செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 9 பெ முதல் மூ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 9 பெ முதல் மூ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+324= 344 விலை : 430/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்: elavazhagantm@gmail.com  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 344  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  களஞ்சியம் வளமான வீடுகள் கட்டி வாழும் நிலக்கிழார் பெருநிலக்கிழார் ஆகிய உழவர்கள், தங்கள் வீட்டின் உட்பகுதியில் களஞ்சியங்கள் அமைத்திருப்பர். களஞ்சியம் இருக்கும் வீடு என்றால் வளமிக்க உழவர்வீடு என்பது பொருள். களத்தில் வரும் தவசங்கள் பயறு வகைகள் ஆகியவற்றை அங்கே பூச்சியரிப்பு, மட்குதல் ஏற்படாவகையில் தளத்தின்மேல் உயர்த்தியும் புன்கு வேம்பு ஆகியவற்றின் தழைகளைப் பரப்பியும், பாதுகாப்பர். அவ்வாண்டு முழுமைக்கும் பயன்படும். அடுத்த ஆண்டு விளைவு குறைந்தாலும் களஞ்சியப் பொருள் கவலையின்றி வாழ உதவும். ஏருழவர் போலச் சொல்லேர் உழவராம் சான்றோர் நூல்கள், அக்காலத்தார்க்கே அன்றி எக்காலத்தார்க்கும் பயன்படும் வகையில் பாதுகாத்துப் பயன் கொள்ளச் செய்வது நூல் களஞ்சியமாகும். இந்தியப் பரப்பில் தமிழ் மொழியில் தான் முதன்முதல் `கலைக் களஞ்சியம் உருவானது என்பது பெருமிதப்படத்தக்கதாம். இப்பொழுது தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்படும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் செவ்வியல் மொழிக் கொடையாக வந்து, தமிழ்மண் பதிப்பக வெளியீட்டால், தமிழ்கூறு நல்லுலகப் பொருளாவது, செம்மொழிச் செம்மல் முனைவர் திருமிகு க. இராமசாமி அவர்கள் தூண்டல் வழியாகத் துலங்கிய துலக்கமாகும். ஆதலால் படைப்பாளன் என்ற நிலையில் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. திருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந்தொண்டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கியுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந் துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந் துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றாக விளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன். மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ் கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கண பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவைத் திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினைத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினைக் கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் வையகமே வந்து போற்று நம் முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தைத் தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (வ்ட்பீது கீகுநூழ்ஙூ) வழக்குச் சொல் அகராதி (ர்மயூரூயுகுயிகீஞ்ணூ நிகுபீய்நூக்ஷி) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ் சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. . பொருளடக்கம் 1. பெ வரிசைச் சொற்கள் 2 2. பே 17 3. பை 29 4. பொ 33 5. போ 66 6. பெள 83 7. ம 85 8. மா 178 9. `மி 212 10. மீ 224 11. மு 230 12. மூ 308 பெ முதல் மூ வரை பெ வரிசைச் சொற்கள் பெ: பகர எகர உயிர்மெய்க் குறில். ட, ண, த, ய, ர, ற ஆகிய ஆறெழுத்துகளொடு மட்டும் சொல்லாக வரும். எ-டு: பெட்டை, பெண்டு, பெதும்பை, பெயர், பெருமை, பெறுதல். பெடை: பெட்டை > பெடை = பெண்பால். பேடையும் பெடையும் பெட்டையும் பெண்ணும் - தொல். 1502 பெட்டைக் கோழி என்பது ம.வ. புறவுப் பெடை பயிரும் - குறுந். 79 பெட்டைப் புலம்பல் - பாரதி. பாஞ். பெட்டி பேழை: பெட்டி = மூடு இல்லாதது. பேழை = மூடு உடையது. கடகம், பெட்டி முதலியவை நாரால் செய்யப்பட்ட காலம் உண்டு. அந் நாளில் பேழைப்பெட்டி என்று ஒன்றும் இருந்தது. திருமணப் பரிசுகளில் பேழைப் பெட்டிக்குத் தனி இடம் உண்டு. அது மூடும் தூக்கும் உடையதாய் வண்ண நார்களால் பின்னப் பட்டதாய் உள்தட்டும் உடையதாய் இருக்கும். நிலைப்பேழை (Bureau) என்னும் பெயர்க்கு மூலம் பேழையாம். பேழ் = பிளத்தல்; பிளந்து மூடுவது பேழை; பேழ்வாய் பெருவாயாம். அமைப்பு ஒப்புமை கருதுக. பெட்டை: பெட்டை = பெண்; பெட்டை > பெடை. பெட்டைக் குட்டி. பெட்டையைப் பொட்டை எனல் வழு. பொட்டப்பயல் வசைமொழி (ம.வ.). * பெடை காண்க. பெட்டைப் பக்கம்: கதவின் பின்பக்கத்தைப் பெட்டைப் பக்கம் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். ஆடவர் முன் முகம் காட்டாமல் கதவின் பின்பக்கம் இருந்து பேசும் பெண்களின் வழக்கத்தைக் கொண்டு இப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் வழியே குமுகாய வரலாறு புலப்படுதல் எண்ணத்தக்கது. பெட்பு: பெண்பு > பெட்பு = விரும்புதல், விருப்பு. முற்றிய திருவின் மூவ ராயினும் பெட்பின் றீதல் யாம்வேண் டலமே - புறம். 205 பொருள்: நிறைந்த செல்வத்தையுடைய மூவேந்தரா யினும் எம்மைப் பேணுதலின்றி ஈதலை யாங்கள் விரும்பேம் ப.உ. பெட்டு என்று நின்றும் விரும்புதல் பொருள்தரும். பெட்டாங்கு ஈயும் பெருவளம் - புறம். 113 பெண்: பேண் > பெண். பேணுதல் இயல்பைப் பிறர் கூறாமல் தானாகவே கொண்டவள் பெண் ஆவள். பெண்கொள் ஒழுக்கம் கண்கொள நோக்கி - அகம். 112 ஏண்பால் ஓவா நாண்மடம் அச்சம் இவையேதம் பூண்பா லாகக் கொள்வார் நல்லார் புகழ்பேணி - கம். அயோ. 224 பெண்டு: பெண்ணியல்பு உடையவள் பெண்டு ஆவாள். பெண்ணியல்பு பேணுதல் இயல்பாம். தன்னைத் தக்கவாறு பேணிக் கொண்டு தன் கணவன் முதலாம் பிறரையும் பேணும் இயல்பை, இயல்பாகப் பெற்றவள் பெண் எனப்பட்டாள். தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் - திருக். 56 என்பதன் பிழிவு பெண்டு என்பதாம். அதன் பன்மை பெண்டிர் என்பதாம். பெண்டு பண்டாரம் என்பது வழங்குமொழி. பண்டாரமாவது பெண்ணுக்குரிய ஆடை அணி ஏவல் முதலியவாம். முதுவாய்ப் பெண்டின் செதுகால் - அகம். 63 பொருள்: முதுமை யுற்ற பெண்ணின் சோர்வுற்ற கால் பெண்ணை: பெண்ணை = பனை. குடிநலம் பேணிக் காக்கும் பெண்ணைப் போல் குடிநலம் காக்கும் பனை பெண்ணை எனப்பட்டதாம். வேண்டுவ வெல்லாம் தரும் கற்பக மரம் என்னும் கற்பனையை மெய்யாக்கிக் காட்டும் மரம் பெண்ணையாம் - பனையாம். மணப்பெண்ணின் தாலியாக இருந்ததும், மணப்பொருள் வைக்கும் பேழையாக இருந்ததும் அதன் மங்கலம் காட்டும். அதன் ஏட்டுக் கொடையே செந்தமிழ்ச் செம்மொழிக் கொடை எனின் வேறென்ன சொல்ல வேண்டும். நாரை செறிமடை வயிரிற் பிளிற்றிப் பெண்ணை அகமடற் சேக்கும் - அகம். 40 பனைமடற்குக் கொக்குறை என்பதொரு பெயர்! பெண்தூக்குதல்: திருமணத்திற்கு முன்னர் மாப்பிள்ளை அழைப்பு, பெண்ணழைப்பு என்னும் சடங்குகள் நிகழ்த்தப்படும். பெண் அழைப்பை, மதுக்கூர் வட்டாரத்தார் பெண்தூக்குதல் என வழங்கும் வழக்கத்தால் குமுகாயத்தில் நிகழ்ந்த நிகழ்வு வெளிப் படுகின்றது. சிறைகொண்டு போதல், கடத்திக் கொண்டு போதல் முதலியவை இலக்கியத்திலும் வழக்கிலும் உள்ளமை அறிவனவே. முன்பு மிக இளம் பருவத்தே பெண்பிள்ளைக்கு மணம் நடத்தப்பட்டதன் வரலாற்று எச்சம் இச்சொல் எனினுமாம். பெதும்பை: பெரியதாம் அறிவு படைத்த பருவத்துப் பெண். பேதை அல்லை மேதையங் குறுமகள் பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து - அகம். 7 பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம் பெண் என்னும் வரிசையிலும் பேதைமை யகன்றமை விளக்கமாம். பெயர்: தமிழ்ச்சொல் வகை நான்கனுள் முற்பட நிற்பது பெயர்ச்சொல். பெயர்நிலைக் கிளவி காலம் தோன்றா தொழில்நிலை ஒட்டும் ஒன்றலங் கடையே - தொல். 554 பெயர்நிலைக் கிளவி = பெயர்ச்சொல். பலவகையான பெயரும் அடங்குதற்குப் பெயராகிய நிலையையுடைய கிளவி எனப்பட்டது. தொழில்நிலை ஒட்டு = வினையால் அணையும் பெயர் குறிப். இளவழக. பெயர்ச்சொல் என்பதன் பொருள் என்ன? பெயர்தலையுடைய சொல் பெயர்ச்சொல்லாம். ஓரிடத்துப் பதிந்து கிடந்த ஒன்றைப் பெயர்த்தெடுத்தலும், கிடையாகக் கிடந்த ஆடுகளைப் பெயர்த்துப் பேர்வை அடித்தலும் நடை முறைக் காட்சிகள். நிலம்பெயரினும் நின்சொற் பெயரல் என்பது புறம் (3). கழிபெயர் மருங்கின் என்பது குறுந்தொகை (340). மலர் எத்தனை பெயர்வுகளை அடைந்தது? அரும்பு, முகை, மொக்கு, மலர், அலர் என எத்தனை பெயர்வுகளை - பெயர்களை - அடைந்தது! கரு, உரு, பிள்ளை, குழவி, குமரன், காளை, வாலியன், முதுவன், பெருமுதுவன் எனவும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனவும் ஆணும், பெண்ணும் எத்தனை பெயர்களை அடைகின்றோம். மற்றும் மகன், தந்தை, பாட்டன், பூட்டன், ஓட்டன், சேயோன், பரன் என்றும், மகள், தாய், பாட்டி, பூட்டி, ஓட்டி, பழையோள், பரை என்றும் எத்தனை முறைப் பெயர்களை ஒவ்வொருவரும் அடைகிறோம்! பெயர்தல் அமைந்தது பெயராம். பெயர்ச்சொல் வகை: பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் வருபெயர் என்று பெயர்ச்சொல்லின் வகையை நன்னூல் (132) குறிக்கும். பெயர் இன்னிசை: பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சார இன்னிசை வெண்பாவால் தொண்ணூறேனும் எழுபதேனும், ஐம்பதேனும் பாடுதல் பெயர் இன்னிசை என்று கூறப் பெறும். பாட்டுடைத் தலைமகன் பெயரைச் சார இன்னிசை வெண்பா எழுபான் இருபஃ தேனும் எழுபா னேனும் ஐம்பஃ தேனும் உரைப்பது பெயரின் னிசையே - முத்துவீ. 1092 பெயர்க்கோவை (நாமக்கோவை): நாமம் = பெயர். எடுத்துக்கொண்ட ஒருவர் பெயரையோ, குழுவின் பெயரையோ ஒழுங்குறுத்திக் கூறுதல் நாமக் கோவை எனப்படும். திருத்தொண்டர் திருநாமக் கோவை என்பது சிவஞான முனிவரால் இயற்றப் பெற்றது: கலிவெண்பா யாப்பினது. திருத் தொண்டத் தொகை. திருத்தொண்டர் திருவந்தாதி, சேத்திரக் கோவை, சீகாழியின் பல்பெயர் களையும் கூறிய பல்பெயர்ப் பத்து என்பவை நாமக் கோவையின் முன்னவை என எண்ணத்தக்கவை. பெயர் நேரிசை: பாட்டுடைத் தலைவன் பெயரினைச் சார நேரிசை வெண்பாவால் தொண்ணூறேனும் எழுபதேனும், ஐம்பதேனும் பாடுதல் பெயர் நேரிசை என்று கூறப் பெறும். பாட்டுடைத் தலைமகன் பெயரைச் சார நேரிசை வெண்பாத்தொண்ணூ றேனும் எழுப தேனும் ஐம்ப தேனும் அறைவது பெயர்நே ரிசையா கும்மே - முத்துவீ. 1094 பெயல்: பெயல் = பெய்யும் மழை பெயல் ஆகும். பெய்தல் > பெயல். மழைபொழிதலும் மழைபோல் கொடை கொடுத்தலும் பெயலாகும். ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண் டருளி - சிறுபாண். 13 கார்ப்பெயற் கலித்த பெரும்பாட் டீரம் - புறம். 120 பெய்தல்: பெய்தல் = மழை பொழிதல்; மழை பொழிதல் போல் கொடுத்தல், அம்பு பெய்தல். பெய்யெனப் பெய்யும் மழை - திருக். 55 பெய்து போகு எழிலி - நற். 396 பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் - புறம். 115 இராகவன் பெய்தான் - கம். உயுத். 1190 பெரிய ஆள்: பெரிய ஆள் = சின்னவன். பெரிய ஆள் என்பது பெரியாள். அது திருமால், நெடுமால், பெருமாள் என்றெல்லாம் வழங்குவது. ஓங்கி உலகளந்த உத்தமன் (திருப்பா.) நீர்செல நிமிர்ந்த மாஅல் (முல்லைப். 3) எனப் பாராட்டப்படுவது. அப்பெருமையன்றி இவண், பெரிய என்பது சொல்லளவில் பெருமை சுட்டப் படினும் பொருள் அளவில் சிறுமை சுட்டுவதாக எள்ளற் பொருளில் வழங்குகின்றது. வருகிறேன் என்று சொல்லி விட்டு வரவில்லை; நீ பெரிய ஆள்தான், பேசும் போது என்ன பேசினாய்; இப்பொழுது என்ன செய்கிறாய்? நீ பெரிய ஆள்தான். என்பவற்றில் சிறுமைக் குறிப்புண்மை அறிக. கல்லைக் கடித்துக் கொண்டு நல்ல சமையல் எனில் பாராட்டாகுமா? அத்தகையது இப்பெரிய ஆள். பெரியர்: பெரு > பெரி > பெரியர். பெருமைக்கு உரியவர் பெரியர். அப் பெருமை பிறர் செய்தற்கு அரியவை என்பவற்றைத் தாம் இயல்பாகச் செய்பவராம். செயற்கரிய செய்வார் பெரியர் - திருக். 26 பெருமைக் குரியவற்றைச் செய்யும் பெரியர், தாம் பெரியரென எண்ணார். அவ்வாறு பிறர் எண்ணுதலையும் விரும்பார். அவர் செயற்கரிய செய்யாமல் இருக்க முடியாமல் செய்பவராதலால் பிறர் பாராட்டுதலையும் விரும்பார். அந் நிலையர், மாட்சியில், பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - புறம். 192 என்னும் மேதக்க மெய்யுணர்வாளராகத் திகழ்வர். பெரிய வீட்டுப் பொழுது: வைப்பு, சின்னவீடு என்று வைத்திருப்பார் இரவுப் பொழுதில் அவண் தங்கிவிட்டுத் தம் மனை மக்கள் இருப்பார் வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது விடியல் ஆதலால், அதனைப் பெரிய வீட்டுப் பொழுது என்பது மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. பெருக்கம்: உள்ள அளவில் பெருகுதல் பெருக்கமாம். செல்வப் பெருக்கு, நீர்ப்பெருக்கு, மக்கட் பெருக்கம், அறிவுப் பெருக்கம் எனப் பெருக்கம் மிகப் பலவாம். பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு என்பது திருக்குறள் (963). பெருமை பெருமிதம் இன்மை - திருக். 979 என்பதும் அது. முன்னைப் பெருக்கங்கள் பருப்பொருள் பெருக்கங்கள். பின்னைப் பெருக்கம் நுண்பொருளாம் பண்புப் பெருக்கமாம். பெருக்கல்: பெருக்கல்:1 கணக்கு வகை நான்கனுள் ஒன்று பெருக்கல். முன்னைப் படிப்பில் பெருக்கல் வாய்பாடு என ஒரு சுவடி இருந்தது. அதனை முழுவதாக மனனம் ஆக்க வேண்டும் என்பது ஆணை போல் இருந்தது. பெருக்கல், கணக்குகளை எழுதிப் பாராமல் போட உதவியாக இருந்தது. பெருக்கல்:2 வீட்டையோ வேறிடத்தையோ தூய்மை செய்ய அமைந்தது பெருக்குமாறு. அதனைக் கொண்டு பணி செய்தல் பெருக்கல் எனப்பட்டது. கூட்டிப் பெருக்கல் என்பதும் அது. பெருக்கல்:3 பெருகச் செய்தல் பெருக்கல் எனப்பட்டது. மக்கட் பெருக்கம், வறுமை வேலை இல்லாத் திண்டாட்டம் ஆயவற்றுக்கு அடிப்படை ஆதலால் கருத்தடையை அரசே ஊக்குகின்றது. பெருக்கான்: எலியில் பெரியது பேரெலி. அதனைப் பெருச்சாளி என்பதும் பொண்டான் என்பதும் உண்டு. பேரெலியைப் பெருக்கான் என்பது திருச்செங்கோடு வட்டார வழக்காக உள்ளது. பெருக்கான் = பெரியது. கொங்குப் பொதுவழக்கு எனவும் கூறலாம். பெருங்காடு: பெரிய காடு என்னும் பொதுப் பொருளது. அப்பொருள் அன்றி அது முதுகாடு, புதைகாடு, இடுகாடு, சுடலை எனப்படும். ஊரெலாம் போனாலும் தான்போகாச் சுடுகாட்டைக் குறிக்கிறது பெருங்காடு என்பது. பெருங்காட்டுப் பண்ணிய கருங்கோட் டீமம் - புறம். 246 பெருங்காட்டைப் புறங்காடு என்பார் புறநானூற்றுப் பழைய உரையாசிரியர். அதனைச் சுடலைக் கானம் என்பது மணிமேகலை (16:25). பெருங்காப்பியம்: வாழ்த்துதல், வணக்கம், வருபொருள் உரைத்தல் என்னும் மூன்றனுள் ஒன்று முன்வர நடந்து, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு ஒழுகலாறுகளையும் உடையதாய், தன்னோடு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவனை உடையதாய், மலை கடல் நாடு நகர் பருவம் ஞாயிறு திங்கள் இவற்றின் தோற்றம் ஆகியவை பற்றிய வருணனையுடையதாய், திருமணம், முடிசூட்டு, பொழிலாட்டு, புனல் விளையாட்டு, உண்டாட்டு, மகப்பேறு, புலவி, கலவி ஆகிய இத்தகையவற்றைக் கூறும் நடையுடையதாய், சூழ்ந்து ஆய்தல், தூதனுப்பல், படையெடுப்பு, போர்புரிதல், வெற்றியெய்தல் ஆகியவை நெறியே தொடர்ந்து காண்டம், இலம்பகம், சருக்கம் முதலிய பாகுபாடுகளை யுடையதாய், நகை முதலிய எண்வகைச் சுவையும் மெய்ப்பாட்டுக் குறிப்பும் பொருந்தப் புலவரால் இயற்றப் பெறுவது காப்பியமாகும். அவற்றுள், பெருங்காப் பியநிலை பேசுங் காலை வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றினொன் றேற்புடைத் தாகி முன்வர இயன்று நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித் தன்னிகர் இல்லாத் தலைவனை யுடைத்தாய் மலைகடல் நாடு வளநகர் பருவம் இருசுடர்த் தோற்றமென் றினையன புனைந்து நன்மணம் புணர்த்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல் புனல்விளை யாடல் தேம்பிழி மதுக்களி சிறுவரைப் பெறுதல் புலவியிற் புலத்தல் கலவியிற் களித்தலென் றின்னன புனைந்த நன்னடைத் தாகி மந்திரந் தூது செலவிகல் வென்றி சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம் பரிச்சேதம் என்னும் பான்மையில் விளங்கி நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக் கற்றோர் புனையும் பெற்றிய தென்ப - தண்டி. 8 பெருந்தகை: பெருமை + தகை = பெருந்தகை. தகை > தகைமை = பண்பு. பெருந்தகவான பண்புடையவர் பெருந்தகை. பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை - நெடுநல். 106 பொருள்: பெருமை பொருந்திய தலைமையினை யுடைய பாண்டியன் உரை, நச். பெருமகன்: பெருமகன், பெருமகள் என்னும் சொற்களின் பெருமை நின்றவாறே நிற்க, மகன், மகள் என்பவை மான் என்றும், மாள் என்றும் திரிதல் உண்டு. அந்நிலையில் பெருமான் என்றும் பெருமாள் என்றுமாகும். பெருமகன் பெருமான் எனத் திரிதலை வெளிப்பட அறிபவர், பெருமகள் பெருமாள் என்று திரியும் என்பதை ஏற்கத் தயங்குவர். ஏனெனில் பெருமாள் என்னும் பெயருடைய இறையும், மக்களும் ஆண்களாகவே பெரிதும் இருப்பதால் என்க! பெருமகள் பெருமாள் ஆதலை விளக்குவது போல், பெண்பெருமாள் என்ற பெயருடைய ஒருவரின் விரிந்த செய்திகள் விநோதரச மஞ்சரியில் உண்டு. இன்றும், மகளிர் சிலர் பெருமாள் என்னும் பெயரில் உளர். பெருமாளம்மாள் என்பார் பெயரில் சரக்குந்து ஒன்று ஓடுவதும் கண்கூடு. பெருமாள் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுப் பெயராக அமைவது எப்படி என்னும் திகைப்பு அல்லது வியப்பு ஏற்படவே செய்யும். பெருமகள் பெருமாள் ஆயது பெண்பால் வழி. பெரும் ஆள் (நெடிய ஆள்; நெடுமால்) பெருமாள் ஆயது ஆண்பால் வழி. நீர்செல நிமிர்ந்த மாஅல் என அளபெடை தந்து பெருமாள் ஆக்குகிறார் நப்பூதனார் (முல்லைப். 3). பெருமகன், பெருமான் எனத் திரிதலால் மகன் மான் என ஆதல் தெளிவாம். இத்திரிபால் கோமகன், கோமான் என்றும், திருமகன் திருமான் என்றும், சீர்மகன் சீமான் என்றும், வேள்மகன் வேண்மான் என்றும், பூமகன் பூமான் என்றும், இன்னவாறு அமைந்தன. தொண்டைமான் பெயர் பழமை யிலேயே அமைந்துவிட்டது. வேள்மகள் வேண்மாள் என்று அமைந்தவை பெண்பால் திரிபுக்குச் சான்று. கோமகள், கோமாள், கோமாட்டி, பெருமாட்டி என்பன இவ்வழி வந்தவை. பெருமகன் பெருமான் ஆய அளவில் திரிபு நிற்கவில்லை. அது பெம்மான் என்றும் திரிந்தது. மக்களுக்கு அமைந்த பெருமகன் இறைவனுக்கும் ஆகித் திரிபுகளையும் கொண்டது. பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே! என்பது தேவாரம் (ஞான.). பெரும் மகன், பெருமான், பெம்மான் ஆகிய அளவிலேனும் நின்றதா? இல்லை, மேலும் திரிந்தது. பிரான் ஆகியது. சிவ பெருமான் சிவபிரான் எனப்படுவது இல்லையா? பிரான் பெருமான் போலவே பெருவழக்காயிற்று. தம்பிரான் நம்பிரான் எம்பிரான் உரிமை அடை பெய்தும் சொல்லப் படுவதாயிற்று. இவரலா திலரோ பிரானார்? எனத் தம்பிரான் தோழர் நம்பிரான் சுந்தரரால் அசதியாடிச் சொல்லவும் பட்டது! பிரானுக்குத் தகப் பிராட்டி தம்பிராட்டி எம்பிராட்டி முதலியன வந்தன. சொல்லின் திரிபு ஆய்வு, சுவை மிக்கது. மட்டுமன்று, மொழி வரலாற்றுக்கும், காலத் தெளிவுக்கும் அரிய கருவியாகவும் உதவும் என்பது அறியத்தக்கது. மலையில் இருந்து கானாற்றில் அடித்துக் கொண்டு வரப்பட்டு முல்லைக் காட்டில் உருண்டு புரண்டு வரும் கல் எத்தகைய தேய்மானத்தை அடைகின்றது என்பதையும் அம்முறையான தேய்மானம் எத்தகைய வனப்பை உண்டாக்கி விடுகின்றது என்பதையும் அறிபவர், கால ஆறு தேய்க்கும் தேய்ப்பில் சொற்றேய்மானம் நிகழ்தலைக் கண்டு கொள்வர். அதே பொழுதில் கல்லின் வடிவு மாறினாலும் அதன் அடி மூலமும் வண்ணமும் மாறாமை போலச் சொல்லின் திரிபிலும் அதன் அடி மூலமும் பொருட்பேறும் மாறாமை கண்டு போற்றிக் கொள்வர். பெருமகிழ்ச்சி மாலை: பெண்கள் அழகும் குணமும் ஆக்கமும் சிறப்பும் ஆகிய வற்றைக் கூறுவது பெருமகிழ்ச்சி மாலையாகும். தெரிவை எழில்குணம் ஆக்கம் சிறப்பை உரைப்பது பெருமகிழ்ச்சி மாலை எனப்பெயர் பெறுமே - முத்துவீ. 1058 பெருமங்கலம்: நாள்தோறும் தான்மேற் கொள்கின்ற சிறை செய்தல் முதலிய செற்றங்களைக் கைவிட்டுச் சிறைவிடுதல் முதலிய சிறந்த தொழில்கள் பிறந்ததற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியைக் கூறுவது வெள்ளணி நாள் = பிறந்த நாள். பெரும் பயறு: சிறு பயறு என்பது ஒருவகைப் பயறு. அதனினும் பெரியது பெரும் பயறு எனப்படுகிறது. இது குமரி மாவட்ட வழக்கு. பெரும் பயற்றைத் தட்டப்பயறு, தட்டாம் பயறு எனல் பொதுவழக்கு. அதன் பூ, தட்டான் பறவை போல இருப்பது பார்க்கத்தக்கது. பெறல்: பெறல் = பெறுதல். பெறுதற்கு அரியதைப் பெறுதலே பெறல் ஆகும். பெறலரும் என்றும், அரும்பெறல் என்றும் கூறப்படுவதும் அது. ஆட்பெறல் நசைஇ - நற். 126 பெறாமகன்: பெற்றமகன், பெற்றமகள் என்பவை வெளிப்படை. மகப்பேறு இல்லாமல் ஒருவரை மகவாகத் தெரிந்து கொள்ளல் பெறாமகன் பெறாமகள் என வழங்கப்படுகின்றது. தத்துமகன், தத்துமகள், தத்துப்பிள்ளை என்பவை தமிழக வழக்கு. மகவைப் போலவே பேரன்பும் பேருதவியும் புரியும் மக்களைப் பெறாமக்கள் என்னும் பொதுவழக்குப் பொருளுக்கும் பொருந்துவது இது. பெறுமதி: பெறுமானம், வருமானம் என்பவற்றில் வரும் மானம் அளவைப் பொருளது. அளவிட்டுக் காணப்பட்டவை. மதி எனவும் படும். ஏற்றுமதி, இறக்குமதி என்பவை அவ் வழிப்பட்ட சொற்கள். பெறுமானம் என்னும் பொருளில் பெறுமதி என்பது மக்கள் வழக்காக ஈழத்தில் வழங்குகின்றது. மதியும் மானமும் ஒத்த பொருளவே. பெற்றம்: தென்பாண்டி நாட்டார் ஆவினைப் பெற்றம் என்பார் என்பது நன்னூல் உரை (273). பெறுவது யாது அது பெற்றமாம். பெற்றவர், பெற்றோள், பெற்றோன், பெறுதல் என்பவை எல்லாம் வழங்கு சொற்களே. பெறுவது பேறு; பேறுகளில் சிறந்தபேறு மகப்பேறு; என்னென்ன பெற்றிருந்தாலும் மகப்பேறில்லாதவர் பெற்றவர் என்னும் நிறைவைப் பெறுவது இல்லை. ஆவை ஆயாம் தாயாக மதித்துப் போற்றுவது தமிழ் வழக்கேயாம். பெற்ற தாயெனப் பேணுதல் சான்று பெற்றம் என்னும் பெயராம். வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று - திருக். 273 பெற்றோர்: கணவன் என்றும், மனைவி என்றும் தனித்தனியே பெயர் பெற்றவர். ஒரு மகவைப் பெற்ற அளவில் பெற்றோர் என்னும் பொதுப்பெயரைப் பெறுகின்றனர். பெற்றோர் என்பது ஓர் உயர் மதிப்புச் சொல்லாகவே வழங்குகின்றது. அம்மதிப்பை வழங்கும் மகவு ஆணா, பெண்ணா என்பது இல்லை. எம் மகவு ஆயினும், பெருமை தரும் மகவாகவே கொள்ளப்படுகிறது. ஏனெனில் ஒரே ஒரு பெண்மகவைப் பெற்ற வரையும் பெற்றோர் என்பது தானே வழக்கு. பெண் மகவு பெற்றார் எனப் பெற்றோர் பெயர் தாராமல் ஒதுக்குவது இல்லையே!  பே வரிசைச் சொற்கள் பே: பகர ஏகாரம். ஓரெழுத்து ஒருமொழி. அச்சப்பொருளது ng> பேய். அளபெடுத்தும் வரும். பேஎ. பேகன்: பேகம் > பேகன். பேகம் = முகில். பெய்கன் > பேகன்; மழைபோல் பெய்யும் வண்மையன். கொடைஞருள் சிறந்த கொடைஞன். உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅ மஞ்ஞைக் கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் - புறம். 141 என அவன் மயிலுக்குப் போர்வை வழங்கியதைப் பரணர் பாடுகிறார். பேகன் பொதினி (பழனி) மலைத்தலைவன். ஆவியர் குடியினன். அவன் பெயர் சொல்லும் வையாபுரிபழனி அடி வாரத்துள்ளது. பேகன், வையாவிக்கோப் பெரும்பேகன் என வழங்கப்பட்டான். அவன் அருட்செயல் பாரியை அடுத்ததாகலின். முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரை எனப் பாடுபுகழ் பெற்றது. தொல்லை = பழநாள். பேகன் தன் மனைவி கண்ணகி வருந்தப் பிரிந்துறைவு கொண்டதை அறிந்த சான்றோர் கபிலர், பரணர், அரிசில்கிழார் பெருங்குன்றூர் கிழார் ஆயோர் பாடி ஒருங்குடன் வாழச் செய்தனர் (புறம். 143 - 147). வள்ளல் எழுவருள் ஒருவனாகிய பேகன் ஈர்ந்தண் சிலம்பின் இருள்தூங்கு நளிமுழை அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப் பெருங்கல் நாடன் பேகன் - புறம். 158 என்றும், வானம் வாய்த்த வளமலைக் கவாஅற் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகன் - சிறுபாண். 84-87 என்றும் பாடப் பெற்றவன். பேச மறத்தல்: பேச மறத்தல் = சாதல். பேச மறுத்தல், உடன்படாமைப் பொருட்டது. பேச மறத்தல் என்பது ஒரு மங்கல வழக்குப் போல இறப்பைச் சுட்டுவதும் உண்டு. விளையாட்டு வழக்காகவும் கூட வழங்கு கின்றது எனலாம். அவர் பேச மறந்து போனார்என இறந்த வரைக் குறிப்பர். மூச்சுவிட மறந்துவிட்டார்வாயைப் பிளந்து விட்டார் கண்ணை மூடிவிட்டார்வானத்தை நோக்கி விட்டார் மூச்சை அடக்கிவிட்டார் ஒடுங்கிவிட்டார் அடங்கிவிட்டார்என்பனவெல்லாம் இப்பொருளவே. பேசுதல்: பேசுதல்:1 பேசுதல் = பாலுறவாடல். பேசுதல் வாய்ப்பேச்சைக் குறிக்கும். கையால் சொல்லுதலும் (கைக்குறியால் காட்டுதலும்) ஒருவகைப் பேச்சே. முகக்குறி வெளிப்பாடு அகக்குறி வெளிப்பாடே என்பது வள்ளுவம். கூறாமை நோக்கிக் குறிப்பறிதல்எனக் குறிக்கிறது. இவ்வாறு சொல்லாமல், செய்தி அறிதலும் குறிப்புப் பேச்சேயாம். அஃது அற்ற இடமும் உண்டு. அது, கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல - திருக். 1100 என்னும் இடம். பேச்சற்ற அவ்வின்ப இடம் பேசுதல்என்பதால் பொதுமக்கள் வாக்கிலே பயிலுதல் வியப்பே. * பேச்சில்லாமைகாண்க. பேசுதல்:2 பேசுதல் = திட்டுதல். உரையாடல் பொருளில் வழங்கும் பேசுதல். திட்டுதல் பொருளிலும் வழங்குகின்றது. என்ன ஆனாலும் ஆகட்டும் என்று நன்றாகப் பேசிவிட்டேன்என்பதில் பேச்சு, திட்டுதல் பொருளில் வந்தது. என்ன பேச்சுப் பேசி என்ன? தைக்கிற வனுக்குத் தானே தைக்கும்என்பதில் பேச்சுத் தைக்க வேண்டும் என்று கருதும் கருத்தால் வசைமொழி என்பது வெளிப்படை. நீ பேசிவிட்டாய், நான் பதிலுக்குப் பேசினால் நீ தாங்க மாட்டாய்என்பதில் வசைக்கு வசையும் பேச்சாக இசைதல் விளங்கும். பேச்சில்லாமை: பேச்சில்லாமை = பகைமை. பேச்சில்லாமை, பேசாமைப் பொருளை நேராகத் தருவது. ஆனால், பேச்சு என்பது தொடர்பின் சிறந்த கருவியாக இருத்தலால் அதனை இல்லாமை மற்றைத் தொடர்பு களெல்லாம் இல்லை என்பதை வெளிப்படுத்தும். இதனைப் பேச்சுவார்த்தை எங்களுக் குள் இல்லை எனச் சொல்லும் வழக்கால் தெரிந்து கொள்ளலாம். பேச்சில்லாமை அமைதிப் பொருளை இழந்து, உறவின்மைப் பொருளுக்கு ஆயிற்று. அவ்வுறவு உடலுறவுக்கும் கூட உண்டா வதாயிற்று. பேசுதல் உடல் தொடர்பும், பேசாமை அஃதின்மையும் குறித்தல் வழக்கு. பேச்சு மூச்சு: பேச்சு = பேசுதல். மூச்சு = மூச்சு விடுதல். பேச்சு மூச்சு இல்லை, பேச்சு மூச்சுக் கூடா என்பவை கேட்கக் கூடியவை. அச்சுறுத்தல் ஆணையில் பேச்சு மூச்சு பெரிதும் வழங்கும். பேச்சு பேசாமை என்பதை விடுத்து வலுவாகப் பேசாமையைக் குறிக்கும். மூச்சுமூச்சுவிடாமை என்பதைக் குறியாமல் அதனையும் ஒலி கேளாவாறு மெதுவாக விடுதல் என்பதைக் குறிக்கும். பேச்சு வார்த்தை (வ): பேச்சு = சந்தித்து உரையாடல். வார்த்தை = எழுத்து வழியே போக்குவரத்து. ஏதாவது சிக்கலானதைத் தீர்ப்பதற்குப் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறுவது வழக்கம். நேரிடையாகக் கூடிக் கலந்துரை யாடலும் பின்னே கடிதத் தொடர்பு கொள்ளலும் நடைமுறையா கலான் அவற்றைக் குறிக்கு முகத்தான் பேச்சு வார்த்தைநடப்பதாகக் கூறினர். வார்த்தை என்பதற்குச் சொல்என்பது பொருளாயினும் இவண் எழுதும் செய்தியைக் குறித்ததாம். பேடு: பேடு:1 பெண்மைவிட்டு ஆண் அவாவுவ பேடு - நன். 264 பொருள்: பெண்தன்மையினை விட்டு ஆண் தன்மை யினை அவாவுவனவாகிய பேடு. பேடு, அழிதூ, அலி, மகண்மா என்பன ஒருபொருட் கிளவி. mÈ, kf©kh v‹gt‰iw ntW TWthU« cs®.”(ciu, சங்.) பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும் - மணிமே. 3:125 பேடிப்பெண் கொண்டு ஆடுகை கடுப்ப நகுவரப் பணைத்த திரிமருப் பெருமை - அகம். 206 பேடு:2 நண்டு குடியிருக்கும் வளையைப் பேடு என்பது உசிலம்பட்டி வட்டார வழக்காகும். பேடுஎன்பது பெட்டி போலும் முதுகுடைய நண்டு. நண்டின் கரு முதிர்ந்து குஞ்சு வெளிப் படும்போது மூடு பெட்டி போன்ற அதன் மேல் பகுதி வெடித்துக் குஞ்சுகள் வெளிப்படும். அது திறவைப்பெட்டி போலவே இருக்கும். அந் நண்டு தங்குமிடம் பேடு எனப்பட்டதாம். பேடை: பேடை = பெண்மைப் பெயர். பேடையும்,பெடையும்,பெட்டையும்.... பெண்ணும்பெண்ணே (தொல்.1502). நாளிரை கவர மாட்டித் தன்பெடை நோக்கிய பெருந்தகு நிலையே - நற். 21 பேட்டுத் தேங்காய்: தேங்காய் போன்ற தோற்றம் இருக்கும். ஆனால், அதனை உடைத்துப் பார்த்தால் உள்ளே ஒன்றும் இராது; வெறுங்கூடாக மட்டுமே இருக்கும். இதனைப் பேட்டுத் தேங்காய் என்பது உசிலம்பட்டி வட்டார வழக்கு. மட்டை பெரிதாகி உள்ளீடு சிறுத்து இருப்பதைப் பேட்டுத் தேங்காய் என்பது குமரி மாவட்டக் கன்னங்குறிச்சி வட்டார வழக்கு. பேணல்: பேணுதல் > பேணல். தன்னைப் போல் பிறரையும் எண்ணி வேண்டுவ புரியப் பயிற்சிக் களம் குடும்பமாகும். ஆதலால் தம்மை நலமுறக் காத்த பெற்றோரை நலமுறக் காத்தல் தொடங்கி விரிவுற வேண்டும் என்பதால், தந்தைதாய்ப் பேண் - ஆத்தி. என்றார் ஔவையார். பெரிதே உலகம் பேணுநர் பலரே - புறம். 207 பேதை: பேது + ஐ = பேதை = அறிவறியாத் தன்மை. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை - திருக். 372 பேதை பெதும்பைஎன்பதால், அறிவு அறியா நிலையும், அறிவு அறி நிலையும் சுட்டப்படுதல் அறியலாம். பேதை, கல்லா இளமை எனவும் படும். கரவு, வஞ்சம் கல்லாத இளமை நிலைமை (புறம். 243). பேத்து மாத்து: பேத்து (பெயர்த்தல்) = ஓரிடத்தில் இருந்து ஒன்றைப் பெயர்த்தல். மாத்து (மாற்றுதல்) = பெயர்த்ததை வேறோரிடத்தில் நட்டுதல். பெயர்த்து மாற்றுதல் உழவுத் தொழில் சார்ந்தது. அதன் வழியாக வந்தது பேத்து மாத்தாம். ஒருவகையாக நிகழும் நிகழ்வை, வேறொன்றாக மாற்றி, மற்றோரிடத்துச் சொல்வது பேத்து மாத்துஎனப்படுகிறது. மாற்றிப் பேசுவதைப் பேத்துதல்என்பர். அது பிதற்றுதலாம்; பெயர்த்தல், பிதற்றுதல் என்பன ஒப்பானவையே. மாற்று என்பது மாத்து என வழங்குதல் வெளிப்படை. பேய்: பேம் = அச்சம். பேம் நாம் உரும் அச்சம் - தொல். 848 பேஎம் = அளபெடை. பேஎ நிலைஇய இரும்பௌவம் - மதுரைக். 76 பொருள்: அச்சமிக்க காற்றும் அலையும் சுறவும் பிறவும் அமைந்த கடல். ஓராளும் கறுப்புடையும் பேய் - பாண். பரிசு பேயில் பலவகை கூறினர். இடாகினிப் பேய் என்பது ஒன்று. இடும்பிணத்தை எடுத்துத் தின்பது. இடு + அயினி = இடுவயினி > இடாகினி. அச்சத்தால் நரம்பு வெடித்துக் குருதி வரிவரியாக நிற்பதைக் கண்டு பேயடித்த அடியின் அடையாளம் என்பர். அஞ்சியவனைக் குஞ்சும் வெருட்டும்; துணிந்தவனுக்குத் துக்கம் இல்லைஎன்பவை பழமொழிகள். இரவில் நிலத்திலிருந்த வெளிப்படும் வெப்பு அலையைக் கொள்ளி வாய்ப்பேய் என்பது அறியாமை. அந்த முகட்டில் பேய்; இந்த முகட்டில் பேய் என அஞ்சி அஞ்சிச் சாவார்; இவர் அஞ்சாத பொருளில்லை என்று இகழ்வார் பாரதியார். பேயோட்டுகிறேன் என்று சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள். பேய் என்பது மனப் பேயே. பேய் அலகை: இயல்பல்லா ஒலியும், இயல்பல்லா அசைவும் அச்சம் உண்டாக்குதல், அவையும் இரவிலுண்டாக்குதல் - கண்கூடு. ஆதலின் அவ்வழிப் பட்ட பேய், அலகை என்னும் சொற்கள் தமிழிலுண்டாயின. நாமம்என்பதும் அச்சப்பொருள் தருவதே. பெயர் என்னும் பொருள் தரல் தமிழில்லை. திருக்குறளில் அச்சப்பொருள் தரும் அச்சொல்லைப் பெயர்ப் பொருளில் குறித்தமை உரைத் தவறாம் (360). பேம் நாம் உரும்அச்சமென்பது தொல்காப்பியம் (தொல். 848). பேய் பேய்: பேய் பேய் > பே பே குழந்தையின் அழுகையை நிறுத்த முயல்வார் அச்சுறுத்த லுக்குப் பேபேஎன ஒலிப்பது இன்றும் காணும் வழக்கமாம். பே > பேய் ஆயது; பேம் எனவும் ஆயிற்று. ஒ.நோ: நா > நாய். உனக்கும் பேபே; உன் அப்பனுக்கும் பேபே என்பது ம.வ. பேரணி: பேர் + அணி = பெரிய - மிக்க - அழகு. பேரணிப் பொலிந்த - நற். 307 இப்பழஞ்சொல் அணிதிரண்டு செல்லும் கூட்டப் பெயராக இந்நாள் வழக்கில் உள்ளது. நாளை மறுநாள் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்வோம்ம.வ. பேராண்மை: பேர் + ஆண்மை = பேராண்மை. பெருமைக்குரியதாம் ஆளும் தகைமை. பிறரை அல்லது பகையை அடக்கும் பேராண்மையினும் தன்னை அடக்கும் பேராண்மையே உயர்வானது என்பதைப், பிறன்மனை நோக்காத பேராண்மை - திருக். 148 என்றும், பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு - திருக். 773 என்றும் அறநூல் கூறுதல் அறிக. பேராயம்: பேர் + ஆயம் = பேராயம் = பெருந்திரள், பெருங்கூட்டம். உருகெழு பெருஞ்சிறப்பின் இருபெயர்ப் பேராயமொடு - மதுரைக். 100-101 பேராயம் = பெருந்திரள் -நச். புலமை மிக்கோர் அவையம் இதுகால் பேராயம் என வழங்கப்படுகின்றது. எ-டு: தமிழ்ப் பேராயம். பேராளர்: பேர் + ஆளர் = பேராளர். பேர் = பெரிய; ஆளர் = ஆளுமை யுடையோர். நெடுமொழி மறந்த சிறுபே ராளர் - புறம். 178 இந்நாளில் ஓரவைக்கு அல்லது கூட்டத்திற்குத் தெரிந் தெடுத்துவிடுக்கப்படுபவர் பேராளர் எனப்படல் கண்கூடு. பேராளர் (பிரதிநிதி). பேரியாழ்: பெரிய > பேரி > பேரியாழ். பெரும்பாணர் என்பார் கொண்ட யாழ் பேரியாழாம். சிற்றுந்தும் பேருந்தும் நடைமுறையில் காண்பது போல் அந்நாளில் பாணர், சிறுபாணர் பெரும்பாணர் யாழ்வகையால் பெயர்பெற்றனர். எ-டு: சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை. பாணர், சீறியாழ்ப்பாணர், பேரியாழ்ப்பாணர் என வழங்கப் பட்டனர். பேரியாழிற்கு நரம்பு இருபத்தொன்று (சிலப். 3:26, அடியார்க்.). பேரும் புகழும்: பேர் = வாழ்ந்து கொண்டிருக்கும் போது உண்டாகும் பெருமை. புகழ் = வாழ்வின் பின்னரும் நிலை பெற்றிருக்கும் பெருமை. பெயர் என்பதிலிருந்து வந்தது பேர். மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே என்பது புகழ் குறித்த புறப்பாடல் (165). பேர் என்பது செல்வாக்கு; புகழ் என்பது வரலாறும் காவியமும். காலத்தொடு முடிவது பேர்; என்றும் நிலைப்பது புகழ். பேரூர்வலப் பா: ஊர்தி வால்வெள் ஏறேஎன்பது சங்கப்பாடல் (புறம். கடவுள்). ஊர்தியில் ஏறி இறைவன் உலாக் கொள்ளுங்கால் பாடப்படும் பாடல் வாகனக்கவி என்பதாம். திருவிழாக் காலங்களின் ஊர்திச் சிறப்பையும், இறைவன் சிறப்பையும் உலாச் சிறப்பையும் கொண்டு பாடும் தனிப்பாடல் வாகனக்கவி எனப்படுமாயினும் ஒரு நூல்வகையினதாகச் சுட்டப்படுதலுண்டு. இதனை, வாகன மாலை என்று கூறும் மாறனலங்காரம். ஆகலின், பல பாடல்கள் பாடப்படுவதும் உண்டு என்பது விளங்கும். மாலை என்பது தனிப் பாடலன்றே. பன் மலர்த் தொடையல் ஆயிற்றே. கொட்டையூர் பெருமாள் கோயில் வாகனக்கவி, திருப் புல்லணை வாகனக்கவி என்பவை இத்தகைய. . பேரேரி = பெரிய ஏரி. பேரேரி > பேரி. விசுவநாதப் பேரி, கிருட்டிணப்பேரி எனச் சில ஊர்ப் பெயர்கள் உள. அவ்வூர்களில் பெரிய பெரிய ஏரிகள் இருக்கக் காணலாம். பெரிய ஏரி, . ஏரியாய், மக்கள் வழக்கில் பேரியாய் வழங்கலாயிற்று. இனிச் சில ஏரிகள் முகப்பேரி, வேப்பேரி என வழங்கப் படுகின்றன. அவை பேர் ஏரிகள் அல்ல. முகப்பு ஏரி, வேப்பு ஏரி என்பவை நிலைமொழி உகரம் கெட்டு வருமொழி ஏகாரம் பெற்றவை. பேர்: பெயர் > பேர். பேர்:1 பெயர்; பேர் சொல்லப் பிள்ளை பிறந்துவிட்டது. நாடெனும் பேர் காடாக - மதுரைக். 156 யாரீரோ எனப் பேருஞ் சொல்லான் - புறம். 150 பேர்:2 புகழ்; பேர் பெற்றவர் அவர். பேர்:3 ஆள்; எத்தனை பேர் வந்துள்ளீர்கள்? பேர்:4 ஏவல்; அந்தக் கல்லைப் பேர் (ம.வ.). பேர்:5 பெரிய; பேரன்பு(நற். 215); பேராசை (ம.வ.). பேன்: பே= அச்சம் என்பது தொல்காப்பியம். அளவில் சிறிதாக இருந்தாலும் அது செய்யும் அரிப்பும், சொரியும் குருதி உறுஞ்சலும், விரைவில் பருத்து ஊர்தலும், இனப்பெருக்கம் செய்தலும் ஆய்ந்த முன்னையர் இப்பெயர் இட்டனர். ஒரு பெரும் புலவர் தமக்கு ஏற்பட்டுள்ள வாட்டும் பகைகளுள் பேன்பகை உண்மையையும் சுட்டுதல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது (136). பேன் துணிகளிலும் உண்டாகும். அது வெள்ளைப் பேன், சீலைப்பேன் என வழங்கும். வியர்வை அழுக்கு அதன் உருவாக்கத்துக்கு மிகப் பயனாம். சிறியதைப் பெரிதாக்குவாரைப் பேனைப் பெருமாளாக்குவார்என்பர். அது பழமொழி ஆயிற்று. ஆ > ஆன்; மா > மான்; கோ > கோன் என்பவை போல் பே > பேன் ஆயிற்று. பே > பேய் ஆதலும் அச்சப் பொருள் தருதலும் எண்ணத்தக்கன.  பை வரிசைச் சொற்கள் பை: பகர ஐகாரமாகிய பை நெடிலாதலின் ஓரெழுத்து ஒருமொழியாம். பை:1 பசுமை, வளமை, பைம்புல்; பைங்கால் கொக்கு (நெடுநல். 15). பை என்பது பைம்மை அல்லது பசுமை. பச்சை மணி பரப்பி வைத்தாற் போலத் திகழும் புல்வெளியில் வேறு செடி கொடி மரங்கள் இல்லையாயினும் அழகு நலம் உண்டாகலின் பசுமையும் அழகெனப் பெற்றதாம். பல வண்ணக் கலப்பு அழகு என்றால், ஒரே வண்ணப் பரப்பும் அழகே எனக் கண்டது பைஎன்க. பை:2 பை = பொருள்கள் வைக்கும் பை. கைப்பை, தோட்பை, சுருக்குப்பை, கோணிப்பை என்பவை ம.வ. பை:3 பை = மெது, மென்மை. பைய நடம.வ. பை:4 பாம்பின் படம். பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள் - தனிப். முன்னேர்க்காரர் விரைந்து சென்றார்; பின்னேர்க்காரரால் அவரைத் தொடர முடியவில்லை. அதனால் பாட்டுப் பாடுவது போல் பையேன்னா பையேன்னாஎன நீட்டி இசைத்தார். மெதுவாகச் செல் என்று அதனைப் புரிந்து கொண்ட முன்னேர்க்காரர், நீ ஆழமாய் உழுவதால்தான் தொடர முடியவில்லை; மேலாக உழு என்பதைச் சொல்ல, தேயேன்னா தேயேன்னாஎன்றார். ஏன் ஆழமாய் உழுகிறாய் தேய்த்துக் கொண்டு மேலாக உழுதுவா என்று பாடினார். வாடகை ஏர் உழவு பற்றிய வழக்கு இது. பைஇப் பைய: பசுமையாகப் பையப் பைய - மெது மெதுவாகப் பசுமை பரத்தல். பசுமையும் மெதுமையும் ஒருசேர வந்த தொடர் இது. பைஇப் பையப் பசந்தனை பசப்பே - நற். 96 பைதல்: பையல் > பைதல் = இளமை, இளமைப் பருவம். பைதல் பருவமானதால் விளையாட்டுப் போகவில்லைம.வ. சிறுகிளிப் பைதலே - நாலா. 3830 குயிற் பைதல்காள் - நாலா. 3832 பைதிரம்: பை + திரம் = பைதிரம் = வளமான நிலம். வாழ்தல் ஈயா வளனறு பைதிரம் - பதிற். 19 வளந்தலை மயங்கிய பைதிரம் திருத்திய - பதிற். 38 பிரதேசம் என்னும் வடசொல்லுக்குத் தமிழில் முந்துற அமைந்த சொல் பைதிரமாகும். எ-டு: மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம். பைமை: பைமை = பசுமை. பசுமையாம் தன்மை, இளமை (வெ.வி.பே.) பைய: பைய என்பது மெதுவாக, மெல்ல என்னும் பொருளில் வழங்கும் தென் தமிழக வழக்குச் சொல். திருச்சி புதுவை முதலாய இடங்களில் பொறுமையாக என வழங்கும் சொல், மெல்ல மெதுவாக எனப் பொருள்கொண்டு வழங்குகின்றது. மற்றை இடங்களில் பொறுமை பொறுத்துக் கொள்வதாம் பண்புப் பெயர் ஆகும். பையன்: பைம்மையாம் இளமைப் பருவத்தன். பையன்கள் இருவர் உள்ளனர் - ம.வ. பைய, பையா - அண்மை, சேய்மை விளிகள். பையுள்: பை = இடும்பை, நோய், துயர். பையுளும் சிறுமையும் நோயின் பொருள - தொல். 824 படையொடு வந்த பையுள் மாலை - நற். 343 பையுள் நோய் கூர - சிலப். 7:50  பொ வரிசைச் சொற்கள் பொ: பகர ஒகரம்; உயிர்மெய்க்குறில். இன்னொரு குறிலொடு சேர்ந்து நெடிலாகிச் சொல்லியல் பெறும் எழுத்துகளுள் ஈதொன்று. பொழுது > போழ்து > போது. பொகுட்டு: பொகுட்டு : 1 காற்றுப் புகுதலால் எழுந்த நீர்க்குமிழ்; நீர்க் குமிழி என்பதும் அது. பொகுட்டு : 2 நீர்க்குமிழ் போல் அமைந்த தாமரைக் கொட்டை. மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீறூர், பூவின் இதழகத் தன்ன தெருவம்; இதழகத்து அரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில் - பரிபா. திர. 6.7 பொகுட்டு:3 கொப்பூழ். தொப்புள்ம.வ. பொகுவல்: பொதுத்துக் கிழிக்கும் வலிய அலகுடைய ஆண்டலைப் பறவை. ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும் - மணிமே. 6:77 பொருள்: உணவாகத் தலை மூளையைக் கடித்துண்ட ஆண்டலைப் பறவையின் குரலும்(குறிப். உ.வே.சா.). கவிசெந் தாழிக் குவிபுறத் திருந்த செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவர வாய்வன் காக்கையும் கூகையும் கூடி பேஎ யாயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு - புறம். 238 பொக்கம்: பொக்கு என்பது உள்ளீடு அற்ற - மணியற்ற - தவசம், பயறு ஆயவை. அதனைக் காற்றில் தூற்றினாலும், நீரில் போட்டாலும் கீழே படியாமல் மேலே பறக்கவோ மிதக்கவோ செய்யும். அப் பொக்கின் தன்மை அதற்கு உயரப்பொருள் தந்தது. பொக்கம் என்பதற்கு உயரம் என்பது கல்குள வட்டார வழக்கு. பொங்கடி: கருவூர் வட்டாரத்தார் திருமணச் சான்றாக உள்ள தாலியைப் பொங்கடி என்று வழங்குகின்றனர். மகிழ்வுமிக்க விழாவும், அவ்விழாவில் பொலிவோடு பூட்டப்படும் அணிகல மாக இருப்பது தாலி என்பதும் எண்ணின் இவ் வழக்கின் மூலம் தெளிவாகும். மகிழ்வூட்டும் அணிகலம் பொங்கடி என்க. பொங்கர்: இலையும் தழையும் பூவும் காயும் கனியும் பொங்கிக் குலுங்கும் சோலை பொங்கர் எனப்படும். வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென நெற்றுவிளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் - குறுந். 39 பொங்கல்: பொங்கல்:1 பொங்கல் விழா. * ‘தை’ப்பொங்கல் காண்க.* பொங்கல்:2 புளிப்பால் பொங்கிவரும் கள். பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து -சிலப். 5:69. அரும். பொங்கல் = கள்ளு. பொங்கல்:3 மகிழ்ச்சி. என்ன பொங்கிப் போகிறாய் -ம.வ. பொங்கல் வைத்தல்: பொங்கல் வைத்தல் = கொலைபுரிதல், அழித்தல். பொங்கலுள் தைப்பொங்கல் உயிர்ப் பலியற்றது. மற்றைப் பொங்கல்கள் அதிலும் குறிப்பாகச் சிற்றூர்ச் சிறுதெய்வப் பொங்கல்கள் உயிர்க் கொலைக்குப் பேரிடமாக இருந்தவை. உயிர்ப்பலித் தடைச்சட்டம் வந்த பின்னரும் கூட முற்றாகத் தடுத்துவிட முடியாத அளவு கொலைவெறிக்கு இடமாக இருப்பவை. இவ்வழக்கில் இருந்தே பொங்கல் வைத்தல் என்பதற்குக் கொலைபுரிதல் பொருள் வந்தது. மனிதரைப் பலியூட்டிய வரலாறும் உண்டு என்பது இந் நூற்றாண்டிலும் கூட ஆங்காங்கு நடக்கும் கயமைகளால் அறியப்படுவதே. உன்னைப் பொங்கல் போடுவோம்என்பது கொலைக்குறி. பொங்கு: பொங்கு என்பது மேலெழுதல் ஆகும். பொங்கி வழிதல், பொங்கல் என்பவை எண்ணுக. உள்ளம் கிளர்ந்து மகிழ்வதும் பொங்குதல் எனப்படும். பொங்குமாகடல் என்பது குற்றால அருவி மேல் நீர்நிலை. கருவூர் வட்டாரத்தார் கோழி இறகைப் பொங்கு என்கின்றனர். சோளத்தின் மேல் உள்ள தோட்டைச் சொங்கு என்பது முகவை, நெல்லை வழக்கு. இதனை எண்ணலாம். பொங்கை: பொங்கு (இறகு) என்பது போலப் பொங்கை என்பதும் வலுவின்மை மென்மை என்னும் பொருள்களில் வழங்கும் சொல்லாகும். ஒல்லியானவன் என்னும் பொருளில் பொங்கை என்பது கொங்கு நாட்டு வழக்காக உள்ளது. பொசிதல்: நீர் கசிதல் பொசிதல் ஆகும். நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - மூதுரை. 10 புசித்தல் = பொசித்தல்(உண்ணல்) என்பார் வள்ளலார். பொசுக்குதல்: சுடுதல், சுட்டுப் பொசுக்குதல் என்பவை ம.வ. கோடை வெயில், செருப்பில்லாமல் சிறிது நடந்தேன்; சுட்டுப் பொசுக்கி விட்டதும.வ. எதிரிகளைப் பொசுக்குகிற எரிகதிரே (நூல்: ஆண்டகை: 59) பொசுபொசுப்பு: வலுவாகத் தோன்றி மெதுமெதுவாக ஒன்றுமில்லாமல் போதல் பொசுபொசுத்துப் போதல் என்பது ம.வ. பிசுபிசுத்தல் என்பதும் அது. பொச்சரிப்பு பூழாப்பு: பொச்சரிப்பு = உள்ளரிப்பாம் எரிவு. பூழாப்பு = பொறாமை. அவன் பொச்சரிப்பும் பூழாப்பும் அவனை அமைதியாய் இருக்கவிடாதுஎன்பர். உட்சினமும், பொறாமையும் உடையவரை வாட்டிக் கொண்டு தாமே இருக்கும். விட்டு வைக்குமா? பொச்சாப்பு = மறதி; பொச்சரிப்பு = எரிச்சல்; பூழாப்பு = பொறுக்க முடியாமை அல்லது பொறாமை. பொச்சாப்பு: பொய்த்து > பொச்சு > பொச்சாப்பு; ஆர்ப்பது > ஆர்ப்பு > ஆப்பு. பொய்யாக ஆரவாரம் செய்து, செய்ய வேண்டுவ செய்யாது மறந்துவிடுவது. பொச்சாப்புக் கொல்லும் புகழை - திருக். 532 பொச்சாவாமைஎன்பது திருக்குறளில் ஓர் அதிகாரம் (54). பொடி: பொடி = பொடித்தல் = பொரிதல்; வெப்பத்தால் புழுதியாதல் பொடியாம். காடுடைய சுடலைப் பொடி பூசி - திருஞான. தேவா. பொடித்திருமேனி அம்பலத்தாடும் - வள்ளலார். பொடி உழவு - வேளாண் வழக்கு. தேயிலைப் பொடி, குளம்பிப் பொடி, மூக்குப்பொடி, மஞ்சள் பொடி, நறுமணப் பொடி என எண்ணரிய பொடியுலாக் காலம் இக்காலம். உசிலை எனப்படும் மசாலைப் பொடி பெருந்தொழிலாகவே நிகழ்கின்றது. பொடித் தூவல்: பொரியல் எனப்படும் பொது வழக்கு, திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் பொடித்தூவல் எனப்படுகிறது. அவியல், துவையல் போன்றது அல்லாமல் பொரியல் கறி செய்து முடித்து, பின்னர் அதன்மேல் அதற்கு வேண்டும் உப்பு, உறைப்பு, மசாலை (உசிலை) ஆயவற்றைத் தூவும் செய்முறையால் பெற்ற பெயராகும் இது. பொட்டலாக்கல்: பொட்டலாக்கல் = பயனைக் கெடுத்தல். பொட்டல் என்பது மேட்டு நிலம்; நீர்வளமற்று வான்மழையை நோக்கிப் புன்பயிர் செய்ய உதவுவது, அப் பயிரும் செய்ய ஆகாத மேடும் உண்டு. அது வறும்பொட்டல், வெறும்பொட்டல், களத்துப் பொட்டல் எனப்படும். தலையில் விழும் வழுக்கையைப் பொட்டல் என்பதும் உண்டு. அப் பொட்டல் மயிர்வளம் இன்மை காட்டும் என்றால், இப் பொட்டல் பயிர் வளம் இன்மை காட்டுவது தெளிவு. இப் பொட்டலிலிருந்து பிறந்தது தானே தலைப்பொட்டல். வளமான நிலத்தையும் உழைத்துப் பாடுபடாமையால் பொட்டலாக்கி விடுவார் உண்டு. அது போல வளமான குடும்பத்தில் பிறந்தவருள் சிலரும் தம் குடியைப் பொட்டலாக்கி விடுவர். அவரைப் பொட்டலாக்கப் பிறந்தவன் எனப் பழிப்பது வழக்கிடைச் செய்தி. பொட்டல்: பொட்டு + அல் = பொட்டல். ஒரு பொட்டு - சொட்டு - நீரும் அற்ற - நீர் தங்காத - நிலம் பொட்டல் நிலம். பொட்டு என்பது புளியம் பொட்டு என இலையையும், துவரம் பொட்டு எனப் பருப்பின் மேல் தோலையும் குறிக்கும். பொட்டுப் பொடி என்பது சிறிது என்னும் பொருளது. ஒரு பொட்டு நீரும் இல்லை என்பது வழக்கு. எவ்வளவு மழை பெய்தாலும் அம் மழை நீரைத் தன்னுள் வாங்கிக் கொள்ளாமல் ஓடவிட்டு விடுவதும், பெரிதும் ஈரப்பதன் அற்றும் இருக்கும் நிலம். - மேட்டு வன்னிலம் - பொட்டல் எனப்படும். தலையில் முடியில்லாமை பொட்டல்எனப்படல் வழக்கு. மேட்டு வன்னிலம் பொட்டல் காடு எனப்படும். ஆங்குள்ள ஊர் பொட்டல்பட்டி, பொட்டல் புதூர், பொட்டல் கொல்லை, பொட்டல்காடு எனப் பெயர் பெறும். பொட்டு நீரும் அற்ற வறண்ட நிலம், பொட்டல். பொட்டன்: காது கேளாதவனை விளவங்கோடு வட்டாரத்தார் பொட்டன் என்கின்றனர். செவிடன் என்பது பொருளாம். நீர் உள்ளே புகாமல் கெட்டிப் பட்ட மேட்டு நிலம் பொட்டல் எனப்படும். பயிரீட்டுக்குப் பயன் செய்யாது. அந்நிலம் நீர் உட்கொள்ளாமை போல, இவன் ஒலியை உட்கொள்ளாதவன் என்னும் பொருளில் பொட்டன் எனப்பட்டானாம். பொட்டித்தல்: பொட்டித்தல் என்பது திறத்தல் என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பொட்டுப் பொட்டெனக் கண்ணை இமைத்தல்; பொட்டென்று கண்ணை மூடப் பொழுது இல்லாமல் தவிக்கிறேன்என்னும் தொடர்களை நோக்கினால் மூடித் திறத்தல் என்பதற்கும் பொட்டுதலுக்கும் உள்ள தொடர்பு புலப்படும். பொட்டென்று போய்விட்டார் என்பதும் கண்ணை மூடுதலை (இறத்தலை)க் குறிப்பதே. பொட்டு = கண்ணிமைக்கும் பொழுது; பொட்டு = காற்றில் பறந்தோடும் பதர், சருகு, செத்தை; என்பவற்றை நினைக. பொட்டு: பூக்களின் இதழ்கள், பொட்டு என வழங்கப்படும். அப் பொட்டுகளைப் போலச் செய்யப்பட்ட அணிகலங்களுள் ஒன்று தாலி. அதற்குப் பொட்டுஎன்று வழங்குவது குமரி மாவட்ட வழக்காகும். பொட்டுத் தாலி என்று இணைத்துச் சொல்வதும் வழக்கே. தோடுஎன்னும் அணிகலப் பெயரும் பொட்டுஎன்னும் இயற்கை வழிப்பெயராதல் கருதுக. பொட்டுப் பொடி: பொட்டு = பயறு தானியம் முதலியவற்றின் தோல். பொடி = பயறு தவசம் முதலியவற்றின் தோல் நொறுங்கல். சில பயற்றுச் செடிகளின் காய்ந்த இலையும் பொட்டெனக் கூறப்படும். அவ்விலையின் நொறுங்கல் பொடியாம். துவரம் பொட்டு என்பது துவரை இலையும், நெற்றின் தோலுமாம். அவற்றின் நொறுங்கல் பொடியாம். இனிப் பொட்டுப் பொடிஎனத் தட்டு முட்டுக் கலங்களும், அணிகலங்களும் வழங்கப் பெறுதல் மிகச் சிறிய பொருள்களைக் குறிப்பதாம். பொதிகை: பொதிதல், மூடிக் கட்டுதல், மூடி மறைத்தல், மறையுமாறு புதைத்து வைத்தல் என்பவை பொதிகையாம். கட்டுணவு பொதி சோறாம்; பொதி என்பது நிறுத்தல் அளவுகளுள் ஒன்று. பருத்தியைப் பொதியாகக் கணக்கிடுவர். அதனை நிறுத்துப் போட்ட பரிய மூடையைப் பொதி என்பர். பொதி மாடுகள் பொதி கழுதைகள் உண்டு. பொதி மூடைப் போரேறிஎன்பது பட்டினப்பாலை (137). சுவையும் வலுவும் மிக்கதாய புதினாத் தழையைப் பொதினா என்பார் பாவேந்தர். ஆற்றல் பொதிந்தது என்பதாம். எப்பொழுதும் கருமுகில் வெண்முகில் படலங்களால் பொதிதலுற்று விளங்கிய மலையைப் பொதிகை, பொதியம் என்றனர். பொதியில் என்றும் கூறினர். இல்இடப் பொருளதாம். அகத்தியமலை என்பது பின்னாளைத் தொன்மக்கதை கொண்டு வழங்கப்பட்டதாகும். மூன்று கூடங்கள் போல் அமைந்தமையால் திரிகூடம் எனப்பட்டது. * திரிகாண்க. பொதியல்: பொதியல் என்பது மூடுதல் பொருளது. வெயில் மழை புகாமல் காப்பாக அமைந்த குடையை - ஓலைக் குடையை-ப் பொதியல் என்பது நெல்லை, குமரி மாவட்ட வழக்காகும். நுங்கு, ஊன் முதலியவை பனை ஒலையைக் குடையாகச் செய்து, தூக்கில் கொண்டு போதல் பண்டு தொட்டே வழங்கிய வழக்காகும். ஓலைக் குடை என்பது அதன்பெயர். மூடி வைப்பதால் பொதியல் ஆயது. பொதிசோறுதேவாரச் செய்தி. பொதியில்: பொதியில்:1 பொது + இல் = பொதுவில் > பொதியில். தொன்மூ தாலத்துப் பொதியில் பொருள்: மிகப்பழைய ஆலமரத் தடியிலுள்ள பொது இடத்தில்; ஊரவை கூடுமிடம். பொதியில்:2 முகிலால் பொதியப்பட்டிருக்கும் குற்றால மலை அல்லது பொதியமலை. பொதும இலை: வாழைக்காய் முதலியவற்றைப் பழுக்க வைப்பவர் வைக் கோலால் மூடல், புகைபோடல் ஆகியவை செய்வர். வேப் பிலையைப் போட்டு மூடிப் பழுக்க வைத்தலும் வழக்கம். அதனால், திருச்செந்தூர் வட்டாரத்தில் வேப்பிலையைப் பொதும இலை என வழங்குகின்றனர். மூடி வைத்தல் என்பது பொதிதல் என்பதாம். பொதிஎன்பது பொதிந்து வைக்கப்பட்ட மூடை யாகும். பொதி என்பது பழங்கால நிறைப்பெயர்களுள் ஒன்று. பொதும்பு: பொதும்பு, இலையும் பூவும் காயும் கனியும் பொதும்பி யுள்ள - செறிந்துள்ள - சோலை. சங்கச் சான்றோர் வாழ்ந்த பொதும்பில் மதுரையை அடுத்து அப்பெயராலேயே இன்றும் வழங்குகின்றது. பொதும்பின் இயல்பை எழில்பட இயம்புகிறார் சாத்தர். வெயில்நுழைந்து அறியாது; அவ்வளவு செறிந்த பொதும்பில், என்ன நுழைகிறது? குயில்நுழைந்து வெளிப்படாது உறைகிறது (மணிமே. 4:5). பொதுவர்: பொதுவர் = ஆயர், இடையர். குறிஞ்சி நிலத்திற்கும் மருத நிலத்திற்கும் இடைப்பட்ட நிலமாகிய முல்லை நிலத்து வாழ்நர் இடையர் எனப்பட்டனர். குறிஞ்சி நிலத்து வளமும் மருத நிலத்து வளமும் பெற வாய்த்தலால் பொதுவர் எனப்பட்டனர். பொத்தகம்: பொத்தகம் = ஏட்டுச் சுவடி. போந்தை = பனை; பனை ஓலையே ஏட்டுச் சுவடியானமையால் பொத்தகம் எனப்பட்டது. பனை, புல் இனத்தது; புல் இனம், வெளிவயிர்ப்பும் உள் துளையும் உடையதாம். பொந்து, பொத்து, பொத்தல், பொள்ளல், புடை, புதை, புழல், புழை ஆயவை உட்டுளைப் பொருளவை. பனை, உள்ளே சோறுள்ளமையால் பொந்து > போந்து > போந்தை ஆயது. பொத்தலுடையதன் ஓலையால் அமைந்த சுவடி பொத்தகம் ஆகிப் பின்னே புத்தகமும் ஆயது. பொத்தகம் முன்வடிவு; புத்தகம் பின்வரவு; பொத்தகம் என்பதைப் பெருங்கதை பெருக வழங்கும். புல்லுதல் = பொருந்துதல். புல் > பொல் > பொரு > பொருந்து > பொருத்து > பொத்து > பொட்டு. பொத்துதல் = பொருத்துதல், சேர்த்தல், தைத்தல், மூட்டுதல், மூடுதல். பொத்து ழூ பொத்தகம் = பொத்திய (சேர்த்த) ஏட்டுக் கற்றை, எழுதிய ஏட்டுத் தொகுதி.”(பாவாணர், வ.மொ.வ. 211). பட்டுச் சுவேதமொடு பாட்டுப்புற மெழுதிய கட்டமை சுவடிபற்றிய கையினர் - பெருங். 3:1:120 என்று சுவடியைச் சுட்டுகிறார் கொங்குவேளிர். சுவடிக்குப் பொத்தகம்என்னும் பெயருண்மையையும் அவர் குறிக்கிறார். நிறைநூல் பொத்தக நெடுமணை ஏற்றி என்பது அது (1:36:226). பொத்தகக் கட்டும், பொத்தகக் கைவினையும் அவரால் பேசப்படுகின்றன. சிந்தாமணியும் பொத்தகத்தை ஆள்கிறது (2009). கலைமகள் வாழ்த்தாக அமைந்த ஒரு வெண்பா பொத்தகமும் ஞானத்து முத்திரையும்எனத் தொடங்குகிறது. பல பொத்தகம் கிடந்தவழி ஒருவன் ஏவலாளனைப் பார்த்து பொத்தகம் கொண்டு வாஎன்றால், அவன் ஒரு பொத்தகங் கொண்டு வந்தவிடத்துத் தான் கருதிய பொத்தகம் அன்றெனில் மற்றையது கொணாஎன்னும். என்றக்கால் இக் கொணர்ந்ததனை ஒழிக்கும் சொல், இக் கொணர்ந்த பொத்தகம் சுட்டிற்றாகலான் கொணர்ந்ததனை ஒழிக்கும் சுட்டுநிலை அதனை ஒழித்து ஒழிந்ததொன்று அவ்வினத் தல்லது பிறிதொன்று குறித்தது கொல்லோ எனிற், குறியா. மற்று அப் பொத்தகத்துள் ஒன்றே பின்னும் குறித்தது எனப்படும்என்பதன் வழியாக ஓரிலக்கணம் கூறுவதுடன் பொத்தகம் என்பதே மூல வடிவம் என்பதனையும் நிலைப்படுத்துகின்றார் இளம்பூரணர். புத்தகம் என்பது அவர் காலத்திற்குப் பிற்பட்ட வழக்காக வேண்டும். அல்லது புத்தகம் என்பது பொருந்தும் மூல வடிவம் அன்று என்று அவரால் விலக்கப்பட்டதாதல் வேண்டும். மொழிக்கு முதலாம் எழுத்துகளுக்கு எடுத்துக்காட்டுத் தரும் நேமிநாத உரை, பகர வரிசைக்குப் படை, பாடி, பிறை, பீரம், புறம், பூமி, பெற்றம், பேதை, பைதல், பொத்தகம், போதம், பௌவம்என்கிறது. இதனால் அவர் காலத்தில் புத்தகம் என்பதனினும் பொத்தகம் என்பதே பெருவழக்காக இருந்தமை புலப்படும். ஏனெனில், அவர் பகர உகரத்திற்குப் புத்தகம் என்பதைக் காட்டியிருக்கக் கூடுமே. நன்னூல் உரையாசிரியர் சங்கர நமச்சிவாயர் பலபொருளான் இயைந்த ஒருபொருள் என்பதற்கு அடிசில் பொத்தகம் சேனைமுதலியவற்றை எடுத்துக் காட்டியுள்ளார். பொத்தகம் என்பது போலப் புத்தகம் என்பதும் பழமை யிலேயே வழங்கியமையும் அறிய வருகின்றது. புத்தகமே சாலத் தொகுத்து - என்கிறது நாலடி (318). புத்தகக் கவளி ஏந்தி - என்கிறது பெரியபுராணம். இந்நாளில் புத்தகமே பெரு வழக்காகவும், பொத்தகம் அருகிய வழக்காகவும் அல்லது மீட்பு வழக்காகவும் வழங்கப் படுகின்றன. பொத்தல் பொதுக்கல்: பொத்தல் = ஓட்டை யுடையது. பொதுக்கல் = பரிதாகத் தோன்றும் பொய்த் தோற்றம் உடையது. பொத்தல் உள்ளீடு இல்லாதது; அவ்வாறே பொதுக்கலும் உள்ளீடு இல்லாததே. இருப்பினும் பொத்தலினும் பொதுக்கல் தோற்றத்தால் பெரியதாம். பொத்தல் பொந்து எனவும் வழங்கும். பொதுக்கன், பொதுக் கட்டி எனச் சிலர்க்குப் பட்டப் பெயரும் உண்டு. அவர்கள் பருத்த உடலும் வலு இன்மையும் உடையவராக இருப்பர். பொந்து புடை: பொந்து = மரத்தில் உண்டாகிய ஓட்டை. புடை = நிலத்தில் உண்டாகிய ஓட்டை. பொந்து ஆயிரம் புளி ஆயிரம் என்னும் பழமொழி, புளியின் தன்மையைக் கூறும். புளி பொந்துபட ஆயிரம் ஆண்டாம்; பொந்துபட்ட பின்னும் வாழ்வது ஆயிரம் ஆண்டாம். புடைத்தல் = பருத்தல், வெளியில் பருத்துத் தோன்றி உள்ளே ஓட்டை இருப்பது புடையாம். புடைத்தல் பருத்தல் என்பதைக் குறித்துப் பின்னர் அதன் உள்ளே அமைந்த ஓட்டையைக் குறித்ததாம். இனிப் பொந்து பெரியதும், புடை சிறியதுமாம் ஓட்டை யாம். கிணற்றில் பொந்து புடை உள்ளன என்னும் வழக்கு இதனைக் காட்டும். பொம்மும்: பொதுமும் > பொம்மும். பொதும்பு = சோலை; பொதும்புதல். எழிலும் வளமும் நிரம்பி உளமும் பொதும்பச் செய்வது பொதும்புதலாம். பொதும்பும் > பொம்மும். பூத்த கண்ணொடும் பொம்மும் உளத்தொடும் - ஆண்டகை. 64 பொம்ஒலிக்குறிப்பு. பொம்மென் முழக்கம் - கம்ப. ஆரண். 392 பொம்மல் = திரண்டிருத்தல், பொதுமியிருத்தல். பொம்மல் ஓதியும் புனையல் - குறுந். 191 பொய்: பொய்:1 பொய்யாவது உள்ளீடு இன்மை. அஃதாவது யானை உண்ட விளங்கனி போல்வது. அஃது இல்லாமையோடு ஒக்கும் (திருக்குறள், தண்ட. 183). பொய்:2 பொய் என்பது பொந்து எனப் பொருள்படும். அஃதாவது வெளியே ஒரு பொள்போல் தோன்றி உள்ளே வெறும் புரையாய் இருப்பது. இங்ஙனமே ஒருவர் நினைவுஞ் சொல்லும் செயலும் ஆராய்ந்து காண்போர்க்கு உள்ளீடு இல்லாதனவாய்ப் புலப்படுமாயின் அவை பொய்யென்று சொல்லப்படும். உள்ளீடு இல்லாப்புரை பயன்படாமை போலப் பொய்யான நினைவு சொற் செயல்களும் பயன்படாமையே அன்றித் தீவினையையும் பயப்பனவாம். இனிப், பரிமேலழகியார் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கருத்துப் பற்றி நன்மை பயவாத நிகழாதது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மைஎன உரைப்பர். நன்மை பயவாதது உண்மையே யாயினும் பயன்படாமையின் அஃது உள்ளீடு இல்லாததே யாம்; நன்மை பயப்பது உண்மை அன்றாயினும் அது பயன்படுதலின் அஃது உள்ளீடு உடையதே யாம். நாயனார் பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்குமெனின்என்பதிற் புரை என்னுஞ் சொல்லையும் உடம்பொடு புணர்த்து ஓதினாராகலின் பொய்யென்பது பயன்படுதலாகிய உள்ளீடு இல்லாத புரையேயாம் என்று உணர்ந்து கொள்க. புரை, பொய், புழை, பொந்து என்பன உட்டொளையினை உணர்த்தும் ஒரு பொருட் பெயர்கள் (திருவாசக விரிவுரை, மறைமலை. 65-66). * பொய்க்குகாண்க. பொய்கை: பொய்யான ஆழத்தின் தோற்றம் தரும் தூய நீர்நிலை பொய்கையாம். திருக்குறள் தூயநீர்ப் பொய்கை; அஃது ஈரடியாய்க் காட்டி ஈராயிரம் அடியாக ஆழ்ந்து செல்லும் பளிக்கு நீர்ப் பொய்கை என்பார் முதற்குறள் உவமைஆசிரியர் கு. கோதண்டபாணியார். தூய நீரின் அடியில் கிடக்கும் ஒன்று அணித்தே இருப்பது போல் காட்டி ஆழத்துள் ஆழமாய்ச் செல்வதால் பொய்கைஎனப்பட்டதாம். களவழி நாற்பது பாடிய புலவர் பொய்கையார் அல்லரா! முதலாழ்வார் மூவருள் முதல்வர் பொய்கையார் அல்லரா! ஊர்ப்பெயரே பொய்கையாய், ஆங்குப் பிறந்தமையால் பொய்கையாராய்ப் பெயர் பெற்றவர்களாம். பொய்த்தோற்றம் தரும் கரடு ஒன்று மான்எனக் காண்பாரை மயக்கும். அதற்குப் பொய்மான் கரடு என்பது பெயர்; சேலம் சார்ந்தது அது. பொய்ம்மை (பொம்மை). * பொய்தல்காண்க. பொய்க்கு: உள்ளீடற்ற தவசம் பொய்க்கு எனப்படும். உள்ளீடாம் உண்மை அற்றது பொய். அது போல்வது பொய்க்கு. பொய்க்கு > பொக்கு. பதர், பதடி என்பதும் பொக்கே. தவசத்தைக் காற்றில் தூற்றும் போது மணியுள்ளது நேரே கீழே விழ, பொய்க்கு அப்பால் அகன்று பறந்து போகும். ஆதலால் பொக்கு என்பது விரைவுப் பொருள் தந்தது. பொக்கென்று வாஎன்பது விரைந்து வா என்பதாம். பொய்தல்: தொல்பழநாள் தொட்டே சிறுவர் சிறுமியர் ஆடும் விளையாட்டாக விளங்கி வருவது, பொய்தல். பின்னாளில் அது சிறுவீடு கட்டுதல் எனப்பட்டது. சிற்றில் இழைத்தல் என்பது (இலக்கிய ஆட்சி) பிள்ளைத்தமிழில் ஒரு பருவம் ஆயிற்று. கைதை வேலிக் கழிவாய் வந்தெம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர் பொய்தல் அழித்துப் போனார் அவர்நம் மையல் மனம்விட் டகல்வார் அல்லர் என்பது சிலம்புக் கானல் வரி (43). பொய்தல் அழித்து - விளையாட்டை மறப்பித்துஎன்பது அரும்பதவுரை. ஆண்களுள் சிறுவரும் பொய்தல் ஆடினர் என்பது, பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் என்னும் நற்றிணையால் விளங்கும் (166). பெரியவர்கள் செய்யும் தொழில், ஆடல், பாடல் ஆகிய வற்றைக் கண்ட சிறுவர் சிறுமியர் அவற்றை அவர்போலச் செய்யும் விளையாட்டு ஆதலால் பொய்தல் எனப்பட்டதாம். வேட்டையாடல், வீடு கட்டல், சமையல் செய்தல் முதலாய வற்றை விளையாட்டாகச் செய்து பின்னர் அவர்களே அழித்து விட்டுப் போதலும், குறும்புச் சிறார், சிறுமியர் கட்டிய பொய்வீடு முதலியவற்றைச் சிதைத்தலும் சிற்றூர் விளையாட்டாக இன்றும் நிகழ்வதேயாம். சிற்றில் சிதையேலோஎன்றல் பிள்ளைத்தமிழ். பொய்தல் வாழ்வியற் பயிற்சி என்பர். யானை, குட்டியைப் பொய்யாகத் தாக்குதலும்; நாய், குட்டியைப் பொய்க்கடி கடித்தலும்; ஆ, கன்றைப் பொய்முட்டு முட்டுதலும்; கோழி, குஞ்சுக்கு இரையுண்ணப் பயிற்றலும் பொய்தல் வகையவாம். பொய் கூறலும், வான்முகில் பெய்யாது கழிதலும் பொய்த்தலாம். அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளைகள் தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ? என்பது கம்பர் அவையடக்கு. புழுதியாட்டு அயராஓர் அயிராவணம் என்பது குமரகுருபரர் கூறிய மூத்த பிள்ளையார் ஆட்டு! பொய்தல், விளையாடல் என்பவை, பின்னைத் திரு விளையாடல் மூலகங்கள்! பொய்புரட்டு: பொய் = உண்மை இல்லாததை (உள்ளீடு இல்லாததை)க் கூறுதல். புரட்டு = ஒன்றை ஒன்றாக மாற்றிக் கூறுதல். இல்லாத ஒன்றைக் கூறுவது, பொய்; இருக்கும் ஒன்றை நேருக்கு மாறாக மாற்றிக் கூறுவது புரட்டு. பொய் உள்ளீடு இல்லாதது. பொக்கு, பொக்கை, பொத்தை, பொந்து முதலிய வற்றைக் கருதுக. பொய் புரட்டுப் பேசாவிட்டால் உனக்கு வயிறு வீங்கி விடுமே என்பதொரு பழிப்புரை. * உருட்டுப் புரட்டுகாண்க. பொய் புளுகு: பொய் = உண்மை அல்லது உள்ளீடு இல்லாததை உள்ளது போல் கூறுதல். புளுகு = பொய்யை ஒட்டிப் புனைந்து கூறுதல். பொய் கூறுவதும் அதனைப் பொருத்திக் காட்டுவதற்குப் புளுகு வதும் வழக்கம். ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடாங்கி அணைத்துப் புளுகடா அயலூர்க் கோடாங்கி என்பது பொய் புளுகை வெளிப்படுத்தும். கோடாங்கி கூறுபவன், சில குறிப்புகளை மனத்தில் தாங்கி இவற்றை இப்படிக் கூறுவேன் எனக் கொண்டு கூறுபவன் ஆகலின் அவன் கோள் தாங்கி (கோடாங்கி) எனப்பட்டான். ஓரிடத்துச் செய்தியை ஓரிடத்துக் கொண்டு கூறுதல் கோள்எனப்படுவதை எண்ணுக. பொய்ம்மொழி அழகு (பொய்ம்மொழி அலங்காரம்): அலங்காரம் = அழகு. பொய்யாகப் புனைந்து கூறும் அழகு பொய்ம்மொழி அலங்காரம் எனப்படும். பொய்யாகப் புனைந்து கூற வேண்டுவது என்ன? அதில் அழகு இருப்பதும் என்ன? என ஐயம் எழுதல் இயற்கை. கட்டுக்கதை என்றும் புனைகதை என்றும் சொல்லப்படும் சிறுகதை, தொடர்கதை என்பவையும் நாடகம், திரைப்படம் ஆகியவையும் உள்ளது உள்ளவாறு கூறுவன அல்ல. இல்லோன் தலைவனாக இல்லது கூறலும்கூத்து வகைக்குரியதெனக் கொள்கை வகுத்துளர். இப்பொய்ப் புனைவால் மெய்ந்நலம் உண்டு என்னும் கருத்தாலேயே அவ்வாறு கூறினர். ஆனால் அதனைக் கற்றாரும் கேட்டாரும் உணர்ந்தால் அல்லவோ பயன் உண்டாம்! நல்ல புனைவு, நல்ல பொழுதுபோக்காவதுடன், புனைவில் வரும் நன்னிகழ்வு நறுவிதாய் நெஞ்சகம் புகுந்து நிலைபெற்றுத் தன்வயமாக்கித் தீயோனையும் திருத்தும் நலப்பாடு உடையதாம். கட்டி பூசிக் கடுத்தீற்றுவது போலச்சுவையாகத் தோன்றிச் சுட்டும், நலம் சேர்ப்பது கண் கூடாகலின் இத்தகையவும் நூற் பொருளாக நுவலப் பட்டதென்க. பொய்ம்மொழியும் மெய்ம்மொழியும் போற்றுமலங் காரமிரண் டய்யகலி வெண்பாவால் ஆற்றுவன - பிர. திர. 16 என்பதால் இது கலிவெண்பாட்டால் வருமென அறியலாம். பொய்மையும் வாய்மை யிடத்தபுரை தீர்ந்த நன்மை பயக்கு மெனின் என்னும் குறள் (292) கருதத்தக்கது. * மெய்ம்மொழி அலங்காரம்காண்க. பொய்யும் வழுவும்: பொய் = விளையாட்டுப் போல ஒன்றைச் செய்து விலகிவிடுதல். வழு = உறுதிமொழி தந்து அவ்வுறுதியை வழுவி விலகிப் போய்விடுதல். திருமணச் சடங்குமுறை தோன்றுதற்கு அடிப்படையாக இருந்தவை மணமக்கள் வாழ்வில் பொய்யும் வழுவும் தோன்றி யமையே எனச் சுட்டுகிறார் தொல்காப்பியர் (1091). சிறுமியர் கட்டும் சிறுவீடு பொய்தல்எனப்படும். சிறுவீடு கட்டி விளையாடி அழிப்பது போல் அழித்தது பொய். வழு அல்லது குற்றம் செய்து நழுவிச் செல்லுதல் வழு. ஊரறிந்த உறுதியும் சடங்கும் மணப்பாதுகாப்பும் என்பதாம். பொரிதல்: வெயிலால் வெப்பம் உண்டாம்; வெப்பம் ஈரப்பதம் இல்லாமல் ஆக்கும்; உலர்த்தும்; வெப்பு மிகுந்தால் பொரியும். சுடும் எண்ணெயில் பட்ட கடுகு பொரியும்; அனற்சட்டியில் பட்ட அரிசி சோளம் முதலியவை பொரியாம். கோழியின் அடை காத்தலால் குஞ்சு பொரிக்கும். உடலில் சுரம் உண்டானால் உடல் பொரிகிறது என்பது மக்கள் வழக்கு. மண்ணும் கல்லும் வெப்பாலும் தீயாலும் பொரியும்; பொரிந்தது பொடியும் ஆகும். உழவில் உலரவிட்டு உலரவிட்டு உழுதல் பொடி உழவு எனப்படும். அவ் வுழவுப் புழுதியின் நொய்மையைக் கருதியே தொடிப்புழுதி கஃசா உணக்கின் என்றது வள்ளுவம். உணக்கின் என்றால் ஈரப்பதன் அறவே இல்லாமல் காய விடுதல் ஆகும். பொரி மெல்லிய உணவுப் பண்டம், இதுகால் பெரிய வணிகப் பண்டம். பொரியல் தொடுகறி வகையுள் ஒன்று. இப் பொரியலின் வெப்பும் வெதுப்பும் படபடப்பும், என்னமாய்ப் பொரிந்துவிட்டான்! அவன் முகத்தை இனிக் காணலாமா?என்பது மான நோக்கர் உரை. பொரிதல் இயற்கையின் கொடை. பொருட்டு: பொருட்டுஎன்பது ஒரு சொல். பொருளை உடையது என்பது பொருள். என்னை ஒரு பொருட்டாக அவன் கருதவில்லை; நானும் அவனை ஒரு பொருட்டாகக் கருத வில்லைஎன்பன நாம் கேள்விப்படாதனவா? பொருட்டாக எண்ணப்படுவதே பொருளால் உண்டாவது என்பதால் பொருளின் சிறப்புப் புலப்படும். பொருத்தம்: ஒன்றனோடு ஒன்று ஒத்தது பொருத்தம் ஆகும். பொரு, உவமை உருபு, ஒப்புப் பொருளது. பொருள் என்பது கொடுக்கல் வாங்கல் வகையிலும், பொருதல் என்பது ஊர்தி, கருவி முதலியவை ஒத்த வகையிலும், திருமணம் என்பது பிறப்பு குடிமை ஆண்மை, உருவு முதலாம் பத்து வகைகளிலும் பொருந்த இருத்தல் அல்லது ஒப்பாக இருத்தல் பொருத்தமாகும். பொருந்துதல், பொருதல், பொருள் என்பவற்றிற்குரிய பொருமூலம் ஒன்றே. பொறுமை, பொறுத்துக் கொள்ளல், பொறுப்பு என்பவற்றிற்குரிய பொறுமூலம் வேறொன்று ஆகும். எ-டு: பொருத்தம் அழியாத பூந்தண்தார் மன்னர் - பழமொழி. 242 பொறுத்தல் இறப்பினை என்றும் - திருக். 152 பொருத்திச் சக்கை: ஒன்றொடு ஒன்று பொருந்தி நிற்கும் சுளைகளை யுடைய அன்னாசி (செந்தாழை)ப் பழத்தைப் பொருத்திச் சக்கை என்பது குமரி மாவட்ட வழக்கு. பிரிக்க இயலாவகையில் பொருந்திய செறிவு நோக்கி வழக்கூன்றிய பெயர் இது. பொருநர்: பொரு = ஒப்பு; பொருவ = உவம உருபு. பொருநன் = போராளி. ஒத்த இருவராய், ஒத்த படையினராய், ஒத்த ஊர்தியராய் இருப்பாரே பொருதல் பழவழக்கு. ஆதலால் பொருநர் எனப்பட்டார். எம்முளும் உளன் ஒரு பொருநன் - புறம். 87 ஒருவரை ஒத்த கோலம் இயல்பு செயல் உடையராய் நடிப்பாரும் பொருநர் எனப்பட்டார். எ-டு: பொருநர் ஆற்றுப்படை. பொருள்கோள்: பொருள் + கோள் = பொருள்கோள் பாடற்குப் பொருள் கொள்ளும் முறை பொருள்கோள் ஆகும். பொருள்கோள் ஒன்பது வகைப்படும் நிரல்நிறை மொழிமாற்று, சுண்ண மொழிமாற்று, அடிமறி மொழிமாற்று, அடிமொழிமாற்று, பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள் கோள், தாப்பிசைப் பொருள்கோள், கொண்டுகூட்டுப் பொருள் கோள் (யா.கா. 43, குண. உரை). பொருள்மொழி: பொருள்மொழி = மெய்யுரை, அறவுரை. பொருள்மொழி நீங்கன்மின் - சிலப். 30:192 பொருளுரை என்பதும் இதுவாம். பொய்யிற் புலவன் பொருளுரை தேறாய் - மணிமே. 22:61 பொருள்வஞ்சி: புறத்திணைக்கண் ஒருதுறைப் பொருளை விரித்துக் கூறின் அஃது அப்பொருள் வஞ்சியாகும். விரித்தொரு பொருளை விளம்பினப் பெயராம் - இலக். பாட். 109 பொலம்: பொலம் என்பது பொன். பொலங்கொடி என்பது பொற்கொடி. பொன்னின் அழகும் பொலிவும் மதிப்பும் எவரும் அறிந்தது. ஆகலின், பொலம், பொலிவு, பொற்பு, பொன் என்பன அழகைச் சுட்டினவாம். பொலி: களத்தில் தவசத்தைத் தூற்றிக் குவித்த குவியல் சாவி, சண்டு, தூசு, தும்பு போயமையால் கண்கவர் காட்சியதாய் விளங்கும். அது பொலி எனப்படும். பொலி, பொலிவாம். ஆடு மாடுகள் இணை சேர்தலால் அதன் இனம் பெருகும். ஆதலால், இணைசேர்தல் பொலிதல் (புணர்தல்) எனப்படும். பொலிவு அழகுப் பொருளது. பொலம், பொன் என்பதை அறிக. இற்பொலி மகடூஉ - புறம். 331 பொலி, விளக்கமாம் பொருள் தருவது. மனைக்கு விளக்கம் மடவார் ஆதலால். பொலிவு: பொன்னின் அழகு பொலிவு எனப்பெறும். நிறைவும் பொலிவாம். பொலிவான அழகு, அழகு பொலிகின்றது என்னும் தொடர்கள் பொலிவுக்கும் அழகுக்கும் உள்ள இணைப்பை விளக்கும். பொல்லம்: பொல் என்பது துளை. முறம் பெட்டி முதலியவற்றில் ஓட்டை விழுமானால் பொல்லம் பொத்துதல் (துளையை நாரால் தைத்து மூட்டுதல்) அண்மைக்காலம் வரை வழக்கு. பொல்லம் பொத்தலையோ பொல்லம்எனத் தெருவில் கூவி வருவார் இருந்தனர். பொல்லாப் பிள்ளையார்மெய்கண்டார் வரலாற்றில் இடம் பெற்றவர். பொல்லல், உளிகொண்டு வேலை செய்தல். பொல்லாமை துளையாமல் தன்னிலையில் அமைந்த பிள்ளையார். தான்தோன்றிஎன்பது அது. தான்தோன்றி (தாந்தோணி) கருவூர் சார்ந்ததோர் திருக்கோயில். பொல்லம் துளைப்பொருளில் வழங்குதல் தென்தமிழகப் பெருவழக்கு. பொழி: வானம் பொழிகிறது பூமி விளைகிறதுஎன்பது மக்கள் வழக்கு. பொழியும் முகில் திரண்டு கூடியே பொழிகிறது. ஆதலால் பொழிதல், திரளுதல்என்னும் பொருளதாம். பொழில் என்பது பூவும் காயும் கனியும் அடர்ந்து விளங்கும் சோலை. சொற்களைத் திரட்டிச் சொல்லும் வகையால் தொடர்ந்து சொல்லுதல் சொற்பொழிவு. உழவர் நிலத்தில் நீர்தேக்க வைக்கும் வரப்புக்குப் பொழி என்பது பெயர். மண்ணைத் திரட்டுதலால் பொழி எனப்பட்டது. பாடலின் பொருளைத் திரட்டி யுரைத்தல் பொழிப்புரையாகும். பாடலின் சொல்லுக்குச் சொல் உரைகூறுதல் சொல்லுரை யாம், பதவுரை. பாடல் சொல்லை விட்டுப் பொருளை மட்டும் கூறுவது போல், ஒருசீர் இடைப்பட ஒருசீர் எதுகை மோனை முதலியன பெறுதல், பொழிப்பு மோனை, பொழிப்பு எதுகை முதலியனவாகப் பெயர் பெறும். பொழில்: மாந்தன் தோன்று முன்பும் மக்கள் பெருகு முன்பும் ஞாலத்திலுள்ள நிலமெல்லாம் மரஞ்செடி கொடி படர்ந்து ஒரே சோலையாய்த் தோன்றிற்று. பெருநிலப் பகுதிகளும் சிறுநிலப் பகுதிகளும் தனித்தனி பெருஞ்சோலையும் சிறு சோலையுமாக விருந்தன. இதனால், மண்ணுலகமும் அதன் கண்டங்களும் நாடுகளும் பொழில் என்னும் பொதுப்பெயர் பெற்றன. பொழில் என்பது சோலை; பொழிதல் திரளுதல்; பொழித்தல் திரட்டுதல். மரங்களின் பொழிப்பு அல்லது தொகுப்பு பொழில். ஒரு பாட்டின் சொற்பொருளைத் தொகுத்துக் கூறும் உரையைப் பொழிப்புரை யென்றல் காண்க. தொழில் காவல் மலிந்தியலும் பொழில் காவலன் புகழ் விளம்பின்று என்னும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவில் (66) பொழில் என்பது ஞாலத்தை - பூமியைக் குறித்தது. நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குற என்னும் மணிமேகலை யடியில் (22:29) பொழில் என்பது (இந்து) தேயத்தைக் குறித்தது. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின் என்னும் தொல்காப்பிய அடியில் (செய்யுளியல், எ) அச்சொல் (தமிழ்) நாட்டைக் குறித்தது. பரதகண்ட மெனப்படும் இந்து தேயம், பழங்காலத்தில் நாவல் மரத்தாற் சிறப்புற்றிருந்தமையால் நாவலம் பொழில் எனப்பட்டது. ஒரு காலத்தில் குமரி மலை முதல் பனிமலை (இமயம்) வரையும் முத்தமிழ் வேந்தர் ஆட்சி செலுத்தியமையால், நாவலந் தண்பொழிற்கு மூவர் தண்பொழில் என்றும் பெயர். பிற்காலத்தில் தமிழ் வழக்கும் தமிழாட்சியும் தெற்கே ஒடுங்கிவர, மூவர் தண்பொழில்என்பது தென்னாட்டை அல்லது தமிழ்நாட்டை மட்டும் குறித்தது (சொல். கட். 17). இனி, பொழி > பொழில் எனினும் ஆம். மழை கைம்மாறு வேண்டாது பொழிவது போல் பயன்மிக்கவற்றை யெல்லாம் பொழிவது சோலையாகும். வேராலும், பட்டையாலும், இலையாலும், பூவாலும், காயாலும், கனியாலும் பிறபிறவற்றாலும் பயன்பொழிவது பொழிலாம். மெய்ம்மணம் கமழும் தண்பொழில் - ஐங். 19 பொழிவு: பொழி > பொழிவு. நிலத்தில் அமைக்கப்படும் வரப்பு, பொழி எனப்படும். பொழி என்பது திரட்டி அமைக்கப்பட்டது என்னும் பொருளது. திரண்ட முகில் மழை பெய்வது பொழிவு, பொழிதல். தக்க சொற்களைத் திரட்டித் தகவுரைத்தல் சொற்பொழிவு. கலைத்திறம் கவினக் கல்லில் சிலை வடித்தலும், கல்லைப் பலவாய் வீசுதலும் கற்பொழிவு எனப்படும். அம்பு பல ஏவுதல், விற்பொழிவு. * பொழிகாண்க. பொழுது: பொழுது போகவில்லையே என்று புலம்புவாரைப் பற்றிப் புகலவில்லை! பொழுது போதவில்லையேஎன்று வெதும்பு வாரைப் பற்றி விளம்பவில்லை! பொழுதில் நல்லதும் அல்லதும்பகுத்துக் கொள்வாரைக் குறித்தும் கூறவில்லை! பொழுதுப் பெயர்கள்தாம் தமிழில் எத்தனை! எத்தனை! என்று எண்ணியது இப்பொழுது! அசைப்பு = கண்ணிமைக்கும் பொழுது. அந்தி = கதிர் மறையும் பொழுது. அந்திக் கருக்கல் = கதிர் மறைந்து இருளும் பொழுது. அமையம் = அமைந்த நல்ல பொழுது. அரையிருள் யாமம்= நடுயாமப் பொழுது. அல் = பகல் அல்லாத இரவுப் பொழுது. அல்கல் = ஒளி சுருங்கி வரும் மாலைப் பொழுது. இமைப்பு = கண்ணிமைக்கும் பொழுது. இரவு, இரா = இருட்பொழுது. இருண்மாலை = இருள் கப்பிவரும் மாலைப் பொழுது. உச்சி = கதிர் உச்சியில் நிற்கும் பொழுது. உருமம் = உச்சிக் கடுவெயிற் பொழுது. உவா = நிறைபொழுது: 15 நாள் கொண்ட காலப் பொழுது. எல் = கதிர் ஒளி செய்யும் பகற்பொழுது. எற்பாடு = கதிர் மறையும் பொழுது. எல்லி = கதிர் மறைந்த பொழுது. எல்வை = கதிர் தங்கியுள்ள பகற்பொழுது. ஓரை = நாளும் கோளும் ஒன்றிய பொழுது. கங்குல் = செங்கதிர் மறைந்து கருக்கும் இரவுப் பொழுது. கடி = மங்கலப் பொழுது. கடிகை = மங்கல நிகழ்வுக்காம் பொழுது. கணம் = கண்ணிமைப் பொழுது. கருக்கல் = இருண்டுள்ள காலைப் பொழுது. கலை = நொடி எட்டுக் கொண்ட பொழுது. காட்டை = நொடி அறுபத்துநான்கு கொண்ட பொழுது. காருவா = முழுதிருள் இரவுப் பொழுது. கால், காலை = கதிர் காலூன்றும் பொழுது. கிழமை = ஏழு நாள் கொண்ட பொழுது. கொன் = அச்சமிக்க இருட் பொழுது. கோதூளி = ஊர்க்காலி திரும்பும் மாலைப் பொழுது. சந்தி = காலை தொடங்கும் பொழுது. சந்திக் கருக்கல்= காலைக்கு முற்பட்ட இருட் பொழுது. சமையம் = தேர்ந்தமைந்த பொழுது. சாயல் = கதிர் சாயும் பொழுது. சாயுங்காலம் = கதிர் மறையும் மாலைப்பொழுது. செக்கர் = மாலைச் செவ்வானப் பொழுது. செவ்வி = செவ்விய பொழுது. சொடக்கு = சொடக்குப் போடுதற்காம் பொழுது. துடி = நாடி துடித்தற்காம் பொழுது. நடுப்பகல் = பகலின் நடுப்பொழுது. நடு இரவு = இரவின் நடுப்பொழுது. நடுயாமம் = இரவின் இடையாமப் பொழுது. நண்பகல் = நடுப்பகல் பொழுது. நரை இருள் = நிலவொளி இல்லாத இள வொளிப் பொழுது. நள்ளிரவு = நடு இரவுப் பொழுது. நாள் = பகற்பொழுது; ஒரு பொழுது. நிமிட்டு = விரலை நிமிட்டும் பொழுது. நிமையம் = கண்ணிமைக்கும் பொழுது. நிலை = வரம்பிட்ட பொழுது. நுட்பம் = கால அடிப்படை அலகுப்பொழுது. நேரம் = தேர்ந்து அல்லது நேர்ந்து கொண்ட பொழுது. நொடி = கைவிரலை நொடிக்கும் பொழுது. பகல் = கதிருள்ள பொழுது. படுஞாயிறு = கதிர் மறையும் பொழுது. பதம் = பக்குவமான பொழுது. பருவம் = இயற்கை திரண்டு நிற்கும் பொழுது. பாணி = இனிய பொழுது. பால் = பகல் பொழுது. பானாள் = நடுஇரவு, நடுப்பகற் பொழுது. பாதிநாட் பொழுது. பிதிர் = கையுதிர்க்கும் பொழுது. பிற்பகல் = உச்சிக்குப் பிற்பட்ட பொழுது. பின்னந்தி = அந்திக்குப் பிற்பட்ட பொழுது. பின்னிரவு = நடுயாமத்துக்குப்பிற்பட்ட பொழுது. புலர்காலை = விடிகாலைப் பொழுது. புலரி = விடியும் பொழுது. பொழுது = பொதுமை சுட்டும் பொழுது. போது, போழ்து = பூ மலர்தலால் குறிப்பிட்ட பொழுது. மங்குல் = மங்கி வரும் மாலைப் பொழுது. மருண்மாலை = இருள்பெருகி வரும் மாலைப் பொழுது. முழுத்தம் = முழுமதிப் பொழுது, மணப் பொழுது. முற்பகல் = உச்சிக்கு முற்பட்ட பொழுது. முன்னந்தி = அந்திக்கு முற்பட்ட பொழுது. முன்னிரவு = நடுயாமத்துக்கு முற்பட்ட பொழுது. யாமம் = நள்ளிரவுப் பொழுது. வாரம் = ஏழுநாள் கொண்ட பொழுது. விடியல் = இருள்விலகும் காலைப் பொழுது. விடியற்காலை = இருள்விலகிக் கதிர் காலூன்றும் பொழுது. வீச்சு = கைவீசுதற்காம் பொழுது. வெள்ளந்தி = கதிர் கிளர்ந்து ஒளிசெய்யும் காலைப் பொழுது. வெள்ளுவா = முழுமதிப் பொழுது. வெள்ளென = கதிர் வெளுக்கும் பொழுது. வேலை = விரிந்த பொழுது. வேளை = விரும்பும் பொழுது. வைகல் = இருள் தங்கியுள்ள காலைப் பொழுது. வைகுறு விடியல் = விடியலுக்கு முந்திய கருக்கல் பொழுது. வைகறை = இருளை அறுத்த காலைப் பொழுது. வைகுபுலரி = விடி பொழுதுக்கு முன்னிருள் பொழுது. வைகுபுலர்காலை = வைகுபுலரிக்கும், காலைக்கும் இடையுறு பொழுது. பொளி: ஒருவர் நிலத்திற்கும் மற்றொருவர் நிலத்திற்கும் ஊடு எல்லையாக அமைந்த வரப்பை பொளி என்பது தென்தமிழக வழக்கு. கடலின் ஊடும் அலைப்பகுதி அலை இல்லாப் பகுதி இவற்றின் ஊடிடத்தைப் பொளி என்பதும், மீன்பிடி பகுதிகளைப் பிரித்துப் பொளி என்பதும் மீனவர் வழக்கு. இது குமரி மாவட்ட வழக்கு. பொழி > பொளி. பொள்ளல் பொத்தல்: பொள்ளல் = சின்னஞ்சிறு நுண்துளை. பொத்தல் = பெரிய துளை அல்லது ஓட்டை. பொள்ளலில் நீர் கசியும்; பொத்தலில் நீர் ஒழுகும். ஆதலால் மண்கலம் வாங்குவார் பொத்தல், பொள்ளல், கீறல், விரிதல் முதலியவை உண்டோ எனத் தட்டிக் கொட்டிப் பார்த்தே வாங்குவது வழக்கம். பொள்ளென ஆங்கே புறம்வேரார் என்பது வள்ளுவம் (திருக். 487). பொள்ளுதல்: குமரி மாவட்ட நட்டாலை வட்டார வழக்காகப் பொள்ளுதல் என்பது சுடுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. பொள்ளல், துளை என்னும் பொருளில் வருதல் பொது வழக்கு. குழல் முதலியவற்றைத் துளையிடுவதற்குக் கம்பியைக் காயவைத்துச் சுடுதலும் துளைத்தலும் வழக்கமாதல் கொண்ட செய்முறை வழிப் பொருளாம் இது. பொறி: உள்வாங்குதலும் வெளியிடுதலுமாகிய பொறிகள் ஐந்து. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவை. இவ்வியற்கைப் பொறிகளை யமைந்த ஐந்தறிவு மாந்தன், மன அறிவாம் ஆறாம் அறிவு கொண்டு படைக்கும் பொறிகள் எண்ணற்றவை. பொறியியல் துறை என்பது விரிய விரியும் விரிவினதாக விளங்குகின்றது. எலிப்பொறி, இறைவைப் பொறி, எறிபொறி, ஏவுபொறி என வீட்டிலும் நாட்டிலும் பொறிகள் பண்டு தொட்டே பெருகி வருகின்றன. பொறியியல் கல்லூரிப் பெருக்கமும், பயில்வார் பெருக்கமும், அவர்கள் தேவைப் பெருக்கமும் நாடறிந்தவை. பொறுக்கப் பிடித்தல்: வயிறு முட்ட உண்ணுதல் பொறுக்கப் பிடித்தல் எனப்படும். சிலர் வயிற்றுக்கு வஞ்சகம் கூடாது என்று பொறுக்கப் பிடிப்பர். பொறுக்கப் பிடிப்பார் பொறுமித் துன்புறுவதும் உண்டு. இது பொதுக்கப் பிடித்தல், பொதுமப் பிடித்தல் எனவும் வழங்கும். பொறுக்குதல்: ஒவ்வொன்றாகத் தேர்ந்து பொறுக்கித் தின்னுதல். பொறுக்கு மணிஎன்பது எண்ணத்தக்கது. விரவல் அல்லது கலவை (மிக்சர்) என்னும் சிற்றுண்டியில் கிடக்கும் கடலைப் பருப்பை விரும்பி முதற்கண் பொறுக்கித் தின்னல் கண்கூடு. புறா, பொறுக்கித் தின்பதை இயல்பாக உடையது. கிண்டிக் கிளறிக் கொத்திப் பொறுக்கும் இயல்பினது கோழி. பொறுதி: குமரி மாவட்டக் கிள்ளியூர் வட்டார வழக்கில் பொறுதி என்பதோர் சொல் வழக்கில் உள்ளது. அது, வீடு என்னும் பொருளது. இப் பொருளின் வழியாக உள்ள வாழ்வியல் குறிப்பு, மிகச் சிறந்ததாம். பொறுமை பேணல், பொறுத்துக் கொள்ளுதல், தாங்குதல் (பொறுத்தல்) வீட்டு வாழ்வில் பேணிக் கொள்ளத்தக்க கடப்பாடுகள் என்பதை வலியுறுத்தும் ஆட்சியாம். அமர்க் களத்தில் தாங்குவார் போலத் தமர்க் களத்திலும் தாங்குதல் வேண்டும் என்பதை ஆற்றுவார் மேற்றே பொறைஎன்னும் வள்ளுவம் (திருக். 1027) கொண்டு தெளியலாம். பொறையன்: பொறையன் என்பதைச் சேரர் குடி அல்லது குடும்பத்தின் ஒரு பகுதிக்கு அரசனாயிருந்தவனின் பெயராகக் கொள்ளலாம். பொறை என்பது பாறை அல்லது பொற்றை அல்லது குன்று என்று பொருள்படும். எனவே பொறையர் என்ற சொல் மலையும் குன்றும் நிறைந்த மலைநாட்டில் வாழும் மக்களையும் மன்னர்களையும் குறிக்கும் (சங்ககால இலக்கியச் சிறப்புப் பெயர்கள், 235). பொறையுடைமை: பொறை = பொறுத்தல்; பொறுத்தல், தாங்கிக் கொள்ளுதல். இல்வாழ்வுத் தொடக்கம் கொண்டிருந்த சுமையினும், வரவரச் சுமை கூடத்தானே செய்யும். பெற்றோரைப் பேணல் ஒருபால்; பிள்ளைகளைப் பேணல் ஒருபால்; இவ்வளவு பாரங்களும் ஒரே பொழுதில் ஒன்றும் பலவுமாய் அழுத்தும் நிலையில் பொறுமையுடையவராய் இருத்தல் அருமையாம். ஆனால் அப் பொறுமை போற்றாக்கால் இல்வாழ்வு, இல்லறம்ஆகாதாம். பொற்பு: பொன் = பொலம், பொலிவு என்பன போல இவையும் பொன்வழியாக அழகைச் சுட்டும் சொல்லே. பொற்பு என்பது அழகே யன்றி அழகுறுத்துதலையும் சுட்டும். புனைதல் என்பதாம் அது. பொன்: தன் நிறத்தாலும் பொலிவாலும் விலைமதிப்பாலும் கவர்ந்த பொன், பொலிவு என்றும் பொற்பு என்றும் பொலன் என்றும் அழகின் ஆட்சி பெற்றது. அத்தகைய பொலிவுக் கனிமம், பொதுப் பெயரும் ஆயது. இரும்பொன் (கரு நிறத்தது) இரும்பு; வெண்பொன் (வெண்ணிறத்தது) வெள்ளி; செம்பொன் (சிவந்த நிறத்தது) செம்பு; பசும்பொன், பைம்பொன் (பசுமை கலந்தது) வெண்கலம். என மாழைப் பொதுப்பெயர் கொண்டது. பொன்னன், பொன்னி, பொன்வினை, பொற்கொல், பொன்னம் போல், பொன்னாணி, பொன்னாத்தாள், பொன் விளைந்த களத்தூர், பொன்னாயிரம் கவிராயர் எனப் பல் பொருள் ஒருசொல் ஆயது. பொன்கொழிக்கும் காவிரியால் சோழநாடு பொன்னாடு, பொன்னிநாடு எனவும் வழங்கியது. பொன்னேர் பூட்டல் பெருவிழாவாயிற்று. பொன்முழுக்காட்டு (கனகாபிடேகம்): தன்னால் காதலிக்கப்பட்டாளொரு தலைவியின் அணுக்கத் தோழியர்க்குத் தலைவன் பொற்கிழி வழங்கி அன்பு வெளிப் படுத்தல் கனகாபிடேகம்எனப்படும் இலக்கியமாம். இதன் இலக்கணத்தை, வாள்மின்னார், பாங்கியர்க்கு வேந்தன் கனகமுடி பாய்விடலாம் கனகாபி டேகம் என்று கூறும் பிரபந்தத் திரட்டு (25). பொன்னம்: பொன் என்பது மாழை என்பது போல் பொதுப்பெயரே. இரும்பொன் அல்லது கரும்பொன், செம்பொன், வெண்பொன், பைம்பொன் என வழங்கப்பட்ட அவை இரும்பு, செம்பு, வெள்ளி, தங்கம் என்பனவாம். பொன்வகையாம் அக்கனிமம் பொன்னம் எனத்தக்கனவாம். பொலிவுடையது அவை. ஆதலால் பொலம் எனவும் வழங்கப்பட்டனவாம். பொன்னி: காவிரியாற்றின் ஒரு பெயர் பொன்னியாகும். புனல் பரந்து பொன் கொழித்தலால்பொன்னி எனப் பட்டது. நெல் பொன்போலும் நிறத்தது; நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும்! பட்டினப்பாலை, பொன்னி வளத்தைக் கூறிப், பதினாறு நூறாயிரம் பொன் பரிசாகப் பெற்ற பேறுடையதாம். பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பரிசு வழங்கியவன் கரிகாற் சோழன். பத்துப்பாட்டில் ஒன்பதாம் பாட்டு அது. பொற்கைப் பாண்டியன் கதை தமிழறிந்தது. கலைமகள் பெயர்களுள் ஒன்று பொன்னி; புலவர்கள் பொன்பெறப் பாட்டும் திறமும் அருள்தலால் பின்னைப் புலவர்கள் வழங்கியது அப் பொன்னி என்னும் பெயர். பொன்னையா: அப்பாவின் அப்பாவைப் பொன்னையா என்பது நெல்லை வழக்கு. அவ்வாறே அம்மாவின் அம்மாவைப் பெற்றவர் பொன்னாத்தாள் எனப்படுவார். பொன், பொலிவும் அருமையும் மிக்க பொருளாதல் போன்றவர் அவர் என்பதாம்.  போ வரிசைச் சொற்கள் போ: போ:1 பகர ஓகாரமாகிய இஃது, ஏவல் பொருளில் விளங்குகிறது. ஓரெழுத்து ஒருமொழி வீடிப் போகாதே ஓடிப் போ - கம். ஆரண். 347 போ போ என அடுக்குத் தொடராகின்றது. பாரதியார் பாடலில் போ போ போஎன மூவடுக்காகின்றது. வலிமையற்ற தோளினாய் போ போ போ. போ போஎன்பது உரிமையால் போகாதே என்னும் தடையாய் மக்கள் வழக்கில் உள்ளது. புகுதல் புகட்டுதல் போல்வன, போதல் போடுதல் என இருகுறில் ஒருநெடிலாய்ப் பொருள்மாறா நிலையில் வருகின்றது. போ:2 போஅசைநிலை. யாகா பிற பிறக்கு அரோ போ மாது என வரூஉம் ஆயேழ் சொல்லும் அசைநிலைக் கிளவி - தொல். 764 போஒம்: போகும் > போம். பகர ஓகாரம் அளபெடுத்து நீண்டது போஒம் ஆகும். ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய் - திருக். 848 அசை, சீர்நிலை எய்த அளபெடுத்தது மட்டுமன்று. அவ்வுயிர் போகும் அளவும் பிறரைப் படுத்தும் பாடு அளப்பரிது என்பது காட்டற்குமாம். போகம்: போகம் என்பது நுகர்வு துய்ப்பு என்னும் பொருளது. பூ என்பதும் அது. நுகர்வும் துய்ப்பும் உட்கொளலால் அமைவது. விளைவு இல்லாமல் உணவு இல்லை. ஆதலால், விளையும் ஒரு பயிரீட்டுக் காலம் போகம் எனப்பட்டது. போகத்திற்கு ஆவது போகம்! அதனைத் தரும் விளைவும் போகம். தஞ்சை நிலம் முப்போகம் விளையும் என்பர். போகி: போகி:1 போகு + இ = போகி. போகியவன் போகி. கண்போகி- மாற்றுத்திறனாளன். போகி:2 தண்டியல் அல்லது சிவிகையைத் தூக்கிப் போக்குவரவு புரிபவன். ஒரு சிவிகையைத் தூக்க நான்கு போகிகள்; மாற்றுப் போகிகள் நால்வர்; ஆக எண்மர் வேண்டும். சிவிகை பொறுத்தான், சிவிகை ஊர்ந்தான் என்பார் வள்ளுவத்தில் சுட்டப்படுவர். போகி:3 ஒருவேளை உண்பவன் யோகியே (ஓகியே) இருவேளை உண்பவன் போகியே - ம.வ. போகி = துய்ப்பு மிக்கவன். போகி:4 வினை, எச்சம், போகிய. ஈன்பிணவு ஒழியப் போகி - பெரும்பாண். 90 போகு: போகு என்பது கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்று. அதன் முடிநிலை ஆதலால், போகு எனப்பட்டது. சுரிதகம் என்பதும் அது. போகு இருவகைப்படும். கொச்சக ஒருபோகு, அம்போதரங்க ஒருபோகு என்பவை அவை. கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று ஒப்ப நாடி உணர்தல் வேண்டும் - தொல். 1405 போகுணி: இது மக்கள் வழக்கில் போகணிஎன்றும் போணி என்றும் உள்ளது. நீர், நீர்ம உணவு ஆயவற்றைக் குடிக்கப் பயன்படுத்தும் தகரக் குவளை போகுணியாம். கடிக்காமல் மெல்லாமல் அப்படியே உள்ளே போகும் உணவு போகுணி. அதனைப் பருக உதவுவதும் போகுணியாய் ஆயது. விட்டு விட்டு உண்பதும் - ஒருவேளை விட்டு மறுவேளை உண்பதும், நாள் விட்டு நாள் உண்பதும் பட்டுணி (பட்டினி) எனப்படல் அறிக. போணி பண்ணுதல் என்பது வணிகப் பொருளை முதன் முதன் விற்பனை செய்தல். அது உணவுக்கு வழிசெய்வது என்பதால் போணி எனப்பட்டது. போக்கடாத்தனம்: போக்கு + அடா + தனம் = போக்கடாத்தனம். போகத் தகாத போக்கில் சென்று செலவிடல். ஒரு போக்கடாப் பயல் பிறந்தான்; மூன்று பரம்பரையாகத் தேடிய சொத்தைத் தொலைத்துவிட்டான்ம.வ. போக்காடு: போக்காடு = சாவு. நோக்காடு = நோவு; சாக்காடு = சாவு என வருதல் போலப் போக்காடு போவு என வழக்கில் இல்லை. போக்காடு, சாவுஎன்னும் பொருளில் வழங்குகின்றது. இந்தப்பாடு பட்டுக் கேவலப்படுவதற்குப் போக்காடு வந்தாலும் ஒரே போக்காகப் போய்ச் சேரலாம் என்பதில் போக்காட்டின் பொருள் நன்கு வெளிப்படும். போன காடு, போகின்ற காடு, போகுங்காடு என்னும் பொருளில் போங்காடாகவர வேண்டியது வல்லொற்றாகி போக்காடுஎன நின்றது போலும். காடு என்பது இடுகாடு, சுடுகாடு, முதுகாடு, நன்காடு என்பவற்றில் வருதல் அறிக. அனைவரும் போங்காடு போக்காடாம். போக்கு: போக்கு = போகச் செய் என்பது. பிறவினை. போக்கு = குற்றம் என்னும் பொருளது. போக்கின்றென்ப வழக்கி னுள்ளே - தொல். 505 போக்கு = நடத்தை அல்லது ஒழுக்கம். உன் போக்கு எனக்குச் சரியாகப் படவில்லை - ம.வ. போக்கு = பிரிவு. போக்கெல்லாம் பாலை - பழைய தனிப். போக்கு = அழித்தல். போக்கரு மரபின் - சிறுபாண். 118 போக்குவரவு: போக்குவரவு = நட்பு, தொடர்பு. போதல் வருதல் என்னும் பொருள் தரும் போக்குவரவு, நட்புப் பொருளும் தரும். மனத்தின் போக்காலும் வரவாலும் ஏற்படுவது நட்பு. அது பின்னே, இருக்கும் இடம் தேடியும் போக்கு வரவு புரியத் தூண்டி நிலைப்படுத்துவதால் போக்கு வரவுக்கு நட்புப் பொருள் உண்டாயிற்றாம். மதியார் இல்லத்து மிதியாமை கோடி பெறும் என்பதால், மதிப்புள்ள இடத்து மிதித்தல் வெளிப்படையாம். போக்கு வரவு எங்களுக்குள் இல்லை என்றால் நட்பில்லை என்பதுடன் பகையுண்டு என்பதும் கூடக் காட்டுவதாக வழங்குகின்றது. போக்கு வரவு புரிய நீக்கமின்றி நிற்கு மன்றேஎன்பது சிவஞான போதம். மெய்யியல் காட்டும் போக்கு வரவு இது. அரசின் போக்குவரவுத் துறை பெருந்துறை. நிலம், நீர், விண் என விரியும் துறை. போச்சி: நீர்ச் செம்பைப், போச்சிஎன்பது நெல்லை வழக்காகும். அதனைப் போகணி என்பதும் நெல்லை வழக்கே. புவ்வா என்னும் உணவுப் பெயரும் புகுவாய்என்பதன் வழிவந்த சொல். நீர் கொள்ளவும் வெளியே விடவும் அமைந்த குவளை அல்லது நீர்ச் செம்பைப் போச்சி (போகச் செய்வது) என்று வழங்கினர் ஆகலாம். போச்சுது: பசிக்கிறது என்பதைப் போச்சுது(போயிற்று) என்பது அகத்தீசுவர வட்டார வழக்கு. உண்ட உணவு அற்றுப் போயது என்பதை வெளிப்படுத்தும் அரிய ஆட்சி அது. ஆனால், ஆயிற்று ஆச்சுது ஆனது போலப் போயிற்று என்பது போச்சுது எனக் கொச்சை வடிவுற்றது. உறுதியாயிற்று என்பது உறுதியாச்சு என ஏட்டு வழக்கு ஆயதை இவண் எண்ணலாம். அற்றது என்னும் வள்ளுவ வழக்கையும் எண்ணலாம். அற்றது = செரித்தது, எரித்தது, வெளியேறியது. போச்சை: புகுதலால் ஏற்பட்ட பெயர் புகை. நுண்துளைக்குள்ளும் புகவல்லது அது. புகுதல் = போதல்; போச்சை என்பது அகத்தீசுவர வட்டாரத்தில் புகை என்னும் பொருளில் வழங்குகின்றது. போச்சை = போதலுடையது. போஞ்சி: நாகர்கோயில் வட்டாரத்தில் போஞ்சி என்பது, எலுமிச்சைச் சாறு என்னும் பொருளில் வழங்குகின்றது. பிழிந்து எடுத்தது என்னும் பொருளில் பிழிஞ்சு - பேஞ்சி - போஞ்சி ஆகியிருக்கலாம். (மழை) பொழிந்தது, பெய்தது, பேஞ்சது என்றவாறு வழங்குவது நினையத்தக்கது. சாற்றைப் பிழிந்து கொண்டு சக்கையைப் போக்கும் வகையால் போஞ்சி எனப் பட்டிருத்தலுமாம். போடு: திட்டுவிளை வட்டாரத்தில் போடு என்பது பொந்து என்னும் பொருளில் வழங்குகின்றது. போட்டு வைக்கும் இடம், பெட்டி, பை ஆகியவை பொந்து (உட்குடைவு) உடையவையா தலால் இப் பெயர் பெற்றது. போடுதல்: போகடுதல் என்பது போடுதலாயதாம். வெற்றிலை பாக்குப் போடுதல், ஊசி போடுதல் என்பவை வழக்கில் உள்ளவை. போட்டி: குழந்தைக்குப் பால் புகட்டுதல் போட்டுதல் எனப்படும். தருமபுரி வட்டாரத்தில் போட்டி என்பது குடலைக் குறித்து வழங்குகின்றது. ஊட்டும் கருவி ஊட்டியாவது (சங்கு) போலப் போட்டும் உணவு போய்ச் சேரும் இடம் போட்டி என வழங்கப்பட்டது. போட்டுதல்: புகட்டுதல் என்பது போட்டுதல் எனத் திரிந்ததாம். பாட்டி அடித்தாளோ பால் போட்டும் கையாலே என்னும் தாலாட்டுப் பாட்டு, போட்டுதலைக் காட்டும். போட்டும் என்பது போகவிட்டு என்பதன் மரூஉ என்பர். ஒள்ளிகல் அரக்கர் போட்டோடு நாள்என்பதை அவர் எடுத்துக் காட்டுவர். (தமிழ்ச் சொல்லகராதி). போதம்: போதம் = மெய்யறிவு. போதிக்கப்பட்டது போதம். மெய்ப்பொருள் பற்றி விளக்கிக் கூறும் நூல்வகை போதம் எனப்படுகின்றது. அத்தகு நூல்களுள் சிவஞான போதம் தலைப்பட்டது. அதனைக் கண்டவர் பெயரே மெய்கண்டார் எனின் வேறு விளக்கம் வேண்டுவதின்று. பன்னிரு நூற்பாக்களால் (40 அடிகளால்) அமைந்தது சிவஞான போதம். குன்றத்தைக் குன்றி மணிக்குள் அடக்கிய பான்மையது. சித்தர் தொகுதியுள் சிவானந்த போதம், நிசானந்த போதம் என இரண்டு நூல்கள் உள. இவ்விரண்டும் உரையும் பாட்டும் விரவிய நூலாக இயல்கின்றன. பல்வகைப் பாவும் இனமும் பயில்கின்றன. தனித்தனி நூல்களாமளவு விரிவும் உடையன. போதல்: போதல் = சாவு. போதல் என்பது ஓரிடம் விடுத்து ஓரிடம் அடைதலைக் குறிக்கும். போனார் தமக்கோர் புக்கில் உண்டுஎன்பது மணிமேகலை. போதல் வருதல் இல்லாமல் ஒரே போக்காகப் போதல் திரும்பாமையைக் குறிக்கும். போய்ப் போய் இப்படி வருவதற்கு ஒரே போக்காகப் போய்விட்டாலும் தலையை முழுகலாம்; அதற்கும் வழி இல்லைஎன்பதில் ஓடிப் போனவர் களைத் தேடித் தவித்த துயர் வெளிப்படும். போதல், உலாவப் போதல், வீட்டை விட்டுப் போதல் என்பவற்றுடன் மீளாத இடத்திற்குப் போதல் பொருளும் தந்து சாவுஆயிற்றாம். போதிகை: பொதிகை > போதிகை. மண்டபங்களில் பாவுகல் பரப்புவதற்குத் தாங்கு கல்லாகத் தூண்களின் மேல் வைக்கப்படும் கல் போதிகைக் கல் எனப்படும். மண்டபக் கூரையின் நடுப்பத்தியில் போடப்பட்டிருக்கும் கற்களுள் ஏழினையும் போதிகையையும்- பூவாலைக்குடிக் கல்வெட்டு. (கலைக்கோவன். தினமணி 13.10.2010). போதிகைக்கல்என்பது கற்றச்சர், கொற்றர் (கொத்தர்) வழக்கு. போதிகை = குறுந்தறி, சுமையடைக் கட்டை. போதிகைக் கட்டை = தாழ்வாரந் தாங்கி. போதிகத்தூண் = குறுந்தூண். (வெ.வி.பே. அகராதி) போது: பொழுது > போழ்து > போது. போது:1 v¥bghGJ tªÔ®?; v¥nghœJ tªÔ®?; எப்போது வந்தீர்?. இம்மூன்று வடிவுகளும் இருவகை வழக்குகளிலும் உண்டு. கூதிர் நின்றாற் போதே - நெடுநல். 72 பொருள்: கூதிர்காலம் நின்ற பின்னர். போது = பின்னர் நிகழ்ந்த பொழுது(உரை, நச்.) கார் செய் மாலை வரூஉம் போழ்தே - நற். 37 போது:2 பொழுதில் மலர்வதாம் பூ, போது என வழங்கப்படும். தாதுண் தும்பி போது முரன்றாங்கு - மதுரைக். 655 போது:3 போவாயாக. போது:4 பொழுது காட்டும் மூலம் கதிரோன் ஆதலால், பொழுது போது என்பவை கதிரோனைக் குறித்தன. பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால் - பாரதி. பாடல். போத்தி: போற்றி (போற்றத்தக்கவர்) என்னும் அருமைப் பெயர் போத்தி என மக்கள் வழக்கில் ஊன்றியுள்ளது. தாத்தா என்னும் முறைப்பெயரே போத்தி என்பதாம். இது நெல்லை வழக்கு. போத்து: போத்து = ஆண்பாற் பெயர்களுள் ஒன்று. போத்தும் கண்டியும் கடுவனும் பிறவும் யாத்த ஆண்பாற் பெயரென மொழிப - தொல். 1501 புலிப்போத் தன்ன புல்லணற் காளை - பெரும். 138 போத்தன்என்பது ஆண்பால் மக்கட் பெயராக நடைமுறையில் உள்ளது. ஓரறிவு உயிரியும் போத்து என்னும் பெயர் பெறல் உண்டு. ஆனால் நெல் புல் போன்றவற்றுக்கு அப் பெயர் கொள்ளார். பிள்ளை குழவி கன்றே போத்தெனக் கொள்ளவும் அமையும் ஓரறிவு உயிர்க்கே - தொல். 1523 நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே - தொல். 1524 மரத்தின் கிளையைப் போத்து எனல் மக்கள் வழக்கில் உள்ளது. அந்தப் போத்தை வெட்டுபோத்து ஒட்டுதல் ஒட்டுவகைஎனப்படும். போந்தை: பொந்து > போந்து > போந்தை = பனை. பனை புல்லினத்தது ஆதலால், புறவயிர்ப்பும் உள்ளே பொந்தும் உடையதாம். புறக்காழனவே புல்லென மொழிப- தொல். 1585 போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் - தொல். 1006 சேரர்க்குரிய பூ, பனம்பூவாம். போம்: போகும் > போம். போம்:1 இமைக்கும் அளவில்தம் இன்னுயிர்போம் ஆற்றை எனைத்தானும் தாம்கண் டிருந்தும் - தினைத்துணையும் நன்றி புரிகல்லா நாணில் மடமாந்தர் பொன்றில்என் பொன்றாக்கால் என்? உயிர்போம், பொழுது போம், பொருள் போம், போகக் கூடாதனவெல்லாம் போம், இப்படி மக்கள் கூறினால், பசிவந் திடப்பத்தும் போம் - நல்வழி. 26 என்கிறார் ஔவையார். அப் பத்தும் வருமாறு: மானம் குலம்கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் போம்:2 செல்லும்என்னும் ஏவல். போரடித்தல்: போர் + அடித்தல் = போரடித்தல். ஒன்றன் மேல் ஒன்றைப் போர்த்துவது போல் வைக் கோலைக் களத்தில் பரப்பி, மாடுகளைப் பிணைத்துப் பிணையலிடலைப் போரடித்தல் என்பது உழவர் வழக்கு. மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்லென்று யானை கட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை என்பது நாட்டுப்பாடல். * பிணையல்காண்க போரவை: போர் + அவை = போரவை. போரிடும் களப்பயிற்சிக் கூடம். ஒரு வேந்தன் பெயர் சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்பது. தித்தன் என்னும் சோழன் மகன், முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் போரவையில் பொருது கொன்றான். சாத்தந்தையார் என்பாரும், பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணை என்பாரும் இவனைப் பாடினர் (புறம். 80-85). ஊரில் விழா; தலைவி மகப்பேறு; பொழுது மாலை; காலம் மாரி; கட்டில் பின்னுவோன் வாரைச் செலுத்தும் ஊசி விரைவது போல் போரவையில் பின்னினானாம், போரவைக் கோப்பெருநற்கிள்ளி (புறம். 82). பின்னி எடுத்துவிட்டான்; பின்னிவிட்டான் பின்னி என்பவை ம.வ. போரிடுதல்: போரிடுதல் என்பது வெளிப்படைப் பொருள் தருவது. ஆனால் செட்டிநாட்டு வழக்கில் போரிடுதல் என்பது மகப்பேறு பார்த்தலைக் குறிப்பது, அதன் அரும்பாடும் துயரும் விளக்கும் ஆட்சியாகும். போர்: போர்:1 பொருதல் = சண்டையிடல். பொரு = ஒப்பு. ஒப்புடைய இருவர் பொருதல், போரிடல்எனப்படும். பொருபவர் > பொருநர். போர்:2 பொருந்துதல் = இருகதவு பொருதல் - பொருந்துதல் - போர். திண்போர்க் கதவம்(மதுரைக். 354), பொருமுக எழினி (சிலம்பு), சங்கிலி இணைப்பு - பொருதுவாய். பொருதுவாய் விட்டிருக்கிறதுஎன்பது வழக்கு. போர்:3 குவியல். வைக்கோல் போர். போரிடை யுறங்கு மன்னம் - கம்ப. நாட்டு. 61 போர்:4 பொந்து. மரத்தில் போர் விழுந்துவிட்டதுஎன்பது மக்கள் வழக்கு. போரை என்பதும் அது. போர்:5 புகர் > போர் = புள்ளி. புகர்முகம் யானையின் பெயர்களுள் ஒன்று. போர்க்காளை என்பது ம.வ. போர்பு: போர் > போர்பு. போர்பு:1 போர்பு = மூடிக் கிடத்தல், போர்த்திருத்தல். ஏரோர் களத்தை மூடிக்கிடக்கும் வைக்கோல் போர். நீர்சூழ் வியன்களம் போர்பு அழித்து - அகம். 366 போர்பு:2 போர்க்களத்தை மூடிக் கிடக்கும் பிணம். கழிபிணம் பிறங்கு போர்பழிகளிறு எருதா வாடா வைகலும் உழக்கும் - புறம். 342 போர்வை: போர்த்தப்படும் ஆடை. உடாஅ போராஅ ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக் கீத்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் - புறம். 141 படாஅம் = போர்வை. மாக்கிணை விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை - புறம். 399 போர்பு என்பதும் இது. பிணம்பிறங்கு பல் போர்வு - புறம். 369 போவாய் பொழுவாய்: போவாய் = பல்போன வாய். பொழுவாய் = நீர் ஒழுக்குடைய வாய். போய வாய், போவாய் ஆயிற்று; போயது பல் என்க. பொழுவாய் என்பது ஒழுகுகின்ற. பொழிகின்ற வாய் எனும் பொருளில் பொழுவாய் எனப்பட்டதாம். இதனை ஓவாய் ஒழுவாய்என்னும் இணைச்சொல்லுடன் ஒப்பிட்டுக் காண்க. பொருள் வேறுபாடு இல்லாத ஈரிணைச் சொற்கள், போவாய் பொழுவாய்என்பனவாம். போழ்தல்: போழ்தல்:1 போழ்தல் = துளைத்தல். போழ்தூண் டூசியின் - புறம். 82 போழ்தல்:2 போழ்தல் = துண்டித்தல். ஆழ்கென் உள்ளம் போழ்கென் நாவே பாழூர்க் கிணற்றில் தூர்கவென் செவியே - புறம். 132 போற்றல்: போற்றல்:1 போற்றுதல் > போற்றல் = கூடியவரைப் பிரியாது இருத்தல் போற்றல் - போற்றுதல் - என்பதாம். போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை - கலித் 133 போற்றல்:2 போற்றல் = வாழ்த்துதல். மணிவாசகர் பாடிய போற்றித் திருவகவல், வள்ளலார் பாடிய போற்றிப் பதிகங்கள் காண்க. போற்றா ஒழுக்கம்: கண்ணகியாரொடு மதுரைக்கு வந்த கோவலன், சிலம்பு விற்கப் புறப்படுவதற்கு முன், தன் குறைபாடுகளை யெல்லாம் நெஞ்சாரக் கூறி நெகிழ்கின்றான். அந்நிலையில் கண்ணகியார், போற்றா ஒழுக்கம் புரிந்தீர்என்று சுட்டுவதைக் குறை போலாகக் கூறுவார் உளர். அதனைப் பற்றிக் கருதுவது இது. தன் பிழையுணர்ந்து வருந்தும் கணவனிடம், போற்றா ஒழுக்கம் புரிந்தீர்என்பது கற்புக் கண்ணகியார்க்குத் தகுமா? இது திருந்தியவனை வருந்த வைக்கும் மொழியாயிற்றேஎனக் குறை காண்கின்றனர். கண்ணகியார் தனித்து உறைதலை உணர்ந்த கோவலன் தாய் தந்தையர், உள்ளகம் வருந்தினர். அவர்கள் உள்ளகம் வருந்துதல் ஆற்றாத கண்ணகியார், தாம் வருந்தவில்லை என்பதைக் குறிப்பது போல், வாயல் முறுவல் செய்து வாழ்ந்தனர். அதனைக் குறிக்கும் வகையாலேயே, அவர், உள்ளகம் வருந்தப் போற்றா ஒழுக்கம் புரிந்தீர்என்றார். இதில், தம் உள்ளகம் வருந்திய குறிப்போ - வருத்திய குறிப்போ - இல்லை. கண்ணகியார் வாயல் முறுவல் செய்தலைப் பட்டறிவும் பழுத்த அறிவும் ஒருங்கமைந்த மாமன் மாமியர் உணர்ந்து கொள்ளமாட்டார்களா, என்ன? அதனால், அவர்கள் உள்ளகம் வருந்தவே செய்தனர்; அதனையே குறித்தார் கண்ணகியார். ஆதலால் அவர் மேல் குறைகாண இடமில்லை. இனிப், பெற்றோர்க்காகவே எனினும் கலங்கியும் கவன்றும் கரைந்தும் நிற்கும் கணவனிடம் இவ்வாறு கூறலாமா?என அடுத்துத் தொடுப்பாரும் உளர். அவர்கள், போற்றா ஒழுக்கம் என்பதன் மரபு வழிப்பொருளை உணர்ந்து கொண்டால் இதனைக் குறையாகக் கருதார். போற்றா ஒழுக்கம் என்பதற்குப் பேணிக் காவாத குற்றம், பிறர் போற்றிக் கூறத் தகாத தவற்றொழுக்கம், பரத்தமை என்றெல்லாம் பொருள்கண்டு இவ்வாறு கூறுகின்றனர். போற்றா ஒழுக்கம்என்பதற்கு அரும்பத உரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறினர் அல்லர். ஒன்றுக்கு மூன்று முறை போற்றா ஒழுக்கம்என்றே கூறி யமைந்தனர். இதன் பொருள் என்ன? இத்தொடர்க்குப் பொருள் கூற வேண்டிய தேவை இல்லை; புலவர் உலகம் இத்தொடரின் பொருளை வெட்ட வெளியாக அறியும்என்பதே பொருளாம். இப்போற்றா ஒழுக்கத் தொடர் கொலைக் களக்காதையை அன்றி, வரந்தரு காதையிலும் வருகின்றது. ஆங்கும் அரும்பத உரையில் பொருள் இல்லை. அடியார்க்கு நல்லார் உரையோ கிடைக்கவில்லை! ஆதலால் ஆங்கும் அதே நிலைதான். வரந்தரு காதையில், புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் நிகழ்ந்ததற் கிரங்கும் என்னையும் நோக்காய் என்பது. இது கண்ணகியாரின் தாயார் கூற்றாக வருவது. தவறு சுட்டும் பொருளாக இஃதிருப்பின், கண்ணகியின் தாய் கூற்றாக - மாமியார் கூற்றாக - இடம்பெறல் உண்டா? மரபு வழி உரிமை சிறிதும் பழித்துரைக்க இடம் தராதாம் என்பதைத் தமிழியலும் தமிழர் வாழ்வியலும் அறிந்தார் நன்கு கண்டு கொள்வர். பழி சுட்டாததாக இருந்தும், பழிச்சுட்டாகக் கொள்ளப் படலான இத்தொடரின் பழம்பொருளைக் கலித்தொகைத் தொடரொன்று கைந்நீட்டி அழைத்துக் காட்டித் தெளிவிக்கிறது (133). போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமைஎன்பது அது. ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை என்பவற்றைத் தொடராகக் கூறி விளக்கும் இப்பாடலில், போற்றுதல்என்பதன் பொருள்விளக்கம் கிடைக்கின்றது. இத்தொடர்க்கு, ஒன்றைப் பாதுகாத்தல் என்று சொல்வது, கூடினாரைப் பிரியாதிருத்தலைஎன்று பொருள் உரைக்கிறார் நச்சினார்க்கினியர். போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை எனின், போற்றாமை என்பது புணர்ந்தாரைப் பிரிதல்தானே! நீர் பிரிந்தீர்என்பது தவறான செய்தியா? மயக்கம் தீர்க்க மரபுவழி உரைகாணும் முறையைப் போற்றுதல் வேண்டும் என்று இப்போற்றா ஒழுக்கம் சுட்டுவதாகக் கொள்ளலாமோ! போனார்: போயினார் > போனார். அவர் வந்தார்; போனார்என்பது ம.வ. போனார் நாட்டுளதாங் கொல் - சிலப். 7:41 போன்று: போல > போல் > போன் > போன்று. மழைவரும் போன்று (போல) தெரிகின்றது என்பது ம.வ. வாழ்வோர்ப் போகிய பேரூர்ப் பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே - நற். 159  பெள வரிசைச் சொற்கள் பௌ: பகர ஔகாரம். உயிர்மெய் நெடில். பெளஎன்பதற்கு வளைதற் பொருள் மக்கள் வழக்கில் உண்டு. பௌவியம், பவ்வியம் = பணிந்து வளைந்து நிற்றல். பௌவம்: பௌவுதல், பதுங்குதல், மறைதல். பம்முதல் என்பதும் மறைதலே. ஆறுகள் பலவும் புகுந்து தம் பெயரும் தகவும் மறைந்து போதற்கு இடமாக இருத்தலால் பௌவம் என்பது கடல், மாகடல் ஆயிற்றாம். கரைகாணாப் பௌவத்துக் கலஞ்சிதைந் தாழ்பவன் திரைதரப் புணைபெற்றுத் தீதின்றி உய்ந்தாங்கு - கலித். 134 நிலஞ்சூழ்ந்த கடலாதலால் வளைவுப் பொருள் வழியே பௌவம் எனப்பட்டதுமாம்.  ம வரிசைச் சொற்கள் ம: மகர அகரம்; உயிர்மெய்க்குறில். மெல்லினம். இவ்வரிசை எழுத்துகள் எல்லாம் மொழி முதலாக வரும். மஃகான், மகரம், மகாரம் என இம்முப் பெயராலும் சொல்லப்படும். மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் - தொல். 28 மகரத் தொடர்மொழி - தொல். 82 செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈரொற் றாகும் - தொல். 18 சிவய நம என்பதில் வரும் மங்கலப் பொருள்தருதல் சமய வாணர் கருத்து. நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி (தொல். 43) என்பது மொழி இலக்கண வாணர் ஆணை. மகண்மா: விலங்கு வகையைச் சேர்ந்ததாயினும் மக்களியல் கொண்டி ருத்தலால் மகண்மா என வழங்கப்படுவது; தேவாங்கு என்பதாகும். வால் இல்லாமை, நெடிய விரல், பெரிய காது இதன் சிறப்பியல்பு. சிந்தாமணியில் கூறப்படும் விலங்கு இது (1902). மெலிந்து காது நீண்ட ஆடவர் பெண்டிரைத் தேவாங்கு எனப்பட்டப் பெயரிட்டு வழங்குவது இன்றும் நாட்டுப்புற வழக்கு. மகத்துப் பிள்ளை: மகம் + அத்து = மகத்து. மகம் = விழா. நெடு நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்து பின்னே மிக எதிர்பார்த்துக் கிடந்து பிறந்த பிள்ளையை மகத்துப் பிள்ளை என்பது முகவை வழக்கு. அவ்வழக்கு பின்னே, தலைப் பிள்ளை என்னும் பொருள் தருவதாக வழங்குகின்றது. மகவுக்காக வேண்டி நோன்பு கிடந்து பெற்ற பிள்ளை மகத்துப்பிள்ளையாம். மகவு: மக > மகவு. மழ, குழ என்பவை இளமைப் பொருள் தருவன. அவ்வாறே மகஎன்பதும் இளமைப் பொருள் தருவதே. மழ > மழவு; குழ > குழவு; மக > மகவு. மகவும் பிள்ளையும்(தொல். 1513). மழவும் குழவும் இளமைப் பொருள - தொல். 795 மகவு வழிப்பட்ட சொல்லே மகன், மகள், மகார், மக்கள் என்பவை. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி - திருக். 70 அரிக்கூட் டின்னியங் கறங்க ஆடுமகள் - குறிஞ். 193 புன்றலை மகாரொடு - மலைபடு. 217 உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே - தொல். 484 இனி, மகனார், மகளார், மகளிர் என்பனவும் இவ்வழியவே. நோதக வுண்டோ நம்மக னார்க்கு - சிலப். 16:17 மயிலியன் மடவரன் மலையர்தம் மகளார் - சிலப். 24:16 இழையணி வனப்பின் இன்னகை மகளிர் - பொருந. 85 மகனார், மகளார் என்னும் வழக்கம் அன்று தொட்டு இன்று வரைக்கும் தொடரும் பண்பாட்டுக் கூறு என்பது, எத்தகு பெருமிதமானது! மழ, குழ என்பவை போல மகஎன்பதை அன்றி மட, மத, குத, புத என்பனவும் இளமைப் பொருள் தரும் சொற்களாதல் எண்ணத்தக்கன. மழ = இளமை, மழலை. குழ = குழந்தை, குழவி. மட = மடநடை, மட அன்னம். மத = மதலை, மழலை. குத = குதலை, மழலை. புத = புதல்வன், புதல்வி, புதல்வர். மகன்றில்: நீர்ப்பறவையுள் ஒன்று மகன்றில். நிலத்து வாழ் பறவையாம் அன்றில் வேறு. ஆயினும் இரண்டு வகைப் பறவைகளும் ஒன்றை ஒன்று பிரியாதவை ஆதலால் அன்றில் என்றும் மகன்றில் என்றும் பெயர் பெற்றன. பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன நீருறை மகன்றில் - குறுந். 57 பொருள்: தாம் வாழும் நீரின்கண் உள்ள நீர்ப்பூ வொன்று தம்மிடை நின்று மறைக்க நேரினும் அம் மறைவால் நேரும் நொடிப் பொழுதும் பல யாண்டுகள் கழிந்தாற் போலக் கருதித் துன்புறும் நீரின்கண் வாழும் மகன்றிற் பறவை(உரை, பெருமழைப்.). * அன்றில்காண்க. மகிழ்: மகிழ்:1 மகிழ் இனிதுஎன்று மகிழம்பூவின் சிறுவடிவத்தையும் நறுமணத்தையும் சுட்டுவார் ஔவையார் (தனிப்.). மகிழ்:2 மகிழ்ச்சி என்னும் பொருளை மகிழ் தருவது, நாள்கள் உண்டு நாள்மகிழ் மகிழின் என்னும் புறப்பாடலால் விளங்கும் (123). நாட்காலையே மதுவையுண்டு நாளோலக்கத்து மகிழ்ச்சியை மகிழின்ப.உ. மகிழ்:3 மகிழ்கஎன்னும் ஏவல். மக்குதல்: மட்குதல் > மக்குதல். மண்ணில் கிடக்கும் குப்பை சருகு முதலியவை சிதைந்து மண்ணோடு மண்ணாகிப் போகும். அது பயிர்க்கு உரமாகும். அதனை மட்குதல் > மக்குதல் என்பர். கூர்த்த மூளை இல்லாரைத் தலையில் களிமண்ணாஇருக்கிறது என்பர். மக்குஎன்றொரு செய்பொருள் மரத்தூள் மெழுகு துணி முதலியவை கூடிய கூட்டு. அதனை மரத்தில் கீறல் துளை அடைக்கத் தச்சர் பயன்படுத்துவர். மக்கிய - மட்கிய - குப்பையே நல்ல உரமாம். மக்கான் என்பது தவளை. அதனைப் பற்றித் தின்னும் பாம்பின் முன்னால் இருந்தே தன்னைக் காட்டித் தந்து சாவும். அதனால் கூர்ப்பற்றது எனக் கருதித் தரப்பட்ட பெயர் அது. மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும்தன் வாயால் கெடும் - பழமொழி. 184 மண்டூகம் என்பதும் தவளையே. அங்கும் மண்டு விட வில்லையே! மங்கட்டை: மங்கல மகள், மங்கல விழா, மங்கல மனை என்பவை திருமணம் நன்மை என்னும் பொருள்வழிச் சொற்கள். மன் + கலம் = மன்கலம் > மங்கலம். மங்கலம் என்ப மனைமாட்சி(திருக். 60). மங்கல வாழ்வு இழந்தவள் மங்கட்டை என வழங்கப்படுதல் குமரி மாவட்ட நயினார் குறிச்சி வட்டார வழக்காகும். மங்கல மொழி: மங்குதலற்று இனிதுற வாழுமாறு வாழ்த்துதல் மங்கல மொழியாகும். மங்கல மொழியும் வைஇய மொழியும் - தொல். 1190 சிலப்பதிகார முதல் காதையின் பெயர், மங்கல வாழ்த்துக் காதை என்பது. மனையறங் கொள்ள நிகழ்த்தப்படும் மணவிழாவை மங்கலவிழா என்பதும் வழக்கு. ஆதலால், மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு என்றது குறள் (50). மங்கலம்: மங்கலம்:1 மன் + கலம் = மன்கலம் > மங்கலம். மன் + திரம் = மந்திரம் எனவும், இயன் + திரம் = இயந்திரம் எனவும் வழங்குதல் போன்றது இது. மங்கல மடந்தையை நன்னீராட்டி - சிலப். 15:131 மங்கல விழா = திருமணம். மங்கலம்:2 மங்கலம், திருமங்கலம் என்னும் பெயருடைய ஊர்கள் ஆள்வோரால் இறையிலியாகத் தரப்பட்ட ஊர்களாகும். மங்கலம்:3 நன்மை; மங்கலம் உண்டாகட்டும் ம.வ. மங்கலம்:4 மங்கு > மங்கல் > மஞ்சல் = மங்கலான (மஞ்சள்) நிறம், அந்நிறக் கிழங்கு, அக்கிழங்குப் பொடி அல்லது அரையல் அல்லது குழம்பு. x.neh.: பொங்கு > பொஞ்சு, இங்கே > இஞ்சே (கொச்சை). மங்கல வள்ளை: உயர்குல மங்கையை ஒன்பது வெண்பாவாலும் வகுப்பாலும் பாடுவது மங்கல வள்ளை எனப்பெறும். ஒன்பது வெண்பா வகுப்பால் உயர்குல மங்கையைப் பாடுதல் மங்கல வள்ளை - இலக். பாட். 68 ஒன்பது வெண்பாவாலும் ஒன்பது வகுப்பாலும் பாடுவது என்று முத்துவீரியம் கூறும். மேற்குலத்திற் பிறந்த மின்னாளை வெண்பா ஒன்பதா லும்வகுப் பொன்பதி னாலும் வழுத்துவது மங்கல வள்ளை யாகும் இனி, மங்கல வள்ளையை மங்கல வெள்ளை என்பார் பன்னிரு பாட்டியலார். வெண்கலிப்பாவும் வருவதற்கு உரியது என்பார் அவர். வகுப்பும் வெள்ளையும் தனித்தனி வருவதையும் ஏற்பார். சந்தமும் வெள்ளையும் தருவன கற்புடை மங்கல வெள்ளை வருவன ஒன்பான் - மாபூதனார் பன்னிரு. 302, மேற். அதுவே, வெண்கலி யானும் வருதற்கும் உரித்தே - மாபூதனார் பன்னிரு. 303, மேற். மங்கல வாழ்த்து (சோபனம்): முன்னிலையாரை விளித்து, சோபனம் சோபனம்என வாழ்த்து உரைத்து வாழிப்பகுதியோடு நிறைவுறும் அமைவுடையது, மங்கல வாழ்த்து எனப்படும் சோபனமாம். திருமண நிகழ்ச்சியைப் பாராட்டி, வாழ்த்துரைப்பது பண்டு தொட்டே வரும் வழக்கம். புதல்வரைப் பெற்ற புகழ்சால் மகளிர் நால்வர் கூடி மணநிகழ்ச்சியை நடாத்தி வைப்பதும், கற்பினின் வழுவாமல், நற்பல உதவியொடு, பெற்றவன் பெட்கும் பிணைமான் அனையை யாகிவாழியென வாழ்த்துவதை அகப்பாடல் தெரிவிக்கின்றது (86). சிலப்பதிகார மங்கல வாழ்த்துக் காதையும் முதற்கண் இயற்கை வாழ்த்துக் கூறிப், பின் மங்கல நல்லமளி ஏற்றி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துரைத்து நடையிடுகின்றது. ஆல்போல் படர்ந்து, அரசு போல் தளிர்த்து அறுகுபோல் வேரூன்றி வாழ்கவென வாழ்த்துதல் வாழ்த்து மரபாக இந்நாளிலும் கல்லாரிடமும் அமைந்துள்ளது. இவ் வழிவழி மரபே மங்கல வாழ்த்தாய் அமைய வேண்டியும் மொழிநலம் போற்றாத் தமிழர் மடமையால் சோபனமாயிற்று, நலுங்குமாயிற்று; திருமணம், மங்கலவிழா, மணவிழா, மன்றல்விழா எனப்பல பெயர்கள் வாய் மணக்க வாய்த்திருந்தும் வாழ்க்கைத் துணைநலமென வழிசிறக்க வாய்த்திருந்தும் விவாகத்தில் மாட்டிக் கொண்டவர்களும், வெட்டிங்கில்திளைப்பவர்களும் சோபனத்தை விட்டு வைப்பரோ? மங்குல்: மங்குதல் இல்லாத பொங்குதல் வாழ்வு வாய்க்க அடிப்படையாக இருப்பது மங்குல் ஆகிய முகில் ஆகும். மங்குல் வாழ்த்து, மழை வாழ்த்து, வான்சிறப்பு என்பவை. விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குல் மாமழை தென்புலம் படரும் - அகம். 24 மங்குல் மாமழை விண்ணதிர்பு முழங்கித் துள்ளுப் பெயல் - அகம். 294 மங்கை: பெதும்பை என்னும் அறிவறிந்த பருவத்திற்கு மேம்பட்ட மங்கல நிலையள் மங்கை ஆவள். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை என்னும் வரிசையில் அமைந்தவள் மங்கை. இலங்குவளை மடமங்கையர் - மதுரைக். 159 துணைப் புணர்ந்த மடமங்கையர் - பட்டினப். 106 மலர்போல் மழைக்கண் மங்கையர் கணவன் - மலைபடு. 58 மங்கையர் என்பார் துணையொடு வாழும் மங்கல மடந்தையர் என்பது புலனாம். மசக்கை: மசக்கை = உண்டாகி யிருத்தல்; கருக்கொண்டிருத்தல். மயல், மயர்வு, மயக்கம், மசக்கை என்பன வெல்லாம் ஒருபொருட் சொற்களே எனினும் இவற்றுள் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. மயல் = காதல்; மையல் என்பதும் அது. மயர்வு = மதி மருட்சி; மயக்கம் = பொறிபுலன் தடுமாறல். மசக்கை= வயறு வாய்த்திருத்தலால் உண்டாகும் சோர்வு. வாந்தி, சோம்பல் ஆகியவை. அவளுக்கு மூன்று மாதம்; மசக்கையாக இருக்கிறாள் என்பது வழக்கு. மசக்கை உண்டாதற்குக் காரணம் வயிறு வாய்த் திருத்தல். ஆதலால் வயிறு வாய்த்தல் மசக்கை எனப்படுகிறதாம். மசண்டை: விடியுமுன் இருக்கும் காரிருள் பொழுதை மசண்டை என்பது செட்டிநாட்டு வழக்கு. சோம்பேறியாக இருப்பவரை மசண்டை என்பது முகவை வழக்கு. ஒட்டி நின்று ஒன்றும் செய்யாதும், ஓயாது பேசுவதுமாக இருப்பதை மசமசஎன்பது பார்ப்பனர் வழக்கு. மசை: மசை என்பது திரட்சி, வனப்பு என்னும் பொருள் தரும் சொல். அது அப் பொருள் அமைந்த இளம்பருவப் பெண்ணைக் குறிப்பதாக மதுரை வட்டார இழுவை வண்டியாளர் வழக்கில் உள்ளது. மச்சம்: மச்சம் என்பது அடையாளக்குறி என்பது பொதுவழக்கு. பருத்தி தவசம் வாங்கும் வணிகர் மச்சம் பார்ப்பது என்பது விளைவு - விலை - தரம் - மதிப்பீடு குறித்துப் பார்ப்பது. ஒரு பானை சோற்றுக்கு ஓர் அவிழ் என்பது போன்றது அது. புலவை மச்சம்என்பது கொழுப்பூட்டம் கருதிய வழக்காகும். குறிகாரர் பார்க்கும் மச்சம் முதற்கண் கூறப்பட்டதில் அடங்கும். மச்சி: ஒரு மாடு மலடாக இருந்தால் அதனை மச்சி என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. மலடாதற்குரிய வழிகளில் ஒன்று வேண்டாத அளவுக்குக் கொழுப்பு அடைத்தல். மச்சி மச்சை என்பவை கொழுப்பு. ஆதலால் கொழுப்பு என்னும் சொல்லை மலடு என்பதற்கு மக்கள் பயன்படுத்தினர். மச்சி என்னும் உறவுப்பெயர் பொதுவழக்கு. மச்சு: மச்சுவீடு என்பது இப்பொழுதும் மக்கள் வழக்கில் உள்ள சொல்லாகும். வேயா மாடமும், மேன்மாடமுமாம் பெருவீடு அது. குச்சும் மச்சாகும் குளிர்க்கு என்னும் தனிப்பாடல், குச்சு, மச்சுகளை விளக்கும். பனியும் வாடையும் புகாதது மச்சு. வாய்ப்பும் வளமும் உடையது. கூழும்அமு தாம்பசிக்குக் குச்சும்மச் சாம்குளிர்க்குச் சூழிருட்குக் கொள்ளி சுடர்விளக்காம் - பூழ்தியும்பூ மெத்தையாம் நித்திரைக்கு வெப்பத்திற் கற்பகத்தை ஒத்ததாம் கள்ளிநிழல் ஓது இவற்றை எண்ணினால், குச்சு, மச்சு வேறுபாடு புலப்படும். மஞ்சரி: தலைவன் பத்து நாள் உலா வரல்; அவ் வுலாவின் நான்காம் நாள் பாவை யொருத்தி அவனைக் காணல்; அவளிடம் அன்பு அரும்புதல் ஒன்பதாம் நாளில் தன் முன்றிலில் வந்து அவனைக் காணல்; பத்தாம் நாள் கரிமேல் அவன் உலா வரல்; பின்னர் பாவை பிரிவால் வருந்துதல் - என்னும் பொருளில் வருவது மஞ்சரி என்னும் இலக்கியம். இவ்விலக்கியம் வணிகச் செல்வர்க்கு உரியதாகச் சொல்லப் பெறுதல் இல்லை. ஒன்பான் நாள் முன்றிற்காகும்என்றதால் எட்டாம் நாள் வரை அவள் இல்லுள் அடைவுற்றிருந்து வாயில், பலகணி, மாடம் வழியாகக் கண்டாள் என்பது புலப்படும். முத்தொள்ளாயிரக் கைக்கிளைப் பாடல்கள் இப்பொருளை விளக்குவனவாதல் அறிக. வேந்தர்க்குரியதாகக் கூறிய இம்மஞ்சரி, இளங்கோக்கள் என்னும் பெருமை பூண்ட வணிகர்க்கு ஆகுமோ என்பார்க்கு, ஆகாது என்றார். வணிக நலம் பேணுவார் முதலிழக்கும் செய்வினை ஊக்குதல் கூடாது என்னும் உன்னிப்பாக இதனைக் கொள்ளலாம். வரும்பவனி பத்து வருமவர்காண் நாலில் அரும்புமொன்பா னாள்முன்றிற் காகும் - விரும்புகரி பத்தாநா ளைப்பவனி பாவைபிரி வேவணிக வத்தருக்கா காமஞ் சரி - பிர. திர. 34 பாடற் சொல்லமைதி நல்விளக்கமாக அமையாமையின் பிறவாறு பொருள் காணவும் வாய்க்கும். மஞ்சள்: மஞ்சள் நிறத்தைத் தந்தது மஞ்சள். அது பொன்னிற மானது. தாலிக்குப் பகரமாக மஞ்சள் கயிறு அணிவதுண்டு. சமையலுக்குப் பயன்படும் மஞ்சளைக் குழம்பு மஞ்சள் என்பது சேலம் ஆற்றூர் வட்டார வழக்கு. அது விரல் போல் இருத்தலால் விரலி மஞ்சள்என்றும், குளிப்புக்குப் பயன்படும் மஞ்சள் உருண்டையாக இருத்தலால் உருண்டை மஞ்சள் என்றும் கூறுவர். மஞ்சளை, மஞ்சள் கிழங்கு என்பதும் வழக்கே. மஞ்சள் கடவு: மஞ்சள், வண்ணப்பெயர். கடவு, இடப்பெயர். கடக்க உரிய இடம் கடவு. பெருஞ்சாலைகளைக் கடந்து செல்ல உரிய இடங்களை வெள்ளை வரிகள் இட்டு அடையாளப்படுத்துதல் தமிழகத்தில் உண்டு. ஈழத்தில் அவ்விடங்களில் மஞ்சள் வரிகள் இட்டு அடையாளப்படுத்தியுள்ளனர். அதனைத் தமிழர் மஞ்சள் கடவு என வழங்குகின்றனர். பழங்கடவு புது விளக்கம் பெற்றது இது. நாடு விட்டு நாடு போதற்கு இசைவு வழங்கும் சீட்டுக்குக் ‘கடவுச்சீட்டு’எனப் பெயரமைந்ததை எண்ணலாம்.\ மஞ்சள் நீராட்டு: மஞ்சள் நீராட்டு = பூப்பு நீராட்டு. மஞ்சள் தேய்த்து நீராடல் தமிழ்நாட்டு மகளிர் வழக்கு. ஆனால், அந்நீராட்டைக் குறியாமல் ஆளான அல்லது பூப்படைந்தவளுக்கு மஞ்சள் கலந்த நீர் கொண்டு நீராட்டுதலே மஞ்சள் நீராட்டாகும். பூப்படைதல், மஞ்சள் நீராட்டு எனப் பல இடங்களில் பெருவழக்காக உள்ளது. பூவை நீரில் போட்டு வைத்து முழுக்காட்டுவதும் உண்டு. அதனால்பூ நீராட்டு என்பதும் அதுவே. மஞ்சி: தேங்காய் பனை முதலியவற்றின் நார்களை மஞ்சி என்பது சென்னை வழக்கம். முடிதிருத்துவாரை மஞ்சிகர் என்பது பழவழக்கு. முடிபோலும் நாரை மஞ்சி என்பது அவ் வழிப்பட்டது. மஞ்சு மேலெழும் முகில் என்பதை நினைவு கொள்ளலாம். மஞ்சு: மஞ்சு:1 மஞ்சு = அழகு. மஞ்சு, மைந்துஎன்பதன் போலி. மஞ்சன் கழல்என்றார் கம்பர் (ஆரண். 626). மைந்தாவது வலிமை; ஆடவர்க்கு வினையே உயிர்என்பராகலின் வினையாற்றற்குரிய வலிமை மைந்தர்க்குப் பண்பாகச் சுட்டப்பெறும். வலிமை யுடைய இடத்து அழகும் பொதுளுதல் ஒருதலை. ஆகலின் மஞ்சு அழகு எனப் பெற்றதாம். மஞ்சு:2 மஞ்சு = முகில். மஞ்சு தவழ் இறும்பில் - நற். 154 துஞ்சு பிடி மருங்கில் மஞ்சுபடக் காணாது பெருங்களிறு பிளிறும் சோலை - நற். 222 மஞ்சு விரட்டு: மைந்து > மஞ்சு; மைந்து = வீரம்; வெருட்டு > விரட்டு. மைந்தர்கள் வெருட்டி அடக்கும், காளை (ஏறு) தழுவுதல் மஞ்சு விரட்டாம். மைந்து பொருளாக வந்த வேந்தன் - தொல். 1016 மைந்து உடையவன் மைந்தன். மைந்தன் > மஞ்சன். கஞ்சங்களை மஞ்சன் கழல் நகுகின்றது கண்டாள் - கம். ஆரண். 626 ஏறு தழுவுதல், சல்லி கட்டு என்பனவும் இது. காளை விரட்டு என்பதும் வட்டார வழக்கு. மஞ்ஞை: மஞ்ஞை = மயில். மஞ்சு = மழை முகில். மயில், மழை முகில் கண்டு மகிழ்ந் தாடும் இயல்பினது. ஆதலால் மஞ்ஞை எனப்பட்டது. மின்னுபு, வானேர் பிரங்கும் ஒன்றோ அதனெதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும் - குறுந். 194 மழைவர வறியா மஞ்ஞை ஆலும் - ஐங். 198 மடக்கு: வந்த சொல்லே மீள வருதல் மடக்கு ஆகும். உழவு செய்வார் மடங்கி மடங்கி வந்து உழுவர். மடக்குதல் மீண்டு வருதல் என்னும் பொருளது. தின்னுமாம் ஒரு படப்பு; திரும்பாதாம் ஒரு மடக்குஎன்பது பழமொழி. கத்தி வகையுள் ஒன்று மடக்குக் கத்தி; நாற்காலி வகையுள் ஒன்று மடக்கு நாற்காலி. மடக்குக் கட்டிலும் உண்டு. சொல் மடக்கி வருவது மடக்கணி. உமாதரன் உமாதரன் உமாதரன் உமாதரன் - இலக். அக. வானூர்தியையே மடக்கி ஒரு பெட்டிக்குள் வைக்கும் திறத்தை ஈழப் போராளிகள் பெற்றமை அவர்கள் அறிவியல் வளமாம். காலை மடக்குதல் கையை மடக்குதல் மக்கள் வழக்கு. ஆடு மாடுகளை மேற் செல்லாமல் மடக்குதல் ஆயர் வழக்கு. மடக்கிப் பிடித்துப் பறித்தல் திருடர் வழக்கு. நில அளவையுள் ஒன்று ஏக்கர். அதனை மடக்கு என்பது உழவர் வழக்கு. மடக்கு மடக்கு என்று குடித்துவிடு என்பது மருத்துவ முறை. மடக்கு முடி முதல் (யமக அந்தாதி): யமகம் என்பது மடக்கு ஆகும். எழுத்துகளது தொகுதி பிற எழுத்தானும் சொல்லானும் இடையிடாதும் இடையிட்டும் வந்து பெயர்த்தும் வேறுபொருளை விளைப்பது மடக்காகும். எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும் பெயர்த்தும்வேறு பொருள்தரின் மடக்கெனும் பெயர்த்தே - தண்டி. 91 இம்மடக்கென்னும் சொல்லணி அமைந்த பாக்களால் இயற்றப்பெற்று அந்தாதியாக வரும் நூல் யமக அந்தாதி எனப் பெயர்பெறும். குற்றால யமக அந்தாதி, செந்தில் யமக அந்தாதி, தில்லை யமக அந்தாதி முதலியவை இவ்வகையைச் சார்ந்தவையாம். மடங்கல்: காலை மடக்குதல், கையை மடக்குதல் விளையாட்டுப் பயிற்சி; வேலையிலும் உண்டாம். நாம் மடக்காமல் அதுவே வளைதல் மடங்கலாம். கால் மடங்கிவிட்டது; கை மடங்கிவிட்டது; மருத்துவம் பார்க்க வேண்டும் என்பர். அரிமாவாம் சிங்கத்தின் பிடர் மடங்கியிருப்பதால் அதனைக் கருத்தோடு கண்டவர் அம் மடங்குதலே பெயராய் மடங்கல்என்றனர். மடங்கலிற் சினைஇஎன்கிறது புறப்பாடல் (73). மடங்கல் என்பதன் எதிர்ச்சொல் மடங்காமையாம். ஆதலால் அப் புறப்பாடல், மடங்கலிற் சினைஇ மடங்கா உள்ளம் என்றது. எவர்க்கும் எதற்கும் அழிவாக்க வல்ல மடங்குதல் இல்லாக் கூற்றுக்கு மடங்கல் என்பதொரு பெயர். உடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கல் உண்மை மாயமோ அன்றே - புறம். 363 இந்நாளில் அஞ்சல் துறை எனப் பெரிய துறையே உள்ளது. அதன் வழியே யாவது, தனியாள் வழியாவது விடுக்கும் கடிதம் மடங்கல்எனப் பெயர் பெறுகிறது. ஏனெனில் செய்தி எழுதிய தாளை மடக்கி வைப்பதால் மடங்கல் எனப்படுகிறது. அரிமாவின் உளைமயிர் தானே மடங்குவது போல் இல்லாமல் நாமல்லவோ மடக்குகிறோம். மடக்குக் கத்திஎன்று ஒன்று உண்டே. ஏன் மடக்குவதை மடக்குஎன்னாமல் மடங்கு என்றனர்? தோடு மடல் என்பவை புல்லின் வகைய. மடல் என்பதன் வழியாக வந்தது, மடங்கல் என்பது. அது, முடங்கல் என்றும் ஆயிற்றே. மடங்குதல் முடங்கல் ஆய அளவில் நின்றதா? இல்லை! நுடங்கலும் ஆயிற்று. நுடங்குதலும் வளைதல், அசைதல் பொருளதே. மடக்கல் முடக்கல் போல நுடக்கல் எனவும் ஆயது அது. நுடக்கம் - முடக்கம் என்பது அகராதிப் பொருள். உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும் என்பது புறப்பாடல் (384). இவ்வழக்கு, உணவுண்ட நல்ல கலங்களில் உண்ண மாட்டா தொழிந்த மிக்கவற்றை அக்கலத் திடையே வைத்து மடித்து எறியவும்என்பது ஔவை சு.து. உரை. * மடல்காண்க. மடங்கு: மடங்கு:1 மடங்கு = அளவு. மும்மடங்கு = மூன்று பங்கு அளவு. மும்மடங்கு பொலிந்த முகத்தினான் - கம்ப. சுந். 348 மடங்கு:2 மடங்கு = திரும்பு; ஏவல். மடங்கு:3 ஏர் உழுது திரும்பும் இடம்; மடங்கும் இடம். மடநடை: மடம் + நடை = மடநடை. மடம் = மென்மை; மடநடை = மெல்லிய (அ) மெது நடை. மடநடை ஆமான் - மலைபடு. 500 மடநடைக் குழவி - நற். 120 மடநடை மஞ்ஞை - முருகு. 310 மக - மட - மத - மழ = இளமைப் பொருளாகும் சொற்கள். மடந்தை: மகளிர் பருவங்களுள் மங்கையை அடுத்த பருவம் மடந்தைப் பருவமாம். இல்லறம் இனிது நடத்தும் பருவம். மடம் உடையவள் மடந்தை. மடமாவது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமைஎன்பது அடியார்க்கு நல்லார் (சிலப். 16:86), இறையனார் களவியலுரையார்(2), நச்சினார்க்கினியர் (சீவக. 356) தொல்காப்பியப் பேராசிரியர் (பொருள். 252) ஆயோர் உரையாம். நல்லோர் உரையை நழுவ விடாமல் கடைப்பிடியாகக் கொண்டு இல்லறம் நடத்த வல்ல நல்லாள் மடந்தை என்பதாம். தகைசான்ற சொற்காத்து (திருக். 56). என்பது கருதுக நெடும்பணைத் திரள்தோள் மடந்தை - பெரும்பாண். 12 மடம்: ஊரூர்க்கும் மடம்என்னும் பெயரால் ஊர்ப்பொதுக் கட்டடம் உள்ளமை தமிழகம் தழுவிய அமைப்பு. மடம் மட்டுமே இருந்து பின்னர் ஊராகியவையும் உண்டு. அவை மடத்துப்பட்டி, மடத்துப்பட்டு என்று வழங்குகின்றன. மடம்மென்மைப் பொருளில், ஒரு பண்புப் பெயராக வழங்குதல் வகையால், மட அன்னம், மட நாரை, மட நல்லார் என வழங்குதல் இலக்கிய வழியது. மடவார், மடந்தை என்பவை பெண்மைப் பெயர்கள். மடம்உயரியதோர் கடைப்பிடியாக இருந்தமை இலக்கண வழியே அறிவது. அது, கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமைஎன்பது. தொல்காப்பியப் பேராசிரியர் உரை (பொருள். 252). மடந்தை மகளிர் பருவங்களுள் ஒன்று. கொளுத்தல் என்பது அறிவுறுத்தல்; அதனை, அப்படியே ஏற்றுக் கொண்டு, ஏற்றுக் கொண்டதை விட்டுவிடாமல், கடைப்பிடியாகக் கொள்ளுதல் என்பதே இதன் விளக்கமாம். நல்லோர் - பெருமக்கள் - சான்றோர் - குருவர், உரைகேட்டு வாழ்வில் கொள்ளும் கட்டொழுங்கு மடம் எனப்பட்டது என்க. இதனைக் கற்றுத் தந்த துறவர் வாழ்விடம், மடம் எனப்பட்டது. மடம் என்பது அறியாமைப் பொருளில் வழங்குவதை நாம் கேட்கவும் செய்கிறோம். கற்பித்தவாறே கடைப்பிடித்தல் அல்லாமல், தாமே அதனை மாற்றியோ திருத்தியோ ஆய்ந்தோ கொள்வது இல்லாமல் - தன்னறிவு வெளிப்பாடு இல்லாமல் - இருத்தல் வழியாக அப்பொருள் பின்னாளில் உண்டாயதாம் எனின் இல்லையாம். மடந்தப உரைத்தல்என்பதால் இப்பொருளும் அப் பழமைக் காலத்ததே என்பது விளங்கும் (மடந்தப = அறியாமை நீங்க) மடம் பெண்டிர்க்கே உரியதா? இயற்கை மென்மை, கட்டான கடைப்பிடி என்பவற்றால் பெண்டிர்க்குச் சிறப்பியலாகச் சொல்லப்படுவது மடம் எனினும், மக்களுக்குப் பொதுவில் வேண்டத் தக்க ஒரு பண்பேயாம். மகளிர் அதனை அணியாகக் கொள்வர் என்பதை, ஏண்பால் ஓவா நாண்மடம் அச்சம் இவையேதம் பூண்பால் ஆகக் கொள்வார் நல்லார் புகழ்பேணி என்பது கம்பன் வாக்கு (அயோத். 226). நாணமும் மடமும் நாரியர்க் கழகுஎன்பது ஔவை மொழி. இனி மடவன், மடவார் என்பதற்கும், மடைமை, மடையன், மடைப்பள்ளி என்பவற்றுக்கும் தொடர்பு இல்லை. இச் சொற்கள் மடை(உணவு) வழியாக ஏற்பட்டது. ஊணே வாழ்வாக - குறியாக - இருக்கும் ஊணன், மடையன். மடுத்தல் உண்ணல்எனப்படும். மடைப்பள்ளி என்பது ஊணாக் கும் இடம். மடையன் உணவு ஆக்குபவன். அடு மடையா என்பது நளவெண்பா. ஏரி கண்வாய் குளம் ஆயவற்றுக்கு மடைகள் உண்டு. வாய்மடை, தத்துவாய் மடை எனலும் வழக்கு. நீர் வெளியேறும் அடைப்பு - திறப்பு வழியே மடையாகும். மடைநீர் ஒலிக்கும் ஒலி வகையால் அஃது, ஓஎனவும் வழங்கியது. அவ்வொலியை ஓவிறந்து ஒலிக்கும் ஒலிஎன்பார் இளங்கோவடிகள் (சிலப். 10:109). இனி, மடம் என்பதுடன் அத்துச்சேர்த்து (சாரியை இணைத்து) வழங்குதலும், வழங்காமையும் உண்டு. சாரியை சேரின், அதன் பொருட்கும், அதனைச் சேராது விடின் ஆகும் பொருட்கும் உள்ள வேறுபாடு, மாறுபாடுஎன்னும் அளவில் மிக்கது. மடத்தனம் என்பதற்கும் மடத்துத் தனம் என்பதற்கும்; மடத்துறவி என்பதற்கும் மடத்துத்துறவி என்பதற்கும்; மடச்சிறுவன் என்பதற்கும் மடத்துச் சிறுவன் என்பதற்கும் - வெளிப்பட விளங்கும் பொருள் வேறுபாடு தெளிவே. பெண் துறவர்கள், திருக்கோயில் தொண்டு மகளிர் வாழ்விடம் கோயில் சார்ந்து இருத்தல் பண்டை வழக்கு. நந்தவனமும் அருகே இருக்கும். அதனைப் பேணல், மலர் பறித்தல், தொடுத்தல் ஆய கடன்களைச் செய்ய அத் திட்டம் பயன்பட்டது. கோயில் சார்ந்த மகளிர்தம் குடியிருப்பு மடவார் வளாகம்எனப்பட்டது. அது பின்னாளில் தனியூராகவும் விளங்கியது. திருவில்லிபுத்தூரைச் சார்ந்த மடவார் வளாகம் (திருக்கோயில் - தெப்பக்குளம் - குடியிருப்பு ஆயவை இணைந்துள்ளவை) எடுத்துக்காட்டு. அவர்கள் திருத்தளிப் பெண்டுஎன வழங்கப் பட்டமை கல்வெட்டுகளின் வழியே அறிவது. (தளி = கோயில். மண்ணால் அமைந்தது மட்டளி; கல்லால் அமைந்தது கற்றளி. அங்கே வழங்கிய படையல் தளிகை.) அப்பணி, பெருமையும் பேறுமாக ஒரு காலத்தில் கருதப்பட்டமை, அப்பரடிகளின் தமக்கையார் திலகவதியார் அப்பணி மேற்கொண்டிருந்தமை கொண்டு தெளியலாம். அவர்தம் தொண்டு வாழ்வே, அப்பரடிகளைப் பிறர் செய்யா உழவாரத் தொண்டுக்கு ஆட்படுத்திக் குறிக்கோள் வாழ்வு காட்டியதுடன், இறைவனுக்கு - இறைவனை அடைதற்குத் தொண்டலால் துணையும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே என்று உறுதி கொள்ளவும் வாய்த்ததாம். அப்பரடிகளே திருமடம் அமைத்து அடியார் பணித் திறத்திற்கு வழிகாட்டியமை இன்றும் சான்றுடன் விளங்குகின்றது. இக்காலத்தில் தொண்டு நிறுவனம் எனவும் சேவை நிறுவனம் எனவும் விளங்குவன, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாகஅரசு ஒப்புகை பெறுகின்றன. பண்டைத் தொண்டு நிறுவனமாகிய மடங்களோ, திருமடங்களோ குமுகாய - சமுதாயத் தொண்டு நிறுவனங் களாகத் திகழ்ந்தன. அதனால் அரசை எதிர்நோக்காமல் ஊரவர் கொடையாலே தளிர்த்தன; தழைத்தன. மக்கள் இல்லார், தக்க உறவும் வாயார், அறப்பணிக்கு ஆகட்டும் என்று கொடுத்த கொடைகளே திருமடத்துப் பொருள்களாம். அறங்காவலர் எனத் தேர்ந்து கொண்டு மக்கட்பணியும் இறைப்பணியும் ஆற்றத் தக்கார் என முடிவெடுத்துக் கொடுக்கப்பட்ட கொடை வளமே அது. கொடை வழங்கினார் ஒரு சாதியார் அல்லர். சாதி கருதிக் கொடை வழங்கினாரும் அல்லர். ஆதலால் திருமடத்துத் தொண்டு பொதுவறத் தொண்டாகவே - இறைபணியாகவே - திகழ வேண்டும் என்பதாம். அந்நாளில் அப்பணி மேற்கொள்பவர் தமக்கென அடையாளம் சில கொண்டனர். அவருள் சிவனியர் (சைவர்) கொண்டது காவியுடையாம். காவிஎன்பது வண்ணப் பெயராகக் கொள்ளப்படுகிறது. காவி நிறம் எனவே வழங்கவும் படுகிறது. அவர்தம் உடை வண்ணம் உறைவிட வண்ணம் காவி அடையாளமாகியது. காவிக் கல்லும் உண்டு. வண்ணப் பொருள் காவிக்கு ஏற்பது பிற்காலத்தது. முற்காலப் பொருளது, பிறர்துயரை யாம் தாங்கி அவர் துயர் அகற்றுவேம்என்பது. காவுதல் = தாங்குதல். காவினெம் கலனேஎன்னும் ஔவையாரின் புறப்பாடல் தொடர் எம் யாழை யாம் எடுத்துக் கொண்டேம்என்னும் பொருளதாம் (209). காவுதடி என்பதே காவடியாயிற்று. தோளில் காவுதலால் அப்பெயர் பெற்றது. காஎன்பதும் அது. காப்போல என்பது வள்ளுவம். ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது - திருக். 1196 என்பது அது. தூக்கி நிறுக்கும் எடையுள் ஒன்று கா. இப்பழஞ் சொற்கள் இப்பழம் பொருளிலே இந்நாளில் வழங்குவனவாக உள்ளனவா எனின் பொருள் மாற்றம் போலவே இயல் செயல்களும் மாறின என்பதே உண்மையாம். இம்மீட்டெடுப்பு நேரின், நாட்டு நலமீட்டெடுப்பாகவும் திருமடங்கள் திகழும் என்பது உறுதியாம். அப்பொழுது சோறு மணக்கும் மடமெல்லாம்என்பது மாறித் தொண்டு மணக்கும் மடமெல்லாம்என்னும் நிலை பாடு புகழாகச் சிறக்கும். மடல்: மடல்:1 மடல் புல்லினத்து உறுப்பு. தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாளை என்றா ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும் புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர் என்பது தொல்காப்பியம் (1586). மடல்பெரிது தாழை - மூதுரை 12 மடல்:2 கடிதம், முடங்கல். முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு - சிலப். 8:49 மண்ணுடை முடங்கல் மாதவி ஈத்தலும் - சிலப். 13:76 மடல்:3 அறம் பொருள் வீடு என்னும் மூன்று பொருள்களையும் பழித்து, மங்கையரைச் சேர்தலான் உளவாகிய இன்பத்தையே பயனெனக் கொண்டு இன்னிசைக் கலிவெண்பாவால் தலைவன் இயற்பெயர் எதுகையில், அப்பொருள் முழுவதும் பாடுதல் மடல் எனப்படும்; இஃது இன்பமடல், வளமடல் என்றும் கூறப்பெறும். அறம்பொருள் வீடு திறம்பெரி தழித்துச் சிறந்த வேட்கை செவ்விதிற் பராஅய்ப் பாட்டுடைத் தலைவன் இயற்பெயர்க் கெதுகை நாட்டிய வெண்கலிப் பாவ தாகித் தனிச்சொல் ஒரீஇத் தனியிடத் தொருத்தியைக் கண்டபின் அந்த ஒண்டொடி எய்தலும் மற்றவள் வடிவை உற்றகிழி எழுதிக் காமங் கவற்றல் கரும்பனை மடல்மா ஏறுதல் ஆடவர் என்றனர் புலவர் - பன்னிரு. 246 மடல்:4 மடல் என்பது பனையின் கருக்கோடு கூடிய மட்டை, அதனால் குதிரை வடிவு செய்து, அதன் மேல் ஆடவர் ஏறியிருந்து ஊர்வதாகக் கூறுதல் மடல்என்னும் நூலாயிற்று. அவர் எருக்கு மாலை சூடுவர். மாவென மடலும் ஊர்ப; பூவெனக் குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப - குறுந். 17 இனி, வளமடல், இரந்து குறை பெறாத் தலைமகன் மடலேறுவன் என்றும், இரண்டடி எதுகையாய் வருமென்றும் கூறுவர். அறம்பொருள் இன்பம் ஆகிய பயனை எள்ளி மகடூஉக் காமவின் பத்தைப் பயனெனக் கொண்டு பாட்டுடைத் தலைமகன் இயற்பெயர்க் கெதுகை இயல்பு நாடிப் பகர்ந்தவ் வெதுகைப் படத்தனிக் கிளவி இன்றி இன்னிசைக் கலிவெண் பாவால் தலைமகன் இரந்து குறைபெ றாது மடலே றுவதாய் ஈரடி எதுகை வரப்பா டுவது வளமட லாகும் - முத்துவீ. 1087 மகளிர் மடல் ஊர்வதாகவோ, ஊரப் போவதாகக் கூறுவதாகவோ நூல் செய்யத் தமிழ்நெறி ஏற்பதில்லை. இதனைக், கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில் - திருக். 1137 என்னும் வள்ளுவரின் வாய்மொழியால் அறிக. எனினும், பாட்டியல் நூல்கள் மகளிர் மடலேற்றையும் சுட்டியுரைக்கின்றன. அவ்வாறு சுட்டுதல் வடவர் நெறி என்பதைத் திருமங்கை மன்னர் பாடிய பெரிய திருமடலில் (38, 39), அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல் மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும் தென்னுரையில் கேட்டறிவ துண்டதனை யாம்தெளியோம் மன்னும் வடநெறியே வேண்டினோம் என்பதால் தெளியலாம். மகளிர் மடலேறுவதாகக் கூறும் நிலையொன்றைக் குறிக்கின்றது பாட்டியல். மடன்மாப் பெண்டிர் ஏறார்; ஏறுவர் கடவுளர் தலைவராய் வருங் காலே - பன்னிரு. 247 கடவுளர் மேற்றே காரிகை மடலே - பன்னிரு. 248 எந்தை யுடைப்பெயர்க் கெதுகை சாற்றி அந்தமில் இன்பம் பொருளா ஏத்திப் பொருளும் அறனும் வீடும் பழித்து மடன்மா ஏறுதல் மாதர்க் குரித்தே - பன்னிரு. 249 இவற்றுக்குத் திருமங்கை மன்னர் பாடிய சிறிய திருமடல், பெரிய திருமடல் முதலியவை எடுத்துக்காட்டாம். மடவரல்: மடமை + வரல் = மடவரல். மடவரல் அரிவை (குறுந். 321, 378). மடவரல் உண்கண் வாணுதல் விறலி - புறம். 89 மடம் வருதலை யுடைய ஒருத்தி - ஐங். 76 பெருமழைப். மடி: மடி = சோம்பல். எழுச்சி கிளர்ச்சி முதலாயவற்றை மடியச் செய்யும் சோம்பல் நிலை மடியாகும். மடிதலின் முன்னிலை மடியாம். மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து - திருக். 608 மடியின்மை திருக்குறள் அதிகாரங்களுள் ஒன்று (61). மடிப்பெட்டி: வெற்றிலைக்குச் சுருள் என்பது ஒருபெயர். மொய் தருவார் வெற்றிலையில் வைத்துப் பணம் தரும் வழக்கத்தால் அது சுருள் எனப்பட்டது. இனி, சுருள் என்பது போல் மடி என்பதொரு சொல்லும் வெற்றிலைக்கு உண்டு என்பது பரதவர் வழக்கால் புலப்படுகின்றது. வெற்றிலையை வைக்கும் பெட்டியை மடிப்பெட்டி என்பர். மடித்து மெல்லுவது மடி, வலித்தல் பொருளிலும் மடியை அவர்கள் வழங்குதல் படகு வலித்தல் (ஓட்டுதல்) வழியதாகலாம். மடியகம்: மடி + அகம் = மடியகம். உண்டவற்றை எரித்து மடியச் செய்யும் குடல்களை யுடைய வயிறு. மடியகத் திட்டாள் மகவை - சிலப். 9:22 படியை மடியகத் திட்டான் - நான்மணிக். 2 மடியில் மாங்காயிடல்: மடியில் மாங்காயிடல் = திட்டமிட்டுக் குற்றப்படுத்தல். மாந்தோப்புப் பக்கம் போனான் ஒருவன், அவன் மேல் குற்றம் சாட்டித் தண்டனை வாங்கித் தர வேண்டும் எனத் தோட்டக்காரன் நினைத்தான். உடனே மரத்தின் மேல் ஏறி ஒரு மாங்காயைப் பறித்து, வழியே போனவன் மடியில் வைத்து விட்டு, அவன் கையைப் பின் கட்டாகக் கட்டிக் கொண்டு ஊர்மன்றுக்கு அழைத்துச் சென்று குற்றம் சாட்டினான். குற்றம் சாட்ட வேண்டுமென்றால் குற்றமா கிடையாது? வல்லடிக்காரனுக்குக் குற்றமொன்றைப் படைத்துச் சான்றுடன் உறுதிப்படுத்துவது தானா கடினம்?. மடியில் மாங்காய் இட்டது போல மாட்டி வைத்துவிட்டானேஎன்பது வழங்குமொழி. மடியைப் பிடித்தல்: மடியைப் பிடித்தல் = இழிவு படுத்தல்; கடனைக் கேட்டல். மடி என்பது வேட்டி என்னும் பொருளது. மடி என்பது வயிற்றையும் குறிப்பது. வயிற்றுப் பகுதியில் வேட்டிச் சுற்றில் பணம் வைப்பதும் பணப்பை வைப்பதும் வழக்கம். மடியைப் பிடித்தல் என்பது கடனைக் கேட்டல் என்னும் பொருளிலும் இழிவுபடுத்தல் என்னும் பொருளிலும் வந்தது. வேட்டியைப் பிடித்தல் என்பது அவிழ்த்தலின் முற்பாடு. உடுக்கை இழக்க நேர்வது - அதனைக் குறிப்பால் குறித்தல் கூட இழிவானது. அதற்கு மடிவேட்டி; மடியில் வைத்த பணம் மடிஆயது. இடவாகுபெயர். இரண்டு நிலைகளாலும் இருபொருள்கள் கிளர்ந்தன. மடு: மாட்டின் பால்மடியை மடுஎன்பது பொதுவழக்கு. மடுப்போட்டுவிட்டது விரைவில் ஈனும்என்பர். ஆறிடு மேடும் மடுவும்என்பதால் ஆற்றுப் போக்கால் ஏற்படும் மேடும் பள்ளமுமாகியவற்றுள் பள்ளத்தைக் குறிக்கின்றது மடு என்பது. மடுத்தல் என்பது உண்ணல், பருகல், கேட்டல் என்னும் பொருளில் வருகின்றது. இது, உள்வாங்கல் ஆகும். மடு என்னும் பள்ளமான நீர்நிலையும் உள்வாங்கல் பொருளில் அமைந்துள்ளது. எ-டு: மணற்பாட்டு மடு. இது நெல்லை வழக்கு. மடுவளைவு ஆதலால் அப்பொருளும் கொண்டது. மாத்திரை அளவில் தாள்மடுத்துஎன்பது, கம்பர் வாக்கு. மடுபள்ளம் ஆதலால், பள்ளத்திலிருந்து மேலிழுக்கும் எருது, மடுத்தவாய் எல்லாம் பகடன்னான்என முயற்சியாளனுக்கு உவமையானது வள்ளுவத்தில் (திருக். 624). மடுத்தல்: மடுத்தல்:1 நிறைய உண்ணுதலும், நிறையக் குடித்தலும் மடுத்தலாம். மடுத்தல் உண்ணுதலை அன்றி உண்பித்தலையும் குறிக்கும் என்பதை ஒண்டொடி மகளிர் மடுப்பஎன்பதால் புறநானூறு கூறும் (56). மண்டியிட்டுக் குனிந்து கை கூட்டி அள்ளிப் பெருக உண்ணுதல் மடுத்தலாம் என்பதைத் திருவிளையாடல் சுட்டும் (குண்டோ. 14). மடுத்தல்:2 மடுத்தல் = கேட்டல். செவிமடுத்தல் என்பது மக்கள் வழக்கு. மடை: மடுப்பது மடை. எ-டு: எடுப்பது எடை; கொடுப்பது கொடை; தடுப்பது தடை. நீரை உள்வாங்கல், உணவை உள்வாங்கல் மடுத்தலாம். செய்திகளை உள்வாங்கல் செவிமடுத்தலாம். உள்வாங்கும் உணவு முதலியவற்றை ஆக்குதல் - மடுக்கக் கூடியவற்றை ஆக்குதல் - மடைத்தொழிலாம். அத்தொழில் செய்யும் இடம் மடைப்பள்ளி ஆயிற்று. அடுமடையா என்பது நளவெண்பா. ஏரி நீர் வெளியேறி வயலுக்குச் செல்லுதல் வேளாண்மைக் குரியது. அவ்வாறு நீர் வெளியேறும் வழி கண்கள் போன்ற அமைப்புடையது. மான்கண், புலிக்கண், யானைக்கண், நாழிக்கண், துடுப்புக்கண் என்னும் பெயருடையது. அக் கண்ணாகிய வாய் வழியே நீரை வெளியேற்றும் இடம் கண்வாய் எனப்படும். அமைந்த ஊர் மடைஎன்னும் பொதுப்பெயர் கொள்ளும். எ-டு: பத்தமடை; பாலாமடை. மடங்கள் கோயில்கள் ஆகியவற்றின் மடைப்பள்ளிகள் தனி ஊராக அமைந்துவிடலும் உண்டு. மடை உட்டுளை உடைமையால், உள்துளையுடைய தூம்பும் மடை எனப்படும். மடை = தூம்பு. மடையன்: மடை + அன் = மடையன். மடைத்தொழில் செய்பவன், மடையன். மடைத் தொழிலாகிய சமையல் செய்யுமிடம் மடைப்பள்ளி. சோறே குறியாக வாழ்பவன் மடையன். அத்தகையன் அறிவில் நாட்டம் செலுத்தான். ஆதலால் மடையன் என்பதற்கு அறிவிலி என்னும் பொருள் எய்தியது. * மடைகாண்க. மடேர்: மடேர்ஒலிக்குறிப்பு. மரம் மடேர் என விழுந்தது. மடார்என்பதும் அது. (ம.வ.) மட்டம்: மட்டம்:1 மட்டு + அம் = மட்டம் = மது, கள். மட்டோடு - அளவோடு - நிறுத்திக் கொள்ள வேண்டியது மது. மட்டம் பெய்த மணிக்கலம் - குறுந். 193 மட்டு என்பதும் இது. மட்டு என்பது கள்ளின் பெயர். அஃது அம்முச் சாரியை பெற்று இங்ஙனம் (மட்டு) வந்தது. உரை, உ.வே.சா. மட்டு நீக்கி மது மகிழ்ந்து - பட்டினப். 108 பொருள்: கள்ளுண்டலைக் கைவிட்டுக் காம பானத்தை உண்டு மகிழ்ந்தும்(உரை, நச்.). மட்டு = காமபானம் -சீவக. 98 உரை, நச். மட்டு காமத்தைத் தூண்டலின் காமபானம் எனப்பட்டது. ஒரு கதை: ஒரு கொடியவனிடம் மதுவைப் பருகு அல்லது மாதைக் கெடு அல்லது குழந்தையைக் கொல் என்று கூறக் குறைந்த கேடு மதுவே எனக் குடித்தான்; அம் மதுவெறியில் மாதைக் கெடுத்தான்; குழந்தையைக் கொன்றான்; ஒரு கேட்டில் மூன்று கேடும் முடிந்தது என்பது. மதுக்குடிக்கேடு, குடிகேடு, குடிமைக்கேடு என்பதை இதன்மேல் விளக்க வேண்டுவதில்லை. கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு - திருக். 930 குடியன் திருந்த உள்ள ஒரே வழி குடித்துக் கிடப்பானைக் காணல். அதில் திருந்தான், எதிலும் திருந்தான் போலும். மட்டம்:2 மட்டம் = குறைவு. மட்டம் என்பது சமமானது. ஒப்புரவானது என்பது பொருள். மட்டப்பலகை, பூச்சு மட்டப்பலகை, மட்டம் பார்த்தது, என் மட்டம் என்பவையெல்லாம் சமநிலைப் பொருள். இப்பொருளை விடுத்துக், குறைவு என்னும் பொருள் தருதலும் வழக்கில் உண்டு. அவன் மட்டமானவன்என்றால் சமநிலையாளன், ஒப்புரவாளன் எனப் பொருள் தராமல் கீழானவன், குறை வானவன் என்னும் பொருள் தருவதாம். மட்டமாகப் பேசி விட்டான் என்றால் இழிவாகப் பேசிவிட்டான் என்பது பொருளாம். மட்டு மரியாதை (வ): மட்டு= தனக்குரிய அளவு. மரியாதை= பெருமை, மதிப்பு. சிலர் செருக்காகப் பேசும் போதோ, நடந்து கொள்ளும் போதோ மட்டு மரியாதைதெரியாதவன் என்பர். தனக்குரிய அளவும், பிறர்க்குத் தரவேண்டிய பெருமை அளவும் தெரியாதவன் என்பதாம். இனிப் பிறர் தகுதியளவும், பெருமை அளவும் தெரியாதவன் என்பதுமாம். அந்த மட்டில் நில்என்பதில் மட்டுஅளவுப் பொருளாதல் விளங்கும். மட்டிப்பு (Limited)¡ கழகங்கள் இந்நாளில் உள்ளன. வரையறுக்கப்பட்ட அளவினது என்பது பொருள். மட்டை: மட்டை = கூரற்றவன். கூர் தேய்ந்தது மட்டை எனப்படும். முழுதாகக் கூர் அழிந்தது முழுமட்டை, மழுமட்டை எனப்படும். கரிக்கோலைச் (Pencil) சீவ வேண்டும் மட்டையாக இருக்கிறது என்பது வழக்கு. இம்மட்டை மழுங்கிய பொருளைக் குறிப்பது நீங்கி அறிவுக் கூர்மை இல்லாதவனைக் குறிக்கும் வகையில் வழக்கில் உண்டு. மணம்: மண் + அம் = மணம். மண்ணின் மணமே மணம் எனப்பட்டு, அதன்மேல் மலர்மணம் மற்றை மணமெல்லாம் ஆயினவாம். மழை பெய்யும் போது மண்ணின் மணம் நாமுணரத் தோன்றுவதாம். நீர்ப்பூவின் மணத்தினும் நிலப் பூவின் மணம் மிகுதல் மண்ணின் தொடர்பணுக்கம். கொண்டமையாலேயேயாம். மண்ணா வாயின் மணம்கமழ் கொண்டு கார்மலர் கமழும் தாழிருங் கூந்தல் - பதிற். 21 மணம்கமழ் தண்பொழில் - ஐங். 348 மணங்கமழ் பூங்கானல் - சிலப். 7:9 மணங்கமழ் கோதை - கலித். 92 மணம் = திருமணம், மண்ணல், மாலை சூட்டல் ஆயவற்றால் மணம் என்னும் பெயர் பெற்றது. மணமுரசு (பரி. 22) மணமுழவு (அகம். 136) மணப்போதில் ஒலித்தன. முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன அகலுள் மங்கல வணியெழுந்தது - சிலப். 1:47-48. மணல்: மண் + அல் = மணல். மண் = செறிவுடையது. மண்திணிந்த நிலமும் - புறம். 2 மண் அல் = செறிவு அற்றது; நனைமுதிர் புன்கின் பூந்தாழ் வெண்மணல் - குறுந். 53 தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி - அகம். 86 மணல்மலி பந்தர் - அகம். 136 மணவரை: மணம் என்பதும் வரை என்பதும் ஒரு பொருளவே. ஒருபொருள் மேல் வரும் இது மீமிசைச் சொல் எனப்படும். மணவரை என்பது மணமக்கள் அமர்ந்து மணம் கொள்ளும் இடத்தைக் குறிக்கும். மணமக்கள் அமரும் இடம் மணவடை. அவர்கள் மணச்சடங்குகள் நிகழ்வு மணவரை. மணத்தலும் வரைதலும் ஒரு பொருளவே. இனி, மணவறை எனின் பள்ளியறையாம். அஃது ஓரிற்படுத்துதல். மணற்காடை: தவளை தத்தும் ஊரியாம். காடை பறவையாம். இங்கே மணற்காடை என்பது தவளைப் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. ஊரியும் இன்றி, பறப்பதும் இன்றி, மணல் வாழ்வுடைமையால் இப் பெயர் சூட்டினர் போலும். மணி: மண் + இ = மணி. மண்ணுதல் = கழுவுதல்; சாணை பிடித்துக் கழுவப்பட்டது மணியாகும். ஒன்பான் மணிகளாக எண்ணப்பட்ட அவை செயற்கை மணிவகையால் பலவாயின. மண்ணப்பட்ட மாழையால் செய்யப்பட்ட மணியால் ஓசைப் பொருள் உண்டாயது. மணிகள் அணிகலமாதலால் அழகு என்னும் பொருள் கிளர்ந்தது. அறுபது நிமையங்கள் கொண்ட மணியும், மணித்துளியும் மணி ஓசை கொண்டு அமைந்தன. கண்மணி, கருமணி எனக் கண்பாவை மணியாயது. கண்மணி, மணி, மணியரசு, மணிமேகலை எனப்பெயர்கள் உண்டாயின. ஊர்ப் பெயரும் குழுமணி, பெருகமணி, சிறுகமணி, சிந்தாமணி என உண்டாயின. தவசமணி சிறிதாதலால் மணி, தவசமணி எனப்பட்டது. சிறிது என்னும் பொருளும் தந்தது. மணிக்குடல், மணிக்கொச்சம், மணித்தக்காளி. உருத்திராக்கம் உருத்திராக்க மணி (உருத்திராக்கக் கண்மணி) எனப்பட்டது. மண்ணுதற்குரிய நீர், மணிநீர் எனப்பட்டது. நீர் கொண்ட முகிலும் நீர் பெருகு கடலும் நீலமாகலின் நீலகண்டன் மணிமிடற்றோன் எனப்பட்டான். நீலமணி மிடற்றொருவன் போல - புறம். 91 வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன், அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் - சிலப். 20:53-55 மணி = கழுவுதல் எனப் பொருள்படும். மண் என்னும் முதனிலையில் தோன்றிய தமிழ்ச்சொல்; கழுவுதலாவது சாணைக் கல்லில் தேய்த்து மாசு போக்கித் தூய்மை செய்தல்திருவாசக விரிவுரை. சிவபு. 1-5 மறைமலையடிகள். அறுபது வயதில் எடுக்கும் விழா மணிவிழா என்பது மக்கள் வழக்கு. மணிக்கூடு: காலம், பழங்காலத்திலேயே கணிக்கப்பட்டது. அதனைச் செய்தவர் காலக்கணியர் எனப்பட்டனர். காலத்துள் ஒன்று கடிகை. அதனைச் சார்ந்தே கடிகையாரம் (கடிகாரம்) எனப் புதுச்சொல்லாட்சி பெற்றது. காலங்காட்டி என்பதும் அது. கடி காரத்தை மணிக்கூடு என்பது யாழ்ப்பாண வழக்கு. மணிக்கூண்டு எனக் காலம் காட்டும் கோபுரங்கள் உண்டு. மணிமாலை: எந்தப் பொருள்மேலும் வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிப் பாடுவது மணிமாலையாகும். எப்பொருள் மேலும் வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் கலந்து வருவது மணிமாலை யாகும் வழுத்துங் காலே - முத்துவீ. 1056 மணிசெம்மணி, பச்சை மணி, நீலமணி என ஒன்பான் வகைப்படும். அவற்றுள் இருமணித் தொடையாய், அறுபது எண்ணால் இயல்வது, இம் மாலையாம். அறுபதாம் ஆண்டு மணிவிழாஎனல் கருதலாம். மணியம் செய்தல்: மணியம் செய்தல் = அதிகாரம் பண்ணல். அம்பலம், மன்றாடி, நாட்டாண்மை, ஊராளி, மணியகாரர் என்பனவெல்லாம் ஊராட்சி மேற்கொண்டிருந்தவர்களின் தகுதிப்பட்டங்கள். ஆங்கில அரசின் காலத்தில் ஊராட்சி கிராம kÂa«’(Village Munsif) என்னும் அரசுப் பதவிப் பெயராக வாய்த்தது. ஊர் நடவடிக்கை எல்லாமும் மணியத்தைச் சார்ந்தே இருந்தது. அதனால் அதிகாரம் செய்தல் என்னும் பொருள் மணியத்திற்கு உண்டாயிற்று. அவ் வழக்கால் உன் மணியம் பெரிய மணியமாக இருக்கிறது, நீயெல்லாம் மணியம் செய்தால் ஊர் என்னாவது?என்றெல்லாம் வழக்குகள் உண்டாயின. மணை: மண்ணைத் தழுவிய பலகை, கட்டை மணை. அமரும் பலகை மணையாகும். அரிவாள் மணை, அடுமனைப் பொருள்களுள் ஒன்று. அடிமணை என்பது அடிப்படை. முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய் கிடக்கையோ டிவ்வைந்தும் என்ப - தலைச்சென்றார்க்கு ஊணொடு செய்யும் சிறப்பு - ஆசாரக். 54 மணை, அமரும் பலகை. நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய - தொல். 1570 மண்: மண் ஐம்பூதங்களுள் ஒன்று. வெளி, வளி, ஒளி, நீர் என்னும் நான்கு பூதங்களும் படிப்படியே செறிவு கொண்டவை. மண்ணோ செறிவே தன் இயல்பாக அமைந்தது. மண் திணிந்த நிலம்; மண்திணி ஞாலம்என்னும் பழந்தமிழ் ஆட்சி, மண்ணின் செறிவைக் காட்டும். மண்ணின் செறிவும் இறுக்கமும் பொறுமைச் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுவதாம். மண்ணின் செறிவு குன்றிய நிலமும் உண்டு. அது, களர் (நிலம்), அளறு (நிலம்) எனப்படும். யானையையும் அளறு உள்வாங்குவது. ஆதலால், காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா வேலாழ் முகத்த களிறு என்பது குறள் (500). மண்போல் செறிவு அற்றது மண் அல்லாதது (மண் + அல்) மணல் எனப்பட்டது. மண்ணின் திண்மையும் இறுக்கமும் கரடு, பாறை, கல் எனச் செறிவு மிகப் பெறல் கண்கூடு. மண் கொண்டு திண்மையாய்ச் செய்யப்பட்ட கலம் மண்டை எனப்பட்டது. அதன் வடிவம் மாந்தர் மண்டை - தலை - வடிவென உருண்டையாக அமைந்தது. “என் மண்டை மலர்க்குநர் யார்?”, கவிழ்த்த என் மண்டைஎன்பவை உண்கலம். மண்டைப் பகுதியின் செறிவு மிகுதியாம். தலை ஓடு மிக வன்மையானது. அதனுள் அடங்கிய பெருமூளை, சிறுமூளை, கண்கள், காதுகள், மூக்கு, வாய் என்னும் பொறிகள் செறிந்து அமைந்து கிடத்தலும் புலன் உணர்வுகளுக்குக் கொள்கலமாக விளங்குதலும் அச் செறிவைப் புலப்படுத்தும். நீராட்டு வகையில் ஒன்று மண்ணுநீராட்டு. குளித்தல் மூழ்கல் போன்று அன்றிக் குடம் குடமாகக் கொட்டி முழுக்காட்டிக் கொண்டாடும் பெருவிழாவாகும். பல குடங்களில் கொணர்ந்து பலரும் பல்கால் விடுதலால் மண்ணுநீராட்டு, மண்ணு மங்கலம் என்றாகியது. அம்மண்ணுதல் பிற்காலத்து, குளித்தல்என்னும் பொருளில், கடல்பெரிது மண்ணீரும் ஆகாதுஎன்று நீராட்டு என்னும் பொருளது ஆயிற்று. மண்ணின் செறிவு மண்டுதல்எனச் செறிவுப் பொருளே தந்தது. புகைமண்டுதல்என்பது புகைச் செறிவு. அழுக்கு, கசடு செறிவு ஆதல் மண்டிஎனப்பட்டது. எ-டு: மண்டி எண்ணெய்; மதுவின் செறிவும் மண்டி எனப்படும்! மேலே உள்ளது தெளிவு; கீழே படிந்த செறிவு அடிமண்டி; மாடு செறிவுள்ள காடி நீரைப்பருகுதல் மண்டுதல்எனப்படும். வயிறு முட்டக் குடிக்கும் குடியை ஒரே மண்டாக மண்டிவிட்டான் என்பர்; பொருள்களைச் செறிவு மிக அடுக்கிவைப்பதாகிய இடம் மண்டிஎனப்பட்டது. மக்கள் செறிவாகக் கூடும் இடமும், விழாக் கொள்ளும் இடமும் மண்டகம், மண்டகப்படி ஆயின. நீரின் மண்டுதல், புகையின் மண்டுதல் மேலும் விரிந்து புகழ் மண்டுதல் என்றும் ஆயது. புகழ்மண்டிக் கிடக்கும் தமிழ்நாடுஎன்றார் பாரதியார். செறிவுமிக்க போர் மண்டமர்எனப்பட்டது. அழுக்குச் செறிவு, சாற்றுச் செறிவு, காடிச் செறிவு, புகைச் செறிவு என்னும் செறிவு நிலை போல், அறியாமைச் செறிவும் அகலாது படிந்து கிடக்கக் கண்டவர் அஃதுடையாரை மண்டுஎன்றனர். மண்டை அறிவுச் சுரப்பின் இருப்பிடம்; அறிவைப் பாரித்து விளக்கும் ஒளி நிலையம். அதில் அறியாமை கப்பிக் கிடத்தலால் மண்டுஎன்னும் பழிப்புக்கு இடனாயிற்று. அங்கே அறிவுப் பெருக்கு அருவியாய் - ஆறாய் - ஊற்றாய் - சுனையாய் - விளங்கும் எனின், மண்டைச் சுரப்புஎன்று பாராட்டப்படும் அதுவே, அவ்வறிவறியா மூடத்தை, மண்டுஎன்றனர். தலைவகையால் மண்டுஎனப் பெயர் பெற்றது போகக், கால் வழியாகவும் ஏற்பட்டது. நிலத்தொடு நிலமாய்க் கிடத்தலும், நகர்தலும், புரளலும் மண்டியிடல் ஆயிற்று. மண்ணினோடு மண்ணெனப் படிந்து சுருளும் பாம்பு மண்டலிப் பாம்பு எனப்படும். பல்கால் மீள மீள உண்டாகும் சுழல் முறை மண்டலிப்பு ஆகும். ஓரடியே நாலடிக்கும் கட்டளையாய் வரும் யாப்பியல் மண்டிலம் எனப்பட்டது. நாற்பது நாள் தொடர் மருத்துவம் மண்டலம்என்றாயது. மண்ணின் செறிவு மிக்க பகுதியின் பெயர், பொதுமைக் குறியொடு மண்டலம்என்னும் நிலப்பகுதி ஆயிற்று. அது, வான மண்டலம்வளிமண்டலம், ஒளிமண்டலம், நீர் மண்டலம் எனப் பூத மண்டலங்களாகவும், பரமண்டலம், வியன் மண்டலம், விரிமண்டலம் என வியனுலக மண்டலமாகவும் எம்மண்டலமாகவும் விரிந்தது. மண்டலம் மண்டிலமாகவும் ஆயது. மண்ணில் விழுந்த இலை, தழை, சருகு, தாள் முதலியவை மண்ணோடு மண்ணாய்க் கூடிச் செறிந்து சேர்ந்து விடும். தம் தன்மை இழந்து மண்ணின் செறிதன்மையற்ற அது மட்குதல்ஆகும். பசுந்தாள் உரம் - இயற்கை உரம் - உயிர் உரம் என்பது அவ்வுரமே! மண்ணுக்குச் செறிவும் வளமும் ஊட்டி உயிராற்றலைப் பெருக்கும் வலிமையைக் கண்ட அறிவினர் உரம்எனக் கூறினர். உரம் என்பது வலிமையாம்! ஊக்கமுமாம்! ஊட்டமும் ஊற்றமுமாம்! மக்கட்கு வாய்க்கும் அவ்வுரத்தின் அருமையை அறிந்த வள்ளுவர் உரம் ஒருவர்க்குள்ள வெறுக்கைஎன்றார். மட்கும் அதன் நலம் நில வளமாம்! ஆனால், நல்ல கருத்து நயனான கருத்துக் கூர்மை என்பவை இல்லா மாந்தப் பிறவியர் சிலர் மக்குஎனப்படுவர். மண்டுக்குப் பின்பிறந்த தம்பி மக்கு! மக்கு என்பது மட்குவழியது. நென்மணி, வைக்கோல் தாள் முதலிய பயன் பொருள்கள் அப்பயன் ஒழிந்து சீரழிதல் மக்கி (மட்கி)ப் போதல் ஆகும். அம்மட்கல் அழிவுக் கேட்டின் செறிவாம்! செறிவான கட்டளை - சட்டதிட்ட அமைப்பு - மட்டிப்பு எனப்படும்! அதற்குமேல் அதனைச் செறிவாக்க இயலாச் செறிவே மட்டிப்பாம். மட்டிப்பு லிமிடெட்என்னும் ஆங்கிலச் சொல்லுக்குப் பெயர்ப்பாய் வழக்கில் ஊன்றியது. மண்டு, மண்டிஎன்னும் செறிவு போல், மட்டு, மட்டிஎன்பவை செறிவுப் பொருள் கொண்டன. மட்டிப் பையன்என்பது ஏச்சுப் பேச்சு! சாந்துக் கலவையில் உதவாதது மட்டி; மட்டி எண்ணெய் என்பது தரம் குன்றியது. சமன்பாட்டு நிலையில் தாழ்ந்ததை மட்டம்என்பதும் மக்கள் வழக்காயிற்று. வாயை இறுக்க மூடி உதட்டைக் கடித்தல் மட்டித்தல் - மட்டியைக் கடித்தல் - என ஆகும். நீ மட்டியைக் கடித்தால் நான் அஞ்சி விடுவேனோஎன்பதில் மட்டித்தல் சினக்குறி காட்டுதல் என்பது விளங்கும். மண்டகம்: மண்டு + அகம் = மண்டகம். பொருள்கள் செறிந்து கிடக்கும் பண்டகம் போல் மக்கள் செறிந்திருக்கும் இடம் மண்டகமாகும். புகை மண்டுதல் என்பது மக்கள் வழக்கு. புகழ்மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு - பாரதி. பண்டகசாலை எனப்படுவது போல, மண்டக சாலை எனப்படலும் உண்டு. எ-டு: மண்டகசாலை ரெட்டிய பட்டி. மண்டலம்: மண்டலம் மண்டிலம் என மருவிற்று மதுரைக். 190 உரை, நச். மண்டலித்தல் வட்டமாதல். அது மண்டலம் என்னும் தொகைச் சொல்லில் பிறந்த வினை. மண்டலம், மண்டிலம் என மருவியும் வரும். மண்டலிப் பாம்பு, சுரமண்டலம், திங்கள் மண்டிலம், மண்டிலச் செலவு (குதிரைச் சாரி) முதலியன வட்டம் என்னும் வடிவப் பொருளில் வந்தன. ஜயங் கொண்ட சோழ மண்டலம். மண்டலம் என்னும் தொகைச் சொல் மண் + தலம் என விரியும். பண்டைத் தமிழர் கடற் செலவில் தேர்ந்திருந்தார் ஆதலின் உலகெங்கும் கலத்தில் சென்று நிலம்வட்டமாய் இருத்தலை நன்கு அறிந்திருந்தனர். பண்டை உலகத்தை ஏழ் தீவாகப் பகுத்துக் கூறினதும் இதை வற்புறுத்தும். (செந்தமிழ்ச் செல்வி 12:65). மண்டலம் காலப் பெயருமாம். இடமும் காலமும் முதற்பொருளாதலால் இடம் காலம் இரண்டும் தழுவி நிற்கும். தமிழ மருத்துவர் இந்த மருந்தை ஒரு மண்டலம் உண்க என்பர். மண்டலம் என்பது நாற்பது நாள், நாற்பத்தெட்டு நாள் என இருவகையாகக் கொள்ளல் உண்டு. மண்டலிப்பு (விருத்தம்): யாப்பால் பெற்ற பெயர் விருத்தம் என்பது. இனி, ஒரு சாரார் வரலாறு தழுவியது என்றும் கூறுவர். ஆயின், அவர் சுட்டும் வரலாறும் விருத்த யாப்பால் இயன்றுளதாகலின், யாப்பே கொளத்தகும். விருத்த யாப்பால் இயன்ற ஒரு நூல் நரி விருத்தம். அது திருத்தக்க தேவரால் இயற்றப் பெற்றது. கிளி விருத்தம், எலிவிருத்தம் முதலிய நூல்களும் இருந்த செய்திகள் உள. நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம்கட்டளைக் கலித் துறையாக அமைந்துள்ளது. ஆயின், இப்பெயராட்சி புதுமையானது. திருமழிசையார் பாடிய விருத்தம் சந்த வகையினதாகலின் திருச்சந்த விருத்தம் எனப்படுகின்றது. முதலாறு சீர்களும் மாச் சீராகவும் ஏழாம் சீர் விளச்சீராகவும் வருதல் சந்த விருத்த யாப்பாகும். பரிசிலை யானை வாள்குடை வேல்செங் கோலொடு நாடு ஊர் உரைப்பின் அகவல் விருத்தம் பத்தென வேண்டினர் புலவர் என்பது பன்னிரு பாட்டியல். (178) அகவல் விருத்தம் என்பது ஆசிரிய விருத்தம், அறுசீர் முதலாக நீண்டு வரும் பாட்டே ஆசிரிய விருத்தம் ஆகும். பரியாவது குதிரை. சிலையாவது வில். அவை, பரிவிருத்தம், சிலை விருத்தம் எனப்பெயர் பெறும் என்க. இனி, ஆனை விருத்தம், குதிரை விருத்தம், வாள் விருத்தம், குடைவிருத்தம், செங்கோல் விருத்தம், வில் விருத்தம், வேல்விருத்தம், நாட்டு விருத்தம், நகர் விருத்தம் என ஒன்பது வகை காட்டுவார் நவநீதப் பாட்டியலார் (41). நகர் விருத்தத்தை ஊர் விருத்தம் என்பார் முத்துவீரியனார். வில்வா ளொடுவேல் செங்கோல் யானை குதிரை நாடூர் குடையிவ் வொன்பது பப்பத் தகவல் விருத்தத் தாலே ஒன்பது வகையுற உரைப்பது விருத்த இலக்கணம் என்மனார் இயல்புணர்ந் தோரே - முத்துவீ. 1126 மண்டாரம்: வீட்டு மாடிகளில் உள்ள வெளியை மண்டாரம் என்பது மதுக்கூர் வட்டார வழக்கு. மண்டை என்பது தலை என்றும் பெரிய என்றும் பொருள் தரும் சொல். பெரும் பானையை மண்டைஎன்பதும் உண்டு. மண்டைத்தாலி பெருந்தாலி. உயர்ந்த பெருவெளி மண்டாரம் எனப்பட்டுள்ளது. இதுவும் மதுக்கூர் வட்டார வழக்கே. மண்டி: மண்டி:1 மண்டு + இ = மண்டி. பொருள்கள் மண்டிக் கிடக்கும் (செறிந்து கிடக்கும்) இடம் மண்டி, மண்டிக் கடை எனப்படும். அரிசி மண்டி, வெல்ல மண்டி, பலசரக்கு மண்டி எனப் பெயரும் உண்டு. எல்லி மண்டி நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் - அகம். 67 பொருள்: இருள்செறிந்த போதில் விரைந்து சென்று நல்ல போரில் வென்ற மானமிக்க வீரர் மண்டி:2 மண்டி = கசடன். எண்ணெய் வைக்கப்பட்ட கலத்தில் அவ்வெண்ணெய் தீர்ந்த பின்னர்ப் பார்த்தால் அடியில் மண்டிகிடக்கும். எண்ணெயில் இருந்த கசடு படிவதே மண்டியாம். சிலரை வெளிப்பட மண்டி விளக்கெண்ணெய்என்று எள்ளுவதும் வழக்கே. எண்ணெய் ஆட்டுங்கால் போட்ட பொருள்களின் கசடுகளும் பின்னே விழுந்த தூசி தும்புகளும் சேர்ந்து மண்டிக் கிடக்கும். அம்மண்டி போன்றவனை மண்டி என்றது ஒப்பினாகிய பெயராம். வேண்டியவற்றை விடுத்து வேண்டாதவற்றைத் தேக்கிக் கொள்பவன் மண்டி எனப்பட்டான் என்க. மண்டு: மண்டு = செறிவு. அறியாமை செறிந்த நிலை மண்டு என்பதாம். எத்தனை முறை படித்தாலும் சொன்னாலும் ஏறாத மண்டுஎன்பது வசை. மண்டுதல்: சுவை பாராமல் கண்ணை மூடிக் கொண்டு நிரம்பக் குடித்தல் மண்டுதல் என்பது வழக்கு. மண்டுதல் ஆவலாகப் பருகுதல், மிகக் குடித்தல் என்று சொல்லும் தமிழ்ச் சொல்லகராதி. கண்ணை மூடி மண்டி விடுஎன்று குழந்தைகளை வலியுறுத்துதல் இன்றும் வழக்கே. மண்டை: கல வகையுள் ஒன்று. பெருங்கலம் அது. பலர்க்குரிய உணவு கொள்ளுவது. பண்டு பாணர் குடும்பம் குடும்பமாகச் சென்றதால் மண்டை கொண்டு சென்றனர். பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் வாக்க உக்க தேக்கள் தேறல் கல்லலைத் தொழுகும் - புறம். 115 பரூஉக்கண் மண்டை - புறம். 125 மண்டை இக்காலத்து மொந்தை என வழங்கப்படுகிறது (அகம். 96 உரை, வேங்கட.) மண்டைக்கறி: மதுரை, இழுவை வண்டியோட்டியர் மண்டைக்கறி என ஒன்றை வழங்குகின்றனர். அதற்குப் பெயர் சுஞ்சா. அதனைப் பயன்படுத்துவார் பற்றுமை விளக்கும் செய்தி இது. மண்ணடித்தல்: மண்ணடித்தல் = கெடுத்தல். கையில் இருப்பது தேன். அதனை மண்ணில் கொட்டினால் என்னாம்? அங்கணத்துள் சொரிந்த அமிழ்துஎன உவமைப் படுத்தினார் திருவள்ளுவர் (திருக். 720). மண் உயர்ந்ததே எனினும் உண்ணவும் உணவுக்கு உறவுடையதே எனினும் அதனை உண்ணலாமா? உண்பனவற்றோடு கலந்து உண்ணலாமா? உண்ண ஆகாத அதனை உணவில் கலந்து விற்கும் கயமையரைப் போலக் குமுகாயக் கேடர் ஒருவர் உளரா? பொன்னாம் வாழ்வை மண்ணாக்கும் பேதையர் எத்துணையர்? என் நினைவில் எல்லாம் மண்ணடித்து விட்டான்; மண்ணைப் போட்டு விட்டான் என்பதில் என் நினைவைக் குழிக்குள் தள்ளி மண்ணால் மூடிப் புதைத்துவிட்டான் எனச் சாக்காட்டுத் துயர் அன்றோ ஓலமிடுகின்றது. மண்ணல்: மண்ணுதல் = நீராடல். வறுமை கூரிய மண்ணீர்ச் சிறுகும் - அகம். 121 கடல்பெரிது மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல் உண்ணீரும் ஆகி விடும் - மூதுரை 12 மண்ணீட்டாளர்: மண் + ஈட்டு + ஆளர் = மண்ணீட்டாளர். சுதையால் பாவை உள்ளிட்டன பண்ணுவார்; மண் = சுதை. மண்ணோடு இயைந்த மரத்தனையர் (திருக். 576) என்றார் ஆகலின் குயவருமாம்(சிலப். 5:30 அரும்பத. அடியார்க்.). மண்ணுமங்கலம்: மண்ணு மங்கலம் = மங்கல நீராடுதல். முடி சூட்டுதற்காகச் செய்யப்படும் நீராட்டு. இகல் மதில், குடுமி கொண்ட மண்ணு மங்கலம் - தொல். 1014 சிறந்த சீர்த்தி மண்ணு மங்கலம் - தொல். 1037 மண்ணியாறு, மண்ணிப் படித்துறை என்பவை பாடுபுகழ் பெற்றவை. மண்ணைக் கவ்வல்: மண்ணைக் கவ்வல் = தோற்றல். போரில் குப்புற வீழ்தல் மண்ணைக் கவ்வலாம். மற்போரில் மல்லாக்க வீழ்தலும் முதுகில் மண்படலும் தோல்வியாக வழங்குகின்றது. முன்பு குப்புற வீழ்த்திக் குதிரை ஏறல் வெற்றிச் சின்னம். குதிரை குப்புற வீழ்த்தியதும் அன்றிக் குழியையும் பறித்தது என்பதும் வீழ்ச்சி விளக்கம். கீழே விழுந்தும் முதுகில் மண்படவில்லைஎன வரும் மரபுத் தொடராலும், கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லைஎன்னும் மரபுத் தொடராலும் கீழே விழுதல்மண்படுதல்இழிவுப் பொருளாதல் தெளிவாம். மண்போடல்: மண்போடல் = இறந்தவரைக் குழிக்குள் வைத்துப் புதை குழியை மூடல். மண்போடல் பொதுச் செயல். அதனை விலக்கி இறந்தவரைப் புதைத்த புதை குழியை மூடுதற்குப் போடுவதே மண்போடலாகவும், மண் தள்ளலாகவும் வழங்குகின்றது. இடுகாட்டுக்கு வந்த அனைவரையும் அழைத்து மூன்று மூன்று கைம்மண் தள்ளச் சொல்வர். கடைசியில் மண் தள்ளிய பேற்றில் பங்கு கொள்ளல் பெரும்பேறு எனவும் கருதுதல் உண்டு. வாழ்ந்த நாளில் அவருக்கு மண் போட்டவரும் இந்த மண் போடுதலால் கடன் தீர்த்துக் கொள்வதாகக் கூட கருதுவதும் உண்டு. மதகு: மதகு:1 மதகு = மடைவாய். ஏரி குளங்களில் இருந்து நீர் வெளியேறும் வழி. மதவு = வலிமை மத வலியாகும் - தொல். 860 மதகைத் திறந்துவிட்டதும் வரப்புக் கொள்ளாமல் வயலை நிரப்பி வழிந்தது என்பது மக்கள் வழக்கு. மதகு:2 ஏரி, குளம் ஆயவற்றின் நீர்ப் போக்கியை மதகு என்பது பொதுவழக்கு. அம் மதகு அமைப்பில் நீர் செல்லுமாறு அமைக்கப்பட்ட மட்குழாயை மதகு என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு. மதகுபட்டி என ஊர்ப்பெயர் முகவை மாவட்டத்துள்ளது. மதலை: பெற்றோர்க்குத் தாங்குதலாய் அமைந்தவன் மதலை ஆவான். இதனை, முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க் கில்லை நிலை என்னும் குறளில் (449) வரும் மதலைஎன்னும் சொல்லமைதி யால் அறிக. தூண்என்றும் பற்றுக்கோடுஎன்றும் இச்சொல் பொருள் தரும். வான மூன்றிய மதலை போல - பெருபாண். 646 சிதலை தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு - நாலடி. 197 மதவு: மதவு:1 மத > மதவு. மழ = இளமை; மழ > மத. மதலை = குழந்தை; மதலைச்சொல் சொல்வது. மதலை, குதலை, மழலை என்பவை ஒத்த பொருளவை. இளநடையை, மதவு நடைஎன்னும் அகநானூறு (14). மதவு:2 மதவு = வலிமை; இளமைக்கு வலிமை மிகுதி. மதவுடை நா - அகம். 341 வலிமை யுடைய நா என்பது பொருளாம். முதுமை நா, வலியும் சுவையும் குறைந்ததாம். மதன்: இளமை யமைந்ததும், வாளிப்பு உடையதும் மதன் எனப்பெறும். மழலை மதலை எனப் பெறல் அறிக. மதலையாய் வீழூன்றி யாங்கு(நாலடி. 197) என்பதால் மதலை மக்கட் சுட்டாதல் தெளிவு. மழ, குழ என்பன போல மதஎன்பதும் இளமை சுட்டும். மதர்ப்பு என்னும் கொழுமையையும் மதன் காட்டும். ஆகலின் மதன் அழகாயிற்றாம். மதார் பிடித்தல்: மதார் பிடித்தல் = தன் நினைவற்றிருத்தல். இருந்தது இருந்த படியே, எது நடந்தாலும் அறியாதபடியே மூச்சுவிடுதல், பார்த்தல் ஆயவை யன்றி, உணர்வு வெளிப்படுத்த மாட்டாத நிலையில் இருப்பாரை மதார் பிடித்தல் என்பர். மதம் பிடித்தல் = காமவெறி கொள்ளல். இது செயலற்று உயிர்ப்பொ(ய்)ம்மை போல் இருத்தலாம். இதனைப் பேயறைந்தாற் போலிருத்தல்எனவும் கூறுவர். மதமதப்பு என்பது மதர்த்தலாம். மதர்த்தல் என்பது மரத்துப் போதல் என்பதைக் குறிக்கும். மரத்தின் இயல்பு என்னவோ அந்நிலை யடைதல் என்பதைக் காட்டும் வழக்குச் சொல்லாம் இது. மதார் பிடித்தவன் போல் இருக்கிறான்மதார் பிடித்து விட்டதா உனக்கு? சொன்னது காதில் விழுகிறதா?என்பவற்றிலிருந்து மதார்ப் பொருள் விளங்கும். மதியுடம்படுதல்: மதி உடம்பாடு > மதியுடம்படுதல். களவுக்காதலர் இருவரும் நீயே கணவனை யானே நின்மனையேன்என அறிவால் தேர்ந்து தெளிந்து ஒருதலைப்படுதல் மதியுடம்பாடாம். மதியுடம் பட்ட மையணற் காளை - அகம். 221 மதில்: மதி நலம் சிறக்க அமைக்கப்பட்ட கட்டுமானமும் மதிநலம் விளங்கச் செய்யப்பட்ட பொறிவகைகளும் கொண்டது மதிலாகும். முழு அரணாவது, மலையும் காடும் நீரும் அல்லாத அகநாட்டுச் செய்த அருமதில். அது வஞ்சனை பலவும் வாய்த்துத் தோட்டிமுண் முதலியன பதித்த காவற்காடு புறஞ்சூழ்ந்து அதனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய பலபொறிகளும் ஏனைய பொறிகளும் பதணமும் ஏய்ப்புழை ஞாயிலும் ஏனைய பிறவும் அமைந்து, எழுவும் சீப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிற எந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம் தொல். புறத். 10 நச். மதுரை மாநகர் மதிற்கண் இருந்த பொறிகளைச் சிலம்பு பின்வருமாறு சுட்டுகிறது. மிளையும் கிடங்கும் வளைவில் பொறியும் கருவிரல் ஊகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் - சிலப். 15:207-218 மதில் சுட்ட கல்லானும், உடைகல்லானும் இட்டிகை யானும் கட்டப் பெற்று, அறிவரிய பொறிகளைத் தன்னகத்துக் கொண்டதாக அமைந்த சுவரே எனினும் அதனைக் கன்னி எனவும் குமரி எனவும் கொண்டு பண்டை வேந்தர் போற்றிக் காத்தனர். இதனை, கருதாதார் மதிற் குமரிமேல் ஒருதானாகி இகன் மிகுத்தன்று என்றும், வணங்காதார் மதிற் குமரியொடு மணங்கூடிய மலிபுரைத் தன்று என்றும் வரும் புறப்பொருள் வெண்பா மாலையால் அறியலாம் (106, 122). இதனால் மதிலைத் தீண்டுதல் என்பது தொடுதற்கு உரிமையிலாக் குமரி மகளிரைத் தொடும் குற்றத்திற்கு ஒப்பக் கொண்டு ஓம்பினர் ஆகலின், பிறர் தீண்டற்கு ஆகாது வேந்துடை அரணேஎன்றார். வலிதில் மகளைப் பற்றிச் செல்ல வருவார் உளரேல் வாளாஇருப்பரோ? உயிரையும் பொருட்டாக எண்ணாது ஊக்கி நின்று தாக்குவர் என்பது இருவகை வழக்கினும் காண்டற்குரியதேயாம். இனிப் பகைவரால் தீண்டுதற்கு ஆகாத முள்வேலியை, குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள் வேலி - புறம். 301 என்றதுவும் இவண் கருதத் தக்கது. மதில் என்பதை மதிள்எனப் பாடுவர் ஆழ்வார்கள் (நாலாயிரப் பிரபந்தம்). மதிற்பொறி வகை: மிளை = காவற்காடு. கிடங்கு = அகழி. வளைவிற்பொறி = வளைந்து தானே எய்யும் எந்திர வில். கருவிரல் ஊகம் = கரிய விரலையுடைய குரங்கு போல் இருந்து சேர்ந்தாரைக் கடிக்கும் பொறி. கல் உமிழ் கவண் = கல்லை உமிழும் கவண். பரிவுறு வெந்நெய் = காய்ந்து இறைத்தலால் சேர்ந் தாரை வருத்துவதாய நெய். பாகடு குழிசி = செம்புருக்குமிடா; அன்றி அங்ஙனம் இறைத்தற்குப் பாகுகாயும் குழிசி. காய்பொன் உலை = உருகக் காய்ச்சி எறிதற்கு எஃகு பட்டிருக்கும் உலைகள். கல்இடு கூடை = இடங்கணிப் பொறிக்குக்கல்லிட்டு வைக்கும் கூடை. தூண்டில் = தூண்டில் வடிவாகப் பண்ணிப் போகட்டு வைத்துக் கிடக்கும் கிடங்கு நீங்கி மதில் பற்றுவாரைக் கோத்து வலிக்கும் கருவி. தொடக்கு = கழுக்கோல் போலக் கழுத்திற் பூட்டி முறுக்கும் சங்கிலி; கயிற்றுத் தொடக்குமாம். ஆண்டலைஅடுப்பு = ஆண்டலைப் புள்வடிவாகப் பண்ணிப் பறக்கவிட உச்சியைக் கொத்தி மூளையைக் கடிக்கும் பொறிநிரை. கவை = கிடங்கில் ஏறின் மறியத் தள்ளும் இருப்புக் கவை கழு = கழுக்கோல். புதை = அம்புக்கட்டு. புழை = ஏவு அறை. ஐயவித் துலாம்= பற்றாக்கை தூக்கிப் போகட்ட விட்டம் அன்றிக் கதவை அணு காதபடி கற்கவி தொடங்கி நாற்றும் துலாம். சாணம்புக் கூடு என்பாரும், சிற்றம்புகள் வைத்து எய்யும் இயந்திரம் என்பாரும் உளர். கைபெயர் ஊசி = மதில் தலையைப் பற்றுவாரைக் கையைப் பொதுக்கும் ஊசிப்பொறி; கதவொடு சேராதபடி வைத்த நிரைக்கழு எனினும் அமையும். சென்றெறிசிரல்= மாற்றார் மேற்சென்று கண்ணைக் கொத்தும் சிச்சிலிப் பொறி. பன்றி = மதிற்றலை ஏறினார் உடலைக் கோட்டாற் கிழிக்க இரும்பாற் செய்து வைத்த பன்றிப் பொறி. பணை = வேய்வடிவாகப் பண்ணி அடித் தற்கமைந்த பொறி. எழுவுஞ் சீப்பு = கதவுக்கு வலியாக உள்வாயிற் படியிலே நிலத்திலே வீழ விடு மரம். கணையம் = கணைய மரம்; சீப்பு அகப்படக் குறுக்கே போடக் கடவ மரம். கோல் = விட்டேறு. குந்தம் = சிறு சவளம். வேல் = வல்லையம்; ஈட்டி முதலியனவும். சதக்கினி = நூற்றுவரைக் கொல்லி. ஞாயில் = குருவித்தலை; ஏவறை என்பாரும் உளர். இவையன்றித் தள்ளி வெட்டி, களிற்றுப்பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப்பொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப்பொறி, தகர்ப்பொறி, அரிநூற் பொறி என்பனவும் மதுரைக் கோட்டையில் இருந்த பொறிகள் என இளங்கோவடிகள் கூறுவனவும் அவற்றுக்கு அடியார்க்கு நல்லார் உரைத்த உரையுமாம் (சிலப். 15 207-217). மது: மது:1 மதியை மயக்கும் மதுவகையுள் ஒன்று, கள். மதிமயக்கம் தருவது ஆதலால் கள்ளுண்ணாமை என்றோர் அதிகாரம் திருக்குறளில் வந்தது. மதுமயக்கில் கிடக்கிறான்ம.வ. மது:2 மகிழ்வூட்டும் சுவை நீரும் ஊட்டந்தரும் பழச்சாறு வகையும். பதனீர் சுவை மிக்கது, உடல்நலம் செய்வது. ஒரே பாளையில் இருந்து வழிவதே பதனீரும், கள்ளும். மது காடியேற்றப்பட்டதால் மயக்கம் தருவதாயிற்று. மட்டு நீக்கி மது மகிழ்ந்து(பட்டினப். 108) என்பதில் மட்டு மது என்பவற்றின் வேறுபாடு விளங்கும். மதுகை: மத > மதவு > மதுகை = வலிமை. மதவலி யானை - அகம். 354 கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத் தாமிரந் துண்ணும் அளவை ஈன்ம ரோஇவ் வுலகத் தானே - புறம். 74 உடல் வலிமை, உள வலிமை இரண்டையும் சுட்டுவது இம் மதுகையாம். மதுரை: மதி > மதிரை > மதுரை. மதுரை = மதிக்குலத்தவனான பாண்டியன் முதல் தலைநகர் (தென்மதுரை), கண்ணன் ஆண்ட வட மதுரை, அப் பெயர் பெற்ற கடைக்கழகப் பாண்டியர் தலைநகர்(தேவநே. 11). பத்துப்பாட்டுள் ஒன்று மதுரைக்காஞ்சி. இனிமைக்கு இடமான தமிழ் வளர்த்த பேற்றையுடைமையால் என்பதுமாம். மட்டு நீக்கி மதும கிழ்ந்துஎன்பதால் மகிழ்வு தரும் இனிய பழச்சாறு மதுவெனப்பட்டதறிக (பட்டினப். 108). மத்து: உருண்டு திரண்ட வடிவினது மத்து. மத்துப் போன்ற காயுடையது மத்தம். அது, ஊஎன்னும் வாயிதழ் போன்ற பூவும், மத்துப் போன்ற காயும் உள்ளதாய் ஊமத்தை (ஊமத்தம்) என்பதும் அது. மத்தை: மத்து என்பது திரண்டு உருண்டது. தேங்காயின் குடுமி யாகிய நார்த் திரளையை மத்தை என்பது தருமபுரி வட்டார வழக்கு. மத்து என்னும் மோர்கடை கருவியையும் ஊமத்தைக் காயையும் ஒப்புமை காணலாம். மந்தணம்: மந்தணம்:1 பிறர்க்குச் சொல்லாமல் உள்ளடக்கமாக வைக்கத் தக்கதை மந்தணமாக என்பது இக் காலத் தமிழ்ப் பற்றாளர் எழுத்துமுறை. உள்ளடக்கமாக வைக்க வேண்டும் செய்தியை மந்தணம் என்பது நெல்லை வழக்கு. மந்தணம்:2 மந்து + அண் + அம் = மந்தணம். மந்திப்பு = இறுக்கம்; மந்தாரம் = மூடி மறைத்தல். இவை மக்கள் வழக்கு. வயிறு மந்திப்பாக உள்ளதுமேகமூட்டம் மந்தாரமாக உள்ளதுஇவ்வாறு வெளிப்படாமல் ஒரு செய்தியை மறைத்து வைப்பது மந்தணம் ஆகும். Confidential என்பதற்காம் கலைச்சொல் மந்தணம். மறை என்பது பழஞ்சொல். மந்தி: மன்று > மந்து > மந்தை = கூட்டம். மந்தை மந்தையாகக் காணப்படுவது மந்தியாம். மத்தித்தல் திரளல்; மந்திப்பு = உணவு செரிக்காமல் செறிந்து வயிற்றுள் தங்குதல். இவற்றால், செறிவு, கூட்டம், திரள் எனப் பொருள் வருதல் தெளிவாம். கோடு வாழ் குரங்கு என்பது தொல்காப்பியம் (1512). வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் - குற். குற. மந்திச்சுனை, மந்தித்தோப்பு. சுனையும் தோப்பும் ஊர்களு மாம். மந்திரம்: மனத்திண்மையால் கருதியது நிறைவேறும் மொழி மந்திரம். மன் + திரம் = மந்திரம். முன்னுதல் = கருதுதல். முன் > மன். திரம் = திறம். x.neh.: மன்று > மந்து > மந்தை. முரி > முறி (வளை). மந்தை: மந்து + ஐ = மந்தை. மன அறிவு வரப் பெறாத ஆடு மாடுகளின் கூட்டம் அல்லது தொகுதி மந்தை ஆகும். ஒற்றைக்கல் மந்துஎன்பது உதக மண்டலம் என இதுகால் வழங்குகிறது. ஊட்டி என்பதும் அது. ஊரூர்க்கும் மந்தை உண்டு. ஊர்க்காலி மாடு அடையும் இடம் அது. சென்னையில் மந்தைவெளி என ஒரு பகுதி உள்ளது. மந்தைக் குடம்: இறப்புச் சடங்குகளுள் ஒன்று கொள்ளிக் குடம் உடைத்தல் என்பது. அக் கொள்ளிக் குடம் ஊரின் எல்லை வரை கொண்டுவரப்பட்டு ஊர் மந்தையில் உடைக்கப்படும். அவ்வளவுடன் மகளிர் திரும்புவர். அக் கொள்ளிக் குடம் வரும் இடக்குறிப்பாக மந்தைக் குடம் என்று முதுகுளத்தூர் வட்டாரத்தில் வழங்குகிறது. மந்தை, ஆடு மாடு அடையும் ஊர்ப் பொதுவிடம். மன்று > மந்து > மந்தை. மப்பு: மப்பு என்பது கொழுப்பு, மூடுதல், திமிர் என்னும் பொதுப் பொருளில் வழங்குகின்றது. தூண்டில் மிதப்புச் சக்கையை மப்பு என்பது முகவை மாவட்ட வழக்காகும். மரத்தில் வெடிப்பு துளை இருக்குமானால் அதனை அடைக்க வைக்கும் மெழுகை மப்பு என்பது தச்சர் வழக்கு. மப்பு மந்தாரம்என்பது வானம் இருளல். அவன் மப்பு அப்படிப் பேச வைக்கிறதுஎன்பவை மக்கள் வழக்குகள். மப்பு மந்தாரம்: மப்பு (மைப்பு) = மை அல்லது முகில் திரண்டிருத்தல். மந்தாரம் = மழை பெய்தற்குரிய குளிர் காற்று அடித்தல். மை = முகில்; கருமுகில்; மழை முகில் மைஎனப்படும். மைப்பு, மப்புஎன நின்றது. மந்தாரம் மெல்லிய தண்ணிய காற்று. எட்டத்தில் மழை பெய்திருந்தால் அம்மழையின் ஈர நைப்பு காற்றொடு வரும். அன்றியும் தாழப் படிந்த கருமுகிலைத் தழுவிவரும் காற்றும், ஈர நைப்புடன் வரும். இவற்றால், மப்பும் மந்தாரமும் இணைதற்காயின. மம்மர்: மம் என்று இருத்தல் மம்மர். செயலற்றும் மதர்த்தும் உரையாடாதும் இருத்தல் மம்மராம் (ம.வ.). மம்மர் = மயக்க நிலை (இ.வ.). மழையென மருண்ட மம்மர் பலவுடன் - அகம். 111 பொருள்: மேகமென மயங்கிய மயக்கம் பலவற்றுடன் தாழா தளரா தலைநடுங்கா தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் காழிலா..... மம்மர்கொள் மாந்தர் - நாலடி. 14 மயக்கம்: மை > மய > மயக்கு > மயக்கம். ஒன்றோடு ஒன்று செறிதல், ஒன்றை வேறு ஒன்றாக நினைத்தல், தெளிவில்லாமை, பற்றுமை மிகல். நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் - தொல். 1589 மாலைப் பொழுது, மயங்கும் பொழுது - ம.வ. எனக்கு மயக்கமாக உள்ளது; தலைசுற்றுகிறது - ம.வ. தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானம் - புறம். 19 பொருள்: தமிழப்படை கைகலந்த தலையாலங் கானம் (ப.உ.) மம்மர் என்பதும் இது. மயிர்: கரிய முடி (தலை மயிர்). மை + இர் = மையிர் > மயிர். மை = கருமை. இர் = இருப்பது; பின்னொட்டு. x.neh.: பை + இர் = பயிர். மயிர் பழைய வழக்கு. தலையி னிழிந்த மயிரனையர்(திருக். 964). மயிர் என்பது இழிவழக்கு எனக் கருதியவர் முடிஎனல் பிற்கால வழக்கு. முடி = தலை கவிப்பு. மயில்: மை + இல் = மையில் > மயில். மை = மழை முகில், நீலம். மை = கருமை, நீலம். மை + இல் = மயில் = நீலப் பீலிக் கண்களையுடைய குறிஞ்சிநிலப் பறவை. இது குமரி நாட்டிலேயே குறிஞ்சி வாணரால் முருகனூர்தியாகக் கொள்ளப்பட்டு விட்டது. மயில் - மயூர (வ). மரக்கல வகை: புணை = நீரில் மிதக்கும் கட்டை. தெப்பம் = பலமிதப்புக் கட்டைகளின் சேர்க்கை. கட்டுமரம் = இருகடையும் வளைந்த மரக்கட்டு. தோணி = தோண்டப்பட்ட மரம் போல்வது. ஓடம் = வேகமாகச் செல்லும் தட்டையான தோணி. திமில் = திரண்ட மீன் படகு (திண்டிமில் வன்பரதவர் புறம். 24) பஃறி = பன்றி போன்ற வடிவமுள்ள தோணி. பரிசல் = வட்டமான பிரம்புத் தோணி. அம்பி = விலங்கு முகம் அல்லது பறவை முகம் போன்ற முகப்பையுடைய மரத்தோணி. படகு = பாய் கட்டிய தோணி. நாவாய் = நீரைக் கொழித்துச் செல்லும் போர்க் கலம். கப்பல் = பலபாய் கட்டி வணிகச் சரக்கேற்றிச் செல்லும் பெருங் கலம் (சொல். 44). மரக்காலை: மரக்கடை, மரவாடி எனத் தமிழகத்தில் வழங்கும் சொல் ஈழத்தில் மரக்காலை என வழங்குவதை வவுனியா மரக்கடையின் பலகையில் காண முடிந்தது. விளக்கம் தெளிவாகவில்லை. மரக்கடை எப்படி மரக்காலைஆயது? கண், கால், கை, முகம் என்பவையெல்லாம் இடப்பொருள் தருவனவே. கால்அளவைப் பெயரால் மரக்கால் உள்ளது. ஊன்றுதல் பொருளில் ஏர்க்கால்உண்டு. கால் என்பது அடிமரம்; உருட்டு. அக்கடையில் அறுத்த பலகை, சட்டம் முதலியவை இல்லாமல் அடிமரம், தடி என்பவை மட்டுமே இருக்கக்கூடும். கடையுள் சென்று காணவில்லை. கீழே இறங்கவும் முடியா இடர்நிலை அது. கால்கள் உள்ள கடை, காலை! மரபு: மரத்தில் இருந்து வித்து; வித்தில் இருந்து மரம்; இப்படியே மீண்டும் மீண்டும் மரமும் வித்தும் தொடர்ந்து வருதல் மரத்தின் இயல்பு; இந்நிலையே மரபின் இயல்பும் விளக்கமுமாம். ஒரு மரத்தில் இருந்து தோன்றும் இலை, தழை, பூ, காய், கனி முதலியவை மாறுவது இல்லை. வழிவழியாக அத்தன்மை யோடேயே வருகின்றன. இல்லையேல் புளிம்பழம்என்றும் தீஞ்சுளைப் பலவின் பழம்என்றும், முதலை மீந்தோல் அன்ன கருங்கால் ஓமைஎன்றும் சங்கச் சான்றோர் குறித்தவை பொய்யாய் - புனைவாய் - ஒழிந்திருக்குமல்லவோ? ஆகலின், வழிவழி மாறா நிலைமையதே மரபுஎன்பதும், மரபு என்பது மரத்தின் வழியே பெற்ற பெயர் என்பதும் விளக்கமாம். மரப்பெயரில் இருந்தே மரபு என்பது வந்ததேனும், புல், பூண்டு, செடி, கொடி, ஊரி, விலங்கு, பறவை, நீரி இன்னவும் மரபு வழிப்பட்டனவே. இவற்றுள் ஒன்றானும் சுட்டியிருக்கலாம். இயங்குபொருள் நிலைப்பொருள் என்னும் இருவகைப் பொருளிலும் நிலைப்பொருளுக்கே பெயரீட்டில் முன்னுரிமை யுண்டாதல் மொழி மரபாகும். அதன் பின்னரே இயங்குபொருள் பெயரீடு எய்தும். மரபு என்பது போலவே, கொடி வழிஎன மரபு சுட்டப் பெறுவதையும் அறிக. கிழங்குவழிமரபு அமைதலும் வழக்கே. மங்கலத் தன்மை வாய்ந்ததெனக் கொள்ளப் பெறுவது வாழை. திருமணப் பந்தலா, திருவிழாக் கோலமா - வாழை வனப்புற வந்து முந்து நிற்கும் - வாழைப்பழம் தெய்வத் திருப் படையல் பொருள். இனி, வாழைக்கெனத் தனிப்பெரு வாழ்வியல் ஒன்றும் உண்டாம். தன் குடியின் வாழ்வுக்குத் தன்னையே ஈகம் (தியாகம்) புரிதல் அஃதாம். அதனால், வள்ளலார் உள்ளத்தில் வாழை வளஞ்செய்தது. வாழையடி வாழையென வந்ததிருக் கூட்டம் என்று வாழையால் மரபினை அவர் விளக்கம் செய்தார். மரபினை மற்றவை வித்தாலும் பிறவற்றாலும் விளக்கம் செய்தன என்றால், கிழங்கால் விளக்கம் செய்வது வாழை. அதற்கும் வித்து விளக்கம் உண்டேனும் கிழங்கின் விளக்கமே வெளிப்பட விளங்குவதும், நடைமுறைப் படுத்தப்படுவதும் ஆம்! தான் அழிந்தும் தன் மரபு அழியாமல் போற்றும் வாழையின் தகவை அறிவார், வள்ளலார் வாய்மொழி அருமையும் அறிவார். மரப் பெயரடியாக மரபு வந்ததை இலக்கண வழியாலும் காணலாம். உண்டவன் உரம் செய்வான் என்பது பழமொழி. இஃது உண்டவள் உரம் செய்வாள்; உண்டவர் உரம் செய்வார்; உண்டது உரம் செய்யும்; உண்டவை உரம் செய்யும் - என மற்றை நான்கு பால்களுக்கும் இயைந்து நின்றமை போல இயற்கை யனைத்தையும் தழுவியது மரபுஎனக் கொள்க. இதனை, ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப - தொல். 1168 என்பதால் காண்க. தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள் என்னும் மும்மரபுகளைத் தனித்தனியே வகுத்துக் கூறுகின்றது. எனினும் பொருளில் செய்யுள் மரபு, அணி மரபு, வாழ்வு மரபு, கூற்று மரபு, நூன்மரபு இன்னசில மரபுகளையும் விரித்தும் தொகுத்தும் உரைக்கின்றது. ஆகலின் மரபு காத்தலே நோக்காக வெளிப்பட்ட நூல் தொல்காப்பியம் எனல் தகும். இயம்என்பது இனிதாகச் சொல்வது என்னும் பொருட்டது. இசைக்கருவிகளை இயம்என்பதும் பலவகை இசைக்கருவிகளையும் மீட்டிக் கொண்டு பாடுதலைப் பல்லியம் என்பதும் நோக்கின் இயம்என்பதன் பொருள் விளக்கமாம். தொன்மையான மரபுகளைக் காப்பதை இனிமையாகக் கூறும் நூலே தொல்காப்பியம் எனல் விளங்கும். அத்தொல் காப்பியத்தை இயற்றியதனாலேயே நூலாசிரியர் தொல்காப்பியர் எனப் பெற்றார் என்பதும் இவண் நோக்கத்தக்கதாம். தொல்காப்பியர்என்பது நூலாசிரியர்க்கு நூலின் முற்படு பெயராக இருந்திருக்குமானால் நூல் தொல்காப்பியர் என்று வழங்கப்பட்டிருக்குமே அன்றித் தொல்காப்பியம் என வழங்கப்பட்டிராதாம். திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள் திருவள்ளுவர்என்றே முந்து வழங்கப் பெற்றது என்பதை ஒப்பிட்டுக் காண்க. வள்ளுவம் என வழங்கப் படுகின்றதே எனின், இற்றைக் காலப் புத்தாக்கச் சொல்லாம் அஃதென அமைக. தொல்காப்பியத்தை இயற்றியதால் அன்றே நூலாசிரியர் தொல்காப்பியர் என்று வழங்கப்பட்டார் என்பதை அவர் தம் ஒருசாலை மாணவராகிய பனம்பாரனார். தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிஎன்பதால் குறித்தாராம் எனவும் நுண்ணிதின் உணர்ந்து கொள்க. மரபு காக்க எழுந்த நூல் காப்பியம் எனப் பெயர் பெறுதலைத் தொல்காப்பியம் அன்றிப் பல்காப்பியம் என்னும் நூலாலும் அறிக. அதனை இயற்றியவர் பல்காப்பியனார் என்பர். அவரைப் பல்காயனார் என்பதும், நூல் பல்காயம் என்பதும் உண்டெனப் பாடவேறு காட்டுவாரும் உளர். பனம்பாரனார் ஒருசாலை மாணவராகத் தொல் காப்பியரொடு பயின்றதுடன், பனம்பாரம் என்னும் இலக்கணம் யாத்த புலவரும் ஆவர். அன்றியும் தொல்காப்பிய விழுமிய நூலைப் பழுதறக் கற்றவரும் ஆவர். அதனால், தொல்காப்பியத்தின் உயிர்நிலை இன்னதென உள்வாங்கிக் கொண்டு, உயர்பெரும் பாயிரம் அருளினார். அப் பாயிரத்தில் ஆசிரியர் தொல்காப்பியனார் மயங்கா மரபில்நூல் யாத்த திறத்தைத் தெளிவாக்கினார். அது, தொல்காப்பியப் பிழிவெனல் சாலும்! தொல்காப்பியம் மரபு கூறும் நூல் என்பதை நூன்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு என்னும் இயல்பெயர்களும் மரபியலும் வெளிப்படக் காட்டுதல் அறிந்து கொள்ளக் கூடுவதே. மரபியலைத் தொடங்கும் தொடக்க நூற்பாவிலேயே, மரபு என்பது இது என்பதை ஆசிரியர் சுருக்கமும், செறிவும், செம்மையும் ஒருங்கமையச் சுட்டுகிறார். அது, மாற்றருஞ் சிறப்பின் மரபுஎன்பது. மரபு என்பதன் இலக்கணம் யாது எனின், மாற்றுதற்கு அரிதாம் தனித்தன்மை என்பதேயாம் என்று கூறினாராம் ஆசிரியர். மாற்றருஞ் சிறப்பின் மரபினை மரபுநிலை திரியா மாட்சிஎன்று (98) வேறொரு வகையானும் ஆசிரியர் விளக்குகிறார். அம்மரபு, மாறுதலும் - திரிதலும் - ஒருகால் உலக வழக்கில் கொள்ளப் பெறுமாயினும், செய்யுள் வழக்கில் கொள்ளுதல் ஆகாது என்பாராய், மரபுநிலை திரிதல் செய்யுட்கில்லை மரபு வழிபட்ட சொல்லி னான என்றார். இன்னும் இம்மரபுநிலை போற்றாக்கால் என்னாம் என்பதனை, மரபு நிலைதிரியின் பிறிது பிறிதாகும் என்று தெளிவுறுத்தினார். பழமரபுகள் எத்தனை எத்தனையோ மறைந்திருக் கின்றனவே; புதிய மரபுகள் எத்தனை எத்தனையோ புகுந்திருக் கின்றனவே! காலவெள்ளத்தோடு கலந்து செல்லும் செலவை என்ன செய்வது? என்று வினவுவார் உளராயின் அவர்தம் தெளிவுக்கு, மரபு நிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும் என்ப என்று அகத்திணை இயற்கண்ணரே ஆசிரியர் உரைத்தருளினார். மரபு காத்தல் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல் ஒன்றனை அது நுவலுமாறு அறிந்து கொள்ளுதற்கும், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இடர்ப்பாடு இருத்தல் அம்மொழி வல்லாராலும் உணரப்பட்டு உரைக்கப்பட்டு வருதல் கண்கூடாக, ஆசிரியர் தொல்காப்பியனார் வாக்கை அவர் நோக்கில் பிறழாமல் பெரும்பாலும் அறிந்து கொள்கின்றோம் என்றால் மரபை வழிவழியாகப் போற்றிக் கொண்டு வரும் மாண்பாலேயே அன்றோ! இதனை உள்ளவாறு அறிவார் மரபை அழிக்கும் பழிவழியை எண்ணியும் பார்ப்பரோ? குயவனுக்கு ஆறுமாத வேலை; தடிகாரனுக்கு அரைநாழிகை வேலைஎன்பதையும் தடங்கரை காத்தல் அரிதோ பெயர்த்தல் அரிதோஎன்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் அல்லவோ? எழுத்தின் வடிவும் அதன் ஒலிமுறையும் தமிழ் வழங்கும் நிலத்தெல்லாம் ஒரு தன்மைத்தாக இயன்று வந்தால்தான் அதன் வரிவடிவும் ஒலிவடிவும் மாறாமல் பயன் கொள்ளும் படித்தாக என்றும் அமைந்திருக்கும். அவற்றைக் கைவந்த வாறெல்லாம் எழுதியும், வாய்வந்த வாறெல்லாம் சொல்லியும் ஒவ்வொருவரும் மரபு கடப்பராயின், ஒருவர் சொல்வதும் எழுதுவதும் மற்றொருவர்க்குப் புரியாமல் ஒழியும். புதுப்புது வட்டார மொழிகளாகவும் குழு மொழிகளாகவும் சுருங்கிச் சுருங்கிப் பிரிந்து பிரிந்து வழக்கொழிந்து போகும். தென்னை மரத்தை ஒருவர் பனைமரம் என்றும், தேங்காயை மாங்காய் என்றும் மரபு கெட வழங்குகிறார் என்றால், அவற்றைக் கேட்ட மற்றொருவர் பனைமரத்தில் மாங்காய் கிடைக்கும் என்றல்லவோ கூற நேரும். அக்கூற்று எத்தகு நகைப்பையும் திகைப்பையும் விளைவிக்கும்? ஆலமரம் எவ்வாறு இருக்கும் என்று வினாவினானாம் ஒருவன். அதற்கு விடை வழங்கினோன், ஆலமரம், புளியமரம் போல வேலியில் முள்ளுமுள்ளாகப் படர்ந்திருக்கும்என்றானாம். விடை கூறியவனுக்கு ஆலமரம் மட்டுமோ தெரியாது? வேலியும் தெரியாது; புளியும் தெரியாது; முள்ளும் தெரியாது; கொடியும் தெரியாது என்றல்லவோ ஆகும். இது போலவே மொழிமரபு மாறிப் போகுமானால் அனைவர் நிலையும் இப்படியே இருக்கும். மரபு பேணுதலின் இன்றியமையாமையைக் கூர்த்த அறிவால் தொல்லாசிரியர்கள் அறிந்து கொண்டதால்தான் என்ப, கூறுப, மொழிப, என்மனார் புலவர், என்மரும் உளரே, முடியவந்த அவ்வழக்கு, நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரேஎன்றெல்லாம் கூறினர். இவற்றுள் பெரும்பாலனவும் மரபியலினுள்ளே ஆளப் பெற்றிருத்தல் நோக்கத்தக்கன. ஓர் இடத்தில் இருந்து ஓர் இடத்திற்கு ஒருவர் நடக்கிறார். அவர் நடைப்பதிவு பலருக்கும் வழிகாட்டியாகி விடுகின்றது. அப்பதிவின் வழியே மற்றவர்களும் நடக்கின்றனர். பலரும் பல்காலும் நடந்து பதிவாகியது, பாதையாய் நிலை பெறுகின்றது. தடம், தடி, வழித்தடம், வழி, பெருவழி என்பனவெல்லாம் இவ்வாறு நிலைத்தனவே. மொழிப்பதிவும் இவ்வாறு அமைந்ததேயாம். முதற்கண் ஒருவன் தடம்பதிக்கவே தெளிவும் திறமும் வேண்டும். முதல்வன் தடம்பதித்துப் பாதையாக்கிவிட்டால் அப்பாதையில் மாறாமல் போவது எளிதாகிவிடும். அதுபோலவே, மொழி மரபுகள் வல்லாரால் வகுக்கப்பட்டனவே எனினும், கல்லா மாந்தரும் வழி வழி வழக்கால் எளிதில் போற்றிக் கொள்ள வாய்க்கின்றது. இந்நாட்டில் பிறந்து வளர்ந்த ஒருவர் கல்வி நிலையங்களுள் கால்வைக்காதவர் எனினும் கூட, ஆட்டுக் குஞ்சு கோழிக்குட்டி என்று வாய் மறந்தும் சொல்லமாட்டார் அல்லரோ? கஞ்சி குடித்தல்என்பாரே ஒழிய கஞ்சி சாப்பிட கஞ்சியுண்ண என்று சொல்ல மாட்டாரே! குழலூதலைக் குழலடிக்கஎன்று விளையாட்டுப் பிள்ளைகளும் கூடச் சொல்லமாட்டாவே! ஏன்? மரபு குருதியோடு குருதியாய் ஊறிப் போய்விட்டது என்பதே. மரத்தின் மரபு இயல்பானது. ஆனால், மொழி மரபு போற்றிக் கொள்ளும் முறைமையைப் பொறுத்தே நிலைப்பது. ஒரு மரத்தின் வித்தினை ஊன்றி நீர் விட்டால் அதன் இயல்பு மாறாமல் முளைத்து வளரும்! விதையொன்று போடச் சுரையொன்று முளைக்குமா? என்னும் பழமொழியே இதனைத் தெளிவிக்கும். ஆனால் மொழிமரபு மரமரபு போல் தானேயோ வந்து விடுகின்றது? அம்மா, அப்பா, அத்தை அம்மான் என்பவற்றை எத்தனை ஆயிரமுறை கேட்டு அதன் பின்னர்ச் சொல்வதற்கு அறிந்து கொள்கின்றது குழந்தை! தானேயே அறிந்து கொள்வது இல்லையே! இவ்வாறு அருமையாய் அமையும் மரபும், மொழிவார் அறிவுநிலை, பயிற்சி நிலை ஆகியவை போலன்றோ அமைகின்றது! கற்றவர் மொழி நிலைக்கும் கல்லாதவர் மொழி நிலைக்கும் வேறுபாடு உண்டே! கற்றவர் மொழி நிலையிலும், எத்துணை ஏற்றத் தாழ்வுகள்! இப்பல பகுதிப் பட்டோர் மரபுகளில் எதனை எடுத்துக்காட்டாக - முன்னீடாக - வழிகாட்டியாக - முறைமையானதாகக் - கொள்ள வேண்டும்? இனி, வட்டாரந்தோறும் குடிவழிதோறும் மொழிநிலை வேறுபடக் காண்கிறோமே! இவற்றுள் எவ்வட்டாரத்தினர் மொழியையும், எக்குடியினர் மொழியையும் அளவுகோலாகக் கொண்டு மரபு என்பது? இவ் ஐயவினாக்கள் எழுமென்றே ஆசிரியர் தொல்காப்பியனார், வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான - தொல்.மர. 3 என்றார். இதனையே ஒருவகையால், வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ?என்றார் தாயுமானவர்! இஃது ஒழுக்கம்என்றும், இஃது ஒழுக்க மற்றது என்றும், இது முறைஎன்றும், இது முறையற்றதுஎன்றும் நாம் எப்படி உறுதிப்படுத்துகிறோம். உயர்ந்தோர் ஒழுகலாற்றைக் கொண்டே உறுதிப்படுத்து கின்றோம் அல்லவோ! இழிமாந்தர் - கயவர் - இன்னோர் ஒழுகலாற்றையும் செயல்முறையையும் ஒழுக்கமெனக் கொள்வது இல்லையே. இது போலவே, மொழி மரபும் உயர்ந்தோர் மொழிவையே அளவுகோலாகக் கொண்டு முடிக்கப் பெறும் என்க. மரபு பழஞ்சொல் ஆதலால் காலந்தோறும் அதன் பொருள் விரிவுற்று வந்தமை அறிய முடிகின்றது. விஞ்சையன் ஒருவன் தந்ததாம் ஓலையைச் சீவகன் மரபினான் நோக்குகிறான்என்றார் திருத்தக்கதேவர். உயர்ந் தவர் ஒருவர் தரும் பொருளை வாங்கும் முறையில் வாங்குதல் இன்றும் வழக்காறுதானே? ஆனால் இவன் ஓலையை வாங்குதலைக் குறிக்காமல் படித்தலைக் குறிப்பதால் இத்தொடரில் வரும் மரபு என்னும் சொல்லுக்கு வழிபாட்டோடேஎனப் பொருள் கண்டார் நச்சினார்க்கினியர் (842). மரபு என்பதைக் குலவழி அல்லது குடிவழி என்னும் பொருளில் கண்டார் கம்பர். சூரியன் மரபுஎன்பது அவர் வாக்கு (கிட். வாலி. 87). குணம், பழைமை, முறைமை ஆகிய பொருள்களின் மரபினை நிகண்டு நூல்கள் வழங்குகின்றன. மரபின் இலக்கணம் இன்னது என்பதை, எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபேஎனத் தெளிவாக்குகிறார் நன்னூலார் (388). இந்நூற்பாவுக்குப் பொருள் விரித்த இராமாநுசக் கவிராயர் மரபு - பழைய முறைமை வ-று: யானைக் கன்று, யானைக்குட்டி, குதிரைக்குட்டி, பசுவின் கன்று, மான் கன்று, யானை மேய்ப்பான் பாகன், ஆடு மேய்ப்பான் இடையன், யானையிலத்தி, எருமைச்சாணி என்றாற் போல்வன எனக் காண்க. இனி, இவ்வாறன்றி பசுவின் குட்டி, குதிரைக் கன்று, யானைச் சாணி, எருமையிலத்தி எனக் கூறுதல் வழுவாம். ஆதலால், வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் வழங்கிவரும் மரபு தேர்ந்து கொள்கஎன்றார். மரபு வழி இளமைப் பெயர் பார்ப்பு : பறப்பவை, தவழ்பவை, குரங்கு. பிள்ளை : பறப்பன, தவழ்பவை, பன்றி, புலி, முயல், குரங்கு (நெல் புல் நீங்கிய) ஓரறிவுயிர். குட்டி : மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், குரங்கு. பறழ் : மூங்கா, வெருகு, எலி, அணில், நாய், பன்றி, புலி, முயல், நரி, குரங்கு. குருளை : நாய், பன்றி, புலி, முயல், நரி. மறி : யாடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய். மகவு : குரங்கு, மக்கள். கன்று : யானை, குதிரை, கழுதை, கடமை, மான் அல்லது ஆன், எருமை, மரை, கவரி, கராம் அல்லது கராகம், ஒட்டகம், (நெல் புல் நீங்கிய) ஓரறிவுயிர். குழவி : குஞ்சரம், ஆ, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம், மக்கள், (நெல் புல் நீங்கிய) ஓரறிவுயிர். போத்து : (நெல் புல் நீங்கிய) ஓரறிவுயிர். முதுமை மரபு இளமையைப் பற்றிக் கூறிய ஆசிரியர் முதுமையைப் பற்றிக் கூறினார் அல்லர். அதனைக் கருதிய பேராசிரியர் அது வரையறை யின்மையிற் கூறான் என்பதுஎன்றார் (மர. 1). இதனால் இளமை வரையறை உடையது என்றும் முதுமை வரையறை அற்றது என்றும் பேராசிரியர் கருதினார் என்பதும், அக் கருத்தானே தான் இளமைப் பெயர் பற்றிக் கூறிய ஆசிரியன் முதுமையைப் பற்றிக் கூறிற்றிலன் என்று காரணம் காட்டினார் என்பதும் புலப்படும். ஆகலின், வரையறுக்கப் பெற்றது எதுவோ அதுவே மரபியலில் உரைக்கப் பெறுகின்றது என்பது பேராசிரியர் கருத்தாதல் விளங்கும். சொல்லிய மரபின் இளமை தானே சொல்லுங் காலை அவையல திலவே என்றும், பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே என்றும் கூறும் ஆசிரியர் உறுதிமொழிகள் பேராசிரியர்க்கு இக் கருத்தை எழுப்பி யிருக்கலாம். இனி, முதுமை வரையறை இல்லது என்பதில் முதுமைத் தன்மை வரையறை இல்லதோ, முதுமைப் பெயர் வரையறை இல்லதோ என்பதும் ஆராயத் தக்கதே. இளமைக்குப் பெயர்கள் பலவுளவாயின போலவே முதுமைக்கும் பெயர்கள் பலவுளவாயின என்பது அறியத்தக்கதே. உலவை, ஓரி, கனி, கிழம், பண்டு, பழம், பழமை, பழுப்பு, முடுவல், முதிர்பு, முதுவாய், முதுவை, முதையல், முரஞ்சல், முற்றல், மூது, மூதை, மூப்பு, மூரி இன்ன பல சொற்கள் முதுமையைக் குறிப்பன. பண்டு தொட்டே ஆட்சியில் இருந்து வருவன. முரஞ்சல் முதிர்வாம்என ஆசிரியர் உரியியலில் உரைத்தார். சங்கத்தார் நூல்களில் இடம்பெற்றுள்ள இம் முதுமைச் சொற்களுள் சிலவேனும் அவர்க்கு முந்தைத் தொல்காப்பியர் காலத்தும் அவர்க்கு முந்தைக் காலத்தும் வழக்கில் அரும்பாமல் இருந்திரா. எனினும் ஆசிரியர் சுட்டாமைக்குக் கரணியம் - பேராசிரியர் குறித்தாங்கு - வரையறை யின்மையாகவே இருந்திருக்க வேண்டும். அவ்வரையறை யின்மை முதுமைத் தன்மை வரையறையின்மையே. இளமை என்பது பிறப்புத் தொடங்கி விளங்கும் வளர்ச்சி நிலை. அந்நிலை மகளிர்க்குப் பூப்பாய் அமையும், அதுவே முதுக்குறைவு எனச் சான்றோரால் உரைக்கப்பட்டது. ஆடவர்க்கு மீசை அரும்புதல் இளமையின் நிறை வாயிற்று. இளமை கடந்த இரு பாலரும் குமரி, குமரன், கன்னி, காளை எனப்பட்டனர். ஆகலின் இப்பருவத்திற்கு முந்தைப் பருவம் இளமையாம். இதுபோல் முதுமைக்கு வரையறையுண்டோ? இருபதில் எழுச்சி; முப்பதில் முறுக்கு; நாற்பதில் நழுவல்; ஐம்பதில் அசதி; அறுபதில் ஆட்டம்; எழுபதில் ஏக்கம்; எண்பதில் தூக்கம்என்பது ஒரு தொடர்ப் பழமொழி. நாற்பதில் நழுவலுக்கே நழுவல் தந்தவர் உளரே! ஐம்பதில் அசதிக்கே அசதி தந்தவர் உளரே! அறுபதில் ஆட்டத்தையே ஆட்டி வைப்பவர் உளரே! எழுபதில் ஏக்கத்திற்கே ஏக்கம் காட்டுபவர் உளரே! எண்பதில் தூக்கத்தையே தூக்கிப் போட்டவர் உளரே! மனிதர்க்கு வயது நூறல்லதில்லை என்னும் கபிலர் அகவல் பொய்யாய் - கதையாய் - கனவாய்-ப் போகும் வண்ணம் 120, 150, 160 என வாழ்வாரும் வையகத்தில் உளரே; இளமை வரை யறைப்படுவது போல முதுமை வரையறைப் படுமோ? படக் கூடாமை கண்டே ஆசிரியர் முதுமை கூறினார் அல்லர் என்று கண்டு கொண்டார் பேராசிரியர் என்க. மரபு சாராதவை மக்கள் தாமே ஆறறி வுயிரே என்று உறுதி செய்தவர் தொல்காப்பியர் (33). மக்களைப் பிரித்தார் அல்லர்; ஆண்மக்கள் பெண்மக்கள் என்பவை பால் பிரிவேயன்றி மக்கட் பிரிவு அன்றாம். மக்கள் அறிவு ஆறறிவு. அவ் ஆறு அறிவு மெய்யறிவு நாவறிவு மூக்கறிவு கண்ணறிவு செவியறிவு மனனறிவு என்பவை. இவற்றுள் இறுதியதாம் மனனறிவு குன்றிய பிறவியரும் உளராயின் அவர் ஐயறிவுப் பிறவியதாம் மாவொடும் இணைக்கப்பட்டு, மாக்கள் எனப்பட்டனர் என்பதை, மாவும் மாக்களும் ஐயறி வினவே என்று நூற்றார். பொறியின்மைக் குறை இவ்வகையில் சாராது என்பதை, பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி என்னும் குறளால் (618) அறியலாம். பொறிக்குறை உடையார் மனவளம் குன்றினாரும் அல்லர்; அறிவறியாரும் அல்லர் என்க. ஆறாம் அறிவுப் பிறப்பியாகப் பிறந்தும் அதற்குத் தக வாழாமல், அழிம்பும் கேடும் செய்வாரை மாக்கள்என்றனராதல் வேண்டும். மாவும் புள்ளும் ஐயறி வினவே என்னும் பாடமே முதலுரையாசிரியர் கொண்ட பாடம். அவர் உரையாசிரியர் எனப்படும் இளம்பூரணர் ஆவர். அது சீரிய பாடம் என்பார் தொல்காப்பியப் பதிப்பாசிரியர் சி. கணேசர். ஒழுக்கமுடைமை குடிமைஎன்னும் திருவள்ளுவர் இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்என்பார். இழிந்த பிறப்பாவது, ஆறாம் அறிவில் இழிந்த (தாழ்ந்த) ஐந்தாம், நான்காம் அறிவுப் பிறப்பிகளாம். ஏனெனில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்பது அவர் வாய்மொழியாகலின். இவற்றை இவண் விரிப்பது ஏன் எனின், மரபொடு சாராத சில நூற்பாக்கள் மரபியலில் சார்த்தப்பட்டுள. அச்சார்த்துதலும், உரையாளர் காலத்திற்கு முன்னர் இருந்தே மூலப் படிகளிலே செறிக்கப்பட்டு, உரையாசிரியர்கள் கையில் எட்டியிருக்க வேண்டும் என்பதாம். பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே - தொல். 70 என நிறைவித்த பின்னர், நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க் குரிய - தொல். 71 படையும் கொடியும் குடையும் முரசும் நடைநவில் புரவியும் களிறும் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய - தொல். 72 அந்த ணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமா றுண்டே - தொல். 73 பரிசில்பா டாண்டிணைத் துறைக்கிழ மைப்பெயர் நெடுந்தகை செம்மல் என்றிவை பிறவும் பொருந்தச் சொல்லுதல் அவர்க்குரித் தன்றே - தொல். 74 அந்த ணாளர்க் கரசுவரை வின்றே - தொல். 75 ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவியும் யாரும் சார்த்தி அவையவை பெறுமே - தொல். 76 தலைமைக் குணச் சொல்லும் தத்தமக் குரிய நிலைமைக் கேற்ப நிகழ்த்துப என்ப - தொல். 77 இடையிரு வகையோர் அல்லது நாடின் படைவகை பெறாஅர் என்மனார் புலவர் - தொல். 78 வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை - தொல். 79 மெய்தெரி வகையின் எண்வகை உணவின் செய்தியும் வரையார் அப்பா லான - தொல். 80 கண்ணியும் தாரும் எண்ணினர் ஆண்டே - தொல். 81 வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி - தொல். 82 வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் வாய்ந்தனர் என்ப அவர்பெறும் பொருளே - தொல். 83 வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் ஆரமும் தேரும் வாளும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய - தொல். 84 அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை - தொல். 85 என இவ்வாறு பதினைந்து நூற்பாக்கள் இடையே நிற்கத், தோடே மடலே ஓலை என்றா ஏடே இதழே பாளை என்றா ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும் புல்லொடும் வருமெனச் சொல்லினார் புலவர் என்னும் நூற்பா முதலாக இலையே முறியே காயே பழமே என நூற்பாக்கள் இரண்டு மேலே நின்று நிலந்தீ நீர்வளி என முடிபு எய்துகின்றது. புல்லொடு வரும், மரனொடு வரூஉம், அவையும் அன்னஎன்பவை எங்கே இடம் பெற்றிருக்க வேண்டியவை? உயிர்களின் பாகுபாடு தொடங்கி புல் மரன் முதலாகக் கூறி முடித்த (33) அவ்விடத்தில் அல்லவோ தொடர்ந்து 34, 35, 36 ஆம் நூற்பாக்களாக வந்திருக்க வேண்டும்! அங்கே வெட்டி இங்கே தொடர்பின்றி ஒட்டுவானேன் எனின், ஊடு செறித்துத் தமிழ் நெறியை உருக்குலைக்க மேற்கொண்ட கரவு முயற்சியர் கை வரிசையே அதுவாம். அந்தணர், அரசர், வைசியர் (வாணிகர் அல்லர்) வேளாண் மாந்தர் எனப் பிரித்த பிரிவு மரபுஆகுமா? ஆகா, மரபை ஆக்கு வானேன்? ஆக்கும் அழிவு முனைப்பே ஆக்கிற்று என்பதை அன்றி என்ன சொல்வது? வெள்ளி பாடலும் கந்தி பாடலும் (வெள்ளியம்பல வாணத் தம்பிரான், கந்தியார் பாடல்கள்) துள்ளி வந்த பின் வரவுக்கு, முதன்முதல் வரவு இப்பொருந்தா மரபு வரவாம்! பிறக்கும் பிள்ளை இளமையுறுதல் மரபு; ஆணாகவோ பெண்ணாகவோ இருத்தலும் மரபு; ஒருகால் ஆணிலி யாகவோ பெண்ணிலியாகவோ குறைப் பிறவியாகவோ பிறத்தலும் மரபு. முதுமை யுறுதலும் இறத்தலும் மரபு. இவற்றுள் இளமை, ஆண்மை, பெண்மை என்பவற்றின் பெயர்களை ஆசிரியர் கூறினார். ஓரறிவுயிரியாம் புல்லும் மரனும் (புல் பூண்டு செடி கொடி மரம்) என்பவற்றுக்கு இளமை, பெண்மை ஆண்மை என்பவை பிறப்பொடு வந்தவை. ஆண்மரம், பெண்மரம், ஆண்பூ, பெண்பூ என்பவையாம் ஓரறிவுயிரி முதலே ஆறறிவுயிரி வரையும் இருத்தல் எவரும் வெளிப்பட அறிந்தது. அரும்பு, முகை, மலர், அலர், வீ - என எவர் அறியார்? துளிர், தளிர், இலை, பழுப்பு, சருகு தெரியாதவையா? குட்டி, புருவை, கடா; குஞ்சு, பெட்டை, சேவல் - இன்னவை காணாதவையா? இவை (இளமை, ஆண்மை, பெண்மை) இயற்கை யமைதியா? செயற்கைச் சேர்மானமா? எனக்குக் கை உள்ளது! அது தற்கிழமை. என் கையில் எழுதுகோல் உள்ளது! அது பிறிதின் கிழமை. என் வேலை முடித்தாலும் கையைக் கழற்றி வைக்க முடியாது! என் வேலை முடிந்ததும் எழுதுகோலை உரிய இடத்தில் வைத்து விடுவேன். தன்னை விட்டு அகலற்கில்லா உரிமை தற்கிழமை; தன்னை விட்டு அகற்றக்கூடும் உரிமை பிறிதின் கிழமை, கிழமை யாவது உரிமை! இளமை, ஆண்மை, பெண்மை மரபு வழியாகப் பிறப்பொடு தாய் வயிற்றில் இருந்து வெளிப்படும் போதே எவரும் அறிய கண்காண – அறியப் படுவன. ஆனால், அந்தணர் என அரசர் என அறியப்படுமா பிறக்கும் போது! அந்தணர்க் குரியதாகக் கூறப்படும் நூல், கரகம், முக்கோல், மணை என்பவற்றொடு எங்கேனும் பிறந்த ஓரந்தணன் உள்ளான் என உரைக்க முடியுமா? அப்பன் சாதியெனக் கொண்டதைச் சார்த்துவானே யன்றிப், பிள்ளை பிறக்கும் போது இன்ன சாதியன் யான் எனப் பிறப்பது இல்லை. ஆதலால், அந்தணன் என்பதும் பிறவும் மரபியலொடு சாராதவை எனத் தள்ளத் தக்கனவாம். மரம்: மரபு என்பதன் மூலமாக வாய்த்த இயற்கை ஓரறிவு நிலைத்தினை மரமாம். ஓரறிவுயிரி ஆகலின் உணர்வு நிலை குன்றியமை உணரப்படும். பட்டமரம் தளிர்ப்பதில்லை. அது பட்ட கட்டை ஆகிக் கம்பாகிப் பலகை ஆகிக் கதவாகி உத்திரம் ஆகிப் பேர் மாற்றமுற்றது. மரம் என்பது ஓரறிவுயிரியாய் உணர்வு குறைந்த இயற்கை என்பதேயாம். ஓரிடத்துக் காலை மடக்கி அமர்ந்து எழுந்தால் எழுதற்குச் சிக்கலும் காலில் மதமதப்பும் உண்டாகும். அதனை மரத்துப் போனது என்பது மக்கள் பொது வழக்கு. சொல்லைக் கேட்டு நடவாதவனை, எத்தனை இடித் துரைத்தாலும் கேட்காதவனை மரத்துப் போனவன்என்பதும் ம.வ. உணர்வு குன்றிய மரத்தின் இயல்பு காட்டும் சொல்மரபு, மரத்துப் போதல் என்பவை என்க. மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே - தொல். 217 மரம் மட்டை: மரம் = ஓரறிவுயிராம் மரம். மட்டை = மரத்தின் உறுப்பாகிய மட்டை. மட்டை என்பதும் மடல் என்பதும் ஒன்றே. தென்னை, பனை, வாழை, தாழை என்பவற்றிற்கு மட்டையுண்டு. இவை மர இனத்தைச் சார்ந்தவை அல்ல. புல்லினத்தைச் சார்ந்தவை. எனினும் பிற்கால மக்கள் வழக்கில் இவை தென்னை மரம், பனை மரம் என்பன போலக் கொள்ளப்பட்டமையால் நேர்ந்த இணை மொழியாக மரமட்டைவழங்குகின்றது. மரபு நிலை மாறிய வழக்கைத் தழுவியது இது. மரவை: உப்பு இளகும் தன்மையது. அதனை மண் கலயத்திலோ பிற ஏனங்களிலோ போட்டு வைப்பது இல்லை. மரத்தால் மூடியுடன் வட்டப் பெட்டி செய்து உப்புப் பெட்டியாகப் பயன்படுத்துவர். அதற்கு உப்பு மரவை என்பது பெயர். மரத்தால் செய்யப்பட்டது மரவை ஆகும். இது தென்தமிழக வழக்கு. மரிச்சி: மதிப்புக்கு உரியவர்களுக்குத் தரும் சிறப்பை மரியாதை என்பர். அம் மரியாதைப் பொருளில் மரிச்சி என்பதை நெல்லை மாவட்டத்து மூவிருந்தாளி வட்டாரத்தார் வழங்குகின்றனர். மதிப்பு என்பது மரிச்சி ஆகவும் கூடும். மருட்பாப் பனுவல் (மருட்பாப் பிரபந்தம்): புறநிலை வாழ்த்து, செவியறிவுறூஉ, கைக்கிளை, வாயுறை வாழ்த்து என்னும் நான்கு பொருளின் மேலும் வரும் மருட்பாவால் அமைந்த நூல் மருட்பாப் பிரபந்தம் எனப் பெறும். இப்பொருள்கள் மருட்பாவன்றிப் பிற பாக்களாலும் பாடப் பெறுவதும் உண்டு. புறநிலை வாயுறை வாழ்த்துப் புவியில் ஒருவன்செவி யறிவே உறுத்தல் அகப்புறக் கைக்கிளை ஆனவிந்த நெறியிற் பொருள்களை அன்றி மருட்பா நிகழ்தலினால் அறியவிந் நாற்செய்யு ளல்லாத பாவினால் ஆமென்பரே - நவநீத. 55 இப்பொருள்கள் அகவல், கலிப்பா வகைகளிலும் வருதல், தொகை நூல்களாலும் பிறவற்றாலும் அறியக் கிடக்கின்றன. மருதம்: வயலும் வயல் சார்ந்த இடமும் ஆங்குச் சிறந்து விளங்கிய மருத மரத்தின் பெயரால் அமைந்தது. பின்னர் மருத நிலத்து ஒழுக்கமும் மருதம் என்றே வழங்கப்பட்டது. ஓங்கு தாங்காக விளங்கிய மருதமரம் மல்கிய வையைத் துறை மருத முன்றுறை எனப்பட்டது. துறையாடல், ஊடல் உரிப் பொருள் அடிமணையாக அமைந்துவிடும். காதல் ஒழுக்கம் சிறக்க ஊடல் கட்டாயம் வேண்டும். தவறில ராயினும் தவற்றைக் கற்பித்துக் கொண்டு ஊடல் வேண்டும்என்னும் திருக்குறள் (1325). காமம் புணர்தலின் ஊடல் இனிது என்பதும் அது (1326). மனைவியை வாளா கூறாமல் மருவினிய காதல் மனையாள் என்பது பொருளொடு பொருந்து தொடர். மருவுதல் தடையே மருவுதல் வேட்கையைப் பெருக்கும். அவ்வேட்கைப் பெருக்க ஊடல் ஒழுக்கம் மருதப் பெயர் பெற்றது தகவேயாம். மருதம் பாடலாலேயே மாண்புற்றவர் மருதன் இளநாகனார். ஊடல் மருதம் - பழம்பாடல் மருதம்: மருவுவது மருதமாகும். மருவுதல் என்பது கலத்தல், கிட்டுதல், தழுவுதல் எனும் பொருட்டது. இப்பொருளை நடைமுறைச் சொற்களாலும் அறியலாம். மருமகன் வீட்டில் புதிதாக வந்து கலந்த மகன். பத்துப்பாட்டிலே இப்பொருள் பட்டு நிற்கும் சொற்களைக் காண்போம். மருவரல் = சேர்தல். மருவல் = கிட்டுதல். மருவழி = மருவின இடம். மருவூட்டுதல் = மருவுதலை உணர்த்துதல். மருவலர் = தம்மைத் தழுவாதவர், அஃதாவது பகைவர்; எனவே இச்சொற்களின் மூலவேர்ச் சொல் மரு என்பதே. மரு + து + அம் = மருதம். மருதம் சான்ற மருதத் தண்பணைஎன்ற மதுரைக் காஞ்சி வரியிலே மருதம் என்பது ஊடியும் கூடியும் போகம் நுகர்தல் என்று நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவதும் இங்குக் காணற்குரியது. ஊடல் என்பது பிரிவும் அன்று; புணர்தலும் அன்று; பிரிவுக்கும் புணர்வுக்கும் இடைப்பட்ட நிலை. தலைவியின் அன்பைப் பெற அவளைக் கிட்டுகின்ற (மருவுகின்ற) நிலை. அவளது பிணக்கைத் தவிர்க்க அவளண்டை மருவி (சார்ந்து) நிற்கும் நிலையே மருதம் (அகத்திணைத் தெளிவு). மருத்துவமுறை உணவு: பச்சரிசி சூடுண்டாக்கும் ஆதலால் வெப்ப நாட்டிற்கு ஏற்காதென்று புழுங்கல் அரிசி ஆக்கப்படுகின்றது. அதைச் சம தண்ணீர் வைத்துச் சமைத்தல் வேண்டும். சுவை மிகுத்தற்கு (அரிசியை)த் தீட்டும் போது நீக்கும் தவிட்டைத் தனியாகக் கொழுக்கட்டை பிடித்துத் தின்பது வழக்கம். வாழைக்காய் வளி மிகுப்பதென்று பிஞ்சு நிலையிற் சமைக்கப்படும். சீனியவரை என்னும் கொத்தவரை பித்தமிகுப்பதென்று முதலில் அவித்து இறுக்கப்படும். காறல் உண்டாக்கும் காய்கட்குப் புளி சேர்க்கப்படும். காயச் சரக்காகக் கூட்டுவனவற்றுள் மஞ்சள் நெஞ்சுச் சளியை முறிக்கும், கொத்து மல்லி பித்தத்தை யடிக்கும்; சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும்; மிளகு தொண்டைக் கட்டைத் தொலைக்கும்; பூண்டு வளியகற்றி வயிற்றளைச்சலை நிறுத்திப் பசிமிகுக்கும். வெங்காயம் குளிர்ச்சியை உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்தும். பெருங்காயம் வளியை வெளியேற்றும். இஞ்சி பித்தத்தை ஒடுக்கிக் காய்ச்சலைக் கண்டிக்கும். தேங்காய் நீர்க்கோவை என்னும் தடுமத்தை (மூக்குச் சளியை) நீக்கும்; கறிவேப்பிலை மணமூட்டி உணவு விருப்பை உண்டாக்கும். இவையெல்லாம் சேர்த்த துவரம் பருப்புக் குழம்பும் சீரகம் பூண்டு கலந்த மிளகு நீரும், சூட்டைத் தணித்துச் செரிமான ஆற்றலை மிகுக்கும் மோரும் கூடிய முப்படையற் சோற்றைக் கொழுமைப் படுத்திக் குடற்புண் ஆற்றும் நெய்யோடும் உடலுக்கு உரஞ் செய்து கழிமாசுக் கட்டை (மலபந்தத்தை) நீக்கும். கீரையொடும், குளிர்ச்சி தந்து பித்தம் போக்கும் எலுமிச்சை ஊறுகாயொடும் அறுசுவைப்பட உண்ட தமிழன் அற்றது போற்றி உணின் நோய் உண்டாகாது. (தி.ம.942). மருந்து: மருந்து என்பது பிணிநீக்கியைக் குறித்தல் பொதுவழக்கு. ஆனால் மருந்தைக் குடித்துச் செத்துவிட்டான்(ள்) என்பதில், மருந்து நஞ்சுப் பொருள் தருகிறது. இது தென்தமிழக வழக்கு. சாவா மருந்துஎன்பது அமுது, நஞ்சு என்னும் இருபொருளும் தருதல் திருக்குறள் உரை வழியது. மருந்து குடித்தல்: மருந்து குடித்தல் = நஞ்சுண்ணல். மருந்து என்பது நோய் நீக்கப்பொருள். அதுவே உயிர் காக்கும் பொருள். ஆனால் உயிர் போக்கும் நஞ்சும் மருந்து எனப்படுவது வழக்கு. அவள் மருந்து குடித்து விட்டாள்எனின் நஞ்சுண்டுவிட்டாள் என்பது பொருளாம். இப்படியே நீ துயரப்படுத்தினால் நான் ஒரு நாளைக்கு மருந்து குடித்துச் சாகத்தான் போகிறேன்என்பதும் மனச்சுமை தாங்காமல் வெளிப்படுத்தும் செய்தியாம். அவர்கள் துன்ப நீக்கத்திற்கு அடிப்படையாக இருப்பதால் அதனையும் மருந்து என்பர் போலும். சாவா மருந்துஎன்னும் குறளுக்கு நஞ்சுப் பொருள்தருவதும் கருதத்தக்கது. மருந்து மாயம்: மருந்து = மருத்துவம் பார்த்தல். மாயம் = மந்திரம் குறி முதலியன பார்த்தல். எவருக்காவது நோய் வந்துவிட்டால் நோய்க்கும் பார்; பேய்க்கும் பார்என்பது வழக்கம். நோயாகவும் இருக்கும்; பேயேவலாகவும் இருக்கும் என்பது கருத்து. ஆதலால் மருந்தை மட்டும் பார்க்காமல் மாயமும் பார்க்க விரும்புவர். மாயம் பேயோட்டுவது, குறி பார்ப்பது இன்னவாறாகச் செய்யப்படும். கண்மூடி வழக்கம் மண்மூடிப் போக வேண்டும்என்ற குரலுக்கு மருந்தும் மாயமும்போன்றவை ஓர் அடிப்படைத் தூண்டல் ஆகலாம். மருள்: மருள் = மயக்கம்; அதனெதிர்ச் சொல் தெருள். தெருள் = தெளிவு. மருள் என்பது பாம்போ என மயங்குமாறு தோற்றம் தரும். கற்றாழை வகையது. அவ்விதழை எண்ணெய் தோய்த்துத் தீயில் வாட்டிக் காதின் சீழ்க்கு மருந்தாகப் பயன்படுத்துவர். பார்த்த பார்வையில் பாம்பென மயங்க வைப்பதால் அது மருள் எனப்பட்டது. மரல் என்பது பழம் பெயர். மர நாகம் என்பது மக்கள் வழக்கு. வழலைப் பாம்பு போலாக மரல் வாடியிருப்பதை, வேனி லோதிப் பாடுநடை வழலை வரிமர லுகும்பின் வாடி - நற். 92 என்பதால் அறியலாம். (சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம் 63). மாலைப் பொழுது ஒளி சுருங்கி இருள்பரவும் வேளை ஆதலால் மருள் மாலைஎனப்படும். தன்நிலை மறந்து ஏதோ ஏவல் வழிப்பட்டவனாய் எண்ணும்படி ஆடுவார் மருளாடி, மருளாடுவார் எனப்படுவர். அஞ்சி மயங்கச் செய்வது மருட்டுதல்; அத்தன்மை மருட்சியாம். மரையான்: மரத்தில் கடைசல் வேலை செய்தல் தச்சுக்கலை. திருகி வளையும் வளைவால் கலைத்திறம் ஆவது மரை போடுதல். இயற்கை வழங்கிய மரையை - திருகு கொம்பை - உடைமையால் மரையான் எனப்பட்டது. நரையுடையது நரையான் ஆனது போல. மரையான் கூட்டமாக வாழும் (அகம். 224). இதன் விரைவு ஓட்டம் கருதிக் கானக்குதிரை என்னும் பிங்கல நிகண்டு (2490). மலடு: மலர்தல் இல்லது. உரியவகை மலர்ச்சியும் கருப்பை விரிவும் கருத்தாங்கி உருப்பெறுதலும் இல்லாமை மலடு எனப்படும். மலடி என்பது மணிமேகலையில் மட்டும் ஓரிடத்து இடம் பெற்ற சொல் (29:161). மற்றைப் பழநூலடைவில் இடம்பெறாச் சொல். மல்லல் வளம்; மகவளம் இல்லாததால் மலடு எனப்பட்டது எனலுமாம். ஈனா வேண்மாள் - புறம். 372 ஈன்றாள் x ஈனாள் என்பவை பழவழக்கு. ஈனாக்கிடேரி ஈனா வாழைஎன்பவை ம.வ. மலரணை: ஒருவருக்கு உரிமைப்பட்ட சொத்தை இன்னொருவருக்கு உரிமைப் படுத்துவதாகச் சொல்லி எழுதி வைப்பது மலரணை எனப்படும். மலர்தல் = சொல்லுதல்; திருவாய் மலர்தல் என்பது பெரியவர்கள் சொல்லுதலைக் குறிக்கும். அணை என்பது சொல்லியதற்குச் சான்று. இது செட்டி நாட்டின் வழக்கு. மலர்: மல் > மலர். மலர்தலாலும் மலர்ச்சியாலும் பெற்ற பெயர் மலர் என்பதாம். என் கலம் மலர்க்குநர் யார்?என்பதில் மலர்தல் என்பது கவிழ்த்து வைத்த கலத்தை நிமிர்த்தி வைத்தல் என்னும் பொருள் தரும். மலரின் இலக்கணம் பூ என்பதில் சொல்லப் பட்டது (நன். 30). மலி: மல் > மலி = மிகுதி. நெய்ம்மலி அடிசில் - குறிஞ்சிப். 204 பூமலி புறவு - மலைபடு. 120 மலிபுகழ் = மிகுபுகழ். மாங்காய் விலை மலிவாகிவிட்டது. ஏனெனில் விளைவு மிகுதலால் விலை மலிவு ஆகியது (ம.வ.). நெல்மலிந்து விளையும் வயல் வளமுடைய ஊர் நெல்மலி (நென்மலி). மலை: மல் > மலை. மல் = வலிமை, வளமை, செழுமை ஆயமை உடைமையால் மலை எனப்பட்டது. மலை என்னும் சொல்லுக்குப் பொருள் வலிமையினை உடையது. மல் என்றால் வலிமை. மலைகள் எல்லாம் பெரும்பாலும் வலிவான கருங்கல்லால் ஆக்கப்பட்டிருக்கின்றன (ஆகியிருக்கின்றன). மிகவும் உயரமாக இருக்கும் மலையை, ஓங்கல் பிறங்கல் பொருப்பு வெற்பு என்றும்; ஓரிடத்தில் குறுக்கே வளர்ந்து நீண்டு கிடக்கும் மலையை, விலங்கல்என்றும்; ஒன்றன்மேல் ஒன்று அடுக்கு அடுக்காய் வளர்ந்திருக்கும் மலையை, அடுக்கல் என்றும்; எதிரொலி செய்யும் மலையை, சிலம்பு என்றும்; மூங்கில் காடுகள் உள்ள மலையை, வரைஎன்றும்; காடுகள் அடர்ந்த மலையை, இறும்புஎன்றும்; சிறிய மலையைக், குன்று குவடு குறும்பொறைஎன்றும் மண்மிகுந்த மலையைப் பொற்றை பொச்சைஎன்றும் மலைப்பக்கத்தைச் சாரல் என்றும் பழைய தமிழ்நூல்கள் கூறா நிற்கும். (சிறுவர்க்கான செந்தமிழ். பக். 4 மறைமலை.) மேலும் சில வகை அறை = சிறுபாறை. முரம்பு = சரள்பாங்கான மேட்டுநிலம். கரடு = கற்பாங்கான பெருந்திடல். பொறை, பொச்சை, பொற்றை = பெரும்பாறை. பறம்பு = சிறுகுன்று.குன்று,குன்றம், கோடு = சிறுமலை. குறும்பு = அரணான சிறுமலை. மலை = மரமடர்ந்து வளமான குன்றுக் கூட்டம். பொருப்பு = பக்கமலை. விண்டு = விண்ணளாவிய மலை.குவடு, கோடு = மலைச்சிகரம். முடி = உச்சிச் சிகரம். கொடுமுடி = உச்சிச் சிகர உச்சி. கவான் = இருகுவடுகள் சேருமிடம். வெற்பு = அடிமலை. சாரல் = மலையடிவாரம். (சொல். 48) அளக்க லாகா அளவும் பொருளும் துளக்க லாகா நிலையும் தோற்றமும் வறப்பினும் வளம்சுரக்கும் வண்மையும் மலைக்கே - நன். 28 மலையடி: மலையின் அடிவாரத்தைக் குறிப்பது பொதுவழக்கு. மலையடிக் குறிச்சி என ஊர்ப் பெயரும் உண்டு. திண்டுக்கல் வட்டாரத்தில் மலையடி என்பது கொசுக்கடி என்னும் பொருளில் வழங்குகின்றது. கொசுவால் மலேரியா என்னும் தொற்றுக் காய்ச்சல் உண்டாவதும், காய்ச்சல் அடிக்கிறது என்னும் வழக்கும் நோக்கச் செய்கிறது இம் மலையடி. மல்குதல்: “மல்லல் வளனே” என்பது தொல்.(788). மல் என்பதன் வழிவந்த சொல் மல்குதல், பெருகுதல், நிறைதல், குவிந்து திரளல் என்னும் பொருள்களைத் தரும். மல், மலை, மல்லிகை முதலியவை இவ்வழிப்பட்ட சொற்கள். மல்லல்: மல்லல் வளனே - தொல். 788 உலகவளம் அள்ளக் குறையாதது. ஆகலின் முந்தைப் புலமையர், மல்லல் மாஞாலம் என்றனர். ஆனால் அவா வென்னும் அளப்பரும் பாவியால் உலகவளம் நாளும் பொழுதும் தொடர்ந்து மல்லல் இழந்து மல்லல் இலாஞாலம்எனுமாறு நம் கண் முன் சென்று கொண்டுளது. காட்டழிவு என்ன, நீரழிவு என்ன, நிலத்தழிவு என்ன, காற்றழிவென்ன, வெப்பழிவு என்ன, என்ன என எண்ணி இரங்கும் படியாக உளது. மல்லல் பேர்யாறு - புறம். 192 எனப்பட்டவை, மல்லல் வெற்பு எனப்பட்டவை வறண்ட ஆறும் வறண்ட வெற்புமாய் விளங்குதல் மக்களுக்கு உண்டாகியுள்ள தந்நலப் பேராவலாலேயேயாம். மல்கல் என்பதும் இது. ஓதம் மல்கலின் மாறா யினவே - அகம். 300 மல்லாடுதல்: மல்லாடுதல் போராடுதல் பொருளது. மல்லர் புரியும் போர் மற்போர். ஆமூர் மல்லன்புறப்பாடலால் புகழ்பெற்றவன். மல்லாடுதல் பொருளில்லாமல் அல்லல் படுதலையும் மல்லாடுதல் என்பது வழக்காயிற்று. ஐந்து பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவன் வறுமையில் மல்லாடுகிறான்என்பர். மல்லாத்தல்: மல்லாத்தல் = தோற்கச் செய்தல். குப்புறத் தள்ளல், மண்ணைக் கவ்வ வைத்தல் என்பவை தோற்கச் செய்வதன் அடையாளமாக இருப்பது போல மல்லாக்கக் கிடத்தலும் தோற்க வைத்ததன் அடையாளமாகக் கருதப்படு கின்றது. ஆமையை மல்லாக்கக் கிடத்தினால் அரும்பாடு பட்டே திரும்பி வர முடிவது எண்ணத்தக்கது. முதுகில் மண்படல் குத்துச் சண்டையில் தோல்விப் புள்ளியாகக் கருதப்படுதலும் எண்ணத் தக்கது. குப்புறத் தள்ளிக் குதிரை ஏறல் போல, மல்லாக்கக் கிடத்தி மானங் கெடுத்தலும் வழக்கிடை அறியக் கூடியதே. என்னை மல்லாத்தி விட்டு நீ போகவா பார்க்கிறாய்?என்னும் வஞ்சின மொழி இதன் பொருள் விளக்கும். மழலை: மழ > மழலை. மழவும் குழவும் இளமைப் பொருள - தொல். 795 குழலும் யாழும் அமிழ்தும் குழைத்தநின் மழலைக் கிளவி - சிலப். 2:58-59 இழுமென் மொழியால் விழுமியது கூறல் என்பதால் மழலையாம் விழுமியதை அடுக்கினார் இளங்கோவடிகள். அவர்க்கு முந்தை அடுக்கியவர் திருவள்ளுவர். குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் - திருக். 66 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் - திருக். 64 மழு: மழு:1 மழுவென்றது வாய்ச்சியை; தறிகையுமாம் (புறம். 206 ப.உ.). தறிகையாவது தறிக்கும் கருவி; கோடரி. மழு:2 மழுக்கை > வழுக்கை. மழு:3 எரியிரும்பு மான்மழுவேந்தி; தீப்பந்தம் போல்வது. மழு:4 கூர்மை இல்லாதது; மழுமட்டை; கூரிய அறிவு இல்லாதவன். மழுக்கட்டை: மழுக்கட்டை = அறிவுக் கூர்மையில்லாதவன், மான மற்றவன். மழுங்கல், மழுங்குணி, மழுக்கட்டை, மழுக்கட்டி என்பன வெல்லாம் ஒரு தன்மையவே. மழுங்கல் என்பது கூரற்ற தன்மை. அஃது இரண்டு வகையாம். ஒன்று அறிவுக்கூர்மை இல்லாமை, மற்றொன்று மானக்கூர்மை இல்லாமை. இருவகைக் கூர்மை இல்லாமையும் மழுக்கட்டையாக வழங்கப்படுகின்றது. அவன் மழுக்கட்டை எதைச் சொன்னாலும் அவனுக்கு ஏறாது என்பது அறிவுக் கூர்ப்பன்மை. சூடு சொரணை இல்லாத மழுக் கட்டைஎன்பது மானக் கூர்ப்பன்மை. மழுங்குணி: மழுங்குணி = அறிவுக் கூர்மையும் மானவுணர்வும் மழுங்கிய தன்மை. அவன் மழுங்குணி; போட்டதைத் தின்பான்; சொன்னா லும் தெரியாது; சொரணையும் கிடையாதுஎன்பதில் இரு தன்மைகளும் அறிய வருதல் அறிக. * மழுக்கட்டைகாண்க மழுப்புதல்: தான் சொல்லிய சொல்லைத் தானே மாற்றியும் புரட்டியும் கூறுதல். பேசிவிட்டு மழுப்புவதைப் பார் என்பது ம.வ. மழுப்புதல் = மழுப்பல்; மழுப்பல் உள்ளவர், மழுங்கன், மழுங்கி ஒளி மழுங்குதல் போல், உண்மை மழுங்கச் செய்பவர். மழுமட்டை: மழுமட்டை = அறிவின்மை, வழுக்கலான தன்மை. மழுமழுப்பு என்பது வழுக்கல்; மட்டை என்பது மடல். குட்டையில் ஊரப் போட்ட மட்டைமழுமட்டை எனப்படும். மழுமழு அல்லது வழுவழுத் தன்மையுடையதாக அஃதிருக்கும். ஊறிய மட்டை போன்ற தன்மையுடையவன் மழுமட்டை என்க. ஊறப் போட்டு நார் உரிக்கப் பயன்படுவது புளிச்சை மட்டை. ஊறிய நீரையும் மழுமழுக்க வைத்துவிடும். கையால் தொடவே வழுக்கலும் நாற்றமும் உடையதாக இருக்கும். அவன் மழுமட்டை; அவனை வைத்துக் கொண்டு எப்படி மாரடிப்பது?என்பது வழக்குச் செய்தி. மழை: மழை:1 மழை = பெய்யும் மழை; மழைக்காலம். மழை:2 குளிர்; மழைக்காற்று. மழை:3 இன்பம். எல்லா இன்பங்களுக்கும் மூல இன்பமும் வானமு தும் ஆயதால் மழை என்பதற்கு இன்பப் பொருள் உண்டாயிற்று. பெருந்தொகையில் மூன்று பாடல்களில் மழை, இன்பம் என்னும் பொருளில் உள்ளது. மழலை பேசுதலை மழைத்தது என்பார் பாரதிதாசனார். மழைத்தாள்: பால்தாள் எனப் பொதுமக்களால் வழக்கப்படும், பாலிதீன் நீர்க்காப்பாக இருப்பது. மழைப்போதில் தலை முதல் உடல் மறையாகப் பயன்படுத்துவது. இப் பயன் விளங்கத் திருப்பூர் வட்டாரத்தார் அதனை மழைத்தாள் என வழங்குகின்றனர். மழை பெய்தல்: மழை பெய்தல் = செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல். உங்கள் காட்டில் மழை பெய்கிறது; பெய்யட்டும், பெய்யட்டும்என்பது மழையைக் குறியாமல் பண வருவாய் பெருகி வருதலைக் குறிப்பதாம். அடைமழை பெய்வதுண்டு; பலநாள் தொடர்ந்து பெய்வது அது. அதுபோல் தொடர் தொடராய் வருமானம் வருவதையே மழை பெய்வதாகக் கூறப்படுகிறது. மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லைஎன்றால், மழை வருவாய்க் குறியானது சரியானதே. மள்ளர்: மள்ளர்:1 மள்ளர் = இளமையானவர். மள்ளர்:2 மள்ளர் = வீரர். செருவில் ஒருவ பொருவிறன் மள்ள - திருமுரு. 262 போர்த்தொழிலில் ஒருவனாகி நிற்பாய், பொருகின்ற வெற்றியினையுடைய மள்ள. மள்ளன் = இளமைப் பருவத்தன். வம்ப மள்ளர் - புறம். 77 பொருள்: புதிய வீரர்ப.உ. மள்ளு: மள்ளு என்றும் மண்டு என்றும் வழங்கும் வழக்குச் சொல் சிறுநீர் என்னும் பொருள் தருவதாகக் கொங்குநாட்டு வழக்கில் உளது. கொள்ளும் என்பது கொண்ம் ஆவது போல மள்ளு, மண்டு ஆகும். மொள்ளுதல் மோளுதல் என்னும் வழக்கு தென்தமிழகப் பெருவழக்கு. மள்ளு, மொள்ளு என வழக்குப் பெற்றிருக்கலாம். மறக்கள வஞ்சி: பகைமேற் கொண்டெழுந்த மன்னவர் மறக்களச் சிறப்பைக் குறள் சிந்து அளவு வகைகளில் வரும் அகவலடிகள் கலந்த (மயங்கிய) வஞ்சிப் பாட்டில் குறைவின்றிப் பாடுவது மறக்கள வஞ்சி எனப்படும். குறள்சிந் தளவடி அகவல் அடிவிராஅய் வஞ்சிச் செய்யுளின் மன்னவர் மறக்களம் எஞ்சா துரைப்பது மறக்கள வஞ்சி - பன்னிரு. 317 இயங்குபடை மன்னர் இகற்களம் புகழ்ந்த மயங்கியல் வஞ்சி மறக்கள வஞ்சி - பன்னிரு. 318 மறக்களம் = போர்க்களம். வஞ்சி = போர்க்களத்தில் கொள்ளப்பட்ட வெற்றி. வஞ்சிஎன்பது மாற்றார் மண்ணைக் கொள்வதற்குக் கிளர்ந்த படையெடுப்பு. புறத்திணைகளுள் ஒன்று வஞ்சி. இதற்கு வஞ்சி மாலை சூடிச் செல்லல் வழக்காறு. இவர்க்கு எதிரிடுவார் காஞ்சி மாலை சூடுவர். வஞ்சியும் காஞ்சியும் தம்முள் மாறே என்பது பழம்பாடல். மறதி: மறைதி > மறதி. நீரெழுத்து உடன்மறையும்; மணலெழுத்தும் காற்றாலும் நீராலும் நடையாலும் மறைந்து போம். கல்லெழுத்து மறைதல் இல்லை. நிலைபெற்று நிற்கும். மலைமறைவு மட்டுமன்று; சிறு கைமறைவும் கதிரை மறைக்கும். மறைவு சிறுதுண்டாயினும் மறைக்கவே செய்யும். மறதி என்பதும் நினைவாம் நிலைபேற்றை எளிதில் மறைத்துவிடும். ஒரே பொழுதில் பல நினைவு, பல வேலை, உடல் உள அயர்வு, மடிமை, முதுமை, இடைவெளிப்படல் என்பவற்றால் மறதி பெரிதும் உண்டாம். உடல் உள அயர்வால் மறதியாதலை, அயர்த்துப் போனேன்(அயத்துப் போனேன்; அயத்து = மறந்து) என்னும் வழக்கால் அறியலாம். நினைவு ஒருமுகப்பட்டதாயின் மறப்பது இல்லை. அதற்கு இளமைப் பருவம் ஏற்றது; மிக ஏற்றது. ஏனெனில் வாழ்க்கைப் போராட்டமோ மன நெருக்கடியோ உண்டாகாப் பருவம் அது; கற்பதற்கே உரிய பருவம். ஆதலால், இளமைக் கல்வி எளிதில் போகாஎன்றும் (அன்பும் அறிவும்) இளமையில் கல்வி சிலையில் எழுத்துஎன்றும் (ம.வ.) கூறப்பட்டன. நன்றல்லது, அன்றே மறப்பது நன்று - திருக். 108 நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் - திருக். 605 மறம்: பெருவேந்தன் ஒருவன் குறுநில மன்னனாகிய வேடனிடத்து அவன் மகளை வேண்டித் தூது விடுக்கத் தூதன் மொழி கேட்ட குறுநில மன்னன் சினந்து உரைப்பது மறம்என்பதாகும். பெருநில வேந்தன் மகட்பால் வேண்டி ஒருபெருந் தூதன் உரைத்த மொழிகேட்டுக் குறுநில மறவன் வெஞ்சினந் திருகி மாற்றமிக உரைப்பது மறமென பொழிப - பன்னிரு. 250 இனி, மகட்பாற் காஞ்சி என்பதையும் மறம் எனக் கூறுவாரும் உளர். மகட்பாற் காஞ்சி என்பது, குலத்தொடு பொருந் தாத மன்னன் ஒருவன் மகள் வேண்டத், தந்தை தாய் உடன் பிறந்தார் ஆகிய அனைவரும் மகள் மறுத்துரைப்பது என்பர். கூடாக் குலமுதல் மன்னன் மகள்வேண்டத் தாதையும் தாயும் தன்னையர் அனைவரும் மாறுசொல் மகட்பாற் காஞ்சியும் மறனே - பன்னிரு. 62 சங்கப்பிரதி மறம் கலம்பகத்து உறுப்புகளுள் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. மறம்பாடல்என்பதொரு வகைநூல், மறவர் தம் வரலாறும் வழக்காறும் கூறுவதாக அமைந்துள்ளது. மறலி: மறை > மற > மறலி. மறைந்து நின்று உயிரை வாங்கும் கூற்றுவன். மறமிகு வீரர்க்கும் மறமிக்கவன் மறலியாம், கூற்றுவன். மறலி யன்ன களிற்று மிசையன்னே - புறம். 13 பொருள்: கூற்றம் போன்ற களிற்றின் மேலோன்ப.உ. மறலுதல் = போரிடல். வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் - பரிபா. 9 மறி: தாயை மறித்து மறித்து (தடுத்துத் தடுத்து) ஊடாடி வருவதும் பால் பருகுவதுமாம் குட்டி, கன்று. யாடும் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே - தொல். 1511 மறியல்: ஒருவர் கூறுவதற்கு ஒருவர் மறுமொழி கூறுவதை மறுத்துஎன்பது சிற்றூர் வழக்கு. ஒரு நெடும் பகுதிக் கட்டடத்தைக் குறுக்கே சுவர் அல்லது தடுப்பு வைத்துப் பிரிப்பது மறியல் மறிசல் (மறுசல்) என வழங்கும். ஒருவரை அல்லது ஓர் ஊர்தியை மேலே செல்லாமல் தடுப்பது மறியல்என வழக்கு ஊன்றியது. ஒரு காலில் செல்லும் நீரைத் தடுத்து மற்றொரு காலில் செல்ல விடுவது மறுகால் ஆகும். மறுகால் குறிச்சி என்பது ஓர் ஊரின் பெயர். அவ்வாறே ஒரு பயிர் விளைவின் பின் அதன் அடியை வெட்டித் தளிர்க்க விடுவதும் மறுகால் ஆகும். கால் என்பது அடி, முளை என்னும் பொருளது. மறுமொழி மறுப்பாகவும் அமைந்துவிடுவது உண்டு; அது மாறுகோள் ஆகும். இருவர் மாறுகோள் ஒருதலைத் துணிவு என்பது உத்திவகையுள் ஒன்று. மறுபடு > மாறுபாடு. ஒரு பக்கக் கையையும் அதன் எதிரிடைக் காலையும் வாங்கி விடுதல் (வெட்டுதல்) மாறுகால் மாறுகை வாங்குதலாம். முந்தைத் தண்ட வகையுள் அஃதொன்றாம். கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவது கைம்மாறு; கைம்மாற்று. மனம் எதிரிடுவது மனமாற்றம்; கால் சோர்வுறல் தடுமாற்றம்; உடுத்தும் துணியை மாற்றுவது உடுமாற்று; பாதுகாப்பாக நம்பியவர் எதிரிடையாக இருப்பது ஏமாற்று; பணத்தாளுக்குச் சில்லறை வாங்கல் பணமாற்று; ஏமாற்றுக்கு ஆட்பட்டவர் மாறிஎனப்படுவார். திசை மாறுபவர் திசைமாறி. இவ்வாறு விரிவன பெருகும். மறு: மறு:1 ஏவல்: மறுக்க; மொழிவதை எதிர்க்கும் மறுமொழி. விடையாம் மொழி. மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் - அகம். 250 மறு:2 மறு = களங்கம். மாயிரு ஞாலம் மறுவின்றி விளங்க - திருமுரு. 91 மறு:3 மறு = கறை. வெண்கோடு செம்மறுக் கொளீஇ - குறுந். 243 மறு:4 மறு = குற்றம். மறுவற்ற மைந்தர் - பரிபா. 90 மறு:5 மறு = தழும்பு. ஏரிடம் மடுத்த இருமறு - அகம். 194 மறு = மச்சம், கரும்புள்ளி (ம.வ.). மறுகு: மறுக்கு > மறுகு. குறுக்கும் மறுக்கும் என்பது இணைமொழி; குறுக்கும் நெடுக்கும் என்பது போல. நெடிய தெரு மறுகு ஆகும். அதில் அமைந்த குறுக்குத் தெரு குறுக்கு ஆகும். தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை - சிறுபாண். 66,67 வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு - பட்டினப். 193 மறுத்து: மறுத்து = திரும்ப, மீள, மற்றும். ஒன்றைச் சொல்ல அதற்கு எதிரிடையாகச் சொல்வதோ, ஒன்றைச் செய்ய அதற்கு எதிரிடையாகச் செய்வதோ மறுப்பாகக் கொள்ளப்படும். ஆனால், நான் சொன்னேன்; மறுத்து என்ன சொல்வதுஎன்பதில் மறுப்புப் பொருள் இல்லை. திரும்பவும், மீளவும் என்னும் பொருளே யுண்டு. இலக்கியம் வல்லார் மற்றும்என்பது போல, மறுத்து என்னும் ஆட்சி பொதுமக்கள் வாழ்வில் உள்ளதாம். நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மறுத்து நீ என்ன செய்கிறாய்?என்பதிலும் மறுத்து இப் பொருளதாதல் அறிக. மறுபக்கம்: முன்பக்கம் ஒன்றுண்டாயின் பின்பக்கம் ஒன்றுண்டு. அது மறுபக்கம். அகங்கை, புறங்கை போல. ஒவ்வொன்றற்கும் வெளிப் படுபக்கமும், வெளிப்படா மறைபக்கமும் உண்டு. இருபக்கமும் ஆய்ந்தால் மட்டுமே உண்மை புலப்படும். ஏனெனில் நாடகமே உலகம்என்பது வெளிப்படை ஆகலின். மிக உயர்ந்தோர்க்கும் மறுபக்கம் ஒன்றுண்டு. ஆதலால் தெளிவு மிக்கோர், மாட்சியில் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே - புறம். 192 என்றனர். மறுப்பு (நிராகரணம்): பிறர் கொள்கை மறுப்பு நூலாக வெளிப்பட்டது நிராகரணம் என்னும் ஒருவகை நூல். இவ்வகையில் முற்படக் குறிப்பிடத் தக்கது சங்கற்ப நிராகரணம்என்னும் நூல். இதில் பல்வேறு சமயவாதிகள் மறுக்கப்படுகின்றனர். மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி, பிங்கலகேசி முதலிய நூல்களும், நாவல் நாட்டுப் பிற சமயவாதிகளை வெல்லும் வழக் காறும் நிராகரண நூல்களைத் தோற்றுவித்தலில் பங்குள்ளவை. கிறித்தவ சமய மறுப்பாகக் கிளர்ந்தது யேசுமத சங்கற்ப நிராகரணம்என்னும் நூல். மறுமாற்றம்: பதில் சொல்லுதல் மறுமொழி என்றும், மறுமாற்றம் என்றும் சொல்லப்படும். அது பொதுவழக்கு. இலக்கிய வழக்கும் உடையது. உசிலம்பட்டி வட்டாரத்தில் சோற்றுடன் உண்ணும் தொடுகறி வகையை மறுமாற்றம் என்று வழங்குகின்றனர். சோற்றுச் சுவைக்கு மாறுபட்ட சுவையினது என்பதாகலாம். தொடுகறியை மாற்றாணம் என்பது திருப்பூர் வட்டார வழக்கு. மறுமை: பொறை நிலை என்பது பொறுமையாம்; அவ்வாறே மறைநிலை என்பது மறுமையாம். இம்மை என்பது இவ்வுலகில் வாழும் கால அளவினையும் மறுமை என்பது உடலின் நின்று உயிர் நீங்கிய பிற்றை நிலையையும் குறிக்கும். இம்மை உலகு இவ்வுலகு என்றும், இறப்பின் பின்னைப் பெறும் எச்சங்களே மறுமை உலகு, அவ்வுலகு என்றும் கூறப்படுதல் நூல் வழக்கு. இவை சுட்டு வழிப் பெயர்கள். மறுமை உலகமும் மறுவின் றெய்துப - அகம். 66 மறுமை உலகத்து மன்னுதல் பெறுமே - குறுந். 199 மறை: மறை என்பதற்கு மறைத்து வைக்கப்பட்டது எனப் பொருள் கூறுவது தமிழ்மறையை வடமொழி வேதமாக்கி அதன் அடிப்படையில் பொருள் விரிப்பதாம். வேதம்ஒரு குலத்துக்கு உரியது என்றும், அக்குலத்தார் ஒழிந்தார் ஓதின், ஓதிய அவர் நாவை அறுக்க வேண்டும் என்றும், சொன்னவர் வாயில் இரும்புக் கம்பியைக் காய வைத்துச் செலுத்துதல் வேண்டும் என்றும், பதிய வைத்துக் கொண்டவர் நெஞ்சைப் பிளக்க வேண்டும் என்றும், ஓதக் கேட்டவர் செவியில் ஈயத்தை உருக்கி ஊற்ற வேண்டும் என்றும் மனுநூல்கூறுவதில் இருந்தே வேதம் குலப்பொருள் என்பதும், ஒரு குலத்துக்கு ஒருநெறி யுரைப்பது என்பதும் வெளிப்படை. வேதம் பொதுப்பொருள் அன்று என்பதாலேயே எழுதாக் கிளவிஎன்றும் சுருதிஎன்றும் வழங்கப்பட்டதாம். ஆனால் தமிழில் மறை என்பது பொதுப்பொருள்; எழுதும் கிளவியது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் (திருக். 972) கேடில் விழுச்செல்வம் கல்விஎன்றும் (திருக். 400) கூறும் செய்தி, மறைத்துக் கூறும் செய்தியாமா? ஒரு குலத்துக்கொரு நெறி கூறும் செய்தியாமா? தமிழில் மொழியியல் காவல் நூலாகக் கிளர்ந்தது தொல் காப்பியம். பண்பாட்டியல் காவல் நூலாகக் கிளர்ந்தது திருக்குறள். வரையறை செய்து கூறும் இலக்கண நூல்களை மறை என்னும் வழக்குண்மை நரம்பின் மறைஎன்னும் தொல்காப்பிய ஆட்சியால் விளங்கும். நரம்பின் மறை, யாழிசை நூலாம் (தொல். 33). தமிழில் வழங்கும் மறை என்னும் சொல்லின் பொருளைத் தொல்காப்பியம் தெளிவாக்குகின்றது. நிறைமொழி மாந்தரால் ஆணையிட்டுக் கூறப்படுவதே மறைமொழி. மந்திரம் என்பதுவும் அதுவே என்பது தொல்காப்பியர் கருத்து. நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப - தொல். 1434 என்பது அவர் வாக்கு. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் - திருக். 28 என்றார் திருவள்ளுவர். இவண் குறிக்கப்பட்ட நிறைமொழி மாந்தர் தகைமையை எண்ண வேண்டும்! நிறைமொழி கூறுவார் எவர்? அவர் நிறை நெஞ்சர் என்க! நெஞ்சின் ஊர்தி சொல்லே! ஆதலால் நிறை நெஞ்சில் இருந்தே நிறைமொழி தோன்றும் என்க! குறைநெஞ்சில் இருந்து நிறைமொழி தோன்றாது என்பது வெளிப்படையாம். நிறைநெஞ்சின் தனிமூலம், மனத்துக்கண் மாசின்மையாம். அம் மாசிலா நெஞ்சிலேதான் அழுக்காறு இல்லை; அவா இல்லை; வெகுளி இல்லை; இன்னாச்சொல் இல்லை; நிலையிற்றிரியாது அடங்கிய தோற்றமும், குணமென்னும் குன்றேறி நிற்கும் பெற்றிமையும் நிறைமொழி மாந்தர் வரையறை. நிறைமொழி மாந்தர் கூறும் மறைமொழி எத்தகையது? இதனைச் செய்க; இதனைச் செய்யாதேஎன ஆணையிட்டுக் கூறும் அத்தகையதே நிறைமொழி மாந்தர் கூறும் மறை மொழியாம். ஆணையிட்டுக் கூறப்படும் ஒன்று ஒளித்து மறைத்துக் கூறுவது ஆகுமா? மறை என்பதன் மெய்ப்பொருள் பாதுகாப்பு என்பதாம். அல்நெறி ஈது; நல்நெறி ஈதுஇதனைத் தள்ளுக; இதனைக் கொள்ளுகஎனப் பாதுகாத்துக் கூறுவதே மறைமொழியாம். இப்பாதுகாப்பும் அகக்காப்பு புறக்காப்பு என இருவகைத் தாம். தந்நாட்டு வழக்குகளாக உள்ளனவற்றுள் கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளல் அகக்காப்பாம். பிறநாட்டார் வழக்குகளாக உள்ளனவும் நம் நடைமுறைக்கு ஆகாதனவுமாகிய வற்றை விலக்குவது புறக்காப்பாம். இத்தகையவற்றைப் பறையறைவது போலவும் அறை கூவுவது போலவும் கூறாமல் மறைத்துக் கூறுவதால் ஆகும் பயன்தான் என்ன? மறை என்பதற்குக் காவல்என்னும் பொருள் உண்டா? குடைக்கு ஒரு பெயர், வெயின் மறைஎன்பது. வெயிற் கொடுமை வாட்டா வண்ணம் காப்பதால் குடை வெயின் மறைஆயிற்று. நாட்டவர்க்கு வெங்கொடுமை வாரா வண்ணம் காப்பதற்குச் சான்றாகவே முடியுடை வேந்தர் குடையுடையோராய்த் திகழ்ந்தனர் என்க (புறம். 35:60). வீட்டுக்கு ஒரு பெயர் வளிமறைஎன்பது. கொடுங் கோடையோ கடும் வாடையோ வருத்தா வண்ணம் கதவமைந்த வீடே வளிமறைஎனப்பட்டதாம் (புறம். 196). வளி = காற்று. போர்க் களத்தில் பகைவர் விடுக்கும் படை துளைக்கா வண்ணம் அணியும் கவசத்திற்கு மெய்ம்மறைஎன்பது பெயர். பதிற்றுப்பத்து மெய்புகு கருவி(14) மெய்புதை அரணம்(52) என வழங்கும். வீரருக்கு வீரராக விளங்கி முன்னின்று காக்கும் மொய்ம்புடையாரைச் சான்றோர் மெய்ம்மறை(14, 58) என்றும் மழவர் மெய்ம்மறை(53, 58) என்றும் வில்லோர் மெய்ம் மறை(59, 65) என்றும் பதிற்றுப்பத்து பயில வழங்குகின்றது. நாட்டின் காவலுக்கு அரணங்கள் இருப்பது போல, பண்பாடு நாகரிகம் இவற்றின் காவலுக்கு அரணமாக இருப்பது மறைஎன்க! தமிழ்மறை எனவும், பொதுமறை எனவும் வழங்கும் நம்மறையாம் திருக்குறளை மேலோட்டமாகக் காண்போரும் அல்லவற்றை மறுத்து, மறுத்துக் கூறும் நெறிமுறையை நன்கு அறிவர். நல்லவற்றைக் கூறுதலினும் அல்லவற்றை மறுத்தல் கட்டாயத் தேவையாம். அதுவே காவற்கடனில் தலைப்பட்ட நிலைப்பாடு உடையதாம். ஆதலால் அறுப்பது, அறை; இறுப்பது, இறை; பொறுப்பது பொறை; நிறுப்பது, நிறை என்னும் சொல்லாட்சி போல மறுப்பது, மறைஎனப்பட்டதாம் என்க! இனி, மறைஎன்பது களவுஎன்னும் பொருள் தரும் பழைய ஆட்சி. பிறரறியா வண்ணம் பாதுகாக்கும் காதல் ஒழுக்கமே மறைஎனப்பட்டது அறிக! காவலாக அமைந்தது என்ப வற்றுடன் களவொழுக்கம் என்பதையும் கமுக்கம் என்பதையும் வள்ளுவம் குறிக்கும். மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் - திருக். 1180 புறப்படுத்தான் ஆகும் மறை - திருக். 590 இவற்றுள் முன்னது களவுப் பொருளையும், பின்னது கமுக்கப் பொருளையும் தரும். ஒரு பொருளைப் பிறர் அறியாவண்ணம் காக்கக் கருதுவார் மறைத்து வைத்தல் காவல் வழிப்பட்டதே என்பதும் எவரும் அறிவர். ஆதலால், மறைஎன்பது வாழ்வியல் காவல் நூல் என்பதே தெளிந்த செய்தியாம். மறைப்பு: மறை > மறைப்பு. வெளிப்படாதிருக்க அமைக்கப்படும் திரை, மறைதட்டி, கதவு முதலியவை (ம.வ.). செய்வினை மறைப்பினும் - தொல். 1060 மறையெனல் அறியா மாயமில் வாழ்க்கை - புறம். 243 மன அழுத்தம்: மனத்தில் பெரும்பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கும் துயரம் மன அழுத்தம் எனப்படும். கல் அழுத்தி என்பது காலில் உண்டாகும் ஒரு நோய். கல் அழுத்துவதால் ஏற்படுவது. ஒருவரை எள்ளி நகையாடலும் அவர் இயற்செயலைப் பழித்துக் காட்டலும் அழுத்தம் காட்டுதல் எனல் வழக்கம். மன அழுத்தம் ஈழத்தில் இயல்பான வழக்குச் சொல்லாக உள்ளது. தமிழகத்தில் அருஞ்சொல்லாக வழங்குகின்றது. மனம்: மன் + அம் = மனம். மன்னி நிலைபெறற்கும், மன்னா தொழிதற்கும் இடனாக இருப்பது மனம் ஆகும். மனம் போல வாழ்வுஎன்பது ம.வ. மனம் , மன அறிவாம் ஆறாம் அறிவு. அதன் நிலைப்படு செயற்பாடே அவர் நிலைப்பாடு ஆதலால் மன்னுதல் பொருளில் மனம் அமைந்ததாம். மனை: மனை:1 மன் > மனை. மன் = நிலைபேறு. நிலைபெறக் குடியிருக்கும் வீடு மனையாகும். மனை:2 மனை = மனையிடம். நான்குமனை நான்கு பிள்ளைகளுக்கும் உள்ளன. மனை:3 மனை = மனையாள். அவர்க்கு இரண்டு மனை உண்டு ம.வ. மனைத்தக்க மாண்பு: ஒரு பெரிய தலைவனின் மனைவி சொல்கின்றாள், என் கணவர் மண நிகழ்ச்சிக்குச் சென்றால், அவரே மணமகன் போல ஆகிவிடுவார்; இழப்பு நிகழ்ச்சிக்குச் சென்றால், அவரே இழப்புக்கு ஆட்பட்ட வீட்டாராக மாறிவிடுவார். போன இடத்திற்குத் தகப் பொருந்துதல் தானே புறந்தள்ள முடியாத - பிரித்துப் பார்க்கவும் முடியாத - பொருந்துதல். அவ்வாறாக, ஒரு மனைவிக்கு வேண்டிய தலையாய பண்புகளில் எல்லாம் தலையாய பண்பு, மனைத்தக்க மாண்புஎனக் காண்கிறார் வள்ளுவர். தான் பிறந்த வீட்டுப் பழக்கவழக்கங்கள், இயல் செயல்கள் ஒருவகையாக இருக்கலாம். புகுந்த வீட்டுக்குப் பொருந்த வாழ்வதே போற்றும் வாழ்வாகும். தம்வீட்டு வாழ்வும், தம்வீட்டில் பழகிப் போன போக்கும் விட முடியாமையால் புகுந்த வீட்டில் ஒட்ட முடியாமல் தம் வாழ்வைத் தாமே நிரயம் (நரகம்) ஆக்கிக் கொள்வார் எத்துணைப் பேர். புகுந்த வீட்டு நடைமுறை, போற்றிக் கொள்ளத் தகாத குறைபாடு உடையதாக இருந்தாலும், அக்குறையை அவர்கள் தாமே அறிந்து கொள்ளும் வகையில், நயமாக எடுத்துக் கூறி அவர்களும் ஏற்கும் அளவில் நலம் செய்வதே நீடிக்கும். இல்லையானால் அதுவே எதிரிடை வித்தாகிவிடும். தான் தன் குடும்பத்தில், பெற்றோரின் செல்வத்திலே - தட்டிக் கேளா - மறுத்துச் சொல்லா - நிலையிலே, வைத்ததே வரிசைஎன வாழ்ந்திருக்கலாம்! அவ்வரிசையே புகுந்த வீட்டு வரிசையாகி விடுமா? ஒரு மகள் பிறப்பாளா? என ஏங்கிக் கிடந்த வீட்டிலே பிறந்து வளர்ந்த வளமையை, ஏழெட்டுப் பெண் பிறந்த வீட்டிலே போய் எதிர்பார்க்க முடியுமா? போட்டுண்ணவும் மாட்டாதவள்; போட்டாலும் கெஞ்சியும் கொஞ்சியும் உண்பிக்கப்பட்டவள், அதே கோலத்தின் புகுந்த வீட்டிலும் வாழ்ந்தால் என்ன ஆகும். அங்கே, குப்பை கொட்ட முடியுமா? வறுமைக் குடியில் பிறந்தவள்; வளமைக் குடிக்குப் புகுந் துள்ளாள்! அவ் வாழ்வுக்குத் தகத் தன்னை அமைத்துக் கொள்ள வில்லையேல், அவ்விடத்துப் பணியாளரும் கருதிப் பாராரே! நல்ல மனைவியாக இருக்க விரும்புபவளுக்கு வேண்டும் முதன்மையான நற்பண்பு, புகுந்த மனைக்குத் தகப் பொருந்தி வாழ்தலே. அதுதான், பின்னே ஊரொடு ஒத்து வாழ்தலுக்கும், உலகத்தொடு ஒத்து ஒழுகுதலுக்கும் பயிற்சி நிலை. மனைமாட்சி: மனைத்தக்க மாண்புஎன்பது பண்பு. மனைமாட்சி என்பது செயல்திறம். அதாவது குடும்பத்தைச் சிறப்புடன் நடத்தும் செயல்திறம். வீட்டை முழுமையாக நிரப்பிக் காட்ட வேண்டும் என்ற தந்தைக்கு, ஒரு மகன் வைக்கோற் போரால் நிரப்பிக் காட்டியதும், ஒரு மகன் ஒளி விளக்கால் நிரப்பிக் காட்டியதும் ஆகிய, புனை கதையைக் கேளார் எவர்? நிரப்புதல் ஒன்றானாலும் நிரப்பு வகை எத்தகைய வேறுபாடுடையவை! வீட்டுத் தூய்மை, சூழல் தூய்மை, கலத்தூய்மை, பொருள் வைப்பு ஒழுங்கு, சமையல் தேர்ச்சி, உரையாட்டு நயம், உரைக்கத் தக்கவை உரைத்து, உரைக்கத் தகாதவை மறைக்கும் திறம், உடைச்செம்மை, ஒப்பனைச் சால்பு, காலம் போற்றல், கருத்தில் ஒருமை என்பன வெல்லாம் மனைமாட்சிகளேயாம். இதன் விரிவைக் காண விரும்புவார் பாவேந்தர் படைத்த குடும்ப விளக்குமுதற் பகுதியைக் கற்பாராக! அதற்கு எதிராய குடும்பத்தைக் காண விரும்புவார். இருண்ட வீடுஎன்னும் அவர்தம் மற்றொரு படைப்பைப் பயில்வாராக! கற்ற குடும்பச் சீர்மைக்கு முன்னதும், கல்லாக் கொடுமைக்குப் பின்னதும் அவரால் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டவை. அவை பெருவழக்கு. மனைமாட்சி யமைந்த கல்லா மனைவியும் அரிதின் உண்டு. இவை விதிவிலக்குகளே அல்லாமல் விதிகள் அல்லவாம். குடும்பத்திற்கு எத்தனையோ வாய்ப்புகளும் பெருமை களும் இருக்கலாம். ஆனால், மனைமாட்சி மனைவியிடத்து அமையவில்லை எனின், மற்று அமைந்தவை எல்லாம் அமையாதவையே! பத்துவகைக் காய்கறிகள் இருந்தும், ஆக்கும் பக்குவம் அமையாமையால் ஒதுக்கி எறிபவை இல்லையா? கொல்லைப் புறத்துக் கீரையைப் பறித்துக் குழம்பாய்க், கொத்தாய்ப், பொறியலாய் மூவுருப் பெற்று முழுதின்பச் சுவை நலமாய் அமைந்து விடுவது இல்லையா? இதுவும், மனைமாட்சியா? ஆம். தலையாய மனைமாட்சி! பொருளியல், உடலியல், மருந்தியல், மன இயல் எல்லாம் கூடிய மனையியல் மாட்சிஇது! மன்: மன் = நிலைபேறு. மன் x மன்னா; நிலைபேறும் நிலைபேறு இல்லாமையும். மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே - புறம். 165 பொருள்: எப்பொழுதும் நிலையாத இவ்வுலத்தின்கண் நிலைபெறுதலைக் கருதினோர் தம்முடைய புகழைப் பூமி யிடத்தே நிறுத்தித் தாங்கள் இறந்தார்ப.உ. மன்பதை: மன் > மன்பதை. மனத்தையுடைய மாந்தர்தம் தொகுதி மன்பதை எனப்படும். சமதாயம் (சமுதாயம்), குழுவாயம், குமுகாயம் என்பவை பின்னை ஆட்சிகள். மன்பதை என்பது பழவாட்சியாம். மன்பதை நிரப்பி - பதிற். 40 மன்பதை மருள - பதிற். 42 பொருள்: மக்கள் எல்லாம் வியக்க. மன்று: மன் + து = மன்று. மன அறிவாம் ஆறாம் அறிவினர் கூட்டம் மன்றம். மணி பொன் வெள்ளி தாமிரம் சித்திரம் என்னும் பெயரிய ஐந்து மன்றங்களும் இறைமை சார்ந்தவை. அவை முறையே ஆலங்காடு, தில்லை, மதுரை, நெல்லை, குற்றாலக் கோயில் இடத்தவை. புதுப்புது மன்றங்கள் பொலிவோடு இந்நாளில் பெருகி உள்ளன. முறைமன்றம் நீதிமன்றம் என்பனவும் மன்றங்களே. பழநாள் அரசர்களின் புலவரவை, மன்னுடை மன்றம் எனப் பட்டது (நன். 53). மன்றோரம் சொன்னார் மனை இகழப்பட்டது (நல்வழி. 23). மன்றம் அவை, அம்பலம், பொதியில் எனவும் வழங்கப்பட்டது. மன்னுதல்: தவசத்தைக் கோணிகளில் போடும் போது, இடைவெளி இருந்தால் போடும் பொருள் அளவு சிறுத்துப் போகும். நிரம்பவும் இடைவெளியின்றிப் போட, இப்படியும் அப்படியும் குலுக்குவர் கோணியை. அதற்கு மன்னுதல் என்பது பெயர். மன்னுதல் நிறைதல், நிரம்புதல், நிலைபெறல் பொருளது. இது முகவை நெல்லை வழக்கு.  மா வரிசைச் சொற்கள் மா: அகர வரியில் பத்தாம் எழுத்தாம் மகரத்தின் நெடில். பெரியஎன்றும் மாமரம் என்றும் மாவு என்றும் மா நிறம் என்றும் பொருள்தரும். ஓரெழுத்து ஒருமொழி. மரவகை வித்துகளில் மாங்கொட்டையே பெரியதாகலின் மா எனப்பட்டதாம். மாந்தளிர் நிறம் மாநிறம் எனப்பட்டதாம். அரிசி, பருப்பு முதலியவற்றின் மாவும், மாநிறப் பூச்சியும், மணப்பொடியும் மா எனப்படுவனவாம். மாநிலம், மாநாடு, மாகடல் என்பவற்றில் வரும் மா, பெரிய என்பதன் முன்னொட்டாம். பெரியது பெருமைப் பொருளதாம். பூம்பராகம் துழாவும் வண்டும் மா என்பதாம். மாஅரிமா, பரிமா, கரிமா, நரிமா முதலாக விலங்குப் பெயர்களின் பின்னொட்டாம். மாந்தளிர் மேனி எனப் பொன்னிறப் பொலிவும் மாமகள் எனத் திருமகள் பெயரும் ஆயதாம். மா ஆகிய விலங்கிற் பெரிய யானை கறுப்புநிறம். ஆதலால், யானை பன்றி கருநிறநஞ்சு என்பனவுமாம். இருபது மா ஒன்று என்பதால் அளவைப் பெயருமாம். உண்க மாஎன அசையுமாம். மாவும் மாக்களும் ஐயறி வினவே - தொல். 1531 வழங்கியல் மாவென் கிளவி - தொல். 480 மாக்கள்: மா என்பது விலங்கு; மாக்கள் என்றது, அவ் விலங்குப் பிறப்பினும் உயர்ந்து ஏனை மக்கட் பிறப்பில் தாழ்ந்து அவ்விரண்டின் நடுவணதாய் அவற்றிற்கு வேறானதொரு பிறப்பாம். இப் பிறவியுட்படும் மாக்கள் என்னும் உயிர்கள் விலங்கின் உருவமும் மக்கள் உருவமும் கலந்ததோர் உருவத்தை உடையவாய் இருக்கும் என்ப. இங்ஙனமொரு படைப்பு விலங்குப் பிறப்பிற்கும் மக்கட் பிறப்பிற்கும் இடையே ஆண்டவனால் படைக்கப்பட்டிருத்தல் வேண்டுமென இக்காலத்து உயிர்நூல் வல்லாரும் உய்த்துணர்ந்து அங்ஙனம் உணர்ந்தவாறே இருப்ப தொரு படைப்பினை ஆத்திரேலியா என்னும் நாட்டில் நேரில் கண்டு, தமது துணிபினை மெய்ப்படுத்துவாராயினர். இற்றைக்கு ஏறக்குறைய ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரே நம் முதுதமிழ்ப் பேராசிரியராய் விளங்கிய தொல்காப்பியனார் இவ் வுண்மையை நன்கு தெளிந்து, அவ்வினத்தவராம் உயிர்கட்கு ஐந்து அறிவுகள் உண்டு என அறிவு வரையறை காட்டி மாவும் மாக்களும் ஐயறி வினவே(மரபியல் 32) எனத் தமது அரும் பெறல் நூலில் நூற்பா யாத்து உரைத்தது பெரிதும் நினைவு கூர்ந்து மகிழற்பாலதாகும் (திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை 127-128). மனனறிவு இல்லா நிலை, மாக்கள் நிலை. மக்களே போல்வர்என்றார் வள்ளுவர் (திருக். 1071). தோற்றத்தால் மக்கள். ஆனால் குணம் செயல்களால் மாக்கள் நிலை. ஆதலால் குறுக்காக நடக்கும் மாக்களாம் விலங்கும், நிமிர்ந்து நடக்கும் மக்களாம் மாக்களும் ஒப்பாகக் கொண்டு தொல்காப்பியர் இணைத்துக் கூறினார். அரிமா, பரிமா, வரிமா, கரிமா என்னும் மாஎன்பதே விலங்குப் பொருளதாம். மாவும் புள்ளும் என்பதும் விலங்கும் பறவையும் என்பார். ஆ, மா, கோ மூன்றும் னகர ஒற்றுப் பெற்று ஆன், மான், கோன் என்றாகும். இதில் மா, மான் ஆதல், மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - திருக். 969 என்பதில் மாவாக நிற்றல் அறிக. மாக்கான்: குமரி மாவட்டத்தில் மாக்கான் என்பது தவளை என்னும் பொருளில் வழங்குகின்றது. மணற்கானல் என்பது மணக்கான் மாக்கான் ஆகியிருக்கக் கூடும். தவளை மணல் நிறத்தது; மணலில் வாழ்வது. மணல் தேரை என்னும் பெயரினது. மாங்காய்: மாவின் காய் என்னும் பொதுப்பொருளில் வழங்காமல் மாங்காய் என்பது ஆட்டின் விதைக் கொட்டையைக் குறிப்பதாகப் புலவுக்கடையினர் வழங்குகின்றனர். இது உவமை வழிவந்த சொல்லாட்சி யாகலாம். மாங்கு: உச்சி எடுத்தல், வகிடு எடுத்தல் என்பவை பொது வழக்குகள். வகிடு, உச்சி என்பவற்றை மாங்கு எனத் திருமங்கலம் வட்டாரத்தார் வழங்குகின்றனர். பாங்கு = பக்கம்; பாங்கு என்பது மாங்கு என மாறி இருபக்கமாகப் பிரிக்கப் படுதலைக் குறித்தது. மாசு: மாய்சு, மாசு ஆயிற்று. மாசு = மாய்வுக்கு அடிப்படையாக இருப்பது. மாசு = ஒளி குன்றல், அழுக்கு, குற்றம் முதலியவை. மாசு பருப்பொருளாகத் தூசி, புகை, துரு, கரி, மலம், நீர் முதலியன வாகவும், நுண்பொருள் பண்பாம் அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் முதலியனவாகவும் நோயை ஆக்குவன, மாய்வை ஆக்குவனவாகவும் அமையும். மாசு தோன்றுமிடம் மனமாகலின், மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற என்றது திருக்குறள் (34). அம் மன மாசும் காதல் களவு அறக்கற்பாகத் தடையாகும் நிலையே பெருங்கேடாம். ஆதலின், தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்றல், தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல், நற்றாய் தன்னையர்க்கு அறட்தொடு நிற்றல் என்னும் தொல்பழ நெறி மனமாசு என்பது, காதலன் காதலியர் சொல்லிய சொல் மாறாமை என்பதை விளக்கும். மாசு இலா மணி என்பது என்ன? சாணை பிடித்து நேர்கூர் செய்து கழுவிப் பொலிவுறுத்துதல் தானே! மாசு (மனமாசு) என்பது எளியதன்று; மனச்சான்று உடையார்க்குத் தம் மாசாம் குற்றம் மாய்வைத் தருதற்குப் பாண்டியன் நெடுஞ்செழியன் வரலாற்றினும் வேறு என்ன வேண்டும்? யானோ அரசன் யானே கள்வன் என்று சொல்லி வீழ்ந்ததால் (வீய்ந்ததால்) தானே, வளைந்த கோலைச் செங்கோல் ஆக்கினான்என்று சேர வேந்தன் செம்மையின் ஆணி செங்குட்டுவன் கூறினான். மாச்சல்: சோம்பல் என்பது பொதுச்சொல். மடி என்பது இலக்கியச் சொல். இவற்றின் சோர்வுப் பொருளை மாச்சல் என்பது திருமங்கல வட்டார வழக்கு. மாய்ச்சல் > மாச்சல். மாய்ந்து போனதாம் நிலை. எனக்கு அவனைப் பார்க்க மாச்சலாக இருக்கிறது என்று அச்சப் பொருளில் வழங்குதல் முகவை வழக்கு. மாட கூடம்: மாடம் = தளத்தின் மேல் தளம் அமைத்த கட்டடம். கூடம் = மாடத்தின் மேல் அமைந்த கூண்டுக் கட்டடம். மேல் தளம், மாடம், மாடி, மெத்து, மச்சு, தட்டு இன்னவெல்லாம் மாடங்களே! ஒன்றன் மேல் ஒன்றாய் எத்தனை தட்டுகள் அடுக்கினாலும் மாடங்களே! மாடத்தின் மேல் வளைகூடாய்ச் செய்யப்பட்டவை கூடமாம். நெடுநிலை மாடத்து இடைநிலத்து என்பது சிலம்பு (13:69). ஏராரும் மாட கூட மதுரையில் என்பது திருப்புகழ். மாடம்: மாடு = பக்கம்; மேல் (உயர) இடத்தின் கட்டடம். மாடம்; மாடி. வீட்டின் பக்கமாக அமைந்தது மாடு. வீட்டின் அடித் தளத்துப் பக்கம் அமைந்தது அது; வீட்டின் மேல்தளத்து அமைந்தது மாடி; மாடம் என்பதும் அது. ஏராரு மாடகூட மதுரைஎன்பது திருப்புகழ். மாடக்கோயில் என்பது கோயில் அமைப்புகளுள் ஒன்று. நிலமட்டத்தில் அமையாமல் நிலமட்டத்தை உயர்த்தி ஓர் உயர்தளமாக்கி அதன்மேல் எழுப்பப்பட்டது மாடக் கோயில் ஆகும். கோச் செங்கட் சோழன் ஆக்கிய கோயில்கள் பல, மாடக் கோயில்களாம். மாடு: மாடு என்பது பக்கம் எனும் பொருளது. தலைமாட்டில் விளக்கை வைக்காதேஎன்பர். கால்மாட்டிலா தலை வைப்பது என்பர். கால்மாட்டுப் பக்கம், தலைமாட்டுப் பக்கம் என்றும் கூறுவர். மாடு நின்ற மணிமலர்ச் சோலைஎன்பார் கம்பர் (சுந்தர. 330). மாடு என்பதற்குப் பக்கம் என்னும் பொருள் எப்படி ஏற்பட்டது. மாந்தர் வாழ வீடு கட்டினர்; அதனோடு இணைத்து மாடு கட்டினர். வீட்டின் பக்கம் மாடு கட்டியதால் அவ்விடம் மாடு எனப்பட்டது. மாடு, பால்வளம், உணவு வளம், உரவளம், பொருள் வளம் எனத் தருதலால் செல்வம் எனப்பட்டது. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை என்பது வள்ளுவம் (திருக். 400). செல்வத்தில் சிறந்த செல்வம் பொன் ஆதலால், மாடைஎன்பது பொன் எனப்பட்டது. ஒருமாட்டு வளத்தால் ஏழு மாடு வாங்கிய சிறப்பை முல்லைக்கலி கூறுகிறது. வளம் தரும் வண்மை யமைந்தது மாடு. அது மாந்தர்க்கு வேண்டும் தவசம் பயறு வகைகளைத் தந்து மாந்தர் உண்ணப் பயன்படாத வைக்கோல், தட்டை, தாள், பொட்டு, கொடி, இலை, தவிடு என்பவற்றைத் தின்கிறது. பால் ஒன்றால் ஆனைந்து (பால், தயிர், மோர், வெண்ணெய், நெய்) தருகின்றது. அதனால் அம் மாட்டைத் தெய்வமாக மதித்துத் தொழுதான். மாடு நிற்குமிடத்திற்குத் தொழு, தொழுவம் எனப் பெயரிட்டான். மேலும் பசுமாட்டை அம்மை என்றும், காளை மாட்டை அப்பன் என்றும் கொண்டான். அப்பன் வழிபாடு சிவனியமாய், அம்மை வழிபாடு மாலியமாய் வளர்ந்தது. பசு (அ) ஆன், உயிர் என்பதன் அடையாளம் ஆயிற்று. அரியே அம்மை என்பதை, அரியலால் தேவி யில்லை ஐயன் ஐயாறனார்க்கே என்றார் அப்பரடிகள் (தேவா.). மாடை: மாற்றுயர்ந்த பொன்னை மாடைப் பொன்என்பது வழக்கு. செல்வத்தில் சிறந்ததாக விளங்கியது பொன். மாடு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உண்டாகிய பின், அச்செல்வத்தில் சிறந்த மாற்றுக் குறையாப் பொன் மாடைஎனப்பட்டது. பொன்போல் விளங்கும் நென்மணிகளைப் பெருக்கும் பொன்னியாற்றை, புனல்பரந்து பொன்கொழிக்கும்என்றார் கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பட். 7). மதுரைக்கு மேல்பால் அமைந்ததொரு குளம், மாடைக் குளம்; ஊர்ப்பெயர், பொன்மேனி. மாட்சி: மா > மாண் > மாட்சி. மாட்சி பெருமை, பெருமையமைந்தது. பாய லின்துணை யாகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீயல துளரோஎன் நெஞ்சமர்ந் தோரே - ஐங். 293 மாட்டிவிடல்: மாட்டிவிடல் = சிக்கலுண்டாக்கல். ஒரு கொக்கியை மற்றொரு கொக்கியில் அல்லது மாட்டியில் மாட்டி விடுவது மாட்டல் ஆகும். மாட்டு எனச் சொல்லப்படும் இலக்கணம் பொருந்திய வகையால் தொடரை இணைத்தலாம். இது, மாட்டிவிடக் கூடாத வகையில் மாட்டி விட்டுச் சிக்கலுக்கு ஆளாக்கி அதனால் மகிழ்வதில் விருப்ப முடையவர் செய்யும் சிறு செயலாகும். இணைத்து விடுதல், இசைத்து விடுதல் என்பவற்றுக்கு எதிரிடையானது மாட்டிவிடுதல். சொல்லால் அவ்வெதிரிடை வெளிப்படுவ தில்லை யாயினும் குறிப்புப் பொருளால் வெளிப்படுவதாம். மாட்டு: மாட்டு:1 அணிகலங்களின் பூட்டுவாய். மாட்டு:2 செய்யுளில் சொற்கள் இடையீடு பட்டுத் தொலைவில் நின்றாலும் அடுத்து நின்றாலும் சொல் முடிபு நோக்கிக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளும் முறை. அகன்று பொருள்கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருள்முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின் - தொல். 1467 முட்டாச் சிறப்பில் பட்டினம் பெறினும் வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே - பட்டினப். 218-220 என நின்றது பின்னர், வேலினும் வெய்ய கானமவன் கோலினும் தண்ணிய தடமென் தோளே - பட்டினப். 299-300 எனச் சேய்த்தாகச் சென்று பொருள் கோடலின் அஃது அகன்று பொருள் கிடப்பினும் இயன்று பொருள் முடியத் தந்து உரைத்ததாம். திறந்திடுமின் தீயவை பிற்காண்டும் மாதர் இறந்து படிற்பெரிதாம் ஏதம் - உறந்தையர்கோன் தண்ணார மார்பிற் றமிழர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு - முத்தொள். 42 என்பது அணுகிய நிலை எனப்படும். கதவு திறந்திடுமின் மாட்டுக்கால் விடல்: பிணையல் என்றும் சூடடிப்பு என்றும் வழங்கும் பொதுவழக்கு, திருப்பரங்குன்ற வட்டாரத்தில் மாட்டுக்கால் விடல் என வழங்குகின்றது. நெற்கதிர் அடித்த தாளை வட்டமாகப் பரப்பி அதிலிருக்கும் மணியை எடுப்பதற்காக மாடுகட்டிப் போரடிப்பதே மாட்டுக்கால் விடல் எனப்படுகின்றதாம். மாணகன்: மாண் + அகன் = மாணகன் > மாணவன். மாண்புகள் பலவும் அகத்தே உடையான். மாணி என்பானும் அவன். மாண்பினை யுடையான் அவன். மாணாக்கன் என்பான் மாண்பானவை ஆக்குவான்; மாண்பானவை சொல்லும் நாவுடையான். மாண்பின் அடிப்படையில் வந்த சொற்களே இவையெல்லாம். மாணவி என்னும் பெண்பால் பெயரும் மாணவர் என்னும் பலர்பாற் பெயரும் அன்னவே ஆம். மாணவப் பருவத்தனாம் மாணி பொறிபுலன் அடக்கத்தினன். காதற் கருத்து இல்லாமல் கல்விக் கருத்தில் ஒன்றியவன். அப் பருவம் முழுதுறு கல்விக்கே என்று கண்ட ஒருமுகக் கல்வியன். பணிவு மீக்கூர்ந்தான். அம் மாணியை இசைக்கு அடங்கும் மதயானைக்கு ஒப்பாகக் கூறுவார் கொங்கு வேளிர். ஆணை ஆசாற்கு அடியுறை செய்யும் மாணி போல மதக்களிறு படிய - பெருங். 2:9:58-59 என்பார். வசைஇல் மாணகர் - பெருங். 1:5 முன்னுற நின்று மூதறி செவிலிநும் மகண்மா ணாக்கி வணங்குநும் மென - பெருங். 1:37:109-110 மாணாக்கன்: மாண் + ஆக்கன் = மாணாக்கன். மாண் + நாக்கன் = மாணாக்கன். அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் - குறுந். 33 பொருள்: கல்வியைச் சிறப்பிக்க இளமாணாக்கன் என்றாள்குறிப். உ.வே.சா. * மாணகன்காண்க. மாணி: மாணி என்னும் சொல் கற்கும் பருவத்ததாம் மாணவ நிலையைக் குறிப்பது. வேறு கடப்பாடு இன்றிக் கல்விக் கடப்பாட்டிலே ஊன்றிக் கட்டமை ஒழுக்கம் போற்றத் தக்க பருவம் மாணிப் பருவமாம். மாணி என்பது மாணகன் மாணவன் மாணாக்கன் எனப் பல வடிவுகள் கொண்டது. ஆணை ஆசாற்கு அடியுறை செய்யும் மாணி போல மதக்களிறு படிய என்பது பெருங்கதை (2:9:58-59). மாண்பு: மாண் > மாண்பு = பெருமை, அழகு. மாண் என்பதும் இது. மா என்னும் உரிச்சொல் வழிவந்த சொல் மாண்பு. அது, மாஅழகாதல் போல, அழகு சுட்டும் சொல்லாயிற்று. மையீ ரோதிக்கு மாண்புற அணிந்து - சிலப். 6:108 புனைமாண் எஃகம் வலவயின் ஏந்திச் செலன்மாண் புற்ற நும்வயின் - அகம். 215 மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல் வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டனன்கொல் - ஐங். 90 மாதம்: மதி வளர்வதும் தேய்வதுமாம் கால அளவையை மாதம் எனப் பெயரிட்டனர். முழு ஒளி நாளும், முழு இருள்நாளும் ஆக30 நாள்கள் மதியின் வளர்தல் தேய்தல் கொண்டு கணக் கிடப்பட்டதாம். மதியொளியால் அதனைத் திங்கள் - திகழ்வது - என்றனர். அம்முறையில் அத் திங்கள் தேய்தல் வளர்தல் கால அளவால் திங்கள் எனவும் பெற்றது. மாதப் பெயர்கள் பொழுது பெரும்பொழுது எனவும், சிறுபொழுது எனவும் பிரிக்கப்பட்டிருந்தது. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பன பெரும்பொழுது. மாலை, யாமம், விடியல், காலை, நண்பகல், எற்பாடு என்பன சிறுபொழுது. நாழிகை,நாள், வாரம், திங்கள், பருவம், ஆண்டு முதலிய பிரிவுகளைத் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிந்திருந்தனர். கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப் பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியில் இருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத்தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும், கார்காலம். ஐப்பசியும் கார்த்திகையும், கூதிர்காலம். மார்கழியும் தையும், முன்பனிக்காலம். மாசியும் பங்குனியும், பின்பனிக்காலம். சித்திரையும் வைகாசியும், இளவேனிற் காலம். ஆனியும் ஆடியும், முதுவேனிற்காலம். இவ்வாறு காலங்கள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டு வந்தன. பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியில் இருந்தன (பேரா.சி.இலக்குவனார் தொல்காப்பிய ஆராய்ச்சி பக். 136, 137). இந்நாளில் தைத்திங்களை ஆண்டுப் பிறப்பாக்க வேண்டும் என்னும் தமிழுணர்வாளர் நெடிய ஆய்வுக் கருத்தை ஏற்றுத் தமிழ்நாட்டு அரசும் தைத்திங்களே தமிழாண்டுப் பிறப்பு என்று ஆணைப்படுத்தியுள்ளது. பாவாணர் தை முதலிய பன்னிரு மாதங்களையும் முறையே சுறவம் (தை), கும்பம் (மாசி), மீனம் (பங்குனி), மேழம் (சித்திரை), விடை (வைகாசி), ஆடவை (ஆனி), கடகம் (ஆடி), மடங்கல் (ஆவணி), கன்னி (புரட்டாசி), துலை (ஐப்பசி), நளி (கார்த்திகை), சிலை (மார்கழி) என்றாக்கி உலகத் தமிழ்க் கழகத்தின் வழியே ஆட்சிக்குக் கொணர்ந்தார். மகரத்தின் பெயர் மானே கலை சுறா மகரப் பெயரே சுறவம் கும்பத்தின் பெயர் குடமே சாடி பெயரே கும்பம் கும்பம் மீனத்தின் பெயர் மீனே மீனம் பலபெயர் பெறுமே மீனம் மேடத்தின் பெயர் வருடை உதள்தகர் மறிமை கொறியென விரியும் ஆட்டின்பெயர் மேட விராசி மேழம் இடபத்தின் பெயர் பாறல் புல்லம் பாண்டில் பசுமூரி ஏறுமுதல் வந்தன இடப விராசி விடை மிதுனத்தின் பெயர் பாடவை ஆடவை இரட்டை சயமகள் மேவும்யாழ்ப் பல்பெயர் தண்டே மிதுனம் ஆடவை கர்க்கடகத்தின் பெயர் அலவன் நள்ளி குளிர்ஞெண்டு ஆர்மதி கள்வன் என்றிவை கர்க்கடகப் பெயரே கடகம் சிங்கத்தின் பெயர் அரிமை புரவி ஐயா னனம்யாளி தெரியிற் புலிசீயப் பல்பெயர் சிங்கம் மடங்கல் கன்னியின் பெயர் பெண்மையின் பெயரே கன்னிக்கு மாகும் கன்னி துலாத்தின் பெயர் நிறையே கட்டளை வாணிகன் நிறுப்பான் துலையே கோலெனத் துலாப்பெயர் பெறுமே துலை விருச்சிகத்தின் பெயர் தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம் அலம்என் பெயரும் தேளின் மேற்றே நளி தனுவின் பெயர் சாபம் காண்டீபம் தனுவின் பெயரே சிலை மகரத்தின் பெயர் என்பது முதலாகிய பன்னிரு நூற்பாக் களும், திவாகர நிகண்டில் உள்ளவை. அப் பெயர்களின் - பக்கல் இடம்பெறும் சொற்கள் பாவாணர் வழங்கியவை. இவை பன்னிரண்டுள் மடங்கலும், நளியும், சிலையும் திவாகரம் கூறாதவை என்பது விளங்கும். சிங்கத்தின் பெயர் ஆளி மடங்கல் அரிகண் டீரவம் கேசரி மிருக பதிவயப் போத்து சீயம் வயப்புலி பஞ்சான னம்வயமா மேவிய சிங்கம் எனவிளம் பினரே - திவாகரம் விருச்சிகத்தின் பெயர் தெறுக்கால் விருச்சிகம் நளிவிடம் தேளே - பிங். 2539 நளியே துட்டன் விடமுள் என்பதுமாம் - பிங். 2540 தனுவின் பெயர் வில்மலை ஓர்மரம் சிராவண மும்சிலை - பிங். 3528 திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும் - சிலப். 8:74 அப்பும் புதையும் அணிவரிச் சிலையும் - பெருங். 1:52:16 சிலைத்தார் அகலம் - புறம். 61 வணங்குசிலை - பதிற். 43 நிகண்டில் காணப் பெற்ற சிலைபழஞ்சொல்லே; பிற்காலச் சொல்லன்று - என்பதற்காகப் பழநூற் சான்றுகள் காட்டப் பட்டனவாம். இவற்றால் புதையலை அகழ்ந்து பொருந்தும் சொற்களைப் பொலிவாகச் சூட்டியவர் பாவாணர் என்பதை அன்றி, அவரே புதுவதாய்ப் படைத்தவை அல்ல என்பதை உணர்த்துமாறே இவை விரித்துரைக்கப்பட்டனவாம். இனிப், பேரா. இலக்குவனார் கூறுமாறு விண்ணியலை மண்ணில் இருந்து கொண்டே கணிக்க வல்ல கணியர் - முதுகண்ணர் - என்பார் தம்கண் காண இருந்தமையால்தான், ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து என்று வள்ளுவரும் (திருக். 353), செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரி தருதிசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இனைத்தென் போரும் உளரே - புறம். 30 என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனாரும் பாடியதை அறிவோர், மாதப்பெயர் அறியாதிருந்தார் என்றோ பெயர் சூட்டாதிருந்தோர் என்றோ ஐயுறார். தமிழர் வழங்கிய பெயர்களைப் பெயர்த்துக் கொண்டு அப் பெயர்களைக் காட்டி, அவற்றின் பெயர்ப்பே தமிழ்மாதப் பெயர் என்றது, உண்மை காண்பார்க்கு விளங்காமல் போகாது. சித்திரை முதலாகிய மாதங்கள், எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் தொல்லாசான் ஆணை முறையில், இவ்வாறு இருக்கக் கூடும்என எண்ணியது இது. இதனினும் தக்க பொருந்துதல் உண்டாயின் அதனைக் கொள்ளல் தமிழ் வளமேயாம். தை: தைத்தல் என்னும் ஏவல், உறைதல் (பிறைதைத்தல்), தாளக்கட்டு ஒலி, இளைப்பு, தைத்திங்கள் என்னும் பொருள்தரும் ஓரெழுத்து ஒருமொழி. தைப்பனி தரையைப் பிளக்கும் என்பது பழமொழி. தைஇத் தண்கயம்என்பது பெரு வழக்கு. தையல் ஊசியால் குத்துவது போல் மயிர்க்கால்தொறும் பனிக்குளிர் புகுந்து வாட்டும் காலம் தைஎனப்பட்டது. இரவு, குளிரும் நீர்த்தண்மையும் உடைய காலம் எனினும், காட்டுவளம் எல்லாம் வீட்டு வளமாகும் காலம் அஃது ஆதலால், தைப் பிறந்தால் வழிபிறக்கும்என்னும் பழமொழி பிறந்தது. அன்றியும் கதிரோனின் தென்செலவு நிறைவுற்று வடசெலவு கொள்ளும் நலக்காலத் தொடக்கமும் ஆயிற்று. இவற்றால் மக்கள் உள்ளம் மகிழ்ந்து பொங்கிப் பொங்கல் விழா எடுக்கும் காலமும் ஆயிற்று. மார்கழிப் பீடை நீங்கித் தைப்பிறப்பு மகிழ்வாயிற்று. மாசி: மாசிப்பனி மச்சைப் பிளக்கும் என்பது பழமொழி. பனிமூட்டம் பக்கமெல்லாம் மூடியது போலத் தோன்றும். விண்வெளியையும் மண்வெளியையும் மூடிய தோற்றம் மாசு ஆயிற்று. கண்ணில் மாசு படிதல் பார்வைக் குறைவைச் சுட்டும் அல்லவோ! பகல்நீ டாகாது இரவுப் பொழுது பெருகி மாசி நின்ற மாகூர் திங்கள் பனிச்சுரம் படரும் என்பது பதிற்றுப்பத்து (59). பொருள்: பகற்பொழுது மிகாமல் இரவுப் பொழுது மிக்குப் பெருகி நின்ற விலங்குகள் குளிர்மிக்கு வருந்தும் மாசித் திங்களிலே பனிமிக்க வழியிலே செல்லும் முன்பனியின் பிற்பாதியும் பின்பனியின் முற்பாதியும் ஆகிய தையும் மாசியும் ஆகிய திங்களே பனிமிக்குக் குளிரால் உயிர்களை வருத்தும் காலமாதலால், தையும் மாசியும் வையகத் துறங்குஎன்பது பற்றி மாசித் திங்கள் சிறப்பித்தோதப்பட்டது என்று விளக்குவார் ஔவை சு.து. வையகம் = வை + அகம்; வைக்கோல் வேய்ந்த வீடு. பங்குனி: பங்குனி உயர் அழுவம்பங்குனித் திங்களின் உச்சமாம் உத்தரம் (புறம். 229). பங்குனி முயக்கம்பங்குனி விழா (அகம். 137). உறையூர்ப் பங்குனி உத்தர விழா - இறைய. 16 பங்கு - பங்குனி - (பரிபா. 11). கரியவன் புகையினும் தூமம் தோன்றினும் - சிலப். 10:102 பங்குனி மாதம் பகல்வெளி நடந்த பாவம்சாவிப்பு. - (ம.வ.) பல்கதிர் வெய்யோன் வாட்டல் மிக்கதால், பல்குனி, பங்குனி ஆகியிருக்கலாம்; பற்குனி என்பது உத்தரநாள்; பங்குனி. உ + தரம் = உத்தரம். வெப்பத்தின் உச்சம். சித்திரை: திரையாவது அலை. நீரலை, காற்றலை, வெப்பலை என அலை பல. சில் + திரை = சிற்றிரை > சித்திரையாய் அமைந் திருக்கலாம். சிற்றம்பலம் - சித்தம்பலம் என்றும் சிதம்பரம் என்றும் ஆகவில்லையா? சித்திரைத் திங்களில் எரிநாள்(அக்கினி நட்சத்திரம்) உண்டு. அவை முன்னேழு பின்னேழு எனப் பதினான்கு நாள்கள் வாட்டி வதைக்கும். கதிர் வாட்டுதலால் கதிரியாய்க் கத்திரிஎன இந்நாள் வழங்குகிறது. கதிரியின் வெப்பலை உடைமையால் பெற்ற பெயர் சித்திரை ஆகலாம். பங்குனி சித்திரை மாதம் பகல்வழி நடந்த பாவத்தில் போவேனாகவும்என்பது முன்னாள் ஆவண வரைவுச் சொல். சித்திரைத் திங்கள் - சிலப். 5:64 வைகாசி: கடு வெப்பு, கடுங்குளிர், கடுமழை என்பவை இல்லாமல், இயற்கை இயல்பு வாழ்வுக்குத் துணையாகும் பொற்காலம் வைகாசி ஆனி ஆகிய மாதங்களாம். வைத்திருக்கும் காசுஅனையது வைகாசி. காசு என்பது (காய்ச்சு) பொன்னால் செய்யப்பட்டது. வை = பொதிந்து வைத்திருத்தல். * காசுவைகாண்க. இருதிள வேனிலில் எரிகதிர் இடபத்து ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்றபின் மீனத் திடைநிலை மீனத் தகவையில் போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் - மணிமே. 11:40-43 எரிகதிர் இடபம் = கதிர் மிகுவெப்பம் செய்யும் வைகாசிஇஃது இளவேனில் காலம். ஆனி: ஆனுதல் ஊன்றுதல்; ஆனித் தூக்குஎன்பது வழக்கு. ஒருவர் ஒரு சுமையைத் தாமே தூக்க முடியா நிலையில் மற்றும் ஒருவர் துணையால் தூக்கித் தலையிலோ தோளிலோ ஏற்றிக் கொள்ளல் வழக்கு. உடன் தூக்குவார் அழுந்தப் பற்றித் தூக்காமல் இருந்தால் சுமை நேராக எழாமல் அவர் பக்கம் தாழும். மேலே ஏறாது. அந்நிலையில் ஆனித் தூக்கு என்பர். முன்னே அமைந்த வைகாசியின் இயற்கை நலம் அவ்வாறே தொடர்ந்து ஊன்றி நிற்றல் ஆனியாம். ஆனுதல் பொருந்துதல். ஆவிற்கு அமைந்த இரு கோடு போல என்பது இணைப்பொருளது. வைகாசி போன்றது ஆனி என்க. ஆடி: காற்று மிக்க பருவம் ஆடி; ஆடாத நிலைத் திணைகள் எல்லாம் வேரொடு பறியுண்டு சாயப் பேயறை அறையும் காற்றுக்காலம் அது. மலையையும் புரட்டும் மா வலி யுடையது காற்று. அம்மி பறக்கும் ஆடிக் காற்றில் எச்சில் இலை எம்மாத்திரம் என்பது பழமொழி. ஆடுதலால் ஆட்டி வைக்கும் கடுங்காற்றுக் காலம் ஆடியாம்! ஆடுதலால் பெற்றதும். வெற்றிப் பொருளதும் ஆகியது ஆடு. ஆடிப்பட்டம் தேடிவிதை என்பது மண்ணின் ஈரப்பதம் அறவே அற்றுப்போய்த் தொடிப் புழுதி கஃசா உணங்கக்கதிரொடு காற்றும் துணையாம் நிலை கருதுக. காற்றாடுதல் உலரப் போடலாம். காற்று மிக்க காலம் ஆடியாம். ஆடித் திங்கள் அசுவையின் -சிலப். உரைபெறு. ஆவணி: நிகழும் ஆண்டின் விளைவு, உடல்நலம், ஊறுபாடு ஆகியவை எவ்வாறாம் என்பதை முந்துறக் கணிபோல் காட்டும் திங்கள் ஆவணித் திங்களாம். ஆவணம் - (ஆ + வணம்) ஆகின்ற வகை; ஆகின்ற வகையை அறியக் காட்டும் திங்கள் ஆவணித் திங்களாம். ஆவணம் ஆவண்ணம் என்பதன் தொகுத்தல். ஆவணம் காட்டி என்பது திருவாசகம். ஆட்சி காட்சி ஆவணம்என்பது பெரியபுராணம். ஆவணக்களரி என்பது சோழர் காலச் செப்பேடு ஓலை முரிக்காப்பகம். ஆவணி முதல் ஆடி ஈறாகிய கால அளவே நில ஒத்தியும் வேலையாள் ஒப்பந்தமும் நிகழல் எண்ணத்தக்கவை. நில ஆவணப் பதிவுக் காலமும் அது. புரட்டாசி: பூரட்டாதி எனவும் படும். பூரட்டம் மாறுபாடு. அதன் குறுக்கம் புரட்டம்; மாறுபாடு செய்யும் காலம். மக்கள், புரட்டாசியை வறட்டாசி என்பர். வேலை வாய்ப்பு வருவாய் வாய்ப்பு அற்ற வறட்சிக் காலம் அது. ஆதலால், செய்யாதன செய்யவும், படாதன படவும் ஆக்கும் காலம் பூரட்டாசி (புரட்டாசி) ஆகியது. உருட்டு, புரட்டு, புரட்டல், புரளல், புரட்சி என்பவை எல்லாம் மாற்றங்களாம். அப்புரட்டாசியைத் தாண்டிவிட்டால், நோய்நொடி நீங்கும்; பயிர் பச்சை துலங்கும்; நீர்நிலை சுரக்கும் என்பவை மக்கள் எதிர்பார்ப்பாம். அதற்கு ஏற்ப அமைவது ஐப்பசியாதல் காண்க. ஐப்பசி: ஐ = அழகு; பசி = பசுமை யமைந்தது. ஐப்பசி கார்த்திகை அடைமழை என்பது பழமொழி. மழை பெய்யத் தொடங்கியதும் மண் குளிர்ந்து, மறைந்தும் காய்ந்தும் கரிந்தும் கிடந்த புல்லும் செடியும் கொடியும் பசுமை பூத்து, நிலமகளுக்கு அழகிய பச்சைப் போர்வை போர்த்தும் காலம் ஐப்பசியாம். ஐப்பசியின் தொடர்ச்சி மழைக்காலம், கார்த்திகையாகும். அது கார்காலத் தொடக்கம், அதன் தொடக்கம் பசுமைக் கோலமாம் ஐப்பசி. ஐ = அழகுப் பொருளது. பசுமையின் அழகு பச்சைமா மலையை, பசுங்காட்டை, பசிய வயலை, பசிய புற்றரையைப் பார்த்த பார்வையில் பசி போகாதா? அவற்றின் விளைவுகள் தாமே பசிக்கு உணவாகி - உணர்வாகி -ச் சிறக்கும் உயிர்ம்மை! கார்த்திகை: முல்லைக்குரிய பெரும் பொழுது சிறுபொழுதுகளைக், காரும் மாலையும் முல்லை என்பார் தொல்காப்பியர் (தொல். 952). விண்ணில் இருந்து கார் பொழிதலைக் கொண்டே மண்ணக வாழ்வு இருப்பதால் கார்காலம்முற்படக் கூறப்படுவதாயிற்று. கார்வான், கார்மழை, கார்ப்பெயல், கார்நாள், கார்த்திகை என்பவை பழந்தமிழ்ச் சொற்களாயின. கார்கால வருகை அறிவிப்பு கார்த்திகை ஆயிற்று. காலப்பயிர் கோடைப்பயிர் என்பவை ஆடை, கோடை என வழங்கும். காலம் என்னும் பொதுக்குறியீடு கார்காலத்தையே குறிக்கும். தாமரை என்பது செந்தாமரை என்பதே போல. மார்கழி: மாரி = மழை. மாரித்துளி, மாரிநடுநாள், மாரிநாள், மாரிமாமழை, மாரியிரவு என்பவை பழஞ்சொற்கள். மாரி பெய்து கழிகின்ற காலம் மார்கழி ஆயிற்று. மார் > மாரி. இகர ஈறு பெற்றது. ஓர் > ஓரி, ஈர் > ஈரி என்பவை போல. கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப் பனிப்படு பைதல் விதலைப் பருவத்து ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் என்பது பரிபா (11). பொருள்: கறுத்த மேகங்கள் இடிக்கும் குரல் நீங்கப் பனி மிகுதலால் குளிரால் நடுங்குதலையுடைய முன்பனிப் பருவத்தில் கதிர் வெப்பம் தாங்காத மார்கழி மாதத்திலே நிறைமதிநாள். இருது: இரு > இருது = ஒருபருவம்; இரண்டு திங்கள் அளவு. இரண்டு மாதங்கள் இயைந்த ஒரு பருவம் இருது எனப்படும். இருதிள வேனில் - மணிமே. 11:40 பன்னிரண்டு மாதங்களுள் ஆவணி முதலிய இரண்டி ரண்டு மாதங்கள் இருது எனவும் பெரும் பொழுது எனவும் பருவம் எனவும் கூறப்படும். அவை முறையே கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என ஆறு வகையாம்குறிப்புரை உ.வே.சா. மாதர்: மா = அழகு. மா > மாது = அழகு, (அழகுள்ள) பெண், (பெண்மேற் கொள்ளும்) காதல். மாது > மாதர் = அழகு, பெண், காதல். மணந்த பெண்டிரெல்லாரும் பெரும்பாலும் பின்னர்த் தாய்மாராதலாலும், பெண் தெய்வக் கருத்தில் தாய்மைக் கருத்துங் கலந்திருப்பதனாலும், மகள் என்னும் சொல் தாயையுங் குறித்தலாலும், மாதர் எனும் சொல் ஆரிய மொழிகளில் தாய்ப்பொருள் பெறலாயிற்று. (தி.ம:752) விருப்புக்கு உரியவர் மாதர். மாதர் காதல்என்பது தொல்காப்பியம். மாதர் அழகால் விருப்புக்கும், பண்பால் வழிபாட்டுக்கும் உரிமை பூண்டவர். தாய்மையும் இறைமையும் தங்கிய வடிவு மாதர் ஆகலின் அழகுகுறித்த சொல்லாயிற்றாம். அன்பே உயிர்நிலையாய பெண்மை, பேணும் திறத்தாலும் அன்பின் பெருக்காலும், உயிரும் ஈயும் ஈகத்தாலும் மாதர் எனப்பட்டனராம். முழுதுறும் அன்பு மாதர்க்குரிய பெயர், பின்னர்ப் பொதுமைப் பெயர் கொள்ளலாயிற்று. மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி என்னும் குறள் (1118) முழுதுறு விளக்கமாம். மாதினியார்: மாது + இனியார் = மாதினியார். அண்ணனை மணந்த அண்ணியார் மாதினியார் எனப்படு வார். அண்ணன் பின் பிறந்த தம்பியர், தங்கையர்க்கும் அம்முறை யுடைய பிறர்க்கும், அண்ணியார் மாதினியார்எனவும் படுவார். அது, வழுவாய் இந்நாளில் மதினியார்என வழங்கப்படுகிறது. மாதினியார் சொல்வழிப் பட்டனையோ - தமிழக ஒழுகு 1677 மாதீண்டு துறுகல்: மா தீண்டு துறுகல் = மாடு முதலாம் விலங்கு உடலைத் தேய்க்கும் வகையில் துறுத்தி நின்ற கல். ஆதீண்டு குற்றி, ஆவுரிஞ்சு குற்றி என்பவை போல இயற்கையாகப் பாறையில் அமைந்த கல். குறவர் முன்றில் மாதீண்டு துறுகல் - ஐங்குறு. 277 மாத்தம்: அவன் என்னோடு எதிராடுகிறான். எனக்கு அவன் எம்மாத்திரம் என்பது ம.வ. மாத்திரம் அளவுப் பொருளது. மாத்திரை என்பதும் அளவுப் பொருளதே. எழுத்துகளின் ஒலி அளவை மாத்திரைக் கணக்கில் அளந்தனர். குறில் ஒரு மாத்திரை; நெடில் இரண்டு மாத்திரை மெய் அரை மாத்திரை - இன்னவாறு கணக்கிட்டனர். நீட்டல் அளவைப் பெயராக வந்த மீட்டர் என்பதற்கு மாத்தம்என்ற அளவைப் பெயரைத் தந்தார் பாவாணர். மாத்திரை: மா > மாத்து > மாத்திரை = கால அளவையும்; இட அளவையும். மா = அளவைப் பெயர்; 20 மா = 1. காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே மாநிறை வில்லதும் பன்னாட் காகும் - புறம். 184 பொருள்: ஒரு மாவிற்குக் குறைந்த நிலம்ப.உ. மாத்திரை என்னும் கால அளவையை, உன்னல் காலே ஊன்றல் அரையே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே என்று நொடியளவைப் பகுத்தனர். இது கண்ணிமை உன்னல், ஊன்றல், அழுத்தல், விழித்தல் என்பனவொடு இரட்டுறலு மாகும். கைந்நொடி யளவும், கண்ணிமை அளவும் மாத்திரை என்றாராகலின். மாந்தர்: மாந்துதலை உடையார் மாந்தர். எதுவாயினும் உண்ணாமல் பருகாமல் நுகராமல் தக்கதாக இருந்தால் மட்டுமே தமக்குரியதாய் இருந்தால் மட்டுமே தம் உணர்வுக்கு ஒவ்வுவதாய் அமைந்தால் மட்டுமே மாந்தும் மேன்மை யுடைய மன அறிவுப் பிறப்பினர் மாந்தர் எனப்பட்டார். மாந்தர்க்குரிய தனிப் பேரடையாளம், மாந்தரை மாந்தராக மதித்துத் தம்மொத்த நிலையில் போற்றிக் கொள்ளலே ஆகும். மாந்தரை மாந்தராக மதியார் மாந்தப் பிறவியர் ஆகார், எவ்வளவு உயர் பதவியர், செல்வர், அறிவர் எனினும், கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ்வென - குறுந். 247 மாந்துதல்: மாந்துதல் = தேக்கெறியு மாறும், புளிப்பு ஏப்பம் வருமாறும் நிரம்ப உண்ணுதல்; குடித்தலுமாம் (பிங். 2000). உண்டு செரியாமல் அல்லது தொக்கமாய் இருத்தலை எடுத்தல் மாந்தம் எடுத்தல்எனப் பெறும். மாந்தித் துயின்றது தானை யெல்லாம் - கம்ப. உயுத். 4229 மாமை: மாந்தளிர் போலும் நிறம் மாமை. பச்சைப் பசேல் எனத் திகழும் மாமரத்தின் கிளை நுனிதோறும் செம்பசுமை அல்லது பொன் பசுமை திகழும் தளிர்கள் அரும்பி அசையும் காட்சி, மரம் முழுவதையும் விலக்கித் தன் மாட்டே காண்பாரை வயப்படுத்துதல் கண்கூடு. ஆகலின் மாமை அழகு ஆயிற்றாம். மாம்மை: மாமாவின் அம்மையை மாம்மைஎன்பது விருதுநகர் வட்டார வழக்கு. மாமா அம்மை மாம்மைஎனத் தொகுத்து நின்றது. அப்பாவின் அப்பா அப்பப்பா என்றும், அம்மாவின் அம்மா அம்மம்மாள் என்றும் வழங்குவது போன்றது இது. மாயை: மாயும் தன்மையும் மறையும் தன்மையும் மாயையாம். மாயம் என்பதும் இது. மாயையின் ஒளித்த மணிமேகலை - மணிமே. 18:155 மாயைவிட் டிறைஞ்சினள் மணிமே கலையென் - மணிமே. 28:245 மாயோள்: மாஅயோள் > மாயோள். அழகிய கரிய நிறம். வணர்ந்தொலி கூந்தல் மாயோள் - நற். 139 பொருள்: குழன்று தாழ்ந்த கூந்தலையுடைய மாமை நிறத்தவள் மாயோன் = ஆண்பால். மணிவரை யன்ன மாஅ யோனே - புறம். 229 பொருள்: நீல மலை போலும் மாயோன்ப.உ. நீலமாவது கருநீலம், கருப்பு. மாமை நிறத்தையுடையர் மாயோள், மாயோன் என்க. முல்லை நிலத் தலைவன் மாயோன் என்பதை, மாயோன் மேய காடுறை உலகம் என்றார் தொல்காப்பியர் (தொல். 951). மாய்தல்: மாய் > மாய்தல் = மறைதல், இறத்தல், மாளல். மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே - புறம். 27 தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியா தோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் - புறம். 27 மாரடித்தல்: மாரடித்தல் = சேர்ந்து செயலாற்றல். இறந்தாரை நினைத்து மகளிர் சிலர் பலர் கூடி மாரடிப்பது நம் நாட்டில் அண்மைக் காலம் வரை இருந்த வழக்கே. மாரடித்த கூலி மடி மேலேஎன்பதும், கூலிக்கு மாரடித்தல்என்பதுவும் மாரடித்தல் நிலையை விளக்கும். ஒப்புக்காக அழும் ஒப்பாரி கூலிக்கு அன்று. மாரடிப்பு கூலிக்கு உரியது. மாரடிப்பில் ஒருவர் முன்னே பாடி மாரடிக்கப் பின்னே பலர் பின் பாட்டோடு மாரடிப்பர். அப் பின் பாட்டும் முன்பாட்டும் தொடர்பு கொண்டு முழுமையாகும். தொடர்பு அமையா மாரடி அவலத்திற்கு மாறாக நகைப்புக்கு இடமாகி விடும். அதனால், உன்னோடு மாரடிக்க முடியாது; நீ கெடுத்துவிடுவாய்என்பது வழக்கில் ஊன்றியது. மாராப்பு: மார்பு > மார் + ஆர்ப்பு = மாரார்ப்பு > மாராப்பு. ஆர்த்தல் கட்டுதல். மார்பை இறுக்கிக் கட்டும் கச்சு என்பது மாராப்பு எனப்பட்டு அதன்பின் அக்கச்சு மறையச்சீலை அணிதல் மாராப்பு எனலாயது. மாராப்புச் சேலைக்காரி என்பது eh£L¥òw¥gh£L. சீலை >nriy. கச்சு, மார்க்கட்டு எனவும் வழங்கும். மாராயம்: வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் மாராயம்என்று பாராட்டப்படும். அது, இலக்கிய வழக்கு. மாராயம் பெற்ற குடிகளின் பழம்புகழ் இன்றும் பேசப்படுகின்றது. இது செய்தி என்னும் பொருளிலும் ஊரழைப்பு என்னும் பொருளிலும் முகவை வட்டார வழக்கில் உள்ளது. மாரி: மா > மார் > மாரி = கருமை; கருமுகில்; அது பொழியும் மழை. மாரி = மழைத்தெய்வமாகக் கருதப்படும் மாரியம்மை. மாரிமூலை: மாரி = மழை. மழை மேகம் திரண்டு, பெய்யத் தொடங்கும் பக்கம் மாரி மூலை எனப்படும். அது, வடகிழக்கு மூலையாகும். அங்கே மேகம் திரண்டால் மழைவரும் என எவரும் அறிவர். உழவர் வழக்கு இது. மார்பு: மா > மார் > மார்பு. மார்பு = அகலமாக அமைந்தது. மார்பகம், அகலம் என்பனவும் அது. வல்வில் ஓரியின் மார்பு விற்பயிற்சியால் விரிந்து பரந்ததாய் இருந்ததால், ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பன்- புறம். 152 என வன்பரணரால் ஓரி பாராட்டப்படுகிறான். பொருள்: சந்தனம் பூசிப்புலர்த்திய அழகிய பரந்த மார்பினன்ப.உ. மார்பெழுத்து: மார்பு + எழுத்து = மார்பெழுத்து. இன்னாருக்கு அடிமைப்பட்டவர் என்று மார்பிலே எழுதும் எழுத்து (நாலா. திவ். அ.). மார்ப்புப் பத்து (பயோதரப்பத்து): ஆசிரிய விருத்தம் பத்தினாலாவது, கலித்துறை பத்தினாலா வது பயோதரத்தை (மார்பை)ப் புகழ்வது பயோதரப் பத்து எனப்படும் (நவநீத. 50). இதனை ஆசிரிய விருத்தத்தால் பாடுவது என்று பன்னிரு பாட்டியல் (333) பகரும். பொதுவகையில், பத்துப் பாடல்என்று இலக்கண விளக்கம் இயம்பும் (பாட். 92). பருமுலை பத்துப் பாவால் அறைவது பயோதரப் பத்தெனப் பகரப் படுமே - முத்துவீ. 1105 மாலை: மால் > மாலை. மாலை:1 முள் - முள்கு - முள்குதல் = முயங்குதல், கலத்தல். முள் - (முய்) - முய - முயங்கு - முயக்கு - முயக்கம். முயங்கு - மயங்கு - மயக்கு - மயக்கம். முய - மய. மயத்தல் = மயங்குதல், கலத்தல். மய - மயல் - மால் = மயக்கம், கலப்பு. மால் - மாலை = பூக்கள் கலந்த கோவை, பகலும் இரவுங் கலந்த வேளை. மாலை - மாலா (வ.). (â.k.:752). மாலையோ பூவின் காம்புகளை ஒரு நாரடியோடு சேர்த்துப் பிணைத்து நெருங்கத் தொடுக்கப்படுவது. (சி.த.சொ.ஆ. பக். 3). சந்தனத் தளிர்நன் மாலை ஓச்சினார் கண்ணி கண்ண முடற்றினார் - சிந்தா. 2661 மாலை:2 மாலை போல் தொடுக்கப்படுவது மாலை எனப்பட்டது. பூவால் தொடுக்கப்படுதல், பாவால் தொடுக்கப் படுதலுக்கு ஆயது. மாலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூக்களைக் கொள்ளலும் அவற்றையும் ஓர் ஒழுங்குறவும் கலைநலம் செறியவும் தொடுத்தலும் வினைத் திறத்தாலும் ஒப்புமையாம். மாலை நூல்கள் பலவகைய, இணைமணி மாலை, இரட்டை மணிமாலை, மும்மணி மாலை, நான்மணி மாலை, மாலை மாற்றுமாலை, மடக்கு மாலை, திரிபு மாலை இன்னவை. மாலையில் பெரும்பாலனவும் முதல்முடி இயைபுத் தொடையாதல், வரப்படுத்திக் கொண்டார் வரிசைப்படுத்திக் கூறுதற்கு வாய்ப்பாம். மாலை என்னும் பகுப்பின் வகுப்புகள் எண்ணற்றன. அதனை வேண்டியாங்குக் கொள்வதற்கு வாய்ப்பாகச் சிதம்பரப் பாட்டியல் வகுத்துக் கூறுகின்றது. முப்பான் நாற்பான் எழுபான் தொண்ணூறு நூறால் வெண்பா மன்னுகலித் துறையால் புகலப் பேரான் மாலையுமாம் எண்ணாலும் மருவும் பேராம் - சிதம். மர. 11 என்பது அது. மாலை பூத்தல்: திருமணம் என்பதற்குரிய வழக்குச் சொற்களும் வட்டார வழக்குச் சொற்களும் மிகப்பல. அவற்றுள் ஒன்று மாலை பூத்தல் என்பது. இது முகவை நெல்லை வழக்காகும். மாலை மாற்று மாலை: ஒரு செய்யுளை இறுதி முதலாகக் கொண்டு படிப்பினும் அச்செய்யுளே ஆவது மாலை மாற்று என்பதாம். அஃது அந்தாதியாகத் தொடர்வது மாலை மாற்று மாலையாம். இலக்கண நூல்களில் குறள் வெண்பா, வெண்பா, வஞ்சித்துறை ஆகியவை மாலை மாற்றுக்கு எடுத்துக்காட்டாய்த் தரப் பெற்றுள்ளன. பெரும்புலவர் அரசஞ் சண்முகனார் கலித் துறையில் இயற்றினார். அதனுள் மடக்கு (யமகம்), திரிபு, காதைகரப்பு முதலிய சொல்லணிகளும் அமைய 33 செய்யுட்கள் இயற்றி மாலை மாற்று மாலை எனப் பெயர் சூட்டியுள்ளார். நுண்ணுணர்வினர்க்கே அமைந்த படைப்பு இஃதாகும். திருஞான சம்பந்தர் திருப்பிரம்மபுரப் பதிகம் ஒன்றை மாலை மாற்று மாலையாகப் பாடியுள்ளார். அதற்குத் திருமாலை மாற்று என்பது பெயர். எ-டு: நீவாத மாதவா தாமோக ராகமோ தாவாத மாதவா நீ பொருள்: நீங்காத பெரிய தவத்தை யுடையாய்! மிக்க மயக்க வேட்கை கெடாது; ஆதலால் அழகிய மாதினுடைய ஆசையை நீக்குவாயாக(தண்டி. 98). மாலை வகை: கண்ணி, தார், தொங்கல், கதம்பம், படலை, தெரியல், அலங்கல், தொடலை, பிணையல், கோவை, கோதை, சிகழிகை சூட்டு, ஆரம் என்பனவாம். கண்ணி = இவ்விரு பூவாக இடைவிட்டுத் தொடுத்த மாலை. தார் = கட்டிமாலை. தொங்கல் = தொங்கல் விட்டுக் கட்டியமாலை. கதம்பம் = பலவகைப் பூக்களால் தொடுத்த மாலை. கத்திகை எனவும்படும். படலை = பச்சிலையோடு மலர் விரவித் தொடுத்த மாலை. தெரியல் = தெரிந்தெடுத்த மலராலாய மாலை. அலங்கல் = சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை. தொடலை = தொடுத்த மாலை. பிணையல் = பின்னிய மாலை. கோவை = கோத்த மாலை. கோதை = கொண்டை மாலை. சிகழிகை = தலை அல்லது உச்சி மாலை. சூட்டு = நெற்றி மாலை. ஆரம் = முத்து மாலை (சொல். 43) (தேவநே.11) மால்: மா > மால் = உயரம், உயரமான கட்டடம்; உயரமான நெடுமால். ஆனைகட்டும் மால் - ம.வ. வைக்கோலும் மால்யானை யாம் - காளமே. தனிப். திருமலை மன்னர் மால் (மகால் - ஸவ). மால்வரைச் சிலம்பு - பெரும்பாண். 330 மால் என்பதற்கு எல்லை என்னும் பொருள் நெல்லை மாவட்டத்தில் உண்டு. மால் என்பதற்குச் சந்தை என்பது பொருள் விருதுநகர் வட்டார வழக்கு. பெரிய வலையைக் குறிப்பது பரதவர் வழக்கு. மாவள்ளி: மாம்பழச் சுவையை ஊட்டும் வள்ளி மாவள்ளி. பாறை இடுக்குகளில் வருவது; மோருடன் ஊற வைத்துச் சோற்றொடும் உண்பது. நறுமணமுடையது. மாவுப்பூச்சி: மா > மாவு + பூச்சி = மாவுப்பூச்சி. அரிசி மா, கேழ்வரகுமா முதலியவையும் உழுந்துமா பாசிப் பயற்றுமா முதலியவையும் வெண்ணிறத்தவை. ஆதலால் மா ஆகிய மாவுக்கு வெண்ணிறப் பொருள் உண்டாயது. மாக்கூழ் போல் வெண்ணிறத்ததாகக் கப்பிக் கிடக்கும் செடி கொடி மரநோய் மாவுப்பூச்சி என வழங்குகிறது. வெப்பத்தில் உண்டாகி மழைப்பொழிவால் கரைந்து போவது அப் பூச்சியாம். மழைபெய்தது மாப்பூச்சி அகன்றது என்பது ம.வ. மாழை: மாழ் + ஐ = மாழை. மாழ் = மயக்கம். ஒன்றனோடு ஒன்றாகப் பல செறிதல் மயக்கம் ஆகும். நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்என்பது தொல்காப்பியம் (1589). இம்மயக்கத்தால் அமைந்த வளப் பொருள்களை மாழை என்றனர். மயக்கத்தால் அமைந்த மாழையே, உலகை மயக்கத்தில் ஆழ்த்தி வருதல் அறிவியல் வளர வளர மிகத் தெளிவாகின்றது. தங்கம் பவுன் விலை உருவா 20 ஆயிரத்திற்கு மேல்! பொதுவில் உலோகப் பொருள்தரும் மாழை, சிறப்பாகப் பொன்னைச் சுட்டும். இனி, மாழை மான்மட நோக்கிஎனச் சுண்டியிழுக்கும் கவர்ச்சியும் மாழைக்கு உண்டு. ஆகலின் மாழைக்கு அழகு என்னும் பொருள் உண்டாயிற்று. மாழ்கல்: மாழ் > மாழ்கல் = மயங்குதல். மாழ்குதல் என்பதும் அது. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர் - திருக். 653 மாழை மடமான் பிணை - கலி. 131 இனி, மகிழ்தல் மாழ்கலுமாம். இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து - திருக். 539 மாறல்: மாறல் = ஏற்பாடு. மாறுதல் மாறலாம். இம்மாறல் அப்பொருளில் மாறி ஏற்பாட்டுப் பொருளில் வருகிறது. கைம்மாறல், கைம்மாற்று என்பவை வழக்கில் உள்ளவை. கைம்மாறல் வாங்க முடியாத ஒருவர். அதனை வாங்கித் தர முடிந்தவரிடம் உங்கள் மாறலாகவாவது கிடைக்கும் என நம்புகிறேன்என்பர். இவண் மாறல் ஏற்பாடாகும். உங்கள் மாறல் என்பது உங்கள் கைம்மாற்று ஏற்பாட்டு வகையால் என்பதை உள்ளடக்கி வருகின்ற வழக்காகும். மாறன்: மாறு + அன் = மாறன்; பாண்டியன். மாறு காட்டாதவனும் மாறு காட்டுவான்மேல் போர் தொடராதவனும் ஆகிய அறப்போராளன் மாறன் எனப்பட்டான். கைம்மாறு கருதாத மழையன்ன கொடையனும் மாறனாம். பாண்டி வேந்தனை யன்றி மாறனார், மாறன் பொறையனார் என்னும் புலவர்களும் நம்மாழ்வார் என்னும் மாறனாரும் திருமாறன் நெடுமாறன் எனப் பெயர் கொண்டாரும் பலர் ஆயினர். மாறி வருதல்: மாறிவருதல் என்பது ஒருபொருளை விற்றுவருதலைக் குறிப்பது. கைம்மாறு கைம்மாற்று என்பதும் எண்ணத்தகும். சிலம்பில் மாறிவருவன்(16:13) என வருவது இலக்கிய ஆட்சி. திருச்சி மாவட்ட வழக்கில் மாறி வருதல் விற்றுவருதல் பொருளில் வழங்குகின்றது. பொருளைக் கொடுத்து வேறொரு பொருளை மாற்றி வாங்கி வருதல் என்பதாம். மாறு காற்று: காலம் என்பது கார் காலத்தையே குறிக்கும். காற்று என்பது கிழக்கில் இருந்து நீர் கொண்டுவரும் காற்றையே குறிக்கும். அதற்கு மாறான காற்று மேல் காற்று. கோடைக் காற்று என்பதும் அது. ஆடை கோடைஎன்பதில் ஆடை கார்காலம்; கோடை, கோடை காலம். மேல்காற்றை மாறுகாற்று என்பது சீர்காழி வட்டார வழக்காகும். மாற்றுரை யாட்டு (வசன சம்பிரதம்): சாற்றுவன எல்லாம் தகைஇ ரணமொழியாச் சாற்றல் வசன சம்ப்ர தாயமே - பிர. திர. 64 சொல்பவற்றை யெல்லாம், தகவார்ந்த வகையில் எதிரிட்டு விளங்கும் மொழியினால் மறுத்துரைத்தல், வசன சம்ப்ர தாயம் என்னும் நூலின் நுவல் பொருள். இரணம் = எதிரிடை, முரண். மானதவம்: அகன்ற மலைகளில் அழுத்தமான தவமியற்றி அத்தவத் தால் நங்கை ஒருத்தியை வருவித்துத் தருவது பற்றிக் கூறுவது, மான தவம்என்னும் நூல் வகைச் செய்தியாம். மானம் = பெருமை. விட்டவறைக் கானந் தரிபூசை யாலழைத்து மாலரிவை தானுதவல் மான தவம் - பிர. திர. மானம்: மன் = பெருமை, பெரியோன், தலைவன், கணவன், அரசன். மன் - மான் - மானம் = பெருமை. மானம் - மான் (வ). (தி.ம. பக்: 752) உயர்குடிப் பிறப்புக்குரிய பண்புகளுள் ஒன்றான தன்மதிப்பு திருக். அதி. 97 தி.ம. மானியம்: மானியம் = மான்ய. மானம் - மானி. மானித்தல் = அளத்தல், மதித்தல், பெருமைப் படுத்துதல், தன்னை மிக மதித்துச் செருக்குதல். ஒ.நோ.: தீர்மானம் = முடிவு. தீர்மானித்தல் = முடிவு செய்தல், முடிபு கொள்ளுதல். மானம் - மானி = அளக்குங் கருவி, தன்மானமுள்ளவன், செருக்கன். மானி - மானியம் = புலவரையும் மறவரையும் மதித்துச் செய்யும் சிறப்பு, அவர்க்களிக்கும் முற்றூட்டு அல்லது இறையிலி (சர்வ மானியம்), கோயில்கட்கும் அறச்சாலைகட்கும் விடும் அறப்புறம் (இறையிலி நிலம்). மானியம் - மானிபம். இவ்வடிவம் வடமொழியிலில்லை. நிலமானியம் (Endowment of land) என்னும் பொருளும் மா.வி.அ.விற் குறிக்கப் பெறவில்லை (வ.வ:235) (தேவநே. 11) மான்: மா = விலங்கு. அரிமா, வரிமா, நரிமா என வழங்குதல் இலக்கியம் கண்டது. ஆமாகோ னவ்வணை யும்மே என்பது இலக்கணம். இவ்வழியால் மா என்பது மான் எனப் பொதுமை ஏற்றாலும் தன் தனிப் பெரும் சிறப்பாகக் கொண்டது மான் ஆகும். அன்றியும் தன் முடியால் மானம்என்னும் பெருந்தகு பண்புப் பெயரை மக்கள் இனத்திற்குத் தந்ததும் மானே ஆகும். பின்னே, மகன் மான்ஆயதும் உண்டு. பெருமகன் பெருமான்இல்லையா? மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் - திருக். 969 என்பது வள்ளுவம். மானம் நல்ல மதிப்பீட்டுச் சிறப்பும், அதன் எதிரிடையும் ஆயது. வருமானம், பெறுமானம், வெகுமானம் என்பவை மக்கள் வழக்கு. மானம்பெருமைஎன ஈரதிகாரங்கள் திருக்குறளில் இருத்தலால் இயல்பான பெருமையினும் மானப் பெருமைச் சிறப்பு விளக்கமாம். மானம் உடையான் மானன்; உடையவள் மானி. வரிவளைக்கை மடமானி என்பார் சம்பந்தர் (தேவா.). வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - தொல். 230 மானம் = குற்றம்.  மி வரிசைச் சொற்கள் மி: மகர இகர உயிர்மெய். மெல்லின வரிசையில் ஐந்தாம் எழுத்து. இதழொட்டப் பிறக்கும் எழுத்துகளுள் ஒன்று. ஆதலால் இதழ்குவி பாடல்களில் மிக இடம் பெறும். மிகல்: மிகுதல் > மிகல்; மிகை என்பதும் இது. மிகுதிப் பொருள்தரும் மிகை என்பது, கல்லாமையும் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ள மிகுதிஎன்பார் பேராசிரியர் (தொல். பொருள். 200). மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர் - திருக். 857 மிகை: மிகுதி என்னும் பொருளது மிகை. அதற்குக் குற்றம் என்னும் பொருள் காரியாபட்டி வட்டார வழக்கில் உள்ளது. மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல்என்றும் வள்ளுவம் மிகுதி என்பது குற்றத்தையேயாம். அளவை விஞ்சுதல் குற்றமாம். எதிலும் அளவு வேண்டும் என்பது நெறிமுறை. மிசை: மிசை = மேல் என்னும் பொருளது. நிலமிசை = நிலத்தின் மேல். நிலமிசை நீடுவாழ் வார் - திருக். 3 மேல் என்னும் பொருள் தரும் இச்சொல் மிசைப் பலகை என மக்களால் வழங்கப்பெறும். அதனை மேசை என்பதன் பகரமான கலைச்சொல்லாக ஆட்சி செய்தார் பாவாணர். * மிசைதல்காண்க. மிசைதல்: மிசைதல் = நாவின் மேலிட்டு உண்ணுதல். விருந்தினரைப் பேணி எஞ்சிய மிச்சிலை உண்ணுதல். மிச்சில் மிசைவான் என்பது திருக்குறள் (85) மிசைவுஎன்பது உணவுஎன்னும் பொருட்டது. ஆகலின், மிசைதல் உண்ணுதல் ஆயிற்று என்பதாம். கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும் என்னும் புறப்பாட்டால் (236) மிசைவு உணவாதல் புலப்படும். செங்கால் பலவின் தீம்பழம் மிசையும்என்னும் நற்றிணை (232) உண்ணுதலைக் குறிக்கும். மிசை என்பது மேல் என்னும் பொருள் தருவது ஆதலால் நாவின் மேல் இட்டு உண்ணும் உணவைக் குறிப்பதாயிற்று. மிச்சம் சொச்சம்: மிச்சம்= மீதம் அல்லது எச்சம். சொச்சம்= மீதத்தைப் பயன்படுத்திய பின்னரும் எஞ்சும் எச்சம். வீட்டார் உண்டு முடித்த பின் எஞ்சி இருக்கும் உணவு மிச்சமாகும். அம் மிச்ச உணவை எவருக்கோ படைத்துவிட, அவர்க்குப் பின்னே ஒருவர் வந்து கேட்டால் பின்னரும் உணவுக் கலங்களைத் தட்டித் தடவித் தருவது சொச்சமாம். தவசம், பணம் இவற்றிலும் மிச்சம் சொச்சம்என்னும் பேச்சு வரும். மிச்சில்: மிசைதல் > மிச்சில். உண்ண வேண்டுவார் பலரும் உண்ட பின்னும் எஞ்சியிருக்கும் உணவு மீதம் அல்லது மிச்சம் எனப்படும். அவ்வுணவு மிச்சில் எனப்படும். வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம் - திருக். 85 மிஞிறு: ஞிமிறு என்பது ஒலிக்குறிப்பால் தேனீ பெற்ற பெயர். அதன் எழுத்து முன்பின் மாறி மிஞிறு என ஆயது. x.neh.: சிவிறி > விசிறி; தசை > சதை. ஞிமிறார்க்கும் கமழ்கடாத்த - புறம். 22 பொருள்: தேனீ ஒலிக்கும் மணம்நாறும் மதத்துடன்ப.உ. மிடல்: மிடல் = வலிமை. உயிரின் வாழ்வு உணவின் வலிமை, காற்றின் இயக்கம் இவற்றால் ஆயது. இவ்விரண்டும் புகுவழி மூக்கும் வாயும் என இரண்டாயினும் மிடறு வழியே வழியாய்ச் செல்வதாம். மிடற்றியக்கத்தால் ஆவது மிடல் அல்லது வலிமை என்க. பசும்பூண் பொருந்தலர் நெடுமிடல் சாய்த்த - அகம். 266 பொருள்: பசிய பொன்னணியை யுடைய பகைவரது மிக்க வலிமையைக் கெடுத்த வேங். விள. நள்ளாதார் மிடல் சாய்த்த, வல்லாள - புறம். 125 மிடறு: மிடல் > மிடறு. உயிர் வாழ்வுக்கு வலிமை செய்வதாம் கண்டம் அல்லது கழுத்து. கறைமிடறு அணியலும் அணிந்தன்று - புறம். 1 மிடற்றது பசும்புண் - புறம். 100 மிடா: இடா > மிடா. மிகுதியான பொருள்களை இட்டு வைக்கும் பெரும்பானை. மற்றைச் சட்டி குடம் பானைகளினும் வலிமையும் திண்ணமும் உடைமையால் மிடா எனப்பட்டதாம். மிடல் = வலிமை. பூநீர் வியல்மிடா- களவழி. 27 வியல் = விரிந்த பெரிய. மிகப்பலர்க்கு உணவாக்கப் பானை உதவாது. பழங்காலத்தில் மிடாப் பானையே பயன்பட்டது. இப்பொழுது அண்டா, கொப்பரை என்பவை மாழைகளால் ஆக்கப்படுகின்றன. சாறயர்ந்தன்ன மிடாஅச் சொன்றி- குறிஞ். 201 பொருள்: விழாக் கொண்டாடுதற்கு அமைந்த மிடாச் சோறு உரை. மிடி: மிடு > மிடி = வறுமை; பெருமிதத்தை அழிக்கும் சிறுமிதம். மிடு > மிடுக்கு = பெருமிதம். மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந் தார் - நாலடி. 56 மிடைதல்: மிடு > மிடை > மிடைதல் = செறிவாதல். மிடை பூ எருக்கு - நற். 152 மிடை மரச் சோலை - சிலப்.5:61 எருக்கு, கொத்துக் கொத்தாக இருத்தல் காணக் கூடியது. வெயில்நுழைபு அறியாக் குயில்நுழை பொதும்பர் - மணிமே. 4:5 பொதும்பர் = சோலை. பொதுளி = செறிந்து இருத்தலால் பொதும்பு எனப்பட்டது. பரிதியஞ் செல்வன் விரிகதிர்த் தானைக்கு இருள்வளைப் புண்ட மருள்படு பூம்பொழில் - மணிமே. 4:1-2 பொழில் என்பதும் சோலை. மிதப்பு: மிதவை, மிதவைக் கட்டை என்பவை பொதுவழக்கில் உள்ளவை. மிதப்பு என்பது நீர்மேல் மிதக்கும் வெண்ணெயைக் குறிப்பதாக மானாமதுரை வட்டார வழக்காக உள்ளது. பொறுப்புணர்ந்து செய்யாமல் தட்டிக் கழிப்பதை மிதப்பு என்பது தென்தமிழக வழக்கு. மிதவை: மிதந்து செல்லும் பரிசல், படகு, ஓடம் ஆயவை மிதவை ஆகும் (ம.வ.). பலரும் உண்ணினும் உண்ணமாட்டா அளவையில் மிகுந்திருக்கும் உணவு மிதவைஎனப்படல் புலமையர் வழக்கு. பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவீர் - மலை. 417 வேய்கொள் அரிசி மிதவை - மலை. 435 ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை - புறம். 215 வாலவிழ் மிதவை - அகம். 37 உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை - அகம். 86 வெண்ணெல்மாத் தயிர்மிதி மிதவை - அகம். 340 மிதவை, வழங்குதற்குரியதும் அரியதுமாம் சொல்லாக இருந்தும் இற்றை வழக்கில் வீழ்ந்தது. மிதிதும்பை: கால்மிதியாகப் பயன்படுவதை மிதி தும்பை என்பது நெல்லை வழக்கு. தும்பு என்பது பலவகை முடிப்புகளை உடையது. ஆதலால் பின்னல் அமைப்பு உடைய கால் மிகுதியைக் குறித்துப் பின்னர்ப் பொதுப்பொருள் பெற்றிருக்கும். மிதிதோல்: மிதிதோல் = துருத்தி. கையால் மேலும் கீழும் அசைத்து இயக்கும் கொல்லர் உலைக்களத் துருத்தி மிதி தோல் என்பதால், முன்னர்க் காலால் மிதித்து இயக்கும் வகையில் இருந்தது என்பதை அறியலாம். ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த உலைவாங்கு மிதிதோல் - குறுந். 172 குருகு ஊது மிதியுலைப் பிதிர்வு - அகம். 202 கொல்லர் உலைக்களம் மிதியுலை எனப்பட்டதும் எண்ணத் தக்கது. மிதியடி: மிதிக்கும் காலின் அடியில் கிடப்பதால் மிதியடி. வாயிலில் நடையிடுவார் கால்தூசி துடைத்து வரப் போடப்படும் துணி, நார்க்கயிறு விரிப்பு ஆயவை மிதிப்புஎனப்படும். இம் மிதிப்பு வழியால் மிதிவண்டி, மிதியுந்து, மிதி எஃகி, மிதியேற்றம் என்னும் பொறிப் பெயர்கள் உண்டாயின. மிதியல் = மிதியடி. மிதியல்: சேரல நாட்டு மலை ஒன்றன் பெயர். மிதியற் செருப்பின் பூழியர் கோவே - பதிற். 21 பொருள்: செருப்பென்பது ஒருமலை. மிதியல் என்பது அடை; மிதி என்று செருப்பிற்குப் பேராக்கிச் செருப்பல்லாத செருப்பென்று வெளிப்படுத்தானாக உரைக்ககுறிப். உ.வே.சா. மிதிவிடல்: நெற்கதிரை அடித்து, அதன் வைக்கோலை வட்டமாகக் களத்தில் பரப்பி மாடுவிட்டு (பிணையல் - விடல்) மிதித்தல் மிதிவிடல் ஆகும். போரடித்தல் என்பதும் அது. மாடுவிட்டுப் போரடித்தால் மாயாது செந்நெலென்று யானைகட்டிப் போரடிக்கும் அழிகான தென்மதுரை என்பது மக்கள் பாட்டு. மிதிவெடி: கண்ணிவெடி என வழங்கும் வெடி, ஈழத்தில் மிதிவெடி என வழங்குகின்றது. மிதிபட்டால் வெடித்து மிதித்ததைச் சிதறச் செய்வது மிதிவெடியாம். சாலையின் இருபாலும் வேறு வேறு இடங்களிலும் மிதிவெடிகளைப் புதைத்து வைத்துப் பகையைப் புதைகுழிக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடு இஃதாம். மிதியடிபாதுகாப்பு. மிதிவெடிபகையழிப்பு. மிரியல்: இர் > இரி > இரியல் > மிரியல் = கருநிற மிளகு. மிரியற், புணர்ப்பொறை தாங்கியங் கழுதை - பெரும்பாண். 78-80 மிலைதல்: மலைதல் > மிலைதல் = அணிதல். மலைதற் கினிய பூவும் காட்டி - மலைபடு. 283 இனமீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் - அகம். 270 மிழற்றல்: மழற்றுதல் > மிழற்றுதல் = மழலை மொழிபோல் பேசுதல். பைங்கிளி மிழற்றும் - பட்டினப். 264 நீர்குடி சுவையில் தீவிய மிழற்றி - அகம். 54 மிளகாய்க் கல்: அரைகல், அரைசிலை, அம்மி என்னும் பொருள் பொது வழக்கானது. அதனை மிளகாய்க் கல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். மிளகாய் என்பது பல சரக்கு என்பது தழுவி நின்றது. மிளகு: கறி என்னும் பெயரது மிளகு. மிரியல் எனவும் பெயர் பெற்றது. மிளகு பெய்தனைய சுவைய புன்காய் உலறுதலை உகாஅய் - நற். 66 என்றதால், மிளகின் உறைப்பும் உகாய்க்காயின் உறைப்பும் ஒப்பாம் என்பது புலப்படும். கறிக்கும், சுவைக்கும் உடல் நலத்துக்கும் உதவுதலால் கறி என்பதே மிளகு எனப்பட்டது. பொங்கலிலும் வடையிலும் சாற்றிலும் மிளகு சேர்த்தல் தனிச் சுவையாம். கருங்கொடி மிளகின் காய்த்துணர்ப் பசுங்கறி - மலைபடு. 521-522 மிளகு பழுத்து உதிரும் என்பது, பழுமிளகு உக்க பாறை - குறிஞ். 187 என்பதால் விளங்கும். மிளகிலும் உட்டுளைக்கும் உளு உண்டு என்பது பழமொழி நானூறு (326). மிளகிடிக்கத் தனி உலக்கை இருந்தமை பதிற்றுப்பத்தால் விளங்கும் (41). கறிவளர் அடுக்கத்தில் களவினில் புணர்ந்த செம்முக மந்தி - நற். 151 என்பது. அடர்கொடிப் பந்தலாக மிளகுக் கொடி இருத்தலால் மற்றைக் குரங்குகள் அறியாமல் கடுவன் மந்தியைக் களவில் கூடியதாம். மிளை போலும் கொடி தந்தது மிளகு ஆயிற்றெனலாம். கறிப்புதைப் புணர்ச்சி கொண்டு கடுவனை அகன்ற மந்தி குறிப்பதைச் சுற்றம் காணாக் குறிக்கொடு வேங்கை ஏறி நெறிப்புதைச் சுனைப்ப ளிங்கில் நெகிழ்ந்துள மயிரை நீவி வெறிப்பதை அகற்றும் காதல் வியன்மிகு குறிஞ்சிக் காதல் - குண்டல. 994 (இ.கு.) * மிளைகாண்க. மிளகுசாறு: சிற்றூர் எனினும் பேரூர் எனினும் இரசம்(வ) இல்லாத விருந்து இன்று காணற்கு இல்லை. நெல்லை முகவை மாவட்டங்களில் மிளகுசாறும், மிளகு தண்ணீரும், சாறும் தூய தமிழாகக் கமழ்கின்றன. ஆங்கிலரைக் கூட மிளகு தண்ணீர் கவர்ந்து அப்படியே ஒலிபெயர்த்து வழங்கச் செய்தது! ஆனால் தமிழர் நிலை? பருப்புக் குழம்பு, சாம்பார் ஆயது. துவையல் மற்றும் கரைதுவையல் சட்டினி ஆனது. சோறு சாதம் ஆனது! மிளிர்தல்: மிளிர்தல் = ஒளிர்தல், விளங்குதல். மலங்கு மிளிர் செறு - புறம். 61 மிளை: மிடை > மிளை. மிடைதல் = செறிதல்; மிளை = செறிந்த காடு. கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை - புறம். 21 * மிளகுகாண்க. மிறை: இறை > மிறை. இறை = வளைவு. இறைவாரம் = வளைந்து சரிந்து நீண்ட தாழ்வாரம். குறியிறை = குறுகிய கை வளைவு. கூர் மழுங்கிய வாளைத் தீட்டுதற்கு ஏந்தாகக் கொள்ளப்பட்ட கட்டை, கல் ஆகிய வளைவுப் பொருள் மிறையாகும். ஒருகை இரும்பிணத் தெயிறு மிறையாகத் திரிந்த வாய்வாள் திருத்தா - புறம். 284 பொருள்: இறந்த யானையின் கொம்பு வளைவாக வேறுபட்ட கத்தியைத் திருத்தி உரை. உ.வே.சா. மண்ணிடம் கொண்ட யானை மணிமருப் பிடையிட் டம்ம விண்ணிடம் மன்னர் கொள்ள மிறைக்கொளீஇத் திருத்தி னானே - சீவக. 284 பிறை என்பதும் வளைபொருள் தருவதே. மினுக்கிடுதல்: மினுக்கிடுதல் > மினக்கிடுதல் > மெனக்கிடுதல். மினுக்கிடுதல் = அலங்கரித்தல்; அலங்காரத்திலேயே கருத்தாயிருந்து வேலையைக் கைநெகிழ விடல். வேலை மினக்கிடுதல்என்னும் வழக்கையும் சிங்காரிக்கு முன் தேர் நிலைக்கு வந்துவிட்டதுஎன்னும் பழமொழியையும் நோக்குக. வினைகெடுதல், வினைக்கேடுஎன்பவை மெனக்கெடுதல் ஆயிற்று என்பதுமாம். மினுக்குதல்: மினுக்குதல் = அணிகளால் மயக்கல். மின் - மினுகு - மினுக்கு என்பன ஒளியுடன் பளிச்சிடலைக் குறிப்பன. மினுக்குதல் என்பது பானை சட்டி முதலியவற்றின் அழுக்கினைப் போக்கத் தேய்ப்பதைக் குறிப்பிடுதல் அறிக. அம் மினுக்குதல் போலவே அணிகலம் அணிந்தும், பூச்சும் புனைவும் செய்தும் தம்மை வெளிச்சம் காட்டுபவர் மினுக்குபவர் எனப்படுவர். அம் மினுக்குதலுக்கு வயப்பட்டோர் தம்மை இழந்து தகாத வகையில் சிக்கி அழிந்து போவர். மின்: மின்னுதல். மின் = மின்னுவதால் மின்னல். மின் = நீர், கரி, கதிர், காற்று என்பவை வழி யாக எடுக்கப்படும் மின்னாற்றல். மின் = மின்மினிப் பூச்சி. மின்னி: மின்னி:1 மின்னிட்டாம் பூச்சி எனப்படும், மின்மினி. மின்னி:2 மிகச்சிறு பயறு வகையுள் ஒன்று மின்னி. நாற்றுச் சோளத்துடன் முளைத்துக் கொடியாக அதில் படர்ந்து மாடு, ஆடுகளின் தீனியாக இருப்பது. மின்னி:3 மின்னி = ஒளிசெய்து; வினையெச்சம்.  மீ வரிசைச் சொற்கள் மீ: மகர ஈகாரம்; மேல் என்னும் பொருள் தரும் ஓரெழுத் தொருமொழி. உயர்வுப் பொருள் தருவது மீப்புகழ். மீகான்: மீகான் = படகோட்டி, மாலுமி. விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் - மதுரைக். 321 சீரிய மரக்கலம் கடலில் செலுத்துபவர் ஓச்சுநர் எனப்பட்டனர். பெருநீர் ஓச்சுநர் - மரக்கல மீகாமர்என்றார் நச். மீகான் = ஒருமைப் பெயர். மீகாமர் = பன்மைப்பெயர். நீர்மேல் காலால் நடப்பது போல் கலத்தைச் செலுத்து வான் மீகான் எனப்பட்டான் எனலாம். பருவக் காற்றின் நிலை யறிந்து கலம் செலுத்துவான் மீகான் என்பதுமாம். கால் > கான். மீசை: மீ என்பது மேல் என்னும் பொருளது. மீமிசை என்பது மேலே என்னும் பொருள் தரும் இருசொற்கள். உயர்ந்து ஓங்குதல் என்பது போன்றது. இருசொற்களும் ஒருபொருள் தருவன. ஆதலால் மீமிசைச் சொற்கள் எனப்பட்டன. ஒருபொருள் பன்மொழி என்பதும் அது. மேல் என்னும் மீமிசை என்னும் சொல் இடையே நின்ற மிஎன்பதை இழந்து மீசை எனப்பட்டது. மேலுதட்டின் மேலே இருப்பது மீசை எனப்பட்டது. மிசை என்பது மேல் என்னும் பொருளது. மிசை பொது வகையில் இடப்பொருளும் தரும். மிசை என்பது என் மிசை என்று என்னிடம், என்மேல் எனப் பொருள் தரும். மிசை என்பதை மேசை என்னும் சொல்லுக்குத் தக்க சொல்லாகப் பயன் படுத்தினார் பாவாணர். மீட்டல்: மீட்டு > மீட்டல். மீளச் செய்வது மீட்டுவது ஆகும். போர் தொடங்கும் அடையாளமாகப் பகைவர் நாட்டுப் பசுக்களைக் கவர்தல் வெட்சி என்னும் புறத்துறையாகும். வெட்சியார் கவர்ந்த பசுக்களை மீளத் திருப்புதல் கரந்தை எனப்படும் ஆநிரை மீட்டலாம். இது பழங்காலப் புறத்துறை மரபு. தங்கம் நிலம் ஆயவற்றை அடைவு, ஒற்றி என வைத்துப் பணம் வாங்கலும் பின்னர் உரிய பணத்தைத் தந்து மீட்டலும் இக்கால நடைமுறை. மீட்டல் கரந்தை என்பது புறத்துறை. இக்கால அடைவுக் கடைகள் தனியாரால் நடாத்தப்படுவன, வைப்பகத்தால் நடத்தப்படுவன என இருவகை உண்டு. ஒற்றி பதிவகப் பணியாக நிகழ்கின்றது. மீதம்: மிகுதி > மீதி > மீதம். வரவு கணக்கு எழுதி, செலவும் எழுதி, செலவு குறைவாக இருப்பின் வரவு மிகுதியாகும்; செலவு கூடியிருப்பின் செலவு மிகுதியாகும். இவை மீதி எனப்படும். வகுத்தல் கணக்கில் வகுக்கப்படும் எண்ணை வகுக்கும் எண்ணால் வகுத்து வகுக்கப்பட முடியாமல் எஞ்சுவது மீதம் எனப்படும். உண்டது போக உணவு எஞ்சின் அதுவும் மீதமாம். அது கெட்டுப் போகாமல் பயன்படுதற்காகப், பாழாய்ப் போவது பசி வயிற்றில் என்றோர் பழமொழி உண்டாயிற்று. அப்பழமொழி, பாழாய்ப் போவது பசுவயிற்றில் என்றாயது. பசு, புல் வைக்கோல் தின்னும்! மாந்தன் நிலை? மீதம் என்பது மீதி என்பதுமாம். மீது: மீ > மீது. மீ = மேல். ஒன்றன்மேல் ஒன்றை வைப்பது, ஒன்றன்மீது வைப்பது ஆகும். சுமைதாங்கி மேல் - மீது - சுமையை வைப்பது பழங்கால நடைவழியர் வழக்கம். என்மீது பழியைப் போட்டுவிட்டு அவன்தப்பிவிட்டான் அவன்மேல் (இறைவன் மேல்) பாரத்தைப் போட்டுவிட்டு இரு. எல்லாம் சரியாகும் சுவரின் மீது சாயாதே; காலை வைக்காதேஎன்பவை மக்கள் வழக்குகள். புல்லின் மீது நடவாதீர்என்பது பூங்கா விளம்பரம். ஏனல் உழவர் வரகுமீ திட்ட கான்மிகு குளவிய வன்புசேர் இருக்கை - பதிற். 30 மீதூண்: மீ > மீது > மீது ஊண். உண்ட பின்னும் பின்னும் மேலே மேலே உண்ணல். உண்டது எரித்து அற்றுப் போகுமுன் மேலும் உண்ணல். மீதூண் விரும்பேல் - ஔவை. ஆத்தி. உடலுக்கு ஓய்வு தருதல் போல் குடலுக்கும் ஓய்வு தர வேண்டும் என்னும் தெளிவும் திறமும் உடையார் மீதூண் விரும்பார். மீமிசை: மீ = மேல்; மிசை = மேல். மீமிசை = மேல்மேல். இச்சொல் இலக்கணக் கலைச்சொல்லாக்கம் பெற்று மீமிசைச் சொல் எனப்பட்டது. ஒரே பொருள்தரும் இருசொல் இணைதல் மீமிசையாம். கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் - புறம். 9 உயர்ந்தோங்கு செல்வத்தான் - சிலப். 1:32 மீயுயர் தோன்றல் - கலித். 142 மீளல்: மீள் + அல் = மீளல். அல் = சொல்லீறு. மீளல் = திரும்பல். மீட்டல் = திருப்புதல். போனவர் மீளவில்லை; ஏன் எனப் புலப்படவில்லை, கொடுத்த கடன் மீளவில்லை; வட்டி ஏறிப் போகிறதுஎன்பன ம.வ. ஊர்வயின் மீள்குவம் - நற். 313 மீளா உறக்கம்: மீளா உறக்கம் = இறப்பு. உறக்கம் விழிப்பு என்பவை மாறிமாறி நிகழ்பவை. ஆதலால், உறக்கம் மீளவும் விழிப்பு மீளவும் வருதலால் அவை மீளுறக்கம், மீள்விழிப்பு எனப்படும். எனினும் அவற்றை மீள்என்னும் அடையின்றி வழங்குதல் அளவே அமைந்தது. ஆனால், இறப்பு பின்னே விழிப்பாக அமையாமல் மீளா உறக்கமாகவே அமைந்து விடுதலால் இறப்புப் பொருள் கொண்டது. போர்க்களம் சென்று மீளல் மீட்சியாம். களத்தில் மடிந்தவர்க்கு மீட்சி இல்லையே. ஆதலால் மீளா உறக்கம்மீளாச் செலவுதிரும்பாப் பயணம் என்பவை உண்டாயின. மீளி: மீள் + இ = மீளி; ஒப்பில்லா வீரன். வென்று மீளுதற்கு அரிய பகையை வென்று மீளவல்லான் எவனோ அவன் மீளி ஆவான். அடிபுதை அரணம் எய்திப் படம்புக்குப் பொருகணை தொலைச்சிய புண்தீர் மார்பின் விரவுவரிக் கச்சின் வெண்கை ஒள்வாள் வரையூர் பாம்பிற் பூண்டுபுடை தூங்கச் சுரிகை நுழைந்த சுற்றுவீங்கு செறிவுடைக் கருவில் ஓச்சிய கண்ணகன் எறுழ்த்தோள் கடம்பமர் நெடுவேள் அன்ன மீளி - பெரும்பாண். 69-75 மீனம்: மீன் + அம் = மீனம். மீனக்கொடி = மீன்கொடி. மீனக்கொடி பாடும் பாடலே பாடல் - சிலப். 29:27 மீன விண்மீன், மீனத் திடைநிலை மீனத் தகவையில் - மணிமே. 11:42; 15:25 மீன்: மின் > மீன். மின்னுவது மீன். மின்னுதல் ஒளிசெய்தல் மினுங்குதல் என்பது ம.வ. கெண்டைமீனின் அடிப்பகுதி வெண்ணிறப் பொலிவுடையது. மேலே கருமையது. அது பிறழ்ந்து மகிழ்வதும் செல்வதுமாம். மேலே துள்ளல் பொலிவு மிக்கதாம். அதனால் அது மீன் எனப் பட்டு, மற்றையவற்றுக்கும் அப்பெயர் பொதுமையாயது. ஆறு கடல்களில் மின்னும் மீனொப்ப விண்ணில் மின்னுவனவாம் உடுக்களும் மீன் எனப்பட்டன. விண்மீன் என்றாயின. மீனினம் ஓடிப் பரக்குதம்மா - ஊடே வெள்ளி ஓடமொன்று செல்லுதம்மா வானும் கடலாக மாறுதம்மா - இந்த மாட்சியில் உள்ளம் மகிழுதம்மா - மலரும் மாலையும் என்றார் கவிமணி. மீன் வகை: வாளை, வறுக்கை, திருக்கை, ஓனாமீன், நெய்தலை (நெற்றிலி), திமிதம், உள்ளான், சுறா, பிள்ளைக் கொல்லி, நெய்மீன், குதிப்பு, சாளை, பனை, கடல் சுரும்பை, மடவை, வங்கு, நெத்துளுவை, ஆனைமீன், குதிரை மீன். (இராமப்பையன் அம்மானை பக். 48)  மு வரிசைச் சொற்கள் மு: மகர உகரம். உயிர்மெய்க்குறில். மகர வரிசையில் ஐந்தாம் எழுத்து. தொகை வகையால் மூன்று என்னும் எண்ணைக் குறிப்பது. எ-டு: முத்தமிழ், முக்கனி, முக்காலம், முப்பால். முகங்கொடுத்தல்: முகங்கொடுத்தல் : 1 முகங்கொடுத்தல் = பார்த்தல். செவிகொடுத்தல், கேட்டல் பொருள் தருவது போல முகங்கொடுத்தல் என்பது பார்த்தல் பொருளதாம். முகங்கொடுத்துப் பார்க்கிறானா?என்பதோர் ஏக்க வினா. முகங்கொடுத்தே பாராதவன் தானா, அகங்கொடுத்துப் பார்க்கப் போகிறான்?என்பது தெளிவு விடை. முகத்துக்கு முகம் கண்ணாடி என்பது பழமொழி. என் முகத்தை நான் கண்ணாடியால் காணலாம். அது போலவே என் முன்னால் இருப்பவர் முகத்தின் வழியேயும் என் முகத்தைக் காணலாம். அவர் முகம் நகையுடன் இருந்தால் என் முகமும் அத்தகைத்து என்றும் அவர் முகம் கடுத்திருந்தால் என் முகமும் அத்தகைத்து என்றும் கண்ணாடியில் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்ளலாம் என்பதே அது. முகங்கொடுத்தல்:2 எதிரீட்டுக்கும் துன்பத்திற்கும் ஆட்படுதலைக் குறிப்பதாக உள்ளது. அவர்கள் ஈழத்துப் பட்டுவரும் பாட்டை உள்ளீடாகக் கொண்டு வெளிப்பட்ட பொருட்சொல் இதுவாம். முகடி: முகத்தை மூடுவது முகடியாம். வீட்டுக்கூரை போடுதலை முகடு போடுதல் என்பர். அது கூரை வேய்தலாம். முகத்தை மூடிக் கிடத்தல் சோம்பல்அடையாளம். ஆதலால் முகடியை மூதேவி என்றனர்; மூத்தவள் என்றும் கூறினர். அறிவுக் கூர்ப்பை மூடிக்கிடக்கும் அறியாமையை உடையானை மூடன் என்றும், அறியாமையை உடையவளை மூடி என்றும் கூறினர். புட்டில் கலம் முதலியவற்றை மூடுவதை மூடி என்றும் வழங்கினர். வீட்டு முகட்டு வளையில் தங்குகின்றவள் என்னும் கருத்துப் பற்றி முகடி என்னப்பட்டாள் போலும். முகடி = மூதேவி.”(தி.ம. 936). முகடு: முகடு:1 கூரை வேய்தல் முகடு போடுதல் எனப்படும். தளம்பரப்பும் கட்டடம் இந்நாள் மூடுதல் எனப்படுகின்றது. முகட்டில் இருக்கும் பூச்சி முகட்டுப்பூச்சி. அது மூட்டுப் பூச்சி என வழங்கப்படுகிறது. முகடு என்பது மூடுஎன்றும், மூடி என்றும் ஏவலாகவும் மூடுபொருளாகவும் ஆயின. முகடு:2 முகடு, மோடுஎனப்படும். மோடு, மோடம் ஆகும். வானக்கூரை போல் அமைந்த கருமுகில் செறிவை மோடம் என்பர். மோடம் போட்டுள்ளது; மழைவரும்என்பர். மோடம், மூடமாகவும் வழக்கில் உண்டு. மேலும், அகப்பகுதி - உட்பகுதி-யின் எழுச்சியாம் இது, அகடுஎனவும் படும். முகமதி எழுச்சி (வதன சந்திரோதயம்): தூதி ஒருவிவந்து சொல்லுவதாய், மான்முகத்துக்கு ஏதம் மதியென்று இதமுரைத்தே - ஓதுகலி வெண்பாவாய் மாமதுரம் ஏற்றதாய்ப் பாடுதலே அண்வதன சந்த்ரோ தயம் - பிர. திர. 67 தூதி ஒருத்தி வந்து சொல்லுவதாகவும், தலைவியின் முகத்துக்கு மதி எவ்வகையானும் ஒப்பாகாது என்று புனைந்து கூறுவதாகவும் பொருளமைதி யுடையது, வதன சந்திரோதயம் ஆகும். அந்நூல், கலிவெண்பாவால் பாடப்படும். மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி என்னும் குறளே (1118) மாதர் முகம் போல் ஒளிவிட வல்லதன்று மதி என்னும் புனைவை யுட்கொண்டது. பிள்ளைத் தமிழில் வரும் அம்புலிப்பத்து ஒப்பும் உறழ்வும் கூறிப் பாடப் படுவதே. பாவிகத்தில் இத்தகு புனைவு மிகவுண்டு. இவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு வளர்ந்த இலக்கிய வகை ஈது. ஒருவிஎன்பது ஒருத்திஎன்பதன் புதிய ஆட்சி. இனித், தூதி தலைவியை அகன்று தனியே வந்துஎன்னும் பொருளதுமாம். முகமூடியை உடைத்தல்: முகமூடியை உடைத்தல் = மறைப்பை வெளிப்படுத்தல். முகத்திரையைக் கிழித்தல், மூடு திரையைக் கிழித்தல் என்பனவும் இப்பொருளவே. திரையைக் கிழித்தற்கும், இவ் வுடைத்தற்கும் வினை வேறுபாடு உண்டு. அது துணியைக் கிழித்தற்கும் தகட்டை உடைத்தற்கும் உள்ள வேறுபாடாம். வன்மையாக மூடி மறைத்துவிட்ட செய்தியையும், ஆழத்துள் ஆழமாகப் புதையுண்ட செய்தியையும் வெளிப்படுத்திக் காட்டல் இதுவாம். இவ்வுடைத்தல் தீமை, கொடுமை ஆகியவை பற்றிய மறைப்பை விலக்குதலே யன்றி, புகழ் விரும்பார் மறைத்துவிட்ட ஆக்கச் செய்தியை வெளிப்படுத்துதல் அன்றாம். முகம்: முகம்:1 எளிய அறிவினரும் எளிதில் அறிய முடியும் தமிழ்ச்சொல் முகம்! ஆய்வு வேண்டிய சொல் இல்லை. காட்சியை முகக்கிறது, கண்; ஒலியை முகக்கிறது, செவி; சுவையை முகக்கிறது, நா; மணத்தை முகக்கிறது, மூக்கு; வெப்பு தட்பை முகக்கிறது, மெய்; கருத்துப்பொருள்களை யெல்லாம் முகக்கிறது, மூளை! ஆறறிவுகளையும் முகந்து வைக்கும் இடம் எது? முகம்தானே! பாருங்களேன்! எண்ணிப் பாருங்களேன்! அகத்தை முகந்து காட்டுவது முகம்தானே! வள்ளுவ மாமணி என்ன சொல்கிறார்? அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம் - திருக். 706 முகம் தமிழில்லைஎன்பார், தமிழைக் கெடுப்பதே எம் நோக்குஎனத் தடம் புரண்டவர்! அவர் அப்படித்தான் சொல்வார்! முகம் போல் அமைந்த இடம் முகப்பு; முகப்பில் அமைந்த வழி முகவாய்; முகக்கும் அளவை முகத்தல் அளவை; முகப்பாக அமைந்த அமைவும் அவ்விடம் சார்ந்த ஊரும் முகவை; நீரை முகந்து வெளிக் கொணரும் இறைவை - ஏற்றப்பாட்டு முகவைப்பாட்டு; காட்டின் மலையின் முகப்பு அமைந்த ஏரி முகப்பேரி; முகம்போல் அமைந்த கூரை முகடு. முகத்தை மூடிப் படுத்திருப்பவள் முகடி; முகத்தை மூடுவது போல் அமைந்த மூடுகருவி மூடி; அறிவு வெளிப்பாடு வெளிப்படாமல் அமைந்த மறை நிலை மூடம்; மூடத்தை உடையவள் மூடி; ஆண்பால் மூடன்; பலர்பால் மூடர்; பொருள்களை உள்ளிட்டுத் தைத்து மறைத்தல் மூட்டல்; கதிரை மறைக்கும் முகில் கூடல் மூட்டம்; பனிச்செறிவு பனிமூட்டம்; ஒருவர்மேல் இல்லாப் பொல்லாப் பழி கூறிப் பகையாக்கல் மூட்டிவிடல், கோள் மூட்டல்; புகைமிக்கு மறைத்தல் புகைமூட்டம்; நகைப்பை மூளச் செய்தல் நகைமூட்டல், சிரிப்பு மூட்டல்; பிறர் தூண்டாமல் தானே முயலல் மூளல்; முகத்து முகப்பாம் மூக்கு அணி, காது அணி இன்மை மூளி; முகம் தேய்ந்த அளவை கருவி முதலியவை மூளியாதல். முகத்தில் முகம்பார்க்கலாம்என்பதும் முகத்துக்கு முகம் கண்ணாடிஎன்பதும் பண்பாட்டுப் பழமொழி. பெற்றோர் முகம்போல் பிள்ளைகள் முகம் அமைதல் முகக்கூறு, முகக்களை, முகச்சாயல். ஒன்றுபட்டு நோக்கலும் செயலாற்றலும் ஒருமுகம், ஒருமுகப்பாடு. முகத்துக்கு முகம் மகிழ்வு காட்டலும் வரவேற்று உரையாடலும் முகமன். தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் முதற்கண் நோக்குதல் புகுமுகம் புரிதல். அகத்துணர்வை முகந்து தரும் முகத்தை ஒப்பப் பேரறிவு அமைந்தது ஒன்று உண்டோ? முகத்தின் முதுக்குறைந்த துண்டோ? (திருக். 707). முகத்தை நோக்கி அகத்தை அறியார் அறிவர் அல்லர் என்பவை வள்ளுவம் (முகநோக்கி நிற்க அமையும். திருக். 708). இவற்றால் புறத்தை முகப்பதுடன், உள் அகத்தை முகந்து காட்டுவதும் முகம் என அகமும் புறமும் ஒருங்கே முகந்து காட்டும் முகத்தின் அழகும் அருமையும் அமைவும் ஒப்பிலா உயர்வினவாம். முகவணை: முகம் + அணை = முகவணை. வாயில் முகப்பை அழகுபடுத்தும் கலைநுட்பத்தை முகவணை என்னும் சொல்லால் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. இச்சொல்லாட்சி பூவாலைக் குடி பூவணநாதர் கோயில் கல்வெட்டிலும் குடுமியான் மலைக்கல்வெட்டிலும் அரிதாகக் காணப்படும் அருமைச் சொல்லாகும். (இரா. கலைக்கோவன், தினமணி 13.10.2010) முகவம் (விலாசம்): பாட்டுடைத் தலைவன் உலாக் கண்ட மகளிர் தம் காதலை வெளிப்படுத்தி யுரைப்பதாகவும், கனவு நிலை உரைப்பதாகவும் தலைவன் அருள் வரப்பெறுவதாகவும் கழிநெடில் ஆசிரிய விருத்தத்தால் பாடப்பெறும் ஒரு நூல்வகை விலாசம் என்பதாம். பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக வருவதும் மா மா காய்என்னும் அமைப்பு நான்கு கொண்டது ஓரடியாய் வருவதும் விலாச நூல்களால் அறியக் கிடக்கின்றன. இரட்டுறல், மடக்கு ஆகியவை பாடல்தோறும் வர இயற்றுவது விலாச மரபாகும். விலாசம் நூறு பாடல்களாலும் அதற்குக் குறைந்தும் வருவதுண்டு. மாம்பழச் சிங்க நாவலரால் இயற்றப் பெற்ற சந்திரவிலாசம் கடிகை முத்துப்புலவரால் இயற்றப்பெற்ற சமுத்திர விலாசம்,சேறை கணபதிக் கவிராயரால் இயற்றப்பெற்ற நதி விலாசம்ஆகியவற்றைக் காண்க. விலாசங்களில் புதுமையானது, பஞ்சலட்சணத் திருமுக விலாசம் என்பது. இதன் பெயரைக் கேட்ட அளவில் ஐந்திலக்கணம் கூறும் நூல் போலும் என எண்ண நேரலாம். ஆயின் பஞ்சகால நிலையை விரித்துக் கூறும் நூலாக உள்ளது. சிவகங்கைத் துரைசிங்க அரசர் மேல் வில்லியப்பக் கவிராயரால் பாடப்பட்டது இப்பஞ்ச லட்சணத் திருமுக விலாசமாம். நகைச்சுவை மிக்கதாக அங்கதப் பொருளுக்கு எடுத்துக்காட்டாக இந்நூல் அமைந்துள்ளது. விலாசப் பெயருடைய சில நூல்கள் நாடகமாக உள்ளன. அரிச்சந்திர விலாசம் தமயந்தி விலாசம் என்பன போல்வன அவை. முகவை: கப்பல் அல்லது நாவாய் பொருள்களை முகந்து கொண்டு செல்லவும், முகந்து வந்த பொருள்களை இறக்கி வைக்கவும் நீருக்கும் நிலத்திற்கும் முகவாயாக இருந்த துறை முகவை ஆகும். முகவாய் என்பதும் அது. கடல்சார் துறையாக முன்பு விளங்கிய இராமநாத புரத்திற்கு முகவை என்பது பெயர். எ-டு: முகவை இராமாநுச கவிராயர், முகவை மாவட்டம். முகத்துவாரம்என்பது இருபிறப்பி; முகம் (த), துவாரம் (வ). முகில்: மழைக்கு வேண்டும் நீரை எடுத்து மேலே செல்லும் நீராவிப் படலம் முகில் எனப்படும். முகந்து செல்வதால் கொண்ட பெயர்; மற்றும் திரண்டு செல்வதாலும் (முகிழ்) பொருந்திய பெயர். கருமுகில், காளமுகில், கார்முகில் என்பனவும் அதன் வண்ணம் கருதிய பெயர். நீரை முகக்குமுன் வெண்முகில்அது. ஆயினும் கருமுகில் போல் பெருவழக்கினது அன்று. முகில் என்னும் பெயரால் இந்நாளில் பெயருடையார் மிகப்பலராவர். எ-டு: முகிலன், கார்முகிலன், முகிலி. பொருள்களைத் தந்தும் கொண்டும் செல்லும் கடல்வாய்முகம் முகவை முகந்து கொண்டு வந்து நீர்தரும் கமலை, ஏற்றப்பாட்டு முகவைப்பாட்டு; அகத்தின் உணர்வை முகந்து வெளிப்படுத்தும் தலைமுன்புறம் முகம்; அளந்து தரும் அளவுகளுள் ஒன்று முகத்தல் அளவை; பேரூர்க்கு அல்லது போரூர்க்கு முகமாக அமைந்த ஊர் முகவூர்; முகப்பில் பெரிய ஏரி கொண்ட ஊர், முகப்பேரி. முகிழ்: முகைக்கு முன்னை நிலை முகிழ் ஆகும். முகிழ்த்தல் அரும்பின் வளர்நிலை. குவிமுகிழ் எருக்கம் - குறுந். 17 முகை: முகிழ் > முகை. அரும்பு திரண்டு முகம் கொள்ளல் முகையாம். முகிழ்த்தல் அரும்பிப் பெருத்தல் முகமாகப் பரந்து உருண்டு திரளல் முகை. முகைமொக்குள் உள்ளது நாற்றம் - திருக். 1274 முகை முற்றினவே - குறுந். 188 முக்கட் கூட்டம்: தலைவன் தலைவியர் களவில் கூடும் கூட்டவகை முக்கட் கூட்டம் எனப்பெறும். அது மூவிடத்துக் கூட்டமாம். இயற்கையால் கூடும் கூட்டம் (இயற்கைப் புணர்ச்சி), தோழனால் கூடும் கூட்டம் (பாங்கற் கூட்டம்), தோழியாற் கூடும் கூட்டம் (பாங்கியாற் கூட்டம்) என்பன. முக்கண் = மூவிடம். முக்கட்டு: மூன்று கட்டு என்னும் பொருளில் வருவது அன்று முக்கட்டு என்னும் அணிகலம். மூன்று கல்லை வைத்துக் கட்டுதலால் அமைந்த காதணி முக்கட்டு ஆகும். இஃது ஆண்கள் அணிகலம். நெல்லை முகவை வழக்கு. முக்கண்ணன்: மூன்று கண்ணை யுடையவன் எனப்படும் சிவபெருமான். இடவலக் கண்களுடன் நெற்றிக் கண்ணுமுடையவன் என்பதால் முக்கண்ணன் என்றும் முக்கணான் என்றும் வழங்கப் பெற்றான். முளையமை திங்கள் சூடும் முக்கணான் முதல்வ னாக - கம்ப. உயுத். 1234 முக்காடு: முகம் முழுவதும் மறையப் போர்த்துக் கொள்ளுதல் முக்காடு. முழுதுறும் உடலுக்கும் முகமே வெளிப்பட மூடாதது. அதனை முழுமையாக மூடுவது உடல் முழுமையும் மூடியதாகக் கொள்ளப்பட்டு முக்காடுஆயது. முக்காடு போட்டுக் கொண்ட பெண் முகடிஎனப்பட்டார். முகடி சோம்பிக் கிடப்பார் மூடிக் கொள்ளுதல் வழியாக ஏற்பட்ட சொல். பின்னவர் மூதேவி என்றனர். மூடுவதற்கு உரியது மூடி ஆகும். மூடி மூடன் என்பார் அறியாமையால் தம்மை மூடிக் கொண்டிருப்பவர் என்னும் பொருளது. முகடி, முகடுகளில் கண்டது இது. முக்காடு போடல்: முக்காடு போடல் = இழிவுறுதல். முக்காடு போடுதல் சமயக் கோட்பாடாகக் கொண்டார் உளர். கைம்மைக் குறியாகக் கொண்டாரும் உளர். அவரை விலக்கிய முக்காடு இது. இந்நாளில் முக்காட்டு வழக்கெனக் காவல் துறையார் காட்டும் முக்காட்டினும் இம்முக்காடு வேறுபட்டது. உன்னைப் பெற்றதற்கு முக்காடு போட வைத்துவிட்டாய்என்பதில் முகங்காட்ட முடியாத இழிவுக்கு ஆட்படுத்திவிட்டாய் என்னும் மானக்குறைக் கொடுமைக் குறிப்பு உண்மை அறிக. இழிவுக்கு ஆட்பட்டு அதனை உணரும் மானமுடையார் தம் முகம் காட்ட நாணி, முக்காடு போடல் காணக் கூடியதே. நான்கு பேர் முன் தலைகாட்ட நாணித் தலைமறைந்து செல்லலும் காணக் கூடியதே. ஆதலின் முக்காடு இழிவுக் குறியாக இவ்வழியில் இயல்கின்றதாம். முக்காணி: கட்டை வண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை உண்டு. அதன் வளைவு கருதிய பெயர் குரங்குக் கட்டை. வண்டியின் முகப்பில் அதன் பாதுகாப்பாக இருத்தலால் முற்காணி, முக்காணி ஆயது. முகக்காணி முக்காணி எனினுமாம். வண்டியின் பின்னாலும் தாங்கு கட்டை உண்டு. தேனி வட்டார வழக்கு முக்காணி என்பது. முக்கால்: மூன்று காலம் = இறப்பு, நிகழ்வு, எதிர்வு. மும்முறை = முக்கால் கூறியும் கேட்டிலன் ம.வ. மூன்று கால் = இரண்டு கால்களுடன் கோல் ஒரு காலாக முக்கால். மூன்று காற்பங்கு = ஒன்றன் முக்கால் பங்கு. முக்கியர்: முத்துக் குளிப்பவர் கடலின் ஆழ்நீரில் மூழ்கிக் கடமை புரிபவர். ஆதலால் மூழ்கியர் எனப்பட்டார். மூழ்குதல், முங்குதல் முக்குதல் என மக்கள் வழக்கில் ஆயது. மாடு, தொட்டி நீரின் ஆழத்துள் இருக்கும் திண் பொருளை மூக்கால் மூழ்கி எடுத்தலை முக்கிக் குடித்தலாகக் கூறுவர். அவ்வாறு, மூழ்கி முத்தெடுத்தல் முக்குதலாய், அதனைச் செய்வார் முக்குவராய் வழங்கப்பட்டார். இது யாழ்ப்பாணப் பெருவழக்கு. முக்கியர் என்னும் இப்பெயர் மீனவர், கரையர், பரதவர் திமிலர் ஆயோர் பெயராகவும் விரிவுற்றது. பரதவர் என்பது பழம்பெயர். கடல்சார் வேந்தர் பரதவர் என வழங்கப்பட்டதும், கடலோடிகளால் பரதவர் நாடு எனப்பெயர் பெற்றதும் பழஞ் செய்திகள். முக்குணி: அடுப்புக் கூட்டு என்பது ஆய்த எழுத்தின் வடிவு. முப்பாற் புள்ளி என்பதும் அது. காதணிகளுள் ஒன்று முக்கட்டு. மூன்றுகல் உடையது. அது போல் மூன்று குமிழ் உடைய அடுப்பின் வடிவு நோக்கி, முக்குணி என்பது, நெல்லை வழக்கு. மூன்று கல்லை வைத்து அடுப்பு உண்டாக்குதல் நாட்டு வழக்கம். முக்கணியாக இருந்து முக்குணி எனப் பெயர் பெற்றிருக்கலாம். முக்கு முடங்கி: முக்கு = முட்டித் திரும்பும் இடம். முடங்கி = வளைந்து திரும்பும் இடம். முக்கு முடங்கிதெருக்களில் உண்டு. நில புலங்களிலும் உண்டு. வளைந்து வளைந்து ஓடும் ஆறு ஒன்று முடங்கியாறு என்னும் பெயருடன் விளங்குகின்றது. முடக்கம், முடம் என்பவை, வளைவின் அடியில் வந்தவையே! முக்கு என்பதை மூலை முடுக்கில் காண்க. முடங்கு முடுக்கு எனவும் படும். வளைந்த நெற்பயிரை, முடந்தை நெல்என்பர். முக்குளித்தல்: மாடு தன் மூக்கைத் தொட்டியில் உள்ள நீர், ஊறல், காடிநீர் இவற்றுள் செலுத்திக் குடித்தல் முக்குளித்தல் எனப்படும். முக்குளிக்கும் போது மூச்சுக் குமிழிட்டு நீருக்கு மேலே வரும். முக்குளித்தல் ஒலியும் கேட்கும். தொட்டி நிரம்பி நீர் கிடந்தாலும் அடிமட்டதில் இருக்கும் கட்டிப் பொருளை முக்குளிக்கும் மாடு தின்றுவிடும். இத்தகையவற்றை முக்குளிப்பான் என்பதுண்டு. நீருள் மூழ்கி மூச்சடக்கி இருத்தலை முக்குளித்தல் என்பதும் கருதுக. முத்துக் குளித்தல் வழியாக வந்ததோ என்பது கருதத்தக்கது. இனி மொக்குள் என்பது நீர்க்குமிழைக் குறித்தலின் மொக்குளித்தல் என்பது திரிந்ததோ எனவும் கருதலாம். முக்கோணம்: மூன்று + கோணம் = முக்கோணம். கோண் > கோணல் > கோணம். மூன்று கோண்களை - வளைவுப் பக்கங்களை - யுடையது. முக்கோணம் கணிதக் கருவிகளுள் ஒன்று. நாற்கோணம், அறுகோணம், எழுகோணம், எண்கோணம் என்பனவும் மக்கள் வழக்கில் உள. எழுகோண மண்டபம், அறுகோண மண்டபங்கள் இன்றும் காண்பன. முக்கோல்: மூன்று + கோல் = முக்கோல். காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனையும் வென்றதன் அடையாளமாகத் தமிழ அந்தணர் கொண்ட முத்தலைத் தண்டு. முக்கோல்கொள் அந்தணர் - கலித். 126 முசு: மொய்ச்சு > மொச்சு > மொசு > முசு. மொய்த்த முடியையுடைய பெண் குரங்கு முசு. முசித்தல் = செறிவு. மூங்கில் போல் முசியாமல்என்பது ம.வ. முசிதல் = நெருங்கல், பண்ணை. கருமுக முசுவின் கானத்தானே - அகம். 121 முசுக்கலை என்பதும் இது. மைபட் டன்ன மாமுக முசுக்கலை - அகம். 267 முசுடு: முசுப்போலும் சீற்றமும் பற்கடிப்பும் ஒதுங்கலும் உடையவனை முசுடு என்பது ம.வ. அந்த முசுடுக்கு நல்லதும் தெரியாது; கெட்டதும் தெரியாது; வந்துவிடும் விளம்என்பது ம.வ. விளம் = கோவம், சீற்றம். முச்சி: மகளிர் முடியைக் கூட்டி அல்லது கோதி முடியும் முடிச்சு, முச்சியாகும். உச்சி முச்சி எனவும் வழங்கும் ம.வ. போதவிழ் முச்சி ஊதும் வண்டே- ஐங். 93 மதியுடம் படலால் தலைவன், தேம்பாய் நல்லிணர் தளிரொடு கொண்டுநின் தண்ணறும் முச்சி புனைய - அகம். 221 முச்சூடும்: முழுவதுமாக என்னும் பொருளில் முச்சூடும் என்பது சேலம் பகுதியில் வழங்குகின்றது. தலையடி அடித்த வைக்கோல் பின்னர்ச் சூடு உண்டாகுமாறு போர் வைப்பர்; பின்னர்ச் சூடடிப்பு எனப் பிணையல் அடிப்பர். இவ் வகையால் முழுச்சூடும் என்பது முச்சூடும்என்றாகி இருக்கலாம். பின்னர் எல்லாம் என்னும் பொதுமைப் பொருள் கொண்டிருக்கும். முஞ்சிறை: முன் + சிறை = முன்சிறை > முஞ்சிறை. குமரி மாவட்டத்து ஓர் ஊர். செறிவு மிக்க காடு முன் சார்ந்த ஊராதலின் முன்சிறை எனப்பட்டதாம். உள்ளிருந்தாரை வெளிப்படுத்தாக் காட்டைச் சிறைக்காடு என்பது மக்கள் வழக்கு. சிறைப்படுத்தப்பட்டார் வெளியில் இருப்பாரைப் பார்க்க முடியாமையும், வெளியில் இருப்பார் உள்ளிருப்பாரைப் பார்க்க முடியாமையும் சிறை என்பதாம். பெருமரங்கள் அல்லாச் செறிந்ததும் முள்ளடர்ந்ததும் புகல் அருமையும் உடைமையால் சிறைக்காடு எனப்பட்டதாம். முஞ்ஞை: இடுமுட் படப்பை மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கட் குற்றடகு புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம்- புறம். 197 முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல் - புறம். 320 தாளி முதல் நீடிய சிறுநறு முஞ்ஞை முயல்வந்து கறிக்கு முன்றில் - புறம். 328 முன்றிலாடு முஞ்ஞை மூதிலை கறிக்கும் - தொல். செய். 31 மேற். பேர்; நச். முஞ்ஞை, கீரை வகையினது என்பதும், முற்றத்தும் தோட்டத்தும் படர்ந்தும் செறிந்தும் வளர்வது என்பதும் ஆடு முயல் முதலியவை விரும்பி யுண்பது என்பதும் விருந்தோம் பலுக்கு உரியது என்பதும் புலப்படும். கொய்த கணுவில் தளிர்க்கும் தகையதால், மீண்டும் மீண்டும் பறித்துப் பயன் கொள்ளத் தக்கதாய் அமைந்ததும் முஞ்ஞையாம். இக்கீரை பசலை நிறம் மிக்கதால் பசலை எனப்படும். முயற்காது போலும் அமைப்புடைய தாதலால் முஞ்ஞை என வழங்கப்பட்டதாகலாம். அவ்வழக்கு மிகப்பழ வழக்காம். முயல்கீரை என மக்கள் வழங்குவது முயல் விரும்பி உண்பதாலும், அதன் காது போன்றது இலை என்பதாலும் ஆகலாம். முடவாண்டி: கால் கை முடம்பட்டவர்கள் முடவாண்டிஎனப்படுதல் கொங்குநாட்டு வழக்கு. முடவாண்டியர்களைப் பேணுதற்கு அறச்சாலை அமைத்தனர். அவர்களைக் கண்காணித்து உதவி செய்பவர் காலாடிஎனப்பட்டனர். கோவை ரங்கே கவுடர் தெருவில் முடவாண்டியர் மடம் உள்ளதாகக் கூறுவர். முடிச்சுப் போடல்: முடிச்சுப் போடல்:1 முடிச்சுப் போடல் = இல்லாததும் பொல்லாததும் கூறல். மூட்டி விடுதல், மாட்டி விடுதல் போல்வது இம்முடிச்சுப் போடுதல். ஒருவரோடு ஒருவருக்குச் சிக்கல் உண்டாக்கும் செயலில் ஈடுபடுதல் முடிச்சுப் போடலாகும். முடிச்சு அவிழ்க்க வல்லவரிடம், முடிச்சுப் போட முடியாத விழிப்பரிடம் முடிச்சாளர் வேலை நடைபெறாது. எங்களுக்கு முடிச்சுப் போடவா பார்க்கிறாய்? அந்தப் பாய்ச்சல் நடக்காது என்று முகத்தில் கரிபூசி விடுவர். முடிச்சுப் போடல்:2 முடிச்சுப் போடல் = திருமணம். திருமணம் முடிச்சுப் போடுதல் என்பது தாலி கட்டல், கட்டுக் கழுத்தி, கட்டிக் கொள்ளல் என்பவற்றால் புலப்படும். மூன்று முடிச்சுப் போடுஎன்பது ம.வ. முடிச்சுமாறி: மக்கள் வழங்கும் வசைச்சொல்; திருடனைக் குறிப்பது. முடிந்து வைத்த பணத்தையும் பொன் வெள்ளி நகைகளையும் திருடிக் கொண்டு போய் விற்பவன் முடிச்சுமாறியாம். மாறுதல் = விற்றல். சீறடிச் சிலம்பின் ஒன்று கொண்டுபோய் மாறி வருவன் - சிலப். 16:92-93 மூத்தபிள்ளை யாரே முடிச்சவிழ்த்துக் கொண்டீரே - காளமே. தனிப். முடிமுதல் அடி (கேசாதி பாதம்): கலிவெண்பாவால் முடிமுதல் அடியளவும் கூறுவது கேசாதிபாதமாகும். கலிவெண் பாவான் முடிமுதல் கால்வரை கிளத்தல் கேசாதி பாத மாகும் - முத்துவீ. 1107 கேசாதி பாதமே கலிவெண் பாவால் முடிமுதல் அடிவரை மொழிவர்நா வலரே - பிர. தீபம். 73 முடிமுதல் அடியும், அடிமுதல் முடியும் புனைந்துரைக்கும் வனப்பு சங்கச் சான்றோரிடை அரும்பி, காப்பிய நூலாரிடை முகிழ்த்து. மெய்யடியாரிடத்துத் திரளுற்றுச், சிற்றிலக்கியப் பாவலரிடத்தே மலர்ந்து மணம் பரப்பியதெனலாம். பெரியாழ்வார் அருளிய சீதக் கடல்என்னும் திருப்பாசுரம், திருப்பாதாதி கேசவண்ணம்எனப்படுவதும் திருப்பாத கேசம்எனத் தொகை நிலையில் கூறப்படுவதும் நோக்கத்தக்கவை. சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும் பாதக் கமலங்கள் காணீரே, பவளவா யீர்வந்து காணீரே எனத் தொடங்கும் சீதக்கடல், பாதம், விரல் கணைக்கால், முழந்தாள், குறங்கு, முத்தம், மருங்கு உந்தி, உதரம், திருமார்பு, தோள், கைத்தலம், கண்டம், தொண்டை, வாக்கு, நயனம், வாய், முறுவல், மூக்கு, கண்கள், புருவம், குழை, நெற்றி, குழல்கள் என இருபது திருப்பாடல்களில் அடுக்கியும் அடக்கியும் அடிமுதல் முடிகாறும் இருபத்து நான்கு உறுப்புகளைக் கூறுதல் அருமையும் அழகும் உடையதாம். ஆழ்வார் தாயாக மாறிப் புக்கு இருந்தாலன்றித் தாயர்தம் ஆர்வ முத்தத்திற்கு உறையுளாம் மழலைக்குறி முத்தத்தை முத்தம்என எழில்மிகு பெயரிட்டு ஆள இயலுமோ? * அங்கமாலைகாண்க. முடம்: முடங்குவது முடம். முடங்குதல் = வளைதல். தெருவென்ன முக்கும் முடங்கியுமாக உள்ளது என்பது ம.வ. கை முடங்குதல், கால் முடங்குதல் என்பவை கைமுடம், கால்முடம் எனப்படும். முடங்குதல் வழியால் செயலற்றுப் போதல் பொருளும் உண்டாயிற்று. முடத்தெங்கு= வளைந்த தெங்கு (நன். 35). முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போலஎன்பது பழமொழி. முடந்தாள் புன்னை - அகம். 180 முடம், முடந்தை எனவும் வழங்கும். முடந்தை வரகு- அகம். 284 நெடுவரைப் பெருந்தேன் கண்ட இருக்கை முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்கு - குறுந். 60 முடி: முடி = உச்சி. உடலின் உச்சியாம் இடம் முடி; மலையின் உச்சியும் முடி எனப்படும். கோதி முடிதலால் கூந்தல் முடி எனப்படும். கற்றை கற்றையாகக் கட்டி முடிந்த நாற்றும் தட்டையும் முடியாம். ஒன்றன் முடிவிடம் முடியாம். முடி என்னும் ஏவலுமாம். ஒருகை, முடியொடு கடகம் சேர்த்தி - முல்லைப். 76 நீருறு செறுவில் நாறுமுடி அழுத்தலின் - நற். 60 முடிவுரை: முடிவு + உரை = முடிவுரை. சொற்பொழிவாற்றலிலும், கட்டுரை வரைதலிலும் இறுதியாக (அ) நிறைவாகக் கூறுவதும், எழுதுவதும் முடிவுரையாகும். முன்னது முன்னுரை; பின்னது முடிவுரை. முடுக்கு: முடக்கு > முடுக்கு. முட்டு முடுக்கு இணைச்சொல். முட்டித் திரும்பும் தெரு. முடுக்கு = ஏவல்; ஆடு மேய்கிறது, அதை முடுக்கு. (ம.வ.) விரைந்து ஓட்டு என்னும் பொருளது. மூரிதவிர முடுக்கு முதுசாடி - பரிபா. 80:54 முடுக்கு என்னும் விரைவுப் பொருட்சொல் இடை யொற்றுக் கெட்டு முடுகுஆகும். இசை வகையுள் ஒன்று முடுகிசை. அராகம் என்பதும் அது. கெட்டிமேளம் கொட்டுவது போன்ற முடுகியலது. உருட்டுவண்ணம் அராகம் தொடுக்கும் - தொல். 1488 முடுகு வண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே - தொல். 1489 முடை: முடை = தீய நாற்றம்; மூக்கை மூடுமாறு செய்வதால் முடை எனப்பட்டது. முடைதல் = மூடுதல்; கூடை முடைதல், பாய்முடைதல் பொல்லம் பொத்தல் என்பன வெல்லாம் மூடுதல் பொருள. மூக்கைப் பொத்தி மூடும் நாற்றம் முடைநாற்றமாம். முடைநாற்றம் - மணிமே. 16:66 முடைக் கருந்தலை - திருமுரு. 53 முட்டடி: முட்டடி:1 முட்டு + அடி = முட்டடி. முட்டடி என்பது வறுமை, நெருக்கடி ம.வ. இப்போது செலவுக்கு முட்டடியாக உள்ளதுஎன்பர். முட்டடி:2 முட்டடி என்பது நாற்சீரில் குறைந்த அடி. முட்டடி இன்றிக் குறைவுசீர்த் தாகியும் - தொல். 1380 முற்றடி இன்றி என்பதே பாடமாகலாம். முட்டு என்பது முட்டுப்பாடு, மோதுதல். மகப்பேற்றுச் சிக்கலால் மகப்பேற்று வீடு முட்டு வீடுஎனப் பட்டமை ம.வ. (நெல்லை முகவை வழக்கு). முட்டம்: முட்டு + அம் = முட்டம். நடைவழி முட்டுப்பாடாக இருத்தல். ஊழடி முட்டம் - குறிஞ். 258 பொருள்: முறையடிப் பாடாய்ப் பின்பு வழிமுட்டாய் இருக்கும் இடம்உரை. நச். முட்டி: தட்டு முட்டு என்பது சமையலறைப் பொருள்கள். பிச்சை முட்டி என்பது இணைச்சொல். முட்டி என்பது வட்டி என்னும் பொருளில் சென்னை வட்டாரத்தில் வழங்குகின்றது. முட்டிக் குனியும் நிலையில் வாங்கப் படுவதும், கொடுக்கப்படுவதுமாம் வட்டியை உணர்ந்து பெயரிட்ட வழக்கு அது. முட்டிக் குனிதல்: முட்டிக் குனிதல் = பட்டறிவு இல்லாமை. உயரங் குறைந்த வாயில்களைக் கடப்பார் புதுவராயின் முட்டிக் கொள்வர். பின்னர்க் குனிந்து செல்லப் பழகிப் போவர். இது முட்டிக் குனிதலாம். இவ்வாறே தீச்சுடும் என்பதை அறியாத குழந்தை தீயைத் தொட்டுச் சுட்டுக் கொண்ட பின்னர்த் தீச்சுடும் என்றும், அதனைத் தொடுதல் ஆகாது என்றும் தெரிந்து கொள்கிறது. இது பட்டறிவு. குழந்தை நிலையில் சரி. வளர்ந்த நிலையில் இதனால் இன்னது நேரும் என்னும் தெளிவு வேண்டும். அத் தெளிவு இல்லார் முட்டிக் குனிவர். முட்டிக் குனிதலே வாழ்வாக அவர்களுக்கு இருக்கும். ஒன்றைக் கொண்டேனும் ஒன்றைத் தெளிவாரா? அதுவும் செய்யார். அத்தகையரே முட்டிக் குனிபவருள் முதல்வர் என்க. முட்டு: முட்டு = வறுமை; முட்டுப்பாடு. முட்டு = தடை. எனக்கு முட்டு அவன்தான்ம.வ. தடைப்படுத்தல் = ஓடாமல் சாயாமல் இருக்க முன்னும் பின்னும் முட்டுக் கொடுத்தல். முட்டு = ஏவல். முட்டு = முட்டிக் கிடக்கும் - செறிந்து கிடக்கும் - பொருள்கள். தட்டு முட்டுஎன்பது ம.வ. மூவேழ் துறையும் முட்டின்று போகிய - புறம். 166 முட்டுக்கால் முழங்கால்: முட்டுக்கால் = கால் எலும்பும் தொடை எலும்பும் முட்டுகிற இடம். முழங்கால் = முட்டுக்கால் முதல், கணைக்கால் வரை உள்ள கால். முழங்கால் முழந்தாள் எனவும் படும். கைம்முழம் அளவு இருத்தல் கருதி முழங்கால் எனப்பட்டது. முழம் போடுதல் நீட்டலளவாக நெடுங்காலம் இருந்தது. முட்டு, முட்டிஎனவும் வழங்கும். முட்டுக்கை முழங்கை: முட்டுக்கை= கை எலும்பும் தோள் எலும்பும் முட்டுகிற இடம். முழங்கை= மணிக்கட்டு முதல் முட்டுக்கை வரையுள்ள கை. ஈரெலும்புகள் முட்டுகிற இடம் முட்டு; இரண்டையும் மூடி இணைப்பது மூட்டு. முட்டுக்கை முட்டிக்கை எனவும்படும். சிறுவர் விளையாட்டுகளில் தோல்வியுற்றவர்க்கு முட்டி தள்ளும் தண்டனை உண்டு. கல்லையோ, குச்சியையோ ஆட்டக் குழிவரை முட்டியால் தள்ளிக் கொண்டு போக வேண்டும் என்பது அது. முட்டுதல் மோதுதல்: முட்டுதல் = ஒன்றையொன்று படுமாறு தலைப்படுதல் முட்டுதலாம். மோதுதல் = கீழே வீழ்ந்து படுமாறு தள்ளுதல் மோதுதலாம். முட்டுதல் முற்படு வினையும் மோதுதல் பிற்படு வினையும் ஆம். முட்டித் தள்ளுதல்என்பது இவ் வினைச்சொற் பொருளை விளக்கும். முட்டுப்பாடாம் வறுமை முட்டுப்பாடுஎனப்படுவதும் அறிக. * முட்டுக்கால் முழங்கால்முட்டுக்கை முழங்கைகாண்க. முட்டுப்படுதல்: முட்டுப்படுதல் = வறுமை. முட்டுப்படுதல் வறுமை. முட்டுப்பாடு என்பதும் அது. தட்டுப்பாடு என்பது சிற்றளவு வறுமை. முட்டுப்பாடு பேரளவு வறுமையாம். எங்கெங்கும் கேட்டும் எதுவும் பெற முடியாமல் என்செய்வோம் எனத் தவிக்கும் வறுமையாம் இது. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு - திருக். 1048 என்னும் வறுமையும், நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பா டரிது - திருக். 1049 என்னும் வறுமையும் முட்டுப்பாடாம். முட்டு வீடு என்பது தாய் மகப்பேறு பெற்ற அறை. அதனைப் பெற என்ன பாடுபடுவாளோ அப்பாடு முட்டுப்பாடு. அவ்வுயிர்ப் போராட்டத் துடிப்பை ஆக்குவது முட்டுப்பாடாம் வறுமை என்க. முட்டு மாடு: முட்டு மாடு = முன் சீற்றத்தன் (முன் கோவி). முட்டும் மாட்டின் தலையசைவு, கொம்பசைவு கண்டே ஒதுங்கி விடுவர். கொம்புளதற்கு ஐந்து முழம் விலக வேண்டும்என்பது ஒரு தனிப்பாடல். கொம்புள்ள மாட்டின் முட்டுதலுக்கு அஞ்சி ஒதுங்குவது போல முன்சீற்றத்தாரைக் கண்டும் அஞ்சுதல் உண்டு. ஆதலால் அவரை முட்டுமாடு என்பர். அதனை அவர் முன்னர்க் கூற முடியுமா? அவர் காது கேட்கவும் கூற முடியுமா? பிறர்க்கு வெளிப்படாத வகையில் முட்டு மாடுஎன்று பெயர் சூட்டிக் கொள்வர். எத்துணைச் சிறப்புகள் இருப்பினும் முன்சினத்தர்நிலை மதிப்பைக் கெடுத்து விடுதல் வெளிப்படை. கோவம் உள்ள இடத்தில்தான் குண மிருக்கும் என்பது ஒப்பேற்றி சொல்லாம். ஒப்பேற்றி = எதற்கும் ஆமாம் போட்டுப் பிழைப்பவர். முட்டு மொளி: முட்டு = ஓர் எலும்பும் மற்றோர் எலும்பும் அல்லது இருபகுதிகள் முட்டுகிற இடம். மொளி = ஒரு முட்டுக்கும் மற்றொரு முட்டுக்கும் இடைப்பட்ட இடம் மொளி. கரும்பில் உள்ள கணுக்கள் முட்டு; கணுவுக்கும் கணுவுக்கும் உள்ள இடைவெளி மொளி. காலில் முட்டுக்கால், முழங்கால் உண்டு. முட்டுக்கால் முட்டி அல்லது மண்டி போடும் பகுதி. அதற்குக் கீழே உள்ளது முழங்கால். அதே போல் முட்டுக்கையும் முழங்கையும். முட்டுக்கை நீண்டால் முழங்கை நீளும் என்பது பழமொழி. முட்டை: முட்டை:1 குஞ்சு உருக்கொண்டு பருத்து வெளிப்படுமாறு முட்டுதலால் கொண்ட பெயர், முட்டை. பறவைகளின் முட்டை, கோழி முட்டை. முட்டை:2 மதிப்பெண் இன்மை காட்டும் சுழி. முட்டை:3 நீரில் தோன்றும் குமிழ். முட்டை:4 வழலை (சவர்க்காரம்) நீரை ஊது குழல்வழி ஊதினால் உண்டாகும் நுரைமுட்டை. முட்டை:5 பூ அரும்பு திரண்ட நிலையில் மொக்கு என்றும், மொட்டு என்றும் வழங்குதல் பொதுவழக்கு. அதனை முட்டை என்பது கொங்குநாட்டு வழக்கு. அது வடிவொப்புக் கருதியது. முட்டையிடல்: முட்டையிடல் = அடங்கிக் கிடத்தல். அடைகாத்தல் என்பது போன்றது முட்டையிடல். முட்டைக் கோழி அடையை விட்டு வெளிப்படாது. தீனியும் நீரும் கூடக் கருதாமல் கிடந்த கிடையாய்க் கிடக்கும். அப்படிக் கிடத் தலையோ, தீனும் நீரும் கொள்ளாதிருத்தலையோ குறியாமல் வீட்டுள் அடைந்து கிடத்தலைக் குறிப்பதாக வழங்குவது முட்டையிடலாம். முட்டையிட்ட கோழி போல வீட்டை விட்டு வெளிப் போகாமல் கிடக்கிறான் என்பது பொருளாம். அவன் முட்டைக்கோழி; விளையாட வரமாட்டான் என்பதில் வீட்டுள் அடங்கிக் கிடக்கும் பொருளிருத்தல் அறிக. முணங்கக் கொடுத்தல்: முணங்கக் கொடுத்தல் = தாங்க மாட்டாத அளவு அடி தருதல். கொடுத்தல் என்பது கொடைமானம் என்பதால் திட்டு தலையும், கொடை என்பதால் அடித்தலையும் குறிக்கும். அடிபட்டவன் வலி தாங்க முடியாமல் முணங்குதல் கண்கூடு. அதனால், முணங்குதல் என்பது வலி தாங்க முடியாத அரற்றாக அமைந்தது. அவ்வரற்று அமையுமாறு அடித்தல் முணங்கக் கொடுத்தல் ஆயிற்றாம். இன்னும் இதனிற் கடியது முக்க முணங்கக் கொடுத்தல் எனப்படும். முணகுதல் சலித்தல், முணங்குதல் அரற்றுதல் என்னும் வேறுபாடு அறிக. நன்றாக முணங்கக் கொடுத்துவிட்டான், இனி மற்றவர் வழியில் தலை யிட்டு வர மாட்டான் என்பது முணங்கப் பெற்றான் பெற்ற முணகலுக்கு முடிவுரை. முண்டகம்: முண்டகம்:1 முள் > முண் > முண்டகம். முள்ளைத் தண்டிலே யுடையது முண்டகமாம் தாமரை. முண்டகக் கூர்ம் பனிமலர் - குறுந். 51 கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணி கழாஅலவும் - சிறுபாண். 148 முண்டகம்:2 முண்டு + அகம் = முண்டகம். முண்டு = துண்டு. நீராடுதற்குக் கட்டிய துண்டொடும் இருத்தல், முண்டகமாம். முண்டம்: முண்டு + அம் = முண்டம் = கழுத்துத் துண்டிக்கப்பட்ட உடல். கண்ணுதலின் முண்டத்தான் - ஐங். எழு. கட. உடையெதுவும் இல்லா உடல் (ம.வ.). முண்டித்தல் என்பது தலை மழித்து மழுக்கையாக்கல். முண்டாசு: முண்டு என்பது துண்டு. இப்பொழுது முண்டு கேரள வழக்கில் உள்ளது. பண்டு தமிழில் வழக்கில் இருந்ததே அது. முண்டைத் தலைமறையக் கட்டுதல் முண்டாசு எனப் பட்டது. ஆசு = பற்றுக்கோடு. தலையைச் சுற்றிப் பற்றிக் கொண்டிருப்பது முண்டாசு. தலைப்பாகை என்பதும் அது. முண்டும் முடிச்சும்: முண்டு = மரத்தின் தூர் திரண்டு திண்டாகப் பருத்திருத்தல். முடிச்சு = மரத்தின் தூரில் கணுக்கள் இருத்தல். முண்டும் முடிச்சுமாக இருக்கும் இந்த மரத்தை அறுக்க முடியாது. அரம்பத்தையும் சிதைத்துவிடும் என்பர். கதவு, நிலை முதலிய பொருள் செய்தற்கு மரம் எடுப்பவர் முண்டு முடிச்சு இல்லாமல் பார்ப்பர். முதலை: முதல் + ஐ = முதலை. முதல் = உடல்; முதலாகு பெயர், சினையாகுபெயர் என்பவற்றுள் முன்னது உடல்; பின்னது உறுப்பு. அம்முதலாம் உடலுக்கு வலிமை எது? உடலா உடலில் வாய்ந்துள்ள வலிமையா? அவ்வலிமைச் சிறப்பே உள்ளம் உடைமை உடைமைஎன்றும் (திருக். 592), உடையர் எனப்படுவது ஊக்கம்(திருக். 591) என்றும் திருக்குறளில் போற்றப்படும். அதே குறள் நெடும்புனலுள் வெல்லும் முதலை(திருக். 495) என்னும். ஊக்கமாம் முதலை உடைமையால் அது முதலை எனப்பட்டதாம். அதன் நிறமும் தோற்றமும் கண்டு இட்ட பெயர் கராம்என்பதாம். கசேந்திரன்என்னும் தொன்மக் கதையை நினைக. முதல்: முதல் = மூலப்பொருள், அடிப்பொருள். விரிவாக்கத்திற்கு எல்லாம் இருப்பாக அல்லது கருவாக உள்ள பொருள். ஆம் பொருள் அன்று ஆதலால், முதலாம் பொருள் எனப்படாது முதல் என்பதேயாம். 1. முதல் = முதலாக உடையன; அ, ஆ, இ முதலியன அவை. எ-டு: அகர முதல எழுத்தெல்லாம்(திருக். 1). 2. முதல் எண். எ-டு: வளிமுதலா எண்ணிய மூன்று(திருக். 941) 3. செல்வம். முதலிலார்க்கு ஊதியம் இல்லை(திருக். 449) 4. வேர், கிழங்கு. வள்ளிமுதல் அரிந்தற்று(திருக். 1304) 5. முதன்மை. முதல்வர், முதல் பரிசு. 6. முதன்மை, வேர், பழம், விதை, சொத்து எனப் பொருள் தரும் சொல் முதல் என்பது. அது நாற்று என்னும் பொருளில் உழவர் சொல்லாக வழங்குகின்றது. நெல் நாற்று ஒன்றுக்கு, ஆயிரமாய் விளைவது எண்ணத்தக்கது. விளைவைக் கண்டுமுதல் என்பதும் எண்ணத்தக்கது. முதற்றாய் மொழியின் இயல்புகள்: உலகமொழிகள் பல்லாயிரக்கணக்காகப் பரவிக் கிடப் பினும். அவற்றுக்கெல்லாம் ஓரளவில் மூலமாக அல்லது முதலாக ஒரு பெருந் தாய்மொழி யிருந்திருத்தல் வேண்டும் என்பது. மொழிநூலாற் போந்த முடிபாம். மக்களெல்லாம் ஒரு தாய் வயிற்றினர் என்று கொள்ளப் படாவிடினும். மாந்தன் தோன்றிய இடம் ஒன்றே என்பது மாந்தனூலால் தெரிய வருதலால், உலகமொழி கட்கெல்லாம் ஆதியில் ஏதேனுமொரு தொடர்பிருந்திருத்தல் வேண்டும். மொழிகள் யாவும் சிற்றளவாகவும் பேரளவாகவும் திரிந்து கொண்டே யிருப்பதால், அவற்றுக்குள்ள தொடர்பு முதற்காலத் திலிருந்தது போல் இக்காலத்தில் தெளிவாயில்லை. ஆயினும், ஆழ்ந்து ஆராயுங்கால், அப் பழந்தொடர்பைக் கண்டறிதற்குச் சில சான்றுகள் கிடைக்கின்றன. இதுபோதுள்ள மொழிகளுள், முதற்றாய் மொழியாகக் கருதப்படக் கூடியவை வடமொழி (சமற்கிருதம்), தென்மொழி (தமிழ்) என்னும் இரண்டே இவற்றுள் வடமொழி யொன்றே மேனாட்டாரால் விரிவாகவும் விளக்க மாகவும் அறியப் பட்டுள்ளது. தமிழைத் தமிழரும் செவ்வையாயறிந்தாரல்லர். அதனால், வடமொழி யொன்றையே, முதற்றாய் மொழி யாயிருந்திருக்கலாம் என மேனாட்டார் கருதி வருவதில், யாதொரு குற்றமும் தப்பெண்ணமும் இல்லை. ஒரு போலிக் கொள்கையை அல்லது பொய்க் கொள்கையை எத்துணைப் பேர் கொண்டிருப்பினும், அது நீடித்து நில்லாது, உண்மை என்றைக்கேனும் வெளிப்படுவது திண்ணம். முதற்றாய் மொழிக்கு, அதற்குரிய சில சிறப்பியல்புகளும் நிலைமை களும் உண்டு. அவை, வடமொழி, தென்மொழி என்னும் இரண்டுள் எதற் குள்ளன என்று பார்ப்போமாயின், முதற்றாய் மொழியைக் கண்டுவிடலாம் (தேவநே. 11, பக். 299). முதனிலையும் முழுநிலையும்: ஒரு சொல்லின் முதனிலை தனிச்சிறப்பினது. அது முதல் இடத்தில் நிற்பதுடன் முதன்மை பெற்றதுமாம். கல்லூரி முதல்வர், மாநில முதல்வர் என்னும் பதவிச் சிறப்புகள் முதலானதுடன் முதன்மைச் சிறப்பும் காட்டுவனவாம். முதலாம் தன்மையே முதன்மை என்க! முதனிலை அளவில் அமைந்ததும் சொல்லாம் எனின், அச்சொல்லின் முதனிலைச் சிறப்பு அம்முதனிலையிலே அடங்கி இருத்தல் கூடும் அன்றோ! முதல்என்பதற்குரிய பொருள்என்னும் பொருளும் முதலின் முதன்மைச் சிறப்பை வெளிப்படுத்தும். முதலாளி என்பது வழக்குச் சொல். முதலிலார்க்கு ஊதியம் இல்லை(திருக். 449) என்பது வள்ளுவம். ஊதியம் இல்லையாயினும் ஒழியட்டும்; முதல் ஒழிந்து விடக்கூடாது என்பது சிந்தாமணி (770). உள்ளம், உயிர் என்பன முதன்மையானவையே, எனினும் இவற்றினும் முதன்மையானது உடல். அவ்வுடல் இல்லாக்கால் உள்ளம் எங்கே? உயிரின் உறைவு எங்கே! ஆதலால் உடல் முதல் எனப்படும். முதலும் சினையும்என்பது தொல்காப்பியம் (சொல். 89). சினையாவது உறுப்பு. மரம் செடி கொடிகளின் வாழ்வும் வளமும், வேரைக் கொண்டதே. அவ்வேர், முதல்எனப்படும். கிழங்கும் முதல் எனப்படும். அம்மட்டோ! உலகம் தோன்றுவதற்கு முதலாம் இயற்கை அல்லது இறையும் முதல்எனவே படும். மூவா முதலாஎன்பன சிந்தாமணியும் திருவாசகமும் (கடவுள். 27; 10). சொல் முதலாம் முதனிலையில் சொல்லின் முழுநிலை இருப்பதை இனிக் காண்போம்! கேளிர்; இச்சொல், பழஞ்சொல்; பழகிப் போன சொல்லும் கூட! யாதும் ஊரே யாவரும் கேளிர்என்னும் கணியன் பூங்குன்றனார் உரை. இக்கால் மிகப் பரப்பானதே கேளிர் என்பதில் முதல்நிலை எது? கேள் என்பதே முதல்நிலை. இக் கேள்என்பதிலே கேளிர்என்பதன் சிறந்த பொருள் அடங்கிக் கிடக்கிறது. கேள்என்று ஏவுகின்றது முதல்நிலை! எதைக் கேட்க ஏவுகின்றது? இன்பத்தைக் கேட்கவா? துன்பத்தைக் கேட்கவா? இன்பத்தைக் கேட்க எவரும் விரும்புவர்; துன்பத்தைக் கேட்பதற்குச் செவி சாய்ப்பரே அரியர். ஆதலால் பிறர் கூறும் இன்பு துன்புகளைக் கேள் எனப் பொதுப்பொருள் தரும் எனினும், துன்பினைக் கேட்டலே கேள்என்பதன் ஏவற் பொருளாகும். கேளும் கிளையும் கெட்டார்க்கில்லைஎன்பதன்றோ முது மொழி. கெட்ட காலை விட்டனர் என்னாது நட்டோர் என்பது நாட்டினைஎன்பதன்றோ பெருங்கதை (2:9:118-119). கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல் - திருக். 796 என்பதன்றோ வள்ளுவம். ஒருவர் துயருற்றோ தொல்லையுற்றோ இழப்புற்றோ இழிப்புற்றோ வந்து தம் நிலைமையைச் சொல்லத் தவிக்கின்றார். அவர் அல்லலை மாற்றுவதும் மாற்றாததும் ஆய்வுக்குரியவே எனினும், அவர் சொல்வதைக் காது கொடுத்தாவது கேட்க வேண்டும் அன்றோ! அக்கேட்புத் தானே அதனைக் கூறுபவர்க்கு வாய்க்கும் முதல் ஆறுதல்! ஆதலால், அல்லல்பட்டு ஆற்றாது உரைப்பார் உரையைக் காது கொடுத்துக் கேட்பவர் எவரோ அவர் கேள்; கேளிர். காது கொடுத்துக் கேளாதவர் எவரேயாயினும் அவர் கேளார்! (கேளிர் = உறவினர்; கேளார் = உறவிலார்) ஒட்டு உறவு, கொண்டோர் கொடுத்தோர் என்பார் கேளல்லர். அவரே ஆயினும் சரி, அவரல்லா அயலாரே ஆயினும் சரி, புண்பட்டு வந்தவர் புகல்வுக்குக் காது கொடுத்துக் கேட்பவரே கேளிராம். காது கொடுத்துக் கேட்டால் மட்டும் போதுமா? என வினவுவார் உளர் எனின், காது கொடுத்துக் கேட்கவும் மாட்டாதவர்தாமா ஓடி வந்து கை கொடுத்து உதவுவார் என மறுவினா வினாவுக! அண்மைக் காலத்தில் வாழ்ந்த சருக்கரைப் புலவர் என்பார், ஒருவர் சொல்வதைக் காசு கொடுத்துக் கூடக் கேட்க வேண்டா; காது கொடுத்துமா கேட்கக் கூடாது?என்பார். சொல்வதைக் கேட்க ஒருவர் இருந்தால் சொல்பவருக்கு ஓர் ஆறுதல் கிடைக்கும். அவ்வாய்ப்பும் இல்லாது போனால், வெந்த புண்ணில் வேல் துளைத்ததெனத் துயரே மிகும்! அதனால்தான், செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு - திருக். 389 என்றார் திருவள்ளுவர். பொருள்: துயருக்கு ஆட்பட்டு வந்தவர் கேட்கப் பொறுக்காக் கடுஞ்சொல்லே சொன்னாலும் பண்புடைய அரசன் செவி கொடுத்துக் கேட்க வேண்டும்! அவ்வாறு கேட்பானாயின் அவன் ஆட்சியின் கீழ் உலகமெலாம் இனிது தங்கும் அடியவர் கூறும் ஆற்றாமை உரையைக் கேட்டு அருள்பவன் இறைவன் ஆகலின் அவனை அப்பரடிகள் சொற்றுணை என்றார்; நற்றுணை என்றும் நவின்றார். முன்னை நாளினும் இன்றை நாளில் மனநோயர் பெருகி வருவது கண்கூடு! அதிலும் முதுமையில் - செல்வாக்கு மிக்க பதவிகளில் இருந்து ஓய்வு பெற்ற முதுமையில் - மன நோயராக உழல்வார் பெருகி வருகின்றனர்! அந்நிலை பெருகாமல் தடுப்பதும் தவிர்ப்பதும் கேளிராம் தன்மையால் பெரிதும் கூடுவதாம். ‘kd«É£L¥ ngr xUt® ïšiyna! என்று மறுகுவார் எத்துணைப் பேர்கள்! இவர்கள் மனநோயர்கள் ஆகாமல் தடுக்க வேண்டின் கேளிர், பெருக வேண்டும்! இதனைப் கேட்பார் எத்துணையர்? முதிரை: முதிர்ந்த பயறு வகையும் பருப்பு வகையும். செவ்வூன் தோன்றா வெண்டுவை முதிரை - பதிற். 56 பொருள்: முதிரை என்றது அவரை துவரை முதலாயினவற்றைப.உ. முதிர்வு: இளமை x முதுமை; முதியர்; முதிர்ந்தவர். முதிர்வு = மூப்பு; முதுமையுறல்; முதிர்தல், முதிர்ச்சி என்பவும் அது. இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி - பெரும்பாண். 268 முதிர்தேம் பழம் - சிலப். 10:71 முதிர்பூந் தாழை - சிலப். 1:49 முதுகண்: முதுகண் என்பது தமது நெருங்கிய கிளைஞராயுள்ள இளைஞர்க்கும் பெண்டிர்க்கும் அவர்கள் பொருள்களுக்கும் பாதுகாவலாக நிலவிய, ஆண்டில் முதிர்ந்த ஆண் மக்கட்குரிய பெயராக முற்காலத்தில் வழங்கியுள்ளது என்பது கல்வெட்டு களால் தெரிகிறது. இதனை இச் சுந்தர பட்டனையே முதுகண்ணாக வுடைய இப் பொன்னார் மேனி பட்டன் மாதா cikah©lhS«”(S. I. I. Vol. V, No. 649) எனவும், இவனையே முதுகண்ணாக வுடைய இவன் பேரன் சொக்கன் ஆராவமுதும் (S. I. I. Vol. Vi, No. 34) எனவும் போதரும் கல்வெட்டுத் தொடர்களால் உணரலாம். பிறர்க்கு முதுகண்ணாக இருப்பவன் முதுகண்ணன் என்பது வெளிப்படை (உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்பவர் ஒரு சங்கச் சான்றோர்) (புறநானூற்றுச் சொற் பொழிவுகள் 132-133). (உ.க.சொ.நு.வி. பக். 209) முதுகாஞ்சி: இளமை கழிந்து அறிவின் மிக்கோர், இளமை கழியாத அறிவில்லாத மாக்கட்குக் கூறுவது முதுகாஞ்சியாகும். இளமைகழிந் தறிவு மிக்கோர் இளமை கழியாத அறிவின் மாக்கள் தமக்கு மொழியப் படுவது முதுகாஞ்சி யாகும் - முத்துவீ. 1127 காஞ்சி = நிலையாமை. இவ்வுலகியலைக் கூறும் தொல்காப்பியம், நில்லா உலகம் புல்லிய நெறித்தே- தொல். 1024 என்னும். மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே என்னும் புறநானூறு (165). ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில் என்னும் திருக்குறள் (233). நாலடியார், இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என்பவற்றை விரிக்கும். நிலையாமை பொதுவில் அறியப்படுமாயினும், போர்க் களத்து அறியப்படுதல் மிகத் தெளிவாம். ஆகலின், களப்போர் சுட்டும் வஞ்சிக்கு எதிரிடையாம் காஞ்சி, நிலையாமைப் பொருளும் தரலாயிற்று. நிலையாமை கருதி, அறமேற் கொண்டு ஒழுக அறிவுறுத்தும் நூல்களுள் ஒன்று முதுமொழிக் காஞ்சி என்பதும் அறிக. அசோக மன்னன் வெற்றியிலே புத்த சமயப் பரப்பம்எழுந்ததும் உணர்க. முதுகுடி: முதுமை + குடி = முதுகுடி. முதுகுடி, மகட்பா டஞ்சிய மகட்பா லானும் - தொல். 1025 பொருள்: தன்தொல்குலச்சிறப் புணர்த்தற்கு முதுகுடி எனமுன் வந்ததுஇளவழ. குறிப். மூதின்முல்லை என்பதும் அது. வீரர்க்கன்றி அம்மறக் குடியிற் பிறந்த மகளிர்க்கும் வீரம் உண்டாதலைக் கூறுதல் மூதின் முல்லை (புறப். வெண். 175). இத்துறையமைந்த புறப்பாடல்கள்: 279, 288, 306, 308, 312. முதுக்கு: முது = முதுமையால் உண்டாகும் அறிவு, அறிவு. முது > முதுக்கு. x.neh.: மெது > மெதுக்கு. முதுக்கு உறைதல் = அறிவு தங்குதல், அறிவடைதல். முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ - திருக். 707 முதுக்குறைவு: முதுக்கு + உறைவு = முதுக்குறைவு. முதுமை அறிவும் முதிர் சால்பும் உறையுநராக இருத்தல். இளமையிலேயே முதுக்குறைவு பெறின் சிறுமுதுக்குறைவியாம். சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன் - சிலப்.16:68 சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி - அகம். 17 கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே - குறுந். 217 முதுசொம்: சொம் என்பது சொத்து என்னும் பொருள்தரும் பழஞ்சொல்; இலக்கியச் சொல். வழிவழியாக வரும் சொத்து, முதுசொம் எனப்படுதல், யாழ்ப்பாண வழக்காக உள்ளது. பழஞ்சொத்து என்பது பொருளாம். சும் > சொம். மிகத்திரண்டது. சும்மை, பல்வகை ஒலி, சுமை, பொதி. முதுவர்: முதியர் என்பது போல முதுவர் என்பதும் பொதுவழக்கே. முதுமக்கள் தாழியை நினைவு கூரலாம். முதுவர் என்னும் பழங்குடி மக்கட் பெயரும் உண்டு. திருப்பாச் சேத்தி வட்டாரத்தில் முதுவர்என்பது பெருவழக்கு. முதை: முதுமை > முதை. முதைபடு பசுங்காட்டு - அகம். 262 பொருள்: பழைமை மேவிய பசிய காட்டிலேவேங்.வி. விதையர் கொன்ற முதையற் பூழி - நற். 121 பொருள்: விதை விதைக்கும் ஆயர் பலபடியாக உழுது புரட்டிய பழங் கொல்லைப் புழுதிபின்னத். முத்தம்: முட்டு > முத்து = முட்டை போல் உருண்டு கிளிஞ்சிற்குள் சிறிதாக விளையும் ஒளிக்கல் வகை, உருண்டு திரண்ட சிறுவிதை. முத்து > முத்தம் (பெருமுத்து) > முக்த (வ). வடவர் சிப்பியினின்று விடுதலை பெற்றதென்று பொருட்கரணியங் காட்டுவது பேதைகட்கே ஏற்கும்(தி.ம. 753). முத்தரையர்: மூன்று அரசர் என்றும் (முத்தரையர்) முத்து அரசராம் பாண்டியர் என்றும் பொருள் தருவது இது. அரையர் = அரசர். பாண்டிய நாடு முத்துடையது. மூவரையர் என்பார் கம்ப அரசர், சோம அரசர், முத்து அரசர் என்பார் மூவர். அவர் பெயரால் உள்ளவை திருச்சிராப் பள்ளியை அடுத்த கம்பரசம் பேட்டை, சோமரசம்பேட்டை, முத்தரச நல்லூர் என்ப. பெருமுத்தரையர் நாலடியாரில் பாடுபுகழ் பெற்றவர். வண்மை மிக்கார் (200). முத்தனும் பெத்தனும்: முத்தன்= முத்தி நிலை பெற்றோன். பெத்தன்= பெருநிலை அல்லது ஒடுக்க நிலை பெற்றோன். முத்தனும் பெத்தனும்என்பது சமயநூல் இணைச் சொற்கள். முத்தனைச் சீவன் முத்தன்எனவும் கூறுவர். பெத்தநிலை, பெத்த முத்தி எனவும்படும். முத்தி நிலை என்பது முழுமை பெற்றோன் நிலை. முத்தன் முழுதுணர்ந்தோன்; அவன் நிலையை அறிந்தோர் மண்ணுலகில் வாழும் போதே முத்தன் பெத்தன் என வழங்குகின்றனர். முடிவினை அறிந்தபின் கூறப்படுவதன்றாம். புத்தன் அருகன் முதலியோரை முத்தன்என்பதைக் கொண்டு அறிக. முத்து: முற்று > முத்து. சங்கில் முற்றிய மணி, தன் மென்மையாலும் பொலிவாலும் அணிகலப் பயன் செய்தலாலும் வன்மை (முற்று) இழந்து முத்து எனப்பெயர் கொண்டதாம். முத்து முத்தமாதலும் உண்டு. கண்ணே மணியே முத்தந்தா!என்று குழந்தையைக் கொஞ்சலும் காதற் கொஞ்சலும் மெல்லியற் பேறாதல் குறிப்பில் உணர்த்துவதாம். ஆமணக்கு முத்து, கொட்டை முத்து, வேப்பமுத்து, புளியமுத்து என்னும் மக்கள் வழக்கை அறிக. முத்துமுடி: நரைத்தல் முதுமை அடையாளம் எனப்பட்ட காலமும், கவலைக்கு அடையாளம் எனப்பட்ட நிலையும் மாறிப் போயது வெளிப்படை. நரையை மாற்ற எடுக்கும் முயற்சிகளை நோக்கினால் கருமுடியின் பெருமை விளங்கும். நரைமுடிக்கு ஆண்டிபட்டி வட்டாரத்தார் ஓர் அருமையான முடிசூட்டு விழா எடுத்துள்ளனர். அது முத்துமுடி என்பது. வெண்ணிறம் மட்டுமா முத்து! அது, எவ்வளவு விலைமானப் பெருமையது! முத்தெண்ணெய்: முத்து என்பது வேம்பு, புளி, ஆமணக்கு முதலியவற்றின் வித்துக்கும் பெயர். முத்தின் வடிவுநிலை கருதியதாகவும், பின் சார்பு கருதியதாகவும் வந்த பெயர் அது. ஆமணக்கு எண்ணெய், விளக்கு எரிக்கப் பயன்பட்டதால் விளக்கெண்ணெய் ஆயது. அதனை முத்தெண்ணெய் என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. எரிந்து வெளிச்சம் தருதலால், வெளிச்செண்ணெய் என்பதும் உண்டு. வெளிச்சம் = ஒளி. முத்தை: முந்தை > முத்தை. முத்தைத் தம்மென - பதிற். 85 பொருள்: முன்னே தம்மின் என. முந்தை முத்தை என வலித்ததுப.உ. நந்து > நத்து > நத்தை ஆவது போல. முத்தொள்ளாயிரம்: மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம். மூன்று = மூவேந்தர். சேர, சோழ, பாண்டிய மன்னர் ஒவ்வொருவரைப் பற்றியும் முந்நூறு முந்நூறு பாடலாக 900 பாடல் பாடியமையால் முத்தொள்ளாயிரம் எனப்பட்டதாம். ஒவ்வொருவர் மேலும் 900 பாடல்கள் எனின் 2700 பாடல்களாம். வச்சத் தொள்ளாயிரம் என்னும் நூலை எண்ணினால் தொள்ளாயிரம் பாடல்களைப் பாடுதல் மரபாகக் கருதலாம். பத்து, நூறு, ஆயிரம் போலத் தொள்ளாயிரம் என்பதாம். முந்து: முன் + து = முந்து. முன்னர், முன்னே. முந்தை என்பதும் இது. தண்பனி வடந்தை அச்சிரம் முந்துவந் தனர்நம் காத லோரே - ஐங். 223 பெருந்தண் வாடையின் முந்துவந் தனரே - ஐங். 352 முந்நீர்: 1.மும்மை + நீர் = முந்நீர். மூன்று நீர்மைகளை (தன்மைகளை) யுடைய நீர், கடல். படைப்பு, காப்பு, அழிப்பு என்பவை அம்முந் நீர்மையாம். ஆகுபெயர். ஆற்றுநீர் ஊற்றுநீர் மேனீர் என இவை யென்பார்க்கு அற்றன்று; ஆற்றுநீர் மேனீராகலானும் இவ் விரண்டுமில்வழி ஊற்று நீரும் இன்றாம் ஆதலானும், இவற்றை முந்நீர் என்றல் பொருந்தியதன்று; முது நீரெனின், நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும்(குறள். 17) என்பதனால் அதுவும் மேனீரின்றி அமையாமையின் ஆகாது; ஆனால் முந்நீர்க்குப் பொருள் யாதோ எனின் முச்செய்கை உடைய நீர், முந்நீரென்பது. முச்செய்கை யாவன மண்ணைப் படைத்தலும் மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்.”(சிலப். 17:31 அடியார்க்.). 2 . ஆற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீரும் ஆகிய மூன்று நீர்களைக் கொண்ட கடல் (புறம். 9, ப.உ.). 3 . முன்னீர் என்றோதி. நிலத்துக்கு முன்னாகிய நீர் என்றுஉரைப்ப (புறம். 9, ப.உ.). முப்பால் புள்ளி: பால் = பக்கம், பகுதி. முப்பால் = முப்பக்கம். ஒரு பக்கமாக இல்லாமல் மூன்று பக்கம் புள்ளி உடைமை யால் முப்பால் புள்ளி எனப்பட்டது. அடுப்புக் கூட்டுப் போல்வதோர் எழுத்து என அதன் வடிவுக்கு உவமை காட்டுவர் இலக்கண உரையாசிரியர். நேருக்கு நேராக இருகற்களும் இருபாலும் இடைவெளி அமைய அவற்றூடு முக்கோண அமைப்பில் ஒருகல்லும் வைத்து அடுப்பாகக் கூட்டுதல் மக்கள் வழக்காகும். மும்மணிக் கோவை: ஆசிரியம், வெண்பா, கலித்துறை ஆகிய மூன்றும் முறையே முப்பது பாட்டான் வருவது மும்மணிக்கோவை யாகும். கோவையாவது கோக்கப்பட்ட மாலை போல்வது. ஆசிரியம் வெண்பாக் கலித்துறை முப்ப தாக வருவது மும்மணிக் கோவை - நவநீத. 36 இப்பாக்களை வெண்பா, அகவல், கலித்துறை என்னும் முறையில் வரும் என்றும், வெண்பா அகவல் என்பவை நேரிசை வெண்பாவும், நேரிசை ஆசிரியமுமே என்றும் கூறுவர். வெள்ளையும் அகவலும் நேரிசையாகக் கலித்துறை வரவந் தாதி யாகி முறைமையின் இயல்வது மும்மணிக் கோவை - பன்னிரு. 262 கலித்துறையாவது கட்டளைக் கலித்துறை. இதனை அசையெண் கலித்துறை என்பார் இலக்கண விளக்க நூலார் (55). மும்மணி மாலை: வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம் என்னும் மூன்றும் முறையே முப்பது பாட்டான் வரின் மும்மணி மாலை எனப் பெயர் பெறும். வெள்ளை கலித்துறை ஆசிரிய விருத்தம் புல்லும் முப்பதும் மும்மணி மாலை - நவநீத. 36 மிகுந்த வெள்ளை கலித்துறை அகவல் விருத்த மும்மணி விளம்புமந் தாதி - பன்னிரு. 256 இவற்றை, வெண்பா கலித்துறை அகவல் அந்தாதி என்பார் இலக்கண விளக்கப் பாட்டியலார். மும்மணி யந்தாதி: தளவாய் மும்மணி அந்தாதிஎன்பதொரு தொகுப்பு நூல். அதனைச் செய்தார் தளவாய் திருமலையப்பர். மூவர் தேவாரங்களில் இருந்து முடிமுதல் தொடை அமையத் தொகுக்கப்பட்ட நூறு பாடல்களையுடையது. மூவகைப் பாடல்கள் என்னும் வழக்கில் இருந்து விரிந்து மூவர் பாடல் தொகுப்புக்கு ஆயிற்று இம் மும்மணி. மும்மண்டிலப்பா: ஒரே ஒரு பாடலாக இருந்து, அதனைப் பகுத்துப் பார்க்க மூன்று பாடல்களாய் மூவகை யாப்பியல்புடையதாய்ப் பொருளமைதி நிறைவுடையதாகத் திகழும். இவ்வகைப்பா மும்மண்டிலப்பா எனப்படும். மும்மண்டிலப்பா திருவரங்கத் திருவாயிரத்தில் இடம்பெற்றுள்ளது. * பகுபடு பஞ்சகம்பிறிதுபடுபாட்டுகாண்க. முயக்கம்: மயக்கம் > முயக்கம். மயக்கம் = கலத்தல், செறிதல், தழுவுதல். நிலம்தீ நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கம் உலகம் - தொல். 1589 துனிதீர் முயக்கம் - அகம். 144 மெய்தோய் முயக்கம் - நற். 199 முயங்குதல் என்பதும் இது. இன்னுயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து - அகம். 22 முயலுக்கு மூன்று கால்: முயலுக்கு மூன்று கால் = தாம் சொன்னதை வலிந்து நிலைநாட்டல். முயலின் கால் நான்கே. கால் ஒன்றை இழந்த ஒரு முயலைப் பார்த்தவன், முயலுக்கு மூன்று கால்என்றான். எத்தனை பேர் மறுத்து நான்கு கால் எனக் கூறினும் தான் கூறியதே கூறினான். அதனால், சொன்னதையே நிலைநாட்ட நினைவாரை முயலுக்கு மூன்று கால்எனக் கூறுதல் வழக்காயிற்று. வாதத்திற்கு மருந்து உண்டு; பிடிவாதத்திற்கு மருந்து உண்டோ?என்பது பிடிவாதரின் மாறாத் தன்மையைக் காட்டுவதாம். நான் என்னென்னவோ சொன்னேன்; அவன் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று பேசுகிறான்; அவனை எப்படித் திருத்துவது?என்பதில் பிடிவாதப் பொருள் புலப்படும். முயல்: மூ > மூய் > மூயல் > முயல். இடமற மூடிய மென்மயிரை உடைமையால் அது முயல் என்னும் பெயரைப் பெற்றது. மூய் = மூடியிருத்தல். மூடியிருத்தல் முகடு, முகடி, மூடு, மூடை என வழங்கப்படுதல் அறிக. பவழநிறப் பூச்சி மூதாய் எனப்படுவதும் முழுதுடலும் மென் செம்பட்டுப் போர்த்த தனையதாய் இருத்தலும் கருதுக. மணிமிடை பவளம் எனப் பெயர்பெற்றது அது (அகம். 304). முயற்சி: முயலுதல், முயற்சி; முயற்சியின் அடிப்படை உள்ளக் கிளர்ச்சியாம் எழுச்சி. அவ்வெழுச்சியும் தாவுதலும் விரைதலும் மறைதலும் அமைந்தது முயல் ஆயிற்று. இயல்பாக அமைந்த எழுச்சியைச் சோர்வால் கெடுத்து விடல் உண்டு என்பதற்கு விளக்கமே முயல் ஆமைக் கதை. இரண்டு பெயர்களையும் இணைக்க முயலாமையாம். அதுவே தோல்வி. முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்பதற்குச் சான்று (திருக். 616). முயல்வு, முயறல், முயற்று என்பன வெல்லாம் முயற்சியே. முயிறு: மொயிறு > முயிறு. பன்னூறு கூடி மொய்த்துக் கூடு கட்டி வாழும் செவ் வெறும்பு முயிறு ஆகும். அதன் உறைவகம் தண்ணிய மாந்தளிர். அத்தளிர் நிறம் கொண்டது அது. நெருங்க விடாக் கடியுடையதும் அடுத்ததை அப்பிக் கொள்வதும் அது. பலா விலையிலும் கூடு கட்டும். பழனப் பாகல் முயிறுமூசு குடம்பை - நற். 180, ஐங். 99 நிழலில் வீழ்ந்து பரவித் திரிதலால் நிழலுக்கு எவரும் ஒதுங்க முடியாதும் செய்வது முயிறு ஆதலின், நிழற்கண் முயிறாய் விடும் என்றது சிறுபஞ்சமூலம் (96). அதன் இயல்பறிந்து, சினமும் சிடுமூஞ்சித் தனமும் உடையாரை முசுடு என்பது ம.வ. முயிறு, முசுடு ஆயிற்றாம். முரண்: அரண் x முரண். அரண் = பாதுகாப்பு; முரண், பாதுகாப்புக்கு எதிரிடைப்பட்டது. முரடு, முரண்டு, முரடன், முரட்டுத்தனம் என்பவை எல்லாம் முரண்வழிப் பட்டவை. கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சி - புறம். 37 பரல்மண் சுவல முரணிலம் உடைத்த வல்வாய்க் கணிச்சி - அகம். 21 முரண்நிலம் = வன்னிலம், பாறை. முரண் வஞ்சி: முரணாவது பகை, வஞ்சியாவது பகைமேற் சென்று போரிடல்; அதற்கு அடையாளமாக வஞ்சி மாலையணிதல். வஞ்சிப்பாவால் போர்வாய்த்த செய்கைகளையெல்லாம் குறையாமல் கூறுவதாகவும் பகைவர் அடிப்படுதலாகவும் உரைப்பது முரண் வஞ்சியாம். வஞ்சிப்பா வால்மறம் வாய்த்த செய்கை எல்லாமும் எஞ்சா திறைவன் இசைத்தலாய்ப் - பஞ்சார் சரணாய் உரைத்தல் தலந்தன்னில் என்றும் முரண்வஞ்சி முன்னி அறி - பிர. திர. 28 பஞ்சார் - பஞ்சு போலப் பறந்தோடும் பகைவர். பஞ்சாகப் பறத்தல்என்பது வழக்காறு. ஆளையா உனக்கமைந்தன மாருதம் அறைந்த பூளையாயின கண்டனைஎன்று கம்பர் (உயுத். 1217) கூறுதல் பஞ்சாகப் படை பறந்ததைத் தெளிவாக்கும். பூளை = பூளைப்பூ; பஞ்சார்என்று பறந்தோடும் பகைவரைச் சுட்டுதல் அரிய ஆட்சி. முரம்பு: வளநிலை முரணுற்றது முரம்பு. பாறையும் பரலும் மேடும் பள்ளமுமாகியதும் தூறும் பாம்புறைவும் உடையதுமாகிய வன்னிலம் முரம்பாம். முரம்புகண் ணுடைந்த பரல்அவல் போழ்வில் கரந்துபாம் பொடுங்கும் பயம்புமா ருளவே - மலைபடு. 198,199 பொருள்: மேட்டுநிலம் தன்னிடத்திலே விண்ட பரலையுடைய பள்ள நிலத்திற் பிளப்பிலே பாம்பு மறைந்து கிடக்கும் குழிகளும் உளஉரை, நச். வான்பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின் - பதிற். 66 முரலுதல்: முரலுதல் = ஒலித்தல்; தும்பிகள் ஒலித்தல் முரலுதலாம். குழலிசை முரலுதலுக்கு ஒப்பாயமையால், குழலிசை தும்பி கொளுத்திக் காட்ட மழலை வண்டினம் நல்லியாழ் செய்ய - மணிமே. 4:3-4 தும்பிக்குத் தூம்பு (குழல்வாய்) இருத்தல் அறியத்தக்கது. முரல் > முரலி > முரளி. குழல் ஊதுவோன், கண்ணன். கின்னரம் முரலும் - பெரும்பாண். 494 நரம்பார்ந் தன்ன வண்டினம் முரலும் - அகம். 355 முரிவு: முரிவு = வளைவு, ஓடிவு. முரி கருஞ்சிலை - சிலப். 28:18 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் - திருக். 473 அலவனைக் காதலித்துக் கால்முரித்து - நாலடி. 123 முருகன்: மலையிடை வாழ்ந்த தமிழ்மக்கள் தங்கட்குக் கண்கூடாகக் காட்சியளித்த இயற்கையை அடிக்கடி கண்ணாற் கண்டு உளத்தால் முகந்து, அதை இடையறாது நினைந்து நினைந்து அதன்கண் படிந்த வாழ்வு நடாத்தினார்கள். அதன் பயனாக அவர்கள் இயற்கையினுள் பிரிவின்றி விராவி நிற்கும் அழகையும் அழகின் மாறாத இளமையையும் இளமையிலூரும் அழியா மணத்தையும் இவையுடைய ஒன்று எல்லாவற்றையுங் கடந்து மாறுதலின்றி ஒளிருந் தன்மையையுங் கண்டார்கள். இவ்வழகு, இளமை, மணம், கடவுட்டன்மை ஆகிய இயல்புகளைக் கொண்ட ஒன்றைப் பண்டைத் தமிழ்மக்கள் முருகு என்பது பொருள் பொதிந்த ஒரு சொல். அம்முருகை உடையவன் முருகன். (முருகின் தொன்மை. திரு.வி.க.) (உ.க.சொ.நு.வி. பக். 210-211) முருகு: அழகு, இளமை, மணம், தெய்வம் இன்ன பல உயர் பொருளையே சுட்டுவது முருகு. ஆகலின், முருகுறையும் மலையிடத்து இறைவனை முருகனாக மலைவாணர் கண்டு வழிபட்டனர். முருகனை அழகன் எனவும் குழகன் எனவும் கொண்டாடினர். தெய்வ முருகில் அழகு கொஞ்சுவதைச் சொல்ல வேண்டுமோ? இயற்கை முருகைக் குறிஞ்சிவாணர் செங்கதிர் எழக்கண்ட காட்சியில் தோய்ந்து சேய், சேயோன், செவ்வேள் எனக் கொண்டனர். அதனையே, உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு ஓவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி என்றது திருமுருகாற்றுப்படை (1-3). மலைநிலச் சேயோன் கடல் காடு வயல் என எல்லா நிலங்களிலும் வழிபடு பொருளானான். முருகனுக்குரிய இசை முருகியம் எனப்பட்டது. முருகு உவக்கும் வாச்சியம் முருகியம் என்றார் நச். திருமுரு. 243 * வேலன்காண்க. முருக்கு: முருக்கு:1 இலையே இல்லாமல் எழில் மிக்க சிவந்த பூவாகவே தோற்றம் தரும் முருக்கு பார்ப்பவரை வயப்படுத்தும். எரி பரவிய வனம் என மயங்க வைக்கவல்லது. முருகன், அழகன்! செம்மேனியன்; முருக்கும் அச்செம்பூவால் சிறப்புற்றது. குருதி தோய்ந்த புலிநகம் போல முருக்கின் அரும்பு இருப்பதை, உதிரந் துவறிய வேங்கை உகிர்போல் எதிரி முருக்கரும்ப என்கிறது ஐந்திணை ஐம்பது (31). முருக்கின் எரிமருள் பூஞ்சினை - அகம். 41 மகளிர் உகிர்க்கு ஊட்டும் செங்குழம்பு போல்வது என்பதை, நகைமுக மகளிர் ஊட்டுகிர் கடுப்ப என்கிறது அகம் (317). முருக்கு:2 முருக்கு, சுவையான தின்பண்டங்களுள் ஒன்று. வளைவு - வட்டம் - எனும் வடிவாலும் முருகல் சுவையாலும் முருக்கு ஆயது. அதன் வகைகள் இனிப்பு காரமெனப் பலவாயின. சரக்கு முருக்கா? வணிகர் முருக்கா? எனப் பெருமைப் பெயரும் பெற்றது. முருங்கை: முற்றியது பிஞ்சு என்பவற்றை முருக்கிப் பார்த்துக்காய் வாங்கும் - பறிக்கும் - வழக்கத்தால் - முருங்கை எனப்பட்டது. அதன் இயற்கை மணமும் சுவையும் மற்றையவற்றுக்கும் மணமும் சுவையும் ஊட்டியது. நெய் உருக்கும் போது அதனொடு முருங்கை இலைகள் போடலால் முருகு - மணம் - கமழ்ந்தது. முருகு நறுமணப் பொருள் பொதுமக்கள் வழியே வாய்த்தது. இந்நாளில் உணவகங்களில் முருகல் தோசையாகிப் பெருவரவாயிற்று. முருங்கைக்காய்: முருங்கைக்காய் = மெலிவு. முருங்கைக்காய் நீளமானது; கனம் இல்லாதது; எளிதில் ஒடிவது. மரமும் எளிதில் நெடுநெடு என வளரும்; வலுவிராது; எளிய காற்றின் சுழற்சிக்கும் கிளையோடு ஒடியும்; அடியோடும் சாயும் இத்தன்மைகளை அறிந்தவர்கள் உடல் வலுவின்றி வளர்ந்தவர்களை முருங்கைக்காய்என்பது வழக்கு. முருங்கைக் காய் பிஞ்சாக இருக்கும் போது நீண்டிருத்தலும், காற்றில் ஆடலும் காண்பார் இவ்வுவமையை மிகத் தெளிவாக உணர்வர். உடல் சதையில்லாமல் முருங்கைக்காய் போல நெடுநெடு என வளர்ந்து விட்டான்என்பது வழக்கு. முருந்து: மயிலிறகின் அடிப்பகுதி. முருகன் ஊர்தியெனப் புனையப் பட்டமையால் தோகையின் அடி முருந்து எனப்பெயர் கொண்டது. இன்னகை, முருந்தெனத் திரண்ட முள் எயிற்றுத் துவர்வாய் - அகம். 179 பொருள்: இனிய நகையினையும் மயிலிறகின் அடியெனத் திரண்ட முட்போலும் கூரிய பற்களையும்வேங். விள. முருந்து ஏர் முறுவல் - அகம். 193 முல்லை: காடும் காடு சார்ந்த இடமும் ஆங்குச் சிறந்து விளங்கிய முல்லைக் கொடியின் பெயரால் முல்லை என்றே வழங்கப் பட்டது. காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய் - திருக். 1227 என்பதும், முகைமொக்குள் உள்ளது நாற்றம் என்பதும் முல்லை மலரைப் போலவே முல்லைப் பல்லியாம் தலைவியின் இல்லிருந்து தலைவனை எதிர்பார்த்திருத்தலும், அவன் வரக்காணக் காடு சென்ற பறவையும், விலங்கும் வீடு திரும்பும் தூண்டல்கள் நிகழ்தலும் எல்லாம் முல்லை மொக்கு விரிந்து மணம் பரப்புதலை ஒக்குமாகலின் அவ்வொழுக்கம் முல்லை எனலாயது. சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்குசுவல் அசைத்த கையள் கைய கொடுங்கோல் கோவலர் பின்னின் றுய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் என்பது முல்லைப் பாட்டு (12-17). இல்லிருத்தல் முல்லை. முல்லை மாறி: முல்லை மாறி = களமாக்கி விடுபவன். முல்லை என்பது வளமிக்க காட்டு நிலம். அக்காட்டு வளநிலை மாறி மழையற்று வறண்டு போனால் பாலை எனப்படும். முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து நல்லியல்பழிந்து போனால் பாலை எனப்படும் என்பார் இளங்கோவடிகளார். அவர்தம் இலக்கணக் குறிப்பைப் பொதுமக்கள் மிக எளிமையாக முல்லைமாறிஎன்பதால் வழங்குகின்றனர். வளமான வாழ்வைப் பாலை யாக்குபவனை முல்லைமாறி என்று வசை கூறுவர். முல்லை மாறி மொல்லைமாறிஎன உலக வழக்கில் இக்காலத்தில் வழங்குகின்றது. முழக்கம்: கடலொலியும் அருவி ஒலியும் இடியொலியும் பிறவும் முழக்கம் ஆகும்; அம்முழக்கப் போல் ஒலிக்கும் பறை முழவு எனப்பட்டது. பெருந்திரை முழக்கமொ டியக்கவிந் திருந்த கொண்டல் இரவின் - அகம். 100 கார்ப்பெயல் உருமின் முழங்க லானாவே - புறம். 81 முழவு: முழங்கும் பறை இசைக்கருவி முழவு ஆகும். முழவம் என்பதும் இது. பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே - புறம். 164 இடி முழங்குதல், அருவி முழங்குதல் - இயற்கை ஓசை. அம்முழக்கம் பறை முழக்கம் ஒப்பதாம். இடியென முழங்கு முரசு - புறம். 17 பறையிசை அருவி - புறம். 126 * முழக்கம்காண்க. முழுகாதிருத்தல்: முழுகாதிருத்தல் = கருக்கொண்டு இருத்தல். திங்கள்தோறும் மகளிர்க்கு வரும் முழுக்கு. விலக்கின் வழியே வருவது. அம்முழுக்கு நின்று விடுதலைக் குறிப்பது முழுகாதிருத்தல் என்பதாம். முழுகாதிருப்பின் கருக்கொண்டு வயிறு வாய்த்துளாள் என்பது குறிப்பாம். ஆகவே, முழுகுதல் என்பது பொது நீராடலையும், ஆடவர் நீராடலையும் விலக்கி, மாதவிலக்கு முழுகுதலைக் குறித்ததாயிற்றாம். அம்முழுக்குக் கொள்ளாமையே முழுகாதிருத்தலாம். முழுகாதிருக்கிறேன் என்ற செய்தியைக் கேட்ட அளவில் உன்னை முழுகிவிட்டேன் என்னும் உட்கோளரும் உளர். அவர் முழுகிக் குளித்தவர். அதனால் நடுக்கம் இல்லை. முழுக்கு: முழுக்கு = முழுகுதல்; முழுக்காட்டுதல் என்னும் பொருளது. பழநாள் கடவுள் மங்கலம்இக்கால், குடமுழுக்கு எனப்படு கின்றது. திருமுழுக்காட்டுஎன்பது விழாக்கோள் வகையால் மக்களுக்கும் தெய்வ உருவத்திற்கும் நீராட்டுதலாகும். முழுதுறும் உடலும் நீருள் மூழ்குதல் முழுகுதல். தலைக்கு நீர் விடாது நீராடல் குளித்தல் ஆகும். முழுக்குப் போடுதல் என்பது விட்டு ஒழித்தல், விட்டுக் கழித்தல் என்னும் பொருளது. முழுங்குதல்: விழுங்குதல் என்பது முழுங்குதலாகத் திரிந்தது எனலாம். இரண்டற்கும் வேற்றுமை முழுங்குதல் என்பது முழுமையாக ஒன்றை விழுங்குவதைச் சுட்டுவதாகலாம். மலைமுழுங்கி மகாதேவன்என்று சிலரை உவமையாகச் சொல்லுவது அறிக. முழுமையில் இருந்து முழுத்தம் வந்தது போல, இதுவும் அமைதற்கு இடன்உண்டாம். முழுக்காட்டுதல்,முழுக்காளி (முத்துக் குளிப்பவன்) என்பவற்றையும் எண்ணலாம். முழுது: முழு > முழுது = முழுவதாக நிரம்புவது. முழுதென் கிளவி எஞ்சாப் பொருட்டே - தொல். 89 கலை முழுதும் நிரம்பிய மதி முழுமதி. வண்டியில் முழுப்பாரமும் போட்டாயிற்றும.வ. முழுமதி புரைமுகம் - சிலப். 7:14 முழுவதும், முழுமை என்பனவும் அது. முழுத்தம்: முழுத்தம் பார்த்தல், முழுத்தக்கால் நடுதல், முழுத்த நேரம் என்பன வழக்கில் உள்ளவை. ஏன் இந்த விரைவு? முழுத்தம் தப்பிப் போகுமா? என்பது விரைவை அமைதிப் படுத்துதல். முழுத்தம்என்பது மங்கலச் செயலுக்கு முழுமை வாய்ந்த பொழுதாகக் கொள்ளப்பட்ட காலம் ஆகும். பின்னர்த் திருமணத்திற்கு ஆயிற்று. இதனை முகூர்த்தம்என வழங்கு வதுடன் முழுத்தம்கல்லார் வாய்ச்சொல் என்னும் கருத்தும் உள்ளது. இது தவறு முழுத்தம்தூய தமிழ்ச்சொல்லே. முழுமை யமைந்த மதி, முழுமதி; முழுமை முழுத்தம். முழுதும் பழுதற்ற முத்தமிழ்ஆவது சிலம்பு. முடிமுதல் அடிவரை நீராட்டல் முழுக்காட்டல், முழுக்காட்டு. தலையில் நீர்விடாது குளித்தல் முழுக்காட்டு இல்லை. செல்வம் எல்லாம் கடனில் போய்விட்டால் கடனில் முழுவிவிட்டதுஎன்பது வழக்கு. முழுமையாக ஒதுக்கி விடுதலைத் தலைமுழுகி விடுதல்என்பதும் வழக்கே. பழங்காலத்தில் திருமணங்கள் இரவில் தொடங்கி வைகறைப் பொழுதிலேயே நடாத்தப் பெற்றன. அவர்கள் போக்குவரவு வினைநலங்களுக்கு ஏற்ப வளர்பிறை, நிறைமதி, முழுமதி நாள்களே தேர்ந்து கொள்ளப்பட்டன. அந்நாளும் திங்கள், சகடம் என்னும் (ரோகிணி) விண்மீனை நெருங்கிக் கூடும் பொழுதாகத் தேர்ந்தனர். கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்- அகம். 86 அங்கண் விசும்பு விளங்கத் திங்கள் சகடம் மண்டிய துகள் தீர்பொழுது- அகம். 136 வானூர் மதியம் சகடு அணைய- சிலப். 1:50 என்பன முழுத்தம் குறிப்பன. முழுத்தம் நற்பொழுது என்பது இதனை, தாமரைச் சேவடி பணியும் முழுத்தம் ஈங்கிது என்கிறது சிலம்பு (26:30). முழுத்தத்தை, முகிழ்த்தம் என்கிறது பிரபந்தத் திரட்டு (36). கல்யாணத்துக்கு முகிழ்த்தம் வைக்க என்பது அது. திரண்ட பூ, முகை என்றும், முகிழ் என்றும் வழங்குவது அறிக. இவற்றால், முழுத்தம்பொருள் பொதிந்த தமிழ்ச் சொல்லே எனக் கொள்க. ஒன்றைச் செய்தற்கு ஏற்ற பொழுதைக் குறைவரக் கருதி முழுமையாக அமைந்த பொழுதை முழுத்தம் என்பதைக் காட்டினும் சிறந்த சொல் பிறிதில்லை யெனத் தெளிதல் வேண்டும். நெல்லை முகவை வழக்காக முழுத்தம் வழங்கி வருகின்றது. முழுமதி எழுச்சி (விடய சந்திரோதயம்): விடயம் = காதல். உள்ளத்தில் ஊன்றிய மயலை விரித்து வெண்ணிலவு ஒளிகாலும் பொழுதில் கூறுதல் விடய சந்திரோதயம் எனப்படும். கலித்தாழிசையால் சொல்லப்படும். நிலவொளியால், பிரிவுக்கு ஆட்பட்ட தலைவன் தலைவியர் வெதும்புதல் பாவிக அமைப்பில் பெருவரவினதாம். சந்திரோ பாலம்பனம் மன்மதோ பாலம்பனம்என நூல்களில் இடம் பெற்றுள. இராம காதையில் இவ்வண்ணனை மிகப் பெருக்கமாக உள்ளது. இத்தகைய பாவிகக் காட்சியை வாங்கிக் கொண்டு எழுந்த சிறுநூல் விட சந்திரோதயம்ஆகும். நாட்டு மயல், வெண்ணிலவிற் கூறல் விடய சந்திரோதய மாம், எண்ணுங் கலித்தாழிசைஎன்பது பிரபந்தத் திரட்டு (46). முழை: முழு > முழை = முழுதுறப் புகுந்து மறைந்து வாழத்தக்க மலைக்குகை. வாள்வரி வயப்புலி கன்முழை உரற - அகம். 168 கன்முழை அருவிப் பன்மலை நீந்தி - புறம். 147 முளரி: முள் + அரி = முளரி = தாமரை. முள்ளைக் கொடியில் கொண்டிருத்தலால் முளரி எனப்பட்டது. முண்டகம் என்பதும் அது. முளரிக்கானமும் ஒத்தது முழங்குநீர் இலங்கை - கம். சுந். 128 * முண்டகம்காண்க. முளவு: முளவு, முளவம், முள்ளம்பன்றி, எய்ப்பன்றி என்றெல்லாம் வழங்கப்படுவது இது. இதன் முள், அம்பு போல் தைக்கக் கூடியதால் எய்ப்பன்றி எனப்பட்டதாம். எய் = எய்யும் அம்பு. முள் உடைமையால் முளவு, முளவம், முளவுமா என்னும் பெயர்கள் உண்டாயின. எய்ம்முள்என்னும் நற்றிணை (98). ஈத்திலையின் கூரையொடும் ஒப்பது - பெரும்பாண். 88, 89 முளவுமா: முளவு என்பது வேறு; முளவுமா என்பது வேறு. இது மான் வகை சார்ந்தது. கொம்பு அற்றது. உடல் பருமை மிக்கது. மக்கள் வழக்கில் மிளா எனப்படுகிறது. முளவுமான் எனவும் வழங்கும். கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை சிறுகுடிப் பகுக்கும் - நற். 85 வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை முளவுமாட் தொலைச்சிய பைந்நிணப் பிளவை - மலைபடு. 176-177 மானும் முளவும் வேறானவை என்பதை இது காட்டும். முளவுமானும் நாயும் வீட்டு முற்றத்தில் ஒருங்கு விளையாடுதலை நற்றிணை கூறுகிறது (285). முளவுமான் ஏற்றையொடு மனைவாய் ஞமலி ஒருங்கு புடையாட என்பது அது. ஆதலால் வீட்டில் வளர்க்கப்படுதல் அறியலாம். வீட்டில் வளர்ப்பது யான் நேரில் அறிந்ததுமாம். இடம்: சேற்றூர். முளை: முள் > முளை = கூரிய நுனையுடன் வெளிப்படுவது. முளைத்து வருவன வெல்லாம் முளை எனப்படுவதே யாம். ஆனால் விளவங்கோடு வட்டாரத்தில் முளை என்பது மூங்கில் என்பதைக் குறித்து வழங்குகின்றது. முளைப்பாரி அல்லது முளைப்பாலிகை என்பது மங்கல விழா, திருவிழாக்களின் அடையாளமாக இருப்பதையும், முளை என்பது பாவைஎன வழங்கப்படுதலும் எண்ணலாம். முளைஞ்சு: முளை என்பது முளைத்து வருவனவற்றுக்கு எல்லாம் பொது வழக்கு. ஆனால் முளைத்து வந்த பயிரின் குருத்தினை முளைஞ்சு என வழங்குவது இறையூர் வட்டார வழக்காகும். முள்: முள் > முனை. வித்து உயிர் பெற்று வெளிப்படுநிலை கூரிய முள்போல் தோன்றிப் பின்னே விரிவுறும். முளைப்பதம் என்பது மூக்குப் போல் முன்நீட்டி வெளிப்படலாம். முகிழ் - முகிழ்த்தல் - நிலை அது. முகை என்பது மலர்நிலைக்கு முன்னையது. முனை என்பதும், நுனை, நனை என்பனவும் எண்ணத்தக்கனவே. முள்முடல்: முள் = வேலமரம், ஒட்டடை மரம் இவற்றின் கிளை அல்லது படல். முடல் = காய்ந்த விறகு. சிற்றூர்களில் முள்ளும் முடலும்எரிபொருளாகக் கொள்வர். முள் என்பது முட்படலைக் குறித்தது. கவைக் கோலால் முட்படல்களைக் குத்தித் தூக்கிக் கொண்டு வருவது வழக்கம். வெளுப்புத் தொழிலுக்கு ஆவி வைப்பதற்கு முள்முடல்கொண்டு வருவது வழக்கம். முடல், முடலைஎனவும் படும். முடலை விறகுஎன்பது மணிமேகலை (16:26). ஒழுங்கற்ற வடிவும் காய்வும் உடையது முடலை. முள்ளா: முள்ளம்பன்றி என்பதை முள்ளா என்று குமரி மாவட்டத்தார் வழங்குகின்றனர். நெடிய தொடரையும் சொல்லையும் பொருள் விளங்கச் சுருக்குதல் பொதுமக்கள் வழக்காகும். முள்ளா என்பது அதற்கொரு சான்று. முள்ளான்எனின் புலமக்கள் வழக்காகி விடும். முள்ளி: முன் > முள் > முள்ளி = நுனை அல்லது முனைக் கூர்மையுடையது. முள்வகை: கருவேல், வெள்வேல், உடைவேல், சடைவேல், ஒட்டடை இவை மரம். முள்ளி = கொடி; நீர்நிலையில் வாழ்வது. குளத்தில் நன்றாக வளரும். முள்ளிக்குளம், முள்ளி வாய்க்கால். நகத்தால் எடுத்துச் சிறிது தருதல் முள்ளித் தருதல். நகத்தால் கீறுதல் முள்ளுதல். முள்ளும் முடலும் இணைமொழி. முள்ளுடைய பன்றி, முள்ளம்பன்றி. எய்ப்பன்றி என்பதும் அது. முறம்: முற்றம் > முறம். இல்லத்தின் முன்புறத்து வாயிலின் முன்னாக இருந்து புடைத்தலால் அப்புடைத்தல் கருவி முறம் எனப்பட்டது. முற்றப் பகுதியில் காற்று இருப்பதாலும் கோது நீக்கித் தள்ள வாய்த்தலாலும் அவ்விடத்தில் புடைப்பது வழக்கம். சிறுமுறம் முச்சில் என வழங்கும்; பெருமுறம் அகன்றதால் யானையின் காதுக்கு ஒப்பிடுவர். முறஞ்செவி வாரணம் - கலி. 42 முறஞ்செவி யானை - புறம். 339 சுளகு என்பது தென்தமிழக வழக்கு. முறி: முறி:1 எழுதும் ஏட்டை முறி என்பது பொதுவழக்கு. ஆனால் முறி என்பதற்குக் குமரி வட்டாரத்தார் அறைஎனப் பொருள் வழங்குகின்றனர். நெடிய வீட்டுப் பரப்பைப் பகுதி பகுதியாக அறுப்பது அறை எனப்படுவது போல முறிப்பதால் முறி எனப்பட்டது. அறையும் முறியும் கை கோக்கின்றன அல்லவா! தறி என்பதும் தாம் கூடி நிற்க வரவில்லையா? முறி:2 தேங்காயை இரண்டாக உடைப்பர். உடைந்த பகுதியை முறி என்பது வழக்கு. கண்ணுள்ள பகுதியைப் பெண்முறி என்றும், கண்ணில்லாப் பகுதியை ஆண்முறி என்றும் கூறுவர். முறியின் உடைவில் கூட நலம் பொலம் பார்க்கும் நம்பிக்கை உண்டு. இவை தென்தமிழகப் பொது வழக்கு. முறி:3 முறி = தளிர், ஓலை. மாந்தளிர் போலும் நிறமுடைய உடலை, முறி மேனிஎன்பார் வள்ளுவர் (திருக். 1113). மாந்தளிர் மெல்லியது. மென்காற்றாலும் முறி (ஒடி) படும் தன்மையது. ஆதலால் முதற்கண் அது முறி எனப்பட்டு, பின்னர்ப் பிற பிற தளிர்களையும் குறிப்பதாயிற்று. முறுக்கான்: முறு, முறுமுறுப்பு என்பவை முற்றல் வழிப்பட்ட சொற்கள். முறுக்கான் என்பது வெற்றிலை என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. முற்றிய வெற்றிலையை முதற்கண் குறித்துப் பின்னர்ப் பொதுப் பொருள் கொண்டிருக்கும். வெற்றிலைக் கொடிக்காலில் இளங்கால், முதுகால் என்னும் வகைகள் உண்டு. முறுவல்: முற்றிய மகிழ்வால் உண்டாகும் வெளிப்பாடும் முற்றிய சினத்தால் உண்டாகும் வெளிப்பாடும் முறுவல் ஆகும். மகிழ்வும் வெகுள்வுமாம் உளநிலையின் மெய்ப்பாடுகளுள் ஒன்று முறுவல். முறுவல் மகிழ்வுக் குறியாதல், முறிமேனி முத்தம் முறுவல் - திருக். 1117 என்னும் வள்ளுவத்தால் விளங்கும். முறுவல் வெகுள்வுக் குறியாதல், முப்புரம் எரி செய்த தொன்மத்தால் தோன்றும். அஃது அரணமுறுவல் என்னும் பெயரீடும் ஆயிற்று. முறைப்பாடு: முறையிடுதல்என்பது தமிழக வழக்கு. மன்றாட்டு என்பது இலக்கிய வழக்கு. ஊரவைகளிலோ, முறைமன்றங்களிலோ வழக்குத் தொடுப்பது ஈழத்தில் முறைப்பாடுஎன வழங்கப் படுகின்றது. பாடு தொழிற்பெயர் ஈறு. எ-டு: கூப்பாடு, புறப்பாடு. முறைப்பெயர்: தமிழில் எத்தனை பரம்பரைகளுக்கு முறைப்பெயர்கள் உண்டுஎன்று ஓரன்பர் வினவினார். அவர் பன்மொழிப் புலமையாளர்; பட்டறிவும் வாய்ந்தவர்; புதியன கண்டு போற்றுதலில் பூரிப்பவர்; அவர் வினாவுதல் மகிழ்வு தந்தது. ஆனால், யான் அதற்கு நேர்விடை கூறாமல் வினா எதிர்வினாஎன்னும் முறைப்படி, ஆங்கிலத்தில் எத்தனை பரம்பரைகளுக்கு முறைப்பெயர் வழங்குகின்றதுஎன்றேன். தந்தை, மகன், தாய், மகள் என்று இருபரம்பரைக்கே உண்டு. அதற்கு முன்பின் உள்ள பரம்பரைக்கு அவற்றின் ஒட்டுப் பெயர்களே உண்டு. தனிப்பெயர் இல்லைஎன்றார். நன்றி; மகிழ்ச்சிஎன்று கூறிய யான், தமிழில் எத்தனை பரம்பரைக்கு முறைப்பெயர் உண்டு என்பது நீங்கள் அறிந்தது தானே! அவை மிகுதியானவை அல்லவாஎன்றேன். ஆம்! ஐந்து பரம்பரைக்கு உண்டு என்று நினைக்கிறேன் என்று கூறிய அவர் அவற்றைச் சுட்டினார். இவ்வளவு தானா? இன்னும் உண்டா?என்றார் மீண்டும். ஒன்பது பரம்பரைக்குத் தமிழில் முறைப்பெயர் உண்டுஎன்று யான் கூறவும் அவர், தம் கண்களை அகல விரித்து வியப்புடன் தம் கையைத் தலைமேல் வைத்துக் கொண்டு ஓ! கடவுளே அவ்வளவு சொற்கள் உண்டா?என்றார். அதன் பின்னே தமிழிலுள்ள முறைப்பெயர்களைப் பற்றி உரையாடினோம். அவருக்கு வியப்பான செய்திகள் பல. எனக்குப் புதியதோர் ஆய்வுத் தலைப்பாட்டு வாய்ப்பு! எந்த ஒரு தூண்டலும் துலக்கத்திற்கு உண்டானவே என்னும் கடைப் பிடியைக் கொண்டால் ஆய்வுத் துறைகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருத்தல் உறுதியாம்! உண்மையுமாம்! முறைப்பெயர் ஆய்வு பழமையானது. ஆசிரியர் தொல்காப்பியனார் முறைப்பெயரை நன்கு ஆய்கிறார். அது விளியேற்கும் முறையை விரித்துரைக்கிறார். முறைப்பெயர்க்கு வரும் எழுத்துகளையும் இயம்புகின்றார். முறைப்பெயர் என்பதற்கு உரையாசிரியர்கள் தரும் விளக்கம் அருமையானது. பிறப்பு முறை பற்றிய பெயரே முறைப்பெயர்என்பது அவர்கள் தரும் விளக்கமாம். பிறப்பு முறையால் தானே தாய், தந்தை, மகன், மகள், பேரர், பேர்த்தி என்பனவெல்லாம் இயல்கின்றன. முறைப்பெயர்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் ஏற்ப வேறுபடுதல் தனிச் சிறப்புக்கு உரியதாம். என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ? என்னும் பொருளமையக் குறுந் தொகைப் பாட்டொன்று வருகின்றது. அது, யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? என்பது. இதில் யாய், ஞாய்; எந்தை, நுந்தை எனத் தன்மை முன்னிலை இடங்களுக்கு ஏற்ப முறைப்பெயர் வருதலை அறிகின்றோம். ஆனால் தொல், சொல், உரையாசிரியர் தெய்வச் சிலையார் மூவிடங்களிலும் வரும் முறைப்பெயர்களை விளக்குகிறார். தந்தை, நுந்தை, எந்தை எனவும் தாய், ஞாய், யாய் எனவும் தம்முன், நும்முன், எம்முன் எனவும் தம்பி, நும்பி, எம்பி எனவும் புதல்வனையும், ஈன்றாளையும், முன், பின் பிறந்தானையும் உணர்த்தும் பன்மைச் சொற்களெல்லாம் பொருண்முகத்தால் தம்மையும் பிறரையும் உணர்த்துவனஎன்கிறார். முறை என்பது பிறப்பொடு வந்த முறைமையல்லவோ? அதனால் உற்றார் உறவினரை முறைவைத்துக் கூப்பிடுவர். அதனை முறைமையாகப் போற்றுவர். முறையாவது நேர்மை, ஒழுக்கம், கட்டுப்பாடு, நடைமுறை என்னும் பொருள்களை எல்லாம் தரும் சொல். முறை மாப்பிள்ளை முறைப்பெண் என்பவை இன்றும் உள்ளவையே. முறைகேடாக நடப்பவர் முறைகேடர் எனப்படுவார். முறை தவறிப் பார்த்தலும், முறை தவறிப் பேசுதலும், முறைத்துப் பார்ப்பதாகவும், முறைத்துப் பேசுவதாகவும் இகழப்படும். KiwnfL elªJÉ£lhš ‘Kiwnah? என்று முறையீடு செய்வதும் வழக்கம். முறை செய்து காப்பவனே இறைஎன்பது அறமுறை! இப்படி முறைமுறையே சொல்ல இன்னும் எத்தனை எத்தனையோ முறைகள் இருக்கின்றன. இருந்தும் முறையை முகத்திலே அறைந்து தள்ளி, அதன் முதுகின் மேல் பாந்தத்துவம்(பாந்துவம்) ஏறிக் கொண்டு உலா வருகின்றதைக் காண்கிறோம். தமிழில் முறைப்பெயர் ஒன்றா இரண்டா? நூற்றுக்கு மேலுண்டு! அப்பா அம்மாவுக்கு எத்தனை எத்தனை பெயர்கள்! பாட்டன் பாட்டிக்கு எத்தனை எத்தனை பெயர்கள்? அண்ணிக்கு ஒரு பெயர் மட்டுமா? ஊரூர்க்கு எத்தனை பெயர்கள்? ஒவ்வோர் இனத்திலும் ஏன் குடியிலும் எத்தனை பெயர்கள்? தொல்காப்பியத்தில் நூன்மரபு, மொழிமரபு முதலியவை உண்டு. மரபியல் என்னும் பெயராலே ஓர் இயலும் உண்டு. மரபின் சிறப்பினை இவை தெரிவிக்கும். இனிக் கொடிவழிஎனவும் மரபு சொல்லப்படுவதுண்டு. அதுவும், நிலைத்திணையாதல் கருதுக. ஒரு கொடியின் வேர் ஓரிடத்து இருந்தாலும் அது கொடியாய்த் தளிர்த்துப் படர்ந்து ஓடி ஆங்காங்கு கிளைவேர் ஊன்றிப் பூத்துக் காய்க்கும். ஆயினும் அதன் கொடித் தன்மை மாறாமை தெளிவாம். ஆதலால், கொடிவழி என்பதும் குடிவழி என்பதும் ஒன்றாய் அமைந்தன. மாந்தர் அனைவரும் ஒரு குலம்; அவருள் தமிழராவோர் ஓர் இனம்; அவருள் சேரர், சோழர், பாண்டியர் வேளிர் பல்லவர் கங்கர் எனப்பட்டோர் தனித்தனிக் குடியினர். சோழர் இருவர் போரில் எதிர்த்து நின்ற போது குடிப்பொருள் அன்று நும் செய்திஎன்று கூறும் புலவர் வாக்கும், பழங்குடிஎன்பதற்குப் பரிமேலழகர் கூறும் உரை விளக்கமும் குடிஎன்பதை நன்கு விளக்கும். குலம் வேறு குடி வேறுஎன்பதும் விளங்கும். குலம் பெரும் பிரிவுக்கும் குடி அதன் உட்பிரிவுக்கும் உரியது என்பதும் தெளிவாம். இதனைக் குலமும் ஒன்றே குடியும் ஒன்றேஎன வரும் கபிலர் அகவல் தெளிவிக்கும். இடைக்காலத்தே குடிப்பெருமையைக் குலப்பெருமையாகச் சுட்டினர். குலமுறை கிளத்து படலங்களும் வகுத்துப் பாடினர். மரபு, கொடிவழி, குடிவழி, வழிவழி, வழிமுறை, தலைமுறை, பரம்பரை என்பனவெல்லாம் ஒரு பொருளனவாய் வழங்குவன. இவற்றுள் பரம்பரை என்னும் ஆட்சி பிற்காலத்ததாம். ஆனால், அதன் பொருளமைதி முற்பட்டதாம். பரம்என்பது இறைவன்; பரைஎன்பது இறைவி; இறைவன் இறைவி முதலாக வரும் பரம்பரைஎன்பதாம். இக்காலத்துப் பலப்பல குடியினரும் தங்கள் குடி முதல்வனைத் தெய்வ நிலைக்கு ஏற்றிச் சொல்லுதல் அறியத் தக்கதாம். முன்பும் சேரர் செந்தீயையும், சோழர் செங்கதிரையும், பாண்டியர் வெண்டிங்களையும் தங்கள் குல முதலாகக் கொண்டமையும் கருதத் தக்கதாம். அம்முறையில் முதுபழந்தலைவனும். முது பழந் தலைவியும் சேயோன் என்றும் பழையோள் என்றும் சுட்டப் பெற்றனர். சேயோன் என்னும் முதுவன் பெயரே சிய்யான் என இந்நாளில் வழங்குகின்றதாம். சேயோன் என்னும் தொல்பழ முதியன் பெயர், செந்நிறங் கரணியத்தால் தன்மைப் பெயராயும் வழங்கிற்றாம். சிவன் என்பதும் அரன் என்பதும் செந்தீ வண்ணன், சிவந்தவன் என்னும் பொருளவேயாம். அவன் மனைவியாம் முதுமகள் பழையோள் என்று முந்து நூல்களில் சுட்டப் பெறுதல் உண்டு. எ-டு: திருமுரு; பழையோள் குழவி(259). தமிழர் வழக்கில் ஒன்பது பரம்பரைக்குப் பெயர்கள் உண்டு. உட்கார்ந்து சாப்பிட்டாலும் ஒன்பது பரம்பரைக்கு வரும்என வழங்கும் பழமொழி ஒன்பது பரம்பரையைச் சுட்டும். அவை: ஆண்பால் பெண்பால் 1. சேயோன் பழையோள் 2. ஓட்டன் ஓட்டி 3. பூட்டன் பூட்டி 4. பாட்டன் பாட்டி 5. தந்தை தாய் 6. மகன் மகள் 7. பேரன் பேர்த்தி 8. எள்ளுப் பேரன் எள்ளுப் பேர்த்தி 9. கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேர்த்தி இவ்வொன்பான் தலைமுறைப் பெயர்கள். இவ்வொழுங் கில் அமையினும். இக்கால வழக்கில், மாறியும் திரிந்தும் கிடத்தல் உலகியலை நோக்க நன்கு அறியப் பெறும். இவற்றிற்கெல்லாம் முன்னாம் தொல்பழந் தந்தை பரன்; தொல்பழந்தாய் பரை; இரண்டையும் இணைத்த பரன்பரை பரம்பரைஎன வழக்கில் உள்ளதாம். பரம் = தொல்பழமை, அப்பால். தாயும் தந்தையுமாம் இருவரும் பெற்றோர் எனப்படு கின்றனர். கல்வி, செல்வம், வீரம், வினையாற்றல் இன்ன பலவற்றை அவர்கள் பெற்றிருந்தாலும் அவற்றைப் பெற்றவர்கள் என்பதற் காக அவர்கள் பெற்றோர்எனப்படுவதில்லை. மக்களைப் பெற்றதனாலேயே பெற்றோர் எனப்படுகின்றனர். மக்களைப் பெறுவதைப் பேறுஎன்பதும் அவர்களைப் பெற்றெடுக்கும் காலத்தைப் பேறு காலம்என்பதும் கருதத் தக்கனவாம். பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற - திருக். 61 என்றார் திருவள்ளுவர். பெற்றோன்என்பது தந்தையையும் பெற்றோள்என்பது தாயையும் பெற்றோர்என்பது இருவரையும் குறித்தல் எவரும் அறிந்ததே. இப்பெயர்களை ஆழ்ந்து நோக்கினால் சில சிக்கல்கள் உண்டாம். தாயைப் பெற்றோள்என்பது தகும்; தந்தையைப் பெற்றோன் என்பது தகுமோ என்பது முதலாவதாக எழும் சிக்கல். பெறுதல் என்னும் மூலப்பொருளை ஆராய்ந்தால் சிக்கல் தீரும். ஒருவன் ஒரு பொருளைத் தந்தால், அவன் தந்தவன் ஆகின்றான். அதனை ஒருவன் பெற்றால் அவன் பெற்றவன் ஆகின்றான். உலகியலில் உள்ள தருதல் பெறுதல் வழக்கத்தை உன்னித்து உணர்ந்தால் உண்மை புலப்படும். தந்தைஎன்னும் பெயர்க்கு உள்ள அடிப்பொருளும் தெளிவாம். மகவைத் தந்தவன் தந்தையாவான்! அதனைப் பெற்றுக் கொண்டவள் பெற்றோள்ஆனாள். ஆனால், தந்தையைப் பெற்றோன் என்பது பொருந்தாதே என்னும் ஐயம் எழும். முந்தை இலக்கண முறையை அறிந்தவர் ஐயுறார்; இலக்கியச் சான்று கண்டு மகிழ்வர். தலைவி ஒருத்தியைத் தலைவனிடம் ஒப்படைக்கும் மங்கல விழா மகட்கொடைஎனப் பண்டு வழங்கப்பட்டது. கொடுப்போரும் அடுப்போரும் இருந்து மகட்கொடை நிகழ்த்திய நிகழ்வையும், கொடுப்போர் இன்றி அயலாரே கொடை நேர்ந்து உதவிய நிகழ்வையும் இலக்கியங்கள் விரிந்த அளவில் சுட்டுகின்றன. மகட்கொடையை ஏற்பவன் என்ன பெயர் பெறுவான்? பெற்றோன்ஆவன் அல்லனோ? ஆதலால், தலைவி யொருத்தி, பெற்றோள்என்னும் பேற்றைப் பெறுமுன் தலைவனே அத்தலைவியைப் பெற்றுக் கொள்ளுதலால் பெற்றோன்என்னும் பேறு பெற்றுவிட்டான் என்க. இதனை விளக்குமுகத்தான், பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு - அகம். 86 என்று மங்கல மகளிர் மணவிழாவில் வாழ்த்தும் திறத்தை அகப்பாட்டுக் கூறுகின்றது (86). ஆகலின், தலைவியைப் பெற்றமையால் தலைவன் பெற்றோனாதலும், அத்தலைவன் தருதலால் மகவைப் பெறும் தலைவி பெற்றோள்ஆதலும், இருவரும் இக் கரணியங்களால் இணைந்து பெற்றோர் ஆதலும் விளக்கமாம். மேலும் ஒரு கருத்தும் இணைந்து நோக்கத் தக்கதாம். தாய் மகவை ஈன்று புறம் தருகின்றாள். அதனைப் பெற்றுப் பெருநிலைப்படுத்துதலில் தந்தையின் பங்கு முதன்மை யுடையதாய் முந்து இருந்தது. இதனை, வீறுசால் புதல்வற் பெற்றனை இவணர்க்கு - பதிற். 74 என்னும் அடி விளக்கும். தந்தையோடு கல்வி போம் என்பதும் சுட்டும் பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு புத்தேளிர் வாழும் உலகு - திருக். 58 என்னும் வள்ளுவம் தலைவனைப் பெற்றான்எனல் அறிக. கணவனுக்குக் கொண்டான்என்னும் பெயருண்மையும் கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டிஎன்னும் பாட்டுண்மையும் இதனை மேலும் விளக்கும். பெற்றோன், பெற்றோள் என்பவை அடிப்படைப் பொருள் கருதாமல் தந்தை, தாய் என்னும் பொருளில் வழங்கலான பின்னர், ஈன்றோன், ஈன்றோள் என்பவை ஈனுதல் நிலையாலும், பயந்தோன், பயந்தோள் என்பவை மக்களின் பயன்பாட்டு நிலையாலும் வழக்கில் ஊன்றினவாம். ஈன்ற பொழுதிலும் சான்றோன் எனக் கேட்ட பொழுது ஈன்றாளுக்கு இன்பந் தருதலைப் பழ நூல்கள் பலவும் பாரித்துரைக்கும். ஈனில் இழைத்து (முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தற்காகக் கூடு அமைத்து) இன்புறும் பறவையை அகப்பாட்டுத் தெரிவிக்கும். கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்ததைமதுரைக்காஞ்சி தெளிவிக்கும். ஆகலின், கால முறையால் தலைவன் தலைவியர் முதற்கண் பெற்றோர் ஆதலும், பின்னர் ஈன்றோர் ஆதலும் நிறைவில் பயந்தோர்ஆதலும் முறையாய் விளங்கும். இம்முப் பெயர்க்குப் பின்னே குறைவிலா நிறை பெயராய் வருவது குரவர்என்னும் பெயராம். குரவராவார், உள்ளொளி வாய்ந்த ஒள்ளியர் என்க! இனிப், பெற்றோரைக் குரவர்என்பதும், முதுகுரவர் என்பதும், இருமுது குரவர் என்பதும் புதுவதன்று; பழைய வழக்காறேயாம் இவற்றுள் முன்னை இரண்டு, பெற்றோர் எனத் தாய், தந்தைஅளவில் நிற்கப் பின்னை வரும் இருமுது குரவர்என்பதோ தலைவன் தலைவியர் ஆகிய இருபால் குடும்பத்து இருபெரும் பெற்றோர் களையும் சுட்டும் சீர்மையது என்பதை எண்ணின் இனிக்கும் செய்தியாம். இருமுது குரவர், ஏவலும் பிழைத்தேன்என்பது கண்ணகி முன்னர்க் கோவலன் கலங்கியும் கனிந்தும் கண்ணீர் வார்ந்தும் உரைக்கும் உரை என்பதைக் கருதலும் தகும்! ஆதலின் பயந்தோரினும் உயர்முதுநிலை குரவர் நிலை என்பதைக் கொள்ளுதல் ஏற்புடையதாம். தலைவன் - தலைவி, கிழவன் - கிழத்தி என்பவை திருமணத்திற்கு முன்பு சுட்டப்பெறும் பெயர்கள். மணமகன், மணமகள் எனவும், பின்னர்த் திருமணத்தின் போழ்தில் கணவன் மனைவி எனவும், துணைவன் துணைவி எனவும் ஆளன் ஆட்டி எனவும் வழங்கப் பெற்றனர். இவையெல்லாம் பெற்றோர் என்னும் பெருநிலை எய்துதற்கு முன்னவை. ஆனால், பெற்றோர் முதலாகச் சுட்டப் பெற்றவையோ மகப்பேறு தொட்டுப் பின்னே வருபவையோம். இன்னும் ஒரு குறிப்பை இவண் நோக்குதல் நலமாம். மகப்பேற்றின் முன்னர்த் தலைவன் தலைவி, கணவன் மனைவி எனத் தலைவனுக்கு முதன்மையும், மகப்பேற்றின் பின்னர்த் தாய் தந்தை, அம்மை அப்பன் எனத் தலைவிக்கு முதன்மையும் வழங்குதல் மரபாகக் கொள்ளப் பெறுதல் என்பதாம். இப்பேறு குலம் தருதல் என்பதால் மகளிர்க்கு வாய்த்ததாம். குலம் தருதலாவது புதல்வற் பயந்து மேலும் குலத்தை வளர்த்தல் என்பதாம் (சீவக. 214, நச்.). தாய் என்னும் முறைப் பெயரைக் காணலாம். தன்மை முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களுக்கும் பொதுவாக அமைந்த முறைப்பெயர் ஆய்எனவும், முன்னிலையில் நும் ஆய்எனவும், படர்க்கையில் தம் ஆய்எனவும் வழங்கின. ஆய்க்கு அமைந்த இம்மூவிட முறைப் பெயர்களே பின்னர் முறையே யாய், ஞாய், தாய் என ஆயின. இவ்வாட்சி பழங்காலத்தில் மாறாமல் வழங்கின என்பது பழைய இலக்கியங்களால் அறியப் படுகின்றன. ஆனால், ஆய் என்பதன் இடத்தைத் தாய் பற்றிக் கொண்டதால் எம் தாய், நும் தாய், தம் தாய் என இக்காலத்தில் வழங்குகின்றன. ஆய்என்பது ஆயிஎன இகர இறுதி ஏற்று வழங்குவதும் உண்டு. ஆய் என்பது போலவே ஓய் என்பதும் பெற்றோள் பெயராக முன்பு வழங்கியது. ஆரண மறையோன் எந்தை அருந்ததிக் கற்பின் எம்மோய்என்பது கம்பர் வாக்கு. ஆய் ஓய் என்று ஏன் கத்துகிறாய்?என்னும் வழக்கு, ஓய் என்பதன் ஆட்சி இருந்தமையை வலியுறுத்தும். எம்மோய், நும்மோய், தம்மோய் என்பன முறையே மூவிடங்களுக்கும் முறைமை பூண்டு இருந்தனவாம். முறைப் பெயர்களாக வழங்குவனவற்றுள் பெரும்பாலனவும் விளிப் பெயர்களே! அம்மா, அப்பா, அக்கா, மாமா, தாத்தா முதலிய முறைப் பெயர்கள் விளி வடிவாகவே இருத்தல் அறிக! அடிக்கடி அழைத்து, அழைத்த பெயரே பெயராக அமைந்து விட்டமையால் முறைப்பெயர்கள் விளிப் பெயராக அமைந்துள்ளனவாம்! அம்மை, அம்மு, அம்மன் என்பவை தாயைக் குறிக்கும் பெயர்கள். இவை அம்மா என்னும் விளிவடிவாய் நின்றன. அம்ம என்பது அண்மை விளியாம். அது, யான் சொல்வதைக் கேட்க என்னும் பொருளில் வழங்கலாயிற்று. அதனால், அம்ம கேட்பிக்கும் என இலக்கணம் வகுத்தார் ஆசிரியர் தொல்காப்பியனார். குறவஞ்சி நூல்களில் அம்மே என்னும் விளிப்பெயர் பெருக வழங்கும். உலக வழக்கிலும் பெருக வழங்குவதே. அம்மோ என்பதும் வழக்கில் ஊன்றியதேயாம். ஏ அம்மே என்பது எம்மே என்றும் ஏ அம்மோஎன்பது எம்மோஎன்றும் வழங்கப் பெறுதலும் எவரும் அறிந்ததே. அம்மை என்பது அம்மா என ஆயினாற் போல, அன்னை என்னும் பெயரும் அன்னா என வழங்கும். அம்மே என்பது போல அன்னே எனவும் வழங்கும். ஐ என்னும் ஈறு ஆய் என்னும் ஈறாகும் என்பதன்படி, அன்னாய் எனவும் வழங்கும். பழநூல்களில் இது பெரிதும் வழங்கப்படுவதாம். அம்மோ என்பது போல அன்னோ என வழங்குதலும் உண்டு. அன்னோ என்பது அந்தோ என்னும் பொருளில் வருதலும் வழக்கு. அன்னே என விளியாதல் அன்னே உன்னை யல்லால் ஆரை நினைக்கேனே என்னும் தேவாரத்தால் தெளிவாம். அஞ்ஞை என்பது தாயைக் குறிக்கும் முறைப்பெயரேயாம். இது, அஞ்ஞாஎன விளி வடிவு பெறும். அஞ்ஞை என்பது அண்மை விளியாக அமைதல் அஞ்ஞை நீ ஏங்கி அழல் எனவரும் சிலப்பதிகாரத்தால் விளக்கமாம். அஞ்ஞை என்னும் பழந்தமிழ்ச் சொல் இக்காலத்தில் ஓரினத்தில் பெரு வழக்குடையதாய், அதுவே அவ்வினத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றன் பெயராய் வழங்கி வருதல் அறியத் தக்கதாம். அம்மை, அன்னை, அஞ்ஞை என்னும் பெயர்கள் அகரம் சார்ந்த மெல்லினமாய் அமைதலையும், அப்பன் அச்சன் அத்தன் என்னும் பெயர்கள் அகரம் சார்ந்த வல்லினமாய் அமைதலையும் நோக்குவார் ஒலியியலால் பண்பியலை விளக்கிய முந்தையோர் திறத்தை இனிதின் அறிவார். தாயைக் குறிக்கும் பெயர்களுள் ஆத்தாள் என்பதும் ஒன்றாம். அஃது இருவகை வழக்கிலும் ஒன்றியதேயாம். ஆத்தாளையும், ஆத்தாளின் ஆத்தாளையும், ஆத்தாளின் மூத்தாளையும் ஒரு பாடலில் குறிப்பார் காளமேகப் புலவர். ஆத்தாளை அபிராம வல்லியைஎன்னும் அபிராமி அந்தாதி. பட்டினத்தார் தம் தாய்க்கு அரிசியிடுங்கால் ஆத்தாள்என்பார். இவற்றைக் காண்க! அகத்துக் காரியாக இருப்பவளே (அகத்தாள்) ஆத்தாளாகவும் அமைகிறாள் என்பதையும் கருதுக! ஆத்தாள் என்பது ஆத்தா ஆத்தே ஆத்தோ என விளியாகும். ஏ ஆத்தே என்பதும் ஏ ஆத்தோ என்பதும் ஏத்தே, ஏத்தோ என வழங்கும். தெளவை, ஔவை என்பன அம்மையைக் குறித்தல் மூத்தவள் பெரியவள் என்பதாலேயாம். தெளவை என்பது அக்கையையும் ஔவை என்பது தாயைப் பெற்ற தாயையும் குறிக்கும் முறைப் பெயர்களாம். சில குடும்பச் சூழல்களில் அவர்கள் தாய் நிலையையும் ஏற்க நேர்ந்த நேர்வால் இப் பெயர்கள் தாய்க்கு உரியனவாயின. தாயைக் குறிக்கும் அம்மா, ஆத்தா என்னும் பெயர்கள் பொதுவாக விளிப் பெயர்களாய் அகவை நோக்குதலும் இல்லாமல் - வழங்குதல் அறியத்தக்கது. வாங்க அம்மாவா அம்மாஎன்பன போன்ற வழக்குகளை எண்ணுக! காளியம்மா, மாரியாத்தா என்பன போன்ற பெயர்களில் அம்மா ஆத்தா என்பவை பெயரொட்டாக அமைந்தமையும் தெளிக! இனி, அம்மையின் மூத்தாள், இளையாள் ஆகியவர்கள் பெரியம்மா, பெரியாத்தா, சின்னம்மா, சின்னாத்தா, சிற்றவ்வை, சிற்றன்னை, சித்தி என வழங்குதல் எவரும் அறிந்ததே. அம்மாவின் உடன்பிறந்த இளையாள் அல்லது சிற்றன்னை, நல்லம்மா, நல்லாத்தா, நல்லாயி என வழங்குதல் பழங்காலத்து வழக்கில் இருந்த நற்றாய் என்பதன் எச்சம் ஆகலாம். அம்மா, அம்மம்மா, அம்மம்மோ, அம்மாடியோ, அத்தத்தா, ஆத்தா, ஆத்தாடி, அத்தாடியோ என வழக்கில் உள்ள உணர்ச்சிச் சொற்கள் அம்மையின் அரவணைப்பு அணுக்கம் உருக்கம், உரிமை இன்னன பற்றி வழக்கில் ஒன்றியனவாம். அடித்த போதும் அன்னாஎன்று அழும் குழவியையும், தடித்ததோர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாய் அணைத்திடுதலையும் எவரே அறியார்? முன்னது குலசேகரப் பெருமாள் வாக்கு. பின்னது வள்ளலார் வாக்கு. தந்தைஎன்னும் பெயர்க்காரணம் முந்து கண்டோம். தந்தையை அப்பாஎன வழங்குவது இந்நாளில் பெருவழக்கு. அப்பன், அப்பர், அப்பு, அப்பச்சி என்பவற்றின் விளிவடிவு. அப்பாஎன்பதாம். அவ்விளி வடிவே அப்பா அழைக்கிறார் அப்பாவுடன் போகிறேன்எனப் பெயர் வடிவாகவே வழங்குகின்றது. அப்பே, அப்போ என்பவையும் விளி வடிவுகளே. ஏ அப்பேஎன்பதும் அப்போஎன்பதும் ஏப்பே, எப்பே, ஏப்போ, எப்போஎன வழங்குகின்றன. அப்பன் என்பது அப்பனார்என வழங்குவதும் உண்டு. அது, ஐயன் ஐயனார் என வழங்குவது போன்றது. முறைப்பெயராக வழங்கும் இப்பெயர் பிறரை மதித்து வழங்கும் பெயர்களாகவும் அமைகின்றன. தன்னில் மூப்பரையும் இளையரையும் கூட இச்சொற்களுடன் உறவமைத்து அழைப்பதுண்டு. அப்பச்சி வாங்க, அப்பு வாங்க, வாங்க அப்பா, வா அப்பச்சி, வா அப்பு, வா அப்பா (வாப்பா) என்று வாங்கவாஎன முதுமை இளமை கருதிய அமைப்பு அன்றிப் பெயரில் வேறுபாடு இல்லாமை அறிக! ஐ, ஐயன், ஐயர், ஐயனார் என்பனவும் தந்தையைக் குறிக்கும். ஐயா என்பது இவற்றின் விளி! ஐயர்என்பது சில இடங்களில் தந்தையைப் பெற்றவர் பெயராகவும் வழங்கும். அப்பா என்பதைத் தந்தைக்கும், ஐயாஎன்பதை அவரைப் பெற்றவர்க்கும் முறையாக வழங்குகின்றனர். அப்பாசாமி, அப்புசாமி, ஐயாசாமி என்பன போல முறைப்பெயர், பெயர் வடிவில் நிற்றலும் வழக்கு. செல்லப்பன், செல்லப்பா, செல்லையா என்பன போலப் பெயரடையாக இவை நிற்றலும் கண்கூடு. அப்பன் போல வழங்கும் ஒரு சொல் அச்சன் என்பதாம். மலையாள நாட்டில் அச்சன் என்னும் பெயர் பெரு வழக்கிலுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் பெருவழக்காக இருந்ததே, மலையாளம் தனிமொழித் தன்மை யடைந்த காலத்துப் பெருவழக்காகக் கொண்டிருக்கக் கரணியமாம். எழுத்தச்சன்என்பான் மலையாள எழுத்தை அமைத்துப் போற்றி வளர்த்த தந்தை ஆவான். கண்ணச்சன்முதலியோர் சிறப்புப் பெற்றவர். அச்சன் பற்று, அச்சன் புதூர், அச்சன் குளம் என்பவை தமிழகம், மலையாளம் தழுவிய ஊர்ப் பெயர்கள் இவை. அச்சன் என்னும் சொல் தமிழகத்தில் முற்றாக மறைய வில்லை என்பதைக் காட்டும். மாணிக்கவாசகர் அருளிய அச்சோப் பத்துஅச்சன் வழக்கின் எச்சமாம். அதன் ஒவ்வொரு பாடல் இறுதியிலும், அச்சோவே என்னும் முடிநிலை அமைந்திருத்தல் அறிக. இனி, அச்சச்சா, அச்சச்சோ என்னும் உணர்வுக் குறிப்புகள் இந்நாளில் பெருவழக்குடையவை. அச்சச்சா அச்சச்சோ என்பவை அப்பப்பா, அப்பப்போ, அத்தத்தோ, ஐயையா, ஐயையோ என்பவை போன்றவை. அச்சன் போலவே அத்தன் என்பதும் தந்தையைக் குறிக்கும் பெயரே. அத்தா! உன்னையல்லால் இனியாரை நினைக்கேனேஎன்பது தேவாரம். அத்தன் என்னும் தந்தை பெயரே. அவர் உடன் பிறந்தவளை அத்தைஎன்று முறைசொல்ல வைத்ததாம். அத்தையின் மகனை அத்தான்என்று அழைக்கவும் ஏவியதாம். அம்மையின் உடன்பிறந்தவனை அம்மான்என அழைக்கும் வழக்கை அறிவோம் அல்லவோ! அம்மான்சேய்தானே அம்மாஞ்சியாக விழிக்கிறான். குடும்பத் தலைவனாகிய அப்பன், ஐயன், அச்சன், அத்தன், தந்தை ஆகிய பெயர்கள் உலகத் தலைவனாம் இறைவனைக் குறிப்பதாக வழங்குதல் உலகெல்லாம் தழுவிய ஒரு பெருவழக்காம். பாடும் புலவன் அல்லது வழிபடும் அடியன் தன்னை மகன்மை முறையிலும் இறைவனைத் தந்தைமை முறையிலும் கொள்ளும் அடிப்படையில் வந்த வழக்கமே இஃதாம். சுத்த சன்மார்க்க வேண்டுகோள்பகுதியில் வள்ளலார் இறைவனை, அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஐயா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் அத்தா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் அச்சா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் என்று தந்தையின் முறைப்பெயர்கள் நான்கை வழங்கியதுடன், அண்ணா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்என்றும் வழங்கினார். சில குடும்பங்களில் அரிதாக அப்பாவை அண்ணாஎன அழைக்கும் வழக்கையும் கருதலாம். தந்தை என்பது படர்க்கைப் பெயர். தாய் என்பது போல. அப்பா என்னும் பொருள் தருவதாம். என் தந்தையும், எம் தந்தையும் எந்தையாம்; நின் தந்தையும் நும் தந்தையும் நுந்தையாம். நின் என்பது நுன் எனவும் வழங்கும். ஆதலால், உன் தந்தையும் உம் தந்தையும் உந்தையாம். உம் எம் என்பனவும், தம் நம் என்பனவும் உங்கள் எங்கள் தங்கள் நங்கள் என வருதல் பன்மை மேல் பன்மையாகிய சிறப்புப் பன்மையாம். அப்பாவுக்கு முன் பிறந்தவரும் அம்மாவுக்கு மூத்த பெண்களை மணங்கொண்டவரும் பெரியப்பா, பெரிய ஐயா என வழங்கப்படுதலும், அப்பாவுக்குப் பின் பிறந்தவரும், அம்மாவுக்குப் பின் பிறந்த பெண்களை மணங்கொண்டவரும் சிற்றப்பா, சின்னையா என வழங்கப் படுதலும் எவரும் அறிந்த செய்தி. சிற்றப்பாவை நல்லப்பன் என்பதும் உண்டு. அவரைக் குட்டியப்பாஎன்பதும் இளமை கருதிய பெயரே. குட்டிச்சாக்கு, குட்டிப்பை, குட்டிப்பாலர் வகுப்பு என்னும் வழக்குகளால் குட்டிக்குரிய சிறியதுஎன்னும் பொருள் விளக்கமாம். முறைப்பெயர் விரிவாக்கம்: முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ன முப்பொருள் அடிப்படை மூல இயக்கம். முதற்பொருள் இரண்டாம் நிலமும் பொழுதுமாய். நிலமும் பொழுதும் கருக்கொளும் வகையால் கருப்பொருள் பலவாய்க் கவினுற லாகும் உரிப்பொருள் வளமே உயிர்களின் வளமாம். உரிப்பொருள் சிறக்கப் பொறியும் புலனும் ஐந்தைக் கடந்தோர் ஆறும் ஆயதாம். ஆறாம் பொறிபுலன் மனனும் உணர்வும் மக்கள் தாமே ஆறறி உயிரே 10 மிக்க தொல்லோன் மேல்மொழி ஆணை. உலகும் உயிரும் நுண்ணணு வாக்கம். வித்தும் விந்தும் உயிர்க்கொடை யாகும். நீர்மை விந்து; திண்மை வித்து. விந்தின் விளக்கம் விந்தை யாகும். அம்மம் ஊட்டுவாள் அம்மை அம்மா அம்மப் பாலுண் சேய்கொடை அம்மா அம்மம் பருகும் குழந்தை உயிர்ப்பொலி அம்மா பெயரை அமையத் தந்ததே. மம்மம் எனலால் மம்மி ஆதல் 20 ஆங்கிலக் குழவி அருளிய கொடையே. அகரம் ஒன்றிய மென்மை தாய்பெயர் அன்னை அம்மை அஞ்ஞை அவையே. அம்முதல் அமுதம் அமிழ்தம் அமிர்தம் அம்மக் குழந்தை ஆக்குசொல் வழியாம். அம்மா அப்பா விளிப்பெய ராமே. ஆகிய பேற்றால் ஆய்என லானாள். தள்ளும் குலையால் வாழை தள்ளை; தள்ளை என்பது தாயின் பெயரே பயந்தாள் புறந்தாள் என்பவும் தாயே. 30 ஈன்றோர் பெற்றோர்; ஈன்றோள் ஈன்றோன் என்பவை தாயும் தந்தையும் ஆவன. அம்மா அம்மோ அம்மம்மோ எனலும் அன்னா அன்னோ அன்னன்னோ எனலும் அஞ்ஞா அஞ்ஞோ அஞ்ஞஞ்ஞோ எனலும் அம்மை வழியாம் விளியின் பெயர்கள். யாயும் ஞாயும் தாயும் மூன்றும் ஆயும் அன்னை மூவிட வழக்கே. எம்மோய் நும்மோய் தம்மோய் மூன்றும் முந்தைத்தாயின் மூவிட வழக்கே. 40 அம்மா விளிமொழி அகவை இன்றிப் பெண்பாற் பொதுவாய்ப் பெருக வழங்கும். பெற்ற தாயை நற்றாய் என்பர். ஐயை தாயும் தாயின் தாயுமாம். அகரம் ஒற்றிய வன்மை தந்தைபேர் அப்பன் அத்தன் அச்சன் அவையே. தந்தவன் கொடையால் தந்தை ஆனான் அந்தை என்பதும் தந்தை பெயரே. அப்பர் அப்பார் தந்தை பெயரே ஐயன் ஐயர் என்பரும் அப்பா. 50 அப்பா அப்பப்பா அப்பப்போ எனலும் அத்தா அத்தத்தா அத்தத்தோ எனலும் அச்சா அச்சச்சா அச்சச்சோ எனலும் ஐயா ஐயோ ஐயையோ எனலும் அப்பரை விளிக்கும் விளிகள் ஆமே. எந்தை நுந்தை தந்தை மூன்றும் முந்தைத் தந்தை மூவிட வழக்கே. அம்மும் அப்பும் அணுக்கப் பெயர்கள் அம்முதல் அப்புதல் என்பவை சொல்லும். அப்பா விளிமொழி அகவை இன்றி 60 ஆண்பாற் பொதுவாய் அமைதல் பெருநெறி. நல்லப்பன் நல்லம்மை என்பவை இந்நாள் சிற்றப்பன் சின்னம்மை என்னும் முறையர். எந்தை நுந்தை தந்தை மூவிடம். அப்பாடி அம்மாடி ஆத்தாடி என்னும் ஒப்பிய உணர்வில் உரைத்தலும் உண்டே. அம்மு அப்பு மாமு எனச்சிலர் அம்மை அப்பன் மாமனை ஆள்வர். அம்மன் எனவும் அக்கன் எனவும் அம்மையும் அக்கையும் குறித்தமை உண்டே. 70 அம்மா அக்கா அத்தை மாமி இன்னன மதிப்புறு மூத்தோர் விளிச்சொல். ஐயா என்பதும் அண்ணா என்பதும் மூத்தோர் ஆண்பால் மதிப்புறு விளிச்சொல். அம்மை என்பவள் ஆச்சியும் ஆவாள். அம்மையின் அம்மை அம்மாயி ஆவாள். அம்மையின் அம்மை அம்மாச்சி யாவாள். அப்பாவின் அம்மை அப்பாச்சி ஆனாள். அம்மாவின் அம்மா அம்மம்மா ஆவர். அம்மாவின் ஆத்தாள் அம்மாத்தாள் என்பாள். 80 அப்பாவின் அம்மை அப்பாயி ஆனாள். அப்பாவின் ஆத்தாள் அப்பாத்தாள் என்பாள். அப்பாவின் அப்பா அப்பப்பா ஆவர். எந்தம் தாயும் எந்தம் தந்தையும் என்றும் பிரியார் என்பதன் விளியாய் எந்தாய்என்ப தமைந்த தருமையாம்! அம்மையும் அம்மையின் அம்மையும் ஆயோர் அவ்வை அவ்வா எனப்படல் ஆவர். மணக்கொடை புரிதலால் மாண்புறத் தாதா எனப்படு பெருமையர் பெற்றோர்ப் பெற்றோர். 90 போற்றத் தக்க தாத்தா தம்மைப் போற்றி என்னல் போத்தி யாமே! தந்தை தாயே தமப்பன் தமையன் தம்முன் தம்பின் தமக்கை தமங்கை என்பவை தம்எனும் உரிமை கொளுமே. பருவ மழையனார் பாட்டன் பாட்டி பாட்டம் என்பது பருவ மழையே. பாட்டிக் கொருபெயர் ஐயா அம்மை. பூட்டிய காவலாய்ப் போற்றிக் காத்தவர் பூட்டன் பூட்டியர் எனப்பட் டனரே. 100 பூட்டிய கையும் பூட்டும் பூட்டையும் பூட்டிய வில்லும் பூணும் காண்க. ஓட்டமும் நடையும் ஒழுக்கமும் தந்தார் ஓட்டன் ஓட்டி உரிமையர் ஆனார். ஓட்டன் ஓட்டிமேல் உறவிலை என்பார். ஓட்டன் முன்னோன் சேயோன் என்பான் சேய்மை தொலைவு; சேயோன் தொல்லோன் சேயோன் செய்யன் செங்கதிர் அன்னோன். ஓட்டி முன்னோள் பழையோள் என்பாள் பழமை சேய்மை பயிலும் தொன்மை. 110 சேயோன் பழையோள் என்பார் கூறும் ஓட்டன் ஓட்டியர் தமக்கு முன்னோர். சேயோன் பழையோள் முன்னோர் எவரெனின் தொல்பழந் தந்தையும் தாயும் ஆகிய பரனும் பரையுமாம் பரன்பரை என்க. தொல்பழ நாளின் அப்பன் அம்மை பரனும் பரையும் எனப்படல் தெளிக. வித்தும் கொடியும் கிழங்கும் மூலமாய் நிலைத்திணை வந்த நீர்மை போல பரனும் பரையும் தொல்பழ மூல 120 அப்பனும் அம்மையும் ஆதலால் அவரவர் எங்கள் பரம்பரை எனல்வழக் கதுவே. அகத்தை ஆள்பவள் அகத்தாள் ஆத்தாள் அகமுடை யாளும் அவள்தன் பேரே. அகமெனல் மனமும் மனையும் உள்ளுமாம். இல்லம் ஆள்பவள் இல்லாள் என்பாள் துன்பும் துயரும் வறுமையும் வாட்டலும் இல்லா தாக்குவாள் இல்லாள் ஆனாள். மன்னுதல் நிலைபெறல் மன்னும் மாண்பால் மின்னச் செய்பவள் மீப்புகழ் மனையாள். 1200 தலைமைத் தகுதி தாங்குவாள் தலைவி தலைமைத் தகுதி தாங்குவான் தலைவன் தலைவி தலைவன் ஒப்புப் பெயர்கள். கிழவன் உரிமையன்; கிழத்தி உரிமையள் கிழவன் கிழத்தி ஒப்புப் பெயர்கள். ஆளன் கணவன் ஆட்டி மனைவி ஆட்சிச் சிறப்பால் அமைந்த பெயர்கள். கணவன் மனைவி கண்ணாய் இருப்பவன் கண்ணாம் மனைவி கண்ணாட்டி ஆவாள். கேள்வன் என்பது கணவன் பெயரே. 140 ஒருவன் என்பதும் கணவன் பெயரே அவர்என் பதுவும் கணவன் பெயரே. ஒருத்தி என்பதும் மனைவி பெயரே அவள்என் பதுவும் மனைவி பெயரே. ஒருவன் ஒருத்தி ஒன்றிடின் ஒருவர்! ஒருவர் என்பது ஒப்பிலா வாழ்வர். பெண்டாம் மனைவி பெண்மைச் சிறப்பால். மக்கள் என்பார் மகன்மகள் பொதுப்பால். தேவன் தேவி கணவன் மனைவி நாயகன் நாயகி என்பவும் அவையே 150 காதலன் காதலி களவில் தலைமையர் வயந்தன் வயந்தை என்பவும் அவையே. பார்ப்பு பாப்பு பாப்பா பாவை என்பன பெண்பால் குழந்தைப் பெயரே. குழவி குழந்தை மதலை மழலை பிள்ளை பிறங்கல் தோன்றல் சேயென மகவின் பெயர்கள் விரிதல் எய்தும். குட்டி குறுமான் என்பவை தாமும் பெண்ணின் பெயரும் ஆணின் பெயருமாம் குட்டி குட்டன் என்பவும் அவையே. 160 பெண்குழந் தையை வாம்மா எனல்போல் வாப்பா வாடா எனலும் வழக்கே. ஆண்மக வுக்குப் பெண்ணுடை உடுத்தும் பெண்மக வுக்கமை யாணுடை உடுத்தும் மகிழ்வு கொள்ளல் மாதர் வழக்கே. மக்களின் மக்கள் பேரன் பேர்த்தியர். பெண்எனில் மகளும் பிள்ளை என்னில் மகனும் ஆதல் வழக்கில் உளவே. பிள்ளை குட்டி என்னும் பெயர்கள் ஆண்மகன் பெண்மகள் பெயரென லாமே. 170 பிள்ளை குழந்தை குமரன் காளை வாலியன் முதியன் பெருமூ தாளன் என்பவை ஏழும் ஆடவர் பருவம். பிள்ளை குழந்தை குமரி கன்னி பெண்டு முதியள் பெருமூ தாட்டி என்பவை ஏழும் பெண்டிர் பருவம். தாத்தா பாட்டி மீமுப் புடையார்க் கீத்து வழங்கும் இனிய விளிச்சொல். ஆர்ஈர் இசைத்தல் ஆர்க்கும் உண்டாம் அம்மையார் அப்பனார் தம்பியார் போன்றே. 180 பேரனைப் பேராண்டி என்பார் பாட்டி. பேரரின் மக்கள் எள்ளுப் பேரர் அவர்தம் மக்கள் கொள்ளுப் பேரர் இவர்களைப் பூட்டன் ஓட்டன் என்றும் பூட்டி ஓட்டி எனலும் வழக்கே. முன்னோன் மூத்தோன் மேலோன் அண்ணன். தம்ஐயன் அன்னான் தமையன் அண்ணல். தம்பின் பிறந்தோன் தம்பி யாவன். தம்முன் அண்ணன் தமக்கு மூத்தோன். ஐயன் அண்ணன் ஆவதும் உண்டே. 190 உடன்பிறந் தானை உடன்பிறப் பெனலும் உடன்பிறந் தாளை உடன்பிறப் பெனலும் இன்னும் ஒழியா வழக்கே ஆகும். உடன்பிறந் தாரை ஒருவயிற் றோரெனல் சிலம்பில் காணும் செய்தி யாகும். தம்பி பையல் பையன் என்பவை அன்புறும் இளைஞர்க் கமைவதாம் விளிச்சொல். அண்ணன் தன்னை அண்ணாத் தேஎனல் பொருந்திய தாகப் போற்றற் கில்லை. எவ்வை நுவ்வை தவ்வை என்பவை 200 முன்னை மூத்தாள் மூவிட வழக்கே. எம்பி நும்பி தம்பி என்பவை முந்தை இளையர் மூவிட வழக்கே. எங்கை நுங்கை தங்கை என்பவை முன்னை இளையள் மூவிட வழக்கே. மனையின் ஆட்சியால் அண்ணன் மன்னன் அவன்மனை அண்ணி மன்னி ஆனாள். பெற்றோர் பெயரைப் பிள்ளைகட் கிடலால் பெயரன் பெயர்த்தியர் எனப்பேர் ஆனார். அம்மை உடன்பிறப் பம்மான் ஆனான். 210 அம்மகன் அம்மான் மாமகன் மாமன். மாமன் தன்னை மாமனார் என்னின் மகக்கொடை தந்தான் என்பதன் குறியாம். மாமன் துணைவி மாமி என்பாள். அம்மான் மனையை அம்மாமி எனலும் சிலம்பில் காணும் சீரிய வழக்கே. அத்தன் உடன்பிறப் பத்தை ஆனாள். மாமன் மைந்தர் அளியரும் ஆவர். அத்தையின் ஆச்சி அத்தாச்சி என்பாள். மருவு மகனே மருமகன் மருமான் 220 மருவு மகளே மருமகள் மருமாள் மருகன் மருகி எனவும் படுவர் மருவுதல் கலத்தல் வழிமுறை யாக்கல். கொழுமை அன்பினன் கொழுநன் ஆவன். கொண்டான் என்பான் கொண்ட கணவன். கொழுநன் உடன்பிறந் தவனோ கொழுந்தன். கொழுநை உடன்பிறந் தவளோ கொழுந்தி. கணவன் மூத்தான் அத்தான் மச்சான். கணவன் தன்னை மாப்பிளை எனலும் கணவன் தம்பியை மாப்பிளை எனலும் 230 பல்வே றிடங்களில் பயிலும் வழக்கே. புகுந்த வீட்டின் பேச்சுத் துணையை நாத்துணை எனலே நாத்தினாள் ஆனதாம். நாத்தூண் நங்கை என்னும் சிலம்பே. ஒருகுடி மணவர் ஓரகத் தாராம். தாயெனப் படுவாள் செவிலித் தாயே! தோழி என்பாள் செவிலி மகளே. கொள்பவர் கொடுப்பவர் தம்மை முறையே கேளும் கிளையும் எனலும் மேலும் உற்றார் உறவினர் எனலும் வழக்கே 240 சம்பந்தி வரலால் சாய்ந்தன இவையே! வாழிய நலனே! வாழிய நிலனே! - இ.கு. முற்றில்: இல்லத்தின் முகப்புப் பகுதி முன்றில் எனப்படும். இல்முன் என்பது முன்றில் ஆயது. முன்றில் முற்றில் என்பது வலித்தல்! முற்றம் என்பது மக்கள் வழக்கு. செய்யுள் வழக்குமாம். மூலையில் இருந்தாரை முற்றத்தில் வைத்தவர் சாலப் பெரியர் முற்றும்: முற்று > முற்றும். 1. முற்றும் = முழுவதும். எ-டு: முற்றும் செலவாகி விட்டது. 2. முற்றும் = முடிந்துவிட்டது. எ-டு: எழுதிய தொடர் முற்றும். தம்கருமம் முற்றும் துணை - நாலடி. 231 முற்றூட்டு: முற்றூட்டு. முழுமையாக ஊண் உடை உறைவுக்கு வழங்கப் பட்ட இடம் முற்றூட்டு. புலவர்களுக்கு முற்றூட்டாக வழங்கி யவை, காரிகைக் குளத்தூர்; குறவஞ்சி மேடு. முனிவர்: முனிவு + அர் = முனிவர். முனிவு = வெறுப்பு. அறவோர் அருளாளரால் கொள்ளக் கூடாதவை எனப் பட்டவற்றை முனிந்து (வெறுத்து) ஒதுக்கி வாழும் தற்பற்றில்லாத் துறவர் முனிவர் எனப்பட்டார். முனி என்பதும் அது. பணியியர் அத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே - புறம். 6 சினமிக்கார் சாவிப்புச் சொல்வார் முனிவர் என்னல் பின்னைத் தாழ்நிலைச் சிறுமையும் புனைவும். முனிவு: முனிவு = முன்சினம் உடைமை. முனிவு மெய்ந் நிறுத்தல் - தொல். 1217 இனிது கண்டிசிற் பெரும முனிவிலை - புறம். 22 முனைவர்: முழுதறிவினைப் பெற்று முதல்நூல் செய்தவன். வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் - தொல். 1594 ஒரு துறையில் ஆய்ந்து மேனிலைப்பட்டம் பெற்றார் முனைவர் என்பது இக்கால வழக்கு. தீவினை அற்றவரும், வினையின் விளைவைத் தாம் கொள்ளாதவரும் பிறர்க்கு மேம்பட்ட இலங்கறிவு உடையாரும் முனைவர் எனப்பட்டனர் எனவும் அவர் உலக நலங் கருதிப் புதுவதொரு நூலை முதற்கண் படைத்தவர் என்பதும் பொருளாம். முன்: முன்னிடம், முற்காலம். காலமும் இடமும் முதற்பொருள். ஆதலால் முன் என்பது இடம் காலம் இரண்டையும் உணர்த்தும். முன் x பின், யாண்டு, ஞான்று முதலனவும் இடமும் காலமும் உணர்த்துவனவே. என் முன் ஆறு ஓடுகிறது, என் முன் என் தந்தை வாழ்ந்தார்என்பவை ம.வ. முன்றலை: முன் + தலை = முன்றலை. வீட்டின் அவையின் கூடத்தின் முன்றலையில் உள்ளது என்பது ஈழ வழக்கு. நாம் முன்றில், முன்னில், முற்றம் என்பவற்றை முன்றலை என்கின்றனர். தலை இடப் பொருளதாதல், கண்கால் கடைஇடை தலைவாய் திசைவயின் - நன். 302 இடப்பொருள் உருபு: அவர் நகரவை முன்றலை வந்தடைந்தார் என்பது ம.வ.  மூ வரிசைச் சொற்கள் மூ: மகர ஊகாரம்; உயிர்மெய் நெடில். மூன்று என்னும் பொருள்தரும். மூவாண்டு, மூவேந்தர், மூவறிவு. மூப்பு என்னும் பொருளும் தரும். மூதேவி; மூத்தவள், மூத்தாள். மூக்கறுத்தல்: மூக்கறுத்தல் = இழிவுறுத்தல். இடைக்காலப் போராட்டங்களுள் மூக்கறுப்புப் போராட்டம் ஒன்று. மைசூர் மன்னர் படைஞர் மூக்கை, முகவை அரசர் படைஞர், திருமலை மன்னருக்காக அறுத்த செய்தி வரலாற்றில் உண்டு. இராம காதையிலே மூக்கறுப்புப் போர் தொடங்கி விட்டமை நாடறிந்த செய்தி. மூக்கை அறுத்தல் இழிவுபடுத்துதல் பொருளது. காதறை, மூக்கறை என ஆக்குவது வாழ்நாளெல்லாம் காணுவார் கண்ணுக்கெல்லாம் காட்சி தருவன வல்லவோ! சொல்லாற் படுத்தும் இழிவு தன் மனத்து வடுவாம். இவ்விழிவோ காண்பார்க்கெல்லாம் இழிவைப் பரப்பும் விளம்பரப் பறையாம் அன்றோ! அவ்வழக்கால் மூக்கறுத்தல் என்பதற்கு இழிவுறுத்தல் பொருள் தோன்றிற்றாம். மூக்கறை காக்கறை: மூக்கறை = மூக்குக் குறைந்தது. காக்கறை = கால்கை குறைந்தது. உறுப்புக் குறையாளர்களை அடுக்கும் இணைமொழி மூக்கறை காக்கறைஎன்பதாம். கால் கை பிடித்தல், காக்கை பிடித்தல் என வழங்குவது போலக் கால் கை குறை காக்கறை ஆயிற்றாம். மூக்கு அறை = மூக்கறை; மூக்கறுபட்டது. மூக்கறுப்பு முன்னாளிலும் பின்னாளிலும் முனைப்பான வரலாற்றுச் செய்திகள் அறிவற்றுப் போதல் அறிவறை எனப்படுவதை அறிக. மூக்கு: முக்கு > மூக்கு. முப்பட்டை வடிவாக அமைந்ததும் மூச்சு விடுதற்கு அமைந்ததும் முன்னோக்கி எழுத்ததுமாம். உறுப்பு மூக்கு ஆகும். கிளி மூக்கு மாம்பழம் என்பது மூக்கின் வடிவ வழிப் பெயரது. பல்லும் இதழும் நாவும் மூக்கும் - தொல். 83 மெல்லின எழுத்தின் பிறப்பிடம் மூக்கு. அவ்வழி, ஆவி இடைமை இடம்மிட றாகும் மேவு மென்மை மூக்கு உரம்பெறும் வன்மை - நன். 75 காய், மலர், காம்பு விடுதல். நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்ந்த - ஐங்குறு. 213 கதிர்மூக்கு ஆரல் - புறம். 249 உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை - அகம். 53 மூக்குச் சிந்தல்: மூக்குச் சிந்தல் = கவலைக்கு உள்ளாதல், அழுது அரற்றல். அழும் ஒருவர்க்குக் கண்ணீர் சிந்துவதுடன் மூக்கும் ஒழுகலாகும். அதனைச் சிந்தல் காணக்கூடியது. அதனால், மூக்குச் சிந்தல், அழுதல், கவலை ஆகிய பொருள்களுக்கு உள்ளாயிற்று. தடுமம் பற்றலாலும் மூக்குச் சிந்தல் நேரும். எனினும், அதனை விலக்கிக் கவலைப் பொருளாதல் வழக்குச் சொல்லாயிற்று. அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகஎன்பது மரபுத் தொடராக உள்ளமை இப்பொருளை வலியுறுத்தும். ஒன்றைச் சொன்னால் உடனே மூக்கைச் சிந்துவாயே என்பதில் இப்பொருண்மை உண்மை தெளிவாம். மூக்குடை படுதல்: மூக்குடை படுதல் = இழிவுபடுதல். மூக்கறுபடல் போல்வதோர் வழக்கு இது. மூக்கை உடைக்காமலே உடைத்தது போன்ற இழிவுக்கு ஆட்படுத்துதல் மூக்குடைபடுதலாம். உடைபடுதல் என்பதால் எலும்பை உடைத்தல் என்பது தெளிவாம். அறுத்தல் தோலுக்கு ஆம். அதனினும் வன்மை எலும்பை உடைத்தல். குளம் உடைந்தால் நீர் வழியும்; இவண் குருதி வழியும். மூக்குடைபட்டுக் குருதி யொழுகச் செய்வது போல இழிவுறச் செய்தலாம். நன்றாக மூக்கை உடைத்தாய்; அதற்கு பின்னர் அவன் வாயைத் திறந்தானா? என்பதில் இழிவுறுத்தல் பொருள் உள்ளதாம். மூக்குத்திப்பூண்டு: மூக்குக்குத்தி¡கšநகை¤தொங்கšபோடுவJமகளி®வழக்கு. இதோ ஒரு பூண்டுக்குப் பெயராகிறது. அது, மூக்குத்திப்பூண்டு. இயற்கை ஓவியமா? உவமை அணிகலமா? மூக்கும் முழியும்: மூக்கு = மூக்கின் எடுப்பான தோற்றம். முழி = விழியின் கவர்ச்சியான தோற்றம். ஒரு குழந்தையைப் பார்த்து அழகாக இருந்தால் மூக்கும் முழியும்எப்படி இருக்கிறது என வியந்து கூறுவது தாய்மைச் சீர். மூக்கு என்பதற்கு ஏற்ப விழிமோனைப்பட முழிஆயிற்று. வாக்கும் நயனமும் வாயும் முறுவலும் மூக்கும் இருந்தவா காணீரேஎன்பது பெரியாழ்வார் திருமொழி. மூங்கா: மூங்கா = கீரி. மூங்கா வெருகு எலி மூவரி அணிலொடு ஆங்கவை நான்கும் குட்டிக் குரிய - தொல். 1505 பாம்பு முதலியவற்றைப் பற்றித் தின்றபின், கீரி தன் மூக்கைப் பல்கால் தேய்த்தலால் மூங்கா என்னும் பெயர் பெற்றதாம். மூங்கில்: மூங்கில் = மூசுதல் = ஒலித்தல். வண்டுகள் துளையிட்டு மூசுதலாலும், அத் துளையில் காற்றுப் புகுந்து ஒலித்தலாலும் மூங்கில் எனப்பட்டதாம். மூம்மூம்ஒலிக்குறிப்பு. * மூங்கைகாண்க. மூங்கை: மூங்கை = ஊமன், ஊமை. அவர் பேச்சு வாராமல் மூம்மூம் என ஒலித்துத் தம் கருத்தை உணர்த்தலால் மூங்கை எனப்பட்டாராம். பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந் தேதிலார் இற்கண் குருடனாய்த் தீய புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் என்றும் அறங்கூற வேண்டா அவற்கு - நாலடி. 158 மூசு: மூசுதல் = ஒலித்தல். மூசு மூசுஒலிக்குறிப்பு. மூசுமூசு என்று மூச்சுவிட்டான்; அழுதான். வண்டு மூசு தேறல் மாந்தி - நெடுநல். 33 ஞிமிறுமூசு கவுள சிறுகண் யானை - அகம். 159 மூசை: திண்மைப் பொருளை உலைக்களத்தில் வெதுப்பி ஓடவிட்ட நீர்மத்தால் உருப்படுத்துதல் கருவி மூசை என்பதாம். மூசுதல் ஊதுதல். மூசு > மூச்சு. மூசு வண்டு மூச்சால் ஒலி செய்யும் வண்டு. மூசைத் தங்கம் மூசுமூசு எனல் = பெருமூச்சு விடுதல். மூச்சி: முச்சி என்பது வகிடு. அது அகலம் இல்லாமல் நீண்டு எடுக்கப்படுவது. முச்சி என்பது நீண்டு மூச்சியாகி நீளப் பொருள் தருதல் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. சொல்லின் நீட்சி, பொருளின் நீட்சியுமாதல் இரட்டைப் பொருத்தமாம். மூச்சு: மூச்சு = பேசாதே. மூச்சு என்றாலே அழுகையை அடக்கு; வாயைத் திறவாதே; பேசாதே என்னும் பொருள்களைத் தரும் வழக்குகள் உள. அழும் குழந்தை, ஓயாது பேசும் குழந்தை ஆகியவற்றை அடக்க மூச்சுஎன்பர். அக்குறிப்பை அறிந்த குழுந்தை வாயை ஒடுக்கும், அழுகையை நிறுத்தும் அச்சப்பொருள் தரும் கட்டளைச் சொல் மூச்சுஎன்பதாம். ஓர் அரற்று அரற்றியதும் காச்சு மூச்செல்லாம் அடங்கிப் போயிற்றுஎன்பதில் ஆரவாரத்தை அடக்குதல் பொருள் உள்ளது. மூச்சுஎன்பதில் மூச்சு விடாமைப் பொருள் இல்லை என்பதை அறிக. மூச்சுவிட மறத்தல்: மூச்சுவிட மறத்தல் = சாதல். பேச மறத்தல் என்பது போன்ற வழக்கே மூச்சுவிட மறத்தல் என்பதாம். மூச்சே உயிர், மூச்சு அடங்குதல் உயிர் போதலாம். ஒடுக்கம் அடக்கம் என்பவும் இறப்பை உணர்த்துதல் அறிக. மூச்சு நின்று போனது என்பதை அவர் செயலாக்கி மூச்சு விட மறந்துவிட்டார்என வழக்கில் உள்ளதாம். மூச்சை அடக்கிப் பயிற்சி செய்தல். மூச்சை அடக்கி நீருள் மூழ்குதல் என்பன போல்வதன்றி முற்றாக மூச்சு நின்று போதலே இது என்க. காயமே பொய்யடா, காற்றடைத்த பையடாஎன்பது மூச்சுக் காற்றால் இயலும் உடலியல் கூறுகின்றதாம். மூச்செடுப்பு: மூச்சு உள்வாங்கல், வெளியிடல் வழியாக மார்பு அளவெடுத்தல் வழக்கம். அம் மூச்செடுப்பு பொதுவழக்கு. கிள்ளியூர் வட்டார வழக்கில் மூச்செடுப்பு என்பது ஓய்வு என்னும் பொருளில் வழங்குகின்றது. மூச்சுவிட நேர மில்லைஎன்பது நெல்லை வழக்கு. மூச்சுவிடுதல் என்பதன் ஓய்வெடுத்தல் பொருளை நெல்லை வழக்கு தெளிவு செய்கின்றது. ஒருவட்டார வழக்கை இன்னொரு வட்டார வழக்கு தெளிவாக்குதல் சான்று ஈதாம். மூடம்: அறிவுக் கிளர்வைத் திரையிட்டாற் போல மூடிக் கிடக்கும் அறியாமை, மூடமாம். அறிவு மூடம்; அறியாமூடம் என மூடம் இருவகையாம். கதிரையோ வானத்தை மூடி மறைத்துள்ள முகிற் செறிவு மூடம்ஆகும். மூடல் > மூடம். மக்கள் வழக்கில் மோடம் எனப்படும். வானம், மோடம் போட்டுள்ளது, மழை வரும்என்பது ம.வ. மூட்டம் என்பது மாந்தரால் போடப்படுவதாம். வாழைக்காயைப் பழுக்க வைக்கப் புகைமூட்டம் போடுவது வழக்கு. பாலடுப்பிற்கு உமிமூட்டம் போட்டுக் கொழுந்துவிட்டு எரியாமல் மூடுவதும், பானை, சட்டி வேக வைக்க மூட்டம் போடுவதும் உண்டு. மூடி: வாயை மூடி வைக்கும் மூடு. வாயை மூடுதல் போல் பானை முதலிய கலங்கள் புட்டில் முதலியவற்றை மூடுதற்குரியது மூடி. எழுதுகோல் மூடியும் உண்டு. மூடத்தன்மையள் மூடிஎனப்படுவாள். குளிரில் மூடிப் படுத்தல் இயற்கை. முகமூடிப்படுத்தல் இயற்கை. முகமூடிக் கொள்ளை பல்கிவருதல் கண்கூடு. கண் மூடுமுன் பலர் வாழ்வு மண்மூடிப் போகிறது பரபரப்பான ஊர்திப் போக்குகளால். சென்றே எறிப ஒருகால் சிறுவரை நின்றே எறிப பறையினை - நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடிதீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து - நாலடி. 24 மூடு: மூடு என்பது பழமையான சொல். குட்டி என்னும் பொருள் தரும் சொற்களுள் ஒன்று (தொல், மரபு). அச்சொல் அப்பொருளில் திருச்சிராப்பள்ளி, கருவூர் வட்டார வழக்குகளில் உள்ளது. வெள்ளாட்டுப் பெண்குட்டியின் பெயர் அது. மறி என்பது பாற்பொதுப் பெயர். ஆண்மறி, பெண்மறி எனப்படும். மறி= குட்டி; மான்மறி. மூடை: பொருள்களைச் சிந்தாமலும் சிதறாமலும் காக்கவும் வெளிப்படத் தோன்றாமல் இருக்கவும் கோணியில் போட்டுக் கட்டியோ தைத்தோ மூடி வைக்கப்படுவது மூடையாகும். பெரிய மூடை பொதிமூடை எனப்படும். மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி.... வரையாடு வருடை - பட்டினப். 136-139 மூட்டம்: கருமுகில் குவிந்து கிடத்தல் முகில்மூட்டம், மேகமூட்டம் எனப்படும். புகை போட்டு மூடுவது புகைமூட்டம். மூட்டிவிடுதல்: மூட்டி விடுதல் = கோள்கூறல். இருபக்கத்தை இணைத்து ஒன்றாக்கல் இயைத்தல், இசைத்தல் என்றெல்லாம் வழங்கும். அவை ஒன்றுபடுத்தல் பொருள். இது ஒன்றாக இருந்தவரை இரண்டாக்கி நான்காக்கிப் பிரித்து வைப்பதாம். அடுப்பு மூட்டல், நெருப்பு மூட்டல், தீமூட்டல் எரிமூட்டல் என்பன போல இம்மூட்டல் சினத்தையும் மூண்டெழச் செய்து அதனால் பலப்பல சிதைவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஆட் படுத்துதலாம். மூட்டிவிடுதல், மாட்டிவிடுதல் என்பனவெல்லாம் கெடுவழிப் பிறந்த கேடர் கைப்பொருள்கள். மூட்டுவதில் பெரிய ஆள்என்னும் வழக்கில் உள்ள பெருமையின் சிறுமை வெளிப் படை. மூட்டு: 1. முட்டு > மூட்டு. இரண்டு எலும்புகள் முட்டி நிற்கும் இடம் மூட்டு. மூட்டுத்தொல்லை முடியாத தொல்லை என்பது ம.வ. 2. ஏவல். தீமூட்டுதல். களிறு சுவைத்திட்ட கோதுடைச் சிதறல் கல்லா உமணர்க்குத் தீமூட் டாகும் - அகம். 257 3. கோள் மூட்டுதல். 4. ஏவல். அந்தக் கோணியை மூட்டு. மூட்டை கட்டல்: மூட்டை கட்டல் = புறப்படல். ஓர் ஊரில் இருந்து வேற்றூர் செல்வார் தோட்கோப்புக் கொண்டு செல்லல் முந்தை வழக்கு. தோட்கோப்பு கட்டுச்சோறுஎனவும் வழங்கும். சோற்று மூட்டை என்பதும் அது. சோற்று மூட்டை கட்டினால் வேற்றூர்ச் செலவுண்டு என்பது வெளிப்படை. இனி வேற்றூரில் நிலையாகத் தங்கச் செல்வார் தம் உடைமைகளை மூட்டை கட்டிக் கொண்டு போதல் உண்டு. பெட்டியில் போட்டாலும், உந்துகளில் தொடரிகளில் கொண்டு சென்றாலும் மூட்டை முடிச்சுகளே அவை. ஆதலால், மூட்டை கட்டல் என்பது இடம்விட்டுப் புறப்படல் பொருளில் வருகின்றது. ஓயாது இடமாறிச் செல்வார், மூட்டை கட்டுவதே என் பிழைப்பாகி விட்டதுஎன்பதுண்டு. மூணாரம்: இடுப்பு என்பதைக் கருங்குளம் வட்டாரத்தார் மூணாரம் (மூன்று ஆரம்) என வழங்குகின்றனர். எத்தகைய அரிய ஆட்சி என்பது பொருளறிந்தால் புலப்படும். இடுப்பில் உள்ளாடை ஒன்று; மேலாடை ஒன்று; அதன்மேற் காப்பாக ஒட்டியாணம் என்றும் இடைவார் என்றும் அணிவன மற்றொன்று. இம்மூன்று ஆரம் (சுற்றுக்கட்டு, பாதுகாப்பு) இருப்பதால் மூணாரம் எனப்பட்டது. பொதுமக்கள் பார்வை, புலமக்கள் பார்வையை வெல்லும் திறச் சான்றுகளுள் ஒன்று இஃதாம். மூதாய்: காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயன் மூதாய் வரிப்பப் பவழமொடு மணிமிடைந் தன்ன குன்றம் - அகம். 14 மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச் செம்புற மூதாய் பரத்தலின் - அகம். 134 அரக்குநிற உருவின் ஈயல் மூதாய் பரப்பியவை போல் பாஅய்ப் பலவுடன் - அகம். 139 ஊட்டு பஞ்சிப் பிசிர்பரந் தன்ன வண்ணம் மூதாய் தண்ணிலம் வரிப்ப - அகம். 283 காயாஞ் செம்மல் தாஅய்ப் பலவுடன் ஈயல் மூதாய் ஈர்ப்புறம் வரிப்ப - அகம். 304 குறுமோட்டு மூதாய் குறுகுறு ஓடி மணிமண்டு பவழம் போலக் காயா அணிமிகு செம்மல் ஒளிப்பன மறைய - அகம். 374 ஈரிடைத் தாழ்ந்த பெய்புல மூதாய்ப் புகர்நிறத் துகிரின் மையற விளங்கிய ஆனேற் றவிர்பூண் - கலிட். 85 மூதாயைப் பற்றிய பாடலடிகளைப் பலவாக அடுக்கிக் காட்டியமை அதன் பெயர்விளக்கம் காட்டவேயாம். மூதாய் என்பது சிவப்பு நிறத்தது. மக்கள் தம்பலப் பூச்சி என்பர். அதன் தோற்றம் செம்பட்டுப் போன்றது. பலவாகச் செறிந்து பரந்து திரிவது; காயாம்பூவில் படிந்தும் பரவியும் மறைந்தும் திகழ்வது. அது மணிமிடை பவழம்அன்னது என்பவை இவ்வடிகளின் தொகையாம். முழுவதாய் நிலப்பரப்பில் தெரிதலால் மூதாய் எனப்பட்டதாம். முழுதாய் > மூதாய். அகநானூற்றின் ஒருபகுதியின் பெயர்க்கொடை இது வழங்கியது; மணிமிடை பவழம் என்பது. (பாடல் 126-300). மூதில் மறம்: பழமையான வீரர் குடியில் பிறந்த ஆடவர்க்கே அன்றி அக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் வீரமுண்டாதலைச் சிறப்பித்துக் கூறுவது. அடல்வேல் ஆடவர்க் கன்றியும் அவ்வில் மடவரல் மகளிர்க்கு மறமிகுத் தன்று என இதன் இலக்கணமும் வந்த படைநோனாள் வாயில் முலைபறித்து வெந்திறல் எஃக மிறைக்கொளீஇ - முந்தை முதல்வர்கற் றான்காட்டி மூதின் மடவாள் புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு என இதற்கு எடுத்துக்காட்டும் கூறுகிறது புறப்பொருள் வெண்பா மாலை (175). மூது: முது > மூது = முதுமை. மூதாளர், மூதாலம். மூப்பு: 1. மூப்பு = வயது முதிர்வு. எ-டு: மூப்பர், மூப்பனார். 2. மூப்பு = விருப்பு. தம் மூப்பில் அதைச் செய்தார்; அதற்கு நான் பொறுப்பா? என்பது ம.வ. மூரல்: முறுவல் > மூரல் = பல். றகர, ரகரத் திரிபு வகையாலாயது இது. மூரல் முறுவல் என மீமிசையாகவும் வழங்கும். மூரல் முறுவல் - குறுந். 286 மூரல் முறுவலள் - அகம். 390 மூரல் வெண்ணிறமாதலால், மூரல் வெண்சோறு(அகம். 60) எனப்பட்டது. மூரி: முதிர் > மூர் > மூரி = முதிர்ந்தது, முற்றியது, வலியது. மூரி எக்கர் - நற். 15 உயர்மணல் மேடு. மூரி நிமிர்ந்துஎன்பது ஆழ்வார் ஆட்சி (நாலா. 496). நெறிபடு மருப்பின் இருங்கண் மூரி - பதிற். 67 பொருள்: இருங்கண் மூரி என்றது பெரிய உடலிடத்தை யுடைய எருதென்றவாறுப.உ. மூலம்: முதல் > மூல் > மூலம். எல்லாவற்றுக்கும் அவ்வவற்றின் மூலமாக இருந்தது மூலம் ஆகும். அணுச் செறிந்த உலகம்; ஆதலால் அணுமூலம். வித்து, விந்து, வேர், கிளை, கிழங்கு முதலாம் மூலம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - திருக். 1 எழுத்து மூலம், உலக மூலம் கூறியது இது. ஆதி மூலம் என்பது மாலியம். சிறுபஞ்ச மூலம் கீழ்க் கணக்குள் ஒன்று. மூலம் = நோய்; வேர் அன்னது. மூலம் = வழி, வகை. அவர் மூலமாக விடுக்க. மூலம் = மூலிகை; மருந்து. மூலிகைப் பூச்சி விரட்டி: பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை வெருட்ட (விரட்ட) மூலிகைச் சாறு பயன்படும். ஆடு மாடுகள் உண்ணாத செடி கொடிகளின் சாறு அது. ஆடுதொடா, ஆடு தின்னாப்பாளை, ஊமத்தை, எருக்கு, துத்தி, உண்ணிச் செடி, காட்டாமணக்கு, எட்டி, சீதா கொட்டை, அரளிவிதை, வெப்பாலை, பீநாறிச்சங்கு, கற்றாழை, நொச்சி, தும்பை, துளசி, நாய்த்துளசி, சீமைக்கருவேல் முதலியவை பூச்சி வெருட்டித் தன்மையுடையவை. இச் சாறுகளொடு மாட்டுநீர் சேர்த்தல் வேண்டும். இவற்றுள் வாய்த்தவற்றை ஆட்டிச் சாறெடுத்து மாட்டுநீருடன் காய்ச்சிச் சிலநாள்கள் ஊறவிட்டுத் தெளித்தால் பூச்சிகள் அகலும்; மேலும் நெருங்கா. பூச்சி உண்டாய பின்னர் அடிப்பதைக் காட்டிலும் முன்னரே அடித்துவிட்டால் மிக நலமாம். (வேளாண்துறை அறிவிக்கை தினமணி 26.05.2011). மூலை முடுக்கு: மூலை = இரண்டு பக்கங்கள் சந்திக்கும் இடத்தின் முக்கோணப்பகுதி. முடுக்கு = கோணலாய் அமைந்தது முடுக்கு எனப்படும். மிக நெருக்கமானதும் முடுக்கு எனப்படும். தெருக்களில் மூலை முடுக்குஉண்டு. மூலை, மாரி மூலை, ஈசான மூலை எனக் கோணத்திசைகளைக் குறிப்பதும் உண்டு. முக்கு என்பது முட்டித் திரும்பும் இடம். முடுக்கு வளைந்து திரும்பும் இடம். இவை இவற்றின் வேறுபாடு. மூவகை வல்லினம்: பொதுவகையில் வல்லினம் என்போம். அவ்வல்லினம் ஒலி வகையால் மூவினமாதல் எண்ணின் புலப்படும். முத்து, முற்று, முட்டு என்பவற்றின் இடையொற்று வல்லினமே. ஆனால் ஒலிப்பால் ஒப்பாகவில்லை. முத்து வல்லினத்தில் மென்மை; முற்று வல்லினத்தில் இடைமை; முட்டு வல்லினத்தில் வன்மை - எனல் புரியும். சங்கின் முத்து, ஆமணக்கு முத்து, வேப்பமுத்து, புளிய முத்து அன்பும் ஆர்வமும் தவழ வழங்கும் முத்தம் மெத்தெனத் தோன்றி முதிர்ந்தவை. ஈரப்பதம் உள்ளே உள்ளவை. முற்றிய நெற்று, அவரை, துவரை, மொச்சை முதலியவை ஈரப் பசையற்றுக் காய்ந்தவை. நெல்போல் நிறத்தவை. நெல் + து = நெற்று. தேங்காய் நெற்று. முட்டு என்பது அறியா மோதலாய், சினத்தின் சான்றாய்க் கடுந்துயர் செய்பவை. இத் தன்மைகளை ஒலி மென்மை அழுத்தம் மீயழுத்தம் என்பவற்றால் அறிய வைக்கும் அமைவு படைப்பின் அருமை காட்டுவனவாம். மூவர்: பழந்தமிழகத்தை ஆட்சி புரிந்த மூவர். அவர் சேர சோழ பாண்டியர். போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் - தொல். 1006 போந்தை (பனம்பூமாலை) அணிந்தவர் சேரர்; வேம்பு (வேப்பம்பூமாலை) அணிந்தவர் பாண்டியர்; ஆர் (ஆத்திமாலை) அணிந்தவர் சோழர். மூழை: முழுகி > மூழ்கி > மூழை = முழுகி (உட்புகுந்து) அள்ளி எடுக்கும் அகப்பை. அடுகம் அடிசிலென் றம்மதிலுள் இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு - பு.வெ. 117 காம்பிலா மூழை - அப். தேவா. மூழ்கல்: முழுகல் > மூழ்கல். 1. ஒன்றிலே முழுதுற ஆழ்ந்து விடுதல். 2. நீருள் முழுகிப் போதல், உட்புகுதல். வைந்துனைப் பகழி மூழ்கலில் - முல்லை. 73 பாசடகு மிசையார்; பனிநீர் மூழ்கார் - புறம். 62 மூளை: முள் > முளை > மூளை. முள் = கூர்மை. முள்போல் கூர்மையாகத் தோன்றிய முளை விரிவாக்கம் பெற்று மூளையாகச் சிறக்கின்றது. ஓயாமல் தவழும் கடல் அலைகளைப் போல் உடலெங்குமிருந்து வந்தடையும் உணர்வுச் செய்திகளை ஏற்பதும், ஏற்கப்படும் செய்திகளுக்குப் பதில் வினையாக உடல் இயக்கக் கட்டளைகளை உரிய பகுதிகளுக்கு விடுப்பதும், மூளையின் உடலியக்க ஆட்சிப் பணிகளாகும். உணர்வுச் செய்திகளும் இயக்கக் கட்டளைகளும் மின்துடிப்புகளாக நமது உடலில் மின்னல் கொடிகள் போல் எந்நேரமும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. மூளையின் இத்தகைய செய்தித் தொடர்புப் பணிகளால் நாம் மனநலமும் உடல்நலமும் பெற்று இயல்பாக வாழ முடிகிறது(மூளைக்கு உணவு - நூல் அறிமுக உரை.). தலைக்குள் இருக்கும் மூளையைக் கருத்தில் கொண்டே தலையாயதுதலைமைஎன்றெல்லாம் குறிப்பிடுகின்றோம். (- அணிந்துரை). “மிகச்சிறந்த கல்வியாளர்களான பெண் துறவிகளின் மூளை, இவர்கள் கற்ற கல்வியால் பெருமளவு தூண்டப் பட்டிருப் பதன் அடையாளமாக விரிவான புறணியும் (Larger Cortex) மிகுதியான கிளைகளும் இணைப்புகளும் காணப் பட்டன.”(பக். 116). நுண்மாண் நுழைபுலம் - திருக். 407 அஃகி யகன்ற அறிவு - திருக். 175 என்பன எண்ணத்தக்கன. 