட்சண்யமற்றவர் உயிர் வாழ்வது உலகுக்குப் பாரமாகும். 3. பண்என்னாம் பாடற்கு இயைபுஇன்றேல், கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். (ப-உ) பண்- இசையானது. பாடற்கு- பாடலுக்கு. இயைபு இன்றேல்- பொருத்த மில்லையானால். என்ஆம்- என்ன பயன்? கண் - கண்ணானது. கண்ணோட்டம் இல்லாத கண்- தாட்சண்யம் இல்லாதபோது. என்ஆம்- என்ன பயனுடையதாம்? (க-து) பாட்டுடன் சேராத இசையால் பயன் இல்லை. அதுபோல், தாட்சண்ய மில்லாத கண்ணால் பயனில்லை. 4. உளபோல முகத்து எவன்செய்யும், அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். (ப-உ) அளவினால்- தகுந்த அளவினால். கண்ணோட்டம் இல்லாத- தாட் சண்யம் இல்லாத. கண்- கண்கள். முகத்து- முகத்தில். உளபோல்- இருப்பவை போல் காணப்பட்டாலும். எவன்- அவை என்ன பலனை. செய்யும்- தரும்? (க-து) தாட்சண்யம் காட்டாத கண்களால் பயன் இல்லை. 5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண்என்று உணரப் படும். (ப-உ) கண்ணிற்கு- கண்ணுக்கு. அணிகலம்- ஆபரணம். கண்ணோட்டம்- தாட்சண்யமாகும். அஃது இன்றேல்- அவ்வா பரணம் இல்லையானால். புண்என்று- அக்கண்ணைப் புண் என்று. உணரப்படும்- எண்ணப்படும். (க-து) தாட்சண்யமே கண்ணுக்கு ஆபரணம். தாட்சண்யம் இல்லாத கண் புண் ஆகும். 6. மண்ணோடு இயைந்த மரத்துஅனையர், கண்ணோடு இயைந்து கண்ணோடா தவர். (ப-உ) கண்ணோடு இயைந்து- கண்ணோடு கூடியிருந்தும். கண்ணோடாதவர்- தாட்சண்யம் இல்லாதவர். மண்ணோடு- மண்ணுடன். இயைந்த- பொருந்தி நின்ற. மரத்து அனையர்- மரத்தை ஒப்பார். (க-து) தாட்சண்யம் அற்றவர் மரத்தை ஒப்பார். 7. கண்ணோட்டம் இல்லவர் கண்இலர்; கண்உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். (ப-உ) கண்ணோட்டம் இல்லவர்- தாட்சண்யம் இல்லாதவர். கண் இலர்- கண் இல்லாதவர். கண் உடையார்- கண் உள்ளவர். கண்ணோட்டம் இன்மையும்- தாட்சண்யம் இல்லாதவராயிருப்பதும். இல்-இல்லை. (க-து) தாட்சண்யம் இல்லாதவர் குருடர்; தாட்சண்யம் உள்ளவர் கண்ணுள்ளவர். 8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்துஇவ் உலகு. (ப-உ) கருமம்- தம் கடமையாகிய காரியத்திலே. சிதையாமல்- தவறாமல். கண்ணோட- தாட்சண்யம் காட்ட. வல்லார்க்கு- வல்லவர்க்கு. இவ்உலகு-இந்த உலகம். உரிமை உடைத்து- உரிமையுள்ளதாம். (க-து) கடமை தவறாத தாட்சண்யமுள்ளவர்களுக்கே இவ்வுலகம் சொந்த மாகும். 9. ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும், கண்ணோடிப் பொறுத்துஆற்றும் பண்பே தலை. (ப-உ) ஒறுத்து ஆற்றும்- தம்மைத் தண்டிக்கும். பண்பினார் கண்ணும்- தன்மையுள்ளவரிடத்தும். கண்ணோடி- தாட்சண்யம் காட்டி. பொறுத்து ஆற்றும்- பொறுத்துக் கொள்ளும். பண்பே- தன்மையே. தலை- சிறந்த குணம். (க-து) தம்மைத் துன்புறுத்துவோரிடமும் தாட்சண்யம் காட்டுவதே சிறந்த பண்பாகும். 10. பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர், நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். (ப-உ) நயத்தக்க- விரும்பத்தக்க. நாகரிகம்- கண்ணோட்டத்தை. வேண்டுபவர்- விரும்புகின்றவர். நஞ்சு- விஷத்தை. பெயக் கண்டும்- பழகினவர் உணவில் இடக்கண்டும். உண்டு- மறுக்காமல் அதை உண்டு. அமைவர்- அவருடன் வாழ்வர். (க-து) தாட்சண்யம் உள்ளவர், தம் நண்பர் தரும் நஞ்சு கலந்த உணவையும் உண்டு அவருடன் இருப்பர். 59. ஒற்றாடல் உளவு காண்போரின் திறம் அறிந்து அவரை ஆளுதல். 1. ஒற்றும், உரைசான்ற நூலும், இவைஇரண்டும் தெற்றுஎன்க மன்னவன் கண். (ப-உ) ஒற்றும்- ஒற்றனும். உரைசான்ற நூலும்- புகழ் நிறைந்த நீதிநூலும். இவை இரண்டும்- இவைகள் இரண்டும். மன்னவன் - அரசன். கண்- தன்கண்கள் என. தெற்றுஎன்க- தெளிவாக அறிய வேண்டும். (க-து) ஒற்றனையும், நீதிநூலையும் அரசன் தனது கண்கள் என்று அறிய வேண்டும். 2. எல்லார்க்கும், எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும் வல்அறிதல் வேந்தன் தொழில். (ப-உ) எல்லார்க்கும்- எல்லாரிடத்தும். நிகழ்பவை எல்லாம்- நடப்பவைகளை எல்லாம். எஞ்ஞான்றும் - ஒவ்வொரு நாளும். வல்அறிதல் - விரைவில் தெரிந்து கொள்ளுதல். வேந்தன் தொழில்- அரசன் வேலையாகும். (க-து) எல்லோருடைய செயல்களையும் ஒற்றரால் கண்டறிவது அரசன் கடமையாகும். 3. ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல். (ப-உ) ஒற்றினால் - ஒற்றரால். ஒற்றி- பகைவர் செயலை அறிந்துவரச் செய்து. பொருள் தெரியா- அதன் பயனை ஆராயாத. மன்னவன்- அரசன். கொற்றம் கொளக் கிடந்தது- வெற்றிபெறக் கிடந்தவழி. இல்- ஒன்றும் இல்லை. (க-து) ஒற்றனைக் கொண்டு பகைவர் செய்கையை அறியாத அரசனுக்கு வெற்றி கிடைக்காது. 4. வினைசெய்வார். தம்சுற்றம், வேண்டாதார், என்றுஆங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. (ப-உ) வினை செய்வார்- தொழில் செய்வார். தம் சுற்றம்- தமது சுற்றத்தார். வேண்டாதவர்- பகைவர். என்று ஆங்கு- என்று சொல்லப்பட்ட. அனைவரையும்- எல்லோரையும், ஆராய்வது- ஆராய்ந்து அறிகின்றவனே. ஒற்று- ஒற்றனாவான். (க-து) அரசனிடம் வேலை செய்வோர், உறவினர், பகைவர் எல்லோருடைய செயல்களையும் ஆராய்கின்றவனே ஒற்றனாவான். 5. கடாஅ உருவொடு, கண்அஞ்சாது, யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. (ப-உ) கடாஅ- சந்தேகப்படாத. உருவொடு- வடிவத்துடன். கண் அஞ்சாது- பகைவர் பார்வைக்குப் பயப்படாமல். யாண்டும்- எவ்விடத்திலும். உகாஅமை- உண்மையை உமிழ்ந்து விடாம லிருக்க. வல்லதே- வல்லவனே. ஒற்று- ஒற்றனாவான். (க-து) நல்ல தோற்றம், அஞ்சாமை, பயந்து உண்மையை வெளியிடாமை இவைகள் ஒற்றன் இயல்புகள். 6. துறந்தார், படிவத்தர் ஆகி, இறந்துஆராய்ந்து என்செயினும் சோர்வுஇலது ஒற்று. (ப-உ) துறந்தார்- துறவி போலவும். படிவத்தர்- விரதிகள் போலவும். ஆகி- உருக்கொண்டு. இறந்து- தடைகளையெல்லாம் தாண்டிச் சென்று. ஆராய்ந்து- உண்மையை அறிந்து. என்செயினும் - பகைவர் என்ன துன்பம் செய்தாலும் . சோர்வு இலது- தன்னைக் காட்டிக் கொள்ளாதவனே. ஒற்று- ஒற்றனா வான். (க-து) துறவிகள், விரதிகள் உருக்கொண்டு எங்கும் சென்று உண்மை காணவல்லவர்களே ஒற்றர்களாவர். 7. மறைந்தவை கேட்கவற்று ஆகி, அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. (ப-உ) மறைந்தவை- இரகசியமான செய்திகளை. கேட்க- கேட்டறிய. வற்று ஆகி- வல்லவனாகி. அறிந்தவை- கேட்டறிந் தவைகளிலே. ஐயப்பாடு- சந்தேகம். இல்லதே- இல்லாதவனே. ஒற்று- ஒற்றனாவான். (க-து) இரகசியங்களை அறிகின்றவனும், அறிந்தவை களில் சந்தேகம் இல்லாதவனுமே ஒற்றனாவான். 8. ஒற்றுஒற்றித் தந்த பொருளையும், மற்றும்ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். (ப-உ) ஒற்று- ஒரு ஒற்றனால். ஒற்றி- உளவறிந்து. தந்த- உரைத்த. பொருளையும்- செய்தியையும். மற்றும் ஓர் ஒற்றினால்- பின்னும் ஓர் ஒற்றனால். ஒற்றி- அறிந்துவரச் செய்து. கொளல்- ஒப்புக்கொள்ளவேண்டும். (க-து) ஓர் ஒற்றன் உரைத்ததை, மற்றொரு ஒற்றனால் அறிந்துவரச் செய்து ஒப்புக்கொள்ளவேண்டும். 9. ஒற்றுஒற்று உணராமை ஆள்க, உடன்மூவர் சொல்தொக்க தேறப் படும். (ப-உ) ஒற்று- ஒரு ஒற்றனை. ஒற்று- மற்றொரு ஒற்றன். உணராமை- அறியாதபடி. ஆள்க- ஆளவேண்டும். மூவர்சொல்- மூன்று ஒற்றர்களின் சொற்கள். உடன்தொக்க- ஒன்றாக இருப்ப தாயின். தேறப்படும்- அது உண்மையென்று தெளியப்படும். (க-து) ஒரு ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியக்கூடாது; ஒற்றர் மூவர் கூறுவது ஒத்திருந்தால்தான் அது உண்மையாகக் கொள்ளவேண்டும். 10. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. (ப-உ) ஒற்றின்கண்- ஒற்றர் இடம். சிறப்பு- சிறப்பை. அறிய- பிறர் அறியும்படி. செய்யற்க- செய்யக்கூடாது. செய்யின்- செய்தால். மறை- தனது இரகசியத்தை. புறப்படுத்தான் ஆகும்- தானே வெளிப்படுத்தியவன் ஆவான். (க-து) அரசன், பிறர் அறியும்படி ஒற்றனுக்குச் சிறப்புச் செய்யாதிருக்க வேண்டும். செய்தால், தனது இரகசியங்களைத் தானே வெளியிட்டவன் ஆவான். 60. ஊக்கம் உடைமை மன உற்சாகத்துடன் காரியம் செய்தல். 1. உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதுஇல்லார் உடையது உடையரோ மற்று. (ப-உ) உடையர் எனப்படுவது- உடையவர் என்று சொல்லத்தக்கது. ஊக்கம்- மன உற்சாகம். அஃது இல்லார்- அந்த மன உற்சாகம் இல்லாதவர். மற்றுஉடையது- வேறு எதை உடையவராக இருந்தாலும். உடையரோ- உடையவர் ஆவரோ? (க-து) உற்சாகமே செல்வம்; உற்சாகம் இல்லாதவர் செல்வம் உடையவர் அல்லர். 2. உள்ளம் உடைமை உடைமை; பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். (ப-உ) உள்ளம் உடைமை- உற்சாகம் உடைமையே. உடைமை- நிலைத்த செல்வம். பொருள் உடைமை- பொருட்செல்வம். நில்லாது- நிலைக்காமல். நீங்கிவிடும் - போய்விடும். (க-து) ஊக்கமே அழியாத செல்வம்; பொருள் செல்வம் அழிந்துவிடும். 3. ஆக்கம் இழந்தேம் என்றுஅல்லாவார், ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார். (ப-உ) ஒருவந்தம்- நிலைபெற்ற. ஊக்கம்- உற்சாகத்தை. கைத்துஉடையார்- கையில் பொருளாகக் கொண்டவர். ஆக்கம்- செல்வத்தை. இழந்தேம் என்று- இழந்துவிட்டோம் என்று. அல்லாவார் - கலங்கமாட்டார். (க-து) ஊக்கம் உள்ளவர் செல்வத்தையிழந்தாலும் வருந்தமாட்டார். 4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசைவுஇலா ஊக்கம் உடையான் உழை. (ப-உ) அசைவு இலா- தளராத. ஊக்கம் உடையான் உழை- ஊக்கம் உள்ளவனிடம். ஆக்கம்- செல்வமானது. அதர்வினாய்- வழி கேட்டுக்கொண்டு. செல்லும்- போகும். (க-து) ஊக்கம் உள்ளவனிடம் செல்வம் தானே வந்து சேரும். 5. வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு. (ப-உ) மலர் நீட்டம்- நீர்ப்பூக்களின் தாளின் அளவு. வெள்ளத்து அனைய- நீரின் அளவாகும்; அதுபோல். மாந்தர் தம்- மனிதர்களின். உயர்வு- உயர்வானது. உள்ளத்து அனையது- அவர்களின் ஊக்கத்தின் அளவாகும். (க-து) நீர்ப்பூக்களின் தாள் நீரின் அளவாம்; மனிதர் உயர்வு அவர் ஊக்கத்தின் அளவாகும். 6. உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து. (ப-உ) உள்ளுவது எல்லாம்- நினைப்பதை எல்லாம். உயர்வு- உயர்வாகவே. உள்ளல்- நினைக்கவேண்டும். மற்று அது- அந்த நினைப்பு. தள்ளினும்- கை கூடாமல் போனாலும். தள்ளாமை நீர்த்து- தள்ளப்படாத தன்மை உடையது. (க-து) உயர்ந்ததையே நினைக்கவேண்டும்; அந்நினைப்பு நிறைவேறா விட்டாலும், அந்நினைப்பை விட்டுவிடக் கூடாது. 7. சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர்; புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு. (ப-உ) களிறு- யானை. புதை அம்பின்- உடலில் தைத்த அம்பினால். பட்டு- புண்பட்டபோதும். பாடு ஊன்றும்- தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல. உரவோர்- ஊக்கமாகிய வலிமை உள்ளவர். சிதைவு இடத்து- தமக்கு அழிவுண்டானபோது. ஒல்கார்- தளராமல் தன் பெருமையை நிலைநாட்டுவார். (க-து) யானை புண்பட்டாலும் தன் பெருமையை நிலை நாட்டும். அதுபோல, ஊக்கம் உள்ளவர் துன்பம் நேர்ந்தாலும் தளர்ச்சியடையமாட்டார். 8. உள்ளம் இலாதவர் எய்தார், உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. (ப-உ) உள்ளம் இலாதவர்- மன எழுச்சி இல்லாதவர். உலகத்து- இவ்வுலகில். வள்ளியம்- நாம் கொடுக்குந் தன்மை யுடையோம். என்னும்- என்று தம்மையே பாராட்டும். செருக்கு- மதிப்பை. எய்தார்- அடையமாட்டார். (க-து) ஊக்கமற்றவர் மதிப்பைப் பெறமாட்டார். 9. பரியது, கூர்ங்கோட்டது ஆயினும் யானை, வெரூஉம் புலிதாக் குறின். (ப-உ) யானை- யானையானது. பரியது- பெரிய உருவம் உள்ளது. கூர்ம் கோட்டது- கூர்மையான கொம்புகளையுடையது. ஆயினும்- ஆனாலும். புலி தாக்கு உறின்- புலி தன்னைத் தாக்கப் பெற்றால். வெரூஉம்- அஞ்சும். (க-து) யானை பெரிதானாலும் சிறிய புலியின் எதிர்ப்புக்கு அஞ்சும். 10. உரம் ஒருவற்கு உள்ளவெறுக்கை; அஃதுஇலார் மரம்; மக்கள்ஆதலே வேறு. (ப-உ) ஒருவற்கு- ஒருவனுக்கு. உரம்- உறுதியான அறிவு. உள்ள வெறுக்கை- ஊக்கமேயாகும். அஃதுஇலார்- அந்த உற்சாகம் இல்லாதவர். மரம்- மரம் ஆவார். மக்கள் ஆதலே- உருவத்தில் மக்களாக இருப்பதுதான். வேறு- மரத்துக்கும் அவருக்கும் உள்ள வேற்றுமை. (க-து) ஊக்கமே அறிவாகும். ஊக்கம் இல்லாதவர் மனிதர் அல்லர்; மரம் ஆவர். 61. மடியின்மை சோம்பல் இல்லாமல் ஊக்கமுடன் செயல் செய்வதால் வரும் சிறப்பு. 1. குடி என்னும் குன்றாவிளக்கம், மடிஎன்னும் மாசுஊர, மாய்ந்து கெடும். (ப-உ) *குடி என்னும்- ஒருவனுடைய குடி என்று சொல்லப்படும். குன்றா விளக்கம்- மங்காத விளக்கானது. மடி என்னும்- சோம்பல் என்னும். மாசு ஊர- இருட்டு நெருங்க. மாய்ந்துகெடும்- மழுங்கிக் கெடும். (க-து) குடி என்னும் விளக்கு சோம்பலால் அணைந்து விடும். 2. மடியை மடியா ஒழுகல், குடியைக் குடியாக வேண்டு பவர். (ப-உ) குடியை - தாம் பிறந்த குடியை. குடியாக- நல்ல குடியாக உயர. வேண்டு பவர்- விரும்புகின்றவர். மடியை- சோம் பலை. மடியா -சோம்பலாகவே நினைத்து. ஒழுகல்- முயற்சியுடன் நடக்கவேண்டும். (க-து) தாம் பிறந்த குடியை உயர்த்த விரும்புவோர் சோம்பலை ஒழிக்க வேண்டும். 3. மடிமடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி,மடியும் தன்னினும் முந்து. (ப-உ) மடிமடி- அழிக்கத்தகுந்த சோம்பலை. கொண்டு ஒழுகும்- தன்னிடம் கொண்டு வாழும். பேதை- அறிவில்லாதவன். பிறந்தகுடி- பிறந்த குடியானது. தன்னினும் முந்து- அவன் அழிவதற்கு முன்பே. மடியும்- அழியும். (க-து) சோம்பலுள்ளவன் குடி, அவன் அழிவதற்கு முன்பே அழிந்துவிடும். 4. குடிமடிந்து குற்றம் பெருகும், மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. (ப-உ) மடி மடிந்து- சோம்பலில் வீழ்ந்து. மாண்ட - சிறந்த செயல்களை. உஞற்றிலவர்க்கு- செய்யாதவர்களுக்கு. குடிமடிந்து- அவர் பிறந்த குடி அழிந்து. குற்றம் பெருகும்- குற்றங்களும் வளரும். (க-து) முயற்சியில்லாதவர் குடி அழியும்; அவரிடம் குற்றங்களும் பெருகும். 5. நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். (ப-உ) நெடுநீர்- காலம் தாழ்த்தல். மறவி- மறதி. மடி- சோம்பல். துயில்- தூக்கம். நான்கும்- இந்நான்கு குணங்களும். கெடுநீரார்- கெட்டுப்போகும் தன்மையுள்ளவர். காமக் கலன்- விரும்பும் மரக்கலமாகும். (க-து) தாமதம், மறதி, சோம்பல், தூக்கம் இவைகள் கெடுவோர் ஏறும் மரக்கலங்களாம். 6. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும், மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. (ப-உ) படிஉடையார்- அரசரது. பற்று- செல்வம். அமைந்தக்கண்ணும்- தானே வந்து சேர்ந்தபோதும். மடி உடையார்- சோம்பல் உள்ளவர். மாண்பயன்- பெரும்பயனை. எய்தல் அரிது- அடைவதில்லை. (க-து) அரச செல்வமே வலிந்து வந்தாலும் சோம்பேறிகள் அதனால் பயன்பெறமாட்டார்கள். 7. இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர், மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். (ப-உ) மடிபுரிந்து- சோம்பலை விரும்பியதனால். மாண்ட- சிறந்த முயற்சியை. உஞற்றிலவர்- செய்யாதவர். இடிபுரிந்து- நட்பினர் இடித்துக்கூறி. எள்ளும் சொல்- இகழும் சொல்லை. கேட்பர்- கேட்பார்கள். (க-து) சோம்பல் உள்ளவர் பிறரால் இகழப்படுவார்கள். 8. மடிமை குடிமைக்கண் தங்கின் தன்ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். (ப-உ) மடிமை- சோம்பல். குடிமைக்கண்- நல்ல குடியில் பிறந்தவனிடம். தங்கின்- தங்குமானால், அது. தன் ஒன்னார்க்கு- தனது பகைவர்க்கு. அடிமை புகுத்திவிடும்- அடிமையாக்கிவிடும். (க-து) சோம்பல் உள்ளவன் தன் பகைவர்க்கே அடிமை யாவான். 9. குடிஆண்மை உள்வந்த குற்றம், ஒருவன் மடிஆண்மை மாற்றக் கெடும். (ப-உ) ஒருவன் - ஒருவன் தன்னுடைய. மடி ஆண்மை- சோம்பலை ஆளும் தன்மையை. மாற்ற- ஒழிப்பானாயின். குடி- அவன் குடியிலும். ஆண்மை- ஆண்மையிலும் ஏற்பட்ட. குற்றம் கெடும்- குற்றங்கள் அழியும். (க-து) சோம்பலை ஒழித்தவனது குடியிலும், ஆண்மையிலும் உண்டான குற்றங்கள் அழியும். 10. மடிஇலா மன்னவன் எய்தும், அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு. (ப-உ) மடிஇலா- சோம்பல் இல்லாத. மன்னவன்- அரசன். அடி- தனது அடியால். அளந்தான்- எல்லா உலகையும் அளந்த கடவுள். தாஅயது எல்லாம்- தாவிய நிலப்பரப்பு முழுவதையும். ஒருங்கு- ஒன்றாக. எய்தும்- அடைவான். (க-து) சோம்பல் இல்லாத அரசன் உலக முழுவதையும் பெறுவான். 62. ஆள்வினை உடைமை இடைவிடாத உடல் முயற்சியால் அடையும் நன்மை. 1. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். (ப-உ) அருமை உடைத்து- இது செய்ய முடியாத காரியம். என்று- என்று நினைத்து. அசாவாமை வேண்டும்- தளர்ச்சி அடையக்கூடாது. முயற்சி- முயற்சியானது. பெருமை தரும்- பெருமையைத் தரும். (க-து) முயற்சி பெருமை தரும். ஆதலால் ஒன்றை, இது நம்மால் செய்ய முடியாதது என்று எண்ணிச் சோர்வடையக் கூடாது. 2. வினைக்கண் வினைகெடல் ஓம்பல், வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. (ப-உ) வினைக்குறை- எடுத்த செயலை அரைகுறையாக. தீர்ந்தாரின்- விட்டவரை. உலகு- உலகம். தீர்ந்தன்று- கைவிட்டது; ஆதலால். வினைக்கண்- செய்யும் காரியத்திலே. வினைகெடல்- முயற்சியில்லாதிருப்பதை. ஓம்பல்- கைவிடவேண்டும். (க-து) எடுத்த செயலை அரைகுறையாக விட்டவரை உலகம் கைவிட்டது; ஆதலால் எடுத்த செயலை முயற்சியுடன் செய்யவேண்டும். 3. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. (ப-உ) வேளாண்மை என்னும்- உதவி செய்வது என்னும். செருக்கு- உயர்வு. தாளாண்மை என்னும்- முயற்சி என்னும். தகைமைக்கண்- உயர்ந்த பண்பில். தங்கிற்றே- நிலைத்து நின்ற தாகும். (க-து) முயற்சியுள்ளவரிடமே உபகாரம் செய்யும் தன்மை அமைந்திருக்கின்றது. 4. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை, பேடிகை வாளாண்மை போலக் கெடும். (ப-உ) தாளாண்மை இல்லாதான்- முயற்சி இல்லாதவன். வேளாண்மை- உபகாரம் செய்ய விரும்புந் தன்மை. பேடிகை- பேடி ஒருவன் தன் கையிலே. வாள்ஆண்மை போல- வாளை யேந்தி ஆளும் தன்மைபோல. கெடும்- பயனில்லாமல் ஒழியும். (க-து) முயற்சியற்றவன் உதவிசெய்ய விரும்புந் தன்மை பேடி கையின் வாள்போல் ஆகும். 5. இன்பம் விழையான் வினைவிழைவான், தன்கேளிர் துன்பம் துடைத்துஊன்றும் தூண். (ப-உ) இன்பம் விழையான்- தன் சுகத்தை விரும்பாமல். வினை விழைவான்- தொழிலை முடிக்க விரும்புகின்றவன். தன் கேளிர்- தன் சுற்றத்தாரின். துன்பம் துடைத்து- துன்பத்தை ஒழித்து. ஊன்றும்- அவர்களைத் தாங்கும். தூண்- தூணாவான். (க-து) தன்னலமின்றி முயல்கின்றவன், தன் உறவினரைத் தாங்கும் தூணாவான். 6. முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். (ப-உ) முயற்சி- முயற்சியானது. திருவினை- செல்வத்தை. ஆக்கும்- வளர்க்கும். முயற்று இன்மை- முயற்சியில்லாமை. இன்மை- வறுமையை. புகுத்திவிடும்- நுழைத்துவிடும். (க-து) முயற்சியால் செல்வம் பெருகும்; சோம்பலால் வறுமை வளரும். 7. மடிஉளாள் மாமுகடி என்ப, மடிஇலான் தாள்உளாள் தாமரையி னாள். (ப-உ) மாமுகடி- கரிய மூதேவி. மடிஉளாள்- சோம்பலில் இருப்பாள். தாமரையினாள்- செந்தாமரையில் வாழும் சீதேவி. மடிஇலான்- சோம்பல் இல்லாதவனது. தாள்- முயற்சியிலே. உளாள்- இருப்பாள். என்ப- என்று கூறுவர். (க-து) சோம்பல் உள்ளவனிடம் மூதேவியும், முயற்சி யுள்ளவனிடம் சீதேவியும் இருப்பார்கள். 8. பொறியின்மை யார்க்கும் பழிஅன்று; அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. (ப-உ) பொறி இன்மை- நன்மை தரும் விதியில்லாமை. யார்க்கும்- ஒருவருக்கும். பழி அன்று- பழி ஆகாது. அறிவு அறிந்து - அறியவேண்டியவைகளை அறிந்து. ஆள்வினை இன்மை - காரியம் செய்யாமைதான். பழி - குற்றமாகும். (க-து) நல்விதியில்லாமை குற்றமாகாது; முயற்சியில்லா மையே குற்றமாகும். 9. தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். (ப-உ) தெய்வத்தான் - தொடங்கிய வினையானது விதியினால். ஆகாது எனினும்- முடியாமற் போனாலும். முயற்சி- முயற்சியானது. தன் மெய்- தன் உடம்பை. வருத்த- வருத்தி யதற்குத் தகுந்த. கூலிதரும்- கூலியைக் கொடுக்கும். (க-து) விதி விரோதமானாலும், முயற்சி உடல் உழைப்புக்குத் தகுந்த கூலியைக் கொடுக்கும். 10. ஊழையும் உட்பக்கம் காண்பர், உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர். (ப-உ) ஊழையும்- ஊழ்வினையையும். உட்பக்கம் காண்பர்- புறம் காண்பர். உலைவு இன்றி- சோர்வடையாமல். தாழாது- தாமதிக்காமல். உஞற்றுபவர்- முயல்கின்றவர். (க-து) சோர்வின்றி விரைந்து முயல்வோர் ஊழ்வினையையும் தோல்வி யடையச் செய்வார். 63. இடுக்கண் அழியாமை துன்பம் வந்தபோது என்செய்வோம் என்று மனம் கலங்கா திருத்தல். 1. இடுக்கண் வருங்கால் நகுக; அதனை அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல். (ப-உ) இடுக்கண் வரும்கால்- துன்பம் வரும்போது. நகுக- அதற்கு வருந்தாமல் மகிழ்க. அதனை - அத்துன்பத்தை. அடுத்து ஊர்வது- அடுத்து வருவதாகிய. அஃது ஒப்பது- அதைப்போன்ற மகிழ்ச்சி. இல்- வேறு இல்லை. (க-து) துன்பம் வரும்போது மகிழவேண்டும். அதன்பின் வருவது இன்பமே யாகும். 2. வெள்ளத்து அனைய இடும்பை, அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். (ப-உ) வெள்ளத்து அனைய- வெள்ளம்போன்ற அளவற்ற. இடும்பை- துன்பம் எல்லாம். அறிவுடையான்- அறிவுள்ளவன். உள்ளத்தின்- தன் மனத்தால். உள்ள- அதை வேறுவிதமாக நினைக்க. கெடும்- அத்துன்பம் கெடும். (க-து) அறிவுள்ளவன், தன் துன்பத்தை வேறுவிதமாக நினைப்பானாயின் அத்துன்பம் அழியும். 3. இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். (ப-உ) இடும்பைக்கு - துன்பம் வந்ததற்காக. இடும்பை படாஅதவர்- வருந்தா தவர். இடும்பைக்கு- தன்னை அடைந்த துன்பத்துக்கு. இடும்பை- துன்பத்தை. படுப்பர்- உண்டாக்குவர். (க-து) துன்பத்திற்காக வருந்தாதவர், தன்னை அடைந்த துன்பத்திற்குத் துன்பத்தைக் கொடுப்பார். 4. மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான், உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. (ப-உ) மடுத்த- தடையுள்ள. வாய் எல்லாம்- இடங்களில் எல்லாம். பகடு அன்னான்- வண்டியை இழுத்துச் செல்லும் எருதுபோன்ற முயற்சி உள்ளவனை. உற்ற- அடைந்த. இடுக்கண்- துன்பமானது. இடர்ப்பாடு- தானே துன்பம் அடையும். உடைத்து - தன்மையுள்ளதாம். (க-து) எருதுபோன்ற முயற்சியுள்ளவனை அடைந்த துன்பம், தானே துன்பமடையும். 5. அடுக்கி வரினும், அழிவிலான் உற்ற இடுக்கண், இடுக்கண் படும். (ப-உ) அடுக்கி வரினும்- அடுத்தடுத்து வந்தாலும். அழிவு இலான்- தன் கொள்கையை விடாதவனை. உற்ற - அடைந்த. இடுக்கண்- துன்பமானது. இடுக் கண்படும்- துன்பப்படும். (க-து) ஆண்மையுள்ளவனை அடைந்த துன்பம் துன்பப்படும். 6. அற்றேம்என்று அல்லல் படுபவோ, பெற்றேம்என்று ஓம்புதல் தேற்றா தவர். (ப-உ) பெற்றேம் என்று - செல்வம் வந்த காலத்தில், செல்வம் பெற்றோம் என்று. ஓம்புதல்- அதைப் பாதுகாப்பதை. தேற்றாதவர்- அறியாதவர். அற்றேம் என்று- வறுமைக் காலத்தில், செல்வத்தை இழந்தோம் என்று. அல்லல் படுபவோ- துன்பப்படு வார்களோ? (மாட்டார்கள்.) (க-து) செல்வம் வந்தபோது வாரி வழங்கியவர், வறுமை வந்தபோது வருந்த மாட்டார். 7. இலக்கம் உடம்பு இடும்பைக்குஎன்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். (ப-உ) மேல்- அறிவுள்ளவர். உடம்பு- உடம்பானது. இடும்பைக்கு- துன்பம் என்னும் வாளுக்கு. இலக்கம்- இலக்கானது. என்று- என்று அறிந்து. கலக்கத்தை- துன்பத்தை. கையாறா- துன்பமாக. கொள்ளாதுஆம்- கொள்ள மாட்டார். (க-து) அறிவுள்ளவர் துன்பத்தைத் துன்பமாகக் கொள்ள மாட்டார். 8. இன்பம் விழையான், இடும்பை இயல்புஎன்பான், துன்பம் உறுதல் இலன். (ப-உ) இன்பம் விழையான்- இன்பத்தை விரும்பாதவனாய். இடும்பை- துன்பம் அடைதல். இயல்பு என்பான்- இயல்பு என்று அறிந்தவன். துன்பம் உறுதல் இலன்- துன்பம் அடைய மாட்டான். (க-து) இன்பத்தை விரும்பாமல், துன்பம் வருவது இயல்பு என்று எண்ணுகின்றவன் துன்பமடைய மாட்டான். 9. இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். (ப-உ) இன்பத்துள்- இன்பம் அனுபவிக்கும்போதும். இன்பம் விழையாதான்- அவ்வின்பத்தை மனத்தால் விரும்பாதவன். துன்பத்துள்- துன்பம் வந்தபோது. துன்பம் உறுதல் இலன்- துன்பம் அடைய மாட்டான். (க-து) இன்பத்தை விரும்பாதவன், துன்பத்தால் துயரடைய மாட்டான். 10. இன்னாமை இன்பம் எனக்கொளின், ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு. (ப-உ) இன்னாமை- துன்பத்தையும். இன்பம் எனக்கொளின் - இன்பம் என்று எண்ணிக்கொள்ளுவானாயின். தன் ஒன்னார்- தன் பகைவரும். விழையும் - விரும்பக்கூடிய. சிறப்பு- பெருமை. ஆகும்- அவனுக்கு உண்டாகும். (க-து) துன்பத்தையும் இன்பமாக நினைப்போன், தன் பகைவராலும் மதிக்கப்படும் பெருமையை அடைவான். அங்கவியல்* 64. அமைச்சு அமைச்சர்களின் தகுதியைக் கூறுவது. 1. கருவியும், காலமும், செய்கையும், செய்யும் அருவினையும், மாண்டது அமைச்சு. (ப-உ) கருவியும்- தொழிலுக்கு வேண்டிய சாதனமும். காலமும்- அதற்கு ஏற்ற காலமும். செய்கையும்- செய்யும் வகையும். செய்யும் அருவினையும்- செய்யப்படும் அரிய செயலும் மாண்டது- இவைகளைச் சிறப்புடன் ஆராய வல்லவனே. அமைச்சு- மந்திரியாவான். (க-து) சாதனம், காலம், செய்யும் விதம், செய்யும் தொழில் இவைகளை ஆராய்ந்து செய்யவல்லவனே மந்திரி ஆவான். 2. வன்கண், குடி,காத்தல், கற்றுஅறிதல், ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. (ப-உ) வன்கண்- சோர்வின்மை. குடி- சிறந்த குடிப்பிறப்பு. காத்தல்- குடிகளைக் காத்தல். கற்று அறிதல்- நீதி நூல்களைக் கற்றுணர்தல். ஆள்வினையோடு- முயற்சியும் ஆகிய. ஐந்துடன்- ஐந்து அங்கங்களுடன். மாண்டது- சிறந்த குணத்தையும் உடை யவனே. அமைச்சு- மந்திரியாவான். (க-து) அஞ்சாமை, குடிப்பிறப்பு, குடிகளைக் காத்தல், கல்வி யறிவு, முயற்சி இவைகள் அமைச்சனுக்கு வேண்டும் பண்புகள். 3. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு (ப-உ) பிரித்தலும் - பகைவருடைய துணைவரைப் பிரித்தலும். பேணிக் கொளலும்- தம்மிடம் இருப்பவரைப் பிரியாமல் காத்துக் கொள்ளுதலும். பிரிந்தார்- பிரிந்தவரை. பொருத்தலும்- சேர்த்துக் கொள்ளுதலும். வல்லது- ஆகிய வற்றில் வல்லவனே. அமைச்சு- அமைச்சனாவான். (க-து) பகைவர் துணைவரைப் பிரித்தல், தம் துணை வரைப் பிரியாமல் காத்தல், பிரிந்தவரைச் சேர்த்துக் கொள்ளுதல் இவைகளில் வல்லவனே மந்திரி ஆவான். 4. தெரிதலும், தேர்ந்து செயலும், ஒருதலையாச் சொல்லலும், வல்லது அமைச்சு. (ப-உ) தெரிதலும்- காரியத்தைத் தேர்ந்தெடுத்தலும். தேர்ந்து செயலும்- அது முடியும் விதத்தை ஆராய்ந்து செய்தலும். ஒருதலையாச் சொல்லலும்- துணிவாகச் சொல்லுதலும். வல்லது- ஆகிய இவற்றில் வல்லவனே. அமைச்சு- மந்திரியாவான். (க-து) செய்யத்தக்கதைத் தேர்ந்தெடுத்தல், வெற்றி பெறச் செய்தல், ஆராய்ந்து கூறுதல் இவற்றில் வல்லவனே மந்திரி யாவான். 5. அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான், எஞ்ஞான்றும் திறன் அறிந்தான், தேர்ச்சித் துணை. (ப-உ) அறன் அறிந்து- தருமங்களை அறிந்து. ஆன்று அமைந்த- கல்வி நிறைந்து அமைந்த. சொல்லான்- சொல்லை யுடையவனாகி. எஞ்ஞான்றும் - எந்நாளிலும். திறன் அறிந்தான்- காரியத்தை முடிக்கும் வழியை அறிந்தவனே. தேர்ச்சி- ஆலோசனைக்கு. துணை- துணையாவான். (க-து) தருமங்களை அறிந்து, அறிவுள்ள சொல்லை யுடையவனாய், காரியங்களை முடிக்கும் வழியையும் அறிந்தவனே அமைச்சனாவான். 6. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு, அதிநுட்பம் யாஉள முன்நிற் பவை? (ப-உ) நூலோடு- நூலறிவோடு. மதி நுட்பம்- நுண்ணறிவும். உடையார்க்கு- உள்ளவர்க்கு. அதிநுட்பம்- மிகவும் நுட்பமான ஆராய்ச்சிக்கு உரியவைகளாய். முன்நிற்பவை- முன்னே நிற்பவை. யாஉள- எவை உள்ளன? (க-து) கல்வியும், நுண்ணறிவும் உள்ள மந்திரிகளுக்கு அறிய முடியாதவை ஒன்றுமில்லை. 7. செயற்கை அறிந்தக் கடைத்தும், உலகத்து இயற்கை அறிந்து செயல். (ப-உ) செயற்கை- நூலறிவால் வினை செய்யும் வழியை. அறிந்தக் கடைத்தும்- அறிந்திருந்தாலும். உலகத்து- உலகத்தில். இயற்கை- அப்பொழுது நடைபெறும் இயல்பை. அறிந்து- தெரிந்து. செயல்- அதற்கு ஏற்பச் செய்ய வேண்டும். (க-து) தொழில் செய்யும் வழியை நூலறிவினால் அறிந்திருந்தாலும், உலக இயல்பை அறிந்து செய்ய வேண்டும். 8. அறிகொன்று, அறியான் எனினும், உறுதி உழையிருந்தான் கூறல் கடன். (ப-உ) அறிகொன்று- பிறர் அறிவிப்பையும் அழித்து. அறியான்- தானும் அறியாதவன். எனினும்- ஆயினும். உழை இருந்தான்- பக்கத்திலிருந்த அமைச்சன். உறுதி- நன்மைகளை. கூறல்கடன்- அரசனுக்குரைத்தல் கடமையாகும். (க-து) அரசன் சொற்புத்தியும் சுயபுத்தியும் அற்றவனாயினும், அவனுக்கு நன்மைகளை எடுத்துரைத்தல் அமைச்சன் கடமை. 9. பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள்; தெவ்வோர் எழுபது கோடி உறும். (ப-உ) பக்கத்துள்- பக்கத்திலிருந்துகொண்டு. பழுது எண்ணும்- அரசனுக்குத் தீங்கு நினைக்கும். மந்திரியின்- மந்திரியைவிட. தெவ்வோர்- பகைவர். எழுபது கோடி- எழுபது கோடி ஆனாலும். உறும்- நன்மையே உண்டாகும். (க-து) எழுபதுகோடி பகைவரைவிட, உடனிருந்து தீங்கு நினைக்கும் ஒரு மந்திரியே கொடுமையுள்ளவன். 10. முறைபடச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். (ப-உ) திறப்பாடு இலாதவர்- திறமையற்றவர். முறைப்பட- செய்யும் வினைகளைப் பற்றி முறையாக. சூழ்ந்தும்- எண்ணி யிருந்தாலும். முடிவு இலவே- செய்கின்ற வினைகள் முடியாமல் போகும்படிதான். செய்வர்- செய்து விடுவார்கள். (க-து) திறமையற்ற மந்திரிகள், எவ்வளவு ஆலோசித்துச் செய்தாலும் தாம் செய்வனவற்றைக் கெடுத்து விடுவார்கள். 65. சொல்வன்மை கேட்போர் மனத்தைக் கவரும்படி பேசும் வல்லமை. 1. நாநலம் என்னும்நலன், உடைமை; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. (ப-உ) நாநலம் என்னும்- நாவின் நன்மையாகிய சொல் வன்மை என்னும். நலன்- நன்மையே. உடைமை- செல்வமாகும். அந்நலம்- அந்த நன்மை. யாநலத்து- பிற நன்மைகளில். உள்ள தூஉம் அன்று- அடங்குவதன்று. (சிறந்தது.) (க-து) மந்திரிகளுக்கு நாவன்மையே சிறந்த செல்வம்; அது ஒப்பற்ற செல்வம். 2. ஆக்கமும், கேடும் அதனால் வருதலால், காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு. (ப-உ) ஆக்கமும்- செல்வமும். கேடும்- அழிவும். அதனால் வருதலால்- அச் சொல்லால் வருவதனால். சொல்லின்கண் சோர்வு- சொல்லிலே சோர்வு உண்டாகாமல். காத்து ஓம்பல்- பாதுகாத்துக் கொள்ள வேண்டும். (க-து) செல்வமும் அழிவும் சொல்லால் வருவன. ஆதலால், சொல்லில் சோர்வுண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும். 3. கேட்டார்ப் பிணிக்கும் தகைஅவாய்க், கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். (ப-உ) கேட்டார்- கேட்டவரை. பிணிக்கும்- தன்வசமாக்கும். தகைஅவாய்- தன்மையுள்ளதாய். கேளாரும்- கேட்காதவர்களும். வேட்ப- விரும்பும் வண்ணம். மொழிவது- சொல்லப்படுவதே. சொல்ஆம்- சொல்லாகும். (க-து) கேட்டாரும், கேட்காதவரும் விரும்பும்படி பேசுவதே சொல்லாகும். 4. திறன் அறிந்து சொல்லுக சொல்லை, அறனும் பொருளும் அதனின்ஊங்கு இல். (ப-உ) சொல்லை- சொல்லும் சொல்லை. திறன் அறிந்து- கேட்போர் தகுதியறிந்து. சொல்லுக- கூறுக. அதனின் ஊங்கு- அதைவிட. அறனும் பொருளும்- தருமமும் பொருளும். இல்- வேறு இல்லை. (க-து) கேட்போர் தகுதியறிந்து பேசவேண்டும். 5. சொல்லுக, சொல்லைப் பிறிதுஓர்சொல், அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து. (ப-உ) சொல்லை- தாம் கூறும் சொல்லை. பிறிது ஓர்சொல்- வேறு ஒரு சொல். வெல்லும் சொல்- வெல்லும் சொல்லாக. இன்மை- இல்லாதபடி. அறிந்து- ஆராய்ந்து. அச்சொல்லை- அவ்வார்த்தையை. சொல்லுக- கூறவேண்டும். (க-து) தம் சொல்லை வேறொரு சொல்லால் வெல்ல முடியாதபடி ஆராய்ந்து சொல்ல வேண்டும். 6. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல், மாட்சியின் மாசற்றார் கோள். (ப-உ) வேட்ப- பிறர் விரும்பும்படி. தாம் சொல்லி- தாங்கள் சொல்லி. பிறர் சொல்- மற்றவர் சொல்லின். பயன் கோடல்- பயனை அறிந்து கொள்ளுதல். மாட்சியின்- சிறப்புடைய. மாசு அற்றார்- குற்றமற்றவர்களின். கோள்- கொள்கையாகும். (க-து) பிறர் விரும்பும்படி பேசி, பிறர் சொல்லின் பயனை அறிவதே அமைச்சர்களின் கொள்கையாகும். 7. சொலல்வல்லன், சோர்வுஇலன், அஞ்சான், அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. (ப-உ) சொலல் வல்லன்- பிறர் ஏற்கச் சொல்லுவதில் வல்லவனாய். சோர்வு இலன்- மறதி இல்லாதவனாய். அஞ்சான்- அஞ்சாதவனாய். அவனை- இருக்கும் அவனை. இகல் வெல்லல்- பகையில் வெல்லுதல். யார்க்கும் அரிது- யாராலும் முடியாது. (க-து) சொல்வன்மை, மறதிஇன்மை, அஞ்சாமை உடை யவனை யாராலும் வெல்ல முடியாது. 8. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம், நிரந்துஇனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். (ப-உ) நிரந்து- ஒழுங்குபடுத்தி. இனிது- இனிமையாக. சொல்லுதல்- பேசுவதில். வல்லார்ப் பெறின்- வல்லவரைப் பெற்றால். ஞாலம்- இவ்வுலகம். விரைந்து- விரைந்து அவருடைய. தொழில்கேட்கும்- காரியங்களைக் கேட்டு நடக்கும். (க-து) ஒழுங்குபடுத்தி இனிமையாகச் சொல்லுகின்றவர் களின் சொற்படி இவ்வுலகம் நடக்கும். 9. பல சொல்லக் காமுறுவர்; மன்ற மாசற்ற சிலசொல்லல் தேற்றா தவர். (ப-உ) மன்ற - நிலைபெற. மாசு அற்ற- குற்றம் அற்ற. சில சொல்லல்- சில வார்த்தைகள் கூறுவதை. தேற்றாதவர்- அறியாதவர். பல சொல்ல- பல சொற்களைக் கூற. காம்உறுவர்- விரும்புவார்கள். (க-து) குற்றமற்ற சொற்களைக் கூற அறியாதவர்கள் பல சொற்களைக் கூறுவார்கள். 10. இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர், கற்றது உணரவிரித்து உரையா தார். (ப-உ) கற்றது- கற்ற நூல்களை. உணர- பிறர் அறியும்படி. விரித்து உரையாதார்- விரித்துச் சொல்ல முடியாதவர். இணர்- கொத்திலே. ஊழ்த்தும்- மலர்ந்திருந்தும். நாறா- மணம் வீசாத. மலர் அனையர்- பூப்போல்வர். (க-து) கற்ற நூல்களைப் பிறர்க்கு விளங்கச் சொல்ல முடியாதவர் மலர்ந்தும் மணம் வீசாத மலர் போன்றவர். 66. வினைத்தூய்மை செய்யும் வினைகள் எல்லாம் நல்லனவாயிருத்தல். 1. துணைநலம் ஆக்கம் தரூஉம்; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும். (ப-உ) துணைநலம்- துணையின் நன்மை. ஆக்கம்- செல்வத்தை. தரூஉம்- கொடுக்கும். வினைநலம்- செய்யும் தொழிலின் நன்மை. வேண்டிய எல்லாம் தரும்- விரும்பியவை களையெல்லாம் கொடுக்கும். (க-து) துணையின் நன்மை செல்வம் ஒன்றையே தரும். தொழிலின் நன்மை விரும்பியவைகளையெல்லாம் தரும். 2. என்றும் ஒருவுதல் வேண்டும், புகழொடு நன்றி பயவா வினை. (ப-உ) புகழொடு- புகழையும். நன்றி- அறத்தையும். பயவா வினை- தராத தொழில்களை. என்றும்- எக்காலத்திலும். ஒருவுதல் வேண்டும்- செய்யாமல் விட்டு விலகவேண்டும். (க-து) புகழையும், அறத்தையும் தராத செயல்களை அமைச்சர்கள் கைவிடவேண்டும். 3. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை, ஆஅதும் என்னும் அவர். (ப-உ) ஆஅதும் - மேன்மை அடைவோம். என்னும் அவர்- என்று நினைப்பவர். ஒளி மாழ்கும்- தம்புகழ் கெடுவதற்குக் காரணமான. செய்வினை- காரியத்தை. ஓஒதல் வேண்டும்- விட்டு விட வேண்டும். (க-து) மேன்மையடைய நினைப்போர் தம் புகழைக் கெடுக்கும் காரியத்தைச் செய்யக்கூடாது. 4. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார், நடுக்குஅற்ற காட்சி அவர். (ப-உ) நடுக்கு அற்ற- கலக்கமற்ற. காட்சி அவர்- அறிவினை யுடையவர். இடுக்கண்படினும்- துன்பத்தில் அகப்பட்டாலும். இளிவந்த- பழிக்கத்தக்க செயல்களை. செய்யார் -செய்யமாட்டார். (க-து) கலங்காத அறிவுள்ளவர் துன்பப்பட்டாலும் இழிந்த காரியங்களைச் செய்யமாட்டார். 5. எற்றுஎன்று இரங்குவ செய்யற்க, செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று. (ப-உ) எற்று என்று- நான் செய்தது எப்படிப்பட்டது என்று. இரங்குவ- தானே நினைத்து வருந்தும் செயல்களை. செய்யற்க- செய்யக்கூடாது. செய்வானோல்- தவறிச் செய்வானாயின். மற்று - மீண்டும். அன்ன- அச்செயல்களை. செய்யாமை நன்று- செய்யாதிருப்பதே நன்மை. (க-து) பின்பு, தானே நினைத்து வருந்தும் செயல்களைச் செய்யக்கூடாது. தவறிச் செய்தால் மீண்டும் செய்யாமல் இருத்தலே நல்லது. 6. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க, சான்றோர் பழிக்கும் வினை. (ப-உ) ஈன்றாள் - பெற்ற தாயின். பசி- பசியை. காண்பான் ஆயினும்- கண்டு வருந்துகின்ற வறுமையுடையவனாயினும். சான்றோர்- அறிவுள்ளவர்கள். பழிக்கும் - நிந்திக்கும். வினை- காரியங்களை. செய்யற்க- செய்யக்கூடாது. (க-து) தாயின் பசியைத் தீர்க்கும் பொருட்டுக்கூட தீய தொழிலைச் செய்யக்கூடாது. 7. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின், சான்றோர் கழிநல் குரவே தலை. (ப-உ) பழிமலைந்து- பழியை மேற்கொண்டு செய்த காரியங்களால். எய்திய- அடைந்த. ஆக்கத்தின்- செல்வத்தைவிட. சான்றோர்- அவ்வாறு செய்யாத அறிவுள்ளவர்களின். கழி நல்குரவே- மிகுந்த வறுமையே. தலை- உயர்ந்தது. (க-து) கொடுந் தொழிலால் அடைந்த செல்வத்தைவிட அறிவுள்ளவர்களின் வறுமையே சிறந்தது. 8. கடிந்த கடிந்துஒரார், செய்தார்க்கு, அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். (ப-உ) கடிந்த -நூலோரால் வெறுக்கப்பட்ட வினைகளை. கடிந்து ஒரார்- வெறுத்து ஒதுக்காமல். செய்தார்க்கு- அவைகளைச் செய்தவர்களுக்கு. அவைதாம்- அவ்வினைகள். முடிந்தாலும் - வெற்றியாக முடிந்தாலும். பீழை தரும்- துன்பத்தையே தரும். (க-து) அறிவுள்ளோரால் வெறுக்கப்பட்ட காரியங்களைச் செய்து வெற்றி பெற்றாலும், துன்பமே உண்டாகும். 9. அழக்கொண்ட எல்லாம் அழப்போம்; இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. (ப-உ) அழக்கொண்ட- பிறர் அழும்படி கவர்ந்த. எல்லாம்- எல்லாச் செல்வங்களும். அழப்போம்- தாமும் அழும்படி நீங்கும். நல்பாலவை- நல்வினைகளால் வந்த செல்வங்களை. இழப்பினும்- இழந்தாலும். பின் பயக்கும்-பிறகு தம்மைச் சேர்ந்து நன்மை தரும். (க-து) பிறர் வருந்தும்படி கவர்ந்த பொருள், தாமும் வருந்தும்படி அழியும். நல்வழியில் வந்த செல்வம் அழிந்தாலும் மீணடும் வந்து சேரும். 10. சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல், பசுமண் கலத்துள்நீர் பெய்துஇரீஇ அற்று. (ப-உ) சலத்தால்- தீய காரியத்தால். பொருள் செய்து- பொருளைச் சேர்த்து. ஏமார்த்தல்- அதைப் பாதுகாப்பது. பசுமண் கலத்துள்- சுடப்படாத மண்பாண்டத்துள். நீர் பெய்து- தண்ணீரை ஊற்றி. இரீஇ அற்று- வைத்ததைப்போல் ஆகும். (க-து) வஞ்சகத்தால் பொருள் சேர்த்துக் காத்தல் பச்சை மண்பாண்டத்தில் தண்ணீரை ஊற்றிவைப்பது போலாம். 67. வினைத் திட்பம் வினை செய்கின்றவனுக்கு மனவலிமை அவசியமாகும். 1. வினைத்திட்பம்; என்பது ஒருவன் மனத்திட்பம்; மற்றைய வெல்லாம் பிற. (ப-உ) வினைத் திட்பம் என்பது- காரியத்திற்கு வலிமை என்று சொல்லப்படுவது. ஒருவன்- அதைச் செய்யும் ஒருவனுடைய. மனத் திட்பம்- மனவலிமையாகும். மற்றைய எல்லாம்- மற்ற வலிமைகள் எல்லாம். பிற- வேறாகும். (க-து) காரியத்திற்கு வலிமையென்பது அதைச் செய்கின்றவனது மனவலிமை ஒன்றுதான். 2. ஊறுஓரால்; உற்றபின் ஒல்காமை; இவ்விரண்டின் ஆறுஎன்பர்; ஆய்ந்தவர் கோள். (ப-உ) ஊறுஓரால்- குற்றமுள்ள காரியங்களைச் செய்யாமை. உற்ற பின்- செய்யும் தொழிலில் குற்றம் உண்டான பின். ஒல்காமை- மனம் தளராமை. இவ்இரண்டின் ஆறு என்ப- இவ்விரண்டு வழிகளைக் கொண்டது என்பர். ஆய்ந்தவர் கோள்- ஆராய்ந்த அமைச்சர் கொள்கை. (க-து) குற்றமுண்டாகும் காரியங்களைச் செய்யாமை; செய்தவை பழுதுபட்டால் வருந்தாமை; இவைகளே மந்திரி களின் கொள்கை. 3. கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக்கொட்கின் எற்றா விழுமம் தரும். (ப-உ) கடை- இறுதியில். கொட்க- வெளிப்படும்படி. செய்தக்கது- காரியத்தை மறைவாகச் செய்வதே. ஆண்மை- வலிமையாகும். இடை கொட்கின்- காரியம் முடிவதற்கு இடையில் வெளிப்படுமாயின் அது. எற்றா- நீக்கப்படாத விழுமம்- துன்பத்தை. தரும்- கொடுக்கும். (க-து) முடிவதற்குமுன் பிறர் அறியாதபடி செய்து, காரியத்தில் வெற்றி காண்பதே வலிமையாகும். 4. சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். (ப-உ) சொல்லுதல்- இதை இவ்வாறு முடிப்போம் என்று சொல்வது. யார்க்கும்எளிய- எவருக்கும் எளிதாகும். சொல்லிய வண்ணம்- சொன்னபடி. செயல்- செய்வது. அரியவாம்- முடியா தனவாம். (க-து) சொல்வது எளிது; சொன்னபடி செய்வது அரிது. 5. வீறுஎய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும். (ப-உ) வீறு எய்தி- வெற்றியடைந்து. மாண்டார்- சிறந்த மந்திரிகளின். வினைத்திட்பம்- செயலின் உறுதியானது. வேந்தன் கண்- அரசனிடம். ஊறு எய்தி- அடைந்து. உள்ளப்படும்- மதிக்கப்படும். (க-து) மந்திரிகளின் சிறந்த செயல்கள் அரசனுக்கு நன்மை தரும்; பலராலும் மதிக்கப்படும். 6. எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். (ப-உ) எண்ணிய- தாம் நினைத்தவைகளை. எண்ணி ஆங்கு- நினைத்தபடியே. எய்துப- அடைவார்கள். எண்ணியார்- தாம் நினைத்த காரியத்திலே. திண்ணியர் ஆகப்பெறின்- உறுதியுள்ளவராக இருந்தால். (க-து) தாம் செய்ய நினைத்த காரியத்திலே உறுதியுடையவ ராயிருந்தால், நினைத்தவைகளை நினைத்தபடி அடைவார்கள். 7. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெரும்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. (ப-உ) உருள் பெரும் தேர்க்கு- உருண்டு செல்லும் பெரிய தேருக்கு. அச்சுஆணி அன்னார்- அச்சில் உள்ள கடையாணி போன்றவரை. உடைத்து- இவ்வுலகம் பெற்றுள்ளது, அதனால். உருவு கண்டு- உருவத்தின் சிறுமை கண்டு. எள்ளாமை வேண்டும்- இகழாதிருக்கவேண்டும். (க-து) உருவில் சிறியராயினும், செயலில் சிறந்தவர் உண்டு; ஆதலால் ஒருவர் உருவத்தைக் கண்டு இகழக்கூடாது. 8. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். (ப-உ) கலங்காது- மனங்கலங்காமல். கண்ட- செய்யத் துணிந்த. வினைக்கண்- காரியத்தில். துளங்காது- அஞ்சாமல். தூக்கம் கடிந்து- தாமதம் இல்லாமல். செயல்- செய்யவேண்டும். (க-து) தெளிந்து செய்யத் துணிந்த காரியத்தைத் தாமதம் இன்றிச் செய்து முடிக்கவேண்டும். 9. துன்பம் உறவரினும் செய்க, துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை. (ப-உ) துன்பம்- துன்பமானது. உறவரினும்- மிகுதியாக வருமானாலும். இன்பம் பயக்கும்- பின்னால் இன்பந்தரும். வினை- காரியத்தை. துணிவுஆற்றி- துணிவுடன். செய்க- செய்து முடிக்கவேண்டும். (க-து) முதலில் துன்பந் தருவதாயினும் பின்னால் இன்பந் தரும் காரியத்தையே செய்யவேண்டும். 10. எனைத்திட்பம் எய்தியக் கண்ணும், வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. (ப-உ) எனைத் திட்பம்- வேறு எவ்வித வலிமைகளை. எய்தியக்கண்ணும்- அடைந்திருந்தாலும். வினைத்திட்பம்- காரியம் செய்வதில் வலிமையை. வேண்டாரை- விரும்பாதவரை. உலகு வேண்டாது- உலகினர் விரும்பமாட்டார்கள். (க-து) தொழிலிலே உறுதி காட்டும் வலிமையற்றவரை உலகினர் விரும்ப மாட்டார்கள். 68. வினைசெயல் வகை காரியத்தை வெற்றியுடன் செய்யும் விதம். 1. சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல்; அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. (ப-உ) சூழ்ச்சி- ஆலோசனையின். முடிவு- எல்லை. துணிவு எய்தல்- துணிவைப் பெறுதல். அத்துணிவு- அவ்வாறு துணிவு பெற்ற செயலை. தாழ்ச்சியுள்- தாமதத்தில். தங்குதல்- தங்கும்படி விடுவது. தீது- தீமையாகும். (க-து) ஆலோசனையின் முடிவு துணிவாகும்! துணிந்ததைச் செய்யாமல் தாமதித்தல் தீமையாகும். 2. தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்க தூங்காது செய்யும் வினை. (ப-உ) தூங்கி- தாமதித்து. செயல்பால- செய்ய வேண்டி யவைகளை. தூங்குக- தாமதித்துச் செய்யவேண்டும். தூங்காது- விரைவில். செய்யும் வினை- செய்யவேண்டிய காரியங்களை. தூங்கற்க- தாமதம் இல்லாமல் செய்க. (க-து) தாமதமாகச் செய்ய வேண்டியவைகளைத் தாமத மாகவும், விரைவில் செய்யவேண்டியவைகளை விரைந்தும் செய்யவேண்டும். 3. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே; ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். (ப-உ) ஒல்லும்வாய் எல்லாம்- முடியும் இடத்தில் எல்லாம். வினை நன்றே- காரியத்தைச் செய்து முடித்தல் நல்லது. ஒல்லாக்கால்- முடியாவிட்டால். செல்லும்வாய் நோக்கி- அது முடியும்வழியை அறிந்து. செயல் - செய்க. (க-து) முடியும்போது காரியத்தை முடிக்கவேண்டும்; முடியாவிட்டால், முடியும் வழியறிந்து செய்து முடிக்க வேண்டும். 4. வினைபகை என்றுஇரண்டின் எச்சம் நினையும்கால் தீஎச்சம் போலத் தெறும். (ப-உ) நினையும் கால்- ஆராய்ந்து பார்த்தால். வினைபகை- தொழிலும், பகையும். என்று இரண்டின்- என்று சொல்லப்பட்ட இரண்டின். எச்சம்- குறையும். தீ எச்சம்போல- தீயின் மிச்சம் போல. தெறும்-அழிக்கும். (க-து) அரைகுறைச் செயலும், பகையை விட்டு வைப்பதும், தீயின் மிச்சம் பெருகி அழிப்பதைப் போல் வளர்ந்து அழித்து விடும். 5. பொருள்,கருவி, காலம்,வினை, இடனோடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். (ப-உ) பொருள்- பொருள். கருவி- சாதனம். காலம்- பருவம். வினை- காரியம். இடனோடு- இடத்துடன். ஐந்தும்- ஐந்தையும். இருள்தீர - மயக்கம் இல்லாமல் தெளிவாக. எண்ணி- ஆராய்ந்த பின். செயல்- காரியத்தைச் செய்க. (க-து) பொருள், கருவி, காலம், செயல், இடம் இவைகளை ஆராய்ந்து ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும். 6. முடிவும், இடையூறும், முற்றியாங்கு எய்தும் படுபயனும், பார்த்துச் செயல். (ப-உ) முடிவும்- காரியம் முடிவதற்கான முயற்சியையும். இடையூறும்- அதற்குள்ள தடங்கல்களையும். முற்றி ஆங்கு- அக்காரியம் முடிந்தவுடன். எய்தும்- கிடைக்கும். படுபயனும்- பெரும் பயனையும். பார்த்து- ஆராய்ந்து. செயல்- காரியத்தைச் செய்க. (க-து) முயற்சி, இடையூறு, பயன் இவைகளை ஆராய்ந்து ஒரு காரியத்தைச் செய்யவேண்டும். 7. செய்வினை செய்வான் செயல்முறை, அவ்வினை உள் அறிவான் உள்ளம் கொளல். (ப-உ) செய்வினை - செய்யப்படும் காரியத்தை. செய்வான்- செய்யத் தொடங்கியவன். செயல்முறை- அதைச் செய்யும் முறையாவது. அவ்வினை- அக்காரியத்தின். உள்- இரகசியங் களை. அறிவான்- அறிந்தவனுடைய. உள்ளம்- கருத்தை. கொளல்- அறிந்துகொள்ள வேண்டும். (க-து) ஒரு தொழிலைச் செய்யத் தொடங்குகின்றவன், அத்தொழிலின் நுட்பத்தை அறிந்தவனது கருத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். 8. வினையால் வினையாக்கித் கோடல், நனைகவுள் யானையால் யானை ஆர்த்து அற்று. (ப-உ) வினையால்- ஒரு தொழிலால். வினை- வேறொரு தொழிலையும். ஆக்கிக் கோடல்- முடித்துக் கொள்ள வேண்டும்; அது. நனைகவுள்- மதநீரால் நனையும் கன்னங்களையுடைய. யானையால்- யானையினால். யானை- மற்றொரு யானையை. ஆர்த்து அற்று- கட்டியதைப் போலாகும். (க-து) ஒரு தொழிலைச் செய்பவன் அதனால் மற்றொரு தொழிலையும் முடித்துக்கொள்ள வேண்டும். 9. நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். (ப-உ) நட்டார்க்கு- நண்பினர்க்கு. நல்ல செயலின்- நன்மைகளைச் செய்வதை விட. ஒட்டாரை- பகைவரை. ஒட்டிக் கொளல்- நட்பாக்கிக் கொள்ளுவது. விரைந்ததுஏ- விரைவில் செய்யக் கூடியதாகும். ஏ; அசை. (க-து) பகைவரை விரைவில் நட்பாக்கிக் கொள்வது சிறந்தது. 10. உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. (ப-உ) உறை சிறியார்- சிறிய உறைவிடத்தையுடையவர். உள்- தமது மனம். நடுங்கல் அஞ்சி- நடுங்குவதற்குப் பயந்து. குறைபெறின்- தம் குறையைக் கேட்டுச் சமாதானமாக விரும்புவா ராயின். பெரியார்- தம்மினும் பெரியவரை. பணிந்து- வணங்கி. கொள்வர்- சமாதானத்தை ஏற்றுக்கொள்ளுவார்கள். (க-து) சிறிய இடத்தை உடைய மந்திரிகள், வலியார் எதிர்த்தபோது பயந்து அவருடன் சமாதானம் செய்து கொள்ளுவார்கள். 69. தூது ஒரு அரசிடமிருந்து மற்றொரு அரசிடம் தூது போகின்றவர் தன்மை. 1. அன்புடைமை, ஆன்றகுடிப்பிறத்தல், வேந்து அவாம் பண்புடைமை, தூதுஉரைப்பான் பண்பு. (ப-உ) அன்பு உடைமை- சுற்றத்தாரிடம் அன்புள்ள வனாதல். ஆன்ற குடிப்பிறத்தல்- அறிவு நிரம்பிய குடியிலே பிறத்தல். வேந்து அவாம்-அரசர் விரும்பும். பண்பு உடைமை- குணம் உள்ளவனாதல், இவை. தூது உரைப்பான்- தூதனாகச் சென்று பேசுகின்றவனுக்குரிய. பண்பு- இலக்கணமாகும். (க-து) அன்பு, நல்ல குடிப்பிறப்பு, அரசர் விரும்பும் குணம் இவைகள் தூதனுக்கு வேண்டியவை. 2. அன்பு,அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை, தூதுஉரைப்பார்க்கு இன்றி அமையாத மூன்று. (ப-உ) அன்பு- அரசரிடம் அன்பு. அறிவு- அறிவுடைமை. ஆராய்ந்த சொல் வன்மை- ஆராய்ந்து பேசும் வல்லமை. தூது உரைப்பார்க்கு- இவைகள் தூது போய்ப் பேசுகின்றவர்க்கு. இன்றி அமையாத- அவசியமான. மூன்று - மூன்று தன்மைகளாகும். (க-து) அன்பு, அறிவு, சிறந்த சொல்வன்மை இவை தூதர்க்கு அவசியமானவை. 3. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல், வேலாருள் வென்றிவினை உரைப்பான் பண்பு. (ப-உ) நூலாருள்- நூலாராய்ச்சியுள்ளவர்களிலே. நூல் வல்லன் ஆகுதல்- நூலிலே வல்லவனாயிருத்தல். வேலாருள்- வேலையுடைய வேற்றரசரிடம் போய். வென்றி வினை- தனது அரசனுக்கு வெற்றி தரும் காரியத்தை. உரைப்பான்- சொல்லு கின்ற தூதனுடைய. பண்பு- தன்மையாகும். (க-து) சிறந்த நூலாராய்ச்சியுள்ளவனாயிருத்தல் தூதன் இலக்கணமாகும். 4. அறிவு,உரு, ஆராய்ந்த கல்வி, இம்மூன்றின் செறிவுஉடையான் செல்க வினைக்கு. (ப-உ) அறிவு - சிறந்த அறிவு. உரு- நல்ல தோற்றம். ஆராய்ந்த கல்வி- தேர்ந்த கல்வி. இம்மூன்றின்- இந்த மூன்றிலும். செறிவு உடையான்- நிறைந்தவனே. வினைக்கு- தூதுரைக்கும் தொழிலுக்கு. செல்க- போக வேண்டும். (க-து) அறிவு, நல்ல தோற்றம், கல்வி இம்மூன்றும் உள்ளவனே தூது செல்லத் தகுதியுள்ளவன். 5. தொகச்சொல்லி, தூவாத நீக்கி, நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. (ப-உ) தொகச் சொல்லி- சொல்வதைத் தொகுத்துச் சொல்லியும். தூவாத நீக்கி- தகாத சொற்களை நீக்கியும். நகச்சொல்லி- மகிழும்படி சொல்லியும். நன்றி பயப்பது- நன்மை விளைக்கின்றவனே. தூதுஆம்- தூதனாவான். (க-து) கடும்சொல் இன்றி, தொகுத்துச் சொல்லி மகிழும் படி பேசுகின்றவனே தூதன் ஆவான். 6. கற்றுக், கண்அஞ்சான், செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதுஆம் தூது. (ப-உ) கற்று- நீதிநூல்களைக் கற்று. செலச் சொல்லி- எதிரியின் மனத்தில் படும்படி தன் காரியத்தைச் சொல்லி. கண் அஞ்சான்- அவர் கோபப்பார்வைக்கு அஞ்சாமல். காலத்தால்- காலத்துடன். தக்கது அறிவது- தகுந்த வழியை அறிகின்றவனே. தூதுஆம்- தூதன் ஆவான். (க-து) நீதி நூல் ஆராய்ச்சி, எதிரி மனம் கொள்ளச் சொல்லல், அஞ்சாமை, காலத்திற்கு ஏற்ற தந்திரம் இவைகளை உடையவனே தூதன். 7. கடன்அறிந்து, காலம் கருதி, இடன்அறிந்து எண்ணி உரைப்பான் தலை. (ப-உ) கடன் அறிந்து- முறையை உணர்ந்து. காலம் கருதி- சமயம் பார்த்து. இடன் அறிந்து- இடத்தையும் அறிந்து. எண்ணி உரைப்பான்- ஆராய்ந்து பேசுகின்றவனே. தலை- சிறந்த தூதன். (க-து) சொல்லும் முறை அறிந்து, காலம் பார்த்து, இடமறிந்து ஆராய்ந்து பேசுகின்றவனே தூதருள் சிறந்தவன். 8. தூய்மை, துணைமை, துணிவுடைமை, இம்மூன்றின் வாய்மை, வழிஉரைப்பான் பண்பு. (ப-உ) தூய்மை- பரிசுத்தம். துணைமை- அறிஞரைத் துணைக்கொள்ளும் தன்மை. துணிவு உடைமை- துணிந்து சொல்லும் தன்மை. இம்மூன்றின் வாய்மை- இம்மூன்றோடு கூடிய உண்மை, இவைகள். வழி உரைப்பான்- அரசன் வழியிலே சென்று தூதுரைப்பவனுடைய. பண்பு- இலக்கணமாகும். (க-து) பரிசுத்தம், துணை, துணிவு, உண்மை இவை தூதன் குணங்கள். 9. விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான், வடுமாற்றம் வாய்சோரா வன்கண் அவன். (ப-உ) வடுமாற்றம்- குற்றம் தரும் சொற்களை. வாய் சோரா- வாய் தவறியும் சொல்லாத. வன்கண் அவன்- உறுதி யுள்ளவனே. விடுமாற்றம்- அரசன் சொல்லிவிட்ட வார்த்தையை. வேந்தர்க்கு- வேற்று மன்னர்க்கு. உரைப்பான்- சொல்லுவதற்கு உரிய தூதன் ஆவான். (க-து) தன் அரசன் கூறியதை வேற்றரசரிடம், தவறில்லாமல் சொல்ல வல்லவனே தூதனாவான். 10. இறுதி பயப்பினும், எஞ்சாது, இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது. (ப-உ) இறுதி பயப்பினும்- தனக்கு முடிவைத் தருமா யினும். எஞ்சாது- அஞ்சாமல். இறைவற்கு- தனது அரசனுக்கு. உறுதி பயப்பது- நன்மை தரும் சொற்களை உரைப்பவனே. தூதுஆம்- தூதன் ஆவான். (க-து) தன் உயிருக்கு ஆபத்து வந்தாலும் அஞ்சாமல் அரசனுக்கு நன்மை தரும் சொற்களை வேற்றரசனிடம் கூறுகின்ற வனே தூதன் ஆவான். 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகுதல் அரசருடன் சேர்ந்து வாழும் விதம். 1. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க, இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். (ப-உ) இகல்- வலிமையுள்ள. வேந்தர்ச் சேர்ந்து- அரசரை அடுத்து. ஒழுகுவார்- வாழ்கின்றவர்கள். அகலாது- அவரை விட்டு நீங்காமலும். அணுகாது- அவரிடம் நெருங்காமலும். தீக்காய்வார் போல்க- நெருப்பில் குளிர்காய்வார் போல் இருக்கவேண்டும். (க-து) மந்திரிகள் அரசரிடம் தீயில் குளிர்காய்வார் போல், நீங்காமலும் நெருங்காமலும் இருக்க வேண்டும். 2. மன்னர் விழைப, விழையாமை, மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். (ப-உ) மன்னர் விழைப- மன்னர் விரும்புகின்றவைகளை. விழையாமை- தாம் விரும்பாமலிருக்கும் தன்மையே. மன்னரால்- அரசரால். மன்னிய- நிலைபெற்ற. ஆக்கம்- செல்வத்தை. தரும்- கொடுக்கும். (க-து) அரசரால் விரும்பப்பட்டவைகளைத் தாமும் விரும்பாத மந்திரிகளே அரசரால் செல்வத்தை அடைவார்கள். 3. போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. (ப-உ) போற்றின்- தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால். அரியவை- தம்மிடம் பெரிய குற்றங்கள் தோன்றாமல். போற்றல்- காத்துக்கொள்ள வேண்டும். கடுத்தபின்- அரசன் தம்மைச் சந்தேகித்த பின். தேற்றுதல்- அவனைச் சமாதானம் செய்தல். யார்க்கும் அரிது- யாராலும் முடியாது. (க-து) மந்திரிகள் தம்மேல் குற்றங்கள் உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும். இன்றேல் அரசன் கோபத்திற்கு ஆளாவார்கள். 4. செவிச்சொல்லும், சேர்ந்தநகையும் அவித்து ஒழுகல், ஆன்ற பெரியார் அகத்து. (ப-உ) ஆன்ற- வல்லமை நிறைந்த. பெரியோர் அகத்து- அரசன் இடத்தில் இருக்கும்போது. செவிச் சொல்லும்- ஒருவன் காதோடு இரகசியம் பேசுவதையும். சேர்ந்த நகையும்- ஒருவன் முகம் பார்த்து நகைப்பதையும். அறிவித்து- நீக்கி. ஒழுகல்- நடக்கவேண்டும். (க-து) மந்திரி, அரசன் பக்கத்தில் இருக்கும்போது இரகசியம் பேசுவதையும், பிறரைப் பார்த்துச் சிரிப்பதையும் விட்டுவிட வேண்டும். 5. எப்பொருளும் ஓரார்,தொடரார், மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. (ப-உ) மறை- அரசன் பிறருடன் இரகசியம் பேசும்போது. எப்பொருளும்- எவ்விஷயத்தையும். ஓரார்- காதுகொடுத்துக் கேட்காமலும். தொடரார்- அவனை வினவாமலும் இருந்து. மற்று அப்பொருளை- அந்த இரகசியத்தை. விட்டக்கால்- அவனே வெளியிட்டால். கேட்க- கேட்டுக்கொள்ள வேண்டும். (க-து) அரசன் பேசிய இரகசியத்தை, அவனே கூறினால் கேட்டுக் கொள்ள வேண்டும். 6. குறிப்பு அறிந்து, காலம்கருதி, வெறுப்புஇல வேண்டுப, வேட்பச் சொலல். (ப-உ) குறிப்பு அறிந்து- அரசன் கருத்தறிந்து. காலம் கருதி- சமயம் பார்த்து. வெறுப்புஇல்- வெறுப்பில்லாதனவும். வேண்டுப- வேண்டுவனவும் ஆகியவைகளை. வேட்ப -அவன் விரும்பும் வகையில். சொலல்- சொல்லவேண்டும். (க-து) அரசன் கருத்தறிந்து, சமயம் பார்த்து, அவன் வெறுக்காமல் விரும்பும் காரியங்களை உரைக்கவேண்டும். 7. வேட்பன சொல்லி, வினையில, எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். (ப-உ) வேட்பன சொல்லி- அரசன் விரும்புகின்றவை களைச் சொல்லி. கேட்பினும்- அவனே கேட்டாலும். வினைஇல- பயன் இல்லாதவைகளை. எஞ்ஞான்றும்- என்றும். சொல்லா விடல்- சொல்லாமலிருக்க வேண்டும். (க-து) அரசன் விரும்பியவற்றைச் சொல்லி, விரும்பாதவை களை அவன் கேட்டாலும் சொல்லாமலிருப்பதே மந்திரிகள் கடமை. 8. இளையர், இனமுறையர், என்றுஇகழார்; நின்ற ஒளியோடு ஒழுகப் படும். (ப-உ) இளையர்- அரசர் எனக்கு இளையவர். இன முறையர்- இன்ன முறையுள்ளவர். என்று இகழார்- என்று அவமதிக்காமல். நின்ற- அரசரிடம் உள்ள. ஒளியோடு - சிறப்புக்குத் தக்கபடி. ஒழுகப்படும்- நடந்துகொள்ள வேண்டும். (க-து) மந்திரிகள், அரசரை இளையவர், உறவினர் என்று கருதாமல், அவர் பெருமைக்குத் தக்கவாறு நடந்துகொள்ள வேண்டும். 9. கொளப்பட்டேம் என்றுஎண்ணிக், கொள்ளாத, செய்யார் துளக்கற்ற காட்சி யவர். (ப-உ) துளக்கு அற்ற- கலக்கம் அற்ற. காட்சியவர்- அறிவுள்ளவர். கொளப்பட்டேம்- அரசனால் மதிக்கப்பட்டோம். என்று எண்ணி- என்று நினைத்து. கொள்ளாத- அவன் விரும்பா தவைகளை. செய்யார்- செய்ய மாட்டார்கள். (க-து) அறிவுள்ளவர், அரசன் விரும்பாத காரியங்களைச் செய்யமாட்டார்கள். 10. பழையம் எனக்கருதிப், பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை, கேடு தரும். (ப-உ) பழையம்- நாம் அரசனுக்குப் பழமையானவர். எனக் கருதி- என்று நினைத்து. பண்பு அல்ல- தகாத காரியங்களை. செய்யும்- செய்கின்ற. கெழுதகைமை- உரிமையானது. கேடு தரும்- கெடுதியைத் தரும். (க-து) நாம் அரசனது பழைய நட்பினர் என்று நினைத்துத் தீமை செய்வோர்க்குக் கெடுதி உண்டாகும். 71. குறிப்பு அறிதல் சொல்லாமல், குறிப்பால் மனத்தில் உள்ளதை அறிதல். 1. கூறாமை நோக்கிக், குறிப்புஅறிவான், எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. (ப-உ) கூறாமை- சொல்லாமலே. நோக்கி- முகத்தையும், கண்ணையும் பார்த்து. குறிப்பு அறிவான்- உள்ளக் கருத்தைத் தெரிந்துகொள்ளும் மந்திரி. எஞ்ஞான்றும்- என்றும். மாறா நீர்- வற்றாத நீர்சூழ்ந்த. வையக்கு- உலகத்துக்கு. அணி- ஆபரண மாவான். (க-து) அரசன் சொல்லாமலே, அவன் மனக்குறிப்பை அறிகின்ற அமைச்சனே உலகுக்கு ஆபரணமாவான். 2. ஐயப் படாஅது, அகத்தது உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல். (ப-உ) ஐயப் படாஅது- சந்தேகப்படாமல். அகத்தது- மனத்தில் உள்ளதை. உணர்வானை- தெளிவாக அறிகின்றவனை. தெய்வத்தோடு ஒப்ப- தெய்வத்துக்குச் சமமாக. கொளல்- மதிக்கவேண்டும். (க-து) ஒருவன் உள்ளத்தில் இருப்பதைத் தெளிவாக அறிகின்றவனைத் தெய்வத்துக்குச் சமமாக மதிக்க வேண்டும். 3. குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். (ப-உ) குறிப்பின்- முகம் கண் இவற்றின் குறிப்பால். குறிப்பு உணர்வாரை- பிறர் கருத்தை அறிகின்றவரை. உறுப்பினுள்- அரசன் தனது அங்கங்களுள். யாது கொடுத்தும்- எதைக் கொடுத்தாவது. கொளல்- துணையாகக் கொள்ளவேண்டும். (க-து) குறிப்பால் பிறர் உள்ளக் கருத்தைக் காணும் அறிஞரை அரசன், அவர் வேண்டுவன கொடுத்துத் துணையாகக் கொள்ள வேண்டும். 4. குறித்தது கூறாமைக் கொள்வாரோடு; ஏனை, உறுப்புஓர் அனையரால்; வேறு. (ப-உ) குறித்தது- மனத்தில் எண்ணியதை. கூறாமை- சொல்லாமலே. கொள்வாரோடு- உணர்ந்து கொள்ளுகின்ற வருடன். ஏனை- மற்றவர். உறுப்பு- அவயவத்தால். ஓர் அனையர் ஆல்- ஒரு தன்மையராக இருப்பினும். வேறு - அறிவதால் வேறுபட்டவர் ஆவர். (க-து) குறிப்பால் ஒருவர் மனத்தை அறிகின்றவரும், மற்றவரும் உருவால் ஒத்தாலும், அறிவால் வேறாவர். 5. குறிப்பின் குறிப்புணரா ஆயின், உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். (ப-உ) குறிப்பின்- பார்வையினால். குறிப்பு- பிறர் மனத்தை. உணராஆயின்- அறியமாட்டாவாயின். உறுப்பினுள்- அவயவங் களில். கண்- சிறந்த கண்கள். என்ன பயத்தஓ- என்ன பயனை யுடையன? ஓ: அசை. (க-து) பார்த்தவுடன் பிறர் உள்ளத்தை அறிய முடியாத கண்களால் பயன் இல்லை. 6. அடுத்தது காட்டும் பளிங்குபோல், நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். (ப-உ) அடுத்தது- தன்னை அடுத்த பொருளின் உருவை. காட்டும்- தான் உட்கொண்டு காட்டுகின்ற. பளிங்குபோல்- பளிங்கைப்போல. நெஞ்சம்- மனத்துள். கடுத்தது- மிகுந்திருக்கும் குணத்தை. முகம் காட்டும்- முகம் காட்டிவிடும். (க-து) தன்னை அடுத்த பொருளைக் காட்டும் கண்ணாடி போல், ஒருவன் முகம் அவன் உள்ளத்தைக் காட்டிவிடும். 7. முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ? உவப்பினும், காயினும், தான்முந் துறும். (ப-உ) உவப்பினும்- விரும்பினாலும். காயினும்- வெறுத் தாலும். தான்- அதைத்தான் அறிந்து. முந்துறும்- முன்நிற்கும்; ஆதலால். முகத்தின்- முகத்தைவிட. முதுக்குறைந்தது- அறிவு மிகுந்தது. உண்டோ- வேறு உண்டோ? (க-து) விருப்பு வெறுப்பைக் காட்டி முன்நிற்கும் முகம் போல் அறிவுடையது வேறு ஒன்றும் இல்லை. 8. முகம்நோக்கி நிற்க அமையும், அகம்நோக்கி உற்றது உணர்வார்ப் பெறின். (ப-உ) அகம்நோக்கி- தம் மனத்தைக் குறிப்பால் அறிந்து. உற்றது- தமக்கு வந்த துன்பத்தை. உணர்வார்- அறிகின்றவரை. பெறின்- துணையாகப் பெற்றால். முகம்நோக்கி- அவருடைய முகத்தைப் பார்த்து. நிற்க- நின்றாலே. அமையும்- போதும். (க-து) தம் மனத்தைக் குறிப்பால் அறிகின்றவரைத் துணையாகப் பெற்றால் அதுவே போதும். 9. பகைமையும் கேண்மையும் கண்உரைக்கும், கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். (ப-உ) கண்ணின் வகைமை- கண் பார்வையின் வகைகளை. உணர்வார்- அறியவல்லவர்களை. பெறின்- அரசர் தம் துணையாகப் பெற்றால். பகைமையும்- பகைத் தன்மையையும். கேண்மையும்- நட்புத் தன்மையையும். கண் உரைக்கும்- பகைவர் சொல்லாமற் போயினும், அவர் கண்கள் உரைப்பதை அறிந்து கூறுவதனால் நன்மையடைவர். (க-து) கண்ணால் மனத்தை அறியும் மந்திரிகளைப் பெற்ற மன்னர், பிறர் பகை, நட்புக்களை அறிந்து நலம் பெறுவர். 10. நுண்ணியம் என்பார் அளக்கும்கோல், காணும்கால் கண்அல்லது இல்லை பிற. (ப-உ) நுண்ணியம் என்பார்- யாம் நுண்ணறிவுள்ளோம் என்றிருக்கும் மந்திரிகள். அளக்கும் கோல்- அரசர் கருத்தை அளந்தறியும் கோல். காணும் கால்- ஆராயும்போது. கண் அல்லது- அவரது கண்களைத் தவிர. பிற இல்லை- வேறு இல்லை. (க-து) அரசர் கருத்தை அளந்து காணும் கோல் அவர் கண்கள்தாம்; வேறு இல்லை. 72. அவை அறிதல் சபையின் நிலையை அறிதல். 1. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக; சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். (ப-உ) சொல்லின் தொகை அறிந்த - சொல்லின் கூட்டத்தை அறிந்த. தூய்மையவர்- பரிசுத்தம் உள்ளவர். அவை அறிந்து- சபையின் தரத்தைத் தெரிந்துகொண்டு. ஆராய்ந்து- நன்றாக எண்ணிப் பார்த்து. சொல்லுக- சொல்லவேண்டும். (க-து) சொற்களின் தன்மைகளை அறிந்தவர், சபையின் நிலை அறிந்து பேசவேண்டும். 2. இடைதெரிந்து, நன்குணர்ந்து சொல்லுக; சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். (ப-உ) சொல்லின் நடை- சொற்களின் போக்கை. தெரிந்த- அறிந்த. நன்மையவர்- நல்லவர். இடைதெரிந்து- சபையில் சமயம் அறிந்து. நன்கு உணர்ந்து- நன்றாக ஆராய்ந்து. சொல்லுக- சொல்லவேண்டும். (க-து) சொல்லின் போக்கை அறிந்த அறிவுள்ளவர், சபையில் சொல்லத்தக்க சமயமறிந்து குற்றமின்றிக் கூறவேண்டும். 3. அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகைஅறியார்; வல்லதூஉம் இல். (ப-உ) அவை அறியார்- சபையின் நிலையை அறியாதவர். சொல்லல்- ஒன்று சொல்வதை. மேற்கொள்பவர்-மேற் கொள் வாராயின், அவர். சொல்லின் வகை அறியார்- சொல்லின் வகைகளை அறியாதவராவர். வல்லதூஉம்- அவர் கற்று வல்ல கலையும். இல்- இல்லை. (க-து) சபையின் நிலையறிந்து சொல்லாதவர் சொல் வகைகளை அறியாதவர்; கலைகளில் வல்லவரும் அல்லர். 4. ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். (ப-உ) ஒளியார் முன்- அறிவுள்ளோர் சபையில். ஒள்ளியர் ஆதல்- தாமும் அறிவுடையராக நடந்து கொள்ளவேண்டும். வெளியார் முன்- அறிவில்லாதார் சபையில். வான் சுதை வண்ணம்- *வெண்மையான சுண்ணாம்பின் நிறத்தை. கொளல்- கொள்ளவேண்டும். (க-து) அறிவாளிகள் சபையிலே அறிவுள்ளவராகவும், அறிவில்லாதார் சபையிலே அறிவற்றவராகவும் நடந்துகொள்ள வேண்டும். 5. நன்று என்றவற்றுள்ளும் நன்றே, முதுவருள் முந்து கிளவாச் செறிவு. (ப-உ) முதுவருள்- அறிவு மிகுந்தோர் சபையில். முந்து கிளவா- தானே முற்பட்டு ஒன்றைப் பேசாத. செறிவு- அடக்கம். நன்று என்றவற்றுள்ளும்- நன்மை என்று சொல்லப்பட்ட வைகளில். நன்றே- சிறந்ததாகும். (க-து) அறிவுள்ளவர் சபையில் அடக்கமுடன் இருப்பதே நன்மைகளில் சிறந்ததாகும். 6. ஆற்றின் நிலைதளர்ந்து அற்றே வியன்புலம் ஏற்றுஉணர்வார் முன்னர் இழுக்கு. (ப-உ) வியன்புலம்- விரிந்த நூல்பொருள்களை. ஏற்று- கற்று. உணர்வார் முன்னர்- உண்மை அறிவோர் சபையில். இழுக்கு - ஒருவன் சொற்குற்றத்தில் அகப்படுதல். ஆற்றின்- நல்வழியில். நிலை- நிற்பதிலிருந்து. தளர்ந்து அற்றே- தவறியது போலாகும். (க-து) கற்றோர் சபையில் ஒருவன் சொல்குற்றத்திற்கு ஆளாதல், நல்வழியில் நின்றவன் கெட்டவழியில் இறங்கியது போலாகும். 7. கற்றறிந்தார் கல்வி விளங்கும், கசடுஅறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. (ப-உ) கசடு அற- குற்றமில்லாமல். சொல் தெரிதல்- சொற்களை ஆராய்ந்து அறிவதில். வல்லார் அகத்து- வல்லவர் சபையிலே. கற்று அறிந்தார்- பல நூல்களையும் படித்து அறிந்த வர்களுடைய. கல்வி- கல்வியானது. விளங்கும்- அனைவர்க்கும் விளங்கும். (க-து) கற்றவர்களின் சபையில்தான், கற்றோர் கல்வி சிறப்படையும். 8. உணர்வது உடையார்முன் சொல்லல், வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந்து அற்று. (ப-உ) உணர்வது உடையார்முன்- அறிவுடையார் சபையிலே. சொல்லல்- கற்றார் ஒன்றைச் சொல்வது. வளர்வதன் -தானே வளரும் பயிருள்ள. பாத்தியுள்- பாத்தியில். நீர் சொரிந்து அற்று- தண்ணீர் ஊற்றியது போலாகும். (க-து) படித்தவர் சபையில் படித்தவர் பேசுவது, பயிருள்ள பாத்தியில் தண்ணீர் ஊற்றுவது போலாம். 9. புல்அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க, நல்அவையுள் நன்கு செலச்சொல்லு வார். (ப-உ) நல்அவையுள்- நல்லவர் உள்ள சபையில். நன்கு- நல்ல பொருள்களை. செலச்சொல்லுவார். அவர் மனத்தில் படும்படி சொல்லுகின்றவர். புல்அவையுள்- அற்பர்கள் கூடிய சபையில். பொச்சாந்தும்- மறந்தும். சொல்லற்க- அவைகளைச் சொல்லாதிருக்க வேண்டும். (க-து) நல்லோர் சபையில் சொல்லும் நல்ல பொருள் களை, மறந்தும் அற்பர்கள் சபையிலே சொல்லக்கூடாது. 10. அங்கணத்துள் உக்கஅமிழ்து அற்றால்தம் கணத்தர் அல்லார்முன் கோட்டி கொளல். (ப-உ) தம் கணத்தர்- தம் இனத்தவர். அல்லார் முன்- அல்லாத அறிவற்றவர் முன். கோட்டி கொளல்- ஒன்றையும் சொல்லாதிருக்க வேண்டும்; சொன்னால் அது. அங்கணத்துள்- சாக்கடையுள். உக்க- சிந்திய. அமிழ்து அற்று ஆல்- அமுதம் போன்றதாகும். ஆல்- அசை. (க-து) மூடர்கள் சபையில் ஒன்றும் சொல்லக்கூடாது. சொன்னால் அது சாக்கடையில் சிந்திய அமுதம் போன்றதாகும். 73. அவை அஞ்சாமை சபையில் அஞ்சாமல் பேசுந் தன்மை. 1. வகைஅறிந்து வல்லவை வாய்சோரார், சொல்லின் தொகைஅறிந்த தூய்மை யவர். (ப-உ) சொல்லின் தொகை அறிந்த- சொற்களின் கூட்டத்தை அறிந்த. தூய்மையவர்- பரிசுத்தமானவர். வகை அறிந்து- சபையின் தரத்தை அறிந்து. வல்லவை- அச்சபைக்கு ஏற்றவைகளை. வாய் சோரார்- பிழையின்றிச் சொல்வார்கள். (க-து) சொல்லின் தொகையை அறிந்தவர்கள் சபையின் தரம் அறிந்து பிழையின்றிப் பேசுவார்கள். 2. கற்றாருள் கற்றார் எனப்படுவர், கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். (ப-உ) கற்றார்முன்- கற்றவர் சபையில். கற்ற - கற்றவைகளை. செலச்சொல்லுவார்- அவர்கள் மனத்தில் பதியும்படி சொல்லுகின்றவர். கற்றாருள்- கற்றவர்களிலே. கற்றார்- நன்றாகக் கற்றவர். எனப்படுவர்- என்று புகழ்ந்து சொல்லப்படுவார். (க-து) கற்றவர் சபையில், தாம் கற்றவற்றைத் தெளிவாகச் சொல்லுகின்றவரே கற்றவருள் சிறந்தவர். 3. பகைஅகத்துச் சாவார் எளியர்; அரியர் அவைஅகத்து அஞ்சா தவர். (ப-உ) பகைஅகத்து- பகைவரிடம் போர்செய்து. சாவார்- சாகின்றவர். எளியர்- உலகில் பலராவர். அவை அகத்து- சபையிலே. அஞ்சாதவர்- பயப்படாமல் பேச வல்லவர். அரியர்- சிலர்தாம். (க-து) போர்க்களத்தில் இறப்போர் பலர்; சபையில் அஞ்சாமல் பேசுவோர் சிலர். 4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித், தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். (ப-உ) கற்றார் முன்- கற்றவர் சபையிலே. கற்ற- தாம் கற்றவைகளை. செலச்சொல்லி- அவர்கள் மனம் கொள்ளச் சொல்லி. தாம் கற்ற- தாம் கற்றவைகளை விட. மிக்காருள்- அதிகமாகக் கற்றவரிடம். மிக்க- அதிகமான பொருள்களை. கொளல்- தெரிந்துகொள்ள வேண்டும். (க-து) கற்றவர் சபையிலே நாம் கற்றவைகளைக் கூற வேண்டும்; அதிகமாகக் கற்றவர்களிடம் சிறந்த பொருள்களைத் தெரிந்துகொள்ளவேண்டும். 5. ஆற்றின் அளவறிந்து கற்க; அவைஅஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு. (ப-உ) அவை- சபையில். அஞ்சா- பயப்படாமல். மாற்றம் - அவர் கேள்விகளுக்கு மறுமொழி. கொடுத்தல் பொருட்டு- கொடுப்பதற்காக. ஆற்றின்- கற்கும் வழியிலே நின்று. அளவு அறிந்து- தர்க்க நூலையும் ஆராய்ந்து. கற்க- படிக்கவேண்டும். (க-து) கேட்போர்க்கு மறுமொழி கொடுப்பதற்காக, தர்க்க நூலையும் படித்தறியவேண்டும். 6. வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு? நூலோடுஎன் நுண்அவை அஞ்சு பவர்க்கு. (ப-உ) வன்கண்ணர் அல்லார்க்கு- வீரம் இல்லாதவர்க்கு. வாளொடு- வாளாயுதத்துடன். என்- என்ன சம்பந்தம்? நுண் அவை- புத்தி நுட்பம் உள்ளவர்கள் கூடிய சபையைக் கண்டு. அஞ்சுபவர்க்கு- பயப்படுகின்றவர்க்கு. நூலொடு- நூலுடன். என்- என்ன சம்பந்தம்? (க-து) கோழைகளுக்கு வாளுடன் சம்பந்தம் இல்லை. அதுபோல, சபையைக் கண்டு அஞ்சுவோர்க்கு அவர்கள் கற்ற நூலுடன் சம்பந்தம் இல்லை. 7. பகைஅகத்துப் பேடிகை ஒள்வாள்; அவையகத்து அஞ்சும் அவன்கற்ற நூல். (ப-உ) அவை அகத்து- சபை நடுவில். அஞ்சும் அவன்- பேச அஞ்சுகின்றவன். கற்ற நூல்- கற்றநூல் அறிவு. பகை அகத்து- பகைவர் நடுவிலே. பேடிகை- பேடியின் கையிலே பிடித்த. ஒள்வாள்- ஒளிபொருந்திய வாள் போன்றதாகும். (க-து) சபையிலே பேச அஞ்சுகின்றவன் படித்த நூல், பேடியின் கையில் உள்ள வாளை ஒக்கும். 8. பல்லவை கற்றும் பயம்இலரே நல்அவையுள் நன்குசெலச் சொல்லா தவர். (ப-உ) நல்அவையுள்- நல்லவர் நிறைந்த சபையிலே. நன்கு- நல்ல சொற்களை. செலச் சொல்லாதார்- அவர்கள் மனங் கொள்ளச் சொல்ல முடியாதவர். பல்லவை கற்றும்- பல நூல்களைப் படித்தும். பயம் இலர்ஏ- உலகிற்குப் பயன்படாதவர் ஆவர். ஏ: அசை. (க-து) பல நூல்களைக் கற்றவராயினும், அறிஞர் சபையிலே சொல்ல அஞ்சுகின்றவரால் உலகுக்குப் பயன் இல்லை. 9. கல்லாதவரின் கடை என்ப; கற்றறிந்தும் நல்லார்அவை அஞ்சு வார். (ப-உ) கற்று அறிந்தும்- நூல்களைக் கற்று அறிந்திருந்தும். நல்லார் அவை- நல்லவர் சபையிலே. அஞ்சுவார்- பேச அஞ்சு கின்றவர். கல்லாதவரின்- மூடர்களைவிட. கடை என்ப- கடைப் பட்டவர் என்று உலகத்தார் கூறுவர். (க-து) கற்றவர் சபையைக் கண்டு அஞ்சுகின்ற படித்தவர், கல்லாதவரைவிடக் கீழ்ப்பட்டவர். 10. உளர்எனினும் இல்லாரோடு ஒப்பர்; களன்அஞ்சிக் கற்றசெலச் சொல்லா தார். (ப-உ) களன் அஞ்சி- சபைக்குப் பயந்து. கற்ற- தாம் கற்றவைகளை. செலச் சொல்லாதார்- சபைக்கு ஏற்றபடி பேச முடியாதவர். உளர்எனினும்- உயிரோடு இருந்தாலும். இல்லா ரோடு ஒப்பர்- இறந்தவர்க்குச் சமம் ஆவார். (க-து) கற்றவைகளைச் சொல்ல அஞ்சும் சபைக்கோழைகள், உயிரோடு இருந்தாலும் இறந்தவருக்கு ஒப்பாவார். 74. நாடு நாட்டின் அமைப்பு. 1. தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்வுஇலாச் செல்வரும், சேர்வது நாடு. (ப-உ) தள்ளா விளையுளும்- குறையாமல் விளைவிப் போரும். தக்காரும்- அறநெறியில் வாழ்வோரும். தாழ்வு இலாச் செல்வரும்- கேடுஇல்லாத செல்வம் உள்ளவர்களும். சேர்வது- கூடி வாழ்வதே. நாடு - சிறந்த நாடாகும். (க-து) உழவர், அறிஞர், செல்வர்கள் கூடி வாழ்வதே சிறந்த நாடு. 2. பெரும்பொருளால் பெட்டகத்து ஆகி, அரும்கேட்டால், ஆற்ற விளைவது நாடு. (ப-உ) பெரும் பொருளால்- அளவற்ற பண்டங்களால். பெட்டகத்து ஆகி- பிற நாட்டினரால் விரும்பத் தக்கதாய். அரும்கேட்டால்- அழிவில்லாமல். ஆற்ற விளைவதே- மிகவும் விளைவதே. நாடு- சிறந்த நாடாகும். (க-து) பிற நாட்டினரால் விரும்பத்தக்க பொருள் உடைமை, அழிவின்மை, மிகுந்த விளைவு இவைகளை உடையது சிறந்த நாடு. 3. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி, இறைவற்கு இறைஒருங்கு நேர்வது நாடு. (ப-உ) பொறை- பிற நாடுகளின் சுமை. ஒருங்கு- ஒன்றாக. மேல் வருங்கால்- தன்மேல் வரும்போது. தாங்கி- அவைகளைச் சுமந்து. இறைவற்கு- அதற்கு மேல் அரசனுக்கும். இறை ஒருங்கு- வரி முழுவதையும். நேர்வது- கொடுக்கச் சம்மதிப்பதே. நாடு- சிறந்த நாடாகும். (க-து) பிற நாட்டைக் காக்கவேண்டிய நிலை வந்தால் அதையும் காத்து, தன் அரசனுக்கு வரி முழுவதையும் கொடுப்பதே சிறந்த நாடாகும். 4. உறுபசியும், ஓவாப் பிணியும், செறுபகையும் சேராது இயல்வது நாடு. (ப-உ) உறு பசியும்- மிகுந்த பசியும். ஓவாப் பிணியும்- நீங்காத நோயும். செறு பகையும்- அழிக்கின்ற பகையும். சேராது- தன்னிடம் சேராமல். இயல்வது- வாழ்வதே. நாடு- சிறந்த நாடாகும். (க-து) பசி, பிணி, பகையில்லாமல் அமைதியுடன் வாழ்வதே சிறந்த நாடு. 5. பல்குழுவும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்துஅலைக்கும் கொல்குறும்பும், இல்லது நாடு. (ப-உ) பல்குழுவும்- கருத்து வேற்றுமையுள்ள பல கூட்டமும். பாழ் செய்யும்- நாசம் புரியும். உள்பகையும்- கூடிக் கெடுக்கும் பகையும். வேந்து அலைக்கும்- சமயம் வந்தால் அரசனைத் துன்புறுத்துகின்ற. கொல் குறும்பும்- கொலைத் தொழிலையுடைய குறுநில மன்னரும். இல்லது- இல்லாததே. நாடு- சிறந்த நாடாகும். (க-து) பல கட்சிகள், பகைவர்கள், குறுநில மன்னர்கள் இல்லாத நாடே சிறந்த நாடு. 6. கேடறியா கெட்ட விடத்தும் வளம்குன்றா நாடுஎன்ப நாட்டில் தலை. (ப-உ) கேடு அறியா- பகைவரால் கெடுக்கப்படாததும். கெட்ட இடத்தும்- கெட்டாலும். வளம் குன்றா- செல்வம் குறையாததும் ஆகிய. நாடு- நாடுதான் நாட்டின் நாடுகளிலே. தலைஎன்ப- முதன்மையானது என்பார்கள். (க-து) அழியாததும், செல்வம் குறையாததுமான நாட்டையே முதன்மையான நாடு என்பார்கள். 7. இருபுனலும், வாய்ந்த மலையும், வருபுனலும், வல்அரணும், நாட்டிற்கு உறுப்பு. (ப-உ) இரு புனலும்- ஊற்றுநீர், மழைநீர் என்னும் இருவகை நீரும். வாய்ந்த மலையும்- வளம் பொருந்திய மலையும். வருபுனலும்- அதிலிருந்து வரும் நீரும். வல் அரணும்- அழியாத கோட்டையும். நாட்டிற்கு- ஒரு நாட்டுக்கு. உறுப்பு- அங்கமாகும். (க-து) ஊற்றுநீர், மழைநீர், மலை, மலையிலிருந்து வரும் நீர், நல்ல பாதுகாப்பு இவை ஒரு நாட்டின் அங்கமாகும். 8. பிணியின்மை, செல்வம், விளைவு,இன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கு இவ்ஐந்து. (ப-உ) பிணிஇன்மை- நோய் இல்லாமை. செல்வம்- செல்வம். விளைவு- பயிர்விளைவு. இன்பம்- சுகம். ஏமம்- பாதுகாப்பு. இவ்ஐந்து- இவ்வைந்தையும். நாட்டிற்கு- தேசத்துக்கு. அணி என்ப- அழகு என்று கூறுவர். (க-து) நாட்டிற்கு அழகு ஐந்து. அவை; நோயில்லாமை, செல்வம், விளைவு, சுகம், காவல் என்பர். 9. நாடுஎன்ப நாடா வளத்தன; நாடல்ல நாடவளம் தரும் நாடு. (ப-உ) நாடா- தேடி வருந்தாத. வளத்தன- செல்வங்களை யுடைய நாடுகளையே. நாடு என்ப- நாடுகள் என்று சொல்வர். நாட- வருந்தித் தேடுவதனால். வளம் தரும்- செல்வம் தரும். நாடு - நாடுகள். நாடு அல்ல- நாடுகள் அல்ல. (க-து) இயற்கைவளம் நிறைந்த நாடுகளே நாடுகள்; முயன்று தேடும் செல்வமுள்ள நாடுகள் நாடுகள் அல்ல. 10. ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும், பயம்இன்றே வேந்துஅமைவு இல்லாத நாடு. (ப-உ) ஆங்கு- மேற்சொல்லியவைகள். அமைவு எய்தியக் கண்ணும்- நிறைந்திருந்தாலும். வேந்து- அரசனோடு. அமைவு இல்லாத- பொருந்தியிராத. நாடு- நாடானது. பயம் இன்றுஏ- பயன் இல்லை. ஏ: அசை. (க-து) எல்லாச் செல்வங்களும் அமைந்திருந்தாலும், அரசனோடு பொருந்தாத நாடு பயன் இல்லை. 75. அரண் நாட்டுக்குப் பாதுகாவல். 1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள்; அஞ்சித்தன் போற்று பவர்க்கும் பொருள். (ப-உ) அரண்- கோட்டையானது. ஆற்றுபவர்க்கும்- பிறர்மேல் படையெடுத்துச் செல்வோர்க்கும். பொருள்- சிறந்தது. அஞ்சி- பகைவர்க்குப் பயந்து. தன் போற்றுபவர்க்கும்- தன்னைச் சரணடைந்தவர்க்கும். பொருள்- சிறந்ததாகும். (க-து) கோட்டையானது, சண்டை செய்வோர்க்கும், சரண் அடைந்தவர்க்கும் சிறந்ததாகும். 2. மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல் காடும், உடையது அரண். (ப-உ) மணிநீரும்- மணிபோன்ற நிறமுள்ள நீரும். மண்ணும்- வெளிநிலமும். மலையும் - மலையும். அணிநிழல் காடும்- குளிர்ந்த நிழல் உள்ள காடும். உடையது- உடையதே. அரண்- கோட்டையாகும். (க-து) நீரும், வெட்டவெளியும், மலையும், காடும் சூழ்ந்திருப்பதே கோட்டையாகும். 3. உயர்வு,அகலம், திண்மை,அருமை, இந் நான்கின் அமைவுஅரண் என்று உரைக்கும் நூல். (ப-உ) உயர்வு-உயரம். அகலம்- அகலம். திண்மை- வலிமை. அருமை- பகைவர் நெருங்க முடியாமை. இந்நான்கின்- இந் நான்கினது. அமைவு- அமைப்புடைய, மதிலையே. அரண் என்று - கோட்டை என்று. நூல் உரைக்கும்- நூல்கள் கூறும். (க-து) உயர்வு, அகலம், வலிமை, அருமை இந்நான்கும் அமைந்திருக்கும் மதிலையே கோட்டை என்று நூல்கள் கூறும். 4. சிறுகாப்பின், பேர்இடத்தது ஆகி, உறுபகை ஊக்கம் அழிப்பது அரண். (ப-உ) சிறுகாப்பின்- காக்கவேண்டும் இடம் சிறிதாய். பேர் இடத்தது ஆகி- பெரிய இடத்தை உடையதாய். உறுபகை- வந்து சூழ்ந்த பகைவர்களின். ஊக்கம்- உற்சாகத்தை. அழிப்பது- கெடுப்பது. அரண்- கோட்டையாகும். (க-து) பகைவரால் எளிதில் கைப்பற்ற முடியாத பாது காப்பும், வலிமையும் அமைந்ததே கோட்டையாகும். 5. கொளற்குஅரிதாய்க் கொண்ட கூழ்த்து ஆகிஅகத்தார் நிலைக்குஎளிதாம் நீரது அரண். (ப-உ) கொளற்கு அரிதாய்- பகைவரால் கைக்கொள்ள முடியாததாய். கொண்ட- நிறைந்த. கூழ்முது ஆகி- உணவை யுடையதாகி. அகத்தார்- உள்ளிருப்பவர். நிலைக்கு- நிலைத் திருப்பதற்கு. எளிது ஆம்- எளியதான. நீரது- தன்மையுள்ளதே. அரண்- கோட்டையாகும். (க-து) பகைவரால் கைப்பற்ற முடியாததாய், பலவகை உணவுப்பொருள் நிறைந்ததாய், உள்ளிருப்போர் நீண்டநாள் வாழ்வதற்கு உரியதாய் இருப்பதே கோட்டையாகும். 6. எல்லாப் பொருளும் உடைத்தாய், இடத்துஉதவும் நல்லாள் உடையது அரண். (ப-உ) எல்லாப் பொருளும்- வேண்டும் பொருள்கள் எல்லாம். உடைத்தாய்- உடையதாகி. இடத்து- பகைவரால் ஆபத்து வந்தபோது. உதவும்- காப்பாற்றுகின்ற. நல்ஆள் உடையது - நல்ல வீரர்களையும் கொண்டதே. அரண்- கோட்டையாகும். (க-து) எல்லாப் பொருள்களும் அமைந்து, ஆபத்தைக் காக்கும் வீரர்களையும் கொண்டதே கோட்டையாகும். 7. முற்றியும், முற்றாது எறிந்தும், அறைப்படுத்தும், பற்றற்கு அரியது அரண். (ப-உ) முற்றியும்- முற்றுகையிட்டும். முற்றாது எறிந்தும்- முற்றுகையிடாமல் போர் செய்தும். அறைப்படுத்தும்- வஞ்சகம் செய்தும். பற்றற்கு அரியது- பகைவரால் கைப்பற்ற முடியாததே. அரண்- கோட்டையாகும். (க-து) முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் உடனடி யாகப் போர் செய்தும், வஞ்சனை செய்தும், பகைவரால் கைப்பற்ற முடியாததே கோட்டையாகும். 8. முற்றுஆற்றி முற்றி யவரையும், பற்றுஆற்றிப் பற்றியார் வெல்வது அரண். (ப-உ) முற்றுஆற்றி- முற்றுகையிட்டு. முற்றிய வரையும்- சூழ்ந்து கொண்டவரையும். பற்றியார்- உள்ளிருந்தோர். பற்று ஆற்றி- தமது பிடிப்பை விடாமல் நின்று. வெல்வது - போர் செய்து வெற்றி கொள்ளுவதே. அரண்- கோட்டையாகும். (க-து) உள்ளிருந்தோர், வெளியில் முற்றுகையிட்டி ருப்பவரை வெல்லத்தக்க பாதுகாப்பை உடையதே கோட்டை யாகும். 9. முனைமுகத்து மாற்றலர் சாய, வினைமுகத்து வீறுஎய்தி மாண்டது அரண். (ப-உ) முனைமுகத்து- போர்க்களத்தில். மாற்றலர்- பகைவர்கள். சாய- விழும்படி. வினைமுகத்து- உள்ளிருந்தோர் தமது போர்த்திறங்களால். வீறுஎய்தி- சிறப்படைந்து. மாண்டது- பெருமை பெற்றதே. அரண்- கோட்டையாகும். (க-து) போரில், பகைவர் அழியும்படி போர் செய்யும் பெருமையுள்ளதே கோட்டையாகும். 10. எனைமாட்சித்து ஆகியக் கண்ணும், வினைமாட்சி இல்லார்கண், இல்லது அரண். (ப-உ) எனைமாட்சித்து- எவ்வளவு பெருமை. ஆகியக் கண்ணும்- உடையதாயினும். வினைமாட்சி- தொழில் செய்யும் பெருமை. இல்லார்கண்- இல்லாதவரிடம். அரண் இல்லது- கோட்டை இல்லையாம். (க-து) கோட்டையானது எவ்வளவு சிறப்புள்ளதானாலும், சிறந்த தொழில் இல்லாதவர்க்கு அதனால் பயன் இல்லை. 76. பொருள்செயல்வகை செல்வப் பொருளைச் சேர்க்கும் வகை. 1. பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருள்;அல்லது இல்லை பொருள். (ப-உ) பொருள் அல்லவரை- ஒரு பொருளாக மதிக்கப் படாதவரையும். பொருளாகச் செய்யும்- ஒரு பொருளாக மதிக்கும்படி செய்வது. பொருள்- செல்வமாகும். அல்லது- அதைத் தவிர. பொருள் இல்லை- பொருள் வேறில்லை. (க-து) மதிக்கப்படாதவரையும் மதிக்கும்படி செய்வது பொருள்; அதைவிட வேறு சிறந்த பொருள் இல்லை. 2. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்; செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. (ப-உ) இல்லாரை - பொருள் இல்லாதவரை. எல்லாரும்- யாவரும். எள்ளுவர்- இகழ்வார்கள். செல்வரை- பொருள் உடையவரை. எல்லாரும்- யாவரும். சிறப்புச் செய்வர்- கொண்டாடுவார்கள். (க-து) வறியவரை அனைவரும் அவமதிப்பர்; செல்வரை யாவரும் புகழ்வார்கள். 3. பொருள்என்னும் பொய்யா விளக்கம், இருள்அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. (ப-உ) பொருள் என்னும்- பொருள் என்று சொல்லப்படும். பொய்யா விளக்கம்- அணையாத விளக்கு. எண்ணிய- அவர் நினைத்த. தேயத்துச் சென்று- எந்த நாட்டிலும் போய். இருள்- பகை என்னும் இருட்டை. அறுக்கும்- கெடுக்கும். (க-து) பொருள் என்னும் விளக்கு, பகை என்னும் இருளை அழிக்கும். 4 அறன்ஈனும், இன்பமும் ஈனும், திறன்அறிந்து தீதுஇன்றி வந்த பொருள். (ப-உ) திறன் அறிந்து- சேர்க்கும் வகையறிந்து. தீதுஇன்றி- தீமையில்லாத வழியிலே. வந்த பொருள்- கிடைத்த பொருள். அறன்ஈனும்- அறத்தையும் தரும். இன்பமும் ஈனும்- இன்பத்தையும் தரும். (க-து) நல்வழியிலே கிடைத்த பொருள் அறத்தையும் இன்பத்தையும் தரும். 5. அருளொடும் அன்பொடும் வாராப்பொருள் ஆக்கம், புல்லார், புரள விடல். (ப-உ) அருளொடும்- கருணையோடும். அன்பொடும்- அன்போடும். வாரா- சேர்ந்து வராத. பொருள் ஆக்கம்- பொருளைச் சேர்ப்பதை. புல்லார்- ஏற்றுக் கொள்ளாமல். புரளவிடல்- விட்டுவிட வேண்டும். (க-து) அருளோடும் அன்போடும் சேர்ந்து வராத பொருளை விட்டுவிட வேண்டும். 6. உறுபொருளும், உல்கு பொருளும், தன்ஒன்னார்த் தெறுபொருளும், வேந்தன் பொருள். (ப-உ) *உறுபொருளும்- நாதியில்லாமல் தாமே கிடைக்கும் பொருளும். உல்குபொருளும்- சுங்கத்தால் கிடைக்கும் பொருளும். தன்ஒன்னார்- தன் பகைவரை. தெறுபொருளும்- வென்று கப்பமாகக் கொள்ளும் பொருளும். வேந்தன் பொருள்- அரசனுக்கு உரிய பொருள்கள். (க-து) தானே வரும் பொருள், சுங்கப் பொருள், பகைவரிடம் கப்பமாக வாங்கும் பொருள் இவைகளே அரசனுக்குரிய பொருள்கள். 7. அருள்என்னும் அன்பீன் குழவி, பொருள்என்னும் செல்வச் செவிலியால் உண்டு. (ப-உ) அன்புஈன்- அன்பு பெற்றெடுத்த. அருள் என்னும்- அருள் என்று சொல்லப்படும். குழவி- குழந்தை. பொருள் என்னும் - பொருள் என்று சொல்லப்படும். செல்வம்- செல்வம் உள்ள. செவிலியால்- செவிலித்தாயால். உண்டு- வளர்வது உண்டு. (க-து) அன்பால் பெறப்பட்ட அருள் என்னும் குழந்தை யானது, பொருள் என்னும் செவிலித்தாயால் வளரும். 8. குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால், தன்கைத்துஒன்று உண்டாகச் செய்வான் வினை. (ப-உ) தன்கைத்து- தன்கையில். உண்டாக- பொருள் இருக்கும்போது. ஒன்று செய்வான்- ஒரு தொழிலைச் செய்கின்ற வனது. வினை- செய்கையானது. குன்று ஏறி- ஒருவன் மலைமேல் ஏறி நின்று. யானைப்போர்- யானைகளின் சண்டையை. கண்டு அற்று- பார்த்ததை ஒக்கும். ஆல்- அசை. (க-து) தன் கையில் பொருளை வைத்துக்கொண்டு ஒன்றைச் செய்கின்றவன் வல்லவர் மூலம் தன் காரியத்தில் வெற்றி பெறுவான். 9. செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும் எஃகு, அதனின்கூரியது இல். (ப-உ) பொருளை- செல்வத்தை. செய்க- சம்பாதிக்க வேண்டும். செறுநர்- பகைவருடைய. செருக்கு- கர்வத்தை. அறுக்கும்- அழிக்கும். எஃகு- வாள். அதனின்- அது போல். கூரியது- கூர்மையான ஆயுதம். இல்- வேறு இல்லை. (க-து) செல்வமே பகைவர் கர்வத்தை அறுக்கும் வாள்; அதைப்போல கூர்மையான ஆயுதம் ஒன்றும் இல்லை. 10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு, எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. (ப-உ) ஒண்பொருள்- சிறந்த பொருளை. காழ்ப்ப- மிகுதி யாக. இயற்றியார்க்கு- உண்டாக்கினவர்க்கு. ஏனை இரண்டும்- மற்றைய அறமும் இன்பமும். ஒருங்கு- ஒன்றாக. எண் பொருள்- எளிய பொருள்களாம். (க-து) நல்வழியிலே மிகுந்த பொருளைச் சேர்த்தவர்க்கு அறமும் இன்பமும் எளிதில் வருவன. 77. படைமாட்சி படையினது நன்மையைப் பற்றிக் கூறுவது. 1. உறுப்புஅமைந்து, ஊறுஅஞ்சா வெல்படை, வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. (ப-உ) உறுப்பு- படைக்குரிய *நால்வகை அங்கங்களும். அமைந்து- நிறைந்து. ஊறு- காயம்படுவதற்கு. அஞ்சா- அஞ்சாமல் நின்று. வெல் படை- பகைவரை வெல்லுகின்ற சேனை. வேந்தன்- அரசனது. வெறுக்கையுள் எல்லாம்- செல்வங் களில் எல்லாம். தலை- முதன்மையான செல்வம். (க-து) போரில் அஞ்சாமல் நின்று எதிரிகளை வெல்லும் படையே அரசனுக்கு முதன்மையான செல்வம். 2. உலைவிடத்து, ஊறுஅஞ்சா வன்கண், தொலைவுஇடத்துத் தொல்படைக்கு அல்லால் அரிது. (ப-உ) உலைவு இடத்து- அழிவு வந்தபோதும். தொலைவு இடத்து- தோல்வி வந்தபோதும். ஊறு அஞ்சா- காயம்படு வதற்கு அஞ்சாமல். வன்கண்- பகைவரைத் தாக்கும் வலிமை. தொல்படைக்கு அல்லால்- பழமையான படைக்கு அல்லாமல். அரிது- வேறு படைக்கு இல்லை. (க-து) பரம்பரைப் படை வீரரே எதிரிகளை அஞ்சாமல் நின்று தாக்குவார்கள். 3. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை; நாகம் உயிர்ப்பக் கெடும். (ப-உ) எலிப்பகை- எலிகளாகிய பகை ஒன்று கூடி. உவரி- கடல்போல். ஒலித்தக்கால்- சப்தம் இட்டால். என் ஆம்- பாம்புக்கு என்ன துன்பம்? நாகம்- நாகப்பாம்பு. உயிர்ப்ப- மூச்சுவிட்ட அளவிலே. கெடும்- அப்பகை அழியும். (க-து) எலிகள் பாம்பை வெல்லா; அதுபோல் வலியார்முன் எளியார் தோல்வி அடைவர். 4. அழிவின்று, அறைபோகாது ஆகி, வழிவந்த வன்கண் அதுவே படை. (ப-உ) அழிவு இன்று - போரில் பின்வாங்காமல். அறை போகாது ஆகி- பகைவர்க்கு இரகசியத்தைச் சொல்லாதது ஆகி. வழிவந்த- பரம்பரையாக வந்த. வன்கண் அதுவே- வீரத்தை யுடையதே. படை- படையாகும். (க-து) போரில் பின்வாங்காமல், பகைவர் வஞ்சனைக்கு ஆளாகாமல், பரம்பரையான வீரத்தையுடையதே படையாகும். 5. கூற்றுஉடன்று மேல்வரினும், கூடி எதிர்நிற்கும் ஆற்றல் அதுவே படை. (ப-உ) கூற்று- கூற்றுவன். உடன்று- கோபித்து. மேல் வரினும்- தன்மேல் வந்தாலும். கூடி- மனம் ஒத்து. எதிர்நிற்கும்- எதிர்த்து நிற்கும். ஆற்றல் அதுவே- ஆற்றலையுடைய அதுதான். படை- படையாகும். (க-து) எமனே கோபித்து வந்து போர் செய்தாலும் எதிர்த்துத் தாக்கும் ஆற்றலையுடையதே சேனையாகும். 6. மறம்,மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம், எனநான்கே ஏமம் படைக்கு. (ப-உ) மறம்- வீரம். மானம்- கௌரவம். மாண்ட வழிச் செலவு- சிறந்த முன்னோர் வழியில் செல்லுதல். தேற்றம்- அரசனது நம்பிக்கைக்கு உரியது ஆதல். என நான்கே- என நான்கு குணங்களுமே. படைக்கு- சேனைக்கு. ஏமம்- பாதுகாவல். (க-து) வீரம், மானம், நல்ல நடத்தை, நம்பிக்கை இந்நான்கும் சேனைக்குப் பாதுகாப்பாகும். 7. தார்தாங்கிச் செல்வது தானை, தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. (ப-உ) தலைவந்த- தன்மேல் வந்த. போர்- போரை. தாங்கும் தன்மை- விலக்கும் வகையை. அறிந்து- உணர்ந்து. தார்- எதிரியின் படையை. தாங்கி- தன்மேல் வராமல் தடுத்து. செல்வது- அதன்மேல் போவதே. தானை - சேனையாகும். (க-து) தன்மேல் வந்த படையைத் தடுக்கும் வகையறிந்து, எதிரியின் படையைத் தடுத்துப் போர் செய்வதே சேனையாகும். 8. அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும், தானை, படைத்தகையால் பாடு பெறும். (ப-உ) தானை- சேனையானது. அடல் தகையும்- முன்சென்று போர் செய்யும் தகுதியும். ஆற்றலும்- எதிரியின் போரைத் தாங்கும் வல்லமையும். இல்எனினும்- இல்லையானாலும். படைத்தகையால்- படையின் தோற்றத்தால். பாடு பெறும்- பெருமையடையும். (க-து) சேனைக்கு வீரமும், வலிமையும் இல்லையானாலும், தனது தோற்றத்தால் அது பெருமையடையும். 9. சிறுமையும், செல்லாத் துனியும், வறுமையும் இல்ஆயின் வெல்லும் படை. (ப-உ) சிறுமையும்- அளவில் சிறியதும். செல்லாத் துனியும் - நீங்காத வெறுப்பும். வறுமையும்- தரித்திரமும். இல்ஆயின்- இல்லையானால். படை- அச்சேனை. வெல்லும்- பகைவரை வெல்லும். (க-து) அளவில் குறைவு, அதிருப்தி, வறுமை இல்லாத படையே எதிரிகளை வெல்லும். 10. நிலைமக்கள் சால உடைத்துஎனினும், தானை தலைமக்கள் இல்வழி இல். (ப-உ) நிலைமக்கள் - போரில் நிலைத்து நிற்கும் வீரர்களை. சால- மிகுதியாக. உடைத்து எனினும்- உடையது ஆனாலும். தலைமக்கள்- தலைவராகிய வீரர்கள். இல்வழி- இல்லாதபோது. தானை- அப்படையால். இல்- பயன் இல்லை. (க-து) பெரிய சேனையானாலும், சேனைத்தலைவர்கள் இல்லாவிட்டால் அது போரில் நிலைத்து நிற்காது. 78. படைச் செருக்கு படையினது சிறந்த வீரம். 1. என்ஐமுன் நில்லன்மின், தெவ்விர்! பலர்என்ஐ முன்நின்று, கல்நின் றவர். (ப-உ) தெவ்விர்- பகைவர்களே. என்ஐமுன்- என் தலைவன் முன். நின்று- எதிர்த்துநின்று. கல் நின்றவர்- மாண்டு கல்லுருவில் நின்றவர். பலர்- பலராவர்; ஆதலால். என்ஐமுன்- என் தலைவன் எதிரில். நில்லன்மின்- போர் செய்ய நிற்காதீர்கள். (க-து) என் தலைவனை எதிர்த்து மாண்டவர் பலர். ஆதலால், அவனை எதிர்த்து நிற்காதீர்கள். 2. கான முயல்எய்த அம்பினில், யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (ப-உ) கானம்- காட்டில் ஓடுகின்ற. முயல்- முயலை. எய்த- குறி தவறாமல் எய்த. அம்பினில்- அம்பைத் தாங்குவதைவிட. யானை- யானையின்மேல் குறி வைத்து எறிந்து. பிழைத்தவேல்- தவறிப்போன வேலை. ஏந்தல் இனிது- தாங்குதல் சிறந்ததாம். (க-து) முயலைக் கொன்ற அம்பைவிட, யானையைக் குறி வைத்து எறிந்து தவறிய வேல் சிறந்தது. 3. பேராண்மை என்ப தறுகண்; ஒன்றுஉற்றக்கால், ஊர்ஆண்மை மற்றதன் எஃகு, (ப-உ) தறுகண்- வீரமே. பேர் ஆண்மை- மிகுந்த ஆண்மை யாகும். என்ப- என்பார்கள். ஒன்று - பகைவர்க்கு ஒரு தாழ்வு. உற்றக்கால்- வந்தபோது. ஊர் ஆண்மை- உதவி செய்யும் தன்மை. மற்று அதன் - அப்பேராண்மையின். எஃகு- கூர்மையாகும். (க-து) பகைவரை வெல்லுதல் வீரம்; பகைவர்க்குத் தாழ்வு வந்தபோது உதவுதல் அவ்வீரத்தின் சிறப்பாகும். 4. கைவேல் களிற்றோடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும். (ப-உ) கைவேல்- தன் கையிலிருந்த வேலை. களிற்றொடு- தன்னை எதிர்த்த யானையின்மேல். போக்கி- எறிந்துவிட்டு. வருபவன் - வேறு வேற்படை தேடி வருகின்றவன். மெய் வேல்- தன் மார்பிலிருந்த வேலைக்கண்டு. பறியா- பறித்து. நகும்- மகிழ்வான். (க-து) கையிலிருந்த வேலை யானைமீது வீசிவிட்டு வருகின்றவன், தன் உடம்பிலிருந்த வேலைப் பிடுங்கி வைத்துக் கொண்டு மகிழ்வான். 5. விழித்தகண், வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின், ஒட்டன்றோ வன்கண் அவர்க்கு. (ப-உ) விழித்த கண்- பகைவரைக் கோபித்துப் பார்த்த கண். வேல்கொண்டு- பகைவர் வேலால். எறிய- வீசுவதைக் கண்டு. அழித்து- மாறி. இமைப்பின்- இமைக்கு மாயின், அதுவே. வன்கண் அவர்க்கு- வீரர்க்கு. ஒட்டு அன்றோ- தோல்வி அல்லவா? (க-து) கோபித்துப் பார்த்த கண், பகைவர் வேல்வீச்சைக் கண்டு இமைக்குமாயின் அதுவே வீரர்க்குத் தோல்வியாகும். 6. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்,தன் நாளை எடுத்து. (ப-உ) தன் நாளை- வீரன், தனது கழிந்த நாள்களை. எடுத்து- எடுத்து எண்ணி. விழுப்புண்- பெரிய காயங்கள். படாத நாள் எல்லாம்- படாத நாள்களையெல்லாம். வழுக்கினுள்- பயன் படாமல்போன நாள்களில். வைக்கும்- வைப்பான். (க-து) சிறந்த வீரன், போர் செய்யாத நாள்களையெல்லாம் வீண் நாட்களாக எண்ணி வைப்பான். 7. சுழலும், இசைவேண்டி, வேண்டா உயிரார், கழல்யாப்புக் காரிகை நீர்த்து. (ப-உ) சுழலும்- உலகில் சுற்றி நிற்கும். இசை வேண்டி- புகழை விரும்பி. வேண்டா உயிரார்- அதற்காக உயிர் வாழ்வை யும் வேண்டாத வீரர். கழல்- வீரகண்டாமணியை. யாப்பு- கட்டிக்கொள்ளுதல். காரிகை நீர்த்து- அழகு செய்யும் தன்மை யுடையது. (க-து) புகழுக்காக உயிரையும் விடும் வீரர்கள், காலில் வீர கண்டாமணியை அணிதல் அவர்க்கு அழகாகும். 8. உறின் உயிர்அஞ்சா மறவர், இறைவன் செறினும் சீர்குன்றல் இலர். (ப-உ) உறின்- சண்டை வந்தால். உயிர் அஞ்சா- தம் உயிருக்கு அஞ்சாமல் போர் செய்யும். மறவர்- வீரர். இறைவன் -தம் அரசன். செறினும்- கோபித்தாலும். சீர்குன்றல்- தமது வீரத்தில் குறைதல். இலர்- இல்லாதவர் ஆவர். (க-து) உயிருக்கு அஞ்சாத வீரர், தம் அரசன் கோபித்தாலும் கடமை தவறமாட்டார். 9. இழைத்தது இகவாமைச் சாவாரை, யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். (ப-உ) இழைத்தது - தாம் கூறிய சபதம். இகவாமை- தவறாதபடி. சாவாரை- போர்க்களத்தில் சாகின்றவரை. பிழைத்தது- அவர் தவறு செய்ததாகச் சொல்லி. ஒறுக்கிற்பவர்- இகழ்கின்றவர். யாரே- யார்தான்? (ஒருவரும் இல்லை.) (க-து) தான் கூறிய சபதப்படி போர்க்களத்தில் இறக்கும் வீரரை ஒருவரும் இகழமாட்டார்கள். 10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகின்பின், சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. (ப-உ) புரந்தார் கண்- தம்மைப் பாதுகாத்தவரின் கண்களில். நீர்மல்க- நீர் பெருகும்படி. சாகின்பின்- போரிலே செத்தால். சாக்காடு- அச் சாவு. இரந்து- இரந்தேனும். கோள் தக்கது- கொள்ளும் தகுதியை. உடைத்து- உடையதாம். (க-து) அரசர் கண்ணீர் விடும்படி போர்க்களத்தில் இறக்கும் சாவு எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கது. 79. நட்பு நட்பின் சிறப்பு. 1. செயற்கரிய யாஉள நட்பின்; அதுபோல் வினைக்கரிய யாஉள காப்பு? (ப-உ) நட்பின்- நட்பைப்போல. செயற்கு அரிய- சம்பாதிப் பதற்கு அரிய பொருள்கள். யாஉள- எவைகள் இருக்கின்றன? அதுபோல்- அந்த நட்பைப்போல. வினைக்கு அரிய - செய்யும் தொழிலுக்குச் சிறந்த. காப்பு- பாதுகாப்பு. யாஉள- எவைகள் இருக்கின்றன? (க-து) நட்பைப்போல் சிறந்தது வேறு ஒன்றும் இல்லை. 2. நிறைநீர, நீரவகேண்மை பிறை; மதிப் பின்னீர பேதையார் நட்பு. (ப-உ) நீரவர்- அறிவுள்ளவர்களின். கேண்மை- நட்பு. பிறை- பிறைபோல். நிறைநீர- நிறையும் தன்மை உள்ளவை. பேதையார் நட்பு- அறிவில்லாதவர்களின் நட்பு. மதி- பூரண சந்திரன்போல். பின்நீர- நாள்தோறும் குறையும் தன்மையுள்ளவை. (க-து) அறிவுள்ளோர் நட்பு பிறைபோல் வளரும்; அறிவற்றோர் நட்பு முழுமதிபோல் குறையும். 3. நவில்தொறும் நூல்நயம் போலும், பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. (ப-உ) நவில்தொறும்- கற்கும்தோறும். நூல்- நூல் பொருள். நயம்போலும்- இன்பந் தருவதுபோலும். பயில்தொறும்- பழகுந் தோறும். பண்புடையாளர்- நற்குண மக்களின். தொடர்பு- நட்பு இன்பந் தரும். (க-து) நல்லோர் நட்பு பழகப் பழக இன்பந்தரும். 4. நகுதற் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு. (ப-உ) நட்டல்- நட்புச் செய்தல். நகுதல் பொருட்டு அன்று- சிரித்து மகிழ்வதற்காக அன்று. மிகுதிக் கண்- வேண்டாத செய்யும்போது. மேல்சென்று- முன்சென்று. இடித்தல் பொருட்டு - கண்டித்துப் புத்தி கூறுவதற்காகவே. (க-து) நட்புச் செய்தல் தீமை செய்யும்போது கண்டித்துப் புத்தி புகட்டுவதற்காகத்தான். 5. புணர்ச்சி, பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும். (ப-உ) புணர்ச்சி- நட்புச் செய்தற்கு ஓரிடத்திலிருத்தலும். பழகுதல்- பலதரம் கண்டு பேசுவதும். வேண்டா- வேண்டுவதில்லை. உணர்ச்சிதான்- ஒத்தஅறிவே. நட்புஆம்- நட்பாகிய. கிழமை தரும்- உரிமையைத் தரும். (க-து) இருவருக்கும் ஒத்த அறிவே நட்பை உண்டாக்கும். 6. முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு. (ப-உ) முகம்நக- முகத்தில் மட்டும் சிரிப்புத் தோன்ற. நட்பது- சினேகம் பண்ணுவது. நட்பு அன்று -சினேகம் ஆகாது. நெஞ்சத்து அகம் நக- அன்பால் உள்ளம் மகிழ. நட்பது- சினேகம் செய்வதே. நட்பு. சினேகமாகும். (க-து) மனம் மகிழ்ந்து நட்புக் கொள்ளுவதே உண்மையான நட்பாகும். 7. அழிவின் அவைநீக்கி, ஆறுஉய்த்து, அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. (ப-உ) அழிவின்- அழிவைத் தரும். அவைநீக்கி- தீயவை களிலிருந்து விலக்கி. ஆறு உய்த்து- நல்ல வழியிலே நடத்தி. அழிவின்கண்- துன்பம் வந்தபோது. அல்லல்- அத்துன்பத்தை. உழப்பது- உடனிருந்து அனுபவிப்பதே. நட்புஆம்- நட்பாகும். (க-து) தீமையை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் வரும்போது உடனிருந்து அனுபவிப்பதே நட்பாகும். 8. உடுக்கை இழந்தவன் கைபோல, ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. (ப-உ) உடுக்கை இழந்தவன்- ஆடையை இழந்தவனுக்கு. கைபோல- கை சென்று உதவுவதுபோல. ஆங்கே- அப்பொழுதே. இடுக்கண் களைவது- சென்று துன்பத்தை நீக்குவது. நட்புஆம்- நட்பாகும். (க-து) ஆடையிழந்தவன் கைபோல் தாமே முன்சென்று துன்பத்தை நீக்குவதே நட்பாகும். 9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில், கொட்புஇன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. (ப-உ) நட்பிற்கு- சினேகத்துக்கு. வீற்றிருக்கை- அரசிருக்கை. யாது எனில்- யாதென்றால். கொட்பு இன்றி- வேறுபடாமல். ஒல்லும்வாய்- முடியும் இடம் எல்லாம் சென்று. ஊன்றும் நிலை- தாங்கும் நிலையாகும். (க-து) எந்நாளும் தாங்குவதே நட்பின் சிறப்பாகும். 10. இனையர் இவர்எமக்கு, இன்னம்யாம், என்று புனையினும் புல்என்னும் நட்பு. (ப-உ) இவர் எமக்கு- இவர் எங்களுக்கு. இனையர்- இவ்வளவு அன்புள்ளவர். யாம்- நாங்கள். இன்னம்- இவர்க்கு இவ்வளவு அன்புடையேம். என்று புனையினும்- என்று ஒருவரை யொருவர் பாராட்டினாலும். நட்பு- சினேகம். புல் என்னும்- சிறிதாகத் தோன்றும். (க-து) ஒருவரை ஒருவர் புகழ்ந்து பேசும் நட்பு வளராது; குறைந்துவிடும். 80. நட்பு ஆராய்தல் நட்பினரை ஆராய்ந்து அறிதல். 1. நாடாது நட்டலின் கேடில்லை, நட்டபின் வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. (ப-உ) நட்பு ஆள்பவர்க்கு- நட்பை விரும்பி நிற்பவர்க்கு. நட்டபின்- ஒருவனுடன் சினேகித்தபின். வீடு இல்லை- அதனை விடும் தன்மை உண்டாகாது; ஆதலால். நாடாது- ஆராயாமல். நட்டலின்- சினேகிப்பதுபோல. கேடு இல்லை- தீமை வேறில்லை. (க-து) முன்பின் ஆராயாமல் சினேகம் பண்ணுவதுபோல் தீமை வேறு ஒன்றும் இல்லை. 2. ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை தான்சாம் துயரம் தரும். (ப-உ) ஆய்ந்து ஆய்ந்து- பலமுறை பல வழிகளில் ஆராய்ந்து. கேண்மை- நட்பு. கொள்ளாதான்- கொள்ளாதவன் செயல். கடைமுறை- முடிவில். தாம் சாம்- தான் சாவதற்குக் காரணமான. துயரம் தரும்- துன்பத்தைத் தரும். (க-து) ஆராய்ந்து கொள்ளாதவன் நட்பு சாவுக்குக் காரணமான துன்பத்தைத் தரும். 3. குணனும், குடிமையும், குற்றமும், குன்றா இன்னும்அறிந்து, யாக்க நட்பு. (ப-உ) குணனும்- குணத்தையும். குடிமையும்- குடிப் பிறப்பையும். குற்றமும்- குற்றத்தையும். குன்றா இன்னும்- குறையாத சுற்றத்தையும். அறிந்து- ஆராய்ந்த பின். நட்புயாக்க- சினேகம் செய்யவேண்டும். (க-து) ஒருவனுடைய குணம், குடிப்பிறப்பு, குற்றம், சுற்றம் இவைகளை ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும். 4. குடிப்பிறந்து, தன்கண் பழிநாணு வானைக், கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு (ப-உ) குடிப்பிறந்து- உயர்ந்த குடியில் பிறந்து. தன்கண்- தன்னிடம். பழி நாணுவானை- பழிச்சொல் வருவதற்கு அஞ்சு கின்றவனை. கொடுத்தும்- விலை கொடுத்தும். நட்பு கொளல் வேண்டும்- நட்பாகக் கொள்ளவேண்டும். (க-து) உயர்ந்த குடியிலே பிறந்து, பழிக்கு அஞ்சுகின்ற வனை விலைகொடுத்தாவது நட்பாகக் கொள்ள வேண்டும். 5. அழச்சொல்லி அல்லது, இடித்து, வழக்குஅறிய வல்லார்நட்பு, ஆய்ந்து கொளல். (ப-உ) அல்லது - தீமை செய்ய நினைத்தால். அழச் சொல்லி- அழும்படி சொல்லி. இடித்து - நெருக்கி. வழக்கு- உலக நடையை அறியாதபோது. அறியவல்லார்- அதை அறிவிக்கவும் வல்லவரின். நட்பு- சினேகத்தை. ஆய்ந்து கொளல்- ஆராய்ந்து கொள்ள வேண்டும். (க-து) தீமை செய்வதை விலக்கவும், உலக நடையை அறிவிக்கவும் வல்லவரின் நட்பையே தேடிக் கொள்ளவேண்டும். 6. கேட்டினும் உண்டுஓர் உறுதி, கிளைஞரை நீட்டி அளப்பதுஓர் கோல். (ப-உ) கேட்டினும்- கேடு வந்தாலும். ஓர் உறுதி உண்டு- அதனால் ஒரு நன்மை உண்டு. கிளைஞரை- நட்பினராகிய நிலத்தை. நீட்டி அளப்பது- குறையாமல் அளப்பதாகிய. ஓர் கோல்- ஒரு அளவு கோலாம் அது. (க-து) கெடுதி வந்தால், அப்பொழுது நட்பினரின் தன்மையை அளந்தறியலாம். ஆதலால், கெடுதியிலும் ஒரு நன்மையுண்டு. 7. ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். (ப-உ) ஒருவற்கு- ஒருவனுக்கு. ஊதியம் என்பது- இலாபம் என்பது. பேதையார்- அறிவில்லாதவரது. கேண்மை- நட்பிலிருந்து. ஒரீஇ விடல் - விலகி விடுவதாகும். (க-து) அறிவற்றவர் சினேகத்தைக் கைவிடுவதே ஒருவனுக்கு இலாபமாகும். 8. உள்ளற்க உள்ளம் சிறுகுவ; கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. (ப-உ) உள்ளம்- ஊக்கம். சிறுகுவ- குறைவதற்கான காரியங்களை. உள்ளற்க- செய்ய நினைக்காதிருக்க வேண்டும். அல்லல்கண்- தமக்குத் துன்பம் வந்தபோது. ஆற்று அறுப்பார்- கைவிடுகின்றவரின். நட்பு- சினேகத்தை. கொள்ளற்க- ஏற்றுக் கொள்ளக்கூடாது. (க-து) ஊக்கம் குன்றும் செயலைச் செய்யக்கூடாது; ஆபத்தில் உதவாதவர் நட்பைக் கொள்ளக்கூடாது. 9. கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை, அடும்காலை உள்ளினும் உள்ளம் சுடும். (ப-உ) கெடும் காலை- கெடுதி வந்தபோது. கை விடுவார்- கைவிடுகின்றவரின். கேண்மை- நட்பானது. அடும் காலை- எமன் தன்னைக் கொல்லுங் காலத்தில். உள்ளினும்- நினைத்தாலும். உள்ளம் சுடும் -மனத்தைச் சுட்டுவிடும். (க-து) ஆபத்தில் உதவாதார் நட்பைச் சாகும் காலத்தில் நினைத்தாலும் துன்பந் தரும். 10. மருவுக மாசற்றார் கேண்மை; ஒன்றுஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. (ப-உ) மாசு அற்றார்- குற்றமற்றவரது. கேண்மை- நட்பை. மருவுக- தழுவிக்கொள்ள வேண்டும். ஒப்பு இலார்- உலகத்தோடு ஒத்து நடக்காதவரின். நட்பு- நட்பை. ஒன்று ஈத்தும்- அவர் வேண்டியது ஒன்றைக் கொடுத்தாவது. ஒருவுக - கைவிட வேண்டும். (க-து) நல்லோர் நட்பைக் கொள்ளவேண்டும்; தீயோர் நட்பைக் கைவிடவேண்டும். 81. பழமை பழைய நண்பர்களின் பிழைகளைப் பொறுத்தல். 1. பழமை எனப்படுவது யாதெனின், யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (ப-உ) பழமை எனப்படுவது- பழமை என்று சொல்லப் படுவது. யாது எனின்- என்னவென்றால். கிழமையை- உரிமையுடன் செய்தவைகளை. யாதும்- சிறிதும். கீழ்த்திடா- சிதைக்காமல் ஏற்றுக்கொள்ளும். நட்பு- நட்பாகும். (க-து) பழைய நட்பினர் உரிமையுடன் செய்தவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதே நட்பாகும். 2. நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை, மற்றுஅதற்கு உப்பாதல் சான்றோர் கடன். (ப-உ) நட்பிற்கு- சினேகத்துக்கு. உறுப்பு- அங்கமாவது. கெழுதகைமை- உரிமையுடன் காரியம் செய்வதாம். மற்று அதற்கு- அவ்வுரிமைக்கு. உப்பு ஆதல்- இனியர் ஆதல் (உடன் படுதல்). சான்றோர் கடன்- அறிவுள்ளவர் கடமை. (க-து) சினேகத்துக்கு அங்கம் உரிமையுடன் செயல் செய்தலும், அதை ஒத்துக்கொள்ளுவதும் ஆகும். 3. பழகிய நட்புஎவன் செய்யும், கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. (ப-உ) கெழுதகைமை- நட்பினர் உரிமையுடன் செய்தவை களை. செய்து ஆங்கு- தாமே செய்தவைபோல். அமையாக்கடை- எண்ணிச் சம்மதிக்காராயின். பழகிய- தொன்று தொட்டுப் பழகிய. நட்பு- சினேகம். என்செய்யும்- என்ன பயனைத் தரும்? (க-து) நட்பினர் செய்தவைகளைத் தாம் செய்தவை போல் எண்ணாராயின் நட்பினால் பயன் இல்லை. 4. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால், கேளாது நட்டார் செயின். (ப-உ) நட்டார்- நட்பினர். கெழுதகையால்- உரிமையால். கேளாது- தம்மைக் கேட்காமலே. செயின்- தம் காரியத்தைச் செய்வாராயின். விழைதகையான்- அதன் விரும்பப்படும் தன்மை பற்றி அறிவுடையோர். வேண்டியிருப்பர்- அதனை விரும்புவார். (க-து) நட்பினர் உரிமையுடன் தம்மைக் கேட்காமல் செய்யும் காரியத்தையும் அறிவுடையோர் ஒப்புக்கொள்ளுவர். 5. பேதமை ஒன்றோ பெரும்கிழமை என்றுணர்க, நோதக்க நட்டார் செயின். (ப-உ) நோதக்க- தாம் வெறுக்கத்தக்கவைகளை. நட்டார் செயின்- சினேகிதர் செய்தால். பேதைமை ஒன்றோ- அதற்குக் காரணம் அறியாமை ஒன்று மட்டும் அன்று. பெரும்கிழமை- மிகுந்த உரிமையுமாம். என்று உணர்க- என்று அறியவேண்டும். (க-து) சினேகிதர் செய்யும் வெறுக்கத்தக்க செயலும் உரிமையுடன் செய்வதாகும். 6. எல்லைக்கண் நின்றார், துறவார் தொலைவுஇடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. (ப-உ) எல்லைக்கண் நின்றார்- நட்பின் வரம்பிலே நின்றவர். தொலைவு இடத்தும்- தமக்கு அழிவுவந்தாலும். தொல்லைக்கண் நின்றார்- பழமைதொட்டு நட்பாக உள்ளவரின். தொடர்பு- சினேகத்தை. துறவார்- விட்டுவிடமாட்டார். (க-து) நட்பில் நிலைத்து நின்றவர் பழைய சினேகத்தைக் கைவிடமாட்டார். 7. அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். (ப-உ) அன்பின்- அன்புடன். வழிவந்த- நெடுநாள் பழகிவந்த. கேண்மையவர்- நட்பினர். அழிவந்த- கேடுதரும் செயல்களை. செய்யினும்- செய்தாலும். அன்பு அறார்- அவரிடம் கொண்ட அன்பை விடமாட்டார். (க-து) நட்புத்தன்மையுள்ளவர், பழமையான நண்பர் தீமை செய்தாலும், அவரிடம் கொண்ட அன்பை விட்டுவிட மாட்டார். 8. கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாள்இழுக்கம் நட்டார் செயின். (ப-உ) கேள் இழுக்கம்- நட்பினரது பிழையை. கேளா- பிறர் சொன்னாலும் கேட்காத. கெழுதகைமை வல்லார்க்கு- உரிமை அறிய வல்லவர்க்கு. இழுக்கம்- பிழையை. நட்டார்செயின்- நட்பினர் செய்தால், அது. நாள் - பயனுடைய நாளாகும். (க-து) நட்பினரின் குற்றத்தைப் பொருட்படுத்தாதவர்க்கு, நட்பினர் பிழைசெய்யும் நாள் பயனுள்ள நாளாகும். 9. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை, விடாஅர் விழையும் உலகு. (ப-உ) கெடாஅ- கெடாமல். வழிவந்த- பழமையாக வந்த. கேண்மையார்- நட்பினரின். கேண்மை- சினேகத்தை. விடாஅர்- விடாதவரை. உலகு விழையும்- உலகம் விரும்பும். (க-து) பழைய நட்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பும். 10. விழையார் விழையப் படுப, பழையார்கண் பண்பில் தலைப்பிரியா தார். (ப-உ) பழையார்கண்- பழைய நட்பினரிடம், அவர் குற்றம் செய்தாலும். பண்பில்- தம் நட்புத் தன்மையிலிருந்து. தலைப் பிரியாதார்- நீங்காதவர். விழையார்- பகைவராலும். விழையப் படுப- விரும்பப்படுவார்கள். (க-து) பழைய சினேகிதரின் நட்பை விடாதவர், விரோதி களாலும் விரும்பப்படுவார்கள். 82. தீ நட்பு கெட்ட குணமுள்ளவர்கள் சினேகத்தின் தன்மை. 1. பருகுவார் போலினும், பண்பிலார் கேண்மை, பெருகலின் குன்றல் இனிது. (ப-உ) பருகுவார் போலினும்- ஆசை மிகுதியால் உண்பவர் போல் காணப்பட்டாலும். பண்பு இலார்- குணமில்லாதவரது. கேண்மை- நட்பானது. பெருகலின்- வளர்வதைவிட. குன்றல்- குறைதல். இனிது- நல்லதாம். (க-து) நற்குணமற்றவர் நட்பு வளர்வதைவிடக் குறைவதே நலமாகும். 2. உறின்நட்டு, அறின்ஒரூஉம், ஒப்பிலார் கேண்மை, பெறினும் இழப்பினும் என்ன? (ப-உ) உறின்- பயன் கிடைத்தால். நட்டு - சினேகம் செய்து. அறின்- பயன் இல்லாதபோது. ஒரூஉம்- நீங்கும். ஒப்பு இலார்- ஒப்பற்றவரின். கேண்மை- நட்பை. பெறினும்- பெற்றாலும். இழப்பினும்- இழந்தாலும். என்- என்ன பயன்? (க-து) தந்நலமுள்ளவர் நட்பைப் பெறுவதும் ஒன்றுதான்; இழப்பதும் ஒன்றுதான். 3. உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர். (ப-உ) உறுவது- தமக்கு வரும் பயனை. சீர்தூக்கும் நட்பும்- அளந்து பார்க்கும் நட்பினரும். பெறுவது- விலையை. கொள்வாரும்- கொள்ளும் வேசையரும். கள்வரும்- களவு செய்வோரும். நேர்- ஒப்பாவார்கள். (க-து) சுயநலம் கருதும் நட்பினர், வேசையர், கள்வர் இவர்கள் ஒரு தன்மையர். 4. அமர்அகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. (ப-உ) அமர் அகத்து- போர்க்களத்தில். ஆற்று அறுக்கும்- தள்ளிவிட்டு ஓடுகின்ற. கல்லா- கல்வியில்லாத. மா அன்னார்- குதிரையைப் போன்றவரின். தமரின்- நட்பைவிட. தனிமை- தனித்திருப்பதே. தலை- சிறந்ததாகும். (க-து) ஆபத்தில் கைவிடுவோர் நட்பைவிடத் தனிமையே சிறந்ததாகும். 5. செய்துஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை, எய்தலின் எய்தாமை நன்று. (ப-உ) செய்து- நன்மை செய்தாலும். ஏமம்சாரா- பாது காப்பாகாத. சிறியவர்- கீழ்மக்களின். புன்கேண்மை- தீநட்பு. எய்தலின்- உண்டாவதைவிட. எய்தாமை- இல்லாதிருப்பதே. நன்று- நல்லது. (க-து) அற்பர்களின் நட்பைப் பெறுவதைவிட, பெறாம லிருப்பதே நலம். 6. பேதை பெரும்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். (ப-உ) பேதை- அறிவில்லாதவனது. பெரும் கெழீஇ நட்பின்- மிகவும் நெருங்கிய நட்பைவிட. அறிவுடையார்- அறிவுள்ளவரின். ஏதின்மை- விரோதம். கோடி உறும்- கோடி பங்கு நன்மை தரும். (க-து) அறிவில்லார் நட்பைவிட, அறிவுள்ளவர் பகைமை நல்லது. 7. நகைவகையர் ஆகிய நட்பின், பகைவரால் பத்துஅடுத்த கோடி உறும். (ப-உ) நகைவகையர் ஆகிய- நகைப்பதற்கான வகைகளைச் செய்கின்றவர்களாகிய. நட்பின்- நட்பினரால் வரும் தீமையை விட. பகைவரால்- பகைவரால் வருபவை. பத்து அடுத்த கோடி- பத்துமடங்கு. உறும்- நன்மை உண்டாகும். (க-து) நகைப்பதற்கு மட்டும் காரணமான நட்பை விடப் பகைவரால் பத்துமடங்கு நன்மையுண்டாகும். 8. ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை, சொல்லாடார் சோர விடல். (ப-உ) ஒல்லும் கருமம்- தம்மால் முடியும் காரியத்தையும். உடற்றுபவர்- கெடுக்கின்றவரிடம் கொண்ட. கேண்மை- நட்பை. சொல்லாடார்- சொல்லாமலே. சோரவிடல்- நழுவ விடவேண்டும். (க-து) தம்மால் முடியும் காரியத்தையும் முடியாமல் கெடுப்பவரின் நட்பைச் சொல்லாமலே விட்டுவிட வேண்டும். 9. கனவினும் இன்னாது மன்னோ, வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (ப-உ) வினைவேறு- செயல்வேறு. சொல்வேறு- மொழி வேறு. பட்டார்- பட்டவரின். தொடர்பு- நட்பு. கனவிலும்- நனவில் மட்டும் அன்றிக் கனவிலும், இன்னாது- துன்பம் செய்வதாகும். மன், ஓ; அசைகள். (க-து) செயலும் சொல்லும் ஒன்றுபடாதவரின் நட்பு கனவிலும் துன்பந் தருவதாகும். 10. எனைத்தும் குறுகுதல் ஓம்பல், மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. (ப-உ) மனைக் கெழீஇ- வீட்டில் நட்புடன் இருந்து. மன்றில்- சபையிலே. பழிப்பார்- பழி பேசுகின்றவரின். தொடர்பு- நட்பை. எனைத்தும்- எவ்வளவு சிறியதாயினும். குறுகுதல்- தம்மைச் சேர்வதை. ஓம்பல்- நீக்கிவிடவேண்டும். (க-து) வீட்டிலே புகழ்ந்து, வெளியிலே இகழ்பவர் நட்பை அடியோடு கைவிட வேண்டும். 83. கூடா நட்பு சேரக்கூடாத பொருத்தமற்ற நட்பு. 1. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. (ப-உ) நேரா- மனதில் கூடாதிருந்து. நிரந்தவர்- வெளியில் கூடியிருப்பவரின். நட்பு- சினேகமானது. சீர் இடம் காணின்- சந்தர்ப்பம் கண்டால். எறிதற்கு- அடியோடு அழிப்பதற்குத் துணை செய்யும். பட்டடை- பட்டடையாகும். (க-து) போலி நட்பு, சமயம் வாய்க்கும்போது அடித்து நசுக்கும் கொல்லன் பட்டடையாகும். 2. இனம்போன்று இனம்அல்லார் கேண்மை, மகளிர் மனம்போல வேறு படும். (ப-உ) இனம்போன்று- உறவினர்போல இருந்து. இனம் அல்லார்- உறவில்லாமல் இருப்பவருடன் கொண்ட. கேண்மை- நட்பானது. மகளிர்- பெண்களின். மனம்போல- நெஞ்சம்போல. வேறுபடும்- வேறுபடுவதாகும். (க-து) நண்பர்போல நடிப்பவரின் நட்பு, பெண்கள் மனம்போல மாறுபடும். 3. பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. (ப-உ) பல நல்ல- பல நல்ல நூல்களை. கற்றக் கடைத்தும்- படித்திருந்த போதிலும். மனம் நல்லர் ஆகுதல்- மனம் திருந்தி நட்பினராகுதல். மாணார்க்கு- பகைவர்க்கு. அரிது- இல்லை. (க-து) பல நல்ல நூல்களைப் படித்திருந்தாலும், பகைவர்கள் நட்பினராக மாட்டார்கள். 4. முகத்தின் இனிய நகாஅ, அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப் படும். (ப-உ) முகத்தின்- முகத்தால். இனிய நகாஅ- இனியன வாகச் சிரித்து. அகத்து- நெஞ்சத்தில். இன்னா- தீமையைக் கொண்டிருக்கும். வஞ்சரை- வஞ்சகரைக் கண்டால். அஞ்சப்படும் - அஞ்ச வேண்டும். (க-து) முகத்தில் சிரிப்புக் காட்டி, நெஞ்சில் கெடுதி நினைக்கும் வஞ்சகர்க்கு அஞ்சவேண்டும். 5. மனத்தின் அமையா தவரை, எனைத்தொன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று. (ப-உ) மனத்தின்- மனத்தால். அமையாதவரை- ஒன்றுபடாத வரை. எனைத்து ஒன்றும்- எக்காரியத்திலும். சொல்லினால்- அவர் சொல்லைக்கொண்டு. தேறல்பாற்று- தெளியும் தன்மை. அன்று- நல்லதன்று. (க-து) மனத்தில் ஒன்றுபடாதவரின் சொல்லில் நம்பிக்கை வைப்பது நன்மையன்று. 6. நட்டார்போல் நல்லவை சொல்லினும், ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். (ப-உ) நட்டார்போல்- நண்பரைப்போல. நல்லவை- நன்மை தரும் சொற்களை. சொல்லினும்- சொன்னாலும். ஒட்டார் சொல்- பகைவரின் சொற்கள் நன்மை தராமலிருப்பதை. ஒல்லை- விரைவில். உணரப்படும்- அறியப்படும். (க-து) பகைவர், நண்பரைப்போல் நல்ல சொற்களைக் கூறினாலும் அதன் தீமை அப்பொழுதே காணப்படும். 7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க, வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். (ப-உ) வில் வணக்கம்- வில்லினது வணக்கம். தீங்கு- தீமை செய்வதை. குறித்தமையான்- குறித்தது. ஆதலால். ஒன்னார்கண்- பகைவரிடம் உண்டாகும். சொல் வணக்கம்- சொல்லின் வணக்கத்தை. கொள்ளற்க- நன்மை தரும் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. (க-து) வில் வணக்கம் தீங்கு தருவதுபோல், பகைவரின் பணிந்த சொல் தீமையைத் தரும். 8. தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார், அழுதகண் ணீரும் அனைத்து. (ப-உ) ஒன்னார்- பகைவரின். தொழுத கையுள்ளும்- கும்பிட்ட கையின் உள்ளும். படை ஒடுங்கும்- ஆயுதம் மறைந் திருக்கும். அழுத கண்ணீரும்- அவர் அழுத கண்ணீரும். அனைத்து- அவ்வாறே வஞ்சனையுள்ளதாகும். (க-து) பகைவரின் கும்பிட்ட கையின் உள்ளும் ஆயுதம் மறைந்திருக்கும். அதுபோலவே, அவர் அழுத கண்ணீரிலும் வஞ்சனை மறைந்திருக்கும். 9. மிகச்செய்து தம்எள்ளு வாரை, நகச்செய்து நட்பினுள் சாப்புல்லல் பாற்று. (ப-உ) மிகச் செய்து- வெளியில் மிகுந்த நட்புச் செய்து. தம்- தம் மனத்தில். எள்ளுவாரை- இகழும் பகைவரை. நகச்செய்து- தாமும் புறத்தில் மகிழும்படி செய்யும். நட்பினுள்- நட்பில் நின்று. சாப்புல்லல் பாற்று- அகத்தில் நட்பு இல்லாமல் தழுவிக் கொள்ளுந் தன்மையே சிறந்ததாம். (க-து) வெளியில் மட்டும் நட்புச் செய்கின்றவரிடம், தாமும் அவ்வாறே வெளியில் மட்டும் நட்புக்காட்டி, உள்ளத்தில் நட்பில்லாமல் இருக்க வேண்டும். 10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு அகநட்பு ஓரீஇ விடல். (ப-உ) பகை- பகைவர். நட்புஆம் காலம்- நண்பராக நடக்கும் காலம். வருங்கால்- வரும்போது. முகம் நட்டு- தாமும் முகத்தால் நட்புச் செய்து. அகம்- உள்ளத்தால். நட்பு- நட்பை. ஒரீஇ- நீங்கி நின்று. விடல்- பின்பு அந்த முகநட்பையும் விட்டுவிட வேண்டும். (க-து) பகைவர் நண்பரானால், முகத்தால் மட்டும் நட்புச் செய்து பின்பு அதையும் விட்டுவிட வேண்டும். 84. பேதைமை அறியாமையின் தன்மை. 1. பேதைமை என்பதும்ஒன்று யாதுஎனின், ஏதம்கொண்டு ஊதியம் போக விடல். (ப-உ) பேதைமை என்பது ஒன்று- அறியாமை என்று சொல்லப்படுவதாகிய ஒன்று. யாது எனின்- யாதென்றால். ஏதம்கொண்டு- குற்றம்தரும் காரியங்களைக் கைக்கொண்டு. ஊதியம்- இலாபம் தரும் செயல்களை. போகவிடல்- கைவிடுவ தாகும். (க-து) அறியாமை என்பது, குற்றங்களைக் கைக்கொண்டு இலாபத்தைக் கைவிடுவதாகும். 2. பேதைமையுள் எல்லாம் பேதைமை, காதன்மை கையல்ல தன்கண் செயல். (ப-உ) பேதைமையுள் எல்லாம்- அறியாமையுள் எல்லாம். பேதைமை- அறியாமையாவது. கை அல்ல தன்கண்- ஒழுக்கமற்ற செயல்களில். காதன்மை செயல்- ஆசை வைத்துச் செய்வதாகும். (க-து) ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்வதே அறியாமையுள் அறியாமையாகும். 3. நாணாமை, நாடாமை, நார்இன்மை, யாதொன்றும் பேணாமை, பேதை தொழில். (ப-உ) நாணாமை- தீமை செய்ய நாணாமை. நாடாமை- நல்லவற்றைத் தேடாமை. நார் இன்மை- அன்பில்லாமை. யாது ஒன்றும் பேணாமை- யாதொரு நன்மையையும் ஆதரிக்காமை பேதை தொழில்- இவைகள் மூடன் செய்கை. (க-து) வெட்கமில்லாமை, ஆராயாமை, அன்பில்லாமை. நன்மையை விரும்பாமை இவை மூடன் செய்கை. 4. ஓதி,உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும், தான்அடங்காப் பேதையின் பேதையார் இல். (ப-உ) ஓதி- நூல்களை ஓதியும். உணர்ந்தும்- அவற்றின் பயனை அறிந்தும். பிறர்க்கு உரைத்தும்- அதை மற்றவர்க்குச் சொல்லியும். தான் அடங்கா- தான்மட்டும் அடங்கி நடக்காத. பேதையின்- மூடனைப்போல். பேதையார்- மூடர். இல்- உலகில் இல்லை. (க-து) படித்தும், அறிந்தும், பிறர்க்குக் கூறுவானாயினும், அடக்கமற்றவன் அறிவில்லாதவன். 5. ஒருமைச் செயலாற்றும் பேதை, எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு. (ப-உ) பேதை- மூடனானவன். எழுமையும்- வரும் பிறவிகளில் எல்லாம். தான்புக்கு - தான் புகுந்து. அழுந்தும்- மூழ்குகின்ற. அளறு- நரகத்துக்குக் காரணமான தீமையை. ஒருமை- ஒரு பிறப்பிலேயே. செயல் ஆற்றும்- செய்து கொள்ள வல்லவன் ஆவான். (க-து) மூடன், ஒரு பிறப்பிலேயே இனிவரும் பிறவிகளில் எல்லாம் நரகத்தை யடையத்தக்க செயல்களைச் செய்வான். 6. பொய்படும் ஒன்றோ, புனைபூணும்; கையறியாப் பேதை வினைமேல் கொளின். (ப-உ) கைஅறியா- செய்யும் முறையை அறியாத. பேதை- மூடன். வினை- ஒரு காரியத்தை. மேற்கொளின்- செய்யத் தொடங்குவானாயின். பொய்படும்- அது கெட்டுப் போகும். ஒன்றோ- அதுமட்டுமா? புனைபூணும்- அவனும் குற்றவாளியாகி விலங்கைத் தரிப்பான். (க-து) மூடன் ஒரு காரியத்தைச் செய்வானாயின் அக்காரியம் கெடும்; அவனும் கையில் விலங்கு பூணும் குற்றவாளியாவான். 7. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர்; பேதை பெரும்செல்வம் உற்றக் கடை. (ப-உ) பேதை-மூடன். பெரும் செல்வம்- பெரிய செல்வத்தை. உற்றக்கடை- அடைந்தபோது. ஏதிலார்- அந்நியர். ஆர- நிறைய அனுபவிக்க. தமர்- சுற்றத்தார். பசிப்பர்- பசித்திருப்பர். (க-து) மூடன் செல்வம் பெற்றால் அதை அந்நியர் அனுபவிப்பர்; சுற்றத்தார் பசியால் வாடுவர். 8. மையல் ஒருவன் களித்தற்றால்; பேதை,தன் கைஒன்று உடைமை பெறின். (ப-உ) பேதை- மூடன். தன்கை- தன் கையில். ஒன்று- ஒரு பொருளை. உடைமை பெறின்- சொந்தமாகப் பெற்றானாயின். மையல் ஒருவன்- பைத்தியம் பிடித்த ஒருவன். களித்து அற்று- கள்ளுண்டு மயங்கியது போலாகும். ஆல்- அசை. (க-து) அறிவில்லாதவன் செல்வம் பெறுவானாயின் அது, பைத்தியக்காரன் கள்ளை உண்டு களிப்பது போலாகும். 9. பெரிதுஇனிது பேதையார் கேண்மை; பிரிவின்கண் பீழை தருவதுஒன்று இல். (ப-உ) பேதையார் கேண்மை- மூடர் நட்பு. பெரிது இனிது- மிகவும் நல்லது. பிரிவின்கண்- பின் பிரிவு நேர்ந்தபோது. பீழை தருவது- துன்பம் தருவதாகிய. ஒன்று- ஒரு தீமை. இல்- இல்லை. (க-து) மூடர் நட்பு பிரியும்போது துன்பம் தருவதில்லை; ஆதலால் அறிவிலார் நட்பே சிறந்தது. 10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்; சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். (ப-உ) சான்றோர்- பெரியோர்களின். குழாஅத்து- சபையில். பேதை புகல்- மூடன் புகுவது. கழாஅக்கால்- கழுவாத காலை. பள்ளியுள்- படுக்கையின்மேல். வைத்துஅற்று ஆல்- வைத்ததைப் போல ஆகும். ஆல்- அசை. (க-து) மூடன் பெரியோர் சபையுள் நுழைவது, கழுவாத காலைப் படுக்கையுள் வைத்ததுபோலாகும். 85. புல் அறிவாண்மை அற்ப அறிவைக் கைக்கொண்டிருக்கும் தன்மை. 1. அறிவின்மை இன்மையுள் இன்மை; பிறிதுஇன்மை இன்மையா வையாது உலகு. (ப-உ) இன்மையுள்- இல்லாமை பலவற்றுள்ளும். இன்மை- இல்லாமை யாவது. அறிவின்மை- அறிவில்லாமையாகும். பிறிது இன்மை- வேறு பொருள் இல்லாமையை. உலகு- உலகத்தார். இன்மையா- இல்லாமையாக. வையாது- கொள்ளமாட்டார்கள். (க-து) இல்லாமையுள் இல்லாமை அறிவின்மைதான்; பொருள் இல்லா மையை உலகத்தார் இல்லாமையாக எண்ண மாட்டார்கள். 2. அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல், பிறிதுயாதும் இல்லை, பெறுவான் தவம். (ப-உ) அறிவுஇலான்- அற்ப அறிவுள்ளவன். நெஞ்சுஉவந்து - மனம் மகிழ்ந்து. ஈதல்- ஒருவனுக்கு ஒன்றைக் கொடுத்தல். பெறுவான்- அதைப் பெறுகின்றவனது. தவம்- தவமேயாகும். பிறிது யாதும் இல்லை- வேறு ஒன்றும் இல்லை. (க-து) அறிவில்லாதவன் ஒருவனுக்கு ஒன்றைக் கொடுப்பது, பெற்றுக்கொள்ளுகிறவன் செய்த தவமேயாகும். 3. அறிவிலார், தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. (ப-உ) அறிவிலார்- சிற்றறிவுள்ளவர். தாம் தம்மை- தாங்களே தங்களை. பீழிக்கும்- துன்புறுத்திக் கொள்ளும். பீழை- துன்பத்தை. செறுவார்க்கும்- பகைவராலும். செய்தல் அரிது- செய்ய முடியாது. (க-து) அறிவில்லாதவர் தம்மைத் தாமே வருத்திக் கொள் வது போன்ற துன்பத்தைப் பகைவராலும் செய்ய முடியாது. 4. வெண்மை எனப்படுவது யாதுஎனின், `ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. (ப-உ) வெண்மை எனப்படுவது- அறியாமை என்று சொல்லப்படுவது. யாது எனின்- யாதுஎன்றால். ஒண்மை உடையம் யாம்- அறிவுடையோம் நாம். என்னும் செருக்கு- என்னும் கர்வமேயாகும். (க-து) நாமே அறிவுடையோம் என்னும் கர்வமே அறியாமையாகும். 5. கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கசடற வல்லதூஉம் ஐயம் தரும். (ப-உ) கல்லாத- ஒருவன் படிக்காத நூல்களையும். மேற் கொண்டு- கற்றவராக மேலிட்டுக்கொண்டு. ஒழுகல்- நடத்தல். கசடுஅற- குற்றம் இல்லாமல். வல்ல தூஉம்- அவன் கற்றுவல்ல நூலைப்பற்றியும். ஐயம்தரும்- சந்தேகத்தை உண்டாக்கும். (க-து) ஒருவன், தான் கல்லாதவைகளைக் கற்றோம் என்று சொல்லிக் கொள்ளுதல், அவன் கற்றிருப்பதைப் பற்றியும் சந்தேகத்தை உண்டாக்கும். 6. அற்றம் மறைத்தலோ புல்லறிவு; தம்வயின் குற்றம் மறையா வழி. (ப-உ) தம்வயின்- தம்மிடத்தில் உண்டாகும். குற்றம்- குற்றங்களை. மறையா வழி- நீக்காராயின். அற்றம்- மறைக்கத் தக்க அங்கத்தை. மறைத்தலோ- மறைத்துக் கொள்ளுவது. புல்லறிவு- சிற்றறிவாகும். (க-து) தன் குற்றங்களை நீக்காமல், மறைக்கத் தக்க அங்கத்தை மறைத்து கொள்ளுவது அறியாமையாகும். 7. அருமறை சோரும் அறிவிலான், செய்யும் பெருமிறை தானே தனக்கு. (ப-உ) அருமறை- சிறந்த இரகசியத்தை. சோரும்- மனத்தில் கொள்ளாமல் மறக்கும். அறிவிலான்- அறிவற்றவன். தானே தனக்கு- தனக்குத்தானே. பெருமிறை- பெரிய துன்பத்தை. செய்யும்- செய்து கொள்வான். (க-து) இரகசியத்தை வெளியிடும் அறிவில்லாதவன் தனக்குத்தானே துன்பத்தைத் தேடிக்கொள்ளுகிறவன் ஆவான். 8. ஏவவும் செய்கலான், தான்தேறான், அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய். (ப-உ) ஏவவும்- அறிவுடையார் சொல்லவும். செய்கலான்- செய்யமாட்டான். தான்- தானாகவும். தேறான்- அறிந்து செய்ய மாட்டான். அவ்உயிர்- அந்த உயிர். போம் அளவும்- உடலை விட்டுப் பிரியும் வரையிலும். ஓர்நோய்- உலகுக்கு ஒரு நோயாகும். (க-து) அறிவில்லாதவன் தனக்கான நன்மைகளைப் பிறர் சொல்லியும் செய்யமாட்டான்; தானே அறிந்தும் செய்ய மாட்டான். 9. காணாதான் காட்டுவான் தான்காணான்; காணாதான், கண்டானாம், தான்கண்ட வாறு. (ப-உ) காணாதான்- அறிவில்லாதவனுக்கு. காட்டுவான்- அறிவிக்கப் புகுவோன். தான் காணான்- தானே அறிவற்ற வனாவான். காணாதான்- அறி வில்லாதவன். தான்கண்ட - தான் அறிந்த. ஆறு- வழியிலேயே நடப்பதால். கண்டான்ஆம்- அறிவுள்ளவனாவான். (க-து) அறிவில்லாதவனுக்கு அறிவிக்க முன்வருவோனே அறிவில்லா தவன்; அறிவற்றவன் தன் எண்ணப்படியே நடப்பதால் அறிவுள்ளவனாவான். 10. உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான், வையத்து, அலகையா வைக்கப் படும். (ப-உ) உலகத்தார்- உலகத்தோரால். உண்டு என்பது- உண்டு என்று சொல்வதை. இல்என்பான் - இல்லை என்று சொல்லுகின்ற அறிவற்றவன். வையத்து- உலகிலே. அலகையா- ஒரு பேயாக. வைக்கப்படும்- ஒதுக்கி வைக்கப்படுவான். (க-து) உலகத்தார் உண்டு என்பதை இல்லை என்பவன் மனிதனாக எண்ணப்படமாட்டான்; ஒரு பேயாக எண்ணி ஒதுக்கிவைக்கப்படுவான். 86. இகல் வலிமையை அழிக்கும் மாறுபாடான பகைமை உணர்ச்சி. 1. இகல்என்ப; எல்லா உயிர்க்கும், பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். (ப-உ) எல்லா உயிர்க்கும்- எல்லா உயிர்களுக்கும். பகல் என்னும்- பிரிந்து நிற்பது என்னும். பண்பு இன்மை- தீய குணத்தை. பார்க்கும்- வளர்க்கும். நோய்- நோயானது. இகல் என்ப- மாறுபாடு என்பர். (க-து) எல்லாவுயிர்களுக்கும், கெட்ட குணத்தை வளர்க்கும் குற்றம், பகைமையே யாகும். 2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. (ப-உ) பகல் கருதி- பிரிந்து நிற்க நினைத்து. பற்றா- அன்பற்ற காரியங்களை. செயினும்- ஒருவன் செய்தாலும். இகல் கருதி- அவனோடு மாறுபடுவதால் வரும் தீமையை எண்ணி. இன்னா செய்யாமை- துன்பம் செய்யாமையே. தலை- உயர்வாகும். (க-து) ஒருவன், வெறுக்கும் செயல்களைச் செய்தாலும் அவனுக்குத் துன்பம் செய்யாமையே உயர்ந்த குணம். 3. இகல்என்னும் எவ்வநோய் நீக்கின், தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும். (ப-உ) இகல் என்னும்- மாறுபாடு என்னும். எவ்வம் நோய்- துன்பம் தரும் நோயை. நீக்கின்- ஒருவன் தன் உள்ளத்திலிருந்து நீக்கிவிடுவானாயின் அது. தவல் இல்லா- குற்றம் இல்லாத. தாவில்- கெடாத. விளக்கம் தரும்- புகழைக் கொடுக்கும். (க-து) ஒருவன் மனத்திலிருந்து மாறுபாட்டை நீக்கு வானாயின், அதுவே அவனுக்குப் புகழைத் தரும். 4. இன்பத்துள் இன்பம் பயக்கும்; இகல்என்னும் துன்பத்துள் துன்பம் கெடின். (ப-உ) இகல் என்னும்- மாறுபாடு என்னும். துன்பத்துள் துன்பம்- துன்பங்களில் மிகுந்த துன்பமானது. கெடின்- இல்லை யானால் அதுவே. இன்பத்துள்- இன்பங்களில் சிறந்த. இன்பம் பயக்கும்- இன்பத்தைத் தரும். (க-து) மாறுபாடு என்னும் துன்பத்தை விடுகின்றவனே மிகுந்த இன்பத்தை அடைவான். 5. இகல்எதிர் சாய்ந்துஒழுக வல்லாரை யாரே மிகல்ஊக்கும் தன்மை யவர். (ப-உ) இகல்- மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளாமல். எதிர் சாய்ந்து- அதன் எதிரே திரும்பிக்கொண்டு. ஒழுக வல்லாரை- நடக்க வல்லவரை. மிகல்ஊக்கும்- வெல்ல நினைக்கும். தன்மை யவர்- தன்மையுள்ளவர். யாரே- யாவர்? (க-து) மாறுபாட்டை நீக்க வல்லவரை யாராலும் வெல்ல முடியாது. 6. இகலின்மிகல் இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. (ப-உ) இகலின் மிகல்- மாறுபடுவதில் மிகுந்து நிற்பதே. இனிது என்பவன்- எனக்கு இனிமையானது என்பவனது. வாழ்க்கை- வாழ்க்கையானது. தவலும்- குற்றத்தையும். கெடலும்- அழிவையும். நணித்து- விரைவில் அடையும். (க-து) மாறுபடுவதுதான் நல்லது என்பவன் வாழ்வு விரைவில் அழியும். 7. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார்; இகல்மேவல் இன்னா அறிவி னவர். (ப-உ) இகல் மேவல்- மாறுபாடு அமைந்த. இன்னா- துன்பம் செய்கின்ற. அறிவினவர்- அறிவுள்ளவர். மிகல் மேவல்- வெற்றி பொருந்திய. மெய்ப்பொருள்- நீதிநூல் பொருள்களை. காணார்- அறியமாட்டார். (க-து) மாறுபாட்டால் துன்பம் செய்யும் அறிவுள்ளவர், நீதி நூல்களின் பொருளை அறியமாட்டார். 8. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்; அதனை மிகல்ஊக்கின் ஊக்குமாம் கேடு. (ப-உ) இகலிற்கு- உள்ளத்தில் மாறுபாடு தோன்றிய போது. எதிர் சாய்தல்- அதை ஏற்றுக்கொள்ளாமல் சாய்வதே. ஆக்கம்- நன்மையாகும். அதனை- அம் மாறுபாட்டில். மிகல் ஊக்கின்- செல்வதை மேற்கொள்ளுவானாயின். கேடு ஊக்குமாம் - அவனிடம் கேடு வருவதாகும். (க-து) மாறுபாட்டை விலக்குவதே நன்மை; அதை மேற்கொள்வது கேடாகும். 9. இகல்காணான் ஆக்கம் வருங்கால்; அதனை மிகல்காணும் கேடு தரற்கு. (ப-உ) ஆக்கம் வருங்கால்- ஒருவன் செல்வம் வரும்போது. இகல் காணான்- மாறுபாட்டை நினைக்க மாட்டான். கேடு தரற்கு- தனக்குக் கேடு தருவதற்கே. அதனை- அந்த மாறு பாட்டில். மிகல்- செல்வதை. காணும்- நினைப்பான். (க-து) ஒருவன் செல்வம் வரும்போது மாறுபாட்டை நினைக்கமாட்டான்; கேடு வரும்போது அதை நினைப்பான். 10. இகலான்ஆம் இன்னாத எல்லாம்; நகலான்ஆம் நன்னயம் என்னும் செருக்கு. (ப-உ) இகலான்- மாறுபாடு ஒன்றினாலேயே. இன்னாத எல்லாம்- துன்பங்கள் எல்லாம். ஆம்- உண்டாகும். நகல் ஆன்- நட்பு ஒன்றினாலேயே. நல்நயம் என்னும்- நல்ல நீதி என்னும். செருக்கு- பெரும் செல்வம். ஆம்- உண்டாகும். (க-து) மாறுபாட்டால் துன்பங்கள் உண்டாகும்; நட்பால் செல்வம் உண்டாகும். 87. பகைமாட்சி பகையின் பெருமையால் வரும் தீமைகள். 1. வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக; ஓம்பா மெலியார்மேல் மேக பகை. (ப-உ) வலியார்க்கு- தம்மைவிட வலியவர்மேல். மாறு ஏற்றல்- எதிராகப் பகை கொள்ளுவதை. ஓம்புக- விட்டுவிட வேண்டும். மெலியார்மேல்- மெலியவர்மேல். பகை- பகை கொள்வதை. ஓம்பா- விடாமல். மேக- விரும்ப வேண்டும். (க-து) வலியாரைப் பகைத்தல் கூடாது; மெலியார் பகையை விரும்பவேண்டும். 2. அன்பிலன், ஆன்ற துணையிலன், தான்துவ்வான், என்பரியும் ஏதிலான் துப்பு. (ப-உ) அன்பிலன்- தன் சுற்றத்தார்மேல் அன்பில்லாதவன். ஆன்ற துணை இலன்- சிறந்த துணையும் இல்லாதவன். தான் துவ்வான்- தானும் வலிமையற்றவன். ஏதிலான் துப்பு- இவன் பகைவனது வலிமையை. என்பரியும்- எப்படித் தொலைப்பான்? (க-து) அன்பும், துணையும், வலிமையும் இல்லாதவன் பகைவனை வெல்ல முடியாது. 3. அஞ்சும், அறியான், அமைவிலன், ஈகலான், தஞ்சம்; எளியன் பகைக்கு. (ப-உ) அஞ்சும்- அஞ்ச வேண்டாதவைகளுக்கு அஞ்சுவான். அறியான்- அறியவேண்டியவைகளை அறியமாட்டான். அமைவு இலன்- பிறரோடு சேரமாட்டான். ஈகலான்- கொடுக்கமாட்டான். பகைக்கு- இவன் பகைவர்க்கு. தஞ்சம்- தஞ்சமாவான். எளியன்- எளிதில் வெல்லப்படுவான். (க-து) அஞ்சுகின்றவன், அறியாதவன், நட்பில்லாதவன். உலோபி ஆகியவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். 4. நீங்கான் வெகுளி, நிறையிலன், எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. (ப-உ) வெகுளிநீங்கான்- கோபத்திலிருந்து நீங்காதவனும். நிறை இலன்- உள்ளத்தை ஒரு வழியிலே நிறுத்தாதவனும் ஆயின். எஞ்ஞான்றும்- அவன் எந்நாளும். யாங்கணும்- எவ்விடத்திலும். யார்க்கும்- யாவருக்கும். எளிது- எளியவன் ஆவான். (க-து) கோபமும் மனஉறுதியின்மையும் உடையவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான். 5. வழிநோக்கான், வாய்ப்பன செய்யான், பழிநோக்கான். பண்பிலன் பற்றார்க்கு இனிது. (ப-உ) வழிநோக்கான்- நீதிநூல்களைக் கல்லான். வாய்ப்பன செய்யான்- விதித்தவைகளைச் செய்யமாட்டான். பழிநோக்கான்- பழியையும் பார்க்கமாட்டான். பண்புஇலன்- நற்குணமும் இல்லாதவன். பற்றார்க்கு- அவன் பகைவர்க்கு. இனிது- இன்பமாவான். (க-து) நீதியை அறியாதவன், நன்மை செய்யாதவன், பழிக்கு அஞ்சாதவன், நற்குணமற்றவன் ஆகிய ஒருவன் பகைவ ரால் எளிதில் வெல்லப்படுவான். 6. காணாச் சினத்தான், கழிபெரும் காமத்தான் பேணாமை, பேணப் படும். (ப-உ) காணாச் சினத்தான்- அறிவற்ற கோபத்தை யுடையவனும். கழிபெரும்- மிகுந்த. காமத்தான்- காமத்தை யுடையவனும். பேணாமை - ஆகிய ஒருவன் பகையை. பேணப்படும்- விரும்பி ஏற்றுக்கொள்ளப்படும். (க-து) கோபத்தையும், காமத்தையும் உடையவன் எளிதில் பகைவரால் வெல்லப்படுவான். 7. கொடுத்தும் கொளல்வேண்டும், மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. (ப-உ) அடுத்து இருந்து- தன்னுடன் சேர்ந்திருந்து. மாணாத செய்வான்- தீமை செய்கின்றவனது. பகை- விரோதத்தை. கொடுத்தும்- ஒரு பொருளைக் கொடுத் தாவது. மன்ற- நிச்சயமாக. கொளல் வேண்டும்- ஏற்றுக்கொள்ள வேண்டும். (க-து) தன்னோடிருந்து தீமை செய்கின்றவன் பகையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். 8. குணன்இலனாய்க் குற்றம் பலவாயின், மாற்றார்க்கு இனன்இலனாம், ஏமாப்பு உடைத்து. (ப-உ) குணம் இலனாய்- ஒருவன் நற்குணம் இல்லாத வனாய். குற்றம் பல ஆயின்- குற்றங்கள் பல உடையவன் ஆயின். இனன் இலன் ஆம்- அவன் துணையில்லாதவன் ஆவான். மாற்றார்க்கு- பகைவர்க்கு, அவனது நிலைமை. ஏமாப்பு- துணை செய்யும் தன்மை. உடைத்து- உடையதாகும். (க-து) ஒருவன் குணமில்லாமையும், குற்றங்களும் உடை யவன் ஆயின் அவன் பகைவர்க்கு எளியவன். 9. செறுவார்க்குச் சேண்இகவா இன்பம்; அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். (ப-உ) அறிவு இலா- நீதியை அறியாத. அஞ்சும்- அஞ்சு கின்ற. பகைவர்ப் பெறின்- பகைவரைப் பெற்றால். செறுவார்க்கு- அவரை வெல்லுகின்றவர்க்கு. சேண்- உயர்ந்த. இன்பம்- இன்பங்கள். இகவா- நீங்காமல் நிற்கும். (க-து) அறிவற்ற, அச்சமுள்ள பகைவரை வெல்லுவோர்க்கு உயர்ந்த இன்பம் உண்டு. 10. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லாது ஒளி. (ப-உ) கல்லான்- நீதிநூல்களைக் கற்காதவனுடன். வெகுளும் - பகைத்துக் கொள்ளும். சிறுபொருள்- சிறிய பொருளை. ஒல்லானை- அடையாதவனை. எஞ்ஞான்றும்- எந்நாளும். ஒளி- புகழ். ஒல்லாது- சேராது. (க-து) கல்லாதவனுடன் பகைத்துக்கொள்ளாதவனுக்குப் புகழ் இல்லை. 88. பகைத்திறம் தெரிதல் பகையின் தன்மையைத் தெரிந்து கொள்ளுதல். 1. பகையென்னும் பண்பில் அதனை, ஒருவன் நகையேயும், வேண்டற்பாற்று அன்று. (ப-உ) பகை என்னும்- பகையென்று சொல்லப்படும். பண்புஇல் அதனை- நன்மையில்லாத அச்செயலை. ஒருவன் நகையேயும்- ஒருவன் விளையாட்டில்கூட. வேண்டல்பாற்று அன்று- விரும்பத்தக்கது அன்று. (க-து) பகை என்னும் தீமையை ஒருவன் விளையாட்டிலும் விரும்பக் கூடாது. 2. வில்ஏர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க, சொல்ஏர் உழவர் பகை. (ப-உ) வில்ஏர் - ஒருவன் வில்லை ஏராக உடைய. உழவர்- உழவருடன். பகைகொளினும்- பகைத்துக் கொண்டாலும். சொல்ஏர்- சொல்லை ஏராக உடைய. உழவர்- உழவருடன். பகை கொள்ளற்க- விரோதம் கொள்ளக்கூடாது. (க-து) வீரர்களை விரோதித்துக்கொண்டாலும் அறிஞர் களுடன் விரோதித்துக்கொள்ளக் கூடாது. 3. ஏமுற் றவரினும் ஏழை; தமியனாய்ப், பல்லார் பகைகொள் பவன். (ப-உ) தமியனாய்- தனியாக நின்று. பல்லார்- பலரோடு. பகை கொள்பவன்- பகைத்துக் கொள்ளுகின்றவன். ஏம் உற்ற வரினும்- பைத்தியம் பிடித்தவரைவிட ஏழை- அறிவற்றவன். (க-து) தனித்திருந்து பலர் விரோதத்தைத் தேடிக் கொள் பவன், பைத்தியக்காரனைவிட. அறிவற்றவன். 4. பகை நட்பாக் கொண்டுஒழுகும் பண்புடையாளன், தகைமைக்கண் தங்கிற்று உலகு. (ப-உ) பகை- பகைவரையும். நட்பாக் கொண்டு- நட்பாகக் கொண்டு. ஒழுகும்- நடக்கும். பண்புடையாளன்- தன்மையுள்ள வனது. தகைமைக்கண்- பெருந்தன்மையிலே. உலகு- உலகம். தங்கிற்று- தங்கியது. (க-து) பகையை நட்பாகக் கொண்டு நடக்கும் பெருமையில் உலகம் வாழ்கின்றது. 5. தன்துணை இன்றால், பகைஇரண்டால், தான்ஒருவன், இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. (ப-உ) தன்துணை- தனக்குத் துணை. இன்று ஆல்- இல்லை. பகை- பகையோ. இரண்டுஆல்- இரண்டாகும். தான் ஒருவன்- இந்நிலையில் ஒருவனாகிய தான். அவற்றின் ஒன்று- அப் பகைகளில் ஒன்றை. இன்துணையா- இனிய துணையாக. கொள்க- கொள்ளவேண்டும். (க-து) துணையின்றித் தனித்திருப்பவன், தன்னை எதிர்த்த இரு பகையில் ஒன்றைத் துணையாகக்கொள்ள வேண்டும். 6. தேறினும் தேறா விடினும், அழிவின்கண், தேறான் பகாஅன் விடல். (ப-உ) தேறினும்- தெளிந்தானாயினும். தேறா விடினும்- தெளிந் திலனாயினும். அழிவின்கண்- தனக்குத் தாழ்வு வந்த போது. தேறான்- அவனுடன் கூடாமலும். பகாஅன்- நீங்காமலும். விடல்- விட்டுவைக்க வேண்டும். (க-து) பகைவனைத் தெரிந்துகொண்டாலும் சரி, தெரிந்து கொள்ளா விட்டாலும் சரி, தனக்குத் தாழ்வு வரும்போது அவனுடன் சேராமலும், பிரியா மலும் இருக்கவேண்டும். 7. நோவற்க, நொந்தது அறியார்க்கு; மேவற்க, மென்மை பகைவர் அகத்து. (ப-உ) நொந்தது- தான் துன்புறுவதை. அறியார்க்கு- தாமே அறியாத நட்பினர்க்கு. நோவற்க- தன் துன்பத்தைச் சொல்லா திருக்க வேண்டும். மென்மை- தன் மெலிமை. பகைவர் அகத்து- பகைவரிடம். மேவற்க- மேவும்படி செய்யக்கூடாது. 8. வகையறிந்து, தற்செய்து, தற்காப்ப, மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. (ப-உ) வகையறிந்து- செய்யும் வகையை அறிந்து. தன்செய்து- தன்னையும் வலுப்படுத்திக்கொண்டு. தன் காப்ப- தன்னைக் காத்துகொண்டால். பகைவர்கண்- பகைவர்களிடம். பட்ட- உண்டாகிய. செருக்கு- கர்வம். மாயும்- கெடும். (க-து) தொழில்செய்யும் வகையை அறிந்து, தன்னையும் வலுப்படுத்திக் கொண்டு, தன்னைக் காத்துக் கொண்டால் பகைவர்களின் செருக்கு அழியும். 9. இளைதாக முள்மரம் கொல்க; களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. (ப-உ) முள் மரம்- முள்ளு மரத்தை. இளைதாக- செடியாக இருக்கும்போதே. கொல்க- வெட்டவேண்டும். காழ்த்த இடத்து- முற்றியபோது. களையுநர்- அதை வெட்டுகின்றவரது. கை கொல்லும்- கையைத் துன்புறுத்தும். (க-து) முள் மரத்தைச் செடியிலேயே களைந்து விட வேண்டும்; அது முற்றினால், அதை வெட்டுகின்றவரின் கையைத் துன்புறுத்தும். 10. உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற; செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். (ப-உ) செயிர்ப்பவர்- பகைப்பவருடைய. செம்மல்- கர்வத்தை. சிதைக்கலா தார்- கெடுக்காதவர்கள். உயிர்ப்ப- பின்பு அவர் மூச்சுவிடவே. மன்ற- நிச்சயமாக. உளர் அல்லர்- எதிர் நிற்காமல் அழிவர். (க-து) பகைவரின் கர்வத்தை அழிக்காதவர், பின்பு அவர் மூச்சுவிட்டாலே அழிந்துவிடுவர். 89. உட்பகை வெளிப்பகைக்கு இடம் தரும் உள்பகை 1. நிழல்நீரும், இன்னாத இன்னா; தமர்நீரும், இன்னாவாம் இன்னா செயின். (ப-உ) நிழல் நீரும்- நிழலும் நீரும். இன்னாத- நோய் தருவனவாயின். இன்னா- தீமையாம். தமர் நீரும்- சுற்றத்தார் தன்மையும். இன்னா செயின்- துன்பம் செய்யுமாயின். இன்னா ஆம்- நன்மையல்லவாம். (க-து) நோய்தரும் நிழலும் நீரும் துன்பம் செய்வது போல, சுற்றத்தாரின் கெட்டகுணமும் தீமைதரும். 2. வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. (ப-உ) வாள்போல்- வாள்போல் வெளிப்படையாக நிற்கும். பகைவரை- பகைவரைக் கண்டு. அஞ்சற்க- அஞ்சவேண்டாம். கேள்போல்- உறவினரைப் போல. மறைந்து நிற்கும். பகைவர்- பகைவருடைய. தொடர்பு- நட்புக்கு. அஞ்சுக- அஞ்சவேண்டும். (க-து) வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டு வதில்லை; உறவினராக நடிக்கும் பகைவர்க்கு அஞ்சவேண்டும். 3. உட்பகை அஞ்சித் தற்காக்க, உலைவுஇடத்து மட்பகையின் மாணத் தெறும். (ப-உ) உள்பகை- உட்பகையினருக்கு. அஞ்சி- பயந்து. தன்காக்க- தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். உலைவு இடத்து- இன்றேல், தளர்ச்சியடைந்தபோது. மண்பகையின்- மண்பாண்டத்தை அறுக்கும் ஆயுதம்போல. மாண- தவறாமல். தெறும்- பகைவர் தன்னை அழிப்பர். (க-து) உட்பகைக்கு அஞ்சிக் காத்துக்கொள்ள வேண்டும். இன்றேல், பகைவர் தன்னை அழிப்பர். 4. மனம்மாணா உட்பகை தோன்றின், இனம்மாணா ஏதம் பலவும் தரும். (ப-உ) மனம் மாணா- ஒருவனுக்கு உள்ளந்திருந்தாத. உட்பகை தோன்றின்- உட்பகை உண்டாகுமானால் அது. இனம்மாணா- சுற்றத்தாரின் தொடர்பு நீங்கும்படியான. ஏதம் பலவும்- குற்றங்கள் பலவற்றையும். தரும்- கொடுக்கும். (க-து) உட்பகை உறவினரை நீக்கி, குற்றங்கள் பலவற்றையும் கொடுக்கும். 5. உறன்முறையான் உட்பகை தோன்றின், இறன்முறையான் ஏதம் பலவும் தரும். (ப-உ) உறன்முறையான்- உறவு முறையோடு கூடிய. உட்பகை தோன்றின்- உட்பகை உண்டானால் அது. இறன் முறையான்- இறக்கும்படியான. ஏதம் பலவும்- குற்றங்கள் பலவற்றையும். தரும்-கொடுக்கும். (க-து) சுற்றத்தாரின் உட்பகை உண்டானால் அது இறக்கும்படியான குற்றங்கள் பலவற்றைக் கொடுக்கும். 6. ஒன்றாமை ஒன்றியார் கண்படின், எஞ்ஞான்றும், பொன்றாமை ஒன்றல் அரிது. (ப-உ) ஒன்றாமை- பகைமை. ஒன்றியார்கண்- தம்முடன் சேர்ந்திருப்பவரிடம். படின்- தோன்றினால். பொன்றாமை ஒன்றல்- இறவாமல் வாழ்தல். எஞ்ஞான்றும்- எந்நாளும். அரிது- இல்லை. (க-து) ஒருவனைச் சேர்ந்திருப்போர் பகைவராயின் அவன் ஒருநாளும் உயிர்வாழ மாட்டான். 7. செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், கூடாதே உட்பகை யுற்ற குடி. (ப-உ) செப்பின்- செம்பினது. புணர்ச்சிபோல்- சேர்க்கை போல. கூடினும்- வெளியில் வேற்றுமையின்றிச் சேர்ந்திருந் தாலும். உட்பகைஉற்ற- உள்ளே பகைமையுள்ள. குடி- குடியில் உள்ளார். கூடாதே- மனம் ஒன்றுபட்டு வாழமாட்டார். (க-து) உட்பகை பொருந்திய குடியில் உள்ளவர்கள் மனத்தால் ஒன்றுபட்டு வாழமாட்டார். 8. அரம்பொருத பொன்போலத் தேயும், உரம்பொருது உட்பகை யுற்ற குடி. (ப-உ) உட்பகை உற்ற குடி- உட்பகையைப் பெற்ற குடியானது. அரம்பொருத- அரத்தால் தேய்க்கப்பட்ட. பொன் போல- இரும்புபோல. பொருது- தேய்க்கப்பட்டு. உரம்- வலிமை. தேயும்- அழியும். (க-து) உட்பகையுள்ள குடி, அரத்தால் தேய்க்கப்பட்ட இரும்புபோல் அழியும். 9. எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை, உள்ளதாம் கேடு. (ப-உ) உட்பகை- உட்பகையானது. எள்பகவு அன்ன- எள்ளின் பிளவு போன்ற. சிறுமைத்தே ஆனும்- சிறுமையை உடையதாயினும். கேடுஉள்ளதுஆம்- அதனால், கெடுதி உண்டாகும். (க-து) உட்பகை எள்ளின் பிளப்பைப் போன்று சிறிதா யிருந்தாலும், அதனால் கெடுதியுண்டாகும். 10. உடம்பாடு இலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போடு உடன்உறைந்து அற்று. (ப-உ) உடம்பாடு இலாதவர்- மன ஒற்றுமை இல்லாத வருடன். வாழ்க்கை- சேர்ந்து வாழும் வாழ்க்கை. குடங்கருள்- ஒரு குடிசையினுள். பாம்போடு- நாகப்பாம்புடன். உடன் உறைந்து அற்று- கூடி வாழ்ந்ததைப் போலாகும். (க-து) மன ஒற்றுமையில்லாதவருடன் சேர்ந்து வாழும் வாழ்வு, ஒரு குடிசையுள் நாகப்பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும். 90. பெரியாரைப் பிழையாமை பெரியோரை அவமதிக்காமை. 1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை, போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. (ப-உ) ஆற்றுவார்- காரியங்களை முடிக்க வல்லவர்களின். ஆற்றல்- வல்லமையை. இகழாமை- அவமதிக்காமைதான். போற்றுவார்- தம்மைக் காத்துக் கொள்ளுகின்றவரின். போற்றலுள் எல்லாம்- காவல்களில் எல்லாம். தலை- சிறந்ததாம். (க-து) வல்லவரின் ஆற்றலை இகழாமைதான், ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ளும் காவல்களில் தலை சிறந்தது. 2. பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரால் பேரா இடும்பை தரும். (ப-உ) பெரியாரை- வலிமையுள்ளவரை. பேணாது- மதிக்காமல். ஒழுகின்- நடப்பாராயின். பெரியாரால்- அந் நடத்தையானது, பெரியாரால். பேரா- நீங்காத. இடும்பை- துன்பங்களை. தரும் - கொடுக்கும். (க-து) பெரியோரை அவமதிப்பதினால் நீங்காத தீமை யுண்டாகும். 3. கெடல்வேண்டின் கேளாது செய்க; அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. (ப-உ) கெடல்வேண்டின்- ஒருவன் தான் அழிய விரும்பினால். கேளாது செய்க- கேட்காமல் குற்றம் செய்க. அடல்வேண்டின்- பகைவர் தன்னை அழிப்பதை விரும்பினால். ஆற்றுபவர்கண்- காரியத்தைச் செய்யவல்ல பெரியோரிடம். இழுக்கு- குற்றம் செய்க. (க-து) தான் கெட விரும்பினால் குற்றம் செய்க; பகை வரால் அழிய விரும்பினால் பெரியோர்க்குத் தீமைசெய்க. 4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால், ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். (ப-உ) ஆற்றுவார்க்கு- வல்லமையுள்ளவர்க்கு. ஆற்றாதார்- வல்லமை யில்லாதவர். இன்னா செயல் - தீமைகளைச் செய்வது. கூற்றத்தை- தானே வரும் எமனை. கையால்- கைகாட்டி. விளித்து அற்றுஆல்- அழைத்ததைப் போலாகும். ஆல்: அசை. (க-து) வல்லமை உள்ளவர்க்கு வல்லமையற்றவர் தீமை செய்தல், எமனைக் கைகாட்டி அழைப்பது போலாகும். 5. யாண்டுச்சென்று யாண்டும் உளர்ஆகார், வெம்துப்பின் வேந்து செறப்பட் டவர். (ப-உ) வெம்துப்பின்- கொடிய வலிமையுள்ள. வேந்து- அரசனால். செறப்பட்டவர்- கோபிக்கப்பட்டவர். யாண்டுச் சென்று- அவனிடமிருந்து தப்பி எங்கே சென்றாலும். யாண்டும்- எவ்விடத்தும். உளர் ஆகார்- தப்பித்து வாழ முடியாதவர் ஆவார். (க-து) வலிமையுள்ள அரசன் கோபத்துக்கு ஆளானவர் எங்கு சென்றாலும் உயிர்வாழ முடியாது. 6. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்; உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். (ப-உ) எரியால்- நெருப்பால். சுடப்படினும்- சுடப் பட்டாலும். உய்வுஉண்டாம்- உயிர் பிழைத்தல் கூடும். பெரியார்- பெரியார்க்கு. பிழைத்து ஒழுகுவார்- குற்றம் செய்து நடப்பவர். உய்யார் - உயிர் பிழைக்கமாட்டார். (க-து) தீயினால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளலாம்; பெரியார்க்குப் பிழை செய்தால் உயிர்வாழ முடியாது. 7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். (ப-உ) தகைமாண்ட - பெருமையால் சிறந்த. தக்கார்- தவசிகள். செறின்- கோபிப்பாராயின். வகை- பலவகை அங்கங்களால். மாண்ட- அழகு பெற்ற. வாழ்க்கையும்- அரச வாழ்க்கையும். வான் பொருளும்- பெரும்பொருளும். என்ஆம் - என்ன பயனைத் தரும்? (க-து) பெரியோர் கோபித்தால் அரசனது ஆட்சியும் செல்வமும் அழியும். 8. குன்றன்னார் குன்ற மதிப்பின், குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. (ப-உ) குன்று அன்னார்- மலைபோன்ற பெரியார். குன்ற மதிப்பின்- அழியும்படி நினைப்பாராயின். நிலத்து- இந்நிலத்திலே. நின்ற அன்னார்- நிலைபெற்றவர்போல் உள்ள செல்வர். குடியோடு- தம் குடியுடன். மாய்வர்- அழிவர். (க-து) பெரியோர் கெடுதி நினைப்பாராயின் செல்வர் தம் குடியோடு அழிவார். 9. ஏந்திய கொள்கையார் சீறின், இடைமுரிந்து வேந்தனும் வெந்து கெடும். (ப-உ) ஏந்திய கொள்கையார்- உயர்ந்த கொள்கைகளை யுடையவர். சீறின்- கோபிப்பாராயின். வேந்தனும்- இந்திரனும். இடைமுரிந்து- இடைக்காலத்திலே தன் பதவி இழந்து. வெந்து கெடும்- அழிந்து கெடுவான். (க-து) தவத்தில் சிறந்தவர் கோபித்தால் இந்திரனும் அழிவான். 10. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும், உய்யார்; சிறந்தமைந்த சீரார் செறின். (ப-உ) சிறந்து அமைந்த- மிகுந்த. சீரார்- தவத்தை யுடையவர். செறின்- கோபிப்பாராயின். இறந்து அமைந்த- அளவுகடந்த. சார்புடையர் ஆயினும்- துணையை உடைய வரானாலும். உய்யார்- தப்பிக்க மாட்டார். (க-து) தவமுள்ளோர் கோபித்தால். மிகுந்த துணையை உடையவரும் உயிர் வாழமாட்டார். 91. பெண்வழிச் சேறல் பெண்சொல் கேட்டு நடப்பதால் வரும் தீமை. 1. மனைவிழைவார், மாண்பயன் எய்தார்; வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. (ப-உ) மனைவிழைவார்- மனையாளை விரும்பி அவள் சொற்படி நடப்பவர். மாண்பயன்- சிறந்த அறமாகிய பயனை. எய்தார்- அடையமாட்டார். வினைவிழைவார்- பொருள் சம்பாதிக்கும் தொழிலை விரும்புகின்றவர். வேண்டாப் பொருளும்- வெறுக்கும் பொருளும். அது- அதுதான். (க-து) மனையாள் விருப்பப்படி நடப்பவர் அறத்தையும் பொருளையும் இழப்பர். 2. பேணாது, பெண்விழைவான் ஆக்கம், பெரியதுஓர் நாணாக, நாணுத் தரும். (ப-உ) பேணாது- தன் ஆண்மையை விரும்பாமல். பெண் விழைவான்- மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனது. ஆக்கம்- செல்வம். பெரியது ஓர் நாண்ஆக- பெரியதொரு நாணமாக மாறி. நாணுத்தரும்- வெட்கத்தைத் தரும். (க-து) ஆண்மையின்றி மனையாளின் பெண் தன்மையை விரும்பு கின்றவனது செல்வம் நாணத்தைத் தரும். 3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை, எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். (ப-உ) இல்லாள்கண்- மனைவியிடம். தாழ்ந்த- பணிந்து நடக்கும். இயல்பு இன்மை- ஆண்மையின்மை. எஞ்ஞான்றும்- எந்நாளும். நல்லாருள்- நல்லவரிடம் செல்லுங்கால். நாணுத் தரும்- வெட்கத்தைக் கொடுக்கும். (க-து) மனையாளுக்குப் பணிந்து நடக்கும் தன்மை எந்நாளும் வெட்கத்தை உண்டாக்கும். 4. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன், வினையாண்மை, வீறுஎய்தல் இன்று. (ப-உ) மனையாளை அஞ்சும்- மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற. மறுமை இலாளன்- மறுமைப்பயன் இல்லாதவனுக்கு. வினை ஆண்மை- செயலை முடிக்கும் தன்மையிருந்தாலும். வீறுஎய்தல் இன்று- அது சிறப்படைதல் இல்லை. (க-து) மனைவிக்கு அஞ்சுகின்றவன் செய்யும் செயல் பெருமை அடையாது. 5. இல்லாளை அஞ்சுவான் அஞ்சும், மற்றுஎஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். (ப-உ) இல்லாளை அஞ்சுவான்- மனைவிக்குப் பயப் படுகின்றவன். மற்று எஞ்ஞான்றும்- எந்நாளும். நல்லார்க்கு- நல்லவர்களுக்கு. நல்ல செயல்- நன்மை செய்வதற்கு. அஞ்சும் - அஞ்சுவான். (க-து) மனைவிக்குப் பயப்படுகின்றவன், நல்லவர்களுக்கு நன்மை செய்ய அஞ்சுவான். 6. இமையாரின் வாழினும் பாடுஇலரே, இல்லாள் அமைஆர்தோள் அஞ்சு பவர். (ப-உ) இல்லாள்- மனைவியின். அமைஆர் தோள்- மூங்கிலின் தன்மை பொருந்திய தோளுக்கு. அஞ்சுபவர்- பயப்படுகின்றவர். இமையாரின்- தேவரைப்போல. வாழினும்- வாழ்ந்தாலும். பாடு இலர்ஏ- பெருமை இல்லாதவர் ஆவர். ஏ: அசை. (க-து) மனைவிக்கு அஞ்சுகின்றவர் பெருமையடைய மாட்டார். 7. பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின், நாண்உடைப் பெண்ணே பெருமை உடைத்து. (ப-உ) பெண்- மனைவியின். ஏவல்- ஏவல் தொழிலை. செய்து ஒழுகும் செய்துகொண்டு திரிகின்றவனது. ஆண்மை யின்- ஆண் தன்மையைவிட. நாண்உடை- நாணத்தையுடைய. பெண்ணே- அவளுடைய பெண்தன்மையே. பெருமை உடைத்து - மேன்மையுள்ளதாகும். (க-து) மனைவியின் சொல்லைக் கேட்டு நடக்கும் ஆண் தன்மையைவிட, அம் மனைவியின் பெண்மையே சிறந்ததாகும். 8. நட்டார் குறைமுடியார், நன்றுஆற்றார், நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். (ப-உ) நல் நுதலாள்- தம் மனைவி. பெட்டு ஆங்கு- விரும்பியபடி. ஒழுகுபவர்- நடப்பவர். நட்டார்- தம் நண்பரது. குறை முடியார்- குறையைத் தீர்க்க மாட்டார். நன்று- அறத்தையும். ஆற்றார்- செய்ய மாட்டார். (க-து) மனைவியின் எண்ணப்படி நடப்பவர் நண்பர்களின் குறையையும் தீர்க்க மாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார். 9. அறவினையும், ஆன்ற பொருளும், பிறவினையும், பெண்ஏவல் செய்வார்கண் இல். (ப-உ) அறவினையும்- அறச் செயலும். ஆன்ற பொருளும்- சிறந்த பொருட் செயலும். பிறவினையும்- வேறு இன்பச் செயலும். பெண் ஏவல்- தம்மனையாளின் ஏவலை. செய்வார்கண்- செய்கின்றவரிடம். இல்- இல்லை. (க-து) மனைவியின் ஏவலைச் செய்கின்றவரிடம். அறம், பொருள், இன்பச் செயல்கள் இல்லை. 10. எண்சேர்ந்த நெஞ்சத்து இடன்உடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்துஆம் பேதைமை இல். (ப-உ) எண் சேர்ந்த- ஆராயும் தன்மை பொருந்திய. நெஞ்சத்து- மனத்தையும். இடன்- செல்வத்தையும். உடையார்க்கு- உடையவர்க்கு. எஞ்ஞான்றும்- எந்நாளும். பெண் சேர்ந்து ஆம்- மனையாளைச் சேர்வதால் உண்டாகும். பேதைமைஇல்- அறியாமை இல்லை. (க-து) ஆராயும் அறிவும் செல்வமும் உள்ளவர்கள் மனைவியால் அறியாமைக்கு ஆளாக மாட்டார்கள். 92. வரைவின் மகளிர் ஒரு அளவில் நிற்காத பெண்கள். 1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல், இழுக்குத் தரும். (ப-உ) அன்பின் விழையார்- அன்பு பற்றி விரும்பாமல். பொருள் விழையும்- பொருளுக்காக விரும்பும். ஆய்தொடியார்- ஆராய்ந்த வளையல்களை அணிந்த பொதுமகளிரின். இன்சொல்- இனிய சொல். இழுக்குத் தரும்- துன்பத்தைத் தரும். (க-து) அன்பின்றிப் பொருளுக்காக விரும்பும் வேசையர் களின் இனிய சொல் துன்பத்தையே தரும். 2. பயன்தூக்கிப் பண்புஉரைக்கும் பண்பில் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். (ப-உ) பயன்தூக்கி- பொருளின் அளவறிந்து. பண்பு உரைக்கும்- அதற்கேற்ப இனிமையாகப் பேசும். பண்பு இல் மகளிர்- நற்குணமற்ற பொது மகளிரின். நயன்தூக்கி- நடத்தையை ஆராய்ந்து. நள்ளாவிடல்- அவருடன் சேராமல் விட்டுவிட வேண்டும். (க-து) பொருளுக்காக இனிமையாகப் பேசும் வேசையரின் நட்பைக் கைவிடவேண்டும். 3. பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்டறையில் ஏதில் பிணம்தழீஇ அற்று. (ப-உ) பொருள் பெண்டிர்- பொருளையே விரும்பும் பொதுமகளிரின். பொய்ம்மை- பொய்யான. முயக்கம்- தழுவுதல். இருட்டு அறையில்- இருட்டு வீட்டில். ஏதில் பிணம்- முன் அறியாத பிணத்தை. தழீஇ அற்று- தழுவிக்கொண்டது போலாகும். (க-து) வேசையர்களின் பொய்த்தழுவல், இருட்டு வீட்டில் தான் அறியாத பிணத்தைத் தழுவிக் கொண்டது போலாகும். 4. பொருள்பொருளார் புல்நலம் தோயார், அருள்பொருள் ஆயும் அறிவி னவர். (ப-உ) பொருள் பொருளார்- இன்பத்தை இகழ்ந்து பொருளையே விரும்பும் வேசையரின். புல்நலம்- அற்பமான இன்பத்தை. அருள் பொருள்- அருளோடு கூடிய பொருளை. ஆயும்- ஆராய்ந்து சேர்க்கும். அறிவினவர்- அறிவுள்ளவர். தோயார்- தொடமாட்டார். (க-து) அருளை விரும்பும் அறிவுள்ளவர் வேசையரைத் தீண்டமாட்டார். 5. பொதுநலத்தார் புல்நலம் தோயார், மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். (ப-உ) மதிநலத்தின்- அறிவின் நன்மையால். மாண்ட- சிறந்த. அறிவின் அவர்- அறிவுடையவர். பொதுநலத்தார்- பொது மகளிரது. புல்நலம்- அற்ப இன்பத்தை. தோயார்- தீண்டமாட்டார். (க-து) நல்ல அறிவுள்ளவர் பொதுமகளிரைத் தொட மாட்டார். 6. தந்நலம் பாரிப்பார் தோயார், தகைசெருக்கிப் புல்நலம் பாரிப்பார் தோள். (ப-உ) தகை- ஆடல் பாடல் அழகு என்பவைகளால். செருக்கி- களித்து. புல்நலம்- தமது அற்பநலத்தை. பாரிப்பார்- பரப்பும் பொதுமகளிரின். தோள்- தோளை. தம்நலம்- தமது புகழை. பாரிப்பார்- உலகில் பரப்பும் உயர்ந்தோர். தோயார்- தீண்டமாட்டார். (க-து) தமது புகழைப் பரப்பும் பெரியோர் பொதுமகளிர் தோளைத் தொடமாட்டார். 7. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர், பிறநெஞ்சின் பேணிப் புணர்பவர் தோள். (ப-உ) நெஞ்சின்- நெஞ்சினால். பிறபேணி- வேறு பொருள் களுக்கு ஆசைப்பட்டு. புணர்பவர்- புணரும் வேசையரின். தோள்- தோள்களை. நிறை நெஞ்சம் இல்லவர்- உறுதியான நெஞ்சம் இல்லாதவர் தாம். தோய்வர்- சேர்வர். (க-து) உறுதியற்ற உள்ளம் உடையவரே பொதுமகளிர் தோள்களைத் தழுவுவார். 8. ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்குஎன்ப மாய மகளிர் முயக்கு. (ப-உ) மாய மகளிர்- வஞ்சிப்பதில் வல்ல பொதுமகளிரின் முயக்கு- புணர்ச்சியை. ஆயும்- ஆராய்ந்து அறியும். அறிவினர் அல்லார்க்கு- அறிவுள்ளவர் அல்லாதவர்க்கு. அணங்கு என்ப- மோகினியின் தாக்குதல் என்பர். (க-து) அறிவில்லாதார்க்கு, பொதுமகளிரின் புணர்ச்சி மோகினிப்பேயின் தாக்குதல் ஆகும். 9. வரைவிலா மாண்இழையார் மென்றோள், புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. (ப-உ) வரைவுஇலா- விலை கொடுப்போரைக் கூடும். மாண் இழையார்- சிறந்த ஆபரணங்களை அணிந்த பொது மகளிரின். மெல்தோள்- மெல்லிய தோள்கள். புரையிலா- குற்றத்தை உணரும் அறிவில்லாத. பூரியர்கள் - கீழ்மக்கள். ஆழும்- அழுந்தும். அளறு- நரகமாகும். (க-து) பொதுமகளிரின் தோள்கள் அற்பர்கள் வீழும் நரகமாகும். 10. இருமனப் பெண்டிரும், கள்ளும் கவறும், திருநீக்கப் பட்டார் தொடர்பு. (ப-உ) இருமனப் பெண்டிரும்- இரு மனம் உள்ள பொது மகளிரும். கள்ளும்- மதுவும். கவறும்- சூதும். திருநீக்கப் பட்டார்- திருமகளால் கைவிடப்பட்டவர்க்கு. தொடர்பு- நட்பாகும். (க-து) வேசையர், கள், சூது இவைகள் இலக்குமியால் கைவிடப்பட்டவர்க்கு உறவாகும். 93. கள் உண்ணாமை கள்ளுண்ணாமையின் சிறப்பு. 1. உட்கப் படாஅர், ஒளியிழப்பர்; எஞ்ஞான்றும் கள்காதல் கொண்டொழுகு வார். (ப-உ) கள்காதல் கொண்டு- கள்ளின் மேல் ஆசை கொண்டு. ஒழுகுவார்- நடப்பவர். எஞ்ஞான்றும்- எந்நாளும். உட்கப்படாஅர்- பகைவரால் அஞ்சப்படார். ஒளி- புகழையும். இழப்பர்- இழந்துவிடுவர். (க-து) கள்ளுண்பவர்களுக்குப் பகைவர் பயப்பட மாட்டார்; அவர் புகழையும் இழப்பர். 2. உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரால் எண்ணப் படவேண்டா தார். (ப-உ) கள்ளை- அறிவுள்ளவர் மதுவை. உண்ணற்க- உண்ணக்கூடாது. சான்றோரால்- நல்லோரால். எண்ணப்பட வேண்டாதார்- மதிக்கப்படுவதை விரும்பாதவர். உணில்- உண்ண வேண்டுமானால். உண்க- கள்ளை உண்ணுக. (க-து) கள்ளுண்பவர்கள் அறிவுள்ளவர் மதிப்பைப் பெறமாட்டார்கள். 3. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. (ப-உ) ஈன்றாள் முகத்தேயும்- தாயின் முன்பும். களி- கள்ளுண்டு களித்தல். இன்னாதுஆல்- துன்பம் தருவதாம். மற்றுச் சான்றோர் முகத்து- பின் அறிவுள்ளவர் எதிரில். என் - அவ்வாறு களித்தால் என்னாகும்? ஆல்: அசை. (க-து) கள்ளுண்பானைக் கண்டு பெரியோர்கள் வருந்துவர். 4. நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (ப-உ) கள்என்னும்- கள் என்று சொல்லப்படும். பேணா- இகழத்தக்க. பெரும் குற்றத்தார்க்கு- மிகுந்த குற்றத்தையுடை யவர்க்கு. நாண் என்னும் நல்லாள்- நாணம் என்னும் நல்லவள். புறம் கொடுக்கும்- பயந்து புறமிட்டு ஓடுவாள். (க-து) கள்ளுண்பவர்களுக்கு நாணம் இருக்காது. 5. கையறியாமை உடைத்தே, பொருள் கொடுத்து மெய்யறி யாமை கொளல். (ப-உ) பொருள் கொடுத்து- பொருளைக் கொடுத்து. மெய் அறியாமை- தன் உடம்பை மறக்கச் செய்யும் கள்ளை. கொளல்-உட்கொளல். கைஅறியாமை- ஒழுக்கத்தை அறியாத மூடத்தனத்தை. உடைத்துஏ- உடையதாகும். ஏ: அசை. (க-து) கள்ளை உண்டு தன்னை மறத்தல் ஒழுக்கமற்ற மூடச் செயலாகும். 6. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்; எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்உண் பவர். (ப-உ) துஞ்சினார்- தூங்கினவர். செத்தாரின்- இறந்தவரை விட. வேறு அல்லர்- வேறு ஆகமாட்டார். எஞ்ஞான்றும்- எந்நாளும். கள் உண்பவர்- கள்ளை உண்பவர். நஞ்சு உண்பார்- விடத்தை உண்பவர் ஆவார். (க-து) கள்ளைக் குடித்தவர் விஷத்தை உண்டவர்க்கு ஒப்பாவார். 7. உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர், எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர். (ப-உ) கள்ஒற்றி- கள்ளை மறைந்து குடித்து. கண் சாய்பவர்- அறிவிழப்பவர். உள்ளூர்- உள்ளூரில் இருப்பவரால். உள்ஒற்றி- உள்ளே நடப்பதை அறிந்து. எஞ்ஞான்றும்- எந்நாளும். நகப்படுவர்- சிரிக்கப்படுவார்கள். (க-து) கள்ளுண்டு அறிவிழப்போர், எந்நாளும் பிறர் சிரிப்புக்கு ஆளாவார். 8. களித்தறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். (ப-உ) களித்து அறியேன்- கள்ளுண்டு அறியேன். என்பது- என்று சொல்வதை. கைவிடுக- விட்டுவிட வேண்டும். நெஞ்சத்து ஒளித்ததூஉம்- நெஞ்சில் மறைத்து வைத்திருக்கும் குற்றமும். ஆங்கே- கள்ளுண்டு களித்திருக்கும்போது. மிகும்- மிகுதியாக வெளிப்பட்டுவிடும். (க-து) கள்ளுண்டு மயங்கியிருக்கும்போது அவன் மனத்துள் மறைந்திருக்கும் குற்றமும் வெளிப்பட்டு விடும். ஆதலால் கள்ளுண்ணக் கூடாது. 9. களித்தானைக் காரணம் காட்டுதல், கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. (ப-உ) களித்தானை- கள்ளுண்டு களித்திருப்பவனை. காரணம் காட்டுதல்- காரணம் காட்டித் திருத்த முயல்வது. கீழ்நீர் குளித்தானை- நீருள் மூழ்கியிருக்கும் ஒருவனை. தீ- விளக்கினால். துரீஇஅற்று- தேடுவதைப் போலாகும். (க-து) கள்ளுண்டவனை அறிவுள்ளவனாக்குதல், நீருள் மூழ்கியிருப்பவனை விளக்கினால் தேடியதைப் போலாகும். 10. கள்உணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால், உள்ளான்கொல்? உண்டதன் சோர்வு. (ப-உ) கள்உணாப் போழ்தில்- கள்உண்டவன், அதை உண்ணாதிருக்கும்போது. களித்தானை- கள்ளுண்டு மயங்கிய மற்றொருவனை. காணும் கால்- காணும்போது. உண்ட - கள்ளுண்ட காலத்தில் இருக்கும். தன் சோர்வு- தன் சோர்வைப் பற்றி. உள்ளான்கொல்- நினைத்துப் பார்க்கமாட்டானா? (க-து) கள்ளுண்பவன் தான் குடிக்காமலிருக்கும்போது, குடித்திருப்பவன் நிலையைப் பார்த்து தனது நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும். 94. சூது சூதாட்டத்தின் தீமையை உரைப்பது. 1. வேண்டற்க வென்றிடினும் சூதினை, வென்றதூஉம் தூண்டில்பொன் மீன்விழுங்கி அற்று. (ப-உ) வென்றிடினும்- வெல்லும் வலிமையுள்ளவனாயினும். சூதினை- சூதாடுவதை. வேண்டற்க- விரும்பக் கூடாது. வென்ற தூஉம்- சூதில் வென்று சேர்த்த பொருளும். தூண்டில் பொன்- தூண்டில் இரும்பை. மீன் விழுங்கி அற்று- மீன் விழுங்கியது போலாகும். (க-து) வல்லவனாயினும் சூதாடுதல் கூடாது. சூதால் வந்த பொருள் தீமையையே தரும். 2. ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும், உண்டாம்கொல் நன்றுஎய்தி வாழ்வதுஓர் ஆறு? (ப-உ) ஒன்று எய்தி - ஒன்றை லாபமாகப் பெற்று. நூறு இழக்கும்- அவ்வகையில் நூறை இழக்கும். சூதர்க்கும்- சூதாடி களுக்கும். நன்று எய்தி- அறமும் இன்பமும் பெற்று. வாழ்வது ஓர் ஆறு- வாழ்கின்ற ஒரு வழி. உண்டாம் கொல்- உண்டாகுமோ? (க-து) ஒரு பொருளைப் பெற்று நூறு பொருளை இழக்கும் சூதர்கள் நன்மை பெற்று வாழமாட்டார்கள். 3. உருள்ஆயம் ஓவாது கூறின், பொருள்ஆயம் போஒய்ப் புறமே படும். (ப-உ) உருள் ஆயம்- சூதாடு கருவியினால் வரும் இலாபத்தை. ஓவாது கூறின்- விடாமல் சொல்லிச் சூதாடு வானாயின். பொருள் ஆயம்- பொருள் வருமானம். போய்- அவனை விட்டுப் பிரிந்து. புறமே படும்- பகைவரிடத்தில் தங்கும். (க-து) சூதாடுவோன் செல்வம், அவனை விட்டுப் பிரிந்து பகைவரிடம் சேரும். 4. சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின், வறுமை தருவதுஒன்று இல். (ப-உ) சிறுமை பல செய்து- துன்பங்கள் பலவற்றைச் செய்து. சீர் அழிக்கும்- புகழைக் கெடுக்கும். சூதின்- சூதுபோல். வறுமை தருவது- தரித்திரத்தை உண்டாக்குவது. ஒன்றுஇல்- வேறு ஒன்றும் இல்லை. (க-து) சூதாட்டத்தைப் போல வறுமையைக் கொடுப்பது வேறு ஒன்றும் இல்லை. 5. கவறும், கழகமும், கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். (ப-உ) கவறும்- சூதையும். கழகமும்- சூதாடும் இடத்தையும். கையும்- சூதாடும் திறமையையும். தருக்கி- பெரிதாக மதித்து. இவறியார்- அவற்றைக் கைவிடாதவர். இல் ஆகியார்- பொருள் இருந்தாலும் இல்லாதவரே ஆவார். (க-து) சூதாட்டத்தைக் கைவிடாதவர், செல்வம் இருந்தாலும் இல்லாதவரே ஆவார். 6. அகடுஆரார், அல்லல் உழப்பர், சூதுஎன்னும் முகடியான் மூடப் பட்டார். (ப-உ) சூது என்னும்- சூது என்று சொல்லப்படும். முகடியான்- மூதேவியால். மூடப்பட்டார்- விழுங்கப்பட்டவர். அகடுஆரார்- இம்மையிலும் வயிறு நிறைய உண்ணமாட்டார். அல்லல் உழப்பர்- மறுமையிலும் துன்பத்தை அடைவர். (க-து) சூதாடுவோருக்கு இம்மையிலும் இன்பம் இல்லை; மறுமையிலும் இன்பம் இல்லை. 7. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும், கழகத்துக் காலைப் புகின். (ப-உ) காலை- ஒருவன் காலம். கழகத்து- சூதாடும் இடத்தில். புகின்- கழியுமானால் அது. பழகிய செல்வமும்- பழமையான செல்வத்தையும். பண்பும்- நல்ல குணங்களையும். கெடுக்கும்- அழிக்கும். (க-து) சூதாடும் இடத்தில் காலம் கழிப்பானாயின், அவனது பழமையான செல்வமும், நல்ல குணமும் அழியும். 8. பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ, அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. (ப-உ) சூது- சூதாட்டமானது. பொருள்கெடுத்து- செல்வத்தைக் கெடுத்து. பொய்மேல் கொளீஇ- பொய்யை மேற்கொள்ளும்படி செய்து. அருள்கெடுத்து- அருளையும் அழித்து. அல்லல் உழப்பிக்கும்- துன்பம் அடையும்படி செய்யும். (க-து) சூதாட்டமானது செல்வத்தை அழித்து, பொய் சொல்லச் செய்து, அருளையும் கெடுத்துத் துன்பத்தை உண்டாக்கும். 9. உடை,செல்வம், ஊண்,ஒளி, கல்வி, என்றுஐந்தும் அடையாவாம் ஆயம் கொளின். (ப-உ) ஆயம் கொளின்- சூதாட்டத்தை மேற்கொண்டால். உடை- உடையும். செல்வம்- பொருளும். ஊண்- உணவும். ஒளி- புகழும். கல்வி- கல்வியும். என்று ஐந்தும்- என்று சொல்லப்படும் இவ்வைந்தும். அடையாஆம்- சேரமாட்டாவாம். (க-து) சூதாடுவோன் உடை, செல்வம், உணவு, புகழ், கல்வி என்னும் ஐந்தையும் இழப்பான். 10. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல், இன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். (ப-உ) இழத்தொறூஉம்- பொருளை இழக்குந்தோறும். காதலிக்கும்- அதன்மேல் இன்னும் ஆசையை உண்டாக்கும். சூதேபோல்- சூதாட்டத்தைப்போல். உயிர்- உயிரானது. துன்பம்- துன்பங்களை. உழத்தொறூஉம்- அனுபவிக்கும்தோறும். காதற்று- ஆசையை உடையதாகும். (க-து) பொருளை இழந்தாலும் சூதின்மேல் ஆசை வளரும்; துன்பத்தால் வருந்தினாலும் உயிர் வாழ்வதற்கே ஆசையுண்டாகும். 95. மருந்து நோயற்று வாழ்வதற்கான மருந்து. 1. மிகினும் குறையினும் நோய்செய்யும்; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. (ப-உ) மிகினும்- உணவும் உழைப்பும் மிகுந்தாலும். குறையினும்- குறைந்தாலும். நூலோர்- மருத்துவ நூலோரால். வளிமுதலா- வாதம், பித்தம், சிலேத்துமம் என. எண்ணிய மூன்று - எண்ணப்பட்ட மூன்றும். நோய் செய்யும்- துன்பத்தைத் தரும். (க-து) உணவும் தொழிலும் மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும். 2. மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது அற்றது போற்றி உணின். (ப-உ) அருந்தியது- உண்ட உணவு. அற்றது- சீரணித்ததை. போற்றி- அறிந்த பின். உணின்- உணவு கொண்டால். யாக்கைக்கு- உடம்புக்கு. மருந்து என- மருந்து என ஒன்று. வேண்டாஆம்- வேண்டுவதில்லையாம். (க-து) உண்டது செரித்தபின் சாப்பிட்டால், மருந்தே வேண்டியதில்லை. 3. அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுஉடம்பு பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு. (ப-உ) அற்றால்- உண்டது சீரணமானால். அளவு அறிந்து- அதன்பின் உண்ணும் அளவை அறிந்து. உண்க- சாப்பிடுக. உடம்பு பெற்றான்- உடம்பைப் பெற்றவன். நெடிது- நெடுங்காலம். உய்க்கும் ஆறு- வைத்துக் காக்கும் வழி. அஃது- அதுவாகும். (க-து) உணவு சீரணமானபின் அளவோடு உண்பவன் நீண்டகாலம் உயிர் வாழ்வான். 4. அற்றது அறிந்து கடைப்பிடித்து, மாறுஅல்ல துய்க்க, துவரப் பசித்து. (ப-உ) அற்றது அறிந்து- முன் உண்டது செரித்ததை அறிந்து. மாறு அல்ல- உடம்புக்கு ஏற்ற உணவுகளை. கடைப்பிடித்து- பார்த்து. துவரப் பசித்து- மிகவும் பசித்தவுடன். துய்க்க- உண்ண வேண்டும். (க-து) உண்டது செரித்தபின், உடலுக்கேற்ற உணவு களைப் பசித்தபின் உண்ணவேண்டும். 5. மாறுபாடு இல்லாத உண்டி, மறுத்துஉண்ணின், ஊறுபாடு இல்லை உயிர்க்கு. (ப-உ) மாறுபாடு இல்லாத- குற்றம் இல்லாத. உண்டி- உணவை. மறுத்து- மனம் விரும்பும் அளவை மறுத்துப் போது மான அளவாக. உண்ணின்- உண்டால். உயிர்க்கு- உயிருக்கு. ஊறுபாடு- நோய்த் துன்பம். இல்லை- உண்டாகாது. (க-து) நல்ல உணவை அளவோடு உண்போர்க்கு நோய்கள் இல்லை. 6. இழிவுஅறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். (ப-உ) இழிவு அறிந்து- குறைதல் நல்லது என்று அறிந்து. உண்பான்கண்- உண்பவனிடம். இன்பம் போல்- நிற்கும். இன்பத்தைப் போல. கழிபேர் இரையான்கண்- மிகவும் அதிக மான இரையை விழுங்குகின்றவனிடம். நோய் நிற்கும்- நோய் நிலைத்து நிற்கும். (க-து) குறைவாக உண்பவனிடம் இன்பம் நிற்பது போல், மிகுதியாக உண்பவனிடம் நோய் நிலைத்து நிற்கும். 7. தீஅளவு அன்றித் தெரியான் பெரிதுஉண்ணின், நோய்அளவு இன்றிப் படும். (ப-உ) தீஅளவு அன்றி- பசியின் அளவுக்கு மீறி. தெரியான்- தன் உடலுக்கேற்ற உணவையும் ஆராயாமல். பெரிது உண்ணின்- மிகுதியாக உண்பானாயின். அளவு இன்றி- அளவில்லாமல். நோய்படும்- நோய் உண்டாகும். (க-து) உடலுக்கு ஏற்காத உணவை மிகுதியாக உண்பவனுக்கு அளவுக்கு மீறிய நோய் உண்டாகும். 8. நோய்நாடி, நோய்முதல் நாடி, அதுதணிக்கும் வாய்நாடி, வாய்ப்பச் செயல். (ப-உ) நோய் நாடி- நோய் இன்னது என்று துணிந்து. நோய் முதல் நாடி- அந் நோய் வருவதற்கான காரணத்தை அறிந்து. அது தணிக்கும் வாய்- அதை நீக்கும் வழியை. நாடி - ஆராய்ந்து. வாய்ப்பச் செயல்- பொருத்தமாக வைத்தியம் செய்ய வேண்டும். (க-து) வைத்தியன் நோயையும், அதன் காரணத்தையும், அதை நீக்கும் வழியையும் அறிந்து வைத்தியம் பண்ணவேண்டும். 9. உற்றான் அளவும், பிணிஅளவும், காலமும், கற்றான் கருதிச் செயல். (ப-உ) கற்றான்- வைத்தியன். உற்றான் அளவும்- நோயாளி யின் நிலையை யும். பிணி அளவும்- நோயின் அளவையும். காலமும்- மருந்து கொடுப்பதற்கேற்ற காலத்தையும். கருதி- எண்ணி. செயல்- வைத்தியம் செய்யவேண்டும். (க-து) நோயாளன் நிலை, நோயின் அளவு, மருந்தளிக்கும் காலம் இவைகளை ஆராய்ந்து வைத்தியன் மருத்துவம் செய்ய வேண்டும். 10. உற்றவன், தீர்ப்பான், மருந்து,உழைச் செல்வான்என்று அப்பால் நாற்கூற்றே மருந்து. (ப-உ) மருந்து- மருந்தாவது. உற்றவன்- நோயாளி. தீர்ப்பான்- வைத்தியன். மருந்து- மருந்து. உழைச்செல்வான்- நோயாளியின் பக்கத்திலிருப்பவன். என்று- என்று சொல்லப் பட்ட. அப்பால்- அப்பகுதியையுடைய. நால் கூற்றுஏ- நான்கு வகைப்பட்டதாகும். ஏ: அசை. (க-து) வைத்தியமுறை நோயாளி, வைத்தியன், மருந்து, நோயாளியின் பக்கத்திலிருப்பவன் என்ற நான்கு பகுதியை உடையதாகும். ஒழிபியல்* 96. குடிமை உயர் குடியில் பிறந்தவர் தன்மை. 1. இல்பிறந்தார் கண் அல்லதுஇல்லை இயல்பாகச் செப்பமும், நாணும் ஒருங்கு. (ப-உ) செப்பமும்- நல்லொழுக்கமும். நாணும்- நாணமும். ஒருங்கு- ஒன்றாக. இல்பிறந்தார்கண் அல்லது- உயர்ந்த குடியிலே பிறந்தவரிடம் அல்லாமல் மற்ற வரிடம். இயல்பாக- இயல் பாகவே. இல்லை- இருப்பதில்லை. (க-து) ஒழுக்கமும் நாணமும் நல்ல குடியில் பிறந்தவர் களிடந்தான் உண்டு; ஏனையோரிடம் இல்லை. 2. ஒழுக்கமும், வாய்மையும், நாணும், இம்மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். (ப-உ) குடிப்பிறந்தார்- உயர்ந்த குடியிலே பிறந்தவர். ஒழுக்கமும்- ஒழுக்கத் தையும். வாய்மையும்- உண்மையையும். நாணும்- நாணத்தையும். இம்மூன்றும்- இம் மூன்றையும். இழுக்கார் - தவறாமல் கொண்டிருப்பர். (க-து) ஒழுக்கம், உண்மை, நாணம் இம்மூன்றும் உயர் குடிப் பிறந்தவர் இயல்பு. 3. நகை, ஈகை, இன்சொல், இகழாமை நான்கும் வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. (ப-உ) வாய்மைக் குடிக்கு- உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு. நகை- முகமலர்ச்சி. ஈகை- கொடுத்தல். இன்சொல்- இனிமையாகப் பேசுதல். இகழாமை- பிறரை அவமதியாமை. நான்கும்- இந்நான்கும். வகை என்ப- உரிய குணவகை யாகும் என்பார்கள். (க-து) நற்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, கொடுத்தல், இன்சொல், இகழாமை இந்நான்கும் உரிய குணங்கள். 4. அடுக்கிய கோடி பெறினும், குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். (ப-உ) அடுக்கிய- அடுக்கப்பட்ட. கோடி- கோடிக்கணக்கான பொருளை. பெரினும்- பெற்றாலும். குடிப்பிறந்தார்- உயர்ந்த குடியிலே பிறந்தவர். குன்றுவ -தம் பெருமை கெடுகின்றவை களை. செய்தல் இலர்- செய்ய மாட்டார்கள். (க-து) உயர்குடியில் பிறந்தவர் கோடிக்கணக்கான பொருளைப் பெற்றாலும் இழிதொழில்களைச் செய்ய மாட்டார்கள். 5. வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும், பழங்குடி, பண்பின் தலைப்பிரிதல் இன்று. (ப-உ) பழங்குடி- பழமையான உயர்குடியில் பிறந்தவர். வழங்குவது- தாம் கொடுக்கும் பொருள். உள்வீழ்ந்தக் கண்ணும்- சுருங்க விட்டாலும். பண்பின்- தமது குணத்திலிருந்து. தலைப் பிரிதல் இன்று- நீங்க மாட்டார். (க-து) நல்ல குடியில் பிறந்தவர்கள் வறியர்களாக ஆய்விட்டாலும் தம் குணம் கெடமாட்டார்கள். 6. சலம்பற்றிச் சால்புஇல செய்யார்; மாசற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். (ப-உ) மாசு அற்ற- குற்றமற்ற. குலம்பற்றி- குடி ஒழுக்கத்தைப் பின்பற்றி. வாழ்தும் என்பார்- வாழ்வோம் என்று நினைப்பவர் வறுமையுற்றாலும். சலம்பற்றி- வஞ்சனையுடன். சால்புஇல- பொருத்தமற்ற செயல்களை. செய்யார்- செய்ய மாட்டார். (க-து) நல்ல குடியில் பிறந்தவர் வறியர் ஆனாலும் வஞ்சனை பொருந்திய செயல்களைச் செய்ய மாட்டார்கள். 7. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம், விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (ப-உ) குடிப் பிறந்தார்கண்- உயர்ந்த குடியில் பிறந்தவர் களிடம். குற்றம்- உண்டாகும் குற்றம். விசும்பின்- ஆகாயத்தில் காணும். மதிக்கண்- சந்திரனிடம் உள்ள. மறுப்போல்- களங் கத்தைப்போல. உயர்ந்து- நன்றாக. விளங்கும்- காணப்படும். (க-து) உயர்ந்த குடியில் பிறந்தவரிடம் உள்ள குற்றம், சந்திரனிடம் உள்ள களங்கத்தைப்போல் பலர்க்கும் காணப்படும். 8. நலத்தின்கண் நார்இன்மை தோன்றின், அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். (ப-உ) நலத்தின்கண்- நல்ல குணமுள்ளவனிடம். நார் இன்மை- அன்பில்லாமை. தோன்றின்- உண்டாகுமானால். அவனை- அம் மனிதனை. குலத்தின்கண்- அவன் குடிப்பிறப்பைப் பற்றி. ஐயப்படும்- உலகம் சந்தேகப்படும். (க-து) நல்லவனிடம் அன்பில்லாமை காணப்படுமாயின், அவன் குடிப்பிறப்பைப்பற்றி உலகத்தார் சந்தேகப்படுவார். 9. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல். (ப-உ) நிலத்தில் கிடந்தமை- நிலத்தின் இயல்பை. கால்- அதில் தோன்றிய முளை. காட்டும்- காட்டிவிடும்; அதுபோல. குலத்தில் பிறந்தார்- நல்ல குலத்தில் பிறந்தவரின். வாய்ச்சொல்- வாய் மொழியானது. காட்டும்- அவர் குலத்தின் இயல்பைக் காட்டிவிடும். (க-து) நிலத்தின் தன்மையைப் பயிர் காட்டுவது போல, குலத்தின் தன்மையை வாய்ச்சொல் காட்டிவிடும். 10. நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்; குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. (ப-உ) நலம் வேண்டின்- நன்மையை விரும்பினால். நாண் உடைமை வேண்டும்- நாணமுடையவனாக வேண்டும். குலம் வேண்டின்- குடியின் உயர்வை விரும்பினால். யார்க்கும்- யாவருக்கும். பணிவு- பணிதல். வேண்டும்- வேண்டுவதாகும். (க-து) நாணுடைமை நன்மை தரும்; பணிவுடைமை *குடியின் பெருமையைக் காட்டும் 97. மானம் தம் குடிப்பெருமைக்குத் தாழ்வு வந்தால் உயிர் வாழாமை. 1. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும், குன்ற வருப விடல். (ப-உ) இன்றி அமையா- அவசியமான. சிறப்பின ஆயினும்- சிறப்புடையவையானாலும். குன்ற- தம் குடிப்பிறப்பின் பெருமை குறையும்படி. வருப- வரும் செயல்களை. விடல்- செய்யாமல் விட்டுவிட வேண்டும். (க-து) மிகவும் அவசியமானவையானாலும், தம் குடிப் பெருமைக்கு இழிவு தரும் செயல்களைச் செய்யக்கூடாது. 2. சீரினும், சீர்அல்ல செய்யாரே, சீரொடு பேர்ஆண்மை வேண்டு பவர். (ப-உ) சீரொடு- புகழுடன். பேர் ஆண்மை- மானத்தையும். வேண்டுபவர்- விரும்புகின்றவர். சீரினும்- புகழைச் சம்பாதிக்கும் போதும். சீர்அல்ல- தம் குடிக்குப் பொருந்தாத செயல்களை. செய்யார்ஏ- செய்ய மாட்டார்கள். ஏ: அசை. (க-து) புகழையும், மானத்தையும் விரும்புவோர் தம் குடிக்குப் பொருந்தாத செயல்களைச் செய்ய மாட்டார்கள். 3. பெருக்கத்து வேண்டும் பணிதல், சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. (ப-உ) பெருக்கத்து- நிறைந்த செல்வம் உள்ளபோது. பணிதல்- பணிவு என்னும் குணம். வேண்டும்- வேண்டியதாம். சிறிய- குறைந்த. சுருக்கத்து- வறுமையுள்ளபோது. உயர்வு- பணியாமை. வேண்டும்-வேண்டுவதாம். (க-து) செல்வமுள்ள காலத்தில் வணங்கும் தன்மையும், வறுமைக் காலத்தில் வணங்காத தன்மையும் வேண்டும். 4. தலையின் இழிந்த மயிர்அனையர், மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. (ப-உ) மாந்தர்- மக்கள். நிலையின்- தமது உயர்ந்த நிலையி லிருந்து. இழிந்தக்கடை- தாழ்ந்து விட்டபோது. தலையின்- தலையிலிருந்து விழுந்த. மயிர் அனையர்- மயிரைப் போன்றவர் ஆவார். (க-து) நல்ல குடியில் பிறந்தவர் தமது நிலை கெட்டபோது, அவர் தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாவார். 5. குன்றின் அனையாரும், குன்றுவர்; குன்றுவ, குன்றி அனைய செயின். (ப-உ) குன்றின் அனையாரும்- மலைபோல் உயர்ந்தவரும். குன்றுவ- தாழ்வுக்குக் காரணமான காரியங்களை. குன்றி அனைய - ஒரு குன்றிமணி அளவு. செயின்- செய்தாலும். குன்றுவர் - தாழ்ந்து விடுவார்கள். (க-து) மலைபோன்ற உயர்ந்த குடியினரும், சிறிதளவு இழிந்த செயலைச் செய்தாலும் தாழ்ந்து விடுவார்கள். 6. புகழ்இன்றால், புத்தேள்நாட்டு உய்யாதால், என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. (ப-உ) இகழ்வார் பின்- தம்மை அவமதிப்பவர் பின்னே. சென்றுநிலை- திரிந்து நிற்பதனால். புகழ் இன்று ஆல்- புகழும் இல்லை. புத்தேள் நாட்டு- தெய்வலோகத்திலும். உய்யாதுஆல்- செலுத்தாது. மற்றுஎன்- வேறு என்ன பயன்? ஆல்: அசைகள். (க-து) தம்மை மதியாதார் பின்னே திரிவோர்க்குப் புகழும் இல்லை; புண்ணிய லோகமும் இல்லை. 7. ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின், அந்நிலையே, கெட்டான் எனப்படுதல் நன்று. (ப-உ) ஒட்டார்பின்- தன்னை இகழ்கின்றவர் பின்னே. சென்று - போய். ஒருவன் வாழ்தலின்- ஒருவன் உயிர் வாழ்வதை விட. அந்நிலையே- முன்னுள்ள வறுமை நிலையிலேயே இருந்து. கெட்டான் எனப்படுதல்- இறந்தான் என்று சொல்லப்படுதல். நன்று- நல்லதாகும். (க-து) தன்னை அவமதிப்பவர் பின்சென்று உயிர்வாழ்வதை விட தரித்திரனாக இருந்து உயிர் விடுதல் சிறந்தது. 8. மருந்தோ, மற்றுஊன்ஓம்பும் வாழ்க்கை, பெருந்தகைமை பீடழிய வந்த விடத்து. (ப-உ) பெரும் தகைமை- உயர்குடிப் பிறப்பின். பீடு- மானம். அழியவந்த இடத்து- அழியும்படியான நிலை வந்தபோது. ஊன் ஓம்பும்- உடம்பைக் காப்பாற்றும். வாழ்க்கை- வாழ்வானது. மற்று மருந்தோ- இறவாமலிருப்பதற்கு மருந்தாகுமோ? (க-து) மானம் அழியும் நிலை வந்தபோது உடம்பைக் காக்கும் வாழ்வு, சாவாமைக்கு மருந்தாகாது. 9. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின். (ப-உ) மயிர் நீப்பின்- தம் உடம்பில் உள்ள மயிர் நீங்கினால். வாழா- உயிர் வாழாத. கவரிமா அன்னார்- கவரி மானைப் போன்றவர். மானம் வரின்- இழந்த தமது மானம் திரும்ப வருமாயின். உயிர் நீப்பர்- அதற்காக உயிரையும் விடுவர். (க-து) கவரிமானைப் போன்றவர் மானத்தின் பொருட்டு உயிரையும் விடுவார்கள். 10. இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. (ப-உ) இளிவரின்- ஓர் அவமானம் வந்தால். வாழாத- உயிர்வாழாத. மானம் உடையார்- மானம் உள்ளவரின். ஒளி- புகழை. உலகு- உலகத்தார். தொழுது ஏத்தும்- வணங்கித் துதிப்பார்கள். (க-து) அவமானத்திற்கு அஞ்சி உயிர் விடுவோர் புகழை உலகம் கொண்டாடும். 98. பெருமை நற்குணம் உள்ள பெரியோர்களின் இயல்பு. 1. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை; இளிஒருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல். (ப-உ) ஒருவற்கு- ஒருவனுக்கு. ஒளி- புகழ். உள்ள வெறுக்கை - மன உற்சாகத்துடன் சிறந்த காரியத்தைச் செய்தலாம். ஒருவற்க்கு இளி-ஒருவனுக்கு இழிவானது. அஃது இறந்து- அந்த உற்சாகத்தை இழந்து. வாழ்தும் எனல்- உயிர் வாழ்வோம் என்று நினைப்பது. (க-து) ஒருவனுக்குப் புகழ் மன உற்சாகம்; ஒருவனுக்கு இழிவு மன உற்சாகம் இல்லாமை. 2. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (ப-உ) எல்லா உயிர்க்கும்- எல்லா மக்கள் உயிர்க்கும். பிறப்பு- பிறப்பின் தன்மை. ஒக்கும்- ஒத்திருக்கும். செய்தொழில்- அவரவர் செய்யும் தொழிலின். வேற்றுமையான்- வேறுபாட்டால். சிறப்பு- சிறப்பின் தன்மைகள். ஒவ்வா- ஒத்திருக்கமாட்டா; வேறுபடும். (க-து) மக்களுக்குப் பிறப்பு ஒரு தன்மையாகும்; சிறப்பு, தொழில் வேற்றுமையால் வேறுபட்டிருக்கும். 3. மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்; கீழ்இருந்தும் கீழ்அல்லார் கீழ்அல் லவர். (ப-உ) மேல்அல்லார்- சிறியார். மேல்இருந்தும்- உயர்ந்த ஆசனத்திலிருந்தாலும். மேல்அல்லர்- பெரியவர் அல்லர். கீழ் அல்லவர்- பெரியவர். கீழ் இருந்தும்- தாழ்ந்த வெறுந்தரையில் இருந்தாலும். கீழ்அல்லார்- சிறியவராக மாட்டார். (க-து) சிறியவர் மேலே இருந்தாலும் பெரியவர் ஆகிவிட மாட்டார். பெரியவர் கீழே இருந்தாலும் சிறியவராகி விடமாட்டார். 4. ஒருமை மகளிரே போலப், பெருமையும், தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு. (ப-உ) ஒருமை மகளிரேபோல- ஒருமனமுள்ள கற்புள்ள மாதரைப்போல. பெருமையும்- பெருமைக்குணமும். தன்னைத் தான்- தன்னைத்தானே. கொண்டு ஒழுகின்- காத்துக்கொண்டு வாழ்வானாயின். உண்டு - அவனிடம் உண்டு. (க-து) கற்புள்ள மாதரைப்போலத் தன்னைத்தான் காத்துக் கொள்பவனிடமே பெருமை உண்டு. 5. பெருமை உடையவர், ஆற்றுவார், ஆற்றின், அருமை உடைய செயல். (ப-உ) பெருமையுடையவர்- பெருமை உள்ளவர். அருமை யுடைய செயல்- பிறரால் செய்வதற்கு அருமையான செயல்களை. ஆற்றின்- செய்யும் வழியில் நின்று. ஆற்றுவார்- செய்யவல்லவர் ஆவார். (க-து) பெருமை உள்ளவர் அரிய செயல்களைச் செய்வார். 6. சிறியார் உணர்ச்சியுள் இல்லை, பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. (ப-உ) பெரியாரை- பெரியவரை. பேணி- வழிபட்டு. கொள்வேம் என்னும்- அவர் இயல்பை மேற்கொள்வோம் என்னும். நோக்கு- கருத்து. சிறியார்- சிறியவர்களின். உணர்ச்சியுள்- மனத்தில். இல்லை- உண்டாகாது. (க-து) பெரியோரை வணங்கி அவர் தன்மையை அடைவோம் என்னும் கருத்து சிறியாரிடம் தோன்றுவதில்லை. 7. இறப்பே புரிந்த தொழிற்றாம், சிறப்புந்தான் சீர்அல் லவர்கண் படின். (ப-உ) சீர் அல்லவர்கண்- சிறியவரிடம். சிறப்பும் தான்- சிறப்பானதுதான். படின்- உண்டாகுமாயின், அது. இறப்பே புரிந்த- எல்லைகடந்த. தொழிற்றாம் - தீமை செய்வதாகும். (க-து) சிறியவர்க்குச் சிறப்புண்டானால் அது அளவற்ற தீமையைச் செய்யும். 8. பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. (ப-உ) பெருமை- பெருமையுள்ளவர். என்றும்- சிறப்புண் டான காலத்திலும். பணியும்- அடங்கி நடப்பர். சிறுமை- சிறுமையுள்ளவர். தன்னை வியந்து- தன்னைத்தானே புகழ்ந்து. அணியும்-சிறப்பித்துக் கொள்வார். (க-து) பெருமையுள்ளவர் எப்பொழுதும் அடங்கி நடப்பார்; சிறுமையுள்ளவர் எப்பொழுதும் தம்மைத்தாமே சிறப்பித்துக் கொள்ளுவர். 9. பெருமை, பெருமிதம் இன்மை; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். (ப-உ) பெருமை- பெருமைக் குணமாவது. பெருமிதம் இன்மை- கர்வம் இல்லாமலிருப்பது. சிறுமை- சிறுமைக் குணமாவது. பெருமிதம்- செருக்கிலே. ஊர்ந்து விடல்- சென்று விடுவதாகும். (க-து) கர்வமில்லாமை பெருமைக் குணமாகும்; கர்வம் சிறுமைக் குணமாகும். 10. அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும். (ப-உ) பெருமை- பெருமைக்குணம் உள்ளவர். அற்றம்- பிறர் அவமானத்தை. மறைக்கும்- சொல்லாமல் மறைப்பார். சிறுமைதான்- சிறுமைக்குணம் உள்ளவர். குற்றமே- பிறர் குற்றத்தையே. கூறிவிடும் - சொல்லி விடுவார்கள். (க-து) பெரியோர் பிறர் குற்றத்தை மறைப்பர்; சிறியோர் பிறர் குற்றத்தையே எடுத்துக் கூறுவர். 99. சான்றாண்மை நற்குணங்கள் பலவும் நிறைந்த தன்மை. 1. கடன்என்ப, நல்லவை எல்லாம், கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. (ப-உ) கடன் அறிந்து- தம் கடமை அறிந்து. சான்று- நல்லகுணங்கள் நிறைந்து. ஆண்மை- அவைகளை ஆள்வதை. மேற்கொள்பவர்க்கு- மேற்கொண்டு வாழ்வார்க்கு. நல்லவை எல்லாம்- நல்ல குணங்கள் எல்லாம். கடன் என்ப- இயல்பாகவே இருக்கும் என்பர். (க-து) கடமை அறிந்து நடப்போரிடம் நற்குணங்கள் குடிகொண்டிருக்கும். 2. குணநலம், சான்றோர் நலனே; பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. (ப-உ) சான்றோர் நலன்ஏ- சான்றோர்களின் நன்மை. குணநலம்- குணங்களால் ஆகிய நன்மையே ஆகும். பிற நலம்- மற்ற உறுப்புக்களின் நன்மை. எந்நலத்து உள்ளதூஉம்- எந்த நலத்தில் சேர்ந்துள்ளதும். அன்று- அல்ல. ஏ; அசை. (க-து) அறிவுடையோர்க்குக் குண நன்மையே நன்மை யாகும்; வேறு நன்மை நன்மையன்று. 3. அன்பு,நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு, ஐந்துசால்பு ஊன்றிய தூண். (ப-உ) அன்பு- அன்புடைமை. நாண்- பழி பாவங்களுக்கு நாணுதல். ஒப்புரவு- யாவருக்கும் உதவி செய்தல். கண்ணோட்டம்- இரக்கம். வாய்மையோடு- உண்மை என்பதோடு. ஐந்து - இவ்வைந்தும். சால்பு- நற்குணங்கள் என்னும் பாரத்தை. ஊன்றிய- தாங்கிய. தூண்- தூண்களாகும். (க-து) அன்பு, நாணம், உபகாரம், தாட்சணியம், உண்மை இவ்வைந்தும் நற்குணங்கள் என்னும் பாரத்தைச் சுமக்கும் தூண்கள். 4. கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. (ப-உ) நோன்மை- தவமாவது. கொல்லா நலத்தது- கொல்லாமை என்னும் அறத்தையுடையது. பிறர் தீமை- பிறர் தீமையை. சொல்லா நலத்தது- சொல்லாத தன்மையையுடையது. சால்பு- நிறைந்த நற்குணமாகும். (க-து) ஓர் உயிரையும் கொல்லாமையே தவம்; பிறர் குற்றத்தைக் கூறாமையே நிறைந்த நற்குணமாகும். 5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்; அதுசான்றோர், மாற்றாரை மாற்றும் படை. (ப-உ) ஆற்றுவார்- ஒரு காரியத்தைச் செய்து முடிப்பவரது. ஆற்றல்- வலிமையாவது. பணிதல்- துணை செய்வாரைப் பணிந்து உதவி பெறுதல். அது- அப்பணிவு. சான்றோர்- அறிவுள்ளவர்கள். மாற்றாரை- தம் பகைவரை. மாற்றும் படை- அழிக்கும் ஆயுதமாகும். (க-து) துணையாவாரைப் பணிந்து அவர் உதவி பெறுவதே பகைவர்களை அழிக்கும் ஆயுதமாகும். 6. சால்பிற்குக் கட்டளை யாதெனில், தோல்வி துலைஅல்லார் கண்ணும் கொளல். (ப-உ) சால்பிற்கு- நிறைந்த நற்குணங்களை அறிவதற்கு. கட்டளை- உரைகல். யாது எனில்- யாதென்றால். தோல்வி- தனது தோல்வியை. துலை அல்லார் கண்ணும்- இழிந்தவரிடத் திலும். கொளல்- ஒப்புக் கொள்ளுவதாகும். (க-து) பெருமைக்கு உரைகல், இழிந்தவரிடத்திலும் தமது தோல்வியை ஒப்புக்கொள்ளுவதாம். 7. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு? (ப-உ) இன்னா செய்தார்க்கும்- தமக்குத் துன்பம் செய்தவர்க்கும். இனியவே - இன்பமானவைகளை. செய்யாக்கால்- செய்யாவிட்டால். சால்பு- நிறைந்த குணம். என்ன பயத்ததுஓ- என்ன பயனையுடையதாகும்? ஓ: அசை. (க-து) துன்பம் செய்தவர்க்கும் நன்மை செய்யாவிட்டால், நற்குணங்களால் நன்மையில்லை. 8. இன்மை ஒருவற்கு இளிவுஅன்று; சால்புஎன்னும் திண்மை உண்டாகப் பெறின். (ப-உ) சால்பு என்னும்- நற்குணங்களால் நிறைந்த தன்மை என்னும். திண்மை- வலிமை. உண்டாகப் பெறின்- தன்னிடம் உண்டானால். ஒருவற்கு- ஒருவனுக்கு. இன்மை- வறுமையால் வருவது. இளிவு அன்று- இழிவு ஆகாது. (க-து) நற்குணங்கள் என்னும் வலிமையுள்ளவனுக்கு வறுமையால் இழிவில்லை. 9. ஊழிபெயரினும் தாம் பெயரார்; சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். (ப-உ) சான்றாண்மைக்கு- நற்குணங்களுக்கு. ஆழி எனப் படுவார்- கடல் என்று சொல்லப்படுகின்றவர். ஊழி பெயரினும்- காலம் மாறினாலும். தாம் பெயரார்- தாம் வேறுபட மாட்டார். (க-து) சான்றோர் எப்பொழுதும் ஒரு நிலையிலேயே இருப்பார். 10. சான்றவர் சான்றாண்மை குன்றின், இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை. (ப-உ) சான்றவர்- பல குணங்களாலும் நிறைந்தவர். சான்றாண்மை- தமது தன்மை. குன்றின்- குன்றுவாராயின். இருநிலந்தான்- இப்பெரிய பூமியும். பொறை- தனது பாரத்தை. தாங்காது மன்னோ- தாங்காமல் வருந்தும். மன் ஓ: அசைகள். (க-து) சான்றோர் தமது தன்மையில் மாறுபடுவாராயின், பூமி பாரந் தாங்கமுடியாமல் வருந்தும். 100. பண்புடைமை எல்லார் தன்மைகளையும் அறிந்து நடத்தல். 1. எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப, யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. (ப-உ) யார்மாட்டும்- யாவரிடத்தும் . எண்பதத்தால்- எளிதில் காணும்படி இருந்தால். பண்புஉடைமை என்னும்- பண்புடைமை என்னும். வழக்கு- நல்வழியை. எய்தல்- அடைவது. எளிது என்ப- எளிது என்று கூறுவார். (க-து) யாவராலும் எளிதில் காணும்படியிருப்பவர், பண்புடைமை என்னும் நல்வழியை எளிதில் அடைவார். 2. அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. (ப-உ) அன்பு உடைமை- அன்புள்ளவனாயிருப்பதும். ஆன்ற குடிப்பிறத்தல்- சிறந்த குடியிலே பிறத்தலும். இவ்விரண்டும் - இந்த இரண்டும். பண்புடைமை என்னும்- பண்புடைமை என்று சொல்லப்படும். வழக்கு- நல்வழியாகும். (க-து) அன்புடைமையும், உயர்குடியில் பிறத்தலுமே பண்புடைமையென்னும் நல்வழியாகும். 3. உறுப்புஒத்தல் மக்கள்ஒப்பு அன்றால், வெறுத்தக்க பண்ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு. (ப-உ) உறுப்பு ஒத்தல்- உடம்பால் ஒத்திருத்தல். மக்கள் ஒப்பு அன்று ஆல்- மனிதரோடு ஒப்பாகாது. ஒப்பதாம்- பொருந்து வதாகிய. ஒப்பு- ஒப்பாவது. வெறுத்தக்க- நெருங்கத்தக்க. பண்பு ஒத்தல்- குணத்தால் ஒத்திருத்தலாகும். ஆல்: அசை. (க-து) உடம்பால் ஒத்திருத்தல் ஒப்பாகாது; குணத்தால் ஒத்திருத்தலே ஒப்பாகும். 4. நயனொடு நன்றி புரிந்த பயன்உடையார் பண்பு பாராட்டும் உலகு. (ப-உ) நயனொடு - நீதியுடன். நன்றி- அறத்தையும். புரிந்த- விரும்பிய. பயன் உடையார்- தமக்கும் பிறர்க்கும் பயன்படு கின்றவரின். பண்பு - குணத்தை. உலகு பாராட்டும்- உலகத்தார் கொண்டாடுவார். (க-து) நீதியையும், தருமத்தையும் விரும்பும் பயன் உள்ளவர் குணத்தை உலகம் பாராட்டும். 5. நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி; பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. (ப-உ) இகழ்ச்சி- இகழ்தல். நகையுள்ளும்- விளையாட்டிலும். இன்னாது- துன்பந் தருவதாகும். பாடு அறிவார் மாட்டு- பிறர் இயல்பறிந்து நடப்பவரிடம். பகை உள்ளும்- பகைமை உள்ள போதும். பண்புஉள - நல்ல குணங்களே உள்ளனவாம். (க-து) இகழ்தல் விளையாட்டிலும் துன்பந்தரும்; பகையிலும் நல்லவரிடம் நற்குணம் உண்டாம். 6. பண்புடையார் பட்டுஉண்டு உலகம்; அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன். (ப-உ) பண்பு உடையார்- பண்புள்ளவரிடம். பட்டு- நற்குணம் இருப்பதனால். உலகம் உண்டு- உலகியல் நிலைத் திருக்கின்றது. இன்றேல்- இல்லாவிட்டால். அது- அவ்வுலகியல். மண்புக்கு- மண்ணில் புகுந்து. மாய்வது மன்- மறைந்துவிடும். மன்: அசை. (க-து) நற்குணமுள்ள பெரியோர்களால் உலகம் வாழ் கின்றது; இன்றேல் உலகியல் அழியும். 7. அரம்போலும் கூர்மைய ரேனும், மரம்போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர். (ப-உ) மக்கள்- மக்களுக்குரிய. பண்பு இல்லாதவர்- நல்லகுணம் இல்லாதவர். அரம்போலும்- அரத்தைப் போன்ற. கூர்மையரேனும்- கூர்மையான அறிவுள்ளவராயினும். மரம் போல்வர்- ஒரே அறிவுள்ள மரத்தை ஒப்பார். (க-து) மனிதத் தன்மையற்றவர் கூர்மையான புத்தியுள்ள வராயினும் மரத்தை ஒப்பார். 8. நண்புஆற்றார் ஆகி, நயம்இல செய்வார்க்கும் பண்புஆற்றார் ஆதல் கடை. (ப-உ) நண்பு- நட்பினை. ஆற்றார் ஆகி- செய்யாதவராய். நயம் இல- தீமைகளை. செய்வார்க்கும் - செய்கின்றவர்க்கும். பண்பு ஆற்றார் ஆதல்- பண்புள்ளவராய் நடவாமை. கடை- குற்றமாகும். (க-து) நட்பு இல்லாத பகைவர்க்கும் நன்மை செய்தலே சிறந்த பண்பாகும். 9. நகல்வல்லர் அல்லார்க்கு, மாயிரு ஞாலம், பகலும்பாற் பட்டன்று இருள். (ப-உ) நகல்வல்லர் அல்லார்க்கு- கலந்து மகிழாதவர்களுக்கு. மாயிரு ஞாலம்- பெரிய பூமியானது. பகலும்- பகல்பொழுதும். இருள்பால்- இருளினிடம். பட்டன்று- கிடந்ததாகும். (க-து) நட்புக்கொண்டு மகிழாதவர்க்கு பகலும் இரவு போன்றதாகும். 10. பண்பிலான் பெற்ற பெரும்செல்வம், நன்பால் கலம்தீமை யால்திரிந் தற்று. (ப-உ) பண்பு இலான்- நல்ல குணம் இல்லாதவன். பெற்ற- அடைந்த. பெரும் செல்வம்- பெரிய செல்வமானது. நன்பால்- நல்லபால். கலம் தீமையால்- பாத்திரத்தின் குற்றத்தால். திரிந்து அற்று- கெட்டது போலாகும். (க-து) நற்குணம் இல்லாதவன் பெற்ற செல்வம், நல்ல பால் பாத்திரத்தின் அழுக்கால் கெட்டது போலாகும். 101. நன்றியில் செல்வம் பயன் இல்லாத செல்வம். 1. வைத்தான், வாய்சான்ற பெரும்பொருள், அஃதுண்ணான் செத்தான்; செயக்கிடந்தது இல். (ப-உ) வாய்சான்ற -வீட்டில் நிறைந்த. பெரும் பொருள்- பெரிய பொருளை. வைத்தான்- சேர்த்துவைத்தவன். அஃது உண்ணான்- அதனை அனுபவிக்காமல் இருப்பானாயின்; அவன். செத்தான்- செத்தவனே ஆவான். செயக்கிடந்தது- அவன் செய்யக் கிடந்தது ஒன்றும். இல்- இல்லை. (க-து) செல்வத்தைத் தேடிவைத்தவன் அதை அனுபவிக் காவிட்டால், அவன் இறந்தவனுக்கே ஒப்பாவான். 2. பொருளான்ஆம் எல்லாம் என்று,ஈயாது இவறும் மருளான்ஆம் மாணாப் பிறப்பு. (ப-உ) பொருளான்- பொருள் ஒன்றினால். எல்லாம் ஆம்- எல்லாம் உண்டாகும். என்று - என்று எண்ணி. ஈயாது- பிறர்க்குக் கொடுக்காமல். இவறும்- உலோபத்தனம் செய்யும். மருளான்- அறியாமையினால். மாணா- பெருமையற்ற. பிறப்பு ஆம்- பிறப்பு உண்டாகும். (க-து) பொருளைச் சேர்த்து வைத்துக்கொண்டு கருமித்தனம் செய்வதால் பெருமையற்ற பிறப்பு உண்டாகும். 3. ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. (ப-உ) ஈட்டம்- சம்பாதிப்பதை. இவறி- விரும்பி. இசை வேண்டா- புகழை விரும்பாத. ஆடவர்- மக்களின். தோற்றம்- பிறப்பு. நிலக்கு- பூமிக்கு. பொறை- பாரமாகும். (க-து) பொருளை விரும்பிப் புகழை விரும்பாத மக்களின் பிறப்பு பூமிக்குப் பாரமாகும். 4. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். (ப-உ) ஒருவரால்- ஒருவராலும். நச்சப்படாஅதவன்- விரும்பப்படாதவன் தனக்குப்பின். எச்சம் என்று - மீதியாக இருப்பது என்று. என்- எதை. எண்ணும் கொல்ஓ- நினைப்பான்? ஓ:அசை. (க-து) ஒருவராலும் விரும்பப்படாதவனுக்குப் பின் எஞ்சி நிற்பது ஒன்றும் இல்லை. 5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு, அடுக்கிய கோடிஉண் டாயினும் இல். (ப-உ) கொடுப்பதூஉம்- பிறர்க்குக் கொடுப்பதும். துய்ப்பதூஉம் - தாம் அனுபவிப்பதும். இல்லார்க்கு- ஆகிய இவ்விரண்டும் இல்லாதவர்க்கு. அடுக்கிய கோடி - பலகோடி செல்வங்கள். உண்டு ஆயினும்- இருந்தாலும். இல்- பயன் இல்லை. (க-து) கொடுத்தல், அனுபவித்தல் இரண்டும் இல்லாத வர்க்கு எவ்வளவு செல்வமிருந்தும் பயன் இல்லை. 6. ஏதம், பெரும்செல்வம் தான்துவ்வான், தக்கார்க்குஒன்று ஈதல் இயல்பிலா தான். (ப-உ) தான் துவ்வான்- தானும் அனுபவிக்க மாட்டான். தக்கார்க்கு- தகுதியுள்ளவர்க்கு. ஒன்று- அவர் வேண்டும் ஒன்றை. ஈதல் இயல்பு இலாதான் - கொடுக்கும் தன்மையும் இல்லாதான். பெருஞ்செல்வம் - அவனது நிறைந்த செல்வமானது. ஏதம்- ஒரு நோயாகும். (க-து) தானும் உண்ணாமல், பிறர்க்கும் கொடாமல் வாழ்கின்றவனது செல்வம் ஒரு நோயாகும். 7. அற்றார்க்குஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றான் தமியள்மூத்து அற்று. (ப-உ) அற்றார்க்கு- வறியவர்க்கு. ஒன்று- அவர் வேண்டியது ஒன்றை. ஆற்றாதான்- கொடுக்காதவனது. செல்வம்- செல்வ மானது. மிகநலம் பெற்றாள்- மிகுந்த அழகையுடைய ஒரு பெண். தமியள்- கணவன் இல்லாமல் தனியாக இருந்து. மூத்துஅற்று- கிழவியானதைப் போலாம். (க-து) கொடாதவன் செல்வம், அழகுள்ள பெண் ஒருத்தி தனித்திருந்து கிழவியானதைப்போலாம். 8. நச்சப் படாதவன் செல்வம், நடுஊருள் நச்சு மரம்பழுத்து அற்று. (ப-உ) நச்சப்படாதவன்- பிறரால் விரும்பப்படாதவன். செல்வம்- பெற்றிருக்கும் செல்வம். நடுஊருள்- ஊரின் நடுவிலே உள்ள. நச்சுமரம்- எட்டி மரம். பழுத்து அற்று- பழுத்ததைப் போல் ஆகும். (க-து) பிறரால் விரும்பப்படாதவனது செல்வம், ஊர் நடுவிலே எட்டிமரம் பழுத்திருப்பதுபோல ஆகும். 9. அன்புஒரீஇத், தன்செற்று, அறம்நோக்காது ஈட்டிய ஒண்பொருள், கொள்வார் பிறர். (ப-உ) அன்புஒரீஇ- அன்பில்லாமல். தன்செற்று- தன்னை யும் துன்புறுத்தி. அறன் நோக்காது- அறத்தையும் நினையாமல். ஈட்டிய ஒண்பொருள்- சம்பாதித்த சிறந்த பொருளை. கொள்வார்- கொண்டுபோய் அனுபவிப்பவர். பிறர்- பிறர் ஆவார். (க-து) அன்பின்றி, வருந்தி, அறமும் செய்யாமல் சம்பாதித்த பொருள், சம்பாதித்தவனுக்குப் பயன்படாது; அதை அனுபவிப்பவர் பிறர். 10. சீர்உடைச் செல்வர் சிறுதுனி மாரி வறம்கூர்ந்து அனையது உடைத்து. (ப-உ) சீர்உடை- புகழுடைய. செல்வர்- செல்வம் உள்ளவரின். சிறுதுனி- சிறிய வறுமை. மாரி- மேகம். வறம் கூர்ந்து அனையது- மழையின்றி வறுமை மிகுந்தது போன்ற தன்மையை. உடைத்து- உடையதாகும். (க-து) புகழ் உள்ள செல்வரது வறுமையானது, மேகம் மழை பெய்யாமல் வறண்டது போலாகும். 102. நாண் உடைமை செய்யத் தகாதவைகளைச் செய்ய நாணுதல். 1. கருமத்தால் நாணுதல் நாணு; திருநுதல் நல்லவர் நாணுப் பிற. (ப-உ) கருமத்தால் - இழிந்த செயலால். நாணுதல்- நாணுவதே. நாணு- நாணமாகும். பிற- வேறு வகையால் வரும் நாணம். திரு நுதல்- அழகிய நெற்றியையுடைய. நல்லவர்- குலமகளிரின். நாணு- நாணம் போன்றதாகும். (க-து) இழிவுக்கு நாணுவதே நாணமாகும்; வேறு வகையால் வரும் நாணம், பெண்களின் நாணம் போன்றதாம். 2. ஊண்,உடை, எச்சம், உயிர்க்கெல்லாம் வேறல்ல; நாண்உடைமை மாந்தர் சிறப்பு. (ப-உ) ஊண்- உணவு. உடை- ஆடை. எச்சம்- மற்றவைகள். உயிர்க்கு எல்லாம்- எல்லா உயிர்களுக்கும். வேறு அல்ல- தனித்தனி அல்ல; பொதுவானவை. மாந்தர் சிறப்பு- உயர்ந்த மக்களுக்குச் சிறப்பாக உரியது. நாண் உடைமை- நாணம் உடைமையாம். (க-து) உணவு, உடை, மற்றவை எல்லோர்க்கும் பொது; நல்ல மக்களின் சிறப்பு நாணம் ஆகும். 3. ஊனைக் குறித்த உயிர்எல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. (ப-உ) உயிர் எல்லாம்- உயிர்கள் எல்லாம். ஊனை- உடம்பை. குறித்த- தமக்கு இடமாகக் கொண்டவை. சால்பு- நற்குணங்களின் நிறைவு. நாண்என்னும் -நாணம் என்று சொல்லப்படும். நன்மை குறித்தது- நற்குணத்தைத் தனக்கு இடமாகக் கொண்டதாகும். (க-து) உயிர்களுக்கு உடம்பு இடம்; நற்குணங்களுக்கு நாணம் இடம். 4. அணிஅன்றோ நாண்உடைமை சான்றோர்க்கு; அஃது இன்றேல் பிணிஅன்றோ பீடு நடை. (ப-உ) சான்றோர்க்கு- பெரியோர்க்கு. நாண்உடைமை- நாணம் உடைமை. அணி அன்றோ- ஆபரணம் அன்றோ? அஃது இன்றேல்- அவ்வாபரணம் இல்லையானால். பீடுநடை- பெரு மிதமான நடை. பிணி அன்றோ- நோய் அன்றோ? (க-து) பெரியோர்க்கு நாணமே ஆபரணமாகும். நாண மின்றேல், அவருடைய பெருமித நடை நோய் ஆகும். 5. பிறர்பழியும், தம்பழியும் நாணுவார், நாணுக்கு உறைபதி என்னும் உலகு. (ப-உ) பிறர் பழியும்- பிறர்க்கு வரும் பழியையும். தம் பழியும்- தமக்கு வரும் பழியையும். நாணுவார்- ஒன்றாக எண்ணி நாணுகின்றவரை. நாணுக்கு- நாணத்திற்கு. உறை பதி- உறை விடம். என்னும் உலகு- என்று கூறுவார் உலகத்தார். (க-து) பிறர் பழியையும், தம் பழியையும் ஒன்றாக மதித்து நாணுகின்றவரை, நாணத்தின் உறைவிடம் என்று உலகத்தார் உரைப்பர். 6. நாண்வேலி கொள்ளாது, மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். (ப-உ) மேலாயவர்- உயர்ந்தவர். நாண்- நாணத்தை. வேலி கொள்ளாது- தமக்குப் பாதுகாப்பாகக் கொள்ளாமல். வியன் ஞாலம்- பரந்த நிலத்தை. பேணலர்- விரும்பிக் கொள்ள மாட்டார்கள். மன், ஓ: அசைகள். (க-து) உயர்ந்தவர், பரந்த நிலத்தைவிட நாணத்தையே சிறந்ததாகக் கொள்ளுவார்கள். 7. நாணால் உயிரைத் துறப்பர், உயிர்பொருட்டால் நாண்துறவார், நாண்ஆள் பவர். (ப-உ) நாண் ஆள்பவர்- நாணத்தைக் கைவிடாதவர். நாணால்- நாணம் அழியாமல் இருப்பதற்காக. உயிர் துறப்பர்- உயிரை விடுவர். உயிர்ப் பொருட்டால்- உயிரைக் காக்கும் பொருட்டு. நாண் துறவார்- நாணத்தை விடமாட்டார். (க-து) நாணம் உள்ளவர் நாணத்தைக் காக்க உயிரை விடுவர்; உயிரைக் காக்க நாணத்தை விடமாட்டார். 8. பிறர்நாணத் தக்கது, தான்நாணான் ஆயின், அறம்நாணத் தக்கது உடைத்து. (ப-உ) பிறர்- கேட்டவரும் பார்த்தவரும். நாணத்தக்கது- நாணத்தக்க பழியை. தான் நாணான் ஆயின்- செய்வதற்குத் தான் நாணமாட்டானாயின். அறம்- அறமானது அவனைக் கண்டு. நாணத்தக்கது- வெட்கி நீங்கத்தக்க குற்றத்தை. உடைத்து- உடையதாம். (க-து) நாணாமல் பழி செய்கின்றவனை விட்டுத் தருமம் நீங்கும். 9. குலம்சுடும் கொள்கை பிழைப்பின்; நலம்சுடும் நாண்இன்மை நின்றக் கடை. (ப-உ) கொள்கை பிழைப்பின்- ஒழுக்கந் தவறினால். குலம்சுடும்- அது அவன் குடிப்பிறப்பை அழிக்கும். நாண் இன்மை - நாணம் இல்லாமை. நின்றக்கடை- ஒருவனிடம் நின்ற போது. நலம்சுடும்- அது அவனுடைய எல்லா நன்மைகளையும் அழிக்கும். (க-து) ஒழுக்கந் தவறுதல் குலத்தை அழிக்கும். நாணம் இன்மை எல்லா நன்மைகளையும் அழிக்கும். 10. நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று. (ப-உ) அகத்து நாண் இல்லார்- மனத்தில் நாணம் இல்லாத மக்கள். இயக்கம் - உயிருள்ளவர்போல் இயங்குவது. மரப்பாவை- மரப்பதுமை. நாணால்- கயிற்றினால். உயிர்- உயிர் உள்ளதாக. மருட்டி அற்று- மயக்குவது போலாகும். (க-து) நாணமற்ற மக்கள் வாழ்வது கயிற்றால் ஆடும் மரப்பதுமை உயிருள்ளதாக மயக்குவது போலாம். 103. குடி செயல்வகை தன் குடியை உயரச்செய்யும் விதம். 1. கருமம் செயஒருவன், கைதூவேன் என்னும், பெருமையின் பீடுஉடையது இல். (ப-உ) ஒருவன் கருமம் செய - ஒருவன் தன் குடியை உயர்த்தும் காரியம் செய்வதை. கைதூவேன்- கைவிட மாட்டேன். என்னும் பெருமையின்- என்று கூறும் பெருமையைப்போல். பீடுஉடையது- சிறந்தது. இல்- வேறில்லை. (க-து) ஒருவன், தன் குடியை உயர்த்தும் செயலைக் கைவிடமாட்டேன் என்று சொல்வதைப்போல் சிறந்தது ஒன்று இல்லை. 2. ஆள்வினையும், ஆன்ற அறிவும், எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. (ப-உ) ஆள் வினையும்- முயற்சியும். ஆன்ற அறிவும்- நிறைந்த அறிவும். என இரண்டின்- என்ற இரண்டின். நீள்வினையால்- இடைவிடாத முயற்சியால். குடி- ஒருவன் குடி. நீளும்- உயரும். (க-து) முயற்சி, அறிவு இரண்டினாலும் ஒருவன் குடி உயரும். 3. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். (ப-உ) குடி செய்வல் - என் குடியை உயரச் செய்வேன். என்னும்- என்று முயலும். ஒருவற்கு- ஒருவனுக்கு. தெய்வம்- தெய்வமானது. மடிதற்று- உடையை வரிந்துகட்டிக்கொண்டு. தான் முந்துறும்- தானே முன்வந்து நிற்கும். (க-து) தன் குடியை உயர்த்தும் முயற்சியுள்ளவனுக்குத் தெய்வம் துணை செய்யும். 4. சூழாமல் தானே முடிவுஎய்தும், தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. (ப-உ) தம்குடியை- தமது குடியை உயர்த்த. தாழாது-விரைந்து. உஞற்றுபவர்க்கு- முயல்பவர்க்கு. சூழாமல்- ஆலோசிக்க வேண்டாமலே. தானே- தானாகவே. முடிவு எய்தும்- வெற்றி கிடைக்கும். (க-து) தன் குடியை உயர்த்தும் செயலைச் செய்வோர்க்கு, தானாகவே வெற்றி கிடைக்கும். 5. குற்றம் இலனாய்க், குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. (ப-உ) குற்றம் இலன் ஆய்- குற்றங்கள் செய்யாதவனாய். குடிசெய்து- தன் குடியை உயரச் செய்து. வாழ்வானை- வாழ் கின்றவனை. உலகு- உலகத்தார். சுற்றமா- அவனுக்குச் சுற்றமாக. சுற்றும்- சூழ்ந்துகொள்ளுவர். (க-து) குற்றம் இன்றிக் குடியை உயரச்செய்து வாழ்கின்ற வனை உலகத்தார் சுற்றமாகச் சுற்றிக் கொள்ளுவர். 6. நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்ஆண்மை ஆக்கிக் கொளல். (ப-உ) ஒருவற்கு- ஒருவனுக்கு. நல்ஆண்மை என்பது- நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது. தான் பிறந்த இல்- தான் பிறந்த குடியை உயர்த்தி. ஆண்மை - ஆளுந் தன்மையை. ஆக்கிக் கொளல்- தனக்கு உண்டாக்கிக் கொள்ளுவதாம். (க-து) தன் குடியை உயர்த்திக்கொள்ளுவதே ஒருவனுக்குச் சிறந்த ஆண்மையாம். 7. அமர்அகத்து வன்கண்ணர் போலத் தமர்அகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. (ப-உ) அமர் அகத்து- போர்க்களத்தில். வன்கண்ணர் போல்- வீரர்களைப் போல. தமர் அகத்தும்- குடிப்பிறந்தாருள்ளும். பொறை- அக்குடியின் பாரத்தைப் பொறுத்தல். ஆற்றுவார் மேற்றே- வல்லவர்மேல் உள்ளதாகும். (க-து) போர்க்களத்தை வீரர்கள் தாங்குவர்; அதுபோல் குடியை வல்லவர் தாங்குவர். 8. குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மானம் கருதக் கெடும். (ப-உ) குடி செய்வார்க்கு- குடியை உயர்த்துவார்க்கு. பருவம் இல்லை- அதைச் செய்யும் காலம் என்று ஒன்றும் இல்லை. மடிசெய்து-சோம்பல் கொண்டு. மானம் கருத- மானத்தையும் நினைப்பாராயின். கெடும்- அவர் குடிகெடும். (க-து) தம் குடியை உயர்த்துவதற்குக் காலம் பார்க்க வேண்டாம்; விரைவில் முயலவேண்டும். 9. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ, குடும்பத்தைக் குற்றம் மறைப்பான் உடம்பு. (ப-உ) குடும்பத்தை- தன் குடும்பத்தை. குற்றம் மறைப்பான்- குற்றங்கள் சேராமல் காக்க முயல்பவனது. உடம்பு- உடம்பானது. இடும்பைக்கே- முயற்சியாகிய துன்பத்துக்கே. கொள்கலம் கொல்லோ- இருப்பிடம் ஆமோ? (க-து) தன் குடியைக் காக்க முயல்கின்றவன் உடம்பு துன்பத்துக்கே உறைவிடமாகுமோ? 10. இடுக்கண்,கால் கொன்றிட வீழும், அடுத்துஊன்றும் நல்ஆள் இலாத குடி. (ப-உ) அடுத்து ஊன்றும்- முட்டுக் கொடுத்துத் தாங்க வல்ல. நல்ல ஆள்- நல்ல ஆண்மகன். இலாத குடி- பிறக்காத குடி என்னும் மரம். இடுக்கண்- துன்பம் என்னும் கோடரி. கால் கொன்றிட - தன் அடியை வெட்டிச் சாய்க்க. வீழும்- விழுந்து விடும். (க-து) தாங்குவார் இல்லாத குடி அடியோடு அழியும். 104. உழவு உழவுத் தொழிலின் உயர்வு. 1. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்; அதனால், உழந்தும் உழவே தலை. (ப-உ) உலகம்- உலகமானது. சுழன்றும் - பல தொழில் களில் திரிந்தும். ஏர்ப் பின்னது- உழவர் பின்னே நிற்பதாகும். அதனால்- ஆதலால். உழந்தும்- எவ்வளவு வருந்தினாலும். உழவே- உழவுத்தொழிலே. தலை- தலைமையான தொழிலாகும். (க-து) உழவராலேயே உலகம் வாழும். ஆதலால் உழவுத் தொழிலே தலைமையான தொழில். 2. உழுவார் உலகத்தார்க்கு ஆணி; அஃதுஆற்றாது எழுவாரை யெல்லாம் பொறுத்து. (ப-உ) உழுவார்- உழவுத் தொழில் செய்கின்றவர். அஃது ஆற்றாது- அந்த உழவுத் தொழிலைச் செய்யாமல். எழுவாரை எல்லாம்- வேறு தொழில்களில் போவோரை யெல்லாம். பொறுத்து- தாங்குவதால். உலகத்தார்க்கு- உலகத்தாராகிய தேருக்கு. ஆணி- கடையாணி ஆவார். (க-து) உழுகின்றவரே உலகத்தை வாழச் செய்கின்றவர் ஆவர். 3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றுஎல்லாம், தொழுதுண்டு பின்செல் பவர். (ப-உ) உழுதுஉண்டு - உழவுத்தொழில் செய்து உண்டு. வாழ்வாரே- வாழ்கின்றவரே. வாழ்வார்- உரிமையுடன் வாழ் கின்றவராவார். மற்று எல்லாம்- மற்றவர் எல்லாரும். தொழுது- பிறரை வணங்கி. உண்டு- அதனால் தாம் உண்டு. பின் செல்பவர்- அவர் பின் செல்கின்றவர் ஆவார். (க-து) உழுதுண்டு வாழ்பவரே சுதந்தரமாக வாழ்பவர்; மற்றவர் அடிமையாக வாழ்பவர் ஆவர். 4. பலகுடை நீழலும் தம்குடைக்கீழ்க் காண்பர்; அலகுடை நீழ லவர். (ப-உ) அலகுஉடை- நெற்கதிர்களையுடைய. நீழல் அவர்- இரக்கம் உள்ளவர். பலகுடை நீழலும்- பல வேந்தர்களின் குடை நிழலில் உள்ள நிலம் முழுவதையும். தம் குடைக்கீழ்- தமது அரசர் குடையின்கீழ். காண்பர்- பார்ப்பார்கள். (க-து) உழவுத் தொழில் செய்வோர், பல நாடுகளையும் தமது அரசர்களின் ஆட்சியிலே இருக்கக் காண்பார். 5. இரவார்; இரப்பார்க்கு ஒன்றுஈவர்; கரவாது, கைசெய்துஊண் மாலை யவர். (ப-உ) கைசெய்து- தம் கையால் உழவுத் தொழில் செய்து. ஊண்மாலையவர்- உண்ணும் தன்மையுள்ளவர். இரவார்- பிறரிடம் யாசிக்கமாட்டார். இரப்பார்க்கு- தம்மிடம் வந்து யாசிப்பவர்க்கு. ஒன்று- அவர் வேண்டிய தொன்றை. கரவாது- ஒளிக்காமல். ஈவர்- கொடுப்பர். (க-து) உழுதுண்பவர் பிறரிடம் யாசிக்கமாட்டார்; யாசிப்பவர்க்குக் கொடுப்பார். 6. உழவினார் கைம்மடங்கின், இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கு நிலை. (ப-உ) உழவினார்- உழுகின்றவரின். கைம்மடங்கின்- கை உழாமல் மடங்கியிருக்குமானால். விழைவதூஉம்- விரும்பும் உணவையும். விட்டேம் என்பார்க்கு- துறந்தோம் என்பவர்க்கும். நிலைஇல்லை- இவ்வுலகில் வாழ்வில்லை. (க-து) உழவுத்தொழில் நடைபெறாவிட்டால் துறவி களுக்கும் வாழ்வில்லை. 7. தொடிப்புழுதி கஃசா உணக்கின், பிடித்துஎருவும் வேண்டாது சாலப் படும். (ப-உ) தொடிப்புழுதி - ஒரு பலப் புழுதியை. கஃசா- காற்பலம் ஆகும்படி. உணக்கின்- காயவிடுவானாயின். பிடித்து எருவும்- ஒரு பிடியில் அடங்கும் எருவும். வேண்டாது- வேண்டாமல். சாலப்படும்- அதிகமாக விளையும். (க-து) உழுது காயவிட்ட நிலத்திற்கு எருவேண்டுவ தில்லை; நன்றாக விளையும். 8. ஏரினும் நன்றால் எருவிடுதல், கட்டபின் நீரினும் நன்றுஅதன் காப்பு. (ப-உ) ஏரினும்- உழுவதைவிட. எருவிடுதல்- எருப் போடுதல். நன்றுஆல்- நல்லதாகும். கட்டபின்- இவ்விரண்டும் செய்து களை எடுத்தபின். நீரினும்- நீர் பாய்ச்சுவதைவிட. அதன் காப்பு- அதைக் காத்தல். நன்று - நன்றாகும். ஆல்: அசை. (க-து) உழுவதைவிட எருப்போடுதல் நல்லது; களை பிடுங்கியபின் நீர் பாய்ச்சுவதைவிடப் பாதுகாத்தல் நல்லது. 9. செல்லான் கிழவன் இருப்பின், நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். (ப-உ) கிழவன்- நிலத்துக்கு உரியன். செல்லான்- நாள் தோறும் நிலத்தைப் பார்க்கப் போகாமல். இருப்பின்- இருப்பானாயின். நிலம் - அந்த நிலம். இல்லாளின்- மனைவியைப் போல. புலந்து- வெறுத்து. ஊடிவிடும்- பிணங்கிவிடும். (க-து) உழவன் நாள்தோறும் நிலத்தைப் போய்ப் பார்க்கா மலிருந்தால் அது அவன் மனைவியைப்போல் பிணங்கிவிடும். 10. இலம்என்று அசைஇ இருப்பாரைக் காணின், நிலம்என்னும் நல்லாள் நகும். (ப-உ) இலம் என்று- செல்வம் இல்லாதவர் ஆனோம் என்று. அசைஇ இருப்பாரை- சோம்பி இருப்பவரை. காணின்- கண்டால். நிலம் என்னும்- நிலம் என்று சொல்லப்படும். நல்லாள் - நல்லவள். நகும்- சிரிப்பாள். (க-து) வறியவர் ஆனோம் என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் பூமிதேவி சிரிப்பாள். 105. நல்குரவு தரித்திரத்தால் வரும் துன்பம். 1. இன்மையின் இன்னாதது யாதுஎனின், இன்மையின் இன்மையே இன்னா தது. (ப-உ) இன்மையின்- வறுமைபோல. இன்னாதது- துன்பம் செய்வது. யாதுஎனின்- யாதென்று கேட்டால். இன்மையின்- வறுமைபோல. இன்னாதது - துன்பம் செய்வது. இன்மையே- வறுமைதான். (க-து) தரித்திரம்போல் துன்பத்தைத் தருவது வேறு எதுவும் இல்லை. 2. இன்மை எனஒரு பாவி, மறுமையும் இம்மையும் இன்றி வரும். (ப-உ) இன்மை என- வறுமை என்று சொல்லப்படும். ஒரு பாவி- ஒப்பற்ற பாவியானவன். மறுமையும்- மறுமையின்பமும். இம்மையும்- இம்மையின்பமும். இன்றி- இல்லாமல் போகும்படி. வரும்- வருவான். (க-து) தரித்திரம் இம்மை, மறுமை இன்பங்களை அழிப்பதாகும். 3. தொல்வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக நல்குரவு என்னும் நசை. (ப-உ) நல்குரவு என்னும்- வறுமை என்று சொல்லப்படும். நசை- ஆசையானது. தொல்வரவும்- பழமையான குடிப் பெருமையும். தோலும்- புகழையும். தொகையாக- ஒன்றாக. கெடுக்கும்-அழிக்கும். (க-து) தரித்திரம் என்னும் ஆசை குடிப்பெருமையையும், புகழையும் கெடுக்கும். 4. இல்பிறந்தார் கண்ணேயும் இன்மை, இளிவந்த சொல்பிறக்கும் சோர்வு தரும். (ப-உ) இன்மை- வறுமையானது. இல்பிறந்தார் கண்ணே யும்- உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்திலும். இளிவந்த சொல்- அவமானத்தை உண்டாக்கும் சொல். பிறக்கும்- பிறப்பதற்குக் காரணமான. சோர்வு தரும்- சோர்வை உண்டாக்கும். (க-து) தரித்திரம், உயர் குடியில் பிறந்தவர்க்கும் அவமானத்தை உண்டாக்கும். 5. நல்குரவு என்னும் இடும்பையுள், பல்குரைத் துன்பங்கள் சென்று படும். (ப-உ) நல்குரவு என்னும்- வறுமை என்று சொல்லப்படும். இடும்பையுள்- துன்பத்துள். பல்குரைத் துன்பங்கள்- பலவகைத் துன்பங்களும். சென்றுபடும்- புகுந்து வளரும். (க-து) வறுமைத் துன்பம் ஒன்றினால், பலவகைத் துன்பங் களும் வளரும். 6. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். (ப-உ) நல்பொருள்- நல்ல நூல்களின் பொருள்களை. நன்கு உணர்ந்து- தெளிவாக அறிந்து. சொல்லினும்- சொன்னாலும். நல்கூர்ந்தார்- வறியவர். சொல்பொருள்- சொல்லும் பொருள். சோர்வுபடும்- யாராலும் கேட்கப்படாமல் வீணாகும். (க-து) வறியவர்கள் நல்ல பொருள்களைக் கூறினாலும் அவற்றை யாரும் கேட்கமாட்டார்கள். 7. அறம்சாரா நல்குரவு, ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். (ப-உ) அறம்சாரா- அறத்துடன் பொருந்தாத. நல்குரவு- தரித்திரத்தை உடையவன். ஈன்ற தாயானும்- தன்னைப் பெற்ற தாயினாலும். பிறன்போல- அந்நியனைப் போல. நோக்கப்படும்- பார்க்கப்படுவான். (க-து) நோர்மையற்ற வறுமையுள்ளவன், தன் தாயினாலும் வேற்றானாக எண்ணிப் பார்க்கப்படுவான். 8. இன்றும் வருவது கொல்லோ, நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. (ப-உ) நெருநலும்- நேற்றும். கொன்றது போலும்- கொன்ற தைப் போன்ற துன்பங்களைச் செய்த. நிரப்பு- வறுமையானது. இன்றும்- இன்றைக்கும். வருவது கொல்ஓ- வந்து துன்புறுத்துமோ? (க-து) நேற்றுத் துன்பம் செய்த வறுமை, இன்றும் வந்து துன்புறுத்துமோ? 9. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. (ப-உ) நெருப்பினுள்- ஒருவன் நெருப்பிலே கிடந்து. துஞ்சலும் ஆகும்- தூங்கவும் முடியும். நிரப்பினுள்- வறுமையில். யாதொன்றும்- யாதொரு வகையினாலும். கண்பாடு அரிது- தூங்குதல் இல்லை. (க-து) தீயிலும் தூங்கலாம்; வறுமைக் காலத்தில் தூங்க முடியாது. 10. துப்புரவு இல்லார் துவரத் துறவாமை, உப்பிற்கும், காடிக்கும் கூற்று. (ப-உ) துப்புரவு இல்லார்- அனுபவிக்கத்தக்க பொருள் அற்ற வறியவர். துவரத் துறவாமை- முழுவதும் துறவை மேற்கொள்ளாதிருத்தல். உப்புக்கும் காடிக்கும்- பிறர் வீட்டில் உள்ள உப்புக்கும் புளிக்கும். கூற்று- எமன் ஆவான். (க-து) வறுமையுள்ளவர் துறவறம் கொள்ளாதிருத்தல், பிறருடைய உப்புக்கும் புளிக்கும் நஷ்டமாகும். 106. இரவு மானம் கெடாமல் யாசித்தல் 1. இரக்க இரத்தக்கார்க் காணின்; கரப்பின் அவர்பழி; தம்பழி அன்று. (ப-உ) இரத்தக்கார்- யாசிப்பதற்குத் தகுந்தவரை. காணின்- கண்டால். இரக்க- அவரிடம் யாசிக்கவும். கரப்பின்- அவர் பொருள் கொடுக்காமல் ஒளிப்பாராயின். அவர் பழி- அது அவருடைய குற்றமாகும். தம்பழி அன்று- தம்முடைய குற்றமாகாது. (க-து) கொடுப்பவர்களிடமே யாசிக்கவேண்டும். அவர் கொடுக்காவிட்டால் அது அவருடைய குற்றம்; யாசிப்பவர் குற்றம் அன்று. 2. இன்பம், ஒருவற்கு இரத்தல்; இரந்தவை, துன்பம் உறாஅ வரின். (ப-உ) ஒருவற்கு- ஒருவனுக்கு. இரத்தல் இன்பம்- யாசித்தலும் இன்பமாகும். இரந்தவை- தான் இரந்து கேட்டவை. துன்பம் உறாஅ- துன்பம் இல்லாமல். வரின்- கிடைக்குமாயின். (க-து) ஒருவன் தான் இரந்து கேட்ட பொருள் எளிதில் கிடைக்குமாயின் இரத்தலும் இன்பமாகும். 3. கரப்புஇலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து. (ப-உ) கரப்புஇலா - வஞ்சனையில்லாத. நெஞ்சின்- நெஞ்சையுடைய. கடன் அறிவார் முன்- தம் கடமையை உணர்ந்தவர் முன்னே. நின்று இரப்பும்- நின்று ஒன்றை இரத்தலும். ஓர் ஏஎர் உடைத்து- ஒரு அழகையுடையதாகும். (க-து) மறைக்காமல் கொடுப்பவர் முன் நின்று யாசிப்பதும் ஒரு அழகாகும். 4. இரத்தலும் ஈதலே போலும்; கரத்தல் கனவினும் தேற்றாதார் மாட்டு. (ப-உ) கரத்தல்- ஒளிப்பதை. கனவிலும்- கனவில் கூட. தேற்றாதார் மாட்டு- அறியாதவரிடம். இரத்தலும்- யாசிப்பதும். ஈதலேபோலும்- கொடுப்பதைப் போன்ற இன்பமாகும். (க-து) கருமித்தனம் இல்லாதவரிடம் யாசித்தல், கொடுப் பதைப் போன்ற இன்பந் தரும். 5. கரப்புஇலார் வையகத்து உண்மையால்; கண்நின்று இரப்பவர் மேற்கொள் வது. (ப-உ) கண்நின்று- கண்முன் நின்று. இரப்பவர்- யாசிப்பவர். மேற்கொள்வது - யாசிப்பதை மேற்கொள்வதற்குக் காரணம். கரப்புஇலார்- ஒளிக்காமல் கொடுக்கின்றவர். வையகத்து- உலகில். உண்மையால்- இருக்கின்றதால்தான். (க-து) ஒளிக்காமல் கொடுப்பவர் உலகில் இருப்பதனால் தான் யாசிப்பவர் யாசிக்கின்றனர். 6. கரப்புஇடும்பை இல்லாரைக் காணின்; நிரப்புஇடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். (ப-உ) கரப்புஇடும்பை- ஒளிப்பதாகிய நோய். இல்லாரை- இல்லாதவரை. காணின்- கண்டால். நிரப்பு இடும்பை எல்லாம்- வறுமையால் வரும் துன்பம் எல்லாம். ஒருங்கு கெடும்- ஒன்றாக அழியும். (க-து) கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் துன்பம் நீங்கும். 7. இகழ்ந்துஎள்ளாது ஈவாரைக் காணின், மகிழ்ந்துஉள்ளம் உள்உள் உவப்பது உடைத்து. (ப-உ) இகழ்ந்து எள்ளாது- அவமதித்து இகழாமல். ஈவாரைக்காணின்- கொடுப்பவரைக் கண்டால். உள்ளம்- இரப்பவர் மனம். மகிழ்ந்து- மகிழ்ச்சியடைந்து. உள்உள்- உள்ளத்தினுள். உவப்பது- மிகவும் மகிழும் தன்மையை. உடைத்து- உடையதாகும். (க-து) மறைக்காமல் பொருள் கொடுப்பாரைக் கண்டால், யாசிப்போர் மனம் மிகவும் மகிழ்ச்சி அடையும். 8. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம், மரப்பாவை சென்றுவந்து அற்று. (ப-உ) இரப்பார்ஐ- இரப்பவர். இல்ஆயின்- இல்லை ஆனால். ஈர்ங்கண்- குளிர்ந்த இடத்தையுடைய. மாஞாலம்- பெரிய நிலத்தில் உள்ளவர்களின் போக்கு வரவுகள். மரப்பாவை- மரப்பதுமை. சென்று வந்து அற்று- கயிற்றால் போய்வருவது போல ஆகும். ஐ:அசை. (க-து) இரப்போர் இன்றேல் இவ்வுலகில் உள்ளவர் போக்குவரவு, கயிற்றால் உலவும் மரப்பதுமையின் போக்குவரவு போன்றதாகும். 9. ஈவார்கண் என்உண்டாம் தோற்றம்? இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. (ப-உ) இரந்துகோள்- ஒன்றை இரந்து பெற்றுக் கொள்வதை. மேவார்- விரும்பாதவர். இலாக்கடை- இல்லாத போது. ஈவார்கண்- கொடுப்பவரிடம். என்- என்ன. தோற்றம் உண்டாம்- புகழ் உண்டாகும்? (ஒன்றும் இல்லை). (க-து) யாசிப்பவர் இல்லாவிட்டால், கொடுப்பவர் களுக்குப் புகழ் இல்லை. 10. இரப்பான் வெகுளாமை வேண்டும்; நிரப்புஇடும்பை தானேயும் சாலும் கரி. (ப-உ) இரப்பான்- யாசிப்பவன். வெகுளாமை வேண்டும்- கொடுப்பவனிடம் கோபங் கொள்ளக்கூடாது. நிரப்பு இடும்பை தானேயும்- சினம் உதவி செய்யாது என்பதற்கு அவனுடைய வறுமைத் துன்பமே. சாலும்- போதுமான. கரி- சாட்சியாகும். (க-து) யாசிப்பவன் கொடுப்பவனிடம் கோபங்கொள்ளக் கூடாது. 107. இரவு அச்சம் மானம் அழியக்கூடிய இரவுக்கு அஞ்சுதல். 1. கரவாது உவந்துஈயும் கண்அன்னார் கண்ணும், இரவாமை கோடி உறும். (ப-உ) கரவாது- மறைக்காமல். உவந்து ஈயும்- மனமகிழ்ந்து கொடுக்கும். கண்அன்னார்கண்ணும்- கண்போல் சிறந்தவரிடத்தும். இரவாமை- யாசிக்காமல் இருத்தல். கோடிஉறும்- கோடிமடங்கு நன்மையாகும். (க-து) மறைக்காமல் கொடுப்பவரிடத்தும் யாசிக்காம லிருத்தல் கோடி மடங்கு நன்மையாகும். 2. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகுஇயற்றி யான். (ப-உ) உலகு இயற்றியான்- இவ்வுலகைப் படைத்தவன். இரந்தும்- யாசித்தும். உயிர்வாழ்தல் வேண்டின்- உயிர் வாழ வேண்டும் என்று விதித்தானாயின். பரந்து- அவனும் அந்த யாசகரைப்போல எங்கும் சுற்றி. கெடுக- அழிந்து போகட்டும். (க-து) பிரமன் யாசகம் செய்வதற்காக உலகத்தோரைப் படைத்தானாயின் அவன் அழிந்து போகட்டும். 3. இன்மை இடும்பை இரந்துதீர் வாம்என்னும், வன்மையின் வன்பாட்டது இல். (ப-உ) இன்மை- வறுமையால் வரும். இடும்பை- துன்பத்தை. இரந்து தீர்வாம்- யாசித்து நீக்கிக்கொள்ளுவோம். என்னும்- என்று நினைக்கும். வன்மையின்- வல்லமைபோல். வன்பாட்டது- வலிமையுள்ளது. இல்- வேறு இல்லை. (க-து) வறுமையை யாசகத்தால் நீக்கிக் கொள்வோம் என்னும் துணிவைப்போல வலிமையுள்ளது ஒன்றும் இல்லை. 4. இடம்எல்லாம் கொள்ளாத் தகைத்தே; இடம்இல்லாக் காலும் இரவுஒல்லாச் சால்பு. (ப-உ) இடம் இல்லாக்காலும்- இன்பம் அடைய இடமில்லாத வறுமைக் காலத்திலும். இரவு- பிறரிடம் சென்று யாசிப்பதற்கு. ஒல்லாச் சால்பு- சம்மதிக்காத பெருமை. இடம் எல்லாம்- உலகம் எல்லாம். கொள்ளாத் தகைத்துஏ- கொள்ளாத பெருமையுள்ளது. ஏ: அசை. (க-து) தரித்திர காலத்திலும் யாசிக்காமலிருப்பதே சிறந்த பெருமை. 5. தெண்ணீர் அடுபுற்கை ஆயினும், தாள்தந்தது உண்ணலின்ஊங்கு இனியது இல். (ப-உ) தெள்நீர்- தெளிந்த நீர்போல. அடுபுற்கை ஆயினும்- சமைத்த கூழானாலும். தாள் தந்தது- தன் முயற்சியால் தேடியதை. உண்ணலின் ஊங்கு- உண்பதை விட மேலான. இனியதுஇல்- இனிமையான உணவு வேறு இல்லை. (க-து) தன் முயற்சியால் கிடைத்த உணவு கூழாயினும், அதுவே இனிய உணவாகும். 6. ஆவிற்கு நீர்என்று இரப்பினும், நாவிற்கு இரவின் இளிவந்தது இல். (ப-உ) ஆவிற்கு- பசுவுக்கு. நீர்என்று- தண்ணீர் வேண்டும் என்று. இரப்பினும்- இரந்தாலும். இரவின்- அந்த யாசிப்பைப் போல். நாவிற்கு- நாக்கிற்கு. இளிவந்தது- அவமானகரமானது. இல்- வேறு இல்லை. (க-து) பசுவுக்குத் தண்ணீர் வேண்டும் என்று இரப்பதும் அவமானமாகும். 7. இரப்பன் இரப்பாரை எல்லாம்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. (ப-உ) இரப்பின்- யாசிக்க வேண்டுமானால். கரப்பார்- மறைப்பவரிடம். இரவன்மின்- இரக்காதீர்கள். என்று- என்று சொல்லி. இரப்பாரை எல்லாம்- இரப்பவர்களையெல்லாம் பார்த்து. இரப்பன்- வேண்டிக்கொள்வேன். (க-து) யாசிப்பவர்களைப் பார்த்து, நீங்கள் கொடுக்காதவர் களிடம் யாசிக்காதீர்கள் என்று வேண்டிக்கொள்ளுவேன். 8. இரவுஎன்னும் ஏமாப்புஇல் தோணி, கரவுஎன்னும் பார்தாக்கப் பக்கு விடும். (ப-உ) இரவு என்னும்- யாசகம் என்னும். ஏமாப்பு இல்- பாதுகாப்பில்லாத. தோணி- மரக்கலம். கரவு என்னும்- கொடுக்காமல் ஒளித்தல் என்னும். பார்தாக்க- வலிய நிலத்தோடு தாக்குமாயின். பக்குவிடும்- பிளந்து போகும். (க-து) யாசகம் என்னும் தோணி, கொடாமை என்னும் வலிய நிலம் தாக்குமானால் பிளந்துவிடும். 9. இரவுஉள்ள உள்ளம் உருகும், கரவுஉள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். (ப-உ) இரவு உள்ள- யாசிப்பதன் கொடுமையை நினைத் தால். உள்ளம் உருகும்- மனம் கரையும். கரவு- இல்லை என்று ஒளிக்கும் கொடுமையை. உள்ள- நினைத்தால். உள்ளதூஉம்- உருகும்படியான அவ்வுள்ளமும். இன்றிக்கெடும்- இல்லாமல் அழியும். (க-து) யாசிப்பதை நினைத்தால் மனம் உருகும்; கேட்டதை இல்லை என்று மறைப்பதை நினைத்தால் மனமே அழிந்துவிடும். 10. கரப்பவர்க்கு யாங்குஒளிக்கும் கொல்லோ? இரப்பவர் சொல்ஆடப் போஓம் உயிர். (ப-உ) சொல்ஆட- இல்லையென்று சொன்னவுடன். இரப்பவர்- யாசிப்பவரின். உயிர்போம்- உயிர் போய்விடும். கரப்பவர்க்கு- இல்லையென்று மறைப்பவர்க்கு. யாங்கு- அவர் உயிர் எங்கே. ஒளிக்கும் கொல்ஓ- ஒளிந்து நிற்குமோ. ஓ:அசை. (க-து) யாசிப்பவர்க்கு இல்லையென்று சொன்னால் அவர் உயிர் போய்விடும். இல்லை என்று மறைப்பவர்க்கு அவர் உயிர் எங்கே ஒளிக்குமோ? 108. கயமை நல்ல குணமில்லாத கீழோர் தன்மை. 1. மக்களே போல்வர் கயவர்; அவர்அன்ன ஒப்பாரி யாம்கண்டது இல். (ப-உ) கயவர்- கீழோர். மக்களேபோல்வர்- உருவத்தில் மக்களை ஒத்திருப்பர். அவர் அன்ன- அவரைப் போல. ஒப்பார் - மக்களை ஒத்திருப்பவரை. யாம்கண்டது இல்- வேறு இனத்தில் நாம் பார்த்ததில்லை. (க-து) கீழ்மக்கள் உருவில் மக்களை ஒத்திருப்பர்; செயலில் வேறுபட்டிருப்பர். 2. நன்றுஅறி வாரின், கயவர் திருவுடையர்; நெஞ்சத்து அவலம் இலர். (ப-உ) நன்று- தமக்கு நன்மையானவைகளை. அறிவாரின்- அறிகின்றவர்களைவிட. கயவர்- கீழ்மக்கள். திருஉடையர்- நன்மையுள்ளவர் ஆவார். நெஞ்சத்து- தம் மனத்தில். அவலம் இலர்- நன்மையைப்பற்றிக் கவலை இல்லாமலிருப்பர். (க-து) நன்மைகளை நாடுகின்றவர்களைவிட மனத்தில் கவலையற்ற கயவர் நன்மையுள்ளவர் ஆவார். 3. தேவர் அனையர் கயவர், அவரும்தாம் மேவன செய்துஒழுக லான். (ப-உ) கயவர்- கீழ்மக்கள். தேவர் அனையர்- தேவர் போன்றவர். அவரும்- கயவர்களும் தேவர்போல. தாம் மேவன- தாம் விரும்புகின்றவைகளை. செய்து ஒழுகலான்- செய்து வாழ்வதால். (க-து) தேவர்களைப் போல் கயவர்களும் தாம் விரும்பியதைச் செய்து வாழ்கின்றனர். ஆதலால் தேவரும் கயவரும் ஒரு தன்மையர். 4. அகப்பட்டி யாவாரைக் காணின், அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். (ப-உ) கீழ்- கீழ்ப்பட்டவன். அகப்பட்டி ஆவாரை- தம் விருப்பப்படி நடக்கும் மனமுள்ள கீழ்மக்களை. காணின்- கண்டால். அவரின்- அவரைவிட. மிகப்பட்டு- தான் மேம்பட்டு. செம்மாக்கும்- செருக்கடைவான். (க-து) கீழ்மக்கள், பட்டியாக நடப்பவரைக் கண்டால், தான் அவரைவிட இன்னும் பட்டித்தனமுடன் நடந்து கொள்வார். 5. அச்சமே கீழ்களது ஆசாரம், எச்சம் அவாஉண்டேல், உண்டாம் சிறிது. (ப-உ) கீழ்களது ஆசாரம்- கீழோர்களின் ஆசாரத்துக்குக் காரணம். அச்சமே- பயமாகும். எச்சம் - பயம் இல்லாவிட்டால். அவா உண்டேல்- பொருளின் மேல் ஆசை இருக்குமானால். சிறிது உண்டாம்- சிறிது ஆசாரம் உண்டாகும். (க-து) கீழ்மக்களிடம் பயம் அல்லது பொருளாசை காரண மாகத்தான் ஆசாரம் உண்டாகும்; தானே உண்டாவதில்லை. 6. அறைபறை அன்னர் கயவர்; தாம்கேட்ட மறைபிறர்க்கு உய்த்துஉரைக்க லான். (ப-உ) தாம் கேட்ட- தாம் கேள்விப்பட்ட. மறை- இரகசியங்களை. பிறர்க்கு உய்த்து உரைக்கலான்- அந்நியரிடம் கொண்டுபோய்க் கூறுவதனால். கயவர்- கீழ்மக்கள். அறைபறை அன்னர்- அடிக்கப்படும் பறை போன்றவர். (க-து) இரகசியத்தைப் பிறரிடம் தாமே வெளியிடுவதனால், கீழ்மக்கள் தம்பட்டம் போன்றவர். 7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுஉடைக்கும் கூன்கையர் அல்லாத வர்க்கு. (ப-உ) கொடிறு- கன்னத்தை. உடைக்கும்- அறைந்து பெயர்க்கும். கூன்கையர்- வளைந்த கையினர். அல்லாதவர்க்கு- அல்லாதவர்க்கு. கயவர்- கீழ்மக்கள். ஈர்ங்கை- தாம் உண்டபின் ஈரமுள்ள கையைக் கூட. விதிரார்- உதறமாட்டார். (க-து) கீழ்மக்கள் தம்மை வருத்துவோருக்குத்தான் பொருள் கொடுப்பார். 8. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். (ப-உ) சான்றோர்- பெரியோர். சொல்ல- மெலியவர் தம் குறையைக் கூறிய உடனேயே. பயன்படுவர்- அவருக்கு உதவி கரமாக இருப்பர். கீழ்- கீழ்மக்கள். கரும்புபோல்- கரும்பைப்போல. கொல்ல- நசுக்கினால்தான். பயன்படுவர்- உபயோகப்படுவார். (க-து) மேலோர், பிறர் துயரைக் கேட்டவுடனேயே உதவுவர்; கீழோர், தம்மை நசுக்குவோர்க்குத்தான் உதவுவார். 9. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின், பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். (ப-உ) கீழ்- கீழ்மகன். உடுப்பதூஉம்- பிறர் நன்றாக உடுப்ப தையும். உண்பதூஉம்- நன்றாக உண்ணுவதையும். காணின்- கண்டால் அவற்றைப் பொறுக்காமல். பிறர்மேல்- மற்றவர்மேல். வடுக்காண- குற்றம் உண்டாக்க. வற்றாகும்- வல்லவனாவான். (க-து) கீழ்மகன், பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டு பொறுக்காமல் அவர்கள்மேல் குற்றம் சுமத்துவான். 10. எற்றிற்கு உரியர் கயவர் ஒன்றுஉற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. (ப-உ) கயவர்- கீழோர். எற்றிற்கு உரியர்- எத்தொழிலுக்கு உரியவர்? ஒன்று உற்றக்கால்- ஒரு துன்பம் வந்தபோது. விரைந்து- விரைவில். விற்றற்கு உரியர்- தம்மை விற்பதற்கு உரியவர் ஆவார். (க-து) கீழோர், துன்பம் வந்தபோது தம்மை விற்று விடுவார்கள். காமத்துப்பால் களவியல்* 109. தகை அணங்குறுத்தல் அழகு வருத்தம் செய்தல். 1. அணங்குகொல்? ஆய்மயில் கொல்லோ? கனம்குழை மாதர்கொல்? மாலும்என் நெஞ்சு. (ப-உ) கனம் குழை- கனமான காதணியையுடைய இவள். அணங்குகொல்- தெய்வப் பெண்ணோ. ஆய்மயில் கொல்லோ- சிறந்த மயிலோ. மாதர் கொல்- அல்லது மனிதப் பெண்தானோ. என் நெஞ்சு- என்மனம் இன்னாள் என்று தெளிய முடியாமல். மாலும்- மயங்கும். (க-து) இவள் தெய்வமோ, மயிலோ, மாதோ, யார் என்று அறியேன். 2. நோக்கினாள், நோக்குஎதிர் நோக்குதல், தாக்குஅணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து. (ப-உ) நோக்கினாள்- அழகுள்ள இவள். நோக்கு எதிர் நோக்குதல்- என் பார்வைக்கு எதிரே பார்த்தல். தாக்கு அணங்கு- தாக்கி வருத்தும் தெய்வம். தானை - தானையையும். கொண்டு அன்னது உடைத்து- கொண்டு வந்ததுபோன்ற தன்மையை உடையதாகும். (க-து) இவள் பார்வை, ஒரு தெய்வப்பெண் போர் செய்வதற்குச் சேனையையும் கொண்டுவந்திருப்பது போலக் காணப்படுகின்றது. 3. பண்டுஅறியேன் கூற்றுஎன் பதனை, இனி அறிந்தேன்; பெண்தகையால் பேர்அமர்க் கட்டு. (ப-உ) கூற்று என்பதனை- எமன் என்று சொல்லப்படுவதை. பண்டுஅறியேன்- முன் கண்டறியேன். இனி அறிந்தேன்- இப் பொழுது கண்டேன். பெண் தகையால்- பெண் தன்மையுடன். பேர் அமர்- பெரிதாகப் போர்செய்கின்ற. கட்டு- கண்களை உடையதாம். (க-து) கூற்றுவன், பெண்தன்மையுடன் பெரிய போர் செய்யும் கண்களையும் உடையவன் என்பதை இப்பொழுது தான் அறிந்தேன். 4. கண்டார் உயிர்உண்ணும் தோற்றத்தால், பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண். (ப-உ) பெண் தகை- பெண் தன்மைகளையுடைய. பேதைக்கு- இப் பெண்ணுக்கு. கண்- கண்கள். கண்டார்- தம்மைக் கண்டவர்களின். உயிர் உண்ணும்- உயிரை உண்ணுகின்ற. தோற்றத்தால்- தோற்றத்துடன். அமர்த்தன- மாறு பட்டிருந்தன. (க-து) இவள் கண்கள், பார்ப்போர் உயிரை உண்ணும் காட்சியுடன் கொடுமையாக இருந்தன. 5. கூற்றமோ, கண்ணோ, பிணையோ, மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து. (ப-உ) கூற்றமோ- எமனோ. கண்ணோ- கண்தானோ. பிணையோ- பெண்மானோ. மடவரல் நோக்கம்- இப்பெண்ணின் பார்வை. இம்மூன்றும்- இம்மூன்றின் தன்மைகளையும். உடைத்து- கொண்டிருக்கின்றது. (க-து) இவளுடைய பார்வை எமனோ, கண்ணோ, மானோ அறியேன். 6. கொடும்புருவம் கோடா மறைப்பின், நடுங்குஅஞர் செய்யல மன்இவள் கண். (ப-உ) கொடும்புருவம்- கொடிய புருவங்கள். கோடா மறைப்பின்- கோணாமல் நேர்நின்று விலக்கினால். இவள்கண்- இவளது கண்கள். நடுங்குஅஞர்- நடுங்கும்படியான துன்பத்தை. செய்யலமன்- செய்யமாட்டா. மன்: அசை. (க-து) இவள் கண்கள் புருவங்களால் மறைக்கப்பட்டால், எனக்குத் துன்பந் தரமாட்டா. 7. கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்; மாதர் படாஅ முலைமேல் துகில். (ப-உ) மாதர்- இம் மாதருடைய. படாஅமுலைமேல்- சாயாத முலைகளின் மேல் உள்ள. துகில்- ஆடையானது. கடாஅம் களிற்றின்மேல்- மதங்கொண்ட யானையின் மேல் இட்ட. கண் படாம்- முகபடாத்தைப் போன்றதாகும். (க-து) இவள் முலைகளின்மேல் உள்ள துணி யானை முகத்தின்மேல் இட்ட முகபடாம் ஆகும். 8. ஒள்நுதற்கு ஓ உடைந்ததே, ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு. (ப-உ) ஞாட்பினுள்- போர்க்களத்தில். நண்ணாரும்- பகைவரும். உட்கும்- அஞ்சுகின்ற. என் பீடு- என் வலிமை. ஒள்நுதற்குஓ- இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்கே. உடைந்ததே- அழிந்துவிட்டது. ஓ, ஏ: அசைகள். (க-து) எனது வலிமை இவள் நெற்றிக்குத் தோற்றது. 9. பிணைஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணிஎவனோ ஏதில தந்து. (ப-உ) பிணைஏர்- பெண்மான் போன்ற அழகிய. மடநோக்கும்- அஞ்சும் பார்வையும். நாணும்- நாணமும். உடை யாட்கு- உடைய இவளுக்கு. ஏதில தந்து- வேறு ஆபரணங்களைக் கொண்டுவந்து. அணிஎவன்ஓ- அணிவிப்பதால் என்ன பயன்? ஓ:அசை. (க-து) இவளுக்குப் பார்வையும், நாணமுமே ஆபரணங்கள். வேறு ஆபரணங்களால் என்ன பயன்? 10. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல், கண்டார் மகிழ்செய்தல் இன்று. (ப-உ) அடுநறா- காய்ச்சப்பட்ட கள். உண்டார் கண் அல்லது- தன்னை உண்டவர்களுக்கு மகிழ்ச்சி தருமே அல்லாமல். காமம்போல்- காமத்தைப்போல. கண்டார்- தன்னைக் கண்டவர் களிடம். மகிழ் செய்தல்- மகிழ்ச்சியை உண்டாக்குவது. இன்று- இல்லை. (க-து) கள்ளை உண்டவர்கள்தாம் மகிழ்வர்; காமத்தைக் கண்டாலே மகிழ்ச்சியுண்டாகும். 110. குறிப்பு அறிதல் மனத்தில் எண்ணியதை அறிதல். 1. இருநோக்கு இவள்உண்கண் உள்ளது, ஒருநோக்கு நோய்நோக்கு; ஒன்றுஅந்நோய் மருந்து. (ப-உ) இவள் உண் கண்- இவளது மைதீட்டிய கண்களில். உள்ளது- இருக்கின்ற பார்வை. இரு நோக்கு- இரண்டு பார்வை யாகும். ஒரு நோக்கு- ஒரு பார்வையானது. நோய் நோக்கு- துன்பம் செய்யும் பார்வை. ஒன்று- மற்றொரு பார்வை. அந்நோய் மருந்து- அத்துன்பத்துக்கு மருந்தாகும். (க-து) இவளிடம் இரண்டு பார்வை உண்டு. ஒன்று நோய் தரும்; மற்றொன்று அதற்கு மருந்தாகும். 2. கண்களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. (ப-உ) கண்- இவள் கண்கள். களவுகொள்ளும்- நான் காணாமல் என்னைப் பார்க்கின்ற. சிறு நோக்கம்- சிறிய பார்வை. காமத்தில்- காதலில். செம்பாகம் அன்று- சரிபாதி அன்று. பெரிது- பெரிதாகும். (க-து) இவளது திருட்டுத்தனமான சிறிய பார்வை காமத்தைவிடப் பெரிதாகும். 3. நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள்; அஃதுஅவள் யாப்பினுள் அட்டிய நீர். (ப-உ) அவள் -அப்பெண். நோக்கினாள்- நான் பார்க்காத போது அவள் என்னைப் பார்த்தாள். நோக்கி இறைஞ்சினாள்- பார்த்துத் தலைகுனிந்தாள். அஃது - அச்செய்கை. யாப்பினுள்- எம்மிருவரிடமும் உள்ள அன்புப் பயிர் வளர. அட்டிய நீர்- பாய்ச்சிய நீராகும். (க-து) அவள் என்னைப் பார்த்து நாணியது, இருவர் பாலும் அன்புப் பயிர் வளர்வதற்குப் பாய்ச்சிய நீராகும். 4. யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காகா தான்நோக்கி மெல்ல நகும். (ப-உ) யான் நோக்கும் காலை- நான் அவளைப் பார்க்கும் போது. நிலன் நோக்கும்- அவள் நிலத்தைப் பார்ப்பாள். நோக்காமல்- நான் பார்க்காதபோது. தான் நோக்கி- அவள் என்னைப் பார்த்து. மெல்ல நகும்- மெதுவாகச் சிரிப்பாள். (க-து) நான் பார்க்கும்போது நிலத்தைப் பார்க்கிறாள்; நான் பார்க்காதபோது என்னைப் பார்த்துப் புன்னகை புரிகின்றாள். 5. குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். (ப-உ) குறிக்கொண்டு- நேரடியாக என்னை. நோக்காமை அல்லால்- பார்க்கவில்லையே தவிர. ஒரு கண்- ஒரு கண்ணை. சிறக்கணித்தாள்போல- சுருக்கினவளைப் போல. நகும்- என்னைப் பார்த்துச் சிரிப்பாள். (க-து) என்னை நேரே பார்க்காமல் கடைக்கண்ணால் பார்த்துச் சிரிக்கின்றாள். 6. உறாஅ தவர்போல் சொலினும், செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். (ப-உ) உறாஅதவர்போல்- அயலார்போல. சொலினும்- கடுஞ்சொற் கூறினாலும். செறாஅர் சொல்- பகையற்றவர் கூறும் சொல் என்பதை. ஒல்லை- விரைவில். உணரப்படும்- அறியப்படும். (க-து) கடுஞ்சொற் கூறினும் பகையற்றவர் சொல்லின் நன்மை விரைவில் அறியப்படும். 7. செறாஅச் சிறுசொல்லும், செற்றார்போல் நோக்கும், உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. (ப-உ) செறாஅச் சிறு சொல்லும்- பகையற்ற கடும் சொல்லும். செற்றார்போல் நோக்கும்- பகைத்தவர் போன்ற பார்வையும். உறாஅர்போன்று- அயலார் போலிருந்து. உற்றார்- நட்பாக இருப்பவரிடம் உள்ள. குறிப்பு- அடையாளமாகும். (க-து) அன்புள்ள கடும் சொல்லும், பகைத்தவர் போன்ற பார்வையும், நட்பினரிடம் உள்ள அடையாளமாகும். 8. அசைஇயற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்; யான்நோக்கப் பசையினள், பைய நகும். (ப-உ) யான் நோக்க- நான் பார்க்கும்போது. பசையினள்- அன்புள்ளவளாகி. பையநகும்- மெதுவாகச் சிரிக்கின்றாள். அசைஇயற்கு- அசையும் தன்மையுள்ள அவளுக்கு. ஆண்டு- அச் சிரிப்பிலும். ஓர் ஏஎர் உண்டு- ஒரு அழகு உண்டு. (க-து) நான் பார்த்தபோது அன்புடன் பார்த்து மகிழ் கின்றாள்; அம்மகிழ்ச்சியிலும் ஒரு அழகு உண்டு. 9. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல், காதலார் கண்ணே உள. (ப-உ) ஏதிலார்போல- முன்பின் அறியாதவர்போல. பொது நோக்கு நோக்குதல்- பொதுப் பார்வையாகப் பார்த்தல். காதலார்கண்ணே- காதலர்களிடம். உள- உண்டு. (க-து) அயலார்போலப் பொதுவாகப் பார்த்துக் கொள்ளுதல், காதலர்களிடம் உண்டு. 10. கண்ணொடு கண்இணை நோக்குஒக்கின், வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. (ப-உ) கண்ணொடு - காதலர்களின் கண்களோடு. கண் இணை- கண்கள். நோக்கு ஒக்கின்- பார்வையால் ஒன்றுபடு மாயின். வாய்ச் சொற்கள்- பின்பு வாய்ச்சொற்கள். என்ன பயனும் இல- ஒருபயனும் இல்லாமற் போய்விடுகின்றன. (க-து) காதலர் இருவர் பார்வையும் ஒன்றானால், வாய்ச் சொற்கள் பயன் இல்லை. 111. புணர்ச்சி மகிழ்தல் இன்பத்தை மகிழ்ந்துரைத்தல். 1. கண்டு,கேட்டு, உண்டு,உயிர்த்து, உற்றுஅறியும் ஐம்புலனும் ஒண்தொடிக் கண்ணே உள. (ப-உ) கண்டு- கண்ணால் கண்டும். கேட்டு- காதால் கேட்டும். உண்டு- நாவால் உண்டும். உயிர்த்து- மூக்கால் முகர்ந்தும். உற்று- உடம்பால் தீண்டியும். அறியும் ஐம்புலனும்- அனுபவிக்கப்படும் ஐந்து புலனும். ஒண்தொடிக்கண்ணே - ஒளி பொருந்திய வளையலை அணிந்த இவளிடம். உள- இருக்கின்றன. (க-து) ஐம்புலன்களால் அனுபவிக்கப்படும் இன்பங்களும் இவளிடம் இருக்கின்றன. 2. பிணிக்கு மருந்து பிறமன்; அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. (ப-உ) பிணிக்கு- நோய்களுக்கு. மருந்து- மருந்தாக இருப்பன. பிறமன்- வேறு பொருள்கள். அணி இழை தன்- ஆபரணங்களை அணிந்த இவளால் வந்த. நோய்க்கு- பிணிக்கு. தானே மருந்து- இவளே மருந்தாவாள். மன்: அசை. (க-து) நோய்களுக்கு மருந்து வேறாம்; இவள் தந்த காமநோய்க்கு இவளே மருந்தாவாள். 3. தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்? தாமரைக் கண்ணான் உலகு. (ப-உ) தாம் வீழ்வார்- தாம் விரும்பும் பெண்களின். மெல்தோள்- மெல்லிய தோள்களைத் தழுவிக்கொண்டு. துயிலின் - தூங்கும் தூக்கத்தைப்போல. தாமரைக் கண்ணான் உலகு- திருமாலின் வைகுந்தம். இனிது கொல்- இன்பம் உடையதோ? (க-து) தாம் காதலிக்கும் மாதரின் தோள்களைத் தழுவிக் கொண்டு உறங்குவதுபோன்ற இன்பம் வைகுந்தத்திலும் இல்லை. 4. நீங்கின் தெறூஉம்; குறுகுங்கால் தண்என்னும், தீயாண்டுப் பெற்றாள் இவள்? (ப-உ) நீங்கின் - பிரிந்தால். தெறூஉம்- சுடுகின்றது. குறுகுங்கால்- நெருங்கும்போது. தண் என்னும்- குளிர்ச்சி தரும். தீ- இத்தகைய தீயை. இவள் யாண்டுப் பெற்றாள்- இவள் எவ்வுலகத்தில் பெற்றாள்? (க-து) விலகினால் சுடுவதும், நெருங்கினால் குளிர்ச்சி தருவதும் காமத்தீயின் இயல்பு. 5. வேட்ட பொழுதின் அவைஅவை போலுமே, தோட்டார் கதுப்பினாள் தோள். (ப-உ) தோடுஆர் கதுப்பினாள்- மலர்நிறைந்த கூந்தலை யுடையவளது. தோள்- தோள்கள். வேட்ட. பொழுதின்- விரும்பிய பொழுது. அவை அவைபோலும்ஏ- விரும்பிய பொருள்களைப் போலவே இன்பம் செய்யும். ஏ:அசை. (க-து) இவளுடைய தோள்கள் நான் விரும்பிய பொருள் களைப் போல நின்று இன்பந் தருகின்றன. 6. உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தின் இயன்றன தோள். (ப-உ) உறுதோறு- பொருந்தும் போதெல்லாம். உயிர் தளிர்ப்ப- எனது உயிர் செழிக்கும்படி. தீண்டலால்- படுவதனால். பேதைக்கு- இப்பெண்ணுக்கு. தோள்- தோள்கள். அமிழ்தின் இயன்றன- அமுதத்தால் செய்யப்பட்டன. (க-து) தொடும்போதெல்லாம் எனது உயிர் செழிப்பதால் இவள் தோள்கள் அமிழ்தத்தால் ஆக்கப்பட்டன. 7. தம்இல் இருந்து, தமதுபாத்து உண்டுஅற்றால், அம்மா அறிவை முயக்கு. (ப-உ) அம்மா அரிவை- அழகிய மாமை நிறமுள்ள இப்பெண்ணை. முயக்கு- தழுவிக்கொள்ளுவது. தம்இல்இருந்து- தமது வீட்டில் இருந்து. தமது- தம் முயற்சியால் வந்த பொருளை. பாத்து- மற்றவர்களுக்கும் பகுத்துக்கொடுத்து. உண்டுஅற்றுஆல்- தாமும் உண்டது போன்ற இன்பம் தருகின்றது. ஆல்: அசை. (க-து) இப்பெண்ணைத் தழுவிக்கொள்வது, தமது முயற்சி யால் வந்த பொருளைப் பிறர்க்கும் கொடுத்துத் தாமும் உண்டது போன்ற இன்பந் தருகின்றது. 8. வீழும் இருவர்க்கு இனிதே, வளிஇடைப் போழப் படாஅ முயக்கு. (ப-உ) வளி இடை- காற்று இடையிலே புகுந்து. போழப் படாஅ- பிளக்க முடியாத நெருங்கிய. முயக்கு- தழுவுதல். வீழும் இருவர்க்கு- ஒருவரை ஒருவர் விரும்பும் இருவர்க்கும். இனிதே- இன்பமுடையதாகும். (க-து) காற்றும் நுழையமுடியாமல் இறுகக் கட்டித் தழுவுதல் காதலர் இருவர்க்கும் இன்பந்தரும். 9. ஊடல், உணர்தல், புணர்தல், இவைகாமம் கூடியார் பெற்ற பயன். (ப-உ) ஊடல்- ஊடலும். உணர்தல்- ஊடல் நீங்குதலும். புணர்தல்- அதன்பின் தழுவிக்கொள்ளுதலும். இவை- ஆகிய இவைகள். காமம் கூடியார்- காதலைப் பெற்றவர்கள். பெற்ற பயன்- அடைந்த பயனாகும். (க-து) ஊடல், நீங்கல், அதன்பின் கூடல் என்பவைகளே காதலர் பெற்ற இன்பங்களாகும். 10. அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. (ப-உ) செறிதோறும்- தழுவிக்கொள்ளத் தழுவிக் கொள்ள. சேயிழைமாட்டு- சிவந்த ஆபரணங்களையுடைய இவளிடம். காமம்- காணப்படும் இன்பம். அறிதோறு- ஆராய்ந்து அறியுந்தோறும். அறியாமை- நமது அறியாமை. கண்டுஅற்று ஆல்- காணப்படுதல் போன்றதாகும். ஆல்: அசை. (க-து) ஆராய்ந்து காணக்காண நமது அறியாமை காணப்படுவதுபோல, தழுவத் தழுவ இவளிடம் இன்பம் காணப்படுகின்றது. 112. நலம்புனைந்து உரைத்தல் தலைவன் தலைமகளைப் புகழ்தல். 1. நன்னீரை வாழி அனிச்சமே, நின்னினும் மெல்நீரள் யாம்வீழ் பவள். (ப-உ) அனிச்சமே- அனிச்சப்பூவே. வாழி- வாழ்க. நல்நீரை- நீ நல்லகுணம் உடையை ஆயினும். யாம் வீழ்பவள்- எம்மால் விரும்பப்பட்டவள். நின்னினும்- உன்னைவிட. மெல்நீரள் - மெல்லிய தன்மையுள்ளவள். (க-து) என் காதலி அனிச்சப்பூவைவிட மெல்லிய தன்மை யுள்ளவள். 2. மலர்காணின் மையாத்தி நெஞ்சே! இவள்கண் பலர்காணும் பூஒக்கும் என்று. (ப-உ) நெஞ்சே- மனமே. இவள் கண்- இவளுடைய கண்கள். பலர்காணும்- பலராலும் காணப்படும். பூஒக்கும் என்று - மலர்களை ஒக்கும் என்று நினைத்து. மலர் காணின்- மலர்களைக் காணும்போதெல்லாம். மையாத்தி- மயங்குகின்றாய். (க-து) என் காதலியின் கண்கள் மலர்களைப் போன்றவை. 3. முறிமேனி, முத்தம் முறுவல், வெறிநாற்றம், வேல்உண்கண், வேய்த்தோள் அவட்கு. (ப-உ) வேய்த்தோள் அவட்கு- மூங்கில் போன்ற தோள் களை உடையவளுக்கு. முறிமேனி- தளிர்போன்ற நிறம். முத்தம் முறுவல்- முத்துக்களே பற்கள். வெறிநாற்றம்- நறுமணமே இயற்கை மணம். வேல்உண்கண்- வேல்களே மையுண்ட கண்கள். (க-து) என் காதலி, மூங்கில் போன்ற தோள்களையும், தளிர்போன்ற நிறத்தையும், முத்துப்போன்ற பற்களையும், இயற்கையான நறுமணத்தையும், வேல்போன்ற கண்களையும் உடையவள். 4. காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்; மாண்இழை கண்ஒவ்வேம் என்று. (ப-உ) குவளை- குவளைமலர்கள். காணின்- பார்க்கு மாயின். மாண்இழை- ஆபரணங்களை உடையவளது. கண் ஒவ்வேம்- கண்களுக்குச் சமமாகமாட்டோம். என்று- என்று நினைத்து. கவிழ்ந்து- வெட்கித் தலைகுனிந்து. நிலன் நோக்கும்- பூமியைப் பார்க்கும். (க-து) குவளை மலர்கள் இவள் கண்களைப் பார்த்து நாணித் தலைகுனியும். 5. அனிச்சப்பூ கால்களையாள் பெய்தாள்; நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. (ப-உ) அனிச்சப்பூ- அனிச்சமலரை. கால் களையாள். காம்பு களையாமல். பெய்தாள்- சூடினாள் ஆதலால். நுசுப்பிற்கு - இவள் இடைக்கு. பறை- பறைகள். நல்ல- நல்லவையாக. படாது- ஒலிக்கமாட்டா. (க-து) இவள் காம்பு களையாத அனிச்சமலரைச் சூடினாள்; ஆதலால் இவள் இடுப்பு முறியும். 6. மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். (ப-உ) மீன்- நட்சத்திரங்கள். மதியும்- சந்திரனையும். மடந்தை முகனும்- இம்மாதின் முகத்தையும். அறியா- வேறுபாடு காணமுடியாமல். பதியின்- தமது நிலையிலிருந்து. கலங்கிய- தடுமாறித் திரிகின்றன. (க-து) நட்சத்திரங்கள் இப்பெண்ணின் முகத்துக்கும், சந்திரனுக்கும் வேற்றுமை தெரியாமல் தடுமாறுகின்றன. 7. அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுஉண்டோ மாதர் முகத்து. (ப-உ) அறுவாய்- குறைந்த இடம். நிறைந்த அவிர்- பின்பு நிறைந்து விளங்குகின்ற. மதிக்குப்போல - சந்திரனிடம் இருப்பது போல. மாதர்முகத்து- இம்மாதர் முகத்தில். மறுஉண்டோ- களங்கம் உண்டோ? (இல்லை). (க-து) சந்திரனிடம் இருப்பதுபோன்ற களங்கம் இம்மாதர் முகத்தில் இல்லை. 8. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை; வாழி மதி. (ப-உ) மதி- சந்திரனே. வாழி- வாழ்வாயாக. மாதர் முகம்போல்- பெண்கள் முகம்போல். ஒளிவிட வல்லையேல்- நீயும் ஒளிவீசும் வல்லமை பெறுவாயானால். காதலை - என்னால் விரும்பப்படுவாய். (க-து) மதியே, நீயும் மாதர் முகம்போல் ஒளிவீசுவா யானால் என்னால் காதலிக்கப்படுவாய். 9. மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி ஆயின் பலர்காணத் தோன்றல் மதி. (ப-உ) மதி- சந்திரனே. மலர் அன்ன கண்ணாள்- மலர்போன்ற கண்ணையுடைய இவளின். முகம்ஒத்தி ஆயின்- முகத்தை ஒத்திருக்க விரும்புவாயானால். பலர் காண- பலரும் பார்க்கும்படி. தோன்றல்- தோன்றாதே. (க-து) சந்திரனே! நீ இவள் முகத்தை ஒத்திருக்க விரும்பு வாயானால், பலரும் காணப் புறப்படாதே. 10. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். (ப-உ) அனிச்சமும்- அனிச்சப்பூவும். அன்னத்தின் தூவியும்- அன்னப்பறவையின் இறகும். மாதர் அடிக்கு- பெண்களின் அடிக்கு. நெருஞ்சிப்பழம்- நெருஞ்சிப்பழம்போல் துன்பம் செய்யும். (க-து) அனிச்சமலரும், அன்னத்தின் இறகும், பெண்களின் பாதங்களுக்கு நெருஞ்சி முள்ளைப்போல் துன்பம் தரும்; அவர்கள் பாதங்கள் மெல்லியவை. 113. காதற் சிறப்புரைத்தல் தனது காதலின் மிகுதியைச் சொல்லுதல். 1. பாலொடு தேன்கலந்து அற்றே, பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். (ப-உ) பணி மொழி- மெல்லிய சொல்லையுடையவளது. வால்எயிறு- வெண்மையான பற்களின் அடியிலே. ஊறியநீர்- ஊறிய உமிழ்நீரானது. பாலொடு- பாலுடன். தேன்கலந்து அற்றுஏ- தேனைக் கலந்தது போல இருக்கின்றது. ஏ: அசை. (க-து) இவளுடைய உமிழ்நீர் பாலுடன் தேன் கலந்தது போல இனிப்பாக இருக்கின்றது. 2. உடம்பொடு உயிர்இடை என்ன, மற்றுஅன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. (ப-உ) மடந்தையொடு- இப்பெண்ணுடன். எம் இடை நட்பு- எம்மிடம் உண்டான நட்பு. உடம்பொடு- உடம்புடன். உயிர்இடை- உயிரிடம் உள்ள நட்புகள். என்ன- எப்படிப் பட்டவையோ. அன்ன- அப்படிப்பட்டவையாகும். (க-து) இவளுடன் எமக்குள்ள நட்பு, உயிருக்கும் உடலுக்கும் உள்ள நட்புகள் போன்றவை. 3. கருமணியில் பாவாய்,நீ போதாய்; யாம்வீழும் திருநுதற்கு இல்லை இடம். (ப-உ) கருமணியில் பாவாய்- என் கண்ணின் கரு மணியிலிருக்கின்ற பாவையே. நீ போதாய்- நீ போவாயாக. யாம்வீழும்- நாம் விரும்புகின்ற. திரு நுதற்கு- அழகிய நெற்றியை உடையவளுக்கு. இடம் இல்லை- என் கண்ணில் இருக்க இடம் இல்லை. (க-து) கண்ணில் உள்ள பாவையே, நீ இருப்பதனால் என் காதலிக்கு இடம் இல்லை. ஆதலால் நீ போய்விடு. 4. வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை, சாதல் அதற்குஅன்னள் நீங்கும் இடத்து. (ப-உ) ஆயிழை- சிறந்த ஆபரணத்தை அணிந்தவள். உயிர்க்கு- கூடும்போது எனது உயிர்க்கு. வாழ்தல் அன்னள்- வாழ்வு போன்றவள். நீங்கும் இடத்து- பிரியும்போது. அதற்கு - அவ்வுயிர்க்கு. சாதல் அன்னள்- சாவு போன்றவள். (க-து) இவள் என்னோடு சேரும்போது நான் உயிருடன் வாழ்வது போன்றாள்; பிரியும்போது நான் சாவது போன்றாள். 5. உள்ளுவன் மன்யான் மறப்பின், மறப்பறியேன் ஒள்அமர்க் கண்ணாள் குணம். (ப-உ) யான்- நான். ஒள் அமர்க்கண்ணாள்- ஒளி பொருந்திய போர் செய்கின்ற கண்களை உடையவளது. குணம்- குணங்களை. மறப்பின்- மறந்தேனாயின். உள்ளுவன் மன்- மீண்டும் நினைப்பேன். மறப்பு அறியேன். மறக்கமாட்டேன்; ஆதலால் நினைக்க வேண்டுவதில்லை. மன்: அசை. (க-து) இவளுடைய குணங்களை ஒருபொழுதும் நான் மறந்ததில்லை. ஆதலால், நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. 6. கண்உள்ளில் போகார், இமைப்பின் பருவரார், நுண்ணியர்எம் காத லவர். (ப-உ) எம் காதலவர்- எமது காதலவர். கண் உள்ளில்- கண்ணுள்ளேயிருந்து. போகார். போகமாட்டார். இமைப்பின்- இமைத்தோமானால் அதனால். பருவரார்- துன்புறமாட்டார். நுண்ணியர்- அவ்வளவு நுட்பமானவர். (க-து) எமது காதலர் எப்பொழுதும் எம் கண்ணிலேயே இருக்கின்றார். 7. கண்உள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. (ப-உ) காதலவர்- எம் காதலர். கண் உள்ளார் ஆக- எம்கண்ணுள் இருக்கின்றார் ஆதலால். கரப்பாக்கு அறிந்து- மை எழுதினால் அவர் மறைவார் என்று எண்ணி. கண்ணும்- கண்ணை. எழுதேம்- மையாலும் பூசமாட்டோம். (க-து) எம் காதலர் எம் கண்ணுள் இருப்பதனால் கண்ணுக்கு மையும் பூசமாட்டோம். 8. நெஞ்சத்தார் காத லவராக வெய்துஉண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. (ப-உ) காதலர்- எம் காதலர். நெஞ்சத்தார் ஆக- நெஞ்சில் இருக்கின்றார் ஆதலால். வேபாக்கு அறிந்து- அவர் வெந்துபோவார் என்று நினைத்து. வெய்து உண்டல்- சூடுள்ள உணவை உண்பதற்கு. அஞ்சுதும்- பயப்படுகின்றோம். (க-து) எம் காதலர் எம் நெஞ்சத்துள் இருப்பதால் சூடான உணவை உண்பதற்கு அஞ்சுகின்றோம். 9. இமைப்பின் கரப்பாக்கு அறிவல், அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். (ப-உ) இமைப்பின்- என் கண் இமைக்குமாயின். கரப்பாக்கு அறிவல்- என் காதலர் மறைவார் என்பதை அறிந்து இமையேன். அனைத்திற்கே- அவ்வளவிற்கே. இவ்வூர்- இவ்வூரினர். ஏதிலர் என்னும்- அவரை அன்பிலர் என்று தூற்றும். (க-து) என் காதலரை எண்ணி நான் உறங்குவதில்லை. அதனால், அவரை இவ்வூர் அன்பிலர் என்று பழிக்கின்றது. 10. உவந்துஉறைவர் உள்ளத்துள் என்றும்; இகந்துஉறைவர் ஏதிலர் என்னும் இவ்வூர். (ப-உ) உள்ளத்துள்- என் மனத்துள். என்றும்- எப் பொழுதும். உவந்து உறைவர்- என் காதலர் மகிழ்ந்து வாழ்கின்றார். இவ்வூர்- இதை அறியாத இவ்வூரினர். இகந்து உறைவர்- பிரிந்து உறைகின்றார். ஏதிலர்- அன்பில்லாதவர். என்னும்- என்று பழிபேசுகின்றனர். (க-து) என் காதலர் எப்பொழுதும் என் உள்ளத்தில் வாழ்வதை அறியாமல், அவரைப் பழிக்கின்றது இவ்வூர். 114. நாணுத்துறவு உரைத்தல் காமத்தால் நாணம் இழத்தலைக் கூறுதல். 1. காமம் உழந்து வருந்தினார்க்கு, ஏமம் மடல் அல்லது இல்லை வலி. (ப-உ) காமம் உழந்து- காமத்தை அனுபவித்து. வருந்தினார்க்கு - பின் அது பெறாமல் துன்புற்ற ஆடவர்க்கு. ஏமம் மடல் அல்லது- பாதுகாப்பாய் வருகின்ற மடலூர்வதை அல்லாமல். வலி இல்லை- வலியது வேறு இல்லை. (க-து) மீண்டும் காதலைப் பெறுவதற்கு *மடலூர்வதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை. 2. நோனா உடம்பும்உயிரும் மடல்ஏறும்; நாணினை நீக்கி நிறுத்து. (ப-உ) நோனா - காதல் துன்பத்தைத் தாங்க முடியாத. உடம்பும் உயிரும்- உடலும் உயிரும். நாணினை- நாணத்தை. நீக்கி நிறுத்து- ஒழித்துவிட்டு. மடல் ஏறும்- மடல் ஏறத் துணிந்தன. (க-து) காதலால் வருந்தும் என் உயிரும் உடம்பும், நாணத்தை விட்டு மடல் ஏறத் துணிந்தன. 3. நாணொடு நல்லாண்மை பண்டுஉடையேன்; இன்று உடையேன் காமுற்றார் ஏறும் மடல். (ப-உ) நாணொடு - நாணத்தையும். நல்ஆண்மை- நல்ல ஆண்மையையும். பண்டு உடையேன்- முன்பு பெற்றிருந்தேன். இன்று- இப்போது. காமுற்றார்- காமம் மிகுந்தவர். ஏறும் மடல்- ஏறுகின்ற மடலை. உடையேன்- உடையவன் ஆனேன். (க-து) காமத்தால் நாணத்தையும் ஆண்மையையும் துறந்து மடலேறத் துணிந்தேன். 4. காமக் கடும்புனல் உய்க்குமே, நாணொடு நல்லாண்மை என்னும் புனை. (ப-உ) நாணொடு நல் ஆண்மை- நாணம், நல்ல ஆண்மை. என்னும் புணை- என்னும் தெப்பங்களை. காமக் கடும்புனல்- காமம் என்னும் வெள்ளம். உய்க்கும்ஏ- என்னை விட்டுப் பிரித்துக் கொண்டு போகின்றது. ஏ:அசை. (க-து) நாணம், ஆண்மை ஆகிய தெப்பங்களைக் காம வெள்ளம் அடித்துக்கொண்டு போகின்றது. 5. தொடலைக் குறுந்தொடி தந்தாள், மடலொடு மாலை உழக்கும் துயர். (ப-உ) தொடலைக் குறும்தொடி - மாலைபோல் தொடர்ந்த சிறிய வளையல்களை உடையவள். மடலொடு- மட லேறுதலோடு. மாலை உழக்கும் துயர்- மாலைக் காலத்தில் அனுபவிக்கும் துன்பத்தையும். தந்தாள்- கொடுத்தாள். (க-து) என் காதலி மாலைக் காலத்தில் துன்பத்தையும், மடலேறுதலையும் எனக்குத் தந்தாள். 6. மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற, படல்ஒல்லா பேதைக்கு என்கண். (ப-உ) பேதைக்கு - காதலிக்காக. என் கண்- என் கண்கள். படல்ஒல்லா- தூங்கச் சம்மதிக்கவில்லை. யாமத்தும்- அதனால் பாதியிரவினும். மடல் ஊர்தல்- மடல் ஊர்வதைப்பற்றியே. மன்ற உள்ளுவேன்- நிச்சயமாக நினைப்பேன். (க-து) காதலியை நினைத்து என் கண்கள் உறங்கவில்லை. ஆதலால், பாதி இரவிலும் மடலூர்வது பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். 7. கடல்அன்ன காமம் உழந்தும், மடல்ஏறாப்* பெண்ணின் பெரும்தக்கது இல். (ப-உ) கடல்அன்ன- கடல்போன்ற. காமம் உழந்தும்- கரையற்ற காமநோயால் வருந்தியும். மடல் ஏறா- மடல் ஏறாமல் பொறுத்திருக்கும். பெண்ணின்- பெண் பிறப்பைப்போன்ற. பெரும் தக்கது- மிகுந்த சிறந்த பிறப்பு. இல்- உலகில் இல்லை. (க-து) காமத்தைத் தாங்கும் தன்மையுள்ள பெண் பிறப்பே சிறந்த பிறப்பு. 8. நிறைஅரியர் மன்அளியர் என்னாது, காமம் மறைஇறந்து மன்று படும். (ப-உ) நிறைஅரியர்- நெஞ்சை ஒருநிலையில் நிறுத்த முடியாதவர். மன் அளியர்- மிகவும் இரங்கத் தக்கவர். என்னாது- என்று இரங்காமல். காமம்- மகளிரின் காமமும். மறை இறந்து- மறைப்பைக் கடந்து. மன்றுபடும்- அம்பலமாகிவிடும். (க-து) மகளிர் காமமும் அடங்காமல் வெளிப்பட்டு விடும். 9. அறிகிலார் எல்லாரும் என்றே என்காமம் மறுகின் மறுகும் மருண்டு. (ப-உ) எல்லாரும் அறிகிலார்- யான் அடங்கியிருப்பதால் எல்லோரும் என்னை அறியமாட்டார். என்றே- என்று நினைத்து. என் காமம்- எனது காமம். மறுகில்- இவ்வூர்த் தெருவில். மருண்டு- மயங்கி. மறுகும்- சுழலும். (க-து) இவ்வூரார் என்னை அறியார்; நானே என்னை அறிவித்துக்கொள்ளுவேன் என்று நினைத்து என் காமம் இவ்வூர் வீதியிலே மயங்கிச் சுழல்கின்றது. 10. யாம்கண்ணின் காண நகுப, அறிவுஇல்லார், யாம்பட்ட தாம்படா ஆறு. (ப-உ) யாம்பட்ட- யாம் அடைந்த துன்பத்தை. தாம்படா- தாம் அடையாத. ஆறு- காரணத்தால். அறிவுஇல்லார்- அறிவில்லாதவர்கள். யாம் கண்ணின் காண- நாம் கண்ணாற் காணும்படி. நகுப- நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றனர். (க-து) நம்மைப்போன்று துன்பத்தை அவர் அடையாத காரணத்தால், நம்மைக் கண்டு அறிவில்லாதவர் சிரிக்கின்றனர். 115. *அலர் அறிவுறுத்தல் பிறர்கூறும் பழியை எடுத்துரைத்தல். 1. அலர்எழ ஆருயிர் நிற்கும், அதனைப் பலர்அறியார் பாக்கியத் தால். (ப-உ) அலர் எழ- எம் காதலைப்பற்றி இவ்வூரார் பழிப்ப தனால். ஆர்உயிர் - எனது அரிய உயிர். நிற்கும்- நிலைத்திருக்கும். அதனை- அவ்வுண்மையை. பாக்கியத்தால்- நல்வினையால் நான் அறிவேனே அன்றி. பலர் அறியார்- பழிக்கின்ற பலரும் அறிய மாட்டார். (க-து) எம் காதலைப் பழிப்பதனால் எம் உயிர் நிலைத்திருக் கின்றது; இவ்வுண்மையைப் பழிப்போர் அறியமாட்டார்கள். 2. மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர். (ப-உ) மலர் அன்ன கண்ணாள்- மலர்போன்ற கண்களை யுடையவளின். அருமை அறியாது- அருமையை அறியாமல். இவ்வூர்- இவ்வூரானது. அலர்- பழியை. எமக்கு ஈந்தது- எமக்கு அளித்து உதவியது. (க-து) காதலியின் அருமை அறியாமல், இவ்வூர் அவளுடன் என்னைச் சேர்த்து அலர்கூறி உதவிற்று. 3. உறாதோ ஊர்அறிந்த கெளவை? அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. (ப-உ) ஊர் அறிந்த- எங்கள் காதலை இவ்வூரார் அறிந்த தனால் உண்டான. கெளவை- அலரானது. உறாதோ- நமக்குப் பொருந்தாதோ? பொருந்தும். பெறா அது- அந்த அலர் இப்பொழுது அவள் காதலைப் பெறாதிருந்தும். பெற்று அன்ன நீர்த்து- பெற்றது போன்ற தன்மையுடையதாயிற்று. (க-து) இவ்வூரார் பேசும் பழி, இப்பொழுது அவள் காதலைப் பெறாதிருந்தும், பெற்றதுபோன்ற தன்மையை உடைய தாயிற்று. 4. கவ்வையால் கவ்விது காமம்; அதுஇன்றேல், தவ்என்னும் தன்மை இழந்து. (ப-உ) காமம்- எனது காதல். கவ்வையால்- இவ்வூரார் கூறும் பழியால். கவ்விது- வளர்வதாயிற்று. அது இன்றேல்- அப்பழி இல்லாவிட்டால். தன்மை இழந்து- தன் தன்மையை இழந்து. தவ்என்னும்- சுருங்கிப் போகும். (க-து) என் காமம் இவ்வூராரின் அலரால் வளர்கின்றது; இன்றேல் சுருங்கிப்போகும். *5. களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால், காமம் வெளிப்படுந் தோறும் இனிது. (ப-உ) களித்தொறும்- கள் உண்பவர் கள்ளுண்டு களிக்குந் தோறும். கள் உண்டல்- மேலும் கள்ளுண்பதை. வேட்டு அற்று ஆல்- விரும்பியதைப்போல. காமம் -காதலானது. வெளிப்படும் தோறும்- பழிக்கப்பழிக்க. இனிது- இன்பந் தருகின்றது. ஆல்: அசை. (க-து) கள்ளுண்டார் மேலும் மேலும் கள்ளுண்டு களிப்பதுபோல, என் காமம் வெளிப்பட வெளிப்பட எனக்கு இன்பந் தருகின்றது. 6. கண்டது மன்னும் ஒருநாள்; அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. (ப-உ) கண்டது- நான் தலைவனைக் கண்டது. ஒரு நாள் மன்னும் - ஒரு நாள்தான். மன்னும் அலர்- அதனால் பொருந்திய அலரோ. திங்களை- சந்திரனை. பாம்புகொண்டு அற்று- பாம்பு கவ்வியதுபோல் எங்கும் பரந்தது. (க-து) நான் ஒரு நாள்தான் காதலனைக் கண்டேன். ஆனால் அதனால் உண்டான பழியோ, சந்திரனைப் பாம்பு கவ்வியதுபோல எங்கும் பரவி விட்டது. 7. ஊரவர் கெளவை எருவாக, அன்னைசொல் நீராக, நீளும்இந் நோய். (ப-உ) இந்நோய்- இக் காமநோயாகிய பயிர். ஊரவர் கெளவை- இவ்வூர் மகளிர் கூறும் பழிச்சொல்லை. எருவாக- எருவாகவும். அன்னைசொல்- தாயின் கடுஞ்சொல்லை. நீராக- தண்ணீராகவும் கொண்டு. நீளும்- வளர்கின்றது. (க-து) எனது காதல், ஊரார் உரைக்கும் பழியை எருவாகவும், அன்னையின் சொல்லை நீராகவும் பெற்று வளர் கின்றது. 8. நெய்யால் எரிநுதுப்பேம் என்றுஅற்றால், கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். (ப-உ) கெளவையால்- பழி கூறுவதால் உண்டாகும். காமம்- காமத்தை. நுதுப்பேம் எனல்- அவிப்போம் என்று நினைப்பது. நெய்யால்- நெய்யினால். எரி- நெருப்பை. நுதுப்பேம் என்று அற்றால் - அவிப்போம் என்று நினைப்பது போலாகும். (க-து) பிறர் பழிப்பதால் வளரும் காமத்தை அடக்க முடியாது. 9. அலர்நாண ஒல்வதே அஞ்சல்ஓம்பு என்றார், பலர்நாண நீத்தக் கடை. (ப-உ) அஞ்சல் ஓம்பு என்றார்- அன்று அஞ்ச வேண்டாம் என்று உறுதி கூறியவர். பலர் நாண- இன்று பலரும் நாணும்படி. நீத்தக்கடை - நீங்கிய பொழுது. அலர்- பிறர் கூறும் பழிக்கு. நாண ஒல்வதோ- நாணக் கூடுமோ? (க-து) அன்று அஞ்சாதே என்றவர், இன்று பிரிந்ததனால் உண்டான அலருக்கு நாணலாமா? (நாணக்கூடாது.) 10. தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும் இவ்வூர். (ப-உ) யாம் வேண்டும் கெளவை- நாம் விரும்புகின்ற அலரை. இவ்வூர் எடுக்கும்- இவ்வூர் எடுத்துரைக்கின்றது. காதலர்- இனி நம் காதலர். வேண்டின்- அவருடன் செல்ல நாம் விரும்பினால். தாம் நல்குவர்- அவர்தாம் அதற்கு அருள்வார். (க-து) நாம் விரும்பிய பழி இவ்வூரில் எழுந்தது. இனி நம் காதலர் நம்மை உடன் அழைத்துச் செல்ல இணங்குவார். கற்பியல்* 116. பிரிவு ஆற்றாமை தலைவி, தலைவன் பிரிவின் துன்பத்தைப் பொறுக்காத தன்மை. 1. செல்லாமை உண்டேல் எனக்குரை; மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை. (ப-உ) செல்லாமை உண்டேல்- பிரியாமை உண்டாயின். எனக்கு உரை- அதனை எனக்குச் சொல். மற்று- அவ்வாறு இல்லாமல். நின்வல்வரவு- பிரிந்துபோனபின் உனது விரைந்த வருகையைப் பற்றி. வாழ்வார்க்கு - அப்பொழுது உயிர் வாழ் கின்றவர்க்கு. உரை- சொல்லுக. (க-து) நீ பிரிந்து சென்றால் நான் உயிர் வாழ மாட்டேன். 2. இன்கண் உடைத்துஅவர் பார்வல், பிரிவுஅஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. (ப-உ) அவர் பார்வல்- முன்பு அவர் பார்வை. இன்கண் உடைத்து- இன்பம் உடையதாயிருந்தது. புணர்வு- இப்பொழுது அவருடன் கூடியிருத்தல். பிரிவு அஞ்சும்- பிரிவார் என்று பயப்படுகின்ற. புன்கண் உடைத்து ஆல்- அச்சம் உடைய தாயிற்று. ஆல்- அசை. (க-து) அவர் பிரிவார் என்று நினைக்கும்போது அச்சம் உண்டாகின்றது. 3. அரிதுஅரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும், பிரிவுஓர் இடத்துஉண்மை யான். (ப-உ) அறிவுடையார் கண்ணும்- பிரிவின் துன்பத்தை அறியும் காதலரிடத்தும். பிரிவு - பிரிந்து செல்லும் செயல். ஓர் இடத்து- ஓர் சமயம். உண்மையான்- உண்டாதலால். தேற்றம்- பிரியேன் என்று அவர் கூறும் தேறுதல் மொழியை. அரிது- நம்புவதற்கு இல்லை. அரோ: அசை. (க-து) நான் பிரியேன் என்று காதலர் கூறுவதை நம்புவதற் கில்லை. 4. அளித்துஅஞ்சல் என்றவர் நீப்பின், தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. (ப-உ) அளித்து- மிகுந்த அன்பு காட்டி. அஞ்சல் என்றவர்- பிரியேன் அஞ்சாதே என்று கூறியவர். நீப்பின் - பின்னே பிரிவாராயின். தெளித்தசொல்- அவரால் தெளிவாகக் கூறிய சொல்லை. தேறியார்க்கு- உண்மையென்று நம்பினவர்க்கு. தவறு உண்டோ- குற்றம் உண்டோ? (க-து) பிரியேன் என்று கூறியவர் பிரிந்தால், அச் சொல்லை நம்பினவர்மேல் குற்றம் உண்டோ? இல்லை. 5. ஓம்பின் அமைந்தார் பிரிவுஓம்பல்; மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு (ப-உ) ஓம்பின்- காத்துக்கொள்ள வேண்டுமானால். அமைந்தார்- காதலரின். பிரிவு ஓம்பல்- பிரிவு நேராமல் காத்துக் கொள்ளுக. மற்று அவர் நீங்கின்- அவ்வாறு இல்லாமல் அவர் பிரிந்தால். புணர்வு அரிது- மீண்டும் அவரைக் கூடுதல் அரிதாகும். ஆல்: அசை. (க-து) காதலர் பிரிவைத் தடுக்கவேண்டும். பிரிந்தால் மீண்டும் கூடுதல் அரிது. 6. பிரிவுஉரைக்கும் வன்கண்ணர் ஆயின், அரிதுஅவர் நல்குவர் என்னும் நசை. (ப-உ) பிரிவு உரைக்கும்- நான் பிரிந்து செல்வதைக் கூறும். வன்கண்ணர் ஆயின்- இரக்கம் அற்றவரானால். அவர் நல்குவர்- அவர் மீண்டு வந்து அன்பு நாட்டுவார். என்னும் நசை - என்னும் ஆசை. அரிது- பயன்அற்றது. (க-து) பிரியத் துணிந்து அதை உரைத்தவர், மீண்டு வந்தருள்வார் என்று நினைப்பதால் பயன் இல்லை. 7. துறைவன் துறந்தமை தூற்றாகொல், முன்கை இறைஇறவா நின்ற வளை. (ப-உ) துறைவன்- நெய்தல்நிலத் தலைவனாகிய என் காதலன். துறந்தமை- பிரிந்ததை. முன்கை இறை - முன் கையிலிருந்து. இறவா நின்றவளை- கழல்கின்ற வளையல்கள். தூற்றாகொல்- அறிவிக்கமாட்டாவோ? (க-து) தலைவன் பிரிந்ததை, என் கைவளையல்கள் கழன்று விழும் நிகழ்ச்சியே காட்டும். 8. இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்; அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. (ப-உ) இனன்இல் ஊர்- மகளிர்க்குத் தம் குறிப்பறியும் தோழியர்கள் இல்லாத ஊரில். வாழ்தல்- வாழ்வது. இன்னாது- துன்பம் ஆகும். அதனினும்- அதைவிட. இனியார்ப் பிரிவு- தம் காதலரைப் பிரிதல். இன்னாது- துன்பந் தருவதாகும். (க-து) மகளிர்க்குத் தோழியர் இல்லாத இடத்தில் வாழ்வது துன்பம்; காதலரைப் பிரிந்து வாழ்வது அதைவிடத் துன்பமாகும். 9. தொடில்சுடின் அல்லது காமநோய் போல, விடில்சுடல் ஆற்றுமோ தீ. (ப-உ) தீ - நெருப்பு. தொடில்- தொட்டால். சுடின் அல்லது - சுடுமே அல்லாமல். காமநோய்போல- காதல் நோயைப்போல. விடில்- பிரிந்தால். சுடல் ஆற்றுமோ- சுடக்கூடியதாகுமோ? (க-து) தொட்டால் சுடுவது நெருப்பு: பிரிந்தால் சுடுவது காமம். 10. அரிதுஆற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவுஆற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். (ப-உ) அரிது ஆற்றி- பிரிவுக்கும் சம்மதித்து. அல்லல்நோய் பிரியும் துன்பத்தையும். நீக்கி- ஒழித்து. பிரிவு ஆற்றி- பிரிவையும் பொறுத்து. பின் இருந்து -பின்னும் இருந்து. வாழ்வார் பலர்- உயிர்வாழும் மகளிர் பலர் உள்ளனர். (க-து) பிரிவைப் பொறுத்து உயிர்வாழ்கின்ற மகளிர் பலர் உண்டு. 117. படர்மெலிந்து இரங்கல் தலைவி காதல் துன்பத்தால் இளைத்து வருந்தல். 1. மறைப்பேன்மன் யான்,இஃதோ, நோயை இறைப்பவர்க்கு, ஊற்றுநீர் போல மிகும். (ப-உ) யான்- நான். நோயை- இக் காமநோயை. மறைப் பேன்மன்- மறைக்கின்றேன். இஃதோ- ஆனால் இந்த நோயோ. இறைப்பவர்க்கு- தண்ணீர் வேண்டி இறைப்பவர்க்கு. ஊற்றுநீர் போல. ஊறிவரும் நீர்போல. மிகும்- பெருகும். மன்:அசை. (க-து) நான் காமநோயை மறைக்கின்றேன்; ஆனால் அது ஊற்றுநீர்போலப் பெருகி நின்றது. 2. கரத்தலும் ஆற்றேன்இந் நோயை; நோய்செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். (ப-உ) இந்நோயை- இக் காமநோயை. கரத்தலும் ஆற்றேன்- ஒளிப்பதற்கும் வல்லமையற்றேன். நோய் செய்தார்க்கு. -இந்நோயை உண்டாக்கியவர்க்கு. உரைத்தலும்- சொல்லுவதும். நாணுத் தரும்- நாணத்தைத் தரும், என் செய்வேன்? (க-து) காமநோயை என்னால் மறைத்துக்கொள்ளவும் முடியவில்லை; இந்நோயைத் தந்தவரிடம் சொல்வதற்கும் வெட்கமாயிருக்கின்றது. 3. காமமும், நாணும், உயிர்காவாத் தூங்கும்;என் நோனா உடம்பின் அகத்து. (ப-உ) காமமும்- காமநோயும். நாணும்- வெட்கமும். நோனா- அவைகளைப் பொறுக்க முடியாத. என் உடம்பின் அகத்து- என் உடம்புக்குள். உயிர் காவா - உயிரைக் காவடித் தண்டாகக் கொண்டு. தூங்கும்- தொங்குகின்றன. (க-து) காமமும், வெட்கமும் என் உயிரைத் தண்டாகக் கொண்டு இருபுறத்திலும் தொங்குகின்றன. 4. காமக் கடல்மன்னும் உண்டே; அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். (ப-உ) காமக்கடல்- காமமாகிய கடல். மன்னும் உண்டுஏ- நிலைத்திருக்கின்றது. அது நீந்தும்- அதைக் கடக்கும். ஏமப் புணைமன்னும்- காவலாகிய தெப்பம் மட்டும். இல்- இல்லை. ஏ: அசை. (க-து) காமமாகிய கடல் உண்டு; ஆனால் கடக்கும் தெப்பம் இல்லை. 5. துப்பின் எவன்ஆவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். (ப-உ) நட்பினுள்- நட்புள்ள சமயத்திலே. துயர் வரவு- துன்பம் உண்டாகும்படி. ஆற்றுபவர்- செய்கின்றவர். துப்பின்- பகைவரானபோது. எவன் ஆவர்- என்னதான் செய்வாரோ? மன், கொல்: அசைகள். (க-து) நட்பாக இருக்கும்போதே துன்பம் செய்கின்றவர், பகைவரானால் என்னதான் செய்வாரோ? 6. இன்பம் கடல்மற்றுக் காமம், அஃதுஇடுங்கால் துன்பம் அதனின் பெரிது. (ப-உ) காமம்- காமமானது. இன்பம் - கூடி இன்புறும் போது. கடல்- கடல்போல் பெரிது. மற்று அஃது- அக்காமம். அடுங்கால் - துன்புறுத்தும்போது. துன்பம்- அத்துன்பமானது. அதனின் பெரிது- அக்கடலினும் பெரிது. (க-து) காமத்தால் இன்புறும்போது அது கடல் போல் பெரிது; அதனால் துன்புறும்போது அது கடலினும் பெரிதாம். 7. காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன், யாமத்தும் யானே உளேன். (ப-உ) காமக் கடும்புனல்- காமமாகிய வெள்ளத்தை. நீந்தி- நீந்தியும். கரை காணேன்- அதன் கரையைக் கண்டிலேன். யாமத்தும்- சாமத்திலும். யானே- நானே. உளேன்- தனியாக இருக்கின்றேன். (க-து) காமத்தின் எல்லையை அறியேன்; நள்ளிரவிலும் உறங்காமல் தனித்திருக்கின்றேன். 8. மன்உயிர் எல்லாம் துயிற்றி, அளித்துஇரா; என்அல்லது இல்லை துணை. (ப-உ) இரா அளித்து- இந்த இராக்காலம் இரங்கத்தக்கது. மன்உயிர் எல்லாம்- உலகில் வாழும் உயிர்களையெல்லாம். துயிற்றி- தூங்கச் செய்து. என் அல்லது- என்னைத் தவிர. துணைஇல்லை- வேறு துணையில்லாமல். இருக்கின்றது. (க-து) எல்லோரும் உறங்குகின்றனர்; நான் மட்டும இந்த இரவுக்குத் துணையாக உறங்காமல் இருக்கின்றேன். 9. கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. (ப-உ) இந்நாள்- பிரிவின் துயரைத் தாங்காத இந்நாட் களில். நெடிய கழியும்- தாமதமாகக் கழிகின்ற. இரா- இரவுகள். கொடியார்- பிரிந்துபோன அக்கொடியவரின். கொடுமையின்- கொடுமையை விட. தாம் கொடிய- தாம் கொடுமை செய்கின்றன. (க-து) தாமதமாகக் கழியும் இவ்விரவுகள், பிரிந்து சென்றவரின் கொடுமையைவிடக் கொடுமை செய்கின்றன. 10. உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின், வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். (ப-உ) என்கண்- எனது கண்கள். உள்ளம் போன்று- மனத்தைப்போல. உள்வழி- காதலர் உள்ள இடத்திற்கு. செல்கிற் பின்- விரைந்து செல்லுமாயின். வெள்ளநீர்- வெள்ளமாகிய நீரை. நீந்தல்- நீந்தமாட்டா. மன், ஓ: அசைகள். (க-து) மனம்போல என் கண்கள் காதலர் இருக்கும் இடத்திற்கு விரைந்து செல்லுமாயின், கண்ணீர் வெள்ளத்தில் நீந்தவேண்டிய அவசியம் இல்லை. 118. கண்விதுப்பு அழிதல் தலைவனைக் காண்பதற்கு விரைந்து தலைவியின் கண்கள் வருந்துதல். 1. கண்தாம் கலுழ்வது எவன்கொலோ, தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. (ப-உ) தண்டாநோய்- இத் தீராத காம நோயை. தாம் காட்ட- கண்கள்தாம் அவரைக் காட்ட. யாம் கண்டது- யாம் பெற்றோம். கண்தாம்- இப்பொழுது அக்கண்கள்தாம். கலுழ்வது - அவரைக் காட்டச் சொல்லி அழுவது. எவன்கொல்- எதற்காக? (க-து) இக்கண்கள் தாம் அவரைக் காட்டிக் காமநோயைத் தந்தன. இப்பொழுது இக்கண்கள் அழுவது ஏன்? 2. தெரிந்துணரா நோக்கிய உண்கண், பரிந்துஉணராப் பைதல் உழப்பது எவன்? (ப-உ) தெரிந்து உணரா- ஆராய்ந்து அறியாமல். நோக்கிய - அன்று தலைவரைப் பார்த்த. உண்கண்- மையுண்ட கண்கள். பிரிந்து உணரா- தம் குற்றத்தை விரைந்து அறியாமல். பைதல் உழப்பது- இன்று துன்பம் அடைவது. எவன்- ஏனோ? (க-து) அவரைக் கண்டு காதலைச் செய்த கண்கள் இன்று தமது குற்றத்தை அறியாமல் வருந்துவதில் பயன் இல்லை. 3. கதும்எனத் தாம்நோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்கது உடைத்து. (ப-உ) கதும்எனத் தாம்நோக்கி- அன்று திடீர் என்று தாமே பார்த்து. தாமே கலுழும்- இன்று தாமாகவேஅழுகின்ற. இது- இச்செயல். நகத்தக்கது உடைத்து- சிரிக்கத்தக்க தன்மை யுள்ளது. (க-து) தாமே பார்த்துக் காதல்கொண்ட இக்கண்கள், இன்று அழுவது சிரிக்கத்தக்க செயலாகும். 4. பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண், உயல்ஆற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. (ப-உ) உண்கண்- எனது மையுண்ட கண்கள். உயல் ஆற்றா- நான் பிழைக்க முடியாத. உய்வுஇல் நோய்- தீராத காமநோயை என்கண் நிறுத்து- என்னிடம் நிலைக்கச் செய்து. பெயல் ஆற்றா- தாமும் அழ முடியாதபடி. நீர் உலந்த- நீர் வற்றி விட்டன. (க-து) தீராத காமநோயை என் கண்களே உண்டாக்கின; இன்று அவை அழுது அழுது நீர் வற்றின. 5. படல்ஆற்றாப் பைதல் உழக்கும்; கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண். (ப-உ) கடல்ஆற்றா- கடலினும் பெரிய. காமநோய் செய்த- காமநோயை உண்டாக்கிய. என்கண்- எனது கண்கள். படல்ஆற்றா - தூங்க முடியாத. பைதல் உழக்கும்- துன்பத்தை அனுபவிக்கின்றன. (க-து) கடலினும் பெரிய காமத்தைத் தந்த என் கண்கள் தூங்காமல் துன்பம் அடைகின்றன. 6. ஓஒ இனிதே! எமக்குஇந்நோய் செய்தகண் தாஅம், இதன்பட் டது. (ப-உ) எமக்கு இந்நோய்- எமக்கு இக் காமநோயை. செய்த கண்- உண்டாக்கிய கண்கள். தாம் - தாமும். இதன்பட்டது- தூங்காமல் இத் துன்பத்தில் அகப்பட்டது. ஓஒஇனிதே- மிகவும் நல்லதுதான். (க-து) எமக்குக் காமத்தை உண்டாக்கிய கண்கள், தாமும் தூங்காமல் துன்பம் அடைவது நல்லதுதான். 7. உழந்துஉழந்து உள்நீர் அறுக; விழைந்துஇழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். (ப-உ) விழைந்து- விரும்பி. இழைந்து- உருகி. வேண்டி- ஆசைப்பட்டு. அவர்க் கண்ட கண்- அத் தலைவரைப் பார்த்த கண்கள். உழந்து உழந்து- இன்று வருந்தி வருந்தி. உள்நீர் - தம்முள் இருக்கும் நீர். அறுக- இல்லாமல் போகட்டும். (க-து) ஆசைப்பட்டு அவரைக் கண்டு காமங்கொண்ட கண்கள், இன்று வருந்தி அழுது கண்ணீர் வற்றிப் போகட்டும். 8. பேணாது பெட்டார் உளர்மன்னோ, மற்றவர்க் காணாது அமைவுஇல கண். (ப-உ) பேணாது- மனத்தால் விரும்பாமல். பெட்டார்- சொல்லால் மட்டும் விரும்பியவர். உளர்- இங்கிருக்கின்றார். கண்- கண்களால். மற்று அவர்க் காணாது- அவரைக் காணாமல். அமைவுஇல்- பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. மன், ஓ: அசைகள். (க-து) நெஞ்சில் அன்பின்றி சொல்லால் அன்பு காட்டிய வரால் பயன் இல்லை. ஆயினும் கண்கள் அவரைக் காணவே விரும்புகின்றன. 9. வாராக்கால் துஞ்சா; வரின்துஞ்சா; ஆயிடை ஆர்அஞர் உற்றன கண். (ப-உ) வாராக்கால்- அவர் வராவிட்டாலும். துஞ்சா- தூங்கமாட்டா. வரின்- வந்தாலும். துஞ்சா- அவர் பிரிவாரே என்று எண்ணித் தூங்கமாட்டா. ஆஇடை- அவ்விரு பொழுதிலும். கண்- எனது கண்கள். ஆர்அஞர் உற்றன- பெரிய துன்பத்தை அடைந்தன. (க-து) என் கண்கள் காதலர் இல்லாதபோதும் தூங்குவ தில்லை; இருக்கும்போதும் தூங்குவதில்லை. இவ்வாறு துன்புறு கின்றன. 10. மறைபெயல் ஊரார்க்கு அரிதுஅன்றால்; எம்போல் அறைமறை கண்ணார் அகத்து. (ப-உ) எம்போல்- எம்மைப்போன்ற. அறைபறை- அடிக்கின்ற பறைபோன்ற. கண்ணார்- கண்களையுடையவர் களின். அகத்து- நெஞ்சில் உள்ள. மறைபெறல்- இரகசியத்தை அறிதல். ஊரார்க்கு- இவ்வூரில் உள்ளார்க்கு. அரிது அன்றுஆல்- முடியாதது அன்று; எளிதில் முடியும். ஆல்: அசை. (க-து) எம்போன்ற கண்களையுடையவர்களின் உள்ளத்தில் உள்ள இரகசியத்தைத் தெரிந்து கொள்வது எளிதாகும். 119. பசப்புஉறு பருவரல் தனித்திருக்கும் தலைவிக்குப் பசலை படர்வதால் வரும் துன்பம். 1. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்; பசந்தஎன் பண்புயார்க்கு உரைக்கோ பிற. (ப-உ) நயந்தவர்க்கு- என்னை விரும்பியவர்க்கு. நல்காமை- பிரிவை. நேர்ந்தேன்- அன்று சம்மதித்தேன். பசந்த- பிரிவைத் தாங்காமல் இப்பொழுது பசலைநிறம் அடைந்த. என் பண்பு- என் தன்மையை. பிற யார்க்கு உரைக்கோ- வேறு யாரிடம் சொல்வேன்? (க-து) அன்று தலைவர் பிரிந்துசெல்லச் சம்மதித்தேன்; அதனால் இன்று நான் பசலைநிறம் பெற்றேன். இதை யாரிடம் சொல்வேன்? 2. அவர்தந்தார் என்னும் தகையால், இவர்தந்துஎன் மேனிமேல் ஊரும் பசப்பு. (ப-உ) பசப்பு- இப் பசலைநிறம். அவர் தந்தார்- என் காதலர் தந்தார். என்னும் தகையால்- என்னும் செருக்கினால். என்மேனிமேல்- எனது உடம்பின்மேல். இவர் தந்து- ஏறி. ஊரும்- படர்கின்றது. (க-து) காதலரைப் பிரிந்ததனால் என் உடம்பு முழுதும் பசலை நிறம் படர்கின்றது. 3. சாயலும் நாணும் அவர்கொண்டார்; கைம்மாறா, நோயும் பசலையும் தந்து. (ப-உ) கைம்மாறா- பதில் உதவியாக. நோயும்- காமநோ யையும். பசலையும்- பசலைநிறத்தையும். தந்து- கொடுத்து. சாயலும் நாணும்- அழகையும் நாணத்தையும். அவர் கொண்டார் - பிரிந்து போனவர் கைக்கொண்டு சென்றார். (க-து) பிரிந்து சென்றவர், என் அழகையும் நாணத்தையும் கவர்ந்தார்; காமநோயையும், பசலை நிறத்தையும் கொடுத்துப் போனார். 4. உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறம் ஆல்; கள்ளம் பிறவோ பசப்பு. (ப-உ) யான்- நான். உள்ளுவன்மன்- அவர் சொற்களையே நினைக்கின்றேன். உரைப்பது- பேசுவதும். அவர் திறம்ஆல்- அவர் குணங்களைப்பற்றித்தான். பசப்பு- அப்படியிருந்தும் இந்தப் பசலைநிறம் வந்தது. கள்ளம்- வஞ்சனையோ. பிறவோ- வேறு எவையோ? ஆல்: அசை. (க-து) அவர் சொற்களையே நினைக்கின்றேன்; அவர் குணங்களையே பேசுகின்றேன். இருந்தும் இப்பசலை என்மேல் படர்ந்தது. 5. உவக்காண்எம் காதலர் செல்வார்; இவக்காண்என் மேனி பசப்புஊர் வது. (ப-உ) உவக்காண்- அங்கே பார். எம் காதலர் செல்வார்- எமது காதலர் பிரிந்து செல்கின்றார். என் மேனி- அதனால் என் உடம்பிலே. பசப்பு ஊர்வது- பசலை நிறம் படர்வதை. இவக்காண்- இங்கே பார். (க-து) எம் காதலர் பிரிந்ததும் என் உடம்பில் பசலை நிறம் படர்கின்றது. 6. விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு. (ப-உ) விளக்கு அற்றம்- விளக்கு அணைவதை. பார்க்கும்- எதிர்பார்க்கும். இருளேபோல்- இருட்டைப் போல. கொண்கன்- காதலனது. முயக்கு அற்றம் - தழுவல் நீங்கும் சமயத்தை. பசப்பு பார்க்கும் - பசலை எதிர் பார்த்திருக்கும். (க-து) விளக்கு அணைந்தால் இருட்டு படர்வதைப்போல, கணவன் தழுவாவிட்டால் பசலை படர்கின்றது. 7. புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன், அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. (ப-உ) புல்லிக் கிடந்தேன்- காதலனைத் தழுவிக்கொண்டு கிடந்த நான். புடைபெயர்ந்தேன்- சிறிது விலகினேன். அவ்வளவில்- உடனே. பசப்பு- பசலை நிறமானது. அள்ளிக்கொள்வற்றே- அள்ளிக்கொள்வது போல வந்து பரவி விட்டது. (க-து) என் காதலன் அணைப்பிலிருந்து சிறிது பிரிந்த உடனேயே பசலை என்னைக் கவர்ந்து கொண்டது. 8. பசந்தாள் இவள்என்பது அல்லால், இவளைத் துறந்தார் அவர் என்பார் இல். (ப-உ) இவள் பசந்தாள்- இவள் பசலைநிறம் பெற்றாள். என்பது அல்லால்- என்று என்னைப் பழிக்குமே அல்லாமல். இவளை- இப்பெண்ணை. அவர் துறந்தார்- அவர் பிரிந்து சென்றார். என்பார் இல்- என்று சொல்லுவார் இல்லை. (க-து) என்னைப் பழிக்கின்றனர்; துறந்து சென்ற என் காதலரைப் பழிப்பவர் இல்லை. 9. பசக்கமன் பட்டாங்குஎன் மேனி, நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். (ப-உ) நயப்பித்தார்- பிரிவுக்கு என்னை உடம்படச் செய்த காதலர். நல்நிலையர் ஆவர் எனின்- இன்று நல்லநிலையில் இருப்பவராயின். என் மேனி- என் உடம்பு. பட்டாங்கு - பட்டது பட. பசக்கமன்- பசலைநிறம் அடையட்டும். மன்: அசை. (க-து) பிரிந்து சென்ற எம் தலைவர் நல்ல நிலையிலிருந் தால் போதும்; என் உடம்பு பசலைநிறம் பெற்றாலும் பெறட்டும்; கவலை இல்லை. 10. பசப்புஎனப் பேர்பெறுதல் நன்றே, நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். (ப-உ) நயப்பித்தார்- பிரிவுக்குச் சம்மதிக்க வைத்த என் கணவரின். நல்காமை- அருளின்மையை. தூற்றார் எனின்- பழிக்காமலிருப்பார்களாயின். பசப்பு என- பசலை நிறம் பெற்றாள் என்று. பேர்பெறுதல்- பெயர் பெறுவது. நன்றே- நன்மைதான். (க-து) என் காதலரைப் பழிக்காமலிருப்பார்களேயானால், நான் பசலை பெற்றவள் என்று பெயர்பெறுவது நல்லதுதான். 120. தனிப்படர் மிகுதி காதலனைப் பிரிந்து தனித்திருப்பதால் வரும் துன்பமிகுதி. 1. தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர், பெற்றாரே காமத்துக் காழ்இல் கனி. (ப-உ) தாம் வீழ்வார்- தம்மால் விரும்பப்பட்ட கணவர். தம் வீழப்பெற்றவர்- தம்மை விரும்புகின்ற காதலைப் பெற்ற மகளிர். காமத்து- இன்பவாழ்வின். காழ்இல் கனி- விதையில்லாத பழத்தை. பெற்றார்ஏ- பெற்றவராவார். ஏ : அசை. (க-து) தம் கணவரால் காதலிக்கப்படும் மகளிர்தாம், இன்பவாழ்வு என்னும் விதையில்லாத பழத்தைப் பெற்றவராவார். 2. வாழ்வார்க்கு வானம் பயந்துஅற்றால், வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. (ப-உ) வீழ்வார்க்கு- தம்மை விரும்பும் மகளிர்க்கு. வீழ்வார்- அவரை விரும்பும் காதலர். அளிக்கும் அளி- அளிக்கும் அன்பானது. வாழ்வார்க்கு- தன்னையே நோக்கி உயிர் வாழ்கின்ற வர்க்கு. வானம்- மழை. பயந்து அற்று- வேண்டிய அளவு பெய்தது போலாம். ஆல்: அசை. (க-து) தம்மை விரும்பும் மகளிரிடம் காதலன் காட்டும் அன்பு, மழையை நோக்கியிருப்போர்க்கு அம்மழை பெய்து உதவுதல் போலாம். 3. வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே, வாழுநம் என்னும் செருக்கு. (ப-உ) வீழுநர்- தம்மால் விரும்பப்படும் கணவரால். வீழப்படுவார்க்கு- விரும்பப்படும் மகளிர்க்கு. வாழுநம்- நாம் வாழ்வோம். என்னும் செருக்கு- என்னும் கர்வம். அமையும்- பொருத்தமாகும். ஏ:அசை. (க-து) கணவன் அன்பைப் பெற்ற மகளிர்க்கு அவன் பிரிந்திருந்தாலும், அவன் வருவான்; கூடிவாழ்வோம் என்று எண்ணி மகிழ்வது பொருத்தமாகும். 4. வீழப் படுவார் கெழீஇயிலர்; தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். (ப-உ) வீழப்படுவார்- கற்புடை மகளிரால் விரும்பப்படும் பெண்கள். தாம் வீழ்வார்- தம்மால் விரும்பப்படும் கணவரால். வீழப்படார் எனின்- விரும்பப்படாதவராயின். கெழீஇயிலர்- அவர் நல்வினையற்றவர் ஆவர். (க-து) தம் கணவரால் விரும்பப்படாத மகளிர் தீவினை யுள்ளவர். 5. நாம்காதல் கொண்டார் நமக்குஎவன் செய்பவோ, தாம்காதல் கொள்ளாக் கடை. (ப-உ) நாம் காதல் கொண்டார்- நம்மால் காதல் கொள்ளப்பட்டவர். தாம் காதல் கொள்ளாக்கடை- தாமும் நம்மிடம் காதல் கொள்ளாதபோது. நமக்கு எவன் செய்பவோ- அவர் நமக்கு என்ன நன்மையைச் செய்வார். (க-து) நம்மிடம் காதல்கொள்ளாத கணவரால் நமக்கு இன்பம் இல்லை. 6. ஒருதலையான் இன்னாது காமம், காப்போல இருதலை யானும் இனிது. (ப-உ) காமம்- காமமானது. ஒரு தலையான்- ஒரு பக்கத்தில் மட்டும் இருக்குமாயின். இன்னாது- துன்பம் செய்யும். காப்போல- காவடியைப்போல. இருதலையானும்- இரண்டு பக்கங்களிலும் சமமாக இருக்குமானால். இனிது- இன்பமாகும். (க-து) ஆடவர், மகளிர் என்னும் இருவரிடமும் சமமாக இருக்கும் காமமே இன்பந்தரும். 7. பருவரலும் பைதலும் காணான்கொல், காமன் ஒருவர்கண் நின்றுஒழுகு வான். (ப-உ) ஒருவர்கண் நின்று - ஒருவர் பக்கத்தில் மட்டும் நின்று. ஒழுகுவான்- போர் செய்கின்றவனாகியகாமன்- காமனானவன். பருவரலும்- நோயையும். பைதலும்- துன்பத்தையும். காணான் கொல்- அறிய மாட்டானோ? (க-து) காமன் நடுநிலையில் இல்லாமல் ஒருபக்கத்தே நின்று போர் செய்வதால், என் துக்கத்தை அறியவில்லை. 8. வீழ்வாரின் இன்சொல் பெறாஅது, உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். (ப-உ) வீழ்வாரின்- தாம் விரும்பும் கணவரின். இன்சொல் பெறாஅது- இனிய சொல்லைப் பெறாமல். வாழ்வாரின்- தனித்து வாழ்கின்ற மகளிரைப்போல. உலகத்து- உலகில். வன்கணார்- தைரியம் உள்ளவர். இல்- வேறு இல்லை. (க-து) தம் கணவரின் இனிய சொல்லைப் பெறாமல் தனித்து வாழும் மகளிரைப் போலத் தைரியம் உள்ளவர் உலகில் ஒருவரும் இல்லை. 9. நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. (ப-உ) நசைஇயார்- என்னால் விரும்பப்பட்ட காதலர். நல்கார் எனினும்- அருள் செய்யார் ஆயினும். அவர் மாட்டு- அவரிடம். இசையும்- பொருந்திய குணங்களைக் கேட்பது. செவிக்கு- என் காதுகளுக்கு. இனிய- இன்பம் தருகின்றன. (க-து) என் காதலர் என்னிடம் அன்பற்றவராயினும், அவருடைய நற்குணங்களைக் கேட்பது எனக்கு இன்பமாகும். 10. உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. (ப-உ) உறாஅர்க்கு- உன்னிடம் அன்பில்லாதவர்க்கு. உறுநோய் - மிகுந்த காமநோயை. உரைப்பாய்- சொல்லுகின்றாய். கடலைச் செறாஅஅய்- அதைவிடக் கடல்மீது கோபங் கொள்வாய். நெஞ்சு வாழிய - நெஞ்சே வாழ்க. (க-து) நெஞ்சே, உன்னிடம் அன்பில்லாதவரிடம் உனது துன்பத்தைக் கூறுவதைவிட கடலின்மேல் கோபங் கொள்வாயாக. 121. நினைந்தவர் புலம்பல் காதலரின் பிரிவை எண்ணி வருந்துதல். 1. உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும் காமம் இனிது. (ப-உ) உள்ளினும்- நினைத்தாலும். தீரா - நீங்காத பெருமகிழ்- மிகுந்த மகிழ்ச்சியை. செய்தலால்- செய்வதனால். கள்ளினும்- உண்டால் மகிழ்ச்சி தரும் கள்ளை விட. காமம் இனிது- காமம் இன்பம் தரக்கூடியதாகும். (க-து) நினைத்தாலே காமம் இன்பந்தரும்; உண்டால் தான் கள் இன்பந்தரும். ஆதலால், காமமே சிறந்தது. 2. எனைத்துஒன்று இனிதேகாண் காமம்:தாம் வீழ்வார் நினைப்ப வருவதுஒன்று இல். (ப-உ) தாம்வீழ்வார்- தம்மால் விரும்பப்படும் காதலரை. நினைப்ப- பிரிந்திருக்கும்போது நினைப்பதனால். வருவது ஒன்று இல்- அவருக்கு வரும் துன்பம் ஒன்றும் இல்லை ஆதலால். காமம்- காமமானது. எனைத்து ஒன்று -எவ்வளவாயினும். இனிதே காண்- இன்பம் தருவதேயாகும். (க-து) பிரிந்திருக்கும் காதலரை நினைப்பதனால் அவருக்கு ஒரு துன்பமும் இல்லை. ஆதலால், காதல் இன்பமேயாகும். 3. நினைப்பவர் போன்று நினையார்கொல்? தும்மல் சினைப்பது போன்று கெடும். (ப-உ) தும்மல்- தும்மலானது. நினைப்பது போன்று- வருவதுபோல் தோன்றி. கெடும்- வராமல் கெடும்; ஆதலால் தலைவர். நினைப்பவர் போன்று- என்னை நினைப்பவர்போல் இருந்து. நினையார்கொல்- நினைக்காமல் விடுகின்றார் போலும். (க-து) எனக்குத் தும்மல் வருவதுபோல் தோன்றி வருவதில்லை. அதனால், காதலர் என்னை நினைப்பது போல் இருந்து நினைக்காமல் விடுகிறார்போல் தெரிகின்றது. 4. யாமும் உளேம்கொல் அவர்நெஞ்சத்து; எம்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். (ப-உ) எம்நெஞ்சத்து- எமது நெஞ்சத்தில். அவர்- காதலர். ஓஒஉளரே- நீங்காமல் இருக்கின்றார். அவர் நெஞ்சத்து- அவருடைய மனத்தில். யாமும் உளேம் கொல்- நாமும் இருக்கின்றோமா? (க-து) காதலர் எம் மனத்தில் எப்பொழுதும் இருக்கின்றார்; நாமும் அவர் மனத்துள் இருக்கின்றோமா? 5. தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார், நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல். (ப-உ) தம் நெஞ்சத்து- தமது நெஞ்சில். எம்மைக் கடிகொண்டார் - நான் வராமல் காப்பாற்றி வைத்திருக்கும் தலைவர். எம்நெஞ்சத்து- எமது மனத்தில். ஓவா வரல்- நீங்காமல் வருவதற்கு. நாணார்கொல்- வெட்கமடையமாட்டாரா? (க-து) தமது நெஞ்சில் எம்மைப் வரவிடாமல் வைத்திருக்கும் தலைவர், எம்நெஞ்சில் தாம் வருவதற்கு நாணமாட்டாரா? 6. மற்றுயான் என்உளேன் மன்னோ, அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். (ப-உ) அவரொடு- அக் காதலருடன். யான் உற்ற நாள்- யான் கூடியிருந்த நாளை. உள்ள- நினைப்பதால். உளேன்- உயிர்வாழ்கின்றேன். மற்று- அது இல்லையானால். யான் என் உளேன்- நான் வேறே எதனால் உயிர்வாழ்வேன்? (க-து) நான் காதலருடன் கூடி மகிழ்ந்த நாளை நினைத்து உயிர்வாழ்கின்றேன்; இன்றேல் உயிர்வாழ மாட்டேன். 7. மறப்பின் எவன்ஆவன் மன்கொல், மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். (ப-உ) மறப்பு அறியேன்- அவருடன் கூடியிருந்த இன்பத்தை மறந்தறியேன். உள்ளினும்- அவர் பிரிவை நினைத்தாலும். உள்ளம் சுடும்- அது என் உள்ளத்தைச் சுடுகின்றது. மறப்பின்- மறந்தால். எவன் ஆவன்- என்ன ஆவேன்? மன், கொல்: அசைகள். (க-து) அவருடன் கூடியிருந்த இன்பத்தை மறவேன். அவர் பிரிவை நினைத்தாலே அது என் உள்ளத்தைச் சுடுகின்றது. அவரை மறந்தால் உயிர்வாழ மாட்டேன். 8. எனைத்து நினைப்பினும் காயார்; அனைத்துஅன்றோ காதலர் செய்யும் சிறப்பு. (ப-உ) எனைத்து நினைப்பினும்- எவ்வளவுதான் நினைத் தாலும். காயார்- கோபிக்கமாட்டார். அனைத்து அன்றோ- அவ்வளவன்றோ. காதலர்- காதலரானவர். செய்யும் சிறப்பு- எனக்குச் செய்யும் சிறந்த இன்பமாகும். (க-து) காதலரை எவ்வளவு நினைத்தாலும் கோபிக்க மாட்டார். அதுவே அவர் எனக்குச் செய்யும் இன்பமாகும். 9. விளியும்என் இன்உயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. (ப-உ) வேறுஅல்லம் என்பார்- முன்பு நாம் இருவரும் தனித்தனி அல்லோம் என்றவருடைய. அளி இன்மை- அன்பின் மையை. ஆற்ற நினைந்து- மிகவும் எண்ணி. என் இன்உயிர் - எனது இனிய உயிர். விளியும்- அழிகின்றது. (க-து) நாம் இருவரும் ஒன்றே என்று முன்பு கூறியவரின் அன்பின்மையை எண்ணி என் உயிர் அழிகின்றது. 10. விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. (ப-உ) மதி- சந்திரனே. விடாஅது- என் நெஞ்சை விட்டு நீங்காமல். சென்றாரை -பிரிந்து போனவரை. கண்ணினால் காண- கண்ணால் பார்ப்பதற்காக. படாஅதி- நீ மறையாதிருக்க வேண்டும். வாழி- நீ வாழ்க. (க-து) பிரிந்து சென்றாலும் என் மனத்திலிருப்பவரைக் கண்ணால் காணும் பொருட்டு, சந்திரனே நீ மறையாமலிருக்க வேண்டும். 122. கனவுநிலை உரைத்தல் தலைவி, காதலனைப்பற்றித் தான் கண்ட கனவை எடுத்துக் கூறுதல். 1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. (ப-உ) காதலர்- யான் வருந்துவதை அறிந்து காதலரது. தூதொடு வந்த- தூதுடன் என்னிடம் வந்த. கனவினுக்கு - கனவுக்கு. விருந்து- விருந்தாக. யாது செய்வேன்- என்ன செய்வேன்? கொல்: அசை. (க-து) காதலர் விடுத்த தூதுடன் வந்த இக் கனவுக்கு என்ன விருந்து செய்வேன்? 2. கயல்உண்கண் யான்இரப்பத் துஞ்சின், கலந்தார்க்கு உயல்உண்மை சாற்றுவேன் மன். (ப-உ) கயல் உண்கண்- கயல்மீன் போன்ற மை பூசிய எனது கண்கள். யான் இரப்ப- நான் வேண்டிக்கொள்ள. துஞ்சின்- தூங்குமானால். கலந்தார்க்கு- கனவிலே காணப்பட்ட தலைவர்க்கு. உயல் உண்மை- நான் பிழைத்திருக்கின்ற தன்மையை. சாற்றுவேன்- கூறுவேன். மன்:அசை. (க-து) என் வேண்டுகோளுக்கு இணங்கி எனது கண்கள் தூங்குமானால், கனவிலே வரும் தலைவர்க்கு நான் பிழைத் திருக்கும் தன்மையைப்பற்றி உரைப்பேன். 3. நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டுஎன் உயிர். (ப-உ) நனவினால்- நனவில் வந்து. நல்காதவரை- அருள் செய்யாத தலைவரை. கனவினால்- கனவில். காண்டலின்- காணுவதனால். என் உயிர் உண்டு- எனது உயிர் நிலைத்திருக் கின்றது. (க-து) நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் என் உயிர் நிலைத்திருக்கின்றது. 4. கனவினால் உண்டாகும் காமம்; நனவினால் நல்காரை நாடித் தரற்கு. (ப-உ) நனவினால்- நனவில் வந்து. நல்காரை- அருள் செய்யாதவரை. நாடித்தரற்கு- தேடிக்கொண்டு வந்து தருவ தனால். கனவினால்- கனவிலே. காமம்- இன்பம். உண்டாகும்- உண்டாகின்றது. (க-து) நனவிலே வராத காதலரைக் கனவிலே காண்ப தனால் எனக்கு இன்பம் உண்டாகின்றது. 5. நனவினால் கண்டதூஉம் ஆங்கே; கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. (ப-உ) நனவினால்- முன்பு நனவிலே. கண்டதூஉம்- தலை வரைக் கண்டு அனுபவித்த இன்பமும். ஆங்கே- அப்பொழுது இன்பமாயிருந்தது. கனவுந்தான்- இன்று கனவில் அனுபவித்த இன்பமும். கண்ட பொழுதே- அனுபவித்த அப்பொழுதுதான். இனிது- இன்பமாயிருந்தது. (க-து) கனவில் கண்ட இன்பமும், நனவில் கண்ட இன்பமும் எனக்கு ஒரு தன்மையாகவே இருந்தன. 6. நனவுஎன ஒன்றுஇல்லை ஆயின், கனவினால் காதலர் நீங்கலர் மன். (ப-உ) நனவு என ஒன்று- நனவு என்று சொல்லப்படும் ஒன்று. இல்லை ஆயின்- இல்லாவிட்டால். கனவினால்- கனவில் வந்து கூடிய. காதலர்- தலைவர். நீங்கலர்- என்னைவிட்டுப் பிரியமாட்டார். மன்: அசை. (க-து) நனவு என்று ஒன்று இல்லாவிட்டால், கனவிலே வந்த காதலர் என்னைவிட்டுப் பிரியமாட்டார். 7. நனவினால் நல்காக் கொடியார், கனவினால் என்எம்மைப் பீழிப் பது. (ப-உ) நனவினால்- நனவில் வந்து. நல்கா- அன்பு காட்டாத. கொடியார்- கொடியவராகிய தலைவர். கனவினால்- கனவில் வந்து. எம்மைப் பீழிப்பது- எம்மைத் துன்புறுத்துவது. என்- என்ன காரணம்? (க-து) ஒரு நாளாவது நனவில் வந்து அன்பு காட்டாதவர், நாள்தோறும் கனவில் வந்து துன்புறுத்துவது ஏன்? 8. துஞ்சும்கால் தோள்மேலர் ஆகி, விழிக்குங்கால் நெஞ்சத்தார் ஆவர் விரைந்து. (ப-உ) துஞ்சும்கால்- நான் தூங்கும்போது. தோள் மேலர் ஆகி- என் தோளின்மேல் உள்ளவராகி. விழிக்கும் கால்- விழித்த போது. விரைந்து - விரைவுடன். நெஞ்சத்தர் ஆவர்- மனத்தில் உள்ளவர் ஆகின்றார். (க-து) என் உள்ளத்தில் உள்ள காதலர், தூங்கும்போது தோளின்மேலும், விழித்தபோது நெஞ்சத்திலும் இருக்கின்றார். 9. நனவினால் நல்காரை நோவர், கனவினால் காதலர்க் காணா தவர். (ப-உ) கனவினால்- கனவிலே. காதலர்க் காணாதவர்- காதலரைக் காண அறியாத மகளிர். நனவினால்- நனவிலே வந்து. நல்காரை- அன்பு செய்யாத என் காதலரை. நோவர்- அன்பற்றவர் என்று நொந்துகொள்வார்கள். (க-து) தமக்குக் காதலர் இல்லாமையால் காதலரைக் கனவிலே கண்டறியாத மகளிர், நனவிலே வராத என் காதலரைப் பழிப்பர். 10. நனவினால் நம்நீத்தார் என்பர்; கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். (ப-உ) இவ்வூரவர்- இவ்வூரில் உள்ள பெண்கள். நனவினால்- நனவிலே. நம் நீத்தார் - நம்மைக் கைவிட்டார். என்பர்- என்று என் காதலரைப் பழிப்பர். கனவினால்- அவர் நாள்தோறும் கனவிலே. காணார்கொல்- வருவதை அறியாரோ? (க-து) என் காதலர் தினந்தோறும் கனவிலே வந்து இன்பந் தருவதை இவ்வூர் மகளிர் அறியார். அதனால்தான், அவர் நனவில் வராததுபற்றிப் பழி கூறுவர். 123. பொழுது கண்டு இரங்கல் தனித்திருக்கும் தலைவி மாலைப்பொழுது கண்டு வருந்துதல். 1. மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும் வேலைநீ வாழி பொழுது. (ப-உ) பொழுது- பொழுதே. நீ மாலையோ அல்லை- நீ மாலைக்காலம் அல்ல. மணந்தார்- மணந்தவர் பிரிந்திருந்தால் அவர்களின். உயிர் உண்ணும் - உயிரை உண்ணுகின்ற. வேலை- முடிவுக்காலமாக இருக்கின்றாய். வாழி- வாழ்க. (க-து) நீ மாலைக்காலம் அல்ல; காதலரைப் பிரிந்திருப் போரின் உயிருக்கு இறுதிக்காலமானாய். 2. புன்கண்ணை வாழி மருள்மாலை, எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. (ப-உ) மருள்மாலை- மயங்கிய மாலைப்பொழுதே. புன் கண்ணை- நீயும் துன்பப்படுகின்றாய். வாழி- வாழ்க. நின் துணை- உன் துணையும். எம் கேள்போல்- எமது துணையைப் போல. வன்கண்ணதோ- இரக்கமற்றதோ? (க-து) வருந்துகின்ற மாலைக்காலமே! உன் துணையும், எம் துணையைப்போல இரக்கம் அற்றதோ? 3. பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். (ப-உ) பனி அரும்பி- நடுக்கம் அடைந்து. பைதல் கொள் மாலை- பசலை நிறங்கொண்ட மாலைப்பொழுது. துனி அரும்பி - எனக்கு வாழ்வில் வெறுப்புண்டாக்கி. துன்பம் வளர- துன்பம் வளரும்படி. வரும்- வருகின்றது. (க-து) எனக்கு வாழ்வில் வெறுப்பும் துன்பமும் உண்டாகும் படி இம்மாலைப்பொழுது வருகின்றது. 4. காதலர் இல்வழி மாலை, கொலைக்களத்து ஏதிலர் போல வரும். (ப-உ) மாலை- இந்த மாலைப்பொழுது. காதலர் இல்வழி- என் காதலர் இல்லாத இப்பொழுது. கொலைக்களத்து- கொலைக்களத்திலே. ஏதிலர்போல- வரும் கொலைஞர்போல. வரும்- என் உயிரைக் கவர வருகின்றது. (க-து) காதலர் இருந்தபொழுது இன்பம் செய்த இம் மாலைப் பொழுது, அவர் இல்லாத இப்பொழுது கொலை ஞனைப் போல வருகின்றது. 5. காலைக்குச் செய்தநன்று என்கொல்; எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. (ப-உ) யான் - நான். காலைக்கு- காலைப் பொழுதுக்கு. செய்த நன்று- செய்த நன்மை. என்கொல்- யாது? மாலைக்கு- மாலைப்பொழுதுக்கு. செய்தபகை- செய்த தீமை. எவன் கொல்- யாது? (க-து) காலைப்பொழுது எனக்குத் துன்பம் செய்யவில்லை; மாலைப்பொழுது துன்பம் செய்கின்றது. காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்கு நான் செய்த தீமை என்ன? 6. மாலைநோய் செய்தல், மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன். (ப-உ) மாலை- முன்பெல்லாம் எனக்கு இன்பம் செய்த மாலைப்பொழுது. நோய் செய்தல்- இன்று துன்பம் செய்வதை. மணந்தார்- தலைவர். அகலாத காலை- பிரியாமலிருந்த பொழுது. அறிந்தது இலேன்- அறியமாட்டேன். (க-து) முன்பு எனக்கு இன்பம் செய்த மாலை, இப்பொழுது துன்பம் செய்கின்றது. இதனை, என் காதலர் என்னுடன் இருந்த பொழுது நான் அறிந்ததில்லை. 7. காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி, மாலை மலரும்இந் நோய். (ப-உ) இந்நோய்- இக் காமநோயாகிய மலர். காலை அரும்பி- காலைப்பொழுதில் அரும்பாகி. பகல் எல்லாம் போது ஆகி- பகல் முழுவதும் மலரும் பருவத்தை யடைந்து. மாலை மலரும்- மாலைப்பொழுதில் பூக்கின்றது. (க-து) இக் காமநோய் காலையில் அரும்பாகி, பகலில் மொட்டாகி, மாலையில் மலர்கின்றது. 8. அழல்போலும் மாலைக்குத் தூதுஆகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. (ப-உ) ஆயன் குழல்- மாலைக்காலத்தில் இடையன் ஊதும் குழல். அழல்போலும்- தீப்போல் சுடுகின்றதாகி. மாலைக்குத் தூது ஆகி- மாலைப்பொழுதுக்குத் தூதும் ஆகி. கொல்லும் படைபோலும்- என்னைக் கொல்லும் ஆயுதம் போலும் ஆயிற்று. (க-து) முன்பு இனிமையாயிருந்த இடையன் குழலோசை, இன்று என் காதலர் இல்லாமையால் என்னைச் சுடுவதாயிற்று; மாலைக்குத் தூதும் ஆயிற்று; என்னைக் கொல்லும் படையும் ஆயிற்று. 9. பதிமருண்டு பைதல் உழக்கும்; மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. (ப-உ) மதிமருண்டு- அறிவு மயங்கும்படி. மாலை- மாலைக்காலம். படர்தரும்போழ்து- வரும்பொழுது. பதி- இவ்வூரெல்லாம். மருண்டு- மயங்கி. பைதல் உழக்கும்- துன்பம் அனுபவிக்கும். (க-து) மாலைக்காலத்தில் நான் படும் துன்பத்தைக் கண்டு, இவ்வூரெல்லாம் துன்புறுகின்றது. 10. பொருள்மாலை யாளரை உள்ளி, மருள்மாலை மாயும்என் மாயா உயிர். (ப-உ) என் மாயா உயிர்- எனது இறக்காத உயிர். பொருள் மாலையாளரை- பொருள்தேடப் பிரிந்து போன தன்மை யுள்ளவரை. உள்ளி- நினைத்து. மருள் மாலை- மயங்கும் இம் மாலைப்பொழுதிலே. மாயும்- இறக்கின்றது. (க-து) சாவாதிருந்த எனது உயிர், பொருள் தேடப் பிரிந்த அக்காதலர் செயலை நினைந்து இந்த மாலையிலே சாகின்றது. 124. உறுப்புநலன் அழிதல் தலைவன் பிரிவால் வருந்தும் தலைவியின் அவயவங்களின் அழகு குறைவது. 1. சிறுமை நமக்குஒழியச் சேண்சென்றார் உள்ளி நறுமலர் நாணின் கண். (ப-உ) சிறுமை- துன்பம். நமக்கு ஒழிய- நம்மிடம் நிற்கும்படி. சேண்சென்றார்- நெடுந்தூரம் சென்றவரை. உள்ளி- நினைத்து அழுது. கண்- கண்கள். நறுமலர் நாணின்- முன்பு தம்மைக் கண்டு நாணமடைந்த நல்ல மலர்களைக் கண்டு இப்பொழுது தாம் நாணம் அடைந்தன. (க-து) காதலர் பிரிவால் வருந்திய கண்கள், இப்பொழுது. முன்பு தமக்கு நாணிய நல்ல மலர்களைக்கண்டு தாம் நாண மடைந்தன. 2. நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். (ப-உ) பசந்து- நிறம் வேறுபட்டு. பனிவாரும் கண்- நீரைச் சொரியும் கண்கள். நயந்தவர்- நம்மால் விரும்பப்பட்டவரது. நல்காமை- அன்பில்லாமையை. சொல்லுவபோலும்- சொல்லு கின்றவைபோல் காணப்படுகின்றன. (க-து) நீரைச் சொரியும் கண்கள், நமது காதலரின் அன்பில்லாமையைக் கூறுகின்றவைபோல் இருக்கின்றன. 3. தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். (ப-உ) மணந்தநாள்- தலைவர் கூடியிருந்த நாளில். வீங்கியதோள்- பூரித்த தோள்கள். தணந்தமை- இன்று அவர் பிரிந்திருப்பதை. அறிவிப்பபோலும்- அறிவிப்பவைபோல் மெலிகின்றன. (க-து) காதலர் மணந்த நாளில் பருத்திருந்த தோள்கள், அவர் பிரிந்த நாளில் மெலிகின்றன. 4. பணைநீங்கிப் பைந்தொடி சோரும்; துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். (ப-உ) துணைநீங்கி- காதலரைப் பிரிந்து. தொல் கவின்- பழைய இயற்கை அழகு. வாடிய தோள்- குறைந்த தோள்கள். பணைநீங்கி- தமது பருமையை இழந்து. பைம்தொடி- பசும்பொன் வளையல்கள். சோரும்- கழல்கின்றன. (க-து) தலைவர் பிரிவால் அழகிழந்த தோள்கள், தமது பருமையும் இழந்தன; பொன் வளையல்களும் கழல்கின்றன. 5. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். (ப-உ) தொடியொடு- வளையல்கள் கழல்வதோடு. தொல்கவின் வாடிய- இயற்கை அழகையும் இழந்த. தோள்- தோள்கள். கொடியார்- எம்மைப் பிரிந்த கொடியவரது. கொடுமை உரைக்கும்- கொடுமையைக் கூறுகின்றன. (க-து) வளையல்களையும், அழகையும் இழந்த எனது தோள்கள், பிரிந்த எனது காதலரின் கொடுமையைச் சொல்லு கின்றன. 6. தொடியொடு தோள்நெகிழ நோவல், அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. (ப-உ) தொடியொடு- வளையல்கள் கழலும்படி. தோள் நெகிழ- தோளும் மெலிவதைக் கண்டு. அவரை- பிரிந்திருக்கும் என் காதலரை. கொடியர் எனக் கூறல்- கொடுமையுள்ளவர் என்று கூறுவதைக்கேட்டு. நொந்து நோவல்- பொறுக்காமல் வருந்துகின்றேன். (க-து) என் தோளைக் கண்டு பிறர் என் காதலரைப் பழிப்பதைக் கேட்டு நான் வருந்துகின்றேன். 7. பாடு பெறுதியோ நெஞ்சே, கொடியார்க்குஎன் வாடுதோள் பூசல் உரைத்து. (ப-உ) நெஞ்சே- மனமே. கொடியார்க்கு- கொடியவரான என் காதலர்க்கு. என் வாடுதோள்- எனது மெலிகின்ற தோளால் உண்டாகும். பூசல் உரைத்து- ஆரவாரத்தைச் சொல்லி. பாடு பெறுதியோ- அதனால் ஒரு பெருமையை அடைவாயோ? (க-து) நெஞ்சே! எனது தோள் மெலிவினால் உண்டாகும் ஆரவாரத்தை அவரிடம் கூறி, அவர் வந்து, பெரும் பெருமையை அடைவாயானால் அது சிறந்ததாகும். 8. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். (ப-உ) முயங்கிய கைகளை- காதலியைத் தழுவிய கைகளை. ஊக்க- சிறிது தளர்த்திய உடன். பைம்தொடி- பசுமையான பொன் வளையல்களை அணிந்த. பேதை நுதல்- பேதையின் நெற்றியானது. பசந்தது- பசலைநிறம் பெற்றது. (க-து) யான் அவளைத் தழுவிய கைகளைச் சிறிது தளர்த்தினேன்; உடனே, இவர் பிரிந்தால் என் செய்வோம் என்று கருதி அவள் நெற்றி பசலைநிறம் பெற்றது. 9. முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புஉற்ற பேதை பெருமழைக் கண். (ப-உ) முயக்கு இடை- தழுவிக்கொண்டிருந்தபோது. தண்வளி- குளிந்த காற்று. போழ- இடையே சென்றதனால். பேதை- பேதையின். பெருமழைக் கண்- பெரிய குளிர்ந்த கண்கள். பசப்பு உற்ற- பசலை நிறம் பெற்றன. (க-து) அவளைத் தழுவிக்கொண்டிருந்த என் கைகள் சிறிது தளர்ந்தன; உடனே அவள் கண்கள் பசலை நிறம் பெற்று விட்டன. 10. கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே; ஒள்நுதல் செய்தது கண்டு. (ப-உ) ஒள்நுதல் - காதலியின் ஒளி பொருந்திய நெற்றியால். செய்தது கண்டு- உண்டாக்கப்பட்ட பசலை நிறத்தைக் கண்டு. கண்ணின் பசப்போ- கண்களில் தோன்றிய பசலை நோய். பருவரல் எய்தின்றுஏ- துன்பம் அடைந்தது. ஏ: அசை. (க-து) நெற்றியில் உண்டான நிற வேறுபாட்டைக் கண்டு, கண்கள் துன்பம் அடைந்தன. 125. நெஞ்சொடு கிளத்தல் காதலனைப் பிரிந்திருக்கும் துன்பத்தை, தலைவி தன் மனத்திடம் கூறுவது. 1. நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே; எனைத் தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. (ப-உ) நெஞ்சே- மனமே. எவ்வநோய்- துன்பந்தரும் இக் காமநோயை. தீர்க்கும் மருந்து- நீக்கும் மருந்து. ஒன்று- ஒன்றை. எனைத்து ஒன்றும்- அது எப்படிப்பட்ட தொன்றாயினும். நினைத்து- அறிந்து. சொல்லாயோ- சொல்லமாட்டாயோ? (க-து) நெஞ்சே! தீராத காமநோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றை ஆராய்ந்து சொல்லமாட்டாயோ? 2. காதல் அவர்இலர் ஆக,நீ நோவது பேதமை வாழிஎன் நெஞ்சே! (ப-உ) வாழி என் நெஞ்சே- வாழ்க எனது மனமே. அவர்- அத்தலைவர். காதல்இலர் ஆக- நம்மேல் ஆசையற்றவரா யிருக்கவும். நீ நோவது - நீ அவர் வருகையை எதிர்பார்த்து வருந்துவது. பேதைமை- அறியாமையாகும். (க-து) மனமே! அவர் நம்மிடம் அன்பற்றவர். அப்படி யிருந்தும் அவர் வரவை எதிர்பார்த்து வருந்துதல் அறியாமையாகும். 3. இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே, பரிந்துஉள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். (ப-உ) நெஞ்சே- மனமே. இருந்து உள்ளி- இங்கிருந்து நினைத்து. பரிதல்என் - வருந்துவது ஏன்? பைதல் நோய் செய்தார் கண்- இத்துன்ப நோயை உண்டாக்கியவரிடம். பரிந்து உள்ளல்- இரங்கி நம்மை நினைத்தல். இல்- இல்லை. (க-து) மனமே அவர் நம்மிடம் இரக்கம் கொண்டு நினைக்காதபோது, அவரை நினைத்து வருந்துவது ஏன்? 4. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே, இவைஎன்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. (ப-உ) நெஞ்சே- மனமே. கண்ணும்- நீ அவரைக் காணச் செல்லும்போது இக்கண்களையும். கொளச் சேறி- உன்னுடன் அழைத்துச் செல்வாயாக. இவை- இக்கண்கள். அவர்க்காணல் உற்று- அவரைக் காண வேண்டி. என்னைத் தின்னும்- என்னைப் பிடுங்கித் தின்னுகின்றன. (க-து) நெஞ்சே! இக்கண்கள் அவரைக் காண விரும்பி என்னைத் தொல்லைப்படுத்துகின்றன. ஆதலால், நீ அவரைக் காணச் செல்லும்போது இக்கண்களையும் அழைத்துச் செல். 5. செற்றார் எனக் கைவிடல்உண்டோ, நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். (ப-உ) நெஞ்சே- மனமே. யாம் உற்றால்- நாம் விரும்பினால். உறாஅதவர்- நம்மை விரும்பாத தலைவரை. செற்றார் என- நம்மை வெறுத்தார் என நினைத்து. கைவிடல் உண்டோ- கைவிடும் வழி நமக்கு உண்டோ? (க-து) நெஞ்சே! நாம் விரும்பியும் நம்மை விரும்பாத தலைவரை, நம்மை வெறுத்தார் என்று நினைத்துக் கைவிட முடியாது. 6. கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துஉணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. (ப-உ) என் நெஞ்சு- எனது மனமே. கலந்து- நம்முடன் கூடி. உணர்த்தும்- நமது பிணக்கை நீக்கும். காதலர்க்கண்டால்- காதலரைப் பார்த்தால். புலந்து உணராய்- பொய்யாகவாவது ஊடி நீங்கமாட்டாய். பொய்க்காய்வு- அவரைக் கொடியர் என்று பொய்க் கோபமாக. காய்தி- கோபிக்கின்றாய். (க-து) நெஞ்சே! காதலரைக் கண்டபோது பிணங்க மாட்டாய்; காணாதபோது ஏன் பொய்யாகப் பிணங்குகின்றாய்? 7. காமம் விடு ஒன்றோ. நாண்விடு, நல்நெஞ்சே! யானோ பொறேன்இவ் விரண்டு. (ப-உ) நல்நெஞ்சே- நல்ல மனமே. ஒன்றோ காமம் விடு- ஒன்று காமத்தை விட்டுவிடு. நாண்விடு- ஒன்று நாணத்தை விட்டுவிடு. யானோ- நானோ. இவ்விரண்டு- இவ்விரண்டையும். பொறேன்- பொறுக்கமாட்டேன். (க-து) மனமே! காமத்தை விட்டுவிடு அல்லது வெட்கத்தை விட்டுவிடு. இவ்விரண்டையும் என்னால் தாங்க முடியாது. 8. பரிந்தவர் நல்கார் என்றுஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. (ப-உ) என் நெஞ்சு- எனது மனமே. அவர் பரிந்து- அவர் விரைந்து வந்து. நல்கார் என்று- அன்பு செய்யவில்லை என்று. ஏங்கி- வருந்தி. பிரிந்தவர்பின்- பிரிந்து சென்றவர் பின்னே. செல்வாய்- போகின்றாய். பேதை- இது அறியாமையாகும். (க-து) மனமே! அவர் வந்து அன்பு செய்யாதிருந்தும், பிரிந்துபோனவர் பின் நீ போகின்றாய்; இது அறியாமை. 9. உள்ளத்தார் காத லவர்ஆக, உள்ளிநீ யார்உழைச் சேறி என்நெஞ்சு. (ப-உ) என் நெஞ்சு- என் மனமே. காதலவர்- காதலர். உள்ளத்தார் ஆக- உன் உள்ளத்திலிருக்கும் போது. உள்ளி- அவரைத் தேடிக்கொண்டு. நீ யார் உழை- நீ யாரிடம். சேறி- போகின்றாய்? (க-து) மனமே!. காதலர் உன் உள்ளத்திலிருக்கும்போது நீ அவரைத் தேடிக்கொண்டு யாரிடம் போகின்றாய்? 10. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். (ப-உ) துன்னா - கூடாமல். துறந்தாரை- பிரிந்து போனவரை. நெஞ்சத்து- மனத்தில். இன்னும் உடையேமா- இன்னும் வைத்திருக் திருக்கிறோம். ஆதலால், கவின்- அழகை. இழத்தும்- இழப்போம். (க-து) நம்மைப் பிரிந்தவரை இன்னும் நமது மனத்தில் வைத்திருக்கின்றோம்; ஆதலால் அழகை இழப்போம். 126. நிறை அழிதல் தலைவி தன் நெஞ்சில் நிறுத்த வேண்டியவைகளை நிறுத்த முடியாமல் வெளிவிடுதல். 1. காமக் கணிச்சி உடைக்கும், நிறைஎன்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. (ப-உ) நாணுத்தாழ் வீழ்த்த- நாணம் என்னும் தாழ்போட்ட. நிறைஎன்னும் கதவு- நிறையென்று சொல்லப்படும் கதவை. காமக் கணிச்சி- காமமாகிய கோடரி. உடைக்கும்- உடைத்துவிடுகின்றது. (க-து) மன உறுதி என்னும் கதவை காமம் என்னும் கோடரி உடைத்துவிடுகின்றது. 2. காமம்என ஒன்றோ கண்இன்று, என்நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். (ப-உ) காமம்என ஒன்றோ- காமம் என்று சொல்லப்படும் ஒன்று. கண்இன்று- இரக்கம் இல்லாமல். யாமத்தும் -பாதி இரவிலும். என் நெஞ்சத்தை- என் மனத்தை. ஆளும் தொழில்- அடக்கி ஆளும் தொழிலைச் செய்கின்றது. (க-து) காமத்திற்கு இரக்கம் இல்லை; அது பாதி இரவிலும் என் நெஞ்சத்தை அடக்கி ஆளுகின்றது. 3. மறைப்பேன்மன் காமத்தை யானோ; குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். (ப-உ) காமத்தை- இக்காமத்தை. யானோ- நானோ. மறைப்பேன்- வெளிப்படாமல் மறைக்க நினைப்பேன். குறிப்பு இன்றி- அது என் கருத்தின்படி நிற்காமல். தும்மல்போல்- தும்மலைப்போல. தோன்றிவிடும்- வெளிப்பட்டு விடுகின்றது. மன்: அசை. (க-து) காமத்தை வெளிப்படாமல் மறைக்க நினைக் கின்றேன்; ஆனால், அது எனக்கு அடங்காமல் தும்மல் போல் வெளிப்பட்டு விடுகின்றது. 4. நிறையுடையேன் என்பேன்மன் யானோ, என்காமம் மறையிறந்து மன்று படும். (ப-உ) யானோ- நானோ. நிறைஉடையேன்- காமத்தை மனத்தில் நிறுத்திக்கொள்ளும் தன்மை உடையேன். என்பேன்- என்று நினைத்திருப்பேன். என் காமம்- எனது காமமோ. மறையிறந்து- மறைந்திருக்காமல். மன்றுபடும்- பலரும் அறிய வெளிப்படுகின்றது. (க-து) நான் என்னை மன உறுதியுடையேன் என்று எண்ணியிருந்தேன்! ஆனால் எனது காமம் மறைந்திராமல் வெளிப்படுகின்றது. 5. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை; காமநோய் உற்றார் அறிவதுஒன்று அன்று. (ப-உ) செற்றார்பின்- தம்மைப் பிரிந்து போனவர்பின். செல்லா- போகாதிருக்கின்ற. பெருந்தகைமை- உறுதித் தன்மை. காமநோய் உற்றார்- காமநோயைப் பெற்றவரால். அறிவதுஒன்று அன்று- அறியப்படுவது ஒன்று அன்று. (க-து) நம்மைப் பிரிந்தவர்பின் தாம் செல்லாதிருக்கும் உறுதி காமநோய் பெற்றவர்களிடம் இல்லை. 6. செற்றவர் பின்சேறல் வேண்டி, அளித்துஅரோ எற்றுஎன்னை உற்ற துயர். (ப-உ) செற்றவர்பின்- என்னைப் பிரிந்து சென்றவர் பின்னே. சேறல்வேண்டி - யானும் செல்ல விரும்புதலால். என்னை உற்றதுயர்- என்னை அடைந்த இக்காமநோய். எற்று- எத்தன்மையுள்ளது? அளித்து- மிகவும் கொடிது. அரோ: அசை. (க-து) என்னைவிட்டுப் பிரிந்தவர்பின் யானும் செல்ல விரும்புவதால் இக்காமநோய் மிகவும் கொடியது. 7. நாண்என ஒன்றோ அறியலம்; காமத்தால் பேணியார் பெட்ப செயின். (ப-உ) பேணியார்- நம்மால் விரும்பப்பட்ட காதலர் வந்து. காமத்தால் - காதலுடன். பெட்ப- நாம் விரும்பியவைகளை. செயின்- செய்யும்போது. நாண் என ஒன்றோ- நாணம் என்று சொல்லப்பட்ட ஒன்றையும் அறியலம்- அறியமாட்டோம். (க-து) நம் காதலர் வந்து நாம் விரும்பியவைகளைச் செய்யும்போது நாணத்தையும் துறந்து விடுகின்றோம். 8. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. (ப-உ) நம் பெண்மை- நமது பெண் தன்மையாகிய நிறையை. உடைக்கும் படை- அழிக்கும் ஆயுதம். பல் மாயகள்வன்- பல பொய்களைப் பேசும் வஞ்சகனுடைய. பணிமொழி அன்றோ- பணிந்த சொற்கள் அல்லவோ! (க-து) நமது நிறையை அழிக்கும் படை, பொய் சொல்லும் அவ் வஞ்சகரின் பணிவான சொற்களே ஆகும். 9. புலப்பல்எனச் சென்றேன் புல்லினேன், நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. (ப-உ) புலப்பல் என- அவர் வந்தால் பிணங்குவேன் என்று எண்ணி. சென்றேன்- வேறு இடத்தில் போயிருந்தேன். நெஞ்சம் - அவர் வந்தவுடன் எனது மனம். கலத்தல் உறுவது- அவரோடு ஒன்றுபடுவதை. கண்டு- அறிந்து. புல்லினேன்- அவரைத் தழுவிக் கொண்டேன். (க-து) அவர் வந்தவுடன் ஊடுவேன் என்றிருந்த நான், அவரைக் கண்டவுடன் என் மனம் ஒன்றுபடுவதை அறிந்தேன்; அவரைத் தழுவிக்கொண்டேன். 10. நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு, உண்டோ புணர்ந்துஊடி நிற்பேம் எனல். (ப-உ) நிணம்- கொழுப்பை. தீயில் இட்டு அன்ன- நெருப்பில் இட்டதுபோன்ற. நெஞ்சினார்க்கு- உருகும் உள்ளமுடைய மகளிர்க்கு. ஊடி - பிணங்கி. புணர்ந்து- பின்பு கூடி. நிற்பேம் எனல்- நிற்போம் என்று நினைத்தல். உண்டோ- உண்டாகுமோ? (க-து) எளிதில் இளகும் உள்ளம் படைத்த மகளிர்க்கு, ஊடியபின் கூடுவோம் என்று உறுதியாக நிற்கும் நிலை உண்டா வதில்லை. 127. அவர் வயின் விதும்பல் தலைவி, தன்னைப் பிரிந்த தலைவரைக் காணவிரைவது. 1. வாள்அற்றுப் புற்கென்ற கண்ணும்; அவர்சென்ற நாள்ஒற்றித் தேய்ந்த விரல். (ப-உ) கண்ணும்- கண்களும். வாள் அற்று- ஒளியிழந்து. புற்கு என்ற- மெலிந்துபோயின. விரல்- விரல்கள். அவர் சென்ற நாள்- அவர் சென்ற நாள்களை. ஒற்றி- தொட்டு எண்ணுவதால். தேய்ந்த - தேய்ந்து போயின. (க-து) அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியிழந்தன; அவர் சென்ற நாள்களைத் தொட்டு எண்ணுவதனால் என் விரல்கள் தேய்ந்தன. 2. இலங்கிழாய்! இன்று மறப்பின்என் தோள்மேல் கலம்கழியும் காரிகை நீத்து. (ப-உ) இலங்கிழாய்- விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்தவளே. இன்று மறப்பின்- இந்நாளில் தலைவரை மறப் பேனாயின். என் தோள்மேல் கலம் - எனது தோள் வளையல்கள். காரிகைநீத்து- என்னைவிட்டு நீங்கும்படி. கழியும்- கழலும். (க-து) நான் என் காதலரை மறப்பேனாயின், என் அழகு நீங்க என் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து போவேன். 3. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். (ப-உ) உரன்நசைஇ- வெற்றியை விரும்பி. உள்ளம்- தமது ஊக்கத்தையே. துணையாகச் சென்றார்- துணையாகக் கொண்டு சென்றவர். வரல்நசைஇ- வருவதை விரும்பி. இன்னும் உளேன்- இன்னும் உயிரோடிருக்கின்றேன். (க-து) இன்பத்தை விரும்பாமல் வெற்றியை விரும்பிச் சென்ற என் காதலர் வருவதை விரும்பி, இன்னும் உயிரோடு இருக்கின்றேன். 4. கூடிய காமம் பிரிந்தார் வரவுஉள்ளிக் கோடுகொடு ஏறும்என் நெஞ்சு. (ப-உ) பிரிந்தார்- என்னைப் பிரிந்துபோன தலைவர். கூடிய காமம்- மிகுந்த காமத்துடனே. வரவு உள்ளி- நம்மிடம் வருவதை நினைத்து. என்நெஞ்சு- என் மனம் வருத்தம் நீங்கி. கோடுகொடு ஏறும்- கிளைகொண்டு வளர்கின்றது. (க-து) பிரிந்து சென்ற தலைவர் மிகுந்த அன்புடன் வருவதை எண்ணி என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றது. 5. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக், கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு? (ப-உ) கொண்கனை- என் கணவனை. கண்ணார - நான் கண்ணாரக் காண்பேனாக. கண்டபின்- பார்த்தபின். என் மென்தோள்- எனது மெல்லிய தோள்களின். பசப்பு நீங்கும் - பசலைநிறம் நீங்கும். மன்: அசை. (க-து) என் கணவனை நான் கண்ணாரக் கண்டபின் என் பசப்புநிறம் நீங்கும். 6. வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. (ப-உ) கொண்கன்- பிரிந்த எனது கணவன். ஒரு நாள் வருக- ஒருநாள் என்னிடம் வருவானாக. பைதல் நோய் எல்லாம்- வந்தால் துன்பம் செய்யும் இந்நோய் முழுவதும். கெட- அழியும் படி. பருகுவன்- இன்பம் நுகர்வேன். மன்:அசை. (க-து) பிரிந்த என் காதலன் ஒருநாள் வந்தால், என் துன்பமெல்லாம் ஒழியும்படி அவனிடம் இன்பம் நுகர்வேன். 7. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ, கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் வரின். (ப-உ) கண்அன்ன கேளிர்- கண்போல் சிறந்த நண்பர். வரின்- வருவாராயின். புலப்பேன் கொல்- பிணங்குவேனோ. புல்லுவேன்கொல்- தழுவிக்கொள்ளுவேனோ. கலப்பேன்கொல் - இவ்விரண்டையும் கலந்து செய்வேனோ; என் செய்வேன்? ஓ: அசை. (க-து) என் கணவர் வந்தால் அவர் பிரிந்து சென்றதற்காக ஊடுவேனோ? தழுவிக்கொள்ளுவேனோ? இவ்விரண்டையும் செய்வேனோ? என்னதான் செய்வேன்? *8. வினைகலந்து வென்றுஈக வேந்தன், மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. (ப-உ) வேந்தன்- எமதுமன்னன். வினைகலந்து- போர் செய்து. வென்றுஈக - வெற்றி பெறுவானாக. மனைகலந்து- யாமும் மனைவியுடன் கூடி. மாலை - மாலைப்பொழுதுக்கு. விருந்து அயர்கம்- விருந்து செய்வோம். (க-து) அரசன் போரில் வெற்றிபெறுக; நாம் மனைவி யுடன் கூடி மாலைப்பொழுதுக்கு விருந்து செய்வோம். 9. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்; சேண்சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. (ப-உ) சேண்சென்றார்- தூரதேசத்துக்குச் சென்ற காதலர். வரும்நாள் வைத்து- திரும்பிவரும் நாளை மனத்தில் வைத்து. ஏங்குபவர்க்கு - வருந்தும் மகளிர்க்கு. ஒரு நாள்- ஒருநாளானது. ஏழுநாள் போல- ஏழு நாட்களைப் போல. செல்லும்- கழியும். (க-து) தூரதேசத்துக்குச் சென்ற காதலர் வரும் நாளை நினைத்து வருந்தும் மகளிர்க்கு, ஒருநாள் ஏழுநாட்களைப்போல நீண்டு கழியும். 10. பெரின்என்னாம், பெற்றக்கால் என்னாம், உறின்என்னாம், உள்ளம் உடைந்துஉக்கக் கால். (ப-உ) உள்ளம் உடைந்து- காதலி தனது மனம் உடைந்து. உக்கக் கால்- அழிந்து போனால், அதன்பின். பெறின் என்னாம்- நம்மைப் பெறுவதால்தான் என்ன. பெற்றக்கால் என்னாம்- பெற்றால்தான் என்ன. உறின் என்னாம்- பெற்றுத் தழுவினாலும் என்ன பயன்? (க-து) நம் காதலி மனமுடைந்து மாண்ட பிறகு அவளைக் காண்பதிலோ, அடைவதிலோ, தழுவுவதிலோ ஒரு பயனும் இல்லை. 128. குறிப்பு அறிவுறுத்தல் தம் எண்ணத்தை வெளியிடுதல். 1. கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண், உரைக்கல் உறுவதுஒன்று உண்டு. (ப-உ) கரப்பினும்- சொல்லாமல் மறைத்தாலும். ஒல்லா- அதற்குச் சம்மதிக்காமல். கையிகந்து- உன் கையைக் கடந்து. நின்உண்கண்- உனது மைபூசிய கண்கள். உரைக்கல் உறுவது- சொல்லக்கூடியதாகிய. ஒன்று உண்டு- ஒரு காரியம் உண்டு. (க-து) நீ மறைத்தாலும், உன் கண்கள் எனக்குச் சொல்லும் காரியம் ஒன்று உண்டு. 2. கண்நிறைந்த காரிகைக் காம்புஏர்தோள் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. (ப-உ) கண்நிறைந்த காரிகை- கண்ணிறைந்த அழகையும். காம்புஏர்தோள்- மூங்கில்போன்ற அழகிய தோளையும் உடைய. பேதைக்கு- இம்மாதினிடம். பெண் நிறைந்த நீர்மை- பெண் களிடம் நிறைந்த அறியாமை. பெரிது- மிகுதியாக இருக்கின்றது. (க-து) அழகுள்ள என் காதலியிடம் அறியாமை மிகுந்திருக்கின்றது. 3. மணியில் திகழ்தரு நூல்போல், மடந்தை அணியில் திகழ்வதுஒன்று உண்டு. (ப-உ) மணியில் - கோக்கப்பட்ட மணிக்குள். திகழ்தரு- காணப்படுகின்ற. நூல்போல்- நூலைப்போல. மடந்தை அணியில் - இப்பெண்ணின் அழகுக்குள்ளிருந்து. திகழ்வது- வெளியில் காணப்படுவதாகிய. ஒன்றுஉண்டு- ஒரு குறிப்பு உண்டு. (க-து) மணிக்குள் காணப்படும் நூலைப்போல, இம்மாதின் அழகில் காணப்படும் கருத்து ஒன்று உண்டு. 4. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல், பேதை நகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு. (ப-உ) முகைமொக்குள்- அரும்பு முதிர்ந்த மொட்டினுள் உள்ளது- உள்ளதாகிய. நாற்றம் போல்- வாசனையைப்போல. பேதை- இம்மாதின். நகைமொக்குள்- புன்னகையுள். உள்ளது- உள்ளதாகிய. ஒன்று உண்டு- ஒரு குறிப்பு உண்டு. (க-து) மொட்டினுள் மணம் அமைந்திருப்பது போல, இம்மாதின் புன்னகையுள் ஒரு கருத்து அடங்கியிருக்கின்றது. 5. செறிதொடி செய்துஇறந்த கள்ளம், உறுதுயர் தீர்க்கும் மருந்துஒன்று உடைத்து. (ப-உ) செறிதொடி- நிறைந்த வளையலை அணிந்த காதலி. செய்துஇறந்த-செய்துவிட்டுப் போன. கள்ளம்- கள்ளத்தனமான குறிப்பிலே. உறுதுயர்- எனது மிகுந்த துன்பத்தை. தீர்க்கும்- நீக்கும். மருந்து ஒன்று உடைத்து- மருந்து ஒன்று இருக்கின்றது. (க-து) என் காதலி மறைவாகச் செய்துவிட்டுப் போன குறிப்பிலே என் துன்பத்தைத் துடைக்கும் மருந்து ஒன்று இருக்கின்றது. *6. பெரிதுஆற்றிப் பெட்பக் கலத்தல். அரிதுஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து. (ப-உ) பெரிது ஆற்றி- மிகவும் அன்புசெய்து. பெட்பக் கலத்தல்- நாம் விரும்பும்படி கூடுதல். அரிது ஆற்றி- அரிதாகிய பிரிவைச் செய்து. அன்பின்மை- பின் அன்பில்லாமல் கைவிடு வதற்கு. சூழ்வதுஉடைத்து- நினைப்பதை உடையதாகும். (க-து) இப்பொழுது என்னிடம் காட்டும் அன்பு, பின்னால் என்னைவிட்டுப் பிரிவதற்கு எண்ணிச் செய்வதாகும். 7. தண்ணந் துறைவன் தணந்தமை, நம்மினும் முன்னம் உணர்ந்த வனை. (ப-உ) தண்அம் துறைவன்- குளிர்ந்த அழகிய நீர்த்துறை யையுடைய தலைவன். தணந்தமை- உள்ளத்தால் நம்மைவிட்டுப் பிரிந்ததை. நம்மினும்- நம்மைவிட. வளை- இவ்வளையல்கள். முன்னம் உணர்ந்த- முன்னமே அறிந்து கொண்டன. (க-து) தலைவன் பிரியப்போகின்றான் என்பதை, நம்மை விட நமது வளையல்கள் முன்பே அறிந்து கொண்டன. 8. நெருநற்றுச் சென்றார்எம் காதலர், யாமும் எழுநாளேம் மேனி பசந்து. (ப-உ) எம் காதலர்- எமது காதலர். நெருநற்று- நேற்றுத்தான். சென்றார் - பிரிந்து போனார். யாமும் - நாமும். மேனிபசந்து- அப்பிரிவால் உடல் நிறம் வேறுபட்டு. எழுநாளேம் - ஏழு நாட்களை உடையவர் ஆனோம். (க-து) என் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போனார். ஆயினும், எனது உடம்பின் நிறம் மாறி ஏழு நாட்கள் ஆயின. 9. தொடிநோக்கி மென்றோளும் நோக்கி, அடிநோக்கி அஃதுஆண்டு அவள்செய் தது. (ப-உ) தொடிநோக்கி- வளையல்களைப் பார்த்து. மெல் தோளும் நோக்கி- மெல்லிய தோள்களையும் பார்த்து. அடிநோக்கி- தன் அடிகளையும் பார்த்து. ஆண்டு- அங்கே. அவள் செய்தது- அவள் செய்த குறிப்பு. அஃது - என்னுடன் வருவதற்குக் காட்டிய அக்குறிப்பாகும். (க-து) என்னுடன் வருவதற்குச் சம்மதம் தெரிவிக்கவே என் காதலி வளையலையும், தோளையும், அடியையும் நோக்கினாள். 10. பெண்ணினால் பெண்மை உடைத்துஎன்ப, கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. (ப-உ) காமநோய்- மகளிர் தமது காமநோயை. கண்ணினால் சொல்லி- கண்ணால் கூறி. இரவு- தம்மை விட்டுப் பிரியாமலிருக்கும்படி வேண்டுதல். பெண்ணினால்- பெண் தன்மையால் சிறந்து. பெண்மைஉடைத்து - மேலும் பெண் தன்மையையுடைது. என்ப- என்று கூறுவர். (க-து) மகளிர் தமது காமநோயைக் கண்ணாற் கூறித் தம்மைப் பிரியாதிருக்கும்படி இரத்தல் சிறந்த பெண் தன்மை யாகும். 129. புணர்ச்சி விதும்பல் தலைவனும் தலைவியும் ஒன்றுகூட விரைதல். 1. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும், கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு. (ப-உ) உள்ளக் களித்தலும்- நினைத்தவுடன் களிப்படை வதும். காண மகிழ்தலும்- கண்டவுடன் மகிழ்ச்சி யடைதலும். கள்ளுக்குஇல்- கள்ளுண்போர்க்கு இல்லை. காமத்திற்கு - காமம் உடையோர்க்கு. உண்டு- இத்தன்மை உண்டு. (க-து) நினைத்தால் களித்தலும், கண்டால் மகிழ்தலும் கள்ளுண்பவர்க்கு இல்லை; காமம் உள்ளவர்க்கு உண்டு. 2. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்; பனைத்துணை காமம் நிறைய வரின். (ப-உ) காமம்- காமமானது. பனைத்துணையும்- பனை அளவிலும். நிறையவரின்- மிகுதியாக உண்டானாலும். தினைத் துணையும்- தினை அளவும். ஊடாமை- தலைவரோடு பிணங்கா மலிருப்பதே. வேண்டும்- தலைவரால் விரும்பப்படுவதாகும். (க-து) மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிகுந்தாலும், தம் காதலருடன் தினையளவும் ஊடாமலிருக்க வேண்டும். 3. பேணாது பெட்பவே செய்யினும்; கொண்கனைக் காணாது அமையல கண். (ப-உ) பேணாது- நம்மை அவமதித்து. பெட்பவே- தான் விரும்பியவைகளையே. செய்யினும்- செய்வாராயினும். கொண் கனை- கணவனை. கண்- என் கண்கள். காணாது- பார்க்காமல். அமையல- பொறுத்திருக்கவில்லை. (க-து) காதலர், நம்மை ஆதரிக்காமல் தாம் விரும்பி யவைகளையே செய்வாராயினும், அவரைக் காணவே என் கண்கள் விரும்புகின்றன. 4. ஊடற்கண் சென்றேன்மன் தோழி, அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. (ப-உ) தோழி- தோழியே. ஊடல்கண் சென்றேன்- நான் என் காதலருடன் பிணங்குவதற்காகச் சென்றேன். என்நெஞ்சு- என் மனம். அதுமறந்து- அதை மறந்து. கூடல்கண் சென்றது- அவரைக் கூடுவதற்குச் சென்றது. மன்: அசை. (க-து) அவர் குற்றத்தை எண்ணி அவருடன் ஊடுவதற் காகச் சென்றேன்; என் மனமோ அவரைக் கூடுவதற்காகச் சென்றது. 5. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல், கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. (ப-உ) எழுதும்கால்- மைதீட்டும்போது. கோல் காணா- அந்த அஞ்சனக் கோலை அறியாத. கண்ணேபோல்- கண்களைப் போல. கொண்கன்பழி- கணவன் செய்த குற்றத்தை. கண்ட இடத்து - அவரைக் கண்ட போது. காணேன்- காணாமல் மறந்து விடுகின்றேன். (க-து) முன்பு பார்த்திருந்தும், மையெழுதும்போது அக்கோலின் இயல்பைக் காணாத கண்களைப்போல, கணவனைக் காணும்போது அவன் குற்றத்தை மறந்து விடுகின்றேன். 6. காணும்கால் காணேன் தவறாய; காணாக்கால் காணேன் தவறுஅல் லவை. (ப-உ) காணும்கால்- நான் என் கணவனைக் காணும்போது. தவறுஆய- அவன் குற்றங்களை. காணேன்- காணமாட்டேன். காணாக்கால்- அவரைக் காணாத பொழுது. தவறு அல்லவை- நல்லவைகளை. காணேன்- அவரிடம் காணமாட்டேன். (க-து) நான் கணவரைக் காணும்போது அவரிடம் குற்றம் காண்பதில்லை; அவரைக் காணாதபொழுது குற்றந்தவிர வேறொன்றையும் அவரிடம் காண்பதில்லை. 7. உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்துஎன் புலந்து. (ப-உ) உய்த்தல்- தம்மையிழுத்துச் செல்லும் என்பதை அறிந்தும். புனல்பாய்பவரேபோல்- ஓடும் நீரில் பாய்கின்றவரைப் போல. பொய்த்தல் அறிந்து- பொய்யாகத்தான் முடியும் என்பதை அறிந்தும். புலந்துஎன்- காதலருடன் பிணங்குவதால் என்ன பயன்? (க-து) தம்மை இழுத்துச் செல்லும் என்பதை அறிந்தும் வெள்ளத்தில் பாய்வாரைப்போல், நமது ஊடல் நிலைக்காது என்பதை அறிந்தும் ஊடுவதனால் ஒரு பயனும் இல்லை. 8. இளித்தக்க இன்னா செயினும், களித்தார்க்குக் கள்அற்றே கள்வனின் மார்பு. (ப-உ) கள்வ- கள்வனே. நின்மார்பு- உனது மார்பு. இளித்தக்க- வெறுக்கத்தக்க. இன்னாசெயினும்- துன்பத்தைச் செய்தாலும். களித்தார்க்கு- கள்ளுண்டு களித்தவர்க்கு. கள் அற்றே- மேலும் குடிக்க விரும்பும் கள்ளைப்போன்றதாகும். (க-து) இகழத்தக்க தீமைகளைச் செய்தாலும், குடியர், மேலும் மேலும் குடிக்க விரும்பும் கள்ளைப்போல உன் மார்பு எம்மால் விரும்பப்படுகின்றது. 9. மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். (ப-உ) காமம்- காமமானது. மலரினும் மெல்லிது- பூவினும் மென்மையானது. அதன் செவ்வி- அதன் பக்குவத்தை அறிந்து. தலைப்படுவோர்- அதைப் பெறுவோர். சிலர்- உலகத்தில் சிலர்தாம். (க-து) காமம் பூவைவிட மென்மையானது; அதன் இயல்பை அறிந்து அனுபவிப்பவர் உலகில் ஒரு சிலர்தாம். 10. கண்ணில் துனித்தே கலங்கினால், புல்லுதல் என்னினும் தான்விதுப்பு உற்று. (ப-உ) கண்ணில் துனித்தே- என் காதலி கண்ணால் மட்டும் வணங்கி. புல்லுதல்- தழுவிக் கொள்வதற்கு. என்னினும்- என்னைவிட. தான் விதுப்பு உற்று- தான் விரைந்து. கலங்கினாள்- ஊடலை மறந்தாள்; என்னைத் தழுவினாள். (க-து) என் காதலி கண்ணில் மட்டுந்தான் ஊடுதல் குறிப்பைக் காட்டினாள்; என்னைக் கண்டவுடன் என்னை விட விரைந்து தழுவிக்கொண்டாள். 130. நெஞ்சொடு புலத்தல் நெஞ்சத்துடன் பிணங்குதல். 1. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும், எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. (ப-உ) நெஞ்சே- மனமே. அவர் நெஞ்சு- அவருடைய மனம். அவர்க்கு ஆதல்- நம்மை நினையாமல் அவர்க்குத் துணையாய் நிற்பதை. கண்டும்- அறிந்தும். நீ எமக்கு ஆகாதது- நீ எமக்குத் துணையாய் நிற்காதது. எவன் - ஏன்? (க-து) நெஞ்சே, அவருடைய மனம் நம்மை நினைக்காத போது, நீ மட்டும் அவரை மறவாதது ஏன்? 2. உறாஅ தவர்க்கண்ட கண்ணும், அவரைச் செறாஅர்எனச் சேறிஎன் நெஞ்சு. (ப-உ) என்நெஞ்சு- எனது மனமே. உறாஅதவர்- நம்மிடம் அன்பில்லாத தலைவரை. கண்டகண்ணும்- உண்மை அறிந்த போதும். செறாஅர்என- வெறுக்க மாட்டார் என்று எண்ணி. அவரை சேறி- அவரை அடைகின்றாய். (க-து) மனமே, காதலர் நம்மிடம் அன்பில்லாதவர் என்று அறிந்தும், அவர் வெறுக்க மாட்டார் என்று நினைத்து அவரிடம் செல்கின்றாய். 3. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ, நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். (ப-உ) நெஞ்சே நீ - மனமே நீ என்னிடம் நில்லாமல். பெட்டாங்கு- விரும்பியபடி. அவர்பின் செலல்- அவரிடம் போவதற்குக் காரணம். கெட்டார்க்கு- கெட்டுப் போனவர்க்கு. நட்டார்இல்- நட்பினர் இல்லை. என்பதோ - என்ற நினைவோ? (க-து) மனமே, நீ நம்மைப் பிரிந்த காதலரிடம் செல் வதற்குக் காரணம், கெட்டுப் போனவர்க்கு உலகில் நண்பர் இல்லை என்ற நினைவினாலோ? அல்லது இயற்கையாகவோ? சொல்லுக. 4. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்; நெஞ்சே, துனிசெய்து துவ்வாய்காண் மற்று. (ப-உ) நெஞ்சே- மனமே. துனிசெய்து- நீ அவரிடம் ஊடல் செய்து. மற்றுத் துவ்வாய்காண்- பின் இன்பம் துய்க்கமாட்டாய். இனி அன்ன- ஆதலால் இனி அப்படிப்பட்டவைகளை. நின்னொடு - உன்னுடன். சூழ்வார் யார்- கலந்து ஆலோசிப்பவர் ஆர்? (க-து) நெஞ்சே! நீ அவரைக் கண்டவுடன் கூடுகின்றாய்; ஊடல் செய்து கூடமாட்டாய். ஆதலால் இது பற்றி இனி உன்னோடு ஆலோசிப்பவர் இல்லை. 5. பெறாஅமை அஞ்சும்; பெறின்பிரிவு அஞ்சும்; அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு. (ப-உ) பெறாமை அஞ்சும்- காதலரைக் காணப் பெறாமைக்கு அஞ்சும். பெறின்- காணப்பெற்றால். பிரிவு அஞ்சும்- மீண்டும் பிரிவார் என்று எண்ணி அஞ்சும். என் நெஞ்சு- என் மனம். அறா இடும்பைத்து- நீங்காத துன்பத்தையுடையது. (க-து) காதலரைக் காணாவிடினும் என் நெஞ்சு அஞ்சும்; அவரைக் கண்டாலும் மீண்டும் பிரிவாரே என்று நினைத்து அஞ்சும். ஆதலால் என்றும் நீங்காத துக்கத்தையுடையது எனது மனம். 6. தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததுஎன் நெஞ்சு. (ப-உ) தனியே இருந்து- தனித்திருந்து. நினைத்தக்கால்- காதலர் தவற்றை நினைக்கும்போது. என் நெஞ்சு- எனது மனம். என்னைத் தினிய- என்னைத் தின்னுவதுபோன்று. இருந்தது- துன்பம் செய்து கொண்டு இருந்தது. (க-து) தனித்திருந்து காதலர் பிரிவை நினைக்கும்போது, என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்கின்றது. 7. நாணும் மறந்தேன், அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சில் பட்டு. (ப-உ) அவர் மறக்கல்லா- அவரை மறக்க முடியாத. மாணா- பெருமையற்ற. என் மடநெஞ்சில் பட்டு- எனது அறிவற்ற மனத்தோடு சேர்ந்து. நாணும்- உயிரினும் சிறந்த நாணத்தையும். மறந்தேன்- மறந்துவிட்டேன். (க-து) தன்னை மறந்தவரைத் தான் மறக்காத எனது அறிவற்ற மனத்துடன் சேர்ந்து, சிறந்த நாணத்தையும் கைவிட்டேன். 8. எள்ளின் இளிவாம்என்று எண்ணி, அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. (ப-உ) உயிர்க்காதல் நெஞ்சு- உயிரின்மேல் காதல் உள்ள என் மனம். எள்ளின்- நம்மைப் பிரிந்தவரை நாம் இகழ்ந்தால். இளிவு ஆம்- அது நமக்கே இழிவாகும். என்று எண்ணி- என்று நினைத்து. அவர் திறம்- அவர் தன்மையையே. உள்ளும் -நினைக்கின்றது. (க-து) என் மனம், நம்மை இகழ்ந்த காதலரை நாமும் இகழ்வது நமக்கே அவமானம் என்று கருதி, அவரது நல்ல தன்மையையே நினைக்கின்றது. 9. துன்பத்திற்கு யாரே துணையாவார், தாம்உடைய நெஞ்சம் துணைஅல் வழி. (ப-உ) துன்பத்திற்கு- துன்பம் வந்தபோது அதை நீக்குவதற்கு. தாம் உடைய- தம்முடைய. நெஞ்சம்- உள்ளம். துணை அல் வழி- துணை செய்யாதபோது. யாரே துணை ஆவார்- வேறு யார்தான் துணைசெய்வார்? (க-து) துன்பத்தை நீக்குவதற்குரிய தமது மனம், துன்பத்தை நீக்கத் துணை செய்யாவிட்டால் வேறு யார்தான் துணை செய்வார்? 10. தஞ்சம், தமர்அல்லர் ஏதிலார், தாம்உடைய நெஞ்சம் தமர்அல் வழி. (ப-உ) தாம் உடைய- தம்முடைய. நெஞ்சம்- மனம். தமர் அல்வழி- ஒருவர்க்கு உறவாகாதபோது. ஏதிலார்- அயலார். தமர் அல்லர்- உறவுகொள்ளாதிருத்தல். தஞ்சம் - எளிதாகும். (க-து) ஒருவர்க்குத் தமது மனம் துணை செய்யாதபோது, அயலார் துணை செய்யாதிருத்தலும் இயல்பாகும். 131. புலவி* காதலர்களின் பிணக்கம். 1. புல்லாது இராஅப் புலத்தை, அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. (ப-உ) அவர் உறும்- அக்காதலர் அடையும். அல்லல்நோய்- துன்பநோயை. சிறிது காண்கம்- சிறிதுகாண்போம். புல்லாது- ஆதலால் அவரைத் தழுவிக்கொள்ளாமல். இரா- இருந்து. புலத்தை- பிணங்குவாயாக. (க-து) மனமே! நீ அவரைத் தழுவிக்கொள்ளாமல் பிணங்கியிரு. அவர் காதல்நோயைக் கொஞ்சம் காணுவோம். 2. உப்புஅமைந்து அற்றால் புலவி; அது சிறிது மிக்கு அற்றால் நீளவிடல். (ப-உ) புலவி- பிணக்கு. உப்பு அமைந்து அற்று ஆல்- உணவில் வேண்டுமளவு உப்புக் கலந்ததுபோல் ஆகும். நீளவிடல்- அதனை வளரவிடுதல். அது சிறிது- அந்த உப்பு கொஞ்சம். மிக்குஅற்று ஆல்- அதிகப்பட்டதுபோல் ஆகிவிடும். ஆல்: அசைகள். (க-து) உணவுக்கு உப்புப்போல் காமத்துக்கு ஊடல் இன்பமாகும்; அவ்வூடல் வளர்வது, உணவில் உப்பு அதிக மானாற்போல் ஆகிவிடும். 3. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால், தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். (ப-உ) தம்மைப் புலந்தாரை- தம்முடன் ஊடிய மகளிரை. புல்லாவிடல்- அவர் ஊடலை நீக்கித் தழுவிக் கொள்ளாமலிருத்தல். அலந்தாரை- மிகுந்த துன்பத்தைர. அல்லல்நோய் - மேலும் துன்பம். செய்து அற்று ஆல்- செய்ததுபோலாகும். ஆல்: அசை. (க-து) தம்முடன் ஊடிய மகளிரை ஊடல் நீக்கித் தழுவிக் கொள்ளாதிருத்தல், துன்புற்றவர்க்கு மேலும் துன்பம். அவ் வருத்தம் நெடுநேரம் நிற்காது; விரைவில் மறையும். 4. ஊடி யவரை உணராமை, வாடிய வள்ளி முதல்அரிந்து அற்று. (ப-உ) ஊடியவரை- பிணங்கிய மகளிரை. உணராமை- அவர் ஊடலைத் தீர்த்துக் கூடாமல் இருப்பது. வாடிய- முன்பே நீர் இல்லாமல் வாடிய. வள்ளி- கொடியை. முதல் அரிந்து அற்று- அடியிலே அறுத்தது போல் ஆகும். (க-து) ஊடிய மகளிரின் ஊடலை நீக்கித் தழுவாம லிருத்தல், வாடிய கொடியை வேரில் அறுப்பது போன்றதாகும். 5. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர், புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. (ப-உ) நலத்தகை- நற்குணங்களால் சிறந்த. நல்லவர்க்கு- தலைவர்க்கு. ஏஎர்- அழகாவது. பூஅன்ன கண்ணார்- மலர்போன்ற கண்களையுடைய மகளிரின். அகத்து- நெஞ்சில் உண்டாகும். புலத்தகை- ஊடலின் மிகுதியேயாகும். (க-து) நற்குணங்களையுடைய தலைவர்க்கு அழகு, மகளிரின் மனத்தில் உண்டாகும் ஊடல் மிகுதியேயாகும். 6. துனியும் புலவியும் இல்லாயின், காமம் கனியும் கருக்காயும் அற்று. (ப-உ) துனியும்- பெரிய பிணக்கும். புலவியும்- சிறிய ஊடலும் - இல்ஆயின்- இல்லையானால். காமம்- காமமானது. கனியும் அளிந்த கனியையும். கருக்காயும் - இளம் காயையும். அற்று- போன்றது ஆகும். (க-து) பிணக்கும் ஊடலும் இல்லாத காமம், அளிந்த கனியையும் இளம் காயையும் போன்றதாகும். 7. ஊடலின் உண்டுஆங்கு ஓர்துன்பம், புணர்வது நீடுவது அன்றுகொல் என்று. (ப-உ) புணர்வது- கூடியிருப்பது. நீடுவது- நீட்டித் திருக்குமோ. அன்றுகொல்- இல்லையோ. என்று - என்று நினைத்தால். ஊடலின்- பிணக்கிலும். ஆங்கு ஓர் துன்பம் உண்டு- அப்பொழுது ஒரு துன்பம் உண்டு. (க-து) இக்கூடல் நீட்டித்திருக்குமோ இருக்காதோ என்று நினைத்தால், ஊடலிலும் துன்பம் உண்டு. 8. நோதல் எவன்மற்று நொந்தார்என்று, அஃதுஅறியும் காதலர் இல்லா வழி. (ப-உ) நொந்தார் என்று - இவர் நமக்காக வருந்தினார் என்று. அஃது அறியும்- அத்துன்பத்தை அறிகின்ற. காதலர்- அன்புடையவரை. இல்லாவழி- பெறாதபோது. நோதல்- ஒருவர் வருந்துவதால். மற்று எவன்- என்ன பயன்? (க-து) நம் வருத்தம் கண்டு அனுதாபப்படுகின்றவர் இல்லாதபோது வருந்துவதால் ஒரு பயனும் இல்லை. 9. நீரும் நிழலது இனிதே; புலவியும் வீழுநர் கண்ணே இனிது. (ப-உ) நீரும்- தண்ணீரும். நிழலது- நிழலில் வைக்கப் பட்டிருக்குமானால். இனிதே- இனிதாகும். புலவியும்- பிணக்கும். வீழுநர் கண்ணே- அன்புள்ளவரிடத்திலே. இனிது- இனிதாகும். (க-து) நிழலில் உள்ள நீரே இனிமையைத் தரும். அது போல், அன்புள்ளவரிடம் பிணங்குவதே இன்பம் தரும். 10. ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. (ப-உ) ஊடல் உணங்க- ஊடலிலே வருந்தும்படி. விடுவாரோடு- விட்டுவைத்திருப்பவருடன். என் நெஞ்சம்- எனது மனம். கூடுவேம் என்பது- கூடுவோம் என்று முயல்வதற்குக் காரணம். அவா- ஆசையே யாகும். (க-து) நாம் ஊடலால் வருந்தும்படி விட்டிருப்பாரை என் மனம் கூட முயற்சிப்பதற்குக் காரணம் ஆசைதான். 132. புலவி நுணுக்கம் காதலனும் காதலியும் கூடியிருக்கும்போது, காரண மில்லாமலே காதலியிடம் தோன்றும் ஊடல். 1. பெண்இயலார் எல்லோரும் கண்ணின்பொது உண்பர்; நண்ணேன் பரத்தநின் மார்பு. (ப-உ) பரத்த- பரத்தையரிடம் போகின்றவனே. பெண் இயலார் எல்லாரும் - பெண் தன்மையுள்ளவர் எல்லாரும். கண்ணின்- தம் கண்களால். பொது உண்பர்- பொதுவாக அனுபவிப்பர். ஆதலால்; நின் மார்வு- உனது மார்பை. நண்ணேன் - பொருந்தமாட்டேன். (க-து) பரத்தனே! உன் மார்பைப் பெண்கள் அனைவரும் கண்ணால் கண்டு அனுபவிப்பர். ஆதலால் அந்த மார்பைத் தழுவிக்கொள்ள மாட்டேன். 2. ஊடி இருந்தேமாத் தும்மினார், யாம்தம்மை நீடுவாழ் கென்பார்க்கு அறிந்து. (ப-உ) ஊடி- யாம் அவரோடு பிணங்கி. இருந்தேம்ஆ - பேசாமல் இருந்தோம். யாம் தம்மை- நாம் அவரை. நீடு வாழ்கென்பாக்கு - நீடு வாழ்க என்று சொல்லுவோம் என. அறிந்து- நினைத்து. தும்மினார்- தும்மினார். (க-து) நாம் காதலரோடு பேசாமல் ஊடியிருந்த போது அவர் நாம், நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் என்று எண்ணித் தும்மினார். 3. கோட்டுப்பூச் சூடினும் காயும், ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. (ப-உ) கோட்டுப்பூ- வளைந்த பூமாலையை. சூடினும்- யான் தரித்தாலும். ஒருத்தியை- நீர் விரும்பும் ஒருத்திக்கு. காட்டிய- காட்டும்பொருட்டு. சூடினீர் - இம்மாலையைச் சூடினீர். என்று- என்று சொல்லி. காயும்- கோபிப்பாள். (க-து) நான் மலர்மாலையை அணிந்தாலும், வேறு ஒருத்திக்குக் காட்ட இதைச் சூடினீர் என்று என்மீது கோபங் கொள்வாள் என் காதலி. 4. யாரினும் காதலம் என்றேனா, ஊடினாள் யாரினும் யாரினும் என்று. (ப-உ) யாரினும் காதலம்- நாம் யாரையும்விட மிகுந்த காதலுடையோம். என்றேன்ஆ - என்று கூறினேன் ஆக; உடனே. யாரினும் யாரினும் என்று - யாரைவிட யாரைவிட என்று சொல்லி. ஊடினாள்- பிணங்கினாள். (க-து) யாரையும்விட நாம் காதல் உடையோம் என்றேன். உடனே என் காதலி, என்னால் காதலிக்கப்பட்ட வேறு மகளிர் இருப்பதாக எண்ணி யாரைவிட யாரைவிட என்று கேட்டுப் பிணங்கினாள். 5. இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். (ப-உ) இம்மைப் பிறப்பில்- இப்பிறப்பிலே. பிரியலம் என்றேன்ஆ- நாம் பிரிய மாட்டோம் என்றேனாக; உடனே மறுபிறப்பில் பிரிவோம் என்று நினைத்து. கண்நிறை- கண்கள் நிறைய. நீர் கொண்டனள்- நீரைக் கொண்டாள். (க-து) இப்பிறப்பில் பிரியமாட்டோம் என்றேன். உடனே மறுபிறப்பிலே பிரிவோமா என்று வருந்திக் கண்ணீர் விட்டாள் என் காதலி. 6. உள்ளினேன் என்றேன், மற்றுஎன்மறந்தீர் என்றுஎன்னைப் புல்லாள் புலத்தக் கனள். (ப-உ) உள்ளினேன் என்றேன்- பிரிந்திருந்தபோது உன்னை நினைத்தேன் என்றேன். மற்று- அதற்கு. என் மறந்தீர் - ஏன் என்னை மறந்தீர். என்று - என்று சொல்லி. புலத்தக்கனள்- ஊடற்குத் தக்கவளாகி. என்னைப் புல்லாள்- என்னைத் தழுவாமலிருந்தாள். (க-து) நான் பிரிந்திருந்தபோது உன்னை நினைத்தேன் என்றேன். உடனே அவள், ‘மறந்தால்தானே நினைக்க வேண்டும்; ஏன் மறந்தீர்? என்று சொல்லி என்னைத் தழுவாமல் ஊடினாள். 7. வழுத்தினாள் தும்மினேன் ஆக; அழித்து அழுதாள் யார்உள்ளித் தும்மினீர்? என்று. (ப-உ) தும்மினேன் ஆக- நான் தும்மினேன். வழுத்தினாள்- அவள் வாழ்த்தினாள். அழித்து- மீண்டு. யார் உள்ளி- யார் நினைத்து. தும்மினீர் என்று- தும்மினீர் என்றுசொல்லி. அழுதாள் - அழுது பிணங்கினாள். (க-து) என் காதலியுடன் சேர்ந்திருக்கும்போது யான் தும்மினேன். உடனே வாழ்த்தினாள். மீண்டு, ‘யார் நினைத்துத் தும்மினீர்? என்று அழுது ஊடினாள். 8. தும்முச் செறுப்ப அழுதாள், நுமர்உள்ளல் எம்மை மறைத்தீரோ என்று. (ப-உ)தும்மு- அவள் ஊடலுக்கு அஞ்சி எனது தும்மலை. செறுப்ப- அடக்கிக் கொள்ளவும். நுமர் உள்ளல்- உமது காதலிகள் உம்மை நினைப்பதை. எம்மை மறைத்தீரோ- எமக்கு மறைத்தீரோ. என்று- என்று சொல்லி. அழுதாள்- அழுது ஊடினாள். (க-து) நான் தும்மலை அடக்கினேன்; உடனே நும் காதலிகள் உம்மை நினைப்பதை எமக்கு மறைக்கின்றீரோ என்று கூறி அழுது ஊடினாள். 9. தன்னை உணர்த்தினும் காயும், பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. (ப-உ) தன்னை உணர்த்தினும்- அவளைப் பணிந்து ஊடலை நீக்கினாலும். பிறர்க்கும்- பிற மகளிரிடத்திலும். நீர் இந்திரர் ஆகுதிர்- நீர் இத்தன்மை யுடையராவீர். என்று- என்று சொல்லி. காயும்- கோபிப்பாள். (க-து) நான் என் காதலியைப் பணிந்து ஊடல் நீக்கும் போதும், நீர் மற்ற மகளிரிடமும் இப்படித்தான் செய்வீர் என்று சொல்லிக் கோபிப்பாள். 10. நினைத்திருந்து நோக்கினும் காயும், அனைத்துநீர் யார்உள்ளி நோக்கினீர் என்று. (ப-உ) நினைத்து இருந்து- அவள் அங்கங்களின் அழகையே நினைத்துப் பேசாமல் இருந்து. நோக்கினும்- அவைகளைப் பார்த்தாலும். அனைத்தும்- என் அவயவங்களை எல்லாம். நீர் யார் உள்ளி- நீர் யாருடைய அவயவங்களுக்கு ஒப்பில்லாமை என்று கருதி. நோக்கினீர்- பார்த்தீர். என்று- என்று சொல்லி. காயும்- கோபிப்பாள். (க-து) நான் பேசாமல் அவளுடைய அவயவங்களின் அழகையே பார்த்துக்கொண்டிருந்தாலும், ‘என் அவயவங்கள் யாருடைய அவயவங்களுக்கு ஒப்பாகாதவை என்று பார்க்கின்றீர்? என்று சொல்லிக் கோபிப்பாள். 133. ஊடல் உவகை ஊடலால் உண்டாகும் இன்பம். 1. இல்லை தவறுஅவர்க்கு ஆயினும், ஊடுதல் வல்லது அவர் அளிக்குமாறு. (ப-உ) அவர்க்கு- அவரிடம். தவறு- குற்றங்கள். இல்லை ஆயினும்- இல்லாதிருந்தாலும். ஊடுதல் - பிணங்குவது. அவர் அளிக்கும் ஆறு- அவர் நம்மிடம் அன்பு காட்டும்படி. வல்லது - செய்யவல்லதாகும். (க-து) அவரிடம் தவறில்லையானாலும் நாம் ஊடுதல், அவரை நம்மிடம் இன்னும் அதிக அன்பு காட்டும்படி செய்யும். 2. ஊடலில் தோன்றும் சிறுதுனி, நல்அளி வாடினும் பாடு பெறும். (ப-உ) ஊடலில் தோன்றும்- ஊடலில் உண்டாகின்ற. சிறுதுனி- சிறிய துன்பத்தால். நல்அளி- தலைவர் காட்டும் நல்ல அன்பு. வாடினும்- வாடுமாயினும். பாடு பெறும்- அது பெருமை யடையும். (க-து) ஊடல் காரணமாக வரும் சிறிய துன்பத்தால் காதலர் செய்யும் சிறந்த அன்பு வாடினாலும், அது பெருமை அடையும். 3. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ, நிலத்தொடு நீர்இயைந் தன்னார் அகத்து. (ப-உ) நிலத்தொடு- நிலத்தினோடு. நீர்- நீரானது. இயைந்த அன்னார் அகத்து- கலந்ததுபோன்ற ஒற்றுமையுள்ள காதலரிடம். புலத்தலின்- பிணங்குவதுபோல் இன்பந்தரும். புத்தேள் நாடு- தெய்வலோகம். உண்டோ- ஒன்று உண்டோ? இல்லை. (க-து) நிலமும் நீரும் கலந்ததுபோன்ற ஒற்றுமையுள்ள காதலரிடம் பிணங்குவதுபோல் இன்பம் தரும் தெய்வலோகம் இல்லை. 4. புல்லிவிடாஅப் புலவியுள் தோன்றும், என் உள்ளம் உடைக்கும் படை. (ப-உ) புல்லி- காதலரைத் தழுவிக்கொண்டு. விடா- பின் நீங்காமலிருப்பதற்குக் காரணமான. புலவியுள்- பிணக்கிலேதான். என் உள்ளம் உடைக்கும்- என் உள்ளத்தைச் சிதைக்கின்ற. படை- ஆயுதம். தோன்றும்- காணப்படும். (க-து) காதலரை விடாமல் தழுவுவதற்குக் காரணமாகிய ஊடலில்தான், என் உள்ளத்தை உடைத்து அவரிடம் ஈடுபடுத்தும் ஆயுதம் உண்டு. 5. தவறுஇலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்குஒன்று உடைத்து. (ப-உ) தவறு இலர் ஆயினும்- ஆடவர் குற்றம் இல்லாதவர் ஆயினும், குற்றம் உள்ளவர்போல் எண்ணப்பட்டு. தாம் வீழ்வார் - தம்மால் விரும்பப்படும் மகளிரின். மென்தோள்- மென்மை யான தோள்களை. அகறலின்- தழுவாமல் நீங்கியிருக்கும் காலத்திலும். ஆங்கு ஒன்று - அப்படிப்பட்ட ஓர் இன்பம். உடைத்து - உடைய தாகும். (க-து) குற்றம் புரியாத ஆடவரைக் குற்றம் புரிந்தவராகக் கருதி மகளிர் ஊடுவாராயின், அதிலும் ஒரு இன்பம் உண்டு. 6. உணலினும் உண்டது அறல்இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது. (ப-உ) உணலினும்- மேலும் உண்பதைவிட. உண்டது அறல்- முன் உண்டது சீரணித்தல். இனிது- இன்பமாகும். காமம் - காமத்துக்கு. புணர்தலின்- மேலும் கூடியிருப்பதைவிட. ஊடல்- ஊடுதல். இனிது- இன்பந்தரும். (க-து) மேலும் உண்பதைவிட உண்டது செறித்தல் இன்பமாகும். அதுபோல், மேலும் கூடுவதைவிட ஊடுதல் காமத்திற்கு இன்பமாகும். 7. ஊடலில் தோற்றவர் வென்றார், அதுமன்னும் கூடலில் காணப் படும். (ப-உ) ஊடலில் தோற்றவர்- ஊடலில் தோற்றவரே. வென்றார்- வெற்றிபெற்றவர் ஆவார். அது மன்னும் - அது பின் உண்டாகும். கூடலில் காணப்படும் - புணர்ச்சியிலே காணப்படும். (க-து) ஊடலில் தோற்றவரே வென்றவர் ஆவார்; அது பின் நிகழும் கூடலிலே காணப்படும். 8. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலின் தோன்றிய உப்பு. (ப-உ) நுதல் வெயர்ப்ப- இவளது நெற்றி வியர்க்கும்படி. கூடலின் தோன்றிய- கூடியதனால் உண்டான. உப்பு -இனிமையை. ஊடி -இவள் மீண்டும் ஊடியிருக்கும் போது. பெறுகுவம் கொல்- அடைவோமோ? ஓ:அசை. (க-து) இவளுடன் இப்பொழுது அனுபவிக்கும் இன்பத்தை, இவள் மற்றொருமுறை ஊடும்போதுதான் அனுபவிக்க முடியும். 9. ஊடுக மன்னோ ஒளிஇழை; யாம்இரப்ப நீடுக மன்னோ இரா. (ப-உ) ஒளி இழை- ஒளியுள்ள ஆபரணங்களை அணிந்தவள். ஊடுகமன்ஓ- எம்மொடு பிணங்குவாளாக. யாம் இரப்ப- அவ்வூடலை நீக்கும் பொருட்டு நாம் இவளிடம் வேண்டிக்கொள்ளுவதற்காக. இரா- இந்த இராப்பொழுது. நீடுகமன்ஓ- வளர்வதாக. மன், ஓ: அசைகள். (க-து) இவள் எம்மோடு பிணங்குவாளாக; இவள் பிணக்குத் தீர இவளைக் கெஞ்சி வேண்டிக் கொள்ளுவதற்காக இராப்பொழுது நீண்டநேரம் இருக்கவேண்டும். 10. ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின். (ப-உ) ஊடுதல்- ஊடுவதே. காமத்திற்கு இன்பம்- காமத்துக்கு இன்பம் ஆகும். அதற்கு- அந்த ஊடலுக்கு. கூடி முயங்கப்பெறின்- மீண்டும் கூடித் தழுவிக் கொண்டால். இன்பம்- அதுவே இன்பமாகும். (க-து) ஊடுவது காமத்துக்கு இன்பம்; ஊடியபின் கூடித் தழுவிக் கொள்ளுவதே ஊடலுக்கு இன்பம். திருவள்ளுவ மாலை (இது திருக்குறளின் சிறப்பைப் பாராட்டிக் கூறுவது; சங்கப் புலவர்களின் பெயரால் அமைந்த 55 வெண்பாக்களை உடையது.) 1. திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க உருத்திர சன்மர்; என உரைத்து வானில், ஒருக்கஓ என்றதுஓர் சொல். (அசரீரி) (குறிப்பு உரை) உருத்தகு- உருவிலே சிறந்த. நல்பலகை- நல்ல சங்கப் பலகையிலே. உருத்திர சன்மர் ஒக்க இருக்க உருத்திரசன்மர்; முருகன் அவதார மாகிய ஒரு புலவர். ஒருக்க- ஒன்றுபடும்படி. ஓஎன்றது-ஓவென்று ஒலித்தது. 2. நாடா, முதல்நான் மறை, நான் முகன்நாவில் பாடா, இடைப்பா ரதம் பகர்ந்தேன்; - கூடாரை எள்ளிய வென்றி இலங்கு இலைவேல் மாற! பின் வள்ளுவன் வாயதுஎன் வாக்கு. (நாமகள்) (கு-உ) கூடாரை எள்ளிய வென்றி இலங்கு இலைவேல் மாற என்பதை முதலில் வைத்துப் பொருள் காண்க. கூடார்- பகைவர். இலங்கு- விளங்குகின்ற. மாற- பாண்டியனே. நாடா- நாடி; ஆராய்ந்து. நாவில்- நாவிலிருந்துகொண்டு. பாடா- பாடி. இடை- இடைக்காலத்தில். 3. என்றும் புலராது, யாணர்நாள் செல்லுகினும் நின்று அலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் குன்றாத செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்; மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல். (இறையனார்) (கு-உ) மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல். என்றும் புலராது- எக் காலத்திலும் வாடாமல். யாணர் நாள்- நெடுங் காலம். பிலிற்றும்- சிந்தும். போன்ம்- போலும். 4. நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான் முகத்தோன் தான்மறைந்து; வள்ளுவனாய்த் தந்து ரைத்த நூல்முறையை வந்திக்க சென்னி; வாய் வாழ்த்துக; நல்நெஞ்சம் சிந்திக்க; கேட்க செவி. (உக்கிரப் பெருவழுதியார்) (கு- உ) முப்பொருள் - அறம், பொருள், இன்பம். நூல் முறையை- நூலின் சிறப்பை. வந்திக்க- வணங்குக. சென்னி- தலை. வள்ளுவர் பிரம்மாவின் அவதாரம் என்று கூறுகிறது இச் செய்யுள். 28-வது வெண்பாவிலும் இக் கருத்தைக் காணலாம். 5. தினைஅளவு போதாச் சிறுபுல்நீர்; நீண்ட பனைஅளவு காட்டும் படித்தால்; - மனை அளகு வள்ளைக்கு உறங்கும் வளநாட! வள்ளுவனார் வெள்ளைக் குறள்பா விரி. (கபிலர்) (கு-உ) மனை அளகு- மனையில் உள்ள பறவைகள். வள்ளைக்கு- உலக்கைப் பாட்டைக் கேட்டு. வெள்ளைக் குறள்பா- வெண்பாவாகிய குறள் பாட்டில் உள்ள. விரி- விரிந்த பொருள். சிறு புல் நீர்- சிறிய புல் நுனியில் உள்ள நீர். பனை அளவு- பனையின் உருவை. படித்து ஆல்- தன்மையை உடையது. முன் இரண்டடி களையும் பின் வைத்துப் பொருள் கொள்க. 6. மாலும் குறளாய் வளர்ந்து, இரண்டு மாண்அடியால் ஞாலம் முழுதும் நயந்துஅளந்தான்;- வால் அறிவின் வள்ளுவரும், தம்குறள்வெண் பாஅடியால், வையத்தார் உள்ளுவஎல் லாம் அளந்தார் ஓர்ந்து. (பரணர்) (கு-உ) மாலும்- திருமாலும். குறளாய்- வாமனனாய் வந்து. வளர்ந்து- திரிவிக்கிரமனாய் வளர்ந்து. வால் அறிவின்- மெய்யறி வையுடைய. உள்ளுவ எல்லாம்- நினைப்பவைகளை எல்லாம். 7. தானே முழுதுஉணர்ந்து, தண்தமிழின் வெண்குறளால் ஆனா அறம்முதலா அந்நான்கும் - ஏனோருக்கு ஊழின் உரைத்தார்க்கும், ஒள்நீர் முகிலுக்கும், வாழி! உலகுஎன் ஆற்றும் மற்று. (நக்கீரனார்) (கு-உ) முழுது உணர்ந்து- எல்லா நூற்பொருள்களையும் அறிந்து. ஆனா- அழியாத அறம், பொருள், இன்பம், வீடு என்பன நான்கு. ஏனோருக்கு- மற்றவர்களுக்கு. ஊழின்- முறைப்படி. மேகமும் வள்ளுவரும் ஒப்பாவர். வாழி என்னும் சொல்லை இறுதியில் வைத்துப் பொருள் கொள்க. 8. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அந்நான்கின் திறம்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும் வள்ளுவன் என்பான்ஓர் பேதை; அவன்வாய்ச் சொல் கொள்ளார் அறிவுடை யார். (மாமூலனார்) (கு-உ) திறம் தெரிந்து- வகைகளை அறிந்து. தேவை- தேவரை; தேவர் என்பது வள்ளுவர்க்கு ஒரு பெயர். வள்ளுவன் என்பான்- வள்ளுவன்தானே என்று இகழ்ந்து பேசுவோன். 9. ஒன்றே பொருள்எனின், வேறுஎன்ப; வேறுஎனின், அன்றுஎன்ப; ஆறு சமயத்தார்;- நன்றுஎன எப்பா லவரும் இயைபவே; வள்ளுவனார் முப்பால் மொழிந்த மொழி. (கல்லாடனார்) (கு-உ) அறுவகைச் சமயம்- வியாச மதம், சைமினி மதம், பதஞ்சலி மதம், கபில மதம், கணாத மதம், அக்கபாத மதம் என்பன. எப்பாலவரும்- எவ்வகைப் பிரிவினரும். இயைபவே- ஒத்துக்கொள்ளுவார்கள். 10. மும்மலையும், முந்நாடும், முந்நதியும், முப்பதியும், மும்முரசும், முத்தமிழும், முக்கொடியும், - மும்மாவும். தாம்உடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ? பாமுறைதேர் வள்ளுவர்முப் பால். (சீத்தலைச் சாத்தனார்) (கு-உ) மும்மலை- கொல்லிமலை, நேரிமலை, பொதிய மலை. முந்நாடு- சேர, சோழ, பாண்டியநாடு. முந்நதி- தாமிர பரணி, காவிரி, வையை. முப்பதி- வஞ்சி, புகார் மதுரை. மும்முரசு- மங்கலமுரசு, வெற்றிமுரசு, கொடைமுரசு. முத்தமிழ்- இயல், இசை, நாடகம். முக்கொடி- வில், புலி, மீன். மும்மா- கனவட்டம், பாடலம், கோரம் என்னும் குதிரைகள். மன்னர்- மூவேந்தர்கள். தார்- மாலை. 11. சீந்திநீர்க், கண்டம் தெறிசுக்குத் தேன் அளாய் மோந்தபின் யார்க்கும் தலைக்குத்துஇல்;- காந்தி மலைக்குத்து மால்யானை! வள்ளுவர்முப் பாலால் தலைக்குத்துத் தீர்வுசாத் தற்கு. (மருத்துவன் தாமோதரனார்) (கு-உ) சீந்தி நீர்- சீந்தி என்னும் கொடியின் சாற்றில் எடுத்த சர்க்கரை. கண்டம் தெரிசுக்கு- துண்டாடிப் பொடிசெய்த சுக்கு. தேன் அளாய்- தேன் கலந்து. தலைக் குத்து- தலைவலி. காந்தி- சினந்து. மால் யானை- பெரிய யானையை உடைய வனே. சாத்தற்கு தலைக்குத்து தீர்வு. சாத்தன்- சீத்தலைச் சாத்தனார். தீர்வு- தீர்ந்தது. 12. தாள்ஆர் மலர்ப்பொய்கை தாம்குடைவார், தண்ணீரை வேளாது ஒழிதல் வியப்புஅன்று; - வாளா தாம் அப்பால் ஒருபாவை ஆய்பவோ? வள்ளுவனார் முப்பால் மொழிமூழ்கு வார். (நாகன் தேவனார்) (கு-உ) தாள் ஆர்- கொடி அமைந்த. தண்ணீரை- வேறு தண்ணீரை. வேளாது ஒழிதல்- விரும்பாமை. வாளா- வீணாக. வள்ளுவனார் முப்பால் மொழி மூழ்குவார் வாளாதாம் அப்பால் ஒருபாவை ஆய்பவோ முப்பால் மொழி- திருக்குறள். அப்பால்- அதன்பின். 13. பரந்த பொருள் எல்லாம் பார்அறிய, வேறு தெரிந்து, திறம்தொறும் சேரச் - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லார்ஆர் வள்ளுவர் அல்லால். (அரிசில்கிழார்) (கு-உ) பார் அறிய- உலகில் உள்ளோர் அறியும்படி. வேறு தெரிந்து- வெவ்வேறாக ஆராய்ந்து. திறந்தொறும் சேர- வகை வகையாகத் தொகுத்து. வள்ளுவர் அல்லால் வல்லார் ஆர் வல்லார்- வல்லவர். 14. கான்நின்ற தொங்கலாய்! காசிபனார் தந்ததுமுன் கூநின்று அளந்த குறள்என்ப; -நூல்முறையால் வான்நின்று மண்நின்று அளந்ததே, வள்ளுவனார் தாம்நின்று அளந்த குறள். (பொன்முடியார்) (கு-உ) கான் நின்ற- மணம்பொருந்திய. தொங்கல்- மாலை. காசிபனார்- காசிப முனிவர். கூநின்று - பூமியில் நின்று. கு- பூமி. குறள்- வாமனம். 15. ஆற்றல் அழியும்என்று, அந்தணர்கள் நான் மறையைப் போற்றி உரைத்து, ஏட்டின் புறத்து எழுதார்- ஏட்டுஎழுதி வல்லுநரும், வல்லாரும், வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும், ஆற்றல்சோர்வு இன்று. (கோதமனார்) (கு-உ) போற்றி உரைத்து- வாய்ப்பாடமாகப் பாதுகாத்துக் கூறி. வள்ளுவனார் முப்பாலை ஏட்டு எழுதி வல்லுநரும், வல்லாரும் சொல்லிடினும் ஆற்றல் சோர்வு இன்று. வல்லுநர்- வல்லமையுள்ளவர். வல்லார்- வல்லமையற்றவர். ஆற்றல்- வலிமை. சோர்வு- குறைதல். 16. ஆயிரத்து முந்நூற்று முப்பது அரும்குறளும் பாயிரத்தி னோடு பகர்ந்ததன்பின்- போய் ஒருத்தர் வாய்க்கேட்க நூல்உளவோ? மன்னு தமிழ்ப்புலவர் ஆய்க்கேட்க வீற்றிருக்க லாம். (நத்தத்தனார்) (கு-உ) பாயிரத்தினோடு ஆயிரத்து முந்நூற்று முப்பது அரும் குறளும் என்று பொருள் கொள்க. பகர்ந்ததன்பின்- கூறியபின். கேட்க- பிறர் தம்மிடம் வந்து கேட்க. இப்பாடல் திருக்குறளின் எண்ணிக்கையைக் குறித்தது. 17. உள்ளுதல் உள்ளி உரைத்தல், உரைத்ததனைத் தெள்ளுதல் அன்றே செயல்பால;- வள்ளுவனார் முப்பாலின் மிக்க மொழிஉண்டு எனப்பகர்வார், எப்பா வலரினும் இல். (முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்) (கு-உ) உள்ளுதல்- நினைத்தல். உள்ளி உரைத்தல்- நினைத்துப் பிறர்க்குக் கூறுதல். உரைத்ததனைத் தெள்ளுதல்- பிறர் கூறியதை ஆராய்தல். மிக்க- சிறந்த. எப்பாவலரினும்- எவ்வகைப்பட்ட புலவரிலும். 18. சாற்றிய பல்கலையும், தப்பா அருமறையும் போற்றி உரைத்த பொருள்எல்லாம் - தோற்றவே முப்பால் மொழிந்த முதல்பா வலர் ஒப்பார் எப்பா வலரினும் இல். (ஆசிரியர் நல்லந்துவனார்) (கு-உ) சாற்றிய- சொல்லப்பட்ட. தப்பா- தவறாத. தோற்றவே- காணும்படி. முப்பால் மொழிந்த- திருக்குறளைக் கூறிய. முதற்பாவலர் என்பது வள்ளுவர்க்கு ஒரு பெயர். 19. தப்பா முதற்பாவால் தாம்மாண்ட பாடலினால் முப்பாலின் நாற்பால் மொழிந்தவர், - எப்பாலும் வைவைத்த கூர்வேல் வழுதி, மனம்மகிழத் தெய்வத் திருவள் ளுவர். (கீரந்தையார்) (கு-உ) எப்பாலும் வைவைத்தகூர்வேல்வழுதிமனம்மகிழதப்பா.....ர் தெய்வத் திருவள்ளுவர் என்று மாற்றிப் பொருள் கொள்க. வைவைத்த- கூர்மையாகச் செய்து வைத்த. வழுதி- பாண்டியன். முதற்பா- குறள்வெண்பா. முப்பாலின்- மூன்று பகுதியில். நாற்பால்- நான்கு பகுதிகளையும். மூன்று: அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். நான்கு பகுதி- அறம், பொருள், இன்பம், வீடு. 20. வீடுஒன்று பாயிரம் நான்கு; விளங்குஅறம் நாடிய முப்பத்துமூன்று; ஒன்றுஊழ் - கூடுபொருள் எள்ளில் எழுபது; இருபதிற்று ஐந்துஇன்பம்; வள்ளுவர் சொன்ன வகை. (சிறுமேதாவியார்) (கு-உ) இது திருக்குறளை வள்ளுவர் எவ்வாறு வகுத்துக் கூறினார் என்பதை உரைத்தது. வீடு ஒன்று; வீடுபெறும் தன்மை பொருந்திய பாயிரம் நான்கு; அதிகாரம் - அறத்துப்பால் முப்பத்து மூன்று அதிகாரம்; ஊழ் ஒரு அதிகாரம்; பொருட்பால் எழுபது அதிகாரம்; காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரம். இவை இப்பாடலில் காண்பவை. 21. உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான் உத்தர மாமதுரைக்கு அச்சஎன்ப- இப்பக்கம் மாதாநு பங்கி, மறுவில் புலச்செந்நாப் போதார், புனல்கூடற்கு அச்சு. (நல்கூர் வேள் வியார்) (கு-உ) உப்பக்கம் நோக்கி- வடக்கு நோக்கி. உபகேசி- நப்பின்னைப் பிராட்டி. தோள் மணந்தான்- தோளைத் தழுவிய கண்ணன். உத்தர மாமதுரை- வட மதுரை. அச்சு- ஆதரவு. மாதாநு பங்கி, செந்நாப் போதார்; வள்ளுவர் பெயர்கள். மறுஇல் புலம்- குற்றமற்ற அறிவினையுடைய. கூடல்- மதுரை. 22. அறம்நான்கு; அறிபொருள் ஏழ்; ஒன்று காமத் திறம்மூன்று; எனப்பகுதி செய்து - பெறல்அரிய நாலும் மொழிந்தபெரு நாவலரே நன்கு உணர்வார் போலும் ஒழிந்த பொருள். (தொடித்தலை விழுத்தண்டினார்) (கு-உ) அறம் நான்கு- அறத்துப்பால் பாயிரம், இல்லறவியல், துறவியல், ஊழ் இயல் என்ற நான்கு பகுதியை உடையது. அறிபொருள்- அறியத்தக்க பொருட்பால் ஏழ்- அரசியல், அமைச்சியல், அரண் இயல், கூழியல், படையியல், நட்பியல், ஒழிபியல் என ஏழு பகுதிகளையுடையது. காமத்திறம் மூன்று- காமத்துப் பாலின் வகை மூன்று. அவை, ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று, இருபால்கூற்று என்பன. நாலும்- அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும். 23. செய்யா மொழிக்கும், திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே;- செய்யா அதற்குரியர் அந்தணரே, ஆராயின், ஏனை இதற்குரியர் அல்லாதார் இல். (வெள்ளி வீதியார்) (கு-உ) செய்யாமொழி- வேதம். பொய்யாமொழி- திருக்குறள். செய்யா அதற்கு- வேதத்துக்கு. வேதம் அந்தணர்க்கு உரியது; குறள் எல்லோர்க்கும் பொது. வேதப்பொருளும், திருக்குறட் பொருளும் ஒன்றே என்றது இச்செய்யுள். 24. ஓதற்கு எளிதாய் உணர்தற்கு அரிதுஆகி, வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதுஅற்றோர் உள்ளுதொறும் உள்ளுதொறும் உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு. (மாங்குடி மருதனார்) (கு-உ) இது திருக்குறளின் சிறப்பை உரைக்கின்றது. ஓதற்கு- படிப்பதற்கு. அரிது ஆகி- அரிய பொருள்களை உடையதாகி. உள்ளுதொறும்- நினைக்குந் தோறும். 25. பாயிரம் நான்கு; இல் லறம் இருபான்; பன்மூன்றே தூயதுறவறம்; ஒன்றுஊழ்; ஆக- ஆய அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்து உரைத்தார் நூலின் திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து. (எறிச்சலூர் மலாடனார்) (கு-உ) இது அறத்துப்பாலின் பிரிவைப்பற்றிக் கூறுகின்றது. வள்ளுவனார் நூலில் திறத்து- திருவள்ளுவர் தமது நூலின்கண். பால் தேர்ந்து- பகுக்கவேண்டிய முறையை ஆராய்ந்து. பாயிரம் நான்கு- பாயிரம் நான்கு அதிகாரம். இல்லறம் இருபான்- இல்லறவியல் இருபது அதிகாரம். துறவறம் பன்மூன்று - துறவறவியல் பதின்மூன்று அதிகாரம். ஊழ்ஒன்று- ஊழ்இயல் ஒரு அதிகாரம். 26. அரசியல் ஐஐந்து; அமைச்சியல் ஈர்ஐந்து; உருவல் அரண் இரண்டு; ஒன்றுஒண்கூழ் - இருவியல் திண்படை; நட்புப் பதினேழ்; குடிபதின்மூன்று எண்பொருள் ஏழாம் இவை. (போக்கியார்) (கு-உ) இது பொருட்பாலின் பிரிவை உணர்த்துகின்றது. அரசியல் ஐஐந்து- அரசியல் இருபத்தைந்து அதிகாரம். அமைச்சியல் ஈர்ஐந்து- அமைச்சியல் பத்து அதிகாரம். உருவல் அரண் இரண்டு- சிறந்த வலிய அரண் இயல் இரண்டதிகாரம். ஒன்று ஒண்கூழ்- கூழ் இயல் ஒரு அதிகாரம். இருஇயல் திண்படை- படை இயல் இரண்டு அதிகாரம். நட்பு பதினேழ்- நட்பியல் பதினேழு அதிகாரம். குடி பதின்மூன்று- ஒழிபுஇயல் பதின்மூன்று அதிகாரம். எண்பொருள் ஏழாம் இவை- எண்ணப் பட்ட பொருட்பாலின் பகுதி ஏழாகிய இவைகள். 27. ஆண்பால் ஏழ்; ஆறு இரண்டு பெண்பால்; அடுத்துஅன்பு பூண்பால் இருபால்ஓர் ஆறாக; - மாண்பாய காமத்தின் பக்கம் ஒரு மூன்றுகக் கட்டுரைத்தார் நாமத்தின் வள்ளுவனார் நன்கு. (மோசிகீரனார்) (கு-உ) இது காமத்துப்பாலின் பகுதிகளைக் கூறுகின்றது. ஆண்பால் ஏழ்- ஆண்பால் இயல் ஏழு அதிகாரம். ஆறு இரண்டு பெண்பால்- பெண்பால் இயல் பன்னிரண்டு அதிகாரம். அடுத்து அன்பு பூண்பால்- ஒருவரை ஒருவர் நெருங்கி அன்பு கொள்வ தாகிய. இருபால் ஓர்ஆறு- இருபால் இயல் ஆறு அதிகாரம். நாமத்தின்- பெயரில் சிறந்த. (22 - வது வெண்பாவில் உள்ள பொருள் 25, 26, 27 ஆகிய மூன்று வெண்பாக்களில் விரித்துரைக்கப்பட்டது). 28 ஐஆறும், நூறும் அதிகாரம் மூன்றும்ஆம், மெய்ஆய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது தந்தான் உலகிற்குத் தான், வள்ளுவன்ஆகி அம்தா மரைமேல் அயன். (காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்) (கு-உ) ஐஆறும், நூறும் அதிகாரம் மூன்றுமாய்- நூற்று முப்பத்துமூன்று அதிகாரங்களாய். அம்தா மரைமேல் அயன் வள்ளுவன் ஆகி என்பதை முதலில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டும். இது திருக்குறளின் அதிகார எண்ணிக்கை யைக் கூறிற்று. வள்ளுவர் நான்முகன் அவதாரம் 29. எல்லாப் பொருளும் இதன்பால் உள; இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை; ஆல் - சொல்லால் பரந்த பாவால் என்பயன்? வள்ளுவனார் சுரந்தபா வையத் துணை. (மதுரைத் தமிழ் நாகனார்) (கு-உ) எல்லாப்பொருளும்- பலவகை நூல்களில் சொல்லப் படும் எல்லாப் பொருள்களும். வள்ளுவனார் சுரந்தபா- திருக்குறளே. வையத் துணை- உலகினர்க்குத் துணையாகும். 30. எப்பொருளும், யாரும், இயல்வின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம்; செப்பவரும் - முப்பாற்குப் பாரதம், சீராம கதை, மனுப், பண்டைமறை நேர்வன; மற்றுஇல்லை நிகர். (பாரதம் பாடிய பெருந்தேவனார்) (கு-உ) இயல்பின்- முறைப்படி. செய்பவரும்- சொல்லவந்த. முப்பாற்கு- திருக்குறளுக்கு. குறளுக்கு பாரதம், இராமாயணம், மனுநீதி, வேதங்கள் இவைகளே ஒப்பாகும்; மற்றுநிகர் இல்லை. 31. மணல்கிளைக்க நீர்ஊறும்; மைந்தர்கள் வாய்வைத்து உணச்சுரக்கும் தாய்முலை ஒண்பால்! - பிணக்கு இலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு. (உருத்திரசன்மர்) (கு-உ) பிணக்கு இலா- வெறுப்பதற்கு இடமில்லாத. வள்ளுவர் முப்பால் ஆய்தொறும் மதிப்புலவோர்க்கு அறிவு ஊறும் என்று பொருள் கொள்க. மணல்நீர் ஊற்றும், தாய் முலையும் குறளுக்கு உவமைகள். 32. தம் இல்வள்ளுவர் இன்குறள் வெண்பாவினால் ஓதிய ஒண்பொருள் எல்லாம்- உரைத்ததனால், தாதுஅவிழ் தார்மாற! தாமே? தமைப்பயந்த வேதமே மேதக் கன? (பெரும்சித்திரனார்) (கு-உ) தாதுஅவிழ் தார் மாற! ஏதம்.....உரைத்ததனால் தாமே...மேதக்கன?” ஏதம்- குற்றம். ஓதிய- வேதங்களில் சொல்லப் பட்ட. தாமே- திருக்குறளோ. தமைப்பயந்த வேதமே- திருக்குறள் பாடல்களைத் தந்த வேதமோ. மேதக்கன- இவற்றுள் சிறந்தன எவை? தாது- மகரந்தம். தார்- மாலை. 33. இன்பம்,பொருள், அறம்வீடு என்னும் இந்நான்கும் முன்புஅறியச் சொன்ன முதுமொழிநூல்- மன்பதை கட்கு உள்ள அரிது; என்று அவை, வள்ளுவர் உலகம் கொள்ள மொழிந்தார் குறள். (நரிவெரூஉத்தலையார்) (கு-உ) முதுமொழி நூல்- வேதம். மன்பதை- மக்கள். உள்ள அரிது- ஓதிஉணர் வதற்குஅரிதானது.அவை- அவ்வேதப் பொருள்களை. ‘அவை உலகம் கொள்ள வள்ளுவர் குறள் மொழிந்தார் என்று மாற்றிப் பொருள் கொள்ளுக. 34. புலவர் திருவள் ளுவர் அன்றிப் பூமேல் சிலவர் புலவர்எனச் செப்பல், நிலவு பிறங்குஒளி மலைக்கும்bபயர்மாலை;மற்றும் கறங்குஇருள்மhலைக்கும்பயர். (மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்க்கிழார்) (கு-உ) நிலவுஒளி வீசும் மாலைக் காலத்தையும், மாலை என்று கூறுவர்; நிலவு இல்லாத இருட்டுள்ள மாலைக் காலத்தையும் மாலையென்று கூறுவர். இது போன்றதே திருவள்ளுவரையும் புலவர் என்று சொல்லி, வேறு சிலரையும் புலவர் என்று கூறுவது. 35. இன்பமும் துன்பமும் என்னும் இவைஇரண்டும், மன்பதைக்கு எல்லாம் மனம்மகிழ - அன்புஒழியாது உள்ளி உணர உரைத்தாரே; ஓதுசீர் வள்ளுவர் வாயுறை வாழ்த்து. (மதுரை அறுவை வாணிகன் இனவேட்டனார்.) (கு-உ) ஓதுசீர் வள்ளுவர் இன்பமும். . . உள்ளி உணர, வாயுறை வாழ்த்து உரைத்தாரே என்று மாற்றிப் பொருள் கொள்க. திருக்குறளை வாயுறை வாழ்த்தாகக் கூறினார். வாயுறை வாழ்த்து என்பது நன்மை - தீமைகளை எடுத்துக்கூறி அறிவுறுத்துவது. 36. பூவிற்குத் தாமரையே, பொன்னுக்குச் சாம்புனதம், ஆவிற்கு அருமுனியாய், யானைக்கு அமரர் உம்பல், தேவில் திருமால், எனச்சிறந்தது என்பவே பாவிற்கு வள்ளுவர்வெண் பா. (கவிசாகரப் பெருந்தேவனார்) (கு-உ) பூவில் சிறந்தது தாமரை. பொன்னில் சிறந்தது சாம்புனதம். பசுவில் சிறந்தது காமதேனு. யானையில் சிறந்தது தேவர் யானையாகிய ஐராவதம். தேவர்களில் திருமால் சிறந்தவர். பாடல்களிலே வள்ளுவர் குறள் வெண்பா சிறந்தது. 37. அறம்முப்பத் தெட்டுப், பொருள்எழுபது, இன்பத் திறம்இருபத்து ஐந்தால் தெளிய- முறைமையால் வேத விழுப்பொருளை வெண்குறளால் வள்ளுவனார் ஓத வழுக்கற்றது உலகு. (கு-உ) அறம் முப்பத்தெட்டு- அறத்துப்பால் முப்பத்தெட்டு அதிகாரம். பொருள் எழுபது- பொருட்பால் எழுபது அதிகாரம். இன்பத் திறம் இருபத்தைந்து- இன்பத்துப்பால் இருபத்தைந்து அதிகாரம். உலகு வழுக்குஅற்றது- உலகம் குற்றத்திலிருந்து தப்பியது. இச்செய்யுள் திருக்குறள் அதிகார எண்ணிக்கையைக் கூறியது. 38. அறம்முதல் நான்கும் அகல்இடத்தோர் எல்லாம் திறம்உறத் தேர்ந்து தெளியக் குறள்வெண்பாப் பன்னிய வள்ளுவனார் பால்முறைநேர் ஒவ்வாதே முன்னை முதுவோர் மொழி. (கோவூர்கிழார்) (கு-உ) அகல் இடத்தோர்- பெரிய இவ்வுலகில் உள்ளோர். திறம்உற- வகைப்பட. வள்ளுவனார் பால் முறை நேர்- வள்ளுவரின் முப்பால் நீதிக்கு எதிரில். முன்னை முதுவோர் மொழி ஒவ்வாதுஏ- பழம்புலவர்கள் மொழிந்த நூல்களும் ஒப்பாகாது. 39. தேவிற் சிறந்த திருவள்ளுவர், குறள்வெண் பாவில் சிறந்திடும் முப்பால்பகரார்- நாவிற்கு உயல்இல்லை; சொற்சுவை ஓர்வுஇல்லை; மற்றும் செயல்இல்லை என்னும் திரு. (உறையூர் முதுகூற்றனார்) (கு-உ) திருவள்ளுவர்- திருவள்ளுவரது. குறள் வெண்பாவில் சிறந்திடும்- குறள் வெண்பாக்களால் அமைந்து சிறந்திருக்கின்ற. முப்பால்- முப்பால் நூலை. பகரார்- சொல்லாதவர்களின். உயல் இல்லை- வாழ்வில்லை. ஓர்வு- உணர்ச்சி. என்னும் திரு- என்று நினைத்து இலக்குமி சேரமாட்டாள். 40. இம்மை மறுமை இரண்டும் எழுமைக்கும் செம்மை நெறியில் தெளிவுபெற மும்மையின், வீடுஅவற்றின் நான்கின் விதிவழங்க, வள்ளுவனார் பாடினர் இன்குறள்வெண் பா. (இழிகட்பெரும்கண்ணனார்) (கு-உ) இம்மை மறுமை இரண்டும்- இம்மை மறுமை இரண்டின் பயனையும். எழுமைக்கும்- ஏழுபிறப்பினும். செம்மை நெறியில்- நல்ல முறையிலே. தெளிவு பெற- அறிந்து தெளியும்படி. மும்மையின்- முப்பால்களில். வீடு அவற்றின் நான்கின் விதிவழங்க - வீடோடு கூடிய அவைகள் நான்கின் விதிகளையும் கூற; வள்ளுவர் இக்குறள் வெண்பா பாடினர். 41. ஆவனவும் ஆகா தனவும் அறிவுடையார் யாவரும் வல்லார்எடுத்து இயம்பத் தேவர் திருவள் ளுவர்தாமும் செப்பியவே செய்வார்; பொருவில் ஒழுக்கம்பூண் டார். (செயிர்க்காவிரியார் மகனார் சாத்தனார்) (கு-உ) அறிவுடையார் யாவரும் எடுத்து இயம்ப வல்லார், பொருவில் ஒழுக்கம் பூண்டார் தேவர் திருவள்ளுவர் தாம் செப்பியவே செய்வார். அறிவுள்ளவர்கள் திருக்குறளிலிருந்தே செய்யக்கூடியன இவை, செய்யக்கூடாதன இவை என்பதை எடுத்துக்கூற வல்லவர் ஆவார்- ஒழுக்கம் உள்ளவர் திருவள்ளுவர் கூறியபடியே நடப்பார்கள். தேவர் திருவள்ளுவர்- தேவராகிய திருவள்ளுவர். 42. வேதப் பொருளை விரகால் விரித்து, உலகோர் ஓதத் தமிழால் உரைசெய்தார்; ஆதலால், உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டுஎன்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு. (செயலூர்க் கொடும் செங்கண்ணனார்) (கு-உ) விரகால் விரித்து - அறிந்துகொள்ளும் உபாயத்தால் விரிவாக. உள்ளுநர் - நினைக்கின்றவர். வள்ளுவர் வாய்மொழி மாட்டு உள்ளுநர் உள்ளும் பொருள் எல்லாம் உண்டு என்ப என்று பொருள் கொள்க. 43. ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து, இதனின்இது சீரியது என்றுஒன்றைச் செப்பரிதுஆல்; ஆரியம், வேதம் உடைத்துத் தமிழ், திரு வள்ளுவனார் ஓது குறட்பா உடைத்து. (வண்ணக்கம் சாத்தனார்) (கு-உ) இதனின் இது சீரியது- இதைவிட இது சிறந்தது. செப்ப அரிது- சொல்லமுடியாது. ஆரியம்- வடமொழி. 44. ஒருவர் இருகுறளே முப்பாலின் ஓதும் தருமம் முதல்நான்கும் சாலும்;- அருமறைகள் ஐந்தும், சமயநூல் ஆறும், நம் வள்ளுவனார் புந்தி மொழிந்த பொருள். (களத்தூர்கிளார்) (கு-உ) ஒருவர்- ஒருவர்க்கு. இருகுறளே- சிறந்த குறளிலே. முப்பாலின் ஓதும்- மூன்று பகுதியிலும் கூறப்படும். சாலும்- போதுமானதாகும். அருமறைகள் ஐந்து- இருக்கு, எசுர், சாமம், அதர்வணம், பாரதம் என்பன. சமயநூல் ஆறும்- அறுவகைச் சமயங்களுக்குரிய ஆறு நூல்கள். (சமயம் ஆறு 9-ஆம் வெண்பா பார்க்க.) 45. எழுத்து, அசை, சீர், அடி, சொல், பொருள், யாப்பு, வழுக்குஇல் வனப்புஅணி, வண்ணம், இழுக்கின்றி என்றுஎவர் செய்தன எல்லாம் இயம்பின இன்றுஇவர் இன்குறள்வெண் பா. (நச்சுமனார்) (கு-உ) எழுத்துமுதல் வண்ணம்வரை உள்ளவை செய்யுளின் இயல்பு. இழுக்குஇன்றி - குற்றம் இல்லாமல் குறள் வெண்பாவில் எழுத்து முதல் வண்ணம் வரையுள்ள இயல்புகள் அமைந்துள்ளன. 46. கலைநிரம்பிக் காண்டற்கு இனிதுஆகிக் கண்ணின் நிலைநிரம்பு நீர்மைத்து எனினும் தொலைவுஇலா வான்ஊர் மதியம் தனக்கு உண்டோ, வள்ளுவர்முப் பால்நூல் நயத்தின் பயன் (அக்காரக்கனி நச்சுமனார்) (கு-உ) கலைநிரம்பி- கதிர்நிறைந்து. கண்ணின் நிலை- கண்ணால் பார்க்கும் நிலையில். நிரம்பும் நீர்மைத்து- நிறைந்திருக்கும் தன்மையுடையது. தொலைவுஇலா- அழிவில்லாத. வான்- வானம். வள்ளுவர் முப்பால் நூல் நயத்தினால் வரும் வயன் தொலைவுஇலா வான்ஊர் மதியம் தனக்கு உண்டோ என்று மாற்றிப் பொருள் கொள்க. 47. அறம்தகளி, ஆன்ற பொருள்திரி, இன்பு சிறந்தநெய், செஞ்சொல்தீத் தண்டு குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்இருள் நீக்கும் விளக்கு. (நப்பாலத்தனார்) (கு-உ) திருக்குறள் மக்கள் மன இருட்டை நீக்கும் விளக்காகும். அறம் அகல்; பொருள்திரி; இன்பம் நெய்; செஞ்சொல் தண்டு; குறள்வெண்பா தீ. இவ்வாறு அமைந்தது திருக்குறள் விளக்கு. ஆன்ற- சிறந்த. செம்சொல் தண்டு; தீ குறும்பாவா என்று மாற்றிப் பொருள் கொள்ளுக. 48. உள்ளக் கமலம் மலர்த்தி, உளத்துள்ள தள்ளற்கு அரியஇருள் தள்ளுதலால், வள்ளுவனார் வெள்ளைக் குறட்பாவும் வெம்கதிரும் ஒக்கும்எனக் கொள்ளத் தகும் குணத்தைக் கொண்டு. (குலபதி நாயனார்) (கு-உ) குறளும் சூரியனும் ஒரு தன்மையுடையன என்று கூறுகிறது இச்செய்யுள். தள்ளற்கு அரிய இருள்- நீக்க முடியாத அறியாமை என்னும் இருட்டை. வெள்ளைக்குறட்பா- குறள் வெண்பா. 49. பொய்ப்பால பொய்யேயாய்ப் போயின; பொய்அல்லா மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே; முப்பாலில் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால், வையத்து வாழ்வார் மனத்து. (தேனீக்குடிக் கீரனார்) (கு-உ)முப்பாலில்....மனத்து,பொய்ப்பால....விளங்கினவே’ என மாற்றுக. பொய்ப்பால- பொய்த் தன்மையுடையன. மெய்ப்பால- மெய்யாயின. 50. அறன் அறிந்தேம்; ஆன்ற பொருள் அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்; வீடு தெளிந்தேம்; மறன்எறிந்த வாள்ஆர் நெடுமாற! வள்ளுவனார் தம்வாயால் கேளாதனவெல்லாம்கட்டு. (கொடிஞாழன் மாணிபூதனார்) (கு-உ) மறன் எறிந்த....கேட்டு, அறன் அறிந்தேம்... தெளிந்தேம் என்று மாற்றிப் பொருள் கொள்க. ஆன்ற- சிறந்த. மறன் எறிந்த- பகைவரைக்கொன்ற. வாள்ஆர்- வாளாயும் ஏந்திய. 51. சிந்தைக்கு இனிய; செவிக்கு இனிய; வாய்க்குஇனிய; வந்த இருவினைக்கு மாமருந்து; முந்திய நன்னெறி நாம் அறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள்வெண் பா. (கவுணியனார்) (கு-உ) முந்திய- பழமையான. வந்த- தொடர்ந்து வந்த. இருவினை- நல்வினை, தீவினை. நல்நெறி- நல்லொழுக்கங்களை. நாப்புலமை- நாவன்மை யும் புலமையும் நிறைந்த. 52. வெள்ளி, வியாழம், விளங்கு இரவி, வெண்திங்கள் பொள்என நீக்கும் புறஇருளை; - தெள்ளிய வள்ளுவர் இன்குறள் வெண்பா, அகிலத்தோர் உள்இருள் நீக்கும் ஒளி. (மதுரைப்பாலாசிரியனார்) (கு-உ) இரவி- சூரியன். பொள்என- விரைவில். உள் இருள்- மன இருள். வெள்ளி முதலியன மனத்திருளை நீக்கமாட்டா. வெள்ளி, வியாழம் இரண்டும் பிரகாசம் உள்ள நட்சத்திரங்கள். 53. வள்ளுவர் பாட்டின் வளம் உரைக்கின், வாய்மடுக்கும் தெள் அமுதின் தீம்சுவையும் ஒவ்வாதுஆல்;- தெள்அமுதம் உண்டுஅறுவார் தேவர்; உலகு அடைய உண்ணும்ஆல் வண்தமிழின் முப்பால் மகிழ்ந்து. (ஆலங்குடி வங்கனார்) (கு-உ) வாய்மடுக்கும்- உண்ணப்படுகின்ற. தீம் சுவையும்- இனிய சுவையும். வண்தமிழின் முப்பால் மகிழ்ந்த உலகு அடைய உண்ணும் ஆல். முப்பால்- திருக்குறளாகிய அமுதத்தை. மகிழ்ந்து- மகிழ்ச்சியுடன். உலகுஅடைய- உலகம் முழுவதும். 54. கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். (இடைக்காடர்) (கு-உ) கடுகின்உள் ஏழு கடலையும் புகுத்தி வைத்தது போன்றது திருக்குறள். 55. அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள். (ஔவையார்) (கு-உ) அணுவுக்குள் ஏழு கடல்களையும் புகுத்தி வைத்தது போன்றது திருக்குறள். அதிகார அகராதி (எண்: அதிகாரஎண்) அடக்கம் உடைமை கண்விதப்பு அழிதல் அமைச்சு கயமை அரண் கல்லாமை அருள்உடைமை கல்வி அலர்அறிவுறுத்தல் கள்ளாமை அவர்வயின் விதும்பல் கள்உண்ணாமை அவா அறுத்தல் கனவுநிலை உரைத்தல் அவை அஞ்சாமை காதற்சிறப்பு உரைத்தல் அவை அறிதல் காலம் அறிதல் அழுக்காறாமை குடிசெயல்வகை அறன் வலியுறுத்தல் குடிமை அறிவுடைமை குறிப்பறிதல் (பொ.பா) அன்புடைமை குறிப்பறிதல் (கா. பா) ஆள்வினை உடைமை குறிப்புஅறிவுறுத்தல் இகல் குற்றம் கடிதல் இடன் அறிதல் கூடாநட்பு இடுக்கண் அழியாமை கூடாஒழுக்கம் இரவு கேள்வி இரவு அச்சம் கொடுங்கோன்மை இல்வாழ்க்கை கொல்லாமை இறைமாட்சி சாண்றாண்மை இனியவை கூறல் சிற்றினம் சேராமை இன்னா செய்யாமை சுற்றந் தழால் ஈகை சூது உட்பகை செங்கோன்மை உழவு செய்ந்நன்றி அறிதல் உறுப்புநலன் அழிதல் சொல்வன்மை ஊக்கம் உடைமை தகை அணங்குறுத்தல் ஊடல் உவகை தவம் ஊழ் தனிப்படர்மிகுதி ஒப்புரவு அறிதல் தீநட்பு ஒழுக்கம் உடைமை தீவினை அச்சம் ஒற்றாடல் துறவு கடவுள் வாழ்த்து தூது கண்ணோட்டம் தெரிந்து செயல்வகை தெரிந்து தெளிதல் புலவி நுணுக்கம் தெரிந்து வினையாடல் புலால் மறுத்தல் நடுவுநிலைமை புல் அறிவாண்மை நட்பு புறங்கூறாமை நட்பு ஆராய்தல் பெண்வழிச்சேறல் நலம் புனைந்து உரைத்தல் பெரியாரைத் துணைக் கோடல் நல்குரவு பெரியாரைப் பிழையாமை நன்றியில் செல்வம் நாடு பெருமை நாண்உடைமை பேதமை நாணுத்துறவு உரைத்தல் பொருள் செயல்வகை நிலையாமை பொழுதுகண்டு இரங்கல் நிறை அழிதல் பொறையுடைமை நினைந்தவர் புலம்பல் மக்கட்போறு நீத்தார் பெருமை மடியின்மை நெஞ்சொடு கிளத்தல் மருந்து நெஞ்சொடு புலத்தல் மன்னரைச் சேர்ந்து ஒழுகல் பகைத்திறம் தெரிதல் பகைமாட்சி மானம் பசப்புறு பருவரல் மெய்உணர்தல் படர்மெலிந்து இரங்கல் வரைவின் மகளிர் படைச்செருக்கு வலி அறிதல் படைமாட்சி வாய்மை பண்புடைமை வாழ்க்கைத் துணைநலம் பயன்இல சொல்லாமை வான்சிறப்பு பழமை விருந்துஓம்பல் பிரிவு ஆற்றாமை வினைசெயல்வகை பிறன் இல் விழையாமை வினைத்திட்பம் புகழ் வினைத்தூய்மை புணர்ச்சி மகிழ்தல் வெகுளாமை புணர்ச்சி விதும்பல் வெஃகாமை புலவி வெருவந்த செய்யாமை செய்யுள் முதற்குறிப்பு (எண்: பாட்டு எண்) அஃகாமை அரிதுஅரோ அஃகி அகன்ற அரிது ஆற்றி அகடு ஆரார் அரியவென்று அகப்பட்டி அரியகற்ற அகரமுதல அரியவற்றுள் அகலாது அரும்பேடன் அகழ்வரை அரும்கேடன் அகன்அமர்ந்து ஈதல் அரும்செல்வி அகன் அமர்ந்து செய் அருமைஉடைத்து அங்கணத்துள் அரும்பயன் அசைஇயற்கு அருவினைஎன்ப அச்சமே அருளொடும் அச்சம் அருள் அல்லது அஞ்சாமை அல் அருள் இல்லார்க்கு அஞ்சாமை ஈகை அருள்என் அஞ்சும் அருள்கருதி அஞ்சுவது அஞ்சா அருள்செல்வம் அஞ்சுவது ஓரும் அருள்சேர்ந்த அடக்கம் அருள்வெஃகி அடல்தகையும் அலந்தாரை அடல்வேண்டும் அலர்எழ அடுக்கியகோடி அலர்நாண அடுக்கிவரினும் அல்லல் அருள் அடுத்தது அல்லவைதேய அணங்கு கொல் அல்லற்பட்டு அணி அன்றோ அவர்தந்தார் அந்தணர் என் அவர்நெஞ்சு அந்தணர் நூற்கும் அவாஇல்லார்க்கு அமர்அகத்துஆ அவாஎன்ப அமர் அகத்துவன் அவாவினை அமிழ்தினும் அவிசொரிந்து அமைந்து ஆங்கு அவைஅறிந்து அரங்குஇன்றி அவை அறியார் அரம்பொரு அவ்வித்து அரம்போலும் அவ்வியநெஞ் அழக்கொண்ட அறன்நோக்கி அழச்சொல்லி அறன் வரையான் அழல்போலும் அறிகிலார் அழிவதூஉம் அறிகொன்று அழிவந்த அறிதோறு அழிவின் அறிந்து ஆற்றி அழிவின்றி அறிவிலார் அழுக்கற்று அறிவிலான் அழுக்காறு அவா அறிவினான் அழுக்காறு உடையார் அறிவினுள் அழுக்காறு உடையார் அறிவின்மை அழுக்காறு என அறிவு அற்றம் அழுக்காற்றின் அறிவுஉடையார் ஆவது அளவின் கண் அறிவிடையார் எல் அளவு அல்ல அறிவு உரு அளவு அளாவு அறுவாய் அளவு அறிந்தார் அறைபறை அளவு அறிந்து அற்கா அளித்து அஞ்சல் அற்றது அற ஆழி அற்றம் மறைக்கும் அறத்து ஆறு அற்றம் மறைத்தலோ அறத்து ஆற்றின் அற்றவர் அறத்தான் வரு அற்றார் அறத்திற்கே அற்றாரைத் அறத்தின்ஊங்கு அற்றா;ரக்கு அறம்கூறான் அற்றால் அளவு அறம்சாரா அற்றேம் அறம் சொல்லும் அனிச்சப்பூ அறம்பொருள் அனிச்சமும் அறவினையாது அன்பிலன் அறவியும் அன்பிலார் அறன்அழீஇ அன்பிற்கும் அறன்அறிந்து ஆண் அன்பின் வழி அறன் அறிந்து மூத்த அன்பின் விழை அறன் அறிந்து வெஃகா அன்பு அகத்து அறன் ஆக்கம் அன்பு அறிவு ஆராய் அற இயலான் அன்பு அறிவு தேற் அறன் இழுக்காது அன்புஈனும் அறன் ஆனும் அன்புடைமை ஆன்ற அறன் என அன்புடைமை இவ்வி அறன் கடை அன்புஓரீஇத் அன்புநாண் இடிப்பாரைஇல் அன்பும் இடுக்கண் கால் அன்புற்று இடுக்கண்படினும் அன்போடு இடுக்கண் வருங் அன்றுஅறிவாம் இடும்பைக்கு ஆகாறு அளவு இடும்பைக்கே ஆகு ஊழால் இடைதெரிந்து ஆக்கம் அதர் இணர்ஊழ்த்தும் ஆக்கம் இழந் இணர்எரிதோய் ஆக்கம் கருதி இதனை இதனால் ஆக்கமும் கேடும் இமைப்பின் ஆங்கு அமைவு இமையாரின் ஆபயன் குன்றும் இம்மைப் பிறப் ஆயும் அறிவினர் இயல்பாகும் ஆய்ந்து ஆய்ந்து இயல்பினான் ஆராஇயற்கை இயல்பு உளிக் ஆவிற்கு நீர் இயற்றலும் ஆள்வினையும் இரக்க ஆற்றாரும் ஆற்றி இரத்தலின் ஆற்றின்அளவு ஈக இரத்தலும் ஈதலே ஆற்றின் அளவு கற்க இரந்தும் உயிர் ஆற்றின் ஒழுக்கி இரப்பன் ஆற்றின் நிலைதளர் இரப்பாரை ஆற்றின் வருந்தா இரப்பான் வெகுளாமை ஆற்றுபவர்க்கும் இரவார் ஆற்றுவார் இக இரவு உள்ள ஆற்றுவார் பசி இரவுஎன்னும் ஆற்றுவார் பணி இருநோக்கு இகலான் ஆம் இருந்து உள்ளி இகலிற்கு எதிர் இருந்து ஓம்பி இகலின் மிகல் இருபுனலும் இகல்எதிர் இருமனப் இகல்என்ப இருமை வகை இகல் என்னும் இருவேறுஉலகத்து இகல்காணான் இருள்சேர் இரு இகழ்ச்சியின் இருள்நீங்கி இகழ்ந்து எள்ளாது இலக்கம் இடம் எல்லாம் இலங்கிழாய் இடன்இல் பரு இலம்என்று அசைஇ இடிக்கும் துணை இலம்என்று வெஃ இடிபுரிந்து இலர்பலர் இலன்என்று தீயவை இன்பம் ஒருவற்கு இலன் என்னும் இன்பம் கடல் இல்பிறந்தார் கண்அல் இன்பம் விழைஇடு இல்பிறந்தார் கண்ணே இன்பம் விழைவினை இல்லது என் இன்மை இடும்பை இல்லரை இன்மை என இல்லாளை இன்மை ஒருவ இல்லாள்கண் இன்மையின் இன்னாதது இல்லைதவறு இன்மையின் இன்னாது இல்வாழ்வான் இன்மையுள் இவறலும் இன்றி அமையா இழத்தொறூஉம் இன்றும்வருவது இழிவு அறிந்து இன்னா எனத்தான் இழுக்கல் உடையுழி இன்னா செய்தாரை இழுக்காமை இன்னாசெய்தார்க்கும் இழைத்தது இன்னாது இரக்கப் இளித்தக்க இன்னாது இனன் இளிவரின் இன்னாமை இளைதாக ஈட்டம் இவறி இளையர் ஈதல்இசைபட இறந்தமைந்த ஈத்துஉவக்கும் இறந்த வெகுளி ஈர்ங்கை விதிரார் இறந்தார் ஈவார்கண்என் இறப்பே புரிந்த ஈன்றபொழுதின் இறல்ஈனும் ஈன்றாள் பசிகாண் இறுதிபயப்பினும் ஈன்றாள் முகத்தே இறைகடியன் உடம்பாடு இலா இறைகாக்கும் உடம்பொடு உயிர் இனத்து ஆற்றி உடுக்கை இனம்போன்று உடுப்பதூஉம் இனி அன்ன உடைசெல்வம் இனிய உளவாக உடைத்தம் வலி இனைத்துணைத்து உடைமையுள் இனையர் இவர் உடையர் எனப் இன்கண் உடையார்முன் இன்சொலால் ஈத்து உட்கப்படாஅர் இன்சொலால் ஈரம் உட்பகை அஞ்சி இன்சொல் இனிது உணர்வது உடையார் இன்பத்துள் இன்பம் உணலினும் இன்பத்துள் விழை உண்டார்கண் இன்பம் இடை உண்ணற்க உண்ணாது உள்ளியதுஎய்தல் உண்ணாமை உள்ளது உள்ளினும் தீரா உண்ணாமை வேண்டும் உள்ளினே உதவிவரைத்து உள்ளுவது உப்பு அமைந்து உள்ளுவன்மன் உரை உயர்வு அமைந்து உள்ளுவன்மன் மறம் உயிர்உடம்பின் உறங்குவது உயிர்ப்ப உறன்முறை உய்த்தல் உறாஅதவர்க் உரம் ஒருவர்க்கு உறாஅதவர்போல் உரன்என்னும் உறாஅதோ உரன்நசைஇ உறாஅர்க்கு உருவுகண்டு உறின்உயிர் உருள்ஆயம் உறின்நட்டு உரைப்பார் உறுதோறு உலகத்தார்ல உறுபசியும் உலகத்தோடு உறுபொருளும் உலகம் தழீஇயது உறுப்பு அமைந்து உலைவிடத்து உறுப்பு ஒத்தல் உவக்காண் உறுவது சீர் உவந்து உறைசிறியார் உவப்ப உற்றநோய் நீக்கி உழந்து உழந்து உற்றவன் உழவினார் உற்றவன் உழுதுண்டு உற்றான் உழுவார் ஊக்கம் உழைப்பிரிந்து ஊடலின் உண்டு உளபோல் ஊடலின் தோற்றவர் உளர் எனினும் ஊடலின் தோன்றும் உளர்என்னும் ஊடல் உணங்க உளவரை ஊடல்உணர்தல் உள்ஒற்றி ஊடற்கண் உள்ளக்களித்தலும் ஊடியிருந்தேமா உள்ளத்தால் உள்ளலும் ஊடில்பெறுகுவம் உள்ளத்தார் ஊடியவரை உள்ளத்தால் பொய் ஊடுகமன்னோ உள்ளம் இலாதவர் ஊடுதல் காமத் உள்ளம் உடைமை ஊண்உடை உள்ளம்போன்று ஊதியம் உள்ளற்க ஊரவர்கெளவை உள்ளிய எல்லாம் ஊருணிநீர் ஊழிபெயரினும் எனைத்துணையர் ஊழின்பெருவலி எனைத்து நினைப் ஊழையும் உப்பக்கம் எனைத்தும் குறுகு ஊறுஓரால் எனைப்பகை ஊனைக்குறித்த எனைமாட்சித்து எச்சம்என்று எனைவகையால் எட்பகவு என்ஐமுன் எண்என்ப என்பு இலதனை எண்சேர்ந்த என்றும் ஒருவு எண்ணித்துணிக ஏதம் பெரும் எண்ணிய எண் ஏதிலார் ஆர எண்ணியார் எண் ஏதிலார்குற்றம் எண்பதத்தால் ஏதிலார்போல எண்பதத்தான் ஏந்திய கொள்கை எண்பொருள் ஏமுற்றவரினும் எதிரதா ஏரினும் நன்றால் எந்நன்றி ஏரின்உழாஅர் எப்பொருளும் ஏவவும் செய்கலான் எப்பொருள் எத் ஐந்துஅவித்தான் எப்பொருள் யார் ஐயத்தின் எய்தற்கு ஐயப்படாஅது எரியால் ஐயுணர்வு எல்லாப்பொருளும் ஒட்டார்பின் எல்லார்க்கும் எல்லாம் ஒண்நுதற்கு எல்லார்க்கும் நன் ஒண்பொருள் எல்லாவிளக்கும் ஒத்தது அறிவான் எல்லைக்கண் ஒப்புரவினால் எவ்வது உறைவது ஒருதலைவாய் எழுதுங்கால் ஒருநாள் எழுபிறப்பும் ஒருபொழுதும் எழுமை எழு ஒருமைக்கண் எளிது என ஒருமைச்செயல் எள்ளாத எண்ணி ஒருமைமகளிரே எள்ளாமை ஒருமையுள் ஆமை எள்ளின் இளி ஒலித்தக்கால் எற்றிற்கு உரியர் ஒல்லும்கருமம் எற்றுஎன்று ஒல்லும் வகையால் எனைத்தாலும் எஞ் ஒல்லும்வாய் எனைத்தானும் நல் ஒல்லது அறிவது எனைத்திட்பம் ஒழுக்கத்தின்எய் எனைத்துஒன்று ஒழுக்கத்தின்ஒல் ஒழுக்கத்து நீத்தார் ஒழுக்கமும் ஒழுக்கம் உடைமை ஒழுக்கம் உடையவர் ஒழுக்கம் விழுப்பம் ஒழுக்கு ஆறா ஒளி ஒருவர்க்கு ஒளியார்முன் ஒறுத்தாரை ஒறுத்தார்க்கு ஒறுத்துஆற்றும் ஒற்றினான் ஒற்றி ஒற்றுஒற்றி ஒற்றுஒற்று ஒற்றும்உரை ஒன்றாக உரை ஒன்றாக உலக ஒன்றாக நல்லது ஒன்றாமை ஒன்றானும் ஒன்றுஎய்தி ஒன்னார்த் ஓஓஅனிதே ஓஒதல்வேண்டும் ஓதி உணர்ந்தும் ஓம்பின் ஓர்த்து உள்ளம் ஓர்ந்துகண் கடல்அன்ன கடல்ஓடா கடன்அறிந்து கடன்என்ப கடாஅ உரு கடாஅ களிற் கடிது ஓச்சி கடிந்த கடிந்து கடுஞ்சொல்லன் கடுமொழியு கடைக்கொட்க கணைகொடிது கண்உடையார் கண்உள்ளார் கண்உள்ளில் கண்களவு கண்டது மன்னும் கண்டார் உயிர் கண்டுகேட்டு கண்ணிற்கு அணி கண்ணில் துனி கண்ணின் பசப் கண்நின்று கண்ணும்கொளச் கண்ணொடு கண்ணோட்டத்து கண்ணோட்டம் இல் கண்ணோட்டம் என் கண்தாம் கண்நிறைந்த கதம்காத்து கதும்என கயல்உண்கண் கரத்தலும் கரப்பவர்க்கு கரப்பினும் கரப்பு இடும்பை கரப்பு இலாநெஞ் கரப்பு இலார் கரவாது உவந்து கருமணியின் கருமத்தால் கருமம் சிதை கருமம் செய கருவியும் காலமும் கலங்காது கண்ட கலந்து கல்லா ஒருவன் கல்லாதமேற் கல்லாதவரின் கல்லாதவரும் கல்லாதான் ஒட்பம் கல்லாதான்சொல் கல்லார்ப்பிணிக்கும் கல்லான் வெகு கவறும் கவ்வையால் கழாஅக்கால் களவினால் கனவின்கண் களவு என்னும் களித்தறியேன் களித்தானை களித்தொறும் கள் உணாப் கள்வார்க்கு கறுத்து இன்னா கற்ககசடுஅற கற்றதனால் ஆய கற்றாருள் கற்றார் கற்றார்முன் கற்றிலன் ஆயினும் கற்று அறிந்தார் கற்றுஈண்டு கற்றுக் கண் கனவினால் உண் கனவினும் இன் காக்க பொருளா காக்கை கரவா காட்சிக்கு காணாச்சினத்தான் காணாதான் காணின் குவளை காணுங்கால் காண்கமன் காதல், காதல் காதலர் இல் காதலர்தூதொடு காதல் அவரிலர் காதன்மை காமக்கடல் காமக்கடும்புனல் உய் காமக் கடும்புனல் நீந்தி காமக் கணிச்சி காமமும் நாணும் காமம் உழந்து காமம் என காமம் விடு காமம் வெகுளி காலத்தினால் காலம் கருதி காலை அரும்பி காலைக்குச் செய்த கால்ஆழ் களரின் கானமுயல் குடம்பை குடிஆண்மை குடிஎன்னும் குடிசெய்வல் குடிசெய்வார்க்கு கூடிதழீஇக் குடிபுறம் குடிபிறந்தார் குடிபிறந்து குற் குடிபிறந்துதன் குடிமடிந்து குணநலம் குணம்என்னும் குணம்நாடி குணனும் குடிமையும் குணன் இலனாய் குலம் சுடும் குழல் இனிது குறிக்கொண்டு குறித்தது கூறா குறிப்பின்குறிப்புஉணரா குறிப்பின் குறிப்பு உணர் குறிப்பு அறிந்து குற்றம் இலனாய் குற்றமே காக்க குன்றின் அனையா குன்றன்னார் குன்றுஏறி கூடியகாமம் கூத்தாட்டு கூழும் குடியும் கூறாமை நோக்கி கூற்றத்தை கூற்றம் குதித்தலும் கூற்றமோ கூற்று உடன்று கெடல்வேண்டின் கெடாஅ வழிவந்த கெடுங்காலை கெடுப்பதூஉம் கெடுவல் யான் கெடுவாக கெட்டார்க்கு கேடறியாக் கேடுஇல் கேடும் பெருக்கமும் கேட்டார்ப் பிணிக்கும் கேட்டினும் உண்டு கேட்பினும் கேள் இழுக்கம் கையறியாமை கைம்மாறு கைவேல் கொக்குஒக்க கொடியார் கொடுமைஉ கொடியார் கொடுமையின் கொடுத்தலும் கொடுத்தும் கொடுப்பது அழுக்க கொடுப்பதூஉம் கொடும்புருவம் கொடைஅளி கொலைமேல் கொலையின் கொடி கொலைவினையர் கொல்லா நலத்தது கொல்லாமை கொல்லான் கொளப்பட்டேம் கொளற்கு அரிதாய் கொன்று அன்ன கோட்டுப்பூ கோள்இல் பொறி சமன் செய்து சலத்தால் பொருள் சலம்பற்றி சாதலின் இன்னாதது சாயலும் நாணும் சார்பு உணர்ந்து சால்பிற்குக் சான்றவர் சிதைவுஇடத்து சிறப்பறிய சிறப்புஈனும் செல்வமும் சிறப்புஈனும் செல்வம் சிறப்பொடு பூசனை சிறியார் உணர்ச்சி சிறுகாப்பின் சிறுபடையான் சிறுமை நமக்கு மீறுமை பல சிறுமையும் சிறுமையுள் சிறைகாக்கும் சிறைநலனும் சிற்றினம் அஞ் சிற்றின்பம் சினத்தைப் சினம் என்னும் சீரிடம் காணின் சீர்உடைச் செல்வர் சீரினும் சீர் சீர்மை சிற சுடச் சுடரும் சுவை ஒளி சுழலும் இசை சுழன்றும் ஏர்ப் சுற்றத்தால் சூழாமல் தானே சூழ்ச்சி முடிவு சூழ்வார்கண் செப்பம் உடை செப்பின் புணர்ச்சி செயற்கரிய செய் செயற்கரிய யாஉள செயற்கை அறி செயற்பால செய் செயற்பாலது செயிரின் தலைப் செய்க பொருளை செய்தக்க அல்ல செய்து ஏமம் செய்யாமல் செய்த செய்யாமல் செற் செய்வானை செய்வினை செருக்கும் செருவந்த செல்இடத்துக் செல்லா இடத் செல்லாமை செல்லான் கிழவன் செல்வத்துள் செல்விருந்து செவிஉணவில் செவி கைப்பச் செவிக்கு உணவு செவிச்சொல்லும் செவியின் சுவை செறாஅச் சிறு செறிதொடி செறிவு அறிந்து செறுநரை செறுவார்க்குச் செற்றவர் பின் செற்றார் எனக் செற்றார்பின் சென்ற இடத் சொலல்வல்லன் சொல்லப் பயன் சொல்லுக சொல்லில் சொல்லுக சொல்லை சொல்லுதல் சொல்கோட்டம் சொல்வணக்கம் ஞாலம் கருதினும் தகுதிஎன ஒன்று தக்கஆங்கு தக்கார் இனத்த தக்கார் தகவிலர் தஞ்சம் தமர் தணந்தமை தண்ணந்துறை தந்தை மகற்கு தந்நலம் தமர்ஆகி தம்நெஞ்சத்து தம்பொருள் தம்இல் இருந்து தம்மின் பெரியார் தம்மின் தம் தலைப்பட்டார் தலையின் இழிந்த தவமும் தவம் செய்வார் தவம் மறைந்து தவறுஇலர் தள்ளா தற்காத்து தனக்கு உவமை தனியே தன்உயிர்க்கு தன்உயிர்தான் தன்உயிர் நீப் தன்ஊன் தன்குற்றம் தன்துணை தன்நெஞ்சு தன்னைஉணர்த் தன்னைத்தான் காக் தன்னைத்தான் காத தாம் இன்புறுவது தாம்வீழ்வார் தம்வீழ தாம்வீழ்வார் மென் தாம்வேண்டின் தார்தாங்கி தாளாண்மை இல் தாளாண்மை என் தாள்ஆற்றி தானம் தவம் திறன்அல்ல திறன் அறிந்து தினல் பொருட்டால் தினைத்துணை நன்றி துனைத்துணையாம் தினைத்துணையும் தீஅளவு தீப்பால தீயவை செய்தார் தீயவை தீய தீயினால் சுட்ட தீவினையார் துஞ்சினார் துஞ்சுங்கால் துணைநலம் துப்பார்க்குத் துப்பின்எவன் துப்புரவு இல்லார் தும்முச் துளியின்மை துறந்தாரின் துறந்தார்க்குத் துறந்தார்க்கும் துறந்தார் படிவ துறந்தார் பெருமை துறப்பார்மன் துறைவன் துனியும் துன்பத்திற்கு துன்பம் உற துன்புறூஉம் துன்னாத் துன்னியார் தூங்காமை தூங்குக தூஉய்மை தூய்மை துணைமை தெண்ணீர் தெய்வத்தால் தெய்வம் தெரிதலும் தெரிந்த இனத் தெரிந்துணரா தெருளாதான் தெளிவு இலதனை தென்புலத்தார் தேரான் தெளிவும் தேரான் பிறனைத் தேவர்அனையர் தேறற்க தேறினும் தொகச்சொல்லி தொடங்கற்க தொடலைக் தொடிநோக்கி தொடிப் புழுதி தொடியொடு தொடில் கடின் தொட்டு அனைத்து தொல்வரவும் தொழுதகை தோன்றின் புக நகல்வல்லர் நகுதல் பொருட்டு நகைஈகை நகையும் நகையுள்ளும் நகைவகையர் நசைஇயார் நச்சப் நடுவுஇன்றி நட்டார் குறை நட்டார்க்கு நல்ல நட்டார்போல் நட்பிற்கு உறுப்புக் நட்பிற்கு வீற்றி நண்பு ஆற்றார் நத்தம் போல் நயந்தவர்க்கு நயந்தவர் நல் நயனொடு நயன்இலசொல் நயன்இலன் நயன் ஈன்று நயன்உடையான் நயன் சாரா நலக்கு உரியார் நலத்தகை நலத்தின்கண் நலம்வேண்டின் நல்ஆண்மை நல்லாறு என நல்ஆறு எனினும் நல்ஆற்றல் நல்லினத்தின் நல்குரவு நல்லவை நல்லார்கண் நவில்தொறும் நற்பொருள் நனவினான் கண்ட நனவினான் நம் நீத் நனவினான் நல்காக் நனவினால் நல்காதவரை நனவினால் நல்காரை நனவு என நன்மையும் நன்றிக்கு வித்து நன்றி மறப்பத நன்று அறிவாரின் நன்று ஆகும் நன்று ஆம்கால் நன்றுஆற்றல் நன்று என்ற நன்றே தரினும் நன்னீரை நாச்செற்று நாடாது நட்டலின் நாடுஎன்ப நாணாமை நாணால் உயிரை நாணும் மறந் நாணொடு நாண் அகத்து நாண் என ஒன் நாண் என்னும் நாண் வேலி நாநலம் என்னும் நாம் காதல் நாள் என ஒன்று நாள்தொறும் நாடி நாள்தோறம் நாடுக நிணம் தீயில் நிலத்து இயல்பால் நிலத்தின் கிடந் நிலவரை நீள்புகழ் நிலை அஞ்சி நிலைமக்கள் சால நிலையில் திரியா நில்லாதவற்றை நிழல் நீரும் நிறை அரியர் நிறை உடைமை நிறை உடையேன் நிறை நீர நிறை நெஞ்சம் நிறைமொழி நினைத்திருந்து நினைத்து ஒன்று நினைப்பவர் நீங்கான் வெகுளி நீங்கின் தெறூஉம் நீரும் நிழலது நீர் இன்று நுணங்கிய கேள்வி நுண்ணிய நூல்பல நுண்ணியம் நுண்மாண்நுழை நுனிக்கொம்பர் நூலாருள் நெஞ்சத்தார் நெஞ்சில் துறவார் நெடுங்கடலும் நெடுநீர் மறவி நெடும்புனலுள் நெய்யால் எரி நெருநல் உளன் நெருநற்றுச் நெருப்பினுள் நோக்கினாள் நோக்கி நோக்கினாள் நோக்கு நோதல் எவன் நோய் எல்லாம் நோய் நாடி நோவற்க நோனா உடம்பும் பகச்சொல்லி பகல் கருதிப் பற்றா பகல் வெல்லும் பகுத்து உண்டு பகைஅகத்துச் பகை அகத்துப் பகைஎன்னும் பகை நட்பாக் பகைநட்பாம் காலம் பகை, பாவம் பகைமையும் பசக்கமன் பசந்தாள் பசப்புஎன் படல்ஆற்றா படிஉடையார் படுபயன் வெஃகி படைகுடி கூழ் படைகொண்டார் பணியும்ஆம் என் பணிவுடையன் பணை நீங்கிப் பண்என்னாம் பண்டுஅறியேன் கூற் பண்பிலான் பெற்ற பண்புடையார் பதிமருண்டு பயன்இல பல்லார் பயன்இல் சொல் பயன்தூக்கார் பயன்தூக்கிப் பயன்மரம் உள் பரிந்தவர் நல்கார் பரிந்து ஓம்பி பரிந்துஓம்பிக் பரியது கூர்ங்கோட் பரியினும் ஆகா பருகுவார் போலி பருவத்தோடு ஓட்ட பருவரலும் பலகுடை நீழலும் பலசொல்லாக் கா பலசொல்லக் கா பலநல்ல கற்றக் பல்குழுவும் பல்லவை கற்றும் பல்லார் பகை பல்லா8 முனியப் பழகிய செல்வமும் பழகிய நட்புஎவன் பழமை எனப் பழிமலைந்து எய்திய பழியஞ்சிப் பாத் பழுது எண்ணும் பழையம் எனக் பற்றற்ற கண்ணும் பற்றுஅற்றகண்ணே பற்றுஅற்றேம் என் பற்றிவிடாஅ பற்றுள்ளம் என் பற்றுக பற்றற்றான் பனிஅரும்பி பன்மாயக் பாடுபெறுதியோ பாத்துஊன் பாலொடுதேன் பிணிஇன்மை பிணிக்கு மருந்து பிணைஏர்மட பிரித்தலும் பிரிவுஉரைக்கும் பிழைத்துணர்ந் பிறப்புஎன்னும் பிறப்புஒக்கும் பிறர்க்கு இன்னா பிறர்நாணத் தக்கது பிறர்பழியும் பிறவிப் பெருங் பிறன்பழி பிறன்பொருளாள் பிறன்மனை பீலிபெய் புகழ்இன்றால் புகழ்ந்தவை புகழ்பட புகழ்புரிந்த புக்கில் புணர்ச்சி புத்தேள் புரந்தார்கண் புலத்தலின் புலப்பல் புலப்பேன் புல்அவையுள் புல்லாது புல்லிக்கிடந்தேன் புல்லிவிடா புறம்குன்றி புறம்கூறி புறத்துஉறுப் புறம் தூய்மை புன்கண்ணை பெண்இயலார் பெண்ஏவல் பெண்ணின் பெருந் பெண்ணினால் பெயக்கண்டும் பெயல்ஆற்றா பெரிதுஆற்றி பெரிதுஇனிது பெரியாரைப் பெருக்கத்து பெருங்கொடையான் பெருமை உடையவர் பெருமைக்கும் பெருமைபெருமிதம் பெரும்பொருளால் பெறாஅமை பெறின் என்னாம் பெறும் அவற்றுள் பெற்றான் பெறின் பேணாது பெட்டார் பேணாது பெட்பவே பேணாது பெண்விழை பேதை பெருங்கெழீஇ பேதைப் படுக்கும் பேதைமை என்பது பேதைமைஒன்றோ பேதைமையுள் பேராண்மை பொச்சாப்பார்க்கு பொச்சாப்புக் பொதுநலத்தார் பொதுநோக்கான் பொய்படும் ஒன்றோ பொய்ம்மையும் பொய்யாமை அன்ன பொய்யாமை பொய் பொருளான்ஆம் பொருள் என்னும் பொருள் கருவி பொருள் கெடுத்து பொருள் அல்லவரை பொருள் அல்லவற் பொருள் அற்றார் பொருள் ஆட்சி பொருள்தீர்ந்த பொருள்பெண்டிர் பொருள்பொருளார் பொருள்நீங்கி பொருள் மாலை பொள்ளென பொறியின்மை பொறிவாயில் பொறித்தல் பொறை ஒருங்கு போற்றின் அரிய மகன் தந்தைக்கு மக்கள்மெய் மக்களே போல்வர் மங்கலம் என்ப மடல்ஊர்தல் மடிமடிக் மடிமை குடிமை மடிஇலா மடியுளாள் மடியைமடியா மடுத்த வாய் மணிநீரும் மணியில் திகழ் மண்ணோடு மதிநுட்பம் மதியும்மடந்தை மயிர்நீப்பின் மருந்துஆகித் மருந்தென மருந்தோ மற்று மருவுக மலர்அன்னகண்ணாள்அ மலர்அன்னகண்ணாள்மு மலரினும் மலர்கயணின் மலர்மிசை மழித்தலும் மறத்தல் வெகுளி மறந்தும் பிறன் மறப்பினும் ஒத்து மறப்பின் எவன் மறம் மானம் மறவற்க மறைந்தவை மறைபெறல் பறைப்பேன்மன் கா மறைப்பேன்மன் யான் மற்றுயான் மற்றும் தொடர்ப் மனத்தது மனத்தான் ஆம் மனத்தின் அமை மனத்து உளது மனத்துக்கண் மனத்தொடு மனநலத்தின் மனநலம் நன்கு மனநலம் மன்உயிர் மனந்தூயார்க்கு மனந்தூய்மை மனம்மாணா மனைத்தக்க மனைமாட்சி மனையாளை மனைவிழைவார் மன்னர்க்கு மன்னர் விழைப மன்னுயிர்எல் மன்உயிர் ஓம்பி மாதர்முகம் மாலைநோய் மாலையோ அல்லை மாறுபாடு இல்லா மிகச்செய்து மிகல்மேவல் மிகினும் குறையினும் மிகுதியால் முகத்தான் முகத்தின் இனிய முகத்தின் முதுக் முகம்நக நட்பது முகம்நோக்கி முகைமொக்குள் முடிவும் முதல் இலார்க்கு முயக்கு இடைத் முயங்கியகை முயற்சி திருவினை முரண்சேர்ந்த முறிமேனி முறைகோடி முறைசெய்து முறைப்பட முற்றியும் முற்றாது முற்றுஆற்றி முனை முகத்து முன்உறக் காவாது மேல்இருந்தும் மேற்பிறந்தார் மையல் ஒருவன் மோப்பக் யாகாவார் யாண்டுச் சென்று யாதனின் யாதானும் யாமும் உளேம் யாம்கண்ணின் யாம் மெய்யாக் யாரினும் காதலம் யான் எனது யான் நோக்கும் வகுத்தான் வகைஅறிந்து தற் வகைஅறிந்து வல்லவை வகைமாண்ட வகையறச் கூழாது வசையிலா வசைஎன்ப வசைஒழிய வஞ்சமனத்தான் வருகமன் வருமுன்னர்க் வருவிருந்து வரைவிலா மாண் வலியார்க்கு மாறு வலியார் முன் வலியில் நிலைமை வழங்குவது வழிநோக்கான் வழுத்தினாள் வறியார்க்கு வன்கண் குடி வாணிகம் செய் வாய்மை என வாராக்கால் வாரி பெருக்கி வாழ்தல் உயிர்க் வாழ்வார்க்கு வாளொடு என் வாள்அற்றுப் வாள்போல் பகை வான் உயிர் வான்நின்று வான்நோக்கி விசும்பின் துளி விடாஅது சென் விடுமாற்றம் விண்இன்று வித்தும் இடல் வியவற்க விருந்து புறத்ததா விருப்புஅறாச் விரைந்து தொழில் விலங்கொடு வில்லோர் உழவர் விழித்தகண் விழுப்புண்படாத விழுப்பேற்றின் விழைதகையான் விழையார் விளக்கு அற்றம் விளிந்தாரின் விளியும் என் வினை கலந்து வினைக்கண் வினை வினைக்கண் வினையு வினைக்கு உரிமை வினைசெய்வார் வினைத்திட்பம் வினைபகை வினையால் வினை வினைவலியும் வீழப்படுவார் வீழுநர் வீழப் வீழும் இருவர்க் வீழ்நாள் படாமை வீழ்வாரின் வீறுஎய்தி வெண்மை எனப் வெருவந்த வெள்ளத்து அனைய வெள்ளத்து அனையம் வேட்டபொழுதின் வேட்பத்தாம் வேட்பன சொல்லி வேண்டற்க வெஃகி வேண்டற்க வென்றி வேண்டாமை அன்ன வேண்டிய வேண்டியாங் வேண்டின் உண் வேண்டுங்கால் வேண்டுதல் வேண் வேல்அன்று வென்றி வேலொடு நின்றான் வைத்தான் வாய் வையத்துள் வாழ்