தொல்காப்பிய உரைத்தொகை - 12 பொருளதிகாரம் இளம்பூரணம் -2 வ.உ. சிதம்பரனார் (பதிப்பு - 1921,1933,1935) மீள்பதிப்பு - 2018 பதிப்பாசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் தமிழ்மண் பதிப்பகம் நூற்குறிப்பு தொல்காப்பிய உரைத்தொகை – 12 பொருளதிகாரம் - இளம்பூரணம்-2 முதற்பதிப்பு(1921,1933,1935) வ.உ. சிதம்பரனார் பதிப்பாசிரியர் மீள்பதிப்பு (2018) முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர்கள் முனைவர் கல்பனா சேக்கிழார் பதிப்பாளர் கோ. இளவழகன் பக்கம் : 24+360 = 384 விலை : 600/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. தொ.பே. .: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 384  கட்டமைப்பு: இயல்பு  படிகள் : 500   நூலாக்கம் : கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (Harrish)   அச்சு : மாணவர் நகலகம், பிராசசு இந்தியா, ரியல் இம்பேக்ட் சொல்யூசன், தூரிகை பிரிண்ட், வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  தொல்காப்பிய உரைத்தொகை தொல்காப்பியம் நம் வாழ்வியல் ஆவணம்; நம் முந்தையர் கண்ட மொழியியல் வளங்கள் அனைத்தையும் திரட்டித் தந்த தேன் தேட்டு! அத்தேட்டைச் சுவைத்த கோத்தும்பிகள் பழைய உரையாசிரியர்கள். அவர்கள் உரைகளையெல்லாம் ஒன்று திரட்டி, வரிசையுறத் தமிழுலகம் கொள்ள வைத்த உரைத்தொகுதிகள் இவையாம்! முன்னைப் பதிப்பாசிரியர்கள் தெளிவுறுத்தும் மணிக்குவைகள் எல்லாமும், அவர்கள் வைத்த வைப்புப்படி வைத்த செப்பேடுகள் இத் தொல்காப்பிய உரைத் தொகையாம். மேலும், இவை கிடைத்தற்கு அரிய கருவூலமுமாம்! ***** ***** ***** இளம்பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய பழைய உரையாசிரியர்கள், உரை விளக்கம் பல காலங்களில் எழுதியுளர். எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் பதிப்புகள் ஒரே காலத்தில் ஒருவரால் வெளியிடப்பட வில்லை. அவற்றையெல்லாம் ஓரிடத்தில் ஒரே வேளையில் ஒட்டு மொத்தமாக முன்னைப் பதிப்பாசிரியர்கள் உரை - விளக்கம் - குறிப்பு - இணைப்பு ஆகியவற்றுடன் பெற வெளியிடும் அரிய பெரிய முயற்சியில் வெளியிடப்படுவது தமிழ்மண் பதிப்பகத்தின் இப்பதிப்பாகும். தொல்காப்பியத்திற்குக் கிடைத்த உரைகள் அனைத்தையும் ஒருமொத்தமாகத் தருவதால் இது, தொல்காப்பிய உரைத்தொகை எனப்பட்டது. தொகையாவது தொகுக்கப்பட்டது. இரா. இளங்குமரன் அறிமுகவுரை வ.உ. சிதம்பரனார் வள்ளி நாயக - உலகநாத - சிதம்பரனார், `வ.உ.சி.’ என மூன்றெழுத்தில் முத்தமிழ்ப் புகழும் கொண்டவர் அவர்! “நாடும் மொழியும் நம்மிரு கண்கள் என்று கொண்ட பெருமக்களை விரல் விட்டு மடக்கக எண்ணின் - அவற்றுக்கே தம்மை ஈகம் செய்தவரை எண்ணின் - அடுத்த விரலைல மடக்க - ஆழமாக எண்ணித் தானே ஆக வேண்டும்! ஓட்டப்பிடாரத்தில், உலகநாதர் - பரமாயியர் மகனாராக 05.09.1892 இல் பிறந்தவர் வ.உ.சி. தந்தையார் வழக்கறிஞர்: தாம்பிறந்த ஊரி இருந்த `வீரப் பெருமாள் அண்ணாவி’ என்பாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்கரளைக் கற்றார். தூத்துக்குடி கிறித்தவ உயர்பள்ளி, திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி உயர்பள்ளி ஆயவற்றில் கற்றார். தந்தையார் கால்டுவெல் கல்லூரியில் சேர்த்துப் பயிலச் செய்தும், கல்வி நாட்டம் இல்லாராய் ஊர்க்கு வந்து வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி செய்தார். அதுவும் ஏற்காமல் சட்டம் படிக்கத் திருச்சிராப்பள்ளி வந்து சட்டக் கல்லூரியில் பயின்று கி.பி. 1895இல் வழக்கறிஞரானார். படிக்கும் போதே 1894இல் திருமணமும் ஆயது. மணமகனார் வள்ளியம்மை. வறியவர்க்கு வாதாடலும், காவலரைத் திணறவைக்க வினாவலும் கொண்ட வ.உ.சி.யின்மேல், அரசின்பகை மளையிடத் தொடங்கிவிட்டது. தந்தையார் தூத்துக்குடிக்குச் செல்ல வைத்தார். வள்ளியம்மை 1900இல் இயற்கை எய்த, அவர் உறவினராய மீனாட்சியம்மையை மணக்கவும் நேர்ந்தது. சிதம்பரனார் தூத்துக்குடிக்குச் சென்றால் என்ன? அவர் ஈகமும் துணிவும் அவருடன் தானே இருக்கும்! தூத்துக்குடி பெருநகர்! தொண்டுக்கும் வாய்ப்பு! எகிப்து கொலை வழக்கு! விடுவிடுப்பு முடிபு! ஏழைமையர் தோழமை யரானார்! தமிழில் தொய்வும், சைவ சமய ஈடுபாடும் பெருகப் பெருவாய்ப்பு ஏற்பட `விவேகபானு’ என்னும் இதழ் நடத்தினார். இது மாதிகை இதழ். சென்னைக்குச் சென்று திரும்பும் ஒரு சூழல் ஏற்பட்டது. அப்பொழுது சிதம்பர்க்கு ஓர் எழுச்சி உண்டாயது; வணிகத்தால் நேர்ந்த அயலாராட்சியை ஒழிக்க, அவ்வணிகமே வழி என்று திட்டம் தோன்றிக் கப்பல் இயக்குதலில் முனைந்தாதர். மும்பை சென்று கப்பல் வாங்கி, தூத்துக்குடிக்கும் கெழும்புக்கும் இடையே செலுத்தினார். `சுதேசிக் கப்பல்’ ஆங்கிலரைக் கொதிக்க வைக்காதா? சுதேசி பண்டசாலை, நெய்தல் சாலை, என்பவற்றை நிறுவினார். ஆலைப் போராட்டங்களில் முன்னின்றார். திலகரைத் தலைவராகக் கொண்டார். சூரத்தில் நிகழ்ந்த மாநாட்டில் பங்குகொண்டு (1907) மீண்டு மேடைகளில் அரசியல் முழக்கமிட்டார். சுப்பிரமணியே சிவா உடனானார்! மாவட்ட ஆட்சியர் விஞ்சு என்பார் சிதம்பரனார், சிவா இருவர் மீதும் குற்றங்கள் பல சாற்றி, நாடுகடத்தவும் திட்டமிட்டார். முறைமன்றம் 20 ஆண்டு, கடுங்காவல் தண்டம் விதிக்க, அதனை `இறைவன் அருள்’ என்றா. மேல் முறையீடுகளால், ஆறாண்டுகள் ஆகிக் கணல்பொறி இயக்கி, செக்கிழுத்து 1912இல் விடுதலை பெற்றார். சிறையில் சேம்சு ஆலன் நூல்களை மொழி பெயர்த்தார். விடுதலைக்குப்பின் தமிழ்த் தொண்டில் ஆழமாக இறங்கினார். தொல்காப்பிய இளம்பூரணர் உரையை 1936இல் பதிப்பித்தார். திருக்குறள் அறத்துப்பால் விரிவுரை 1935இல் வெளியிடப்பட்டது. அவர்தம் ஆய்வும் துணிவும் திருக்குறள் உரையில் வெளிப்பட்டது. அவர் எண்ணியவாறு முழுதுரை கண்டும் முழுதுற வெளிப்படவில்லை! சிறையில் அவர் எழுதிய `சுயசரிதை’யின் அருமை படிப்பார் நெஞ்சை உருக்கும்! அச்சரிதை 1946இல் பாரி நிலையத்தினரால் வெளியிடப்பட்டுப் பல பதிப்புகள் கண்டது. திருக்குறள் அறத்துப்பால் உரை, சிங்கப்பூர் தமிழ்த்திரு. கோவலங் கண்ணனாரால் வெளியிடப்பட்டு குறள் கூறிய ஒவ்வொருவருக்கும் இலவயமாக வழங்கியது. வ.உ.சி. யின் வண்மைக் கதிரெihளி எனத் தோன்றியது. 14ஆம் மாடியில் வெளியிட்டு அவ்வுரை நயம் எளியேன் கூற, அவ்வுரைப் பெருமை அவையைத் திளைக்கச் செய்தது! கப்பரேலாட்டிய தமிழர் - தமிழ்க் கப்பலும் ஓட்டிய தோன்றல் - தம் நிலைகுறித்து ஒருவெண்பாவில் தாமே ஓடுகிறார்; ஓட்டப்பிடாரத்தார் அல்லரோ! “வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும் தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று- சந்தமிழ் வெண் பாச் சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகின்றான் நாச் சொல்லும் தோலும் நலிந்து” “ஏ! தாழ்ந்த தமிழகமே! என்றது மெய்தானே! இரா. இளங்குமரன். தொல்காப்பியம் அரிய பதிப்புகளும் தேவைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தமிழின் பண்டை இலக்கண/ இலக்கிய நூல்கள் அச்சிடப் பெற்றன. அவ்வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட முதல் இலக்கண நூலாக இன்று அறியப்படுவது நன்னூலே. காரணம் தமிழக மடங்கள் நன்னூலைப் பயிற்றிலக்கண மாகவும் பயன் பாட்டு இலக்கணமாகவும் கொண்டிருந்தன. 1835 -இல் திருத்தணிகை விசாகப் பெருமாளையர் தாமே உரையெழுதி நன்னூல் மூலமும் காண்டிகையுரையும் என்னும் தலைப்பில் வெளியிட்டார். தொடர்ந்து தாண்டவராய முதலியாரும்,அ. முத்துச்சாமி பிள்ளையும் இணைந்து இலக்கணப் பஞ்சகம் என்னும் தலைப்பில் நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றின் மூலங்களை வெளிக் கொணர்ந் தனர். இதன் தொடர்ச்சியாக 1838 -இல் வீரமா முனிவரின் தொன்னூல் விளக்கம் அச்சாக்கம் பெற்றது. 1847 -இல் தான் மழவை மகாலிங்கையரால் தமிழின் தொல் இலக்கணம் தொல்காப்பிய எழுத்ததிகாரம் உரையோடு அச்சிடப்பட்டது. தொடர்ந்து யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர், யாழ்ப்பாணத்து சி.வை. தாமோதரம் பிள்ளை, கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, சோடசாவதானம் சுப்பராய செட்டியார், போன்றோர் 19 -ஆம் நூற்றாண்டில், தொல்காப்பியத்தைக் கிடைத்த உரைகளோடு பதிப்பித்தனர். 1935 - இல் தொல்காப்பியத் திற்கு எழுதப்பட்ட உரைகள் (இன்று கிடைத்துள்ள அனைத்து உரைகளும்) பதிப்பிக்கப்பட்டு விட்டன. 1847 - 2003 வரை தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரை எட்டுப் பதிப்புகளும், 1885-2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் முன்னைந்தியல் எட்டுப் பதிப்புகளும், செய்யுளியல் நச்சினார்க்கினியர் தனித்து மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன. 1892 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை ஐந்து பதிப்புகளும், 1868 - 2006 வரை எழுத்து இளம்பூரணம் ஏழு பதிப்புகளும், 1920 - 2005 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம் பத்துப் பதிப்புகளும், 1927 - 2005 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் இளம்பூரணம் ஆறு பதிப்புகளும், 1885 - 2003 வரை தொல்காப்பியம் பொருளதிகாரம் பேராசிரியம் ஏழு பதிப்புகளும், 1929 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் மூன்று பதிப்புகளும், 1964 - 2003 வரை தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடம் மூன்று பதிப்புகளும் வெளிவந்துள்ளன என முனைவர் பா. மதுகேவரன் தமது தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 2003 -இல் தமிழ்மண் பதிப்பகத்தின் வாயிலாகத் தொல்காப்பிய உரைகள் (இளம்பூரணம், நச்சினார்க்கினியம், பேராசிரியம், சேனாவரையம், கல்லாடம், தெய்வச்சிலையம்) பண்டித வித்வான் தி.வே. கோபாலையர், முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் வாழ்வியல் விளக்கத்துடன் வெளிவந்துள்ளன. இருப்பினும் அச்சில் இன்று கிடைக்காத அரிய பதிப்புகளை மீள் பதிப்பாகப் பதிப்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில், சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு, கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு, வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு, இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு, சி. கணேசையர் பதிப்பு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு ஆகியோரின் பதிப்புகளுடன் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகளும் இணைத்து தமிழ்மண் பதிப்பகத்தின் வழி மீள் பதிப்புகளாகப் பதிப்பிக்கப் படுகின்றன. மீள் பதிப்பில் பின்பற்றியுள்ள பொது நெறிகள் முதுமுனைவர் இரா. இளங்குமரனாரின் தொல்காப்பியம் குறித்த விளக்கம், ஒவ்வோர் அதிகாரம் பற்றிய வாழ்வியல் விளக்கம், உரையாசிரியர் விவரம் ஆகியவை நூலின் தொடக்கத் தில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளின் முகப்புப் பக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பாசிரியர் பற்றிய விவரங்கள் கால அடிப்படையில் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் தொல்காப்பியம் தொகுப்பில் எழுதி யுள்ள தொல்காப்பிய இயல் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளன. முன்னைப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்த அந்தப் பக்கத்தில் தரப்பட்டிருந்தன. இப்பதிப்பில் ஒவ்வோர் இயலுக்கும் தொடர் இலக்கமிட்டு, அந்தந்த இயலின் இறுதியில் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. முன்னைப் பதிப்புகளில் நூற்பாக்களைக் கையாண்டுள்ள முறையையே இப் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. நூற்பாக் களுக்குத் தமிழ் எண் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நடை முறையில் இப்போது உள்ள எண்களாக மாற்றப்பட்டுள்ளன. நூற்பா அகரமுதலி, மேற்கோள் அகரமுதலி போன்றவற்றிற்குப் பக்க எண்கள் கொடுக்கப்பட்டிருப்பின் அவை நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. பின்னிணைப்பாகத் தொல்காப்பியம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள கட்டுரைகள் இணைக்கப் பட்டுள்ளன. நூற்பா முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப் பட்டுள்ள பதிப்புகளில் அவற்றோடு, 2003 தமிழ்மண் பதிப்பகத்தின் வழியே பண்டித வித்துவான் தி.வே. கோபாலையர் முனைவர் ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்த இலக்கணப் பதிப்பில் இணைக்கப் பட்டிருந்த, - நூற்பா நிரல் - மேற்கோள் சொல் நிரல் - மேற்கோள் சொற்றொடர் நிரல் - செய்யுள் மேற்கோள் நிரல் - கலைச் சொல் நிரல்( நூற்பாவழி) - கலைச்சொல் நிரல் (உரைவழி) ஆகியவை எடுத்துப் பயன்படுத்தப்பட்டுள்ளன. - பாடவேறுபாடுகள் சுட்டப்பட்டுள்ளன. - முன்னைப் பதிப்பில் வடமொழிச் சொற்கள் பயன் படுத்தப்பட்டிருப்பின் அவை அப்படியே கையாளப் பட்டுள்ளன. - தொல்காப்பியப் பதிப்புகள் குறித்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளன. சி.வை. தாமோதரம் பிள்ளை பதிப்பு - 1892 சொல்லதிகாரம் - நச்சினார்க்கினியர் 1868 - இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரை யருரையைப் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளை, 1892 ஆம் ஆண்டு சொல்லதிகாரம் நச்சினார்கினியர் உரையைப் பதிப்பித்தார். சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர் உரை தொடர்ச்சியாகப் பதிப்பிக்கப்பட்டாலும், முதலில் பதிப்பித்த சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்பு இன்று அச்சுவடிவில் புழக்கத்தில் இல்லை. அப்பதிப்பினை வெளியிடும் நோக்கத்தில் இப்பதிப்பு மீள் பதிப்பாக வெளிவருகிறது. இப்பதிப்பில் நூற்பா முதற்குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் மற்ற இணைப்புகளும் இணைக்கப்பட்டு, முதுமுனைவர் இரா. இளங்குமரன் அவர்களின் வாழ்வியல் விளக்கமும், ஒவ்வோர் இயலின் தொடக்கத்தில் க. வெள்ளைவாரணனார் எழுதியுள்ள இயல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் சொல்லதிகாரம் தொடர்பாக அறிஞர் பெருமக்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் பின்னிணைப்பாக இணைக்கப் பட்டுள்ளன. கா. நமச்சிவாய முதலியார் பதிப்பு - 1927 சொல்லதிகாரம் - இளம்பூரணம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பொருளதிகாரம் உரைகள் முன்பே வெளிவந்தன. சொல்லதிகாரம் இளம்பூரணர் உரை 1927 - இல் காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியாரின் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் சென்னை ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸால் வெளியிடப்பட்டது. இதுவே சொல்லதிகாரம் இளம்பூரணர் உரையின் முதற் பதிப்பாகும். இப் பதிப்பில் அடிக்குறிப்புகள் அந்தந்தப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் தொடர் இலக்கமிட்டு, ஒவ்வோர் இயலின் முடிவில் அடிக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இப் பதிப்பில் நூற்பாக்களுக்குத் தமிழ் எண்வரிசையும் நடைமுறை எண் வரிசையும் கொடுக்கப்பட்டிருந்தன. இப்பதிப்பில் நடைமுறை எண் முறை மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது. வ.உ. சிதம்பரம்பிள்ளை பதிப்பு - 1928 , 1931, 1933, 1935 எழுத்ததிகாரம், பொருளதிகாரம் - இளம்பூரணம் 1868 இல் திரிசிரபுரம் சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு கன்னியப்ப முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து 1928 -இல் தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்ததிகாரம் பதவுரை என்னும் பெயரில் வ.உ. சிதம்பரம் பிள்ளை பதிப்பு வேலாயுதம் பிரிண்டிங் பிர, தூத்துக்குடியிலிருந்து வெளிவந்தது. அப்பதிப்பின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்த நூற்பா அகராதி இப்பதிப்பின் நூலின் இறுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் (உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. 1920 -இல் கா. நமச்சிவாய முதலியார் பொருளதிகாரம் இளம்பூரணம் உரை முதல் பகுதியாகக் களவியல், கற்பியல், பொருளியல் மூன்று இயல்களையும் ஸி. குமாரசாமி நாயுடு ஸன் நிறுவனத்தார் வெளியிட்டுள்ளார். மற்ற பகுதிகள் வெளிவந்ததாக அறிய இயலவில்லை. இப்பதிப்பிற்குப் பின் வ.உ. சிதம்பரம் பிள்ளை தொல்காப்பியம் இளம்பூரணம் பொருளதிகாரம் அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரு இயல்கள் இணைந்த பதிப்பு, சென்னைப் பிரம்பூரில் இருந்து வெளிவந்தது. இப்பதிப்பில் ஆண்டு குறிப்பிடப்படவில்லை. ஆனால் 1921- இல் வெளிவந்த குறிப்பினை, தொல்காப்பியம் இளம்பூரணம் எழுத்திகாரம் பதவுரை பதிப்பில் குறிப்பிடுகிறார். களவியல், கற்பியல், பொருளியல் 1933 - இல் வாவிள்ள இராமவாமி சாட்ருலு அண்ட் ஸன் மூலம் வெளி வந்துள்ளது. 1935 - இல் மேற்கண்ட பதிப்பாளர்களைக் கொண்டு மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் பதிப்பித்துள்ளார். மூன்று பகுதிகளாக வெளிவந்தாலும் அவற்றிற்கும் தொடர் எண் கொடுக்கப்பட்டுள்ளன. 1935 - இல் ஒருங்கிணைந்த பதிப்பாக வ.உ. சிதம்பரம் பிள்ளை எ. வையாபுரிப்பிள்ளை ஆகியோர் பதிப்பாசிரியர்களாக அமைந்து வெளிவந்துள்ளது. தனித்தனிப் பதிப்புகளாக மூன்று பகுதிகளாக வெளிவந்துள்ள பதிப்பினை அடிப்படையாகக் கொண்டு இம் மீள் பதிப்பு பதிப்பிக்கப்படுகின்றது. இரா. வெங்கடாசலம் பிள்ளை பதிப்பு - 1929 சொல்லதிகாரம் - தெய்வச் சிலையார் 1929 -இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால் முதன் முதலில் பதிப்பிக்கப்பட்டது. பதிப்பாசிரியர் ரா. வேங்கடாசலம் பிள்ளை. இதன் நிழற்படிவம் 1984 -இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இப் பதிப்பில் சூத்திர முதற் குறிப்பு அகராதி மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சொல் நிரல் (மேற்கோள்), சொற்றொடர் நிரல் (மேற்கோள்), செய்யுள் நிரல் (மேற்கோள்) கலைச் சொல் நிரல் (நூற்பா வழி) கலைச் சொல் நிரல் ( உரைவழி) தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பு - 1937, 1938, 1943,1948 எழுத்து நச்சினார்க்கினார்கினியர், சொல்லதிகாரம் சேனாவரையர் பொருள் - நச்சினார்க்கினியர், பேராசிரியர் 1847 - இல் மழவை மகாலிங்கையரால் எழுத்ததிகாரம் நச்சினார்க் கினியம் பதிப்பிக்கப்பட்டது. 1891 - இல் சி. வை. தாமோதரம் பிள்ளை பதிப்பும் 1923 - இல் த. கனகசுந்தரத்தின் பதிப்பும் கழகத்தின் மூலமும் வெளிவந்தன. 1937 - இல் நா. பொன்னையா அவர்களால் கணேசையர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் எழுத்ததிகாரம் மூலமும் நச்சினார்க்கினியருரையும் வெளியிடப்பட்டன. 1868 -இல் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமுக நாவலர் பதிப்பு, சென்னபட்டணம் ஊ. புஷ்பரதச் செட்டியாரது கலாரத்நாகர அச்சுக்கூடத்தில் சி.வை. தாமோரதம் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது. இதே ஆண்டு கோமளபுரம் இராசகோபால பிள்ளையின் பதிப்பும் தொல்காப்பியம் சேனாவரையம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. 1923 - இல் கந்தசாமியார் திருத்திய திருத்தங்களோடும் குறிப்புரையோடும் கழகப் பதிப்பாக வெளிவந்தது. 1938 -இல் சி. கணேசையர் பதிப்பு அவர் எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது. 1885 -இல் சி.வை. தாமோதரம் பிள்ளையால் தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் இயற்றிய உரையோடும் பலதேசப் பிரதிரூபங்களைக் கொண்டு பரிசோதித்து யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரரால் பதிப்பிக்கப்பட்டது என்னும் குறிப்புடன் பதிப்பு வெளிவந்தது. அப்பதிப்பில் உள்ள பின்னான்கியல் நச்சினார்க்கினியர் உரை அன்று என்று மறுத்து இரா. இராகவையங்கார் 1902 - 1905 வரையான செந்தமிழ் இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதித் தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து பொருளதிகாரம் முழுதும் நான்கு பகுதியாக நச்சினார்க்கினியம், பேராசிரியம் எனப் பிரித்து 1916, 1917 - ஆம் ஆண்டுகளில் ச. பவனாந்தம் பிள்ளை பதிப்பித்தார். 1917 - இல் ரா. இராகவையங்கார் செய்யுளியலுக்கு நச்சினார்க்கியர் உரை இருப்பதை அறிந்து, நச்சினார்கினியர் உரை உரையாசிரியர் உரையுடன் என இரு உரைகளையும் இணைத்து வெளியிட்டார். 1934, 1935 -இல் எ. வையாபுரிப்பிள்ளை அவர்களால் ஓலைப் பிரதி பரிசோதிக்கப்பட்டு மா.நா. சோமசுந்தரம் பிள்ளை அவர்களது அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும் திருத்தங் களுடனும் தொல்காப்பியம் பொருளதிகாரம் முதற்பாகம் வெளிவந்தது. 1948 - இல் தொல்காப்பிய முனிவரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் பொருளதிகாரம் (முதற்பாகம்) முன்னைந்தியலும் நச்சினார்க்கினியமும் என, சி. கணேசையர் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புரையுடன் நா. பொன்னையா அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. 1943 -இல் தொல்காப்பியம் பொருளதிகாரம் (இரண்டாம் பாகம்) என்பதோடு பின்னான்கியலும் பேராசிரியமும் இவை புன்னாலைக் கட்டுவன் தமிழ் வித்துவான், பிரமரீ சி. கணேசையர் அவர்கள் ஏட்டுப் பிரதிகளோடு ஒப்புநோக்கித் திருத்திய திருத்தங்களோடும் எழுதிய உரை விளக்கக் குறிப்புகளோடும் ஈழகேசரி அதிபர் நா. பொன்னையா அவர்களால் தமது சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில் பதிப்பிக்கபட்டன என வரையறுக்கப் பட்டிருந்தது. 2007-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்பாக சி. கணேசையரின் பதிப்பைப் பதித்துள்ளது. அப்பதிப்பினைப் பின்பற்றியே இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சூத்திர அகராதி, சூத்திர அரும்பத விளக்கம் ஆகியவற்றிற்கு இப்பதிப்பில் பக்க எண் கொடுக்கப்பட்டிருந்தன. அவை இம் மீள்பதிப்பில் நூற்பா எண்களாக மாற்றப்பட்டுள்ளன. அனுபந்தமாக சி. கணேசைய்யர் சில கட்டுரைகளை அப்பதிப்பில் இணைத் திருந்தார் அவற்றோடு மேலும் அவருடைய சில கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் பதிப்பு 1971 சொல்லதிகாரம் கல்லாடம் சி.வை. தாமோதரம் பிள்ளை தொல்காப்பியம் பொருளதி காரம் நச்சினார்க்கினியர் உரை பதிப்புரையில் (1885) கல்லாடர் உரை பற்றிய குறிப்பினைத் தருகிறார். டி.என் அப்பனையங்கார் செந்தமிழ் இதழில் (1920, தொகுதி-19, பகுதி-1, பக்கம்-20) கல்லாடருரை என்னும் கட்டுரையில் ரீமான் எம் சேக்ஷகிரி சாதிரியார் (1893) கல்லாடர் உரை குறித்து ஆராய்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். சோழவந்தான் அரசஞ்சண்முகனார் (1905) ரா. இராகவையங்கார் (1917) பெயர் விழையான், கா. நமச்சிவாய முதலியார்(1920) நவநீதகிருஷ்ண பாரதி(1920) பி. சிதம்பர புன்னைவனநாத முதலியார்(1922) கந்தசாமியார் (1923) வ.உ. சிம்பரம் பிள்ளை (1928) மன்னார்குடி தமிழ்ப் பண்டிதர் ம.நா. சோமசுந்தரம் பிள்ளை (1929) அரங்க. வேங்கடாசலம் பிள்ளை (1929) ஆகியோர் கல்லாடர் உரை குறித்த குறிப்புகளைத் தமது கட்டுரைகளில் குறிப்பிடுகின்றனர். பின்னங்குடி சா. சுப்பிரமணிய சாதிரியார் கல்லாடர் உரை ஓரியண்டல் கையெழுத்துப் புத்தக சாலையில் உள்ளது என்றும், அவ்வுரை எவ்வியல் வரை உள்ளது என்னும் குறிப்புரையும் தருகிறார். 1950 - 1952 வரை தருமபுர ஆதீனம் வெளியிட்ட ஞான சம்பந்தம் இதழில் அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தின் இரண்டாம் பிரதியை ஒட்டிப் பதிப்பிக்கப்பட்டது. கிளவியாக்கம் தொடங்கி இடையியல் 10 - ஆவது நூற்பா வரை வெளிவந்தது. கல்லாடர் உரையைத் தம்முடைய திருத்தங்களுடன் வெளியிட்டவர் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர். 1963 -இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கோவை என்னும் பெயரில் ஆபிரகாம் அருளப்பனும் வ.ஐ. சுப்பிரமணியமும் இணைந்து வெளியிட்டனர். இது நான்கு இயலுக்கான பதிப்பாக அமைந்திருந்தது. கழகப் பதிப்பாக 1964 -இல் கு. சுந்தரமூர்த்தி விளக்கவுரையுடன் கல்லாடம் வெளிவந்தது. 1971 -இல் தெ.பொ.மீ அவர்களால் ஒன்பது பிரதிகளைக் கொண்டு ஒப்பிட்டு அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப் பதிப்பாக வெளிவந்தது. 2003 -இல் தி.வே. கோபாலையர், ந. அரணமுறுவல் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தமிழ் மண் பதிப்பகம் கல்லாடனார் உரையைப் பதிப்பித் துள்ளது. 2007 -இல் தி.வே. கோபாலையரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு, சரசுவதி மகால் நூலகம் தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரைக்கொத்தில் கல்லாடர் உரையை வெளியிட்டுள்ளது. கல்லாடர் உரை முழுமையாக இதுவரை கிடைத்திலது. இம்மீள்பதிப்பில் செந்தமிழ் அந்தணர் அவர்களின் இலக்கண வாழ்வியல் விளக்கமும் கா. வெள்ளைவாரணனாரின் இயல் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை தொல்காப்பியத்திற்குள் புகுவாருக்கு எளிதான மனநிலையை உருவாக்குவதுடன், ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயன் உடையதாக இருக்கும். பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள், தொல்காப்பிய உரையாசிரியர், உரைகள் குறித்த நுட்பத்தைப் புலப்படுத்துவதுடன், தொல்காப்பியம் பற்றிய நுண்மையை அறியவும் துணை செய்யும். நூற்பா, உரை வழிக் கலைச்சொற்கள், உரையில் உள்ள மேற்கோள் அகராதி போன்றவை தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தை அறிய விரும்புவாருக்கும், ஆய்வாளர்களுக்கும் இத் தொகுப்பு பயன் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் மூலமும், உரையோடும் பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இருப்பினும் தொடக்கத்தில் தமிழ் அறிஞர் பெருமக்களால் உரையோடு தொல்காப்பியத்தைப் பதிப்பித்த பதிப்புகள் இன்று கிடைக்கவில்லை. அந்நிலையைப் போக்கும் பொருட்டு, தமிழரின் பண்பாட்டை, மேன்மையை, உயர்வைப் பொதித்து வைத்துள்ள நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் ஐயா கோ. இளவழகனார் அவர்கள் பழம் பதிப்புகளைப் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்பியதன் காரணமாக இப்பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பதிப்பிற்கு, தமிழின் மூத்த அறிஞர், செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார் அவர்கள் பதிப்பாசிரியராக அமைந்து என்னையும் இப்பணியில் இணைத்துக்கொண்டார்கள். பழந்தமிழ் நூல்களைப் பாதுகாத்து வைத்துள்ள புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்களிடம் இருந்து தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடர் உரை பெறப்பட்டுப் பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது. மற்ற உரைகள் அனைத்தும் தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகம், உலகத் தமிழாராய்ச்சி இணையப் பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு இம் மீள்பதிப்பிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. சி. கணேசையர் பதிப்பினை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வழி வெளிவந்த சி. கணேசைய்யரின் தொல்காப்பியப் பதிப்பிற்கு உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் மேனாள் இயக்குநர் (முழுகூடுதல் பொறுப்பு) முனைவர் திரு ம. இராசேந்திரன் அவர்கள் கணேசையர் பதிப்பிற்கு எழுதியுள்ள முகவுரை அவருடைய ஒப்புதலுடன் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பா. மதுகேவரன் அவர்களின் தொல்காப்பியம் பதிப்பு ஆவணம் 7 என்னும் நூற்பகுதியில் இருந்து தொல் காப்பியப் பதிப்பு அடைவுகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் தொடர்பான பல்வேறு அறிஞர் பெருமக்களின் ஆய்வுக் கட்டுரைகள் தொகுத்து வழங்கப் பட்டுள்ளன. தொல்காப்பியம் உரைகள் முழுதும் ஆய்வு செய்துள்ள பேராசிரியர் முனைவர் ச. குருசாமி அவர்களின் கட்டுரைகள் இப்பதிப்பில் இணைக்கப் பட்டுள்ளன. பதிப்பிற்குத் துணை செய்த மேற்கண்ட அனைவருக்கும் நன்றியினைப் புலப்படுத்திக் கொள்ளுகிறேன். முனைவர் ஸ்ரீ. பிரசாந்தன் அவர்கள் தொகுத்த இலக்கண வரம்பு நூலிலிருந்த கட்டுரைகள் கணேசையர் பதிப்பில் இணைக்கப்பட்டுள்ளன. செந்தமிழ், தமிழ்ப்பொழில், தமிழியல் முதலிய ஆய்விதழ்களிலிருந்து தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் சேர்க்கப் பட்டுள்ளன. பதிப்புப் பணியில் ஈடுபடுத்திய ஐயா திரு கோ. இளவழகனார் அவர்களுக்கும் பதிப்பில் இணைந்து செயல்படப் பணித்த ஐயா முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களுக்கும், பதிப்பிற்குத் துணைபுரிந்த புலவர் செந்தலை கௌதமன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி. தட்டச்சுச் செய்து கொடுத்த திருமதி ப. கயல்விழி திருமதி கோ. சித்திரா. அட்டை வடிவமைத்த செல்வன் பா. அரி (ஹரிஷ்), மற்றும் பதிப்பகப் பணியாளர்கள் திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன், இப்பதிப்பிற்கு உதவிய என்னுடைய முனைவர் பட்ட மாணவர்கள் பா. மாலதி, கா. பாபு, சு. கோவிந்தராசு, கா. கயல்விழி ஆகிய அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப் பதிப்புப் பணியில் என்னை முழுவதாக ஈடுபடத் துணையாக நிற்கும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழார் அவர்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகிறேன். கல்பனா சேக்கிழார் நுழைவுரை தமிழ்மண் பதிப்பகம் இதுகாறும் வெளியிட்டுள்ள அறிஞர் பெருமக்களின் உரைகள் யாவும் பழைய இலக்கிய இலக்கணக் கருவூலத்தின் வாயில்களைத் திறக்கின்ற திறவுகோல்கள்; தமிழரை ஏற்றிவிடும் ஏணிப்படிகள்; வரலாற்றுப் பாதையைக் கடக்க உதவும் ஊர்திகள். தமிழறிஞர்களின் அறிவுச்செல்வங்களை முழு முழு நூல் தொகுப்புகளாக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் பெரும் பங்களிப்பை எம் பதிப்பகம் செய்து வருவதை உலகத் தமிழர்கள் அனைவரும் அறிவர். தமிழகம் வேற்றினத்தவர் படையெடுப்பால் தாக்குண்டு அதிர்ந்து நிலைகுலைந்து தமிழ்மக்கள் தம் மரபுகளை மறந்தபோதெல்லாம் பழம்பெரும் இலக்கியச் செல்வங்களை எடுத்துக்காட்டி விளக்கித் தமிழ் மரபை வாழச் செய்த பெருமை உரையாசிரியர்களுக்கு உண்டு. தமிழ்மொழியின் நிலைத்த வாழ்விற்கும் வெற்றிக்கும் காரணமாக இருப்பவர்கள் உரையாசிரியர்களே ஆவர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழிக்கு வரம்பு கட்டி இலக்கியக் கருத்துகளை விளக்கி காலந்தோறும் பண்பாட்டை வளர்த்து, தமிழ் இனத்திற்குத் தொண்டு செய்த பெருமை உரையாசிரியர்களையே சாரும். ஒவ்வொரு உரையாசிரியரும் தமிழினம் உறங்கிக் கொண்டிருந்தபோது விழித்தெழுந்து, எழுச்சிக்குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனையாளர்கள். அவர்கள் எழுதியுள்ள உரைகள் யாவும் காலத்தின் குரல்கள்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள்; தமிழ் இன வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவைகள்; நெருக்கடியின் வெளிப்பாடுகள் ஆகும். - உரையாசிரியர்கள், (மு.வை. அரவிந்தன்). தொல்காப்பியம் இலக்கணநூல் மட்டுமன்று; தமிழரின் அறிவுமரபின் அடையாளம். தமிழரின் வாழ்வியலை, மெய்யியலைப் பாதுகாத்த காலப்பேழை. இதில் பொதிந்துள்ள தருக்கவியல் கூறுகள் இந்தியத் தருக்கவியல் வரலாற்றின் மூல வடிவங்கள் - அறிஞர்களின் பார்வையில் பேரறிஞர் அண்ணா, (முனைவர் க. நெடுஞ்செழியன்) மேற்கண்ட அறிஞர்களின் கூற்று, தொல்காப்பியத்தின் இன்றியமை யாமையையும், உரையாசிரியர்களின் கருத்துச் செறிவையும் உழைப்பையும் உணர்த்த வல்லவை. சி.வை. தாமோதரம் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், வ.உ. சிதம்பரனார், சி. கணேசையர், இரா. வேங்கடாசலம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற பெருந்தமிழ் அறிஞர்களின் உழைப்பால் உருவான இவ் வாழ்வியல் கருவூலம் தொல்காப்பிய உரைத்தொகை எனும் பெயரில் தமிழ்மண் பதிப்பகம் மீள் பதிப்பு செய்துள்ளது. 2003 -ஆம் ஆண்டில் எம் பதிப்பகம் தொல்காப்பியத்தை (எழுத்து - சொல் - பொருள்) முழுமையாக வெளியிட்டுள்ளது. இதுகாறும் வெளிவந்துள்ள தொல்காப்பிய நூல் பதிப்புகளில் இடம் பெறாத அரிய பதிப்புச் செய்திகள் இவ்வுரைத் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைத் தொகை எல்லா நிலையிலும் சிறப்பாக வெளிவருவதற்கு தோன்றாத் துணையாக இருந்தவர்களைப் பற்றி தனிப்பக்கத்தில் பதிவு செய்துள்ளோம். இவ்வாழ்வியல்நூல் பிழையற்ற செம்பதிப்பாக வெளிவருவதற்கு முதன்மைப் பதிப்பாசிரியர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார், இணை பதிப்பாசிரியர் அருமை மகள் முனைவர் கல்பனா சேக்கிழார் ஆகியோரின் உழைப்பும் பங்களிப்பும் என்றும் மறக்க முடியாதவை. எம் தமிழ் நூல் பதிப்பிற்கு எல்லா நிலையிலும் தொடர்ந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் இனிய நண்பர் புலவர் செந்தலை ந. கவுதமன் அவர்களின் தன்னலம் கருதா தமிழ்த் தொண்டிற்கு என்றும் நன்றி உடையேன். தமிழர்கள் தம் இல்லம்தோறும் பாதுகாத்து வைக்க வேண்டிய இவ்வருந்தமிழ்ப் புதையலைத் தமிழ் கூறும் உலகிற்கு வழங்குவதைப் பெருமையாகக் கருதி மகிழ்கிறோம். இப்பதிப்பைத் தமிழ்க்கூறும் நல்லுலகம் ஏற்றிப்போற்றும் என்று நம்புகிறோம். கோ. இளவழகன் நூலாக்கத்திற்கு உதவியோர் முதன்மைப்பதிப்பாசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரனார் இணைப்பதிப்பாசிரியர்: முனைவர் கல்பனா சேக்கிழார் நூல் வடிவமைப்பு: திருமதி. கயல்விழி, கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (Harrish) திருத்தத்திற்கு உதவியோர்: புலவர் பனசை அருணா புலவர் மு. இராசவேலு முனைவர் அரு. அபிராமி முனைவர் ஜா. கிரிசா நூலாக்கத்திற்கு உதவியோர்: திருமிகு. இரா. பரமேசுவரன், திருமிகு. வே. தனசேகரன், திருமிகு. கு. மூர்த்தி, திருமிகு. வி. மதிமாறன் கணினியில் நூலாக்கம்:  மாணவர் நகலகம்,  பிராசசு இந்தியா,  ரியல் இம்பேக்ட் சொல்யூசன்,  தூரிகை பிரிண்ட் உள்ளடக்கம் 1. களவியல் .... 3 2. கற்பியல் .... 145 3. பொருளியல் .... 250 4. மெய்ப்பாட்டியல் .... 305 பொருளதிகாரம் - இளம்பூரணம்-2 களவியல் - கற்பியல் - பொருளியல் - மெய்ப்பாட்டியல் வ.உ.சிதம்பரம்பிள்ளை (1921, 1933, 1935) வாவிள்ள இராமஸ்வாமி சாஸ்த்ருலு அண்ட் ஸன்ஸ், வாவிள்ள பிரஸ், சென்னை. (1933) இல் பதிப்பிக்கப்பட்ட நூலை மூலமாகக் கொண்டு இப்பதிப்பு மீள்பதிப்பாக வெளிவருகிறது களவியல் களவொழுக்கம் உணர்த்தினமையால் களவியலென்னும் பெயர்த்தாயிற்று. களவாவது அன்பு, அருள், அறிவு, அழகு, குடிப்பிறப்பு முதலியவற்றால் ஒத்து விளங்குந் தலைவனும் தலைவியும் நல்லூழின் செயலால் தாமே எதிர்ப்பட்டு, உலகத்தாரறியாது மறைந்தொழுகுதல். ஐம்பெரும் பாதகங்களு ளொன்றாகப் பேசப்படுங் களவென்பது பிறர்க்குரிய பொருளை வஞ்சனையாற் கவர்ந்துகொள்ளுதலாகிய குற்றமாகும். இஃது அத்தன்மையதன்றி ஒத்த அன்புடைய கன்னியரை அவர்தம் இசைவறிந்து சுற்றத்தாரறியாது காதலால் உளங்கலந்து பழகும் பெருங்கேண்மை யாதலால் சிறப்புடைய அறமெனவே கொள்ளப்படும். ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியுமாகிய இருவரும் தமது நெஞ்சக் கலப்பினைப் பிறரறியாதபடி உலகர் முன் முறைந் தொழுகினராகலின், கரந்தவுள்ளத்தராகிய அவ்விருவரது ஒழுகலாறு, களவென்ற சொல்லால் வழங்கப்படு வதாயிற்று. இக்களவினை மறைந்தவொழுக்கம், மறை, அருமறை யென்ற சொற்களால் வழங்குவர் ஆசிரியர். “மேல் கைக்கிளைமுதற் பெருந்திணை இறுவாயாக எழு திணையொதி அவற்றின் புறத்து நிகழும் திணைகளும் ஓதிப்போந் தார். அவ்வெழுதிணையினும் ஒருதலைவேட்கையாகிய கைக்கிளையும் ஒப்பில் கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து, இருவர் அன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவணைந்திணைக் கண்ணும் புணர்ப்பும், பிரிதலும் இருத்தலும், இரங்கலும், ஊடலுமாகிய உரிப்பொருள், களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின் அவ்விருவகைக் கைக்கோளினுங் களவாகிய கைகோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின்பின் கூறப்பட்டது” என முன்னுள்ள இயல்களோடு இவ்வியலுக்குள்ள தொடர்பினை விளக்கினார் இளம்பூரணர். “இன்பத்திற்குப் பொதுவிலக்கணம் அகத்திணையியலுட் கூறி, அதற்கினமாகிய பொருளும் அறனும் கூறும் புறத்திணையை அதன் புறத்து நிகழ்தலிற் புறத்திணையியலுட்கூறி, ஈண்டு அவ்வின்பத்தினை விரித்துச் சிறப்பிலக்கணம் கூறுதலின், இஃது அகத்திணையியலோடு இயைபுடைத்தாயிற்று” என்றார் நச்சினார்க்கினியர். இவ்வியற் சூத்திரங்களை 51-ஆக இளம்பூரணரும் 50-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரைகூறியுள்ளார்கள். அன்பினைந்திணையாகிய இக் களவொழுக்கத்தினைக் காமப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு பாங்கொடுதழாஅல், தோழியிற் கூட்டம் என நால்வகையாகப் பகுத்துரைப்பர். அன்புடையார் இருவர் முற்பிறப்பின் நல்வினையால் எதிர்ப்பட்டு ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் அன்பினால் உளமொத்தலாகிய நெஞ்சக் கலப்பே காமப் புணர்ச்சியாகும். இருவரது உள்ளக் குறிப்பும் முயற்சியுமின்றி நல்வினைப் பயனாகத் தன்னியல்பில் நிகழும் இவ்வுறவினை இயற்கைப் புணர்ச்சி, தெய்வப்புணர்ச்சியென்ற பெயர்களால் வழங்குவர் முன்னையோர். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றைநாளும் அவ்விடத்திற் சென்று எதிர்ப்படுதல் இடந்தலைப்பாடாகும். தலைவியோடு தனக்குள்ள உறவினைத் தலைவன் தன் உயிர்தோழனாகிய பாங்கனுக்குச் சொல்லி, நீ எனக்குத்துணையாக வேண்டுமென வேண்ட, அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்ந்து வந்துணர்த்தியபின் சென்று கூடுதல் பாங்கற்கூட்ட மெனப்படும். இக்களவொழுக்கம் நீண்ட நாளைக்குத் தொடர்ந்து நிகழவேண்டுமென விரும்பிய தலைவன். தலைவிக்குச் சிறந்தாளாகிய தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகத் தலைவியைக் கூடல் தோழியிற் கூட்டமாகும். இவை நான்கும் இம்முறையே நிகழும். இனி, இம்முறை நிகழாது இடையீடுபட்டு வருதலும் உண்டு. தலைமகளை யெதிர்ப்பட்ட காலத்து அன்புடையா ரெல்லார்க்கும் இயற்கைப்புணர்ச்சி தடையின்றி நிகழுமென்பதற் கில்லை. தலைமகளை யாதானுமோரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன், அவள் காதற் குறிப்புணர்ந்து கூட்டத்திற்கு இடையீடு உண்டாயவழி அங்கே சென்ற வேட்கை தணியாது வந்து, நேற்றுக் கண்டாற்போல் போல இன்றுங் காணலாகுமோ என எண்ணி அங்கே மறுநாளுஞ் செல்லுதலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையால் அடர்ப்புண்டு அங்கே வருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். அங்கே ஆயத்தாராலோ பிறராலோ இடையீடு பட்டவிடத்துத் தலைவன் தன் வருத்தத்தினைப் பாங்கனுக்கு உணர்த்தி, அவன் தலைமகள் நின்ற நிலையறிந்துவந்துகூற அங்கே சென்றும் கூடுவன். அவ் விடத்தும் இடையீடுபடின் தோழிவாயிலாக முயன்றெய்துவன். இனி ஒரு கூட்டமும் நிகழாது அங்குண்டாகிய வேட்கை இருவர்க்குந் தணியாது நின்று மணஞ்செய்த பின்னர்க் கூடுதலும் உரியன். இவ்வகையினால் இக்களவொழுக்கம் மூவகைப் படுமென்றார் இயம்பூரணர். எல்லாவுயிர்க்கும் உரிய இன்பவுணர்வும், அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும், அப்பொருளினை யீட்டுதற்குரிய வரம்பாகிய அறமும் எனச் சொல்லப்பட்டு அன்பினால் நிகழும் ஐந்திணைக்கண் நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்கால், மறையோரிடத்து ஓதப்பட்ட எண்வகை மணத்துள்ளும் துறையமை நல்யாழத் துணைமையோராகிய கந்தருவரது ஒழுகலற்றினை யொக்கும் என்பர் ஆசிரியர். கந்தருவராவார் நல்ல யாழமைத்து இசை பாடுதலில் வல்லவரென்றும் அவர்தாம் எக்காலத்தும் ஆணும் பெண்ணுமாக இணைந்தே செல்லும் இயல்பினரென்றும் கூறுபவாதலின், அவர்களைத் ‘துறையமை நல்யாழ்த்துணைமை யோர்’ என்றார் தொல் காப்பியனார். அவர்காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப்பட்டமையால் மறையோர்தே எத்து மணமுறைக்கும் தென்றமிழ்நாட்டு மணமுறைக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்கவுணர்த்தல் அவரது கடனாயிற்று. ஒருவன் ஒருத்தியென்னும் இருவரிடையே யுண்டாகும் கூட்டுறவை ஒருதலைக் கேண்மையாகிய கைக்கிளை. ஒத்த கேண்மையாகிய அன்பினைந்திணை ஒவ்வாக்கேண்மையாகிய பெருந்திணையென மூவகையாகப் பகுத்துரைத்தால் தமிழ் மரபு. பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவரும், அசுரம், இராக்கதம், பைசாசம் என எட்டுவகையாகப் பகுத்தல் வடநூல் மரபாகும் நாற்பத்தெட்டாண்டு பிரமசாரியங் காத்த இளைஞனுக்குப் பன்னிரண்டு வயதுடைய கன்னியை அணிகல னணிந்து கொடுப்பது பிரமம். மைத்துன கோத்திரத்தான் மகள் வேண்டிச் சென்றால் மறுக்காது கொடுப்பது பிரசாபத்தியம். தகுதியுடையானொருவனுக்குப் பொன்னினாற் பசுவும் எருதுஞ் செய்து அவற்றிடையே பெண்ணை நிறுத்தி அணிகலன் அணிந்து ‘நீங்களும் இவைபோற் பொலிந்து வாழ்மின்’ என நீர்வார்த்துக் கொடுப்பது ஆரிடம். வேள்வி செய்த ஆசிரியனுக்கு வேள்வித் தீமுன் கன்னியைத் தக்கிணையாகக் கொடுப்பது தெய்வம். கந்தருவ குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கூடினாற்போன்று ஒருவனும் ஒருத்தியும் தாமே யெதிர்ப்பட்டுக் கூடுவது கந்தருவம். கொல்லுமியல்புடைய எருதினை அடக்கியவன் இப்பெண்ணை மணத்தற்குரியன், வில்லேற்றினான் இவளை மணத்தற் குரியவன், இன்னதொரு பொருள் தந்தான் இவளை மணத்தற்குரியன் என இவ்வாறு சொல்லி, சொல்லியவண்ணஞ் செய்தாற்குப் பெண்ணைக் கொடுப்பது அசுரமெனப்படும். தன்னால் விரும்பப்பட்ட பெண்ணை, அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிதிற் கவர்ந்து செல்வது இராக்கதம் எனப்படும். மூத்தாள், துயின்றாள் களித்தாள் ஆகிய மகளிரைக் கூடுதல் பைசாசம் எனப்படும். மறையோர்க்குரிய நூலிற் சொல்லப்பட்ட இவ்வெட்டு மணங்களையும் முறையே அறநிலை, ஒப்பு, பொருள்கோள், தெய்வம், யாழோர் கூட்டம், அரும்பொருள் வினைநிலை, இராக்கதம், பேய்நிலை என மொழிபெயர்த்து வழங்குவர் தமிழர். இவையெட்டும் வடமொழியாளர்க்கே யுரியன வென்பார் ‘மறையோர்தேஎத்து மன்றல் எட்டு’ என்றார் தொல்காப்பியனார். எனவே இவ்வெண்வகை மணமுறைகளும் தமிழர்க்குரியன அல்ல என்பது பெறப்படும். மறையோர்க்குரியவாகச் சொல்லப்பட்ட எண்வகை மணத்தினுள்ளும் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும், தமிழர் கூறிய கைக்கிளைப்பாற்படுவன வென்றும், பிரமம், பிரசாபத்தயம், ஆரிடம், தெய்வம் என்ற நான்கும் பெருந்திணையாயடங்குமென்றும், கந்தருவமென்ற ஒன்றும் ஐந்திணையின்பாற்படுமென்றும் இளம்பூரணரும் நச்சினார்க் கினியரும் வகுத்துரைத்துள்ளார்கள். அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம், மறையோர்தேஎத்து மன்றலெட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோராகிய கந்தருவரது இயல்பினை யுடையதெனவே, கந்தருவ குமாரரும் கன்னியரும் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தாற்போலத் தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுப் புணர்வது இக்களவொழுக்கமாகுமெனக் கந்தருவத்திற்கும் களவொழுக் கத்திற்குமிடையே யமைந்த ஒற்றுமையினை நச்சினார்க்கினியர் நன்கு விளக்கியுள்ளார். ஒருவனும் ஒருத்தியுமாக எதிர்ப்பட்டார் இருவர், புனலோடும் வழிப் புற்சாய்ந்தாற்போலத் தம் நாணமும் நிறையும் இழந்து மெய்யுறு புணர்ச்சியிற் கூடி மகிழும் இயல்பே கந்தருவ மணமாகும். இங்ஙனம் கூடினோர் தம் வாழ்நாள் முழுதுங் கூடி வாழ்வரென்னும் நியதியில்லை. எதிர்ப்பட்ட அளவில் வேட்கை மிகுதியாற் கூடிப் பின் அன்பின்றிப் பிரிந்து மாறும் வரம்பற்ற நிலையும் இக் கந்தருவத்திற்கு உண்டு. தமிழர் கூறும் களவொழுக்கமோ இருவருள்ளத்தும் உள்நின்று சுரந்த அன்பின் பெருக்கினால், தான் அவள் என்னும் வேற்றுமையின்றி இருவரும் ஒருவராயொழுகும் உள்ளப் புணர்ச்சியேயாகும். இவ்வுள்ளப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர் ஒருவரையொருவர் இன்றியமையா தொழுகும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பே சாந்துணையும் நிலைபெற்று வளர்வதாகும். உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்தபின் ஒருவரையொருவர் பிரிவின்றி யொழுகும் அன்பின் தூண்டுதலால் உலகறிய மணந்து வாழும் கற்பென்னுந் திண்மை, தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக்கத்தின் முடிந்த பயனாகும். உலகியலில் உளவாகும் பலவகை இடையூறுகளால் ஒருவரை யொருவர் மணந்துகொள்ள இயலாமல் உள்ளப்புணர்ச்சி யளவே கூடி வாழ்ந்து பின்னர் இறந்த காதலரும் இத்தமிழகத்து இருந்தனர். மணிமேகலையிற் கூறப்படும் தருமதத்தன் விசாகை யென்னும் இருவரும் யாழோர் மணமாகிய கந்தருவ முறையிற் பொருந்தியவர்கள் எனத் தம்மை நோக்கி ஊரார் கூறிய பழிமொழியை விலக்கித் தம் வாழ்நாள் முழுவதும் மெய்யுறு புணர்ச்சியை விரும்பாது உள்ளப் புணர்ச்சியளவில் நின்று உயிர் துறந்த வரலாறு இங்கு நினைத்தற்குரியதாகும். கந்தருவ வழக்கில் மெய்யறு புணர்ச்சி முதற்கண் தோற்றுவது. அதன் பயிற்சியால் உள்ளப் புணர்ச்சி நிலைபெற்றுச் சாகுமளவும் கூடி வாழ்தலும் உண்டு; உள்ளப் புணர்ச்சி தோன்றாது தம்மெதிர்ப்பட்டாரைக் கூடி மாறுதலும் உண்டு, என்றும் பிரியா நிலையில் நினற கடவாது அன்பினாற் கூடும் உள்ளப் புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பியல்பாகும். இதுவே தமிழியல் வழக்கமாகிய களவுக்கும் வடநூல் மணமாகிய கந்தருவத்துக்குமுள்ள உயிர் நிலையாய வேறுபாடாகும். ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக்கூட்டம்’ எனத் தொல்காப்பியனாரும் ‘அன்புடை நெஞ்சந் தாங்கலந்தனவே’ எனப் பிறசான்றோரும் உள்ளப் புணர்ச்சி யொன்றையே களவுக்குரிய சிறப்பியல்பாக விரித்துரைத்துள்ளார்கள். ஆரிய மணமாகிய கந்தருவத்திற்கும் தமிழர் ஒழுகலாறாகிய களவொழுக்கத்திற்கும் உள்ள வேற்றுமையினையும் தமிழியல் வழக்கமெனச் சிறப்பித்துரைக்கப்படும் களவொழுக்கத்தின் தூய்மையினையும் ஆரிய அரசன் பிரகத்துனுக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு, கந்தருவத்திற்கும் களவிற்குமுள்ள வேற்றுமையினை இனிது விளக்குவதாகும். இந்நுட்பத்தினை நன்குணர்ந்தே ‘கந்தருவர்க்குக் கற்பின்றி யமையவும் பெறும், ஈண்டுக் கற்பின்றிக் களவே அமையாது” என இவ்விரண்டற்கு முள்ள வேற்றுமையினை விளக்கினார் நச்சினார்க்கினியர். மகளிரை அஃறிணைப் பொருளாகிய உடைமைபோலக் கருதிப் பிறர்பாற் கேட்டுப் பெறுதலும் கொடராயின் சுற்றத் தார்க்குத் தெரிந்தோ தெரியாமலோ வன்மையினாற் கவர்ந்து சேறலுமாகிய செயல் முறைகளை மணமெனக் கூறும் வழக்கம் தமிழர்க்கில்லை. ஆகவே இத்தகைய பொருந்தா மண முறை களுக்கு வடநூல்களிற்போலத் தமிழ் நூல்களில் இலக்கியங் காணுதலரிது. ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை’ யெனவே அதன் முன்னும்பின்னுங் கூறப்பட்ட ஒருதலைக் காமமாகிய கைக்கிளை யிலும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணையிலும் இருவர்பாலும் ஒத்த அன்பினைக் காணுதலரிதென்பது பெறப்படும். இத்தகைய பொருத்தமில்லாத கூட்டுறவுகள் எந்நாட்டிலும் எக்காலத்தும் காணப்படுவனவேயாம். பொருந்தாத செயல்களைக் குறிப்பாகச் சுட்டி விலக்கியும் பொருத்தமுடைய நற்செயல்களை வெளிப்படையாக எடுத்துரைத்து விளக்கியும் மக்களை நல்வழிப்படுத்துவதே சிறப்புடைய நூலின் மரபாகும். இம்மரபினை யுளத்துட்கொண்டு கைக்கிளை பெருந்திணைகளைக் குறிப்பாகவும் அன்பினை ந்திணையை விரிவாகவும் கூறுவர் ஆசிரியர். ஒருவனும் ஒருத்தியும் கூடி வாழும் மனையறத்தின பயனாக அவ்விருரையும் பிறப்புத்தோறும் சேர்த்து வைப்பதும் பிரித்து விலக்குவதுமாகிய இருவகை ஊழினும், இருவருள்ளமும் என்காலத்தும் ஒன்றி வாழ்தற்கேற்ற நல்லூழின் ஆணையால், ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் எதிர்ப்பட்டுக் காண்பர். அன்பு முதலியவற்றால் தலைவன் மிக்கவனாயினுங் குற்றமில்லை. இச்செய்தி, “ஒன்றே வேறே யென்றிரு பால்வயின் ஒன்றி யுயர்ந்த பால தாணையின் ஒத்த கிழவனுங் கிழந்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே” என வரும் களவியற் சூத்திரத்தாலுணரப்படும். இங்ஙனம் ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்படும் முதற் காட்சிக்கு நல்லூழின் ஆணையே காரணமென்பார் ‘உயர்ந்த பால தாணையின்’ என்றும், அவ்வூழின் ஆணைக்குக் காரணமாவது அவ்விருவரும் பண்டைப் பிறப்புக்களிற் பயிலியது கெழீஇய நட்பென்பார் ‘ஒன்றியுயர்ந்த பாலதாணை’ யென்றும், பல பிறவிகளிலும் பழகிய அன்பின் தொடர்ச்சியே ஒருவரையொருவர் இன்றியமையாதவராகக்காணுதற்குரிய காதற் கிழமையை வழங்கியதென்பார், ‘ஒத்தகிழவனுங் கிழத்தியுங்காண்ப’ வென்றும் கூறினார் தொல்காப்பியனார். தலைவனுக்கும் தலைவிக்கும் அமைந்த ஒத்த பண்புகளாவன: பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, நிறை, அருள், உணர்வு, திரு என்னும் இப்பத்துமாகும். இயற்கைப் புணர்ச்சிக்கண் ஒருவரை யொருவர் எதிர்ப்பட்டஅளவே வேட்கையைத்தூண்டி நிற்றற்கும் அவ்விருவரும் பண்டைப் பிறப்பிற் பயிலியது கெழீஇய நட்பன்றிப் பிறிது காரணமில்லையென்பதே தொல்லாசிரியர் கருத்தாகும். ஓத்த பருவத்தார் ஒருவரையொருவர் கண்டுழி யெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையின் ‘ஒன்றியுயர்ந்த பாலதாணையிற் காண்ப’ என்றார் ஆசிரியர். ஈண்டுக்காணுதல் என்றது தனக்குச் சிறந்தாராகக் கருதலை. தலைவி ஒத்த நலங்களாற் சிறந்து தோன்றியவழி இவள் மக்களுள்ளாள்கொல்லோ தெய்வமோ எனத் தலைவனுள்ளத்தே ஐயம் தோன்றும் ஒப்புமையிற் குறைவுடையளாயின் அவ்விழிபே அவளை இன்னாளெனத் தெளிவிக்குமாதலின், அந்நிலையில், ஐயந்தோன்றுதற்கிடமில்லை. தலைவி தன்னினும் உயர்ந்த தலைவனை நோக்கி இவன் தெய்வமோ மகனோ என ஐயுற்றால் அவளுள்ளத்தில் அச்சந்தோன்றுமேயன்றிக் காமவுணர்வு தோன்றாது. ஆகவே இங்ஙனம் ஐயப்படுவான் தலைமகனே யென்பர். தலைமகளை நோக்கி இவள் தெய்வமகளோ எனத் தலைவன் ஐயுற்ற காலத்து, அவள் கூந்தலிலணிந்த மாலையிடத்தே மொய்த்த வண்டுகளும் அவளணிந்த அணிகலன்களும் நறுமலரும் அவள் பால் தோன்றும் தடுமாற்றமும் கண்ணிமைப்பும் அச்சமும் அத்தன்மைப் பிறவும் ஐயத்தினைக் களைதற்குரிய கருவியாகும். இங்கெடுத்துக் காட்டிய அடையாளங்களைக் கொண்டு தலைமகளை இன்னாளெனத் துணிந்த தலைமகன், அவளது கருத்தறியாது அவளை யணுகுவானாயின், அச்செயல் பொருந்தா வொழுக்கமாகிய பெருந்திணையாய் முடியும் ஒத்த அன்பினால் நிகழ்தற்குரிய இக்களவொழுக்கத்திற்குத் தலைமகளது உளக் கருத்தைத் தலைமகன் உணர்ந்து கொள்ளுதலே முதற்கண் வேண்டப்படுவதாகும். அங்கே ஒருவரோடொருவர் உரையாடுதலும் முறையன்றாம். ஒருவர் வேட்கைபோல மற்றவர்க்கும் வேட்கையுளதாகுங் கொல்லோ என ஐயுற்று நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்தற்கு அவ்விருவர் கண்களும் வேட்கையினால் ஒருவர் ஒருவர்க்குரைக்குங் காமக்குறிப்புரையாம், கண்ட அளவிலேயே வேட்கைதோன்றி ஒருவரது உள்ளக் குறிப்பினை மற்றவர் ஏற்றுக்கொண்ட நிலையிலேதான் கண்ணினால் வரும் இக்குறிப்பு நிகழும். தன்னைத்தான் கொண்டொழுகும் பெருமையும், சென்ற விடங்களில் மனத்தைச் செல்லவிடாது தீமையின் நீக்கி நன்றின் பாலுய்க்கும் நல்லறிவும் ஆடவரது சிறப்பியல்பாகும். தனது நிறை காவலுக்கு இடையூறு நேருமோ வென்னும் அச்சமும், பெண்ணியல்பாகிய நாணமும், தான் மேற்கொண்ட கொள்கையை நெகிழவிடாமையாகிய மடனும் மகளிரது சிறப்பியல்பாகும். இவ்விரு திறத்தாரும் தம்மைக் காவாது வேட்கை மீதூர்ந்த நிலையிற்புன லோடும் வழிப் புற்சாய்ந்தாற்போலத் தமக்குரிய இக்குணங்களை நெகிழவிடுதல் கூடாமையின், தாம் எதிர்ப்பட்ட முதற்காட்சிலேயே மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்பாடது உள்ளப் புணர்ச்சி யளவே யொழுகி மணந்துகொண்ட பின்னரே கூடுதல் முறையாகும். ஒருவரையொருவர் பெறல் வேண்டுமென்னும் உள்ள நிகழ்ச்சியும் இடைவிடாது நினைத்தலும் உண்ணாமையாலுள தாம் உடல் மெலிவும், தனக்கு ஆக்கமாவன இவையெனத் தனக் குள்ளே சொல்லிக் கொள்ளுதலும், நாணத்தின் எல்லை கடத்த லும், காண்பனவெல்லாம் அன்புடையார் உருவாகவே தோற்று தலும், தம்மை மறத்தலும், மன மயக்கமுறுதலும், உயிர் நீங்கி னாற்போன்று உயிர்ப் படங்குதலும் ஆகிய இவை யொன்பதும் உயிரோரன்ன செயிர்தீர் நட்பாகிய காமவுணர்வினைச் சிறப்பிப் பனவாதலின், இவற்றைக் களவொழுக்கத்திற்குச் சிறந்தனவாகச் கூறுவர் முன்னையோர். வேட்கை முதல் சாக்காடீறாக இங்குச் சொல்லப்பட்டவை நிகழ்ந்த பின்னரே மெய்யுறு புணர்ச்சி நிகழுமென்பர். தனியிடத்தே தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன், தனது பெருமையும் உரைனும் நீங்க வேட்கை மீதூர்தலால் மெய்யுறு புணர்ச்சியை விரும்பினானாயினும் தலைமகள்பால் தோன்றும் அச்சமும் நாணும் மடனும் அதற்குத் தடையாய் நிற்பனவாம். அத்தடை நீங்குதற் பொருட்டுத் தலைமகளை முன்னிலைப்படுத்திச் சில கூறுதலும், தான் சொல்லும் சொல்லின்வழி அவள் நிற்கும் படி சில கூறுதலும், அவளது, நலத்தினை யெடுத்துரைத்தலும், அது கேட்டதலைமகள்பால் முறுவற் குறிப்புத் தோன்றி நிற்றலையறிதலும், தன் அகத்தே நிகழும் நோயால் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பால் விளக்குதலும், தன்னுள்ளத்து வேட்கை மீதூர்தலை நிலைப்படச் சொல்லுதலும், தலைமகள் உள்ளப் பண்பினைத் தான் அறிந்த தெளிவினைத் தன் மனத்தகத்தே தேர்ந்து வெளிப்படுத்தலும் ஆகிய இவ்வுரையாடல்கள் தலைவன்பால் நிகழ்வனவாம். பெருமையும் உரனுமுடைய தலைவன், காதல் வெள்ளம் புரண்டோடத் தனக்குச் சிறந்தாளெனத் தெளிந்த தலைவியின் மெய்யைத் தீண்டிப் பழகுதலும், விளையாட்டின்கண் அவள் நலத்தைப் பாராட்டி யுரைத்தலும், அவள் நின்ற இடத்தை நெருங்கி நின்று அன்பொடு தழீஇய சொற்களைச் சொல்லுதலும், தலைவனது ஊற்றுணர்வு என்றும் பயிலாத தன் மெல்லியல் மெய்யிற் பட நாணமுடையளாகிய தலைவி, அங்குள்ள கொம்பும் கொடியுமாகியவற்றைத் தனக்குச் சார்பாகக் கொண்டு மறைந்து ஒல்கி நிற்க, அதுகண்ட தலைவன், இவ்வூற்றின்பத்திற்கு இடையூறாய் நின் மனத்து நிகழ்ந்தவை யாவையென வினவி நிற்றலும், அவளை மெய்யுறுதற்கியலும் காலம் வாய்க்காமையை யெண்ணி வருந்துதலும், பின்னர் அவளை மெய்யுறுதலும், மேற்கூறியவற்றுடன் இன்பந் திளைத்தலையும் விரைவாகப் பெற்றவிடத்து, நின்னைப் பிரியேன் எனத் தலைவிக்குத் தெளிவுரை பகர்தலும் ஆகிய எட்டுவகைக் கூற்றும், முன்கூட்டம் பெற்ற இடத்தினையே மீண்டுந் தலைப்பட்டுக் கூடி மகிழ்தலும், தலைமகளைப் பிரிந்த வழிக் கலக்கமுறுதலும், என்றும் நிலை நிற்பதாகிய இல்லறத்தை மேற்கொள்ள நினைந்து மேல் நிகழ்வனவற்றை யெடுத்துரைக்கு மிடத்தும் தன்பால் சோர்வு மிகுதியாலும் காதல் மிகுதியாலும் நேர்வுற்ற பழிபாவங்களை யெடுத்துக்காட்டி இடித்துரைக்கும் உயிர்த் தோழனாகிய பாங்கன் தனது களவொழுக்கத்தையேற்று உடன்பட்டவிடத்தும் தலைமகளால் விரும்பப்பட்ட உயிர்த்தோழியை வாயிலாகப் பெற்று அவளை இரந்து பின்னின்று அவள் கூட்டக் கூடுவேன் எனக் கருதி அவ்விரத்தலை மேற்கொள்ளுமிடத்தும் ஊரும் பேரும் தான் இழந்தன பிறவும் ஆகியவற்றை வினவு முகத்தால் தன் மனக் கருத்துப் புலனாகத் தோழியைக் குறையிரந்து நிற்கும் பகுதியும், தோழி இவன் கூறுகின்ற குறை தலைவியைக் குறித்ததாக விருந்ததென்று அவள்மேல் சேர்த்தெண்ணும் நிலையிற் சில கூறலும், பலகாலுஞ் சென்று இரத்தலும் மற்றையவழியும் தலைவன் வருந்திக் கூறுகின்ற சொல்லினைத் தலைவியொடு சார்த்திக் கூறுதலின் முன்னுறு புணர்ச்சி முறையேயடைக வெனவும் தலைவி பேதைத் தன்மையள் எனவும் இவ்வாறு ஒழுகுதலாற் கேடுளதாம் எனவும் இவ்வொழுக்கம் நின் பெருமைக்கு ஏலாது எனவும் கூறித் தோழி தலைவனை அவ்விடத்தினின்றும் அஞ்சி நீக்குதலாலுளதாய வருத்த நிலைமையும் நோக்கி மடலேறுவேன் எனக் கூறுதலும் ஆகிய கூற்றுக்கள் தலைவன்பால் நிகழ்வனவாம். தலைமகளது இளமைப் பண்பினைத் தோழி எடுத்துக் கூறித் தலைவன் அவ்விடத்திருந்து பெயர்த்த வழியும், வருத்தத்ததினால் மெலிகின்றமை கூறியவிடத்தும், தலைமகன் குறையை மறுக்குந் தோழி அன்புதோன்ற நகைத்த நிலையிலும், அவளது உடம்பாட்டினைப்பெற்று மகிழுமிடத்தும், தான் செல்லும் வழியிடை இடையூறுண்டாயவிடத்தும் எனத்தோழியிற் கூட்டத்திடத்தே தலைவன் கூற்று நிகழ்தல் இயல்பாகும். அன்புற்றாரிருவர் துணையாய்க் கூடுதற்கு நிமித்தமாகவன பன்னிரண்டாம். அவையாவன. காட்சி, ஐயம், துணிவு என முன்னர்க் கூறிய மூன்றும், குறிப்பறிதலின் பயனாய்த் தோன்றும் வேட்கை முதல் சாக்காடீறாகச் சொல்லப்பட்ட ஒன்பதுமாகும். இவை பன்னிரண்டுமே அன்பொடு புணர்ந்த ஐந்திணைமருங்கிற் காமக் கூட்டத்திற்கு நிமித்தமாவனவாம். இவற்றுள் முற்கூறிய காட்சி, ஐயம், துணிவு என்பன மூன்றும் அன்பினைந்திணைக்குரிய தாதலேயன்றி ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்குரிய குறிப்புக்களாகவும் அமையும். நோக்குவவெல்லாம் அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு எனப் பின்னர்க்கூறிய நான்கு நிலைகளும் ஒத்த அன்பால் நிகழும் வழி ஐந்திணை யாதலேயன்றி ஒவ்வாக் காமத்தால் நிகழும்வழிப் பெருந்திணைக் குரிய பொருந்தா நிலைகளாகவும் கருதப்பெறும். முதல், கரு, உரியென்னுந் திணைக் கூறுபாட்டுடன் பொருந்திய யாழோர் நெறியினையொத்த காமக்கூட்டம் வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல் என்னும் ஐந்து நிலைகளையுந் தனக்குரிய சிறப்பு நிலைக்களனாகக் கொள்ளும் என்பர் ஆசிரியர். தோழியின் உடம்பாடுபெற்றுத் தலைமகளைக் கூடிய தலைமகன் அவளை மணந்துகொள்ளும்வரையும் கூறும் பொருள்களைத் தொகுத்துக் கூறுவது ‘இருவகைக் குறிபிழைப்பாகியவிடத்தும்’ எனத் தொடங்கும் இவ்வியற் சூத்திரமாகும். இதனைத் தலைவி கூற்றாகக்கொண்டு பொருளுரைப்பர் நச்சினார்க்கினியர். தலைவியின்பால் நிலைபெற்றுள்ள நாணமும் மடனும் பெண்மைக்கு அங்க மாதலால் காமவொழுக்கத்தின்கண் குறிப்பினாலும் இடத்தினலு மல்லது அவள்பால் வேட்கை புலப்படுதலில்லை. வேட்கை யுரையாத கண்கள் யாண்டுமின்மையால் வேட்கை காரணமாக அச்சம் நீங்கினாலும் நாணமும் மடனுமாகிய இரண்டும் தலைவியிடத்து என்றும் நீங்காதுளவாம். தலைவன் புணர்ச்சி கருதிக் கூறுஞ்சொல்லின் எதிரே இசைவில்லாதாரைப்போன்று கூறுதலே தலைவிக்கு இயல்பாகும். இன்னின்ன இடங்களில் தலைவி உரையாடுதற்குரியள் என்பதை இவ்வியல் 21-ஆம் சூத்திரத்தால் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தவைன் இன்ன நாளில் நின்னை மணந்துகொள்வேன் எனச் சொல்லிவிட்டுத் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது நீங்கிய நிலையில், தன்னைக் கண்டு தோழி ஐயுறுதற்கேற்ற குறிப்பு தன்கண் தோன்றாதபடி மறைத்தொழுகிய தலைவி, தலைவன் வருமளவும் ஆற்றாது வருத்த முற்ற நிலையிலும், களவொழுக்கத்தில் வந்தொழுகுந் தலைவன் செவிலித்தாய் முதலியோரை எதிர்ப்பட்டபொழுதும், இவ்வொழுக்கத்தினை நின் தோழிக்குச் சொல்லுக என அவன் தனக்குச் சொல்லிய நிலையிலும் தானே தோழிக்குக் கூறுதலுண்டு. உயிரைக்காட்டிலும் நாணம் சிறந்தது; அத்தகைய நாணத்தினுங் கற்புச் சிறப்புடையது என்னும் முன்னோர் மொழியை யுளத்துட்கொண்டு, தலைவன் உள்ளவிடத்தையடைய நினைத்தலும் இவ்வாறு குற்றந்தீர்ந்த நற்சொற்களைக் கூறுதலுமாகிய இவை, தலைவி தானேகூறுங் கூற்றினுள் அமைதற்குரிய பொருள்வகையென்பர் ஆசிரியர். களவொழுக்கத்தின்கண் தலைவிக்கு இன்றியமையாத வளாகிய தோழி உரையாடுதற்குரிய பொருள்வகை யெல்லா வற்றையுந் தொகுத்துக் கூறுவது, ‘நாற்றமும் தோற்றமும் (களவு-24) எனத் தொடங்குஞ் சூத்திரமாகும். இதன்கண் தோழி கூறுதற்குரியனவாக முப்பத்திரண்டு பொருண்மைகள் விரித் துரைக்கப்பெற்றுள்ளன. இங்கே தோழி கூறுவனவாக ஆசிரியர் எடுத்தோதிப் பொருட்பகுதிகளை உற்றுநோக்குங்கால், மக்கள் மன நிலையை அவர்தம் தோற்றம் ஒழுக்கமுதலியவற்றால் உய்த் துணரும் மனப்பயிற்சியும் ஒத்த அன்பினராகிய தலைவனையும் தலைவியையும் உலகியல் கூறித் தீதொரீஇ நன்றின்பா லுய்க்கும் நல்லறிவும், உள்ளக் கருத்தறிதலருமையும், தன் அறிவின் திறத்தைப் பிறரறியாது ஒழுகும் அடக்கமும், மறைபுலப்படாமல் நிறுத்தும் நல்லுள்ளமும், மாசற்ற அறவுணர்ச்சியும், செய்யத் தகுவன அறிந்து கூறலும் ஆகிய பெண்மைக்குணங்கள் முழுவதும் தோழியினிடத்து ஒருங்கமைத்திருத்தல் புலனாம். இவ்வாறு பொறுத்தற்கரிய பெருங் குணங்கள் யாவும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவளே தோழியெனப் பாராட்டுதற்குரியவ ளென்பார், ‘தாங்கருஞ்சிறப்பின் தோழி’ என்றார் தொல் காப்பியனார். தலைவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாகிய நிலையில் ஊரார் அலர் கூறிய காலத்தும், தலைவியின் வேட்கை அளவிறந்த நிலையிலும், அவளது வனப்புமிக்குத் தோன்றிய காலத்தும், தலைவனொடு தலைவியை ஒருசேரக் கண்ட காலத்தும் தலைவியின் மெலிவுக்குரிய காரணங்களைக் கட்டுவைப்பித்தும் கழங்கு பார்த்தும் கண்டறிந்து அவளது நோய்தீர வேலனையழைத்து வெறியாடிய பொழுதும், வெறியாடுதலைத் தோழி தடுத்து நிறுத்திய நிலையிலும், காதல் மிகுதியால் தலைவனை நினைந்து தலைவி கனவில் அரற்றிய பொழுதும் செவிலித்தாய் தோழியை வினவுதலுண்டு. இன்னவாறு நிகழ்ந்ததெனத் தோழி கூறியவழி இவ்விருவரது ஒழுகலாற்றினால் குடிக்குப் பழி விளைதலாகாதெனத் தெய்வத்தை வேண்டுதலும் தலைவி தலைவனுடன் போயினாளென்றறிந்த நிலையில் தோழியொடு ஆராய்ந்து அவ்விருவரையும் மனையறத்தின்கண் நிறுத்தற்கு முயலுதலும் அவள் செயல். தலைவன் மணந்துகொள்ளாது தலைமகளைப் பிரிந்த காலத்து அவள் கற்புவழிப்பட்டு மனைக்கண் அமைதியாக அடங்கியிருக்கும் நிலையினை யெண்ணிய நிலையிலும் தலைவனது குடிப்பிறப்பு தம் குடிப்பிறப்பினோடு ஒக்கும் என ஆராய்தற்கண்ணும் இவைபோன்ற பிறவிடங்களிலும் செவிலி உரையாடுதற்குரியள். செவிலியுணர்வுடன் ஒத்த கருத்துடையளாயின் நற்றாய்க்கும் மேற்சொல்லப்பட்ட கூற்றுக்கள் உரியனவாம். தலைவியின் மெலிவினைக் கண்டு வருந்திய செவிலியும் நற்றாயும், குற்றமற்ற சிறப்பினையுடைய உயர்ந்தோராகிய அறிவரைப் பணிந்து நின்று இவளது மெலிவு எதனாலாயிற்று என வினவி நிற்பர். அது கேட்ட பெரியோர், முக்கால நிகழ்ச்சியினையும் தாம் ஒருங்குணரும் நுண்ணுணர்வுடை யோராதலின், தலைவியொடு தலைவனுக்குண்டாகிய தொடர்பினை வெளிப்படச் சொல்லுதல் மரபன்மையானும் நிகழ்ந்ததை மறைத்தல் வாய்மைக்கு மாறாதலானும் ‘நும்மகள் தலைமகன் அறியா அறிவினையுடையாள்’ என ஐயக் கிளவியால் மறுமொழி கூறுவர். எதிர்காலத்தில் தன்னை மணத்தற்குரிய கணவனாலும் அறியப்படாத பேரறிவினையுடையாள் நும்மகள் என ஒரு பொருளும், தன் கணவனாகியொழுகும் தலைவனாலும் அறியப்படாத அறிவுரிமைபூண்டு மயங்குகின்றாள். இவள் தன்னறிவிற் சிறிதும் மயக்கமிலள், அவன் பொருட்டு மயங்குகின்றாள் என மற்றொரு பொருளும் தரும் நிலையில் இங்ஙனம் ஐயுறக்கூறிய அறிவரது சொற்பொருளை யுய்த்துணர்ந்து தலைவன் தலைவியாகிய இருவரிடையே யமைந்த தொடர்பினைச் செவிலியும் நற்றாயும் அறிந்துகொள்ளுதலும் உண்டு. வேறு வேறாகத் தம்முள் காதல் செய்தொழுகும் அறிவில்லா தாரைப்போலத் தனது மிக்க வேட்கையைத் தலைவன் முன்பு சொல்லுஞ் சொல், தலைவியிடத்து நிகழ்தலில்லை. அங்ஙனம் சொல் நிகழாதொழியினும் தலைவியது வேட்கை புதுக்கலத்துப் பெய்தநீர் புறத்தே பொசிந்து காட்டுமாறுபோலும் உணர்வினை யுடைத்தென்று கூறுவர். இயற்கைப் புணர்ச்சியாகிய களவு, கூட்டிவைப்பார் பிறரின்றித் தனிமையிற் பொலிவது. ஆதலின் தலைவன் தலைவி யிருவரும் தத்தமது உளக்கருத்தைப் புலப்படுத்துந் தூதுவராகத் தாமே நின்று கூடுதலும் உண்டு அந்நிலை மெய்ப்பாட்டியலுள் ‘புகுமுகம் புரிதல்’ முதலிய மெய்ப்பாடு பன்னிரண்டானும் நன்கறியப்படும். எனவே தலைவன் பாங்கனது உதவிபெற்றுக் கூடுதலும் தோழியின் உடன்பாடு பெற்றுக் கூடுதலுமாகிய இவை யாவர் மாட்டும் நிகழவேண்டுமென்னும் வரையறையில்லை யென்பது பெறப்படும். இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தலைவனது சொல்லின் எல்லையைக் கடத்தல் தலைமகளுக்கு அறனன்றாகலானும் தான் செல்லுதற்குரிய இடத்தைத் தானே யுணர்வளாதலானும் தாங்கள் மீண்டும் கண்டு அளவளாவுதற்குரிய ஓரிடத்தை யறிவிக்கும் பொறுப்பு தலைமகளைச் சார்ந்ததாகும். தோழியால் அறிவிக்கப்பட்டுப் பொருந்துமிடமும் உண்டு. களவிற்புணர்ச்சி தோழியின் துணையின்றி மூன்று நாளைக்குமேல் நிகழ்தலில்லை. அம்மூன்று நாளைக்குள்ளும் தோழியின்துணை விலக்கப்படுதலில்லையென்பர் ஆசிரியர். எனவே இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்னும் மூன்றுநாளெல்லையளவும் தலைவன் தோழியின் உதவியின்றி அவளறியாது தலைமகளைக்கண்டு அளவளாவுதல் கூடுமென்பதும், அம்மூன்று நாளைக்குமேலாயின் தோழியின் உதவியின்றித் தலைவி எதிர்ப்படுதற்கு அரியளென்பதும், அம்மூன்று நாளைக்குள்ளேயே தோழியின் உடன்பாட்டைப் பெறுதலுமுண்டென்பதும் ஆசிரியர் கருத்தாதல் உய்த்துணரப் படும். பலவகையானும் தலைமகள்பாலுளவாம் நன்மைகளை நாடுவார் பக்கத்தினை ஆராயும் ஆராய்ச்சி தலைவனுக்கு வேண்டு மாதலானும், தாங்கள் மேற்கொண்ட அன்பின் வழிப்பட்ட களவொழுக்கம் ஒன்றிய அன்புடைய துணையாகிய தோழியால் புறத்தாரறியாது நிலைபெற்று நிகழ்தல் வேண்டுமாதலானும், தனக்குத் துணையாவாள் இன்னாளெனத் தலைவனுக்குச் சுட்டிக் கூறுஞ் சொல் தலைவிக்குரியதாகும் என்பர் ஆசிரியர். களவொழுக்கத்தில் நணுகியாராய்ந்தறிதற்கரிய மறைப் பொருளெல்லாவற்றையும் கேட்டற்கும் சொல்லுதற்கும் உரிய தாயாகச் சிறப்பித்துரைக்கப்படுபவள் செவிலியேயாம். தனக்கு இன்றியமையாத உயிர்த்தோழியாகத் தலைவியால் விரும்பப்பட்ட தோழியென்பாள் மேற்கூறிய சிறப்புடைய செவிலியின் மகளாவாள். தலைவியின் களவொழுக்கம்பற்றித் தன் மனத்துள்ளே ஆராய்தலும் தலைவியின் சூழ்ச்சிக்குத் தான் உசாத்துணையாகி நிற்றலுமாகிய பெருங்கேண்மையுடையாள் இத் தோழியேயென்பர். தலைவன் தன்பால்வந்து குறையுற்று நிற்க அவனுள்ளக் கருத்தினை யுணர்தலும், தலைவியின் உள்ளக் குறிப்பினைக் கண்டுணர்தலும், தலைவியும் தானும் ஒருங்கிருந்த நிலையில் தலைவன்வர அந்நிலையில் அவ்விருவரது உள்ளக்கருத்தினை யுணர்தலும் எனத் தோழி, தன் கருத்துடன் அவ்விருவரது கருத்தினையும் வைத்து ஒன்றுபடுத்துணரும் உணர்ச்சி மூவகைப்படும். இவ்வாறு மூவர் மதியினையும் ஒன்றுபடுத் துணர்தலின் இது மதியுடம்படுத்தலென்று பெயராயிற்று. இங்ஙனம் தலைவன் தலைவியென்னும் இருவர்பாலும் ஒத்த அன்புடைமையுணர்ந்தபினல்லது தலைவன் தன்னை இரந்து பின்னிற்கும் முயற்சிக்குத் தோழி இடந்தரமாட்டாள். தன்னை இரந்து பின்னிற்குந் தலைவனது நினைவின்கட்படும் மாசற்ற அன்பின் திறத்தையுணர்ந்து அவனைத் தலைவியோடு கூட்டுவித்தலும் அத்தோழியின் செயலேயாம். தலைவன் தலைவி யிருவரும் பிறரறியாது பகலிலும் இரவிலும் அளவளாவுதற்கெனக் குறிக்கப்பட்ட இடமே குறியென வழங்கப்படும். மனையுனுட்புகாது அங்குள்ளோர் கூறுஞ்சொற்கள் கேட்கும் அணிமைக்கண் அமைவது இரவுக்குறியாகும். ஊரின் மதிற்புறமாய்த் தலைமகள் அறிந்து சேர்தற்குத் தகுதியுடையதாகிய இடம் பகற்குறியாகும். தலைவன் செய்த அடையாளமென மயங்தற்குரியன இயற்கையாக நிகழின் குறியல்லாதவற்றைக் குறியெனக் கொள்ளுதலும் தலைமகளுக்குரிய இயல்பாகும். கற்புடை மகளிர்க்குரிய சிறப்பிற் குன்றாவாறு மேற்கூறிய இருவகைக் குறியிடங்களிலும் பிறரறியாதபடி தலைவனொடுகூடி யொழுகும் ஒழுக்கமும் தலைமகளுக்கு உண்டு. இங்ஙனம் களவொழுக்கத்தில் வந்தொழுகுதல் காரணமாக என்றும் தன் தோழர்களுடன் கலந்துகொள்ளுதற் குரிய விளையாட்டினையும் திருவிழாச் செயல்முறைகளையும் விலகியொழுகும் ஒழுக்கம் தலைவனுக்கில்லை. யாவராலும் விரும்பி நோக்கப்படுந் தலைவன் களவொழுக்கம் காரணமாக இவற்றை விலகியொழுகு வானாயின் அவன் வாரமைபற்றி அவனைப் பலரும் வினவ, அது காரணமாக அவனது களவொழுக்கம் புறத்தார்க்குப் புலனாமாதலின், இவற்றை நீங்கியொழுகுதல் கூடாதென விலக்குவர் ஆசிரியர். இவ்வாறே வழியருமையும் நெஞ்சழிதலும் அஞ்சுதலும் இடையூறும் ஆகிய இவை தலைவன்பால் நிகழ்தல்கூடாதென்பர். தலைவியின் தந்தையும் தமையன்மாரும் இக்களவொழுக் கத்தைக் குறிப்பினால் உணர்வர். நற்றாய், செவிலியுணரும் முறைமையால் அறிந்துகொள்வாள். இரவினும் பகலினும் அவ்வழி வந்து செல்லுந் தலைமகனையறிந்து அவனது வருகை காரணமாக மகளிர் சிலரும் பலரும் தம்முகக் குறிப்பினாற் புலப்படுத்தும் அம்பலும், இன்னானோடு இன்னாளிடையது நட்பு எனச் சொல்லால் விரித்துரைப்பதாய அலரும் தோன்றிய பின்னரல்லது இம்மறை வெளிப்படாதாதலின், இக்களவு வெளிப்படுதற்குத் தலைவனே காரணமாவன், களவு வெளிப்பட்ட பின்னர்த் தலைவியை மணந்துகொள்ளுதலும் அது வெளிப்படுதற்கு முன்னரே மணம் செய்துகொள்ளுதலும் என மணந்துகொள்ளும் முறை இருதிறப்படும். களவு வெளிப்பாடே கற்பியல் வாழ்க்கையாகக் கருதப் படுமாயினும் உலகத்தாரறியத் தலைவியை மணந்துகொள்ளாத நிலையில் ஓதல், பகை, தூது என்பன காரணமாகத் தலைவன் நெட்டிடைப் பிரிந்து சேறல் கூடாதென்பர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல் வரிசை -10, பக். 257-273 மூன்றாவது களவியல் 89. இன்பமும் பொருளு மறனு மென்றாங் கன்பொடு புணர்ந்த வைந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுட் டுறையமை நல்யாழ்த் துணைமையோ ரியல்பே. என்பது சூத்திரம் இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், களவியல் என்னும் பெயர்த்து. களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃ தாதல் ஈண்டு உரைக்கின்றதனான் பயன் இன்றாம்; களவென்பது அறம் அன்மையின் (எனில்), அற்றன்று; களவு என்னும் சொற் கண்டுழி யெல்லாம் அறப்பாற்படாதென்றல் அமையாது. களவாவது, பிறர்க்குரிய பொருள் மறையிற் கோடல். அன்னதன்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத்தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர், தம் இச்சையினான் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் 1அறநிலை வழா மன்றலால், இஃது 2அறமெனப்படும். அன்னதாதல் இச்சூத்திரத்தானும் விளங்கும். அஃதற்றாக, மேலை யோத்தினோடு இவ்வோத்திற்கு இயைபு என்னை யெனின், மேல் கைக்கிளை முதற் பெருந்திணை இறு வாயாக எழுதிணை யோதி அவற்றின் புறத்து நிகழுந் திணைகளும் ஓதிப்போந்தார். அவ்வெழுதிணையினும் ஒருதலை வேட்கை யாகிய கைக்கிளையும், ஒப்பில்கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து, இருவரன்பும் ஒத்த நிலைமையாகிய நடுவண் ஐந்திணைக் கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலுமாகிய உரிப்பொருள் களவு கற்பு என்னும் இருவகைக் கைகோளினும் நிகழுமாதலின், அவ்விருவகைக் கைகோளி னுங் களவாகிய கைகோள் இவ் வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின் பின் கூறப்பட்டது. இது நடுவணைந்திணைக்கண் நிகழும் பொருட்பாகுபாடாயின், அகத்திணை யியலின் பின் வைக்கற்பாலது எனின், ஆண்டு வைக்கக் கருதின் ``வெட்சி தானே குறிஞ்சியது புறனே’’ (புறத். 59) என்னும் மாட்டேறு பெறாதாம், அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க. மற்றும், அஃது யாங்கனம் உணர்த்தினாரோ எனின், ``காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும் பாங்கொடு தழாஅலுந் தோழியிற் புணர்வுமென் றாங்கநால் வகையினு மறைந்த சார்வொடு மறையென மொழிதன் மறையோ ராறே’’ (செய். 178) என்பதனான் இந்நால்வகையும் இதனுள் உரைக்கப்படு கின்றதென்று கொள்ளப்படும். காமப்புணர்ச்சியெனினும், இயற்கைப் புணர்ச்சி யெனினும், முன்னுறு புணர்ச்சி யெனினும், தெய்வப் புணர்ச்சி யெனினும் ஒக்கும். இவையெல்லாம் காரணப்பெயர். அஃதாவது, ஒத்தார் இருவர் தாமே கூடுங் கூட்டம். இடந்தலைப்பாடாவது, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றைஞான்றும் அவ் விடத்துச் சென்று எதிர்ப் படுதல். பாங்கற் கூட்டமாவது, இப் புணர்ச்சி பாங்கற்கு உரைத்து, நீ யெமக்குத்துணையாக 3வேண்டுமென அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்த்தச் சென்று கூடுதல். தோழியிற் கூட்டமாவது, இவற்றின் பின்னர் இக்கூட்டம் நீடச்சேறல் வேண்டித் தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகக் கூடுதல். இவை நான்கும் இம்முறையே நிகழும் என்று கொள்க. இனி இம்முறை நிகழாது இடையீடு பட்டும் வரும். அஃதாமாறு: தலைமகள் எதிர்ப்பட்டுழி, அன்புடையார் எல்லார்க்கும் இயற்கைப் புணர்ச்சி முட்டின்றிக் கூடுதல் உலகியல் அன்மையான், தலைமகளை யாதானும் ஓரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன் அவள் காதற் குறிப்புணர்ந்து நின்று, கூட்டத்திற்கு இடையீடு உண்டாயுழியும் ஆண்டுச் சென்ற வேட்கை தணியாது நின்று, முன்னை ஞான்று கண்டாற் போலப் பிற்றை ஞான்றும் காணலாகுமோ என ஆண்டுச் சேறலும், தலைமகளும் அவ்வாறே வேட்கையான் அடர்ப்புண்டு ஆண்டு வருதலும் ஆகியவழிப் புணர்ச்சி நிகழும். ஆண்டு ஆயத்தாரானாதல் பிறரானாதல் இடையீடுபட்டுழித்தன்வருத்தத்தினைப் பாங்கற்கு உணர்த்தி, அவன் தலைமகள் நின்றுழி யறிந்து கூற, ஆண்டுச் சென்று புணரும். அவ்விடத்தும் இடையீடு பட்டுழித் தோழி வாயிலாக முயன் றெய்தும். இவ்வாறும் ஒரோவொன்று இடையீடு பட்டுழி வரைந் தெய்தல் தக்கதன்றோ எனின், வரைந்தெய்துந் திறம் நீட்டிக்குமாயின் வேட்கை நிறுத்த லாற்றாதார் புணர்ச்சி கருதி முயல்ப. இவ்வாறு சான்றோர் செய்யுள் வந்தனவும் உளவோ எனின், சான்றோர் செய்யுள்களுள் இவ்வாறு பொருள்கொள்ள ஏற்பன உள. அவையாவன: ``மருந்திற் றீரா மண்ணி னாகா தருந்தவ முயற்சியி னகற்றலு மரிதே தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய தேனிமிர் நறவின் றேறல் போல நீதர வந்த நிறையருந் துயரநின் னாடுகொடி மருங்கி னருளி னல்லது பிறிதிற் றீரா தென்பது பின்னின் றறியக் கூறுது மெழுமோ நெஞ்சே நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்த னாடுமழைத் தடக்கை யறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்த விளங்குமுத் துறைக்கும் வெண்பற் பன்மாண் சாயற் பரதவர் மகட்கே.’’ இதனுள் ``ஆடுகொடி மருங்கி னருளின் னல்லது பிறிதிற் றீராது’’ என்பதனான் இயற்கைப் புணர்ச்சி இடையீடுபட்டுப் புணர்ச்சி கருதிக் கூறியவாறு காண்க. ``மயில்கொன் மடவாள்கொன் மாநீர்த் திரையுட் பயில்வதோர் தெய்வங்கொல் கேளிர் குயில்பயிலும் கன்னி யிளஞாழற் பூம்பொழிலி னோக்கிய கண்ணின் வருந்துமென் னெஞ்சு.’’ (திணைமொழி. 49) இதனுள் ஐயநிலைப் பாங்கற்கு உரைத்தலின் புணர்ச்சி இன்றாயிற்று. ``கொண்டன் மாமழை 4குடக்கேர்பு குழைத்த சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம் வகைசே ரைம்பா றகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்க ணாய முவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கு நிலவுமணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லாட்டி யருளினு மருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியன்மா னெஞ்சே யென்னதூஉ மருந்துய ரவலந் தீர்க்கு மருந்து பிறிதில்லையா னுற்ற நோய்க்கே.’’ (நற். 140) இதனுள் ‘அருளினும் அருளாளாயினும்’ என்றமையான் கூட்ட மின்மையும், ‘பின்னிலை முனியல்’ என்றமையான் இரந்து பின்னிற்பானாகத் 5துணிந்தமையும், தோழியிற்கூட்டத்து இயற்கைப் புணர்ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க. ``நறவுக்கம ழலரி நறவு வாய்விரிந் திறங்கிதழ் கமழு மிசைவாய் நெய்தற் கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர் நின்னைய ரல்லரோ நெறிதா ழோதி யொண்சுணங் கிளமுலை யொருஞான்று புணரி னுண்கயிற் றுறுவலை நுமரொடு வாங்கிக் கைதை வேலி யிவ்வூர்ச் செய்தூட் டேனோ சிறுகுடி யானே.’’ பெரியீரெனச் சேட்படுத்தவழிக் கூறியது. ``கூறுவங் கொல்லோ கூறலங் கொல்லெனக் கரந்த காமங் கைந்நிறுக் கல்லாது நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி யரைநாள் யாமத்து விழுமழை கரந்து கார்மலர் கமழுங் கூந்தற் 6றூவினை நுண்ணூ லாகம் பொருந்தினள் வெற்பி னிளமழை சூழ்ந்த மடமயில் போல வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூ லஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து துஞ்சி யாமத்து முயங்கினள் பெயர்வோ ளான்ற கற்பிற் சான்ற பேரிய லம்மா வரிவையோ வல்லள் 7தெனாஅ தாஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற் கவிரம் பெயரிய வுருகெழு கவாஅ னேர்மலை நிறைசுனை யுறையுஞ் சூர்மகள் கொல்லெனத் துணியுமென் னெஞ்சே.’’ (அகம். 198) இது தோழியிற்கூடிய தலைமகன் கூற்று. ``அவரை பொருந்திய பைங்குர லேனற் கவரி மடமா கதூஉம் படர்சாரன் கானக நாட மறவல் வயங்கிழைக் கியானிடை நின்ற புணை.’’ (ஐந்திணையெழு. 1) இதனானே முந்துற்ற கூட்டமின்மை யுணர்க. இனி ஒரு கூட்டமும் நிகழாது ஆண்டு வந்தடைவேட்கை இருவர்க்கும் தணியாது நின்று வரைந்தெய்தலும் ஒன்று. இவ்வகையினான் இக்களவொழுக்கம் மூவகைப்படும். இனி, இத்தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், காமப் புணர்ச்சிக்கு இலக்கண வகையாற் குறியிடுதலை உணர்த்துதல் நுதலிற்று, என்பது சூத்திரம். இன்பமும் பொருளு... காணுங் காலை என்பது - இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்லப்பட்டு, அன்பொடு புணர்ந்த நடுவண் ஐந்திணையிடத்து நிகழும் காமக் கூட்டத்தினை ஆராயுங்காலத்து என்றவாறு. அன்பொடு புணர்ந்த ஐந்திணை என்றதனான், கைக்கிளை பெருந்திணையை ஒழித்து, நின்ற முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் எனக் கொள்ளப்படும். அவை அன்பொடு புணர்ந்த வாறு என்னையெனின், கைக்கிளை பெருந்திணையைப் போலாமை, ஒத்த அன்பினராகிப் புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும் இரங்கலும் நிகழ்த்துப வாகலானும், அவை நிகழுங்கால் அத்திணைக்கு உறுப்பாகிய இடமும் காலமும் கருப்பொருளும் துணையாகி நிகழு மாகலானும், இவை அன்பொடு புணர்ந்தன என்க. அஃதேல், ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை என்பனவும் அன்பொடு புணர்ந்தனவாம் எனின், அவை அன்புடையார் பலர் கூடி நிகழ்த்துபவை யாகலின், அன்பொடு புணர்ந்தனவாம். ``அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் மறத்திற்கு மஃதே துணை.’’ (குறள். 76) என்பதனானும் கொள்க. இனி, இவ்வைந்திணையும் இன்பமும் பொருளும் அறமும் ஆயினவாறு என்னையெனின் புணர்தல் முதலாகிய ஐந்து பொருளும் இன்பந் தருதலின் இன்பமாயின. முல்லை முதலாகிய ஐந்திணைக்கும் உறுப்பாகிய நிலமும் காலமும் கருப்பொருளும் இவற்றின் புறத்தாகிய வெட்சி வஞ்சி உழிஞை தும்பை என்பனவும் வாகையுள் ஒரு கூறும் பொருளாகலானும், புணர்தன் முதலாகிய உரிப்பொருளான் வருவதோர் கேடின்மையானும், பொருளாயின. இவ்வொழுக்கங்கள் அறத்தின்வழி நிகழ்தலானும், பாலையாகிய வாகைப் படலத்துள் அறநிலை கூறுத லானும், இவை அறமாயின. அஃதேல், கைக்கிளை பெருந்திணையும் இவற்றின் புறமாகிய பாடாண்பாட்டும் காஞ்சியும் அற முதலாகிய மூன்று மன்றி அன்பொடு புணர்தல் வேண்டுமெனின், காஞ்சி அன்பொடு புணராமையும், பாடாண் பாட்டு அன்பொடு புணர்தல் ஒருதலையன்மை யும் அவ்வோத்தினுள் கண்டுகொள்க. ஏனையிரண்டும் அன்பொடு புணராமை மேற்சொல்லப்பட்டன. இனி அவை அறனும் பொருளுமாய் இன்பமாகா; அஃதேல், அறனும் பொருளும் ஆகாமையும் வேண்டு மெனின், குலனும் குணனுங் கல்வியு முடையராகிய அந்தணர் என விசேடித்தவழி ஏனையோர்க்கும் இம்மூன்று பொருளும் இயைதல் வேண்டு மென்னும் நியமம் இன்மையின் ஏற்றவழிக் கொள்ளப்படும். இனி,’ ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டம்’ என்பது புணர்தல் முதலாகிய உரிப்பொருளும், அந்நிலமும் காலமும் கருப்பொருளும், களவினும் கற்பினும் வருதலின், அவை ஒரோவொன்று இருவகைப் படும். அவற்றுள், புணர்ச்சியாகிய இருவகையினும் களவாகிய காமக்கூட்டம் எனக் கொள்க. இன்னும் ‘அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டம்’ என்றதனான், எல்லா நிலத்தினும் காமக் கூட்டம் நிகழப் பெறும் என்று கொள்க. அவ்வாறாதல் சான்றோர் செய்யுளகத்துக் காண்க. மறையோர் தேஎத்யோரியல்பே என்பது மறையோரிடத் தோதப் பட்ட மணம் எட்டனுள்ளும் துறையமை நல் யாழினை யுடையராகிய துணைமையோர் நெறி என்றவாறு. மறையோர் என்றது அந்தணரை. தேஎம் என்றது அவரதாகிய நூலை. மணம் எட்டாவன: பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்திருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. பிரமமாவது, கன்னியை அணிகலன் அணிந்து பிரமசாரியாயிருப்பானொருவனுக்குத்தானமாகக் கொடுப்பது. பிரசாபத்தியமாவது, மகட் கோடற்குரிய கோத்திரத்தார் மகள் வேண்டியவழி இருமுதுகுரவரும் இயைந்து கொடுப்பது. ஆரிடமாவது, ஒன்றானும் இரண்டானும் ஆவும் ஆனேறும் வாங்கிக் கொடுப்பது. தெய்வமாவது, வேள்விக்கு ஆசிரியராய் நின்றார் பலருள்ளும் ஒருவர்க்கு வேள்வித்தீ முன்னர்க் கொடுப்பது. காந்திருவ மாவது ஒத்த இருவர் தாமே கூடுங்கூட்டம். அசுரமாவது, வில்லேற்றினானாதல் திரிபன்றி யெய்தானாதல் கோடற்குரியனெனக் கூறியவழி அது செய்தாற்குக் கொடுத்தல். இராக்கதமாவது, தலைமகள் தன்னினும் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது. பைசாசமாவது, களித்தார்மாட்டுந் துயின்றார்மாட்டுங் கூடுதல். ``அறனிலை யொப்பே பொருள்கோ டெய்வம் யாழோர் கூட்ட மரும்பொருள் வினையே யிராக்கதம் பேய்நிலை யென்றிக் கூறிய மறையோர் மன்ற லெட்டவை யவற்றுட் டுறையமை நல்யாழ்த் துணைமையோர் புணர்ப்பினதன் பொருண்மை யென்மனார் புலமை யோரே.’’ என்பதனாலுங் கொள்க. துறையமை நல்யாழ்த்துணைமை யோராவார் கந்திருவர். அவர் இருவராகித் திரிதலின் ‘துணைமை யோர்’ என்றார். 8துணையியல்பாவது அவர் ஒழுகலா றோடொத்து மக்கண்மாட்டு நிகழ்வது. ஈண்டுக் காமக் கூட்டமென வோதப்பட்டது மண விகற்பமாகிய எட்டனுள்ளுங் ‘கந்திருவ’ மென்றவாறு. மாலை சூட்டல் யாதனுள் அடங்கு மெனின், அதுவும் ஒத்த அன்பினராய் நிகழ்தலிற் கந்திருவப்பாற் படும். அறனும் பொருளு மின்பமும் என்னாது, இன்பமும் பொருளும் அறனும் என்றது என்னை (எனின்), பலவகை யுயிர்கட்கும் வரும் இன்பம் இருவகைப்படும். அவையாவன, போகம் நுகர்தலும் வீடு பெறுதலும் என. அவற்றுள் வீடுபேறு துறவறத்தின் நின்றார்க்கல்லது எய்தல் அரிதாயிற்று. போக நுதர்தல் மனையறத்தார்க் கெய்துவது. அவரெய்தும் இன்பமும் அவ்வின்பத்திற்குக் காரணமாகிய பொருளும் அப் பொருட்குக் காரணமாகிய அறனும் எனக் காரிய காரணம் நோக்கி வைத்தார் என்க. இதனாற் சொல்லியது ஈண்டுக் களவென்றோதப்படுகின்ற ஒழுக்கம் அறம்பயவாத புறநெறியன்று; வேதவிதியாகிய தந்திரம் என விகற்பமாகிய நெறி கூறியவாறு. (1) 90. ஒன்றே வேறே யென்றிரு பால்வயி னொன்றி யுயர்ந்த பால தாணையி னொத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே. என்-னின், இது காமக்கூட்டத்தின்கண் தலைமகனும் தலைமகளும் எதிர்ப்படுந் திறனும் அதற்குக் காரணமும் உணர்த்துதல் நுதலிற்று. ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என்பது - ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி, அவ்விருவரையும் மறுபிறப்பினும் ஒன்றுவித்தலும் வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு. ஒன்றியுயர்ந்த பாலதாணையின் என்றது - இருவருள்ளமும் பிறப்புத்தோறும் ஒன்றி நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழினது ஆணையின் என்றவாறு. உயர்ந்ததன் மேற்செல்லும் மனநிகழ்ச்சி உயர்ந்த பாலாயிற்று. காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதல் நல்வினையான் அல்லது வாராதென்பது கருத்து. ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப என்பது: ஒப்புப் பத்து வகைப்படும். (அவை), ``பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயி னிறையே யருளே யுணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பின வகையே.’’ (மெய்ப். 25) என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் (கூறிய) பத்துமாம். அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக் குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய (குடிவரவு) குடிவரவைக் ‘குடிமை’ என்றார். ``பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.’’ (குறள். 972) எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டென்று கூறினாராகலின். ஆண்மையாவது, ஆண்மைத்தன்மை. அஃதாவது, ஆள்வினையுடைமையும் வலி பெயராமையுமாம். ``மொழியா ததனை முட்டின்று முடித்தல்’’ (மரபியல். 110) என்பதனான் தலைமகள்மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும். ஆண்டென்பது, ஒருவரினொருவர் முதியரன்றி ஒத்த பருவத்தராதல்: அது குழவிப்பருவங் கழிந்து பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத்தாளுமாதல். உருவு என்பது வனப்பு. நிறுத்த காமவாயில் என்பது நிலைநிறுத்தப் பட்ட புணர்ச்சிக்கு வாயில்; அஃதாவது, ஒருவர் மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது பிறர் வருத்தத்திற்குப் புரியும் கருணை. உணர்வென்பது அறிவு. திரு என்பது செல்வம். இப்பத்து வகையும் ஒத்த கிழவனும் கிழத்தியும் எதிர்ப்படுவர் எனக் கொள்க. மிக்கோயின்றே என்பது - இக்குணங்களால் தலைமகன் மிக்கானாயினுங் கடியப்படாது என்றவாறு. எனவே, இவற்றுள் யாதானும் ஒன்றாயினும் தலைமகள் மிக்காளாயின் ஐந்திணையிற் கடியப்படும் என்றவாறாம். பாலதாணையிற்... காண்ப என்பது - ஒருவரை யொருவர் கண்டுழி யெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையிற் பாலதாணையான் ஒருவரையொருவர் புணர்தற் குறிப்பொடு காண்ப என்றவாறு. மிக்கோ னாயினும் என்ற உம்மை இறந்தது தழீஇய எச்ச வும்மை. எற்றுக்கு, எதிர்மறையாக்கி ‘இழிந்தோ னாயினும் கடியப்படாது’ என்றாற் குற்ற மென்னையெனின், செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி வருகின்ற பெருமையாதலின், இழிந்தானொடு உயர்ந்தாட்குளதாகிய கூட்டமின்மை பெருவழக்காதலின் அது பொருளாகக் கொள்ளாம் என்பது. ஈண்டுக் கிழவ னும் கிழத்தியும் என ஒருவனும் ஒருத்தியும் போலக் கூறினாராயினும், ``ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப.’’ (பொருளியல். 26) என்பதனானும், இந்நூல் உலகவழக்கே நோக்குதலானும், அவர் பல வகைப்படுவர். அஃதாமாறு அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நால்வரோடும் அநுலோமர் அறுவரையும் கூட்டப் பதின்மராவர். இவரை நால்வகை நிலத்தோடு உறழ நாற்பதின்மராவர். 9இவரையும் அவ்வந்நிலத்திற்குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னுந் தொடக்கத்தாரொடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப் பன்மையான் நோக்க வரம்பிலராவர். (2) 91. சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப விழிந்துழி யிழிவே சுட்ட லான. என்-னின், ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விரு வகையரும் உயர்வுடையராயின் அவ்விடத்து ஐயம் சிறந்தது என்று சொல்லுவர்; அவர் இழிபுடையராயின், அவ்விடத்து அவள் (இழி)பினையே சுட்டி யுணர்தலான் என்றவாறு. சிறப்பு என்பது மிகுதி. ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல். சிறந்துழி என்பதற்குத் தலைமகள் தான் சிறந்துழியும் கொள்ளப்படும்; அவளைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப்படும். உருவ மிகுதி யுடையளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று ஐயுறுதல். இதனாற் சொல்லியது உலகத்துத்தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார் அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத்தாராகிய குறுநில மன்னர் மாட்டும் உளராவரன்றே? அவரெல் லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமக னும் தலைமகளு (மாயினோர்) மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டு அவ் விழிமரபினையே சுட்டியுணரா நிற்குமாதலான் என்றவாறு. ‘காராரப் பெய்த’ என்னும் முல்லைக் கலியுள் (கலித். 109) ``மண்ணித் தமர்தந் தோர்புறந் தைஇய கண்ணி யெடுக்கல்லாக் கோடேந் தகலல்குல் புண்ணிலார் புண்ணாக நோக்கு முழுமெய்யுங் கண்ணளோ வாயர் மகள்.’’ என ஐயமின்றிச் சுட்டியுணர்ந்தவாறு காண்க. இனி உயர்புள்வழி ஐயம் நிகழுமாறு: ``உயர்மொழிக் கிளவி யுறழுங் கிளவி யையக் கிளவி யாடூஉவிற் குரித்தே’’ (பொருளியல். 43) என்றாராகலின், ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள் ஐயப்படாததென்னையெனின், அவள் ஐயப்படுங் கால் தெய்வமோ வென்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி யுண்டாகாது. (3) 92. வண்டே யிழையே வள்ளி பூவே கண்ணே யலமர லிமைப்பே யச்சமென் றன்னவை பிறவு மாங்க ணிகழ நின்றவை களையுங் கருவி யென்ப. என்-னின், ஐயப்பட்டான் துணிதற்குக் கருவி உணர்த்துதல் நுதலிற்று. எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் 10பிறவுமாகி அவ்விடத்து நிகழாநின்றவை ஐயம் களையும் கருவி என்றவாறு. ஐயமென்பது அதிகாரத்தான் வந்தது. ‘நிகழா நின்றவை’ என்பது குறுகிநின்றது. வண்டாவது மயிரின் அணிந்த பூவைச் சூழும் வண்டு. அது பயின்றதன் மேலல்லது செல்லாமையின் அதுவும் மக்களுள்ளா ளென்றறிதற்குக் கருவியாயிற்று. இழையென்பது அணிகலன். அது செய்யப்பட்டதெனத் தோற்றுதலானும், தெய்வப்பூண் செய்யா அணியாதலானும் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. வள்ளி என்பது முலையினும் தோளினும் எழுதிய கொடி. அதுவும் உலகின் உள்ளதாகித் தோன்றுதலின் (அதுவும்) கருவியாயிற்று. அலமரல் என்பது தடுமாறுதல். தெய்வமாயின் நின்றவழி நிற்கும். அவ்வா றன்றி, நின்றுழி நிற்கின்றிலள் என்று சுழற்சியும் அறிதற்குக் கருவியாயிற்று. இமைப்பென்பது கண்ணிமைத்தல். தெய்வத்திற்குக் கண் இமையாமையின் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அச்ச மென்பது ஆண்மக்களைக் கண்டு அஞ்சுதல். அது தெய்வத்திற்கு இன்மையான் அதுவும் அறிதற்குக் கருவியாயிற்று. அன்னவை பிறவும் என்றதனான் கால்நிலந்தோய்தல், வியர்த்தல், நிழலா(டு)தல் கொள்க. இவை கருவியாகத்துணியப்படும் என்றவாறு. காட்சி முதலாகிய இத்துணையும் கைக்கிளைக் குறிப்பாம். இதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. இனிக் குறிப்பறிதல் கூறுகின் றாராகலின், அக்குறிப்பு நிகழும்வழி இவையெல்லாம் அகமாம்? என்னை; இருவர் மாட்டுமொத்த நிகழ்ச்சி யாதலான். இவை தலைமகள் மாட்டுப் புலப்பட நிகழாது. ஆண்டுக் குறிப்பினாற் சிறிது நிகழுமென்று கொள்க. அவை வருமாறு: ``உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று.’’ (குறள். 1090) எனவும் வரும். பிறவும் அன்ன. (4) 93. நாட்ட மிரண்டு மறிவுடம் படுத்தற்குக் கூட்டி யுரைக்குங் குறிப்புரை யாகும். என்-னின் மேல் தலைமகளை இத்தன்மையள் எனத் துணிந்த தலைமகன் குறிப்பறியாது சாரலுறின் பெருந்திணைப் பாற்படு மாகலானும் இக் கந்திருவநெறிக்கு ஒத்த உள்ளத்தாராதல் வேண்டுமாதலானும், ஆண்டு ஒருவரோடொருவர் சொல்லாடுதல் மரபன்மையானும், அவருள்ளக் கருத்தறிதல் வேண்டுதலின், அதற்குக் கருவியாய உணர்த்துதல் நுதலிற்று. நாட்டமிரண்டும் என்பது - தலைமகன் கண்ணும் தலைமகள் கண்ணும் என்றவாறு. அறிவுடம்படுத்தற்கு என்பது - ஒருவர் வேட்கை போல இருவர்க்கும் வேட்கை உளதாகுங் கொல்லோ எனக் கவர்த்து நின்ற இருவரது அறிவினையும் ஒருப்படுத்துற்கு என்றவாறு. கூட்டியுரைக்குங் குறிப்புரையாகும் என்பது - தமது வேட்கை யொடு கூட்டி ஒருவர்ஒருவர்க்கு உரைக்குங் காமக் குறிப்புரையாம் என்றவாறு. இதன் பொழிப்பு: இருவர்க்குங் கவர்த்து நின்ற அறிவை ஒருப் படுத்தற்பொருட்டு வேட்கையொடு கூட்டிக் கூறுங் காமக் குறிப்புச் சொல் இருவரது நாட்டமாகும் என்றவாறு. ஆகும் என்பதனை நாட்டம் என்பதனொடு கூட்டியுரைக்க. இதற்குச் செய்யுள்: ``பானலந் 11தண்கழிப் பாடறிந்து தன்னையர் நூனல நுண்வலையாற் தொண்டெடுத்த - கானற் படுபுலால் காப்பாள் படைநெடுங்க ணோக்கங் கடிபொல்லா வென்னையே காப்பு.’’ (திணைமாலை. 32) கண்ணினான் அறிப என்றவாறு. (5) 94. குறிப்பே குறித்தது கொள்ளு மாயி னாங்கவை நிகழு மென்மனார் புலவர். என்-னின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. ஒருவர் குறிப்பு ஒருவர் குறித்ததனைக் கொள்ளு மாயின், அவ்விடத்துக் கண்ணினான் வருங் குறிப்புரை நிகழும் என்றவாறு. எனவே, குறிப்பைக் கொள்ளாதவழி அக்குறிப்புரை நிகழாது என்றவாறாம். இதனாற் சொல்லியது கண்ட காலத்தே வேட்கை முந்துற்ற வழியே இக்கண்ணினான் வருங் குறிப்பு நிகழ்வது; அல்லாதவழி நிகழாது என்றவாறு. இனிக் குறிப்பு நிகழுமாறும் அதன் வேறுபாடும் மெய்ப்பாட் டியலுள் கூறுப. ஈண்டும் சில உதாரணம்: காட்டுதும். ``நோக்கினா ணோக்கி யிறைஞ்சினா ளஃதவள் யாப்பினு ளட்டிய நீர்.’’ (குறள். 1093) எனவும், ``அசையியற் குண்டாண்டோ ரேஎரியா னோக்கப் பசையினள் பைய நகும்.’’ (குறள். 1098) எனவும் வரும். பிறவும் அன்ன. தலைமகன்குறிப்புத் தலைமகள் அறிந்த வழியும் கூற்று நிகழாது, பெண்மையான். (6) 95. பெருமையு முரனு மாடூஉ மேன. என்-னின், இது தலைமகற்கு உரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. பெருமையாவது - பழியும் பாவமும் அஞ்சுதல். உரன் என்பது அறிவு. இவை யிரண்டும் ஆண்மகனுக்கு இயல்பு என்றவாறு. இதனானே மேற்சொல்லப்பட்ட தலைமகளது வேட்கைக் குறிப்புக் கண்ட தலைமகன், அந்நிலையே புணர்ச்சியை நினையாது, வரைந்து எய்துமென்பது பெறுதும். ``சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு.’’ (குறள். 422) என்பவாகலின். தலைமகன் இவ்வாறு கூறியதற்குச் செய்யுள்: ``வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணரைம்பான் மான்வென்ற மடநோக்கின் மயிலியலாற் றளர்பொல்கி யாய்சிலம் பரியார்ப்ப வவிரொளி யிழையிமைப்பக் கொடியென மின்னென வணங்கென யாதொன்றுந் தெரிகல்லா விடையின்கட் கண்கவர் பொருங்கோட வளமைசா லுயர்சிறப்பி னுந்தைதொல் வியனக ரிளமையா னெறிபந்தோ டிகத்தந்தாய் கேளினி; பூந்தண்டார்ப் புலர்சாந்திற் றென்னவ னுயர்கூடற் றேம்பாய வவிழ்நீலத் தலர்வென்ற வமருண்கண் ணேந்துகோட் டெழில்யானை 12யொன்னாதார்க் கவன்வேலிற் சேந்துநீ யினையையா லொத்ததோ சின்மொழி; பொழிபெயல் வண்மையா னசோகந்தண் காவினுட் கழிகவி னிளமாவின் றளிரன்னா யதன்றலைப் 13பணையமை பாய்மான்றே ரவன்செற்றார் நிறம்பாய்ந்த கணையினு நோய்செய்தல் கடப்பன்றோ கனங்குழாய்; வகையமை தண்டாரான் கோடுயர் பொருப்பின்மேற் றகையிண ரிளவேங்கை மலரன்ன சுணங்கினாய் மதவலி கமழ்கடாஅத் தவன்யானை மருப்பினுங் கதவவாற் றக்கதோ காழ்கொண்ட விளமுலை; எனவாங்கு, இனையன கூற விறைஞ்சுபு நிலநோக்கி நினையுகு நெடிதொன்று நினைப்பாள்போன் மற்றாங்கே துணையமை தோழியர்க் கமர்த்த கண்ணள் மனையாங்குப் பெயர்ந்தாளெ னறிவகப் படுத்தே.’’ (கலித். 57) ``உறுகழி மருங்கி னோதமொடு மலர்ந்த சிறுகரு நெய்தற் கண்போன் மாமலர்ப் பெருந்தண் மாத்தழை 14யிருந்த வல்கு லைய வரும்பிய சுணங்கின் வையெயிற்று மையீ ரோதி வாணுதற் குறுமகள் விளையா டாயமொடு வெண்மண லுகுத்த புன்னை நுண்டாது பொன்னி னொண்டு மனைபுறந் தருதி யாயி னெனையதூஉ மிம்மனைக் கிழமை 15யெம்மொடு புணரிற் றீது முண்டோ மாத ராயெனக் கடும்பரி நன்மான் கொடிஞ்சி நெடுந்தேர் கைவல் பாகன் பையென வியக்க யாந்தற் குறுகின மாக வேந்தெழி லரிவே யுண்கண் பனிவர லொடுக்கிச் சிறிய விறைஞ்சின டலையே பெரிய வெவ்வம் 16யாமிவ ணுறவே.’’ (அகம். 230) இவை உள்ளப் புணர்ச்சியான் வரைதல் வேண்டிப் பாங்கற்கு 17உரைத்தன. (7) 96. அச்சமும் நாணு மடனு முந்துறுத னிச்சமும் பெண்பாற் குரிய வென்ப. என்-னின், இது தலைமகட்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. அச்சமும் நாணும் பேதை(மை)யும் இம்மூன்றும் நாடோறு முந்துறுதல் பெண்டிர்க்கு இயல்பு என்றவாறு. எனவே, வேட்கையுற்றுழியும் அச்சத்தானாதல் நாணானாதல் மடத்தானாதல் புணர்ச்சிக்கு இசையாது நின்று வரைந்தெய்தல் வேண்டு மென்பது போந்தது. இவ்வாறு இருவரும் உள்ளப் புணர்ச்சியால் நின்று வரைந்தெய்தி மெய்யுறும். இதற்குச் செய்யுள்: ``தீம்பால் கறந்த கலமாற்றிக் கன்றெல்லாந் தாம்பிற் பிணித்து மனைநிறீஇ யாய்தந்த பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு முல்லையுந் தாய பாட்டங்காற் றோழிநம் புல்லினத் தாயர் மகளிரோ டெல்லா மோர்ங்கு விளையாட வவ்வழி வந்த குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாநீ பெற்றேம்யா மென்று பிறர்செய்த வில்லிருப்பாய் கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய் தாதுசூழ் கூந்த 18றகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப் பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா யைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற் றொய்யி லெழுதுகோ மற்றென்றான் யாம்பிறர் செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது மையலை மாதோ விடுவென்றேன் றையலாய் சொல்லிய வாறெல்லா மாறுமா 19றியான்பெயர்ப்ப வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும் யாயு மறிய வுரைத்தீயின் யானுற்ற நோயுங் களைகுவை மன்.’’ (கலித். 111) இது தலைமகள் உள்ளப்புணர்ச்சியின் உரிமைபூண்டிருந்த வாறும் வரைந்தெய்தக் கூறலுற்றவாறும் காண்க. (8) 97. வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலித லாக்கஞ் செப்ப னாணுவரை யிறத்த னோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றிச் சிறப்புடை மரபினவை களவென மொழிப. என்-னின், மெய்யுறுபுணர்ச்சி நிகழுங்காலம் உணர்த்துதல் நுதலிற்று. மேல்,’’பெருமையு முரனு மாடூஉ மேன’’ (95) எனவும், ``20அச்சமும் நாணு மடனும் முந்துறுதல் நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப.’’ எனவும் ஓதியவதனான் உள்ளஞ் சென்றவழியும் மெய்யுறு புணர்ச்சி வரைந்தெய்தி நிகழ்த்துப வென்றாராம். அவ்வழிச் சாக்காடெல்லையாகிய மெய்ப்பாடுவரின் மெய்யுற்றுப் புணரப்பெறு மென்பது உணர்த்திற்று. வேட்கை முதலாகச் சாக்காடு ஈறாக ஓதப்பட்ட காமச் சிறப்புடையவாற்றாற் களவு ஆமென்று சொல்லுவர் என்றவாறு. ஆனும் ஆமும் எஞ்சி நின்றன. இவற்றை அவத்தையென்ப. அஃதேல், அவை பத்துளவன்றே? ஈண்டுரைத்தன ஒன்பதா லெனின், காட்சி விகற்பமுங் கூறினார், அஃது உட்படப் பத்தாம். காட்சி விகற்பமாகிய ஐயமுந் துணிவும் முதலது; வேட்கை இரண்டாவது, என்று கொள்க. வேட்கையாவது - பெறல்வேண்டு மென்னும் உள்ள நிகழ்ச்சி. ஒருதலையுள்ளுத லாவது - இடைவிடாது நினைத்தல். ``உள்ளிக் காண்பென் போல்வென் முள்ளெயிற் றமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழகி லார நாறு மறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே.’’ (குறுந். 286) மெலிதலாவது - உண்ணாமையான் வருவது. ஆக்கஞ்செப்ப லாவது - உறங்காமையும் உறுவ வோதலும் முதலாயின கூறுதல். ``ஒண்டொடி யரிவை கொண்டன ணெஞ்சே வண்டிமிர் பனித்துறைத் தொண்டி யாங்க ணுரவுக்கட லொலித்திரை போல விரவி னானுந் துயிலறி யேனே’’ (ஐங்குறு. 172) என வரும். நாணுவரையிறத்தலாவது - நாண் நீங்குதல். ``காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு.’’ (குறள். 1247) நோக்குவ வெல்லாம் அவையே போற லாவது - தன்னாற் காணப்பட்டன எல்லாந் தான் கண்ட உறுப்புப் போலுதல். ``ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லுங் காந்தட் கிவரும் கருவிளம் பூக்கொள்ளு மாந்தளிர் கையிற் றடவரு மாமயில் பூம்பொழி னோக்கிப் புகுவன பின்செல்லுந் தோளெனச் சென்று துளங்கொளி வேய்தொடு நீள்கதுப் பிஃதென நீரற லுட்புகும்.’’ என்றாற்போல்வன. மறத்தல் - பித்தாதல். மயக்கமாவது - மோகித்தல். சாக்காடு - சாதல். இவற்றுள் சாதல் பத்தாம் அவத்தையாதலால், ஒழிந்த எட்டுங் களவு நிகழ்தற்குக் காரணமாம் என்று கொள்க. இது தலைமகட்கும் தலை மகற்கும் ஒக்கும். இவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. (9) 98. முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்த னன்னய முரைத்த னகைநனி யுறாஅ வந்நிலை யறிதன் மெலிவுவிளக் குறுத்த றன்னிலை யுரைத்த றெளிவகப் படுத்தலென் றின்னவை நிகழு மென்மனார் புலவர். என்-னின், இஃது இயற்கைப் புணர்ச்சிக்குரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று. தனியினால் தலைமகளை யெதிர்ப்பட்ட தலைமகன் தன்னுடைய பெருமையும் அறிவும் நீக்கி வேட்கை மீதூரப் புணர்ச்சி வேண்டினானாயினும், தலைமகள்மாட்டு நிற்கும் அச்சமும் நாணும் மடனும் நீக்குதலும் 21வேண்டுமன்றே. அவை நீங்குதற்பொருட்டு இவையெல்லாம் நிகழுமென்பது. உலகத் துள்ளா ரிலக்கண மெல்லாம் உரைக்கின்றாராகலின், இவ்வாசிரியர் உரைக்கின்றவாற்றான் நிகழ்தல் பெரும்பான்மை யாகவும், ``சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி’’ (தொல். களவியல். 11) என ஓதுதலின், இவையெல்லாம் நிகழ்தலின்றிச் சிறுபான்மை வேட்கை மிகுதியாற் புணர்ச்சி கடிதின் முடியவும் பெறுமெனவுங் கொள்க. முன்னிலையாக்கல் என்பது - காமக்குறிப்புண்மை அறிந்த தலைமகன் வேட்கையாற் சார நினைத்தவழித் தலைமகளும் வேட்கைக் குறிப்புடையா ளாயினும் குலத்தின் வழிவந்த இயற்கையான் நாணமும் அச்சமும் 22மீதூர அக் குறிப்பில்லாதாரைப் போல் நின்றவழி அவளை முன்னிலையாகப் படுத்துச் சில கூறுதல். ``ஒள்ளிழை மகளிரொ டோரையு மாடாய் வள்ளிதழ் நெய்தற் றொடலையும் புரியாய் விரிபூங் கான லொருசிறை நின்றோ யாரை யோநிற் றொழுதனம் வினவுதுங் கண்டார் தண்டா நலத்தைத் தெண்டிரைப் பெருங்கடற் பரப்பி னமர்ந்துறை யணங்கோ விருங்கழி மருங்கி னிலைபெற் றனையோ சொல்லினி மடந்தை யென்றனெ னதனெதிர் முள்ளெயிற்று முறுவலுந் திறந்தன பல்லித ழுண்கணும் பரந்தவாற் பனியே.’’ (நற். 155) சொல்வழிப் படுத்தலாவது - தான் சொல்லுகின்ற சொல்லின்வழி அவள் நிற்குமாறு படுத்துக் கூறுதல். ``சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின் றிருமுக மிறைஞ்சி நாணுதி கதுமெனக் காமங் 23கைம்மிகிற் றாங்குத லெளிதோ கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப் புலிவிளை யாடிய புகர்முக வேழத்தின் றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ வல்ல நண்ணா ராண்டலை மதில ராகவு முரசுகொண் டோம்பரண் கடந்த வடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூட லன்னநின் கரும்புடைத் தோளு முடையவா லணங்கே.’’ (நற். 39) நன்னய முரைத்தலாவது - தலைமகளினது நலத்தினை யுரைத்தல். ``சேரன் மடவன்னஞ் சேரன்னடை யொவ்வாய் சேரன் மடவன்னஞ் சேரன்னடை யொவ்வா யூர்திரை வேலி யுழக்கித் திரிவாள்பின் சேரன் மடவன்னஞ் சேரன்னடை யொவ்வாய்.’’ (சிலப். கானல். 23) நகைநனி யுறாஅ அந்நிலையறிதலாவது - தலைமகன் தன் நன்னய முரைத்தலைக் கேட்ட தலைவிக்கு இயல்பாக அகத்து உளவாகும் மகிழ்வாற் புறந்தோன்றும் முறுவற் குறிப்பு மிக்குத் தோன்றா அந்நிலையினைத் தலைவன் அறிதல். ``மாணிழை பேதை நாறிருங் கூந்த லாணமு மில்லா ணீர்உறை சூருடைச் சிலம்பிற் கணங்காய் முயன்ற செறியிய னொதும னோக்கைக் காண்மோ நெஞ்சே வறிதான் முறுவற் கெழுமிய நுடங்குமென் பணைவேய் சிறுகுடி யோளே.’’ மெலிவு விளக்குறுத்தலாவது - தலைவன் அகத்துறும் நோயாற் புறத்து நிகழும் தளர்வினைக் குறிப்பான் எடுத்துக் கூறலும். உதாரணம்: வந்துழிக் காண்க. குறிப்பாவன புறத்துறுப்பா யவர்க் 24கின்றியமையாதன. தன்னிலை யுரைத்தலாவது - அப் புறநிகழ்ச்சியின் பொலி விழவைக் கண்ட தலைமகண்மாட்டுத்தலைவன் தன் உள்ள வேட்கை மீதூர்வினை நிலைபடக் கூறுதல். ``சொல்லிற் சொல்லெதிர் கொள்ளா யாழநின்’’ என்னும் நற்றிணைப்பாட்டுள், ``காமங் கைம்மிகிற் றாங்குத லெளிதோ ......... ........... ........... ........... ...... ........... கடைமணி சிவந்தநின் கண்ணே கதவ வல்ல.’’ (நற். 39) எனத்தன்னிலை யுரைத்துவாறு காண்க. தெளிவு அகப்படுத்த லாவது - தலைவன் முன்னிலை யாக்கல் முதலியன கூறிப் பின்னர் இயற்கைப் புணர்ச்சியினை விழைந்து நின்றானாக, அப் புணர்ச்சியினைக் கூறுவார், முன்னம் ஒத்த பண்புடைமை உள்ளத்து இருவர்மாட்டும் வேண்டுதலின், தலைமகள் பண்பினைத்தலைவன் அறிந்து அத்தெளிவைத் தன்னகப்படுத்துத் தேர்தல். ``யாயும் யாயும் யாரா கியரோ’’ என்னும் குறுந்தொகைப் பாட்டுள், ``அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே’’ (குறுந். 40) என இயற்கைப் புணர்ச்சி முன்னர்த்தலைவன் தலைவியர் உள்ளம் ஒத்த பண்பினைக் கூறியவாறு காண்க. இதுகாறும் இயற்கைப் புணர்ச்சிக்குரிய திறன்கூறி, மேல் இயற்கைப் புணர்ச்சி நிகழுமாறு கூறுகின்றார். அஃதேல், தன்னிலை யுரைத்தலைத் தெளிவகப்படுத்தலுடன் இணைத்து மெய்யுறு புணர்ச்சி யாக்கிய பின்னர்த் தோன்றுந் துறையாகப் படுத்தாலோ எனின், அது சான்றோர் வழக்கின்றாதலானும், மெய்யுறு புணர்ச்சி முன், ``மெய்தொட்டுப் பயிறல்’’ (களவியல். 11) முதலியன யாண்டும் நிகழ்ந்தே தலைவிக்கு மெய்யுறு புணர்ச்சி நிகழுமாதலானும், அஃதன்றென்க. (10) 99. மெய்தொட்டுப் பயிறல் பொய்பா ராட்ட லிடம்பெற்றுத் தழாஅ லிடையூறு கிளத்தல் நீடுநினைந் திரங்கல் கூடுத லுறுதல் சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித் தீராத் தேற்ற முளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பி னிருநான்கு கிளவியும் பெற்றவழி மகிழ்ச்சியும் பிரிந்தவழிக் கலங்கலு நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைப்பினுங் குற்றங் காட்டிய வாயில் பெட்பினும் பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினு மூரும் பேருங் கெடுதியும் பிறவு நீரிற் குறிப்பி னிரம்பக் கூறித் தோழியைக் குறையுறும் பகுதியுந் தோழி குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறலுந் தண்டா திரப்பினு மற்றைய வழியுஞ் சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினு மறிந்தோ ளயர்ப்பி னவ்வழி மருங்கிற் கேடும் பீடுங் கூறலுந் தோழி நீக்கலி னாகிய நிலைமையு நோக்கி மடன்மா கூறு மிடனுமா ருண்டே. என்-னின், களவிற் கூட்டம் நான்கினிடத்தும் தலைவன் கூற்று நிகழுமாறும், காதல் மிக்கு ஆற்றாமை கையிகப்பின் தலைவனாம் இயலும் கூறுதல் நுதலிற்று. மெய்தொட்டுப் பயிறலாவது - பெருமையும் உரனுமுடைய தலைமகன் தெளிவகப்படுத்தியது காரணமாகக் காதல் வெள்ளம் புரண்டோடத் தலைவியின் மெய்யைத் தீண்டிப் பயிறல். ``தீண்டலு மியைவது கொல்லோ மாண்ட வில்லுடை யிளையர் கல்லிடு பெடுத்த நனந்தலைக் கானத் தினந்தலைப் பிரிந்த புன்கண் மடமா னேர்படத் தன்னையர் சிலைமாண் கடுவிசைக் கலைநிறத் தழுத்திக் குருதியொடு பறித்த செங்கோல் வாளி மாறுகொண் டன்ன வுண்க ணாறிருங் கூந்தற் கொடிச்சி தோளே.’’ (குறுந். 272) பொய் பாராட்டலாவது - தலைவியின் ஐம்பால் முதலிய கடை குழன்று சிதைவின்றேனும் அஃதுற்றதாக மருங்குசென்று தொட்டான் ஓர் காரணம் பொய்யாகப் படைத்து உரைத்துப் பாராட்டல். ``கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் னைய ருடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் னீயு மிடல்புக் கடங்காத வெம்முலையோ பார மிடர்புக் கிடுகு மிடையிழவல் கண்டாய்.’’ (சிலப். கானல். 17) இடம்பெற்றுத்தழாஅ லாவது - பொய்பாராட்டல் காரணமாத் தலைவிமாட்டு 25அணிமையிடம் பெற்றுத்தழுவக் கூறல். உதாரணம்: ``கொல்யானை வெண்மருப்புங் கொல்வல் புலியதளு நல்யாணர் நின்னையர் கூட்டுண்டு - செல்வார்தா மோரம்பி னாலெய்து போக்குவர்யான் போகாமை யீரம்பி னாலெய்தா யின்று.’’ (திணைமாலை. 22) இடையூறு கிளத்த லாவது - நாண் மடன் நிலைக்களனாக் கொண்ட தலைவி தன் அறிவுநலன் இழந்து ஒன்றும் அறியாது உயிர்த்தனள். அஃது ஒக்குமோ எனின் ஒக்கும். புதிதாய்ப் புக்கார், ஊற்றுணர்வு என்றும் பயிலாத தம் மெல்லியல் மெய்யிற்பட அறிவிழப்பினும் 26உள் நெக்கு உயிர்க்கும் என்க. அதுபற்றிப் புலையன் தொடு தீம்பால் போல் காதல் கூரக் கொம்பானும் கொடியானும் சார்ந்தாளைத் தலைவன், ``இப்பொழுது இவ்வூற்றின்பிற்கு இடையூறாய் நின்மனத்தகத்து நிகழ்ந்தவை யாவென வினவுதலும். நீடுநினைந்திரங்கலாவது - இருவர் இயலும் ஒருங்கு இணைந்தும் தலைவி பெருநாணால் பால்வழி உறுகவென எண்ணி மாற்றமுங் குறியுங் காட்டாது கண் புதைப்பாளைத் தலைவன் புறமோச்சி நிற்கவும் ஆண்டும் கலக்கலாம் பொழுது கூடாமைக்கு நினைந்து இரங்கல். கூடுதலுறுதலாவது - இங்ஙனமாய்க் காட்சி நிகழ்வின் பின்னர்ப் புணர்ச்சி எய்தலும். இதுவரை இயற்கைப் புணர்ச்சியாம் காரணங் கூறிக் கூடுதலுறுதலான் மெய்யுறு புணர்ச்சி கூறினார். இவற்றிற்குச் செய்யுள்: ``வீழு மிருவர்க் கினிதே வளியிடை போழப் படாஅ முயக்கு.’’ (குறள். 1108) இது கூடுதலுறுதல். பிற வந்துழிக் காண்க. சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி என்பது - இயற்கைப் புணர்ச்சிக்குக் களனாக மேற்கூறப்பட்டவற்றுடன் அவ் வின்பந் திளைத்தலையும் விரைவாக ஒன்றாய்ப் பெற்றவிடத்து. இத் தெய்வப்புணர்ச்சிக்குப் பொருள் கூறுங்கால், பயிறல், பாராட்டல், தழாஅல், கிளத்தல், இரங்கல், உறுதல், நுகர்ச்சி, தேற்றம் என்று சொல்லப்பட்ட இருநான்கு கிளவியும் என எண்ணப்படுத்துக. ``மெய்தொட்டுப் பயிறல்’’ முதலாகக் ``கூடுத லுறுதல்’’ வரை இயற்கைப் புணர்ச்சிக்கே உரிய கூறி, ``சொல்லிய நுகர்ச்சி’’ முதல் ``இருநான்கு கிளவி’’ வரை இடந் தலைப்பாடும் சேர்த்து உணர்த்தினார். அற்றாயின் நுகர்ச்சியும் தேற்றமும் இயற்கைப் புணர்ச்சியன்றோ, இடந் தலைப்பா டாமாறு என்னை யெனின், நன்று கடாயினாய். மெய்யுறு புணர்ச்சியினைப் பால் கூட்டும் நெறிவழிப் பட்டுப் பெற்றார்க்கு, மெய்தொட்டுப் பயிறல் முதல் அறு துறையே இன்றியமையாத் துறையாக, ஏனைய இரண்டும் இடந்தலைப் பாட் டிற்கும் சேர்ந்த துறையாகலின், பொதுப்பட இரண்டற்கும் நடுவே வைத்துச் செப்பம் ஆக்கினாரென்க. நுகர்ச்சியும் தேற்றமும் எனப் பிரித்துக் கூட்டுக. தீராத் தேற்ற மாவது - இயற்கைப் புணர்ச்சியுடன் முடியாத தெளிவு. ``வேட்ட பொழுதி னவையவை போலுமே தோட்டார் கதுப்பினா டோள்.’’ (குறள். 1105) இஃது இயற்கைப் புணர்ச்சித்துறையன்று; இடந்தலைப் பாட்டின்கண் தலைமகன் கூறியது; நுகர்ச்சி பெற்றது. ``கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனு மொண்தொடி கண்ணே உள.’’ (குறள். 1101) என்பதோ எனின், இயற்கைப் புணர்ச்சிக்கண் நுகர்ச்சி யுற்றமை கூறிற்று என்க. ``எம்மணங் கினவே மகிழ்ந முன்றி னனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன வெக்கர் நண்ணய லேம்மூர் வியன்றுறை நேரிறை முன்கை பற்றிச் சூரர மகளிரோ டுற்ற சூளே.’’ (குறுந். 53) இஃது இயற்கைப் புணர்ச்சிப் பின்றைச் சொற்ற தீராத் தேற்றவுரை. ``இன்னிசை யுருமொடு’’ என்னும் அகப்பாட்டுள், ``நின்மார் படைதலி னினிதா கின்றே நும்மில் புலம்பா னுள்ளுதொறு நலியும்’’ (அகம். 85) என்றது இடந்தலைப்பாட்டில் நேர்ந்த தேற்றம். ``பேராச் சிறப்பின்’’ எட்டு என்றல் பேரும் சிறப்பின ஆறு என்றலை எடுத்தோத்தாற் காட்டி நின்றது. இதுவரை இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும். மேல் ‘வாயில் பெட்பினும்’ என்னுமளவும் பாங்கற் கூட்டம்; மேல் தொடர்பவை தோழியிற் கூட்டம். பெற்றவழி மகிழ்ச்சியும் என்பது - இடந்தலைப்பாட்டினை யொட்டி நிகழும் இன்பினைப் பெற்றவழி அகத்துத் தோற்றும் பெரு மகிழ்வும். ``நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந் தீயாண்டுப் பெற்றா ளிவள்.’’ (குறள். 1104) ``ஒடுங்கீ ரோதி யொண்ணுதற் குறுமக ணறுந்தண் ணீர ளாரணங் கினளே யினைய ளென்றவட் புனையள வறியேன் சிலமெல் லியவே கிளவி யணைமெல் லியல்யா முயங்குங் காலே.’’ (குறுந். 70) இவை புணர்ச்சியான் மகிழ்ந்ததற்குச் செய்யுள்கள். பிரிந்தவழிக் கலங்க லாவது - இவ்வாறு கூடின தலைமகள் பிரிந்தவழிக் கலக்க முறுதலும் என்றவாறு. ``என்று மினிய ளாயினும் பிரித லென்று மின்னா ளன்றே நெஞ்சம் பனிமருந்து விளைக்கும் பரூஉக்க ணிளமுலைப் படுசாந்து சிதைய முயங்குஞ் சிறுகுடிக் கானவன் பெருமட மகளே.’’ என வரும். 28இத்துணையும் இடந்தலைப்பாடு. பெற்றவழி மகிழ்தலும் பிரிந்தவழிக் கலங்கலும் பாங்கற் கூட்டத்தினுந் தோழியிற் கூட்டத்தினும் நிகழும். நிற்பவை நினைஇ நிகழ்பவை யுரைப்பினும் என்பது காமநுகர்ச்சி யொன்றனையும் நினையாது இவளாலே நமக்கு இல்லறம் இனிது நடக்குமென்று உட்கோடலும். 29நிற்பவை- இல்லறவினை. ``தேரோன் றெறுகதிர் மழுங்கினுந் திங்க டீரா வெம்மையொடு திசைநடுக் குறுப்பினும் பெயராப் பெற்றியிற் றிரியாச் சீர்சால் குலத்திற் றிரியாக் கொள்கையுங் கொள்கையொடு நலத்திற் றிரியா நாட்டமு முடையோய் கண்டத னளவையிற் கலங்குதி யெனினிம் மண்திணி கிடக்கை மாநில முண்டெனக் கருதி யுணரலன் யானே.’’ இது நிற்பவை நினைஇக் கழறியது. ``இடிக்குங் கேளிர் நுங்குறை யாக நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பரந்தன் றிந்நோய் நொண்டுகொளற் கரிதே.’’ (குறுந். 58) இது நிகழ்பவை உரைத்தது. 30குற்றங் காட்டிய வாயிலாவது - தலைவன் மாட்டுச் சோர்வானும் காதல் மிகுதியானும் நேர்வுற்ற பழிபாவங்களை எடுத்துக்காட்டும் பாங்கன். பெட்பினும் - அத்தகைய பாங்கன் இவ்வியல் பண்டைப் பால் வழியது என எண்ணி இவ்வாறு தலைமகன் மறுத்தவழி அதற்குடன்படல். அவ்வழி, நின்னாற் காணப்பட்டாள் எவ்விடத்தாள்? எத்தன்மையாள்? எனப் பாங்கன் வினாவுதலும், அதற்குத்தலைமகன் இடமும் உருவுங் கூறுதலும், அவ்வழிப் பாங்கன் சென்று காண்டலும், மீண்டு தலைமகற்கு அவள் நிலைமை கூறலு மெல்லாம் உளவாம். அவ்வழிப் பாங்கன் வினாதலும் தலைமகன் உரைத்தனவும் உளவாம். பாங்கன் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. அவ்வழித் தலைமகன் உரைத்தற்குச் செய்யுள்: ``எலுவ சிறாஅ ரேமுறு நண்ப புலவ தோழ கேளா யத்தை மாக்கட னடுவ னெண்ணாட் பக்கத்துப் பசுவெண் டிங்க டோன்றி யாங்குக் கதுப்பயல் விளங்குந் திருநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே.’’ (குறுந். 129) ``கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க வாடுமக ணடந்த கொடும்புரி நோன்கயிற் றதவத் தீங்கனி யன்ன செம்முகத் துயவுத்தலை மந்தி வன்பறழ் தூங்கக் 31கழைக்க ணிரும்பொறை யேறி விசைத்தெழுந்து குறக்குறு மாக்க டாளங் 32கொட்டுமக் குன்றகத் ததுவே கொழுமிளைச் சீறூர் சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத் ததுவே பிறர் விடுத்தற் காகாது பிணித்தவென் னெஞ்சே.’’ (நற். 95) இன்னும் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைந்தெய்தல் வேண்டிக் கூறினவுங் கொள்க. ``முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே கிளைஇய குரல கிழக்குவீழ்ந் தனவே 33செறிநிரை வெண்பலும் பறிமுறை நிரம்பின சுணங்குஞ் சிலதோன் றினவே 34யணங்குதற் கியான்றன் னறிவல் தானறி யலளே யாங்கா குவள்கொ றானே பெருமுது செல்வ னொருமட மகளே.’’ (குறுந். 337) (இது பாங்கன் நின்னை அணங்காக்கியாள் எவ்விடத்தவள் எவ்வியலின ளென்று வினாய் அறிந்தது.) இவ்வாறு கேட்ட பாங்கன் அவ்வழிச் சென்று கண்டதற்குச் செய்யுள், ``இரவி னானு மின்றுயி லறியா தரவுறு துயர மெய்துப தொண்டித் 35தண்ணறு நெய்த னாறும் பின்னிருங் கூந்த லணங்குற் றோரே.’’ (ஐங். 173) என வரும். இச்சூத்திரத்துட் கூற்று 36வரையறுத்துணர்த்தாமை பாங்கற் கூற்றும் அடங்கற்குப் போலும். பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுப்பினும் என்பது - மேற்சொல்லிய வாற்றான் உடம்பட்ட பாங்கனால் தலைமகளைப் பெற்றுப் பின்னும் வரைந்தெய்த லாற்றாது களவிற் புணர்ச்சி வேண்டித் ``தோழியை இரந்து பின்நின்று கூட்டக் கூடுவன்’’ என்னும் உள்ளத்தனாய், அவ்விரத்தலை வலியுறுத்தினும் என்றவாறு. வலியுறுத்தலாவது, தான் வழி மொழிந்தது யாது தான் அவ்வாறு செய்குவல் என்றமை. பெட்டவாயிலால் தலைமகளைக் கண்டு கூறியதற்குச் செய்யுள்: ``கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் னையர் உடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் னீயும் மிடல்புக் கடங்காத வெம்முலையேற் பார மிடல்புக் கிடுகு மிடையிழவல் கண்டாய்’’ (சிலப். கானல். 17) இன்னும், பெட்டவாயில் பெற்று என்பதற்கு இரட்டுற மொழிதல் என்பதனான், தலைமகன் தான் விரும்பப்பட்ட தோழி யாகி ``எமக்கு வாயில் நேர்வாள் இவள்’’ எனப் பெற்றுப் பின்னிரந்து குறையுற நினைப்பினும் என்றுமாம். அதற்குச் செய்யுள்: ``தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகி ணாண்டும் வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் டளிதலைத் தலைஇய தளிரன் னோளே.’’ (குறுந். 222) இரவு வலியுறுத்தற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. ``கொண்டன் மாமழை குடக்கேர்பு குழைத்த சிறுகோ லிணர பெருந்தண் சாந்தம் வகைசே ரைம்பாற் றகைபெற வாரிப் புலர்விடத் துதிர்த்த துகள்படு கூழைப் பெருங்கண் ணாய முவப்பத் தந்தை நெடுந்தேர் வழங்கு நிலவுமணன் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவி லாட்டி யருளினு மருளா ளாயினும் பெரிதழிந்து பின்னிலை முனியன்மா நெஞ்சே யென்னதூஉ மருந்துய ரவலந் தீர்க்கு மருந்துபிறி தில்லையா னுற்ற நோய்க்கே.’’ (நற். 140) என்னும் பாட்டும் ஆம். இத்துணையும் பாங்கற்கூட்டம். ஊரும்... பகுதியும் என்பது - ஊராயினும் பேராயினும் கெடுதி யாயினும் பிறவாயினும் நீர்மையினால் தன்குறிப்புத் தோன்றக் கூறித் தலைமகன் தோழியைக் குறையுறும் பகுதியும் உண்டு என்றவாறு. அவற்றுள் ஊர்வினாயதற்குச் செய்யுள் ``அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக் கன்றுகால் யாத்த மன்றப் பலவின் வேர்க்கொண்டு தூங்குங் 37கொழுஞ்சுளைப் பெரும்பழங் குழவிச் சேதா மாந்தி யயலது வேய்பயி லிறும்பி னாமறல் பருகும் பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச் சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக் கருவி மாமழை வீழ்ந்தென வெழுந்த செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக் கொய்புனங் காவலு நுமதோ கோடேந் தல்கு னீடோ ளீரே.’’ (நற். 213) பெயர் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. கெடுதி வினாயதற்குச் செய்யுள்: ``நறைபரந்த சாந்த மறவெறிந்து நாளா லுறையெதிர்ந்து வித்தியவூ ழேனற் - பிறையெதிர்ந்த தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ வேமரை போந்தன வீண்டு.’’ (திணைமாலை. 1) ``38இல்லுடைக் கிழமை யெம்மொடு புணரிற் றீது முண்டோ மாத ரீரே.’’ என்றது பிறவாறு வினாயது. பிறவுமன்ன. தோழி குறை... மிடனுமா ருண்டே என்பது - தோழி குறையைத் தலைமகளைச் சார்த்தி மெய்யுறக் கூறுதலும், அமையா திரப்பினும் மற்றைய வழியும், சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும், அறிந்தோள் அயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும் பீடும் கூறுதலின் நீக்கலினாகிய நிலைமையும் நோக்கி மடல்மா கூறுதலும் உண்டு தலைமகன்கண் என்றவாறு. (தலைமகன் என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. உம்மையாற் பிறகூறுதலுமுண்டென்றவாறு. புணர்ச்சி நிமித்தமாகத் தலைமகன் இரத்தலுங் குறையுறுதலும் மடலேறுவல் எனக் கூறுதலும் பெறுமென்றவாறு.) ஈண்டு, குறையவட் சார்த்தி மெய்யுறக் கூறல் என்றது - தோழி கூற்றுள் ‘அருமையி னகற்சி’ யென்று ஓதப்பட்டது. தண்டாதிரத்த லாவது - தலைமகன் பலகாலுஞ் சென்று இரத்தல். மற்றையவழி என்பது - பின்வர வென்றல் முதலாயின. சொல்லவட் சார்த்தலிற் புல்லியவகை என்பது - முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்துணர்த்தலென ஓதப் பட்டது. அறிந்தோளயர்ப் பென்பது பேதைமை யூட்டல் என ஓதப்பட்டது. கேடு கூறுதலாவது உலகுரைத் தொழிப்பினும் என ஓதப்பட்டது. பீடு கூறுதலாவது பெருமையிற் பெயர்ப்பினும் என ஓதப்பட்டது. நீக்கலி னாகிய நிலைமை என்பது அஞ்சி அச்சுறுத்து லென ஓதப்பட்டது. இவையெல்லாந் தோழி கூற்றினுட் காணப்படும். தோழியைக் குறையுறும் பகுதி வருமாறு: ``தோளுங் கூந்தலும் பலபா ராட்டி வாழ்த லொல்லுமோ மற்றே செங்கோற் குட்டுவன் றொண்டி யன்னவெற் கண்டு மயங்கிநீ நல்காக் காலே’’ (ஐங்குறு. 178) இனி மடலேறுவல் என்பதற்குச் செய்யுள் ``மாவென மடலு மூர்ப பூவெனக் குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப மறுகி னார்க்கவும் படுப பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே.’’ (குறுந். 17) அவ்வழித்தலைமகன் கூறிய சொற்கேட்டு, இஃது அறிவும் அருளும் நாணமும் உடையார் செய்யார் எனக் கூறியவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள்: ``நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன் காமுற்றா ரேறு மடல்.’’ (குறள். 1133) (எனவும்,) ``அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம மறுகின் மறுகு மருண்டு.’’ (குறள். 1139) (எனவும் வரும்.) பிறவு மன்ன. மடல்மா கூறாது பிற கூறியதற்குச் செய்யுள்: ``பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவ ளுருத்தெழு வனமுலை யொளிபெற வெழுதிய தொய்யில் காப்போ ரறிதலு 39மறியார் முறையுடை யரசன் செங்கோல் வையத் தியான்றற் கடவின் யாங்கா வதுகொல் பெரிதும் பேதை மன்ற வளிதோ தானேயிவ் அழுங்க லூரே.’’ (குறுந். 276) இவ்வாறு இரந்து பின்னிற்றலும் மடலேறுவல் என்றலும் கைக்கிளை பெருந்திணைப் பாற்படுமோ எனின், அவ்வாறு வருவன அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாமாறு வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். (11) 100. பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினு மன்புற்று நகினு மவட்பெற்று மலியினு மாற்றிடை யுறுதலு மவ்வினைக் கியல்பே. என்-னின், எய்தியது விலக்குதல் நுதலிற்று. ‘மேல் தலைமகன் மடல்மா கூறும் இடனுமா ருண்டே’ என்றார், இஃது அவன் மடல்மா கூறுதற்கு நிமித்த மாகிய நீக்கத்தினை மாறுபட்டுக் கூறாத்தலைமகள் இயல்பைக் கூறிப் பெயர்ப்பினும், அஃதறிந்து தாம் உடன்படத்தலைமகன் வருத்துத்தினான் மெலிகின்றமை கூறிய இடத்தினும், தலைமகன் குறையை மறுப்புழி அன்பு தோன்ற (நக்க இடத்தும்,) தோழி உடன்பாடுற்றவழியும், தலைமகனும் மேற்சொல்லப்பட்ட மடல்மா கூறுதல் இடையூறுபடுதலும் தோழியிற் கூட்டத்திற்கு இயல்பு என்றவாறு. உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. பண்பிற் பெயர்ப்பினும் தலைமகள் இளமைப் பண்பு கூறிப் பெயர்த்த வழித்தலைமகன் கூறியது. அதற்குச் செய்யுள்: ``குன்றக் குறவன் காதன் மடமகள் வண்டுபடு கூந்தற் தண்தழைக் கொடிச்சி வளையண் முளைவா ளெயிற்ற ளிளைய ளாயினு மாரணங் கினளே.’’ (ஐங்குறு. 256) பரிவுற்று மெலியினும் - பரிந்த வுள்ளத்துடன் மெலிதலுறு தலும்; பரிவுற்றுத் தோழி மெலிதலாவது ‘உடம்படுவல்யான்’ என்றாற்போல வருவது. அவ்வழித்தலைமகன் கூற்று: ``தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை யுழக்குந் துயர்.’’ (குறள். 1135) அன்புற்று நகினும் - அன்பு தோன்றும் உள்ளத்துடன் நக்கக்காலும் கூற்று நிகழும். அன்புற்று நக்கவழித்தலைமகன் கூறியதற்குச் செய்யுள்: ``நயனின் மையிற் பயனிது வென்னாது பூம்பொறிப் பொலிந்த அழலுமி ழகன்பைப் பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது தகாஅது வாழியோ குறுமக ணகாஅ துரைமதி யுடையுமென் னுள்ளஞ் சாரற் கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சேயரி பரந்த 40வாயிழை மழைக்க 41ணுறாஅ நோக்க முற்றவென் பைத னெஞ்ச முய்யு மாறே.’’ (நற். 75) அவட்பெற்று மலியினும் - தோழி உடம்பாட்டினைப் பெற்று மகிழல்; இரட்டுற மொழிதலான் தலைமகளை இருவகைக் குறியினும் பெற்று மகிழினும் என்றும் கொள்க. உதாரணம்: ``எமக்குநயந் தருளினை யாயிற் பணைத்தோ ணன்னுத லரிவையொடு மென்மெல வியலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி யன்னநின் பண்புபல கொண்டே.’’ (ஐங்குறு. 175) இது அவட்பெற்று மலியுந் தலைவன் கூற்று. இனி, உள்ளப் புணர்ச்சியா னின்றி யியற்கை யிடையீடு பட்டுழி, பின் தலைமகள் குறியிடங் கூறியவழி யதனைப் பாங்கற் குரைத்தற்குச் செய்யுள்: ``அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கின ணுணங்கிழைப் பொங்கரி பரந்த வுண்க ணங்கலிழ் மேனி யசையிய லெமக்கே.’’ (ஐங்குறு. 174) எனவுஞ் சிறுபான்மை வரும். ``42காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கும் மாணிழை கண்ணொவ்வே மென்று.’’ (குறள். 1114) இது தலைவியைப் பகற்குறிக்கண் பெற்று மலிதல். ``மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன்.’’ (குறள். 1116) இஃது இரவுக்குறிக்கண் தலைவன் அவட்பெற்று மலிந்தது. ``மாதர் முகம்போ லொளிவிட வல்லையேல் காதலை வாழி மதி.’’ (குறள். 1118) என்பதும் அது. ஆற்றிடை உறுதலும் - தான்சேறும் ஆற்றிடை இடையூறு உண்டாய விடத்தும் கூற்று நிகழும். இரட்டுற மொழிதலான் வரைவிடை வைத்துப் பிரிந்தான், தான் சேறும் ஆற்றின்கண் வருத்தமுற்றுக் கூறலும் கொள்ளப்படும். ``குருதி வேட்கை யுருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கு மரம்பயில் சோலை மலியப் பூழிய ருருவத் துருவி னாண்மேய லாரு மாரி யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதனை யுறையு மம்மா வரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதி ரிளவெயிற் தோன்றி யன்னநின் னாய்நல முள்ளி வரினெமக் கேம மாகும் மலைமுத லாறே.’’ (நற். 192) இந் நற்றிணைப் பாட்டு தலைவி ஆற்றினது அருமை செப்பத் தலைவன் செப்பியது. ``ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் றூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையின மாரு முன்றிற் புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.’’ (குறுந். 235) இக் குறுந்தொகைப் பாட்டு தலைவன் வரைவிடத்துச் சேருவான் கூறியது. (12) 101. பாங்கர் நிமித்தம் பன்னிரண் டென்ப. என்-னின், பலவகை மணத்திற் பாங்கராயினார் துணையாகு மிடம் இத்துணையென வரையறுத்துணர்த்துதல் நுதலிற்று. பாங்கராயினார் துணையாகக் கூடும் கூட்டம் பன்னிரண்டு வகை யென்றவாறு. நிமித்தம் என்பது - நிமித்தமாகக் கூடும் 43கூட்டம். அக்கூட்டம் நிமித்தமென ஆகுபெயராய் நின்றது. பாங்கராற் கூட்டம் பாங்கர் நிமித்தமென வேற்றுமைத் தொகையாயிற்று. அவையாவன: பிரமம் முதலிய நான்கும், கந்திருவப் பகுதியாகிய களவும், உடன்போக்கும் அதன்கண் கற்பின் பகுதியாகிய இற்கிழத்தியும், காமக்கிழத்தியும், காதற்பரத்தையும், அசுரம் முதலாகிய மூன்றுமென இவை. (13) 102. முன்னைய மூன்றுங் கைக்கிளைக் குறிப்பே. என்-னின், மேற்சொல்லப்பட்ட பன்னிருவகையினும் கைக்கிளைப் பாற்படுவன வகுத்துணர்த்துதல் நுதலிற்று. எண்வகை மணத்தினுள்ளும் முன்னையவாகிய அசுரம் முதல் மூன்றும் கைக்கிளைப்பாற்படும் என்றவாறு. (14) 103. பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே. என்-னின், மேற்சொல்லப்பட்டவற்றுள் பெருந்திணைக் குரியன உணர்த்துதல் நுதலிற்று. எண்வகை மணத்தினுள்ளும் பிரமம் முதலிய நான்கும் பெருந்திணைப் பாற்படும் என்றவாறு. (15) 104. முதலொடு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பி னைந்நிலம் பெறுமே. என்-னின், மேற்சொல்லப்பட்ட ஒருதலைக் காமமும் பொருந்தாக் காமமுமன்றி, ஒத்த அன்பின் வருங் கூட்டம் உணர்த்துதல் நுதலிற்று. முதல் என்பது நிலமும் காலமும். நிலத்தொடும் காலத்தொடும் பொருந்திய கந்திருவர்பாற்பட்டன கெடுதலில்லாத சிறப்பினை யுடைய ஐந்துவகைப்படும் என்றவாறு. முதலொடு புணர்ந்த என்றாரேனும் ‘வந்தது கொண்டு வாராதது முடித்தல்’ (மரபியல். 112) என்பதனான் ஒழிந்த கருப்பொருளும் உரிப்பொருளும் கொள்ளப்படும். நிலம் என்பது இடம். இதனாற் சொல்லியது, ஒத்த காமமாகிக் கருப்பொரு ளொடும் புணர்ந்த கந்திருவ நெறி இட வகையான் ஐந்து வகைப்படும் என்றவாறு. அவையாவன: களவும், உடன்போக்கும், இற்கிழத்தி, காமக்கிழத்தி, காதற் பரத்தையும் எனச் சொல்லப் பட்ட ஐவகைக் கூட்டம். இச் சொல்லப்பட்ட பன்னிருவகைப்பட்ட கூட்டத்திற்கும் பாங்கராயினார் நிமித்தமாக வேண்டுதலின், அவற்றுள் தலைவற்கும் தலைவிக்கும் ஒத்த காத லுள்வழிப் பாங்கராயினாரால் நிகழும் நிகழ்ச்சி கந்திருவப் பகுதியாகவும், ஒருதலை வேட்கை யாகியவழி இவரான் வரும் நிகழ்ச்சி கைக்கிளையாகவும் ஒப்பில் கூட்டமாகியவழிப் பெருந்திணை யாகவும் கொள்க. ஐந்நிலம் என்பதனை முல்லை குறிஞ்சி முதலாயின வென்றார் உளராலெனின், ‘முதலொடு புணர்ந்த’ என்பதனான் நிலம் பெறுமாதலான் நிலம் என்பதற்கு வேறு பொருள் உரைத்தல் வேண்டு மென்க. அஃது அற்றாக, இற்கிழத்தி, காமக்கிழத்தி என்பார் உள்ளப் புணர்ச்சியானாதல் மெய்யுறு புணர்ச்சி யானாதல் வரையப்பட்டாராகப் பொருட்பெண்டிராகிய காதற் பரத்தையர் கூட்டம் ஒத்த காமமாகியவா றென்னையெனின், அரும்பொருளானாதல் அச்சத்தானாதல்அன்றி, அன்பினாற் கூடுதலின் அதுவுங் கந்திருவப்பாற்படும். அவ்வாறன்றி அவரைப் பிறிது நெறியாற் கூடுவனாயின் இவன்மாட்டுத்தலைமை இன்றாமென்பது உணர்ந்து கொள்க. அஃதாமாறு: ``அன்னை கடுஞ்சொ லறியாதாய் போலநீ யென்னைப் புலப்ப தொறுக்குவென் மன்யான் சிறுகாலை யிற்கடை வந்து குறிசெய்த வவ்வழி யென்றும்யான் காணேன் றிரிதர வெவ்வழிப் பட்டாய் சமனாக விவ்வெள்ளல்.’’ (கலித். 97) எனவும், ``கண்டேனின் மாயங் களவாதல்’’ என்னுங் கலியுள், ``நோயும் வடுவுங் கரந்து மகிழ்செருக்கிப் பாடுபெய னின்ற பானா ளிரவிற் றொடிபொலி தோளு முலையுங் கதுப்புங் வடிவார் குழையு மிழையும் பொறையா வொடிவது போலு நுசுப்போ டடிதளரா வாராக் கவவினோ டொருத்திவந் தல்கற்றன் சீரார் ஞெகிழஞ் சிலம்பச் சிவந்துநின் போரார் கதவ மிதித்த தமையுமோ.’’ (கலித். 90) எனவும், பரத்தையர் அன்பினாற் கூறியவாறும் இவர் இற்கிழத்தியும் காமக்கிழத்தியும் அன்மையும் அறிந்துகொள்க. இவ்வகை வருவன ஐந்து நிலனாய் 44வரும். அஃதேல், மருதக் கலியுள், ``அடக்கமில் போழ்தின்கட் டந்தை காமுற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்.’’ (கலித். 82) எனவும், ‘வழிமுறைத்தாய்’ எனவும், ‘புதியோள்’ எனவும், இவ்வாறு கூறக் கேட்கின்ற காமக்கிழத்தியு மென மனைவியர் நால்வருளர். அவரெல்லாரையும் கூறாது மனைக்கிழத்தியர் இருவர் என்றதனாற் பயன் இன்றெனின், அவரெல்லாரும் இற்கிழத்தியும் காமக்கிழத்தியுமென இரண்டு பகுப்பினுள் அடங்குப; அன்றியும், இவர் நால்வரோடு பரத்தையுட்பட ஐவர் கந்திருவப் பகுதியர் என உரைப்பினும் அமையும். ``பரத்தை வாயில் நால்வர்க்கு முரித்தே.’’ (பொருளியல். 28) என ஓதுதலானும், தலைவற்குப் பிரமம் முதலாக வரும் நான்கு வருணத்துப் பெண்பாலாரும் பரத்தையும் என ஐவகைப் படுப வென்பதூஉம் ஒன்றெனக் கொள்க. (16) 105. இருவகைக் குறிபிழைப் பாகிய விடத்துங் காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினுந் தானகம் புகாஅன் பெயர்த லின்மையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிக் கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் வேளா ணெதிரும் விருப்பின் கண்ணுந் தாளா ணெதிரும் பிரிவி னானு நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் வரைதல் வேண்டித் தோழி செப்பிய புரைதீர் கிளவி புல்லிய வெதிரும் வரைவுடம் படுதலு மாங்கதன் புறத்தும் புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோன் மேன வென்மனார் புலவர். இது, தோழியிற் கூடிய தலைமகன் வரைந்தெய்துங்காறும் கூறும் பொருண்மை யுணர்த்துதல் நுதலிற்று. இருவகைக் குறி பிழைப்பாகிய விடத்தும் என்பது - பகற்குறியும் இரவிற்குறியும் பிழைப்பாகிய இடத்தும் என்றவாறு. பகற்குறி இரவிற்குறி யென்பது எற்றாற் பெறுதுமெனின், ``குறியெனப் படுவ திரவினும் பகலினும் அறியக் கிளந்த வாற்ற தென்ப.’’ (களவியல். 40) என்பதனாற் கொள்க. அக்குறிக்கண் தலைவி வரவு பிழைத்தவிடத்துத்தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. ``மழைவர வறியா மஞ்ஞை யாலு மடுக்க னல்லூ ரசைநடைக் கொடிச்சி தானெம் மருளா ளாயினும் யாந்தன் உள்ளுபு மறந்தறி யேமே.’’ (ஐங்குறு. 298) இது, குறிபிழைத்தவழித் தோழிக்குச் சொல்லியது. ``இல்லோ னின்பங் காமுற் றாஅங் கரிது வேட்டனையா னெஞ்சே காதலி நல்லா ளாகுத லறிந்தாங் கரியா ளாகுத லறியா தோயே.’’ (குறுந். 120) (இது, குறி பிழைத்தவழி) உள்ளத்திற்குச் சொல்லியது. காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினும் என்பது - தலைமகளைக் காணாவகையிற் பொழுது மிகவும் கடப்பினுங் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள்: ``உள்ளிக் காண்பென் போல்வல் முள்ளெயிற் றமிழ்த மூறுஞ் செவ்வாய்க் கமழகி லார நாறு மறல்போற் கூந்தற் பேரமர் மழைக்கட் கொடிச்சி மூரன் முறுவலொடு மதைஇய நோக்கே.’’ (குறுந். 286) என வரும். தானகம்புகாஅன் பெயர்த லின்மையிற்... பொழுதினும் என்பது - காணாவகையிற் பொழுது மிகக் கழிந்துழிக் காட்சி யாசையினாற் குறியிடத்துச் சென்று ஆண்டுக் காணாது கலங்கி வேட்கையான் மயக்கமுற்றுச் செயலற்று நிற்குங் காலத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு. புகான் என்பது முற்று வாய்பாட்டான் வந்த வினையெச்சம். செய்யுள் வந்தவழிக் காண்க. புகாஅக் காலை புக்கெதிர்ப் பட்டுழிப்... கண்ணும் என்பது - தான் புகுதற்குத் தகுதியில்லாத காலத்துக்கண் அகம்புக் கெதிர்ப்பட்டுழி அவரால் நீக்கப்படாத விருந்தின் பகுதியனாகிய வழியும் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள்: ``இரண்டறி களவினங் காத லோளே முரண்கொ டுப்பிற் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நண்ணுற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி யமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே’’ (குறுந். 312) என வரும். வேளா ணெதிரும் விருப்பின் கண்ணும் என்பது - தலைவி உபகாரம் எதிர்ப்பட்ட விருப்பின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. அது குறிவழிக் கண்டு கூறுதல். அவ்வழித்தலைவிக்குக் கூறிய செய்யுள்: ``சிலம்புகமழ் காந்த ணறுங்குலை யன்ன நலம்பெறு கையினென் கண்புதைத் தோயே பாய லின்றுணை யாகிய பணைத்தோட் டோகை மாட்சிய மடந்தை நீயல துளரோவென் னெஞ்சமர்ந் தோரே.’’ (ஐங்குறு. 293) இது தலைவி கண்புதைத்தவழித்தலைவன் கூறியது. ``குருதி வேட்கை யுருகெழு வயமான் வலிமிகு முன்பின் மழகளிறு பார்க்கு மரம்பயில் சோலை மலியப் பூழிய ருருவத் துருவி னாண்மேய 45லோரும் மாரி 46யெண்கின் மலைச்சுர நீளிடை நீநயந்து வருத லெவனெனப் பலபுலந் தழுதனை யுறையு மம்மா வரிவை பயங்கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிதியல் பாவை விரிகதி ரிளவெயிற் றோன்றி யன்னநின் னாய்நல முள்ளி வரினெமக் கேம மாகு மலைமுத லாறே.’’ (நற். 192) எனவும் வரும். தாளா ணெதிரும் பிரிவி னானும் என்பது - தாளாண்மை எதிரும் பிரிவின்கண்ணும் என்றவாறு. எனவே நெட்டாறு சேறலன்றி அணிமைக்கண் பிரிவென்று கொள்க. ``இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக விளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி விசும்புவீசு 47கொள்ளியிற் பைம்பயிர் துமியக் 48காலியற் செலவின் மாலை யெய்திச் சின்னிரை வால்வளைக் குறுமகள் பன்மா ணாக மடைந்துவக் குவமே.’’ (குறுந். 189) பிரிந்தவழிக் கூறியதற்குச் செய்யுள் ``ஓம்புமதி வாழியோ வாடை 49பாம்பின் றூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக் கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி மரையின மாரு முன்றிற் புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.’’ (குறுந். 235) எனவும் வரும். நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும் என்பது - நாணந் தலைவி நெஞ்சினை வருத்துதலானே நீக்கி நிறுத்துதற்கண்ணும் என்றவாறு. அஃது, அலராகு மென்றஞ்சி நீக்குதல். அவ்வழித் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழி இவ்வாறு கூறுகின்றது, புனைந்துரை யென்று கருதிக் கூறுதலும் மெய்யென்று கருதிக் கூறுதலும் உளவாம். ``களித்தொறுங் கள்ளுண்டல் வேட்டற்றாற் காமம் வெளிப்படுந் தோறு மினிது.’’ (குறள். 145) இது புனைந்துரையென்று கருதிக் கூறியது. ``உறாஅ தூரறி கௌவை யதனைப் பெறாஅது பெற்றன நீர்த்து.’’ (குறள். 1143) ‘ஊரறிந்த கௌவை நன்றே காண்; அதனைக் குற்றமாகக் கொள்ளாது பெறாது பெற்ற நீர்மைத்தாகக் கொள்’ என்றமை யான் தமர் வரைவுடன் படுவர் எனக் கூறியவாறாம். இது மெய்யாகக் கொண்டு கூறியது. வரைதல் வேண்டி... புல்லிய வெதிரும் என்பது - வரைந்து கோடல் வேண்டித் தோழியாற் சொல்லப்பட்ட குற்றந் தீர்ந்த கிளவி பொருந்திய வெதிர்ப்பாட்டுக்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. அஃதாவது பின்னுங் களவொழுக்கம் வேண்டிக் கூறுதல். ``நல்லுரை 50யிகந்து புல்லுரைத் தாஅய் பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி யரிதவா வுற்றனை நெஞ்சே 51நன்றும் பெரிதா லம்மநின் 52பூச லுயர்கோட்டு மகவுடை மந்தி போல வகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.’’ (குறுந். 29) என வரும். வரைவுடம்படுதலும் - தோழி கூறிய சொற்கேட்டு வரைவுடம் படுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. ``ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற் சூர்நசைந் 53தனையையாய் நடுங்கல் கண்டே நரந்த நாறுங் குவையிருங் கூந்தல் நிரந்திலங்கு வெண்பன் மடந்தை பரிந்தனெ னல்லனோ விறையிறை யானே.’’ (குறுந். 52) என வரும். ஆங்கதன் புறத்தும் என்பது - அவ் வரைவு நிகழ்ச்சிக் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. செய்யுள் வந்தவழிக் காண்க. புரைபடவந்த மறுத்தலொடு தொகைஇ என்பது குற்றம்படவந்த மறுத்தலொடு கூட என்றவாறு. அஃது அவர் மறுத்தற்கண்ணுந் தலைமகன்மாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு. அதற்குச் செய்யுள்: ``பொன்அடர்ந் தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு 54கோதைய டிணிமண லடைகரை யலவ னாட்டி 55யசையின ளிருந்த வாய்தொடிக் குறுமக ணலஞ்சால் விழுப்பொருள் கலநிறை கொடுப்பினும் பெறலருங் குரைய ளாயி 56னறந்தெரிந்து நாமுறை தேஎ மரூஉப் பெயர்ந் தவனொ டிருநீர்ச் சேர்ப்பி னுப்புட னுழுதும் பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும் படுத்தனம் பணிந்தன மடுத்தன மிருந்தபிற் றருகுவன் கொல்லோ தானே விரிதிரைக் கண்டிரண் முத்தங் கொண்டு ஞாங்கர்த் தேனிமிர் தகன்கரைப் பகுக்குங் கானலம் பெருந்துறைப் பரதவ னெமக்கே.’’ (அகம். 280) என வரும். கிழவோன் மேன வென்மனார் புலவர் என்பது - இச் சொல்லப் பட்டன வெல்லாங் கிழவோன் இடத்தன என்றவாறு. கூற்றென்னாது பொதுப்படக் கூறுதலான் உள்ள நிகழ்ச்சியும் கூற்றும் கொள்ளப்படும். (17) 106. காமத் திணையிற் கண்ணின்று வரூஉ நாணு மடனும் பெண்மைய வாகலிற் குறிப்பினு மிடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட வாரா வவள்வயின் னான. என்பது மேல் தலைவர்க்குரிய கிளவி கூறி, இனித் தலைவிக்குரிய கிளவி கூறுகின்றாராகலின், முற்பட அவள் தலைவனைக் கண்ணுற்றவழி வரும் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. தலைவியிடத்து நிலைமை பெற்றுவருகின்ற நாணமும் மடனும் பெண்மைக்கு அங்கமாகலின், காமவொழுக்கத்தின்கண் குறிப்பினானும் இடத்தினானுமல்லது வேட்கை புலப்பட நிகழாது, தலைவியிடத்து என்றவாறு. காமத்திணை என்பதனைக் குறிப்பென்பதற்கு முன்னே கூட்டி யுரைக்க. அச்சமும் இயல்பன்றோவெனின், அதுவும் வேட்கைக் குறிப்பினான் நீங்குமென்ப, அச்சமுள்வழி வேட்கை நிகழாமையின், வேட்கையுள்வழி நாணும் மடனும் நீங்காவோ எனின், அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. இதனாற் சொல்லியது தலைவி தலைவனை எதிர்ப்பட்டுழி முன்னிலையாக்கல் முதலாகத் தலைவன்மாட்டு நிகழ்ந்தமை போலத் தலைவிமாட்டு நிகழ்பவை உளவோ வெனின், அவள்மாட்டுக் குறிப்பினானாதல், சொல்லுதற்குத்தக்க விடத்தினானாதல் தோற்றுவதல்லது, புலப்பட்டு நிகழா தென்றவா றாயிற்று. ``உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று’’ (குறள். 1090) என்றது தலைவனைக் கண்ட தலைவி வேட்கையைக் குறிப்பினால் தன்னுள்ளே கருதியது. இடம்பற்றி வேட்கை தோற்றியதற்குச் செய்யுள் ``நெடுங்கொடி நுடங்கு நாவாய் தோன்றுவ காணா மோவெனக் காலிற் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளு மென்னையே குறித்த நோக்கமொடு நன்னுத லொழிகோ யானென வழிதகக் கூறி யாம்பெயர் தோறு நோக்கித் தான்றன் நெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலு மின்றுமென் கட்கே.’’ (அகம். 110) எனத்தன் குறிப்புக் காலத்தாற் கூறுதலாற்றாது பின் இடம் பெற்றுழிக் கூறியவாறு காண்க. (18) 107. காமஞ் சொல்லா நாட்ட மின்மையி னேமுற விரண்டு முளவென மொழிப. என்பது, மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. வேட்கையுரையாத கண் உலகத்தின்மையான் தலைவன் ஏமுறற் பொருட்டு நாணும் மடனும் உளவாம் என்றவாறு. இதனாற் சொல்லியது, மேல் தலைவிக்கு இயல்பாய்க் கூறப்பட்ட அச்சமும் நாணும் மடனும் என்பனவற்றுள் வேட்கையான் அச்சம் நீங்கினவழி நாணும் மடனும் நீங்காவோ என்றையுற்றார்க்கு, அவை தலைமகற்கு ஏமமாதற்பொருட்டு நீங்காவாம் என்பதூஉம், வேட்கைக் குறிப்புக் கண்ணினான் அறியலா மென்பதூஉம் உணர்த்தியவாறு. என்னை? நாணும் மடனும் இல்லாதாரைத்தலைமக்கள் அவமதிப்பாராதலால். 57உதாரணம்: ``கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்.’’ (குறள். 1133) இதனுள் ‘கடலன்ன காமம் உழந்தும்’ என்றதனான் வேட்கை மிக்க நிலையினையும், ‘மடலேறாப் பெண்’ என்றமை யான் நாணும் மடனும் நீங்கா நிலையினையும் கூறுதல் காண்க. ``கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க ளென்ன பயனு மில.’’ (குறள். 1100) இதனுள் அகத்து நிகழ் வேட்கையினைக் கண்ணினால் அறியக் கிடந்தமை கூறியவாறு காண்க. (19) 108. சொல்லெதிர் மொழித லருமைத் தாகலி னல்ல கூற்றுமொழி யவள்வயி னான. என்பது, இதுவும் தலைவிமாட்டு ஒரு கூற்றுச்சொல் நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. தலைவன் இயற்கைப் புணர்ச்சி கருதிக்கூறுஞ் சொல் லெதிர், தான் வேட்கைக் குறிப்பினளாயினும் அதற்குடம்பட்ட நெறியைக் கூறுதல் அருமையுடைத்தாதலான், அதற்கு உடம்பாடல்லாத கூற்றுமொழி தலைவியிடத்தன என்றவாறு.; என்றது, இசைவில்லாதாரைப் போலக் கூறுதல். உதாரணம்: ``யாரிவ னென்னை விலக்குவா னீருளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் கல்லாப் பொதுவனை நீமாறு நின்னொடு சொல்லலோம் பென்றா ரெமர்.’’ (கலித். 112) எனவரும். இதன்பின், ``எவன் கொலோ மாயப் பொதுவ னரைத்த உரையெல்லாம் வாயாவ தாயிற் றலைப்பட்டாம் பொய்யாயிற் சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தவென் னாயித ழுண்கண் பசப்பத் தடமென்றோள் சாயினு மேஎ ருடைத்து.’’ (கலித். 112) என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்ல கூற்றாயிற்று. (20) 109. மறைந்தவற் காண்ட றற்காட் டுறுத னிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் வழிபாடு மறுத்தன் மறுத்தெதிர் கோடல் பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல் கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினு மிட்டுப்பிரி விரங்கினு மருமைசெய் தயர்ப்பினும் வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினு நொந்துதெளி வொழிப்பினு மச்ச நீடினும் பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும் வருந்தொழிற் கருமை வாயில் கூறினுங் கூறிய வாயில் கொள்ளாக் காலையும் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற வருமறை யுயிர்த்தலு முயிராக் காலத் துயிர்த்தலு முயிர்செல வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும் நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி யொருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோ ளருமை சான்ற நாலிரண்டு வகையிற் பெருமை சான்ற வியல்பின் கண்ணும் பொய்தலை யடுத்த மடலின் கண்ணுங் கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் வெறியாட் டிடத்து வெருவின் கண்ணுங் குறியி னொப்புமை மருடற் கண்ணும் வரைவுதலை வரினுங் களவறி வுறினுந் தமர்தற் காத்த காரண மருங்கினுந் தன்குறி தள்ளிய தெருளாக் காலை வந்தவன் பெயர்ந்த வறுங்கள நோக்கித் தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும் வழுவின்று நிலைஇய வியற்படு பொருளினும் பொழுது மாறும் புரைவ தன்மையி னழிவுதலை வந்த சிந்தைக் கண்ணுங் காமஞ் சிறப்பினு மவனளி சிறப்பினு மேமஞ் சான்ற வுவகைக் கண்ணுந் தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையு மன்னவு முளவே யோரிடத் தான. என்றது, தலைவிக்கு இயற்கைப்புணர்ச்சி முதலாகக் களவின்கட் ‘குறிப்பினு மிடத்தினுமல்லது’ (களவியல். 18) நிகழ்ச்சி யெல்லாவற்றினும் கூற்று நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. மறைந்தவற் காண்டல் என்பது - தன்னைத்தலைவன் காணாமல் தான் அவனைக் காணுங் காட்சி. தற்காட்டுறுதல் என்பது தன்னை அவன் காணுமாறு நிற்றல். நிறைந்த... மழுங்கல் என்பது - நிரம்பிய வேட்கையான் தலைவன் கூறிய சொற் கேட்டு எதிர்மொழி கூறாது மடிந்து நிற்றல். இம் மூன்றிடத்தினுங் கூற்று நிகழாது. வழிபாடு மறுத்துல் என்பது - அதன்பின் இவள் வேட்கைக் குறிப்புக் கண்டு சாரலுற்றவழி அதற்கு உடம்படாது மறுத்தல். அது குறிப்பினானும் கூற்றினானும் வரும். மறுத்தெதிர்கோடல் என்பது - மறுத்தாங்கு மறாது பின்னும் ஏற்றுக் கோடல். பழிதீர்... தோற்றல் - குற்றந் தீர்ந்த முறுவல் சிறிது தோற்றுவித்தல். அது புணர்தற்கு உடன்பாடு காட்டி நிற்கும். இவை யாறுநிலையும் புணர்ச்சிக்கு முன் நிகழும். ஈண்டுங் குறிப்பு நிகழ்ச்சியல்லது கூற்று நிகழ்ச்சி அருகியல்லது வாராது. அவற்றுள் சில வருமாறு: ``இகல் வேந்தன் சேனை’’ என்னும் முல்லைக் கலியுள், ``மாமருண் டன்ன மழைக்கண்சிற் றாய்ச்சியர் நீமருட்டுஞ் சொற்கண் மருள்வார்க் குரையவை யாமுனியா வேறுபோல் வைகற் பதின்மரைக் காமுற்றுச் செல்வாயோர் கட்குத்திக் கள்வனை நீயெவன் செய்தி பிறர்க்கு; உரை, யாமெவன் செய்து நினக்கு; இது வழிபாடு மறுத்தது. இன்னும் இதனுள், ``தேங்கொள் பொருப்பன் சிறுகுடி யெம்மாயர் வேந்தூட் டரவத்து நின்பெண்டிர் காணாமைக் காஞ்சித்தா துக்கன்ன தாதெரு மன்றத்துத் தூங்குங் குரவையு ணின்பெண்டிர் கேளாமை யாம்பற் குழலாற் பயிர்பயிர் தெம்படப்பைக் காஞ்சிக்கீழ்ச் செய்தேங் குறி.’’ (கலித். 108) இது மறுத்தெதிர் கோடல். பழிதீர் முறுவல் சிறிதே தோற்றற்கு உதாரணம்: ``அன்னையோ, மன்றத்துக் கண்டாங்கு சான்றார் மகளிரை யின்றி யமையேனென் றின்னவுஞ் சொல்லுவாய் நின்றாய்நீ சென்றீ யெமர்காண்பர் நாளையுங் கன்றொடு சேரும் புலத்து.’’ (கலித். 110) இதனுள் ``அன்னையோ’’ என்பது நகையொடு கூடிய சொல். கைப்பட்டுக் கலங்கினும் என்பது - தலைவன் கையகப்பட்ட பின்பு என்செய்தே மாயினேம் எனக் கலக்கமுறினும் என்றவாறு. நாணுமிகவரினும் என்பது - தலைவிக்கு முன்புள்ள நாணத்தினும் மிக நாணம் வந்துழியும் என்றவாறு. இட்டுப்பிரி விரங்கினும் என்பது - தலைவன் இட்டு வைத்துப் பிரிவன் என அஞ்சியதற்கு இரக்கமுறினும் என்றவாறு. அருமைசெய்தயர்ப்பினும் என்பது - தலைவன் வருதற்குக் காவலாகிய அருமை செய்ததனான் அவனும் வருதலைத் தவிரினும் என்றவாறு. வருதலைத்தவிர்தலை அயர்ப்பு என்றார். அன்றியும் புறத்து விளையாடுதற்கு அருமை செய்ய மயக்கம் வரினும் என்றுமாம். செய்தென்பதனைச் செயவெனத் திரிக்க. வந்தவழி யெள்ளினும் என்பது - தலைவன் வந்தவிடத்து அலராகும் என்றஞ்சி அவனை எண்ணிய வழியும் என்றவாறு. விட்டுயிர்த்தழுங்கினும் என்பது - மறையாது சொல்லி இரங்கினும் என்றவாறு. நொந்து தெளிவொழிப்பினும் என்பது - தலைவன் தெளிவித்து தெளிவை நொந்து, அதனை யொழிப்பினும் என்றவாறு. அச்சம் நீடினும் என்பது - தலைவன் வருகின்றது இடையீடாக அச்சம் மிக்குழியும் என்றவாறு. பிரிந்தவழிக் கலங்கினும் என்பது - தலைவன் பிரிந்தவழிக் கலக்கமுறினும் என்றவாறு. அது தாளாணெதிரும் பிரிவு. பெற்றவழி மலியினும் என்பது - தலைவனோடு கூட்டம் பெற்றவழி மகிழினும் என்றவாறு. வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும் என்பது - தலைவன் வருதற்கு இடையீடாகக் காவலர் கடுகுதலான் ஈண்டுவருதல் அரிதெனத் தோழி தலைவிக்குச் சொல்லினும் என்றவாறு. கூறிய... காலையும் என்பது - தோழி இவ்வாறு கூறியதனை மனங்கொள்ளாத காலத்தினும் என்றவாறு. மனைப்பட்டு அருமறை யுயிர்த்தலும் என்பது - புறத்து விளையாடுதல் ஒழிந்து மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்குச் சூழ்தலமைந்த அரிய மறைப்பொருளைச் சொல்லலும் என்றவாறு. எனவே சிதையாவழித் தோழிக்குச் சொல்லாளாம் என்பது போந்தது. வேட்கை மறைக்கப்படுதலின் மறையாயிற்று. ‘கைப்பட்டுக் கலங்கல்’ முதலாகக் ‘கூறிய வாயில் கொள்ளாக் காலை’ யீறாகச் சொல்லப்பட்ட பன்னிரு வகையினும் தலைமகள் தோழிக்கு உரைக்கப்பெறும். அஃது உரைக்குங்கால் மனைப்பட்டுக் கலங்கி மேனி சிதைந்தவழியே உரைக்கப்பெறுவது. ஆண்டும் இதற்கு என்செய்வாம் என உசாவுதலோடு கூடத் தனது காதன்மை தோன்ற வுரைக்கும் என்றவாறு. மனைப்படாக்கால் அவனைக் காண்டலான் உரைக்க வேண்டுவதில்லை யென்றவாறாயிற்று. இப்பன்னிரண்டும் ஒருத்திமாட்டு ஒருங்கு நிகழ்வன அல்ல. இவ்விடங்கள் உரைத்தற்கு இடமென இலக்கணங் கூறியவாறு. அவற்றுட் கைப்பட்டுக் கலங்கியதற்குச் செய்யுள்: ‘கொடியவுங் கோட்டவும்’ என்னுங் குறிஞ்சிக்கலியுள், ``நரந்தநா றிருங்கூந்த லெஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் தொன்முறை சுற்றி மோக்கலும் மோந்தன னறாஅவவிழ்ந் தன்னவென் மெல்விரற் போதுகொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன் றொய்யி லிளமுலை யினிது தைவந்து தொய்யலந் தடக்கையின் வீழ்பிடி களிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்; அதனால், அல்லல் களைந்தனன் றோழி நந்நக ரருங்கடி நீவாமை கூறி (னன்றெ)ன நின்னொடு சூழ்வ றோழி நயம்புரிந் தின்னது செய்தா ளிவளென மன்னா வுலகத்து மன்னுவது புரைமே.’’ (கலித். 54) இதனுட் கைப்பட்டுக் கலங்கியவாறும் அருமறை யுயிர்த்தவாறும் இவ்வாறு செய்யாக்கால் இறந்துபடுவன் என்னுங் குறிப்பினளாய் ‘மன்னா வுலகத்து மன்னுவது புரையும்’ எனவுங் கூறியவாறு காண்க. நாணுமிக வந்ததற்குச் செய்யுள்: ``நோக்குங்கா னோக்கித் தொழூஉம்பிறர் காண்பராத் தூக்கிலி தூற்றும் பழியெனக் கைகவித்துப் போக்குங்காற் போக்கும் நினைந்திருக்கு மற்றுநாங் காக்கு மிடமன் றினி; எல்லா வெவன்செய்வாம் நாம்.’’ (கலித். 63) இது நாணம் மிக்கவழித் தோழியொடு உசாவியது. இட்டுப்பிரி விரங்கியதற்குச் செய்யுள் ``அம்ம வாழி தோழி காதலர் பாவை யன்னவென் னாய்கவின் றொலைய நன்மா மேனி பசப்பச் செல்வே மென்பதம் மலைகெழு நாட்டே.’’ (ஐங்குறு. 221) எனவரும். அருமைசெய் தயர்த்தற்குச் செய்யுள் ``நெய்தற் புறவி னிறைகழித் தண்சேர்ப்பன் கைதைசூழ் கானலுட் கண்டநாட் போலானாற் செய்த குறிவழியும் பொய்யாயி னாயிழாய் யையகொ லான்றார் தொடர்பு.’’ (திணைமொழி. 41) என வரும். வந்தவழி யெள்ளியதற்குச் செய்யுள்: ``கண்டிரண் முத்தம் மயக்கு மிருண்முந்நீர்ப் பண்டங்கொ ணாவாய் வழங்குந் துறைவனை முண்டகக் கானலுட் கண்டே னெனத்தெளிந்தே னின்ற வுணர்விலா தேன்.’’ (ஐந்திணை யெழு. 56) (இதனுள்) ‘பின்னும் வருவன் என்றிருந்தேன்; அதனான் எள்ளினேன்’ என்பது கருத்து. ``ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன் மாறினெ னெனக்கூறி மனங்கொள்ளுந் 58தானென்ப கூடுதல் வேட்கையாற் குறிபார்த்துக் குரனொச்சிப் பாடோர்க்குஞ் செவியோடு பைதலேன் யானாக.’’ (கலித். 46) இஃது எள்ளினாயென நினைத்தான் என்றவழிக் கூறியது. விட்டுயிர்த்தழுங்கியதற்குச் செய்யுள்: ``பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க மணிமலை நாடன் வருவன்கொ றோழி கணிநிற வேங்கை மலர்ந்துவண் டார்க்கு மணிநிற மாலைப் பொழுது.’’ (திணைமொழி. 9) எனவும், ``மரையா வுகளு மரம்பயில் சோலை யுரைசார் மடமந்தி யோடி யுகளுந் புரைதீர் மலைநாடன் பூணேந் தகல முரையா வுழக்குமென் னெஞ்சு’’ (கைந்நிலை. 6) எனவும் வரும். நொந்து தெளிவொழித்தற்குச் செய்யுள்: ``மன்றத் துறுகற் கருங்கண் முசுவுகளுங் குன்றக நாடன் றெளித்த தெளிவினை நன்றென்று தேறித்தெளிந்தேன் றலையளி யொன்றுமற் றொன்று மனைத்து.’’ (ஐந்திணை யெழு. 9) என வரும். அச்சம் நீடினும் என்பதற்குச் செய்யுள்: ``மென்றினை மேய்ந்த தறுகட் பன்றி வன்க லடுக்கத்துத் துஞ்சு நாட னெந்தை யறித லஞ்சிக்கொ லதுவே மன்ற வாரா மையே.’’ (ஐங்குறு. 261) (எனவும்,) ``மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங் கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழிய ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே’’ (குறுந். 87) எனவும் வரும். பிரிந்தவழிக் கலங்கியதற்குச் செய்யுள்: ``வருவது கொல்லோ தானே வாரா தவணுறை மேவலி னமைவது கொல்லோ புனவர் கொள்ளியிற் புகல்வரு மஞ்ஞை யிருவி இருந்த குருவி வெருவுறப் பந்தாடு மகளிரிற் படர்தருங் குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே.’’ (ஐங்குறு. 295) (எனவும்,) ``அதுகொ றோழி காம நோயே வதிகுரு குறங்கு மின்னிலைப் புன்னை யுடைதிரைத் திவலை யரும்புந் தீநீர் மெல்லம் புலம்பன் பிரிந்தெனப் பல்லித ழுண்கண் பாடொல் லாவே.’’ (குறுந். 5) எனவும், ``மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்ப னணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற் றிணிமண லெக்கர்மே லோதம் பெயர்ந்து துணிமுந்நீர் துஞ்சா தது’’ (ஐந்திணை யெழு. 60) எனவும், ``நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட லஞ்சுதும் வேபாக் கறிந்து.’’ (குறள். 1128) எனவும், ``கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு மெழுதேங் கரப்ப தறிந்து’’ (குறள். 1127) எனவும் வரும். உறங்காமையும் உண்ணாமையும் கோலஞ் செய்யாமையும் வருத்தும் பிறவுஞ் சொல்லுதல். ``இவ்வழி நீ வருந்தாதி; நின்மாட்டு அன்பு பெரிதுடை யான்’’ எனத் தோழி ஆற்றுவித்தவழி ஆற்றாமையாற் கூறியதற்குச் செய்யுள்: ``சிறுதினை மேய்ந்த தறுகட் பன்றி துறுக லடுக்கத்துத் துணையொடு வதியு மிலங்குமலை நாடன் வரூஉ மருந்து மறியுங்கொ றோழியவன் விருப்பே’’ (ஐங்குறு. 262) என வரும். பெற்றவழி மலியினு மென்பதற்குச் செய்யுள்: ``அம்ம வாழி தோழி பன்மா ணுண்மண லடைகரை நம்மோ டாடிய தண்ணந் துறைவன் மறைஇ யன்னை யருங்கடி வந்துநின் றோனே.’’ (ஐங்குறு. 115) எனவும், ``முளைவளர் முதல்வன்’’ என்னும் அகப்பாட்டினுள், ``....... ........ வேட்டோர்க் கமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின் வண்டிடைப் படாஅ முயக்கமுந் தண்டாக் காதலுந் தலைநாட் போன்மே.’’ (அகம். 332) எனவும், ``பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலரே நீர்பரந் தொழுகலி னிலங்கா ணலரே யெல்லை சேறலி னிருள்பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாட் கங்குல் யாங்குவந் தனையோ வோங்கல் வெற்ப வேங்கை கமழுமெஞ் சிறுகுடி யாங்கறிந் தனையோ நோகோ யானே.’’ (குறுந். 355) எனவும், ``அம்ம வாழி தோழி நலமிக நல்ல வாயின வளியமென் றோள்கள் மல்ல லிருங்கழி மலரு மெல்லம் புலம்பன் வந்த வாறே.’’ (ஐங்குறு. 120) எனவும் வரும். வருந்தொழிற் கருமை வாயில் கூறியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள் ``அருங்கடி யன்னை காவ னீவிப் பெருங்கடை யிறந்து மன்றம் போகிப் பகலே பலருங் காண நாண்விட் டகல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி பன்னாட் கருவி வானம் பெய்யா தாயினு மருவி யார்க்குங் கழைபயி னனந்தலை வான்றோய் மாமலை கிழவனைச் சான்றோ யல்லை யென்றனம் வரற்கே.’’ (நற். 365) என வரும். கூறிய வாயில் கொள்ளாக் காலத்துத்தலைவியுரைத்தற்குச் செய்யுள்: ``கல்வரை யேறிக் கடுவன் கனிவாழை யெல்லுறு போழ்தி னினிய பழங்கைக்கொண் டொல்லெலை யோடு மலைநாடன் றன்கேண்மை சொல்லச் சொரியும் வளை.’’ (கைந்நிலை. 7) என வரும். மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு நினைத்தல் சான்ற அருமறை உயிர்த்தற்குச் செய்யுள் ``பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன் னிரிலவென் றிணைபயிரு 59மேகல்சூழ் வெற்பன் புலவுங்கொ றோழி புணர்வறிந் தன்னை செலவுங் கடிந்தாள் புனத்து.’’ (திணைமொழி. 10) எனவும், ``பொழுது மெல்லின்று பெயலு மோவாது கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப் புலிப்பற் றாலிப் புதல்வர்ப் புல்லி 60யன்னா யென்னு மன்னையு மன்னோ வென்மலைந் தனன்கொ றானே தன்மலை யார நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றோனே’’ (குறுந். 161.) எனவும் வரும். இவை யெல்லாம் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்தபின் நிகழ்வன. உள்ளப் புணர்ச்சியான் உரிமை பூண்டிருந்தவரும் இவ்வாறு கூறப்பெறும் என்று கொள்க, ஆண்டு மனநிகழ்ச்சி ஒருப்பட்டு நிற்றலின். உயிராக்காலத் துயிர்த்தலும் உயிர்செல என்பது - இவ்வாறு கூறாக் காலத்து உயிர் செல்லுமாறு சொல்லுதலும் என்றவாறு. ஈண்டு, உயிர்த்தல் என்பது சுவாதம் எனினும் அமையும். இந்நிகழ்ச்சியைத் தோழிக்கு நாணத்தால் உரையாளாயின், நோயட வருந்தும் என்றவாறு. உதாரணம்: ``தழையணி யல்கு றாங்கல் செல்லா நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக வம்மெல் லாக நிறைய வீங்கிய கொம்மை வரிமுலை செப்புட னெதிரின 61யாங்கா குவள்கொல் பூங்குழை யென்னு மவல நெஞ்சமொ டுசாவாக் கவலை மாக்கட்டிப் பேதை யூரே.’’ (குறுந். 159) இது யாங்காகுவ621ளென உயிர்செலவு குறித்து நின்றது. ``இன்ன ளாயின ணன்னுத லென்றவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழிநம் படப்பை நீர்வார் பைம்புதற் கலித்த மாரிப் பீரத் 63தலர்சில கொண்டே.’’ (குறுந். 98) என வரும். வேற்றுவரைவு... தன்பிழைப்பாகத் தழீஇத் 64தேறலும் என்பது - வேற்று வரைவுவரின் அது மாற்றுதல் முதலாகத் தமர் தற்காத்து காரணப் பக்கம் ஈறாக நிகழும்வழித் தன்குறி தப்பித்தலைவன் எதிர்ப் படுதலில்லாக் காலத்து வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்குறையாக வுடம்பட்டுத் தேறுதலும் என்றவாறு. ஆண்டுக் கலக்கமின்றித் தேறுமென்பது கூறினாராம். அவ்வழி, வேற்று வரைவுவரின் அது மாற்றுதற்கண்ணும் என்பது - பிறனொருவன் வரைய வரின் அதனை மாற்றுதற் காகவும் தன்குறி தப்பும் என்றவாறு. நெறிப்படு... மறைப்பினும் என்பது - கூட்ட முண்மை வழக்கியலால் நாடுகின்ற காலத்து மெய் வேறுபாடு நிகழ்ந்துழி, தோழி அறியாமலும் செவிலி அறியாமலுந் தலைவி மறைப்பினும் என்றவாறு. பொறியின்... இயல்பின் கண்ணும் என்பது - பொறி யென்பது ஊழ். ஊழாற் கட்டப்பட்ட புணர்ச்சியைக் குறித்து ஒற்றுமைப்பட்ட நண்பினானே தலைவன் வரைதற்குக் குறையுறு கின்றதனைத் தெளிந்த தலைவி செய்தற்கு அருமையமைந்த எண்வகையினாற் பெருமை இயைந்த இயல்பினளாகி நிற்றற் கண்ணும் என்றவாறு. எண்வகையாவது மெய்ப்பாட்டியலுள் மனன் அழிவில்லாத கூட்டம் என ஓதுகின்ற, ``முட்டுவயிற் கழறன் முனிவுமெய்ந் நிறுத்தல் அச்சத்தி னகற லவன்புணர்வு மறுத்தல் தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மை.’’ (மெய்ப்பாட். 23) என்பன. அவற்றுள், முட்டுவயிற் கழறல் ஆவது - களவொழுக்கம் நிகழாநின்றுழி நிலவு வெளிப்பாடு, காவலர் கடுகுதல், தாய்துஞ்சாமை, ஊர்துஞ் சாமை, தலைவன் குறி வருவதற்கு இடையீடு படுதல், இவ்வழிக் களவொழுக்கத் தினாற் பயனின்மை கூறல். அவ்வாறு கூறி இனி இவ்வொழுக்கம் அமையுமென வரைந்தெய்துதல்காறும் புணர்ச்சியை விரும்பாது கலக்கமின்றித் தெளிவுடையாளாம். முனிவு மெய்ந்நிறுத்தல் ஆவது - இவ்வொழுக்கத்தினான் வந்த துன்பத்தைப் பிறர்க்குப் புலனாகாமை மெய்யின்கண்ணே நிறுத்தல். அவ்வழியும் வரைந்தெய்தல் சான்றமையின் புணர்ச்சி யெனக் குறிவழிச் செல்லாளாம். அச்சத்தின் அகறல் ஆவது இதனைப் பிறரறிவர் என்னும் அச்சத்தினானும் குறிவழிச் செல்லாளாம். அவன் புணர்வுமறுத்தல் ஆவது - தலைவன் புணர்ச்சியில் வழியும் குறிவழிச் செல்லாளாம். தூது முனிவின்மை ஆவது - அவ்வழித்தலைவன்மாட்டுத் தூதாகி வருஞ் சொற்கேட்டலை முனிவின்மை. துஞ்சிச் சேர்தல் ஆவது - உறங்காமையின்றி யுறக்கம் நிகழ்தல். காதல் கைம்மிகல் ஆவது - இவ்வாறு செய்யுங் காதல் அன்பின்மை யின்றி அன்பு மிகுதல். கட்டுரை யின்மை ஆவது - கூற்று நிகழ்தலின்மை. இவையெல்லாம் கலக்கமில்லாத நிலைமை யாதலிற் பெருமை சான்ற இயல்பாயின. பொய்தலையடுத்த மடலின் கண்ணும் என்பது - பொய்ம்மையால் ‘மடலேறுவன்’ எனத் தலைவன் கூறியவழியும், வெறுத்த உள்ளத்தளாய்க் குறிவழிச் செல்லாளாம். கையறு தோழி கண்ணீர்த் துடைப்பினும் என்பது - தோழி கையினால் தலைவி கண்ணீர் துடைத்தவழியுங் குறிவழிச் செல்லாளாம். வெறியாட்டிடத்து வெருவின்கண்ணும் என்பது - தலைவி வேறுபாடு எற்றினானாயிற்றெனச் செவிலி வெறியாட்டுவிக்க வரும் அச்சத்தினானுங் குறிவழிச் செல்லாளாம். குறியின் ஒப்புமை மருடற்கண்ணும் என்பது - தலைவன் செய்த குறியை ஒப்புமை பற்றிச் சென்று அஃது அவ்வழி மருளுதற் கண்ணும் குறிவழிச் செல்லாளாம். அஃதாவன புள்ளெழுப்புதல் போல்வன. அவை பெற்றுப் 65புள்ளரவம் எழும். அவ்வாறு மருளுதல். வரைவு தலை வரினும் என்பது - தலைவன் வரையவருகின்ற நாள் அணித்தாக வரினும் குறிவழிச் செல்லாளாம். களவறிவுறினும் என்பது - களவினைப் பிறர் அறியினும் குறிவழிச் செல்லாளாம். தமர் தற்காத்த காரண மருங்கினும் என்பது - தன்னைத் தமர் காத்த காரணப் பக்கத்தினும் என்றவாறு. அஃது ஐயமுற்றுக் காத்தல். அவற்றுள், வேற்றுவரைவு வரின் அது மாற்றுதற்குத் தலைவி கூறிய செய்யுள்: ``அன்னை வாழிவேண் டன்னை புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை யென்னை யென்று மியாமே யிவ்வூர் பிறிதொன் றாகக் கூறு மாங்கு மாக்குமோ வாழிய பாலே.’’ (ஐங்குறு. 110) என வரும். நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தமை மறைத்தற்குச் செய்யுள்: ``துறைவன் துறந்தெனத் துறையிருந் தழுதவென் மம்மர் வாண்முக நோக்கி யன்னை நி னவல முரையென் 66றனளே கடலென் பஞ்சாய்ப் பாவை கொண்டு வண்டலஞ் 67சிறுமனை சிதைத்ததென் றேனே.’’ என வரும். முட்டுவயிற் கழறற்குச் செய்யுள்: ``இரும்பிழி மகாஅரிவ் வழுங்கன் மூதூர் விழவின் றாயினுந் துஞ்சா தாகு மல்ல லாவண மறுகுடன் மடியின் வல்லுரைக் கடுஞ்சொ லன்னை துஞ்சாள் பிணிகோ ளருஞ்சிறை யன்னை துஞ்சிற் றுஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவ ரிலங்குவே லிளையர் துஞ்சின் வையெயிற்று வலஞ்சுரித் தோகை ஞாளி மகிழு மரவவாய் ஞமலி மகிழாது மடியிற் பகலுரு வுறழ்நிலாக் கான்று விசும்பி னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே திங்கள்கல் சேர்பு கனையிருண் மடியி னில்லெலி வல்சி வல்வாய்க் கூகை கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும் வளைக்கட் சேவல் வாளாது மடியின் மனைச்செறி கோழி மாண்குர லியம்பு மெல்லா மடிந்த காலை யொருநா ணில்லா நெஞ்சத் தவர்வா ரலரே, யதனா லரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந் தாதி போகிய பாய்பரி நன்மா நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன பன்முட் டின்றாற் றோழிநங் களவே.’’ (அகம். 122) என வரும். முனிவு மெய்ந் நிறுத்தற்குச் செய்யுள்: ``நோமே நெஞ்சே நோமே நெஞ்சே யிமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி யமைதற் கமைந்தநங் காதல ரமைவில ராகுத னோமே நெஞ்சே.’’ (குறுந். 4) என வரும். அச்சத்தின் அகறற்குச் செய்யுள்: ``பேணுப பேணார் பெரியா ரென்பது நாணுத்தக் கன்றது காணுங் காலை யுயிரோ ரன்ன செயிர்தீர் நட்பி னினக்கியான் மறைத்தல் யாவது மிகப்பெரி தழிதக் கன்றாற் றானே கொண்கன் யான்யா யஞ்சுவ லெனினுந் தானெற் பிரிதல் சூழான் மன்னே யினியே கான லாய மறியினு மானா தலர்வந் தன்றுகொ லென்னு மதனாற் புலர்வது கொல்லவ னட்பென வஞ்சுவ றோழியென் னெஞ்சத் தானே.’’ (நற். 72) என வரும். அவன் புணர்வு மறுத்தற்குச் செய்யுள்: ``யாரு மில்லைத்தானே கள்வன் றானது பொய்ப்பின் யானெவன் செய்கோ தினைத்தா ளன்ன சிறுபசுங் கால வொழுகுநீ ராரல் பார்க்குங் குருகு முண்டுதா மணந்த ஞான்றே.’’ (குறுந். 25) என வரும். தூது முனிவின்மைக்குச் செய்யுள்: ``புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற் றோன்று நாடன் றீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின் வந்தன்று வாழி தோழி நாமு நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தாம்வரைந் தனையமென விடுகந் தூதே.’’ (குறுந். 106) என வரும். துஞ்சிச் சேர்தற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க காதல் கைம்மிகுதற்குச் செய்யுள்: ``கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை யுணீஇயர் வேண்டுந் திதலை யல்குலென் மாமைக் கவினே.’’ (குறுந். 27) என வரும். கட்டுரையின்மைக்குக் கூற்று நிகழாது. பொய்தலையடுத்த மடலின்கண் தலைமகள் கூறிய செய்யுள் வந்தவழிக் காண்க. கையறு தோழி கண்ணீர் துடைத்தற்குச் செய்யுள்: ``யாமெங் காமந் தாங்கவுந் தாந்தங் கெழுதகை மையி னழுதன தோழி கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பத நோக்கி யேறா திட்ட வேமப் பூசல் விண்டோய் விடரகத் தியம்புங் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே.’’ (குறுந். 241) என வரும். வெறியாட்டிடத்து வெருவினாற் கூறியதற்குச் செய்யுள்: ``நம்முறு துயர நோக்கி யன்னை வேலவற் றந்தன ளாயினவ் வேலன் வெறிகமழ் நாடன் கேண்மை யறியுமோ தில்ல செறியெயிற் றோயே.’’ (ஐங்குறு. 241) என வரும். குறியின் ஒப்புமை மருடற்குக் கூறிய செய்யுள்: ``அணிகடற் றண்சேர்ப்பன் றேர்ப்பரிமா பூண்ட மணியரவ மென்றெழுந்து போந்தேன் கனிவிரும்பு புள்ளரவங் கேட்டுப் பெயர்ந்தே னணியிழா யுள்ளுருகு நெஞ்சினேன் யான்.’’ (ஐந்திணையைம். 50) ``கனைபெய னடுநாள்யான் கண்மாறக் குறிபெறான் புனையிழா யென்பழி நினக்குரைக்குந் தானென்ப துளிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளிற்ற னளிநசைஇ யார்வுற்ற வன்பினேன் 68யானாக.’’ (கலித்.46) என வரும். வரைவு தலைவந்தவழிக் கூறிய செய்யுள்: ``கொல்லைப் புனத்த வகில்சுமந்து கல்பாய்ந்து வானி னருவி ததும்பக் கவினிய நாட னயமுடைய னென்பதனா னீப்பினும் வாடன் மறந்தன தோள்.’’ (ஐந்திணையெழு. 2) நயனுடைய னென்றதனான் வரைவு தலைவந்தமை யறிந்து கூறினாளாம். ``இலையமர் தண்குளவி வேய்ந்த பொதும்பிற் குலையுடைக் காந்த னினவண் டிமிரும் வரையக நாடனும் வந்தான்மற் றன்னை யலையு மலைபோயிற் றன்று.’’ (ஐந்திணையெழு. 3) எனவரும். களவறிவுற்றவழிக் கூறிய செய்யுள்: ``யாங்கா குவமோ வணிநுதற் குறுமக டேம்படு சாரற் சிறுதினைப் பெருங்குரல் செவ்வாய்ப் பைங்கிளி கவர நீமற் றெவ்வாய்ச் சென்றனை யவணெனக் கூறி யன்னை யானாள் கழற முன்னின் றருவி யார்க்கும் பெருவரை நாடனை யறியலு மறியேன் காண்டலு மிலனே வெதிர்புனை தட்டையேன் மலர்பூக் கொய்து சுனைபாய்ந் தாடிற்று மிலனென நினைவிலை பொய்ய லந்தோ வாய்த்தனை யதுகேட்டுத் தலையிறைஞ் சினளே யன்னை செலவொழிந் தனையா லணியநம் புனத்தே.’’ (நற். 147) என வரும். தமர்தற்காத்த காரணப் பக்கத்திற்குக் கூறிய செய்யுள்: ``பெருநீ ரழுவத் தெந்தை தந்த’’ என்னுங் களிற்றியானை நிரையுள், ``பல்பூங் கான லல்கினம் வருதல் கவ்வை நல்லணங் 69குற்ற விவ்வூர்க் கொடிதறி பெண்டிர் சொற்கொண் டன்னை கடிகொண் டனளே தோழி பெருந்துறை யெல்லையு மிரவு மென்னாது கல்லென வலவ னாய்ந்த வண்பரி நிலவுமணற் கொட்குமோர் தேருண் டெனவே.’’ (அகம். 20) என வரும். (தன்குறி தள்ளிய தெருளாக் காலை) வந்தவன் பெயர்ந்த வறுங்களம் நோக்கித் தன்பிழைப்பாகத் தழீஇத் தேறியதற்குச் செய்யுள்: ‘இருள்கிழிப்பது போல்’ என்னும் களிற்றியானை நிரையுள், ``வாணடந் தன்ன வழக்கருங் கவலை யுள்ளுந ருட்குங் கல்லடர்ச் சிறுநெறி யருள்புரி நெஞ்சமோ டெஃகுதுணை யாக வந்தோன் கொடியனு மல்லன் றந்த நீதவ றுடையையு மல்லை நின்வயி னானா வரும்படர் செய்த யானே தோழி தவறுடை யேனே.’’ (அகம். 72) என வரும். வழுவின்று... அன்னவுமுளவே என்பது - வழுவின்று நிலைஇய இயற்படுபொருண் முதலாக ‘ஏமஞ்சான்ற உவகை’ யீறாகச் சொல்லப்பட்ட இடங்களில் தன்னிடத்து உரிமையும் அவனிடத்துப் பரத்தைமையும் அன்னவையும் நிகழப்பெறும் என்றவாறு. அன்ன என்பது அவைபோல்வன என்றவாறு. ஓரிடத்துக்கண் என்றதனான் இவ்வாறு எல்லார்மாட்டும் எவ்விடத்தும் நிகழாது என்றவாறாம். எனவே மேற் ‘குறிப்பினும் இடத்தினு மல்லது’ (களவியல். 18) கூற்று நிகழாதென்பதனை மறுத்து ஓரிடத்துக் கூற்று நிகழும் என்றவாறாம். அவற்றுள், வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும் என்பது தலைவனை இயற்பழித்தவழி அவன் குற்றமிலனாக நிலைநிறுத்தப்பட்ட இயற்படமொழிந்த பொருண்மைக் கண்ணும் தன்வயின் உரிமை தோன்றவும் அவன்வயிற் பரத்தைமை தோன்றவும் கூறும் தலைவி என்றவாறு. இரண்டினுள் ஒன்று தோன்ற உரைக்கு மென்றவாறு. எனவே இரண்டுந் தோன்ற வருவனவு முளவாம். பொழுது மாறும்... சிந்தைக்கண்ணும் என்பது - தலைவன் வருங் காலமும் இடனும் குற்றமுளவாதலான், ஆண்டு அழிவுவந்த சிந்தைக்கண் ணும் தலைமகள் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு. காமஞ் சிறப்பினும் என்பது - தலைமகன்மாட்டு வேட்கை மிகினும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் உரைக்கும் தலைவி என்றவாறு. அவன் அளி சிறப்பினும் என்பது - தலைவன் தலையளி மிக்க வழியும் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு. ஏமஞ்சான்ற உவகைக்கண்ணும் என்பது - ஏமம் பொருந்திய மகிழ்ச்சி வந்துழித் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தைமையும் தோன்றக் கூறும் என்றவாறு. அஃதாவது இவன் வரைந்தல்லது நீங்கான் என்னும் உவகை. அவற்றுள், வழுவின்று நிலைஇய இயற்படு பொருட்கண் கூறியதற்குச் செய்யுள் ``அடும்பம லங்கொடி யுள்புதைந் தொளிப்ப வெண்மலர் விரிக்குந் தண்ணந் துறைவன் கொடிய னாயினு மாக வவனே தோழிஎன் னுயிர்கா வலனே.’’ (ஐங்குறு. தனி. 6) என வரும். பொழுது மாறும் புரைவ தன்மையின் அழிவுதலை வந்த சிந்தையான் தலைவி கூறிய செய்யுள்: ``கொடுவரி வேங்கை யிளைத்துக் கோட்பட்டு மடிசெவி வேழ மிரிய - வடியோசை யஞ்சி யொதுங்கு மதருள்ளி யாரிருட் டுஞ்சா சுடர்க்கொடி கண்.’’ (ஐந்திணையைம். 16) ``வளைவாய்ச் சிறுகிளி விழைதினை கடியச் செல்கென் றோளே யன்னை யெனநீ சொல்லி னெவனாந் தோழி கொல்லை நெடுங்கை 70வன்மான் கடும்பகை யுழந்த குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கு மாரிரு ணடுநாள் வருதி சார னாட வாரலோ வெனவே.’’ (குறுந். 141) என வரும். காம மிக்கவழிக் கூறிய செய்யுள்: ``அம்ம வாழி தோழி நலனே யின்ன தாகுதல் கொடிதே புன்னை யணிமலர் துறைதொறும் விரிக்கு மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.’’ (ஐங்குறு. 117) இது தன்வயின் உரிமை: ``நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந் தினிதடங் கினரே மாக்கண் முனிவின்றி நனந்தலை யுலகமுந் துஞ்சு மோர்யான் மன்ற துஞ்சா தேனே.’’ (குறுந். 6) இஃது அவன்வயிற் பரத்தைமை: ``கொடுந்தா ளலவன் குறையா யிரப்பே மொடுங்கா வோலிகடற் சேர்ப்பன் - னெடுந்தேர் கடந்த வழியையெங் கண்ணாரக் காண நடந்து சிதையாதி நீ.’’ (ஐந்திணையைம். 42) அவனளி சிறந்தவழித்தலைவி கூறிய செய்யுள்: ``சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி வான மீனின் வயின்வயி னிமைக்கு மோங்குமலை நாடன் சாந்துபுல ரகல முள்ளி னுண்ணோய் மல்கும் புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய்.’’ (குறுந். 150) ``மன்றப் பலவின் சுளைவிழை தீங்கனி யுண்டுவந்து மந்தி முலைவருடக் கன்றமர்ந் தாமா கறக்கு மணிமலை நாடனை யாமாப் பிரித லிலம்.’’ (ஐந்திணையெழு. 4) என வரும். ஏமஞ் சான்ற உவகைக்கண் கூறிய செய்யுள்: ``ஓங்க லிறுவரைமேற் காந்தள் கடிகவினப் பாம்பென வோடி யுருமிடிப்பக் கண்டிரங்கும் பூங்குன்ற நாடன் புணர்ந்தவந் நாள்போல வீங்கு நெகிழ்ந்த வளை.’’ (திணைமொழி. 3) என வரும். பரத்தைமை தோன்ற வந்ததற்குச் செய்யுள்: ``கணங்கொ ளிடுமணற் காவி வருந்தப் பிணங்கிரு மோட்ட திரைவந் தழிக்கு மணங்கம ழைம்பாலா ரூடலை யாங்கே வணங்கி யுணர்ப்பான் றுறை.’’ (கலித். 131) என்னும் பாட்டினுள் தானூடினாளாகவும் மகிழ்ந்தவாறும் அவன்வயிற் பரத்தைமை கூறியவாறும் காண்க. இச்சூத்திரத்தாற் சொல்லியது ‘மறைந்தவற் காண்டல்’ முதலாக ஓதப்பட்ட அறுவகைப் பொருண்மையும், ‘கைப்பட்டுக் கலங்கல்’ முதலாகக் ‘கூறியவாயில் கொள்ளாக்காலை’ ஈறாகவரும் மகிழ்ச்சியினான் மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழி எண்ணுதல் சான்ற அருமறையைச் சொல்லுதலும், இவ்வாறும் எண்ணந்தான் உரையாக் காலத்துத் தன்னுயிர் செல்லுமாறு உரைத்தலும், ‘வேற்றுவரைவுவரின் அது மாற்றுதல்’ முதலாகத் ‘தமர்தற் காத்த காரணப் பக்கம்’ ஈறாகத்தன் குறிபிழைக்க நிற்கப் பெறும் என்றலும், அவ்வழித் தலைவன் வந்து பெயர்ந்துழிக் கலக்க மின்றித் தெளிதலும், ‘வழுவின்று நிலைஇய இயற்படு பொருள்’ முதலாக ‘ஏமம் சான்ற உவகை’ ஈறாகத்தான் உரியளாகிய நெறியும் தலைவன் அயலாகிய நிலையும் போல வரிற் சொல்லப்பெறும் என்றலும் எனக் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட்டவாறாகத் தலைவிக்குக் கூற்று நிகழுமிடம் உணர்த்தியவாறு. (21) 110. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினு முரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணுந் தானே கூறுங் காலமு முளவே. இதுவும் தலைவிமாட்டுச் சொல் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து நீங்குகின்றான், ‘இன்ன நாள் வரைந்து கொள்வல்’ எனக் கூறித் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது தணந்தவழி, யதனைத் தோழி ஐயப்படுங் குறிப்புத் தோன்றாமை மறைத்தொழுகிய தலைவி அவன் வருந்துணையும் ஆற்றாது வருத்தமுறினும், வரையாத நாளின்கண் மறைந்தொழுகாநின்ற தலைவன் செவிலி முதலாயினாரை முட்டினவழியும், ``இவ்வொழுக்கத்தினை நின் தோழிக்கு உரை’’யெனத்தலைவன் கூறியவழியும், தலைவி தானே கூறுங் காலமும் உள என்றவாறு. உம்மை எதிர்மறையாதலாற் கூறாமை பெரும்பான்மை. காலமும் என்றது இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாங் காலம். அக்காலத்துத் தோழி மதியுடம்படாம லறிவிக்கும் என்றவாறு. இனி, வரைவிடைவைத்த காலத்து வருத்தமுற்றவழிக் கூறிய செய்யுள்: ``புனவன் 71றுடவைப் பொன்போற் சிறுதினைக் கடியுண் கடவுட் கிட்ட சில்குர லறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் வெறியுறு வனப்பின் வேர்த்துற்று நடுங்குஞ் சூர்மலை நாடன் கேண்மை நீர்மலி கண்ணொடு நினைப்பா கின்றே.’’ (குறுந். 105) என வரும். வரையா நாளிடை வந்தோன் முட்டியவழித் தலைவி கூறியதற்குச் செய்யுள்: ``தாழை குருகீனுந் தண்ணந் துறைவனை மாழைமா னோக்கின் மடமொழி நூழை நுழையு மடமகன் யார்கொலென் றன்னை புழையு மடைத்தாள் கதவு.’’ (கைந்நிலை. 59) எனவும், ``அறியா மையி னன்னை யஞ்சிக் குழையன் கோதையன் குறும்பைந் தொடியன் விழவயர் துணங்கை தழுவுகஞ் செல்ல நெடுநிமிர் தெருவிற் கைபுகு 72கொடுமிடை நொதும லாளன் கதுமெனத் தாக்கலிற் கேட்டோ ருளர்கொ லில்லைகொல் போற்றென 73யாணது பசலை யென்றன னதனெதிர் 74நாணிலை யெலுவ வென்றுவந் திசினே செறுநரும் விழையுஞ் செம்ம லோனென நறுநுத லரிவை போற்றேன் சிறுமை பெருமையிற் காணாது துணிந்தே.’’ (நற். 50) எனவும் வரும். (இதன்கண் என்றானென ஒரு சொல் வருவிக்க.) உரையெனத் தோழிக்கு உரைத்தற்குச் செய்யுள் ``பொன்னிணர் வேங்கை கவினிய பூம்பொழிலு ணன்மலை நாட னலம்புனைய - மென்முலையாய் போயின திந்நாள் புனத்து மறையினா லேயினா ரின்னு மினிது.’’ (ஐந்திணையைம். 11) என வரும். இன்னும், ‘உரையெனத் தோழிக் குரைத்தற்கண்ணும்’ என்பதற்குத்தலைவற்கு உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் என்றுமாம். உதாரணம்: ``என்னைகொ றோழி யவர்கண்ணு நன்கில்லை யன்னை முகனு 75மதுவாகும் பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல தில்லென் றுரை’’ (ஐந்திணையெழு. 58) என வரும். (22) 111. உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவ னுள்வழிப் படினுந் தாவி னன்மொழி கிழவி கிளப்பினு மாவகை பிறவுந் தோன்றுமன் பொருளே. இதுவும் அது. உயிரினும் நாண் சிறந்தது; அதனினுங் குற்றந்தீர்ந்த காட்சியினையுடைய கற்புச் சிறந்தது; என முன்னோர் கூற்றை யுட்கொண்டு தலைவனுள்ள விடத்துச் 76செல்லலும் வருத்த மில்லாச் சொல்லைத் தலைவி சொல்லுதலுமாகிய அவ்வகை பிறவுந் தோன்றும்; அவை பொருளாம் என்றவாறு. மன் ஆக்கத்தின்கண் வந்தது. எனவே இவ்வாறு செய்தல் பொருளல்ல என்று கூறற்க என்றவாறு. இதனுள் நாணத்தினும் கற்புச் சிறந்த தென்றவாறு. நொதுமலர் வரைவு நோக்கிக் கூறுவது : ``அளிதோ தானே நாணே நம்மொடு நனிநீ டுழந்தன்று மன்னே யினியே வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை தீம்புன னெரிதர வீழ்ந்துக் காஅங்குத் தாங்கு மளவைத் தாங்கிக் காம நெரிதரக் கைந்நில் லாதே.’’ (குறுந். 149) ``கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி யீங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே யெழுவினி வாழியென் னெஞ்சே முனாஅது குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்தா ராயினும் வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே.’’ (குறுந். 11) இது காமக்கிழவ னுள்வழிப் படுதல். தாவில் நன்மொழி கூறியதற்குச் செய்யுள்: ``மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ மென்ப யாவதுங் கொடிய ரல்லரெங் குன்றுகெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழிய ஞெகிழ்ந்தன்று தடமென் றோளே.’’ (குறுந். 87) என வரும். (23) 112. நாற்றமுந் தோற்றமு மொழுக்கமு முண்டியுஞ் செய்வினை மறைப்பினுஞ் செலவினும் பயில்வினும் புணர்ச்சி யெதிர்ப்பா டுள்ளுறுத்து வரூஉ முணர்ச்சி யேழினு முணர்ந்த பின்றை மெய்யினும் பொய்யினும் வழிநிலை பிழையாது பல்வேறு கவர்பொரு ணாட்டத் தானுங் குறையுறற் கெதிரிய கிழவனை மறையுறப் பெருமையிற் பெயர்ப்பினு முலகுரைத் தொழிப்பினு மருமையி னகற்சியு மவளறி வுறுத்துப் பின்வா வென்றலும் பேதைமை யூட்டலு முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துரைத்துலு மஞ்சியச் சுறுத்துலு முரைத்துழிக் கூட்டமொ டெஞ்சாது கிளந்த விருநான்கு கிளவியும் வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் புணர்ந்தபின் னவன்வயின் வணங்கற் கண்ணுங் குறைந்தவட் படரினும் மறைந்தவ ளருகத் தன்னொடு மவளொடு முன்னமுன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினு நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினு மெண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் புணர்ச்சி வேண்டினும் வேண்டாப் பிரிவினும் வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தினும் புணர்ந்துழி யுணர்ந்த வறிமடச் சிறப்பினு மோம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணுஞ் செங்கடு மொழியாற் சிதைவுடைத் தாயினு மென்புநெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ யன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணு மாற்றது தீமை யறிவுறு கலக்கமுங் காப்பின் கடுமை கையற வரினுங் களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி யுளப்படப் பிறவு நாடு மூரு மில்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பு மிறப்ப நோக்கி யவன்வயிற் றோன்றிய கிளவியொடு தொகைஇ யனைநிலை வகையான் வரைதல் 77வேண்டினு மையச் செய்கை தாய்க்கெதிர் மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினு மவள்விலங் குறினுங் களம்பெறக் காட்டினும் பிறன்வரை வாயினு மவன்வரைவு மறுப்பினும் முன்னிலை யறனெனப் படுதலென் றிருவகைப் புரைதீர் கிளவி தாயிடைப் புகுப்பினும் வரைவுடன் பட்டோர்க் கடாவல் 78வேண்டினு மாங்கதன் றன்மையின் 79வன்புறை யுளப்படப் பாங்குற வந்த நாலெட்டு வகையினுந் தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன. என்றது, களவொழுக்கத்தின்கண் தோழிக்குரிய கிளவியெல்லாம் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. நாற்றமு.... நாட்டத்தானும் என்பது - நாற்றமுதலாகச் சொல்லப்பட்ட ஏழினானும் புணர்ச்சிக்கு முந்துற்ற நிலைமையை உட்கொண்டு வரும் மனநிகழ்ச்சி யேழினும் புணர்ச்சியுண்மை யறிந்த பின்றை மெய்யினானும் பொய்யினானுந் தலைவி குலத்தினுள்ளார் நிலைமையிற் பிழையாது பலவாகி வேறுபட்ட கவர்த்த பொருண்மை யையுடைய ஆராய்தற்கண்ணும் என்றவாறு. நாற்றம் என்பது - பூவினானும் சாந்தினானும் தலைவன் மாட்டுளதாகிய கலவியான் தலைவிமாட்டுளதாய நாறுதல். தோற்றம் என்பது - புணர்ச்சியான் வரும் பொற்பு. ஒழுக்கம் என்பது - ஆயத்தாரொடு வேண்டியவா றொழுகுத லின்றித் தன்னைப் பேணியொழுகுதல். உண்டி என்பது - உண்ணும் அளவிற் குறைதல். செய்வினை மறைத்தல் ஆவது - பூக்கொய்தலும் புனலாடலும் போலும் வினைகளைத் தோழியை மறைத்துத் தனித்து நிகழ்த்துதல். அன்றியும் தலைவன் செய்த புணர்ச்சி யாகிய கருமத்தினைப் புலப்பட விடாது தோழியை மறைத்தலும் என்றுமாம். செலவினும் என்பது - எத்திசையினும் சென்று விளையாடு வாள் ஒரு திசையை நோக்கிச் சேறல். பயில்வினும் என்பது - ஓரிடத்துப் பயிலுதல். புணர்ச்சி எதிர்ப்பாடு ஆவது - புணர்வதற்கு முந்துற்ற காலம். உள்ளுறுத்துல் ஆவது - உட்கோடல். உணர்ச்சி ஏழாவது - நாற்ற முதலாகச் சொல்லப்பட்ட வற்றான் வரும் மனநிகழ்ச்சி ஏழும். பல்வேறு கவர்பொருள் நாட்டம் என்பது - ஒன்றோ டொன்று ஒவ்வாத வேறுபட்டனவாகி இருபொருள் பயக்கும் சொற்களானே யாராய்தல். அவற்றுள் சில வருமாறு: ``கண்ணுஞ் சேயரி பரந்தன்று நுதலு நுண்வியர் பொறித்து வண்டார்க் கும்மே வாங்கமை மென்றோண் மடந்தை யாங்கா யினள்கொ லென்னுமென் நெஞ்சே.’’ (சிற்றெட்டகம்) இது தலைவி தோற்றங்கண்டு பாங்கி கூறியது. பிறவும் அன்ன. குறையுறற் கெதிரிய கிழவனை மறையுற என்பது - களவொழுக் கத்தின்கண்ணே யுறுதற்காகத் தனது குறையைச் சொல்ல வேண்டி எதிர்ப்பட்ட தலைவனை யென்றவாறு. ‘மறையுற’ என்பதனை முன்னே கூட்டுக. பெருமையிற் பெயர்ப்பினும் என்பது - தலைவனது பெருமையான் நீக்கலும் என்றவாறு. ``இவளே, கான னண்ணிய காமர் சிறுகுடி நீனிறப் பெருங்கடல் கலங்க வுள்புக்கு மீனெறி பரதவர் மகளே நீயே நெடுங்கொடி நுடங்கு நியம மூதூர்க் கடுந்தேர்ச் செல்வர் காதன் மகனே நிணச்சுற வுறுத்த வுணங்கல் வேண்டி யினப்புள் ளோப்பு மெமக்குநல னெவனோ புலவு நாறுதுஞ் செலநின் றீமோ பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ வன்றே யெம்ம னோரிற் செம்மலு முடைத்தே.’’ (நற். 45) என வரும். உலகுரைத் தொழித்தல் என்பது - உலகத்தார் மகட்கொள்ளுமாறு கொள்ளெனக் கூறுதல். ``கோடீ ரெல்வளைக் கொழுமடற் கூந்த லாய்தொடி மடவரல் வேண்டுதி யாயிற் றெண்கழிச் சேயிறாற் படூஉந் தண்கடற் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ.’’ (ஐங்குறு. 196) இன்னும் ‘உலகுரைத் தொழித்தல்’ என்றதனாற் கையுறை மறையுங் கொள்க. ``நீடுநீர்க் கான னெருநலு நித்திலங்கொண் டைய வந்தீர் கோடுயர் வெண்மணற் கொற்கையெம் மூரிவற்றாற் குறையி லேமியா மாடுங் கழங்கு மணிவிளக்கு மம்மனையும் பாடி யவைப்பனவும் பந்தாடப் படுவனவும் பனிநீர் முத்தம்.’’ அருமையின் அகற்சியும் என்பது - தலைவியைக் கிட்டுதற்கு அருமை கூறி யகற்றுதல். உதாரணம்: ``நெருநலு முன்னா ளெல்லையு மோர்சிறைப் புதுவை யாகலி னதற்கெய்த நாணி நேரிறை வளைத்தோணின் றோழி செய்த வாருயிர் வருத்தங் களையா யோவென வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை யெம்பதத் தெளிய ளல்ல ளெமக்கோர் கட்காண் கடவு ளல்லளோ பெரும வாய்கோன் மிளகின் மலயங் கொழுங்கொடி துஞ்சுபுலி வரிப்புறந் தைவரும் மஞ்சுசூழ் மணிவரை மன்னவன் மகளே.’’ என வரும். அவளறி வுறுத்துப் பின்வா வென்றலும் என்பது - நின்னாற் காதலிக்கப்பட்டாட்குச் சென்று அறிவித்துப் பின்னர் என்மாட்டு வா என்றவாறு. அவற்றுள், நீயே சென்று அறிவி என்றதற்குச் செய்யுள்: ``தன்னையுந் தானாணுஞ் சாயலாட் கீதுரைப்பி னென்னையு நாணப் படுங்கண்டா - யென்னைய வேயேர்மென் றோளிக்கு வேறா யினியொருநா ணீயே யுரைத்து விடு.’’ பின்வா வென்றற்குச் செய்யுள்: ``நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட கோள்வேங்கை போற்கொடிய ரென்னையர் - கோள்வேங்கை யன்னையால் வேங்கை யருந்தழையா மேலாமைக் கென்னையோ நாளை யெளிது.’’ (திணைமாலை. 20) என வரும். பேதைமை யூட்டல் என்பது - நேரினும் அவள் அறிவாளொருத்தி யல்லள் என்று தலைவற்குக் கூறல். உதாரணம்: ``நறுந்தண் டகரம் வகுள மிவற்றை வெறும்புதல்போல் வேண்டாது வெட்டி - யெறிந்துழுது செந்தினை வித்துவார் தங்கை பிறர்நோய்க்கு நொந்தினைய வல்லளோ நோக்கு.’’ (திணைமாலை. 24) இன்னும், பேதைமை யூட்டல் என்பதனால் தோழி தான் அறியாள் போலக் கூறுதலுங் கொள்க. உதாரணம்: ``புன்றலை மந்திக் 80கல்லா வன்பறழ் குன்றுழை நண்ணிய முன்றிற் போகா தெரியகைந் தன்ன வீததை யிணர வேங்கையம் படுசினைப் பொருந்திக் கைதைய தேம்பெய் தீம்பால் வெளவலிற் கொச்சிடி யெழுதெழில் சிதைய வழுத கண்ணே தேர்வண் சோழர் குடந்தை வாயின் 81மாரியங் கிடங்கி னீரிய மலர்ந்த பெயலுறு நீலம் 82போன்றன விரலே 83ரபாஅ யவ்வயி றலைத்தலின் னானா தேர்மழை தவழுங் கோடுயர் பொதியி னோங்கிருஞ் சிலம்பிற் பூத்த காந்தளங் கொழுமுகை போன்றன சிவந்தே.’’ (நற். 379) என வரும். முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்துரைத்தலும் - என்பது முன்னுறு புணர்ச்சி முறையே நிறுத்துக் கூறலும் என்றவாறு. நிறுத்துக் கூறலாவது நீங்கவிடாது உடன்பட்டுக் கூறல். இன்னும், முன்பு கூடினாற் போலக் கூட வமையுமென்று கூறுதல். உதாரணம்: வந்தவழிக் காண்க. அஞ்சி அச்சுறுத்தலும் என்பது - தான் அச்சமுற்று அஞ்சின தன்மையைத் தலைவற்கு அறிவித்தலும் என்றவாறு. அது யாய் வருவளென்றா னும் தமையன்மார் வருவ ரென்றானும் காவலர் வருவரென்றானும் கூறுதல். உதாரணம்: ``யானை யுழலு மணிகிளர் நீள்வரைக் கானக வாழ்க்கைக் குறவர் மகளிரே மேன லுழையர் வரவுமற் றென்னைகொல் காணினுங் காய்வ ரெமர்.’’ (திணைமொழி. 6) என வரும். உரைத்துழிக் கூட்டமோடு என்பது - நின்னாற் காதலிக்கப்பட்டாள் யாவள் என வினாயவழி, இத்தன்மையாள் எனச் சொல்லக் கேட்ட தோழி, அவளும் நின் தன்மையாள் என இவனொடு கூட்டி யுரைத்தலும் என்றவாறு. ஒடு எண்ணின்கண் வந்தது. உதாரணம்: ``நெறிநீ ரிருங்கழி நீலமுஞ் சூடாள் பொறிமாண் வரியலவ னாட்டலு மாட்டா டிருநுதல் வேரரும்பச் சிந்தியா நின்றாட் செறிநீர்த்தண் சேர்ப்பயா னென்சொல்லிச் சேர்கேன்.’’ என வரும். எஞ்சாது கிளந்த இருநான்கு கிளவியும் என்பது - ஒழியாது கூறிய எட்டுக் கூற்றும் என்றவாறு. முன்னைப் புணர்ச்சிமுறை யறிந்தா ளாதலின் அவன் இரந்து பின்னின்றுழி ஈண்டுக் கூறிய வெல்லாம் அவன் உள்ளக் கருத்தறியுந் துணையும் தழீஇக்கொண்டு கூறினாளல்லது ஒழித்தல் பொருளாகக் கூறாள் என்பது கொள்ளப்படும். இவை எட்டும் குறையுற வுணர்தலின் பகுதி. வந்த கிழவனை மாயஞ் செப்பிப் பொறுத்த காரணங் குறித்த காலையும் என்பது - மாயம் சொல்லிவந்த கிழவனைத் தலைவி பொறுத்த காரணம் குறித்த காலையும் தோழி கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழித் தலைவன் குறிப்பும் தலைவி குறிப்பும் உணர்தலும் தலைவன் கேட்டதற்கு மாற்றம் கூறுதலும் உளவாம். மாயம் செப்பி வந்த கிழவன் என மாற்றுக. மாயம் செப்புதலாவது யானை போந்ததோ மான் போந்ததோ எனக் கூறல். ``இரந்து குறையுறாது கிழவியுந் தோழியு மோர்ங்குதலைப் பெய்த செவ்வி நோக்கிப் பதியும் பெயரும் பிறவும் வினாஅய்ப் புதுவோன் போலப் பொருந்துபு கிளந்து மதியுடம் படுத்தற்கு முரிய னென்ப.’’ (இறையனாரகப். 6) என்பதனாற் குறையுற வுணர்தல் நிகழ்ந்துழி இது நிகழாதென்று கொள்க. அதன்கட் குறிப்புணர்வதற்குச் செய்யுள்: ``வேங்கை மலரும் வெறிகமழ் தண்சிலம்பின் வாங்கமை மென்றோட் குறவர் மகளிரேஞ் சோர்ந்த குருதி யொழுகமற் றிப்புனத்திற் போந்த திலையக் களிறு’’ (திணைமொழி. 8) எனவும், ``நெடுந்தேர் கடைஇத் தமியராய் நின்று கடுங்களிறு காணீரோ வென்றீர் - கொடுங்குழையார் யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத்து ளேனற் கிளிகடிகு வார்.’’ எனவும், ``ஏனல் காவ லிவளு மல்லள் மான்வழி வருகுவ னிவனு மல்ல னரந்தங் கண்ணி யிவனோ டிவளிடைக் கரந்த வுள்ளமொடு கருதியது பிறிதே நம்முன் னாணினர் போலத் தம்முண் மதுமறைந் துண்டோர் மகிழ்ச்சி போல வுள்ளத் துள்ளே மகிழ்ப சொல்லு மாடுப கண்ணி னானே.’’ எனவும், குறிப்புணர்ந்து இருவரு முள்வழி அவன் வரவுணர்தல். புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்ணும் என்பது - மேற் சொல்லப்பட்ட மூவகையானும் புணர்ச்சியுண்மை பொருந்தியபின் தலைவன்கண் தாழ நிற்றற்கண்ணும் என்றவாறு. அது நீ கருதியது முடிக்கற்பாலை எனவும், நீ இவளைப் பாதுகாத்தல் வேண்டுமெனவும் இவ்வகை கூறுதல். உதாரணம்: ``அரவின் பொறியு மணங்கும் புணர்ந்த வுரவுவின் மேலசை கையை யெராங்கு நிரைவளை முன்கையென் றோழியை நோக்கிப் படுகிளி பாயும் பசுங்குர லேனல் கடிதன் மறப்பித்தா யாயி னினிநீ நெடிதுள்ள லோம்புதல் வேண்டும் ............. ............. ............... ............ கடுமா கடவுறூஉங் கோல்போ லெனைத்துங் கொடுமையிலை யாவ தறிந்து மடுப்பல் வழைவளர் சாரல் 84வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி யுழையிற் 85பிரியிற் பிரியு மிழையணி யல்குலென் றோழியது கவினே.’’ (கலித். 50) என வரும். குறைந்து அவட் படரினும் என்பது - மேல் தலைவன் புணர்ச்சியுண்மை யறிந்து தாழநின்ற தோழி தானுங் குறையுற்றுத் தலைவிமாட்டுச் செல்லுதற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. இக் கிளவி இரந்து பின்னின்ற தலைவன் உள்ளப் புணர்ச்சியுள் வழியும் குறையுற்று மெய்யுறு புணர்ச்சி வேண்டித் தலைவிமாட்டுச் செல்லுங் காலத்தும் ஒக்கும். உதாரணம்: ``வளையணி முன்கை வாலெயிற் றின்னகை யிளைய ராடுந் தளையவிழ் கானற் 86குறுந்துறை வினவி நின்ற நெடுந்தே ரண்ணலைக் கண்டிகும் யாமே.’’ (ஐங்குறு. 198) என வரும். மறைந்து அவள் அருகத்தன்னொடும் அவளொடும் முன்னம் முன் தளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும் என்பது - மேல் தலைவன்மாட்டுத் தோழி குறை நயப்பிக்கச் சென்றவழித் தோழி சொல்லும் குறிப்புமொழிக்கு அவள் மறைத்து அரியளாகத் தன்னொடும் அவளொடும் குறிப்பினை முன்னர்த் தடுத்துக்கொண்டு வழிபட்டு முயலும் பல வேறு பக்கத்தின்கண்ணும் தோழிகூற்று நிகழும் என்றவாறு. மறைத்துலாவது - தன் மனத்து நிகழ்ச்சியை ஒளித்தல். அருகுதலாவது - இசைவிலாதாரைப் போல நிற்றல். முன்னமுன் தளைதலாவது கூற்றினானன்றிக் குறிப்பினானுணர்த்தல். முதன்மூன் றளைஇ என்று பாடமாயின், மனத்தினானும் மொழியினானும் உடம்பினானும் (ஒருங்கே) அளவி என்றுமாம். பின்னிலை நிகழும் பல்வேறு மருங்காவது - வழிபாடு கொடுவருங் கூற்று வேறுபாடு. எனவே தலைவிக்குத் தழையும் கண்ணியும் கொண்டு ஒருவன் நம் புனத்தயல் வாராநின்றான் எனவும், அவன் என்மாட்டு ஒரு குறையுடையன் போலும் எனவும், அருளுவார்க்கு இஃது இடமெனவும், அவன் குறைமறுப்பின் மடலேறுவல் எனக் கூறிப் போந்தான் பின்பு வரக்கண்டிலேன் எனவும், இந்நிகரன கூறுதல். அவை வருமாறு: ``புனைபூந் தழையல்குற் பொன்னன்னாய் சாரற் றினைகாத் திருந்தேம்யா மாக வினைவாய்த்து மாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத் தாம்வினவ லுற்றதொன் றுண்டு.’’ (ஐந்திணையைம். 14) எனவும், ``நெய்யொடு மயக்கிய வுழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் றலையது செயலை(யம் பகைத்)தழை வாடு மன்னாய்.’’ (ஐங்குறு. 211) எனவும், ``இலைசூழ்செங் காந்த ளெரிவாய் முகையவிழ்த்த வீர்ந்தண் வாடை கொலைவே னெடுங்கட் கொடிச்சி கதுப்புளருங் குன்றநாட னுலைபடு வெந்நோ யுழக்குமா லந்தோ முலையிடை நேர்பவர் நேரு 87மிடனிதுமொய் குழலே.’’ எனவும், ``புணர்துணையோ டாடும் பொறியலவ னோக்கி யிணர்ததையும் பூங்கான லென்னையு நோக்கி யுணர்வொழியப் போன வொலிதிரைநீர்ச் சேர்ப்பன் வணர்சுரி யைம்பாலாய் வண்ண முணரேனால்.’’ (சிலப்.கானல். 31) எனவும், ``தன்குறையீ தென்னான் றழைகொணருந் தண்சிலம்பி னின்குறை யேநா னினைப்பினும் - பொன்குறையு நாள்வேங்கை நீழலு நண்ணா னெவன்கொலோ கோள்வேங்கை யன்னான் குறிப்பு.’’ (திணைமாலை. 31) எனவும், ``ஒருநாள் வாரல னிருநாள் வாரலன் பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை வரைமுதிர் தேனிற் போகி யோனே யாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ வேறுபுல நன்னாட்டுப் பெய்த வேறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே.’’ (குறுந். 176) எனவும், ``மாயோ னன்ன மால்வரைக் கவாஅன் வாலியோ னன்ன வயங்குவெள் ளருவி யம்மலைக் கிழவ 88னந்நயந் தென்றும் வருந்தின னென்பதோர் வாய்ச்சொற் றேறாய் நீயுங் கண்டு நுமரொ டெண்ணி யறிவறிந் தளவல் வேண்டு மறுதரற் கரிய வாழி தோழி பெரியோர் நாடி நட்பி னல்லது நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே.’’ (நற். 32) எனவும் வரும். நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும் என்பது - தலைவி குறை நயந்தமை பெற்றவழி அத்தலைவி நயம் பொருந்தும் இடத்தினுங் கூற்று நிகழும் என்றவாறு. தலைமகள் குறைநயந்தமை தலைமகற்குக் கூறிய செய்யுள்: ``நெய்தற் பரப்பிற் பாவை கிடப்பன நின்குறி வந்தன னியறேர்க் கொண்க செல்கஞ் செலவியங் கொண்மோ வைகலு மார லருந்த வயிற்ற நாரை மிதிக்கு மென்மக ணுதலே.’’ (குறுந். 114) எனவும், ``கடும்புலால் புன்னை கடியுந் துறைவ வடும்புலால் புட்கடிவாள் புக்க - தடம்புலாந் தாழைமா ஞாழற் றதைந்துயர்ந்த தாழ்பொழிலே யேழைமா னோக்கி யிடம்.’’ (திணைமாலை. 44) எனவும் வரும். இன்னும் (நயம்புரி யிட)த்தும் என்றதனால் களவொழுக்கம் நிகழா நின்றுழிக் கூறுங் கூற்றும் ஈண்டே கொள்க. அது தலைவன் வருமெனவும் வந்தா னெனவுங் கூறுதலும் தலைமக(ன் பகற்குறிக்கண்) நீங்கியவழிக் கூறுதலும் எனப் பலவாம். ``கவர்பரி நெடுந்தேர் மணியு மிசைக்கும் பெயர்பட விலங்கிய விளையரு மொலிப்பர் கடலாடு வியலணிப் பொலிந்த நறுந்தழைத் (திதலை யல்கு)ல் நலம்பா ராட்டிய வருமே தோழி வார்மணற் சேர்ப்ப னிறைபட வாங்கிய முழவுமுதற் புன்னை மாவரை மறைகம் வம்மதி பானாட் பூவிரி கானற் புணர்குறி வந்துநம் மெல்லிணர் நறும்பொழிற் காணா வல்லரும் படரே காண்கநாஞ் சிறிதே.’’ (நற். 307) இது வருகின்றான் எனக் கூறியது. ``நிலவும் மறைந்தன் றிருளும் பட்டன் றோவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை யன்ன நிற்ப்புறங் காக்குஞ் சிறந்த செல்வத் தன்னையுந் துஞ்சினள் கெடுத்துப்பெறு நன்கல மெடுத்துக்கொண் டாங்கு நன்மார் படைய முயங்கி 89மென்மெலக் கண்டனம் வருகஞ் சென்மோ தோழி கீழு மேலுங் காப்போர் 90நீத்து 91வறுந்தலைப் பெயர்களிறு போலத் தனியன் வந்தோன் பனியலை நீயே.’’ (நற். 182) இது வந்தான் எனக் கூறியது. ``நெய்தல் கூம்ப (நிழல்குண)க் கொழுகக் கல்சேர் மண்டிலஞ் சிவந்து சினந்தணியப் பல்பூங் கானலும் பல்குற் றன்றே யினமணி யொலிப்பப் 92பொழுதுபடப் பூட்டி மெய்ம்மலி காமத் தியாந்தொழு தொழியத் தேருஞ் செல்புற மறையு மூரோ டியாங்கா வதுகொ றானே தேம்பட வோதைவண் டிமிருங் கோதை மார்பின் மின்னிவர் பெரும்பூட் கொண்கனொ டின்னகை மேவிநா மாடிய பொழிலே.’’ (நற். 187) இது பகற்குறிக்கண் தலைவன் நீங்கியவழிக் கூறியது. எண்ணரும் பன்னகை கண்ணிய வகையினும் என்பது எண்ணுதற்கு அரிய பல நகையாட்(டுக்களைத் தலைவனிடம் குறி)த்த வகையுங் கூற்று நிகழும் என்றவாறு. அஃது அலராகுமென்று கூறுதல். இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாயினால் அவ(ர் தூற்றி நகைப்பர)hகலின் நகையாயிற்று. உதாரணம்: ``நிறையரியர் மன்னெளிய ரென்னாது காம மறையிறந்து மன்று படும்.’’ (குறள். 1138) ``அன்னையு மறிந்தன ளலரு மாயின்று நன்மனை நெடுநகர் புலம்புகொள வுயிர்க்கு மின்னா வாடையு மலையு நும்மூர்ச் செல்க 93வெழுகமோ தெய்யோ.’’ (ஐங்குறு. 236) எனவும் வரும். புணர்ச்சி வேண்டினும் என்பது - மேற்சொல்லப்பட்ட பல்லாற்றானும் தலைவற் கறிவுறுத்தவழிப் பின்னும் புணர்ச்சி வேண்டினும் ஆண்டுத் தோழி கூற்று நிகழும் என்றவாறு. ``நெய்யா லெரிநுதுப்போ மென்றற்றாற் கவ்வையாற் காம நுதுப்பே மெனல்.’’ (குறள். 1148) ``இவளே, நின்சொற் கொண்ட வென்சொற் றேறிப் பசுநனை ஞாழற் பல்கிளை யொருசிறைப் புதுநல னிழந்து புலம்புமா ருடையள் உதுக்காண் டெய்ய வுள்ளல் வேண்டும் நிலவு மிருளும் போலப் புலவுத்திரைக் கடலுங் கானலுந் தோன்று மடறாழ் பெண்ணையெஞ் சிறுநல் லூரே.’’ (குறுந். 81) இது பின்னும் புணர்ச்சி வேண்டிய தலைவற்கு இடமுணர்த்தியது. இரவு வருவானைப் பகல் வாவென்றலும் பகல் வருவானை இரவு வாவென்றலுங் குறிபெயர்த்தலும் எல்லாம் ஈண்டே கொள்க. ``ஊர்க்கு மணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்து மன்று சிறுகான் யாறே யிரைதேர் வெண்குரு கல்ல தியாவதுந் துன்னல் போகின்றாற் பொழிலே யாமெங் கூழைக் கெருமணங் கொணர்கஞ் சேறு மாண்டும் வருகுவள் பெரும்பே தையே.’’ (குறுந். 113) இது பகற்குறி நேர்ந்தது. ஆண்டுத்தலைவிக்குக் கூறுமாறு: ``ஒலிவெள் ளருவி யோங்குமலை நாடன் சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித் தொன்முரண் சோருந் துன்னருஞ் சோலை நடுநாள் வருதலும் வரூஉம் வடுநா ணலமே தோழி நாமே.’’ (குறுந். 88) என வரும். வேண்டாப் பிரிவினும் என்பது - புணர்ச்சி வேண்டாது பிரிவு வேண்டினும் என்றவாறு. இது தலைவன் நெஞ்சினாற் பிரியானென்பதனான் வேண்டாப் பிரிவென்றார். ‘அது தாளாண்’ (105) என்பது அலராகுமென்று அஞ்சி ஒருவழித்தணத்தலும் ஒன்று. அவ்வழித் தலைவிக்கு உரைத்தனவும் 94தலைவற் குரைத்தனவும் உளவாம். அவை வருமாறு: ``இறவுப்புறத் தன்ன பிணர்படு 95தடவுமுதற் சுறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பி னன்ன வரும்புமுதிர்பு நன்மா 96னுளையின் வேறுபடத் தோன்றி விழவுக்களங் கமழு முரவுநீர்ச் சேர்ப்ப வினமணி நெடுந்தேர் பாக னியக்கச் செலீஇய சேறி யாயி னிவளே வருவை யாகிய சின்னாள் வாழா ளாத லறிந்தனை சென்மே.’’ (நற். 19) இது, தலைவன் பிரிவு வேண்டியவழிக் கூறியது. ``சாரற் பலவின் கொழுந்துணர் நறும்பழ மிருங்கல் விடரளை வீழ்ந்தென வெற்பிற் பெருந்தே னிறாலொடு 97சிதறு நாடன் பேரமர் மழைக்கண் கலிழத்தன் சீருடை நன்னாட்டுச் செல்லு மன்னாய்.’’ (ஐங்குறு. 214) இது தலைவிக்கு உரைத்தது. ``கானலம் பெருந்துறைக் 98கலிதிரை திளைக்கும் வானுய ரெறிமண லேறி யானாது காண்கம் வம்மோ தோழி செறிவளை நெகிழ்த்தோ னெறிகட னாடே.’’ (ஐங்குறு. 199) இது தலைவியை யாற்றுவித்தது. ``இருடிணிந் தன்ன வீர்ந்தண் கொழுநிழல் நிலவுக் குவித்தன்ன வெண்மண லொருசிறைக் கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் புலம்ப வின்னும் வாரார் வரூஉம் பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே.’’ (குறுந். 123) எனவும் வரும். வேளாண் பெருநெறி வேண்டிய விடத்தினும் என்பது - வேளாண்மையாவது உபகாரம். பெருநெறியாவது உபகாரமாகிய பெரியநெறி என்க. அதனைத் தோழி தலைவனை வேண்டிக் கோடற் கண்ணும் என்றவாறு. ``நெடுவேண் மார்பி னாரம் போலச் செவ்வாய் வானந் தீண்டிமீ னருந்து பைங்காற் கொக்கி னிறைபறை யுகப்ப வெல்லை பைப்பயக் கழிப்பிக் குடவயிற் கல்சேர்ந் தன்றே பல்கதிர் ஞாயிறு மதரெழின் மழைக்கண் கலிழ விவளே பெருநா ணணிந்த சிறுமென் சாயன் மாணலஞ் சிதைய வேங்கி யானா தழறொடங் கினளே பெரும வதனாற் கழிச்சுறா வெறிந்த புட்டா ளத்திரி நெடுநீ ரிருங்கழிப் பரிமெலிந் தசைய வல்வி லிளையரொ டெல்லிச் செல்லாது 99சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ பெண்ணை யோங்கிய வெண்மணற் படப்பை யன்றி லகவு மாங்கண் சிறுகுர னெய்தலெம் 100பெருங்கழி நாட்டே.’’ (அகம். 120) என்பதும், ``நிலாவி னிலங்கும்’’ என்னும் அகப்பாட்டினுள், ``101சேர்ந்தனிர் செல்குவி ராயின் யாமு மெம்வரை யளவையிற் பெட்குவம் 102நும்மொப் பதுவோமேவரி தெமக்கே.’’ (அகம். 200) என்பதும் கொள்க. இதனாற் பயன் இல்லறம் நடத்தல் வேண்டும் என்பது. புணர்ந்துழி யுணர்ந்த அறிமடச் சிறப்பினும் என்பது - தலைவ னொடு தலைவி புணர்ந்தவழி ஆண்டுப் பொருந்திய அறிவு மடம்பட்ட சிறப்பின்கண்ணும் என்றவாறு. அஃதாவது அல்ல குறிப்படுதல். அவ்வழியும் தோழி கூற்று நிகழும். ``கொடுமுண் மடற்றாழைக் கூம்பவிழ்ந்த வொண்பூ விடையி லிழுதொப்பத் தோன்றிப் - படையெல்லாந் தெய்வங் கமழுந் தெளிகடற் றண்சேர்ப்பன் செய்தான் தெளியாக் குறி.’’ (ஐந்திணையைம். 49) ``இடுமண லெக்க ரகன்கானற் சேர்ப்பன் கடுமான் மணியரவ மென்று - கொடுங்குழையாழ் புள்ளரவங் கேட்டுக் கலிழ்ந்தாள் சிறுகுடியா ருள்ளாய நாணுப வென்று. (ஐந்திணையெழு. 59) ``அம்ம வாழியோ வன்னைநம் படப்பை மின்னேர் நுடங்கிடைக் கின்னிழ லாகிய புன்னை மென்காய் பொருசினை யரிய வாடுவளி தூக்கிய வசைவிற் கொல்லோ தெண்ணீர் பொய்கையுள் வீழ்ந்தென வெண்ணினை யுரைமோ வுணர்குவல் யானே.’’ என வரும். ஓம்படைக் கிளவிப் பாங்கின் கண்ணும் என்பது - ஓம்படுத்துதற் பொருட்பகுதிக்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. அஃதாவது ஒருவழித்தணக்கும்வழி ஓம்படை கூறுதல். ``பெருநன் றாற்றிற் பேணாரு முளரே 103யொருநன் றுடையா ளாயினும் புரிமாண்டு புலவிதீர 104வளிமதி யிலைகவர் பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல் மென்னடை மரையா துஞ்சு நன்மலை நாட நின்னல திலளே.’’ (குறுந். 115) எனவும், ``எறிந்தெமர் தாமுழுத வின்குர லேனன் மறந்துங் கிளியினமும் வாரா - கறங்கருவி மாமலை நாட மடமொழி தன்கேண்மை நீமறவ னெஞ்சத்துட் கொண்டு’’ (ஐந்திணையைம். 18) எனவும் வரும். இதனுள் கிளிகடிய யாம் வாரேம் நீ மறவாதொழிதல் வேண்டு மென்றவாறு. செங்கடு மொழியாற் சிதைவுடைத்தாயினு மென்பு நெகப் பிரிந்தோள் வழிச்சென்று கடைஇ அன்புதலை யடுத்து வன்புறைக் கண்ணும் என்பது - செவ்விய கடிய சொல்லினானே தலைவன் அன்பு சிதைவுடைத்தாயினும் என்புருகுமாறு பிரியப்பட்டவளிடத்துச் சென்று தலைவன் அன்புடைமையின் அளிப்பன் என ஆற்றுவித்த வற்புறுத்தற் கண்ணுந் தோழிகூற்று நிகழும் என்றவாறு. செங்கடுமொழி என்றது கொடிய கடுமொழியே யன்றி மனத்தினான் இனியளாகிக் கூறும் கடுமொழி. அஃதாவது இயற்பழித்தல். அவ்வாறு இயற்பழித்தவழித்தலைவன் அன்பு சிதைவுடைத்தாயினும் என்றவாறு. அன்பு தலையடுத்த வன்புறையாவது தலைவன் இன்றியமையான் என ஆற்றுவித்தல். இயற்பழித்தற்குச் செய்யுள்: ``மாசறக் கழீஇய யானை போலப் பெரும்பெய லுழந்த இரும்பிணர்த் துறுகற் பைத லொருதலை சேக்கு நாடனீடு நோய்தந் தனனே தோழி பசலை யார்ந்தனள் குவளையங் கண்ணே.’’ (குறுந். 13) வன்புறைக்குச் செய்யுள்: ``மகிழ்நன் மார்பே வெய்யை யெனநீ யழியல் வாழி தோழி நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போகிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.’’ (குறுந். 73) ``மெய்யிற் றீரா மேவரு காமமோ டொய்யா யாயினு முரைப்ப றோழி கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே யருவி யான்ற பைங்கா றோறும் மிருவி தோன்றின பலவே நீயே முருகு முரண்கொள்ளுந் தேம்பாய் கண்ணிப் பரியல் னாயொடு பன்மலைப் படரும் வேட்டுவற் பெறலோ 105டமைந்தனை யாழநின் றோட்கெழு தொடலை நுடங்க வெழுந்தெழுந்து கிள்ளைத் தெள்விளி யிடையிடை பயிற்றி யாங்காங் கொழுகா யாயி னன்னை சிறுகிளி கடித றேற்றா ளிவளெனப் பிறர்த்தந்து நிறுக்குவ ளாயி னுறற்கரி தாகுமவன் மலர்ந்த மார்பே.’’ (அகம். 28) ஆற்றுவித்தற்குச் செய்யுள்: ``குறுங்கை இரும்புலி கோள்வ லேற்றை நெடும்புதற் கானத்து மடப்பிடி யீன்ற நடுங்குநடைக் குழவிகொளீஇய 106பலவின் பழந்தூங்கு கொழுநிழ லொளிக்கு நாடற்குக் கொய்திடு தளிரின் வாடி நின் மெய்பிறி தாக லெவன்கொ லன்னாய்.’’ (ஐங்குறு. 216) ``அழிய லாயிழை யன்புபெரி துடையன் பழியு மஞ்சும் பயமலை நாட னில்லா மையே நிலையிற் றாகலி னல்லிசை வேட்ட நயனுடைய நெஞ்சிற் கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத் தங்குதற் குரிய தன்றுநின் அங்கலுழ் மேனிப் பாஅய பசப்பே.’’ (குறுந். 143) எனவும், ``பெருங்கை யிருங்களி றைவன மாந்திக் கருங்கான் மராம்பொழிற் பாசடைத் துஞ்சுஞ் சுரும்பிமிர் சோலை மலைநாடன் கேண்மை பொருந்தினார்க் கேமாப் புடைத்து.’’ (ஐந்திணையெழு. 12) எனவும் வரும். ஆற்றது தீமை அறிவுறு கலக்கமும்... வரைதல் வேண்டியும் என்பது - தலைவன் வருநெறியினது தீமையைத்தாங்கள் அறிவுற்றதனான் எய்திய கலக்கத்தானும் காவற் கடுமை வரையிறந்ததனானும் குறியிடமும் காலமுமாகத்தாங்கள் வரைந்த நிலைமையை விலக்கித்தலைவி காதல் மிகுதல் உட்படப் பிறவுந் தலைவனது நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் மிகுதியும் நோக்கித்தலைவன் மாட்டுக் கிளக்குங் கிளவியோடே கூட அத்தன்மைத்தாகிய நிலவகையினானே வரைதல் வேண்டியும் தோழி கூறும் என்றவாறு. அவற்றுள், ஆறின்னாமை கூறியதற்குச் செய்யுள்: ``சாரற் புனத்த பெருங்குரற் சிறுதினைப் பேரமர் மழைக்கட் கொடிச்சி கடியவுஞ் சோலைச் சிறுகிளி யுண்ணு நாட வாரிருள் பெருகின் வாரல் கோட்டுமா வழங்குங் காட்டக நெறியே.’’ (ஐங்குறு. 282) காப்பு வரை யிறந்ததற்குச் செய்யுள்: ``பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத் துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல் கேளே மல்லேங் கேட்டனெம் பெரும வோரி முருங்கப் 107பீலி சாய நன்மயில் வலைப்பட் டாங்கியா முங்குதொறு முயங்கு மறனில் யாயே.’’ (குறுந். 244) எனவும், ``கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றெனக் கைம்மை யுய்யாக் காமர் மந்தி கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி யோங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்குஞ் சார னாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே.’’ (குறுந். 69) எனவும் வரும். காதன் மிகுதி கூறியதற்குச் செய்யுள் ``வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவ ளுயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.’’ (குறுந். 18) ‘பிறவும்’ என்றதனான் தலைவனைப் பழித்தலுங் கொள்க. ``நெடுவரை மிசையது குறுங்கால் வருடை தினைபாய் கிள்ளை வெருவு நாட வல்லைமன் றம்ம பொய்த்தல் வல்லாய் மன்றநீ யல்லது செயலே.’’ (ஐங்குறு. 287) இது, தலைவனைப் பழித்தது. ``குன்றக் குறவன் காதல் மடமகள் மென்றோட் 108கொடிச்சியைப் பெறற்கரிது தில்ல பைம்புறப் படுகிளி யோப்பவவர் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே.’’ (ஐங்குறு. 260) இது, புனக்காவலினி இன்றென்றது. ``கொடிச்சி யின்குரல் 109கிளைசெத் தடுக்கத்துப் பைங்குர லேனற் படர்தருங் கிளியெனக் காவலுங் கடியுநர் போல்வர் மாமலை நாட வரைந்தனை கொண்மே.’’ (ஐங்குறு. 289) இது, குறவரியல்பு உணர்த்தி வரைக வென்றது. ``வெறிகமழ் வெற்பனெம் மெய்ந்நீர்மை கொண்ட தறியாள்மற் 110றன்னோ வணங்கணங்கிற் றென்று 111மறியீர்த்துதிரந்தூய் வேலற் றரீஇ வெறியோ டலம்வரும் யாய்.’’ (ஐந்திணையைம். 20) இது, வெறி யச்சுறுத்தியது. ``இனமீ னிருங்கழி யோத 112முலாவ மணிநீர் பரிக்குந் துறைவ தகுமோ குணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்க நினைநீர்மை யில்லா வொழிபு’’ (திணைமொழி. 44) இஃதருளல் வேண்டுமென்றது. இன்னும் ‘பிறவும்’ என்றதனான் தலைமகள் தன்னை யழிந்தமை கூறுதலுந் தலைவன்மாட்டு வருமிடையூறு அஞ்சுதலுங் கொள்க. அது வருமாறு: ``தன்னெவ்வங் கூரினும் நீசெய்த வருளின்மை யென்னையு மறைவித்தா ளென்றோழி யதுகேட்டு நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூற றானாணி’’ (கலித். 44) இது, தலைமகள் தன்னை அழிந்ததற்கண் வந்தது. ``கரைபொரு கானியாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயின் அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே றுங்கைவே லஞ்சுக நும்மை வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வாரலையோ.’’ இஃது அவனூறு அஞ்சுதற்கண் வந்தது. நாடுமுதலாயின சுட்டித்தலைவன்மாட்டுத் தோன்றுங் கிளவியாவன - நீ இத்தன்மையாகிய நாட்டையுடையை; இத்தன்மையாகிய நகரையுடையை; இத்தன்மைத்தாகிய இல்லை யுடையை; இத்தன்மைத்தாகிய குடிப்பிறப்பை யுடையை; இத்தன்மைத்தாகிய சிறப்புடையை என அவற்றின் மிகுதிபடக் கூறுதல். அவை வருமாறு: ``கோழிலை வாழை’’ என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள் (2), ``குறியா வின்ப மெளிதி 113னின்மலைப் பல்வேறு விலங்கு 114மெய்து நாட குறித்த வின்ப நினக்கெவ னரிய.’’ என நாடு சுட்டி வந்தது. ``காமங் கடப்ப உள்ளம் இனைப்ப யாம்வந்து காண்பதோர் பருவ மாயி னோங்கித் தோன்று முயர்வரைக் கியாங்கெனப் படுவது நும்மூர் தெய்யோ.’’ (ஐங்குறு. 237) இஃது ஊர்பற்றி வந்தது. ``கடிமலர்ப் புன்னைக்கீழ்க் காரிகை தோற்றாளைத் தொடிநெகிழ்ந் தாளழத் துறப்பாயான் மற்றுநின் குடிமைக்கட் 115பெரியதோர் குற்றமாய்க் கிடவாதோ.’’ இது, குடிமை பற்றி வந்தது. ``ஆய்மலர்ப் புன்னைக்கீ ழணிநலந் தோற்றாளை நோய்மலி நிலையளாத்துறப்பாயான் மற்றுநின் வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ.’’ ``திகழ்மலர்ப் புன்னைக்கீழ்த் திருநலந் தோற்றாளை துகழ்மலர்க் கண்ணளாத் துறப்பாயான் மற்றுநின் புகழ்மைக்கட் பெரியதோர் புகராகிக் கிடவாதோ.’’ (கலித். 135) ``தாமரைக் கண்ணியைத் தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ மணங்கென வஞ்சுவர் சிறுகுடி வாழ்நரே.’’ (கலித். 52) பிறவு மன்ன. ஐயச் செய்கை தாய்க் கெதிர்மறுத்துப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் என்பது - தலைவிக்குப் பிறரொடு கூட்ட முண்டெனச் சொல்லி ஐயுற்றவழி அதனை மறுத்துத் தலைவி செய்த செய்கையைப் பொய்யென நீக்கிப் பிறிதோர் ஆற்றான் மெய்வழிக்கட் படுத்தினும் என்றவாறு. அஃதாமாறு தலைவி குறிவழிச் செல்கின்றதனைக் காண்டல். ``உருமுற்று 116கருவிய பெருமழை தலைஇப் பெயலான் றவிந்த தூங்கிரு ணடுநாண் மின்னு ணிமிர்ந்த கனங்குழை யிமைப்பப் பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் வரையிழி மயிலி னொல்குவன ளொதுங்கி மிடையூர் பிழியக் கண்டனெ னிவளென வலையல் வாழிவேண் டன்னைநம் படப்பைச் சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தான்வேண் டுருவி னணங்குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவாண்டு மருட்டலு முண்டே யிவடான் சுடரின்று தமியளும் பனிக்கும் வெருவுற மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சழிந் தரணஞ் 117சேரு மதன்றலைப் புலிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு முருகி னன்ன சீற்றத்துக் கடுந்திற லெந்தையு மில்லா னாக வஞ்சுவ ளல்லளோ விவளது செயலே.’’ (அகம். 158) என வரும். ``வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து மாந்தளிர் மேனி வியர்ப்பமற் - றாங்கெனைத்தும் பாய்ந்தருவி யாடினே மாகப் பணிமொழிக்குச் சேந்தனவாஞ் சேயரிக்கண் டாம்.’’ (ஐந்திணையைம். 15) என்பதும் அது. அவள்விலங்குறினும்.... தாயிடைப்புகுப்பினும் என்பது - தலைவி காப்பு மிகுதியானுங் காதன் மிகுதியானும் நொதுமலர் வரைவினானும் தமர்வரைவு மறுத்ததினானும் வேறுபட்டவழி, இஃது எற்றினான் ஆயிற்று எனச் செவிலி அறிவரை வினாஅய்க் குறிபார்க்கும் இடத்தினும், அஃதன்றி வெறியாட்டிடத்தினும், பிறர் வரைவு வந்துழியும், அவன் வரைவு மறுத்தவழியும், முன்னிலை வகையானாதல் அறத்தொடு நிலைவகையானாதல் இவ்விரு வகையானுந், தலைவற்கும் தலைவிக்கும் தனக்குங் குலத்திற்கும் குற்றந் தீர்ந்த கிளவியைத்தாய்மாட்டுப் புகுத விடுத்தலும் என்றவாறு. புகுதவிடுத்தலாவது நிரம்பச் சொல்லாது தோற்றுவாய் செய்தல். அந்நால்வகைப் பொருளினும் முன்னிலைக் கிளவி வருமாறு: ``பொய்படு பறியாக் கழங்கே மெய்யே மணிவரைக் கட்சி மடமயி லாலும் மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோ னாண்டகை விறல்வே ளல்லனிவள் பூண்டாங் கிளமுலை யணங்கி யோனே.’’ (ஐங்குறு. 250) இது, குறிபார்த்தவழிக் கூறியது: கழங்கு முன்னிலையாக. ``அம்ம வாழி தோழி பன்மலர் நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை குன்றம் பாடா னாயி னென்பயஞ் செயுமோ வேலற்கு வெறியே.’’ (ஐங்குறு. 244) இது, தலைவியை முன்னிலையாகக் கூறியது. ``நெய்த னறுமலர்ச் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழு மார்பி னருந்திறற் கடவு ளல்லன் பெருந்துறைக் கொண்டிவ ளணங்கி யோனே.’’ (ஐங்குறு. 182) இது, வேலனை முன்னிலையாகக் கூறியது. ``கடவுட் 118கற்சுனை யடையிறந் தவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தட் குருதி யொண்பூ வுருகெழக் கட்டிப் பெருவரை யடுக்கம் பொற்பக் குறமக ளருவி யின்னியத் தாடு நாடன் மார்புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்து மண்ணாந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே.’’ (நற். 34) இது, முருகனை முன்னிலையாகக் கூறியது. பிறவுமன்ன. ``அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடற் றிரைதரு முத்தம் வெண்மண லிமைக்குந் தண்ணந் துறைவன் வந்தெனப் பொன்னினுஞ் சிறந்தன்று கண்டிசின் னுதலே.’’ (ஐங்குறு. 105) இது, முன்னிலைப்பகுதி; நொதுமலர் வரைவுபற்றி வந்தது. ``குன்றக் குறவன் காதன் மடமக ளணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையு மாகிற் றொடுத்தன மாயினோ நன்றே யின்னு மானாது நண்ணுறு துயரே.’’ (ஐங்குறு. 258) இஃது, அவன் வரைவு மறுத்துழிக் கூறியது. இனி, அறத்தொடுநிலைப் பகுதி யெழுவகைப்படும். அவை யாமாறு: ``எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல் கூறுத லுசாவுதல் லேதீடு தலைப்பா டுண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ யவ்வெழு 119வகைய வென்மனார் புலவர்’’ (பொருளி. 12) எனப் பொருளியலுட் கூறிய சூத்திரத்தானே கொள்க. எளித்துல் என்பது - தலைவன் நம்மாட்டு எளிய னென்று கூறுதல். அதனது பயம் மகளுடைத்தாயர் தம்வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவ ராதலான், எளியனென்பது கூறி அறத்தொடு நிற்கப் பெறு மென்றவாறு. ``அன்னை யறியினு மறிக 120வலர்வாய் யிம்மென் சேரி கேட்பினுங் கேட்க பிறிதொன் றின்மை யறியக் கூறிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக் கடுஞ்சூ டருகுவ னினக்குறு கானற் றொடலை யாயமொடு கடலுட னாடியுஞ் சிற்றி லிழைத்துஞ் சிறுசோறு குவைஇயும் வருந்திய வருத்தந் தீர யாம்சிறி திருந்தன மாக வெய்த வந்து தடமென் பணைத்தோண் மடநல் லீரே எல்லு மெல்லின் 121றசைவும்பெரி துடையேன் மெல்லிலைப் பரப்பின் விருந்துண் டியானுமிக் கல்லென் சிறுகுடித் தங்கின்மற் றெவனோ வெனமொழிந் 122தனனே வொருவ னவற்கண் டிறைஞ்சிய முகத்தெம் புறஞ்சேர்பு பொருந்தி யிவைநுமக் குரிய வல்ல விழிந்த கொழுமீன் வல்சி யென்றன மிழுமெ னெடுங்கொடி நுடங்கு நாவாய் தோன்றுவ காணா மோவெனக் காலிற் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோ ருள்ளு மென்னையே குறித்த நோக்கமொடு நன்னுத லொழிகோ யானென அழிதகக் கூறி யாம்பெயர் தோறு நோக்கித் தான்ற னெடுந்தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலு மின்றுமென் கட்கே.’’ (அகம். 110) என வரும். அன்னை என்றது நற்றாயை. ஏத்தல் என்பது - தலைவனை உயர்த்துக் கூறுதல். அது, மகளுடைத்தாயர் ‘தலைவன் உயர்ந்தான்’ என்றவழி மனமகிழ்வராகலின், அவ்வாறு கூறப்பட்டது. உயர்த்துக் கூறி அறத்தொடு நிற்கப்பெறும் என்றவாறு. ``அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி யதன்றிறம் யானுந் தெற்றென வுணரேன் மேனாள் மலிபூஞ் சாரலென் றோழி மாரோ டொலிசினை வேங்கை கொய்குவஞ் சென்றுழிப் புலிபுலி யென்னும் பூச றோன்ற வொண்செங் கழுநீர்க் கண்போ லாயித ழூசி போகிய சூழ்செய் மாலையன் பக்கஞ் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயமண் டாகஞ் செஞ்சாந்து நீவி வரிபுனை வில்ல னொருகணை தெரிந்துகொண் டியாதோ மற்ற மாதிறம் படர்கென வினவி நிற்றந் தோனே யவற்கண் டெம்மு ளெம்முள் மெய்ம்மறை பொடுங்கி நாணி நின்றனெ மாகப் பேணி யைவகை யமர்த்த கூந்த லாய்நுதன் மையீ ரோதி மடவீர் நும்வாய்ப் பொய்யு முளவோ வென்றனன் பையெனப் பரிமுடுகு தவிர்ந் 123தோனெதிர் மறுத்து நின்மக ளுண்கண் பன்மா 124ணோக்கிச் சென்றோன் மன்றவக் குன்று கிழவோன் பகன்மா யந்திப் படுசுட ரமையத் தவன்மறை தேய நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்றன ளிதனள வுண்டொர்கோண் 125மதிவல் லோர்க்கே.’’ (அகம். 48) இதனுள் கழுநீர் மாலையன், வெட்சிக் கண்ணியன் எனக் கூறினமையான், அவன் நாட்டிற்கும் மலைக்குந் தலைவன் என்பது படவும், ஒருகணை தெரிந்துகொண்டு புலி யாதென்ற அவனது வீரியமுங் கூறி உயர்த்தவாறுங் காண்க. வேட்கையுரைத்தலாவது - தலைவன்மாட்டுத்தலைவி வேட்கையும் தலைவிமாட்டுத்தலைவன் வேட்கையும் கூறுதல். வேட்கைகூறி அறத்தொடு நிற்கும் என்றவாறு. ``நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச் சென்றோன்’’ என்பது தலைவன் வேட்கை கூறியவாறாம். ``அன்னாய் வாழிவேண் டன்னை யென்றோழி நனிநா ணுடைய 126ளெனினு மஞ்சு மொலிவெள் ளருவி யோங்குமலை நாடன் மலர்ந்த மார்பிற் பாய றவநனி வெய்ய நோகோ யானே.’’ (ஐங்குறு. 205) இது, தலைவி வேட்கை கூறியது. கூறுதலாவது தலைவியைத்தலைவற்குக் கொடுக்க வேண்டு மென்பது படக் கூறுதல். உதாரணம்: ``வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டியாய்க் கோடாது நீகொடுப்பி னல்லது - வாடா வெழிலு முலையு மிரண்டிற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து.’’ (திணைமாலை. 15) என வரும். ``கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி யறியா வேலன் வெறியெனக் கூறு மதுமனங் கொள்குவை யன்னையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே.’’ (ஐங்குறு. 243) எனவும் வரும். உசாவுதல் என்பது - வெறியாட்டுங் கழங்கும் இட்டுரைத் துழி வேலனோடாதல் பிறரோடாதல் தோழி உசாவுதல். ``முருகயர்ந்து வந்த முதுவாய் வேல சினவ லோம்புமதி வினவுவ துடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி தோன்றியள் நறுநுதல் நீவி 127வணங்கினை கொடுத்தி யாயி னணங்கிய விண்டேர் மாமலைச் சிலம்பன் றண்டா ரகலமு 128முண்ணுமோ பலியே.’’ (குறுந். 362) இது, வேலனொடு உசாவுதல். ``இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப் பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கினோ டுண்ணமை மதுத்129துளி பெறூஉ நாட னறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி யெம்மில் வருகுவை நீயெனப் பொம்ம லோதி நீவி யோனே.’’ (குறுந். 379) இது செவிலி கேட்பத் தலைவியொடு தோழி உசாவியது. பிறவுமன்ன. ஏதீடு தலைப்பாடு என்பது யாதானுமோர் ஏதுவை இடையிட்டுக் கொண்டு தலைப்பட்டமை கூறுதல். உதாரணம்: ``காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள் ............. ................... .................... ............. யருமழை தரல்வேண்டிற் தருகிற்கும் பெருமையளே.’’ (கலித். 39) இது, புனலிடை உதவினானெனத்தலைப்பாடு கூறியது. ``சுள்ளி சுனைநீலஞ் சோபா லிகைசெயலை யள்ளி யளகத்து மேலாய்ந்து - தெள்ளி 130யிதணாற் கடியொடுங்கா வீர்ங்கடா யானை 131யுதணாற் கடிந்தா னுளன்.’’ (திணைமாலைநூற். 2) இது, களிற்றிடை உதவினானெனத் தலைப்பாடு கூறியது. ``அன்னாய் வாழிவேண் டன்னை 132யென்னை தானு மலைந்தா னெமக்குந்தழை யாயின பொன்வீ மணியரும் பினவே யென்ன மரங்கொலவர் சார லவ்வே.’’ (ஐங்குறு. 201) இது, தழையும் கண்ணியுந் தந்தானென்பதுபடக் கூறியது. உண்மை செப்பும் கிளவி யாவது - பட்டாங்கு கூறுதல். ``அல்கன்மழை பொழிந்த வகன்க ணருவி யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாளிவள் மயங்கிதழ் மழைக்கண் கலிழு மன்னாய்.’’ (ஐங்குறு. 220) இவ்வகை யெல்லாம் தத்தங் குடிமைக் கேற்றவழிக் கொள்க. வரைவுடன் பட்டோர்க் கடாவல் வேண்டியும் என்பது - தமர் வரைவுடன்பட்டமையைத் தலைவற்கு உரைக்க வேண்டியும் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. ஆங்கதன் றன்மையின் வன்புறை என்பது - அவ்வாறு வரைவுடம் பட்ட தன்மையினான் தலைவியை வற்புறுத்தற் கண்ணும் என்றவாறு. ``கூர்முண் முண்டகக் கூர்ம் பனிமாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை யானுங் காதலெ 133னாயும்நனி வெய்ய ளெந்தையுங் கொடீஇயர் வேண்டும் அம்ப லூரு மவனொடு மொழிமே.’’ (குறுந். 51) ``அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவல னாகிப் பெரிதுநின் மென்றோ ணெகிழவுந் திருநுதல் பசப்பவும் பொன்போல் விறற்கவின் றொலைத்த குன்ற நாடற் கயர்ந்தனர் மணனே.’’ (ஐங்குறு. 230) என வரும். பாங்குற வந்த நாலெட்டு வகையும் என்பது - பகுதிப்பட வந்த முப்பத்திரண்டு வகைப்பட்ட பொருண்மையும் என்றவாறு. அவையாவன மேற் சொல்லப்பட்ட முன்னுற வுணர்தல், குறையுற வுணர்தற்கண் பெருமையிற் பெயர்த்தல், உலகுரைத் தொழித்தல், அருமையினகற்றல், பின் வாவென்றல், பேதைமை யூட்டல், முன்னுறு புணர்ச்சி முறைநிறுத்துரைத்தல், அஞ்சி யச்சுறுத்தல், உரைத்துழிக் கூட்டம் எனச் சொல்லப்பட்ட எண்வகை, மாயஞ் செப்பி வந்த கிழவனைப் பொறுத்த காரணம் குறித்தலாகிய இருவருமுள்வழி அவன் வரவுணர்தல், புணர்ந்தபின் அவன்வயின் வணங்கல், குறைநயப்பச் சேறல், குறைநயப்புவகை, நயந்தமை கூறல், அலராமென்றல், புணர்ச்சி வேண்டியவழிக் கூறல், பிரிவு வேண்டியவழிக் கூறல், வேளாண் பெருநெறி வேண்டிக் கூறல், அல்லகுறிப் பட்டவழிக் கூறல், ஓம்படை கூறல், இயற்பழித்து வற்புறுத்தல், ஆறின்னாமை கூறல், காப்பு மிகுதி கூறல், காதல் மிகுதி கூறல், அவன்வயிற்றோன்றிய கிளவி, ஐயச்செய்கை தாய்க்கெதிர் மறுத்துல், குறிபார்த்தல் விலக்கல், வெறிவிலக்கல், பிறன் வரைவு மறுப்பித்தல், அவன் வரைவுடம்படுத்தல், வரைவுடம்பட்டமை தலைவற்குக் கூறல், உடம்பட்டமை தலைவிக்குக் கூறி வற்புறுத்துல் என இவை. தாங்கருஞ் சிறப்பிற் றோழி மேன என்பது - இவை முப்பத்திரண்டு பொருண்மையும் தலைவிக்கு இன்றியமையாத தோழி மேலன என்றவாறு. (24) 113. களவல ராயினுங் காமமேற் படுப்பினு மளவுமிகத் தோன்றினுந் தலைப்பெய்து காணினுங் கட்டினுங் கழங்கினும் வெறியென விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக் கண்ணு மாடிய சென்றுழி யழிவுதலை வரினுங் காதல் கைம்மிகக் கனவி னரற்றலுந் தோழியை வினாவலுந் தெய்வம் வாழ்த்துலும் போக்குட னறிந்தபின் றோழியொடு கெழீஇக் கற்பி னாக்கத்து நிற்றற் கண்ணும் பிரிவி னெச்சத்து மகணெஞ்சு வலிப்பினு மிருபாற் குடிப்பொரு ளியல்பின் கண்ணு மின்ன வகையிற் பதின்மூன்று கிளவியொ டன்னவை பிறவுஞ் செவிலி மேன. என்றது மேற் றலைவற்குந் தலைவிக்குந் தோழிக்கு முரிய கிளவியெல்லாங் கூறி, இனிச் செவிலிக்குரிய கிளவி யுணர்த்துதல் நுதலிற்று. களவலராதன் முதலாகச் சொல்லப்பட்ட பதின்மூன்று கிளவியும் அத்தன்மைய பிற கிளவியும் களவுக்காலத்துச் செவிலியின் மேலன என்றவாறு. இவற்றுள் தோழியை வினாதலென வேறொரு கிளவியாக ஓதினா ராயினும், அதன் முன்பு நிகழும் கிளவியெல்லாம் அவளை வினாதற்குக் காரண மாதலின் அவை யீண்டுப் பதின்மூன்றென வெண்ணப்பட்டன வென்க. களவல ராயினும் என்பது - தலைவன் ஒழுகலாறு புறத்தார்க்குப் புலனாகி அலர் தூற்றப்பட்ட விடத்துத் தோழியை வினாவும் என்றவாறு. உதாரணம்: ``பாவடி யுரல பகுவாய் வள்ளை யேதின் மாக்க ணுவறலு நுவல்ப வழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே பெரும்பூட் பொறையன் பேஎமுதிர் கொல்லிக் கருங்கட் டெய்வங் குடவரை யெழுதிய நல்லியற் பாவை யன்ன வென் மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.’’ (குறுந். 89) காம மேற் படுப்பினும் என்பது தலைவிமாட்டுளதாகிய வேட்கை அளவிறப்பினும் தோழியை வினாவும் என்றவாறு. ``மணியுட் திகழ்தரு நூல்போன் மடந்தை யணியுட் டிகழ்வதொன் றுண்டு.’’ (குறள். 1273) அளவு மிகத் தோன்றினும் என்பது - பெதும்பைப் பருவத்தளாகிய தலைவி புணர்ச்சியாற் கதிர்த்து வீங்குகின்ற முலையும் புதிதுற்ற கவினுங் கண்டவிடத்துந் தோழியை வினாவும் என்றவாறு. ``கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்ணிறைந்த மாமை பெரிது.’’ (குறள். 1272) தலைப்பெய்து காணினும் என்பது - தலைவனொடு தலைவியைத்தலைப்பெய்து காணினும் வினாவும் என்றவாறு. பெய்தென்பதனைப் பெயவெனத் திரிக்க. ``மிடையூர் பிழியக் கண்டனென்’’ (அகம். 158) என வரும். கட்டினும் என்பது - கட்டு வைப்பித்தவழியும் அவர்சொற் கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு. கழங்கினும் என்பது - கழங்கு வைத்துழியும் அவர்சொற் கேட்டுத் தோழியை வினாவும் என்றவாறு. வெறியென விருவரு மொட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும் என்பது - செவிலியும் நற்றாயும் பொருந்திய பக்கத்துக் கண்டு வெறியாடுவாமென்றவழித்தலைவி செய்திக்கண்ணுந் தோழியை வினாவும் என்றவாறு. ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும் என்பது வெறியாடிய சென்றவழி அதற்கழிவுறுமிடத்து வரினும் என்றவாறு. அஃதாவது: ``நின்னணங் கன்மை யறிந்து மண்ணார்ந்து கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினு மாக மடவை மன்ற வாழிய முருகே.’’ (நற். 34) எனத் தோழி கூறுதல். அவ்வாறு கூறியவழியுங் காரண மென்னையென வினாவும். காதல் கைம்மிகக் களவி னரற்றலும் என்பது - காதன் மிகுதியான் தலைவனை யுள்ளிக் கனவின்கண் தலைவி அரற்றுதற்கண்ணும் வினாவும். தோழியை வினாதலும் என்பது இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும் என்றவாறு. எனவே களவலராதல் முதற் கனவினரற்ற லீறாக ஓதிய வொன்பது கிளவியும் தோழியை வினாதற் பகுதி. அவை நிகழாதவழி வினாதலில்லை. அதனால் தோழியை வினாதலென ஒரு கிளவியாக எண்ணற்க. தெய்வம் வாழ்த்தலும் என்பது - இவ்வாறு பட்டதெனத் தோழியுரைத்தவழி யிதனை நற்றாய்க்கும் தந்தைக்கும் கூறலாற்றாதாள் தெய்வத்தை வேண்டிக்கோடல். போக்குடன் அறிந்தபின்... நிற்றற் கண்ணும் என்பது - தலைவனுடன் போயினாள் என்று அறிந்தவழித்தானுந் தோழியொடு கெழுமி இல்லத்தின்கணிறுத்தற்கண்ணும் என்றவாறு. ``பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே.’’ (குறுந். 15) பிரிவி னெச்சத்து மகணெஞ்சு வலிப்பினும் என்பது - தலைவன் வரையாது பிரிந்தவழி யொழிந்த தலைமகள் அலராகுதலுமின்றி வேறுபாடுமின்றி ஒருமனைப்பட்டிருந்த வுள்ளக்கருத்தை யறிந்தவழியும் என்றவாறு. வலித்தல் என்பது தெளிதல். இருபாற் குடிப்பொரு ளியல்பின்கண்ணும் என்பது - தலைவன் குடிமை தன் குடிமையோ டொக்குமென வாராய்தற் கண்ணும் என்றவாறு. குடியென்னாது பொருள் என்றதனால் பொருளுங் குணமும் ஆயப்பெறுமென்றவாறு. ‘அன்னவை பிறவும்’ என்றதனான், ``நாற்றம் பெற்று நிலைப்புக் காண்டல் உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல் கண்டுயின் மறுத்தல் கோலஞ்செய் யாமை’’ முதலாயின கொள்க. இவையும் வினாதற்கேதுவாம். இவற்றிற் கெல்லாஞ் செய்யுள் வந்தவழிக் காண்க. (25) 114. தாய்க்கும் வரையா ருணர்வுடம் படினே. இது நற்றாய்க்கு உரியதோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. செவிலியுணர்வோடு உடம்பட்ட வுள்ளத்தளாயின், நற்றாய்க்கும் மேற்சொல்லப்பட்டவை யெல்லாம் 136வரையப்படா வென்றவாறு. உணர்வுடம்படுதலாவது - தலைவியை யுற்று நோக்கும் 137நோக்கம் நிகழ்ந்தவழியன்றித்தானும் செவிலியைப் போல உற்று நோக்கா ளென்று கொள்க. இப்பொருள்மேற் கிளவி வருவன உளவேனுஞ் செவிலியைப் போல வொருப்பட்ட வுள்ளத்துளாயின் அவள்கண்ணும் இக்கிளவி யெல்லாம் நிகழும் என்றவாறு. உடம்படாதவாறு என்னை யெனின், யாரிடத்தும் மக்களை வளர்ப்பார் செவிலியராகலானும் தமக்குத் தம் இல்லறநிலைக்குக் கடவப் பகுதியான அறனும் பொருளும் இன்பமும் வேண்டுத லானும் கூற்றொடு வேறுபாடு தோன்றாது. (26) 115. கிழவோ னறியா வறிவின ளிவளென மையறு சிறப்பி னுயர்ந்தோர் பாங்கி னையக் கிளவியி னறிதலு முரித்தே. இது நற்றாயும் செவிலியும் துணியுமாறு கூறுகின்றது. கிழவோன் அறியா அறிவினள் என்பது - தலைமகன் அறியா அறிவினையுடையவள் என்றவாறு. எனவே ஒரு பக்கம் எதிர்காலம் நோக்கிக் 138கூறினார் போலத் தோன்றும்; ஒரு பக்கம் இறந்த காலம் தோன்றும். அவன் அறியாத அறிவுரிமை பூண்டு மயங்குதல், 139அவள் எத்துணையும் மயக்கமிலள் எனவும் அவன்பொருட்டு மயங்கினாள் எனவும்படக் கூறுதல். தலைவன் அறியாத அறிவினை யுடையவள் எனக் குற்றமற்ற சிறப்பினை யுடைய உயர்ந்தோர்மாட்டு உளதாகிய ஐயக் கிளவியால் புணர்ப்பறிதலும் உரித்து, செவிலிக்கும் நற்றாய்க்கும் என்றவாறு. இஃது எற்றினான் ஆயிற்று எனக் குற்றமற்ற 140தவரை வினாயவழி அவர் இவ்வாறு பட்டதென மெய் கூறுதலுந் தகுதி யன்றாம்; பொய் கூறுதலும் தகுதியன்றாம். ஆதலால் ஐயப்படு மாறு சில கூறியவழி, அதனானே யுணர்ப என்றவாறு. ‘கிழவோ னறியா வறிவின ளென்றவாறு கூறியவழிக் கிழவோ னெதிர்ப் பட... இறந்த காலத்துள் தலைவன் உளன் என்றவாறாம். (27) 116. தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்த லெண்ணுங் காலைக் கிழத்திக் கில்லைப் பிறநீர் மாக்களி னறிய வாயிடைப் பெய்ந்நீர் போலு முணர்விற் றென்ப. இது, தலைவிக்கு உரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று. (தலைவி) தனது வேட்கையைக் கிழவன் முன்பு சொல்லுதல் நினைக்குங் காலத்துக் கிழத்திக்கு இல்லை. அங்ஙனம் சொல்லாத விடத்தும் புதுக்கலத்தின்கட் பெய்த நீர் போலப் புறம் பொசிந்து காட்டும் உணர்வினையு முடைத்து அவ்வேட்கை என்றவாறு. எனவே, குறிப்பின் 141உணரநிற்கும் என்றவாறு. தலைவன்மாட்டுக் கூற்றினானும் நிகழப்படுமென்று கொள்ளப்படும். (28) 117. காமக் கூட்டந் தனிமையிற் பொலிதலிற் றாமே தூதுவ ராகலு முரித்தே. என்றது, களவிற்புணர்ச்சிக் குரியதோர் வேறுபாடுணர்த்துதல் நுதலிற்று. மேற் சொன்னவாற்றால் பாங்கனுந் தோழியு நிமித்தமா கக் கூடுதலேயன்றித் தாமே தூதுவராகிய கூட்டங்கள் நிகழப்பெறும், அது சிறப்புடைத்தாதலால் என்றவாறு. எனவே, பாங்கற் கூட்டம் தோழியிற் கூட்டம் என்பன நியம மில்லை, யார்மாட்டும் என்றவாறாம். தனிமையிற் பொலிதலின் என்றமையான் இது மிகவும் நன்று. (29) 118. அவன்வரம் பிறத்த லறந்தனக் கின்மையிற் களஞ்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந் தான்செலற் குரியவழி யாக லான. இது, சொல்லப்பட்ட கூட்டத்திற்குக் குறியிடம் கூறுவா னுணர்த்துதல் நுதலிற்று. தலைவன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த பின்பு, தலைவ னெல்லையை மறத்தல் தலைவிக்கு அறமாக லின்மையானே குறியிடம் கூறுதல் தலைமகளதாம், அது தான் சேறற்குரிய இடமாதலான் என்றவாறு. எனவே, இத்துணைக் கூறின் மிகையன்று என்றவாறாம். (30) 119. தோழியின் முடியு மிடனுமா ருண்டே. இது, தோழியிற் கூட்டத்திற் காயதோர் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று. மேல், ‘காமக்கூட்டந் தனிமையிற் பொலிதலிற் றாமே தூதுவ ராகலும் உரித்’ தெனக் கூறிப்போந்தார்; அவ்வாறன்றி மேற் சொல்லப்பட்ட இயற்கைப் புணர்ச்சியாவது தோழியின் முடியுமிடத்து ஓரிடத்து உண்டு என்றவாறு. ``அன்பொடு புணர்ந்த வைந்திணை’’ (களவியல். 1) என்றதனால் யாண்டும் உள்ளப் புணர்ச்சியான் வேட்கை மீதூர்ந்த வழியே தோழியின் முடியப் பெறுவது என்று கொள்க. அல்லாக்காற் பெருந்திணைப்பாற் படும். (31) 120. முந்நா ளல்லது துணையின்று கழியா தந்நா ளகத்து மதுவரை வின்றே. இது, பாங்கற் கூட்டம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. மேல், தோழியிற் கூட்டத்தின் விகற்பங் கூறினா ராகலின், ஈண்டுத்துணையென்றது பாங்கன் ஆயிற்று. மூன்று நாளல்லது துணை யின்றிக் களவிற் புணர்ச்சி செல்லாது; அந்நாளகத்தும் துணையை நீக்கவும் படாது என்றவாறு. எனவே, 142எதிர்ப்பட்ட தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்வதன் முன் பாங்கற்கு உணர்த்தவும் பெறும் என்றவாறு. உதாரணம்: மேற்காட்டப்பட்டது. (32) 121. பன்னூறு வகையினுந் தன்வயின் வரூஉ நன்னய மருங்கி னாட்டம் வேண்டலிற் றுணைச்சுட்டுக் கிளவி கிழவிய தாகுந் துணையோர் கரும மாத லான. இது, தலைவிக்கு உரியதோ ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று. பன்னூறு வகையினும் என்பது - பலவகையானும் என்றவாறு. நூறு, பத்து, ஆயிரம் என்பன பல்பொருட் பெயர். தன்வயின்வரூஉ... மாதலான என்பது - தன்னிடத்து வரும் நல்ல நயப்பாட்டுப் பக்கத்தினை ஆராய்தல் தலைவன்மாட்டு வேண்டு மாதலான். துணையைச் சுட்டிக் கூறலுறும் சொல் தலைமகள தாகும்; தான் கூறும் கருமம் துணையோராற் செய்யப்படும் கருமமா தலான் என்றவாறு. எனவே, 143தலைமகன் களவுக் காலத்துப் பாங்கற்கு உற்றதுரைத்த பின்பு பாங்கனைச் சுட்டி யாது செய்வாமெனக் கூறப்பெறும் என்றவாறாயிற்று. (33) 122. ஆய்பெருஞ் சிறப்பி னருமறை கிளத்தலிற் றாயெனப் படுவோள் செவிலி யாகும். இது, செவிலிக்கு உரியதோர் சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. நல்ல பெரிய சிறப்பினையுடைய அறிதற்கரிய மறைப் பொருள் யாவற்றையுங் கூறும் கடப்பாடுடையளாதலின், தாய் எனப்படுவாள் செவிலியாகும் என்றவாறு. நற்றாய் இத்துணைச் சிறப்பிலள் என்றவாறு. இதனாற் பயன் களவுக் காலத்தையச் சொ... செவிலித்தாய்க்குங் கைத்தாய்க்கும் பொதுவாயினும், தாயென்று வேண்டப்படுவாள் செவிலி என்றறிவித்தல். (34) 123. தோழி தானே செவிலி மகளே. இது, தோழிக்கு உரியதோர் சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று. களவுக் காலத்தும் இன்றியமையாளாகத் தலைவியான் வேண்டப்பட்டாள் செவிலிமகள் என்றவாறு. எனவே, பயின்றா ரெல்லாருந் தோழியராகார். அருமறை கிளக்கப் படுதலான் உடன் முலையுண்டு வளர்ந்த செவிலி மகளே தோழி எனப்படுவாள் என்றவாறு. அருமறை கிளத்தல் என்பதனை யீண்டு வருவிக்க. (35) 124. சூழ்தலு முசாத்துணை நிலைமையிற் பொலிமே. இது, தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட தோழி தான் சூழ்தற்கும் தலைவி சூழ்ச்சிக்கு உசாத்துணையாகியும் வரும் நிலைமையாற் பொலிவு பெறும் என்றவாறு. எனவே, செவிலிமகள் என்னுந் துணையாற் பொலிவு பெறாள்; என்றும் தோழியாவாள் செவிலிமகளாதலே யன்றிச் சூழவும் உசாத்துணையாகவும் வல்லள் ஆதல்வேண்டும் என்றவாறு. செய்யுள் மேற்காட்டப்பட்டன. (36) 125. குறையுற வுணர்தன் முன்னுற வுணர்த லிருவரும் முள்வழி யவன்வர வுணர்தலென மதியுடம் படுத லொருமூ வகைத்தே. இது, தலைவன் புணர்ச்சி யுண்மை தோழி அறியுந் திறன் பாகுபடு மாறு உணர்த்துதல் நுதலிற்று. தலைவன் குறையுற வுணர்தலும், அவன் குறையுறா வழித்தலைவி குறிப்புக் கண்டு உணர்தலும், தானும் தலைவியுங் கூடியிருந்துழித் தலைவன் வந்தமைகண்டு உணர்தலும், என மூவகைத்துத் தோழி அறிவுடம்படுதற் கண்ண வென்றவாறு. மதியும்படுதல் எனினும் புணர்ச்சியுணர்தல் எனினும் ஒக்கும். இம் மூன்றினும் ஒன்று கண்டுழி அவரவர் குறிப்பினாற் புணர்ச்சி யுணரும் என்றவாறு. ‘குறையுறயுணர்தல்’ முன்வைத்தார், நன்கு புலப்படுதலின். ‘முன்னுறவுணர்தல்’ அதன்பின் வைத்தார், தலைவி வேறுபாடு கண்டு பண்டையிற்போலாள் என்னும் நிகழ்ச்சியான் முற்றத்துணிவின்மையின். ‘இருவரு முள்வழி யவன் வரவுணர்தல்’ அதன் பின் வைத்தார், ஆண்டுப் புதுவோன் போலத்தலைவன் வருதலானும் தலைவி கரந்த உள்ளத்தளாய் நிற்குமாதலானும் அத்துணைப் புலப்பாடின்மையின். அக் கருத்தினானே மேற் சொல்லப்பட்ட தோழிகூற்று மூவகையாகப் பொருள் உரைத்த தென்று கொள்க. (37) 126. அன்ன வகையா னுணர்ந்தபின் னல்லது பின்னிலை முயற்சி பெறாளென மொழிப. இதுவும் தோழிக்கு உரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட கூறுபாட்டான் இருவர் மாட்டும் அன்புடைமை உணர்ந்தபின் அல்லது வழிபாட்டு நிலைமையாற் கூட்டத்திற்கு முயலப்பெறாள் தோழி என்றவாறு. அஃதேல், உள்ளப் புணர்ச்சியானின்று மெய்யுறாது கூட்டத்திற்கு முயல்வார் உளர். ஆயின், அஃதெற்றாற் பெறும் எனின், ஆண்டும் இருவர் மாட்டுளதாகிய அன்புடைமையான் மனநிகழ்ச்சி யுளவாக, அந்நிகழ்ச்சி கண்டுழியும் முயலப் பெறுமென்று கொள்க. அதனானேயன்றே ‘முன்னுற வுணர்தல்’ (125) என்னுஞ் சூத்திரத்தினும் ‘புணர்ச்சி யுடம் படுதல்’ என்னாது ‘மதியுடம்படுதலொரு மூவகைத்து’ எனப் பொதுப்பட ஓதுவாராயிற் றென்க. அவ்வன்பினான் வரு நிகழ்ச்சி யுள்ளவழியும் இவ்விட மூன்றினும் காதலுண்மை அறிய லாகும். (38) 127. முயற்சிக் காலத் ததற்பட நாடிப் புணர்த்த லாற்றலு மவள்வயி னான. இதுவும் அது. தோழி வழிமொழிந்து முயலுங்காலத்து அவன் நினைவின்கட் படுந்திறன் ஆராய்ந்து புணர்த்தலைச் செய்யும் அவளிடத்து என்றவாறு. அஃதாவது, ‘இன்னுழிச் செல்’ எனவும், ‘இன்னுழி வா’ எனவும், தலைவியை ஆயத்துணின்றும் பிரித்துத் தனி நிறுத்திப் பட்டாங்கு கூறியும் பிறவாற்றானும் ஆராய்ந்து கூட்டுதல். இவ்வைந்து சூத்திரத்தானுந் தோழிக்கு உரிய மரபு உணர்த்திய வாறு காண்க. (39) 128. குறியெனப் படுவ திரவினும் பகலினு மறியக் கிளந்த வாற்ற தென்ப. என்றது, மேல் ‘களஞ்சுட்டுக் கிளவி கிழவியதாகும்’ (118) என்றார். அதற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. குறி என்று சொல்லப்படுவது இரவினானும் பகலினானும் இருவரும் அறியச் சொல்லப்பட்ட இடத்தை யுடைத்து என்றவாறு. எனவே, இரவிற்குறி பகற்குறி என இருவகைப்படும் என்பது கொள்ளப்படும். (40) 129. இரவுக் குறியே யில்லகத்துள்ளும் 144மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான. என்றது, இரவுக் குறிக்கு இடமுணர்த்துதல் நுதலிற்று. இரவுக் குறியாம் இடமே இல்லகத்துள் மனையகம் புகாவிடத்துக்கண் மனையோர் கிளவி கேட்கும் அணிமைத்தாம் என்றவாறு. எனவே, மனைக்கும் எயிற்கும் நடுவணதோரிடம் என்று கொள்ளப்படும். (41) 130. பகற்புணர் களனே புறனென மொழிப வவளறி வுணர வருவழி யான. என்றது, பகற்குறி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. பகற்குறியாகிய புணருமிடம் எயிற்புறன் என்று சொல் லுவர்; ஆண்டுந் தலைமகள் அறிவுற்று வரும் இடனாகல் வேண்டும் என்றவாறு. (42) 131. அல்லகுறிப் படுதலு மவள்வயி னுரித்தே யவன்குறி மயங்கிய வமைவொடு வரினே. இதுவுமது. அல்லகுறிப்படுதலுந் 145தலைமகட்கு உரித்து; தலைவன் செய்த குறி மயங்கிய பொருத்தத்தொடுவரின் என்றவாறு. உதாரணம்: மேற்காட்டப்பட்டது. மயங்கிய அமைவு ஆவது - அவன் செய்யும் குறியோடமை வுடையன. (43) 132. ஆங்காங் கொழுகு மொழுக்கமு முண்டே யோங்கிய சிறப்பி னொருசிறை யான. இதுவுமது. அவ்வவ்விடத் தொழுகும் ஒழுக்கமுந் தலைவி மாட்டு உண்டு, ஓங்கிய சிறப்பினையுடைய ஒரு பக்கத்து என்றவாறு. ஒருசிறை யென்றது, மனத்தானும் மொழியானும் மெய்யானும் கற்புடை மகளிர் ஒழுகும் ஒழுக்கத்தின்கண் மனத்தான் ஒழுகும் ஒழுக்கமும் உண்டு என்றவாறு. (44) 133. மறைந்த ஒழுக்கத் தோரையு நாளுந் துறந்த வொழுக்கங் கிழவற் கில்லை. என்றது, தலைவற்கு உரிய இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. களவொழுக்கத்து முகுர்த்தமும் நாளும் துறந்தொழுகும் ஒழுக்கம் தலைவற்கு இல்லை என்றவாறு. என்றதனான், ஆண்டு அறத்தின் வழுவினானல்லன், தலைவி மாட்டுத்தலையளி குறைதலான் என்றவாறு. (45) 134. ஆற்றின தருமையு மழிவு மச்சமு மூறு முளப்பட வதனோ ரற்றே. இதுவுமது. நெறியினது அருமையும், மனன் அழிவும், அஞ்சுதலும் (45), இடையூறும், தலைவன்மாட்டு நிகழா என்றவாறு. (46) 135. தந்தையுந் தன்னையு முன்னத்தி னுணர்ப. என்றது, தந்தையும், தன்னையரும் களவு உணருமாறு உணர்த்துதல் நுதலிற்று. தந்தையரும் தன்னையரும் குறிப்பின் உணர்ப என்றவாறு. எனவே, கூற்றினான் உரைக்கப்பெறார் என்றவாறாம். (47) 136. தா யறிவுறுதல் செவிலியோ டொக்கும். என்றது, நற்றாய்க்கு உரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. நற்றாய் களவொழுக்கம் அறிவுறுதல் செவிலியோ டொக்கும் என்றவாறு. செவிலி கவலுந்துணைக் கவலுதலல்லது, தந்தையையும் தன்னையன்மாரையும் போல வெகுடலிலள் என்றவாறு. அவர் வெகுள்வரோ எனின். ``அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்.’’ (கலித். 39) எனத்தாய் வெகுளாமை காணப்பட்டது. ``அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந் தொருபக லெல்லாம் உருத்தெழுந் தாறி’’ (கலித். 39) என்றதனான் வெகுட்சி பெற்றாம். (48) 137. அம்பலும் அலருங் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவ னாகும். என்றது, களவு வெளிப்படுப்பார் 146இவர் என்பது உணர்த்துதல் நுதலிற்று. அம்பல் என்பது முகிழ்த்தல். அஃது ஒருவரொருவர் முகக் குறிப்பினாற் றோற்றுவித்தல். அலராவது சொல்லுதல். அதனானே இவை இரண்டும் களவினை வெளிப்படுத்தலின் அதற்குக் காரணமாவான் தலைவன் என்றவாறு. என்னை? அவனை யறிந்துழியல்லது இவை நிகழாமையின். தலைவி வேறுபாட்டான் ஆகாதோ எனின், ஆண்டு எற்றினான் ஆயிற்று என ஐயம் நிகழ்தலல்லது, துணிவு பிறவாதாம் என்று கொள்க. (49) 138. வெளிப்பட வரைதல் படாமை வரைதல்என் றாயிரண் டென்ப வரைத லாறே. இது, வரையும் பகுதி உணர்த்துதல் நுதலிற்று. களவு வெளிப்பட்டபின் வரைதலும் களவு வெளிப் படாமை வரைதலும், என அவ்விரண்டென்று சொல்லுவர் வரையும் நெறி என்றவாறு. இதனாற் சொல்லியது, இருவாற்றானும் அறன் இழுக்கா தென்றவாறு. அஃது இழுக்காதவாறு வருகின்ற சூத்திரத்தான் உணர்க. (50) 139. வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும் ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொரு ளாக வரையாது பிரிதல் கிழவோற் கில்லை. இது, தலைவற்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. களவு வெளிப்படுதல் கற்பினோடொப்பினும், மேற் சொல்லப்பட்ட மூன்று பொருளாக வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை என்றவாறு. அவையாவன முற்கூறிய ஓதற் பிரிவும், பகைவயிற் பிரிவும், தூதிற் பிரிவும். எனவே பொருள்வயிற் பிரிதலும் வேந்தர்க் குற்றுழிப் பிரிதலும் காவற் பிரிதலும் நிகழப்பெறும் என்றவாறாம். (51) மூன்றாவது களவியல் 147முற்றிற்று. களவியல் அடிக்குறிப்புகள் 1. `அறநிலைவழாம னிற்றலால்’ என்றிருப்பின் நலம். 2. ` இஃதாமெனப்படும்” என்று பிரதியிலுள்ளது. 3. `மென்றவழி’ என்றிருத்தல் வேண்டும் போலும். 4. `கடைக கொபுரத்து குழைத்த’ எனப் பிரதியில் உள்ளது. 5. `துணிந்தமையானும்’ எனப்பிரதியில் உள்ளது. 6. `றூவிநை’ என்பது பிரதி. 7. தெஅனாங்காய்’ என்பது பிரதி. 8. `துணை... யல்பாவது’ என்றிருத்தல் வேண்டும் போலும். 9. `இவரொடும்’ என்பது பிரதி. 10. `பிறவுமாம்’ என்றிருத்தல் வேண்டும். 11. `தண்கழுநீர்’ என்பது பிரதி. 12. யெண்ணாதார்க் (பி-ம்). 13. `புணையமை யாய்மான்றே’ 14. `யருந்த’ 15. `யெவ்வமொடு’. 16. `யாமினுறவே’. 17. `உரைத்தது’. 18. `றகைபெருதகைஇய’. 19. `றியான் பெயர’ 20. `அச்சமு நாணும் பெண்பாலன’. 21. `வேண்டுமென்றே’. 22. `மீதூர நின்றார்’. 23. `கைமிக்குற்றாத லெளிதோ’. 24. `கின்றியமையாதன’ என்றிருக்கவேண்டும் போலும். 25. `அனிமையிடம்’. 26. `உண்நொக்கு’. 27. 98ஆம் சூத்திர வுரையில் `நன்னயமுரைத்தல்’ என்பதன் கீழுள்ள `சேரன் மடவன்னம்’ என்ற செய்யுளின் இறுதியடியிலிருந்து 99ஆம் சூத்திரவுரையில் `பெற்றவழி மகிழ்ச்சியும்’ என்பதன் கீழுள்ள `நீங்கிற்றெறூஉம்’ என்னும் செய்யுள் வரையும் காணும் பகுதி ஏட்டுப் பிரதியிற் காணப்பெறவில்லை; காலஞ்சென்ற த.மு. சொர்னம்பிள்ளை யவர்களுடைய கடிதப் பிரதியில் மாத்திரம் இருந்தது; நச்சினார்க்கினியரது உரையினின்றும் எடுத்துச் சேர்க்கப்பட்டுளது எனக் கருதுதற்கு இடமுண்டு. இதன்பின்னர் `ஒடுங்கீரோதி’ என்பதிலிருந்து 10ஆம் சூத்திரவுரை முடியவுள்ள பகுதியிற் பெரும்பாலும் ஏட்டுப் பிரதியிற் பலவாறாகப் பிறழ்ந்து காணப் படுகின்றது.இது பொருட்டொடர்புநோக்கி யொருவாறு செப்பஞ் செய்யப் பெற்றுளது. 28. இவ்விரண்டு துறையும் இடந்தலைப்பாட்டுக்கும் ஒக்குமன்றோ வெனின் பெற்றுழி மகிழ்தலும் பிரிந்துழிக் கலங்கலும் என்பன எந்நிலத்தார்க்கும் எவ்வொழுக்கினுக்கும் ஏற்குமாகலின் ஒக்குமேல், இடந்தலைப்பாட்டுக்கும் பாங்கற்கூட்டம் பாங்கியிற் கூட்டம் என்பன வற்றுக்கும் கொள்க. (த.மு.சொ.). 29. இது தொடங்கி `இது நிற்பவை நினைஇக் கழறியது’ என்பது முடியவுள்ளது (த.மு.சொ.) 30. இது தொடங்கி `பண்டைப் பால்வழியது என எண்ணித்’ என்பது முடியவுள்ளது (த.மு.சொ.) 31. பறைக்க ணிரும்பொறை யேறி நின்று. 32. கொட்டுங். 33. செறிமுறை. 34. யணங்கெனதா. 35. தண்ணுறு. 36. வரையாதோதிற்றுப். 37. கொடுஞ்சினைப். 38. இது தொடங்கி `பிறவுமன்ன’ என்பது முடியவுள்ளது (த.மு.சொ.) 39. மறியாது. 40. மாயிதழ் 41. இது தொடங்கி `இது அவட் பெற்று மலியுந் தலைவன் கூற்று’ என்பது முடியவுள்ளது. (தா.மு. சொ.) 42. இது தொடங்கி சூத்திரவுரையின் இறுதிவரையுள்ளது. (த.மு.சொ.) 43. கூட்டநிமித்தம். 44. இதன்பின் `புணர்ச்சி நிமித்தமாகத் தலைமகனிரத்தலும், குறையுறுதலும், மடலேறுவலெனக் கூறுதலும் பெறும் என்றவாறு’ எனப் பிரதியிற் காணப்படுகிறது. பொருட்டொடர்பு நோக்கி இவ் வாக்கியம் 34ஆம் பக்கத்திறுதியிற் சேர்க்கப்பட்டுளது. 45. பார்க்கு. 46. யெண்கினம் வலிதரு. 47. கொள்ளிநெற்பயிர் துயிப்பக். 48. காலையிற் செல்லி. 49. பாப்பின். 50. யிகழ்ந்த 51. என்றும். 52. அஞ்சொ. 53. தணையாய். 54. தெரிகைய. 55. யசையுள. 56. னந்தில் தெரிநுநாமுரைப் பெயாவந்தவனொ டிருநீர்ச் சேர்ப்பினும் புட்டனுழும். 57. இது தொடங்கிச் சூத்திரவுரையின் இறுதிவரையுள்ளது. (த.மு.சொ.) 58. தானெனக. 59. மெக்கல். 60. யினா. 61. குவன்கொல் பூங்குழை யெண்ணு. 62. னென. 63. தலர்சிலர். 64. தேறுதலும். 65. புள்வரவு. 66. றோளே. 67. சிறுவன. 68. பானாக. 69. குற்றத் திவ்வூர்க். 70. வளமான். 71. றொடவை. 72. கொடிமுடி. 73. யானது. 74. தூணிலை யெலுவமென்றுவந். 75. மிநதாளா நாமினிப். 76. செல்லவும். 77. வேண்டியு. 78. வேண்டியு. 79. வன்பொறை. 80. கல்லார். 81. மாதயங். 82. போன்றல. 83. பாயறுவய றலைதவலி. 84. வரிவளைநன்மாண். 85. பிரியுற்றுறையு. 86. சறுந்துறை. 87. மிடனே 88. னன்னயத் 89. மென்மேற். 90. நீர்க்க. 91. வருந்தலைப். 92. வொ..டி. 93. வெழுரே. 94. தலைவிக். 95. கடவுமுதற். 96. னுனையின். 97. வெற்பிறஞ்சிதறு. 98. கவிதிரை. 99. சேர்ந்தனை. 100. பெருங்கறி. 101. சேர்நகர்நீர். 102. நும்மொப்பது மெவரிதினெமதுக்கே. 103. யொருகன். 104. வழிமதி. 105. டமைந்தன. 106. பலவின்கொ. 107. பலி. 108. கொட்புச் சிறையைப். 109. கிளைசேர்த். 110. றன்னை. 111. மறியீர்தன னோர்ந்தாய. 112. முதலாவ. 113. னின்மனைப். 114. மெய்த. 115. பேரினத்தாற். 116. கருவியல். 117. சேருந் தன்றலைப். 118. கிதனை. 119. வகையுமென்மனார். 120. வலலவா. 121. றிசையும். 122. தனறென. 123. தோளெதிர். 124. னோக்கிச். 125. சொன்மதிவல். 126. வெனினு. 127. யணங்கினை. 128. முண்ணுமொப்பிலியே. 129. துணி. 130. யிதனாற் 131. யதனாற். 132. யென்னைகூறுதல். 133. நையுநனிவெய்யன். 134. எண்வகையும். 135. ஓதினாராகலானும். 136. வரையப்பட்ட தென்றவாறு. 137. நோக்காதிகழ்ந்தவழியன்றித். 138. கூறினாள். 139. அவன் எத்துணையு மயக்கமிலனென்பது மவுள் பொருட்டு மயங்கினான். 140. தவவரை. 141. உணராநிற்கும். 142. எதிர்ப்படத் 143. தலைமகள். 144. மனையோள். 145. தலைவிசெய்த குறிமயங்கிப். 146. இருவர். 147. முடிந்தது. நடேசன்துணை. கற்பியல் கற்பினது இலக்கணம் உணர்த்தினமையால் இது கற்பியலென்னும் பெயர்த்தாயிற்று. அன்புரிமை பூண்ட தலைமகன் தன்பால் அன்புடைய தலைவியைப் பெற்றோர் கொடுப்பப் பலரறிய மணந்து வாழும் மனைவாழ்க்கையே கற்பெனச் சிறப்பித்துரைக்கப் பெறுவதாகும். முன் களவியலிற் கூறியவாறு ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் நல்லூழின் ஆணையால் எதிர்ப்பட்டு உள்ளப் புணர்ச்சியிற் கூடியொழுகின ராயினும் தலைமகனுடைய பெற்றோர் உடன்பாடின்றி அவ்விருவரும் மனைவாழ்க்கையை மேற்கொள்ளுதல் இயலாது. ஆகவே ஒருவரையொருவர் பிரியாது வாழ்தற்குரிய உள்ளத் துறுதியை உலகத்தாரறிய வெளிப்படுத்தும் நியதியாகியவதுவைச் சடங்குடன் தலைவன் தலைமகளை மணந்துகொள்ளுதல் மனைவாழ்க்கைக்கு இன்றியமையாத சிறப்புடைய நிகழ்ச்சியாயிற்று. உள்ளப் புணர்ச்சியளவில் உரிமை பூண்டொழுகிய தலைவனும் தலைவியும் உலகத்தாரறிய மனையறம் நிகழ்த்துதற்கு உரிமை செய்தளிக்குஞ் செயல் முறையே பண்டைத் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்காகும். இதனைக் கரணம் என்ற சொல்லால் வழங்குவர் தொல்காப்பியனார். கணவனிற் சிறந்த தெய்வம் இல்லையெனவும் அவனை இன்னவாறு வழிபடுதல் வேண்டுமெனவும் தலைமகளுக்குப் பெற்றோர் கற்பித்தலானும், அந்தணர் சான்றோர் அருந்தவத் தோர் விருந்தினர் முதலியோர்பால் இன்னவாறு நடந்துகொள்ளுதல் வேண்டுமெனத் தலைமகன் தலைமகளுக்குக் கற்பித்தலானும், நின் மனைவியை இவ்வாறு பாதுகாப்பபாயாக எனத் தலைவனுக்கும் நின் கணவனுக்கு இவ்வாறு பணி செய்தொழுகு வாயாக எனத் தலைவிக்கும் சான்றோர் கற்பித்தலானும் இவ்வதுவைச் சடங்காகிய கரணமும் கற்பெனப்படுவதாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். தலைவன் தலைவி யிருவரும் ஒருவரை யொருவர் இன்றியமையாதவராய் மணந்து வாழுங்கால் தலை மகளது மனத்தின்கண் அமைந்த கலங்கா நிலைமையாகிய திண்மையே கற்பெனப்படும். “கற்பென்னுந்திண்மை” என்றார் திருவள்ளுவர். இத்தகைய மனவுறுதியை உலகத்தாரறியப் புலப்படுத்துவது திருமணச் சடங்காகிய கரணமேயாகும். காதலர் இருவரும் பிரிவின்றியியைந்த நட்புடையார் என்பதனை வலியுறுத்துவது வதுவைச் சடங்காகிய இக்கரணமே யாதலின் இந்நியதி பிழைபடுமேல் அவ்விருவரது வாழ்க்கையில் சாதலையொத்த பெருந் துன்பம் நேருமென்பது திண்ணம். ‘கரணம் பிழைக்கில் மரணம் பயக்கும்’ என நம் நாட்டில் வழங்கும் பழமொழி இதனை வலியுறுத்தல் காணலாம். தலைவன், தலைமகளைப் பெற்றோரறியாது உடன்போக்கில் அழைத்துச் சென்றவழி, அவளுடைய பெற்றோரது உடன்பாடின்றியும் கரணம் நிகழ்தலுண்டென்பர் ஆசிரியர். எனவே மகட்கொடைக்குரிய பெற்றோரது இசைவில்லாது போயினும் காதலரிருவரது உள்ளத்துறுதியைப் புலப்படுத்து வதாகிய திருமணச் சடங்கு உலகத்தாரறிய நிகழ்தல் இன்றியமையாததென்பது நன்கு புலனாம். இத்திருமணச் சடங்கு மிகப்பழைய காலத்தில் நாட்டில் எல்லா மக்களுக்கும் விதிக்கப்பட்டிலது. படைப்புக் காலந்தொட்டு நிலைபெற்று வரும் மூவேந்தர் குடும்பத்திற்கே முதன் முதல் வகுக்கப்பட்டிருந்தது. அரசியலாட்சியில் பட்டத்தரசி முதன்மை பெறுதல் காரணமாகவே இவ்வரையறை விதிக்கப்பட்டிருத்தல் வேண்டும். வண்புகழ் மூவராகிய மேலோர் மூவர்க்கும் வகுத்த கரணம் அவர்கீழ் வாழும் குடிமக்களுக்கும் உரியதாயிற்று. இச்செய்தி, “மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம், கீழோர்க்காகிய காலமும் உண்டே” எனவரும் இவ்வியற் சூத்திரத்தால் நன்கு விளங்கும். ஒருவன், ஒருத்தியை அன்பினாற் கூடியொழுகிப் பின்னர் அவளை யறியேன் எனப் பொய் கூறுதலும், நின்னைப் பிரியேன் எனத் தெய்வத்தின் முன்னிலையில் உறுதிகூறிப் பின் அதனை வழுவிக் கடைப்பிடியின்றி யொழுகுதலுமாகிய தீய வழக்கங்கள் இந்நாட்டில் தோன்றிய பின்னரே சான்றோராகிய குடும்பத் தலைவர்கள், கணவனும் மனைவியும் பிரிவின்றி வாழ்தற்குரிய மணச் சடங்காகிய கரணத்தை வகுத்தமைத்தார்கள். இச் செய்தி, “பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” எனவரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் இனிது விளங்கும். பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன் கண் முடிய நில்லாது தப்பி யொழுகுதல், கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவா மாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று என்பர் இளம்பூரணர். ஐயர் என்னுஞ் சொல் தலைமைச் சிறப்புடைய பெரியோரைக் குறித்து வழங்குந் தனித்தமிழ்ச் சொல்லாகும். அச்சொல் ஈண்டு தமிழ்க்குல முதல்வராகிய முன்னோரைக் குறித்து நின்றது. இதனை ‘ஆர்ய’ என்னும் வடசொல்லின் திரிபாகப் பிறழவுணர்ந்து இத்தொல்காப்பியச் சூத்திரத்திற்கு மாறுபடப் பொருள் கூறினாருமுளர். “என்னைமுன் னில்லன்மின் தெவ்விர் பலரென்னை, முன்னின்று கன்னின் றவர்” (திருக்குறள்-771) எனவும், “என்னைபுற்கை யுண்டும் பெருந்தோளன்னே” (புறம்-84) எனவும் வரும் தொடர்களின் என்-ஐ என்பது என் தலைவன் என்ற பொருளில் வழங்கக் காண்கின்றோம். ஐ என்பதன் அடியாகப் பிறந்தததே ஐயர் என்னுந் தமிழ்ச் சொல்லாகும். ‘ஐ வியப்பாகும்’ (உரி-88) என்பது தொல்காப்பியம். தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறி வுடைமையாற் பலரும் வியந்து பாராட்டத் தக்க தலைமைச் சிறப்புடையாரை ஐயர் என வழங்கும் மரபுண்மை இதனாற் புலனாகும். “புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும்” (கற்-5) என்புழித்தலைவன், புதல்வனைப் பயந்து வாலாமை நீங்கிய தலைவியைக் கருதி, அறனாற்றி மூத்த அறிவுடையோர்களாகிய தன் குல முதல்வரைத் துணையாகக் கொண்டும் அமரகத்தஞ்சா மறவர்களாய்த் துறக்கம் புக்க வீரர்களை எண்ணியுஞ் சிறப்புச் செய்தலுண்டென்பதனை ஆசிரியர் விளக்கியுள்ளார். ‘ஆசறு காட்சியையர்’ (குறிஞ்சிப்-17) எனக் கபிலரும், ‘விண்செலன் மரபின் ஐயர்’ (திருமரு-107) என நக்கீரரும் முற்றத்துறந்த தவச்செல்வர்களை ஐயர் என வழங்கியுள்ளார்கள். சமணரில் இல்லறத்தாராகிய உலக நோன்பிகளைப் ‘பெரும் பெயர் ஐயர்’ என்பர் இளங்கோவடிகள். தமையன்மார்களை ஐயர் என வழங்குதலும் உண்டு. “அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட, என் ஐயர்க்குய்த்துரைத்தாள் யாய்” என்பது குறிஞ்சிக்கலி. “இளமா வெயிற்றி இவைகாண் நின்ஐயர், தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆனிரைகள்” என்பது சிலப்பதிகாரம். திருநாளைப்போவார், திருநீலகண்டயாழ்ப்பாணர் ஆகிய தலைமைப் பண்புடைய பெரியோர்களை ஐயர் என்ற சொல்லாற் சிறப்பு முறையிற் சேக்கிழாரடிகள் வழங்குதலால் இச்சொல் இக்காலத்திற்போல முற்காலத்திற் சாதிப்பெயராக வழங்கியதில்லையென்பது நன்கு துணியப்படும். பலநூறாண்டு கட்கு முற்பட்ட தமிழ் நூல்களிலும் கல்வெட்டுக்களிலும் ஐயரென்னும் இச்சொல் சாதிப்பெயராக வழங்கப்பெற்றிலது. அங்ஙனமாகவும் மிகப் பழைய தமிழ் நூலாசிய தொல் காப்பியத்தில் வழங்கிய ஐயரென்னுஞ் சொல்லுக்கு இக் காலச் சாதிப்பெயர் வழக்கத்தை யுளத்துட் கொண்டு ‘ஆரியமேலோர்’ எனப் பொருள் கூறுதல் வரலாற்று முறைக்கு ஒவ்வாத பிழையுரையாதல் திண்ணம். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் கரணம் யாத்தன ரெனவே, அவை தோன்றாத காலம் மிக முந்திய தென்பதும் அக்காலத்தில் இத்தகைய வதுவைச் சடங்குக்கு இன்றியமையாமை நேர்ந்ததில்லையென்பதும், ‘ஐயர் யாத்தனர் கரணம் என்ப’ எனத் தொல்காப்பியனார் தமக்கு முன்னோர் கூற்றாக வைத்துரைத்தலால் இக்கரண வரையறை அவர் காலத்துக்கு முன்னரே தமிழ் முன்னோர்களால் விதிக்கப்பட்ட தென்பதும் நன்கு துணியப்படும். முன் பொய்யும் வழுவுந் தோன்றாத களவு மணத்தில் பின் அவை தோன்றியதற்குத் தமிழரொடு தொடர்பில்லாத வேற்றினத்தாரது வருகையே காரணமாதல் வேண்டும். களவொழுக்கம் ஒழுகா நின்ற தலைமகன், ஒருவரும் அறியாத படி தலைமகளை உடன்போக்கில் அழைத்துச் செல்லுங்கால், அவளுடைய சுற்றத்தார் இடைச்சுரத்திடையெய்தி அவ்விரு வரையுந் தடுத்து நிறுத்த முயலுவர். அவரது வருகையைக் கண்டு அஞ்சிய தலைமகள், தன்னுயிரினுஞ் சிறந்த தலைவனைப் பிரிதற்கு மனமின்றி நிற்பள். இந்நிலையினை ‘இடைச்சுர மருங்கின் அவள் தமரெய்திக் கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை’ என்பர் ஆசிரியர். தலைவியின் கற்பு நிலையைக் கண்ட சுற்றத்தார் அவ்விருவரும் மணந்து வாழும் நெறிமுறையினை வகுத்தமைப்பர். மறைந்தொழுகும் ஒழுகலாறாகிய களவு பலரறிய வெளிப் படுதலும் பின்னர் தலைவியின்சுற்றத்தார் கொடுப்பத் தலை மகளைத் தலைவன் மணந்து கொள்ளுதலுமாகிய இவை முதலாகிய வழக்கு நெறியில் மாறபடாது, மலிவு, புலவி, ஊடல், உணர்வு, பிரிவு என்னும் இவ்வைந் தியல்களோடுங்கூடி நிகழ்வது கற்பென்னும் ஒழுகலாறாகும் என்பர் ஆசிரியர். இல்வாழ்க்கையும் புணர்ச்சியும் முதலியவற்றால் தலைவன் தலைவி யென்னும் இருவருள்ளத்துந் தோன்றும் மகிழ்ச்சியே மலிவெனப்படும். புணர்ச்சியாலுண்டாகிய மகிழ்ச்சி குறைபடாமல் காலங் கருதியிருக்கும் உள்ள நிகழச்சியே புலவியாகும். அங்ஙனம் உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பினாலன்றிச் சொல்லால் வெளிப்படுத்தும் நிலை ஊடல் எனப்படும். அவ்வாறு தலைவிக்கு ஊடல் நிகழ்ந்தவழி அதற்கேதுவாகிய செயல் என்பால் நிகழவில்லையேயெனத் தலைவனும் அவன்சார்பாக வாயில்களும் தலைமகளுக்கு உணர்த்துதலே உணர்வெனப்படும். பொருளீட்டுதலும் போர்மேற் சேறலும் கலை பயிலுதலும் முதலிய இன்றியமையாத உலகியற் கடமை கருதித் தலைவன் தன் மனையாளைப் பிரிந்துசேறல் பற்றிய நிகழ்ச்சி பிரிவெனப்படும். தமிழர் மணமுறையில் நிகழ்தற்குரிய கரணங்கள் இவை யென்பது தம் காலத்தில் வாழ்ந்த எல்லோர்க்கும் நன்கு தெரியுமாதலால் அவற்றைத் தொல்காப்பியனார் தம் நூலில் வரித்துக் கூறவில்லை. தொன்று தொட்டுத் தமிழ்மக்கள் கொண்டொழுகிய திருமணச் சடங்குகள் சிலவற்றை அகநானூற்றில் -66, 86-ஆம் பாடல்களால் ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். வேள்வியாசான் காட்டியமுறையே அங்கிசான்றாக நிகழும் சடங்குமுறை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங் களிலும் கூறப்படாமையால் ஆரியர்மேற்கொண்ட அவ்விவாக முறைக்கும் தமிழர் கொண்டொழுகிய திருமணச் சடங்குமுறைக் கும் பெரிதும் வேறுபாடுண்டெனத் தெளியலாம். கலித் தொகையில் “ஓத்துடையந்தணன் எரிவலங்கொள்வான்போல்” எனவரும் தொடரில் புரிநூலந்தணராகிய வேதியரது வேள்விச் சடங்கு உவமையாக எடுத்துரைக்கப்படுகின்றது. இத்தொடர்ப் பொருளை ஊன்றிநோக்குங்கால் இங்ஙனம் எரிவலம் வருதல் ஓத்துடையந்தணராலன்றி ஏனைய தமிழ் மக்களால் மேற் கொள்ளப்படாத சடங்கென்பது நன்கு புலனாம். இனி, இக்கற்பியலிற் கூறப்படும் ஏனைய பொருள்களை நோக்குவோம். தலைவன் தலைவி ஆகிய இருவரும் உலகத் தாரறிய மணம் புரிந்து வாழும் கற்பியல் வாழ்விலே தலைவன், தலைவி, தோழி, காமக்கிழத்தியர், அகம்புகல் மரபின் வாயில்கள், செவிலி, அறிவர், பாணர், கூத்தர், இளையோர், பார்ப்பார் என்போர் உரையாடுதற்குரிய இடங்களையும் பொருள்வகை யினையும் அவர்தம் செயல் முறைகளையும் இவ்வியல் 5-முதல் 14-வரையுள்ள சூத்திரங்களாலும், 24-முதல் 30-வரையுள்ள சூத்திரங்களாலும், 36-ம் சூத்திரத்தாலும் ஆசிரியர் விரித்துக் கூறியுள்ளார். தலைவன் தேற்றத் தெளியும் எல்லையினைத் தலைவி கடந் தனளாயினும் களவின்கண் தலைவி செய்த குறியைத் தப்பினாலும் தலைவன், மனம் சிறிது வேறுபட்டுப் புலத்தலும் அவ்வேறுபாடு நிலைத்து நிற்ப ஊடுதலும் உண்டு. அங்ஙனம் தலைவன் புலந்து ஊடிய நிலையில் அவனுள்ளம் அமைதியடைதற்குரிய பணிந்த மொழிகளைத் தோழி கூறுவாள். பரத்தையரை விரும்பியொழுகும் தலைவனது புறத்தொழுக்கத்தை நீக்குதல் கருதியும் தலைவி மடனென்னுங் குணத்தால் அடங்கியொழுகும் எளிமையுடை யளாதல் கருதியும் தலைவனை நோக்கி ‘அன்பிலை கொடியை’ யெனத் தோழி இடித்துரைத்தற்கும் உரியள். தலைவனது உள்ளக் குறிப்பை யறிதல் வேண்டியும் தன்மனத்து ஊடல் நீங்குமிடத்தும் தலைவனொடு உறவல்லாதாள்போன்று தலைவி வேறுபடப் பேசுதற்கு உரியள். கணவனை எஞ்ஞான்றும் வழிபட்டொகுதல் மனைவிக்கு இயல்பாகலால். காமவுணர்வு மிக்குத் தோன்றிய நிலையில் தலைவியைத் தலைவன் பணிந்து கூறுதல் தவறாகாது. பிறர் துன்பங்கண்டு உளமிரங்கும் அருளுணர்வைத் தோற்றுவித்த அன்பு பொதிந்த சொற்களை மெய்யே கூறுதல் தலைவிக்குரிய இயல்பாகும். முற்கூறிய களவொழுக்கத்தினும் அது வெளிப்பட்ட கற்பியல் வாழ்வினும் அலர் தோன்றும். அவ்வலர் மொழியால் தலைவன் தலைவி யிருவருள்ளத்துங் காமவுணர்வு மிக்குத் தோன்றும். இவ்வாறே தலைவனது விளையாட்டும் காமவுணர்வை மிகுதிப்படுத்தும். கணவனும் மனைவியும் சிறிது மனம் வேறுபட்டு ஊடிய காலத்து அவர்தம் பிணக்கத்தைத் தீர்த்து வைத்தற்குரியவர்கள் வாயில்கள் எனப்படுவர். பாணர், கூத்தர் முதலியோர் தலை மகனை எக்காலும் அகலாது நின்று தலைவியினது பிணக்கத்தைத் தீர்க்கும் வாயில்களாக மனைக்கண் பலகாலும் வந்து பழகும் இயல்பினராகலின், இவர்களை ‘அகம்புகல் மரபின் வாயில்கள் என்பர் ஆசிரியர். இவ்வாயில்கள் முன்னிலைப் புறமொழியாகப் பேசுதலும் உண்டு. பின்முறை வதுவையாக மற்றொருத்தியை மணந்த காலத்தும் தன் புதல்வனை வாயிலாகக் கொண்டு செல்லினும் தான் பரத்தமை செய்து ஒழுகியதை நினைந்து தலைவன் நிலைகுலைந்து கலங்குதலும் உரியன். தலைவனைக் கூடிமகிழுங் காலத்தில் தாயைப்போன்று அவனை இடித்துரைத்துத் திருத்தி அவனது மனக் கவலையை மாற்றுதலும் மனைவிக்குரிய கடமையாகும். தலைவனது ஒழுக்கத்திற் சோர்வு பிறவாமற் காத்தல் தலைவியின் கடமையாக நூல்களிற் சொல்லப்படுதலால், மகனைப் பெற்ற தாயாகிய தலைவி இங்ஙனம் இடித்துரைக்கும் உயர்வுடையளாதலும் தலைவனது உயர்வாகவே கருதப்படும். எல்லாச் செல்வங்களுக்கும் உரிய தலைவன் இவ்வாறு அன்புடையார்கண் பணிந்தொழுகுதல் இயல்பேயாகும். போர் செய்து பகைவரை வெல்லுதற்குரிய வழி துறைகளை ஆராய்தற்கு இடமாகிய பாசறையின்கண் மகளிரொடு உடனுறைதல் கூடாது. போர்த்தொழிலுதவியிற் பழகிப் புண்பட்ட வீரரை யுபசரித்தலும், இசைபாடி மகிழ்வித்தலும் முதலிய புறத்தொழில் புரியும் புறப்பெண்டிராயின் பாசறையில் இருத்தல் பொருந்துவதாகும். மனைவாழ்க்கைக்கண் கணவன் மனைவி ஆகிய இருவர்க்கு மிடையே பழகும் எல்லா வாயில்களும் அவ்விருவர்பாலும் அமைதற்குரிய மகிழ்ச்சி நிலையைப் பொருளாகக் கொண்டே உரையாடுதற்குரியர், அவ்விருவரிடத்தும் அன்பு நீங்கிய கடுஞ் சொற்களைக் கூறவேண்டிய செவ்வி நேர்ந்தால் நேர் நின்று கூறாது சிறைப்புறமாக ஒதுங்கி நின்று கூறுதல் வேண்டும். தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலும் தெளித்தலும் என்னும் இரண்டிடமுமல்லாத ஏனையிடங்களில் தலைவன் முன்னர்த் தலைவி தன்னைப் புகழ்தல் கூடாது. தலைவன் வினைவயிற் பிரியுங்கால் தலைவி முன்னர்க் தன்னைப் புகழ்ந்துரைத்தல் பொருந்தும். தலைவன் கூற்றினை எதிர்த்துக் கூறும் உரிமை பாங்கனுக்கு உண்டு. இங்ஙனம் எதிர்த்துக்கூறும் சொல் எல்லாக் காலத்திலும் நிகழ்வதில்லை; அருகியே நிகழும். துன்பக்காலத்தும் தலைவியை வற்புறுத்தியல்லது தலைவன் பிரிந்து செல்லுதல் இல்லை. வினைமேற்செல்லுங் காலத்துத் தலைவி தன் பிரிவினைப் பொறுத்திருக்கமாட்டாள் என்ற நிலையில் தனது பயணத்தை நீங்குதல் இல்லை; அவளை வற்புறுத்தல் கருதிச் சிறிதுபொழுது தாமதித்துச் செல்வன். தலைவன் வினை மேற்கொண்டு சென்ற இடத்தில் அவன்பாற் சென்று தலைவியின் ஆற்றாத்தன்மையை யாவரும் சொல்வதில்லை. தலைவன் தான் மேற்கொண்ட வினையில் வெற்றிபெற்ற நிலையிலேதான் தலைவியைப்பற்றிய நினைவு அவனுள்ளத்தே விளங்கித் தோன்றும். தலைவிக்குப் பூப்புத்தோன்றி மூன்றுநாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் கருத்தோன்றுங் காலமாதலின், தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்துப் பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் தலைவினைப் பிரிந்துறைதல் கூடாதென்பர் ஆசிரியர். யாவராலும் விரும்பத்தக்க கல்வி கருதிப் பிரியுங்காலம் மூன்றண்டுகளுக்கு மேற்படாது. பகை தணிவினையாகிய வேந்தற்குற்றுழிப் பிரியும் பிரிவும், அதனைச்சார்ந்த தூது, காவல் என்பனவும், ஒழிந்த பொருள்வயிற் பிரிவும் ஓராண்டிற்குட்பட்ட காலவெல்லையினையுடையன. யாறு குளங்களிலும் சோலைகளிலும் விளையாடி உறைபதியைக் கடந்துபோய் நுகர்ச்சி யெய்துதல் தலைவன் தலைவி யிருவர்க்கும் உரியதாகும். இங்ஙனம் காமநுகர்ச்சி யெல்லாம் நுகர்ந்தமைந்த பிற்காலத்தே, பாதுகாவலமைந்த பிள்ளைகளுடனே நெருங்கி, அறத்தினை விரும்பும் சுற்றத் தாருடனே தலைவனும் தலைவியும், வீடுபேறாகிய சிறப்பினை யருளும் முழுமுதற்பொருளை இடைவிடாது எண்ணிப் போற்றும் நன்னெறியிற் பழகுதல், மேற்கூறிய மனைவாழ்க்கையின் முடிந்த பயனாகும். தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய இப் பன்னிருவரும் மனைவாழ்க்கையின்கண்ணே கணவன் மனைவி யென்போரிடையேயுளதாம் பிணக்கத்தினைத் தீர்த்து வைக்கும் நிறைந்த சிறப்பினையுடைய வாயில்களாவர். வினைகருதிப் பிரிந்த தலைமகன், தன் உள்ளம்போன்று உற்றுழியுதவும் பறவையின் வேகத்தையுடைய குதிரையையுடைய னாதலின், தான் வினைமுற்றி மீளுங் காலத்து இடைவழியிற் றங்காது விரைந்து வருதலையுடையனாவன் என அவன் தலைவி யின்பால் வைத்த பெருவிருப்பினைப் புலப்படுத்துவர் ஆசிரியர். - க. வெள்ளைவாரணனார் நூல் வரிசை -10, பக். 273-281 நான்காவது கற்பியல் 140. கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், கற்பியல் என்னும் பெயர்த்து. கற்புக்கு இலக்கணம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். கற்பென்பது யாதோவெனின், அஃதாமாறு இச்சூத்திரத்தின் விளங்கும். இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், கற்பிலக்கணம் கூறுதல் நுதலிற்று. கற்பென்று சொல்லப்படுவது, கரணத்தொடு பொருந்திக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழத்தியைக் கொடுத்தற் குரிய மரபினை யுடையார் கொடுப்பக் கொள்வது என்றவாறு. ‘கொளற்குரிய மரபின்’ என்பதனைக் ‘கிழத்தி’ என்பதனோடுங் கூட்டியுரைக்க. களவின்கண் ஒத்தாரிருவர் வேட்கை மிகுதியாற் கூடி ஒழுகியவழிக் கரணத்தின் அமையாது இல்லறம் நடத்தலாமோ எனின், அஃதாகா தென்றற்குக் ‘கரணமொடு புணர’ என்றார். கரணம் என்பது வதுவைச் சடங்கு. ‘கொளற்குரி மரபிற் கிழவோன்’ என்றதனான் ஒத்த குலத்தானும் உயர்ந்த குலத்தானும் என்று கொள்க. ‘கொளற்குரி மரபிற் கிழத்தி’ யென்றதனான், ஒத்த குலத்தாளும் இழிந்த குலத்தாளும் என்று கொள்க. ‘கொடைக்குரி மரபினோர்’ என்றதனான், தந்தையும் தாயும் தன்னையரும் மாதுலனும் இவரில்லாதவழிச் சான்றோரும் தெய்வமும் என்று கொள்க. கொடுப்பக் கொள்வது கற்பு என்றமையான், அது கொடுக்குங்கால், களவு வெளிப்பட்ட வழியும், களவு வெளிப்படாத வழியும், மெய்யுறு புணர்ச்சியின்றி உள்ளப் புணர்ச்சியான் உரிமைபூண்ட வழியும் கொள்ளப் பெறும் எனக் கொள்க. களவியற் சூத்திரத்துள்,``இன்பமும் பொருளு மறனு மென்றாங், கன்பொடு புணர்ந்த.’’ (களவியல் 1) என்பதனைத் தந்துரைத்து, ஐந்திணை மருங்கிற் கற்பெனப்படுவது எனக் கூட்டுக. அஃதேல், கொடுப்பக் கொள்வது கற்பாயின் பிரமம் முதலிய எண்வகையும் கொள்க. ‘கொடுப்போ ரின்றியும் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான’ (என்னும்) இது கற்பாகுமோ எனின், ஆகும். அவையும் கற்பாதல் ஒக்குமேனும் கந்திருவம்போல ஒத்த அன்புடையார் ஆதல் ஒருதலை யன்மையின் கைக்கிளை பெருந்திணைப்பாற்படும். ஈண்டு ஐந்திணை தழுவிய அகத்திணையையே களவு கற்பு எனப் பகுத்தார் என்று கொள்க. (1) 141. கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான. இது மேலதற்கோர் புறனடை. கொடுப்போரின்றியும், கரணநிகழ்ச்சி உண்டு, புணர்ந் துடன் போகிய காலத்து என்றவாறு. எனவே கற்பிற்குக் கரணநிகழ்ச்சி ஒருதலையாயிற்று. இதனானே கொடுப்போரில்வழியும் கரணநிகழ்ச்சி உண்மையும் ஒழுக்கக் குறைபாடு இன்மையும் கொள்க. ``பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வெள்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே.’’ (குறுந். 15) இதனுள் விடலையொடு மடந்தை நட்பு பறைபடப் பணில மார்ப்ப விறைகொண்டு நாலூர்க் கோசர் நன்மொழிபோல வாயாயிற்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும், விடலை எனப் பாலை நிலத்திற்குரிய தலைவன் பெயர் கூறினமையானும் கொடுப்போரின்றியும் கரணம் நிகழ்ந்தவாறு காண்க. (2) 142. மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணங் கீழோர்க் காகிய காலமு முண்டே. இதுவுமது. மேற்குலத்தாராகிய அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூன்று வருணத்தார்க்கும் புணர்த்த கரணம் கீழோராகிய வேளாண் மாந்தர்க்கும் ஆகிய காலமும் உண்டு என்றவாறு. இதனாற் சொல்லியது, முற்காலத்துக் கரணம் பொதுப்பட நிகழ்த லின் எல்லார்க்கும் ஆம் 1என்பதும், பிற்காலத்து வேளாண் மாந்தர்க்குத்துவிர்ந்ததெனவுங் கூறியவாறு போலும். அஃதாமாறு தரும சாத்திரம் வல்லாரைக்கொண்டுணர்க. (3) 143. பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் மென்ப. என்றது, கரணமாகியவாறு உணர்த்துதல் நுதலிற்று. பொய்கூறலும் வழூஉப்பட வொழுகலும் தோன்றிய பின்னர் முனைவர் கரணத்தைக் கட்டினார் என்று சொல்வர் என்றவாறு. இரண்டுந் தோன்றுவது இரண்டாம் ஊழியின் கண்ணாதலின், முதலூழியிற் 2கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்ததென்பதூஉம் இவை தோன்றிய பின்னர்க் கரணந் தோன்றின தென்பதூஉம் கூறியவாறாயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவாவது செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி 3யொழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையின் அவை யிரண்டும் நிகழாவா மாதலாற் கரணம் வேண்டுவதாயிற்று. (4) 144. கரணத்தி னமைந்து முடிந்த காலை நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும் அஞ்ச வந்த வுரிமைக் கண்ணும் நன்னெறிப் படருந் தொன்னலப் பொருளினும் பெற்ற தேஎத்துப் பெருமையி னிலைஇக் குற்றஞ் சான்ற பொருளெடுத் துரைப்பினும் நாமக் காலத் துண்டெனத் தோழி ஏமுறு கடவு ளேத்திய மருங்கினும் அல்ல றீர வார்வமொ டளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணுஞ் சொல்லென ஏனது சுவைப்பினு நீகை தொட்டது வானோ ரமிழ்தம் புரையுமா லெமக்கென அடிசிலும் பூவுந் தொடுத்தற் கண்ணும் அந்தணர் திறத்துஞ் சான்றோர் தேஎத்து மந்தமில் சிறப்பிற் பிறர்பிறர் திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினு மொழுக்கத்துக் களவினு ணிகழ்ந்த வருமையைப் புலம்பி அலமர லுள்ளமொ டளவிய விடத்தும் அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழிகெட வொழுகலும் அழிய லஞ்சலென் றாயிரு பொருளினுந் தானவட் பிழைத்த பருவத் தானும் நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னி னாகிய தகுதிக் கண்ணும் 4புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதின் நெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற் கண்ணும் பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லா துயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி அல்கன் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய விரவினும் உறலருங் 5குரைமையின் ஊடன்மிகுத் தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் பிரிவி னெச்சத்துப் புலம்பிய விருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும் நின்றுநனி பிரிவி னஞ்சிய பையுளுஞ் சென்றுகை யிகந்துபெயர்த் துள்ளிய வழியுங் காமத்தின் வலியுங் கைவிடி னச்சமுந் தானவட் பிழைத்த நிலையின் கண்ணும் உடன்சேறற் செய்கையோ டன்னவை பிறவும் மடம்பட வந்த தோழிக் கண்ணும் வேற்றுநாட் டகல்வயின் விழுமத் தானும் மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் பேரிசை யூர்திப் பாகர் பாங்கினுங் காமக் கிழத்தி மனையோ ளென்றிவர் ஏமுறு கிளவி சொல்லிய வெதிருஞ் சென்ற தேஎத் துழப்புநனி விளக்கி இன்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் அருந்தொழின் முடித்த செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற் கண்ணும் மாலை யேந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக் கண்ணும் ஏனைய வாயிலோ ரெதிரொடு தொகைஇப் பண்ணமை பகுதிமுப் பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன் மேன. இது, தலைவற்கு உரிய கிளவியெல்லாந் தொகுத் துணர்த்துதல் நுதலிற்று. கரணத்தினமைந்து முடிந்த பின்பு, நெஞ்சுதளை யவிழ்ந்த புணர்ச்சி முதலாக ஏனைய வாயிலோரெதிரொடு கூடிப் 6பண்ணுத லமைந்த பகுதியினையுடைய முப்பத்தின் மூன்றிடத்தினும் கூறல் எண்ணுதற் கரிய சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு. இடம் என்பது வகையிற் கூறியவதனான் உரைக்கப்பட்டது. கூற்றென்பது வருகின்ற சூத்திரத்தினும் கொணர்ந்துரைக்கப் பட்டது. கரணத்தினமைந்து முடிந்த காலை என்பது - ஆசான் புணர்த்த கரணத்தினான் வதுவை முடிந்தபின் என்றவாறு. நெஞ்சு தளையவிழ்த லாவது - தலைவியைத்தலைவன் கண்ணுற்ற ஞான்று தலைவன்மாட்டு உளவாகிய பெருமையும் உரனும் தலைவி மாட்டு உளவாகிய அச்சமும் நாணும் மடனும் ஏதுவாக இயற்கைப் புணர்ச்சி இடையீடுபட்டுழி, வேட்கை தணியாது வரைந்தெய்துங்காறும் இருவர்மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டுவிடப்படுதல். இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் அலரறி வுறுக்கப்பட்டு நீங்கி வரைந்தெய்துங்காறும், புணர்ச்சி வேட்கையாற் செல்கின்ற நெஞ்சினை இருவரும் வேட்கை தோற்றாமல் தளைக்கப் பட்டதனைத் தளை என்றலும் ஒன்று. இவை யிரண்டினும் மிகுதி பொருளாகக் கொள்க. உதாரணம்: ``உழுந்து தலைப்பெய்த கொழுங்களி விதவை பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகாற் றண்பெரும் பந்தர்த் தருமணன் ஞெமிரி மனைவிளக் குறுத்து மாலை தொடரிக் கனையிரு ளகன்ற 7கவின்பெறு காலைக் கோள்கா னீங்கிய கொடுவெண் டிங்கட் கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென உச்சிக் குடத்தர் புத்தகன் மண்டையர் பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வர்ப் பயந்த திதலை யவ்வயிற்று வாலிழை மகளிர் நால்வர் கூடிக் கற்பின் வழாஅ நற்பல வுதவிப் பெற்றாற் பெட்கும் பிணையை யாகென நீரொடு சொரிந்த வீரித ழலரி பல்லிருங் கதுப்பி னெல்லொடு தயங்க வதுவை நன்மணங் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேரிற் கிழத்தி யாகெனத்த மர்தர ஓரிற் கூடிய வுடன்புணர் கங்குற் கொடும்புறம் வளைஇய கோடிக் கலிங்கத் தொடுங்கினள் கிடந்தன ளோர்புறந் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப அஞ்சின ளுயிர்த்த காலை யாழநின் னெஞ்சம் பயந்த தெஞ்சா துரையென இன்னகை யிருக்கைப் பின்னியான் வினவலிற் செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர வகமலி யுவகைய ளாகி முகனிகுத் தேயென விறைஞ்சி யோளே மாவின் மடங்கொண் மதைஇய நோக்கி னொடுங்கீ ரோதி மாஅ யோளே.’’ (அகம். 86) இதனுள் ‘முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப வஞ்சினள் உயிர்த்தகாலை’ என்பதனான் இயற்கைப்புணர்ச்சி யின்மையும், ‘அகமலியு வகையளாகி முகனிகுத் தேய்யென விறைஞ்சி’ என்பதனால் உள்ளப்புணர்ச்சி யுண்மையும் அறிக. பிறவும் அன்ன. எஞ்சா மகிழ்ச்சி யிறந்துவரு பருவத்தும் என்பது - ஒழியாத மகிழ்ச்சி மிக்கு வருங் காலத்துத் தலைவன்கட் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``குனிகா யெருக்கின் குவிமுகிழ் விண்டலொடு பனிவா ராவிரைப் பன்மலர் சேர்த்தித் தாருங் கண்ணியுந் ததைஇத் தன்னிட் டூரு மடவோன் உலர்வன் கொல்லென நீர்த்துறைப் பெண்டிர் நெஞ்சழிந் 8திரங்கினு முணரா ளூர்தோ றணிமடற் கலிமா மன்றத் தேறித்தன் அணிநலம் பாடினு மறியா ளென்றியான் பெருமலை நெடுங்கோ டேறிப் 9பெறுகென் றுருவிடித் தீயி னுடம்புசுடர் வைத்த வென்னுறு விழுமம் நோக்கிப் பொன்னொடு திருமணி யிமைக்குங் கோடுயர் நனந்தலை 10யிரவுடைப் பெண்டி 11ரிடும்பை நோக்கித் தெளிவுமனங் கொண்ட தீதறு காட்சி வெளியன் வேண்மான் விளங்குகரி போல மலிகட லுடுத்த மணங்கெழு நனந்தலைப் பலபா ராட்டவும் படுவ மாதோ கடைந்து கவித்தன்ன கால்வீங்கு கருங்கட் புடைதிரள் வனமுலை புலம்ப லஞ்சிக் காமர் நுழைநுண் ணுசுப்பிற் றாமரை முகத்தியைத் தந்த பாலே.’’ (குணநாற்பது.) என வரும். அஞ்சவந்த உரிமைக்கண்ணும் என்றது - தலைவன் தானும் பிறரும் அஞ்சும்படியாகத்தலைவிமாட்டு உளதாகிய கற்பாகிய உரிமைக்கண்ணும் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. நன்னெறிப் படரும் தொன்னலப் பொருளினும் என்றது- நன்னெறிக்கட் செல்லாநின்ற தொன்னலப் பொருண்மைக் கண்ணும் என்றவாறு. நன்னெறியாவது - அறம்பொருளின்பம் வழுவாத நெறி. தலைமகன் சிறப்புத் தொன்றுதொட்டு வருதலிற் குடிநலத்தைத் தொன்னலமென்றார். இதனாற் சொல்லியது அறம் பொருள் இன்பங்களை வழாமல் தன்குலத் திற்கேற்ற மனைவாழ்க்கையைத் தலைமகள் நடத்துதற்கண்ணும் தலைவன்கண் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``தடமருப் பெருமை மடைநடைக் குழவி தூண்டொறும் யாத்த காண்தகு நல்லிற் கொடுங்குழை பெய்த செழுஞ்செய் பேழை சிறுதாழ் செறித்த மெல்விரல் சேப்ப வாளை யீர்ந்தடி வல்லிதின் வகையிறப் புகையுண் டமர்த்த கண்ண டகைபெறப் பிறைநுதற் பொறித்த சிறுநுண் பலவிய ரந்துகிற் றலையிற் றுடையின 12ணப்புலந் தட்டி லோளே யம்மா வரிவை யெமக்கே வருகதில் விருந்தே சிவப்பார்ந்த சிறியமுள் ளெயிறு தோன்ற முறுவல் கொண்ட முகங்காண் கும்மே.’’ (நற். 120) இதனுள் ஊடற்குறிப்பினளாகிய தலைவி மனை வாழ்க்கைத் தருமமாகிய விருந்து புறந்தருதல் விருப்பினளாதலின் நன்னெறிப் படர்தல் ஆயிற்று. பெற்றதேஎத்துப் பெருமையின் நிலைஇக் குற்றஞ் சான்ற பொருள் எடுத்துரைப்பினும் என்றது - வரைந்து பெற்றவழித் தலைவியைப் பெருமையின்கண்ணே நிறுத்திக் களவுக்காலத்துக் குற்றஞ்சான்ற பொருளை யெடுத்துக் கூறியவழியும் என்றவாறு. உதாரணம்: ``அதிரிசை யருவிய பெருவரைத் தொடுத்த பஃறே 13னிறாஅ லல்குநர்க் குதவு நுந்தை நன்னாட்டு வெந்திறன் முருகென நின்னோய்க் கியற்றிய வெறிநின் றோழி யென்வயி னோக்கலிற் போலும் பன்னாள் வருந்திய வருத்தந் தீரநின் றிருந்திழைப் பணைத்தோள் புணர்ந்துவந் ததுவே.’’ இதனுள் ‘நுந்தை நன்னாட்டு’ என்றதனான் தலைவி பெருமையும், ‘நின்னோய்க் கியற்றிய வெறி நின்தோழி யென்வயி னோக்கலிற் போலும்’ என்றதனால் குற்றஞ்சான்ற பொருள் என்பதும் அறிந்துகொள்க. நாமக் காலத்துண்டெனத் தோழி யேமுறு கடவு ளேத்திய மருங்கினும் என்பது - அச்சக்காலத்து நமக்குத்துணை யாயிற்றெனத் தோழி யேமுறு கடவுளை யேத்துதற்கண்ணும் தலைவன்கட் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச் சொல்லுறு பொருளின் கண்ணும் என்பது - தலைவி தன் துன்பந் தீர ஆர்வத்தொடு பொருந்தச் சொல்லப்பட்ட பொருண்மைக்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. என்றது களவுக் காலத்து வருந்திய வருத்தந் தீரத் தனது காதல் மிகுதி தோன்றச் சொல்லுதற் பொருளின் கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானும் நீயு மெவ்வழி யறிதுஞ் செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.’’ (குறுந். 40) என வரும். சொல்லென வேனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலும் பூவுந் தொடுத்தற்கண் ணும் என்பது - யாதானும் ஒன்றை நுகரினும் நீ கையால் தொட்டது வானோர் அமிழ்தம் புரையும், இதற்குக் காரணம் சொல்லுவாயாக என்று அடிசில் தொடுத்தற்கண்ணும் பூத்தொடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. வந்தது கொண்டு வாராதது முடித்தல் என்பதனான், சாந்து முதலியனவும் கொள்க. உதாரணம்: வந்தவழிக் காண்க. ``வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி’’ (குறுந். 196) 14எனத்தலைவன் கூறினமை தோழி கூறுதலானும் அறிக. அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பிற் பிறர் பிறர் திறத்தினும் ஒழுக்கம் காட்டிய குறிப்பினும் என்பது - பார்ப்பார் கண்ணும் சான்றோர்கண்ணும் மிக்க சிறப்பினையுடைய பிறராகிய அவரவரிடத்தும் ஒழுகும் ஒழுக்கத்தைக் குறிப்பினான் காட்டிய இடத்தினும் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் கண்டுகொள்க. ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி யலமர லுள்ளமொ டளவியவிடத்தும் என்பது - ஒழுக்கத்தினுங் களவுக் காலத்து நிகழ்ந்த அருமையைத்துனித்துச் சுழன்ற உள்ளத்தோடே உசாவிய விடத்தும் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. அந்தரத் தெழுதிய வெழுத்தின் மான வந்த குற்றம் வழி கெட ஒழுகலும் என்பது - களவுக்காலத் தொழுகிய ஒழுக்கக் குறைபாட்டான் நிகழ்ந்த குற்றத்தை ஆகாயத்தெழுத்துப் போல வழிகெட ஒழுகு தற்கண்ணும் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. அழியல் அஞ்சலென் றாயிரு பொருளினுந் தானவட் பிழைத்த பருவத்தானும் என்பது - அழியல், அஞ்சல் என இயற்கைப் புணர்ச் சிக்கட் கூறிய அவ்விருபொருளைப் பிழைத்து காலத்தினும் தலைவன் கண் கூற்று நிகழும் என்றவாறு. அஃதாவது, புறப்பெண்டிர்மாட்டுப் பிரிதல். ``நகுகம் வாராய் பாண பகுவாய் 15அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில் தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன் பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு காம நெஞ்சந் துரப்ப யாந்த முயங்கல் விருப்பொடு குறுகினே மாகப் பிறைவனப் 16புற்ற மாசறு திருநுத னாறிருங் கதுப்பினெங் காதலி வேறுணர்ந்து வெரூஉமான் பிணையி னோக்கி யாரை யோவென விகந்துநின் றதுவே.’’ (நற். 250) என வரும். நோன்மையும் பெருமையும் மெய்கொள வருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னினாகிய தகுதிக்கண்ணும் என்பது - பொறையும் பெருமையும் மெய்யெனக் கொள்ளுமாறு அருளி, ஆராய்தல் அமைந்த வாயிலொடு பொருந்தித், தலைவன் தன்னான் ஆகிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. அருளிப் பொருந்திக் கூறும் எனக் கூட்டுக. எனவே தலைமகன் என்பதூஉந் தலைமகள் என்பதூஉம் எஞ்சிநின்றன. கூற்று என்றது அதிகாரத்தான் வந்தது. அஃதாவது, பொறுத்தல் வேண்டும் எனவும் சிறுமை செய்தல் குற்றம் எனவும் கூறுதலும், தலைமகள்தன்னான் வந்ததனை என்னான் வந்தது எனவும் இவ்வாறு கூறுதல். பன்னல் சான்ற வாயிலாவது, ``நீ என் செய்தனை? இவள் வெகுடற்குக் காரணம் என்னை?’’ என ஆராய்தலிற் பொருந்திய தோழி என்க. பொருந்துதலாவது வேறுபடாது உடம்படுதல். அவை வருமாறு: ``யாரினுங் காதல மென்றேமா வூடினா ளியாரினு மியாரினு மென்று.’’ (குறள். 1314) ``தும்முச் செறுப்ப வழுதா ணுமருள்ள வெம்மை மறைத்திரோ வென்று.’’ (குறள். 1318) ``இம்மைப் பிறப்போ பிரியல மென்றேமாக் கண்ணிறை நீர்கொண் டனள்.’’ (குறள். 1315) ``தன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீ ரீந்நீர ராகுதி ரென்று.’’ (குறள். 1319) ``கோட்டுப்பூச் சூடினுங் காயு மோர்த்தியைக் காட்டிய சூடினீ ரென்று.’’ (குறள். 1313) என வரும். பிறவும் அன்ன. 17புதல்வற் பயந்த புனிறுதீர் பொழுதி னெய்யணி மயக்கம் புரிந்தோ ணோக்கி ஐயர் பாங்கினு மமரர்ச் சுட்டியுஞ் செய்பெருஞ் சிறப்பொடு சேர்தற்கண்ணும் என்பது 18புதல்வனைப் பயந்த ஈன்ற ணிமை நீங்கின பொழுதின்கண் நெய்யணி மயக்கம் புரிந்தவளைக் குறித்து முனிவர்மாட்டும் அமரரைக் குறித்தும் செய்யாநிற்கும் பெரிய சிறப்பொடு சேர்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. நெய்யணி மயக்கமாவது வாலாமை நீங்கி நெய்யணிதல். நோக்கிச் சேர்தல் எனக் கூட்டுக. ``வாராய் பாண நகுகம் நேரிழை கடும்புடைக் கடுஞ்சூ னங்குடிக் குதவி நெய்யோ டிமைக்கு மையவித் திரள்தாள் விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப் புதல்வனை யீன்றெனப் பெயர்பெயர்த் தவ்வரித் திதலை யல்குன் முதுபெண் டாகித் துஞ்சுதி யோமெல் லஞ்சி லோதியெனப் 19பன்மா ணகட்டிற் குவளை யொற்றி யுள்ளினெ னுள்ளுறை 20யெற்கண்டு மெல்ல முகைநாண் முறுவ லொன்றித் தகைமல ருண்கண் 21புதைத் ததுவே.’’ (நற். 370) என வரும். பயங்கெழு துணையணைப் புல்லிப் புல்லாது உயங்குவனள் கிடந்த கிழத்தியைக் குறுகி அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் என்பது - தலைவன் பரத்தையிற் பிரிந்துழி ஊடற் கருத்தினளாய்ப் பயங்கெழு துணை அணையைப் புல்லிப் புல்லாது வருந்திக் கிடந்த தலைவியைக் கிட்டித்தங்குதலைக் குறித்து நிறையழிபொழுதில் தலைவியது மெல்லென்ற சீறடியைப் புல்லிய இரத்தற்கண்ணும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொ லென்று.’’ (குறள். 1307) ``ஊடுக மன்னோ வொளியிழா யாமிரப்ப நீடுக மன்னோ விரா.’’ (குறள். 1329) ``ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும்.’’ (குறள். 1322) என வரும். உறலருங் குரைமையி னூடன் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற்கண்ணும் என்பது - ஊடல் மிகுத்தோளை உறுதற்கருமையாற் பிறபிற பெண்டிர் ஏதுவாக ஊடல் உணர்த்துற்கண்ணும் என்றவாறு. ``22புனம்வளர் பூங்கொடி யன்னாய்’’ என்னும் மருதக் கலியுள், ``ஒருத்தி, புலவியாற் புல்லா திருந்தா ளலவுற்று வண்டின மார்ப்ப விடைவிட்டுக் காதலன் றண்டா ரகலம் புகும்.’’ (கலித். 92) எனப் பிறபிற பெண்டிரைக் காட்டித்தலைவன் ஊடலுணர்த்திய வாறு அறிந்து கொள்க. பிரிவினெச்சத்துப் புலம்பிய விருவரைப் பரிவு நீக்கிய பகுதிக் கண்ணும் என்பது - பிரிவு நிமித்தமாக வருந்திய மனையாளையும் காமக் கிழத்தியையும் அவ் வருத்தத்து நின்று நீக்கிய பகுதிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு.; அஃதாவது பிரியேன் என்றல். ``பொன்னும் மணியும் போலும் யாழநின் நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும் போது 23மணையும் போலும் யாழநின் மாத ருண்கணும் வனப்பின் தோளும் இவைகாண் டோறு மகமலிந் தியானு மறநிலை பெற்றோ ரனையே னதன்றலைப் பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் வினையும் வேறு புலத்திலே னினையின் யாதனிற் பிரிகோம் மடந்தை காத றானுங் கடலினும் பெரிதே.’’ (நற். 166) இக்கூற்று இருவர்மாட்டும் ஒக்கும். நின்றுநனி பிரிவின் அஞ்சிய பையுளும் என்பது நிலைநிற்க மிகப்பிரியும் பிரிவின்கண் அஞ்சிய நோயின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. ``ஆள்வழக் கற்ற சுரத்திடைக் கதிர்தெற நீளெரி பரந்த நெடுநிலை 24யாஅத்துப் போய்வளி முயங்கும் புல்லெ னுயர்சினை முடைநசை யிருக்கைப் பெடைமுக நோக்கி யூன்பதித் தன்ன வெருவரு செஞ்செவி எருவைச் சேவல் கரிபுசிறை தீய வேனி னீடிய வேயுயர் நனந்தலை மலையுழந் தெய்துஞ் செய்வினைப் பொருட்பிணி பல்லிதழ் மழைக்கண் மாஅ யோள்வயிற் பிரியிப் புணர்வ தாயிற் பிரியா தேந்துமுலை முற்றம் வீங்கப் பல்லூழ் சேயிழை தெளிர்ப்பக் கவைஇ நாளு மனைமுதல் வினையொடு முவப்ப நினைமா நெஞ்ச நீங்குதன் மறந்தே.’’ (அகம். 51) என வரும். சென்று கையிகந்து பெயர்த்துள்ளியவழியும் என்பது மேற்கூறிய வாற்றினைக் கையிகந்து முன்னொருகாற் சென்று மீட்டும் அந்நெறி யினைப் போக நினைந்தவழியும் கூற்று நிகழும் என்றவாறு. ``இருங்கழி முதலை மேஎந்தோ லன்ன கருங்கா லோமைக் காண்பின் பெருஞ்சினைக் கடியுடை நனந்தலை யீன்றிளைப் பட்ட கொடுவாய்ப் பேடைக் 25கல்கிரை தரீஇயர் மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை 26வான்றோய் சிமய விறல்வரைக் கவாஅற் றுளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி யொண்செங் குருதி 27யுவறியுண் டருந்துபு புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை கொள்ளை மாந்தரி னானாது கவரும் புல்லிலை 28மராத்த வகன்சே ணத்தங் கலந்தர லுள்ளமொடு கழியக் காட்டிப் பின்னின்று துரக்கும் நெஞ்ச நின்வாய் வாய்போற் பொய்ம்மொழியெம் மெவ்வங் களைஇயர் கவிரித ழன்ன காண்பின் செவ்வா யந்தீங் கிளவி யாயிழை மடந்தை கொடுங்குழைக் கமர்த்த நோக்கம் நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே.’’ (அகம். 3) என வரும். காமத்தின் வலியும் என்பது பொருளினுங் காமம் வலியுடைத்த என உட்கொண்டவழியும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``விரிதிரைப் பெருங்கடல் வளைஇய வுலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தே ணாடும் இரண்டுந் தூக்கிற் சீர்சா லாவே பூப்போ லுண்கண் பொன்போன் மேனி மாண்வரி யல்குற் குறுமகள் தோண்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.’’ (குறுந். 101) எனவரும். கைவிடின் அச்சமும் என்பது - தலைவியைக் கைவிட்டவழி அவளது உயிர்ப்பொருட்டு அஞ்சுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``அளிநிலை பொறாஅது தமரிய முகத்தள் விளிநிலை கேளா டமியன் மென்மெல நலமிகு சேவடி நிலம்வடுக் கொள்ளாக் குறுக வந்து கூரெயிறு தோன்ற வறிதகத் தெழுந்த வாயன் முறுவலள் கண்ணிய துணரா வளவை யொண்ணுதல் வினைதலைப் படுதல் செல்ல னினைவுடன் 29முளிந்த வோமை முதையலங் காட்டுப் பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி மோட்டிரும் பாறை யீட்டுவட் டேய்ப்ப உதிர்வன படூஉங் கதிர்தெறு கவாஅன் மாய்த்த போல 30மழுகுநுனை தோற்றிப் பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல் விரனுதி சிதைக்கு நிரைனிலை யதர பரன்முர பாகிய பயமில் கானம் இறப்ப வெண்ணினி ராயி னறத்தா றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன வாக வென்னுநள் போலு முன்னங் காட்டி முகத்தி னரையா வோவச் செய்தியி னொன்றுநினைந் தொற்றிப் பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ டாகத் தொடுக்கிய புதல்வன் புன்தலைத் தூநீர் பயந்த துணையமை பிணையன் மோயின ளுயிர்த்த காலை மாமலர் மணியுரு விழந்த வணியழி தோற்றங் கண்டே கடிந்தனஞ் செலவே யொண்டொடி உழைய மாகவு 31மினைவோள் பிழையலண் மாதோ 32பிரிதுநா மெனினே.’’ (அகம். 5) என வரும். தானவட்பிழைத்த நிலையின்கண்ணும் என்பது - தலைவன் தலைவியை ‘நின்னிற் பிரியேன்’ என்ற சொல்லிற் பிழைத்து நிலையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. பிழைத்தலாவது பிரிதல்: ``வயங்குமணி பொருத வகையமை வனப்பிற் பசுங்கா ழல்குன் மாஅ யோளொடு வினைவனப் பெய்திய புனைபூஞ் சேக்கை விண்பொலி நெடுநகர்த் தங்கி யின்றே இனிதுடன் கழிந்தன்று மன்னே நாளைப் பொருந்தாக் கண்ணேம் புலம்புவந் துறுதரச் சேக்குவங் கொல்லோ நெஞ்சே சாத்தெறிந் ததர்கூட் டுண்ணு மணங்குடைப் பகழிக் கொடுவி லாடவர் படுபகை வெரீஇ ஊரெழுந் துலறிய பீரெழு முதுபாழ் முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரினோங்கு சிறுபுற முரிஞ்ச வொல்கி யிட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென 33மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத் தெழுதணி கடவுள் போகலிற் புல்லென் றொழுகுபலி மறந்த மெழுகாப் 34புன்றிணைப் பானாய் துள்ளிய பறைக்கட் சிற்றிற் குயில்காழ் சிதைய மண்டி யயில்வாய்க் கூர்முகச் சிதலை வேய்ந்த போர்மடி நல்லிழைப் பொதியி லானே.’’ (அகம். 167) என வரும். உடன் சேறற் செய்கையொடு என்பது உடன்போக வேண்டு மெனச் சொல்லியவழியும் என்றவாறு. ஒடு எண்ணின்கண் வந்தது. ``செருமிகு சினவேந்தன்’’ என்னும் பாலைக் கலியுள், ``எல்வளை யெம்மொடு நீவரின் யாழநின் மெல்லியன் மெல்வந்த சீறடித் தாமரை அல்லிசே ராயித ழரக்குத் 35தோய்ந் தவைபோலக் கல்லுறி னவ்வடி கறுக்குந வல்லவோ.’’ (கலித். 13) என வரும். அன்னவை பிறவும் மடம்பட வந்த தோழிக்கண்ணும் என்பது - மேற்சொல்லப்பட்டவையிற்றினும் மடமைப்பட வந்த தோழி மாட்டும் கூற்று நிகழும் என்றவாறு. அவையாவன: ``இல்லென விரந்தோர்க்கொன் றீயாமை யிழிவெனக் கல்லிறந்து செயல்சூழ்ந்த பொருள்பொரு ளாகுமோ’’ (கலித்.2) என வரும். இந்நிகரன கூறியவழித்தலைவன் கூற்று நிகழும். இவ்வழிக் கூறுங் கூற்றுக் காமமாகத் தோன்றாது பொருளாகத் தோன்றும், காமத்திற்கு மாறாகக் கூறல் வேண்டுதலின். ``இன்பம் விழையான் வினைவிழைவான் றன்கேளிர் துன்பந் துடைத்தூன்றுந் தூண்.’’ (குறள். 615) என வரும். வேற்றுநாட் டகல்வயின் விழுமத்தானும் என்பது- வேற்றுநாட்டு அகலும்வழி வரும் நோயின்கண்ணும் என்றவாறு. அஃதாவது, பிரிவு ஒருப்பட்ட பின்பு போவேமோ தவிர்வேமோ எனச் சொல்லும் மனநிகழ்ச்சி: உதாரணம்: ``உண்ணா மையி னுயங்கிய மருங்கு லாடாப் படிவத் தான்றோர் போல வரைசார் சிறுநெறி நிரைபுடன் செல்லுங் கான யானை கவினழி குன்றம் இறந்துபொரு டருதலு மாற்றாய் சிறந்த சில்லிருங் கூந்த னல்லகம் பொருந்தி யொழியின் வறுமை யஞ்சுதி யளித்தக வுடையை வாழிய நெஞ்சே நிலவென நெய்கனி நெடுவே லெஃகிலை யிமைக்கு மழைமருண் பஃறோன் மாவண் சோழர் கழைமாய் காவிரிக் கடன்மண்டு பெருந்துறை யிறவொடு வந்து கோதையொடு பெயரும் பெருங்கட லோதம் போல வொன்றிற் கொள்ளாய் சென்றுதரு பொருட்கே.’’ (அகம். 123) என வரும். மீட்டுவர வாய்ந்த வகையின் கண்ணும் என்பது - பிரிந்த தலைவன் மீட்டு வரவு வாய்ந்த வகையின்கண்ணும் என்றவாறு. ‘வரவு’ என்பது கடைகுறைந்தது. உதாரணம்: ``தாழிரு டுமிய மின்னித் தண்ணென வீழுறை யினிய சிதறி யூழிற் கடிப்பிடு முரசின் முழங்கி யிடித்திடித்துப் பெய்யினி வாழியோ பெருவான் யாமே செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு டிவணின் மேவின மாகிக் குவளைக் குறுந்தா ணாண்மலர் நாறு நறுமென் கூந்தன் மெல்லணை யேமே.’’ (குறுந். 270) இது வந்து புகுந்த தலைவன் கூற்று. அவ்வழிப் பெருகிய சிறப்பின் கண்ணும் என்பது - தலைவன் பிரிந்துழிப் பெருகிய சிறப்பினும் கூற்று நிகழும் என்றவாறு. ``கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை நாறிதழ்க் குவளையொ டிடைப்பட விரைஇ யைதுதொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாயது முயங்குக மினியே.’’ (குறுந். 62) என வரும். பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும் என்பது - தானுற்ற வின்பத்தினைப் பாகற்குக் கூறுதற்கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``மறத்தற் கரிதாற் பாக பன்னாள் வறத்தொடு வருந்திய வுலகுதொழிற் 36கொளீஇய 37மழைபெயல் பொழிந்த புதுநீர் வல்வர நாநவில் பல்கிளை கறங்கு மாண்வினை மணியொலி கௌhள்ளாள் வாணுத லாதனா னேகுமி னென்ற விளையர் வல்லே இல்புக் கறியுணர் வாக மெல்லென மண்ணாக் கூந்தன் மாசறக் கழீஇச் சில்போது கொண்டு பல்குர லழுத்திய வந்நிலை புகுதலின் மெய்வருத் துராஅய் வீழ்பூ முடியிள் கவைஇய மடமா வரிவை மகிழ்ந்தயர் நிலையே.’’ (நற். 42) என வரும். காமக் கிழத்தி மனையோ ளென்றிவ ரேமுறு கிளவி சொல்லிய வெதிரும் என்பது - காமக்கிழத்தியும் மனையாளும் என்று சொல்லு மிருவரும் பாதுகாவலாகக் கூறிய கூற்றினெதிரும் தலைவன் கூற்று நிகழும் என்றவாறு. இவ்விருவரும் இல்லுறை மகளிராதலின், தலைவன்மாட்டு நிகழுமவை இருவருக்கும் ஒக்கும் என்க. அஃதாவது வழிவந்தவா றென்னை யெனவும் வருத்துமுற்றீ ரெனவும் இந்நிகரன பல கூறுதல். உதாரணம்: ``எரிகவர்ந் துண்ட 38வென்றூழ் நீளிடை யரிய வாயினு மெளிய வன்றே வவவுறு நெஞ்சங் கவவுநனி விரும்பிக் கடுமான் றிண்டேர் கடைஇ நெடுமா னோக்கிநின் 39னுள்ளியாம் வரவே.’’ (ஐங்குறு. 360) என வரும். சென்ற தேஎத்துழப்பு நனிவிளக்கி யின்றிச் சென்ற தன்னிலை கிளப்பினும் என்பது - தான் சென்ற தேயத்து வருத்தத்தை மிகவும் விளக்கித்தலைவியை யொழித்துச் சென்ற தன்னிலைமை கிளப்பினும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``ஒழித்(த)து பழித்து நெஞ்சமொடு வழிப்படர்ந் துள்ளியு மறிதிரோ வெம்மென யாழநின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவ லழுங்க நோய்முந் துறுத்து நொதுமன் மொழியனின் னாய்நல மறப்பனோ மற்றே சேணிகந் 40தொலிகழை பிசைந்த ஞெலிசொரி யொண்பொறி படுஞெமல் புதையப் பொத்தி நெடுநிலை முளிபுன் மீமிசை வளிசுழற் றுறாலிற் காடுகவர் 41பெருந்தீ யோடுவயி னோடலி னதர்கெடுத் தலறிய சாத்தொ டொராங்கு மதர்புலி வெரீஇய மையல் வேழத் தினந்தலை மயங்கிய நனந்தலைப் பெருங்காட்டு ஞான்றுதோன் றவிர்சுடர் மான்றாற் பட்டெனக் கட்பட ரோதி நிற்படர்ந் துள்ளி 42யருஞ்செல வாற்றா வாரிடை ஞெரேரெனப் பரந்துபடு பாய னவ்வி யற்றென விலங்குவளை செறியா 43விகுத்த நோக்கமொடு நிலங்கிளை நினைவினை நின்ற நிற்கண் டின்னகை வினைய மாகவு மெம்வயி னூடல் யாங்குவந் தன்றென யாழநின் கோடேந்து புருவமொடு 44குவவுநுத னீவி 45நறுங்கதுப் புளரிய நன்ன ரமையத்து வறுங்கை காட்டிய வாயல் கனவி னேற்றேக் கற்ற வுலம்வரல் போற்றா யாதலிற் புலத்தியா (லெம்)மே.’’ (அகம். 39) என வரும். அருந்தொழின் முடித்து செம்மற் காலை விருந்தொடு நல்லவை வேண்டற்கண்ணும் என்பது - அரிய வினையை முடித்து வந்த தலைமைக் காலத்து விருந்தினரொடுகூட நல்லவற்றைக் கிளத்தி விருப்பமுறுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. மாலை ஏந்திய பெண்டிரு மக்களுங் கேளி ரொழுக்கத்துப் புகற்சிக்கண்ணும் என்பது - தலைவனை எதிர்கொண்டு மங்கலமாக மாலையேந்தி நின்ற பெண்டிரும் மக்களும் கேளிரும் ஒழுகும் ஒழுக்கத்து விருப்பத்தின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. கேளிரும் என்னும் உம்மை எஞ்சி நின்றது. ஈண்டு ஒழுக்க மாவது - ``சொல்லாது பெயர்ந்தீர்’’ என்றானும், ``இளமையும் காமமும் நோக்காது பெயர்ந்தீர்’’ என்றானும் கூறி, ``இதற்குக் காரணம் என்னை?’’ எனத்தலைவன் வந்துழி அவர் நிகழ்த்தும் நிகழ்ச்சி. உதாரணம்: ``உள்ளினெ னல்லனோ யானே யுள்ளி நினைந்தனெ னல்லனோ பெரிதே நினைந்து மருண்டனெ னல்லனோ வுலகத்துப் பண்பே நீடிய மராத்த கோடுதோய் மலிநிறை யிறைத்துணச் சென்றற் றாங்க மனைப்பெருங் காம மீண்டுகடைக் 46கொளவே.’’ (குறுந். 99) என வரும். ஏனைய வாயிலோ ரெதிரொடு தொகைஇ என்பது - பெண்டிரு மல்லாத வாயில்களாயினார் எதிர் கூறும் கூற்றும் தலைவன்மாட்டு நிகழும் என்றவாறு. இவை யெல்லாம் காமப் பொருளாகத் தோன்றா, அவர் செயல் பொருளாகத் தோன்றும். உதாரணம்: வந்தவழிக் காண்க. பண்ணமைப் பகுதிமுப் பதினொரு மூன்றும் எண்ணருஞ் சிறப்பிற் கிழவோன்மேன என்பது - செய்தலமைந்த பகுதியினை யுடைய முப்பத்துமூன் றிடத்தினும் நிகழும் கூற்று மிக்க சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றவாறு. மிக்க சிறப்பினையுடைய கிழவோன் மேலன என்றமை யான், மிகாத சிறப்பினையுடையார்மாட்டு இவையெல்லாம் ஒருங்கு நிகழ்தலில என்று கொள்க. ‘செயலமை பகுதி’ என்றதனான், இவ்விடங்களின் வரும் பொருள் வேறுபாடுகட்கும் இவையே இடமாகக் கொள்க. (5) 145. அவனறி வாற்ற வறியு மாகலின் ஏற்றற் கண்ணு நிறுத்தற் கண்ணும் உரிமை கொடுத்த கிழவோன் பாங்கிற் பெருமையிற் றிரியா வன்பின் கண்ணுங் கிழவனை மகடூஉப் புலம்புபெரி தாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் இன்பமு மிடும்பையு மாகிய விடத்துங் கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியி னீக்கிய விளிவரு நிலையும் புகன்ற வுள்ளமொடு புதுவோர் சாயற் ககன்ற கிழவனைப் புலம்புநனி காட்டி இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர்பெய்து மறுத்த வீரத்து மருங்கினுந் தங்கிய வொழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க் குரையென விரத்தற் கண்ணுஞ் செல்லாக் காலைச் செல்கென விடுத்தலுங் காமக் கிழத்தி தன்மகத் தழீஇ யேமுறு விளையாட் டிறுதிக் கண்ணுஞ் சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி அறம்புரி நெஞ்சமொடு தன்வர வறியாமைப் புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத் தானுந் தந்தைய ரொப்பர் மக்களென் பதனால் அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினுங் கொடியோர் கொடுமை சுடுமென வொடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியி னீங்கிய தகுதிக் கண்ணுங் கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி அடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காத லெங்கையர் காணி னன்றென மாதர் சான்ற வகையின் கண்ணுந் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை யுள்ளிய வழியுந் தன்வயிற் சிறப்பினு மவன்வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூ ளெடுத்தற் கண்ணுங் காமக் கிழத்தி நலம்பா ராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணுங் கொடுமை யொழுக்கத்துத் தோழிக் குரியவை வடுவறு சிறப்பிற் கற்பிற் றிரியாமைக் காய்தலு முவத்தலும் பிரித்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவ தென்ப. என்-னின், கற்பின்கண் தலைவிகூற்று நிகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. ஏற்றல் முதலாக வாயிலின் வரூஉம் வகையொடு கூடத்தலைவி கூறல் உரியதாகும் என்றவாறு. அவனறி வாற்ற அறியு மாகலின் ஏற்றற் கண்ணும் என்பது - தலைவனது நினைவைத்தலைவி மிக அறியுமாகலின் அவனை யுயர்த்துக் கூறுதற்கண்ணும் தலைவி கூற்று நிகழும். உதாரணம்: ``நின்ற சொல்லர் நீடுதோன் றினிய ரென்று மென்றோள் பிரிவறி யலரே தாமரைத் தண்டா தூதி மீமிசைச் சாந்திற் கொண்ட தீந்தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை நீரின் றமையா வுலகம் போலத் தம்மின் றமையா நந்நயந் தருளி நறுநுதல் பசத்த லஞ்சிச் சிறுமை யுறுப செய்பறி யலரே.’’ (நற். 1) என வரும். நிறுத்தற் கண்ணும் என்பது - தலைவனது பண்பினைத் தோழி கூறியவாற்றான் தான் நிறுத்துக் கூறுதற்கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``முடவுமுதிர் பலவின் குடமருள் பெரும்பழம் 47பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் பாடிமி ழருவிப் பாறை மருங்கி னாடுமயின் முன்னர்த் தாகக் கோடியர் விழவுகொண் மூதூர் விறலியர் பின்றை முரல்வன் போல வகப்படத் தழீஇ இன்றுணைப் பயிருங் குன்ற நாடன் குடிநன் குடையன் கூடுநர்ப் பிரியல னெடுநா மொழிய 48னன்பின னெனநீ 49வல்ல கூறி வாய்வதிற் 50புணர்த்தோய் 51நல்லை நாணினி காதலந் தோழி கடும்பரிப் புரவி நெடுந்தே ரஞ்சி நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவற் றொல்லிசை நிறீஇய வுரைசால் பாண்மகன் எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும் புதுவது புனைந்த திறத்தினும் வதுவை நாளினு மினியனா லெமக்கே.’’ (அகம். 352) என வரும். உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின் பெருமையின் திரியா அன்பின் கண்ணும் என்பது - தலைவிக்கு உரிமையைக் கொடுத்த கிழவோன்மாட்டுப் பெருமையிற் றிரியா அன்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே.’’ (குறுந். 3) என வரும். கிழவனை மகடூஉப் புலம்பு பெரிதாகலின் அலமரல் பெருகிய காமத்து மிகுதியும் என்பது - தலைவனைத்தலைவி நீங்கித்தனிமை யுறுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதி யின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``நீர் நீடாடிற் கண்ணுஞ் சிவக்கும் ஆர்ந்தோர் வாயிற் றேனும் புளிக்குந் தணந்தனி ராயினெம் மில்லுய்த்துக் கொடுமோ வந்தண் பொய்கை யெந்தை யெம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவி னடுங்கஞ ரெவ்வங் களைந்த வெம்மே.’’ (குறுந். 354) எனவும், ``என்கைக் கொண்டு தன்க ணொற்றியுந் தன்கைக் கொண்டென் னன்னுத னீவியும் அன்னை போல வினிய கூறியுங் கள்வர் போலக் கொடியன் மாதோ மணியென விழிதரும் அருவிப் பொன்னென வேங்கை வீதரு மோங்குமலை யடுக்கத் தாடுகழை நிவந்த பைங்கண் மூங்கில் ஓடுமழை கிழிக்குஞ் சேண கோடுயர் பிறங்கன் மலைகிழ வோனே.’’ (நற். 28) எனவும், ``மனைநடு வயலை வேழஞ் சுற்றுந் துறைகே ழூரன் கொடுமை நாணி நல்ல னென்று மியாமே யல்ல னென்னுமென் தடமென் றோளே.’’ (ஐங்குறு. 11) எனவும், ``வீழுநர் வீழப் படுவோர்க் கமையுமே வாழுந மென்னுஞ் செருக்கு.’’ (குறள். 1193) எனவும் வரும். இன்பமும் இடும்பையும் ஆகிய இடத்தும் - என்பது தலைவிக்கு இன்பமும் துன்பமும் ஒருங்கு நிகழும்வழியும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்க ணுடைத்தாம் புணர்வு.’’ (குறள். 1152) எனவும், ``குக்கூ வென்றது கோழி யதனெதிர் துட்கென் றற்றென் றூஉ நெஞ்சம் தோடோய் காதலர்ப் பிரிக்கும் வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.’’ (குறுந். 157) எனவும் வரும். கயந்தலை தோன்றிய காமர் நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறீஇ நளியின் நீக்கிய இளிவரு நிலையும் என்பது- புதல்வன் றோன்றிய நெய்யணி நயந்த கிழவனை நெஞ்சு புண்ணுறுமாறு பண்ணிச் செறிவு நீக்கிய இளிவந்த நிலையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. இளிவந்த நிலையாவது தன்னை அவமதித்தான் என்னுங் குறிப்பு. உதாரணம்: ``கரும்புநடு பாத்திக் கதிர்த்த வாம்பல் சுரும்புபசி 52களையும் பெரும்புன லூர புதல்வனை யீன்றவெம் மேனி முயங்க லதுவே தெய்யநின் மார்புசிதைப் பதுவே.’’ (ஐங்குறு. 65) என வரும். புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு அகன்ற கிழவனைப் புலம்பு நனிகாட்டி இயன்ற நெஞ்சந் தலைப்பெயர்த் தருக்கி எதிர்பெய்து மறுத்து ஈரத்து மருங்கினும் என்பது - விருப்பமுடைய உள்ளத்தோடே புதுவோரது நலத்தின்பொருட்டு அகன்ற கிழவனைத்துனது தனிமை மிகவுங்காட்டி அவன்மாட்டுச் செல்கின்ற நெஞ்சத்தை மீட்டு 53அருகப்பண்ணி அவன் காதலித்தாளை எதிர்பெய்துகொண்டு புணர்ச்சியை மறுத்து ஈரத்தின்கண்ணும் கூற்று நிகழும். ஈரமாவது முற்றும் மறாமை. ``கடல்கண் டன்ன கண்ணகன் பரப்பி னிலம்பக வீழ்ந்த வேர்முதிர் கிழங்கிற் கழைகண் டன்ன தூம்புடைத் திரள்காற் களிற்றுச் செவியன்ன பாசடை மருங்கிற் 54கழுநிவந் தன்ன கொழுமுகை யிடையிடை முறுவன் முகத்திற் பன்மலர் தயங்கப் பூத்த தாமரைப் புள்ளிமிழ் 55பழனத்து வேப்புநனை யன்ன நெடுங்க ணீர்ஞெண் டிரைதேர் வெண்குரு கஞ்சி யயல தொலித்த பகன்றை யிருஞ்சேற் றள்ளற் றிதலையின் வரிப்ப ஓடி விரைபுத னீர்மலி 56மண்ணளைச் செறியு மூர மனைநடு வயலை மானிவர் கொழுங்கொடி அரிமல ராம்பலோ டார்தழை தைஇய விழவாடு மகளிரொடு தழுவணிப் பொலிந்து மலரே ருண்கண் மாணிழை முன்கைக் குறுந்தொடி துடக்கிய நெடுந்தொடர் விடுத்த துடன்றனள் போலுநின் காதலி யெம்போற் புல்லுளைக் குடுமிப் புதல்வற் பயந்து நெல்லுடை நெடுநகர் நின்னின் றுறைய என்ன கடத்தளோ மற்றே 57தன்முகத் தெழுதெழில் சிதைய வழுதன ளேங்கிய வடித்தென 58வுருத்த தித்திப் பல்லூழ் நொடித்தெனச் சிவந்த மெல்விரற் றிருகுபு கூர்நுனை மழுகிய வெயிற்றள் ஊர்முழுது நுவலுநிற் காணிய சென்மே.’’ (அகம். 176) என வரும். தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரையென இரத்தற் கண்ணும் என்பது - பிறள்மாட்டுத்தங்கிய ஒழுக்கத்துக் கிழவனைத்தாழ்ந்து எங்கையர்க்கு உரையென வேண்டிக் கோடற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. ‘அகன்றுறை’ என்னுங் கலியுள், ``நோதக்கா யெனநின்னை நொந்தீவா ரில்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் 59ஞெகிழ்தொடி யிளையவ ரிளமுலைத் தாதுசோர்ந் திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால் .................... ..................... ................. ................. .................... ..................... ................. ................. மண்டுநீ ராரா மலிகடல் போலுநின் தண்டாப் பரத்தை தலைக்கொள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமேற் றோலாமோ நின்பொய் மருண்டு.’’ (கலித். 73) எனக் கூறுதலால் தான் தாழ்ந்தவாறும், எங்கையர்க்கு உரை இற்றெனக் கூறியவாறும் காண்க. ``நினக்கே யன்றஃ தெமக்குமா ரினிதே நின்மார்பு நயந்த நன்னுத லரிவை வேண்டிய குறிப்பினை யாகி ஈண்டு நீயருளர தாண்டுறை தல்லே.’’ (ஐங்குறு. 49) இதுவும் அது. செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் என்பது தலைவன் போகாத காலத்துப் போவெனக் கூறுதலும் என்றவாறு. உதாரணம்: ``பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்கா யிகவாய் நெடுங்கடை 60நில்லாதி ஆங்கே யவர்வயிற் சென்றி யணிசிதைப்பா னீங்கெம் புதல்வனைத் தந்து.’’ (கலித். 79) என வரும். காமக் கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விளையாட்டு இறுதிக் கண்ணும் என்பது - காமக்கிழத்தி தலைவி மகவைத்தழீஇ ஏமுற்ற விளையாட்டின் இறுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதி னல்லி யவிரிதழ் புரையு மாசி லங்கேழ் மணிமருள் செவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத் தேர்வழங்கு தெருவிற் றமியோற் கண்டே கூரெயிற் றரிவை குறுகி யாவருங் காணுந ரின்மையிற் 61சேர்த்தனள் பேணடிப் பொலங்கலஞ் சுமந்த பூண்டாங் கிளமுலை வருக மாளவென் னுயிரெனப் பெரிதுவந்து கொண்டன 62னின்றோட் கண்டுநிலைச் செல்லேன் மாசில் குறுமக ளெவன்பே துற்றனை நீயுந் 63தாயை யிவற்கென யான்றற் கரைய வந்து விரைவனென் கவைஇக் களவுடன் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா நாணி நின்றோ ணிலைகண் டியானும் பேணின னல்லனோ மகிழ்ந வானத் தணங்கருங் கடவு ளன்னோணின் மகன்றா யாதல் புரைவதா லெனவே.’’ (அகம். 16) என வரும். சிறந்த செய்கை யவ்வழித் தோன்றி யறம்புரி நெஞ்சமொடு தன் வரவறியாமை புறஞ்செய்து பெயர்த்தல் வேண்டிடத்தானும் என்பது - சிறந்த செய்கையினையுடைய அவ்விடத்துத் தலைவன் தோன்றி அறம்புரி நெஞ்சத்தோடே தனது வரவைத்தலைவி யறியாளாக நின்று தலைவியைப் புறஞ்செய்து அவள் மாட்டுளதாகிய ஊடலைப் பெயர்த்தல் வேண்டின இடத்தும் தலைவிமாட்டுக் கூற்று நிகழும் என்றவாறு. அவ்வழி என்றது தலைவியுங் காமக்கிழத்தியைப் போலத்தன் மகனைக் கொண்டு விளையாடியவழியும் என்றவாறு. ``மையற விளங்கிய’’ என்னும் மருதக் கலியுள், ``பெரும விருந்தொடு 64கைதூவா வெம்மையும் உள்ளாய் பெருந்தெருவிற் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீகற்ற சொற்களியான் கேட்க வருந்தோவா நெஞ்சிற் கமிழ்தமயின் 65றற்றாப் பெருந்தகாய் கூறு சில.’’ எனவும், ``எல்லிழாய், சேய்ந்நின்று நாங்கொணர்ந்த பாணன் சிதைந்தாங்கே வாயோடி யேனாதிப் பாடியோ மென்றற்றால் நோய்நாந் தணிக்கும் மருந்தெனப் பாராட்ட வோவா தெடுத்தெடுத் தத்தத்தா வென்பவன்மான வேய்மென்றோள் வேய்த்66திறஞ் சேர்த்தலு மற்றிவன் வாயுள்ளிற் போகா னரோ.’’ எனவும், ``உள்ளி யுழையே யொருங்கு படைவிடக் கள்வர் படர்தந் ததுபோலத் தாமெம்மை யெள்ளுமார் வந்தாரே யீங்கு.’’ (கலித். 81) எனவும், இவ்வாறு வரும். தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனான், அந்தமில் சிறப்பின் மகப்பழித்து நெருங்கினும் என்பது - தந்தையரை மக்கள் ஒப்பர் என்பதனான் அந்தமில்லாத சிறப்பினையுடைய மகனைப் பழித்தற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. ``மைபடு சென்னி மழகளிற் றோடை’’ என்னும் மருதக் கலியுள் (86), ``வீத லறியா விழுப்பொரு ணச்சியார் காதன்மாட் டொத்தி பெருமமற் றொவ்வாதி மாதர்மென் னோக்கின் மகளிரை நுந்தைபோ னோய்கூர நோக்காய் விடல்.’’ (கலித். 86) என வரும். கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகைஇப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் என்பது - கொடியாரது கொடுமை சுடாநின்றதெனப் புணர்ச்சியை ஒடியாது புகழை விரும்பினோர் சொல்லோடே ஒருப்பட்டு வேறுபடுதலின் நீங்கிய தகுதிக்கண்ணும் என்றவாறு. அஃதாவது, அக்காலத்துத் தக்கதறிதல். புகழை விரும்பினோர் சொல்லும் சொல்லாவது, காமம் விரும்பும் பரத்தையரைப் போலாது அறத்தை விரும்புதல். உதாரணம்: 67‘யாரிவனெங் கூந்தல்’ என்னும் மருதக் கலியுள் (89), ``68மாண மறந்துள்ளா நாணிலிக் குப்போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே யுறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ னெனநெருங்கிற் றப்பினே னென்றடி சேர்தலு முண்டு.’’ (கலித். 89) என்பது ஆற்றாமை வாயிலாகப் பகுதியி னீங்கிய தகுதி. பாணன் முதலானோர்க்கு வாயில் நேர்ந்தது வந்தவழிக் காண்க. கொடுமை யொழுக்கங் கோடல் வேண்டி யடிமேல் வீழ்ந்த கிழவனை நெருங்கிக் காத லெங்கையர் காணின் நன்றென மாதர் சான்ற வகையின்கண்ணும் என்பது - தலைவனது கொடுமை யொழுக்கத்தினைத்தலைவியே பொறுக்கவேண்டி அவளடிமேல் வீழ்ந்தவனை நெருங்கி நின்மாட்டுக் காதலையுடைய எங்கையர் காணின் இப்பணிதல் நன்றா மெனக் காதலமைந்த வகையின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. ‘நில்லாங்கு நில்லா’ என்னும் மருதக் கலியுள், ``நல்லாய், பொய்யெல்லா மேற்றித் 69தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன்; அருளினி; அருளுகம் யாம்யாரே 70மெல்லா தெருள வளித்துநீ பண்ணிய பூழெல்லா மின்னும் விளித்துநின் பாணனோ டாடி யளித்து விடலைநீ நீக்கலின் னோய்பெரி தேய்க்கு நடலைப்பட் டெல்லா நின்பூழ்.’’ (கலித். 95) இதனுள் ‘கையொடு கண்டை பிழைத்தேனருள்’ என அடிமேல் வீழ்ந்தவாறும், ‘அருளுகம் யாம் யாரேம்’ எனக் காதலமைந்தவாறும், ‘நீ நீக்கலின் நின் பூழெல்லாம் நடலைப்பட்டு நோய் பெரிதேய்க்கும் அவற்றை யின்னும் விளித்து நின் பாணனோடாடி யளித்துவிடு’ எனவும் ‘இப்பணிதல் நின் பெண்டிர்க்கு நன்றாகுமே’ எனவும் கூறியவாறு காண்க. ஈண்டுப் பூழ் என்றது குறிப்பினாற் பரத்தையரை. தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள்ளிய வழியும் என்பது - தாயரைக் கிட்டிய நல்ல அணியை யுடைய புதல்வனை மாயப் பரத்தை குறித்தவழியுங் கூற்று நிகழும் என்றவாறு. புதல்வனைப் பரத்தைமை குறித்துலாவது, தலைவன் புறப்பெண்டிர்மாட்டுப் போகியவழி வெகுளுமாறு போலப் புதல்வனையும் அவரிடைச் சென்றவழி வெகுளல். ‘கண்ணிய நல்லணி’ யெனவே அவர் கொடுத்த நல்லணி யென்பது பெறுதும். பரத்தைமை உள்ளாதவழி இவள்மாட்டு ஊடற் குறிப்பு நிகழாதாம். மாயமென்பது பரத்தைக்குப் பண்பாகி இனஞ் சுட்டாது வந்தது. உதாரணம்: ``உறுவளி தூக்கும் 71முயர்சினை மாவி னறுவடி யாரிற் றவைபோ லழியக் கரந்தியா 72னரக்கவுங் கைநில்லா வீங்கிச் சுரந்தவென் மென்முலைப் 73பால்பழு தாகநீ நல்வாயிற் போத்தந்த பொழுதினா 74னெல்லா கடவுட் கடிநகர் தோறு மிவனை வலங்கொளீஇயர் வாவெனச் சென்றாய் விலங்கினை யீரமி லாத விவன்றந்தை பெண்டிருள் யாரிற் றவிர்ந்தனை கூறு; நீருள், அடைமறை யாயிதழ்ப் போதுபோற் கொண்ட குடைநிழற் றோன்றுநின் செம்மலைக் காணூஉ விவன்மன்ற யானோவ வுள்ளங்கொண் டுள்ளா மகனல்லான் பெற்ற மகனென் றகனகர் வாயில் வரையிறந்து போதந்து தாயர் தெருவிற் றவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர் தத்தங் கலங்களுட் கையுறை 75யென்றிவற் கொத்தவை யாய்பாய்ந் 76தணிந்தார்; பிறன்பெண்டிர், ஈத்தவை கொள்வா ரிஃதொத்தன் சீத்தை 77செறுதக்கான் மன்ற பெரிது. சிறுபட்டி, ஏதிலார் கையெம்மை யெள்ளுபு நீதொட்ட மோதிரம் யாவோயாங் காண்கு; அவற்றுள், நறாவிதழ் கண்டன்ன செவ்விரற் கேற்பச் சுறாவே றெழுதிய மோதிரந் தொட்டாள் குறியறிந்தேன் காமன் கொடியெழுதி யென்றுஞ் செறியாப் பரத்தை யிவன்றந்தை மார்பிற் 78பொறியொற்றிக் கொண்டாள்வ லென்பது தன்னை யறீஇய செய்த வினை; அன்னையோ, இஃதொன்று; முந்தையே கண்டு யெழுகல்லா தென்முன்னர் வெந்தபுண் வேலெறிந் தற்றா லிஃதொன்று தந்தை யிறைத்தொடி மற்றிவன் றன்கைக்கட் டந்தாரியா ரெல்லா விது; என்னொத்துக் காண்க பிறரு மிவற்கென்னுந் தன்னலம் பாடுவி தந்தாளா நின்னை யிதுதொடு கென்றவர் யார்; அஞ்சாதி, நீயுந் தவறிலை நின்கை யிதுதந்த பூவெழி லுண்க ணவளுந் தவறிலள் 79வேனிற் புனலன்ன நுந்தையை நோவார்யார் மேலின்று மெள்ளி யிதுவிவன் கைத்தந்தா டானியாரோ வென்று வினவிய நோய்ப்பாலேன் யானே தவறுடை யேன்.’’ (கலித்.84) என வரும். தன்வயிற் சிறப்பினும் அவன்வயிற் பிரிப்பினும் இன்னாத் தொல்சூள் எடுத்தற் கண்ணும் என்பது - தன்மாட்டு நின்ற மிகுதியானும் அவன்மாட்டு நின்ற வேறுபாட்டானும் இன்னாத பழைய சூளுறவைத்துலைவி யெடுத்தவழியும் கூற்று நிகழும் என்றவாறு. தலைமகள்மாட்டு மிகுதி யாதோ வெனின், ``மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவும் நினையுங் காலைப் புலவியு ளுரிய.’’ (பொருளியல். 32) என்றாராகலான், அக்காலத்து மிகுதியுளதாம். ``தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீகூறும் பொய்ச்சூ ளணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு.’’ (கலித். 88) என வரும். காமக்கிழத்தி நலம் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின் கண்ணும் என்பது - காமக்கிழத்தி நலத்தினைப் பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. நலம் பாராட்டுவாள் தலைவி; அவள் பாராட்டுதல் தீமை பற்றி வருதலான், அதனாற் சொல்லி முடிப்பது பிற பொருளாயிற்று. உதாரணம்: ``கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே.’’ (ஐங்குறு. 122) இதனான், அவள் மிக்க இளமைகூறித்தலைவனைப் பழித்தாளாம்; ஒருமுகத்தாற் புலந்தவாறு. இன்னுந் தலைமகள் நலம் பாராட்டியவழிக் கூறவும் பெறும். ``அணிற்பல் லன்ன கொங்குமுதிர் முண்டகத்து மணிக்கே ழன்ன மாநீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை யாயினு நீயா கியரெங் கணவனை யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே.’’ (குறுந். 49) என வரும். கொடுமை ஒழுக்கத்துத் தோழிக் குரியவை வடுவறு சிறப்பின் திரியாமைக் காய்தலும் உவத்தலும் பெட்டலும் ஆவயின் வரூஉம் பல்வேறு நிலையினும் என்பது - தலைவி கொடுமை யொழுக்கத்துத் தோழிக்குக் கூறுதற் குரியவை குற்றமற்ற சிறப்பினையுடைய கற்பின்கண் திரியாது தலைவனைக் காய்தலும் உவத்துலும் நீக்கி நிறுத்தலும் பேணிக்கோடலும் அவ்விடத்து வரும் பலவாய் வேறுபட்டு வரு நிலையினும் தலைவி கூற்று நிகழும் என்றவாறு. தோழிக்குரியவை என்றதனான் தோழிக்குக் கூறத்தகாதனவும் உள என்று கொள்க. உதாரணம்: ``நன்னலந் தொலைய நலமிகச் சாஅய் இன்னுயிர் கழியினு முரைய லவர்நமக் கன்னையு மத்தனு மல்லரோ தோழி புல்லிய தெவனோ வன்பிலங் கடையே.’’ (குறுந். 93) இது காய்தல் பற்றி வந்தது. ``நாமவர் திருந்தெயி றுண்ணவு வமர்நம தேந்துமுலை யாகத்துச் சாந்து கண்படுப்பவுங் கண்டுசுடு பரத்தையின் வந்தோற் கண்டு மூடுதல் பெருந்திரு வுறுகெனப் பீடுபெற லருமையின் முயங்கி யேனே.’’ எனவும், ``காணுங்கால் காணேன் றவறாய காணாக்காற் காணேன் றவறல்ல வை.’’ (குறள். 1286) எனவும் இவை உவத்தல்பற்றி வந்தன. ``அடும்பவி ழணிமலர் சிதைஇ மீனருந்துந் தடந்தா ணாரை யிருக்கு மெக்கர்த் தண்ணந் துறைவற் றொடுத்து நன்னலங் கொள்வா மிடுக்க ணஞ்சி யிரந்தோர் வேண்டக் கொடுத்தவை தாவெனக் கூறலி னின்னா தோநம் மன்னுயி ரிழவே.’’ இது பிரித்தல் பற்றி வந்தது. ``நீரேர் செறுவி னெய்தலொடு நீடிய நேரித ழாம்ப னிரையிதழ் கொண்மார் சீரார் சேயிழை யொலிப்ப வோடு மோரை மகளி ரோதை வெரீஇயெரி யார லார்கை யஞ்சிறைத் தொழுதி யுயர்ந்த பொங்க 80ருயர்மர மேறி யமர்க்கண் மகளி ரலப்பிய வந்நோய் தனக்குரைப் பனபோற் பல்குரல் பயிற்று முயர்ந்த போர்வி னொலிநல் லூரன் புதுவோர்ப் புணர்தல் வெய்ய னாயின் வதுவை நாளால் வைகலு மஃதியா னோவென் றோழி நோவாய் நீயென வெற்பார்த் துறுவோய் கேளினித் தெற்றென; 81எல்லினை வருதி யெவன்குறித் தனையெனச் சொல்லா திருப்பேன் னாயி னொல்லென விரியுளைக் 82கலிமான் றேரொடு வந்த விருந்தெதிர் கோடலின் மறப்ப லென்றும்; வாடிய பூவொடு வாரலெம் மனையென வூடி யிருப்பே னாயி னீடா தச்சா றாக புணரிய வருபவன் பொய்ச்சூ ளஞ்சிப் புலவே னாகுவல்; பகலாண் டல்கினை பரத்தை யென்றியா னிகலி யிருப்பே னாயிற் றான்றன் முதல்வன் பெரும்பெயர் முறையுளிப் பெற்ற புதல்வற் புல்லிப் பொய்த்துயி றுஞ்சும்; ஆங்க; விருந்தெதிர் கொள்ளவும் பொய்ச்சூ ளஞ்சவு மரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவு மாங்கலாந் தொழியுமென் புலவி தாங்கா தவ்வ விடத்தா னவையவை காணப் பூங்கண் மகளிர் புனைநலஞ் சிதைக்கு மாய மகிணன் பரத்தைமை நோவேன் றோழி கடன்நமக் கெனவே.’’ (கலித். 75) இது பெட்பின்கண் வந்தது. ``நகையா கின்றே தோழி நெருநன் மணிகண் டன்ன துணிகயந் துளங்க விரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை யாம்பன் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் மாந்திக் கரைய காஞ்சி நுண்டா தீர்ம்புறத் திறைப்ப மெல்கிடு கவுள வல்குநிலை புகுதரு தண்டுறை யூரன் றண்டா ரகலம் வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் றெருவிற் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யழிப டெம்மனை புகுதந் தோனே யதுகண்டு மெய்ம்மலி யுவகை மறையினெ னெதிர்சென் றிம்மனை யன்றஃ தும்மனை யென்ற வென்னுந் தன்னு நோக்கி மம்மர் நெஞ்சினன் மருண்டுநின் றதுவே.’’ (அகம். 56) இது மேற்கூறியவாற்றா னன்றிப் பிறவாற்றான் வந்தது. ``ஒலிபுன லூரனை யொருதலை யாக வலிநமக் காவது வலியென் றொழியப் பந்தர் மாட்டிய பரூஉச்சுடர் விளக்கத்துக் கந்த முனித்துதலைத் தும்பி யார்ப்பக் காலை கொட்டிய கவர்தோற் சிறுபறை மாலை யாமத்து மதிதர விடாது பூண்டுகிடந்து வளரும் 83பூங்கட் புதல்வனைக் காண்டலுங் காணான்றன் கடிமனை யானே.’’ என வரும். வாயிலின் வரூஉம் வகையொடு தொகைஇக் கிழவோள் செப்பல் கிழவதென்ப என்பது - வாயில்கள்மாட்டு வரூஉங் கூற்றுவகை யுளப்படத் தலைவி கூற்று நிகழும் என்றவாறு. வாயில்களாவார்: பார்ப்பார், பாங்கன், தோழி, செவிலி, பாணன், விறலி, இளையர், விருந்தினர், கூத்தர், அறிவர், கண்டோர். இவருள் தோழி வாயிலாதல் மேற்கூறுதலின் ஒழிந்த வாயில்கள் ஈண்டுக் கொள்ளப்படும். ``அன்னா யிவனோ 84ரிளமா ணாக்கன் றன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ விரந்தூ ணிரம்பா மேனியொடு விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே.’’ (குறுந். 33) இது பாணன் வாயிலாக வந்துழிக் கூறியது. ``நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ வொன்று தெளிய நகையின மொழிமோ வெண்கோட் டியானை சோணை படியும் பொன்மலி பாடினீ பெறீஇயர் யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.’’ (குறுந். 75) இது வருகின்றான் என்ற உழையர்க்குக் கூறியது. ``ஆடியன் விழவி னழுங்கன் மூதூ ருடையோர் பான்மையிற் பெருங்கை தூவா வறனில் 85புலத்தி யெல்லிற் றோய்த்த புகாப்புகர் கொண்ட பூளைபூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர வோடிப் பெருங்கயிறு நாலு மிரும்பனம் பிணையற் பூங்க ணாய முயங்க வூங்கா ளழுதனள் பெயரு மஞ்சி லோதி யல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் ஊச லுறுதொழிற் பூச லூட்டா நயனின் மாக்களொடு கெழீஇப் பயனின் றம்மவிவ் வேந்துடை யவையே.’’ (நற். 90) இது பாங்கனைக் குறித்துக் கூறியது. ``நெய்யுங் குய்யு மாடி 86மையொடு மாசுபட் டன்றே கலிங்கமுந் தோளுந் திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப் புதல்வர்ப் புல்லிப் புனிறு நாறும்மே வாலிழை மகளிர் சேரத் தோன்றும் 87தேரோற் கொத்தனே மல்லே மிதனாற் பொன்புரை நரம்பி னின்குரற் சீறியா ழெழாஅல் வல்லை யாயினுந் தொழாஅல் புரையோ ரன்ன புரையு நட்பி னிளையோர் கூம்புகை மருள்வோ ராங்குக் கொண்டுசெல் பாணநின் றண்டுறை யூரனைப் பாடுமனைப் பாடல் கூடாது நீடுநிலைப் புரவியும் 88பூணிலை முனிகுவ விரகில 89மொழியல்யாம் வேட்டதிவ் வழியே.’’ (நற்.380) ‘90வாயிலின் வரூஉம் வகை’ என்றமையான், தன் ஆற்றாமையும், புதல்வனும் வாயில்களாகக் கொள்ளப்படும் என்பது பெற்றாம். ``புல்லேன் மகிழ்ந புலத்துலு மிலனேஎ கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குள மடைநீர் விட்டெனக் காலணைந் தெதிரிய கணைக்கோட்டு வாளை யள்ளலங் கழனி யுள்வா யோடிப் பகடுசே றுதைத்த புள்ளிவெண் புறத்துச் செஞ்சா லுழவர் கோற்புடை மதரிப் பைங்காற் செறுவி னணைமுதற் புரளும் வாணன் சிறுகுடி யன்னவென் கோனே ரெல்வளை ஞெகிழ்த்த நும்மே.’’ (நற். 340) இஃது ஆற்றாமை வாயிலாகச் சென்றாற்குக் கூறியது. ‘புள்ளிமி ழகல்வயின்’ என்ற மருதக் கலியுள், ``பூங்கட் புதல்வனைப் பொய் பாராட்டி நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி யாங்கே யவர்வயிற் சென்றி யணிசிதைப்பா னீங்கெம் புதல்வனைத் தந்து.’’ (கலித். 79) என்று புதல்வன் வாயிலாகக் கூறியது காண்க. (6) 146. புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந் திடைச்சுரத் திறைச்சியும் வினையுஞ் சுட்டி யன்புறு தக்க கிளத்த றானே கிழவோன் செய்வினைக் கச்ச மாகும். என்-னின், இதுவும் தலைமகட்குரிய கிளவிக்கட்படும் - இலக்கணம் நுதலிற்று. களவிற் புணர்ந்து உடன்போகிய தலைமகள் கற்புக் கடன்பூண் டொழுகுங் காலத்து மனைக்கணிருந்து, தான் முன்னர் இடைச்சுரத்திற் றலைவனுடன் கண்ட கருப்பொருண் முதலிய வற்றையும் அவற்றின் தொழிலையும் குறித்துக் கிழவன் அன்புறுதற்குத்தக்கவற்றைக் கூறுதலே தலைமகன் இயற்றுந் தொழிற்கு அஞ்சும் அச்சமாகும் என்றவாறு. எனவே புணர்ந்துடன் போகாத தலைவி அங்ஙனமிருந்து கூறல் தலைவற்கு அவன் செய்வினைக்கண் அச்சமாகா தென்றவாறு. உதாரணம்: ``கான யானை தோனயந் துண்ட பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை யலங்க லுலவை யேறி யொய்யெனப் புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரு மத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச் சேர்ந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் கொல்லே மென்ற தப்பற்குச் சொல்லா தகறல் வல்லு வோரே.’’ (குறுந். 79) இதனுள் அஞ்சியவாறு காண்க. பிறவும் அன்ன. (7) 147. தோழியுள் ளுறுத்த வாயில் புகுப்பினு மாவயி னிகழு மென்மனார் புலவர். என்-னின், இதுவுமது. தோழியுள்ளிட்ட வாயில்களைப் போகவிட்ட அக்கா லத்தும் முற்கூறிய நிகழுமென்றுரைப்பர் புலவர் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. (8) 148. பெறற்கரும் பெரும்பொருள் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின் கண்ணு மற்றமழி வுரைப்பினு மற்ற மில்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினுஞ் சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினு மடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை யடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி யிழைத்தாங் காக்கிக் கொடுத்தற் கண்ணும் வணங்கியன் மொழியான் வணங்கற் கண்ணும் புறம்படு விளையாட்டுப் புல்லிய புகர்ச்சியுஞ் சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினு மாணலந் தாவென வகுத்தற் கண்ணும் பேணா வொழுக்க நாணிய பொருளினுஞ் சூள்வயிற் றிறத்தாற் சோர்வுகண் டழியினும் பெரியோ ரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினு மவ்வழி யுறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பானின்று கெடுத்தற் கண்ணு முணர்ப்புவயின் வாரா வூடலூற் றோள்வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன் பானின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணு மருமைக் காலத்துப் பெருமை காட்டிய வெளிமைக் காலத் திரக்கத் தானும் பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரு நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும் பிரியுங் காலத் தெதிர்நின்று சாற்றிய மரபுடை யெதிரு முளப்படப் பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் தோழிக் குரிய வென்மனார் புலவர். என்-னின், கற்பின்கண் தோழிகூற்று நிகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. பெறற்கரும் சிறப்பு முதலாக மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும் ஈறாக மொழியப்பட்டவை யாவும் தோழிக்குரிய என்று கூறுவர் புலவர் என்றவாறு. பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த தெறற்கரு மரபிற் சிறப்பின்கண்ணும் என்பது - பெறுதற்கு அரிய பெரும்பொ ருளை முடித்து பின்னர்த் தோன்றிய தெறுதற்கரிய மரபு காரணத்தான் தலைவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழி கூற்று நிகழும் என்றவாறு. பெரும்பொருள் ஈண்டு வரைவிற்கேற்றது. தெறுதல் - சுழல நோக்குதல். உதாரணம்: ``அயிரை பரந்த வந்தண் பழனத் தேந்தெழின் மலர்ந்த தூம்புடைத் திரள்கா லாம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவ ளிடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் கரிய மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே.’’ (குறுந். 178) என வரும். அற்றமழிவு உரைப்பினும் என்பது - முற்காலத்துற்ற வருத்தத்தின் நீங்கினமை கூறினும் என்றவாறு. உதாரணம்: ``எரிமருள் வேங்கை யிருந்த தோகை யிழையணி மடந்தையின் றோன்று நாட வினிதுசெய் தனையா னுந்தை வாழியர் நன்மனை வதுவை யயரவிவள் பின்னிருங் கூந்தன் மலரணிந் தோயே.’’ (ஐங்குறு. 294) என வரும். அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக்கடத்தினும் என்பது - 91குற்றமில்லாத தலைமகனைச் சுட்டிய தெய்வக்கடன் 92கொடுத்தற் கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``நெஞ்சமொடு 93மொழிகடுத் தஞ்சுவர நோக்குந் தாயவட் டெறுதரக் காக்கவெம் மகனெனச் சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே பெற்றனம் யாமே மற்றதன் பயனே.’’ ``வாழி யாதன் வாழி யவினியே வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக வெனவேட் டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்டுறை யூரன் வரைக வெந்தையுங் கொடுக்க எனவேட் டேமே.’’ (ஐங்குறு. 6) ``திண்டேர் நள்ளி கானத் தண்டர் பல்லா பயந்த நெய்யிற் 94றொண்டி முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோ றொழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி பெருந்தோ ணெகிழ்சூழ்ந்து செல்லற்கு விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.’’ (குறுந். 210) என வரும். சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் என்பது- சீருடைய பெரும்பொருளாவது இற்கிழமை; அதனைத் தலைமகண் மாட்டு வைத்தவிடத்து அவளை மறந்து ஒழுகினவழியும் என்றவாறு. அஃதாவது அறத்தினானாதல் பொருளினானாதல் அவனுக்காகிய இசையுங் கூத்தும் முதலியவற்றான் ஆதல் அத்திறம் மறத்தல். அவ் வழியுந் தோழி கூற்று நிகழும். உதாரணம்: ``பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப் புன்கா னாவற் 95பொதிப்புற விருங்கனி கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப் பல்கா லலவன் கொண்டகோட் கசாந்து கொள்ளா நரம்பி னிமிரும் பூச லிரைதேர் நாரை யெய்தி 96விடுக்குந் துறைகெழு மாந்தை யன்ன விவணலம் பண்டு மிற்றே கண்டிசிற் றெய்ய வுழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய நெகிழ்ந்த விவணலங் கொல்லோ மகிழ்ந்தோர் கட்களி செருக்கத் தன்ன காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே.’’ (நற்.35) என வரும். அடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை யடங்கக் காட்டுதற் பொருளின்கண்ணும் என்பது - அடங்கா வொழுக்கத்தையுடைய தலைவன் மாட்டு மனன் அழிந்தோளை யடங்கக் காட்டுதற்கு ஏதுவான பொருட் பக்கத்தினும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``இதுமற் றெவனோ தோழி துனியிடை யின்ன ரென்னு மின்னாக் கிளவி 97யிருமருப் பெருமை யீன்றணிக் காரா னுழவன் யாத்த குழவியி னகலாது பாற்செய் பைம்பயிர் ராரு மூரன் றிருமனைப் பல்கடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே.’’ (குறுந். 181) என வரும். பிழைத்துவந் திருந்த கிழவனை நெருங்கி யிழைத்தாங் காக்கிக் கொடுத்தற்கண்ணும் என்பது - பிழைத்து வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித்தலைமகன் மாட்டாக்கிக் கொடுத்தற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``98பகலிற் றோன்றும் பல்கதிர்த் தீயி னாம்பலஞ் செறுவிற் றேனூ ரன்ன விவணலம் புலம்பப் பிரிய லாவநல முடையளோ மகிழ்நநின் பெண்டே.’’ (ஐங்குறு. 57) ``கேட்டிசின் வாழியோ மகிழ்ந 99வாறுற்ற மைய னெஞ்சிற் கெவ்வந் தீர நினக்குமருந் தாகிய யானினி யிவட்குமருந் தன்மை நோமே நெஞ்சே.’’ (ஐங்குறு. 59) என வரும். வணங்கிய மொழியான் வணங்கற் கண்ணும் என்பது - தாழ்ந்த இயல்பினையுடைய மொழியினான் வணங்குதற் கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``உண்துறைப் பொய்கை வராஅல் இனம்இரியுந் தண்துறை யூர தகுவதோ ஒண்தொடியைப் பாராய் மனைதுறந் தச்சேரிச் செல்வதனை ஊராண்மை யாக்கிக் கொளல்.’’ (ஐந்திணையெழு. 52) என வரும். புறம்படு விளையாட்டுப் புல்லிய 100புகர்ச்சியும் என்பது புறப்பட்ட விளையாட்டினைத் தலைவன் பொருந்திய புகர்ச்சிக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. புகர்ச்சி - குற்றம். உதாரணம்: ``காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர் மரீஇய சென்ற மல்ல லூர னெல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவர் தாயே தெறுவ தம்மவித் திணைப்பிறத் தல்லே.’’ (குறுந். 45) என வரும். சிறந்த புதல்வனைத் தேராது புலம்பினும் என்பது - இருவர்க்குஞ் சிறந்த புதல்வனை நினையாமையான் தலைமகன் தனிமையுறுதற் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``நெடுநா வொண்மணி கடிமனை யிரட்டக் குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப் பெரும்பாண் காவல் பூண்டென வொருசார் திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரிந்த வறுவை மெல்லணைப் புனிறுநாறு செவிலியொடு புதல்வன் றுஞ்ச வையவி யணிந்த நெய்யா டீரணிப் பசிநோய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை 101யீரிமை பொருந்த நள்ளென் கங்குற் கள்வன் போல வகன்றுறை யூரனும் வந்தனன் சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே.’’ (நற். 40) எனவும், ``நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த பன்மீ னுணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் காண வியையுங்கொ லென்றோழி வண்ணந்தா வென்கந் தொடுத்து.’’ (ஐந்திணையெழு. 66) எனவும் வரும். மாணலந் தாவென வகுத்தற்கண்ணும் என்பது - நீ கொண்ட நலத்தினைத் தந்து போ எனக் கூறுதற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. ``102விட்டென விடுக்குநாள் வருக வதுநீ நொந்தனை யாயிற் றந்தனை சென்மோ குன்றத் தன்ன குவவுமண லடைகரை நின்ற புன்னை நிலந்தோய் படுசினை வம்ப நாரை சேக்குந் தண்கடற் சேர்ப்பநீ யுண்டவென் னலனே.’’ (குறுந். 236) என வரும். பேணா வொழுக்கம் நாணிய பொருளினும் என்பது - தலை மகனைப் பேணாத ஒழுக்கத்தினான் தலைமகள் நாணிய பொருண்மைக் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கா னெய்த லினமீ னிருங்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின மானுந் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு னாணிக் கரப்பா டும்மே.’’ (குறுந். 9) என வரும். சூள்வயிற் றிறத்தாற் சோர்வுகண் டழியினும் என்பது - தலைமகன் சூளுற்ற சூளுறவிற் சோர்வுகண்டு அழிந்து கூறினும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``எம்மணங் கினவே மகிழ்ந முன்றி னனைமுது புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறியயர் களந்தொறுஞ் செந்நெல் வான்பொரி சிதறி யன்ன வெக்கர் நண்ணிய வெம்மூர் வியன்றுறை நேரிழை முன்கை பற்றிச் சூரர மகளிரொ டுற்ற சூளே.’’ (குறுந். 53) என வரும். பெரியோரொழுக்கம் பெரிதெனக் கிளந்து பெறுதகை யில்லாப் பிழைப்பினும் என்பது - பெரியோ ரொழுக்கம் பெரிதாகுமெனச் சொல்லித் தலைமகளைப் பெறுந் தகைமை யில்லாத பிழைப்பின் கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``வெள்ளி விழுத்தொடி மென்கரும் புலக்கை வள்ளி நுண்ணிடை வயின்வயி னுடங்க மீன்சினை யன்ன வெண்மணற் குவைஇக் காஞ்சி நீழற் றமர்வளம் பாடி யூர்க்குறு மகளிர் குறுவழி விறந்த வார லருந்திய சிறுசிரன் மருதின் றாழ்சினை யுறங்குந் தண்துறை யூர விழையா வுள்ளம் விழையு மாயினுங் கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாஅமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்த லனைய பெரியோ ரொழுக்க மதனா லரிய பெரியோர்த் தெரியுங் காலை நும்மோ ரன்னோர் மாட்டு மின்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய்யாண் டுளதோ வுலகத் தானே.’’ (அகம். 286) என வரும். அவ்வழி யுறுதகை யில்லாப் புலவியின் மூழ்கிய கிழவோள் பால்நின்று கெடுத்தற் கண்ணும் என்பது - மேற் சொல்லிய வாற்றாற் தலைவன் பிழைத்தவழி அவனா லுறுந் தகைமை யில்லாத புலவியின் மூழ்கிய தலைவி பக்கத்தாளாகி நின்று அதனைக் கெடுத்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``மானோக்கி நீயழ நீத்துவன் னானாது நாணில னாயி னலிதந் தவன்வயி னூடுவ தென்னோ வினி.’’ (கலித். 87) என வரும். 103உணர்ப்புவயின் வாரா வூடலுற் றோள்வயி னுணர்த்தல் வேண்டிய கிழவோன் பானின்று தான்வெகுண் டாக்கிய தகுதிக்கண்ணும் என்பது - தலைவன் ஊடல் தீர்க்கவும் அதன்வழி வாராத ஊடலுற்றோள்வயின் அவ்வூடலைத் தீர்த்தல் வேண்டி தலைவன் பக்கத்தாளாகி நின்று தலைவனை வெகுண்டு நின்றுண்டாக்கிய தகுதிக்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. ``உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது மிக்கற்றா னீள விடல்.’’ (குறள். 1302) என வரும். அருமைக் காலத்துப் பெருமை காட்டிய எளிமைக் காலத் திரக்கத்தானும் என்பது - தாமரியராகக் களவு காலத்துத்தமது பெருமையைக் காட்டிய தாம் எளியராகிய கற்புக் காலத்து இரக்கத்தின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. பெருமைகாட்டிய விரக்கம் எனக் கூட்டுக. இதனாற் சொல்லியது வாளாதே இரங்குதலன்றிப் பண்டு இவ்வாறு செய்தனை இப்பொழு திவ்வாறு செய்யாநின்றனை எனத்தமதுயர்ச்சியுந் தலைமகனது நிலையின்மையுந் தோற்ற இரங்குதலாயிற்று. இதுவும் புலவிமாத்திர மன்றித்தலைவ னீங்கி யொழுகும் ஒழுக்கம் மிக்கவழிக் கூறுவதெனக் கொள்க. உதாரணம்: ``வேம்பின் பைங்காயென் றோழி தரினே தேம்பூங் கட்டி யென்றனி ரினியே பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர் தைஇத் திங்கட் டண்ணிய தரினும் வெய்ய வுவர்க்கு மென்றீ ரைய வற்றா லன்பின் பாலே.’’ (குறுந். 196) என வரும். பாணர் கூத்தர் விறலிய ரென்றிவர் பேணிச் சொல்லிய குறைவினை யெதிரும் என்பது - பாணராயினுங் கூத்தராயினும் விறலியராயினும் இத்தன்மையர் விரும்பிச் சொல்லிய குறையுறும் வினைக் கெதிராகவுங் கூற்று நிகழும் என்றவாறு. குறையுறும் வினை குறைவினை யென ஒட்டிற்று; அது சொல்லிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாயிற்று. உதாரணம்: ``புலைமக னாதலிற் பொய்ந்நின் வாய்மொழி நில்லல் பாண செல்லினிப் பரியல் பகலெஞ் சேரிக் காணி னகல்வய லூர னாணவும் பெறுமே.’’ எனவும், ``அணிநிறக் கெண்டை யாடிடம் பார்த்து மணிநிறச் சிறுசிரன் மயங்குநம் பொய்கை விரைமல காற்றா விருந்தினம் யாமென முழவிமிழ் முன்றின் முகம்புணர் சேர்த்தி யெண்ணிக் கூறிய வியல்பினின் வழாஅது பண்ணுக்கொளப் புகுவ கணித்தோ பாண செவிநிறை யுவகையே மாக விதுநா ணன்மைக் குரைத்துச்சென் றீமே.’’ எனவும் வரும். நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் காத்து தன்வயிற்கண் நின்று பெயர்ப்பினும் என்பது தலைவியை நீத்த கிழவனை அவளுடன் நிகழுமாறு படுத்தல் வேண்டி அவளைப் புறங்காத்து தன்னிடத்துற்ற தலைமகனைக் கண்ணோட்டமின்றிப் பெயர்த்தற்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``மனையுறு கோழிக் குறுங்காற் பேடை வேலி வெருகின மாலை யுற்றெனப் புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇப் 104பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங் கின்னா திசைக்கு மம்பலொடு வாரல் வாழிய ரையவெந் தெருவே.’’ (குறுந். 139) என வரும். பிரியுங்காலை யெதிர்நின்று சாற்றிய மரபுடை எதிரும் உளப்பட என்பது தலைவன் சேயிடைப் பிரியுங் காலத்து முன்னின்று சொல்லிய மரபுடை மாறுபாடும் என்றவாறு. எனவே, அகத்திணையியலுட் கூறப்பட்டது களவுக்காலத்தை நோக்கிக் கூறுதலான் அயலிதாகக் கூறப்பெறும் என்பதூஉம் இவ் வோத்தினுட் செலவழுங்குவித்தல் பார்ப்பார்க் குரித்தாகக் கூறுதலான் கற்பினுட் பிரிவு மரபு கெடாமற் கூறவேண்டும் 105என்பதூஉங் கருத்து. மரபினாற் கூறுதலாவது குற்றேவல் முறைமையாற் கூறுதல். பிரிவை அகத்திணையியலுள் வைத்த தனான், ஆண்டுக் கூறிய கிளவி இருவகைக் கைகோளிற்கும் பெரும்பான்மை யொக்கும் எனக் கொள்க. உடன்போக்கும் ஒக்குமோ எனின், கற்பினுள் உடன்போக்கு உலகியலுட் பெரும்பான்மையென்று கொள்க. இக்கூற்றுத் தலைமகன் மாட்டுந் தலைமகள் மாட்டுமாம். உதாரணம்: ``அறனின்றி யயறூற்று மம்பலை நாணியும் வறனீந்தி நீசெல்லும் நீளிடை நினைப்பவு மிறைநில்லா வளையோட விதழ்சோர்பு பனிமல்கப் பொறைநில்லா நோயொடு புல்லென்ற நுதலிவள் விறனலம் விளர்ப்பவும் வினைவேட்டாய் கேளினி; உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல விடைகொண்டியா மிரப்பவு மெங்கொள்ளா யாயினை கடைஇய வாற்றிடை 106நீர்நீத்து வறுஞ்சுனை யடையொடு வாடிய வணிமலர் தகைப்பன; வல்லையிற் றுறப்பாயேல் வகைவாடு மிவளென வொல்கியா முரைப்பவு முணர்ந்தீயா யாயினை செல்லுநீ ளாற்றிடைச் சேர்ந்தெழுந்த 107மரம்வாடப் புல்லுவிட் டிறைஞ்சிய பூங்கொடி தகைப்பன; பிணிபுநீ விடல் சூழிற் பிறழ்தரும் இவளெனப் பணிபுவந் திரப்பவும் பலசூழ்வா யாயினை துணிபுநீ செலக்கண்ட வாற்றிடை 108யம்மரத் தணிசெல வாடிய அந்தளிர் தகைப்பன; எனவாங்கு; யாநிற் கூறவு மெங்கொள்ளா யாயினை யானா திவள்போ லருள்வந் தவைகாட்டி மேனின்று மெய்கூறுங் கேளிர்போ னீசெல்லுங் கானந் தகைப்ப செலவு.’’ (கலித். 3) என வரும். இனித் தலைமகட்குக் கூறியதற்குச் செய்யுள்: ``அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிறிதாற்றிப் பின்னொழிந்து வாழ்வார் பலர்.’’ (குறள். 1160) என வரும். பிறவும் வகைபட வந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய வென்மனார் புலவர் என்பது - மேற்சொல்லப்பட்ட கிளவி யன்றிப் பிற வாய்பாட்டாற் பாகுபடவந்த கிளவி யெல்லாந் தோழிக்குரிய என்றுரைப்பர் புலவர் என்றவாறு. வகைபடவந்த கிளவியாவன: பிரிந்த தலைமகன் வருவனெனக் கூறுதலும், பருவங்கண்டு கூறுதலும், வற்புறுத்தலும், நிமித்தங்கண்டு கூறுதலும், வந்தான் எனக் கூறுதலும், இந்நிகரனவும். மேற்சொல்லப்பட்ட இடங்களிற் கூற்று வேறுபாடாகி வருவனவுங் கொள்க. அவற்றிற் களவுக்குங் கற்பிற்கும் பொதுவாகி வருவன அகத்திணையியலுட் கொள்க. கற்பிற்கே உரித்தாகி வருவன ஈண்டுக் கொள்க. உதாரணம்: ``ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை யேமாண் சிலையார்க் கினமா விரிந்தோடுந் தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு வாய்மாண்ட பல்லி படும்.’’ (கைந்நிலை. 18) இது நிமித்தங் கண்டு கூறியது. ``109வாளிலங் குண்கண் வையெயிற் றோயே ஞாலங் காவலர் வந்தனர் காலை யன்ன மாலைமுந் துறுத்தே.’’ இது தலைவன் வந்தமை கூறியது. பிறவும் அன்ன. (9) 149. புல்லுதன் மயக்கும் புலவிக் கண்ணு மில்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினு மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணுங் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றாய்போற் கழறித்தழீஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணு மின்னகைப் புதல்வனைத் தழீஇ யிழையணிந்து பின்னை வந்த வாயிற் கண்ணும் மனையோ ளொத்தலிற் றன்னோ ரன்னோர் மிகையெனக் குறித்த கொள்கைக் கண்ணு மெண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவுங் கண்ணிய காமக் கிழத்தியர் மேன. என்-னின், காமக்கிழத்தியர் கூற்று நிகழும் இடம் உணர்த்திற்று. புல்லுதன் மயக்கும் புலவி முதலாகச் சொல்லப்பட்ட இடத்தினும் அந்நிகரன பிறவிடத்தினும் குறிக்கப்பட்ட கூற்றுக் காமக்கிழத்தியர் மேலன என்றவாறு. கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது. காமக்கிழத்தியராவார் பின்முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர்; ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப் பட்டாரும் என. ஒத்த கிழத்தியர் முந்துற்ற மனை யாளன்றிக் காமம் பொருளாகப் பின்னுந் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல். இழிந்தாராவார் அந்தணர்க்கு அரச குலத்தினும் வணிக குலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப் பட்டாரும், அரசர்க்கு ஏனை யிரண்டு குலத்தினுங் கொடுக்கப் பட்டாரும், வணிகர்க்கு வேளாண் குலத்திற் கொடுக்கப்பட்டாரும். வரையப்பட்டார் செல்வராயினார் கணிகைக் குலத்தினுள் ளார்க்கும் இற்கிழமை கொடுத்து வரைந்து கோடல் அவர் கன்னியில் வரையப்பட்டாரும் அதன் பின்பு வரையப்பட்டாரும் என இருவகையர். அவ்விருவரும் உரிமை பூண்டமையாற் காமக்கிழத்தியர் பாற்பட்டனர். பரத்தையராவர் யாரெனின், அவர் ஆடலும் பாடலும் வல்லராகி அழகுமிளமையுங் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர்மாட்டுந் தங்காதார். இவருள்ளும் ஒருவரைப்பற்றி மறுதலைப் பெண்டிரைச் சார்த்திக் கூறுவனவும் காமக்கிழத்தியர் கூற்றின்பாற் படும். இவற்றின் வேறுபாடு அவரவர் கூற்றானறிக. இச்சூத்திரத்திற் காமக் கிழத்தியென ஓதாது ‘கிழத்தியர்’ என ஓதுதலானும் பலவகையர் என்பது கொள்க. புல்லுதன் மயக்கும் புலவிக்கண்ணும் என்பது - புல்லுதலைக் கலக்கும் புலவிமாட்டுங் காமக்கிழத்தியர் கூற்று நிகழும் என்றவாறு. அஃதாவது முதிராத புலவி மாத்திரமாகிய புணர்ச்சியை யுடன் பட்ட நெஞ்சத்துளாதல். உதாரணம்: ``பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு 110மதிமொழி யிடன்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவிசெறு வாக முதுமொழி நீராற் புலனா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர; ஊரன்மன் னுரனல்ல னெமக்கென வுடன் வரா தோரூர்தொக் கிருந்தநின் பெண்டிரு 111ணேராகிக் களையாநின் குறிவந்தெங் கதவஞ்சேர்ந் தசைத்தகை வளையினவாய் விடன்மாலை மகளிரை நோவேமோ கேளல்ல னமக்கவன் குறுகன்மி னெனமற்றெந் தோளொடு பகைபட்டு நினைவாடு நெஞ்சத்தேம்; ஊடியார் நலந்தேம்ப வொடியெறிந் தவர்வயின் மால்தீர்க்கு மவன்மார்பென் றெழுந்தசொன் னோவேமோ முகைவாய முலைபாயக் குழைந்துநின் றாரெள்ள வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்; சேரியாற் சென்றுநீ சேர்ந்தவில் 112வினாயினன் றேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ வலிகொண்ட சும்மையான் மணமனை குறித்தெம்மிற் பொலிகெனப் புகுந்தநின் புலையனைக் கண்டயாம்; ஆங்க, நனவினான் வேறாகும் 113வேளா முயக்க மனைவரிற் பெற்றுவந்து மற்றெந்தோள் வாட வினைய ரெனவுணர்ந்தா ரென்றேக்கற் றாங்குக் கனவினா னெய்திய செல்வத் தனையதே யைய வெய்ய வெமக்குநின் மார்பு.’’ (கலித். 68) இது மூவகையார்க்கும் பொது. இல்லோர் செய்வினை யிகழ்ச்சிக் கண்ணும் என்பது - மனையகத்தோர் செய்த வினையை யிகழ்ந்து கூறுதற்கண்ணும் என்றவாறு. பன்மையான் தலைமகனை யிகழ்தலுந் தலைமகளை யிகழ்தலுங் கொள்க. உதாரணம்: ``கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉ மூர னெம்மிற் பெருமொழி கூறித் தம்மிற் கையுங் காலுந் தூக்கத் தூக்கு மாடியிற் பாவை போல மேவன செய்யுந்தன் புதல்வன் றாய்க்கே.’’ (குறுந். 8) என்றும், ``நன்மரங் குழீஇய நனைமுதிர் 114சாடிப் பன்னா ளரித்த 115கோதுடை வைப்பின் மயங்குமழைத் திவலையின் மறுகுடன் பனிக்கும் பழம்பன் னெல்லின் வேளூர் வாயி னறுவிரை தெளித்த நாறிணர் மாலைப் பொறிவரி யினவண் டூதல் கழியு முயர்பலி பெறூஉ முருகெழு தெய்வம் புனையிருங் கதுப்பி 116னீகடுத் தோள்வயி னனையேன் னாயி னணங்குக வெம்மென மனையோட் டேற்று மகிழ்ந னாயின் யார்கொல் வாழி தோழி நெருனைத் தார்பூண் களிற்றிற் தலைப்புணை 117தழீஇ வதுவை யீரணிப் பொலிந்து நம்மொடு புதுவது வந்த காவிரிக் கோடுதோய் 118மலிர்நிறை யாடி யோரே.’’ (அகம். 166) என்றும் வரும். இவை தலைவனை இகழ்ந்தன. ``அளியர் தாமே மகிணன் பெண்டிர் தாமவற் பிணித்த றேற்றார் நாமழச் செய்தா ரகலம் வவ்வின ரிவரென வெம்பழி யறையுநர் போலத் தம்பழி தூற்றும் பெரும்பே தையரே.’’ ``எரியகைந் தன்ன தாமரைப் பழனத்துப் பொரிமுகைந் தன்ன பொங்குபல சிறுமீன் வெறிகொள் பாசடை 119யுணீஇய பைப்பயப் பறைதபு முதுசிர லசைபுவந் திருக்குந் துறைகே ழூரன் பெண்டுதன் கொழுநனை நம்மொடு புலகுவ மென்ப வதுநாஞ் செய்யா மாயி னுய்யா மரபிற் செறிதொடி தெளிர்ப்ப வீசிச் 120சிறிதவ ணுலம்வந்து வருகஞ் சென்மோ தோழி யொளிறுவாட் டானைக் கொற்றச் செழியன் 121வெளிறில் கற்பின் மண்டமர் தோறுங் களிறுபெறு வல்சிப் பாண னெறியுந் தண்ணுமைக் கண்ணி னலைஇயர்தன் வயிறே.’’ (அகம். 106) இவை பரத்தை கூற்று. பல்வேறு புதல்வர்க் கண்டுநனி யுவப்பினும் என்பது - பலவகைப் புதல்வரைக் கண்டு மிகவும் உவந்து கூறியவழியு மென்றவாறு. உதாரணம்: ``நயந்தலை மாறுவார் மாறுக மாறாக் கயந்தலை மின்னுங் கதிர்விடு முக்காழ்ப் பயந்தவெங் கண்ணார யாங்காண நல்கித் திவளொளி முத்தங் கரும்பாகத் தைஇப் பவளம் புனைந்த பருதி சுமப்பக் கவள மறியாநின் கைபுனை வேழம் புரிபுனை 122பூங்கயிற்றிற் பைபய வாங்கி யரிபுனை புட்டிலி 123னாங்கணீர்த் தீங்கே வருகவெம் பாக மகன்; கிளர்மணி யார்ப்பார்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லுந் தளர்நடை காண்ட லினிதுமற் றின்னாதே யுளமென்னா நுந்தைமாட் டெவ்வ முழப்பார் வளைநெகிழ் பியாங்காணுங் கால்; ஐய, காமரு நோக்கினை யத்தத்தா வென்னுநின் றேமொழி கேட்ட லினிதுமற் றின்னாதே எய்வின்றி நுந்தை நலனுணச் சாஅய்ச்சாஅய்மா ரெவ்வநோ யாங்காணுங் கால்; ஐய, திங்கட் குழவி வருகென யானின்னை யம்புலி காட்ட லினிதுமற் றின்னாதே நல்காது நுந்தை புறமாறப் பட்டவ ரல்குவரி யாங்காணுங் கால்; ஐய, காதிற் கனங்குழை வாங்கிப் பெயர்தொறும் போதில் வறுங்கூந்தற் கொள்வகை நின்னையா னேதிலார் கண்சாய நுந்தை வியன்மார்பிற் றாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய கோதைபரி பாடக் காண்கும்.’’ (கலித். 80) என வரும். மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் என்பது - களவின் வருகின்ற மனை யோள் செய்வினை பொறையின்றிப் பெருகிய துன்பத்தின் கண்ணும் என்றவாறு. உதாரணம்: ``வாளை வாளிற் பிறழ 124நாளும் பொய்கை நீர்நாய் வைகுதுயி லேற்குங் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல்வெள் ளாம்ப லுருவ நெறித்தழை யைதக லல்கு லணிபெறத் தைஇய விழவிற் செலீஇயர் வேண்டு மன்னோ யாண ரூரன் காணுந னாயின் வரையா மையோ வரிதே வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் வரைவேய் புரையு நற்றோ ளளிய தோழி தொலையுந பலவே.’’ (நற். 390) இது, பரத்தையராகி வந்த காமக்கிழத்தியர் கூற்று. காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையிற் றாய்போற் கழறித் தழீஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும் என்பது - காதற் சோர்வினானும் ஒப்புரவுடைமை யானுந் தாய்போற் கழறிப் பொருத்துப்பட்ட மனைவியைக் காய்தலின்றித் தலைமகன்மாட்டுப் பொருத்தற் கண் ணுங்கூற்று நிகழும் என்றவாறு. இதுவும் அவள் கூற்று. காதற் சோர்வு என்பது தன்மாட்டுக் காதல் சோர்தல். இது தலைமகன் மாட்டுத் 125துனியுளவழி நிகழும் நிகழ்ச்சி. உதாரணம்: ``வயல்வெள் ளாம்பல் சூடுதரு புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சி லோய்நடை முதுபக டாரு மூரன் றொடர்புநீ வெஃகினை யாயி னென்சொற் கொள்ளன் மாதோ முள்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே யவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித் தண்கமழ் புதுமலர் கதூஉம் வண்டென மொழிப மகனென் னாரே.’’ (நற். 290) இது காமக்கிழத்தியாகிய தலைமகட்கு முன் வரையப்பட்ட பரத்தை கூற்று. இன்னகைப் புதல்வனைத் தழீஇ யிழையணிந்து பின்னை வந்த வாயிற்கண்ணும் என்பது - இனிய நகையையுடைய புதல்வனைத் தழீஇ இழையணிந்து பின்னை வந்த வாயிலின் கண்ணும் என்றவாறு. பின்னை என்றதனான் ஏனைய வாயில்களை மறுத்த வழியென்று கொள்க. ``புள்ளிமி ழகல்வய லொலிசெந்நெ லிடைப்பூத்த முள்ளரைத்தாமரை முழுமுதல் 126சாய்த்துதன் வள்ளித ழுறநீடி வயங்கிய வொருகதி ரவைபுக ழரங்கின்மே லாடுவா ளணிநுதல் வகைபெறச் செரீஇய வயந்தகமே போற்றோன்றுந் தகைபெறு கழனியந் தண்டுறை யூரகேள்; அணியொடு வந்தீங்கெம் புதல்வனைக் கொள்ளாதி மணிபுரை செவ்வாய்நின் மார்பகல நனைப்பதாற் றோய்ந்தாரை யறிகுவல் யானெனக் கமழுநின் சாந்தினாற் குறிகொண்டாள் சாய்குவள் ளல்லளோ; புல்லலெம் புதல்வனைப் புகலநீ நின்மார்பிற் பல்காழ்முத் தணியாரம் பற்றினன் பரிவானான் மாணிழை மடநல்லார் முயக்கத்தை நின்மார்பிற் பூணினாற் குறிகொண்டாள் புலக்குவ ளல்லளோ; கண்டேயெம் புதல்வனைக் கொள்ளாதி நின்சென்னி வண்டிமிர் வகையிணர் வாங்கினன் பரிவானா னண்ணியார்க் காட்டுவ திதுவெனக் கமழுநின் கண்ணியாற் குறிகொண்டாள் காய்குவ ளல்லளோ; எனவாங்கு, பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்கா யிகவாய் நெடுங்கடை நில்லாதி யாங்கே யவர்வயிற் சென்றீ யணிசிதைப்பா னீங்கெம் புதல்வனைத் தந்து.’’ (கலித். 79) என வரும். மனையோள் ஒத்தலின் தன்னோரன்னோர் மிகையெனக் குறித்து கொள்கைக் கண்ணும் என்பது - தான் மனையாளை ஒத்தலாற் றன் போல்வார் தலைவற்கு மிகையெனக் குறித்த கோளின்கண்ணும் கூற்று நிகழும் என்றவாறு. உதாரணம்: ``அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற 127விளைகனி குண்டுநீ ரிலஞ்சிக் 128கெண்டை கதூஉந் தண்டுறை யூரன் பெண்டினை யாயிற் பலவா குகநின் னெஞ்சிற் படரே ஓவா தீயு மாரி வண்கைக் கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சிக் கொன்முனை யிரவூர் போலச் சிலவா குகநீ துஞ்சு நாளே.’’ (குறுந். 91) என வரும். எண்ணிய பண்ணையென் றிவற்றொடு என்பது - எண்ணப்பட்ட விளையாட்டு என்று சொல்லப்பட்ட இவற்றோ டென்றவாறு. விளையாட்டாவது - ஆறுங் குளனுங் காவும் ஆடுதல். உதாரணம்: ``கூந்த லாம்பன் முழுநெறி யடைச்சிப் பெரும்புனல் வந்த 129விருந்துறை விரும்பி யாமஃ தையர்கஞ் சேறுந் தானஃ தஞ்சுவ துடைய ளாயின் வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி முனையான் பெருநிரை போலக் கிளையொடு நுகர்கதன் கொழுநன் மார்பே.’’ (குறுந். 80) பிறவும் என்றதனான் தலைமகட் குரியவாகச் சொல்லப் பட்டவற்றுள் ஒப்பன கொள்ளப்படும். அவற்றுட் சில வருமாறு: ``ஞாலம் வறந்தீர’’ என்னும் மருதக் கலியுள், ``அடக்கமில் போழ்தின்கட் டந்தைகா முற்ற தொடக்கத்துத் தாயுழைப் புக்கான்.’’ எனவும், ``வழிமுறை தாயுழைப் புக்கான்’’ எனவும், ``தலைக்கொண்டு நம்மொடு காயுமற் றிஃதோர் புலத்தகைப் புத்தேளிற் புக்கான்’’ (கலித். 82) எனவும், கூறுதலிற் புதல்வனை யீன்றாள் மூன்றாங் காமக்கிழத்தி யாயின வாறும் இவன்மாட்டுத் தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை யுள்ளிக் கூற்று நிகழ்ந்தவாறுங் கண்டுகொள்க. பிறவும் அன்ன. தோழி கூற்றும் இவட்கும் ஒக்கும். (10) 150. கற்புங் காமமு நற்பா லொழுக்கமு மெல்லியற் பொறையுந் நிறையும் வல்லிதின் விருந்துபுறந் தருதலுஞ் சுற்ற மோம்பலும் பிறவு மன்ன 130கிழவோண் மாண்புகண் முகம்புகன் முறைமையிற் கிழவோற் குரைத்த லகம்புன் மரபின் வாயில்கட் குரிய. என்-னின், அகம்புகல் மரபினவாய வாயில்கள் கூற்று நிகழுமாறு உணர்த்திற்று. கற்பு முதலாகச் சொல்லப்பட்டனவும் பிறவுமாகிக் கிழவோள்மாட்டுளவாகிய தன்மைகளை முகம்புகு தன்மை யானே தலைமகற்கு உரைத்தல் அகம்புகு மரபின் வாயில்கட்குரிய என்றவாறு. செய்யுளியலுள் ``வாயி லுசாவே தம்மு ளுரிய’’ (சூ.191) என்பதனான், தலைமகற் குரைத்தலே யன்றித்தம்முள் தாம் கூறுதலும் உரியரென்று கொள்க. ``மதவலி யானை மறலிய பாசறை இடியுறழ் முரசம் பொருகளத் தியம்ப வென்றுகொடி எடுத்தனன் வேந்தனுங் கன்றொடு கறவை புல்லினம் புறவுதொறுத் துகளாக் குழல்வாய் வைத்தனர் கோவலர் வல்விரைந் 131திளைய ரேகுவனர் பரப்ப விரியுளைக் கடுநடைப் புரவி வழிவா யோட வலவன் வள்புவலி யுறுப்ப வுலவிய சுரும்பு கடிகொண்ட பொலந்தா ரகலத்துத் தண்கமழ் சாந்த நுண்டுக ளிரிய வென்றிகொ ளுவகையொடு புகுதல் வேண்டினன் யாண்டுறை வதுகொ றானே மாண்ட போதுடன் கொண்ட வுண்கட் டீதி லாட்டி திருநுதற் பசப்பே.’’ (அகம். 354) எனவும், ``கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம மாலை விரிந்த பசுவெண் ணிலவிற் குறுங்காற் கட்டி னறும்பூச் சேக்கை பள்ளி யானையி னுயிர்த்தன னசையிற் புதல்வற் புல்லினன் விறலவன் புதல்வன் றாய்வன் புறங்கவ வினளே.’’ (குறுந். 359) எனவும், ``யாயா கியளே மாஅ யோளே மடைமாண் செப்பிற் றமிய வைகிய பெய்யாப் பூவின் மெய்சா யினளே பாசடை நிவந்த கணைக்கா னெய்த லினமீ னிருங்கழி யோத மல்குதொறுங் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானுந் தண்ணந் துறைவன் கொடுமை நம்மு ணாணிக் காப்பா டும்மே.’’ (குறுந். 9) எனவும், ``முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரற் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாக ரினிதெனக் கணவ னுண்டலி னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.’’ (குறுந். 167) எனவும், ``கானக் கோழிக் கவர்குரற் சேவ னுண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பத் 132தேநீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு வரினுஞ் சேந்துவர லறியா செம்ம றேரே.’’ (குறுந். 242) எனவும், ``பிரசங் கலந்த 133வெண்சுவைத் தீம்பால் விரிகதிர்ப் பொற்கலத் தோர்கை யேந்திப் புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ லுண்ணென் றோக்குபு பிழைப்பத் தெண்ணீர் முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற் றருநரைக் கூந்தற் செம்முது செவிலியர் பரிமெலிந் 134தொழியப் பந்த ரோடி யேவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி யறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல் கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளா தொழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுதுமறுத் துய்க்குஞ் சிறுமது கையளே.’’ (நற். 110) எனவும், ``பாணர் முல்லை பாடச் சுடரிழை மாணுத லரிவை முல்லை மலைய வினிதிருந் தனனே நெடுந்தகை துனிதீர் கொள்கைத்தன் புதல்வனொடு பொலிந்தே.’’ (ஐங்குறு. 408) எனவும் வரும். இவையெல்லாம் வாயில்கள் தம்முட் கூறின. தலைவற்குக் கூறின வந்தவழிக் காண்க. (11) 151. கழிவினு நிகழ்வினு மெதிர்வினும் வழிகொள நல்லவை யுரைத்தலு மல்லவை கடிதலுஞ் செவிலிக் குரிய வாகு மென்ப. என்-னின், செவிலிக்குரிய கூற்று வருமா றுணர்த்திற்று. இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர் காலத்தினும் தன் குலத்திலுள்ளார் வழி கொள்ளுமாறு நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலுஞ் செவிலிக்கு உரிய என்றவாறு. 135இறந்தகால முதலியவற்றாற் கூறுதலாவது முன்புள்ளார் இவ்வாறு செய்து நன்மை பெற்றார் இவ்வாறு செய்து தீமை பெற்றார் எனவும், இப்பொழுது இன்னோர் இவ்வாறு செய்து பயன்பெறா நின்றாரெனவும், இவ்வாறு செய்தார் பின்பு நன்மை தீமை பெறுவர் எனவுங் கூறுதல். 136அவை, அறனும் பொருளும் இன்பமும் பற்றி நிகழும்; அவை யாவன, தலைமகன் மாட்டும் உலகத்தார் மாட்டும் ஒழுகும் திறன் கூறுதல். அவை, மனையாளைப் பற்றி வருதலிற் காம தந்திரத்துட் பாரி யாதிகாரமெனக் கூறப்பட்டன. அறம்பற்றி வருதல் திருவள்ளுவப் பயன் முதலிய சான்றோர் செய்யுட்களுள் அறப்பகுதியிற் கூறப்பட்டன. உதாரணம்: ``தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.’’ (குறள். 56) எனவும், ``தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை.’’ (குறள். 55) எனவும், ``மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.’’ (குறள். 51) எனவும், ``கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவா ளுட்குடையா ளூர்நா ணியல்பினா - ளுட்கி யிடனறிந் தூடி யினிதி னுணரு மடமொழி மாதராள் பெண்.’’ (நாலடி. 384) இதனுள், ``கட்கினியாள்’’ என்றதனான் கோலஞ்செய்தல் வேண்டு மெனக் கூறியவாறாம். எனவும், ``அடிசிற் கினியாளை யன்புடை யாளைப் படிசொற் பழிநாணு வாளை - யடிவருடிப் பின்றுஞ்சி முன்னுணரும் பேதையை யான்பிரிந்தால் என்றுஞ்சுங் கண்க ளெனக்கு.’’ எனவும் வரும். இவை நல்லவை யுரைத்தல். ``எறியென் றெதிர்நிற்பாள் கூற்றஞ் சிறுகாலை யட்டில் புகாதா ளரும்பிணி - யட்டதனை யுண்டி 137யுதவாதா ளில்வாழ்பே யிம்மூவர் கொண்டானைக் கொல்லும் படை.’’ (நாலடி. 363) எனவும், ``தலைமகனிற் றீர்ந்தொழுகல் தான்பிறரிற் சேற னிலைமையிறீப் பெண்டிரிற் சார்தல் - கலனணிந்து வேற்றூர் புகுதல் விழாக்காண்ட னோன்பெடுத்தல் கோற்றொடியார் கோளழியு மாறு.’’ (அறநெறிச். 94) எனவும் வரும். இந்நிகரன அல்லவை கடிதலாம். பிறவும் அன்ன. 152. சொல்லிய கிளவி யறிவர்க்கு முரிய. என்-னின், அறிவர் கூற்று நிகழுமா றுணர்த்திற்று. மேற் செவிலிக்குரித்தாகச் சொல்லப்பட்ட கிளவி அறிவர்க்கும் உரிய என்றவாறு. உதாரணம்: மேற்காட்டப்பட்டன. (13) 153. இடித்துவரை நிறுத்தலு மவர தாகுங் கிழவனுங் கிழத்தியு மவர்வரை நிற்றலின். என்-னின், அறிவர்க் குரியதோர் மரபு உணர்த்திற்று. கழறிய வெல்லையின்கண்ணே நிறுத்தலும் அறிவர்க் குரிய, தலைவனும் தலைவியும் அவர் ஏவல்வழி நிற்றலின் என்றவாறு. உதாரணம்: ``உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி விழவொடு 138வருதி நீயே யிஃதோ வோரான் வல்சிச் சீறில் வாழ்க்கை பெருநலக் குறுமகன் வந்தென வினிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே.’’ (குறுந். 295) இது தலைமகற்குக் கூறியது. ``துறைநீர் வழங்கும் பெருநீர்ப் பொய்கை யரிமல ராம்பன் மேய்ந்த நெரிமருப் பீர்ந்தண் ணெருமைச் சுவல்படு முதுபோத்துத் தூங்குசேற் றள்ளற் றுஞ்சிப் பொழுதுபடப் பைந்நிண வராஅல் குறையப் பேர்ந்து 139பரூஉக்கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச்செறி மள்ளரிற் புகுதரு மூரன் றேர்தர வந்த நேரிழை நெகிழ்தோ ளூர்கோ ளகலா மகளிர் தரத்தரப் பரத்தை 140தாங்கலோ வலனென் பதுநீ புலத்த லொல்லுமோ மனைகெழு மடந்தை யதுபுலந் துறுதல் வல்லி யோரே 141செய்யோ ணீங்கச் சில்பதங் கொழித்துத் தாமட் டுண்டு தமிய ராகித் தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப வைகுந ளாத லறிந்து மறியா ரம்மவஃ துடலு மோரே.’’ (அகம். 316) இது தலைவிக் குரைத்துது. (14) 154. உணர்ப்புவரை யிறப்பினுஞ் செய்குறி பிழைப்பினும் புலத்தலு மூடலும் கிழவோற் குரிய. என்-னின், தலைமகன் புலக்குமிடம் கூறுதல் நுதலிற்று. புலவி அண்மைக் காலத்தது; ஊடல் அதனின் மிக்கது. பொருள் சூத்திரத்தான் விளங்கும். உதாரணம்: ``எவ்வி யிழந்த வறுமையர் பாணர் பூவில் வறுந்தலை போலப் புல்லென் றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத் தெல்லுறு மௌவ னாறும் பல்லிருங் கூந்த லாரே நினக்கே.’’ (குறுந். 19) என வரும். (15) 155. புலத்தலு மூடலு மாகிய விடத்துஞ் சொலத்தகு கிளவி தோழிக் குரிய. இது தோழிக்குரிய மரபுணர்த்திற்று. ``அலந்தாரை யல்லனோய் செய்தற்றாற் காமம் புலந்தாரைப் புல்லா விடல்.’’ (குறள். 1303) இது கற்பு. ``கலந்தநோய் கைம்மிகக் கண்படா 142வெம்வயிற் புலந்தாயு நீயாகி பொய்யானே வெல்குவை யிலங்குதா ழருவியோ டணிகொண்ட நின்மலைச் சிலம்புபோற் கூறுவ கூறு மிலங்கே ரெல்வளை யிவளுடை நோயே.’’ (கலித். 46) இது களவு. (16) 156. பரத்தை மறுத்தல் வேண்டியுங் கிழவி மடத்தகு கிழமை யுடைமை யானு மன்பிலை கொடியை யென்றலு முரியள். இதுவும் தோழிக்கு உரியதோர் இயல்பு உணர்த்திற்று. இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும். உதாரணம்: ``மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூ ழிளமுலை முகிழ்செய மூழ்கிய தொடர்பிவ ளுண்க ணவிழ்பனி யுறைப்பவு நல்காது விடுவா 143யிமிழ்திரைக் கொண்க கொடியை காணீ; இலங்கே ரெல்வளை யேர்தழை தைஇ 144நலஞ்செய நல்கிய தொடர்பிவள் சாஅய்ப் புலந்தழப் புல்லாது விடுவா யிலங்குநீர்ச் சேர்ப்ப கொடியை காணீ.’’ (கலித். 125) என வரும். (17) 157. அவன்குறிப் பறிதல் வேண்டியுங் கிழவி அகமலி யூடல் அகற்சிக் கண்ணும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறுமே. இது, தலைவிக்குரியதோர் மரபுணர்த்திற்று. தலைவன் குறிப்பறிதல் வேண்டியுந் தலைவி தனது அகமலிந்த ஊடல் நீங்கும் இடத்தினும் வேற்றுமைக் கிளவி தோற்றவும் பெறும் என்றவாறு. ``யாரிவ னெங்கூந்தல் கொள்வான்.’’ (கலித். 89) எனவும், ``யாரையோ வெம்மில் புகுதருவாய்.’’ (கலித். 98) எனவும் கூறியவாறு காண்க. (18) 158. காமக் கடப்பினுட் பணிந்த கிளவி காணுங் காலைக் கிழவோற் குரித்தே வழிபடு கிழமை யவட்கிய லான. இது, தலைமகற் குரியதோர் மரபுணர்த்திற்று. இது, சூத்திரத்தாற் பொருள் விளங்கும். உதாரணம்: ``ஒரூஉ, கொடியிய னல்லார் குரனாற்றத்துற்ற.’’என்னும் மருதக் கலியுள், ``பெரியார்க் கடியரோ வாற்றா தவர்.’’ எனத்தலைவி கூறியவழி, ``கடிய தமக்கினி யார்சொலத் தக்கரா மற்று.’’ (கலித். 88) என வரும். (19) 159. அருண்முந் துறுத்த வன்புபொதி கிளவி பொருள்பட மொழிதல் கிழவோட் குரித்தே. இது, தலைமகட்குரியதோர் இயல்புணர்த்திற்று. பொருள்பட மொழிதலாவது பொய்யாக் கூறாது மெய்யே கூறல். உதாரணம்: வந்தவழிக் காண்க. (20) 160. களவுங் கற்பு மலர்வரை வின்றே. என்-னின், அலர் ஆமாறு உணர்த்திற்று. களவினுங் கற்பினும் அலராகு மென்று கூறுதல் வரைவின்று என்றவாறு. ‘தொகுத்துக்கூறல்’ என்பதனாற் களவும் ஈண்டு ஓதப்பட்டது. உதாரணம்: ``கண்டது மன்னு மோர்நா யலர்மன்னுந் திங்களைப் பாம்புகொண் டற்று.’’ (குறள். 1146) இது களவு. ``வேதின வெரிநி னோதி முதுபோத் தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்துஞ் சுரனே சென்றனர் காதல ருரனழிந் தீங்கியா னழுங்கிய வெவ்வம் யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.’’ (குறுந். 140) இது கற்பு. (21) 161. அலரிற் றோன்றுங் காமத்து மிகுதி. உதாரணம்: ``ஊரவர் கௌவை யெருவாக வன்னைசொ னீராக நீளுமிந் நோய்.’’ (குறள். 1147) எனவும் வரும். (22) 162. கிழவோன் விளையாட் டாங்கு மற்றே. இதுவும் அது. கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதியைக் காட்டும் என்றவாறு., ஆங்கு - அசை. ``அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம் புதல்வனை மெய்தீண்டப் பொருந்துத லியைவதா னினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின் றமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே.’’ (கலித். 70) என வரும். விளையாட்டாற் காமமிக்கு உறங்காமை கண்டுகொள்க.(23) 163. மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்கட் கில்லை. என்-னின், வாயில்கட் குரியதோர் மரபுணர்த்திற்று. மனைவிமாட்டுக் கிழவோன் கொடுமையைத் தாங்கார் கூறல் வாயில்கட் கில்லை என்றவாறு. (24) 164. மனைவி முன்னர்க் கையறு கிளவி மனைவிக் குறுதி யுள்வழி யுண்டே. என்-னின், இதுவுமது. மனைவி முன்னர்ச் செயலற்றுக் கூறுஞ் சொல் மனைவிக்கு உறுதியுள்வழி வாயில்கட்கு உண்டு என்றவாறு. உதாரணம்: ``இனியவர், வரினும் நோய்மருந் தல்லாய் வாரா தவண ராகுக காதல 145ரிவணங் காமம் படர்பட வருத்திய நோய்மலி வருத்தங் காணன்மா ரவரே.’’ (நற். 64) என வரும். (25) 165. முன்னிலைப் புறமொழி யெல்லா 146வாயிற்கும் பின்னிலைத் தோன்று மென்மனார் புலவர். இதுவுமது. முன்னிலைப் புறமொழியாகக் கூறுஞ் சொல் எல்லா வாயில்கட்கும் உரிய; பின்னிலை முயலுங்கால் தோன்றும் என்றவாறு. முன்னிலைப் புறமொழியாவது - முன்னிலையாக நிற்பாரைக் குறித்துப் பிறனைக் கூறுமாறு போலக் கூறுதல். ``உண்கடன் வழிமொழிந் திரக்குங்கான் முகனுந்தாங் கொண்டது கொடுக்குங்கான் முகனும்வே றாகுதல் பண்டுமிவ் வுலகத் தியற்கை.’’ (கலித். 22) என்றவழி அவ்வுரை தலைமகனை நோக்கியவாறு காண்க. (26) 166. தொல்லவை யுரைத்தலு நுகர்ச்சி யேத்தலும் பல்லாற் றானு மூடலிற் தகைத்தலு முறுதி காட்டலு மறிவுமெய்ந் நிறுத்தலு மேதுவி னுரைத்தலுந் துணியக் காட்டலு மணிநிலை யுரைத்தலுங் கூத்தர் மேன. என்-னின், கூத்தர்க்குரிய திறங் கூறுதல் நுதலிற்று. தொல்லவை யுரைத்த லாவது - முன்புள்ளார் இவ்வாறு செய்வரெனக் கூறுதல். நுகர்ச்சி யேத்து லாவது நுகர்ச்சி யிவ்வாறு இனிய தொன்றெனப் புகழ்தல். பல்லாற்றானும் ஊடலிற் றகைத்தலும் என்பது - பல நெறியானும் ஊடலினின்றுந் தலைமகளை மீட்டல்; அஃதாவது இவ்வாறு செய்தல் குற்றமென்றானும் அன்புடையார் செய்யா ரென்றானும் மனைக்கிழத்தியர் செயலன்று 147என்றானும் இவ்வாறு கூறுதல். உறுதிகாட்ட லாவது - இவ்வூடல் தணிந்ததனாற் பயனிது 148வெனவும் நன்மை பயக்கும் எனவும் கூறுதல். அறிவு மெய்ந்நிறுத்தலாவது - தலைமகள் மெய்யின்கண் மிக்க துணிவினாற் கெட்ட வறிவை இது தக்கதன்றென அறிவு கொளுத்துதல். ஏதுவினுரைத்தலும் என்பது - இவ்வாறு செய்யின் இவ்வாறு குற்றம் பயக்கும் என ஏதுவினாற் கூறுதல். அது பிறள் ஒருத்தி கெட்டபடி கூறுதல். துணியக் காட்டலாவது - அவள் துணியுமாறு காரணங் காட்டுதல். அணிநிலை யுரைத்தலாவது - இவ்வாறு உளதாகிய அணியைப் புலரவிடுகின்றதனாற் பயன் என்னையெனக் கூறுதல். இவை யெல்லாம் கூத்தர் மேலன என்றவாறு. அவர் எல்லா நெறியினானும் புனைந்துரைக்க வல்லராதலான் அவர்மேலன 149என உரைத்தார். இவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. இந்நூல் வழக்குஞ் செய்யுளும் பற்றி நிகழ்தலின், இப்பொருண்மேல் வரும் வழக்குரை உதாரணமாம். (27) 167. நிலம்பெயர்ந் துரைத்த லவணிலை யுரைத்தல் கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை யுரிய. இது, மேற்கூறப்பட்ட கூத்தர்க்குஞ் சொல்லாத பாணர்க்கும் உரிய கிளவி உணர்த்திற்று. நிலம் பெயர்ந்துரைத்தல் என்பது - தலைவன் பிரிந்தவிடத்துச் சென்று கூறுதல். அவள்நிலை யுரைத்தல் என்பது - அவள் நின்ற நிலையைத் தலைவற்குக் கூறுதல். ``அருந்தவ மாற்றியா னுகர்ச்சிபோல்’’ என்னும் பாலைக் கலியுள், ``தணியாநோ யுழந்தானாத் தகையவ டகைபெற வணிகிளர் நெடுந்திண்டே ரயர்மதி பணிபுநின் காமர் கழலடி சேர்க நாமஞ்சா றெவ்வரி னடுங்குநள் பெரிதே.’’ (கலித். 30) எனப் பாசறைக்கண் தலைவற்குத் தலைவி வருத்தங் கூறியவாறு காண்க. (28) 168. ஆற்றது பண்புங் கருமத்து வினையு மேவன் முடிபும் வினாவுஞ் செப்பு மாற்றிடைக் கண்ட பொருளு மிறைச்சியுந் தோற்றஞ் சான்ற வன்னவை பிறவு 150மிளையோர்க் குரிய கிளவி யென்ப. இஃது, இளையோர்க்குரிய கிளவியாமா றுணர்த்திற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். உதாரணம்: ``விருந்து பெறுகுவள் போலுந் திருந்திழைத் தடமென் பணைத்தோண் மடமா வரிவை தளரியற் கிள்ளை யினிதினி னெடுத்த வளராப் பிள்ளைத் தூவி யன்ன 151வளர்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவிற் பறைக்க ணன்ன நிறைச்சுனை தோறும் துளிபடு மொக்கு ளெழுவன சாலத் தொளிபொரு பொகுட்டிற் றோன்றுவன மாய விரிசினை யுதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச் சிரற்சிற கேய்ப்ப வறற்கண் 152வரித்து வண்டு 153ணறுவீ துமித்து நேமி தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு ணிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லு நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர்புக நய்ந்தே.’’ (அகம். 324) என வரும். பிறவு மன்ன. (29) 169. உழைக்குறுந் தொழிலுங் காப்பு முயர்ந்தோர் நடக்கை யெல்லா மவர்கட் படுமே. இதுவும் இளையோர்க்குரிய திறன் உணர்த்திற்று. இடத்தினின்று குற்றேவல் செய்தலும் மெய்காத்தலும் பிறவும் உயர்ந்தோர்க் குளதாகிய நடையெல்லாம் இளையோர் கட் படும் என்றவாறு. உதாரணம்: வந்தவழிக் காண்க. (30) 170. பின்முறை யாகிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி யெதிர்ப்பா டாயினு மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினு மிறந்த துணைய கிழவோ னாங்கட் கலங்கலு முரிய னென்மனார் புலவர். இது, தலைமகற் குரியதோர் மரபுணர்த்திற்று. உதாரணம்: ``இம்மை யுலகத் திசையொடும் விளங்கி மறுமை யுலகமு மறு154வின் றெய்துப செறுநரும் விழையுஞ் செயிர்தீர் காட்சிச் சிறுவர்ப் பயந்த செம்ம லோரெனப் பல்லோர் கூறும் 155பழமொழி யெல்லாம் வாயே யாக வாய்த்தனந் தோழி நிரைதார் மார்ப னெருனை யொருத்தியொடு வதுவை யயர்தல் வேண்டிப் புதுவதி னியன்ற வணிய னித்தெரு விறப்போன் மாண்டேர் மாமணி கறங்கக் கடைகழிந்து காண்டல் விருப்பமொடு தளர்புதளர் போடும் பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர் தாங்குமதி வலவவென் றிழிந்தனன் றாங்காது மணிமரு ளவ்வாய் மார்பகஞ் சிவணப் புல்லிப் பெரும செல்லினி யகத்தெனக் கொடுப்போற் கொல்லான் கலுழலிற் றடுத்த மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு தானே புகுதந் தோனே யானது தடுத்தனெ னாகுத னாணி யிடித்திவற் கலக்கினன் போலுமிக் கொடிய னெனச்சென் றலைக்குங் கோலொடு குறுகித் தலைக்கொண் டிமிழ்குரன் முரசி னின்சீ ரவர்மனைப் பயில்வன போலவந் திசைப்பவுந் தவிரான் 156கழங்கா டாஅயத் தன்றுநம் மருளிய 157பழங்க ணோட்டமும் நலிய வழுங்கின னல்லனோ வயர்ந்ததன் மணனே.’’ (அகம். 66) என வரும். (31) 171. தாய்போற் கழறித் தழீஇக் கோட லாய்மனைக் கிழத்திக்கு முரித்தென மொழிப கவவொடு மயங்கிய காலை யான. இது, தலைமகட் குரியதோர் கிளவி யுணர்த்திற்று. காமக்கிழத்தி மாட்டுத் தாய்போற் கழறித் தழீஇக் கோடல் மனைக்கிழத்திக்கும் உரித்து, கவவால் வருத்தமுற்ற காலத் தென்றவாறு; அஃதாவது புலவாவழி என்றவாறு. இவ்வாறு கூறுவது தலைமகன் முதிர்ந்தவழி என்று கொள்க. உம்மை இறந்தது தழீஇயிற்று. உதாரணம்: ``வயல்வெள் ளாம்பற் சூடுதரி புதுப்பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சி லோய்வுடை நடைப்பக டாரு மூரன் றொடர்புநீ வெஃகினை யாயி னென்சொற் கொள்ளன் மாதோ முள்ளெயிற் றோயே நீயே பெருநலத் தகையே யவனே நெடுநீர்ப் பொய்கை நடுநா ளெய்தித் தண்கமழ் புதுமல ரூதும் வண்டென மொழிப மகனென் னாரே.’’ (நற். 260) என்பது கொள்க. ‘கவவொடு மயங்கிய காலை’ என்பதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. (32) 172. அவன்சோர்வு காத்தல் கடனெனப் படுதலின் மகன்றா யுயர்புந் தன்னுயர் பாகுஞ் செல்வன் பணிமொழி யியல்பாக லான. இதுவும் தலைமகட்குரிய கிளவி யுணர்த்திற்று. மேலதற்கோர் புறனடை. தலைமகனது சோர்வு காத்தல் தலைமகட்குக் கடனா கலான் தன் மகனுக்குத் தாயாகிய காமக்கிழத்தி யுயர்புந் தன்னுயர் பாகும், இருவருந் தலைமகன் பணித்து மொழிகோடல் இயல்பாகலான் என்றவாறு. சோர்வாவது ஒழுக்கத்திற் சோர்வு. அது பரத்தையிற் பிரிவு. அதனை மறையாது காமக்கிழத்தி ஆற்றின் தலைமகற்குக் குறைபாடு வரும் என்பதனான், அவளை யுயர்த்தி யவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாகாமை யேற்றுக்கோடல் வேண்டுமெனக் கூறுதலுந் தனக்கு இழிபு ஆகாது உயர்ச்சியாம் என்றவாறு. இது மேலதற்குக் காரணங் கூறிற்று. (33) 173. எண்ணரும் பாசறைப் பெண்ணொடும் புணரார். இது, தலைமகட் குரியதோர் மரபு உணர்த்திற்று. நினைத்தற்கரிய பாசறைக்கண் தலைமகளிரொடும் புணரார் தலைமக்கள் என்றவாறு. நினைத்தற்கருமை மாற்றாரை வெல்லுங் கருத்து மேற் கோடலிற் றலைமகளிரை நினைக்கலாகாதாயிற்று. ‘பாசறை’ என விசேடித்தவதனால் ஏனைப் பிரிவுக்குமாமென்று கொள்க. (34) 174. புறத்தோ ராங்கட் புணர்வ தாகும். இது, மேலதற்குப் புறனடை. மேற் சொல்லப்பட்ட பாசறைக்கட் புறப்பெண்டிர் புணர்ச்சி பொருந்துவது என்றவாறு. பொருந்துவது என்றதனாற் கூட்டமென்று கொள்க. அவராவார் தாதியருங் கணிகையரும். (35) 175. காமநிலை யுரைத்தலுந் தேர்நிலை யுரைத்தலுங் கிழவோன் குறிப்பினை யெடுத்துக் கூறலு மாவொடு பட்ட நிமித்தங் கூறலுஞ் செலவுறு கிளவியுஞ் செலவழுங்கு கிளவியு மன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய. இது, பார்ப்பார்க் குரிய கிளவி யுணர்த்திற்று. காமநிலை யுரைத்த லாவது - நீ பிரியின் இவள் காமமிகும் என்று கூறுதல், ``அறனின்றி யயறூற்று மம்பலை’’ என்பதனுள் ``உடையிவ ளுயிர்வாழா ணீநீப்பி னெனப்பல விடைகொண்டியா மிரப்பவு மெங்கொள்ளா யாயினை கடையவாற் றிடைநீர நீரற்ற வறுஞ்சுனை யடைவொடு வாடிய வணிமலர் தகைப்பன.’’ (கலித். 3) என வரும். தேர்நிலை யுரைத்த லாவது ஆராய்ச்சிநிலையாற் கூறுதல். அது வருமாறு: ``வேனி 158லுழந்த வறிதுயங் கோய்களிறு வானீங்கு வைப்பின் வழங்காத்தேர் நீர்க்கவாங் கானங் கடத்தி ரெனக்கேட்பின் யானொன் றுசாவுகோ வைய சிறிது; நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின் கைபுனை வல்வின் ஞாணுளர் தீயே இவட்கே, செய்வுறு மண்டில மைபரப் பதுபோன் மையில் வாண்முகம் பசப்பூ ரும்மே; நீயே, வினைமாண் காழகம் வீங்கக் கட்டிப் புனைமாண் வரிய வம்பு தெரிதியே இவட்கே, சுனைமா ணீலங் காரெதிர் பவைபோ லினைநோக் குண்க ணீர்நில் லாவே; நீயே, புலம்பிய லுள்ளமொடு பொருள்வயிற் செலீஇயர் வலம்படு திகிரி வாய்நீ வுதியே இவட்கே, அலங்கிதழ்க் கோடல் வீயுகு பவைபோ லிலங்கே ரெல்வளை யிறைவா ரும்மே; என நின் சென்னவை யாவது மினையவ ணீநீப்பிற் றன்னலங் கடைகொள்ளப் படுதலின் மற்றிவ ளின்னுயிர் தருதலு மாற்றுமோ முன்னிய தேஎத்து முயன்றுசெய் பொருளே.’’ (கலித். 7) கிழவோன் குறிப்பினை யெடுத்துக் கூறலும் என்பது தலைவன் குறிப்பினைத் தலைவிக்கு விளங்கக் கூறலும் என்றவாறு. ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் என்பது - ஆவொடு பட்ட நிமித்தங் கூறுதலும் என்றவாறு. ‘பட்ட நிமித்தம்’ என்றதனான் எல்லா நிமித்தமங் கொள்க. செலவுறு கிளவி என்பது - செலவுற்ற சொல்லும் என்றவாறு. அஃதாவது தலைமகன் போயினான் என்று கூறுதல். இவற்றிற்கு இலக்கியம் வந்தவழிக் காண்க. செலவழுங்கு கிளவி என்பது - செலவழுங்கல் வேண்டுமெனக் கூறுதல். உதாரணம்: ``நடுவிகந் தொரீஇ நயனில்லான் வினைவாங்கக் கொடிதோர்த்த மன்னவன் கோல்போல ஞாயிறு கடுகுபு கதிர்மூடிக் காய்சினந் தெறுதலி னுறலூறு கமழ்கடாஅத் தொல்கிய வெழில்வேழம் வறனுழு நாஞ்சில்போன் மருப்பூன்றி நிலஞ்சேர விறன்மலை வெம்பிய போக்கறு வெஞ்சுரஞ் சொல்லா திறப்பத் துணிந்தனிர்க் கோர்பொருள் சொல்லுவ துடையேன் கேண்மின்மற் றைஇய; வீழுநர்க் கிறைச்சியாய் விரல்கவர் பிசைக்குங்கோ லேழுந்தம் பயன்கெட விடைநின்ற நரம்பறூஉம் யாழினு நிலையிலாப் பொருளையு நச்சுபவோ; புரைதவப் பயனோக்கார் தம்மாக்க முயல்வாரை வரைவின்றிச் செறும்பொழுது கண்ணோடா துயிர்வெளவு மரசினு நிலையில்லாப் பொருளையு நச்சுபவோ; மரீஇத்தாங் கொண்டாரைக் கொண்டக்காற் போலாது பிரியுங்காற் பிறரெள்ளப் பீடின்றிப் புறமாறுந் திருவினு நிலையிலாப் பொருளையும் நச்சுபவோ; எனவாங்கு, நச்சல் கூடாது பெரும விச்செல வொழிதல் வேண்டுவல் சூழிற் பழியின்று மன்னவன் புறந்தர வருவிருந் தோம்பித் தன்னகர் விழையக் கூட லின்னுறழ் வியன்மார்ப வதுமனும் பொருளே.’’ (கலித். 8) என வரும். இவை பார்ப்பார்க் குரிய வென்றவாறு. ‘ஒருபாற் கிளவி யேனைப் பாற்கண்ணும்’ (பொருளியல். 27) வரும் என்பதனான் தோழிமாட்டும் பாங்கன் மாட்டும் கொள்க. (36) 176. எல்லா வாயிலு மிருவர் தேஎத்தும் புல்லிய மகிழ்ச்சிப் பொருள வென்ப. இது, வாயில்கட் குள்ளதோர் மரபு உணர்த்திற்று. வாயில்கள் எல்லாம் இருவர்மாட்டும் பொருந்திய மகிழ்ச்சிப் பொருண்மையுடைய என்றவாறு. இருவராவார் தலைவனுந் தலைவியும் எனவே, வெகுட்சிப் பொருண்மை கூறப்பெறார் என்றவாறு. (37) 177. அன்புதலைப் பிரிந்த கிளவி தோன்றிற் சிறைப்புறங் குறித்தன் றென்மனார் புலவர். இது, மேலதற்கோர் புறனடை. வாயில்கண் மகிழ்ச்சிப் பொருண்மை கூறுதலன்றி யன்பு நீங்கிய கிளவி கூறினாராயிற் றலைவன் சிறைப்புறத் தானாகப் பெறுவர் எனச் சொல்லுவர் என்றவாறு. இதுவும் ஓரிலக்கணங் கூறியவாறு. (38) 178. தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்த லெத்திறத் தானுங் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த விரண்டலங் கடையே. இது தலைவிக்குரியதோர் மரபுணர்த்திற்று. தலைவன் முன்னர்த்தன்னைப் புகழுங் கூற்று எவ்வழியானுங் கிழத்திக்கு இல்லை; முற்படக் கூறிய இரண்டிடமும் அல்லாதவழி யென்றவாறு. அவையாவன தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்தவழி இரத்தலுந் தெளித்தலும் என அகத்திணையியலுட் கூறிய இரண்டும் அவ்வழிப் புகழ்தலாவது: ``159ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல் யாநின்னை 160வெரூஉதுங் காணுங் கடை.’’ (கலித். 87) என்றவழித்தன்னை உயர்த்துக் கூறுதலாற் புகழ்ந்தாளாம், நின்னை வெருவாதார் பிறர் என்னும் உள்ளக்கருத்தினான். ``நீகூறும் பொய்ச்சூ 161ளணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு.’’ (கலித். 88) என்றவழியும் பெண்டிர் பலர் உளராயினும் அவர் எல்லார் மாட்டுஞ் செல்லாது தன்மேல் வருமெனக் குறித்தாளாதலின், தன்னைப் புகழ்ந்தாளாம். பிறவுமன்ன. (39) 179. கிழவி முன்னர்த்தற்புகழ் கிளவி கிழவோன் வினைவயி னுரிய வென்ப. இது, தலைவற் குரியதோர் மரபுணர்த்திற்று. தலைவி முன்னர்த் தலைவன் றன்னைப் புகழுங் கூற்று வினைவயிற் பிரியும்வழி யுரிய யென்றவாறு. ``இல்லென விரந்தோர்க்கொன் றீயாமை யிழிவு.’’ (கலித். 2) என்றும், ``இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழ்.’’ என்றும் இவ்வாறு கூறுதல். இவ்வாறு கூறவே ``யான் செய்யேன்’’ எனத் தன்னைப் புகழ்ந்தவாறாம். (40) 180. மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே. இது, பாங்கற் குரியதோர் மரபுணர்த்திற்று. இது களவிற்கும் கற்பிற்கும் பொது; ஒப்பக் கூறல் என்னும் உத்திவகையாற் கூறப்பட்டது. தலைவன் கூறியவழி எதிர் கூறுதல் பாங்கற்கு உரித்து என்றவாறு. எதிர் கூறுதலாவது மாறுபடக் கூறுதல். அவை களவுக் காலத்துக் கழறலுங், கற்புக் காலத்துப் பரத்தையிற் பிரிவிற்கு உடம்படாது கூறலும், இவை போல்வனவும். உதாரணம்: ``காமங் காம மென்ப காம மணங்கும் பிணியு மன்றே நுணங்கிக் கடுத்தலுந் தணித்தலு மின்றே யானை குளகு மெஃகுளம் போலப் பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே.’’ (குறுந். 136) என்றும், ``மருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு ளாயு மறிவி னவர்.’’ (குறள். 914) என்றும் வரும். (41) 181. குறித்தெதிர் மொழித லஃகித் தோன்றும். இதுவுமது. மேற் குறித்ததற் கெதிர் கூறுதல் அருகித் தோன்றும் என்றவாறு. அது வந்தவழிக் காண்க. (42) 182. துன்புறு பொழுதினு மெல்லாங் கிழவன் வன்புறுத் தல்லது சேற லில்லை. இது, தலைவற் குரியதோர் மரபுணர்த்திற்று. துன்புறு பொழுதினும் எல்லாப் பிரிவினும் தலைவன் தலைவியை வற்புறுத்தியல்லது சேறலில்லையென்றவாறு. துன்புறு பொழுதாவது களவுக்காலம். களவினும் கற்பினும் பொது என்றவாறு. (43) 183. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்பொறை குறித்த றவிர்ச்சி யாகும். இதுவுமது. தலைவன் போகக் கருதித்தவிர்தல் போகாமை யன்று; தலைவியை வற்புறுத்துதலைக் குறித்துத் தவிர்ந்த தவிர்ச்சியாம் என்றவாறு. னவே, வினைமேற் செல்லுங்காலத்துத்துலைவி பொறாள் எனப் போகாமை இல்லை; வற்புறுத்திப் போம் என்றவாறு. (44) 184. கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும். உரையாமை யாவது உருவு வெளிப்பாடு. அதனை வினை நிகழு மிடத்து உரைக்கப்பெறார், தலைமக்கள்; தமது வினைமுடிந்த காலத்து விளங்கித்தோன்று மென்றவாறு. எனவே, வினையிடத்துள் நினைப்பாராயினும் அமையும், உரைக்கப் பெறார் என்பதூஉம், வென்றிக் காலத்துக் குற்றமறத் தோன்றும் என்பதூஉம் கொள்ளப்படும். உதாரணம்: ``தங்கிய வொள்ளொளி யோலைய தாய்த்துட மாமதின்மேற் பொங்கிய வேந்த ரெரிமுகந் தோன்றின்று போதுகண்மேற் பைங்கயல் பாய்புனற் பாழிப்பற் றாரைப் பணித்ததென்னன் செங்கய லோடு சிலையுங் கிடந்த திருமுகமே.’’ (பாண்டிக்கோவை) என வரும். (45) 185. பூப்பின் புறப்பா டீரறு நாளும் நீத்தகன் றுறையா ரென்மனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான. இதுவுமது. பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் விட்டு அகன்றுறைவா ரல்லர் என்று சொல்லுவர் பரத்தையிற் பிரிந்த காலத்து என்றவாறு. பரத்தையர் சேரியா னாயினும் பூப்புத் தோன்றி மூன்று நாள் கழித்து பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு. இதனாற் பயன் என்னையெனின் அது கருத் தோன்றுங் காலம் என்க. (46) 186. வேண்டிய கல்வி யாண்டுமுன் றிறவாது. இதுவுமது. விரும்பப்பட்ட கல்விக்கட் பிரியுங் காலம் மூன்றி யாண்டின் மிகாது என்றவாறு. எனவே, ஓரியாண்டாயினு மீரியாண் டாயினும் ஆமென்பது கொள்ளப்படும். (47) 187. வேந்துறு தொழிலே யாண்டின தகமே. இதுவு மது. வேந்துறு தொழிலாவது பகை தணிவினை. வேந்தற் குற்றவழி, தூது காவல் என அவ்வழிப் பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு. எனவே, அறுதிங்கள் முத்திங்கள் எல்லாங் கொள்ளப்படும். (48) 188. ஏனைப் பிரிவு மவ்விய னிலையும் இதுவுமது. ஒழிந்த பொருள்வயிற் பிரிவிற்குங் காலம் யாண்டினதகம் என்றவாறு. (49) 189. யாறுங் குளனுங் காவு மாடிப் பதியிகந்து நுகர்தலு முரிய வென்ப. இது, தலைவற்குங் கிழத்திக்கு முரியதோர் மரபு உணர்த்திற்று. யாறுங் குளனும் காவும் ஆடி என்பது விளையாட்டு என்று கொள்க. உதாரணம்: ``அருந்தவ மாற்றியா னுகர்ச்சிபோ லணிகொள’’ என்னும் பாலைக் கலியுள், ``துயிலின்றி யாநீந்தத் தொழுவையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வான்கொல்லோ.’’ (கலித். 30) என்று தலைவன் பதியிகந்து நுகர்ந்தமை தலைவி கூறியவாறு காண்க. (50) 190. காமஞ் சான்ற கடைக்கோட் காலை யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயிற்ற லிறந்ததன் பயனே. இது, தலைவற்கும் தலைவிக்கு முரியதோர் மரபுணர்த்திற்று. சிறந்தது பயிற்ற லாவது - அறத்தின்மேல் மன நிகழ்ச்சி. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (51) 191. தோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாட்டி யிளையர் விருந்தினர் கூத்தர் விறலிய ரறிவர் விருந்தினர் யாத்த சிறப்பின் வாயில்க ளென்ப. இது, கற்பின்கண் வாயில்க ளாவாரை உணர்த்திற்று. பாட்டி யென்பது பாடினி யென்றவாறு. தோழிமுதலாகச் சொல்லப்பட்ட பன்னிருவரும் வாயில்க ளாவார் என்றவாறு. (52) 192. வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை யிடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை யுள்ளம் போல வுற்றுழி யுதவும் புள்ளியற் கலிமா வுடைமை யான. இது, வினைமுற்றி மீண்ட தலைவற் குரியதோர் மரபு உணர்த்திற்று. சூத்திரத்தாற் பொருள் விளங்கும். ‘இடைச்சுர மருங்கிற் றவிர்த லில்லை’ என்பது 162வழியில் இடை யிற்றங்காது இரவும் பகலுமாக வருமென்பது கருத்து. தங்குவா னாயின் மனையாள்மாட்டு விருப்பின்றாம். உதாரணம்: ``இருந்த வேந்த னருந்தொழின் முடித்தெனப் புரிந்த காதலொடு பெருந்தேர் 163யானு மேறி யல்லது வந்த வாறு நனியறிந் தன்றோ விலனே தாஅய் 164முயற்பற ழுகளு முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறூ ராங்கண் மெல்லிய லரிவை யில்வயி 165னீறீஇ யிழிமின் னென்றநின் மொழிமருண் டிசினே வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ 166மானுரு வாகநின் மனம்பூட் டினையோ வுரைமதி வாழியோ வலவ வெனத்தன் வரைமருண் மார்பி னளிப்பனன் முயங்கி மனைக்கொண்டு புக்க நெடுந்தகை விருந்தே பெற்றன டிருந்திழை யோளே.’’ (அகம். 384) என வரும். பிறவுமன்ன. (53) நான்காவது கற்பியல் முற்றிற்று. கற்பியல் அடிக்குறிப்புகள் 1. என்பதூம். 2. கரணமின்றே. 3. லொழுகுதல். 4. புதல்வர்ப். 5. குறைமையி. 6. பின்னுத 7. வின்பேருறு 8. திரங்கு. 9. பெருகென் 10. விளவுடைப் 11. ரிடுமன்பை. 12. னப்புலந் 13. னில்லதற்குதவு 14. னமையெனத் 15. வரிபெய். 16. புனற்ற. 17. புதல்வர்ப். 18. புதல்வரைப். 19. படைமானகட்டிற் 20. வெற்கண்டு. 21. கைபுதைதந்துகவே. 22. புள்வளர். 23. மனையும். 24. யாழத்துப் 25. கலதிரை. 26. யான்றோய். 27. யும் வறிதுண்டருந்தும். 28. யார்த்த. 29. முனந்த. 30. மெழுகுநுனை. 31. மிளையோள் 32. பிறிதுநா. 33. பணிப்புறத். 34. புன்றினை. 35. தொயலத்தவைபோற் 36. கொழீஇய. 37. மழைமழை. 38. வென்னூழ். 39. றுள்ளியாம். 40. தொலிதழைமிசைந்த. 41. பொருந்தி. 42. யஞசலலாரவுரு விடை. 43. விகுதி. 44. குவவுங் குதனீ. 45. வந்துறுங் கதுப்புளிரிய. 46. கொளவோன். 47. மயல்கிளைத் 48. னனவின. 49. வல்லை. 50. புறத்தோய். 51. நெல்லை. 52. தளையும் 53. உருகப்பண்ணி. 54. களிரிவந் 55. புனத்து. 56. மண்ணனைச் 57. தன்முகந். 58. வருத்தொற. 59. ஞெகிழ்முலை யிளையவ ரிடைமுலைத் 60. யில்லாதி. 61. சேர்த்தனன். 62. நிற்றோட். 63. தாம்வயிறுறற்கென 64. கைதுவா. 65. றுற்றாப். 66. புறஞ். 67. யவாகவனெடுங் கூந்தல். 68. மான. 69. தூறு. 70. யெல்லாந். 71. முயர்சிலை மாயி. 72. மரக்கவுங் 73. பாலமு. 74. னெல்லாங். 75. யின்றி யிவற். 76. தனனிந்திரா. 77. செறுதற்காண். 78. பொடியொற்றிக் 79. வெனறிபுனலன்னது. 80. ரூர்மாருமறிய. 81. எல்கினை. 82. கலமான். 83. பூக்கட். 84. யிளமா. 85. புககிலததி. 86. மெய்யொடு. 87. தேரோர் கொத்த மெனமல் லேயிதனாற். 88. பன்னிலை. 89. மொழியல்வாம். 90. இங்கிருந்து 1¾ பக்கம் ஏட்டில் எழுதப்பெறாது விடப்பட்டுளது. `புணர்ந்துடன் போகிய’ என்ற சூத்திரமும், `தோழியுள்ளுறுத்த’ என்ற சூத்திரமும், `பெறற்காரும்’ என்ற சூத்திரமும் அதன் முதலிரண்டு அடிகளின் உரையும் மறைந்து விட்டனபோலும். இப்பகுதிக்கு நச்சினார்க்கினியத்தைத் தழுவி உரையெழுதி (இ.மு.சொ.) சேர்த்திருக்கின்றனர். இங்கே தரப்படுவது அவ்வாறு சேர்க்கப் பெற்றதேயாம். `குற்றமில்லாத் தலைமகனைச் சுட்டிய தெய்வக் (கடன்) கொடுக்க வேண்டுமென் றலாம்’ என்பது தொடங்கி யேட்டுப் பிரதியிற் காணப்படுகின்றது. 91. 169ஆம் பக்கத்தில் உடுக்குறியிட்ட இடத்தினின்று இதுவரை (இமு.சொ.) தாமே எழுதித் சேர்த்தது. 92. கொடுக்கவேண்டு மென்றலாம். 93. மொழிகொடுத். 94. றொன்றி. 95. பொதியபு. 96. யிடுக்குந். 97. யிருமைப். 98. அகற லின்றும் பரிகதிர்த். 99. தவாறுற் றமையெ. 100. புகற்சியும். 101. யுரிமை. 102. வீடென விடுக்குந வருவதுநீ. 103. உணராப்புலவியா வூடலுற். 104. பைததறகிப் பிள்ளைகிளை கின்னாப் பயிர்ந்தாங். 105. என்பது. 106. நீநிர்த்த. 107. வாய்வாடப். 108. யம்பரத். 109. வானிலங். 110. மதுமொழி. 111. டராகிக். 112. வினாயிநின். 113. வேளாண். 114. சாமப். 115. கோஒஉடைப்பின். 116. னீதடுத். 117. கழீஇ. 118. மலர்நிறை. 119. யுணீயெனப்பயப். 120. சிதறிவன். 121. வெளிவல். 122. பூங்கையிற் புடையடைய. 123. னாங்கனிந். 124. நாரும். 125. துணியளவழி. 126. காய்த்தன. 127. விளைக்கணி. 128. கொண்டை. 129. விருந்திறை. 130. கிழவோன். 131. திளையா. 132. தேனீர். 133. ஒன்னமைத். 134. தொழிப்பப். 135. இறந்தகாலத்தாற். 136. இவை. 137. யுவவாதா. 138. வருந்தி. 139. பரூஉக்கோலடிப் 140. தாங்கோ. 141. செய்கெயா. 142. வெம்பை. 143. உமிழ். 144. யலசெயனல்கிய. 145. ரிவ்வணங். 146. வாயில்கட்கும். 147. எனவும். 148. வென்றும். 149. யெனறுறறார். 150. மிளைஞோர்க். 151. வார்பெய்தல். 152. வாத்த. 153. ளறுவி. 154. வின்றி வெய்துப. 155. பழிமொழி. 156. கழங்கடா அயத். 157. பழங்கா. 158. லுயர்ந்த. 159. ஒருவுநீ. 160. வெருவுதுங். 161. ளணங்காகி. 162. தங்குதல். 163. யாய. 164. பறழும் பாந்தளு. 165. னறீஇ. 166. ....லகு. பொருளியல் மேற்சொல்லப்பட்ட இயல்களிலும் இனிச் சொல்லும் இயல்களிலும் வரும் பொருளினது தன்மையினை யுணர்த்துதலின் இது பொருளியலென்னும் பெயர்த்தாயிற்று. அகப்பொருள், புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறினமையின் இதனை ஒழிபியலென்னினுங் குற்றமில்லை யென்பர் இளம்பூரணர். சொல்லதிகாரத்திற் கூறிய சொற்களை மரபியலின் இரு திணை ஐம்பால் இயல் நெறி வழாமைத் திரிபில் சொல் என்ப ராதலின் அவை ஈண்டுத் தம்பொருளை வேறுபட்டிசைப்பினும் பொருளாமெனவும், இப்பொருளதிகாரத்து முன்னர்க் கூறிய பொருளிற் பிறழ்ந்திசைப்பனவும் பொருளாமெனவும் அமைத்துச், சொல்லுணர்த்தும் பொருளும் தொடர்மொழி யுணர்த்தும் பொருளும் ஒருங்கே கூறலிற் பொருளியலென்றார் என்பர் நச்சினார்க்கினியர். இவ்வியலிற் கூறப்பட்டன யாவும் சொற் பொருளின் வழுவமைதியும் பொருளின் வழுவமைதியும் என இரு பகுதிப்படுமென்பதும், புறத்திணையியலுட் புறத்திணைவழுக் கூறி அகப்பொருட்குரிய வழுவே ஈண்டுக் கூறுகின்றதென்பதும் அவர் கருத்து. அகப்பொருள் ஒழுகலாற்றில் தலைவன், தலைவி, தோழி முதலியோர் உரையாடுதற்குரிய சொல்லமைதியினையும் அவர் தம் கூற்றில் அமைத்தற்குரிய பொருள் வகையினையும் சிறப்பு முறையிற் கூறுவது இப்பொருளியலாகும். இவ்வியலிலுள்ள சூத்திரங்களை 52-ஆக இளம்பூரணரும், 54-ஆக நச்சினார்க்கினியரும் பகுத்து உரை கூறியுள்ளார்கள். சொல்லொடுசொல் தொடர்வுபடும் வாய்பாட்டால் தொடர்ந்து நில்லாது பிறிதோர் வாய்பாட்டால் தொடர்ந்து நிற்பினும், சொல்லக் கருதிய பொருள் இயைபு பெறப் புலப்படும். அவ்வழிச் சொற்களுக்கு அங்கமாகிய அசைச் சொற்கள் மாறி நிற்றலில்லை. உலகியலில் எல்லோர்க்கும் உரியதாய்ப் பயின்றதாகாது ஒரு திறத்தார்க்கே யுரியதாய்ப் பயிலும் சொல்வகையினைப் ‘பாற்கிளவி’ என வழங்குவர் ஆசிரியர். பால்-பக்கம். பாற்கிளவி-ஒரு திறத்தார்க்கே உரியதாய்ப் பயிலும் சொல். துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுமுடைய காமத்தைக் கருதிய இயல்பு புலனாக எண்வகை மெய்பாடும் விளங்கப் பொருந்திய உறுப்புடையதுபோலவும், உணர்வுடையதுபோலவும், தனது கூற்றினை மறுத்துரைப்பது போலவும், நெஞ்சொடு சேர்த்துக் கூறியும், பேசும் ஆற்றலில்லாத பறவை, விலங்கு முதலியவற்றோடு பொருந்தி அவை செய்யாதனவற்றைச் செய்தனவாகக் கூறியும், பிறருற்ற பிணியைத் தாமுற்ற பிணிபோலச் சேர்த்தியும், அறிவையும் அறிதற்கு வாயிலாகிய பொறி புலன்களையும் வேறுபட நிறுத்தி உவமைப் பெயரும், உவமிக்கும் பெயரும், தொழிலும் பண்பும் பயனுமாகிய மூவகைப்பட்ட பொருட்கும் உரியவாக உவமம் பொருந்துமிடத்து உவமங் கூறுதலும், தலைவன் தலைவி ஆகிய இருவர்க்கும் உரிய ஒரு கூற்றுச் சொல்லாம். காமம் இடையீடுபட்ட காலத்து கனக்கண்டு கூறுதலும் அவ்விருவர்க்கும் உரியதாகும். அவ்விருவரும் உடன்போகிய காலத்துத் தாய் கனாக்கண்டு கூறுதலும் உண்டு. தம்முள் அன்புடையராய்ப் பழகும் இன்ப நிலையில்லாத ஏனைத் துன்பக் காலத்துத் தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வர்க்கும் மேற்கூறியவாறு அறிவும் புலனும் வேறுபடக் கூறும் ஒரு கூற்றுச் சொல் உரியதாகும். அன்பொருமையும் உயிரினுஞ் சிறந்த நாணமும் மடனும், குற்றமற்ற சிறப்பினையுடைய பெண்பாலார் நால்வர்க்கும் உரியவாகும். எனவே இவர் நால்வரும் இக்குணங்களுக்கு இழுக்கு நேராவண்ணம் உரையாடுதல் வேண்டுமென்பது நன்கு பெறப்படும். தலைமகள், தனது உடல் வனப்பு வேறுபட்டுத் தனிமை யுறுங்கால் தலைமகனது பிரிவைத் தன் அவயங்கள் முன்னமே உணர்ந்தனபோலப் பொருந்திய வகையாற் கூறுதலும் உண்டு. தன் உடம்பும் உயிரும் மெலிந்த நிலையிலும் ‘இவை என்ன வருத்த முற்றன?’ எனத் தனக்கு வருத்தமில்லதுபோலக் கூறுவதல்லது, தலைவனைத் தானே சென்று சேர்தல் தலைமகளின் இயல்பன்றாம். தன் நெஞ்சுடன் தனித்து ஆராயுங் காலத்துத் தலைமகன் இருக்குமிடத்தை யடைதல் வேண்டுமெனத் தலைவி கூறுதலும் உண்டு. தலைவன் புறத்தொழுக்கத்தை மறைக்குமிடனும் தான் அவன்பால் பெரு விருப்புற்ற நிலையும் அல்லாத ஏனையிடங்களிலெல்லாம் மடன் நீங்காதபடி நிற்றல் தலைவியின் கடனாகும். தலைவன் தலைவி என்னும் இருவரும் இயற்கைப் புணர்ச்சி யாகிய முதற் காட்சியில் ஒருவரையொருவர் சந்தித்த முறைமை தூய அன்பொடு பொருந்திய அறத்தின் வழிப்பட்ட நற்செயலே யென்பதனை அறிவுறுத்துதல் களவு வெளிப்படுத்தலின் கருத் தாகும். ஆதலால் அங்ஙனம் வெளிப்படுத்தும் முறையினை ‘அறத்தொடு நிற்றல்’ என்பர் ஆசிரியர். தலைவி தலைவனொடு தனக்குண்டாகிய தொடர்பினைத் தம் பெற்றோர்க்கு அறிவித்தல் வேண்டுமென்னுங் கருத்தினளாகிய காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் முறைமையிலள். அங்ஙனம் அறத்தொடு நிற் குங்கால் தலைவியின் குடிப்பிறப்பிற்கும் செவிலியின் அறிவிற்கும் தலைவியின் நாணம், கற்பு முதலிய பெருமைக்கும் தனது காவலுக்கும் தலைவனுக்குரிய அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடியென்னும் பெருந்தன்மைக்கும் தவறு நேராதபடி இக்களவொழுக்கம் நிகழ்ந்த முறையினை முரண்பாடில்லா மொழிகளால் தோழி செவிலிக்கு அறிவுறுத்தல் மரபாகும் என்பர் களவியலுரையாசிரியர். செவிலிக்குத்தோழி அறத்தொடு நிற்குங்கால், தன்னிகரற்ற தலைவன் இளையோராகிய எங்கள்பால் எளியனாக நடந்து கொண்டான் என்று கூறுதலும், இத்தகைய அருளும் சிறப்பு முடையான் அத்தோன்றல் எனத் தலைவனை உயர்த்துப் புகழ்தலும், தலைவன் தலைவியென்னும் இருவரும் அன்பினால் நிரம்பிய வேட்கையுடையாரெனக் கூறுதலும், அத்தகைய தலைவனுக்கே நம் தலைவியை மணஞ்செய்து கொடுத்தல் வேண்டுமென்னும் குறிப்புத் தோன்றக்கூறுதலும், தலைவியினது நோயினைத் தணித்தல் வேண்டி வேலன் முதலியோரைக் கொண்டு வெறியாடல் முதலியன நிகழ்த்தியபொழுது அவை தலைவியின் நோயைத் தணித்தற்குரியன அல்ல எனத் தெரிவித்துத் தடுக்குமுகமாக அவர்கள்பால் சிலவற்றை வினாவுதலும், தலைவன் யாதேனும் ஒரு காரணத்தை முன்னிட்டு வருங்கால் தன் கருத்தின்றித் தலைமகளை எதிர்ப்பட்டானெனக் கூறுதலும், தலைமகனும் தலைமகளும் ஒருவரை யொருவர் சந்தித்தபொழுது நிகழ்ந்த நிகழ்ச்சியினை நிகழ்ந்த முறையே உண்மையாக எடுத்துரைத்தலும் என இவ்வேழு வகையாலும் களவொழுக்கத்தை வெளிப்படுத்தல் முறையென்பர் தொல்காப்பியர். காமவுணர்வு மிக்குத்தோன்றிய காலத்தல்லது சொல் நிகழ்ச்சி யில்லாமையால் தலைமகளது வேட்கையை அவளது தோற்ற முதலியவற்றைக்கொண்டு செவிலி முதலியோர் குறிப் பினால் உணர்வர். அடக்கம், அமைதி, நேர்மை, உண்மையினை வற்புறுத்தும் சொல்வன்மை, தீதொரீஇ நன்றின்பாலுய்க்கும் நல்லறிவு, பிறர்பாற் காணுதற்கரிய அருமை என்பன பெண்டிர்க்குரிய சிறப்பியல்புகளாகும். ஆகவே மேற்சொல்லிய அறத்தொடு நிலைவகையும் இனிக்கூறும் வரைவுகடாதற் பகுதியும் ஆகியவற்றை உண்மைவகையானும் புனைந்துரை வகையானும் கூறும் ஆற்றல் தோழி முதலிய பெண்பாலார்க்குண்மை இனிது புலனாம். தலைமகன் வரும் காலமும் வழியும் ஊரிடையுளதாங் காலலும் ஆகியவற்றைத் தப்பியொழுகுதலால் உளவாம் தீமைகளை எடுத்துக்காட்டலும், தான் நெஞ்சழிந்து கூறுதலும், தலைமகனுக்குளவாம் இடையூறு கூறுதலும், அவனைப் பகற்குறி விலக்கி இரவில் வருகவென்றலும், இரவும் பகலும் இங்கு வாராதொழிக வெனக் கூறுதலும், நன்மையாகவும் தீமையாகவும் பிறபொருளையெடுத்துக் காட்டலும், பிறவுமாக இங்ஙனம் தலைவனது உயர்ச்சி கெடத் தோழி கூறுஞ் சொற்கள்யாவும் தலைமகளுக்குத் தலைமகன்பால் விருப்பமின்மை யாற் கூறப்பட்டன அல்ல; தலைமகளை அவன் விரைவில் மணந்துகொள்ளுதல் வேண்டுமென்னும் வேட்கையினைப் பொருளாகவுடைய சொற்களாம். தலைவன் களவொழுக்கத்து நீட்டித்தொழுகிய நிலையில் இவ்வாறு குறிப்பாகச் சொல்லாது வெளிப்படையாக மறுத்துரைத்தலும் உண்டு. களவொழுக்கத்தில் தலைவன் தனியே வந்து போவதன்றித் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து செல்லுதலும் இயல்பேயாகும். உண்ணுதற்றொழிதலை நிகழ்த்துதற்குரியன அல்லாத உணர்வற்ற பொருள்களை அத்தொழிலை நிகழ்த்தினவாக ஏறிட்டுக் கூறுதலும் இவ்வகத்திணைக்கண் வழங்கும் மரபாகும். தலைமகளைப் புறத்தே செல்லவொட்டாது காக்கும் காவல் மிகுதியான நிலையில், ‘எங்கள் சுற்றத்தார் தலைமகளைக் கொடுக்க இசையாமைக்குக் காரணம் பரிசப்பொருளை வேண்டி நிற்றலே’ எனத் தோழி தலைமகனை நோக்கிக் கூறுதலும் விலக்கத்தக்கதன்று. காவல் மிகுதியால் தலைவிக்கு வருத்தம் நேர்ந்தபொழுது, தலைவன்பால் உளவாம் அன்பும், அன்பின் வழிப்பட்ட மனை யறமும், மனையறத்தின்கண் இருந்து நுகர்தற்குரிய இன்பமும், பெண்ணியல்பாகிய நாணமும் ஆகிய இவற்றிற் கருத்தின்றி அடங்கியொழுகும் நிலை, பழியுடையதன்றாதலால் இற்செறிக் கப்பட்ட காலத்தில் இவற்றைப்பற்றி எண்ணுதற்கு இடமில்லை என்பர் ஆசிரியர். பொருளீட்டுதல் கருதிப் பிரிந்து செல்லுந் தலைமகன், தன்னோடு உடன்வரக் கருதிய தலைமகளுக்கு ‘யான் போகும் வழி வெம்மைமிக்க பாலை நிலைமாம்’ எனக் கூறி விலக்குதலும் தவறகாது. முன்னைய நூல்களில் அகப்பொருளாகவும் புறப் பொருளாகவும் எடுத்தோதப்பட்டனவன்றித் தம் காலத்து வாழும் சான்றோர் தமது அநுபவத்தால் தெளிந்து கூறுவனவும் உயர்த்தோர் வழக்கென ஏற்றுக்கொள்ளத் தக்கனவாதலின், உயர்தோர் வழக்கொடு பொருத்தி வருவனவெல்லாம் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்கப்படும். உலக வழக்கிற்குப் பொருத்தமில்லாத கூற்றுக்கள் அகப்பொருளொழுகலாற்றிற்குப் பயனுடையனவாக வருமாயின், அவற்றை வழக்கென்றே புலனெறி வழக்கஞ் செய்தலும் பழியுடையதன்றாம். அவ்வாறு உலக வழக்கினைக் கடந்து வருவனவாகிய பொருட்பகுதிகளைச் செய்யுளில் அமைத்துக் கூறுங்கால், நாணம் நீங்காமைக்குக் காரணமாகிய நன்னெறிப்படுத்துக் கூறுதல் வேண்டும். முறைப்பெயரிடத்து இருபாலுக்கும் பொருந்தின தகுதி யுடைய ‘எல்லா’ என்னும் பொதுச் சொல், ஆண்பால் பெண் பால் ஆகிய அவ்விரண்டற்கும் ஒப்ப வுரியதாய் வழங்கும். தந்தைக்குரிய பொருள்களாய் மக்கள் எய்துதற்குரிய பொருள்களிற் சேராதனவுமாய், அறமும் புகழுங் கருதி ஒருவர் கொடுப்ப மற்றையோர்பாற் செல்லாதனவுமாய், உழவு முதலிய தொழில் முயற்சியால் வாராதனவுமாய், வேறுபட்ட பிறரால் வலிந்து கொள்ளப்படாதனவுமாய் வரும் பொருளுரிமை முறை, இவ்வகப்பொருள் ஒழுகலாற்றிற் பொருந்தி வருதல் உண்டு என்பர் ஆசிரியர். சங்கத்தொகை நூல்களில் தலைவியின் அங்கங்களைத் தோழி தன்னுடையனவாக உரிமை பாராட்டிக் கூறுவனவாக அமைந்த கூற்றுக்கள்யாவும் இத்தகைய உரிமை முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கிழவன், கிழத்தி என்பன முதலாக இவ்வாறு ஆணொரு மையும் பெண்ணொருமையும் உணர்த்தி நிற்கும் ஒருமைச் சொற் கள், நானிலத்துத் தலைவரையும் தலைவியரையும் உணர்த்தும் பன்மைச்சொற்கண்ணே நின்று பன்மைப் பொருளையுணர்த்தும் முறை, உலக வழக்கில் நிலைபெற்றது என்பர் அறிஞர். இன்பம் என்று சொல்லப்படும் உணர்வானது எல்லாவுயிர் களுக்கும் மனத்தொடு பொருந்திவரும் விருப்பத்தை அடிப்படை யாகக்கொண்டு தோற்றுவது என்பர் ஆசிரியர். எனவே மனம் பொருந்தியவழிப் பரத்தையர்மாட்டும் இன்பம் உளதாமெனவும் மனம் பொருந்தாதவழி மனைவியர்மாட்டும் இன்பமின்றா மெனவும் விளக்கங்கூறுவர் இளம்பூரணர். எல்லாவுயிர்க்கும் இன்பம் பொது எனவே ஒழிந்த அறனும் பொருளும் எல்லாவுயிர்க்கும் நிகழா, மக்கட்கே சிறந்து வரும் எனக் கருத்துரைப்பர் நச்சினார்க்கினியர். பரத்தையிற் பிரிவு காரணமாகப் பாணர் முதலியோரை ஊடல் தீர்க்கும் வாயிலாகஅனுப்புதல், மருதநிலத் தலைவர்க்கே சிறப்புரிமையுடையதாயினும் நானிலத்தலைவர்க்கும் பொதுவாக உரியதாகும். அவ்வழிப் பிரியும் பிரிவு தம் ஊரைக் கடந்து நிகழ்வதில்லை. இடைவிடாது இன்பம் நுகர்தலோடு மனையறம் நிகழ்த்தும் உரிமையை உறுதியாக விரும்புதலானும், வினைசெய்தலில் விருப்புடைய ஆண்மக்கள் பிரிவர் எனக்கருதி அஞ்சும் அச்சம் மகளிர்க்கு இயல்பாதலானும், களவொழுக்கத்தைப் புறத்தார்க்கு வெளிப்படுத்துமென்று அஞ்சும்படி தோன்றிய அம்பலும் அலரும் ஆகிய இருவகைக் குறிப்பினாலும், தலைமகனது வரவினை எதிர் நோக்கியிருந்த நிலையில் வந்த அவனுடன் அளவளாவுதற்கு இயலாதபடி இடையூறு நேர்தலானும் தலைவனோடு உடன்போ தற்குறிப்பும் ‘ஏன் இன்னும் மணஞ்செய்து கொள்ளவில்லை?’ என அவனை வினவுங் குறிப்பும் தலைமகளிடத்தே தோன்றும். வருத்த மிகுதியைக் குறித்த நிலையில் மனைவாழ்க்கையில் இரக்கம் தோன்றுதலும் உரித்தாம். தலைவன் பணிந்துழி அச்சமும் நாணமுமின்றித் தலைவி அப்பணிவினை யேற்றுக் கொள்ளுதலும், தலைவன் தன் தலைமைக்கு மாறாகத் தலைவியைப் பணிதலும் புலவிக்காலத்து உரியனவாம். களவுக்காலத்துத் தலைவியின் நலம் பாராட்டிய தலைவன், கற்புக்காலத்தும் அவளது எழில் நலம் பாராட்டுதற்கு உரியன். வெளிப்படச் சொல்லப்பட்ட பொருளின் புறத்தே தங்கிய குறிப்புப் பொருளை இறைச்சியென வழங்குவது தமிழ்மரபு, “இறைச்சிப் பொருள் என்பது உரிப் பொருளின் புறத்ததாகித் தோன்றும் பொருள். அஃதாவது கருப்பொருளாகி நாட்டிற்கும் ஊர்க்கும் துறைக்கும் அடையாகி வருவது” என்பர் இளம் பூரணர். இத்தகைய இறைச்சிப்பொருள் பெரும்பான்மையும் அகப்பொரு ளொழுகலாற்றில் தலைவனது கொடுமைகூறும் வழிப் பிறப்பதென்றும், கூறவேண்டுவதோர் பொருளின் புறத்தே புலப்பட்டு அப்பொருட்கு உபகாரப்படும் பொருட்டன்மையினை யுடையதென்றும் கூறுவர் நச்சினார்க்கினியர். ‘இறைச்சிதானே யுரிப்புறத்துவே’ என இளம்பூரணரும், ‘இறைச்சிதானே பொருட்புறத்ததுவே’ என நச்சினார்க்கினியரும் பாடங்கொண்டனர். இறைச்சிப் பொருளாகிய இதன் கூறுபாட்டினை ஆழ்ந்து உணரவல்லார்க்கு வெளிப்படக் கூறப்படும் பொருளின் புறத்த தாகி வரும் அவ்விறைச்சியினுள்ளே உட்பொருளாகத் தோன்றும் வேறுபொருள்களும் உள என்பர் ஆசிரியர். எனவே இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள்கொளக்கிடப்பனவும் கிடவா தனவும் என இருவகைப்படும் என்பர் இளம்பூரணர். ‘கருப்பொருள் பிறிதோர் பொருட்கு உபகாரப்படும் பொருட்டாதலேயன்றி, அக்கருப்பொருள் தன்னுள்ளே தோன்றும் பொருளும் உள; அஃது உள்ளுறை யுவமத்தின் கூற்றிலே அடங்குமாறுபோல நடக்குமிடத்து, அவ்வுள்ளுறையுவமம் அன்று இஃது இறைச்சி யென்று ஆராய்ந்துணரும் நல்லறிவுடையோர்க்கு’ என இறைச்சிப் பொருளின் கூறுபாட்டினைச் சிறிது விரித்து விளக்குவர் நச்சினார்க்கினியர்.1 தலைவி, தலைவனது பிரிவாற்றாது வருந்தியகாலத்து, பிரிந்து சென்ற தலைவனால் வழியிடைக் காணப்பட்ட கருப்பொருள்களுள் அவன் தலைவியை நினைந்து அன்பு செய்தற்குத் தகுவனவாக அமைந்த சிலவற்றின் நிகழ்ச்சிகளைச் சுட்டி இறைச்சிப் பொருள் படத் தோழி கூறுதலும் தலைவியை வற்புறுத்தும் குறிப்பினதாகும். தலைவியை நோக்கித் தலைவன் பாராட்டிய பாராட்டானது, ‘யான் செய்யக் கருதிய பொருளுக்கு இவள் இடையூறாவாள் கொல்லோ’ எனத் தலைவன் தன் மனத்தட்கொண்ட அச்சத்தையும் தான் பொருள் ஈட்டுதற் பொருட்டுப் பிரிகின்ற செய்தியினையும் தலைவிக்கு உறுதியாகப் புலப்படுத்துவதாகும். கற்பின் வழிப்பட்ட தலைமகள் பரத்தையைப் புகழ்ந்து பாராட்டினாளாயினும், அவள் மனத்தகத்தே தலைவனோடு ஊடினதன்மை யுண்டென்பர் நுண்ணுணர்வினோர். மற்றொருத் தியைக் குறித்து ‘இவள் இத்தன்மையள்’ எனத் தலைவனுக்குச் சொல்லி, ‘அவளிடத்தில் இவன் எத்தன்மையனாயிருக்கின்றான்’ என அவனது உள்ளக் குறிப்பினை யுணர்தலும் தலைவிக்குரிய இயல்பாகும். தலைவனால் தாம் அடைந்த துன்பத்தினைப் பரத்தையர் தனக்குக் கூறிய வழியும், தான் அவரது துன்பத்தினை உள்ளவாறு உணர்ந்த நிலையிலும் தலைவியானவள், மகிழ்ச்சியும் புலவியுமாகிய காலத்தன்றி ஏனைக்காலத்துத் தலைவனது முன்னிலையில் நின்று இடித்துரைத்தல் இல்லை என்பர் ஆசிரியர். எனவே தலைவனுடன் மகிழ்ந்து அளவளாவும் நேரத்தில் அம்மகிழ்ச்சியொடு கூட்டி அவனை இடித்துரைத்தலும், தலைவன்பால் தவறுகண்டு புலக்குங்காலத்து அத்தவறுகளோடு கூட்டி இடித்துரைத்தலும் நுண்ணுணர்வுடைய தலைமகளின் இயல்புகளாம் என ஆசிரியர் அறிவுறுத்தினாராயிற்று. மகிழ்ச்சியும் புலவியும் என இவ்விரு நிலையும் அல்லாத ஏனைக் காலங்களில் தலைவனைக் கழறுதல், தசைசான்ற சொற்காக்குந் தலைவியின் கடமைக்கு ஊறுவிளைப்ப தாகலின் அங்ஙனம் இடித்துரைத்தல் கூடாதெனத் தொல்காப்பியனார் விலக்கிய திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். தலைவன் யாதேனும் ஒரு பருவத்தை யெல்லையாகக் குறித்துப் பிரிந்தானாக, இருதிங்களை யெல்லையாகவுடைய அப்பருவம் தோன்றிய பொழுதே, அப் பருவம் கழிந்தது போலத் தலைவி கூறுதலும் உண்டு. அவ்வாறு கூறுதல், அறியாமை யாலாவது வருத்தத்தினாலாவது மயக்கத்தாலாவது அப் பருவத்திற்குரிய பொருள்கள் மிகுந்து காணப்படுதலாலாவது என இந்நான்கு காரணங்களாலும் நிகழும் என்பர் ஆசிரியர். ‘எனவே இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்றதல்ல’ என இதற்கு விளக்கந்தருவர் இளம்பூரணர். தோழி, தன்னை இரந்து குறைவேண்டிய தலைமகனைச் சேட்படுத்து விலக்கிநிறுத்துதலேயன்றி, மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் நல்வகையுடைய நயவுரைகளைக் கூறுதலும் என இவ்வாறு பலவகையாலும் படைத்து மொழிதலுண்டு. ஒருவரை யொருவர் உயர்த்துச் சொல்லுதற்குரிய சொல், தலைவன் தலைவியாகிய இருவர்க்கும் ஒக்கும். ஐயுற்றுக் கூறுஞ் சொல் தலைமகனுக்கே யுரியதாகும். தலைமகளுக்கு உற்ற துன்பத்தைத் துடைத்தல், அவளோடு ஓன்றித்தோன்றும் பேரன்பினளாகிய தோழியின் இயல்பாதலின், எதிரதாக் காக்கும் அறிவாகிய உள்ளத்திண்மை அவள்பால் நன்கு அமைத்திருத்தல் வேண்டும். தலைவியையும் தலைவனையும் உயர்த்துக் கூறும் கூற்றும் தோழியாகிய அவளுக்கே ஒப்பவுரிய தாகும். அகப்பொருள் ஒழுகலாற்றில் உரையாடுதற்குரிய வாயில் களாகிய பாணர் கூத்தர் முதலியோர், தாம் தாம் சொல்லத் தகுவனவற்றைத் தவறின்றி வெளிப்படையாகக் கூறுதல் வேண்டும் என இவ்வியல் 45-ம் சூத்திரத்தில் ஆசிரியர் தெளிவாகக் குறித்துள்ளார். ஆகவே மேற்குறித்த வாயில்கள் அல்லாத தலைமகளும் நற்றாயும் தாம் கூறக் கருதியவற்றை மறைத்துச் சொல்லப் பெறுவர் எனவும், வருகின்ற (46-ம் சூத்திரம் மறைத்துச் சொல்லுதலாகிய உள்ளுறை கூறுவதாதலின், அத்தகைய உள்ளுறை பாணர் கூத்தர் முதலிய வாயில்களுக்கு இல்லையென இச்சூத்திரத்தால் விலக்கப்பட்டதெனவும், வாயில்களாவார் குற்றேவல் முறையின ராதலானும், தலைமக்களாகிய கேட்போர் பெரியோராதலானும், வெளிப்படக் கூறக்கால் பொருள் விளங் காமையானும், பொருள் விளங்காதாயின் இவர்களது கூற்றிற்குப் பயனின்மையானும் வாயில்களாவார் மறைத்துக் கூறாது வெளிப்படவே கூறுதல் வேண்டுமெனவும் உரையாசிரியர் கூறிய விளக்கம் இங்கு நோக்கத்தகுவதாகும். உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என உள்ளுறை ஐந்து வகைப்படும் என்பர் ஆசிரியர். “உடனுறையாவது உடை னுறைவதொன்றைச் சொல்ல அதனானே பிறிதொரு பொருள் விளங்குவது. உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக் கப்படும் பொருள் தோன்றுவது. சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டிப் பிறிதோர் பொருட்படுதல். நகையாவது நகையினாற் பிறிதொரு பொருள் உணர நிற்றல். சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இதுவெனக் கூறுவதனானே பிறிதோர் பொருள் கொளக்கிடப்பது” என விளக்கங்கூறுவர் இளம்பூரணர். உடனுறையாவது, நான்கு நிலத்தும் உளவாய் அந் நிலத்துடன் உறையுங் கருப்பொருளாற் பிறிதொன்று பயப்ப மறைத்துக்கூறும் இறைச்சி. உவமமாவது அக்கருவாற் கொள்ளும் உள்ளுறை யுவமமும் ஏனையுவமமும். நகையும் சிறப்பும் பற்றாது ஒன்று நினைந்து ஒன்று சொல்வனவும், அன்புறுதகுந இறைச்சியுட் சுட்டி வருவனவும் சுட்டெனப்படும். நகையாவது ஒன்று நினைந்து ஒன்று கூறுதல். ஏனையுவமம் நின்று, உள்ளுறையுவ மத்தைத் தருங் கருப்பொருட்குச் சிறப்புக்கொடுத்து நிற்பது சிறப்பு என்னும் உள்ளுறையாம். இவை ஐந்தும் ஒன்றனை உள்ளுறுத்தி அதனை வெளிப்படாமற் கூறுதலின் உள்ளுறை யெனப்பட்டன என்பர் நச்சினார்க்கினியர். முடிவில்லாத சிறப்பினையுடைய அகப்பொருள் ஒழுகலாற்றால் ஆகிய இன்பமனைத்தும் இத்தகைய உள்ளுறைப் பொருண்மையிலே விளங்கித் தோன்றும்படி செய்த சிறப்பும் முன்னைச் சான்றோர் வகுத்துரைத்த பண்புடைய சொல்லாடல் முறையால் விளைந்ததே என்பது ஆசிரியர் தொல்காப்பியனார் கருத்தாகும். தலைவன் தன்தன்மை யென்பதொன்றின்றி நந்தன்மை யெனக் கருதுதலின், யாம் ஒன்றை நினைந்து ஒன்று கூறினும் அவன் அச்சொற்களைக் கேட்டு வெகுளாது இன்பமெனக் கொள்வன் என்ற கருத்தால் தலைவியும் தோழியும் அவனுடைய குறைகளைக் குறிப்பாகப் புலப்படுத்தி இடித்துரைக்கும் நிலையிற் கூறிய உள்ளுறைப் பொருண்மையினைக் கேட்ட தலைவன் ‘இவை இன்பந்தரும்’ என்றே ஏற்றுக் கொள்வானாதலால்1 இத்தகைய உள்ளுறைப் பொருண்மையால் தலைமக்களது இன்பவுணர்வு வளர்ந்து சிறத்தல் காணலாம். மங்கலத்தாற் கூறுஞ் சொல்லும், இடக்கரடக்கிக் கூறுஞ் சொல்லும், குற்றமற்ற ஆண்மை காரணமாகச் சொல்லிய மொழியும் ஆகிய இவையெல்லாம் சொல்லாற் பொருள் படாமையால் முற்கூறிய உள்ளுறையின்கண் அடங்கும் என்பர் ஆசிரியர். தலைமக்களுக்கு ஆகாதனவென்று மெய்ப்பாட்டியலில் விலக்கப்படும் சினம், பேதைமை, பொறாமை, வறுமை ஆகிய நான்கும் யாதானு மொரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாக அவர்பாற் சார்த்தியுரைக்கப்படும். அன்னை என்ற சொல்லால் தோழி தலைவியையும் தலைவி தோழியையும் அழைத்தலும், என்னை என்ற சொல்லால் அவ்விருவரும் தலைவனை அழைத்தலும் உள. இச்சொல் வழக்குகள் சொல்லினாலும் அதற்குறுப்பாகிய எழுத்தினாலும் பொருள் தோன்றாத மரபினையுடையன என்பர் ஆசிரியர். ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என இங்ஙனம் வரும் சொல்லெல்லாம், நாட்டில் வழங்குகின்ற வழக்கியல் மரபினாலே பொருளை மனத்தினால் உணரினல்லது இதனது வடிவம் இதுவெனப் பொறிகளால் தானும் உணர்ந்து பிறர்க்கும் தெரியக் காட்ட முடியாதனவாகிய பிழம்பில்பொருள்களை உணர்த்துவனவாகும். இமையாக் கண்களையுடைய தேவருலகிலும் கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்திலும் மேற்குறித்தனவாகிய அப்பொருள்கள் இல்லாத காலம் என்பது இல்லாமையால் (எக்காலத்தும் உள்ளமையால்) ஒப்பு முதல் நுகர்வு ஈறாகச் சொல்லப்பட்ட அவை யாவும் கட்புலனாகிய வடிவமில்லாதனவாயினும் என்றும் உள்பொருள்களெனவே கொள்ளத்தக்கன என்பர் ஆசிரியர். இங்ஙனம் ஆசிரியர் தொல்காப்பியனாரால் ஒப்பு முதலாக எடுத்துரைக்கப்பட்ட இப்பொருள்களை ‘உண்மை மாத்திர முணர்த்திப் பிழம்பு உணர்த்தப்படாதன’ என்ற பகுப்பினுள் இறையனார் களவியலுரையாசிரியர் அடக்கிக் காட்டினமை இங்கு நினைக்கத் தகுவதாகும். - க. வெள்ளைவாரணனார் நூல் வரிசை -10, பக். 281-293 ஐந்தாவது பொருளியல் 193. இசைதிரிந் திசைப்பினு 1மியையுமன் பொருளே யசைதிரிந் திசையா வென்மனார் புலவர். என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், பொருளியல் என்னும் பெயர்த்து; பொருளியல்பு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். என்னை பொருளியல்பு உணர்த்தியவாறு எனின், மேற்சொல்லப்பட்ட ஓத்துக்களினும் இனிச் சொல்லும் ஓத்துக்களினும் வரும் பொருளினது தன்மை யுணர்த்துதலிற் பொருளியல் உணர்த்திற்றாம். இதனை ‘ஒழிபியல்’ எனினும் இழுக்காது; அகப்பொருள் புறப்பொருள் என்பன இரண்டு பொருண்மையினும் எஞ்சி நின்றன கூறினமையின். இதன் தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ எனின், தொடர் மொழிக்கட் பொருள் இயையுமாறு உணர்த்திற்று. இசைதிரிந்து ஒலிப்பினும் பொருள் இயையும்; அவ்வழி அச்சொற்கு அங்கமாகிய 2அசை திரிந்தொலியா என்றவாறு. என்றது, சொல்லொடு சொல் தொடர்வுபடும் வாய்பாட்டான் தொடராது பிறிதோர் வாய்பாட்டான் தொடுப்பினும் பொருட்டொடர்பு உண்டாயிற் பொருள் இயையும்வழி, அசைச்சொற்கள் திரியாது நின்ற நிலையே பொருள்படுமா றாயிற்று. உதாரணம்: “கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் நுண்ஞாண் ணுதல திமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே யூர்ந்த தேறே சேர்ந்தோள் உமையே செவ்வா னன்ன மேனி அவ்வா னிலங்குபிறை அன்ன விலங்குவால் வையெயிற் றெரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை 3முதிராத் திங்களொடு சுடருஞ் சென்னி மூவா வமரரு முனிவரும் 4பிறரும் யாவரு மறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமா னுரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற் றந்தணன் 5றாவில் றாள்நிழ றவிர்ந்தன்றா லுலகே.” (அகம். கடவுள் வாழ்த்து) இதற்குக் கொன்றையாலமைந்த தாரினனாய் மாலையனாய்க் கண்ணியனாய் நுண்ஞாண் மார்பினனாய் இமையா நாட்டத்து நுதலி னனாய்க் கணிச்சியு மழுவு மூவாய் வேலும் ஏந்திய கையினனாய் யாவர்க்குந் தோலாதோனுமாய் ஏற்றினையு மூர்ந்து உமையாளையுஞ் சேர்ந்து செவ்வானன்ன மேனியையும் பிறைபோன்ற எயிற்றினையும் எரிபோன்ற சடையினையும் திங்களொடு சுடருஞ் சென்னியையும் உடையனாய் மூவாவமரர் முதலிய யாவரு மறியாத் தொன்முறை மரபினனாய்ப் புலியதளை உடுத்த யாழ்கெழு மணிமிடற் றந்தணனது சிவானுபூதியிற் பேருலகந் தங்கிற்று எனப் பொருள் உரைக்குங் காலத்து, அதன்கண் இடைக்கிடந்த சொற்கள் முன்னொடுபின் வாய்பாடுகள் சேராவன்றே? அவ்வழி அவ்வாய்பாட்டாற் போந்த பொருளுரைப்பச் சேர்ந்தவாறும், இசைதிரித்து இசைத்தவாறும், அவை தத்தம் நிலையிற் குலையாமை நின்று பொருள் பட்டவாறுங் கண்டுகொள்க. “ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டி னாறென்பர் வாய்ந்தவர் கோள்.” (குறள். 662) இதுவும் இரண்டென்னுந் தொகைக்கு ‘ஊறொராமை’ எனப் பொருள் உரைக்க வேண்டும். (1) 194. நோயு மின்பமு மிருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய வுறுப்புடை யதுபோ லுணர்வுடை யதுபோன் மறுத்துரைப் பதுபோ னெஞ்சொடு புணர்த்துஞ் சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியு மவரவ ருறுபிணி தமபோற் சேர்த்தியு 6மறிவும் புலனும் வேறுபட நிறீஇ யிருபெயர் மூன்று முரிய வாக வுவம வாயிற் படுத்தலு முவம மொன்றிடத் திருவர்க்கு முரியபாற் கிளவி. என்-னின், ஒருசார் காமப் பொருண்மை பற்றி நிகழ்வதோர் கிளவி யுணர்த்திற்று. நோயுமின்பமும் இருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய வெட்டன் பகுதியும் விளங்க வொட்டிய உறுப்புடையது போல், உணர்வுடையதுபோல், மறுத்துரைப்பது போல் னெஞ்சொடு புணர்த்தும் என்பது - துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுடைய காமத்தைக் குறித்த மரபு இடையீடு படுதலான் மெய்ப்பரிவு எட்டாகிய எட்டன் பகுதியும் விளங்கப் பொருந்திய உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும் மறுத்துரைப்பது போலவும் நெஞ்சொடு புணர்த்துக் கூறியும் என்றவாறு. ‘காமங்கண்ணிய’ என்றதனால் அகப்பொருளாகிய காமமும் புறப்பொருளாகிய காமமும் கொள்ளப்படும். ‘இடைதெரிய’ என்பதனை, “............... இன்பம் இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா றடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.” (நாலடி. 54) என்றாற் போலக் கொள்க. ‘தெரிய’ என்னும் செயவெனெச்சம் ஏதுப் பொருண்மை குறித்து நின்றது. மெய்ப்பாடு எட்டாவன:- நகை, அழுகை, உவகை, இளிவரல், அச்சம், பெருமிதம், மருட்கை, வெகுளி; இவற்றின் பகுதி மெய்ப்பாட்டியலுட் காண்க. இம் மெய்ப்பாடு உறுப்புடையது போலச் சொல்லப்பட்ட நெஞ்சின்கட் புலப்பட என்றவாறு. சொல்லா மரபினவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற்றொழிற்படுத்தடக்கியும் என்பது - சொல்லாத மரபினையுடையவற்றொடு கெழுமி அவை செய்யாத மரபை யாண்டுப் படுத்தியவற்றையும் நெஞ்சினைப் போல அடக்கியும் என்றவாறு. சொல்லா மரபின வாவன - புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலாயின. செய்யா மரபாவன - தூதாச் சேறலும் வருதலும் உளபோலக் கூறும் அவை போல்வனவும் பிறவும். அவரவருறுபிணி தமபோற் சேர்த்தியும் என்பது - யாவர் சிலர் யாதோர் பிணியுற்றார் அவருற்ற பிணியைத் தாமுற்ற பிணிபோலச் சேர்த்தியும் என்றவாறு. ‘அவரவர்’ என்பது உயர்திணையாய்க் கூறினும் இருதிணையுங் கொள்ளப்படும், “ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப.” (பொருளியல். 27) என்பதனால். அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்று முரியவாக வுவம வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து என்பது - அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி இருவகைப்பட்ட பெயரும் மூவகைப்பட்ட பொருட்கும் உரியவாக உவமம் பொருந்துமிடத்து உவமவாயிற் படுத்தலும் என்றவாறு. வேறுபட நிறுத்தலாவது - தத்தம் நிலைமை யொழிய என்றவாறு. இருபெயராவது - உவமைப் பெயரும் உவமிக்கும் பெயரும். மூன்றும் உரியவாகும் என்பது - தொழிலும் பண்பும் பயனும். ‘உவமம் ஒன்றிடத்து’ என்றதனை மொழி மாற்றுக. இருவர்க்கும் உரிய பாற் கிளவி என்பது - தலைமகற்குந் தலைமகட்கும் உரியவொருகூற்றுக் கிளவி என்றவாறு. அவற்றுள் நெஞ்சொடு புணர்த்தற்கு உதாரணம்:- “கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப் பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித் தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல் அந்தீங் கிளவிக் குறுமகள் மென்தோள் பெறநசைஇச் சென்றவென் னெஞ்சே.” (அகம். 9) என்பது நெஞ்சினை உறுப்புடையதுபோல உவகைபற்றி வந்தது. “சென்றதுகொல் போந்ததுகொல் செவ்வி பெறுந்துணையும் நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றில் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற் குழந்துபின் சென்றவென் னெஞ்சு.” (முத்தொள். 61) இஃது அவலம் பற்றி நெஞ்சினை உறுப்புடையதுபோற் கூறிய பெண்பாற் கூற்று. “உள்ளம் 7பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சஞ் செல்லல் தீர்கஞ் செல்வா 8மென்னும்.” (நற். 284) என்றவழி நெஞ்சு உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகன் கூற்று. “குறுநிலைக் குரவின் சிறுநனை நறுவீ 9வண்டுதரு நாற்றம் வளிகலந் தீயக் 10கண்களி பெறூஉங் கவின்பெறு காலை யெல்வளை நெகிழ்த்தோற் கல்ல லுறீஇயர் சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவா தொருங்குவர னசையொடு வருந்துங் கொல்லோ லருளா னாகலி னழிந்திவண் வந்து தொன்னல னிழந்தவென் பொன்னிற நோக்கி யேதி லாட்டி யிவளெனப் போயின்று கொல்லோ நோய்தலை யிழந்தே.” (நற். 56) இது நெஞ்சு உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகள் கூற்று. “நின்மொழிகொண் டியானோ விடுவ னென் மொழிகொண் டென்னெஞ்சம் ஏவல் செயின்.” (கலித்103) இது மறுத்துரைப்பது போல் தலைமகன் கூற்று: உவகைபற்றி வந்தது. “அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவனெஞ்சே நீயெமக் காகா தது.” (குறள். 1291) இதுவும் மறுத்துரைப்பது போல் தலைவி கூற்று: இளிவரல்பற்றி வந்தது. “இருளிடை மிதிப்புழி நோக்கியவர் தளரடி தாங்கிய சென்ற தின்றே” (அகம். 128) இஃது அச்சம்பற்றி வந்தது. பிறவுமன்ன. ‘சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச், செய்யா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்’ என்பதற்குச் செய்யுள்:- “கானலுங் கழறாது கழியுங் கூறாது தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியா தொருநீ யல்ல துறுதியாது மிலனே யிருங்கழி மலர்ந்த கண்போ னெய்தற் கமழிதழ் நாற்ற மமிழ்தென நசைஇத் தண்டா தூதிய வண்டினங் கழிசிறந்து பறவை கிளருந் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமால்” (அகம். 170) என்பது தலைவி கூற்று. தலைவன் கூற்று வந்தவழிக் காண்க. அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியதற்குச் செய்யுள்:- “பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் தூவறத் துறந்தனன் றுறைவனென் றவன்றிறம் நோய்தெற வுழப்பார்க ணிமிழ்தியோ வெம்போலக் காதல்செய் தகன்றாரை யுடையை யோநீ.” (கலித். 129) பிறவுமன்ன. ‘அறிவும் புலனும் வேறுபட நிறீஇ உவமவாயிற் படுத்த’ற்குச் செய்யுள்:- “ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லுங் காந்தட் கிவருங் கருவிளம் பூக்கொள்ளு மாந்தளிர்க் கையி றடவரு மாமயில் பூம்பொழி னோக்கிப் புகுவன பின்செல்லும் தோளெனச் சென்ற துளங்கொளி வேய்தொடும் நீள்கதுப் பிஃதென நீரற் றறல்புகும் வாளொளி முல்லை முகையை முறுவலென் றாள்வலி மிக்கா னஃதறி கல்லான்.” இவை, இடையுங் கையு முதலாகிய உறுப்புக்களைப் பற்றிய உவமவாயிற் படுத்தறியும் அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி உவமம் பொருந்தியவழிக் கூறியவாறு காண்க. வேயைத் தோள்போலு மென்னாது தோளென்று தொட்டமை யான் அறியப்படும் பொருள் வேறுபட்டது. அதனைத் திரியக் காண்டலான் அறிவு வேறுபட்டது. பித்துங்களியும் போல் முலையெனச் சென்று வேயைத்தொடும் என்னாது தோளெனச் சென்று வேயைத் தொட்டமை யான் உவமம் ஒன்றியவழி உவமவாயிற் படுத்தது. (2) 195. கனவு முரித்தா லவ்விடத் தான. என்-னின், இதுவுங் காமம் இடையீடு பட்டுழி வருவதோர் பொருள் வேறுபாடு உணர்த்திற்று. மேற்கூறியவாற்றால் காமம் இடையீடு பட்டுழிக் கனாக் காண்டலும் உரித்தென்றவாறு. இது தலைமகற்குந் தலைமகட்கு முரித்து. “இன்னகை யினைய மாகவு மெம்வயி னூடல் யாங்குவந் தின்றென யாழநின் கோடேந்து புருவமொடு குவவுநுத னீவி நறுங்கதுப் புளரிய நன்ன ரமை(ய)த்து வறுங்கை காட்டிய வாயல் கனவி னேற்றேக் கற்ற வலமரல் போற்றா யாகலிற் புலத்தியா லெம்மே.” (அகம். 39) என்றது தலைவன் கனாக் கண்டு கூறியது. “கேட்டிசின் வாழி தோழி யல்கற் பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇ வாய்த்தரு பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் தமளி தைவந் தனனே குவளை வண்டுபடு மலரிற் சாஅய்த் தமியேன் மன்ற வளியென் யானே.” (குறுந். 30) இது, தலைவி கனாக் கண்டு கூறியது. (3) 196. தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின். என்-னின், நற்றாய்க் குரியதோர் மரபு உணர்த்திற்று. மேற்சொல்லப்பட்ட கனவு தாய்க்கும் உரித்து, உடன் போக்குக் கிளக்கப்பட்டுழி என்றவாறு. உதாரணம்: “கண்படை பெறேன் கனவ” (அகம். 55) என வரும். வேறும் வந்தவழிக் காண்க. (4) 197. பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே நட்பி னடக்கை யாங்கலங் கடையே. என்-னின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுதனுதலிற்று. பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்து என்பது - பான்மை கெழுமப்பட்ட கிளவி 11பெண்பாலாராகிய நால்வர்க்கும் உரித்தென்ற வாறு. நால்வராவார் - தலைவி, தோழி, நற்றாய், செவிலி. அஃதேல் தலைமகளை யொழிய மூவர் என்று அமையாதோ எனின் மேல் தலைமகட்கும் உரித்தென்றார் அவரொடு கூட நால்வர் என வரையறுத்தல் என்பது. நட்பி னடக்கை யாங்கலங் கடையே என்பது - நட்பின் வழங்கும் வழக்கல்லாதவிடத்து என்றவாறு. அஃதாவது, தலைவியொடு தோழி யொழுகும் ஒழுக்கம் அவ்வழி யல்லாதவிடத் தென்றவாறு. 12அவள்மாட்டு நிகழ்வது தலைவன் தோழிக்குணர்த்தாது பிரிந்தவழி என்று கொள்ளப் படும். பாற்கிளவி என்பது பயிலாது வரும் ஒரு கூற்றுச்சொல் எனப்பட்டது. அதனைக் கெழுமிய சொல் பால்கெழு கிளவியாயிற்று. ஆண்டு நற்றாய் கூறியதற்குச் செய்யுள்: “கருமணற் கிடந்த பாவையென் மருமகளேயென முயங்கின மழுமே.” (அகம். 165) செவிலி கூறியதற்குச் செய்யுள்:- “தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய்நீ பாவை யிருங்குரவே - யீன்றாள் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் நீயெனக்கு வந்து” (திணைமாலை நூற். 65) தோழி கூறியதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க. (5) 198. உயிரு நாணு மடனு மென்றிவை செயிர்தீர் சிறப்பி னால்வர்க்கு முரிய. என்-னின், மேற்சொல்லப்பட்ட நால்வர்க்கு முரியதோர் பொருண்மை யுணர்த்திற்று. உயிரும் நாணும் மடப்பமும் என்று சொல்லப் பட்டவை குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய தலைமகட்கும் தோழிக்கும் நற்றாய்க்கும் செவிலிக்கும் உரிய என்றவாறு. ‘செயிர்தீர் சிறப்பின்’ என்றமையான், ஏனையோர் போலாது இவர் நால்வரும் ஒரு நீர்மையர் என்று கொள்க. இதனாற் சொல்லியது என்னையெனின், இந்நால்வரும் ஆக்கமுங்கேடும் ஒருவர்மாட்டு வந்துழித் தமக்குற்றபோல் நினைப்பராதலான் ஒருவரையொருவர் இன்றியமையாது ஓருயிர் போல்வர் எனவும், நாணமும் மடனும் நால்வர்க்கும் ஒக்குமாகலான் அவலமாகியவழியும் வருத்தம் ஒக்கும் எனவும் கூறியவாறு. அதற்குச் செய்யுள்:- “இவளே நின்னல 13திலளே யாயுங் குவளை யுண்க ணிவளல திலளே யானு மாயிடை யேனே மாமலை நாட மறவா தீமே.” என வரும். (6) 199. வண்ணந் திரிந்து புலம்புங் காலை யுணர்ந்தது போல வுறுப்பினைக் கிழவி புணர்ந்த வகையாற் புணர்க்கவும் பெறுமே. என்-னின், தலைமகட்குரியதோர் பொருளுணர்த்திற்று. தலைமகள் வண்ணம் வேறுபட்டுத் தனிமையுறுங் காலைத் தலைமகன் பிரிவைத் தன் உறுப்புக்கள் உணர்ந்தன போலப் பொருந்தும் வகையாற் கூறவும் பெறும் என்றவாறு. உம்மை எதிர்மறை. “தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்.” (குறள். 1233) “தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை.” (குறள். 1277) என வரும். (7) 200. உடம்பு முயிரும் வாடியக் கண்ணு மென்னுற் றனகொ லிவையெனி னல்லதைக் கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை. இஃது உடம்பும் உயிரும் மெலிந்த இடத்தும் இவை என்னுற்றன எனக் கூறினல்லது, கிழவோன் உள்வழிப் படர்தல் கிழத்திக்கு இல்லை என்றவாறு. உதாரணம்: “கதுமெனத் தாநோக்கித் தாமே கலிழு மிதுநகத் தக்க துடைத்து.” (குறள். 1173) எனவும், “ஓஒ வினிதே யெமக்கிந்நோய் செய்தகண் டாஅ மிடற்பட் டன.” (குறள். 1176) எனவும் வரும். (8) 201. ஒருசிறை நெஞ்சோ டுசாவுங் காலை யுரிய தாகலு முண்டென மொழிப. என்-னின், மேலதற்கோர் புறனடை உணர்த்திற்று. தனித்து நெஞ்சோடு உசாவுங் காலத்துக் கிழவோற் சேர்தல் உரியதாகலும் உண்டு என்றவாறு. உம்மை எச்சவும்மை யாகலாற் தோழியோடு உசாதலுங் கொள்க. “கோடீ ரிலங்குவளை நெகிழ நாடொறும் பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி யீங்கிவ ணுறைதலு முய்குவ மாங்கே யெழுவினி வாழிய நெஞ்சே.” (குறுந். 11) என வரும். “பகலே பலருங் காண வாய்விட் டகல்வயற் படப்பை யவனூர் வினவிச் சென்மோ வாழி தோழி.” (நற். 365) என்றது தோழியொடு உசாவியது. (9) 202. தன்வயிற் கரத்தலு மவள்வயின் வேட்டலு மன்ன விடங்க ளல்வழி யெல்லா மடனொடு நிற்றல் கடனென மொழிப. என்-னின், தலைமகட் கின்றியமையாத மடன் அழியும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. தலைமகன் தனதொழுக்கந் தலைமகள்மாட்டுக் கரந்து உணர்த்தும்வழியும், தலைமகள்மாட்டுப் புணர்ச்சி வேட்கை தோற்றிய வழியுமாகிய வத்தன்மைப்பட்ட விடங்களல்லாதவழி யெல்லாம் 14தலைமகள் மடனொடு நிற்றல் கடன் என்று சொல்லுவர் என்ற வாறு. தன்வயிற் கரந்தவழி மடனழிய நின்றதற்குச் செய்யுள்:- “முத்தேர் முறுவலாய் நம்மலைப் பட்டதோர் புத்தியானை வந்தது, காண யான் றங்கினேன்.” என்றவழி, அதற்குடம்படாது, “அவ்வியானை வனப்புடைத் தாகலுங் கேட்டேன்.” (கலித். 97) என்றவழி, பொய்கூறினான் என்னுங் 15கருத்தினளாகிக் கூறுதலின் மடனழிதலாயிற்று. “கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி 16மதவுநடைச் செவிலி கையென் புதல்வனை நோக்கி நல்லோர்க் 17கொத்தனிர் நீயிர் இஃதோ செல்வர்க் கொத்தனம் யாமென மெல்லவென் மகன்வயிற் பெயர்தந் தேனே.” (அகம். 26) என்றவழி வேட்கை தணிதலாகாதாள் அது தணியுந் துணையு முயங்காது, கவவுக் கை நெகிழ்ந்ததெனப் பெயர்தல் மடனழிதலாயிற்று. (10) 203. அறத்தொடு நிற்குங் காலத் தன்றி யறத்தியன் மரபில டோழி யென்ப. இது, அறத்தொடு நிற்கும் நிலைமரபு உணர்த்திற்று. தலைவி அறத்தொடு நிற்குங் காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் மரபு இலள் என்றவாறு. தலைவி அறத்தொடு நிற்குமாறு:- “விழுந்த மாரிப் பெருந்தண் சாரற் கூதிர்க் கூதலத் தலரி நாறு மாதர் வண்டி னயவருந் தீங்குரன் மணநாறு சிலம்பி னசுண மோர்க்கு முயர்மலை நாடற் குரைத்த லொன்றோ துயர்மருங் கறியா வன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென வுரைத்த லொன்றோ செய்யா யாதலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை யணிபெற நிவந்த செயலை மந்தளி ரன்னவென் மதனின் மாமைய்ப் பசலையுங் கண்டே.” (நற். 244) என வரும், தோழியறத்தொடு நிற்(றல் வரு)கின்ற சூத்திரத்தாற் கூறுப. (11) 204. எளித்த லேத்தல் வேட்கை யுரைத்தல் கூறுத லுசாஅத லேதீடு தலைப்பா டுண்மை செப்புங் கிளவியொடு தொகைஇய வேழு வகைய வென்மனார் புலவர். என்-எனின், இது தோழி யறத்தொடு நிற்குமாறு உணர்த்திற்று. இதற்குப் பொருள் களவியலுள் தோழி கூற்று உரைக் கின்றுழி உரைக்கப்பட்டது. (12) 205. உற்றுழி யல்லது சொல்ல லின்மையி னப்பொருள் வேட்கைக் கிளவியி னுணர்ப. என்-னின், இது செவிலிக்குரியதோர் மரபுணர்த்திற்று. காமம் மிக்கவழி யல்லது சொல்நிகழ்ச்சி யின்மையின் தலைமகள்தான் கருதிய பொருண்மேல் வேட்கையைத் தலைமகள் தன்னானே யறிப என்றவாறு. பன்மையாற் கூறினமையான், அவ்வுணர்ச்சி செவிலிக்கும் நற்றாய்க்கும் ஒக்கும் என்றவாறு. இதனாற் சொல்லியது அறத்தொடு நிற்பதன் முன்னம் செவிலி குறிப்பினான் உணரும் எனக் கொள்க. “அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி.” (அகம். 48) என்றவழிச் செவிலி குறிப்பினான் உணர்ந்தவாறு காண்க. வேட்கை தோற்றத் தலைமக னில்லாதவழித் தோழிகூற்று நிகழும். அது “காமர் கடும்புனல்” (கலித் 39) என்னும் பாட்டினுள் காண்க. (13) 206. செறிவு நிறைவுஞ் செம்மையுஞ் செப்பு மறிவு மருமையும் பெண்பா லான. என்-னின், இது பெண்டிர்க்குரியதோர் இயல்புணர்த்திற்று. செறிவு என்பது - அடக்கம். நிறைவு என்பது - அமைதி. செம்மை என்பது - மனங்கோடாமை செப்பு என்பது - சொல்லுதல் அறிவு என்பது - நன்மை பயப்பனவுந் தீமை பயப்பனவும் அறிதல். அருமை என்பது - உள்ளக் கருத்தறிதலருமை. இவை எல்லாம் பெண்பக்கத்தன என்றவாறு. இதனாற் சொல்லியது, மேற்சொல்லிய அறத்தொடுநிலை வகையும் இனிக் கூறுகின்ற வரைவுகடாதற் பகுதியும் உண்மை வகையானும் புனைந்துரை வகையானும் கூறுங்கால், இவை, பேதையராகிய பெண்டிர்க்கு இயையுமோ என ஐயுற்றார்க்குக் கூறப்பட்டது. (14) 207. பொழுது மாறுங் காப்புமென் றிவற்றின் வழுவி னாகிய குற்றங் காட்டலுந் தன்னை 18யழிதலும் மவனூ றஞ்சலு மிரவினும் பகலினும் நீவா வென்றலுங் கிழவோ றன்னை வார லென்றலு நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் புரைபட வந்த வன்னவை பிறவும் வரைதல் வேட்கைப் பொருள வென்ப. என்-னின், இது தோழிகூற்றிற் கூறப்பட்ட சில கிளவிக்குப் பயன் உணர்த்திற்று. தலைமகன் வருகின்ற பொழுதும் நெறியும் ஊரின்கட் காவலும் என்று சொல்லப்பட்டவற்றின்கண் வரும் தப்பினான் உளதாகுங் குற்றங் காட்டலும், தான் மனனழிந்து கூறலும், தலைமகற்கு வரும் இடையூறு கூறலும், தலைமகனைப் பகற் குறிவிலக்கி இரவுக் குறி நீ வா என்றலும், இரவுக்குறி விலக்கிப் பகற்குறி நீவா என்றலும், தலைமகனை வாரா தொழிஎனக் கூறலும், நன்மையாகவுந் தீமையாகவும் பிறபொருளை எடுத்துக் கூறலும், இத் தன்மையவாகிக் குற்றம் பயப்ப வந்த அத்தன்மைய பிறவும், புணர்ச்சி விருப்பமின்மையாற் கூறப்பட்டன வல்ல; வரைதல் வேண்டும் என்னும் பொருளை யுடைய என்றவாறு. இவையெல்லாந் தோழி கூற்றினுள் கூறப்பட்டன. ஆயின் ஈண்டோதிய தென்னை எனின், அவை வழுப்போலத் தோற்றும் என்பதனைக் கடைப்பிடித்து அன்பிற்கு மாறாகாது, ஒருபயன் பட வந்தவென உணர்த்துதலே ஈண்டு ஓதப்பட்ட தென்க. நன்மையுந் தீமையும் பிறிதினைக் கூறலும் என்பது நாடும் ஊரும் இல்லுங் குடியும் என ஆண்டோதப்பட்டன. இவை வரைதல் வேட்கைப் பொருள வாமாறும் ஆண்டுக்காட்டப்பட்ட உதாரணத்தான் உணர்க. (15) 208. வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தன் மரீஇய மருங்கி னுரித்தென மொழிப. என்-னின், இதுவும் தலைமகட்குந் தோழிக்கும் உரியதோர் இயல்புணர்த்திற்று. வரைதல் வேட்கைப் பொருளாற் கூறுதலை மறுத்துப் பட்டாங்கு கூறிச்சொல்லுதல் மருவிய பக்கத்தின் உரித்தென்றவாறு. மருவிய பக்கமாவது களவொழுக்கம் நீட்டித்த இடம். அவ்வழிப் பட்டாங்கு கூறுதலும் ஆம் என்றவாறு. எனவே மேற்கூறியவாறு கூறுதல் மருவாதவழி என்றவாறாம். “கொ(டி)ச்சி யின்குரல் கிளை(செ)த் தடுக்க(த்து)ப் பைங்குரல் ஏனற் படர்தருங் கிளியெனக் க(h)வலுங் கடியுநர் போல்வர் மாமலை நாட வரைந்தனை கொண்மே.” (ஐங்குறு. 289) என வரும். (16) 209. தேரு மியானையுங் குதிரையும் பிறவு மூர்ந்தன ரியங்கலு முரிய ரென்ப. என்-னின், இது தலைமகற்குரியதோர் மரபுணர்த்திற்று. களவுக் காலத்துத் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து சேறலும் உரியர் என்றவாறு. களவின்கண் என்பது அதிகாரத்தான் வந்தது. “நெடுந்தேர் கடாஅய்த் தமியராய் வந்தோர் கடுங்களிறு காணீரோ வென்றீர் - கொடுங்குழையார் யானை யதருள்ளி நிற்பரோ தம்புனத் தேனல் கிளிகடிகு வார்.” பிறவு மன்ன. ‘ஊர்ந்தன ரியங்கலு முரியர்’ என்றமையான் தனி வருதல் பெரும்பான்மை. இதனை எச்ச வும்மையாக்கி வையமூர்தலும் இளையரொடு வருதலுங் கொள்க. “வல்வே லிளையரொ (b)டல்லி(ச்) செல்லாது.” (அகம். 120) என வரும். பிறவுமன்ன. இதனான் சொல்லியது பெரியார் இவ்வாறு செய்வார் எனவுங் கூறியவாறாம். (17) 210. உண்டற் குரிய வல்லாப் பொருளை யுண்டன போலக் கூறலு மரபே. என்-னின், இஃது ஒருசார் வழுவமைத்தலை நுதலிற்று. உண்டற்றொழிலுக் குரியவல்லாத பொருளை உண்டன வாகக் கூறலும் மரபென்றவாறு. ‘பசலையால் உணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால்’ (கலித். 15) எனவும், ‘நீலமுண்ட துகில்’ எனவும், “கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே யிவையென்னைத் தின்னு மவர்க்காண லுற்று.” (குறள். 1244) எனவும் வரும். இது சொல்லின் கட் கிடந்ததோ ரொழிபு. (18) 211. பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே காப்புக்கைம் மிகுத லுண்மை யான அன்பே யறனே யின்ப நாணொடு துறந்த வொழுக்கம் பழித்தன் றாகலி னொன்றும் வேண்டா காப்பி னுள்ளே. என்-னின், இது களவுக் காலத்துத் தலைமகற் குரியதோர் இயல்புணர்த்திற்று. பொருள்வயிற் பிரிதல் வேண்டும் எனக் கூறுதலும் கடியப்படாது; தலைமகளைத் தமர் காக்குங் காவல் மிகுதியுள்ளவழி இவை நீங்கப்பெறும் என்றவாறு. இதனாற் சொல்லியது அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் நினைத்து வருந்தப்பெறான் எனவும், நாணத்தைக் கைவிட்டுத் தமர் கொடுக்குமாறு முயலவேண்டு மென்பதூஉம் கூறியவாறாம். இவை ஒருவழித் தணத்தற்கண் நிகழ்வன. (19) 212. சுரமென மொழிதலும் வரைநிலை யின்றே. என்-னின், இதுவும் தலைமகற்குரியதோர் திறன் உணர்த்திற்று. தலைமகன் பொருள்வயிற் பிரியும்வழி உடன்போக்குக் கருதிய தலைமகட்கு யான் போகின்ற நெறி கல்லுங் கரடுமாகிய சுரம் எனக் கூறுதலும் நீக்கப்படாது என்றவாறு. இதனாற் சொல்லியது காப்பு மிகுதிக்கண் வருத்தமுறுந் தலைமகளை உடன்கொண்டு போதல் தக்கது என்பார்க்கு நெறியருமை கூறி விலக்கவும் பெறும் என்றவாறு. (20) 213. உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின் வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே. என்-னின், இதுவுமோர் மரபு உணர்த்திற்று. உயர்ந்தோர் கூற்று வழக்குவழிப்படுதலின் வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடன் என்றவாறு. எனவே, வழக்கழிய வருவன செய்யுட்கண் வரப்பெறா என்றவாறு. இதனானே மேலதிகாரத்திற் கூறிய சொல்லும் இவ்வதிகாரத்திற் கூறுதற்கியன்ற பொருளும் வழக்கொடு புணர்ந்தனவே செய்யுட்கண் வருவன; புணராதன செய்யுட்கண் வரப்பெறா என்றவாறாம். இன்னும் இந் நூலகத்து அகப்பொருளாகவும் புறப்பொருளாகவும் எடுத்தோதப் பட்டவன்றி உயர்ந்தோர் வழக்கொடு பொருந்தி வருவன வெல்லாஞ் செய்யுட்குப் பொருளாகப் புணர்க்க என வெஞ்சிய துணர்த்தியவாறுமாம். உயர்ந்தோர் வழக்கென்றமையானும், பொருளு மின்பமும் கெடாமல் மூன்றனுளொன்று பயப்பக் கூறுதல் கொள்க. (21) 214. அறக்கழி வுடையன பொருட்பயன் வரினே வழக்கென வழங்கலும் பழித்த தென்ப. என்-னின், மேலதற் கோர் புறனடை. அறத்தின் கழிவுடையன பொருட்குப் பயன்பட வரின் அதனை வழக்கென்று வழங்குதலும் பழித்ததென்றவாறு. பொருளாவது அகப்பொருளும் புறப்பொருளும். அறத்திற் கழிவு வரும் அகப்பொருளாவது பிறன்மனைக் கூட்டம். பொருட்பயன் வருதலாவது அவராலே பொருள் பெறுதல். அவ்விடத்து இன்பமும் பொருளும் பயப்பினும், அதனை வழங்குதலும் பழிக்கப்பட்டதென்றவாறு. உம்மை முற்றும்மை யாகலான் வழக்கென் றுரையற்க என்றவாறு. “எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையுந் தேரான் பிறனில் புகல்.” (குறள். 144) என வரும். புறப்பொருட்கண் அறக்கழி வுடையன பகைவர் தேஎத்து நிரை கோடலும் அழித்தலும் போலப் பொருட்பயன் காரணத்தான் நட்டோர் தேஎத்துஞ் செயல். இவையும் பொருள் பயப்பினும் வழக்கென வழங்குதலாகா என்றவாறு. இதுவும் ஒரு முகத்தான் நீதி கூறியவாறு. “பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர் கழிநல் குரவே தலை.” (குறள். 657) என வரும். (22) 215. மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே. என் - எனின் இதுவுமது. மிக்க பொருளாவது மேற்கூறப்பட்ட அகப் பொருள். அப்பொருட்கண்ணும் நாண் நீங்காத நல்வழிக்கட் படுத்துப் பொருள் வகை புணர்க்க என்றவாறு. எனவே அறமுதலாயின வழுவில ஆயினும் நாணழிய வரும் பொருண்மை 19புணர்த்தற்க என்றவாறு. “பிறர்நாணத் தக்கது தானாணா னாயி னறனாணத் தக்க துடைத்து.” (குறள். 1018) என வரும். (23) 216. முறைப்பெயர் மருங்கி(ன)ற் கெழுதகைப் பொதுச்சொ னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே. என்-னின், இதுவும் வழுவமைத்தலை நுதலிற்று. முறைப் பெயராவது - இயற்பெயர் முதலிய பெயரா னன்றி முறைமைபற்றி வருவது: அது தந்தை மகனைக் கூறும் பொழுது தம்முன், தம்பி என்பனவும் கிழவன், தோழன் 20என்பனவும் போல வருவன. அப்பெயரகத்து வரும் நன்றாகிய கெழுதகைப் பொதுச்சொல்லாவது - பயிற்சியாற் கூறும் ‘எல்லா’ என்பது. நிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே என்பது - நிற்றற்குரிய மரபினானே யிருபாற்கு முரித்தென்றவாறு. நிற்றற்குரிய மரபின் என்பது இவ்வாறு தோற்றாமையான் என்றவாறு. “எல்லாவிஃதொத்த னென்பெறான் கேட்டைக்காண்” (கலித். 61) என்றவழிப் பெண்பால்மேல் வந்தது. “எல்லா, தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா செய்வது நன்றாமோ மற்று.” (கலித். 62) என்றவழித் தலைமகன்மேல் வந்தது. இதுவும் ஒரு சொல்வழு அமைத்தவாறு. இச் சொற் காமப் பொருளாகத் தோற்றுதலாற் சொல்லதிகாரத்து ஓதாது ஈண்டு ஓதப்பட்டது. (24) 217. தாயத்தி னடையா வீயச் செல்லா வினைவயிற் றங்கா வீற்றுக் கொளப்படா வெம்மென வரூஉங் கிழமைத் தோற்ற மல்ல வாயினும் புல்லுவ வுளவே. என்-னின், இதுவும் ஒருசார் மரபு வழுவமைத்தலை நுதலிற்று. தாயத்தான் எய்துதலாவது தந்தை பொருள் மகற்குறுதல். ஈயச் சேறலாவது ஒருவன் கொடுப்ப ஒருவன் கோடல். வினைவயிற்றங்கலாவது உழவு முதலியனவற்றான் வருதல். வீற்றுக் கொளப் படுதலாவது வேறுபடுத்திக் கோடல். அஃதாவது பகையினால் வந்தது கோடல். இந்நான்கினும் வரும் பொருளினது உரிமைத் தோற்றமல்ல வாயினும் பொருந்துவ வுள என்றவாறு. செய்யா என்னும் வினையெச்சம் வரூஉம் என்னும் பெயரெச்சத்தொடு முடிந்தது. அன்றியும் செய்யா என்பதனைப் பெயரெச்ச எதிர்மறையாக்கி இந்நான்கினும் வருந்தகவு இல்லாத பொருள் பொருளலவாயினும் எமதென வரும் உரிமைத் தோற்றம் பொருந்துவ என்றவாறு. ‘அல்லவாயினும்’ என்பதனை மாறிக்கூட்டுக. எனவே ஒரு முகத்தாற் பொருள் தேடுவார் திறன் கூறினாருமாம். இனி அக் கிழமைத் தோற்றம் ஆவது. “விரும்பிநீ யென்றோள் எழுதிய தொய்யிலும் யாழநின் மைந்துடை மார்பிற் சுணங்கும் நினைத்துக்காண்” (கலித் 18) என்ற வழித் தலைமகள் தோளைத் தோழி தன்னையு முளப்படுத்தி எனதெனக் கூறியவாறு காண்க. பிறவுமன்ன. (25) 218. ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் வருவகை தாமே வழக்கென மொழிப. என்-னின், இதுவு மோர்சார் பொருள் கொளுந்திறன் உணர்த்துதல் நுதலிற்று. ஒருபக்கத்துக் கூறிய பொருண்மை ஒழிந்த பக்கத்துக் கண்ணும் வருவகைதாம் வழக்கு நெறி என்றவாறு. மனையோள்மாட்டுங் காமக்கிழத்தி மாட்டும் நிகழும் புணர்ச்சியும் பிரிவும் ஊடலும் பரத்தையர்மாட்டும் நிகழும். அது வருமாறு:- “அன்னை கடுஞ்சொல் அறியாதாள்” (கலித். 97) என்னுங் கலியுள், “சிறுகாலை யிற்கடை வந்து குறிசெய்த அவ்வழி என்றும்யான் காணேன்.” என்பது புணர்வு குறித்து வந்தது. “உள்ளுதொறு நகுவ றோழி வள்ளுகிர் மாரிக் கொக்கின் கூரல கன்ன குண்டுநீர் ராம்பற் றண்டுறை யூரன் றேங்கம ழைம்(பால்) பற்றி யென்வயின் வான்கோ லெல்வளை வவ்விய 21பூசற் சினவிய முகத்துச் சினவாது சென்றுநின் மனையோட் குரைப்ப லென்றலின் முனையூர்ப் பல்லா நெடுநெறி வில்லி னொய்யுந் தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப் புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின் 22 மண்ணார் கண்ணி னதிரு 23நன்ன ராளன் நடுங்கஞர் நிலையே.” (நற். 100) இஃது ஊடல் குறித்து வந்தது. இப் பரத்தையர் பொருட் பெண்டிராகலின் இன்பம் பயக்குமோ எனின், அஃது இன்பமாமாறு வருகின்ற சூத்திரத்தான் எல்லாப் பொருட்கும் உளதாகும் பொது விலக்கணம் கூறியவாறு. (26) 219. எல்லா வுயிர்க்கு மின்ப மென்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும். என்-னின், மேலதற் கோர் புறனடை உணர்த்திற்று. எல்லாவுயிர்க்கும் இன்பமென்பது தான் மனம் பொருந்திவரும் விருப்பத்தையுடைத்து என்றவாறு. எனவே, மனம் பொருந்திய வழிப் பரத்தையர்மாட்டும் இன்பமுள தாகும் எனவும், பொருந்தாதவழி மனைவியர்மாட்டும் இன்பமின்றாம் எனவும் கொள்க. (27) 220. பரத்தை வாயி னால்வர்க்கு முரித்தே நிலத்திரி பின்றஃ தென்மனார் புலவர். என்-னின், பரத்தையிற் பிரிவிற்கு உரியாரை உணர்த்துதல் நுதலிற்று. பரத்தையர்மாட்டு வாயில் விடுதல் நான்கு வருணத் தார்க்கும் உரித்து; அவ்வழிப் பிரியும் பிரிவு நிலம் பெயர்தல் இல்லை என்றவாறு. எனவே, தன்னூரகத்துஞ் சார்ந்தவிடமுங் கொள்க. நால்வர்க்கும் உரித்து என்றமையான் நான்கு வருணத்துப் பெண்பாலாரும் அவனொடு ஊடப்பெறுப என்றுமாம். “யாரிவ னெங்கூந்தல் கொள்வா னிதுவுமோ ரூராண்மைக் கொத்த படிறுடைத்து.” (கலித். 89) என்பது பார்ப்பனி கூற்று. “பெரியார்க் கடியரோ ஆற்றா தவர்.” (கலித். 88) என்பது அரசி கூற்று. (28) 221. ஒருதலை யுரிமை வேண்டினும் மகடூஉப் பிரித லச்ச முண்மை யானு மம்பலு மலருங் களவுவெளிப் படுக்குமென் றஞ்ச வந்த வாங்கிரு வகையினு நோக்கொடு வந்த விடையூறு பொருளினும் போக்கும் வரைவு மனைவிகட் டோன்றும். என்-னின், இது களவின்கண் தலைமகட்குரியதோர் மரபு உணர்த்திற்று. ஒருதலையுரிமை வேண்டினும் என்பது - ஒருதலை யாகத் தலைமகள் உரிமை பூண்டலை வேண்டியவிடத்து மென்றவாறு. மகடூஉப் பிரித லச்ச முண்மை யானும் என்பது - பிரிதற்கண் வரும் அச்சம் பெண்பாற்கு இயல்பாகு மென்றவாறு. அம்பலும் அலரும் களவுவெளிப்படுக்கு மென் றஞ்சவந்த வாங்கிரு வகையினும் என்பது - களவொழுக்கத்தை வெளிப்படுக்கு மென்று அஞ்சும்படியாக வந்த அம்பலும் அலருமாகிய இருவகையின் கண்ணும் என்றவாறு. நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் என்பது - தலைமகன் வரவு பார்த்திருந்தவழி வந்த இடையூறாகிய பொருளின்கண்ணும் என்றவாறு. அவையாவன:- தாய்துஞ்சாமை, நிலவு வெளிப்படுதன் முதலியன. போக்கும் வரைவும் மனைவிகட் றோன்றும் என்பது - தலைமக னுடன் போதற் குறிப்பும் வரைவுகடாதற் குறிப்பும் மனைவிமாட்டுத் தோன்றும் என்றவாறு. உதாரணம்: “சிலரும் பலரும் கடைக் ணோக்கி மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச் சிறுகோல் வலந்த ளன்னை யலைக்க வலந்தனென் வாழி தோழி 24கானற் புதுமலர் தீண்டிய பூணாறு குரூஉச்சுவற் கடுமான் பரிய கதழளி கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே.” (நற். 149) இது போக்குக்குறித்தது. ‘இரும்பிழி மகாஅர்’ (அகம். 122) என்னும் பாட்டு வரைவு குறித்தது. (29) 222. வருத்த மிகுதி சுட்டுங் காலை யுரித்தென மொழிப வாழ்க்கையு ளிரக்கம். என்-னின், இது தலைமகட்குந் தோழிக்கு முரியதோர் திறன் உணர்த்திற்று. வருத்த மிகுதியைக் குறித்தவழி மனைவாழ்க்கையுள் இரக்கம் உரித்தெனச் சொல்லுவர் என்றவாறு. எனவே, வருத்த மிகுதியைச் சுட்டாதவழி மனைவாழ்க்கையுள் இரக்கம் இன்றெனக் கொள்ளப்படும். “செல்லாமை யுண்டே லெமக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.” (குறள். 1151) “அன்பற மாறியா முள்ளத் துறந்தவள் பண்பு மறிதிரோ வென்று வருவாரை 25யென்றிறம் யாதும் வினவல் வினவிற் பகலின் விளங்கு26நின்செம்மல் சிதை(ய)த் தவலருஞ் செய்வினை முற்றாமை யாண்டோர் ரவலம் படுதலு துண்டு.” (கலித். 19) இதுவுமோர் மரபுவழு வமைத்தது. (30) 223. மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு நினையுங் காலைப் புலவியு ளுரிய. என்-னின், கற்புக்காலத்துத் தலைமகட் குரியதோர் மரபு உணர்த்திற்று. தலைமகள் உயர்வும் தலைமகன் தாழ்வும் ஆராயுங் காலத்துப் புலவிக்காலத்து உரிய வென்றவாறு. எனவே 27ஒழிந்த ஊடல் துனிவென்பனவற்றிற் குரியவாம். “ஒரூஉக் கொடியிய னல்லார் குரனாற்றத் தேற்ற முடியுதிர் பூந்தா(து) மொய்ம்பின வாகத் தொடிய எமக்குநீ யாரைப் பெரியார்க் கடியரோ வாற்றா தவர்; கடியதமக்கினி யார்சொலத் தக்கரா மாற்று வினைக்கெட்டு, 28வாயல்லா வெண்மை யுரையாது சென்றீநின் மாய மருள்வா ரகத்து; ஆயிழாய், நின்கண் பெறினல்லா வின்னுயிர் வாழ்கல்லா வென்க ணெவனோ தவறு. (கலித். 88) இதனுள் தலைமகன் பணிவுந் தலைவி யுயர்வுங் காண்க. இஃது ஈண்டுக் கூறியதென்னை? ‘காமக் கடப்பினுட் பணிந்த கிளவி’ (கற்பியல் 19) யென மேற்கூறப்பட்டதாலெனின், ஆண்டுக் கூறியது ஊடல் புலவி துனி யென்னு மூன்றற்கும் பொதுப்பட நிற்றலின், இது புலவிக்கே உரித்தென்னுஞ் சிறப்பு நோக்கிக் கூறியவாறு காண்க. (31) 224. நிகழ்தகை மருங்கின் வேட்கை மிகுதியிற் புகழ்தகை வரையார் கற்பி னுள்ளே. என்-னின், இதுவு மோர் மரபுணர்த்திற்று. கற்புக் காலத்து நிகழாநின்ற தகையின் பக்கத்து வேட்கை மிகுதியாற் புகழ்தலை நீக்கார் என்றவாறு. களவுக் காலத்து நலம் பாராட்டிய தலைமகன் கற்புக்காலத்து 29மெழினலம் பாராட்டப்பெறும் என்றவாறு. தகை என்பது அழகு. அதனைப் பற்றிப் புகழும் எனக் கொள்க. “அணைமரு ளின்றுயி லம்பணைத் தடமென்றோட் டணைமல ரொளிநீலத் தேந்தெழின் மலருண்கண் (மண)மௌவன் முகையன்ன மாநிரை வெண்பன் 30மணநாறு நறுந்தண் மாரி மிளிருங்கூந்த லலர்முலை யாகத் தகன்ற வல்குல் சிலநிரை வால்வளைச் செய்யா யோவெனப் பலபல கட்டுரை பண்டையிற் பாராட்டி.” (கலித். 14) என வரும். (32) 225. இறைச்சி தானே யுரிப்புறத் ததுவே. என்-னின், இறைச்சிப்பொருளாமா றுணர்த்திற்று. இறைச்சிப் பொருளென்பது உரிப்பொருளின் புறத்தாகித் தோன்றும் பொருள் என்றவாறு. அஃதாவது கருப்பொருளாகிய நாட்டிற்கும் ஊர்க்குந் துறைக்கும் அடையாகி வருவது. “(நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே) சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே.” (குறுந். 3) என்றவழி நாட்டிற்கு அடையாகி வந்த குறிஞ்சிப் பூவும் தேனும் இறைச்சிப் பொருள் என்று கொள்க. (33) 226. இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே திறத்தியன் மருங்கிற் றெரியு மோர்க்கே. என்-னின், இஃது இறைச்சிப்பொருள்வயிற் பிறக்கும் பிறிது மோர் பொருள் உணர்த்துதல் நுதலிற்று. இறைச்சிப்பொருள்வயிற் றோன்றும் பொருளும் உள: பொருட்டிறத்தியலும் பக்கத்து ஆராய்வார்க் கென்றவாறு. இறைச்சிப் பொருள் பிறிதுமோர் பொருள்கொளக் கிடப்பனவுங் கிடவாதனவுமென இருவகைப்படும். அவற்றிற் பிறிதோர் பொருள்பட வருமாறு:- “ஒன்றே னல்லெ னொன்றுவென் குன்றத்துப் பொருகளிறு மிதித்த நெரிதாழ் வேங்கை குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் நின்றுகொய மலரு நாடனோ டொன் (றேன்) றோழி யொன்றி னானே.” (குறுந். 208) என்பது வரைவெதிர் கொள்ளாது தமர் மறுத்தவழித் தலைமகனோடு ஒன்றுமாறு என்னெனக் கவன்ற தோழிக்கு உடன்போதற் குறிப்பினளாய்த் தலைமகள் கூறியதாதலின், இதனுட் ‘பொருகளி’ றென்றமையான், தலைமகள்தமர் தலைமகன் வரைவிற் குடன்படுவாரும் மறுப்பாருமாகி மாறுபட்ட தென்பது தோற்றுகின்றது. ‘பொருகளிறு மிதித்த வேங்கை’ யென்றதனாற் பொருகின்ற விரண்டு களிற்றினும் மிதிப்ப தொன்றாகலின் வரைவுடன்படாதார் தலைமகனை யவமதித்தவாறு காட்டிற்று. ‘வேங்கை நின்று கொய்ய மலரும்’ என்றதனான் முன்பு ஏறிப் பறித்தல் வேண்டுவது இப்பொழுது நின்று பறிக்க லாயிற்று என்னும் பொருள்பட்டது. இதனானே பண்டு நமக்கரியனாகிய தலைமகன் தன்னை யவமதிக்கவும் நமக்கெளியனாகியருள் செய்கின்றானெனப் பொருள் கொளக் கிடந்த வாறு காண்க. (34) 227. அன்புறு தகுவன விறைச்சியிற் சுட்டலு வன்புறை யாகும் வருந்திய பொழுதே. என்பது (சூத்திரம்). என்-னின், இஃது இறைச்சிப்பொருளாற் படுவதோர் பொருள் உணர்த்திற்று. அன்புறுதற்குத் தகுவன இறைச்சிப்பொருட்கண் சுட்டுதலும் வற்புறுத்தலாம் என்றவாறு. உம்மை இறந்தது தழீஇயிற்று. “அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையாற் கடியவே (கனங்குழாய் காடென்றா ரக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு) முரைத்தனரே.” (கலித். 11) என்றது வற்புறுத்தற் குறிப்பு. (35) 228. செய்பொரு ளச்சமும் வினைவயிற் பிரிவு மெய்பெற வுணர்த்துங் கிழவி பாராட்டே. என்-னின், இது தலைமகட்குரியதோர் இயல் புணர்த்துதல் நுதலிற்று. தலைமகன் பொருள்வயிற் பிரியுமிடத்து ஆறின்னாமை யானுளதாகிய அச்சத்தொடு வினைவயிற் பிரிவும் பிரியுங் காலத்துத் தலைவியைப் பாராட்டிப் பிரிதலினால், அப்பாராட்டினான் மெய்பெற வுணரும் என்றவாறு. உதாரணம்: “நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி” (கலித். 24) என்றமையாற் பாராட்டினான் தலைமகள் பிரிவு உணர்ந்தவாறு அறிக. (36) 229. கற்புவழிப் பட்டவள் பரத்தையை யேத்தினு முள்ளத் தூட லுண்டென மொழிப. என்-னின், இதுவும் அது. கற்புக் காரணமாகத் தலைமகனது பரத்தைமைக் குடன்பட்டாளே யாயினும், உள்ளத்தின்கண் ஊடல் நிகழும் என்றவாறு. (37) 230. கிழவோள் பிறள்குண மிவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரியள். என்-னின், இது தலைமகட் குரியதோர் இலக்கண முணர்த்துதல் நுதலிற்று. தலைவி மற்றொருத்தி குணம் இத்தன்மையள் எனச் சொல்லித் தலைமகன் குறிப்பினை யறிதற்கு முரியள் என்றவாறு. இது கற்பியலுட் கூறியதற் கிலக்கணம். “கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே.” (ஐங்குறு. 122) என வரும். பிறவு மன்ன. (38) 231. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினு மெய்ம்மை யாக வவர்வயி னுணர்ந்துந் தலைத்தாட் கழறறம் மெதிர்ப்பொழு தின்றே மலிதலு மூடலு மவையலங் கடையே. என்-னின், இது தலைமகட்குரியதோர் மரபுணர்த்திற்று. பரத்தையர் தாமுற்ற துன்பத்தினைத் தலைமகட்குக் கூறியவழியும், அவரிடத்துத் துன்பத்தை மெய்ம்மையாக உணர்ந்து வைத்துந், தலைமகன்மாட்டுக் கழறுதல் தலைவன் எதிர்ப்பட்ட பொழுது இல்லை, மகிழ்ச்சியும் புலவியும் அல்லாத காலத்து என்றவாறு. கூறினும் என்ற உம்மை எதிர்மறை. கூறாமை பெரும்பான்மை. அதனை ஐயப்படாது துணிதலான் ‘மெய்ம்மையாக’வென்றார். அதனைத் தலைமகன் வந்தவழிக் கூறுவாளாயிற், றனக்குப் புணர்ச்சியிற் காதலில்லையாம்; சொல்லாளாயின் அவள் கூறியவதனாற் பயனில்லை யாம். அதனைக் கலவியிறுதியினும் புலவியினும் கூறப்பெறும் என்றவாறு. “நின்னணங் குற்றவர் நீசெய்த கொடுமைக ளென்னுட னொந்துவந் துரையாமை பெறுகற்பின்” (கலித். 77) எனப் புலவியிற் கூறியவாறு காண்க. கலவியிறுதியிற் கூறுதல் வந்தவழிக் காண்க. (36) 232. பொழுதலை வைத்த கையறு காலை யிறந்த போலக் கிளக்குங் கிளவி மடனே வருத்த மருட்கை மிகுதியோ டவைநாற் பொருட்க ணிகழு மென்ப. என்-னின், இது பருவம் வந்துழித் தலைமகட் குரியதோர் வழுக்காத்தலை நுதலிற்று. பொழுது தலைவைத்தலாவது - யாதானுமோர் பருவத்தைக் குறித்தவழி, அப்பருவம் இருதிங்களை யெல்லையாக வுடைத்தாயினும் அது தோற்றியவழி என்றவாறு. கையறு காலை என்பது - இது கண்டு செயலற்றகாலை என்றவாறு. இறந்தபோலக் கிளத்தலாவது - அக்காலந் தோன்றிய பொழுது கழிந்தது போலக் கூறுதல். மடனே வருத்தம் மருட்கை மிகுதியோடு அவை நாற்பொருட் கண் நிகழும் என்ப என்பது - அவ்வாறு கூறுதல் அறியாமையானாதல் வருத்தத்தானாதல் மயக்கத்தானாதல் அக்காலத்திற்குரிய பொருள் மிகத் தோன்றுதலானாதல் என இந்நான்கு பொருளானும் நிகழும் என்றவாறு. சிறுபொழுதாயின் யாமங் கழிவதன் முன்னர்க் கூறுதல். எனவே இவ்வாறு வருஞ் செய்யுள் காலம் பிழைத்துக் கூறுகின்றதன்று என்றவாறு. உதாரணம்: “பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போற் றிருவிலங் கூன்றிறற் றீம்பெய றாழ வருது மெனமொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந் தாலி நகும்” (கார்நாற். 1) இது பருவங் கண்டவழி வாரார்கொல் என்றமையான் இறந்த போலக் கிளந்தவாறாயிற்று. பிறவுமன்ன. இதுவுமோர் மரபு வழுவமைத்தல். (40) 233. இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்த லன்றியும் வாய்மை கூறலும் பொய்தலைப் பெய்தலு நல்வகை யுடைய நயத்திற் கூறியும் பல்வகை யானும் படைக்கவும் பெறுமே. என்-னின், களவுக்காலத்துத் தோழிக்குரியதோர் திறன் உணர்த்துதல் நுதலிற்று. இரந்து குறையுற்ற தலைமகனைத் தோழி நிரம்ப நீக்கி நிறுத்தலன்றி, மெய்ம்மை கூறுதலும் பொய்ம்மை கூறுதலும் நல்வகையுடைய நயத்தினாற் கூறியும் பல்வகையானும் படைத்து மொழிந்து சொல்லவும் பெறும் என்றவாறு. உதாரணம்: களவியலுட் காட்டப்பட்டனவுள்ளுங் காண்க. நல்வகையுடைய நயத்திற்குச் செய்யுள்:- “வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவே யவையினும் பலவே சிறுகருங் காக்கை யவையினு மவையினும் பலவே குவிமட லோங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங் குரீஇக் கூட்டுவாழ் சினையே.” இது மடலேறுவல் என்ற தலைவனைப் 31பழித்து அருளுடை யீராதலான் மடலேறுவது அரிது என நயத்திற் கூறியது. இதுவுமோர் மரபுவழு வமைத்தவாறு. (41) 234. உயர்மொழிக் கிளவி யுறழுங் கிளவி யையக் கிளவி யாடூஉவிற் குரித்தே. என்-னின், தலைமகற்குந் தலைமகட்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. உயர்த்துச் சொல்லுதற்குரிய கிளவி தலைமகற்குந் தலை மகட்குமொத்த கிளவி; ஐயக்கிளவி, தலைமகற்கே உரித்தென்றவாறு. தலைவிமாட்டு ஐயக்கிளவியின்றென்றவாறாம். அதனாற் குற்றமென்னையெனின், தெய்வமென்று ஐயுறுங்கால் அதனை முன்பு கண்டறிவாளாதல் வேண்டும்; காணாமையின் ஐயமிலள் என்க. இனி உயர்த்துச் சொல்லுதல் உளவாம். “அவன்மறை 32தேஎ நோக்கி மற்றிவன் மகனே தோழி யென்(ற)னள்.” (அகம். 48) என்பது உயர்த்துச் சொல்லியவாறு. தலைவன் உயர்த்துச் சொல்லியதற்குச் செய்யுள்:- “மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற் காதலை வாழி மதி.” (குறள். 1118) பிறவுமன்ன. ஐயக்கிளவி களவியலுட் கூறப்பட்டது. (42) 235. உறுக ணோம்ப றன்னியல் பாகலி னுரிய தாகுந் தோழிக ணுரனே. என்-னின், இது தோழிக்குரியதோர் மரபுவழுக் காத்தலை நுதலிற்று. தலைமகற் குற்ற துன்பம் பரிகரித்தல் தோழி இயல்பாகலின் அவட்குரியதாகும் அறிவு என்றவாறு. அதனானே 33யன்றே, “பால்மருண் மருப்பி னுரல்புரை பாவடி” என்னும் பாலைக்கலியுள், “கிழவ 34ரின்ன ரென்னாது பொருடான் பழவினை மருங்கிற் (பெயர்பு)பெயர் புறையும்” (கலித். 21) எனக் கூறினாள் என்று கொள்க. (43) 236. உயர்மொழிக் கிளவியு முரியவா லவட்கே. என்-னின், இதுவுமது. உயர்த்துச் சொல்லுங் கூற்றும் உரித்து தோழிக்கு என்றவாறு. “தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉ மணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே.” (கலித். 52) என்பது உயர்த்துச் சொல்லியவாறு. (44) 237. வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்த றாவின் றுரிய தத்தங் கூற்றே. என்-னின், வாயில்கட்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. தத்தங் கூறுபாட்டினான் வாயில்கள் கூறுங் கிளவி வெளிப்படக் கிளத்தல் கேடின்றி யுரிய வென்றவாறு. தத்தங் கூறாவது அவரவர் சொல்லத்தகுங் கூறுபாடு. ஆனுருபு தொக்கு நின்றது. எனவே வாயில்களல்லாத தலைமகளும் நற்றாயும் மறைத்துச் சொல்லப்பெறுவர் என்றவாறு. வருகின்ற சூத்திரம் மறைத்துச் சொல்லும் உள்ளுறை சொல்லுகின்றாராதலின், அவ்வுள்ளுறை வாயில்களை விலக்கியவாறு. இவர் மறைத்ததனாற் குற்றமென்னை? இவர் குற்றேவல் முறைமையரா தலானும் கேட்போர் பெரியோர் ஆதலானும், வெளிப்படக் கூறாக்காற் பொருள் விளங்காமை யானும், அவ்வாறு கூறினால் இவர் கூற்றிற்குப் பயனின்மை யானும், வெளிப்படவே கூறுப என்க. (45) 238. உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக் கெடலரு மரபி னுள்ளுறை யைந்தே. என்-னின், உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. உடனுறையும் உவமமும் சுட்டும் நகையும் சிறப்பும் எனக் கெடலரு மரபினை உடைய உள்ளுறை ஐந்து வகைப்படும் என்றவாறு. உள்ளுறையாவது பிறிதோர் பொருள் புலப்படுமாறு நிற்ப தொன்று. அது கருப்பொருள் பற்றி வருமென்பது அகத்திணை யியலுள் (அகத். 50) கூறப்பட்டது. உடனுறையாவது உடனுறைவ தொன்றைச் சொல்ல, அதனானே பிறிதோர் பொருள் விளங்குவது. “விளையாட் டாயமொடு வெணமர லழுத்தி மறந்தனன் துறந்த 35கான்முளை யகைய நெய்பெய் தீம்பால் பெய்தனம் வளர்த்தது நும்மினுஞ் சிறந்தது நுவ்வை யாகுமென் றன்னை கூறினள் புன்னையது நலனே யம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்திற் பாணர் விளரிசை கடுப்ப வலம்புரி வான்கோடு நரலு மிலங்குநீர்த் துறைகெழு கொண்கநீ நல்கி னிறைபடு நீழற் பிறவுமா ருளவே.” (நற். 172) இதனுள் ‘புன்னைக்கு நாணுதும்’ எனவே, அவ்வழித் தான் வளர்த்த புன்னை யென்றும், ‘பல்காலும் அன்னை வருவள்’ என்றுடனுறை கூறி விலக்கியவாறு. பிறவுமன்ன. உவமம் என்பது உவமையைச் சொல்ல உவமிக்கப்படும் பொருள் தோன்றுவது. “வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுந்தேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுசேர்ந் துண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர் வண்டா மரைப்பிரிந்த வண்டு.” (தண்டி. 53 உரை) இது வண்டைக் கூறுவாள் போலத் தலைமகன் பரத்தையிற் பிரிவு கூறுதலின் உள்ளுறையுவம மாயிற்று. சுட்டு என்பது ஒரு பொருளைச் சுட்டப் பிறிதோர் பொருட் படுதல். “தொடிநோக்கி மென்றோளு நோக்கி யடிநோக்கி யஃதாண் டவள்செய் தது.” (குறள். 1279) இதனுள் இப் பூப்பறிப்போமாயின் வளை கழன்று தோள் மெலிய நடத்தல் வல்லையாக வேண்டும் என ஒரு பொருள் சுட்டித் தந்தமை காண்க. நகையாவது நகையினாற் பிறிதோர் பொருளுணர நிற்றல். “அசையியற் குண்டாண்டோ ரேரியா னோக்கப் பசையினள் பைய நகும்.” (குறள். 1098) இதனுள் நகையினாற் பிறிதோர் குறிப்புத் தோன்றியவாறு காண்க. சிறப்பு என்பது இதற்குச் சிறந்தது இஃது எனக் கூறுவ தனானே பிறிதோர் பொருள் கொளக் கிடப்பது. (46) 239. அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம் தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. என்-னின், இதுவும் உள்ளுறைப்பாற் படுவதோர் பொருள் உணர்த்துதல் நுதலிற்று. அந்தமிலாத சிறப்பினாகிய வின்பத்திடத்து உள்ளுறைப் பொருண்மை வருதலும் வகுத்த இயல்பு என்றவாறு. ‘அந்தமில் சிறப்பு’ என்பது மேன்மேலுஞ் சிறப்புச் செய்தல். “நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங் கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையா ரொண்ணுத னீவுவர் காதலர் மற்றவ ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும்.” (கலி. 4) என்றவழி, இன்பத்தின்கண்ணும் பிறிதோர் பொருள் உண்டென்பது தோற்றுகின்றது. (47) 240. மங்கல மொழியு மவையன் மொழியு மாறி லாண்மையிற் சொல்லிய மொழியுங் கூறிய மருங்கிற் கொள்ளு மென்ப. என்-னின், இதுவும் உள்ளுறைப்பாற் படுவதோர் சொல் உணர்த்துதல் நுதலிற்று. மங்கல மொழி முதலாகச் சொல்லப்பட்டனவும் உள்ளுறைப்பாற் படும் என்றவாறு. மங்கல மொழியாவது - மங்கலத்தாற் கூறுஞ்சொல். அது செத்தாரைத் துஞ்சினார் என்றல். அவையல் மொழியாவது - இடக்க ரடக்கிக் கூறுதல். அது கால் கழீஇ வருதும் என்றல். மாறிலாண்மையிற் சொல்லிய மொழியாவது - ஒருவனைச் சிங்கம் வந்த தென்றாற்போற் கூறுவது. அவையெல்லாஞ் சொல்லாற் பொருள்படாமையின் உள்ளுறைப் பாற்படும். இன்னும் இவ்வாற்றாற் பொருள் கொள்ளுமாறு ‘ஒல்லுவ தொல்லும்’ என்னும் புறப்பாட்டினுள் (புறம். 196) ‘நோயில ராகநின் புதல்வர்’ எனவும் ‘சிறக்கநின் னாளே’ எனவும் வரும் மங்கலச் சொல் கெடுக என்னும் பொருள் பட்டவாறு காண்க. “இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து” (கலித். 89) 37என்றது தீயொழுக்கம் ஒழுகினாய் என்ற இடக்கரடக்கி அவைய மொழியான் ஒழுக்கக் குறைபாடு கூறியவாறு. (48) 241. சினனே பேதைமை நிம்பிரி நல்குர வனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே. என்-னின், மெய்ப்பாட்டியலுள் நடுவண் ஐந்திணைக் குரிய தலைமக்கட் 38காகாதன எடுத்தோதுகின்றானாகலின், அவற்றுள் ஒருசாரன ஒரோவிடத்து வருமென்பது உணர்த்திற்று. இச்சூத்திரம் எதிரது நோக்கிற்று. சினமும் பேதைமையும் நிம்பிரியும் நல்குரவும் என்று சொல்லப்பட்ட அந்நான்கு வகையும் யாதானும் ஒரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாக வரும் என்றவாறு. “கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் 39தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க் கடியரோ வாற்றா தவர்.” (கலித். 88) இதனுள் ‘தொடிய எமக்கு நீயாரை’ என்பது சினம்பற்றி வரினும், காமக் குறிப்பினாற் புணர்ந்த தலைமகள் கூறுதலின், அவள் காதலைச் சிறப்பிக்க வந்தது. “செவ்விய திவ்விய சொல்லி யவற்றொடு பைய முயங்கிய 40வஞ்ஞான் றவையெல்லாம் பொய்யாத லி(யா)ன்யாங் கறிகோம(ற்) றைய.” (கலித். 19) என்பதனுள் ‘யான்யாங் கறிகோ’ எனப்பேதைமை பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்தது. “அகனகர் கொள்ளா வலர்தலைத் தந்து பகல்முனி வெஞ்சுர முள்ள லறிந்தேன் மகனல்லை மன்ற வினி.” (கலித். 19) என்பதனுள் தலைவி ‘மகனல்லை’ எனல் நிம்பிரியாகிய வெறுப்புப் பற்றி வந்தது. இதுவும் பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்தது. “உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந் தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி 41விழைவொடு வருதி நீயே யிஃதோ வோரான் வல்சிச் சீறில் வாழ்க்கைப் பெருநலக் குறுமகள் வந்தென வின்விழ வாயிற் றென்னுமிவ ளூரே.” (குறுந். 295) இதனுள் ‘ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை’ எனத் தலைமகன் செல்வக் குறைபாடு கூறிப் ‘பெருநலக் குறுமகள் வந்தென விழவாயிற்றென்னு மிவ் ஊர்’ என்றமையான் நல்குரவு பற்றித் தலைமகளைச் சிறப்பிக்க வந்தது. இச்சூத்திரத்துள் வரைந்து கூறாமையின், தலைவியுந் தலைவனுந் தோழியுஞ் செவிலியுங் கூறப்பெறுவர் என்று கொள்க. (49) 242. அன்னை யென்னை யென்றலு முளவே தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினுந் தோன்றா மரபின வென்மனார் புலவர். என்-னின், இதுவுமோர்சார் மரபுணர்த்துதல் நுதலிற்று. அன்னை என்னை என்று சொல்லுதலும் உள. அவை முன்புள்ளார் சொல்லிப்போந்த முறைமை. அவைதாம், சொல்லினானும் சொல்லிற் கங்கமாகிய எழுத்தினானும் பொருள் தோன்றாத மரபினை யுடைய என்றவாறு. எழுத்தென்பது எழுத்தாகப் பிரித்தாற் படும் பொருள் வேறுபாடு. இவை அகத்தினும் புறத்தினும் வரும். “ஒரியி(ன) னொழுகு மென்னைக்குப் பரியன் மன்யான் பண்டொரு காலே.” (குறுந். 203) என்பது தலைமகள் தலைமகனைக் கூறியது. “அன்னா யிவனோ விளமா ணாக்கன்.” (குறுந். 33) என்பது தலைவி தோழிக்குக் கூறியது. “என்னைமுன் நில்லன்மின் றெவ்விர் (பலரென்னை முன்னின்று கன்னின் றவர்.”) (குறள். 771) “என்னை, புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே.” (புறம். 84) இவையும், ‘என்றலும்’ என்ற வும்மையான் இந்நிகரனவுங் கொள்க. “எந்தைத னுள்ளங் குறைபடா வாறு.” (கலி. 50) என வரும். (50) 243. ஒப்பு முருவும் வெறுப்பு மென்றா கற்பு மேரு மெழிலு மென்றா சாயலு நாணு மடனு மென்றா 42நோயும் வேட்கையு நுகர்வு மென்றாங் காவயின் வரூஉங் கிளவி யெல்லா நாட்டியன் மரபி னெஞ்சுகொளி னல்லது காட்ட லாகாப் பொருள வென்ப. என்-னின், மேற் பொருட்பாகுபாடு முதல் கருவுரிப் பொருளென உணர்த்தி, அவற்றின் பாகுபாடு இத்துணையும் ஓதினான். அவற்றுட் பாகுபடுத்திக் 43காட்டலாகாதன சிலபொருள் கண்டு அவற்றைத் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று. ஒப்பு முதலாக நுகர்ச்சியீறாக அவ்வழி வருஞ் சொல்லெல்லாம் நாட்டின் வழங்குகின்ற மரபினானே பொருளை மனத்தினான் உணரினல்லது மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி யாசிரியன் காட்டலாகாத பொருளையுடைய என்றவாறு. ஒப்பாவது - தந்தையை யொக்கும் மகன் என்பது. அவ்விருவர்க்கும் பிறப்பு வேறாயினவழி ஒப்பாகிய பொருள் யாதென்றார்க்கு இதுவெனக் காட்டலாகாமையின், அவ் விருவரையுங் கண்டான் அவ் வொருவ ரொருவரை ஒக்குமது பிறனொருவன்மாட்டுக் காணாமையின் தானே யப்பொருண்மையை உணரும் என்பது. உரு என்பது - உட்கு. அது பயிலாத பொருளைக் கண்டுழி வருவதோர் மனநிகழ்ச்சி. இவருட்கினார் என்றவழி, மனத்தினான் உணரக் கிடந்தது. வெறுப்பு என்பது - செறிவு. அஃது அடக்கங் குறித்து நின்றது. அவரடக்கமுடையர் என்றவழி அதுவும் மனத்தினான் உணரக்கிடந்தது. கற்பு என்பது - மகளிர்க்கு மாந்தர்மாட்டு நிகழும் மனநிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது. ஏர் என்பது - தளிரின்கட் டோன்றுவதோர் பொலிவு போல எல்லா வுறுப்பினும் ஒப்பக் கிடந்து கண்டார்க் கின்பத்தைத் தருவதோர் நிற வேறுபாடு. அஃது எல்லா வண்ணத்திற்கும் பொதுவா கலின் வண்ணம் அன்றாயிற்று. இது வண்ணம் பற்றி வரும். ‘இவன் ஏருடையன்’ என்றால் அதுவும் மனங்கொளக் கிடந்தது. எழில் என்பது - அழகு. அது மிக்குங் குறைந்தும் நீடியும் குறுகியும் நேர்ந்தும் உயர்ந்தும் மெலிதாகியும் வலிதாகியும் உள்ள உறுப்புக்கள் அவ்வளவிற் குறையாமல் அமைந்தவழி வருவதோர் அழகு. இதுவும் அழகியன் என்றவழி அழகினைப் பிரித்துக் காட்டல் ஆகாமையின் ஈண்டோதப்பட்டது. சாயல் என்பது - மென்மை. அது நாயும் பன்றியும் போலாது மயிலுங் குயிலும் போல்வதோர் தன்மை. அதுவும் காட்டலாகாமையின் ஈண்டோதப்பட்டது. நாண் என்றது - பெரியோர் ஒழுக்கத்து மாறாயின செய்யாமைக்கு நிகழ்வதோர் நிகழ்ச்சி. அதுவும் காட்டலாகாது. மடன் என்பது - பெண்டிர்க் குள்ளதோர் இயல்பு. அஃது உய்த்துணர்ந்து நோக்காது கேட்டவாற்றானுணரும் உணர்ச்சி. அதுவும் காட்டலாகாது. நோய் என்பது - துன்பம். இவன் துன்பமுற்றான் என்றவழி அஃதெத்தன்மையது என்றார்க்குக் காட்டலாகாமையின் அதுவும் ஈண்டோதப்பட்டது. வேட்கை என்பது - யாதானும் ஒன்றைப் பெறல்வேண்டு மெனச் செல்லும் மனநிகழ்ச்சி. இவன் வேட்கையுடையான் என்றவழி அஃது எத்தன்மை என்றார்க்குக் காட்டலாகாமையின் ஈண்டோ தப்பட்டது. நுகர்வு என்பதும் அது. ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம் என்றதனான், அன்பு அழுக் காறு பொறை அறிவு என்பனவும் இவைபோல்வனவுங் கொள்க. இவையெல்லாம் அகத்திணை புறத்திணை இரண்டற்கும் பொது. இவை காட்டலாகாப் பொருளவாயின் இல்பொருண் மேற் சொன்னிகழ்ந்த வென்றாலோ எனின், இது மேற்கூறப்பட்ட பொருள், பொருளென்பது அறிவித்தல். அவை உள்பொருள் என்பது வருகின்ற சூத்திரத்தான் உரைக்கும். (51) 244. இமையோர் தேஎத்து மெறிகடல் வரைப்பினு மவையில் கால மின்மை யான. என்-னின், இதுவும் மேற்கூறப்பட்ட பொருள், பொருள் என்பது அறிவித்தலை நுதலிற்று. தேவருலகத்தினுங் கடல்சூழ்ந்த வுலகத்தினும் மேற் சொல்லப்பட்ட பொருளில்லாத காலம் இன்மையான் உள்பொரு ளென்றே கொள்ளப்படும் என்றவாறு. (52) ஐந்தாவது பொருளியல் முற்றிற்று. பொருளியல் அடிக்குறிப்புகள் 1. மிசையுமன் 2. அங்கம் 3. முதிர்ந்த 4. யர்வரும் பிறரு 5. றாவின் 6. மறிவுமைம். 7. துணிகொண். 8. மெனினும். 9. வண்டுக்க நாற்ற மவள்கலந் 10. நெகிழ்ததோ ரகல வரீஇயர் 11. யெண்பாலா. 12. அவன் 13. திவளே வாயும். 14. தலைமகன். 15. கருத்தினராகிக். 16. மகவுடைச் 17. கொத்தநீர் நிறீஇயதோர். 18. யறிதலு. 19. புணர்க்க 20. என்றாற். 21. வூசற். 22. மன்னார்க். 23. நன்னாளா. 24. சாரற். 25. யெனறிதமை. 26. நிரைசெம்மல். 27. ஒழித்த. 28. வாயெல்லா. 29. மொழிநலம். 30. மனாநாறு. 31. பதித்து. 32. தேர். 33. யன்றென. 34. கன்னா. 35. காள்முனை. 36. செய்பெய். 37. என்றவாறு. 38. காகாதென. 39. தொடீய. 40. வன்னான். 41. விளிவொடு வருந்தி. 42. நோயினும் வேட்கையின்னுகர்வு. 43. காட்லாகாதென. மெய்ப்பாட்டியல் மனத்தினால் உய்த்துணரினல்லது ஐம்பொறிகளால் உணர்ந்துகொள்ள முடியாத பொருள்கள் சிலவற்றை மேல் பொருளியலில் இறுதியில் தொகுத்தோதினார். வடிவமில்லா தனவாகிய அப்பொருள்களையும் பொறி வாயிலாக மனங்கொள்ளுதற்கு ஏதுவாவன மெய்ப்பாடுகளாகும். உலகத்தாரது உள்ள நிகழ்ச்சி அவரது உடம்பின்கண் தோன்றும் கண்ணீரரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல், வியர்த்தல், நடுக்கம் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலனாகுந்தன்மை மெய்ப்பாடெனப்படும். ஒருவன் புலி முதலிய கொடிய விலங்குகளைக்கண்டு அஞ்சிய நிலையில், அவனுள்ளத்திலே இன்னது செய்வரென்று ஒன்றுந் தோன்றாது கலங்கும் கலக்கமும், பின் எவ்வாறேனும் தப்பி மறைதல் வேண்டுமென்ற கருத்தும், அவனது உடம்பின் கண்ணே நடுக்கமும், வியர்த்தலும் உண்டாதல் இயல்பு. இவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலி முதலியன சுவைப்படு பொருள் எனப்படும். அவற்றைக் கண்டதுமுதல் அவனுள்ளத்திலே நீங்காது நின்ற அச்சம் சுவையெப்படும். அதுகாரணமாக அவனுள்ளத்திலே தோன்றும் கலக்கமும் மறைதற்கருத்தும் குறிப்பெனப்படும், அக்குறிப்பின்வழி அவனது உடம்பிலே வெளிப்பட்டுத் தோன்றும் நடுக்கமும் வியர்த்தலும் விறல் எனப்படும். விறலை வடநூலார் சத்துவம் என வழங்குவார். நடுக்கமும் வியர்ப்பும் ஆகிய சத்துவங்கள், அச்சமுற்றானாகிய அவனுக்கேயன்றி, அஞ்சி ஓடி வரும் அவனைக்கண்ட ஏனையோர்க்கும் நன்கு புலனாவன. குறிப்பும் சுவையுணர்வும் ஆகிய ஏனையவை அவன் மன நிகழ்ச்சிகளாகும். அச்சமுற்றான் மனத்தே நிகழும் அச்சம், அவனுடம்பில் தோன்றும் நடுக்கம், வியர்த்தல் முதலிய புறக்குறிகளால் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். ‘மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று’ என்பர் இளம் பூரணர். மெய் - உடம்பு. படுதல் - தோன்றுதல். படு என்னும் முதனிலைத் தொழிற்பெயர் பாடு என நீண்டு நின்றது. இனி, மெய் என்ற சொல்லுக்குப் பொருளின் உண்மைத் தன்மை எனப் பொருள்கொண்டு,1 மெய்ப்பாடு என்பதற்குப் பொருளின் புலப்பாடு எனப் பொருள் விரித்தலும் உண்டு. “மெய்ப்பாடு என்பது பொருட்பாடு அஃதாவது உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படு வதோராற்றான் வெளிப்படுதல் அதனது இலக்கணங்கூறிய ஓத்தும் ஆகுபெயரான் மெய்ப்பாட்டிய லென்றாயிற்று” எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். மக்களது அகவாழ்வும் புறவாழ்வும் ஆகிய உலகியல் வழக்கிலே புலப்பட்டுத் தோன்றும் இம்மெய்ப்பாடுகளைப் புனைந்துரை வகையாகிய நாடக வழக்கிற்கும் புலனெறி வழக்கமாகிய செய்யுள் வழக்கிற்கும் அங்கமாகக்கொள்ளுதல் தொன்று தொட்டு வரும் தமிழிலக்கண மரபாகும். இம்மரபினை உளங்கொண்ட தொல்காப்பியனார், இம்மெய்ப்பாடுகளைப் புலனெறி வழக்கமாகிய செய்யுளுக்குரிய உறுப்புக்களுள் ஒன்றாகக் கொண்டு இவ்வியலில் விரித்து விளக்குகின்றார். இவ்வியல் இருபத்தேழு சூத்திரங்களால் இயன்றதாகும். “பண்ணைத்தோன்றிய முப்பத்திரண்டு பொருள்களையுங் குறித்து அவற்றின் புறத்து நிகழும் பொருள்கள் பதினாறென்று சொல்லுவர். மேற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டாகியடங்கும் பகுதியும் உண்டு” என மெய்ப்பாடுகளைக் குறித்து நாடக நூலார் கொண்ட பாகுபாட்டினை இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களால் தொல்காப்பியனார் குறிப் பிட்டுள்ளார், பண்ணை என்பது விளையாட்டு என்ற பொருளில் வழங்கும் உரிச் சொல்லாகும்.1 அச்சொல் விளையாட்டினை யுடைய கூட்டம் என்ற பொருளில் இங்கு ஆளப்பெற்றுள்ளது. பண்ணையையுடையது பண்ணையென்றாயிற்று என்பர் இளம்பூரணர். முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினார் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டுங் காமம் நுகரும் இன்ப விளையாட்டிலே, நகை முதலிய சுவைகளுக்குக் காரணமாகிய சுவைப்படு பொருள்களும், அவற்றை நுகர்ந்தவழி உளவாம் சுவையும், அச்சுவை பற்றித் தோன்றும் மனக்குறிப்பும், அக்குறிப்பின்வழி மெய்யின்கண் வெளிப்படும் சத்துவமும் ஆகிய இவை சிறந்து தோன்றுதல் இயல்பாதலின், ‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்’ எனக் குறித்தார் ஆசிரியர். விளையாட்டாயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டாவன, நகை முதலிய சுவைகளுக்கு எதுவாகப் பின்னர்க் கூறப்படும் எள்ளல் முதல் விளையாட் டீறாகவுள்ள சுவைப்படு பொருள்கள் எனவும், அவற்றைக் குறித்த புறனாவன வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவு நிலைமை என்றும், வீரக்குறிப்பு, அச்சக்குறிப்பு, இழிப்புக்குறிப்பு, வியப்புக்குறிப்பு, காமக்குறிப்பு, அவலக்குறிப்பு, உருத்திரக்குறிப்பு, நகைக்குறிப்பு, நடுவுநிலைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும் நடுவு நிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினாறுமாம் எனவும், இவை பதினாறினையும் சுவையுள் அடக்கிச் சுவையெட்டும் ஆக்கி நிகழ்தல் உண்டு எனவும் கூறுவர் இளம்பூரணர்.2 “ஒன்பது சுவையுள் உருத்திரம்1 ஒழித்து எட்டனையுங் கூறுங்கால், சுவைக்கப்படும் பொருளும், அதனை நுகர்ந்த பொறியுணர்வும், அது மனத்துப்பட்டவழி உள்ளத்து நிகழும் குறிப்பும், குறிப்புக்கள் பிறந்த உள்ளத்தாற் கண்ணீரரும்பலும் மெய்ம்மயிர் சிலிர்த்தலும் முதலாக உடம்பின்கண் வரும் வேறு பாடாகிய சத்துவங்களும் என நான்காக்கி, அச் சுவை யெட்டோடுங் கூட்டி, ஒன்று நான்கு செய்து உறழ முப்பத்தி ரண்டாம்” என்பதும், எனவே சுவைப்பொருளும், சுவையுணர்வும், குறிப்பும், விறலும் என நான்கு வகைப்பட்டு நிகழும் இம்முப்பத்திரண்டு பொருள்களையே ‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்’ என இச்சூத்திரத்தில் தொல்காப்பி யனார் குறித்தனர் என்பதும் பேராசிரியர் கருத்தாகும். இனி, சூத்திரத்திலுள்ள பண்ணை என்ற சொல்லுக்குத் ‘தொகுதி’ எனப் பொருள்கொண்டு, எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்றாற்போல நந்நான்காய்ப் பண்ணைகூடி வரும் முப்பத்திரண்டு பொருளும் என விளக்கங் கூறுதலும் உண்டு.2 நகை, அழுகை முதலிய சுவைகளுக்கு ஏதுவாகிய சுவைப் பொருள்களை நாடக அரங்கிலே நிறுத்தி, அவற்றைக் கண்டு குறிப்பும் சத்துவமும் நிகழ்த்துகின்ற கூத்தனையும் அரங்கிலே கொணர்ந்து நிறுத்தி, பின்னர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினை அவையிலுள்ளோர் கண்டு உணர்வதாக வருகின்ற முறைமை யெல்லாம் நாடக வழக்கிற்கேயுரிய பகுதியாகும். அப்பகுதியெல்லாம் இயற்றமிழ் நூலில் உணர்த்தத்தக்கன அல்ல எனக் கருதிய தொல்காப்பியனார் மெய்ப்பாடு பற்றிய நாடகநூற்கோட்பாடு களைப் பிறன்கோட் கூறல் என்னும் உத்திபற்றி இவ்வியலின் முதலிரண்டு சூத்திரங்களால் தொகுத்துச் சுட்டினார்.3 நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடுதற்கமைந்த புலனெறி வழக்குப் பற்றித் தாம் உணர்த்த எடுத்துக்கொண்ட மெய்ப் பாடுகளை இவ்வியலிலுள்ள ஏனைய சூத்திரங்களால் விரித்து விளக்குகின்றார். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை எனச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் ஆசிரியர். இங்கே கூற எடுத்துக்கொண்ட எண்வகை மெய்ப்பாடுகளும் முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலாயினோர் நாடக மகளிர் முதலியோர் நிகழ்த்தும் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டும் காமநுகரும் இன்ப விளையாட்டின் நிகழ்ச்சிகளோடு ஒருவாற்றால் தொடர்புடை யானவை ? என்பார், விளையாட்டுப் பொருளினதாகிய நகையென்னும் மெய்ப்பாட்டை முதற்கண்வைத்தார். நகைக்கு மறுதலையாவது அழுகையாதலின் அதனை அதன்பின் வைத்தார். அழுகையும் இளிவரலோடு ஒக்குமாதலால் அழுகையின் பின் இளிவரலை வைத்தார். தாம் இளிவந்த நிலையில் தம்மினும் உயர்ந்தவற்றை யெண்ணி வியத்தல் மக்களது இயல்பாதலின் இளிவரலின்பின் மருட்கை வைத்தார். வியப்பாகிய மருட்கை பற்றியும் அச்சம் பிறத்தலின் அச்சத்தை அதன்பின் வைத்தார். அச்சத்திற்கு மறுதலை வீரமாதலின் அச்சத்தின்பின் வீரத்தை வைத்தார். வீரத்தின் பயனாகப் பிறப்பது வெகுளியாதலின் வீரத்தின்பின் வெகுளியை வைத்தார். வெகுளிக்கு மறுதலையாதலானும் எல்லாச் சுவைகளினும் சிறந்ததாதலானும் முதலிற் கூறிய நகை யுடன் தொடர்புடை யதாதலானும் உவகையை இறுதிக்கண் வைத்தார் என நகைமுதல் உவகையீறகவுள்ள எண்வகை மெய்ப்பாடுகளின் வைப்பு முறைக்குப் பேராசிரியர் கூறும் காரணங்கள் நினைக்கத் தக்கனவாகும். எண்வகை மெய்ப்பாடுகளுள் நகையென்பது எள்ளல், இளமை, பேதமை, மடன் என இந் நான்கும் பற்றி நிகழும் என்பர் ஆசிரியர். எள்ளல்-இகழ்தற் குறிப்பு. இளமை-விளைவறியாத இளம்பருவ இயல்பு. பேதமை அறிவின்மை. மடன்- பெரும் பான்மையும் பிறர் அறிவிக்க அறிந்து அறிந்தவற்றை நெகிழ விடாமை. மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல் என்றும், பேதமை என்பது பொருண்மை யறியாது திரியக்கோடல் என்றும், பேதமை என்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாஈக் கோடல் என்றும் இவ்விரண்டிற்கும் வேறுபாடு கூறுவர் இனம்பூரணர். மெய்ப்பாடாகப் புறத்தே வெளிப்படும் நகையொன்றே, தன் தோற்றத்திற்குரிய காரணங்களாக அகத்தே நிகழும் எள்ளல், இளமை, பேதைமை, மடன் என்னும் இந்நால்வகை மனக் குறிப்புக்களும் புலப்படுதற் குரிய நிலையில் நால்வகைப்பட்டுத்தோன்றும் என்பார், ‘உள்ளப்பட்ட நகை நான்கென்ப’ என்றார் ஆசிரியர். இவ்வாறே அழகை முதல் உவகையீறாகவுள்ள ஏனைய மெய்ப்பாடுகளும் தத்தம் தோற்றத் திற்குக் காரணமாக அகத்தே தோன்றும் சுவைப்பொருள்களுக் கேற்பப் புறத்தே நால்வகைப்பட நிகழும் என்ற நுட்பத்தினை அவற்றின் இயல்புரைக்கும் சூத்திரங்களில் ஆசிரியர் புலப்படுத்தி யுள்ளார். இனி, எள்ளல் பற்றிய நகையென்பது, தான் பிறரை இகழ்ந்து நகுதலும் பிறரால் இகழப்பட்ட நிலையில் தான் நகுதலும் என இரண்டாம். இளமை பற்றிய நகையென்பது, தன் இளமை காரணமாகப் பிறரைக்கண்டு நகுதலும் பிறரது இளமைகண்டு தான் நகுதலும் என இருவகைப்படும். தன் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் பிறர் பேதைமை பொருளாகத் தோன்றுவதும் எனப் பேதைமை பற்றிய நகை இருவகைப்படும். இவ்வாறே தன்கண் தோன்றிய மடமை காரண மாகவும் பிறர் கண்தோன்றிய மடமை காரணமாகவும் நகை தோன்றுமாதலின் மடமை பற்றிய நகையும் இருவகைப்படும் என்பர். இளிவு, இழவு. அசைவு, வறுமை என இந்நான்கு பொருள்பற்றி அழுகை தோன்றும். இவற்றுள் இளிவு என்பது பிறரால் இகழப்படடு எளியராதல். இழவு என்பது தந்தை தாய் முதலிய சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். அசைவு என்பது முன்னைய நல்ல நிலைமை கெட்டு வேறுபட்டு வருந்துதல். வறுமை யென்பது போகந் துய்க்கப்பெறாத பற்றுள்ளம். இவை நான்கும் தன்கண் தோன்றினும் பிறர்கண் தோன்றினும் அழுகையாம் ஆதலின் இவையும் எட்டாயின என்பர் பேராசிரியர். தன்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தை அழுகையென்றும் பிறர்கண் தோன்றிய இளிவுபற்றிப் பிறக்கும் அவலத்தைக் கருணையென்றும் கூறுதல் மரபு.1 மூப்பு, பிணி, வருத்தம், மென்மை என இந்நான்கு பொருள் பற்றி இளிவரல் தோன்றும். மூப்பு-முதுமை காரணமாகத் தோன்றும் தளர்ச்சி. பிணி-நோய். வருத்தம்-பயன் விளையாத வீண் முயற்சி. மென்மை-ஆற்றலும் பொருளும் இன்றி எளியராம் நிலைமை. இவை நான்கும் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டாதலுடைய. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என இந்நான்கு பொருள்பற்றி மருட்கை தோன்றும். புதுமை-புதிதாகக் கண்டது. பெருமை-மிகப் பெரியது. சிறுமை-மிக நுண்ணியது. ஆக்கம்- ஒன்று திரிந்து ஒன்றாகியது. இந்நான்கும் முற்கூறியன போலத் தன்கண் தோன்றுதலும் பிறர்கண் தோன்றுதலும் பற்றி எட்டா வன. உலக வழக்கினுள் நின்றவாறு நில்லாமல் அறிவினைத் திரித்து வேறுபடுத்துவது வியப்பென்னும் மெய்ப்பாடாதலின் அதனை ‘மதிமை சாலா மருட்கை’ என அடைபுணர்த்தோனார் ஆசிரியர். எனவே திரிபின்றி இயல்பாகிய அறிவுடன் கூடிய நிலையில் மருட்கை தோன்றுதற்கு இடமில்லை யென்பது புலனாம். அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை என இந்நான்கு பொருள் பற்றி அச்சம் தோன்றும். அணங்காவன எதிர்ப்பட்டாரை வருத்தும் இயல்பினவாகிய பேய் பூதம் முதலியன. விலங்காவன அரிமா, புலி முதலாகவுள்ள கொடிய விலங்குகள். கள்வராவார் சோர்வு பார்த்து வஞ்சித்துக் கொடுந்தொழில் புரிவோர். தம் இறையென்றது தந்தை ஆசிரியன், அரசன், வழிபடு தெய்வம் என இவ்வுரிமை முறையிற் பணிகொண்டு தம்மை ஆளும் தலைவரை அஞ்சத்தக்கனவாகிய இவற்றைக் கண்ட நிலையில் உள்ளம் நடுக்கமுற்று அஞ்சுதல் இயல்பு. இங்ஙனம் நடுங்காது பிணங்கி நிற்பாரது மனத்தில் அச்சம் தோன்றுவதில்லை யென்பார் ‘பிணங்கல் சாலா அச்சம்’ என்றார். அச்சத்திற்குக் காரணமாகிய இவை நான்கும் தன்கண் தோன்றுவன பிறர்கண் தோன்றுவன என இருபாற்படாது பிறிது பொருளென ஒருபாற்பட்டே நிற்பனவாம். கல்வி, தறுகண், இசைமை கொடை என்ற இந் நான்கும் காரணமாகப் பெருமிதம் தோன்றும். பெருமிதமாவது எல்லா ரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் என்பர் பேராசிரியர். எனவே அறிவு ஆண்மை பொருள் முதலிய சிறப்புக்களால் மக்கள் எல்லாரோடும் ஒப்பநில்லாது உயர்ந்து நிற்றல் பெருமிதம் எனக் கொள்ளுதல் பொருந்தும். கல்வி என்பது தவம் முதலாகிய செயலின் திறம். தறுகண் என்பது உள்ளத்து உறுதியாகிய வீரம். இசைமை என்பது எக்காலத்தும் பழியொடு வருவன செய்யாமையாகிய புகழ்த்திறம். கொடை என்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலிய எல்லாப் பொருளுங் கொடுத்தலாகிய வண்மைத் திறம். இவைநான்கும் ஒருவர்பால் அமைந்த நிலையில் அவரிடத்தே பெருமிதம் என்னும் மெய்ப்பாடு தோன்றுதல் இயல்பு. எனவே இது தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும் என்றார் பேராசிரியர். உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என்ற இந்நான்கும் பற்றி வெகுளி தோன்றும். உறுப்பறையாவது கையை வெட்டுதலும் கண்ணைத் தோண்டுதலும் போன்ற கொடுஞ் செயல்கள். குடிகோள் என்பது பிறரது குடிப்பிறப்பின் உயர்வுக்கும் அவருடைய சுற்றத்தார்க்கும் கேடு சூழ்தல். அலை என்பது அரசியல் நெறிக்கு மாறாகக் கோல்கொண்டு அலைத்தல் முதலிய தீத்தொழில்கள். கொலை என்பது பிறருடைய அறிவும் புகழும் முதலிய நன்மைளை அழித்துப் பேசுதல். இங்ஙனம் நால்வகைப்படக் கூறப்பெற்ற இக் கொடுந்தொழில்கள் காரணமாக மக்களது மனத்தே வெகுளி தோன்றுதல் இயல்பு. இவ்வெகுளி பிறர்கண் தோன்றிய பொருள்பற்றி வருவதாகும். செல்வம், புலன், புணர்வு விளையாட்டு என்ற இந்நான்கும் காரணமாக உவகை தோன்றும், செல்வம் என்றது செல்வத்தால் உண்டாகும் நுகர்ச்சியினை. புலன் என்றது கல்விப் பயனாகிய அறிவுடைமை. புணர்வு என்றது அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமப் புணர்ச்சியினை. விளையாட்டென்றது யாறும் குளமும் சோலையும் முதலாகிய வனப்புமிக்க இடங்களில் தங்கித் துணையொடு விளையாடி மகிழும் விளையாட்டினை. இவை நான்கும் பொருளாக உவகைச் சுவை பிறக்கும். உலகியல் வாழ்விற் பிறரது துன்பத்தினைக் கண்டு கீழ் மக்களடையும் போலி மகிழ்ச்சி உண்மையான உவகையாகாது என அறிவுறுத்தும் நோக்கத்துடன் ‘அல்லல் நீத்த உவகை’ என அடைபுணர்த்தோதிய ஆசிரியரது புலமைத்திறன் உணர்த்து பாராட்டத் தகுவதாகும். மேற்சொல்லப்பட்ட மெய்ப்பாடுகள் முப்பத்திரண்டும் ஒரு பக்கமாக, மற்றொருபக்கம் உடைமை, இன்புறல், நடுவுநிலை அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் என வரும் இம்முப்பத்திரண்டும் உளவாவன. இவை மேற்கூறிய முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளுள் அடங்காத நிலையிலேதான் தனி மெய்ப்பாடுகளாகக் கொள்ளத்தக்கன என்பர் ஆசிரியர். இங்ஙனம் இவ்வியலில் 3 முதல் 12 வரையுள்ள சூத்திரங் களால் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடுகளை வகுத்துரைத்த ஆசிரியர் 13 முதல் 25 முடிய வுள்ள சூத்திரங்களால் அகத்திணைக்கே சிறப்புரிமையுடைய மெய்ப்பாடுகளை விரத்து விளக்குகின்றார். அகத்திணையுள் களவெண்ணும் ஒழுகலாற்றிற்குச் சிறந்துவரும் மெய்ப்பாடுகளைக் கூறத் தொடங்கிய தொல்காப்பியனார், புணர்க்கும் பாலாகிய நல்லூழின் ஆணையால் அன்பிற் சிறந்தாராகிய ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழி, அவ்வெதிர்ப்பாடாகிய காட்சி தொடங்கிப் புணர்ச்சியளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளாமெனவும், அவ்விருவரும் மெய்யுற்றுக் கூடிய புணர்ச்சிக்குப் பின் மறைவில் நிகழும் ஒழுகலாறாகிய அக்களவு வெளிப்படுமளவும் நிகழும் மெய்ப்பாடுகள் மூன்று கூறுகளா மெனவும், இவையாறும் ஒவ்வொன்றும் நந்நான்கு பகுதிகளையுடையவாகி ஒன்றன்பின் ஒன்றாய முறையே தோன்றுமெனவும் விரித்துரைக்கின்றார். தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் எதிர்ப்பட்ட முதற்காட்சியிலே, தன்னைத் தலைவன் நோக்குதற்கண் தலைவி மாறுபடாது விரும்பி நிற்கும் உள்ள நிகழ்ச்சி ‘புகுமுகம் புரிதல்’ எனப்படும். இவ்வாறு தலைவன் தன்னை நோக்கிய நிலையில் அச்சமும் நாணும் ஒருங்கு வந்தடைதலால் வியர்வை யரும்பிய நெற்றியையுடையளாதல் ‘பொறிநுதல் வியர்த்தல்’ என்னும் மெய்ப்பாடாம். அதன் பின்னர்த் தலைவனிடத்தே தோன்றிய குறிப்புக்களால் அவனுடன் அளவளாவி மகிழவேண்டு மென்ற விருப்பம் தன்னுள்ளத்தே தோன்றிய நிலையிலும் அவ்விருப்பம் புறத்தே வெளிப்படாதபடி மறைத்தல் ‘நகுநய மறைத்தல்’ எனப்படும். இங்ஙனம் தலைமகள் தனது விருப்பத்தினை மறைத் தாளாயினும் உள்ளஞ் சிதைந்து நிறையழியுமாதலால் தன் சிதைவு புறத்தார்க்குப் புலனாகாதபடி தனது நெஞ்சினை நிறுத்த முயலுதல் இயல்பாம். அத்தகையமுயற்சி ‘சிதைவு பிறர்க்கின்மை, என்னும் மெய்ப்பாடாம். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்று தோன்று தற்குத் தகுமெனப்பட இந்நான்கு மெய்ப்பாடுகளும் களவிற்குரிய முதற்கூறாகும் என்பர் ஆசிரியர். மேற்குறித்த வண்ணம் தலைமகள் தனது மனச்சிதை வினைப் புறத்தார்க்குப் புலப்படாமல் மறைத்த வழியும், உள்ள நெழ்ச்சியாலே உடம்பொடு தொடர்புடையதாகி வேறுபட்ட அவளது கூந்தலாகிய முடி தன் வயத்ததன்றி நெகிழ்ந்து தாழ்தல் ‘கூழை விரித்தல், எனப்படும். கூந்தலைப்போலன்றிக் காதிடைப் பெய்து அணியப்பெற்ற தோடு முதலிய அணிகளுள் ஒன்று நிற்ப மற்றொன்று நெகிழ்ந்து வீழ்தல் ‘காதொன்று களைதல்’ என்னும் மெய்ப்பாடகும். தனது உடம்பின் வேறுபாடுணர்ந்த தலைமகள் தோடுபோல நெகிழப் பெய்யப்படு முறைமையின வன்றிச் சிறிது இறுகச் செறித்தணியும் முறைமையினவாகிய கைவளை, மோதிரம் முதலிய அணிகலன் களைக் கழன்று விழாதபடி இறுகச் செறித்துக் கொள்ளுதல் ‘ஊழணிதைவரல்’ எனப்படும். தனது உடம்பின் நெகிழ்ச்சியையுணர்ந்த தலைமகள் தான் உடுத்த உடையினைப் பல முறையும் இறுக உடுத்துக் கொள்ளுதல் ‘உடைபெயர்த்துடுத்தல்’ என்னும் மெய்ப்பாடாம். இம் மெய்ப்பாடுகள் நான்கும் களவிற் குரிய இரண்டாங்கூறென்பர் ஆசிரியர். தலைவியின் உள்ளச் சிதைவறிந்து தலைவன் அவளை மெய்யுற அணுகிய நிலையில் நிகழ்வன இம்மெய்ப்பாடுகளாதலின் இவை களவின் இரண்டாம் கூறு என முறைப்படுத்தப்பட்டன. முற்கூறியவாறு உடை பெயர்த்துடுத்த தலைமகள், உடை பெரிதும் நெகிழ்ந்த நிலையில் தன்கையால் அற்றம் மறைத்தல் ‘அல்குல் தைவரல்’ எனப்படும். அதனைச்சார இடையில் அணிந்த கடி சூத்தர முதலியவற்றை நெகிழாது திருத்திப் போற்றிக் கொள்ளுதல் ‘அணிந்தவை திருத்தல்’ என்னும் மெய்ப்பாடாம். இவ்வாறுதன் வலியற்ற நிலையிலும் தலைமகள் தான் புணர்ச்சியை வேண்டாதாள் போல்வதோர் வன்மையை மேற்கொண்டு நிற்றல் ‘இல்வலியுறுத்தல்’ எனப்படும். (இல்லாத வன்மையை மிகுத்தல் என்பது இத்தொடரின் பொருளாகும்.) இங்ஙனம் தலைமகள் தன்கண் உளதாகப் படைத்துக்கொண்ட வன்மையினாலும் தடுக்கப்படாது நெஞ்சத்தின் நிறையழிதலால் தன் இருகைகளும் தலைவனை முயங்கும் விருப்பத்தால் தாமே எழுவன போல்வதோர் குறிப்புடையளாதல் ‘இருகையும் எடுத்தல்’ என்னும் மெய்ப்பாடாகும். இவை நான்கும் களவின் மூன்றாம் கூறென்பர் ஆசிரியர். மூன்று கூறுகளாகப் பகுத்துரைத்த இப்பன்னிரண்டும் இயற்கைப் புணர்ச்சியாகிய முதற் கூட்டத்திற்கு முன்னே நிகழ்வனவாம். ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டவழி தனது மனக்கருத்தினை நாணும் நிறையுமாகிய குணங்களால் புறத் தார்க்குப் புலனாகாது மறைக்கும் நிகழ்ச்சி பெண்மையின் இயல்பாதலால் இங்கே கூறப்பட்ட மெய்ப்பாடுகள் பெருபான்மையும் தலைமகள் கண்ணே சிறந்து நிகழும் என்பர் பேராசிரியர். புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனது பெருமையை நினைந்து தலைவி பாராட்டும் உள்ளக் குறிப்பினளாதல் ‘பாராட் டெடுத்தல்’ எனப்படும். விளையாடும் பருவத்து இயல்பாகிய மடமை நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிது அறிவு தோன்ற உரையாடுங் குறிப்பினளாதல் ‘மடந்தப வுரைத்தல்’ என்னும் மெய்ப்பாடாம். இவ்வொழுக்கம் சிறிது வெளிப்படும் நிலையிற் சுற்றத்தார் கூறும் கடுஞ் சொற்களை முனியாது ஏற்றுக் கொண்டு இது புறத்தார்க்குப் புலனாகுமோ என நாணும் உள்ளக் குறிப்பினளாதல் ‘ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்’ எனப்படும். தலைமகன் அன்பினாற் கொடுத்த கையுறைப் பொருள்களை மறுக்காது ஏற்றுக்கொண்டு அவற்றைப் பாராட்டும் உள்ளமுடையளாதல் ‘கொடுப்பவை கோடல்’ என்னும் மெய்ப்பாடாம். இங்ஙனம் முறையே ஒன்றன்பினொன் றாகத் தோன்றுதற்குரிய இவை நான்கும் களவின் நான்காம் கூறென்பர் ஆசிரியர். உயிரினுஞ் சிறந்த நாணுடையளாகிய தலைமகள், தன்னைக் குறித்து அயலார் கூறும் பழிச்சொற்களுக்கு நாணி, இவ்வொழுகலாற்றினை நம் பெற்றோர்க்குத் தெரிவிப்போமா அன்றித் தெரிவியாதிருப்போமா எனத் தடுமாறிப் பின் ஒருவகையால் ஆராய்ந்து, தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண்தன்மைக்கும் ஏற்றவகையால் சொல்ல வேண்டுவனவற்றைத் தெரிந்து கொண்டு இன்னவாறு நிகழ்ந்ததென்று தன்தோழிக்கு உடம்படுதலும் அவள் வழியாகச் செவிலிக்கு உடம்படுதலும் ஆகிய குறிப்பினளாதல் ‘தெரிந்துடம்படுதல்’ எனப்படும். தலைவனுடன் முன்னர்ப் பலநாள் பகலும் இரவும் அளவளாவி மகிழ்ந்தவாறு போன்று கூடி மகிழ்தலைத் தனக்கு இயல்பாகிய அச்சமும் நாணமும் மடனும் காரணமாக மறுக்கும் குறிப்பின ளாதல் ‘திளைப்பு வினை மறுத்தல்’ என்னும் மெய்ப்பாடாம். தலைமகள் பெற்றோரால் இற்செறிக்கப்படுதல் காரணமாகத் தான் தலைவனது கூட்டத்தை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவன் முன்னர் வெளிப்படாது மனையகத்தே மறைந்தொழுகுங் கருத்துடையளாதல் ‘கரந்திடத் தொழிதல்’ எனப்படும். இங்ஙனம் தலைவன் முன்னர்த் தோன்றாது மறைந்தொழுகுவாள் ஒருநாள் எதிர்பாராத நிலையில் அவனைக் காணலுற்றபொழுது எல்லையற்ற பெருமகிழ்ச்சி யுடைளாதல் ‘கண்டவழி யுவத்தல்’ என்னும் மெய்ப்பாடாம். இவை நான்கும் களவினது ஐந்தாங் கூறெனப்படும். பூவுஞ் சாந்தும் பூணுந் துகிலும் முதலாயின கொண்டு தன்னைப் புறத்தே அலங்கரித்த நிலையிலும் தலைமகள் தன் அன் பிற்கினிய தலைவனைக் கூடப் பெறாமையால் தன் அகத்தே மகிழ்ச்சியின்றி நெஞ்சழிந்து சோர்தல் ‘புறஞ் செயச் சிதைதல்’ எனப்படும். சுற்றத்தார் பலரும் சூழ அவர்கள் நடுவே தான் வாழும் நிலையிலும் தலைவனது துணையின்றி வருந்துதலால் தான் தனியள் என்று அறிவிக்கும் கருத்தினளாதல் ‘புலம்பித் தோன்றல்’ எனப்படும். தனிமையுள்ளத்தளாகிய தலைவி கையுங்களவுமாகப் பிடிப்பட்ட கள்வரைப் போன்று தான் சொல்லுவனவற்றை மனத் தடுமாற்றந்தோன்றச் சொல்லுதல் ‘கலங்கி மொழிதல்’ எனப்படும். தனது மனக்கலக்கத்தை யடக்கிக் கொண்டு பேசும் நிலையிலும் தனது செயலற்ற தன்மை தோன்றக் கூறுதல் ‘கையறவுரைத்தல்’ எனப்படும். தனிமை விகற்பமாகிய இவை நான்கும் களவின் ஆறாம் கூறென்பர் ஆசிரியர். கையறவுரை தோன்றியதன் பின்னர் நிகழ்வன ஒரு தலைக் காமமாகிய கைக்கிளைக்கும் ஒவ்வாக் காமமாகிய பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவனவன்றி நடுவணைந் திணை யெனப்பட்ட நற் காமத்துக்கு ஏற்புடையன அல்ல எனவும், களவொழுக்கத்தினுள் ‘கையறவுரைத்தல்’ என்ற எல்லையின் மீறிய மெய்ப்பாடுகள் கூறப் படாவெனவும் அறிவுறுத்தக் கருதிய ஆசிரியர், ‘சையறவுரைத்தல்’ என்ற மெய்ப்பாட்டினைக் களவொழுக்கத்தின் இறுதிக்கண் வைத்தார். தலைமகன்பால் தோன்றும் குறிப்புச் சில பற்றித் தலைமகள்பால் பல குறிப்புத் தோன்றுமாதலால் தலைமகளிடத்துத் தோன்றும் மெய்ப்பாடுகளே சிறந்தனவென்று இங்கு வரையறுத் துரைக்கப்பட்டன. மேற்சொல்லப்பட்ட அறுவகைக் கூற்றினவாகிய இருபத்து நான்கு மெய்ப்பாடு போல்வன பிறவும் நிலைப்பட்ட அவை தமது உட்பகுதியாகி வருவன பிறவும் நிலைபெற்ற ஒழுகலாறாகிய நடுவணைந் திணைக்கேயுரிய நிமித்தமாம் மெய்ப்பாடுகளாகும் என்பர் ஆசிரியர். ‘மன்னிய வினை’ எனப்பட்ட புணர்ச்சி, தலைமகளுக்கு ஆற்றாமை நேர்ந்தவிடத்து மேல் அறுவகைப்படக் கூறப்பட்ட மெய்ப்பாடுகளை முறையே நிமித்தமாகக் கொண்டு வாராமையும் உரித்து என்பர் ஆசிரியர். களவிற்குரியனவாக மேற்கூறப்பட்ட முதலாங்கூறு முதல் ஆறாங்கூறு முடியவுள்ள அறுவகை மெய்ப்பாடுகளையும் ஒன்று முதல் ஆறு அவத்தைகள் எனவும், அவற்றின் பின் உளவாம் உன்மத்தம், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன முறையே ஏழு எட்டு ஒன்பது பத்தாம் அவத்தைகள் எனவும் பகுத்துரைப்பர் இளம்பூரணர். பிற்கூறிய நான்கும் அகனைந்திணை யின்பத்திற்கு உரியன அன்மையில் இவற்றையுஞ் சேர்த்துப் பத்தவத்தைகளென ஆசிரியர் வரையறை கூறாதொழிந்தார் என்பது பேராசிரியர் கருத்தாகும். மேற்கூறிய இருபத்து நான்கு அல்லாதவழி இனிக் கூறு கின்ற மெய்ப்பாடுகளும் உளவாம். இன்பத்திற்கு ஏதுவாகிய பொருள்களைக் கண்டநிலையில் அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதலும், தானொருத்தியே துன்புறுகின்றாளாகச் சொல்லுதலும், தலைவனும் அவனுடைய தேர் முதலாயினவும் தன்னெதிர் தோன்றுவனவாக முன்னிறுத்திக்கொண்டு வருந்துதலும், கூட்டத்திற்கு வரும் இடையூறுண்டென்று பலவற்றையும் ஆராய்தலும், பசிநோய் வருத்தவும் அதற்குத் தளராது உணவினை மறுத்தலும், வற்புறுத்தி உணவூட்டிய பொழுதும் முன்போலாது உணவினைக் குறைத்துக் கொள்ளுதலும், உணவின்மை காரணமாக உடம்பு பெரிதும் இளைத்துச் சுருங்குதலும், இரவும் பகலும் உறக்கத்தை மேற்கொள்ளாமையும், சிறிது உறக்கம் வந்த நிலையில் தலைவனைக் கனவிற்கண்டு மயங்குதலும், மெய்யைப் பொய்யாகக் கொள்ளுதலும், பொய்யை மெய்யென்று துணிதலும், தலைவர் நம்மைத் துறப்பரோ என ஐயுறுதலும், தலைவனுக்கு உறவாயினாரைக் கண்டு மகிழ்தலும், அறமாகிய தெய்வத்தைப் போற்றிப் பரவுதலும், அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்து கூறுதலும், யாதாயினும் ஒரு பொருளைக் கண்டவிடத்துத் தலை மகனோடு ஒப்புமை கொள்ளுதலும், அவ்வழி ஒப்புமையுண்டாகிய நிலையில் உள்ளம் உவத்தலும், தலைவனது பெரும்புகழ் கேட்டு மகிழ்தலும் கலக்கமுற்றுரைத்தலும் என வரும் இவை புணர்ச்சிக்கு நிமித்தமாகா தன போன்று காட்டினும் இவற்றை மிகவும் ஆராய்ந்துணரிற் புணர்ச்சி நிமித்தமேயாகும் என்பர் ஆசிரியர். இவை யெல்லாம் அறனும் பொருளும் அன்றி இன்பப் பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவர் உள்ளத்து நிகழ்வனவாதல் வழக்கு நோக்கி யுணரப்படுமென்றும், இங்கு எண்ணப்பட்ட எல்லாம் உள்ளத்து நிகழ்ந்தவற்றை வெளிப்படுப்பன ஆகலான் மெய்ப்பாடெனப்பட்டன என்றும் கூறுவர் பேராசிரியர். களவொழுக்கத்திற்கு முட்டுப்பாடாகியவழி இடித்துரைத் தலும், மனத்திலே வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமையும், இவ்வொழுக்கம் பிறர்க்கும் புலனாம் என்ற அச்சம் காரணமாகத் தலைவன் நீங்கியொழுகலும், இரவும் பகலும் தலைவனொடு அளவளாவுதலை மறுக்குங் குறிப்புடையளாதலும், புள்ளும், மேகமும் போல்வனவற்றை நோக்கித் தலைவர்பால் என் பொருட்டுத் தூது சொல்லுமின் என இரந்துரைத்தலும், மனையகத்திற் பொய்த்துயிலொடு மடிந்துவைகுதலும், காதலுணர்வு வரம்பிகந்த நிலையில் நிகழும் உள்ளக் குறிப்பும், உரையாடாது வாளா இருத்தலும் என எண்ணப்பட்ட இவை எட்டும் திருமணம் முடித்து எய்துதலால் என்றும் அழியா நிலைமைத்தாகிய கற்புக் கூட்டத்திற்கு நிமித்தமாகிய மெய்ப் பாடுகளாகும். தலைமகனுக்குத் தொழுகுலமாகிய தெய்வத்தினைத் தலைமகள் அஞ்சியொழுகும் ஒழுக்கமும், தனக்கு ஒத்த இல்லறம் இன்னதென்று தலைமகளது உள்ளத்தே படுதலும், களவொழுக் கத்திற் போலன்றித் தலைமகன்பால் இல்லாத குற்றத்தை ஏறிட்டுக் கொண்டு வெகுளலும், தலைமகனாற் பெற்ற தலையளி உண்மையேயாயினும் அதனை உண்மையென்று தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சியும், புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சியும், களவின்கண் பகற்குறியும் இரவுக்குறியும் என வரையறுத்தாற் போல்வதோர் வரையறை கற்புக்கு வேண்டாமையால் அப்பொழுதினை மறுத்தலாகிய ஆக்கமும், களவுக்காலத்துத் துன்பமுற்றாற் போலன்றி அருள்மிகத் தோன்றிய நெஞ்சினளாதலும், களவுக்காலத்து விரிந்த அன்பெல்லாம் மனையறத்தின்மேற் பெருகிய விருப்பினாலே ஒருசேரத் தொகநிற்றலும், களவிற் பிரிவாற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுட் பிரிவாற்றுதல் வேண்டப்படாமையும், தலைவனது மறைந்த ஒழுக்கத்தைப்பற்றி அயலார் கூறிய புறஞ்சொல்லின் தீமை குறித்து எழுந்த சொல்லுடன் சேர இங்கு எடுத்துரைத்த பத்தும் ஆழிவில் கூட்டம் என மேற்கூறிய கற்பின்கண் வரும் மெய்ப்பாடுகளாகும். காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதற்குரிய தலைவனும் தலைவியும் ஆகிய இவ்விருவர்பாலும் குடிப்பிறப்பு, அதற்குத்தக்க நல்லொழுக்கம், ஆள்வினைத் தன்மை, பருவம் வடிவம், வடிவ வனப்பினை வாயிலக்கொண்டு நிகழும் அன்பு, உள்ளத்தை ஒருவழி நிறுத்துதல், எல்லாவுயிர்களிடத்தும் அருளுடையராதல், அறிவு, எக்காலத்தும் திருத்தகவிற்றாகிய உள்ளம் உடைமை என இப்பத்தும் ஒத்திருத்தல் வேண்டும் என்பர் ஆசிரியர். எனவே இவையெல்லாம் தலைவன் தலைவி இருவர்பாலும் அமையவேண்டிய ஒப்புமைக் குணங்களெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவும் உணர்த்தினாராயிற்று. பொறாமை, கொடுமை, தம்மைப் பெரியராக வியத்தல் புறங்கூறுதல், கடுஞ்சொற்கூறல், கடைப்பிடியின்றி நெகிழ்ந் திருக்கும் சோர்வு, சோம்பல், பிறப்பினால் தம்மை உயர்ந்தாராக நினைத்தல், ஒருவர் ஒருவரைவிட இன்புறுவதாக நினைத்தல், நுண்ணுணர்வின்றி வரும் வெள்ளறிவு, மறதி, இன்னாரை யொப்பர் இன்னார் என்றெண்ணி ஒருவரையொருவர் விரும்புதல் என இங்குச் சொல்லப்பட்ட குற்றங்கள் தலைமக்கள் பால் இல்லா தொழிதல் வேண்டுமென விலக்குவர் பெரியோர். இக்குற்றங்கள்யாவும் இன்றித் தலைமகன்பால் மெய்ப்பாடு நிகழுமெனவும், தலைவன்பால் நிகழ்தற்குரிய மெய்ப்பாடுகள் இவையிவையென வரையறுத்துக் கூறாது, அவன்பால் நிகழத்தகாதன இவையென இச்சூத்திரத்தால் ஆசிரியர் வரையறுத்துக் கூறினாரெனவும் கருதுவர் பேராசிரியர். இங்குக் கூறப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடு களின் நுட்பமனைத்தும், கண்ணாலும், செவியாலும் திட்பமாக அறியவல்ல நுண்ணறிவுடைய பெருமக்களுக்கல்லது ஏனை யோர்க்கு ஆராய்ந்துணர்தற்கரியது என்பர் ஆசிரியர். மனத் தளவில் அமைந்த மெய்ப்பாட்டின் உட்பொருளைக் கண்ணாலும் செவியாலும் அறிந்துகொள்ளுதல் எவ்வாறெனின், ஒருவரது மனக்குறிப்பின்வழி அவர்தம் முகம் வேறுபடுதலும் மொழி வேறுபடுதலும் இயல்பாதலால் அவ்வேறுபாடுகளுக்கு ஏதுவாயமைந்த அவற்றை முறையே கண்ணாலுஞ் செவியாலும் உணர்ந்துகொள்ளுதல் அவ்வத் துறைபோயினாரது ஆற்றல் என இதனால் ஆசிரியர் உய்த்துணர வைத்த திறம் உணர்ந்து மகிழத்தக்கதாகும். - க. வெள்ளைவாரணனார் நூல் வரிசை -10, பக். 293- 308 ஆறாவது மெய்ப்பாட்டியல் 245. பண்ணைத் தோன்றிய வெண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப. என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், மெய்ப் பாட்டியல் என்னும் பெயர்த்து; மெய்ப்பாடு உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃதியாதோ எனின், முன்னர்க் கூறுதும். இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், பிறர் வேண்டு மாற்றான் சுவையுஞ் சுவைக்குறிப்பும் உணர்த்துதல் நுதலிற்று. பண்ணைத் தோன்றிய என்பது - விளையாட்டாயத் தின்கண் தோன்றிய என்றவாறு. பண்ணையுடையது பண்ணை என்றாயிற்று. எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறனே நானான் கென்ப என்பது - முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று சொல்லுவர் என்றவாறு. புறத்து நிகழ்வதனைப் ‘புறம்’ என்றார். ‘பண்ணைத் தோன்றிய’ ‘கண்ணிய புறன்’ எனப் பெயரெச்ச அடுக்காகக் கூட்டுக. அன்றியும், ‘எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறன்’ என ஒரு சொல் நடையாக ஒட்டித் ‘தோன்றிய’ என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாக்கினும் அமையும். புறன் என்னும் எழுவாய் நானான் கென்னும் பயனிலை கொண்டு முடிந்தது. ஈண்டுச் சொல்லப்படுகின்ற பதினாறு பொருளும், கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமை யாற், பண்ணைத் தோன்றிய என்றான்; என்னை? நகைக்குக் காரணமாகிய எள்ளல் அவர்கண் தோன்றாமையின். பிறவும் அன்ன. முப்பத்திரண்டாவன - நகை முதலானவற்றிற் கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத் தோதப் படுகின்றன. அவற்றைக் குறித்த புறனாவன சுவையும் குறிப்பும். வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம், நகை, நடுவுநிலைமை என்றும், வீரக் குறிப்பு, அச்சக் குறிப்பு, 1இழிப்புக் குறிப்பு, வியப்புக் குறிப்பு, காமக் குறிப்பு, அவலக் குறிப்பு, உருத்திரக் குறிப்பு, நகைக் குறிப்பு, நடுவு நிலைமைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும் நடுவு நிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினாறுமாம். வியப்பெனினும் அற்புதமெனினும் ஒக்கும். காமமெனினுஞ் சிருங்காரமெனினும் ஒக்கும். அவலம் எனினும் கருணை யெனினும் ஒக்கும். உருத்திரம் எனினும் வெகுளியெனினும் ஒக்கும். நடுவு நிலைமை எனினும் மத்திமம் எனினும் சாந்தம் எனினும் ஒக்கும். வீரம் என்பது மாற்றாரைக் குறித்து நிகழ்வது. அச்சம் என்பது அஞ்சத் தகுவன கண்டவழி நிகழ்வது. இழிப்பென்பது இழிக்கத் தக்கன கண்டுழி நிகழ்வது. வியப்பென்பது வியக்கத் தக்கன கண்டுழி நிகழ்வது. காமம் என்பது இன்ப நிகழ்ச்சியான் நிகழ்வது. அவலம் என்பது இழவு பற்றிப் பிறப்பது. உருத்திரம் என்பது அவமதிப்பாற் பிறப்பது. நகையென்பது இகழ்ச்சி முதலாயினவற்றாற் பிறப்பது. நடுவுநிலைமை யென்பது யாதொன் றானும் விகாரப்படாமை. அவை இற்றாக, 2மத்திமமென்பதனை ஈண்டொழித்தது என்னை யெனின், “மத்திம மென்பது மாசறத் தெரியிற் சொல்லப் பட்ட வெல்லாச் சுவையொடு புல்லா தாகிய பொலிவிற் றென்ப.” “நயனுடை மரபி னிதன்பய மியாதெனிற் சேர்த்தி யோர்க்குஞ் சாந்துபடு வோர்க்கு மொப்ப நிற்கு நிலையிற் றென்ப.” “உய்ப்போ 3ரிதனை யாரெனின் மிக்கது பயக்குந் தாபதர் சாரணர் சமணர் கயக்கறு முனிவ ரறிவரொடு பிறருங் காமம் வெகுளி மயக்க நீங்கிய வாய்மை யாளர் வகுத்தனர் 4பிறரு மச்சுவை யெட்டு மவர்க்கில வாதலி னச்சுவை யொருதலை யாதலி னதனை மெய்த்தலைப் படுக்கவிதன் மிகவறிந் தோரே.” என்பது செயிற்றியச் சூத்திரம். இதனானே இது வழக்கிலக்கணம் அன்று என உணர்க. இனிச் சுவை என்பது - காணப்படு பொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம். “இருவகை நிலத்தி னியல்வது சுவையே.” என்றும், “நின்ற சுவையே ... ... ஒன்றிய நிகழ்ச்சி சத்துவ மென்ப.” என்றும், “சத்துவ மென்பது சாற்றுங் காலை மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணீர் வார்த னடுக்கங் கடுத்தல் வியர்த்த றேற்றங் 5கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த பத்தென மொழிப சத்துவந் தானே.” 6என்றும் சார்பொருள் உரைப்ப. அவை வருமாறு: பேயானும் புலியானும் கண்டானொருவன் அஞ்சியவழி மயக்கமுங் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பு முளவாமன்றே? அவற்றுள் அச்சத்திற்கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படு பொருள். அவற்றைக் கண்ட காலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை. அதன்கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு. நடுக்கமும் வியர்ப்புஞ் சத்துவம். இவற்றுள் நடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவன என்று கொள்க; ஏனைய மன நிகழ்ச்சி. பிறவு மன்ன. இவற்றின் பிரிவை நாடக நூலிற் காண்க. (1) 246. நாலிரண் டாகும் பாலுமா ருண்டே. என்-னின், மேலதற்கோர் புறனடை. மற்சொல்லப்பட்ட பதினாறு பொருளும் எட்டென வரும் பக்கமு முண்டு என்றவாறு. அவையாவன சுவை, குறிப்புப் பதினாறனையுஞ் சுவையுள் அடக்கிச் சுவை யெட்டுமாக்கி நிகழ்த்தல். (2) 247. நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகையென் றப்பா லெட்டா மெய்ப்பா டென்ப. என்-னின், மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. நகை முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் என்றவாறு. மெய்ப்பாடென்பது யாதோவென்னின், “உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதன் மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே.” எனச் செயிற்றியனார் ஓதுதலின் அச்சமுற்றான்மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும். மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடா யிற்று. அஃதேல், இவ் விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின், ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்ய வேண்டுதலின் ஈண்டுங் கூற வேண்டுமென்க. “உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளின் மெய்ப்பட முடிவது மெய்ப்பா டாகும்.” (தொல். பொ. 505) என இவ்வாசிரியன் மெய்ப்பாடுஞ் செய்யுளுறுப்பென ஓதினமை உணர்க. நகை என்பது இகழ்ச்சியிற் பிறப்பது. அழுகை என்பது அவலத்திற் பிறப்பது. இளிவரல் இழிப்பிற் பிறப்பது. மருட்கை வியப்பிற் பிறப்பது. அச்சம் அஞ்சத் தகுவனவற்றாற் பிறப்பது. பெரு மிதம் வீரத்திற் பிறப்பது. வெகுளி வெறுக்கத் தக்கனவற்றாற் பிறப்பது. உவகை சிருங்காரத்திற் பிறப்பது. (3) 248. எள்ள விளமை பேதைமை மடனென் றுள்ளப் பட்ட நகைநான் கென்ப. என்-னின், நகையும் நகைப்பொருளும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. எள்ளுதற் பொருண்மை முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் நகைப்பொருளாம் என்றவாறு. எனவே காரணம் பற்றி நகையும் நான்காயின. “நகையெனப் படுதல் வகையா தெனினே நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கு நகையொடு நல்லவை நனிமகிழ் வதுவே.” என்பதனான் நகைபடுபொருள் கண்டதன்வழி முறுவலொடு வரும் மகிழ்ச்சிப் பொருளாமாறு நகையாவது என்று கொள்க. “உடனிவை தோன்று மிடமியா தெனினே முடவர் செல்லுஞ் செலவின் கண்ணு மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணுங் கவற்சி பெரிதுற் 7றுரைப்போர் கண்ணும் பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ் சுற்றத் தோரை யிகழ்ச்சிக் கண்ணு மற்று மோர்வர்கட் பட்டோர் கண்ணுங் குழவி கூறு மழலைக் கண்ணு மெலியோன் கூறும் வலியின் கண்ணும் வலியோன் கூறும் மெலிவின் கண்ணும் ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங் கல்லார் கூறுங் கல்விக் கண்ணும் பெண்பிரி தன்மை யலியின் கண்ணு மாண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணுங் களியின் கண்ணுங் காவாலிக் கண்ணுந் தெளிவிலா ரொழுகுங்கடவுளார் கண்ணு 8மாரியர் கூறுந் தமிழின் கண்ணுங் காரிகை யறியாக் காமுகர் கண்ணுங் கூனர் கண்ணுங் குறளர் கண்ணு மூமர் கண்ணுஞ் செவிடர் கண்ணு மான்ற மரபி னின்னுழி யெல்லாந் தோன்று மென்ப துணிந்திசி னோரே.” என இவ்வகையெல்லாம் உளவெனச் செயிற்றியனார் ஓதுதலின், அவை நான்காகியவாறு என்னையெனின், முடவர் செல்லுஞ் செலவு எள்ளுதற் பொருண்மையாயிற்று; மடவோர் சொல்லுஞ் சொல் மடமைப் பொருண்மையாயிற்று; கவற்சி பெரிதுற் றுரைப்போர் கூற்றுப் பேதைமையாயிற்று; குழவி கூறு மழலை இளமைப் பொருளாயிற்று; ஏனைய வெல்லாம் இவற்றின்பாற் படுதல் காண்க. புணர்ச்சி நிமித்தமாகக் கூற்று நிகழ்ந்துழி வரும் நகை இளமை என்பதனாற் கொள்க. இப் பொருண்மை செயிற்றியத்தில் ‘வலியோன் கூறும் மெலிவு’ என்பதனாற் கொள்க. மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னையெனின், மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல்; பேதைமை யென்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல். எள்ளல் இளமை எனப் பொதுப்பட்டு நின்றமையான் தன் மாட்டு நிகழும் வழியுங் கொள்க. உதாரணம்: “நகையாகின்றே தோழி” என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள், “தண்துறை யூரன் றண்டா ரகலம் வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் றெருவிற் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யழிட் டெம்மனைப் புகுதந் தோனே யவற்கண்டு மெய்ம்மலி யுவகையென் மறையினெ னெதிர்சென் றிம்மனை யன்றஃ தும்மனை யென்ற வென்னுந் தன்னு நோக்கி மம்மர் நெஞ்சினன் றொழுதுநின் றதுவே.” (அகம். 56) எனக் கூறி ‘நகையாகின்றே தோழி’ என்றமையின் எள்ளல் பற்றி நகை தோன்றியது. ஏனவும் வந்தவழிக் காண்க. (4) 249. இழிவே யிழவே யசைவே வறுமையென விளிவில் கொள்கை யழுகை நான்கே. என்-னின், இஃது அழுகையாமாறும் அதற்குப் பொருளு முணர்த்துதல் நுதலிற்று. இழிவு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மை யும் அழுகைக்குப் பொருளாம் என்றவாறு. இழிவு என்பது - பிறர் தன்னை யெளியன் ஆக்குதலாற் பிறப்பது. இழவாவது - உயிரானும் பொருளானும் இழத்தல். அசைவென்பது - தளர்ச்சி. அது தன்னிலையிற் றாழ்தல். வறுமை என்பது - நல்குரவு. இவை ஏதுவாக அழுகை பிறக்கும் என்றவாறு. இதுவுந் தன்மாட்டுற்றதனானும் பிறர்மாட்டுற்றதனானும் பிறக்கும். “கவலை கூர்ந்த கருணையது பெயரே யவல மென்ப வறிந்தோ ரதுதான் னிலைமை யிழந்து நீங்குதுணை யுடைமை தலைமை சான்ற தன்னிலை யழிதல் சிறையணி துயரமொடு செய்கையற் றிருத்தல் குறைபடு பொருளொடு குறைபா டெய்தல் சாப மெய்தல் சார்பிழைத்துக் கலங்கல் காவ லின்றிக் கலக்கமொடு திரிதல் கடகந் தொட்டகை கயிற்றொடு கோடல் முடியுடைச் சென்னிபிற ரடியுறப் பணித லுளைப்பரி பெருங்களி றூர்ந்த சேவடி தளைத்திளைத் தொலிப்பத் தளர்ந்தவை நிறங்கிள ரகல நீறொடு சேர்த்தல் மறங்கிளர் கயவர் மனந்தவப் புடைத்தல் கொலைக்களங் கோட்டங் கோல்முனைக் கவற்சி யலைக்கண் மாறா வழுகுர லரவ மின்னோ ரன்னவை யியற்பட நாடித் துன்னின ருணர்க துணிவறிந் தோரே.” “இதன்பய மிவ்வழி நோக்கி யசைந்தன ராகி யழுத லென்ப.” என்பன செயிற்றிய மாகலின். இவையெல்லாம் இந் நான்கினுள் அடங்குமாறு அறிந்துகொள்க. இதற்குச் செய்யுள். “ஐயோ வெனயான் புலியஞ் சுவலே யயத்தனென் கொளினே மார்பெடுக் கல்லேன் என்போற் பெருவிதுப் 9புறுக நின்னை யின்னா துற்ற வறனில் குறே நிரைவளை முன்கை பற்றி வரைநிழற் சேர நடந்திசிற் சிறிதே.” (புறம். 255) இஃது இழிவுபற்றி வந்த அழுகை. ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. (5) 250. மூப்பே பிணியே வருத்த மென்மையோ டியாப்புற வந்த விளிவர னான்கே. என்-னின், இளிவரலாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. மூப்பு முதலாகச் சொல்லப்பட்ட நான்கு பொருண்மை யும் இளிவரலுக்குப் பொருளாம் என்றவாறு. இவை நான்குந் தன்மாட்டுத்தோன்றினும் பிறர்மாட்டுத் தோன்றினும் நிகழும். உதாரணம்: “தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா விறக்கு விவண்மாட்டுங் - காழிலா மம்மர்கொண் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோ லம்மனைக்கோ லாகிய ஞான்று.” (நாலடி. 14) என்றது பிறர்மாட்டு மூப்புப்பற்றி இழிப்புப் பிறந்தது. பிணி யென்பது - பிணியுறவு கண்டு இழித்தல். அதனானே உடம்பு தூயதன்றென இழித்தலுமாம். “மாக்கேழ் மடநல்லா யென்றரற்றுஞ் சான்றவர் நோக்கார்கொ னொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோ ரீச்சிற கன்னதோர் தோலறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல்.” (நாலடி. 41) இஃது உடம்பினை அருவருத்துக் கூறுதல். வருத்தமென்பது - தன்மாட்டும் பிறர்மாட்டும் உளதாகிய வருத்தத் தானும் இழிப்புப் பிறக்கும் என்றவாறு. உதாரணம்: “செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ யுற்றா ரறிவதொன் றன்று.” (குறள். 1255) இது பிறன் வருத்தங் கண்டு இழிப்புப் பிறந்தது. உதாரணம்: “தொடர்ப்படு ஞமலியி 10னிடர்ப்படுத் திரீஇய கேளல் கேளிர் 11வேளாண் சிறுபத மதுகை யின்றி வயிற்றுத்தீத் 12தணியத் தாமிரந் துண்ணு 13மளவை 14யீன்ம ரோவிவ் வுலகத் தானே.” (புறம். 74) இது தன்மாட்டு வருத்தத்தானே இழிப்புப் பிறந்தது. மென்மை என்பது - நல்குரவு. “அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.” (குறள். 1047) “இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.” (குறள். 1044) என வரும். இன்னும் ‘யாப்புற’ என்பதனான் இழிக்கத்தக்கன பிறவுங் கொள்க. அவை நாற்றத்தானும் தோற்றத்தானும் புல்லியன. இவற்றிற் கெல்லாஞ் செய்யுள் வந்தவழிக் காண்க. (6) 251. புதுமை பெருமை சிறுமை யாக்கமொடு மதிமை சாலா மருட்கை நான்கே. என்-னின், இது மருட்கை யாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் நுதலிற்று. புதுமை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினானும் மருட்கை பிறக்கும் என்றவாறு. மதிமை சாலா மருட்கை என்றமையான் அறிவுடையார் இப் பொருட்கண் வியவார் என்று கொள்க. புதுமையாவது - யாதொன்றானும் எவ்விடத்தினும் எக்காலத்தினுந் தோன்றாததோர் பொருள் தோன்றியவழி வியத்தல். அது கந்திருவர் அந்தரம் போவது கண்டு வியத்தல் போல்வன. பெருமை என்பது - பண்டு கண்ட பொருள்கள் போலாத பொருள்கள் அவ்வளவிற் பெருத்தன கண்டு வியத்தல். அவை மலை யும் யானையும் செல்வமும் முன்கண்ட அளவின் மிக்கன கண்டவழி வியப்பு வரும். சிறுமை என்பது - பிறவும் நுண்ணியன கண்டு வியத்தல். அது ‘கடுகின்கட் பல துளை’ போல்வன. ஆக்கம் என்பது - ஒன்றன் பரிணாமங் கண்டு வியத்தல். அது தன்னளவின்றி நன்னிலஞ் சார்பாகத் தோன்று மரமுதலாயின ஆகியவழி வியத்தலும், நல்கூர்ந்தான் யாதொன்று மிலாதான் ஆக்கமுற்றானாயின், அதற்குக் காரண முணராதான் அது கண்டு வியத்தலும், இளையான் வீரங் கண்டு வியத்தலுமாம். பிறவும் உலகத்து வியக்கத் தகுவன எல்லாம் இவற்றின்பாற் படுத்திக் கொள்க. ‘இருந்தவேந்தன்’ என்னும் அகப் பாட்டினுள், “............. ................. பெருந்தேர் யானும் 15மேறிய தல்லது வந்த வாறு நனியறிந் தன்றோ விலனே தாவு முயற்பற ழுகளு முல்லையம் புறவிற் கவைக்கதிர் வரகின் சீறூர் ராங்கண் மெல்லிய லரிவை யில்வயி னிறீஇ 16யிழிமினிலனென்ற நின்மொழி மருண் டிசினே.” (அகம். 384) என்றது வியந்தவாறு. “பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழ லொருமுலை யிழந்தாளோர் திருமா பத்தினிக் கமரர்க் கரசன் றமர்வந் தீண்டியவள் காதற் கொழுநனைக் காட்டி யவளோடு கட்புலங் காண விட்புலம் போகிய திறும்பூது போலு மதறிந்த ணீயென.” (சிலப். பதிகம்) என்றது புதுமை. (7) 252. அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப் பிணங்கல் சாலா வச்ச நான்கே. என்-னின், அச்சமாகிய மெய்ப்பாடும் அதன் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. அணங்கு முதலாகச் சொல்லப்பட்ட நான்கினும் பிறக்கும் மாறுபடுதல் அமையாத அச்சம் நால்வகைப்படும் என்றவாறு. பிணங்கல் சாலுமாயின் நடுக்கம் முதலாயின உளவாகா; அவை பிணங்கல் சாலாத வழியே உளவாவ வென்று கொள்க. அவை நாலச்சமும் வருமாறு:- கொலை களவு கட்காமம் பொய் யென்பனவற்றை 17நிகழ்த்தின வர்க்கு அரசனான் அச்சம் வருதலின் அவனும் அஞ்சு பொருளாயினான். உதாரணம்: “மையல் வேழ மடங்கலி னெரிதர வுய்விட மறியே மாகி யொய்யெனத் திருந்துகோ லெல்வளை தெளிர்ப்ப நாண்மறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்தவற் பொருந்திச் சூருறு மஞ்ஞையி நடுங்கி” (குறிஞ்சிப். 165 - 169) என வரும். பிறவு மன்ன. (8) 253. கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே. என்-னின், பெருமித மாமாறும் அதன் பொருண்மையும் உணர்த்துதல் நுதலிற்று. கல்வியானுந் தறுகண்மையானும் புகழ்மையானும் கொடையானும் பெருமிதம் நால்வகைப்படும் என்றவாறு. இவை நான்கும் பிறனொருவனின் மிகுத்தவழிப் பிறக்கு மகிழ்ச்சி பெருமிதம் என்று கொள்க. பெருமிதமாவது - தன்னைப் பெரியனாக நினைத்தல். “உறுசுடர் வாளோ டொருகால் விலங்கிற் சிறுசுடர்முற் பேரிருளாங் கண்டா - யெறிசுடர்வேற் றேங்குலாம் பூந்தெரியற் றேர்வேந்த நின்னொடு பாங்கலா வீரர் படை.” (புறப். வெ.7:8) இது வீரம் பற்றி வந்தது. பிறவு மன்ன. (9) 254. உறுப்பறை குடிகோ ளலைகொலை யென்றன வெறுப்ப வந்த வெகுளி நான்கே. என்-னின், வெகுளியாமாறும் அதற்குப் பொருளும் உணர்ததுதல் நுதலிற்று. உறுப்பறை முதலாகச் சொல்லப்பட்ட நான்கனானும் வெகுளி பிறக்கும் என்றவாறு. இப்பொருள் நான்குந் தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க. உறுப்பறையாவது - அங்கமாயினவற்றை 18அறுத்தல். குடிகோளாவது - கீழ்வாழ்வாரை நலிதல். அலை என்பது - வைதலும் புடைத்தலும். கொலை என்பது - கொல்லுதற் கோர்ப்படுதல். ஊடற்கண்ணும் வெகுளி தோற்றுமால் எனின், அஃது இன்பத்திற்குக் காரணமாதலான் தலைமகள் புருவநெரிவும் வாய்த் துடிப்புங் கண்ட தலைமகற்கு வெகுட்சி பிறவாது உவகை பிறக்கும். தலைமகன் வெகுளுவனாயின் அதன்பாற் படும். “உறுதுப் பஞ்சா துடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை யருஞ்சமந் ததையத் தாக்கி முரசமொ டொருங்ககப் 19படே(அ) னாயின்.” (புறம். 72) என்பது வெகுளி பற்றி வந்தது. பிறவு மன்ன. (10) 255. செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென வல்ல னீத்த வுவகை நான்கே. என்-னின், உவகை யாமாறும் அதன்பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. செல்வ நுகர்ச்சியானும், கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலன்களான் நுகர்தலானும், மகளிரொடு புணர்தலா னுஞ், சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டினானும் உவகை பிறக்கும் என்றவாறு. “ஒத்த காமத் தோர்வனு மோர்த்தியு மொத்த காமத் தோர்வனொடு பலரு மாடலு பாடலுங் கள்ளுங் 20களியு மூடலு முணர்தலுங் கூடலு மிடைந்து புதுப்புனல் பொய்கை பூம்புன லென்றிவை விருப்புறு மனத்தொடு 21விழைந்து நுகர்தலும் பயமலை மகிழ்தலும் பனிக்கட லாடலும் நயனுடை மரபி னன்னகர்ப் பொலிதலுங் குளம்பரிந் தாடலுங் கோலஞ் செய்தலுங் கொடிநகர் புகுதலுங் கடிமனை விரும்பலுந் துயிற்க ணின்றி யின்பந் துய்த்தலு மயிற்கண் மடவா ராடலுண் மகிழ்தலு நிலாப்பயன் கோடலு நிலம்பெயர்ந் துறைதலுங் கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலு மோர்ங்கா ராய்ந்த வின்னவை பிறவுஞ் சிருங்கா ரம்மென வேண்டுப விதன்பயன் றுன்ப நீங்கத் துகளறக் கிடந்த வின்பமொடு புணர்ந்த வேக்கழுத் தம்மே.” எனச் செயிற்றியனார் விரித்தோதினா ராயினும் இவையெல்லாம் இந் நான்கனுள் அடங்கும். “தம்மி லிருந்து தமதுபாத்€ துண்டற்றா லம்மா வரிவை முயக்கு.” (குறள். 1107) என்றவழித் தம்மிலிருந்து தமது பாத்துண்ட செல்வ நுகர்ச்சி. முயக்கம். புணர்ப்பு. “வையை வருபுன லாட லினிதுகொல் செவ்வேற்கோ குன்ற நுகர்த லினிதுகொல் வைவ்வே னுதியன்ன கண்ணார் துணையாக எவ்வாறு செய்வாங்கொல் யாமென நாளும் வழிமயக் குற்று மருட னெடியா னெடுமாடக் கூடற் கியல்பு.” (பரிபாடல்) என வரும். பிறவு மன்ன. (11) 256. ஆங்கவை ஒருபா லாக வொருபா லாக வுடைமை யின்புற னடுவுநிலை 22யருள றன்மை யடக்கம் வரைத லன்பெனாஅக் கைம்மிக னலிதல் சூழ்ச்சி வாழ்த்த னாண றுஞ்ச லரற்றுக் கனவெனாஅ முனித னினைதல் வெரூஉதன் மடிமை கருத லாராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக் கையா றிடுக்கண் பொச்சாப்புப் பொறாமை வியர்த்த லைய மிகைநடுக் கெனாஅ வவையு முளவே யவையலங் கடையே. என்-னின், மேற்சொல்லப்பட்ட எண்வகை மெய்ப்பாடும் ஒழிய வேறுபட்டு வருவன சில மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்டன ஒருபக்கமாக, ஒரு பக்கம், உடைமை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் உள, அவை யல்லாத விடத்து என்றவாறு. எனவே, ஆமிடத்து இவை யங்கம் ஆகும். உடைமையாவது - யாதானு மோர்பொருளை உடையனா யினமையான் வருதலாகும் மன நிகழ்ச்சி. “நெடுந லியானையுந் தேரு மாவும் படையமை 23மறவரு முடையம் யாமென் றுறுதுப் பஞ்சாது.” (புறம். 72) என வரும். இன்புறலாவது - நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது. “கெடுத்தெடீய நன்கல மெடுத்துக் கொண்டாங்கு.” (நற். 182) “......... .............. ................ உள்ளிய வினைமுடித் தன்ன வினியோள்.” (நற். 3) “விட்டகன் றுறைந்த நட்டோர்க் கண்ட நாளினு மினிய நல்லாள்.” எனக் காம நுகர்ச்சியின்றி வரும் இன்புறுதல். நடுவுநிலைமையாவது - ஒருமருங்கு ஓடாது நிகழும் மன நிகழ்ச்சி. “சமஞ்செய்து சீர்தூக்குங் கோல்போல் லமைந்தோர்பாற் கோடாமை சான்றோர்க் கணி.” (குறள். 118) என வரும். அருளாவது - எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல். “அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்.” (கலித்.11) என்றாற்போல வருவது. தன்மை யென்பது - சாதியியல்பு. பார்ப்பார் அரசர் இடையர் குறவர் என்றின்னோர்மாட்டு ஒருவரை யொருவர் ஒவ்வாமற் கிடக்கு மியல்பு. அது மெய்க்கட்டமையின்கண் வேறுபட்டு வருதலின் மெய்ப்பாடாயிற்று. “வயலைக் கொடியின் வாடிய மருங்கி 24னுயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்” (புறம். 315) என்றும், “25புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய வெய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின் மறலியன்ன களிற்றின்மிசை யோனே.” (புறம். 13) என்றும், “காயாம்பூக் கண்ணிக் கருந்துவ ராடையை மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி 26நின்றாயோர் ராயனை யல்லை.” (கலித். 108) என்றும், “தேனொடு நீடு மயிற்குற மாக்கள்” என்றும் வரும். அடக்கம் என்பது - மன மொழி மெய்யி னடங்குதல். அது பணிந்த மொழியும் தானை மடக்கலும் வாய் புதைத்தலும் போல்வன. “ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின்” (குறள். 126) என்றும், “யாகாவா ராயினும் நாகாக்க” (குறள். 127) என்றும், “நிலையிற் றிரியா தடங்கியான் றோற்றம்” (குறள். 124) என்றும் வருவன. இதுவும் அடங்காமை போலாமையின் மெய்ப்பா டாயிற்று. வரைவு என்பது - செய்யத் தகுவனவும் தவிரத் தகுவனவும் வரைந்து ஒழுகும் ஒழுக்கம். அது, “பெண்விழைந்து பின்செலினும் தன்செலவிற் குன்றாமை கண்வீழ்ந்து 27கையுறினுங் காதல் பொருட்கின்மை” (திரிகடுகம் 29) என்றாற்போல வருவன. அன்பு என்பது - பயின்றார்மாட்டுச் செல்லுங் காதல். “புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை யகத்துறுப் பன்பி லவற்கு.” (குறள். 79) என்பதனான் அறிக. கைம்மிகல் என்பது - குற்றமாயினுங் குணமாயினும் அளவின் மிகுதல். அது நிலையின் வேறுபடுதலின் மெய்ப் பாடாயிற்று. கையென் பது அளவுகுறித்ததோர் இடைச் சொல். “காதல் கைம்மிகல்” (தொல். மெய்ப்பாட்டியல் 23) என்றும், “குணனிலனாய்க் குற்றம் பலவாயின்” (குறள். 868) என்றும் இவ்வாறு வருவன. நலிதல் என்பது - பிறரை நெருக்குதல். அதன்கண் நிகழும் மன நிகழ்ச்சி நலிதலாயிற்று. இதுவும் மேற் சொல்லப்பட்ட எட்டும் இன்மையின் ஈண்டு ஓதப்பட்டது. “பகைமெலியப் பாசறையு ளான்.” (நெடுநல். இறுதிவெண்பா.) எனவரும். பிறவும் அன்ன. சூழ்ச்சி என்பது - எண்ணம். “சூழ்வார்கண் ணாக லொழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.” (குறள். 445) இதுவுமோர் மன நிகழ்ச்சி. வாழ்த்தல் என்பது = பிறனை வாழ்த்துதல். அதுவும் மேற்கூறப்பட்டன போலாமையான் வேறொரு மெய்ப்பாடாக ஓதப்பட்டது. “வாழியாதன் வாழி” (ஐங்குறு. 1) என்றும், “எங்கோ வாழிய குடுமி” (புறம். 9) என்றும் இவ்வாறு வருவழி ஆண்டு வரும் மன நிகழ்ச்சி மெய்ப்பாடாம். அஃதேல் வைதலும் மெய்ப்பாடாதல் வேண்டும் எனின், அது வெகுட்சியின் முதிர்வு. இஃது அன்பின் முதிர்வாகாதோ எனின், அன்பின்றியும் அரசன் முதலாயினாரைச் சான்றோர் வாழ்த்துதலின் அடங்காதென்க. நாணல் என்பது .... தமக்குப் பழி வருவன செய்யாமை. “பிறர்பழியுந் தம்பழியும் நாணுவார் நாணுக் குறைபதி யென்னு முலகு.” (குறள். 1015) “நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டா னாண்டுறவார் நாணாள் பவர்.” (குறள். 1017) என வரும். துஞ்சல் என்பது - உறக்கம். அதுவும் உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று. “........................ முனிவின்றி நனந்தலை யுலகமுந் துஞ்சும்.” (குறுந்.6) என வரும். அரற்று என்பது - உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு. அஃதும் ஏனைச் சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று. முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது. “பாயல்கொண் டென்றோட் கனவுவா 28ராய்கோற் றொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ விடுமருப்பி யானை விலங்குதேர்க் கோடும் நெடுமலை வெஞ்சுரம் போகி 29நடுநின்று செய்பொருள் முற்று மளவு.” (கலித் 24) என வரும். இது, களவியலின் பாற்படுமெனின், அரற்றென்பது ஒரு பொருளைப் பலகாற் கூறுதல்; அஃது அப்பொருண்மேற் காதலாற் கூறுதலின் அதுவுமோர் மெய்ப்பாடாயிற்றெனவுமாம். “பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப் புனனாடன் பேரே வரும்.” (முத்தொள். 104) என வரும் என்பது கொள்க. கனவுநிலை நனவு போலாமையின் மெய்ப்பாடாயிற்று. கனவு - “நனாவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான் கண்ட பொழுதே யினிது” (குறள். 1215) என வரும். முனிதல் என்பது - வெறுத்தல். “காலை யெழுந்து கடுந்தேர் பண்ணி வாலிழை மகளிர்த் தழிஇச் சென்ற மல்ல லூரன் நெல்லினன் பெரிதென மறுவருஞ் சிறுவர் தாயே தெறுக வம்மவித் திணைப்பிறத் தல்லே.” (குறுந். 45) எனக் குடிப் பிறத்தலை வெறுத்தவாறு காண்க. நினைத்தல் என்பது - கழிந்ததனை நினைத்தல். அது மறந்தாங்கு மறவாது பின்புந் தோற்றுதலின் மெய்ப்பாடாயிற்று. “நினைப்பவர் போன்று நினையார்கொ றும்மல் சினைப்பது போன்று கெடும்.” (குறள். 1203) வெரூஉதல் என்பது - அச்சம் போல நீடுநில்லாது கதுமெனத் தோன்றி மாய்வதோர் குறிப்பு. அதனைத் துணுக்கு என்றானென்பது. “ஒரூஉநீ யெங்கூந்தல் கொள்ளல்யா நின்னை வெருவு தூஉங் காணுங் கடை.” (கலித். 87) என்றவழி அஞ்சத் தகுவது கண்டு அஞ்சுதலின்மையும் அஞ்சினார்க்குள்ள வேறுபாடு அதன்பின் நிகழாமையும் காண்க. மடி என்பது - சோம்புதல். “மடிமை குடிமைக்கட் டங்கிற்றன் னொன்னார்க் கடிமை புகுத்தி விடும்.” (குறள். 608) என்றவழி மடி யென்பதோர் மெய்ப்பாடுண்மை யறிக. கருதல் என்பது குறிப்பு. “குறிக்கொண்டு நோக்காமை யல்லா லொருகண் சிறக்கணித்தாள் போல நகும்.” (குறள். 1095) என்றவழிக் குறிக்கோள் என்பதோர் மெய்ப்பாடுண்மை யறிக. ஆராய்ச்சி என்பது - ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மைத்தென வாராய்தல். ஆராய்தல் எனினுந் தெரிதல் எனினுந் தேர்தலெனினும் நாடலெனினும் ஒக்கும். “நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த” (குறள். 511) “ஆயு மறிவினர்” (குறள். 918) “தேரான் பிறனைத் தெளிந்தான்.” (குறள். 508) எனவும் ஆராய்த லென்பது தோற்றியவாறு காண்க. விரைவு என்பது - ஒருபொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான் கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மன நிகழ்ச்சி. “கன்றமர் கறவை மான முன்சமத் தொழிந்ததன் றோழற்கு வருமே.” (புறம். 275) “போழ்தூண் டூசியின் விரைந்தன்று மாதோ.” (புறம். 82) என வரும். பிறவு மன்ன. உயிர்ப்பு என்பது - முன்பு விடும் அளவினன்றிச் 30சுவாதம் நீள விடுதல். “......... பானாட் பள்ளி யானையி னுயிர்த்தெ னுள்ள மின்னுந் தன்னுழை யதுவே.” (குறுந். 142) எனவரும். கையாறு என்பது - காதலர் பிரிந்தால் வருந் துன்பமும் அந்நிகரன வும் வருவது. “தொடிநிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடிமனை காத்தோம்ப வல்லுவள் கொல்லோ.” (கலித். 24) என்றவழிக் கையாறென்பதும் ஒரு மெய்ப்பாடாயிற்று. இடுக்கண் என்பது - துன்பமுறுதல். மேலதனோடு இதனிடை வேறுபாடு என்னை யெனின், கையாறு என்பது இன்பம் பெறாமையான் வருந் துன்பம்; இடுக்கணாவது துன்பமாயின வந்துறுதல். “அடுக்கி வரினு மழிவிலா னுற்ற விடுக்க ணிடுக்கட் படும்.” (குறள். 625) என்றவழி இடுக்கணென்பது வருவதொன்றாகக் கூறியவாறு காண்க. கையாறென்பது - மனத்தின்கண் நிகழ்வதோர் மெய்ப்பாடு. இடுக்கணென்பது - மெய்யானுந் தோற்றுவதோர் மெய்ப்பாடு. பொச்சாப்பு என்பது - 31மறத்தல். “பொருடீர்ந்த 32பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த மாசறு காட்சி யவர்.” (குறள். 199) என்பதனாற் பொச்சாப்பு மறத்தலாயிற்று. பொறாமை என்பது - பிறர்க்கு ஆக்க முதலாயின கண்டவழி யதனைப் பொறாது நடக்கும் மனநிகழ்ச்சி. அதனை அழுக்காறு என்ப. “அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி யுய்த்துவிடும்.” (குறள். 168) என்றவழி அழுக்காறு என ஒரு மெய்ப்பாடு உளதாகியவாறு கண்டு கொள்க. வியர்த்தல் என்பது - தன்மனத்தின் வெகுட்சி தோன்றிய வழிப் பிறப்பதோர் புழுக்கம். “பொள்ளென வாங்கே 33புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்ப 34ரொள்ளி யவர்.” (குறள். 487) இதன்கண். உள்வேர்ப்பர் என்றதனான் மன நிகழ்ச்சி ஆகியவாறு காண்க. ஐயம் என்பது - ஒரு பொருளைக் கண்டவழி யிதுவெனத் துணியாத நிலைமை. “அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலுமென் னெஞ்சு.” (குறள். 1081) என்றவழி, ஐயம் மனத்தின்கண் நிகழ்ந்தவாறு காண்க. மிகை என்பது - ஒருவனை நன்கு மதியாமை. “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல்.” (குறள். 158) இதனுள் மிகுதி யென்பது நன்கு மதியாமையாம். நடுக்கம் என்பது - யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி. “கொடுங்குழாய் துறக்குந ரல்லர் நடுங்குதல் காண்மார் நகைகுறித் தனரே.” (கலித். 13) என வரும். இத்துணையும் கூறப்பட்டன அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவென்று கொள்க. (12) 257. புகுமுகம் புரிதல் பொறிநுதல் 35வியர்த்த னகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு தகுமுறை நான்கே யொன்றென மொழிப. என்-னின், மேல் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொது வாகிய மெய்ப்பாடு உணர்த்தி, இனி அகத்திற்கே யுரியன உணர்த்துகின்றான்; முற்பட்ட அவத்தை பத்தினும் முதலவத்தைக்கண் பெண்பாலார் குறிப்பினான் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. புகுமுகம் புரிதல் என்பது - தலைமகன் புணர்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல். அஃதாவது. “கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர னோக்கமிம் மூன்று முடைத்து.” (குறள். 1085) என்றாற்போலக் கூறியவழி ஒருவாது நிற்றல். பொறிநுதல் வியர்த்தல் என்பது - அவ்வழி முகம்புக்கு அவனைப் பொருந்திய தலைமகள் உட்கும் நாணும் வந்துழி வரும் நுதல் வியர்ப்பு. நகுநய மறைத்தல் என்பது - அதன்பின்னர்த் தலைமகன் கூறுவன கேட்டு நகை வந்துழி, நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல். சிதைவு பிறர்க்கின்மை என்பது - தன்மனனழிவு பிறர்க்குப் புலனாகாமை நிற்றல். ஒடு எண்ணின்கண் வந்தது. தகுமுறை நான்கே யொன்றென மொழிப என்பது - இவ்வாறு தகுதியுடையவாய் முறைப்பட வருவன நான்கும் முதல் அவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடு என்றவாறு. (13) 258. கூழை விரித்தல் காதொன்று களைத லூழணி தைவர லுடைபெயர்த் துடுத்தலொடு கெழீஇய நான்கே யிரண்டென மொழிப. என்-னின், இரண்டாம் அவத்தையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. கூழை விரித்தல் முதலாகச் சொல்லப்பட்ட முறைமை யுடைய நான்கும் இரண்டாம் அவத்தை மெய்ப்பாடு என்றவாறு. கூழை விரித்தலாவது - மேல் நகுநயமறைத்தாள் காதன்மேல் வேட்கை செல்லுமாயின் வாளாது நிற்றலாற்றாது மயிரினைக் குலைத்தல். காதொன்று களைதல் என்பது - காதிலணிந்த தொன்றை வீழப்பண்ணி யதனைத் தேடுகின்றாள் போல நிற்றல். ஊழணி தைவரல் என்பது - முறைமையாக அணிந்த வணியைத் தைவருதல் என்றவாறு. உடை பெயர்த் துடுத்தல் என்பது - ஆடையைக் குலைத்தடுத்தல். அவை நான்குங் காமத்திற் குறியிலாதார் தலைமக்கள் முன் செய்யாமையாற் றனது காமக் குறிப்பினானும் அவள் வாளாது நிற்பின் இதற்குக் காரணம் என்னையெனப் பிறர் ஐயப்படாமற் சிறிது பொழுதாயி னும் இவ்விடை நிற்கலாகும் எனவும் இவை நிகழ்த்தும் என்றவாறு. (14) 259. அல்கு றைவர லணிந்தவை திருத்த லில்வலி யுறுத்த லிருகையு மெடுத்தலொடு சொல்லிய நான்கே மூன்றென மொழிப. என்-எனின், மூன்றாம் அவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. அல்குல் தைவரல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் மூன்றாம் அவத்தை மெய்ப்பாடென்க என்றவாறு. அல்குல் தைவரல் என்பது - மேல் உடைபெயர்த்துடுத்தவள் அதனைப் பேணும் மதிப்பு உள்வழித் தம்மைப் பேணுதல் பெண்டிர்க்கு அழகு. அணிந்தவை திருத்தலும் அவ்வாறே கொள்க. இல்வலியுறுத்தல் என்பது - தம் இல்லத்தோர் வலி யுறுத்தல். அது சார நினைத்தாரைத் தமது இற்பிறப்புச் சொல்லி இசைவில்லாரைப் போல மறுத்துக் கூறுதல். இருகையு மெடுத்தல் என்பது - அவ்வழி மறுத்த வாய்பாட்டாற் கூறினும் இரண்டு கையினையும் பிறிதோர் காரணம் பற்றிக் கிளர்த்தல். தலைமக்கள் முன்னர்ப் பெண்டிர் கை கிளர்த்தாராதலாற் புணர்ச்சிக் கோர்ப்பட்ட வுள்ளத்தான் கிளர்த்து மென்க. இதனாற் பயன் நாண் நீங்கல். (15) 260. பாராட் டெடுத்தன் மடந்தப வுரைத்த லீரமில் கூற்ற மேற்றலர் நாணல் கொடுப்பவை கோட லளப்படத் தொகைஇ யெடுத்த நான்கே நான்கென மொழிப. என்-னின், நான்காம் அவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. பாராட்டெடுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் நான்காமவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடென்க. பாராட்டெடுத்தலாவது - தலைமகன் நின்ற நிலையையுங் கூறிய கூற்றையும் தனித்தவழியும் எடுத்து மொழிதல். மடந்தப வுரைத்தல் என்பது - பெண்டிரது இயல்பாகிய மடப்பங் கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும்வழி யதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல். ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல் என்பது - ஊராருஞ் சேரியாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அலர் ஆயிற்றென நாணுதல். கொடுப்பவை கோடல் என்பது - கண்ணியாயினுந் தழையாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கோடல். மனத்தினான் உரிமை பூண்டாலல்லது பிறன் பொருள் வாங்காமையின், இதுவுமோர் மெய்ப்பாடாக ஓதப்பட்டது. (14) 261. தெரிந்துடம் படுத றிளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு பொருந்திய நான்கே யைந்தென மொழிப. என்-னின், ஐந்தா மவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று. தெரிந்துடம்படுதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஐந்தாம் அவத்தைக்கு மெய்ப்பாடாம் என்றவாறு. தெரிந்துடம்படுதலாவது - தலைமகன் கொடுப்பவை கொண்ட தலைமகள் ஆராய்ந்து உடம்படுதல் என்றவாறு. ஆற்றாமை பெருகுகின்ற காதலின் இத்துணையும் மறுத்தவள் உடம்படுதல் என்றார். அவ்வழியுந் தெரிந்துடம்படுதல் என்றமையான், ஆராய்ந்தல்லது புணர்ச்சிக்கு உடம்படாமை கொள்க. திளைப்பு வினை மறுத்தல் என்பது - விளையாட் டாயமொடு திரிவாள் வேட்கை நலிதலான் அவ்விளையாட்டு வினையை மறுத்தல் என்றவாறு. கரந்திடத்தொழிதல் என்பது - தலைமகனைக் காண்டல் வேட்கை யான் ஒளித்துப் பார்த்தொழிதல் என்றவாறு. கண்டவழி யுவத்தல் என்பது - தலைமகனைக் கண்டவழி மகிழ்தல் என்றவாறு. (17) 262. புறஞ்செயச் சிதைதல் புலம்பித் தோன்றல் கலங்கி மொழிதல் கையற வுரைத்தல் விளம்பிய நான்கே யாறென மொழிப. என்-னின், ஆறாமவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. புறஞ்செயச் சிதைதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஆறாம் அவத்தைக்கண் மெய்ப்பாடாம் என்றவாறு. புறஞ்செயச் சிதைதலாவது - தலைமகள் கோலஞ் செய்யும் வழியதற்கு மகிழ்ச்சியின்றிச் சிதைவுடையளாதல். புலம்பித் தோன்ற லாவது - பொலிவழிந்து தோன்றல். கலங்கி மொழிதல் என்பது - கூறுங் கூற்றுக் கலக்கமுற்றுக் கூறுதல். கையறவுரைத்தலாவது - செயலறவு தோன்றக் கூறல். இச் சொல்லப்பட்ட ஆறு அவத்தையும் பெண்பாலார் எல்லார்க்கும் பொது. இவை புணராதவழித் தோன்றுதல் பெரும்பான்மை. (18) 263. அன்ன பிறவு மவற்றொடு சிவணி மன்னிய வினைய நிமித்த மென்ப. என்-னின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. மேற் சொல்லப்பட்டனவும் அத்தன்மைய பிறவும் நிலைபெற்ற வினையுடைய நிமித்தமாம் என்றவாறு. வினை என்பது - கற்பிற்குரிய கரணமாம். இவையெல்லாங் கற்பிற்குரிய கரணத்துக்கு நிமித்தமாம் என்றவாறு. அன்னவை பிறவுமாவன: நோக்காமை நோக்கியின்புறுதல், தனியிடை நகுதல், நோக்குங் காலைச் செற்றார் போல் நோக்குதல், மறைந்து காண்டல், தற்காட்டுறுத்தல். இந்நிகரன அவத்தை பற்றி நிகழ்ந்தனவாயின் ஏழாவது முதலாகப் பத்தாவது ஈறாகக் கூறவெனின், ஏழாமவத்தை நாண் நீங்கிய காதலின் தேறுதலொழிந்த காமத்து மிகுதியாகிய பெருந்திணைப் பாற்படும்; ஒத்த காமத்து நிகழாது. எட்டாவது உன்மத்தம். ஒன்பதாவது மயக்கம். பத்தாவது சாக்காடு. ஆதலான் நடுவணைந்திணைக்கண் வருவன ஆறு எனக் கூறினான் என்று கொள்க. (19) 264. வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே. என்-னின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று. கரண நிகழ்ச்சி உயிர் மெலிந்தவிடத்து இன்மையும் உரித்து என்றவாறு. எனவே, இயற்கையும் நிகழும் என்றவாறாம். உம்மை எதிர்மறை யாகலான், கரண நிகழ்தல் பெரும்பான்மை. உயிர் மெலிவிடம் என்றமை யான் ஐந்தாவது முதலாக இயற்கை நிகழும் என்று கொள்க. அதனானேயன்றே யவ்வழித் ‘தெரிந்துடம் படுதல்’ என ஓதுவானாயிற்றென்க. (20) 265. அவையு முளவே யவையலங் கடையே. என்-னின், கைக்கிளைக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதல் முதலாயின உள: நடுவணைந்திணை யல்லாத கைக்கிளைப் பொருண்மைக் கண் என்றவாறு. ‘அவையலங்கடை’ என்றமையாற் பாடாண்பாட்டிற் கைக்கிளை யும் கொள்ளப்படும். அஃதேல், ஆண்டும் புகுமுகம் உளதோவெனின், தலைமகள் காட்சி மாத்திரத்தைத் தனது வேட்கைமிகுதியாற் புகுமுகமாய்க் கொள்ளும் என்க. பிற் கூறிய ‘அவை’ என்பன களவும் கற்பும்; முற் கூறிய ‘அவை’ என்பன புகுமுகம் புரிதல் முதலாயின. அவையலங்கடை யவையுமுளவே என மாறிக் கூட்டுக. (21) 266. இன்பத்தை வெறுத்த றுன்பத்துப் புலம்ப லெதிர்பெய்து பரித லேத மாய்தல் பசியட நிற்றல் பசலை பாய்த லுண்டியிற் குறைத லுடம்புநனி சுருங்கல் கண்டுயின் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடன் மெய்யே யென்ற லையஞ் செய்த லவன்றம ருவத்த லறனழிந் துரைத்த லாங்குநெஞ் சழித லெம்மெய் யாயினு மொப்புமை கோட லொப்புவழி யுறுத்த லுறுபெயர் கேட்ட னலத்தக நாடிற் கலக்கமு மதுவே. என்-னின், மேல் நடுவ ணைந்திணைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் கைக்கிளைக்குரிய வாமாறு உணர்த்தினான். இனி இச் சூத்திரத்தாற் பெருந்திணைக்குரிய மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்திணை யல்வழி வரும் என்றவாறு. அது என்பது - ‘அவையு முளவே யவையலங் கடையே’ என்பதைச் சுட்டி நின்றது. கலக்கமும் நாடின் என மாறுக. ஏற்புழிக் கோடல் என்பதனாற் பெருந்திணைப்பாற் கொள்ளப்படும். இது களவிற்கும் கற்பிற்கும் ஒக்கும். இவை தேறுதலொழிந்த காமத்தின்பாற் படுவனவும், மிக்க காமத்தின் மிடலின்பாற் படுவனவுமாம் (அகத். 54). இன்பத்தை வெறுத்தல் என்பது - கோலஞ்செய்தல் முதலியனவற்றை வெறுத்தலும், தென்றலும் நிலவு முதலாயின வற்றை வெறுத்தலும். இவ்வாறு களவின்கண் வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண் வரிற் பிறர் இயல்வுஅழி மங்கல மென்றுஆம். “கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு மெழுதேங் கரப்பாக் கறிந்து.” (குறள். 1127) “சிறுகுழ லோசை செறிதொடீஇ வேல்கொண் டெறிவது போலு மெமக்கு.” என வரும். துன்பத்துப் புலம்ப லாவது - துன்பத்தின்கண்ணே புலம்புறுதல். “இன்பங் கடலற்றுக் காம மதுவடுங்காற் றுன்ப மதனிற் பெரிது.” (குறள். 1166) எனவரும். எதிர் பெய்து பரிதல் என்பது - தலைமகன் முன்னின்றி அவனின் றானாகப் பெய்துகொண்டு வருந்துதல். “கண்ணுள்ளிற் போகா ரிமைப்பிற் பருவரார் நுண்ணியரெங் காத லவர்.” (குறள். 1126) என வரும். ஏதமாய்தல் என்பது - குற்றமாராய்தல். “துப்பி னெவனாவர் மற்கொ றுயர்வரவு நட்பினு ளாற்று பவர்.” (குறள். 1165) என வரும். பசியட நிற்றல் என்பது - உண்ணாமை. “நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்ட ஞ்சுதும் வேபாக் கறிந்து.” (குறள். 1128) பசலை 36பாய்தல் என்பது - பசலை பரத்தல். “பசந்தா ளிவளென்ப தல்லா லிவளைத் துறந்தா ரவரென்பா ரில்.” (குறள். 1188) என வரும். உண்டியிற் குறைதல் என்பது - உணவு சுருங்குதல். “பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு” (அகம். 48) என வரும். 37உடம்பு நனி சுருங்கல் என்பது - உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல். “பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்.” (குறள். 1234) என வரும். கண்டுயின் மறுத்தல் என்பது - உறங்காமை. “மன்னுயி ரெல்லாந் துயிற்றி யளித்திரா வென்னல தில்லை துணை.” (குறள். 1168) என வரும். களவொடு மயங்கல் என்பது - கனவை நனவென மயங்குதல். “நனவினா னல்காக் கொடியார் கனவினா னென்னெம்மைப் பீழிப் பது.” (குறள். 1217) என வரும். பொய்யாக் கோடல் என்பது - தலைவன் கூற்றுதன்னைப் பொய்யாகக் கோடல். “வாயல்லா வெண்மை யுரையாது சென்றீநின் மாய மருள்வா ரகத்து.” (கலித். 88) மெய்யே யென்றல் என்பது - உரைத்த மாற்றத்தை மெய்யெனக் கூறுதல். “மெய்யே வாழி தோழி சாரன் மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை யாற்றப் பாயாத் தப்ப லேற்ற கோட்டொடும் போகி யாங்கு நாடன் றான்குறி வாராத் தப்பற்குத் தாம்பசந் தனவென் றடமென் றோளே.” (குறுந். 121) இதனுட் ‘கூறியது’ என ஒரு சொல் வரல் வேண்டும். ஐயஞ் செய்தல் என்பது - தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல். “ஒண்ணுதல் னீவுவர் காதலர் மற்றவர் கண்ணுவ தெவன்கொலோ வறியே னென்னும்.” (கலித். 4) என வரும். அவன்றம ருவத்தல் என்பது - தலைவன் தமரைக் கண்டவழி உவத்தல். “செல்வஞ் சிறப்பிற் சிறப்புச்செய் தீவாரா வெம்மொடு சேர்ந்துசென் றீவாயாய் செம்மால் நலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த புலம்பெலாந் தீர்க்குவெ மன்.” (கலித். 83) என வரும். அறனழித் துரைத்தல் என்பது - அறத்தினை யழித்துக் கூறுதல். “விளியுமெ னின்னுயிர் வேறல்ல மென்பார் ரளியின்மை யாற்ற நினைந்து.” (குறள். 1209) என வரும். அளியின்மை யறனின்மை கூறினாளுமாம். ஆங்கு நெஞ்சழிதல் என்பது - அறனழித்துரைக்குமிடத்து நெஞ் சழிந்து கூறுதல். “பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு மறாஅ விடும்பைத்தென் னெஞ்சு” (குறள். 1295) என வரும். எம் மெய்யாயினும் ஒப்புமை கோடல் என்பது - யாதானு மோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு. “புன்கண்ணை வாழி மருள்மாலை யெங்கேள்போல் வன்கண்ண தோநின் றுணை.” (குறள். 1222) என வரும். அளியின்மை 38யறனின்மை கூறினாளாம். ஒப்புவழி யுவத்தல் என்பது - தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல். “யாவருங் காணுந ரின்மையிற் செத்தனள் பேணி” (அகம். 16) என வரும். உறுபெயர் கேட்டல் என்பது - தலைவன்பெயர் கேட்டு மகிழ்தல். “நசைஇயர் நல்கா ரெனினு மவர்மாட் டிசையு மினிய செவிக்கு.” (குறள். 1199) என வரும். கலக்கம் என்பது - மனங் கலங்குதல். மேற் ‘கலங்கி மொழிதல்’ என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை. “பொங்கிரு முந்நீர் கலமெல்லா நோக்கினை திங்களுட் டோன்ற விருந்த குறுமுயா லெங்கே ளிதனகத் துள்வழிக் காட்டீமோ காட்டீனை யாயிற் கதநாய் கொளுவுவென் வேட்டுவ ருள்வழிச் செப்புவெ னாட்டி மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந் தென்னல்ல றீரா வெனின்.” (கலித். 144) “கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று நாடுவென் கண்டெனென் சிற்றிலுட் கண்டாங்கே யாடையான் மூடி யகப்படுப்பேன் சூடி காணான் றிரிதருங் கொல்லோ மணிமிடற்று மாண்மாலைக் கொன்றை யவன்.” (கலித். 142) என வரும். இச் சூத்திரத்துள் ‘நலத்தக நாடின்’ எனக் கலக்கத்தைப் பிரித்து வைத்தமையாற் சொல்லப்பட்ட பத்தொன்பதினும் முதிர்ந்து வந்த நிலை என்று கொள்ளப்படும். இச் சூத்திரம் பொதுப்படக் கூறினமையான் தலைமகற்கு ஏற்ப வருவன கொள்க. (22) 267. முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்த லச்சத்தி னகற லவன்புணர்வு மறுத்த றூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல் காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென் றாயிரு நான்கே யழிவில் கூட்டம். என்-னின், மேற்கூறப்பட்டன வெல்லாம் மனனழிவு நிகழ்ந்த - வழி நிகழ்வனவாதலின், இவை மனன் அழியாதவழி நிகழ்வன என உணர்த்துதல் நுதலிற்று. முட்டுவயிற் கழறல் என்பது - களவு இடையீடு பட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல் என்றவாறு. முனிவு மெய்ந்நிறுத்தல் என்பது - வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின்கண்ணே நிறுத்தல். அச்சத்தினகறல் என்பது - இவ்வொழுக்கம் 39பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்று ஒழுகல் அவன் புணர்வு மறுத்தல் என்பது - இது தலைமகன் புணர்ச்சிக்கண் வாராக் காலத்துத் தானும் மனனழியாது நிற்கும் நிலை. தூது முனிவின்மை என்பது - தூது விட்டவழி வெறாமை. ‘துஞ்சிச் சேர்தல்’ என்பது - கவற்சியான் உறங்காமையன்றி யுரிமை பூண்டமையான் உறக்கம் நிகழ்தல். காதல் கைம்மிகல் என்பது - அவ்வழியும் அன்பின்மை யின்றிக் காதல் கைம்மிக்கு வருதல். கட்டுரையின்மை என்பது - கூற்று நிகழ்த்துதலன்றி யுள்ளக் கருத்தினை மறைத் தமர்ந்திருத்தல். இவை நடுவணைந்திணைக்குரிய. இவற்றிற்குச் செய்யுள் களவியலுட் காட்டப்பட்டன, வரைந்தோதாமையான். (23) 268. தெய்வ மஞ்சல் புரையறந் தெளித லில்லது காய்த லுள்ள துவர்த்தல் புணர்ந்துழி யுண்மை பொழுதுமறுப் பாத லருண்மிக வுடைமை யன்புமிக நிற்றல் பிரிவாற் றாமை மறைந்தவை யுரைத்தல் புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇச் சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே. என்-னின், இஃது அழிவில் கூட்டத்திற்குரிய பொருள் உணர்த்துதல் நுதலிற்று. தெய்வ மஞ்சல் என்பது - தெய்வத்தினை யஞ்சுதல். “மன்ற மராத்த பேமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉ மென்ப” (குறுந். 87) எனவும், “நீகூறும் பொய்ச்சூ ளணங்காகி மற்றினி யார்மேல் விளியுமோ கூறு.” (கலித். 88) எனவும் வரும். புரையறந் தெளிதல் என்பது - ‘கடன்மிக் கனவே’ என்றவழிப் பரத்தைமை கண்டு புலவாது, ‘40இதனைப் போற்றல் இல்லுறை மகளிர்க் கியல்பென்னும் அறத்தினானே’ எனக் கூறியவாறு கண்டுகொள்க. இல்லது காய்தல் என்பது - தலைமகன்க ணில்லாத குறிப்பினை யவன்மாட்டு உளதாகக் கொண்டு காய்தல். “யாரினும் காதல மென்றேமா வூடினாள் யாரினும் யாரினு மென்று.” (குறள். 1314) இதனுள் சொன்ன மாற்றத்தை வேறாகப் பொருள் கொண்டு இல்லாததனைச் சொல்லிக் காய்ந்தவாறு காண்க. உள்ளதுவர்த்தல் என்பது - உள்ளதனை யுவர்த்துக் கூறுதல். அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல். “வெய்யாரும் வீழ்வாரும் வேறாகக் கையின் முகையலர்ந் தன்ன முயக்கின் றொகையின்றே 41தண்பனி வைக லெமக்கு.” (கலித். 78) என வரும். புணர்ந்துழி யுண்மை என்பது - புணர்ந்தவழி யூடலுள் - வழி மறைத்துக் கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல். “குளிரும் பருவத்தே தம்மானுந் தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதா - மொளியிழா யூடி யிருப்பினு மூர னறுமேனி கூட லினிதா மெமக்கு.” (ஐந்திணையைம் 30) என வரும். பொழுது மறுப்பாதல் என்பது - தலைவன் வரும் பொழுது நியமமின்றி மறுப்பு வந்துழிப் பொழுதினைப் பற்றி நிகழும் மன நிகழ்ச்சி. “புல்லிய கேளிர் புணரும் பொழுதறியே னல்லியா கெல்லையென் றாங்கே பகல்முனிவே னெல்லிய காலை யிராமுனிவேன் யானுற்ற வல்லல் களைவா ரிலேன்.” (கலித். 144) என வரும். இது பெருந்திணைக்கு உரியதன்றோ எனின், ஆண்டு, ‘மரபுநிலை திரியா மாட்சியவாகி விரவும் பொருளும்’ (அகத்திணை. 48) விரிந்தவெனக் கொள்க. அருண்மிக வுடைமையாவது - தலைமகன்மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை. ‘முதைச்சுவற் கலித்த’ என்னும் அகப்பாட்டினுள் (88), “நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோ தானே.... ............................................... வடுவாழ் புற்றின வழக்கறு நெறியே.” (அகம். 88) என வரும். அவன் போன பின்பு இடையூறின்றிப் பெயர்ந்தான் கொல்லென அருள் மிகுத்தவாறு காண்க. அன்புமிக நிற்றல் என்பது - அன்பு புலப்பட நிற்றல். “கொடிய னாயினு மாக வவனே தோழி என்னுயிர்கா வலனே.” (சிற்றெட்டகம்) என்றவழி, அன்பு தோன்ற நின்றவாறு காண்க. பிரிவாற்றாமை என்பது - பிரிவின்கண் ஆற்றாமை. “செல்லாமை யுண்டே லெமக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.” (குறள். 1151) என வரும். மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇ என்பது - 42மறைத்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ் சொல்லாகிய அலர் மாட்சிமைப்படாத கிளவியொடு கூட என்றவாறு. மறைந்தவை யுரைத்த புறஞ் சொல்லாவது - அலர். மாணாமை யாவது - அவ்வலர் மாட்சிமைப்படாமற் கற்புக்கடம் பூண்டல் அன்றியும், “மாண மறந்துள்ளா நாணிலி” (கலித். 89) என்றாற் போல மாணாமை என்பது மிகாமை என வுரைப்பினும் அமையும். அலர் மிகாமைக் கூறுங் கூற்றினுங் கற்புக்கடம் பூண்டு கூறுதல். “நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே.” (நற். 149) என வரும். அலர் மிகாக் கிளவியாவது - அலர்க்கு உள்ளம் நாணுதல். “களிறுகவர் கம்பலை போல வலரா கின்றது பலர்வாய்ப் பட்டே.” (அகம். 66) என வரும். சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே என்பது - இச்சொல்லப்பட்ட பத்தும் மேற்சொல்லப்பட்ட அழிவில் கூட்டப் பொருள் என்றவாறு. என்றவழி நடுவணைந்திணைக்குரிய பொருள் என்றவாறு. (24) 269. பிறப்பே குடிமை யாண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயி னிறையே யருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பினது வகையே. என்-னின், இது களவியலுட் கூறப்பட்ட தலைவற்குந் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று. இதற்குப் பொருள் களவியலுள் உரைத்தாம். (25) 270. 43நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை யின்புற லேழைமை மறப்போ டொப்புமை யென்றிவை யின்மை யென்மனார் புலவர். என்-னின், இது தலைமக்கட்காகாத குணம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. நிம்பிரி என்பது அழுக்காறு. அவ்வியம் என்பதும் அது. கொடுமை என்பது - 44அறனழியப் பிறரைச் சூழும் சூழ்ச்சி. வியப்பென்பது - தம்மைப் பெரியராக நினைத்தல். புறமொழி என்பது - புறங் கூறுதல். வன்சொல் என்பது - கடுஞ்சொற் கூறல். பொச்சாப் பென்பது - தம்மைக் கடைப்பிடியாமை. அது சோர்வு. மடிமை என்பது - முயற்சி யின்மை. குடிமையின்புறல் என்பது - தம் குலத்தினானுந் தம்குடிப் பிறப்பினானுந் தம்மை மதித்து இன்புறுதல். ஏழைமை என்பது - பேதைமை. மறப்பு என்பது - யாதொன்றாயினுங் கற்றதனையுங் கேட்டதனையும் பயின்றதனையும் மறத்தல். ஒடு எண்ணின்கண் வந்தது. ஒப்புமை என்பது - ஆண்பாலாயினும் பெண்பாலாயினுந் தான் காதலிக்கப்பட்டாரைப் போல்வாரைக் கண்டவழி அவர் போல்வர் என ஆண்டு நிகழும் உள்ள நிகழ்ச்சி. அஃது உலகின்கட் கீழ்மக்கள்மாட்டுங் கண்ணிலோர்மாட்டும் நிகழ்தலின் அது தலைமகட்காகாதென விலக்கப்பட்டது. என்றிவை யின்மை யென்மனார் புலவர் என்பது - இச் சொல்லப் பட்டன இல்லையாதலும் வேண்டும், மேற் சொல்லப்பட்டவற்றொடுங் கூட்ட என்றவாறு. மேற் சொல்லப்பட்டவற்றொடுங் கூடுதல் அதிகாரத்தான் வந்தது. இவ்விரண்டு சூத்திரத்தானும் ஒருமுகத்தானாய இலக்கணங் கூறியவாறு. (26) 271. கண்ணினுஞ் செவியினுந் திண்ணிதி னுணரு முணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியி னன்னயப் பொருள்கோ ளெண்ணருங் குரைத்தே. என்-னின், இஃது அதிகாரப் புறனடை. (மெய்ப்பாட் டதிகாரம்) ஈண்டுச் சொல்லப்பட்ட நல்ல நயத்தினையுடைய மெய்ப்பாடெல்லாம் ஆராயுங்காற் கண்ணானுஞ் செவியானும் விளங்க உணரும் அறிவுடை மாந்தர்க் கல்லது கருதுதல் அரிது என்றவாறு. (27) ஆறாவது மெய்ப்பாட்டியல் முற்றிற்று. மெய்ப்பாட்டியல் அடிக்குறிப்புகள் 1. இளிப்பு. 2. மத்திபம். 3. னிதனை. 4. பிறவு. 5. கொடுகுரல்குண வற்றொடு 6. எனச் 7. றரைப்போர். 8. மறியார். 9. பிறுதி. 10. இடர்ப்படத்தீய. 11. வேளன. 12. தணியோர். 13. மளவையி. 14. னாம. 15. மெயநரி. 16. யிழிவினில். 17. நிகழ்ந்ததுவர்க்கு. 18. யுறுத்தல். 19. பட்டே. 20. கனியு. 21. விழைத்து. 22. யருட. 23. மறாவரு. 24. வைய. 25. புதுநிறக். 26. நின்றாநீ-யாரானை. 27. கையறினுங். 28. னாய்கோற். 29. யடுநின்னே. 30. சிகவாத. 31. மறைத்தல். 32. பொருடீர்ந்து பொச்சார்ந்து. 33. புறம்பேரார். 34. ருள்ளியவர். 35. வெயர்த்த. 36. யாதல். 37. இதன்உரை பிரதியிற்காணப்படவில்லை. 38. யறனின்றமை. 39. கூபந்தன். 40. இதனைப்பொத்தல். 41. கண்பனி. 42. மறைந்த. 43. நிம்புரி. 44. அறன்வழிப்.