தொல்காப்பிய உரைத்தொகை - 14 பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் -1 முன்னைந்தியல் சி. கணேசையர் உரைவிளக்கக் குறிப்புக்களுடன் – 1948 மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 14 பொருளதிகாரம் - நச்சினார்க்கினியம் - 1 முன்னைந்தியல் முதற்பதிப்பு - 1948 சி. கணேசையர் (உரைவிளக்கக் குறிப்புக்களுடன்) மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 32+424 = 456 விலை : 710/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 456  f£lik¥ò : இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் “வாழிய வாழியவே” 1. வாழிய வாழியவே வாழிய வாழியவே எங்கள் இன்னுயிர் ஈழத் தமிழகம் - வாழிய 2. சூழும் கடலகம் வாழும் வளநிலம் ஈழத் தமிழகம் இன்னுயிர்த் தாயகம்-வாழிய 3. ஏழெழு நாடுகள் ஆழியுள் தாழினும் ஊழையும் வென்றஎம் ஈழத் தமிழகம் - வாழிய 4. இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்தவள் மன்னுயிர் காத்துள மாண்புலிச் செவ்வியர் - வாழிய 5. செங்களம் செல்வதைப் பொங்கலாய்க் கொண்டெமைக் காந்தளம் பூவெனக் காக்கும் பெருமையர் - வாழிய 6. கொள்ளை கொள்ளையாய்த் துள்ளும் இயற்கையை அள்ளிக் கொழித்துயர் வள்ளல் தாயவள் - வாழிய 7. ஞாலப் பழமொழி சாலத் திகழ்மொழி மேனலத் தமிழ்மொழி மூலப் புகழ்நிலம் - வாழிய - இரா. இளங்குமரன் புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் ஈழநாட்டு யாழ்ப்பாணத்திற்கு அணித்தாகவுள்ள புன்னாலைக் கட்டுவன் என்னும் ஊரில், சின்னையர் - சின்னம்மையார் என்பார் மகனாக கி.பி. 1878 -இல் பிறந்தார். கதிர்காமர், பொன்னம்பலர், குமரசாமி என்பார்களிடம் கல்விகற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியராய்ப் பணி செய்தார். தம் 32 ஆம் அகவையில் அன்னலக்குமி என்பாரை மணந்தார். பின்னர் 1921 முதல், சுன்னாகம் பிராசீன பாடசாலை என்னும் கல்விக் கழகத்தில் தலைமைப் பேராசிரியராக விளங்கி ஓய்வு பெற்றபின் முழுதுறு தமிழ்ப் பணியில் ஊன்றினார். கற்பதும், கற்பிப்பதும், நூல் யாப்பதுமாக நாளெல்லாம் பணி செய்தார். `மகாவித்துவான்’, `வித்துவ சிரோமணி’ என்னும் உயரிய விருதுகளும் பாராட்டுகளும் பெற்றார். உரையும் பாட்டும் வல்ல இவர் இயற்றிய சிற்றிலக்கியங்கள் பல. இவர் இயற்றிய `புலவர் சரிதம்’ 101 புலவர் பெருமக்கள் வரலாறுகளைக் கொண்டதாகும். தம்மிடம் பயின்ற மாணவர்களுக்குத் தொல்காப்பியம் பயிற்றும்போது எழுதிய அரிய குறிப்புகளையும், சி.வை. தாமோதரனார் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு, பவானந்தர் பதிப்பு, வையாபுரியார் பதிப்பு, கனக சபையார் பதிப்பு ஆகிய முப்பதிப்புகளையும் கிடைத்த ஏட்டுப் படிகளையும் ஒப்பிட்டுத் திருத்திய குறிப்புகளையும் விளக்கங்களையும் கொண்டு “ஈழகேசரி” அதிபர் நா. பொன்னையா அவர்கள் தம் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கப் பட்டவையே, புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் அவர்கள் பதிப்பாகும். நச்சினார்க்கினியர் - எழுத்ததிகார உரை, (1937) சேனாவரையர் - சொல்லதிகார உரை (1938) பேராசிரியர் - பொருளதிகாரப் பின்னான்கியல் உரை (1943) நச்சினார்க்கினியர் - பொருளதிகார முன்னைந்தியல் (1948) பதிப்பு உலகில், தனிப்பெருமை பெற்ற தொல்காப்பியப் பதிப்பு என்பது இந்நாள் வரை வெள்ளிடைமலையாக விளங்குவதாம் அவர் பதிப்பு. இவரியற்றிய கட்டுரைகள் சில மதுரைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ் இதழில் வெளிவந்தன. நிறைவில் துறவு வாழ்வு பூண்டவர் போல் வாழ்ந்து, தம் எண்பதாம் அகவையில் (1958) இயற்கை எய்தினார். சென்னைப் பல்கலைக் கழக வித்துவான் நிறைநிலைத் தேர்வுக்குப் பாடமாக இருந்த பேராசிரியம் தமிழகப் பரப்பில் கிட்டாத நிலையில் 1948 இல் ஈழத் திருமகள் அழுத்தகப் பதிப்பக வழியே பெற்று யான் கற்க வாய்த்தது. அதன் பெரும்பயன் கணேசனார் பதிப்புக் குறிப்பு, பதிப்பு அமைப்பு ஆயவற்றால் ஏற்பட்ட பூரிப்பினும் பன்மடங்கான பூரிப்பை ஏற்படுத்தியது பேராசிரியர் உரை. அவ்வுரையே, “உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம்” என்னும் அரியதோர் நூலைப் படைக்கத் தூண்டலாக அமைந்தது! முதற்கண் சை. சி. கழகத் தாமரைச் செல்வராலும் பின்னர்த் தமிழ்மண் பதிப்பகத்தாலும் பதிப்பிக்கப்பெற்றுத் தமிழ்வளம் ஆகியது. - இரா. இளங்குமரன் தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் குறுக்க விளக்கம் அகம். அகநானூறு ஆசார. ஆசாரக் கோவை ஆய்ச்சி. ஆய்ச்சியர் குரவை ஊர்சூழ். ஊர்சூழ்வரி எச்ச. எச்சவியல் எழு. தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஐங்குறு. ஐங்குறுநூறு கலி. கலித்தொகை களவழி. களவழி நாற்பது கானல். கானல்வரி குறள். திருக்குறள் குறுந். குறுந்தொகை கைக். கைக்கிளைப் படலம் சிலப். சிலப்பதிகாரம் சீவக. சீவகசிந்தாமணி சூளா. சூளாமணி செய். செய்யுளியல் சொல். சொல்லதிகாரம் திருச்சிற். திருச்சிற்றம்பலக் கோவையார் துறவு. துறவுச் சுருக்கம் துன்ப. துன்ப மாலை தொல். தொல்காப்பியம் நற். நற்றிணை நாலடி. நாலடியார் நான்மணி. நாண்மணிக்கடிகை நெடுநல். நெடுநல்வாடை பட். பட்டினப் பாலை பதிற். பதிற்றுப்பத்து பரி. பரிபாடல் பு.வெ. புறப்பொருள் வெண்பாமாலை புறம். புறநானூறு பொருந. பொருநராற்றுப்படை மதுரைக். மதுரைக்காஞ்சி மலைபடு. மலைபடுகடாம் முத்தொள். முத்தொள்ளாயிரம் முருகு. திருமுருகாற்றுப்படை வேட்டு. வேட்டுவரி உள்ளடக்கம் தொல்காப்பியம் ....... 1 இயலமைதி ....... 27 வாழ்வியல் விளக்கம் ....... 31 நச்சினார்க்கினியர் ....... 190 அணிந்துரை ....... 205 முதற் பதிப்பின் முகவுரை ....... 212 சிறப்புப் பாயிரம் ....... 225 பொருளதிகாரம் ....... 234 1. அகத்திணையியல் ....... 236 தொல்காப்பியம் பழந்தமிழ் நூல்களின் வழியே நமக்குக் கிடைத்துள்ள முழு முதல் இலக்கண நூல் தொல்காப்பியமே. ஆசிரியர், தொல்காப்பியம் என்னும் நூலை இயற்றியமையால்தான் தொல்காப்பியன் எனத் தம் பெயர் தோன்றச் செய்தார் என்பதைப் பாயிரம், தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்று தெளிவாகக் கூறுகிறது. தொல்காப்பியம் பழமையான இலக்கண மரபுகளைக் காக்கும் நூல் என்பதற்குப் பலப்பல சான்றுகள் இருப்பவும்,பழமையான காப்பியக்குடியில் தோன்றியவரால் செய்யப்பட்டது என்னும் கருத்தால், பழைய காப்பியக் குடியில் உள்ளான் என நச்சினார்க்கினியர் கூறினார். பழைய காப்பியக்குடி என்னும் ஆட்சியைக் கண்டு விருத்த காவ்யக்குடி என்பது ஒரு வடநாட்டுக்குடி என்றும், பிருகு முனிவர் மனைவி காவ்ய மாதா எனப்படுவாள் என்றும் கூறித் தொல்காப்பியரை வடநாட்டுக் குடி வழியாக்க ஆய்வாளர் சிலர் தலைப்படலாயினர். இம்முயற்சிக்கு நச்சினார்க்கினியர் உரையின் புனைவையன்றி நூற் சான்றின்மை எவரும் அறியத்தக்கதே. இவ்வாய்வுகளையும் இவற்றின் மறுப்புகளையும் தமிழ் வரலாறு முதற்றொகுதி1 (பக். 255 - 257) தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி2 (பக். 2, 3) தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம்3 (பக். 17-23) என்பவற்றில் கண்டு கொள்க. காப்பியர் தொல்காப்பியர் சிறப்பால் அவர் வழிவந்தவரும், அவரை மதித்துப் போற்றியவரும் அவர் பெயரைத் தம் மக்கட்கு இட்டுப் பெருக வழங்கினராதல் வேண்டும். இதனால் காப்பியாற்றுக் 1. இரா. இராகவ ஐயங்கார் 2. மு. இராகவ ஐயங்கார் 3. க. வெள்ளைவாரணனார் காப்பியன், வெள்ளூர்க் காப்பியன் என ஊரொடு தொடர்ந்தும், காப்பியஞ் சேத்தன், காப்பியன் ஆதித்தன் எனக் காப்பியப் பெயரொடு இயற்பெயர் தொடர்ந்தும் பிற்காலத்தோர் வழங்கலாயினர். இனிப் பல்காப்பியம் என்பதொரு நூல் என்றும் அதனை இயற்றியவர் பல்காப்பியனார் எனப்பட்டார் என்றும் கூறுவார் உளர். அப்பெயர்கள் பல்காயம் என்பதும் பல்காயனார் என்பதுமேயாம்; படியெடுத்தோர் அவ்வாறு வழுப்படச் செய்தனர் என்று மறுப்பாரும் உளர். தொல்காப்பியர் தமிழ் நாட்டாரே வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் ஆய்ந்து, தமிழியற்படி எழுத்தும் சொல்லும் பொருளும் ஆகிய முப்பகுப்பு இலக்கணம் செய்தவரும், போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவையும் (1006) வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் நாற்பெய ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியையும் (1336) தமிழென் கிளவியும் அதனோ ரற்றே (385) எனத் தமிழமைதியையும், வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே (884) என வடவெழுத்துப் புகாது காத்தலையும் கூறிய தொல்காப்பியரை வலுவான அகச்சான்று வாய்த்தால் அன்றி வடநாட்டவர் என்பது வரிசை இல்லை என்க. இனி, சமதக்கினியார் மகனார் என்பதும் திரணதூமாக் கினியார் இவர் பெயர் என்பதும் பரசுராமர் உடன் பிறந்தார் என்பதும் நச்சினார்க்கினியர் இட்டுக் கட்டுதலை அன்றி எவரும் ஒப்பிய செய்தி இல்லையாம். தொல்காப்பியப் பழமை சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் முற்பட்டதா? பிற்பட்டதா? ஆய்தல் இன்றியே வெளிப்பட விளங்குவது முற்பட்டது என்பது. எனினும் பிற்பட்டது என்றும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அளவினது என்றும் குறித்தாரும் உளராகலின் இவ்வாய்வும் வேண்டத் தக்கதாயிற்று. தொல்காப்பியர் பரிபாடல் இலக்கணத்தை விரிவாகக் கூறுகிறார். அவ்விலக்கணத்துள் ஒன்று, கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் நான்கு உறுப்புகளையுடையது அது என்பது. மற்றொன்று, காமப் பொருள் பற்றியதாக அது வரும் என்பது. இப்பொழுது கிடைத்துள்ள பரிபாடல்கள் இருபத்திரண்டனுள் ஆயிரம் விரித்த என்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. எஞ்சிய பாடல்கள் இருபத்து ஒன்றும் உறுப்பமைதி பெற்றனவாக இல்லை. பரிபாடல் திரட்டிலுள்ள இரண்டு பாடல்களுள் ஒரு பாடல் பலவுறுப்புகளை யுடையதாக உள்ளது. மற்றது உறுப்பற்ற பாட்டு. பரிபாடல் காமப் பொருள் பற்றியே வரும் என்பது இலக்கணமாக இருக்கவும் கடவுள் வாழ்த்துப் பொருளிலேயே பதினைந்து பாடல்கள் வந்துள்ளன. பரிபாடல் உயர் எல்லை நானூறடி என்பார். கிடைத்துள்ள பரிபாடல்களில் ஒன்றுதானும் சான்றாக அமையவில்லை. இவற்றால் அறியப்படுவது என்ன? தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ள இலக்கணங்களை யுடைய பரி பாடல்கள் இவையில்லை. அவ்விலக்கணங்களை யுடைய பரிபாடல்கள் இறந்தொழிந்தன. தலைச்சங்கத்தார் பாடியதாக வரும் எத்துணையோ பரிபாடல்களின் அமைதியைக் கொண்டது தொல்காப்பிய இலக்கணம். ஆதலால், பாடலமைதி யாலும் பொருள் வகையாலும் இம்மாற் றங்களையடைய நெடிய பலகாலம் ஆகியிருக்க வேண்டும் என்பதே அது. தொல்காப்பியர் குறளடி சிந்தடி அளவடி நெடிலடி கழிநெடிலடி என்பவற்றை எழுத்தளவு வகையால் சுட்டுகிறார். அவ்வடிவகை கட்டளையடி எனப்படும். அவ்வாறாகவும் சங்கப் பாடல்கள் சீர்வகை அடியைக் கொண்டனவாக உள்ளனவே யன்றிக் கட்டளையடிவழி யமைந்தவையாக இல்லை. முற்றாக இம்மாற்றம் அமைய வேண்டுமானால் நெட்ட நெடுங்கால இடைவெளி ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. தொல்காப்பியர் நேர், நிரை அசைகளுடன் நேர்பசை, நிரைபசை என்பவற்றையும் குறிக்கிறார். இந் நேர்பசை நிரைபசையை வேறு எவ்விலக்கண ஆசிரியரும் கொண்டிலர்; நேர் நிரை என்னும் இருவகை அசைகளையே கொண்டனர். கட்டளையடி பயிலாமை போலவே, இவ்வசைகளும் பயிலாமை தொல்காப்பியப் பழமையை விளக்குவதேயாம். யாப்பருங் கலத்திற்கு முற்பட்டது காக்கைபாடினியம். அந்நூலிலும் அவிநயம் முதலிய நூல்களிலும் இவ்விருவகை அசைகளும் இடம் பெறாமையால் இவற்றுக்கு மிகமுற்பட்ட நூல் தொல்காப்பியம் என்பது விளங்கும். காக்கைபாடினிய வழிவந்ததே யாப்பருங்கலம் ஆதலின் அதன் பழமை புலப்படும். பாட்டுயாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழி யாப்பு, பிசியாப்பு, அங்கதயாப்பு, முதுசொல்யாப்பு என எழுவகை யாப்புகளை எண்ணுகிறார் தொல்காப்பியர் (1336). இவற்றுள் பாட்டுயாப்பு நீங்கிய எஞ்சிய யாப்புகள் எவையும் சான்றாக அறியுமாறு நூல்கள் வாய்த்தில. ஆகலின் அந்நிலை தொல்காப்பியத்தின் மிகுபழமை காட்டும். பேர்த்தியரைத் தம் கண்ணெனக் காக்கும் பாட்டியரைச் சேமமட நடைப் பாட்டி என்கிறது பரிபாட்டு (10:36-7). பாட்டி என்பது பாண்குடிப் பெண்டிரைக் குறிப்பதைச் சங்கச் சான்றோர் குறிக்கின்றனர். ஆனால், தொல்காப்பியம் பாட்டி என்பது பன்றியும் நாயும் என்றும் நரியும் அற்றே நாடினர் கொளினே என்றும் (1565, 1566) கூறுகின்றது. பாட்டி என்னும் பெயரைப் பன்றி நாய் நரி என்பவை பெறும் என்பது இந் நூற்பாக்களின் பொருள். முறைப்பெயராகவோ, பாடினியர் பெயராகவோ பாட்டி என்பது ஆளப்படாத முதுபழமைக்குச் செல்லும் தொல்காப்பியம், மிகு நெட்டிடைவெளி முற்பட்டது என்பதை விளக்கும். இவ்வாறே பிறவும் உள. சங்கச் சான்றோர் நூல்களில் இருந்து சான்று காட்டக் கிடையாமையால் உரையாசிரியர்கள் இலக்கணம் உண்மையால் இலக்கியம் அவர் காலத்திருந்தது; இப்பொழுது வழக்கிறந்தது என்னும் நடையில் பல இடங்களில் எழுதுவாராயினர். ஆதலால், சங்கச் சான்றோர் காலத்திற்குப் பன்னூற்றாண்டுகளுக்கு முற்பட்டவர் தொல்காப்பியர் என்பது வெள்ளிடைமலையாம்! கள் என்னும் ஈறு அஃறிணைக்கு மட்டுமே தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது. அது திருக்குறளில் பூரியர்கள் மற்றையவர்கள் எனவும் கலித்தொகையில் ஐவர்கள் எனவும் வழங்குகின்றது. அன் ஈறு ஆண்பாற் படர்க்கைக்கே உரியதாகத் தொல்காப்பியம் கூறுகின்றது. இரப்பன், உடையன், உளன், இலன், அளியன், இழந்தனன், வந்தனன் எனத் தன்மையில் பெருவரவாகச் சங்கநூல்களில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியத்தில் வழங்காத ஆல், ஏல், மல், மை, பாக்கு என்னும் இறுதியுடைய வினையெச்சங்கள் சங்கநூல்களில் பயில வழங்குகின்றன. தொல்காப்பியத்தில் வினையீறாக வழங்கப்பட்ட மார், தோழிமார் எனப் பெயர்மேல் ஈறாக வழங்கப்பட்டுள்ளது. வியங்கோள்வினை, முன்னிலையிலும் தன்மையிலும் வாராது என்பது தொல்காப்பிய விதி. அவற்றில் வருதலும் சங்கப் பாடல்களில் காணக்கூடியது. கோடி என்னும் எண்பற்றித் தொல்காப்பியத்தில் குறிப்பு இல்லை. தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பனபோல எண்ணுப் பெயர்கள் (ஐ அம் பல் என்னும் இறுதியுடையவை) வழங்குவதைச் சுட்டும் அவர், கோடியைக் குறித்தார் அல்லர். சங்கப் பாடல்களில் கோடி, அடுக்கியகோடி என ஆளப் பெற்றுள்ளது. ஐ, அம், பல் ஈறுடைய எண்ணுப் பெயர்கள் அருகுதலும் சங்க நூல்களில் அறிய வருகின்றன. சமய விகற்பம் பற்றிய செய்திகள், சமணம் புத்தம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால், சங்க நூல்களில் இவற்றைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எழுத்து சொல் ஆகிய அளவில் நில்லாமல் வாழ்வியலாகிய பொருள் பற்றி விரித்துக் கூறும் தொல்காப்பியர் காலத்தில் இவை வழக்கில் இருந்திருந்தால் இவற்றைக் கட்டாயம் சுட்டியிருப்பார். ஆகலின் சமண, பௌத்தச் சமயங்களின் வரவுக்கு முற்பட்டவரே தொல்காப்பியர். ஆதலால் தொல்காப்பியர் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதேயன்றிப் பிற்பட்டதாகாது. இக்கருத்துகளைப் பேரா. க. வெள்ளைவாரணரும் (தமிழிலக்கிய வரலாறு - தொல்காப்பியம், பக். 87 - 96), பேரா.சி. இலக்குவனாரும் (தொல்காப்பிய ஆராய்ச்சி, பக். 12 - 14) விரித்துரைக்கின்றனர். சிலப்பதிகாரத்தால் இலங்கை வேந்தன் கயவாகு என்பான் அறியப்படுகிறான். அவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பர். அச் சிலப்பதிகாரத்தில் திருக்குறள் எடுத்தாளப்பட்டுள்ளது. ஆகலின் திருக்குறள் சிலப்பதிகாரக் காலத்திற்கு முற்பட்டது என்பது வெளிப்படை.. இளங்கோவடிகள் காலத்து வாழ்ந்தவரும், மணிமேகலை இயற்றியவரும், சேரன் செங்குட்டுவன் இளங்கோவடிகள் ஆகியோருடன் நட்புரிமை பூண்டவரும், தண்டமிழ் ஆசான் சாத்தன் என இளங்கோவடிகளாரால் பாராட்டப்பட்டவரு மாகிய கூலவாணிகன் சாத்தனார், திருவள்ளுவரைப் பொய்யில் புலவன் என்றும், திருக்குறளைப் பொருளுரை என்றும் குறித்துக் கூறிப் பாராட்டுகிறார். ஆகலின், சிலப்பதிகார மணிமேகலை நூல்களுக்குச் சில நூற்றாண்டுகளேனும் முற்பட்டது திருக்குறள் எனத் தெளியலாம். அத் திருக்குறளுக்கு முப்பால் கொள்கை அருளியது தொல்காப்பியம். அறமுதலாகிய மும்முதற் பொருள் என்பது தொல்காப்பியம். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு என வருவதும் தொல்காப்பியம். அது வகுத்தவாறு அறம் பொருள் வழக்காறுகள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளதுடன், இன்பத்துப்பாலோ, புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனத் தொல்காப்பியர் சொல்லும் உரிப்பொருள் ஐந்தற்கும் முறையே ஐந்தைந்து அதிகாரங்களாக 25 அதிகாரங்கள் கொண்டு முற்றாகத் தொல்காப்பிய வழியில் விளங்க நூல் யாத்தவர் திருவள்ளுவர். ஆகலின் அத் திருக்குறளின் காலத்திற்குப் பன்னூற்றாண்டு முற்பட்ட பழமையுடையது தொல்காப்பியம் என்பது தெளிவுமிக்க செய்தியாம். திருக்குறள் அறம் என்று சுட்டப்பட்டதுடன், குறள் தொடர்களும் குறள் விளக்கங்களும் பாட்டு, தொகை நூல்களில் இடம் பெற்ற தொன்மையது திருக்குறள். அதற்கும் முற்பட்டது தொல்காப்பியம். இனித் தொல்காப்பியத்தில் வரும் ஓரை என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயன்றவர் உளர். ஓரை அவர் கருதுமாப்போல ஹோரா என்னும் கிரேக்கச் சொல் வழிப்பட்டதன்று. அடிப்பொருள் பாராமல் ஒலி ஒப்புக் கொண்டு ஆய்ந்த ஆய்வின் முடிவே அஃதாம். யவனர் தந்த வினைமாண் நன்கலம் இவண் வந்ததும், அது பொன்னொடு வந்து கறியொடு (மிளகொடு) பெயர்ந்ததும், யவன வீரர் அரண்மனை காத்ததும் முதலாகிய பல செய்திகள் சங்க நூல்களில் பரவலாக உள. அக்காலத்தில் அவர்கள் தோகை அரி முதலிய சொற்களை அறிந்தது போல அறிந்து கொண்ட சொல் ஓரை என்பது. அச் சொல்லை அவர்கள் அங்கு ஹோரா என வழங்கினர். கிரேக்க மொழிச் சொற்கள் பல தமிழ்வழிச் சொற்களாக இருத்தலைப் பாவாணர் எடுத்துக் காட்டியுள்ளார். ஓரை என்பது ஒருமை பெற்ற - நிறைவு பெற்ற - பொழுது. âUkz¤ij KG¤j« v‹gJ«, âUkz ehŸ gh®¤jiy KG¤j« gh®¤jš v‹gJ«, âUkz¡ fhšnfhis ‘KG¤j¡fhš’ v‹gJ«, ‘v‹d ïªj X£l«; KG¤j« jt¿¥nghFkh? என்பதும் இன்றும் வழக்கில் உள்ளவை. முழுமதி நாளில் செய்யப்பட்ட திருமணமே முழுத்தம் ஆயிற்று. இன்றும் வளர்பிறை நோக்கியே நாள் பார்த்தலும் அறிக. ஆராய்ந்து பார்த்து - நாளும் கோளும் ஆராய்ந்து பார்த்து - நல்லவையெல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் பொழுதே நற்பொழுது என்னும் குறிப்பால் அதனை ஓரை என்றனர். இத்திறம் அந்நாள் தமிழர் உடையரோ எனின், செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல, இனைத்தென்போரும் உளரே என்னும் புறப்பாடலை அறிவோர் ஓரையைப் பிறர்வழியே நம் முன்னோர் அறிந்தனர் என்னார். உண்கலத்தைச் சூழ வைத்திருந்த பக்கக் கலங்களை, நாள்மீன் விரவிய கோள் மீனுக்கு உவமை சொல்லும் அளவில் தெளிந்திருந்த அவர்கள், ஓரையைப் பிறர் வழியே அறிந்தனர் என்பது பொருந்தாப் புகற்சியாம். தொல்காப்பியர் சமயம் தொல்காப்பியனார் சமயம் பற்றியும் பலவகைக் கருத்துகள் உள. அவர் சைவர் என்பர். சைவம் என்னும் சொல் வடிவம் மணிமேகலையில்தான் முதற்கண் இடம் பெறுகிறது. பாட்டு தொகைகளில் இடம் பெற்றிலது. சேயோன், சிவன் வழிபாடு உண்டு என்பது வேறு. அது சைவ சமயமென உருப்பெற்றது என்பது வேறு. ஆதலால் தொல்காப்பியரைச் சைவரெனல் சாலாது. இனி, முல்லைக்கு முதன்மையும் மாயோனுக்குச் சிறப்பும் தருதல் குறித்து மாலியரோ எனின், குறிஞ்சி முதலா உரிப்பொருளும் காலமும் குறித்தல் கொண்டு அம் முதன்மைக் கூறும் பொருள்வழி முதன்மை எனக் கொள்ளலே முறை எனல் சாலும். தொல்காப்பியரை வேத வழிப்பட்டவர் என்னும் கருத்தும் உண்டு. அஃதுரையாசிரியர்கள் கருத்து. நூலொடு பட்ட செய்தியன்றாம். சமயச் சால்பில் ஓங்கிய திருக்குறளை - வேத ஊழியைக் கண்டித்த திருக்குறளை - வேத வழியில் உரை கண்டவர் இலரா? அது போல் என்க. தொல்காப்பியரைச் சமணச் சமயத்தார் என்பது பெருவழக்கு. அவ்வழக்கும் ஏற்கத்தக்கதன்று. அதன் சார்பான சான்று தொல்காப்பியத்தில் இல்லை. ஆனால் அச்சமயம் சார்ந்தார் அல்லர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. சமணச் சமய நூல்களாக வழங்குவன அருக வணக்கம் சித்த வணக்கம் உடையவை. அவ்வாறு பகுத்துக் கூறாவிடினும் அருக வணக்கம் உடையவை. சமணச் சமய நூல்களாகக் கிடைப்பவற்றை நோக்கவே புலப்படும். தொல்காப்பியர் காலத்தில் கடவுள் வாழ்த்து நூன் முகப்பில் பாடும் மரபில்லை எனின், அவர் சமணச் சமயத்தார் என்பதும் இல்லை என்பதே உண்மை. என்னெனின் சமணர் தம் சமயத்தில் அத்தகு அழுந்திய பற்றுதல் உடையவர் ஆதலால். சமணச் சமயத்தார் உயிர்களை ஐயறிவு எல்லையளவி லேயே பகுத்துக் கொண்டனர். ஆறாம் அறிவு குறித்து அவர்கள் கொள்வது இல்லை. மாவும் மாக்களும் ஐயறி வினவே என்னும் தொல்காப்பியர், மக்கள் தாமே ஆறறி வுயிரே என்றும் கூறினார். நன்னூலார் சமணர் என்பதும் வெளிப்படை. அவர் ஐயறிவு வரம்பு காட்டும் அளவுடன் அமைந்ததும் வெளிப்படை. சமணச் சமயத்தார் இளமை, யாக்கை, செல்வ நிலையாமை களை அழுத்தமாக வலியுறுத்துவர். துறவுச் சிறப்புரைத்தலும் அத்தகையதே. ஆகவும் நிலையாமையையே கூறும் காஞ்சித் திணையைப் பாடுங்காலும், நில்லா உலகம் புல்லிய நெறித்தே என உலகம் நிலையாமை பொருந்தியது என்ற அளவிலேயே அமைகிறார். காமஞ் சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (1138) என அன்பு வாழ்வே அருள் வாழ்வாம் தவவாழ்வாக வளர்நிலையில் கூறுகிறார். இல்லற முதிர்வில் தவமேற்கும் நிலை சமணம் சார்ந்ததன்று. அஃது இம்மண்ணில் தோன்றி வளர்ந்து பெருகிய தொல் பழந்தமிழ் நெறி. தொல்காப்பியர் சமணச் சமயத்தார் எனின் அகத்திணை யியல் களவியல் கற்பியல் பொருளியல் என அகப் பொருளுக்குத் தனியே நான்கு இயல்கள் வகுத்ததுடன் மெய்ப்பாட்டியல் செய்யுளியல் உவம இயல் என்பனவற்றிலும் அப்பொருள் சிறக்கும் இலக்கணக் குறிப்புகளைப் பயில வழங்கியிரார். காமத்தைப் புரைதீர்காமம் என்றும் (1027) காமப் பகுதி கடவுளும் வரையார் என்றும் (1029) கூறியிரார். ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது தேனது வாகும் என்பது போலும் இன்பியல் யாத்திரார். கிறித்தவத் துறவு நெறிசார் வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கப் பொருளதி காரம் காண்பார் இதனை நன்கு அறிவார். சிந்தாமணியாம் பாவிகத்தை எடுத்துக்காட்டுவார் எனின் அவர், திருத்தக்கதேவர் பாடிய நரிவிருத்தத்தையும் கருதுதல் வேண்டும். பாட இயலாது என்பதை இயலுமெனக் காட்ட எழுந்தது அந்நூல் என்பதை யும், காமத்தைச் சூடிக் கழித்த பூப்போல் காவிய முத்திப் பகுதியில் காட்டுவதையும் கருதுவாராக. கடவுள் நம்பிக்கை தொல்காப்பியர் கடவுள் வாழ்த்துக் கூறவில்லை எனினும், கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்றும் (1034), புறநிலை வாழ்த்து, வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து பொலிமின் என்பது என்றும் ஆளும் இடங்களில் தெளிவாகக் கடவுள் வாழ்த்து என்பதையும் வழிபடு தெய்வம் என்பதையும் குறிக்கிறார். மேலும் கருப்பொருள் கூறுங்கால் தெய்வம் உணாவே என உணவுக்கு முற்படத் தெய்வத்தை வைக்கிறார். உலகெலாம் தழுவிய பொதுநெறியாக இந்நாள் வழங்கும் இது, பழந்தமிழர் பயில்நெறி என்பது விளங்கும். ஆதலால் பழந்தமிழர் சமயநெறி எந்நெறியோ அந்நெறியே தொல்காப்பியர் நெறி எனல் சாலும். வாகைத் திணையில் வரும், கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை, அருளொடு புணர்ந்த அகற்சி, காமம் நீத்தபால் என்பனவும், காஞ்சித் திணையில் வரும் தபுதார நிலை, தாபத நிலை, பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்து என்பனவும் பழந்தமிழர் மெய்யுணர்வுக் கோட்பாடுகள் எனக் கொள்ளத் தக்கன. கொற்றவை நிலை, வேலன் வெறியாட்டு, பூவைநிலை காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என வரும் வெட்சிப் பகுதிகள் பழந் தமிழர் வழிபாட்டியலைக் காட்டுவன. சேயோன் மாயோன் வேந்தன் வண்ணன் என்பார், குறிஞ்சி முதலாம் திணைநிலைத் தெய்வங்களெனப் போற்றி வழிபடப் பட்டவர் என்பதாம். ஆசிரியர் திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடினாலும், அவர் இன்ன சமயத்தவர் என்பதற்குரிய திட்டவட்டமான அகச்சான்று இல்லாமை போலத் தொல்காப்பியர்க்கும் இல்லை. ஆகவே சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாத பொதுநெறிக் கொள்கையராம் வள்ளுவரைப் போன்றவரே தொல்காப்பியரும் என்க. தொல்காப்பியக் கட்டொழுங்கு தொல்காப்பியம் கட்டொழுங்கமைந்த நூல் என்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்க்கும் நன்கு விளங்கும். இன்ன பொருள் இத்தட்டில் என்று வைக்கப்பட்ட ஐந்தறைப் பெட்டியில் இருந்து வேண்டும் பொருளை எடுத்துக் கொள்வது போல் எடுத்துக்கொள்ள வாய்த்தது தொல்காப்பியம். அதனையே பாயிரம் முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்ததாகக் குறிக்கின்றது. எழுத்து சொல் பொருள் என்னும் மூன்றதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒன்பது ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் அதன் கட்டமைதிச் சிறப்புக் காட்டுவதாம். ஆயிரத்தின் மேலும் அறுநூற்றுப் பஃதென்ப பாயிரத்தொல் காப்பியங்கற் பார் என்பது தொல்காப்பிய நூற்பா அளவினைக் கூறுவதொரு வெண்பா. ஆனால் உரையாசிரியர்களின் அமைப்புப்படி 1595 முதல் 1611 நூற்பா வரை பல்வேறு எண்ணிக்கையுடையவாய் அமைந்துள்ளன. இக்கணக்கீடும், தொல்காப்பியர் சொல்லியதோ, பனம்பாரனார் குறித்ததோ அன்று. உரையாசிரியர்களின் காலத்தவரோ அவர்களின் காலத்திற்கு முன்னே இருந்த மூலநூற்பா எல்லையில் கணக்கிட்டறிந்த ஒருவரோ கூறிய தாகலாம். தொல்காப்பிய அடியளவு 3999 என்று அறிஞர் வ.சுப. மாணிக்கனார் (தொல்காப்பியக்கடல் பக். 95) எண்ணிக் கூறுவர். ஏறக்குறைய 5630 சொல் வடிவங்கள் தொல்காப்பியத்தில் உள்ளமையையும் கூறுவர். அவர் தொல்காப்பிய இலக்கணத் தைக் காண்பதற்குத் தொல்காப்பியத்தையே இலக்கியமாகக் கொள்ளலாம். தன்னைத் தானே விளக்கிக் காட்டுதற்குரிய அவ்வளவு பருமனுடையது தொல்காப்பியம் என்று வாய்மொழிகின்றார். முப்பகுப்பு தனியெழுத்துகள், சொல்லில் எழுத்தின் நிலை, எழுத்துப் பிறக்கும் வகை, புணர் நிலையில் எழுத்தமைதி என்பவற்றை விரித்துரைப்பது எழுத்ததிகாரம். நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன எழுத்ததிகார இயல்கள். எழுத்துகள் சொல்லாம் வகை, பெயர்கள் வேற்றுமையுரு பேற்றல், விளிநிலை எய்தல், பெயர் வினை இடை உரி என்னும் சொல் வகைகள் இன்னவற்றைக் கூறுவது சொல்லதிகாரம். கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன சொல்லதிகார இயல்கள். இன்ப ஒழுக்க இயல்பு, பொருள் அற ஒழுக்க இயல்பு, களவு கற்பு என்னும் இன்பவியற் கூறுகள், பொருளியல் வாழ்வில் நேரும் மெய்ப்பாடுகள், பொருளியல் நூலுக்கு விளக்காம் உவமை, செய்யுளிலக்கணம், உலக வழக்கு செய்யுள் வழக்கு என்பவற்றின் மரபுகள் ஆகியவற்றைக் கூறுவது பொருளதிகாரம். அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பன பொருளதிகார இயல்கள். எடுத்துக்கொண்ட பொருளின் அடிக்கருத்தை முதற்கண் கூறி, பின்னர் வித்தில் இருந்து கிளரும் முளை இலை தண்டு கிளை கவடு பூ காய் கனி என்பவை போலப் பொருளைப் படிப்படியே வளர்த்து நிறைவிப்பது தொல்காப்பியர் நடைமுறை. எழுத்துகள் இவை, இவ்வெண்ணிக்கையுடையன என்று நூன் மரபைத் தொடங்கும் ஆசிரியர், குறில் நெடில் மாத்திரை, உயிர் மெய் வடிவு உயிர்மெய், அவற்றின் ஒலிநிலைப்பகுப்பு, மெய்ம்மயக்கம், சுட்டு வினா எழுத்துகள் என்பவற்றைக் கூறும் அளவில் 33 நூற்பாக்களைக் கூறி அமைகிறார். முப்பத்து மூன்றாம் நூற்பாவை, அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் உளவென மொழிப இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்கிறார். இயலிலக்கணம் கூறும் ஆசிரியர் இசையிலக்கணம் பற்றிய நூல்களில் இவ்வெழுத்துகளின் நிலை எவ்வாறாம் என்பதையும் சுட்டிச் செல்லுதல் அருமையுடையதாம். அவ்வாறே ஒவ்வோர் இயலின் நிறைவிலும் அவர் கூறும் புறனடை நூற்பா, மொழிவளர்ச்சியில் தொல்காப்பியனார் கொண்டிருந்த பேரார்வத்தையும் காலந்தோறும் மொழியில் உண்டாகும் வளர்நிலைகளை மரபுநிலை மாறாவண்ணம் அமைத்துக் கொள்வதற்கு வழிசெய்வதையும் காட்டுவனவாம். உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே. (405) என்பது குற்றியலுகரப் புணரியல் புறனடை கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும் விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின் வழங்கியல் மருங்கின் உணர்ந்தனர் ஒழுக்கல் நன்மதி நாட்டத்து என்மனார் புலவர் (483) என்பது எழுத்ததிகாரப் புறனடை. அன்ன பிறவும் கிளந்த அல்ல பன்முறை யானும் பரந்தன வரூஉம் உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித் தோம்படை ஆணையிற் கிளந்தவற் றியலாற் பாங்குற உணர்தல் என்மனார் புலவர். (879) என்பது உரியியல் புறனடை. இன்னவற்றால் தொல்காப்பியர் தொன்மையைக் காக்கும் கடப்பாட்டை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் நிகழ்கால எதிர்கால மொழிக் காப்புகளையும் மேற்கொண்டிருந்தவர் என்பது இவ்வாறு வரும் புறனடை நூற்பாக்களால் இனிதின் விளங்கும். தொல்காப்பியம், இலக்கணம் எனினும் இலக்கியமென விரும்பிக் கற்கும் வண்ணம் வனப்பு மிக்க உத்திகளைத் தொல்காப்பியர் கையாண்டு நூலை யாத்துள்ளார். இலக்கிய நயங்கள் எளிமை : சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையாகச் சொல்கிடந்தவாறே பொருள் கொள்ளுமாறு நூற்பா அமைத்தலும், எளிய சொற்களையே பயன்படுத்துதலும் தொல்காப்பியர் வழக்கம். எழுத்தெனப் படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப மழவும் குழவும் இளமைப் பொருள ஓதல் பகையே தூதிவை பிரிவே வண்ணந் தானே நாலைந் தென்ப ஓரியல் யாப்புரவு ஒன்றைக் கூறுங்கால் அதன் வகைகளுக்கெல்லாம் ஒரே யாப்புரவை மேற்கொள்ளல் என்பது தொல்காப்பியர் வழக்கம். வல்லெழுத் தென்ப கசட தபற மெல்லெழுத் தென்ப ஙஞண நமன இடையெழுத் தென்ப யரல வழள சொன்மீட்சியால் இன்பமும் எளிமையும் ஆக்கல் ஓரிலக்கணம் கூறுங்கால் சிக்கல் இல்லாமல் பொருள் காண்பதற்காக வேண்டும் சொல்லைச் சுருக்காமல் மீளவும் அவ்விடத்தே சொல்லிச் செல்லுதல் தொல்காப்பியர் வழக்கம். அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு குறித்துவரு கிளவி முதலெழுத் தியையப் பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும் பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும் தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும் தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும் மூன்றே திரிபிடன் ஒன்றே இயல்பென ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே என்னும் நூற்பாவைக் காண்க. இவ்வியல்பில் அமைந்த நூற்பாக்கள் மிகப் பல என்பதைக் கண்டு கொள்க. நூற்பா மீட்சியால் இயைபுறுத்தல் ஓரிடத்துச் சொல்லப்பட்ட இலக்கணம் அம்முறை யிலேயே சொல்லப்படத் தக்கதாயின் புதிதாக நூற்பா இயற்றாமல், முந்தமைந்த நூற்பாவையே மீளக்காட்டி அவ்வவ் விலக்கணங்களை அவ்வவ்விடங்களில் கொள்ளவைத்தல் தொல்காப்பிய ஆட்சி. இது தம் மொழியைத் தாமே எடுத்தாளலாம். அளபெடைப் பெயரே அளபெடை இயல தொழிற்பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல என்பவற்றைக் காண்க. எதுகை மோனை நயங்கள் எடுத்துக் கொண்டது இலக்கணமே எனினும் சுவைமிகு இலக்கிய மெனக் கற்குமாறு எதுகை நயம்பட நூற்பா யாத்தலில் வல்லார் தொல் காப்பியர். வஞ்சி தானே முல்லையது புறனே எஞ்சா மண்ணசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே. ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும் இவை தொடை எதுகைகள். இவ்வாறே ஐந்தாறு அடிகளுக்கு மேலும் தொடையாகப் பயில வருதல் தொல்காப்பியத்துக் கண்டு கொள்க. மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் இவை சீர் எதுகைகள். விறப்பும் உறப்பும் வெறுப்பும் செறிவே நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை முன்னதில் முழுவதும் எதுகைகளும், பின்னதில் முழுவதும் மோனைகளும் தொடைபடக் கிடந்து நடையழகு காட்டல் அறிக. முன்னது - முற்றெதுகை; பின்னது - முற்றுமோனை. வயவலி யாகும் வாள்ஒளி யாகும் உயாவே உயங்கல் உசாவே சூழ்ச்சி இவை மோனைச் சிறப்பால் அடுத்த தொடரைக் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இதனை எடுத்து வருமோனை எனலாம். அடைமொழி நடை மரம்பயில் கூகை, செவ்வாய்க் கிளி, வெவ்வாய் வெருகு, இருள்நிறப் பன்றி, மூவரி அணில், கோடுவாழ் குரங்கு, கடல்வாழ் சுறவு, வார்கோட்டி யானை என அடை மொழிகளால் சுவைப்படுத்துதல் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. இழுமென் மொழியால் விழுமியது பயிலல் எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும் இவ்வாறு ஒலி நயத்தால் கவர்ந்து பொருளை அறிந்துகொள்ளச் செய்வதும் தொல்காப்பியர் உத்திகளுள் ஒன்று. மாத்திரை முதலா அடிநிலை காறும் நோக்குதற் காரணம் நோக்கெனப் படுமே ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும் என எடுத்த இலக்கணத்தை அச்சொல்லாட்சியாலேயே விளக்கிக் காட்டுவதும் தொல்காப்பிய நெறி. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் என இயலின் பெயர் குறிக்கும் மாற்றானே இலக்கணமும் யாத்துக் காட்டியமை நூற்பாவுள் தனி நூற்பாவாகிய பெற்றிமையாம். வரம்பு இளமைப் பெயர், ஆண்மைப் பெயர், பெண்மைப் பெயர் என்பவற்றை முறையே கூறி விளக்கிய ஆசிரியர் பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என நிறைவித்தல் நூல் வரம்புச் சான்றாம். செய்யுளியல் தொடக்கத்தில் செய்யுள் உறுப்புகள் மாத்திரை முதலாக முப்பத்து நான்கனை உரைத்து அவற்றை முறையே விளக்குதலும் பிறவும் திட்டமிட்ட நூற்கொள்கைச் சிறப்பாக அமைவனவாம். வகரக் கிளவி நான்மொழி ஈற்றது அம்மூன் றென்ப மன்னைச் சொல்லே இன்னவாறு வருவனவும் வரம்பே. விளங்க வைத்தல் விளங்கவைத்தல் என்பதொரு நூலழகாகும். அதனைத் தொல்காப்பியனார் போல விளங்க வைத்தவர் அரியர். தாமென் கிளவி பன்மைக் குரித்தே தானென் கிளவி ஒருமைக் குரித்தே ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி இருபாற்கும் உரித்தே தெரியுங் காலை இவ்வளவு விளங்கச் சொன்னதையும் எத்தனை எழுத்தாளர்கள் இந்நாளில் புரிந்துகொண்டுளர்? நயத்தகு நாகரிகம் சில எழுத்துகளின் பெயரைத்தானும் சொல்லாமல் உச்சகாரம் (சு), உப்பகாரம் (பு), ஈகார பகரம் (பீ) இடக்கர்ப் பெயர் என்பவற்றை எடுத்துச் சொல்லும் நாகரிகம் எத்தகு உயர்வு உடையது! இஃது உயர்வெனக் கருதும் உணர்வு ஒருவர்க்கு உண்டாகுமானால் அவர் தம் மனம்போன போக்கில் எண்ணிக்கை போன போக்கில் கிறுக்கிக் கதையெனவோ பாட் டெனவோ நஞ்சை இறக்கி இளையர் உளத்தைக் கெடுத்து எழுத்தால் பொருளீட்டும் சிறுமை உடையராவரா? தொல்காப்பிய நூனயம் தனியே ஆய்ந்து வெளிப்படுத்தற் குரிய அளவினது. தொல்காப்பியக் கொடை முந்து நூல் வளங்கள் அனைத்தும் ஒருங்கே பெறத்தக்க அரிய நூலாகத் தொல்காப்பியம் விளங்குவதுடன், அவர்கால வழக்குகளையும் அறிந்துகொள்ளும் வண்ணம் தொல்காப்பியர் தம் நூலை இயற்றியுள்ளார். அன்றியும் பின்வந்த இலக்கியப் படைப்பாளிகளுக்கும் இலக்கணப் படைப்பாளிகளுக்கும் அவர் வழங்கியுள்ள கொடைக்கு அளவே இல்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணியென அது சுரந்து கொண்டே உள்ளமை ஆய்வாளர் அறிந்ததே. பொருளதிகார முதல் நூற்பா கைக்கிளை முதலா எனத் தொடங்குகின்றது. அக் கைக்கிளைப் பொருளில் எழுந்த சிற்றிலக்கியம் உண்டு. முத்தொள்ளாயிரப் பாடல்களாகப் புறத்திரட்டு வழி அறியப் பெறுவன அனைத்தும் கைக்கிளைப் பாடல்களே. ஏறிய மடல் திறம் என்னும் துறைப்பெயர் பெரிய மடல், சிறியமடல் எனத் தனித்தனி நூலாதல் நாலாயிரப் பனுவலில் காணலாம். மறம் எனப்படும் துறையும் கண்ணப்பர் திருமறம் முதலாகிய நூல் வடிவுற்றது. கலம்பக உறுப்பும் ஆயது. உண்டாட்டு என்னும் புறத்துறை, கம்பரின் உண்டாட்டுப் படலத்திற்கு மூலவூற்று. தேரோர் களவழி களவழி நாற்பது கிளர்வதற்குத் தூண்டல். ஏரோர் களவழி என்பது பள்ளுப்பாடலாகவும், குழவி மருங்கினும் என்பது பிள்ளைத் தமிழாகவும் வளர்ந்தவையே. காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தலென் றிருமூன்று மரபின்கல் என்னும் புறத்திணை இயல் நூற்பா தானே, சிலப்பதிகார வஞ்சிக் காண்டத்திற்கு வைப்பகம். பாடாண் திணைத் துறைகள் சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு வழங்கியுள்ள கொடை தனிச்சிறப்பினவாம். அறம் முதலாகிய மும்முதற் பொருட்கும் என நூற்பாச் செய்து முப்பாலுக்கு மூலவராகத் தொல்காப்பியனார் திகழ்வதைச் சுட்டுவதே அவர்தம் கொடைப் பெருமை நாட்டுவதாகலாம். இவை இலக்கியக் கொடை. இலக்கணக் கொடை எத்துணைக் கொடை? இலக்கண நூல்கள் அனைத்துக்கும் நற்றாயாயும், செவிலித் தாயாயும், நல்லாசானாயும் இருந்து வளர்த்து வந்த - வளர்த்து வருகின்ற சீர்மை தொல்காப்பியத்திற்கு உண்டு. இந்நாளில் வளர்ந்துவரும் ஒலியன் ஆய்வுக்கும் தொல்காப்பியர் வித்திட்டவர் எனின், அவர் வழி வழியே நூல் யாத்தவர்க்கு அவர் பட்டுள்ள பயன்பாட்டுக்கு அளவேது? தொல்காப்பியன் ஆணை என்பதைத் தலைமேற் கொண்ட இலக்கணர், பின்னைப் பெயர்ச்சியும் முறை திறம்பலுமே மொழிச்சிதைவுக்கும் திரிபுகளுக்கும் இடமாயின என்பதை நுணுகி நோக்குவார் அறிந்து கொள்ளக்கூடும். இலக்கணப் பகுப்பு விரிவு இனித் தொல்காப்பியம் பிற்கால இலக்கணப் பகுப்புகளுக்கும் இடந்தருவதாக அமைந்தமையும் எண்ணத் தக்கதே. தமிழ் இலக்கணம் ஐந்திலக்கணமாக அண்மைக் காலம் வரை இயன்றது. அறுவகை இலக்கணமென ஓரிலக்கண மாகவும் இது கால் விரிந்தது. இவ் விரிவுக்குத் தொல்காப்பியம் நாற்றங் காலாக இருப்பது அறிதற்குரியதே. எழுத்து சொல் பொருள் என முப்பகுப்பால் இயல்வது தொல்காப்பியம் ஆகலின் தமிழிலக்கணம் அவர் காலத்தில் முக் கூறுபட இயங்கியமை வெளி. அவர் கூறிய பொருளிலக்கணத்தைத் தனித்தனியே வாங்கிக் கொண்டு அகப்பொருள், புறப்பொருள் என இலக்கணங்கூறும் நூல்கள் கிளைத்தன. அது பொருளிலக்கணத்தைப் பகுத்துக் கொண்டதே. அவர் கூறிய செய்யுளியலை வாங்கிக் கொண்டு, யாப்பருங் கலம் முதலிய யாப்பு இலக்கண நூல்கள் தோன்றித் தமிழ் இலக்கணத்தை நாற்கூறுபடச் செய்தன. அவர் கூறிய உவமையியலையும் செய்யுளியலில் சில பகுதிகளையும் தழுவிக்கொண்டு வடமொழி இலக்கணத் துணையொடு அணியிலக்கணம் என ஒரு பகுதியுண்டாகித் தமிழ் இலக்கணம் ஐங்கூறுடையதாயிற்று. இவ்வைந்துடன் ஆறாவது இலக்கணமாகச் சொல்லப் படுவது புலமை இலக்கணம் என்பது. அது தமிழின் மாட்சி தமிழ்ப் புலவர் மாட்சி முதலியவற்றை விரிப்பது. தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதென வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே என்பது அவ்விலக்கணத்தில் ஒரு பாட்டு. ஆக மூன்றிலக்கணத்துள் ஆறிலக்கணக் கூறுகளையும் மேலும் உண்டாம் விரிவாக்கங்களையும் கொண்டிருக்கின்ற மொழிக் களஞ்சியம் தொல்காப்பியம் என்க. தொல்காப்பியரின் சிறப்பாகப் பாயிரம் சொல்வனவற்றுள் ஒன்று, ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்பது. ஐந்திரம் இந்திரனால் செய்யப்பட்டது என்றும், பாணினியத்திற்குக் காலத்தால் முற்பட்டது என்றும், வடமொழியில் அமைந்தது என்றும் பாணினியத்தின் காலம் கி.மு. 450 ஆதலால் அதற்கு முற்பட்ட ஐந்திரக் காலம் அதனின் முற்பட்ட தென்றும், அந் நூற்றேர்ச்சி தொல்காப்பியர் பெற்றிருந்தார் என்றும், அந்நூற் பொருளைத் தம் நூலுக்குப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஆய்வாளர் பலப்பல வகையால் விரிவுறக் கூறினர். சிலப்பதிகாரத்தில் வரும் விண்ணவர் கோமான் விழுநூல், கப்பத் திந்திரன் காட்டிய நூல் என்பவற்றையும் இந்திரன் எட்டாம் வேற்றுமை என்றனன் என்னும் ஒரு நூற்பாவையும் காட்டி அவ்வைந்திர நூலைச் சுட்டுவர். விண்ணவர் கோமான் இந்திரன் வடமொழியில் நூல் செய்தான் எனின், தேவருலக மொழி வடமொழி என்றும், விண்ணுலக மொழியே மண்ணில் வடமொழியாய் வழங்குகின்றது என்றும் மண்ணவர் மொழி யுடையாரை நம்பவைப்பதற்கு இட்டுக் கட்டப்பட்ட எளிய புனைவேயாம். அப்புனைவுப் பேச்சுக் கேட்டதால்தான் இளங்கோ தம் நூலுள்ளும் புனைந்தார். அவர் கூறும் புண்ணிய சரவணத்தில் மூழ்கி எழுந்தால் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவர் என்பதே நடைமுறைக் கொவ்வாப் புனைவு என்பதை வெளிப்படுத்தும். அகத்திய நூற்பாக்களென உலவ விட்டவர்களுக்கு, இந்திரன் எட்டாம் வேற்றுமை சொன்னதாக உலவவிட முடியாதா? இவ்வாறு கூறப்பட்டனவே தொன்மங்களுக்குக் கைம்முதல். இதனைத் தெளிவாகத் தெரிந்தே தொல் காப்பியனார், தொன்மை தானே உரையொடு புணர்ந்த பழமை மேற்றே என்றார். தொன்மை என்பது வழிவழியாக உரைக்கப்பட்டு வந்த பழஞ்செய்தி பற்றியதாம் என்பது இந்நூற்பாவின் பொருள். இவ்வாறு தொல்காப்பியர் கேட்ட தொன்மச் செய்திகளைப் பனம்பாரனார் கேட்டிரார் என்ன இயலாதே. இந்திரனாற் செய்யப்பட்டதொரு நூல் உண்டு காண்; அது வடமொழியில் அமைந்தது காண்; அதன் வழிப்பட்டனவே வடமொழி இலக்கண நூல்கள் காண் என்று கூறப்பட்ட செய்தியைப் பனம்பாரர் அறிந்தார். அறிந்தார் என்பது இட்டுக் கட்டுவதோ எனின், அன்று என்பதை அவர் வாக்கே மெய்ப்பிப்பதை மேலே காண்க. திருவள்ளுவர் காலத்திலும், தாமரைக் கண்ணானின் உலக இன்பத்தினும் உயரின்பம் ஒன்று இல்லை என்று பேசப்பட்டது. இவ்வாறு பிறர் பிறர் காலத்தும் பிறபிற செய்திகள் பேசப்பட்டன என்பவற்றை விரிப்பின் பெருகுமென்பதால் வள்ளுவர் அளவில் அமைவாம். திருவள்ளுவர் கேட்ட செய்தி, அவரை உந்தியது. அதனால் தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல், தாமரைக் கண்ணான் உலகு? என்றோர் வினாவை எழுப்பி இவ்வுலகத்தெய்தும் இன்பங்களுள் தலையாய காதலின்பத்தைச் சுட்டினார். அடியளந்தான் கதையை மறுத்து, மடியில்லாத மன்னவன் தன் முயற்சியால் எய்துதல் கூடும் முயல்க; முயன்றால் தெய்வமும் மடிதற்று உன்முன் முந்து நிற்கும் என்று முயற்சிப் பெருமையுரைத்தார். இன்னதோர் வாய்பாட்டால் பனம்பாரனார் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியரைச் சுட்டினார். ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்று வாளா கூறினார் அல்லர் பனம்பாரனார். மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என்றார். mt® nfŸÉí‰wJ ‘É©Qyf Iªâu«! அவ்விண்ணுலக ஐந்திரத்தினும் இம்மண்ணுலகத்துத் தொல்காப்பியமே சிறந்த ஐந்திரம் என்னும் எண்ணத்தை யூட்டிற்றுப் போலும்! ஆகாயப்பூ நாறிற்று என்றுழிச் சூடக்கருதுவாருடன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும் என்பதை அறியாதவர் அல்லரே பனம்பாரர். அதனால் நீர்நிறைந்த கடல் சூழ்ந்த நிலவுலகின்கண் விளங்கும் ஐந்திரம் எனத்தக்க தொல்காப்பியத்தை முழுதுற நிரம்பத் தோற்றுவித்ததால் தன் பெயரைத் தொல்காப்பியன் எனத் தோன்றச் செய்தவன் என்று பாராட்டுகிறார். இனி ஐந்திரம் என்பது சமண சமயத்து ஐந்தொழுக்கக் கோட்பாடு. அவற்றை நிறைந்தவர் தொல்காப்பியர் என்றும் கூறுவர். ஒழுக்கக் கோட்பாடு படிமையோன் என்பதனுள் அடங்குதலால் மீட்டுக் கூற வேண்டுவதில்லையாம். அன்றியும் கட்டமை நோற்பு ஒழுக்கம் அவ்வாதனுக்கு உதவுதலன்றி, அவனியற்றும் இலக்கணச் சிறப்புக் குரியதாகாது என்பதுமாம். ஆயினும், தொல்காப்பியர் சமண சமயச் சார்பினர் அல்லர் என்பது மெய்ம்மையால், அவ்வாய்வுக்கே இவண் இடமில்லை யாம். இனி ஐந்திறம் என்றாக்கி ஐங்கூறுபட்ட இலக்கணம் நிறைந்தவர் என்பர். அவர் தமிழ் இலக்கணக் கூறுபாடு அறியார். தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதைத் தொல் காப்பியமே தெளிவித்தும் பின்னே வளர்ந்த ஐந்திலக்கணக் கொள்கையை முன்னே வாழ்ந்த ஆசிரியர் தலையில் சுமத்துவது அடாது எனத் தள்ளுக. ஐந்திரம் எனச் சொன்னடை கொண்டு பொருளிலாப் புதுநூல் புனைவு ஒன்று இந்நாளில் புகுந்து மயக்க முனைந்து மயங்கிப்போன நிலையைக் கண்ணுறுவார் ஏட்டுக் காலத்தில் எழுதியவர் ஏட்டைக் கெடுத்ததும் படித்தவர் பாட்டைக் கெடுத்ததும் ஆகிய செய்திகளைத் தெளிய அறிவார். எழுதி ஏட்டைக் காத்த - படித்துப் பாட்டைக் காத்த ஏந்தல்களுக்கு எவ்வளவு தலை வணங்குகிறோமோ, அவ்வளவு தலை நாணிப் பிணங்கவேண்டிய செயன்மையரை என் சொல்வது? தொல்காப்பிய நூற்பாக்கள் இடமாறிக் கிடத்தல் விளங்குகின்றது. தெய்வச்சிலையார் அத்தகையதொரு நூற்பாவைச் சுட்டுதலை அவர் பகுதியில் கண்டு கொள்க. மரபியலில் தவழ்பவை தாமும் அவற்றோ ரன்ன என்னும் நூற்பாவை அடுத்துப் பறழ்எனப் படினும் உறழாண் டில்லை என்னும் நூற்பா அமைந்திருத்தல் வேண்டும். அவ்வாறு அமைந்தால் எடுத்துக்காட்டு இல்லை என்பனவற்றுக்கு இலக்கியம் கிடைத்தல் இயல்பாக அமைகின்றது. இக்காலத்து இறந்தன என்னும் இடர்ப்பாடும் நீங்குகின்றது. இடப் பெயர்ச்சிக்கு இஃதொரு சான்று. இடையியலில் கொல்லே ஐயம் என்பதை அடுத்த நூற்பா எல்லே இலக்கம் என்பது. இவ்வாறே இருசீர் நடை நூற்பா நூற்கும் இடத்தெல்லாம் அடுத்தும் இருசீர் நடை நூற்பா நூற்றுச் செல்லலும் பெரிதும் எதுகை மோனைத் தொடர்பு இயைத்தலும் தொல்காப்பியர் வழக்காதலைக் கண்டு கொள்க. இத்தகு இருசீர் நடை நூற்பாக்கள் இரண்டனை இயைத்து ஒரு நூற்பாவாக்கலும் தொல்காப்பிய மரபே. உருவுட் காகும்; புரைஉயர் வாகும் மல்லல் வளனே; ஏபெற் றாகும் உகப்பே உயர்தல்; உவப்பே உவகை என்பவற்றைக் காண்க. இவ்விருவகை மரபும் இன்றி நன்று பெரிதாகும் என்னும் நூற்பா ஒன்றும் தனித்து நிற்றல் விடுபாட்டுச் சான்றாகும். அகத்திணையியல் இரண்டாம் நூற்பா, அவற்றுள் என்று சுட்டுதற்குத் தக்க சுட்டு முதற்கண் இன்மை காட்டி ஆங்கு விடுபாடுண்மை குறிப்பர் (தொல். அகத். உரைவளம். மு. அருணாசலம் பிள்ளை). இனி, இடைச் செருகல் உண்டென்பதற்குத் தக்க சான்றுகளும் உள. அவற்றுள் மிகவாகக் கிடப்பது மரபியலி லேயேயாம். தொல்காப்பியரின் மரபியல் கட்டொழுங்கு மரபியலி லேயே கட்டமைதி இழந்து கிடத்தல் திட்டமிட்ட திணிப்பு என்பதை உறுதிப் படுத்துகின்றது. மாற்றருஞ் சிறப்பின் மரபியல் என்று மரபிலக்கணம் கூறி மரபியலைத் தொடுக்கும் அவர் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் ஆகியவற்றைக் குறிக்கிறார். அக்குறிப்பொழுங்குப் படியே இளமைப் பெயர்கள் இவை இவை இவ்விவற்றுக்குரிய என்பதை விளக்கி முடித்து, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே என நிறைவிக்கிறார். அடுத்து ஓரறிவு உயிரி முதல் ஆறறிவுடைய மாந்தர் ஈறாக ஆண்பால் பெண்பால் பெயர்களை விளக்க வரும் அவர் ஓரறிவு தொடங்கி வளர்நிலையில் கூறி எடுத்துக்காட்டும் சொல்லி ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களை யும் இவை இவை இவற்றுக்குரிய என்பதை விளக்கி நிறைவிக்கிறார். ஆண்பால் தொகுதி நிறைவுக்கும் பெண்பால் தொகுதித் தொடக்கத்திற்கும் இடையே ஆண்பா லெல்லாம் ஆணெனற் குரிய பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய காண்ப அவையவை அப்பா லான என்கிறார். பின்னர்ப் பெண்பாற் பெயர்களைத் தொடுத்து முடித்து, பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என்று இயல் தொடக்கத்தில் கூறிய பொருளெல்லாம் நிறைந்த நிறைவைச் சுட்டுகிறார். ஆனால், இயல் நிறைவுறாமல் தொடர்நிலையைக் காண்கிறோம். எப்படி? நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்பது முதலாக வருணப் பாகுபாடுகளும் அவ்வவர்க் குரியவையும் 15 நூற்பாக்களில் தொடர்கின்றன. கூறப்போவது இவையென்று பகுத்த பகுப்பில் இல்லாத பொருள், கூற வேண்டுவ கூறி முடித்தபின் தொடரும் பொருள், மரபியல் செய்தியொடு தொடர்பிலாப் பொருள் என்பன திகைக்க வைக்கின்றன. நூலும் கரகமும் முக்கோலும் மணையும் படையும் கொடியும் குடையும் பிறவும் மாற்றருஞ்சிறப்பின் மரபினவோ? எனின் இல்லை என்பதே மறுமொழியாம். வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என்னும் நூற்பா நடை தொல்காப்பியர் வழிப்பட்டதென அவர் நூற்பாவியலில் தோய்ந்தார் கூறார். வாணிகன் பெறுமே வாணிக வாழ்க்கை என நூற்கத் தெரியாரோ அவர்? இளமை, ஆண்மை, பெண்மை என்பன மாறா இயலவை. பிறவியொடு வழி வழி வருபவை. நூல், கரகம் முதலியன பிறவியொடு பட்டவை அல்ல. வேண்டுமாயின் கொள்ளவும் வேண்டாக்கால் தள்ளவும் உரியவை. முன்னை மரபுகள் தற்கிழமைப் பொருள; பிரிக்க முடியாதவை. பின்னைக் கூறப்பட்டவை பிறிதின் கிழமைப் பொருளவை. கையாம் தற்கிழமைப் பொருளும் கையில் உள்ளதாம் பிறிதின் கிழமைப் பொருளும் கிழமை என்னும் வகையால் ஒருமை யுடையவை ஆயினும் இரண்டும் ஒருமையுடையவை என உணர்வுடை யோர் கொள்ளார். இவ்வொட்டு நூற்பாக்கள் வெளிப்படாதிருக்க ஒட்டியிருந்த புறக்காழ் அகக்காழ் இலை முறி காய்பழம் இன்னவை பற்றிய ஐந்து நூற்பாக்களைப் பின்னே பிரித்துத் தள்ளி ஒட்டாஒட்டாய் ஒட்டி வைத்தனர். இதனை மேலோட்டமாகக் காண்பாரும் அறிவர். நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் என்னும் நூற்பாவே மரபியல் முடிநிலை நூற்பாவாக இருத்தல் வேண்டும். பின்னுள்ள நூலின் மரபு பொதுப் பாயிரம் எனத்தக்கது. அது சிறப்புப் பாயிரத்தைத் தொடுத்தோ, நூன் முடிவில் தனிப்பட்டோ இருந்திருக்க வேண்டும். அதுவும் நூலாசிரியர் காலத்திற்குப் பிற்பட்டுச் சேர்த்ததாக இருத்தல் வேண்டும். அதிலும் சிதைவுகளும் செறிப்புகளும் பல உள. அவற்றுள், சூத்திரந்தானே என வரும் செய்யுளியல் நூற்பாவை யும் (1425) சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் என வரும் மரபியல் நூற்பாவையும் (1600) ஒப்பிட்டுக் காண்பார் ஒரு நூலில் ஒருவர் யாத்த தெனக் கொள்ளார். மரபியல் ஆய்வு தனியாய்வு எனக் கூறி அமைதல் சாலும். இவ்வியல் நூற்பாக்கள் அனைத்திற்கும் இளம்பூரணர் உரையும் பேராசிரியர் உரையும் கிடைத்திருத்த லால் அவர்கள் காலத்திற்கு முன்னரே இம் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவான செய்தி. மேலும் சில குறிப்புகளும் செய்திகளும் வாழ்வியல் விளக்கத்தில் காணலாம். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது பொருளதிகாரம் இயலமைதி எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என்பவற்றைப் போலவே பொருளதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டிருத்தல் உயரிய கட்டுமுறை யாகும். எழுத்து, சொல் ஆகியவற்றைக் கருவியாகக் கொண்டது பொருள். உலகத்துக் காணப்படும் பொருள்களைக் காட்சிப் பொருள் கருத்துப் பொருள் என இருவகைப் படுத்துவர். அவற்றை வாழ்வியல் முறைக்குத் தக முதல், கரு, உரி என மூவகைப்படுத்திக் காண்பது பொருளியல் கண்ட தமிழ் மேலோர் முறையாகும். அவற்றை முறையே கூறி, அகவொழுக்க நெறிமுறைகள் ஏழனையும் அதன் சார்புகளையும் அகத்திணை இயல் என்னும் முதல் இயலில் கூறுகிறார். கைக்கிளை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பெருந்திணை என்பன அத்திணைகள். அகத்திணை ஏழானாற் போல அமைந்த புறத்திணை ஏழனையும் புறத்திணை இயல் என்னும் அடுத்த இயலில் கூறுகிறார். அவ்வேழு திணைகளும் வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பனவாம். மூன்றாம் இயலாகக் களவியல் வைக்கிறார். அது அகத்திணைக் கைகோள் இரண்டனுள் முற்பட்டதாம். களவுக் காதல் விளக்கம் கள வொழுக்கம், இயற்கைப் புணர்ச்சி, களவொழுக்கத்தில் தலைவன், தலைவி, தோழி, செவிலி முதலோர் நிலை, இடந்தலைப்பாடு, வரைவு (திருமணம்) என்பவை கூறப்படுகின்றன. நான்காவதாம் இயல், கற்பியல். அதில், மணவாழ்வு, மணமக்கள் கூற்று, பிறர் கூற்று, அலர், பிரிவு, அறநிலை என்பவை முறையே கூறப்பட்டுள. கைகோள் ஆகிய களவு, கற்பு என்னும் இரண்டன் தொடர்பாகவும் பிறவாகவும் சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லும் பொருளியல் ஐந்தாவதாக இடம்பெறுகிறது. அறத்தொடு நிலை, வரைவுகடாதல், புலனெறி வழக்குகள், தலைவி தோழி முதலோர் பற்றிய சில குறிப்புகள் இதில் உரைக்கப்பட்டுள்ளன. ஆறாவதாக அமைந்தது மெய்ப்பாட்டியல். மெய்ப்பாடு என்பதன் பொருள், மெய்ப்பாடுகளின் வகை, அவை தோன்றும் நிலைக்களங்கள், அன்பின் ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், கைக்கிளை பெருந்திணை மெய்ப்பாடுகள், வாழ்நலத்திற்கு ஆகாக் குறிப்புகள், மெய்ப்பாட்டு நுட்பம் என்பவை முறையே இதில் கூறப்பட்டுள. பொருள் விளக்கச் சிறப்பமைந்த உவமை இயல் ஏழாவதாக இடம் பெறுகிறது. உவமையின் வகை, உவம உருபு, உவமையை உணருமுறை, உள்ளுறை உவமம், உவமை பற்றிய புறனடை என்பவை இவ்வியலில் பேசப்படுகின்றன. எட்டாம் இயல் தொல்காப்பியத்துவரும் இயல்கள் இருபத்து ஏழிலும் விரிவுடையதாகிய செய்யுள் இயல். ஈதொன்று மட்டுமே 240 நூற்பாக்களைக் கொண்டது. நூலில் ஏறத்தாழ ஏழில் ஒரு பங்காக அமைந்தது. இதனை அடுத்ததாக 112 நூற்பாக்களை யுடையது இதனை அடுத்த மரபியல் ஆகும். இச் செய்யுளியல், மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ எனத் தொடங்கி முப்பத்து நான்கு வகையில் செய்யுள் உறுப்புகள் அமைதலை முதல் நூற்பாவிலேயே தொகுத்துக் கூறி, அவற்றை முறையே கூறி முடிக்கிறார். எல்லா இயல்களிலும் வைப்பு முறைச் சிறப்புண்டு எனினும் இவ்வியல் கொண்ட வைப்புமுறை நனிபெரும் சிறப்புடையதாம். பொருள் வைப்புமுறை மாத்திரை, எழுத்தியல், அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களம், காலவகை, பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம், அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பவை அவை. தொல்காப்பிய நிறைவில் வருவது மரபியல். தொல்காப்பியர் முறை திறம்பா வைப்புமுறை, முறை மாற்றி வைக்கப்பட்டதில் தலைமை கொண்டது இவ்வியலாயிற்று. மாற்றரும் சிறப்பின் மரபு என மரபுமாண்பு கிளப்பதுடன் தொடங்குவது இது (1500). இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் இவை இவை எனச் சுட்டி முறைமுறையே கூறி, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே என்று நிறைவு செய்கிறார் (1525). பின்னர் உயிர்களை ஓரறிவுமுதல் ஆறறிவு ஈறாகப் பகுத்துரைத்து, ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் கூறி, பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என முடிபும் கூறுகிறார் (1568). இது காறும் நூற்பா இடமாற்றச் சிக்கல் ஏற்பட்டமை யன்றி, இடைச் செருகல் ஏற்படவில்லை. இது கூறுவேம் என்று தொடங்கி, இது கூறினேம் என முடித்தபின், அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்பார் இயல்புகள் பற்றி (1570 - 1584) பதினைந்து நூற்பாக்கள் வந்து, ஓரறிவுயிரிகளின் சில சிறப்பியல்களைக் (1585 - 1588) கூறி, இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும் என இயல் நிறைவாகக் காட்டிய பின்னரும் நூல்வகை, சூத்திரம், உரை, நூற்சிதைவுகள், நூல் உத்திகள் என்பவை (1590 - 1610) இடம் பெற்று நூல் நிறைகின்றது. ஓரறிவு உயிரிபற்றிக் கூறிய இடத்தொடு (1526) தொடர்புடைய அகக்காழ், புறக்காழ், தோடு, மடல், இலை, முறி, காய், பழம் என்பவை நெட்டிடை தள்ளப்பட்டுக் (1585) கூறப்படுதலும், இடையே நூலே கரகம் முதலாக மரபொடு பொருந்தாப் பொருள் இடம்பெறலும் சேர்ப்பு என்பதை விளக்க வேண்டுவது இல்லை. மரபு இயற்கை தழுவியது; இளமை, ஆண்மை பெண்மை எனக் கூறப்பட்டது. நூலும் கரகமும் குடையும் கொடியும் ஏரும் பிறவும் பிறப்பொடு தொடர்புடையவையா? இயற்கைத் தொடர்பு உடையவையா? கவச குண்டலத்தொடு பிறத்தல் கதைக்கு உதவும் நடைக்கு ஆகுமா? மரபியலில் உரையாசிரியர்கள் காலத்திற்கு முன்னரே, பல்வேறு திணிப்புகளும் மாற்றங்களும் செய்யப்பட்டுள என்பதை அறிந்து கொள்ளல் இப்பகுதிக்குச் சாலும். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது பொருளதிகாரம் வாழ்வியல் விளக்கம் தமிழினம் பெற்ற பேறுகளுள் தலையாய பேறு தொல்காப்பியத்தைப் பெற்றபேறு ஆகும். ஏனெனில், தொல்காப்பியர்க்கு முன்னரே இலக்கிய இலக்கணக் கலைவள மெய்யியல் நூல்கள் பலப்பல இருந்தன எனினும் அவற்றைக் காணற்கியலாக் காலநிலையில், அவற்றின் முழுமையான எச்சமாக நமக்குக் கிடைத்தது தொல்காப்பியமே ஆதலால்! இப் பேற்றினுள்ளும் தனிப்பெரும்பேறு, தொல்காப்பியப் பொருளதிகாரம் பெற்ற பேறு. மூவதிகாரங்களையுடைய தொல்காப்பியம் எழுத்து சொல் அளவில் பயிலப்பட்டு, பொருள் மறைக்கப்பட்டிருந்த காலமும் உண்டு. பொருளின் சிறப்பு அக் காலத்தையே, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் யாப்பதிகாரமும் வவ்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து, பொருளதிகாரம் வல்லாரை எங்கும் தலைப்பட்டிலேம் என்று வந்தார்; வர, அரசனும் புடைபடக் கவன்று என்னை, எழுத்தும் சொல்லும் யாப்பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமே எனின் இவை பெற்றும் பெற்றிலேம் என்று சொல்லா நிற்ப என்னும் இறையனார் களவியல். அவ்வுரையால் பொருளதிகாரப் பயிற்சி நாட்டில் குன்றியமையும் அதில் வல்லார் இல்லாமையும், பொருளதிகாரம் மறைவுண்டமையும் விளக்கமாம். வெளிப்பாடு இந் நிலையிலிருந்த தொல்காப்பியம், தமிழே வாழ்வாகிய புலமைச் செல்வர்கள் சிலர் தண்ணருளால் ஏட்டுப் படியாகக் காக்கப்பட்டன; அக் காவலுக்கு அரண்போல உரை வல்ல பெருமக்கள் சிலர் உரைகண்டு உயிரூட்டினர்; அதனை அரிதின் முயன்று தேடிப் பெருமக்களில் சிலர் அச்சிட்டு நடமாட விட்டனர். இவ்வாறு வழிவழியாகப் பெற்ற பேறே, நம் வாழ்வியல் களஞ்சியமாம் தொல்காப்பியத்தை நாம் பெற வாய்ப்பாகியதாம். பொருள் வளம் இலக்கணம் என்பது எழுத்து சொல் அளவில் அமைவதே, இந் நாள்வரை உலகம் கண்டது. ஆனால், தொல் பழ நாளி லேயே வாழ்வியல் இலக்கணமாம் பொருள் இலக்கணமும், மொழி இலக்கணத்துடன் இணைத்துத் தமிழில் கூறப்பட்டமை பெருமிதமும் விந்தையும் உடையதாம். தொல்காப்பியக் கொடைவளத்திற்குப் பாரிய சான்றாக விளங்குவன திருக்குறள், பாட்டு, தொகை என்னும் பழமை சான்றவை. தொல்காப்பியர் வகுத்தருளிய அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் விளக்கமாகத் திகழ்வது திருக்குறள். பாட்டு தொகைகளில் அமைந்த பாடல்கள் அனைத்தும் தொல்காப்பிய அகம், புறம் ஆகிய பொருள் விளக்கமாய்த் திணை, துறை கொண்டு அமைந்தவை. பின்வரவாகிய நூல்களும், தொல்காப்பியப் பெருமணி மாலையில் ஒன்றும் பலவுமாய் எடுத்துக் கொண்டு கோக்கப் பெற்றவையே. இனித் தொல்காப்பியம் போல விரிவிலக்கணமோ முழுதுறு இலக்கணமோ கொள்ளாத நூல்களும், தொல் காப்பியச் சார்பாய், சார்பின் சார்பாய் வெளிப்பட்டவையே. தமிழ் நெறிக்கு அயலாகவும் மாறாகவும் தோன்றியன தாமும், தொல்காப்பியத்தை வேண்டுமாற்றால் பயன்படுத்திக் கொண்டு புற்றீசலாய்ப் புறப்பட்டவையேயாம். ஆகையால், தமிழர் வாழ்வியல் அளவுகோல் என அமைந்த தொல்காப்பியப் பொருளியல் வாழ்வு விரிவு மிக்கதாம். பொருளதிகாரத் தொடக்கம் அகவாழ்வில் கிளர்கின்றது. அகத் திணை இயல் என்பது அது. அக வொழுக்கம் பற்றிக் கூறுவது என்பதே அதன் பொருளாம். அகம் அக வாழ்வு என்பது, இல்வாழ்வு, இல்லற வாழ்வு, உள்ளத்தால் வாழும் உணர்வு வாழ்வு! புற வாழ்வு என்பது, அக வாழ்வில் இருந்து கிளர்ந்து விரிவாக்க முற்று உலக வாழ்வாகத் திகழ்வது. அக வாழ்வு என ஒன்று இல்லாக்கால் புற வாழ்வு என ஒன்று அரும்பியிருக்கவே இயலாது! அகம், புறம் என்பது ஆட்சியே அன்றிப் புறம், அகம் என ஆட்சி இல்லையாம். அறம் அறம் என்பதன் தோற்றமே, அகவாழ்வின் தோற்றமாம்! தக்காள் ஒருத்தி தக்கான் ஒருவன் உள்ளத்திலோ, தக்கான் ஒருவன் தக்காள் ஒருத்தி உள்ளத்திலோ பதிவாகும் நிலைக்கு அறம் எனப் பெயர் சூட்டியவர் தமிழ் மூதறிவாளர். அதனைப் போற்றி உரைத்தவர் தொல்காப்பியர் (1152). தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல் முதலாகச் சொல்லப்படுவன அவை. அதனாலேயே வள்ளுவம் அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என இல்வாழ்வில் முழங்கியது. அக வொழுக்கம் பற்றிக் கூறப்புகும் ஆசிரியர் நல்ல சூழலை முதற்கண் உருவாக்கிக் கொள்கிறார். தமிழர் கண்ட அகவொழுக்கம் கைகோள் எனப்பட்டது. கை என்பதன் பொருள் - ஒழுக்கம்; கோள்- கொள்ளுதல்; அக் கைகோள் களவு, கற்பு என இரண்டாம். களவில் தொடங்கிக் கற்பில் நிறைவுறல் அன்றி வழுவுதல் ஆகாது என்னும் வரையறை உடையது அக் கைகோள். கைகோள் தோன்றுமிடம் அல்லது தொடங்குநிலை, கைக்கிளை எனப்பட்டது. ஒழுக்கம் கிளைக்கும் நிலையே கைக்கிளை என்க. (கணவனை இழந்த தாபத நிலை, பின்னாளில் கைம்மை என வழங்கியமை, கட்டமை ஒழுக்கப் பொருளிலேயே என்பது எண்ணத் தக்கது.) ஏழு திணை கைக்கிளையில் தொடங்கும் காதல் வாழ்வு, மேலே ஐந்திணை (குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை) பெருந்திணை என ஏழு திணைகளாக வகுத்துக் கூறப்படுவதை முதல் இயல் முதல் நூற்பாவில் சுட்டுகிறார். அது, கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் முற்படக் கிளந்த எழுதிணை என்ப (947) என்பது. கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் என்றமையால், நடுவண் ஐந்திணை உண்மையைக் குறிக்கிறார் (948). நிலம் தமிழ் நிலம் நானிலம் என்னும் பகுப்புடையது. அந் நானிலம் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்படும் நிலைத் திணை (தாவரம்) வளமாக வளரும் இடத்தை அந் நிலைத் திணையின் பெயராலேயே வழங்கினர்! நிலைத்திணைகளில் பொலிவு மிக்கதும் உள்ளம் கவர்வதும் பூ. ஆதலால் நிலைத் திணைப் பூப் பெயரே அகம், புறம் இரண்டற்கும் அடையாளம் ஆயின. நடுவண் ஐந்திணையுள் நடுவண் திணையாகப் பாலையைக் கொள்கிறார் தொல்காப்பியர். அதனால், அத்திணை ஒழிந்த திணைகள் நான்கற்கும் நானிலங்களை வழங்குகிறார். பாலை என்பது பால்மரம். அது மழையற்று வறண்ட நிலத்தும் வளர்வது. அதனால், அப் பெயரால் பாலை நிலம் வழங்கப் பட்டது. மலையும் காடும் வளமற்று வறண்ட நிலையில் அதனைப் பாலையாகக் கொள்வது தமிழக வழக்காயிற்று. இதனையே, முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியப்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என்றார் இளங்கோவடிகள். ஆனால், குமரிக்கண்டத்திருந்த ஏழ்முன் பாலை, ஏழ்பின்பாலை என்னும் நாடுகள் நம் கருத்தில் தோன்றி, ஐந்திணை நிலமும் இயல்பாக இருந்ததை விளக்கும். நானிலத்து ஒழுக்கங்களும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப்பட்டவை போலவே, பாலை நில ஒழுக்கமும் பாலை எனப்பட்டது. முறையே இவ்வைந்திணை ஒழுக்கங் களும் புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் எனப்பட்டன. பல்வேறு வகையாகக் கூறப்படுவது பொருள். அதனை அகத்திணை அமைவு கருதி, முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என மூவகைப் படுத்திக் கூறினர் (950). முதற்பொருள் என்பது, நிலமும் பொழுதும். கருப் பொருள் என்பது, முதற்பொருள் வழியாகக் கருக்கொண்ட பொருள். உரிப்பொருள் என்பது, உயரிய மாந்தப் பிறப்பின் உரிமையாய் அமைந்த ஒழுக்கப் பொருள். இம் முப்பொருள்களுள் மூன்றாவதாகிய ஒழுக்கப் பொருளே - உரிப்பொருளே - ஆசிரியர் கூறுதற்கு எடுத்துக் கொண்ட பொருளாகும். முதற் பொருளாகிய நிலமும் பொழுதும், உரிப்பொருள் நிகழ்தற்கு அமைந்த இடமும் காலமும் பற்றியவை. உரிப்பொருள் விளக்கத்திற்கு அமைந்தது கருப் பொருள். ஆதலால், அவற்றைக் கூறும் ஆசிரியர் முதற் பொருளினும் கருப்பொருளும் கருப்பொருளினும் உரிப் பொருளும் ஒன்றில் ஒன்று சிறந்தது என்கிறார். ஏனெனில், இடம் காலம் சூழல் எனப் பேசுவன எல்லாம் வாழ்வுக்காகவே ஆதலால். இம் முறை வகுப்புத் தாமே கண்டு படைத்து வைத்தது இல்லை என்பதை உறுதியுடன் கூறுகிறார். அது, பாடலுள் பயின்றவை நாடுங் காலை என்பது (949). நிலத்தைக் கூறும் போது நிலத்தின் பெயரை வாளா கூறாமல், அவ்வந் நிலத்தவர் வழிபட்டு வந்த தெய்வப் பெயரையும் சேர்த்தே சுட்டுகிறார். கருப்பொருள் கூறத் தொடங்கும்போதும், தெய்வம் என்பது மக்கள் உள்ளத்தே கருக்கொண்டு விளங்கிய பொருள் என்பதைச் சொல்லியே பிற கருப்பொருள்களைக் கூறுகிறார் (964). மேல், கீழ் கடல் கொண்ட குமரிக் கண்டமும் சரி, எஞ்சியுள்ள தமிழகமும் சரி, இவை மேல் மலைதொட்டுக் கீழ் கடல் எனப் படிப்படியே அமைந்தவையே. மலை நிலம் உயர்ந்தது ஆதலால், மேல், மேற்கு என உயரப் பொருளால் அத் திசை குறிக்கப்பட்டது. கடல் நிலம் தாழ்வுடையது ஆதலால், கீழ், கிழக்கு எனத் தணிவுப் பொருளால் அத்திசை குறிக்கப்பட்டது. முல்லை முதல் இந் நிலையில், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என அமையும் நில அமைப்பின்படியே திணை வைப்புச் செய்யாமல், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என முறைப்படுத்திக் கூறுகிறார். அம் முறையே பலரும் சொல்லிய முறை எனவும் உறுதி மொழிகிறார். அது, மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்பது (951). இனிக் காலம் சொல்லும் போதும், காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர் (952) பனிஎதிர் பருவமும் உரித்தென மொழிப (953) வைகறை விடியல் மருதம்; எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் (954) நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே (955) பின்பனி தானும் உரித்தென மொழிப (956) என்றே வரிசைப் படுத்துகிறார். இருத்தல் உணவின் சுவை நாவிலே இல்லை; வயிற்றிலே இருக்கிறது என்றால், மறுதலையாகத் தோன்றும் அல்லவா. ஆனால், உண்மை அது தானே! பசித்துக் கிடந்து உண்ணக் காத்திருப்பவன் விரும்பி உண்ணும் உணர்வுக்கும், பசியின்றி உண்ண வேண்டுமே என்பதற்காக உண்பவன் உணர்வுக்கும் எவ்வளவு இடைவெளி! அக இன்பம், கூடுதலில் இல்லை; கூடுவதை எதிர்பார்த்து இருத்தலிலேயே இருக்கிறது! இத் தெளிவின் தீர்ப்பாகவே முல்லை, குறிஞ்சி என முறை வைத்தனர். நில அமைப்புப் பற்றிக் கூறல் தொல்காப்பியர் நோக்கு இல்லை. ஒழுக்க அமைதிபற்றிக் கூறுதலே அவர் நோக்கு. தொல்காப்பிய உரிப்பொருள் விளக்கமாகவே காமத்துப்பால் இயற்றியவர் திருவள்ளுவர். அவர் இறுதிக் குறளாக, ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின் என்றமை விளக்கமாக்கும். இதன் மேல்விளக்கமாக, உணலினும் உண்டது அறல் இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது என்பதும் (1326) எண்ணி மகிழத்தக்கது. நிலம், பொழுது வாழும் இடம், காலம், சூழல் ஆகியவைக்கும் வாழ் வார்க்கும் தொடர்பு உண்டா? உண்டு என்பது வெளிப்படை. மலைவாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும், கடல் வாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும் ஓர் ஒப்பானவையா? முல்லை ஆயர் தொழிலும் குடிநலம் பேணலும், மருத உழவர் தொழிலும் குடிநலம் பேணலும், ஓர் ஒப்புமை அமைந்தவையா? பனிநாள் மழைநாள் இளவேனில் நாள் மாறுதல், மக்கள் ஊண் உடை உறை நிலை மாற்றங்களை ஆக்க வில்லையா? இனிய விடியற் பொழுதும், கொடிய நண்பகல் வேளையும், மஞ்சள் மாலையும், காரிருள் கப்பிய யாமமும் என்னென்ன மாற்றங்களை யெல்லாம் ஏற்படுத்திவிடுகின்றன! குளிர் தூங்கும் அருவிச் சூழலும், கொதிக்கும் பாலைச் சூழலும் தனித்தனிப் பதிவுகளை உருவாக்கி விட வில்லையா? இவற்றை எண்ணுவார், வாழ்வுக்கு நிலமும் பொழுதும் சூழலும் உடனாகி நிற்றலை உணரத் தவறார். நாடக உயிர்ப்பு, உரையாட்டு - நடிப்பு - தோற்றம் என்பவற்றில் இருந்தாலும், மேடையும் திரையும் ஒளியும் பிறவும் அவற்றை மேம்படுத்துதல் நாம் அறியாதது இல்லையே! கருப்பொருள் கரு என்பது கர் என்னும் வேர்வழிச் சொல். கருமம் கருவி கருத்தன் என்பவற்றின் மூலமும் கர் என்பதே. கர் என்பது கார், கால், காள், காழ் என்றாகியும் விரிவாக்கம் பெறும். கருமை, கருமுகில் வழிப்பட்ட வான் சிறப்பாய், வையகச் சிறப்பு ஆக்குவதாம். அம் மழை இன்றிப் புல்லும் கருக் கொள்ளா என்னின், பிறவற்றைச் சொல்ல என்ன உண்டு? மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை என்பது குறிப்பு. நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு என்பது வள்ளுவ வான்சிறப்பின் நிறைவு. வான் ஒழுக்கே (மழையே), வையக ஒழுக்கு (ஒழுக்கம்) மூலம் என்பதை உரைத்தது அது. ஆறு - ஒழுக்கு - நெறி - வழி என்பன வெல்லாம் ஆற்று நடைக்கும் ஆள் நடைக்கும் உரியவையாக இருத்தலைக் கருதுக. அன்றியும் நீரின் தன்மையே நீர்மை என்பதையும் நீர்மையாவது பண்புடைமை என்பதையும் உணர்தல் இனிதாம். இனித் தொல்காப்பியர், தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப எனக் கருப்பொருள் வகைகளைக் கூறுகிறார் (மா = விலங்கு; புள் = பறவை; செய்தி = தொழில்). இவ்வாறு கொள்ளப்படுவன பிறவும் உள; அவற்றையும் கொள்க என்கிறார். பிறவும் என்றதனால், தலைமகன் பெயர், தலைமகள் பெயர், நீர், ஊர், பூ, மக்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்கிறார் களவியல் உரைகாரர். வாழ்வியல் ஆசான் ஒருவன் ஞால நூல், கால நூல், திணை நூல் வல்லானாகவும் திகழ்தல் வேண்டும் என்பதைக் கூறாமல் கூறுவது இப்பகுதி என்க. தெய்வத்தை நினைந்து உயிர்க்கமுதாம் உணவு உண்ணுதல் வழக்கத்தை வெளிப்படுத்துதல் போலத் தெய்வம் உணாவே என்றார் என்பதும் எண்ணத்தக்கது. இஃது உலகந் தழுவிய நெறியாதல் அறிக. இதனைச் சுட்டுவார் பேரா. சி. இலக்குவனார். உரிப்பொருள் முல்லை நிலமும், முல்லைக்குரிய கார் காலமும் முன்வைத்த ஆசிரியர், உரிப்பொருள் சொல்லும் போது குறிஞ்சியை முதற்கண் வைத்துள்ளார். அது புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே என்பது (960). முல்லைக்குத் தந்த நில கால முதன்மையை, உரிப் பொருளுக்கும் தருதல் ஆகாது என்பது ஆராய்வார் எவர்க்கும் புலப்படும். ஏனெனில், முல்லை என்பது புணர்தலின் பின்னாக ஏற்படும், எதிர்பார்த்திருக்கும் இருத்தல் ஒழுக்கம்; அது கூடுதல் இல்லாமல் நிகழாது; ஆதலால், குறிஞ்சி முல்லை என முறை வைத்தல் மேற்கொள்ளப்பட்டது என்பதற்காகவே, தேருங் காலை என்றார். தேருங் காலையாவது; ஆராயும் பொழுது. கண்டாராகிய ஆடவரும் பெண்டிரும் காட்சியால் ஒருப்பட்டுக் கருத்தாலும் ஒருப்பட்டு ஒருவரை இன்றி ஒருவர் இல்லை என்னும் அறவுணர்வு ஓங்கிய நிலையிலேயே ஒருவரை ஒருவர் மீளவும் காண எதிர்பார்த்திருத்தல் இயற்கை. ஆதலின், நடைமுறை வாழ்வறிந்த நன்முறை மாற்றமே குறிஞ்சி (புணர்தல்) முல்லை (இருத்தல்) என்னும் வைப்பு முறையாம். பிரிதல் கூடினார் இருவர் எதிர்பார்த்து இருப்பார் என்னின், நிகழ்ந்தது என்ன என எண்ணின் தெளிவு கிட்டும். அது பிரிதல் என்பது. ஆதலால், குறிஞ்சி முல்லை என்னும் இரண்டன் இடையே பாலையை (பிரிவை) வைத்தல் முறைமையாயிற்றாம். பிரிவு என்பது வேளைப் பிரிவும், நாளைப் பிரிவும், திங்கள் முதலாம் பிரிவும் எனப் பலவகைத்தாம். இவற்றுள் வேளைப் பிரிவே முல்லைப் பிரிவு ஆகும். கூடு துறந்து செல்லும் பறவை போலவும் தொழுவம் பிரிந்து செல்லும் கால்நடை போலவும் வீடு துறந்து சென்று, வேலை முடித்து மாலையில் மீளும் வேளைப் பிரிவே இம் முல்லைப் பிரிவு. கணவன் பிரிந்து சென்றால் அவன் மீள வரும்வரை மனைவிக்குக் கதவே காது என்னும் பாவேந்தர் படைப்பு முல்லைப் பிரிவாகும். இந் நாளில் வேலை நிமித்தமாக வெளியே சென்று மாலையில் திரும்பி வரும் மனைவியைக் கணவன் நோக்கி யிருத்தலும் இருவரும் காலையில் பிரிந்து மாலையில் திரும்பும் கடமையுடையராய் ஒருவரை ஒருவர் நினைந்திருத்தலும் இருத்தல் எனத் தகும். ஓதல் பகையே தூது இவை பிரிவே என்னும் பிரிவுகள், நெடிய பிரிவுகள் ஆகலின் அவை இல்லத்தின் எல்லை கடந்து, கடற் பரப்பு வரை நீண்டு நெய்தல் எனப்பட்டது. நெய்தல் ஒழுக்கம் இரங்கல். வெப்பத்தால் வெண்ணெய் உருகும் உருக்கம் போல உருகும் நிலை அது. கடலும் அலையும் கானலும் காற்றும் அமைந்த சூழல் பிரிந்தார்க்குத் துயரைப் பெருக்குதலின் இரங்கல் நெய்தல் ஆயது. கொஞ்சம் என்பது சிறிது என்னும் பொருளது. சிறிதளவும் சிறிது நேரமும் கொஞ்சம் எனப்படுதல் வழக்கம். கொஞ்சுதல் என்பது மகிழ்வுப் பொருளும் தரும். கெஞ்சும் கொஞ்சும் என்பது திருப்புகழ். கொஞ்சுதலாம் மகிழ்தல், அளவால் குறைந்திருத்தலே நெஞ்ச நிறைவாழ்வு என்பதை வெளிப்படுத்தும். இச் சொல் வழக்கு ஆழமிக்க அகப் பொருள் இலக்கண வழிப்பட்டதாகும். கூடியிருத்தலுக்குக் குளிர்கால யாமப் பொழுதை மட்டுமே குறித்து, எஞ்சிய காலமும் பொழுது மெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாக அமைத்துக் கொண்ட நலவாழ்வு முறை நானிலம் போற்றத்தக்கதும், கொண்டு ஒழுகத் தக்கதுமாம். ஊடல் இனி ஊடல் என்னும் மருதத்தின் பொருள் தான் என்ன? உடலுக்கு ஒரு பெயர் கூடு என்பது. கூடு விட்டு இங்கு ஆவிதான் போன பின்பு என்பதில் வரும் கூடு உடல் இல்லையா? குடம்பை தனித்தொழியப் புள் பறந்தற்றே என்பதில் வரும் குடம்பையும் கூடு தானே! கூடும் கூடும் (உடலும் உடலும்) ஒன்றுதல் கூடல். கூடும் கூடும் கூடாமல் ஓர் எண்ணம் ஊடு தடுத்திருத்தல் ஊடல். ஆதலால், உடனிருந்தும் பிரிதல் ஊடல் ஆகின்றது. ஆகவே, அகவாழ்வில் நம் முந்தையர் கொண்டிருந்த தெளிந்த கருத்தும் அறிவுறுத்தமும் பாராட்டுக்கு உரியவையாம். இவ் வகையால், உரிப் பொருள் - புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என முறைப்படுத்தப்பட்டன. நிமித்தம் புணர்தல் எனின் வருதல், காணல், உரையாடல், பிரிதல் என்பனவும் நிகழ்வன தாமே. இவை, புணர்தல் நிமித்தம் எனப்பட்டன. இவ்வாறே பிரிதல் முதலியனவும் நிமித்தம் உடையவையாய்ப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பவை முதலாகப் பெயரீடு பெற்றன. நிமித்தம் என்பது - சார்பாவது. பெயர் இனி உரிப் பொருளுக்கு உரியார் எவர்? அவர் பெயர் என்ன? தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் சோழன் கரிகால் பெருவளத்தான் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன் வல்வில் ஓரி வையாவிக் கோப் பெரும் பேகன் பெருங்கோப் பெண்டு கண்ணகி -இவ்வாறெல்லாம் வருவன பாடுபுகழ் பெற்ற பெயர்கள். இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பும் திணையும் துறையும் உடையவை. தொண்டைமானுழைத் தூது சென்ற ஔவையார் பாட்டு, சேரமான் கணைக்கால் இரும்பொறை உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்னும் இன்ன வரலாறும் உடையவை. இப்படிப் பெயர்களோ ஊர்க் குறிப்போ இல்லாத பாடல்கள் அகப் பாடல்கள். பாடும் பொருளோ, உள்ளத்தே கொண்டொழுகும் உணர்வுப் பொருள். அதனை உடையார் இவரெனக் கூறின் என்னாம்; புறப்பொருள் ஆகிவிடுமே! ஆதலால், மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர் என்பது ஆணை மொழியாயிற்று (1000). அவர் பெயரை எங்கே கூறலாம்? எனின், புறத்திணை மருங்கின் பொருந்துதல் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே என்பது வரையறையான விடையாயிற்று (1001). இவ்வாறு பெயர் கூறல் ஆகாது என்பது மட்டுமில்லை. மறைமுகமாகவோ குறிப்பாகவோகூட இன்னார் என அறிதற்குரியவை அகப் பாடலில் இடம்பெறல் ஆகாது. அப்படி ஒரு பாட்டுடைத் தலைவன் இன்னார் என அறியப்படுவன் ஆயின், அவனைப் பற்றிய அப் பாடலை, அகப்பாடல் வகையில் இருந்து நீக்கிப் புறப்பாடல் வகையில் சேர்ப்பதைத் தொகுப்பாளர் கொண்டனர் என்பதை அறியும் போது, அந் நெறி வழிவழியாகப் போற்றப்பட்டமை விளங்கும். இனி, அகப் பொருளில் இடம் பெறுவார்க்கு என்ன பெயர்தான் வைப்பது எனின், தலைவன் தலைவி, கிழவன் கிழத்தி, ஒருவன் ஒருத்தி, தோழன் தோழி, செவிலி நற்றாய் இன்னவான உரிமைப் பெயர்களே வரும். அன்றியும் ஆயர், வேட்டுவர், கோவலர், எயினர், உழவர், கிழார், நுளையர், பரதவர் என்னும் வினைநிலைப் பெயர்களும் வரும் பெயரும் வினையுமென்று ஆயிரு வகைய திணைதொறும் மரீஇய திணைநிலைப் பெயரே எனச் சுட்டுகிறார் (966). அகனைந்திணைக்கும் உரிமைப் பட்டவரே கிழவன், கிழத்தி என்றும், தலைவன் தலைவி என்றும் வழங்கப்பட்டனர். இக் கிழமை பின்னே நிலவுரிமைக்கும் குடிமைத் தலைமைக்கும் பெயராயிற்று. கோவூர் கிழார், முதிரத்துக் கிழவன், நிலக் கிழார், பெருநிலக் கிழார் என்னும் பெயர்கள் ஏட்டிலும் நாட்டிலும் காண்பவையும் கேட்பவையும். செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் என்பது மனைக் கிழமை, நிலக் கிழமை என்பவற்றின் இணைப்பாகும். ஆகார் சிலர் அகனைந்திணைக்குத் தக்கவர் அல்லர் எனச் சிலர் அந் நாளில் ஒதுக்கப்பட்டும் இருந்தனர். தம் முரிமைப்பட்டு வாழ முடியாதவராய்ப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர் அவருள் ஒருவர். அடிமைப்பட்டுக் கிடப்பானுக்கு உரிமை இன்பவாழ்வு கொள்ள வாயாது; வாய்ப்பினும் தன்னோடு தன்னையடுத்த வரையும் அடிமையில் கிடக்கவே வைப்பன். ஆதலால் அவரைப் பாடுதற் பொருளாகப் புலமையர் கொண்டிலர். ஒருத்தி ஒருவனை விரும்புகிறாள்; அவனிடம் தன் விருப்பையும் கூறுகிறாள். அவனோ, நீங்கள் உங்கள் வாழ்வைத் தீர்மானிக்கலாம்; ஆனால் நானோ எனக்குச் சம்பளம் தருபவர் சொற்படியே என் வாழ்வை அமைக்க முடியும் என்கிறான். அவன் வாழுரிமையனா? ஏவுவார் ஏவுவதை அன்றித் தாமே எண்ணிச் செய்யாதவரும் உண்டு. அவர் செயல்புரிதலில் வல்லவராக இருப்பினும், எண்ணிச் செய்யும் திறம் இல்லாதராதலின் அவரும் உரிமை இன்ப வாழ்வுக்கு உரியவர் ஆகார் ஆயினர். இனி, ஏவுவதைச் செய்தலும் இல்லாராய்ப் பிறரைத் தாம் ஏவித் தம் கடனைத் தட்டிக் கழிப்பாரும் உளர். அத்தகையரும் அன்பின் ஐந்திணையைப் பேணிக் கொள்வார் அல்லர். ஆதலால், இத்தகையர் அகத்திணைத் தலைமைக்கு உரியவர் அல்லர். தள்ளத் தக்கவர் ஆவர் எனப்பட்டனர். ஏனெனில் பாடுபொருட் சிறப்புப் போலவே, பாடப் படுவார் சிறப்பும் கருதியதே அகப்பாட்டு. அகத்திணைக்குத் தக்காராகக் கருதப்படாத இவர் அன்பின் ஐந்திணைகளுக்கு முன்னாம் கைக்கிளைக்கும் பின்னாம் பெருந்திணைக்கும் உரியர் என்று கூறுவதும் உரைமரபாக உள்ளது. இத்தகையர் இன்ப வாழ்வைப் புறத்திணைக்கண் சார்த்திக் காண்பதை அன்றி, அகத் திணைக்கண் சார்த்திக் காணக் கூடாது எனல் பொருந்துமோ என எண்ண வேண்டி யுளது. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் கடிவரை இலபுறத்து என்மனார் புலவர் என்பது நூற்பா (969). கடிவரை இல - நீக்குதல் இல்லை. இதனை, புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே என்பதனொடு இணைத்து நோக்கலாம் (1001). பிரிவார் தகவு இன்பத்தை மேம்படுத்துவதாகிய பிரிவு எவ்வெவ் வகை யால் ஏற்படும், அப் பிரிவிற்குரியவர் தகுதி என்ன என்பதை அடுத்தே குறிப்பிடுகிறார் ஆசிரியர். கற்பியலில் மேல்விளக்கமும் தருகிறார் (1133 - 1137). பாடு புகழ் பெறுவோர் தக்கோர் ஆதலின், அவர்தம் அறக்கடமை நாட்டுக்கடமை பொருட்கடமை புலப்படும் வகை யால், அவர்கள் பிரிவு வகைகள் இவையெனக் கூறுகிறார். ஓதல் பகையே தூதிவை பிரிவே என்றும் (971) பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே என்றும் (979) வருவன அவை. ஓதல் பிரிவு என்பது, இளமைக் கல்வி பெறுவாரை அன்று; கற்றுத் துறை வல்லாராய் மேனிலைக் கல்வி பெறச் செல்வாரைக் குறித்தது. பகைப் பிரிவாவது, நாட்டுக்குப் பகைவரால் உண்டாகிய கேட்டை ஒழிக்கக் களஞ் செல்லும் பிரிவு. தூதாவது, வழிமொழிதல்; ஆள்வோரால் சொல்லப் பட்டது எதுவோ அதனை மறவாது மாறாது சொல்லும் வகை யால் சொல்லி நலம் செய்தலாகும். பொருள் வயின் பிரிதல், குடிமை நலம் காக்கவும், அறப்பணி புரியவும் வேண்டும் ஆக்கம் தேடற்குப் பிரிதலாகும். மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னைத் தமிழர் கொண்ட இப் பிரிவு வகைகளை அறிவியல் வளர்ந்த இந் நாளின் பிரிவுகளொடு எண்ணிப் பார்ப்பின் புதுமை ஏதேனும் உண்டோ? அயல் மாநிலம் செல்வாரும், அயல் நாடு செல்வாரும் எண்ணிப் பார்க்கலாமே! தெரிவு இந் நாளில் அயலகம் செல்வதற்குத் தக்கார் எனத் தெரிவு செய்யப்படுவார் இலரா? இவ்வாறே இப்பிரிவுகளுக்குத் தக்காராகத் தெரிவு செய்தமை அறிய வாய்க்கின்றது. பகைதணி வினைக்குச் செல்வார் அரசின் ஆணை வழிதானே செல்வர்! தூது என்பதும் அரசின் ஆணை வழி நிகழ்வதுதானே! அவ்வாறே ஓதல் என்பதும் அரசின் ஆணை வழிப்பட்டது; ஆகலின், உடன் எண்ணினார். இம் மூவருள், ஓதற்குச் செல்வா ரையும் தூதிற்குச் செல்வாரையும் தனித்து நோக்கி விடுத்தலை ஆள்வோர் கடமையாகக் கொண்டனர். மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் ஆதலாலும், அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் ஆதலாலும், ஆள் வோன் அத் துறைகளில் மேம்பட்டு நிற்பாரைக் கண்டு அத் தொழிற்கு ஏவுவான். அவ்வாறு காண்பனோ எனின், வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும் (665) என்பது வள்ளுவம். ஆதலால் தக்கோனைத் தெரிந்து ஏவுதல் அவற்கு இயல் பாகும். மற்றும், ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண் என்பதால் ஒற்றறிதல் வகையாலும் காண்பானாம் (581). ஓதற் சிறப்பாலும் தூதுத்திற மாண்பாலும் உயர்ந்து விளங்குவார் எவரோ அவரே அதற்குரியராக விடுக்கப்படுவர். இதனால் தொல்காப்பியர், அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன (972) என்றார். இனிப் பகைதணிவினையாம் படைக்குத் தெரிவும் பயிற்சி யும் முதன்மையாகக் கருதிப் பேணப்பட்டமையாலும், அவர் அணி அணியாகச் செல்வார் ஆதலாலும், அவரை இவரோடு எண்ணினார் அல்லர். அன்றியும் அவர் செல்லுதலும், தான் தேர்ந்த தலைவரொடு அவர் செல்லுதலும் தான் செல்வதாகவே ஆகும் ஆதலால் அவரைத் தனித்துக் கூறினார் அல்லர் (978). இனிப் பொருட் பிரிவுக்குரியர் இருவகையார். அவர் அரசின் சார்பில் பொருட் பொறுப்பினராய் வரிதண்டுவாரும் அறங்காப்பாருமாக இருப்பார் ஒருவகையர். மற்றொரு வகையர் குடிமை நலம் காத்தற்குப் பொருட் பிரிவு மேற்கொள்வார் வரைவு இடைவைத்துப் பொருள்வயின் பிரிதலும் குடிமை நலம் காக்கும் பொருட் பிரிவேயாம். இவருள் முன்னவர் முல்லை குறிஞ்சி முதலாகிய நானிலத் தலைவரும் ஆவர். ஆதலால், மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே (975) என்றார். அவர் மன்னர் கடமை என்னவோ அதனை அவர் சார்பாக இருந்து செய்கின்ற செயல் வீறு உடையவராம். அதனால் அவர், மன்னர் பாங்கின் பின்னோர் ஆகுப எனச் சொல்லப்பட்டார் (976). ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தாடைங்காப் பேதையிற் பேதையார் இல் எனப்படுபவர் போன்றாராக இல்லாமல் ஓதி உணர்ந்து ஓதவல்லாராகத் திகழ்ந்த உயர்ந்தவர் வழியிலே நெறிமுறைகள் வகுத்துப் பரப்பப்பட்டன. அதனால் உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான (977) என்றார் தொல்காப்பியர். வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான (1592) என்று மரபியலில் கூறுவது இவண் நோக்கத்தக்கதாகும். கடற்பிரிவு இவண் குறிக்கப்பட்டோர் கடல் கடந்து அயல் நாட்டுக்குப் பிரிதலும் உண்டு. அவர் பிரிந்து செல்லுங்கால் தம்மொடு மகளிரை அழைத்துச் சென்றனரோ எனின் இல்லை என்பதை, முந்நீர் வழக்கம் மகடூஉவோ டில்லை (980) என்று உரைத்தார். முந்நீர்வழக்கம் = கடற்செலவு. ஆடவர் மகளிரோடு கடல் கடந்து சென்றால், சென்ற நாட்டிலேயே தங்கிவிடக் கூடும் என்றும், மகளிர் இவண் இருப்பின் அவரை நாடி ஆடவர் மீள்வர் என்றும், மண்ணை மறவா நிலையைப் போற்றும் வகையால் இம் முறையை வகுத்தனர் என்றும் கொள்ளலாம். மடலேறுதல் உயிராகக் காதலித்த ஒருத்தியை மணக்க, அவள் பெற்றோர் தடையாக இருத்தலும் ஏற்பட்டுளது. தலைவியால் விரும்பப்படாத ஒருவனின் உற்றார் உறவினர் மணம்பேச வருதலும் நேர்ந்துளது. அந் நிலையில், காதலித்தவன் தன் காதலை ஊரறியச் செய்தேனும் ஊரவர் வழியாக மணமுடிக்க எண்ணுதலும் வழக்கம். அவ் வெண்ண முதிர்வே மடலேறுதல் என்னும் முறையாயிற்று. பனங்கருக்கினை எடுத்துக் குதிரைபோல் செய்து அதில் ஏறி அமர்ந்து, உண்ணாதும் பருகாதும் பாடுகிடந்து, காதலித்த தலைவியை அடையும் முயற்சியே இஃதாகும். அரம்பம் போன்ற பனங்கருக்கால் உடலைக் கிழித்துக் குருதி சொட்ட உயிரையும் பொருட்டாக எண்ணாமல் மணக்க விரும்புவானைக் கண்டு, தலைவியின் பெற்றோர் உற்றோர் இரக்கம் கொள்ளலும், சான்றோர் எடுத்துரைத்தலும் மணம் கூடலும் நேரும். இவ்வாறு ஆடவர் மடலேறல் உண்டு எனினும், மகளிர் மடலேறும் வழக்கம் இல்லை. இதனை, எத்திணை மருங்கினும் மகடூஉ மடல்மேல் பொற்புடை நெறிமை இன்மை யான என்கிறார் (981). எத்திணை மருங்கினும் என்பது எந் நிலத்தும். கடலன்ன காம முழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் என்பதை இவண் எண்ணலாம் (குறள். 1137). ஆடவரினும் மகளிர் அடக்கமும் அறிவும் அமைவுமிக்கா ராக இருத்தலால், அவர் மடலேறுதல் அளவும் செல்லார் என்பதை, செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான என்று ஆசிரியர் கூறுவதால் அறியலாம் (1155). எண்ணிப் பார்ப்பின், கால இட தொழில் நிலைகள் மாறுபட்ட இக் கால நிலையிலும், இவ்வுளவியல் மாறிற்றில்லை என்பதை உணர முடியும். ஆடவர் வலிந்து மணங் கோடலை அன்றி, மகளிர் வலிந்து மணங்கோடல் செய்தி நடைமுறையில் இல்லாமை எவரும் அறிந்ததே. கூற்று அகவாழ்வில் இடம்பெறுவார் பேசும் இடம், பேச்சு என்பவற்றை முறையாகக் கூறும் ஆசிரியர், நற்றாய், செவிலித்தாய், தோழி, கண்டோர், தலைவன், பிறர் என வகுத்துக் கொள்கிறார். அவர்கள் பேசுவது கூற்று எனப்படும். கூற்று = கூறுவது. கூற்று நிகழும் சூழல் ஒன்று வேண்டுமே. அச் சூழல், கொண்டு தலைக்கழிதல், உடன் போக்கு எனப்படுகிறது. அது இந் நாளில், கூட்டிக் கொண்டு போதல் எனப்படுகிறது. ஓடிப்போதல் எனப் பழிக்கவும் படுகிறது. முன்னாள் வாழ்வொடு எண்ணின், பழித்தற்கு இடமில்லை என்பதொடு, அந் நாள் மாந்தர் இதனை ஏற்றுப் போற்றிய சிறப்பும் படிப்பினையாக நமக்கு அமையும். ஒரு தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொண்ட நிலையில், தலைவியைப் பெற்றவளாகிய நற்றாய் தனித்து வருந்துதலும் பேசுதலும் முதன்மை இடம் பெறுகின்றன. தாய் தலைவனும் தலைவியும் உடன்போக்குக் கொள்ளும் போது, நற்றாய், தன்னையும் தலைவனையும் தன் மகளையும் எண்ணிப் புலம்புவாள், குறிபார்த்தல் தெய்வம் வேண்டல் என்பன புரிவாள், நன்மையாவதும், தீமையாவதும் அஞ்சத் தக்கதும் ஆகியவற்றைக் கூறிவருந்துவாள். தோழி யிடத்திலும் கண்டோர் இடத்திலும் வினாவுவாள் (982). செவிலி தாய் ஊரின் எல்லை வரை சென்று தேடுவாள். செவிலித் தாய் ஊரைத் தாண்டியும், வழிநடந்தும் தேடுவாள் (983). ஊரைவிட்டுத் தலைவன் தலைவியர் போகிவிடாமல் ஊரின் அயலிடத்தே இருப்பினும், அதுவும் பிரிவாகவே கொள்ளப்படும். இதனையும் இவ்விடத்தே குறிப்பிடுகிறார் (984) ஆசிரியர். தோழி தான் வேறு தலைவி வேறு என்றில்லாமல் ஒன்றியவள் தோழி. தலைவியைத் தலைவன் உடன் கொண்டு போதலே நலம் என்பதைத் தான் உணர்தலால் தலைவனிடம் எடுத்துரைப்பாள்; உடன்போக்கு ஏற்ற போது தலைவிக்கு நல்லுரை சொல்லுவாள்; உறவைப் பிரிதலால் உண்டாகும் தன் வருத்தமும் உரைப்பாள்; உடன் போக்கினரை மீட்டு அழைக்கச் செல்லும் தன் தாயைத் தடுத்து மீளுமாறு சொல்வாள்; மகளின் பிரிவை அறிந்து வருந்தும் பெற்ற தாய்க்குத், தலைவி மாறா அன்பால் பிரிந்தமை உரைத்துத் தேற்றுவாள் (985). இவை அவள் கூற்று நிகழும் இடங்கள். கண்டோர் வழிச் செல்வாரைக் கண்டோர், வாளா பார்த்துக் கொண்டு செல்லாமல் உரையாடும் வகையையும் எடுத்துரைக் கிறார் ஆசிரியர். பொழுது போனமை, வழியின் தொலைவு, இடையே உண்டாம் அச்சம் என்பவற்றைக் கண்டோர், உடன் போக்கினர்க்கு உரைப்பர்; செல்லும் ஊர்த் தொலைவும் தம் ஊர் நெருக்கமும் கூறித் தம் ஊர்க்கு அழைப்பர்; உடன் போவோர் நிலைக்காக வருந்தியுரைத்து அவரூர்க்குத் திரும்பிச் செல்லு மாறும் சொல்லுவர்; அவரைத் தேடிவரும் செவிலியைக் கண்டு தேற்றித் திரும்புமாறு வேண்டுவர்; இவ்வாறு கண்டோர் உரை அமையும் (986). தலைவன் கூற்றுகளை மேலும் விரிவாகச் சொல்கிறார் (987). உள்பொருள் நிகழ்ச்சி; அந் நிகழ்ச்சி உறுப்பினர்; உறுப்பினர் உரைக்கும் உரை - இவற்றை இவ்வகத்திணையியலில் மட்டுமன்றிப் பின்னே வரும் களவியல், கற்பியல் ஆகியவற்றிலும் விரிவாகக் கூறுகிறார். இவை நாடகக் காட்சிகள் போன்றவை அல்லவா! நாடகம் என்பது நாட்டில் நிகழாததா? நிகழாத ஒன்று அல்லது இட்டுக் கட்டிய ஒன்று ஏற்றுக் கொள்ளவும் படாது; பயன்படவும் படாது. ஓரிடத்து ஒருகாலத்து ஒருசிலரிடத்து நிகழப் பெறுவனவே ஏற்ற புனைவுவகையால் நாடகமாகவும் காப்பியமாகவும் அமைகின்றனவாம். எங்கும் என்றும் எவரிடத்தும் காணலாகாப் பொருள் பற்றிப் பேசின், இல்பொருளாக ஏற்பாரின்றி ஒழியும். தொல்காப்பியர்க்கு முற்பட விளங்கிய இலக்கிய இலக்கண நூல் வழக்குகளும், அவர் கண்ட உலகியல் வழக்கு களும், ஒருங்கே தொகுக்கப்பட்டுத் தொகையாக்கியதே அவர் வழங்கிய வாழ்வியல் இலக்கணமாகும். சான்றுகள் உடன்போக்கு, அறமே என நினைந்த ஒரு தாயுள்ளம் கூறுகின்றது. மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி இனிய ஆகுக தில்ல; அறநெறி இதுவெனத் தெளிந்தஎன், பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே (ஐங். 371) மழைபொழிந்து வழிகுளிரட்டும்; அறம் இதுவெனத் தெளிந்த என்மகள் சென்ற இடம் என்னும் இது, பெற்றவள் உள்ளம் பேசுவது இல்லையா? தலைவியைத் தலைவனொடு விடுக்கும் தோழி, இவளே நின்னலது இலளே; யாயும் குவளை உண்கண் இவளலது இலளே; யானும் ஆயிடை யேனே; மாமலை நாட மறவா தீமே! என்பது, குறிய தொடர்களில், எத்துணைப் பெரிய நேய உரை! இதுநும் ஊரே; யாவரும் கேளிர்; பொதுவறு சிறப்பின் வதுவையும் காண்டும்; ஈன்றோர் எய்தாச் செய்தவம் யாம்பெற் றனமால்; மீண்டனை சென்மே கண்டோர், தலைவன் தலைவியர்க்கு உரைக்கும் இவ்வுரை, எத்தகு கனிவும் பெருமிதமும் தாங்குதலும் உடையதாகத் திகழ்கின்றது! இது உங்கள் ஊர்; இருப்பவர் எல்லாம் உம் உறவினர்; சிறப்புற மணம் நிகழ்த்துவேம்; உங்கள் பெற்றவர் பெறாப் பேறு எங்களுக்கு வாய்த்தது; வருக என்னும் இவ்வுரை தாய்மை யுள்ளம் தெய்வ வுள்ளமாகிச் சுரந்த சுரப்பு அல்லவோ! உடன்போக்குக்கு ஓர் உள்ளம் உடன்வந்து வழிகாட்டு கின்றதே: எங்களூர் இவ்வூர்; இதுவொழிந்தால் வில்வேடர் தங்களூர்; வேறில்லை தாமுமூர் - திங்களூர் நானும் ஒருதுணையா நாளைப்போ தும்மிந்த மானும் நடைமெலிந்தாள் வந்து (கிளவித்தெளிவு) தொல்காப்பியர் வழங்கிய கூற்றுவகை வெள்ளப் பெருக்கே, சங்கத்தார் அகப்பாடல்களும், பிற்காலக் கோவை முதலிய பாடல்களுமாம். அகவலும் வெண்பாவும் கட்டளைக் கலியும் பாவினமும் இக் கூற்றுவகையை விளக்குவனவாகப் பிற்காலத்தில் விளங் கினும், தொல்காப்பியர் நாளில் கலிப்பாவும் பரிபாவும் பெரு வரவாகக் கொண்டிருந்தன. இவற்றை யெல்லாம் வடித்தெடுத்த பாகாக, நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரிய தாகும் என்மனார் புலவர் என நூற்பா கிளர்ந்ததாம் (999). நினைத்தல் பிரிவு, பிரிவு வகைக் கூற்று என்பவற்றை உரைத்த ஆசிரியர் அது தொடர்பான வேறு சில குறிப்புகளையும் வழங்குகிறார். நினைத்தலும் செய்தலொடு ஒக்கும் என்பது ஓர் உயர்ந்த உளவியல் ஒழுக்கம். அவ் வொழுக்கம் விளங்கும் வகையால், நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் என்று கூறி, நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே என்கிறார். பிரிவுக்காலத்து நிகழ்ந்த நிகழ்ச்சிகள், தலைவன் தலைவியால் நினைத்தற்கு உரியவையும் ஆகும் என்பதுடன், நிகழ்ந்த அது நெஞ்சில் நிலைபெற்றிருத்தலும் அப் பிரிவாகிய பாலைத் திணையே ஆகும் என்பதும் இவற்றின் பொருள். இவ்வகத்திணையில் இணைக்கத் தக்கவை எவையும் இல்லையோ எனின், மரபு நிலை நீங்கா மாட்சியொடு இணைக்கும் பொருளை இணைத்தலும் ஏற்கக் கூடியதே என்கிறார் (991). உள்ளுறை சிந்திக்க வைக்கும் செய்தி எதுவோ அது செயலூக்கியாகத் திகழுதல் உறுதி. அதனால், அகத்திணை உரையாடல்களில் ஓர் அரிய உத்தியை வகுத்து, நூன் மரபாகப் போற்றினர். அஃது உள்ளுறை உவமை என்பது. இயல்பாக வழங்கும் உவமையொடு, இவ்வுள்ளுறை உவமையும் வரச் செய்யுள் இயற்றல் சிறக்கும் அகப்பொருளுக்கு என்று கூறும் அவர், அதன் இலக்கணத்தை, உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள்முடிகென உள்ளுறுத்து இறுவதே உள்ளுறை உவமை என்கிறார் (994). அலை கொழித்துத் திரட்டிய மணல் மேட்டை அசையும் துகிலைப்போலக் காற்றுத் தூற்றும் கடற்கரைத் தலைவனே என்று குறிப்பிடுவதன் வாயிலாகத் தலைவன் தலைவியர் சந்திப்பு ஊரவர் அறிந்து தூற்றப்படு பொருளாகியமையைத் தோழி உணர்த்துகிறாள் தலைவனுக்கு. இதன் உட்கருத்து காலம் நீட்டாது உடனே மணந்து கொள் என்று ஏவுதலாகும். இதனை, முழங்குதிரை கொழீஇய மூரி எக்கர் நுணங்குதுகில் நுடக்கம் போலக் கணங்கொள ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப என்கிறாள் (நற். 15). உள்ளகத்துப் பொருளாகிய அகம், உவமை வழியால்கூட வெளிப்படல் சிறப்பன்று என்று கொண்ட உயர்நெறியே இவ் வுள்ளுறை எனல் சாலும். இதன்மேல் இறைச்சி என்பதொன்றும் உண்டு. அதனை உவமையியல் முதலியவற்றில் விரியக் கூறுகிறார் ஆசிரியர். கருப்பொருளை அடியாகக் கொண்டு உள்ளுறை தோன்றும் என்னும் ஆசிரியர் தெய்வம் என்னும் கருப் பொருள் உள்ளுறையில் இடம் பெறக் கூடாது என்று வரம்பு காட்டுகிறார். புலப்பாடு இல்லாத ஒன்றைக் காட்சியளவால் விளக்கிப் புலப்படுத்தலே முறை. அவ்வாறு காட்சி வகையால் காட்ட முடியாத ஒன்றால், புலப்படுத்த எண்ணல் புலப்பாடாக்காது என்பதால் விலக்கினார் எனத் தெளியலாம். எழுதிணை ஏழுதிணைகளாகக் கூற எடுத்துக் கொண்டவற்றுள் முந்து நிற்கும் கைக்கிளை இலக்கணமும், பிந்து நிற்கும் பெருந்திணை இலக்கணமும் இயல் நிறைவில் கூறி அமைகிறார். மக்கள் எழுவர் என்றால், மூத்தாரும் இளையாரும் ஒப்ப மக்கள் எனவே படுவர். அது போல், அகத்திணை ஏழு எனின், முன்னும் பின்னுமாகிய இவையும் அகத்திணைகளேயாம். புறத் திணையொடு பொருந்துவன ஆகா. அகம் புறம் எனல் இரண்டே யன்றி அகப்புறம் புறப்புறம் என்பன பொருந்தாப் பிற் பிரிவாயவை. இளையராய் இருப்பார் விளையாட்டுக் காதலும், வேட்கை மிக அமைந்தார் அளவொடும் அமையாராய்க் கொள்ளும் பெருவிருப்பும், முறையே இக் கைக்கிளை, பெருந்திணை எனலாம். கைக்கிளை காமம் சாலா இளமை யோள்வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிரு திறத்தால் தன்னொடும் அவனொடும் தருக்கிய புணர்த்துச் சொல்எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே என்பது முன்னதன் இலக்கணம் (996). பருவம் அடையாத ஒருத்தி; அவள் பருவம் அடைந்தவளா அடையாதவளா என்பதை அறிந்து கொள்ளாத இளையவன் ஒருவன்; ஆனால், அவளால் தாங்காத் துயர் தான் கொள்வதாகக் கூறுகிறான். தன்னைப் புரிந்து கொண்டு நடத்தலால் தனக்கும் அவளுக்கும் ஏற்படும் இன்பத்தையும் இல்லாக்கால் இருவர்க்கும் ஏற்படும் துன்பத்தையும் தானே பெருமிதமாகக் கூறுகிறான்; அவளிடமிருந்து மறுமொழி என எதுவும் அவன் பெற்றான் அல்லன்; எனினும், தானே சொல்லி அதனால் இன்பப்பட்டுக் கொள்கிறான்; இதுவே கைக்கிளை எனப்படுவது என்பது இதன்பொருள். இந் நிலை, பால் பிரிவு இல்லாமல் பயிலும் இளம் பள்ளிகளிலும், இளையோர் பணிபுரியும் தொழிலகங்களிலும், நெருங்கி உறையும் குடியிருப்புகளிலும் பெருக நிகழ்தலும் சொல்லுறவாகத் தொடங்கி நல்லுறவாகப் பின்னே திகழ்தலும் காண்பார் கைக்கிளையாவது காதல் தொடக்கம் எனவே உளவியற்படி கொள்வர். உரிய வழிகாட்டலால் உயரிய வாழ்வுக்கு அடித்தளம் ஆக்குவர். பெருந்திணை இனிப் பெருந்திணை என்பதை எண்ணுவோம். ஆசிரியர் பெருந்திணையை, ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே என்கிறார். மடலேறுதல், இளமை நீங்கியபின் விரும்புதல், தெளிவற்ற காமமிகை, மிக்க காமத்தால் செய்யும் துணிவுச் செயல் ஆகிய நான்கும் பெருந்திணை எனப்படுபவை என்பது இதன் பொருளாம். இத் திணையை அகத்தொடு முரணா வகையில் ஆய்ந்த அறிஞர் வ. சுப. மாணிக்கனார், ஐந்திணையாவது அளவுக் காதல்; பெருந் திணையாவது மிகுதிக்காதல். பெரும் என்ற அடை அளவினும் மிகுதிப் பாட்டை மிகையைக் குறிக்கின்றது. பெருமூச்சு, பெருங்காற்று, பெருமழை, பெருமிதம், பெரும்பேச்சு, பெருங் காஞ்சி, பெருவஞ்சி என்ற தொடர்களை உடன் நோக்குக என்பது இவண் கொள்ளத் தக்கது. களவை நாணின்றி வெளிப்படுத்திக் கற்பு ஆக்கினமை யின் (ஏறியமடல் திறம்) ஐந்திணைப் படாது பெருந்திணைப் பட்டது என்றும், இல்வாழ்க்கையில் காதல் நுகர்ச்சிக்கு ஒத்த மதிப்புக் கொடாது, இளமையை வேண்டுமளவு நுகராது, பொருள் முதலாயவற்றில் நாட்டம் கொண்டு ஒழுகுவது மிகையாதலின் இளமைதீர்திறம் பெருந்திணை யாயிற்று என்றும், கற்பு போய்வரும் பொருளில்லை. நாணோ ஒழுக் கத்தை விடாது அரிதில் போய்வரும் தன்மையது. நாண் விட்டமையால், காமத்து மிகுதிறத்தால் பெருந்திணையாயிற்று என்றும், களவுத் தலைவி மன்னரின் விழாவிற்கும் மகளிரின் துணங்கைக்கும் இல்லங் கடந்து புறப்பட்டே போய் விட்டாள். எண்ணம் சொல் அளவில் அமையாது இயங்கிய இச் செய்கை மிக்க காமத்து மிடல் எனப்படும் என்றும் இவற்றின் முடிபையும் கூறுவார் மாணிக்கர். (தமிழ்க் காதல் - 234 - 257). அகத்திணையை அடுத்து ஆசிரியர் புறத்திணை இயல் கூறினார். முற்படக் கிளந்த எழுதிணை (947) என்றவர், அவ்வெழுதிணை களுக்கும் அமைந்த புறத்திணைகள் ஏழனையும் கூறுதலை நூன் முறையாகக் கொண்டார். நாம் எடுத்துக் கூறிய அகத்திணை தொடர்பான களவு, கற்பு எனக் கைகோள் இரண்டனையும், அவற்றின் தொடர்பான எஞ்சுதல் பொருள் கூறிய பொருளியலையும் கண்டு, புறத்திணை இயலைக் காணலாம். பொருள் தொடர்ச்சி நோக்கியது இவ்வமைப்பாகும். களவு ஒருவர்க்கு உரிமையாம் பொருளை ஒருவர் கவர்ந்து கொள்ளுதல், உலகியலில் சொல்லப்படும் களவாகும். அக் களவைக் கடிந்து கள்ளாமை (களவு செய்யக் கருதாமை) கூறும் வள்ளுவர், உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் என்பார். உள்ளத்தால் உள்ளலும் (நினைத்தலும்) செய்தலோடு ஒக்கு மென, உளமொன்றிய உரைவகுத்து ஆசிரியர் உளப் பாங்கை வெளிப்படுத்துவார் உரையாசிரியர் பரிமேலழகர். அத்தகைய பழிக் களவு அல்லாமல் உயிர் தளிர்க்கச் செய்யும் உள்ளங் கவர் களவு ஈதாகும். ஆதலால், வாழ்வியல் நெறிவகுத்த சான்றோர், ஒருவரை ஒருவர் உள்ளத்தால் கவர்ந்து ஒன்றுபடும் இயற்கை இயைபை, இயற்கைப் புணர்ச்சி, தெய்வப் புணர்ச்சி, கடவுட் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, ஒன்றிய பாலது ஆணை, காமக் கூட்டம், ஊழால் கூடும் கூட்டம் என்றெல்லாம் பெயரீடு செய்து பாராட்டினர். அன்றியும் களவு பிறர் அறியாவகையில் நிகழும் நிகழ்வு ஆதலால் மறை எனவும், மறைநெறி எனவும், மறையோர் ஆறு எனவும் குறியீடு செய்து நம் முந்தையர் வழங்கினர். இக் களவின் முதல் நிலையாம் காட்சியை, ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பால தாணையில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே என்கிறார் தொல்காப்பியர் (1039). உலகியலில் ஒருவரோடு ஒருவரை இணைக்கின்ற சூழல் என ஒன்று உண்டு. அன்றி அவரை அவ்வாறு இணையச் செய்யாத சூழல் என்பதொன்றும் உண்டு. இவ் விரண்டனுள் இணையச் செய்யும் உயர்ந்த சூழல் வலிமையால், ஒத்த ஒருவனும் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் காணுதற்கு வாய்க்கும். அக் காட்சியால் ஏற்படும் உள்ளப் பதிவே, பால் ஒன்றுதலாகிச் சிறக்கும். ஒத்த என்னும் நிலையில், சற்றே மிக்கோன் கிழவன் எனினும் நீக்குதற் குரியது இல்லை; ஏற்கத் தக்கதேயாம் என்கிறார் (1039). ஒத்த கிழவனும் கிழத்தியும் என்பதன் ஒப்பு எவை எனின், பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே என்னும் பத்துவகை ஒப்புமாம் (1219). இவ் வொப்புகளின் அருமை போற்றின் இல்லற வாழ்வு இனிதின் அமையும். உள்ளப் பொருத்தம் இருவருக்கும் உண்டா என்பதை முதற்கண் காண வேண்டியிருக்க, இறுதிவரைகூடக் காண்பதும் கேட்பதும் இல்லை! ஆனால், பெயர் என்றும் நாள்கோள் என்றும் பார்க்க வேண்டாதன பொருத்தமெனப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பெற்றோர் அறியாமல் தாமே மணந்து கொள்ளலும், வேற்றிடம் சென்று விடலும், தம்மைத் தாமே முடித்துக் கொள்ளலும் பெருக்கமாகி வருதல் கண்கூடு. மணப்பெண் பார்க்க வருவார்; வீடு பார்க்கின்றனர்; வளம் பார்க்கின்றனர்; பெற்றோர் தமக்குள் பெண் ஆண் பிடித்தம் பற்றிப் பேசிக் கொள்கின்றனர்; உற்றார் உறவினர் பிடித்தமும் கருதுகின்றனர். தப்பித் தவறி ஆணின் விருப்பைக் கேட்பாரும் பெண்ணின் விருப்பைக் கேட்டு நடத்தல் அருமையே! இந் நிலையில், இருமனம் ஒன்றி விட்டாரையும், சாதி சமய செல்வ நிலைகாட்டி ஒன்றிவிடாது தடுக்க முந்துவாரே பலராகின்றனர். போராடிப் பெற முடியாராய் அவர் முடிந்த பின்னர் இவர் முட்டி என்ன? மோதி என்ன? சாதி சமயம் செல்வம் கணியம் கண்மூடி வெறி இவை இறந்தவரை மீட்டுத் தருமா? தொல்காப்பியர் கூறிய பத்துப் பொருத்தம் பற்றி எண்ணிப் பாராமல், சோதிடன் சொல்லும் பத்துப் பொருத்தமும் பார்த்துப் பொருத்தமென முடித்து, மனப் பொருத்தம் இல்லாதார் வாழ்வு, வீட்டிலேயே விரும்பி உண்டாக்கி வைக்கப்பட்ட நிரய (நரக) வாழ்வு என எண்ணுவார் பெருகினால் அல்லாமல், இதற்குத் தீர்வு வாயாதாம். களவியலைக் கூறத் தொடங்கும் ஆசிரியர், இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டம் காணும் காலை மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே என்கிறார் (1038) இதற்கு, உயிர்களுக் கெல்லாம் பொதுவாகிய இன்பமும், அவ்வின்பத் துய்ப்பிற்குத் தேவையாம் பொருளும், அப் பொருள் தேடுதற்காம் அறமும் என்பவற்றை ஒருங்கே கொள்ளும் வகையில் அன்பொடு கூடும் கூட்டத்தின் தொடக்கமாகியது களவு எனப்படும் காமக் கூட்டம். அக் கூட்டத்தை ஆராயும் போது அது, மறையோர் மணமாகச் சொல்லப்படும் மணம் எட்டனுள் இசைத் துறை வல்லோராம் யாழோர் (கந்தருவர்) மணத்தினை ஒப்பதாம் எனல் பொருளாம். களவு என்பதை விளக்க உவமை கூறுவார், அயல் நெறியாளர் மணவகையுள் ஒன்றனைச் சுட்டினார் என்பதும், அச் சுட்டுதலும் கண்முன் காணற்கியலாக் கற்பனைப் படைப்பராம் கந்தருவரைக் காட்டினார் என்பதும் உரிய பொருள் விளக்கத்திற்கோ, உரிய தமிழ் நெறிக்கோ உதவாததாம். தமிழ் கூறு நல்லுலக வழக்கும் செய்யுளும் நோக்கிக் கூறும் குறிக்கோள் உடையவர், விண்ணுலாவுவாராக அயலார் இட்டுக் கட்டிக் கூறுவாரை, உவமை காட்டுதல் ஏற்புடையதன்றாம். உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் என்னும் தம் உவமை இலக்கணத்திற்கு மாறாம். மேலும் கண்டறியா ஒன்றைக் காட்டுதற்குக் கண்டறிந்த ஒன்றை ஒப்புக் காட்டுதலை யன்றிக் கண்டறிந்த ஒன்றை விளக்கக் காணா ஒன்றைக் காட்டுதல், ஆகாயப் பூ நாறிற்று என்புழிச் சூடக் கருதுவாரும் இன்றி மயங்கக் கூறினான் என்னும் குற்றத்தின் பாற்படும் என்னும் உரைக்கே அது எடுத்துக் காட்டாகிவிடும். அயல்நெறி ஒன்றனை விளக்குவார், தமிழ் நெறியுள் இன்னது போல்வது என்பதே நூன்முறையாம். இந்நூற்பாவின் நான்காம் அடியாகிய, மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் என்னும் ஓரடியை விலக்கிக் காணின், எப்பொருள் குறைதலும் இன்றிக் கண்ணேர் சான்றும் வாய்த்துச் சிறத்தல் கண்கூடு. ஆதலால், இவ் வோரடி உரைகண்டார் காலத்திற்கு முற்படவே மூலத்தின் இடையே சேர்க்கப்பட்ட பொருந்தாச் சேர்ப்பு என்பது புலப்படும். இப்படிச் சேர்ப்பு உண்டோ எனின், இடைச் சேர்ப்பு, இடமாற்றம், நூற்பாச் செறிப்பு, நூற்பா விடுப்பு என்பனவும் தொல்காப்பியத்துள் உளவாதல் ஆய்வார் இயல்பாகக் காணக் கூடியவையாம். வைசியன் என்னும் ஒரு சொல் பழந்தமிழ் நூல்கள் எவற்றிலும் இடம் பெறாதது. பின்னூலார் தாமும் அயற் சொல்லென வெளிப்பட அறிந்தது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளமை (1578) மேற்போக்காக நோக்குவார்க்கும் சேர்மானத்தைக் காட்டிவிடத் தவறாது. இவ்வாறாயின் இவ்வடி நீக்கிய நூற்பாவின் பொருள் என்ன? பொருந்தும் வகை என்ன? என்பவை தெளிவு பெறல் வேண்டும். காமக் கூட்டம் என்பது, பாடுதுறைவல்லாரும் யாழ்த்திற வோருமாகிய பாணர்தம் இணைப்பை ஒப்பது. அது பிரிவு என்பது அறியா வாழ்வினது என்பதாம். பாணர் கூட்டம் என்றும் பிரிவறியாப் பெருமையது என்பது, பாணன் பாடினி அவர்தம் சுற்றம் என்பவை மண் குடிசையில் இருப்பினும் காடுகரைகளில் திரியினும் மன்னர் மாளிகைக்குச் செல்லினும் ஒன்றாகவே இருந்ததைச் சங்கச் சான்றோர் பாடல்கள் தவறாமல் சொல்கின்றன. எந்தப் புலவரும் அப்படித் துணையொடும் சுற்றத்தொடும் சென்றமை அறியுமாறு இல்லை. தள்ளமுடியாச் சான்றைத் தள்ளி, இல்லாத அயற்சான்றைத் தேடி அலைதல் தேவை அற்றதாம். தலைவன் தலைவியை யாழ என்று விளிக்கும் வழக்கு பண்டு முதலே இன்று வரை தொடர்தல் (யாழ, ஏழ, ஏழா என வழங்கப் படுதல்) இதனொடும் எண்ணத் தக்கது. இனி, இவ் வடியை விடுதலால் ஏதேனும் நூற்பாவிற்குப் பொருள் இடரோ விடுபாடோ ஏற்படுமோ எனின் அவையும் இல்லையாம். அன்றியும் இரண்டு நூற்பாக்களுக்குப் பொருந்த வுரைத்த உரைகள் திருந்தும் வகையும் உண்டாகின்றதாம். அதனை மேலே காணலாம். இனி, இன்பமும் பொருளும் அறமும் என்னும் இம்முறை முறையோ; அன்றிச் செய்யுளியலில் அறம் முதலாகிய மும்முதற் பொருள் என்பது முறையோ எனின், இரண்டும் முறையே ஆகலின் ஆசிரியர் கூறினார் என்க. மேலும், வடுவிலா வையத்து மன்னிய மூன்றில் நடுவணது எய்த இருதலையும் எய்தும் நடுவணது எய்தாதான் வாழ்க்கை உலைப்பெய்து அடுவது போலும் துயர் என வருதலால், பொருள் முன்வைப்பு அறியலாம். இம் மூவகையும் ஆசிரியன் ஆணை வழியவே என்பது மும்முதல் என்ற குறியீட்டால் விளங்கும். சொல்லும் இடம் குறித்து எதுவும் முதற் பொருளாகக் கொண்டுரைக்கும் உரிமையினது என்பதால்தான் மும் முதல் என மூன்றற்கும் முதன்மை கூறப்பட்டதாம். காட்சி தலைவன் தலைவியருள் எவர்முற்காண்பரோ எனின், அவ் வினாவுதலுக்கு இடம் வைக்காமல், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என இருவரும் ஒத்துப் பார்க்கும் ஒருமிப்புப் பார்வையே அது என்றார். தகவிலார் மாட்டு எம் பார்வை பதிந்திராது ஆகலின், இவர் தக்காரே என இருவரும் எண்ணுதல் ஐயம் ஆகும்; தெளிவும் ஆகும் (1040). இருவர் கண்ணும் கருத்தும் ஒன்றுபட்டமையால், அது நெஞ்சக் கலப்பாகிச் சிறக்கும் (1042). இவை இயற்கையாக நிகழ்ந்தவை ஆதலால் இயற்கைப் புணர்ச்சி எனப்படுவதாயிற்று. இயல்பாக நடைபெற்றது இயற்கை. இத் தலைவனும் தலைவியும் முன்னரே அறிந்தவராகவும் இருக்கலாம். ஆனால், அறிந்த அந் நாள் ஏற்படாமல் ஓரிடத்து ஒருவேளையில் ஒரு சூழலில் ஒருவரும் எண்ணாமல் நிகழ்வதே இஃதெனத் தெளிய லாம். பிரிவு நெஞ்சங்கலந்த அவர்கள் பிரிந்தபின் ஏற்படும் உளப்பாடுகளை ஒன்பதாக எண்ணுகிறார் தொல்காப்பியர்: இடையீடு படாது விரும்புதல், அவ்வாறே இடையீடு இல்லாமல் எண்ணுதல், இவற்றால் உடல் மெலிவடைதல், எண்ணம் நிறைவேறுதற்கு என்ன செய்யலாம் எனக் கூறுதல், அடங்கிக் கிடந்த நாணம் எல்லை கடத்தல், நினைப்பவை - காண்பவை - எல்லாமும் தம் எண்ண வெளிப்பாடாகவே தோன்றல், தம்மை மறத்தல், மயக்கம் கொள்ளல், வாழ்வை வெறுத்துக் கூறல் என்பவை தலைவன் தலைவியர் இருவர் பாலும் நிகழ்வன (1046). இடம் தலைப்படல் அழைத்துப் பேசாதவற்றை அழைத்துப் பேசுதல், பேசாதன பேசுவனவாகக் கொள்ளுதல், அவற்றின் நலம் உரைத்துப் பாராட்டல், தலைவன் தான் மகிழ்வுறாமை காட்டித் தலைவி இருக்கும் நிலை அறிதல், தலைவன் தனக்குப் பிரிவால் உண்டாகும் மெலிவினை விளக்குதல், தம் இருவர்க்கும் உண்டாகிய தொடர்புநிலை உரைத்தல், தன்னைப் பற்றிய தெளிவு தலைவிக்கு உண்டாகுமாறு தலைவன் கூறுதல் என்பவை இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தோன்றுவன (1047). தலைவன், தன் குடிவரவால் அமைந்த பெருமையும் தன் அறிவாற்றலும் பெருகி நிற்றலாலும், தலைவி, தன் குடிவரவாய பெருமையுடன் இயல்பான அச்சம் நாணம் உறுதிப்பாடு ஆயவை கொண்டு இருத்தலாலும் இருவர் தகுதியும் பேணிக் காக்கும் வகையில் உள்ளுறுதி காத்து நிற்பார் (1044, 1045). தாம் முந்துறக் கண்ட இடத்துக் காணற்கும் முந்துவர். கண்ட அவ் விடத்தில் மீளக் காணுதல் இடந்தலைப்பாடு எனப்படும். தலைப்பாடாவது - கூடுதல். ஏதாவது ஒன்றை முன்னிட்டுத் தலைவியின் உடலைத் தொடுதல், புனைந்துரை வகையால் பாராட்டுதல், தக்க இடம் பார்த்து நெருங்குதல், தலைவி நழுவிச் செல்லுதல் கண்டு வருந்துதல், அதுபற்றி நெடிது நினைத்து நைதல், நெருங்குதல், தொடுதலுறப் பெறுதல், பெற்றபின் உன்னை எவ் வகையாலும் மறவேன் என உறுதி கூறுதல் என்பவை இடந்தலைப் பாட்டில் நிகழ்வன. மெய்தொட்டுப் பயிறல்; பொய்பா ராட்டல்; இடம் பெற்றுத் தழாஅல்; இடையூறு கிளத்தல்; நீடு நினைந் திரங்கல்; கூடுதல் உறுதல்; சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்றம்; உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பின் இருநான்கு கிளவியும் என்பது இதன் தொல்காப்பிய நடை (1048). மெய் தொடல் இதில், மெய்தொட்டுப் பயிறல் முதலியவை வறிதே கூறுவனவா? வாழ்வில் நடைபெறுவனவா? காதல் உரிமையர் சந்திக்கும் படம் - கதை - காட்சி இன்னவற்றை மின்வெட்டென நொடிப் பொழுது இதுகால் நாம் பார்ப்பினும், இவற்றுள் ஒன்று புலப்படுதல் தவறாதே! மெய்தொட்டுப் பயிறல், கூடுதல், நுகர்ச்சி, புணர்ச்சி என்பன வெல்லாம், பழிப்புக்குரியவையாகவோ உடல் கலக்கும் கூட்டமாகவோ கொள்ளக் கூடியவை அல்ல. தலைவி கூந்தலில் பூ இருக்க, அப்பூவை அடுத்துவரும் வண்டை ஓட்டுதல் வழியாகத் தொடுதல் வண்டோச்சி மருங்கணைதல் என்னும் மெய்தொட்டுப் பயிறல். இந் நாளில் இக் காட்சி அருமை அல்லது புனைவு எனத் தோன்றின், ஆலையில் வேலை பார்த்துவரும் ஒருத்தி தலையில், பஞ்சுத் துகளோ நூலோ இருப்பதாக மெய்தொட்டுப் பயிறல் கண்கூடு. புணர்ச்சி ஈராறுகள் கூடுதல் கூடுதுறை; கடலொடு ஆறு கூடுதல் கொண்டு புணரி; இரண்டு சொற்கள் கூடல் புணர்ச்சி; பூவை மணத்தல் என்பது முகர்தல்; நுகர்தல். இன்னவகையில், மெய்தொட்டுப் பயிறல் முதலியவற்றைக் கொள்ளவே பண்டை அகப்பொருள் புலனெறி வழக்காகும். காதலித்தான் ஒருவன் ஊரறிய மனங்கொண்டு வாழாக்கால் சென்ற ஊரே முன்னின்று அறங்காட்டிய நெறி, அந்நெறி. பெற்றோரால் கரணம் முடித்தோ கரணம் பிறரால் முடிக்கப்பட்டோ ஓரிற்படுத்தல் என்னும் நிகழ்வு நேரிட்ட பின்னன்றிக் கூடுதலை ஒப்பாதது புலனெறி வழக்கம். அத்தகு மெய்யுறு கூட்டம் முன்னுற நிகழ்தலும் மகப்பேறு பெறுதலும் என்பவை, சங்கப் பாடல்களில் சான்றுக்கும் இல்லாதவை. அகப் பொருளும் சரி, புறப் பொருளும் சரி கறையிலாத் தூயதாகக் கொள்ளப்பட்ட தன் விளக்கமே பொருளதிகாரச் சுருக்கச் செய்தியாம். உதவலும் தடையும் தலைவியைக் கண்டு மகிழ்ந்தவன், பிரிந்த போது கவலைப்படுதலுடன் அமையான். தலைவியை மீளவும் கண்டு அவளைத் துணையாகக் கொண்டு மனையறம் நடத்தும் வேட்கையனாக இருப்பான். தலைவியைக் காணற்கு வாயிலாக, அவள் உயிர்த் தோழியின் உதவியைப் பலவகையாலும் நாடுவான். தன் உயிர்த் தோழனாக இருப்பான் துணையையும் கொள்வான். தலைவன் தலைவியர் உறுதிப் பாட்டைப் பெருக்கும் வகையால் தலைவன் தலைவியர் இருவரும் காணத் தடையாகியும், காண வாய்ப்பு உண்டாக்கித் தந்தும் பங்களிப்புச் செய்வர். இரவில் சந்தித்தல், பகலில் சந்தித்தல், சந்திப்புக்கு இடையூறு என்பனவும் நிகழும். தோழி, தலைமகள் இளமைப் பருவம் உரைப்பாள்; அவள் அறியாள் என்பாள்; அரியன் என்பாள்; தலைவனை நெருங்கா வகையில் அகற்றுவாள்; அவன், தோழியிடம் மன்றாடிக் கேட்கவும் ஆவன்; அவள் இசைவைப் பெறுதலுமாவன்; பெற வாயா நிலையில் மடலேறுதல் கூறவும் ஆவன். பாங்கன் நிமித்தம் தோழனால் உண்டாகும் கூட்டத்தைப், பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப என்பார் தொல்காப்பியர் (1050). அவை: காட்சி, ஐயம், துணிவு, வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன. இவற்றுள் முதல் மூன்றும் - கைக்கிளை; அடுத்த ஐந்தும் அன்பின் ஐந்திணை; இறுதி நான்கும் - பெருந்திணை. இவற்றை, முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே (1051) என்றும், முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே (1052) என்றும் கூறுவனவற்றால் தெளிவிப்பார். மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் என்னும் நெறியைப் பழைய உரையாசிரியர்கள் கொண்டமை யால், முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்பதற்கு, அசுரம் பைசாசம் இராக்கதம் என்னும் மூன்று மணங்களையும், பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே என்பதற்கு, பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்னும் நான்கு மணங்களையும் பொருளாகக் கொண்டனர் (இளம். நச்.). பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப என்னும் முன்னை நூற்பாவை (1050) அடுத்து வருதலை விட்டுப் (1051-2) பொருந்தா மணத்தைப் பொருத்திக் காட்டினர் (1038). மறையோர் மணவகை இவண், மறையோர் தேஎத்து மன்றல் எட்டும் பற்றிய குறிப்பை அறிதலும் வேண்டுவதாம். தள்ளத் தக்கதா கொள்ளத் தக்கதா என்பதற்கு உரிய பொருள் வேண்டுமே. பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டு பிரமசரியம் காத்தவனுக்குப் பன்னீராண்டுக் கன்னியை அணிகலம் அணிந்து கொடுப்பது. பிரசாபத்தியம்: மைத்துன முறையான் மகள் வேண்டிச் செல்ல மறுக்காமல் கொடுத்தல். ஆரிடம்: தக்கான் ஒருவனுக்குப் பொன்னாற் பசுவும் காளையும் செய்து அவற்றினிடையே பெண்ணை நிறுத்தி அணிகலம் பூட்டி இவற்றைப்போல் நீங்கள் பொலிவுடன் வாழ்க என வாழ்த்திக் கொடுப்பது. தெய்வம்: வேள்வி ஆசிரியனுக்கு வேள்வித் தீயின் முன் கன்னியைத் தட்சிணையாகக் கொடுப்பது. கந்தருவம்: கந்தருவ குமரனும் கன்னியரும் தன்முன் தான்கண்டு கூடினாற் போல, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடி மணப்பது. அசுரம்: கொல்லேற்றினை அடக்கியவன் இவளை மணத்தற்குரியன்; வில்லேற்றினான் இவளை மணத்தற் குரியன் எனக் கூறி வைத்து, அதன்படி செய்தாற்குக் கொடுப்பது. இராக்கதம்: தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிந்து கவர்ந்து செல்வது. பைசாசம்: மூப்புடையாள், உறங்குவாள், மதுமயக்கம் உடையாள் ஆயோரைக் கூடுதல். - இவை தமிழர் மணமல்ல என்பது, மறையோர் தேஎத்து மன்றல் என்பதால் புலப்படும். மக்கட்சட்டம், அரசியல் சட்டம் என்பவற்றால் குற்றமாகக் கொள்ளப்படுவனவும் - பட வேண்டுவனவும் எவையோ, அவையே இப் பட்டியலாக அமைகின்றதாம். பெண்ணடிமை என்று பேசுவார் கண்ணுக்கு இவையெல்லாம் தட்டுப்படா போலும்! காதல் அறம்! என்னும் ஔவையுரைக்கு இவ்வெண்வகை மணங்களுள் ஒன்றற் கேனும் இடமுண்டோ? கந்தருவம் இடம் பெறாதோ எனின், கண்டதும் கூடுதல் என்பது கந்தருவம். அவரை மணத்தல் வேண்டுவதுமன்று; ஏற்றதுமன்று; ஆதலால், களவு கற்பாதல் உயிரான தமிழ் மணத்தொடு எதுவும் ஒவ்வாததாம். தலைவன் கூற்று பகலில் சந்திக்கும் இடம் இரவில் சந்திக்கும் இடம் என்னும் ஈரிடங்களிலும் சந்திக்கத் தவறிவிட்ட போதும், பார்க்க முடியாத வகையில் நெடும் பொழுது கடந்த போதும், காணவேண்டி நின்று காணா நிலையில் வேட்கை மிகுந்து மயங்கிய போதும், தான் புகுதற்குக் கூடாத காலத்துப் புகுதலால் விருந்தினனாகிய போதும், தலைவியே விரும்பி ஏற்கும் விருந்தின் போதும், முயற்சியை முன்னிட்டுப் பிரிய நேரும் போதும், நாணத்தால் தலைவி விலக்கி நிற்கும் போதும், வரைந்து (மணந்து) கொள்ளுமாறு தோழி சொல்லும் உயர்ந்த சொல்லைக் கேட்கும் போதும், வரைதலை உடம்பட்டு ஏற்கும் போதும், வரைதலை அவர்கள் மறுக்கும் போதும், தலைவன் கூற்று உண்டாகும். இந்நூற்பாவைத் தலைவி கூற்று வகையாகக் கொண்டார் நச்சினார்க்கினியர். இளம்பூரணர், தலைவன் கூற்று வகையாகக், கொண்டார். தலைவியைப் பற்றிய சில குறிப்புகளை அடுத்துக் கூறி, அவள் கூற்றுகள் எவை என அடைவு மேலே செய்தலால், இது தலைவன் கூற்றெனலே தகுதியாம் (1055). தலைவி இயல்பு இன்ப ஒழுக்கில் நிலை பெற்றுவரும் நாணம் மடம் என்னும் உயரிய பண்புகள் தலைவிக்கு உரியவை; ஆதலால், குறிப்பினால் கருத்தை வெளிப்படுத்துவாள்; தக்க இடத்தில் மட்டுமே சொல்லால் வெளிப்படுத்துவாள்; அல்லாமல் அவள் விருப்பை வெளிப்பட உணர்த்தமாட்டாள் (1054). விருப்பத்தை வெளியிடாத கண் இல்லாமையால், அதுவே கருத்தை வெளிப்படுத்திவிடும் (1055). தலைவன் விருப்பினை ஏற்றுக் கொள்ளும் தலைவியே எனினும், (உடம்பாட்டினள் எனினும்) உடம்பாடில்லாள் போலக் கூறுதலும் உண்டு (1056). - என்பவை, ஆசிரியர் தலைவியின் நாணம் மடம் குறித்த இயற்கைச் செய்தி அறிந்து கூறும் தெளிவினவையாம். இந்நாளிலும், அன்பின் ஐந்திணைப் படும் வாழ்வினர் இத்தகையராகவே இருத்தல் வெளிப்படை. நாணம் மகளிர் நாணுதல் நயம் திருநுதல் நாணு என்னும் இயற்கையான நாணமாகும். கற்பித்துவருவது அன்று; நாணுதல் ஆகாது எனத் தம் முனைப்புக் கொண்டாரும், நாணாமல் இருக்க முடியாத இயற்கை நாணுதல் அஃதாதலின், கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற என்பது வள்ளுவம். மடம் மடம் என்பது இளமையொடு கூடிய உயரிய ஓர் இயற்கை. கற்றவை கேட்டவை என்பவற்றுள் தக்கவற்றை விடாப்பிடி யாகக் கொள்ளும் கொள்கை வீறு ஆகும் அது. துறவர் நிலைப் பயிற்றிடம் மடம் எனப் பெயர் கொள்ளப்பட்டது இக் கொள்கைக் கடைப்பிடி கருதியேயாம். அங்கே இப் பண்பியல் அருகியமையே, இப் பொருளை மறுக்கவும், சமையல் கூடம் - சாப்பாடு என்பவை தழுவிய மடைப்பள்ளி நிலையத்து வாழ்வினர் என்னும் பொருளுக்கு அவர்களை இடமாக்கிய தாம். எம்துயர் தாங்குவதுடன் பிறர் துயரும் யாம் தாங்குவேம் என்னும் கொள்கைத் தவவீறு காவி ஆகும். காவுதல் - தாங்குதல். காவு தடி - காவடி. காவினேம் கலமே புறம். இக்காவி உடையளவில் நிற்கும் இடமும் உண்டுதானே! அதுபோல். கூற்று தலைவனை மறைத்து நின்று காணுதல் முதலாகத் தலைவி கூற்று நிகழும் இடங்களையும் புதுவதோர் மணம், புதுவதோர் பொலிவு முதலாயவை கண்டு தோழி கூற்று நிகழுமிடங்களை யும், களவு ஊரவர் அறிய வெளிப்படு நிலை முதலாகச் செவிலி கூற்று நிகழுமிடங்களையும் நாடக உத்தியில் நயமுற உரைக்கிறார் தொல்காப்பியர் (1057, 1060, 1061). இடையிடையே களவொழுக்கம் குறித்த நுணுக்கச் செய்திகள் சிலவற்றையும் குறிப்பிடுகிறார். தலைவி கூற்று தலைவி தானாகக் கூறும் இடங்களும் உண்டு என்பதைக் கூறுகின்றார். ஆதலால், வினாவிய வழியே தலைவி பிற இடங்களில் கூறுவாள் என்பதைப் புலப்படுத்துகிறார். திருமணம் செய்யும் காலத்தைத் தள்ளிவைத்துத் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரியும் போதும், திருமணம் செய்யாமல் தேடிவந்து நீங்கும் தலைவனைக் கண்டபோதும், அயலார் மணம் வேண்டி நிற்றலைத் தலைவனுக்கு உரையெனத் தோழிக்கு உரைக்கும் போதும் தலைவி தானே கூறுதல் உண்டு (1058). உயிரைப் பார்க்கிலும் உயர்ந்தது நாணம்; அந் நாணத்தினும் குற்றமற்ற அறிவான் அமைந்த கற்பு உயர்ந்தது; என்று முன்னோர் சொல்லிய சொல்லை ஏற்றுக் கொண்ட மனத்துடன், தலைவன் இருக்குமிடம் தேடிச் செல்லுதலும், தன்துயர் வெளிப்படுத்தாத நல்ல சொற்களைச் சொல்லுதலும் ஆகிய நிலையிலும் தலைவி கூற்று நிகழ்தல் உண்டு (1059). குறிப்புகள் சில அகவாழ்வியல் அறியார்போலத் தான் கொண்ட வேட்கையைத் தலைவன் முன் கூறுதல் பெரிதும் தலைவிக்கு உண்டாதல் இல்லை; புதிய மண்கலத்தில் ஊற்றப்பட்ட நீர் புறத்தே பொசிவது போல அவள் மெய்ப்பாட்டால் புலப்பட்டு விடும் (1064). இயற்கைப் புணர்ச்சி, தாமே கொண்டது ஆதலால் தோழன், தோழி என்பார் தூதர்களாக இருத்தல் அன்றித், தமக்குத் தாமே தூதாதலும் தலைவன் தலைவியர்க்கு உண்டு (1065). தலைவி தலைவனைச் சந்திக்கக் கூடும் இடத்தை அவளே கூறுவாள். அவள் வருதற்குத் தக்க இடமாக அமைய வேண்டும் ஆதலால் (1066). தலைவியை அன்றித் தான் வேறாக இல்லாத தோழி குறிக்கும் இடமும் உண்டு (1067). தலைவியைக் காணவரும் தலைவனுக்குத் தோழன் மூன்றுநாள் அளவே உடனாவன் (1068). தலைவனைப் பற்றித் தெளிந்த கருத்து வேண்டுதலால் அவன் தோழனைச் சுட்டிக் கேட்கும் முறையைத் தலைவி கொள்வாள். அவள் கேட்டல் துணைச் சுட்டுக் கிளவி எனப்படும் (1069). தலைவி அறிந்துகொள்ள வேண்டிய நற்பொருள் பலவற்றையும் அறியச் செய்பவள் தாய் ஆவாள். தாய் எனப்படுவாள் செவிலி ஆவள் (1070). தலைவிக்குத் தோழியாக இருப்பவள் அச் செவிலியின் மகளே ஆவள். அத் தலைவியின் தாய்க்குத் தோழியாயவள், தோழியின் தாயாகிய தன் செவிலித்தாயே என்பதால் அவள் வழிவழி உரிமை புலப்படும் (1071). தலைவிக்கு வழிகாட்டும் அறிவுத் துணையாகத் தோழி இருத்தலால், அவள் தலைவியை நன்கு ஆராய்தலும் சிறப்பேயாம் (1072). தலைவியை அடைவதற்குத் தலைவன் தன்னிடம் வேண்டி நிற்றலாலும், தலைவியின் குறிப்புணர்ந்து கொள்ளலாலும், இருவரும் ஓரிடத்து இருத்தலை அறிதலாலும் அவர்கள் இருவருக்கும் உள்ள அன்புணர்வைத் தோழி உணர்ந்து கொள்வாள். இதற்கு, மதியுடம் படுதல் என்பது பெயர் (1073). தோழி மதியுடம்பட்டு உணர்ந்தால் அல்லாமல், அதன்பின் நிகழ்தற்குரிய கடமைகள் நடைபெற மாட்டா என்பர் (1074). தலைவன் தலைவியர் கூடுதல் முயற்சிக்கும் வரைதல் நிகழ்வுக்கும் அவளே பொறுப்பாளியாக இருத்தலால், அவர்களைப் பற்றி அறிந்திருத்தல் கட்டாயமாம் (1075). தலைவன் தலைவியர் சந்திக்கும் இடம் குறி எனப்படும். அது இரவுக் குறி, பகற்குறி என இரண்டாம் (1076). இரவுக் குறி மனைக்கண் உள்ளார் பேசும் ஒலி கேட்கும் அளவுள்ள மலை சார்ந்த இடமாகும். ஆனால், அது மனைக்குள்ளிடம் ஆகாது (1077). மனைக்கு அப்பாலானதாகவும் தலைவி அறிந்த இடமாகவும் இருப்பதே பகற்குறி இடமாகும் (1078). தலைவன் தான் குறியிடம் வந்ததைக் குறியால் அறிவிக்க, அக் குறியிடம் இல்லாத வேறு இடத்திற்குத் தலைவி சென்று அவனைத் தேடிக் காணாமல் வருதற்கும் நேரும் (1079). மிக அமைந்த சிறப்பான இடம் வாய்க்குமெனில் ஆங்காங்குச் சென்று சந்தித்தலும் உண்டு (1080). களவொழுக்கத்தின் போது நேரமும் நாளும் தவறிய நிலை தலைவனுக்கு இல்லை (1081). வரும் வழியின் அருமை, நேரும் கேடு, அச்சம், இடையூறு என்பவற்றைப் பற்றியவற்றால் நேரமும் நாளும் தவறுவதும் தலைவனுக்கு இல்லை (1082). தலைவி காதலறம் கொள்ளுதலை அவள் தந்தை முதலியோர் அவள் குறிப்பாலேயே அறிவர் (1083). தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலி அறிந்து கொண்டவாறு நற்றாயும் அறிவாள் (1084). களவொழுக்கம் அரும்பிய நிலையில் இருந்து விரிந்து ஊரறியும் செய்தியாவது தலைவனாலேயே ஆம் (அம்பல் - அகத்து ஒடுங்கியிருந்த நிலை; அலர் = மலர்ந்து மணம் பரவுதல் போன்ற நிலை) (1085). களவு வெளிப்பட்டபின் மணம் கொள்ளல், களவு வெளிப்படுமுன் மணம் கொள்ளல் என மணங்கொள்ளும் (வரைவு) வகை இரண்டாகும் (1086). வெளிப்பட்டபின் மணங் கொள்ளல் கற்புமணம் போன்றது. எனினும், முன்னே கூறிய ஓதல் தூது பகை வகைப் பிரிவுகளை மணம் கொள்ளுமுன் கொள்ளல் தலைவனுக்கு இல்லை. ஆனால், திருமணத்தை இடையே வைத்துப் பொருள் தேடுதற்காகப் பிரியும் பிரிவு ஒன்று மட்டும் அவனுக்கு உண்டு. இவையெல்லாம் களவியல் ஒழுக்கச் செய்திகள். சிறு விளக்கம் கண்டதும் காதல் என்பது அவ்வளவில் ஒழியாமல் இருப்பதற்காக இத்தனை வகைக் கட்டொழுங்குகளை நம் முந்தையர் விதித்திருந்தனர் என்பது, எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்க ஒழுகலாறாகும். கண்டதும் காதல், கலைந்ததும் மறத்தல் என்பதற்கு இடமில்லா நெறிமுறைகள் இவையாம். தலைவியும் தலைவனும் தாமே கண்டு ஒருமித்தனர். ஆனால், தலைவன் தோழனோ, தலைவி தோழியோ அறியாமல் அடுத்த நாள் அவர்கள் தாமே கண்டிலர். தோழன் ஆய்வு - இடிப்பு - கண்டிப்பு - தடை என்பவற்றுக்கு ஈடு தந்தே தலைவன் தலைவியைக் காண முடிந்தது. தோழியின் ஆய்வு - மறைப்பு - மறுப்பு - புறக்கணிப்பு என்பவற்றுக்கு ஈடுதந்தே தலைவி தலைவனைக் காணமுடிந்தது. தலைவற்குத் தோழன் இடிக்கும் கேளிராகவே இருந்தான். தலைவிக்குத் தோழி இணையில்லா அறிவுத் துணையாகவே திகழ்ந்தாள். அவளே, களவுக்கு இசைவு தந்து, கற்பு வாழ்வுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட துணிவாட்டி. அந் நிலையை அமைவாய்ச் செய்யமுடியா நிலையில், தாய்க்கு அறிவித்து உடன் போக்குக்கு வழிகாட்டி உரிமையறம் நிலை நாட்டுபவளும் அவள். இத்தகு கட்டொழுங்கு இல்லாமல் இருவராகவே காதலித்திருப்பின் அக்காதல் நீள்வதற்கும் நிலைப்பதற்கும் பொறுப்பாவார் எவர்? நிழல்போல் தொடர்ந்து நீங்கா நெறிகாட்டும் நேயப் பிறவியர் இவர்கள். தோழன், தோழியர் என்னும் இவருள்ளும், தோழியின் பங்களிப்போ கற்பு வாழ்விலும் அருவியாய் ஆறாய்த் திகழும் நீர்மையது. தோழி தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே இடம் பெறுகிறது. ஆனால் தோழி என்னும் சொல்லோ 550 இடங்களில் வருகிறது. தோழி என்னும் சொல்லின் ஆட்சிப் பெருக்கம், அக வாழ்வில் அவள் ஆட்சிப் பெருக்கம் உணர்த்துவதேயாம். அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர். ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலாரே; பாங்கன் ஒரு துறையளவில் வந்து போய் விடுகிறான்; பாணன் சிலபொழுது வருகிறான்,, தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை. தலைவனது தந்தை உடன்பிறந்தார் பற்றி ஒன்றும் சொல்வதாகாது; தலைவியது தந்தையும் அண்ணன்மாரும் கூற்றுக்கு உரியவர் அல்லர். கற்பினில் வரும் மழலைமகன் இளந்தூதுவனே அன்றி உரையாடான்; தோழியும் செவிலியும் அன்னையும் பரத்தையும் அக இலக்கியத்தில் கொள்ளும் வாய்ப்பு மிகப் பெரிது என்கிறது தமிழ்க் காதல். மேலும் சங்க இலக்கியத்தில் 882 களவுப் பாடல்கள் உள. இவற்றுள் 842 பாடல்கள் தோழியிற் கூட்டம் என்னும் ஒரு துறைக்கே வருவன. இதனால் அக இலக்கியத்திற்குத் தோழி என்னும் ஆள், இன்றியமையாதவள் என்பதும் தோழியிற் புணர்ச்சிக்குரிய துறைகளே புலவர்களின் நெஞ்சைக் கவர்ந்தன என்பதும் பெறலாம் என விளக்குகின்றது. தோழி சொல்லாடும் இடங்கள் களவுப்பகுதியில் நாற்பத்து ஏழு; கற்புப்பகுதியில் இருபத்தொன்று; ஆக அறுபத்தெட்டு எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர் தொல்காப்பியர். அவள் உரையாடும் இடங்களையும் திறங்களையும் நோக்கும் போது, பெண்ணியல்பு என்று சொல்லப்படும் பெருமைக் குணங்கள் எல்லாமும் ஓருருக் கொண்டு விளங்கும் உயரிய படைப்பே அவள் என்பது விளக்கமாகும். தலைவிக்கும் தோழிக்கும் உரிய உரிமை, உயிர் உரிமை. அதனால் பிறருக்கெல்லாம் தலைவியாக இருப்பவள் தோழிக்குத் தோழியாகவே விளங்குகிறாள். அவள், இவளைத் தோழி என்கிறாள். இவள், அவளைத் தோழி என்கிறாள். இத்தகைய ஒத்த உரிமையே தோழமையின் நிலைக் களம். இன்னும் ஒருபடி மேலே செல்கிறது அவர்கள் தோழமை. தோழி தலைவியை அன்னை என்பாள். தலைவி தோழியை அன்னை என்று உரிமையாய் அழைப்பாள். நம் தாய், நம் தலைவர், நம் வாழ்வு, நம் உயிர் என்று இருவரும் ஒப்பிதமாகக் கூறுவர். தங்கள் உயிர்கலந்து ஒன்றிய தோழமையை, ஒரு தோழி சொல்கிறாள்: தாயோ, தன் கண்ணைவிட மேலாக இவளை விரும்புகிறாள். தந்தையோ, இவள் கால் நிலத்தில் படுவதையும் பொறுக்காதவனாய் உன் சிற்றடி சிவக்க எங்கே செல்கிறாய் என்று தடுப்பான். நானும் இவளுமோ, பிரிவு இல்லாமல் அமைந்த நட்பால் இரண்டு தலைகளையுடைய ஓருயிர்ப் பறவை போல உள்ளோம்! என்கிறாள். எத்தகைய அரிய உவமை! தலைவன் தன் தலைவிக்கு வாய்த்த தோழியைப் பற்றிச் சொல்கிறான்: தோழி எதைச் செய்கிறாளோ, அதையே செய்கிறாள் தலைவி. மிதப்பின் தலைப்பக்கத்தைத் தோழி பிடித்தால், தலைவியும் அத் தலைப்பக்கத்தையே பிடிக்கிறாள். மிதப்பின் அடிப்பக்கத்தைத் தோழி பிடித்தால், அவ் வடிப்பக்கத்தையே தலைவியும் பிடிக்கிறாள். மிதப்பை விட்டு விட்டுத் தோழி வெள்ளத்திலே போனால், தலைவியும் போவாள் போலும் என்பது அவன் நெஞ்சார்ந்த உரை. இன்ன சிறப்பால் தான் தோழியைக் கூறும் தொல்காப்பியர், தாங்கரும் சிறப்பின் தோழி என்றார் போலும் (1060) ! கற்புமணம் கற்பு மணம் என்பது என்ன? எனின், கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே என்பது (1088). கரணமாவது - சடங்கு; மணச் சடங்கு. கிழவற்குக் கொடுத்தற்குரிய முறைமையர் கொடுக்க, கிழத்தியைக் கொள்வதற்குரிய முறைமையர் கொள்வதே திருமணக் கொடையாகும். கிழவன் கிழத்தியரின் பெற்றோரைப் பெற்றவர்கள், இக் கொடையைச் செய்வராதலால் தாதா எனப்பட்டனர். தாதா = கொடையாளர். அப் பெயர் ஆண்பால் அளவில் சுருங்கி, முறைப் பெயராக இன்று வழங்குகிறது. தாத்தா என்பது அது. முழுத்தம் திருமணச் சடங்கு முழுமதி நாளில் இரவுப்பொழுதில் நடந்தமையால் அதனை முழுத்தம் என வழங்கினர். அதன் அடையாளமே முழுத்தம் பார்த்தல், முழுத்தக்கால் நடுதல் என்பனவும், வளர்பிறை நாளில் மணவிழா நடத்திவருவதுமாம். திருமணக் கரணம் மணமக்களை நீராட்டி, புத்துடை உடுத்தச் செய்து, மக்களைப் பெற்ற மங்கையர் நால்வர் மங்கலவிழா நிகழ்த்தி, கற்பினில் வழாஅ நற்பல உதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு என்று வாழ்த்தியமை அகநானூற்றில் 86ஆம் பாடலாகத் திகழ்கின்றது. அதன் 136ஆம் பாட்டும் அதனைச் சுட்டுகிறது. இம் முழுத்தமே முகூர்த்தம் எனப்பட்டு, 24 மணித் துளி அளவு குறிக்கும் குறுங்காலமாகியும், அயன் மொழி வழியில் ஆகாச் சடங்கு நெறியாகியும் இந் நாள் நிகழ்வதாயிற்று. திருமணப் போது இரவாக இருந்ததால் முழு நிலவு ஒளி இருப்பினும் விளக்கேற்றினர். ஓமத்தீ வளர்த்திலர்; வந்தவர்க்கு உணவு வழங்கினரே அன்றி, வாளா எரியில் படைத்திலர். அம்மி மிதிக்கும் இழிமை ஏற்படவில்லை. மணமகள் கற்போடு இருந்தால், அருந்ததி விண்மீன் போல் விளங்குவாள். இல்லையானால், அகலியை கல்லானாற் போலக் கெட்டு மிதிபடுவாள் என்னும் அடையாளமாம் அரை கல்லை (அம்மியை) மிதித்தல் அறிவுப் பிறப்பினர் ஏற்கத் தக்கதா? மணமேடைக்கு வந்து சடங்குகள் பலவும் முடித்தபின், மணமகன், மணமகளை மணக்க மாட்டேன் எனக் காசிச் செலவு மேற்கொள்ளலும், பெண்ணைப் பெற்றவன் அவன் பின்னே போய் அவனை வணங்கி, நன்மொழியுரைத்து மணமேடைக்கு அழைத்து வந்து மணம் செய்வித்தலும், சிந்தனை சிறிதேனும் உள்ளவர் ஒப்பும் செயலாகுமா? காசிக்குப் போகின்றவன் மேடைக்கு வந்து ஊடே எழுந்து போவது விழாவுக்கு வந்தோர் அனைவரையும், மூக்கறுத்துப் புள்ளி குத்துவது அல்லவா! உலகம் தட்டை என்பதே இறைமொழி என்ற உறுதிப் போக்கினரும் அஃது உருண்டை என ஒப்புக் கொள்ளும் அளவில், அறிவியல் வளர்ந்துள்ள போதிலும் கண்மூடித் தனத்தில் உருண்டு புரளல்தான் கனமதிப்பு என எண்ணுவா ரும், எண்ணுவார் வழியில் நிற்பாரும் என்றுதான் சிந்திப்பாரோ? தமிழன் தன்மானங் கெட்டுப்போன முதல் நாள், வடமொழி வழிச் சடங்கை ஏற்றுக் கொண்ட நாளேயாம்! அதன் விளைவு என்ன? தொல்காப்பியத் தூய தமிழ் நெறிகளை யும் வடவர் நெறிப் பொருள்காட்ட உரையாசிரியர்களுக்கு இடம் ஆயிற்றாம். அதனைப் பின்னே காண்போம். உடன்போக்கு என்பது, தலைவன் தலைவியரின் பெற்றோர் உற்றார் தொடர்பு இல்லாமல் அகன்று போன அயலிடத்து நிகழ்ச்சி. ஆங்கேயும் மணச் சடங்கு இல்லாமல் மணமக்கள் உடனுறைதல் இல்லை. அதனால், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான என்றார் தொல்காப்பியர் (1089). மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே என அக் கரணம் இல்லாக் காலமும், அக் கரணம் முன்னர்க் கொண்டாரும் அதன் பின்னர்க் கொண்டவரும் பற்றிய நூற்பா இஃது (1090). மூவர் மூவர் என்பார் முடியுடைய மூவேந்தர் என்பவர். போந்தை, வேம்பே, ஆர் என வரூஉம் மாபெருந்தானையர் என ஆசிரியரால் கூறப்பட்டவர். முத்தமிழ், முப்பால் என்பவை போல, மூவர் என்றால் எவராலும் அறியப்பட்டவர். அவர்கள் மூவர் குடியிலும் திருமணக் கரணம் முதற்கண் நிகழ்ந்தது. அக் கரணம் பின்னர் அவர்க்கு உட்பட்ட நானிலத் தலைவர், அரசியல் அலுவலர், ஊர்த் தலைமையர், ஊரவர் என்பார்க்கும் படிப்படியே நிகழலாயிற்று. மன்னர் குடியில் உண்டாகிய மரபுகளே பிறந்தநாள் விழா, சிறந்த நாள் விழா, பள்ளி எழுச்சி, திருவுலா, திருநீராட்டு, திருவூசல் முதலியனவாகக் கோயில் சார்ந்தும் மக்கள் சார்ந்தும் வழங்கின என்பதை அறியின், அடிப்படை விளங்கும். மன்னன் எப்படி மக்கள் அப்படி என்பது இதன் சுருக்கக் குறிப்பு. இம் மூவரை வருணப் பிரிவிற்குத் தொடர்புபடுத்திக் கீழோர் என்பதற்கு வேளாண்குடியினர் எனப் பொருள் காணற்கு இடமில்லை! பொருள், பதவி, தலைமை எனச் சிக்கல் ஏற்படும் இடங்களிலேதான், சிக்கல் தீர்வுக்கு வழியும் காணப்படும் என்பது எண்ணத்தக்கது. பல மனைவியருள் முதன் மனைவியே ஆளுரிமை வாய்ந்தவள் கோப்பெருந் தேவி எனப்படுவதும், அவள் மக்களே ஆளுரிமையர் என்பதும் எண்ணின் இது தெளிவாம். ஐயர் இனி, பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்பது அடுத்த நூற்பா (1091). ஐயர் யாத்தனர் என்னும் சொல் வந்ததும் இந் நாள் ஐயர் அந் நாளே யாம் தாம் அறநெறி அமைத்துத் தந்த மூலவர் என்று மேடையில் மட்டுமல்லாமல் நூலிலும் முழக்கமிடுகின்றனர். சாதிமைக் கொடி பிடித்தலை, மேற்கொண்டவர்கள் வெறியை அன்றி, இந் நூற்பாவில் எள்ளளவும் அப் பொருளுக்கு இடமில்லை. சங்கப் புலவர்கள் பாடல்களில் இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பு உண்டு. அப் பெயர்களில் ஒன்றில் தானும் இன்ன ஐயர் என ஒரு பெயரைக் காட்ட முடியுமா? ஐயர் என்பது சாதிப் பெயராயின், வேடர் கண்ணப்பரும், பாணர் திருநீலகண்டரும் உழவர் நந்தனாரும் சேக்கிழாரால் ஐயர் எனப்பட்டிருப்பரா? போப்பையர், கால்டுவெல் ஐயர் ஐயர் சாதியினரா? இக் குடி எனப்பார்த்தலில்லா வீரசைவர் ஐயர் என்பது சாதியா? ஐயன் - ஐயர் - ஐயா - ஐயை - ஐயாம்மா - ஐயாப்பா என்னும் முறைப் பெயர்கள் எக் குடியினர்க்காவது தனியுரிமைப் பட்டயம் கொண்டதா? தம் ஐயன் என்பதுதானே தமையன். தமையன் என்பாரெல்லாம் ஐயன் சாதிதானா? இளமா எயிற்றி இவைகாண் நின்ஐயர் என எயிற்றிக்குச் சுட்டுதல் அப்பாவா, சாதிப் பெயரா? ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் வரும் ஆசறு காட்சி ஐயர் சாதிப் பெயரா? களவுமணம் ஒப்பாத எண்மணப் பேறுடையார்க்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய் என்னும் குறிஞ்சிக்கலி பொருந்துவதா? இவர் அவர் எனப் பகுக்கும் சாதிப்பிரிவு அல்லாத சால்புப் பெருமக்கள், எக்குடிப் பிறப்பினும் அவரெல்லாம் கரணம் வகுத்து வழிநடத்திய ஐயரே ஆவர் என்க. களவுக் காதல் கற்பு அறமாகாதவகையில், ஓரீர் இடங்களில் உண்டாகிய பொய்யும் வழுவும் கண்ட குடிமைப் பெருமக்கள், அறமன்றச் சான்றோர்கள் ஆயோர் திருமணக் கரணம் செய்வித்து, ஊரறிய ஒப்புக்கொள்ள வைத்த பட்டயப் பதிவே கரணம் ஆகும். பொய்யாவது - செய்ததனை மறைத்தல். வழுவாவது, செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவாம் ஆதலால் கரணம் வேண்டுவதாயிற்று என்பது இளம்பூரணர் உரை. நச்சினார்க்கினியரோ வேதமுறை மணமே பொருளாக்கினார். ஆனால், பொதுச் சடங்கு செய்தே தழும்பேறிப் போகிய செம்முது பெண்டிர் நடத்திய அகநானூற்றுப் பாடலையே எடுத்துக் காட்டினார் (136). எடுத்துக் காட்டிய அளவில் மனத்தில் தடை ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா! நாம் எழுதும் உரை என்ன? எடுத்துக்காட்டும் மேற்கோள் என்ன? முழந்தாளுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிப்பு எனச் சிறிதளவேனும் சிந்திப்பானும் உண்மை அறிவானே எனத் தோன்றியிராமல் போகியிருக்குமா? அவரே அறிவார்! கரணம் என்ப, என்னும் தொடர்க்கு, ஈண்டு என்ப என்றது முதனூலாசிரியரையன்று; வடநூலோரைக் கருதியது என, ஆடுகளம் அமைத்துக் கொண்டு ஆட்டத்தில் தெளிவாக இறங்குகிறார் நச்சினார்க்கினியர். ஒருவர் சுட்டாமல் தாமே தோன்றிய கரணம், வேத நூற்கே உளதென்பது பெற்றாம் என்று மேற்குறிப்பும் காட்டுகிறார். நெஞ்சுதளை கரணத்தின் அமைந்து முடிந்த காலை நெஞ்சுதளைஅவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் என்பது தலைவன் கூற்றுவகையுள் முற்பட நிற்பது (1092). கட்டிப் போடப்பட்டிருந்த நெஞ்சம் அக் கட்டினை நீங்கியது எதனால்? கரணம் முடிந்த உரிமை நிலையால்! என்பது இதற்கு வெளிப் படையான பொருள். திருமணம் முடிந்து விட்டமையால் மனம் திறந்த மகிழ்வுடையன் ஆனான் தலைவன் என்பது தானே குறிப்பு. இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வேட்கை தணியாது வரைந்தெய்துங்காறும் இருவர் மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டுவிடப்படுதல் என உரை கூறுகிறார் இளம்பூரணர். ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து, ஆன்றோராவார் - மதியும் கந்தருவரும் அங்கியும். களவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும் கூட்ட மின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக் கூடிய கூட்டத்தின் கண்ணும்: அது நாலாம் நாளை இரவின் கண்ணதாம் என உரை வரைந்து, குறுந்தொகை 101 ஆம் பாடலை எடுத்துக்காட்டி, இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி என்கிறார். கற்பவர்தாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்! ஆசிரியன் சொல் எப்படி யிருந்தாலும், இப்படித்தான் உரை எழுதுவேன் என உறுதி கொண்டமை தானே, இத்தகு இடங்களில் வெளிப்படுகிறது! எத்தகைய பேரறிஞர்! ‘mt® m¿ah¤ jÄœü‰ fl‰gu¥ò VnjD« ïUªâU¡f Koíkh? என ஆர்வ நெஞ்சத்தை ஆட்கொள்கிறாரே! ‘ïtiu¥nghy ciufhz‰ bfdnt ãwªjh® vtnu? என ஏங்க வைக்கும் அவர், ஏன் இப்படி எழுதுகிறார்? இது தான் சார்ந்ததன் வண்ணமாதல் போலும்! அல்லது இன்னான் எனப்படும் சொல் என்பது போலும்! கற்பில் கூற்றுவகை கற்புக் காலத்தில் தலைவன் கூற்றுவகை முப்பத்தொன்ற னைக் காட்டுகிறார். அவ்வாறே தலைவி, தோழி முதலியோர் கூற்று வகைகளையும் கூறுகிறார் (1092 - 1101). ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கெனத் தலைவன் தலைவியைப் பாராட்டலும், அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் எனக் குறையுணர்ந்து பணிதலும், குடிவாழ்வுக்கு இன்றியமை யாதவை. இவை தலைவன் கூற்றுள் இரண்டு (1092). உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையில் திரியா அன்பின் கண்ணும் என உரிமை உணர்ந்து தலைவி பெருமை போற்றுதல், உரிமை வேட்கைக் காலத்தும் போற்றத்தக்கது. இது தலைவி கூற்றுள் ஒன்று (1093). பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் என்பது தோழி கூற்றுள் ஒன்று. தோழிக்கு இருந்த உரிமை, உறுதி, காவல் கடன் என்பவற்றைக் காட்டுவது இது (1096). காமக் கிழத்தி என்பாளுக்கும் அகவாழ்வில் இடமிருந்த தால் அவள் கூற்றும் உண்டு. செவிலி, அறிவர் ஆயோர் கூற்றும் இடம்பெறும். வாயிலோர் தலைவன் தலைவியர் ஊடற்கண் அதனை நீக்குவார் வாயிலோர் எனப்படுவர். அவர்கள் பாணர் கூத்தர் என்பவர். அவர்கள், உரிமையுடன் சென்று பழகும் இயல்பினர் ஆதலால் அகம்புகல் மரபின் வாயில் எனப்படுவர் (1098). இனிய ஓரியல் இல்வாழ்க்கையில் தலைவி வழியில் தலைவனும், தலைவன் வழியில் தலைவியும் நிற்றல் சிறப்பாதலால், காமக் கடப்பினுள் பணிந்த கிளவி காணும் காலை கிழவோற் குரித்தே வழிபடு கிழமை அவட்கிய லான என்றும் (1100) அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே என்றும் (1101) கூறினார். அலர் முதலியன களவுக் காலம் கற்புக் காலம் இரண்டிலும் அலர் உண்டு (1108). அவ் வலரில் தான் அன்புப் பெருக்கம் உருவாகும் (1109). தலைவன் விளையாட்டும் அவ்வாறே பெருக்கும் (1110). தலைவனுக்குச் சொல்லவிரும்புவனவற்றைப் பிறருக்குக் கூறுவதுபோல வாயில்கள் கூறல் உண்டு. அது முன்னிலைப் புறமொழி எனப்படும் (1113). வேற்று இடத்திற்குச் சென்று தலைவி நிலையைத் தலைவனுக்கு உரைத்தலும், தலைவியிடம் வந்து வேற்றிடத்தில் இருக்கும் தலைவன் நிலையைக் கூறுதலும் பாணர்க்கு உண்டு (1115) தாய்போல் கண்டித்தலும் தழுவிக் கொள்ளலும் தலைவிக்கு உரிய மனைக் கிழமையாம் (1119). பிறவற்றை எண்ணுதற்கும் கூடாத பாசறைக்குப், பெண்ணொடு செல்லுதல் இல்லை (1121). புறப்பணி புரிவார்க்கு அக் கட்டளை இல்லை (1122). தன்னைப் புகழ்ந்து கூறும் சொற்களைத் தலைவன்முன் தலைவி மேற்கொள்ள மாட்டாள் (1126). ஆனால், அவன் அயன்மனை சார்ந்து பின் இரந்து நிற்றலும் தெளித்தலும் ஆகிய இடங்களில் அவள் தற்புகழ்தலும் கொள்வாள் (987). தலைவன் சொல்லை மறுத்துக் கூறுதல் பாங்கனுக்கு உண்டு (1127). ஆனால் அம் மறுத்துக் கூறல் மிகுதியாக இராது (1129). பிரிவுக்குத் தலைவி வருந்தும் இடத்தெல்லாம் அவளை வற்புறுத்தித் தேற்றிச் செல்வதே தலைவன் வழக்கம் (1130). பிரிந்து செல்லுதற்கு ஏற்படும் இடைத்தடை, செலவைத் தடுத்தல் இல்லை. தேற்றிச் செல்வதற்கே உதவும் (1131). தலைவன் மேற்கொண்ட வினைப்பொழுதில், தலைவி நிலைபற்றி எவரும் உரையார். அவன் வினைமுடித்தபோது, தலைவி நிலை அவனுக்குத் தானே தோன்றும் (1132). பூப்புண்டாகிய நாளில் இருந்து பன்னிரண்டு நாள்கள் தலைவன் தலைவியைப் பிரியான். ஏனெனில், அந் நாள் கருவுறும் நாள் ஆதலின் (1133). ஓதல் பிரிவு மூன்றாண்டுக்கு மேற்படாது (1134). காவல் பிரிவு, தூதுப் பிரிவு பொருள் தேடும் பிரிவு என்பவை எல்லாம் ஓராண்டிற்கு மேல் ஆகாது (1135, 1136) தலைவன் தலைவியுடன் ஊரைக் கடந்து ஆறு குளம் கா என்பவற்றுக்குச் சென்று மகிழ்தலும் உரியவை என்பர் (1137). வினை கருதிப் பிரிந்த தலைவன், அவ்வினை முடித்ததும் இடை வழியில் தங்குதல் இல்லை; மனம் போல உரிய இடத்து உதவும் குதிரையாகிய பறக்கும் விலங்கைக் கொண்டிருத்தலால் (1140). இன்ன செய்திகளை அடைவு செய்து கற்பியலை முடிக்கும் ஆசிரியர் தமிழர் அறநெறியை அருமைப்பட மொழிகிறார். அது, காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்பது (1138). சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயன் = முதுமையடைந்ததன் பயன். இறத்தல் = கடத்தல். அளவிறந்த, வரை இறந்த என்பவற்றில் வரும் இறந்த என்பதைக் கருதுக. குடிநலம் சிறக்க வாழ்ந்த முதுமையின் பயன் யாதாக இருக்க வேண்டும் என்பதைத் தெளிவிப்பது இந் நூற்பா. அப்பயன் சிறந்தது பயிற்றல் என்பதாம். கமம் நிறைந்து இயலும் என்பது, கமம் என்னும் சொல்லின் பொருள். பிறைமதி எனத் திகழ்வது கமம். பிறைமதி - வளர் மதியாய் - நிறைமதியாய் விளங்குவது போலக் கமம் என்னும் காமம் விளக்கமுறும். இன்பம் என்பது, எல்லா உயிர்க்கும் பொதுமையது என்பது ஆசிரியன் உரை (1169). ஆனால், காமம் மாந்தர்க்கே சிறப்பின் அமைந்த உணர்வு - அதனாலேயே வள்ளுவ மூன்றாம் பால், இன்பத்துப் பால் எனக் குறியீடு பெறாமல் காமத்துப்பால் எனக் குறியீடு பெற்றதும் அச் சொல்லையே 39 இடங்களில் பயன்படுத்தியதுமாம். காமம் வரும் ஈரிடங்களில் மட்டுமே இன்பமும் வந்து, அமைவுற்றமை யும் அறிக. இக் காமம் நிறைவுற்ற முதுமைக் காலம், காமம் சான்ற கடைக் கோட்காலை ஆகும். அக் காலத்தில் அவர்களுக்கும் குடிவழிக்கும் பாதுகாப்பான நன்மக்கள் தோன்றிச் சிறந்து விளங்குவர்; அவர்களை அன்றி இல்லறச் சுற்றமாகவும் உரிமை உறவுச் சுற்றமாகவும் பலர் இருப்பர்; குடும்பத் தலைவர்களால் அறவாழ்வின் அருமை அவர்கள் அறிந்து திகழ்வர்; மக்கள், சுற்றம் ஆகிய இவர்களுக்குத் தம் பிறவிப்பயனாகச் சிறக்கும் மேல் நெறிகளைக் காட்டி அந் நெறியில் அவர்கள் நிற்குமாறு பயிற்றுதல் கடமையாம் (1138). சிறந்தது பயிற்றல் என்பது சுட்டும் சிறப்பு - செம்பொருள் என்பதாம். பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்ப தறிவு என்று வாய்மொழி கூறுதல் காண்க. இச் சிறப்பு வளர்நிலையே வாழும்போதே பெறும் வீடுபேறு ஆகிய அவாவறுத்தல். வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில் என்பது வீடுறு வழியும், ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும் என்பது வீடுபேறுமாம். தமிழ் நெறியில் இல்லறம் துறவறம் என அறம் இரண்டன்று. இல்லறம் ஒன்றே அறம். அவ்வறம் மேற்கொண்டார் அனைவரும் தம் இல்லறக் கடமைகளை இனிது நிறைவேற்றித் தம் மக்களுக்கும் தம் சுற்றத்திற்கும் பயிற்ற வேண்டுவ எல்லாம் பயிற்றி அவர்களும் அவ்வழியில் தொடருமாறு பற்றற்ற வாழ்வு மேற்கொள்வதே அவ்வறத்தின் நிறைவாகும். இதனாலேயே அறத்தை இரண்டு ஆக்காமல் ஒன்றாக்கியது வள்ளுவம் என்பதும், துறவுப் பகுதியில் அறம் என்னும் சொல் ஒன்றுதானும் இல்லாது அமைந்தது என்பதுமாம். மணிவிழா இனி, மணிவிழா என்பது முதுவர்கள் தம் குடும்பப் பொறுப்பை மக்களிடம் ஒப்படைத்து அவர்கள் பேணலொடும் உதவியொடும் அறப்பணி - அருட்பணி ஆற்றுவதை மேற்கொள்வ தற்கென்றே அமைக்கப்பட்டது என அறியின் இரண்டாம் திருமணம் அறுபதாம் கலியாணம் என்னும் பெயர்களைக் கொள்ளாதாம். பொலிவுச் சடங்கு போலிச் சடங்காகியமை அறிவர் வழிகாட்டத் தவறியமையாலேயே எனக் கருதின் மீட்சி கிட்டுதற்கு வாய்க்கும்! ஏனெனில், அடங்கு கொள்கை சடங்காகிவிட்டதல்லவா! பொருளியல் இனி, அகத்திணை இயல், புறத்திணை இயல், களவியல், கற்பியல் ஆயவற்றில் சொல்லாதனவும், சொல்ல வேண்டுவன உண்டு என்று ஆசிரியர் கருதுவனவும் பொருளியலில் இடம் பெற்றுள ஆதலால், எச்ச இயல் என ஆசிரியர் ஆளுதல் ஒத்த குறியீடு ஆம். அசைமாறல் ஒரு தொடர் மொழியில், ஒலிமாறி ஒலிப்பினும் பொருள் பொருந்தியே வரும்; ஆனால் அசை மாறுபடுதல் கூடாது; அது வழுவாகி விடும். ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்ப ஆய்ந்தவர் கோள் என்னும் குறள் ஊறொராமை உற்றபின் ஒல்காமை என வருதல் வேண்டும். அவ்வாறு வாராக்காலும் பொருள் அவ்வாறே கொள்ளுதல் வேண்டும். ஆனால் அசையாகிய உறுப்பு மாறின் யாப்பு வழுவாகவே அமைந்து விடும். முன்னது பொருள்காண் நெறி; பின்னது இலக்கண நெறி. முன்னதில் பொருள் போற்றுதலும் பின்னதில் யாப்புப் போற்றுதலும் வேண்டும் என்பதாம் (1141). தனிமொழி நாடக உத்தியில் தனிமொழி என்பதொன்று உண்டு. தானே பேசும் பேச்சு அது. பக்கச் சொல், பாற்கிளவி, தனிமொழி என்பவை அது. நெஞ்சொடு கிளத்தல் என்னும் வகையால் தன்நெஞ்சுக்குத் தானே கூறுவது, இதில் ஒருவகை. உறுப்பு உடையது போலவும், உணர்வு உடையது போலவும், மறுத்துக் கூறுவது போலவும் கற்பித்துக் கொண்டு கூறுதல் இது. இனிச் சொல்லாடுதல் இல்லாத வற்றைச் சுட்டி அவை செய்யாதனவற்றைச் செய்தனவாகக் கூறுதலும், பிறர் கொண்ட துயரைத் தான் கொண்ட பிணி போலச் சார்த்திக் கூறுதலும் தலைவன் தலைவியர் ஒருபாற் சொற்களாகும் (1142). நற்றாய் செவிலித்தாய் ஆயோர்க்கும் தனிச்சொல் வழக்குண்டு (1145). தலைவன் தலைவியர் காணுதற்கு அரிய நிலை உண்டாகிய காலத்து அவர்களுக்குள் கனவுக் காட்சியும் உண்டு. உடன்போக்கு நேரிட்ட காலத்து நற்றாய் செவிலித்தாய், கனவு காணலும் உண்டு (1143, 1144). வாழ்வின் உயிர் நிலையாம் அன்பு நாணம் மடம் ஆகிய மூன்றும் தலைவன் தலைவி நற்றாய் செவிலி என்னும் நால்வர்க்கும் உரியவை (1147). தன் தலைவனைப் பிரிந்த தலைவி பசலையடைந்து வருந்தும் போது தன் உறுப்புகளும் தலைவன் பிரிந்ததை அறிந்தன போலக் கூறலும் வழக்கம் (1148). பிரிவால் மெலிந்தபோதும் இவற்றுக்கு என்ன ஆயின என்பாளே அன்றித் தலைவன் இருக்கும் இடத்தைத் தலைவி தேடி அடைவது இல்லை (1149). தலைவன் ஒரு பக்கமாக வருங்கால் தன் நெஞ்சுக்குக் கூறுவது போல் தலைவன் கேட்கக் கூறுவதும் உண்டு (1150). தலைவன் உண்மையை மறைக்கும் போதும், தலைவிக்கு விருப்பு மிகுந்த போதும் அல்லாமல் மற்றைப் போதுகளில், கண்டு கொள்ளாதவளாகவே தலைவி அமைவாள் (1151). தலைவன் தலைவியர் காதலை உணர்த்தத் தக்க பொழுது இது என அறிந்த பின்னரே, தோழி அறத்தொடு நிற்றலை (காதல் வெளிப்படுத்துதலை) மேற்கொள்வாள் (1152). தலைவனுக்குள்ள எளிமை, பெருமை, விருப்பமிகுதி ஆகியவற்றை உரைத்தல், பிறர் கூறுவது கேட்டு அதுபற்றிக் கருத்துரைத்தல், இடையூறு உண்டாகியபோது இடைவந்து தீர்த்தல், தாமே எதிர்ப்பட்டுக் காணல், மெய்யாக நிகழ்ந்தது இதுவெனல் என்னும் ஏழுவகையாலும் தோழி களவொழுக் கத்தை வெளிப்படுத்துவாள் என்று புலமையர் கூறுவர் என்பார் தொல்காப்பியர் (1153). தக்க இடம் வாய்த்தால் அல்லாமல் தோழி சொல்ல மாட்டாள் ஆதலால், செவிலி, தலைவி நிலையை உணர்ந்து கொள்ளலும் உண்டு. ஏனெனில், அடக்கம், நிலைப்பாடு, நேர்மை, கூறுவது கூறல், அறிவு, அரியதன்மை என்பவை பெண்டிர்க்கு இயல்பு என்பதால் (1154, 1155). தலைவன் தலைவியர் களவொழுக்கத்திற்கு இசைந்த தோழி, அதனைக் கற்பொழுக்கமாக்கத் திட்டமிட்டே துணிவான சில செயல்களைச் செய்வாள். தலைமகன் வரும்பொழுது, வழி, காவல்மிகுதி ஆகியவற்றைக் கூறி அவற்றால் நேரும் தீமையைச் சுட்டுவாள்; அவற்றை நோக்கித் தான் மனங்கலங்கி வருந்துதலை உரைப்பாள்; சந்திக்கும் இடத்தில் உண்டாகும் இடையூற்றை உரைப்பாள்; இரவில் வருக என்பாள்; பகலில் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வருக என்பாள்; இரவிலும் பகலிலும் வாராதே என்றும் கூறுவாள்; நன்மையாகவும் தீமையாகவும் புலப்படப் பிறிதொன்றனைக் கூறுவாள்; இவையெல்லாம் தலைவன்மேல் கொண்ட வெறுப்பாலோ காதலைத் தடுக்க வேண்டும் என்னும் எண்ணத் தாலோ செய்வன அல்ல! காதல் வேட்கையைப் பெருக்கிக் கடிமணத்தை விரைந்து முடிக்குமாறு தூண்டுதல் குறிப்புகளேயாம் (1156). தேர் யானை குதிரை முதலியவற்றில் ஊர்ந்து வந்து தலைவன் தலைவியைக் காணலும் உண்டு (1158). உண்ணுதல் இல்லாத ஒன்று உண்டதாகக் கூறுதலும் அகத் தொழுக்க வழக்கமாகும். அது, பசலை பரவுதலைப் பசலை உண்டது என்பது போல்வது (1159). தலைவி வீட்டை விட்டு வெளியேற முடியாத காவல் மிக்க பொழுதில் (இற்சிறை) தலைவனிடம் தோழி, எங்கள் இல்லத்தார் பெரும்பொருளைப் பரிசமாக வேண்டியுளர் என்பது உண்டு. ஏனெனில், அவன் அவளைத் தேடி வராமல் இருக்கவும், மணமுடித்து மனையறம் காக்க வேண்டும் பொருள் தேடி வருதற்குத் தூண்டுதலாக இருக்கவும் ஆகும் (1160). ஆனால் தலைவன் பொருள் தேடச் செல்லும் வழித்துயர் பற்றிச் சொல்லவும் தவறாள் (1162). வீட்டுக் காவற்பட்ட தலைவி உயிர்நிலையாகிய அன்பு, அன்பு வழிப்பட்ட அறம், அறத்தால் அடையும் இன்பம், பெண்மைக்கு இயல்பாகிய நாணம் என்பவற்றை நீங்கி ஒடுங்கிய நிலை பழிக்கப்படுவதில்லை. ஏனெனில், அவள் செயலும் உணர்வும் ஒடுக்கப்பட்டுள்ள சூழல் அஃதாதலால் அவ்வக் காலத்து வாழும் சான்றோர் தக்கநெறி என ஏற்றுக் கொண்ட (1161) வற்றைத் தழுவிச் செய்யுள் செய்தல் முறையையாம் (1163). உலக வழக்கில் பொருந்தாதது போல் தோன்றும் ஒன்று, அகப் பொருட்கு அமைவுடையதாக இருப்பின் அதனை வழக்காக ஏற்றுக் கொள்ளல் பழியாகாது (1164). ஆனால் அப் பொருள் நாணத்தக்கதாக இல்லாத நற்பொருளாக அமைதல் வேண்டும் (1165). முற்பட்ட இலக்கிய இலக்கணங்களிலும் கைம்மை கைம்மைத் துயர் என்பவை இடம் பெற்றுள. மகளிராகவே விரும்பி ஏற்றுக் கொள்ளப் பட்டதாகவும் போற்றப்பட்டது. கடுவனாம் ஆண்குரங்கு இறந்ததாக அதனைத் தாங்காத மந்தி, தன் இளங்குட்டியைச் சுற்றத்திடையே விட்டுவந்து பாறையில் மோதி இறக்க அதனைக் கைம்மை உய்யாக் காமர் மந்தி என்று புனைவு வகையாற் பாராட்டியதும் உண்டு. ஆனால், இந் நாளில் கைம்மை மணம் வரவேற்புக் குரியதாயிற்று. மனைவியை இழந்தான் கணவனை இழந்தாளை மணமுடித்துக் கொண்டு வாழ்வு தருதல் உயரறம் எனப் பாராட்டப்படுத லாயிற்று. இது காலங்கண்ட அறநெறி. இதனைப் போற்றுதல் - செய்யுள் செய்தல் (புலனெறி வழக்கம் ஆக்குதல்) புலமையாளர் கடன்! இவ் வகையில் பாவேந்தர் படைப்பும், அதன் பின்வரவாம் படைப்புகளும் பெருக்கமிக்கவை அல்லவா! ஆசிரியர் தொல்காப்பியர் வாழ்வியல் காப்புள்ளம் இத்தகைய எதிரது போற்றுதலை ஆணை யாக்கிச் சிறப்பிக்கின்றது என்க. அன்புப்பெருக்கால் அழைக்கும் சொல் எல்லா என்பது. அச் சொல் ஆண்பால் பெண்பால் ஆகிய இருபாலுக்கும் உரிய பொதுச்சொல் ஆகும். இச் சொல்லே ஏலா, ஏலே, ஏழா, ஏடா என வழங்குவதாம். எல்லே இளங்கிளியே எனப் பறவைக்கும் ஆயது! எல்லா ஒப்புரிமை இதுகால் பெரிதும் ஆண்பால் தழுவி நிற்கின்றது. யாழ என்னும் சொல் இருபாற்குரியதாக இருந்து ஏழா ஆயது என்பதும் கருதத்தக்கது (1166). பங்குரிமைச் சொத்தாக வாராதது; கொடை புரிந்தாலும் கொடுத்த வரை விட்டுச் செல்லாதது; செயல் திறனால் தங்கவைக்க முடியாதது; பிறரால் கையகப்படுத்திக் கொள்ளவும் முடியாதது; அத்தகு பொருளை ஒருவர் உரிமைப் பொருளாகக் கொள்வது போன்றது, தலைவியின் உறுப்புகளைத் தோழி தன் உறுப்புகளாகக் கொண்டு உரைப்பது; உரிமையில்லாதது அது எனினும், பொருந்திவருதல் அக நூல்களில் உண்டு. ஆதலால், அதனைப் போற்றிக் கொள்ளல் கடன் என்கிறார் (1167). என்தோள் எழுதிய தொய்யில் என்பது தலைவி தோளைத் தன் தோளாகக் கருதித் தோழி சொல்வதாம் (கலித். 18). ஓரிடத்துக் கூறும் தலைவி தலைவன் என்னும் சொற்கள், அவ்விடத்துள்ளாரை அன்றி, எவ்விடத்துள்ளார்க்கும் உரியவை யாய் வருதலே வழக்கமாகும். இன்னான்தான், இன்னாள்தான் என்று குறித்துக் கூறப்படாமல் உலகத்துள்ள ஒருவன் ஒருத்தி என்பார் எவர்க்கும் உரிமையுடையது எனத் தெளிவித்தார் (1168). உயிர்க்கெல்லாம் பொதுப் பொருளாய் அமைந்தது இன்பம் என்பதை, எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும் என்கிறார் (1169). அமர்தல் = தங்குதல்; நெஞ்சத்துத் தங்குதல்; மேவற்று = விருப்பமுடையது. இதனால் இன்பம் உயிர்ப்பொது என்றார். ஏனை அறம் பொருள் என்பவை மாந்தர்க்குரியவை என்பது குறிப்பாகக் கூறப்பட்டது. மற்றும் காதல் காமம் என்பவையோ எனின் உயிர்ப் பொதுமை விலக்கி ஆடவர் பெண்டிர்க்கே உரிமைப்படுத்தப் பட்டது. குறிஞ்சி - புணர்தல்; முல்லை - இருத்தல் என்பன முதலாக ஒழுக்கம் சொல்லப்படும் என்றாலும், அவை அந் நிலத்திற்குச் சிறப்பே யன்றி, மற்றை நிலத்து நிகழாதவை அல்ல. நானிலத்திற்கும் பொதுவாக அமைந்தவையே யாம். ஆதலால், ஊடல் என்னும் உரிப்பொருள் மருதம் ஒன்றனுக்கே அமைந்தது இல்லை; மற்றை நிலத்தவர்க்கும் உண்டு; அவ்வூடல் தீர்ப்பாரும் அவண் உண்டு என்பாராய், பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே நிலத்திரி பின்றஃது என்மனார் புலவர் என்றார். நால்வர் = நானிலத்தவர். நால் வருணத்தவர்க்கும் என்று வழக்கம் போல உரைகண்டனர் பழைய உரையா சிரியர்கள் (1170). நிலமக்கள், தலைமக்கள், அடியோர், வினைவலர் ஆகிய நால் வகையார்க்கும் எனக் குறிப்பு எழுதுவார் இளவழகனார். தலைவிக்கு உடன்போக்குக் கொள்ளவேண்டும் என்றும், திருமணம் நிகழ்தல் வேண்டும் என்றும் ஏற்படும் உந்துதல்களை ஒருதலை உரிமை வேண்டியும் என்னும் நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் (1171). உறுதியாக இல்லற வாழ்வு மேற்கொள்ளல் வேண்டும் என்னும் நிலையிலும், வினையே ஆடவர்க்கு உயிர் ஆதலால், அது குறித்துப் பிரிவு நேரும் என்னும் அச்சம் ஏற்பட்ட நிலையிலும், அம்பல் அலர் என்பவற்றால் களவொழுக்கம் வெளிப்பட்டுப் போகும் என்னும் அஞ்சுதல் உண்டாகிய நிலையிலும், தன்னைத் தலைவன் காண வருங்கால் ஏற்படும் இடையூறு பற்றி எண்ணிய நிலையிலும் தலைவிக்கு உடன்போக்குப் பற்றியும் மணங்கொள்ளல் பற்றியும் உந்துதல் உண்டாகும். சூழலால் உண்டாம் எண்ணங்கள் செயலூக்கி யாகத் திகழும் அடிப்படையை விளக்கியது இது. எவ்வொரு வினைப்பாட்டுக்கும் சூழலும் எண்ணமும் தூண்டலாய் அமைந்து துலங்கச் செய்யும் என்னும் வரையறை நல்ல தெளிவுறுப்புச் செய்தி. வாழ்வுக்குத் தேவையான இரக்கம் எப்பொழுது உண்டாகும் எனின் ஒருவர் கொண்ட வருத்தத்தைத் தானும் உணரும் போதேயாம். நோவற்க நொந்தது அறியார்க்கு என்பது வள்ளுவம். துயரத்தை அறிந்து கொள்ளாதவர்க்குத் துயரை உரையாதே என்பது அது. இரக்கம் உண்டாக்கும் அருள் வாழ்வு துயரம் கண்டபோது ஏற்படுவது ஆகலின், வருத்த மிகுதி சுட்டும் காலை உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம் என்றார் தொல்காப்பியர் (1172). வாழ்வின் வளர்நிலை இன்புரை கேட்டலினும் துன்புரை கேட்டு அருள்வதிலேயே உள்ளது என்பது அருமை மிக்கது. ஊடற் போதில் தலைவி உயர்வு விளக்கமாம். அதேபொழுதில் தலைவன் பணிவும் விளக்கமாம் (1173). அவ்வூடற் பணிவு இல்லையேல் கூடலின்பம் கொள்ளான்! மகளிர் ஊடல் தணிக்கவும் பணியேன் என்பது இல்லறத்திற்கு ஏற்காத செயல். கற்பொழுக்கத்தின் போது தலைவன் தலைவியர் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்வதை விலக்கார்; புகழ்தல் இல்லறம் சிறக்க வாய்ப்பாம் என்றது இது (1174). முன்னே உரைத்த உள்ளுறை உவமம் போல இறைச்சி என்ப தொன்றும் அகப்பொருளில் இடம் பெறும். இறைச்சி என்பது கூறும் பொருளுக்கு அப்பாலாய் அமைவது. இறைச்சி தானே பொருட்புறத் ததுவே என்பது அதன் இலக்கணம். சொல்ல வேண்டிய கருத்துக்கு வேறாக அடைமொழி அமைவில் நின்று பயன்செய்வது. பொருட்புறத்ததுவே என்பதற்கு உரிப்புறத் ததுவே என்பது இளம்பூரணர் பாடம். பொருட் புறத்ததுவே என்பது நச்சினார்க்கினியர் பாடம். இறைச்சியை ஆராய்ந்து பார்த்தவர்க்கு வெளிப்படக் கூறும் பொருளுக்குப் புறத்ததாகிய பொருள் உள்ளமை புலப்படும் என்பதை, இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே என்பார் (1176). அன்பு கொள்ளத் தக்க கருத்துகளைக் கருப் பொருள்களின் உரைப் பொருளாகக் காட்டித், தலைவி வருந்தும்போது வற்புறுத்தித் (தோழி) தெளிவு செய்தல் வன்புறை எனப்படும் (1177). தலைவியைத் தலைவன் பாராட்டின் அவளுக்கு இருவகை யில் அச்சம் உண்டாகும். ஒன்று, பொருள் தேடுதற்குப் புறப்படுவனோ என்னும் அச்சம். மற்றொன்று, செயல் மேற் கொண்டு பிரிவனோ என்னும் அச்சம். இரண்டுமே பிரிவச்சமாம் (1178). தலைவி அயலாள் ஒருத்தியைப் பாராட்டினால் உள்ளே ஊடல் உண்டு என்பதன் வெளிப்பாடு அது என்பர் (1179). பிறள் ஒருத்தி இத்தகையள் எனத் தலைவி பாராட்டின், அது பற்றித் தலைவன் குறிப்பறிவதற்குரிய வழியுமாகும் (1180). தலைவன் குறையை அயல் பெண்டிர் உரைக்கும் போதும் தானே உணரும் போதும் உடனே இடித்துரைக்காமல் அவன் அன்பு கெழும நிற்கும் போதும் ஊடி நிற்கும் போதுமே கூறுவள். கூறுவதைக் கூறினாலும் கூறுதற்கு இடமும் காலமும் அறிந்து கூறுதலே கூறுதல் பயன் செய்யும் என்னும் உளநிலை உரைத்தது இது. இடித்துரை கூறுவாரும் அறிவுரை கூறுவாரும் எண்ணிப் போற்ற வேண்டிய குறிப்பு ஈதாம் (1181). குறித்த காலம் கடக்கு முன்னரே அக்காலம் கடந்து விட்டதாகக் கூறுதல் மடமை, வருத்தம், மயக்கம், மிகுதி என்னும் இந் நான்கனாலும் ஏற்படும். தன்னிடம் மன்றாடி நின்ற தலைவனைத் தோழி அப்பால் படுத்துதல் அன்றி மெய் யுரைத்தல், பொய்யுரைத்தல், நயந்துரைத்தல் எனப் பலவகைப் படைத்து மொழிகளாலும் நலம் பேணிக் காப்பாள் (1183). புகழ்ந்து கூறுதலை மறுத்துக் கூறுதலும், ஐயுற்றுக் கூறுதலும் தலைவனுக்கு உண்டு. (அதனைத் தலைவி கொள்ளாள்) (1184). துன்பம் எதுவும் நேராமல் காத்தல் தன் கடமை ஆதலால் தோழிக்குத் துணிந்துரைக்கும் உரை உண்டு (1185) தலைவன் தலைவியரைப் புகழ்ந்துரைக்கும் நிலையும் உண்டு (1186). ஊடல் தீர்க்கும் வாயிலாக இருப்பவர் தம் சொல்லைக் குற்றமற்றதாய் வெளிப்படக் கூறுவர் (1187). முன்னே கூறிய உள்ளுறை என்பது - உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும் (1188). இவையன்றி இன்பப் பொருளாகவும் உள்ளுறை வரும் (1189). மங்கலச் சொல், வசைச் சொல், மாறுபாடில்லாத ஆளுமையால் சொல்லிய சொல் என்பனவும் உள்ளுறையுள் அடங்கும் (1190) (இவற்றின் விளக்கம் உவமைப் பகுதியில் காணலாம்) தலைமக்கட்கு ஆகாக் குணங்களாம் சினம் அறியாமை பொறாமை வறுமை என்னும் நான்கும் ஏதேனுமொரு காரணத் தால் அவர்களொடு தொடர்பு படுத்திக் கூறுதல் உண்டு (1191). தோழி தலைவியை அன்னை எனலும், தலைவி தோழியை அன்னை எனலும் இருவரும் தலைவனை என்னை எனலும் பழமையான மரபினதாம். சொல்லாலும் எழுத்தாலும் வெளிப்படாத உலகியல் முறை என்பர் புலமையர் (1192). ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என்பவை இத்தகையவை என்பது கொண்டு மனத்தால் கொள்ளுவகை அல்லாமல் வேறுவகையால் வெளிப்படக் காட்ட இயலாதவையாகும். நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது காட்ட லாகாப் பொருள என்ப என்பது இதன் முடிநிலை (1193). இமையவர் உலகம், கடலொலிக்கும் உலகம் என எவ்வுலகம் எனினும், ஒப்பு உரு முதலியவை இல்லாத காலம் இல்லாமையால் சொல்லைச் சொல்லிய வகையாலே பொருள் அறிந்து கொள்வர் என்பதாம். மக்கள் மொழி சொற்களாக இவை இருப்பதால் எவரும் தாம் கேட்டுணர்ந்த வகையால் பொருள் கண்டு கொள்வர். வழக்குச் சொல்லாக இருப்பவற்றை விளக்க வேண்டுவதில்லை என்பதால் ஒரு சொல் வழக்கிழந்தால் பொருள் விளக்கமும் இழந்துபோம் என்னும் மொழியியல் முறையால் இப்பொருளியலை நிறைவித்தார் ஆசிரியர். அது, இமையோர் தேஎத்தும் எறிகடல் வைப்பினும் அவையில் காலம் இன்மை யான என்பது (1194). புறத்திணை அகத்திணையை அடுத்து ஆசிரியரால் வைக்கப்பட்ட புறத்திணை பற்றி நாம் கருதலாம். அகம் புறம் என்பவை முரண்பட்டவை அல்ல. வாழ்வின் இருபக்கங்கள் அவை. அகங்கை ஏழு எனின், புறங்கையும் ஏழு என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர் நற்கிழமை காட்டி உரைத்த விளக்கம் இதனைத் தெளிவாக்கும். பிறவிப் பேறு அக வாழ்வால் அமைந்தது; அதனைச் சிறப்பிக்கவே இல்வாழ்வு கொண்டது; அவ் வாழ்வுக்கு, இன்றியமையாத் துணைப் பொருளாக அமைவது புறவாழ்வு. இன்னும் எண்ணினால், அகவாழ்வு அமைந்து திகழ, அவ்வப்போது மேற்கொள்ளும் முயற்சி வாழ்வே, புறவாழ் வாகும் என்னலாம். அகவாழ்வு சிறக்க வேண்டுவதாம் பொருள் தேடல், அறம்புரிதல், காவல் கடன்புரிதல், சந்து செய்தல், கலை மேம்படுதல், துறவுமேற்கொள்ளல் என்பன வெல்லாம் புற வாழ்வுப் பகுதியேயாம். போரும் கொடையும் புகழும் போற்றலும் எதற்காக, அகவாழ்வு சிறக்கவே. அகச் சிறப்பே பாரகச் சிறப்பின் அடிமூலம் - நிலைக்களம் - எனக் கண்ட நம் முந்தையர் வகுப்பு இது. அகத்திற்கு, (வெளிப்பட அறியும் வகையில்) நான்கியல் களை (அகத்திணை - களவு - கற்பு - பொருள்) வகுத்த ஆசிரியர், புறத்திணை என ஒன்றனை வகுத்ததை எண்ணல் சாலும். மேலும், மெய்ப்பாடு, உவமை, செய்யுள், மரபு என்னும் நான்கியல்களும், அகம், புறம் ஆகிய இரு பொருள்களுக்கும் பொதுமை யாயவையே என்பதையும் எண்ணலாம். ஏழுதிணை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை பெருந்திணை கைக்கிளை என்னும் அகத்திணை ஏழுக்கும் முறையே, வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வாகை காஞ்சி பாடாண் என்னும் ஏழும் புறத்திணைகளாகும். குறிஞ்சி முல்லை என்பவை எவ்வாறு மலர்ப் பெயர்களோ, அவ்வாறே வெட்சி முதல் காஞ்சிவரை மலர்ப்பெயர்களே. பாடாண் என்னும் ஒன்று மட்டுமே, பாடு புகழ் கருதிய திணைப் பெயராம். தமிழர் வாழ்வாகிய அகம் புறம் என்னும் இரண்டும் பூவால் குறியீடு பெற்றமை, இயற்கையொடு தழுவிய சீர்மை வெளிப் படுத்தும். ஒரு பெண் பருவம் உறுதல் பூப்பு எனவும், ஓர் ஆண் பருவமுறுதல் அரும்புதல் எனவும் வழங்கும் மாறாவழக்குக் கொண்டும் உணரலாம். மலரினும் மெல்லிது காமம் என்பதும், மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்பதும் வள்ளுவங்கள். அகக் காதல் எவ்வாறு அறத் தொடக்கம் உடையதோ அதுபோல், புறவாழ்வும் அறத் தொடக்கம் உடையது என்பது காட்டுவது வெட்சித் திணை. அது வெட்சி என்னும் வெண்ணிறப் பூவை அடையாளமாகக் கொண்டது. வெட்சி பகைவரொடு போரிடத் தொடக்கம் செய்வதே வெட்சித் திணை. அது, பகைவர் ஆக்களைக் கவர்ந்து வருதல் வழியாகப் போர்த் தொடக்கம் செய்வதாகும். அஃது, அறத்து வழி நிகழும் என்பதை, ஆதந்து ஓம்பல் என்பார். வெட்சியின் இலக்கணம், வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும் என்பது (1003). வீரர்தாமே வேற்றவர் இடத்திற்குச் சென்று, ஆக்களைக் கவர்ந்து வருவராயின் அது கூடா ஒழுக்கமாகிய களவாகிவிடும். அக் களவன்று என்பாராய், வேந்து விடு முனைஞர் என வேந்தன் ஏவல் வழிச் செல்லும் வீரர் என்றார். அவர் செய்யும் செய்கை கொடுமைப்பட்டது அன்று என்பாராய், ஆதந்து ஓம்பல் என்றார். ஆக்களைக் கவர்ந்து வருங்கால் புல் கண்ட இடத்து மேயவிட்டு, நீர் கண்ட இடத்துக் குடிக்க விட்டு, நிழல் கண்ட இடத்துப் படுக்க விட்டு, ஓட்டி அலைக்காமல் மெல்லென நடத்தி வருதல் என்பது விளங்க, ஆதந்து ஓம்பல் என்றார். உயிரோம்பல், உடலோம்பல், விருந்தோம்பல் முதலாம் ஓம்பல்களை எண்ணுக. ஆவிற்கு நீரூட்டுவதை, அயலாரை ஏவிச் செய்யாமல், தாமே செய்தல்தான் தகவு என்னும் வள்ளுவம். வீடு கட்டியவர், தம் கண்காணிப்புக்கு மட்டுமன்றி, வளமாகவும் வாழ்வாகவும் காக்கத்தக்க ஆவைக் காக்கவே, பக்கத்தே மாட்டுத் தொழுவம் அமைத்தனர். மாடு என்பது - பக்கம் என்னும் பொருளொடு, செல்வம், பொன் என்னும் பொருளும் கொண்டமை இதனாலேயே ஆம். தொழுகைக்கு உரியதாக இருந் தமையால்தான், ஆன் உறைவிடம் தொழு தொழுவம் என்னும் பெயர்களையும் கொண்டதாம். தமிழர் வாழ்வொடு இரண்டறக் கலந்த அப்பண்பாடே பொங்கல் விழாவெனப் பொலிவுற்றுப் போற்றப்படுவதாம் மாட்டுப் பொங்கல் என்பது நாடறி செய்தி. ஆக்கள் உடலை உராய்வதற்காகவே, வழியில் ஆவுருஞ்சு குற்றி நட்ட செய்தி நயமிக்கது! ஆக்களைக் கவர்ந்து வருதல் போர்க்கு அடையாளமாவ தொடு, அதனைப் பேணும் அறமுமாம் என்பதனால், போர்க் களத்தில் இருந்து அகற்றப்படுவனவற்றுள் தலையிடம் பெற்றது ஆவேயாம் (புறம். 9). ஆநிரை கவரச் செல்லும் படைகள் ஆரவாரித்தல், புறப்பட்டவர் ஊர்ப் பக்கத்தே கேட்ட விரிச்சி என்னும் சொல், பகைநாட்டு ஒற்றர் அறியாவாறு புகுதல், அயலார் அறியாவாறு அவர் நாட்டு நிலையைத் தம் ஒற்றரால் அறிதல், பகைவர் ஊரைச் சுற்றி வளைத்துத் தங்குதல், தம்மைத் தடுக்கவந்த பகைவரை அழித்தல், ஆநிரையைக் கவர்தல், அதனைத் தடுத்ததற்கு வந்தாரை விலக்கி மீள்தல், கவர்ந்த ஆக்களைக் கவலையின்றிக் கொண்டு வருதல், தம்மை எதிர்பார்த்திருக்கும் தம்மவர் மகிழத் தோன்றுதல், ஆக்களை ஊர்க்குக் கொண்டு சென்று நிறுத்துதல், அப் பணியில் ஈடுபட்டவர்க்குப் பங்களிப்புச் செய்தல், செயல்முடித்த மகிழ்வில் களிப்புறுதல், கலைவல்லார்க்குப் பரிசு வழங்குதல் என்னும் பதினான்கு துறைகளை உடையது வெட்சித் திணை என்பார் ஆசிரியர் (1004). மேலும் எடுத்த செயலை முடிக்கவல்ல வீரர்தம் குடிச் சிறப்பு, வெற்றித் தெய்வமாகப் போற்றப்படும் கொற்றவை வழிபாடு என்பனவும் வெட்சி சார்ந்தனவே. வேலன் வேடம் பூண்டு ஆடும் மருளாடி, காந்தள் மாலை சூடி ஆடும் வெறியாடல், இன்னாரைச் சேர்ந்த வீரர் இவர் என அறிதற்குப் பனை, வேம்பு, ஆத்தி என்னும் (சேரர் பாண்டியர் சோழர்) மாலை சூடி ஆடிய கூத்து, வள்ளி என்னும் கூத்து, புகழ்மிக்க வீரக் கழல் அணிதல், எதிரிட்டு நின்று போரிடும் வேந்தனை உன்னமரத்தொடு ஒப்பிட்டுக் கூறும் உன்னநிலை, மன்னனை மாயோனொடு ஒப்பிட்டுச் சொல்லும் பூவை நிலை, போரில் பகைவரை ஓட்டல், பசுக்களை மீட்டித்தருதல், வேந்தன் சிறப்பு உரைத்தல், தன்வீறு தோன்ற வஞ்சினம் கூறல் என்பவை பசுக்களை மீட்டிச் செல்வார் செயல்கள். மற்றும், வரும் படையைத் தடுத்தல், வாட்புண்பட்டு வீழ்தல் எனப்படும் பிள்ளை நிலை; வாட் போரிட்டு வென்றவனுக்குப் பறை முழங்கப் பரிசு வழங்கிய பிள்ளை யாட்டு, களப்போரில் இறந்துபட்டார்க்கு நினைவாகக் கல்லெடுத்தல், அதனை நீராட்டுதல், கல் நடுதல், அதனைச் சூழக் கோயில் எடுத்தல், வழிபடுதல் என்று சொல்லப்பட்ட கற்கோள் நிலை என்பனவும் வெட்சியே. பசுக்களைக் கவர்தல் போன்றதே, மீட்டுக் கவர்ந்து செல்லலும் ஆதலால், இரண்டையும் வெட்சியாகக் கொண்டார் தொல்காப்பியர். ஆனால், பசுக்களை மீட்டுச் செல்லுதலைக் கரந்தை எனத் தனித் திணை ஆக்கி மொழிந்தனர் பின் நூலினர் (பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை). வெட்சி நிரைகவர்தல் மீட்டல் கரந்தையாம் எனக் கொண்டனர் அவர். ஆனால், எழுதிணை என்னும் வரம்பு கடத்தலும், அகப்புறம், புறப்புறம் எனப் பொருந்தாப் பிரிவுவகை காட்டலும் நேரிட்டன வாம். நிரை கவர்வார்க்கும் மீட்டுவார்க்கும் அடையாளம் வேறு காட்டவே முன்னவர் வெட்சியும், பின்னவர் கரந்தையும் (கருநிறப் பூ) - சூடியதென்க. காதல் ஒழுக்கம் அனைத்திற்கும் குறிஞ்சி முதலாதல் போலப் புறத்திணைக் கெல்லாம் முதலாவது வெட்சி என்றும், இரண்டு திணைகளும் களவில் நிகழ்வன என்றும், வெட்சி தானே குறிஞ்சியது புறனே என்பதற்கு ஒப்புக் காட்டுவார் நாவலர் பாரதியார். இப் பகுதியில் கூறப்பட்ட வெட்சிப் போரில் இறந்து சிறப்புற்றவர் நடுகல் இந்நாளும் பலவாகக் காணலும், அவற்றில் அவர் பெயரும் பெருமையுமாகிய எழுத்துப் பொறித்திருத்த லும், ஆவட்டி என ஊர்ப் பெயர் இருத்தலும் எண்ணத் தக்கவை. இதில் வரும் காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தல் என்பனவே காட்சிக் காதை, கால்கோட்காதை, நீர்ப்படைக் காதை, நடுகற்காதை, வாழ்த்துக் காதை, வரந்தரு காதை எனச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டமாக உருக்கொண்டதாம். வஞ்சி முல்லை என்னும் அகத்திணைக்குப் புறமாக அமைந்தது வஞ்சித் திணையாகும். ஆடவர் பிரிதலும், மகளிர் அவரை எதிர் நோக்கி இல்லில் இருத்தலும் இரு திணைக்கும் பொதுவாதலால், முல்லைக்கு வஞ்சி புறனாயிற்றாம் (1007). மண்ணைக் கவரும் எண்ணமிக்குடைய வேந்தன் ஒருவனை, அவன் அஞ்சுமாறு மற்றொரு வேந்தன் படை யெடுத்துச் சென்று வென்றடக்குவதே வஞ்சித்திணையாகும். எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன் அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே என்பது நூற்பா (1008). துறை போரிடச் செல்லும் படையின் எழுச்சி, பகைவர் நாட்டைச் சூழ்ந்து தீயிடல், விளங்கிய படையின் பெருமை, வேந்தன் கொடுக்கும் கொடைச் சிறப்பு, பகையை நெருங்கி அழித்த வெற்றி, பெற்ற பரிசு விருது (மாராயம்) பற்றிய பெருமை, தம்மைப் பொருட்டாக எண்ணாமல் போரிட்ட திறம், பெருகிவரும் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தும் கற்சிறை போல (அணை போல) எதிரிட்டு வரும் படையைத் தனித்து நின்று தடுக்கும் பெருமிதம், படைஞர்க்கு விரும்பும் வகையால் உணவு வழங்கும் பெருஞ் சோற்று நிலை, வெற்றி பெற்றவரிடத்துத் தோன்றும் பொலிவு, தோற்றவர்க்கு உண்டாகிய அழிவு, பகைவர் நாட்டின் அழிவுக்கு வருந்திப் பாடும் சிறந்த வள்ளைப் பாட்டு, அழிக்க வரும் படையைத் தடுத்து நிறுத்திய வீரரைத் தழுவுதல் ஆகிய தழிஞ்சி என்னும் பதின்மூன்று துறைகளையுடையது வஞ்சித் திணை (1009). குறிப்பு காலம் மாறியது; கருவி மாறியது; கருத்தும் மாறியது; எனினும், இற்றைப் போர்களிலும் இத்துறைகள் சொல்லும் முறைகள் நிகழவே செய்கின்றன. மாராயம் என்பது - வேந்தனால் பெற்ற விருது. அவ்விருதுப் பெயரே பெயராக விளங்கும் குடும்பங்கள் இன்றும் உண்டு. கற்சிறையாவது - அணை. கல்லால் தடுத்து நிறுத்துதல் வழக்கமே அணைக்கட்டு; கல்லணை கரிகாலன் வைத்துச் சென்ற புகழ் எச்சம். வள்ளை என்பது - உலக்கைப் பாட்டு. வேந்தனைப் பாடும் புகழ்ப்பாட்டு; மகளிர் பாடிக் கொண்டு உலக்கை குற்றும் பாடல்; சிலம்பில் வள்ளைப் பாட்டு உண்டு. தழுஞ்சி என்பது - தழுவுதல். நல்லதும் அல்லதும் நேர்ந்த போதில் உரிமையுடையார் தழுவிக் கொள்ளுதல், ஆடல் களத்தில் வெற்றி பெற்ற வீரர்களைப் பார்வையர், ஓடிவந்து தழுவுதல் என்பன எண்ணலாம். உழிஞை உழிஞை என்னும் புறத்திணை மருதம் என்னும் அகத் திணைக்குப் புறனாகும் (1012). அரணை முற்றுகை இடுதலும் பற்றுதலும் என்பவை உழிஞைத் திணை. ஊடல் கொண்ட இல்லாள் கதவடைத்து ஊடியிருத்தலும், வாயில்கள் வேண்டிநின்று கதவைத் திறக்கச் செய்து உட்புகுதலும் ஆகியவை உழிஞையொடு ஒப்பதாகலின் உழிஞை மருதத்திற்குப் புறனாயது. உழிஞைத் திணை எட்டுவகை யுடையது. பகைவர் நாட்டைப் பற்றிக் கொள்ளுமுன்னரே வெற்றி யுறுதியால் விரும்பியவர்க்கு விரும்பியதைத் தருதல், சொல்லிய வண்ணமே செய்து முடிக்கும் வேந்தன் திறம், வலிய மதில்மேல் ஏறிப் போரிடல், பகைவர் ஏவும் அம்புகளைத் தடுக்கும் தோற்படை (கேடயம்) மிகுதி, அரணின் உள்ளே உள்ளவன் செல்வச் சிறப்பு, அதனால் தன்னொடு போரிட வந்த புறத்தோனை வருந்தச் செய்தல், தான் ஒருவனாக வெளிப்பட்டு வந்து போர் அடர்த்தல், புறத்தோன் தாக்குதற்குக் கலங்க வேண்டாத மதில் வன்மை என்பவை அவை (1013). இவ்வெட்டனுள் முன்னவை நான்கும் - மதிலை முற்று வோன் பற்றியவை. பின்னவை நான்கும் - மதிலைக் காப்போன் பெற்றியவை. முற்றுவோனும் காப்போனும் கொள்ளும் போர் நிலை பன்னிரு துறைகளாகக் கூறுவார் ஆசிரியர் (1014). தும்பை தும்பை என்னும் புறத்திணை நெய்தல் என்னும் அகத் திணைக்குப் புறனாகும் (1015). இரங்குதல் இருதிணைக்கும் பொதுமையானது. களப் போர் அழிவு அத்தகையது ஆகும். வீரத்தை வெளிப்படுத்துதலே நோக்கமாகக் கொண்டு போரிட வந்தவன் திறத்தை அழிக்கும் சிறப்பினது தும்பை (1016). நிலம் கவர்தலோ, மதில் பற்றுதலோ கருத்தாகக் கொள்ளாமல் வீரத்தை வெளிப்படுத்தும் ஒன்றே நோக்கமெனக் கொண்டு போரிட வந்தவன் ஆதலின் அவனை, மைந்து பொருளாக வந்த வேந்தன் என்றார் ஆசிரியர் (1016). மகனுக்கு மைந்தன் எனப் பெயரிட்ட நோக்கு நாம் எண்ணத்தக்கது. மைந்து = வீரம். நெருங்கிச் செல்ல இயலாத வீரன்மேல் பகைவர் அயலேநின்று ஏவிய கணைகளும் வேல்களும் உடலைச் சூழ்ந்து மொய்த்துக் கிடத்தலும், உயிர் பிரிந்த பின்னரும் அவ்வுடல் நிலத்தில் படாமல் துள்ளி நிற்றலும் என்னும் இரு திறப்பட்ட சிறப்புகளையுடையது தும்பை (1017). தும்பைத் திணை பன்னிரு துறைகளை உடையது. இவற்றுள், தாக்குவானும் தாக்கப்படுவானுமாகிய தலைவர் இருவரும் களத்தில் ஒருங்கே இறந்து படுதல் என்பது ஒருதுறை. அது, இருவர் தபுதி. எருமை மறம் என்பது ஒருதுறை. அது, மறவன் ஒருவன், தன் தலைவன் படை உடைந்து பின்னிடும் நிலையில் உள்ளே புகுந்து தான் ஒருவனாகத் தடுத்துக் காப்பது. அவன் செயல் அஞ்சாத் தறுகண் அமைந்த எருமையின் இயலை ஒத்திருத்தலால் எருமை மறம் எனப்பட்டது. அவன் எருமை மறவன் எனப்பட்டான். எருமை விருது பெற்றான் ஒருவன் பெற்ற ஊர் எருமையூர். அது, மகிச ஊர் என அயன்மொழியாளரால் மாற்றி மறைக்கப் பட்டு, இன்று கருநாடக மண்ணில் மைசூராக உள்ளது. ஒருவனை எருமை எனல் பழநாளில் பெறற்கரிய பெருமை. இன்றோ எள்ளல் பொருள்! ஏன்? வழக்கொழிவே காரணமாம். இத்துறையை, ஒருவன் ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய எருமை என்கிறார். கூழையாவது பின்னணிப்படை. தும்பையின் இன்னொரு துறை, தொகைநிலை. அது, இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலை எனப்படுகிறது. எவரும் வாழாமல் ஒழிவதுதான் வாழப் பிறந்ததன் நோக்கமா? என அசைக்கும் துறை இது! போர் முடிவு சிந்திக்கவே வைக்கிறது; ஆனால், அச் சிந்தனை களத்தில் இருந்து கழிந்த உடனே கழிந்து போவதுதான் மீளமீளப் போராட்டத் தொடர்! வாகை வாகை என்னும் புறத்திணை பாலை என்னும் அகத் திணைக்குப் புறனாவது (1019). அகத்திணையில் நிலமிலாப் பாலை பொதுவாக இருத்தல்போலப் புறத்திணையில் எல்லாத் திணைக்கும் பொதுமையானது வாகையாகும். தாம் கொண்ட குறைவிலா அறிவு ஆற்றல் முதலியவற்றைப் பிறரினும் மிகுத்துக் காட்டிக் கூறுவது வாகைத்திணை என்பர். அது, தாவில் கொள்கை தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப என்பது. தாவுஇல் = தாழ்வு - குறைவு இல்லாத. பாகுபட - மிகுதிப்பட. தமிழ்நெறி கூறவந்தவர் தொல்காப்பியர். அவர் அயல்நெறி கூற நூல் செய்தார் அல்லர் என்னும் அடிப்படையை உணர்ந்தே தொல்காப்பியத்திற்கு உரை, உரை விளக்கம் புரிதல் வேண்டும். வாகைத் திணையில் வரும் ஒரு நூற்பா பெரிதும் எண்ணத்தக்கதாக அமைந்துளது. அது, அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும், ஐவகை மரபின் அரசர் பக்கமும், இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும், மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும், நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும், பாலறி மரபின் பொருநர் கண்ணும், அனைநிலை வகையொடு ஆங்கெழு வகையின் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர் என்பது (1012). அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் என்பதற்கு ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும். அவையாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன என்றார் இளம்பூரணர். வேட்டல் வேட்பித்தல் என்னும் இரண்டையன்றி அவரால் சான்று காட்டப் பார்ப்பனப் பக்கம் இடம் தரவில்லை. ஓதலாவது கல்வி என்று கூறி, கல்வி விழுப்பம், கற்றோர் விழுப்பம், கற்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவெல்லாம் மாந்தப் பொதுநிலை அறம் கூறும் பாடல்களையே காட்டினார். எண் பொருளவாகச் செலச்சொல்லல், நுண்பொருள் காண்டல் (குறள். 424) இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் (குறள். 222) இவை பார்ப்பனப் பக்கம் என்னின், என்னதான் நாம் சொல்வது? இரவலர் புரவலை நீயும் அல்லை என்ற புறப்பாட்டைப் பார்ப்பன பக்கம் என்ன இளம்பூரணர்க்கு எப்படித் துணிவு வந்ததோ? ஆனால், நச்சினார்க்கினியரையோ சொல்ல வேண்டா! பார்ப்பனர் என்றதும், பருந்தெனப் பாய்ந்து எடுத்துக் கொண்டு எழுதுவதற்கே பிறந்தவர், என விரிவாக எழுதினார்: ஆறு கூற்றினுட் பட்ட பார்ப்பியற் கூறும். ஆறு பார்ப்பியல் என்னாது வகையென்றதனால் அவை தலை இடை கடையென ஒன்று மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க. அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை - தலையாய ஓத்து. இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின் இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப் படுதலின் இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமும் தருமநூலும் - இடையாய ஓத்து. அதர்வம் வேள்வி முதலிய சடங்கு கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின், அவற்றோடு கூறப்படா தாயிற்று. ஆறங்கமாவன: உலகியற் சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும் அவ் விரண்டையும் உடனாயும் ஐந்திரத் தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம், பார்த்துவாசம், ஆபத்தம்பம், ஆத்திரையம் முதலிய கற்பங்களும், நாராயணீயம், வாராகம் முதலிய கணிதங்களும் எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சத்தமுமாம். தரும நூலாவன: உலகியல் பற்றிவரும் மனுமுதலிய பதினெட்டும். இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின. இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சி நூலும், அவரவர் அதற்கு மாறுபடக் கூறும் நூல்களும் - கடையாய ஓத்து. எழுத்தும் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப் பயன் தருதலின் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய தமிழ் நூல்களும் இடையாய ஓத்தாம் என்றுணர்க. இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன - இலக்கியம். இனித் தமிழ்ச் செய்யுட்கண்ணும் இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டேயனாரும், வான்மீகனாரும், கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச் சங்கத்தார் செய்தன இடையும், கடைச் சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க. இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்பும் சிறப்பின்மையும் அறிவித்தற்கு பார்ப்பனப்பக்கத்து ஓதுதலுக்குத்தான், இவை யெல்லாம் எழுதினார். மேலும், இனிப் பார்ப்பனப் பக்கத்து வகையாவன பார்ப்பார்க்குப் பார்ப்பனக் கன்னியிடத்தே கற்பு நிகழ்வதற்கு முன்னே, களவில் தோன்றினானும், அவள் பிறர்க்கு உரியவள் ஆகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்து இருந்துழித் தோன்றினானும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும் அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினாருமாகிய சாதிகளாம். இன்னோரும் தத்தம் தொழில் வகையால் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். பார்ப்பனர் என்பதை வசைச் சொல்லாகவும், பழிச் சொல்லாகவும் கருதி அச் சொல்லைப் பிறர் சொன்னால் வெறுப்பவர், அப்பழஞ் சொல்லுக்கு உரிமை கொண்டாடல் பொருந்துமா? பார்ப்பனர், அந்தணர் என்பன வெல்லாம் பிராமணர்களாகிய எங்களையே என்பவர்க்கு இப் பகுதியை இனியர் வழங்கிய படையலாக்கல் தகும்தானே! இவ் வெழுத்தின்படி, எச்சாதியேனும் தூயது எனப் பெருமை கொண்டாட முடியுமா? சாதி கெட்டதற்குப் பெயர் சாதி எனச் சாதித்தல் அறமாகுமா? சாதி என்பது விலங்குக்கும் பறவைக்கும் மீனுக்கும் உரிய இனப் பிரிவு என்பது மரபியல் செய்தி. இல்லாச் சாதியை உருவாக்கி, இழிவாக்கிக் காட்டியமை எச்சாதியர் சாதனை? எண்ணுவார் அறிவர். பார்ப்பனர், அந்தணர், அறிவர், அறவர், அரசர், வணிகர், வேளாளர், கொல்லர், தச்சர், மறவர், பறையர், பள்ளர், முதலி, பிள்ளை, செட்டி என்னும் எப்பெயரும் சாதிப் பெயர் இல்லை. புலவர் - ஆசிரியர் - கணியர் எனச் சாதியர் இல்லாமைபோல், பார்ப்பார் என்பதும் சாதிப் பெயர் இல்லை. பிராமணர் அவர் என்னின், அவர் தூய தமிழ்ப் பெயரைக் கொள்ளார். தூய தமிழ்க் கடவுள் பெயர் சொல்லவும் சொல்லார்; சூட்டவும் சூட்டார்; சூட்டியிருப்பினும் மாற்றி வைப்பதையே வழிவழியாகப் போற்றுவார். செம்பொருட் சிவம் ருத்ரா ஆவார். அம்மை அம்பா ஆவார். முருகன் சுப்பிரமணியன் ஆவான்; (சுப்பிரமணியன் - பிராமணனுக்கு நன்மை செய்பவன்) முருகனைச் சுப்பிரமணியனாக்கி, இருவரும் ஒருவரே என்று கூறினாலும், சுப்பிரமணியனின் மனைவி தேவயானையையும் வள்ளிக் குறத்தியையும் ஒன்றாக்க மாட்டார். ஏன்? கீழ் சாதி என இணைக்க உடன் பாடில்லை! விழிப்புடையவர்கள், பிறர் விழிக்கக் கடமை செய்தல் வேண்டும்! அஃதறம்! அந்தண்மை! ஆனால், விழித்தலே ஆகாது எனத் திட்டமிட்டுத் தமிழே தீட்டு தமிழினம் தீண்டக் கூடாத இனம் என்று கண்மூடித் தனத்தைக் காலமெல்லாம் பெருக்கித் தமிழினமே தமிழினப் பகையாக இருக்கச் செய்துவருதல், இன்றில்லை எனினும், விரைவில் தமிழரை எண்ணிப் பார்க்கச் செய்தல் உறுதி! ஒப்பநோக்கும் உயர்குணத்தர் இவருள் இருந்திலரோ எனின், இருந்தவரும் இருப்பவரும் இக் குறைக்கு ஆட் படாத வணங்கத்தக்க பெருமையர்! அவர் என்றும் தமிழரால் போற்றப் படுபவரே அன்றிப் புறக்கணிக்கப்பட்டார் அல்லர் என்பது வரலாற்றுண்மை. இனிப் பார்ப்பனப் பக்கம் யாதெனப் பார்க்கலாம். பார்ப்பனர் என்னும் பெயரை எண்ணுதல் வேண்டும். பார்த்தார் - பார்க்கிறார் - பார்ப்பார். பார்த்தனர் - பார்க்கின்றனர் - பார்ப்பனர். பார்த்தல் வழியாக ஏற்பட்ட முக்காலப் பெயர்கள் இவை. இவற்றுள் பார்ப்பார், பார்ப்பனர் பெயர்களாக வழக்கூன்றின. கணியம் பார்ப்பார், குறிபார்ப்பார், ஏடு பார்ப்பார், ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்ப்பார், நாடி பார்ப்பார், கணக்குப் பார்ப்பார், சகுனம் பார்ப்பார் எனப்படுவார் வழக்கில் இல்லாமல் போய்விடவில்லையே! இப் பார்ப்பார், அறுவகைத் தொழில் பார்ப்பாராகத் தொல்காப்பியர் காலம் தொட்டே வாழ்ந்த தமிழர். அவர்கள் குருக்கள், ஓதுவார், பூசகர் (பூசாரி) பண்டாரம், பூக்கட்டி, வேளார் என்பார். குருக்கள், பூசகர் - வழிபாட்டாளர். ஓதுவார் - தேவபாணி இசைப்பார். பண்டாரம் - கோயில் பொருட்காவலர். பூக்கட்டி - நந்தவனம் பேணி, மலர் பறித்துத் தருவார்; மாலை தொடுப்பார். வேளார் - தெய்வப் படிவம் செய்வார், மண்ணீட்டாளர்; குயவர் என்பாரும் அவர். குயவர் - பார்ப்பார்; குயம் - குசம் ஆகிப் புல்லாகி, பார்ப்பாரும் ஆகியது. குசம் - தருப்பைப்புல் (அறுகு) தருப்பைப் புல்லால் வந்தவன் குசன் (லவன் குசன்). இனி, இவரையன்றித் தலைவன் களவுக்குத் துணையாய பார்ப்பனப் பாங்கன், வேள்வி செய்யாத வேளாப்பார்ப்பான், வானியல் நுணுக்கம் அறிந்த முதுகண்ணன் அல்லது கணியன் என்பாரும் அறிய வருகின்றனர். இவர்கள் எத்தொழில் செய்தாரோ, அத் தொழில் செய்த பார்ப்பார். இவருள் தொல்காப்பியர் நாளில் வாழ்ந்தவர் அறுவகைப் பார்ப்பார் ஆகலின் அவர்தம் தொழில் கருதி எண்ணினார். ஆசாரிய (கம்ம)த் தொழிலர் ஐவர் பகுப்பு இன்னும் உளதாதல் ஒப்பிட்டுக் காணத்தக்கது. ஐவகை மரபின் அரசர் பக்கம் என்பது ஐவகைக் குடிவழியினராகிய அரசர் பகுதி என்பது. சேரர் சோழர் பாண்டியர் என்பார் மூவேந்தரும், வேளிரும், குறுநில மன்னரும் என்பார்போல் தொல்காப்பியர் காலத்தில் அறியப்பட்ட ஐவர், தலையாலங்கானத்துச்செருவென்ற பாண்டியனை எதிரிட்டார் பல்வகையர் ஆதல் போல், அந் நாளில் ஐந்து வகை அரச குடியினர் இருந்தமையால் அவரைக் குறித்தார். ஒரே காலத்தில் சேரர் சிலரும், சோழர் சிலரும், பாண்டியர் சிலரும் ஆட்சிக் கட்டிலில் இருந்தமை அறியவரினும், அவர் ஒருகுடியினர் ஆதலின் ஒருவராகவே எண்ணப்பட்டனர். வேளிர் போல்வாரும் அவ்வாறேயாம், பதினெண்குடி வேளிர் எனல் அறிக. இரு மூன்று மரபின் ஏனோர் பக்கம் என்பது இவ்விரு வகையினரையும் அல்லாமல், அறுவகைப் பட்ட பிற குடியினர் பகுதி. அவர் அறுதொழிலோர் எனத் திருக்குறளில் குறிக்கப் பட்டவராகலாம். அவ்வறு தொழிலோர், உழவு தொழிலே வரைவு வாணிகம் விச்சை சிற்பம் என்றித் திறத்தறு தொழில் கற்ப நடையது கரும பூமி (கரும பூமி = தொழில் உலகம்) என்று கூறும் திவாகர நிகண்டு. மேலே குறித்த மூன்று பகுதிகளுடன், குற்றமற்ற செயற்பாடுடைய வரும், இறப்பு நிகழ்வு என்னும் கால அறிவால் எதிரது உணரவல்லவரும், வாழும் நெறிகளை வகுத்துக் காட்டியவரும் ஆகிய அறிவர் பகுதியும், எண்வகை வழக்குடைய துறவர் பகுதியும் (நீராடல், நிலத்திடைக் கிடத்தல், தோலுடுத்தல், சடைபுனைதல் எரியோம்பல், ஊரடையாமை, காட்டுணவு கோடல், வழிபாடு என்பவை துறவர் எண்வழக்கு என்பார் இளம்பூரணர். உண்ணாமை, உறங்காமை, போர்த்தாமை, வெயிலில் இருத்தல், நீரில் நிற்றல், காமம் கடிதல், வறுமை பொறுத்தல், வாய்மையால் வருந்தல் போல்வன என்பார் நாவலர் பாரதியார்) அறவியல் அறிந்து மறத்திறம் புரியும் போர்வீரர் பகுதியும், அத்தகையதாகிய ஒப்பற்ற பெருமிதப் பகுதியும் கூடிய எழுவகைச் சிறப்பினது வாகைத்திணை என்கிறார் தொல்காப்பியர் (1021) இவை வாகைத் திணையின் வகை. வாகைத்திணையின் துறைகளைக் கூதிர் வேனில் என்றிரு பாசறை எனத் தொடங்கும் அடுத்த நூற்பாவில் கூறுகிறார் (1022). அத்துறைகளை மற வகை அறவகை என இரண்டாகப் பகுத்து இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே (9+9=18) எனக் கூறுகிறார். அவற்றுள், எட்டுவகை நுதலிய அவையம் என்பதொரு துறை. அத்தகு அவையமே திருவள்ளுவர் கூறும், பெற்றோர் தம் மக்களை முந்தியிருக்கச் செய்யும் அவையமாகும். குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி விழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின் காதல்இன் பத்துள் தங்கித் தீதறு நடுநிலை நெடுநகர் வைகி வைகலும் அழுக்கா றின்மை அவாவின்மை என்றாங்கு இருபெரு நிதியமும் ஒருதாம் ஈட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை என்று அவ் அவையத்தைக் கூறும் ஆசிரியமாலை. அவ்வவையில் ஒருநாள் அளவேனும் தங்குதற்கு வாய்ப்பின், பலப்பல பிறப்புத் துயர்களையும் படலாம் என்பதை, உடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின் பெறுகதில் அம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்ப இம் மலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே என்று கூறி முடிக்கின்றது. குடிப்பிறப்பு, உடை; நூல் சூடும்பூ; ஒழுக்கம், அணிகலம்; வாய்மை, ஊண்; தூயகாதல், உறைவிடம்; நடுவுநிலை, நகர்; அழுக்காறு இல்லாமை, அவா இல்லாமை, செல்வம்; இவற்றை யுடையவர் தோலா (தோல்வியுறாத, பொய்க்காத) நாவின் மேலோர். இத்தகும் அவையம் ஒன்றை எண்ணிய அளவிலேயே எத்தகைய பெருமிதம் உண்டாகின்றது! அவர்கள், தகுதி இல்லார் வரினும் அவரைத் தகுதியராக்கிக் கொள்ளுதல் இன்றித் தள்ளுதல் இல்லார் என்னும் சிறப்பினர் ஆதலால்தான், எந் நிலத்தாரும் எக் குடியாரும் எத் தொழிலாரும் ஆடவர் பெண்டிர் என்னும் பால்வேறுபாடும் இல்லாமல் புலமைச் செல்வராகத் திகழ்ந்தனர் என்பது சங்கச் சான்றோர் பெயர்ப்பட்டியலைப் புரட்டிய அளவானே புலப்படும். இந்நிலை தாழ்ந்து தடம் புரண்டமை, தன்மகன், ஆசான்மகன், பொருட் கொடையன் முதலோர்க்குக் கற்பித்தலும், களி, மடி, மானி, கள்வன், பிணியன், ஏழை, பிணக்கன், சினத்தன், தொன்னூற் கஞ்சித் தடுமாறுளத்தன், தறுகணன் பாவி, படிறன், இன்னோர்க்குக் கற்பித்தல் ஆகாமையும், கற்பிப்போன் கருத்தாகி விட்டதை வெளிப் படுத்தும் நன்னூல் கொண்டு தெளியலாம். நோயுள்ளவனுக்குத் தானே மருத்துவன் உதவி வேண்டும்! நோயனை நெருங்க விடேன் என்பான், மருத்துவன் என்னும் பெயர்க்குத் தானும் உரிமையன் ஆவனா? இதில் கூறப்படும் இன்னொருதுறை, கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை என்பது. கட்டாவது - உறுதிப்பாடு; உரன் என்பதும் அது. உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் வள்ளுவங்கள் கட்டமை ஒழுக்கம் பற்றியவை. கண்ணுமை = பொருந்தி நிற்கும் தன்மை. இதற்கு அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவு நிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை என்பவற்றை எடுத்துக் கூறுவார் இளம்பூரணர். வாகைத் திணையின் நிறைவுத் துறைகளாக வருவன, அருளொடு புணர்ந்த அகற்சி என்பதும் காமம் நீத்த பால் என்பதுமாம். வாகையாவது - வெற்றி: வாழ்வின் வெற்றியாவது: அருள்கலந்த துறவும் (அருட்பணி புரிவதற்காகவே கொள்ளும் பற்றறுதலும்) காமம் நீங்கிய தூய்மையும் ஆகும் என்கிறார். இவ்விடத்தே, நாம் முன்னர்க் கண்ட, காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்னும் கற்பியல் நிறைவு விளக்கத்தை எண்ணல் வேண்டும். ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்னும் களவியல் தொடக்கமும் நோக்குதல் வேண்டும். மேலும், ஆரா இயற்கை அவா நீத்துப் பேரா இயற்கைப் பெற்றி யுறுதல் கூறும் வள்ளுவமும் எண்ணல் வேண்டும். காஞ்சி காஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அகத் திணைக்குப் புறனாகும். பலவகைச் சிறப்புகளும் உடையதுதான் உலகம்; எனினும் அது நிலைபெறாத் தன்மையும் பொருந்தியதாகும் என்பது காஞ்சித் திணையின் பொருள். பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும் நில்லா உலகம் புல்லிய நெறித்தே என்பது நூற்பா (1024). புல்லுதல் பொருந்துதல். நில்லா உலகம் என்றது, அழுது அரற்றுதற்குக் கூறியதா? உலகியல் உண்மை புரிந்து, உரமாகக் கடனாற்றுதற்கும், நில்லா உலகில் நிலைபெற வாழமுடியும் என்பதைப் புகழால் நிலை நாட்டுதற் குமேயாம். மன்னா (நிலையா) உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந் தனரே என்னும் புறமும், ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல் என்னும் அறமும் தெளிவிக்கும். காஞ்சி, உலகியல் அறிவு முதிர்நிலை என்பதும், பெருந்திணை காமமுதிர்நிலை என்பதும் எண்ணின் புறனாதல் புலப்படும். மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை என்பது முதலாகக் காடு வாழ்த்து ஈறாகக் காஞ்சித்திணை இருபது துறைகளை யுடையது. முன்னவை பத்தும் ஒப்பிலாச் சிறப்பும், பின்னவை பத்தும் நிலையாமைக் குறிப்பும் கூறுவன. மாற்றுதற்கு அரியது இறப்பு. அதனைச் சிறப்பு ஆக்குதற்குக் கூடும். அதனாலேயே இறப்பு என்பதற்குச் சிறப்பு என்னும் பொருளும் நம் முந்தையர் கண்டனர். மாண்டார் என்பதும் அப் பொருளதே. சிறப்புடன் இறக்கும் இறப்பே இறப்பு (மற்றவை சாவு) என்றனர். இதனை, மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை என்றார் ஆசிரியர். அமர்க்களம் சென்றான் ஒருவன், அருங்கடனாற்றி அமர்க் களத்தே அமரன் ஆகின்றான். குடிமையராலும் நாட்டவராலும் தெய்வமாகக் கல்நட்டு, பீடும் பெயரும் எழுதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகின்றான். வானுறையும் தெய்வ நிலையை வையகத்தே பெற்றுவிடுகிறான். இது பெருமை; பிறர் பெறாப் பெருமை; கூற்றுக்கும் அஞ்சாத பெருமை என்பதன் வழி மொழிதலாக, நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு எனவரும் குறளை எண்ணினால் பெருமை ஆளப்பட்ட வகை தெரிந்து பொருள் புலப்பாடும் ஆகும். நிலையாமை போலிமையாகத் திணிக்கப் படாமல், அவரவரே அறிவு முதிர்வு, அகவை முதிர்வு. பட்டறிவு என்பவற்றால் தாமே உணர்ந்து போற்றும் வகையில் அமைந்தமை, தமிழியல் நெறியாம். அதனாலேயே போர்க்களம், இறப்பு, அழிவு, வெற்றி என்பவை யமைந்த புறத்திணையின் முடிநிலையாகிய காஞ்சித் திணையின் திரட்டு என நிலையாமை வைக்கப் பட்டதாம். நாலடியார், இளமை நிலையாமை யாக்கை நிலையாமை செல்வம் நிலையாமை என்னும் நிலையாமைகளை முதற்கண் கூற, திருக்குறளோ படிமான வளர் முறையில் தொல்காப்பிய நெறி போற்றி இல்லற முதிர்வில் அருளுடைமை தொடங்கி வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல் லாமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என வரிசைப் படுத்தியமை உணர்ந்து போற்றத்தக்கது. கணவன் இறக்க மனைவியும் உணர்வொன்றி இறத்தல் மூதானந்தம். காதலியை இழந்தமை தபுதாரம் காதலனை இழந்தமை தாபதம் கணவனொடு மனைவி தீப்புகுதல் முதுபாலை அமர் மேம்பட்டு அமரனாகிய மகனொடு முடியும் தாய் நிலை தலைப்பெயல் நிலை எவரெவர் முடிந்து சென்றாலும் முடிந்து போகாமல் கிடக்கும் சுடு - இடுகாட்டினை வாழ்த்தும் வாழ்த்து காடு வாழ்த்து இன்னவை காஞ்சித் திணைத் துறைகளுள் சில. பாடாண் திணை பாடாண் திணை என்னும் புறத்திணை, கைக்கிளை என்னும் அகத்திணைக்குப் புறனாகும். கைக்கிளையின் ஒருபாற் கூற்றுப் போன்றதே, புரவலர்ப் புகழும் புகழ்ச்சி ஆதலின், அதன் புறன் ஆயிற்று. அமரர்கண் முடியும் அறுவகை யானும் புரைதீர் காமம் புல்லிய வகையினும் ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப என்பது பாடாண் பற்றிய இலக்கணத்தின் ஒருபகுதி. அமரர்கண் என்றதும் பழைய உரைகாரர்கள் விண்ணேறித் தேடினர். மண்ணின் மக்களுக்கு மண்ணின் மைந்தரால் தந்த மண்வள நூல் என்பதை மறந்து விட்டனர். எனினும் எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல் மிதக்கும் என்பதுபோல் நாவலர் பாரதியார் வழியாக உண்மை கண்டது தமிழ் உலகம். தொடர்ந்து குழப்புவதே குறியாகி எழுதினாரும் உளர் எனினும் தகவுரையை ஏற்றுப் போற்றினாரும் உளர் என்பது தொல்காப்பியத் தோன்றல் பேரா. இலக்குவனார், பேரா. வெள்ளை வாரணனார் முதலியவர்களால் வெளிப்பட்டது. அமரர் என்னும் சொல் அமர் என்பதன் அடியாகப் பிறந்த பெயராய்ப் போர் செய்தலையே தமக்குரிய தொழிலாகக் கொண்டு வாழும் வீரரைக் குறித்து வழங்கும் தனித் தமிழ்ச் சொல்லாம் போர் மறவர்பாற் சென்று அமைவனவாக முன் இவ் வியலில் விரித்து விளக்கிய வெட்சி முதல் காஞ்சி யீறான புறத்திணை வகைபற்றிய ஆறுமே அமரர்கண் முடியும் அறுவகை எனப்பட்டன என்பார் நாவலர் சோமசுந்தர பாரதியார். இக் கருத்தே ஆசிரியர் தொல்காப்பியனார் கூற்றுக்கும் சங்கத்தொகை நூல்களாகிய தமிழ்ச் செய்யுட்களின் அமைப்புக்கும் ஏற்றதாகும் என்பார் வெள்ளைவாரணர் (தொல்காப்பியம்; தமிழிலக்கிய வரலாறு பக். 108-9). பாடாண் துறையில் இயற்பாவொடு இசைப்பாவும் (வண்ணமும்) வரப்பெறல் உண்டு. தலைவனை முற்படுத்திப் பாடாண்பாடும் புலவர் தம்மைச் சார்ந்தாரை உட்படுத்தி, வண்ணம் பாடுவம் என்பது கண்கூடு. மக்கட் காதல் பாட்டு, தெய்வக் காதல் பாட்டாகவும் வரும் என்பதை, காமப் பகுதி கடவுளும் வரையார் என்பதன் வழியே சுட்டுவார் ஆசிரியர் (1029). தேவார, திருவாசக, திருவாய்மொழி முதலாம் இறைநூல்களிலும் கோவை நூல்களிலும் இக் காதல் பாக்களைக் காணலாம். குழந்தைகள் மீது கொண்ட பேரன்பால் பாடுதலும் உண்டு. ஆழ்வாரின் கண்ணன் பிள்ளைத் தமிழும், பாரதியாரின் கண்ணன் பாட்டும், பிள்ளைத் தமிழ் நூல்களும் இதன் விரிவாக்கமாம். காதல் தழுவிய இப் பாடல்களில் ஊரும் பேரும் பிறசிறப்பும் கூறுதல் உண்டு. ஏனெனில் அகப் பாடலில் அவ்வுரிமை இல்லை ஆதலால், இதனைக் குறிப்பிட்டுக் காட்டினார் (1031). இவையெல்லாம் வழக்கொடு கூடியவை என்பதை, வழக்கொடு சிவணிய வகைமை யான என்றார் (1032, 1033). கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் பண்டே இருந்தமை யாலும், அவ் வாழ்த்துடன் தொடர்புடையவை சில வாழ்த்தப் பெற்றமையாலும் அவற்றைத் தொகுத்து வாழ்த்தினை நான்காக்கிக் கூறினார். கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்பது அது (1034). கொடிநிலை கந்தழி வள்ளி என்பவை குற்றமற்ற சிறப்பினவை. இவை மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வருவன என்பது இதன் பொருள். கொடி என்பது - வளைவுப் பொருளது. ஆதலால், படர் கொடி, ஆடு கொடி, பாம்பு, மின்னல் முதலிய பொருள்களைத் தரும். கந்தழி என்பது - கந்து அழி என்னும் இருசொல் இணைவு. கந்தாவது கட்டுத்தறி. கட்டுத் தறி, நெய்வார் கருவிக்கு அமைந்த நிலைத் தூண்; மாடு கட்டுதற்கு அன்றி யானை கட்டுதற்கும் தறியுண்டு; கட்டிவைக்கும் இடம் கட்டுத் துறை; கட்டிவைக்கப் பயன்படும் தூண் கட்டுத்தறி. அழி என்பது அழிப்பது. கட்டினை அழிப்பது (அ) கட்டற்றது கந்தழி. வள்ளி என்பது - வளம், வளமை. கொடி ஒன்று வள்ளி; கொடையாளர் வள்ளியோர்; வள்ளி, வளத்தக்காள் ஆகிய இல்லாள். கடவுள் வாழ்த்து என நூலொடு பாடப்பட்டுக் கிளர்ந்த நூல் நாமறி அளவில் முற்படக் கிடைத்தது திருக்குறளே. அதில் கடவுள் என்னும் சொல் ஆளப்பட வில்லை எனினும், கடவுள் வாழ்த்தென அதிகாரப் பெயர் உண்டு. அதிகாரப் பெயர் தவறாமல் மூலப்படி, உரைப்படி எல்லாவற்றிலும் இருந்துள்ளமை அறிதலால் நூலொடு கூடியமைந்ததேயாம். தொகைநூல் கடவுள் வாழ்த்தோ பாட்டின் கடவுள் வாழ்த்தாகிய திருமுருகாற்றுப்படையோ தொகுத்தார் அடைவில் அமைந்தவை. இவ் வகையால் திருக்குறளை முன்வைத்து, கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கு அதிகார வரிசையொடு ஒப்பிட்டுக் காணின் பொருந்தலாம் எனத் தக்க தெளிவு உண்டாகின்றது. கொடிநிலை என்பது - மின்னுக் கொடி என்னும் இளங்கோவடிகள் ஆட்சியால் மழையொடு தொடர்புறுதல் அறியலாம். ஆகலின், வான் சிறப்பு எனலாம். கந்தழி என்பது - பற்றற்றது என்னும் பொருள் தருதலால் பற்றற்ற நீத்தார் பெருமை அக் கந்தழி ஆகலாம். வள்ளி என்பது - வளமிக்க தன்மையொடு, உளமிக்க தன்மையும் ஒன்றிய அறன் வலியுறுத்தலாகக் கொள்ளலாம். இவ் வகையால் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கும் முறையே, தொல்காப்பியர் கூறிய கடவுள் வாழ்த்து, கொடி நிலை, கந்தழி, வள்ளி என்பவற்றை உட்கொண்ட அமைப்பு ஆகலாம் என்பது. இதனை அருமையாக எடுத்துக் காட்டியவர் பேரா. மு. இராகவ ஐயங்கார் (பொருளதிகார ஆராய்ச்சி. பக். 143). இவ்வாறு அமைதி கொள்ளல் தகுமோ எனின், தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர் என்னும் விரி கட்டுரை காணல் தெளிவாம். நூல்: திருக்குறளுக்கு உரை திருக்குறளே என்பது; எம் நூல். ஒரே ஒரு குறிப்புச் சான்று அறம் முதலாகிய மும்முதற்பொருள் என்னும் தொல்காப்பியமே, முப்பால் முன்னோடி. ஒரு தெளிவு புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்னும் உரிப்பொருள் வைப்பு முறை, தொல்காப்பியர் உரைத்தது (960). திருக்குறள் காமத்துப்பால் இவ்வைந்து உரிப்பொருள்களையே மாறா வரிசையில் வைத்து, ஒன்றற்கு ஐந்து அதிகாரங்களாக, ஐந்தற்கும் இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டு அமைகின்றது. ஒப்பிட்டுப் பார்த்து உண்மை காண்க. உறக்கம் கொள்வதற்குப் பாடும் பாட்டு, கண்படைநிலை. உறக்கம் நீங்குவதற்குப் பாடும் பாட்டு, துயிலெடை நிலை. பிறந்தநாள் கொண்டாடுதல், பெருமங்கலம். முடிபுனைவிழா, மண்ணுமங்கலம். பரிசில் பெற்று விடை பெறுதல், பரிசில் விடை. வாழ்த்துக் கூறுதல், ஓம்படை. பாடாண் திணையின் துறைகளுள் சில இவை. மூவாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இவ் வழக்கங்கள் புதுப் பொலிவுடன் இன்றும் நிகழ்தலை எண்ணிப் பார்க்கலாமே. மேலும் வாயுறை வாழ்த்து செவியறிவுறூஉ, புறநிலை வாழ்த்து என்பனவும் பாடாண் துறைகளே. அவற்றைச் செய்யுளி யலில் காணலாம். யாம் பெற்ற பேற்றை நீவிரும் பெறுக என வழிகாட்டும் ஆற்றுப்படை என்பதும் இப் பாடாண் துறைகளுள் ஒன்றே யாம். அது, ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கம் என்பது (1037). செல்லும் வழியில் தம் எதிரேவரும் பாணர் கூத்தர் முதலோர்க்கு அப் பாணர் கூத்தர் முதலோர், யாம் இவரைக் கண்டு இவ்வளம் பெற்றேம்; நீவிரும் சென்று பெறலாம்; செல்லும் வழி ஈது; சென்று பயன் கொள்க என வழிப்படுத்துவது ஆற்றுப் படை யாகும். பத்துப் பாட்டுள் செம்பாதி ஆற்றுப்படை என்பதால் அது போற்றப் பட்ட வகை புலப்படும். அந் நாள் நிலநூல், சுற்றுலா நூல், வரலாற்று நூல், வழிகாட்டி நூல், மக்கள் தொடர்பு நூல், மாந்த நேய நூல் என்பனவாக ஆற்றுப்படை விளங்கியமை புலப்படும். மேலும் கலையே வாழ்வாக இருந்தவர் நிலை, அவர்தம் கருவி அமைப்பு, கலைத் திறம், வளம்பெற்றபின் வைத்து வாழத் தெரியாமை, நிலைப்பிலா வாழ்விலும் நிலைத்த குடும்பமும் சுற்றமுமாக வாழ்ந்த வாழ்வு என்பனவும் புலப்படும். சான்றாகத் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும் பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப் படை (மலைபடு கடாம்) என்பவற்றை நோக்குக. பாடுபுகழ்பெற்ற மன்னரும் தாம் பாணரும் கூத்தருமாகப் பாடினர் எனின், அவ் வாற்றுப்படையின் செல்வாக்கு தானே விளங்கும். போக்குக் கற்றவன் போலீசுக்காரன் (போக்கற்றவன்) வாக்குக் கற்றவன் வாத்தியாயன் (வக்கற்றவன்) என்பது புது வழங்குமொழி. இப் போக்குக் கற்றவனும் வாக்குக் கற்றவனுமாகத் திகழ்ந்தவன் ஆற்றுப்படைக் கலை வல்லான் எனல் சாலும்! மெய்ப்பாடு மெய்யின்கண் உண்டாகிய உணர்வு, பிறர்க்குப் புலப்படும் வகையால் வெளிப்படுவது, மெய்ப்பாடு ஆகும். மெய்ப்பாடாவது - பொருட்பாடு; அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான் வெளிப்படுதல் என்பார் பேராசிரியர். உள்ளத்து நிகழ்வது - கருத்துப் பொருள்; அது முகம், கண், காது, கால், கை, வாய், மெய் (உடல்) முதலியவற்றின் அசைவு, துடிப்பு, நடுக்கம், நிறமாற்றம், தடுமாற்றம், மயக்கம், மகிழ்வு, கிளர்ச்சி, துள்ளல் - இன்ன வற்றால் பிறர் அறியத் தோன்றும். இத் தோற்றமே அகவுணர்வின் வெளிப்பாடு ஆகும். குறிப்பறிதல், குறிப்புணர்தல், குறி கூறுதல், கோள் தாங்கி (கோடாங்கி) கூறல் என்பன வெல்லாம், மெய்ப்பாடு உணரவல்லார் தம் தேர்ச்சியினால், பிறரை ஒப்புக்கொள்ள வைப்பனவாம். காப்பியக் கவின், மெய்ப்பாட்டில் தங்கியுளது எனலாம். இயலினும் இசையும், இசையினும் கூத்தும், பொது மக்களை யன்றிப் புல மக்களையும், இளையர் முதுவர் ஆகியோரையும் ஒருங்கே கவர்தல் மெய்ப்படக் காட்டும் சிறப்பாலேயாம். நாடகமே உலகம் என்பது மாறித் திரையே உலகம் காட்சியே உலகம் என ஆகிய காலம் இது. ஆடுநர்க் கழியும் உலகம் என மெய்யியல் காட்டியது பழந்தமிழ்ப் புறநானூறு. ஆடிச் செல்வாரைப் போல-வேடமிட்டு ஆடிச் செல்வாரைப் போல-போவது உலகியல் என்பது அது. கூனியாக நடித்தவன் மீது, செருப்பை எடுத்து எறிந்தான் பார்வை யன் ஒருவன். இதுவரை எனக்குக் கிடைத்த எப் பரிசும், இப் பரிசு போலாகாது என்று பாராட்டி, அடையாளப் பொருளாக்கிக் கொண் டான் கூனியாக நடித்தவன். அவன் மெய்யாக உணர்ந்து நடித்ததுமன்றிப் பார்ப்பவன் தன்னையும் தன்னை மறந்துபோகச் செய்து விட்டான் அல்லவா! மெய்ம் மறந்து நோக்கச் செய்து விடுவது, மெய்ப்பாடு ஆகும் நிலை இது. மெய்ப்பாடு கலையாக இல்லாமல், வாழ்வாகி விடும் போது, எத்தனை பேரை நம்பி ஏமாறச் செய்ய - இழப்புக்கு ஆளாக்க முடிகின்றது என்பதை நாம் கேளாமலும் காணாமலும் இல்லையே. துறவர் போலிமை, கூடா ஒழுக்கமாவது இது. மெய்ப்பாட்டு விளக்கம், உயர்கலை விளக்கம்! ஆனால், அவன் வாழ்வில் மெய்யனாக இல்லாவிடில், பெருந் தீமையாம் என்க. தொல்காப்பியர், மெய்ப்பாடுகள், அவை தோன்றும் நிலைக் களங்கள், அகவாழ்வு புறவாழ்வு இரண்டிலும் மெய்ப்பாட்டின் பங்களிப்பு, ஆகாதமெய்ப்பாடுகள் இன்னவை பற்றி ஆழமாக எண்ணிக் கூறுகிறார். அவர்தம் நுண்மாண் நுழைபுலமும், கலைத்துறைக் கவினும், கட்டமை கோப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் இயற்றியுள்ளார். சுவைப் பொருள், அதனை நுகரும் பொறியுணர்வு, அது உள்ளத்துப்பட்ட போது தோன்றும் குறிப்பு, அக் குறிப்பு மெய்யில் தோற்றமுறும் காட்சி என ஒரு மெய்ப்பாடு நான்காகும். மெய்ப்பாடு நூலோரால் எண்வகையாக உரைக்கப்படும். அவை, நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன. இவ் வெட்டையும், மெய்ப்பாட்டு நிலைக்களம் நான் கொடும் பெருக்கிக் காணின் முப்பத்து இரண்டாம்; இவற்றைச் சுவையும் சுவைப் பொருளும் ஒன்றாக்கிப் பதினாறு எனவும், உள்ளக் குறிப்பும் உடற் குறிப்பும் ஒன்றாக்கி எட்டு எனவும் கொள்வதும் உண்டு. இவற்றைக் கூறி மெய்ப்பாட்டியலை விளக்குகிறார் தொல்காப்பியர் (1195 - 1197). முதல் மெய்ப்பாடாக நகைச்சுவையையும் இறுதி மெய்ப் பாடாக உவகைச் சுவையையும் தொல்காப்பியர் கூறுதல், அவரின் பழுத்த உளவியல் தேர்ச்சி காட்டும். இத் தேர்ச்சியின் வயப்பாடே, திருவள்ளுவர் நகையும் உவகையும் கொல்லும் சினம் என முதலும் முடிவுமாகியவை இணைத்த இணைப்பாம். ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்றும் காரணங்களை நான்கு நான்காகக் கூறுகிறார் தொல்காப்பியர். எள்ளல் இளமை பேதைமை மடனென்று உள்ளப் பட்ட நகை நான்கு என்ப என்பது நகைச்சுவைக்குக் காரணமானவற்றைக் கூறியது (1198). எள்ளலாவது - இகழ்தல்; எள்போல் சிறிதாக எண்ணிக் கூறுதல். இருவர் இருந்தனர் ஓர் இருக்கையில், இடையே இருந்த இடத்தில் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் அழுக்குடை கண்டு நீ முட்டாளா, மடையனா? என்றான் இருந்த ஒருவன். இருவருக்கும் இடையே இருப்பவன் யான் என்றான். எள்ளல், மீட்டோர் எள்ளலும் ஆகியது இது. நடக்க முடியாமல் தத்திப்பித்தி நடக்கும் குழந்தை நடை, அக் குழந்தை பேசும் மழலை நகைச்சுவைக்கு இடமாகி இன்பம் பயத்தல் கண்கூடு. ஆரியர் கூறும் தமிழ் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாதலைக் கூறும் செயிற்றியம். அதனை உரையில் காட்டுவார் பேராசிரியர். ஆங்கிலர் பேசும் தமிழும் அத்தகையதே. மொழிநிலையில் அவர்கள் இளமையராகத் தோன்றுதலே நகைக்கு இடம் தந்தது என்க. பேதைமை பேதைமைத் தன்மை - அறியாத்தனம். அதனைக் காணும்போது நகைச்சுவை உண்டாகும். ஒருத்தி கைக்குழந்தை வைத்திருந்தாள்; அவள் கூந்தல் அவிழ்ந்து விட்டது. முன்னே அவள் அக்கை இருந்தாள். அவர்களுக்கு இடையே ஒருதூண்! தூணின் ஒருபக்கம் இருந்து கொண்டு குழந்தையை நீட்டினாள் தங்கை. அக்கை, தூணின் இருபக்கமும் இரண்டு கைகளையும் நீட்டிக் குழந்தையை வாங்கினாள். இந்தக் காட்சியை எண்ணின் நகைப்பு வராமல் போகுமா? நேரிலே கண்டால்... யான் கண்டது இது. மூன்றாமவர் குழந்தையை வாங்கியபின், ஏதோ தோன்றியது போல் மூவரும் நகைத்தனர்.. மடமை மடமை என்பது - அறிவுறுத்தக் கேட்டாலும், தான் கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ளாமல், அறிவுறுத்துவானை யும் அறியாதவனாகக் கருதுதல், காணாதாற் காட்டுவான் தான்காணான்; காணாதான், கண்டா னாம் தான்கண்ட வாறு என்பது போன்ற தன்மை (குறள். 849) அறிவுறுத்தியதைக் கேட்டு அதை விடாப்பிடியாகக் கொள்ளும் மடம் ஓர் உயரிய பண்பியல். மகளிர்க்கு உரிய தாகவும், துறவர்க்கு உரியதாகவும் அமைந்த மடம் அது. முன்னது தன்மை, பின்னது அத் தன்மையர் - உறையும் இடம். இம் மெய்ப்பாடுகளுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டு வழங்குகின்றனர் இளம்பூரணரும் பேராசிரியரும். சங்க இலக்கியம் வாழ்வியல் இலக்கணமாக இருப்பதன் சான்று அது. அதன் இலக்கணம் தொல் காப்பியத்தில் உண்டு என்றால், அதன் பொருள் என்ன? தொல் காப்பியர்க்கு முன்னரே பரவிக் கிடந்த வழக்காறும் இலக்கியங் களும் இலக்கணங்களுமே அவர் தொகை நூலுக்கு மூலப்பொருள்களாக இருந்தன என்பதை நோக்கத் தமிழ்மாந்தர் தொன்மையும் கலைச் சிறப்பும் பண்பாட்டு முதிர்வும் புலப்படும். செயிற்றியத்தில் இருந்து இளம்பூரணர் காட்டும் பாட்டு அதனை இழந்து விட்ட நம்மை வாட்டவே செய்யும். நகைக்கு மூலமாம் எள்ளல் முதலியவற்றைத் தம் எள்ளல் அடியாகவும், பிறர் எள்ளல் அடியாகவும் ஒன்று இரண்டாதலை விளக்குவர் உரையாசிரியர்கள். அவ்வாறே தம் இளமை, பிறரிளமை எனக் கூறி எள்ளல் முதலிய நான்கையும் எட்டாக்குவர். உரிய சான்றும் காட்டுவர். அழுகை அழுகைச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு (முன்னிருந்த நிலையில் தாழ்தல்), வறுமை என்பவற்றின் வழியாகத் தோன்றும் (1199). இழிவு - இகழ்ந்து பேசுதலால் உண்டாவது; இழிவு - இழப்பின் வழிவருவது; அசைவு - பழம் பெருமை, மதிப்பு ஆயவை குன்றல்; நிலைதாழ்தல்; வறுமை, துய்ப்புக்கு வழியில்லாமை; பட்ட இழிவும் பழித்த இழிவும் பக்கம் பக்கம் எண்ணின் எண்ணுவார்க்கு இளிவின் அழுகை புலப்படும். இழவின் அழுகையே, ஒப்பாரி; கையறுநிலைப் பாடல்கள். அசைவின் பாடே, பாரிமகளிரை வருத்திக் கிளர்ந்த பாட்டு! அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின் எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர்எம் குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே என்பது அது (புறம். 112). வறுமை அழுகைப்பிழிவு, இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு என்பது (குறள். 1048). அசைவு என ஒன்று இருந்தாலும் நான்கும் அசைப்பனவேயாம். விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்து அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்ததும், அழுகையொடு ஒத்ததாகலின் இளிவரலையும், தான் இளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின் பின் வியப்பையும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் அதனை அடுத்து அச்சத்தையும், அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன் பின்னும், அவ் வீரத்தின் பயனாகிப் பிறர்க்குவரும் வெகுளியை அதன்பின்னும், வெகுளிக்கு மறுதலையாகவும் ஓதுதற்குச் சிறந்ததாகவும் முதலாவது சொல்லிய நகைக்கு இயைபானதாகவும் அமைந்த உவகையை இறுதியிலும் வைத்தார் என வைப்பு முறை காட்டுவார் பேராசிரியர். நகை போலவே அழுகை முதலியனவும் தன்னிடத்துத் தோன்றுதலும் பிறரிடத்துத் தோன்றுதலும் என எட்டாக்குவார் பேராசிரியர். இளிவு - பிறர் இகழ்விற் பிறக்கும் அவலம். இழிவே என்னும் பாடம் சிறக்கும் என்பார் நாவலர் பாரதியார். இளிவரல், மானம் குன்ற வருவது. இளிவரின் வாழாத மானமுடையார் எனவும் இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார் எனவும் வருதலான் இப் பொருட்டாதலை அவர் விளக்குவார். இளிவு, பழிபடு குற்றமின்றியும் வரும் ஆதலால் தன்னெஞ்சு சுடுதல் இன்மையால் வாழ்வு வெறுப்பு விளையாது. இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் குன்றவரும் நிலையிழிவைக் குறிக்கும் என வேறுபாடும் காட்டுவார். இளிவரல், மூப்பு பிணி வருத்தம் மென்மை என்பவற்றால் உண்டாகும் (1200). முற்றத்தளவும் போக முடியாத முதுமையின் வாழ்வை வெறுக்கும் தாய் நிலையும், பசிப்பிணிக் கொடுமையில் மனைவி யும் மக்களும் வருந்தும் வருத்தமும் தம் நொய்ய வாழ்வும் எடுத்துக் காட்டும் ஒரு பாட்டு (புறம். 159). இளிவரல் விளைவு விளக்கம்: குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும் ஆளன் றென்று வாளில் தப்பார் தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே என்னும் சேரமான் கணைக்கால் இரும்பொறை பாட்டும் (புறம். 74). சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணா னோடு திருப்போர்ப் புறத்துப் பொருது பற்றுக் கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்றுக் கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சியபாட்டு என்னும் குறிப்புமாம். மருட்கை புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே என்பது மருட்கைச் சுவை தோன்றும் நிலைக்களங்கள் பற்றியது (1201). மருட்கையாவது மயக்கம். பாராதன ஒன்றைப் பார்த்தல் மயக்கமாக்கும். எறும்பு ஒன்று எட்டடி நீளம் ஈரடி உயரத்தில் வரக்கண்டால், பூனை வடிவில் யானை ஒன்று நம் முன்வந்தால், இறந்து போனான் எனப்பட்ட ஒருவன் நம்முன் நடந்து வரக்கண்டால் மருட்கை தோன்றாமல் இராதே. பறழுக்கு (குட்டிக்கு) வயிற்றில் பையையுடைய கங்காரு, பறக்கு மீன், சிற்றுயிர் உற்றக்கால் பற்றிப் பிசைந்துண்ணும் பூச்செடி, இருதலை, முக்கண் ஐங்கால் அறுவிரல் முதலிய வழக்கிறந்த உறுப்புடைய உயிர்கள் போல்வன என்பார் நாவலர். அச்சம் அணங்கு விலங்கு கள்வர் தம் இறை என்பன நான்கும் அச்சச் சுவை நிலைக் களங்கள் (1202). ஒரு மரத்தில் ஒருவன் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து விட அதனை அறிந்தான், அவ்விடத்தை இரவில் போய்க் காண அஞ்சுதலும், சுடுகாட்டுக்குத் தனியே இரவில் சென்று மீள்வதற்கு அஞ்சுதலும், பேய் பிசாசு என்று கற்பிக்கப்பட்டவற்றை நினைத்து அஞ்சுதலும் அணங்குவழி அச்சம். மயக்கும் பெண்பேய் பற்றிய புனைவு பழமை மிக்கது; நீலி கதையோ நெடுங்கதை. இவை நூல்வல்லார் சுட்டும் அளவுக்கும் பெருக்கமாக மக்கள் வழக்கில் இருந்தமை புலப்படும். பேய் பிடித்தல் பேயோட்டல் உடுக்கடி என்பன இன்றும் மறைந்து விடவில்லையே! புலி விலங்கு ஒன்று நம்முன் நிற்பதாகக் கனவில் காணினும் உண்டாகும் அச்சத்தை நோக்கும் போது நேரில் கண்டால்! கள்வர் அச்சம் தந்த பாதுகாப்பே கதவு, பூட்டு, அரண், அகழ், காவல், இன்னவை. கள்வன் வலியனா காப்பு வலியதா என்பது முடிவுக்கு வராத பொருளாகவே என்றும் உள்ளது. இறை - கடவுள், ஆள்வோன், ஆட்சி அலுவலன், தலைவன் ஆய பல பொருள் ஒரு சொல். கடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் கடும்புலி வாழும் காடே நன்று என்பது அரசன் அதிவீரராம பாண்டியன் பாடியது. ஆசிரியரைக் கண்டு ஓட்டமெடுத்த மாணவர் ஒளிந்தது மட்டு மில்லை; கழிந்ததும் உண்டு. எழுத்தறி வித்தவன் இறைவன் எனப்பட்ட காலம் இருந்தது முதியர்க்கேனும் நினைவில் நிற்கும். பெருமிதம் பெருமிதம் வேறு; செருக்கு (தலைக்கனம்) வேறு. பெருமிதப் பேறும் தலைக்கனத் தாழ்வும் எதிரிடைகள். பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் என்னும் குறள் (979) விளக்கம் இரண்டும். பெருமிதச் சுவைக்களம், கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே என்பது (1203). கல்விச் சிறப்பு, போரில் காட்டியவீறு, வழிவழிப் புகழ், இணையிலா ஈகை என்பவை அவர்க்கே யன்றி அவர் பெற்றோர்க்கும் சார்ந்தோர்க்கும் பெருமிதம் தரும். கற்றவன் கொண்ட பெருமை கற்பித்தவனையும் உயர்த்திப் பிடிக்கிறதே! ஆயிரத்தில் ஒரே ஒருவன் பெற்ற கல்விச் சிறப்பு, அவ் வாசிரியன் மதிப்பை நாடறிபொருளாக்கி விடுகின்றதே! ஏனாதி என்னும் பட்டம் தறுகண் வழியாகப் பெற்றமை வரலாறு. மார்பு கொண்ட வேல் மறு பக்கம் துளைத்துச் செல்ல, புறப்புண் எனக் கொள்ளவும் நேருமே என வடக்கிருந்து உயிர் துறந்த புகழாளன் புகழ், வென்றவனையும் வென்றவன் ஆக்கிற்றே. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ! சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே என்னும் புறப்பாட்டு (66). வ. உ. சிதம்பரனார், வீரபாண்டியக் கட்டபொம்மன் போர்வீறு நாடறிய லாயது, மெய்ப்பாட்டுத் திறத்தாலேயே! அவர்களைப் பற்றிய நூலைக் கற்றார் ஆயிரத்தில் ஒருவரும் அருமையே! கொடைப் பெருமிதம் என்ன, முல்லை பல்லைக் காட்டிப் பாடியா பாரியிடம் தேர்ப்பரிசு பெற்றது! உடுத்தாது போர்த்தாது என அறிந்தும் மயிலுக்குப் படாம் வழங்கினானே பேகன்! ஏன்? வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய எனப் பாடுபுகழ் பெற்றானே குமணன்! இவை பெருமித மாதல் இவர் வேடமிட்டு நடிப்பார்க்கும் கிட்டுகின்றதே! வெகுளி உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே என்பது வெகுளிச் சுவை நூற்பா (1204). காலை வெட்டுதல் கையை வெட்டுதல் கண்ணைத் தோண்டுதல் - உறுப்பறை. குடிகோள் - ஒருகுடியையே முற்றாக அழித்தல்; ஒருவன் செய்த குற்றத்திற்கு அவனைச் சார்ந்தாரையெல்லாம் கெடுத்தல். அலை - அலைக் களித்தல். அலைத்தலோடு அமையாமல் அதற்கு மகிழ்தல். பிறர்துயர்ப்படுதல் கண்டு களிப்புறுதல். கொலை: நன்றிமறத்தலையும் கொலையாகக் கண்ட தமிழ் மண்ணில், கொள்ளும் பொருளிலர் எனினும் தலை துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்துயிர் வௌவுதல் கலித்தொகைச் செய்தி. உவகை உவகைச் சுவை நான்கும், செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே என்பது (1205) உனக்கு உவகை வந்தால் என்முதுகுக்கு ஒட்டுப் போட வேண்டும் என்று வருந்திக் கூறினான் தன் நண்பனிடம். அவன் உவகை இவன் அல்லல் ஆதல் ஆகாது என்பாராய் உவகையை அல்லல் நீத்த உவகை என்றார். உவகை இருபாலும் இல்லையேல் அஃது உவகையன்றாம். பாலியல் உவகைக்கும் இவ் விருபால் ஒப்பும் இருத்தலைக் கருதியே உருவு, நிறுத்த காமவாயில் என்றவர் தொல்காப்பியர் என்பதை எண்ணின் விளக்கமாம். இந் நாள் மருத்துவ அறிவியல் இதனை வலியுறுத்தி ஆய்வு மேற்கொள்ளச் சொல்லுதல் தொல்காப்பிய அறிவர்தம் மேம்பாட்டு விளக்கம் (1219). செல்வ உவகை பரம்பரை உடல் நிறத்தையே மாற்றிவிடுதல் கண்கூடு. புலன் என்பது புலமை அன்று; கல்விப்புலமை பெருமிதச் சுவைக் களங்களுள் ஒன்று. இப் புலன் காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள் என்பது போல அறிவு வழியாகத் துய்க்கும் பேறு. அது, அதன் வண்ணமாக அமைந்து மாறிப்புகும் இன்பம். அறிதோறும் அறியாமை கண்டு மகிழும் புலனுகர்வே இவண் புலன் எனப்பட்ட தாம். புணர்வு உயிர்பகுத்தன்ன இருவர் ஒருவராகித் துய்க்கும் இன்பம். தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு? என ஐயவினா எழுப்பி அமைந்த விடை காட்டியது குறள் (1103). உறுதோறு உயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தின் இயன்றன தோள் என்று உவந்து வினாவியதும் அது (குறள். 1106). உவத்தல் என்னும் சொல்வழியாகப் பிறந்தவையே புணர்வு தொடர்பான மக்கள் வழக்குச் சொற்கள் என்பதை எண்ணிப் பார்ப்பின் உண்மை புலப்படும். புணர்வு நட்புப் பொருளதேனும் இதன்பாற்படுத்தல் கூடாதாம். ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள என்பது வள்ளுவம். விளையாட்டும் இருபாற் பொது. கடலாட்டு, புனலாட்டு, சோலைக் காட்சி, மலைச் செலவு, சிலம்பாட்டம், கும்மி, கோல், குரவை, பந்து என்பன வெல்லாம் உவகைப் பொருளவே ஆம். அல்லல் தொடராது அமைந்த இன்பங்களே இவை என்பதை இந் நாள் விளையாட்டுக் குழுவினர் எண்ணிப் பார்க்க இதனை அவர்க்குப் படையல் ஆக்கலாம். சிற்பி கட்டும் கட்டுமானச் சீர்மை தொல்காப்பியர் கைப்பொருளாக இருத்தல் இவற்றாலும் மேல் வருவனவற்றா லும் புலப்படும். மேலும், இலக்கண வறட்சி என்பதற்கு இடம் தராமல், உள்ளப் பட்ட நகைநான் கென்ப விளிவில் கொள்கை அழுகை நான்கே யாப்புற வந்த இளிவரல் நான்கே மதிமை சாலா மருட்கை நான்கே பிணங்கல் சாலா அச்சம் நான்கே சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே வெறுப்ப வந்த வெகுளி நான்கே அல்லல் நீத்த உவகை நான்கே என முதலடியோடு எதுகை வருவது கருதியது அன்றி, அப் பொருள்களின் உயிர்நாடியாம் அடைமொழிகளை நடைப் படுத்தியுள்ள நயம், நினைப்பவர் நெஞ்சம் நிலைக்கவைக்கும் நீர்மை யுடையதாம். மேலும் 32 மெய்ப்பாடு மெய்ப்பாட்டு நிலைக்களங்கள் முப்பத்திரண்டு கூறிய அவர், அவை அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பானவை என வைத்து, அகத்துக்கே அவ்வாறு முப்பத்திரண்டு நிலைக் களங்கள் உண்மையைத் தொகுத்துச் சொல்கிறார். ஆங்கவை ஒருபா லாக ஒருபால் எனத் தொடர்கிறார். உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு என்றும், கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு என்றும், முனிதல், நினைதல், வெருவுதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு என்றும், கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என்றும், நாலெட்டாகப் பகுத்து உரைக்கும் அவற்றை முறையே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கொடு தழாஅல், தோழியிற் புணர்வு மெய்ப்பாடுகள் என்று கூறுவார் நாவலர். களவு மெய்ப்பாடு களவிற்குச் சிறந்த மெய்ப்பாடுகள் இவை என்பதை நான்கு நான்காக அறுவகைப்படுத்தி முறையாக அடுத்து ஓதுவார் ஆசிரியர். தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் விரும்பி நோக்குதல், தலைவிக்கு நெற்றியில் வியர்வை உண்டாதல், காட்சி இன்பத்தைப் பிறர் அறியாதவாறு மறைத்தல், தமக்கு உண்டாகிய மாற்றத்தைப் பிறர்க்குப் புலப்படாவாறு மறைத்தல் என்பவை நான்கும் முதற்பகுதி. இவைமுறையே புகுமுகம் புரிதல், பொறிநுதல் வியர்த்தல், நடுநயம் மறைத்தல், சிதைவு பிறர்க்கு இன்மை எனப்படும். உள்ளத்து உணர்வைப் புலப்படாது மறைக்க முயன்றாலும் அவ்வுணர்வு ஓங்கிக் கூந்தலை விரிக்கவும், காதணியைத் திருகிக் கழற்றவும், மற்றை அணிகளைத் தடவவும், உடையை மாற்றி உடுத்தவும் ஆகிய மெய்ப்பாடுகள் நான்கும் இரண்டாம் பகுதியாம். இவற்றை, முறையே கூழைவிரித்தல், காதொன்று களைதல், ஊழணி தைவரல், உடைபெயர்த்து உடுத்தல் என்பார் ஆசிரியர். ஒடுங்கிய இடையைத் தடவுதல், அணிந்த அணிகளை மீளவும் திருத்தமாக அணிதல், தன் உளத்தில் இல்லாத வலிமையை இருப்பதாகக் காட்டிக் கொள்ளல், கைகள் இரண்டையும் தலைமேல் வைத்து ஆர்வம் காட்டல் என்பவை மூன்றாம் பகுதி. இவை முறையே, அல்குல் தைவரல், அணிந்தவை திருத்தல், இல்வலியுறுத்தல், இருகையும் எடுத்தல் என்பனவாம். தலைமகன் சிறப்பியல்பைப் பாராட்டுதல், அறியாமை நீங்கி அறிவு மேம்படக் கூறுதல், அலர் எனப்படும் இரக்கமில்லாச் சொல்லை ஏற்று நாணுதல், தலைவன் வழங்கும் உடைமுதலியன கொள்ளுதல் என்பவை நான்கும் நான்காம் பகுதி. இவை முறையே, பாராட்டெடுத்தல், மடந்தப உரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் என்பன. நெஞ்சங் கலந்த நிலையை இனி மறையாமல் தோழிக்கு வெளிப் படுத்துதலே நலம் எனத் தலைவி எண்ணுதலும், தலைவனைக் கண்டு மகிழ்ந்த மகிழ்வை வளர்க்கும் வகையால் மறுத்தலும், அவன் காணா வகையில் மறைந்து கொள்ளுதலும், ஒருகால் காணுமாயின் மகிழ்தலும் ஆகியவை நான்கும் ஐந்தாம் பகுதி. இவை முறையே, தெரிந்துடம்படுதல், திளைப்பு வினை மறுத்தல், கரந்திடத் தொழிதல், கண்டவழி உவத்தல் என்பன. தன்னை அழகுறுத்துவார் செயல் கண்டு மனம் வருந்துதல், தலைவனைப் பிரிந்திருக்கும் தனிமையால் வருந்துதல், வருத்தத்தால் கலக்கமிக உரையாடுதல், எதுவும் செய்யமாட்டாத தன்நிலையை உரைத்தல் என்பவை நான்கும் ஆறாம் பகுதி. இவை முறையே, புறஞ் செயச் சிதைதல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல், கையறவுரைத்தல் என்பன. அன்பின் ஐந்திணையின் எல்லை கையற வுரைத்தல் என்பதே. தனிமை மெய்ப்பாடு தலைவனைப் பிரிந்த தனிமையில் தலைவியின் மெய்ப்பாடுகளாக இருபதை எண்ணுவார் ஆசிரியர். இன்பம் தருவன வெல்லாம் துன்பம் தருவனவாகத் தோன்றுதலால் அதனை வெறுத்தல், தனிமைத் துன்பம் தாங்காமல் புலம்புதல், உருவெளித் தோற்றம் கண்டு வருந்துதல், கூட்டத்திற்கு இடையூறானவற்றை எண்ணுதல், பசி வருத்தினும் தாங்கியிருத்தல், வண்ணம் மாறுதல், உணவு குறைதல், உடம்புமெலிதல், உறக்கம் கொள்ளாமை, கனவு கண்டு மயங்குதல், மெய்யையும் பொய்யாகக் கொள்ளல், பொய்யையும் மெய்யாகக் கொள்ளுதல், ஐயமுறுதல், தலைவன் உறவினரை விரும்புதல், அறத்தைப் பழித்துரைத்தல், உள்ளகம் உளைதல், எப்பொருளைக் காணினும் அப் பொருளைத் தலைவனொடு ஒப்பிட்டுக் காணல், ஒப்பிய வகையால் உவப்புறல், தலைவன் பெயர்கேட்க அவாவுதல், கலக்கமுறல் என்பவை அவை (1216). இவையெல்லாம் களவு நிலை மெய்ப்பாடுகள். கற்பு மெய்ப்பாடு கற்புநிலை மெய்ப்பாடுகளை அடுத்தே கூறுகிறார் ஆசிரியர் (1217, 1218). களவு வழித்தே கற்பு ஆகலின் அவற்றின் இறுதியும் முதலும் இணைத்துக் காண வேண்டியவையாம். களவுக் கூட்டத்திற்குத் தடையுண்டாய போது இடித்துரைத்தல் வெறுப்பை மனத்தில் நிலைநிறுத்தல், தமர்க்கும் பிறர்க்கும் அஞ்சுதலால் தலைவனைக் காணாது விலகல், அவன் குறிவருதலை மறுத்தல், தூது சொல்லுமாறு தான் விரும்புவன நோக்கிக் கூறுதல், உறக்கமும் சோர்வு மாக இருத்தல், காதல் மிகுதல், உரையாடாமை என்பவை மனம் அழியாத கூட்டத்திற்குரிய மெய்ப்பாடுகள். மேலும், தெய்வத்திற்கு அஞ்சுதல், உயர்ந்த அறம் ஈதெனத் தெளிதல், இல்லாததையும் இட்டுச் சொல்லிச் சினம் கொள்ளல், உள்ளதாம் உயர்வையும் வெறுத்துரைத்தல், இரவு பகலெனக் கூடியிருந்ததை எண்ணி மகிழ்தல், அவற்றை மறுத்திருத்தல், அருள்மிகக் கொள்ளல், அன்புப் பெருக்காதல், பிரிவு தாங்காமை, தலைவனைப் பற்றிப் பிறர் கூறிய பழிச் சொல் கேட்டு வருந்தல் என்பனவும் அவற்றொடு கூடிய மெய்ப்பாடுகளாம். காதலிருவர்க்கும் வேண்டிய ஒப்புமை பத்தும் முன்னே அகத்திணை இயலில் கூறப்பட்டன. அவை, பிறப்பே குடிமை முதலியன. ஆகாமெய்ப்பாடு காதலுக்கு ஆகாத மெய்ப்பாடுகள் இவை என்பதை, நிம்பிரி, கொடுமை, வியப்பொடு, புறமொழி, வன்சொல், பொச்சாப்பு, மடிமையொடு, குடிமை இன்புறல், ஏழைமை மறப்போடு, ஒப்புமை, என்றிவை இன்மை என்மனார் புலவர் என்றார் (1220). நிம்பிரி - பிழையைப் பொறுத்துக் கொள்ளாமை; கொடுமை அறனெறி அழிப்பு. வியப்பு - தன்னைப் பெருமையாகப் பாராட்டல்; புறமொழி - புறங்கூறுதல்; வன்சொல் - வடுவாக்கும் சொல்; பொச்சாப்பு - மறதி; மடிமை - சோம்பல்; குடிமை இன்புறல் - குடிப் பெருமை பேசி இன்புறுதல்; ஏழைமை மறப்பு - நிலையில் தாழ்வெனக் கருதாமை; ஒப்புமை - ஒப்பிட்டுக் காட்டிக் கூறுதல்; இன்மை என்பது இவையெல்லாம் இல்லாமை என்னும் பொருளதாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுக்காது வீம்பு காட்டும் குடும்பம் கெட்டுத் தொலைதல் மிகுதியாதலால் அது தலைப்பட வைக்கப்பட்டது போலும். அவ்வொன்று கைவரின் மற்ற தீயவை பலவும் ஒழிதல் உண்மையாம். தற்பெருமை கொள்வார், தம்மைச் சிறுமைப்படுத்தத் தாமே கட்டியங் கூறுபவர் ஆவர். பொதுவாழ்வுக்கே தற்பெருமை ஆகாது எனின் குடும்ப வாழ்வுக்கு அதன் வாடையும் அடித்தல் ஆகாது. புறமொழியாவது - புறங்கூறுதல்; இழிவுமிக்கது. குடும்ப இழிவை ஊரிழிவாக ஆக்கும் கொடுமைப் பழிவழியது அது. அதனைத் துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு என வினாவும் குறள் (188). வன்சொல் சுடுசொல், நாகாத்தல்; குடும்ப நலங்காத்தல். தீயினால் சுட்டது ஆறினும் ஆறாதது வாயினால் சுட்டது! குடிப் பெருமை கூறுவது - பிறந்த குடிப்பெருமை கூறுவது, புகுந்த குடிப் பழியாகக் கொள்ளப்பட்டுக் கேடாதல் பெருவழக்கு. பிறந்த குடிப்பெருமை, புகுந்த குடியில் நடந்து கொள்ளும் நடை யாலேயே சிறக்கப் பெற வேண்டுமேயன்றித் தான் கூறுதலால் இல்லை என்பதை உணர்தல் இல்லறச் சீர்மை. ஏழை மையாகிய நிலை சூழலால் ஏற்படுவது. நிலையில் தாழ்வு வறுமை ஏற்படல் பொதுவானது. அது குறித்து எங்கள் குடும்பம் இப்படிப் பட்டது எனத் தாழ்த்திக் கொண்டு ஒடுங்கி இருப்பதும் ஒப்புரிமை இல்லறச் சிறப்புக்கு உதவாது. மனைவியைக் கணவன் இன்னவள் போல என்று ஒப்புக் காட்டி உரைப்பதோ, கணவனை மனைவி இன்னவன் போல என ஒப்புமை காட்டி உரைப்பதோ தீமையைத்தாமே கை கூப்பி வரவேற்பது ஒப்பதாம். இவையெல்லாம் நீங்கிய ஒத்த உரிமை வாழ்வே உயர் வாழ்வு, வாழ்வாங்கு வாழும் வாழ்வு எனத் தெளிவித்தாராம். ஆகாக் குணங்களை அடுக்கி வைத்துள்ள இந் நூற்பாவினை உணர்ந்து பாராமல் எத்தனை குடும்பங்கள் கெட்டுள்ளன; கெட்டு வருகின்றன! கெடுப்பவற்றைக் கூறியது கதைப் படைப்புக் கருவுக்காகவா? கெடாத வாழ்வு சுரக்கட்டும் என்னும் பேரருள் குறிப்பு என உணர்வார், உணர்ந்த பின்னரேனும் வாழ்வில் போற்றி உய்வார்! தொல்காப்பியர் வேட்கை, தம் அறிவைப் பாராட்டுவர் கற்பார் என்பது அன்று. கற்பார் நிற்பாராதல் வேண்டும் என்பதே. அதனை மெய்ப்பாட்டியல் நிறைவு நூற்பாவான் உணர்த்து கிறார்: கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின் நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே என்பது (1221). உணர்வுடை மாந்தர் உணர்வர்; பிறர் எண்ணி அறிதல் அரிது. ஆதலால், உணர்ந்து போற்றுக என்றார். உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்பதும் அவர் உரை (876). உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று என்பது வள்ளுவர் உரை (குறள். 718). உவமை முதிய மாடு ஒன்று புல்லைக் கடித்தது; புல்லைக் கடிக்க முடியாமல் நாவால் தடவி வளைத்தது;அகப்பட்ட அளவில் குதப்பியது. அதனைக் கண்ட ஒரு முதியவர், பல்போனவன் பக்காவடை தின்பது போலத் தின்கிறது என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன்; அவர்க்குப் பல் இல்லை. அவர் பட்டறிவு அப் பழமொழியாக வெளிப்பட்டது என உணர்ந்தேன். அது புதுமொழியே. அவரே சொன்னதாகக் கூட இருக்கலாம். ஆனால், பழமொழி, உவமை, விடுகதை போன்றவை தோன்றும் பட்டறிவு நன்கு புலப்பட்டது. மாநிறம், கிளிப்பச்சை, மயில் கழுத்துச் சீலை, காக்கைக் கறுப்பு - இப்படிப் படைக்கப்பட்டவை பொதுமக்கள் கொடையே. புலிப்பாய்ச்சல், ஆமைநடை, குதிரை ஓட்டம், மாடுபோல உழைத்தல் - இன்னவையும் அப்படியே. குதிரைவாலி, காடைக்கண்ணி, வாளவரை - இவையெல்லாம் பொதுமக்கள் வழங்கியவையே. அலைபோல, சூறாவளிபோல, காற்றாடி போல, பம்பரம் போல - என்பன வெல்லாம் பெரிய இலக்கிய வாணர் படைப்பு இல்லை. மக்கள் வாழ்வில் காணப்படும் உவமைகள் இவை. உள்ளதை உள்ளவாறு மட்டும் சொல்லாமல், அதனை ஒத்த ஒன்று காட்டிப் பொருள் விளங்கவும் பொலிவு ஏற்படவும் செய்யும் உவமை மக்கள் பொது வளமாகப் புலமையர் கண்டு கொண்டு பாராட்டி ஒழுங்குபடுத்தியதேயாகும். கிளிப்பச்சையில் வண்ணம் உவமை. குதிரை வாலியில் வடிவு உவமை. புலிப்பாய்ச்சலில் வினை உவமை. மழைக் கொடையில் பயன் உவமை. சோழன் யானை, பகை வேந்தர் குடையை எற்றி எற்றித் தள்ளியது. யானை எற்றுதல், கொற்றக் குடையின் வடிவம், நிறம் ஆயவை ஆ உதைக்கும் காளாம்பியைக் (காளானைக்) கண்முன் கொண்டு வந்தது. அதன் பொருளும் ஒப்பும் விளக்கமும் அவரை வயப்படுத்தின. அதனால், ஓஒ உமன் உறழ் வின்றி ஒத்ததே எனத் தொடங்கினார். உவமை எத்தகைய வேறுபாடும் இல்லாமல் ஒப்பாகி விட்டது என்பது அவர் வியப்பு. புலவர் பொய்கையார். நூல் களவழி நாற்பது. சிவந்ததும் கூர்மையானது மாகிய நாரையின் அலகைப் புலவர், பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன பவழக் கூர்வாய் செங்கால் நாராய் என்றார். அதனைக் கேட்ட வேந்தன், பூரித்துப் போய்ப் புலவனை அழைத்துப் பரிசு வழங்கினான். உவமைப் பெருமை அல்லவா இது. புலவர் சத்திமுற்றப் புலவர்! கிழங்கைப் பிளந்து பார்த்தால் நாரையின் நாவும் தோற்றம் தருகிறதே. வண்ணமும் வடிவும் ஒத்த உவமை இது. மழைபோலக் கொடையைக் கூறுவர். ஆனால், மழைப் பொழிவு போன்றது சொற்பொழிவு எனக் கண்டார் ஒருவர். பிரசங்கம் என்றும், பெருஞ்சொல் விளக்கம் என்றும் வழங்கி வந்தவரிடையே சொற் பொழிவு என ஒரு சொல்லைத்தந்தது மன்றிச், சொற்பொழிவாற்றுப் படை என்னும் நூலும் தந்தார். அவர் நெல்லை பால்வண்ணர் என்பார். வினையும் பயனும் அமைந்த உவமை. உவமை வகை வினை பயன் மெய்உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் என உவமை வகைகள் இவை எனக் கூறுவார் (1222). உவமை ஒவ்வொன்றும் தனித்தனியே வரும் என்பது இல்லை. இரண்டு மூன்று சேர்ந்து வருதலும் உண்டு. வினையும் பயனும் ஓர் உவமையில் இருக்கலாம். ஓர் உவமையில் வண்ணமும் வடிவும் பொருந்தி யிருக்கலாம். உவமையாகக் கூறுவது உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியர் ஆணை (1224). பெருமை நன்மை காதல் வலிமை என்பவற்றை நிலைக்களமாகக் கொண்டுவரும். தாழ்ந்த பொருள் உவமையாவதை ஏற்கும் இடமும் உண்டு என்றும் கூறுவார் (1226). ஆனால் அத் தாழ்ந்ததிலும் உயர்ந்த தன்மையே உவமை யாக்கப்படும் என்பது குறிப்பு. நன்றியறி தலுக்கு, நாயனையார் கேண்மை கெழீஇக் கொள வேண்டும் என்று உவமைப் படுத்துவது இல்லையா! அதுபோல். முழுமையான பொருள் முதல்; முதற் பொருளின் உறுப்பாக அமைந்தது சினை. முதற் பொருளுக்கு முதற் பொருளும், முதற் பொருளுக்குச் சினைப்பொருளும், சினைப் பொருளுக்கு முதற் பொருளும், சினைப் பொருளுக்குச் சினைப் பொருளும் உவமையாதல் உண்டு. மலை போன்ற யானை -முதலுக்கு முதல் உவமை தாமரை அன்ன தண்குடை -முதலுக்குச் சினை உவமை பனை நெடுங்கை -சினைக்கு முதல் உவமை ஆடுகை கடுப்பத் திரிமருப்பு (கடுப்ப - போல; மருப்பு - கொம்பு)- சினைக்குச் சினை உவமை பவழச் செவ்வாய் என்பது பவழத்தை வாய்க்கு உவமை காட்டியது. எதனால் உவமையாயிற்று எனின், செம்மை என்னும் நிறத்தால் உவமையாகியது. பவழ நிறமும் வாயின் நிறமும் சிவப்பு ஆதலால் உவமையாம். இதில் செம்மை என்பது வெளிப்படத் தெரிய உவமை அமைந்துள்ளது. இவ்வாறு வெளிப்படத் தெரியா வகையில் பவழவாய் எனினும் உவமையே. இரண்டும் உவமையே எனினும் முன்னதில் செம்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பின்னதில் அப்படிக் காட்டப் படாமல் மறைந்துள்ளது. ஆதலால் முன்னது - சுட்டிக் கூறிய உவமை; பின்னது - சுட்டிக் கூறா உவமை என்கிறார் ஆசிரியர். சுட்டிக் கூறா உவமை யாயின் பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே என்பது அது (1228). புணர்த்து - பொருத்தி; புணர்ந்தன - பொருந்துவன. எடுத்துக் கொண்டது எதுவோ அது, பொருள். அதற்கு ஒப்புமை காட்டப்படுவது எதுவோ அது, உவமை. இரண்டும் பொருந்த அமைதல் வேண்டும். (1229). பொருள் என்பதைப் பிற்காலத்தார் உவமேயம் என்றனர். உவமை என்பதை உவமானம் என்றனர்; ஒப்பினைப் பொதுத் தன்மை என்றனர். இரண்டற்கும் அமைந்த இணைப்புச் சொல்லை உவம உருபு என்றனர். அவ்வுருபு வெளிப்பட இருந்தால் உவம விரி என்றும், மறைந்திருந்தால் உவமத் தொகை என்றும் வழங்கினர். முத்துப்பல் என்பது முத்துப் போன்ற பல் என உவமை ஆகும். இதில், பல் - பொருள்; முத்து - உவமை. ஆனால், இவ்வாறு அன்றிப் பல் முத்து எனினும் உவமையாகும் என்றார் ஆசிரியர். அதனை, பொருளே உவமம் செய்தனர் மொழியினும் மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும் என்பது (1230). இதனை உருவகம் என்பது பிற்கால வழக்கு. பொருளினும் உவமை பெரியதாகவும் சிறியதாகவும் இருத்தலும் உண்டு. அலைக் கூந்தல் - அலைபோலும் கூந்தல் (பெரியது); ஊசிக் கோபுரம் - ஊசிபோலும் கோபுரம் (சிறியது) (1231). உவமை என்பதை உணர்த்தும் சொற்கள் இவையென அடுக்கிக் கூறுகிறார் ஆசிரியர். அப் பட்டியைப் பார்த்த அளவிலேயே வாழ்வுக்கும் உவமைக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய என்பன ஆசிரியர் கூறுவன. முப்பத்தாறு உருபுகளைக் குறித்து விட்டு அன்னவை பிறவும் எனச் சேர்த்துக் கொள்ளக் கூறுகிறார். அப்படிச் சேர்ந்தவை பல (1232). அவன் கணக்காக இவன் உள்ளான் அவள் கணக்காக இவள் பேசுகிறாள் இவண் கணக்காக என்னும் பொருள்தரும் உவமை உருபு. இயல்பாக இறந்து கிடப்பவனுக்கும் உறங்கிக் கிடப்பவனுக்கும் வெளித் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. ஆதலால் செத்து என்பது உவமை உருபாயிற்று. புலி செத்து என்றால் புலிபோல என்பதே பொருள். செத்து > செத்திரம் > சித்திரம் ஆயது ஒவ்வியம் > ஓவியம் ஆயது; ஒவ்வ உவம உருபு. செத்து என்பது - பழந்தமிழ்ச்சொல்; ஆயினும் உவம உருபுப் பட்டியில் இடம் பெற்றிலது. சாயல், பார்வை என்பவையும் வழக்கில் காணும் உவமை உருபுகளே. இன்னவாறு மக்கள் வழக்கில் மறைந்து கிடப்பன பலவும் இன்னும் இடம் பெற்றில. புது நூல் ஒரு மொழியின் வளர்ச்சி, காலந்தோறும் வழங்கும் சொற்களை யெல்லாம் தொகுத்து அடைவு செய்தலும் பயன்படுத்தலும் இலக்கண விரிவாக்கம் செய்தலும் ஆகும் என்பதைக் குறித்துக் காட்டுகின்றன. இன்னவை, மூவாயிர ஆண்டுக்கு முற்படு தொல்காப்பியத்தில் பின்னை மூவாயிர ஆண்டு மொழிவளர்ச்சி சேர வேண்டின், காலந்தோறும் அப்பணி நிகழவேண்டும் என்பதாம். இவ் வுவமை உருபுகளையும் இன்ன இன்ன பொருளில் வரும் என வகுத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியர்க்கு உண்டு. அம் மரபு படிப்படியே அருகிப் போயிற்று. இரண்டாக வரும் பொருளுக்கு, உவமையும் இரண்டாக வரும். இரட்டைக் கிளவி இரட்டை வழித்தே (1243) என்கிறார். இணை மாலை போலும் மணமக்கள் திருக்குறள் ஈரடி என்னிருமக்கள் பொன்காண் கட்டளை போன்ற சுண்ணம் பூசிய மார்பு உள்ளுறை முன்னே அகத்திணையில் சொல்லப்பட்ட உள்ளுறை பற்றியும் அதனோடு சிறப்புடைய இறைச்சி பற்றியும் இவ் வுவமைப் பகுதியில் ஆசிரியர் சில கூறுகிறார். (உள்ளுறை: அகத்திணை இயல் 46-48; இறைச்சி: பொருளியல் 35-37; உள்ளுறை வகை ஐந்து பொருளியல்: 48) உவமை இயலில் உள்ளுறை உவமைப் போலி எனவும், இறைச்சி உடனுறை எனவும் கூறும் வழக்குண்மையைக் குறிப்பிடுகிறார் (உவமை. 24, பொருளியல் 48). இப் பெயர்கள் இவற்றின் பொருள் புரிதற்கு உதவுகின்றன. உள்ளுறை, இறைச்சி என்பவை இன்றும் வழங்குமொழி களாக உள. ஆனால், தொல்காப்பியர் வழங்கிய பொருளில் வழங்கப்படவில்லை. ஒருநூலின் உள்ளே வருவன இவை என முற்படக் குறிப்பதை உள்ளுறை என்றும் உள்ளடக்கம் என்றும் கூறுதல் நாம் அறிந்தது. புலாலை இறைச்சி என்பதும் மக்கள் வழக்கே. உள்ளுறை இறைச்சிகள் சொல் அளவில் நின்று பொருள் நிலையில் இழப்புற்றது போலவே இவற்றை இந் நாளில் பாவலர்தம் பாடு பொருளில் கொள்ளும் திறம் இல்லாராகி விட்டனர். ஏனெனில் இவற்றைத் தெளிவாகப் பொருள் புரிந்து ஓதி, ஓதியதைப் பயன்படுத்தித் தமிழ் வளமாக்கும் நிலை அற்றுப் போகியது. உள்ளுறையும் இறைச்சியும் பழந்தமிழர் ஆழங்கால் பட்ட ஆய்வு வழியே கண்டெடுத்த வயிரக் கட்டியும் பவழப் பாறையு மாம். உள்ளுறை என்பது என்ன? 1. உள்ளுறை உவமை சார்ந்தது. 2. உவமை போலப் பொருள் உவமை உருபு என்ற அமைவு இல்லாதது. 3. உவமைப் போலி எனவும் வழங்கப்படுவது. 4. வினை பயன் உறுப்பு உருவு பிறப்பு என்னும் ஐவகையில் வரும். 5. தெய்வம் தவிர்ந்த கருப்பொருள்களை இடமாகக் கொண்டு வரும். 6. இதன் இலக்கணம்: உள்ளுறுத் திதனோடு ஒத்துப் பொருள்முடிகஎன உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம் என்பது (எடுத்துக் கொண்ட பொருளை உள்ளே செறிய வைத்து அமைக்கப்படும் உவமை என்பது இதன் சுருக்க இலக்கணம்). அகப் பொருளில் பயிலும் இவ்வுள்ளுறை தலைவி, தோழி, தலைவன், செவிலி ஆயோர் கூறுதற்கு உரியர். தலைவி, அவள் அறிந்த இடம், பொருள் கொண்டு சொல்வாள். தோழி, அவள் வாழும் நிலப்பரப்பளவும் கொண்டு சொல்வாள். தலைவன், அவன் அறிந்த விரிவாலும் அறிவாலும் சொல்வான். மற்றவர்க்கு இன்ன இடமென்னும் வரையறை இல்லை. உள்ளுறை இன்பந்தழுவியதாகவும் துன்பந்தழுவிய தாகவும் உவமை வழியில் வெளிப்படும். உள்ளுறை - கருப்பொருள் என்னும் இயற்கைச் சூழலில் இருந்து முகிழ்ப்பது. வெளிப் பார்வைக்குச் செடி கொடி மரம் பறவை விலங்குகளின் இயல் செயல்களைப் புனைவதுபோல் தோன்றும். இவற்றைக் கூறுவது தாம் கூறப்புகுந்த அகப் பொருளுக்கு நயமும் நலனும் சேர்ப்பதற்கே என்பதை உட் கொண்டே துய்க்க வேண்டும். பொருளும் காணவேண்டும். இல்லாக்கால் இயற்கைப் புனைவு என்று மட்டுமே கொள்ளலாகி விடும். அது பாடுபுலவன் கருதிய பொருளுணர்ந்து ஓதுவதாக அமையாமல் வாளா அமைந்துவிடும். உள் ஒன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்று கூறுவர். கூறினும் அத் தொடர்பான உட்கருத்து மெய்யுள் உயிர் போல விளங்கிக் கிடக்கும் என்பார் வ. சுப. மாணிக்கனார். உடம்போ டுயிரிடை என்னமற் றன்ன மடந்தையோ டெம்மிடை நட்பு என்னும் உடலுயிர்க் காதல் (குறள். 1122) உள்ளுறையாக, உள்ளுறை இலக்கணம் அமைந்தது என்க. பொதுமக்கள் வழக்குப் போல நேரிடையாக இடித்துக் கூறாமல், அறவோர் உரைபோல் வலியுறுத்து நேராகக் கூறாமல், கனிவொடு கூறிக் காதலும் கற்பும் வாழ்வும் வளமும் சிறக்கக் கூறுவது உள்ளுறை அடிப்படையாம். ஒரு சான்று: யாரினும் இனியன்; பேரன் பினனே; உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்; சூன்முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர் தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின் நாறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே இது, குறுந்தொகை 85. தலைவனுக்குப் பரிந்து கூறவந்த பாணனை நோக்கித் தோழி கூறியது இது. இனியவருள் எல்லாம் இனியன்; அன்பருள் சிறந்த அன்பன்; பாணனே நீ பரிந்து பேசும் தலைவன் தான் எத்தகையன்? ஊரனாகிய அவன் ஊர்க்குருவியைக் கண்டவன் தானே! பெட்டைக் குருவி கருக்கொண்டு முட்டையிடப் போகிறது என்பதை முன்னுணர்ந்து இனிய கரும்பின் வெண்பூவைக் கொய்து வந்து முட்டை இட்டு வைத்தற்குரிய ஈன்இல் ஆகிய கூட்டைக் கட்டி முடித்தது என்பது இப்பாடல் திரட்டுப் பொருள். முட்டையிடும் பெட்டை என்று, ஆண்குருவி கூடு கட்டும் ஊரன், கருக்கொண்ட மனைவியை விட்டு விட்டு அயலே போய் விட்டானே ஊர்க் குருவியைக் கண்டேனும் ஊரன் புரிந்து கொள்ளக் கூடாதா? என்பது இதன் உள்ளுறை. குருவிக் குடும்பத்தைத் தோழி எடுத்துக் கூறியது இயற்கைப் புனைவு மட்டுமே கருதியதா! உட்பொருள் வைத்த உரை கருதியதே அல்லவோ! இறைச்சி இறைச்சி பற்றிக் காணலாம்: இறைச்சி தானே பொருட்புறத் ததுவே இறைச்சியில் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே என்பவை இறைச்சி இலக்கணம் (1175, 1176). பொருளியலில் உள்ள இந்நூற்பா விளக்கம், உள்ளுறையின் தொடர்பு கருதி இவண் கூறப்படுகிறது. இறை கூர்தல், இறைகொண்ட, இறைகொள்ளும் என்பன சங்க நூல்களில் பெருக வழங்குவன. இறை என்பது தங்குதல். இறை என்னும் அரசுவழிப் பெயரும், கடவுள் வழிப் பெயரும் தங்குதல் பொருளவே. ஒன்றில் ஒன்று ஒன்றியிருத்தல் இறைச்சியாம். இதனை உடனுறை என்றது அறிந்தோம். மலருள் மணம் போலவும் தேனுள் சுவைபோலவும் ஒன்றி உடனாகி இருப்பது இறைச்சி. கொழுமை தங்கியிருப்பது என்னும் பொருளிலேயே ஊனாகிய இறைச்சியும் பெயர் பெற்றதாகலாம். உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் வேறுபாடு என்ன எனின், உள்ளுறை - உவமையைக் கூறிப் பொருந்திய பிறிதொரு பொருளைப் பெற வைப்பது. அவ்வாறன்றிச் சொல்லிய பொருளிலேயே அதன் குறிப்பாகப் பிறிதொரு பொருளைக் கொள்ள வைப்பது - இறைச்சி. குறிப்புப் பொருளே இறைச்சியாகும்; உள்ளுறை உவமைபோல ஒன்றற்கு ஒன்று என்று ஒப்புமைப் படுத்திப் பார்ப்ப தெல்லாம் இங்குக் கூடாது; இயலாது என்பார் பெருமுனைவர் தமிழண்ணல். இறைச்சி தானே உரிப்புறத் ததுவே என்பது இளம்பூரணர் பாடம். இறைச்சிப் பொருள் என்பது உரிப்பொருளின் புறத்த தாகித் தோன்றும் பொருள் என்பது அவர் உரை. ஓரறிவு உயிர்முதல் ஐயறிவு உயிரி ஈறாகிய கருப்பொருள் இயக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு மாந்தர்தம் காதல் கற்பு ஆகிய பாலுணர்வு வாழ்வைக் குறிப்பால் உணர்த்துவது இறைச்சி எனத் தெளியலாம். அம்ம வாழி தோழி, யாவதும் வல்லா கொல்லோ தாமே; அவண கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு யாஅம் துணைபுணர்ந்து உறைதும் யாங்குபிரிந் துறைதி என்னா தவ்வே என்னும் இது, ஐங்குறுநூறு (333). பறவைகளை நொந்து சொல்லியது என்னும் குறிப்புடைய இப்பாட்டு, பறவைக் கூட்டமாம் யாம், துணை துணையாக வாழுகிறோம். இது கண்டும் நீதுணை பிரிந்து எவ்வாறு வாழ்கிறாய் என்று கேட்கமாட் டாவோ? என்று தலைவி கூறிய இறைச்சி. இத்தகைய உள்ளுறை இறைச்சி ஆகியவை அகப் பொருளின் அகப் பொருளாக அமைதல் தமிழர்தம் நாகரிகக் கொள்கலங்கள் எனத் தக்கவை. கதையர் இந் நாள் கதைப்புனைவர் கருத்தில் கருக்கொள்ளுமா இவ் வக நாகரிகம்! குப்பை வாரிக் கொட்டும் எழுத்தாளர் தம் குடும்பத்து உறுப்பினரும் படிப்பரே என்று துளியளவேனும் எண்ணியேனும் எழுதக் கூடாதா? இன்னும் இப்படி எழுதினால், உன் மனைவியையும் மகளையும் உன் எழுத்துப்படி செய்வோம் என்று கண்டித்து எழுதினர். அவன் எழுதினான் அவருள் எவர் என்னவர் என்பதை என்னாலேயே கண்டு கொள்ள முடியாதபோது நீதானா கண்டு கொள்வாய் என்று மறுமொழி எழுதும் அயல் நாட்டு நிலை இந் நாட்டுக்கு எய்துதலைத் தவிர்க்க வேனும் எழுதுக என்பதே எம் உள்ளுறை, இறைச்சிகளாம். வேறுவகை உவமை பாரியே ஒருநீதானா கொடையன்; மாரியும் உண்டே என்பது மறுப்பது போன்ற உவமை அல்லவா. விரைந்து செல்லும் கதிரே, வரம்பிட்டுச் செல்கிறாய்; மறைகிறாய்; வருகிறாய்; விண்ணிலேயும் பகலில் மட்டும் விளங்குகிறாய்; நீ எப்படிச் சேரலாதனுக்கு ஒப்பாவாய் என்பதும் உவமையே (புறம். 8). அது ஓரீஇ (விலக்கி)க் கூறல் உவமை (1254). கொடியோ இடையோ என ஐயுற்றுத் தடுமாறுவதாகக் கூறுவது தடுமாறு உவமம் (1256). தடுமாறல் என்பது இன்றும் வழக்குச் சொல் இல்லையா! தட்டுத் தடுமாறி என்னும் இணைச் சொல்லும் வழக்கில் உண்டே. அற்றைக் கலைச்சொல், இற்றைவழக்குச் சொல்லாவது இது. மதியத் தன்ன வாள்முகம் போலும் தாமரைப் புதுப்பூ என இரண்டு முதலிய உவமைகளை அடுக்குதல் ஆகாது. ஆதலால் அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே என்றார். இனி, கலகவான் விழி வேலோ சேலோ மதுரவாய் மொழி தேனோ பாலோ (திருப்புகழ்) என்பது அடுக்கியது ஆகாது. ஐய உவமை யாகிவிடும். உவமை வழிப்பட்டவையே அணிகள் அனைத்தும் என்னும் துணிவால் மயங்கா மரபின் நூல் யாத்த தொல் காப்பியர், உவமை இயல் என்றே வகுத்தார். பின்னூல்கள் பிறபிற விரித்துப் பெருக்கி, பொருள் விளக்குதல் என்னும் வகையால் பொருள் தகுதி இழந்து போயின; போகின்றன. அகம் புறம் ஆகிய பொருள்களுக்கு இடமாகியதும், மெய்ப்பாடு உவமை என்பவற்றின் உறைவிட மாகியதும், செய்யுள். ஆதலால், அதனைச் செய்யுளியல் என்று வகுத்தார் ஆசிரியர். செய்யுள் உறுப்பு செய்யுள் உறுப்புகள் என முப்பத்து நான்கினை எண்ணி, அவற்றை முறையே, விரிக்கிறார். செய்யுள், பா, தூக்கு, பனுவல், தொடை, யாப்பு என்பன வெல்லாம் ஒருபொருள் குறித்த, பொருள் பொதிந்த சொற்கள். பொதுமக்கள் வழக்கில் பண்டு தொட்டு இன்று வரை வழங்கிவரப் பெறுவன. செய்யுள் செய் - விளைநிலம்: செய்தற்கு இடமாகியது; செம்மை செய்யப்பட்டது; புன் செய்; நன்செய்; செயல், செய்கை என்பனவற்றின் மூலமாய சொல். பா - பரவுதல், விரிதல் பொருளது. பார், பாரி, பாய், பாய்தல், பாய்ச்சுதல் இன்னவற்றின் அடிச்சொல். தூக்கு - தூக்கிப் பார்க்கும் எடை, எடைக்கல், ஆராய்தல், உயர்த்துதல், எடுத்தல் இன்னவற்றின் ஏவல். பனுவல் - பன் - பருத்தி; பன்னல் - பருத்தி, கூறுதல்; பனுவல் - பாடல்; நூல். பஞ்சிதன் சொல்லா பனுவல் இழையாக -நன். தொடை - தொடுக்கப்படுவது, இணைப்பது, இசைப்பது; மாலை - தொடையல்; எதுகை மோனை முதலியன தொடுத்தல்; தொடுப்பு, தொடர்பு - நட்பு; தொடுக்கும் - தொடர்பு. ஒன்றோடு ஒன்று ஒன்றுவது தொடை. யாப்பு - யா - கட்டு; யாமரம் கட்டுதற்குரிய பட்டையும் வளாரும் உடையது; யாக்கை - உடல்; யாத்தல் - கட்டுதல்; ஆக்கை - கட்டும் நார், வளார்; யாப்பு - பாத்தி, பாத்தி கட்டுதல்; கட்டுதல் அமைந்த பாட்டு. செய்யுள் குறித்த சொற்கள் அனைத்தும் மக்கள் வழக்கில் உள்ளதால், அவற்றுக்குள்ள இடம் புலப்படும். நாட்டுப் பாட்டு பழமொழி பன்னீராயிரம் கொண்ட தொகுதி உண்டு. பழமொழி பதின்மூவாயிரம் தொகுத்தார் பாவாணர். பழமொழிகள் பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. முது மொழி என்பதும் அது. செய்யுள் வகையுள் அது ஒன்று. ஆடிப் பட்டம் தேடி விதை சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம் இவற்றைப் பாருங்கள். ஆடி, தேடி; எதுகைத் தொடை இது. முதல் எழுத்து மாத்திரை ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து அவ் வெழுத்தாகவோ அதன் இன எழுத்தாகவோ வருவது எதுகை! தைப்பனி தரையைப் பிளக்கும் மாசிப்பனி மச்சைப் பிளக்கும் இவற்றில், தை, த என்றும், மா, ம என்றும் முதல் எழுத்து ஒத்திருத்தலால் யாப்பியற்படி இவை மோனை எனப்படும். முதலெழுத்து ஒத்தல் மோனை முதல் எழுத்து அளவால் ஒத்து, இரண்டாம் எழுத்து ஒத்தல் எதுகை எதுகை மோனையை வெறுக்கும் ஒருவர் கூறினாராம்! மோனை பார்ப்பவர் முழுமூடர்; எதுகை பார்ப்பவர் ஏதுமறியார் இவ் விரண்டிலும் மோனை ஒட்டிக் கொண்டனவே! மோனை எதுகை வெறுப்பரும், விலக்க முடியாதவை அவை என்பது, இதன் குறிப்பாம். ஏனெனில், இம் மண்ணில் வளம் இம் மண்ணின் மைந்தரை விடாமல் ஒட்டும் என்பதே. இனித் தாலாட்டு என்ன? ஒப்பாரி என்ன? விடுகதை என்ன? மாமி அடித்தாளோ மல்லிகைப்பூச் செண்டாலே! பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே! - துள்ளி வருகின்றனவே மோனை! இது தாலாட்டு! கத்தரிக் காய் எங்களுக்குக் கயிலாசம் உங்களுக்கு பூசணிக்காய் எங்களுக்கு பூலோகம் உங்களுக்கு. - இவ் வொப்பாரியில் மோனை மட்டுமா; இறுதி இயைபும் அமைந்துளதே. தமிழனென்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா! - இறுதியில் இவ்வாறு பொருந்திய இசைவருவது இயைபு. பின்னே வரும் பெட்டியும் குட்டியும் இயைபே! நாலு மூலைப் பெட்டி நந்த வனத்துப் பெட்டி ஓடும் குதிரைக் குட்டி வீசும் புளிய ஆக்கை இது விடுகதை; கிணறு - கமலை - ஏற்றம் இறைக்கும் மாடு, சாட்டைக் கோல் பற்றியது. ஓ, வீ என்பன நெட்டெழுத்து ஒன்றுதல் மோனை (நெடிலொன்று மோனை). கணவன் பொய் சொல்கிறான்; மனைவி சொல்கிறாள்: வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம் கத்தாழ முள்ளு கொத்தோட குத்திச்சாம் இதில், எதுகை மோனை மட்டுமா? மேற்கதுவாய் எதுகை வந்துளது; இரண்டாம் அடியில் இரண்டாம் சீர் ஒன்றுதானே எதுகை பெறவில்லை. இப்படி வருவது, மேற்கதுவாய், கதுவாய் இப்பொழுது எப்படி வழங்குகின்றது. கொறுவாய், உடைந்து போனது என்னும் பொருளில் வழங்குகின்றது. கதுவாய் - இல்லாமல் போனது என்னும் பொருள் தருவது. இன்னும் பாருங்களேன்: பள்ளம் மேடு பார்த்துப்போ, அவனுக்கு நல்லது கெட்டது புரியாது, எப்படியும் உள்ளதும் இல்லதும் வெளியாகிவிடும், பெரியவர் சிறியவர் அறியாமல் பேசாதே இவையெல்லாம் முரண்கள்; எதிரிடையாயவை. இவ் விலக்கணம் முரண் தொடை. ஆ ஓ என்று சொல்வது இல்லையா? நீட்டிச் சொன்னால் ஆஅ, ஓஒ என வரும். பாலோஒஒ பால் தயிரோஒஒ தயிர் இப்படி நீட்டிச் சொல்வது, நாள்தோறும் நாம் கேட்பவை தானே. ஒலி அளவில் மிகுவதால் அளபெடை என்பது பெயர். இசை பாடும் போது, நீட்டி நீட்டிப் பாடுவதைக் கேட்கிறோமே! அவையெல்லாம் அளபெடை. இயலுக்கு ஒருமாத்திரை அளவுதான் கூட்டல் உண்டு. சில இடங்களில் இரண்டு மாத்திரை கூட்டலும் உண்டு. ஆனால், இசைக்கு அளவு அவரவர் தொண்டை தான் போலும்! காயாத கானகத்தே-எவ்வளவு நீட்டி இசைக்கக் கேட்டது! எல்லாம் பாட்டு! எங்கும் பாட்டு! எவரும் பாட்டு! என்ற தமிழ்மண், பாட்டுப் பாடி இசைக்கும்பாணன்துணைவிக்குப்பாட்டிஎன்றுபெயரிட்டது. பாட்டன், பாட்டி என முறைப் பெயரும் கண்டது. பாட்டாங்கால் எனப் பாடுபட்டுப் பண்படுத்திய தோட்டப் பெயர் கொண்டது. பாட்டியர் திட்டுதல் ஆகாது! ஏனெனில், பழங்காலத்தில் பன்றி, நாய், நரி என்பவற்றுக்கும் பாட்டி என்பது பெயராக இருந்துள்ளது (1165). உள்ளதைச் சொல்லப் பொல்லாப்பு வேண்டாவே -பாருங்களேன் இப் பழமொழியில் எதுகை கொஞ்சுதல்! இன்னொரு செய்தி; உரையாசிரியர் காலத்துக்கு முன்னரே பாட்டி பற்றிய இவ் வழக்கு அழிந்து விட்டது. அதனால், எடுத்துக்காட்டுத்தர அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. பாட்டு அளவு பாட்டு என்றால் பெரிதாக - நீளமாக - இருக்க வேண்டுமா? அரும்பாடு பட்டு அமைக்க வேண்டுமா? இல்லை! இல்லை! என்கிறார் தொல்காப்பியர். ஓர் அடி சிறப்பாக அமைந்தால் போதும்; அது பாட்டு! சரி, அடி என்றால் 16-சீர், 32-சீர், 64-சீர் என நீண்டிருக்க வேண்டுமா? வேண்டாவே! இருசீர் அடி குறளடி; குறளடி ஒன்று அருமையாக அமைந்து விட்டால் அது பாட்டுதான். குறளடி என்றால் இரண்டடியுடைய குறட்பாவை அன்று; இரண்டு சீர்களையுடையது. அதனை உலகறியக் காட்டிய பாட்டி ஔவையார்: அறஞ்செய விரும்பு ஆறுவது சினம் என்றார். அரிய பாட்டுகள்தாமே இவை. செய்யுள் இனிச் செய்யுள் பற்றித் தொல்காப்பியர் சொல்வதை அறியலாம். செய்யுள் முதல் உறுப்பு மாத்திரை; அடுத்தது எழுத்து. மாத்தல் என்பது - அளத்தல். மாத்தம் - அளவு. பா என்றால், அளவுக்கு முதலிடம் தருதல் வேண்டும். அவ், அளவும் எழுத்திலேயே தொடக்கமாகிவிட வேண்டும். மற்றை மற்றை உறுப்புகளிலும் அளவு பேணப்பட வேண்டும் என்னும் முற்குறிப்பினது மாத்திரை என்பதாம். அளவுடன் அமைந்தனவே எழுத்தொலிகள். நா எழுந்து ஒலி செய்ய வேண்டும் எனின், அசையாமல் இயலாது. நா, இதழ், வாய் இன்னவை அசையும். அசையின், இசையாம். அவ் வசைகள் சில சீராக அமைவது சீர்; அச் சீர்களைக் கொண்டு அல்லது சீர்களால் அமைவது அடி; அடி தனித்து நிற்பினும் பிற அடிகளொடு கட்டுற்று நிற்பினும் யாப்பு ஆகும். இதுவரை சொல்லப்பட்ட மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு என்னும் ஆறும் செய்யுள் மாளிகையின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களாவன. பா - பாவு ஆடை நெய்யும் தறியைப் பாருங்கள்; அங்கே அசை, சீர், அடி, பா என்பவையும் தளை, தொடை என்பவையும் உண்டு. அவர்கள் நெய்வதும், இவர்கள் செய்வதும் ஒப்பது! நூற்றல் என்பது நூல் இழைத்தலையும் நூல் இயற்றலையும் குறிக்கும் சொல்லாயிற்று. இவை, தமிழர் வாழ்வியல் தொழிலொடு கலையுணர்வும் ஒன்றிச் செல்லுதல் காட்டும். கலை என்பது ஆடைக்கும், பாடல் முதலிய கலைகளுக்கும் பொதுப் பெயராதல் அறிக. அடி ஒன்றன் அடியாக இருப்பது அடி. தேக்கடி, தேரடி, மரத்தடி மட்டுமா? இரயிலடி எனத் தொடர்வண்டி நிலையம், பெயர் கொண்டதே. அடி ஒன்று கொண்டது, இயற்கை அல்லது நிலைத்திணை. ஆயிரம் அடி ஆல மரமும் ஓரடியின் வளர்ச்சியே. அடி ஒன்றுடையது இயக்கமின்றி நின்றது. இயக்கமாக இரண்டு அடி வேண்டியதாயிற்று. ஆம்! ஊன்று நிலை, இயக்க நிலையாக - இரண்டு அடிகள் தேவைப்பட்டன. பறவைகள் ஈரடி பெற்றன. விலங்குகள் குறுக்கில் இயங்குவன. அதற்கு வாய்ப்பாக நான்கு அடிகள் கொண்டன. பூனை என்ன யானை என்ன; எலி என்ன புலி என்ன; நான்கு அடிகள் கொண்டன. மாந்தனும் ஒரு காலம் நான்கு அடிகள் கொண்டிருந்தே நிமிர்ந்தான். முன்னிரண்டு அடிகளும் கைகள் ஆயின. இக் காலம் வரை அந் நிலையைக் காட்டும் சான்றாகக் குழந்தை தவழ்ந்து பின் நிமிர்கிறது. முழுதுறு சான்றாக இருப்பது குரங்கு. நடக்கக் காலாக இருப்பவை, பற்றிப் பிடிக்கக் கையாகவும் இருத்தலைக் கண்டு எண்ணலாம்! வாற் குரங்கு, வாலில்லாக் குரங்கு என்னும் வகையையும் நோக்கலாம். அடி இரண்டு - முழந்தாள் இரண்டு - தொடை இரண்டு; தொடை இரண்டும் தொடுத்தது இடை அல்லது இடுப்பு, இடுப்பின் மேலே, தொடை தொடையாக இணை இணையாக - அமைந்த முள்ளந்தண்டு முதுகெலும்பு எத்தகைய அரிய இயற்கைக் கொடை! ஈரடி ஈரடிப் பெருமை என்ன? தனித்தனியே நின்றால் - தொடுக்கப்படாமல் நின்றால், ஊன்று நிலை மட்டுமே இருக்கும்; இயக்கநிலை எய்தாது. இயக்கத்திற்குத் தொடை வேண்டும். ஆதலால், தொடை - தொடையல் என்பவை தொடுத்தல், தொடர்ச்சி, தொடர்பு, தொடரி எனத் தொடர்ந்தன. இயங்கா மலையும் இடையீடு இன்றி இருந்தால், மலைத் தொடர் எனப்பட்டது. ஈரடி எவ்வளவு நடக்கும்? கடக்கும். மண்ணையும் கடக்கும்; விண்ணையும் கடக்கும். இக் கற்பனையே, ஈரடியால் உலகளந்த கதை. வள்ளுவர் காலத்திலேயே இக் கதை கிளர்ந்தமையால் அவர், மெய்ம்மை காட்ட வேண்டி, மடியில்லாத முயற்சியாளி எவனாக இருந்தாலும் அவன் மண்ணையும் விண்ணையும் எட்டலாம் என்றார். பாரடி யெல்லாம் சுற்றிவரப் படர்ந்த அடிகள் எத்தனை? -குழந்தாய்! படர்ந்த அடிகள் எத்தனை? ஈரடி தானே குழந்தாய் - திருக்குறள், ஈரடி தானே குழந்தாய்! என ஈரடியால் உலகளந்த - அளக்கும் - விளக்கம் அறியலாம். இவை யெல்லாம் அடியும் தொடையும் பாவியக்கமாகும் வாழ்வியல் அடிக் களங்களாம். சும்மா v‹d ntiy brŒ»whŒ?-R«kh இருக்கிறேன். vj‰F¥ ngh»whŒ?-R«kh போகிறேன்! v‹d ngR»Ö®?-R«kh பேசுகிறோம்! உயர் பொருட் சும்மா, உற்ற தாழ்நிலை இது. சும்மா என்றால், நோக்கமற்ற - குறிக்கோளற்ற - ஒரு நிலையை வெளிப்படுத்தலாக இந்நாள் விளங்குகின்றது. ஆனால், செய்யுள் ஒன்று கிளம்ப வேண்டும் என்றால், சும்மா கிளம்பக் கூடாது. நோக்கு நோக்கு ஒன்று கொண்டே செய்யுள் கிளம்ப வேண்டும். குறிக்கோள் இலாது கெட்டேன் என்று வாழ்வு அமைதல் ஆகாது; அவ்வாறு, குறிக்கோள் இலாது கெட்டது என வாக்கும் அமைதல் ஆகாது. நோக்கு ஓரிடத்து மட்டும் இல்லை எல்லா உறுப்புகளும் பொருந்த நோக்குவதாக அமைவது நோக்கு. நோக்கு மட்டும் செவ்விதாக அமைந்தால் போதுமா? நோக்கை அடையும் வழியும் செவ்விதாக அமைதல் வேண்டும். பெற்றவள் பசியைத் தீர்த்தல் பிள்ளையின் கடமை என்றாலும், அப் பசியை எப்படியும் தீர்க்கலாம் எனின், அப் பெற்றவளே ஒப்பாள் என்பது, தமிழ் மண்ணின் கொள்கை. ஆதலால், நோக்குடன், நோக்கை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும் என்பதை ஆசிரியர் தொல்காப்பியர் மரபு என்றார். மரபு ஓரிடத்தை அடைதல் நோக்குடன் புறப்பட்டார், போகும் வழி, போகும் முறை என்பவற்றைக் கட்டாயம் கருதவேண்டும் என்பதால், வழி நடைக்குச் சாலை விதிகள் சட்டமாக்கப் பட்டமை உலகளாவிய முறை. பாட்டைக்குக் கண்டதைப் பாட்டுக்கும் கண்டது நம் பண்டையர் முறை. அதுவே, மாற்றருஞ் சிறப்பின் மரபு என்பது. அதனைத் தெள்ளிதில் உணரச் செய்வதே தொல்காப்பிய மரபியல். மரபு பேணி அமைத்தல், நோக்குடையதாதல் என்ற அளவில் பா அமையின் பாடுவோன் அறிவு நிலை சார்ந்தோ உணர்வு நிலை சார்ந்தோ மட்டும் அமைந்து விடும்! தூக்கு பாடுவோன், தானே துய்க்கவோ பாடல் இயற்றினான்? இல்லையே! அவன், படிப்பானைக் கருத்தில் கொள்ளாமல் பாடினால், அப் பாட்டு அவனைத் தொடாமலே போகிவிடுமே! ஆதலால், படிப்பான் எண்ணத்தைத் தான் நுண்ணிதின் உணர்ந்தவனாய் அல்லது பயில்வான் எவ்வெவ் வகையால் எல்லாம் ஆய்வான் - தடைவிடை கிளத்துவான் - என்பவற்றை யெல்லாம் எண்ணி அப் படிப்பாளியாகத் தான் இருந்து கொண்டு பாவைப் படைக்க வேண்டும். அதற்குத் தான் தூக்கு என்பது பெயர். தூக்குக்கு ஒத்துவராதது தூக்கு என்னும் பெயர் கொள்ளத் தகுவது ஆகாதே (தூக்கு = பாட்டு). தொடை சொல்லும் பொருள் தெளிவு திட்பம் மரபு இன்னவற்றை உடையது எனினும், சுவையுடையதாகச் சொல்லப்பட்டால் தான், கேட்பார் விரும்ப அமையும். ஆதலால், பாவலன் கேட்பான் செவியைத் தன் செவியாகக் கொள்ளலும் கடப்பாடாம். கேட்கும் சுவை செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் எனப் பாராட்டப்படும். அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை எனவும் போற்றப்படும். தன் வயப்படுத்திக் கொள்ளாமல் ஒருவனுக்குச் சொல்லப்படும் செய்தி உட்புக வாய்ப்பே இல்லாமல், வாளா போகிவிடும். இன்னது கொண்டே பாவின் நயத்திற்குத் தொடை என்னும் ஒன்றையும் கண்டனர். அத் தொடைகளே மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, செந்தொடை என்பனவாம். அளவு எத்தகு சுவையது எனினும் - பொருள் பொதிவு உடையது எனினும் - அளவோடு அமைதலும் வேண்டும் என்பதும் தொல்காப்பியர் தெளிவு. ஆதலால், அளவியல் என்றோர் உறுப்பையும் கொண்டார். இவற்றை முறையே தொல்காப்பியர் மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல் என வரிசைப்படுத்துகிறார். கட்டடக் கட்டுமானப் பொருள்களாக நாம் முன்னர்க் கண்ட ஆறு உறுப்புகளையும் கொண்டு, கட்டப்பட்ட கட்டுமான உறுப்புகள் இந்த ஆறும் எனலாம். யாப்பு மாளிகைக்குக் கட்டுமானப் பொருள், கட்டுமானப் பணி என்பவை மட்டுந்தாமா உண்டு? தளமென்ன, பூச்சு என்ன, வண்ணமென்ன, வனப்பு என்ன, ஏந்து என்ன, இயைவு என்ன - எல்லாமும் கருதப்பட வேண்டுமே! எல்லாமும் கூடும் போதுதானே ஏராரு மாளிகையாய் ஏற்றம் பெறும்! இவற்றைக் கருத்தில் கொண்டே, பிற உறுப்புகளை வகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் ஆசிரியர். திணை எனப்பட்ட அகப் பொருள் (அகத்திணை) புறப் பொருள் (புறத்திணை) என்னும் இரண்டும், பாடுபொருளாக இருக்க வேண்டும். களவு கற்பு என்னும் கைகோள் (ஒழுக்க நெறி) இடம் பெற வேண்டும். அவற்றைக் கூற்று வகையால் கூற வேண்டும். கூறினால் அதனைக் கேட்போர், கேட்கப்படும் இடம், கேட்கும் காலம் என்பனவும் பொதுள வேண்டும். கேட்டல் பயன். கேட்டலால் உண்டாகும் மெய்ப்பாடு, இன்னும் சேர்க்கத் தக்கனவாம் பிற (எச்சம்) என்பவும் இணைய வேண்டும். கூறுவார் இவர், கேட்பார் இவர் என்னும் குறிப்பும் (முன்னம்), கேட்பார்க்குப் பயனுண்டாகப் புலவனால் படைக்கப்படும் புதுமைப் பொருள், கூறப்படும் பொருளின் துறை, ஒன்றனோடு ஒன்று பொருந்தி நிற்கும் வகை (மாட்டு), ஓசை இன்பமாம் வண்ணம் என்பனவும் ஒன்ற வேண்டும். இவையெல்லாம் எண்ணின் உறுப்புகள் - இருபத்து ஆறாம், செய்யுள் வனப்பு எனப்படுவன எட்டு. அவை: அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன (அவற்றின் விளக்கம் மேலேவரும்). பாடுவது எளிது இவ்வளவும் பார்த்துப் பாடுவதுதான் பாவா? அப்பாடா! நடக்கும் செயலா? பாடல் இயற்றுவது எளிமை இல்லை என்கிறீர்களா? இல்லை! இல்லவே இல்லை! முடியாது என்னும் எண்ணத் தடை ஒன்றே தடை! பாடல் இயற்றுவது தடையில்லை! யாப்புத் தடையும் இல்லை! யார் தடையும் இல்லை! இதனை முதற்கண் தெளிவித்து விட வேண்டும் என்பதற்காகவே, பழமொழி, தாலாட்டு, விடுகதை முதலிய வற்றில் எல்லாம் யாப்பியல் இயல்பாக அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டப் பட்டது. இதற்காகவே எம்மால் எழுதப்பட்ட நூல் ஒன்று எளிதாகப் பாடலாம் என்னும் யாப்பியல் நூல். மிக எளிது மூச்சுவிடுமுன்னே முன்னூறு பாடுவாராம்! நானூறும் பாடுவாராம்! ஆச்சு என்று தும்மல் அடிக்குமுன்னே, ஆயிரம் பாடிவிடுவாராம்! ஒரு புலவர் கூறியது இது. இன்னொரு புலவர் கூறுகிறார்: ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து எழுதிப் படித்த விரகன் இமசேது பரியந்தம் எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன் என்று தம்மைக் குறிப்பிடுகிறார். இன்னொரு வேந்தன் - பின்னாளை வேந்தன், கன்னல் பாகில் கோல்தேனில் கனியில் கனிந்த கவிபாட என்கிறான். தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம் என்கிறான் ஒரு பெரும்புலவன். சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் மன்னிய இன்குறள்வெண் பா. என்பது வள்ளுவ மாலையுள் ஒன்று. வண்ணம் பாடல் அரிதுதான் - ஆனால்! அருணகிரியார்க்கு? ஒலியல் அந்தாதி பாடலும் அரிதே - ஆனால்! வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளுக்கு? ஏகபாதம் என்னும் ஓரடி பாடல், அருமையே - ஆனால்! சோழ வந்தான் அரசஞ்சண்முகனார்க்கு? பண் சுமந்த பாடல் எவ்வளவு எளிமையாகப் பாடியுளர் தேவார மூவர்! பாரதியாரும் பாவேந்தரும், பாவாலே நிலைத்து விடவில்லையா? செந்தமிழும் நாப்பழக்கம்! பாடிப்பாடித் தழும்பேறினால் அரியதும் எளியதாம்! வளையக் காட்சியைப் (சர்க்கசைப்) பார்த்தால் அருமையெல்லாம், எவ்வளவு எளிமை! ஆர்வம் வருக! அதிலே ஊன்றுக! அதன் வடிவே ஆகுக! ஆக்குவ வெல்லாம் ஆக்கமிக்க பாடலேயாம்! அசையும் இசையும் அசையும் சீரும் அடுக்குவதா பாட்டு? இல்லை! அசையும் சீரும் இசையொடு சேர்த்தி இனிக்கப்பாடுக என்கிறார் (1268) ஆசிரியர். அசைவகை, சீர்வகை, அடிவகை, தளைவகை, பாடலாகும் வகை என்பவற்றை எல்லாம் விரிவாகக் கூறுகிறார். புதுப்பா இந்நாளில் புதுக்கவிதை எனப்படுகிறது; உரைவீச்சு எனப்படுகிறது. ஐக்கூ எனப்படுகிறது. வசனகவிதை எனவும் தோன்றியது. இளங்கோவடிகள் உரைப்பாட்டு மடை இயற்றினார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் சிலப்பதிகாரம் வழங்கலாயிற்று. பாட்டும் உரையுமாக நடந்த பெருந்தேவனார் பாரதமும் கிளர்ந்தது. இவற்றை யெல்லாம் தொல்காப்பியம் கொள்ளுமா? தள்ளுமா? தொல்காப்பிய அளவுகோல், கொள்ளுவது - தமிழ்வழக்கு; தள்ளுவது - அயல்வழக்கு. தொல்காப்பியம் கொள்ளுவது - மொழிக்காவல்; பண்பாட்டுக் காவல். தொல்காப்பியம் தள்ளுவது - மொழிக்கேடு; பண்பாட்டுக் கேடு. தொல்காப்பியம் கொள்ளுவது - மொழித் தூய்மை. தொல்காப்பியம் தள்ளுவது - மொழிக் கலப்பு. ஒரோ ஒருகால் ஒருவேற்றுச் சொல்லை ஏற்பினும், அது தமிழியல்பு கொண்டு அமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக அமைத்தல் ஆகாது. வேற்றுச் சொல்லை மாற்றித் தமிழியல்பில் வழங்கினும் கட்டாயம் வேற்று எழுத்து வடிவத்தை எந்த வகை கொண்டும் புக விடுதல் ஆகாது என்பனவேயாம். இவை மீண்டும் இங்கு வலியுறுத்தித் தொகுத்துக் கூறியது, பழமரபு காக்கும் இலக்கண நூல் - மறைநூல் - தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தவேயாம். எத்தகைய பெருமையர் - அருமையர் - பதவியர் - ஆட்சியர் - எனினும், அவர் தொல்காப்பிய நோக்கைப் பாதுகாத்துப் போற்ற உரிமையரே அன்றி, அழிக்க உரிமைப் பட்டவர் அல்லர் என்பதே, அவரை (தொல்காப்பியரை) அடுத்து வந்த நூலாசிரியர் ஒருவர் கட்டளை அது, தொல்காப்பியன் தன் ஆணை என்பது. அது வருமாறு: கூறிய குன்றினும் முதல்நூல் கூட்டித் தோமின் றுணர்தல் தொல்காப் பியன்தன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே பெருந்தொகை. 1368) தோம் இன்று = குற்றம் இன்றி. தடையா? மொழிவளர்ச்சிக்கு இவ்வாணை தடை இல்லையா? மொழிக் காவல், மொழி வளர்ச்சித் தடையாகாது. வளர்ச்சிக் குரிய ஆக்கங்களை யெல்லாம் இயல்தோறும் அதிகாரம் தோறும் புறநடையாக ஆசிரியர் சொல்லிச் செல்வதையும், நூற்பாக்களில் சுட்டுதலையும் எண்ணிப் பார்ப்போர் இவ்வாறு கூற எண்ணியும் பாரார் என்க. உரைப்பா செய்யுள் ஒன்றே யாப்பு எனப் பின்னூல்கள் கொண்டிருக்கவும், தொல்காப்பிய முந்து நூலோ, எழுவகை யாப்புக்களைக் குறிக்கிறது. பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் என்பவை அவை. அவற்றைக் கூறும் நூற்பாவிலேயே, வண்புகழ் மூவர் தண்பொழில் உரைப்பின் நாற்பெயர் எல்லை யகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனார் புலவர் என்றார் (1336). பாட்டு யாப்பு, உரையாப்பு, நூல்யாப்பு, வாய்மொழி யாப்பு, பிசி யாப்பு, அங்கத யாப்பு, முதுசொல் யாப்பு என இவற்றை விரித்துக் கொண்டால் தெளிவாகும். பிசியாவது - புதிர் (விடுகதை). அங்கதம் - வசையும் இசையும் அமைந்த பா. முதுசொல் - பழமொழி. இவற்றின் விளக்கம் மேலேகாண்போம். சொல்மரபு சொல்லின் மரபு சொல்லும் ஆசிரியர், மரபே தானும், நாற்சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று என்கிறார் (1337). நாற் சொல்லாவது: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனச் சொல்லதிகாரத்துச் சொல்லப்பட்டவற்றை. ஓசைவகை அகவல் என்பது என்ன எனின், மயில் அகவுதல் போல்வது. அந்த யாப்பினை ஆசிரியர் கற்பித்தற்கும் நூல் இயற்றுதற்கும் பெரிதும் பயன்படுத்தியமையால் ஆசிரியப்பா எனவும் பட்டது. நூல் இயற்றப் பயன்படுத்தியமையால் நூற்பா எனப்பட்டது. இரண்டற்கும் வேறுபாடு, அகவற் பாவிற்குரிய அடிவரையறை, முடிநிலை என்பவை நூற்பா விற்குக் கொள்ளுதல் வேண்டுவது இல்லை. ஓர் அடியாலும் வரலாம்; குறைந்தும் வரலாம். மிக்குப் பெருகிவரினும் அகவல் முடிவுபோல் முடியவேண்டும் என்பது இல்லை என்பவை இவற்றின் வேறுபாடாம். ஆசான், நுவல்வது > நூல் ஆயது; அதன்பா, நூற்பா எனப்பட்டது. நூல், மறை என்பன இலக்கணம் குறித்துநின்று பின்னர்ப் பொருள் விரிவும், திரிபும் கொண்டன. மறை என்பதன் பழம்பொருள் பாதுகாப்பு, களவு என்பவையாம். எ-டு: மெய்ம் மறை (கவசம்) ; மறையோர் - களவொழுக்கக் காதலர் (1442). அகவல் ஓசை இருவகையாம். அவை நேர் ஒன்றல், நிரை ஒன்றல் மா முன் நேர், விளமுன் நிரை என்பன. செப்பல் ஆசிரியர் உரைப்பதுபோல் ஒரு போக்காக இல்லாமல், கூற்றும் மாற்றமும் - செப்பும் வினாவும் - போல வரும் யாப்பு வெண்பா யாப்பு. அஃதான் றென்ப வெண்பா யாப்பே (அஃது + அன்று = அஃதான்று) வெண்பா ஓசை செப்பல். காய்முன் நேர்வரல் செப்பல். துள்ளல் கலிப்பாவின் ஓசை துள்ளல். நின்று மேலேறிக் கீழேவீழ்தல் துள்ளல் துள்ளல் ஆட்டம் (துள்ளாட்டம்) ஆட்டங்களுள் ஒன்று. தத்து வாய்மடை, கலிங்கல் என்பவை நீர் துள்ளிவீழும் இடங்களாம். துள்ளி வீழும் நீர் துள்ளி > துளி ஆயது. மீன் துள்ளி, துள்ளம் என்பவை ஊர்ப் பெயர்கள். தனதனனா தனதனனா தனதனனா தனதனனா நீர் துள்ளி வீழ்தல்போல் சீர் இறுதி நெடிலாகவும் அடுத்த சீர்முதல் குறிலாகவும் இருத்தல் காண்க. காய்முன் நிரைவரல் கலித்தளை என்க. எ-டு. அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால் தூங்கல் இனி தனதனதன தனதனதன என்னும் ஓசையுடன் வரின் வஞ்சித் தளை. அது தூங்கல் ஓசை எனப்படும். தூங்கல் என்பது யானை. அதன் கையை இப்பாலும் அப்பாலும் அசைப்பது போலவும், தொங்கும் ஊசல், காதணி, கடிகையாரத் தொங்கல் என்பன இயங்கும் இயக்கம் போலவும் இப்பாலும் அப்பாலும் செல்வது. தூங்கல் ஓசை வஞ்சிப்பாவின் ஓசை. கனிமுன் நிரையும், கனிமுன் நேரும் வருதல். முன்னது - ஒன்றிய வஞ்சி; பின்னது - ஒன்றா வஞ்சி. எ-டு : முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தது என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்து. இவை முழுவதும் ஒன்றிய வஞ்சி. மருட்பா இந்நாற்பாவுடன் மருட்பா என ஒன்று உண்டு. அதனை அம்மையப்பன் போலவும் நரமடங்கல் (நரசிம்மம்) போலவும் என்பார் யாப்பருங்கல விருத்தியார். யானைக் கையும், அரிமா உடலும் கொண்ட யாளி என்னும் உருவம் கோயிற் சிலைகளில் உண்டே அது போல் என்பது. மருளாவது - மயக்கம். இதுவும் அதுவும் கலந்த ஒன்று. வெண்பா முன்னாக அகவல் பின்னாக அமையும் யாப்பு அது (1342). செந்தொடை தொடை பற்றி முன்னரே கண்டோம் தொடை எதுவும் வாராமல் தொடுப்பதும் தொடையே! அது பொருளே போற்றிவரும் செந்தொடை என்பது (1357). செம்மையாவது இயல்பு. இருபா அகவல் வெண்பா கலிப்பா வஞ்சிப்பா எனப் பாவகை நான்கெனக் கூறினும், அகவலுள் வஞ்சியும், வெண்பாவுள் கலியும் அடங்குதலின் ஆசிரியப்பா, வெண்பா என்னும் இரண்டு பாவினுள் அடங்கும் என்பார். (வஞ்சி நெடும் பாட்டு என்னும் பட்டினப்பாலையும், வெண்கலிப்பா, கலிவெண்பா என்னும் யாப்பும் இவண் நோக்கத் தக்கவை) வாழ்த்து ஐங்குறு நூல் வாழ்த்துதலையே முதலடியாகக் கொண்ட முதற் பத்து உடையது. வாழி யாதன் வாழி யவினி என்பதே அம் முதலடி பத்தும். சிலப்பதிகாரக் காப்பியம், ஒருவரைக் காணும் காலும், அவரிடம் விடை பெறும் காலும் வாழ்த்துடன் வந்து வாழ்த்துடன் விடை பெறுதலைக் காட்டும். கடவுள் வாழ்த்தி லேயே, திருவள்ளுவர் நீடு வாழ்தலைச் சுட்டினார் இருமுறை. இன்பத்துப் பாலில் நீடு வாழ்க என்பார்க்குத் தும்முதலைச் சுட்டினார். வாழ்த்துதல் என்னும் பண்பு நம்மவர் உயர்பண்பு. இதன் மூல வைப்பகம் தொல்காப்பியம். அது, வாழ்த்தியல் வகைநாற் பாவிற்கும் உரித்தே (1366) என்று எங்கெங்கும் வாழ்த்துக்கு வழி கூறியுள்ளது. புறநிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, அவையடக்கியல், செவியறிவுறூஉ என்பவற்றை அறம் முதலாகிய மும்முதற் பொருளையும் காக்கும் வகையால் கூறுகின்றது (1363). புறநிலை வாழ்த்து நீ வழிபடுகின்ற தெய்வம் உன்னைக் காப்பதாக! பழியற்ற வகையில் செல்வம் சேர்வதாக! வழிவழியாகக் குடிநலம் பெருகி வாழ்வாயாக! - என்று வாழ்த்துவது புறநிலை வாழ்த்து (1367). எவ்விடத்தாயினும் தெய்வம் உறைதலின், திருக்கோயில் வளாகமேயன்றி எங்கும் வழிபாடு செய்யலாம்; வாழ்த்துக் கூறலாம் என்பதை உணர்த்தும் வகையால் புறநிலை வாழ்த்து என்றார். நீ வழிபடு தெய்வம் நிற்புறம் காப்ப என்பது இறை உடனாகி ஒன்றாகிக் காக்கும் என்பது. புறம் புறம் திரிந்த செல்வமே என்னும் மணிவாசகத்தால் இது புலப்படும். மற்றும், குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் என்னும் குறள் (1023) முயற்சியாளனுக்குத் தெய்வம் ஓடிவந்து உதவும் என்பதும் எண்ணத் தக்கது. தெய்வம் நின்புறம் நிற்பதாக என்று வாழ்த்துதலால் புறநிலை வாழ்த்தாம். வாயுறை வாழ்த்து வேம்புபோல் கசப்பும், நஞ்சுபோல் அழிப்பும் உடைய கொடிய சொற்கள் இடம் பெறல் இல்லாமல், வாழ்த்துதலும், நீ எடுக்கும் முயற்சி களும் செல்லும் செலவுகளும் மேலும் மேலும் நலமாக அமைவதாக என்று வாழ்த்துதலும் வாயுறை வாழ்த்தாம். வாயுறை வாயில் இருந்து பொழியும் அமிழ்து. வானில் இருந்து பொழியும் அமிழ்துபோல் வாயில் இருந்து பொழியும் அமிழ்து வாயுறை ஆயிற்று. உறை = மழை; அமிழ்து. இன்பத்து அமிழ்த்துவது ஆதலாலும் வாய்க்கண் இருந்து அவ்வின்பச் சுரப்பு வெளிப்படுதலாலும் வாயுறை ஆயிற்று. வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்பும் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே என்னும் இந் நூற்பாவிற்கு (1369), முற்பருவத்துக் கைத்தும் பிற்பருவத்து உறுதிபயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாயின சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்கும் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்து எனப்படும் என்பது பேராசிரியர் உரை. அவையடக்கியல் தேர்ச்சியில்லாத சொற்களைச் சொல்லும் வகை தெரியாமல் யான் சொன்னாலும் உங்கள் தேர்ச்சியால் அமைத்துக் கொண்டு அருள்வீராக என அவையோரை வேண்டிக் கொள்ளுதல் அவையடக்கியலாகும். அவையை அடக்குதல் தகுமோ எனின், அவைக்குந் தான் அடங்கியமை உரைத்து வேண்டுதலால் அவர்தம் தகவால் அடங்குவர் ஆதலால் அவரை, அடங்குதல் வகையால் அடக்குதல் ஆயிற்று என்க. என்றும் பணியுமாம் பெருமை என்பது கூறுவார்க்கும் கூறக் கேட்பார்க்கும் பொதுமையது ஆகலின். அடங்கிப் போதல், அடக்கும் கருவி என்பது அரிய வாழ்வியல் வளச் செய்தியாம். செவியுறை செவியை உறுத்தும் வகையில் இடித்துக் கூறி இன்பம் சேர்ப்பது செவியுறை ஆகும். உறுத்தும் உரை உறை ஆயது. இடிக்கும் துணையாரை இல்லாதவர் வாழ்க்கை கெடுப்பவர் இல்லாமலும் கெடும் என்பது வாய்மொழி யாதலும், இடிக்கும் கேளிர் என்பது நட்பியலாதலும் அறிந்து போற்றத் தக்கவை. செவியுறை தானே பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே என்பது நூற்பா (1371). பொங்குதல் = செருக்குதல்; புரையோர் = உயர்ந்தோர்; அவிதல் = அடங்கி நடத்தல். எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை பெரியார்ப் பிழைத்தொழுகு வார் என்பது வள்ளுவம் (896). புறநிலை வாழ்த்துக் கூறும்போது அவ் வாழ்த்து, கலிப்பாவும் வஞ்சிப்பாவும் கொள்ளாது என்றார் ஆசிரியர். ஏன்? வாழ்த்து அளவுடையதாக அமைதல் வேண்டும். வரம்பிலா வாழ்த்து இயல்பிலாததாகிவிடும். ஈரடி, மூவடி, நாலடி அளவில் அமையும் வெண்பாவும் அகவலும். ஆனால், கலியும் வஞ்சியும் அவ்வாறு அமையா. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம் என்ன அமையும் கலியும், அதன் இளையோன் போன்ற வஞ்சியும் வாழ்த்துக்கு வேண்டா என்று ஒதுக்கிய வகை இதுவாம் (1367, 1417). சிலர் மேடையில் வாழ்த்தும் வாழ்த்துதல், அவையோர்க்கு மட்டுமன்றி, வாழ்த்துப் பெறுவோரையும் நெளிய வைத்தல் கண்கூடு. அம்மட்டோ! அம் மேடை விட்டு இறங்கியதும் எவ்வளவு வாழ்த்திப் பேசினாரோ அதனினும் மிகப் பழிப்பதும் கேட்க, சீ! சீ! என்ன பிறவி இது என்று பழி கொள்வாராக்கும், இவ் வாழ்த்து வேண்டுவது தானா? இதற்கு மாறானவரும் உண்டு. மனையில் புகழ்வார்; மன்றில் பழிப்பார் அவர். ஆதலால், கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு என்றார் வள்ளுவர் (819, 820). வண்ணம் வளமான இசையமைந்த பா - வண்ணப்பா. வள் > வண். வண் + அம் = வண்ணம். வண்ணம் எழுத்தின் தோற்றத்திலேயே தோன்றியது. மெய்யியல் தோற்றம் எப்படி எழுத்தொடு கொண்டதோ, அப்படிக் கொண்டது வண்ணமும். ஓசை நயம் கொண்டு வண்ணங்களை இருபது எனக் குறித்தார் தொல்காப்பியர். அதனை நூறாக்கினர் பின்னவர்; பன்னூறாகப் பாடியவரும் உளர். பாஅ வண்ணம்: அசையா சீரா தளையா பார்க்க வேண்டா வண்ணம் பாஅ வண்ணம். அவ் வண்ணம் இலக்கணம் கூறும் நூலுள் பயில (நிரம்ப) வரும். அதற்குச் சொல்லே சீராய் அமையும். நூற்பா வண்ணம் என்பதும் இதற்கு ஒரு பெயர். அவற்றுள், பாஅ வண்ணம் சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும் என்னும் இந் நூற்பாவே, பாஅ வண்ணச் சான்று (1470) தாஅ வண்ணம்: இடையிட்டு வரும் எதுகை யுடையது தாஅ வண்ணம். எ-டு: உரிச் சொற் கிளவி விரிக்கும் காலை (782) வல்லிசை வண்ணம்: வல்லெழுத்துப் பலவாக அமைந்தால் அது வல்லிசைவண்ணம். எ-டு: மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை (1025) மெல்லிசை வண்ணம்: மெல்லெழுத்துப் பலவாக அமைதல் மெல்லிசை வண்ணம். எ-டு: வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும் (420) இயைபு வண்ணம்: இடையெழுத்துப் பலவாக வருதல் இயைபு வண்ணம். எ-டு: தலைவரு விழும நிலையெடுத் துரைப்பினும் (985) அளபெடை வண்ணம்: உயிரள பெடை, ஒற்றளபெடை என்னும் அளபெடை இரண்டும் மிகுந்து வருவது அளபெடை வண்ணம். எ-டு: ஓரூஉ வண்ணம் ஒரீஇத் தோன்றும் (1483) கண்ண் டண்ண் எனக் கண்டும் கேட்டும் நெடுஞ்சீர் வண்ணம்: நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடுஞ்சீர் வண்ணம். எ-டு: கேடும் பீடும் கூறலும் தோழி (1048) குறுஞ்சீர் வண்ணம்: குற்றெழுத்து மிகுந்து வருவது குறுஞ்சீர் வண்ணம். எ-டு: புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ (1053) சித்திரவண்ணம்: நெடிலும் குறிலும் ஒப்ப வருவது சித்திரவண்ணம். எ-டு: காமம் நீத்த பாலி னானும் (1022) நலிபு வண்ணம்: ஆய்த எழுத்து மிகுந்து வரின் அது நலிபு வண்ணம். எ-டு: னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு (123) அகப்பாட்டு வண்ணம்: இறுதியடி இடையே வரும் அடிபோல் நிற்பது.அதாவது முடியாத் தன்மையான் முடிந்ததாய் அமையும். எ-டு: மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின் (1593) (நுதலிய நெறியின இருவகை இயல எனமுடிக்க) புறப்பாட்டு வண்ணம்: முடிந்தது போல் தோன்றி முடியாததாய் வருவது புறப்பாட்டு வண்ணம். எ-டு: இன்னா வைகல் வாரா முன்னே செய்நீ முன்னிய வினையே முந்நீர் வைப்பகம் முழுதுடன் துறந்தே -ஈற்றயலடி முடிந்தது போன்று முடியாத தாயிற்று (பேரா). ஒழுகு வண்ணம்: ஒழுகிய இனிய ஓசையால் வருவது ஒழுகு வண்ணம். எ-டு: உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும் மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும்... (106) ஒரூஉவண்ணம்:கூறப்பட்lவண்zவகையுŸஎதனையு«சாராJவண்ண«நீங்கி¢செந்தொடையாfவருவது. எ-டு: சிறப்பொடு வருவழி யியற்கை யாகும் (349) எண்ணு வண்ணம்: ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுவகை பொருந்தி வருவது எண்ணுவண்ணம். எ-டு: நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் (1589) அகைப்பு வண்ணம்: அறுத்து அறுத்து வருவது அகைப்பு வண்ணம். அகைத்தல் = அறுத்தல். எ-டு: ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே..... (1526) தூங்கல் வண்ணம்: வஞ்சியுரிச் சீராகிய கனிச்சீர் மிகுந்து வருவது தூங்கல் வண்ணம். தூங்கல் = அசைநடையது. எ-டு: முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலவெண்குடை (சிலம்பு) ஏந்தல் வண்ணம்: சொல்லிய சொல்லினாலே சொல்லப் பட்டது சிறக்க வருவது ஏந்தல் வண்ணம். எ-டு: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் (குறள். 751) உருட்டு வண்ணம்: உருளை ஓடும் ஓட்டம் போலச் சொல் ஓட வருவது உருட்டு வண்ணம். உருளற்கு ஏற்ப நெடிலும் வல்லொற்றும் பெரிதும் வாராது தொடுத்தல் வேண்டும். எ-டு: எரியுரு வுறழ விலவ மலர (கலி.33) முடுகு வண்ணம்: உருட்டு வண்ணம் போன்று, நாற் சீரடியின் மிக்க அடியில் வருவது முடுகுவண்ணம். எ-டு: நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ (கலித். 39) வண்ணங்கள் இவை என எண்ணி அவற்றை நிரற்பட உரைத்து நிறைவில், வண்ணந் தாமே இவையென மொழிப என முடித்தார் (1490). வண்ண இயற்கை: வண்ணங்கள் இருபதும் குறுங்கணக்கு, நெடுங் கணக்கு என்னும் அரிவரி வரிசையிலேயே இயல்பாக அமைத்துக் கொண்ட அருமை வியக்கத்தக்கதாம். பெயர்களைப் பாருங்களேன்: பா அ வண்ணம், நூற்பா வண்ணம், தாஅ வண்ணம் - இடையிடல்தானே தாவுதல்; வல்லிசை, மெல்லிசை, இயைபு ஆகிய மூன்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் வருதல் தானே. இனி, அளபெடை வண்ணம் சீரிய ஓசை நீட்டம் கருதியது அல்லவோ! நெடுஞ்சீர் குறுஞ்சீர், சித்திரம் நலிபு என்பவை முறையே நெடில், குறில், நெடிலும் குறிலும், ஆய்தம் என்பவை மிகுந்தவைதாமே. அகப்பாட்டு புறப்பாட்டு வண்ணங்கள் முடிநிலை பற்றியவை. ஒழுகு வண்ணம் ஆற்றுநீர் ஓட்டம் போல்வது; ஒரூஉ, வண்ணமில்லா வனப் பினது; எண்ணுவண்ணம் எண்ணிக்கை சுட்டிவருவது. தூங்கல், ஏந்தல், உருட்டு, முடுகு என்பவை முறையே அசைந்துவருதல், பல்கால் வருதல், உருண்டுவருதல் ஆகிய நடைகுறித்தவை. இவையெல்லாம் செயற்கை யில்லா இயற்கை யமைந்தவை. இனி, இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எங்கிருந்து காட்டப்பட்டன என்பதைப் பாருங்கள். 14 வண்ணங்களுக்குத் தொல்காப்பியத்தில் இருந்தே எடுத்துக்காட்டுகள் காட்டப் பட்டுள. ஏந்தல் வண்ணத்திற்கு இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு, இன்னென் சாரியை இன்மை வேண்டும் என்பதும் (131) உருட்டு வண்ணத்திற்கு, உளவென மொழிப இசையொடு சிவணிய என்பதும் (33) எடுத்துக்காட்டு ஆகலாம். அவ்வா றாயின், நான்கு வண்ணங்களுக்கு மட்டுமே எடுத்துக் காட்டுக் காட்ட இயலாதாயிற்று. ஏன்? ஒற்றளபெடை வருதல் இலக்கிய வழக்கிலும் அரிதானது. புறப்பாட்டு வண்ணம் நூற்பாவிற்கு ஏலாதது. தூங்கல் வண்ணம் வஞ்சியடி யுடையது; நூற்பாவோ அகவலடி யுடையது. இனி முடுகு வண்ணமோ நாற்சீர் அடியின் மிக்க அடிக்கண் வருவது; நூற்பா அடிக்குப் பொருந்தாதது. இன்னவற்றாலேயே, இவ் வண்ணங்களுக்கு இலக்கணம் கூறிய தொல்காப்பியத்திலே இலக்கியமும் காட்ட இயலாததாயிற்று. வண்ணம் பாடிய இசை நூலும் அன்று; காப்பியமும் அன்று; தொல்காப்பியம். இலக்கணம் கூற வந்தநூல் இவ்வளவும் கூறியது செயற்கரிய சீர்மையது அன்றோ! ஓர் இலக்கணத்தை இத்தகு சுவையும் நயமும் கமழ இயற்றல் எளிமையாமா என்பதை உணர்ந்து போற்றுவதற்கே நாம் எடுத்துக் கூறுவதிதுவாம். தொல்காப்பியர் அரிய படைப்பாளி மட்டுமல்லர்; மிக இனிய துய்ப்பாளியுமாவர் என்பதன் சான்றுகளுள் ஈதொன்று என்க. வனப்பு வனப்பு எனச் சொல்லப்பட்ட செய்யுள் உறுப்புக் கூறும் ஆசிரியர், அம்மை முதலாகக் கூறுகிறார். வனப்பு = இயற்கை எழில் (வனம் > வனப்பு). கைபுனைந் தியற்றாக் கவின்பெரு வனப்பு என்பது முருகு. அம்மை: அம்மை தானே அடிநிமிர்வு இன்றே (1491) என்கிறார். நிமிர்தல் = மிகுதல். அடிமிகாமல் சுருங்கச் சொல்வதே அம்மை என்னும் அழகாகும். பத்துவகை அழகுகளில் சுருங்கச் சொல்லல் என்பதே முதல் அழகு (நன்). அம்ம கேட்பிக்கும் (61) என்பது போதுமே. அழகு : செய்யுட் சொல்லாகிய உரிச்சொல் மிகுதியாக வர இயற்றுவது அழகு என்னும் வனப்பாகும். எ-டு : ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் (813) தொன்மை : இடை இடையே உரைநடை வரப் பழமையாக வழங்கிவரும் பொருளைக் கூறும் செய்யுள்களை யுடையது தொன்மை. இதற்குத் தகடூர் யாத்திரையைக் கூறுவர். சில பாடல்களை யன்றி நூல் எய்திற்றில்லை. எய்திய பாடல்கள் எம்மால் உரைகண்டு நூலாக்கம் பெற்றுளது. பெருந்தேவனார் பாரதம் உரையிடை இட்டது. தோல் : இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்தமொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர் என்னும் இந் நூற்பாவின் முதல் இலக்கணத்திற்கு இம் முதல் அடியே எடுத்துக்காட்டு. பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகுவதற்குச் சான்று பத்துப்பாட்டு. விருந்து : விருந்து என்பது புதிதாகப் பாடும் நூல் வகையைக் குறிக்கும். புதுயாப்பினது என்பதுமாம். முத்தொள்ளாயிரம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றை எடுத்துக்காட்டுவார் பேராசிரியர். இயைபு: ஞ் என்னும் எழுத்து முதல் ன் என்னும் எழுத்து ஈறாக வரும் புள்ளி எழுத்துகளைக் கொண்டு முடியும் பாடல்களையுடைய நூல் இயைபு இலக்கணம் உடையதாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்பன இவ்வகையின. என் என முடிந்தவை. புலன் : எளிய வழக்குச் சொற்களைக் கொண்டு ஓடிய ஓட்டத்தில் பொருள் புரியுமாறு பாடப்படுவது புலன் என்னும் வனப்பாகும். எ-டு : குடும்ப விளக்கு; இருண்ட வீடு; பாஞ்சாலி சபதம். இழைபு : வல்லொற்று வாராது குறளடி முதலாக ஏறிய அடிகள் பலவும் வரத்தொடுப்பது இழைபு வனப்பு எனப்படும். இதுவும் புலன் போன்ற பொருள் புலப்பாடு உடையதாதல் வேண்டும். எ-டு : கலியும், பரிபாடலும் என்பார் பேராசிரியர். வனப்பு அமைக. இனிப் பா பற்றிச் சில காணலாம். பா, உரைப்பா பா = பாட்டு. இப் பாட்டினைத் தொல்காப்பியத்தை உள்வாங்கி, ஏட்டுப்பாட்டு எனவும் நாட்டுப்பாட்டு எனவும் இரு வகையாகக் காணலாம். ஏட்டுப்பாட்டு என்பது அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபா, அங்கதப்பா, தேவபாணி என்பனவாம். நாட்டுப்பாட்டு என்பது, உரைப்பாட்டு, பிசிப்பாட்டு, முதுமொழிப் பாட்டு, மந்திரப்பாட்டு, குறிப்புப்பாட்டு, பண்ணத்தி என்பவை. அகவல் : அகவல் முதலாகிய பாக்கள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளும் கூறுவனவாக வரும். அவற்றுக்குச் சீர் tiuaiw motiuaiw KoÃiy tiuaiw v‹gití« c©L. ஆசிரியப்பா நால்வகைப்படும். அவை நேரிசை, நிலை மண்டிலம், அடிமறிமண்டலம், இணைக்குறள் என்பன. இறுதியடிக்கு முன்னடி முச்சீராய் வருவது நேரிசை. எல்லா அடிகளும் நாற்சீராய் வருவது, நிலைமண்டிலம். எந்த அடியை எந்த அடியாக மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது, அடிமறி மண்டிலம். முதலடியும், இறுதியடியும் நாற்சீரடியாய் இருக்க இடையடிகள் சில இருசீர் முச்சீர் அடிகளாகவும் வருதல், இணைக்குறள் ஆசிரியப்பா இது சங்கநாளில் பெருஞ் செல்வாக் குடையதாக விளங்கியது. மேற்கணக்கு எனப்படும் பாட்டு, தொகையாகிய பதினெட்டு நூல்களில் கலித்தொகை, பரிபாடல் என்னும் இரண்டும் தவிர்ந்த பதினாறு நூல்களும் அகவலால் அமைந்தவையே. இந் நாள்வரை அதன் செல்வாக்குப் பெருகியே உள்ளது. மூன்றடிச் சிறுமை ஆயிரம் அடிப்பெருமை எனப்பட்ட அப் பா ஆயிரம் அடியைத் தாண்டியும் வள்ளலாரால் பாடப்பட்டது. வெண்பா : வெண்பா ஈரடிச் சிறுமையும் பாடுவோர் எண்ணத் திற்குத் தகுந்த பெருமையும் உடையது. கலித்தொகை யில் கலிவெண்பாவும் உண்டு. குறள்வெண்பா, குறுவெண் பாட்டு எனப்படும். அதனின் நீண்ட வெண்பா நெடுவெண் பாட்டு எனப்படும். குறுவெண்பாவுக்குக் குறள் நூலும், மற்றை வெண்பாவுக்குப் புறப்பொருள் வெண்பா மாலையும் நமக்குக் கிடைத்த தனி நூல்கள். பாரத வெண்பா பெருந்தேவனார் பெயரால் விளங்குகிறது. உரையிடையிட்ட வெண்பா வுடையது. 830 பாடல்கள் அளவில் முன்னும் பின்னும் இல்லாமல் கிடைத்து வெளிப்பட் டுளது. அது பிற்காலத்தே உரையிடையிட்ட தோற்றமுடையது ஆயிற்றுப் போலும்! வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, அளவியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா எனப் பல வகைகளை யுடையது. வெண்பாப் பாடுதலில் பின்னாளில் பெரும் புகழோடு விளங்கியவர் புகழேந்தியார். அவர் கொண்டவை நேரிசை வெண்பா. நான்கடியான் வருவது அது. மூவடியால் வருவது சிந்தியல். இரண்டாமடியில் தனிச்சொல் இன்றி வருவது இன்னிசை; பன்னீரடி வரையுடையது பஃறொடை (பல தொடை); அதனின் நீண்டது கலிவெண்பா. கலிப்பா : கலிப்பா பல உறுப்புகளையுடையது. தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம், வண்ணகம் என்பன அதன் உறுப்புகள். கொச்சகம் சிலவாகவும், பலவாகவும் வரும். பின்வந்த தாழிசை, துறை, விருத்தம் என்னும் இனப்பாவிற்குத் தாய்ப்பா கலிப்பா. தரவு - முற்படத் தந்து நிறுத்துவது. தாழிசை-தாழமமைந்த ஓசையுடையது; ஒரு பொருள்மேல் மூன்றடுக்கி வருவது. சுரிதகம் - முடிநிலை. அம்போதரங்கம் - நீரலை போல்வது; கரைசாரச்சாரச் சுருங்கி வரும் அலைபோலச் சுருங்கிவரும் அடிகளையுடையது. கொச்சகம் என்பது - கொய்சகம். மகளிர் உடுத்தும் உடை இடையில் மடிப்புடன் வருவதுபோல் வருவது. இன்றும் கொசுவம் என வழங்கப்படுவது. விரிவுமிக்கதும் கூற்றும் மாற்றமுமாகத் தொடர வாய்த்ததும், இசை கூட்டிப் பாட வாய்ப்பதும் இது. காலப்போக்கில் அருகி வருவது இப்பா. வண்ணகம் - இசை நலம்மிக்கது. வஞ்சிப்பா : வஞ்சிப்பா குறளடி வஞ்சி, சிந்தியல் வஞ்சி என இருவகையது. முன்னது இரு சீராலும் பின்னது முச்சீராலும் வருவது. வஞ்சிப்பாவும் பாடுதல் அரிதாயிற்று. அன்றியும் அப் பாவால் அமைந்த நூல் ஒன்றுதானும் இல்லை. கிடைத்தவை தனித்த பாடல்களேயாம். பரிபா : பரிபா என்பது கலிப்பாவைப்போல் பல உறுப்புகளை யுடையது (1377). 140 அடி வரை நீள்வது; 25 அடிச் சிறுமையது; அருவியும் ஆறும் பரியும் கரியும் கீரியும் முயலும் நடையிடுவது போன்ற நடையது. பண்வகுத்துப் பாடப்பட்ட பெருமைக்குரியது. இந் நாளில் அதனைப் பாடுவார் அரியர் ஆயினர். அந் நாளில் ஒரு நூலாவது கிளர்ந்தது. அதன் பெயர் பரிபாடல். 70 பரிபாடல்களில் முற்றாகக் கிடைத்தவை 22 மட்டுமே. மருட்பா : மருட்பா வெண்பாமுன்னாகவும் அகவல் பின்னாகவும் கொண்ட மயக்கப்பா என்பது முன்னரே கண்டுளோம். தனிநூலாக்கம் மருட்பா பெற்றதில்லை. அங்கதம் : அங்கதப்பாவும், தேவபாணிப் பாவும் பொருள் வழியால் பெயர் பெற்றவை. தனியாப்புப் பெற்றவை அல்ல. அங்கு = வளைவு. சொல்வதை உள்ளது உள்ளபடி நேருக்குநேர் உள்ளவாறு கூறாமல், புகழாகவும் வசையாகவும் பாடுவது அங்கதமாகும். அங்கதம் - செம்பொருள்; பழிகரப்பு (பழியை மறைத்துக் கூறல்) என இருவகைப்படும் (1381). செம்பொருள் என்பது - வசையை வெளிப்படக் கூறும். வசையை மறைத்துக் கூறுதல் - பழிகரப்பு. தேவபாணி என்பது - இறை வழுத்துப் பாடல். அது பாடல் அளவால் பெருந் தேவபாணி, சிறு தேவபாணி என இருவகைப்படும் (1395) கலி வகையைச் சேர்ந்தது. பாடுபுகழ் : சங்க நாளில் இன்னது பாட இவர் என்னும் புகழ் பெற்றார் இருந்தனர். குறிஞ்சிக்குக் - கபிலன்; முல்லைக்கு - நப்பூதன்; மருதம் - மருதனிளநாகன்; நெய்தல் - நல்லந்துவன்; பாலை - பெருங்கடுங்கோ. இவர் இத் திணைகளைப் பாடுதலில் வல்லார். பரணன் வரலாறு பாடுதலில் வல்லான். பின்னாளிலும் இது பாட இவர் வல்லார் எனப் புகழ் மரபு ஒன்றும் கிளர்ந்தது. இனி, அடி வரையறை இல்லாத உரை முதலியவற்றை எண்ணுவோம். இவை பொதுமக்கள் புலமக்களாய்த் தமிழுக்கு வழங்கிய கொடையாகும். உரைப்பா : உரைப்பா நான்கு வகை என்பதை, பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பா இன்று எழுந்த கிளவி யானும் பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் உரைவகை நடையே நான்கென மொழிப என்பார் ஆசிரியர் (1429). இதில் வரும் உரைவகை நடை என்பதே உரைநடை என்னும் வழக்குக்கு மூலமாகும். பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட்குறிப்பு உரை, பாடல் இல்லாமலே சொல்லப்பட்ட உரை, பொருளொடு பொருந்தாத பொய் (புனைவு) உரை, பொருளொடு பொருந்திய நகைச்சுவை உரை என நால்வகை உரைநடைகளும் பண்டுதொட்டே வழங்குதலைக் குறிக்கிறார் ஆசிரியர். ஆதலால், பண்டை உரைநடை வழக்குக் குன்றி மீட்டெடுப்புச் செய்யப்பட்டது பின்னே என்பதை உணரலாம். மெய்ப்பாடுகளுள் முதற்கண் வைக்கப்பட்டது நகைச்சுவை. அச் சுவை மிக ஆக்கப்பட்ட உரைநடை நூல்கள், அந் நாளே இருந்தன என்பதையும் இந் நூற்பாவால் உணரலாம். பிசி : பிசி என்பது புதிர் என இந் நாளில் வழங்குகின்றது. விடுகதை எனவும் படுகிறது. ஒப்பமைந்த உவமை, ஒன்று சொல்ல ஒன்று தோன்றுவதாம் குறிப்பு என இருவகையாகப் பிசிவரும். அச்சுப் போலே பூப்பூக்கும் அமலே என்னக் காய் காய்க்கும். இது, உவமை பற்றி வந்தது என்பார் இளம்பூரணர். பிறை கவ்வி மலை நடக்கும் என்றுரைத்து யானையைச் சுட்டுவார் பேராசிரியர். நீராடான், பார்ப்பான் நிறம் செய்யான் நீராடின் ஊராடு நீரிற்காக் கை என்று பின்னதற்கு எடுத்துக்காட்டும் தருவார் அவர். இது நெருப்பு. முதுமொழி : நுண்மை - சுருக்கம் - விளக்கம் - எளிமை என்பவை விளங்கக் கருதிய பொருளைத் தருவது முதுமொழி யாகும். கன்றுக் குட்டிமேயக் கழுதைக் குட்டியைக் காதறுத்தான் என்பதும் பழி ஓரிடம்; பாவம் ஓரிடம் என்னும் பழமொழியும் அறிக. மந்திரம் : நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப என்பது இதன் இலக்கணம் (1434). சொல்லிய சொல், வெல்லும் சொல்லாக அமையவல்லார் ஆணை மொழியே மந்திரம் ஆகும். தானே என்று பிரித்தான், இவை தமிழ் மந்திரம் என்பதற்கு என்றார் பேராசிரியர். இதற்கு அவர் காட்டும் பாட்டுகளும் விளக்கமும்: ஆரியம் நன்று தமிழ்தீ தெனவுரைத்த காரியத்தால் காலக்கோட் பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையால் செந்தமிழே தீர்க்க சுவா எனவும், முரணில் பொதியில் முதற்புத்தேள் வாழி பரண கபிலரும் வாழி - அரணியல் ஆனந்த வேட்கையான் வேட்கோக் குயக்கோடன் ஆனந்தம் சேர்க சுவா. எனவும், இவை தெற்கண் வாயில் திறவாத பட்டிமண்டபத்தார் பொருட்டு நக்கீரர் ஒருவன் வாழவும் சாவவும் பாடிய மந்திரம் என்பது. குறிப்பு : குறிப்பு என்பது எழுத்தொடும் சொல்லொடும் பொருந்தாது, புறத்தால் பொருள் அறியுமாறு பாவால் கூறுவது. பிசிக்கும் இதற்கும் வேறுபாடு அது உரைப்பாட்டாய் வருவது; இது பாவாய் வருவது என்பது. குடத்தலையார் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையின் அடக்கிய மூக்கின ராம் என்பது பேராசிரியர் காட்டும் எடுத்துக்காட்டு. இது, யானை. பண்ணத்தி : பாட்டிடையே அமைந்ததாய்ப் பாட்டாகி வருவது பண்ணத்தி (1436). நத்துதல் விரும்புதல். பண் நத்தி என்பது பண்ணத்தி. சிலம்பில் பாட்டின் இடையே பாட்டென எதுகை மோனை இயைய நடையிடும் உரைப்பாட்டு மடை இஃதாகும். இசைநய எடுப்பொடும் பாடற்கும் ஏற்றதாம். நிறைவு சொல்லப்பட்ட இலக்கணம் பிழைத்ததுபோலத் தோன்றினும், தோன்றக்கூடும். அதனை வந்ததொன்றைக் கொண்டு மாறுபாடு இல்லாமல் அமைத்துக் கொள்ளுதல் தெளிந்த அறிவினர் கடமை என்று இச் செய்யுளியலை நிறைவிக்கிறார் ஆசிரியர் (1499). மரபியல் வழக்கு : வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லானே (1592) என வழக்கு என்பதைக் கூறுகிறார். பண்புடையார்ப் பட்டுண் டுலகம் என்பது இது. சட்டத்தின் ஆளுகையினும் சான்றோர் காட்டும் சால்பு ஆளுகையே உலகை - உலகியலைக் காக்கும் என்பதன் குறிப்பு இதுவாம். மரபு : சான்றோரும் அறிவரும் கண்ட வழக்குகளே மரபு ஆகும். மரபு மாற்றருஞ் சிறப்பினது என்கிறார். ஏனெனில், மரபுமாறின் பிறிது பிறிதாகிப் போகும் (1500, 1591). மரபு என்னும் சொல்லே, அதன் பொருள் விளக்கமாக உள்ளது. ஒரு மரத்தின் வித்து மீண்டும் மரமாகி வித்துத் தந்து, வழிவழி மாறாமை போல, மரபு என்பது மாறாதது; மாற்றக் கூடாதது; மாற்றின், பொருட்கேடாகும் என்பவற்றை எண்ணல் நலம். இளமை : மரபியலில் இளமைப் பெயர், ஆண்பாற் பெயர், பெண்பாற் பெயர் என்பவற்றைக் குறிப்பிட்டு முறையே அவற்றை விளக்குகிறார். தொல்காப்பியர் கூறும் இளமைப் பெயர்கள் பார்ப்பு, பறழ், குட்டி, குருளை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்பவை. ஆண்மை : ஆண்பாற் பெயர்களாக ஏறு, ஏற்றை, ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதள், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பவற்றைக் குறிக்கிறார். பெண்மை : பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்பவை பெண்பாற் பெயர் என்கிறார். இளமைப் பெயர்களும், அவற்றைப் பெறுவனவும் பார்ப்பு - பறவை, தவழ்பவை, குரங்கு. பறழ் - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குட்டி - மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. குருளை - நாய், பன்றி, புலி, முயல், நரி. கன்று - யானை, குதிரை, கழுதை, கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). பிள்ளை - பறவை, தவழ்பவை, மூங்கா, வெருகு, எலி, அணில், பன்றி, புலி, முயல், குரங்கு, ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). மக - குரங்கு, மக்கள். மறி - ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய். குழவி - குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மக்கள், ஓரறிவுயிர் (நெல் புல் அல்லாதவை). போத்து - ஓரறிவு (நெல் புல் அல்லாதவை). இவ் விளமைப் பெயர் முதல் அடங்கலில் சுட்டப்படாதது : ஆண்பாற் பெயர்களுள் அமைந்தது. குழவியும் மகவும் ஆயிரண் டல்லவை கிழவ அல்ல மக்கட் கண்ணே என மக்கள் இளமைப் பெயர் இரண்டே குறிக்கிறார். இரண்டு அல்லவை கிளவ (சொல்ல) அல்ல என்றும் கூறுகிறார். ஆய்வு பிள்ளை என்னும் பெயர் பெருவழக்காக இந் நாள் உள்ளது. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை, ஆண்பிள்ளைப் பிள்ளை (ஆம்பிளப் பிள்ளை), பெண்பிள்ளைப் பிள்ளை (பொம்பிளப் பிள்ளை) எனவும் வழங்குகின்றன. பிள்ளைத் தமிழ் இலக்கியம் பெருவரவினது. பிள்ளை யாண்டான் என்பதும் வழக்கு. இவ்வாறு வழக்கு உள்ளமையால், முடிய வந்த அவ்வழக்கு உண்மையின் கடிய லாகா கடனறிந் தோர்க்கே என்னும் ஆணை கொண்டு நாம் இணைத்துக்கொள்ள வேண்டும் (1568). குழந்தை என்னும் பொருளில் பாப்பா என்பது பெரு வழக்காக உள்ளது. பார்ப்பு, பறவை இளமைப் பெயர். அப் பெயர் பாப்பு - பாப்பா என ஆயது. பெண் குழந்தை கண்பாவை எனப் பெற்றோரால் பேணப் படுவதால் பாவை எனப்பட்டது. பார்வை > பாவை. பாவை நோன்பு, பாவை ஆட்டம் என்பன வழக்கில் உள்ளன. இஞ்சி, மஞ்சள் முளைகள் பழநாள் தொட்டுப் பாவை என வழங்கப்பட்டன. அப் பெயர், இப் பட்டியில் இடம்பெறவில்லை. குருளை சிங்கக் குருளை எனக் கம்பரால் ஆளப்படு கின்றது. சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது அது. குட்டி என்னும் பெயர் பெண் மக்கள் இளமைப் பெயராக வழங்கப் படுதல் எவரும் அறிந்தது. அது போல் குட்டன் ஆண்பாலுக்கு வழங்கப்படுதல் நாலாயிரப் பனுவலில் உண்டு. என் மாணிக்கக் குட்டன் என்பது அது. இப் பெயர்கள் சேரலத்தில் பெரு வழக்காக உள்ளவை. குட்டியப்பா சிற்றப்பா; குட்டிப்பல் சிறியபல்; குட்டி சிறுமை ஒட்டு. இவ்வாறு இவ் வியலை ஆய்தல் பெரும் பயன் செய்யும். இவ் வியலில் விடுபாடு உண்டு; இடைப்பாடு உண்டு; முன்பின் தள்ளல் உண்டு; பொருந்தாச் சேர்ப்பும் உண்டு. மரபு காக்கவென்றே ஆக்கப் பட்ட அருமையமைந்த இவ் வியலில் உள்ள மரபுக் கேடுகள் பலப்பல. அவை தனியே ஆயப்பட்டுத் தனி நூலாக்கம் பெறுகின்றன, இங்கு இவ் வாழ்வியல் நோக்குக்கு ஏற்ற அளவில், குறிப்புகள் இடம்பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி மேலே செல்லலாம். சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே என்று முடித்த ஆசிரியர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமைந்த உயிரிகளைப் பற்றிக் கூறுகிறார். இருபதாம் நூற்றாண்டில், செடி கொடிகளுக்கு உயிர் உண்டு என்பதை ஆய்ந்து உலகப் புகழ் பெற்றார் சர் சகதீச சந்திரபோசு. ஆனால், அவர்க்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியரால் காணப்பட்ட அவ் வுண்மை, தமிழரால் அறிவிக்கப்படாமலும், ஆராய்ந்து நிறுவப்படாம லும் அடங்கிக் கிடப்பதாயிற்று. அறிவியல் விளக்கமாக அமைந்த இப் பகுதியை இன்றேனும் தமிழ் அறிவியலார் பயன்கொள்ளல் கட்டாயத் தேவை. தமிழில் அறிவியல் சிறந்து விளங்கியமையை உலகுக்கு எடுத்துக்காட்டலும், தமிழ் மரபில் அறிவியல் நூல் யாத்தலும் அவர்தம் கடமையாம். இதற்கு ஓர் அறிமுகமாக எம்மால் தமிழில் அறிவியல் என்றோர் சுவடி வெளிப்படுத்தப்பட்டுள தாம். அறிவுவகை அறிவியல் எவ்வளவு எளிமையாய் இனிமையாய் உயிரோட்டம் பெறுகிறது என்பதை இந் நூற்பாக்களைக் கொண்டு தெளிக. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே; இரண்டறி வதுவே அதனொடு நாவே; மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே; நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே; ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே; ஆறறி வதுவே அவற்றொடு மனனே; நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (1526) இவ்வாறு அறிவு வகை கூறியவர், அவ் வறிவு உயிர்களை எடுத்துக் காட்டுகிறார். புல்லும் மரனும் ஓரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நந்தும் முரளும் ஈரறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே சிதலும் எறும்பும் மூவறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே நண்டும் தும்பியும் நான்கறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே மாவும் மாக்களும் ஐயறி வினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே மக்கள் தாமே ஆறறி வுயிரே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (1527 - 1532) எமக்கு முன்னரே நேரிதின் உணர்ந்தோர் நெறிப் படுத்தினரே என்று முந்தை அறிவரைச் சுட்டினார் ஆசிரியர். புல்லும் மரனும் என்றால் பூண்டு, செடி, கொடி என்பன அக் கிளைப் பிறப்பு. அவ்வாறே பிறவும் கொள்க. ஆய்வு ஐந்து வகை, உயிரிகளையும் சுட்டும் நூற்பாக்களின் அமைதி கண்டு, ஆறாம் அறிவு உயிரியைச் சுட்டும் நூற்பாவை மீண்டும் காண்க. மக்கள் தாமே ஆறறி வுயிரே என்னும் இந் நூற்பா, இவ் வோரடியால் முடிந்து விடவில்லை யா? ஐந்து நூற்பாக்களிலும் பிறவும் உளவே என்பதைப் படியெடுத்த கை, ஆறாவதும் அப்படியே எடுத்துவிட்டது என்பது புலப்படவில்லையா? மக்களைச் சுட்டிய அவர் மக்கள் தாமே என்று உறுதிப் படுத்தியமை புலப்படவில்லையா. பிறரைச் சுட்டவேண்டிக் கூறினார் எனின், அடுத்த அடியைப் பிறரும் உளரே அக்கிளைப் பிறப்பர் என்றல்லவோ யாத்திருப்பார்? இதன் விளைவு என்ன? மக்கள் தேவர் நரகர் உயர்திணை என நன்னூலாரை நூற்பா யாக்க வைத்ததென்க. தேவரும் நரகரும் வடவேங்கடம் தென்குமரி ஆயிடை வாழ்நரா? செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தரா? காழ் : ஓரறிவு முதலாகக் கூறிய ஆசிரியர் புறக்காழ், அகக்காழ் (வயிரம்), தோடு, இலை, காய் இன்னவற்றைக் கூறவேண்டுமானால் எங்கே கூறுவார்? கூறியிருப்பார்! இவ் வுயிரிகளைத் தொடர்ந்து தானே கூறி யிருப்பார். வைப்பு முறை தவறா வன்பிடியராகிய அவர் தம் கட்டமைதி அறிந்தார், இவ் விட்டமைதியைத் தெளிவாக அறிவர். 1532ஆம் நூற்பாவில் இருந்து 1585ஆம் நூற்பா வரை இடைப் பிற வர நூல் யாப்பாரா? அவர் வரன்முறைப்படியே ஆண்பாற் பெயர் பெண்பாற் பெயர் இவற்றை முடித்து, அந்தணர், அரசர், வைசியர், வேளாளர், மாந்தர் என்பார் பற்றி 1570 முதல் 1584 வரை கூறுகிறார். பின்னர் ஓரறிவுயிர் பற்றித் தொடர்கிறார். இவை அவர் வைப்பு முறை எனலாமா? எண்ணெயும் உண்மையும் இறுதியில் மேல்மிதக்கும் என்பது பழமொழி. இடைச்சேர்ப்பின் உண்மை வெளிப்பாடு இஃதென்க. இதனைப் பற்றி அப் பகுதியில் காணலாம். ஆண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் ஏறு - பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை, மரை, பெற்றம், சுறா. ஏற்றை - எல்லா ஆணுக்கும் பொது. ஒருத்தல் - புல்வாய், புலி, உழை, மரை, கவரி, கராம், யானை, பன்றி, எருமை. களிறு - வேழம், கேழல். சே - எருது. சேவல் - மயிலலாப் பறவை, குதிரை. இரலை - புல்வாய். கலை - புல்வாய், உழை, முசு. மோத்தை - ஆடு. தகர் - ஆடு. உதள் - ஆடு. அப்பர் - ஆடு. போத்து - பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய், நீர்வாழ்வன, மயில், எழால். கண்டி - எருமை. கடுவன் - குரங்கு. பெண்பாற் பெயர்களும் அவற்றைப் பெறுவனவும் பேடை - கோழி பெடை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெட்டை - ஒட்டகம், குதிரை, கழுதை, மரை. பெண் - மக்கள். பிணா - மக்கள். மூடு - ஆடு. நாகு - எருமை, மரை, பெற்றம், நந்து. கடமை - ஆடு. அளகு - கோழி, கூகை, மயில். மந்தி - குரங்கு, முசு, ஊகம். பாட்டி - பன்றி, நாய், நரி. பிணை - புல்வாய், நவ்வி, உழை, கவரி. பிணவு - பன்றி, புல்வாய், நாய். பிணவல் - பன்றி, புல்வாய், நாய். பிடி - யானை. ஆ - பெற்றம், எருமை, மரை. இவற்றைக் கூறிய ஆசிரியர், கூகையைக் கோட்டான் என்பதும், கிளியைத் தத்தை என்பதும், வெருகைப் பூசை என்பதும், பன்றியை ஏனம் என்பதும் பிறவும் சுட்டுகின்றார். இவ்வளவும் கூறியபின், பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என எடுத்த பொருளை முடித்ததைக் கூறுகிறார் (1569) ஒட்டுவேலை இதன் மேலே தொடர்கிறது நூற்பா: நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய (1570) மேலே அரசர்க்குரியவை. வைசிகற்குரியவை, வேளாண் மாந்தர்க் குரியவை இவை இவை எனக் கூறுகிறார். இழிந்தோர் என்று நாலா மவரைச் சுட்டுகிறார். இவற்றை முடித்து, புறக்காழ் தொடங்குகிறார். இவ்வாறு தொல்காப்பியர் அமைத்திருத்தல் இயலாது என்பதை அவர்தம் ஓரியல் ஓதினாரும் அறிவர். இவ் வியலிலேயே மாற்றருஞ் சிறப்பின் மரபு என்று தொடங்கி இளமைப் பெயர், ஆண்பாற்பெயர். பெண்பாற் பெயர் இன்னவை எனக் கூறினார். இளமைப் பெயர் இவை இவை பெறுமென (1503 - 1524) உரைத்து, சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையலது இலவே என முடித்தார் (1525). அதன்மேல் ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களை ஓதினார் (1526 - 1532). அந் நூற்பாவில், மக்கள் தாமே ஆறறிவுயிரே என்று கூறி ஆண்பாற் பெயரை (1533 - 1549) நிறைத்து, ஆண்பால் எல்லாம் ஆண் எனற் குரிய; பெண்பால் எல்லாம் பெண் எனற் குரிய; காண்ப அவைஅவை அப்பா லான என்றார் (1550). அதன்மேல் பெண்பாற் பெயரைக் கூறத் தொடங்கி, பிடியென் பெண்பெயர் யானை மேற்றே (1551) எனக்கொண்டு பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என முடித்தார் (1569). கூறிய இவை மாற்றருஞ் சிறப்பின் மரபுகள் என்பதில் தடையில்லை. ஆனால், நூலே கரகம், படையும் கொடியும், கண்ணியும் தாரும், வாணிகம் வேளாண் என்பவை மாற்றருஞ் சிறப்பினவா? மாறுவது மரபா? இளமை, ஆண்மை, பெண்மை என்பவை தற்கிழமை - தன் பிறப்புரிமை - கொண்டவை. பின்னே கூறியவையோ எடுத்தால் உண்டு. விடுத்தால் இல்லை. இவை பிறவியுரிமை எனின், இளமை போலவோ, ஆண்மை போலவோ, பெண்மை போலவோ பிறவியொடு வந்தவையா? எங்கேனும், பிறந்த பிறவி நூலொடும், படையொடும், குடை யொடும் ஏரொடும் பிறவொடும் பிறந்ததுண்டா? ஏன்? மானங்காக்கும் உடையொடு தானும் பிறந்ததுண்டா? மேல் தோல் - தற்கிழமை. உடை - பிறிதின் கிழமை. (கிழமை = உரிமை). கதை கட்ட வேண்டுமானால், கவசகுண்டலப் பிறப்புக் கூறிப்பொய்ப்பிக்கலாம். நடைமுறை ஆகுமா? இருதலை ஒட்டல், ஈருடல் ஒட்டல் நேரலாம். அவை பிறப்பொடு நேர்ந்தவை. இயற்கை இணைப்பு. செய்பொருள் தாய் வயிற்றினின்று வரும்போதே இருந்ததென்றால், சொல்பவர் சொன்னாலும் கேட்பவர்க்கு மதிவேண்டும் அல்லவோ! மரபொடு பொருந்தாத ஒட்டு ஒன்றை ஒட்டவே இயற்கையாய் அமைந்திருந்த தொடர்ச்சியை வெட்டி ஊடே தம் விருப்பத்தை ஒட்டி, வெட்டிய இயற்கைத் தொடர்பை மீண்டும் ஒட்டி வைத்தமை புலப்படுகின்றது. இவ்வொட்டு வேலை உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்பட்டது என்பது அவர்கள் உரை இப்பகுதிக்கும் உள்ளமையால் தெளிவாகும். அவர்கள் காலத்தில் வருணப்பிரிவுச் சிறுமை செய்தலும் ஏற்றலும் உணராவகையில் பழகிப்போய் விட்டன ஆகவேண்டும் அல்லது அவர்கள் ஒப்புக் கொண்டவை ஆகவேண்டும். ஏனெனில், அப் பிரிவை வலுவாக்கி உள்நாட்டிலும், மொழியாக்கம் செய்து வெளிநாட்டிலும் பரப்பிய ஆய்வுத் தோன்றல்கள், இருபதாம் நூற்றாண்டிலும் இருந்துள்ளமை கண்கூடாம் அல்லவோ! இனி, இடையொட்டுப் போகக் கடையொட்டையும் விட்டுவிட வில்லை. நூலின் மரபாக, மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான மரபுநிலை திரியின் பிறிதுபிறி தாகும் வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரைபடு நூல்தாம் இருவகை இயல முதலும் வழியுமென நுதலிய நெறியின வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் வழிஎனப் படுவது அதன்வழித் தாகும் வழியின் நெறியே நால்வகைத் தாகும் தொகுத்தல் விரித்தல் தொகைவிரி மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனைமர பினவே இவ்வளவுடன் நூலை நிறைத்துப் புறனடை கூறல் முறைமை. ஆனால், சூத்திரம் காண்டிகை நூற்குற்றம் உத்தி என்பவை தொடர்கின்றன. வழிநூல் முதனூல் என்பவும் ஊடு புகுகின்றன. நூற் புறனடை என்னத்தக்க நூற்பா ஊடு கிடந்து பாடிழந்து நிற்கின்றது. அது, நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிபில் சொல்லொடு தழாஅல் வேண்டும் என்பதாகும் (1589). ஐம்பூதக் கலப்பே உலகம் என்பதை இந் நாள் அறிவியல் அறிஞர் மெய்ப்பிப்பதை அந்நாளே கூறிய அறிவர் தொல்காப்பியர் எனின் எத்தகைய நுண்ணியர் அவர். பின்னொட்டு இனி, இம் மரபியல் ஒட்டுப்பகுதியெனக் கருதும் நூற்பாக்களில் வரும் சொற்கள் மூன்று, சுட்டத் தக்கவை. ஒன்று : உத்தி. இரண்டு : காண்டிகை. மூன்று : வைசியன். உத்தியும் காண்டிகையும் இவ் வொட்டில் அன்றித் தொல் காப்பியத்தில் இடம்பெறாதவை வைசியனோ, மிகப்பிற்படு சொல். தொகை, பாட்டு, கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம்வரை இடம்பெறாதது. அச் சொல் தொல்காப்பியத்தில் இடம் பெற்றமை இயல்பில்லை. செய்யுளியலில் நூல், சூத்திரம், இயல் முதலியவை இடம் பெற் றுள்ளன. அங்கே இடம் பெற்றிருக்க வேண்டும் மரபியலில் வரும் நூல், உரை முதலியன. தொல்காப்பியர் கூறும் சூத்திர இலக்கணம் : சூத்திரம் தானே, ஆடி நிழலில் அறியத் தோன்றி நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே என்பது (1425). இது செய்யுளியலில் உள்ளது. இனி, மரபியலில் வருவது, மேற்கிளந் தெடுத்த யாப்பின் பொருளொடு சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகி துளக்கல் ஆகாத் துணைமை எய்தி அளக்கல் ஆகா அரும்பொருட் டாகிப் பல்வகையானும் பயன்தெரி வுடையது சூத்திரத் தியல்பென யாத்தனர் புலவர் என்பது (1600). இரண்டு நூற்பாக்களும் ஒருவர் நூற்றவை தாமா? முன்னே கூறியதைப் பின்னேயும் கூறியதும் ஏன்? கூறவேண்டியிருப்பின், மேற் கிளந்தன்ன, முற்கிளந்தன்ன என்று கூறுதல் அன்றோ, அவர் நூன் முறை. ஆய்ஞர் முடிபு இத் தொல்காப்பிய ஆய்வில் தலைப்பட்ட புலமைச் செல்வர் இருவர் கருத்துகளை நாம் அறிதல் இம் மரபியல் ஒட்டின் தெளிவுக்கு உதவும். மக்களை நிலத்தாற் பிரித்துரைப்பதன்றி நிறத்தால் (வருணத்தால்) பிரித்துப் பேசுதல் பழந்தமிழ் மரபன்றாம். அயலாரால் இந் நாட்டில் பிற்றை நாளில் புகுத்தப்பட்ட நால்வகைச் சாதிப்பிரிவு, தொன்மை வாய்ந்த தொல்காப்பிய மரபியலிலும் பிற்காலத்தவரால் நுழைத்து உரைக்கப் பட்டுள்ளது. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாக உயிர்களுக்கு வழங்கும் மரபுப் பெயர்களை விரித்துரைக்கும் இவ்வியலில் 1 முதல் 70 வரை அமைந்த நூற்பாக்கள் முற்கூறிய மரபினையே விரித்துரைப்பனவாம். இவற்றின் பின் 86 முதல் 90 வரையுள்ள நூற்பாக்களும் இம் மரபினையே தொடர்ந்து பேசுவன. ஒன்றற்கு ஒன்று நீங்காத தொடர்புடையனவாய் அமைந்த இச் சூத்திரங்களின் இடையே, நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய என்பது முதல், அந்த ணாளர்க் கரசுவரை வின்றே என்பது முடியவுள்ள பதினைந்து சூத்திரங்களும், சிறிதும் தொடர்பற்ற நிலையிற் பின்வந்தவர் ஒருவரால் நுழைக்கப் பட்ட இடைச் செருகலாகும். இவை தொல்காப்பியனாரால் இயற்றப்பட்டன அல்ல என்பது சிறிது நூற் பயிற்சியுடை யார்க்கும் தெளிவாகத் தோன்றும். இவ்வாறே இவ் வியலில் சேர்க்கப்பட்டனவாக ஐயுறுதற் குரியனவும் சில உள என்பது முதுநூற் புலமையர் க. வெள்ளைவாரணனார் எழுத்து (தொல்காப்பியம் - தமிழிலக்கிய வரலாறு பக். 16). தமிழ்நெறிக் காவல் நூலாக எழுந்த தொல்காப்பியத்தை, ஆரிய வழி நூலாகக் காட்டி மாசு ஏற்றினோர் தம், மாசு துடைக்க என்றே தொல் காப்பியத்தை ஆங்கிலத்தில் பெயர்த்தும், விரிந்த ஆய்வுரை வரைந்தும், அதனாலேயே முனைவர் பட்டம் பெற்றும் தமிழ்ப் பெருங்காவலராகத் திகழ்ந்த பேராசிரியர் சி. இலக்குவனார், மரபுகளை விளக்கும் இம் மரபியல், ஆசிரியர் கூறிப்போந்தவாறு நமக்குக் கிடைத்திலது என்று எண்ண வேண்டியுள்ளது. தொகுத்தும் வகுத்தும் விரித்தும் கட்டுக் கோப்புக்கு உட்படுத்திச் சொல்லும் ஆற்றல் பெற்றுள்ள ஆசிரியர் போக்குக்கேற்ப மரபியல் அமைந்திலது. முறைபிறழ்ந்து கிடக்கின்றது. ஆசிரியர் கருத்துக்குப் பொருந்தாத செய்திகள் கூறப்பட்டுள்ளன. இடைச்செருகல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு நிற்கின்றது என்கிறார் (தொல்காப்பிய ஆராய்ச்சி. 249). மெய்ம்மை காண இப் பெருமக்கள் மேலாய்வு துணை யாம் என்பதால் இவண் எடுத்துக்காட்டலாயிற்று. தொல்காப்பியர் காட்டும் வாழ்வியல் தமிழர் வாழ்வியலே யன்றி அயலவர் வாழ்வியல் பற்றியதுமன்று; ஒட்டியதுமன்று என உறுதிப்படுத்துவோமாக. - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது நச்சினார்க்கினியர் தனிப்பெருஞ்சிறப்பு தமிழெனும் பெருங்கடற் பரப்பில் ஒரு கலஞ்செலுத்தி உலாக் கொண்டு, உயர்மணித் தொகுதிகளையெல்லாம் தொகுத்துப் பின்னவர்க்குக் கருவூலமென வைத்துச் சென்ற உரையாசிரியர் ஒருவர் உண்டென்றால் அவர் நச்சினார்க் கினியரே! அவரை அடுத்து எண்ணத்தக்க ஒருவர் யாப்பருங்கல விருத்தி உரைகாரரே! இன்னொருவர் அடியார்க்குநல்லார். எத்தனை நூல்களுக்கு உரை கண்டுள்ளார் நச்சினார்க்கினியர்! எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுளார்! வாழ்நாளை எல்லாம் முற்றாக உரை வரைதற்கெனவே பயன்படுத்திய பெருந்தகை நச்சினார்க்கினியரே. உரை கண்ட நூல்கள் பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட் டுங்கலியும் ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும் விருத்திநச்சி னார்க்கினிய மே என்னும் வெண்பாவுரைக்குமாறு தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகியவற்றுக்கு நச்சினார்க்கினியர் வரைந்த உரை நமக்கு வாய்த்துள்ளது. குறுந்தொகைக்குப் பேராசிரியர் வரைந்த உரை அகப்படாமை போலவே நச்சினார்க்கினியர் வரைந்த 20 பாடல்களின் உரையும் அகப்பட்டிலது. தொல்காப்பியம் முழுவதற்கும் உரை கண்டிருப்பினும் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல் ஆகிய மூன்றியல்களுக்கும் உரை கிடைத்திலது. `பாரத் தொல்காப்பியம்' என்னும் வெண்பா நச்சினார்க்கினியர் உரையை `விருத்தி' என்று கூறியிருப்பினும் தொல்காப்பியத்தில் காண்டிகை உரை என்னும் குறிப்பே உள்ளது. பத்துப்பாட்டு கலித்தொகை ஆகியவற்றிலும் `விருத்தி' என்னும் குறிப்பு இல்லை. ஆதலால் இவ்வெண்பாப் பாடியவர் விருத்தி என்று கருதினார் என்று கொள்ளலாம். நச்சினார்க் கினியர் கருத்து அஃதன்று என்றும் கொள்ளலாம். பெயரும் குடிவழியும் நச்சினார்க்கு (விரும்பினார்க்கு) இனியர் என்பது இறைவன் பெயர்களுள் ஒன்று என்பர். நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே என்பது அப்பரடிகள் தேவாரம் (4.66:1). இதில் பெயராக வந்திலது. இறைவன் இயலாகவே வந்துளது என்பது எண்ணத்தக்கது. அப்பரடி களுக்குக் காலத்தால் மிகப்பிற்பட்ட சிவஞானமுனிவரர், நச்சினார்க் கினியாய் போற்றி என்றதும் இயல்விளிப் பெயரேயாம். பெயரன்று என்பதறிக. இவற்றால் இவர் இயற்பெயர் வேறொன்றாக இருந்து இவர்தம் உரைச் சிறப்பறிந்தவர்கள் இப்பெயரை வழங்கியிருத்தல் வேண்டும். அதுவே இயற்பெயர்போல அமைந்துவிட்டது எனலாம். மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் என்று தொல்காப்பியம், பத்துப்பாட்டு ஆகியவற்றின் ஒவ்வொரு பகுதி நிறைவிலும் வருகின்றது. இக்குறிப்பை விளக்குவதுபோல், வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த ஆசான் பயின்ற கேள்விப் பாரத்து வாசன் நான்மறை துணிந்த நற்பொருள் ஆகிய தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன் நவின்ற வாய்மை நச்சினார்க் கினியன் என இவரைப் பற்றிய பாயிரப் பகுதி கூறுகின்றது. இவற்றால் இவர் மதுரையார் என்பதும் பாரத்துவாச கோத்திரத்தார் ஆகிய பிராமணர் என்பதும் புலப்படும். பாரத்துவாச கோத்திரத்தினர் வைணவர், சுமார்த்தர், மாத்துவர் என முப்பிரிவினர் என்றும் அவருள் இவர் சுமார்த்தர் என்றும் அத்வைதக் கொள்கையர் என்றும் கூறுவர் (உரையாசிரியர்கள் பக். 141; நச்சினார்க்கினியர் பக். 6, 7). சமயம் இவர் வேத வழிப்பட்ட நெறியினர் எனினும் `சிவச்சுடர்' எனப் பாயிரம் சொல்லுதலாலும் நூலில் வரும் சில குறிப்புகளாலும் சிவனெறிப் பற்றாளர் என்று கொள்ளலாம். எனினும் இவர்தம் சிந்தாமணி உரையைப் பயின்றாரும், அச் சிந்தாமணி யுரையை அச் சமய நோக்குக்கு முரணா வகையில் உரை வரைய வேண்டும் என்பதற்காகவே அச்சமயம் புகுந்து அழுந்தக் கற்று அதன் முன்னே தாம் எழுதிய உரையை விடுத்துப் புத்துரை செய்தார் என்று கூறப்படும் செய்தி அறிந்தாரும் நச்சினார்க்கினியர் சமயச் சால்பைப் போற்றாமல் இரார். ஒரு நூலுரை செய்தற்காகத் தம் வழிவழிச் சமயந் துறந்து வேறொரு சமயத்துப் புகுந்தார் என்பதினும், அக்கொள்கை களை அழுந்தக் கற்றார் என்பதே சிறக்கும். ஒருகால் அச்சமயத்தார்க்கன்றிப் பிற சமயத்தார்க்குக் கற்பித்தல் இல்லை என்னும் கடுநெறி ஒன்று இருந்திருக்குமானால் அச் சமயத்திற்கே புகழ் வருவதாக இல்லை. அதனை அச்சமயஞ் சார்ந்து பயின்று, பயின்று முடித்த பின்னர் அதனைத் துறந்து தம் சமயம் சார்ந்தார் நச்சினார்க்கினியர் எனின், இவர் சூழ்ச்சியாளர்; பயன்கருதிய இந்நாளைக் கட்சி மாறியர்போல் - சமய மாறியர் - என்ற பழியே இவர்க்கு எய்துவதாம். இவற்றின் இடையேயும் ஒரு பசுமையான செய்தி : ஒரு நூலுக்கு மரபு பிறழாமல் உரை வரைவதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டார் என்பதே. இச்செயல் இந்நாளைக்கு மட்டுமன்று எதிர் நாளைக்கும் இனிய வழிகாட்டும் மாண்பினதாம். காலம் நச்சினார்க்கினியர் உரை வழியால் இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர் ஆகிய தொல்காப்பிய உரையா சிரியர்களுக்கும், நன்னூல் பவணந்தியார், திருக்குறள் பரிமேலழகர், சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் ஆகியோர் களுக்கும் பிற்பட்டவர் இவர் என்பதற்குச் சான்றுகள் உண்மையால் 14ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியினர் என்பது தெளிவாகும். தமிழ்ம்மை தத்தம் புதுநூல் வரிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகை களுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூற வேண்டும் என்றுணர்க என்றும் (புறத். 35), இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற் றுறைகள் பலருங் கூறுவரால் எனின், அவை உலகியலாகிய அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வன வாகலிற் றமிழ் கூறு நல்லுலகத்தன அல்லவென மறுக்க என்றும் (புறத். 12), அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றா ரென்பது உணர்தற்கு னகர இறுவாய் என்றார் என்றும் (நூன். 1), தானே என்று பிரித்தார், இவை தமிழ் மந்திரம் என்றற்கும், மந்திரந்தான் பாட்டாகி அங்கதம் எனப்படுவன வுள, அவை நீக்குதற்கும் என்றுணர்க என்றும் (செய். 178) இன்னவாறு கூறுமிடங்களில் தமிழ் வரம்புக்குரிய நூல் தொல்காப்பியம் என்பதை உணர்ந்து கூறுகின்றார். அதனைப் போற்றுதல் கடப்பாட்டையும் வலியுறுத்துகிறார். எதிரிடை பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப (கற். 4) என்னும் நூற்பாவில், ஈண்டு `என்ப என்றது முதனூலாசிரியரை யன்று; வடநூலோரைக் கருதியது என்கிறார். இவ்வாறு எதிரிடைப் போக்கில் அல்லது வலிந்த நோக்கில் செல்வதால் தாம் சுட்டிய தமிழ் நெறியைத் தாமே சிதைப்பவராக உரை வரையத்துணிந்தார். அதனால், அங்கியங் கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார் (கற். 1) என்றும் முற்காலத்து நான்கு வருணத் தார்க்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது (கற். 2) என்றும், மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையாற் பள்ளி செய்து ஒழுகி; ஆன்றோராவார் மதியும் கந்தருவரும் அங்கியும் என்றும் (கற். 5) கூறுவதும், அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கம் என்பதன் (புறத். 20) உரை விளக்கங்களும், வேத முடிபு (அகத். 5), வேத நெறி அன்மை (அகத். 11), வேத நூலுள் இழைத்த பொருண் முடிபு (அகத். 28), வேதத்தையே (அகத். 31), வேதவிதி (புறத். 2), வேத முடிபு (கள. 8) என நெடுகலும் கூறிச் செல்லுதலும் அவர் எடுத்துக் கொண்ட நூலின் தடத்தை மாற்றி எங்கோ இட்டுச் செல்லுதல் தெளிவாகின்றது. கந்தருவநெறிக்கும் களவு நெறிக்கும் உள்ள வேறுபாட்டை, கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது என்றற்குத் துறையமை என்றார் என்று பிறர்க்கு இல்லாத் தெளிவு காட்டும் திறத்தார் நச்சினார்க்கினியர் (கள. 1) என்பதை மறக்க முடியாது. அறிந்தே செய்யும் பிழை காலம் உலகம் என்னும் சொற்களை வடசொற்களாகச் சேனாவரையர் கூற, காலம் உலகம் என்பன வடசொல் அன்று. ஆசிரியர் வடசொற்களை எடுத்தோதி இலக்கணம் கூறாராகலின் (சொல். 58) என்று ஆசிரியர் ஆணை கூறுபவர் நச்சினார்க்கினியர். இவர் அகர இகரம் ஐகாரமாகும், அகர உகரம் ஔகாரமாகும் என்னும் நூற்பாக்களின் உரைகளில் அகரமும் இகரமும் கூட்டிச் சொல்ல ஐகாரம்போல இசைக்கும்; அது கொள்ளற்க; அகரமும் உகரமும் கூட்டிச் சொல்ல ஔகாரம் போல இசைக்கும்; அது கொள்ளற்க என்று எழுதுதல், நூலாசிரியர் கருத்துக்கு மாறு கொளல் என்பது தெளிவாகின்றது. மேலும், ஆகும் என்றதனான் இஃதிலக்கணம் அன்றாயிற்று என்றும் கூறுகிறார். இஃது இவர் அறியாமை யால் செய்வதன்று என்பது விளங்குகின்றது. சில இடங்களில் வலிந்து சூத்திரங்களை நலித்துப் பொருள் கூறும் வழக்கினை இவர் மேற்கொண்டவர் என்பதும் அதையும் உணர்ந்து கொண்டே செய்தார் என்பதும் விளங்குகின்றது. அளபிறந் துயிர்த்தலும் எனவரும் நூன்மரபு நூற்பா (33) விளக்கத்தில், சூத்திரத் துட்பொருள் அன்றியும் யாப்புற இன்றி யமையா தியைபவை எல்லாம் ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே என்னும் மரபியற் சூத்திரத்தானே (103) இவ்வாறே சூத்திரங் களை நலித்துப் பொருளுரைப்பன வெல்லாம் கொள்க என இவர் எழுதுதல் இவர் தம் உட்கோளைத் தெளிவாக்கும். “வரகு, கொற்றன் ஈரெழுத் தொருமொழி; அகத்தியனார் ஐயெழுத்தொருமொழி; திருச்சிற்றம்பலம் ஆறெழுத் தொரு மொழி; பெரும்பற்றப் புலியூர் ஏழெழுத்தொரு மொழி” என்று அவர் எழுத்தெண்ணிக் காட்டுதல் (குற்றியலுகரம், மெய்களை நீக்கி எண்ணிக் காட்டுதல்) செய்யுளியற் கோட்பாட்டை உரை நடைக் கோட்பாடாக்கிக் காட்டும் முறையல்லா முறையாகி விடுகின்றது. கரணம் வடநூல் பற்றியது எனப் பல்கால் கூறும் நச்சினார்க்கினியர் காட்டும் மேற்கோள்களோ அகம். 86, 136ஆம் பாடல்களாம். அவற்றில் அங்கியங் கடவுளோ அறிகரியாக மந்திர வகைக் கரணமோ ஒன்றும் இல்லாமை எவர்க்கும் வெளிப்பட விளங்கியும்கூட, கரணங்கள் நிகழ்ந்தவாறும் தமர் கொடுத்தவாறும் காண்க என்று துணிந்து கூறுகிறார். இந்நிலை நூற்கருத்துக்கோ நூலாசிரியர்க்கோ பெருமை தருவது இல்லை என்பது பற்றிக் கவலை கொண்டார் இல்லை எனலாமா? தம் கொள்கையை நூலாசிரியர் தலையில் கட்டிவிடுதல் எனலாமா? ழ, ள என்னும் இரண்டு எழுத்துகளும் பிறப்பு செய்கைகளில் ஒவ்வா என்பதை உணரும் நச்சினார்க்கினியர், ழகாரமும் ளகாரமும் ஒன்றானும் இயைபில வேனும் `இடையெழுத் தென்ப யரல வழள (எழுத். 21) என்றாற் சந்தவின்பத்திற்கு இயைபுடைமை கருதிச் சேரவைத்தார் போலும் என ஆசிரியர் வைப்பு முறைக்குச் சான்று தேடிக் காட்டிச் சிறப்புச் செய்கின்றாரே! (நூன். 1). கண்ணிமை நொடியென ஆசிரியர் வைப்பு முறை செய்ததை, நொடியிற் கண்ணிமை சிறப்புடைத்து, உள்ளத்தான் நினைத்து நிகழாமையின் என்று எவ்வளவு கூர்ப்புடன் உரைக்கிறார்! (நூன். 7). இவ்வாசிரியர் நூல் செய்கின்ற காலத்து வினைத் தொகைக் கண்ணும் பண்புத்தொகைக் கண்ணும் அன்றி ஒரு மொழிக் கண்ணே மயங்குவனவும் உளவாதலின், அவற்றைக் கண்டு இலக்கணங் கூறினார். அவை பின்னர் இறந்தன வென்று ஒழித்து உதாரணம் இல்லனவற்றிற்கு உதாரணங் காட்டாமல் போதலே நன்றென்று கூறலும் ஒன்று என்று எவ்வளவு சால்புடன் கூறுகிறார்! (நூன். 24). காரும் மாலையும் முல்லை என்னும் ஆசிரியர் நூற்பா நடைக்கு, முல்லைப் பொருளாகிய மீட்சிக்கும் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன் விரைபரித்தேரூர்ந்து பாசறை யினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉங்காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆகலின், அவை வெப்பமும் தட்பமும் மிகாது இடை நிகர்த்தவாகி ஏவல் செய்து வரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும் ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலின் களி சிறந்து மாவும் புள்ளும் துணையோடின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்கும் தலைவிக்கும் காமக் குறிப்பு மிகுதலானும் என்பது. புல்லைமேய்ந்து கொல்லேற்றோடே புனிற்றாக் கன்றை நினைந்து மன்றிற் புகுதரவும் தீங்குழல் இசைப்பவும் பந்தர் முல்லை வந்து மணங் கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்கும் காமக் குறிப்புச் சிறத்தலின் அக்காலத்து மாலைப் பொழுதும் உரித்தாயிற்று என்று எதுகை மோனை இயற்கையழகு கொஞ்சும் உரைப்பாட்டு இலக்கிய நடையில் எழுதுகின்றார் நச்சினார்க்கினியர் (அகத். 6). நூலாசிரியரோடு ஒப்ப ஒரு நூலாசிரியராயன்றோ திகழ்கின்றார்! இவ்வாறாகவும், வலிந்தும் நலிந்தும் சில இடங்களில் இவர் கூறியுள்ள உரை - ஆசிரியர் நூலுக்கும் தமிழர் நெறிக்கும் ஒவ்வாது இவர் கூறியுள்ள உரை - நடுவுள்ளங்கொண்டு நாடுவாரையும் வருத்தும். இது போன்ற உரைகளையெல்லாம் தொல்காப்பியர் காண நேர்ந்தால் எத்துணை நொந்து போவார். இவற்றையெல்லாம் படித்துவிட்டு இத்துணைக் காலம் தமிழுள்ளம் மரக்கட்டையாகவே இருந்து வந்திருப்பதுதான் வியப்பாகும் என்றும் நச்சினார்க்கினியர் பிற சமயங்களை வெறுத்துப் பேசாதவராயினும் வேத வைதிகப் பற்றுமிக்கவர். ஆனால் வேண்டாத இடங்களிலெல்லாம் `வேதம் வேதம்' என்று கூறிக் கொண்டே இருப்பதால் அவரது வேதப் பற்றைக் கண்டு நாம் சலிப்படைகிறோம் என்றும், அவருடைய காலத்தில் தமிழைப் பொறுத்தமட்டில் அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலவே விளங்கியிருப்பார். இங்கிலாந்து நாட்டில் ஜான்ஸன் காலத்தில் ஜான்ஸன் ஆங்கில மொழியின் சர்வாதிகாரியைப் போல விளங்கினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் நச்சினார்க்கினியரை அப்படி நினைத்துக்கொள்ளலாம். பாட்டின் சொல்லமைப்பை அவர் எப்படிச் சிதைத்தாலும் பண்டிதர் பரம்பரை வழிவழியாக அவரைப் போற்றி வந்திருக்கின்றமையும் நினைக்கத்தக்கது என்றும் வருவன (நச்சினார்க்கினியர் - பேரா. மு. அண்ணாமலை) தெளிந்து கூறிய தேர்ச்சி யுரைகளாம். உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர் என்பது முதுவோர் உரை! அவ்வுள்ளது சிதைப்பதை உணர வாய்த் திருந்தும், உணர்த்தக் கேட்டும் - கற்றும் - இருந்தும், இந் நூற்றாண்டின் இடைக்கால ஆய்வுக்கள மேலாண்மையரும் நச்சினார்க்கினியர் சிதைவுக்கு விளக்கங்கூறியே விழுப்பம் எய்தினர் என்னும்போது அக்காலச்சூழலில் நச்சினார்க்கினியர் சில இடங்களில் தடம் மாறி உரை வரைந்தது வியப்பும் இல்லை! பரியதோர் குறையும் இல்லை! நச்சினார்க்கினியர் புலமை, `ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமைக்கும் ஏமாப் புடைத்து' என்பதற்குச் சான்றாவது; எத்தனை உவமைகள்! எத்தனை எடுத்துக் காட்டுகள்! எத்தனை வரலாற்றுப் பின்னல்கள்! எத்தனை சிறப்புப் பெயர்கள்! ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு `ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்' என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப (நூன். 2). கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப் பிறந்த செவ் வண்ணம் போல நெடிலுங் குறிலுங் கூடிய கூட்டத்துப் பிறந்த பின்னர்ப் பிளவுபடா ஓசையை அளபெடை என்று ஆசிரியர் வேண்டினார் (நூன். 6). அகரந் தனியே நிற்றலானும் பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை யுடைத்தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல (நூன். 8). ஒன்றரை மாத்திரையும் இரண்டரை மாத்திரையும் உடையன (வாகிய உயிர் மெய்கள்) ஒரு மாத்திரையும் இரண்டு மாத்திரையும் ஆயவாறு என்னை எனின், நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரை நாழி யுப்பில் கலந்துழியும் கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பெற்றி (நூன். 10). இவை நூன்மரபில் நச்சினார்க்கினியர் காட்டும் உவமைகள். நச்சினார்க்கினியர் உரையால் மட்டுமே அறியப்படும் நூல்கள் சில உள. அவற்றுள் சீரிய ஒன்று `பெரும் பொருள் விளக்கம்' என்பது. அந்நூலைப் புறத்திரட்டு வழியால் பெயரறிந்து கொள்ளவும் ஒப்பிட்டுக் காணவும் வாய்க்கின்றது. புறத்திரட்டில் காணாத பாடல்கள் மிகப் பல புறத்திணை இயலில் இடம் பெற்றுத் தனி நூலாகி உள்ளன. களவியல் கற்பியல்களிலும் புறத்திணையியலில் காணப்படும் பெரும் பொருள் விளக்க வெண்பாக்களை அன்னவை, எடுத்துக்காட்டாக இலங்குகின்றன. அவற்றை நோக்க அகப்பொருள், புறப்பொருள் இரண்டும் கூடிய பொருளின் முழுப்பரப்பும் தழுவிய நூலாக அந்நூல் இருந்திருத்தல் கூடுமென எண்ண இடமாகின்றது. தகடூர் யாத்திரை, ஆசிரிய மாலை என்பவற்றிலிருந்தும் அரிய பாடல்களைப் பரிசிலென வழங்குகின்றார் இனியர். வரலாற்றுச் செய்தி புறத்திணையியலில் நச்சினார்க்கினியர் காட்டும் வரலாற்றுச் செய்திகள் மிகப் பலவாம். ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர் செல்லாது தன் மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின் அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான் செல்வுழித் தகடூரிடை அதியமான் இருந்ததாம் (புறத். 7). அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்களை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் பொன்முடியார் ஆகியோர் பாடிய தகடூர் யாத்திரைப் பாடல் களைக் குறிக்கிறார் (புறத். 8). பெருங்கோழி நாய்கன் மகள் ஒருத்தி (நக்கண்ணையார்), ஒத்த அன்பினாற் காமுறாதவழியும் குணச்சிறப்பின்றித் தானே காமுற்றுக் கூறியதை, காமப்பகுதி கடவுளும் வரையார் என்னும் நூற்பாவில் (புறத். 28) எடுத்துக்காட்டுகிறார். தமிழகத்துச் செய்தியாம் இவையன்றி அக்காலத்தில் தமிழில் வழங்கிய இராமாயண பாரதப் பழநூல்களில் இருந்து (அவை அகவற் பாவால் இயற்றப்பட்டவை) மேற்கோளும் செய்திக் குறிப்பும் காட்டுகிறார். கொள்ளார் தேஎங் குறித்த கொற்றத்திற்கு (புறத். 12) இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது என்கிறார். செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ, ஒருவன் மண்டிய நல்லிசை நிலை என்பதற்கு (17) குருகுல வேந்தனைக் குறங்கறுத்த ஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர் மக்கள் ஐவரையும் கொன்று வெற்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன என்கிறார். இவ்வாறு இராமாயண பாரதச் செய்திகளை எடுத்துக்காட்டுவதுடன் தொன்ம (புராண)ச் செய்திகளையும் சுட்டுகிறார். இரணியனைப் போல வலியானும் வருத்தத்தானும் கூறு வித்துக் கோடல் வாகையன்றாயிற்று என்பது ஒன்று (புறத். 19). `முழுமுதல் அரணம்' என்பதை விளக்கும் நச்சினார்க் கினியர் (புறத். 10), முழு அரணாவது மலையும் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுள் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமு மெய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து எழுவும் சீப்பும் முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற்கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம் எனச் செறிவு மிகக் கூறுகிறார். இனி இதே நூற்பாவில், சிறப்புடை அரசியலாவன: மடிந்த உள்ளத்தோனையும், மகப்பெறாதோனையும், மயிர் குலைந் தோனையும், அடிபிறக்கிட்டோனையும், பெண்பெய ரோனையும், படை இழந்தோனையும், ஒத்தபடை எடாதோனை யும் பிறவும் இத்தன்மையுடையோரையும் கொல்லாது விடுதலும் கூறிப் பொருதலும் முதலாயினவுமாம் என்று சொல்ல வேண்டும் என்னும் ஆர்வத்துடிப்பால் இயைத்துக் கூறுகின்றார். தெளிபொருள் குற்றியலிகரம் உயிரா? ஒற்றா? இதனை இந்நாளிலும் ஒற்று என்பார் உளர். ஊர்ந்தெனவே குற்றியலிகரமும் உயிரென்பது பெற்றாம். உயிர்க்கல்லது ஏறுதலின்மையின் என்கிறார் (மொழி. 1). இராக் காக்கை, இராக் கூத்து எனவரின் இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து எனப் பொருள் தரும் என்றும், இராஅக் காக்கை, இராஅக் கூத்து எனவரின் இராத என்னும் எதிர்மறைப் பெயரெச்சப் பொருள் தரும் என்றும் விளக்குகிறார் (உயிர். 25). இவ்வாறு மயக்கம் அறுக்கும் இடங்கள் பலவாம். இல்லொடு கிளப்பின் இயற்கையாகும் என்பதற்குக் கோவில் என்று எடுத்துக்காட்டுக் கூறுகிறார் (உயிர். 91). அது கோயில் என்றே இருந்திருக்கும். படியெடுத்தோர் பிழையோ என எண்ண வேண்டியுளது. இளம்பூரணர் மரபு நிலை மாற்றாமல் கோயில் என்றே கொண்டார் என்பது அறியத்தக்கது. கோவில் என்பது 19ஆம் நூற்றாண்டு உரைநடைக் காலத்து வந்த தவறான புது வழக்கு. வழக்குகள் புடோலங்காய் என்பதைப் புள்ளிமயங்கியல் புறநடையில் (110) எடுத்துரைக்கிறார் நச்சினார்க்கினியர். புடலங்காய் என்பது அவர் காலத்தில் அவ்வாறு வழங்கிற்றுப் போலும்! ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க என்கிறார் (உயிர். 67). இவ்வாறு காலவழக்கு இடவழக்கு ஆகியவற்றைச் சுட்டுதலையும் இவர் வழக்காகக் காணலாம். மாட்டின் விளைவு `மாட்டு' என்பதோர் இலக்கணத்தைத் தொல்காப்பியர் செய்யுளியலில் கூறுகின்றார். ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைப்பார் போல அவ்விலக்கணம் கொண்டு நச்சினார்க் கினியர் மாட்டிச் செல்லும் தனிச் செலவில் அவர்க்கு ஒப்ப ஒருவர் இதுகாறும் இருந்தார் இலர். அம் மாட்டுரையே, முல்லைப் பாட்டு, பட்டினப்பாலை முதலியவற்றுக்கு மறைமலையடிகளாரைப் புத்துரை காண ஏவிற்று. நெடுநல் வாடை, முருகாற்றுப்படை ஆகியவற்றுக்குக் கோதண்டபாணி யாரை நயவுரை காணத் தூண்டிற்று! இவருரையில் அமைந்துள்ள சில நூற்பாக்களின் பொருட்போக்கே நாவலர் பாரதியாரைத் தொல்காப்பியப் புத்துரை காண அழுத்திற்று. இவையும் நச்சினார்க்கினியர் கொடையெனின் கொள்ளத் தக்கவாம். ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ? என்னும் சாமிநாத தேசிகர் உரையே, தனித்தமிழ் இயக்கம்காண எதிரிடைத் தூண்டல் ஆயிற்று அல்லவோ! எதிரிடைப் பயனும் ஏற்புடைப் பயனாதல், எண்ணுவார் எண்ணத் திண்மையும் எழுச்சிச் செயற்பாடும் பற்றியவை. மற்றையரோ நீரில் கரைந்த மண்ணாகி நெளிந்து போய்விடுவர். - இரா. இளங்குமரன் தமிழ்வளம் -19, தமிழர் வாழ்வியல் இலக்கணம் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது பொருளதிகாரம் நச்சினார்க்கினியம்-1 முன்னைந்தியல் சி. கணேசையர் - 1948 முதற் பதிப்பு 1948இல் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்திற் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்புகளை அடிப்படையாகக் கொண்டு மீள் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. அணிந்துரை உலகியல் விளக்க நூலாசிரியரும் பரமேவரக் கல்லூரித் தலைமைத் தமிழ்ப் போதகாசிரியரும் பண்டிதமணியுமாகிய மாவை.பிரமஸ்ரீ க.க. நவநீதகிருஷ்ணபாரதியார் அவர்கள் எழுதியது ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப் பியனடி பல்காற் பரவுதும் எழுத்தொடு சொல்கா மருபொருட் டொகைதிகழ் பொருட்டே தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் இவ்வுலகத்து இப்பொழுது வழங்கிவருகின்ற மொழிகள் சற்றேறக் குறையத் தொள்ளாயிரத்துக்கு மேற்பட்டவை என்ப. அவற்றுள் அன்று தொட்டின்றுவரையும் அழிந்தொழியா துய்ந்து வரும் மொழிகள் இபிரேயம், கிரீக்கு, இலத்தீன், சமகிருதம், தமிழ் என்னு மைந்துமேயென ஆராய்ச்சியாளர் கூறாநிற்பர். இவ்வைந்து மொழிகளுள்ளும் தமிழ் ஒழிந்த ஏனைய நான்கு மொழிகளும், பலநூற்றாண்டுகட்கு முன்பே உலகவழக் கழியப் பெற்று, நூல்வழக்கொன்றின்கண்ணேயே நிலைத்து வருகின்றன. தமிழ்மொழியோ அன்று முதலின்று காறும் நூல் வழக்கினும் உலக வழக்கினும் நிலைபெற்றுவருஞ் சிறப்புடையது. தெலுங்கு கன்னடம் முதலாய பல மொழிகளும் இத் தமிழ்மொழி யினின்றுந் தோன்றி யுள்ளன. இம்மொழி, பிறமொழித் துணையின்றித் தானே தனித்தியங்கும் பேராற்றல் பெற்றது. மொழி யுலகமே முன்பின் கண்டிராத காதல்கனிந்த அகப்பொருளிலக்க ணத்தையும், வீரம்வீறிய புறப்பொருளி லக்கணத்தையும் தன்பாற் கொண்டு மிளிர்வது. அன்றுமின்று முள்ள தமிழ்ப் புலவர்கள் எல்லோரும் தமிழ் மொழியை அமிழ்தத் தமிழே! ஆருயிர் மருந்தே! பசுந்தமிழ்க் கொழுந்தே! விசும்புறவரு தமிழ்மணியே! என்றாங்கு விளித்துப் போற்றுவது வழக்காறாகவுள்ளது. வடமொழி முதலாய பிற மொழிகளிலோ கலைகளைத் தெய்வமாகப் பொதுப்படக் கோடலன்றி, இங்ஙனம் தத்தம் மொழிகளை விளித்துக் கூறுவது காணப்பட்டிலது. இதுவும் தமிழ்க்கென வாய்ந்த தனிச்சிறப்பே. சொற்களின் தொடர்ச்சிகளா லறியப்படும் அல்வழி வேற்றுமைப் பொருட் கூறுபாடுகளை, அச்சொற்கள் தம்முட் புணரும் புணர்ச்சியா லடையப்பெறும் இயல்பும் விகாரமுமாகிய செய்கைகளால் புலப்பட வைக்கும் சிறப்பு. இத் தமிழ்மொழிக்கன்றி வேறு மொழிகட்குள தாமே? புலவன் தான் பாட எடுத்துக்கொண்ட பொருட்குரிய செய்யுட் கேற்ப நுண்ணிதாக அசைவுறும் அளவொலியும், அவை தம்முள் ஏற்றவாறு அமைந்தொலிக்கும் எழுத்தொலியும் அங்ஙனமே அவ்வெழுத்துத் தனித்தும் பிறவற்றோடு சேர்ந்தும் அசைவு பெற்றொலிக்கும் அசையொலியும், அவ்வசையொலியே ஏற்ற பெற்றி அளவாகப் பொருள்பெறத் திரண்டொலிக்கும் சீரொலி யும், அங்ஙனம் அசையானும் சீரானும் பொருள் திரண்டொன்று பட்ட அடியொலியும், அவ்வடியொலி தோறும் அப்பொருளறுதி பெற்று நிலைபெறச்செய்யும் யாப்பும். காலமுமிடமும் பற்றி மாறுபடுகின்ற வழக்கிற்கேற்ப வழுவுறாமற்செய்யும் மரபும், அடியோசையால் நிறைவுபெற்ற பொருள் நிரம்பிய ஓசைத் தொகுதியைத் துணித்து நிறுத்துவைக்கும் தூக்கும், அடிகாரணமாகச் சொல்லாலும் பொருளாலும் தொடுக்குந் தொடையும், நுண்ணொலியான மாத்திரை முதலாக உறுப்புகளுடைய பகுதிகளைக் கேட்போரை, அச் செய்யுளின் முதற் பொருளையே நோக்க வைக்கும் நோக்கும், இன்ன செய்யுளென்று அறிந்து கோடற் கேதுவாய பரந்துபட்ட செய்யுளோசையும் என்பனவாதி யாகச் செய்யுளுக்கென வகுக்கப்பட்ட இருபத்தாறுறுப்பும் பிறமொழிகளில் ஒருங்குடன் காணப்பெறா. க - ங; ச - ஞ; ட - ண; த - ந; ப - ம; என்னு மிவற்றிடையே மும்மூன்றெழுத்தொலிக ளுள்ளன. இவ்வைந்துவகைப்பட்ட எழுத்தொலிக் கூட்டங்களை, பஞ்சவர்க்கம் என வடமொழி யாளர் கூறுவர். அவ்வைந்தனுள்ளும் முதலுமிறுதியுமாகவுள்ள எழுத்துகளே தமிழில் உள்ளன. அங்ஙனமிருப்பினும், அவ்வவ் வருக்கத்திடைப்பட்ட எழுத்துகள் பலவும் தமிழ்ச்சொற்களி டையே ஆங்காங்கொலித்துவருதல் கண்கூடு. ஆயினும், அவற்றுக் குரிய தனிப்பட்ட வரிவடிவுகள்தாம் தமிழ்நெடுங் கணக்கிலில்லை. க, ச, ட, த, ப, என்னுமைந்தனையுமே வரிவடிவிற் கொண்டு, ஏனைய அவ்வவற்றின் வேறுபட்ட ஒலிகளைச் சொற்களிடத்தே கொண்ட தமிழ் மொழியானது, எல்லா ஒலிகளையும் தனித்தனி எழுத்துகளாகத் தம்முட் கொண்ட வடமொழி முதலாய ஏனைய மொழிகட்கெல்லாம் மிக முற்பட்டதொரு தொன்மொழியா மென்பது வெளிப்படை. மிகப் பழைய காலத்தே, வடமொழி முதலியவற்றிலுள்ள எல்லா எழுத்துகளையும் மக்கள் உச்சரிப்பார் என்பது இயலாத தொன்று. தமிழ் எழுத்துகளையே இலகுவில் உச்சரித்துக் கொள்வர் என்பது மிகையாகாது. சொற்களைப் பேசத் தொடங்கும் காலத்தும், முடிக்குங் காலத்தும் வர்க் என்ற ஓசைகள் அமைந்த எழுத்துகளால் பிறமொழிகளில் உச்சரிப்பது போல அக்கால மக்கள் உச்சரிக்க மாட்டார் என்பது வெளிப் படை. இத் தமிழ் மொழியிலோ சொற்கள், இயல்பாகிய ஓசை யினால் முதற்கண் தோன்றப்பெற்று, இடைக்கண் இயல்போசைக் குள்ளேயுள்ள வர்க் என்ற ஓசைகளமைந்து, இயல்பாய ஓசை யெழுத்துகளால் முடிவுறும் பெற்றியனவாகப் பண்டைத் தமிழுலகத்து வழங்கப்பட்டு வந்தன. இயல்பான எழுத்தொலிகளையும், அவற்றை முற் கூறியாங்குப் பேசும் வகையினையும் உற்றுநோக்கில் ஏனைய மொழிகட்கெல்லாம் இத் தமிழ்மொழி எத்துணைத் தொன்மை யுடைத்தென்பது போதரும். இவ்வியல் பெல்லாம் மற்றைய மொழிகட்கில்லை யென்பது மிகையாகாது. அன்றியும், கற்றோன்றி, மண் தோன்றாக் காலத்தே மலை யிடத்திலே தோன்றிய தமிழ்மக்கள் மொழியாதலானும் அதன் தொன்மை விளங்கும். நிற்க: தொல்காப்பிய வரலாறு அறிந்த வரையில் இத் தமிழ்மொழிக்குத் தொன்மையாக வுள்ள இலக்கண நூல் அகத்தியமேயாகும். இந்நூல், இயலிசை நாடகம் என்னும் முத்தமிழிலக்கணங்களையும் கூறுவதென்பர். தலைச்சங்கத்துக்கும் இடைச்சங்கத்துக்கும் இலக்கணமாக இருந்ததும் இந் நூலே அகத்தியமுனிவர்பால் இந்நூலைப் பாடங் கேட்ட தொல்காப்பியனார் முதலிய பன்னிரு மாணவரும் ஒருங்கு சேர்ந்து பன்னிருபடலம் என்னும் இலக்கண நூலையும், தொல்காப்பியனார் இயற்றமிழிலக்கண மாகிய தொல்காப்பியத் தையும் இயற்றினர் என்ப. தொல்காப்பியம், எழுத்துச் சொற் பொருள் என்னும் மூன்றதிகாரங் களையும், ஒவ்வோரதிகாரங் கட்கும் ஒன்பதொன்பதியல்களாக இருபத்தேழியல்களையும் ஆயிரத்தறு நூற்றுப்பத்து நூற்பாக்களையும் உடையது. தொல்காப்பியம் தொடங்கிய பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டுப் பேராசிரியர்கள் தத்தம் மாணவர்கட்குத் தாந்தாமே பாடஞ்சொல்லி வருவாராயினர். இங்ஙனம் மரபுமரபாகப் பல்கி நூற்கு உரைநுவல வந்தவர்கள் தத்தமக்குத் தோன்றியவாறே உரைவிரிப்பாராயினர். அதனால் முரண்பாடுகொண்ட பல திறப்பட்டவர்களாகித் தாந்தாம் நுவல்வதே மெய்யுரையாகக் கொண்டு வாதாடியும் வருவாராயினர். இங்ஙனம் பல நூற்றாண்டுகள் கழிந்தன. இக் குறைபாடுகளையெல்லாம் களைந்து, தொல்காப்பிய மெய்ப்பொருளை உலகம் கண்டுய்யும் வண்ணம், பேரருளே காரணமாக முதன்முதலில் இளம்பூரண வடிகள் தொல்காப்பிய நூற்கடலுட் புக்குத், தமது நுண்மாண் நுழை புலனைச் செலுத்திப் பெறலரும் பொருள்களை ஆராய்ந் தெடுத்துரை வகுத்தனர். இவரே முதன்முதலில் உரை வகுத்தா ரெனக் கொண்டு இவரையே உரையாசிரியர் என்பாரும், உரை யாசிரியர் வேறொருவர்; அவர் இவர்க்கு முந்தியவர் என்பாரு முளர். இளம்பூரணவடிகளியற்றிய உரை மூன்றதிகாரங்கட்கும் இப்போது முளது. அஃது அச்சிடப்பட்டு வெளிவந்துமுளது. அதன்பின்னர், வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனா வரையர், தம் மதிநுட்பத்தால் சொல்லதிகாரத்துக்கு மட்டும் உரை கண்டார். அவ்வுரையும் அச்சாகி வெளிவந்துளது. பேராசிரியருரை பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் முதலாகவுள்ள ஐந்தியல்களுக்குமே வெளிவந்துளது. உற்றுநோக்கின் முழுவதற்கும் இவர் உரை கண்டாரென அறியக் கிடக்கின்றது. நச்சினார்க் கினியம், எழுத்ததிகாரத்துக்கும், சொல்லதிகாரத்துக்கும், பொருளதிகாரம் அகத்திணையியல் முதலிய ஐந்தியல்கட்கும், செய்யுளியலுக்கும் மட்டுமே வெளிவந்துளது. பொருளதி காரத்தின் ஏனைய பகுதிகள் வெளிவந்தில. கல்லாடர் சொல்லதிகாரத்துச் சிலபகுதிகட்கு மட்டும் உரைவகுத்தார். அவருரையின் சிற்சில பகுதிகளேயன்றி, முழுவதும் அச்சிடப்பட்டு வெளிவந்திலது. தெய்வச் சிலையாருரை சொல்லதிகாரத்துக்கே அச்சாகி வெளி வந்துளது. இவ்வரலாறு இங்ஙனமாயினும், இன்ன இன்னபகுதி கட்கு இன்னாரின்னார் தாம் உரைவகுத்தார் என அறுதியிட்டுரைத்தல் சாலாது. ஆராய்ச்சி வல்லார் மேலும் மேலும் ஆராயுங்கால், வேறுபட்ட முடிபுகள் தோன்றவே தோன்றும். தொல்காப்பிய பதிப்பு வரலாறு சற்றேறக்குறைய எண்பதாண்டுகட்குமுன், முதன்முதலில், சென்னைச் சர்வ கலாசாலைத் தமிழ்ப்பேராசிரியர், மழவை மகாலிங்கையர் அவர்களால் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியம் பதிப்பிக்கப்பட்டது. அதன்பின்னர், மகாவித்துவான் சுப்பராயச் செட்டியார் அவர்கள், எழுத்ததிகாரம் இளம்பூரணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்கள். அவ்விரு பதிப்புகளும் பல திருத்தங்களைப் பெறவேண்டியன. கோமளபுரம், மகா வித்துவான், இராசகோபாலபிள்ளையவர்கள், சொல்லதிகாரம் சேனாவரையம் பதிப்பித்தார்கள். அவர் பதிப்பும் பல திருத்தங் கட்கிடமாகவுள்ள தேனும், சேனாவரையருடைய உரைப் பகுதிகள் பலவற்றையும் அறிந்து கொள்வதற்குப் பெரிதுமுதவி யாயிருந்தது. ராவ்பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளையவர்கள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களைக் கொண்டு பரிசோதிப்பித்துச் சொல்லதிகாரம் சேனாவரையத்தைப் பதிப்பித்தார்கள். அதன்பின்னர்ச் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியத்தையும் அதன் மேல், நச்சினார்க்கினியருரை என்ற பெயரோடு பொருளதிகாரம் முழுவதையும் மற்றதன் மேல், மகாலிங்கையராற் பதிப்பிக்கப் பட்ட எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியத்தையும் பதிப்பித்தனர். அம்மட்டோடமை யாமல், சங்க இலக்கியங்கள் முதலிய சிலவற்றையும், மற்றவை அழிந்தொழியுமுன்னரே பதிப்பித்துதவினர். செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமு மாற்றலரிதன்றோ? அப்பெரியாருடைய செயற்கருஞ் செயலை மறத்தலும் தமிழுலகிற்குண்டாமோ? அவர் பதிப்புகளும் பல திருத்தங்கட் கிடனாக வுள்ளன. செய்யுளியல் நச்சினார்க்கினியமும், இளம் பூரணமும் மகாவித்துவான் ரா. ராகவ ஐயங்கார் அவர்களால் பதிப்பிக்கப்பட்டன. ரா. ராகவ ஐயங்கார் அவர்கள் சி.வை. தாமோதரப்பிள்ளையவர்கள் பதிப்பித்த பொருளதிகாரப் பதிப்பில் முதல் ஐந்தியல்களும் நச்சினார்க்கினியம் எனவும், பின்னான்கியல்களும் பேராசிரியம் எனவும் ஆராய்ந்து செந்தமிழில் வெளியிட்டார்கள். மற்றதனையே கருவியாகக் கொண்டு, ராவ்பகதூர் பவானந்தம் பிள்ளையவர்கள், பொருளதிகாரத்தை மூன்று பாகங்களாகப் பதிப்பித்து வெளியிட்டார்கள். அப்பதிப்புக் காலப்போக்கிற் கேற்பப் பல திருத்தங்களையும் பெற்றுக் கொண்டது. பின்னர்ப் பல திருத்தங்களோடும் சைவசித்தாந்தப் பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பட்ட எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியமும், சொல்லதிகாரமும் சேனாவரையமும் முன்னரை விடச் சிறந்த பதிப்புக்களாக வெளிவந்தன. மற்றதன் மேல் திரிசிபுரம், ச. கனகசபாபதிப்பிள்ளையவர்கள் பொருளதிகாரத்தை இரண்டு பாகமாகப் பதிப்பித்து வெளியிட்டார்கள். அவற்றுள்ளும் பலதிருத்தங்கள் காணப்பட்டன. கணேசையரும் தொல்காப்பியமும் இங்ஙனமெல்லாம் பல பதிப்புகள் வெளிவந்தும், தொல்காப்பிய நுண்பொருள்கள் இவைதாம் என்று கற் போர்க்கும் கற்பிப்போர்க்கும் விளங்கற்கரியனவாகிச் சிலபல இடர்ப்பாடுகளையே செய்துவந்தன. அப்போது, என்னரிய நண்பரும், இந்தியா, இலங்கை என்னுமிடங்களிலுள்ள புலவர்கள் பலராலும் பாராட்டப் பெற்ற செந்நாப் புலமையுமுடையாரும், கற்றதற்குத்தக நிற்கும் ஒழுக்கம் பெற்றோரும், தெய்வபக்தி, பொறை, செந்தண்மை முதலிய நற்குணமமைந்தவருமாகிய அந்தணத் திருவாளர் வித்துவான், சி. கணேசையர் அவர்கள் அவ்விடர்ப்பாடுகளை இயன்றவாறு தீர்க்க வேண்டுமே என்னும் கருணை மேலிட்டு, 1937ஆம் வருடத்தில் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியத்தையும், அதன்மேல், 1938ஆம் வருடத்தில் சொல்லதிகாரம் சேனாவரையத்தையும் மற்றதன்மேல், 1943ஆம் வருடத்தில் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) பேராசிரியத்தையும், இப்போது (1948ஆம் வருடத்தில்) பொருளதிகாரம் முதலாம்பாகம் நச்சினார்க்கினியத்தையும், தமது நுண்மாண் நுழைபுல ஆற்றலாலும், காலந்தோறும் பதிப்பித்து வெளியிடப் பட்ட தொல்காப்பியப் பதிப்புகளினும் ஏட்டுப் பிரதிகளினும் ஆராய்ந்துவந்த பயிற்சி மிகுதியானும், தமது ஆசிரியர்களிடங் கேட்டறிந்த முறையானும், தக்க நன்மாணக்கர் பலர்க்குக் கற்பித்துவந்த அநுபவமுதிர்ச்சியானும் மிக்க பல திருத்தங்களைச் செய்தும் விளங்காவுரைகளை விளக்கியும் பதிப்பித்து வெளியிட்டுதவினார்கள். அவர்தம் பதிப்புகள் ஏனையோர் பதிப்புகளினும் பல சிறந்த திருத்தங்களைப் பெற்றுளவென்பது படிப்போர்க்கு நன்கு புலப்படும். இப்பொழுது பதிப்பித்த பொருளதிகார முதலாம்பாகப் பதிப்பில் பதிப்பாசிரியர், சி. கணேசையர் அவர்கள், புறத்திணை யியல், 13ஆம் சூத்திர உரையுள் படிவம் முதலியன கூறல் என்பதனைப் படிவம் முதலியன கோடல் எனவும் மேற்படி யியல் 16ஆம் சூத்திர உரையுள், திணைக்கெல்லாம் பொதுவன்மை யிற்றிணையெனவும் படாது என்பதனைத் துறைக்கெல்லாம் பொதுவன்மையிற்றிணை யெனவும் படாது எனவும், களவியல் 20ஆம் சூத்திர உரையுள், இட்டுப் பிரிவிரங்கினும் என்பதனுரையுள், கற்பினுட் சொல்லாத பிரிதலையும் என்பதனைக் கற்பினுட் சொல்லாது பிரிதலையும் எனவும் அவ்வாறே கற்பியல் 5ஆஞ் சூத்திரத்தும், பிறவற்றினும் பல திருத்தங்களைக் கண்டுள்ளார்கள். கற்பவர்கள் அவற்றையெல்லாம் ஆராய்ந்து படித்தின்புறுவார்களாக. நிற்க. இப்பெறலரும் உதவியை உதவிய அந்தணத் திருவாளர் சி. கணேசையர் அவர்கள் மீண்டும் மீண்டும் இத்துறையில் முயன்றுசெல்லும் வண்ணம், இறைவன் ஒரு கூறுறை உமையம்மையார் கடைக்கணித்தருள்வாராக. இந் நூலைப்பதித்துத் தமிழுலகிற் குதவிய ஈழகேசரிப் பத்திராதிபர் ஸ்ரீமாந் நா. பொன்னையாபிள்ளை அவர்களும், நீண்ட ஆயுளும் செல்வமும் பெற்று, இன்னும் இதுபோலும் தமிழ்த் தொண்டுகள் செய்து வாழ்வார்களாக. முதற் பதிப்பின் முகவுரை தன்றோ ணான்கி னொன்று கைம்மிகூ உங் களிறுவளர் பெருங்கா டாயினு மொளிபெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே பொருளதிகார மென்பது பொருளினது இலக்கணத்தை உணர்த்தற்கிடமாகிய படலம் என விரியும். இது தானியாகு பெயர். இலக்கணம் - தானி; படலம் - தானம். இனிப் பொருளினது இலக்கணத்தை உணர்த்தும் படலம் என விரித்துக் காரியவாகு பெயரெனினுமமையும். இலக்கணம் - காரியம்; படலம் - காரணம். அதிகாரம் - முறைமை. முறைமை, மரபு, இலக்கணம் என்பன ஒரு பொருட்கிளவிகளென்பது நச்சினார்க்கினியர் கருத்து. பொருளாவன, அகப்பொருளும் புறப்பொருளுமாம். அன்றி, அறம், பொருள், இன்பம், வீடு எனினுமாம். அறம் முதலிய நான்கும் அகம், புறம் என்னும் இரண்டனுள்ளு மடங்கும். இளம்பூரணர் முதல், கரு, உரி எனப் பொருள் மூன்று வகைப்படு மென்றும், உரிப்பொருளில் அறம் முதலிய நான்கும் அடங்கு மென்றுங் கூறுவர். அகம் என்பது அகத்தே நிகழும் இன்பம் எனப் பொருள் படும். அவ்வின்பம் ஒத்த அன்புடையராகிய ஒருவனு மொருத்தி யுங் கூடித் தாமே அனுபவித் தறிதலின் அகமெனப்பட்டது. ஏனைய அறமும், பொருளும் பிறர்க்கும் புலனாதலிற் புறம் எனப்பட்டன. இவை இளம்பூரணர்க்கும் கருத்தாம். இப்பொருளைப் பற்றிய இலக்கணம் இந்நூலாசிரிய ரானே ஒன்பதியல்களா லுணர்த்தப்பட்டது. அவ்வியல் களாவன: அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் என்பனவாம். இவற்றான் அப்பொருளை யாங்ஙன முணர்த்தினாரோ வெனின், அகம், புறம் என்னும் இரண்டனுள்ளுமடங்கும் அறம் முதலிய நான்கனுள்; இன்பத்திற்குரிய பொதுவிலக்கணங்களை அகத்திணை யியலானும், இன்பமொழிந்த அறம், பொருள் என்னுமிவற்றின் இலக்கணங்களையும், வீட்டைதற்குரிய நிமித்தத்தையும் புறத் திணையியலானும், இன்பத்திற்குரிய சிறப்பிலக்கணங்களைக் களவியல் கற்பியல்களானும், சொல்லும் பொருளுமுணர்த்தும் வழுக்களையமைத்துச் சொல்லுணர்த் தும் பொருளையும் தொடர்மொழியுணர்த்தும் பொருளையும் பொருளியலானும், பொருட்பெற்றி யுணர்த்துதற்கேதுவா யுள்ள மெய்ப்பாடு வமைகளை மெய்ப்பாட்டியல் உவமவியல் களானும், பொருளை அமைத்து உணர்த்துதற்கிடமாகிய செய்யுளிலக் கணங்களைச் செய்யுளியலானும், பொருட்குரிய மரபுகளை மரபியலானும் உணர்த்தினார் எனக் கொள்க. இங்ஙனம் பொருட்பெற்றி உணர்த்தப்பட்டமையானே இவ்வதிகாரமும் மக்கட்குப் பெரிதும் பயனுடைத்தேயாம். இப்பொருளதிகாரத்தை முதலிற் பதிப்பித்துத் தமிழ் நாட்டிற் குதவியர் ராவ்பஹதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை யவர்களே. முதலிற் பதிப்பிப்பவர்க்கே பிரயாசமதிகமென்பது யாவருமறிந்த தொன்றாம். ஆதலினாற் பாணமரித்தும் சிதல் தின்றும் இதழ் முரிந்தும் பின்னும் பின்னும் பழுதடையா வண்ணம், பிரதிகளை ஒன்றொடொன்று பலமுறை ஒப்புநோக்கி அதிக பிரயாசத்தோடும் பிழைகள் பெரிதும் வாராவண்ணம் திருத்திப் பதிப்பித்துதவிய பிள்ளை அவர்களுக்கே தமிழகத்தா ராகிய நாம் என்றும் கடப்பாடுடைய வர்களாக இருத்தல் வேண்டும். பிள்ளையவர்களுக்குப்பின், மேலும் சில திருத்தங்க ளோடும் இதனை இரண்டாவதாகப் பதிப்பித்துதவியர் ராவ்பஹதூர் ஸ்ரீமான் பவானந்தம் பிள்ளையவர்களாவர். அவர்களுக்குப் பின் சென்னைப் பல்கலைக் கழகத் தலைமைப் பேராசிரியர் ராவ்சாஹிப் S. வையாபுரிப் பிள்ளையவர்கள் திருத்தியுதவிய சில திருத்தங்களோடும் மன்னார்குடி இயற்றமிழா சிரியர் ம.ந. சோமசுந்தரம் பிள்ளையவர்கள் எழுதியுதவிய சில கீழ்க் குறிப்புகளோடும் பதிப்பித்துதவியவர் ஸ்ரீமான் S.fdf சபாபதிப் பிள்ளையவர்களாவர். இவர்கள் பதிப்பித்துதவிய இம் முப்பதிப்பானும் இவ்வதிகார மடைந்த திருத்தங்கள் பலவாயினும், இன்னும் பல திருத்தமுற வேண்டியிருந்தமை நோக்கி யாமும் சில ஏட்டுப் பிரதிகளோடும் ஒப்புநோக்கித் திருத்தி. அதனுள் பின்னுள்ள நான்கியல்களையும் உரைவிளக்கக் குறிப்புகளோடும் முன்னர்ப் பதிப்பித்து வெளிப்படுத்தினேம். அவற்றை முன் வெளிப்படுத்தியதற்குக் காரணம், அவை இங்கு ஆரியதிராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தாராலும், இந்தியாவில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தாராலும் பண்டித பரீக்ஷைப் பாடமாக நியமிக்கப்பட்டிருந்தமையும், படிப் போர்க்குச் சிறப்பாக அறியவேண்டிய பகுதியாயிருந்தமையு மாம். இப்போது அதனுள் முன்னுள்ள ஐந்தியல்களையும் அவ்வாறே பதிப்பித்துள்ளேம். இப்பதிப்பின்கண் யாங் கண்ட திருத்தங்களுள் பிரதானமான சில திருத்தங்களை இங்கே காட்டுகின்றேம். அவற்றை அறிஞர் நாடிக் கொள்க. அவையாவன புறத்திணையியல், 11ஆம் சூத்திர அவதாரிகையுள் ஒருவர்க்கு என்பது ஒவ்வொருவருக்கு என்றிருப்பது நலம். என்னை? பின்னர் நான்கு நான்காக என்னுஞ் சொற்றொடர் வருவதாகலின். மேற்படி இயல் 13ஆம் சூத்திர உரையுள் படிவங்கூறல் என்பது படிவங்கோடல் எனத் திருத்தப்படவேண்டுமெனக் காட்டப்பட்டுள்ளது. இஃது ஏட்டுப் பிரதிகள் சிலவற்றிலும் அவ்வாறே காணப்பட்டது. மேற்படி இயல் 16ஆம் சூத்திர உரையுள் இது திணைக் கெல்லாம் பொதுவன்மையிற் றிணையெனவும் படாது என்பது, துறைக்கெல்லாம் பொதுவன்மையிற் றிணை யெனவும் படாது என்று திருத்தப்படவேண்டும் எனக் கீழ்க் குறிப்பிற் காட்டப் பட்டது. என்னை? துறைக்கெல்லாம் பொதுவாயுள்ளதே திணையாகலின். களவியல் 20ஆம் சூத்திரத்து இட்டுப்பிரிவிரங்கினும் என்பதனுரையுள் கற்பினுட் சொல்லாத பிரிதலையும் என்பது கற்பினுட் சொல்லாது பிரிதலையும் எனத் திருத்தப்பட வேண்டும் எனக் காட்டப்பட்டது. இஃது ஏட்டுப் பிரதிகள் சிலவற்றிலும் அவ்வாறே காணப்பட்டது. கற்பியல் 5ஆம் சூத்திரத்துள் வரும். சொல்லென, வேனது சுவைப்பினு நீகை தொட்டது - வானோ ரமிழ்தம் புரையுமா லெமக்கென - அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் என்னு மடிகள், ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோரமிழ்தம் புரையுமா லெமக்கெனச் சொல்லென, அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் என்னுமடிகள், ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோரமிழ்தம் புரையுமா லெமக்கெனச் சொல்லென, அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும் என மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டுள்ளன என்பது உரையை உற்று நோக்கினார்க்கு விளங்கும். ஏனது என்பதற்கு, அமிழ்திற்கு மாறாகிய நஞ்சா யினும் எனப் பொருளுரைக்கப் பட்டுள்ளது. அங்ஙனம் பொருள் கூறியது பின்வரும் அமிழ்தை நோக்கியாகும். ஏனது அமிழ் தல்லாத தெனவே, நஞ்சென்பது பெறப்படும். புனைந்துரைத் தென்பது புனைந்துரைத்துழி என இருத்தல் வேண்டும். ழகர விகரம் தவறியதென்பது உரையானே விளங்கும். இங்ஙனமாக, ஸ்ரீமான் ராவ்பஹதூர் பவானந்தம் பிள்ளை அவர்கள் பதிப்பிலும் S. கனகசபாபதிப் பிள்ளை அவர்கள் பதிப்பிலும், கீழ்க் குறிப்பில் சொல் - நெல்; அஃது அமிழ்தை உணர்த்தி நின்றது எனக் குறிப்பிடப்பட்டது. பொருந்துமோ வென்பது ஆராயத்தக்கது. மேற்படி சூத்திரத்து காமத்தின் வலியும் என்பதனுரையுள், அவளது நீத்து நீக்கியவழி என்பது, அவள் துனித்து நீக்கிய வழி என்றிருத்தல் வேண்டும். அதுவே பொருத்தமானதென்பதைப் பின் வரும் இதுவும் துனி தீர்ப்பதோர்முறை கூறிற்று என்னு முரைவாக்கியம் வலியுறுத்தும். மேற்படி சூத்திரத்து உறலருங் குண்மையின் என வருமடி யுரையுள் வரும் சாந்தழி பெருங்குறி பெற்றார் கூந்தற்றுகளும் என்பது சாந்தழி வேருங் குறி பெற்றார் கூந்தற்றுகளும் என்றிருத்தல் வேண்டும் என உரைக் குறிப்புட் காட்டியுள்ளாம். என்னை? கலித்தொகைச் செய்யுளில் அவ்விரண்டும் வருதலின் கலி - 66ஆம் செய்யுளையும் 72ஆம் செய்யுளையும் முறையே நோக்குக. வேரும் என்பதில் வகரத்தின் கொம்பு அழிந்திருத்தல் வேண்டும். மேற்படி இயல் 11ஆம் சூத்திர உரையுள் மெல்லியற் பொறையும் என்பதனுரை. சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பில், வல்லென்ற நெஞ்சொடு பொறுக்கும் அவனைப் போலாது ஒருதலையாக மெல்லென்ற நெஞ்சினளாய்ப் பொறுக்கும் பொறையும் என்று காணப்படுகின்றது. S.fdfrghg⥠பிள்ளை பதிப்பில் அவனைப் போலாது என்பது ஆனையைப் போலாது என்று காணப்படுகின்றது. ஆனைக்குந் தலைவிக்கும் ஓரியை பின்மையின் அவனை என்பதே பொருத்தமாதல் காண்க. அவன் என்றது தலைவனை. தலைவன் என்பது பின்வரலின் அவனை யென்று சுட்டியொழிந்தார். இவ்வாறு வாக்கியத்தினும் சுட்டுவது இவ்வுரையாசிரியரதும் பேராசிரியரதும் வழக்கமாகும். அவ்வாறு வருதலை இச்சூத்திரவுரையுள் அவன் முகம் புகுது முறைமை காரணத்தான் தலைவற்குக் கூறல் என வருதலானும் புறத்திணையியல் 7ஆம் சூத்திர உரையுள்ளும். கற்பியல் 14ஆம் சூத்திர உரையுள்ளும் வருதலானும் அறிந்துகொள்க. காதன் முதலியவற்றைத் தலைவன் மெலிதாக அடக்கமாட்டான். தலைவி அடக்குவள் என்பது கருத்து. வல்லென்ற நெஞ்சொடு பொறுத்தல் என்றதனால், தனக்குற்ற காதல் முதலியவற்றை ஒரு ஆண்மகன் மெலிதாக அடக்க முடியாமையால வாய் திறந்து கூறிவிடுவான் என்பதும் ஒருவாறு அடக்கின் வலிதாகவே அடக்கிக் கொள்வானென்பதும் மெல்லென்ற நெஞ்சினளாய்ப் பொறுத்தல் என்றதனால், தனக்குற்ற காதல் முதலியவற்றை ஒருபெண்மகள் வாய்திறந்து கூறாள் என்பதும் அடக்கிக் கொள்வாள் என்பதும் பெறப்படும். ஒரு பெண்மகள் தனக்குற்ற காதல் முதலியவற்றைத் தன்னாற் காதலிக்கப்பட்ட ஆண் மகனுக்கு வாய் திறந்து கூறாள் என்பது. இராமாவாதாரத்துச் சூர்ப்பநகைப் படலத்துள், தாமுறு காமத் தன்மை தாங்களே யுரைப்ப தென்ப - தாமெனலாவ தன்றால் என்று சூர்ப்பநகை கூறுவதாக வருஞ் செய்யுளடிகளானும், நோயலைக் கலங்கிய மதனழி பொழுதிற் காமஞ் செப்ப லாண்மகற் கமையும் யானென், பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கி என்று தலைவி கூறுவதாக வரும் நற்றிணைச் செய்யுளடிக ளானும் (64) அறியப்படும். இவையன்றி இச் சூத்திரத்து இன்னும் பல எமது கருத்தின் படி திருத்தப்பட்டுள்ளன. அவற்றைக் கீழ்க் குறிப்பில் அங்கங்கே நோக்கி யறிந்து கொள்க. பழைய ஏட்டுப் பிரதிகள் கிடைப்பின் இன்னும் பல திருத்தம் பெறலாம். எமது உடற்றளர்ச்சியானும், அசௌக்கியத்தானும் ஏட்டுப் பிரதிகளுள்ள இடங்களிற் சென்று பெற்றுப் பார்க்க முடியாமையினாலே கிடைத்த பிரதியைக் கொண்டும். இயைபு நோக்கியும் இவற்றைத் திருத்தினோம். திருத்தம் பெறாதவற்றையும், திருத்தியவற்றிற் பொருந்தாத வற்றையும் திருத்திக் கொள்ளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்ளுகின்றேம். மேலும்: இந்திய தேயத்திற்குச் சென்று மதுரைத் தமிழ்ச்சங்க முதலிய இடங்களில் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பு நோக்கித் திருத்த வேண்டுமென யாம் குறிப்புகள் சில எழுதி வைத்திருந்தேம். எமக்கு நேர்ந்த சுகவீனங் காரணமாக யாஞ் செல்லமுடியாமை யானே. அக்குறிப்புகளை, மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சென்று அங்குள்ள ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பு நோக்கித் திருத்தங்களைக் குறித்து வருமாறு. எம்மிடத்திற் படித்துப் பண்டிதப் பரீட்சை யிலும் வித்துவான் பரீட்சையிலும் சித்தியெய்தியுள்ள ஸ்ரீமாந். f.கி. நடராஜன் அவர்கள் இந்தியாவிற்குச் சென்ற போது, அவர்களிடம் கொடுத்து விட்டதுமன்றி, மேற்குறித்த சங்கத்தினின்று வெளிவரும் செந்தமிழின் உதவிப்பத்திராசிரியராயிருந்தவரும் இப்போது பத்திராசிரியராயிருப்பவரும் எமது நண்பரும் வித்துவானு மாகிய ஸ்ரீமாந் ஏ.கே. இராமானுஜ ஐயங்கார் அவர்கட்கு ஒரு கடிதமுங் கொடுத்துவிட்டேம். அவர்கள் மதுரைத் தமிழ்ச்சங்கம் சென்று மேற்குறித்த ஐயங்கார் அவர்களிடம் கடிதத்தைக் கொடுத்தபோது ஐயங்காரவர்கள் படித்துப் பார்த்து மனமுவந்து அங்கு மூன்று ஏட்டுப் பிரதி களிருப்பதாகக் கூறி அவற்றை எடுத்துக் கொடுத்தது மன்றித் தாமுங் கூடவிருந்து எமது குறிப்புகளைப் பிரதிகளோடு ஒப்பு நோக்கிச் சில திருத்தமான பாடங்களைத் தெரிவித்தும் உதவி செய்தார்கள். அவ்வாறு உதவி செய்த ஐயங்கார் அவர்களின் பேரறிவும் பரோபகார சிந்தையும் என்றும் எம்மால் மறவாது போற்றற்பாலனவே. ஐயங்காரவர் கட்கன்றி, எமது குறிப்புகளைக் கொண்டு சென்று, ஐயங்காரவர்களிதனுதவிபெற்று, பிரதிகளோடு ஒப்பு நோக்கி, திருத்தங்களைக் கொண்டு வந்து எமக்குதவிய மேற்குறித்த ஸ்ரீ. நடராஜன் அவர்கட்கும் எமது அன்பும் ஆசியும் உரியவாகுக. யாம் இந்நூலுள்ளே புறத்திணையியலுரையுள் வரும் உதாரணச் செய்யுட்களிலுள்ள பிழைகளைத் திருத்துதற்கு ராவ்சாஹிப் வித்துவான், பிரமஸ்ரீ. மு. இராகவையங்காரவர் களுடைய பெருந்தொகைத் திரட்டு என்னுநூல் பேருதவி யளித்தது. அதற்காக அவர்களுக்கும் யாம் வணக்கம் கூற வேண்டிய கடப்பாடுடையேம். மேலும், இந்நூலுள்வரும் உதாரணச் செய்யுட்களுட் சில இன்னநூல்களுள் உள்ளன என்று அறியப்படாமையானும் திருத்தமின்றிக் காணப்படலானும் அவற்றின் பொருளை இயைபு பட அறிதல் கூடாதாயிற்று. அதனால், அச் செய்யுட் களிலுள்ள பிழைகளைத் திருத்தவாதல் பொருளெழுதவாதல் முடியாமை யானே அவை வாளாவிடப்பட்டன. அறிந்தோர் திருத்திப் படித்தறிந்து கொள்வார்களாக. மேலும் யாம் திருத்தமென்று கண்டவிடங்களிலுஞ் சில சொற்களும் வாக்கியங்களும் எம் நோக்கத்திற்குத் தப்பிப் பிழையாகவுமிருக்கலாம். அவற்றையும் ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்திக் கொள்வார்களாக. நச்சினார்க்கினியர் எழுதிய உரைதானென்று கூறமுடியாமல் ஆங்காங்குப் பிறழ்ச்சியடைந் திருக்கும் இவ்வுரையை யாம் பூரணமாகத் திருத்திவிட்டே மென்று கூறுவது எமக்கே பெரும் அவமானமாகும் நிற்க. யாமிப்போது அச்சிட்ட இப்பதிப்புப் பூரணமாகத் திருந்திய தென்பது எமது கருத்தன்றாதலால், பழைய ஏட்டுப் பிரதிகள் வைத்திருப்பவர்கள் தமிழ்மகளின் நலன் கருதி அவற்றை அனுப்பி வைப்பின் இரண்டாம் பதிப்பில் இன்னுந் திருத்தஞ் செய்யலாமென்பதை அவர்களுக்கு அறிவித்துக் கொள்ளுகின் றோம். மேலும் யாம் திருத்திய திருத்தங்களிலும், எழுதிய உரை விளக்கக் குறிப்புகளிலும் எமது முதுமை. மறதி முதலியவற்றால் நேர்ந்த பிழைகளைத் திருத்திக்கொள்ளுமாறு அறிஞர்களை வேண்டிக் கொள்ளுகின்றேம். அன்றியும் உண்மையான பிழைகளை அறிஞர்கள் எமக்கு அறிவிப்பின் அவற்றை யாமேற்று, அவர்கள் பெயரோடும் இரண்டாம் பதிப்பில் வெளிப்படுத்து வேம். யாம் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளைப் பலமுறை நுண்ணிதாகப் படித்துப் பார்த்து இன்றியமையாத சில திருத்தங்கள் செய்து துணைபுரிந்த திருநெல்வேலி ஆசிரிய கல்லூரித் தலைமைத் தமிழாசிரியரும், எமது ஆசிரியருளொரு வருமாகிய சுன்னாகம் வித்துவமணி ஸ்ரீமாந். அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடம் முறையாகக் கற்று விற்பன்னராய் விளங்குபவருமாகிய பண்டித சிரேட்டர் சி. கணபதிப் பிள்ளையவர்களுக்கு யாஞ் செய்யக்கிடந்த கைம்மாறு யாதென அறியேம். அவர்கள் செய்த நன்றியும், அவர்கள் நுண்மதியும் என்று மெம்மாற் பாராட்டப் படத்தக்கனவே. யாம் இந்நூலுள் வரும்பிழைகளை ஏட்டுப் பிரதிகளை நோக்கித் திருத்தும்போதும் அச்சிட்டகாலத்து அச்சுத்தாள் களை நோக்கித் திருத்தஞ் செய்யும்போதும் உதவியாளரா யிருந்து பெரிது முதவிசெய்த எமது மாணவரும் பண்டிதருமாகிய ஸ்ரீமாந்வ. முத்துக்குமார பிள்ளை அவர்களுக்கும் எமது அன்பும் ஆசியு முரியவாகுக. எமது பாடபேதங்களையும் இவ்வுரை விளக்கக் குறிப்புக் களையும் படித்துப் பார்த்து அணிந்துரையும் சிறப்புப்பாயிரமு மளித்த, அரியகற்றாசற்றவர்களாகிய முப்பெரும் புலவர்களுக்கும் எமது அன்பும் வணக்கமு முரியவாகுக. அரசர்கள் பெரும்போர் காரணமாகக் காகிதம் முட்டுற்ற இக்காலத்திலே மனமுவந்து பெருந்தொகைப் பொருள் கொடுத்துக் காகிதம் வாங்கி இந்நூலை அச்சிட்டுத் தமிழுலகிற் குபகரித்த, ஈழகேசரிப் பத்திராதிபர் ஸ்ரீமாந். நா. பொன்னையா பிள்ளை அவர்கட்கு யாமேயன்றி, இத்தமிழுலகத்தாரும் பெரிதுங் கடமைப்பட்டவர்களாகி, அவர்களைப் போற்ற வேண்டியவர் களாகின்றார்கள். அவர்கள் இன்னும் நீண்ட காலமிருந்து தமிழ்ப்பணி யாற்றுமாறு இறைவன் அருள்புரிவாராக. சி. கணேசையர் சிறப்பு முகவுரை வடவேங்கடம் தென்குமரிக்கு இடைப்பட்ட தமிழ்கூறு நல்லுலகின் வழக்கும் செய்யுளும் ஆயிருமுதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் ஆய்ந்து தொகுக்கப்பட்டது தொல் காப்பியம் என்று பனம்பாரனார் பாயிரம் கூறுகிறது. தமிழகத்தின் எல்லைகள் பற்றிய குறிப்புகளைத் தரும் தொன்மை மிக்க ஆதாரமாகவும் பனம்பாரனார் பாயிரம் திகழ்கிறது. ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்துசெல்லும் வாய்ப்பினைப் பெற்றோர் அல்லது வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதோர் என்று வரலாற்றில் துறவிகள், புலவர்கள், வணிகர்கள் காணப்படுகின்றனர். துறவிக்கு வேந்தனும் துரும்பு; கற்றோர்க்குச் சென்றஇடம் எல்லாம் சிறப்பு. துறவியும் புலவரும் வணிகரால் போற்றப்படுகின்றனர். துறவிகளுக்குப் படுக்கைகளை வணிகர்களே அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதைத் தொல்லியல் மற்றும் கல் வெட்டியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. புலவர்களுக்குப் புரவலராக அரசர்கள் இருந்துள்ளனர். இன்னொரு நாட்டிற்குள்ளும் சென்று மக்களைச் சந்திக்கும் உரிமை துறவிகளுக்கு உண்டு. அதியமானுக்காக ஔவையார் இன்னொரு நாட்டரசனிடம் தூது சென்றிருக்கின்றார். வணிகர்கள், வாணிகத்தின் பொருட்டுத் தம் நாட்டின் எல்லையைக் கடக்கிறார்கள். இன்னொரு நாட்டுடன் வாணிகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்குத் துறவிகளின் உதவியையும் புலவர்களின் அனுபவத்தையும் வணிகர்கள் பயன்படுத்திக் கொள்வர். வணிகத்திற்கு, வணிகர்களுக்கு இடம் தராமல் இடையூறாக இருக்கும் நாடுகளைக் கைப்பற்றித் தம் நாட்டு எல்லைகளை அரசுகள் விரிவுபடுத்திக் கொள்ளும் போலும். போர்களுக்குரிய காரணங்களில் வாணிகப் போட்டியும் ஒன்றாக இருந்துவருகிறது. கனகவிசயர் தமிழ் அரசர்களைக் குறைத்துக்கூறிய செய்தி புலவர்களாலேயே சேரன் செங்குட்டுவனுக்குத் தெரியவந்திருக் கிறது. எனவே நாடுகளும் ஆட்சி எல்லைகளும் வணிகத்திற்காக வும் செயற்கையாகவே கட்டமைக்கப்படுதலை யும், செயற்கைக் கட்டமைப்புகள் அரசியல் வணிகக் காரணங்களாலேயே சிதைக்கப் பெறுவதையும் வரலாற்றில் காணலாம். ஆனால் மொழிவழி அமைவன இயற்கையான எல்லைகள். இயற்கையான எல்லைகளையும் அரசியல் வணிகக் காரணங்கள் மாற்றியமைக்கவே விரும்பும். அத்தகைய விருப்பம் நிறைவேற மேற்கொள்ளப்பெறும் நடவடிக்கைகள் மக்களிடம் மன அழுத்தத்தை உருவாக்கும் வரலாற்றின் பெரும்பகுதி மன அழுத்தம் மிக்க நிகழ்வுகளின் பதிவுகளே. பனம்பாரனார் குறிப்பிடும் எல்லைகள் மொழிவழியானவை. மக்களின் சடங்குகள், வழிபாடுகள், நம்பிக்கைகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றில் வணிக நோக்கச் செயற்பாடுகளின் வேர்களே வெளிப்படுகின்றன. அவற்றின் தொடர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் கூட வணிக நோக்கங்களே வாழ்வளித்துக் கொண்டிருக்கின்றன. எனவே தமிழ்கூறு நல்லுலகத்தின் எழுத்தும் சொல்லும் பொருளும் அடங்கிய வழக்கும் செய்யுளும் தொகுக்கப்பட்டு, ஆய்ந்து தமிழ் இலக்கணமாகத் தொல்காப்பியம் உருவாக்கப் பட்டுள்ளதிலும் இத்தகைய கூறுகளைக் காணும் ஆய்வுகள் வர வேண்டும். தெளிவு உணர்த்திட உரையாசிரியர்களும், கால மாற்றத்திற்கேற்பக் கைவரப்பெறும் ஊடகத்திற்கேற்பப் பதிப்பாசிரியர்களும் தொல்காப்பியம் தொடர்ந்து கற்கப்பட உதவிவருகின்றனர். தமிழின் தொன்மையும் சிறப்பும் பெருமையும் தெரிந்திடத் தொல்காப்பியம் உதவுகிறது. மேலும் இன்றைய மொழியியல் ஆய்வாளர்களுக்கும் வியப்பைத் தருகிற மொழிசார் கூறுகளை நுட்பமாகவும் கொண்டிருக்கிறது என்பதும் இலக்கியக் கொள்கைகளை உருவாக்கித் தந்திருக்கிறது என்பதும் இனியும் வரும் கொள்கைகளுக்கு இடம் தருகிற வகைப்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்பதும் தொல்காப்பியத்தின் தனிப் பெருமைகளாகும். ஏடுகளிலிருந்த தொல்காப்பியத்தை மீட்டெடுத்து அச்சிட்ட பெருமை மழவை மகாலிங்கையருக்கு உரியது. அவர் தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் முதன்முதலில் வெளியிட்டுள்ளார். இப்பதிப்பு 1848இல் வெளிவந்துள்ளது. தொல்காப்பியத்தின் ஏனைய அதிகாரங்களும் அவற்றின் உரைகளும் இன்னும் பல ஆண்டுகள் கடந்தே வெளி வந்துள்ளன. சேனாவரையர் உரையுடன் சொல்லதிகாரத்தை 1868இல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்தார். 1882இல் நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்தார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திற்கு முதல் ஐந்து இயல் களுக்கு நச்சினார்கினியர் உரையும். அதன் எஞ்சிய நான்கு இயல்களுக்குப் பேராசிரியர் உரையும் கிடைத்துள்ளன. இவற்றைக் கொண்டு 1885இல் தொல்காப்பியப் பொருளதிகாரத் தை இவர் பதிப்பித்துள்ளார். பின்னர், தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் இவர் 1891இல் பதிப்பித்துள்ளார். அதன் பின்னர் மூலம் மட்டும் தனியாகவும் வந்துள்ளது. மூலமும் உரைகளும் தனித்தனியே வெளியிடப் பெற்றும் வந்துள்ளன. கையடக்க அளவிலும் தொல்காப்பியம் அச்சிடப் பெற்றுள்ளது. கூடவே தெளிவுரை, குறிப்புரை, எளிய உரை, மாணவர்க்கான உரை, பாடபேத ஆய்வு என இதுவரை நூற்றுக்கும் அதிகமான பதிப்புகள் தொல்காப்பியத்திற்கு வெளிவந்துள்ளன. இத்தகைய முயற்சிகளுக்குப் பின்பும் கூட, தொல் காப்பியத்தை முழுமையாக, முறையாக, இன்னும் அறிந்து கொள்வதில் இடர்ப்பாடுகள் இருந்து வருகின்றன. இவை தொல்காப்பியத்தின் சிறப்புப் பண்புகளாகவும் நோக்குதற் குரியன. தொல்காப்பியத்தின் நச்சினியார்க்கினியர் உரை மற்றும் அவருரை கிடைக்காத இயல்களுக்குப் பேராசிரியருரைகளை முழுமையாக வெளியிட்ட சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டும் பொருட்டு ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா பிள்ளை 1937இல் சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பித்த நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் கொண்டுவர விரும்பினார். அப்பதிப்பிற்கு அப்போது தமிழ் இலக்கண அறிவு மிகவும் கைவரப்பெற்றவராக இருந்த யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த சி. கணேசையர் உதவவேண்டும் என அவரை அணுகியுள்ளார். நச்சினார்க்கினியர் உரைக்கு மேலுமொரு விளக்கமாக உரையொன்றைச் செய்ய உடல் நலமின்மை காரணமாகச் சி. கணேசையரால் அப்போது இயலவில்லை. அந்நிலையில் அவர் கற்ற காலத்தும் கற்பித்த காலத்தும் குறித்தும் வைத்திருந்த குறிப்புகளை அப்பதிப்பில் சேர்க்க அனுமதித்துள்ளார். மேலும் அப்பதிப்பில் தொல்காப்பியர் வரலாறு, நச்சினார்க்கினியர் வராறு, உதாரண அகராதி, அரும்பத விளக்கம் முதலியவற்றின் அகராதி, தொல்காப்பிய முற்பதிப்புகளில் இடம் பெறாத மேற்கோள்விளக்கம், மற்றும் இணைப்பாக இடம் பெறக் கூடிய சில இலக்கணக் குறிப்புகள் போன்வற்றைத் தாம் எழுதியும் தம் மாணவர்களைக்கொண்டு எழுதுவித்தும் சேர்த்துள்ளார். இப்பதிப்பில் தொல்காப்பியம் ஏட்டுப்பிரதிகளை ஒப்புநோக்கி சி. கணேசையர் திருத்திய பல திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றால் இப்பதிப்பு "கணேசையர் பதிப்பு" என்றே சிறப்புடன் அழைக்கப்படுகிறது. உரையாசிரியர் காட்டியுள்ள மேற்கோள் பாடல்களின் அருஞ் சொற்களுக்கும் கணேசையர் பொருள் தந்துள்ளார். மூலபாடங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ளன. இவற்றை மதிப்பிட்டும் இவர்தம் உரை விளக்கக் குறிப்புகளில் எழுதியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கணேசையர் பதிப்புகளாகிய, தொல்காப்பிய எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றின் மறுபதிப்புகளை இப்போது வெளியிடுகிறது. இந்நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்நிறுவனத்தின் தோற்றம் முதல் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து நிறுவனத்தை வளர்த்து வருகிறார்கள். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு இத்தகைய பணிகளால் நிறுவனம் நன்றி செலுத்துகிறது. நிறுவனப் பணிகள் விரைவாகவும் நிறைவாகவும் அமைய ஒல்லும் வகையான் உதவி நல்கி ஆற்றுப்படுத்தும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் செயலாளர், முனைவர் கி. இராச மாணிக்கம் (இ.ஆ.ப - ஓய்வு) அவர்களுக்கு நன்றி. நிறுவனச் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருந்துவரும் சிறப்பு ஆணையர் மற்றும் தமிழ் வளர்ச்சி இந்து சமய அற நிலையத்துறை மற்றும் செய்தித் துறைச் செயலாளர் திருமிகு து. இராசேந்திரன் இ.ஆ.ப. அவர்களுக்கும், இவ்வெளியீட்டிற்கு அரிய நூல் நிதியுதவித் திட்டத்தின்கீழ் அச்சிட நிதி நல்கிய தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைக்கும், இந்நூலின் ஒளி அச்சுக் கோப்பைச் செய்தும் அச்சிட்டும் அளித்த தி பார்க்கர் நிறுவனத் தார்க்கும் நன்றி. - முனைவர் ம. இராசேந்திரன் இயக்குநர் (முழுக்கூடுதல் பொறுப்பு) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (2007) தரமணி, சென்னை - 600 113 சிறப்புப் பாயிரம் உயிரிளங்குமரன் என்னும் நாடக நூலாசிரியரும் இயற்கைக் கவிசிரேட்டருமாகிய நவாலியூர்; ஸ்ரீமாந். க. சோமசுந்தரப் புலவரவர்கள் இயற்றியது ஆசிரிய விருத்தம் தேமணக்குஞ்சந்தனப்பூம் பொழில்மணக்கும் பொதியமெனுஞ் சிலம்பில் மேனாள் தூமணக்கு நறையிதழித் தொடைமணக்குஞ் சடைமௌலித் தூயோன் றாளுங் காமணக்குங் கடம்பணிந்த கதிர்வேற்பெம் மானடியுங் கருதி நோற்று நாமணக்குந் தமிழ்முனிவ னகத்தியமா முதனூலை நல்கி னானால். (1) அன்னவன்மா ணாக்கரொரு பன்னிருவ ரவர்தம்மு ளறிவான் மிக்க மன்னுபெரும் புகழ்த்தொல்காப் பியனாரங் கியற்றமிழை வகுத்து நாடிப் பன்னுதொல்காப் பியமென்னும் வழிநூலொன் றருந்தமிழ்க்கு மருந்தா யீந்தான் அன்னதன்சீ ரெடுத்துரைக்க வளவிலடங் காதுமிகுந் தகலு மன்றே. (2) அந்நூற்கு நல்லுரைபூ ரணனாரை யுள்ளிட்டோ ரன்று தொட்டே நன்னூலின் படியொழுகு நங்கைமணி மங்கலநன் னாணே போலச் செந்நூலின் கிடைத்திறமு மாசிரிய ருளத்திறமுஞ் செவ்வே நாடி எந்நூற்குங் காப்பாகத் திட்பநுட்ப வொட்பமுற வெழுதி னாரால் (3) எழுதியவவ் வுரைத்திறங்க ளிக்காலம் பயில்வோர்தா மினிது தேற கொழுவியதீஞ் சுவைக்கனியின் தீஞ்சாறுந் தேனுமுடன் குழைத்த தென்னப் பழுதில்வகை சொற்றிறமும் பொருட்டிறமும் பலதிறமும் பண்பி னாடி எழுதரிய வுரைவிளக்க மையவிப ரீதமுற வெழுதித் தந்தான். (4) எழுத்திற்குஞ் சொல்லிற்கு மெழிதற்பொருளிற் கடையுளநான் கியல்க ளுக்கும் வழுத்திடுநல் லுரைவிளக்கந் தந்ததற்பின் முன்னுள்ள வாடாக் காதல் பழுத்ததனி யன்பூரப் பண்பூறப் பகர்பொருளி னியல்பு கூறும் விழுத்தகைய வைந்தியற்கு முறைவிளக்க நுட்பமுற விளம்பி னானால். (5) ஆரியமுஞ் செந்தமிழு மாமிரண்டு மொழிபயின்றே யறிவின் மூத்துச் சீரியநான் மறையொழுக்கந் திறம்பாத தவவிரத சீல முள்ளோன் காரணகா ரியத்தொடர்ச்சி யில்லாத கரிமுகவன் கமல பாத நேரியநெஞ் சினினிறுத்தி யெந்நாளுந் துதிக்குமொரு நியமம் பூண்டோன். (6) பன்னுபுகழ் யாழ்ப்பாண நாடுசெய்த பெருந்தவத்தின் பயனாய் மேலாந் தொன்மைதிகழ் காசிபகோத் திரமுலகில் நிலவவந்து தோன்றுந் தோன்றல் மன்னுபுகழ்ச் சின்னைய மாமறையோன் பெற்றெடுத்த மதலை கற்றோர் கண்ணெனவே கொண்டுதுதி கணேசைய னெனுநாமக் கலைவல் லோனே. (7) மற்றதனைத் தனதுதிரு மகளழுத்த கத்துமிக மகிழ்வா யேற்றுப் பொற்புறவே பதிப்பித்து வெளியிட்டான யாவனெனிற் புகலக் கேண்மோ கற்றவர்பா லன்புடையோ னீழகே சரியதிபன் கலைமே லார்வம் பெற்றவன்றென் மயிலைநகர்ப் பொன்னைய வேளென்னும் பெருமை யோனே. (8) கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியிலும் வித்தியா நிலயத்திலும் தமிழ்ப் பண்டிதரா யிருந்தவரும் வித்தகப் பத்திராசிரியரும் பண்டித சிரேட்டருமாகிய தென்கோவை; ஸ்ரீமாந். ச. கந்தையாபிள்ளை அவர்கள் இயற்றியது. ஆசிரியப்பா உலகினி லாதியா யிலகிய தொன்மொழி பலபல தேஎந்தொறும் பண்டைநாட் பயின்றே உலகெலா மளந்த வொருதனிச் செம்மொழி ஆயுக மநாதி காரண மாகி 5 வியாப்பிய வியாபக மாகி மிளிரும் பதிபசு பாசப் பண்புநனி காட்டப் பதிணெண் மெய்யும் பன்னீ ருயிரும் இடைபின் கலைகளி னியக்கங் காட்ட உவற்றின் பெருக்கி னோக்கமே நாளும் 10 உடல்வளி யியக்கவெண் ணுண்மை காட்ட மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையெனும் மெய்யுயி ருண்மை கைவரத் தெரித்து வேதாந்த சித்தாந்த விழுப்பொரு ளுணர்த்தி இயற்கையின் வழாஅ விலக்கண வரம்பும் 15 அகம்புற வொழுக்க மமைவுறக் காட்டி விழுமிய சொற்பொரு டழுவுசெந் தமிழால் இயற்கை யன்னையின் வனப்பு மீக்கூரச் சங்கச் சான்றோர் தாமினி துஞற்றிய அறிவுறு துறையெலா நிறைபல பனுவலும் 20 இறையனார் வள்ளுவ ரிடைக்காட ரவ்வை ஆதியோ ரருளு மரும்பெரு மறைகளாய் அறம்பொரு ளின்பம்வீ டடையு நெறியின் திறன்றெரிந் துரைக்குந் தெய்விக நூல்களும் பிணிமூப்புச் சாக்காடும் பிறவியு மொரீஇ 25 உடலு முயிரு மொழிவற வொன்றி அள்ளூ றாக்கையா யருளாய் வெளியாய்ச் சத்திசிவ வடிவாய்த் தாரணி கண்டிட ஞானா காசத்து நண்ணி யொடுங்கும் அடியவ ராழ்வா ரநுபவந் தெரித்து 30. முத்திநிலை காட்டும், வித்தக மறைகளாய் ஒப்புயர் வில்லாத் திப்பியம் வாய்ந்த திருவா சகமே திருக்கோவை யாதிய தெய்விக நூல்களுஞ் செகத்தோர்க் கெட்டா மன்னிய கலையென மருவுநால் வேதத் 35 திருநெறி யான திருகுகண் மலிந்த கருமூல மொழிக்குந் திருமூலர் முதலாம் சித்து மூர்த்திகடந் தெய்விக மறைகளும் சாத்திரப் பெயராற் றரணியோர் பயில அறிஞர்பல ரமைத்த வரியபன் னூல்களும் 40 கற்பனை திகழச் சொற்பொரு ணயம்படப் புலவர் பல்லோர் புனைந்தபன் னூல்களும் தன்பாற் கொண்டு தான்றனித் தியங்கும் ஆற்றல் சான்ற அமிழ்தெனுந் தமிழ்மொழி 45 ஊழிதோ றூழிதோ றோங்கி மும்மைச் சங்கத் திருந்து தழைத்த தனிமொழி என்றுமே மன்ற நிலைஇய தென்றமிழ் தேனினு மினிய, செழுஞ்சுவை கனிந்த தெய்வச் செந்தமிழ்ச் சிறப்பினைத் தெரித்தல் 50 அகத்திய ரனைய வருந்தவர்க் கல்லால் எம்ம னோருக் கியல்வதோ! அம்ம! உலக மாக்களுக் கொல்லுவ தாமோ!!! அந்நியர் பல்லோ ராட்சி மன்னிக் கால கதியிற் கலங்கிய தெனினும் 55 திருவருட் பெற்றி திகழ்தர வென்றும் வழக்குவீ ழாது வாழ்வுபெற் றன்றே! தமிழக மின்றுதன் னுரிமைநலம் பெறுதலின் நந்தமிழ் மொழியு நலமுறத் தழைத்துப் புத்துயிர் பெறீஇப் புதுமைநலந் திகழ்ந்து 60 பண்டைப் பரிசுங் குன்றாது நாளும் அருநூல் பலப்பல வவனியோர்க் களித்து வாழ்வுபெற் றோங்கத் திருவருள் வழங்கெனச் சங்கத் தமிழின் றலைமைப் புலவனைச் சாந்தசிவ வடிவிற் சண்முக நாதனை 65 ஞானகுரு பரனா(ம்) நங்கண் மணியினைத் திருவடி தொழுது சேர்குதும் யாமே! இயலிசை கூத்தென வியலபன் னூல்களுட் கடல்கோட் பட்டன வொழிய வழிவழி இற்றைநாட் பயிலு மிலக்கண நூல்களுள் 70 தொன்மை சான்றது தொல்காப்பியமே பிறமொழிக் கமையாப் பெட்புநனி வாய்ந்த தன்னிலை முன்னிலை யொழுக்கெனச் சமைந்த அகம்புற விலக்கண மழகுறத் தெரிக்கும் ஈங்கிதன் பெற்றி பாங்குறக் கிளக்கின் 75 மறம்பொரு டுன்ப மரணம தொரீஇ அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனெனும் பொருளுரைக் கேற்ற பொற்புடைத் தன்றே அகமே புறமே களவே கற்பே பொருளிய லெனப்படூஉம் பொருட்பா லிதுவே 80 வேத வுண்மைபல விளக்கிய தாமே! முதல்கரு வுரியென முன்னிய மூன்றும் பதிபசு பாசப் பண்புதெரித் தன்றே கருவது திரிய முதலெனு முருவும் திரிதரூஉ முரியெனு மொழுக்கமுந் திரியும் 85 திரிதலே மாற்றிப் பிறத்தலாய்த் திகழும் காய மாயங் கழிதற னிதுவே பெற்றசிற் றின்பமே பேரின்ப மாகி முற்ற வரூஉமென முழங்கிடும் வேதம் பிராணனொ டபானனாப் பேசிட நின்ற 90 கொடிநிலை வள்ளி வடுநீங்கிச் சமமுற அசுத்த காம வுணர்ச்சியா யமைந்த கந்தெனு மகத்த வளியுங் கசடொரீஇ அமல மாகி யருவாய்ச் சிவமாம் ஊச லாட்டு முடலுயி ராயின 95 இயக்க வொருப்பா டினிதி னமைதரூஉம் இருவினை சமமுற மலபரி பாகமாம் மணங்கமிழ் தெய்வத் திளநல மென்னும் கந்தழி காட்டுங் கந்தருவ நெறியே அசையா தசையு மமல நிலையாம் 100 பொன்னூச லாட்டம் பொலிதரத் திகழும் வேதாந்த சித்தாந்த சமரச நெறியாம் காமஞ் சான்ற கந்தழி யுருவே கண்ணீர் மல்கிக் கசிந்து நாளும் நாத வேத மோதுங் காதலாம் 105 மையலே காதலென மயங்கு முலகோர் அசுத்த காமத்தா னலக்கணுற் றழிகுவர் ஆவது மழிவது மொன்றினா லென்பது தேவராஞ் சித்தர் திருவாக் கன்றோ! கடையா யுள்ளா யுடலக மரீஇய 110 என்பினு ளன்பா யின்பமாய்ச் சிவமாம் கருவெனும் விந்தே குருநெறி தழீஇய அரியசா தகத்தா லமலமா யுடலில் உணர்வெனம் பெரும்பதந் தெரி தர வுறைதலாம் கடைக்கோ ளிதனாற் காமஞ் சான்றுழிக் 115 கடக்களி றேற்றாத் தடப்பெரு மதம் எனும் விந்து மதமாம் இந்துமதந் திகழ அன்பினில் விளையு மாரமு தமைய மருளுறு காயமே மாசெனும் பாசொரீஇ ஏமஞ் சான்ற வீனமி லுடலெனும் 120 பேரின்ப நல்கும் பிரமக் கிழத்தியாம் அன்பே யமிழ்தாய்ச் சிவமா யமைதரூஉம் சாகாக் கல்விப் பயனா யுடலுயிர் குருவெனுஞ் செம்பொனாய்க் குலவவே வாய்மைப் பொருட்பே றாமெனப் புகன்றிடும் வேதம் 125 தேவியுந் தானுமா யீசனெமை யாளச் கண்ண மிடித்தலி னுண்மையு மிதுவே பொன்மயன் சிவனெனும் பொருட்பொழிப் பிதுவே உற்ற வாக்கையி னுறுபொரு ளாகிச் சத்தெனத் திகழுந் தாதுவே பொன்னாம் 130 திருவடிப் பேறா யிருளினை யகற்றும் பொருளெனும் பொன்னே பொய்யா விளக்கமாம் நடுவதா மிதனா லிருதலையு மெய்தும் தமிழுக் கிருவராய்த் தயங்கி முறையே சாத லுறாத சாத லடைந்தே 135 கந்தழி பெறீஇக் கருது மிருநான் கூன நீங்கி யொழிவற வொன்றி அசையா தசையு மமலநிலை யமைந்த உயிரு முடலுமாங் கிழவனுங் கிழத்தியும் அள்ளூ றாக்கையோ டமிழ்த முண்டு 140 தவத்திற் கொருவராய்த் தம்பா லமைந்த பசுகரண மெல்லாம் பதிகரண மாகி அறம்புரி சுற்றமா யமைதரச் சிறந்த குருநெறி பக்குவர் குறிக்கொளப் பயிற்றி நித்தியம் பெறூஉ முத்திநெறி யிதுவே! 145 இன்னன வேத வுண்மைகண் மலிந்த பொருட்பான் மாண்பு புகலவும் பெரிதே! தமிழியன் மாண்பு சாற்றவும் பெரிதே! தொன்மை சான்றவித் தொல்காப் பியத்துள் அகத்திணை முதலா வமைந்தவைந் தியற்கும் 150 உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க் கினியர் உலகிய னாடி யுஞற்றுபே ருரையினைப் பலகாற் றுருவிப் பண்புற நாடிக் காலநிலைக் குரிய கடப்பா டோர்ந்து மாணவர் குழாமு மருவுமா சிரியரும் 155 மடனகன் றுணரத் தடைவிடை காட்டி விளக்கமுற விசேடக் குறிப்புரை விரிவான் உதவுபே ரறிஞ னுவன்யா ரெனினே செந்தமிழ் வழங்குந் திருநா டிதுவெனப் போற்றும்யாழ்ப் பாணப் புன்னையம் பதியிற் 160 சினைய விப்பிரன் செய்தவப் புதல்வனாய் கோதிலாக் காசிப குலவிளக் கானோன் சைவமுந் தமிழுந் தழைத்திட வருந்தொண் டாற்றிய நல்லூர் ஆறுமுக நாவலன் மருகனாய் வித்தவன் மணியெனப் புகலும் 165 பொன்னம் பலவனாம் புலவனுஞ் சிறியேன் தமிழா சிரியருட் டலைவ னாகிக் கற்போர் யார்க்குங் கரவாது நாளும் சொற்பொரு டெளிக்குந் தூய்மைசா லுளத்தாற் பயன்மர முள்ளூர்ப் பழுத்தன பண்பிற் 170 கன்னைவாழ் குமார சுவாமிப் புலவனும் வரமுற குரவராய் மன்னிட வுவர்பாற் கலையெலா மினிது கற்றொருங் குணர்ந்தோன் பண்டிதர்க் குரிய பரீட்சார்த் திகளாம் மாணவர் பல்லோர்க் கோவாது பல்லாண் 175 டருநூல் பயிற்று மநுபவ வுறைப்பினன் தொல்காப் பியமெனுந் தொன்னூ லுரைக்கெலாம் விளக்கவுரை வரைந்த வித்துவப் பெரியோன் தூக்கின் மெலியது தூக்கி மீக்கொள வலியதே தாழும் வகைமை மான 180 அறிவுவீற் றிருக்குஞ் செறிவுடை யுளத்தாற் பணிவுமின் சொல்லுமே யணியெனக் கொண்டோன் முத்தி வாயிலென முன்னுமுதற் படியாம் வியாப்பிய வியாபக சந்தியாய் மிளிரும் அகலிட மாக்க ளணுகுதற் கெட்டாப் 185 பூம்புக லூரெனும் புகலிடங் காட்டும் புண்ணிய விமல புராண காரண விநாயக னடியே விழுத்துணை யாகத் தனாதுளங் கொண்ட தவநெறி யாளன் இயற்றமிழ்ப் புலமையி னிணையிலாத் திராவிட 190 கலாநிதி யென்னுங் கணேசவிப் பிரனே! இந்நூ லுரைகளை யெழிலுற வச்சில் அமைத்து வழங்கு மருந்தமிழ்த் தொண்டனாம் பொன்னைய நாம மன்னிய குரிசிறன் தமிழ்மொழி யார்வமுஞ் சால்புநனி யுடைத்தே. பொருளதிகாரம் மேல் எழுத்திலக்கணமுஞ் சொல்லிலக்கணமும் உணர்த்திய ஆசிரியர், அவ்விருவகை யிலக்கணங்களையுங் கருவியாகக் கொண்டு மக்கள் உணர்ந்துகொள்ளுதற்குரிய பொருள்நெறி மரபினை இவ்வதிகாரத்தில் வகுத்து விளக்குகின்றார். அதனால் இது பொருளதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. இவ்வுலகிலுள்ள காட்சிப்பொருள் கருத்துப்பொருள் ஆகிய எல்லாவற்றையும் நன்காராய்ந்து அவற்றை முதல், கரு, உரி யென மூவகைப்படுத்துணர்த்தி, இவ்வுலகத்து வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை முறையினை வகுத்துரைப்பது பொருளிலக்கண மெனப்படும் இப்பகுதி தமிழுக்கே சிறப்புரிமை யுடையதாகும். நிலமுங் காலமும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அடிப்படைப் பொருள்கள். எனவே அவை முதற் பொருளெனப் பட்டன. நிலமெனவே நிலத்திற்குக் காரணமாகிய நீரும், நீர்க்குக் காரணமாகிய தீயும், தீயிற்குக் காரணமாகிய காற்றும், காற்றுக்குக் காரணமாகிய ஆகாயமும் அடங்கும். காலமாவது உலக நிகழ்ச்சிக்குத் துணையாய் முன்னும் பின்னும் நடுவுமாகி என்றுமுள்ளதோர் அருவப்பொருள் அது ஞாயிறு, திங்கள் முதலிய அளவைகளால் காலை, நண்பகல், எற்பாடு, யாமம், வைகறையென அறுவகைச் சிறு பொழுதுகளாகவும்; கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என அறுவகைப் பெரும் பொழுதுகளாகவும்; மாத்திரை, நாழிகை, நாள், திங்கள், ஆண்டு முதலிய கூறுகளாகவும் பகுக்கப்படும் நிலமும் காலமு மாகிய முதற்பொருளின் சார்பினாலுண்டாகும் புல் முதல் மக்களீறாக வுள்ள உயிர்ப் பொருள்களும் ஏனை உயிரல் பொருள்களும் கருப்பொருள்களாம். இவை முதற்பொருளின் கண்ணே கருக்கொண்டு தோற்றுவனவாதலின் கருப்பொரு ளெனப் பட்டன. அறஞ்செய்தலும் பொருளீட்டலும் இன்பம் நுகர்தலுமாகிய ஒழுகலாறுகள் உரிப் பொருள்களாம் இவை மக்களுக்கே யுரிய பொருள்களாதலின் உரிப்பொருளெனப் பட்டன. கணவனும் மனைவியும் அன்பினாற் கலந்து வாழுங் குடும்ப வாழ்வினை அகமென்றும், இவ்வாறு பல்லாயிரங் குடும்பங்கள் இகலின்றி ஒத்து வாழ்வதற்கு அரணாகிய அரசியல் வாழ்வினைப் புறமென்றும் கூறுதல் தமிழ்மரபாகும். அகமாவது ஒருவனும் ஒருத்தியும் அன்பினாற் கூடி நுகரும் போக நுகர்ச்சியாகலான் அதனாலாய பயன் அதனைத் துய்த்த அவ்விருவர் உள்ளத்திற்கே புலனாதலின் அதனை அகம் என்றார். புறப் பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலு மாதலால் அவற்றாலாய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறமென்றார். இவ்வாறு உலகத்துப் பொருளெல்லாவற்றையும் முதல், கரு, உரி யென மூன்றாகப் பகுத்து அவற்றை அகம், புறமென இருவகையாக வகுத்து விளக்குதல் பண்டைத் தமிழர் கண்டுணர்ந்த பொருள்நூற் றுணிபாதலின் முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிய ஆசிரியர் தொல்காப்பியனாரும் முன்னைத் தமிழாசிரியர் கூறிய முறையே பொருளிலக்கண வரம்பினை இவ்வதிகாரத்து விரித்துணர்த்துகின்றார். அறம், பொருள், இன்பம், வீடு என உலகத்தோரும் சமயத் தோருங் கூறுகின்ற பொருள்கள் யாவும் முதல், கரு, உரியென்னும் இம்மூன்றனுள் உரிப்பொருளாய் அடங்கு மென்றும், தொல் காப்பியமாகிய இந்நூலகத்துக் காமப்பகுதியும், வீரப்பகுதியும் விரித்துக் கூறப்பட்டன, ஏனைய தொகுத்துரைக்கப் பட்டன வென்றும், இன்பங் காரணமாகப் பொருள் தேடுவராதலானும் பொருளாலே அறஞ் செய்வராகலானும் இந்நூலாசிரியர் (தொல்காப்பியனார்) இன்பமும் பொருளும் அறமுமென ஓதினாரென்றும் இளம்பூரணர் கூறுகின்றார். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 226-227 அகத்திணையியல் அகத்திணைக்கொல்லாம் பொதுவிலக்கண முணர்த்து தலின் அகத்திணையியலென்னும் பெயர்த்தாயிற்று. ஒத்த அன்பினால் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்த தெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகமென்றார். அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயர், இதனையொழிந்தன அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும் இவை இவ்வாறிருந்தவெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவே படும் என்பர் நச்சினார்க்கினியர். இவ்வகத்திணையியற் சூத்திரங்களை 58-ஆக இளம்பூரணரும் 54-ஆக நச்சினார்க்கினிரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். எழுவகை அகத்திணையுள் உரிமை வகையான் நிலம்பெறு வன முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன. அந் நிலத்திடைப் பொதுவகையான் நிகழ்வன கைக்கிளை, பெருந்திணை, பாலை யென்பன. அவற்றுட் பாலைத்திணை நடுவணது எனப்பட்டு நால்வகை யொழுக்கமும் நிகழுங்கால் அந்நான்கனுள்ளும் பிரிதற்பொருட்டாய் நிற்கும். முதல், கரு, உரிப் பொருளும் உவமங்களும் மரபும் இத்தன்மையவென்பதும் இவைபோன்ற அகத்திணைக்குரிய பொதுப் பொருண்மை களும் இவ்வியலில் உணர்த்தப்படுகின்றன. அகத்திணைக்குரிய சிறப்பிலக்கணம் களவியல், கற்பியல், பொருளியல் முதலாகப் பின்வரும் இயல்களில் விரித்துரைக்கப்படும். கைக்கிளை முதலாகப் பெருந்திணை யிறுதியாகச் சொல்லப்படும் அகத்திணை யேழனுள் நடுவே வைத்து எண்ணப்பட்ட முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தலென்னும் ஐந்தையும் ஐந்திணையென ஒன்றாக அடக்கி, கைக்கிளை, பெருந்திணை, ஐந்திணையென மூவகையாகப் பகுத்து விளக்குவர் ஆசிரியர். ஒருவன் ஒருத்தியென்னும் இருவருள் ஒருவர் மட்டும் அன்பினாற் கூடி வாழ்தலில் அளவிறந்த வேட்கை யுடையராயொழுக, மற்றவர் அவரது அன்பின் திறத்தை யுணர்ந்து கொள்ள முடியாத நிலை ஒருபக்கத்து உறவு. ஆதலின் கைக்கிளையெனப்படும். கை-பக்கம். கிளை-உறவு. கைக்கிளை யென்பது ஒருதலைக் காமம். ஒருவன் ஒருத்தியாகிய இருவருள் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் நிலை பெருந்திணையெனப்படும். இத்தகைய உளம் பொருந்தா வாழ்க்கை உலகியலிற் பெரும்பான்மையாகக் காணப்படுதலால் இதற்குப் பெருந்திணையெனப் பெயரிட்டனர் முன்னையோர். பெருந்திணை - உலகிற் பெரும்பான்மையாக நிகழும் ஒழுகலாறு. பல பிறவிகள் தோறும் கணவனும் மனைவியுமாக ஒன்றி வாழ்ந்தமையால் நிரம்பிய அன்புடை யாரிருவர் வேறுவேறிடங்களிற் பிறந்து வளர்ந்தராயினும் நல்லூழின் செயலால் ஒரிடத்தெதிர்ப் பட்டு நெஞ்சு கலந்து அன்பினால் அளவளாவுதலும், அவ்விருவருள் கணவன் உலகியற் கடமை கருதிச் சிலநாள் மனைவியைப் பிரிந்து சேறலும், மனைவி அப்பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து ஆற்றியிருத்தலும் பிரிந்த கணவன் குறித்த நாளில் வரத் தாமதிப்பின் அவள் ஆற்றாமை மிக்கு இரங்குதலும், பின் அவன் வந்தபோது அன்பினாற் பிணங்குதலும் என ஐந்து பகுதியாக ஒத்த அன்புடையா ரிருவரது ஒழுகலாறு விரித்து விளக்கப் பெறுதலின் அஃது ஐந்திணையெனப் பெயர் பெறுவதாயிற்று. இவ்வைந்திணையொழுகலாறுகள் எல்லா நிலத்தும் எல்லாக் காலத்தும் பொதுவாக நிகழ்தற்குரியனவே, எனினும் இவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புரிமையுடைய நிலமும் பொழுதும் இவையெனப் பண்டைத் தமிழாசிரியர் வரம்பு செய்து இலக்கணம் வகுத்துள்ளார்கள். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சி. செவ்வேள் எழுந்தருளிய மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிர்ப்பருவமும் மார்கழியுந் தையுமாகிய பின்பனிப் பருவமும் இவற்றின் நள்ளிரவும் இதற்குரிய காலமாகும். இந்நிலமுங் காலமுமாகிய முதற் பொருள் காரணமாக, இவற்றிற் கருக்கொண்டு தோன்றிய கருப்பொருள் நிகழ்ச்சிகள் துணையாக, ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவருள்ளத்திலும் புணர்தலுணர்வு தோன்றுமென்ப. இவ்வாறே மாயோன் எழுந்தருளிய காடுறை யுலகமும் கார்காலமும் அவற்றின்கண் தோன்றிய கருப்பொருள்களும் ஏதுவாக இருத்தலுணர்வும், வருணன்மேய பெருமணற் பகுதியாகிய கடற்பரப்பும் ஞாயிறு மறையும் பொழுதாகிய எற்பாடும் அங்குத் தோன்றுங் கருப்பொருளும் ஏதுவாக இரங்கலுணர்வும், வேந்தன் ஆட்சிபுரியும் வயல் சார்ந்த நிலமும் வைகறை விடியலும் அங்குள்ள கருப்பொருள்களும் காரணமாக ஊடலுணர்வும், வேனிற் காலத்து நண்பகற் பொழுதில் ஞாயிற்றின் வெப்பத்தால் நல்லியல்பிழந்து பாலையாய் மாறிய நடத்தற்கரிய வழிகளும் அங்குள்ள கருப்பொருள்களுந் துணையாகப் பிரிதலுணர்வும் மேற்பட்டுத் தோன்றுமெனத் தமிழ்ப்பொருளிலக்கண ஆசிரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமது கூர்ந்த நுண்ணுணர்வால் ஆராய்ந்து அறிவுறுத்தியுள்ளார்கள். இவ்வாறு தொல்லாசிரியர் கண்டுணர்த்திய முதற் பொருள் கருப்பொருள்-உரிப்பொருள் என்பவற்றின் இயல்புகள், நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளின் சார்பாலும் அச்சூழலிற் றோன்றிய கருப்பொருள்களின் துணையாலும் மக்களின் மனவுணர்வாகிய உரிப் பொருளொழுகலாறுகள் மாண்புற்றுச் சிறத்தலை இனிது விளக்குவனவாம். மக்களது உணர்வு அவர்கள் பிறந்து வாழும் இடத்தின் வன்மை மென்மை வெப்பதட்பம் முதலிய நிலத்தியல்புக் கேற்பவும் காலவியல்புக் கேற்பவும் வேறுபடும் நீர்மையதென்பதனை இக்கால அறிவியல் நூலாரும் ஏற்று வற்புறுத்துவர். நீரானது தான் சேர்ந்த நிலத்தின் தன்மையினாலே நிறம் சுவை முதலிய பண்புகள் மாறுபடுதலை தாம் வெளிப்படையாக அறிகின்றோம். நீரேயன்றி மக்களது மன நீர்மையும் நிலத்திற்கும் காலத்திற்கும் அவற்றின்கண் தோன்றிய கருப்பொருளாகிய சுற்றுச்சார்பிற்கும் ஏற்ப மாறுபடு மென்பதனைப் பண்டைத் தமிழ்ச் சான்றோர் மன நூற் பயிற்சியால் நன்கு தெளிந்திருந்தார்கள். நிலத்தியல்பால் மக்களது மனநீர்மை திரிதலும் மக்களது மனத்தியல்பால் நிலத்தியல்பு மாறுபடுதலும் வித்தும் மரமும்போன்று ஒன்றற்கொன்று காரணகாரியங்களாம். நிலம் முதலிய புறப்பொருள்களின் தொடர்பால் மக்களது மனத்தகத்தே அன்பென்னும் உயிர்ப்பண்பு வளர்ந்து சிறத்தல் அகத்திணை வளர்ச்சியாகும். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்னும் வாய்மொழிக்கேற்ப அமைந்த மக்களது மனத்தின் ஆற்றலால், புறப்பொருளாகிய நிலத்தியல்பு வளர்ந்து சிறத்தல் புறத்திணை வளர்ச்சியாகும். இவ்விருவகை வளர்ச்சியினையும் முறையே அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பவற்றிலும் புறத்திணையியலிலும் ஆசிரியர் தொல்காப்பியனார் உய்த்துணர வைத்துள்ளார். முதல், கரு, உரி யென்னும் மூவகைப் பொருளையுந் திணை யென்ற சொல்லால் வழங்குவர் ஆசிரியர். காட்டில் முல்லையும் மலையிற் குறிஞ்சியும் வயலருகே மருதமும் கடலருகே நெய்தலும் பெருக வளர்தல்பற்றி அந்நிலங்களை முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் பூக்களாற் பெயரிட்டு வழங்கினர். பாலை யென்பதற்கு நிலமில்லை யாயினும் வேனிலாகிய காலம்பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும் பாலையென்னும் பெயருடைய மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலையென்று பெயரிட்டார். கைக்கிளை பெருந்திணை யென்பனவற்றுக்கு நிலமும் காலமும் பகுத்தோதாமையின் பிறிதோர் காரணம்பற்றிப் பெயரிட்டார். காடும் மலையும் ஊருங் கடலுமாகிய நானிலப் பகுதிகளும் அவற்றின் திரிபாகிய பாலையும், தம்பாற் சிறந்து வளரும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை யென்னும் பூக்களாற் பெயர் பெறுதலால் அவ்வந் நிலத்திற்குச் சிறந்தியைந்த இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்னும் அகவொழுக்கங்களும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என அவ்வந் நிலத்திற்குரிய பூவின்பெயர்களே கொள்வனவாயின. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்பன முறையே இருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல் என்னும் ஒழுக்கத்தைக் குறித்த பெயர்களென்றும் இவ்வொழுக்கத்தின் பெயர்களே இவைநிகழும் நிலத்திற்கு மாயின வென்றுங் கருதுவர் நச்சினார்க்கினியர். அவ்வந் நிலங்களிற் சிறப்பாக வளரும் பூவின் பெயர்களே அவை தோன்றி வளரும் நிலத்திற்கும் அந்நிலத்திற் சிறப்புரிமையுடையதாய் நிகழும் ஒழுக்கத்திற்கும் ஆகு பெயராய் வழங்கின எனக் கொள்வதே பொருத்தமுடையதாகும். இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றியனவாதலாலும் மகளிர், கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல் லிருந்து நல்லறஞ் செய்தலே முல்லையாதலாலும் அது முற்கூறப் பட்டது. புணர்தலின்றி இல்லறம் நிகழாமையின் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். புணர்ச்சிப் பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். மருதத்திற்குரிய பரத்தையிற் பிரிவுபோலப் பிரிவின்கண் நிகழ்வது இரங்கலாகிய நெய்தலாதலின் நெய்தலை ஈற்றின்கண் வைத்தார். என இவ்வாறு முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறைக்குக் காரணங் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வாறே முல்லைக்குக் காரும் மாலையும் குறிஞ்சிக்குக் கூதிர்யாமமும், மருதத்திற்கு வைகறை விடியலும், நெய்தலுக்கு எற்பாடும், பாலைக்கு நண்பகலும் வேனிலும் சிறந்தனவாதற்கு அவ்வாசிரியர் உய்த்துணர்ந்து கூறுங் காரணங்கள் உணர்ந்து மகிழத்தக்கனவாம். குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே வேனில் வெப்பத் தால் வளங்குறைந்து நடத்தற்கரியதாய் மாறிய காலத்துப் பாலையென வழங்கப்படும். முல்லையுங் குறிஞ்சியும் முறைமை யிற்றிரிந்து, நல்லியல்பிழந்து, நடுங்குதுயருத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளுங்காலை என இளங்கோ வடிகள் கூறுதலால் இவ்வழக்கின் உண்மை துணியப்படும். இளங்கோவடி களுக்கு நெடுங்காலம் முற்பட்டவராகிய ஆசிரியர் தொல்காப்பியனார் காலத்துப் பாலையென்னுஞ் சொல் பிரிவொழுக்கமாகிய திணையைக் குறித்து வழங்கியதே யன்றி நிலத்தைக்குறித்து வழங்கவில்லை. அவர் காலத்துக் காடுறையுலகமும் மைவரை யுலகமும் தீம்புனலுலகமும் பெருமணலுலகமும் என இவ்வுலகத்தை நான்கு நிலமாகப் பிரித்துரைக்கும் வழக்கமே நிலவியதென்பது இவ்வியல் 5-ஆம் சூத்திரத்தால் இனிது புலனாம். தொல்காப்பியனார் பாலைக்கு நிலம் வேண்டிற்றிலர்; வேண்டாமையின் தெய்வமும் வேண்டிற்றிலர். பிறர் பகவதியையும் ஆதித்தனையும் தெய்வமென்று வேண்டுவர் எனக் களவியலுரையாசிரியர் கூறுங் கூற்று இதனை வலியுறுத்தல் காணலாம். காலிற்பிரிவு கலத்திற்பிரிவு என்னும் இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றுதலும் பாலைத் திணைக்கு ஏற்புடைய தாகும். ஐந்திணையொழுக்கங்கள் தத்தமக்குச் சிறப்புரிமையுடைய நிலத்தினுங் காலத்தினும் நிகழ்வதுடன் பிற நிலங்களிலும் காலங் களிலும் கலந்து நிற்றல் விலக்கப்படாது. அங்ஙனம் கலக்குங்கால் இரண்டு நிலம் ஒருங்கு நிற்றலில்லை. உரிப்பொருளல்லாத கருப்பொருளும் காலமுதற் பொருளும் மற்றைத் திணைகளிற் சேர நிற்றலுண்டு. தலைவன் தலைவியை உடன்போக்கில் அழைத்துக் கொண்டு பெயர்தலும், தலைமகளுடைய சுற்றத்தார் இடைச்சுரத்திலே தடுத்து நிறுத்துதலால் தலைவனைப் பிரிந்த தலைவி இரங்குதலுமாகிய இருவகை யொழுக்கங்களும் இடைச்சுரமாகிய ஓரிடத்திலேயே நிகழ்தலுண்டு. இவ்வாறே தலைவன் தலைவியை யெதிர்ப்படும் முதற்காட்சியும் அக்காட்சிக்குப்பின் தலைமகளுளக் குறிப்பறிந்து கூடும் உள்ளப்புணர்ச்சியும் ஓரிடத்தே நிகழ்வனவாம். முதற்பொருள் நிலமுங் காலமுமாகிய இவ்விருவகையாலும் உரிப்பொருளுக்கு இடனாய் நிற்பதாகும். தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ்வகை என்பவற்றுடன் அத்தன்மைய பிறவும் கருப்பொருள்களெனப் படும். ஒரு நிலத்திற்குரிய கருப்பொரு ளாகிய பூவும் பறவையும் அந்நிலத்தொடும் பொழுதொடும் வந்திலவாயினும் வந்த நிலத்தின் தன்மையுடைய னவாகக் கொள்ளப்படும், என இவ்வியல் 13-முதல் 21-வரையுள்ள சூத்திரங்களாற் கூறுவர் ஆசிரியர். ஒருதிணைக்கண்ணே நிலத்துவாழும் மக்கட்பெயர் நிலப் பெயரும் தொழிற்பெயரும் என இருவகைப்படும். ஆயர் என்பது முல்லை நிலத்தில் வாழ்வாரைக் குறித்து வழங்கும் நிலப்பெயராகும். வேட்டுவரென்பது வேட்டைத் தொழில் செய்வாரைக் குறித்து வழங்குந் தொழிற் பெயராகும். ஆயர் வேட்டுவர் எனவரும் இப்பெயர்கள் ஆண்மக்களைப்பற்றி வருந் திணைப் பெயர்களாகும். இவர்களுள் அகத்திணை யொழுக லாற்றிற்குரியராய் வரும் தலைவரும் உளர். இவ்வாறே ஏனை நிலங்களில் வாழும் மக்கள் பாலும் அகவொழுக்கத்திற் குரியராய் வழங்கு பெயர்கள் நீக்கப்படாவாம்; என நானில மக்களும் அகவொழுக்கத்திற் குரியராதலை 22, 23, 24-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். தாமே பொருளீட்டி வாழ்க்கை நடத்துதற்குரிய வினைத் திறமின்றிப் பிறர்பால் தாழ்ந்து தம்முணர்வின்றித் தொண்டு செய்தொழுகுவோர் அடியோர். தம் உணர்வு மிகுதியால் தாமே ஒரு தொழிலைச் செய்து முடிக்கவல்லவர் வினைவலர். தாமாக ஒன்றைச் செய்யாது பிறர் இத்தொழிலை இவ்வாறு செய்க என ஏவினால் அவர் ஏவியவண்ணம் செய்யுமியல்புடையோர் ஏவல் மரபின் ஏனோர். இவரனைவரும் பிறர்க்கு அடங்கி அவர் சொல்வழியொழுகு மியல்பினராதலின், அறம்பொருளின் பங்களில் வழுவா தொழுகும் அகனைந்திணை யொழுகலாற் றிற்கு உரியரல்லரென்றும் அவற்றின் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்கேயுரிய ரென்றும் கூறுவர் தொல்காப்பியர் (அகத்-25, 26) ஓதல், பகை, தூது என்பன பிரிவுக்குரிய நிமித்தங்களாம். ஓதற்குப் பிரியும் பிரிவும் தூதாகிப் பிரியும் பிரிவும் ஒழுக்கத்தாலும் பண்பினாலும் உணர்வு மிகுதியாலும் ஏனை யோரினும் உயர்வுடையார்க்கே யுரியனவாம். பகைவரை வெல்லுதற் பொருட்டு வேந்தன் தானே படையொடு செல்லுதலும் அவனொடு பொருந்திய ஏனைக் குறுநிலத் தலைவர் படையொடு செல்லுதலும் வேந்தனது ஆணைவழி நிகழ்தற்குரியனவேயாம். வேந்தனாற் சிறப்பளித்துப் பாராட்டப்பெற்ற ஏனையோர், முல்லை முதலாகச் சொல்லிய நிலப்பகுதிகளுள் அலைத்தல் பெற்றுச் சிதைவுற்றதனைச் சிதைவு நீக்கிக் காத்தல் வேண்டியும், அரசிறையாக இயற்றப்பெற்ற பொருளை ஈட்டுதல் கருதியும் பிரிந்து செல்வர். மலர்தலையுலகிற்கு உயிரெனச் சிறத்தலின் எல்லா மக்களினும் மேலோராகிய வேந்தர்க்குரிய முறை செய்தற்றன்மை நானிலத் தலைவர்க்கும் ஒப்பவுரியதாகும். மன்னர்க்குரிய ஆட்சியுரிமை யில் அவரது குடியிற் பிறந்த பின்னோர்கள் இயல்பாக உரிமையுடையராவர்; அவ்வுரிமை உயர்ந்தோர்க் குரியதாக நூலிற் சொல்லப்பட்ட முறைமையான் வந்தெய்தும். முடிவேந்தர்க்கு இயல்பாகவுரிய ஆட்சியுரிமை, அவர் குடியிற் பிறந்தோர்க்கேயன்றி, வேந்தர்குடியின் வேறுபட்ட ஏனையோர் பாலும் எய்துமிடமுடைத்து. வேந்து வினையியற்கை யெய்திய ஏனோர்க்குப் பொருள்வயிற் பிரிவும் உரியதாகும். அங்ஙனம் அவர் சென்று ஈட்டும் பொருள் உயர்ந்தோரால் மதிக்கப்படும் சிறப்புடைய ஒழுக்கத்தோடு பொருந்தியதாதல் வேண்டும். அன்பினைந்திணையே யன்றிக் கைக்கிளை பெருந்திணையாகிய எத்திணைக் கண்ணும் பெண்ணொருத்தி நாணிறந்து மடலேறினாள் என்றல் பொலிவுமிக்க வாழ்க்கை நெறியன்று; ஆதலால் தலைவன் தலைமகளையுடன்கொண்டு கடல்கடந்து செல்லும் வழக்கம் இல்லை. என 27-முதல் 38-வரையுள்ள சூத்திரங்களால் அகவொழுக்கங்களிற் பெருவர விற்றாய பாலைத்திணைக்குரிய நோக்கமும் செயல்முறைகளும் அவற்றுக்கு உரிமையுடையோர் இன்னின்னாரென்பதும் உணர்த்துவர் ஆசிரியர். தலைமகள் தலைவனுடன் போகியவழி நற்றாய் கூறவனவும், செவிலிக்குரிய திறமும், தலைமகளைத் தலைவனுடன் அனுப்புங்கால் தோழி கூறுவனவும், உடன்போக்கிற் கண்டோர்க்குக் கூற்று நிகழுமிடங்களும், பிரிவின்கண் தலைமகற்குக் கூற்றுநிகழுமிடங்களும், ஏனையோர் கூற்றிற்கு உரியராதலும் 39-முதல் 45-வரையுள்ள சூத்திரங்களால் உணர்த்தப்பட்டன. முன்னர் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்குரிய நிமித்தமாதலும், முன்பு நிகழ்ந்ததொன்றினைக் கூறி நிற்றல் ஒருதிணையாயடங்குதலும், அகத்திணை மரபு மாறுபடாதனவாய்க் கலத்தற்குரிய பொருள் நிகழ்ச்சிகள் கலத்தலுண்டென்பதும் முறையே 46, 47, 48-ஆம் சூத்திரங்களிற் சொல்லப்பட்டன. அகப்பொருளொழுகளாற்றில் சொல்லால் வெளியிட்டுக் கூறுதற்குரியவல்லாத எண்ணங்களை நாகரிகமாக மறைத்துக் கூறுதற்பொருட்டு அமைத்துக்கொண்ட உரையாடல் முறையே உள்ளுறையுவமமாகும். பொருள் புலப்பாட்டிற்கு இன்றியமை யாத ஏனையுவமம் போன்று அகப்பொருளை யுணர்த்தும் நிலையில் தள்ளாது கருதுதற்குரியது இவ்வுள்ளுறை யுவமமாகும். தெய்வமல்லாத ஏனைக் கருப்பொருள்களின் நிகழ்ச்சியினை வெளியிட்டுரைக்கு முகத்தால் அந் நிகழ்ச்சியினை யுவமையாகக் கொண்டு தலைவன் தலைவி யாகிய அகத்திணை மக்களின் ஒழுகலாறுகளை உய்த்துணர்ந்து கொள்ளச் செய்தல் உள்ளுறையின் நோக்கமாகும். யான் புலப்படக் கூறுகின்ற கருப்பொருள் நிகழ்ச்சியாகிய இவ்வுவமத்தோடு புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருளும் ஒத்த முடிவதாகவெனத் தன்னுள்ளத்தே கருதி, அக்கருத்தினைக் கருதியுணர்தற்கேற்ற சொல்லெல்லாம் தன்னகத்தே யமையக்கொண்டு கூறப்படுவதே உள்ளுறை யுவம மெனப்படும். வண்ணம், வடிவு, பயன், தொழில் என்னும் இவற்றால் உவமிக்கப்படும் பொருளோடு எடுத்துக் கூறப்பட்டு வெளிப்படையாகப் பொருள் விளக்குவது ஏனையுவமமாகும். இவ்விரு வகையுவமைகளும் அகத்திணைப் பொரு ளுணர்ச்சிக்கு உபகாரப்படு மியல்பினை 49-முதல் 52-வரையுள்ள சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியுள்ளார். காமக் குறிப்பிற்கு அமைதியில்லாத இளம்பருவப் பெண்ணைக் கண்டு அவளை மனைக்கிழத்தியாகப் பெறவேண்டு மென விரும்பிய ஒருவன், மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தித் தான் அவள்பாற்செலுத்தும் அன்பின் திறமாகிய நன்மையும் அவள் அதனையுணராமையால் தனக்கிழைக்குந் தீமையும் என்னும் இருதிறத்தால் மிகப்பெருக்கிய சொற்களைத் தன்னோடும் அவளோடுங் கூட்டிச் சொல்லி, அச்சொற்களுக்கு அவளிடமிருந்து எதிர் மொழி பெறாது தானே தனக்குள் சொல்லி யின்புறும் நிலை கைக்கிளையாதற்குப் பொருந்தித் தோன்றுங் குறிப்பாம் என 53 ஆம் சூத்திரம் கூறும். எனவே, இத்தகைய கைக்கிளைக் குறிப்பு ஆடவர்க்கன்றி மகளிர்க்கு ஏலாதென்பது ஆசிரியர் கருத்தாதல் பெறப்படும். மடலேறுவேனெனக் கூறுதலோடமையாது மடலேறுதலும், இளமை நீங்கிய பருவத்தும் மெய்யுறுதலில் விருப்பமுடையவ ராதலும், தெளிவிக்கத் தெளியாத காமவுணர்வால் அறவழிந்து மயங்குதலும், கரைகடந்த காமத்தால் விரும்பாதவரை வலிந்து புணரும் வன்கண்மையும் ஆக இங்குச் சொல்லப்பட்ட நான்கும் பொருந்தா வொழுக்கமாகிய பெருந்திணைக் குறிப்புக்களாம் என 54-ஆம் சூத்திரம் கூறும் மேற்கூறிய பெருந்திணைக் குறிப்புக்கள் நான்கின் முற்பட்ட நிலைகளாகிய ஏறாமடற்றிறமும், இளமை நீங்காத் திறமும், தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறமும், மிக்க காமத்தின் மாறகாத்திறமும் ஆகிய நான்கும் முன்னர்க் கூறப்பட்ட கைக்கிளைக்குரியன வென்பது 55-ஆம் சூத்திரத்தாற் கூறப்பட்டது. இங்குக் கைக்கிளைக்குரியனவாகக் கூறப்பட்ட நான்கினையும் முறையே வெளிப்பட இரத்தல், நலம் பாராட்டல், புணரா விரக்கம், நயப்புறுத்தல் என விளக்குவர் இளம்பூரணர். நாடக வழக்காகிய புனைந்துரை வகையாலும் உண்மையான் நிகழும் உலகியல் வழக்காலும் புலவராற் பாடுதற் கமைந்த அகத்திணை யொழுகலாறாகிய புலனெறி வழக்கம், கலியும் பரிபாடலுமாகிய இருவகைப் பாவினும் நடத்தற்குரிமை யுடையது என 56-ஆம் சூத்திரம் கூறும். உலகியலில் அன்பினால் நிகழும் அகத்திணை யொழுகலாற்றினைச் சொல்லோவிய மாகப் புனைந்து காட்ட எண்ணிய நல்லிசைப் புலவர்கள், அவ்வொழுக்கவுணர்வுகள் மக்களுள்ளத்தே தோன்றுதற்குரிய சார்பாகப் புறத்தே தோன்றும் மரம், செடி, கொடி, விலங்கு, பறவை முதலிய கருப்பொருள்களையும் அவற்றுக்கு நிலைக் களனாய் விளங்கும் நிலமுங் காலமுமாகிய முதற்பொருள் களையும் புனைந்து காட்டி, அவை சார்பாகத் தாம் அறிவுறுத்த எண்ணிய இன்ப துன்ப வுணர்வுகளைத் தெளிய விளக்குவர். மனத்தால் எண்ணியுணர்தற்குரிய வாழ்க்கை யுணர்வுகளைச் சொல்லாற் புனைந்துரைத்து ஐம்பொறி வாயிலாகக் காணும் உருவாக்கிக் காட்டுதல் நாடக வழக்கின் பாற்பட்டதாம். பல்வேறிடங்களிலும் பல்வேறு காலத்தும் நிகழ்பவற்றை யெல்லாம் ஓரிடத்து ஒரு காலத்துத்தொகுத்துத் தொடர்புபட்ட கதையாக நிகழ்த்திக் காட்டுதல் நாடகத்தின் இயல்பாகும். இதன்கண் புனைந்து காட்டப்படுவனவும் நிகழாதன அல்ல, உலகியலில் நிகழும் உண்மை நிகழ்ச்சியே யென்பது நாடகம் என்னாது நாடகவழக்கு என்றதனாற் புலனாம். செய்யும் செய்யும் புலவன் உலகில் வழங்கும் உண்மை நிகழ்ச்சியையே தான்கூறக் கருதினானெனினும், அதனை இனிது விளக்குதற்குரிய இடமுங் காலமுந் தந்து புனைந்துரைத்தால் தான் அப்பொருள் கேட் போருணர்வில் நன்கு பதியும். இவ்வுண்மை கருதியே நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலநெறி வழக்கம் எனத் தொல்காப்பியனார் இச்செய்யுள் வழக்கிற்கு இலக்கணங் கூறுவாராயினர். சொல்லாலும் செயலாலும் விளங்கித் தோன்றுதற்குரிய புறப் பொருட்பாடலைக் காட்டிலும் மனத்தாலுணரத்தக்க அகப்பொருட் பாடலுக்கே இப் புனைந்துரை மரபு பெரிதும் இன்றியமையாததாகும். ஒருவரையொருவர் காணும் முதற் காட்சியிலேயே தொன்மையன்பின் தொடர்புணர்ந்து கணவனும் மனைவியுமாக இன்றியமை யாதொழுகும் இயல்புடையார் உலகத்து மிகவும் அரியர். ஆகலின் உலகில் அருகித் தோன்றும் சிறப்புடைய அவர்களை நல்வாழ்விற் சிறந்த தலைமக்கள் எனப் பண்டைத் தமிழியல் நூலார் பாராட்டிப் போற்றினர். அத் தலைமக்கள் வாழ்வில் மிக்குத்தோன்றும் பேரன்பின் செயலை வெளிப்படுத் துணர்த்து முகத்தால் ஏனைப் பொதுமக்கள் வாழ்க்கையினையும் அன்பு நெறியிற் பயிற்றுதல் கூடுமெனக் கருதினர். மேற்காட்டிய தலைமக்கள் வாழ்க்கையினைப் பொருளாகக் கொண்டு செய்யுள் செய்வாராயினர். தலைமக்களாதற்குரிய முழுப் பெற்றியும் அமைந்தார் சிலரைக் கண்ட பின்னரே இத்தகைய செய்யுளைப் பாடுதல் வேண்டுமென்னும் வரையறையில்லை. அவ்வியல் புடையார் தம் காலத்திற் காணப்படாது போயினும் பொதுமக்கள் வாழ்க்கையில் தலைமக்களுக்குரிய இயல்புகளாக ஒவ்வொருவர் பால் தனித்தனியமைந்து விளங்குந் தலைமைப் பண்புகளெல்லாம் தம்மாற் கூறப்படுந் தலைமக்களிடத்து உள்ளனவாக ஒருங்கு தொகுத்து இவ்வியல்புடையார் இத்தலைவனுந் தலைவியும் என இவ்வாறு செய்யுள் செய்தலும் இல்லதெனப்படாது உண்மை யான் நிகழும் உலகியல் வழக்கேயாம் என்பது பண்டைத் தமிழாசிரியர் துணிபாகும். இக் கருத்திற்கு மாறாக இவ்வகத் திணை யொழுகலாற்றை இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டது எனக் கூறினார் களவியலுரை யாசிரியர். இல்லாத ஒன்றினை நாட்டிச் செய்யுள் செய்தல் ஆகாயப்பூ நாறிற்றென்பது போல மயங்கக் கூறியதாக இகழப்படுமாதலாலும், இல்லதென்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ் செய்யாதாகலானும் ஆசிரியர் தொல்காப்பியனார் இப்புலனெறி வழக்கத்திற்கு அடிப்படை யாயமைவது உலகியல் வழக்கம் என இச்சூத்திரத்துக் கூறினமையானும் ஐந்திணையாகிய இவ்வொழுக்கம் மக்கள் வாழ்க்கையாகிய உலகியல் நிகழ்ச்சியையே பொருளாகக் கொண்டதென்பதனை மக்கள் நுதலிய அகனைந்திணையும் என்ற தொடரால் ஆசிரியர் அறிவுறுத்தலானும் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்கவென்று மறுத்தார் நச்சினார்க்கினியர். மக்களைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறும் அகனைந் திணைச் செய்யுளின்கண்ணே அவ்வொழுக்கத்திற் குரியராகச் சொல்லப்படும் தலைமக்கள், நிலப்பெயரும் தொழிற்பெயருமாகிய திணைநிலைப் பெயராற் கூறப்படுதவதல்லது இயற்பெயராற் சுட்டிக் கூறப்பெறா ரென்றும், புறத்திணை யொழுகலாற்றில் அதற்குரிய தலைமக்களது இயற்பெயர் கூறப்படுவதல்லது அகத்திணைக் கண் கூறப்படுதலில்லையென்றும் 57, 58-ஆம் சூத்திரங்களால் ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார். - வெள்ளைவாரணனார் நூல்வரிசை 10, பக். 228-229 முதலாவது அகத்திணையியல் (அகத்திணை ஏழும் இவை எனல்) 1. கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் முற்படக் கிளந்த வெழுதிணை என்ப. என்பது சூத்திரம். 1நிறுத்த முறையானே பொருளினது இலக்கணம் உணர்த் தினமையின் இது பொருளதிகாரமென்னும் பெயர்த்தாயிற்று. 2இது நாண்மீனின் பெயர் நாளிற்குப் பெயராயினாற் போல்வ தோர் ஆகுபெயர். பொருளாவன:- அறம் பொருளின்பமும், அவற்றது நிலை யின்மையும், 3அவற்றினீங்கிய வீடுபேறுமாம். பொருளெனப் பொதுப்படக் கூறவே, 4அவற்றின் பகுதியாகிய முதல் கரு உரியும், 5காட்சிப் பொருளும், கருத்துப் பொருளும், அவற்றின் பகுதி யாகிய ஐம்பெரும் பூதமும், அவற்றின் பகுதியாகிய இயங்கு திணையும் நிலைத்திணையும், பிறவும் பொருளாம். எழுத்துஞ் சொல்லும் உணர்த்தி அச்சொற்றொடர் கருவியாக உணரும் பொருள் உணர்த்தலின், மேலதிகாரத் தோடு இயைபுடைத்தாயிற்று. அகத்திணைக்கண் இன்பமும், புறத் திணைக்கண் ஒழிந்த மூன்று பொருளும் உணர்த்துப. இது வழக்கு நூலாதலிற் பெரும்பான்மையும் நால்வகை வருணத் தார்க்கும் உரிய இல்லறம் உணர்த்திப் பின் துறவறமுஞ் சிறுபான்மை கூறுப. அப்பொருள்கள் இவ்வதிகாரத்துக் காண்க. பிரிதனிமித்தங் கூறவே, இன்ப நிலையின்மையுங் கூறிக் காமஞ் சான்ற என்னுங் கற்பியற் சூத்திரத்தான் துறவறமும் கூறினார். வெட்சி முதலா வாகையீறாக அறனும் பொருளும் பயக்கும் அரசியல் கூறி, அவற்றது நிலையின்மை காஞ்சியுட் கூறவே, அறனும் பொருளும் அவற்றது நிலையின்மையுங் கூறினார். அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும். என்னுஞ் சூத்திரத்தான் இல்லறமுந் துறவறமுங் கூறி இந் நிலையாமை யானும் பிறவாற்றானும் வீட்டிற்குக் காரணங் கூறினார். இங்ஙனங் கூறவே, இவ்வாசிரியர் பெரிதும் பயன் தருவதோர் இலக்கணமே கூறினராயிற்று, இதனாற் செய்த 6புலனெறி வழக்கினை யுணர்ந்தோர் இம்மை மறுமை வழுவாமற் செம்மை நெறியான் துறைபோவராதலின். இப்பொருளை எட்டுவகையான் ஆராய்ந்தாரென்ப. அவை அகத்திணை புறத்திணையென இரண்டு திணை வகுத்து அதன்கட் கைக்கிளை முதற் பெருந்திணை யிறுவா யேழும் வெட்சி முதற் பாடாண்டிணை யிறுவா யேழுமாகப் பதினான்கு பால் வகுத்து, ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி பரிபாடல் மருட்பா வென அறுவகைச் செய்யுள் வகுத்து, முல்லை குறிஞ்சி மருதம் நெய்த லென நால்வகை நிலன் இயற்றிச் சிறுபொழு தாறும் பெரும்பொழு தாறுமாகப் பன்னிரண்டு காலம் வகுத்து, 7அகத்திணை வழுவேழும் புறத்திணை வழுவேழுமெனப் பதினான்கு வழுவமைத்து, நாடக வழக்கும் உலகியல் வழக்குமென இருவகை வழக்கு வகுத்து, வழக்கிடமுஞ் செய்யுளிடமுமென இரண்டு இடத்தான் ஆராய்ந்தாராதலின். எட்டிறந்த பல்வகையான் ஆராய்ந்தாரென்பார் முதல் கரு உரியுந், 8திணை தொறும் மரீஇய பெயருந், திணைநிலைப் பெயரும், இருவகைக் கைகோளும், பன்னிருவகைக் கூற்றும், பத்துவகைக் கேட்போரும், எட்டுவகை மெய்ப்பாடும், நால்வகை உவமமும், ஐவகை மரபு மென்பர். இனி, இவ்வோத்து அகத்திணைக்கெல்லாம் பொது இலக்கண முணர்த்துதலின் அகத்திணையியலென்னும் பெயர்த் தாயிற்று; என்னை? எழுவகை யகத்திணையுள் 9உரிமைவகை யான் நிலம் பெறுவன இவையெனவும் அந்நிலத்திடைப் பொதுவகையான் நிகழ்வன கைக்கிளை பெருந்திணை பாலை யெனவுங் கூறலானும், அவற்றுட் பாலைத்திணை நிலவகை யான் நடுவண தெனப்பட்டு 10நால்வகை யொழுக்கம் நிகழா நின்றுழி அந்நான்க னுள்ளும் பிரிதற் பொருட்டாய்த் தான் 11பொதுவாய் நிற்குமெனக் கூறலானும், முதல் கரு உரிப் பொருளும் உவமங்களும் மரபும் பொதுவகையாற் கூறப்படுத லானும், பிறவும் இன்னோரன்ன பொதுப் பொருண்மைகள் கூறலானு மென்பது. இங்ஙனம் ஓதிய அகத்திணைக்குச் சிறப்பிலக்கணம் ஏனை ஓத்துக்களாற் கூறுப. ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியுங் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத் துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதொரு பொருளாதலின் அதனை அகம் என்றார். எனவே அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்; 12இதனை ஒழிந்தன, ஒத்த அன்புடையார்தாமே யன்றி எல்லார்க்குந் துய்த்துணரப் படுதலானும், இவை இவ்வாறிருந்த வெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும், அவை புறமெனவே படும். இன்பமே யன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாலெனின், அதுவும் காமங் 13கண்ணிற்றேல் இன்பத்துள் அடங்கும். 14ஒழிந்த துன்பம் புறத்தார்க்குப் புலனாகாமை மறைக்கப்படாமையிற் புறத்திணைப் பாலதாம். காமம் நிலையின்மையான் வருந் துன்பமுந் தாபதநிலை தபுதாரநிலையென வேறாம். திணையாவது: ஒழுக்கம்; இயல்: இலக்கணம்; எனவே, அகத்திணை யியலென்றது இன்பமாகிய ஒழுக்கத்தினது இலக்கணமென்ற வாறாயிற்று. இவ்வோத்துகள் ஒன்றற் கொன்று இயைபுடைமை அவ்வவ்வோத்துகளுட் கூறுதும். இனி, இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனிற் கூறக் கருதிய பொருளெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : கைக்கிளை முதலா - கைக்கிளை யெனப் பட்ட ஒழுக்கம் முதலாக; பெருந்திணை இறுவாய் - பெருந்திணை யென்னும் ஒழுக்கத்தினை இறுதியாகவுடைய ஏழனையும்; முற்படக் கிளந்த எழுதிணை என்ப - முற்படக் கூறப்பட்ட அகத்திணை யேழென்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே, பிற்படக் கூறப்பட்ட புறத்திணையும் ஏழுள வென்ற வாறாயிற்று. எனவே, இப்பதினான்கு மல்லது வேறு பொருளின் றென வரையறுத்தாராயிற்று. 15அகப்புறமும் அவை தம்முட் பகுதியாயிற்று. முதலும் ஈறும் கூறித் திணை யேழெனவே நடுவணைந்திணை உளவாதல் பெறுதும். அவை மேற் கூறுப. 16கைக்கிளை யென்பது ஒருமருங்கு பற்றிய கேண்மை. இஃது ஏழாவதன் தொகை. எனவே, ஒருதலைக் காமமாயிற்று. எல்லா வற்றினும் பெரிதாகிய திணை யாதலின் 17பெருந்திணை யாயிற்று. என்னை? எண்வகை மணத்தினுள்ளும் கைக்கிளை முதல் ஆறு திணையும் நான்கு மணம் பெறத் தானொன்றுமே நான்கு மணம் பெற்று நடத்தலின். 18பெருந்திணையிறுவாய் - பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. முற்படக் கிளந்தவென எடுத்த லோசையாற் கூறவே, பிற்படக் கிளந்த எழுதிணை யுளவாயின. அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்திணை என வரும். ஒழிந்தோர் பன்னிரண்டென்றாராதலிற் புறத்திணை யேழென்ற தென்னையெனின், அகங்கை இரண்டுடையார்க்குப் புறங்கை நான்காகாது இரண்டாயவாறு போல, அகத்திணை யேழற்குப் புறத்திணையேழென்றலே பொருத்த முடைத்தா யிற்று. ஆகவே, அகத்திணைக்குப் புறத்திணை அவ்வந்நிலத்து மக்கள் வகையாற் பிறந்த செய்கை வேற்றுமையாதலின் ஒன்றொன்றற்கு இன்றியமையாதவாறாயிற்று. கரந்தை அவ்வேழற்கும் பொதுவாகிய வழுவாதலின், வேறு திணை யாகாது. 19எண்வகைமணனும் எதிர் சென்று கூறுவதாகலானும், காமஞ்சாலா விளமைப்பருவம் அதன் கண்ணதாகலானுங் கைக்கிளையை முற்கூறினார். என்ப வென்றது அகத்தியனாரை. இக் குறியீடுகளும் அகத்தியனா ரிட்ட வென்றுணர்க. (எழுவகைத் திணையுள் தமக்கென நிலம்பெறுவனவும் பெறாதனவுங் கூறல்) 2. அவற்றுள், நடுவ ணைந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே இது முற்கூறிய ஏழனுள் தமக்கென நிலம் பெறுவனவும், நிலம் பெறாதனவுங் கூறுகின்றது. (இ-ள்) அவற்றுள் - முற்கூறிய ஏழு திணையுள்; நடுவண் ஐந்திணை - கைக்கிளை பெருந்திணைக்கு நடுவுநின்ற ஐந் தொழுக்கத்தினை; படுதிரை வையம் பாத்திய பண்பே - ஒலிக்குந் திரைசூழ்ந்த உலகிற்கு ஆசிரியன் பகுத்துக்கொடுத்த இலக்கணத் தை; நடுவணது ஒழிய - நடுவணதாகிய பாலையை அவ்வுலகம் பெறாதே நிற்கும் படியாகச் செய்தார் எ-று. எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வ லென்றார். உலகத்தைப் படைக்கின்ற காலத்துக் காடும் மலையும் நாடுங் கடற்கரையுமாகப் படைத்து, இந்நால்வகை நிலத்திற்கு ஆசிரியன் தான் படைத்த ஐவகை ஒழுக்கத்திற் பாலை யொழிந்தனவற்றைப் பகுத்துக் கொடுத்தான். அப் பாலை ஏனையபோல ஒருபாற் படாது நால்வகை நிலத்திற்கும் உரியதாகப் புலனெறி வழக்கஞ் செய்து வருதல்பற்றி. பாலைக்கு நடுவணதென்னும் பெயர் ஆட்சியும் குணனும் காரணமாகப் பெற்ற பெயர். நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனில் (9) என ஆள்ப. 20புணர்தல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும், நால்வகை யுலகத்திற்கிடை யிடையே, முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும். (சிலப். காடு 64 - 66 என முதற்பொருள் பற்றிப் பாலை நிகழ்தலானும், நடுவண தாகிய நண்பகற் காலந் தனக்குக் காலமாகலானும், புணர்தற்கும் இருத்தற்கும் இடையே பிரிவு வைத்தலானும், உலகியற் பொரு ளான அறம்பொருளின்பங்களுள் நடுவணதாய பொருட்குத் தான் காரணமாகலானும், 21நடுவணதெனக் குணம் காரணமா யிற்று. பாயிரத்துள் எல்லை கூறியதன்றி 22ஈண்டும் எல்லை கூறினார், புறநாட்டிருந்து தமிழ்ச்செய்யுள் செய்வார்க்கும் இதுவே இலக்கணமாமென்றற்கு. இவ்விலக்கணம், மக்கள் நுதலிய அகனைந்திணைக்கே யாதலின் இன்பமே நிகழுந் தேவர்க்காகாது. காமப் பகுதி கடவுளும் வரையார் (தொல் பொருள் 83) என்பது புறம். நடுவணாற்றிணை யென்னாது ஐந்திணை யென்றார், பாலையும் அவற்றோ டொப்பச் சேறற்கு. இத்திணையை மூன்றாக மேற்பகுப்பர். (2) (நடுவணைந்திணைப் பகுப்பு இவை எனல்) 3. முதல்கரு வுரிப்பொரு ளென்ற மூன்றே நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை. இது நடுவ ணைந்திணையைப் பகுக்கின்றது (இ-ள்.) பாடலுள் பயின்றவை நாடும் காலை - புலனெறி வழக்கிடைப் பயின்ற பொருள்களை ஆராயுங் காலத்து; முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே - முதலுங் கருவும் உரிப் பொருளும் என்ற மூன்றேயாம்; நுவலுங் காலை முறை சிறந்தனவே - அவைதாம் செய்யுள் செய்யுங்கால் 23ஒன்று ஒன்றினிற் சிறந்து வருதலுடைய எ-று. முதலிற் கருவும், கருவின் உரிப்பொருளுஞ் சிறந்து வரும். இங்ஙனம் பாடலுட் பயின்ற பொருள் மூன்றெனவே, இம் மூன்றும் புறத்திணைக்கு உரியவென்பது பெறுதும். அது புறத் திணைச் சூத்திரங்களுள், வெட்சி தானே குறிஞ்சியது புறனே (56) என்பன முதலியவற்றாற் கூறுப. பாடலுட் பயின்று வருமெனவே வழக்கினுள் வேறுவேறு வருவன அன்றி ஒருங்கு நிகழா வென்பதூஉம், நாடுங் காலை யெனவே புலனெறி வழக்கிற் பயின்ற வாற்றான் இம்மூன்றனையும் வரையறுத்துக் கூறுவதன்றி வழக்கு நோக்கி இலக்கணங் கூறப்படா தென்பதூஉம் பெறுதும், நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் (தொல். பாயிரம்) என்று புகுந்தமையிற் பொருளும் அவ்விரண்டனானும் ஆராய்தல் வேண்டுதலின். 24இஃது இல்லதெனப்படாது, உலகியலேயாம். உலகிய லின்றேல், ஆகாயப்பூ நாறிற்றென்றுழி அது சூடக் கருதுவாரு மின்றி மயங்கக் கூறினானென்று உலகம் இழித்திடப்படுதலின் இதுவும் இழித்திடப்படும். இச்செய்யுள் வழக்கினை 25நாடக வழக்கென மேற்கூறினார், எவ்விடத்தும் எக்காலத்தும் ஒப்ப நிகழும் உலகியல் போலாது, உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல் முதலாகப் புனைந்துரை வகையான் கூறும் 26நாடக இலக்கணம் போல 27யாதானுமொரோவழி ஒரு சாரார்மாட்டு உலகியலான் நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமுங் காலமும் நியமித்துச் செய்யுட் செய்த ஒப்புமை நோக்கி. மற்று இல்லோன் தலைவனாக இல்லது புணர்க்கும் நாடக வழக்குப்போல் ஈண்டுக் கொள்ளாமை நாடக வழக்கு என்னுஞ் சூத்திரத்துட் (53) கூறுதும். கணங்கொ ளருவிக் 28கான்கெழு நாடன் 29குறும்பொறை நாட னல் 30வய லூரன் தெண்31கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலுங் கூம்புங் காலை வரினுங் களைஞரோ விலரே. (ஐங்குறு. 183) என் இவ் ஐங்குறுநூற்றுள் 32இடம் நியமித்துக் கூறியது செய்யுள் வழக்கு. இனி அவை முறையே சிறந்து வருமாறு:- முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி யவிழ இரும்புதிரிந் தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறங் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானங் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேர னுதுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறத்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி னாறு மாய்தொடி யரிவைநின் மாணலம் படர்ந்தே. (அகம் 4) இது 33குறித்த காலம் வந்தது, அவரும் வந்தாரென ஆற்று வித்தது. 34இக் களிற்றியானைநிரையுள், முல்லைக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. கிளைபா ராட்டுங் கடுநடை வயக்களிறு முளைதரு பூட்டி வேண்டுகுள கருத்த வாணிற வுருவி னொளி றுபு மின்னிப் பரூஉவுறைப் பஃறுளி சிதறிவா னவின்று பெருவரை நளிர்சிமை யதிரவட் டித்துப் புயலே றுரைஇய வியலிரு ணடுநாள் விறலிழைப் பொலிந்த காண்பின் சாயற் றடைஇத் திரண்டநின் றோள்சேர் பல்லதைப் படாஅ வாகுமெங் கண்ணென நீயு மிருண்மயங் கியாமத் தியவுக்கெட விலங்கி வரிவயங் கிரும்புலி வழங்குநர்ப் பார்க்கும் பெருமலை விடரகம் வரவரி தென்னாய் வரலெளி தாக வெண்ணுதி யதனா னுண்ணிதிற் கூட்டிய படுமா ணாரந் தண்ணிது கமழு நின்மார் பொருநா ளடைய முயங்கே மாயின் யாமும் விறலிழை நெகிழச் சாஅய்து மதுவே யன்னை யறியினு மறிக வலர்வாய் யம்பன் மூதூர் கேட்பினுங் கேட்க வண்டிறை கொண்ட வெரிமரு டோன்றியொ டொண்பூ வேங்கை கமழுந் தண்பெருஞ் சாரற் பகல்வந் தீமே. (அகம் 218) இஃது இடத்துய்த்துப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் வரைவு கடாயது. 35இம் மணிமிடை பவளத்துள், குறிஞ்சிக்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. வண்டுபடத் ததைந்த கண்ணி யொண்கழ லுருவக் குதிரை மழவ ரோட்டிய முருக னற்போர் நெடுவே ளாவி யறுகோட் டியானைப் பொதினி யாங்கட் சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய கற்போற் பிரியல மென்ற சொற்றா மறந்தனர் கொல்லோ தோழி சிறந்த வேய்மருள் பணைத்தோண் ஞெகிழச் சேய்நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் நிலம்பக வழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலி ணிழல்றேய்ந் துலறிய மரத்த வறைகாய் பறுநீர்ப் பைஞ்சுனை யாமறப் புலர்தலின் னுகுநெற் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குந ரின்மையின் வௌவுநர் மடியச் சுரம்புல் லென்ற வாற்ற வலங்குசினை நாரின் முருங்கை நவிரல் வான்பூச் சூரலங் கடுவளி யெடுப்ப வாருற் றுடைதிரைப் பிதிர்விற் பொங்கிமுன் கடல்போற் தோன்றல காடிறந் தோரே. (அகம். 1) இது பிரிவிடையாற்றாது தோழிக்குக் கூறியது. 36இக் களிற்றியானை நிரையுள், பாலைக்கு முதலும் கருவும் வந்து உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. சேற்றுநிலை முனைஇய செங்கட் காரா னூர்மடி கங்குலி னோன்றளை பரிந்து கூர்முள் வேலி கோட்டி னீக்கி நீர்முதிர் பழனத்து மீனுட னிரிய வந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமல ராரு மூர யாரை யோநிற் புலக்கேம் வாருற் றுறையிறந் தொளிருந் தாழிருங் கூந்தற் பிறரு மொருத்தியை யெம்மனைத் தந்து வதுவை யயர்ந்தனை யென்ப வஃதியாங் கூறேம் வாழிய ரெந்தை செறுநர் களிறுடை யிருஞ்சமந் ததைய நூறு மொளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன் பிண்ட நெல்லி னள்ளூ ரன்னவெம் மொண்டொடி நெகிழினு நெகிழ்க சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ. (அகம்.46) இது வாயின் மறுத்தது. 37இக் களிற்றியானை நிரையுள், மருதத்திற்கு முதலுங் கருவும் வந்து உரிப்பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. வண்டூது பனிமலர் எனவே வைகறையும் வந்தது. கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப மீனார் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னைக் குடம்பை சேர வசைவண் டார்க் மல்குறு காலைத் தாழை தளரத் தூக்கி மாலை யழிதக வந்த கொண்டலொடு கழிபடர்க் காமர் நெஞ்சங் கையறு பினையத் துயரஞ் செய்துநம் மருளா ராயினு மறாஅ லியரோ வவருடைக் கேண்மை யளியின் மையி வெ னுவறைவு முனைஇ வாரற்க தில்ல தோழி கழனி வெண்ணெல் லரிஞர் பின்றைத் ததும்புந் தண்ணுமை வெரீஇய தடந்தா ணாரை செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை யகமடற் சேக்குந் துறைவ னின்றுயின் மார்பிற் சென்றவென் னெஞ்சே. (அகம்.40) இது பொருட் பிரிவிடைத் தோழிக்கு உரைத்தது. 38இக் களிற்றியானை நிரையுள், நெய்தற்கு முதலுங் கருவும் வந்து உரிப் பொருளாற் சிறப்பெய்தி முடிந்தது. 39இச்சிறப்பானே, முதலின்றிக் கருவும் உரிப்பொருளும் பெறுவனவும், முதலுங் கருவுமின்றி உரிப்பொருளே பெறுவனவுங் கொள்க. திருநகர் விளங்கு மாசில் கற்பி னரிமதர் மழைக்கண் மாஅ யோளொடு நின்னுடைக் கேண்மை யெவனோ முல்லை யிரும்பல் கூந்த னாற்றமு முருந்தேர் வெண்ப லொளியுநீ பெறவே. இது பொருள்வயிற் பிரிந்தோன் சுரத்து நினைந்து உரைத்தது. 40இது முதற்பொருளின்றி வந்த முல்லை. கரந்தை விரைஇய தண்ணறுங் கண்ணி யிளைய ரேவ வியங்குபரி கடைஇப் பகைமுனை வலிக்குந் தேரொடு வினைமுடித் தனர்நங் காத லோரே. இது வந்தாரென் றாற்றுவித்தது. 41இது முதலுங் கருவு மின்றி வந்த முல்லை. நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த தாமரை போன்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ வேமரை போந்தன வீண்டு. (திணைமாலை. 1) இது மதியுடம்படுத்தது. 42இது முதற்பொருளின்றி வந்த குறிஞ்சி. முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே மலைய னொள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனளே. 43இஃது இளையள் விளைவிலள் என்றது. முதலுங் கருவு மின்றி வந்த குறிஞ்சி. இது நாணநாட்டம். நாளு நாளு மாள்வினை யழுங்க வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழென வொண்பொருட் ககல்வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே இது வற்புறுத்தாற்றியது. 44இஃது உரிப்பொருளொன்றுமே வந்த பாலை. பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை முன்னும் பின்னு மாகி யின்னும் பாண னெம்வயி னானே. இது வாயின் மறுத்தது. 45இஃது உரிப்பொருளொன்றுமே வந்த மருதம். அங்கண் மதிய மரவின்பாய்ப் பட்டெனப் பூசல் வாயாப் புலம்புமனைக் கலங்கி யேதின் மாக்களு நோவர் தோழி யென்று நோவா ரில்லைத் தெண்கடற் சேர்ப்ப னுண்டவென் னலக்கே. இது கழிபடர் கிளவி. 46இது பேரானும் உரிப்பொருளானும் நெய்தலாயிற்று. இங்ஙனம் கூறவே, உரிப்பொருளின்றேற் பொருட் 47பயமின் றென்பது பெற்றாம். இதனானே முதல் கரு வுரிப் பொருள் கொண்டே வருவது திணையாயிற்று. இவை பாடலுட் பயின்ற வழக்கே இலக்கணமாதலின் இயற்கையாம். அல்லாத சிறு பான்மை வழக்கினைச் 48செயற்கையென மேற்பகுப்பர். (முதல் இன்னது என்பதும் அதன் பகுப்பும் உணர்த்தல்) 4. முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி னியல்பென மொழிப வியல்புணர்ந் தோரே. இது நிறுத்த முறையானே முதல் உணர்த்துவான் அதன் பகுதியும் அவற்றுட் சிறப்புடையனவும் இல்லனவுங் கூறுகின்றது. (இ,ள்.) முதல் எனப்படுவது - முதலெனச் சிறப்பித்துக் கூறப்படுவது; நிலம் பொழுது இரண்டன் இயல்பு என மொழிப - நிலனும் பொழுதும் என்னும் இரண்டனது இயற்கை நிலனும் இயற்கைப் பொழுதும் என்று கூறுப; இயல்புணர்ந்தோரே - இடமும் காலமும் இயல்பாக உணர்ந்த ஆசிரியர் எ-று. இயற்கையெனவே, செயற்கை நிலனுங் 49செயற்கைப் பொழுதும் உளவாயின. மேற் பாத்திய (2) நான்கு நிலனும் இயற்கை நிலனாம். ஐந்திணைக்கு வகுத்தபொழுதெல்லாம் இயற்கையாம்; செயற்கை நிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும். முதல் இயற்கைய வென்றதனாற் 50கருப் பொருளும் உரிப்பொருளும் இயற்கையுஞ் செயற்கையுமாகிய சிறப்புஞ் சிறப்பின்மையும் உடையவாய்ச் சிறுவரவினவென மயக்க வகையாற் கூறுமாறு மேலே கொள்க. இனி நிலத்தொடு காலத்தினையும் முதல் என்றலின், காலம் பெற்று நிலம் பெறாத பாலைக்கும் அக்காலமே முதலாக அக்காலத்து நிகழும் கருப் பொருளும் கொள்க. அது முன்னர்க் காட்டிய உதாரணத்துட் காண்க. (நிலப்பகுப்பு இவை எனல்) 5. மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. இது நடுவணது (2) ஒழிந்த நான்கானும் அவ் வையத்தைப் பகுக்கின்றது. (இ-ள்) மாயோன் மேய காடு உறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம் புனல் உலகமும், வருணன் மேய பெரு மணல் உலகமும் - கடல்வண்ணன் காதலித்த காடுறையுலகமுஞ், 51செங்கேழ் முருகன் காதலித்த வான் தங்கிய வரைசூழுலகமும், இந்திரன் காதலித்த தண்புன னாடுங், கருங்கடற் கடவுள் காதலித்த நெடுங் 52கோட்டெக்கர் நிலனும்; முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையான் சொல்லவும் படுமே - முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென ஒழுக்கங் கூறிய முறையானே சொல்லவும் படும் எ-று. இந்நான்கு பெயரும் எண்ணும்மையொடு நின்று எழுவாயாகிச் சொல்லவும்படும் என்னும் தொழிற்பயனிலை கொண்டன. என்றது, 53இவ்வொழுக்கம் நான்கானும் அந்நான்கு நிலத்தையும் நிரனிறை வகையாற் பெயர் கூறப்படுமென்றவாறு. எனவே, 54ஒழுக்கம் நிகழ்தற்கு நிலம் இடமாயிற்று. 55உம்மை எதிர்மறையாகலின், இம்முறையன்றிச் சொல்லவும் படுமென்பது பொருளாயிற்று. இது 56தொகை களினுங் 57கீழ்க்கணக்குகளினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க. முல்லை நிலத்துக் கோவலர், பல்லா பயன் தருதற்கு மாயோன் 58ஆகுதி பயக்கும் ஆபல காக்க வெனக் குரவை தழீஇ மடைபல கொடுத்தலின், ஆண்டு அவன் வெளிப்படுமென்றார். உதாரணம்: `அரைசுபடக் கடந்தட்டு என்னு முல்லைக் கலியுள், பாடிமிழ் பரப்பகத் தரவணை யசைஇய வாடுகொ 59ணேமியாற் பரவுதும் (கலி. 105) என வரும், படையிடுவான் மற்கண்டீர் காமன் மடையடும் பாலொடு கோட்டம் புகின். (கலி. 109) என அவன் மகனாகிய காமனும் அந்நிலத்திற்குத் தெய்வமாதல் அவ்வகை பிறவுங் கருவென மொழிப (18) என்புழி வகை யென்றதனாற்கொள்க. இனிக் குறிஞ்சி நிலத்துக் குறவர் முதலியோர் குழீஇ வெறியயர்தற்கு வேண்டும் பொருள் கொண்டு வெறியயர்ப வாகலின், ஆண்டு முருகன் வெளிப்படுமென்றார். அது, அணங்குடை நெடுவரை என்னும் அகப் பாட்டினுட், படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை நெடு 60வேட் பேணத் தணிகுவ ளிவள். (அகம். 22) எனவரும். சூரர மகளிரொ டுற்ற சூளே என்புழிச் சூரர மகளிர் அதன் வகை. இனி ஊடலுங் கூடலுமாகிய காமச்சிறப்பு நிகழ்தற்கு மருத நிலத்துத் 61தெய்வமாக ஆடலும் பாடலு மூடலு முணர்தலும் உள்ளிட்ட இன்ப விளையாட்டு இனிதினுகரும் இமையோர்க்கும் இன்குரலெழிலிக்கும் இறைவனாகிய இந்திரனை ஆண்டையோர் விழவுசெய்து அழைத்தலின், அவன் வெளிப்படு மென்றார். அது, வையைப் புதுப்புன லாடத் தவிர்ந்தமை தெய்வத்திற் றேற்றித் தெளிக்கு (கலி. 98) என, இந்திரனைத் தெய்வமென்றதனானும், இந்திரவிழவூ ரெடுத்த காதையானும் உணர்க. இனி, நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந் தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படு மென்றார். அவை, சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான் (பட்டின.86.7) எனவும், கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி (அகம்.110) எனவும், அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி யாயு மாயமொ டயரும் (அகம். 240) எனவும் வரும். இனிப் பாலைக்குச் சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ (கலி.16) எனவும், வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ (கலி.16) எனவும் ஞாயிற்றைத் தெய்வமாக்கி அவனிற்றோன்றிய மழை யினையும் காற்றினையும் அத் தெய்வப் பகுதியாக்கிக் கூறுபவாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவி கொடுக்குங்கால் 62அங்கி ஆதித்தன்கட் கொடுக்கு மென்பது வேதமுடிபாகலின், ஆதித்தன் அவ் வெல்லா நிலத்திற்கும் பொது வென மறுக்க. இவ்வாசிரியர் கருப்பொருளாகிய தெய்வத்தினை முதற் பொருளொடு கூட்டிக் கூறியது தெய்வ வழிபாட்டு மரபு இதுவே, ஒழிந்தது மரபன் றென்றற்கு. எனவே அவ்வந் நிலத்தின் தெய்வங்களே பாலை நிலத்திற்கும் தெய்வமாயிற்று. உறையுலகென்றார், ஆவும் எருமையும் யாடும் இன்புறு மாற்றான் நிலைபெறும் அக்காட்டின் கடவுளென்றதற்கு. மைவரை எனவே மழைவளந் தருவிக்கும் முருகவேளென்றார். இந்திரன் யாற்றுவளனும் மழைவளனுந் தருமென்றற்குத் தீம்புனலென்றார். திரைபொருது கரை கரையாமல் எக்கர் செய்தல் கடவுட் கருத்தென்றற்குப் பெருமணலென்றார். இனி, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற முறை யென்ன? யெனின், இவ்வொழுக்கமெல்லாம் இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின், கற்பொடு பொருந்திக் கணவன் சொற் பிழையாது இல்லிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது. எனவே, முல்லை யென்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று, முல்லை சான்ற முல்லையம் புறவின் என்பவாகலின். புணர்தலின்றி இல்லறம் நிகழாமையிற் புணர்தற் பொருட்டாகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். இதற்குதாரணம், கருங்காற் குறிஞ்சி சான்றவெற் பணிந்து என்பது. புணர்ச்சிப்பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். மருதஞ் சான்ற மருதத் தண்பணை என்புழி, மருத மென்றது ஊடியுங் கூடியும் போகம் நுகர்தலை. 63பரத்தையிற் பிரிவு போலப் பிரிவொப்புமை நோக்கி நெய்தலை ஈற்றுக்கண் வைத்தார். நெய்தற் பறையாவது இரங்கற் பறையாகலின் நெய்தல் இரக்கமாம். ஐதக லல்குள் மகளிர் 64நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே (புறம்.389) என வரும். இனி, இவ்வாறன்றி முல்லை முதலிய 65பூவாற் பெயர் பெற்றன இவ் வொழுக்கங்களெனின், அவ்வந் நிலங்கட்கு ஏனைப் பூக்களும் உரியவாகலின் அவற்றாற் பெயர் கூறலும் உரியவெனக் கடாவுவாற்கு விடையின்மை உணர்க. இதனானே நடுவுநிலைத்திணை யொழிந்த நான்கற்கும் பெயரும் முறையுங் கூறினார். இந்நான்கும் உரிப்பொருளாதல் புணர்தல் பிரிதல் (14) என்புழிக் கூறுதும். கருப்பொருளாகிய தெய்வத்தை முதற்பொருளொடு கூறியது, 66அவை வந்த நிலத்தின் பயத்த வாய் (19) மயங்குமாறு போல மயங்காது இது வென்றற்கும், கருப்பொருளுடைத் தெனப்பட்ட பாலைக்குத் தெய்வத்தை விலக்குதற்கு மென்றுணர்க. உதாரணம்: வன்புலக் காட்டுநாட் டதுவே (நற்றிணை. 59) எனவும், இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்.. கன்மிசைச் சிறுநெறி (அகம். 128) எனவும், அவ்வய னண்ணிய வளங்கே ழூரனைப் புலத்தலுங் கூடுமோ தோழி (அகம். 26) எனவும், கானலுங் கழறாது மொழியாது (அகம். 170) எனவும் நால்வகை யொழுக்கத்திற்கு நால்வகை நிலனும் உரியவாயினவாறு காண்க. (5) (முல்லைக்குங் குறிஞ்சிக்கும் உரிய பெரும்பொழுதும் சிறுபொழுதும்) 6. காரு மாலையு முல்லை குறிஞ்சி கூதிர் யாம மென்மனார் புலவர். இது முதலிரண்டனுள் நிலங்கூறிக் காலங்கூறுவான் முல்லைக்குங் குறிஞ்சிக்கும் பெரும்பொழுதுஞ் சிறுபொழுதுங் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) காரும் மாலையும் முல்லை - பெரும்பொழுதினுட் கார்காலமுஞ் சிறுபொழுதினுள் அக்காலத்து மாலையும் முல்லையெனப்படும்; குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார் புலவர் - பெரும் பொழுதினுட் கூதிர்காலமுஞ் சிறுபொழுதினுள் அதன் இடையாமமும் குறிஞ்சி யெனப்படும் என்றவாறு. முதல் கரு உரிப்பொருயென்னும் மூன்றுபாலுங்கொண்டு ஒரு திணையாமென்று கூறினாரெனும், 67ஒரு பாலினையுந் திணையென்று அப்பெயரானே கூறினார், வந்தான் என்பது உயர்திணை என்றாற்போல. இது மேலனவற்றிற்கும் ஒக்கும். இக்காலங்கட்கு 68விதந்து ஒரு பெயர் கூறாது வாளா கூறினார், அப்பெயர் உலகவழக்கமாய் அப்பொருள் உணர நிற்றலின். 69காலவுரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்கு உரிய கற்கடகவோரை யீறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாமாதலின், அதனை இம்முறை யானே அறுவகைப்படுத்து, இரண்டு திங்கள் ஒரு காலமாக்கினார். இனி ஒரு நாளினைப் படுசுடரமையந் தொடங்கி மாலையெனவும், அதன்பின் இடையாமமெனவும், அதன்பின் விடிய லெனவும், அதன்பின் காலை யெனவும், அதன்பின் நண்பக லெனவும், அதன்பின் எற்பாடெனவும் ஆறாகப் பகுத்தார். அவை ஒரோவென்று பத்து நாழிகையாக இம்முறையே சூத்திரங்களுட் சிறுபொழுது வைப்பர். பின்பனியும் நண்பகலும் பிற்கூறிய காரணம் அச்சூத்திரத்துக் கூறுதும். முல்லைக்குக் காரும் மாலையும் உரியவாதற்குக் காரண மென்னையெனின், பிரிந்து மீளுந் தலைவன்றிறமெல்லாம் பிரிந்திருந்த கிழத்தி கூறுதலே முல்லைப் பொருளாயும், பிரிந்து போகின்றான் திறங்கூறுவனவெல்லாம் பாலையாயும் வருதலின், அம்முல்லைப் பொருளாகிய மீட்சிக்குந் தலைவி இருத்தற்கும் உபகாரப்படுவது கார்காலமாம்; என்னை? வினைவயிற் பிரிந்து மீள்வோன், விரைபரித்தேரூர்ந்து பாசறையினின்று மாலைக் காலத்து ஊர்வயின் வரூஉங் காலம் ஆவணியும் புரட்டாதியும் ஆதலின், அவை வெப்பமுந் தட்பமும் மிகாது இடை நிகரவாகி 70ஏவல் செய்துவரும் இளையோர்க்கு நீரும் நிழலும் பயத்தலானும், 71ஆர்பதம் மிக்கு நீரும் நிழலும் பெறுதலிற் களிசிறந்து, மாவும் புள்ளுந் துணையோ டின்புற்று விளையாடுவன கண்டு தலைவற்குந் தலைவிக்குங் காமக் குறிப்பு மிகுதலானுமென்பது. புல்லை மேய்ந்து கொல் 72லேற்றொடு 73புனிற்றாக் கன்றை நினைந்து 74மன்றிற் புகுதரவும் தீங்குழ லிசைப்பவும் 75பந்தர்முல்லை வந்து மணங்கஞற்றவும் வருகின்ற தலைவற்கும் இருந்த தலைவிக்குங் காமக்குறிப்புச் சிறத்தலின், அக்காலத்து மாலைப்பொழுதும் உரித்தாயிற்று. இனிக் குறிஞ்சியாவது புணர்தற்பொருட்டு. அஃது இயற்கைப் புணர்ச்சி முதலியனவாம். இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின் களவு நீட்டிப்பக் கருதுந் தலைவற்குக் களவினைச் சிறப்பிக்குங்கால், தலைவி 76அரியளாக வேண்டுமாகவே அவ்வருமையை ஆக்குவது ஐப்பசியுங் கார்த்திகையுமாகிய கூதிரும் அதன் இடையாமமு மென்பது. என்னை? இருள் தூங்கித் துளி மிகுதலிற் சேறல் அரிதாதலானும், 77பானாட் கங்குலிற் பரந்துடன் வழங்காது மாவும் புள்ளுந் துணையுடன் இன்புற்று வதிதலிற் காமக்குறிப்புக் கழியவே பெருகுதலானுங், காவன் மிகுதி நோக்காது வருந் தலைவனைக் குறிக்கண் எதிர்ப்பட்டுப் புணருங்கால் இன்பம் பெருகுதலின், இந்நிலத்திற்குக் கூதிர்காலஞ் சிறந்ததெனப்படும். உ-ம் : விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப வேந்தனும் வெம்பகை தணிந்தனன் றீம்பெயற் காரு மார்கலி தலையின்று தேரு மோவத் தன்ன கோபச் செந்நிலம் வள்வா யாழி யுள்ளுறு புருளக் கடவிக் காண்குவம் பாக மதவுநடைத் தாம்பசை குழவி வீங்குசுரை மடியக் கனையலங் குரல காற்பரி பயிற்றிப் படுமணி மிடற்ற பயநிரை யாயங் கொடுமடி யுடையர் கோற்கைக் கோவலர் கொன்றையங் குழலர் பின்றைத் தூங்க மனைமனைப் படரு நனைநகு மாலைத் தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண்ணிலைப் புன்கா னெல்லிப் பைங்காய் தின்றவர் நீர்குடி சுவையிற் றீவிய மிழற்றி முகிழ்நிலாத் திகழ்தரு மூவாத் திங்கள் பொன்னுடைத் தாலி யென்மக னெற்றி வருகுவை யாயிற் றருகுவென் பாலென விலங்கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றித் திதலை யல்குலெங் காதலி புதல்வர்ப் பொய்க்கும் பூங்கொடி நிலையே. (அகம்.54) இது பாகற்குரைத்தது. இது 78முல்லைக்கட் காரும் மாலையும் வந்தது. மன்று பா டவிந்து மனைமடிந் தன்றே கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே யாமங் கொளவரிற் கனைஇக் காமங் கடலினு முரைஇக் கரைபொழி யும்மே யெவன்கொல் வாழி தோழி மயங்கி யின்ன மாகவு நன்னர் நெஞ்ச மென்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கானக நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார் பிட்டருங் கண்ண படுகுழி யியவி னிருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே. (அகம் 128) இரவுக்குறிக்கட் சிறைப்புறமாகத் தோழிக்கு உரைப்பா ளாக உரைத்தது. 79இது குறிஞ்சிக்குக் கூதிரும் யாமமும் வந்தது. நிலனும் பொழுதும் முதலென்றமையிற் கார் முதலாதல் வேண்டும்; வேண்டவே, அதற்கிடையின்றிக் கூறிய மாலையும் அதன் சினையாமாதலிற், கார்காலத்து மாலையென்பது பெற்றாம். இது கூதிர் யாமம் என்பதற்கும் ஒக்கும். (குறிஞ்சிக்கும் முன்பனியு முரித்தெனல்) 7. பனியெதிர் பருவமு முரித்தென மொழிப. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறியது; முற்கூறிய குறிஞ்சிக்கு முன்பனியும் உரித்தென்றலின். (இ-ள்.) பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப - பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சிக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. எதிர்தலென்பது முன்னாதல்; எனவே, முன்பனியாயிற்று, அது ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின். உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க. உதாரணம்: 80பனியடூஉ நின்ற பானாட் கங்குற் றமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய வலைத்தி முரணில் காலை (அகம். 124) என முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது. (மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய சிறுபொழுதும் இவை எனல்) 8. வைகுறு விடியன் மருத மெற்பாடு நெய்த லாதன் மெய்பெறத் தோன்றும். இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது. (இ - ள்.) வைகுறு விடியல் மருதம் - வைகறையும் விடியற் காலமும் மருதமாதலும்; எற்பாடு நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் - எற்படுகாலம் நெய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும் என்றவாறு. வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்கு நின்றது. செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ (423) என்றாற் போல வைகுறு தலை வைகுறு என்றார். அது மாலையாமமும் இடையாமமுங் கழியுந்துணை அக்கங்குல் 81வைகுறுதல். அது கங்குல் வைகிய அறுதியாதனோக்கி வைகறை யெனவுங் கூறுப. அதுவும் பாடம். நாள் வெயிற் காலையை விடியலென்றார். விடியல் வெங்கதிர் காயும் வேயம லகலறை (கவி.45) என்ப விடியல் வைகறை யிடூஉ மூர (அகம். 196) என்றது, விடியற்கு முன்னர்த்தாகிய வைகறை என உருபுதொக்கு முன்மொழி நிலையலாயிற்று. பரத்தையின் பிரிந்த தலைவன் ஆடலும் பாடலுங் கண்டுங்கேட்டும் பொழுகழிப்பிப் பிறர்க்குப் புலனாகாமல் மீளுங்காலம் அதுவாதலானுந், தலைவிக்குக் கங்குல் யாமம் கழியாது நெஞ்சழிந்து ஆற்றாமை மிகுதலான் ஊடல் உணர்த்தற்கு எளிதாவதோர் உபகார முடைத்தாத லானும் வைகறை கூறினார். இனித் தலைவி விடியற்குக்காலஞ் சிறுவரைத்தாதலின் இதனாற் பெறும் பயன் இன்றென முனிந்து வாயிலடைத்து ஊடனீட்டிப்பவே அவ் வைகறை வழித்தோன்றிய விடியற்கண்ணும் அவன் 82மெய் வேறுபாடு விளங்கக் கண்டு வாயில் புகுத்தல் பயத்தலின் விடியல் கூறினார். வீங்குநீர் என்னும் மருதக்கலியுள், அணைமென்றோள் யாம்வாட வமர்துணைப் புணர்ந்துநீ மணமனையா யெனவந்த மல்லலின் மாண்பன்றோ பொதுக்கொண்ட கெளவையிற் பூவணைப்பொலிந்தநின் வதுவையங் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை. (கலி.66) என மருதத்திற்கு வைகறை வந்தது. விரிகதிர் மண்டிலம் என்னும் மருதக்கலியுள், தணந்தனை யெனக்கேட்டுத் தவறோரா தெமக்கு நின் குணங்களைப் பாராட்டுந் தோழன்வந் தீயான்கொல் கணங்குழை நல்லவர் கதுப்பற லணைத்துஞ்சி யணங்குபோற் கமழுநின் னலர் 83மார்பு காணிய. (கலி.71) என மருதத்துக் காலை வந்தது. 84காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி என்பதும் (குறுந். 45) அது. இனி வெஞ்சுடர் வெப்பந்தீரத் தண்ணறுஞ் சோலை தாழ்ந்து நீழற் செய்யவும், தண்85பதம்பட்ட தெண்கழி மேய்ந்து பல்வேறு வகைப்பட்ட புள்ளெல்லாங் 86குடம்பை நோக்கி 87உடங்கு பெயரவும், புன்னை முதலிய பூவினாற்றம் முன்னின்று 88கஞற்றவும், நெடுந்திரை யழுவத்து நிலாக்கதிர் பரப்பவுங், காதல் கைமிக்குக் 89கடற்கானுங் கானற்கானும் நிறைகடந்து வேட்கை புலப்பட உரைத்தலின், ஆண்டுக் காமக்குறிப்பு வெளிப்பட்டு இரங்கற் பொருள் சிறத்தலின் எற்பாடு நெய்தற்கு வந்தது. உதாரணம்: நெடுவேண் மார்பி லாரம் போலச் செவ்வாய் வானந் தீண்டிமீ னருந்து பைங்காற் கொக்கின நிரைபறை யுகப்ப வெல்லைபைப் பையக் கழிப்பிக் குடவயிற் கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு மதரெழின் மழைக்கண் கலுழ விவளே பெருநா ணணிந்த சிறுமென் சாயன் மாணலஞ் சிதைய வேங்கி யானா தழறொடங் கினளே பெரும வதனாற் கழிச்சுறா வெறிந்த புட்டா ளத்திரி நெடுநீ ரிருங்கழிப் பரிமெலிந் தசைஇ வல்வில் லிளையரோ டெல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை யன்றி லகவு மாங்கட் சிறுகுர னெய்தலெம் பெருங்கழி நாட்டே (அகம்.120) பகற்குறிக்கண் இடத்துய்த்துத் தலைவனை எதிர்ப்பட்டு உரைத்தது. நெய்தற்கு எற்பாடு வந்தது. கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப (அகம்.40) என்பதனுன் மாலையும் வந்தது. கலியுள் மாலைக்காலம் நெய்தலின்கண் வந்தவாறு காண்க. இதுமேல் நிலனொருங்கு மயங்குத லின்று (12) என்பதனாற் பெறுதும். இவற்றிற்கு அறுவகை இருதுவும் உரிய வென்பதன்றிக் காரும் இளவேனிலும் வேனிலும் பெரும்பொழுதாகக் கொள்ப என்றற்குப் பொருள் பெறத் தோன்றும் என்றார். இனி நெய்தற்கு ஒழிந்த மூன்று காலமும் பற்றிவரச் சான் றோர் செய்யுட் செய்திலர், அக்காலத்துத் தலைவி புறம்போந்து விளையாடாமையின். அங்ஙனம் வந்த செய்யுளுளவேல் அவற்றையுங் கொள்க. கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூர னெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூக்கு மாடிப் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே. (குறு. 8) இது குறுந்தொகை. புறனுரைத்தாளெனக் கேட்ட பரத்தை தலைவனை நெருங்கித் தலைவன் பாங்காயினார் கேட்ப உரைத்தது. 90இது முதுவேனில் வந்தது. அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை யரம்போ ழவ்வளைப் பொலிந்த முன்கை யிழையணி பணைத்தோ ளையை தந்தை மழைவளந் தரூஉ மாவண் டித்தன் பிண்ட நெல்லி னுறந்தை யாங்கட் 91கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தங் குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயநா டியானையின் முகனமர்ந் தாஅங் கேந்தொழி லாகத்துப் பூந்தார் குழைய நெருந லாடினை புனலே யின்றுவந் தாக வனமுலை யரும்பிய கணங்கின் மாசில் கற்பிற் புதல்வன் றாயென மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றியெம் முதுமை யெள்ளலஃதமைகுந் தில்ல சுடர்ப்பூந் தாமரை நீர்முதிர் பழனத் தந்தூம்பு வள்ளை யாய்கொடி மயக்கி வாளை மேய்ந்த வள்ளெயிற்று நீர்நாய் முள்ளரைப் பிரம்பின் மூதரிற் செறியும் பல்வேன் மத்தி கழாஅ ரன்னவெம் மிளமை சென்று தவத்தொல் லஃதே யினியெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே. (அகம். 6) பரத்தையொடு புனலாடி வந்தமைகேட்டுத் தலைவி புலந்தது. 92இது இளவேனில் வந்தது. ஏனைய வந்தவழிக் காண்க. நாடகவழக்கானன்றி உலகியல்வழக்கானும் அச்சிறு பொழுதும் அப் பெரும்பொழுதிற்குப் பொருந்து மென்றற்குத் தோன்றும் என்றார். ïj‹ga‹ ï›Éu©L Ãy¤J¡F k‰iw _‹W fhyK« bgU«gh‹ik thuhbt‹wyh«.(8) (பாலைக்குரிய காலம் உணர்த்தல்) 9. நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. இது நிலனுடைய நான்கற்குங் காலங்கூறி அந்நான்கற்கும் பொதுவாகிய பாலைக்குங் காலங் கூறுகின்றது. (இ-ள்.) நடுவுநிலைத்திணையே - பாலைத்திணை; நண்பகல் வேனிலொடு - காலையும் எற்பாடும் என்னும் இரு கூற்றிற்கு நடுவணதாகிய ஒரு கூறு தான்கொண்டு வெம்மை செய்து பெருகிய பெரும் பகலோடும் இளவேனிலும் முதுவேனிலும் என்னும் இரண்டனோடும்; முடிவு நிலை மருங்கின் - பிரிவெனப்படுதற்கு 93முடிவுடைத்தாகிய குறிஞ்சி யும் முல்லையுமாகிய ஒரு மருங்கின் கண்ணே; 94முன்னிய நெறித்து - ஆசிரியன் மனங் கொள்ளப்படும் நெறியையுடைத்து என்றவாறு. நிலையென்றது நிலத்தினை. முடிவுநிலைப்பகுதிக்கண் முன்னப்படுமெனவே அத்துணை யாக்கமின்றி ஒழிந்த மருதமும் நெய்தலும் முடியாநிலமாய் அத்துணை முன்னப்படா வாயின பாலைக் கென்பதாம். பிரிவின்கண் 95முடிய வருவன வெல்லாம் இவ்விரண்டற்கும் முடியவருதலும் ஒழிந்த இரண்டற்கும் அவை குறைய வருதலும் 96உரையிற் கொள்க. என்னை? சுரத்தருமை அறியின், இவள், ஆற்றாளாமெனத் தலைவன் செலவழுங்கு தலுந், துணிந்து போதலும், உடன் போவலெனத் தலைவி கூறுதலும், அதனை அவன் விலக்கலும், இருந்திரங்கலும் போல்வன பலவும் முடியவரும் நிலங் குறிஞ்சியும் முல்லையு மாகலின். சுரத்தருமை முதலிய நிகழாமை யின் மருதமும் நெய்தலும் அப்பொருண் முடிய வாராவாயின. நன்றே காதலர் சென்ற வாறே யணிநிற விரும்பொறை மீமிசை மணிநிற வுருவின தோகையு முடைத்தே. (ஐங்குறு.431) 97இது சுரத்தருமை நினைந்து வருந்தினேனென்ற தலைவிக்கு அவ்வருத்தம் நீங்கக் கார்கால மாயிற்றென்று ஆற்றுவித்தது. இப்பாட்டு முதலிய பத்தும் முல்லையுட் பாலை. கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர்தரு விருந்திந் றவிர்குதல் யாவது மாற்றருந் தானை நோக்கி யாற்றவு மிருத்தல் வேந்தனது தொழிலே. (ஐந்குறு.451) 98இது பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு வருந்தியது. இப்பத்தும் முல்லையுட் பாலை. கருங்கால் வேங்கை மாத்தகட் டொள்வீ யிருங்கல் வியலறை வரிப்பத் தாஅ நன்மலை நாடன் பிரிந்தென வொண்ணுதல் பசப்பது தெவன்கொ லன்னாய். (ஐங்குறு.219) இது வரைவிடை வைத்துப் பிரிந்துழித் தலைவி யாற்றாமை கண்டு தோழி கூறியது. 99இது வைங்குறுநூறு குறிஞ்சியுட் பாலை. எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்டுளி வீசிப் பசலை செய்தன பனிபடு துறையே. (ஐந்குறு.141) இது வைங்குறுநூறு வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றுவிக்குந் தோழிக்குத் துறையின்ப முடைத்தாகலான் வருத்திற்றெனத் தலைவி கூறியது. 100இது சுரத்தருமை முதலியனவின்றி நெய்தற்குட் பாலை வந்தது. ஏனைய வந்துழிக் காண்க. 101முந்நீர் வழக்கஞ் சிறுபான்மையாகலின் நெய்தற்கு முடிய வாராதாயிற்று. இக்கருத்தானே பிரிவொழுக்கம் மருதத்திற்கும் நெய்தற்குஞ் சிறுபான்மையாகப் புலனெறிவழக்கஞ் செய்யப் படும். 102எற்பாட்டுக்கு முன்னர்த்தாகிய 103நண்பகலைப் பாலைக்குக் கூறவேண்டிப் பின் வைத்தாரேனும் பெரும் பொழுதிற்கு முற்கூறுதலின் ஒருவாற்றாற் சிறுபொழுதாறும் முறையே வைத்தாராயிற்று. காலையும், மாலையும் நண்பக லன்ன கடுமைகூரச் சோலை தேம்பிக் 104கூவன் மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம் 105பயந் துறந்து, புள்ளும் மாவும் புலம் புற்று இன்பமின்றித் துன்பம் பெருகுவதொரு காலமாதலின், இன்பத்திற்கு இடையூறாகிய பிரிவிற்கு நண்பகலும் வேனிலுஞ் சிறப்புடைய வாயிற்று. தெள்ளறல் யாற்றுத் திரைமண லடைகரை வண்டுவரி பாடத் தண்போ தலர்ந்து தாதுந் தளிரு மேதகத் துவன்றிப் பல்பூஞ் சோலைப் பன்மலர் நாற்றமொடு செவ்வித் தென்ற னொவ்விதிற் றாகிக் குயில்கூஉக் குரலும் பயில்வதன் மேலும் நிலவுஞ் சாந்தும் பலவுறு முத்து மின்பம் விளைக்கு நன்பொருள் பிறவும் பண்டைய போலா தின்ப மிகத்தரும் இளவேனிற்காலத்து, பொழில் விளையாடியும், புதுப்பூக் கொய்தும், அருவியாடியும் முன்னர் விளையாட்டு நிகழ்ந்தமை பற்றிப் பிரிந்த கிழத்தி மெலிந்துரைக்குங் கிளவி பயின்று வருதலானும், உடன்போக்கின்கண் அக்காலம் இன்பம் பயக்குமாதலானும் இளவேனிலொடு நண்பகல் சிறந்த தெனப்பட்டது. பிரிந்த கிழத்தி இருந்து கூறுவன கார்கால மன்மையின் முல்லையாகா. உதாரணம்: கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை வறனுற லங்கோ டுதிரவலங் கடந்து புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை யிரவுக்குறும் பலற நூறி நிரைபகுத் திருங்கன் முடுக்கர்த் திற்றி கெண்டுங் கொலைவி லாடவர் போலப் பலவுடன் பெருந்தலை யெருவையொடு பருந்துவந் திறுக்கு மருஞ்சுர மிறந்த கொடி யோர்க் கல்கலு மிருங்கழை யிறும்பி னாய்ந்துகொண் டறுத்த நுணங்குகட் சிறுகோல் வணங்கிறை மகளிரோ டகவுநர்ப் புரந்த வன்பிற் கழறொடி நறவுமகி ழிருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூ ரன்னநின் னலர்முலை யாகம் புலம்பப் பலநினைந் தாழ லென்றி தோழி யாழவென் கண்பனி நிறுத்த லெளிதோ குரவுமலர்ந் தற்சிர நீங்கிய வரும்பத வேனி லறலவிர் வார்மண லகல்யாற் றடைகரைத் துறையணி மருமொ டிகல்கொள வோங்கிக் கலுழ்தளி ரணிந்த விருஞ்சினை மாஅத் திணர்ததை புதுப்பூ நிரைத்த பொங்கர்ப் புகைபுரை யம்மஞ் சூர நுகர்குயி லகவுங் குரல்கேட் போர்க்கே. (அகம்.97) இது வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது. 106இக் களிற்றியானைநிரையுள் இருவகை வேனிலும் பாலைக்கண் வந்தன. நண்பகலொடுவருவன வந்துழிக் காண்க. (9) (பாலைக்குப் பின்பனியும் உரித்தெனல்) 10. பின்பனி தானு முரித்தென மொழிப இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள்.) நடுவுநிலைத் திணைக்கு முற்கூறிய வேனிலன்றிப் பின்பனிக்காலமும் உரித்து என்றவாறு. இது, கூதிரை முன்பனியாகிய மார்கழியுந் தையுந் தொடர்ந்தாற்போல, வேனிலாகிய சித்திரை முதலிய நான்கற்கு முன் பின் பனியாகிய மாசியும் பங்குனியுந் தொடர்ந்ததென்று கூறினார். உதாரணம்: பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ புகையெனப் புதல்சூழ்ந்து பூவங்கட் பொதிசெய்யா முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி. (கலி.31) 107இது தனித்தோர்க்குப் பின்பனி ஆற்றலரிது, இஃதெவர்க் கும் 108ஏதமாம் எனவும், இதனான் இறந்துபடுவேனெனவுங் கூறிற்று. அம்ம வாழி தோழி காதலர் நூலறு முத்திற் றண்சித ருறைப்பத் தாளித் தண்பவர் நாளா மேயும் பனிபடு நாளே பிரிந்தனர் பிரியு நாளும் பலவா கவ்வே (குறு.104) தலைவி தோழிக்கு உரைத்தது. 109இக் குறுந்தொகையும் அது. பின்பனிக்கு நண்பகல் துன்பஞ்செய்யா தென்பதூஉம், அதற்குச் சிறுபொழுது வரைவிலவென்பதூஉங் கூறிற்று; என்னை? சூத்திரத்துத் தான் எனத் தனித்து வாங்கிக் கூறினமையின். (10) (பாலைப்பகுதியும் அவற்றிற்குப் பின்பனி உரித்தெனலும்) 11. இருவகைப் பிரிவு நிலைபெறத் தோன்றினு முரிய தாகு மென்மனார் புலவர். இது பாலைப்பகுதி இரண்டெனவும் அவ்விரண்டற்கும் பின்பனி உரித்தெனவுங் கூறுகின்றது. (இ-ள்.) இருவகைப்பிரிவும் நிலைபெறத் தோன்றினும் - நான்கு வருணத்தார்க்குங் காலிற் பிரிவும் வேளாளர்க்குத் கலத் திற் பிரிவுந் தத்தம் நிலைமைக்கேற்பத் தோன்றினும்; உரியது ஆகும் என்மனார் புலவர் - பின்பனிக்காலம் அவ்விரண்டற்கும் உரிமைபூண்டு நிற்குமென்று கூறுவர் புலவர் என்றவாறு. கடலினை நிலமென்னாமையிற் கலத்திற் பிரிவு முன் பகுத்த நிலத்துள் அடங்காதென்று, அதுவும் அடங்குதற்கு இரு வகைப் பிரிவும் என்னும் முற்றும்மை கொடுத்துக், காலிற் பிரிவொடு கூட்டிக் கூறினார். கலத்திற் பிரிவு அந்தணர் முதலிய செந்தீ வாழ்நர்க்கு ஆகாமையின் வேளாளர்க்கே உரித்தென்றார். வேத வணிக ரல்லாதார் கலத்திற் பிரிவு வேதநெறி யன்மையின் ஆராய்ச்சியின்று. இக்கருத்தானே இருவகை வேனிலும் நண் பகலும் இருவகைப் பிரிவிற்கும் ஒப்ப உரியவன்றிக், காலிற் பிரிவுக்குச் சிறத்தலுங், கலத்திற் பிரிவிற்கு இளவேனி லொன்றுங் காற்றுமிகாத முற்பக்கத்துச் சிறுவரவிற்றாய் வருதலுங் கொள்க. 110ஒழிந்த உரிப்பொருள்களினும் பாலை இடை நிகழுமென்றலிற் பிரிய வேண்டிய வழி அவற்றிற்கு ஓதிய காலங்கள் கலத்திற் பிரிவிற்கு வந்தாலும் இழுக்கின்று. என்னை? கார்காலத்துக் கலத்திற்பிரிவும் உலகியலாய்ப் பாடலுட் பயின்று வருமாயி னென்க. தோன்றினும் என்ற உம்மை சிறப்பும்மை; இரண்டு பிரிவிற்கும் பின்பனி உரித்தென்றலின். இனிக் கலத்திற் பிரிவிற்கு உதாரணம்: உலகு கிளர்ந்தன்ன வுருகெழு வங்கம் புலவுத்திரைப் பெருங்கட னீரிடை போழ விரவு மெல்லையு மசைவின் றாகி விரைசெல லியற்கை வங்கூ ழாட்டக் கோடுயர் திணிமண லகன்றுறை நீகான் மாட வொள்ளெரி மருங்கறிந் தொய்ய வாள்வினைப் புரிந்த காதலர் நாள்பல கழியா மையே யழிபட ரகல வருவர் மன்னாற் றோழி தண்பணைப் பொருபுனல் வைப்பி னம்மூ ராங்கட் கருவிளை முரணிய தண்புதற் பகன்றைப் பெருவன மலர வல்லி தீண்டிப் பலவுக்காய்ப் புறத்த பசும்பழப் பாகல் கூதள மூதிலைக் கொடிநிரை தூங்க வறனின் றலைக்கு மானா வாடை கடிமனை மாடத்துக் கங்குல் வீசத் திருந்திழை ஞெகிழ்ந்து பெருங்கவின் சாஅய் நிரைவளை யூருந் தோளென வுரையொடு செல்லு மன்பினர்ப் பெறினே (அகம்.255) இது தோழி தூதுவிடுவது காரணமாக உரைத்தது. 111இம் மணிமிடை பவளத்துப் பின்பனி வந்தவாறும் நண்பகல் கூறாமையும் அவர் குறித்தகாலம் இதுவென்பது தோன்றியவாறுங் காண்க. குன்ற வெண்மண லேறி நின்றுநின் றின்னுங் காண்கம் வம்மோ தோழி களிறுங் கந்தும் போல நளிகடற் கூம்புங் கலனுந் தோன்றுந் தோன்றன் மறந்தோர் துறைகெழு நாட்டே வருகின்றாரெனக் கேட்ட தலைவி தோழிக்கு உரைத்தது. இதன் பின்பனி நின்றகாலம் 112வரைவின்றி வந்தது. கடலிடைக் கலத்தைச் செலுத்துதற்கு உரிய காற்றொடு பட்ட காலம் யாதானுங் கொள்க. ஆகுமென்றதனான் வேத வணிகரும் பொருளின்றி இல்லறம் நிகழாத காலத்தாயிற் செந்தீ வழிபடுதற்கு உரியோரை நாட்டிக் கலத்திற் பிரிதற்கு உரிய ரென்று கொள்க. (11) (மேலனவற்றிற்குப் புறனடை) 12. 113திணைமயக் குறுதலுங் கடிநிலை யிலவே நிலனொருங்கு மயங்குத லின்றென மொழிப புலனன் குணர்ந்த புலமை யோரே. இஃது உரிப்பொருள் மயங்குமென்றலின் மேலனவற்றிற் குப் புறனடை. (இ-ள்.) திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே - மாயோன் மேய (5) என்பதனுள் ஒரு நிலத்து ஓரொழுக்கம் நிகழுமென நினைத்துக் கூறிய ஒழுக்கம் அவ்வந்நிலத்திற்கே உரித்தாயொழு காது தம்முள் மயங்கிவருதலும் நீக்கப்படா; நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிப - அங்ஙனம் ஒருநிலத்து இரண் டொழுக்கந் தம்முள் மயங்குதலன்றி இரண்டு நிலம் ஒரோ வொழுக்கத்தின்கண் மயங்குதல் இல்லை என்று கூறுவர்; புலன் நன்கு உணர்ந்த புலமையோர் - அங்ஙனம் நிலனும் ஒழுக்கமும் இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி வழக்கத்தினை. மெய்பெற உணர்ந்த அறிவினையுடையோர் என்றவாறு. என்றது, ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள் மயங்கி வருமென்பதூஉம், நிலன் இரண்டு மயங்காவெனவே காலம் இரண்டு தம்முள் மயங்குமென்பதுஉங் கூறினாராயிற்று. ஆகவே, ஒரு நிலமே மயங்குமாறாயிற்று. உரிப்பொருண் மயக்குறுதல் என்னாது திணை மயக்குறுதலும் என்றார், ஓர் உரிப்பொருளோடு ஓர் உரிப்பொருள் மயங்குதலும், ஓர் உரிப்பொருள் நிற்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்து மயங்குதலும், இவ்வாறே காலம் மயங்குதலும், கருப்பொருள் மயங்குதலும் பெறுமென்றற்கு, திணையென்றது 114அம் மூன்றனையுங் கொண்டே நிற்றலின். உதாரணம்: அறியே மல்லே மறிந்தன மாதோ பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பச் 115சாந்த நாறு நறியோள் கூந்த னாறுநின் மார்பே தெய்யோ (ஐங்குறு 240) 116இது புறத்தொழுக்க மின்றென்றாற்குத் தோழி கூறியது. புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை வளைவெண் மருப்பிற் கேழல் புரக்குங் குன்றுகெழு நாடன் மன்றதன் பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே (ஐங்குறு.265) 117இது வாயில்களுக்குத் தலைவி கூறியது. வன்கட் கானவன் மென்சொன் மடமகள் புன்புல மயக்கத் துழுத வேனற் பைம்புறச் சிறுகிளி கடியு நாட பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே (ஐங்குறு.283) 118இது தலைவன் ஆற்றாமை வாயிலாகப் புணர்ந்துழிப் பள்ளியிடத்துச் சென்ற தோழி கூறியது. இவை குறிஞ்சிக்கண் மருதம் நிகழ்ந்தன; இவை ஓரொ ழுக்கம் நிகழ்தற்கு உரியவிடத்தே ஓரொழுக்கமும் நிகழ்ந்தன. அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவு யாயி னென்னதூஉ மறிய வாகுமோ மற்றே முறியிணர்க் கோங்கம் பயந்த மானே. (ஐங்குறு.366) இஃது இவ்வேறுபாடென்னென்ற செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்.119இது பாலையிற் குறிஞ்சி. இஃது உரிப்பொருளொடு உரிப்பொருண் மயங்கிற்று. மேல் வருவனவற்றிற்கும் இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்க. வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழின் முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருநற் குறிநீ செய்தனை யென்ப வலரே குரவ நீள்சினை யுறையும் பருவ மாக்குயிற் கெளவையிற் பெரிதே (ஐங்குறு.369) 120இது பொழிலிடத்து ஒருத்தியொடு தங்கி வந்தும் யான் பரத்தையை அறியேனென்றாற்குத் தோழி கூறியது. வண்சினைக் கோங்கின் றண்கமழ் படலை யிருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந் துறையப் பட்டோள் யார ளோவெம் மறையா தீமே (ஐந்குறு.370) 121இது பரத்தையர்க்குப் பூவணிந்தமை கேட்ட தலைவி அஃதின்றென்றாற்குக் கூறியது. இவை பாலைக்கண் மருதம் நிகழ்ந்தன. அருந்தவ மாற்றியார் என்னும் பாலைக்கலியுமது (கலி. 30). அன்னை வாழிவேண் டன்னை யுதுக்கா ணேர்கொடிப் பாசடும்பு பரியவூர் பிழிபு நெய்தன் மயக்கிவந் தன்று நின்மகள் பூப்போ லுண்கண் மரீ இய நோய்க்குமருந் தாகிய கொண்கன் றேரே. (ஐங்குறு.101) இஃது அறத்தொடுநின்றபின் வரைதற்குப் பிரிந்தான் வரை வொடு வந்தமை தோழி செவிலிக்குக் காட்டியது. 122இது நெய்தலிற் குறிஞ்சி. கண்டிகு மல்லமோ கொண் கநின் கேளே 123யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே (ஐங்குறு.122) 124கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே உறாஅ வறுமுலை மடாஅ வுண்ணாப் பாவை யூட்டு வோளே. (ஐங்குறு 128) இவை பெதும்பைப் பருவத்தாள் ஒரு தலைவியொடு வேட்கை நிகழ்ந்தமையைத் தலைவி கூறித் தலைவன் குறிப்புணர்ந்தது. இப்பத்தும் நெய்தற்கண் மருதம். யானெவன் செய்கோ பாணவா னாது மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் ` புல்லென் றனவென் புரிவளைத் தோளே. (ஐங்குறு.133) 125இது தலைவன் புறத்துப்போன அத்துணைக்கு ஆற்றா யாகுதல் தகாதென்ற பாணற்குத் தலைவி கூறியது. இப் பத்தும் நெய்தற்கண் மருதம். வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை மிதிப்ப நக்க கண்போ னெய்தல் கட்கமழ் தானாத் துறைவற்கு நெக்க நெஞ்ச நேர்கல் லேனே. (ஐங்குறு.151) 126இது வாயில்வேண்டிய தோழிக்குத் தலைவி வாயின் மறுத்தது. இப்பத்தும் நெய்தற்கண் மருதம். இலங்குவளை தெளிர்ப்ப வலவ னாட்டி முகம்புதை கதுப்பின ளிறைஞ் சிநின் றோளே புலம்புகொண் மாலை மறைய நலங்கே ழாக நல்குவ ளெனக்கே. (ஐங்குறு.197) இது இடந்தலைப் பாட்டிற் றலைவி நிலைகண்டு கூறியது. 127இது நெய்தலிற் புணர்தனிமித்தம். வேப்புநனை யன்ன நெடுங்கட் கள்வன் றண்ணக மண்ணளை நிறைய நெல்லி னிரும்பூ வுறைக்கு மூரற்கிவள் பெருங்கவி னிழப்ப தெவன்கொ லன்னாய் (ஐங்குறு. 30) 128இது தோழி அறத்தொடு நின்றது. பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங் கழனி யூரநின் மொழிவ லென்றுந் துஞ்சுமனை நெடுநகர் வருதி யஞ்சா யோவிவ டந்தைகை வேலே. (ஐங்குறு.60) 129இது தோழி இரவுக்குறி மறுத்தது. நெறிமருப் பெருமை நீலவிரும் போத்து வெறிமலர்ப் பொய்கை யாம்பன் மயக்குங் கழனி யூரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப்பிணை யலளே. (ஐங்குறு.91) 130இஃது இளையள் விளைவிலளென்றது. கருங்கோட் டெருமைச் செங்கட் புனிற்றாக் காதற் குழவிக் கூறுமுலை மடுக்கு நுந்தை நும்மூர் வருது மொண்டொடி மடந்தை நின்னை யாம் பெறினே (ஐங்குறு.92) 131இது நின்தமர் வாராமையின் எமர் வரைவு நேர்ந்தில ரென்று தோழி கூறக்கேட்ட தலைவன் தலைவிக்குக் கூறியது. இவை மருதத்துக் குறிஞ்சி நிகழ்ந்தன. இக் காட்டியவெல்லாம் ஐங்குநூறு. புனையிழை நோக்கியும் என்னும் மருதக் கலியும் அது (கலி.76) முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டு முட்டுறு கவரி தூக்கி யன்ன செழுஞ்செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக்கதிர் மூதா தின்ற லஞ்சிக் காவலர் டாக லாய்கொடிப் பகன்றையொடு பரீஇக் காஞ்சியி னகத்துக் கரும்பருத்தி யாக்குந் தீம்புன லூர திறவ தாகக் குவளை யுண்க ணிவளும் யானுங் கழனி யாம்பன் முழுநெறிப் பகைத்தழை காயா ஞாயிற் றாகத் தலைப்பப் பொய்த லாடிப் பொலிகென வந்து நின்னகாப் பிழைத்த தவறோ பெரும கள்ளுங் கண்ணியுங் கையுறை யாக நிலைக்கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய் நிலைத்துறைக் கடவுட் குளப்பட வோச்சித் தணிமருங் கறியாள் யாஅயழ மணிமருண் மேனி பொன்னிறங் கொளலே (அகம்.156) 132இது தலைவியைத் தோழி இடத்துய்த்துத் தலைவனை வரைவு கடாயது. இவ்வகப்பாட்டும் அது. இன்னும், மயக்குறுதலும் என்றதனான் அவ்வந் நிலங் கட்கு உரிய முதலுங் கருவும் வந்து உரிப்பொருள் மயங்கு வனவுங் கொள்க. அஃது அயந்திகழ் நறுங்கொன்றை (கலி.150) என்னும் நெய்தற் கலியுட் காண்க. 133இக்கருத்தானே நக்கீரரும் ஐந்திணையுள்ளுங் களவு நிகழுமென்று கொண்ட வாறுணர்க. இனிக் காலம் ஒருங்கு மருங்குங்காற் பெரும்பொழுது இரண்டும் பெரும்பான்மையுஞ், சிறுபான்மை சிறுபொழுதும் மயங்குதலுங் கொள்க. மழையில் வான மீனணிந் தன்ன குழையமன் முசுண்டை வாலிய மலர வரிவெண் கோடல் வாங்குகுலை வான்பூப் பெரிய சூடிய கவர்கோற் கோவல ரெல்லுப் பெயலுழந்த பல்லா நிரையொடு நீர்திகழ் கண்ணிய ரூர்வயிற் பெயர்தர நனிசேட் பட்ட மாரி தளிசிறந் தேர்தரு கடுநீர் தெருவுதோ றொழுகப் பேரிசை முழக்கமொடு சிறந்துநனி மயங்கிக் கூதிர்நின் றன்றாற் பொழுதே காதலர் நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக் காய்சின யானைக் கங்குற் சூழ வஞ்சுவர விறுத்த தானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே. (அகம்.264) இது தோழிக்குத் தலைவி கூறியது. இம் 134மணிமிடை பவளத்துள் முல்லையுட் கூதிர் வந்தது. மங்குன் மாமழை விண்ணதிர்பு முழங்கித் துள்ளுப்பெயல் கழிந்த பின்றைப் புகையுறப் புள்ளிநுண் டுவலை பூவக நிறையக் காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத் துய்த்தலைப் பூவின் புதலிவ ரீங்கை நெய்தோய்த் தன்ன நீர்நனை யந்தளி ரிருவகி ரீருளி னீரிய துயல்வர வவரைப் பைம்பூப் பயில வகல்வயற் கதிர்வார் காய்நெற் கட்கினி திறைஞ்சச் சிதர்சினைத் தூங்கு மற்சிர வரைநாட் காய்சின வேந்தன் பாசறை நீடி நந்நோ யறியா வறனி லாள ரிந்நிலை களைய வருகுவர் கொல்லென வானா தெறிதரும் வாடையொடு நோனேன் றோழீயென் றனிமை யானே (அகம்.294) இரு பருவ வரவின்கண் வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது. 135இம் மணிமிடை பவளத்து முல்லையுள் முன்பனி வந்தது. நிலமுங் கருவும் மயங்கின. கருங்கால் வேங்கை வீயுகு துறுக லிரும்புலிக் குருளையிற் றோன்றுங் காட்டிடை யெல்லி வருநர் களவிற்கு நல்லை யல்லை நெடுவெண் ணிலவே. (குறுந்.47) இஃது இரா வந்து ஒழுகுங்காலை முன்னிலைப் புறமொழி யாக நிலாவிற்கு உரைப்பாளாய் உரைத்தது. 136இக் குறுந் தொகையுட் குறிஞ்சியுள் வேனில் வந்தது. விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப (அகம். 54) என்பது கார்காலத்து மீள்கின்றான் முகிழ்நிலாத் திகழ்வதற்குச் சிறந்த வேனி லிறுதிக்கண் தலைவிமாட்டு நிகழ்வன கூறி, அவை காண்டற்குக் கடிது தேரைச் செலுத்தென்றது. 137இது முல்லைக்கண் வேனில் வந்தது. துஞ்சுவது போல விருளி விண்பக விமைப்பது போல மின்னி யுறைக் கொண் டேறுவது போலப் பாடுசிறந் துரைஇ நிலநெஞ் சுட்க வோவாது சிலைத்தாங் கார்தளி பொழிந்த வார்பெயற் கடைநா ளீன்றுநா ளுலந்த வாலா வெண்மழை வான்றோ யுயர்வரை யாடும் வைகறைப் புதலே ரணிந்த காண்பின் காலைத் தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து வெண்புறக் குடைய திரிமருப் பிரலை வார்மண லொருசிறைப் பிடவவிழ் கொழுநிழற் காமர் துணையோ டமர்துயில் வதிய வரக்குநிற வுருவி னீயன் மூதாய் பரப்பிய வைபோற் பாஅய்ப் பலவுட னீர்வார் மருங்கி னீரணி திகழ வின்னும் வாரா ராயி னன்னுதல் யாதுகொன் மற்றவர் நிலையே காதலர் கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்றவர் வருதுமென் றதுவே (அகம்.139) இது பிரிவிடையாற்றாது தோழிக்கு உரைத்தது. 138இம் மணிமிடை பவளத்துப் பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன. தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற் பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம் புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்; சேயார்கட் சென்றவென் னெஞ்சினைச் சின்மொழி நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி வாய்விரிபு பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி நோய்சேர்ந்த வைகலான் வாடைவந் தலைத்தரூஉம்; போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச் சூழ்பாங்கே சுடரிழாய் கரப்பென்மற் கைநீவி வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணு மிருந்தும்பி யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்; தொடிநிலை நெகிழ்த்தார்கட் டோயுமென் னாருயிர் வடுநீங்கு கிளவியாய் வலிப்பென்மன் வலிப்பவு நெடுநிலாத் திறந்துண்ண நிரையிதழ் வாய்விட்ட கடிமலர் கமழ்நாற்றங் கங்குல்வந் தலைத்தரூஉம்; எனவாங்கு, வருந்தினை வதிந்தநின் வளைநீங்கச் சேய்நாட்டுப் பிரிந்துசெய் பொருட்பிணி பின்னோக்கா தெய்திநம் மருந்துயர் களைஞர் வந்தனர் திருந்தெயி றிலங்குநின் றேமொழி படர்ந்தே (கலி.29) வந்தாரென ஆற்றுவித்தது. 139இதில் வேனிலும் வாடையும் கங்குலும் மாலையும் வந்தன. அம்ம வாழி தோழி சிறியிலைக் குறுஞ்சினை வேம்பி னறும்பழ முணீஇய வாவ லுகக்கு மாலையு மின்றுகொல் காதலர் சென்ற நாட்டே (ஐங்குறு.339) 140இவ் ஐங்குறுநூறு பாலைக்கண் மாலை வந்தது. தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலுங் கூம்பக் காலை வரினுங் களைஞரோ விலரே (ஐங்குறு.183) பருவ வரவின்கண் மாலைப்பொழுது கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது. 141இவ் வைங்குறுநூறு நெய்தற்கண் மாலை வந்தது. தொல்லூழி தடுமாறித் தொகல்வேண்டும் பருவத்தாற் பல்வயி னுயிரெல்லாம் படைத்தான்கட் பெயர்ப்பான்போ லெல்லுறு தெறுகதிர் மடங்கித்தன் கதிர்மாய நல்லற நெறிநிறீஇ யுலகாண்ட வரசன்பி னல்லது மலைந்திருந் தறநெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம்போன் மயங்கிரு டலைவர வெல்லைக்கு வரம்பாய விடும்பைகூர் மருண்மாலை பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழ லினிவரி னுயருமற் பழியெனக் கலங்கிய தனியவ ரிடும்பைகண் டினைதியோ வெம்போல வினியசெய் தகன்றாரை யுடையையோ நீ (கலி.129) 142என நெய்தற்கலியுட் கங்குலும் மாலையும் முன்பனியும் வந்தன. ஒழிந்தனவும் மயங்குமாறு வந்துழிக் காண்க. (12) (கைக்கிளையும் பெருந்திணையும் நான்குநிலத்தும் மயங்குமெனல்) 13. 143உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே. இஃது எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) உரிப்பொருள் அல்லன - உரிப்பொருளென்று ஓதப்படும் ஐந்திணையும் அல்லாத கைக்கிளையும் பெருந் திணையும், மயங்கவும் பெறும் - நால்வகை நிலத்தும் மயங்கவும் பெறும் என்றவாறு. உம்மை, எச்சவும்மையாதலின், உரிப்பொருளாக எடுத்த பாலையும் நால்வகை நிலத்தும் மயங்கவும்பெறும் என்றவாறாம். பாலை என்பது ஒன்றுபிரிந்து பலவாகிய 144கூற்றின் மேற்றாத லின், ஒற்றுமைப்பட்டு நிகழ்கின்றார் இருவர் பிரிந்துவரலும் பாலை யாமன்றே? அதனால் அதுவுங் குணங்காரணமாய்ச் செம்பால் 145செம் பாலையாயினாற்போல நின்றது. ஊர்க்கா னிவந்த என்னுங் குறிஞ்சிக்கலியுள், ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத் தூதுனம் புறவெனத் துதைந்தநின் னெழினல மாதர் கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ (கலி.56) இது நிலம் 146வரையாது வந்த கைக்கிளை. 147இதனைக் குறிஞ்சியுட் கோத்தார் புணர்ச்சி யெதிர்ப்பாடாகலின். கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே யாயர் மகள்; வளியா வறியா வுயிர்காவல் கொண்டு நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற் கெளியவோ வாயமக டோள்; (கலி. 103) அவ்வழி முன்ளெயிற் றேஎ ரிவளைப் பெறுமிதோர் வெள்ளேற் றெருத்தடங்கு வான்; ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற் காரி கதனஞ்சான் கொள்பவன்... (கலி. 104) என்றாற்போல ஏறுதழுவினாற்கு உரியள் இவளெனவந்த கைக்கிளைகளெல்லாம் முல்லைக்கலி பலவற்றுள்ளுங் காண்க. 148முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே (105) என்பதனான் அவை கைக்கிளையாயின. இனி எழின்மருப் பெழில் வேழம் என்றது முதலிய நாலு பாட்டும் ஏறிய மடற்றிறமான (51) பெருந்திணை; என்னை? மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் தேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு (கலி.139) என்றாற் போல்வன வருதலின். புரிவுண்ட புணர்ச்சி என்றது முதலிய ஆறுபாட்டுந் தேறுதலொழிந்த காமத்து மிகுதிறமாகிய (51) பெருந்திணை. இவற்றை நெய்தலுட் கோத்தார், 149சாக்காடு குறித்த இரங்கற் பொருட்டாகலின். கூனுங்குறளும் உறழ்ந்து கூறும் பெருந் திணையும் ஊடற் பகுதியவாகலின் மருதத்துட் கோத்தார். கல்லாப் பொதுவனை நீமாறு (கலி. 112) எனப் பொதுவியர் கூறலும், நடா அக் கரும்பமன்ற தோளாரைக் காணின் விடாஅலோம் பென்றா ரெமர் (கலி. 112) எனப் 150பொதுவர் கூறலும் மிக்க காமத்து மிடலாகிய (51) பெருந்திணையாகலின் முல்லையுட் கோத்தார். நறவினை வரைந்தார் (98) ஈண்டு நீர்மிசை (100) என்னுங் கலிகளுங் காமத்து மிகுதிறத்தான்(51) 151அரசனை நோக்கிச் சான்றோர் கூறியவாகலின் மருதத்துக்கோத்தார். இனி, வான மூர்ந்த வயங்கொளி மண்டில நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட்டு (அகம்.11) எனக் காடுறையுலகத்துப் (5) பாலை வந்தது. தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலாக வடங்காதார் மிடல்சாய வமரர்வந் திரத்தலின் மடங்கல்போற் சினைஇ மாயஞ்செ யவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலு முடன்றக்கான் முகம்போல வொண்கதிர் தெறுதலிற் சீறருங் கணிச்சியோன் சினவலி னவ்வெயி லேறுபெற் றுதிர்வனபோல் வரைபிளந் தியங்குந ராறுகெட விலங்கிய வழலவி ராரிடை மறப்பருங் காத லிவளீண் டொழிய விறப்பத் துணிந்தனிர் கேண்மின்மற் றைஇய (கலி.2) 152இது மைவரையுலகத்துப் (5) பாலை வந்தது. 153மறந்தவ ணமையா ராயினும் (37) என்னும் அகப் பாட்டுத் தீம்புனலுலகத்துப் (5) பாலை வந்தது. 154அருளிலார் பொருள்வயி னகல என்னும் அகப் பாட்டினுட் பெருமணலுலகத்துப் (5) பாலை வந்தது. இன்னும் பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண்ணே உரிப் பொருள் மயங்கியும் காலங்கண் மயங்கியும் வருவனவெல்லாம் இதனான் அமைத்துக்கொள்க. (13) (உரிப்பொரு ளிவையெனல்) 14. புணர்தல் பிரித லிருத்த லிரங்க லூட லிவற்றி னிமித்த மென்றிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே இதுவும் மேனிறுத்த முறையானன்றியும் 155அதிகாரப் பட்டமை கண்டு உரிப்பொருள் கூறுகின்றது, உரிப்பொருள் உணர்ந்தல்லது உரிப்பொருளல்லன உணரலாகாமையின். (இ-ள்.) புணர்தலும் புணர்தனிமித்தமும்; பிரிதலும் பிரிதனிமித்தமும்; இருத்தலும் இருத்தனிமித்தமும்; இரங்கலும் இரங்கனிமித்தமும்; ஊடலும் ஊடனிமித்தமும் என்ற பத்தும் ஆராயுங்கால் ஐந்திணைக்கும் உரிப்பொருளாம் எ-று. தேருங்காலை என்றதனாற் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்குப் பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தற்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வந்நிமித்தங்களும் உரியவென்று ஆராய்ந்துணர்க. இக்கருத்தே பற்றி மாயோன் மேய (5) என்பதனுள் விரித்துரைத்தவாறுணர்க. அகப்பொருளாவது புணர்ச்சியாகலானும் அஃது இருவர்க்கும் ஒப்ப நிகழ்தலானும் புணர்ச்சியை முற்கூறிப், புணர்ந்துழி யல்லது பிரிவின்மையானும் அது தலைவன் கண்ணதாகிய சிறப்பானுந் தலைவி பிரிவிற்குப் புலனெறி வழக்கின்மையானும் பிரிவினை அதன்பிற் கூறிப், பிரிந்துழித் தலைவி ஆற்றியிருப்பது முல்லை யாகலின் இருத்தலை அதன்பின் கூறி, அங்ஙனம் ஆற்றியிராது தலைவனேவலிற் சிறிது வேறுபட்டிருந்து இரங்கல் பெரும்பான்மை தலைமகளதே யாதலின் அவ் விரங்கற்பொருளை அதன்பிற் கூறி, இந்நான்கு பொருட்கும் 156பொதுவாதலானுங் காமத்திற்குச் சிறத்தலானும் ஊடலை அதன்பிற் கூறி இங்ஙனம் முறைப்படுத்தினார். நான்கு நிலத்தும் புணர்ச்சி நிகழுமேனும் 157முற்பட்ட புணர்ச்சியே புணர்தற் சிறப்புடைமையிற் குறிஞ்சியென்று அதனை முற்கூறினார். 158அவை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கற்கூட்டமுந் தோழியிற்கூட்டமும் அதன் பகுதியாகிய இருவகைக் குறிக்கண் எதிர்ப்பாடும் போல்வன. தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும், ஆண்டுத் தோழி கூறுவனவுங் குறை நேர்தலும் மறுத்தலும் முதலியன புணர்ச்சி நிமித்தம். இனி, ஓதலுந் பகையும் தூதும் (25) அவற்றின் பகுதியும் பொருட்பிரிவும் உடன்போக்கும் பிரிவு. ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்துந் தோழியொடு வலித்தன் (41) முதலியன பிரிதனிமித்தம். பிரிந்தபின் தலைவி வருந்துவனவுந் தோழி யாற்றுவித்தனவும் பாலையாதலிற் பின்னொருகாற் பிரிதற்கு நிமித்தமாம், அவை பின்னர்ப் பிரியும் பிரிவிற்கு முன்னிகழ்தலின். இனித் தலைவி, பிரிவுணர்த்தியவழிப் பிரியாரென்றிருத் தலும், பிரிந்துழிக் குறித்த பருவ மன்றென்று தானே கூறுதலும், பருவம் வருந்துணையும் ஆற்றியிருந்தமை பின்னர்க் கூறுவன வும் போல்வன இருத்தல். அப் பருவம் வருவதற்கு முன்னர்க் கூறுவன முல்லை சான்ற கற்பு அன்மையிற் பாலையாம். இனிப் பருவங் கண்டு தலைவி ஆற்றாது கூறுவனவும், தோழி பருவமன் றென்று வற்புறுத்தினவும், வருவரென்று வற்புறுத்தினவும், தலைவன் பாசறைக்கண் இருந்து உரைத்தனவும், அவை போல்வனவும் நிமித்தமாதலின் இருத்தனிமித்த மெனப்படும். இனிக் கடலுங் கானலுங் கழியுங் காண்டொறும் இரங் கலும், தலைவன் எதிர்ப்பட்டு நீங்கியவழி இரங்கலும், பொழுதும் புணர்துணைப் புள்ளுங் கண்டு இரங்கலும் போல்வன இரங்கல். அக்கடல் முதலியனவும், தலைவன் நீங்குவனவு மெல்லாம் நிமித்தமாம். புலவி முதலியன ஊடலாம். பரத்தை, பாணன் முதலியோர் ஊடனிமித்தமாம். 159ஏனையவும் வழக்கியலான் நால்வகை நிலத்துஞ் சிறு பான்மை வருமேனும், பெரும்பான்மை இவை உரிய வென்றற்குத் திணைக்குரிப் பொருளே யென்றார். உரிமை குணமாதலின் 160உரிப்பொருள் பண்புத்தொகை. உதாரணம்: கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை நாறிணர்க் குவளையோ டிடைப்பட விரைஇ யைதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோண் மேனி முறியினும் வாயது முயங்குதற்கு மினிதே (குறு.62) 161இக்குறுந்தொகை புணர்ந்துழி மகிழ்ந்து கூறியது. அல்குபட ருழந்த வரிமதர் மழைக்கட் பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குற் றிருமணி புரையு மேனி மடவோள் யார்மகள் கொல்லிவ டந்தை வாழியர் துயர முறீஇயின ளெம்மே யகல்வய லரிவன ரரிந்துந் தருவனர் பெற்றுந் தண்சேறு தாஅய் மதனுடை நோன்றாட் கண்போ னெய்தல் போர்விற் பூக்குந் திண்டேர்ப் பொறையன் றொண்டி தன்றிறம் பெறுகவிவ ளீன்ற தாயே (நற்றிணை. 8) 162இந் நற்றிணையும், 163முலையே முகிழ்முகிழ்த் தனவே என் னுங் குறுந்தொகையும் புணர்தனிமித்தம். அன்றவ ணொழிந்தன்று மிலையே வந்துநனி வருந்தினை வாழியெ னெஞ்சே பருந்திருந் துயாவிளி பயிற்றும் யாஅவுயர் நனந்தலை யிருடுடி மகுளியிற் பொருடெரிந் திசைக்குங் கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்ற மெம்மொ டிறத்தலுஞ் செல்லாய் பின்னின் றொழியச் சூழ்ந்தனை யாயிற் றவிராது செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே மறவ லோம்புமதி யெம்மே நறவின் சேயித ழனைய வாகிக் குவளை மாயிதழ் புரையு மலிர்கொ ளீரிமை யுள்ளகங் கனல வுள்ளுதோ றுலறிப் பழங்கண் கொண்ட கலிழ்ந்துவீழ் ழவிரறல் வெய்ய வுகுதர வெழிர்இப் பையெனச் சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கைப் பூவீ கொடியிற் புல்லெனப் போகி யடர்செ யாயகற் சுடர்துணை யாக வியங்காது வதிந்தநங் காதலி யுயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே (அகம்.19) 164இது மறவலோம்புமதியெனப் பிரிவு கூறிற்று. அறியாய் வாழி தோழி யிருளற விசும்புடன் விளக்கும் விரைசெலற் றிகிரிக் கடுங்கதி ரெறிந்த விடுவாய் நிறைய நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய் நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை யுழிஞ்சி லுள்ளுன் வாடிய கரிமூக்கு நொள்ளை பொரியரை புதைத்த புலம்புகொ ளியவின் விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோ ரெழுத்துடை நடுக லின்னிழல் வதியு மருஞ்சுரக் கவலை நீந்தி யென்று மில்லோர்க் கில்லென் றியைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காத லருளே காதல ரென்றி நீயே (அகம்.53) 165இது பிரிதனிமித்தம். வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது. வண்டுபடத் ததைந்த கொடியிண ரிடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே (குறு.21) 166இது பருவங்கண்டுழியும் பொய்கூறாரென்று ஆற்றியிருந்தது. அவரோ வாரார் முல்லையும் பூத்தன பறியுடைக் கையர் மறியினத் தொழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் யாடுடை யிடைமகன் சென்னிச் சூடிய வெல்லாஞ் சிறுபசு முகையே (குறு. 221) 167இது பருவங்கண்டாற்றாது கூறியது. இது முல்லை சான்ற கற்பாயிற்று, அவன் கூறிய பருவம் வருந்துணையும் ஆற்றியிருத்தலின். மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய பருவம் வாரா வளவை நெரிதரக் கொம்புசேர் கொடியிண ரூழ்த்த வம்ப மாரியைக் காரென மதித்தே. (குறு. 66) இது பருவமன்றென்று வற்புறுத்தலின் இருத்த னிமித்த மாயிற்று. தேம்படு சிமய (94) என்னுங் களிற்றியானைநிரையும் இருத்தனி மித்தமாம்; இக்காலம் வருந்துணையும் ஆற்றினா ளெனத் 168தான் வருந்துதலின். கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையு மொழியா தொருநின் னல்லது பிறதியாது மிலனே யிருங்கழி மலர்ந்த கண்போ னெய்தற் கமழிதழ் நாற்ற மமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து பறைவ கிளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமா ரலவ பல்காற் கைதையம் படுசினை யெவ்வமொ டசாஅங் கடற்சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின் வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து நின்னுறு விழுமங் களைந்தோ டன்னுறு விழும நீந்துமோ வெனவே (அகம்.170) 169இவ் வகப்பாட்டு நெய்தல். இரங்க லுரிப்பொருட்டா யிற்று. ஞாயிறு பட்ட வகல்வாய் வானத் தளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை யிறையுற வோங்கிய நெறியயன் மராஅத்த பிள்ளை யுள்வாய்ச் செரீஇய விரைகொண் டவையும் விரையுமாற் செலவே (குறுந்.92) 170இஃது இரங்கனிமித்தம் தருக்கேம் பெருமநின் னல்கல் விருப்புற்றுத் தாழ்ந்தாய்போல் வந்து தகவில செய்யாது சூழ்ந்தவை செய்துமற் றெம்மையு முள்ளுவாய் வீழ்ந்தார் விருப்பற்றக் கால் (கலி.69) இஃது ஊடல் பரியுடை நன்மான் பொங்குளை யன்ன வடைகரை வேழம் வெண்பூப் பகருந் தண்டுறை யூரன் பெண்டிர் துஞ்சூர் யாமத்துந் துயிலறி யலரே. (ஐங்குறு. 13) 171இஃது ஊடனிமித்தம். பிறவும் வேறுபட வருவனவெல்லாம் அறிந்து இதன்கண் அடக்கிக் கொள்க. (14) (பாலைக்கட் குறிஞ்சியும் நெய்தலும் மயங்குமெனல்) 15. கொண்டுதலைக் கழியினும் 172பிரிந்தவ ணிரங்கினு முண்டென மொழிப வோரிடத் தான. இது முற்கூறிய ஐந்தனுட் பாலைக்கட் குறிஞ்சி மயங்கு மாறும் நெய்தன் மயங்குமாறும் கூறுகின்றது. (இ-ள்.) கொண்டு தலைக்கழியினும். தலைவன் தலைவியை உடன்கொண்டு அவள் தமரிடத்து நின்று பிரியினும், பிரிந்து அவண் இரங்கினும் - தலைவன்; உடன்கொண்டு போகாது தானே போதலின் தலைவி மனையின்கண் இருந்து இரங்கினும்; ஓரிடத்தான - இவ்விரண்டும் ஓரிடத்தின்கண்ணே ஓரொழுக்க மாயின; உண்டென மொழிப - இவ்வொழுக்கந்தான் நான்கு வருணத்திலும் வேளாண் வருணத்திற்கு உண்டென்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு. கொண்டு தலைக்கழிதலான் இடையூறின்றிப் புணர்ச்சி நிகழுமெனினும், பிரிவு நிகழ்ந்தவா றென்னையெனின். இடைச்சுர மருங்கி னவடம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்தி (41) என மேலே கூறுவாராதலின் தலைவி தந்தையுந் தன்னையருந் தேடிப் பின் வந்து இவ்வொழுக்கத்திற்கு இடையூறு செய்வ ரென்னுங் கருத்தே இருவருள்ளத்தும் பெரும்பான்மை நிகழ்தலிற் பிரிவு நிகழ்ந்தவாறாயிற்று. ஆகவே பாலைக்கண்ணே குறிஞ்சி நிகழ்ந்ததாயிற்று. உதாரணம்: வேனிற் பாதிரிக் கூனி மாமலர் நறைவாய் வாட னாறு நாட்சுர மரியார் சிலம்பிற் சீறடி சிவப்ப வெம்மொ டொராறு படீஇயர் யாழநின் பொம்ம லோதி பொதுள வாரி யரும்பற மலர்ந்த வாய்பூ மராஅத்துச் சுரும்புசூ ழலரி தைஇ வேய்ந்தநின் றேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக்கும் வண்டுகடிந் தோம்ப றேற்றா யணிகொள நுண்கோ லெல்வளை தெளிர்க்கு முன்கை மெல்லிறைப் பணைத்தோள் விளங்க வீசி வல்லுவை மன்னா னடையே கள்வர் பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார் மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்து நாரரை மருங்கி னீர்வரப் பொளித்துக் களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் கல்லா வுமணர்க்குத் தீமூட் டாகுந் துன்புறு தகுந வாங்கட் புன்கோட் டரிலிவர் புற்றத் தல்கிரை நசைஇ வெள்ளரா மிளிர வாங்கும் பிள்ளை யெண்கின் மலைவயி னானே (அகம்.257) இது கொண்டுதலைக்கழிதற்கண் தலைவன் நடையை வியந்தது. இஃது அகம். 173அழிவிலர் முயலும் (நற்றிணை.9) என்பது பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது. இனித் தலைவி பிரிந்திருந்து மிகவும் இரங்குதலின் இரங்கினும் எனச் சூத்திரஞ்செய்து, அதனானே பாலைப் பொருட் கண் இரங்கற்பொருள் நிகழுமென்றார். உதாரணம்: ஓங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன வூன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப் பொறிகிள ருழுவைப் பேழ்வா யேற்றை யறுகோட் டுழைமா னாண்குர லோர்க்கு நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே பலபுலந் துண்ணா வியக்கமொ டுயிர்செலச் சாஅய்த் தோளுந் தொல்கவின் றொலைய நாளும் பிரிந்தோர் பெயர்வுக் கிரங்கி மருந்துபிறி தின்மையி னிருந்தும்வினை யிலனே (அகம். 147) இதனுள் வெள்ளிவீதியைப்போலச் செல்லத்துணிந்து, யான் பலவற்றிற்கும் புலந்திருந்து பிரிந்தோரிடத்தினின்றும் பிரிந்த பெயர்வுக்குத் தோணலந்தொலைய உயிர்செலச்சாஅய், இரங்கிப் பிறிது மருந்தின்மையிற் செயலற்றே மிகவும் இரங்கியவாறு 174மெய்பாடுபற்றி யுணர்க. இஃது அகம். வானமூர்ந்த என்னும் (11) அகப்பாட்டினுள் மெய்புகு வன்ன கைகவர் முயக்க மவரும் பெறுகுவர் மன்னே எனக்கூறி, அழுதன் மேவாவாய்க் கண்ணுந் துயிலுமென இரக்கமீக் கூறியவாறு முணர்க. குன்றியன்ன என்னும் (133) அகப்பாட்டும் அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன. இங்ஙனம் இச் சூத்திரவிதி உண்மையிற் சான்றோர் அகத்தினுங் கலியினும் ஐங்குறுநூற்றினும் பாலைக்கண்ணே உடன்போக்கு நிகழ்ந்த செய்யுட்களைக் கோத்தாரென்றுணர்க. இல்லிருந்து செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற் கொண்டு தலைக்கழிதல் அவர்க்கு உரியதாயிற்று. ஒழிந்த மூன்று வருணத்தோருந் தமக்கு உரிய பிரிவின்கட் செந்தீ யோம்புவாரை நாட்டிப் பிரிப; ஆகலான், அவர்க்கு ஏனைப் பிரிவுகள் அமைந்தன. இதனைக் கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே (143) எனக் கற்பியலிற் 175கரணம் வேறாகக் கூறுமாறு ஆண்டுணர்க. வேர்முழுதுலறிநின்ற என்னும் (145) மணிமிடை பவளத்துள், 176கூழுடைத் தந்தை யிடனுடை வரைப்பி, னூழடி யொதுங்கினு முயங்கும் எனவும், கிளியும் பந்தும் என்னும் (49) களிற்றியானை நிரையுள், 176அல்குபத மிகுந்த கடியுடை வியனகர் எனவும், நெல்லுடைமை கூறிய அதனானே வேளாண்வருண மென்பது பெற்றாம். (15) (பாலைக்கட் குறிஞ்சி மயங்குமெனல்) 16. கலந்த பொழுதுங் காட்சியு மன்ன. இதுவும் பாலைக்கட் குறிஞ்சி மயங்குமென்கின்றது. (இ-ள்.) கலந்த பொழுதுங் காட்சியும் - இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த காலமும் அதன் முன்னர்த்தாகிய 177வழி நிலைக் காட்சி நிகழ்ந்த காலமும்; அன்ன - முன்னர்ச் சூத்திரத்துட் கொண்டு தலைக்கழிந்த காலத்தை உடைய எ-று. என்றது, முன்னர்க் குறிஞ்சி பாலைக்குரிய இருவகை வேனிற்கண் நிகழ்ந்தாற் போல இவையும் இருவகை வேனிற்கண் நிகழுமென்றவாறு. மழைகூர் காலத்துப் புறம் போந்து விளை யாடுதலின்மையின் எதிர்ப்பட்டுப் புணர்தல் அரிதாகலானும், அதுதான் இன்பஞ் செய்யாமையானும் இருவகை வேனிற் காலத்தும் இயற்கைப்புணர்ச்சி நிகழுமென்றது இச்சூத்திரம். 178முன்னர்க் கூதிரும் யாமமும் முன்பனியுஞ் சிறந்த தென்றது, இயற்கைப்புணர்ச்சிப் பின்னர்க் களவொழுக்கம் நிகழ்தற்குக் காலமென்றுணர்க. அது, பூவொத் தலமருந் தகைய வேவொத் தெல்லாரு மறிய நோய்செய் தனவே தேமொழித் திரண்ட மென்றோண் மாமலைப் பரீஇ வித்திய வேனற் குரீஇ யோப்புவாள் பெருமழைக் கண்ணே (குறுந்.72) என வரும். இக்குறுந்தொகையுட் குரீஇயோப்புவாள் கண்ணென வழி நிலைக் காட்சியைப் பாங்கற்குக் கூறினமையின் அத்தினைக்கதிர் முற்றுதற்கு உரிய இளவேனிலும் பகற் பொழுதுங் காட்சிக்கண் வந்தன. கொங்கு தேர் வாழ்க்கை என்பதும் இளவேனி லாயிற்று; தும்பி கொங்கு தேருங்காலம் அதுவாதலின். கலத்தலுங் காட்சியும் உடனிகழுமென்றுணர்க. கலத்தலின்றிக் காட்சி நிகழ்ந்ததேல் உள்ளப்புணர்ச்சியேயாய் மெய்யுறு புணர்ச்சியின்றி வரைந்து கொள்ளுமென்றுணர்க. (16) (முதற்பொருள் இருவகைத்தெனல்) 17. முதலெனப் படுவ தாயிரு வகைத்தே. இது முற்கூறிய முதற்பகுதியைத் தொகுத்து எழுதிணையும் இவ்வாற்றானுரிய வென்கின்றது. (இ-ள்.) முதலெனப்படுவது - முதலென்று கூறப்படும் நிலனும் பொழுதும்; ஆயிரு வகைத்து - அக்கூறியவாற்றான் இருவகைப்படும் யாண்டும் என்றவாறு. இது கூறிற்றென்ற லென்னும் உத்திவகை. இதன்பயன் முதல் இரண்டுவகை என்றவாறாம். தமக்கென நிலனும் பொழுதும் இல்லாத கைக்கிளையும் பெருந்திணையும் நிலனில்லாத பாலையும் பிறமுதலொடு மயங்கினவேனும் அவை மயங்கிய நிலனும் பொழுதும் அவ்வத்திணைக்கு முதலெனப்படு மென்ப தாம். இது முன்னின்ற சூத்திரத்திற்கும் ஒக்கும். (17) (கருப்பொரு ளிவையெனல்) 18. தெய்வ முணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப. இது நிறுத்தமுறையானேயன்றி 179அதிகாரப்பட்டமை யின் உரிப்பொருள் கூறி, ஒழிந்த கருப்பொருள் கூறுதல் நுதலிற்று. (இ-ள்.) தெய்வம் உணாவே மா மரம் புள் பறை 180செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ - எல்லாத் திணைக்குந் தெய்வம் உணா விலங்கு மரம் புள்பறை தொழிலென்று இவற்றை யாழின் கூற்றோடே கூட்டி; அவ்வகை பிறவும் கருஎன மொழிப - அவைபோல்வன பிறவுங் கருவென்று கூறுவர் ஆசிரியர் எ-று. யாழின் பகுதி என்றதனான் மற்றையபோலாது பாலைக்குப் பாலை யாழென வேறு வருதல் கொள்க. அவ்வகை பிறவும் என்றதனான் எடுத்தோதிய தெய்வம் ஒழிய அவற்று உட் பகுதியாகிய தெய்வமும் உள; அவை மாயோன்மேய (5) என்புழிக் காட்டினாம். இதனானே பாலைக்குத் தெய்வமும் இன்றாயிற்று. இன்னும் அவ்வகை என்றதனானே, பாலைக்கு நிலம் பற்றாது காலம்பற்றிக் கருப்பொருள் வருங்காற் றம்மியல்பு திரிய வருவன வும் வருமென்று கொள்க. எந்நில மருங்கிற் பூ (19) என்பதனாற் பூவும் புள்ளும் வரைவின்றி மயங்குமெனவே 181ஒழிந்த கருவும் மயங்குமென்பது சூத்திரத்துட் பொருளன்றியும் (659) என்பதனான் உரையிற் கொள்க. அது அயந்திகழ் நறுங்கொன்றை (150) என்னும் நெய்தற் கலியுட் காண்க. முல்லைக்கு உணா, வரகுஞ் சாமையும் 182முதிரையும்; மா, உழையும் புல்வாயும் முயலும்; மரம், கொன்றையுங் குருந்தும்; புள், கானக்கோழியுஞ் சிவலும்; பறை, ஏறுகோட்பறை; செய்தி, நிரை மேய்த்தலும் வரகு முதலியன களை கட்டலும் கடா விடுதலும்; யாழ், முல்லையாழ். பிறவுமென்றதனான், பூ, முல்லையும் பிடவுந் 183தளவுந் தோன்றியும்; நீர் கான்யாறு; ஊர், 184பாடியுஞ் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசி யும்; மா, புலியும் யானையுங் கரடியும் பன்றியும்; மரம், அகிலும் ஆரமுந்தேக்குந் திமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும்; பறை முருகியமுந் தொண்டகப்பறையும்; செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினை முதலியன விளைத்தலுங் கிளி கடிதலும்; யாழ். குறிஞ்சி யாழ். பிறவுமென்றதனான், பூ காந்தளும் வேங்கையுஞ் சுனைக்கு வளையும்; நீர், அருவியுஞ் சுனையும்; ஊர், சிறுகுடியுங் குறிச்சியும். மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்; மா, எருமையும் நீர் நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள், தாராவும் நீர்க்கோழியும்; பறை, மணமுழவும் நெல்லரிகிணையும்; செய்தி நடுதலுங் களைகட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ், மருதயாழ். பிறவுமென்ற தனான், பூ, தாமரையுங் கழுநீரும்; நீர், யாற்று நீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், ஊர்க யென்பனவேயாம். நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண்பகடு போல்வன; முதலையுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று; மரம், புன்னையும் ஞாழலுங் கண்டலும்; புள் அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன் கோட்பறை; செய்தி, மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும் அவை விற்றலும்; யாழ் நெய்தல்யாழ். பிறவு மென்றதனான், பூ கைதையும் நெய்தலும்; நீர் மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர் பட்டினமும் பாக்கமும். இனிப் பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறை கொண்டனவும்; மா வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றின இருப்பையும் ஓமையும் உழிஞையும் ஞெமையும்; புள், கழுகும் பருந்தும் புறாவும்; பறை, சூறைகோட்பறையும் நிரை கோட்பறையும்; செய்தி, ஆறலைத்தலுஞ் சூறை கோடலும்; யாழ், பாலையாழ். பிறவுமென்றதனான்; பூ, மராவுங் குராவும் பாதிரியும்; நீர், அறுநீர்க்கூவலுஞ் சுனையும்; ஊர், பறந்தலை. இன்னும் பிறவு மென்றதனானே இக் கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. அவை பெயரும் வினையும் (20) என்னுஞ் சூத்திரத்துட் காட்டுதும். பிறவு மென்றதனாற் கொள்வன, சிறுபான்மை 185திரிவுபடுதலிற், பிறவு மென்று அடக்கினார். (18) (ஒரு நிலக் கருப்பொருள் ஒழிந்த நிலத்து மயங்குமெனல்) 19. எந்நில மருங்கிற் பூவும் புள்ளு மந்நிலம் பொழுதொடு வாரா வாயினும் வந்த நிலத்தின் பயத்த வாகும். இது முற்கூறிய கருப்பொருட்குப் புறனடை. (இ-ள்.) எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் - எழுதிணை நிகழ்ச்சியவாகிய நால்வகை நிலத்தும் பயின்ற பூவும் புள்ளும்; அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் - தத்தமக்கு உரியவாகக் கூறிய நிலத்தொடுங் காலத்தொடும் நடவாமற் பிற நிலத்தொடுங் காலத்தொடும் நடப்பினும்; வந்த நிலத்தின் பயத்த ஆகும் - அவை வந்த நிலத்திற்குக் கருப்பெருளாம் என்றவாறு. ஓடு அதனோடியைந்த ஒருவினைக் கிளவி (சொ. 75) யாதலின் உடன் சேறல் பெரும்பான்மையாயிற்று. வினைசெய் யிடத்தி னிலத்திற் காலத்தின் (சொ. 83) என்பதனான் 186நிலத்தின் பயத்தவாமெனப் பொழுதினையும் நிலமென்று அடக்கினார். பூவைக் கருவென ஓதிற்றிலரேனும் முற்கூறிய மரத்திற்குச் சினையாய் அடங்கிற்று. 187ஒன்றென முடித்தலான் நீர்ப்பூ முதலியனவும் அடங்கும். இங்ஙனம் வருமிடஞ் செய்யுளிடமா யிற்று. உதாரணம்: தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் (கலி.52) இது மருதத்துப்பூ, குறிஞ்சிக்கண் வந்தது. உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல விடைகொண்டியா மிரப்பவு மெமகொள்ளா யாயினை கடைஇய வாற்றிடை நீர்நீத்த வறுஞ்சுனை யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன (கலி.3) இது மருதத்துப்பூ, பாலைக்கண் வந்தது. கன்மிசை மயிலாலக் கறங்கியூ ரலர்தூ ற்றத் தொன்னல நனிசாய நம்மையோ மறந்தைக்க வொன்னாதார்க் கடந்தடூஉ முரவுநீர் மாகொன்ற வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல் (கலி.27) இது குறிஞ்சிக்குப் பயின்ற மயில் பாலைக்கண் இளவேனிற் கண் வருதலிற் பொழுதொடு புள்ளு மயங்கிற்று. கபிலர் பாடிய 188பெருங்குறிஞ்சியில் (குறிஞ்சிப்.) வரைவின்றிப் பூமயங்கியவாறு காண்க. பிறவும் இவ்வாறு மயங்குதல் காண்க. ஒன்றென முடித்தலாற் பிற கருப்பொருள் மயங்குவன உளவேனுங் கொள்க. (19) (திணைப்பெயருந் திணைநிலைப்பெயரு மிருவகையவெனல்) 20. பெயரும் வினையுமென் றாயிரு வகைய திணைதொறு மரீஇய திணை நிலப் பெயரே. இது பிறவும் (18) என்றதனாற் தழுவிய பெயர்ப் பகுதி கூறுகின்றது. (இ-ள்.) திணைதொறும் மரீஇய பெயர் - நால்வகை நிலத்தும் மரீஇப்போந்த குலப்பெயரும்; திணைநிலைப் பெயர் - உரிப் பெருளிலே நிற்றலையுடைய பெயரும்; பெயரும் வினையுமென்று அஇருவகைய - 189பெயர்ப்பெயரும் வினைப் பெயருமென்று அவ்விரண்டு கூற்றையுடையவாம் என்றவாறு. நால்வகை நிலத்தும் மருவிய குலப்பெயராவன: - குறிஞ்சிக்குக் கானவர் வேட்டுவர் இறவுளர் குன்றவர் வேட்டு வித்தியர் குறத்தியர் குன்றுவித்தியர்; 190ஏனைப் பெண்பெயர் வருமேனும் உணர்க. முல்லைக்குக் கோவலர் இடையர் ஆயர் பொதுவர் இடைச்சியர் கோவிட்தியர் ஆய்ச்சியர் பொதுவியர். நெய்தற்கு நுளையர் 191திமிலர் பரதவர் நுளைத்தியர் பரத்தியர்; ஏனைப் பெண் பெயர் வருமேனும் உணர்க. மருதத்திற்குக் களமர் உழவர் கடையர் உழத்தியர் கடைசியர்; ஏனைப் பெண்பெயர் வருமேனும் உணர்க. முன்னர் வந்த நிலத்தின்பயத்த (19) என்புழிக் காலத்தையும் உடன் கோடலின் ஈண்டுந் திணைதொறு மருவுதலும் பொழு தொடு மருவுதலும் பெறப்படுதலிற் பொழுது முதலாக வரும் பாலைக்குத் திணைதொறு மரீஇய பெயருந் திணைநிலைப் பெயருங் கொள்க. எயினர் எயிற்றியர் மறவர் மறத்தியர் எனவும், மீளி விடலை காளை எனவும் வரும். இனி உரிப்பொருட்குரிய தலைமக்கள் பெயராவன, பெயர்ப் பெயரும் நாடாட்சிபற்றிவரும் பெயருமாம். குறிஞ்சிக்கு வெற்பன் சிலம்பன் பொருப்பன், கொடிச்சி; 192இஃது ஆண்பாற் கேலாத பெயராயினும் நிலை யென்றதனாற் கொள்க. முல்லைக்கு அண்ணல் தோன்றல் குறும்பொறை நாடன், மனைவி. நெய்தற்குக் கொண்கன் துறைவன் சேர்ப்பன் மெல்லம்புலம்பன். தலைவி பெயர் வந்துழிக் காண்க. மருதத்திற்கு மகிழ்நன் ஊரன், மனையோள் எனவரும். இக் காட்டிய இருவகையினும் 193பெயர்ப் பெயரும் வினைப்பெயரும் பாடலுட் பயின்ற வகையாற் பொருணோக்கி யுணர்க. ஈண்டுக் கூறிய திணைநிலைப்பெயரை ஏவன் மரபின் (24) என்னுஞ் சூத்திரத்து அறுவகையரெனப் பகுக்குமாறு ஆண்டுணர்க. (20) (திணைதொறுமரீஇய பெயரினருள்ளும் தலைவராக வழங்கப்படுவாருமுளர் எனல்) 21. ஆயர் வேட்டுவ ராடூஉத் திணைப்பெய ராவயின் வரூஉங் கிழவரு முளரே. இது முன்னர்த் திணைதொறு மரீஇய பெயருடை யோரினுந் திணைநிலைப்பெயராகிய தலைமக்களாய் வழங்கு வாரும் உளரென முல்லைக்குங் குறிஞ்சிக்கும் எய்தாததெய்து வித்தது. (இ-ள்.) ஆடூஉத் திணைப்பெயர் - முற்கூறிய ஆண் மக்களா கிய திணைதொறும் மரீஇய பெயர்களுள்; ஆயர் வேட்டுவர் வரூஉங்கிழவரும் உளர் - ஆயரினும் வேட்டுவரினும் வருங் கிழவரும் உளர், ஆவயின் (வரூஉங் கிழவியரும் உளர்) - அவ் விடத்து வருந் தலைவியரும் உளர் எ.று. ஆயர் வேட்டுவரென்னும் இரண்டு பெயரே எடுத்தோதினா ரேனும் ஒன்றென முடித்தலான் அந்நிலங்கட்கு உரிய ஏனைப் பெயர்களான் வருவனவுங் கொள்க. தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா மொருங்கு விளையாட வவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் 194பொதுவன்மற் றென்னை முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லா நீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய் கற்றதிலை மன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்தற் றகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ யேதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது மையலை மாதோ விடுகென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா றியான்பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன். (கலி.111) 195ஆயர் மகனையுங் காதலை கைம்மிக ஞாயையு மஞ்சுதி யாயி னரிதரோ நீயுற்ற நோய்க்கு மருந்து. (கலி.107) தோழிநாம் காணாமை யுண்ட கடுங்கள்ளை மெய்கூர நாணாது சென்று நடுங்க வுரைத்தாங்குக் கரந்ததூஉங் கையொடு கோட்பட்டாங் கண்டாய்நம் புல்லினத் 196தாயர் மகன். (கலி. 115) என்றாற்போல்வன பிறவும் வருவன கொள்க. இன்னும் ஏனலு மிறங்குகதி ரிறுத்தன (132) என்னும் அகப் பாட்டினுள் வானிணப் புகவிற் கானவர் தங்கை எனவும், மெய் யிற்றீரா (28) என்பதனுள் வேட்டுவற் பெறலோ டமைந்தனை எனவும் வருவனவும் பிறவுங் கொள்க. வேட்டு என்னுந் தொழிலு டையானை வேட்டுவன்றலிற் குறிப்பு வினைப்பெயர். குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்ற ளிளைய ளாயினு மாரணங் கினளே. (ஐங்குறு.256) இது வருத்தும் பருவத்தளல்லள் என்ற தோழிக்குக் கூறியது. இப்பத்தினுட் குறுவன் மகள் எனக் கூறுவன பல பாட்டுக்கள் உள; அவையுங் கொள்க. இவ்வாற்றான் இந்நிலத்து மக்கள் பெயரும் பெற்றாம். ஏனைய பெயர்களில் வந்தன வுளவேற் கொள்க. (21) (ஒழிந்த திணைதொறுமரீஇய பெயரினருள்ளும் தலைவராக வழங்கப்படுவாருமுளரெனல்) 22. ஏனோர் பாங்கினு மெண்ணுங் காலை யானா வகைய திணைநிலப் பெயரே. இது முல்லையுங் குறிஞ்சியும் ஒழிந்தவற்றுள் திணை தொறு மரீஇய பெயருடை யோரினுந் திணைநிலைப் பெயராகிய தலைமக்களாய் வழங்குவாரும் உளரென எய்தாத தெய்துவித்தது. (இ-ள்.) ஏனோர் பாங்கினுந் திணைநிலைப்பெயர் எண்ணுங் காலை - ஒழிந்த பாலைக்கும் நெய்தற்கும் உரியராகக் கூறிய மக்கள் கூற்றினும் வருந் தலைமக்கள் பெயரை ஆராயுங் காலத்து; ஆனா வகைய - அவை பெரும்பான்மை யாகிய கூறுபாட்டினை யுடைய என்றவாறு. உதாரணம்: 197சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவி லெயினர் தங்கைநின் முலைய சுணங்கென நினைதி நீயே யணங்கென நினையுமென் னணங்குறு நெஞ்சே. (ஐங்குறு.363) இவ் வைங்குறுநூறு உடன்போகின்றான் நலம் பாராட்டிய கூற்றாம். 198முளவுமா வல்சி யெயினர் தங்கை யிளமா வெயிற்றிக்கு நின்னிலை யறியச் சொல்லினே னிரக்கு மளவை வென்வேல் விடலை விரையா தீமே. (ஐங்குறு.364) இவ் வைங்குறுநூறு கொண்டுடன்போங் காலத்திற்குக் கொண்டுடன் போக்கு ஒருப்படுத்துவலென்றது. கணமா தொலைச்சித் தன்னையர் தந்த நிணவூன் வல்சிப் படுபுள் ளோப்பு நலமா ணெயிற்றி போலப் பலமிக நன்னல நயவர வுடையை யென்னோற் றனையோ மாவீன் றளிரே. (ஐங்குறு.365) இவ் வைங்குறுநூறு வரைவிடை வைத்துப் போகின்றான் மாவினை நோக்கிக் கூறியது. ஏனைப் பெயர்களில் வருவன வந்துழிக் காண்க. 199முற்றா மஞ்சட் பசும்புறங் கடுப்பச் சுற்றிய பிணர சூழ்கழி யிறவின் கணங்கொள் குப்பை யுணங்குதிற நோக்கிப் புன்னையங் கொழுநிழன் முன்னுய்த்துப் பரப்புந் துறைநணி யிருந்த பாக்கமு முறைநனி யினிதும னளிதோ தானே துனிதுறந் தகன்ற வல்கு லைதமை நுசுப்பின் மீனெறி பரதவர் மடமகண் மானேர் நோக்கங் காணா வூங்கே. (நற்றிணை.101) இது வரைதற்பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி சிறைப்புறமாகக் கூறியது. அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லைக் குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே யிதற்கிது மாண்ட தென்னா ததற்பட் டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை நுண்வலைப் பரதவர் மடமகள் கண்வலைப் படூஉங் கான லானே. (குறுந்.184) இது கழறிய பாங்கற்குக் கூறியது. கடுந்தே ரேறியுங் காலிற் சென்றுங் ............ ............... ................ ..................... என்னினை யுங்கொல் பரதவர் மகளே. (நற்றிணை.349) இது நற்றிணை. இவளே, கான நண்ணிய என்னும் நற்றிணைப் (45) பாட் டினுள் கடுந்தேர்ச் செல்வன் காதன் மகனே என்றது அவனருமை செய்தயர்த்தலின் அவனை இகழ்ச்சிக் குறிப்பான் அறிவித்துக் கூறினாள். ஏனைப் பெண்பெயர்க்கண் வருவனவும் வந்துழிக் காண்க. ஏனோர் பாங்கினும் எனப் பொதுப்படக்கூறிய அதனான் மருதநிலத்து மக்களுட்டலைமக்கள் உளராகப் புலனெறி வழக்கஞ் செய்த செய்யுள்கள் வந்தன உளவேற் கண்டுகொள்க. (22) (அடியோரும் வினைவலரும் தலைமக்களாதற் குரியரெனல்) 23. 200அடியோர் பாங்கினும் 201வினைவலர் பாங்கினும் கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர். இது மேல் நால்வகை நிலத்து மக்களுந் தலைமக்களாகப் பெறுவரென்றார்; அவரேயன்றி இவருந் தலைமக்களாகுப, கைக்கிளை பெருந்திணைக்க ணென்கின்றது. (இ-ள்.) அடியோர் பாங்கினும். பிறர்க்குக் குற்றேவல் செய்வோரிடத்தும்; வினைவலர் பாங்கினும். பிறர் ஏவிய தொழிலைச் செய்தல் வல்லோரிடத்தும்; கடி வரையில புறத்து என்மனார் புலவர். தலைமக்களாக நாட்டிச் செய்யுட்செய்தல் நீக்கப்படாது நடுவணைந்திணைப் புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் எ-று. கூன்பாட்டினுள், நம்மு னகுதற் றொடீஇயர் நம்முணா முசாவுவங் கோனடி தொட்டேன். எனவும், பேயும் பேயுந் துள்ள லுறுமெனக் கோயிலுட் கண்டோர் நகாமை வேண்டுவல். (கலி.94) எனவும் பெருந்திணைக்கண் அடியோர் தலைவராக வந்தது. என்னை? கோன் அடிதொட்டேன் என்றமையானும் கோயில் என்றமையானும் இவர்கள் குற்றேவன்மாக்கள் என்பது ஆயிற்று. ஏஎயிஃதொத்தன் என்னும் குறிஞ்சிக்கலியுள் போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள் வேட்டார்க் கினிதாயி னல்லதை நீர்க்கினிதென் றுண்பவோ நீருண் பவர். (கலி.62) தீயகாமம் இழிந்தோர்க்குரிமையின், இதுவும் அடியோர் தலைவராக வந்த கைக்கிளை. அடியோரெனவே இருபாற்றலை மக்களும் அடங்கிற்று. கடிவரையில என்றதனான் அவருட் பரத்தையரும் உளரென்று கொள்க. இகல்வேந்தன் என்னும் முல்லைக்கலியுள், மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ ராயனை யல்லை பிறவோ வமரருண் ஞாயிற்றுப் புத்தேண் மகன். (கலி.108) என்பதனால் தலைவன் வினைவல பாங்கனாயினவாறு காண்க. இதனுள், புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ வினத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ. என்றவழி எமரேவலான் யாஞ் செய்வதன்றி யாங்கள் ஏவ நின்னெஞ்சம் இத்தொழில்கள் செய்கின்றதில்லை என்றலின் வினைவல பாங்கினாளாய தலைவி கூற்றாயிற்று. யாவரின் என்னும் முல்லைக்கலியுள், வழங்காப் பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போல் வழங்க லறிவா ருரையாரே லெம்மை யிகந்தாரே யன்றோ வெமர். (கலி.112) இதுவும் வினைவலபாங்கினளாய தலைவியை நோக்கி அத்தலைவன் கூறினது. நலமிக நந்திய என்னும் முல்லைக்கலியுள், பல்கால்யாங் கான்யாற் றவிர்மணற் றண்பொழி லல்க லகலறை யாயமொ டாடி முல்லை குருந்தொடு முச்சிவேய்ந் தெல்லை யிரவுற்ற தின்னுங் குரல்போற் பொருமுர றுருமி னதிருங் குரல்போற் பொருமுர ணல்லேறு நாகுட னின்றன பல்லா னினநிரை நாமுடன் செலற்கே. (கலி.113) இது தாழ்த்துப் போதற்குத் தலைமையின்றிக் கடிதிற் போகல் வேண்டுமென்றமையானும், நல்லேறும் நாகும்போல் நாமுங் கூடப் போகல் வேண்டுமென்றமையானுந், தலைவன் வினைவல பாங்கினனாயின னென்க. வினைவல்லா னென்னாது பாங்கினென்றதனாற் றமரேவல் செய்வது பெறுதும். இஃது அவ்வந்நிலத்து இழிந்தோர்க்கு எஞ்ஞான்றுந் தொழிலேயாய் நிகழுமென்றும், 202புனங்காவலும் படுபுள்ளோப்புதலும் இவ் வாறன்றி உயர்ந்தோர் விளையாட்டாகி இயற்கைப் புணர்ச்சிப் பின்னர்ச் சின்னாளிற் றவிர்வரென்றும் வேறு பாடுணர்க. இக் கூறிய இருதிறத்தோருந் தமக்கு உரியரன்மையான் அறம் பொருளின்பம் வழாமை நிகழ்த்துதல் அவர்க்கரிதென்பது பற்றி இவற்றை அகப்புறமென்றார். (23) (தலைமக்களாதற்குச் சிறந்தாரிவரெனல்) 24. 203ஏவல் மரபி னேனோரு முரியர் ராகிய நிலைமை யவரு மன்னர். இது முன்னர்ப் பெயரும் வினையும் (20) என்பதனுள் திணைதொறுமரீஇய பெயருந் திணைநிலைப்பெயருமெனப் பகுத்த இரண்டனுள், திணைதொறுமரீஇய பெயருட் டலைவராதற் குரியாரை அதிகாரப்பட்டமையிற் கூறி, அங்ஙனந் தலைவராகற் குரிமையின் அடியோரையும் வினைவலபாங்கி னோரையும் அதன்பிற் கூறிப், பின்னர் நின்ற திணைநிலைப் பெயராதற்குச் சிறந்தார் அறுவகைய ரெனப் பகுக்கின்றது. (இ-ள்.) மரபின் - வேதநூலுட்கூறிய இலக்கணத்தானே; ஏவல் ஆகிய நிலைமையவரும் - பிறரை ஏவிக்கொள்ளுந் தொழில் தமக்குளதாகிய தன்மையையுடைய அந்தணர் அரசர் வணிகரும்; அன்னர் ஆகிய அவரும் - அம்மூவரையும்போற் பிறரை ஏவிக்கொள்ளுந் தன்மையராகிய குறுநிலமன்னரும் அரசராற் சிறப்புப் பெற்றோரும்; ஏனோரும் - நால்வகை வருணமென்று எண்ணிய வகையினான் ஒழிந்து நின்ற வேளாளரும்; உரியர் - உரிப்பொருட் டலைவராதற்கு உரியர் என்றவாறு. ஆகிய என்பதனை ஏவலொடும் அன்னரொடுங் கூட்டுக. எனவே, திணைநிலைப்பெயர் அறுவகையாயிற்று. வேந்த விடுதொழிலிற்....bghUns(637)என்பதனா‹வேளாளuஅரசராற்சிறப்òச்செய்யப்பெறுவரென்றுணர்f. இனி வில்லும் வேலுங் கழலு... முரிய (639) என்பதனான் ஏனோருஞ் சிறுபான்மை சிறப்பு பெறுவரென்றுணர்க. உரிப் பொருட்ட லைவர் இவரேயா தலைத்தாம் மேற்பிரிவிற்குக் கூறுகின்றவாற் றானும் உணர்க. 204தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ மணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே; 205ஈர்ந்த ணாடையை யெல்லி மாலையை. (கலி.52) என வரும். முளிதயிர் பிசைந்த காந்தன் மெல்விரல் 206கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக ரினிதெனக் கணவ னுண்டலி னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே. (குறுந்.167) இது குறுந்தொகை. இது பார்ப்பானையும் பார்ப் பனியையுந் தலைவராகக் கூறியது. கடிமனை சென்ற செவிலி கூற்று. வாயினேர்வித்தலுமாம். வருது மென்ற நாளும் பொய்த்தன வரியே ருண்க ணீரும் நில்லா தண்கார்க் கீன்ற பைங்கொடி முல்லை வைவாய் வான்முகை யவிழ்ந்த கோதை பெய்வனப் பிழந்த கதுப்பு முள்ளார் ரருள்கண் மாறலோ மாறுக வந்தி லறனஞ் சலரே யாயிழை நமரெனச் சிறிய சொல்லிப் பெரிய புலம்பினும் பனிபடு நறுந்தார் குழைய நம்மொடு துனிதீர் முயக்கம் பெற்றோள் போல வுவக்குள் வாழிய நெஞ்சே விசும்பிற னேறெழுந்து முழங்கினு மாறெழுந்து சிலைக்குங் கடாஅ யானை கொட்கும் பாசறைப் போர்வேட் டெழுந்த மள்ளர் கையதைக் கூர்வாட் குவிமுகஞ் சிதைய நூறி மானடி மருங்கிற் பெயர்த்த குருதி வான மீனின் வயின்வயி னிமைப்ப வமரகத் தட்ட செல்வந் தமர்விரைந் துரைப்பக் கேட்கு ஞான்றே (அகம்.144) மீண்டவன் நெஞ்சிற்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது. இம்மணிமிடைபவளத்து வேந்தன் தலைவனாயி னவாறுந் தான் அமரகத்து அட்ட செல்வத்தையே மிக்க செல்வ மாகக் கருதுதற் குரியாள் அரசமரபின் தலைவியே என்பதூஉம் உணர்க. பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் வகைகொண்ட செம்மனாம் வனப்பார விடுவதோ. (கலி.31) இதனுள் வேந்தன் தலைவனாயினவாறும் வகைகொண்ட தலைமையின் அழகை நுகரவிரும்பினாள் என்றலிற் றலைவியும் அவ்வருணத்தாளாயவாறும் உணர்க. 207உலகுகிளர்ந்தன்ன என்னும் அகப்பாட்டுள் (255) வாணிகன் தலைவனாகவுங் கொள்ளக் கிடத்தலிற்றலைவியும் அவ்வருணத் தலைவியா மென்றுணர்க. தடமருப் பெருமை மடநடைக் குழவி தூண்டொறும் யாத்த காண்டகு நல்லிற் கொடுங்குழை பெய்த செழுஞ்செவிப் பேதை சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப வாளை யீர்ந்தடி வல்லிதின் வகைஇப் புகையுண் டமர்த்த கண்ண டகைபெறப் பிறைநுதற் பொறித்த சிறுநுண் பல்விய ரந்துகிற் றலையிற் றுடையின ணப்புலந் தட்டி லோளே யம்மா வரிவை யெமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று சிறியமுள் ளெயிறு தோன்ற முறுவல் கொண்ட முகங்காண் கம்மே. (நற்றிணை.120) விருந்தொடு புக்கோன் கூற்று. செவிலிகூற்றுமாம். இந்நற்றிணை 208வாளை யீர்ந்தடிவகைஇ என்றலின் வேளாண்வருண மாயிற்று. மலைமிசைக் குலைஇய வுருகெழு திருவிற் பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித் தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ மாதிரம் புதைப்பப் பொழிதலிற் காண்வர வுருநிலங் கவினிய வேமுறு காலை நெருப்பி னன்ன சிறுகட் பன்றி யயிர்க்கட் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாண்மல ருதிரும் புறவடைந் திருந்த வருமுனை யியவிற் சீறூ ரோளே நன்னுதல் யாமே யெரிபுரை பன்மலர் பிறழ வாங்கி யரிஞர் யாத்த வலங்குதலைப் பெருஞ்சூடு கள்ளர் களமர் களந்தொறுந் மறுகு தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயி லருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து வினைவயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே (அகம்.84) இது தூதுகண்டு வருந்திக் கூறியது. இக் களிற்றியானை நிரையுள் தன்னூரும் அருமுனையியவிற் சீறூர் என்றலிற்றான் குறுநில மன்னனென்பது பெற்றாம். அகலிருவிசும்பகம் (214) என்னும் அகப்பாட்டும் பொருணோக்கினான் 209இதுவேயாமா றுணர்க. இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத் தொருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ் செல்வ முடையோர்க்கு நின்றன்று விறலெனப் பூக்கோ ளேய தண்ணுமை விலக்கிச் செல்வே மாத லறியாண் முல்லை நேர்கான் முதுகொடி குழைப்பநீர் சொரிந்து காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ முழங்குதொறுங் கையற் றொடுங்கிநப் புலந்து பழங்கண் கொண்ட பசலை மேனியள் யாங்கா குவள்கொ றானே வேங்கை யூழுறு கிளர்வீ கடுப்பக் கேழ்கொள வாகத் தரும்பிய மாசறு சுணங்கினள் நன்மணல் வியலிடை நடந்த சின்மெல் லொதுக்கின் மாஅ யோளே. (அகம்.174) இது மீள்வான் நெஞ்சிற் குரைத்தது. இதனுட் பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வே மென்றலின் அரசனாற் சிறப்புப் பெற்ற தலைவன் என்பதாயிற்று, இன்னுஞ் சான்றோர் செய்யுள்களுள் இங்ஙனம் வருவனவற்றை அவற்றின் பொருணோக்கி உணர்க. (24) (பாலை என்னும் பிரிவின் வகை) 25. ஓதல் பகையே தூதிவை பிரிவே. இத் துணையும் அகத்திற்குப் பொதுவாகிய முதல் கரு வுரிப் பொருளே கூறி இனி இருவகைக் கைகோளுக்கும் பொதுவாகிய பாலைத்திணை கூறிய எழுந்தது. (இ - ள்.) பிரிவே - பாலையென்னும் பிரிதற் பொருண்மை; ஓதல் பகையே தூது இவை - ஓதற்குப் பிரிதலும், பகைமேல் பிரிதலும், பகைமேற் பிரிதலும் பகைவரைச் சந்துசெய்தன் முதலிய தூது பற்றிப் பிரிதலுமென மூன்று வகைப்படும் என்றவாறு. ஒரோவொன்றே அறமுந் துறக்கமும் பொருளும் பயத்தற் சிறப்புநோக்கி இவற்றை இவையென விதந்தோதினார். இவை யென்றதனை எடுத்தலோசையாற் கூறவே அறங்கருதாது அரசரேவலான் தூதிற்பிரிதலும், போர்த்தொழில் புரியாது திறை கோடற்கு இடை நிலத்துப் பிரிதலுஞ் சிறப்பின்மை பெறுதும். அறங் கருதாது பொருள் ஈட்டுதற்குப் பிரிதலும் பொருள்வயிற் பிரிவிற்கு உண்மையின் இவற்றோடு ஓதாது பிற்கூறினார். அந்தணர்க்குரிய ஓதலுந் தூதும் உடன் கூறிற்றிலர், 210பகை பிறந்த வழித்தூது நிகழ்தலின். (25) (பிரிவுள் ஓதலுந் தூதும் இவர்க்குரியவெனல்) 26. அவற்றுள், ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன. இது முற்கூறியவற்றுள் அந்தணர் முதலிய மூவர்க்கும் இரண்டு பிரிவு உரித்தென்கிறது. (இ-ள்.) அவற்றுள் - அம்மூன்றனுள்; ஓதலும் தூதும் உயர்ந்தோர்மேன - ஓதற்பிரிவுந் தூதிற்பிரிவும் அந்தணர் முதலிய முவரிடத்தன என்றவாறு. எனவே, ஒழிந்த பகைவயிற்பிரிவு அரசர்க்கே உரித்தென மேலே கூறுப. உயர்ந்தோரெனக் கூறலின் வேளாளரை ஒழித்தா ரென்றுணர்க. உதாரணம்: 211அரம்போ ழவ்வளை தோணிலை ஞெகிழ நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி ஈர்ங்கா ழன்ன வரும்புமுதி ரீங்கை யாலி யன்ன வால்வீதாஅய் வைவா லோதி மையண லேய்ப்பத் தாதுறு குவளைப் போதுபிணி யவிழப் படா அப் பைங்கட் பாவடிக் கயவாய்க் கடாஅ மாறிய யானை போலப் பெய்து வறிதாகிய பிறங்குசெலற் கொண்மூ மைதோய் விசும்பின் மாதிரத் துழிதரப் பனியடூஉ நின்ற பானாட் கங்குற் றமியோர் மதுகை துக்காய் தண்ணென முனிய வலைத்தி முரணில் காலைக் கைதொழு மரபிற் கடவுள் சான்ற செய்வினை மருங்கிற் சென்றோர் வல்வரின் விரியுளைப் பொலிந்த பரியுடை நன்மான் வெருவரு தானையொடு வேண்டுபுலத் திறுத்த பெருவளக் கரிகான் முன்னிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை யாடுபெற வொன்பது குடையும் நன்பக லொழித்த பீடில் மன்னர் போல வோடுவை மன்னால் வாடைநீ யெமக்கே. (அகம்.125) இதனுட் பலருங் கைதொழும் மரபினையுடைய கட வுட்டன்மையமைந்த செய்வினையெனவே ஓதற்பிரிதலென்பது பெற்றாம். சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே (192) என்பதனாற் கிழவனும் கிழத்தியும் இல்லறத்திற் சிறந்தது பயிற்றாக்கால் இறந்ததனாற் பயனின்றாதலின், இல்லறம் நிரம்பாதென்றற்கு நிரம்பா வாழ்க்கை யென்றார். இல்லறம் நிகழ்கின்ற காலத்தே மேல்வருந் துறவறம் நிகழ்த்துதற்காக அவற்றைக் கூறும் நூல்களையும் கற்று அவற்றின் பின்னர்த் தத்துவங்களையு முணர்ந்து மெய்யுணர்தல் அந்தணர் முதலிய மூவர்க்கும் வேண்டுதலின் ஓதற்பிரிவு அந்தணர் முதலியோர்க்கே சிறந்த தென்றார். பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ. (கலி.15) என்பதும் அது; மையற்ற படிவம் அந்தணர் முதலியோர் கண்ண தாகலின். விருந்தின்மன்னர் (54) என்னும் அகப்பாட்டில் வேந்தன் பகைமையைத் தான் தணிவித்தமை கூறலின் அந்தணன் தூதிற் பிரிந்தமை பெற்றாம். வயலைக் கொடியின் வாடிய மருங்கல் (புறம். 305) என்னும் புறப்பாட்டில் அந்தணன் தூது சென்றவாறு உணர்க. அரசன் தூதுசேறல் பாரதத்து 212வாசுதேவன் தூது சென்றவாற்றா னுணர்க. தொடர்ந்தரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே. (சிலப்பதி. ஆய்ச்சியர் குரவை) என்பதனானுணர்க. tÂf‹ br‹w öJ tªJÊ¡ fh©f.(26) (பகைவயிற் பிரிவு அரசர்க்குரித்தெனல்) 27. தானே சேறலுந் தன்னொடு சிவணிய வேனோர் சேறலும் வேந்தன் மேற்றே. இது பகைவயிற் பிரிவு. அரசர்க்கே உரித்தென்கின்றது. (இ-ள்.) தானே சேறலும் - தன்பகைக்குந் தானே செல்லு தலும்; தன்னொடு சிவணிய ஏனோர் சேறலும் - அவனொடு நட்புக்கொண்ட ஒழிந்தோர் அவற்குத் துணையாகிச் செல்லுதலுமாகிய இவ்விருபகுதியும்; வேந்தன்மேற்று. அரசன் கண்ண என்றவாறு. எனவே, வணிகர்க்கு உரித்தன்றாயிற்று. தானேயென்று ஒருமை கூறிய அதனானே முடியுடை வேந்தர் தாமே சேறலும் ஏனோரெனப் பன்மைகூறிய அதனானே பெரும்பான்மையுங் குறுநிலமன்னர் அவர்க்காகச் சேறலும், முடியுடை வேந்தர் அவர்க்காகச் சிறுபான்மை சேறலும் உணர்க. முடியுடைவேந்தர் உள்வழிக் குறுநில மன்னர் தாமே செல்லாமையுணர்க. இதனை வேந்தர்க்குற்றுழி (இறை. கள. 38) யென்ப ஏனையார். அவ் வேந்தர் இல்வழிக் குறுநிலமன்னருந் தாமே சேறல் வேந்து வினை யியற்கை (32) என்பதன்கட் கூறுப. இதனானே தன்பகை மேலும் பிறர்பகை மேலும் ஒருகாலத்திற் சேறலின் றென்றார். கடும்புனல் கால்பட்டு என்னும் பாலைக்கலியுள், 213மயங்கமர் மாறட்டு மண்வௌவி வருபவர் தயங்கிய களிற்றின்மேற் றகைகாண விடுவதோ. (கலி.31) எனவும், 214பகைவென்று திறைகொண்ட பாய்திண்டேர் மிசையவர் (கலி.31) எனவும் மண்கோடலுந் திறைகோடலும் அரசர்க்கே உரித்தாகக் கூறியது. 215நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே. (கலி.31) எனச் சுரிதகத்துக் கூறியவாற்றா னுணர்க. பொருபெரு வேந்தர்க்குப் போர்ப்புணை யாகி யொருபெருங் காதலர் சென்றார் - வருவது காணிய வம்மோ கனங்குழை கண்ணோக்கா னீணகர் முன்றின்மே னின்று. இது வேந்தர்க்குற்றுழி வேந்தன் பிரிந்தது. கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட்டி யானைப் போஒர் கிழவோன் 216பழையன் வேல்வாய்த் தன்னநின் பிழையா நன்மொழி தேறிய விவட்கே (நற்றிணை.10) இது குறுநிலமன்னர் போல்வார் சென்றமை தோன்றக் கூறியது. மலைமிசைக் குலைஇய (அகம்.84) என்பதும் அது. இனி வேட்கைமேற் சேறலும் நாடுகாணச் சேறன் முதலி பயவும் பாலையாகப் புலனெறி வழக்கஞ் செய்யாமை உணர்க. வேந்தனென்று ஒருமையாற் கூறினார். மெய்ந்நிலை மயக்கி னாஅ குநவும் (சொல். 449) 217என்னும் விதிபற்றி சிவணிய வென்பதனை வினையெச்சமாக்கி நட்பாடல் வேண்டி யென்றுமாம். (27) (ஏனைப்பிரிவு இவையெனல்) 28. 218மேவிய சிறப்பி னேனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகல் வேண்டியு மிழைத்த வொண்பொருண் முடியவும் பிரிவே. இது முறையானே தன் பகைமேற்சென்ற அரசன் திறை பெற்ற நாடுகாத்து அதன்கண் தன்னெறிமுறை அடிப்படுத்து தற்குப் பிரிதலும் ஏனை வணிகர் பொருட்குப் பிரிதலுங் கூறுகின்றது. (இ-ள்.) முல்லை முதலாச் சொல்லிய மேவிய சிறப்பின் - தானே சென்ற வேந்தன் தனக்கு முல்லை முதலாக முற்கூறப் பட்ட நால்வகை நிலனுந் திறையாக வந்து பொருந்திய தலைமை யானே; பிழைத்தது - முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலை பெற்று நெறிமுறைமை தப்பிய அந்நாடு; முறையாற் பிழை யாதாகல் வேண்டியும் பிரிவே - தன்னுடைய பழைய நாடுகளை ஆளும் நெறிமுறைமையினானே தப்பாமல் ஆக்கம் பெறக் காத்தலை விரும்பிப் பிரிதலும் பிரிவே; ஏனோர் படிமைய இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே - முற்கூறிய அந்தணர் அரசரை ஒழிந்த வணிகர் தமக்கு விரதங்களுடையவாக வேதநூலிற் கூறிய ஒள்ளிய பொருள் தேடி முடியும்படி பிரிதலும் பிரிவே என்றவாறு. பிரிவை இரண்டற்குங் கூட்டுக. சிறப்பிற் பிரிதலும் எனச் சேர்க்க, சொல்லிவென்பதும் பிழைத்ததென்பதும் தொழிற் பெயர். முறையாற் காக்கவென முடிக்க. விரதமானவை கொள்வ தூஉம் மிகைகொளாது. கொடுப்பதூஉம் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசல் - (பட்டினப். 209:11) முதலியன. உதாரணம்: ஒருகுழை யொருவன்போ லிணர்சேர்ந்த மராஅமும் பருதியஞ் செல்வன்போ னனையூழ்த்த செருந்தியு மீனேற்றுக் கொடியோன்போன் மிஞிறார்க்குங் காஞ்சியு மேனோன்போ னிறங்கிளர்பு கஞலிய ஞாழலு மானேற்றுக் கொடியோன்போ லெதிரிய விலவமும் ஆங்கத் தீதுதீர் சிறப்பி னைவர்க ணிலைபோலப் போதவிழ் மரத்தொடு பொருகரை கவின்பெற நோதக வந்தன்றா லிளவேனின் மேதக; பல்வரி யினவண்டு புதிதுண்ணும் பருவத்துத் தொல்கவின் றொலைந்தவென் றடமென்றோ ளுள்ளுவா ரொல்குபு நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி வெல்புக ழுலகேத்த விருந்துநாட் டுறைபவர்; திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர்; அறல்சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித் திறல்சான்ற பெருவனப் பிழப்பதை யருளுவா ரூறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி யாறின்றிப் பொருள்வெஃகி யகன்றநாட் டுறைபவர்; என நீ, தெருமரல் வாழி தோழிநங் காதலர் பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர் செருமேம் பட்ட வென்றியர் வருமென வந்தன்றவர் வாய்மொழித் தூதே. (கலி.26) இதனுள் ஒல்குபு நிழல்சேர்ந்தார்க்கு எனவே, முன்னர் ஆள்பவர் கலக்குறுத்த அலைபெற்றுப் பின் தன்னை நிழலாகச் சேர்ந்தாரென்பதூஉம், அவர்க்குப் பின்னர் உலைவு பிறவாமற் பேணிக் காத்தானென்பதூஉம், விருந்துநாட்டு என்பதனான் திறைபெற்ற புதிய நாடென்பதூஉம் பெற்றாம். ஏனைய வற்றிற்கும் இவ்வாறே கூறிக்கொள்க. ஏதினாடு - புதிய நாடு, ஆறின்றிப் பகைவர் பொருளை விரும்பின நாட்டென்றும் அவரை யகன்ற நாட்டென்றும் பொருள் கூறுக. செருவின் மேம்பட்ட என்றது, நாடுகளை. அதனாற் பெற்ற வென்றியெனவே, நாடு திறைபெற்றமை கூறிற்று. படைபண்ணிப் புனையவும் (17) என்னும் பாலைக் கலியுள் வல்வினை வயக்குதல் வலித்திமன் என்பதற்கு, வலிய போர் செய்து அப்பகைவர் தந்த நாட்டை விளக்குதற்கு வலித்தி யெனவுந், தோற்றஞ்சா றொகுபொருள் என்பதற்குத் தோற்றம் அமைந்த திரண்ட பொருளாவன அந் நாடுகாத்துப் பெற்ற அறம் பொருளின்பம் எனவும், பகையறு பயவினை என்பதற்குப் பகையறுதற்குக் காரணமாகிய நாடாகிய பயனைத் தரும் வினையெனவும், வேட்டபொருள் என்பதற்கு அறம்பொருள் இன்பம் எனவும் பொருளுரைத்துக் கொள்க. பிறவும் இவ்வாறு வருவன உய்த்துணர்ந்து பொருள் கூறுக. இனிக், 219கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங் கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து. (அகம்.93) என வாணிகர் பொருள்வயிற் பிரிந்தவா றுணர்க. நட்டோ ராக்கம் வேண்டியு மொட்டிய நின்றோ ளணிபெற வரற்கு மன்றோ தோழியவர் சென்ற திறமே. (நற்றிணை. 286) என்பதனுள் அணியென்றது பூணினை. பிறவும் இவ்வாறு வருவன உயர்த்துணர்ந்து கொள். (28) (பொருட்பிரிவு நால்வர்க்கு முரித்தெனல்) 29. மேலோர் முறைமை நால்வர்க்கு முரித்தே இஃது எய்தாததெய்துவித்தது. (இ - ள்.) மேலோர் முறைமை - மேல் அதிகாரப்பட்டு நின்ற வாணிகர்க்கு ஓதிய அறந்தலைப் பிரியாப் பொருள் செயல்வகை; நால்வர்க்கும் உரித்து - அந்தணர்க்கும் அரசர்க்கும் இருவகை வேளாளர்க்கும் உரித்து என்றவாறு. இதற்கு வணிகர்க்கு வேதநூலுள் இழைத்த பொருண் முடிவானே இந்நால்வரும் பொருண்முடிப்பரெனிற் பிரிவொன் றாகி மயங்கக் கூறலென்னும் குற்றம் தங்குமாகலின் அது கருத்தன்று; இந்நால்வருள், அந்தணர் ஓதலுங் தூதும் பற்றிப் பொருண் முடித்தலும், அரசர் பகை வயிற் பிரிவு பற்றிப் பொருண் முடித்தலும், உயர்ந்த வேளாளர் பகைவயிற் பிரிவு பற்றிப் பொருண்முடித்தலும் உழுதுண்பார் வாணிகத்தாற் பொருண் முடித்தலுங் கருத்து. இவற்றுள் வேள்விக்குப் பிரிந்து 220சடங்கிற்கு உறுப்பாகி யும் அதற்குக் குரவனாகியும் நிற்றல் உரிமையின் ஆண்டு வேள்வி செய்தான் கொடுத்த பொருள்கோடல் வேண்டுதலானும் அறங் கருதித் தூதிற் பிரியினும் அவர் செய்த பூசனை கோடல் வேண்டு மாகலானும் அவை அந்தணர்க்குப் பொருள் வருவாயாயின. வேள்விக்குப் பிரிதல் ஓதற் பிரிவின் பகுதியாயிற்று. உதாரணம்: நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி யதுதேர மாசில்வண் சேக்கை மணந்த புணர்ச்சியுட் பாயல்கொண் டென்றோட் கனவுவா ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனைகாத் தோம்ப வல்லுவள் கொல்லோ விடுமருப் பியானை யிலங்குதேர்க் கோடு நெடுமலை வெஞ்சுரம் போகி நடுநின்றெஞ் செய்பொருண் முற்று மளவென்றா ராயிழாய் தாமிடை கொண்ட ததுவாயிற் றம்மின்றி யாமுயிர் வாழு மதுகை யிலமாயிற் றொய்யி றுறந்தா ரவரெனத் தம்வயி னொய்யார் நுவலும் பழிநிற்பத் தம்மொடு போயின்று கொல்லென் னுயிர். (கலி.24) இதனுள் நடுநின்று என்றதனான் இரு பெரு வேந்தரையுஞ் சந்து செய்வித்தற்கு யான் நடுவே நிற்பலென்றும், எஞ்செய் பொருள் முற்றுமளவு என்றதனான் அது முடித்த பின்னர் யாம் பெறுதற்குரியவாய் அவர் செய்யும் பூசனையாகிய பொருண் முடியுமளவு மென்றும், அந்தணன் பொருள்வயிற் பிரியக் கருதிக் கூறிய கூற்றினை அவன் தலைவி கூறியவாறுணர்க. இதனுள் கடிமனைகாத்து என்றதனை இல்லறமாகவும், ஓம்ப என்றதனைச் செந்தீயோம்ப வென்றுங் கொள்க. நன்கலங் களிற்றொடு நண்ணாரேந்தி வந்துதிறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து (அகம்.124) என்புழி, நன்கலந் திறைகொடுத்தோ ரென்றலிற் பகைவயிற் பிரிவே பொருள்வருவாயாயிற்று. ஒழிந்தனவும் இவ்வாறே உய்த்துணர்க. மேலோர் முறைமை ஏனோர்க்கு முரித்தே என்னாது நால்வர்க்கு முரித்தே என்றது. முற்கூறிய வணிகரையொழிந்த இரு வகை வேளாளரையுங் கூட்டியென் றுணர்க. அவர் பொருள்வயிற் பிரிந்தனவுஞ் சான்றோர் செய்யுள்களை நோக்கி உய்த்துணர்ந்து கொள்க. அவர்களுள் உழுதுண்பார்க்குக் கலத்திற்பிரிவும் உரித்து, ஏனையோர்க்குக் காலிற்பிரிவே உரித்தென்றுணர்க. (29) (வேளாளர்க்கு இப்பிரிவும் உரித்தெனல்) 30. மன்னர் பாங்கிற் பின்னோ ராகுப இஃது இறுதிநின்ற வேளாளர்க்கு இன்னுமொரு பிரிவு விகற்பங்கூறுகின்றது. (இ - ள்.) மன்னர் பாங்கின் - அரசரைச் சார்ந்து வாழும் பக்கத்தராகி நிற்றல் காரணமாக; பின்னோர் ஆகுப. பின்னோ ரெனப் பட்ட வேளாளர் வரையறையின்றி வேந்தன் ஏவிய திறமெல்லா வற்றினும் பிரிதற்கு ஆக்கமுடையராகுப என்றவாறு. மன்னர் பின்னோரென்ற பன்மையான் முடியுடை யோரும், முடியில்லாதோரும், உழுவித்து உண்போரும், உழுது உண்போரு மென மன்னரும் வேளாளரும் பலதென்றார் (636). வேளாண் மாந்தர்க்கு (635) வேந்துவிடுதொழிலின் (636) என்னும் மரபியற் சூத்திரங்களான் வேளாளர் இருவகைய ரென்ப. அரசரேவுந் திறமாவன பகைவர்மேலும் நாடுகாத்தன் மேலுஞ் சந்து செய்வித்தன் மேலும் பொருள்வருவாய் மேலுமாம். அவருள் உழுவித்துண்போர் மண்டிலமாக்களுந் தண்டத் தலை வருமாய்ச் சோழநாட்டுப் பிடவூரும் அழுந்தூரும் நாங்கூரும் நாவூரும் ஆலஞ்சேரியும் பெருஞ்சிக்கலும் வல்லமுங் கிழாரும் முதலிய பதியிற்றோன்றி வேளெனவும் அரசெனவும் உரிமையெய்தினோரும், பாண்டி நாட்டுக் காவிதிப்பட்ட மெய்தினோருங், குறுமுடிக் குடிப்பிறந்தோர் முதலியோருமாய் முடியுடைவேந்தர்க்கு மகட் கொடைக்குரிய வேளாளராகுப. இருங்கோ வேண்மா னருங்கடிப் பிடவூர் (புறம். 395) எனவும் ஆலஞ் சேரி மயிந்த... னூருண் கேணிநீ ரொப்போன் எனவுஞ் சான்றோர் செய்யுட்செய்தார். உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்தூர்வேளிடை மகட்கோடலும் அவன் மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர்வேளிடை மகட் கோடலுங் கூறுவர். இதனானே, 221பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயின் (புறம்.35) எனவும், ........... ........... ............. ஞாலத்துக், 222கூலம் பகர்நர் குடிபுறந் தராஅக் குடிபுறந் தருநர் பார மோம்பி (பதிற்று.13) எனவுஞ் சான்றோர் கூறியவாறுணர்க. உ-ம்: வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார் தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய் கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ தண்பனி நாளே தனித்து என வரும். (30) (வேதத்தினாற் பிறந்த நூல்களும் நால்வகை வருணத்தார்க்கு முரியவெனல்) 31. 223உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான. இது நான்கு வருணத்தோர்க்கும் எய்தாத தெய்துவித்து. (இ-ள்.) ஓத்தின் ஆன - வேதத்தினாற் பிறந்த வட நூல்களுந் தமிழ்நூல்களும்; உயர்ந்தோர்க்கு உரிய - அந்தணர் அரசர் வணிகர்க்கும், உயர்ந்த வேளாளர்க்கும் உரிய என்றவாறு. அவை சமயநூல்களும் ஒன்றற்கொன்று மாறுபாடு கூறுந் தருக்க நூல்களும் தருமநூல்களும் சோதிடமும் வியாகரணம் முதலியனவும் அகத்தியம் முதலாகத் தோன்றிய தமிழ்நூல் களுமாம். வேதந் தோன்றிய பின்னர் அது கூறிய பொருள்களை இவையும் ஆராய்தலின் ஓத்தினான வென்று அவற்றிற்கு பெயர் கூறினார், ஓத்தென்பது வேதத்தையே யாதலின். (31) (வேந்தன்றொழில் வேளிர்க்கு முரித்தெனல்) 32. வேந்துவினை யியற்கை வேந்தனி னொரீஇய வேனோர் மருங்கினு மெய்திட னுடைத்தே. இது 224மலைய மாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ண லுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப் பிறந்த வேளிர்க்கும் வேந்தன் றொழில் உரித்தென்கிறது. (இ-ள்.) வேந்து வினை இயற்கை - முடியுடை வேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள்; வேந்தனின் ஒரீஇய ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்து - அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறுநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையன என்றவாறு. அவர்க்குரிய இலக்கணமாவன, தம் பகைவயிற் றாமே சேறலுந், தாம் திறைபெற்ற நாடுகாக்கப் பிரிதலும் மன்னர் பாங்கிற் பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம். உதாரணம்: விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர் வேறுபன் மொழிய தேஎ முன்னி வினைநசைஇப் பரிக்கு முரன்மலி நெஞ்சமொடு புனிமா ணெஃகம் வலவயி னேந்திச் செலன்மாண் புற்ற (அகம்.215) என்புழி 225வேறு பன்மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப் போர்த்தொழிலைச் செலுத்தும் உரன்மிக்க நெஞ்ச மென்றலின், இது குறுநில மன்னன் தன்பகைவரின் நாடு கொள்ளச் சென்றதாம், வேந்தனெனப் பெயர் கூறாமையின். பசைபடு பச்சை நெய்தோய்த்து (244) என்னும் அகப் பாட்டினுள் முடிந்தன் றம்ம 226நாம் முன்னிய வினையே என்றலிற் றானே குறுநில மன்னன் சென்றதாம். ஏனை வந்துழிக் காண்க. (32) (வேளிர்க்குப் பொருட்பிரிவு முரித்தெனல்) 33. பொருள்வயிற் பிரிதலு மவர்வயி னுரித்தே யுயர்ந்தோர் பொருள்வயி னொழுக்கத் தான. இஃது அக் குறுநில மன்னர்க்குப் பொருள்வயிற் பிரிதலும் ஓதற் பிரிதலும் உரிய வென்கின்றது. (இ-ள்.) பொருள் வயினும் - தமக்குரிய திறையாகப் பெறும் பொருளிடத்தும்; உயர்ந்தோர் ஒழுக்கத்துக்கு ஆன பொருள் வயினும் - உயர்ந்த நால்வகை வருணத்தார்க்குரிய ஒழுக்கத்திலே யான ஓத்திடத்தும்; பிரிதல் அவர்வயின் உரித்து - பிரிந்துசேறல் அக் குறுநில மன்னரிடத்து உரித்து என்றவாறு. பொருள்வயிற் பிரிதல் பொருள் தேடுகின்ற இடத்தின் கண்ணென வினைசெய்இடமாய் நின்றது. உயர்ந்தோர்க் குரிய வோத்தி னான (31) என்று அவ் வோத்தினை அவரொழுக்கத்தி லேயான பொருளென்றார். அச் சூத்திரத்திற் கூறிய ஓதற்பிரிவே இவர்க்கும் உரிதென்று கொள்க. இவற்றுக்குச் சான்றோர் செய்யுள்களுள்வழிப் பொருள்படுமாறு உய்த்துணர்ந்து கொள்க. (33) (பொருட்பிரிவு முதலியவற்றில் தலைவியொடு பிரிதல் இல்லையெனல்) 34. முந்நீர் வழக்க மகடூஉவோ டில்லை. இது முற்கூறிய ஓதல் பகை தூது காவல் பொருள் என்ற ஐந்தனுட் பகையுங் காவலும் ஒழிந்தவற்றிற்கு ஓரிலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) ஓதலுந் தூதும் பொருளுமாகிய மூன்று நீர்மை யாற் செல்லுஞ் செலவு தலைவியொடு கூடச் செல்லுத லின்று என்றவாறு. தலைவியை உடன்கொண்டு செல்லாமை முற்கூறிய உதாரணங்களிலும் ஒழிந்த சான்றோர் செய்யுள்களுள்ளுங் காண்க. இதுவே ஆசிரியர்க்குக் கருத்தாதல் தலைவியொடு கூடச் சென்றாராகச் சான்றோர் புலனெறிவழக்கஞ் செய்யாமையான் உணர்க. இனித், தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன் கொண்டு சென்மினெனக் கூறுவனவுந், தோழி கூறுவனவுஞ், செலவழுங்குவித்தற்குக் கூறுவனவென்று உணர்க. அக்கூற்றுட் தலைவன் மரபு அன்றென்று மறுப்பன மரபுநிலை திரியா (45) என்பதனுள் அமைந்தது. இனி, இச் சூத்திரத்திற்குப், பொருள்வயிற் பிரிவின்கண் 227கலத்திற் பிரிவு தலைவியுடன் சேறலில்லை; எனவே, காலிற் பிரிவு தலைவியுடன் சேறல் உண்டு என்று பொருள் கூறுவார்க்குச் 228சான்றோர் செய்த புலனெறிவழக்கம் இன்மை உணர்க. இனி, உடன்கொண்டு போகுழிக் கலத்திற் பிரிவின்று, காலிற்பிரிவே யுளதென்பாரும் உளர். (தலைவி மடலேறினாளாகக் கூறும் புலனெறி வழக்கம் இன்றெனல்) 35. எத்திணை மருங்கினு மகடூஉ மடன்மேற் பொற்புடை நெறிமை யின்மை யான. இஃது இத்துணையும் பாலைக்கு உரிய இலக்கணங் கூறி, மகடூஉ அதிகாரப்படுதலிற் பெருந்திணைக்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.) எத்திணை மருங்கினும் - கைக்கிளைமுதற் பெருந் திணையிறுவாய் ஏழன்கண்ணும்; மகடூஉ மடல்மேல் நெறிமை - தலைவி மடலேறினாளாகக் கூறும் புலனெறிவழக்கம்; பொற்புடைமை இன்மையான - பொலிவுடைமையின்று; ஆதலான் அது கூறப்படாது என்றவாறு. கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் (குறள். 311) எனவரும். கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலூரார் மைந்தர்மே லென்ப - மடலூர்தல் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேற்கொண்ட போழ்து என்றாராலோவெனின், இது மடலேற்றன்று; ஏறுவலெனக் கூறிய துணையாம். (35) (உடன்போக்கின்கண் நற்றாயிரங்கற்பகுதி இவையெனல்) 36. தன்னு மவனு மவளுஞ் கட்டி மன்னு நிமித்தம் மொழிப்பொரு டெய்வ நன்மை தீமை யச்சஞ் சார்தலென் றன்ன பிறவு மவற்றொடு தொகைஇ முன்னிய கால மூன்றுடன் விளக்கித் தோழி தேஎத்துங் கண்டோர் பாங்கினும் போகிய திறத்து நற்றாய் புலம்பலு மாகிய கிளவியு மவ்வழி யுரிய. இது பிரிவிலக்கணம் அதிகாரப்பட்டு வருதலிற் கொண்டு தலைக்கழிந்துழி வருந்துவோர் தாயதென்பதூஉம் அதனது பகுதியுங் கூறுகின்றது. (இ-ள்.) போகிய திறத்து நற்றாய் - தலைவியுந் தலைவனும் உடன்போய காலத்து அம்மகட் பயந்த நற்றாய்; தன்னும் அவனும் அவளுஞ் சுட்டிக் காலம் மூன்றுடன் மன்னும் நன்மை தீமை முன்னிய விளக்கிப் புலம்பலும் - தன்னையும் தலைவனை யுந் தன் மகளையுங் குறித்துக் காலம் மூன்றுடன் நிலைபெற்று வரும் நல்வினை தீவினைக்குரிய காரியங்களைத் தன் நெஞ்சிற்கு விளக்கி வருந்திக் கூறுதலும்; அச்சஞ் சார்தல் என்று அன்ன பிறவும் நிமித்தம் மொழிப் பொருள் தெய்வம் அவற்றொடு தொகைஇப் புலம்பலும் - அச்சஞ் சார்தலென்று கூறப்பட்ட வற்றையும் அவை போல்வன பிறவற்றையும் பல்லி முதலிய சொல் 229நற்சொல் தெய்வங் கட்டினுங் கழங்கினும் இட்டு உரைக்கும் அத்தெய்வப் பகுதியென்றவற்றொடு கூட்டி வருந்திக் கூறலும்; தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் புலம்பலும் - தோழியது ஆற்றாமையைக் கண்டுழியுந், தலைவியைத் தேடிப் போய்க் காணாது வந்தாரைக் கண்டுழியும் வருந்திக் கூறலும்; அவ்வழி ஆகிய கிளவியும் - அவ் வுடன்போக்கிடத்துச் சான்றோராற் புலனெறி வழக்கஞ் செய்தற்குரியவாய் வருங் கிளவிகளும்; உரிய - உடன்போகிய திறத்து உரிய என்றவாறு. நற்றாய் புலம்பலுங் கிளவியும் போகிய திறத்து உரியவென முடிக்க. என்றென்பதனையும் புலம்பலென்பதையும் யாண்டுங் கூட்டுக. இங்ஙனம் உடன்போக்கி வருந்துதல் நோக்கித் தாயை முற்கூறித் தலைவன் கொண்டு போயினமை நோக்கித் தலைவி முன்னர் அவனைக் கூறினார். அவளும் அவனும் என்று பாடம் ஓதுவாரும் உளர். உ.தாரணம்: மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலு முயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி யினிய வாகுக தில்ல 230வறநெறி யிதுவெனத் தெளிந்தவென் பிறை நுதற் குறுமகள் போகிய சுரனே (ஐங்குறு.371) இதனுள் அறநெறி இதுவெனத் தெளிந்த என்மக ளென்று தாய் கூறவே, உடன்போக்குத் தருமமென்று மகிழ்ந்து கூறி அங்ஙனங் கூட்டிய நல்வினையைத் தன் நெஞ்சிற்கு விளக்கிப் புலம்பியவாறு காண்க. நாடொறுங் கலுழு மென்னினு மிடையயீன்று காடுபடு தீயிற் கனலியர் மாதோ நல்வினை நெடுநகர் கல்லெனக் கலங்கப் பூப்புரை யுண்கண் மடவரற் போக்கிய புணர்ந்த 231வறனில் பாலே (ஐங்குறு. 376) இது தீவினையை வெகுண்டு புலம்பியவாறு காண்க. பால். பழவினை. இவை ஐங்குறுநூறு. இனி அச்சம் இருவகைத்து; தலைவி ஆண்டை விலங்கும் புள்ளும் ஆறலைப்போரும் முதலிய கண்டு அஞ்சும் அச்சமும், தந்தை தன்னையர் 232பின்சென்றவர் இஃதறமென்னாது தீங்கு செய்கின்றாரோ என்று அஞ்சும் அச்சமுமென. நினைத்தொறுங் கலுழு மிடும்பை யெய்துக புலிக்கோட் பிழைத்த கலைக்கோட்டு முதுகலை மான்பிணை யணைதர வாண்குரல் விளிக்கும் வெஞ்சுர மென்மக ளுய்த்த வம்பமை வல்வில் விடலை தாயே (ஐங்குறு.373) இதுவும் ஐங்குறுநூறு. கேளாய் வாழியோ மகளைநின் றோழி திருநகர் வரைப்பகம் புலம்ப வவனொடு பெருமலை யிறந்தது நோவே னோவல் கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி முடங்குதா ளுதைத்த பொலங்கெழு பூழி பெரும்புலர் விடியல் விரிந்துவெயி லெறிப்பக் கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல் சிறுபுன் பெடையொடு குடையு மாங்க ணஞ்சுவரத் தகுந கான நீந்திக் கன்றுகா ணாது புன் கண்ண செவிசாய்த்து மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன் கறவை தந்த கடுங்கான் மறவர் கல்லென் சீறூ ரெல்லியி னசைஇ முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை மடமயி லன்னவென் னடை மெலி பேதை தோட்டுதுணை யாகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட் சேக்கோ ளறையுந் தண்ணுமை கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே (அகம்.63) இவை அச்சங் கூறின. 233தந்தை தன்னையர் சென்றாரென்று சான்றோர் செய்யுட் செய்திலர், அது புலனெறி வழக்கம் அன்மையின். இனிச் சார்தலும் இருவகைத்து, தலைவி சென்று சாரும் இடனும், மீண்டு வந்து சாரும் இடனுமென. உதாரணம்: 234எம்வெங் காம மியைவ தாயின் மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாக லார்கைப் பறைக்கட் பீலித் தோகைக் காவிற் றுளுநாட் டன்ன வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பிற் செறிந்த சேரிச் செம்மல் மூதூன் ரறிந்த மாக்கட் டாகுக தில்ல தோழி மாரும் யானும் புலம்பச் சூழி யானைச் சுடர்ப்பூ ணன்னன் பாழி யன்ன கடியுடை விய னகர்ச் செறிந்த காப்பிகந் தவனொடு போகி அத்த இருப்பை ஆர்கழல் புதுப்பூத் துய்த்த வாய துக ணிலம் பரக்கக் கொன்றை யஞ்சினைக் குழற்பழங் கொழுதி வன்கை யெண்கின் வயநிரை பரக்கு மின்றுணைப் பிரிந்த கொள்கையொ டொராங்குக் குன்ற வேயி ற் றிரண்ட வென் மென்றோ ளஞ்ஞை சென்ற வாறே (அகம். 15) அருஞ்சுர மிறந்தவென் பெருந்தோட் குறுமகள் டிருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே புனைமா ணிஞ்சி பூவ லூட்டி மனைமண லடுத்து மாலை நாற்றி யுவந்தி னிதயரு மென்ப யானு மான்பிணை நோக்கின் மடநல் லாளை யீன்ற நட்பிற் கருளா னாயினு மின்னகை முறுவ லேழையைப் பன்னாட் கூந்தல் வாரி நுசுப்பிவர்ந் தோம்பிய நலம்புனை யுதவியோ வுடையேன் மன்னே வஃதறி கிற்பினோ நன்றுமற் றில்ல வறுவை தோயு மொருபெருங் குடுமிச் சிறுபைந் நாற்றிய பஃறலைக் கருங்கோ லாகுவ தறியு முதுவாய் 235வேல கூறுக மாதோநின் கழங்கின் றிட்ப மாறாது வருபனி கலுழுங் கங்குலி னானாது துயருமென் கண்ணினிது படீஇய ரெம்மனை முந்துறத் தருமோ தன்மனை யுய்க்குமோ யாதவன் குறிப்பே (அகம். 195) இவ் வகப்பாட்டு இரண்டும் தெய்வத்தொடு படுத்துப் புலம்பியது. இல்லெழும் வயலை யலையு மூழ்த்தன சொல்வன் மாக்களிற் செல்லு மஃகின மயிலடி யிலைய மாக்குர னொச்சிப் பயிலிணர் நறும்பொழிற் பாவையுந் தமிய ளேதி லாளன் பொய்ப்பப் பொய்மருண்டு பேதை போயினள் பிறங்குமனை யிறந்தென மான்ற மாலை மனையோர் புலம்ப வீன்ற தாயு மிடும்பைய ளெனநினைந் தங்கண் வானத் தகடூர்ந்து திரிதருந் திங்களங் கடவு டெளித்துநீ பெயர்த்தரிற் கடிமலர்க் கொன்றைக் காவலன் சூடிய குடுமியஞ் செல்வங் குன்றினுங் குன்றாய் தண்பொழில் கவித்த தமனிய வெண்குடை யொண்புகழ்த் தந்தைக் குறுதி வேண்டித் தயங்குநடை முதுமை தாங்கித் தான்றனி யியங்குநடை யிளமை யின்புற் றீந்த மான்றே ரண்ண றோன்றுபுகழ் போலத் துளங்கிரு ளிரவினு மன்ற விளங்குவை மன்னாலிவ் வியலிடத் தானே (தகடூர் யாத்திரை) இது தெய்வத்தை நோக்கிக் கூறியது. மறுவி றூவிச் சிறுகருங் காக்கை யன்புடை மரபினின் கிளையோ டாரப் பச்சூன் பெய்த பைந்தினை வல்சி பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ வெஞ்சின விறல்வேல் விடலையொ டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே (ஐந்குறு.391) இவ் வைங்குறுநூறு நிமித்தத்தொடு படுத்துப் புலம்பியது. நற்சொல்லொடு படுத்தன வந்துழிக் காண்க. இனி `அன்னபிறவும் என்றதனால், ஈன்றுபுறந் தந்த வெம்மு முள்ளாள் வான்றோ யிஞ்சி நன்னகர் புலம்பத் தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர் முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகற் பீலி சூட்டித் துடிபடுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும் போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந் துணிந்துபிற ளாயின ளாயினு மணிந்தணிந் தார்வ நெஞ்சமொ டாய்நல னளைஇத்தன் மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல துஞ்சா முழவிற் கோவற் கோமா னெடுந்தேர்க் காரி கொடுங்கான் முன்றுறைப் பெண்ணையம் பேரியாற்று நுண்ணறல் கடுக்கு நெறியிருங் கதுப்பினென் பேதைக் கறியாத் தேஎத் தாற்றிய துணையே (அகம். 35) இவ் வகம், தலைவன் மிகவும் அன்புசெய்கவென்று தெய்வத் திற்குப் பராஅயது. நீர்நசைக் கூக்கிய வுயவல் யானை யியம்புணர் தூம்பி னுயிர்க்கு மத்தஞ் சென்றனண் மன்றவென் மகளே பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே (ஐங்குறு. 377) இவ் வைங்குறுநூறு, யாம் 236இவற்றைக்கண்டு வருந்த இவற்றை எமக்கு ஒழித்துத் தான் நீரிலா 237ஆரிடைப் போயினா ளென்றது. என்னு முள்ளினள் கொல்லோ தன்னை நெஞ்சுணத் தேற்றிய வஞ்சினக் காளையோ டழுங்கன் மூதூ ரலரெழச் செழும்பல் குன்ற மிறந்தவென் மகளே (ஐங்குறு.372) இஃது என்னை நினைப்பாளோ வென்றது. இன்னும் இதனானே, செய்யுட்களுள் இவற்றின் வேறுபட வருவனவெல்லாம் அமைத்துக் கொள்க. செல்லிய முயலிற் பாஅய சிறகர் வாவ லுகக்கு மாலையாம் புலம்பப் போகிய வவட்கோ நோவேன் றேமொழித் துணையிலள் கலுழு நெஞ்சின் னிணையே ருண்க ணிவட்குநோ வதுவே (ஐங்குறு.378) இது, தோழி தேஎத்துப் புலம்பல். இஃது ஐங்குறுநூறு. தோழி தேஎத்துமெனப் பொதுப்படக் கூறியவதனான் தோழி யை வெகுண்டு கூறுவனவுங் கொள்க. 238வரியணி பந்தும் வாடிய வயலையு மயிலடி யிலைய மாக்குர னொச்சியுங் கடியுடை வியனகர்க் காண்வரத் தோன்றத் தமியேன் கண்டதன் றலையுந் தெறுவர நோயா கின்றே மகளைநின் றோழி யெரிசினந் தணிந்த விலையி லஞ்சினை வரிப்புறப் புறவின் புலம்புகொ டெள்விளி யுருப்பவி ரமையத் தமர்ப்பன ணோக்கி யிலங்கிலை வெள்வேல் விடலையை விலங்குமலை யாரிடை நலியுங்கொ லெனவே (நற்.305) என வரும். இதுவென் 239பாவைக் கிளியநன் 240பாவை யிதுவென் பைங் 241கிளி யெடுத்த பைங்கிளி யிதுவென் 242பூவைக் கினியசொற் பூவையென் றலம்வரு நோக்கி னலம்வரு சுடர்நுதல் காண்டொறுங் காண்டொறுங் கலங்க நீங்கின ளோவென் பூங்க ணோளே (ஐங்குறு.375) இவ் வைங்குறுநூறு, தேடிக்காணாது வந்தாரைக் கண்டு புலம்பியது. இனி, அவ்வழியாகிய கிளவிகளுட் சில வருமாறு :- ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை யருஞ்சுர நெருநற் சென்றனள் இனியே, தாங்குநி னவல மென்றனி ரதுமற் றியாங்கன மொல்லுமோ வறிவுடை யீரே யுள்ளி னுள்ளம் வேமே யுண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவெ னணியியற் குறுமக ளாடிய மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே (நற்றிணை.184) இந் நற்றிணை, தெருட்டும் அயலில்லாட்டியர்க் குரைத்தது. கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக் கிளிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ யொய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி தாதெரு மறுகின் மூதூ ராங்க ணெருமை நல்லான் பெருமுலை மாந்து நாடுபல விறந்த நன்ன ராட்டிக் காயமு மணியிழந் தழுகின்று தாயு மீன்றோட் டாரா யிறீஇயரென் னுயிரெனக் கண்ணு நுதலு நீவித் தண்ணெனத் தடவுநிலை நொச்சி வரிநிழ லசைஇத் தாழிக் குவளை வாடுமலர் சூடித் தருமணற் கிடந்த பாவையென் அருமக ளேயென முயங்கின ளழுமே (அகம். 165) இம் மணிமிடை பவளத்துத் தாய் நிலையும் ஆயத்து நிலையுங் கண்டோர் கூறியவாறுணர்க. மாண்பில் கொள்கையொடு மயங்குதுயர் செய்த வன்பி லறனு மருளின்று மன்ற வெஞ்சுர மிறந்த வஞ்சி லோதி பெருமட மான்பிணை யலைத்த சிறுநுதற் குறுமகட் காட்டிய வம்மே (ஐங்குறு.394) இவ்வைங்குறுநூறு, தலைவி மீண்டு வந்துழித் தாய் சுற்றத் தார்க்குக் காட்டியது. நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினு மெம்மனை வதுவை நன்மணங் கழிகெனச் சொல்லி னெவனோ மற்றே வென்வேன் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே (ஐங்குறு.399) இவ்வைங்குறுநூறு, தலைவன் மீண்டு தலைவியைத் தன் மனைக்கட் கொண்டுவந்துழி அவன்தாய் 243சிலம்புகழீஇ நோன்பு செய்கின்றாளெனக் கேட்ட நற்றாய் ஆண்டுநின்றும் வந்தார்க்குக் கூறியது. இன்னுஞ் சான்றோர் செய்யுள்களுள் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க. (36) (சேரியுஞ் சுரத்துந் தாயர் தேடிச்செல்வர் எனல்) 37. ஏமப் பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந் தாமே செல்லுந் தாயரு முளரே. இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ - ள்.) ஏமப் பேர்ஊர்ச் சேரியும் சுரத்தும். 244பதியெழு வறியாப் பேரூரிற் றெருவின்கண்ணும் அருவழிக்கண்ணும்; தாமே செல்லும் தாயரும் உளர். தந்தையுந் தன்னையரும் உணரா முன்னம் எதிர்ப்பட்டு மீட்டற்குத் தாமே போகுந் தாயரும் உளர் என்றவாறு. உம்மை எண்ணும்மை. தாயரெனப் பன்மை கூறித் `தாமே யெனப் பிரித்ததனாற் சேரிக்கு நற்றாய் சேறலுஞ், சுரத்திற்குச் செவிலித்தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்த வென்றுணர்க. உதாரணம்: வெம்மலை யருஞ்சுர நம்மிவ ணொழிய விருநில முயிர்க்கு மின்னாக் கான நெருநற் போகிய பெருமடத் தகுவி யைதக லல்குற் றழையணிக் கூட்டுங் கூழை நொச்சிக் கீழ தென்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த 245வண்டலுங் காண்டீரோ கண்ணுடை யீரே (அகம்.275) வண்டலைக் காணார் தேஎத்து நின்று காணில் ஆற்றீரெனக் கூறினமையின் ஆயத்திற்கன்றி இற்புறஞ் சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று. நிலந் 246தொட்டுப் புகாஅர் வான மேறார் பிறங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார் நாட்டி னாட்டி னூரி னூரிற் குடிமுறை குடிமுறை தேரிற் 247கெடுநரு முளரோநங் காத லோரே (குறுந்.130) இது செவிலி தேடத் துணிந்தது. இக் குறுந்தொகையுள் நம்மாற் காதலிக்கப்பட்டாரென்றது அவ் விருவரையும். தாயருமுளரென்றத னாற்றந்தையும் அன்னையரும் வந்தால் இன்னது செய்வலென்றலும் உளவென்று கொள்க. 248நுமர்வரி னோர்ப்பி னல்ல 249தமர்வரின் முந்நீர் மண்டில முழுது மாற்றாது என்றாற் போல்வன. அடி புறத்திடாதாள் புறம்போதலும் பிரிவென்றற்குச் சேரியுங் கூறினார். அஃது ஏமமிலிருக்கை யன்றாதலின். (37) (மனைஅயற் பிரிதலும் பிரிவு ளடங்குமெனல்) 38. அயலோ ராயினு மகற்சி மேற்றே. இதுவும் பாலைக்கு ஒரு வேறுபாடு கூறுகின்றது. (இ-ள்.) அயலோர் ஆயினும் -- முற்கூறிய சேரியினுஞ் சுரத்தினு மன்றித் தம் மனைக்கு அயலே பிரிந்தாராயினும்; அகற்சிமேற்று - அதுவும் பிரிவின்கண்ணதாம் என்றவாறு, எனவே, நற்றாய் தலைவியைத் தேர்ந்து இல்லிற் கூறுவன வுஞ் சேரியிற் கூறுவனவும் பிரிந்தாரைப் பின் சென்றதேயா யிற்று. இக்கருத்தான் ஏமப்பேரூர் என்றார். 250இதனானே மனையயற்கட் பரத்தையிற் பிரிவும் பாலை யென்று உய்த்துணர்க. (38) (உடன் போக்கின்கண் தோழி கூற்றுக்கள் இவையெனல்) 39. தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும் போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணு நீக்கலின் வந்த தம்முறு விழுமமும் வாய்மையும் பொய்மையுங் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினு நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சுகலுழ்ந் தோளை யழிந்தது களைஇய வொழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் றிறத்தோ டென்றிவை யெல்லா மியல்புற நாடி னொன்றித் தோன்றுந் தோழி மேன. இது, தாயர்க்கு உரியன கூறி, தோழிக்குக் கூற்று நிகழுமாறு கூறுகின்றது. (இ - ள்.) தலைவரும் விழுமநிலை எடுத்து உரைப்பினும் - தலைவன் கொண்டுதலைக்கழியாவிடிற் றலைவிகண் தோன்றுந் துன்பநிலையைத் தலைவற்குந் தலைவிக்கும் விளங்கக் கூறினும்; பேர்க்கற்கண்ணும் - அதுகேட்டு இருவரும் போகற்கொருப் பட்டுழித் தலைவியைப் போகவிடும் இடத்தும்; விடுத்தற் கண்ணும் - தலைவியை அவனொடு கூட்டி விடுக்குங்காற் றலைவற்குப் பாதுகாவலாகக் கூறும் இடத்தும்; நீக்கலின் வந்த தம் உறு விழுமமும் - தாயரை நீக்குதலான் தமக்குற்ற வருத்தத் திடத்தும்; வாய்மையும் பொய்மையும் கண்டோர்ச் சுட்டித் தாய்நிலை நோக்கித் தலைப்பெயர்த்துக் கொளினும் - மெய்யும் பொய்யும் உணர்ந்த அறிவரது தரும நூற்றுணிபும் இதுவெனக் கூறிப்பின் சென்று அவரை மீட்டற்கு நினைந்த தாயது நிலைமை அறிந்து அவரை மீளாதபடி அவளை மீடுக் கொளினும், நோய் மிகப் பெருகித் தன் நெஞ்சு கலுழ்ந்தோளை அழிந்தது களைஇய ஒழிந்தது கூறி வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தோடு - தலைவிபோக்கு நினைந்து நெஞ்சு மிகப் புண்ணுற்றுத் தடுமாறுந் தாயை அவ் வருத்தந் தீர்த்தல் வேண்டி உழுவலன்பு காரணத்தாற் பிரிந்தாளென்பது உணரக்கூறி அவளை நெருங்கி வந்து ஆற்றுவித்தல் கூற்றோடே; என்றிவை யெல்லாம் இயல்புற நாடின் ஒன்றித் தோன்றும் தோழி மேன - என்று இச் சொல்லப்பட்டன எல்லாவற்றுக்கண்ணும் இலக்கண வகையான் ஆராயுங் காலத்துத் தான் அவள் என்னும் வேற்றுமையின்றி ஒன்றுபடத் தோன்றும் தோழிமேன கிளவி என்றவாறு. உதாரணம்: வெல்போர்க் குருசினீ வியன்சுர னிறப்பிற் பல்கா ழல்கு லவ்வரி வாடக் குழலினு மினைகுவள் பெரிதே விழவொலி கூந்தனின் மாஅ யோளே (ஐங்குறு. 306) இவ் வைங்குறுநூற்றுட், குழலினும் இரங்குவளென்று பிரிந்தவள் இரங்குதற் பொருள்படத் தோழி தலைவரும் விழுமந் தலைவற்குக் கூறினாள். உன்னங் கொள்கையோ டுளங்கரந் துறையு மன்னை சொல்லு முய்க மென்னதூஉ மீரஞ் சேரா வியல்பிற் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கெளவையு மொழிகம் நாடுக ணகற்றிய வுதியஞ் சேரற் பாடிச் சென்ற பரிசிலர் போல வுவவினி வாழி தோழி யவரே பொம்ம லோதி நம்மொ டொராங்குச் செலவயர்ந் தனரா லின்றே மலைதொறு மால்கழை பிசைந்த கால்வாய் கூரெரி மீன்கொள் பரதவர் கொடுந்திமி னளிசுடர் வான்றோய் புணரி மிசைக்கண் டாங்கு மேவரத் தோன்றும் யாஅவுயர் நனந்தலை யுயவல் யானை வெரிநுச்சென் றன்ன கல்லூர் பிழிதரும் புல்சாய் சிறுநெறிக் காடுமீக் கூறுங் கோடேந் தொருத்த லாறுகடி கொள்ளு மருஞ்சுரம் பணைத்தோ ணாறைங் கூந்தற் கொம்மை வரிமுலை நிரையித ழுண்கண் மகளிர்க் கரிய வாலென வழுங்கிய செலவே (அகம். 65) இதனுள் அன்னைசொல்லும் பெண்டிர் 251கெளவையுந் தலைவரும் விழுமமென்று தலைவிக்குக் கூறினாள். இனிப் போக்கற்கட் கூறுவன பலவுமுள. இலங்குவீங் கெல்வளை யாய்நுதல் கவின் பொலந்தேர்க் கொண்கன் வந்தன னினியே யிலங்கரி நெடுங்க ணனந்த றீர்மதி நலங்கவர் பசலையை நகுகம் யாமே (ஐங்குறு. 200) இவ் வைங்குறுநூற்றின்கண், கண் அனந்தறீர் என்றதனானே உடன்கொண்டு போதற்கு வந்தானெனப் 252பாயலுணர்த்திக் கூறிற்று. வேலும் விளங்கின வினைஞரு மியன்றனர் தாருந் தையின தழையுந் தொடுத்தன நிலநீ ரற்ற வெம்மை நீங்கப் பெயனீர் தலைஇ யுலவையிலை நீத்துக் குறுமுறி யீன்றன மரனே நறுமலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பலவுடன் றேம்படப் பொதுளின பொழிலே கானமு நனிநன் றாகிய பனிநீங்கு வழிநாட் பாலெனப் பரத்தரு நிலவின் மாலைப் போதுவந் தன்றாற் றூதே நீயுங் கலங்கா மனத்தை யாகி யென்சொ னயந்தனை கொண்மோ நெஞ்சமர் தகுவி தெற்றி யுலறினும் வயலை வாடினு நொச்சி மென்சினை வணர்குரல் சாயினு நின்னினு மடவ ணனிநின் னயந்த வன்னை யல்ல றாங்கி நின்னையர் புலிமருள் செம்ம னோக்கி யலமர லின்னுந் தோய்கநின் முலையே (அகம்.259) இவ் வகம், போக்குதற்கண் 253முயங்கிக் கூறியது. அண்ணாந் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த நன்னெடுங் கூந்த னரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கே ழூர வின்கடுங் கள்ளி னிழையணி நெடுந்தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண்கோட் டியானைப் போஒர் கிழவோன் பழையன் வேல்வாய்த் தன்னநின் பிழையா நன்மொழி தேறிய விவட்கே (நற்றிணை.10) இந் நற்றிணை, தலைவியைப் பாதுகாக்கவெனத் தோழி 254கையடைப்படுத்துவித்தது. புதல்வனீன்ற (நற்.355) என்பதும் அது. இவளே நின்னல திலளே யாயுங் குவளை யுண்க ணிவளல திலளே யானு மாயிடை யேனே மாமலை நாட மறவா தீமே இதுவும் அது. விளம்பழங் கமழுங் கமஞ்சூற் குழிசி பாசந் தின்ற தேய்கான் மத்த நெய்தெரி யியக்கம் வெளின்முதன் முழங்கும் வைகுபுலர் விடியன் மெய்கரந்து தன்கா லரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் வரிப்புனை பந்தொடு வைஇய செல்வோ ளிவைகாண் டோறு நோவர் மாதோ வளியரோ வளியரென் னாயத் தோரென நும்மொடு வரவுதா னயரவுந் தன்வரைத் தன்றியுங் கலுழ்ந்தன கண்ணே. (நற்றிணை.12) இந் நற்றிணை, 255போக்குதல் தவிர்ந்ததாம். அவளே, உடனம ராயமொ டோரை வேண்டாது மடமான் பிணையியன் மதர்த்த நோக்கமொ டென்னினு நின்னினுஞ் சிறந்த மென்மொழி யேதி லாளன் காதலி னானாது பால்பாற் படுப்பச் சென்றன ளதனான் முழவிமிழ் பந்தர் வினைபுனை நல்லில் 256விழவயர்ந் திருப்பி னல்லதை யினியே நீயெவ னிரங்குதி யன்னை யாயினுஞ் சிறந்த நோய்முந் துறுத்தே. என்னினும் நின்னினுஞ் சிறந்தோன் தலைவ னென்று தவிர்தல் தருமநூல்விதி என்பது. இனி விழவயர்ந்திருப்பி னல்லதை எனவே மீட்டற்குச் சேறல் அறன் றென்று மீட்டாளா யிற்று. அன்னை வாழியோ வன்னை நின்மக ளென்னினும் யாயினு நின்னினுஞ் சிறந்த தன்னம ரிளந்துணை மருட்டலின் முனாது வென்வேற் புல்லி வேங்கட நெடுவரை மழையொடு மிடைந்த வயக்களிற் றருஞ்சுரம் விழைவுடை யுள்ளமொ டுழைவயிற் பிரியாது வன்கண் செய்து சென்றனள் புன்கண் செல்தல் புரைவதோ வன்றே. இது, தாயை வற்புறுத்தியது, `இயல்புற என்றதனானே தலைவன் கரணவகையான் வரைந்தானாக எதிர்சென்ற தோழிக்கு யான் வரைந்தமை நுமர்க்குணர்த்தல் வேண்டுமென்றாற்கு அவள் உணர்த்தினே னென்றலுந் தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறுதலுங் கொள்க. கருவிரன் மந்திக் கல்லா விளம்பார்ப் பிருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோன் மதிபுடைப் பதுபோற் றோன்று நாட வரைந்தனை நீயெனக் கேட்டியா னுரைத்தனெ னல்லனோ வஃதென் யாய்க்கே (ஐங்குறு 280) புள்ளு மறியாப் பல்பழம் பழுனி மடமா னறியாத் தடநீர் நிலைஇச் சுரநனி யினிய வாகுக வென்று நினைத்தொறுங் கலுழு மென்னினு மிகப்பெரிது கலங்கின்று தோழிநம் மூரே (ஐங்குறு.398) இன்னும், இதனானே செய்யுட்கண் வேறுபட வருவன வெல்லாம் அமைத்துக்கொள்க. ஊஉ ரலரெழச் சேரி கல்லென வானா தலைக்கு மறனி லன்னை தானே யிருக்கத்தன்மனையே யானே நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க வுணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற் கரும்புநடு பாத்தி யன்ன பொருங்களிற் றடிவழி நிலைஇய நீரே. (குறு.262) இது போக்கு 257நேர்ந்தமை தோழி கூறியது; பிறவுமன்ன. (39) (கொண்டுதலைக் கழிந்துழிக் கண்டோர் கூற்றுகள் இவையெனல்) 40. பொழுது மாறு முட்குவரத் தோன்றி வழுவி னாகிய குற்றங் காட்டலு மூரது சார்வுஞ் செல்லுந் தேயமு மார்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் புணர்ந்தோர் பாங்கிற் புணர்ந்த நெஞ்சமோ டழிந்தெதிர் கூறி விடுப்பினு மாங்கத் தாய்நிலை கண்டு தடுப்பினும் விடுப்பினுஞ் சேய்நிலைக் ககன்றோர் செலவினும் வரவினுங் கண்டோர் மொழிதல் கண்டதென்ப. இது, கொண்டுதலைக்கழிந்துழி இடைச்சுரத்துக் கண்டோர் கூறுவன கூறுகின்றது. (இ - ள்.) பொழுதும் ஆறும் உட்குவரத் தோன்றி வழுவின் ஆகிய குற்றம் காட்டலும் - உடன் போயவழி மாலைக்காலமுஞ் சேறற்கரிய வழியும் அஞ்சுவரக் கூறி, அவற்றது தீங்கு காரணமாகப் போகின்றார்க்கு வரும் ஏதம் அறிவித்தலும்; ஊரது சார்வும் செல்லும் தேயமும் ஆர்வ நெஞ்சமொடு செப்பிய கிளவியும் - எம்மூர் அணித்தெனவும் நீர் செல்லுமூர் சேய்த் தெனவும் அன்புடை நெஞ்சத்தாற் கூறுங் கூற்றுகளும்; புணர்ந்தோர் பாங்கின் புணர்ந்த நெஞ்சமொடு அழிந்து எதிர் கூறி விடுப்பினும் - புணர்ந்து உடன்போய இருவர்கண்ணுந் தணவா நெஞ்சினராகி ஆற்றாமை மீதூர ஏற்றுக்கொண்டு நின்று இனி 258இதின் ஊங்குப் போதற்கரியது நும் பதிவயிற்பெயர்தல் வேண்டுமென்று உரைத்து மீட்டலும்; ஆங்கு அத்தாய்நிலைகண்டு தடுப்பினும் விடுப்பினும் - அவ்விடத்துத் தேடிச் சென்ற அச்செவிலியது நிலைகண்டு அவளைத் தடுத்து மீட்பினும், அவர் இன்னுழிச் செல்வரென விடுத்துப் போக்கினும்; சேய் நிலைக்கு அகன்றோர் செலவினும், சேய்த்தாகிய நிலைமைக் கண்ணே நீங்கின அவ்விருவருடைய போக்கிடத்தும்; வரவினும் - செவிலியது வரவிடத்தும்; கண் டோர் மொழிதல் கண்டது என்ப - இடைச்சுரத்துக் கண்டோர் கூறுதல் உலகியல் வழக்கினுட் காணப்பட்ட தென்று கூறுவர் புலவர் என்றவாறு. எம்மூ ரல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரு மூழ்த்தனன் சேர்ந்தனை சென்மோ பூந்தார் மார்ப விளையண் மெல்லியன் மடந்தை யரிய சேய பெருங்க லாறே. (சிற்றெட்டகம்) இதனுள் 259`கதிரும் ஊழ்த்தனன்எனவே பொழுது சேறலும், பெருங்கலாறு எனவே 260ஆற்றதருமையும் பற்றிக் குற்றங் காட்டிய வாறு காண்க. `எல்லுமெல்லின்று (390) என்னுங் குறுந்தொகைப் பாட்டும் அது. நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள் பல்கதிர்ச் செல்வன் கதிரு மூழ்த்தன னணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேர்ந்தனை சென்மே. (பொருளியல்) இஃது, எம்மூர் அணித்தென்றதனாற் சார்வும், அதனானே செல்லுந்தேயஞ் சேய்த்தெனவுங் கூறிற்று. மகட்பயந்து வாழ்வோர்க்கு இவளைக் கண்டு அருள் வருதலின் ஆர்வநெஞ்ச மென்றார். இதுநும் மூரே யாவருங் கேளிர் பொதுவறு சிறப்பின் வதுவையுங் காண்டு மீன்றோ ரெய்தாச் செய்தவம் யாம் பெற்றனமான் 261மீண்டனை சென்மே. இஃது, அழிந்தெதிர் கூறி விடுத்தது. இது கொடுப் போரின்றிக் கரண முண்மை (141) கூறிற்று. மீட்டுழி இன்னுழிச் சென்று இன்னது செய்ப என்றல் புலனெறிவழக்கன்று. பெயர்ந்து போகுதி பெரூமூ தாட்டி சிலம்புகெழு சீறடி சிவப்ப விலங்குவேற் காளையோ டிறந்தனள் சுரனே. சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே. (கலி.9) கடன்மேய சங்கங் கழியடைந்த பெண்ணை மடன்மேய வாழ்குர லன்றில் - கெடலருஞ்சீர் வாமா நெடுங்கோதை வான்றீண்டு கொல்லிமேற் றேமாவின் மேய கனி. இவை செவிலியைத் தடுத்தன. சிலம்புஞ் சிறுநுதலுஞ் சில்குழலும் பல்வளையு மொருபாற் றோன்ற வலங்கலந் திண்டோளு மாடெருத்து மொண்குழையு மொருபாற் றோன்ற விலங்க லருஞ்சுரத்து வேறுருவி னோருடம்பாய் வருவார்க் கண்டே யலங்க லவிர் 262சடையெம் மண்ணல் விளையாட்டென் றகன்றேம் பாவம் இது, தெய்வமென யாங்கள் போந்தேம், நுமக் 263கெய்தச் சேறலா மென்று விடுத்தது. நெருப்பவிர் கனலி யுருப்புச்சினந் தணியக் கருங்கால் யாத்த வரிநிழ லசைஇச் சிறுவரை யிறப்பிற் காண்டி செறிதளிர்ப் பொன்னேர் மேனி மடந்தையொடு வென்வே லண்ணல் முன்னிய சுரனே. (ஐங்குறு. 388) இவ் ஐங்குறுநூறும் அது. அஞ்சுடர்நீள் வாண்முகந் தாயிழையு மாறிலா வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக்கண் - டஞ்சி யொருசுடரு மின்றி யுலகுபா ழாக விருசுடரும் போந்தனவென் றார் (திணைமாலை.71) இஃது, இடைச்சுரத்துக் கண்டோர் கூறிய வார்த்தையைக் கேட்டோராகச் சிலர் கூறியது. அழுந்துபட வீழ்ந்த பெருந்தண் குன்றத் தொலிவ லீந்தி னுலவை யங்காட் டாறுசென் மாக்கள் சென்னி யெறிந்த செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெருந்தலைக் குருளை மாலை மானோக்கு மிண்டிவ ரீங்கைய சுரனே வையெறிற் றையண் மடந்தை முன்னுற் றெல்லிடை நீங்கு மிளையோ னுள்ளங் காலொடு பட்ட மாரி மால்வரை மிளிர்க்கு முருமினுங் கொடிதே. (நற்றிணை.2) காண்பா னவாவினாற் காதலன் காதலிபின் னடவா நிற்ப நாண்பால ளாதலா னன்னுதல் கேள்வன்பின் னடவா நிற்ப வாண்பான்மை குன்றா வயில்வே லவன்றனக்கும் மஞ்சொ லாட்கும் பாண்பால வண்டினமும் பாட வருஞ்சுரமும் பதிபோன் றன்றே. மடக்கண் டகரக் கூந்தற் பணைத்தோள் வார்ந்தவா லெயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கிற் பிணைய லந்தழை தைஇத் துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின் றோளே யெழுமினோ வெழுமினங் கொழுநர்க் காக்க மாரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த வொள்வாண் மலையன தொருவேற் கோடி யாங்குநம் பன்மைய தெவனோவிவ ணன்மைதலைப் படினே. (நற்றிணை.170) இஃது, இடைச்சுரத்துக் குறும்பினுள்ளோர் இவரைக் கண்டு 264கோளிழைப்புற்றாக்கு அவர்பெண்டிர் கூறியது. இவை செலவின்கட் கூறியன. வில்லோன் காலன கழலே தொடி யோண் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொ லளியர் தாமே யாரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற் றொலிக்கும் வேய்பயி லழுவ முன்னி யோரே (குறுந். 7) என்பதும் அது. கடியான் கதிரெறிப்பக் கல்லளையில் வெம்பியவக் கலங்கற் சின்னீ ரடியா னுலகளந்த வாழியா னாக்கிய வமிழ்தென் றெண்ணிக் கொடியான் கொடுப்பக் 265குடங்கையிடங் கொண்டிருந்து குடித்துச் 266சென்ற வடியேர் தடங்கணவ் வஞ்சிக்கொம் பீன்றாரிவ் வருவார் போலும் நமரே யவரெனி னண்ணினீர் சொன்மி னமர்வி லொராவவதி யாய்நின் - றமரோ விளக்கி னனையாளைத் தான்கண்டாள் கண்டேன் களக்கனி வண்ணனை யான் அறம்புரி யருமறை நவின்ற நாவிற் றிறம்புரி கொள்கை யந்தணிர் தொழுவலென் றொண்டொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெ மம்ம சுரத்திடை யவளை யின்றுணை யினிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கன் மலையிறந் தோளே (ஐங்குறு.387) இவை, செவிலி வரவின்கட் கூறின. எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணிர் வெவ்விடைச் செலன்மாலை யொழுக்கத் தீரிவ்விடை யென்மக ளொருத்தியும் பிறண்மக னொருவனுந் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சிய ரன்னா ரிருவரைக் காணிரோ பெரும காணே மல்லேங் கண்டனங் கடத்திடை யாணெழி லண்ணலோ டருஞ்சுர முன்னிய மாணிழை மடவர றாயிர்நீர் போறிர்; பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே; ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யுஞ் சூழுங்கா னும்மக ணுமக்குமாங் கணையளே; எனவாங்கு இறந்த கற்பினாட் கெவ்வம் படரன்மின் சிறந்தானை வழிபடீஇச் சென்றன னறந்தலை பிரியா வாறுமற் றதுவே (கலி.9) என்னும் பாலைக்கலியும் அது. இக்கூறியவாறன்றி இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இச்சூத்திரத்தான் அமைக்க. (40) (உடன்போக்கின்கண்ணும் பிறாண்டுந் தலைவனுடைய கூற்றுகள் இவையெனல்) 41. ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்து மொன்றிய தோழியொடு வலிப்பினும் விடுப்பினு மிடைச்சுர மருங்கி னவடம ரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞ ரெய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை யுளப்பட வப்பாற் பட்ட வொரு திறத் தானு நாளது சின்மையு மிளமைய தருமையுந் தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியு மின்மைய திளிவு முடைமைய துயர்ச்சியு மன்பின தகலமு மகற்சிய தருமையு மொன்றாப் பொருள்வயி னூக்கிய பாலினும் வாயினுங் கையினும் வகுத்த பக்கமொ டூதியங் கருதிய வொருதிறத் தானும் புகழு மானமு மெடுத்துவற் புறுத்தலுற் தூதிடை யிட்ட வகையி னானு மாகித் தோன்றும் பாங்கோர் பாங்கினு மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையுந் தோன்றல் சான்ற மாற்றேர் மேன்மையும் பாசறைப் புலம்பலு முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினுங் காவற் பாங்கி னாங்கோர் பக்கமும் பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன இஃது, உடன்போக்கினுள் நற்றாயுந் தோழியுங் கண்டோருங் கூறுவன கூறித் தலைவன் ஆண்டும் பிறாண்டுங் கூறுங் கூற்றும் கூறுகின்றது. `தமரினும் பருவத்துஞ் சுரத்து மென்னும் மூன்றற்கும் 267`ஒன்றாவென்பதனையும் `ஒன்றிய வென்பதனையுங் கூட்டி ஏழனுருபு விரித்துப் பொருளுரைக்க. (இ-ள்.) ஒன்றாத் தமரினும் - உடன்போக்கிற்கு ஒன்றாத் தாயர் முதலியோர் கண்ணும்; பருவத்தும் - இற்செறிப்பாற் புறம்போகற்கு ஒன்றாமையானுந் தலைவனொடு கூட்டம் பெறாது ஆற்றியிருக்கும் பருவம் ஒன்றாததானும் ஒன்றாப் பருவத்தின் கண்ணும்; சுரத்தும். `அரிய சேய கல்லதர் ஆகலிற் போதற்கு ஒன்றாச் சுரத்தின்கண்ணும்; ஒன்றிய தோழியொடு வலிப்பினும் - தலைவி வேண்டியதே தான் வேண்டுதலிற்பின் தமர் கூறுங் கடுஞ்சொற் கேட்டற்கும் ஒருப்பட்டு நொதுமலர் வரவிற்காற்றாது உடன்போக்கிற் கேலாத கடுங்கோடை யெனக் கருதாது கொண்டுதலைக்கழிதற்கு ஒன்றிய தோழியொடு தலைவன் ஆராய்ந்து உடன்போக்கினைத் துணியினும்; விடுப்பினும் - தலைவியை ஆற்றியிருப்பளெனக் கருதி உடன்கொண்டு போகாது தலைவன் விடுப்பினும்; இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக் கடைக் கொண்டு பெயர்த்தலிற் கலங்கு அஞர்எய்திக் கற்பொடு புணர்ந்த கெளவை உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் - தந்தையுந் தன்னையரும் இடைச் சுரத்திடத்தே பின்சென்று பொருந்தித் தலைவியைப் பெயர்த்தல் வேண்டுதலிற் றலைவி மிகவருந்தித் தமர்பாற்பட்டு உரையாடாது தலைவன் பாற்படுதலின், அவள் கற்பொடு புணர்ந்தமை சுற்றத்தாரும் சுரத்திடைக் கண்டோரும் உணர்ந்த வெளிப்பாடு உளப்படக் கொண்டு தலைக்கழிதற் கூற்றின்கட் பட்ட பகுதிக்கண்ணும். கடைக்கொண்டெய்தியென்க. கடை - பின் தமரெனவே தந்தை தன்னயரை உணர்த்திற்று. முன்னர்த் `தாய்நிலை கண்டு தடுப்பினும் (40) மென்றலின், தாயர்தாமே சென்றமை முன்னத் தாற் றமர் உணர்ந்து, வலிதிற்கொண்டு அகன்றானோ வென்று கருதியும் அவ்வரைவு மாட்சிமைப்படுத்தற்கும் பின்சென்று அவள் பெயராமற் கற்பொடு புணர்ந்தமை கண்டு, தலைவன் 268எடுத்துக்கொண்ட வினைமுடித்தலும் 269ஒருதலை யென்று ணர்ந்து, பின்னர் அவரும் போக்குடன்பட்டு மீள்பவென்று கொள்க. அவ்வெளிப்பாடு கற்பாதலிற் கற்பென்றார். `உளப்பட வென்றதனான் வலித்தலும் விடுத்தலும் அகப்பட வென்றா ராயிற்று. 270நாளது சின்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமை யது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் - வாழ்க்கைநாள் சிலவாதல் ஏதுவாகப் பொருள் செய்தல் குறித்தாரை இளமையது அருமை இன்பத்தின்கண்ணே ஈர்த்து ஒன்றாமை யும், மடியின்மை ஏதுவாகப் பொருள்செயல் குறித்தாரை யாதானும் ஓர் ஆற்றாற் பொருள் செய்யலாகாது. தத்தம் நிலைமைக்கேற்பச் செயல் வேண்டு மென்னுந் தகுதியதமைதி ஒன்றாமையும், இன்மையான் வரும் இளிவரவு நினைத்துப் பொருள்செய்ய நினைந்தாரைப் பொருளுடைமைக் காலத்து நிகழும் உயர்ச்சி அதற்கு இடை யூறாகிப் பொருணசை யுள்ளத்தைத் தடுத்து ஒன்றாமையும், பிரிந்துழி நிகழும் அன்பினது அகலங் காரணமாகப் பொருள் செய்யக் குறித்தரைப் பிரிவாற்றாமை யிடைநின்று தடுத்து ஒன்றாமை யுமாய், ஒன்று ஒன்றனோடு ஒன்றாது வரும் பொருட்டிறத்துப் பிரிதற்குத் தலைவன் உள்ளம் எடுத்த பகுதிக் கண்ணும்; எனவே, நாளது சின்மையுந், தாளாண்பக்கமும், இன்மைய திளிவும், அன்பின தகலமும், பொருள் செயல்வகைப்பால ஆதலும், இளமையதருமையுந், தகுதிய தமைதியும், உடைமைய துயர்ச்சியும், அகற்சிய தருமையும் இன்பத்தின்பால ஆதலுங் கூறினார். இவ்வெட்டும் பொருள் செயற்கு ஒன்றா வென்னாமோ எனின், வாழ்நாள் சிறிதென்று உணர்ந்து அதற்குள்ளே பொருள் செய்து அறமும் இன்பமும் பெறுதற்குக் கருதிய வழி, ஆண்டு, முயற்சியும் இன்மையான்வரும் இளிவரவும் அதற்கு ஒருப்படுத்துங் கருவி யாதலானும், பொருள், பின்பு அன்பிற்குப் பெருக்கந் தருமாதலானும், இந் நான்கும் பொருள் செய்தற்கு வேண்டுமென மறுக்க. இவ்வெட்டற்குந் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கண்டுகொள்க. ஈதலுந் துய்த்தலு மில்லோர்க் கில்லெனச் செய்வினை கைம்மிக வெண்ணுதி யவ்வினைக் கம்மா வரிவையும் வருமோ வெம்மை யுய்த்தியோ வுரைத்திசி னெஞ்சே (குறுந்.63) இக் குறுந்தொகையுள் இன்மையதிளிவு நெஞ்சிற்குக் கூறிய வாறு காண்க. `பகுதிஎன்றதனானே, தலைவன் பிரிவலெனக் கூறுவனவும் பிறவுங் கொள்க. இன்றே சென்று வருது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக விளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீசுக் கொள்ளியிற் பைம்பயிர் துமியக் காலியற் செலவின் மாலை யெய்திச் சின்னிரை வால்வளைக் குறுமகள் பன்மா ணாக மணந்துவக் குவமே (குறுந். 189) எனவரும். இது குறுந்தொகை. இவை வணிகர்க்கே உரியன. இனித் தலைவன் கூற்றினைத் தலைவியுந் தோழியுங் கொண்டு கூறுவன பெரும்பான்மை. அவையெல்லாம் நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே (44) என மேல்வருஞ் சூத்திரத்துட் காட்டுதும். வாயினுங் கையினும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் - உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத்திடத்துங் கூறுபடுத்துக் கூறிய நூல்களாற் பெறும் பயனைக் கருதிய ஒரு கூற்றின் கண்ணும்; என்றது, வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு மென்றதாம். இதற்குத் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கொள்க. புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் - 271போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறுத்தல் (புறம் 8) அரசியலன்றாத லிற் றமக்கேற்ற புகழும் பெருமையும் எடுத்துக்காட்டி இதனாற் பிரிதுமெனத் தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற் கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. தூது இடையிட்ட வகையினானும் - இதுபெரு வேந்தர் பொருவது குறித்துழி இருவரையுஞ் சந்து செய்வித்தற் பொருட்டுக் கூட்டத்திற்கு இடையிட்ட பிரிதற் பகுதிக் கண்ணும்: ஒருவனுழை ஒருவன் 272மாற்றங்கொண் டுரைத்தலிற் றூதாயிற்று. `வகையென்றார், வணிகரின் அரசர்க்கும் அரசரின் அந்தணர்க்குந் தூது சிறந்ததென்றற்கும், குறுநில மன்னர்க்குப் பெரும்பான்மை யென்றற்கும், வேந்தர் தம்மின் இழிந்தாருழைத் தூதுசேறல் உரித்தன்றென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் - தனக்கு ஆக்கஞ் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு உற்றுழி உதவச் சேறற்கண்ணும்; இதற்கு மலைமிசைக் குலைஇய (அகம். 84) என்பதூஉம் இருபெரு வேந்தர் மாறுகொள் (அகம். 174) என்பதூஉம் முன்னர்க் காட்டினாம். (சூ. 24. உரை) அவற்றை உதாரணமாக் கூறிக்கொள்க. மூன்றன் பகுதியும் - அறத்தினாற் பொருளாக்கி அப் பொருளாற் காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்; மண்டிலத்து அருமையும் - அங்ஙனம் பொருள் வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமை கூறிப் பிரிதற்கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. `தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற புகழினராகிய வேற்று வேந்தர்தமது மீக்கூற்றங் கருதிப் பிரிதற்கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக்காண்க. `தோன்றல் சான்ற என்றதனாற் றெவ்வர் தன்னின் மிக்காரெனக் கேட்டுழி அழுக்காறு தோன்றலின், அதுவும் பிரிதற்கு ஏதுவாமென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து. பாசறைப் புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத் தனிமை கூறும் இடத்தும்; இதனைக் `கிழவி நிலையே (தொல், பொ. கற். 45) என்றுஞ் சூத்திரத்தான் விலக்குவரெனின், அதற்கு உம்மை விரித்துக் கிழவி நிலையை வினைசெய்யாநிற்றலாகிய இடத்து நினைந்து கூறினானாகக் கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றுமென்று பொருளாமென்றுணர்க. முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் - வகையின் வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட வினை முடிந்த காலத்துத் தான் போக்கொருப் பட்டு நின்று பாகனொடு விரும்பிக் கூறிய வகையின்கட் டோன்றிய வேறொரு வினைத்திறத்திடத்தும்; என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகைமேற் சேறல் உளதாதலை. காவற்பாங்கின் பக்கமும் - வேந்தன் றன்னாற் காக்கப் படுவனவாகிய பகுதிகளின் கூற்றிற் பிரியுமிடத்தும்; பகுதி ஆகுபெயர்; அவையானை குதிரை முதலியவற்றைக் காத்தலும், அரசர்க்குத் தருமமாகிய வேட்டையிற்சென்று கடுமா கொன்று ஏனையவற்றைக் காத்தலும் முதலியன. ஆங்கோர் பக்கமும் - அவன் காத்தற்குரிய பகுதிக்கண்ணே நிற்பார் கூற்றிற் பிரியுமிடத்தும்; அவர் தாபதர் முதலியோர் பலருமாம். பரத்தையின் அகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு - பரத்தையிற் பிரிதற் காரணத்தாற் பரிபுலம்பெய்திய தலைவியை எய்தி இரத்தலும் இரந்தபின்னர் ஊடலுணர்த்தலும் என்ற இரு பகுதியோடே; உரைத்திற நாட்டம் கிழவோன் மேன - முற்கூறிய இடங்களிற் கூற்று நிகழுங் கூறுபாட்டை நிலைபெறுத்துதல் தலை மகனிடத்தனவாம் என்றவாறு. உதாரணம்: ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வர றுணிந்த விவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே இது - தோழியொடு வலித்தது. அப்பாற்பட்ட ஒருதிறத்தானும் என்றதனானே, தலைவி யிடத்துத் தலைவன் கூறுவன பலவுங் கொள்க. உதாரணம்: வாள்வரி வயமான் கோளுகி ரன்ன செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின் சிதரற் செம்ம றாஅய மதரெழின் மாணிழை மகளிர் பூணுடை முலையின் முகைபிணி யவிழ்ந்த கோங்கமொ டசைஇநனை யதிரல் பரந்த வந்தண் பாதிரி யுதிர்வீ யஞ்சினை தாஅ யெதிர்வீ மராஅ மலரொடு விராஅய்ப் பராஅ மணங்குடை நகரின் மணந்த பூவி னன்றே கான நயவரு மம்ம கண்டிசின் வாழியர் குறுமக ணுந்தை யடுகளம் பாய்ந்த தொடிசிதை மருப்பிற் பிடிமிடை களிற்றிற் றோன்றுங் குறுநெடுந் துணைய குன்றமு முடைத்தே இவ் வகப்பாட்டுத் தலைவியை 273மருட்டிக் கூறியது. உயர்கரைக் கானியாற் றவிரற லகன்றுறை வேனிற் பாதிரி விரைமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரன் மகளே கண்ணினுங் கதவநின் முலையே முலையினுங் 274கதவநின் றடமென் றோளே (ஐங்குறு. 361) இவ் வைங்குறுநூறு, உடன்போயவழித் தலைவன் புகழ்ச்சிக்கு நாணித் தலைவி கண்புதைத்துழி அவன் கூறியது. அழிவில முயலு மார்வ மாக்கள் வழிபடு தெய்வங் கட்கண் டாஅங் கலமரல் வருத்தந் தீர யாழநின் னலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற் பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி நிழல்காண் டோறு நெடிய வைகி மணல்காண் டோறும் வண்ட றைஇ வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே மாநனை கொழுதி மகிழ்குயி லாலு நறுந்தண் பொழில கானங் குறும்பல் லூரயாஞ் செல்லு மாறே (நற்றிணை. 9) என வரும். இது, புணர்ச்சி மகிழ்ந்தபின் வழிவந்த நன்மை கூறி வருந்தாது ஏகென்றது. இது நற்றிணை. பிறவும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉ மாநிலைப் பள்ளி யல்க நம்மொடு மானுண் கண்ணியும் வருமெனின் வாரார் யாரோ பெருங்க லாறே 275இது, விடுத்தற்கட் கூறியது. வினையமை பாவையி னியலி நுந்தை மனைவரை யிறந்து வந்தனை யாயிற் றலைநாட் கெதிரிய தண்பத வெழிலி யணிமிகு கானத் தகன்புறம் பரந்த கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டு நீவிளை யாடுக சிறிதே யானே மழகளி றுரிஞிய பராரை வேங்கை மணலிடு மருங்கி னிரும்புறம் பொருந்தி யமர்வரி னஞ்சேன் பெயர்க்குவெ னுமர்வரின் மறைகுவென் மாஅ யோயே. (நற்றிணை. 362) இது நற்றிணை. நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின் முந்நீர் மண்டில முழுது மாற்றா தெரிகணை விடுத்தலோ விலனே யரிமதர் மழைக்கண் கலுழ்வகை யெவனே. இவை, தமர் வருவரென ஐயுற்றுக் கூறியன. அவர் வந்து கற்பொடு புணர்ந்தன வந்துழிக் காண்க. அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் பெயர்ந்தநங் காதலர் வருவர்கொல் வயங்கிழா அய் வலிப்பல்யான் கேஎளினி (கலி.11) இதனுள் என என்றதனால் தலைவன் கூற்றுப் பெற்றாம். இது 276மூன்றன் பகுதி. புகழ்சால் சிறப்பிற் காதலி புலம்பத் துறந்துவந் தோயே யருந்தொழிற் கட்டூர் நல்லேறு தழீஇ நாகுபெயர் காலை யுள்ளுதொறுங் கலிழு நெஞ்சம் வல்லே யெம்மையும் வரவிழைத் தனையே (ஐங்குறு.445) இது, பகைவயிற் பிரிந்தோன் பருவங்கண்டு தலைவியை நினைந்து நெஞ்சொடு புலம்பியது. முல்லைநாறுங் கூந்தல் கமழ்கொள நல்ல காண்குவ மாஅ யோயே பாசறை யருந்தொழி லுதவிநங் காதனன் னாட்டுப் போதரும் பொழுதே (ஐங்குறு.446) இது, வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவவரவின்கண் 277உருவு வெளிப்பட்டுழிப் புலம்பியது. உதவியென்றலின் வேந்தற்குற்றுழியாயிற்று. வந்தாற்றான் செல்லாமோ வாரிடையாய் வார்கதிரால் வெந்தாற்போற் றோன்றுநீள் வேயத்தந் - தந்தார் தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி மகரக் குழைமறித்த நோக்கு (திணைமாலை. 77) இஃது, உருவு வெளிப்பட்டுழி நின்னொடு போதுவே னென்று அவளை ஆற்றுவித்தது. திணைமாலையிற் பாலை. நனிசேய்த் தென்னாது நற்றே ரேறிச் சென் றிலங்கு நிலவி னிளம்பிறை போலக் காண்குவெந் தில்லவவள் கவின்பெறு சுடர்நுதல் விண்ணுய ரரண்பல வௌவிய மண்ணுறு முரசின் வேந்துதொழில் விடினே (ஐங்குறு.443) இது, வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் தான் குறித்த பருவத்து வினைமுடியாமையிற் புலம்பியது. தழங்குரன் முரசங் காலை யியம்பக் கடுஞ்சின வேந்தன் றொழிலெதிர்ந் தனனே மெல்லவன் மருங்கின் முல்லை பூப்பப் பொங்குபெயற் கனைதுளி காரெதிர்ந் தன்றே யஞ்சி லோதியை யுள்ளுதொறுந் துஞ்சா தலமர னாமெதிர்ந் தனமே (ஐங்குறு. 448) இது, 278வேந்தற்குற்றுழிப் பிரிந்தோன் பருவம் வந்துழி மீளப் பெறாது அரசன்செய்தியும் பருவத்தின் செய்தியுந் தன்செய்தியுங் கூறிப் புலம்பியது. 279இப் பாசறைப்புலம்பல் பத்தினுள்ளும் வேறுபாடு காண்க. தூதிற் பிரிந்துழிப் புலம்பியன வந்துழிக் காண்க. நீடின மென்று கொடுமை தூற்றி வாடிய நுதல ளாகிப் பிறிது நினைந் தியாம்வெங் காதலி நோய்மிகச் சாஅய்ச் சொல்லிய துரைமதி நீயே முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே (ஐங்குறு.478) இது, தூதுகண்டு அவள் கூறிய திறங் கூறெனக் கேட்டது. பனிமலர் நெடுங்கண் பசலை பாயத் துனிமலி துயரமொ டரும்பட ருழப்போள் கையறு நெஞ்சிற் குயவுத்துணை யாகச் சிறுவரைத் தங்குவை யாயிற் காண்குவை மன்னாற் பாணவெந் தேரே (ஐங்குறு.477) இது, தலைவிமாட்டுப் பாணனைத் தூதாக விடுத்த தலைவன் கூறியது. 280படுந்தடங்கட் பல்பணைபோல் வாள்முழங்கன் மேலுங் கொடுந்தடங்கட் கூற்றமின் னாக - நெடுந்தடங்க ணீர்நின்ற நோக்கி னெடும்பணைமென் றோளாட்குத் தேர்நின்ற தென்னாய்நீ சென்று (திணைமாலை 115) இஃது, இளையோரைத் தூதுவிட்டது. 281ஐய வாயின செய்யோள் கிளவி கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தென நோய்நன்கு செய்தன வெமக்கே யாமுறு துயரமவ ளறியினோ நன்றே (ஐங்குறு. 441) இது, வினைமுடியாமையிற் பருவங்கண்டு மீளப்பெறாத தலைவன் தூதர் வார்த்தை கேட்டு வருந்தியது. பிறவும் வேறுபட வருவன கொள்க. 282முரம்பு கண் ணுடையத் திரியுந் திகிரியொடு பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே யொண்ணுதற் காண்குவம் வேந்துவினை விடினே (ஐந்குறு. 449) இது, வேந்தன் திறைகொண்டு மீள்வுழித் தானுஞ் சமைந்த தேரை அழைத்துக் கண்டு திண்ணிதின் மாண்டன்று தேர்எனப் பாகனொடு கூறியவழி அவ்வேந்தன் திறைவாங்காது வினைமேற் சென்றானாகப் பாகனை நோக்கிக் கூறியது. இவை ஐங்குறுநூறு. மலைமிசைக் குலைஇய என்னும் (84) அகப்பாட்டும் அது. கலித்தொகையுள் புத்தியானை வந்தது காண்பான் யான் றங்கினேன் (97) என்பன முதலியவற்றான் யானை முதலிய வற்றையும், கடவுட்பாட்டால் (93) தாபதரையுங் காத்தற்குப் பிரிந்தே னெனக் கூறினானென்பது பெற்றாம். ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க் கடியரோ வாற்றா தவர்; கடியர்தமக், கியார்சொல்லத் தக்கரா மற்று; வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின் மாய மருள்வா ரகத்து; ஆயிழாய், நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா வென்க ணெவனோ தவறு; இஃதொத்தன், புள்ளிக் கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவு மொள்ளிதழ் சோர்ந்தநின் கண்ணியு நல்லார் சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந் தவறாதல் சாலாவோ கூறு; அதுதக்கது, வேற்றுமை யென்கண்ணோ வோராதி தீதின்மை தேற்றக்கண் டீயாய் தெளிக்கு; இனித் தேற்றேம் யாம்; தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீகூறும் பொய்ச்சூ ளணங்காயின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு. (கலி. 88) இதனுள் 283இரத்தலுந் தெளித்தலும் வந்தவாறு காண்க. பிறவும் இவ்வாறு வருவன கொள்க. (41) (உடன்போக்கின் கண் செவிலி முதலியோருங் கூறப்பெறுவர் எனல்) 42. எஞ்சி யோர்க்கு மெஞ்சுத லிலவே. இது, முன்னர்க் கூற்றிற்கு உரியரெனக் கூறாதோர்க்குங் கூற்று விதித்தலின் எய்தாததெய்துவித்தது. (இ - ள்.) எஞ்சியோர்க்கும் - முன்னர்க்கூறாது நின்ற செவி லிக்கும் தலைவிக்கும் ஆயத்தோர்க்கும் அயலோர்க்கும் எஞ்சு தல் இலவே - கூற்றொழிதல் இல என்றவாறு. செவிலிகூற்று நிகழுமாறு :- கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோ ளளியு மன்புஞ் சாயலு மியல்பு முன்னாட் போலா ளிறீஇயரென் னுயிரெனக் கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த கடுங்கட் கறவையிற் சிறுபுற நோக்கிக் குறுகச் சென்று குவவுநுத னீவி மெல்லெனத் தழீஇயினெ னாக வென்மக ணன்ன ராகத் திடைமுலை வியர்ப்பப் பன்மாண் முயங்கினண் மன்னே யன்னோ விறன்மிகு நெடுந்தகை பலபா ராட்ட வறனிழ லசைஇ வான்புலந்து வருந்திய மடமா னசாவினந் திரங்குமரல் சுவைக்குங் காடுடன் கழித லறியிற் றந்தை யல்குபத மிகுந்த கடியுடை வியனகர்ச் செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழற் போலக் கோதை யாயமே டோரை தழீஇத் தோடமை யரிச்சிலம் பொலிப்பவ ளாடுவழி யாடுவழி யகலேன் மன்னே. (அகம். 49) இவ் வகப்பாட்டு, உடன்போன தலைவியை நினைந்து செவிலி, மனையின்கண் மயங்கியது. அத்த நீளிடை யவனொடு போகிய முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவர றாய ரென்னும் பெயரே வல்லா றெடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே (ஐங்குறு. 380) இவ் வைங்குறுநூறு, செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது. முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின என்னும் அகப்பாட்டு (7) மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின் சென்று 284நவ்விப்பிணையைக் கண்டு சொற்றது. செவிலி 285கானவர்மகளைக் கண்டு கூறியதுமாம். காலே பரிதப் பினவே கண்ணே நோக்கி நோக்கி வாளிழந் தனவே யகலிரு விசும்பின் மீளினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. (குறுந். 44) இக் குறுந்தொகை. செவிலி கடத்திடைத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. இடிதுடிக் கம்பலையு மின்னாத வோசையு மிசையி னாராக் கடுவினை யாளர் கடத்திடைப் பைங்குரவே கவன்று நின்றாய் கொடுவினை மேற்செய்த வெம்மேபோ னீயும் படுசினைப் பாவை பறித்துக்கோட் பட்டாயோ பையக் கூறாய். இது, செவிலி குரவொடு புலம்பியது தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய்நீ பாவை யிருங்குரவே - யீன்றாண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டா யீதென்று வந்து. (திணைமாலை. 65) இது, குரவே வழிகாட்டென்றது குடம்புகாக் கூவற் குடிகாக்குஞ் சின்னீ ரிடம்பெறா மாதிரியு மேறாநீ ளத்த முடம்புணர் காத லுவப்ப விறந்த தடம்பெருங் கண்ணிக்கு யான்றாயர் கண்டீர். இது, நீயாரென்று வினாயினார்க்குச் செவிலி கூறியது. இன்னும் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. இனித் தலைவி கூற்று நிகழுமாறு:- பையப் பசந்தன்று நுதலுஞ் சாஅ யைதா கின்றென் றளிர்புரை மேனியும் பலரு மறியத் திகழ்தரு மவலமு முயிர்கொண்டு கழியி னல்லதை நினையி னெவனோ வாழி தோழி பொரிகாற் பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற வாலி யொப்பின் றூம்புடைத் திரள்வீ யாறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க வீன லெண்கி னிருங்கிளை கவருஞ் சுரம்பல கடந்தோர்க் கிரங்குப வென்னார் கெளவை மேவல ராகி யிவ்வூர் நிரையப் பெண்டி ரின்னா கூறுவ புரைய வல்லவென் மகட்கெனப் பரைஇ நம்முணர்ந் தாறிய கொள்கை யன்னை முன்னர்யா மென்னிதற் படலே. (அகம். 95) இது, போக்குடன் பட்டமை தலைவி தோழிக்குரைத்தது. அகம். அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீந்துக் காங்குத் தாங்கு மளவை தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே. (குறுந் 149) இக் குறுந்தொகை நாண்நீங்கினமை கூறியது. சிலரும் பலருங் கடைக்க ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப நூற்றச் சிறுகோல் வலத்த ளன்னை யலைப்ப வலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமான் பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே. (நற்றிணை.149) இந் நற்றிணை, அலரச்சம் நீங்கினமை கூறியது. சேட்புல முன்னிய வசைநடை யந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த் தாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின் வாரிடை யிறந்தன ளென்மி னேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே. (ஐங்குறு. 384) 286இவ் வைங்குறுநூறு, யான் போகின்றமை ஆயத்திற்கு உரைமின் என்றது. கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக் கோள்வல் வேங்கைய மலைபிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க ணற்றோ ணயந்து பாராட்டி யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே. (ஐங்குறு. 385) 287இவ் வைங்குறுநூறு, இன்று யான் தேரேறி வருத்தமின்றிப் போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது. கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ் சுரநனி வாரா நின்றன ளென்பது முன்னுற விரைந்தனி ருரைமி னின்னகை முறுவலெம் மாயத் தோர்க்கே. (ஐங்குறு. 397) 288இவ் வைங்குறுநூறு, மீள்கின்றாளென்று என் வரவு ஆயத்தார்க்குக் கூறுமின் என்றது. வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற வாய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப் பரியல் வாழி தோழி பரியி னெல்லையி லிடும்பை தரூஉ நல்வரை நாடனொடு வந்த வாறே. (ஐங்குறு. 392) இவ் வைங்குறுநூறு, மீண்டுவந்த தலைவி வழிவரல் வருத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது. அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே. (ஐங்குறு.203) இஃது, 289உடன்போய் மீண்ட தலைவி நீ சென்றநாட்டு நீர் இனிய வல்ல; எங்ஙனம் 290நுகர்ந்தாயென்ற தோழிக்குக் கூறியது. அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ வறனுண் டாயினு மறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற வருவிக் கோள்வரு 291மென்னையை மறைத்த குன்றே. (ஐங்குறு. 312). இவ் வைங்குறுநூறு, நின்ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என்னென்ற தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது. பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க. இனி ஆயத்தார்கூற்று நிகழுமாறு:- மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப தடமென் றோளி யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப் பஞ்சின் மெல்லடி பரல்வடுக் கொளவே. இனி அயலோர் கூற்று நிகழுமாறு:- துறந்ததற் கொண்டுந் துயரடச் சாஅ யறம்புலந்து பழிக்கு மங்க ணாட்டி யெவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளோநின் மடமகள் வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே. (ஐங்குறு. 393). செய்யுளியலுள் பார்ப்பான் பாங்கன் (501) பாணன் கூத்தன்(502) என்னுஞ் சூத்திரங்களாற் பார்ப்பான் முதலியோர் கூற்றுக் கூறுமாறு உணர்க. (42) (தமக்குள் முன்னிகழ்ந்தவற்றைப் பின் தலைவனுந் தலைவியும் நினைப்பாரெனல்) 43. நிகழ்ந்தது நினைத்தற் கேதுவு மாகும். இதுவும் பாலையாவதோர் இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) முன்னர் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்குமுரிய நிமித்தமாம் என்றவாறு. என்றது, முன்னர்த் தலைவன்கண் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர்த் தலைவி நினைத்தற்கும் ஏதுவுமாம். முன்னர்த் தலைவி கண் நிகழ்ந்ததோர் நிகழ்ச்சி பின்னர்த் தலைவன் நினைத்தற்கும் ஏதுவுமாமென்றவாறாம். 292உம்மை எச்சவும்மையாதலிற் கூறுதற்குமாம் என்று கொள்க. நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென் ணொன்ணுதல் நீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும். (கலி. 4) இது, தலைவன்கண் நிகழ்ந்த 293மிகுதித்தலையளி வஞ்சமென்று தலைவி உட்கொண்டு பிரியுங்கொல்லென நினைத்தற்கு நிமித்தமாயிற்று. இதனானே தலைவன் செய்திகளாய்ப் பின்னர்த் தலைவி கூறுவனவற்றிற்கெல்லாம் இதுவே 294ஓத்தாக அமைத்துக் கொள்க. இனி, அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள் விளிநிலை கொள்ளா டமியண் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக் குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் கண்ணிய துணரா வளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன் முளிந்த வோமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப வுதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கு நிரைநிலை யதர பரன்முரம் பாகிய பயமில் கான மிறப்ப வெண்ணுதி ராயி னறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி யன்ன வாக வென்னுநள் போல முன்னங் காட்டி முகத்தி னுரையா வோவச் செய்தியி னொன்றுநினைந் தெற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத் தூநீர் பயந்த துணையமை பிணையன் மோயின ளுயிர்த்த காலை மாமலர் மணியுரு விழந்த வணியழி தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே யொண்டொடி யுழைய மாகவு மினைவோள் பிழையலண் மாதோ பிரிதுநா மெனினே. (அகம். 5) இருங்கழி முதலை மேஎந்தோல்... ... ஞான்றே. (அகம். 3) வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை கந்துபிணி யாணை யயாவுயிர்த் தாஅங் கென்றூழ் நீடிய வேய்பயி லழுவத்துக் குன்றூர் மதிய நோக்கி நின்றுநினைந் துள்ளினெ னல்லனோ யானேமுள் ளெயிற்றுத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுத லெமது முண்டோர் மதிநாட் டிங்க ளுரறுகுரல் வெவ்வளி யெடுப்ப நிழறப வுலவை யாகிய மரத்த கல்பிறங்கு மாமலை யும்பரஃ தெனவே. (நற்றிணை.62) 295இவை தலைவிகண் நிகழ்ந்தனவும் அவள் தன்மையும் பின்னர்த் தலைவன் நினைந்து செலவழுங்குதற்கு நிமித்த மாயவாறு காண்க. அறியாய் வாழி தோழி யிருளற (அகம். 53) என்பது தலைவன்கண் நிகழ்ந்தது தலைவி நினைந்து தோழிக்குக் கூறியது. நெஞ்சு நடுக்குற (23) என்னும் பாலைக்கலியும் அது. உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள் விறலிழை யவரொடும் விளையாடு வான்மன்னோ பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் 296துருத்திசூழ்ந் தறல்வாரும் வையையென் றறையுந ருளராயின். (கலி.30) இதுவும் அது. ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பொரியரை வேம்பின் புள்ளி நீழற் 297கட்டளை யன்ன 298வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் 299நெல்லிவட் டாடும் வில்லே ருழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த 300வுரன்மாய் மாலை யுள்ளினெ னல்லனோ யானே யுள்ளிய வினைமுடித் தன்ன வினியோண் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே. (நற்றிணை.3) என்ற நற்றிணையும் அது. இவ்வாறன்றி வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (43) (தலைவியும் தோழியும் தலைவன்கண் நிகழ்ந்த கூற்றைக் கூறிநிற்றலும் பாலையெனல்) 44. நிகழ்ந்தது கூறி நிலையலுந் திணையே. இஃது ஒன்றாத் தமரினும் (41) என்னுஞ் சூத்திரத்திற்கோர் புறனடை கூறுகின்றது. (இ - ள்.) நிகழ்ந்தது கூறி - ஒன்றாத் தமரினும் என்னுஞ் சூத்திரத்துத் தலைவன்கண் நிகழ்ந்த கூற்றினைத் தலைவியுந் தோழியுங் கூறி, நிலையலுந் திணையே. அதன்கண்ணே நிலை பெற்று நிற்றலும் பாலைத்திணையாம் என்றவாறு. உதாரணம்: அரும்பொருள் வேட்கையி னுள்ளந் துரப்பப் பிரிந்துறை சூழாதி யைய விரும்பிநீ யென்றோ ளெழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கு நினைத்துக்காண் சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவா தொழிந்தவ ரெல்லாரு முண்ணாதுஞ் செல்லா ரிளமையுங் காமமு மோராங்குப் பெற்றார் வளமை விழைதக்க துண்டோ வுளநா ளொரோஒகை தம்முட் டரீஇ யொரோஒகை யொன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினு மொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை யரிதரோ சென்ற விளமை தரற்கு. (கலி. 18) இதனுள், உளநாள் என்றது, நாளது சின்மை; அரிதரோ சென்ற இளமை தரற்கு என்றது இளமையதருமை உள்ளந் துரப்ப என்றது உள்ளத்தான் உஞற்றுதலால் தாளாண்பக்கம்; சென்றோர் முகப்பப் பொருளுங் கிடவாது என்றது தகுதியது அமைதி, தத்த நிலைமைக்கேற்பப் பொருள்செய்ய வேண்டுத லின் அது பாணிக்கு மென்றலின் ஒரோஒகை தம்முட் டழீஇ ஒரோஒகை, ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யாயினும் என்றது இன்மைய திளிவு; வளமை விழைதக்கதுண்டோ என்றது உடைமைய துயர்ச்சி; பிரிந்துறை சூழாதி ஐய என்றது அன்பினதகலம்; பிரிந்துறைந்தன்பு பெருக்கல் வேண்டா தம்மு ளொன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை என்றலின்; தொய்யிலும் ... ...சுணங்கும் நினைத்துக்காண் என்றது அகற்சிய தருமை. இவ்வெட்டுந் தாமே கூறல் வேண்டினமையின் முன்னொருகால் தலைவன் கூறக் கேட்டுத் தோழியுந்தலைவியும் உணர்ந்தமை கூறியவாறு காண்க. பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ (கலி. 15) என்பது ஓதற்குப் பிரிவலெனத் தலைவன் கூறியது கேட்ட தோழி கூறியது. நோற்றோர் மன்ற தாமே கூற்றங் கோளுற 301விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத் 302தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர் நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந் 303தாழல் வாழி தோழி தாழா துருமெனச் சிலைக்கு மூக்கமொடு பைங்கால் வரிமர னோன்ஞாண் வார்சிலைக் கொளீஇ யருநிறத் தழுத்திய வம்பினர் பலருட னண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லி னாண்மகி ழயருங் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும் பழகுவ ராதலோ வரிதே 304முனாஅது முழவுறழ் திணிதோ ணெடுவே ளாவி பொன்னுடை நெடுநகர்ப் பொதினி யன்னநின் னொண்கேழ் வனமுலைப் பொலிந்த நுண்பூ ணாகம் பொருந்துதன் மறந்தே (அகம். 61) இவ் வகப்பாட்டில் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து வீழ்ந்தாரே துறக்கம் பெறுவரெனத் 305தன் சாதிக் கேற்பத் தலைவன் புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள். வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார் தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய் கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ தண்பனி நாளே தனித்து என்பது 306குறைமொழிந்து வேண்டினமை தலைவன் கூறக் கேட்ட தோழி கூறியது. `அரிதாய வறனெய்தி (கலி. 11) என்றது மூன்றன்பகுதி (41) தலைவன் கூறக்கேட்ட தலைவி கூறியது. யானெவன் செய்கோ தோழி பொறிவரி 307வானம் வாழ்த்தி பாடவு மருளா துறைதுறந் தெழிலி நீங்கலிற் பறையுடன் மரம்புல் லென்ற முரம்புயர் நனந்தலை யரம்போழ் நுதிய வாளி யம்பி னிரம்பா நோக்கி னிரையங் கொண்மார்bநல்லிÚளிடைbயல்லி k©o நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடு மெழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கு 308மொழிபெயர் தேஎந் தருமார் மள்ளர் கழிப்பிணிக் கறைத்தோ னிரைகண் டன்ன 309வுவலிடு பதுக்கை யாளுகு பறந்தலை 310யுருவில் பேஎ யூராத் தேரொடு நிலம்படு மின்மினி போலப் பலவுட னிலங்கு பரலிமைக்கு மென்பதந் நலந்துறந் துறைநர் சென்ற வாறே (அகம். 67) இது, மண்டிலத்தருமை தலைவன் கூறக்கேட்ட தோழி கூறியது. நந்நிலை யறியா ராயினுந் தந்நிலை யறிந்தனர் கொல்லோ தாமே யோங்குநடைக் காய்சின யானை கங்குற் சூழ வஞ்சுவர விறுத்த தானை வெஞ்சின வேந்தன் பாசறை யோரே (அகம். 264) இது, தலைவன் பாசறைப் புலம்பினமை கூறக்கேட்ட தலைவி நந்நிலை அறியாராயினும் எனக் கூறினாள். `திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை (கலி.26) என்பது காவற் பாங்கின்கண் தலைவன் கூறியது கேட்ட தலைவி கூறியது. பிறவும் வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (44) (மரபு திரியாமல் சில பொருள் திணைகளின்கண் விரவுமெனல்) 45. மரபுநிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவு மென்ப. இது, மரபியலுட் கூறப்படும் மரபன்றி அகத்திணைக்கு உரிய மரபுகள் கூறுகின்றது. (இ - ள்.) மரபுநிலை திரியா மாட்சிய ஆகி - புலனெறி வழக்கஞ் செய்து வருகின்ற வரலாற்று முறைமை திரியாத மாட்சியவாகி; விரவும் பொருளும் விரவும் என்ப - பாலைத் திணைக்குங் கைக்கிளை பெருந்திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் ஏனைத் திணைக்கும் உரியவாய் விரவும் பொருளும் விரவிவருமென்று கூறுவர் புலவர் என்றவாறு. அவை தலைவி ஆற்றாமை கண்டுழிப் பிரிந்த தலைவன் மீண்டுவந்தானெனத் தோழி கூறுவனவும், வரைவிடை வைத்துப் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்திக் கூறுவனவும், உடன் போயவழி இடைச்சுரத்து நிகழ்ந்ததனை மீண்டும் வந்துழித் தலைவன் றோழிக்குக் கூறுவனவும், யானினைத்த வெல்லை யெல்லாம் பொருள் முடித்து வாராது நின்னல நயந்து வந்தேனெனத் தலைவன் கூறலும், பொருள் வயிற் பிரிந்தோன் தலைவியை நினைந்து வருந்துவனவும், இடைச்சுரத்துத் தலைவன் செலவு கண்டோர் கூறுவனவும், அவன் மீட்சி கண்டோர் கூறுவனவும், ஊரின்கட் கண்டோர் கூறுவனவும் பிறவுமாம். அவை பாலைத் திணைக்கு விரவும் பொருளா மென்றுணர்க. உதாரணம்: கோடுயர் பன்மலை யிறந்தன ராயினு நீட விடுமோ மற்றே நீடுநினைந்து துடைத்தொறுந் துடைத்தொறுங் கலங்கி யுடைத்தரும் வெள்ள மாகிய கண்ணே (ஐங்குறு. 358) இவ் வைங்குறுநூறு, தலைவன் மீண்டானென்றது. பாடின்றிப் பசந்தகண் என்பதும் (கலி. 16) அது. வளைபடு முத்தம் பரதவர் பகருங் கடல்கெழு கொண்கன் காதன் மடமகள் கெடலருந் துயர நல்கிப் 311படலின் பாயல் வௌவி யோளே (ஐங்குறு. 195) இவ் வைங்குறுநூறு, வரைவிடைவைத்துப் பிரிந்தோன் தனிமைக்கு வருந்திக் கூறியது. புறந்தாழ் பிருண்ட கூந்தற் போதி னிறம்பெறு மீரிதழ்ப் பொலிந்த வுண்க ணுள்ளம் பிணிக்கொண் டோள்வயி னெஞ்சஞ் செல்ல றீர்க்கஞ் செல்வா மென்னுஞ் செய்வினை முடியா தெவ்வஞ் செய்த லெய்யா மையோ டிளிவுதலைத் தருமென வுறுதி தூக்கத் தூங்கி யறிவே சிறிதுநனி விரைய லென்னு மாயிடை யொளிறேந்து மருப்பிற் களிறுமாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு போல வீவது கொல்லென் வருந்திய வுடம்பே (நற்றிணை. 284) இந் நற்றிணையும் அது. கானப் பாதிரிக் கருந்தகட் டொள்வீ வேன லதிரலொடு விரைஇக் காண்வரச் சில்லைங் கூந்த லழுத்தி மெல்லிணர்த் தேம்பாய் மராஅ மடைச்சி வான்கோ விலங்குவளை தெளிர்ப்ப வீசிச் சிலம்புநகச் சின்மெல் லொதுக்கமொடு மென்மெல வியலிநின் னணிமாண் சிறுபுறங் காண்டுஞ் சிறுநனி யேகென ஏகல் நாணி ஒய்யென மாகொ ணோக்கமொடு மடங்கொளச் சாஅய் நின்றுதலை யிறைஞ்சி யோளே யதுகண் டியாமுந் துறுதல் செல்லே மாயிடை யருஞ்சுரத் 312தல்கி யேமே யிரும்புலி களிறட்டுக் குழுமு மோசையுங் களிபட்டு வில்லோர் குறும்பிற் றதும்பும் வல்வாய்க் கடுந்துடிப் 313பாணியுங் கேட்டே (அகம். 261) இது, மீண்டு வந்தோன் தோழிக்கு உரைத்தது. 314திருந்திழை யரிவை நின்னல முள்ளி யருஞ்செயற் பொருட்பிணி பெருந்திரு வுறுகெனச் சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச் சிறுகண் யானை திரிதரு நெறிவிலங் கதர கானத் தானே (ஐங்குறு. 355) இவ் வைங்குறுநூறு, பெற்ற பொருள்கொண்டு நின்னலம் நயந்து வந்தேன் என்றது. அளிதோ தானே நாணே யாள்வினை யெளிதென 315லோம்பன்மி னறிவுடை யீரே கான்கெழு செலவின் னெஞ்சுபின் வாங்கத் தான்சென் றனனே தமிய னதாஅன் றென்னா வதுகொ றானே பொன்னுடை மனைமாண் டடங்கிய கற்பிற் புனையீ ரோதி புலம்புறு நிலையே இது, 316செலவு கண்டோர் கூறியது. மரந்தலை மணந்த நனந்தலைக் கானத் தலந்தலை 317ஞெமையத் திருந்த குடிஞை பொன்செய் கொல்லனி னினிய தெளிர்ப்பப் பெய்ம்மணி யார்க்கு மிழைகிளர் நெடுந்தேர் வன்பான் முரம்பி னேமி யதிரச் சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே யிடைச்சுரத் தெழிலி யுறைத்தென மார்பிற் குறும்பொறிக் கொண்ட சாந்தமொடு நறுங்கண் ணியன்கொ னோகோ யானே (நற்றிணை. 394) இந் நற்றிணை, வரவுகண்டோர் கூறியது. இனைந்துநொந் தழுதன ணினைந்துநீ டுயிர்த்தன ளெல்லையுமிரவுங் கழிந்தன வென்றெண்ணி யெல்லிரா நல்கிய கேள்வ னிவன்மன்ற மெல்ல மணியுட் பரந்தநீர் போலத் துணிவாய் கலஞ்சிதை யில்லத்துக் காழ்கொண்டு தேற்றக் கலங்கிய நீர்போற் றெளிந்து நலம்பெற்றா ணல்லெழின் மார்பனைச் சார்ந்து (கலி. 142) இது, பெருந்திணைக்கண் கண்டோர் கூறியது. குரவை தழீஇயா மரபுளி பாடித் தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுது மாசில்வான் முந்நீர் வளைஇய தொன்னில மாளுங் கிழமையொடு புணர்ந்த வெங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே (கலி. 103) இச் சுரிதகத்துக் குரவையாடல் ஏறுகோடற் கைக்கிளை யுள் விராய்வந்தவாறுங் குரவைக்குரிய தெய்வத்தையன்றி அரசனை வாழ்த்திய வாழ்த்து விராய்வந்தவாறுங் கொள்க. விரவும் பொருளும் விரவும் எனவே, ஆய்ச்சியர் குரவைக் கூத்தல்லது வேட்டுவவரிக்குரிய வெறியாடல் விரவாதென் றுணர்க. 318இஃது எண்வகைச் சுவையான் வரும் மெய்ப்பாடுங் கூத்தொடும் படுதலின் அச்சுவை பற்றி வரும் மெய்ப் பாட்டிற்கும் உரித்தாயிற்று. இனி, காவற்பாங்கின் ஆங்கோர் பக்கத்தில் (41) தலைவன் கூறியவற்றைக் கற்பியலுள், தலைவன் பகுதியினீங்கிய தகுதிக்கண் (147) தலைவி பரத்தையராகக் கூறுவனவும் இச் சூத்திரத்தான் அமைக்க அவை மருதக்கலியுட் கடவுட்பாட்டு முதலியன, அவற்றை ஆண்டுக் காட்டுதும்; கண்டுணர்க. இனி, தலைவி கற்பினுட் பிரிவாற்றாது எம்மையும் உடன்கொண்டு சென்மி னென்பனவும், அவன் அவட்கு மறுத்துக் கூறுவனவும் இதனான் அமைக்க. உதாரணம்: மரையா மரல்கவர வறப்ப வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர் சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்த முண்ணீர் வறப்பப் புலர்வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங் கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றா லென்னீ ரறியாதீர் போல விவைகூறி னின்னீர வல்ல நெடுந்தகா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நும்மொடு துன்பந் துணையாக நாடி னதுவல்ல தின்பமு முண்டோ வெமக்கு (கலி. 6) இது கலி; எம்மையும் உடன்கொண்டு சென்மி னென்றது. `செருமிகு சினவேந்தன் என்னும் பாலைக்கலியுள், எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியன் மேவந்த சீறடித் தாரை யல்லிசே ராயித ழரக்குத்தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ (கலி. 13) இது, தலைவிக்குத் தலைவன் 319உடன்போக்கு மறுத்துக் கூறியது. இதன் சுரிதகத்து, அனையவை காதலர் கூறலின் வினைவயிற் பிரிகுவ ரெனப்பெரி தழியாதி (கலி. 13) என வினைவயிற்பிரிவு கூறலின் இது கற்பிற் கூறியதாயிற்று. இன்னும் இச் சூத்திரத்தான் அமைத்தற்குரிய கிளவிகளாய் வருவனவெல்லாம் அமைத்துக்கொள்க. (45) (உவமைகளும் அகத்திணைப் பொருளை உணரவரும் எனல்) 46. 320உள்ளுறை யுவம மேனை யுவமமெனத் தள்ளா தாகுந் திணையுணர் வகையே. இஃது, உவமவியலுள் அகத்திணைக் கைகோள் இரண்டற் கும் பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது. (இ - ள்.) உள்ளுறை உவமம் ஏனை உவமம் என - மேற்கூறும் உள்ளுறை உவமந்தான் 321ஏனையுவமமென்று கூறும்படி உவமையும் உவமிக்கப்படும் பொருளுமாய் நின்றது; திணை உணர்வகை தள்ளாது ஆகும். அகத்திணை உணர்தற்குக் கருவி யாகிய உள்ளுறை உவமம் போல எல்லாத்திணையையும் உணருங் கூற்றைத் தள்ளாதாய் வரும். நல்லிசைப்புலவர் செய்யுட்செய்யின் என்றவாறு. எனவே ஏனையோர் செய்யின் தானுணரும் வகைத்தாய் நிற்கும் என்றவாறாம். உதாரணம்: விரிகதிர் மண்டிலம் வியல்விசும் பூர்தரப் புரிதலை தளையவிழ்ந்த பூவங்கட் புணர்ந்தாடி வரிவண்டு வாய்சூழும் வளங்கெழு பொய்கையுட் டுனிசிறந் திழிதருங் கண்ணினீரறல்வார வினிதமர் காதல னிறைஞ்சித்தன் னடிசேர்பு நனிவிரைந் தளித்தலி னகுபவண் முகம்போலப் பனியொரு திறம்வாரப் பாசடைத் தாமரைத் தனிமலர் தளைவிடுஉந் தண்டுறை நல்லூர் (கலி. 71) என்பது விரியுங் கதிரையுடைய இளஞாயிறு விசும்பிலே பரவா நிற்க, விடியற்காலத்தே இதழ்கண் முறுக்குண்ட தலைகள் அம் முறுக்கு நெகிழ்ந்த செவ்விப் பூவிடத்துக் கள்ளை வண்டு நுகர்ந்து விளையாடி, அதனானும் அமையாது பின்னும் நுகர் தற்கு அவ்விடத்தைச் சூழ்ந்து திரியும் அச் செல்வமிக்க பொய்கையுள் பசிய இலைகளுடனின்ற தாமரைத் தனிமலர், தனக்கு வருத்தஞ் செய்யும் பனி ஒரு கூற்றிலே வடியாநிற்கத் தான் மிகச் செவ்வியின்றி அலருந்துறையினையுடைய ஊர என்றவாறு. இதனுள், வைகறைக் காலத்து மனைவயிற் செல்லாது, இளைய செவ்வியையுடைய பரத்தையரைப் புணர்ந்து விளை யாடி அதனானும் அமையாது பின்னும் அவரைப் புணர்தற்குச் சூழ்ந்து திரிகின்ற இவ்வூரிடத்தே, நின்னைப் பெறாது சுற்றத்திடத்தே யிருந்து கண்ணீர் வாராநிற்க, நீ ஒருகால் அளித்தலிற், சிறிது செவ்விபெற்றாளாயிருக்கும்படி வைத்த தலைவியைப் போல், எம்மையும் வைக்கிறாயென்று, காமக் கிழத்தி உள்ளுறையுவமங் கூறினாள். துனிமிகுதலாலே பெருக்கு மாறாது வீழ்கின்ற கண்ணீர் காமத்தீயாற் சுவறி அறுதலை யுடைத்தாயொழுக, அவ் வருத்தத்தைக் கண்டு விரைந்து கணவன் அருளுதலிற் சிறிது மகிழ்பவள் முகம்போல என்ற ஏனையுவமந் தாமரைமலர் பனிவாரத் தளைவிடுமென்ற உள்ளுறையுவமத்தைத் தருகின்ற கருப்பொருட்குச் சிறப்புக் கொடுத்து நின்றது. இஃது உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே (தொல். பொரு. 242) என்ற பொருளியற் சூத்திரத்திற் சிறப்பென்ற உள்ளுறை. இவ் வேனையுவமம் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக் கொடுத்து உள்ளுறையவுமம் போலத் திணையுணர்ந்தலைத் தள்ளாது நின்றவாறு காண்க. இஃது இனிதுறு கிளவியுந் துனியுறு கிளவியு முவம மருங்கிற் றோன்று மென்ப (தொல். பொரு. 303) என 322உவமப்போலிக்குக் கூறுதலின் அவ்விரண்டுந் தோன்றி நின்றது. ஏனோர் கெல்லா மிடம்வரை வின்றே (தொல். பொரு. 302) என்று உவமப்போலியிற் கூறுதலாற் காமக்கிழத்தியும் உள்ளுறையுவமங் கூறினாள். குறிஞ்சியிலும் மருதத்திலும் நெய்தலிலும் இவ்வாறு வரும் கலிகளும், 323யானே ஈண்டை யேனே யென்னலனே யேனல் காவலர் கவணொடு வெரீஇக் கான யானை கைவிடு பசுங்கழை மீனெறி தூண்டிலி னிவக்கும் கானக நாடனொ டாண்டொழிந் தன்றே (குறுந். 54) என்னும் இக் குறுந்தொகை போல வருவனவும் இச் சூத்திரந் தான் அமைக்க. பேராசிரியரும் இப்பாட்டில் `மீனெறி தூண்டில் என்றதனை ஏனையுவமமென்றார். இனி, `தள்ளாது என்றதனானே, `பாஅ லஞ்செவி (கலி.5) என்னும் பாலைக்கலியுள் தாழிசை மூன்றும் ஏனையுவமமாய் நின்று கருப்பொருளொடு கூடிச் சிறப்பியாது தாமே திணைப் பொருள் தோன்றுவித்து நிற்பனபோல் வனவுங், `கரைசேர் வேழங் கரும்பிற்பூக்குந் துறைகே ழூரன் (ஐங்.12) என்றாற் போலக் 324கருப்பொருள்தானே உவமமாய்நின்று உள்ளுறை பொருள் தருவனவும், பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க. இது புறத்திற்கும் பொது. இதனான் உள்ளுறையுவமமும், ஏனையுவமமுமென உவமம் இரண்டே யென்பது கூறினார். (46) (உள்ளுறையுவமம் தெய்வமொழிந்த கருப்பொருளிடமாகப் பிறக்குமெனல்) 47. உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக் கொள்ளு மென்ப குறியறிந் தோரே. இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது. (இ - ள்.) உள்ளுறை - உள்ளுறையெனப்பட்ட உவமம், தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப - தெய்வ முதலிய கருப்பொருளுள் தெய்வத்தை ஒழித்து ஒழிந்த கருப் பொருள்களே தனக்குத் தோன்று நிலனாகக் கொண்டு புலப்படு மென்று கூறுப, குறி அறிந்தோரே - இலக்கணம் அறிந்தோர் என்றவாறு. எனவே, உணவு முதலிய பற்றிய அப்பொருணிகழ்ச்சி பிறிதொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறையுமமாயிற்று. உதாரணம்: ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனொ டொன்றேன் றோழிமற் றொன்றி னானே (குறுந். 208) இக் குறுந்தொகை, 325பிறிதொன்றின் பொருட்டுப் பொரு கின்ற யானையான் மிதிப்புண்ட வேங்கை நசையறவுணங்காது மலர்கொய்வார்க்கு எளிதாகி நின்று பூக்கும் நாடனென்றத னானே தலைவன் நுகருங் காரணத்தானன்றி வந்து எதிர்ப் பட்டுப் புணர்ந்து நீங்குவான் நம்மை இறந்துபாடு செய்வியாது ஆற்றுவித்துப் போயினானெனவும், அதனானே நாமும் உயிர் தாங்கியிருந்து பலரானும் அலைப்புண்ணா நின்றனம் வேங்கை மரம்போல எனவும், உள்ளத்தான் உவமங்கொள்ள வைத்தவாறு காண்க. ஒழிந்தனவும் வந்துழிக் காண்க. இனி, அஃது உள்ளத்தான் உய்த்துணர வேண்டுமென மேற் கூறுகின்றார். (47) (உள்ளுறை யுவமையாவது இதுவெனல்) 48. உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென வுள்ளுறுத் திறுவதை யுள்ளுறை யுவமம். இதுவும் அங்ஙனம் பிறந்த உள்ளுறையுவமத்தினைப் பொருட்கு உபகாரம்பட உவமங் கொள்ளுமாறு கூறுகின்றது. (இ - ள்.) இதனோடு ஒத்துப்பொருள் முடிகென -உள்ளுறுத்துயான் புலப்படக் கூறுகின்ற இவ்வுவமத்தோடே புலப்படக் கூறாத உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாக வென்று புலவன் தன் உள்ளத்தே கருதி, உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை யுவமம்-தான் அங்ஙனங் கருதும் மாத்திரையே யன்றியுங் கேட்டோர் மனத்தின் கண்ணும் அவ்வாறே நிகழ்த்துவித்து அங்ஙனம் உணர்த்துதற்கு உறுப்பாகிய சொல்லெல்லாம் நிறையக்கொண்டு முடிவது உள்ளுறை யுவமம் என்றவாறு. இதனானே புலவன் தான் 326கருதியது கூறாதவழியுங் கேட் டோர்க்கு இவன் கருதிய பொருள் ஈதென்றாராய்ந்து கோடற்குக் கருவியாகிய சிலசொற் கிடப்பச் செய்தல் வேண்டு மென்பது கருத்தாயிற்று. அது, வீங்குநீ ரவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட ஞாங்கர் மலர்சூழ்தந் தூர்புகுந்த வரிவண் டோங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்ற மாங்கவை விருந்தாற்றப் பகலல்கிக் கங்குலான் வீங்கிறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர் தேங்கமழ் கதுப்பினு ளரும்பவிழ் நறுமுல்லை பாய்ந்தூதிப் படர்தீர்ந்து பண்டுதா மரீஇய பூம்பொய்கை மறந்துள்ளாப் புனலணி நல்லூர! (கலி.66) இதனுள், `வீங்கு நீர் பரத்தையர் சேரியாகவும், அதன்கண் அவிழ்ந்த நீலப்பூக் காமச்செவ்வி நிகழும் பரத்தையராகவும், பகர்பவர் பரத்தையரைத் தேரேற்றிக்கொண்டு வரும் பாணன் முதலிய வாயில்களாகவும், அம்மலரைச் சூழ்ந்த வண்டு தலைவ னாகவும், யானையின் கடாத்தை ஆண்டுறைந்த வண்டுகள் வந்த வண்டுக்கு விருந்தாற்றுதல் பகற்பொழுது புணர்கின்ற சேரிப் பரத்தையர் தமது நலத்தை அத்தலைவனை நுகர்வித்தலாகவும், கங்குலின் வண்டு முல்லையை ஊதுதல் இற்பரத்தையருடன் இரவு துயிலுறுதலாகவும், பண்டு மருவிய பொய்கையை மறத்தல் தலைவியை மறத்தலாகவும், பொருள் தந்து ஆண்டுப் புலப்படக் கூறிய கருப்பொருள்கள் புலப்படக் கூறாத மருதத் திணைப் பொருட்கு உவமமாய்க் கேட்டோனுள்ளத்தே விளக்கி நின்றவாறு காண்க. பிறவும் இவ்வாறு வருவனவெல்லாம் இதனான் அமைக்க. இங்ஙனங் கோடலருமை நோக்கி, `துணிவொடு வரூஉந் துணி வினோர் கொளினே (298) என்றார். (48) (ஏனை உவமம் இதுவெனல்) 49. ஏனை யுவமந் தானுணர் வகைத்தே. இஃது ஒழிந்த உவமங் கூறுகின்றது. (இ - ள்.) ஒழிந்த உவமம் உள்ளத்தான் உணரவேண்டாது சொல்லிய சொற்றொடரே பற்றுக்கோடாகத் தானே உணரநிற்குங் கூறுபாட்டிற்று என்றவாறு. `பவளம் போலும் வாய் என்றவழிப் பவளமே கூறி வாய் கூறாவிடின் உள்ளுறை உவமமாம். அவ்வாறின்றி உவமிக்கப் படும் பொருளாகிய வாயினையும் புலப்படக்கூறலின் ஏனை உவமமாயிற்று. அகத்திணைக்கு உரித்தல்லாத இதனையும் உடன் கூறினார் உவமம் இரண்டல்ல தில்லையென வரையறுத் தற்கும், இதுதான் உள்ளுறை தழீஇ அகத்திணைக்குப் 327பயப் பட்டு வருமென்றற்கும். (49) (கைக்கிளைக்குச் சிறந்தபொருள் இதுவெனல்) 50. காமஞ் சாலா விளமை யோள்வயி னேமஞ் சாலா விடும்பை யெய்தி நன்மையுந் தீமையு மென்றிரு திறத்தாற் றன்னோடு மவளொடுந் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றுங் கைக்கிளைக் குறிப்பே. இது முன்னர் அகத்திணை ஏழென நிறீஇ. அவற்றுள் நான்கற்கு நிலங்கூறிப், பாலையும் நான்கு நிலத்தும் வருமென்று கூறி, உரிப்பொருளல்லாக் கைக்கிளை பெருந்திணையும் அந் நிலத்து மயங்கும் மயக்குமுங்கூறிக், கருப்பொருட்பகுதியும் கூறிப் பின்னும் பாலைப்பொருளாகிய பிரிவெல்லாங் கூறி, 328அப் பகுதியாகிய 329கொண்டு தலைக்கழிவின்கட்கண்ட கூற்றுப் பகுதியுங் கூறி, அதனோடொத்த இலக்கணம் பற்றிப் முல்லை முதலியவற்றிற்கு மரபுகூறி, எல்லாத்திணைக்கும் உவமம் பற்றிப் பொருள் அறியப்படுதலின் அவ்வுவமப்பகுதியுங் கூறி, இனிக் கைக்கிளையும் பெருந்திணையும் இப்பெற்றிய வென்பார், இச்சூத்திரத்தானே கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இது வென்பது உணர்த்துகின்றார். (இ - ள்.) காமம் சாலா இளமையோள் வயின் - காமக் குறிப்பிற்கு 330அமைதியில்லாத இளமைப் பிராயத்தாள் ஒருத்தி கண்ணே; 331ஏமஞ்சாலா இடும்பை எய்தி - ஒரு தலைவன் (இவள் எனக்கு மனைக்கிழத்தியாக யான் கோடல் வேண்டுமெனக் கருதி) மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தி; நன்மையும் தீமையும் என்று இருதிறத்தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து - தனது நன்மையுங் அவளது தீமையு மென்கின்ற இரண்டு கூற்றான் மிகப் பெருக்கிய சொற்களைத் தன்னொடும் அவளொடுங் கூட்டிச்சொல்லி; சொல் எதிர்பெறாஅன் சொல்லி இன்புறல் - அச்சொல்லுதற்கு எதிர்மொழி பெறாதே பின்னுந் தானே சொல்லி இன்புறுதல்; புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே - பொருந்தி தோன்றுங் கைக்கிளைக் குறிப்பு என்றவாறு. அவளுந் தமருந் தீங்குசெய்தாராக அவளொடு தீங்கைப் புணர்த்துந், தான் 332ஏதஞ்செய்யாது தீங்குபட்டானாகத் தன்னொடு நன்மையைப் புணர்த்தும் என நிரனிறையாக உரைக்க. இருதிறத் தாற்றருக்கிய எனக் கூட்டுக. உதாரணம்: வாருறு வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றோட் பேரெழின் மலருண்கட் பிணையெழின் மானோக்கிற் காரெதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதற் கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரை நுசும்பினாய் நேர்சிலம் பரியார்ப்ப நிரைதொடி வீசினை யாருயிர் வௌவிக்கொண் டறிந்தீயா திறப்பாய்கேள்; உளனாவென் னுயிரையுண் டுயவுநோய் கைம்மிக விளமையா னுணராதாய் நின்றவ றில்லானுங் களைநரி னோய்செய்யுங் கவினறிந் தணிந்துதம் வளமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; நடைமெலிந் தயர்வுறீஇ நாளுமென் னலியுநோய் மடமையா னுணராதாய் நின்றவ றில்லானு மிடைநில்லா தெய்க்குநின் னுருவறிந் தணிந்துதம் முடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; அல்லல்கூர்ந் தழிபுக வணங்காகி யடருநோய் சொல்லினு மறியாதாய் நின்றவ றில்லானு மொல்லையே யுயிர்வௌவு முருவறிந் தணிந்துதஞ் செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்; எனவாங்கு, ஒறுப்பின்யா னொறுப்பது நுமரையான் மற்றிந்நோய் பொறுக்கலாம் வரைத்தன்றிப் பெரிதாயிற் புனையிழாய் மறுத்திவ்வூர் மன்றத்து மடலேறி நிறுக்குவென் போல்வல்யா னீபடு பழியே (கலி. 58) எனத் தான் உயிர்கொடுத்தானாகத் தனது நன்மைகூறி அவளது தீங்கெல்லாங் கூறுவான், மடலேறுவேன்போலு மென்று ஐயுற்றுக் கூறியவாறு காண்க. அவளைச் சொல்லுதலே தனக் கின்பமாதலிற் சொல்லியின்புறல் என்றார். இது `புல்லித் தோன்றுங் கைக்கிளை எனவே 333காமஞ்சான்ற இளமையோள் கண் நிகழுங் கைக்கிளை இத்துணைச் சிறப்பின்றாயிற்று. அஃது, எல்லா விஃதொத்தன், (61) என்னுங் குறிஞ்சிக் கலியுள், இவடந்தை, காதலின் யார்க்குங் கொடுக்கும் விழுப்பொருள் யாதுநீ வேண்டி யது; பேதாஅய், பொருள்வேண்டும் புன்கண்மை யீண்டில்லை யாழ மருளி மடநோக்கி னின்றோழி யென்னை யருளீயல் வேண்டுவல் யான் (கலி. 61) எனவரும். 334இது கைகோளிரண்டினுங் கூறத்தகாத வாய் பாட்டாற் கூறலிற் கைக்கிளையென்றார். குறிப்பென்றதனாற் சொல்லியின்புறினுந் தலைவன்றன் குறிப்பின் நிகழ்ந்தது புறத்தார்க்குப் புலனாகாதென்பதூஉம், 335அகத்து நிகழ்ச்சி அறியும் மனைவியர்க்காயின் அது புலனாமென்பதூஉங், கொள்க. அது கிழவோள் பிறள்குணம் (தொல். பொ. பொரு. 40) என்னும் பொருளியற் சூத்திரத்து ஓதுப. `காமஞ் சாலா இளமையோள்வயின் எனப் பொதுப் படக் கூறிய அதனான் வினைவல பாங்காயினார்கண்ணும் 336இவ்விதி கொள்க. இதனைக் காராரப் பெய்த கடிகொள் வியன்புலத்து என்னும் (109) முல்லைக்கலியான் உணர்க. (50) (பெருந்திணை இவையெனல்) 51. ஏறிய மடற்றிற மிளமை தீர்திறந் தேறுத லொழிந்த காமத்து மிகுதிற மிக்க காமத்து மிடலொடு தொகைஇச் செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே. இது, முறையானே இறுதிநின்ற பெருந்திணை இலக்கணங் கூறுகின்றது. (இ - ள்.) ஏறிய மடற்றிறம் - மடன்மா கூறுதலன்றி மடலே றுதலும்; இளமை தீர் திறம் - தலைவற்கு இளையளாகாது ஒத்த பருவத்தாளாதலும்; தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் - 337இருபத்து நான்காம் மெய்ப்பாட்டின் நிகழ்ந்து ஏழாம் அவதிமுதலாக வரும் அறிவழி குணன் உடையளாதலும்; மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - காமமிகுதியானே எதிர்ப் பட்டுழி வலிதிற் புணர்ந்த இன்பத்தோடே கூட்டப்பட்டு; செப்பிய நான்கும் - கந்திருவத் துட்பட்டு வழீஇயிற்றாகச் செப்பிய இந்நான்கும், பெருந்திணைக் குறிப்பே - பெருந் திணைக் கருத்து என்றவாறு. மடன்மாக் கூறுதல் கைக்கிளையாம். `மடற்றிற மென்றத னான் அதன் திறமாகிய வரைபாய்தலுங் கொள்க. `இளமைதீர் திறம் என்றதனாற்றலைவன் முதிர்ச்சியும், இருவரும் முதிர்ந்த பருவத்துந் துறவின்பால் சேறலின்றிக் காமம் நுகர்தலும் கொள்க. `காமத்து மிகுதிறம் என்றனாற் சிறிது தேறப்படுதலுங் கொள்க. இவை கந்தருவத்துட் படாஅ வழீஇயின. இவற்றுள் ஏறிய மடற்றிறமுங் காமத்துமிகுதிறமும் புணர்ச்சிப்பின் நிகழ்வன வாம்; அது, `மடன்மா கூறுமிடனுமா ருண்டே (102) என்பதனாண் ஏறுவல் எனக் கூறிவிடாதே ஏறுதலாம். உதாரணம்: சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த சான்றீர் நுமக்கொன் றறிவுறுப்பென் மான்ற துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டு துஞ்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தெ னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவென் பாய்மா நிறுத்து; யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன் றேமொழி மாத ருறாஅ துறீஇய காமக் கடலகப் பட்டு; உய்யா வருநோய்க் குயலாகு மைய லுறீஇயா ளீத்தவிம் மா காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ னாணெழின் முற்றி யுடைத்துள் ளழித்தரு மாணிழை மாதரா ளேஎரெனக் காமன தாணையால் வந்த படை; காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம மெழினுத லீத்தவிம் மா; அகையெரி யானாதென் னாருயி ரெஞ்சும் வகையினா லுள்ளஞ் சுடுதரு மன்னோ முகையே ரிலங்கெயிற் றின்னகை மாதர் தகையாற் றலைக்கொண்ட நெஞ்சு; அழன்மன்ற காம வருநோய் நிழன்மன்ற நேரிழை யீத்தவிம் மா; ஆங்கதை, யறிந்தனி ராயிற் சான்றவிர் தான்றவ மொரீஇத் துறக்கத்தின் வழீஇ யான்றோ ருள்ளிடப் பட்ட வரசனைப் பெயர்த்தவ ருயர்நிலை யுலக முறீஇ யாங்கென் றுயர்நிலை தீர்த்த னுந்தலைக் கடனே. (கலி. 139) இஃது ஏறிய மடற்றிறம். 338உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான் புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லி னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது. (கலி. 94) இதனுள், கொக்குரித்தன்ன வென்பதனாற் றோல் திரைந் தமை கூறலின் இளமைதீர் திறமாயிற்று. 339உளைத்தவர் கூறு முரையெல்லா நிற்க முளைத்த முறுவலார்க் கெல்லாம் - விளைத்த பழங்கள் ளனைத்தாய்ப் படுகளி செய்யு முழங்கும் புனலூரற் மூப்பு (பு. வெ. 12,14) அரும்பிற்கு முண்டோ வலரது நாற்றம் பெருந்தோள் விறலி பிணங்கல் - சுரும்போ டதிரும் புனலூரற் காரமிர்த மன்றோ முதிரு முலையார் முயக்கு (பு. வெ. 12,13) என்பனவும் அது. `புரிவுண்ட புணர்ச்சி என்னும் (25) நெய்தற்பாட்டுக் காமத்து மிகுதிறம். இதனைப் பொருளியலுட் காட்டுவதும், ஆண்டோதும் இலக்கணங்களுந் தோன்ற. 340இதனுட் டெளிந்து கூறுவனவும் ஆண்டுக் காண்க. ஏஎ யிஃதொத்த னாணிலன் றன்னொடு மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்று மேவினு மேவாக் கடையு மவையெல்லா நீயறிதி யானஃதறிகல்லேன் பூவமன்ற மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான் புல்லினி தாகலிற் புல்லியென னெல்லா தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று. (கலி. 62) இது மிக்ககாமத்து மிடல். `செப்பிய நான்கு எனவே, செப்பாதனவாய் அத்துணைக் கந்தருவமாகக் கூறுகின்ற பின்னர் நான்கும் பெருந்திணை பெறும் (தொல். பொ. கள. 14) என்ற பெருந்திணையும் நான்கு உளவென்று உணர்க. குறிப்பென்றதனான் அந்நான்கும் பெருந் திணைக்குச் சிறந்தனவெனவும், ஈண்டுக் கூறியன கைக்கிளைக்குச் சிறந்தனவெனவுங் கொள்க. (51) (இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழும் கைக்கிளை இவையெனல்) 52. முன்னைய நான்கு முன்னதற் கென்ப. இது முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே (105) எனக் களவியலுட் கூறுஞ் சிறப்பில்லாக் கைக்கிளை போலன்றிக் காமஞ் சாலா இளமையோள்வயிற் கைக்கிளை போல இவையுஞ் சிறந்தன என, எய்தாதது எய்துவித்தது. (இ - ள்.) இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னிகழ்ந்த காட்சியும் ஐயமுந் தெரிதலும் தேறலும் என்ற குறிப்பு நான்கும் நற்காமத் துக்கு இன்றியமையாது வருதலின், முற்கூறிய சிறப்புடைக் கைக்கிளையாதற்கு உரியவென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. களவியலுட் கூறுங் கைக்கிளை சிறப்பின்மையின் முன்னதற் குரியவெனச் சிறப்பெய்துவித்தார். களவியலுள் ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப (93) என்றது முதலாக இந் நான்குங் கூறுமாறு ஆண்டுணர்க. இவை தலைவி வேட்கைக் குறிப்புத் தன்மேனிகழ்வதனைத் தலைவன் அறிதற்கு முன்னே தன் காதன்மிகுதியாற் கூறுவனவாதலிற் கைக்கிளை யாயின. இவை தலைவற்கே உரியவென்பது, சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப (94) என்னும் சூத்திரத்திற் கூறுதும். இவையும் புணர்ச்சி நிமித்தமாய்க் குறிஞ்சியாகாவோ வெனின், காட்சிப்பின் தோன்றிய ஐயமும் ஆராய்ச்சியுந் துணிவும் நன்றெனக் கோடற்கும் அன்றெனக் கோடற்கும் பொதுவாகலின், இவை ஒருதலையாக நிமித்தமாகா; 341வழிநிலைக் காட்சியே நிமித்தமா மென்றுணர்க. (52) (புலனெறி வழக்கம் கலிப்பாவின்கண்ணும் பரிபாடற்கண்ணும் நடக்குமெனல்) 53. நாடக வழக்கினு முலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கங் கலியே பரிபாட் டாயிரு பாங்கினு முரிய தாகு மென்மனார் புலவர். இது புலனெறி வழக்கம் இன்னதென்பதூஉம், அது நடுவணைந்திணைக்கு உரிமையுடைத்தென்பதூஉம், இன்ன செய்யுட்கு உரித்தென்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நாடகவழக்கினும் உலகியல் வழக்கினும் - புனைந்துரைவகையானும், உலகவழக்கத்தானும்; பாடல் சான்ற புலனெறி வழக்கம். புலவராற் பாடுதற்கமைந்த புலவராற்று வழக்கம்; கலியே பரிபாட்டு அ இரு பாங்கினும் உரியது ஆகும் என்மனார் புலவர். கலியும் பரிபாடலுமென்கின்ற அவ்விரண்டு கூற்றுச் செய்யுளிடத்தும் நடத்தற்கு உரியதாமென்று கூறுவர் புலவர் என்றவாறு. இவற்றிற்கு உரித்தெனவே, அங்ஙனம் உரித்தன்றிப் புலனெறி வழக்கம் 342ஒழிந்த பாட்டிற்கும் வருதலும், புலனெறி வழக்கம் இல்லாத பொருள் 343இவ்விரண்டற்கும் வாராமையுங் கூறிற்று. இவை தேவ பாணிக்கு வருதலுங் கொச்சகக் கலி பொருள்வேறுபடுதலுஞ் செய்யுளியலுள் வரைந்து ஓதுதும். மக்கணுதலிய அகனைந்திணையுமென (தொல். பொ. அகத். 54). மேல்வரும் அதிகாரத்தானும், இதனை அகத்திணையியலுள் வைத்தமையானும். அகனைந்திணையாகிய காமப்பொருளே புலனெறி வழக்கத்திற்குப் பொருளாமென் றுணர்க. `பாடல் சான்ற என்றதனாற் பாடலுள் அமைந்தன வெனவே, பாடலுள் அமையாதனவும் உளவென்று கொள்ள வைத்தமையிற், கைக்கிளையும் பெருந்திணையும் பெரும் பான்மையும் உலகியல் பற்றிய புலனெறி வழக்காய்ச் சிறுபான்மை வருமென்று கொள்க. செய்யுளியலுட் கூறிய முறைமையின்றி ஈண்டுக் கலியை முன்னோதியது, கலி யெல்லாம் ஐந்திணைப் பொருளாய புலனெறி வழக்கிற் காமமுங், கைக்கிளை பெருந் திணையாகிய உலகியலே பற்றிய புலனெறி வழக்கிற் காமமும் பற்றி வருமென்றற்கும், பரிபாடல் தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றி வருமென்றற்கும் என்றுணர்க. ஆசிரியமும் பெண்பாவும் வஞ்சியும் அகம் புறமென்னும் இரண்டற்கும் பொதுவாய் வருமாறு நெடுந்தொகையும் புறமுங் கீழ்க்கணக்கும் மதுரைக்காஞ்சியும் பட்டினப்பாலையும் என்பன வற்றுட் காண்க. மருட்பாத் தானிது வென்னுந் தனிநிலை (397) இன்மையின் 344வரைநிலை யின்று. மனைநெடு வயலை வேழஞ் சுற்றுந் துறைகே ழூரன் கொடுமை நாணி நல்ல னென்றும் யாமே யல்ல னென்னுமென் றடமென் றோளே (ஐங்குறு. 11) இதனுள் முதல் கரு வுரிபொருளென்ற மூன்றுங் கூறலின் நாடக வழக்குந், தலைவனைத் தலைவி கொடுமை கூறல் உலகிய லாகலின் உலகியல் வழக்கும் உடன்கூறப்பட்டன. இவ் விரண்டுங் கூடிவருதலே பாடலுட் பயின்ற புலனெறி வழக்க மெனப்படும். 345இவ்விரண்டனுள் உலகியல் சிறத்தல் உயர்ந்தோர் கிளவி (தொ. பொ. பொரு. 23) என்னும் பொருளியற் சூத்திரத்தானும் மரபிய லானும் பெறுதும். முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக ரினிதெனக் கணவ னுண்டலி னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே (குறுந். 167) இஃது உலகியலே வந்தது. இனி, அவ்வந்நிலத்து மக்களே தலைவராயக்கால் அவை உலகியலேயாம். இனிக் கைக்கிளையுள் அசுரமாகிய ஏறுகோடற் கைக் கிளை, காமப் பொருளாகிய புலனெறிவழக்கில் வருங்கால், முல்லை நிலத்து ஆயரும் ஆய்ச்சியருங் கந்தருவமாகிய களவொழுக்கம் ஒழுகி வரையுங்காலத்து, அந்நிலத் தியல்பு பற்றி ஏறுதழுவி வரைந்து கொள்வரெனப் புலனெறி வழக்காகச் செய்தல் இக்கலிக்குரித்தென்று கோடலும் பாடலுள் அமையா தன என்றதனாற் கொள்க. அது, மலிதிரையூர்ந்து என்னும் முல்லைக்கலியுள் (4) ஆங்க ணயவர் தழூஉ என்னுந் துணையும் ஏறு தழுவியவாற்றைத் தோழி தலைவிக்குக் காட்டிக் கூறிப், பாடுகம் வம்மின் என்பதனாற் றலைவனைப் பாடுகம் வாவென் றாட்கு, அவளும் நெற்றிச்சிவலை... மகள் ஒருக்கு நாமாடு... மகன் என்பனவற்றான் அலரச்சம் நீங்கினவாறும், அவற்றான் வருந்திய வாறுங் கூறிப் பாடியபின்னர், தோழி, கோளரி தாக நிறுத்தகொலை யேற்றுக் காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே யார்வுற் றெமர்கொடை நேர்ந்தா ரலரெடுத்த வூராரை யுச்சி மிதித்து (கலி. 104) என எமர் கொடை நேர்ந்தாரெனக் கூறியவாறுங் காண்க. இவ்வாறே இம் முல்லைநிலத்து அகப்பொருளொடு கலந்து வருங் கைக்கிளை பிறவுமுள; அவையெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க. 346புனைந்துரைவகையாற் கூறுப வென்றலிற் புலவர் இல்லனவுங் கூறுபவாலோவெனின், உலகத்தோர்க்கு நன்மை பயத்தற்கு நல்லோர்க்குள்ளனவற்றை ஒழிந்தோர் அறிந் தொழுகுதல் அறமெனக்கருதி, அந்நல்லோர்க்குள்ளனவற்றிற் சிறிது இல்லனவுங் கூறுதலன்றி, யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறாரென்றற்கன்றே நாடகமென்னாது வழக்கென்பா ராயிற்றென்பது. இவ்வதிகாரத்து நாடகவழக்கென்பன, புணர்ச்சி உலகிற்குப் பொதுவாயினும், மலைசார்ந்து நிகழுமென்றுங், காலம் வரைந்தும், உயர்ந்தோர் காமத்திற் குரியன வரைந்தும், மெய்ப்பாடு தோன்றப் பிறவாறுங் கூறுஞ் செய்யுள் வழக்காம். 347இக்கருத்தானே `முதல்கருவுரிப்பொரு ளென்ற மூன்றே - நுவலுங் காலை (தொல். பொ. அகட். 3) என்று புகுந்தார் இவ்வாசிரியர். இப் புலநெறிவழக்கினை 348இல்ல தினியது, புலவரா னாட்டப் பட்ட தென்னாமோவெனின், இல்லதொன்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து இன்பஞ்செய்யாதாக லானும், உடன்கூறிய உலகியல் வழக்கத்தினை ஒழித்தல் வேண்டு மாகலானும், அது பொருந்தாது. அல்லதூஉம் அங்ஙனங் கொண்ட இறையனார் களவியலுள்ளும், வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே (இறையனார் 37) அரச ரல்லா வேனை யோர்க்கும் புரைவ தென்ப வோரிடத் தான் (இறையனார். 38) எனவும், வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென் றாங்கவ் விரண்டு மிழிந்தோர்க் குரிய (இறையனார். 39) எனவும் நான்கு வருணமுங் கூறி, 349நால்வகைத் தலை மக்களை யும் உணர்த்தலின் இல்லதென்பது தொல்லாசிரியர் தமிழ் வழக்கன்றென மறுக்க. இக்கருத்தானே மேலும் மக்க ணுதலிய வகனைந்திணையும் (தொல். பொ. அகத். 54) என்பர். (அகனைந்திணைக்கண்ணும் தலைவன் முதலியோர் இயற்பெயராற் கூறப்பெறார் எனல்) 54. மக்க ணுதலிய வகனைந் திணையுஞ் சுட்டி யொருவர் பெயர்கௌப் பெறாஅர். இது, முற்கூறிய புலநெறி வழக்கிற்குச் சிறந்த ஐந்திணைக் காவதொரு வரையறை கூறுகின்றது. (இ - ள்.) மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும் - மக்களே தலைமக்களாகக் கருதுதற்குரிய நடுவ ணைந்திணைக்கண்ணும்; சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறார் - திணைப்பெயராற் கூறினன்றி ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறி, அவரது இயற்பெயர் கொள்ளப்பெறார் என்றவாறு. இது, நாடக வழக்குப் பற்றி விலக்கியது. அவை வெற்பன் துறைவன் கொடிச்சி கிழத்தியெனவரும். மக்கள் நுதலிய என்பதனானே மக்களல்லாத தேவரும் நரகருந் தலைவராகக் கூறப்படா ரெனவும், அகனைந்திணை யும் என்றதனானே கைக்கிளையும் பெருந்திணையுஞ் சுட்டி ஒருவர் பெயர் கொண்டுங் கொள் ளாதும் வருமெனவுங் கொள்க. அகனைந்திணையெனவே அகமென்பது நடுவுநின்ற ஐந்திணையாதலிற் கைக்கிளையும் பெருந்திணையும் 350அவற்றின் புறத்துநிற்றலின் அகப்புற மென்னும் பெயர் பெறுதலும் பெற்றாம். இனி, அவை வரையறையுடைமை மேலைச் சூத்திரத்தான் அறிக. கன்றுமுண் ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பா னிலத்துக்... கவினே. (குறுந். 27) இது வெள்ளிவீதியார் பாட்டு, மள்ளர் குழீஇய விழவி னானும் ... ....... ............... ................. மகனே (குறுந். 31) இது 351காதலற் கெடுத்த ஆதிமந்திபாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாமென் றஞ்சி வாளாது கூறினார். ஆதிமந்தி தன் பெயரானுங், காதலனாகிய ஆட்டனத்தி பெயரானுங் கூறிற் 352காஞ்சிப்பாற்படும். ஆதி மந்தி போல வேதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே (அகம். 236) எனவும், வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்ந் திசினால் யானே (அகம். 147) எனவும், அகத்திணைக்கட் 353சார்த்துவகையான் வந்தன அன்றித் தலைமைவகையாக வந்தில என்பது. வருகின்ற (55) சூத்திரத்துப் பொருந்தின் என்னும் இலே சானே இச் சார்த்துவகை கோடும். இது, பெயரெனப் பட்ட கருப்பொருளாதலிற் கூற்றிற்கு உரிய தோழியும் பாங்கனும் முதலிய வாயிலோரையும் பொதுப் பெயரா னன்றி இயற்பெயர்த் தொடக்கத்தன கூறப்பெறா ரென்று கொள்க. உ-ம்: முகிழ்முகிழ்த் தேவர வாயினு முலையே யரவெயிற் றொடுக்கமொ டஞ்சுதக் கனவே களவறி வாரா வாயினுங் கண்ணே நுழை நுதி வேலி னோக்கரி யவ்வே யிளைய ளாயினு மணங்குதக் கிவளே முளையின நெருப்பின் முதுக்குறைந் தனளே யதனா னோயில ளாகுக தில்ல சாயிறைப் பணைத்தோ ளீன்ற தாயே இது, சுட்டி ஒருவர் பெயர் கொள்ளக் கைக்கிளை. ஆள்வினை முடித்த வருந்தவ முனிவன் வேள்வி போற்றிய விராம னவனொடு மிதிலை மூதூரெய்திய ஞான்றை மதியுடம் பட்ட ம(ட)க்கட் சீதை கடுவிசை வின்ஞா ணிடியொலி கேளாக் கேட்ட பாம்பின் வாட்ட மெய்தித் துயிலெழுந்து மயங்கின ளதா அன்று மயிலென மகிழ்.............. .................. .................. ........................ 354இது, சுட்டி ஒருவர் பெயர்கொண்ட கைக்கிளை. இஃது, அசுரமாகலின், முன்னைய மூன்றுங் கைக்கிளை என்றதனாற் கோடும். `யாமத்து மெல்லையும் (கலி. 139) என்றது சுட்டி ஒருவர் பெயர் கொள்ளாப் பெருந்திணை. பூண்டாழ் மார்பிற் பொருப்பிற் கோமான் பாண்டியன் மடமகள் பணைமுலைச் சாந்தம் வேறு தொடங்கிய விசய னெஞ்சத் தாரழ னாற்றா தைஇ யோகியிற் பொதியிற் சாந்த மெல்லாம் பொருதிரை முத்தினு முழங்கழற் செந்தீப் பொத்துவது போலும் புலம்புமுந் துறுத்தே. 355இது, சுட்டி ஒருவர் பெயர்கொண்ட பெருந்திணை. இவை, சான்றோர் செய்யுளுட் பெருவரவிற் றன்மை யினன்றே முற்சூத்திரத்து முன்னும் பின்னும் 356இவற்றை வைத்த தென்பது. முட்காற் காரை முதுகனி யேய்ப்பத் தெறிப்ப விளைந்த தீங்கட் டார நிறுத்த வாயந் தலைச்செல வுண்டு பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த வெச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப் புலம்புக் கனனே புல்லணற் காளை யொருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை யூர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்குந் தொடுத லோம்புமதி முதுகட் சாடி யாதரக் கழுமிய துகளன் காய்தலு முண்டக் கள்வெய் யோனே. (புறம். 258) இது, வெட்சித்திணை பெயர் கொள்ளாது வந்தது. முலைபொழி தீம்பான் மண்சேறு படுப்ப மலர்தலை யுலக மோம்பு மென்ப பாசிலைத் தொண்டைப் பல்லவ னாணையின் வெட்சித் தாயத்து வில்லே ருழவர் பொருந்தா வடுகர் முனைச்சுரங் கடந்து கொண்ட பல்லா னிரையே. 357இது, வேந்துவிடு தொழிற்கண் வேந்தனைப் பெயர் கூறிற்று. ஒழிந்தனவும் புறத்திணையியலுட் காண்க. (54) (இயற்பெயர் புறத்திணையோடு பொருந்தி அகத்திணைக்கண்ணும் வருமெனல்) 55. புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்ல தகத்திணை மருங்கி னளவுத லிலவே. இது புறத்திணைக்குத் தலைவர் ஒருவராதலும், பலராதலும் உரிப்பொருட்குத் தலைவர் பலராகாமையுங் கூறலின், எய்தாத தெய்துவித்து எய்தியது விலக்கிற்று. (இ - ள்.) அகத்திணை மருங்கிற் பொருந்தின் - ஒருவனையும் ஒருத்தியையும் விதந்து கூறும் இயற்பெயர் அகத்திணைக் கண்ணே வந்து பொருந்துமாயின்; புறத்திணை அளவுதல் மருங்கின் அல்லது இல - ஆண்டும் புறத்திணை கலத்த லிடத்தின் அல்லது வருதலில்லை என்றவாறு. எனவே, புறத்திணை கருப்பொருளாயும், அதுதான் உவம மாயும் அகத்திணையுட் கலக்குமென்பதூஉம் இதனானே விரித்தாராயிற்று. அளவுமெனவே ஒரு செய்யுட்கண்ணும் அப் புறத்திணையாகிய இயற்பெயர்களுஞ் சிறப்புப் பெயர்களும் ஒன்றேயன்றுப் பலவும் வருதலுங் கொள்க. ஒருவரென்பது அதிகாரப் பட்டமையின் அகத்திற்கு வரும் உரிப்பொருட்பெயர் ஒன்றாதல் கொள்க. உதாரணம் : வண்டுபடத் ததைந்த என்னும் அகப் பாட்டினுள் முருக னற்போர் நெடுவே ளாவி ...... ......................... ......... யாங்கண் (அகம்.1) எனவே புறத்திணைத் தலைவன் இயற்பெயர் ஒன்றே வந்தவாறும், அவன் நிலக் கருப்பொருளாய் அகத்திற்கு வந்தவாறும், உரிப்பொருட் டலைவன் ஒருவனே யானவாறுங் காண்க. எவ்வி யிழந்த வறுமையர் பாணர், பூவில் வறுந்தலை போலப் புல்லென்று (குறுந். 19) என்பது கருப்பொருளுவமமாய் வந்தது. `கேள்கே டூன்றவும் (93) என்றும் அகப்பாட்டுப் புறத் திணைத் தலைவர் பலராய் அகத்திணைக்கண் அளவவந்தது. புறத்திணைக்கண் இயற்பெயர் அளவி வரும் என்பதனானே, முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும் (158) என்னும் புறப்பாட்டு எழுவர் மாய்ந்த பின்றை எனப் புறத்திணைத் தலைவர் பலராய் வந்தது. பிறவும் இவ்வாறு வருவன இதனான் அமைக்க. இன்னும் இதனானே அகப்புறமாகிய கைக்கிளை பெருந் திணைக்கும் இப்பன்மை சிறுபான்மை கொள்க. உதாரணம்: ஏறும் வருந்தின வாயரும் புண்கூர்ந்தார் நாளிருங் கூந்தற் பொதுமகளி ரெல்லாரு முல்லையந் தண்பொழில் புக்கார் பொதுவரோ டெல்லாம் புணர்குறிக் கொண்டு. (கலி. 101) பொருந்தின் எனவே, தானும் தன்னொடு பொருந்துவ தூஉம் என இரண்டாக்கிச் சார்த்துவகையான் வரும் பெயர்க்குங் கொள்க. நாடகவழக்கி னுளது முன்னர்ச் சூத்திரத்துட் காட்டினவாம். பெயர்கள் பலவாதலின் இலவெனப் பன்மை கூறினார். (55) அகத்திணையியல் முற்றிற்று. கணேசயர் அடிக்குறிப்புகள்: 1. நிறுத்தமுறை என்றது மேற்பாயிரத்துள் நிறுத்த முறையை, ஆசிரியன் தன் மனத்து நிறுத்த முறையுமாம். 2. இது என்றது பொருளதிகாரம் என்பதை. நாண்மீன் - நட்சத்திரம். இன்று கார்த்திகை என்றால், கார்த்திகை என்னும் நாண்மீனின் பெயர் தன்னிகழ்ச் சிக்கிடமாகிய நாளை (அஃதாவது அற்றைத்தினத்தை) யுணர்த்தினாற் போல, பொருளதிகாரம் என்பது (பொருளினது இலக்கணம்) தன்னை யுணர்த்தற் கிடமாகிய படலத்தை யுணர்த்தி நின்றது என்பார் இது நாண்மீனின் பெயர் நாளிற்குப் பெயராயினாற் போல்வதோ ராகுபெயர் என்றார். அதிகாரம் - முறைமை; முறைமை; மரபு; இலக்கணம் என்பன ஒரு பொருளன. இவை நச்சினார்க்கினியர் கருத்தாம். நூன்மரபு 1ஆம் சூத்திர உரை நோக்கியறிக. பொருளினது முறைமை (இலக்கணம்) தன்னை உணர்த்தற்கு இடமாகிய படலத்தை யுணர்த்தலின் இது தானியாகுபெயராம். சிவஞான முனிவர்க்கும் இது கருத்தாதலை நன்னூல் விருத்தி பெயரியல் 29ஆம் சூத்திர விரிவுரை நோக்கியறிக. 3. அவற்றினீங்குதலே வீடுபேறு என்பதை ஈதலறந் தீவினைவிட் டீட்டல் பொருளெஞ்ஞான்றுங், காதலிருவர் கருத்தொத்துற் றாதரவு, பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும், விட்டதே பேரின்ப வீடு என்னும் வெண்பாவா லறிக. 4. அவற்றின் - அறம்பொருளின் பங்களின். முதல் கரு உரி இவை என்பதை மேல் வரும் மூன்றாஞ் சூத்திரத்தா னறிக. 5. காட்சிப்பொருள் - காட்சியளவையானறியும் பொருள். கருத்துப் பொருள் - கருதலளவையானறியும் பொருள். முதல் கரு உரியே காட்சிப் பொருளுங் கருத்துப்பொருளுமாதலின், அவற்றின் பகுதியாகிய என்பது ஏடெழுதுவோரால் விடப்பட்டிருத்தல் வேண்டும். இயங்குதிணை - மக்கள், விலங்கு, பறவை முதலியன. நிலைத்திணை - மலை, மர முதலியன. 6. புலனெறி வழக்கு - புலவராற்று வழக்கு (செய்யுள் வழக்கு) 7. அகத்திணைவழு ஏழாவன:- கைக்கிளையும் ஐந்திணையும் பெருந் திணையுமாகிய ஏழும்பற்றி வருவன. அவற்றை, பொருளியல் 2ஆம் சூத்திர, உரைக்கண் எட்டன் பகுதியும் விளங்க வொட்டிய உறுப்புடையது போல் என்பது முதலாகக் கூறுவன ஐந்திணைக்குரிய வழு என்றும், காமங் கண்ணிய என்றதனால் கைக்கிளை பெருந்திணைக்கண் உறுப்புடையது போலக் கூறுகூன முதலாயினவுங் கொள்க என்று கூறுவன கைக்கிளை பெருந்திணைக்குரிய வழுவென்றும் கூறுவனவற்றானும் மற்றுஞ் சூத்திரங்களிலும் அவ்வாறு வழுவமைதி கூறுவனவற்றானு மறிந்து கொள்க. புறத்திணைவழு ஏழாவன:- வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்னுந் திணையேழும் பற்றி வருவன. அவற்றைப் பொதுவியற் கரந்தைப் பகுதி கூறும் சூத்திர வுரையா னுணர்ந்துகொள்க. உணருங்கால் மாவரும் புகழ்........... மலைந்த பூவும் என்பதும், ஓடாக் கழனிலை என்பதும், பிள்ளையாட்டும் வாகை வழுவாம். உன்னநிலை, வஞ்சி, உழிஞை தும்பைக்குரியது. பூவைநிலை பாடாண்டிணைக்குரியது. ஆ பெயர்த்துத் தரல் வெட்சிக்குரியது. பாணர் முதலியோர் கையற்றுக் கூறல் காஞ்சிக்குரியது. தன்னூறு தொழிலாய் வருமிடத்து இவைவழுவா மென்க. 8. திணைதொறு மரீஇய பெயர் ஆவன - நில மக்கள் பெயர். திணை நிலைப் பெயராவன - தலை மக்கள் பெயர். இவற்றை 20ஆம் சூத்திர உரை நோக்கியறிக. இருவகைக் கைகோள் - களவு கற்பு என்பன. பன்னிருவகைக் கூற்று இவை யென்பதைச் செய்யுளியல் 189ஆம் 190ஆம் சூத்திரங்களை நோக்கியறிக. பத்துவகைக் கேட்போராவார் கூற்றுக்குரியோருள் தலைவன் தலைவி யொழிந்த பதின்மருமாவர். எண்வகை மெய்ப்பாடு இவை என்பதை மெய்ப்பாட்டியல் 3ஆம் சூத்திர நோக்கியறிக. நால்வகை உவமம் இவை என்பதை உவம இயல் 1ஆம் சூத்திர நோக்கியறிக. ஐவகை மரபாவன; இருதிணைக்கும் பொதுவாகிய இளமை ஆண் பெண் பற்றிய மரபும், உயர்திணை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லு மரனும் பற்றிய மரபும். அவை பற்றிவரு முலகியன் மரபும், நூன்மரபு மென இவை. 9. உரிமை வகையான் நிலம் பெறுவன. குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பன. 10. நால்வகையொழுக்கம் - புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல். 11. பிரிவு, புணர்ந்தபின்பே நிகழ்தலானும், பின்வரும் புணர்ச்சிக்குக் காரணமாகலானும், பிரிவே இருத்தற்கும் இரங்கற்கும் காரணமாத லானும், பரத்தை வயிற்பிரிவு ஊடற்குக் காரணமாதலானும் பொதுவாய் நிற்கு மென்றார். 12. இதனை ஒழிந்தன என்றது இன்பமொழிந்த அறம் பொருள் வீடு என்பவற்றை. 13. கண்ணல் - கருதல். 14. ஒழிந்த துன்பம் - காமங்கருதாத துன்பம். 15. அகப்புறம், அகனைந்திணையல்லாக் கைக்கிளையும் பெருந்திணையும் என்பது நச்சினார்க்கினியர் கருத்து 54ஆம் சூத்திர உரை நோக்கியறிக. இனிப் பாங்கன் இடை நின்று புணர்க்கும் எண்வகை மணத்தினும் முன்னைய மூன்றும் பெறுங் கைக்கிளையும் பின்னர் நான்கும் பெறும் பெருந் திணையும் காந்தருவம் பெறும் ஐந்திணையும் ஆகிய அவையும் அகப் புறமாம். களவியல் 12ஆம் சூத்திர உரை நோக்கியறிக. 16. கைக்கிளை - ஒருமருங்குபற்றிய கேண்மை. கை - பக்கம்; மருங்கு. கிளை - உறவு. கேண்மை. இது கைக்கட்டோன்றுங் கிளை என விரிதலின் ஏழாவதன் தொகை என்றார். சிறிய உறவு என்பர் இளம்பூரணர். 17. பெருந்திணை - பெருமையாகிய திணை என்பர் இளம்பூரணர். இதனை மங்கலமொழி என்பாருமுளர். 18. பெருந்திணை இறுவாய் என்பது பெருந்திணையாகிய இறுவாய்க் கண் (இறுதிக்கண்) உள்ளது என விரிதலின் பண்புத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்றார். உரையொடு மாறுபடலின் இது ஆராயத்தக்கது. 19. எண்வகை மணத்தினும் எதிர்சென்று கூறுவது கைக்கிளை யாதலானும், காமஞ்சாலா இளமைப்பருவம் அக் கைக்கிளைக் கண்ணதாதலானும் கைக்கிளை முற்கூறப்பட்ட தென்றபடி. எதிர் சென்று கூறலைத், தலைவன் மட்டுமன்றி அவன் கருத்தின்படி எதிர் சென்று மணம்பேசுவார் கண்ணுங் கொள்க. கொள்ளவே எண்வகை மணத்தினும் எதிர்சென்று கூறல் கைக்கிளையாதல் பெறப்படும். பாங்க னிமித்தம் பன்னிரண் டென்ப (180) என்னுஞ் சூத்திரவுரை யானும் இக் கருத்துப் பெறப்படும். கூறுவது கூறப்படுவது என்றுகொண்டு மணத்தை அதனொடு முடிப்பினு மமையும். 20. புணர்ச்சிப் பின், பிரிவு நிகழ்தலானும், பிரிவின்பின், ஏனை மூன்றும் நிகழுதலானும் இடையே நிகழ்தல் என்றார். 21. வேறு காரணங் கூறுவர் சிவஞான முனிவர். இதனை, தொல்....... சூத்திர விருத்தி நோக்கியறிக. 22. ஈண்டும் எல்லை கூறினார் என்றது படுதிரைவையம் என்று வையத்திற்குப் படுதிரையை எல்லையாகக் கூறினமையை. 23. ஒன்று ஒன்றனிற் சிறந்துவருதல் என்றது, முதலிற் கருவும், கருவில் உரியும் சிறந்து வருதலை. 24. இஃது - இப் புலனெறிவழக்கு. இதனை இல்லதெனக் கூறுவார் களவியலுரைகாரர். 25. நாடகவழக்கென மேற்கூறினார் என்றது நாடகவழக்கினும் என 53ஆம் சூத்திரத்துட் கூறியதை. 26. நாடக இலக்கணம் நான்குவகைத்து. அவையாவன: உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தல். உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தல். இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தல். இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தல் என்பன. 27. யாதானும் ஒரோவழி ஒருசாரார்மாட்டு உலகியலின் நிகழும் ஒழுக்க மென்றது களவொழுக்கத்தை. அது உள்ளது; அதனை எல்லார்க்கும் பொதுவாக்கினமையும் அதற்கு இடமும் காலமும் நியமித்ததும் செய்யுள் வழக்கு. 28. கான்கெழுநாடு - முல்லைநிலத்து நாடு. 29. குறும்பொறைநாடு - மலைநாடு, குறிஞ்சி. 30. வயல் ஊர் - மருதநிலத்தூர். 31. கடற்சேர்ப்பு - கடற்கரை - முன்வந்த கான்கெழுநாடன் முதலிய பெயர்கள் சேர்ப்பனை விசேடித்து இத்தலைவன் நானிலத்துக்கும் தலைவன் என்பதைக் காட்டி நின்றன. இத்தலைவன் ஒரு மன்னன் போலும். 32. இடநியமித்தது என்றது, புலனெறிவழக்கமாகிய களவு கற்பொழுக்கங் கட்கு ஐந்நிலமும் இடமென இடநியமித்தது என்றபடி. மேல் புலனெறி வழக்கமாகிய களவொழுக்கத்தை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமும் காலமு நியமித்துச் செய்யுள் செய்தல் என்பதில் இடநியமித்துச் செய்யுள் செய்ததற்கு இது உதாரணமாகக் காட்டப்பட்டது. இச்செய்யுளை எடுத்துக் காட்டியது இதன்கண் நானிலமும் பகுத்துக் காட்டியிருத்தல் பற்றியேயாம். இச்செய்யுளில் நியமிக்கப்பட்ட நிலம் பிரிவிற்குரிய பாலையாயினும், நானிலமுங் கூறலின் அவற்றோடு அவற்றின் றிரிபாகிய பாலையுஞ் சேர்ந்து ஐந்நிலமும் ஐந்திணைக்கு மிடமேயாம் என்க. 33. குறித்தகாலம் - தலைவன் தான் வருவதாகக் குறித்த காலம். அது கார் என்பது இச்செய்யுளா லறியப்பட்டது. 34. களிற்றியானைநிரை - அகநானூற்றின் பிரிவுகளு ளொருபகுதி. அப்பகுதியுள் ஒரு செய்யுள் இச்செய்யுளாதலின் இக்களிற்றியானை நிரை என்றார். இதனுள் கானம் என நிலமும், கார் எனக் காலமுமாகிய முதற் பொருளும் முல்லை. (இல்லம்) தேற்றா, கொன்றைமான் எனக் கருப் பொருள்களும் வந்தமை காண்க. இருத்தல் உரிப் பொருள். 35. இம் மணிமிடை பவளம் என்றது மணிமிடை பவளத்திலுள்ள செய்யுளை. மணிமிடைபவளமும் அகநானூற்றினோர்பிரிவு. இச் செய்யுளுள், களிறும், புலியும், ஆரமும், தோன்றியும், வேங்கையும் குறிஞ்சிக் கருப்பொருள்கள். மலைசார்ந்த நிலமும், கூதிரும், இடையாமமும் முதற்பொருள்கள். மின்னிப் பஃறுளி சிதறி உரைஇய நடுநாள் எனவே கூதிரும் இடையாமமும் பெறப்படும். புணர்ச்சி உரிப்பொருள். 36. இதனுள், நிலம்பக அழல்போல் வெங்கதிர் பைதறத் தெறுதலையுடைய காடு என்றமையானும் பிறவாற்றானும் நிலம் பாலைநிலம் என்பதும், காலம் வேனில் என்பதும் பெறப்படு மாகலின் அந்நிலமும், அக்காலமும் முதற் பொருளாகும். அறுநீர்ச்சுனை முருங்கை முதலியன கருப் பொருளாகும். உரிப்பொருள் - பிரிவு. 37. இதனுள் பழனம் என்றும், ஊரன் என்றுங் கூறலானே நிலம் மருதம் என்பதும், வண்டூது பனிமலர் என்றதனாலே வைகறையும் பெறப்படு மாகலின். அந்நிலமும் அக்காலமும் முதற்பொருளாகும். காரானும், வள்ளையும், தாமரையும் கருப்பொருள்கள். உரிப்பொருள் - ஊடல். 38. இதனுள் கடல்பாடெழுந் தொலிப்ப என்றதனானும், துறைவன் என்றமை யானும் நிலம் நெய்தல் என்பதும், மாலை என்றமையானே காலமும் பெறப்படுமாதலின், அந்நிலமும் அக்காலமும் முதற் பொருள்களாகும். கழிப்பூ, மீன், குருகு, புன்னை என்பன கருப்பொருள்கள். உரிப்பொருள் - இரங்கல். 39. இச்சிறப்பு என்றது. முதலிற் கருவும், கருவின் உரிப்பொருளுஞ் சிறந்தமையை. 40. இதனுள், முல்லை கருவும், இருத்தல் உரிப்பொருளுமாம். இருத்தனிமித்தமும் இருத்தலுளடங்கும். கச-ஆம் சூத்திர உரைநோக்குக. 41. இதனுள் உரிப்பொருள் - இருத்தல். 42. இதனுள், சாந்தம் ஏனல் கருப்பொருள். உரிப்பொருள் - புணர்ச்சி. 43. இதனுள் உரிப்பொருள் - புணர்ச்சி, முலையும் வாரா என்றமையான் இளையள் விளைவிலள் என்றதாயிற்று. 44. இதனுள் உரிப்பொருள் - பிரிவு. 45. இதனுள் உரிப்பொருள் - ஊடல். 46. பெயரானும் என்றது, கடற்சேர்ப்பன் என்ற பெயரை. அதனானும் நிலம் நெய்தல் என்பது பெறப்படும் என்றபடி. உரிப்பொருள் - இரங்கல். 47. பயம் - பயன். 48. செயற்கை என்றது செயற்கை நில முதலியவற்றை. அவற்றை வருஞ் சூத்திரங்களானறிக. 49. செயற்கை நிலன் - பாலை. கூ -ஆ ம் சூத்திர உரை நோக்குக. கைக்கிளை பெருந்திணைகளும் நான்கு நிலத்தும் வரலின் அவைக்குரிய நிலமும் செயற்கையாம். செயற்கைப்பொழுது - மயங்கிவரும்பொழுது. 12ஆம் சூத்திரவுரை நோக்குக. 50. கருப்பொருளும் உரிப்பொருளும் மயங்கற்கு விதியை முறையே சாகூ-ம், 12ஆம் சூத்திரங்களை நோக்கியறிக. 51. செங்கேழ் - செந்நிறம். சேயோன் - செந்நிறமுடையவன். 52. கோடு - கரை. எக்கர் - மணற்குவியல். 53. இவை நான்கென்றது முல்லை முதலிய நான்கையும். 54. முல்லை முதலிய ஒழுக்கம் நிகழ்தற்குக் காடுறையுலக முதலியன இடம் ஆயிற்று என்பது கருத்து. 55. உம்மை - சொல்லவும்படும் என்றதிலுள்ள உம்மை. இம்முறைமாறி நடத்தலாவது முல்லை முதலாகச் சொல்லப்பட்ட முறை மாறி வழங்கல். 56. தொகை - தொகைநூல். அவை எட்டுத்தொகை எனப்படும். 57. கீழ்க்கணக்கு - பதினெண்கீழ்க்கணக்கு. 58. ஆகுதி - ஆகுதிக்குரிய பாலும் நெய்யும். தருதற்குக் கொடுத்தலின் என இயைக்க. 59. நேமியான் - திருமால். 60. வேள் - முருகன் 61. தெய்வமாக அழைத்தலின் என முடியும். 62. அங்கி - அக்கினி. அந்தணர் கொடுக்கும் அவியை அக்கினி ஏற்று ஆதித்தன் கட் கொடுக்கும் என்க. 63. ஊடற்குக் காரணமாகிய பரத்தையிற் பிரிவும், இரங்கற்குக் காரணமாகிய ஏனைப்பிரிவும் பிரிதலளவில் ஒப்புமை யுடைமையின் மருதத்தின்பின் நெய்தலை வைத்தார் என்பார். பரத்தையிற் பிரிவுபோலப் பிரிவொப்பமை நோக்கி நெய்தலை ஈற்றின்கண் வைத்தார் என்றார். பிரிவுபற்றி நிகழும் ஊடலின் பின் பிரிவுபற்றி நிகழும் இரங்கலை வைத்தல் பொருத்த மென்பது கருத்து. 64. நெய்தல் - இரங்கற்பறை. சாப்பறை. 65. பூவாற் பெயர் பெற்றனவெனக் கூறுவார் இளம்பூரணர். முல்லை முதலிய பெயர்க்காரணம் இவை என்பதைப்பற்றி ராவ்சாகிப் வித்துவான் ஸ்ரீமத்.மு. ராகவையங்காரவர்கள் தமது பொருளதிகார ஆராய்ச்சியுட் கூறினமை மிகப் பொருத்தம். அதனை அந்நூலிற் காண்க. 66. அவை என்றது - தெய்வமல்லாத கருப்பொருளை. இது தெய்வம். 67. பால் - பகுதி. இங்கே முதல் கரு உரி என்னு மூன்று பகுதியுள் முதற்பொரு ளாகிய ஒருபகுதிகொண்டு காருமாலையும் முல்லை என்றதே ஒரு பாலினையுந் திணையென்றதாம். காருமாலையும் முதற்பொருள். ஆண் பெண் பலர் என்னு மூன்று பாலுங் கொண்டதே உயர்திணையாகவும் வந்தான் எனத் தனித்துவரும் ஆண்பாலினை யும் உயர்திணை யென்றலும் வழக்காதல்போல இவ்வாறு கூறலும் வழக்காம் என்பார். வந்தான் என்பது உயர்திணை என்றாற்போல என்றார். 68. விதந்து கூறல். சிறப்பாக எடுத்துக் கூறல், தெரித்துக்கூறல். வாளா கூறல், கார், கூதிர் என்றும் மாலையாமம் என்றுங் கூறல். 69. ஞாயிற்றினுதயந் தொடங்கி மற்றைநாள் உதயம் வரைக்கும் ஒரு நாளாகவும் ஞாயிற்றினாட்சி வீடாகிய சிங்கவோரை முதல் (அதற்குரிய மற்றைச் சிங்கவோரைக்கு முன்னுள்ள) ஆடித் திங்களுக்குரிய கற்கடகவோரை வந்து முடியும்வரை ஓர்யாண்டாகவும் இவ்வாறு ஞாயிற்றைக்கொண்டே காலம் வரையறுக்கப்படலின் காலவுரிமை எய்திய ஞாயிறென்றார். சிங்கவோரை - ஆவணித்திங்கள். 70. ஏவல் - தலைவனேவல். 71. ஆர்பதம் - உணவு. 72. ஏறு - எருது. 73. புனிறு - ஈன்றணிமை 74. மன்று - மரத்தடி 75. பந்தர்முல்லை - பந்தரிற் படர்ந்தமுல்லை. பந்தராகப்படர்ந்த முல்லையு மாம். 76. அரியள் - அரிதாகப் பெறற்குரியவள். 77. பானாட்கங்குல் இடையாமம். பால்நாள் - பாதிநாள். 78. இதனுள் தீம்பெயற் காரு மார்கலிதலையின்று என்றதனால் கார்காலம் என்பது பெறப்பட்டது. நனைநகுமாலை என்றதனால் மாலை என்பது பெறப்பட்டது. 79. இதனுள் நீர் வார்பு என்றதனால் கூதிர் என்பது பெறப்படும். வார்தல் - பெருகல். யாமங் கொளவரின் என்றதனால் - இடையாமம் என்பது பெறப்படும். மனைமடிந்தன்றே என்பதனானும் அது பெறப்படும். 80. பனியடூஉநின்ற பானாள் என்றதனால் முன்பனியாமம் என்பது பெறப்பட்டது. 81. வைகுறுதல் - கழிதல் என்று கொண்டு இருள் கழியுங்காலம் என்று பொருள் கோடலே பொருத்தம். வைகலும் வைகல் வரக்கண்டும் என்பதில் வைகல் - கழிதல் என்ற பொருளில் வருதல் காண்க. 82. மெய்வேறுபாடு - உடம்பின் வேறுபாடு. 83. மார்புகாணிய என்றதனால் காலை என்பது பெறப்படும். காலையிலேயே விளங்கக் காணலாமாதலின். 84. இச்செய்யுளிலும், எல்லினன் பெரிதென என வருதல் காலையை யுணர்த்தும். என்னை? அவ்வெல்லை (பரத்தையரொடு புணர்ந்து வருந் தலைவன் விளக்கத்தை) யறிதற்குக் காலையே யுரியதாகலின். 85. பதம் - உணவு 86. குடம்பை - கூடு. 87. உடங்கு - ஒருங்கு 88. கஞற்றல் - நெருங்குதல் 89. ஆன் இரண்டும் விகற்பப்பொருளில் வந்தன. 90. இதனுள் மாவின்வீழ்ந்த பழத்தை வாளை கதூம் என்றதனால் முதுவேனில் என்பது பெறப்படும். மாம்பழம் வீழுங்காலம் பெரும்பாலு அதுவாதலின். 91. கழை - ஓடக்கோல். 92. இதனுள் கழை நிலைபெறாக் காவிரி நீத்தம் என்றதனால் இளவேனில் என்பது பெறப்படும். ஆறு வெள்ளமிக்குப் பெருகுங் காலமதுவாதலின். நீர்விளையாடற்குரிய காலமும் அதுவே. 93. முடிவு - முடிதல் = முடிவுபெறல். 94. முன்னல் - மனங்கொள்ளல் = கருதல். 95. முடிய - முடிவுபெற = முற்றுப்பெற. முடியவருதலைப் பின்வரும் வாக்கியங்களானறிக. 96. உரையிற்கோடல் என்னு முத்தியாற் கொள்க என்பது கருத்து. 97. மணிநிற வுருவின தோகையு முடைத்து என்றதனால் கார் காலம் என்பது பெறப்படும். 98. முல்லை நிலத்துள் வந்த பாலை. பாலை - பிரிவு. ஏனையவுமன்ன. கார் முல்லைக்குரியது. 99. மலைநாடு என்றமையால் குறிஞ்சி என்பது பெறப்பட்டது. 100. இதனுள் எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழும் என்றதனால் நெய்தல் என்பது பெறப்பட்டது. பசலை செய்தன என்பதனால் பிரிவும் பெறப்பட லின் நெய்தலுட் பாலை என்றார். 101. முந்நீர் வழக்கம் - கடலிற் பிரிவு (34ஆம் சூத்திரம்). இதற்கு நச்சினார்க் கினியர் அச்சூத்திரவுரையுள் வேறு பொருள் கூறினும் இதனையும் ஒப்புக் கொள்ளுகின்றார் என்பது அச் சூத்திர விரிவுரை யாற் பெறப்படும். 102. எற்பாடு - ஞாயிறு படுதற்கு முன் பத்துநாழிகை என்பர் நச்சினார்க்கினியர். 103. நண்பகல் - நடுப்பகல் - உச்சிக்காலம். 104. கூவல் - கிணறு. 105. பயம் - பயன் = வளம் 106. அகநானூற்றின் ஒரு பகுதி களிற்றியானை நிரை. 107. இதனுள், புகையெனப் புதல்சூழ்ந்து........ கடும்பனி என்றதனால் பின்பனிக் காலம் என்பது பெறப்படும். 108. ஏதம் - துன்பம். 109. இதனுள் நூலறு முத்திற் றண்சித ருறைப்ப என்றதனானே பின்பனி என்பது பெறப்படும். 110. ஒழிந்த உரிப்பொருள்களிலும் இடைநிகழும் என்பதை முன்விளக்கி யுள்ளாம். 7ஆம் பக்கம் நோக்குக. உரிப்பொருள்களிலும் என்பதை உரிப்பொருட்குரிய நிலங்களிலும் என்னுங் கருத்துறப் பாலைக் கலியின் முகப்பில் இவரே கூறுகின்றார். அதனை ஆண்டு நோக்கி யுணர்க. 111. பகன்றை மலர்தன் முதலியன நிகழ்தல் பின்பனிக் காலத்தாதலின் பின்பனி வந்தவாறும் என்றார். குறித்தகாலம் - பின்பனி அது சொல்லப்படாமையின் தோன்றிற்று என்றார். 112. வரைவு - நியமம். 113. இளம்பூரணர் திணை என்பதற்குத் திணைக்குரிய முதற் பொருளெனக் கூறி, அம்முதற்பொருளுள் நிலன் மயங்காதெனவே காலம் மயங்கு மென்பர். 114. அம்மூன்று - முதல் கரு உரி என்னு மூன்று. 115. சாந்தம் - குறிஞ்சிக்குரிய கரு. 116. இதனுள் ஊடல் வந்தது. 117. இதனுள் குன்றுகெழுநாடு என்றது குறிஞ்சியை. புதல்வனொடு என்னீத் தோன் என்றதனால் ஊடல் பெறப்படும். 118. இதனுள், கானவன் மகள் ஏனற் கிளிகடியும் நாடு என்றதனால் குறிஞ்சி என்பது பெறப்படும். பெரியகூறி நீப்பினும் பொய்வலைப்படும் பெண்டு தவப் பலவே என்றதனால் முன் ஊடல் நிகழ்ந்தமை பெறப்படும். 119. கோங்கு கூறினமையிற் பாலையாயிற்று. பயந்தமாறே என்றதனால் புணர்ச்சி பெறப்படும்; பசந்தனள் என்றதனால் பிரிவு பெறப்படும். ஆதலின் உரிப்பொருளோடு உரிப்பொருண் மயங்கிற்று என்றார். 120. இதனுள் குரவு கூறலின் பாலையாயிற்று. குறிசெய்தனை என்பது முதலியவற்றால் ஊடல் பெறப்படும். 121. இதனுள், கோங்கு கூறலின் பாலையாயிற்று. யாராள் என்பதனால் ஊடல் பெறப்படும். 122. இதனுள்வரும் அடும்பும் நெய்தலும் நெய்தற்குரியன. வரையவந்தமை கூறலின் குறிஞ்சியாயிற்று. 123. இதனுள் இழை உயர்மணல் வீழ்ந்தென என்றதனானும், வெள்ளாங்குருகு என்றதனானும் கொண்கன் என்றதனானும் நெய்தல் என்பது பெறப்படும். 124. இது கொண்கன் என்றதனால் நெய்தலாதல் பெறப்படும். 125. இதனுள் மெல்லம் புலம்பன் என்றமையானே நெய்தலாதல் பெறப்படும். யானெவன் செய்கோ பாண என்பதனால் ஊடல் என்பது பெறப்படும். 126. இதனுள் வரும் வெள்ளாங்குருகும் நாரையும் நெய்தலும் நெய்தலாதலை யுணர்த்தும். துறைவன் என்னும் பெயரும் நெய்தலாதலை யுணர்த்தும். நெஞ்சநேர்கல்லேனே என்பது ஊடலை யுணர்த்தும். 127. இதனுள் அலவனாட்டி என்றதனால் நெய்தல் என்பது பெறப்படும். நின்றோள் ஆகநல்குவ ளெனக்கே என்றதனால் புணர்ச்சி நிமித்தம் என்பது பெறப்படும். புணர்தனிமித்தங் குறிஞ்சிக்குரியது. 128. இதனுள் கூறிய நெல் மருதத்திற்குரியது. ஊரன் என்னும் பெயரும் மருதத்திற்குரியது. ஊரற்குக் கவினிழப்பது எவன்கொலன்னாய் என்றதனால் அறத்தொடு நிற்றலாயிற்று. இது புணர்ச்சிக்குரியது. 129. இதனுள் கழனியூரன் என்றதனால் மருதம் என்பது பெறப்படும். துஞ்சுமனை வருதி என்றதனால் இரவுக்குறி என்பதும், கைவேலை அஞ்சாயோ என்றதனால் மறுத்ததும் பெறப்படும். இதுவும் குறிஞ்சி. 130. இதனுள் கழனியூரன் என்றதனாலும் பிறவற்றானும் மருதம் என்பது பெறப்படும். பழனவெதிரின் கொடிப்பிணையலள் என்றதனால் இளையள் என்பது பெறப்படும். பழனவெதிர் - கரும்பு. 131. இதனுள் எருமைப் புனிற்றாக் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் ஊர் என்றதனால் மருதம் என்பது பெறப்படும். 132. இதனுள், செழுஞ்செய் நெல்லின்......... தீம்புன லூர என்றதனால் மருதம் என்பது பெறப்படும். மேனி பொன்னிறங் கொளல்......... தவறோ என்றதனால் வரைவுகடாதல் பெறப்படும். 133. இக்கருத்தினால் என்றது - உரிப்பொருண் மயங்குமென்னுங் கருத்தினால் என்றபடி. இறையனாரகப்பொருள் 1ஆம் சூத்திர உரை பக. 30. 134. இதனுள் வருங் கருப்பொருள்களால் முல்லை என்பது பெறப்பட்டது. கூதிர் நின்றன்று என்பதனால் காலம், கூதிர் என்பது பெறப்பட்டது. 135. இதனுள் கருவிளை, ஈங்கை, அவரை முதலியன முல்லை நிலத்தை யுணர்த்தின. வயல் - மருதநிலத்தை யுணர்த்தியது. நெல்மருதநிலக் கருப்பொருள். மருதநிலமும் அதன் கருவும் முல்லையோடு மயங்கின. அற்சிரம் - முன்பனி. 136. இதனுள் வேங்கை கூறியதனால் குறிஞ்சி என்பது பெறப்படும். வேங்கைப்பூ மலர்வது வேனிற்காலத்தாதலின் வேனில் என்பது பெறப்பட்டது. நிலா விளங்கற்கேற்ற காலமுமதுவே. 137. இதனுள் பயநிரை யாயம்......... மனைமனைப்படரும் என்றதனால் முல்லை என்பது பெறப்படும். முகிழ்நிலாத் திகழ்தரும் என்றதனாலும் ஆர்கலிதலையின்று என்றதனாலும் வேனிலிறுதிக்கட் கூறியது என்பது பெறப்பட்டது. 138. இதனுள், இரலை, பிடவு முதலியன கூறியதனால் இது முல்லை திரிந்த பாலையாகும். உரிப்பொருளானும் பாலையாதல் பெறப்படும். ஈன்று நாளுலந்த வாலா வெண்மழை......... ஆடும் என்றதனால் முன்பனி என்பது பெறப்படும். வைகறை என்பதனால் வைகறையும் பெறப்படும். 139. இதனுள் இளவேனி லிறுத்தந்த பொழுதின்கண் என்றதனால் இளவேனிலும், வாடைவந்தலைத்தரும் என்றதனால் வாடையும். கங்குல் வந்து என்றதனால் கங்குலும், மாலை அலைத்தரூஉம் என்றதனால் மாலையும் வந்தவாறு காண்க. 140. இது காலத்தானும் உரிப்பொருளானும் பாலையாயிற்று. வேம்பு பழுக்குங் காலம் முதுவேனில் மாலை என்றதனால் அதன்கண் மாலை வந்தது பெறப்படும். 141. இதனுள் கடற்சேர்ப்பன் என்றதனால் நெய்தல் பெறப்படும். கையறுமாலை என மாலை வந்தது. 142. இதனுள் இருள் தலைவர் எனக் கங்குதலும், மருண்மாலை என மாலையும், பனியோடு இருள் சூழ என்றதனால் முன்பனியும் வந்தவாறு காண்க. பனியிருள் சூழ்தர என்றதனால் முன்பனியாதல் பெறப்படும். 143. உரிப்பொருளல்லன கருவும் முதலும் என்பர் இளம்பூரணர். 144. கூறு (பால்) பகுதி. பிரிவு ஒற்றுமைப்பட்டார் இருவர் என்றதனால் ஒன்றாயினார் இரண்டாகப் பிரிதலின் அப்பிரிவும் பாலையாயிற்று என்பது கருத்தாயிற்று. 145. செம்பாலை - ஒருபண். செம்பால் என்பதே செம்பாலை என்று ஆயிற்று என்பது கருத்து. செம்பால், செம்பாலையாயினாற்போல, பால் பாலை யாயிற்று. பால் என்றது ஒன்று பிரிந்து பலவாகிய பிரிவின் கண்ணதாகலின் ஒன்றென ஒற்றுமைப்பட்டார் இருவர் பிரியும் பிரிவினை உணர்த்திற்று. 146. வரையாது - நியமிக்கப்படாது. 147. புணர்ச்சி குறிஞ்சிக்குரியதாகலின் புணர்ச்சிக்குரிய எதிர்ப்பாட்டை யும் அதனோடு சேர்த்து வைத்தார் என்பது கருத்து. எதிர்ப்பாடு - எதிர்ப்படல். புணர்ச்சிக்குமுன் தலைவனுந் தலைவியும் எதிர்ப்படல் கைக்கிளை யாகும். 148. முன்னைய மூன்று - ஆசுரம், இராக்கதம், பைசாசம். (க0ரு) 149. சாக்காடு - இறப்பு. 150. பொதுவர் - இடையர் 151. தலைவியின் காமத்து மிகுதிறத்தை அரசனை நோக்கிச் சான்றோர் கூறிய என்க. இவை இரண்டு செய்யுளும் பெருந்திணைக்குரியன. அரசன் என்றது அரச குலத்தவனாகிய தலைவனை. 152. மைவரையுலகம் - குறிஞ்சி. இதனுள் வரை பிளந்து என்றதனால் குறிஞ்சி என்பது பெறப்படும். ஒண்கதிர் தெறுதலின் என்றதனானும், அவ் வெயிலேறு பெற்று என்றதனானும், அழலவிராரிடை என்றதனானும் பாலை மயங்கினமை பெறப்படும். 153. இதனுள் உழவர் ........ ....... எருதொடு வதியும் எனக் கூறலான் மருதம் என்பது பெறப்படும். வண்டளிர் மாஅத்து என்றதனானும் வேனில் கூறியதனானும் பாலையாகும். 154. இம்முதலையுடைய அகப்பாட்டு அச்சிட்ட புத்தகத்திலில்லை. 155. உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே என முதற்சூத்திரத்து அதிகாரப் பட்டமை கண்டு என்க. 156. புணர்ச்சிக்கண் புலவி (ஊடல்) நிகழ்தலானும், பரத்தைவயிற் பிரிவுபற்றி ஊடல் நிகழ்தலானும், ஊடி இருத்தலானும், ஊடல்பற்றியும் இரங்கல் நிகழ்தலானும், பொது என்றார். 157. முற்பட்ட புணர்ச்சி - புலனெறிவழக்காகிய ஐந்திணையுள் முற்பட்ட புணர்ச்சி. அஃதாவது களவுப்புணர்ச்சி. இப்புணர்ச்சியே புணர்தற் சிறப்புடையது. அவை: இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு. பாங்கற் கூட்டம். தோழியிற்கூட்டம். அதன் பகுதியாகிய பகற்குறி இரவுக்குறி என்பன போல்வன. 158. அவை - அச்சிறந்த புணர்ச்சிகள். 159. ஏனைய என்றது அவ்வந்நிலத்திற்குரிய பொருளல்லாதனவற்றை. 160. உரிமையாகிய பொருள் என விரியும். 161. இதனாற் புணர்ச்சி என்னும் உரிப்பொருள் கூறப்பட்டது. 162. இந் நற்றிணைச்செய்யுள் இயற்கைப்புணர்ச்சி யிறுதிக்கண் சென்று ஆயத்தோடு கூடிய தலைமகளை ஆயத்தார் வழிபடக்கண்டு இவள் யார்மகள் என வியந்து இவள் எமக்கு எய்தற்கரியளாமெனக் கருதி இவளைப் பெற்று எனக்கு உதவிய தந்தை தாயர் வாழ்க என அவரை வாழ்த்தியது. பின்வரும் புணர்ச்சிக்கு நிமித்தமாதலின் இது புணர்ச்சி நிமித்தமாயிற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்து. 163. இச்செய்யுள் இரந்துபின்னின்ற தலைமகன் தலைவி இளையள் விளைவிலள் என்ற தோழிக்கு அவள் பருவம் வாய்த்தவளென உணர்த்தலின் புணர்ச்சி நிமித்தமாயிற்று. 164. இது பிரிந்துபோயதலைவன் இடைச்சுரத்து நின்று தலைவியை யுள்ளியதன் நெஞ்சினைக் கழறியதாதலின் பிரிவாயிற்று. 165. இதனுள் பொருளே காதலர் என்றமையின் இது பிரிதனிமித்த மாயிற்று. 166. இது இருத்தல். 167. இதுவும் இருத்தல். 168. தான் என்றது தலைவனை. 169. இது, அலவனொடு படுத்துத் தூதுபோகும்படி புலம்பியதாகலின் இரங்கற் பொருட்டாயிற்று. 170. மாலைக்காலம் வந்தது; இஃது என்னை வருத்துமெனக் கருதலின் இரங்கனிமித்தமாயிற்று. 171. இதனுள் தலைவன் புறத்தொழுக்கமறிந்து அவன் பெண்டிரை வெறுத்துக் கூறினமையின் ஊடனிமித்தமாயிற்று. 172. பிரிந்தவனிரங்கலைப் பெருந்திணைக்குரியதென்பர் இளம்பூரணர். 173. இதன்கண். நின் - னல மென்பணைத்தோ ளெய்தினமென வருதலின் புணர்ச்சி நிகழ்ந்தது என்றார். 174. செயலற்றேன் என்னுந் தலைவி கூற்றினால் அவளிரக்கந் தோன்றலின் மெய்ப்பாடுபற்றி யுணர்க என்றார். அவள் கூற்று ஈண்டுக் கையறல் என்னும் மெய்ப்பாட்டை யுணர்த்துங் குறிப்பாகும். கையறல், 24ஆவது மெய்ப்பாடு. இதனினூங்கு வருவன கைக் கிளைக்கும் பெருந்திணைக்கு முரிய மெய்ப்பாடுகள். இதனை மெய்ப்பாட்டியல் கஅ-ஆம் சூத்திர நோக்கியறிக. 175. கரணம் - வேள்விச்சடங்கு. 176. கூழ் - சோறு. அது நெல்லையுணர்த்திற்று. பதம் - உணவு. அதுவும் நெல்லை யுணர்த்திற்று. இவை நச்சினார்க்கினியர் கருத்தாம். 177. வழிநிலைக்காட்சி எனினும் குறிப்பறித லெனினும் ஒக்கும். அது தலைவியைக் கண்டபின் நிகழ்வதாகலின் வழிநிலைக்காட்சி எனப்பட்டது. 178. சா-ஆம் எ-ஆம் சூத்திரங்களை நோக்கியறிக. 179. அதிகாரப்பட்டமையிற் கூறி என இயையும். 180. செய்தி - தொழில். 181. ஒழிந்த - பூவும் புள்ளும் ஒழிந்த. 182. முதிரை - எள்ளுக் கொள்ளுப் பயறு உழுந்து அவரை துவரை கடலை மொச்சை என்னு மெண்வகை முதிரைக் கூலம் என்பர் அடியார்க்கு நல்லார். 183. தளவு - முல்லையின் பேதம். செம்முல்லையுமாம். 184. பாடி முதலியன முல்லைநிலத் தூர்களின் பேதம் போலும். இக் காலத்துத் தரங்கம்பாடி எனவும், புதுச்சேரி எனவும். திருச்சினாப் பள்ளி, ஆலைப்பள்ளி எனவும் வழங்குவன அக் காலத்து இடையர் வாழ்ந்த இடங்கள் போலும். 185. திரிவுபடுதல் - வேறுபடல். 186. காலமும் இடப்பொருளில் வருதலின் நிலத்துட் காலமு மடங்குமென்பார், நிலமென்று அடக்கினார் என்றார். 187. ஒருத்தி. 188. பத்துப்பாட்டுள் ஒன்று. 189. பெயர்ப்பெயர், பொருள்பற்றி வரும் பெயர், வினைப்பெயர், தொழில்பற்றி வரும் பெயர். 190. ஏனைப் பெண்பெயர் என்றது கூறாத ஆண்பாற்கேற்ற பெயரை. 191. இக்காலத்துத் திமிலிச்சி எனப் பெண்பாற்பெயர் ஒருமையாய் வழங்குகின்றது. 192. இஃது என்றது கொடிச்சி என்னும் பெயரை. இதற்கு ஏற்ற ஆண்பாற்பெயர் இல்லையென்பது கருத்து. 193. வெற்பன் சிலம்பன் அண்ணல் தோன்றல் என்பன போல்வன பெயர்ப் பெயர். குறும்பொறைநாடன் கானகநாடன் என்பன போல்வன நாடாட்சி பற்றி வரும் பெயர். 194. பொதுவன். இது திணைதொறுமரீஇய பெயரால் திணைநிலைப் பெயர் வந்தது. பிறவுமிவ்வாறு கொள்க. 195. 196. ஆயர்மகன் என்பதும் திணைதொறுமரீஇய பெயர் திணை நிலைப் பெயரானது. 197. இதனுள் எயினர் தங்கை என்பது பாலையுள் திணைதொறு மரீஇய பெயர் திணைநிலைப்பெயரானதற்குதாரணம். 198. இதனுள் எயிற்றி என்பதும் மேற்குறித்தவாறு வந்தது. 199. இதனுள் பரதவர் மடமகள் என்பது நெய்தற்கண் திணை தொறு மரீஇய பெயர் திணைநிலைப் பெயரானதற்குதாரணம். மேல் வருவனவுமன்ன. 200. அடியோர் என்றது ஒருவர் இல்லத்திருந்து அவர் இல்லத்துக்குரிய குற்றேவல் செய்வோரை. 201. வினைவலர் என்பது பிறர்க்குரிய புறத்தொழில்களை அவர் ஏவலின்படி செய்வோரை. வினைவலபாங்கினும் எனவும் பாடம். 202. ஐந்திணைக்குரிய உயர்ந்த தலைமக்களுள் தலைவியும் புனங்காவலும் படுபுள்ளோப்பலுமாகிய தொழில் செய்கின்றாளாதலின் அவளும் வினைவலருளடங்கி இழிந்தோளாவள் கொல்லோ என ஓர்ஐய நிகழுமன்றே. அவ்வையத்தை நீக்கற்கு உயர்ந்தோர் விளையாட் டென்றார். புனங்காவல் - குறிஞ்சிக்குரியது. படுபுள்ளோப்பல் - இதற்கு தினைக்கதிரில் வீழும் பறவைகளை ஒப்பல் என்று கூறலாமெனினும் தினைக்காவல் என்பதனுள் காவல் என்றதனால் அதுவும் அடங்கு மாதலின் நெய்தற்கண் வெயிலில் உணங்க வைக்கும் புலான் மேல் வீழும் புள்ளோப்பலையே கூறினார் என்று கூறல் பொருட் பயனுடைத்தாம். அதற்கு இலக்கியம், கடும்புலால் புன்னை கடியுந் துறைவ. படும்புலாற் புட்கடி வாள்புக்க - தடம்புலாந். தாழைமா நீ ழற் றதைந்துயர்ந்த தாழ்பொழி. லேழைமா னோக்கி யிடம் (திணைமாலை நூற் - 44) என்னுஞ் செய்யுள். கொழுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி - எக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇ (அகம்.உ0) என்பதுமாம். 203. இதற்கு வேறுபொருள் கூறுவர் இளம்பூரணர். ஆயினும் இவர் கூறும் பொருளே பின்வருஞ் சூத்திரங்களுக்குப் பொருத்தமாகின்றது. எனினும் இவ்வாறு நலிந்து பொருள் கொள்ளாது நேர்பொருள் கொள்வதே நலம். 204. தாமரைக்கண்ணியை என்பதனானே அந்தணன் தலைவனாதல் பெறப்படுமென்பது நச்சினார்க்கினியர் கருத்து. தாமரைமாலை அந்தணர்க்குரியது. 205. ஈர்ந்தணாடையை என்பதனால் அந்தணர் வருணத்தான் தலைவனாதல் பெறப்படும். என்னை? கழுவியுடுப்பது அவன்கண்ணதாகலின். இதுவும் நச்சினார்க்கினியர் கருத்து. 206. கழுவுறு கலிங்கம் என்பதனால் பார்ப்பனி யென்பதும், பார்ப்பனி என்பதனால் தலைவனும் பார்ப்பான் என்பதும் பெறப்படும் என்பது இவ்வுரையாசிரியர் கருத்தாகும். விரலைக்கழுவாது உடுத்து என்க. விரலைத்துடைத்த ஆடை என்று பொருள் கொள்வர் டாக்டர் சாமிநாதையர். அவர் தாங்கொண்ட பொருட்கேற்ப இப் பாட்டிற் கூறிய உணவால் பிராமணவருணம் எனக்கொண்டனர். 207. கலத்திற்சென்ற பொருள்வயிற் பிரிவாதலின் வணிகன் தலைவனாகவுங் கொள்ளக் கிடத்தலின் என்றார். 208. வாளையீர்ந்தடி என்றமையான் வேளாண் வருணமென்பது கருத்து வாளை - வாளைமீன். வாழையீர்ந்தடி என்று பாடங்கொண்டு வாழை யிலையை ஈர்ந்து என்று பொருள்கொள்வர், நற்றிணையுரையாசிரியர். வாழைநடுதல் வேளாளர்க்குரியதாகும். 209. வேந்தனும் ..... பாசறை ........ கண்படையிலனே என்று கூறலின். தலைவன் உதவிக்குச் சென்ற குறுநிலமன்னன் என்பது கருத்துப் போலும். அன்றியும் அமருந்தம் வயினதுவே என்பதனானும் பெறப்படும். 210. இதனால் பகையை இடைவைத்து, தூதை அதன்பின் வைத்தமைக்குக் காரணங் கூறப்பட்டது. 211. நிரம்பா - முடிவுபோகாத. வேண்டிச்சென்றார் என இயையும், ஈர்ங்காழ் - ஈரியகொட்டை. ஆலி - ஆலங்கட்டி. தாய் - உதிர்ந்து. ஓதி - ஓந்தி. மையணல் - கருநிறமான தாடி. படா - உறங்காத. கயவாய் - பெரிவாய். கொண்மூ - மேகம். மதுகை - வலிமுரண் - மாறுபாடு. சூடாவாகை - வாகை என்னுமூர். ஆடு - வெற்றி. குடை ஒன்பது என்றதனால் மன்னரும் ஒன்பதின்மர் என்பது பெறப்படும். 212. வாசுதேவன் - கண்ணன் 213. இது மண்கோடல் கூறியது. 214. இது திறைகோடல் கூறியது. 215. நெடுங்கொடி எழ வந்தார் என்றமையான் அரசராதல் பெறப்படும் என்பது கருத்து. 216. பழையன் ஒரு குறுநிலமன்னன் என்பது நச்சினார்க்கினியர் கருத்துப் போலும். நற்றிணை உரைகாரர் சேனாபதி என்பர். 217. தொல் - சொல் - எச்ச - 53. 218. இதற்கு வேறுபொருள் கூறுவர் இளம்பூரணர். 219. கேள் - உறவினர். கேளல்லாத கேளிர் - நொதுமலாளர் (அயலவர்). ஆள்வினை - பொருளீட்டும் முயற்சி. 220. சடங்கு - கிரியை. உறுப்பு - அங்கம். 221. பகடுபுரந்தருநர் - ஏரைப் பாதுகாப்போர்; வேளாளர். பகடு - ஆகுபெயர். குடிபுறந்தரல் - குடிகளைப் பாதுகாத்தல். 222. கூலம் பகர்நர் - கூலவாணிகர். கூலம் - பலசரக்கு என்பாருமுளர் என்றும், ஈரெண்வகைக் கூலம் என்றும், பதினெட்டுவகை என்று கூத்தநூலார் கூறுவர் என்றும் சிலப்பதிகாரவுரை கூறுகின்றது. குடிபுறந்தருநர் - தங்கீழ்க் குடிகளைப் பாதுகாக்கும் வேளாளர். 223. வேறுபொருள் கூறுவர் இளம்பூரணர். 224. மலையமாதவன் - பொதியமுனி அகத்தியன் நிலங்கடந்த நெடுமுடியண்ண லுழை என்பது அண்ணல் வழிக்கண் என எழுத்ததிகாரப் பாயிரத்திலுள்ளது. அவ்வாறு ஈண்டுமிருப்பதே பொருத்தம். நரபதியர் - அரசர்கள். நிலங்கடந்த நெடுமுடியண்ணல் - ஓரரசன் கண்ணனன்று என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அவர் கடந்த என்பதற்கு வென்ற எனப் பொருள் கொள்வர். நிலங்கள் தந்த எனப் பகுப்பாருமுளர். 225. வேறுபன்மொழி - தமிழ்மொழியல்லாத வேறுபலமொழி. என்றது வேறு பல பாஷையை. 226. நாம் முன்னியவினை என்றதனால் தானே சென்றதென்றார். 227. இவ்வாறு பொருள் கூறுபவர் இளம்பூரணர். அவர் பொருளே நேர் பொருளாம். 228. சிலப்பதிகாரக் கதையுள் இவ்வாறு வருகின்றது. சான்றோர் என இவர் கருதியது சங்கப்புலவரை. 229. நற்சொல் - நற்சொல்நிமித்தம். நல்வாய்ப்புள் என்பது மது. இதனைப் பறவாப்புள் என்றுங் கூறுவர். 230. அறநெறி என்றதனால் நல்வினையாதல் பெறப்படும். 231. அறனில்பால் - தீவினை 232. வினையாலணையும்பெயர். 233. சான்றோர் என்றது ஈண்டுச் சங்கப்புலவர்களை. கலித்தொகையில் தாய் அறத்தோடு நின்றவிடத்து. அவருந் தெரிகணை நோக்கிச் சிலை நோக்கி... தெருமந்து சாய்த்தார் தலை எனக் கூறலின் சென்றாரென்று செய்யுட் செய்திலர் என்று கூறினார் போலும். 234. இதனுள் ஆறு அறிந்த மாக்கட் டாகுக என்பது தெய்வத்தொடு படுத்தது. 235. இதனுள் வேல! திட்பம் கூறுக என்றதுமது. 236. இவற்றை - பந்து முதலியவற்றை. 237. ஆரிடை - அருவழி. 238. இதனுள் தோழியை வெகுண்டு கூறியதாகப் பொருள் தோன்றவில்லை. 239. பாவை - பாவைபோல்வாள். 240. பாவை - விளையாட்டுப்பாவை 241. கிளி - கிளிபோல்வாள். 242. பூவை - பூவைபோல்வாள். இவற்றின் பின்வருங் கிளியும் பூவையும் அவள் வளர்த்தவை. நோக்கினையும் நுதலையும் உடைய என் கண் போல்வாள் என இயையும். உடைய என்பது கணோள் என்பதில் விகுதியோடு முடியும். என்று யான் கலங்க என் பூங்கணோள் நீங்கினளோ என முடிக்க. 243. சிலம்பு கழீஇ - சிலம்பு கழித்து. இது மிக முற்பட்டகால வழக்கா யிருக்கலாம். இளமையிலே காலுக்குக் காப்பு அணிந்து பின் வதுவைக் காலத்துக் கழிக்கும் வழக்கு இப்போதும் சில சாதியாரிடம் அருகி வழங்குகின்றது. வேறு கூறுவாருமுளர். 244. பதியெழு வறியாப்பேரூர் - பதியிலுள்ள குடிகள் வறுமை பற்றி வேற்றூர் சென்றறியாத செல்வமிக்க பேரூர். இதனை பதியெழுவறியாப் பண்பு (சிலப். 15-5) எனவும். பதியெழு வறியாப் பழங்குடி (சிலப். 1-5) எனவும் பதியெழுவறியாப் பழங்குடி (மலைபடுகடாம். 479) எனவும் வருவனவற்றாலறிக. 245. வண்டல் - மணல்விளையாட்டு. அவை சிற்றில் கோலல், சிறுசேறாடல் முதலியன; விளையாட்டுப் பாவையுமாம். 246. தொடுதல் - அகழ்தல் - தோண்டல். 247. கெடுநர் - அகப்படாமற் றப்புவார். 248. நுமர் - நுமது சுற்றத்தார். 249. அமர் - போர். 250. பரத்தையிற் பிரிவும் பிரிவு (பாலை) என்பது ஆசிரியர்க்குக் கருத் தென்பது 41ஆம் சூத்திரத்தாற் பெறப்படுமென்பது எமது கருத்து. 251. கெளவை - அலர். 252. பாயலுணர்த்தல் - படுக்கையிற் றுயிலுணர்த்தல் (உணர்த்தல் - தெளிவித்தல்) துயிலெழுப்பல் என்பது கருத்து. 253. முயங்கல் - தழுவல். 254. கையடுத்தல் - கையடைகொடுத்தல். கையடை - அடைக்கலம். 255. போக்குதல் - உடன்போக்குதல். தவிர்தல் - ஒழிதல். 256. விழவு - கொண்டாட்டம் 257. நேர்தல் - உடன்படல். 258. இதினூங்கு - இதின்மேல். 259. கதிர் - ஞாயிறு 260. ஆறு - வழி. 261. மீண்டனைசெல் - எம்மூர்க்கு மீண்டுவருதி. 262. சடையெம்மண்ணல் - சிவன். அவன் விளையாட்டென்றது. அர்த்தநாரீசுர வடிவாய் வருதலை. 263. எய்த - அடைய. 264. கோளிழைத்தல் - தலைவியைக் கவர்தல். நற்றிணையுள் இச்செய்யுள் தோழி விறலிக்கு வாயின்மறுத்தல் என்னுந் துறை எனக் கூறப் பட்டுள்ளது. அவ்வுரை நோக்கியறிக. 265. குடங்கை - உள்ளங்கை. 266. தேடிச்சென்ற செவிலி சுரத்தின்கண் புணர்ந்துடன் வந்தாரிருவரைக் கண்டு வினாவியவிடத்து அவருள் தலைவன் செவிலியை நோக்கிக் கூறியது. 267. ஒன்றா என்பதனை மூன்றற்குங் கூட்டல் - ஒன்றாத்தமர். ஒன்றாப்பருவம். ஒன்றாச்சுரம் எனக் கூட்டல். ஒன்றல் - ஒருப்படல் - இயைதல். இதனைத் தமர்க்கண் ஒன்றல். பருவத்தின் கண் ஒன்றல். சுரத்தின்கண் ஒன்றல் என இயைத்துக் கொள்க. தமர் ஒன்றாமை - உடன்போக்கிற் கொன்றாமை. பருவம் ஒன்றாமை - இற்செறிப்பானே புறம்போதற்குரிய காலமும் ஆற்றியிருக்கும் பருவமும் ஒன்றாமை. கரம் ஒன்றாமை - அரியசேயகல்லதராதலின் உடன்போதற்கு ஒன்றாமை. தமர்க்கண் ஒன்றல் - அவர் கூறுங் கடுஞ்சொற்கேட்டற்கு ஒருப்படல். பருவத்தின்கண் ஒன்றல் - நொதுமலர் வரைவிற் காற்றாமையால் உடன்போக்கிற்கேலாத கடுங்கோடையெனக் கருதாது உடன்படல். சுரத்தின்கண் ஒன்றல் - அரியசேயகல்லதர் எனக் கருதாது கொண்டுதலைக்கழிதற்கு (உடன் போக்கிற்கு) ஒருப்படல். 268. எடுத்துக்கொண்ட வினை - தலைவியை உடன்கொண்டு போதல். 269. ஒருதலை - நிச்சயம். 270. நாளது சின்மை முதலிய நான்கும் பொருள் செய்தற்கு ஊக்கப் படுத்துவன. ஏனைய நான்குந் தடுப்பன என்பது நச்சினார்க்கினியர் கருத்து. இளம்பூரணர் எட்டும் ஒன்றா என்பர் அவருரை நோக்கியறிக. 271. பொதுச்சொல் - நிலம் பிற அரசர்க்கும் பொது என்னுஞ் சொல் புறம் 8ஆம் செய்யுளுரை நோக்குக. 272. மாற்றம் - சொல். 273. மருட்டிக்கூறல் - உடன்போகுழி மருட்டிக்கூறல் (இதுவும் பாலை) 274. கதவ - கோபத்தினையுடையன. 275. விடுத்தல் - தோழி உடன்கூடி விடுத்தல். 276. மூன்றன்பகுதி - அறத்தினாற் பொருளாக்கிப் பொருளால் இன்பநுகர்தல். 277. உருவு - தலைவியுருவு. 278. நீ வந்தால் யாம் போகேமோ அரிய இடையினையுடையாய்! நீயிரங்கல் வேண்டா. நோக்குடனே வந்தால் என இயைக்க. தந்து ஆர்தகரம் எனப் பிரிக்க. தந்து - கொண்டணிந்தது. தகரம் - மயிர்ச்சாந்து. 279. இப் பாசறைப் புலம்பல் பத்து என்றது - ஐங்குறு நூற்றிலுள்ள பாசறைப் புலம்பல் பத்துச் செய்யுளையும். 280. படுதல் - ஒலித்தல். பனை - முரசு மின்கூற்றமாக என்க. கூற்றம் - இயமன். 281. ஐயவாயின - வியக்கத்தக்கவாயின. கிளவி ஆயின என்க. 282. முரம்பு - வன்னிலம். பருக்கைக் கல்லுமாம். திகிரி - உருளை. 283. ஊடிய தலைவியை இரத்தலும் தெளித்தலும் என்க. இச்சூத்திர நோக்குக. 284. நவ்விப்பிணை - மான்பிணவு 285. கானவர்மகள் - வேட்டுவர்மகள். 286. இது, வழிச்செல்லும் அந்தணரை விளித்துக் கூறியது. 287. இது, வழிச்செல்வோரை விளித்துக் கூறியது. 288. இது, தன்னூர்க்குச் செல்கின்றாரை நோக்கிக் கூறியது. 289. உடன் - தலைவனுடன். 290. நுகர்தல் - பருகல். 291. என்னையை - என் தலைவனை. 292. உம்மை என்றது ஏதுவும் என்றதிலுள்ள உம்மையை. இது நினைத்தற்கும் என மாற்றிப் பொருள் கொள்ளப்பட்டது என்பது இவ்வாக்கியத்தால் விளங்குகின்றது. உரையிலுள்ள ஏதுவுமாம் - ஏதுவாம் என்றிருத்தல் வேண்டும். தலைவன் கூறுதற்கு விதி வருஞ் சூத்திரத்தாற் கொள்ளலாம். ஆய்க. 293. மிகுதித் தலையளி - மிகுதியான தலையன்பு. அவை தொடுத்தென நோக்கலும் நீவலும். 294. ஒத்து - விதி. 295. இம்மூன்று உதாரணத்தினுள்ளும் முந்திய இரண்டும் தலைவிகண் நிகழ்ந்ததை நினைத்தலையும், பிந்திய ஒன்றும் அவள் தன்மையை நினைத்தலையும் உணர்த்தியவாறு. காண்க. 296. துருத்தி - ஆற்றிடைக்குறை. 297. கட்டளை - கட்டளைக்கல். 298. வட்டு - உண்டை 299. நெல்லி - நெல்லிக்காய் 300. உரன் - அறிவு. 301. விளியார் - விளியாராய். 302. தாள் - முயற்சி 303. ஆழல் - அழுந்தாதே. அழற்க எனினுமாம். நீட்டல் விகாரம். 304. முனாது - பழையதான. மறந்து பழகுவாராதல் அரிது என்க. 305. தன் சாதிக்கேற்ப - தன் குலத்திற்கேற்ப. 306. அரசன் குறைமொழிந்து வேண்டினமை என்க. அவ்வாறு பாடமிருப்பது நலம். 307. வானம்வாழ்த்தி - வானம்பாடி என்னும் புள். 308. மொழிபெயர் தேம் - வேற்றுமொழிநாடு. 309. உவல் - காய்ந்த இலை. பதுக்கை - கற்குவியல். 310. பேய்த்தேர் - கானல். ஊராத்தேர் - ஒருவரால் ஊரப்படாத தேர். இது வெளிப்படை குறித்தது. தேரை ஈரிடத்துங் கூட்டுக. 311. பாயல் இன் படல் - படுக்கையிடத்துள்ள இனிய துயில். படல் - கண்படை துயில். 312. அல்கல் - தங்கல். 313. பாணி - தூங்கலோசை. 314. நலம் - அழகு. இன்பம், பொருட்பிணி - பொருட்பற்று. பெருந்திரு - பெரிய செல்வம். சொல்லாது பெயர் தந்தேன் - நண்பர்க்குஞ் சொல்லாது மீண்டு வந்தேன். 315. ஓம்பன்மின் - பாதுகாவாதீர். நிலை என்னாவதுகொல் என இயைக்க. 316. செலவு - தலைவன் செலவு 317. ஞெமை - ஒருமரம். குடிஞை - பேராந்தை. தெளிர்த்தல் - ஒலித்தல். நேமி - உருள். நோகோ - நோவேனோ. 318. இஃது - இக்குரவை. 319. உடன்போக்கு மறுத்துக்கூறுதல் என்றது. தலைவி பொருள் வயிற்பிரிவு முதலிய பிரிவின்கண் யானும் உடன்வருவேன் என்றாட்கு அவ்வுடன் போதலை மறுத்துக்கூறலை. இது வினைவயிற்பிரிவில் மறுத்துக் கூறியது. 320. இதற்கு இளம்பூரணருரையே நேர்பொருளும் பொருத்தமுமாகும். 321. ஏனையுவமமாய் நின்று உள்ளுறைப் பொருள் தருவதையே ஈண்டு உள்ளுறை உவமந்தான் ஏனையுவமமென்று கூறும்படி நின்றது என்றார். இதுவே கருத்தாதல் பின் விரிவுரையில். இவ்வேனை யுவமம்.... நின்றவாறு காண்க என்று கூறுதலானுணர்க. இதனை 242ஆம் சூத்திர உரையானுமறிக. 322. உவமப்போலி என்றது உள்ளுறையுவமையை. 323. ஏனல் - தினை. கழை - மூங்கில். இது நிவக்கும் என்பதனோடு முடியும். 324. கருப்பொருள் உவமமாய் நின்றது என்றது, வேழத்திற்குக் கரும்பு உவமமாய் நின்றதை. வேழமும் கரும்பும் கருப்பொருள்கள். 325. பிறிதொன்றன் பொருட்டு - புலியின் பொருட்டு. பூத்த வேங்கை புலிபோறலின் புலியென்று கருதிப் பொருதலின் பிறிதொன்றன் பொருட்டு என்றார். பூத்த வேங்கையைப் புலியொன்று பொருதலை. கலி 38ஆம் செய்யுள் நோக்கி யறிக. நசையறவோங்காது என்று பாடமிருக்க வேண்டும். குறுந்தொகையுள் இச் செய்யுளுரையில் வரும் மேற்கோளாட்சி என்னும் பகுதியை நோக்கி யறிக. பூக்கொய்வாரின் விருப்பங்கெட உயராது நின்று கொய்யமலரும் எனப் பொருளுரைக்க உணங்காது என்று கொள்ளின் நசையற என்பது பசையற என்றிருத்தல் வேண்டும். பசையற - ஈரமற. உணங்காது - காயாது. 326. கருதியது - உள்ளுறைப்பொருள். 327. பயப்பட்டு - பிரயோசனப்பட்டு. 328. அப்பகுதி - பிரிவின்பகுதி 329. கொண்டுதலைக்கழிதல் - தலைவியை உடன்கொண்டு போதல். உடன் போக்கு என்றபடி. 330. அமைதி - பொருத்தம். 331. ஏமம் - காவல்; இஃது ஆகுபெயராய் மருந்தையுணர்த்திற்று. 332. ஏதம் - குற்றம். தீங்கு 333. காமஞ்சான்ற - காமக்குறிப்பிற்கு அமைந்த 334. இது என்றது, காமஞ்சாலா இளமையோள்வயிற் கைக்கிளை யுணர்த்தும் இச்சூத்திரத்தை. 335. அகத்து - மனத்து. 336. இவ்விதி என்றது, இச் சூத்திரத்துட் கூறிய கைக்கிளைக்குரிய ஏமஞ்சாலா விடும்பை எய்தன் முதலியவற்றை. 337. இக்கருத்தை மெய்ப்பாட்டியல் 18ஆம் சூத்திரத்து வரும் விரிவுரை யானுணர்க. 338. உக்கம் - தலை. உரித்தன்ன மடுப்பு என்க. அம் மடுப்புத் தோல் திரைந்துள்ளமையின். கொக்குரித்தன்ன என்றார். 339. இவ்விரண்டும் இளமைதீர் திறத்திற்கு உதாரணம். உளைத்தவர் - வெறுத்தவர். படுகளி - மிக்ககளி. பிணங்கல் - பிணங்காதே. 340. இதனுள் தெளிந்து கூறுவது என்றது காமத்து மிகுதிறத்துத் தெளிந்து கூறுவது என்றபடி. அதனை, பொருளியல் 42ஆம் சூத்திரவுரை நோக்கியறிக. 341. வழிநிலைக் காட்சி என்றது குறிப்பறிதலை. 342. ஒழிந்த - கலியும் பரிபாடலு மல்லாத. எனவே ஆசிரியம் முதலியன என்பதாயிற்று. 343. இவ்விரண்டு - கலியும் பரிபாடலும். 344. வரைநிலையின்று - இப்பொருளில் வருமென வரைவு செய்யும் நிலைமை யில்லை. 345. இவ்விரண்டினும் - நாடகவழக்கு உலகியல்வழக்கு என்னும் இவ்விரண்டினும். உலகியல் சிறத்தல் - உலகியல் மிக்குவருதல். 346. புனைந்துரைத்தல் - நாடகவழக்கு. 347. இக்கருத்து என்றது, நாடக வழக்கு என்ற கருத்தை. முதல் கரு உரி என்னும் வகுப்பு உலகியலன்று; நாடக வழக்காகும். 348. இல்லது இனியது என்று கூறுவது களவியலுரை. 349. நால்வகைத் தலைமக்கள் என்றது நிலம் நான்காதல் பற்றி. தொல்பொருள் 93ஆம் சூத்திர உரை நோக்கியறிக. 350. அவற்றின் - ஐந்திணையின். புறத்து நிற்றல் - ஐந்திணையின் புறத்து நிற்றல். அகத்து நிற்பன ஐந்திணை; எனவே ஏனையிரண்டும் அவற்றின் புறத்து நிற்றல் பெறப்படலின் அகமாகாது, அகப்புறமாயின என்பது கருத்து. 351. காதலற்கெடுத்த - நாயகனைக் கெடுத்த. கெடுத்தல் - போக்குதல். (காணாமற் போகவிடல்) 352. காஞ்சி - புறப்பொருட் டிணையுளொன்று; நிலையின்மை கூறுவது. 353. சார்த்துவகையான் வருதலாவது. உரிப்பொருட் பெயரைத் தன்னொடு சார்த்திக்கூறும் வகையான் வருவது. 354. இதில், சீதை என இயற்பெயர் வந்தது. 355. இதில், விசயன் என இயற்பெயர் வந்தது. 356. இவற்றை - கைக்கிளை பெருந்திணைகளை. 357. இதில், பல்லவன் என வேந்தன் பெயர் வந்தது.