செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் 8 நு முதல் பூ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் நூற்குறிப்பு செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 8 நு முதல் பூ வரை ஆசிரியர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பதிப்பாசிரியர் முனைவர் பி. தமிழகன் பதிப்பாளர் கோ. இளவழகன் முதல்பதிப்பு : 2018 பக்கம் : 20+372= 392 விலை : 490/- பதிப்பு தமிழ்மண் பதிப்பகம் எண். 2, சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர், சென்னை - 600 017. bjh.ng.: 24339030, செல்: 9444410654 மின்னஞ்சல்:  தாள் : 16.0 கி. மேப்லித்தோ,  அளவு : 1/8 தெம்மி   எழுத்து : 11.5 புள்ளி,  பக்கம் : 392  கட்டமைப்பு : இயல்பு  படிகள் : 1000   கணினி & நூலாக்கம் : நல்லதம்பி, கோ. சித்திரா   அட்டை வடிவமைப்பு : செல்வன் பா. அரி (ஹரிஷ்)   அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட், ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006.  களஞ்சியம் வளமான வீடுகள் கட்டி வாழும் நிலக்கிழார் பெருநிலக்கிழார் ஆகிய உழவர்கள், தங்கள் வீட்டின் உட்பகுதியில் களஞ்சியங்கள் அமைத்திருப்பர். களஞ்சியம் இருக்கும் வீடு என்றால் வளமிக்க உழவர்வீடு என்பது பொருள். களத்தில் வரும் தவசங்கள் பயறு வகைகள் ஆகியவற்றை அங்கே பூச்சியரிப்பு, மட்குதல் ஏற்படாவகையில் தளத்தின்மேல் உயர்த்தியும் புன்கு வேம்பு ஆகியவற்றின் தழைகளைப் பரப்பியும், பாதுகாப்பர். அவ்வாண்டு முழுமைக்கும் பயன்படும். அடுத்த ஆண்டு விளைவு குறைந்தாலும் களஞ்சியப் பொருள் கவலையின்றி வாழ உதவும். ஏருழவர் போலச் சொல்லேர் உழவராம் சான்றோர் நூல்கள், அக்காலத்தார்க்கே அன்றி எக்காலத்தார்க்கும் பயன்படும் வகையில் பாதுகாத்துப் பயன் கொள்ளச் செய்வது நூல் களஞ்சியமாகும். இந்தியப் பரப்பில் தமிழ் மொழியில் தான் முதன்முதல் `கலைக் களஞ்சியம் உருவானது என்பது பெருமிதப்படத்தக்கதாம். இப்பொழுது தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்படும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் செவ்வியல் மொழிக் கொடையாக வந்து, தமிழ்மண் பதிப்பக வெளியீட்டால், தமிழ்கூறு நல்லுலகப் பொருளாவது, செம்மொழிச் செம்மல் முனைவர் திருமிகு க. இராமசாமி அவர்கள் தூண்டல் வழியாகத் துலங்கிய துலக்கமாகும். ஆதலால் படைப்பாளன் என்ற நிலையில் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். இன்ப அன்புடன் இரா. இளங்குமரன். கடப்பாட்டு உரை தமிழ் இயற்கை இயங்கியல் வழிப்பட்ட ஒலி, வரி, வடிவுகளையும் இயற்கை இயங்கியல், மெய்யியல், வாழ்வியல், படைப்பியல் என்பவற்றை அடிமனையாகவும் கொண்ட மொழி. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் மூல முழக்கத்தை முழுவதாகக் கொண்டது நம்மொழி என்பதை ஓராற்றான் விளக்குவதாக அமைந்தது இக் களஞ்சியம். ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் என்பவை இல்லாமல், வெளிப்பட எவரும் அறிந்து கொண்டுள்ள வழக்கு, செய்யுள் என்பவை கொண்டே விளக்குவது இக்களஞ்சியம். இதனை, ஊன்றியும் விரும்பியும் கற்பார் தாமும் இவ்வாய்வு செய்ய வியலும் என்பதைத் தூண்ட வல்ல ஆய்வும் இது! ஆதலால், படிப்பாளியைப் படைப்பாளி ஆக்கவல்லது என்பதை என் பட்டறிவுத் தெளிவாகக் கண்டு வருகிறேன்! எளிமையாய் - ஆழ்ந்த நுணுக்கங்களை - ஓரளவு கற்றாரும், கொள்ள வழிகாட்டும் `கைவிளக்கு அன்னது இது. இதனை முதல் - இடை - நிறைவு என்னும் மூன்று நிலை களிலும் உற்ற பெறலரும் உதவுநராக இருந்து முற்றுவித்ததுடன், தமிழ் உலகப் பயன்பாட்டுக்கும் வழியமைத்துத் தந்த `கலங்கரை விளக்கம் செம்மொழிச் செம்மல் முனைவர் திருத்தகு க. இராமசாமி அவர்களே ஆவர். ஆதலால், அவர்களை நெஞ்சாரப் போற்றுவது என் தலைக்கடனாம்! திருவள்ளுவர் தவச்சாலை நிறுவன வழியே இப்பணி செய்ய வாய்த்த அளவில் சொற்றிரட்டியும் மெய்ப்புப் பார்த்தும உதவிய பெருந்தகு கேண்மையும் உழுவலன்பும் உடைய முனைவர் பெருந்தகை கு. திருமாறனார் அவர்களுக்கும் எம் எழுத்துப்பணியைத் தம் பணியாக் கொண்டு தொடர்ந்து செய்துவரும் தொய்விலாத் தொண்டர் மெய்ப்புப் பார்த்தலில் வல்லார் முனைவர் பி. தமிழகனார் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். என் எழுத்தைப் படியெடுத்தும், கொங்கு வட்டார வழக்குச் சொற்களைத் தொகுத்தும் உதவிய புலவர் கலைமணியார் அவர்களுக்கும், இப்பணியில் இல்லை எனினும் உழுவ லன்பாலும் உரிமைப் பேற்றாலும் என் எழுத்துகளைப் படியெடுத்து உதவிய திருக்குறள் செம்மல் பெரும்புலவர் மு. படிக்கராமு அவர்களுக்கும் பெருநன்றியும் வாழ்த்தும் உடையேன். இத்தொகை அனைத்தையும் கணினிப்படுத்தியும், மெய்ப்புப் பார்த்தும், வரவு செலவு கணக்கைத் தக்க வகைத் தணிக்கைக்கு உரியவையாகச் செய்தும், பணிநிறைவை ஒப்படைத்தும் பெருநன்றாற்றிய கவனகச் செம்மல் முனைவர் கலை. செழியனார் அருந்தொண்டைப் பாராட்டி நன்றி பெரிதுடையேன். பணி நிறைவுப்பயன், தமிழ் கூறு நல்லுலகப் பயன்பாடு ஆதல் வேண்டும் என்பது தானே! இல்லாக்கால் செய்த பணியால் ஆவதென்ன? செய்யாமை ஒப்பது தானே! அவ்வாறு ஆகாமல் தாய்த்தமிழக ஆர்வலர்களுடன், அயலகத் தமிழ்ப் பெருமக்களாக விளங்கினும் தாய்த்தமிழக ஆர்வலர்களிலும் மேம்பட்ட ஆர்வலர்களாகக் குவையத்து, அமெரிக்கா, கனடா, மலையகம், சிங்கபுரி, ஈழம் முதலாக வாழ்வார் ஆர்வத் தளிர்ப்பும் தூண்டலும் முன்னிற்கும் பேறு வியப்புக்கும் பெருநன்றிக்கும் உரியதாம்; இப்பெருமக்கள் அனைவர் உள்ளமும் ஓருருவாக வாய்த்து, கருவி நூற்பணியைத் தொகை தொகையாக வகைப்படுத்தி வான் பெருந்தொண்டாகச் செய்தலே எம் பிறவிக் கடன் எனக் கொண்ட தமிழ்ப் போராளி திருமிகு கோ. இளவழகனார் வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயற்கரிய செய்வார் பெரியர் என்பதை நிலைநாட்டியதைப் போற்றுவதன்றி என் சொல்வேன்? களஞ்சியம் கணினிப்படுத்திய அளவில் நிறைவுறுமா? பத்துத் தொகுதிகளையும் ஒருமுறைக்கு மும்முறையாய் முழுதுற மெய்ப்புப் பார்த்தல், எளிமைப் பாடா? கண்புரை வளர்ந்தாலும் இடைத்தடை நேர்ந்தாலும் இத்தொண்டு தமிழன்னை தளிர்க்கும் தொண்டு என்று இமைப் பொழுதும் சோராது கடனாற்றிய கடப்பாட்டாளர் மெய்ப்புச்செம்மல் முனைவர் பி. தமிழகனார்க்குப் பெருங்கடப்பாடு உடையேன்; பதிப்புச் சுமையை ஏற்றமை என் சுமை ஏற்றமையாம்! வாழிய நலனே! வாழிய நலனே! இரா. இளங்குமரன் தமிழ்க் களஞ்சியம் மொழியின் வளம், அம்மொழியைப் பேசுவோர் பயன்படுத்தும் சொற்களாலும், அம் மொழியில் உள்ள இலக்கண, இலக்கிய வகைகளாலும் அறியப்படும். தமிழின் வளம் இலக்கியங்களிலும் மக்கள் வழக்குகளிலும் நிறைந்துள்ளது. சொற்களின் வளமும், பெருக்கமும் மொழியின் சிறப்பைக் காட்டும். சொற்களின் பெருக்கைக் காட்ட எத்தனையோ நிகண்டுகளும், அகராதிகளும், களஞ்சியங்களும் தமிழில் வந்துள்ளன. இவற்றுள் பல பிறமொழிச் சொற்களையும் தமிழ்ச் சொற்களாய்க் கருதிப் பொருள் தந்துள்ளன. பிற மொழிகளில் ஏறிய தமிழ்ச் சொற்களும் வேற்றாடை உடுத்தியுள்ளன. அவற்றை அறிந்து தமிழெனக் காட்ட, மொழி உணர்வும், இலக்கிய இலக்கணப் புலமையும், தமிழ் முழுதறி தகுதியும், மக்கள் வழக்குகளை வழங்கும் சூழலில் கேட்டறிதலும், சொற் பொருளாய்வும், சொல்லியல் நெறிமுறைகளும், வேர்ச் சொல்லாய்வும், கூர் மதியும் நிறைந்திருக்க வேண்டும். இத்தமிழ்ச் சொற் களஞ்சியம் சொற்களின் பொருளை மட்டுமா தருகின்றன? சொற்களின் வேரும், அதன் விரிவும், அவற்றின் விளக்கமும், சான்றுகளும், மக்களின் பொது வழக்கும், வட்டார வழக்கும், யாழ்ப்பாணத் தமிழ் வழக்கும் செறிந்துள்ள தமிழ்க் களஞ்சியமாம். ஒரு வினைச் சொற்கள் தொகை தொகையாகிய தொகை இக்களஞ்சியம். `அடித்தல் சொல்லடியாக 145 சொற்கள் உண்ணல் வகைகள், ஊர்ப் பெயர் ஈறுகள் (504) நோய் வகைகள் (229), நோய் வினைகள் (216), மதில் பொறி வகைகள் (28) மலை வகைகள் (25) முதலிய எத்தனையோ வகைகளும் தொகைகளும் அடங்கியுள்ளன. இவற்றின் தொகுப்பு கற்பாரை வியக்க வைக்கும்! இக் களஞ்சியத் தொகுதிகளுள் நூற்றுக்கணக்கில் மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள், அவற்றின் விளக்கங்கள் அடங்கியுள்ளன. சொற்கள் விளக்கத்திற்கு அன்றாடச் செய்திகளும் (செய்தித்தாள்கள்) சான்றாகின்றன. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்பர். ஆனால், பற்பல நூறுவகைகள் உள்ளமையை இக்களஞ்சியம் காட்டும். மேனாட்டு உடைகளை மாட்டியதால் தமிழர் மேனாட்டார் ஆகாரன்றோ? பஜ்ஜி ஏதோ பிறமொழி என்றே மயங்கி நிற்பர். அது பச்சைக் காய்கறிகளால் செய்யப்படுவது. தேவநேயப் பாவாணர் உடன் பழகியமையாலும், அவர் நூல்களைத் தோய்ந்து தோய்ந்து கற்றமையாலும், அவரே பாராட்டியமையாலும் ஐயா, பல சொற்களுக்கு வேர்ச்சொல் வழி மூலமும் கிளையும் காட்டியுள்ளார். புழுதி, பூழ்தி, பூதி. பல சொற்களின் பொருள் வேறுபாடுகளும் காட்டப்பட்டுள்ளன: விரைப்பு- விரைப்பு; விறைப்பு - தொய்வின்மை; இக்களஞ்சியம் தவசங்களாம் சொற்கள் கொட்டப்பட்டு நிறைந்துள்ளது. படிப்பார் தத்தமக்குத் தேவையான தவசங்களை அள்ளி அள்ளிப் பயன் கொள்ளலாம். எவ்வளவு அள்ளினும் என்றும் குறையாது இக்களஞ்சியம். தமிழரின், மொழி, இன, இலக்கிய, இலக்கணம் ஆகியவற்றின் வரலாறு, பண்பாடு, நாகரிகங்களின் அடங்கல்களைப் படை படையாகத் திரட்டித் தொகுத்து வெளியிடும் தமிழ்மண் பதிப்பகம் தமிழ்நூல் பதிப்பு வரலாற்றில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஐயா முதுமுனைவர், இளமை முதல் தொகுத்த சொற்களஞ்சியங்களைச் சேர்த்துச் சேர்மானமாக்கித் திரட்டித் தந்துள்ளார்கள். தமிழர்களே! இங்கே வம்மின்! களஞ்சியம் கொண்மின்!! தமிழை வளர்மின்!!! பி. தமிழகன். அணிந்துரை செந்தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் என்னும் இந்நூல் இன்று நம்மிடையே வாழும் தொல்காப்பியராக விளங்கும் மூத்த தமிழறிஞர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஏறத்தாழ 8000 தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கும் இந்நூல் தோராயமாக 3254 பக்கங்களில் பத்துத் தொகுதிகளாக வெளிவந்து தன்னேரிலாத தமிழ் மொழிக்குத் தனிப்பெருமை சேர்க்கும் முன்னோடிப் பணியாக அமைந்துள்ளது. அகரமுதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச்சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் போன்றவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க தாகும். இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. அகரத்தில் தொடங்கும் சொற்களுக் கான பொருள் விளக்கங்கள் மட்டுமே 276 பக்கங்களில் முதல் தொகுதியாகவும் தனித் தொகுதியாகவும் அமைந்திருப்பது நூலின் செறிவையும் விரிவையும் பறை சாற்றுவதாக அமைந் துள்ளது. அயன் மொழிச் சொற்கள் அறவே தவிர்க்கப் பட்டிருப்பது நூலின் தனிச்சிறப்பாகும். சொற்பொருட் களஞ்சியப் பணியை நிறைவேற்றும் வகையில் நூலாசிரியருக்குத் தூண்டுதலாக அமைந்தது ஒல்காப் புகழ் தொல்காப்பியமே. குறிப்பாக, எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே (தொல். 640) என்னும் நூற்பா. இந் நூற்பாவினை மூல முழக்கமாகக் கொண்டது தமிழ்மொழி என்பதை விளக்கும் பொருட்டே இக்களஞ்சியம் உருவாக்கப் பட்டதென நூலாசியிர் குறிப்பிட்டுள்ளார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் காட்டியவாறு ஆணிவேர், பக்கவேர், சல்லிவேர் எனக் காணாமல் வெளிப்படையாக அறியக்கூடிய சொற்களுக்கு மட்டுமே அமைதியும் திரிபும் பொருள் விளக்கமும் காட்டுவது இக்களஞ்சியம் என்பதும் நூலாசிரியர் கூற்றாகும். பொருள் விளக்கங்களினூடே கீழ்க்காணும் தொல்காப்பிய நூற்பாக்களின் பயன்பாட்டினையும் உணரலாம். பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும் சொல்லின் ஆகும் என்மனார் புலவர். (தொல். 641) தெரிபுவேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும் இருபாற் றென்ப பொருண்மை நிலையே. (தொல். 642) பொருட்குப் பொருள்தெரியின் அதுவரம் பின்றே. (தொல். 874) பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின் (தொல். 875) மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா. (தொல். 877) ஒரு பொருள் பல சொற்கள் மிகவும் நுட்பமாய் ஆராயப் பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. `அழகு பொருண்மையைக் குறிக்கும் 67 தனித்தமிழ்ச் சொற்களை அடையாளங்கண்டு அவற்றிற்கு நுட்பமான விளக்கங்களைத் தந்திருப்பது ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் வளமான பட்டறிவிற்கும் சான்றாக விளங்குகிறது. பெருமதிப்பிற்குரிய ஐயா இளங்குமரானாரின் நெடுங்கால அவா இந்நூல் வெளியீட்டின் வழி நிறைவேறியுள்ளமை மகிழ்வளிக்கிறது. இது காலத்தை வென்றுநிற்கும் நிலைத்த பணி. தமிழ் ஆய்வாளர்களுக்குக் கிட்டியுள்ள தலைசிறந்த நோக்கீட்டு நூல். உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் இந்நூலினை வரவேற்றுப் போற்றுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. களஞ்சியப் பணி ஒரு தொடர் பணி. இப்பத்துத் தொகுதிகளை அடித்தளமாகக் கொண்டு தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொகுதிகள் வெளிவந்து தமிழிற்கு வளம்சேர்க்க வேண்டும் என்பது என் அவா. தனித்தமிழ்ப் பற்றாளராகவும் அரிய தமிழ் நூல்களின் பதிப்புச் செம்மலாகவும் விளங்கும் தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் திரு. கோ. இளவழகனார் இக்களஞ்சியத்தை அருமுயற்சியுடன் சிறப்புற வெளிக்கொணர்ந்திருப்பது பாராட்டிற்குரியதாகும். முனைவர் க. இராமசாமி முன்னாள் பேராசிரியர் - துணை இயக்குநர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை நுழைவுரை தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் புதைந்து கிடக்கும் அறிவுச் செல்வங்களைத் தனக்கே உரிய நடையில் இருந்து தமிழின் ஆழ அகலங்களை அகழ்ந்து காட்டும் அய்யா இளங்குமரனாரின் நினைவாற்றலை நினைந்து நினைந்து மகிழ்பவன். அவர் அருகில் இருக்கவும், அவருடன் உரையாடவும், வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன். மொழிஞாயிறு பாவாணர், செந்தமிழ் அறிஞர் இலக்குவனார், மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் முதலான பெருமக்களை எட்டி இருந்து பார்த்தவன். அவர்களின் அறிவு நலன்களைக் படித்துச் சுவைத்தவன். இப் பெருமக்களின் மொத்த உருவமாக அய்யா இளங்குமரனாரைப் பார்த்து நெஞ்சம் நெகிழ்பவன். அய்யா அவர்களின் அறிவுச் செல்வங்களைக் கடந்த காலத்தில் பேரளவில் எம் பதிப்பகம் வெளியிட்டு அவரின் உழைப்பை தமிழ் கூறும் உலகுக்கு அளித்ததில் நிறைவு அடைகிறேன். இன்று உங்கள் கைகளில் தவழும் செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் எனும் இவ்வருந்தமிழ்த் தொகுப்பை உருவாக்குவதற்கு எவ்வளவு காலம் உழைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். வியந்து போகிறேன். இச்செந்தமிழ்த் தொகுப்பு தமிழ் அகராதி வரலாற்றில் தமிழுக்குப் புது வரவாகும். இதுவரை யாரும் செய்ய முன்வராத பெரும்பணி யாகும். அய்யாவின் இலக்கிய, இலக்கண பெரும்பரப்பைத் தாங்கிவரும் இப்பொற் குவியலை உலகத் தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பாவாணர் போல் வேர்காட்டி, வளம் கொடுக்கும் சொற்கடலாய் வாழும் அய்யாவின் பேருழைப்பால் விழைந்த இலக்கிய இலக்கணக் களஞ்சியத்தை வெளியிடுவதன் மூலம் என்னையே நான் பெருமைப் படுத்திக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். அய்யாவின் 75ஆம் (30.01.2005) அகவை நிறைவைத் திருச்சித் திருநகரில் தமிழர் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வில் புலமைக்குத் தலைவணக்கம் எனும் நிறைவுமலரினைத் தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்டு மகிழ்ந்தது. அந்த மலரில் மலேசியப் பாவரசு சு.ஐ.உலகநாதன் எழுதிய பாடலினைக் கீழே சுட்டியுள்ளேன். வாய்த்திருக்கும் அகவையெலாம் வரலாறு படைக்கின்றார் வையகமே வந்து போற்று நம் முன் சான்றாக வாழும் `ஐயா அவர்களால் உருவாக்கப்பட்ட இக்களஞ்சியத்தை தமிழ் உலகுக்கு வழங்குவதில் பெருமையும், பூரிப்பும் அடைகிறேன். கோ. இளவழகன் ஆசிரியர் விவரம் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பிறப்பு : 30. 1. 1930 பெற்றோர் : இராமு - வாழவந்தம்மை (உழவர்குடி) ஊர் : சங்கரன்கோவில் வட்டம், வாழவந்தாள்புரம் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூரில் நடுநிலைக் கல்வி - பாவாணர் பயின்ற முறம்பு பள்ளி வித்துவான் - தமிழ்த் தேர்வு - தனித் தேர்வர் ஆசிரியர் பணி : தொடக்கப் பள்ளி - 16ஆம் அகவையில் தொடக்கம் உயர்நிலைப் பள்ளி - தமிழாசிரியப்பணி ஆய்வுப்பணி : பாவாணருடன் - செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் - கலைச் சொல் விளக்கம் தொகுப்புப் பணி, தமிழக வட்டார வழக்குச் சொல் தொகுப்புப் பணி. தமிழ்ப்பணி : கட்டுரை, கவிதை, கதை, நாடகம், காப்பியம், இலக்கண - இலக்கிய உரை - தமிழ்ச் சொல்லாய்வு - பழந்தமிழ்நூல் பதிப்புகள் - தனிமனித - இலக்கண - இயக்க, இசை, வரலாறு. தமிழ்ச் சொற்பொருள் களஞ்சியம் - நாடகம். குழந்தைப் பாடல்கள் - ஆய்வுப் பொழிவு - தொகுப்பு நூல்கள் நாளொன்றுக்கு 18 மணிநேர எழுத்துப் பணி திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி இயக்குதல். செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் ... நூல்கள் : சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், மணிவாசகர் பதிப்பகம், ஈரோடு குறளாயம், திருவள்ளுவர் தவச்சாலை, தமிழ்மண் பதிப்பகம் வழி 420க்கும் மேல் வெளிநாட்டு பயணம் : தமிழீழம், சிங்கப்பூர், மலேயா, அமெரிக்கா முதலிய நாடுகளில் தமிழ் அமைப்புகளில் பொழிவுகள். திருமணம் நிகழ்த்துதல் : தமிழகம், சிங்கப்பூர், மலேயாவில் 4000க்கும் மேற்பட்ட தமிழ்நெறித் திருமணங்கள் நிகழ்த்துநர். இயக்கப்பணி : தமிழகத் தமிழாசிரியர் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், திருக்குறள் பேரவை, ஈரோடு குறளாயம், தமிழ்ச்சான்றோர் பேரவை விருது : இலக்கியச் செம்மல், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் முதலியன. பதிப்பாசிரியர் விவரம் முனைவர் பி. தமிழகன் பிறப்பு : 5. 10. 1946 பெற்றோர் : பிச்சை - மீனாட்சி (வேளாண்குடி) ஊர் : இலால்குடி வட்டம், குமுளூர் கல்வி : தொடக்கக் கல்வி - உள்ளூர் நடுநிலைக் கல்வி - இருங்கலூர் உயர்நிலைக் கல்வி - பூவாளூர் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளி புலவர் - கரந்தைப் புலவர் கல்லூரி, தஞ்சாவூர் தமிழியல் இலக்கிய இளைஞர், முதுகலை, கல்வியியல் முதுகலை, தனித் தேர்வர் ஆய்வு : தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், சங்க இலக்கியத்தில் மரபியல் சொற்கள் ஆசிரியர்கள் : முதுபெரும்புலவர் அடிகளாசிரியர், பாவலரேறு பாலசுந்தரனார் ஈடுபாடு : சங்க இலக்கியம், பத்தி இலக்கியங்கள், தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், நாட்டுப்புறவியல் ஆசிரியப் பணி : திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசுப் பள்ளிகளில் 33 ஆண்டுகள் தமிழாசிரியர், பணி நிறைவுக்குப்பின் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் பேராசிரியர் பணி தொடர்தல். இயக்கப் பணி : தமிழியக்கம், பாவாணர் தமிழியக்கம், திருவள்ளுவர் தவச்சாலை நூல்கள் : தமிழகத் தொல்பொருள் ஆய்வு (வ்ட்பீது கீகுநூழ்ஙூ) வழக்குச் சொல் அகராதி (ர்மயூரூயுகுயிகீஞ்ணூ நிகுபீய்நூக்ஷி) பதிப்புப் பணி : முதுமுனைவர் இரா. இளங்குமரனாரோடு இணைந்து தமிழ்மண் பதிப்பகம் வெளியிட்ட முதுமொழிக் களஞ்சியம், சங்க இலக்கியம். பதிப்பாளர் விவரம் கோ. இளவழகன் பிறந்த நாள் : 3.7.1948 பிறந்த ஊர் : உறந்தைராயன்குடிக்காடு அஞ்சல் உரத்தநாடு வட்டம் - 614 625 தஞ்சாவூர் மாவட்டம். கல்வி : கல்லூரி புகுமுக வகுப்பு இப்போதைய தொழில் : புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களைத் தேடியெடுத்து வெளியிடல் ஆற்றியுள்ள பொதுப்பணிகள் 1965இல் பள்ளி மாணவனாக இருந்தபோதே மொழிப் போராட்டத்தில் முனைப்பாகப் பங்கேற்றுத் தளைப்படுத்தப் பெற்று 48 நாள்கள் சிறையில் இருந்தவர். பிறந்த ஊராகிய உறந்தைராயன்குடிக்காட்டில் `ஊர்நலன் வளர்ச்சிக் கழகம் எனும் சமூக அமைப்பில் இருந்து ஊர் நலப்பணி ஆற்றியவர். உரத்தநாட்டில் `தமிழர் உரிமைக் கழகம் என்னும் அமைப்பையும், பாவாணர் படிப்பகத்தையும் நண்பர்களுடன் இணைந்து நிறுவித் தமிழ்மொழி, தமிழின, தமிழக மேம்பாட்டிற்கு உழைத்தவர். இளம் தலைமுறைக்குத் தமிழ்த் தொண்டாற்றியவர். பேரறிஞர் அண்ணாவின் மதுவிலக்குக் கொள்கையை நெஞ்சில் ஏந்தி உரத்தநாடு மதுவிலக்குக் குழுவின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்து செயலாற்றியவர். 1975-இல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் `உரத்தநாடு திட்டம் என்று பாராட்டப் பெற்ற மதுவிலக்குத் திட்டம் வெற்றி பெற உழைத்தவர். தமிழ்மண் பதிப்பகத்தை நிறுவி புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் நூல்களையும், புதிய படைப்பு இலக்கியங்களையும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்கள் எழுதி வைத்துச் சென்ற தமிழின் அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து முழுமையாகப் பொருள் வழிப் பிரித்து, கால நிரலில் தொடர் தொடராக வெளியிட்டுத் தமிழ்நூல் பதிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர். பொதுநிலை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, மொழிநூல் மூதறிஞர் ஞா. தேவநேயப் பாவாணர், பாவலரேறு பெருஞ் சித்திரனார் ஆகியோரை வழிகாட்டிகளாகக் கொண்டு அவர்தம் கொள்கைகளை நிறைவேற்ற அயராது உழைத்து வருபவர். நூலாக்கத்திற்கு உதவியோர் ஆசிரியர்: முதுமுனைவர் இரா. இளங்குமரன் பதிப்பாசிரியர்: முனைவர் பி. தமிழகன் கணினி மற்றும் நூல்வடிவமைப்பு: திரு. நல்லதம்பி (யாழினி கணினி) திருமதி. கோ. சித்திரா மேலட்டை வடிவமைப்பு: செல்வன் பா. அரி (ஹரிஷ்) திருத்தத்திற்கு உதவியோர்: முனைவர் பி. தமிழகன் நூலாக்கத்திற்கு உதவியோர்: திரு இரா. பரமேசுவரன், திரு தனசேகரன், திரு கு. மருது, திரு வி. மதிமாறன் அச்சாக்கம் - நூல் கட்டமைப்பு: வெங்கடேசுவரா ஆப்செட் பிரிண்டர்சு, ஆயிரம் விளக்கு, சென்னை-14. பொருளடக்கம் 1. நு வரிசைச் சொற்கள் 2 2. நூ 10 3. நெ 26 4. நே 48 5. நை 54 6. நொ 57 7. நோ நெள 66 8. `ப 92 9. பா 251 10. பி 287 11. பீ 316 12. பு 322 13. பூ 349 நு முதல் பூ வரை நு வரிசைச் சொற்கள் நு: நகர உகரம்; மெல்லினம்; உயிர்மெய்க்குறில். நுகம்: நூக்குதல் = தள்ளுதல், செலுத்துதல். நூக்குதற்கு மூலமாக இருப்பது நுகம் என்னும் நுகக்கோல். மக்கள் வழக்கில் நோக்கால் எனவும், வண்டியில் பூட்டப்படும் காளையின் கழுத்தின் மேல் வைப்பதால் மேக்கால் எனவும் வழங்கப்படும். நுகமாம் நுகக்கோல் வண்டியையும் வண்டியில் ஏற்றப்பட்ட பாரத்தையும் குறிப்பதாயிற்று. எழுவர் பூண்ட ஈகைச் செந்நுகம் - சிறுபாண். 113 ஓடுதேர் நுண்நுகம் நுழைத்த மாவே - நற். 58 நுகர்தல்: உண்டி முதலியவற்றால் இன்புறுதலும், நன்னெறிப் படர்ந்து அவாவறுத்துப் பேராப் பெருநிலை பெற்றார் இன்புறுதலும் நுகர்ச்சியாம். இந்நாளில் நுகர்பொருள், நுகர்வோர், நுகர்பொருள் அங்காடி என்பன பெருவழக்கின. தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் (புறம். 214); அம்பிகையோடு நுகர்ந்து களித்தனன் (சிவரக. தேவி மருகயிலை 10) என்பவற்றைக் கருதுக. நுங்குதல்: நுங்கு, நொய், நுறுங்கு போல்வனவற்றை நோண்டி அல்லது சுரண்டித் தின்னுதல். நுறுங்கு குற்றுமித் தவிட்டை நுங்கினான் பசிகள் ஆற என்பது இரட்சணிய யாத்திரிகம். விழுங்குதல் பொருளில் நுங்குதல் வருவதை, பாயும் வெம்புகை நுங்கான் - சேதுபு. சேதுச. 32 இந்தனம்சேர் கானகத்தை நுங்கும் எரிபோல் - பிர. காண். 13:20 என்பவற்றைக் காட்டி நிறுவும் தமிழ்ச்சொல்லகராதி. நுங்கை: நும் + தங்கை = நுங்கை. சேரி யேனே அயலில் லாட்டியேன் நுங்கை யாகுவென் நினக்கென - அகம். 386 பொருள்: யானும் உன்சேரியில் உள்ளேன்; அயல் மனையள்; உனக்குத் தங்கை யாவேன் உரை. நுசுப்பு: நொசி > நுசி > நுசுப்பு = இடுப்பு. நுசுப்பு = நொசிதலை யுடைய மின்னல் போலும் இடை. வாங்குசாய் நுசுப்பு - நெடுநல். 150 பொருள்: வளையும் நுடங்கும் இடை (உரை, நச்.). நுடக்கம்: நுடங்குதல் = அசைதல், வளைதல். நுணங்கு துகில் நுடக்கம் - நற். 15 நுணங்கு துகில் = நுண்ணிய மெல்லிய ஆடை. காற்றின் மெல்லிய அசைவிலும் ஆடலால் ஆடையாம். நுட்பம்: நுண்பு > நுட்பு > நுட்பம். நுண்ணிய தன்மையது நுட்பமாம். அஃகிய நுட்பம் - மலைபடு. 551 மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்னிற் பவை - திருக். 636 அறிவின் சிறப்பில் முதன்மையானது நுட்பமாம். நுண்மாண் நுழைபுலம் - திருக். 407 நுணல்: நுணல் = தவளை. நுண்ணிய கருமணல் போலும் நிறத்தை யுடைமையால் நுணல் எனப்பெயர் பெற்றதாம். தற்காப்பு நிறம் அது. மணல் தவளை என்பதும் அது. பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய்! மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும்தன் வாயால் கெடும் - பழ. 184 நுணா: நுணல் > நுணவு > நுணா = ஒருவகை மரம். மஞ்சணத்தி என்பது மக்கள் வழக்கு. நுணா என்பது இலக்கிய வழக்கு. காயம் ஆற்றுதலில் ஆற்றல் மிக்கது. அதன் இலைபட்டை நன்றாக இடித்து எண்ணெயில் வதக்கிக் கட்டுதல் பெருவழக்கு. இது ஒருகாயாய்த் தோற்றம் தராது, பலகாய்களின் கூட்டுக்காய் இது. பலபூக்கள் இணைந்தமையால் உண்டாகிய இக் காய், நுணல் போலும் (தவளை போலும்) தோற்றம் தருதலால் நுணா எனப்பட்டதாம். கருங்கால் நுணவின் பெருஞ்சினை வான்பூச் செம்மணற் சிறுநெறி கம்மென வரிப்பக் காடுகவின் பெறுக - அகம். 345 நுணவம் என்பதும் இது. கருங்கல் நுணவம் கமழும் - ஐங். 342 நுதல்: நுதல்:1 நுவல் > நுதல். நுவலுதல் = கூறுதல். உத்தி வகையுள் ஒன்று, நுதலிப் புகுதல் என்பது. நுதல்:2 நுதல் = நெற்றி. கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் நல்லவர் நாணுப் பிற - திருக். 1011 ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு - திருக். 1088 நுதி: நுனி > நுதி. பொன்புனை பகழி செப்பங் கொண்மார் உகிர்நுதி புரட்டும் ஓசை - குறுந். 16 உகிர் நுதி = நகத்தின் நுனி. புதுநாண் நுழைப்பாள் நுதிமாண் வள்ளுகிர் - குறுந். 67 நுதிநுனை மிகுகூர்மையாம். நுதிநுனைக் கோடு - கலித். 101 நுந்து: உந்து > நுந்து. தாயின் மடுவில் கன்று முட்டி - உந்தி - நுந்திப் பால் குடித்தலால் அக் கன்று நுந்துகன்று எனப்படும். எப்பொழுதும் தூண்ட வேண்டாமல் எரியும் விளக்கு, நுந்தா விளக்கு எனப்படும். நந்தா விளக்கு, தூண்டா விளக்கு என்பனவும் இது. நுரை: கை வைத்தால் நொரு நொருத்து உடைவதாய் அமைந்தது, நுரை. பால் காய்ச்சினால் நுரை கிளம்பும்; வெள்ளம் பெருகி வந்தால் பால் நுரைப் போர்வை போர்க்கும். பனையின் காயாம் நுங்கு போலவும் நுரை போலவும் காட்சியளித்து நுங்கும் நுரையும் என்னும் இணைச்சொல்லை ஆக்கும். வண்டியில் ஓடியோ, உழவில் கலப்பையை அழுந்தப் பிடித்தோ மாடு வாய்நுரை தள்ளல் காணக் கூடியது. இந் நுரைகள் வெளிப்படு நுரைகள். இவற்றைக் கண்டும் பெயரீடு அறிந்தும் தெளிந்தவன் உடலின் உள்ளுறுப்பாம் நுரையீரலுக்கு இப் பெயரிட்டான். நுரை போல் இருத்தல் இரண்டாக இருத்தல் என்பவற்றால் நுரையீரல் என்றான். ஈரல் = இரண்டாக இருத்தல். * ஈதல் காண்க. நுவ்வை: நும் + அவ்வை = நுவ்வை = நும் அக்கை. தவ்வை என்பதும் இது. தம் + அவ்வை = தவ்வை. நும்மினும் சிறந்தது நுவ்வை யாகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே - நற். 172 அக்கையைத் தம் அவ்வையாகக் கொள்வதும் அண்ணனைத் தம் ஐயனாகக் கொள்வதும் இன்றும் ம.வ. நுழை: நுழை:1 நுழை = நுண்மை. நுண்மாண் நுழைபுலம் - திருக். 407 நுழை:2 நுழை = புகு, ஏவல். நுழை:3 நுழை = வாயில்; நுழைவாயில், தலைவாயில். நுழை:4 நுழை = காற்று நுழையும் பலகணி. வளிநுழையும் வாய்பொருந்தி - பட்டினப். 151 நுழை:5 நுழை = சேறு. நுழைமீன் அருந்தும் - புறம். 391 நுழை:6 நுழை > முழை = குகை. நுளம்பு: நுள் > நுளை = சேறு. சேற்றில் உறைந்து முட்டையிட்டுப் பெருகும் கொசு நுளம்பு என யாழ்ப்பாண வழக்கில் உள்ளமை அறிவியல் பார்வையொடு கூடிய படைப்பு வழக்காகும். நுளையர்: நெய்தல் நிலமாந்தர்; கானல், களர்நிலம் நுளை நிலமாம். ஆங்கு வாழ்வார் நுளையர் நுளைச்சியர் எனப்பட்டனர். நுளையர் விளரி நொடிதரு தீம்பாலை - சிலப். 7:48 நுனிக்கொம்பு: முன் > நுன் > நுனி. கொம்பின் நுனி என்பது நுனிக்கொம்பு என்று முன்பின் மாறி நின்றது. இலக்கணப் போலி. இல் முன் என்பது முன்றில் ஆவது போல. நுனிக்கொம்பர் ஏறினார் - திருக். 476 நுனித்தல்: நுண் > நுன் > நுனி. நுண்ணிதாக (அ) கூரிதாக நோக்கல். நுனித்தகு புலவர் கூறிய நூலே - தொல். 1610 நுணுகி நோக்கல் நுனித்தல் என்க. நுண்மாண் நுழைபுலம் - திருக். 407 நுனை: முன் > முனை > நுனை = நுனிப்பகுதி. நுனை இலங்கு எஃகு - பரிபா. 21 எஃகு = வேல்.  நூ வரிசைச் சொற்கள் நூ: நகர வரிசையின் ஆறாம் எழுத்து; நகர ஊகாரம்; நெட்டெழுத்து. நூ (நூக்கு) என்னும் ஏவல். நூக்குதல் = மேலே எழுப்புதல். வேய் எக்கி நூக்குயர்பு தாக்க - பரிபா. 16 நூ = நூல், எள், எள்ளிளங்காய், அணிகலம் (வெ.வி.பே.). நூக்கி: நூ > நூக்கு > நூக்கி = தூக்கித் தள்ளி. நூக்கி, புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் - நாலடி. 326 நூலகம்: நூல் + அகம் = நூலகம். நூல்களைத் தொகுத்து வைத்துப் படிப்பவர் பயன்பாட்டுக் காக ஏற்படுத்தி வைப்பது நூலகமாகும். ஒவ்வொருவரும் தத்தமக் கெனக் கொண்டிருக்கும் நூலகம் வீட்டு நூலகம் எனப்படும். ஆராய்ச்சியாளர்க்காக மட்டும் பயன்படும் நூல்களை யுடையது ஆய்வு நூலகமாகும். ஆராய்ச்சி நூலகம் என்பதும் அது. பொதுமக்கள் நலம் கருதி அரசு அமைப்பது பொதுநூலக மாகும். பொது நூலகத்திற்கென அமைந்த துறை நூலக ஆணைக் குழுவாகும். நடமாடும் நூலகங்களும், இலவய நூலகங்களும் இதுகால் உள. நூலங்களின் ஒரு பகுதி வாசகசாலையாகவும் உண்டு. நூலகம் சுவடிச்சாலை எனப்படலுண்டு. நூலகம் உலகத்துப் பெருமக்கள் பேரறிஞர்கள் படைத்துப் பிற்கால வழிமுறையர்க் கெனக் கொடுத்துள்ள கொடை வளமாகும். குழந்தைகளுக்கு நூலகம், பாலகம். அறிஞர்களுக்கு நூலகம், காலகம் (பலகணி). முதியவர்களுக்கு நூலகம், மேலகம் (வீடுபேறு). * புத்தகசாலை காண்க. நூலோர்: நூல் ஆய்வாளர்க்குரிய தகவுச் சொல்லாகத் திருவள்ளுவரால் வழங்கப்படும் சொல் நூலோர் என்பதாகும். ஆய்வாளர் நூல் பரப்புகளை யெல்லாம் தொகுத்து ஆய்வாராகலின் நூலோர் தொகுத்தவற்றைக் குறிக்கிறார். இந்நாளில் நூலோர் என்பது நூலியற்றுவாரையும், ஆய்வாரையும் அரிதாகவே குறிக்கின்றது. நூலை அணிவாரைக் குறிப்பது பெருவழக்காயிற்று. அறிவு நூல் ஆடை நூலளவில் வந்த திரிபு நிலை இது. இதனால் நூலே கரகம் என்னும் தொல்காப்பியச் செருகல் நூற்பாவுக்கு முப்புரி நூலைக் குறித்தாரும் உளர் ஆயினர். நூல்: நூல்:1 நுவல் > நூல். பழநாளில் ஆசிரியர் பாடம் சொல்வார்; பாடம் சொல்லுதல் நுவல்தல் எனப்படும். நுவன்றதைக் கேட்கும் மாணவர் மனத்தகத்துப் பதிவு செய்து கொள்வர். நூல் நூலாக மனத்துள் வாங்கிச் சேர்த்துக் கொள்வர். அதனை இளைய மாணவர்களுக்கு நுவல்வர். இப்படி நுவல்தல் வழியாக வந்ததே நூல் என எழுத்துருக் கொண்டது. பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொல் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூலமையு மாறு - நன். 25 என்பது பஞ்சு நூலுக்கும் பயிலும் நூலுக்கும் இரட்டுறலாக அமைந்ததொரு பாடல் (நன். 24). ஆசிரியர் நூலைக் கற்பித்தற்கென்று அமைந்த பா ஆசிரியப்பா எனப்பட்டது. அவ் வாசிரியப்பா நூலுக்குரிய பாவாக இருந்தமையால் நூற்பா எனப்பட்டது. ஆசிரியர் தொல்காப்பியர் பாவகையைக் கூறும்போது நூலினான உரையினான என நூற்பாவையே முன்வைத்தார். அதைப் பின்னோர் சூத்திரம் என்றனர். சூழ்த்திரம் > சூத்திரம் ஆயது. சூழ்தல் = ஆராய்தல். பழநாளில் ஆராய்தல் என்பது சூழ்ச்சி என வழங்கப்பட்டது. சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் என்பது திருக்குறள் (671). எல்லார்க்கும் கல்வி இன்றியமையாதது என்பதால் கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்றார் வள்ளுவர். மக்கள் அனைவருக்கும் கண்கள் இருப்பவை போல அனைவருக்கும் கல்வி வேண்டும் என்பது பழங்காலச் சான்றோர் முடிபு. கல்லார் கண்கள், கண்கள் அல்ல புண்கள் என்றனர். எண்ணொரு கண், எழுத்தொரு கண் என இரண்டையும் வலியுறுத்தினர். முன்னவரைப் போலவே பின்னை ஔவையாரும், எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றும், எண்ணெழுத் திகழேல் என்றும், இளமையில் கல் என்றும் கூறினார். பார்க்கும் கண் இருப்பாரும் படிக்கும் கண் இல்லையானால் நான் கண்ணில்லாதவன் என்று கூறியமை அவர்கள் கல்வியை மதித்த மதிப்பின் அடையாளமாம். அத்தகையர்க்காகவே கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்னும் அதிகாரங்களை இறைமாட்சியை அடுத்தே வைத்தார் திருவள்ளுவர். நம் முன்னை அறிவாளர் அனைவரும் இறவாமல் நம்மோடு இன்றும் உள்ளனர் என்றால், அவர் நூலாகவே உயிர் வாழ்கிறார்; அவர்க்கு அழிவில்லை என்பது மட்டுமன்றி என்றும் அவர்கள் அறிவுக் கொடை வள்ளல்களாக விளங்குகிறார்கள் என்பதே பொருளாம். நூல்:2 நூல் என்பது பஞ்சு நூல், படிப்பு நூல் என்பவை அன்றிப் பல்வேறு பொருள்களில் இடம் பெறலுண்டு. அவற்றுள் ஒன்று நேர் என்பது. மரத்தை அறுப்பதற்கோ, கல்லை உடைப்பதற்கோ, மனையிடம் வகுப்பதற்கோ நூலடிப்பது வழக்கம். நூலின் நேராக்கும் கருத்துப் பொருள் கொண்டு நூல் என்பதற்கு யாழ்ப்பாணத்தார் நேர் என்னும் பொருள் கூறுகின்றனர். சுவர் எழுப்ப உதவுவது குண்டுநூல்; மரம் அறுக்கவும் கல் உடைக்கவும் உதவும் நூல் எற்றுநூல் அல்லது சுண்டு நூல். மங்கலமகள் என்பதன் அடையாளம் கழுத்துநூல் - மஞ்சள்நூல் - தாலிநூல். கம்பன் இறந்த நாள் கலைமகள் நூல் இழந்தநாள் என்பது தனிப்பாடல். நூல் அழகு வகை 1. சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகச் சொல்லல் (சுருங்கச் சொல்லல்). 2. சுருக்கமாகச் சொன்னாலும் பொருள் விளங்குமாறு சொல்லுதல் (விளங்கச் சொல்லல்). 3. கற்பவர்க்குக் கற்கும்தோறும் இனிமை யுண்டாகச் சொல்லுதல் (நவின்றோர்க் கினிமை). 4. பல்காலும் பயிலப் பயில நன்மை பெருகுமாறு நயமிகு சொற்களைச் சொல்லுதல் (நன்மொழி புணர்த்தல்). 5. பயிலுங்கால் செவிக்கு இன்பமாம் இசையமைய இயம்பல் (ஓசையுடைமை). 6. எண்ணும் போதெல்லாம் புதிய புதிய கருத்துகள் அகப்படக் கூறுதல் (ஆழமுடைத்தாதல்). 7. பொருளை வைக்கும் முறைமை ஒன்றன்மேல் ஒன்று படிப்படி வளர்வதாய் முரணில்லாததாய், கொண்டு கூட்டல் முன்பின் இடமாற்றமில்லாததாய் இருத்தல் (முறையின் வைப்பு). 8. சான்றோர்கள் இவ்வாறு இருந்தால் சிறக்கும் எனக் கொள்ளலன்றி இம்முறையே முறையென ஏற்கத் தெளிவாக அமைத்தல் (உலக மலையாமை). 9. கற்பார்க்கே அன்றிக் கேட்பார்க்கும் நிகழ்காலத்திற்கன்றி எதிர்காலத்திற்கும் ஏற்றதாம் என்று போற்றும் சிறப்பொடு செய்தல் (விழுமியது பயத்தல்). 10. சொல்லும் பொருளுக்குரிய எடுத்துக்காட்டை எங்கேயோ போய்த் தேடற்கு இல்லாமல் அங்கங்கே அமைவாக வைத்தல் (விளங்கும் எடுத்துக்காட்டினதாதல் - நன்னூல் 13). மேலும், 1. காலமாற்றம், அறிவியல் ஆக்கவியல் வளம் செறிய இயற்றல். 2. எதிர்கால நலம் கருதி ஏற்பன அமையக் கூறல். 3. மொழித்தூய்மை போற்றல். 4. மொழித்தூய்மை என்பது கற்பார்க்குக் கடுமையானது என்னும் எண்ணம் தோன்றாது செய்தல். 5. அயன்மொழி நூலாக்கல் எனினும் மண்ணின் மணம், மொழியின் செம்மை, நம்மவர் பண்பாடு ஆயன சற்றும் தாழாமல் உயரும் வகையில் செய்தல். 6. மொழிபெயர்ப்பு நூலாயினும் நம்மொழி முதல்நூல் என்ன இயலச் செய்தல். 7. கலைச்சொற்களாக ஆளப்பட்டவற்றைப் பட்டியலிட்டு அதன் மூலச் சொல்லையும் அறியும் வகையில் அடைப்புக் குறிக்குள் காட்டல். 8. இப்பொருளுக்கு உரிய கலைச்சொல் இதுவே எனத் திட்டப்படுத்தி அதையே முழுதுறப் பயன்படுத்துதல். 9. அச்சிட்ட நூல்களில் பிழைகள் வாராமல் முயன்று பல்கால் பார்வையிட்டு - பலர் பார்வையிட்டு - வெளிப்படுத்தல். 10. அச்சுத் திருத்தப் பயிற்சியைப் பாடமாக்கி, அப் பயிற்சியில் தேர்ந்தார் பார்வையின் பின்னரே நூலை வெளியிடுமாறு பதிப்பகங்களுக்கு ஆணையிட்டுக் கட்டாயம் போற்றல். மாற்றம் போற்றல் மொழியின் தூய்மை ஏற்பன ஏற்றல் மண்மணம் கமழல் கடுமை இலாமை நம்மொழி முதலெனல் கலைச்சொல் அடைவு சொல்வரை யறுத்தல் பிழையிலாப் பதிப்பு பதிப்புத் தணிக்கை இன்னவும் பிறவும் முன்னதன் மேற்றே - இ.கு. நூற் குற்றம் குறுதல் = குற்றுதல் இடித்தல். குறையாவதை அகலுமாறு செய்வது குற்ற நீக்கமாகும். அக்குற்ற நீக்கம் நெல்லை இடித்து உமியும் தவிடும் நொய்யும் நொறுங்கும் போகச் செய்தல் போல்வது. வழுக்களைதல் என்பதே குற்ற நீக்கமாம். நூற்குற்ற வகை 1. குன்றக் கூறல் = கூற வேண்டியதைக் கூறாமல் சுருக்குதல். 2. மிகைபடக்கூறல் = கூற வேண்டிய அளவினும் மிகக்கூறுதல். 3. கூறியது கூறல் = சொல்லியதையே தேவையில்லாமல் பல்கால் சொல்லுதல். 4. மாறுகொளக்கூறல் = தாம் சொல்லியதற்கு மாறா யதைத் தாமே கூறுதல். 5. வெற்றெனத் = பொருளாகாத சொற்களையும்தொடுத்தல் கருத்துகளையும் வாளா கூறுதல். 6. மற்றொன்றுவிரித்தல் = சொல்ல வேண்டியதை விடுத்து வேறொன்றை விரிவாகக் கூறுதல். 7. வழூஉச்சொல் = குற்றமமைந்த சொற்களை புணர்த்தல் கலந்து கூறுதல். 8. மயங்க வைத்தல் = பொருள் தெளிவாகா வகை யில் ஐயுறும் வண்ணம் கூறுதல். 9. சென்று = தொடக்க முதல் இறுதிவரை தேய்ந்திறுதல் ஒருசீராம் அளவில்லாமல் செல்லச் செல்லச் சுருக்கிச் சொல்லி முடித்தல். 10. நின்று பயனின்மை = பயன்பட்டு நிலைபெறும் வகை இல்லாமல் சொல்லுதல் (நன்னூல் 12). நூற்குற்றம் என்று நன்னூலார் சொல்வதைத் தொல்காப்பியர் சிதைவு என்பார் (நூற்பா 1608, 1609). மேலும், 1. வேற்றுச் சொல்விரவல்: எடுத்துக் கொண்ட மொழிக்குரிய சொல்லை விடுத்து வேற்றுச் சொல்லைக் கலந்து சொல்லல். 2. வேற்று எழுத்து விரவல்: எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே - தொல். 1 என்னும் நூலோர் ஆணைக்கு மாறாகப் பிற எழுத்துகளைக் கலத்தல். 3. அவையல் கிளவி: அவையில் சொல்லலாகாச் சொல்லையும் வழு, கொச்சை ஆயவற்றையும் கலந்து கூறுதல். 4. மொழிமுதல் வாரா எழுத்துகளை மொழிமுதலாக்கி எழுதுதல். 5. நெட்டெழுத்தேழே. ஓரெழுத்து ஒருமொழி என்பதைக் கொள்ளாமல் விதிமுறை ஆகாத் தனிக்குறிலுக்கும் பொருள் கூறல். 6. விரும்பிய வகையில் எழுத்து வடிவ மாற்றங்களில் தலைப்படல். 7. ஐ, ஔ எழுத்துகளை வேண்டா என விலக்கி அய், அவ் என எழுதத் தொடங்குதல். 8. மூலப் பாடத்தினை மனம் போல் மாற்றி அமைத்தல். 9. கணியம் என்றும் சமயம் என்றும் புதுமை என்றும் மக்கட்பெயர் முதலாம் பெயர்களை மொழியியல் கெடச் சூட்டி நிலைப்படுத்தல். 10. நச்செழுத்தென்றும் அமுத எழுத்தென்றும் பொருத்தம் என்றும் வருணம் என்றும் எழுத்துகளைப் பிரித்துப் பெருமை, சிறுமை சாதிமைப் படுத்தல். தனித்தமி ழாக்கம், வேற்றெழுத் தகற்றல் கொச்சையும் வழுவும் கூடா தகற்றல் மொழிமுதல் ஆகாச் சொல்வரல் அகற்றல் குற்றெழுத் திற்குக் கூறுபொருள் களைதல் வடிவ மாற்றம் வாரா திருத்தல் ஐஔ ஒழித்தலை உன்னா திருத்தல் மூலம் சிதையா முறைமை போற்றல் கணியம் மதமெனத் தமிழியல் கெடாமை உலகங் காட்டி உருக்குலை யாமை என்பன பத்தும் எண்ணிச் செயலே - இ.கு. நூல் கேட்டல் முறை பொழுதொடு செல்லுதல்; ஆசிரியரை வணங்கல்; அவர் இயல்பறிந்து பழகுதல்; அவர் சொற்படி கேட்டல்; இரு என்ற போது இருத்தல்; சொல் என்ற போது சொல்லுதல்; விருப்ப மிக்கவராகப் பாடம் கேட்டல்; செவியே வாயாகவும் நெஞ்சே களஞ்சிய மாகவும் கேட்டவற்றை மறவாமல் கேட்டவாறு சேர்த்துக் கொள்ளுதல்; போ என்னும் போது போதல்; அந்நாள் பாடம் கேட்டல் முறை இவையாகும். மேலும் கேட்ட பாடத்தை நினைத்தலும் தன்னோடு பயிலும் மாணவர் களொடு கலந்து பேசுதலும் வினாவுதலும் அவர்கள் வினாவுக்கு விடை தருதலும் ஆகியவற்றைக் கடமையாகக் கொண்டால் தெளிவும் தேர்ச்சியும் மிகவுண்டாம். (நன். 40, 41). நூலின் இயல்பு நூலின் இயல்பே நுவலின் ஓரிரு பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய் நாற்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி ஐயிரு குற்றமும் அகற்றிஅம் மாட்சியொடு எண்ணான்கு உத்தியின் ஓத்துப் படலம் என்னும் உறுப்பினிற் சூத்திரம் காண்டிகை விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே என்பது நன்னூல் (4). ஓரிரு பாயிரம் = பொதுப்பாயிரம் சிறப்புப் பாயிரம். மும்மையின் ஒன்று = முதல்நூல், வழிநூல், சார்புநூல் என மூன்றில் ஒன்றாதல் (நன். 6). இவற்றுள் முதல்நூல், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும் - நன். 6 வழிநூல், முன்னோர் நூலின் முடிபொருங் கொத்து பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி அழியா மரபினது வழிநூ லாகும் - நன். 7 சார்பு நூல், இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித் திரிபுவே றுடையது புடைநூ லாகும் - நன். 8 வழிநூல் சார்புநூல் ஆகியவற்றில், முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும் போற்றிக் கொள்ளுதல் வழக்கமாகும். ஏனெனில் அவர் கருத்துக்கு மாறாக வேறுநூல் செய்திலோம் என்பதன் அடையாளமாக (நன். 9). நாற்பொருள் என்பவை, அறம், பொருள் இன்பம் வீடு (நன். 10). தொல்பழந் தமிழ்நெறி, அறம் பொருள் காமம் என்னும் முப்பாலாம். திருக்குறளுக்குரிய ஒருபெயர் முப்பால். ஏழுமதம் என்பவை 1. உடன்படல். 2. மறுத்தல். 3. பிறர்மதம் மேற்கொண்டு நீக்கல். 4. தாமே ஒன்றைக் கூறி அதனை நிலைப்படுத்தல். ` 5 .மாறுபட்ட இருவர் கருத்தில் ஒருவர் கருத்தைஏற்றல். 6. பிறர் நூலில் காணும் குறையைக் கூறல். 7. தம் கொள்கையை உணரச் செய்தல். (நன். 11). உத்திவகை 32 உகரம் உயர்மைப் பொருளது. உத்தி திரட்டல் - வரப்பை உயர்த்தல் - வேளாண் தொழில்முறை. 1 .நுதலிப் புகுதல். 2. ஓத்துமுறை வைப்பு. 3. தொகுத்துச் சுட்டல். 4. வகுத்துக் காட்டல். 5. முடித்துக் காட்டல். 6. முடிவிடம் கூறல். 7. தானெடுத்து மொழிதல். 8. பிறன்கோள் கூறல். 9. சொற்பொருள் விரித்தல். 10. தொடர்ச்சொற் புணர்தல். 11. இரட்டுற முடித்தல். 12. ஏதுவின் முடித்தல். 13. ஒப்பின் முடித்தல். 14. மாட்டெறிந்தொழுகல். 15. இறந்தது விலக்கல். 16. எதிரது போற்றல். 17. முன்மொழிந்து கோடல். 18. பின்னது நிறுத்தல். 19. விகற்பத்தின் முடித்தல். 20. உரைத்தும் என்றல். 21. உரைத்தாம் என்றல். 22. ஒருதலை துணிதல். 23. எடுத்துக் காட்டல். 24. எடுத்த மொழியின் எய்த உரைத்தல். 25. இன்னதல்ல திதுவென மொழிதல். 26. எஞ்சிய சொல்லின் எய்தக் கூறல். 27. பிறநூல் முடித்தல் தானுடன்படுதல். 28. தன்குறி வழக்கம் எடுத்துரைத்தல். 29. சொல்லின் முடிவின் அப்பொருள் முடித்தல். 30. ஒன்றின முடித்தல். 31. தன்னினம் முடித்தல். 32. cŒ¤Jzu it¥ò.(e‹. 14). இவ்வுத்திகளைத்தொல்காப்பியம் கூறுமாறு (நூற்பா 1610). உத்தி இலக்கணம் ஓரிலக்கண நூலால் உணர்த்தப்படும் பொருளை நூல் வழக்கோடும் உலக வழக்கோடும் பொருந்த உணர்த்தி அப்பொருளை மற்றோர் இலக்கிய நூற்கண்ணும் ஏற்குமிட மறிந்து இவ்விடத்திற்கு இஃதாமெனக் கருதித் தக்கவகையாகச் செலுத்துதல் உத்தியாகும். (நன். 15). ஓத்து இலக்கணம் ஓரினமாக உள்ளமணிகளை முறையே பதித்தாற் போல ஓரினப் பொருளை ஒருங்குற வைப்பது ஓத்து எனப்படும். (நன். 16). படல இலக்கணம் ஒருவழிப்படாது விரவிய பொருளொடு பொருந்திப் பலபொருள் உணர்த்தும் பொதுச்சொற்கள் ஒரோ வழியின்றித் தொடர்ந்து வரின் படலம் ஆகும். (நன். 17). நூற்பா (அ) சூத்திரம் இலக்கணம் சிறிய கண்ணாடியிற் பெரிய மலை முதலியவற்றின் நிழல் செவ்வையாகச் செறிந்து இனிதாக விளங்கினாற் போலச் செவ்வையாகச் செறிந்து இனிதாக விளங்கச் சிலவகை எழுத்துகளால் இயன்ற யாப்பின்கண் பலவகைப்பட்ட பொருள்களை இனிதாக விளக்கி அப் பலப்பல பொருளும் சிறந்துவரச் செய்வது சூத்திரமாகும். (நன். 18). சூத்திர நிலை 1. ஆற்றொழுக்கு. 2. அரிமா நோக்கு. 3. தவளைப் பாய்த்து. 4. பருந்தின் வீழ்வு. என்பவை போல அமைதல் சூத்திர நிலையாகும். (நன். 19). சூத்திர வகை பிண்டம் எனவும், தொகை எனவும், வகை எனவும், குறி எனவும், செய்கை எனவும், புறனடை எனவும் கூறப்படுவன அவை. (நன். 20). உரை நிலை பாடம், கருத்து, சொல்வகை, சொற்பொருள், தொகுத் துரை, எடுத்துக்காட்டு, வினா, விடை, சிறப்பு, விரிவு, அதிகாரம், துணிவு, பயன், ஆசிரிய உரை என உரை 14 வகையாம். (நன். 21). காண்டிகை உரை கருத்து சொற்பொருள் எடுத்துக்காட்டு வினா விடை என்ப வற்றால் நூற்பொருளை விளக்குவது காண்டிகை உரை. (நன். 22). விருத்தியுரை சூத்திரத்து உட்பொருள் அன்றியும் ஆண்டைக்கு இன்றி யமையா யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறர்நூ லானும் ஐயம் அகல ஐங் காண்டிகை உறுப்பொடு மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி - நன். 23 நூல்பிட்டு: பிள் + து = பிட்டு கொங்கு நாட்டினர் இடியாப்பத்தை நூல்பிட்டு என் கின்றனர். இடியாப்ப மாவு பிழியப்படும் போது, நூல்போல் நிறமும் நீளலும் இருத்தலால் நூல் எனப்பட்டது. பிதிர்வது பிட்டு. குழாய்ப் பிட்டு மாவும் இதுவும் ஒப்புடையவே. நூழில்: பகைவர் படையைக் கொன்று வேலைச் சுழற்றி ஆடுதல் நூழில் எனப்பெறும். கழல் வேந்தர் படை விலங்கி அழல் வேல் திரித் தாட்டமர்ந் தன்று ஆடல் அமர்ந்தான் அமர்வெய்யோன் வீழ்குடர் சூடல் மலைந்த சுழல்கட்பேய் - மீடன் மறந்தவேல் ஞாட்பின் மலைந்தவர் மார்பம் திறந்தவேல் கையில் திரித்து என இதன் இலக்கணமும் இலக்கியமும் கூறும் புறப்பொருள் வெண்பாமாலை (141). நூறு: நூறு:1 ஒரு சங்கைத் தட்டினால் சிறுசிறு சிதறல்களாகும். அச் சிதறல்களுக்கு நூறு என்பது பெயர். அதனைக் கோட்டு நூறு என்பர். கோடு = சங்கு; நூறு = தூள். அந் நூறு, பல என்னும் எண் குறிக்க நின்றது. நூறு (சதகம்):2 கற்றோர் விரும்பும் அகப்பொருள் மேலாவது, புறப் பொருள் மேலாவது நூறு பாடல்கள் பாடுவது நூறு (சதகம்) என்னும் பெயர் பெறும். விழையும் ஒருபொருள் மேலொரு நூறு தழைய உரைத்தல் சதகம் என்ப - இலக். பாட். 87 அகப்பொருள் ஒன்றன்மே லாதல் புறப்பொருள் ஒன்றன்மே லாதல் கற்பித் தொருநூறு செய்யுள் உரைப்பது சதகமா மென்ப - முத்துவீ. 1117 நூறு:3 நொறுக்கித் தின்னல், உடைத்துக் கடித்துத் தின்னல், கறித்தல். கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே ஆகும் வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார் கூறார்தம் வாயிற் சிதைந்து - நாலடி. 156 நூறு நூறு: நூறு நூறு = நூறாண்டு வாழ்க. தும்மல் உண்டானால் அருகில் இருப்பவர் நூறு என்றும், நூறு நூறு என்றும் சொல்வர். நூறாண்டு வாழ்க என்பதே வாழ்த்துப்பொருளாம். நூறாண்டு நூறாண்டு என்பதன் அடுக்கே நூறு நூறு என்பதாம். நூறு பத்து (சதகப் பதிகம்): சதகங்கள் பத்தினை யுடையதும் ஆயிரம் பாடல்களைக் கொண்டதுமாகிய நூல் சதகப்பதிகம். சதகப் பதிகம், தண்டபாணி அடிகள் பாடியுள்ளார். அப் பதிகம், அடிகள் ஒடுக்கமுற்ற திருவாமாத்தூர்க்கு வாய்த்தது. அதிலுள்ள பாடல்கள் வாழ்த்துடன் 1006. நூற்குச்சி: தாளில் எழுத உதவும் கரிக்கோலை (பென்சிலை) பழனி வட்டாரத்தார் நூல் குச்சி என வழங்குகின்றனர். நூல் எழுது தாளைக் குறிப்பதாக உள்ளது. கரிஅல்லது மருந்து ஊடு வைத்துக் குச்சியால் பொதியப்பட்டது. ஆதலால் நூல் குச்சி எனப்படுவதாயிற்று. கற்பலகையில் எழுதும் மாக்குச்சியின் வேறு இஃது. ஆதலின், நூற்குச்சி எனப்பட்டதாம். நூற்றந்தாதி: நூறு வெண்பாவினாலேனும் நூறு கலித்துறையினா லேனும் அந்தாதித்துக் கூறுவது நூற்றந் தாதியாகும். வெண்பா நூற்றினா லேனும் கலித்துறை நூற்றினா லேனும் அந்தாதித் துரைப்பது நூற்றந் தாதியாம் நுவலுங் காலே - முத்துவீ. 1084 * அந்தாதி காண்க.  நெ வரிசைச் சொற்கள் நெ: நகர எகரம்; மெல்லினம்; உயிர்மெய்க் குறில். நெக்கு விடல்: பிளத்தல். கெட்டியாக இருக்கும் பாறையில் வெப்பு மிகலால் வெடிப்பு ஏற்படும். சிலவலிய பாறைகளும் பக்கத்தி லுள்ள மரத்தின்வேர் உட்புகுதலால் வெடிப்பு ஏற்படலுண்டு. நெட்டிரும் பாறைக்கும் நெக்குவிடாப் பாறை மெல்ல மெல்ல வேருக்கும் நெக்கு விடும் என்பது மக்கள் வழக்கு. நெகுதல் > நெகிழ்தல் = பிளத்தல். நெஞ்சறிவுறூஉ: அறிவுறூஉ = அறிவுறுத்துதல். பாடும் புலவர் தம் நெஞ்சுக்கு அறிவுறுத்திக் கூறுமாறு போலக் கூறி, உலகோர் பயனெய்த அருளும் நூல்வகை நெஞ்சறிவுறூஉ ஆகும். வள்ளலார் அருளிய நெஞ்சறிவுறுத்தல் 1406 அடிகளால் ஆகிய கலிவெண்பாவாக இயல்கின்றது. பொன்னார் மலைபோற் பொலிவுற் றசையாமல் எந்நாளும் வாழியநீ என்நெஞ்சே எனத் தொடங்கி, பாழ்வாழ்வு நீங்கப் பதிவாழ்வில் எஞ்ஞான்றும் வாழ்வாயென் னோடு மகிழ்ந்து என நிறைகின்றது. நெஞ்சுக்கு அறிவுறுத்தல் உரையாக, செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனிற் றீயதென்ற தெண்ணிலையே - மல்லல்பெறத் தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க என்றதனைப் பொன்னைப்போற் போற்றிப் புகழ்ந்திலையே - துன்னி அகழ்வாரைத் தாங்கு நிலம்போல வென்னும் திகழ்வாய் மையைநீ தெளிவாய்- 433-435 என்று குறள்மணிகளையும் பிறர்பிறர் கூறும் மணிகளையும் படை படையாக எடுத்துரைத்து நடையிட்டுச் செல்கிறது நெஞ்சறி வுறுத்தல். * செவியறிவுறூஉ காண்க. நெஞ்சு: நெய்ந்து > நெய்ஞ்சு > நெஞ்சு. நெய் போல் உருகும் இயல்பை இயற்கையாகக் கொண்டது நெஞ்சு. உன்நெஞ்சைத் தொட்டுச் சொல் என்பது ம.வ. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டா- உலக. நீதி நெஞ்சம் என்பதும் அது. நெஞ்சகம் என்பதும் அதுவே. நெடில்: குறில் எழுத்தில் நீண்ட எழுத்து நெடில். குறிலுக்கு ஒரு மாத்திரை; நெடிலுக்கு இரண்டு மாத்திரை அளவு. நெடில் அளபெடுத்தால் மூன்று மாத்திரை. குறில் அளபெடுக்க வேண்டின் நெடிலாக மாறி அதன்மேல் அளபெடுக்கும். எ-டு: கெடுப்பதும், கெடுப்பதூஉம் மருவு, மரூஉ நெடில், உயிர்நெடில் உயிர்மெய் நெடில் என இருவகையாம். நெடில், ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என ஏழு. உயிர்நெடில் இவ்வேழு எழுத்துகளும் க முதல் ன ஈறாகிய 18 மெய் எழுத்து களுடனும் சேர உண்டாகும் உயிர்மெய் நெடில் 216 ஆகும். நெடில் ஓரெழுத்து ஒருமொழியாம். குறில் ஓரெழுத்து ஒருமொழி இயல்பாய் அமையாமல் விதிவகையால் அமைந்தவையாம். நொ, து என்பவை (நன். 129). நோ - நொ. தூ - து (அ) துய் > து. அ = 8, உ = 2, எ = 7, க = 1, ரு = 5, ய = 10 என்பவை தமிழ் எண்கள். ந ம சி வ ய என்பது சமயக் கணக்கர் வழி. கு = உலகம். கூ என்பதன் குறுக்கம். ஐம்பூதக் கூட்டால் அமைந்த உலகம் என்பதன் வழியது. நெடுகல்: நெடுகல் என்பது தொடர்ந்து, நாள்தோறும் என்னும் பொருளில் நெல்லை, முகவை வட்டார வழக்காக உள்ளது. நெடுமை (நீளல்) வழிப்பட்டது அது. நெடுகலும் இப்படியே செய்தால் ஒருவேளை இல்லாமல் ஒருவேளை அகப்பட்டுக் கொள்வாய் என்பர். நெடுங்காலன்: ஒட்டகம்; பரிய யானையின் கால்களினும் உடல் மெலிதாய் கால் நெடிதாய் அமைந்தமையால் நெடுங்காலன் எனப்பட்டதாம். அதற்கெதிரிடை குறுங்காலன் (அ) குட்டைக்காலன் = பன்றி ம.வ. நெடுங்குறியெதிர்ப்பு: நெடுநாளாக உதவியர்கள் உதவியை மனங்கொண்டு கொடுத்த அளவைக் குறையாமல் மீளத்தருதல். நெடுங்குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்... .... கொடுமதி மனைகிழ வோயே - புறம். 163 நெடுங்கை: நெடுங்கை = தாராளக்கை. நெடிய கை என்பது நீண்ட கை என்பதைக் குறியாமல் தாராளமாக அள்ளித் தரும் கை; மிகச் செலவு செய்யும் கை என்னும் பொருளில் வரும்போது வழக்குச் சொல்லாம். அவளுக்கு நெடுங்கை, ஒருமாதச் செலவுக்கு இருந்ததை ஒருநாளில் தீர்த்துவிடுவாள், ஆறுநாள் அரைவைச் செலவு அவளுக்கு ஒருநாளுக்குப் போதாது; அவள்கை அவ்வளவு நெடுங்கை, ஒருவர் என்ன இருவருமே நெடுங்கை. குடும்பத்துக்கு எப்படிக் கட்டுபடியாகும்? என்பவை வழங்கு மொழிகள். * நீட்டல், கைந்நீட்டல் காண்க. நெடுஞ்செவியன்: நீண்ட செவியுடையது, கழுதை. யானையின் காது முறம் போல் படிவதால் முறஞ்செவி வாரணம் எனப்படும். கழுதையின் காது நீண்டு நிமிர்ந்து இருப்பதால் நெடுஞ்செவியன் என்பது ம.வ. நெடுஞ்செழியன்: செழுமை யமைந்தவன் செழியன். அவர்களுள் நெடும்புகழ் மிக்கார் நெடுஞ்செழியன் எனப்பட்டனர். ஆரியப்படை கடந்த புகழாளன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். மனச்சான்றால் மாண்டவனும் அம் மாண்பனே. தலையாலங்கானப் போரில் இளம்வயதிலேயே எழுவரை வென்றவன், தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். ஆடவர்க்குரிய அருமைகள் அனைத்தும் அடைந்து சிறந்தவன் நம்பி நெடுஞ்செழியன். தொடியுடைய தோள்மணந்தனன் கடிகாவிற் பூச்சூடினன் தண்கமழும் சாந்து நீவினன் செற்றோரை வழிதபுத்தனன் நட்டோரை உயர்பு கூறினன் வலியரென வழிமொழியலன் மெலியரென மீக்கூறலன் பிறரைத்தான் இரப்பறியலன் இரந்தோர்க்கு மறுப்பறியலன் வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன் வருபடை எதிர்தாங்கினன் பெயர்படை புறங்கண்டனன் கடும்பரிய மாக்கடவினன் நெடும்தெருவில் தேர்வழங்கினன் ஓங்கியல களிறூர்ந்தனன் தீஞ்செறி தசும்பு தொலைச்சினன் பாண்உவப்பப் பசிதீர்த்தனன் மயக்குடைய மொழிவிடுத்தனன்; ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ படுவழிப் படுகஇப் புகழ்வெய்யோன் தலையே - புறம். 239 நெடுஞ்சேரலாதன்: நெடிய புகழமைந்த சேரமன்னன். தென்னங்குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகாண்ட சேரலாதன் இவன். ஐவர் நூற்றுவர் போர்க்கண் இருவர் படைக்கும் இந்நாள் செங்குறுக்கை (செஞ்சிலுவை) அமைப்புப் போல உணவும் மருந்தும் உதவியும் செய்த உயர்ந்தோன் (புறம் 2). இளந்துணை மகாரின் முதியர்ப் பேணிய உதியஞ் சேரலாதன் எனப்பாடு புகழ் பெற்றவன். இமயத்துக் கல் லெடுத்துக் கண்ணகியார்க்குக் கோட்டம் அமைத்த செங் குட்டுவன் தந்தை. கற்கோட்டத்தின் மேலாகக் கண்ணகியார்க்குச் சொற் கோட்டமெடுத்த முத்தமிழ்ப் புலமை முழுதுற அமைந்த இளங் கோவடிகளின் தந்தை. பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்தின் பாடுபெறு புகழோன் - பாடிய புலவன் குமட்டூர் கண்ணனார்க்கு ஐந்நூறு ஊர்களையும் வருவாயின் பகுதியையும் வழங்கியவன் என்று பதிகம் சொல்லும் பண்ணவன். மண்ணிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி இன்னிசை முரசின் உதியஞ் சேரலாதற்கு வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்றமகன் இவன், ஐம்பத்தெட்டாண்டு ஆட்சி நடத்தியவன் இவன் என்பது பதிகச் செய்தி. நெடுஞ்சேண்: நெடுமையும் சேண்மையும் கூடிய இது மிகத் தொலைவுப் பொருள்தரும் மீமிசைச் சொல்லாம். உயர்ந்தோங்கு செல்வத்தான் - சிலப். 1 என்பது போல. சேண்மை, சேய்மையுமாம். எ-டு: சேய்மை விளி. நெடுநகை: நெடுநகை = பெருநகை. குறுமொழி கோட்டி நெடுநகை புக்கு - சிலப். 16:64 குறுமொழிக் கோட்டி = சிறுசொல்லை உடையார். நெடு நகை = மிக்க நகை. இதனை வெடிச்சிரிப்பு என்பார் அடியார்க். நெடுநீர்: நெடு= நெடுமை= காலநீட்டிப்பு. நீர்= நீர்மை= தன்மை. ஒரு செயலைச் செய்தற்குரிய காலத்தில் செய்யாமல் நீட்டிப்பது நெடுநீர் என்பதாம். கெடுதற்குரிய முன்னறிகுறிகளுள் நெடுநீர் என்பதும் ஒன்று என்பதை, நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன் - திருக். 605 என்னும் வள்ளுவம். நான்கன் முன்னிறுத்தியது நெடுநீரேயாம். காலத்தில் செய்யாதது செய்யாததே ஆகும். நெடுநீர் வந்து விட்டால் மறதியும், மடியும் துயிலும் உடன்கைகோத்து வரும் என்னும் எச்சரிப்புமாம். காலத்தில் பெய்யாத மழையும் காலத்தில் செய்யாத செயலும் கேடேயாம். நெடுந்தொகை: தொகை நூல்களின் வரிசையில் ஏழாவதாக நிற்கும் அகநானூற்றின் ஒரு பெயர் நெடுந்தொகையாம். குறுந்தொகை நான்கடி முதல் எட்டடிப் பாடல்களை உடையது. நற்றிணை ஒன்பதடி முதல் பன்னீரடிப் பாடல்களை உடையது. அதன்மேல் 13 முதல் 31 அடிப்பாடல்களைக் கொண்டமை யால் நெடுந்தொகை எனப்பட்டதாம். பாடல் அடியளவால் நெடிய அகப்பாடல் இது. குறுந்தொகை, நெடுந்தொகை, கலித்தொகை என முத்தொகை நூல்களை யுடைமையால் எட்டுத்தொகை எனப் பெயர் வழங்கச் செய்து, பின்னே தொகை நூல்கள் பல உருவாக மூலமாயவற்றுள் ஒன்று நெடுந்தொகை. எ-டு: தனிப்பாடல் தொகை, பெருந்தொகை. நெடுப்பம்: நெடுப்பம் என்பது நீளம் என்னும் பொருளில் நெல்லை மாவட்ட வழக்காக உள்ளது. நிலம் நெடுப்பமாக இருப்பதால் வாய்க்காலும் வரப்புமாகவே போய்விட்டது என்பது வழக்கு. நெடுமொழி: இன்னது செய்யேன் எனின் இன்னவன் ஆவேன் எனத்தன் உயிர்க்கு உயிராக மதிக்கும் கொள்கையை ஊரறிய எடுத்துக் கூறும் வஞ்சினம் நெடுமொழியாம். நெடுமொழியால் கூறியவர் உயிர்ப்பான கொள்கையை உலகமே அறிய வாய்த்தலால் மற்றைமொழி போல் இல்லாமல் நெடுமொழி எனப்பட்டதாம். வஞ்சினம் என்பதும் அதுவாம். இதோ சில நெடுமொழிகள்: அவரை, ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு அவர்ப்புறம் காணேன் ஆயின், சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக; அறனிலை திரியா அன்பின் அவையத்துத் திறனில் ஒருவனை நாட்டி முறைதிரிந்து மெலிகோல் செய்தேன் ஆகுக; மலிபுகழ் வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பின் பொய்யா யாணர் மையற் கோமான் மாவனும் மன்னெயில் ஆந்தையும் அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும் வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும் கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த இன்களி மகிழ்நகை இழுக்கியான் ஒன்றோ மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த தென்புலங் காவலின் ஒரீஇப் பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே - புறம். 71 இதனால், உரைசால் மனைவியையும் அறவோர் அவையத்தையும் புலவர் அவையத்தையும் குடிப்பிறப்பையும் நாட்டையும் எப்படி உயிராகப் போற்றினான் என்பது புலப்படுதல் உறுதியாம். இவன் இத்தகையனாதலால் இவன் இறந்த போது இவன் மனைவி கோப்பெருந்தேவியும் சான்றோர் பலர் தடுத்தும் கேளாமல் புனலும் கனலும் எனக்கு ஒன்றே என எரிமூழ்கினாளாம். இந்நெடுமொழி கூறியவன் ஒல்லையூர் தந்த பூத பாண்டியன். இவ்வாறே பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் சோழன் நலங்கிள்ளி ஆயோர் நெடு மொழிகளும் (72, 73) புறப்பாடலில் பட்டயமாகத் தீட்டப்பட்டுள. மன்மேம் பட்ட மதிக்குடை யோற்குத் தன்மேம் பாடு தானெடுத் துரைத்தன்று தன் மன்னனுக்கு வீரன் ஒருவன் தம் மேம்படு தன்மையைத் தானே எடுத்துச் சொல்லுதல் இது. எ-டு: ஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி வாளொடு வைகுவேன் யானாக - நாளும் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈவப் பிழிமகிழ் உண்பார் பிறர் - பு.வெ.மா. 32 நெடுமொழி வஞ்சி: நெடுமொழி வஞ்சி, போர்த்துறையாம் புறத்துறை சார்ந்தது. வஞ்சினம் என்பதும் இது. அத்துறையை இறைமையோடியைத்துப் பாடியுள்ளார் வள்ளலார். கோவ மென்னுமோர் கொலைப்புலைத் தலைமைக் கொடியனே எனைக் கூடிநீ நின்ற பாவ வன்மையாற் பகையடுத் துயிர்மேற் பிரிவி லாமலே பயனிழந்தனன்காண் சாவ நீயில தேலெனை விடுக சலஞ்செய் வாயெனிற் சதுர்மறை முழக்கம் ஓவி லொற்றியூர்ச் சிவனருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மையென் றுணரே இறையருள் வாளால் வெட்டுதல் உண்மை எனச் சுட்டுகிறார். புறத்துறை வஞ்சிக்கும் இதற்கும் வேற்றுமை இது செய்யாக்கால் இன்னன் ஆவேன் என்று அமைவது புறத்துறை. இதில், இன்னது செய்வேன் என்னும் அளவே யுள்ளது. காமம், கோவம், உலோவம், மோகம், மதம், ஆணவம் என்னும் அறுகுணக் கேடுகளையே பகையாய்ச் சுட்டி, அவற்றை வெட்டியழிப்பதாம் உண்மையுடன் முழுப்பதிகமும் அமைந்துள்ளது. நெடுவாலி: உடும்பு என்னும் ஊரும் உயிரியை நெடுவாலி என்பது குமரி வட்டார வழக்கு. உடும்பின் வால் நீளமும் வலிமையும் கருதிய பெயர் அது. உடு என்பது வளைவு. வாலை எடுத்து உடும்பின் வாயில் தந்துவிட்டால் சக்கரம் போலக் கிடக்கும். வாயில் இருந்து வாலையும் எடாது. ஐந்தாறு உடும்புகளைக் கோலில் போட்டு, தோளில் கொண்டு வருவர். உடும்புப் பிடி தன்வாய் அயல்வாய் என்பதும் தெரியாத படி என்பது வியப்பாம். உடும்பியம் என்பதோர் ஊர்ப்பெயர். நெட்டிடை: நெடு > நெட்டு > நெட்டிடை. நெட்டிடை (வெளி) = நெடிய இடை(வெளி). நெட்டிடை (வழி) = நெடிய இடை(வழி). நெட்டிடை = நெடியஇடை வெளிப்பட்ட காலம். நெட்டித்தள்ளல்: கையால் தள்ளல், காலால் உதைத்துத் தள்ளல் என்பவை போல் நெட்டித் தள்ளல் என்பதொன்றுண்டு. அது கழுத்தைப் பிடித்துத் தள்ளல் என்பதாம். கையால் தள்ளல் வகையுள் ஒன்று அது. நெட்டித் தள்ளினான்; எதிர்பாராமல் தள்ளியதால் குப்புற விழுந்துவிட்டான் என்பது ம.வ. நெட்டிமையார்: இயல்பாக இருக்க வேண்டும் அளவினும் மிக்க கண்ணிமையை உடையவர் நெட்டிமையார் எனப்பட்டார். அன்றி உரிய பொழுது இமைக்காமல் நெடும் பொழுதுக் கொரு முறை இமைப்பவராகவும் - பார்ப்பவராகவும் - இருந்திருக்கலாம். அப் பார்வையைக் குத்திட்டு நிற்கும் பார்வை என்பது ம.வ. இவர், சங்கச் சான்றோருள் ஒருவர். நெட்டியைப் பிடித்தல்: நெட்டியைப் பிடித்தல் = ஏவுதல், கடினமான வேலை. நெட்டியாவது பிடர். குப்புற வீழ்த்த நினைவார், பிடரைப் பிடித்துத் தள்ளுவர். அவ்வழக்கம் பிடர் பிடித்துத் தள்ளாமலே, ஒருவர் செயலைச் செய்யுமாறு ஏவுதற்கு வந்தது. வலுக் கட்டாயமாக ஒன்றைச் செய்ய ஏவுதலே நெட்டியைப் பிடித்தலாகச் சொல்லப்படும். இனித் தாங்க இயலாச் சுமையைத் தலையில் வைத்துச் சுமப்பவர் தம் கழுத்தைப் பிடித்துவிடுவது வழக்கு. அதுபோல் கடினமாகப் பிடிக்கிறது என்றும், நெட்டியைப் பிதுக்குகிறது என்றும் கூறுவது உண்டு. நெட்டிலிங்கம்: இலங்கம் > இலிங்கம். நெடிய இலிங்கம் போன்ற தோற்றம் உடைய இம்மரம் பார்வை மரமாக உள்ளது. ஆனால் மருத்துவப்பயன் மிக்கது. குளிர்ச்சி மிக்க இதன்பட்டைச் சாறு வெப்பு அகற்றும். வயிற்றுப் போக்கை நிறுத்தும் என்பது மருத்துவச் செய்தி. நெட்டு: நெட்டு என்பது நீளம். நெட்டை மரம் என்பார் பாரதியார். நெடிய கழுத்தை நெட்டை என்பது விளவங்கோடு வட்டார வழக்கு. நீண்டு இழுத்துக் கயிறாக்க உதவும் தேங்காய் நாரை நெட்டு என்பது தென்காசி வட்டார வழக்கு. நெட்டு என்பது வாழைப்பழத்தோல் என்னும் பொருளில் நெல்லை வட்டார வழக்குள்ளது. அது வழுக்கிவிட்டு நீளச் செய்தல் பற்றியதாம். அன்றியும் தோலுள் நாரும் நெடியதாம். நெய்: நெய் = உருக்கி எடுக்கப்பட்டது. வெண்ணெய் உருக்கு நெய். எள்ளை ஆட்டி எடுத்தது எள்நெய்யாம் எண்ணெய். அது பொதுப்பெயர் ஆகியமையால் நல்லெண்ணெய் எனப்பட்டது. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் முத்துக் கொட்டை எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய், வேப்பெண் ணெய், பனை எண்ணெய், புன்னை எண்ணெய், தவிட்டெண்ணெய் எனப்பல வகை எண்ணெய்கள் ஆயின. கல்லெண்ணெய், மண் ணெண்ணெய் என்பவை அறிவியல் கணிம வரவு. எண்ணெய் என்னும் சிறப்புப் பெயர், பொதுப்பெயர் ஆகியவகை இது. நெய்தல்: நெய்தல்:1 நெய்தல் = கடலும் கடல்சார் இடமும். நெய்தல்:2 திணை. வெண்ணெய் வெப்புப்பட்ட அளவில் உருகி நீராக ஓடல் போல், பிரிவால் உண்டாகிய அக வெப்பால் முன்னிராப் போதில் பிரிந்தாரை எண்ணிக் கண்ணீர் வார நிற்றல் நெய்தலாம். நெய்தல், கண்போல் பூக்கும் மலர்; கடற்கானல் நீர்த்துளியால் நனைந்து சொட்டுவது. இரங்கலை எடுத்துக்காட்டும் இயற்கையது. இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல் என்பது அகம் (170). நெய்தல், கண்போல் பூத்தமை கண்டு என்பது நற்றிணை (138). அவள் பிரிவுத் துயரை, வழியும் கண்ணீரால் பொழியும் முகிலுக்கு நீர்தர அழைக்கும் அழைப்பை நல்லந்துவனார் நெய்தல் கலியில் எழிலுற வடிக்கிறார். என்னைப் பிரிந்து என் தொடி நெகிழப் பிரிந்த தலைவன் போகிய கானம் சுடு நெருப்பனையது. அந்நெருப்பழலில் நைந்து துயருறாமல் முகிலே பாய்ந்தோடி வருவாயாக! நீ வறந்து கிடந்து என்னதான் செய்கின்றாய்! என் கண் வற்றாக் கடலாய்க் கண்ணீர் பொழிகின்றது; அதனை வாரிக் கொண்டு முழக்கமிட்டு அவர் சென்ற கானலில் பொழிய மாட்டாயா? என்கிறாள். தன் பிரிவுக் கவலையினும், பிரிந்து சென்றான் துயிரின்றிச் செல்லத் தன் கண்ணீரை மழையாகத் தெளித்து மகிழ்விக்கக் கருதும் உள்ளம் எத்தகைய பேருள்ளம்! இதுவல்லவோ நெய்யாக உருகி, நெய்ச்சுவையாக மாறி நலங்கொழிப்பது! நெய்தல் கலி, தாழ்பு, துறந்து தொடிநெகிழ்த்தான் போகிய கானம் வறந்தென்னை செய்தியோ வானம் சிறந்தவென் கண்ணீர்க் கடலால் கனைதுளி வீசாயோ கொண்மூக் குழீஇ முகந்து என்று கூறுகிறது (28). இரங்கிய போக்கு ஏர் நெய்தல் நெய்தல்:3 நெய்தல் தொழில், நெசவு. பஞ்சை இழையிழையாக இழைத்தல் வழியால் கண்ணீர் வழிதலென ஆக்கலால், நெய்தலாயது. பஞ்சுபடும் பாடு பன்னிரு பாடு நெய்தலாம். நெய்தல்:4 நெய்தல் கொடி. நிலப்பெயர், திணைப்பெயர் மூலமானது. பூத்த நெய்தல் என்பது பதிற்றுப்பத்து (13). இனி மக்கள் வழக்கில் குழந்தைகள் அழுதால் ஏன் நை, நை என்று சிணுங்குகிறாய் என்பதும், புலமையர் வழக்கில் இனைதல் என்பதும் நெய்தல் சார்ந்த வழக்குகளாம். நெய்த்தோர்: நெய்யொழுக்கு ஒழுகுவது போன்றது, நெய்த்தோர். அது குருதி. செம்மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் - நற். 3 வல்லியம் = புலி. நெரிசல்: நிரல் = வரிசை; நிரலே = முறையே; நிரல்நிறை = முறை முறையாக நிறுத்தல். நிரல் > நெரல். இகரம் எகரமாகத் திரிதல். x.neh.: இசைவு > எசைவு; இணைவு > எணைவு. நிரல், நிரலல்லா நிலை அடைதல் நெரிதல் ஆயிற்று. தொண்டை வழியை இறுக்கல் நெரித்தல், சங்கை நெரித்தல் எனப்படும். வரிசை கெட்டு நெருக்குதல் நெரிசல் ஆயிற்று. நெரிசலால் மிதியுண்டும் தள்ளுண்டும் எற்றுண்டும் மூச்சுத்திணறியும் இறந்தோர் எண்ணற்றோர். நிரல் கெடுதல் நெரிசல்; நெருக்கல்; நெருக்கடி என்பனவாம். நெரிப்பு: குழாய் அமைப்புடையவற்றை இறுக்கி அழுத்துதல் - அதன் இயக்கத்தை ஒழித்தல் நெரிப்பு ஆகும். சங்கை நெரித்தல் = கொல்லல். நெருக்கடி: செயல்கள் உணர்வுகள் எழுத்துகள் ஆகிய உரிமைகளை வெளிப்படுத்த இயலாமல் செய்யும் அடக்குமுறைநிலை நெருக்கடியாகும். வறுமைப் பாட்டால் வாழ்வுத் தேவைகளை நிறைவேற்ற வகையில்லாமல் மனம் நைந்து செயலற்றுப் போதலும் நெருக்கடியாம். கடன்நெருக்கடி என்றால் வறுமை நெருக்கடியினும் கொடியது. மானக்கேடும் ஆக்குவது. நெருக்கடி நெருங்கா வகையில் திட்டமிட்டு வாழ்பவர் வாழ்வு, நெருக்கடி நெருங்கா வாழ்வாகச் சிறக்கும். அறத்துக்கு மாறாம் நெருக்கடி சுவர்மேல் அடித்த பந்து மீண்டுவருதல் போல் தமக்கு மீள வந்து நெருக்கடி ஆக்கவே செய்யும். பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் - திருக். 319 நெருக்கம்: நெருக்கம்:1 நெருக்கம் = நட்பு, உறவு. நெருங்கி நெருங்கி அல்லது அடுத்தடுத்து இருப்பதே நெருக்கம். பயிர்கள் நெருக்கம்; களை நெருக்கம் என வழங்குவர். மக்கள் நெருக்கம் மிகுதி; நெரிசல் மிகுதி என மக்களுக்கும் நெருக்க ஆட்சியுண்டு. ஆனால், இந்நெருக்கம் உள்ள நெருக்கம்; உறவு நெருக்கம். ஆதலால் வழக்குச் சொல் வகையைச் சேர்ந்தது. எனக்கு நெருக்கமான உறவு; எனக்கு நெருக்கமான நண்பர் என்பவற்றில் நெருக்கப் பொருள் அறிக. இதே பொருள், எனக்கு நெருக்கமானவர் என்பதிலும் உள்ளதறிக. நெருக்கம்:2 அவன் எனக்குத் தந்த நெருக்கத்தை - நெருக்கடியைச் சொல்லி முடியாது என்பது ம.வ. நெருக்குதல்: நெருக்குதல் = மலநீர் கழித்தல். நெருக்கம் என்பது செறிவுப் பொருளது. எனக்கு நெருக்க மானவர் என்பது உறவினர், நண்பர் என்பதைக் காட்டும் செறிவுப் பொருளே தரும். அடிக்கடி துன்புறுத்துதலும் நெருக்கல் என்றும் நெருக்கடி என்றும் சொல்லப்படும். அவன் செய்யும் நெருக்குதலுக்கு அளவேயில்லை என்பது அதனைக் காட்டும். ஒன்றுக்கு இரண்டுக்கு என்பவை நெருக்குதலாகச் சொல்லப்படுதல் உண்டு. உடனே செய்ய வேண்டிய நெருக் கடிகள்தாமே அவை. நெருஞ்சி: மண்ணை நெருங்கிப் படிந்து படரும் கொடி. நெருங்கிய இலைகளை யுடையது. பூக்கும் போது நெருங்கிய பூக்களை யுடையது. நெருங்கியவர் காலை நெருக்கு நெருக்கெனக் குத்துவது. இந்நெருக்கங்களால் பெற்ற பெயர் நெருஞ்சியாம். நெருஞ்சியின் பூ பொன்னிறமானது. கதிரோனை நோக்கியே சாய்வது. நெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாங்கு - புறம். 155 செங்கதிர் விரும்பும் பைங்கொடி நெருஞ்சில் பொன்புனை மலர் - பெருங். 2:4:14,15 நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில்முள் பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியில் நெருஞ்சில் முள்பாய கிலாவே - திருமந். 1617 என்பது அறநெறி. சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினுள்ளே நில்லென்று சொல்லி நிறுத்திவைத்துப் போனீரே என்பது கையறு நிலை (ம.வ.). நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங் கினிய செய்தநங் காதலர் இன்னா செய்தல் நோமென் நெஞ்சே - குறுந். 202 இனிமைக்கும் இன்னாமைக்கும் இயைந்த காட்சி இது. நெருநல்: நெருங்கி உடன் இருந்து சென்ற நல்ல பொழுது நெருநல். நெருநல் = நேற்று. நென்னல் என்பதும் அது. நெல் போலும் நல்லது என்பதாம். நெற்று > நேற்று = உலர்ந்து போயதுதான். ஆனாலும் உயிருக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. இன்று எப்படி இருக்கும்? தெரியாது. ஏனெனில் இன்றும் பின்னும் வரும் நாள்களில் என்ன நிகழும் என்பது மறைக்கப்பட்டுள்ளது. மறைப்பைக் கடந்து வெளிப்பட்டது அது. அதனால், இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு என ஏங்கச் செய்தாலும் அந்த நிரப்பு நேற்றுக் கொன்று விடவில்லை என்பது வெளிப்படையாயிற்று. இன்று கொல்லுமா கொல்லாதா தெரியாது. தெரியாத ஒன்றினும் தெரிந்த ஒன்று நல்லது அல்லவா? இம்மெய்யியல் உணர்ந்த படைப்பே நெருநல், நென்னல், நேற்று என்னும் சொற்களாம். நெருப்பு: தன்னை நெருங்கியதன் நிலையை மாறச் செய்யும் இயல்பினது நெருப்பு. நெல்: நல் > நெல். உணவு என்பது எது எனின், நிலத்தொடு நீர் என்கிறது புறப்பாடல். நிலம் புலம் என்னும் இணைச்சொல்லில் நிலம் என்பது நன்செய். நிலத்திற்கு அழகு எது எனின், நிலத்துக் கணியென்ப நெல்லும் கரும்பும் என்கிறது கீழ்க்கணக்கு (நான்மணிக். 9). நல்விளைவுகளில் எல்லாம் நல்விளைவு நெல்விளைவு. ஏனெனில் சோறு என்றாலே தமிழ மண்ணில் நெற்சோறே (ம.வ.). இன்று இரவு சோறு ஆக்குவார்கள். சோறுகண்டு நான்கு நாள் ஆயிற்று என்பர். நெல்வகை எண்ணற்ற வகை. ஒரே ஒருநெல் பண்ணை பிடித்தால் ஐம்பது நூறு தூர்களாகும். கதிர் ஒன்றில் நூறு நூற்றைம்பது நெல். ஆதலால் நல்விளைவு நெல்விளைவு ஆயிற்று. கதிரோன் ஒளிக்கற்றை போல் தோற்றம் தரலால் கதிர் எனப்பட்டது. நெற்கதிர்க்கு ஆயது பின்னே மற்றைக் கதிர்களுக்கும் ஆயது. சோளக்கதிர், தினைக்கதிர். ஒருபெண் யானை படுக்கும் சிறிய இடத்தில் விளையும் நெல், ஏழு களிறுகளுக்கு உணவாம் என்பதை, ஒருபிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் என்றது புறம் (40). மணி பிடித்தது எதுவோ அதுவே நெல். மணி பிடியாதது பதர். நெல்லையும் சொல்லையும் ஒப்பிட்டுக் காட்டும் சிந்தாமணி. * சொல் காண்க. நெல்லி: நெல்லின் பொன்னிறத்தையுடைய காயைக் கொண்டது நெல்லி. நெல்லித் தீங்கனி அதியமானுக்குப் புகழ்சேர்த்த பெருமை யது. நெல்லிவட்டு என்பது நெல்லியின் விதை வைத்து ஆகும் விளையாட்டு. நெல்லியின் துவர் உடல்நல அமிழ்து (மருந்து). நெல்லுச் சேர்: நெல்லைச் சேர்த்து வைக்கும் குதிரை, நெல்லுச் சேர் என்பது நாகர்கோயில் புத்தனேரி வழக்காகும். சேர்க்கத் தக்க இடம் சேர் ஆயது. நெல்லும் புல்லும்: நெல் = நெல் தவசம். புல் = புல் தவசம் (கம்பு). நெல் = நன்செய்ப் பயிர்; புல் = புன்செய்ப் பயிர். முன்னது பண்பட்ட நிலத்தில் பண்படுத்தச் சிறப்பில் பயன் தருவது. பின்னது கரிசல் மண்ணில் இயல்பாகப் பெய்யும் மழையில் எளிதாய் முளைத்து நல்வளம் தருவது. புல்லரிசி என்பதொன்றுண்டு. அது நெல்லொடு சேர்ந்த தன்று. அஃது எறும்பு சேர்த்து வைக்கும் புல். மலைநெல் வெதிர் நெல் என்னும் மூங்கில் நெல். ஐவனம் என்பது இலக்கியச் சொல். நெளிப்பான்: ஆடல் என்றால் உடல் கால் கை விரல் கழுத்து கண் என்பன வெல்லாம் நெளித்து ஆடப்படுவதாம். ஆதலால் திண்டுக்கல் வட்டார வழக்கில் நெளிப்பான் என்பது ஆடல் என்னும் பொருளில் வழங்குகின்றது. ஆடல் = கூத்து, நட்டுவம். நெளிவு சழிவு: நெளிவு = ஒருபொருள் நெளிந்து விடுதல் அல்லது வளைந்து விடுதல். சழிவு = நெளிந்த பொருள் மேலும் நெளிதல். நெளிவினும் சழிவு சீர்கேடு மிக்கதாம். நெளிவெடுக்க, ஈயம் பூசுவார் கருவியுடன் வருவர். அது, சழிவு ஆகுமானால் எவ்வளவு தட்டிக் கொட்டிப் பார்த்தாலும் சழிவு அடையாளம் இருக்கவே செய்யும். நெளிவு, எவராவது திமிராகப் பேசினால், உன் நெளிசலை எடுக்க வேண்டுமா? என்னும் அளவுக்கு விரிந்தது. நெளிவு சுழிவுக்கும் நெளிவு உதவியுள்ளது. நெளிவு என்பது விரலணிகளுள் ஒன்றுமாம். நெளிவு சுழிவு: நெளிவு = ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத் தக வளைந்து கொடுத்துநிறைவேற்றல். சுழிவு = ஒரு நிகழ்ச்சியை அறிந்து அதற்குத் தகச் சூழ்ச்சி வழியில் நிறைவேற்றல். அவன் நெளிவு சுழிவானவன் அவன் நெளிவு சுழிவாக நிறைவேற்றிக் கொள்வான் என்பவற்றில் இவ்விணைமொழி விளக்கம் தெளிவாம். * நெளிவு சழிவு காண்க. நெறி: நெறுநெறு என்பது இரட்டைக் கிளவி (சொல்). மணலில் நடந்தால் நெறுநெறு என ஒலிக்கும். ஆற்றங்கரையின் மேல் நடந்ததால் வழி, ஆறு எனப்பட்டது. ஆற்றில் நிரம்ப நீர் ஓடாத நாளில் சுற்றிச் செல்லாமல் ஆற்றின் ஊடு மணலில் சென்ற போது மணலில் நெறுநெறு என்னும் ஓசை கேட்க நடந்தமை யால் நெறி ஆயிற்று. ஆறு, நல்லாறு, ஒழுக்காறு முதலாகப் பெயர் பெற்றது போல், நெறியும் நன்னெறி, நீதிநெறி எனப்பட்டு நூற்பெயராயின. * வழி காண்க. நெறிமுகம்: நெறி = வழி. இவண் நீர்வழி. கடலில் கப்பல் படகு ஆயவை வந்து செல்லும் துறை, முகம் எனப்படும். துறைமுகம் என்பது அது. ஆறு கடலோடு கலக்கும் இடம் நெறிமுகம் எனப்படுதல் குமரி மாவட்டம் புதுக்கடை வட்டார வழக்காகும். நெற்றிப் பணம்: நெற்றிப்பணம் = விரும்பாது தரும் காசு. இறந்தவர்கள் நெற்றியில் நாலணாக் காசு ஒன்றைப் பசை வைத்துப் பொட்டுப் போல ஒட்டுவர். அதற்கு நெற்றிப் பணம் என்பது பெயர். அப் பணம் இடுகாட்டில் புதைவினை அல்லது எரிவினை புரிவார் எடுத்துக் கொள்ளற்குரியது. இழவுக் குறியாக அமைந்த அப் பணம், கட்டாயமாகத் துன்புறுத்தி வாங்குபவரிடம் உனக்கு நெற்றிப்பணம் அழுதிருக்கிறேன். இனிமேலும் வந்து விடாதே என்பர். நெற்றிப் பணம் வைக்கப்பட்டவர் மீள்வரோ? அப்படி நீ மீளாதே என வெறுத்துத் தரும் பணம் நெற்றிப் பணம் எனப்பட்டதாம். நெற்று: நெல் + து = நெற்று. நெல்லின் மணிமுதிர்ந்து விளைநிலையில் பொன்னிறத் தோற்றம் தரும். புனல்பரந்து பொன்கொழிக்கும் என்பது பொன்னிற நெற்கதிர்களை வழங்கும் பொன்னியாம் காவிரிக்கு வாய்த்த பெயர். நெல்லின் தோற்றம் போல் பொன்னிறமாக முதிர்ந்த பயறுவகைகளின் காய்களும் நெற்று என்று வழங்கப்பட்டன. பயற்று நெற்று, துவரை நெற்று. அதேபோல் தேங்காய் தரும் நெற்றும் பெயர் கொண்டது. அதன் நிறமும் அந்நிறமே. நெற்றின் உள்ளீடு கெட்டித் தன்மை பட்டது. அதன் மூடாக இருந்த தோல் அல்லது தோடும் கெட்டித் தன்மை உற்றது. அதுபோல் மூடு ஓடு உடைய உயிரிகளின் உறுப்பு நெற்றி எனப்பட்டது. நெல்லின் நிறத்தில் விளங்கிய கனியைக் கண்டு நெல்லி எனப் பெயரிட்டனர். நெல்லின் பெயரால் அமைந்த ஊர்கள் நெல்வேலி, நெல்லூர், நெற்குப்பை என்பவை மட்டுமல்ல; நெல் நென் என ஆகியது; நென்மேனி - மதுரை சார் ஊரும் ஏரியும் இது. நெல், வயல் நிலப்பயிர். மலை நிலப்பயிராம் மூங்கில் தரும் மணி, நெல் எனப்பட்டது. அது மூங்கில் நெல், மலைநெல், வெதிர நெல், ஐவனம் முதலாய பெயர்களைக் கொண்டது. நெல்லின் நிறமுதிர்வு, காலமுதிர்வுக்கு ஆயது. நெருநல்; நெரு > நெருப்பு நிறம்; எரிநிறம் நெல் நிறமாம். நெல், நேலாகி நேற்றும் ஆயது. முற்றிய பருத்திக் காயின் தோடு நெருகு எனப்படல் உழவர் வழக்கு. குறுக்கு ஏறும் நூல், அழுந்திய வலிய செயல், கருத்து ஆகியன நெரடு எனப்படும். நெருடு என்பதும் அது. * வயல் காண்க. நெற்று நெருகு: நெற்று = காய்ந்து போன தேங்காய்நெற்று, பயற்றுநெற்று போல்வன. நெருகு = பருப்பு வைக்காமல் காய்ந்து சுருங்கிய குலையும் கொத்தும் போல்வன. நெற்றில் உள்ளீடு நன்றாக அமைந்திருக்கும். நெருகில் உள்ளீடு இராது. இருப்பினும் பயன் செய்யாது. பருத்திச் செடியில் காய்கள் முற்றிப் பயன்தராமல் நெருகாகிப் போதல் ஒரு நோயாம். தோல் நெருக்கி உள்ளீடு இல்லாமல் செய்தமையால் நெருகுப் பெயர் பெற்றிருக்கலாம். நே வரிசைச் சொற்கள் நே: நே:1 நகர ஏகாரம்; மெல்லினம்; உயிர்மெய்க் குறில். நே:2 நேயம்; அன்பு. நே:3 நே > ஞே = ஒலிக்குறிப்பு; நே நே > ஞே ஞே = அடுக்கு. நேஎ: நேஎ = நேயம். நேஎ நெஞ்சம் = நேய நெஞ்சம். தேஎ > தேயம் ஆவது போல், நேஎ > நேயம் ஆயதாம். நேயம்= அன்பு. நேமி உய்த்த நேஎ நெஞ்சின் - புறம். 3 நேடல்: நாடல் > நேடல் = தேடல். அவாவினாலும் விருப்பினாலும் தேடுதல் நேடுதல் ஆகும். நேட அரிது - கம்ப. கிட். 223 நேரம் காலம்: நேரம் = ஒன்றைச் செய்தற்கு நேர்வாக அமைந்த பொழுது. காலம் = ஒன்றைச் செய்தற்கு எடுத்துக்கொள்ளும் காலநிலை. எந்தச் செயலையும் காலநிலை அறிந்து மேற்கொள்ளல் வேண்டும். காலநிலையுடன் அதனை நிறைவேற்றுதற்குரிய நேரத்தையும் போற்றிச் செய்தலும் வேண்டும். காலமறிந்து செயல் என்னும் திருக்குறள் சொகினம் (சகுனம்) ஐந்திரம் (பஞ்சாங்கம்) பார்த்துச் செய்வதைக் குறிப்பதன்றாம். அவ்வகையில் நேரமும் காலமும் கொள்க. ஒருசெயல் நிறைவேறத் தக்க பொழுது, நிறைவேற இயலாத பொழுதென உண்டேயன்றிப் பொழுதில் நல்பொழுது, அல்பொழுது இல்லையாம். நேரார்: நெஞ்சத்தால் நேராதவர் நேரார் ஆவர். நேர்ந்து கொள்ளாப் பகைவர் அவர். நேரில் வருவார் - பேசுவார் - கூட உண்பார் - நெருக்கமாகக் காட்டுவார். ஆனால் உள்ளத்தால் நேர்ந்திருக்காமல் நல்லதாம் பொழுதை எதிர்பார்த்து தம் வஞ்சத்தை நிறைவேற்றிக் கொள்ளக் காத்திருப்பவர் அவர். தாக்குறு பொழுதில் நேரார் தாளற வீசத் தாவி - கம்ப. சுந். 8 நேரி: தெய்வத்திற்கு முன்னாக நின்று உண்மை சொல்வதை நேரி என்பது குமரி மாவட்ட வழக்கு. நேரில் நின்று கூறுவதுடன் நேரிய நெஞ்சத்துடன் கூறுவதுமாம். நேரி என்பதற்கு மக்களாட்சி முறையில் செலுத்தப்படும் வாக்குரிமையை நேரி என்பார் பாவாணர். நேரும் கூறும்: நேர் = நெடுக்கம் அல்லது நீளம். கூறு = குறுக்கம் அல்லது அகலம். ஒன்றை நேரும் கூறுமாக அறுப்பதும், நேரும் கூறுமாகக் கிழிப்பதும், பின்னர் இணைப்பதும் தொழில் முறையாம். இந்நேரும் கூறும், நெடுக்காகவும் குறுக்காகவும் நடப்பதற்கும் சுட்டப்படும். கூறு என்பது பகுப்பதாம். கூறு வைத்தல், கூற்றம் என்பவை பகுப்பின் பொருளன. நேர்: நேர்:1 நிகர் > நேர் = ஒப்பு. நேர்மை = உலகம் ஒப்புக் கொள்ளும் நேரிய உயர்ந்த பண்பு. நேராம் தன்மையை நேரில் அறியக் காட்டுவது துலைக் கோலின் நா. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி - திருக். 118 நேர்:2 நேர் = முன்னால், முன்பு. எங்கள் வீட்டுக்கு நேர் - நேர்முன் - வீடு என்பது மக்கள் வழக்கு. நேர்:3 அசை வகையுள் ஒன்று; நேரசை. குறில் தனித்தும், நெடில் தனித்தும், குறில் ஒற்றடுத்தும் நெடில் ஒற்றடுத்தும் வருவது நேரசை. நேர்:4 நேர்ந்த நட்பினர்; நேரல்லார் = பகைவர். தொல்காப்பியர் காலத்தில் நேர் என்பதனுடன் நேர்பு என்பதும் அசையாக இருந்தது. நேர் என்பதுடன் உகரமும் சேர்ந்தது நேர்பு. அது அவர்க்குப் பின்வந்த காக்கை பாடினியார் காலத்திலேயே கைவிடப்பட்டதால் அவர்க்கு வழிநூலாகிய யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை ஆயவற்றிலும் நேர்பு இடம்பெறவில்லை. அவ்வாறே நிரைபு என்பதும் இடம் பெறவில்லை. நிரை என்பதே நின்றது. நேர்காணல்: சில பெருமக்களைச், சில தலைவர்களைச், சில அறிவர் களை இதழர் முதலிய ஊடகத்தினர் நேர்காணல் வழக்கம். ஆனால், இதுகால் நேர்காணல் மிக விரிவாகியுள்ளது. பள்ளியில் சேர்க்க - வேலையில் சேர்க்க - தங்கள் வணிகம் தங்கள் தொழில் ஆயவற்றை விளம்பரப்படுத்த என நேர் காணல்கள் பெருகியுள. நேர்காணல் நேர்மையாக இருத்தல் வேண்டும். ஆனால் அரசு ஆணைப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நிகழ்த்தும் நேர்காணல்கள் பின்னவற்றில் மிகப்பல. முன்னரே வேலைக்குத் தெரிவு செய்து வைத்துக் கொண்டு பின்னே போலிமையாக நடத்தும் நேர்காணலால் பலர் அடையும் மன அழுத்தம் பாவிகள் ஏன் இந்நேர்காணலுக்கு அழைத் தார்கள் எனப் புலம்பச் செய்கிறது. ஏனெனில் கையில் காசில்லாமல் கடன்வாங்கிக் கொண்டு நேர்காணலுக்கு வருபவர் மொழி இது. நேர்ச்சி: எதிர்பாராவகையில் நேருக்கு நேராக மோதிக் கொள்வதும் அம்மோதலால் நேர்வதும் நேர்ச்சி எனப்புத்தாக்கச் சொல்லாகி யுள்ளது. நால்வழிச்சாலை அமைந்தாலும் நேர்ச்சி குறைந்த பாடில்லை. நூறடிச் சாலையாக விரிந்தாலும் ஆறடி வண்டிகள் கவனக் குறைவால் நேர்ச்சிக்கு ஆட்படவே செய்கின்றன. நேர்த்திக்கடன்: எதிர்பாரா நோய்நொடி ஏற்படுங்கால், அதன் தீர்வு கருதித் தம் வழிபடு தெய்வத்தை முன்வைத்து இது நிகழின் இது செய்வேன் என நேர்ந்து கொள்ளல் நேர்த்திக் கடனாகும். அதனைச் செய்யத் தவறக் கூடாது என்றும், தவறின் தெய்வத் தண்டனை உண்டென்றும் கொள்ளுதல் நேர்த்திக் கடனாகும். எதிர்பாரா விளைவை நேர்ச்சி என்று அழைக்க மூல வழக்கு இதுவாகலாம். நேர்வது - நேர்ந்தது - நேர்த்தியாயது. இனிச் இறந்தது என்பது சிறந்தது என்னும் பொருளதாம். நேர்த்தி வைப்பது: வழிபடு தெய்வத்திடம் நீ இன்னது செய்தால் நான் உனக்கு இன்னது செய்வேன் என நேர்ந்து கொள்வதுண்டு. இதனை நேர்த்திக் கடன் என்பர். நேர்ந்த கடனையும் வாங்கிய கடன் போலத் தீர்க்க வேண்டும் என நினைவர். முன்னதில் தவறுவாரும் பின்னதைத் தவற அஞ்சுவதும் உண்டு. இந் நேர்த்திக் கடனை நேர்த்தி வைப்பது என்று வழங்குகின்றனர் ஈழத் தமிழர். நேற்று: நாம் நிகழும் நாளை இன்று என்றும், முடிந்த நாளை நேற்று என்றும், வரும்நாளை நாளை என்றும் வழங்குகிறோம். திருவள்ளுவர் வாழ்ந்த நாளில் நேற்று என்பது நெருநல் என்றும், நெருநற்று என்றும் வழங்கியது. நெருநல் உளன் ஒருவன் - திருக். 336 நெருநற்றுச் சென்றார் - திருக். 1278 நெருநற்று என்பதிலுள்ள முதலெழுத்தை நீட்டி, இறுதி இரண்டு எழுத்துகளையும் கூட்டி, நேற்று எனப் பொதுமக்கள் ஆக்கிக் கொண்டனர். நேற்றைக் கவலை ஏனினி எனப் புலமக்களும் ஏற்றுக் கொண்டனர். நேற்று என்பதற்குப் பழந்தமிழாட்சியில் நெருநை, நென்னல் என்பவும் உண்டு. நெருநற்று என்ற ஆட்சி குறளில் மட்டுமே உண்டு!  நை வரிசைச் சொற்கள் நை: நை:1 நகர ஐகாரம்; நெடில். நை:2 ஏவல்; நைக்க. நை:3 சிதைதல். நை:4 இனைதல் மூலம். நைத்தல்: நைதல் > நைத்தல். முன்னது தன்வினை; பின்னது பிறவினை. துணி நைந்து போதல் முன்னது. துணியை நைந்துபோக அடித்தும் தட்டியும் நையச் செய்வது. நைத்தல், நைப்பு எனவும் படும். நையப் புடைத்தான், நைந்து கிழிந்தது என்பவை ம.வ. நைப்பு: நைப்பு என்பது ஈரம் என்னும் பொருளில் திண்டுக்கல் வட்டார வழக்கில் உள்ளது. முகவை, நெல்லை வழக்குகளிலும் உண்டு. நைப்பு, நமப்பு நமர்ப்பு, பதத்தல் எனவும் வழங்கும். நைப்பு ஆகிவிட்டால், மடித்துப் போகும் என்பர். மடித்துப் போதல் உதவாமல் கெட்டுப் போதல். மட்கிப் போதல். நையாண்டி: நகையாண்டி என்பது, வழு வழக்காய் நையாண்டி ஆயது. மேளங்களுள் ஒன்று நையாண்டி மேளம். நையாண்டி செய்வதே சிலர் இயல்பு. வளையக் காட்சி, திரைப்படங்களில் நகைச்சுவை நடிப்பாளர் உண்டு. இதுகால் அவர்களினும் விஞ்ச நகைச்சுவைப் பட்டிமண்டபம் நடத்தும் நையாண்டிகள் பெருகியுளர். நகைச்சுவையொடு நல்லியல் பண்புகளைக் காட்டியவர் நகைச்சுவைக் கலைவாணர்.  நொ வரிசைச் சொற்கள் நொ: நொ:1 நகர ஒகரம்; மெல்லின உயிர்மெய்; குறில். நொ:2 துன்புறு. நோ > நொ. நொங்கு நொங்கு: ஒலிக்குறிப்பு. அவனை நொங்கு நொங்கு என்று குத்தி விட்டான்! சின்ன பையன் என்ன செய்வான் என்பர். இதனை மங்குமங்கு என்றும், மொங்குமொங்கு என்றும் மொத்திவிட்டான் என்பதும் ம.வ. இவையெல்லாம் ஒலிக்குறிப்பு வழிவந்தவை. நொசிவு: நொசி > நொசிவு. சிறுத்தும் வளைந்து நெளிந்தும் போதல் நொசிவாகும். கொடை நொசிதல், இடைநொசிதல், மின்னல் நொசிதல் என்ப வற்றை எண்ணுக. நொசித்துப் போதல் நொடித்துப் போதல் - வறுமைப் பட்டுப் போதல் - என்பது ம.வ. நொச்சி: நொச்சி:1 செடிவகையுள் ஒன்று. நல்ல மருத்துவப் பயன் உடையது. நொச்சி:2 புறத்துறைகளுள் ஒன்று. ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர் சூடிய பூப்புகழ்ந் நன்று என்பது பு.வெ.மாலை. 86. ஆடரவம் பூண்டான் அழலுணச் சீறிய கூடரணம் காப்போர் குழாம்புரையச் - சூடினார் உச்சி மதிவழங்கும் ஓங்கு மதில்காப்பான் நொச்சி நுதிவே லவன் - பு.வெ.மா. இதனைத் தனித்திணையாகக் கொள்ளாமல் உழிஞைத் திணையுள் அடக்குவார் தொல்காப்பியர். நொச்சி மாலை: புறத்து ஊன்றிய பகைவர் கொள்ளாமல், நொச்சிப் பூ மாலை சூடித் தன் மதில் காக்கும் திறம் கூறுவது நொச்சி மாலையாகும். கோலிய மாற்றார் கோட லின்றி நொச்சி வேய்ந்தகல் எயில் நோக்குந் திறனை வழுத்துதல் நொச்சி மாலை யாகும் - முத்துவீ. 1075 நொச்சு: நொறுங்கிய அரிசி நொய் எனவும், குறுநொய் (குறுணை) எனவும் வழங்கும். நொய்யரிசியை நொச்சு என்பது கம்பம் வட்டார வழக்கு. நுண்ணிய நோக்கை நொசிப்பு என்பது பரிபாடல். நொடிப்பு என்பது வறுமை, பள்ளம் என்னும் பொருளுடையது. நொடி: நொடி:1 எழுத்தின் ஒலிப்புக்குரிய கால அளவு மாத்திரை எனப்படும். நொடிப்பொழுதை மாத்திரையின் கால அளவாகக் கொண்டனர். கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே - தொல். 7 இயல்பொழு மாந்தர் இமைநொடி மாத்திரை - நன். 100 கைப் பெருவிரலும் நடுவிரலும் ஊன்றி நொடிப்பதற்கு ஆகும் பொழுதை நொடி என்றனர். உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம், குற்றியலுகரம், குற்றியலிகரம், ஒற்றளபெடை, உயிரளபெடை ஆயவற்றுக்கெல்லாம் ஒலிக்கும் மாத்திரை அளவை அளந்து கூறினர். நொடி என்பது ஒருமுறை நொடிப்பதற்கு ஆகும் பொழுது. இதனைச் சுடக்குப் போடுதல் என்பது ம.வ. சுடக்கென ஒலி எழுவதால் உண்டாய பெயர். ஒரு சுடக்கில் வர வேண்டும் என்று விரைவைச் சுட்டுதலும் ம.வ. நொடி = பள்ளம். நிலத்தில் மேடுபள்ளம் இயல்பாக அமைந்திருத்தல் உண்டு. பள்ளத்தை நொடி என்றும் நொடிப் பள்ளம் என்றும் கூறுவர். கதை நொடி என்பது இணைச்சொல். இந்நொடி யாப்புச் சாராப் பாவகையுள் ஒன்றாகத் தொல் காப்பியர் சுட்டுவார். மக்கள் வழக்கில், வாழ்ந்து கெட்டுப் போதலை - செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்தவர் வறுமையுற்று ஒடுங்கிப் போதலை - நொடித்துப் போய்விட்டார்; நல்லமனிதர் என்பர். அவன் ஆடிய ஆட்டத்திற்கு நொடிப்பு வராமல் எப்படிப் போகும் என்பது வசை. நோய்நொடி இல்லாமல் நூறாண்டு வாழ்க என்னும் இணைமொழி வாழ்த்தில் நொடி வறுமை சுட்டியது. பொருளியலில் பள்ளமாம் அது. நொடி:2 நொடி என்பது விடுகதை. கதை நொடி என்பது இணைச் சொல். நொடித்தல் பதில் கூறுதலாகும். நொடி என்பது பள்ளம் என்னும் பொருளில் தென்தமிழக வட்டார வழக்காகும். வண்டியை நொடியில் விட்டுவிடாதே; நொடிப் பள்ளம் இருக்கிறது; பார்த்து வண்டியை ஓட்டு என்பது பெரியவர்கள் இளையவர்க்குக் கூறும் அறிவுரை. நொட்டை: எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் நொட்டை சொல்வதே உன் வழக்கமாகிவிட்டது என்று கூறுவது நெல்லை வழக்கு. நொட்டை என்பது குறை என்னும் பொருளது. நொண்டி சண்டி: நொண்டி = காலில் குறையுடைய மாடு. சண்டி = உழைக்காமல் இடக்குச் செய்யும் மாடு. நொண்டி நடக்கும் மாடு நொண்டியாம். நொண்டியடித்தல் என்னும் விளையாட்டு நாடறிந்தது. சண்டியை மாதம் போம் காதவழி என்பதும், தின்னுமாம் ஒரு படப்பு திரும்பாதாம் ஒரு மடக்கு என்பதும் விளக்கும். வண்டி மாடு சண்டி; வண்டிக்காரன் நொண்டி என்பது ம.வ. * நொண்டி நொடம் காண்க. நொண்டிச் சிந்து: நொண்டி நாடகங்களுக்கு அமைந்த சிந்து வகையே நொண்டிச் சிந்து எனப்பட்டதாகலாம். அச் சிந்து, அந் நாடகம் தவிர்த்துப் பிறவற்றுக்கும் பயன்படுத்தப்பட்ட போது அப் பெயரைக் கொண்டு வழங்கப்பட்டிருத்தல் கூடும். நொண்டிச் சிந்து பெருவழக்குடையது. சித்தராரூட நொண்டிச் சிந்து என்பதொரு நூல் பாம்புகளின் இயல்பு, அவற்றின் வகை பெயர்கள், பற்களின் பெயர்கள், அவற்றின் தன்மை, நஞ்சினை இறக்கும் வழி ஆகியவற்றை யெல்லாம் மிக விரித்துரைக்கின்றது. நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால் அஞ்சியஞ் சிச்சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே - பாரதியார் என்பது நொண்டிச் சிந்தே. பாதி ஓரடி (மேலடி) குறைந்தும், மீதிப் பாதி ஓரடி (கீழடி) நீண்டும் இருக்கவில்லையா! பாட்டின் அடி அளவே நொண்டிக் கொண்டுவிட்டதல்லவா! நொண்டி நடப்பவர் அடிநெடுமை குறுமையைப் பார்த்தால், நொண்டிச் சிந்து என்னும் பெயர் விளக்கமாகுமே? இரண்டு அடிகளாய் ஒவ்வோர் அடியும் முதற்கண் இருசீர்களும் தனிச் சொல்லும் பின்னர் மூன்று சீர்களும் உடையதாகவும், இரண்டடிகளும் ஓரெதுகை உடைய தாகவும் அமையும் சிந்துகளை எண்ணுங்கால் இவ் வெண்ணம் வருவது இயல்பே. நாலடிகளாகவும், தனிச்சொல் இன்றியும், முன்னடி மிக்கும் வருவனவெல்லாம் பின்வளர்ச்சி நிலையாகலாம். நொண்டி நாடகம்: களவுக் குற்றத்திற்கு ஆட்பட்டுக் காலிழந்த நொண்டி தன் குறையுணர்ந்து, இறையருளை வேண்டிக் கிடக்க, அவன் அருளால் நொண்டி நீங்கி நலம் பெற்றதாகக் கூறும் அமைப்பு டையது, நொண்டி நாடகம். பள்ளு குறவஞ்சி என்பவை போலப் பாட்டுடைத் தலைவன் ஒருவனைக் கொண்டு இயலும். வாழ்த்து, அவையடக்கு, தோடையம், தரு, விருத்தம் முதலியவை இவற்றின் உறுப்புகளாம். சீதக்காதி நொண்டி நாடகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம் என்பவை பரவலாக வழங்குபவை. வலிக்காவிற் காலற்ற லேகாங்கிரி; கவி வெண்பாச் சிந்தாய்க் கோலுற்றார் நொண்டி யென்று கொண்டு என நொண்டி இலக்கணத்தைப் பிரபந்தத் திரட்டுக் கூறுகின்றது (13). திருட்டுக் குற்றத்திற்காக வலிந்து பற்றிச் சென்று தண்டனையாகக் கோயிலில் காவு (பலி) தருவதால் தனித்துக் கிடப்பவனைப் பற்றிக் கலிவெண்பாச் சிந்தாகப் பாடுவது நொண்டி எனப்படும் என்கிறார். ஏகாங்கிரி தனியாள், கோலுற்றார் - அமைத்தார். நொண்டி நொடம்: நொண்டி = கால் குறையால் நொண்டி நடப்பவர். நொடம் = கைமுடங்கிப் போனவர். நொண்டியடித்தல் ஒரு விளையாட்டு. முள்குத்தினாலோ கல் இடித்தாலோ நொண்டி நடப்பது உண்டு. ஆனால், இந்நொண்டுதல் இயற்கையாகி விட்ட நிலை. நொடம், நுடம், முடம் என்பன ஒரு பொருளன. நொண்டுதல் காலைப் பற்றியதும், முடங்குதல் கையைப் பற்றியதுமாம். முடத்தாழை, முடத்தெங்கு கூடைமுடைதல் என்பவற்றில் வரும் முடத்திற்கு வளைவுப் பொருள் உண்மை அறிக. நொட மருத்துவர் என்னும் விளம்பரத்துடன் இருப்பவர் நொண்டி நொடம் இரண்டும் பார்ப்பவரே. நொய் நொறுங்கு: நொய் = அரிசி பருப்பு முதலியவற்றின் குறுநொய். நொறுங்கு= அரிசி பருப்பு முதலியவற்றின் நொறுங்கல். நொறுங்கல் முழுமணியில் அல்லது முழுப்பருப்பில் இரண்டாய் மூன்றாய் உடைந்ததாம். அது, மிகப் பலவாக நொறுங்கிப் போவது நொய்யாம். அரிசியில் நொய்யை நொய்யரிசி என்பர்; குறுநொய் என்பதும் அது. நொய்ய நொறுங்க மிதித்து விட்டான் என்பது மிதிப்பின் கடுமையையும் கொடுமையையும் உவமையால் விளக்குவதாம். நொய்யல்: பல சிறிய ஆறுகள் ஓடைகள் சேர்கின்றன. ஆறு பெருகு கிறது; பேராறு ஆகிறது. பேராற்றின் பயன் என்ன? அணைகள், கால்கள் அமைகின்றன. வேளாண்மைப் பயன் குடிநீர்ப் பயன் ஆகியவை ஆகி அளவால் சுருங்கிச் சிறுகி ஓடுகின்றது. அரிசியில் குறுநொய்யும், நொய்யும் உள்ளமை போலச் சிறிதடைந்த ஆற்றை நொய்யல் என்கின்றனர். கோவையார் கொண்டதும் கண்டதுமாம் ஆறு நொய்யலாறு. கருவூரை அடுத்துச் செல்கிறது. நொய்யினிப்பு: இரவை (ரவை) என்பது குறுநொய்யினும் குறு நொய்யானது. அதனைக் கொண்டு இலட்டுகம் செய்வர். அதனை ரவாலாடு என வழங்குவர். நெல்லை வட்டாரத்தில் நொய்யினிப்பு என்பது இரவை இலட்டுகம் குறிப்பதாம். நொள்ளை: நுள் > நுள்ளை > நொள்ளை. நுள் = நுளை. பள்ளம் குழி புடை. பார்வையின்றிக் கண்குழியாகிப் போனவன், நொள்ளைக் கண்ணன். கண்பார்வை இல்லாமை நொள்ளை எனப்படு கின்றது. நொள்ளைக்கண் என்பது குருட்டுக் கண்ணாம். இல்லை என்று சொன்னாலும், சின்னப் பிள்ளை என்று சொன்னாலும் என்ன நொள்ளை என்றும், சின்ன நொள்ளை என்றும் எதிரிட்டு உரைப்பது வழக்கு. நொள்குதல், ஒழுகுதல், குறைதல் பொருளது. இது நொள்ளை என மாறி இல்லாமைப் பொருள் தருவதாயிற்று. நொள்ளை விழிக்கொரு நோன்புண்ணும் வந்தால்போல்- குண்டல. 175 நொறுக்கு: நொறுக்கு:1 ஏவல் பொருளது. ஒன்றை அடித்து நொறுக்கு; உடை. நொறுக்கு:2 நொறுக்கு = தீனி. நொறுக்குத் தீனி என்பது ம.வ. நொறுக்கு:3 ஒலிக்குறிப்பு. காய்ந்து போன குச்சிதான்; நொறுக்கு நொறுக்கென ஒடிக்கலாம் என்பது ம.வ. நொறுக்குதல்: நொறுக்கித் தின்னல் நொறுக்குதலாகும். முறுக்கு, சீவல், சேவு முதலியவற்றை நொறுக்கித் தின்பர். இவ்வாறு தின்பதை நொறுக்குத் தீனி என்பது வழக்கு. நொறுங்கத் தின்று நோயகற்று என்னும் பழமொழி நன்றாக மென்று தின்னுதலைக் குறிப்பதாம். நொறு நாட்டியம்: நொறு நாட்டியம் = ஆகாதன செய்தல். நொறு நாட்டியம், செய்தற்கு அரிய வகையில் மெய்ப்பாடு களை (உணர்வுகளைக்) காட்டி நடிக்கும் நடிப்பாகும். அது நொற நாட்டியம் நொற நாட்டியம் பிடித்தவன் என்றும் வழங்கு கின்றது. செய்தற்கு அரிய கலை நுணுக்கங்களைப் பொதுமக்கள் அவ்வளவாக அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களால் நுணுக்கம் உணர முடியாத அது வெட்டித் தனமானதாக அவர்களுக்குத் தோன்றுகின்றது. அதனால் வந்த பொருள் இது. நொறு நாட்டியம் அடாவடிச் செயலாகக் கூட (அக்கிரமமாகக் கூட) அவர்களுக்குத் தோன்றிப் பழிப்புக்கு ஆளாகிறது. நொறுவல்: சிற்றுண்டி. நொறுக்குத் தீனி. முறுகல் தோசை. நொய்மை என்பதும் இது. நொய்மை நுகரேல் - ஔவை. ஆத்தி.  நோ நெள வரிசைச் சொற்கள் நோ: நகர ஓகாரம்; உயிர்மெய் நெடில். நோ:1 நோ = நோதல். நோ:2 நோ = நோவு, ஏவல். நோ:3 நோ = நோய். நோ:4 நோ = நோதிறப் பண் (அ) இரங்கல் பண். நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே - குறுந். 4 நோம் = நோவும். நோக்காடு = தீராத்துயர்; என்ன நோக்காடு வந்தது (ம.வ.). நோக்கம்: நோக்கு = நோக்குவார் நோக்கத்தைத் தன்னகத்தை விட்டு அகலா வண்ணம் நிலைபெறுத்துவது அழகு. ஆகலின், நோக்கம், நோக்கு என்பவையும் அழகு என்னும் பொருளது ஆயிற்றாம். மணிமேகலையார் அழகை, ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ? எனச் சாத்தனார் வினவுதல்வழி வியந்துரைத்த தறிக. நோக்கு அழகு என்னும் பொருளது. நோக்காடு போக்காடு: நோக்காடு = நோய். போக்காடு = சாவு. ஊரே நோக்காடும் போக்காடுமாகக் கிடக்கிறது என்று தொற்று நோய் வாட்டும் போதில் சிற்றூரில் சொல்வது வழக்காறு. சாக்காடு போல நோக்காடும் போக்காடும் வந்தனவாம். நோ = நோய்; போக்காடு = போதல்; இடுகாடு அல்லது சுடுகாடு கொண்டு போய்ச் சேர்த்தலைக் குறித்தது. நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச் சென்றான் என்பது நாலடி (29). செல்லுதல் இறப்பைக் குறித்தது போல் போக்காடும் குறித்தது. இன்னும் சாவாமல் இருக்கிறானே என்னும் ஏக்கத்தில் போக்கொழிந்தான் என்பதும் எண்ணத் தக்கது. நோட்டம்: நோட்டம் = உள்ளாய்வு. வெளிப்படப் பாராமல் உள்ளொரு நோக்கம் வைத்துக் கொண்டு கரவாகப் பார்த்தலை நோட்டம் விடல் என்பது ம.வ. போகிறவர்கள் வருகிறவர்களையெல்லாம் நோட்டம் பார்க்கிறானே என்ன? இவன் யார்? எந்த ஊரான் என்பது சிற்றூர் களில் கேட்கப்படும் செய்தி. களவு திருட்டு முதலிய குற்றங்கள் ஊரில் நடந்துவிட்டால், ஊரவர்களே நோட்டம் பார்ப்பர். பொன் வயிரம் மணி முதலியவற்றின் தன்மை மதிப்பீடு அறிவார் நோட்டகாரர் என வழங்கப்பட்டனர். ஒற்றர்கள் என்பாரும் நோட்டகாரரே. இத்தகைய நோட்டம் பருப்பொருள் ஆய்விலிருந்து நுண்பொருள் ஆய்வுக்கும், வெளிப்படும் ஆய்விலிருந்து உள்ளாய்வுக்கும் மாறிவந்துள்ளதை வழக்கால் அறிய முடிகின்றது. கண்ணோட்டம் என்பது வேறு. * கண்ணோட்டம் காண்க. நோண்டல்: நோண்டல் = தோண்டல். நோண்டல் என்பது தோண்டுதல் பொருளில் மக்கள் வழக்கில் உள்ளது. நொங்கு தின்றவனை விட்டுவிட்டு நோண்டித் தின்ற வனைத் தண்டித்தானாம் என்பது பழமொழி. என்னை நோண்டிப் பார்க்கிறான். அப்படி இளக்காரம் ஆகிப் போனேன் என்பதும் ம.வ. நோண்டல், துருவி ஆராய்தல். நோண்டி நோண்டி என்பது துருவித் துருவி ஆகும். நோய்நொடி: நோய் = உடலையும் உள்ளத்தையும் வருத்தும் பிணியும் நோயும். நொடி = உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே வாட்டும் வறுமை. நோ, நோய், நோவு, நோதல், நோக்காடு முதலியவெல்லாம் நோய்வழிச் சொற்களே. நொ என்பதும் நோய் என்னும் பொருள் தருவதே. நொடித்துப் போய் விட்டார் என்பது வறுமைப்பட்டு விட்டார் என்பதைக் குறிப்பதால் நொடி வறுமைப் பொருள் தருதல் புலப்படும். ஆழ்ந்த பள்ளம் நொடிப்பள்ளம் எனப்படு வதால் வறுமையின் அளவீடு வெளிப்படும். நோய் நொடி இல்லாமல் வாழ்க என்பதொரு வாழ்த்து வகை. நோய் வினைகள்: நோய் வினைகள் தனிநூல் ஆதற்குரியன. நோய் - பெயர்க்கரணியம் - விளக்கம் - எடுத்துக்காட்டு - வழக்கு இன்னவை யெல்லாம் விரிக்க வேண்டும். சொல்லை விரிக்கவே தனி நூலாகும் எனின் மருத்துவத் துறை வல்லார் மனங் கொண்டால் எத்துணை விரிவுறும்! தமிழ் மருத்துவர் உள்ளம், தமிழும், மருந்தும் மருத்துவமும் பின்னிப் பிணைந்து செயல் படுங்கால் சொல்லாய்வாளர்க்குச் சுரங்கமாக அது திகழும் என்பது உறுதியாம். சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் என்பதைச் சொற்பொழிவாளியரும் கருதவில்லையானால் அவர்தம் சொற்பொழிவால் ஆகும் பயன்தான் என்ன? நோய்வினைச் சொல்வளப் பட்டியும் அதன் குறு விளக்கமும் அகரமுறையில் வருமாறு: அச்சம், அஞ்சுதல்: நோயச்சம், பேயச்சம், இருளுக்கு அஞ்சுதல். அஞ்சி அஞ்சிச் சாவார், இவர் அஞ்சாத பொருளில்லை பாரதியார். அசைதல், அசைவு: பல்லசைதல், பல்லசைவு; மூட்டசைதல், மூட்டசைவு. அடி, அடித்தல்: மண்டையடி, காய்ச்சல் அடித்தல். அடைத்தல், அடைப்பு: மூச்சடைத்தல், மாரடைப்பு. முன்னும் பின்னும் அடைத்தல் அதைத்தல்: வீங்குதல். கன்னம் அதைத்துள்ளது. அயர்தல், அயர்வு: அயர்வு = சோர்வு, அயர்வு அயதி, அசதி, அசத்தி, அச்சலாத்தி. அரட்டி, அரளல்: பேயரட்டி, அரண்டு போதல். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அரற்றுதல் (புலம்பல்): அழுது அரற்றுதல். அரித்தல் (அரிப்பு): தோல் அரிப்பு, குடல் அரிப்பு. அரிசினத்தால் (குலசேகர.) அலறுதல்: அஞ்சி அழுதல், வாய்வெருவல். அலறாதே என்பது ம.வ. அலுப்பு: உழைப்பால் உண்டாகும் வலி. அலுப்பு மருந்து. அவிதல்: கண்ணவிதல். அவிதல் = அழிதல். அழலுதல் (அழற்சி): குடல் அழற்சி. அறைதல்: பேயறைதல், பிசாசறைதல். அனத்தல், அணத்தல்: வலிதாங்காமல் முணகுதல். ஆட்டம், ஆடுதல்: பல் ஆட்டம், பல் ஆடுதல். அறுபதில் ஆட்டம் ஆதல்: வாந்தியாதல், கழிச்சல் ஆதல் (பேதியாதல்). ஆவலித்தல்: கொட்டாவி விடுதல். இசிவு (இழப்பு): நரம்பு இசிவு. இடக்குதல்: இடர் செய்தல், எதிர் முட்டல். இடக்கி முடக்கி. இடித்தல், இடி: தலையிடித்தல், மண்டையிடித்தல். இருமல்: துரத்துதல், குன்னிருமல். இருமல் பொருமல் செய்கிறது (பரிதிமாற்.). இரைதல், இரைச்சல்: குடல் இரைதல், வயிற்றிரைச்சல். இறக்கம்: குடலிறக்கம். எரிச்சல்: வயிற்றெரிச்சல். எழுச்சி: காதில் கட்டி எழுந்து பழுத்துச் சீழ் வடிதல். ஏற்றம்: குடலேற்றம். கடுத்தல், கடுப்பு: நீர்க்கடுப்பு, வயிற்றுக் கடுப்பு. கணகணப்பு (காய்ச்சல், வெதுப்பு): உடல் கணகணக்கிறது. கசிவு: நீர்க்கசிவு, குருதி கசிதல். கப்புதல்: தொண்டை கப்புதல் (தொண்டைக் கட்டு). கம்முதல்: ஒலி கம்முதல், தொண்டை கம்முதல். கமறுதல்: தொண்டை கமறுதல், ஒவ்வாததை உண்பதாலும், பதன் கெட்டதை உண்பதாலும் கமறுதல். கரகரத்தல்: தொண்டை கரகரத்தல். கரித்தல்: வாயில் உப்புக் கரித்தல். கருத்தல்: நோய், வெயில், பனி ஆகியவற்றால் நிறமாறுதல். கலக்கம்: உள்ளம் ஒருப்படாது கலங்குதல். உண்டது ஒட்டாது கலங்குதல் வயிற்றைக் கலக்கிவிட்டது. கவலை, கவல்வு, கவற்றல்: கவலைப்படல். கழறல்: பல் கழறல். பல்லைக் கழற்றி விடுவேன். கழிச்சல்: வயிற்றுப் போக்கு. கனத்தல்: தலைகனத்தல். கனவுதல்: கனவு கண்டு வெருவுதல். கன்னல் (கன்றல்): அடிபட்டுக் கன்றிப் போதல், கன்றல் கருத்தல். காந்தல்: கண் காந்தல், மூக்குக் காந்தல். காந்தல் = எரிதல். காய்தல்: காய்ச்சல் அடித்தல், பட்டினி கிடத்தல். காயப் போட்டால் தான் சரிவரும்; காயப் போடுதல் அருமருந்து. காய்த்தல்: இடையீடற்ற கடிய உழைப்பால் காய்த்துப் போதல். கை காய்த்தல், கோடரி போடுவோர், கம்பி குற்றுவோர், அகங்கைகள் காய்த்துக் கற்போல் அமைந்திருக்கும். கிட்டல்: பல் கிட்டல், கிட்டல் = நெருங்கல். பல்கிட்டிபோட்டது போல் ஒட்டிக் கொள்ளுதல். கிழிதல்: உதடு கிழிதல், வாய்கிழிதல். பேசினால் வாயைக் கிழித்து விடுவேன். கிறக்கம்: உண்ணாமையால் ஏற்படும் சோர்வு. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு. உண்ணாத கிறக்கம் எல்லா ருக்கும் உண்டு என்பது பழமொழி. கீறல்: பல் கீறல், புண்ணைக் கீறிவிடுதல். குக்கல் (குறுகிப் போதல்): நோயில் குக்கிப் போனான். குடைதல்: கால் குடைதல், காது குடைதல், வயிறு குடைதல். குணங்கல்: பிள்ளை குணங்கிப் போனது. தலையெடுப்பின்றிச் சோர்ந்து கிடத்தல். குத்தல், குத்து: தலைக்குத்தல், மூச்சுக் குத்து. தலைக்குத்துத் தீர்வு சாத்தர்க்கு திருவள். மாலை. குதுகுதுப்பு: குளிர் காய்ச்சல், குதுகுதுப்பாக வருகிறது. குப்புறல்: மயக்கமுற்றுக் குப்புற வீழல். கும்புதல்: செரிமானம் இல்லாதிருத்தல். குமட்டுதல்: ஒவ்வாமையால் குடலிலுள்ள பொருள் வெளியேற எழுதல். குலுக்கல்: குளிரால் உடல்புரட்டிப் புரட்டி எடுத்தல். குழம்பல், குழப்பம், குழறுதல்: ஒருநிலைப்படாத மனநிலை. அச்சத்தால் வாய் வெருவுதல். குளிர்தல்: உடல் குளிரிட்டுப் போதல். குளிர் நளுக்குதல். குளிர் காய்ச்சல். கால் குளிர்தல் கடுவிளைவு. குறுகுறுத்தல்: நரம்புகள் துடித்தல், கண்ணிமை பல்கால் துடித்தல். குன்னுதல்: குன்றுதல், ஓடவோ நடக்கவோ இயலாமல் குன்றிப் போய்க் குந்துதல், குன்னிருமல். கூம்புதல்: முகம் சுருங்குதல், மகிழ்வற்றிருத்தல். கொட்டல்: தேள்கொட்டல், மயிர்கொட்டல், முடிகொட்டல். கொடுகுதல்: குளிரால் நடுங்குதல், புளிப்புணவால் கொடுகுதல். புளித்துக் கொடுகுகிறது. கொடகொடப்பு: வாயில் புளிப்பேறி நீர் சுரத்தல். கொதித்தல்: காய்ச்சலடித்தல், உடம்பு சூடாதல். உடல் கொதிக்கிறதே ம.வ. கொள்ளல்: நீர்க்கொள்ளல். கொன்னல்: திக்குதல் . கொன்னவாய். கோத்தல், கோவை: நீர்கோத்தல், நீர்க்கோவை. சவலை: நலிந்து போதல், உடல்மெலிவு. சிக்கல்: மலச்சிக்கல். சிணுங்கல்: அழுதல், ஓயாது கண்ணீர் வடித்தல். சில்லிடல்: குளிர்ந்து போதல். சிவத்தல், சேத்தல்: அடிபட்டோ, நச்சுயிரி முகர்ந்து பார்த்தோ உடல்சிவத்தல், அடிக்கடி மூக்குச் சிந்துதலால் சிவத்தல். சிறாய்த்தல்: தோல் வழிதல், தோல் உரிதல். சீந்தல்: தடிமத்தால் மூக்குச் சீந்தல். சுண்டுதல்: குருதி குறைதல், நரம்பு சுண்டுதல், சுண்டி இழுத்தல், சுண்டு வாதம். சுரண்டல்: உடல் தினவு போக நகத்தாலோ தகடு போன்றவற்றாலோ சுரண்டுதல். சுளுக்கு: நரம்பு சுளுக்கிவிட்டது. சுற்றல்: தலை சுற்றல். சூடு: காய்ச்சல், வெதுப்பு. சூம்புதல்: கையும் காலும் சூம்பிப் போதல், சிறுத்துச் செயலற்றுப் போதல். சூலம்: சூலம்பட்டுத் துளைத்தல் போல் துளைத்தல். சூலி: வயா நோய், வாந்தி. செருமுதல்: இருமுதல். செயலறல்: சோர்ந்து கிடத்தல். சொக்குதல்: சுறுசுறுப்பின்றி மயக்க நிலையில் கிடத்தல். சொட்டுதல், சொட்டை: தலைமயிர் சொட்டுதல், பகுதி பகுதியாய் மயிர் இல்லாது போதல். சொடக்கல்: நரம்பு விரைப்பை நெகிழ்விக்கச் சுடக்குப் போடுதல். சொத்தை: பல்சொத்தையாகப் போதல். சொரிதல்: தினவு நீங்கச் சுரண்டல். சொருகுதல்: தொண்டைக்குள் உணவு ஒட்டிக் கீழே இறங்காது இருத்தல்; கண்ணிமையைத் திறக்க இயலாமல் மயக்க நிலையில் இருத்தல். சோர்வு: அயர்வாக இருத்தல், அயர்வு - கிளர்ச்சியின்மை. தகதகப்பு, தகிப்பு: எரிபோல் உடல் வெதும்பல். தகை, தகைப்பு: நீர் வேட்கையாய் இருத்தல், தொண்டை வறண்டு கிடத்தல், தண்ணீர்த்தகையாக உள்ளது. தட்டல்: முட்டி தட்டல். தடித்தல், தடிப்பு: புறப்பாட்டால் தோல் தடித்தல். தடிமம்: நீர்க்கொள்ளல். தடுங்கல்: கால் தள்ளாட்டம். தடுமாறல்: கால் தள்ளாடி வீழ்தல். தவித்தல்: தண்ணீர் தவித்தல் நாவறட்சி. தள்ளல்: படபடப்பால் வீழ்தல். தள்ளாடல், தள்ளமாடல்: கால் இடறுதல், மூப்பால் தள்ளமாடுதல். திக்கல்: வாய் பேசத் திணறல். திக்குத் திக்கெனல்: பதறி வெருவுதல், நாடித்துடிப்பு விரைந்து அடித்தல். திடுக்கிடல், திடுக்கீடு: அச்சத்தால் நடுங்கல். திணறுதல்: மூச்சுத் திணறுதல், மூச்சுவிட முடியாமல் முட்டுதல். திரளல்: கட்டி திரளல், கட்டி பழுத்தல். திரும்புதல்: எலும்பு மூட்டில் இருந்து விலகி மாறிக் கிடத்தல். தினவெடுத்தல்: அரித்தல், அரிப்பு. தீதல், தீய்தல்: கரிந்து போதல், தீப்படல். துடித்தல், துடிப்பு: வலம் இடம் துடித்தல், கண்துடித்தல், தோள்துடித்தல். துள்ளல்: நாடி விரைந்து துடித்தல். துளைத்தல்: உடலுள் ஏதாவது பொதுத்துச் செல்லல். தேம்புதல்: அழுது அரற்றுதல், விம்மி அழுதல். தேம்பி அழும் குழந்தை நொண்டி பாரதியார். தேய்தல்: பல்தேய்தல், எலும்பு தேய்தல். தொக்கம்: உண்டது தொண்டைக் குழிக்குள் தொங்குதல். தொக்கம் எடுத்தல். தொற்றல் (தொத்தல்): தொற்று நோய், இயலமாட்டாமை. நசநசத்தல்: வியர்வையால் புழுங்கி நசநசப்பாதல், நசநசத்தல். நீரால் பிசுபிசுத்தல். நசிதல்: அடிபட்டு நைந்து போதல். எழும்பமாட்டாமல் சோர்ந்து கிடத்தல். நசுங்குதல், நைதல்: விரல் நசுங்குதல், விரல் நைதல். நடுங்குதல், நடுக்கம்: குளிர், அச்சம், இழப்பு முதலியவற்றால் உடல் நடுங்குதல். உரை நடுங்கல். நமநமத்தல், நமைச்சல்: மூக்குக் காந்தல், எரிச்சலுண்டாதல். தோல் நமைச்சல் மூக்கு நமநமக்கிறது. நலிதல்: மெலிந்து போதல். நலுங்குதல்: ஆடிப்போதல், ஒடுங்கிப் போதல். நளுக்குதல்: குளிரால் நடுங்குதல், மலம் போவது போல் போக்குக் காட்டிப் போகாது இடர் செய்தல். நறநறப்பு: பற்கடிப்பு. நறநறவெனப் பல்லைக் கடிக்கிறான். நறுங்குதல்: வளர்ச்சி இன்றிக் குன்றிப் போதல். நாச்செற்றல்: பேச வராது நா ஒடுங்குதல். நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் (திருக். 335). நாறுதல்: நாற்றமுண்டாதல், வாய்நாறல். நுரைத்தல்: அச்சத்தாலும், பற்கடிப்பாலும் நுரை தள்ளுதல். நெக்குருகுதல்: உள்ளம் நெகிழ்ந்து உருகுதல். நைதல்: வருந்துதல், நைந்து போதல். நொ: வருந்துதல், நொ துவாம் குறில் ஓரெழுத்து மொழி (நன். 129). நொடி, நொடிதல்: நோய் நொடி. நொம்பலம்: நோவு நொம்பலம். நொய்தல்: குறுநொய் போல் நலிந்து போதல். நோவு, நோதல், நோவுறல்: துன்புறல், நோவுண்டாதல், தலைநோவு, நோக்காட்டில் போவான். பக்குவிடல்: வெடித்தல், புண்ணின் பொறுக்கு எழும்புதல். பசத்தல், பசலை: ஏக்கத்தால் சாம்பல் பூத்து நிறம் மாறல், பசலை நோய் பசப்பு. பஞ்சடைதல்: பார்வை தெளிவற்றிருத்தல். கண் பஞ்சடையு முன்னே. காளமே. தனிப். படபடப்பு: நெஞ்சப் படபடப்பு; பித்தப் படபடப்பு; படக்குப் படக்கென மார்புத் துடிப்பு அடித்தல். படர், படர்தல்: தோல் நோய் விரிதல், தேமல் படர்தல், கண்ணில் மாசு படர்தல். பரண்டுதல்: வயிறு பரண்டுதல், சொறியால் தோல் பரண்டுதல். பருத்தல்: பரு உண்டாதல். பழுத்தல்: சிலந்தி சிறங்கு ஆகியவை நீர் கோத்து முதிர்தல், கண்படலத் திரை முதிர்தலும் பழுத்தலாம். பளபளத்தல்: பழுத்த கட்டி நீர் கோத்தலால் பளபளப்போடு தோன்று தல். பற்று: படை உண்டாதல், நோய் தொற்றுதல். பற்றும் படையும் பற்று - பத்து; பற்றுப் போடுதல். பாரித்தல்: நீலம் பாரித்தல், நீல நிறமாகப் படர்தல். நஞ்சு குருதியில் படர்தலால் உண்டாகும் நிறமாற்றம். பிசுபிசுத்தல்: வியர்வை கொட்டலால் ஈரப்பதனும் நெடியும் இருத்தல். பிடித்தல், பிடிப்பு: தடிமம் பிடித்தல், சுளுக்குப் பிடித்தல், பேய் பிடித்தல், குரக்கை பிடித்தல். பேய் பிடித்திடு தூதரே (சிவப்பிர.). இடுப்புப் பிடித்தல், சே என்றானாம் இடுப்புப் பிடித்துக் கொண்டதாம் என்பது பழமொழி. பிடுங்கல்: பாம்பு பிடுங்கல், பல்லைப் பிடுங்கல். முள்ளைப் பிடுங்கல், ஆணி பிடுங்கல். பிதற்றல்: சஞ்சலத்தால் ஒன்றிருக்க ஒன்று கூறுல். பிளத்தல்: வெயில் மண்டையைப் பிளக்கிறது பிளவையை அறுத்தல். பினாத்துதல்: புலம்புதல். பினைதல்: குடலைப் புரட்டல், செயலற்றுக் கைபினைதல், பினைதல் - பிசைதல். பீச்சல்: வயிற்றோட்டம். வயிறு பீச்சிவிட்டது. பீடித்தல்: பற்றிக் கொள்ளல், பிடித்தல் பீடித்தல். பீறல்: கிழிந்துபடல், வயிற்றோட்டம், குருதிக் குழல் வெடித்துப் பீறுதல். புடைத்தல்: கட்டி திரளல், புடைப்பாதல். புரட்டல்: குடலைப் புரட்டல், தலைபுரட்டல். புரை: கண்புரை. புரையோடல்: குழிப்புண்ணாகிச் சீயொழுகுதல். புலம்பல், புலப்பம்: தனித்துத் துன்புறல். புலம்பே தனிமை தொல். 814 புளைபடல்: புண்படல். புறப்படல், புறப்பாடு: கட்டி தோன்றுதல். பூத்தல்: கண்பூத்துப் போதல், பார்வை மழுங்குதல், நீலம் பூத்தல், மஞ்சள் பூத்தல். பூதித்தல்: பருத்தல். கால் பூதித்துவிட்டது. பொங்குதல்: கண்பொங்குதல், பீளையுண்டாதல். பொடித்தல்: மெய்ம்மயிர் பொடித்தல், மயிர்க்கூச்செறிதல். பொடுபொடுத்தல்: முன்கோபத்தால், செயலாற்றல் பொடுக்கட்டி பட்டப் பெயர். பொடுக்குப் பொடுக்கென வலித்தது. பொத்தல்: பொத்துப் போதல், வாய் பொத்துப் போதல். கால், கை பொத்துப் போதல். பொத்தல் = துளையாதல். பொத்து வழிகிறது. பொத்து > பொந்து. பொதுத்தல்: துளைத்துச் செல்லுதல். முள் பொதுத்தது. பொரிதல்: மேல்சுடல், பொரிக்கிளம்பல், மேல் பொரிகிறது. போக்கு: வயிற்றுப் போக்கு, அரத்தப் போக்கு. போதல்: வயிற்றாலே போதல் (கழிச்சல்). மங்கல்: கண் மங்கல், காது மங்கல். மடங்குதல் (மடக்குதல்): கை கால் மடங்கிவிட்டது மடங்குதல் - முடங்குதல். மதத்தல்: மதம் பிடித்தல், வெறி கொள்ளல். மதமதப்பு: பூச்சிக் கடியால் உண்டாகும் நமைச்சல். மதார் பிடித்தல்: கிறுக்காதல், அமைந்து செயலற்றுக் கிடத்தல். மந்தம்: சுறுசுறுப்பு இல்லாமை, காது கேளாமை அல்லது குறைதல், காது மந்தம், செரிமானம் ஆகாமை. மந்திப்பு: செரிமானம் ஆகாமை. மயக்கம்: உருமாறித் தெரிதல், கண்ணொளி குன்றல், மயக்கமடைதல், ஒன்றைத் துணியாத ஐய நிலை. மரத்தல்: உணர்வற்றுப் போதல், உணர்வு குன்றல். மரத்துப் போதல். மலங்கல்: மயங்கி விழித்தல். மலைத்தல்: மலைப்பு அடைதல், ஆற்றாமை உணர்ந்து ஒடுங்குதல். மழுக்கை: தலைமுடி உதிர்ந்து போதல், மழுக்கை > வழுக்கை. வழுக்கைத் தலை மழித்தலும் நீட்டலும் வேண்டா (திருக். 280). மழுங்குதல்: ஒளி மழுங்குதல், கூர்மை குறைதல். மழுமழுத்தல்; வாய் மழுமழுத்தல், சுவை தோன்றாமை. மாந்தம்: மாந்தியது (உண்டது) செரியாமை. மாந்தம் (தொக்கம்) எடுத்தல். முக்கல்: மூச்சு முட்டித் திணறல். முடக்குதல்: கால் கை செயலறல், முடமாதல். இருகை முடவன் கால் முடம்; கைமுடம். முணகல், முணங்கல்: வெறுப்பால் பொருளற்ற சொற்களைச் சொல்லுதல். முட்டல்: மூச்சு முட்டல், மூச்சுத் திணறல், வயிறு முட்டல். முரிதல், முரிவு: கால் கை முரிதல் எலும்பு முரிவு. மூடல்: கண்ணை மூடுதல், கண்ணை மூடிக்கொள்ளல், இறத்தல். மெலிதல்: ஒல்லியாதல், வலிமை குன்றல். மொடுமொடுத்தல்: வயிறு மொடுமொடுத்தல். இரைச்சலிடல். வடிதல்: சீழ் - சீய் - சீ - வடிதல். நீர்வடிதல். வலி, வலிப்பு: கால், கைவலி, வலிப்பு - கால்கை வலிப்பு, காக்கை வலிப்பு (கொச்சை) வலித்தல் - இழுத்தல், வெட்டல். வழிவு, வழிதல், வழிப்பு: தோல் சிறாய்த்தல். வாங்குதல்: மூச்சு வாங்குதல், மூச்சுத் திணறல். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. விக்கல், விக்குள்: விக்கலுண்டாதல், நீர் வேட்கையால் - வறட்சியால் விக்குதல், விக்கல் நோய். விக்கி இருமா முன் (காளமேகப். தனிப்.) விசும்புதல்: அழுதல். கலங்கி அழுதல். விடல்: பூட்டு விடல், மூட்டுவிடல். விடைத்தல்: நரம்பு விரைத்துப் போதல். விதிர்தல்: நடுங்குதல். வியர்த்தல், வேர்த்தல்: வியர்த்துக் கொட்டும் ஒரு நோய். விரிவு: பித்த விரிவு, பித்த வெடிவு, விரிவு, வெடிவு, வெடிப்பு. விருவிருப்பு: பூச்சிக் கடியால் விறுவிறுப்பேறுதல், வேர்த்து விரு விருத்தல். விரைத்தல்: குளிரால் கால்கை விரைத்துப் போதல், உணர்வற்றுப் போதல். விழுதல்: பூவிழுதல் (கண் படல மறைப்பு), பல் விழுதல். வீங்குதல்: கட்டியாதல், புடைத்தல், பருத்தல், எயிறு வீங்கல், வயிறு வீங்கல். வெட்டு, வெட்டுதல்: புழுவெட்டு, நரம்பு வெட்டுதல், வெட்டி இழுத்தல். வெட்டை: வெள்ளை வெட்டை; வெண்ணிறமாதல், வெண்ணிற நீரொழுக்கு. வெடவெடப்பு: நடுங்கல், குளிராட்டம். வெடிப்பு, வெடிவு: பித்த வெடிப்பு, பித்த வெடிவு, பித்த விரிவு. வெதுப்பம், வெப்பம்: வெப்பத்தால் உண்டாகும் எரிவு நோய். வெதுவெதுப்பு: காய்ச்சல், உடல் வெதும்புகிறது. வெதுவெதுப்பாக இருக்கிறது. வெப்பு: காய்ச்சல், வெதுப்பு. வெலவெலத்தல்: நடுங்குதல், அஞ்சுதல். வெளுச்சி: காதில் சீழ் வடிதல். வெளுத்தல்: அரத்தம் குன்றி நிறமாறிப் போதல். வேக்காடு: வெதுப்பம், வெப்பம். வேதல்: சுடுபடுதல், வேர்த்துக் கொட்டல், வெயில் கொளுத்தல், காற்றில்லாமையால் உண்டாகும் புழுக்கம். நோன்பு: நோன்பு என்பது நோல் என்னும் உறுதிப் பொருள் வழியது. உற்றநோய் நோன்றல், கூற்றம் குதித்தலும் கை கூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு என்பவற்றில் வரும் நோன்பு உறுதிப் பொருளதாதல் தெளிவாம் (திருக். 261, 269). நோன்மை: நோல் = வலிமை; வலிமையைப் பெருக்குவது நோன்பு. ஒரு கொள்கைக்காக வரக்கூடாதவை வந்தாலும் தாங்கி நின்று, கொண்ட கொள்கையில் வெற்றி கொள்வதே நோன்பின் அடிப்படை ஆகலின் இப்பொருள் வளம் புரியும். உண்ணா நோன்பு, உரையாநோன்பு இன்னவை யெல்லாம் பண்டே வழங்கிய நோன்புகளே. வடக்கிருத்தல் என்பது பண்டைப் பெருநோன்புகளுள் ஒன்றாகும். உண்ணாது நோற்கும் நோன்பிலும் இன்னாச் சொல் நோற்றல் சிறப்பென்றார் வள்ளுவர் (160). நௌ: நௌ:1 நகர ஔகாரம்; நெடில்; உயிர்மெய். நௌ:2 நௌ > நா; நௌவல் > நாவல். x.neh.: வௌவால் > வாவல்.  ப வரிசைச் சொற்கள் ப: பகர அகரமாகிய இது வல்லின உயிர்மெய்யில் ஐந்தாம் எழுத்தாகும். குறில். பத்துப் பத்து என்பது பப்பத்து என்றாகும் இடத்தில், பத்து என்பதன் குறியாகப் `ப் அமைகின்றது. தனி எழுத்தாயின் குறிலாத லால் பொருள் தாராது. இருபதில் ஒரு பாகத்தைக் காட்டும் கீழ்வாயிலக்கத்தைக் குறிக்கும் பழங்குறியீடு இஃது என்பது அறியப்படுகிறது (வெ.வி.பே.). பகர வரிசையின் பன்னீரெழுத்தும் மொழிக்கு முதலாகும். பஃகான்: பஃகான் = பகரம். ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉம் எல்லா எண்ணும் சொல்லுங் காலை ஆன்இடை வரினும் மானம் இல்லை அஃதென் கிளவி ஆவயின் கெடுமே உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே - தொல். 199 பஃகான் மெய் = ப். பஃறாரம்: பல் + தாரம் = பஃறாரம். பஃறாரம் = பல்தாரம்; பலபண்டம். எனவே மலைவளன் ஆயிற்று. ஆவன, தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கப்பூரம் சாதியோ டைந்து என இவை (சிலப்: 10:106. அடியார்க்.) தாரம், மணமும் மகிழ்வும் பெறுமானமும் தருவது. தருவது தாரம். பஃறாழிசை: பல் + தாழிசை = பஃறாழிசை. கலிப்பா வகையுள் ஒன்று. அது, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா தாழிசை, கலிப்பா உறுப்புகளுள் ஒன்று. தரவொன்று தாழிசை மூன்று தனிச்சொல் சுரிதகமாய் சிலதாழிசை, பலதாழிசை என்பன மூன்றும், ஆறுமாம் .- யா.கா. 32 பஃறி: பல கட்டைகளை ஒன்றாகக் கட்டி நீரில் மிதவையாக்கப் பட்ட தெப்பம் அல்லது மிதவை பஃறியாம். பஃறி = ஓடம்; ஓடும் நீரில் ஓடுவது. வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி - பட்டினப். 29-30 பஃறுளி: பல் + துளி = பஃறுளி. லகரம் ஆய்தமாயது. எ-டு: பல + தாழிசை = பஃறாழிசை. குமரிக் கண்டத்து ஓடிய ஆறுகளுள் ஒன்று பஃறுளி. பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள - சிலப். 11:19-20 நாஞ்சில் நாட்டில் வள்ளுவன் பொற்றை என்பதன் பகுதியில் ஓடும் பறளியாறு, அப்பஃறுளியாற்றின் நினைவில் பின்னையிட்ட பெயராகலாம். பஃறொடை: பல் + தொடை = பஃறொடை. பஃறொடை என்பது வெண்பா வகையுள் ஒன்றாகிய பஃறொடை வெண்பாவைக் குறிக்கும். இவ்வகை வெண்பாவால் அமைந்த நூல் பஃறொடை என்றும், பஃறொடை வெண்பா என்றும் வழங்கும். மெய்கண்ட நூல்கள் பதினான்கனுள் ஒன்றான போற்றிப் பஃறொடை வெண்பா இவ்வகை சார்ந்தது. உமாபதி சிவா சாரியாரால் இயற்றப்பட்ட அது தொண்ணூற்றைந்து கண்ணி களால் நடக்கின்றது. பஃறொடை வெண்பா ஐந்தடி முதல் பன்னீரடி உயர் எல்லையினது என்பதைக் கடந்து கலிவெண்பாவே போல நீண்டு வளர்ந்த குறிப்பை இதனால் அறியலாம். பலதொடை, பஃறொடை. தொடையாவது தொடுக்கப் பட்ட ஈரடி. தொடை என வழங்கப்படும். காலடிகளையும், தொடுக்கும் மாலையையும் எண்ணுக. தொடுக்கப்பட்டது தொடை. பஃறோல்: பல் + தோல் = பஃறோல். பஃறோல்:1 யானை. மழைமருள் பஃறோல் - மலைபடு. 377 பொருள்: மேகமென மருளும் பல யானைத் திரள் நச். உரை. பஃறோல்:2 பரிசை. மழையென மருளும் பஃறோல் - புறம். 17 பொருள்: திரண்ட முகிலெனக் கருதி மயங்கும் பல பரிசைப் படையினையும் ப.உ. பகட்டு: பல பேரிடையே ஒருவர் இருக்கிறார். அவர் நடை, உடை, பேச்சு ஆகியவற்றில் பிறர்க்கு இல்லாத இயல்பொடு பொருந்தாத ஒரு போலித் தோற்றம் இருக்கக் காண்கிறோம். அந்நிலையில் அவரைப் பகட்டுபவராகச் சொல்கிறோம். அவர் செய்கை அல்லது தன்மை பகட்டெனக் கருதப்படுகின்றது. இயல்பொடு பொருந்தியிருப்பதைப் பகட்டென்பது இல்லை. மிக அருமையான உடையெனின் பளிச்சு என்றிருக்கிறது என்பர். பகட்டாக இருக்கிறது என்னும் வழக்கம் இல்லை. உயரிய அணிகலன்களை அணிதல் பகட்டெனச் சொல்லப்படுவது இல்லை. எடுப்பாக இருக்கிறது என்றே சொல்லப்படுகிறது. போலி அழகே, பிறரினும் தனித்துத் தன்னைக் காட்டிக் கொள்ளச் செய்யும் செய்கையே பகட்டென விளங்குகிறது. பகட்டுதலுக்கு ஆடம்பரங் காட்டுதல், போலிப் பிரகாசம் காட்டுதல், தற்புகழ்ச்சி செய்தல், மயக்குதல், வஞ்சித்தல், கவர்ச்சி ஆகிய பொருள்களை அகராதிகள் தருகின்றன. அனைத்தும் இயல்பல்லா வகை இயல்புகளாக இருத்தல் அறியத் தக்கது. பிறரினின்று தன்னைத் தனியே எடுத்துக்காட்டுதற்காகத் தானே விரும்பிச் செய்வது பகட்டு என்பதை அறியும் நாம் அப்பொருளையே அச்சொல் விளக்குதல் அறிந்து மகிழத்தக்கதாம். பக = பிளக்க; பகவு = பிளவு; பகை = பிரிவு; பகல்= பகுக்கப்பட்டது என்பன போல வரும். சொற்களில் உள்ள பக பகட்டில் இருக்கக் காணலாம். எட்பகவு என்பார் திருவள்ளுவர் (திருக். 889). எள்ளின் பிளவு என்பது பொருள். எள்ளுக்காய் வெடித்தல் போல எனச் சரியான பங்கீட்டுக்குச் சொல்லப்படுதல் நடைமுறைச் செய்தி. எள் மிகச் சிறிது. எள்ளளவு என்பது சிற்றளவைக் குறி. அவ்வெள்ளும் இரு பிளவொன்றிய வித்தேயாம். அதனால், எட்பிளவு எட்பகவு எனப்பட்டதாம். பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் என்பதும் திருக்குறளே (187)! பக + அட்டு = பகட்டு. பிறரின் வேறுபடுத்திக் காட்ட, பிரித்துக் காட்ட அமைத்துக் கொள்வது பகட்டு என்க. அட்டுதல் = அமைத்தல். எல்லாம் பகட்டுக் காண் என்னும் திருநெடுந் தாண்டகமும் (28:236) படர்சடைகள் அவைகாட்டி வெருட்டிப் பகட்ட என்னும் தேவாரமும் (672:2) இச்சொல்லாட்சி வழக்கைக் காட்டுவதுடன் பொருளாட்சியையும் காட்டும். பொதுமக்கள் வழக்கில் ஊன்றியுள்ள சொல் எனினும் அது புலமக்களால் போற்றப்பட்டமையும், அச்சொல் பொருள் பொருந்த அமைந்திருக்கும் சீர்மையும் எண்ணத் தக்கவையாம். பகடு என்பதன் வழி வரும் பகட்டு என்பது வேறு சொல்லாம். உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் உருபேற்கும் நிலையில் பகட்டு என வருதல் கருதுக. வயிறு வலி, வயிற்று வலியும், பயறு நெற்று, பயற்று நெற்றும் ஆவது போல Mங்குப்gகடு,gகட்டுMயதென்க. பகரம்: பகரம் என்பது பதில் என்னும் பொருளில் வழங்கும். இது இலவுவிளை வட்டார வழக்காகும். இவ் வட்டார வழக்குச் சொல்லைப் பாவாணர் எழுத்தில் பொது வழக்குச் சொல்லாகப் பயன்படுத்தினார். வழக்குக்கும் கொண்டு வந்தார். பகர்தல் =கூறுதல்; பதில் கூறுதல் என வந்தது. பகர்ப்புச் சுருள்: மூலப்படி எழுத்தினைப் படியெடுப்பதைப் பகர்ப்புச் சுருள் என்பது குமரி மாவட்ட வழக்கு. உண்மைப்படி, நகல் என்னும் பொதுவழக்கு மற்றை இடங்களில் வழங்கும். பகர்ப்பு என்பது உள்ளது உள்ளவாறு என்னும் பொருளில் ஆளப்படுகிறது. பகர்தல் = சொல்லுதல்; சுருள் என்பது ஓலைச் சுருள் வழியாக வந்தது. பகன்றை: பகல் = கதிரொளி; கதிரொளி போலும் வெண்ணிறப் பூவை உடைமையால் பகன்றை எனப்பட்டது. பகன்றை வெளுக்கப்பட்ட ஆடையைப் போன்றது என்றும், அதனைச் சூடுதல் தலையில் வெளுத்த உடையை அணிந்தது போல்வது என்றும் பதிற்றுப்பத்துக் (76) கூறுகின்றது. பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி பகுபடு பாட்டு: ஒருபாட்டு அதே இனப்பாட்டாகவோ வேறினப் பாட்டாகவோ மூன்றுக்கு மேற்பகுக்கப் படுமாறு அமையு மானால் அது பகுபடுபாட்டு. அவ்வகைப் பாக்களால் அமைந்த நூலும் பகுபடு பாட்டு எனப்படும். ஒருபாட்டு, ஐந்து பாட்டாக அமைந்த நூல் பகுபடு பஞ்சகம் என்று வழங்கப் பெறும். ஐந்தகம் > பஞ்சகம். சிவகந்தன் சீர்மயின் மேற்றிகழ் செய்யும் தினமதொன்றி னவகண்டஞ் சூழினன் றானமின் விஞ்சொண் ணகையிதென்னென் கவலொன்றுங் காலவற் குட்கதி ரெண்முக் கணிறையெஞ்சே யவனங்கங் காணதென் றானரி வந்தித் தனனெழுந்தே என்னும் இக்கட்டளைக் கலித்துறையை, அறுசீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தத்தில் இருவகையாகவும், தரவு கொச்சகக் கலிப்பாவாகவும், கலிநிலைத் துறையாகவும் காட்டப் பெற்றுள்ளதைப் பத்துப் பிரபந்தத்துள் காண்க. (ஐந்தாதி என்னும் பகுபடு பஞ்சகம்). பகுமானம்: பகுமானம் = தனிப்பெருமை; தற்பெருமை. மானம் என்பது பெருமை. பகு என்பது பகுக்கப்பட்டது அல்லது பிரிக்கப்பட்டது. பிறரினும் தன்னைப் பெரிதாக எண்ணிக் கொள்வது பகுமானம் ஆகும். உனக்கிருக்கும் பகுமானத்தில் எங்களை நினைக்க முடியுமா? உன் பகுமானம் உன்னோடு; எங்களுக்கென்ன ஆகப் போகிறது உன் பகுமானத்தை வேறு யாரிடமும் வைத்துக் கொள் என்பன வெல்லாம் பகுமானச் செய்திகள். பகுமானம் என்பது தற்பெருமை, செருக்கு, ஆணவம் என்றெல்லாம் பொதுமக்களால் சொல்லப் படும் வழக்குச் சொல்லாம். பக்கச்சார்பு: நடுவுநிலை தவறி, ஒருதலைப்பட்சமாக ஒருவர் தீர்ப்புக் கூறுதலை ஈழத் தமிழர் பக்கச் சார்பாக அவர் உரைத்தார் என்கின்றனர். ஒருதலைப்பட்சம் (விருப்பம்) என்பது இருபிறப்புச் சொல். ஆனால் பக்கச்சார்பு என்பதோ நற்றமிழ் ஆட்சியாம். பக்கப்பயறு (பக்கப் பயிர்): பாசிப்பயறு என்பது பச்சைப் பயறு ஆகும். பச்சை பாசியாகும். பச்சைப் பாசி என மணிப்பெயர் உண்டு. கிணற்றில் குளத்தில் உள்ள பாசி பசுமை என்பதை அறியலாம். முதன்மைப் பயிரோடு பாசிப் பயிரை ஊடுபயிராகப் போடுவது உண்டு. அதனால் பாசிப் பயிரைப் பக்கப் பயிர் என்றே பழனி வட்டாரத்தில் வழங்குகின்றனர். அப்பயிர் தந்த பயறு பக்கப்பயறு ஆயிற்றாம். பக்கப் பயிர்: விதைக்கப்பட்ட பயிரின் ஊடுபயிராக ஊன்றப்பட்ட பயிரைப் பக்கப்பயிர் என்பது சங்கரன்கோயில் வட்டார வழக்கு. ஊடு பயிர் என்பது பொதுவழக்கு. ஒரு பயிரின் ஊடுபயிராக மூன்று நான்கு போடுவது கொடுமுடி உழவர் வழக்கமாகும். மஞ்சள் பயிரின் ஊடு, துவரை, அகத்தி, உள்ளி என்றும், வெண்டை, கொத்தவரை என்றும் போடுவர். அத்தனைக்கும் ஈடுதர உரமும், நீரும், களையெடுப்பும் காவலும் புரிவர். பக்கப்பாட்டுப் பாடுதல்: பக்கப்பாட்டுப் பாடுதல் = இணைந்து பேசுதல். இருவர் இணைந்து பாடினாலும் பலர் இணைந்து பாடினாலும் ஒருவர் பாடியதாகவே ஆகும். ஆனால், பக்கப்பாட்டு என்பது அவர்கள் பாட்டுக்குப் பின்பாட்டுப் பாடுவதாம். பின்பாட்டுப் பாடுதல் என்பதும் காண்க. ஒருவர் ஒரு கருத்தைச் சொல்லும் போது அவர்க்குத் தொடர்புடைய ஒருவர் தொடர்பில்லாதவர் போல் வந்து நின்று அவர் கூறிய கருத்தை அழுத்தமாக வரவேற்பார்; சான்றும் காட்டுவார். அதனால் அதனைக் கேட்பவர் ஒப்புக் கொள்ள நேர்ந்துவிடும். இதனைப் பக்கப்பாட்டுப் பாடுதல் என்பதும் வழக்கே. பக்கு: பக்கு > பாக்கு. ஒன்று இரண்டாகவோ பலவாகவோ உடைதல் பக்கு, பக்குவிடல் எனப்படும். உடம்பில் உண்டாகிய புண் ஆறினால் தோல் பக்குவிட்டது என்பர். கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும் என்பார் திருவள்ளுவர் (திருக். 1068). கமுகங்காயை இரண்டாகவோ பலவாகவோ பிளந்து பயன்படுத்துவர். அதனைப் பாக்கு என்பர். வெற்றிலையொடு இணைத்துப் பயன்படுத்துதல் அறிந்தது. மனம் சலிப்புற்று மூச்சு இரைத்தல் பக்குப் பக்கென அடித்தல் என்பர். ஒன்றாய் இருந்த பரப்பைப் பகுத்துக் காட்டல் பக்கம் ஆகும். தென்பக்கம், வடபக்கம்; மேல்பக்கம், கீழ்பக்கம்; வலப்பக்கம், இடப்பக்கம்; கைப்பக்கம், அக்கம் பக்கம், அச்சுநூல் பக்கம் என்பவை எல்லாம் வழக்கில் உள்ளவை. பக்கு > பாக்கு > பாக்கம். ஒரு நகரைச் சார்ந்த பகுதி பாக்கம் எனப்படும். காவிரிப் பூம்பட்டினம் சார்ந்ததொரு பாக்கம் மருவூர்ப்பாக்கம். மருவு + ஊர் = மருவூர்; மருவுதல் = சேர்தல்; நெருங்குதல். பக்கவாதம், ஒருபக்கமான தீர்ப்பு, வலுவானவர் பக்கம் ஆகியவும் இத்தகையவே. குதிரையின் முதுகில் இருந்து இறங்கும் இருபக்கக் காலடி தாங்கிகள் பக்கரை எனப்படும். பக்கரை விசித்திரமணி யிட்ட பொற்பலகை - திருப். பங்கு பாகம்: பங்கு= கையிருப்பு, தவசம் முதலியவற்றைப் பிரித்தல். பாகம்= வீடு, மனை, நிலபுலம் முதலியவற்றைப் பிரித்தல். சொத்து நிலைபொருள் என்றும் அலைபொருள் என்றும் இருவகையாம். பங்கு, அலைபொருள் பற்றியது; பாகம் நிலைபொருள் பற்றியது. இவை தாவர சங்கமம் என்று வடமொழியிலும், அசையாப் பொருள் அசையும் பொருள் என்று வழக்குத் தமிழிலும் வழங்கப்படும். பிள்ளைகளுக்குப் பெற்றோர் பங்குபாகம் வைத்துத் தருவது வழக்கம். பசப்புதல்: பசப்புதல் = நயமாகப் பேசி ஏய்த்தல். இல்லாததை இருப்பதாகக் காட்டி, சொல்லாத வகை எல்லாம் சொல்லி, நம்புமாறு நடித்தல் பசப்புதலாக வழங்குகின்றது. நினைவு, சொல், செயல் ஆகிய முந்நிலைகளிலும் ஏமாறச் செய்தல் பசப்புதலாக வழங்குகின்றது. அந்தப் பசப்பெல்லாம் இங்கு வேகாது என்பது ஒரு மரபுத்தொடர். வேகாது என்பதும் வழக்குச் சொல்லே. நிறைவேறாது என்பது பொருள். அவனோடு அவனாகிப் பசைபோல் ஒட்டிப் பசப்பினாலும் வெற்றி பெற முடியாது போகும் இடமும் உண்டு. அத்தகையர் பசப்புதலைக் குறிப்பால் உணரும் திறமிக்கவராம். பசளை: பசுந்தாள் உரமே பயிர்க்கு உயிர் உரம் ஆகும். இயற்கை உரமே இயைந்தது எனச் செயற்கை உரம் செய்த அறிவாளிகள் திரும்பி அல்லது திருந்தியுள்ளது நலமே. ஆனால் பசுந்தாள் உரம் பயிருரம் என்பதைப் பட்டறிவுடைய உழவர் கண்டு பசளை என உரத்திற்குப் பெயர் சூட்டியுளர். இது யாழ்ப்பாண வழக்கு. யாழ்ப்பாண வழக்கு என்பது என்ன? குமரிக்கண்ட ஏழ்பனை நாட்டு வழக்குத்தானே! பசியாறல்: பசித்துக் கிடந்தவன் தன் பசித்தீ ஆறுமாறு உண்ணுதல். ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர் ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர் மேற்றே யுலகின் மெய்ந்நெறி வாழ்க்கை - மணிமே. 11:92-94 பசிப்பிணி என்னும் பாவியது தீர்த்தோர் இசைச்சொல் அளவைக் கெந்நா நிமிராது- மணிமே. 80,81 என்பனவும், பசிப்பிணி மருத்துவன் பண்ணன் என்று பாராட்டப் பெறுவதும் நோக்கத் தக்கன. பசிப்பாழி என்பது உடலுக்கு ஒருபெயர் என்பதும் அறியத் தக்கது. பசுமை: பசுமை:1 பொற்கொல்லர் வழக்கில் பசுமை என்பது வெள்ளியைக் குறிக்கிறது. நிறத்தால் பொருந்தவில்லை. பசுமை வளமைப் பொருளது. அப் பசுமை வெள்ளிக் காசின் பசுமை (வளமை) குறித்ததாகலாம். பசுமை:2 பசுமை = செழிப்பு, செழுமை. பசுமை வண்ணத்தைக் குறியாமல் அதன் செழுமையைக் குறிப்பதாக அமைகின்றது. அந்த நிகழ்ச்சி அல்லது நினைவு பசுமையாக இருக்கிறது என்பது இதனை விளக்கும். பசுமையான இயற்கைச் செடி கொடி மரங்கள், ஊட்டமும் கொழுமையும் மிக்கவை. அதன் வளமை பசுமையாலேயே அறியப்படும். பச்சை இலை, பிடிப்போடு இருக்கும். பழுத்தது உதிரும். தோலுக்குப் பச்சை என்பதொரு பொருள். அது வளமையாம் செழுமையைச் சேர்த்து வைக்கும் இடமாக இருத்தலால் பெற்ற பெயராம். பசுமை, பாசம்: கட்டுக்கிடை நீர்மேல் பசுமையாகத் தோன்றும் அழுக்குப் படலம் பாசி, பாசம் எனப்படும். நீர்மேல் மிதப்பதை அன்றி ஈரக்கசிவு மாறா நிலத்தில் - தளத்தில் - பச்சை நிறத்தில் படிவதும் பாசி, பாசம் எனப்படும். பாசி, பாசம் என்பவை வழுக்கிவிடக் கூடியவை. பசுமை என்பது ஆதி நீண்டு, வேண்டும் திரிபுகளை அடைந்து பாசி ஆயிற்று. மக்கள் வழக்கில் பாசாங்கு என்றொரு சொல் உண்டு. பாசிபோல் குளிர்ச்சியாகத் தோற்றம் தந்து பலவகைக் கேடுகளைச் செய்வது பாசாங்கு எனப்பட்டதாம். பாசாணம் என்பது பச்சை நாவி எனப்படுதலால் அதன் நிறமும் தீமையும் புலப்படும். தாய் குழந்தை மேல் காட்டும் விடாப்பற்றுமை பாசமாம். அக்குழந்தை பச்சைக் குழந்தை, பச்சிளம் குழந்தை, பச்சைப் பிள்ளை என்று வழங்கப்படும். பச்சைப் பிள்ளைக்காரி எனத் தாய் குறிக்கப்படுவாள். அவள் மகப் பெற்ற உடல் பச்சை உடல் எனப்படும். பேசும் பேச்சில் அவைக்குத் தகச் சொல்வதைச் சொல்லாமல் வாய்க்கு வந்தவாறு பேசுதல், பச்சை பச்சையாகப் பேசுதல் எனப்படும். இப்பச்சை நிறத்தைக் குறியாமல் இளமை, அறியாமை, மென்மை என்னும் பொருளில் வருவது. பயிர்பச்சை என்பது இணைச்சொல். பயிர் என்பது தவசம் தருவது. பச்சை என்பது பயறுவகை தருவது. பை + இர் = பயிர். பை = பசுமை. பையன் = இளமையானவன். பைய = மெதுவாக. பையப்பைய = மெதுமெதுவாக, மெல்லென. பையன், பையல் பயல் என வழங்கும். பசன், பசன்கள் எனப் பால் வேறுபாடின்றிச் சிறுபிள்ளைகளை இந்நாள் குறிக்கின்றது. பைதல் என்பது இளமைப் பொருளது. பைங்கண் அரவு கூர்மையான கண்ணுடைய பாம்பைக் குறிக்கும். எண்ணம் மாறாது மறவாது இருப்பது பசுமையான காட்சி, பசுமையான நினைவு எனப் போற்றப்படும். பசளை எனப் பச்சை நிறக்கீரை உண்டு. பசலைக் கன்று என்பது இளங்கன்றைக் குறிக்கும். பச்செனல் பசுமையாம். பச்சைப் பசேர் பச்சைப் பசேல் என்பவை மிகுபச்சை. பச்சம் = பற்று, அன்பு. பச்சிலை, மருந்து. பச்சி = பச்சைக் காய் கொண்டு செய்யப்படும் மாப்பண்டம். பச்சை மிளகாய் = முற்றாமல் வற்றலாகாமல் உள்ள பசுமையான மிளகு அன்ன காரமுடைய காய். பச்சோந்தி = பலவண்ணங்களுள் பசுமையைச் சிறப்பாகக் கொண்டு மாறும் வண்ணங்களையுடைய ஓணான். பச்சைக்கிளி வண்ணத்தால் பெற்ற பெயர். பஞ்சரம், கிளி அடையும் கூடு. பஞ்சரம் விட்டு அகலாது உறையும் அஞ்சொற் கிளிகள் அந்தகக்கவி வீரராகவர் தனிப்பாடல். உயிருள்ள மொழி தமிழ் என்பதன் சான்று இத்தகைய விரிவாக்கச் சொல் வழக்குகளும், விளக்கங்களுமாம். பசை: பசை = ஒட்டிக் கொள்ளல், பசுமை, வளமை. பசை ஒட்டிக் கொள்ளும் தன்மையது என்பது வெளிப்படை. பசை பிசின் எனவும் வழங்குகிறது. பயின் என்பது பழஞ்சொல். பசை பச்சை என்பதன் இடைக்குறையாக வழங்குதல் ஆயிற்று. பச்சை என்பது நீர்மைப்பொருள். ஒட்டிக் கொள்ளும் தன்மையது. அவர் பசையான ஆள் என்னும் பொழுது பணக்காரர் என்பதைச் சுட்டுகிறது. பசை இருந்தால் பக்கம் பத்துப் பேர் என்பதில் பசை என்பது பண வளமையுடன், கொடை வளமையும் சேர்தல் அறிக. பச்சைப் பிள்ளை என்பதில் பச்சை பசைத் தன்மையொடு ஒட்டிக் கொள்ளும் குறிப்புள்ளமை அறிக. பச்சரி: அரி என்பது பழந்தமிழ் வழக்கு. நெல்லையும், நெல் அரிந்த தாளையும், அரிசியையும் குறிப்பது அது. பச்சரிசி என்னும் பொதுவழக்கைப் பச்சரி என விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றனர். பச்சி: சிலர் பச்சி என்பதை பஜ்சி என்பதால் வேற்றுச்சொல் தோற்றம் தருகிறது. நல்ல தமிழ்ச்சொல்லே அது. பச்சைக் காய்கறிகளைக் கொண்ட ஒரு கறி பச்சடி என வழங்குதல் எவரும் அறிந்தது. நாம் சட்டினி என்பதை ஈழத்தமிழர் பச்சுணி என்பர். பச்சைமிளகாய் மல்லித்தழை கறிவேப்பிலை முதலிய பசுமை நிறப்பொருள்கள் சேர்தலால் அப்பெயர் பெற்றது. பச்சையான வாழைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அகத்திப்பூ முதலியவற்றைக் கடலை மாவில் தோய்த்து எண்ணெயில் வேக வைப்பதை அப் பச்சை நிறப்பொருள்களின் சேர்க்கை குறித்துப் பச்சி என வழங்கினர் என்க. பச்சிலை: பசுமை + இலை = பச்சிலை. பசுமையான இலையாதலால் பச்சிலை எனப்பட்டது எனின், பெரிதும் இலை எல்லாம் பசுமையானவையே. ஆதலின், அப்பசுமையுள் சிறப்பொன்று கொண்டமையால் பச்சிலை எனச் சிறப்பித்துக் கூறப்பட்டது. எல்லாவற்றினும் பசுத்திருத்தலில் பச்சிலை என்று பெயர் பெற்றது என்பார் நச். (திருமுரு. 190). பச்சை: பத்துநாள்கள் அடைமழை; தளத்தில் ஈரம் உலராமல் பசுமை கப்பிக் கொண்டது; பச்சைக் கம்பளம் விரித்தது போலாயிற்று. அப் பச்சையைப் பாசம் பிடித்துவிட்டது என்றும் பாசி பிடித்துவிட்டது என்றும் கூறுகின்றனர். தெருவில் கூவிக் கூவிப் பாசி ஊசி என விற்றுப் போகிறாள் ஒருத்தி. அது பசுவானாலும் அதன் பாசத்தைப் பார்த்தாயா? கன்றை நெருங்கும் நாயை என்ன முட்டு முட்டியது? என்கின்றனர். பச்சை காட்டல்: பச்சை காட்டல் = வழி பிறத்தல். பச்சைக் கொடி காட்டல் என்பதும் இது. தொடரி (Train) புறப்படுவதற்கு நிலையங்களில் பச்சைக் கொடி காட்டுவர். பச்சைக் கொடி காட்டிவிட்டால் தடையில்லை, போகலாம் என்பதற்கு அடையாளம். அதுபோல், பெற்றோர் சம்மதித்து விட்டாலும், தனக்கு மூத்த ஆணோ, மணப்பருவம் வாய்ந்த பெண்ணோ உடன்பிறந்தாருள் இல்லாவிடினும் இனி என்ன பச்சைக் கொடி காட்டியாயிற்று; ஏற்பாடு செய்ய வேண்டியதுதானே என்பர். பச்சைக் கொடி காட்டல் தடையில்லை என்னும் பொருளில், வழி பிறத்தலைக் காட்டுவதாம். வீட்டில் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள் என ஒப்புதலால் உவப்பார் மிகப் பலர். பச்சைத் தாள்: பச்சைத் தாள் = நூறு உரூபாத்தாள். ஒருவர் மாட்டை விற்க - வாங்கத் - தாம்பணிக்குப் போகுங்கால், இடைத்தரகர் வாங்குவோர் விற்போர் இடையே வாயால் பேசாது கைவிரலால் பேசுவது வழக்கம். அவர்கள் அதற்கெனச் சில குறியீடுகள் வைத்துளர். சில விரல்களைப் பிடித்து இத்தனை பச்சைத் தாள் என்பர். பச்சைத் தாள் என்பது நூறு உரூபா என்பதாம். கடுவாய்த் தாள் என்றாலும் நூறு உரூபாவேயாம். மற்றை உரூபா தாள்களினும் நூறு உரூபாத்தாள் வண்ணம் வேறுபட்டுப் பச்சையாக இருந்திருத்தல் வேண்டும். இல்லையேல் பச்சை செழிப்பு ஆதலால் வளமான பெரிய தொகையைக் குறித்திருத்தல் வேண்டும். பச்சை பசப்பு: பச்சை = வளமை அல்லது பசுமை. பசப்பு = ஏய்ப்பு அல்லது ஒப்பிதம். பச்சை பசப்புக்காரன் என்று ஏய்ப்பவரைக் குறிப்பர். தம் பசுமையைக் காட்டி ஏய்ப்பாரும், இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஏய்ப்பாரும் என அவர் இருவகையர். அவர் தன்மையை இவ்விணைச் சொல்லால் சுட்டினராம். பசப்புதல் ஏய்த்தல் என்னும் பொருளில் இன்றும் வழங்குகின்றது. பச்சை இப்பொழுது பசையாக வழங்குகின்றது. பசையானவன் என்றால் வளமானவன் என்பதாம். பச்சை பதவல்: பச்சை = சிறிதும் காயாத ஈரம் உடையது. பதவல் = சற்றே காய்ந்து ஈரப்பதமுடையது. பச்சை பதவலை அடைத்து வைத்தால் வெந்து போகும்; பூஞ்சணம் பிடித்தும் போகும்; உலரப் போடு என்பர். உலரப் போடுதல் என்பது ஆலாற்றுதல் எனப்படும். ஆல், என்பது நீர்; ஆல் அகற்றுதல் என்பது ஆலாற்றுதல் ஆயிற்று. நீர்ப்பதம் போக்கல் என்பதாம். பதவல் என்பது மக்கள் பொருளும் தருதல் உண்டு. பதவல் பெருத்துவிட்டது என்பது ம.வ. பஞ்சம்: பஞ்சம் = வற்கடம், வறுமை. பஞ்சு பறப்பது போல் மக்கள் உணவுக்கும் உடைக்கும் உண்ணு நீருக்கும் பிறபிறவற்றுக்கும் பறக்கின்ற நிலை, பஞ்சமாம். இலவின் பஞ்சு பறத்தலைப் பார்ப்பவர் பஞ்சாய்ப் பறத்தலை அறிவர். பஞ்சாகப் புலவர் பறத்தலைப் பாடிய புலவர்களும், அதனைத் தீர்த்த புரவலர்களும் தனிப்பாடல்களில் இடம் பெற்றனர். ஆலாய்ப் பறத்தல் என்பதும் வழங்குமொழி. பஞ்ச லட்சணம் என்பதொரு நூல், பஞ்சத்தால் மக்கள் படும் பாட்டைப் பாடும் சுவைமிக்கது. பஞ்சம் என்பது புதுவழக்கு. பழஞ்சொல் வற்கடம் என்பது. பன்னீரியாண்டு வற்கடம் செல்ல களவியலுரை. தாது ஆண்டுப் பஞ்சம் ம.வ. * ஆலாய்ப் பறத்தல் காண்க. பஞ்சு: பைஞ்சு > பஞ்சு. x.neh.: நைஞ்சு > நஞ்சு. பை = மென்மை; இலவம் பஞ்சில் துயில் (ஔவை. ஆத்தி.) பஞ்சை: கொடிய வறுமைக்கு ஆட்பட்டவரைப் பஞ்சை என்பது ம.வ. பஞ்சத்துக்கு - வறுமைக்கு - ஆட்பட்டவர் என்க. பஞ்சை பரதேசி என்பது இணைச்சொல். படக்கு: வெடி வெடித்தல், வெடி போடுதல் என்பது பொதுவழக்கு. வெடியை வேட்டு என்பதும் பொதுவழக்கே. ஆனால் வேட்டு தீப்பற்றிய அளவில் பட்டென வெடிப்பதால் அவ்வொலிக் குறிப்பைக் கருதிப் படக்கு என்பது குமரி மாவட்ட வழக்காகும். படங்காட்டல்: படங்காட்டல் = பகட்டுதல், நடித்தல். கடுமையாகக் காலமெல்லாம் உழைப்பவர் உழைக்கச் சிலர் குறித்த பொழுதில் வந்து தலைகாட்டி முன்னதாக நின்று மேலலுவலர் பாராட்டைப் பெற்று விடுவதுண்டு. அத்தகையரைப் படங்காட்டுகிற ஆளுக்குத்தான் காலம்; என்ன உழைத்து என்ன பயன் எனப் பிறர் வெளிப்படுத்தும் ஏக்கவுரையால், படங்காட்டுதல், நடித்தல் பொருள் தருவது விளங்கும். படங்காட்டினால் மயங்காதவர் உண்டா? குழந்தைகள் தானா படங்காட்ட மயங்குகின்றனர். எவ்வளவு பெரியவர்கள், படங்காட்ட மயங்கும் குழந்தை நிலையில் உள்ளனர். படந்தால்: படர்ந்த ஆல் > படந்தால். படர்ந்து விரிந்த ஆலமரம் என்னும் பெயர் படந்தால் ஆயது; படந்தால், படந்தால் மூடு என்பவை முறையே நெல்லை, குமரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள். படபடத்தல்: படபடத்தல் = கோவப்படல். கால் படபடத்தல், கை படபடத்தல், நாடித் துடிப்பு, சொல் முதலியன படபடத்தல் வாய், உதடு துடித்தல் இவையெல்லாம் சீற்றத்தின் குறிகள். பித்தப் படபடப்பென ஒரு நோயுண்டு. அப்படபடப்பு மயக்கத்தை உண்டாக்கி வீழ்த்துவது. அதனினும் கொடுமையானது இப் படபடப்பு. ஏனெனில், சிலர் படபடப்பு குடும்பத்தையே கெடுத்ததுண்டு. படமாடம்: ஓவியம் தீட்டி வைக்கப்பட்ட பெருமாளிகை படமாடமாம். படமாடமாக இருந்தவை கோயில்கள் எனவும் வழங்கப்பட்டன. ஆதலால் அவை படமாடக் கோயில் எனப்பட்டன. படமாடம் ஓவியக் கூடம் மட்டுமன்று, ஓவியம் இறையுருவு தீட்டப்பட்டவை. ஆதலால், வழிபாட்டுக்கும் உரியவையாயின. படமாடக் கோயில் என்றே வழங்குவார் திருமூலர் (திருமந். 1857). உயிரிகள் நடமாட்டம் உடைமையால் அவை நடமாடக் கோயில்கள் என அவரால் வழங்கப்பட்டன. படலை: படலை என்பது சீப்பு என்னும் பொருளில் அகத்தீசுவர வட்டார வழக்காக உள்ளது. முடி காற்றில் எழும்பாமல் படிவாக இருக்க மகளிர் தம் கூந்தலில் சீப்பைச் செருகுதல் வழக்கம். அவ் வழக்கத்தில் இருந்து படலை என்பது ஏற்பட்டிருக்கும். படர்ந்து அமைந்தது, படலை. படல்: படர்தல், விரிதல், அகலுதல். தென்னங்கீற்றுகளைப் பின்னியது படல் எனப்படும். அது கூரை வேயும் வகையில் காற்று மழை வெயில் புகாவகையில் வேய் பொருளாகின்றது. படர் > படல். படர்தல் = அகலுதல். படர் கொடி அகலமாதல் - நீளமாதல் - உடையது. துயர் பெருகுதலும் குற்றம் பெருகுதலும் படர் எனப்படும். படருற உளன் உம்பி என்பார் கம்பர் (அயோத் 687). படாஅர்: படர்கொடி, படாஅர் எனப்படும். பாம்புபோல் தோன்றும் தோற்றமமைந்த கொடி பாந்தள் படார் எனப்படுகிறது. நெடிதோடிப் படரும் கொடிபோல் அன்றியும், குத்துச் செடி போல் அன்றியும் குறுகப் படரும் படர்கொடி படாஅர், படார் எனப்பட்டதாம். எ-டு: படராத ஆலமரம் பாடால். படராத அவரை பாடாவரை. படிகம்: தன் முன்னைத் தோன்றும் தோற்றம் தன்னுள் படிய அமைந்தது படிகம். படிகமாவது பளிங்கு. படிவக் கண்ணடி நோக்கினான் என்பார் கம்பர் (அயோத். 26). ஆடி நிழலில் அறியத் தோன்றி - சிலப். பாயி. என்பது பருமையைச் சுருக்கிப் பளிச்சிடக் காட்டும் காட்சிக் குறிப்பு. படிதாண்டாமை: படிதாண்டாமை = கற்புடைமை. படி என்பது வாயிற்படியைக் குறியாமல், ஒழுக்கத்தைக் குறிப்பதாக அமைகின்றது. இல்லையானால் படியைத் தாண்டாமல் யாரால்தான் இருக்க முடியும்? வாயிற்படி மட்டும்தானா படி? ஏணிப்படி, வண்டிகளில் படிக்கட்டு இவற்றையெல்லாம் தாண்டாமல் ஒருவர் வாழ முடியுமா? படி என்பது வழிவழி வந்த ஒழுக்கம். படிமை, படிவம் என்பவை ஒழுக்கம் குறித்தல் அறிக. ஆதலால், ஒழுக்கம் தவறாமை என்னும் பொருளில் வழங்குவதாம். அடுத்தவர் வீட்டுப்படி தாண்டாமை என விளக்குவது பொருந்தாது என்பதை அறிக. அது சிறைகாக்கும் காப்பு; நிறை காக்கும் காவல் ஆகாதாம். படித்தம்: படிப்பு என்பது கல்வி கற்பதைக் குறிக்கும். அது பொதுவழக்கு. குமரி மாவட்டத்தில் கல்வி கற்பதைப் படித்தம் என்கின்றனர். படி என்பது வகுப்பு என்னும் பொருளில் 6 ஆம் படி, 7 ஆம் படி என்பது நெல்லை வழக்கு. படித்தல் படித்தம் எனப்படுதல் சொல்லியல் முறையேயாம். பிடித்தல் பிடித்தம் ஆவது போல். படிப்புரை: படி என்பது வாயில் நுழைவில் இருப்பது. அதற்கு இருபாலும் திண்ணை அமைப்பது பெருவழக்கு. குடிசை வீடு எனினும் கூட அவ் வழக்கம் சிற்றூர்களில் உண்டு. படியின் உயரத்தைக் கொண்டு அதற்கு மேலே உயர்த்திப் போடுவதே திண்ணை அமைப்பாகும். புரை என்பது உயர்வு என்னும் பொருளமைந்த பழஞ்சொல். புரை உயர்வாகும் என்பது தொல்காப்பியம் (785). அப் படி வடிவு மாறாத வட்டார வழக்கு படிப்புரை என்பதாம். இது கல்குள வட்டார வழக்கு. ஒட்டுத் திண்ணை என்பது பொருள். படிமம்: முன்னுள்ள உருவும் ஒளியும் படியக் காட்டுவது படிமம் ஆகும். படி, படிவம் என்பவும் அவை. படிவ உண்டிப் பார்ப்பான் - குறுந். 156 படிவத்தோன் - தொல். பாயி. எத்தனை படிகள் (பிரதிகள்) அச்சிட வேண்டும்? என்பது, அச்சிடல், படியெடுத்தல் பற்றிய தொழிலர் வினவுதலாம். படியளத்தல்: படியளத்தல் = உதவுதல். கூலி வேலை செய்வார் வேலை முடிந்ததும் வீட்டுக்குப் போகும் போது படியால் அளந்து கூலி வாங்கிக் கொண்டு போவது வழக்கம். அற்றை உணவுக்கு அத்தவசம் உதவியாதலால் உழைப்புக்கு உரிய கூலியே எனினும் கொடை போலக் கருதுவாராயினர். அதனால் படியளத்தல் இறைவன் கொடை போலக் கொண்டனர். திட்டிக் கொண்டு கொடுத்தாலும், படியளக்கிற நாயகன் திட்டினால் திட்டிவிட்டுப் போகிறான்; திட்டென்ன அடிக்கவா செய்கிறது? என்பது படியின் இன்றியமையாமையைத் தெரிவிப்பதுடன் வறுமை, சிந்திப்பதையும் கெடுத்துவிட்ட கொடுமையையும் அறியலாம். படிவம்: படிவம்:1 ஒன்றன் சாயல் ஒன்றில் படியுமாறு அமைவது படிவு, படிவம் எனப்படும். ஒரு மூலத்தின் படியே அமைவது படி; படி எடுத்தல் (பிரதி) பொறி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. முன்பு படி எடுத்தவையே நம் ஏட்டுப்படிகளாம். உருவங்களைப் படி எடுப்பது உருப்படிவம். உருப்படிவம் மன்மதனை ஒத்துளர் என்பார் கம்பர் (ஆரண். 329). படிவம்:2 படிவம் என்பது வடிவம் படிந்து நிற்கும் தன்மை. இதனைத் துறந்தார் படிவத்தர் ஆகி என்பதால் (திருக். 586) அறிக. இனிப் படிவம் என்பது நோன்புமாம். நோற்றுப் பட்டினிவிட்டு உண்ணும் உணவைப் படிவ உண்டி (குறுந். 156) என்றும், அவ்வாறு உண்பவரைப் படிவ உண்டியர் என்றும், படிவ நோன்பியர் என்றும் (மணிமே. 5:33, 28:224) கூறுவதால் அறியலாம். பிறர்க்குத் தீமை நினையாமை முதல்நிலை; பிறர் தமக்குச் செய்த தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் அதனின் உயர்நிலை; தீமை செய்தார்க்கும் நன்மை செய்தலும், அவர் தீமை செய்ததன் பயனாக வரும் கேடின்றிக் கடைத்தேறும் வண்ணம் திருவருளை வேண்டிக் கிடத்தலும் அதனினும் உயர்நிலை. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு என்னும் வள்ளுவர் (திருக். 261) காட்டும் படிமத்தைக் காண்க. படிவால்: கால், வால் என்பவை நெடுமை (நீளம்) என்னும் பொருள் தரும் சொற்கள். படி வால் என்பது நீர் ஓடிச் செல்லும் ஓடுகால் ஆகிய ஓடையைக் குறிப்பதாக விளவங் கோடு வட்டாரத்தில் வழங்குகின்றது. படிதல் பள்ளமாக அமைதல். படிறு: படிந்து படிந்து துடைக்கப்படாமல் கெட்டிப்பட்டுப் போன அழுக்குக் கறை போல நீக்குதற்கு இயலாத பழிபாவங்களைச் செய்தல் படிறு ஆகும். பழக்க வழக்க நிலைகளைத் தாண்டி ஒழுக்கமாகவே படிந்து போவதால் அது படிற்றொழுக்கம் எனப் படுவதாயிற்று. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - திருக். 271 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - திருக். 91 படுகிடை: அடுகிடையின் முதிர்வு படுகிடையாம். பாடுகிடத்தல் என்பது இலக்கிய வழக்கு. பாசண்டச் சாத்தர்க்குப் பாடுகிடந்த தேவந்தி செய்தியைச் சிலம்பு கூறும் (9:15) படுத்த படுக்கையாய் உயிரைப் பொருட்டாக எண்ணாமல் கடு நோன்பு இருக்கும் கிடைநிலை அது. * அடுகிடை காண்க. படுகை: படிகை > படுகை = ஒப்புரவான நீர்வள நிலம். காவிரிப் படுகை, வையைப் படுகை என வழங்குகிறோம். இப்படுகை என்பது மேல்வரத்து மண் பள்ளமான பகுதிகளில் படிவதால் ஏற்பட்ட வளமான மேட்டுநிலப் பகுதியே படிகையாய்ப் பின்னர்ப் படுகை ஆயிற்றாம். படிவதால் படிவம், படிகம் என்பனவும் ஆகும். தெற்குப் படுகை, வடக்குப் படுகை என நிலப்பகுதிகள் குறிக்கப்படல் உண்டு. மணற்கல் படுகைகள் நெல்லைக் கடற்பகுதி களில் உண்டு. படுக்காளி: படுக்கை + ஆளி = படுக்காளி = ஒழுக்கக்கேடன். படுக்கை என்பது படுக்கையறை. அதனைவிட்டு வெளியே வராமல் அதுவே தஞ்சமாக இருப்பவன் படுக்காளியாம். இங்கே படுக்கை என்பது, தான் தனித்துப் படுக்கும் சோம்பேறித் தனத்தை அல்லது உறங்குமூஞ்சித் தனத்தைக் குறிப்பதன்று. பால்விழைச்சால் நாளும் பொழுதும் எங்கெங்கும் தேடிக் கிடப்பானைக் குறிப்பதாம். இச்சொல் அவனைக் குறிக்க மட்டும் வழங்குவதன்று; அவளைக் குறிக்கவும் இடம்பெறும். பெரிய படுக்காளி; எப்படி உருப்படும் என்பது இருபாலுக்கும் இயைவதே. படுக்கை: படுக்கை:1 ஒப்புரவாக அமைந்த உறக்கத்திற்குரிய இடம். படுத்தல் கிடைசாய்தல். படுக்கும் இடமும், படுக்கப் பயன்படுத்தும் மெத்தை விரிப்பு ஆயனவும் படுக்கை என வழங்கும். ஓயாமல் படுக்கையில் கிடக்கும் ஒருவன் அல்லது ஒருத்தியைப் படுக்காளி எனல் வசைச்சொல். படுக்கை:2 தெய்வத்திற்கு இடும் படையல் வகையுள் ஒன்றாகச் சீர்காழி வட்டாரத்தில் படுக்கை என்பது வழங்குகின்றது. படுக்கை என்பது புலால் கலவாத படையல் என்பதாம். படுக்கை, பரப்பி வைத்தல் பொருளது. அகன்ற இலைகளில் பரப்பி வைப்பது. ஆனால் குருதிப்பலி என்பதோ கொட்டிப் போவது. ஆதலால் படுக்கை அஃதில்லாத படையல் பொருள் கொண்டது. படுசாவு: படுகிடை என்பது நெடுங்காலம் படுத்துக் கிடக்க வைக்கும் நோய் ஆகும். அவ்வாறு சாவும் சாவு திடுமென்று குத்து, வெட்டு, நேர்ச்சி, வீழ்ச்சி, சுருக்கிடல் என்பவை இல்லாமல், இயல்பாகச் சாவும் சாவாம். ஆதலால், சீர்காழி வட்டாரச் சொல்லாகப் படுசாவு என்பது இயல்பாக இறக்கும் இறப்பைக் குறித்து வழங்குகின்றது. படுத்துவிடுதல்: படுத்து விடுதல் = செயலற்றுப் போதல். ஓடுதல், நடத்தல், இருத்தல், படுத்தல் என்பவை ஒன்றில் ஒன்று சுருங்கிய இயக்கமாம். நன்றாக ஓடுகிறது; சீராக நடக்கிறது; ஏதோ நடந்து கொண்டிருக்கிறது; தொழில் படுத்துவிட்டது என்பவை படிப்படி இறக்க நிலையாம். படுத்தல் என்பது உறக்கப் பொருளது. உறங்குவது போலும் சாக்காடு (திருக். 339) என்பது போல் முழுதாகப் படுத்துவிடுவதும் உண்டு. செயலற்றுப் போய் முற்றாக முடிந்துவிட்ட நிலையாம் அது. படுப்பனை: படுக்கும் இடம் என்னும் பொருளில் திட்டுவிளை வட்டாரத்தில் படுப்பனை என்னும் சொல் வழங்குகின்றது. கொள்வது கொள்வனை எனவும், கொடுப்பது கொடுப்பனை எனவும் வழங்குவது போலப் படுப்பது படுப்பனை ஆகியதாக இருக்கும். படைக்கால்: உழுவார் பாத்தி கட்டுவதற்குச் சால் அடிப்பது (ஆழமாக உழுவது) உண்டு. அது படைச்சால் எனப்படும். அப் படைச்சால் ஒன்றன் இருபக்கங்களிலும் வரப்பு அமைத்து நீரோடும் வாய்க்கால் ஆக்குவது வழக்கம். அவ் வாய்க்கால் சாலுக்கு இருப்பக்கமும் உள்ள சால்களை வரப்புகள் ஆக்கிப் பாத்தி கட்டி நீர்விடுவர். அந் நீரோடும் படை வாய்க்காலை படைக்கால் என்பது திருமங்கல வட்டார வழக்கு. படைச்சால்: படை என்பது உழுபடையாம் கலப்பை அல்லது ஏர். அதில் பல ஏர் எனினும் ஓர் ஏர் எனினும் பாத்திகட்டும் அளவு இடம்விட்டுச் சாலடித்து அச்சாலுழவுக்கு உள்ளாக உழுவர். அச்சால் ஆழ உழவாக இருக்கும். அச்சாலே இரண்டு பக்கப் பாத்திக்கும் நீர் செல்லும் வாய்க்கால் வரப்பு ஆக்கப்பயன் படுத்துவர். சாலடித்தல் என்பது தனியே செய்வதும் உண்டு. சால் = மிகுதிப் பொருள் தருவது. இவண் உழவின் ஆழ மிகுதி குறித்தது. படைத்தல்: நடுகற்கும் இறைவர்க்கும் இல்லுறை தெய்வத்திற்கும் சோறு முதலியன படைத்து அவிப்பொருளாய் உண்பித்தல். சோறு முதலியவற்றைப் பரிகலம், உண்கலம் முதலியவற்றில் இடுதல் படைத்தலாம். பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்னும் வீரநிலைப் பழமொழி, பிற்றைக் காலத் தமிழர் வீழ்நிலைப் பழமொழியாய் வழங்குவதாம். படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணல் படைத்தல் வினையை உணர்த்துவது. படைத்தல் உணவு பல்வகைப்பட்ட பெருஞ்சோற்றுத் திரளை என்பது கருதுக. படைப்பு: படைபடையாக - அடுக்கடுக்காக -த் தட்டை தாள்களை அடுக்கிக் கால்நடைகளின் தீனிக்காகச் சேமிப்பது உண்டு. அவ்வாறு சேமித்து வைக்கும் சேமிப்பிடங்கள் படைப்பு என்று வழங்கியது. இப்பொழுது படப்பு என வழங்கப் பெறுகிறது. வீட்டின் கொல்லைப் புறங்களில் படப்பை வைக்கப் பெற்றமை யால் கொல்லைப் புறத்தோட்டமும் படைப்பை என வழங்கலா யிற்று. இம்முறை சங்கச் சான்றோர் நாளிலேயே வந்துவிட்டது. படைப் போர்: நபிகள் நாயகம் பங்கு கொண்ட போர்கள் தொடர்பாக எழுந்த இவ்விலக்கிய வகை, பின்னே சமயப் போர் தொடர்பாக வளர்ச்சியுற்றது. படைப் போர்களில், இறவு சுல் கூல் படைப் போர் புகழ் மிக்கது. காப்பிய இயலாய் இயல்வது. ஐந்து போர்களைப் பற்றித் தொடர்ந்துரைக்கும் படைப் போர் ஐந்து படைப் போர் என்பது. படைப் போர் கண்ணிகளால் அமைந்தது. இசுலாமியக் கொடையாக எழுந்தது படைப் போர் இலக்கியம். * சண்டை காண்க. படையல்: புத்தக உருவாக்கமாயபின், அப் புத்தகத்தைப் படைத்தவர் அல்லது பதிப்பிப்பவர் அதனைத் தாம் விரும்பும் பெற்றோர், உதவினோர் முதலாம் எவர்க்கேனும் படையலாக்குதலாகிய வழக்கம் புதியதாம். இந்த நூல் இவர்க்குப் படையலெனக் குறிப்பிடலும் அவர் படம் வரலாறு முதலியவை பதிவு செய்தலும் பெருவழக்காயிற்று. அவர் நேரில் வாழ்பவராக இராமல் நெஞ்சில் வாழ்பவராக இருப்பார். நேரில் வாழ்பவர் எனின் அவர் காணும் பேற்றால் காணிக்கை எனல் முறை. ஆனால் படையலும் காணிக்கையும் ஒப்பவும் வழங்கலாயின. படையல் போடல்: படையல் போடல் = தெய்வப் படையல், உழையாத் தீனி. படைத்து வைப்பது படையல் ஆகும். சோறு, கறி, பண்டம் ஆகியவற்றைத் தெய்வப் படையலாகப் படைப்பது வழக்கம். அது படைப்பு என்றும், படைப்புப் போடல் என்றும் இறந்தவர் நினைவு நிகழ்வில் இடம்பெறும். இத் தெய்வப் படையலும், இறந்தவர் படைப்பும், விரும்பாமல் போடும் சோற்றுக்கும் குறியாக வந்தது. உழையாமல் இருந்து வெட்டிச் சோறு தின்பார்க்கு, உனக்குப் படையல் போட்டிருக்கிறது; போ என்று இகழ்வாகச் சொல்லி உண்ணச் செய்தலைக் காணலுண்டு. இதுகால் நூல்களை நினைவுப் படையலாக்குவது வழக்கில் உள்ளது. படையெடுத்தல்: படையெடுத்தல் = கூட்டமாக வருதல். வீரர்கள் போருக்குச் செல்லல் படையெடுப்பாகும். ஆனால், படையெடுத்தல் என்பது போருக்குச் செல்லுதல் என்னும் பொருளின் நீங்கிக் கூட்டமாகப் போதல் என்னும் பொருளில் வழங்குவது உண்டு. எறும்பு படையெடுத்துப் போகிறது; ஈ படையெடுத்துப் போகிறது என்பவை கூட்டமாகப் போதலைக் குறிக்கும் படையெடுப்பு. குழந்தைகள் கூட்டமாக வருதலைக் குழந்தைகள் படையெடுத்து எங்கே வருகின்றன என்பதும் வழக்கே. படைதிரண்டு வருதல் என்பதும் இதுவே. படைவனப்பு (தளசிங்காரம்): வேந்தனொருவன் வியப்புற உலாச் செல்வதை விரித்துக் கூறி, இவன்றன் படைத்திற ஆண்மையைப் பாராட்டல் தள சிங்காரம் எனப்படும். தளம் - படை. கோட்டை கொத்தளம் என்னும் இணைமொழி, கோட்டையும் கொல்தளமாம் படையுமாம். கொல்தளம் - கொற்றளம் - கொத்தளம். கொந்தள அரசர் தந்தளம் இரிய - பெருந். 799 என்பது முதற்குலோத்துங்கன் மெய்க்கீர்த்தி. வேட்டைப் பவனி விரித்துரைத்துச் சேனைமிடல் காட்டல் தளசிங்கா ரம் - பிர. திர. 46 இரகுநாத சேதுபதியின் மேல், தள சிங்கமாலை என்ப தொரு நூல் அழகிய சிற்றம்பலக் கவிராயரால் இயற்றப் பட்டது. அது கட்டளைக் கலித்துறையால் ஆகியது. படைவீட்டுப் பதிகம்: படை என்பது கருவி என்னும் பொருளது. கலப்பை உழுபடை என்றும், அது செல்லும் சால், படைச்சால் என்றும் வழக்கிலுள்ளதை அறிந்தால், பொதுவில் கருவிப் பொருளதே படை என அறியலாம். எனினும், படை போர்க்கருவிகளைக் குறித்தலே பெருவழக்காயிற்று. படைக்கருவிகள் வைக்கப்பட் டுள்ள சாலை படைக்கலக் கொட்டில் என்று பண்டு வழங்கப் பட்டது. ஆயுத சாலை என்னும் வழக்கு வருமுன்னே தமிழ் வழக்கில் இருந்தது, படைக்கலக் கொட்டிலே. படை வழிபாடே ஆயுத பூசைக்கு முன்னோடி. இனிப் படைக்கலம் என்பதும் தன் பொதுமை நிலையில் இருந்து வேல் என்பதைக் குறிக்கும் நிலை யுண்டாயிற்று. போரில் சிறந்த போர், யானைப் போர்; முயலை எய்ய அம்பும், யானையை வீழ்த்த வேலும் வீரர் கொள்வர். ஆகலின், கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என வள்ளுவம் (திருக். 772) பேசிற்று. வேல், வீரன், கையதாம் கருவி. வீரருள் தலையாய வீரனாகச் செவ்வேள் மதிக்கப்பட்டான்; அவனே வேந்தனாகவும், இறைவனாக வும் கொள்ளப்பட்டான். அவன் கை வேற்படை மெய்வழி பாட்டிற்கு உரியதாயிற்று. வழிபாட்டுக்காகப் படை நிறுத்தப்பட்ட இடமே படைவீடு எனப்பட்டது. படை வழிபாடே, முருக வழிபாடாகவும் படையும் முருகனும் இணைந்த வழி பாடாகவும் இயலலாயிற்று. படைவீடு என்பதற்கு விளக்கச் செய்தியே இது. முருகன் வேற்படை வழிபாடு உடைய இடங்கள் எல்லாமும் படைவீடுகள் தாமே! அப் படைவீடுகளுக்குப் பாடப்பட்ட பதிகங்கள் படைவீட்டுப் பதிகங்களாம். எத்தனை இடங்களுக்குப் படைவீட்டுப் பதிகங்கள் பாடியுள்ளார் ஒருவர்? அவர் எவர்? அவர் முருகனடி என்னும் தண்டபாணியடிகளார். அவர் பாடிய படைவீட்டுப் பதிக இடங்கள் அவலூர், இலஞ்சி, உடுப்பி, எட்டுக்குடி, குன்றக்குடி, சத்திமலை, சிவமலை, சோமாசி பாடி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருவேரகம், திருத்தணிகை, திருவரிப்பாடு, திருவேங்கடம், திருப்போரூர், நட்சத்திரமலை, பழனி, பழமுதிர்சோலை, பெரும்பேறு, மயிலம், வள்ளிமலை, வாசகிரி, விராலிமலை, வேலுடையான் பட்டினம், வேள்விமலை என்பனவாம். பட்டசாமி: போரில் இறந்து பட்டாரைப் பழநாளில் பட்டோன் என்பது வழக்கம். பட்டோனுக்குக் கல்லெடுத்து வழிபடுதலும் வழக்கம். இவ்வழக்கம் மதுரை மேலூர் வட்டார வழக்காகப் பட்டசாமி என வழங்குகின்றது. பட்டசாலை: ஒளிவிளக்கம் அமைந்த பெரிய இடம், பட்டசாலை. பெரும்பாலும் படிக்கவும் பலர் இருந்து கேட்கவும் கூட்டம் கூடவும் அமைக்கப்பட்ட இடம் பட்டசாலை. தட்டு முட்டுப் பொருள்களோ பிறபொருள்களோ பூட்டி வைக்கும் பாதுகாப்புப் பொருள்களோ பட்டசாலையில் இரா. செல்வர் வீடுகளில் அமைக்கப்படும் வழக்குடையது அது. கதிரொளி படும் வகையில் ஊடு இடைவெளி உடையதாய் நாற்புறமும் தாழ்வாரம் உடையதாய் விரிவுமிக்கதாய் உள்ள இடம் அது. பட்டடை: கொல்லர் உலைக்களத்து உலைக்கல், இரும்புத் துண்டம். உலையில் காய்ந்த இரும்பை வைத்து அடிக்க உதவும் கல் அல்லது இரும்புத் துண்டம், பட்டடை. சம்மட்டி பட்டு அடைதற்குப் பயன்படுதலால் பெற்ற பெயர். பட்டுதல் அடித்தல் எனப்பொருள் தரவும் ஆயது. பட்டடை என்பதைப் பட்டறை என வழங்குதல் பிழை. ஒட்டு அடை (ஒட்டடை) ஒட்டறை என வழங்கப்படுவது போன்ற பிழைவழக்கு. எறிதற்குப் பட்டடை என்பது வள்ளுவம் (திருக். 821). எறிதல் = அடித்தல், அறைதல். பட்டடைக்கல் = கொல்லர் உலைக்களத்து அமைந்த அடிக்கல். பட்டடைப் பலகை = கிணற்றின் ஏற்றத்தில் அமைந்தசட்டம் .= வண்டியில் அமைந்த பாவு பலகைகள். = கடைகளை மூட அமைந்த பலகைகள். பட்டடை வார் = மாட்டுக் கழுத்தில் அமைந்த பூட்டுவார். பல பட்டடை = பட்டியலிட்டு எழுதும் கணக்குவகை. பட்டடைக் கணக்கர் பட்டடைக் கணக்கு = பல பட்டடைச் சொக்க நாதப் புலவர். பட்டணம்: பட்டணம் = நாகரிகம். பட்டணம், பெருநகர். ஆங்கு, ஆள்வோர், செல்வர், கற்றோர் ஆகியோர் வாழ்ந்தமையாலும், அவர்கள் வளமான வாழ்வும், பொழுது போக்கும், கலைத்திறமும் சிறக்க வாய்ப்புகளை அமைத்துக் கொண்டமையாலும் பட்டணம் என்பது நாகரிகக் களமாக மதிப்புப் பெற்றது. பட்டணத்தான் உடைநலத்தோடும், பூச்சு புனைவு களோடும், பட்டிக்காட்டார் புரியாத மொழியோடும் சென்ற போது, அவர்களைக் கண்ட சிற்றூரார் பெருத்த நாகரிக முடையவர் எனவும், வேறோர் உலகத்திலிருந்து வந்தவர் எனவும் அறியாமையால் மதிப்பாராயினர். அதனால் பட்டணம் நாகரிகம் எனப்பட்டது. பட்டணம், பட்டினம்: பட்டு + அண் + அம் = பட்டணம். பட்டி என்னும் சிற்றூர்ப் பெயர், பட்டு எனவும் பட்டது. எ-டு: செங்கற்பட்டு (செங்கழுநீர்ப்பட்டு). பட்டுகள் பல அடுத்தடுத்தமைந்து பேரூராக அமைந்தது பட்டணம் எனப்பட்டது. அண்ணுதல் நெருங்குதல். அணுமை அணிமை அண்மை என்பவை பக்கமாயவை. அணுக்கம் நெருக்கம். அணுக்கத் தொண்டர்; அண்மை விளி என்பவை அறிக. பட்டு + இனம் = பட்டினம். இனம் = கூட்டம். குப்பம் குப்பமாகத் தனியே தனியே அமைந்து இடைவெளி யுறப் பெரும் பரப்பாகியது பட்டினம். பட்டணம், உள்நாட்டுப் பெருநகராகவும்; பட்டினம், கடற்கரை வளாகப் பெருநகராகவும் பண்டே வழங்கப்பட்டன. எ-டு: காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், காயல்பட்டினம். பட்டினம் போல் பட்டணப் பெயர் வழங்கிற்றில்லை. சென்னைப் பட்டினம் என்பதையே சென்னைப் பட்டணம் என்றனர். பட்டணம் என்பதை நகரும், மாநகரும் கவர்ந்து கொண்டன. பட்டம்: பட்டம்:1 பட்டுத் துணியால் செய்யப்பட்டுக் காற்றில் பறக்கவிட்ட தால் பட்டம் எனப்பட்டது. பட்டுத் துணியில் எழுதித் தரப்பட்ட தகுதிச் சான்றிதழ் பட்டம் எனப்பட்டது. பட்டப் படிப்புப் போன்ற ஒரு படிப்புச் சான்றிதழ் பட்டயம் எனப்பட்டது. பட்டுத் துணியைத் தலையில் சுற்றி வரிந்து கட்டுதல் பட்டம் கட்டுதல் ஆயிற்று. சுற்றிக் கட்டும் பட்டம் போல் சுழன்று வரும் காலம் பட்டம் எனப்பட்டது. எ-டு: தைப்பட்டம்; மாசிப்பட்டம். பட்டில் எழுதிய ஓவியம், பட்டம் > படம் ஆயிற்று. * பட்டொளி காண்க. பட்டம்:2 மேலே விடும் பட்டமோ, படிப்பால், பெருமையால் பெறும் பட்டமோ இல்லாத பட்டம் இது. பட்டம் என்பது பருவம். பட்டம் தவறின் நட்டம் என்பது பழமொழி. நெற்றியில் பட்டம் கட்டுதல் திருமணக் கரணமாக உள்ளது. பயிரின் ஊடே பட்டமடித்தல் (ஊடடித்தல்) உழவர் வழக்கம். இவை பொது வழக்காயவை. பட்டம் பதவி: பட்டம்= படிப்பு - திறமை - தகுதி. பதவி = படிப்புத் திறமையால் அடையும் பணித்தகுதி. பட்டம் = துணி; துகிலில் பொறித்துத் தரப்பட்ட சிறப்புத் தகுதி பட்டம் எனப்பட்டது. பின்னே படிப்புச் சான்றிதழாக வழங்குபவற்றுக்கு வளர்ந்தது. பதவி = மேனிலை; உயர்வின் திரட்சி நிலை அது. அதிகாரம் செலுத்தும் பெருநிலையாய் அமைந்தது. பட்டம் பதவியிருந்தால் மதிப்புத் தானே தேடிவரும் என்பது வழக்குரை. பட்டவாளி: ஒருவரைப் பாராட்டும் உரையாகப் பட்டவாளி என்பது சிவகாசி வட்டார வழக்கு. வில்லாளி, வேலாளி, அறிவாளி என்பவை போலப் பட்ட ஆளி, பட்டவாளியாம். பட்டம் பெற்றான் போன்ற அறிவாளன் என்பதாம். பட்டவாளி எனின் கெட்டிக்காரன் என்பது பொருள் (ம.வ.). பட்டவிருத்தி: வெட்சி கரந்தை முதலாம் போர்களுக்குச் சென்ற வீரன் போர்களில் பட்டு இறந்தானாகக் கல்லெடுத்து வழிபடலொடு அவன் குடும்பத்தார் வாழ்வுக்கு வழியாம் வகையில் நிலபுலம் அரசால் வழங்கப்படுதல் பட்ட விருத்தியாகும். பட்ட என்பது இறந்துபட்ட என்னும் பொருளது. பட்டவிருத்தி ஊர்ப்பெயராகவும் வழங்கும். குடந்தை சார்ந்ததோர் ஊர் பட்டவிருத்தி. பட்டவர்த்தி என வழக்கில் உள்ளது. பட்டாங்கு: ஒருவர் தம் கருத்தில் பட்டது எதுவோ அதனைப் பட்டவாறு உலகவர் அறியுமாறு எழுதிவைக்கப்பட்ட நூல் பட்டாங்கு என்பது. சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையில் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி என்பது ஔவையார் பாட்டு. பட்டாரியர்: ஆரியர் என்பார் பார்ப்பனர். அவரைப் போல் நூல் அணிந்த சௌராட்டிரர் (பட்டு நூல்காரர்) தம்மைச் சௌராட்டிரா பிராமணர் என்பர். அவரை விளவங்கோடு வட்டாரத்தில் பட்டாரியர் என வழங்குகின்றனர். மதுரையில் பட்டுநூல்காரர் என்பர். பட்டி: பட்டி:1 பள்ளமான வயல் நிலத்தும் நெய்தல் நிலத்தும் அமைந்த ஊர் பட்டு. செங்கழுநீர்ப்பட்டு, மதகடிப்பட்டு. பள் + து = பட்டு. பட்டு + இ = பட்டி. சிற்றூர். ஆடு மிக வளர்க்கப்படும் சிற்றூர் பட்டி. பட்டி:2 பட்டி = சிற்றூர், மடித்துத் தைத்தல். இவை பொதுப்பொருள். பட்டி என்பதற்கு நாய் என்னும் பொருள் விளவங்கோடு வட்டார வழக்கில் உள்ளது. பட்டி என்பது ஆடு அடைக்கும் அடைப்பு. அது வைக்கப்பட்டு ஆட்டை அடைத்தாலும் மேலும் காவலாக நாயை வைப்பதால் அதுவும் பட்டி எனப்பட்டது. பட்டியைக் காத்தலால் பெற்றபெயர். பட்டிக்காடு: பட்டிக்காடு = நாகரிகம் இல்லாமை. நகரத்திலிருந்து நாகரிகம் வந்தது என்பது மேலை நாட்டு முறை. சிற்றிசன் என்னும் ஆங்கிலச் சொல்லும் சிற்றி என்னும் நகரில் இருந்து வந்ததே. ஆனால், பழங்காலத் தமிழ் நாகரிகம் புறப்பொருள் வளர்ச்சி கருதாமல் அகவுணர்வு கருதியே வழங்கப் பெற்றதாம். படித்தவர்களும், செல்வச் செழிப்பானவர்களும், ஆளும் பொறுப்பாளர் களும் நகரத்தில் வாழ்ந்ததாலும் அல்லும் பகலும் உழைப்பவரும் நிலத்தை நம்பி வாழ்பவர்களும் பட்டிகளில் வாழ்ந்தமையாலும், அவர்களுக்குக் கல்வி என்பது கைக்கு எட்டாப் பொருளாகப் படித்தவர்களும் பதவியாளர்களும் மேட்டுக்குடியினரும் செய்துவிட்டமையாலும், பட்டிக்காடு என்பது நாகரிகம் இல்லாமைப் பொருள் தருவதாயிற்று. பட்டி தொட்டி: பட்டி தொட்டி என்பவை சிற்றூர்ப் பொதுப்பெயர்கள். ஆடுகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் அடைப்பு பட்டி எனப்படும். அதனால் ஆடுகள் நிரம்ப வளர்க்கப்பட்ட ஊரைப் பட்டி என வழங்கிப் பின்னர்ப் பொதுப் பெயராய்ச் சிற்றூர்களைக் குறிப்பதாயிற்று. தொட்டி என்பது மாடுகள் நீர் குடிப்பதற்குச் செய்து வைக்கப்பட்ட கல்குடைவு; பின்னே சுடுமண்ணால் செய்யப்பட்ட அவை மண்ணில் புதைத்து வைக்கப்பட்டன. அவை குழி தாழி எனப்பட்டன. மேலே வைக்கப்பட்டவை குடிதாழி எனப்பட்டன. இரண்டும் மாறி இக்காலத்தில் குழுதாடி என மக்கள் வழக்கில் உள்ளது. தொட்டிகள் நிறைந்த ஊர் தொட்டி எனப்பட்டுப் பின்னர்ப் பொதுப்பெயராய்ச் சிற்றூரைக் குறித்தது. ஊரெல்லாம் பட்டி தொட்டி என்பது தனிப்பாடலில் ஓரடி. பட்டியல் கல்: வீட்டு முற்றங்களில் பட்டியல் கல் போட்டு, இருத்தலும் படுத்தலும் நாட்டுப்புற வழக்கு. பட்டையான கல், பட்டியல் கல். அகலமும் நீளமும் உடையது. திண்ணைக்கு ஒப்பாக அமைக்கப்படுவது. பட்டி, பட்டை, பட்டயம், பட்டம், பட்டியல் என்பனவெல்லாம் ஒருவழிச் சொற்களே. இது நெல்லை, முகவை வழக்கு. பின்னவை, பொதுவழக்குச் சொற்கள். பட்டியாள் நேரம்: இரவு பத்து மணியைப் பட்டியாள் நேரம் என்பது கொங்குநாட்டு வழக்கு. பட்டி ஆள் என்பது கிடை போட்டுக் காக்கும் ஆயர். அவர்கள் ஆடுகளைப் பட்டியில் விட்டுவிட்டுச் சமைத்துண்ணச் செல்வர். சென்று சமைத்து உண்டு பின்னே காவல் பார்க்கப் பட்டிக்கு வருவர். அந் நேரம் குறித்த சொல்லாட்சி இது. பட்டு: கதிர், பதிவான அல்லது பள்ளமான அல்லது மறைவான ஓர் இடத்தில் இருந்து மேலே ஒளியுடன் வெளிப்பட்டது. அவ்வொளி பட்டொளி எனப்பட்டது. அவ்வொளி பட்ட இடங்கள் எல்லாமும் பட்டொளி செய்தன. கதிர் வெளிப்பட்ட பகல், பட்டப்பகல் எனப்பட்டது. பட்டப்பகல் வட்டத் திகிரியின் இரவாக என்பது திருப்புகழ். பட்டொளி போல் விளங்கிய நூல் பட்டு எனப்பட்டது. அதனைத் தந்த புழு அல்லது பூச்சி, பட்டுப்புழு, பட்டுப்பூச்சி எனப்பட்டது. பட்டில் பட்டுத்துணியில் எழுதித் தரப்பட்ட விருது பட்டம் எனப்பட்டது. பட்டயம் என்பதும் பட்டத்தில் குறைந்த விருது ஆயது. பட்டுத் துணி - தாள் - கயிறு ஆயவற்றால் அமைத்துக் காற்றில் பறக்கவிட்ட விளையாட்டுக் கருவியும் பட்டம் எனப்பட்டது. பட்டம் விடுதல் ஒரு விளையாட்டு. பட்டு + அம் = பட்டம். பட்டம் என்பது ட் என்னும் ஒற்றுக் கெடப் படம் ஆயது. பட்டுத் துணியில் எழுதியமையால் அப் பெயர் பெற்றது. அரசு விடுக்கும் செய்திகள் பட்டுத் துணியில் எழுதிவிடுக்கப் பட்டமையால் பட்டோலை எனப்பட்டது. எழுதுவோன் பட்டோலையான் எனப்பட்டான். பட்டோலை வாசியா நின்றான் என்பது தனிப்பாடல். நீட்டோலை = தரப்பட்ட பட்டோலை. படம் படாம் ஆகும். அது போர்த்தும் போர்வைப் பொருளது. உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக் களித்த எங்கோன் கடாஅக் கழற்கால் பேகன் என்பது புறநானூறு (141). படாம், விரிதல் பொருளால் படாகை, பதாகை எனப்பட்டது. அது கொடி என்னும் பொருளதே. பட்டொளி வீசிய கதிர் மறைந்தது. அது மறைபட்டுப் போயிற்று. பட்டுநூல் தந்த பூச்சி அந்நூலைத் தந்து பட்டுப் போய்விட்டது. தோன்றுதல் பொருள் தந்த பட்டு, மறைதல் பொருளும் தருவதாயிற்று. பயிர் பட்டுப் போனது என்பது இறந்து போனது மடிந்து போனது என்பதாம். மரம் பட்டுப் போனால் பட்டமரம்! விளையாட்டில் ஒன்று சடுகுடு; அதில் ஊடே மூச்சுவிட்டுப் பாடினால் பட்டுப் போனான் என்பர். தீவர்த்தி முன்னே செல்ல, பல்லக்கில் பின்னே செல்லும் ஒரு புலவரை மற்றொரு புலவர், பட்டமரத்தில் பகல் குருடு போகிறது என்றார். பட்ட மரம் = பல்லக்கு; பகலில் பந்தம் பிடித்ததால் பகல் குருடு. முகில் மோதி மின்வெட்டு உண்டாதலும் பட்டொளி; அது நொடி நொடியும் தோன்றியும் மறைந்தும் போதலால் பட்டொளி ஆயது. பட்டு இடையே மறைந்து மீட்டும் ஒளிசெய்தல். விட்டுவிட்டு ஒளிசெய்தல். ஒருவேளை உண்டு மறுவேளை இன்றி இருப்பது பட்டு உணியாம். அது பட்டினி என வழங்குகிறது. படுதல் மறைதல் இறத்தல் பொருள் தருவதால் படை எனப்பட்டது. போர்ப்படை. படைவீடு, பள்ளிப்படை என்பவை உண்டாயின. பட்டும் படாமல்: படுதல் = நெருங்குதல். படாமை = நெருங்காமை. நெருங்குவது போல் நெருங்கி, நெருங்காமல் வாழ்பவரைப் பட்டும் படாமல் வாழ்பவர் என்பர். தொட்டும் தொடாமல் வாழ்பவர் என்பதும் வழக்கு. தாமரை இலை மேல் பட்ட தண்ணீர் இயல்பு போல் வாழும் வாழ்க்கையை இவ்வாறு சுட்டுவர். பற்றற்ற வாழ்வு என்பது அதன் சுருக்கம். பட்டும் படாமல் பேசுவதைத் தப்பித்துக் கொள்ளும் சூழ்ச்சியம் என்று கூறுவர். பட்டு வரையுள் (தேவாங்க வரையுள்): துய்க்கத் தக்க நலமெல்லாம் அமைந்த பட்டுடுத்த மின்னற்கொடி போல்வாளைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்து அவளை அடைதல், தேவாங்க வரையுள் என்னும் இலக்கியப் பொருளாகும். துற்ற தேவாங்க மின்னையே சிறைவாய் வைத்துவந்து மேவுதலே ஓங்கு தேவாங்க வரையுள் என்பது பிரபந்தத் திரட்டு (68). தேவாங்கம் = பட்டு; தேவாங்கரைப் பட்டு நூல்காரர் என்னும் வழக்குண்மை அறிக. தேவாங்க வரையுள், தேவாங்க சிலோச்சயம் எனவும் சொல்லப்படும். சிலோச்சயம் = வரை, மலை. பட்டை கட்டல்: பட்டை கட்டல் = இழிவு படுத்துதல். பட்டை என்பது மட்டையின் திரிபு. பனை மட்டை, தென்னை மட்டை என்பவற்றையும் மடல் என்பவற்றையும் நினைக. பதனீர், பட்டையில் குடித்தல் வழக்கு. பனை ஓலையை விரித்து மடித்துக் குடையாக்கிக் குடித்தல் முன்னாள் நடைமுறை. இந்நாளில் கூடக் காட்டு வேலை செய்வார் பனையின் பட்டையில் கஞ்சி குடித்தல் உண்டு. பனங்குடையில் (பட்டையில்) ஊனூண் வழங்கிய செய்தி புறப்பாடல்களில் உண்டு. பதனீர் குடித்துப் போடப்பட்ட பட்டையை எடுத்துக் கழுதை வாலில் கட்டி வெருட்டல் சிறுபிள்ளையர் விளையாட்டு. அதன் வழியே பட்டை கட்டல் இழிவுப் பொருளுக்கு ஆளாயிற்று. பட்டை தீட்டல்: பட்டை தீட்டல் = ஏமாற்றுதல், ஒளியூட்டல். அவனை நம்பினாய்; அவன் நன்றாகப் பட்டை தீட்டிவிட்டான் என்பது ஏமாற்றிவிட்டான் என்னும் பொருளில் வழங்குவதாம். பட்டை நாமம் பரக்கச் சார்த்தல்; கொட்டை நாமம் குழைச்சுச் சார்த்தல் என்னும் பழமொழியும் ஏமாற்றை விளக்குவதாம். வயிரத்திற்குப் பட்டை தீட்டல் ஒளி ஊட்டுவதாம். சிலர் நல்ல ஆசிரியரை அல்லது பெருமக்களை அடுத்து அறிவன அறிந்து கொண்டால் அவரைப் பட்டை தீட்டப்பட்ட ஆள் எனப் பாராட்டல் உண்டு. இப் பட்டை ஒளியுடைமையாம் அறிவு டைமையைச் சுட்டுவதாம். பட்டை போடல்: பட்டை போடல் = மதுக் குடித்தல். பட்டை பதனீர் பருகும் குடையாகும் (பட்டை கட்டல் பார்க்க). ஆனால் பதனீர் பருகுதலைக் குறியாமல், அப் பட்டையில் குடிக்கும் கட்குடியைக் குறித்து வழங்குவதாயிற்று. இனிப் பட்டை போட்டுக் காய்ச்சும் சாராயம் பட்டை எனப் படுவதால் அதனைக் குடித்தலையும் குறிக்கும். போடல் என்பது உட்கொளல் பொருளது. வெற்றிலை போடல் வாயில் போடல் என்பவற்றால் அப்பொருள் விளங்கும். பணியகம்: பணி + யகம் = பணியகம். தமிழகத்தில் பேருந்து பழுதுற்றால் செப்பனிடும் தொழிற்சாலையைப் பணிமனை என்பர். ஈழத்தில் அலுவலகம் பணியகம் என வழங்கப்படுகிறது. ஒரு துறை சார்ந்த அலுவலகமானால் அது திணைக்களம் என வழங்கப்படுகிறது. அலுவல் தொழிற்பெயர்; பணி, திணை என்பவை பண்பாட்டுப் பெயர்கள் என்பவற்றை எண்ணினால் அவற்றின் சிறப்பு வெளிப்படும். பண்டடை: பண்டம் + அடை = பண்டமடை > பண்டடை. பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு அமைப்பது பண்டடையாகும். எ-டு: வெங்காயப் பண்டடை. பறித்தவுடன் விற்றால் விலை, வேண்டுமளவு கிட்டாது என்பதால் இருப்பு வைத்து விலை கூடும்போது விற்பது உழவர் வழக்கம். அதற்குப் பண்டடை போடுதல் நெல்லை, முகவை வழக்கு. பண்டக சாலை மூலம் அது. பண்டம்: பண்ணப்பட்ட பொருள் பண்டம் ஆகும். பண்ணுதல் செய்தல்; உள்நாட்டில் செய்த பொருள்களைக் கலத்தில் ஏற்றிச் சென்று அயல்நாட்டில் விற்பார், பண்ணிய வினைஞர் எனப்படுவார் (பதிற். 76). சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே - புறம். 102 இதில், பண்ணப்பட்டதன்றி உப்பு முதலாம் பொருள் குறித்தது பண்டம். கூட்டத்தில் பேசும் பொருள் பண்டம் எனப்படும் வழக்கு இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. ஆய்வுக்குரிய பண்டம் என்பது அது. வழிவழியாகப் பழநாள் தொட்டு வழங்கி வருவது பண்டம். பழங்கலங்கள் மட்பண்டம். பண்டம் > பாண்டம். தின்பொருள், தின்பண்டம் எனப்படும். பண்டம் அடுக்கப்பட்ட - குவிக்கப்பட்ட - இடம், பண்டசாலை. பண்டகசாலை என்பதும் அது. * பண்டடை காண்க. பண்டாரம்: பண்டம் > பண்ட + ஆரம் = பண்டாரம். உயர்ந்த செல்வங்களைத் தொகுத்து வைத்த இடம். அது மடம் பெருமடம் என வழங்கும் இடங்கள். அப் பண்டாரங்களின் உடைமையாளராம் மடத்துத் தலைவர் பண்டாரம் எனப்பட்டார். சுவாமிநாத பண்டாரம், திருவாவடுதுறைப் பண்டாரம், பண்டாரச் சந்நதிகள். பண்டாரம் என்பது பொருளறி வாராமல் பண்டாரம் பரதேசி என ஏற்றுண்பாரைக் குறித்தது. புலவர் பூசாரி பண்டாரம் ஓதுவார் பார்ப்பார் எனத்திருக்கோயில் தொண்டு புரிந்தவருள் ஒருவர் அவர். பண்டாரம் பரதேசி: பண்டாரம் = துறவியரும் துறவுக் கோலத்தரும். பரதேசி = இரந்துண்டு வாழ்பவர். பண்டாரம் பரதேசிகட்கு உணவிடுவது அறம் என்பது நெடுநாள் வழக்கம். பண்டாரம் என்பவர் துறவுத் தோற்றத்தராம். பரதேசி என்பது அயல்நாட்டார் என்னும் பொருளது. அயல்நாட்டு இரவலர் பெயர் பரதேசியாக இருந்து பின்னர் இந்நாட்டு இரவலர் பெயராக வழங்குகின்றதாம். பரதேசி வாழ்வு நாட்டுக்குத் தீராப் பழியாகவும் கேடாகவும் உருவாகி வரு கின்றமை கண்கூடு. பரதேசம் என்பது கடல் கடந்த நாடன்று. ஐம்பத்தாறு தேசங்கள் என்று எண்ணிய காலம் உண்டே! அதைக் கருதுக. சில ஊர்களே நாடு எனப் பெயர் கொண்டுள்ளமை அறிக. பண்டு: பண் + து = பண்டு = பழைமை. பண்டைக் காலம், பண்டைத் தமிழர். பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டுமி போனால் விளையாதாம் - ஔவை. பண்டையர் > பாண்டியர். பண்டு = பழம் (தெ.). பண்டுவம்: பண்டு = பழம், பண்டம், பலவகைப் பொருள். பழவகை, வேர்வகை, இலைவகை, மருந்துப் பொருள்வகை ஆயவற்றைக் கொண்டு நோய் நீக்கும் மருத்துவம் பண்டுவம் எனப்படும். பண்டம், பண்டசாலை, பண்டாரம், பண்டிதர் என்பனவெல்லாம் மக்கள் வழக்கில் உள்ள சொற்களாம். பண்டுவம் பார்த்தல் மருத்துவம் செய்தல். செய்வார் அருந்திறத்தை, ஆயிரம் வேரைக் கண்டவன் அரைப் பண்டுவன் என்னும் பழமொழி தெளிவிக்கும். பண்டுவம் மருத்துவர் எனவும் வழங்கப்பட்டனர். மருத்துவக்குடி குடந்தை சார்ந்தது. * மருந்து காண்க. பண்டுவர்: பண்டுவம், பண்டுவர் என்னும் சொற்களை மிகுதியாக ஆட்சிக்குக் கொண்டு வந்தார் பாவாணர். பண்டுவர் என்பது மருத்துவர் எனவும், பண்டுவம் என்பு மருத்துவம் எனவும் பொருள் கொண்டு குமரி மாவட்ட வழக்கில் உள்ளது. பண்டுவர் முடிதிருத்துவாராகவும், பண்டுவர் துணைவியார் மருத்துவச்சி யாகவும் முன்பு வழங்கப்பட்டனர். பண்ணை: செய்நேர்த்தியும் செம்மை வடிவும் அமைந்தவற்றைப் பண்ணப் பட்டவையாகச் சொல்லுதல் பெருவழக்காம்; பண்ணமை யாழ், பண்ணமை கோலம், பண்ணமை சுவர், பண்ணமை நல்யாழ், பண்ணமை நெடுந்தேர், பண்ணமை படுகால், பண்ணமை படைமதில், பண்ணமை பற்று, பண்ணமை பிடி, பண்ணமை புணை, பண்ணமை இருக்கை, பண்ணமை வனப்பு என்பவை பெருங்கதையில் வரும் ஆட்சிகளாம். பண்ணுதலால் சிறக்கும் நிலமும் நிலத்தொகுதியும் பண்ணை எனப்படும். பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை யைக் குறித்தார் கம்பர் (பால. 58). பண்ணையார், பண்ணையாள், பண்ணையடித்தல், பண்ணையம் என்பவை இந்நாளிலும் பெருக வழங்கும் வழக்கில் உள்ளவை. பண்ணை என்பது, கரும்புப் பண்ணை, மூங்கிற் பண்ணை எனப் பலவாகக் கிளைத்துச் செறிந்த மூடுகளைக் குறிப்பதாக வழக்கில் இன்றும் உள்ளது. பல செறிந்திருத்தலே பண்ணை. ஆதலால், கோழிப் பண்ணை, மீன் பண்ணை எனப் புதுப் பண்ணைகள் வழக்கில் வந்துள்ளன. பண்டே பண்ணை யென்பதற்குப் பலர் கூடும் செறிவும், பல கூடும் செறிவும் பொருளாக உண்மை அறிய முடிகின்றது. ஆசிரியர் தொல்காப்பியனார், கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு - உரி. 21 என்றும், பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும் - மெய்ப். 1 என்றும் கூறினார். பண்ணை விளையாட்டாயம் என்றும், பண்ணை யுடையது பண்ணை என்றும் இளம்பூரணர் குறித்தார். பண்ணை என்பதற்குப் பேராசிரியரோ முடியுடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலானோர் நாடக மகளிர் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காம நுகரும் இன்ப விளையாட்டு எனப் பொருள் விரித்தார். கருவிகள் பலவற்றைக் கொண்டு இசைத்துப் பாடுதலும் பண்ணை எனப்பட்டது. பலர் சேர்ந்து பாடும் கூட்டிசையோ பண்ணைக் கானம் எனப்பட்டது. தொகுதிக்கு வந்த இப்பெயர் இசைக் கருவிகளையும், இசைஞரையும் குறிப்பதாக வழக்கில் ஊன்றியது. பண்ணவர் என்பதற்கு இசைஞர் என்ற பொருளும் இயல்பாக அமைந்தது. இசைக்கு அமைந்த காலக் கணிப்பும், தாளக் கட்டும், இனிமையும் எல்லாம் அமைந்த சிறப்பே அதனைப் பண்ணாக்கியது என இச்சொல்லாட்சியால் அறியலாம். பண்ணையடித்தல்: பண்ணை + அடித்தல் = பண்ணையடித்தல். பண்ணையடித்தல் = அக்கறையாக வேலை செய்தல். பண்ணை என்பது உழவர் பெருங்குடி. அக் குடிக்குரியவர் பண்ணையார்; அவர் நிலம் பண்ணை; அங்கு வேலை செய்பவர் பண்ணையாள், பண்ணைக்காரர், பண்ணையில் வேலை மிகுதியாக இருக்கும். வேலைக்கு அஞ்சியவர் பண்ணையில் வேலை செய்ய முடியாது. ஆதலால் பண்ணையடித்தல் என்பது கடுமையாக உழைத்தல் என்னும் பொருளில் வழங்குவதாயிற்று. சிலர் வேலை செய்வதாக நடிப்பர்; இன்னும் சிலர் ஏய்ப்பர்; அத்தகையரை நீ பண்ணையடித்தது போதும்; போய் வா என அனுப்பி விடுவர். நீ பண்ணையடிக்கும் சீரைப் பார்த்தால் விதைத் தவசமும் வீட்டுக்கு வராதே என்பர். இதனால், அக்கறையாக வேலை செய்தல் பண்ணையடித்தல் எனப்படுவது என அறியலாம். பண்ணை வியப்பு (பண்ணை விசித்திரம்): தலைவன், வளமிக்க நிலம், ஆறு, மழை, செங்கோல், நெல், மாடு, களஞ்சியம், நாற்றிடல் ஆகியவற்றை மாதர் இருவர் புகழ்தலும், தம்முள் ஏசிக் கொள்ளுதலும் பண்ணை விசித்திரம் என்னும் நூற்செய்தியாம். மாதர் இருவரிறை வன்நாறு மீறுதிணை ஓதுநதி மேகமழை ஒள்ளிறைவன் - நீதியா நென்மாடு கோட்டை(நிரை) நாறிட்டல் நின்றேசல் அன்னசிந்து பண்ணைவிசித்ரம் - பிர. திர. 18 நாறுமீறு திணை= வளம் விஞ்சிய ஐந்திணையாம் நிலம். நாறு இட்டல்= நாற்று நடல். நிரை என்பது சுவடிச் சிதைவை இட்டு நிரப்பிய சொல், வரிசை என்னும் பொருட்டது. உழத்தியர், பள்ளு இவற்றையன்றி யொருவகையாக உழவுத் தொழில் வழியில் வந்த சிறுநூல் இது. பண்பாடு: பண்படுவது, பண்பாடு, பண்படுதல் சீர்படுதல் அல்லது திருந்துதல், திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும் திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் (தனிப்பாடல்) என்றும், திருந்திய உள்ளத்தைப் பண்பட்டவுள்ளம் என்றும், சொல்வது வழக்கம். பண் என்னும் பெயர்ச் சொற்கு மூலமான பண்ணுதல் என்னும் வினைச் சொல்லும், சிறப்பாக ஆளப்பெறும் போது பல்வேறு வினைகளைத் திருந்தச் செய்தலையும், பல்வேறு பொருள்களைச் செவ்வையாய் அமைத்தலையும் குறிக்கும். பண்பாடு பல பொருட்கு உரியதேனும் நிலமும் மக்கள் உள்ளமும் பற்றியே பெருவழக்காகப் பேசப்பெறும். ஆங்கிலத்திலும் ‘Culture’ என்னும் பெயர்ச் சொல் சிறப்பாக நிலப்பண்பாட்டையும் உளப்பண்பாட்டையும் குறிப்பது கவனிக்கத்தக்கது. Cultivate என்னும் வினைச்சொல்லும் அங்ஙனமே. இவ்விருவகைப் பண்பாட்டுள்ளும் மக்களைத் தழுவிய உளப்பண்பாடே சிறப்பாகக் கொள்ளவும் சொல்லவும் பெறும். பண்பாட்டு மூலம்: பண்பாட்டு மூலம் உழவு வழியே வந்ததாம். பண்பட்ட நிலம், பண்பட்ட கலை, பண்பட்ட வாழ்வு, பண்பட்ட குடும்பம், பண்பட்ட சொல் எனப்பலவாக மக்கள் வழக்கிலும் புலமையர் வழக்கிலும் திகழ்வதைப் பண்டு தொட்டு இன்றுவரை அறிகின்றோம். பண்படுத்துதல் என்பது நிலத்தைப் பண்படுத்துதலாகத் தொடங்கியது. பண்ணுதல் செய்தல்; பண்படுத்தப் பட்ட நிலம் பண்ணை; பண்ணை வேலை பார்ப்பவர் பண்ணைக்காரர்; பண்ணைக்கு உரியவர் பண்ணையார்; பண்ணைத் தொழில் ஆய ஏரடித்தல், போரடித்தல் என்பவற்றால் பண்ணையடித்தல்; பயிர் ஒன்று பலவாக விரிதல் பண்ணை பிடித்தல். நிலத்தை உழுது கட்டி தட்டி உரமிட்டு விளைவுக்குத் தகச் செய்தல் பண் படுத்துதல் அல்லது பண்பாடு. பயிர்பாராமல் கெட்டது என்பதால் எவ்வளவு பாடுபட்டாலும், காவல் இல்லையேல் களத்துக்கு வாராமலும் போகும்; களத்திலும், களஞ்சியத்திலும் போய்விடும். ஆதலால், ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு என்றார் வள்ளுவர் (திருக். 1038). காவல் கடமை வீட்டுக்கும் வேண்டும்; காட்டுக்கும் வேண்டும்; நாட்டுக்கும் வேண்டும். ஆதலால் வீட்டுக் காவல், காட்டுக்காவல், நாட்டுக்காவல் என்பவை இன்றியமையாதவை ஆயின. இக் காவல் வகையை அகக்காவல் புறக்காவல் என இரண்டாக்கினர். அகத்தே உள்ள நலங்கள் புறத்தே போய்விடாமல் காத்தல்; புறத்தே உள்ள கேடுகள் அகத்தே புகாமல் காத்தல். இருவகைக் காவலும் செவ்விதில் அமைதலே பண்பட்ட காவலாகும். அதனால், செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் என்றார் திருவள்ளுவர் (திருக். 1040). அவரே சிறைகாக்கும் பண்பாடு, பண்பாடு ஆகாது; தாம்தம் நிறைகாக்கும் பண்பாடே பண்பாடு எனக் காவல் பண்பாட்டை உரைத்தார். காவல் பண்பாட்டில் பொறிகள் ஐந்தற்கும் ஆறாம் பொறியாம் மனத்திற்கும் பங்குண்டு என்றாலும், மற்றைப் பொறிகளைக் காக்கத் தவறினாலும் நாவினைக் காக்கத் தவறவே கூடாது என்றார் திருவள்ளுவர் (திருக். 127). அது தீரா வடுவாக நிலைபெற்றுவிடும் என்பதை வைஇய மொழி என்பர். வைஇய மொழியாவது காலமெல்லாம் தம்மைவிட்டுப் போகவிடாமல் தம் மனத்தே வைத்திருக்கும் மொழியாம் தீச்சொல், கடுஞ்சொல், கொடுஞ்சொல் என்பனவாம். அதனால், யாகாவார் ஆயினும் நாகாக்க என்ற அளவில் நில்லாமல், காவாக்கால் சொல் இழுக்குப் பட்டுச் சோகாப்பர் என்றார் வள்ளுவர். இவற்றால் பண்பாடு என்பது பொறிபுலன்களைப் பண்படுத்துதலே என்பது தெளிவாம். கலித்தொகை, பண்பெனப்படுவது பாடு அறிந்து ஒழுகல் என்று கூறும் (133). பாடு அறிதல் என்பது, தம்முன் நிற்பார் மெய்ப்பாடு என்ன என்பதை அறிந்து நாம் நடந்து கொள்ளுதலே பண்பாடு என்றாராம். மெய்ப்பாடுகள் நகை முதலாகிய எட்டு. அவற்றுக்கு இயைய நடந்து கொள்ளுதலே பண்பாடாகும். அழுது நொந்து கொண்டிருப்பார் முன் நகைப்பது பண்பாடாகுமா? மங்கல மகிழ்வு விழாவுள் புகுந்து அழுது ஒப்பாரி வைக்கலாமா? வீறு மிக்கார் முன் நின்று கோழைக்குரல் கொடுக்கலாமா? வளவாழ்வர் முன்னே தம் வறுமையை வெளிப்படுத்தலாமா? பண்படுத்தல் மட்டும் பண்பாடு இல்லை. பண் இசைக்கிறார்களே! அது பாடலுக்கு இசைந்து செல்ல வேண்டும் அல்லவோ? இரண்டும் ஒட்டாமல் இருந்தால் பண்ணிசை யாகுமா? பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் - திருக். 573 என்றாரே வள்ளுவர். பண்ணார்ந்த செந்தமிழ் என்று ஒருவரும் பண்ணாகப் பாடினும் என்று ஒருவரும் கூறிய மேம்பாடு பண்ணின் மேம்பாடு அல்லவா! குழல்வழி நின்றது யாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை ஆமந் திரிகையோ டந்தர மின்றிக் கொட்டிரண் டுடையதோர் மண்டில மாக - சிலப். 3:139-144 என்று இசைக் கருவிகள் இசையும் பண்ணியல் கூறுகிறாரே. பண்ணிசை, இசையும் வகைகாட்டிப் பண்பாட்டிசைவு காட்டிய சான்று இஃதாம். உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் - திருக். 140 தமிழ்மொழிச் செம்மையைப் பண்பட்ட செந்தமிழ் என்பது தெளியக் காட்டவில்லையா?. பண்படாரைச் சான்றோர் என்று பண்ணாகப் பாவலர் பாடினாலும் மக்கள் பண்பட்டாராக் கொள்வதில்லை என்பது பண்பட்ட இம்மண்ணின் மூல மரபாம். ஏனெனில் கற்றோர்க்குள்ள மயக்கம் கல்லாப் பொதுமக்கட் கில்லை என்பது கண்கூடு. பதக்கம்: பதிக்கம் > பதக்கம். பதிக்கப்பட்ட விருதமைந்தது பதிக்கம்; அது பதக்கமாயது. இன்னவர் இன்ன துறையில் இன்ன நிலையில் திறம் கொண்டார் என்பதை, இன்ன நாளில் இன்ன துறையினர் பாராட்டி வழங்குகின்ற விருது இது என்பது. பதிக்கப்பட்ட பொன், வெள்ளி, வெண்கல மாழை உருவாக்க வட்டம் பதக்கமாம். ஊரக விளையாட்டு முதல் உலக விளையாட்டுவரை இந்நாளில் இடம்பெற்றுள்ளது இப்பதக்கம். x.neh.: பதிவு > பதவி. பதிவாகும் பணி = அமர்த்தமாகும் அலுவல். பதத்துப் போதல்: பதத்துப் போதல்:1 சில பொருள்கள் ஈரக்காற்று ஈரம் ஆகியவை படுதலால் தம் பக்குவநிலை இழந்து அல்லது அற்றுப் போய்விடும். மொறுமொறு என இருந்தது சதசதப்புடையதாகவும் சுவையற்றுப் போனதாகவும் ஆய்விடும். அதனைப் பதத்துப் போதல் என்றும் பதப்பட்டுப் போதல் என்றும் மக்கள் கூறுவர். பதன் அற்றுப் போதல் பதத்துப் போதலாம். இடம் காலம் கூறப் பெறுபவர் என்பவரை நோக்காமல் சொல்லும் சொல்லும், பதனற்றுப் போதல் என்பது புலமையர் வழக்காக இருந்துள்ளது என்பது, நாளன்று போகிப் புள்ளிடை தட்பப் பதனன்று புக்குத் திறனன்று மொழியினும் வறிது பெயர்குநர் அல்லர் - புறம். 124 என்றுவரும் திருமுடிக்காரியைக் கபிலர் பாடிய பாட்டால் புலப்படும். பதத்துப்போதல்:2 பதப்பு; நாடித்துடிப்பு. மற்றொன்று: அவ்விடம் வெப்பம் மிகாமல் இருக்கக் குழந்தைப் பருவத்தில் விளக்கெண்ணெய் தேய்த்தல் வழக்கம். பதப்பு என்பது குளிர்ச்சி என்னும் பொருளதாம். பதம்: பதம்:1 இசைப்பாட்டு வகைக்குப் பதம் என்பது பெயர். தாள் என்பதில் இருந்து தாளம் பிறந்தது. பதம் என்பதும் தாளம் என்னும் பொருளதே. பதம் > பாதம் = தாள். எடுப்பு (பல்லவி), தொடுப்பு (அநுபல்லவி), அடி (சரணம்) என்னும் உறுப்புகளால் பதம் இயலும் சீர்த்தனை (கீர்த்தனை)யும் பதம் எனப்படுதல் உண்டு. பற்றித் (பத்தித்) துறையில் பயிலும் பதம் பிற துறை களிலும் இடம்பெறல் மிகுதி. அழகிய சொக்கநாதர் பதம், பத்தித்துறைப் பாற்பட்டது. முத்துத் தாண்டவர் பாடிய சபாநாயகர் பதம் 25 சீர்த்தனைகளால் ஆயது. மூக்குத் தூள் புகழ்பதம், மூக்குத்தூள் இகழ்பதம் என்பன எள்ளற் பதங்கள். சீர் முத்துக் குமாரசாமி பேரில் பதம் என்னும் சுப்பராயர் இயற்றிய பதம், இறைமையும் பல்வேறு அகத்துறையும் இயைந்து செல்வது. பதம்:2 பதம் என்பது சோற்றைக் குறிக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம் என்பது பக்குவமாக வெந்த சோற்றைக் குறிக்கும். பதம், உண்டல் பொருளில் வருவதைப் பிங்கல நிகண்டு சுட்டும். சோறு என்னும் பொருளைச் சூடாமணி சுட்டும். இவ்விரண்டையும் தமிழ்ச்சொல்லகராதி சுட்டும். சோற்றின் பெயர் சோறு உட்கொளலுக்கு ஆகிவந்ததாகலாம். பதம் பார்த்தல்: பதம் பார்த்தல் = ஆராய்தல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம் என்பது பழமொழி. ஒரு பொறுக்கை எடுத்து விரலால் நசுக்கி வெந்தது வேகாதது பார்ப்பது வழக்கம். அவ் வழக்கத்திலிருந்து பதம் பார்த்தல் என்பது ஆராய்தல் பொருளில் வழங்குகின்றது. பதர்ச்சொல்: பதர்ச்சொல் = பயனில் சொல். பதர்ச்சொற் பருப்பொருள் பன்னுபு நீக்கிப் பொருட்சொல் நிரப்பும் புலவர் போலக் கல்லும் ஓடும் புல்லும் கரியும் உமியும் மயிரும் என்பும் உட்பட அமைவில் தன்மைய அரித்துடன் களைந்து - பெருங். 2:51-55 பதவல்: பதவல் என்பது நிரம்ப என்னும் பொருளது. பதம் என்பது நீர்ப்பதம். பதத்துப் போயிருத்தல் என்பது நீர் கோத்து நிற்பதாம். பதவலாக இருக்கிறது எனின் இன்னும் உலரப் போட வேண்டும் என்பர். அது எடையாலும் அளவாலும் அளவில் மிகுதியாக இருக்கும். பச்சை மிளகாய்க்கும் வற்றலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியும் போது புலப்படும். பதத்தது மிகுதியாதல் கொண்டு பதவல் என்பது மிகுதிப் பொருள் பெற்றது. இது நெல்லை வழக்கு. மக்கட் பெருக்கமும் பதவல் எனப்படும். குழந்தைகள் ஊரில் பதவலாகப் பெருத்துவிட்டது என்பது மக்கள் வழக்கு. ஈர நிலத்திலும், ஈரவடிகால், அளறு, சாய்க்கடை ஆயவற்றிலும் பூச்சி புழு கொசு ஆயவை பெருக்கமாக உண்டாவது போல மக்களும் குழந்தைகளும் பெருகிவிட்டனர் என்பதைப் பதவலாகக் கிடக்கிறது என்பது ம.வ. குழந்தைப் பதவல் படுத்துகிற பாடு இவ்வளவு, அவ்வளவா? என்னும் சலிப்பு பெரியவர்கள் வாக்கில் பெருக வழங்கும். பதனங்காய்: வழுவழுப்பான தோலமைந்த காய் கத்தரிக்காய். மிகு பிஞ்சும் மிகு முற்றலும் சுவையற்றவை; கேடும் செய்வன. அதன் இடைநிலை உடல்நலத்திற்கு ஊறு செய்யாது. அதனை அறிந்து பயன் கொள்ளும் வகையில் பதனங்காய் என்னும் பெயர் சென்னை வட்டார வழக்காக உள்ளது. பதனம்: பதம் பதன் என்பவை பக்குவம் என்னும் பொதுப்பொருள் குறிப்பன. அந்த ஏனத்தைப் பதனமாக வை, பதனமாக எடு என்பது முகவை, நெல்லை வழக்குகள். பதனம் என்பது மெல்லென மெதுவாக என்னும் பொருளில் வழங்குகிறது. பதிக ஐந்தகம் (பதிக பஞ்சகம்): பதிகங்கள் ஐந்தனைக் கொண்ட இலக்கியம் பதிக பஞ்சகம் எனப்படுகின்றது. ஆகலின் 50 பாடல்களைக் கொண்டது என்பது தெளிவாம். தில்லைக்குப் பதிக பஞ்சகம் உள்ளது. அதனை இயற்றியவர் தண்டபாணி அடிகள். வாழ்த்துடன் 53 பாடல்களைக் கொண்டுள்ளது அது. பதிக நூறு (பதிகச் சதகம்): பதிகங்கள் நூறு கொண்டமையால் ஆயிரம் பாடல்களை யுடைய நூல் என்பது விளங்கும். சதகப் பதிகம் (நூறுகள் பத்து) பெற்ற திருவாமத்தூரே பதிகச் சதகமும் பெற்ற பெருமையது. இதனை இயற்றியவரும் அதனைப் பாடிய தண்டபாணி அடிகளே ஆவார். அந்நூலில் வாழ்த்து முதலியவற்றுடன் 1006 பாடல்கள் உள. பதிகம்: ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் ஆகியன வும் நான்கடி முதல் எட்டடிகாறும் உயர்ந்த வெண்பாவும் ஒருபது, இருபது என்று எண்ணிக்கை வர இயற்றப் பெறுவது பதிகம் ஆகும். இவண் கூறப் பெற்ற வெண்பா பஃறொடை வெண்பா என்க. ஆசிரி யத்துறை அதனது விருத்தம் கலியின் விருத்தம் அவற்றின் நான்கடி எட்டின் காறும் உயர்ந்த வெண்பா மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும் - பன்னிரு. 312 இனி, இதனை ஒரு பொருளைக் குறித்துப் பத்துச் செய்யுள் செய்வது பதிகம் என்பர். கோதிலார் பொருளைக் குறித்தை யிரண்டு பாவெடுத் துரைப்பது பதிக மாகும் - முத்துவீ. 1116 பதிற்றந்தாதி: பத்து வெண்பா, பத்துக் கலித்துறை, பொருட்டன்மை தோன்றப் பாடுதல் பதிற்றந்தாதியாம். பதிற்றந் தாதியே பாடவல் லோர்கள் பப்பத்து வெண்பா பப்பத்துக் கலித்துறை பொருள்தன்மை தோன்ற அந்தாதி பாடுவர் - பிர. தீபம் 54 பதிற்றந்தாதிக்கு முன்னோடி பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தும், ஐங்குறு நூற்றின் தொண்டிப்பத்துமாம். ஆயின் அவை அகவற்பாவால் இயல்வன. பதிற்றுப் பத்தந்தாதி: பதிற்றுப் பத்து = நூறு. நூறு பாடல்களையுடையது இவ்வந்தாதி. எனினும், வெண்பாவந்தாதி, கலித்துறை யந்தாதி போல ஒரே வகைப் பாவால் அமைந்ததன்று. பதிற்றுப் பத்து என்னும் பெயர் விளக்கும் வண்ணம் பத்துவகைப் பாக்களால் அமையும். ஒவ்வொரு வகைக்கும் பத்துப் பாடல்கள் இடம்பெறும். இவண் பாவகை என்றது பா இன வகையாம். பதிற்றுப்பத்து என்னும் பழம் பெயராட்சி, சேர அரசர் பதின்மரைப் பற்றிப், பப்பத்துப் பாடல்களாகப் பாடப் பெற்றமை அறிந்ததே. இவண், பாவகையும் தொகையும் கருதிப் பதிற்றுப் பத்தாயிற்று. முடிமுதல் இயல்புடைமையால் அந்தாதியும் ஆயிற்று. திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, குட்டித் திருவாசகம் எனப்பெறும் சிறப்பினது. இன்னும் கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியவை எடுத்துக் காட்டாம். பதின்பத் தந்தாதி எனப் பதிற்றுப் பத்தந்தாதியைச் சுவாமி நாதம் கூறும். பதினாறு பாமாலை (சோடச மாலை): சோடசம் = பதினாறு; பதினாறு பாக்களால் ஆகிய நூல் சோடசமாலை எனப்படுகின்றது. பாடல் எண்ணிக்கை கொண்டு வரும் அறுமணி, எண்மணி, தொண்மணி என்பவை போலப் பதினாறு பாவால் அமைந்ததென்க. துரோபதையம்மை சந்நிதி விளக்கச் சோடசமாலை என்பது பதினான்கு சீர்க்கழி நெடிலடி ஆசிரியப்பாவால் அமைந்துள்ளது. பதினாறு வகைக் கவனகம் செய்யவல்லார் சோடச அவதானி என வழங்கப்பட்டமை எண்ணத்தக்கது. பதினுறுப்பியல் (தசாங்கத்தியல்): அரசன் தசாங்கத்தை ஆசிரிய விருத்தம் பத்தினால் கூறுவது தசாங்கத்தியலாகும். தசாங்கம் இவை என்பதைத் தசாங்கத்தில் காண்க. இதனைத் தசாங்கத்தியல் தசாங்க வன்னிப்பு என்பதும் உண்டு. வன்னிப்பு > வண்ணிப்பு. அரசன் தசாங்கம் ஆசிரிய விருத்தம் ஐயிரண் டறைவது தசாங்கத் தியலே - முத்துவீ. 1102 பதினொருபா மாலை (ஏகாதச மாலை): அகவல் விருத்தம் பதினொன்றால் முடிமுதல் தொடை அமைவுறப் பாடப்படுவது ஏகாதச மாலையாம். நம்பியாண்டார் நம்பிகள் அருளிய திருநாவுக்கரசு தேவர் திருவேகாதச மாலை இவ்வகைக்கு எடுத்துக்காட்டாம். பதின்பிறப்பு மாலை (தசப்பிராதுற்பவம்): * உற்பவ மாலை காண்க. பதின்மணி மாலை (தசமணிமாலை): வெண்பா முதலாக வேறுபட்ட பாவும் பாவினமும் பத்துவர அந்தாதியாகப் பாடுதல் தசமணி மாலையாம். * நவமணி மாலை காண்க. பத்தடப்பு: பிரிந்து போன இருவரை அல்லது இரு கூட்டங்களை இணைத்து வைப்பது பத்தடப்பு என மதுக்கூர் வட்டார வழக்காக உள்ளது. பத்து அடப்பு என்பவை பற்று அடைப்பு என்பதாம். ஒன்றோடு ஒன்றைப் பொருத்தி வைப்பது பற்ற வைப்பது ஆகும். அப்பொருளில் பொருந்தச் செய்தலாகப் பத்தடப்பு வழங்குகின்றது. ஒப்படைப்பு என்பதில் உள்ள அடைப்பு அடைத்தல் பொருளது. பத்தர்: பத்தர்:1 பற்றர் > பத்தர். x.neh.: கொற்றர் > கொத்தர். இறைமையைப் பற்றுபவர் பற்றர். பத்தர்:2 பற்று வைத்து பணி செய்பவர் பற்றர். அவர் பொற்கொல்லர். பண்டு பூண் கொல்லர். எ-டு: தண்கால் பூண்கொல்லர். பத்தல்: இறைகிணற்றின் நீர் கொட்டும் வாய்க்கால் பத்தல் எனப் படல் பொதுவழக்கு. பனையின் அடிமட்டை பத்தல் எனப்படுதல் தூத்துக்குடி வட்டார வழக்காகும். பத்தல் அமைப்பும் பனை மட்டை அடியமைப்பும் கொண்ட ஒப்புமைப் பெயரீடு இஃதாம். பத்தல்மடை: கிணற்றில் கமலை பூட்டி இறைத்து எடுக்கும் நீர் பத்தல் வழியாக வந்து, மடையில் பாய்ந்து வெளிப்படும் பத்தல் மடை என்பவற்றை இணைத்த சொல் பத்தல்மடை. இப் பெயரொடு கூடிய ஊர் நெல்லை மாவட்டத்தில் உண்டு. அது குளத்துப் பத்தல் மடையாகும். ஊமத்தை என்னும் (ஊ என்னும் போதுண்டாம் வாயமைப்பன்ன பூவும் மத்தும் இணைந்தமை போன்ற) சொல்லமைதி இது. பன்றிக்கு உணவு வைக்கும் ஏனம் பன்றிப் பத்தலாம் பத்துப்பாட்டு: நூறடிச் சிறுமையாய் ஆயிரம் அடிப் பெருமையாய் அமைந்த பத்துப் பாட்டுகள் பத்துப்பாட்டு எனப்பெறும். அப் பாட்டு அகவலால் வரும். நூறடிச் சிறுமை நூற்றுப்பத் தளவே ஏறிய அடியின் ஈரைம் பாட்டுத் தொடுப்பது பத்துப் பாட்டெனப் படுமே - பன்னிரு. 353 அதுவே அகவலின் வருமென அறைகுவர் புலவர் - பன்னிரு. 354 பத்துறுப்பு (தசாங்கம்): அரசனது பத்து அங்கங்களையும் பத்து நேரிசை வெண்பாக் களால் பாடுவது தசாங்கமாகும். தசாங்கப்பத்து என்பதும் இது. நேரிசை வெண்பா வான்நிரு பன்பெறு தசாங்கத் தினைச்சொலல் தசாங்கப் பத்தாம் - இலக். பாட். 80 தசாங்கங்கள் இவை என்பதை, மலையே யாறே நாடே ஊரே பறையே பரியே களிறே தாரே பெயரே கொடியே என்றிவை தசாங்கம் - பன்னிரு. 240 என்பதால் அறிக. இவ்விலக்கணம் அமையப் பாரத தேவிக்குத் திருத்தசாங்கம் பாடியுள்ளார் பாரதியார். இது புதுவகையினதாகும். பந்தடி: பந்தடி என்பது பண்டு கந்துகவரி எனப்பட்டது. சிலம்பின் சீரிய கொடையாகிய கந்துகவரி பெருங்கதையில் பந்தடியாகச் சிறக்கின்றது. மதுரை மால் பகுதி, ஒரு காலத்தில் பந்தடியாக இருந்தமையால் பந்தடி ஒன்று, இரண்டு எனத் தெருப் பெயர்கள் இன்றும் வழக்கில் உள்ளன. மதுரை மீனாட்சியம்மன் பந்தடி இவ்வகையில் எழுந்த நூல். பொன்னி லங்கு பூங்கொடிபொ லஞ்செய் கோதை வில்லிட மின்னி லங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் தென்னன் வாழ்க வாழ்கவென்று சென்று பந்த டித்துமே தேவ ரார மார்பன்வாழ்க வென்று பந்த டித்துமே என்பது சிலம்பு. மென்சி லம்பு நன்கி லங்கப் பண்கு லுங்கு வாய்ச்சியர் இன்ப லுங்கு பொன்ச தங்கை ஓங்க வோங்கப் பாங்கெலாம் பொன்னி யண்ணல் வாழ்க வாழ்க என்று பந்த டிக்குமே பூவை வண்ணன் வாழ்க வாழ்க வென்று பந்த டிக்குமே என்பது அடிகள் அடியைப் பற்றி எழுந்த புதிய குண்டலகேசிப் பாட்டு. பந்தல்: பந்தல் = (சாவுக்) கொட்டகை. கொடி படர்தற்கு அமைக்கப்படும் பந்தல் கொடிப்பந்தல்; தண்ணீர் வழங்குவதற்கென அமைக்கப்பட்ட கொட்டகை தண்ணீர்ப் பந்தல். அவ்வாறே மங்கல விழாவுக்குப் பந்தல் போடுதல் தமிழக வழக்கம். மணவீட்டின் முன் போடப்படும். மங்கல விழாக்களெனக் கொள்ளப்படும் பிறவற்றுக்கும் பந்தல் போடுவது உண்டு. நீல விதானத்து நித்திலப்பூம் பந்தல் என்பது சிலம்பு (1:49). இராமன் முடிசூட்டுக்குப் போட்ட பந்தல், அஃதில்லாமல் பிரிக்கப்பட்டத்தைச் சுட்டும் வகையால் கம்பர், விரித்த பந்தல் பிரித்த தாமென மீனொளித்தது வானமே என்றார் (அயோட். 237). திருமண வீடுகளின் முன் மணக்கோலம் காட்டுவதற்காக அழகிய பந்தல் போடுவர்; வாழை நடுவர்; மேற்கட்டு தொங்கல் அமைப்பர். மணமேடையில் அரசாணிக் கால் நடுவர். நகரத்தார் நாட்டில் பந்தல் என்பது இறப்பு வீட்டில் போடப்படுவது என்னும் வழக்குண்டு. திருமண வீட்டில் போடப்படுவது காவணம் எனப்படும். இறப்பு வீட்டுப் பந்தலில் வாழை முதலியவை நடுதலோ, தொங்கல் விடுதலே இல்லை. சிறப்பு நிகழ்ச்சிப் பந்தலுக்கு இவையுண்டு. இதனைக் கொண்டே காவணம் என வேறுபடுத்திக் காட்டும் வழக்கு உண்டாயிற்றாம். பரந்த இடத்தில் முகடு கூட்டுதல் இல்லாமல் படர் கொடி படரப் போட்ட வழியால் பரந்தமைக்கப்பட்டது பரந்தல். இது பந்தல் என மாறி அல்லது திரிந்திருக்கலாம். படர்ந்த ஆல மரமமைந்த ஊர், படந்தால் என வழங்குகின்றது. பந்தற் பருக்கை: பந்தல் பூப்பந்தல், கொடிப்பந்தல் என்னும் பொதுப் பொருளில் இல்லாமல் இறப்பு வீட்டுக்கு அடையாளம் காட்டவும் அமரவும் தக்கதாக வாழை நட்டாமல், மேற்கட்டுக் கட்டாமல் போடப்படும் கீற்றுத் தடுப்புக்குப் பந்தல் என்பது காரியாபட்டி வட்டார வழக்கு. அப் பந்தலில் படைக்கப்படும் சோறு பந்தற் பருக்கை எனப்படுகிறது. பருக்கை = அரிசிச் சோறு. பந்தாடுதல்: பந்தாடுதல் = அடித்து நொறுக்குதல். உதைத்தல், அடித்தல் பந்தாடுதலில் உண்டு. பந்து இல்லாமலே, எதிர்த்து வந்தவரை உதைத்தும், அடித்தும் பந்தாடி விடுவதும் உண்டு. அப் பந்தாடுதல் அடித்து நொறுக்குதல் பொருளதாம். சும்மா இருக்கிறேன் என்று நினைக்காதே; எழுந்தேன் உன்னைப் பந்தாடி விடுவேன் என்று வீராப்புப் பேசுவாரும், பேசியபடி செய்வாரும் உளர். அப் பந்தாட்டக்காரர், அவரையும் பந்தாட வல்லாரைக் கண்டு சுருட்டி, மடக்கிக் கொண்டு போய்விடுவதும் கண்கூடு. ஓடுவதைக் கண்டால் வெருட்டுவதற்குத் தொக்கு என்பது பழமொழி. பப்பப்பா: அப்பாவைப் பெற்ற அப்பாவைப் பப்பப்பா என்பது குமரிமாவட்டப் பெருவிளை வட்டார வழக்கு. பாட்டனார், தாத்தா என்பவை பொதுவழக்கு. அப்பா அப்பா என்பவை இணைந்து அகரம் பகரமாகிப் பப்பப்பா ஆகிவிட்டது. அப்பப்பா என்பது பொதுவழக்கு. இது சிதைவு. பப்பாளி: இது வெளிநாட்டு நிலைத்திணை. இதன் பழம் வெப்பு மிக்கது. கருக்கொண்டவர் இதன் பழத்தை உண்ணுதலைத் தவிர்ப்பர். உண்ணின் கருவுக்கு ஊறு விளைக்கும் என்பர். வகரம் பகரமாதல், பகரம் வகரமாதல் என்பவை சொல்லியல் நெறிமுறை. அவ்வகையில் வெப்பாளி எனப்பட்டது (வெப்பு ஆளி) பப்பு ஆளி ஆயது. எ-டு: வெங்காலூர் > பெங்களூர்; வேம்பாய் > பம்பாய். இனி இக்காயைப் பருப்புடன் சேர்த்துத் தொடுகறியாக்கி உண்ணும் வழக்கத்தால் பருப்பு ஆளியாய்ப், பப்பாளி ஆயதுமாம். பப்பு = பருப்பு (தெ.). பம்பை பரட்டை: பம்பை = செறிந்து நீண்டு தொங்கும் முடி. பரட்டை = உலர்ந்து அகன்று நிமிர்ந்த முடி. பம்பை பரட்டை என்பது குழந்தைகள் விளையாட்டுப் பாடலின் முதலடி. பம்பைத் தலை, பரட்டைத்தலை என்பது வழக்காறு. கொட்டு அடிப்பவர் தலைமயிர் அவர்கள் அசைவுக்கு ஏற்ப அழகாக இயங்கிக் காட்சி இன்பம் தரும். பம்பைக் கொட்டு என்பது ஒன்று. பல கொட்டுகள் சேர்ந்து முழங்குவது பம்பை. இங்கும் முடிச் செறிவு கருதிய பெயர் அது. வறண்டு காய்ந்த மரங்கள் பரட்டை எனப்படும். அம் மரங்கள் போல்வது பரட்டையாம். பயறு போடல்: பயறு போடல் = இறுதிக்கடன் கழித்தல். பயறு போடல், பச்சை போடல், பாலூற்றல், தீயாற்றல், கொள்ளி வைத்தல், குடம் உடைத்தல், மாரடித்தல் என்பன வெல்லாம் இறந்தார்க்குச் செய்யும் கடன்கள். இவை மற்றை மற்றை வழிகளில் வழங்குமாயின் அவை நேர்பொருள் அன்றி வழக்குப் பொருள் தருவனவல்ல. பயறு போடல் என்பது பயற்றை விதைத்தலையோ, கறிக்குப் பயன்படுத்தலையோ, பானையில் போட்டு வைத் தலையோ குறியாமல் இறந்தார்க்குச் செய்யும் இறுதிக் கடனாகச் சொல்லப்படுதலே வழக்குச் சொல்லாட்சியாம். பயிராதல்: விதை போட்டுப் பயிரிடுதலைக் குறித்தல் பொதுவழக்கு. பயிராதல் என்பது ஆடு மாடு கருக் கொள்ளுதலைப் பயிராதல் என்பது தென் தமிழகப் பொதுவழக்கு. பழைய இலக்கியங்களில் துணையை விரும்பி அழைத்தல் பயிர்தல் எனப்படுதலை அறிந்தால் அதன் நடைச்சொல் இது என உணரலாம். புறவுப் பெடை பயிரும் - குறுந். 79 பயிர் பச்சை: பயிர் = தவசம் விளையும் பயிர் வகை. பச்சை = பயறு விளையும் செடி கொடி வகை. நெற்பயிர், சோளப்பயிர் என்பவற்றால் பயிர் தவச வகைக் காதல் விளங்கும். பயற்றுக் கொடிகளில் பச்சை என்பதொன்று உண்டு. பச்சைப் பயறு, பாசிப் பயறு என்பவை அது. பை = பசுமை; பை + இர் = பையிர் > பயிர். x.neh.: மை + இர் = மையிர் > மயிர். மை என்பது மயிர் மூலம் போலப் பை என்பது பயிர் மூலமாம். அதனின் வேறுபடுத்து அதே பொருள் தருதற்கு வந்ததே பச்சை என்பதாம். பசுமை வண்ணம் சார்ந்ததால் வந்த பெயர். அதன் பின்னே வேக வைக்காத பொருளைச் சுட்டுவதாக அமைந்தது. பச்சைக் காய்கறி, பச்சை ஊன் என்பவை அவை. பின்னே பக்குவமற்ற பேச்சைப் பச்சையாகப் பேசுதல் என வழக்கூன்றியது. பயிர் வகை: பூசணம் அல்லது பூஞ்சணம் (பூஞ்சாணம்) - நொந்த சோற்றிலும் ஈர மரத்திலும் தோன்றும் நுண்பாசி. பாசம் = நீர் மேலும் ஈரமுள்ள இடத்திலும் தோன்றும் பசுமையான நுண்பயிர். பாசி = நீரில் அடிவரை படர்ந்துள்ள பாசம். காளான் = ஈரமுள்ள இடத்தில் குடைபோல் தோன்றும் பயிர்வகை. புல் = அறுகு, குசை, தருப்பை போன்றவை. பயின்: மரம் செடிகளில் உண்டாகும் ஒரு பசைப்பொருள். அது பிசின் என இதுகால் வழங்குகிறது. ஒட்டுப் பசையாகப் பயன்படுகிறது. பயின் என்பதொரு மரம் ஆகும், பயினைத் தருதலால். அடிப்படல், நெருங்கல், ஒட்டல், செறிதல் முதலியன பயின் என்பதன் பொருளாம். பல்கிழி யும்பயி னும்துகில் நூலொடு நல்லரக் கும்மெழு குந்நலம் சான்றன அல்லன அம்மழைத் தாங்கெழு நாளிடைச் செல்வதோர் மாமயில் செய்தனன் அன்றே - சிந்தா. 235 பயின் பெருங்கதையில் பயில வழங்கும். பரண்: பரண் = கம்புகள் பரப்பி வைக்கப்பட்ட பந்தல் மேடை. காடு காவற்குச் செல்பவர் காட்டுப் பரப்பெல்லாம் காணற்கும், கண் அயர்தற்கும் அமைக்கப்பட்ட அமைப்பு பரண் ஆகும். கால்கள் ஊன்றிக் கம்புகளைப் பரப்பிச் செய்தலால் பரண் எனப்பட்டது. பின்னே வீடுகளிலும் பரண் அமைப்பு வந்தது. பரண்வீடு எனப்பெயர் பெற்றது. பழம் பொருள்களைப் பரணையில் போட்டுவைத்தல் வழக்கு. மூக்குப்பொடி போட்டு வைக்கும் சிறுமூடு பெட்டியைப் பரணி என்பது யாழ்ப்பாண வழக்கு. * பரணி காண்க. பர் - பர: தமிழ்ச் சொற்களின் வேர்களுள் ஒன்று பர் என்பது. பர் குறிலொடு கூடிய ஒற்று. அவ்வொற்றும், ரகர ஒற்று. ஆகலின் பர் எனச்சொல் வடிவம் பெறாது. அவ்வாறு வடிவம் பெற்றால், அது வேற்றுமொழிச் சொல் என்றோ - வேற்று மொழியாளர் தம் சொல்லாகத் திரித்துக் கொண்ட சொல் என்றோ உறுதிப் படுத்தலாம். பர் என்னும் வேர், அகரத்தொடு சேரப் பர என்றாகும். பர என்னும் விரியின் வழியே, விரியும் சொற்கள் பல உள; அகர முதலிகளில் அடைவு செய்யப்பட்டவை; செய்யப் படாதவை; இலக்கிய ஆட்சி உடையவை; பொதுமக்கள் வழக்கில் உள்ளவை; பொது வழக்காக உள்ளவை, வட்டார வழக்காக உள்ளவை எனப் பலவகைப் பட்டவையாம். அவற்றுள் தொகுத்துக் கூற வாய்த்தவை மட்டும் இவண் சொற்பொருள் விளக்கம் செய்யப்படுகின்றன. ஆகலின், இது விரிவுக்குரியது என்பது வெளிப்படை. இச்சொல் இல்லையே எனப் பெரிதும் வழக்கிலுள்ள ஒரு சொல், தூண்டலாம். இச்சொல் இடம்பெற்றுள்ளதே என ஒருசொல் நினைவினை எழுப்பலாம். முன்னது தமிழ்ச்சொல் அன்று என்னும் தெளிவால் இடம்பெற்றிலது என்றும், பின்னது தமிழ்ச்சொல் என்னும் முடிவால் இடம்பெற்றுள்ளது என்றும் கொள்ளவேண்டும். தமிழின் சொல்லியல் முறையும் பொருளியல் முறையும் எத்தகைய திட்டமான - ஒழுங்கான - வரம்பமைந்த சீர்மைக் குரியவை என்பதை வெளிப்பட அறிவதற்குச் சான்றுகள் பலவுள. அவற்றுள் பர் என்னும் இவ்வேர்ச் சொல் ஆய்வு அதனை வெள்ளிடை மலையெனத் தெளிவுறக் காட்டும். இப்படியும் ஒரு மொழி அமைதி வாய்க்குமா? என்னும் வியப்பும், இவ்வாய்ப்பை ஆழ்ந்து அகன்ற நுண்மையால் கண்டும், கட்டுமானம் இட்டும், காத்தும் பரப்பியும் வந்த நம் முந்தை நன்மக்கள் பெறலரும் பெருந்திறம் எத்தகு பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் காத்தலுக்கும் உரியது என்னும் கடப்பாட்டுணர்வும், உணர்வு டையார்க்கு உண்டாதல் இயற்கை. ஏனெனில், உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே என்பது தொன்னூலாசிரியர் தேர்ச்சியுரை என்க (தொல். 876)! மற்றொரு தேர்ச்சியும் அவர் தம் பின்னோர்க்கு வைத்துச் சென்றார். அதனைப் பிறழ உணர்ந்தார் பிறபிற உரைத்து, இலக்கணர் தம் எண்ணம் அறியாராய்த் தம்மெண்ணம் உரைத்து, நல்லது செய்தல் தவிர்ந்ததுடன் அல்லது செய்தலிலும் தலைநின்றனர்! தலைமையாயும் நின்றனர். எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பது மூலவர் ஆணை! அவ்வாணை, அவருக்கு மூலவருக்கு மூலவர் வழி வந்த ஆணை! இப்படியோர் ஆணையை உரைப்பது பொருந்துவதன்றாயின், இவர் காலத்தவர் - இவர் மாணவர் - இவர் புலமைத் தோழமையர் - இவர் புலமைக் காய்ச்சலர் - இதனை ஏற்பரோ? இந்நாள் போல் ஒருநூல், எக்கருத்திலும் எப்பொருளிலும் எவ்வடிவிலும் வெளிப்படலாம் என்னும் நிலையில், வெளிவந்த நூலா தொல்காப்பியம்? மாப்பெரும் புலவர் அதங்கோட்டா சிரியர் தலைமையில் அரில்தப அவரும் அவையோரும் ஆய்ந்து, வெளிப்பட்ட நூல் எனத் தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணவர் எனப்படும் பனம்பாரனார் பகர்கின்றாரே? நிலந்தரு திருவின் நெடியோன் எனப்படும் வேந்தன் கூட்டிய அவையம் எனின், நாட்டிலிருந்த நல்லறிஞர் எல்லாரும் குழுமியிருந்து ஆய்ந்திருப்பர் - கேட்டிருப்பர் - என்பதில் ஐயமுண்டோ? அதிலும், அதங்கோட்டாசிரியராம் தலைவர், அறம்கரை நாவர் எனின், அவர் முறைப்பட ஆய்ந்த ஆய்வு செம்முறையாகவன்றி எம்முறையாக இருத்தல் கூடும்? தலைவருக்கு இல்லாத ஆணையா பிறருக்கு? எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பது பொருந்துவதன்றாயின், அந்நூற்பாவையேனும் எடுத்துவிடக் கூறியிருப்பரே! திரைப்படத் தணிக்கை இன்னவற்றில் பகுதி வெட்டல் இல்லையா? ஆயின், எல்லாச் சொற்களும் பொருள் குறித்தன என்பது விளங்கவில்லையே; பலசொற்கள் காரணமிலா இடுகுறிச் சொல்போல் உள்ளனவே; அதனால்தானே இடுகுறி காரணப் பெயர் பொதுச் சிறப்பின (62) எனப் பின்னூலராம் நன்னூலார் கூறினார் என்பார் உளராயின், அதற்குத் தக்க மறுமொழியை ஆசிரியர் தொல்காப்பியர் சொல்லதிகார இறுதியில் தெளிவாக உரைத்தார். எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்பதை, நால்வகைச் சொற்களில் முற்படு சொல்லாம் பெயர்ச்சொல் இலக்கணம் கூறும் இயலின், முதல் நூற்பாவாக வைத்த அவர், சொல்லிலக்கண நிறைவிலே, மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா என்பதை வைத்தார். விழிப்ப என்பது பார்க்க என்னும் பொருளது. சொல்லின் பொருள் பார்த்த அளவால் வெளிப்படத் தெரியாது. ஆழ்ந்து சென்று அறிய வேண்டும்; அறிய முடிந்தாலும் முடியா விட்டாலும், அதற்குப் பொருள் உண்டு என்பது மட்டும் திட்டமான செய்தி என்பவை இந்நூற்பா விளக்கமாம். கடற்கரையில் ஓடி விளையாடும் சிறுவன், சில சிப்பிகளைப் பொறுக்குவது போலச் சில அறிவியல் நுணுக்கங் களைக் கண்டேன்; அவ்வளவே என்றானே ஐசக்கு நியூட்டன் என்னும் ஓர் அறிவியல் அறிஞன்! அந்நிலை மொழியியலுக்கு இல்லையா? ஆழச் சென்று முத்துக் குளிப்பானும் அனைத்து முத்தும் எடுத்து விடுவதில்லை என்பதை எவரே அறியார்? அவரவர் முயற்சி, ஆர்வப் பெருக்கு, அயராமை இன்னவற்றின் அளவுக்கு ஏற்பக் கண்டு பிடிப்புகள் கையகப்படுகின்றன என்னும் தெளிவு உண்டானால், அத் தெளிவு சொல்லாய்வுக்கும் உரியதெனக் கொள்ளலன்றோ முறைமை! இதனால், மொழிஞாயிறு பாவாணர், ஐம்பது அறுபது விழுக்காட்டுச் சொற்களுக்கு வேரும் விளக்கமும் பொருளும் கண்டாலும் போதும்; பின்னவர் எஞ்சியவற்றைக் கண்டு கொள்வர்; எத்தகு பெருமூளையர் எனினும் அவர் நூற்றுக்கு நூறு சொற்களுக்கும் பொருள் காணமுடியும் எனக் கருத வேண்டியதில்லை என்பார். இக் குறிப்பை நினைந்து நூற்றுமேனிக்கு ஒரு பத்துச் சொற்களின் பொருள் கண்டாலும், அவ்வளவில் பயன்தானே என்னும் உந்தலால் எழும் ஆய்வே இஃதென்க. பர் என்னும் அடிச் சொல்லுடன் அகரம் சேரப் பர என்றாம் எனக் குறித்தோம். பர என்பதன் வழியாகவும் விரியாகவும் வரும் சொற்கள் அனைத்தும் பரவுதல் - விரிதல் - அகலுதல் - என்னும் ஒருபொருள் குறித்தே வரக் காணலாம். பர என்னும் சொல்லின் பொருள் பரவுதல் எனின், பல சொற்கள் வேண்டுவதென்னை எனின், வெவ்வேறு பொருள்களைக் குறிக்கச் சொல்லின் இடையும் ஈறும் வெவ்வேறு திரிபு வடிவங்களை எய்துதல் வேண்டும் என்பது சொல்லியல் நெறிமுறை என்க. இல்லையேல் பொருண் மயக்கம் எத்துணையாம்? பரிசம், பரிசில், பரிசு என்னும் மூன்றும் பர் என்னும் வேருடன் இகரம் சேர்த்து வெவ்வேறு வடிவாக நிற்கும் சொற்களாக உள்ளன. ஏன்? இவற்றின் பொருளிலும் நுண்ணிய வேறுபாடு உண்டு என்பதை உணர்த்துவதற்கேயாம். பரிசம் = தலைவன், தலைவிக்குத் தரும் பொருள். பரிசில் = இகலாமல் பெறும் கொடை. பரிசு = இகலிப் பெறும் பொருள். என மூன்றன் வேறுபாட்டையும் சுட்டுவார் பாவாணர். ஆதலால் சொல்திரிதல் பொருள் விளக்கத்திற்காக என அமைக. பரக்கம்: விரிவு என்னும் பொருள் தரும் சொல் பரக்கம் என்பது. பரக்கப் பார்த்தல் என்பது. குறித்த இடத்தில் ஊன்றி நோக்காமல் அங்கும் இங்கும் பரந்துபடப் பார்த்தல். பரக்கப் பார்த்தல், பராக்குப் பார்த்தல் என்றும் வழங்கும். பராக்குப் பார்த்துக் கொண்டு போய்ப் படியில் விழாதே என்பது எச்சரிப்பு. பரக்கப் பரக்கப் பார்த்தல் என்று அடுக்கி வருவதும் வழக்கில் உள்ளதே. இவை, விரிவுப் பொருளன என்பது விளக்கமாம். பரக்களி: கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண்களைப் பரக்களி என்பது கல்வளை வட்டார வழக்காகும். பரத்தை, பரத்தன் என்பவை பொதுவழக்குச் சொற்கள். உரிமை விடுத்து அயலாரால் மகிழல் பரக்களி ஆயிற்று. பரக்கு: பரக்கு என்பது பரவிய புகழைக் குறிக்கும். அதனை அழித்தல் பரக்கழித்தல் எனப்படும். பரக்கு அழிதல் பரக் கழிதல் ஆகும். பரக்கழி என்பதும் புகழ் அழி நிலை சுட்டும். இவை இலக்கிய ஆட்சியுடையவை. கொந்தள மாக்கிப் பரக்கழித்து - நாச். திரு. 12:3 நின்மலனென் றோதிப் பரக்கழிந்தான் - பெரி. திரு. 4.8:5 பரக்கழி இது நீ பூண்டாற் புகழையார் பரிக்கப் பாலார் - கம்ப. வாலி. 79 பரக்கு என்பதற்குப் பரவிய புகழ் எனப்பொருள் கண்டோம். இச்சொல்லும் பொருளும் அகராதியில் இனிமேலேதான் ஏற வேண்டும். ஒளி என்பதொரு சொல்லின் பொருளை விளக்கும் பண்டை யுரையாசிரியர்கள் தாம் உளகாலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப் படுதல் என்பர் (திருக். பரி. 653, 971; நாலடி. பது. 9). புகழ் என்பதற்குத் தான் இறந்த காலத்தும் உளதாம் உரை என்பர் (நாலடி. பது. 9). ஒளியினும் புகழ் விரிந்தது என்பதை, உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ்செய்யான் என்று நாலடியார் (9) கூறும். இதனைப் பரிமேலழகரும் தம் உரையில் எடுத்தாள்வார். இதனால், பரக்கம் விரிவு என்னும் பொருள் தருவதுடன் புகழ்ப் பொருளும் தருதல் அறிந்து இன்புறத் தக்கதாம். மண்தேய்த்த புகழ் என்னும் சிலம்புத் தொடருக்கு (1:36) பூமி சிறுகும் படி வளர்ந்த புகழ் என அரும்பத வுரைகாரரும், புகழ் வளரப் பூமி சிறுகலான் என அடியார்க்கு நல்லாரும் உரைத்தமை அறியத்தக்கன. பரக்கும்: பரக்கும் என்பது, பரவும் என்னும் பொருள் தரும் சொல், ஆனிற் பரக்கும் யானைய முன்பிற், கானக நாடன் என்பது புறப்பாடல் (5). பரக்கும் என்பது பரவுதல் பொருளது. ஆக்கள் பரவித் திரிவது போல் யானைகள் திரிகின்றனவாம் மலை நாட்டில்! இவ்வாறே பரக்க, பரத்தல் என்பனவும் இப் பொருளனவே. பரக்கலென் பகர்வது என்னும் கம்பர் வாக்கு (சடாயு. 11) விரிவாய் எனவும், செம்புற மூதாய் பரத்தலின் என்னும் அகப்பாடல் (134) பரவுதலின் எனவும் பொருள் தருதல் அறிக. ஒருநிலையில் அமையாமல் விரைவானைப் பரக்கா வெட்டி என்னும் வழக்கம் உண்மையை எடுத்துக்காட்டுகிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி. அதன் பொருள், அதிகமாய் அவசரப்படுபவன் என்கிறது. பரக்குதல்: பரக்குதல் என்பதும் பரவுதல் பொருளதே. ஓரிடத்தில் நில்லாமல் அலைந்து திரிதல் என்னும் இச்சொல் வழியாகப் பரக்கினார் என்னும் சொல் உண்டாகின்றது. பரக்கினார் படுவெண் தலையில் பலி என ஆள்கிறது தேவாரம். பரக்குறவை: மீன் வகையுள் ஒன்று பரக்குறவை. அது மற்றைக் குறவைகளிலும் நீளவாளம் உடைமையால் பரக்குறவை எனப்படுகிறது. அது பதின்மூன்று விரலம் (அங்குலம்) வளர்வதும் பச்சை நிறமுள்ளதுமான நன்னீர் மீன்வகை என்று குறிப்பிட்டுள்ளது சென்னைப் பல்கலைக்கழக அகராதி. பரகுரவை பரகொரவை என்னும் பெயர் உடையதும் அது என்றும் அவ்வகரமுதலி கூறும். பரகு: பரபரப்பாகத் திரிதல் பரகு பரகு எனத் திரிதல் எனவும், அகலமாகச் சொறிதல் பரகு பரகு எனச் சொறிதல் எனவும் சொல்லப்படும். பாக்கு வெட்டியின் பயனைச் சொல்லும் ஒரு தனிப் பாடல் பரகு பரகு எனச் சொறிதற்குப் பயன்படுவதைச் சுட்டுகிறது. பரங்கி: பரங்கி என்பதொரு கொடி; அக்கொடி மிக ஓடிப் பரவும் இயல்பினது. அன்றியும் அதன் காயும் பருத்தது. கொடியின் பரவுதல் கொண்டே பரங்கி என்றிருக்க வேண்டும். இனி வெண்ணிறத்தது என்பதால் பறங்கியர் நிறக்காய் என்னும் பொருளால் வருதல் பொருந்துதல் இல்லை. பறங்கியர் நிற ஒப்புமை பரங்கிக்காய் நிற ஒப்புமையொடு பொருந்துதல் இல்லையாம். காய் பருத்ததைக் கொண்டு வந்ததெனின், பருங்கிக் காயாக வந்திருக்கும் என்க! மெல்லிய சுணைகளைக் கொண்டிருத்தலால் பூசுணைக் காய் என அதன் ஒருவகைக்குப் பெயரிருத்தல் அறியத் தக்கது. பரசுதல்: பரசுதல் என்பதொரு தொழில். உழவர் களத்தில் பரசுதல் பணியுண்டு. சோளம், கேழ்வரகு, கம்பு முதலிய தவசக் கதிர்கள் உழுந்து, துவரை, மொச்சை முதலிய பயற்று நெற்றுகள் ஆகியவற்றைப் பரசிக் காய வைப்பர். அவற்றைத் தட்டித் தூற்றிய பின்னரும் பரசிக் காயவிடுதல் உண்டு. பரசுதல் படரக் கிளரிக் காயவிடுதலாம். பரசு அடித்தல் தொழி வேலையில் உண்டு. தொழிக் கலக்கிக் குழை மிதித்த பின் நிலத்தை ஒப்புரவாதற்குப் பரசடித்தல் உண்டு. அதனை அடித்தற்குரிய செயல் மரமடித்தல் எனப்படும். பலகடித்தல் என்பதும் அது. பரசு: மிகுதியான தவசம் களத்தில் காய வைக்க வேண்டி இருந்தால் கையால் பரசி விட முடியாது. அதற்கு வாய்ப்பாகப் பரசு என்னும் ஒரு கருவியுண்டு. கீழ்வாயில் அகன்ற தகடும், அத்தகட்டைப் பொருத்திய பொருத்து வாயில் இருந்து நெடுங்கம்புமாக அமையும். அதற்குப் பரசு என்பது பெயர். அரிசி அரைவை ஆலைகளில் உலரப் போடுவதற்குப் பரசுவாரும், பரசினைப் பயன்படுத்துவர். அக் கருவியும் அவ் வினையும் பரசு, பரசுதல் எனப்படுதல் பரவுதல் பொருளதே. பரசுராமன் என்பான் கையிலுள்ள பரசு என்னும் கருவியின் வாய் ஏனைக் கோடரி, கண்ட கோடரி என்பவற்றிலுள்ள வாய்களின் அகலத்தினும் அகன்றதாக இருத்தல் அறியத்தக்கது. அது கொலைக்கருவி. அப்பரடிகள் கொண்டிருந்த பரசு தொண்டுக்கருவி! கருவி என் செய்யும்? பயன்படுத்துவார் உள்ளத்தைப் பொறுத்தது அது. பரசு என்பதற்கு மூங்கில் என்பதொரு பொருள். ஓரடியில் இருந்து பலப்பல சிம்புகள் வெடித்துப் பண்ணையாகப் பரவுவது மூங்கில். நூறு இருநூறு என மூங்கில்கள் புதராக மண்டிக் கிடத்தல் காணக் கூடியது. கதிரோனைச் சுற்றித் தோன்றும் ஒளிவட்டத்திற்குப் பரசு என்பதொரு பெயர். பரிவேடம் என்பதும் அதன் மற்றொரு பெயர். பரசு என்பதற்கு ஏற்பப் பரவி அகலுதலும், பரி என்பதற்கு ஏற்ப வளைதல் உடையதுமாம் பொருளைத் தரும். பரசு என்பதற்கு ஓடம் என்னும் பொருளும் உண்டு. ஆழ அகலமில்லா ஆறுகளில் பரவினாற் போல அல்லது பரசினாற் போலச் செல்லும் ஓடம் பரசு எனப்படுகிறது. பரிசல், பரசை என்பனவும் அதன் பெயர். பரசுதல், பராவுதல்: விரிந்த அளவில் செய்யப்படும் இறைவழிபாடு, பராவுதல் எனப்படும். தெய்வம் பராஅவுதல் என விளக்கமாகவும் வழங்கும். தெய்வம் பராவுதல் எனவும், அதனைச் செய்வார் பராவுநர் பரசுநர் என வழங்கப்படுவர். தெய்வம் பராய் என்னும் எச்ச நிலையில் நிற்றலும் இலக்கிய வழக்கே. தெய்வம் பராதல் என்பதோர் அகத்துறை. காதல் கொண்ட ஒரு தலைமகள், தலைமகனையே தெய்வமாக வழிபடுதல் அன்றிப் பிறதெய்வம் வழிபடாள் என்னும் கொள்கையால் அவள் காதலை உய்த்துணரச் செய்யும் வகைகளில் ஒன்றாம் அது. இவையெல்லாம் கும்பிடுதல், வணங்குதல் என்பவற்றில் விரிந்த வாழ்த்து ஆதல் அறிந்து கொள்க! பரஞ்சம்: செக்கு உரல் ஊடே இருக்க அதன் சுற்று விரிவு பெரிது. செக்கைச் சுற்றி விரிந்து செல்லும் பரப்பைக் கொண்டு அதற்கு அமைந்த பெயர் பரஞ்சம் என்பது. நீரில் தோன்றி விரியும் நுரைக்குப் பரஞ்சம் என்னும் பெயருண்டு. பரட்டை: தலை சீவாமல் எண்ணெய் தேய்க்காமல் இருந்தால் தலைமுடி படியாமல் எழும்பிக் கிடக்கும். அதனைப் பரட்டை என்பர். பரட்டைத் தலை தன் அளவில் பரவி விரிந்து காட்சி அளித்தல் வெளிப்படை. அவ்வாறே இலை குழை கவிந்து இறங்காமல் மேலேயும் பக்கத்தும் விரிந்து தோன்றும் மரம் பரட்டை மரம் எனப்படுதல் வழக்கு. மொட்டைக்கும் பரட்டைக்கும் முரணுதல் நிலை. பரட்டை என்பதற்குச் செடி முதலியன தலை பரந்து நிற்கை என்னும் சென்னைப் பல்கலைக்கழக அகராதி. பரட்டயம்: பரட்டயம் என்பதோர் உடை வகையைச் சூளாமணி சுட்டுகிறது. அதற்கு ஒட்டுச் சல்லடம் எனக் குறிப்புரை யுளது. ஒட்டிய கலிங்கம் தாள்மேல் திரைத்துடுத் துருவக் கோடிப் பட்டிகை பதைப்ப யாத்துப் பரட்டயம் நரல வீக்கிப் கட்டிய கழலர் என்பது அப்பாட்டு (842). நரல வீக்கி என்றதால் ஒலிக்குமாறு இறுக்கக் கட்டி என்னும் பொருள்பட வரும். அது கழலுக்குக் கீழே பரட்டில் ஒலி கிளருமாறு அணியப்படும் ஓரணி எனக் கொள்ளலாமோ என எண்ண வேண்டியுள்ளது. பரட்டைக் கீரை என்பதொரு கீரையைப் பதார்த்தகுண சிந்தாமணி (603) கூறுகிறது. அதன் அமைப்பைக் கருதிய பெயராக இருக்கலாம். பரடு: காலின் ஒரு பகுதிக்குப் பரடு என்பது பெயர். அது கரண்டை எனப்படும். கணுக்காலுக்குக் கீழே படர்ந்து விரியும் அடியின் மேல்பகுதியே பரடாம். இதனைப் படம் என்று வழங்கும் வழக்கால் அதன் அகலம் அறிப்படும். படத்தைத் தேய்த்துக் கழுவு; எவ்வளவு அழுக்கு, பார் என்பது குழந்தைகளைக் குளிக்க வைக்கும் தாய்மார் உரை. இடைச்செறி குறங்கு கௌவிக் கிம்புரி இளக மின்னும் புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்போ டார்ப்ப என்பது சிந்தாமணி (2445). பரடன்: ஓரிடத்து நிலைத்து வேலை செய்ய வாய்க்காமல் பலப்பலரிடம் பலப்பல இடங்களில் அப்பொழுதைக் கப்பொழுது வேலை செய்யும் கூலியாளன் பரடன் எனப்படுதல் அவன் தொழில்நிலை கருதிய பெயராம். பரண், பரணை: காட்டுக் காவலுக்காகக் கால்கள் ஊன்றிக் கம்புகளைப் பரத்திச் செய்யப்படும் காவல் மேடை பரண் எனப்படும். பரணை என்பதும் அதுவே. கூரை வீடுகளின் சுவர் மட்டத்தில் கம்புகளைப் பரப்பிப் பலகையடைப்புச் செய்து பரண் ஆக்குவதும் உண்டு. அதில் பழம் பொருள்கள், விறகு முதலியவற்றைப் போட்டு வைப்பது வழக்கம். பரண்களை மரத்தின்மேல் அமைக்கும் வழக்கமும் உண்டு. மரக்கிளைகள் இரண்டு மூன்றைக் கழிகளாலும் குச்சிகளாலும் இணைத்துப் படல் பரப்பி வைப்பர். இது பெரும்பாலும் காட்டின் அடிவாரங்களில் அமைக்கப்படும். இவ்வழக்கம் பண்டே உண்டு என்பது, கலிகெழு மரமிசைச் சேணோன் இழைத்த புலியஞ் சிதணம் எனக் குறிஞ்சிப் பாட்டில் (40, 41) சொல்லப்படுகிறது. இதணம் என்பது பரண். கலிகெழு மீமிசைச் சேணோன் என வரும் சிலம்புக்கு (25:30)ச் சேணோன் = பரணின் மேலோன் என அரும்பத வுரைகாரர் பொருள் எழுதியமை அறியத்தக்கது. இதண் எனப் பரண் குறிக்கப்பட்டாலும் கம்பர், தொடர் மஞ்சம் போலுள பரண் என ஆள்கிறார் (அயோத். 673) இனிப் பரணம் என்பதும் பரணைக் குறிப்பதேயாம். பரண்டுதல்: களை குத்துதல், களை கிள்ளுதல், களை எடுத்தல், களை பறித்தல், களை வெட்டல் இன்னவாக வழங்கும் ஒருவினைப் பல கூறுகளுள் களை பரண்டல் என்பதும் ஒன்று. அதற்குரிய கருவி களைபரண்டி. களை சுரண்டியினும் விரிந்த தகடுடையது களைபரண்டி. களைகொத்தி இடப்பரப்பைச் சுருக்கி ஆழ்ந்து செல்லும். களைபரண்டி இடப்பரப்பை விரித்து, மேலால் தடவிச் செல்லும். களை சுரண்டியும் மேலால் நிலத்தை வழித்துச் செல்வதே. எனினும், பரண்டியின் அளவுக்குக் குறைந்தது. எலி துளைத்தல், ஓரிடத்துத் தோண்டுதல்; எலி பரண்டல் அகலமாகக் கிளைத்து எறிதல். பரண்டுதலுக்கு விரிதல் பொருள் உடைமை இவற்றால் விளங்கும். பரண்டை: பரடு என்னும் பொருள் தரும் சொல் பரண்டை என்பதாம். பரண்டை என ஒரு பறவை உண்டெனச் சர்வார்த்த சிற்ப சிந்தாமணி என்னும் நூல் கூறுகிறது (16). பரண்டை வலத்திற் பாடி வலத்திருந் திடத்திற் போந்து என்பது அது. இருபாலும் சிறகு பிறபறவைகளினும் விரிந்தியலும் தன்மையால் இப்பறவைக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அன்றிப் பரண்டுதல் உடைமையாலும் பெயர் பெற்றிருக்கலாம். சில பறவைகள் காட்டுச் செடிகள் தூறுகள் ஆகியவற்றின் அடிப்பகுதியில் பரண்டிக் குழியாக்கி முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரித்தல் உண்டு என்பதை அறியின் இவ்வூகம் கொள்ளத்தக்கதாம். பரணசாலை: பரண், பரணை என்பவற்றை முன்னே அறிவோம். அப்பரண், ஊன்றிய கால்களின் மேல் அல்லது மரக்கிளையின் மேல் அமைக்கப்பட்டவை. இப் பரணசாலையோ, கால்களை நேர்கால்களாகவோ, முகடு கூட்டுதலாகவோ ஊன்றி, இலை தழை புற்களால் வேய்ந்து வைக்கப்படுவதால் - குச்சிகளை ஊன்றிச் செய்யப்படுவதால் குச்சில் எனப்படும். பூப்படைந்தாளுக்கெனத் தனிக்குச்சில் அமைப்பதும், அதில் அவளை இருக்க வைப்பதும் உண்டு என்பதைக் குச்சிலுக்குள் இருக்கிறாள் என்று கூறும் வழக்கம் வெளிப்படுத்தும். பூப்புவிழா முடிந்தபின் குச்சிலை எரித்தல் சில மலைவாணர் வழக்கென்பது அறியத்தக்கது. சோலையங் கதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய சாலையுள் இருந்தாள் ஐய தவம்செய்த தவமாம் தையல்-சுந். திருவடி. 64 எனவரும் கம்பர் வாக்கு, பரணசாலை யமைப்பை விளக்கும். காடு காவலரும் ஏரி காவலரும் களங்காவலரும் குச்சில் அமைத்தலும், மாறி மாறி இரவு பகலாகக் காவல் இருத்தலும் இந்நாளிலும் காணக் கூடிய காட்சிகளே! இனிப் பன்ன சாலை என்பதொரு பெயரும் அதற்குண்டு. பன்னுதல், பின்னுதல். ஓலை இலை தழைகளைக் கொண்டு பன்னுதலால் வந்ததென்க. பன்னக சாலை என்பதும் அது. இவன், கைகள் இன்று பன்னசாலை கட்ட வல்ல வாயவே என்பதொரு பழைய இராமாயணப் பாடல் (புறத் 725). பரணம்: பரணம் என்பதற்குத் தாங்குதல் என்பதொரு பொருள். வறியராய் வந்தாரை வரவேற்று உதவும் பேருளமே இவண் பரணமாதல் அறிக. அடுக்கிய மூவுலகும் கேட்குமே சான்றோர் கொடுத்தார் எனப்படுஞ் சொல் என்பது நாலடிப்பாட்டு (100). புகழ் பரவுதற்கு இடனாக இருக்கும் கொடையைப் பரணம் என்றமை அதன் பரவுதல் தன்மை கருதியதேயாம். இனி, மார்பகம் முழுதுறத் தழுவிக் காவற்கடன் செய்யும் மெய்ம்மறை (கவசம்) பரணம் எனப்படும். பரணி என்னும் விண்மீனும் பரணம் எனப்படும் என்று கூறுகின்றன அகராதிகள். அதன் பொருட் பொருத்தம் பரணியிற் காண்க! பரணர்: கழகக் காலப்பெரும் புலவருள் ஒருவர் பரணர். அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய தொகை நூல்களில் இவர் பாடல்கள் உண்டு. கபில பரணர் எனச் சான்றோரால் எடுத்தாளப்படுதல் இவர்தம் புலமைச் சிறப்பையும் கபிலர்க்கும் இவர்க்கும் இருந்த பெருங் கிழமையையும் உரைக்கும். இன்றும் பரணன் பாடினன் மற்கொல் எனவரும் (புறம். 99) ஔவையார் மொழி, பரணர்தம் சிறப்பினை நன்கு பகரும். கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துப் பாடியதற்குப் பரிசிலாக உம்பற்காட்டு வருவாயைப் பரணருக்கு உவந்து தந்ததுடன், தன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாக வழங்கினான் என வரும் செய்தி (பதிற். பதி. 5) பின்னவனை மன்னவன் தகுதி ஆக்குதற்கு வல்லவர் இன்னவரே எனத் தேர்ந்து செய்த சீர்த்திச் செயலாம். இவர் காலத்திற்குப் பின்னரும் இவர் பெயரால் பலர் இருந்து பரவு புகழாளராகத் திகழ்ந்தமை இவர் புகழை மலைமேல் விளக்கெனக் காட்டும். இனி, இவர் பரணி நாளிற் பிறந்தவராதல் வேண்டும். அது கருதி இப்பெயர் பெற்றார் என்பர். ஆயின், பரணியாராக இருப்பாரே யன்றிப் பரணர் எனப்படார் என்பது தெளிவான செய்தி. வரலாற்றுச் செய்திகளைத் தம் பாடல்களில் விரித்தும் சுட்டியும் செல்லும் இப் புலவர் பெருமகனார், நாடளாவிய புகழாளராகத் திகழ்ந்தார் என்பது ஒருதலையாம். அச்சிறப்பே இவரைச் சான்றோர்களால் பரணர் என வழங்குமாறு செய்ததாம் எனலாம். நம் கண்காணப் பெரியார் என ஒருவர் பெயரே அமைந்து விடவில்லையா! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பெரியாழ்வார் என ஒருவர் பெயர் இருந்ததில்லையா? பரணி: பரணி என்பதொரு விண்மீன்; அடுப்பு, முக்கூட்டுக்கல் போன்ற அமைப்பு உடைமையால் பரணி அடுப்பு எனவும் படும். அடுப்பு என்னும் சொல்லுக்குப் பரணி என்னும் பொருளும் உண்டாயிற்று. பரிய சாடியும், சிலந்திக் கூடும், ஏரி நீர்ப் பெருக்கை வழிய விடும் மதகும், கால் கைகளை அகற்றிச் சுருக்கி ஆடும் கூத்தும் ஆகியவை பரணியின் பொருளன. இவை பரவுதல், அகலுதல், விரிதல் பொருண்மை யுடையவை என்பதை அறிக. அடுப்புத் தனித்து ஒன்றாக வைக்கும் வழக்கமில்லை என்பதை அறியின், பிள்ளை யடுப்பு அல்லது குட்டியடுப்பு, பக்க அடுப்பு, கொடி யடுப்பு என அடுப்புகள் உண்மை விளங்கும். பரணி அடுப்புப் பாழ் போகாது பரணியிலே பிறந்தால் தரணி யாளலாம் என்னும் பழமொழிகளும், தரணி காவலன் சச்சந்தன் என்பவன் பரணி நாட்பிறந் தான்பகை யாவையும் அரணி லான் என்னும் சிந்தாமணியும், இன்ன நாட்பிறந்த இன்னான் என்றல் அரசர்க்கு மரபு. பரணி யானை பிறந்த நாளாதலின் அது போலப் பகையை மதியான் என்றான் என்னும் நச்சினார்க்கினியர் விளக்கவுரையும், பரணியான் பாரவன் என்னும் மயிலைநாதர் உரையும் (நன். 50) இவண் கருதிக் கொள்ளத்தக்கன. பரணி நூல்: போரிடை ஆயிரம் ஆண்யானைகள் பட்டழிய, வென்ற வீரமகனுக்குப் பாடப்படுவது பரணி நூலாகும். ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவ னுக்கு வகுப்பது பரணி - இலக். பாட். 78 ஆனைப் போர் வெற்றியாளர்க்கன்றிப் பிறர்க்குப் பரணி வகுப்பதில்லை என்பதை, யானை எய்த அடுகளத் தல்ல தியாவரும் பெறாஅர் பரணிப் பாட்டே - பன்னிரு. 244 என்பதால் அறியலாம். யானைத் தொகையைப் பிறவாறு கூறினாரும் உளர். ஏழ்தலைப் பெய்த நூறுடை இபமே அடுகளத் தட்டாற் பாடுதல் கடனே - பன்னிரு. 245 என்பது பன்னிரு பாட்டியல். கடவுள் வாழ்த்து, கடைத்திறப்பு முதலிய பல உறுப்புகளை அமைத்துப் பாட்டுடைத் தலைவனுடைய பலவகைச் சிறப்புகளையும் பல்வேறு வகைகளால் புறப்பொருள் அமைதி தோன்ற விளக்கிக் கலித்தாழிசையால் பரணி பாடப் பெறும். இதனுள் இரு சீரடி, முச்சீரடி யுடையவை வாரா. பரணியின் பொருட்டொடர் நிலை வருமாறு: தேவர் வாழ்த்தே கடைநிலை பாலை மேவி அமரும் காளி கோயில் கன்னியை ஏத்தல் அலகை விநோதம் கனாநிலை நிமித்தம் பசியே ஓகை பெருந்தேவி பீடம் அழகுற இருக்க அமர்நிலை நிமித்தம் அவள்பதம் பழிச்சா மன்னவன் வாகை மலையும் அளவும் மரபினி துரைத்தல் மறக்களங் காண்டல் செருமிகு களத்திடை அடுகூழ் வார்த்தல் பரவுதல் இன்ன வருவன பிறவும் தொடர்நிலை யாகச் சொல்லுதல் கடனே - பன்னிரு. 243 கடவுள் வாழ்த்துக் கடைதிறப் புரைத்தல் கடும்பாலை கூறல் கொடுங்காளி கோட்டம் கடிகணம் உரைத்தல் காளிக் கிதுசொலல் அடுபேய்க் கவள்சொலல் அதனால் தலைவன் வண்புகழ் உரைத்தல் எண்புறத் திணையுற வீட்டல் அடுகளம் வேட்டல் இவைமேல் அளவடி முதலா அடியிரண் டாக உளமகிழ் பரணி உரைக்கப் படுமே - இலக். பாட். 79 பரணிப்போர் முறையைப் பன்னிரு பாட்டியல், மயக்கறு கொச்சகத் தீரடி இயன்று நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து வஞ்சி மலைந்த உழிஞை முற்றித் தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை வெம்புசின மாற்றான் தானைவெங் களத்திற் குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத் தொருதனி ஏத்தும் பரணியது பண்பே - பன்னிரு. 242 எனக் கூறும். நவநீதப் பாட்டியலோ பரணியின் இலக்கணத்தை ஐந்து கட்டளைக் கலித்துறைகளால் விரியக் கூறும் (57-61). பரணி என்பது நாண்மீனின் பெயர். பரணி நாள் முதன்முதல் அடுப்பில் தீமூட்டி அடுதற்கு உற்ற நாள் என்பர். அந் நாளைத் தேர்ந்து அடுகளத்துற்ற பேய்கள் கூழட்டு உண்டு கூத்தாடி மகிழ்வதாக அமைந்த நூலுக்குப் பெயராயிற்று. பரணி நாட் பெயர்ப்பொருள், காடு கிழவோள் பூதம் அடுப்பே தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணிநாட் பெயரே என்று திவாகரம் கூறுதலால் புலப்படும். இப் பொருள்களுக்கும் பரணியில் வரும் செய்திகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பரணி நூலால் இனிது விளங்கும். பரத்தமை: கட்டின்றிப் பலரின்பம் தேடி வாழும் வாழ்வைப் பரத்தமை வாழ்வென்பது பழமை தொட்டே வரும் வழக்கு. நண்ணேன் பரத்தநின் மார்பு என்பது திருக்குறள் (1311). பரத்தந்து என்பதொரு சொல் பரிபாடலில் வருகின்றது (7.39) அதற்குப் பரிமேலழகர் பரக்க என உரை எழுதினார். பரத்தர என்னும் சொல்லைக் கலியும் (106), புறமும் (274) வழங்கு கின்றன. பரத்தலைச் செய்யும்படி என்பது இதன் பொருளாம் (கலி. நச்.). பரத்தல், பரத்தருதல் போல வந்தவை பரத்தன், பரத்தை, பரத்தர், பரத்தமை என்னும் சொற்களாம். நகரப் பரத்தர் எனப் பரத்தரை இடஞ்சுட்டி யுரைக்கிறார் இளங்கோவடிகளார் (சிலப். 5:200). பரத்தர், கழிகாமுகர் என்றார் இதற்கு உரைவிளக்கம் தரும் அடியார்க்கு நல்லார். இனிப் பரத்தர் இயன்மையை விளக்குவார் போல, வம்பப் பரத்தர் என்றார் அடிகளார் (16:23). இதற்கு விளக்கம் வரையும் அடியார்க்கு நல்லார், வம்பப் பரத்தர்= புதிய காம நுகர்ச்சியை விரும்பும் காமுகர்; பரத்தையை நுகர்வானும் பரத்தன் என்றார். இத்தன்மை பண்பில் காதலன் பரத்தமை என மணிமேகலையில் இடம்பெறுகின்றது (7:50). போன போக்கிலே பரந்துபோம் வெள்ளத்தையும், கோலக் குறுங்கணும் (சாளரம்) நுழையும் தென்றலையும் முறையே பரிபாடலும் சிலம்பும் உவமை காட்டுவது கொண்டே, உண்மை தானே விளங்கும். பரத்தன் முதலாய இச்சொற்கள் பரவுதல், அப்பால், அப்பாலுக்கு அப்பால் என வரைதுறையின்றி அகலுதல் என்னும் பொருட்பட அமைந்திருத்தல் அறியத் தக்கனவே. அறிவராயினும் தவத்தராயினும் புதிது புதிதுண்ணும் வண்டு போலும் காமுகராயினும் கண்வலை யால் பற்றிப் பிடிக்கும் கலைவல்ல - எண்ணெண் கலைவல்ல - பரத்தையரைச் சுட்டுகிறார் இளங்கோவடிகள். அவர்களைத் தளியிலார் என்றும் பதியிலார் என்றும் அரும்பத வுரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் உரைக்கின்றனர் (சிலப். 14:160, 167). பராகந் தேடியுண்ணும் வண்டுக்கு உவமை கூறிய ஒன்றால் கண்டு கொள்ளலாமே. பரத்தன்: பரம் + அத்து + அன் = பரத்தன். புறத்தொழுக்கமுடையவன் பரத்தனாம். பரத்தன் என்பது இல்லின் கட்டுத் தாண்டிய கட்டற்ற வாழ்வினன் என்பதாம். பரத்தை என்பது பயில வழங்கினும் பால்வேறுபாடற்றுப் பரத்தன் என வழங்கியமையும் அறியலாம். மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி - அகம். 146 நண்ணேன் பரத்தநின் மார்பு - திருக். 1311 பரத்தையிற் பிரிவு: பாலைத் திணை என்பது பிரிதல் ஒழுக்கம் பற்றியது. அப்பிரிவு வகைகளை, ஓதல் பகையே தூதிவை பிரிவே - அகம். 25 பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே - அகத் 33 காவற் பாங்கு பரத்தையின் அகற்சி (அகத். 41) எனப் பலதிறப்பட ஆசிரியர் தொல்காப்பியனார் வகுத்தாராகப் பின்னுளோர், பரத்தையிற் பிரிவென ஒரு பிரிவாக்கியதுடன், இல்வாழ்க்கையே பரத்தையிற் பிரிவே என முதன்மை தரவும் ஆயினர். சேரிப் பரத்தை, இற்பரத்தை எனப் பிறபிற பெயரிட்டு வழங்கும் வழக்கும், பழநாள் தொட்டே ஆயிற்று. அதனை முதற்கண் கடிந்து கொடி தூக்கி முழக்கமிட்டவர் முதற்பாவலரே என்பது இவண் எண்ணத்தக்கது. பரத்தி: பரத்தி என்பதொரு சொல், பரத்தமை சுட்டாப் பொருளில் வழங்குகின்றது. அது பரவை எனப்படும். கடலாளுகையுடைய பரதவர் குடிப்பெண் மகளைக் குறிப்பது. பரதவர் பரவர் ஆகிய பின் அவர்தம் பெண்டிர் பரத்தி எனப்பட்டனர் என்க! பரவர், படவர் எனவும் செம்படவர் எனவும் வழங்குதல் இவண் அறிக! பரத்தை: இனிப் பரத்தை என்றொரு சொல் பரத்தமை குறியாப் பொருளில் வழங்குகின்றது. அது சொல்லின் முழுவடிவற்ற சொல். செம்பரத்தை என்பதன் குறைச்சொல். ஒரு செடிவகை அது. பரந்தோர்: பரந்தோர் எல்லாம் புகழ் என்று புறநானூற்றில் வரும் பரந்தோர் பரவி நின்றோர் என்னும் பொருளதாம் (285). பரந்தோர் அறிவான் விரிந்தோர் என்றும் புகழால் விரிந்தோர் என்றும் பொருள்தர ஆட்சியில் உண்டு. இருங்குன் றென்னும் பெயர் பரந் ததுவே என்னும் பரிபாடல் (15:35). பெயர் பரந்தது என விளக்கிக் காட்டுதல் அறிக. பரந்து படு நல்லிசை எய்தி என்னும் புறநானூறும், பரந்துபட்ட நல்ல புகழை இவ்வுலகத்துப் பொருந்தி என்னும் அதன் உரையும் இவண் கருதத்தக்கன (213). பரப்பு: பரப்பு:1 உலகு பரப்பால் பெரியது என்பது உலகறிந்த செய்தி. அதனால் பரப்பகம், பாரகம், அகல் ஞாலம், கண்ணகல் ஞாலம், மாஞாலம் என எண்ணற்ற வகையால் குறிக்கப்படலாயிற்று. இவ்வுலகின் நிலப்பரப்பினும் நீர்ப்பரப்பே மும்மடங்கு விரிந்தது என்பதும் உலகறிந்த செய்தி. அதனை உணர்த்துமாப் போல நீர்ப் பரப்புக்குப் பரவை என்றொரு பெயர் சூட்டினர் நம் முந்தையோர். பரப்பு என்பது நிலப்பரப்பு நீர்ப்பரப்பு எனப் பொதுமையுடையதாயினும் பரப்பு கடலைச் சிறப்பாகக் குறிப்பதும் ஆயிற்று. பரந்தகன்ற நீர்ப்பகுதியைப் பரவை என்றதும் பரப்பு என்றதும் தேர்ச்சி மிக்கதாம். ஒரே பார்வையில் பார்க்க முடியாத பரப்பு மிக்கது நீர் என்பதை இச்சொற்கள் சொல்லும் பொருளும் ஒருங்கே குறிப்பது போல் மற்றொரு சொல் குறிப்பாகக் காட்டுகின்றது. அது கடல் என்பது. கட்பார்வையைக் கடந்து விரியும் விரிவுடைய நீர்ப்பரப்பு கடல் என்க! இக்கடலின் விரிவுப் பொருள் இலக்கணக் கடல் இலக்கியக் கடல் அறிவுக் கடல் கடலன்ன செல்வம் நன்மை கடலிற் பெரிது (திருக். 103) என்றெல்லாம் இருவகை வழக்கு களிலும் ஊன்றலாயின. பரவை என்பது நெய்தல் நிலம். அந்நிலத்திற்குரிய மக்கள் பரதவர், பரவர் எனப்பட்டனர். கடற்பகுதியை ஆட்சி செய்த வேந்தர்கள் பரதவ என்று விளிக்கப் பெற்றனர். கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ என்பது பதிற்றுப்பத்து (48). இவர் பரதர் எனவும் வழங்கப்பட்டனர் என்பது படர் திரைப் பரதர் எனவரும் கம்பர் வாக்காலும் (கார்காலப். 74), பரத குமரரும் என வரும் இளங்கோவடிகள் வாக்காலும் (சிலப். 5:168) அறியப்பெறும். பரதவர் வேந்தரும், பரதவர் வினைஞருமாக இரு திறத்தவரும் இருந்தனர் என்பதும் அறியக் கிடக்கின்றது. தென்பரதவர் போரேறே எனவரும் மதுரைக்காஞ்சி (144) மன்னரைக் குறிக்கும்; மீன்விலைப் பரதவர் எனவரும் சிலம்பு (5:25) நிலமக்களாம் வினைமக்களைக் குறிக்கும். கொடுந்திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணுதலைப் பட்டினப்பாலையும் (112) பழம்படு தேறல் பரதவர் பருகுதலைச் சிறுபாணும் (159) பாடுகின்றன. அரசர்களால் எட்டிப் பட்டம் பெற்றவராகவும், கடல் வணிகராகவும் இருந்தமையால் வணிகரும் பின்னாளில் பரதவர் எனப்பட்டனர். பரதவர் கோத்திரத்த மைந்தன் (உபதேச. சிவத் 189) என்பதை அறிக. பரதவர் என்பார் பரதர் என வழங்கப் பெற்ற குறிப்பும் பலநூல்களின் வழியே அறியப் பெறுகின்றது. பரதர் மலிந்த பல்வேறு தெருவைக் காட்டுகிறது பெரும்பாண் (323). பரதர் தந்த பல்வேறு கூலத்தைக் காட்டுகிறது மதுரைக்காஞ்சி (317). பரப்பு: பரப்பு:2 பரவச் செய்தல், அகல விரித்தல் ஆகிய பொருள் வழியாகப் பரப்புதல் என்னும் தொழிற்பெயர் வரும். பரப்பு என ஏவலாகவும் பெயராகவும் நிற்றல் உண்டு. பரப்பு இடவிரிவு என்னும் பொருளது. மண்ணிடம், வானிடம், கடலிடம் ஆகிய இட விரிவுகளைப் பொதுவாகச் சுட்டலும், தனித்தனியே சிறப்பாகச் சுட்டலும் உண்டு. நெற்பரப்பு, நிலைப்பரப்பு என்றிரு வகையான நில அளவைச் சுட்டுகின்றது செ.ப.க. அகராதி. கதவு நிலையின் மேலுள மண்தாங்கிப் பலகையையும் பரப்பு எனலுண்டு. கணக்கு வகையில் பரப்பளவு காணல் என்பதொன்று. பரப்பளவுக்கெனத் துறையே அமைந்துள்ளது. விரைவு, சுறுசுறுப்பு, தினவெடுத்தல் என்னும் பொருளில் பரபரத்தல் பரபரப்பு என்பவை வழக்கில் உள்ளன. ஒழுங்காக இரு; இல்லையானால் அடி வாங்குவாய் என்னும் பொருளில், உடம்பு என்ன பரபரக்கிறதா? என்று வினாவுதல் கேட்கக் கூடிய வழக்கு. பரப்பாழ், பப்பரப்பாழ் என்பன திறந்தவெளி, வான்வெளி என்பவற்றைப் பொதுமக்கள் இயல்பாகக் குறிக்கும் வழக்குச் சொற்கள். இவையெல்லாம் பரவுதல் விரிதல் பொருளன என்பது வெளிப்படை. பரம்: மேலானது, உயர்ந்தது, அப்பாலானது, அப்பழுக்கு இல்லாதது முதலிய பொருள்களைத் தரும் சொல் பரம் என்பதாம். பரம்பொருள், பரமன், பரதேசி, பரமானது என்பவற்றில் இப் பொருள்கள் முறையே அமைந்திருத்தல் அறிக. கடவுள் என்பதிலுள்ள கடந்த என்னும் பொருள் பரம் என்பதிலும் உண்மையைக் கடல் பரவை என்பவற்றொடும் எண்ணிக் கொள்க! மொழிபெயர் தேயத்தரே இரந்துண்பாராக இருந்த நாளில் எழுந்த சொல்லாட்சி பரதேயி என்பதாம். பரதேசி என வழங்குதல் தேஎம் தேம் தேயம் என்பவை தேசம் என வேற்றுச் சொல்லாகக் கொள்ளப்பட்டதன் பின்னை வடிவமாம். பரம் என்பது பாரம் என்னும் பொருளிலும் வரும். பரவிய இடம் பார் எனப்படுதல் போல், பரவிய சுமை பாரம் ஆயிற்று. பாரவண்டி, பாரச்சட்டம், பார் என்பவற்றை எண்ணுக! நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதை எனக் கழுதையின் முதுகில் இருபாலும் சுமை ஒழுங்குபட அமைத்துச் செல்லும் முறைமை அகப்பாட்டிலே விளங்குகின்றது (207). கழுதையின் முதுகுப் பரப்பினும் மிக்கு இருபாலும் நிரந்து பரந்து கிடக்கும் சுமை நிரைப்பரம் என்னும் சொல்லாட்சியால் விளங்குதல் நயமிக்கதாம். மேல் மேல் அடுக்கலும் நிரைப்பரமாம். கள்ளமில்லாத வெள்ளைத் தன்மையைப் பரம் என்பதும், அத்தகையரைப் பரமானவர் என்பதும், அவர்தம் போக்கினைச் - செயலினைப் - பரம்போக்கு என்பதும் வழக்கில் உள்ளமை அறியத்தக்கன. பரமேளம் என்பதும் பரம்போக்கே. அகன்ற வாயையுடைய அகல்வாய்ச் சட்டியைப் பரவச் சட்டி என்பதும். அயலே இருந்து வரும் வாக்கைப் பரவாக்கு என்பதும் நினையலாம். உடலுக்குப் பரம் என்பதொரு சொல்லுண்டு. பரம், பாரம் என்னும் பொருளது. உடலைக் கொண்டே உயிர்வாழ்வு இயல்வது என்றாலும், உடலைக் கொண்டே அருள் தொண்டு இயல்வது என்றாலும், அவ்வுடலைப் பேணிக்கொள்ள வேண்டிய தீராக் கடனும் இருத்தலால், அவர்க்குத் தம்முடம்பு பேணுதலும் சுமையாய் அமைகின்றதாம். அதனாலன்றே, மற்றும் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை என்றார் திருவள்ளுவர் (திருக். 345). இப்பரந்துடைத்தவர் என்னும் கம்பர் வாக்கு (கடிமணப். 69) பரம் என்பதற்கு உடல் என்னும் பொருளுண்மை காட்டும். பரம்பரம்: பரம்பரம் அப்பாலுக்கு அப்பாலாம் வீடு பேற்றைக் குறிப்பது உண்டு. பத்திசெய் அடியாரைப் பரம் பரத்து உய்ப்பவன் என்னும் திருவாசகம் (2. 119) இதனைத் தெளிவிக்கும். பரம்பரத்து உய்ப்பவன் பரம்பரன் (திருவாய். 4.3:9) என்க! ஒன்றற்கு மேல் ஒன்றாய் உயர்ந்து விளங்கி வருதல் பரம்பரை எனப்படுகின்றது. சென்று சென்று பரம்பரமாய் எனவரும் திருவாய்மொழி (8.8:5) இதனைக் காட்டும். பரம்பு: அகலமாதல் பரம்பு. பரப்புதல் வழியாக எண்ணின் பரம்பு தெளிவாகும். பரம்படித்தல் உழவுத் தொழிலில் ஒரு பகுதி. அதற்கெனப் பரம்புச் சட்டம் உண்டு. இங்கே பரம்பு என்னும் சொல் பாய் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. பாய் என்பதும் பரம்புதல் பொருளதே யாகும். கல்லாஞ்சரளை பரவிக்கிடக்கும் வறண்ட நிலம் பரம்பு எனப்படும். பரவிய நிலம் என்னும் பொருளில் பரம்பு ஆளப்படுவதும் உண்டு. பரம்பெலாம் பவளம் என்னும் கம்பர் வாக்கு (நாட்டுப். 2) நிலப்பரப்பை அதிலும் மருத நிலப்பரப்பைக் காட்டுவதே. வரம்பு வரப்பென வலித்தல் அடைவது போலப் பரம்பு பரப்பென ஆகும். பரம்பு அளவு என்பதே பரப்பளவு ஆயது வெளிப்படை. பரப்பு என்பது செண்டு வெளி எனப் பொருள் தருதல் பெருங்கதையில் கண்டது (3.5:10). செண்டு வெளியாவது குதிரையோடும் வெளி, முற்றம் என்பன. பரம்படித்தல்: உழவுத் தொழிலில், பரம்படித்தல் என்பதொன்று. அது தொழி உழுது, குழை மிதித்த பின் பரம்புச் சட்டத்தால் சமனிலைப் படுத்தும் பணியாம். அதற்குரிய சட்டம் பரம்புச் சட்டம் எனப்படும். இனிப் பலகையையே பரம்பாகப் பரப்பி அடிப்பதும் அல்லது இழுப்பதும் வழக்கே! அது பரம்புப் பலகை எனப்படும். குலப்பொன்னித் திருநாடர் பரம்படிக்க என்பது ஏர் எழுபது (26). பரர்: பரர் என்பார் அயலார்; அப்பாலார், பரர்க்கடிமை செய்திடோம் என்பதில் (பாரதியார் பாடல்) அயலார் மட்டுமன்றிப் பகைவர் என்னும் பொருளும் உளதாதல் அறிக. பரர் என்பதற்குப் பகைவர் என்னும் பொருளுளதாதலைச் சூடாமணி நிகண்டு சொல்லும். பரரொடு கேளார் ஒல்லார் பகைவர்பேர் எழுமூன் றாமே என்பது அது (2:51). பரல்: பரவிக் கிடக்கும் முரம்பு நிலத்து அல்லது மேட்டு நிலத்துக் கல் பரல் எனப்படும். சுக்கான்கல் பரல் என்பதும், வித்து பரல் என்பதும், சிலம்பு, கழல் முதலியவற்றின் உள்ளிடு கல் பரல் என்பதும் அதன் வடிவொப்புக் கருதியதாம். பரற்கல் என்பது பருக்கைக்கல் எனவும் ஆளப்படும். பரல் என்பது நிலத்தைக் குறித்து வந்த பெயராயும். பருக்கை என்பது கல்லைக் குறித்து வந்த பெயராயும் அறியக் கிடக்கின்றன. முரம்பு கண்ணுடைந்த பரலவற் போழ்வில் என மலைபடுகடாமும் (198), வெயிலுருப்புற்ற வெம்பரல் எனச் சிறுபாணாற்றுப் படையும் (8) பரலைக் குறிக்கின்றன. சிலம்பில் மணியும் முத்தும் பரலாக இடப்படும் என்பதைச் சிலப்பதிகாரம் காட்டும். பரவிச் சென்று ஒலியுண்டாக்கும் வண்ணம் இடைவெளி படக் கிடத்தலால் அவை பரல் எனப்பட்டன எனக் கொள்ளக் கிடக்கின்றனவாம். பரவக் காலி: ஆடி ஓடித் திரியும் ஆடுமாடுகளைப் பரவக்காலி என்பது நாட்டு வழக்கு. அவ்வாறு அலைந்து திரிவானும் பரவக்காலி எனப்படுவான். அவ்வாறு அலைந்து திரியும் தன்மையும் பரவக் காலித்தனம் எனச் சொல்லப்படும். இவை பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. பரவயம்: தன்னைப் பற்றிய கவலையில்லாமல் தன்னைச் சார்ந்ததன் அல்லது சார்ந்தவர் வண்ணமாகி மகிழ்வது பரவயம் எனப்படும். பரம் + வயம் = பரவயம்; பரவயமாவது மகிழ்ச்சி தன்வய மிழக்கையாம். அதனை, மயலெலாம் ஒழிந்து பரவசமாம் காலம் என்பார் சிவப்பிரகாசர். இலைவயமாகத் தந்த கொடைப்பொருள் வெற்றிலையில் வைத்துத் தந்த பொருள் - இலவசம் என்றானாற் போலப் பரவயம் பரவசம் ஆயிற்றாம். பரவர் என்பார் பரதவர் என்பதைக் கண்டுள்ளோம். பரவுதல், பரவல் என்பவை பரவிச் செல்லுதல் வழிவந்த சொற்களே. பரவலாகப் பேசப்படுதல் என்பது பலராலும் பலவிடத்தும் பேசப் படுதலாம். பரவுதல் வாழ்த்துதல் பொருளில் வரும் என்பதை முன்னரே கண்டுள்ளோம். பராவுதல் என்பதும் அப்பொருளதே, ஏனை ஒன்றே, தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே எனத் தேவர்ப் பராவும் கலிவகையைக் குறிப்பார் தொல்காப்பியர் (செய். 137). பரவுக்கடன்: தெய்வத்திற்கு நேர்ந்து கொண்ட நேர்வு அல்லது நேர்த்திக் கடன் பரவுக்கடன் எனப்படும். கொற்றவைக்குப் பரவுக்கடன் பூணலைக் குறிக்கிறது தொல்காப்பியம் (பொருள். 58). பரவெளி: பரம் + வெளி = பரவெளி. பரவெளி இறையுறையும் வானிடம் எனப்படும். விண்வெளி என்பதும் அது. பரவெளியை வறிது நிலைஇய காயம் (30) என்று புறநானூறு கூறும். ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயம் என்பது இதன் பழையவுரை. காயம் என்னும் தென்சொல் ஆகார முன்னொட்டுக் கொண்டு ஆகாயமாய் வடசொல்லாயிற்று. பரவை:1 பரந்து கிடக்கும் கடலுக்குப் பரவை என்பது பழம்பெயர். பார்த்த பார்வைக்குள் அடங்காமல் பரவிக் கிடப்பதால் பெற்ற பெயர். பரவையாம் கடலுள் மீன்வளம் கொள்ளவும், முத்துக் குளிக்கவும், கடல்கடந்து வணிகம் செய்யவும் ஆகிய தொல்பழந் தமிழர் பரதவர் எனப்பட்டார். பரதவர் மலிந்த பயங்கெழு மாநகர் எனக் கடல் நகர்கள் - பட்டினங்கள் - பாராட்டப்பட்டன. நாவலந் தேயம் பரதவர் நாடு என இருந்து, பின்னே ஆரியக் கதைப்புனைவால் பரதன் (சகுந்தலையின் மகன்) பெயரால் ஆயது எனப்பட்டது. கடலாண்ட வேந்தர்கள் பரதவர் எனப்பட்டதும், பரதவ என விளிக்கப்பட்டதும் பழஞ்செய்தி. இந்நாளில் பரதவர் குடி, மீனவர் பரவர் எனப்படுகின்றனர். பழங்காலக் கடலோடிகள் உலகப்புகழ் பெற்றுத் திகழ்ந்தனர். முசிறி, தொண்டி, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் இன்னவையெல்லாம் துறைமுகங்கள், வளநகர்கள். பரவை:2 கடல் என்னும் பொருள்தரும் பரவையை முன்னர்க் கண்டுள்ளோம். பழம் புண்ணுற்றான் ஒருவன் படுக்கையில் புரள்கிறான்; அவன் புரளல் போல் அலை புரள்கிறது கடலில்; அது, முழவென முழங்கவும் செய்கின்றது (நற். 394). முழங்குதிரை முழவின் பாணியின் பைபயப் பழம்புண் ணுறுநரின் பரவையின் ஆலும் என்பது அது. இவண் பரவை புரளற் பொருளது; புரளல் பரவல்தானே! பரவை யமுது என்பது உப்பையும், பரவையாழ் என்பது பேரியாழையும் பரவை வழக்கு என்பது உலக வழக்கையும் குறிக்கும். பரவைப் புல்வரி என்பது, பரந்த புல்வெளியில் கால்நடை மேய்தற்காகப் பெறப்பட்ட ஒரு வரிப்பணமாகும். பரவையார்: ஆடல் அழகு கலைநலம் ஆகியவற்றால் பரவிய புகழ் வாய்ந்த ஒருவர் பரவை நாச்சியார்; சுந்தரர் மனையாட்டியருள் ஒருவர். அவர் பெயரைக் குறிக்கும் சேக்கிழார், பேர்பரவை பெண்மையினிற் பெரும்பரவை விரும்பல்குல் ஆர்பரவை யணிதிகழும் அணிமுறுவல் அரும்பரவை சீர்பரவை யாயினாள் திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை யிடைப்பட்ட என்னாசை எழுபரவை - பெரிய. தடுத் 148 என்கிறார். பரன்: பர் + அன் = பரன். அயன்மையான் என்னும் பொருள் தருவதுடன், இறைவன் என்னும் பொருள் தரும் சொல் பரன். பொறிபுலன்களுக்கு அப்பாலான் என்னும் இறைமைக் கொள்கை வழி வந்த சொல் பரன்; இனிப் பரம் + அன் = பரமன் என்றும், ஈரொட்டுகள் சேர்ந்தும் இறைவனைக் குறிக்கும், பரமாய பொருள் பரம்பொருள் என முந்து கண்டதையும் நினைக! பரன் சிவன், திருமால் அருகன் முதலாம் பல கடவுளரையும் குறிக்கும் சொல்லாகத் தமிழ் நிகண்டுகளும் அவ்வச் சமய நூல்களும் சுட்டுதல் அறியத்தக்கது. பர் - பரா: பர என்பது பரா என்றாகியும் பரவுதல் பொருள் தரும். பரா: பரக்கப் பார்த்தல் பராக்குப் பார்த்தலாக வரும் என்பதைக் குறித்துள்ளோம். பராகம் என்பது பூம்பராகம் எனப்படும் பூம்பொடி (மகரந்தப்பொடி) அதன் பொருளின்று பரவும் தூள், பொடி ஆகியவற்றைக் குறிப்பதாகவும் பராகம் அமைந்தது. பராம் எனத் தொகுத்தும் அப்பொருள் தருவதாயிற்று. பரவிக் கிடக்கும் பாலைவனம் பராடம் எனவும், பருத்த அடிமரம் பராரை எனவும், பருத்த மேல்தொடை பராரை எனவும் (பொருந. 104) வழங்குகின்றன. பரவுதல் பராவுதலாக வருதல் அறிந்ததே! பராக்கு: * கட்டியம் காண்க. பராளம்: பர் + ஆளம் = பராளம். பராளம் என்பது பரபரப்பு (படபடப்பு) என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. பர் அகலமாதல் பொருளது. எண்ணம், கால், கை ஒரு கட்டுக்குள் நில்லாமல் அகலப்படுதல் வழி ஏற்பட்ட சொல்லாகும். ஏராளம், தாராளம் என்பவை போல் ஆளம் சொல்லீறு. ஆளப்படுதல் ஆளம். பர் - பரி: பர் என்னும் வேருடன் இகரம் சேர்தலால் பரி என்னும் சொல்வடிவம் பெறுகின்றது. அகரம் சேர்தலால் பர் என்பது பரவுதல் பொருள் தந்தது போல், இகரம் சேர்தலால் வளைதல் பொருள் தருகின்றதாம். பரவிய ஒன்று வளைதல் இயற்கை; உலகியல் அத்தகைத்தென உற்று நோக்குவார் தெளிவாக அறிவர். உலகுக்கு அண்டம் என்பதொரு பெயர்; அதன் வடிவம் வட்டம் என்பதைக் காட்டும் பெயர் அது. விதை, முட்டை என்பனவும் அண்டம் என்பதன் பொருளவே. அப்பொருள் வடிவம் வட்டத்தின் வழிப்பட்டனவே. திங்கள் ஞாயிறு விண்மீன் இவற்றின் வடிவெல்லாம் வட்டமே. கடல் வலயம் என்பதால் கடல் வட்டம் புரியும். நீராரும் கடலுடுத்த நிலம், புடவிக்கு அணிதுகில் எனவளர் அந்தக் கடல் என்பன கடல் வட்டம் குறிப்பன. நீர்நிலையில் ஒருகல் விழுந்தால் வட்டம் கிளர்ந்து வளர்ந்து வளர்ந்து பெருவட்டமாதல் அறியார் எவர்? நீர்ச்சுழி வட்டமே! மழைத்துளி வடிவம் வட்டமே. அது விழும் வடிவம் வட்டமே. காற்றுக் கிளர்வதும் தீ எழுந்தெரிவதும் வட்டமே. வானின் தோற்றம் வட்டமே. ஆடு மாடு முதலாம் விலங்குகள் படுத்தல் வட்டமே. ஆடையின்றி வாடையில் மெலியும் மாந்தன் படுத்திருக்கும் நிலையும் வட்டமே. பறவைக் கூடுகள் வட்டமே. அவற்றின் உலாவலும், வண்டின் சுழல்வும் வட்டமே. பூவும் வித்தும் கனியும் காயும் தவசமும் வட்டமே. தனித்தனி சொல்வானேன்? குழந்தை கையில் கரியோ சுண்ணமோ எழுதுகோலோ கிடைத்தால் இயல்பாக வரைவது வட்டமே. வளையாமல் வட்டமேது? ஏன்? கோடு என்பதே வளைவு என்னும் பொருளதே. கோட்டம், கோட்டகம், கோட்டி, கோட்டை இவையும் வளைவே! கணை கொடிது யாழ்கோடு செவ்விது என்றாரே வள்ளுவர். கோடு வளைவு அன்றோ? மலைக்குக் கோடும், மரத்திற்குக் கோடும் வந்தமை வளைவால்தானே! ஆகலின் பரவும் ஒன்று வளைதல் அல்லது வட்டமாதல் இயற்கை நியதி. இது கொண்டு பர் என்பதொடு இகரம் சேர்ந்த பரி வழிச் சொற்கள் வளைதல் பொருள் தருதல் தமிழியல் என்க! வளைதலால் வந்த பெயர் வளை, வளையல், வளைவு, வளையம், வளசல், வளாகம் இவற்றில் வளைவு, ஓரளவும் உண்டு; பேரளவும் உண்டு. முழுதுறும் வளைவும் உண்டு. பரி முதற்சொற்கள் வளைதற் பொருளில் வருதலைக் காண்போம். வளைதலின் அடிக் கருத்து எப்படி எப்படி அமையுமென விளக்குகிறார் பாவாணர். வளைதற் கருத்து இயன் முறையில் வளைவு, சுருட்சி, வட்டம், வளையம், உருண்டை, உருளை முதலிய பண்புக் கருத்துக் களையும், செயன்முறையில் வளைதல், சுருள்தல், திரிதல், சூழ்தல், சுற்றுதல், உருளுதல் முதலிய வினைக் கருத்துக்களையும் தழுவும். வளைவு என்னும் பண்பின் பெயரும், வளைதல் என்னும் வினையின் பெயரும் அப்பண்பையும் வினையையும் கொண்ட பொருள்களை ஆகுபெயராகக் குறிக்கும். கோணல், சாய்தல் என்பன வளைதலின் முந்திய நிலைகளாதலின் அவையும் அதனுள் அடங்கும். (வேர்ச்சொற் கட்டுரைகள், 155). பரி:1 அச்சத்தாலோ, ஒரு நோக்கத்தாலோ ஓடும் ஓட்டம் அன்றி மற்றை ஓட்டம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக வட்டமிடல், வளைதலாகவே இயலும். அவ்வகையில் தன் பெயரைப் பெற்ற விலங்கு குதிரை. அது குதித்துக் குதித்து ஓடுதலால் குதிரைப் பெயரும் வளையமிட்டுச் செல்லுதலால் பரிப் பெயரும் பெற்றது. அதன் ஆற்றல் திறமே, அறிவியல் மூளையிற் பரியாற்றலாய் (Horse Power) மின்னளவீடாக இயல்கின்றது. வளைதலால் பரிப்பெயர் பெற்றதன் நடையும் ஓட்டமும் பரி எனப்பட்டன. காலே பரி தப்பின என்னும் குறுந்தொகை செலவையும் (14), பரீஇ என்பது குதிரைக் கதியாம் ஓட்டத்தையும் (புறம். 4) குறித்தன. குதிரை ஓட்டத்திற்குரிய வையாளி வீதி புரவிவட்டம் எனப்படுதல் அறியத் தக்கது (சூடா. 5:46). குதிரை வடிவ விண்மீனாம் அசுவதி பரி எனப்படுவதையும் சூடாமணி சுட்டும். அதற்குச் சகடம் என ஒரு பெயர் உண்மையும் அறியத்தக்கது. சகடம் = சக்கரம். குதிரை ஏற்றம் பரியேற்றம் எனப்படுதல் எவரும் அறிந்தது. குளம், ஏரி, ஆறு முதலியவை நீர்ப்பெருக்கால் உடைப்பெடுத்து விட்டால் அதனை அடைக்கப் புகுவார் வலிய மரத்தூண்களை உடைப்புப் பகுதியில் நிறுத்தி அதன் சார்பில் மரக்கிளை மணல்மூடை முதலியவற்றைச் செறித்து உடைப்பை அடைப்பது வழக்கம். உடைப்பில் நிறுத்தும் மரத்திற்குப் பரி என்பது பெயர். குதிரை மரம் எனக் கூறுவர். பரி நிறுத்துவார் என்பது திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த படலத்து (5) வரும் செய்தி. புறப்பாடல்களில் குதிரை மறம் தனிப்புகழ் வாய்ந்தது. பாண்டியர்களின் பெரும்பொருள், குதிரை வாங்குதற்குச் சென்றதை வெளிநாட்டு உலாவாணர் வியந்துரைத்துளர். பரி என்பது பரிவின் மூலம், பரிவாவது அன்பு. அவ்வன்பும் அவ்வன்பினால் உண்டாம் பாதுகாப்பும் பரி எனப்படும். பாதுகாப்பு என்பது பிறர் பாரம் (சுமை) தாங்கும் பான்மை ஆதலால், அச் சுமையும், அச்சுமை தன் சுமையொடும் ஏறும் சுமையாகலின் மிகையும் அம்மிகை பலர் பாராட்டும் பண்பியல் ஆதலால் உயர்வும் பெருமையும் ஆகியவெல்லாம் பொருளாகப் பரி சிறந்தனவாம். பரி வளைதலாதலும் அன்பாதலும் பிறவாதலும் எப்படி? ஆவும் கன்றும், தாயும் சேயும், பறவையும் குஞ்சும், சேவலும் பெடையும் வளைய வருதலை அறியோமோ? அன்பினால் மட்டுமோ வளைதல்? வன்பினால் ஒரு குட்டிக்கோ குஞ்சுக்கோ இடர் சூழ ஓருயிரி முயலுங்கால் அத்தாய் வளைய வளைய வந்து தன் வலுவெல்லாம் கூட்டித் தாக்குதலை எவரே அறியார்? இதனால் அன்றே வள்ளுவப் பேராசிரியர், அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை என்றார் (76). இவண் சாரச் சாரச் சார்ந்து, தீரத் தீரத் தீரா அன்பு வட்டமாதலைச் சார்புச் சொல்லால் குறித்தமை கொள்ளற் பாலதாம். நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் என்னும் காதலன்பிற் குன்றியதோ அத் தாயன்பு? காதல் முருகி முருகி வளர்ந்து, அருணிலைக் காதலாய்ப் பெருகிய தல்லவோ தாய்மை? பரி என்பதற்கு வருந்துதல் பொருளும் உண்டு. இதன் மிகையைக் காட்டப் பரிபுலம்புதல் என்னும் ஆட்சியும் உண்டு. பக்கம் சேர்ந்து, பரிபுலம் பினனிவன் தானே தமியன் வந்தனன் அளியன் என்பது சாத்தனார் வாக்கு (மணிமே. 16:57-58). அன்புப் பொருளாம் பரி வருந்துதல் வருத்தம் ஆமோ! அது வருந்தாக்கால் எது வருந்துவது? அருளாளர் வரலாறுகள், தமக்கு வருந்துவதையோ பொருட்டாக்கி யுரைக்கின்றன? பிறபிற உயிர்க்கு இரங்கி பரிந்து இரங்கி வருந்தும் வருத்தத்தை யன்றோ புகல்கின்றன. ஆடு தூக்கிச் சுமந்த புத்தர் வரலாறும், தந்தையே இவர்களைப் பொறுத்தருளும் என்ற கிறித்து பெருமான் வரலாறும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் வரலாறும் அவர்கள் பிற உயிர்களுக்காகத் துடித்த துடிப்பை யல்லவோ கூறுகின்றன. அவர்க்கென வந்த அல்லல் இல்லாமையால் அன்றோ, அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை எனத் திட்டமாக உரைத்தார் திருவள்ளுவர். இதற்கு வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரியாக (சான்றாக) இருத் தலைக் கண்டு தெளிக என வழிகாட்டினாரே (திருக். 245). இவற்றை எல்லாம் எண்ணினால் பரி என்பதற்கு வருத்தப் பொருள் வந்த வகை விளங்கும். பரி என்னும் சொல்லுக்குக் கண்ட குதிரை என்னும் பொருள் வழியாகச் சில சொற்கள் வளர்ந்துள்ளன. அவை பரிக்காரர், பரிக்கோல், பரிமா, பரிமுகம் என்பன. பரிக்காரர் ஆவார் குதிரைக்காரர். குதிரை நடத்துவோர். பரிக்கோல் என்பது குத்துக்கோல்; பரிக்கோற்காரர் என்பார் குத்துக்கோற்காரர்; இவர் யானைப்பாகர். மதத்தாற், பரிக்கோல் எல்லையில் நில்லாத களிற்றைக் காட்டுகிறது தொல்காப்பிய உரை (தொல். பொருள். 12). பரிமா என்பது பரியாகிய விலங்கு. கரிமா, அரிமா, நரிமா போல வழங்கும் வழக்கு. பரிமுகம் குதிரைமுக வடிவாக அமைந்த விண்மீன் (அசுவிணி) பரிமுக வடிவில் அமைந்த படகு பரிமுக அம்பி எனப்பட்டது. பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் என்பது சிலம்பு (13:176) பரிமுக மாக்கள் என்பார் கின்னரர் ஆதலைக் கம்பர் சுட்டுவார் (சித்திரகூடப் படலம், 11). பரிச்சாத்து என்பதொரு சொல். சாத்து என்பது வணிகக் கூட்டம். வணிகர் தலைவனாக இருந்தவன் மாசாத்தன் எனப் பட்டான்; அவன் கோவலன் தந்தை. குதிரை வணிகம் பரிச்சாத்து எனப்பட்டு, அவ்வணிகத்தில் ஈடுபட்ட குழுவும் ஆகுபெயரால் பரிச்சாத்து எனப்பட்டது. வந்தது முதுபரிச் சாத்து என்பது திருவிளையாடற் புராணம் (28:29). பரி:2 இறைவைச் சால் சதுரமானது. பரி என்பது இறைவைக் கூனை எனப்படும் வட்ட வடிவினது. பரி என்பது வட்டம் என்னும் பொருளில் வரும் முதனிலை. பரிவட்டம், பரிவேடம் என்பவை அறிக. பரி என்பது இறைவைக் கூனைப் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. கூன், கூனல், கூனை என்பவை வளைவே. பரிகம் பரிகை: பரிகம் என்னும் சொல்லுக்கு அகழ், மதிலுள் மேடை, வளைதடி ஆகிய பொருள்கள் வழங்குகின்றன. கோட்டை வளைமதில் ஆதலால், அதனைச் சூழ அமைந்த அகழ் வளைந்து கிடப்பது என்பது வெளிப்படை. பரி என்பது சூழ்ந்த மதிலைக் குறிப்பதாகி, அதன் மேல் அமைந்த மேடையைப் பரிகம் என்பது குறிப்பதாயிற்று. அகம் என்பது அம்மெனத் தொகுத்தல் வழக்கம். அதன்படி பரியகம் பரிகம் ஆனதென்க! உ என்பது உயர்வு காட்டும் வேர். உப்பு, உப்புதல், உவணம் என்பவை உயர்வு காட்டுவன. அவ்வாறே உப்பரிகை உப்பரிகம் என்பவை மதின்மேல் அல்லது மாடிமேல் மாடியைக் குறிப்பதாய் அமைந்தன. பரிகை என்பது வளையும் தன்மையாகலின் வளைதடியைப் பரிகம் எனல் பொருந்துவதே; இனிப் பரிகை என்பதற்கும் அகழ், மதிலுண் மேடை என்னும் பொருள்களும் பரிவு கூர்தலாம் (அன்புறுதலாம்) தன்மையும் கூறப்படுதல் இணைத்துக் காணத்தக்கன. பரி என்பதற்குப் பரிமரம் என ஒருபொருள் உள்ளமை முன்னர்க் கண்டோம். அதன் வளர்ச்சிச் சொல்லாகிய பரிகம் என்பது அதன் வளர்ச்சிப் பொருளுக்கும் உரியதாக விளங்கு கின்றது. அஃது எழுமரம் என்பதாம். பரிமரம் ஆகிய அது பரிகம் என்பதையன்றிக் கணையமரம், எழுமரம் எனவும் வழங்கும், எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை என்பது புறம் (90). இவ்வெழுமரம் கோட்டைக் கதவின் உட்புறத்தே குறுக் காகப் போடப்படும் வலியமரம். எழூஉத் தாங்கிய கதவு என்பதொரு புறப்பாட்டு (97). பரிகம் என ஓர் இருப்புப் படைக் கலம் உண்டென உரைக்கும். பரிகலம் என்பது உண்கலமாகப் பயன்படும் வாழையிலை; குருத்தாக அறுத்து அதன் வளைவை விரித்துப் போடுதல் வழக்காக இருந்தமையின் பரிகலம் என வழங்கப்படுவதாயிற்று. பரிகலக் குருத்து என்றார் சேக்கிழார் (பெரிய. அப்பூதி. 27). பரிச் சந்தம்: சந்தம் என்பது நறுமணம், அமைதி, அழகு இனிமை முதலிய பொருள்தரும் சொல். இத்தகைய பொலிவெல்லாம் திருவிழாவும் பெருவிழாவுமாம் அரசவிழா. தெய்வ விழாக்களில் சூழ வருதல் கண்கூடு. ஆதலால் பரிச்சந்தம் என்பது அரச பரிச்சின்னங்களைக் குறிப்பதாயிற்று. வீசுவெண் சாமராதி பரிச்சந்தம் முழுதும் விட்டார் என்பது மேருமந்திர புராணம் (1048). பரிச்சின்னம்: பரிச்சின்னம் என்பது அரச சின்னம். அவை குடையும் கோலும் ஊர்தியும் பிறவுமாய் அரசனைச் சூழ அமைந்தும் வந்தும் பொலிவுறுத்தும் அடையாளங்களாம். மணிமுத்தின் பரிச்சின்னம் வரம்பின்றாகக் காட்டுகிறது பெரியபுராணம் (திருஞான. 1016). * பரிவாரம் காண்க. பரிச்சின்னம் என்பது நினைத்தவை நினைத்தபடி வைக்கப் படுபவை யல்ல! இன்னவை இன்ன அளவு, இன்ன வகைத்து என வரம்பு கட்டப்பட்டு வருவது அல்லது அமைவதாம். அதனால் பரிச்சின்னம் என்பது அளவிட்டது அல்லது அளவு பட்டது என்னும் பொருள் பெற்றது. பரிச்சின்ன ஞானம் பரிய என்பது சிவஞான முனிவர் நெஞ்சுவிடு தூது (81). பரிச்செண்டு: செண்டு வெளி என்பது குதிரை வட்டமிடும் வெளியைக் குறிக்கும். செண்டித்தல் என்பது துள்ளியோடல் என்னும் பொருளது. இன்றும் செண்டித்தல் அப்பொருளில் நாட்டுப்புறங்களில் வழங்குகின்றது. வளைபந்தைப் போட்டுத் துள்ளித் துள்ளியாடுதல் பரிச்செண்டு எனப்பட்டதாம். அவ்வாட்டம் நின்றுகொண்டு ஆடுவதும் சுற்றி வந்து ஆடுவதுமென இருவகைத்தாதல் பெரியபுராணத்தால் அறிய வருகின்றது. நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசிமிக மகிழ்வெய்தி என்பது அது (சேரமான். 126). பரிசகம்: வீடு, மனை, மாளிகை என்பவற்றின் வேறுபட்ட அமைப்பில் தனியே விளங்குமாறு கலைக்கூடங்களை அமைத்தல் வழக்கம். அதனை இந்நாள் காட்சிக் கூட அமைப்புகளாக அமைப்பவற்றையும் கொண்டு தீர்மானிக்க முடியும். சுற்றி வருதற்கேற்ற வளைவான வடிவு கலைக்கூட அமைப்புக்கு உரியது என்பதைத் தெளிந்து அதற்குப் பரிசகம் எனப் பெயரிட்டுப் போற்றியமை விளக்கமாகின்றது. விளக்குவது திருக்கோவையார் (78). படிச்சத மாக்கும் படமுளவோ நும் பரிசகத்தே என்பது அது. இப்பொழுது பரிசகமெனப் புத்தாட்சி ஒன்றும் நடந்து வருகின்றது. எந்தச் சூதை ஒழிக்க வேண்டும் என்றாரோ திருவள்ளுவர் அவர் பெயரையும் அவர் குறளையும் உலாப் போக விட்டுவிட்டு அந்தச் சூது வழிப்பட்டதாம் பரிசுச்சீட்டை அரசே நடத்தி வருவது பாழில் பாழாம் செய்கை. அப் பரிசுச் சீட்டு விற்பனையகம் பரிசகம் எனச் சில இடங்களில் பளிச்சிடுகின்றது. பரிசு குலுக்கல், பரிசு வழங்கல் விழாக்களும் பரிய பரிய தலைகள் தலைமையில் நிகழ்கின்றன! இருப்பதை யெல்லாம் இழந்தாலும், ஏதோ ஒன்று விழுந்தால் விழுந்தது பரிசுதானே! பரிசு: பரிசம், பரிசில், பரிசு என்பவை கொடை வகையால் ஒன்றாயினும் பெறுவார் நிலை, பெறும் வகை இவற்றால் வேறுபாடு உண்மை கருதி மூவடிவுற்றதாம். இது முன்னரே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. ஒரு பெண்ணுக்குத் தலைவன் தரும் கையுறை வேறு. அது அவள் கையில் பிறரறியா வண்ணம் சேர்ப்பது; தோழியும் அவளும் உயிரோரன்னர் ஆகலின் அவள் கையில் வழங்கித் தலைவி கையில் சேர்ப்பிப்பதும் கையுறையே. இவற்றின் வேறானது பரிசம் என்பது வெளிப்பட விளங்கும். ஊரவர்க்கும் உரிமையர்க்கும் அறிவித்து, அவர்கள் சூழ்ந்துள்ள அவையத்தில் அல்லது மன்றத்தில் மணமகன் வீட்டார் மணமகளுக்கு வழங்கும் கொடையே பரிசமாம். அகலத் தாலம் ஒன்றிலே மங்கலப் பொருள்கள் விளங்க மற்றைத் தாலங்களிலே மணமகளுக்கும் அவள் வீட்டாருக்குமாம் கொடைப் பொருள்கள் ஊர்வலமாய்ச் சூழ வந்து அவற்றை வழங்குதலும் - அவ் வழங்குதலும் குத்துவிளக்கு வைத்து அதனைச் சூழப் பரப்பிப் பலரும் பார்க்க வைத்தலும் ஆகியவற்றை நோக்குவார் - பரிசையும் அறிவார் வளைவுப் பொருளையும் அறிவார். இனி இகலிப் பெறும் பரிசும், இகலாமல் - போட்டி யிடாமல் - பெறும் பரிசிலும் பண்டு நிகழ்ந்த பான்மையை அறியின் இப் பெயர்ப் பொருத்தம் விளங்கும். கலை வல்லா ரையும் புலமையரையும் யானை மேல் வைத்து உலா வரச் செய்வதும், அவர்களுக்குரிய கொடைப் பொருள்களையும் உடன் உலாவரச் செய்வதும், அவற்றைத் தாலத்திலே வைத்து வழங்கியும் செய்த சீர்மையே பரிசு, பரிசில் என்னும் பெயர்களை வழங் கிற்றாம். பரிசம் போடுதல், பரிசில் வாழ்க்கை, பரிசில் கடாநிலை, பரிசில் நிலை, பரிசில் விடை, பரிசில் துறை, பரிசிலர், பரிசிலாளர் என்னும் சொற்களெல்லாம் மேற்குறித்த முச்சொற்களின் வழிவந்து பொருளிலக்கணப் பொருளாய்ச் சிறக்கின்றன. ஆகலின் அவற்றைத் தனித்தனி விளக்க வேண்டியதில்லையாம். பரிசு கொடைப் பொருள் தருதலானபின் தன்மை, அல்லது குணம் என்னும் பொருளும் தருவதாயிற்று. கொடையால் புகழ் வருதலின் புகழ் என்னும் பொருளும் அதற்கு உண்டாயிற்று. பரிசு பெருமைப் படுத்துவதாம் வகையாக அமைந்தமையால் வகை என்னும் பொருளும் தந்தது. பரிசம் என்பது வட்டப் பெருந்தட்டாக அமைந்த ஓடம் ஆகலின் பரிசுக்கும் அப் பொருள் கண்டனர். தக்கனும் எக்கனும் தம்பரிசு அழிய (திருவா. 13:15) இது புகழ். பிள்ளை பரிசு இது என்றால் (பெரிய. திரு. 33.2) இது தன்மை. நினைந்த அப்பரிசே செய்ய (பெரியபு. மெய்ப். 15) இது வகை. பரிசு = சிற்றோடம் செ.ப.க. அகராதி. பரிசு, பெருமைப் பொருள் குறித்த பின்னர், பரிசு கெடுதல் என்பது சீரழிவைக் குறிப்பதாயிற்று. பரிசு கெட்டவன்(ள்) பரிசை கெட்டவன்(ள்) என்பவை வழங்குமொழிகள். பரிசு பெறுவார் ஓர் ஒழுங்கொடும் பணிவொடும் பெறுவராகலின் அப்பரிசுக்கு ஒழுங்கு. வழி என்னும் பொருள்களும் உண்டாயின. பரிசொடும் பரவிப் பணிவார் என்பது தேவாரம் (612.3). பரிசை: பரிசு பரிசை என ஐகாரம் பெறும். அது வெண்கொற்றக் குடை முதலாம் வெற்றி விருதுகளைக் குறிக்கும். பரிசை என்பதற்குக் கேடயம் என்னும் பொருளும் உண்டு. நீடிய பரிசையே மாவட்டணம் நெடிய வட்டம் என்பது சூடாமணி நிகண்டு (7:18). வலயங்கற் பரிசை என்பது இராமாயணம் (உயுத்த. 1323, பா.வே.). பரிசை, கேடயம் ஆகலின் அதனைப் பிடிப்பவன் பரிசைக் காரன் எனப்பட்டான். குடை பிடிப்போனும் அவ்வாறே பெயர் பெற்றான். பரிஞ்சு: பரிஞ்சு என்பது இருபொருளுடன் வழங்குகின்றது. பரிந்து என்னும் சொல் பரிஞ்சு எனப் போலி வடிவம் பெறுதல் ஒன்று. பரிதல் அன்பு வழிப்பட்டதாகலின் வளைதற் பொருளாதல் தெளிவு. பரிஞ்சு இறை யழுங்கு கின்றேன் என்பது இராமாயணம் (உயுத்த. 2484, பா.வே.). இன்னொரு பொருள் வாளின் பிடி என்பது. வாளின் பிடி வளைவாதல் அறிக. பரித்தல்: பரித்தல் என்பது சூழ்தல், பொறுத்தல், பூணுதல், கட்டுதல் முதலிய பொருள்களைத் தரும். புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் என்னும் அகப்பாடல் (31) புண்சொரி குருதி, தம்மைச் சூழக் கிடந்தோர் என்னும் பொருள் தருதல் காண்க. புகழையார் பரிக்கற் பாலார் என்னும் கம்பர் வாக்கு பொறுத்தல் பூணுதல் ஆகிய பொருளது (கிட். 346). மண்டமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் என்னும் புறப்பாட்டும் (75) தாங்குதல் அல்லது பொறுத்தல் பொருளதே. உயிர்ப்பிடை பரிப்ப என்பது கட்டுதல் பொருளது (கம்ப. கிட். 864). பரிதல்:1 விரும்புதல், சார்தல், வருந்துதல், அஞ்சுதல், பிரிதல், அகலுதல், அழிதல் முதலிய பொருள்களையும் இவற்றின் சார்பான பொருள்களையும் விரிவாகக் கூறுவது பரிதலாகும். பரிதல் = அன்பு; அவ்வன்பு விரும்புதலாம்; சார்தலாம்; அவ்வன்புத் தடைக்கு வருந்துதல் நிகழும்; அஞ்சுதலுமாம்; அன்பின் அகற்சி பிரிவாம்; பெருந்துயராம்; அழிவுமாம் எல்லாம் வட்டமிட அமையும் அன்புப் பரிவை விளக்கின் பெருவிரிவாம். பரிதல்:2 பரிதல் = வெளிப்படுதல்; தோன்றுதல். கதிர் ஈனல் என்பது பொதுவழக்கு. கதிர் ஈனுதலைப் (பயிர்) பரிதல் என்பது முகவை வட்டார வழக்கு. கதிர் பரியும் நேரம் இப்பொழுது மழை பெய்தால் பொட்டு உதிர்ந்து போகும் என்பர். பரிதல்:3 விரைந்து ஓடுதலைப் பரிதல் என்பது தென்தமிழக வழக்கு. ஓடிப் பரிதல் என்று இணைத்தும் கூறுவர். விரைந்த செலவுடைய குதிரை பரி எனப்படுவதும், விரைந்தோடும் பாநடை பரிபா எனப்படுவதும் எண்ணத்தக்கவை. பரிதி: பரிதி என்பது வட்ட வடிவு என்கிறது திவாகரம். வலயம் நேமி திகிரி மண்டிலம் பரிதி ஆழி பாண்டில் விருத்தம் கோளகை கடகம் பாலிகை கொம்மை தட்டு வலையம் சக்கரம் சில்லி வட்ட வடிவிற் கொட்டிய பெயரே எனவும், குடிலம் தட்டு வாங்கல் குலாவல் கோட்டம் வணரே வளாவல் வளைதல் எனவும் வட்ட வடிவம் குறிக்கும் சொற்களைத் தொகுத் துரைக்கிறது. ஒளி என்பதைப் பரிதியம் பரிதி ஒத்தான் என்னும் அதே நூல். வேள்வித் தீயைச் சுற்றியிடப்படும் தருப்பைப் புல்லை பரிதி என்று குறித்தல், பாசிலை நாணற் படுத்துப் பரிதி வைத்து என்னும் நாச்சியார் திருமொழியால் விளங்கும் (6:7). பரிதி கதிரோன் ஆதலால், அதன் மண்டலம் பரிதி வட்டம் எனப்படும். வெங்கதிர்ப் பரிதி வட்டம் என்பது பெரிய திருமொழி (4.5:10), பரிதிவானவன் எனக் கதிரோனைக் குறித்தார் கம்பர் (பால. 346). பரிதி என்பது வட்டத்தின் சுற்றளவைக் காட்டுதல் கணக்கியல். பரிதி என்பார் ஒருவர் திருக்குறள் உரையாசிரியர். இவற்றையன்றிக் குண்டலம், பருதி, படலிகை, மல்லை, வட்டணை, வல்லை, வட்டு, வட்டகை இன்ன சொற்களும் வட்ட வடிவு குறிப்பனவே. கதிரோன் வடிவு வட்டம். அது பரிதியஞ் செல்வன் எனச் சாத்தனாரால் சொல்லப்படுகிறது (மணிமே. 4:1). தேன் கூட்டைச் சொல்லும் நக்கீரர் பரிதியின் தொடுத்த தண்கமழ் அலர் இறால் என்கிறார் (திருமுருகு. 299, 300) தேனடையும் கதிரும் பரிதி வடிவாதல் காட்டும் உவமை இது. தேர் உருளையும், ஆழிப்படையாம் சக்கரப்படையும் பரிதி எனப்படும். அத்தேர்ப்பரிதி என்பது களவழி (4). பரிதியில் தோட்டிய வேலை என்பது கல்லாடம் (80). பரிதி கதிரோனைக் குறித்தலால் அதன்பின் அதன் ஒலியையும் அதனைச் சூழ அமைந்த ஒளிவட்டத்தையும் குறிப்பதாயிற்று. பரிவேடம் என்பதை வளைந்து கொள்ளும் பரிதி என்னும் இரகுவம்சம். பரிப்பு: பரிப்பு என்பது இயக்கப் பொருளது. வட்ட வடிவாம் ஒன்று இயங்குதல் பரிப்பு எனப்படும். வட்ட வடிவாம் உருளைக் கண்டதே (உருள் = சக்கரம்) போக்குவரவுக் கால்கோள். கட்டை வண்டி முதல் கடிது பறக்கும் வானவூர்தி காறும் காலுருள் வளர்ச்சியே. அஃது இயற்கையின் கொடை. கதிரும் மதியும் பிறவும் வட்ட வடிவாயிருத்தலும் அவை இடையீடிலாது இயங்கலும் தூண்டலாம். அதனை நுண்ணிதின் உணர்ந்தே பரிப்புச் சொல்லை வழங்கினர் நம் முந்தையோர். செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரி தரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இனைத்தென் போரும் உளரே என்னும் புறப்பாடல் (30) அந்நாளைத் தமிழ்வாணர் விண்ணியற் கலைத் தேர்ச்சியை இனிது விளக்கும். செஞ்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார் வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர் எனவரும் இப் பகுதியின் பழையவுரை கருதத் தக்கது. பரிபாடல்: தெய்வமும் காமமும் பொருளாக வருவது பரிபாடல்; பரிபாட்டால் அமைந்த தொகை, பரிபாடல் எனப்பட்டது. அது எட்டுத் தொகையுள் ஐந்தாவது. பரிபாடல் உறுப்புகளுள் சிறந்த ஒன்று அராகம். உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும் என்பார் தொல்காப்பியர் (செய். 230) முடுகிச் செல்லும் உருளென முடுகு நடையிடலால் பரிபாடல் எனப்பட்டதாம். அதனால் உருட்டு வண்ணத்தை அடுத்தே முடுகு வண்ணத்தையும் வைத்த தொல்காப்பியர், முடுகு வண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே என்றார் (செய். 231). உருளல், வளைதல் பொருளதே யன்றோ? பரிபுரம்: பரிபுரம் என்பது சிலம்புப் பொருளது. புரம், புரி என்பனவும் வளைதற் பொருளால் அமைந்த சொற்களே! காற்படத் தொடு வளைந்து கிடந்து ஒலி செய்யும் சிலம்பு பரிபுரம் எனப்பட்டது, வடிவு கருதிய ஆக்கம். சிலம்பு என்னும் பெயர் ஒலித்தற் பொருள் கருதிய ஆக்கம். பரிபுரம் சிலம்ப என்கிறார் கம்பர் (பால. 872, 908). பரிமணி: பரிமணி என்பதை மருத்துவ நூல்கள் கரந்தை என்று கூறும். இக்கரந்தை கொட்டைக் கரந்தை என்பது. கொட்டாங் கரந்தை எனவும் அது வழங்கும் (ஐங்குறு. 26, உ.வே.சா. குறிப்பு). கரந்தைப் பூவின் அமைப்பைப் புறப்பாடல் (261) உவமையால் காட்டும். நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை என்பது அது. நாகினது முலை எழுந்து காட்டாது மேலே பரந்து காட்டுவது போலக் கரந்தைப் பூவும் கொடியினின்றும் எழுந்து நில்லாது அதனோடே படிந்து விரிந்து காட்டுவது கண்கூடு என்பார் பேராசிரியர் ஔவை (புறம். 261). பரிமாற்று: பரிமாற்று கொடுத்து வாங்குதல் பொருளது. பண்ட மாற்று என்பது பரிமாற்றமே. ஒருபொருள் இதனைக் கொடுத்துப் பிறிதொன்றனிடம் இருந்து இதனைப் பெற்றது எனக் கூறும் ஓர் அணிவகை பரிமாற்றணி எனப்படும். பண்ட மாற்று என்பது போல் இப் பரிமாற்றணி அமைவதாம். இது பரிவருத்தனை எனவும் படும். மாறாட்டு என்பதும் அது. இவைகொண் டிவையெனக் கீந்தன ரென்று நவைதீர மொழிவது நவில்பரி மாற்றம் - வீரசோ. 153 என்பது அதன் இலக்கணம். பரிமாறுதல்: பரிமாறுதல் இருவகை வழக்குகளிலும் பெருக வழங்கும் சொல். விருந்து பரிமாறுதல், பரிமாறுபவர் பரிமாறல் என்பவை திருமண விழாத்தோறும் பன்னூறு முறை பழகும் சொல். வளைந்து வளைந்து - வளைய வளைய வந்து வந்து - பரிமாறும். இப்பரிமாறுதலைக் குழல் துளைகளில் குழந்தைக் கண்ணன் சிறுவிரல் தடவிப் பரிமாறுதலாகச் சுவை சொட்டச் சொட்டப் பாடுகிறார் பெரியவர் ஆழ்வார். சிறுவிரல்கள் தடவிப் பரிமாற என்பது அது (3.6:8). இப்பரிமாறுதல் சொல் ஒழுகுதல், உலாவுதல், செலவிடுதல் முதலிய பொருள்களாய் விரிகின்றது. பரிமாறுதல் பணிமாறுதலாகக் காட்டுகிறது ஞானவாசிட்டம். துணைக்கவரி பரிமாற என்பது அது (லீலை. 22). பரியகம்: பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை அரியகம் காலுக் கமைவுற அணிந்து எனப் பரியகம் காலணியாதலைக் குறித்தார் இளங்கோவடிகளார் (சிலப். 6: 84,85). பரியகம் காற்சவடி என்றார் அரும்பத உரையாசிரியர், பரியகமாவது, பொன்னிதழ் பொதிந்த பன்னிற மணிவடம் பின்னிய தொடரிற் பெருவிரல் மோதிரம் தன்னொடு தொடக்கித் தமனியச் சிலம்பின் புறவாய் சூழ்ந்து புணரவைப் பதுவே என்னை? அவ்வாய் மகரத் தணிகிளர் மோதிரம் பைவாய் பசும்பொற் பரியக நூபுரம் மொய்ம்மணி நாவின் முல்லையங் கிண்கிணி கௌவிய ஏனவுங் காலுக் கணிந்தாள்! என்றார் எனக் கூறினார் அடியார்க்கு நல்லார். பரிவட்டணை: இசை எழுவும் எண்வகையுள் ஒன்று பரிவட்டணை. பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய எண்வகையால் இசை யெழீஇ என்பது சிலம்பு (7:5-8). பரிவட் டணையின் இலக்கணம் தானே மூவகை நடையின் முடிவிற் றாகி வலக்கை இருவிரல் வனப்புறத் தழீஇ இடக்கை விரலின் இயைவ தாகத் தொடையொடு தோன்றியும் தோன்றா தாகியும் நடையொடு தோன்றும் நயத்த தாகும் என்றார் அரும்பத வுரையாசிரியர். பரிவட்டம் வளைவுப் பொருளதாதல் போலக் கைவிரல் வளைந்தியலலும் முடுகலும் பரிவட்டணைப் பெயர்க்கு உரியவை ஆயினவாம். பரி = விரி; வட்டணை = வட்டம்; வட்டணை, சுற்றி வந்து நடஞ் செய்தலைக் குறித்தல் (மணிமே. 7:43) விரிந்து சுருங்கும் இயல்பால் விரற்பெயர் வந்ததறிக. கோவைகளை மீண்டும் மீண்டும் வட்டமாக இசைப்பது வட்டணை யாகும். முதல்நடை அல்லது முந்திய நடையில் கோவைகளை ஏற்று அவற்றை இரட்டிப்பதே அடுத்த நடை. எனவே, முதல் நடைக் கோவைகளை ஏற்று மீண்டும் இரட்டித்து ஒலிப்பதே பரிவட்டணை (பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல், 214). பரிவட்டம்: பரிவட்டம், பரிவேடம் என்பதையும் குறிக்கும். (பரிவேடம் காண்க). பரித்தம் என்பது பரிவட்டமாதலை வெள்ளி விழாப் பேரகராதி சுட்டும். திருக்கோயில்களில் பரிவட்டம் கட்டுதல் இன்றும் காணும் பெருவழக்கு. உயர்ந்த பட்டாடையைத் தலையைச் சூழத் தொங்கலுடன் கட்டுதல் பரிவட்டம் எனப்படும். கோயில் வரவேற்பு மங்கல நிகழ்வாகப் பெருந்தக்கார்க்குச் செய்வதாய் அமைகின்றது. முந்தை மன்னர்கள் காலத்தில் அலுவல் அடையாளமாகவும் பரிவட்டம் திகழ்ந்துள்ளது. இழப்புக் கடனாக மொட்டையடிப்பவர்க்குப் பரிவட்டம் கட்டுதல் பெருவழக்காக இன்றும் உள்ளது. வேட்டி துண்டு கட்டுதல் என்பது அந் நிகழ்வுக்குப் பெயர். உறவினர் (சம்பந்திகள்) செய்வது அது. உற்றார் (பங்காளிகள்) செய்தல் விலக்குடையது. பரிவருத்தம்: பரிபுலம்புதல் போல்வது இது. மீள மீள வரும் மிகு வருத்தத்தைக் குறிப்பதுடன் உலக முடிவு, ஊழி முடிவு என்பதையும் குறிக்கும். ஒருபொருள் கொடுத்து இன்னொரு பொருள் வாங்குதல் பரிவருத்தம் எனவும் படும். இனிச் சுற்றுதல், வட்டம், ஆமை முதலிய பொருள்களையும் தரும். பரிவாரம்: பரிவாரம் என்பது பரியாளம் எனவும் வழங்கும். பரியாளம் என்பது பரிவார மாகும் என்பது திவாகரமும் (மக்கட்) பிங்கலமும் (840). பரிவாரம் சூழ்வோரைக் குறிக்கும். பரிசனர் என்றதும் இது. படைஞர் ஏவலர் என்பாரையும் குறிக்கும் (சதுரகராதி). திருக்கோயில் திருத்தொண்டு மேற்கொண்டவர்களுக்கும் பரிவாரப் பெயர் வழக்கில் உண்டு. கோவை, திருச்சி, மதுரை மாவட்டத் தொட்டியக் குறுநில மன்னர்களுக்குப் பரிவாரம் என்னும் பெயருண்டு என்பதைச் செ.ப.க. அகராதி சுட்டும். பரிவாரம், உறை, சூழ்வோர், படை என்னும் யாழ்ப்பாண அகராதி. பரிவு: பரிவு அன்புப் பொருளது. கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னும் தொடர் கண்ணப்பன் அன்பைக் காட்டும். அவன் வடிவென ஒன்று இல்லையாம்; அன்பே அவன் வடிவாம். பரிவின் தன்மை உருவு கொண்டனை யவன் என்கிறது பதினோராம் திருமுறை. பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே எனப் பரிவின் சிறப்பை விளக்கும் புறநானூறு (184). அன்புகெடக் கொள்ளும் பொருள் என உரைக்கும் பழைய உரையாசிரியர் பரிவுதவ என்றோதி அக்குடிகட்கு வருத்த மிக என்றுரைப்பாரும் உளர் என்கிறார். பரிவேட்டித்து, பரிவேட்பு: பரிவேட்டித்து என்பதற்குக் சுற்றி என்னும் பொருளுண்டு என்பது விவேக சிந்தாமணியால் விளங்கும். பரிவேட்பு என்பதற்கு வட்டப் பொருள் உண்மை பதிற்றுப்பத்தால் தெளிவாம். பார்வற் கொக்கின் பரிவேட்பு என்பது அது (21). பரிவேடணம் என்பதற்குச் சூழுதல் பொருளுடை மையைச் சங்கத் தமிழ் அகராதி சொல்லும். பரிவேடபுடம் என்பதற்கு ஆறு ஓரை சேரப் பரிவேடமாம் என மருத்துவ அகராதி உரைக்கும். பரிவேடம்: ஊர்கோள் வட்டம் என்பதுவும் இதன் பெயர். கதிரையும் திங்களையும் சுற்றியமைத்துள்ள ஒளிவட்டம் ஊர்கோள் அல்லது பரிவேடமாம். திங்களைச் சுற்றிய வட்டம் கோட்டை எனவும் வழங்கும். எட்டக் கோட்டை யிட்டால் கிட்ட மழை; கிட்டக் கோட்டை யிட்டால் எட்ட மழை என்பது பழமொழி. அறிவார்ந்த தலைமக்கள் தலையைச் சுற்றி வரையப்படும் வட்டம் இப்பரிவேடத்துடன் எண்ணத் தக்கதாம். உள்ளொளி மாட்சியை விளக்கும் புறவொளிக் காட்சி அஃதென்க. பரிவேட மிட்டது கொல் பார் என்று கண்ணன் அசுவத் தாமனுக்குக் காட்டலைக் காட்டுகிறது பாரத வெண்பா. பரிவேடிப்பு: பரிவேடம் என்பதன் மற்றை வடிவம் பரிவேடிப்பு பரிவேடித்தல் என்பதும் அது. மின்னணி மதியம் கோள்வாய் விசும்பிடை நடப்பதே போல் கன்மணி யுமிழும் பூணான் கடைபல கடந்து சென்றான் என்னும் சிந்தாமணியும் (1098), கடைபல கடந்து விசும்பிடையிற் கோள்களிடத்தே யுறையும் ஒளியணிந்த மதியம் அதனைக் கைவிட்டு நிலத்தே நடப்பது போலப் போந்தான் என்க! கோள் = பரிவேடிப்புமாம்; வந்தவர்கள் சூழ நடுவே போவதற்குவமை என்னும் நச். உரையும் காண்க! பரிவை: நந்தியா வட்டம் நந்தியாவட்டை என வழங்கப்படும் பூ பரிவை எனப்படும். ஆங்குள்ள வட்டம், வட்டை என்னும் சொற் பொருளை வெளிப்படக் காட்டுவது பரிவையாதல் அறிக. பரி > பரிவு > பரிவை. வட்டம் வட்டு வட்டை என்பன வள் என்னும் வேரிலிருந்து வருவன போன்றன. பர் - பரு: பர் என்பது பரியாதலை அறிந்து அதன் வளைவுப் பொருளையும் கண்டோம். பர் உகரம் சேரப் பரு என ஆதலால் வளைந்த அது திரளுதல் ஆதலை இவண் அறியலாம். பரிதி, பருதி எனவும் வழங்கும். பரியது, பருமை ஆகும். பரிதி கதிரோனைக் குறித்தல் போல் பருதியும் கதிரைக் குறிக்கிறது. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை என்னும் குறளில் பரியது பருவுருவம் உடையது என்பதைச் சுட்டுகிறது. இத்தகைய சொற்களால், வளைதற் பொருளுக்கும் திரளுதல் பொருளுக்கும் உள்ள நெருக்கம் புலப்படும். பரு - பருத்தல் - பருமன் பருமை என்பவற்றைப் பார்த்த அளவானே திரளுதல் திரட்சி என்பவை எளிதில் விளங்கும். வெப்பத்தாலோ உள் ஊறுகளாலோ உடலில் ஓரிடம் தடிக்கின்றது; அத் தடிப்புச் செல்லச் செல்லத் திரள்கிறது; பருக்கிறது. அதற்குப் பரு என்று பெயர் சொல்கின்றனர். ஓரிடத்துத் தோன்றும் சிறு கட்டி பரு எனப்பட்டால், உடலே திரளுதல் பருத்தல், பருமன் எனப்படுகின்றது. பருமை என்பது பருப்பு என்னும் பொருளிலே கொங்கு வேளிரால் ஆளப்பட்டுள்ளது. பரப்பும் விதிர்ப்பும் பருப்பும் இன்றி - பெருங். 2:4:196 பளிதம் பெய்த பருப்பிற் றேய்வை - பெருங். 4:16:19 பரு என்பது பருத்த சிலந்திக் கட்டியைக் குறிப்பதுடன், வியர்க்குரு என்பதையும் குறிப்பதை அகராதிகள் குறிக்கின்றன. பருப்பம், பருப்பதம் என்பவை மலையைக் குறிக்கும். பரு என்பதும் மலையைக் குறிக்கும். பரு, கடலைக் குறித்தலைச் சுட்டுகிறது வெள்ளிவிழாப் பேரகராதி. பருக்கன்: பருத்தவன், பருக்கன் எனப்படுவான். பருக்கன் மற்றை உயிர்களில் பருத்ததையும், பொருள்களில் பருத்ததையும் குறித்தல் உண்டு. பரும்படியானது, பருவட்டானது பருவெட்டானது என்பவையும் இத்தகையன. பருத்தவன் தடித்தவன் ஆவன். உடல் தடிப்பும் உள்ளத் தடிப்பும் கூட பருத்ததாகச் சொல்லப்படும். செருக்கைத் தலைக்கனம் என்பதில்லையா? அது போல என்க! மென்மையற்ற பொருளைப் பருக்கன் என்பது, பருமை வன்மை எனக் கொண்ட பொருளின் வழித்தாம். பருக்குதல்: ஆட்டுக்குட்டியைப் பால் குடிக்கச் செய்தலைப் பருக்குதல் என்பது ஆயர் வழக்கு. தானே தாயை அடுத்துப் பால் குடியாக் குட்டியைப் பால் குடிக்க வைப்பது பருக்குதல் ஆகும். பருகச் செய்தல் பருக்குதல். இவ் வழக்கு பொதுவழக்காகவும் கூறும் அளவில் அறிய வாய்க்கின்றது. முகவை, மதுரை வட்டாரங் களுடன் திருச்சி வட்டாரத்தில் கேட்கும் சொல்லாகவும் உள்ளது. பருக்கை: பருத்தல் என்பது பருக்கை எனவும் படும். பருமனாதல், சோற்றுப் பருக்கை, பருக்கைக் கல், உருண்டை என்பவை பருக்கைப் பொருளன. பருக்கை என்பது சிறுகல்லே; கூழாங் கல்லே எனினும், அது பரியகல் உறுத்தும் துயரினும் பருவரல் (துயர்) மிகவுண்டாக்கும் கல்லாதல் அறியத்தக்கது. பரல் என்பது பருக்கைக் கல். செருப்பிடையே பட்டுக் காலை வருத்தும் கல்லின் கொடுஞ்செயல் பட்டார்க்கே தெரியும். அதனால் பகைவரை வாட்ட வல்ல வேந்தன் ஒருவன், செருப்பிடைப் பரல் அன்னன் எனப்பட்டான். செருப்பிடைச் சிறுபரல் அன்னன்- புறம். 257 கண்ணுள் குறுஞ்சிறு பரல் புகுந்து தரும் அல்லலைச் சொல்லி முடியாது. கண்வீங்கி, இமைவீங்கி முகம் வீங்கிப் படும்பாடு பட்டார் அன்றிப் பிறர் அறியார். அதனால் விளக் கெண்ணெயும் தாய்ப்பாலும் கலந்து கண்ணுள் விட்டு மெல்ல நீவிப் பருக்கை எடுப்பர். இந்நாளில் கூடச் சிற்றூர்களில் அவர் உளர். பருக்கை எடுத்தல் என்பது வினை; பருக்கை எடுப்பார் பெயர். அப்பருக்கை எப்பருக்கை? பட்ட இடத்தைப் பன்மடங்கு பருக்க வைக்கும் அதற்குப் பருக்கை என்பது நல்ல பட்டம்தான்! பருக்கைக் கல்லுக்கும் பருக்காங்கல் என்பது ஒரு வழக்குப் பெயர். அரிசி, மணி எனப்படும். மணி என்பதற்குச் சிறு என்னும் பொருள் உண்டு. சிறுமணிப் பயறு என ஒரு பயறும் உண்டு. மணிக்குடல், மணிக்கொச்சம் என்பவை சிறுமை சுட்டும் ஒட்டுச் சொற்கள். அரிசிமணி வேக வைக்கப்பட்டால் அதன் அளவில் பருமன் ஆகிவிடுகிறது. என்ன உழைத்தும் சோற்றுப் பருக்கைக்கு வழியில்லை என்று ஏங்குவார் படும் பருக்கைப்பாடு பெரும்பாடே! பருக்கையிலாக் கூழுக்குப் போட உப்பில்லை என்பதொரு வறுமைப்பாட்டு. இது தனிப்பாட்டு. பருக்கை தண்ணீர்: பருக்கை = சோறு. தண்ணீர் = சோற்று நீர். பருக்கை தண்ணீர் ஆயிற்றா? என வினவுவது உண்டு. உண்டு ஆயிற்றா என்பதே அவ்வினா. கஞ்சி தண்ணீர் என்பதும் ஒரு சார் இத்தகையதே. அரிசியின் அளவு, வேக வேகப் பருப்பதால் பருக்கை ஆயிற்று. பரு, பருப்பு, பரியது இன்னவை உருவப் பருமை காட்டுவன. தண்ணீர் என்பது நீற்றுத் தண்ணீர், சோற்றுத் தண்ணீர். பருகல்: பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர் குடித்தல்; பருகுவன் அன்ன ஆர்வம் என்னும் உவமையே பருகுதல் என்பதன் வேட்கைப் பெருக்கத்தை உரைக்கும். பருகுவான் போல் நோக்குதல் எவ்வளவு பருத்த நோக்கு. பருகு வன்ன வேட்கையைப் பகர்கின்றது புறநானூறு (207). பருகுதல் நால்வகை உண்திறத்தில் ஒன்றாகும். பருகுதல் என்பதற்கு விழுங்குதல் பொருள் உண்மையை நச்சினார்க்கினியர் குறிப்பார் (பொருந. 104). பருகுதல் வேட்கையர்க்கு நீர் தருதல் ஓரறம்; பேரறம். அதனால், நீர்தான் கொணர்ந்து பருக்கி இளைப்பை நீக்கீரே என ஆண்டாளார் ஏவுகின்றார் (நாச்சியார் திருமொழி 13:4). பருகுதல்: ஆர்வ மீதூர நீர் குடித்தல் பருகுதல் ஆகும். * பருகல் காண்க. பருசம்: பரிசம் என்பது பொதுமக்களால் பருசம் எனப்படுவதும் உண்டு. விரிசம் பழம் என்பது விருசம் பழம் என்பது போன்றது அது. ஆனால், இப்பருசம் அப்பொருட்டதன்று. கிணற்றின் நீராழத்தைக் காண்பார் ஓராள் பருசம் ஈராள் பருசம் என்பது நாட்டுப்புற வழக்கம். ஆள் பருசம், ஆள் உயரம்; நீரின் நீளத்தை விடுத்து அகலத்தை அல்லது நிலை உயரத்தைக் குறித்தலால் ஒருவகையால் பருமையாம். ஓராள் மட்டம்; ஈராள் மட்டம் என்பவற்றில் வரும் மட்டம் திரளல் பொருளதே. மட்டம், மத்தம், மத்திப்பு, மட்டிப்பு, மத்து, மட்டு என்பவற்றை அறிக! பருஞ்சு: பருந்து என்பது பருஞ்சு எனக் கம்பரால் ஆளப்படுகிறது. புரிந்து என்பது புரிஞ்சு எனக் கொச்சையாக வழங்கும் வழக்குப் போல்வது அது. ஆயினும் பரு மாறிற்றில்லை. பருஞ்சு இறை என்பது அது (ஆரணிய. 956). பருந்துகளின் தலைவனாம் சடாயு எனப்பொருள் காணின் இப்பிரிப்பாம். பருஞ்சிறை பரிய சிறகுகளையுடைய சடாயு எனின் வேறு பிரிப்பாம். இருவகையாகவும் கொள்வார் உளர். (வை.மு.கோ.; கம்பராமாயண அகராதி). பருத்தி: பருத்தலால் வந்த பெயர் பருத்தி. பருத்திரள் போல் திரள்தலும் பழுத்தலும் வெடித்தலும் பஞ்சு வாய் திறக்க வெளியேறுதலும் பிளந்து விரிந்து பன்மடங்கு பருமையாய் விரிந்து காணலும் நோக்கின் பருத்திப் பெயர்ப் பொருத்தம் மிக விளங்கும். பருத்தி தமிழகத்துப் பழம்பொருள். நூற்றலும் நெய்தலும் பண்டே சிறக்க நடந்த தொழில். பெரும்பாலும் அத்தொழிலில் மகளிர் ஈடுபட்டிருந்தனர் என்பது பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன எனவரும் புறப்பாடலால் (125) விளங்கும். அதிலும் கணவனை இழந்த கைம்மை மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டனர் என்பதும் விளங்குகிறது. ஆளில் பெண்டிர் தாளில் செய்த, நுணங்குநுண் பனுவல் என்கிறது நற்றிணை (353). கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த மூடைப் பண்டம் இடைநிறைந்து எனப் புறநானூறும் (393) பொதிமூடைப் போரேறி ஆடும் நாயும் ஆடும் ஆட்டத்தைப் பட்டினப்பாலையும் கூறுகின்றன. பொதிமூடை என்பது பருத்தி மூடையைப் பொதுவகையிலும் பிறவற்றைச் சிறப்பு வகையிலும் சுட்டும். பருத்தி என்பதற்குப் பாரம் என ஒரு பெயர் உண்டு என்பதைக் குறிஞ்சிப்பாட்டுக் கூறும் (92). பருத்திப் பஞ்சைச் செறித்து வைத்த குடுவை, பருத்திக் குண்டிகை எனப்படும். பருதி: பெரிது பெரிது புவனம் பெரிது என்பது எவரும் அறிந்தது. அப்பெரிய புவியும் கதிரோனை நோக்கச் சிறிய துண்டம் என்பது அறிவியல் கணிப்பு. பருதியில் இருந்து சிதறி விழுந்த துண்டுகளில் ஒன்றே புவி எனின், இத்துண்டங்கள் எல்லாவற்றையும் கொண்டிருந்ததும், இத்துண்டங்களை அகலவிட்டும் மிகப் பேரண்டமாகத் திகழும் அப்பருதியாம் கதிரின் பருதியைக் கணித்தல் அரிதே. அதனைப் பருதி என்றது எத்தகு தகவுப் பெயர். பரிதி, பருதியாம் வடிவால் சுரம்பல கடவும் கரைவாய்ப் பருதி எனத் தேராழியைக் குறிக்கிறது பதிற்றுப்பத்து (46:8) பருதி ஞாயிறு என்பது பருதிப் பொருள் வெளிப்படத் தெரிவிக்கும் (பெருங்கதை 1:48:42). பருந்து: பருத்ததொரு பறவை என்னும் குறிப்பால் பருந்து எனப்பட்டது. பரியது அது என்னும் பொருட்டால் பருந்துக்குப் பாறு என்றொரு பெயரும் ஏற்பட்டது. பருத்த வடிவால் பருந்து என்னும் பெயரும், கருத்த வண்ணத்தால் கருடன் கலுழன் என்னும் பெயர்களும், மிக உயரமாகப் பறத்தலால் உவணம் என்னும் பெயரும் அதற்கு உண்டாயின. பருந்து ஓரிரையைக் கண்டு வீழ்ந்து இறங்கும் தோற்றத்தைக் கண்டோர் பருந்தின் வீழ்வு - பருந்தின் வீழ்ச்சி - பருந்தின் வீழ்க்காடு - என நூற்பாவின் பொருணிலை அமைதிக்கு ஒரு வாய்பாடு கண்டனர். பருந்து இரையை எடுக்கும் இழுபறியையும் ஆடும் ஆட்டத்தையும், குத்திக் குதறிக் கொடுமைப்படுத்துதலையும் கண்டோர் பருந்தாட்டம் ஆடுதல் என்றனர். பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டம் ஆட்டி என்பதொரு தனிப்பாட்டு. பருந்தின் வாயமைப்பைக் கூர்ந்து கண்ட மீனவர் பருந்துவாயன் என, ஒரு மீன் வகையைக் கண்டனர். அதனைப் பறாளை விநாயகர் பள்ளு தோகைப் பருந்து வாயன் மட்டுமீன் எனப் பயன்படுத்திக் கொண்டது (15). தச்சுப் பணியர் உள்ளத்துப் பருந்தின் வால் பதிந்தது. அதனால் பருந்து வால்போல் வெட்டிப் பலகையின் மூலைப் பொருத்து இணைத்தலைப் பருந்துவால் எனப் பெயரிட்டனர். பரிதல் = வளைதல்; பரிந்து = வளைந்து. இப்பரிந்து பருந்து என்றும் வடிவு கொண்டு வளையலைச் சுட்டியது. பறக்கும் பருந்துக்கும் வளையலாம் பருந்துக்கும் வேறுபாடு காட்ட வேண்டுமே என்று எண்ணிய சங்கச் சான்றோர் பறாஅப் பருந்து என்றனர் (கலி. 147). பருப்பம்: பருப்பு - பருத்தது; பருப்பு + அம் = பருப்பம். அம் பெருமைப் பொருள்; (எ-டு) கூடு + அம் = கூடம். பருத்த உயிரி யானை; அவ்வியானை நடக்கும் மலை எனப்படும். அவ்வியானையின் முகபடாமும், அம்பாரியும் பருமம் எனப்பட்டால் அவற்றைக் கொண்ட யானையும், அவ்வியானையொடு ஒருபுடை ஒப்பாகச் சொல்லப்படும் நடவா மலையும் பருப்பம் எனப்படுவது தகவுதானே! அவ்வகையால் மலைக்குப் பருப்பம் என்னும் பெயரும் பருப்பதம் என்னும் பெயரும் உண்டாயின. பர்வதம் என்பது வடசொல். பருப்பம் தென்சொல். நீலப் பருப்பம் என்பது பெருங்கதை (5:1:181) பருப்பதமலை என்னுமொரு மலையையும் காட்டும் பெருங்கதை (5.3:55). மலையமலை என்பது போலப் பொதுச் சிறப்புப் பெயர் இணையாம். பதம் என்பது திரண்டது, பருமையும் பருவமும் அமைந்தது என்னும் பொருளதாதலும் அறிக. அறியின் பருப்பதம் என்னும் தென்சொல் நிலை தெளிவாம். பதம் திரட்டப்பட்டதாதல் வெண்ணெய்க்கொரு பெயரதாதலால் கண்டு கொள்க! பருப்பு: பருப்பு என்பது பருமைப் பொருளது. பருப்புடைப் பவளம் போல எனவரும் சிந்தாமணி இப்பொருளைத் தெரிவிக்கும் (2273). அயிருருப் புற்ற ஆடமை விசயம் கவவொடு பிடித்த வகையமை மோதகம் என வரும் மதுரைக் காஞ்சிக்கு (625, 626) பருப்பும் தேங்காயுமாகிய உள்ளீடுகளோடே கண்டசருக்கரை கூட்டிப் பிடித்த வகுப்பமைந்த வெம்மை பொருந்தின அப்பம் என உரை வரைகின்றார் நச்சினார்க்கினியர். அவரைப் பயற்றின் பருப்புச் சோற்றைச் சொல்கிறது பெரும்பாணாற்றுப் படை (195). கும்மாயம் என்பதோர் உணவு குறிப். உ.வே.சா. குழையச் சமைத்த பருப்பு என்பார் மணவாள மாமுனிகள் (பெரியாழ்வார் 3. 3:37) பயற்றது கும்மாயம் நன். 299 மயிலை. மேற். பருப்பு, பயற்றை உடைத்துச் செய்யப்பட்டது. தோல் உரித்து ஆக்கப்பட்டது. பருப்பு என்னும் சொல், பருப்புக் கொண்டு அரைக்கப்படும் துவையலைக் குறித்து, பின்னர்த் துவையல் என்னும் பொதுப் பொருளில் விருதுநகர் வட்டாரத்தில் வழங்குகின்றது. பருப்புக் குழம்பு: சாம்பார் இல்லாச் சாப்பாடா? பருப்பு இல்லாத் திருமணமா? என்னும் பழமொழியும் பொய்த்துப் போனது. சாம்பார்தான் உண்டேயன்றிப் பருப்பும் இல்லை; குழம்பும் இல்லை. இன்னும் புளிக்குழம்பு, காரக் குழம்பு, வற்றல் குழம்பு, கண்டக் குழம்பு எத்தனை வகை. மோர்க் குழம்பை விட முடியுமா? ஒரு சாம்பார் என்ன வேலை செய்கின்றது! பருமம்: மகளிரின் திரண்ட மார்பகம் பருமம் எனப்படும். கொம்மை, கொழுமை என்பன போல அதனியல் விளக்கும் பெயராம். பெண்டிர் அழகென உறுப்பிலக்கணம் சொல்லும் நூல்கள் மார்பகப் பருமை சுட்டுதலும், கோயிற் சிற்பங்களில் காணப்படும் அணங்குகளின் உடற்கூறும் காண்பார் இப்பெயரமைதி பொருந்துமாற்றை அறிவர். இவ்வமைப்பும் பருவத் திரட்சியொடும் கூடியது என்பதும் சொல்லமைப்பால் கொள்ளத் தக்கதாம். மகளிர், பருத்த தொடைப்புறம் குறிப்பது பருமம் என்பது யாழ்ப்பாண அகராதி. அரைப்பட்டிகையைக் குறிப்பது என்பது திருமுருகாற்றுப்படை. அது பதினெட்டு வடங்கொண்டது என்னும் பருமை சுட்டியது என்பது அறியற்பாலது (146) களிற்றின் கழுத்து மெத்தை என்பது கலித்தொகை (97) குதிரையின் கலணை என்பது நெடுநல்வாடை (179). பருமம், பருமை என்பது உலக வழக்கு. பருமன் என்பதும் அது. அம்பாரியைப் பருமக்கட்டு என்றும் (உயுத். 3360) பிடரியில் தவிசைத் தாங்கிய யானை, பருமயானை என்றும் (அயோத். 2) கம்பரால் குறிப்பிடப்படும். பருமல்: பருத்த மரக்கை பருமல் எனப்படும். பருத்தது பருமன் ஆதல் போலப் பருமல் எனப்பட்டதாம். கப்பலுக்குரிய குறுக்கு மரத்தின் கை பருமல் எனப்படும் என்பதைச் சுட்டுகிறது செ.ப.க. அகராதி. பருமிதம்: பெருமிதம் என்பது பெருமையாகவும் தன்னெடுப்பாகவும் இருநிலையில் அமையும். இப்பெருமிதம் பருமிதம் எனவும் படும். பருமிதம் மகிழ்வையும் குறிக்கும். பருமித்தல் என்பது அழகுறுத்தல் பண்ணுறுத்தல் என்பவற்றைக் குறித்தல் பருமம் என்பதன் வழியாக வரும் பொருளாம். முத்தம் பருமித்திடை தேய்ந்து - கூர்ம. அந்த. 53 பருமித்த களிற்றி னானும் - சிந். காந்த. 20 என்பவற்றை மதுரைத் தமிழ்ச்சங்க அகராதி எடுத்துக் காட்டும். பருமை: பருமை என்பது பருத்திருத்தல், பெருமை என்பவற்றை வெளிப்பட உணர்த்தும். பருஞ்சோளம், பருங்கீரை, பருந்தேக்கு, பருநெல், பருப்பொருள், பரும்படி, பருமட்டம், பருவெடி, பருவுடல் இவ்வாறு பருமை சுட்டிய அடையாக வருவது பெருவழக்கு. பரு பெரு என்றும் ஆகும். பெருந்தீனி, பெரும்பாடு, பெருங்காயம், பெருங்கோழி இவ்வாறு பருமை பெருமையடையாக வருதல், பருமிதம் எனவும் வழங்கும். பருவல் என்பது பருமை என்னும் பொருளில் வழங்குதல் உலக வழக்கு. பருவம்: பருவமழை என்பதும் பருவத்தே பயிர்செய் என்பதும் அனைவரும் அறிந்தவை. பருவம் என்பது மழைபெய்யும் பருவமாம். காலச்சோளம், காலப்பருத்தி, காலமழை என்பவற்றில் உள்ள காலம் மழைக்காலமாதல் உழுதொழிலோர் நன்கறிந்தது. தற்காலம் என்பது மழைக் காலத்தை முன்னே குறித்ததென்பது தற்பாடிய தளியுணவிற் புள் தேம்ப எனவரும் பட்டினப் பாலையால் விளங்கும் (3). காரே கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் வேனில் என அறுவகைப் பருவமும் எண்ணியிருப்பதும் முதற்கண் கார் இடம் பெற்றிருப்பதும் கருதத்தக்கன. கருமுகில் திரண்டு வான்மறைய உருக்கொண்டு பொழிதலைப் பருவக் கொண்மூ என்பர். கொண்டல் என்பதும் நீர் கொண்ட கருமுகிலையே யாம். சூற்கொண்ட மகள் மகப்பேறு உறுவதுபோல் சூற்கொண்ட முகில் மழைப்பேறு வழங்கி உலகத்தை ஓம்புதல் வான்பெருஞ்சிறப்பாம். இப்பருவம், இயற்கை முதிர்ந்து விளங்கித் தோன்றும் விழுப்பமிக்கதாகலின் பருவம் எனப் பெற்றதாம். குமரி ஒருத்தி இயற்கையின் விம்முதலால் இல்வாழ்வு ஏற்கும் பருவத்தை அடைகிறாள் என்பதற்கு அறிகுறி பருவமடைதலாம். உழவடைக்காலம் கற்கும் காலம் ஆகியவற்றின் சீரிய - வாய்த்த - பொழுதுகளே அல்லது காலங்களே பருவம் எனப்படுகின்றதாம். அது நிகழ்தற்கு அல்லது அது செய்தற்குத் திரண்டு நிற்கும் முழுத்தமே பருவம் எனத் தேர்ந்ததும், முழுமதி நாளாம் முழுத்தத்தில் திருமணம் வைத்ததும் அதற்கு முழுத்தம் எனப் பெயரிட்டதும் முந்தையோர் பருவம் போற்றிய தேர்ச்சிச் சான்றுகளாம். பருவமாலை: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனப்படும் பெண்டிர் பருவம் ஏழனையும் உரைத்து, அவ்வேழ் பருவத்தும் கற்றுக் கொண்டுள்ள துறைக் கல்விச் சிறப்புகளையும் எடுத்துரைத்தல் பருவ மாலை எனப்படும். பெண்பருவம் ஏழுக்கும் ஆண்டேழ் துறைக்கல்வி ஏற்றமுறல் வாழ்பருவ மாலையா மால் - பிர. திர. 10 பெண்டிர் பருவ வருணனை நோக்கு மட்டுமன்றி அவர்தம் கல்வித் திறம் குறித்தும் கருதியிருத்தல் குறிப்பிடத் தக்கதாம். பொருந்து கல்வியும் செல்வமும் பூக்கும் புகழ் வாழ்வுக்குத் தக்க புதுப்படைப்பாகப் பருவமாலை வெளிப்படல் வேண்டும். பருவரல்: இடுக்கண், பழங்கண், புன்கண், துன்பம், துயர், இன்னல், அல்லல் என்ன எண்ணற்ற சொற்கள் கவலைக்கு உள்ளன. கவலைப் பெருக்கம் வாழ்வில் உண்மையைக் காட்டுவது போலவே, சொற்களும் விரிவாக உள்ளன. அவற்றுள், பருவரல் ஒன்று. எஞ்சிய துயரச் சொற்களினும் விஞ்சிய துயரை விளக்கு வது பருவரல் என்பதை அதன் பருமையே காட்டும். பருவருதல் எனினும் பருவரலே! பருவரல் பொறுக்க முடியாத் துயர் என்பதைப் பொறை யின்று பெருகிய பருவரல் என்பதால் வெளிப்படுத்துவார் தொல்காப்பியர் (1097). பருவரல் தீரக் கடவு மதிபாக என்னும் ஐங்குறுநூற்றுப் பருவரல் பெரும்பிறிதென அறிக (488). அதனினும் பருந்துயர் இல்லையே! பருவி: பருவி = பருத்தி. பருவி வித்திய பைந்தாள் புனம் - பெருங். 1:50:16 பருவி பரீஇ எனவும் ஆகும். பரீஇ வித்திய - குறுந். 72 வித்துதல் = விதைத்தல். பர் - பரூஉ: பரூஉ பருமைப் பொருளதாதலைத் திவாகரமும் (பண்பு) பிங்கலமும் (1928) உரைக்கும். பரூஉச் சுடர், பரூஉச் செவி, பரூஉத் தொடி இன்ன பல வற்றைச் சொல்கிறது பெருங்கதை. பரூஉக்கண், பரூஉக்கரை, பரூஉக்காழ், பரூஉக்குடர், பரூஉக்குரல், பரூஉக்கை, பரூஉத்தாள், பரூஉத்திரி, பரூஉப்பகடு, பரூஉப்பனை, பரூஉப்பெயல் இன்ன பலவற்றைப் பயில வழங்குகின்றன பாட்டு, தொகைகள். பர் - பரேர்: பரு + ஏர் = பரேர். பருத்ததும் அழகியதுமாம் தன்மை பரேர் எனப்பட்டது. பருமை அழகு இவற்றொடும் வலிமையும் அமைந்தது பரேர் எறுழ் எனப்பட்டது. பரேரெறுழ்க் கழற்கால் - பட். 294 பரேரெறுழ்த் தடக்கை - அகம். 148 பரேரெறுழ்த் திணிதோள் - பெரும். 90; நெடுநல். 31 பரேரெறுழ் முழுவுத்தோள் - பதிற். 81 என்பவற்றைக் காண்க. புழகு என்பதொரு பூ. பரேரம் புழகு எனப்படுகின்றது (குறிஞ்சிப் பாட்டு 96) அதன்பூ செந்நிறம் என்பது அரக்கு விரித்தன்ன என்பதால் புலப்படுகின்றது. பலகணி: கணி = கண்ணையுடையது; கண்ணாவது கண்போன்ற துளையமைப்பு. பலகணி = பலவாய கண்களையுடையதும் காற்று வரு வழியினதுமாகிய வீட்டு அமைப்பு. காற்று வரும்வழி, காலதர். கால் = காற்று. அதர் = வழி. மான்கண் காலதர் மாளிகை என்ப தனால், மான்கண் போன்ற அமைப்பு உடையது என்பது விளக்கமாம் (சிலப். 5:8). * கண்வாய் காண்க. பலகை: மரச்சட்டங்கள் பலவற்றை இழைத்து ஒழுங்குறுத்திச் செய்யப்பட்ட இருக்கை, படுக்கை ஆகியவை பலகை எனப்பட்டன. அட்டில் பகுதியில் அமர்ந்து பணி செய்ய மணைப்பலகை பயன்படுத்தினர். சுவர்ப்பூச்சுக்குட் தேய்ப்புப் பலகை பயன் படுத்தினர். சிறிதாக அப்பலகை இருந்தமையால் மணிப்பலகை எனப்பட்டது. மணி சிறுமைப் பொருளது. எ-டு: மணிக்கடலை; மணிக்கயிறு; மணிக்குடல். நன்செய் நிலத்தில் குழைமிதித்துச் சேறாக்கிய பின் ஒப்புரவு ஆக்குவதற்கு மாடு பூட்டியோ ஆள்கள் இழுத்தோ பலகை யடித்தல் அல்லது பலகை தடவல் வேளாண் வழக்கு. சங்கச்சான்றோர் அமர்ந்து ஆய்ந்த இருக்கை பலகை எனப் பட்டது. சங்கப் பலகை என்பது அது. கரும்பலகை பள்ளிகளின் சான்று; சரப்பலகை, கடைகளின் சான்று; குழந்தைகளிடம் கற்பலகை. திருவிளையாடல் புராணத்தில் பலகையிட்ட படலம் என்பது ஒன்று. இந்நாள் விளையாடல்களில் ஒன்று மட்டைப் பலகை விளையாட்டு. புலவர்கள் இருந்த இருக்கையை அன்றி அவர்கள் இருந்த இடமும் பலகை என வழக்கூன்றியமையே இந்நாளின் அறமன்றப் பலகை (Court Bench) மூலமாம். எண்ணெய் நீராடச் சென்ற திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இருகைதானே இருக்கிறது எப்படி நீராடுவது என வினாவிப் பலகை வரச்செய்து நீராடினார் என்பது செவிவழிச்செய்தி. நீர்நிலைகளில் செல்ல அகன்ற பலகைகளைப் பரிசலாகப் பயன்படுத்தியது உண்டு. அத்துறை பரிசல் துறை. இரும்புத் தகடும் பலகை என்றாகி இருப்புப் பலகை எனப்பட்டது. மருப்பிடைப் பயின்ற மாசறு மணித்தொழில் பரப்பமை பலகை - பெருங். 1:38:147-8 வட்டிகைப் பலகை - பெருங். 1:38:169 வட்டிகைப் பலகை = ஓவியம் எழுதுதற்குரிய பலகை. அரக்குவினைப் பலகை - பெருங். 1:48:61 பரவைத் தட்டிற் பன்மணிப் பலகை - பெருங். 1:48:16 பொறிநிலை அமைந்த செறிநிலைப் பலகை - பெருங். 2:6:72 முதனிலைப் பலகை (அரியணை) - பெருங். 2:6:101 தண்ணிதிப் பலகை (பொற்பலகை) - பெருங். 2:18:41 மணிகிளர் பலகை - பெருங். 4:15:105 எனப் பலகை பெருங்கதையில் பயில வழங்குகிறது. மரத்தாலாகிய பலகை, பலவகை அணிமணி வேலைப் பாடமைந்த இருக்கையாய் ஊர்தியாய்க் கதவாய்ச் சுவராய்க் கருவியாய் விரிந்த வகை இது. பலவற்றை ஒட்டிய ஒட்டுப் பலகை, கல்நார்ப் பலகை, முறை மன்றப் பலகை புதுவரவானாலும் பழம்பலகைக் கொடை யேயாம். இந்நாளில் பலவற்றை ஒட்டாமல் இணைக்காமல் பாளமாக அமைந்த ஊஞ்சல், கட்டில் எனப்படுவன ஒரே தகடாக இருப்பினும் பழம்பலகைப் பெயரை விட்டில. பல ஒன்றானாலும், ஒன்று பல எனப் பெயர் பெறலும் காலந்தோறும் வழங்கும் மொழிக்கொடையாம். வல்லுப்பலகை என்பது சூதாடுவார் அவ்வாட்டத்திற்குப் பயன்படுத்தும் பலகை. அதனைத் தொல்காப்பியர், நாயும் பலகையும் வரூஉங் காலை ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே உகரம் கெடுவழி அகரம் நிலையும் என்கிறார் (எழுத்து. 375). பதினைந்தாம் புள்ளி விளையாட்டு, பல்லாங்குழி விளையாட்டு, நாயும் புலியும் விளையாட்டு, தாய விளையாட்டு என்பவற்றின் முன்னோடியாம் விளையாட்டு வல்லு. அதன்காய் வட்டு எனப்படும். வட்டினும் சூதினும் வான்பொருள் வழங்கிக் கெட்ட குடியினன் மணிமேகலைச் சாதுவன் மட்டும் தானா? நளன் என்ன, தருமன் என்ன எல்லாரும் வல்லாட்டம் ஆடியவரே! கண்வாய் கால்வாய் ஆகியவற்றின் மடைகளைப் பலகையால் அடைப்பர். அதற்கு ஓ என்பது பெயர். ஓ = மதகுநீர் தாங்கும் பலகை; கூரை வேய்வதற்கும் படப்பை வேய்தற்கும் தட்டி ஒழுங்குறுத்தும் பலகை தட்டுப்பலகையாம்; போர்க்களத்தில் மெய்க்காப்பாகக் கொள்ளும் மெய்மறை (கவசம்) பலகை எனப்பட்டது. வடிமணிப் பலகை (பெரும்பாண். 120). போர்க்கதவு என்பதற்குப் பலகைகள் தம்மிற் சேருதலையுடைய கதவு என்பார் நச்சினார்க்கினியர் (பட். 40). பலகையால் செய்யப்பட்ட சுவர், பாகர் எனப்பட்டதை அவரே கூறுகிறார் (சிறுபாண். 258) மலைவாணர் குடியிருப்புகளின் சுவர்கள் பலகை அடைப்புகளால் அமைந்தமை பண்டு முதல் இன்றுவரை கண்கூடு. புத்துலக நாகரிகம் சுவரடைப்பாகப் பலகையைக் கொள்கின்றது. பலகையும் சீப்பும் மதிலுறுப்பு. பலகையடைப்பு: வீட்டிலும் காட்டிலும் பொருள்கள் போட்டு வைக்கவும் காவல் கருதி அமர்ந்திருக்கவும் அமைக்கப்படுவது பரண் ஆகும். பரண் என்பதும் பரணை என்பதும் பொதுவழக்கு. அதனைப் பலகை அடைப்பு என்பது அருப்புக் கோட்டை வட்டார வழக்கு. பலகையால் அடைத்துப் பரப்பப்படுவதால் பெற்ற பெயர். மற்றைப் பரண் கம்புகளைப் பரப்பி அமைக்கப்பட்டதாகும். பலம்: பலம் என ஒரு நிறைகல் (எடைகல்) இருந்தது. பலம் வலிமைப் பொருளிலும் வழங்கும். அது வலம் என்பதன் திரிபாகும். இனி மாடு பலப்பட்டிருக்கிறது என்பதும் பயிர் பலன்(ம்) பிடித்திருக்கிறது என்பதும் உழவர் வழக்கு ஆகும். மாட்டுத் தரகர் வழக்கிலும் முன்னது உண்டு. பலாப்பழம்: பலாப்பழம் பருத்த பழம். அது, பல் - பரு - பல் - பலா = பெரும் பழம். சிறுகோட்டுப் பெரும்பழம் என்பது குறுந்தொகை(18). பலா - பலவு. தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க்குமே - புறம். 109 பலாப்பழம், தமிழ்க் குறிஞ்சி நிலத்திற்குச் சிறப்பாக உரியதை அறிந்திருந்தும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி வடசொல்லாகக் காட்டியிருப்பது வியக்கத்தக்க நெஞ்சழுத்தம் என்கிறார் பாவாணர். (வடமொழி வரலாறு பக். 202) பலிசை: பலிசை என்பது வட்டி என்னும் பொருளில் நாகர்கோயில் வட்டார வழக்காக உள்ளது. கல்வெட்டுகளிலும் இச்சொல் இப் பொருளில் ஆளப்படும். பலிசை என்பது இலேசு (ஊதியம்) என்னும் பொருளில் சிந்தாமணியில் வழங்குகின்றது (770). வட்டி எனினும், ஊதியம் எனினும் எளிமையாக இருக்க வேண்டும் என்னும் கருத்தினது அது. பலுகு: நிலத்தைக் கிளறிக் களை பெயர்க்கப் பயன்படுத்தும் பலுகுச் சட்டம் உழவர் கருவிகளுள் ஒன்று. அது பலபல்களைக் கொண்டு இருத்தலால் பலகு, பலுகு என வழங்கப்படுகின்றது. புழுதி புரட்டி எனப்படும். நெல் முளைத்து நான்கு ஐந்து விரல் உயரமாகப் பயிர் இருக்கும் போது பலுகடித்தல் நடைமுறை வழக்காகும். பல்: பற்று என்பது பல் என்பதன் வழியாக வந்த சொல். பல் என்பதன் பொருள் என்ன? பல் என்பது வெண்மை குறித்த சொல். பல பல என விடிந்தது என்னும் வழக்கிலும் பால் என்னும் சொல்லிலும் வெண்மைப் பொருள் உள்ளதாதல் அறிக! பல், பால் என்பவை போலக் கல், கால் என்பவை கருமைப் பொருள் தருதலையும் ஒப்பிட்டுக் காண்க. பல் என்பது பள் எனத் திரிந்தும் வெண்மைப் பொருள் தருதலைப் பளபள, பளபளப்பு பளிச்சிடல் என்பவற்றிலும் பளிக்கு பளிங்கு என்பவற்றிலும் காண்க. இவ்வாறே கல் என்பது கள் எனத் திரிந்து கருமைப் பொருள் தருதலைக் களம், களவு, களர், கள்ளம், கள்வன் முதலிய சொற்களைக் கொண்டு தெளிவு செய்து ஒப்பிட்டுக் கொள்க! வெண்மைப் பொருள் தரும் பல் பின்னர்ப் பன்மைப் பொருள் தருவதாய் விரிந்தது எப்படி? உடற்பொறிகளை மெய், வாய், கண், மூக்கு, செவியென எண்ணுவர். இவற்றுள் வாயின் உள்ளுறுப்புகளில் ஒன்றாகியது பல், இதனைப் பெருக்கல் வாய்பாடு போல, எண்ணான்கு முப்பத்திரண்டு பற்காட்டி என்கிறது ஒரு தனிப்பாட்டு. கண்கள் இரண்டு; காதுகள் இரண்டு; ஆனால் பற்களோ முப்பத்திரண்டு. அவையும் கண்கள் காதுகள் போலத் தனித் தனி நின்றன அல்ல, தொடுத்துப் பத்தியாய் அமைந்துள்ளன. முல்லை யரும்பையோ முத்தையோ கோத்து வைத்த கோவை என்ன உவமைத் தொடை படக் கூறப்படுவனவாயின. இப்பல்லின் வரிசையே பல வென்பதை அல்லது பன்மையை வழங்கும் குறியாயிற்றாம். உழவுக் கருவிகளுள் ஒன்று பலகுச் சட்டம்; அதனைப் பயிரூடு அடித்தலைப் பலகடித்தல் என்பர். பலகு, பலுகு எனவும் வழங்கும். களை குத்தி போல் பல் பல்லாகிய முளைகளை யுடையது அப்பலகு என்பதை அறிபவர், அதன் பெயர்ப் பொருளைத் தெளிவாக அறிவர். பலகடித்தலைப் பல்லியாடுதல் என்பது பண்டையோர் வழக்கு. பூழி மயங்கப் பலவுழுது வித்திப் பல்லி யாடிய என்பது புறப்பாட்டு (120) பல்லியாடுதலைத் தாளியடித்தல் என்பார் புறநானூற்று உரைகாரர், ஊடடித்தல் என்பது இக்கால வழக்கு. பலகு அமைப்பைத் தலை சீவும் சீப்புடன் ஒப்பிட்டு வடிவமைப்புக் காண்க! சீப்புப் பல் பல்போன சீப்பு என்னும் வழக்குகளையும் கருதுக. கொழுவொடு சேர்க்கப்பட்டதும் பற்கள் உள்ளதுமான பலகையொடு அமைந்த கலப்பை பல்லுக் கலப்பை எனப்படுதலையும், செங்கல் கட்டட மேல் தளத்தில் ஒன்றுவிட்டு ஒன்று வெளியே நீட்டி வைக்கப்பெறும் செங்கல் வரிசை பல்லுவரி எனப்படுதலையும் எண்ணலாம். ஈர வெண்காயம், வெள்ளைப் பூண்டு ஆகிய இவற்றின் பிளவுகள் அல்லது கப்புகள் பற்கள் என்றே வழக்கில் இன்றும் உள்ளன. பல் பல்லாக எடுத்தே நடவு செய்தலும் கண்கூடானதே. சிற்றூர்ப் பலசரக்குக் கடைகளில், பூடு ஒரு பல்லுக் கொடுங்கள் என்று கேட்டு வாங்குதல் அண்மைக் காலம் வரை நடைமுறையில் இருந்ததேயாம்! இவற்றிலெல்லாம் பல் தன் மூலமாம் ஒளிப்பொருளையும் பன்மைப் பொருளையும் இழந்து, ஒருமை சுட்டி வந்ததாம். முப்பழம் வாழை, மா, பலா என்பவை. இவற்றுள் பலா சுளை எனப்படும். கனியிடை ஏறிய சுளை என்னும் பாவேந்தர் வாக்கில் வந்த கனி பலாக்கனி என்பது எவரும் அறிந்ததே. பலாக் கொட்டையின் வடிவை ஊன்றிக் காண்பார் வண்ணமும் வடிவமும் பல்லொடு ஒத்திருப்பதைக் காண்பர். அதன் பெயரீட்டையும் அறிந்து கொள்வர். பல் போன்ற கொட்டை யுடையதும், இவற்றையும் பலவாகக் கொண்டதும் பலா எனப்பட்டதாம். பர் பல் பலா எனவரல் உண்மையால் அதற்குப் பருமைப் பொருளும் உண்டாம். பலாச் சுளை என்பது போலவே, பருத்திச் சுளை என்பதும் வழக்கே. சுள் என அடிக்கும் வெயிலால் முற்றி வெடிப்பதால் சுளை எனப்பட்டது. பருத்தி சுளைத்திருக்கிறது என்பது பருத்தி வெடிப்பைக் குறிக்கும். பருத்திச் சுளை எடுப்பார்க்குப் பருத்தியே கூறிட்டுக் கூலியாகத் தருதல் வழக்கம். பருத்தி எடுக்கப்பட்ட கொலுக்கு (கொதுக்கு) பல்பல்லாக இருக்கும். முள்ளைப் போல் குத்தவும் செய்யும். அதனை உணர்ந்து பருத்திக்குப் பல் எனப் பெயர் வைத்தனர். அது பன் எனவும் பன்னல் எனவும் இலக்கண இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. மின்னும் பின்னும் பன்னும் கன்னும் அந்நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல என்பது தொல்காப்பியம் (345). பன்னல் வேலிப் பணைநல் லூரே என்பது புறநானூறு (345). பருத்தி, வேலிப் பயிரோ என்பாராயின், பருத்தி வேலிச் சீறூர் என்னும் புறநானூறு தெரிவிக்கும் (299). இந்நாளில் வேலிப் பருத்தி என ஒரு பருத்தி வேலிப் புறங்களில் இருத்தல் அறிக. பன் ஆகிய பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட நூல் பனுவல் எனப்பட்டது. பின்னர், அவ்வாடை நூலைக் குறித்த பனுவல், அறிவு நூலைக் குறித்தது. பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொல் புலவனே சேயிழையா - எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு என்று பனுவலை ஒப்பிட்டுப் பகர்கின்றது நன்னூல் (24). பல் பன் ஆகுமா? கல் கன் ஆனதே. கன்மாப் பலகை எனச் சங்கப்பலகை வழங்கப் பெற்றதே. பல்பல்லாய் அமைந்த அறுவாள் பன்னறுவாள் எனப்படுவதையும், அதன் பற்களைக் கூராக்குவதைப் பன்னு வைத்தல் எனப்படுவதையும் நாட்டுப் புறங்களில் நன்கு அறியலாம். பலமொழி வல்லார் பன்மொழிப் புலவர் எனப்படுதலையும் பல்கால் சொல்லியதையே சொல்லுதல், பன்னுதல், பன்னிப் பன்னிப் பேசுதல் என்று வழங்கப்படுதலையும் தெளிக! பனை என்னும் தொல்புகழ் மரத்தை அறிவோம். தென்னை, புன்னை என்பவை போலப் பன்னை என்பதே அதன் மூத்த பெயராக இருந்து இடைக்குறை எய்தியிருக்க வேண்டும். குமரிக் கண்ட நாளிலேயே ஏழ்பனை நாடு பேசப் படுதலாலும் பனைக்கொடியும் பனம்பூ மாலையும் சேரர்க்குரியவை ஆதலாலும் அவற்றைத் தொல்காப்பியமும் சுட்டுதலாலும் பனை என்னும் வடிவம் மிகப் பழமையே வந்துவிட்டது என்பதைக் கொள்ள வேண்டும். எவ்வளவு காலம் கடந்தாலும் சில அடிமூலங்கள் உண்மையை விளக்கி உறுதி செய்து விடுகின்றனவாம். பதனீரை வடிப்பதற்குப் பயன்படுவது பன்னாடை. அது பனை மடலைச் சூழ்ந்து வலை போல் இருக்கும் நார் ஆடையைக் கூட்டிப் பிடித்து அமைத்த தாம். பன் ஆடை பன்னாடை ஆயிற்று. இழை கலக்கமான உடையையும் நெய்யரியையும் பன்னாடை என்பதும் வழக்கம்! பன்னாடையில் அமைந்துள்ள பன் பன்னை என்பதன் முந்தை மூலங்காட்டுவதாம். தென்னை ஓலை தென்னோலை ஆனாற் போலப் பன்னை ஆடை பன்னாடை ஆயிற்றாம். தென்னவன் கூடலில் ஒரு தெரு தென்னோலைக்காரத் தெரு என்பது. பனைக்கும் பல்லுக்கும் என்ன தொடர்பு? பனையின் அடிமரப் பரப்பெல்லாம் பல்பல்லாய் - செறும்பு உடையதாய் - இருப்பது பொருள்விளக்கம் செய்வதாம். இரும்பனஞ் செறும்பு என்னும் அகநானூறு (277). செறும்பு, சிறாம்பு செதும்பு என வழக்கில் உள்ளன. சிம்பு என்பது கொச்சை வழக்கு. பல் தொடர்பால் பல்லி பெயர் பெற்றது போலவே, பன்றி என்பது பல் தொடர்பால் பெயர் பெற்றதேயாம். பல் + தி = பன்றி. கடைவாய் ஓரங்களில் நெடும் பல் அல்லது கோரைப் பல் இருந்த காலத்தில் அதற்குச் சூட்டப் பெற்ற பெயர் பன்றி. கோரையின் குருத்து நீளல் இயற்கையை நோக்கிக் காண்பார் கோரைப்பல் என்னும் பெயரீட்டு விளக்கமும் காண்பார். யானையின் நெடும் பல்லாம் கொம்பு தேயாமல் நிலைத்தது. பன்றிக்கோ தேய்ந்தொழிந்தது. கோரைப்பல், மாந்தர்க்கும் முந்தை யுடைமையாக இருந்ததைப் பழஞ்சிற்பங்கள் பறையறைய வில்லையா! பன்றிக்கு வல்லுளி என்னும் பெயர் உண்மையையும், யானையைக் குறிக்கும் கோட்டுமா என்னும் பெயர் பன்றியையும் குறித்தலையும் அறியின், பெயரின் பொருள் விளக்கமாம். பல் என்பது பத்தின் மூலமாம். பல் + து = பஃது; பத்து ஆயிற்று. பல் பன் என ஆகியும் பத்தைக் குறிக்கும். இருகை விரல்களையும் எண்ணத் தெரிந்து கொண்ட காலத்தில் அதுவே பலவற்றுள் உச்ச எண்ணாகக் கருதி வைக்கப்பெற்ற பெயராம். பஃது பத்து என்னும் இருவகை ஆட்சிகளும் பண்டை நூல்களிலே இடம் பெற்றிருத்தலும் பன்னிரண்டு என்பதிலே பன் என்னும் வடிவே பத்தினைக் குறித்து நிற்றலும் எண்ணுக! இனிப் பன்னொருவர் எனப் பரிபாடல் கூறுவதும் (8) பன்னொன்று என அருகலாக வழக்கில் உள்ளதும் இணைத்துக் காணலாம். இனிப் பஃது பத்து ஆகுமோ? என்பார் உளரெனின் அஃகுள், அக்குள் அஃகம், அக்கம் என வருவனவற்றைக் கருதுவாராக! பெருநீர்ப் பெருக்குடைய குமரிக் கண்டத்தோர் ஆறு, பஃறுளி என வழங்கப் பெற்றது அறிஞர் அறிந்தது. பல துளி என்பதே பஃதுளி என்பதும், பல துளி பெரு வெள்ளம் என்பதும் எவரே அறியார்? பல துளி பஃறுளியானது போலவே, பல தாழிசை பஃறாழிசையாகவும், சில தாழிசை சிஃறாழிசையாகவும் கொச்சகக் கலிப்பா வகையில் இடம்பெற்றமை யாப்பியல் வல்லார் கோப்புற அறிந்தவையாம். பஃறி என்பது படகைக் குறிக்கும் சொல். ஆனால், ஒரு படகைக் குறிக்காமல் பல படகுகளைக் குறிக்கும் தொகுதிச் சொல் என்பது பஃறி என்பதன் வேர் புலப்படுத்துகின்றது. பல் + தி = பஃறி. பல படகுகளைக் குறிப்பது பஃறி என்பதற்குச் சான்று உண்டோ எனின், உண்டு என்பதாம். கழக இலக்கியங்களில் பட்டினப்பாலையில் மட்டும் ஒரோ ஓர் இடத்தில் (30) ஆளப்பட்டுள்ள சொல், பஃறி அது, கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு வெள்ளையுப்பின் கொள்ளைசாற்றி நெல்லொடுவந்த வல்வாய்ப்பஃறி பணைநிலைப்புரவியின் அணைமுதற்பிணிக்கும் என்பது. பந்தியிலே நிற்றலையுடைய குதிரைகளைப் பிணிக்குமாறு போலச் சார்ந்த தறிகளிலே பிணிக்கும் என்கிறார் நச்சினார்க்கினியர். வணிகப் படகுகள் பலவாகச் செல்லுதலும் மீண்டு வருதலும் வழக்கம் என்பதை வரலாற்று வழி அறிந்தோர், பஃறியின் மெய்ப்பொருள் தெளிவர். அக்காலச் சாத்துகள் வணிகர் கூண்டு வண்டிகள் வரிசையாகச் சென்று வணிகம் செய்து திரும்பிய செய்தியும் ஒப்பிட்டுக் காணத் தக்கதே. தோல் என்பது கிடுகு படை அல்லது பரிசை எனப்படும். கேடயம் என்பதும் அது. பல வீரர்களும் ஒருங்கே தோல் பிடித்துப் போர்க்களத்து நிற்றலைப் பஃறோல் என்பர். அதனை மழை முகிலுக்கு ஒப்பிட்டுக் காட்டுதல் பெருவழக்கு. மழைமருள் பஃறோல் - மலைபடு. 377 பஃறோல் போலச் சென்மழை - நற். 197 மழையென மருளும் பஃறோல் - புறம். 17 என்பவற்றைக் காண்க! பல்லடியாகக் கிளைத்த சொற்கள் இவைதாமோ? இன்னும் பலவாகலாம். அறிஞர்கள் எண்ணுவார்களாக. பல்குதல்: பல்குதல் = பலவாகப் பெருகுதல். ஒரு குடும்பத்து மக்கள் ஓரூராக விரிதலும் ஓராட்டுக் குட்டிகள் ஒரு மந்தையாக விரிதலும் பல்குதலாம். பலவகையாகப் பெருகுதல் பல்கிப் பெருகுதல் எனப்படும். பல்குதல், பலுகுதல் என்றும் வழங்கும். ஒரே ஓர் ஆடு வாங்கினோம்; நன்றாகப் பலுகி நாலாண்டில் நாற்பது உருப்படிக்கு மேல் ஆகிவிட்டது என்பதில் பலுகுதல் என்பது பெருகுதல் பொருளில் வருதல் அறியலாம். பெருகுதல் கூடுதல்தானே. வீடெல்லாம் எலி பலுகிவிட்டது; பூனை வளர்த்தால்தான் சரிப்படும் என்பதும் வழக்கே. ஆடு மாடுகள் கருக்கொள்ளல் பலப்படுதல் என்றும், குட்டி, கன்று போடுதல் பலுகுதல் என்றும், பூவில் பலன் பிடித்தல் என்றும் வழங்கும் வழக்குகள் ஒப்பிட்டறியத்தக்கன. பல்சந்த மாலை: பல் சந்தங்களால், பத்து முதல் நூறு பாடல்கள் வருவது பல்சந்த மாலையாகும். பல சந்தம் என்பராயினும் பத்துச் சந்தங்கள் வருதல் வழக்கு என்க. சந்தம் என்பது நான்கெழுத்து முதல் இருப்பத்தாறு எழுத்தளவும் ஒரோ அடியான் ஒத்து வருவது என்க. பத்துக் கொரு சந்தம் பாடிப்பா நூறாக வைத்தல்தான் பல்சந்த மாலையாம் - பிர. திர. பத்து முதலாகப் பப்பத் தீறா வைத்த வண்ண வகைபத் தாகப் பல்சந்த மாலை பகரப் படுமே - இலக். பாட். 74 பல்பெயர்: ஒன்றற்குரிய பல பெயர்களையும் முறையே கூறும் பாடல் தொகுதி பல்பெயர் எனப்படும். இதற்கு எடுத்துக்காட்டு, ஞான சம்பந்தர் பாடிய பல்பெயர்ப் பத்து ஆகும். பிரமபுரம், வேணுபுரம், பூம்புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிவபுரம், புறவம், சண்பை, சீர்காழி, கொச்சை, கழுமலம் என்னும் பெயர்கள் முறையே வரப்பாடப்பட்டுள்ள பதிகம் பல்பெயர்ப் பத்தாம். ஒரு பொருட் பன்மொழி வளர்ச்சி இப்பதிகப் பனுவல் (ஓரிடப்பன்மொழி) எனத்தகும். பல்லம்: பலவகைக் காய்களைப் போட்டு வைக்கத் தக்கதாகவும் அகன்றதாகவும் தடுப்புகள் அமைந்த கட்டுக்கொடிப் பின்னல் தட்டுகளைப் பல்லம் என்பது எழுமலை வட்டார வழக்காகும். ஐந்தறைப் பெட்டியைப் போலப் பலவகைக் காய்களைத் தனித்தனியே போட்டு வைக்க அமைந்தது இது. பல தட்டு (தடுப்பு) உடையது பல்லம் எனப்பட்டது. பல்லாங்குழி: பதினான்கு குழி > பன்னாங்குழி > பல்லாங்குழி. பதினான்கு குழிகளையுடைய கட்டையால் அல்லது மாழையால் (உலோகத்தால்) அமைந்த சதுரப் பலகை இது. திருமண வீடுகளில் பெரிதும் மகளிர் விளையாட்டாக - மகிழ்வான - பொழுதுபோக்காக அமைந்தது இவ்விளையாட்டு. முற்காலத்தில் செல்வர்கள் மன்னர்கள் விளையாட்டாகவும் இருந்துளது. வட்டாடுதலில் (சூதாடலில்) சூதும் வாதும் உண்டு. இதில் அவை இல்லை. பல்வேறு நாடுகளிலும் இவ்விளையாட்டு ஆடப்படுகிறது. குழிகளுக்கு வால்குழி, மூலைக்குழி, காசிக்குழி, பொய்க்குழி எனப்பெயர்கள் உண்டு. பல்லாடல்: பல்லாடல் = உண்ணல். விடிந்ததில் இருந்து இந்நேரம் வரை பல்லாடவே இல்லை எனின் உண்ணவில்லை என்பது பொருளாம். பல்லாடுதல் ஆகிய பல்லசைவு பல் மருத்துவரைத் தேடுதற் குரியது. உண்ணுதற்கு அசை போடுதல் என்பதொரு பெயர். அசைத்தல் என்பதும் உண்ணுதலே. பல்லை அசைக்க மெல்ல - வகையின்றி இருப்பது உண்ணா வறுமையை உரைப்பதாம். பல்லில் பச்சைத் தண்ணீர் படவில்லை என்பதும் அத்தகையதொரு வழக்கே. பல்லாண்டு: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு எனக் குறள் வெண் செந்துறையால் தொடங்கும் பல்லாண்டு அறுசீர் ஆசிரிய விருத்தம் பதினொன்றால் நிறைகின்றது. இது பெரியாழ்வார் பாடியது. மன்னரை வாழ்த்துதல் பழமையானது. புறப்பாடலில் புரவலரை வாழ்த்திக் கூறிய வாழ்த்துகள் மிகப்பல. அவை அகவல் நடையன. இறைவனை வாழ்த்துதல் உண்டு; அகவல், கலிவெண்பா, விருத்தம் இன்ன பல யாப்புகளில் பாடப்பட்டுள்ளன. எனினும், பல்லாண்டு என்னும் சொல்லாட்சியும், பாடல்தோறும் பல்லாண்டு கூறுதும் என்னும் முடிநிலையும் ஆழ்வார் அருளியவையே. வையக மன்னவன் மன்னுக பல்யாண் டெய்துக வென்ப தியாண்டுநிலை யாகும் என்பது பன்னிருபாட்டியல் (328). மன்னவன் மாலோடொப்பான் என்றமையால் மாலுக்குப் பல்லாண்டு பாடினார் போலும் ஆழ்வார். பல்லி: பல் + இ = பல்லி. தனிக்குறில் முன் வந்த மெய் அதற்கு முன் உயிர் எழுத்து வர இரண்டாகும் என்னும் விதிப்படி பல் + ல் + இ = பல்லி யாயது. பல்லியின் நீளத்தையும் பருமையையும் பார்த்து அவற்றுடன் பல்லின் பருமை நீளம் ஆகியவற்றையும் ஒப்பிட்டுக் கண்டால் எவ்வளவு உன்னிப்பாகப் பார்த்து இப்பெயரிட்டுள்ளனர் என்பது விளங்கும்; வியப்பும் தோன்றும். பல்லன் பல்லாயி என்னும் பட்டப் பெயர் வழக்கும் நோக்குக. பல்லுச்சோளம்: சோள வகையுள் ஒன்று வெள்ளைச் சோளம். அதனை முத்துச் சோளம் என்பது பொதுவழக்கு. அதன் வெண்ணிறம் குறித்துப் பல்லுச்சோளம் என வழங்குதல் கண்டமனூர் வட்டார வழக்காகும். பல்லைக் காட்டல்: பல்லைக் காட்டல் = கெஞ்சுதல், சிரித்தல். எண்ணான்கு முப்பத்திரண்டு பற்களையும் திறந்து காட்டி என ஒரு புலவர் பாடினார். பல்லைக் காட்டல் கெஞ்சுதல் பொருளில் வருவதாம். பல்லைக் காட்டுதல் வாயைத் திறந்து கொண்டிருத்தல், சிரித்தல் என்னும் பொருள்களையும் தரும். சொல்வதைக் கேளாமல் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கிறாயே எனக் கடிவது உண்டு. எவ்வளவு மறுத்தாலும், வெறுத்தாலும் தன் வேண்டு கையை விடாமல் சொல்லிக் கொண்டிருப்பதே கெஞ்சுதல் பொருள் தரும் பல்லைக் காட்டுதலாம். பல்லைப் பிடித்துப் பார்த்தல்: பல்லைப் பிடித்துப் பார்த்தல் = ஆராய்தல். மாடு பிடிப்பார் மாட்டின் அகவையைத் தெரிவதற்குப் பல்லைப் பிடித்துப் பார்ப்பர். அவ்வகையால் பல்லைப் பிடித்தல் ஆராய்தல் பொருள் பெற்றது. அதனால் ஒருவரைப் பற்றி ஒருவர் மற்றொருவரிடம் பலப்பலவற்றைக் கேட்டு அறிந்தாலும், நேரில் வினவியறியத் தலைப்பட்டாலும் என்னையே பல்லைப் பிடித்துப் பார்க்கிறான்? என இகழ்வது உண்டு. இலவசமாகக் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்த்தானாம் என வரும் பழமொழி, விலையில்லாப் பொருளை எத்தகையதாயினும் ஓரளவு பயன்படுமெனினும் கொள்க என்னும் பொருளில் வருவதாம். பல்லைப் பிடுங்கல்: பல்லைப் பிடுங்கல் = அடக்குதல். நச்சுப் பாம்புக்கு பல்லில் நஞ்சுண்டு. அதனால், பாம்பாட்டிகள் அப் பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டுப் பாம்பாட்டுதலுக்குப் பயன்படுத்துவர். நச்சுப்பல் ஒழிந்த பல்லால் கடித்தால், அதனால் உயிர்க்கேடு வாராது. ஆதலால் நச்சுப் பல்லைப் பிடுங்குதல் என்பது ஆற்றலைக் குறைத்து அடக்கு தலைக் குறிப்பதாயிற்று. அவன் பல்லைப் பிடுங்கியாயிற்று. இனி என்ன செய்வான் என்பது வழக்குரை. பல்லைப் பிடுங்கல் செல்வம் வலிமை முதலியவற்றை அழித்து அடக்குதலாம். வாயைப் பிடுங்கல் வேறு. அது மறைத்த சொல்லை வினவி வாங்குதலாம். பவளம்: பாளம் > பவளம். பள்ளமான குடுவை போன்ற பாறையில் உறையும் ஒரு நுண்ணுயிரி பவளமாகும். கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்து கெட்டிமிக்க பாறையாக்கி வாழ்கிறது. நுண்ணுயிரி வாழ்ந்து இறந்து போன பின்னர் சுண்ணாம்பு நிலை பெற்ற பாறையாகிறது. பாளம் பாளமாகப் பெயர்க்கத் தக்கதாகி விடுகின்றது. அதன்நிறம் சிவப்பாக மாறுதலும் பெறுகிறது. பவளமல்லிகை, பவளக்கொடி என்பவற்றால் அதன்நிறம் புலப்படும். மன்னார் வளைகுடாவில் பவளப்பாறை மிகுதி. ஒன்பான் மணிகளுள் பவளம் ஒன்றாம். இதனைப் பவழம் என்பதும் உண்டு. பவளப் பாறைகளை அடுத்தே வண்ண வண்ண மீன்கள் உருவாகி வாழ்கின்றன. கடற்பறவைகள் ஒட்டுண்ணிகள் பாலூட்டிகள் ஆகிய கடலுயிரிகள் பல பவளப் பாறை சார்ந்தே வாழ்கின்றன. பவளப் பாறையால் ஆழிப் பேரலையின் தாக்குதல் வலுவிழக்கின்றது. பவளப் பாறை மாந்தர் மூளை வடிவிலும், மான் கொம்பு வடிவிலும் பிற பிற அழகிய தோற்றங்களிலும் உருவாவதுண்டு. ஒரு பெரிய மரம் போலவும் வளர்ந்து பொலிவாக வளர்வதுண்டு. கடலில் கழிவு நீர்சேர்தலும் வெடிவைத்துத் தகர்த்தலும் அதன் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் பெருங்கேடாம். முகவை மண்டபப் பகுதியில் பவளப்பாறையைப் பார்க்கக் கண்ணாடிப் படகு உலா வாய்ப்பு உண்டு (சிவ.சு. செகசோதி. தினமணி - பவளப்பாறைகள் 03.04.2011). பழக்கம் சொல்லல்: எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்வதைப் பழக்கம் சொல்லல் என ஈழத் தமிழர் வழங்குகின்றனர். ஒரு பழக்கம் சொன்னால் நீ செய்வதில்லையா? எனக் கண்டிப்பாரும் உண்டு. நன்னெறி கூறல் பழக்கம் சொல்லல் ஆகின்றது. ஏனெனில் பழக்கம், வழக்கம், ஒழுக்கம் என்பவை வரிசைமுறை. பழக்க வழக்கம்: பழக்கம் = ஒருவர் பல்கால் ஒன்றைச் செய்து வருவது பழக்கம். வழக்கம் = பலரும் பல காலகடைப்பிடியாகக் கொண்டது வழக்கம். வழக்கம் என்பது மரபு ஆகும். அது வழி வழி வழங்கி வருவதாம். தனிப்படப் பழகி, கடைப்பிடியாக அமைந்துவிட்டது பழக்கமாம். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதொரு பாடல். பழக்க வழக்க வேறுபாட்டுணர்வு இன்மையால் பழக்கம் கொடிது பாறையிலும் கோழி கிண்டும் என்னும் பழமொழி வந்தது. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பது பழக்கமே. கோழி கிண்டல் வழக்கமே. பழமொழி: பழமொழி, இலக்கிய வகையாதல் பழமையானது. நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும் மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் ஏது நுதலிய முதுமொழி என்ப என்பது பழமொழி பற்றிய தொல்காப்பியச் செய்தி (1433). பழமொழி = முதுமொழி. பழமலை, முதுகுன்றம் என்னும் ஓரூர் இருபெயர் அறிக. முதுமொழி சீரிய அடிப்படையில் செவ்விது கிளப்பதாய் வருதலின் ஏது நுதலிய முதுமொழி என்று கூறினார் தொல்காப்பியர். பழமொழி நானூறு இவ்வகையில் எழுந்த தனிப்பெருந் தொகை நூல். பல்லாயிரம் என்னும் அளவில் திரட்டப்பட்ட பழமொழிகள் இருப்பினும், முழுதுறு திரட்டில் ஒரு சிறுபகுதியே அது எனலாம். பழமொழி மேல் வைப்பு: முதுமொழி என்பதும் பழமொழியே. திருக்குறளை மேல் வைப்பாகக் கொண்டதொரு நூல் முதுமொழி மேல் வைப்பாக விளங்குகின்றது. சிவஞான முனிவர் இயற்றிய அந்நூல் சோமேசர் முதுமொழி வெண்பா என்னும் பெயர்த்து. அவ்வாறே திருக்குறளை மேல் வைப்பாகக் கொண்டு பிறந்த நூல்கள் பல. அவற்றுள் திருக்குறள் குமரேச வெண்பா 1330 குறள்களையும் மேல் வைப்பாகக் கொண்ட 1330 நேரிசை வெண்பாக்களால் ஆயது. கவிராச பண்டித செகவீர பாண்டியனார் இயற்றியது அது. முதுமொழி தொல்காப்பியர் சுட்டும் ஒரு வகை நூற்குறிப்பு. முதுமொழிக் காஞ்சி கீழ்க்கணக்கில் ஒன்று. தண்டலையார் சதகம் முதுமொழி விளக்கமே. நாவரசர் பாடிய திருவாரூர்த் திருப்பதிகம் ஒன்று பழமொழிப் பெயராகவே விளங்குகின்றது. கனியிருப்பக் காய்கவர்ந்த கள்வனேனே முயல்விட்டுக் காக்கைப் பின் போனவாறே என்று தொடர்ந்து, கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்தவாறே எனப் பழமொழியுடன் நிறைகின்றது. பழமொழிமேல் வைத்தலைப் பிறரெல்லாம் முடிநிலையாகக் கொள்ள, வள்ளலாரோ முதல் நிலையை மேல்நிலையாகக் கொள்கிறார். வானை நோக்கி மண்வழி நடப்பவன் போல் வாயிலான் பெருவழக் குரைப்பது போல் வித்தை யின்றியே விளைத்திடு பவன்போல் நீர்சொரிந் தொளி விளக்கெரிப்பவன் போல் எனத் தொடங்கிப் பாடுகிறார். பழமொழி மேல் வைத்துப் பரிவு கூர்தல் என்பது இப்பதிகப் பெயர். பழம்: பழு + அம் = பழம். பழுத்தது பழம்; துளிராய்த், தளிராய்க், கொழுந்தாய் இலையாய் வளர்ந்து பழுத்ததும் முதிர்ந்ததும் அரும்பாய் - பூவாய் - பிஞ்சாய் - காயாய் முதிர்ந்து பழுத்ததும் பழுப்பு, பழம் எனப்படும். பழம் போல் முதிர்ந்தது பழமை. பல்கால் செய்து பழகியது பழக்கம். பழுத்த இலை; பழுத்த பழம் என்பவை மக்கள் வழக்கு. திருக்குறளில் பழமை என்பதோர் அதிகாரம். பரம்பரை பரம்பரையாய்த் தொடரும் நட்பு அது. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - ஔவை. தனிப். முதியரைப் பழுத்த பழம் என்பது உலக வழக்கு. பழனி: ஒரு செய்தி: பழனித் திருக்கோயில் மூலவரை வலுப்படுத்த அறிஞர் குழு அமைக்கப்படும். பூசகர்கள் சிற்பர்கள் கூடி, அடியார்கள் விரும்பிய வண்ணம் பல்வேறு முழுக்காட்டுகள் நடத்துதலால், பழனித் திருக்கோயில் மூலவர் திருவுருவப் படிமம் தேய்மானம் மிக்குளது. இச்சிதைவினின்று காத்தற்குக் குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். குழு அமைக்கப்பட்டது; மூலவர் படிமம் ஆயப்பட்டது. முழுக்காட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்யத் தக்க செயல் இது. படிவம் கெடாமல் சிதையாமல் போற்றிக் காத்தல், அரசுக்கும் அறங்காவலர்க்கும் பூசகர்க்கும் பிறர்க்கும் கடமையே! இறையடியார்கள் அக்கடைப்பிடியைப் பேணி நடத்தல் முறைமையே! இவ்வாறு, மொழிச்சிதைவை - அழிபாட்டை - கேட்டைத் தடுக்க அறைகூவல் உண்டா? நடைமுறைக் கட்டுப்பாடு உண்டா? இல்லை! இல்லை! இல்லவே இல்லையே! ஏன், ஓரப்பார்வையும், ஒட்டுப் பார்வையும், ஒதுக்குப் பார்வையும் இருக்கலாமா? பழனியைப் பழனி என்பதா? பழநி என்பதா? பழனியைப் பழநி ஆக்கல் மொழிக்கேடு என்று அறிந்தால் - அதைத் திருத்தி அமைக்க அரசு முன்வர வேண்டுமே! அறிஞர்கள் முன்வர வேண்டுமே! அறங்காவலர்கள் முன்வர வேண்டுமே! அடியார்களும், வலியுறுத்தவும் கைக்கொள்ளவும் வேண்டுமே! மொழியா? எக்கேடும் கெடட்டும் என்று விட்டுவிட்டால், இவர்கள் செயல் ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணமும் வைப்பது அன்றி வேறன்றே! செய்தக்க அல்ல செயக்கெடும் என்பதை உணர்பவர், செய்தக்க செய்யாமையானும் கெடும் என்பதையும் உணர வேண்டும் அல்லவோ! பழனி முன்னாள் ஊரா? பின்னாள் ஊரா? மலையூர் என்றால் அதன் பழமையைச் சுட்ட வேண்டியது இல்லையே! சங்கப் புலவர்கள் பாடு புகழுக்கு இடனாகிய ஊர் பழனி. சங்க நாள் வேந்தர் ஆட்சியில் தழைத்தது அது. அகப்பாடல்கள் இரண்டில் (1, 61) அகப்பட்டுக் கிடக்கிறது பழனி. எப்படி? நெடுவேள் ஆவி, அறுகோட்டி யானைப் பொதினி நெடுவேள் ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி இப்பொதினியே பழனியாயது. பொதினி, யாருக்குரியதாகப் பழநாளில் இருந்தது? ஆவியர்க்கு இருந்ததாகச் சொல்கின்றனவே சுட்டப்பட்ட பாடல்கள் இரண்டும். பண்டைத் தமிழகத்தில் குறுநில மன்னர்களாக விளங்கிப் பெரும்புகழ் கொண்ட குடிகளில் ஒன்று ஆவியர் குடி. அக்குடி முதல்வன், நெடுவேள் ஆவி; அவன் முதல்வனாக, அவன் வழி வந்தோர் ஆட்சி புரிந்தது பொதினி; பொதினியை ஆவியர் குடியினர் ஆளுங்கால் புகழொடும் விளங்கியவன், பேகன் என்பான். உடுத்தாததும், போர்த்தாததும் ஆகிய மயிலுக்குப் போர்வை வழங்கிப் புகழ் கொண்டானே பேகன்; அவனைப் பற்றிப் புறப்பட்ட புறப்பாடல்கள் ஏழு (புறம் 141 - 147) அவற்றில் அவன் ஆவியர்கோ எனப்படுவான். அவன் பெயரோ வையாவிக் கோப்பெரும் பேகன் எனப்படும். இன்றும் அவன் வையாவி, பழனிக்கு அருகே உண்டு. அதன் இக்காலப் பெயரோ வையாபுரி என்பது. ஆவியர் ஆட்சி செய்த பொதினிக்கு ஆவிநன்குடி என்பதொரு பெயர். திருவொடு சேர்ந்து திருவாவிநன்குடி என்றாயிற்று. திருவாவி நன்குடியைச் சொட்டச் சொட்டப் பாடுகின்றார் அருணகிரியார். அவர் பாடல்களில் பழநி தலை காட்டுகிறது. பதிப்பார், பதிப்புப் பாங்கு ஆகலாம். எப்படி? மாம்பழக்கவிச் சிங்க நாவலர் பாடல் தொகுப்பைத் தொகுத்து வெளியிட்டவர் பழநி சாமியார்; அவர் பதிப்பில் பழனியைப் பார்க்க இயலுமா? என்னதான் பழநி இருப்பினும், பழனாபுரியை மாற்ற முடியவில்லை! அஃது உண்மையை நிலைப்படுத்தி விடுகின்றது. வண்ணச் சரபம் தண்டபாணி அடிகள் பாடினார், பழனித் திருவாயிரம் அதில் எங்கும் பழனி! எல்லாம் பழனி! பழநி தலைகாட்டவில்லை! பாடினோரும் பதிப்பாளரும் ஒரு குடியர். ஒருநிலையர்! அதனால் பழனியே கமழ்கிறது. பழநீ என்பது பழநி ஆய கதை இருக்கட்டும். அப்படி ஒரு சொற்புணர்ச்சி தமிழில் உண்டா? அப்படி ஒரு சொல்லிணைப்பைக் காட்டி ஊர்ப்பெயரை நாட்ட இயலுமா? கழனி, துழனி உண்டு. அழனம், பழனம் உண்டு; அழன், புழன் உண்டு; எழுனி இழுனி உண்டு; தொழுனையும் உண்டு. ஆனால் பழநிப் புணர்ச்சி ஒன்றும் இல்லையாம். சங்க நாள் பொதினியைக் கற்பார் பழநியைப் பார்க்கும் போது அதன் பழமைச் சீர்மையையும் வரலாற்று மாண்பையும் உணர்வார்! அதனைப் பெயர் மாற்றத்தால் மறைக்க வேண்டுவது என்ன? நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்றைச் சிலம்பில் படிப்பார், அழகர் மலையில் சிலம்பாறு எனப் பெயரிருக்கக் கண்டால் வரலாறு உணர்ந்து மகிழ்வர் அன்றோ! அதனை நூபுர கங்கை என மாற்றி அமைத்த ஏமாற்று, ஆற்றுப் பெயருக்கு மட்டுமா ஏமாற்று? தமிழர் வரலாற்றுக்கே ஏமாற்று இல்லையா? வன்கொலையினும் கொலை, வரலாற்றுக் கொலையன்றோ? பழனித் திருவடிவம் தேய்மானம் இன்றி இருக்க வேண்டும் என எவ்வளவு தேட்டம் உண்டோ அவ்வளவு தேட்டம், அதன் திருப்பெயர் மாறாதிருக்கவும் வேண்டும் அன்றோ? பொதினி என மாற்றாவிட்டாலும் பழனி என மாறிய அளவிலாவது பேண வேண்டுமே! திருப்படிவத்தை மாற்றாமல், தேய்மான அளவிலா வது வைத்துப் போற்ற வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லமோ! பழி: பழித்து - இகழ்ந்து - உரைப்பதற்கு இடமான செயல். பழியொடு படராப் பஞ்சவ வாழி - சிலப். 20:33 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் - திருக். 44 பழி பாவம்: பழி = பொருந்தாச் செயல் செய்தால் இம்மையில் உண்டாகும் பழிப்பு. பாவம் = தீவினை செய்தலால் மறுமையில் உண்டாகும் பழிப்பு. பழி = வசைச்சொல்; பழியஞ்சித் தேடிப் பகுத்துண்ண வேண்டும் என்பார் வள்ளுவர். பழியோரிடம் பாவமோரிடம் என்பதில் பழி என்பது பழிக்கு ஆளாம் குற்றத்தைக் குறித்தது. பாவம் = அகன்றது; அகன்று செல்வது என்னும் பொருளது. ஒன்றைத் தொட்டு ஒன்றாக விரிந்து கொண்டே வரும் தீவினைகளை இயற்றுவது பாவமாகும். முன்னதிற் பின்னது கொடுமை மிக்கது என்பது கருதுக. பழுது: பழுது என்பது பயன்படாதது, கெட்டுப் போனது என்பது பொதுவழக்கு. பழுது பயமின்றே என்பது தொல்காப்பியம் (807). இனி வைக்கோல்புரியைப் பழுது என்பது முகவை, மதுரை மாவட்ட வழக்காகும். பழு என்பது சுமை. அதனைக் கட்ட உதவுவது பழுது ஆயது. பழுதை என்பதும் இது. பழுத்துப் போதல்: பழுத்துப் போதல் = தோல்வி, உதவாமை. இலை பழுத்துப் போனால் கட்டுவிட்டு உதிர்ந்து விடும். ஆதலால், பழுத்தல் என்பது உதிர்ந்து விழுதல் அல்லது உதிர் தலைக் குறித்தது. உன் ஆட்டம் பழுத்துப் போயிற்று என்று விளையாட்டில் சொல்வது, தோற்றுப் போயிற்று என்னும் பொருளதாம். சில காய்கள் பழுத்தால் பயன்தராது. பாகற்காய் பழுத்தாலும் கத்தரிக்காய் பழுத்தாலும் பயன்படாது. அதிலும் பிஞ்சிலே பாகல் பழுத்தால் வெம்பி உதிர்ந்து விடும். அந்நிலையில் பழுத்தல் என்பது பயனின்மைப் பொருளதாம். பிஞ்சிலே பழுத்தவன் எனப் பழித்தலும் வழக்கில் உள்ளதே. பழுப்பு: சோளத்தட்டை, கரும்புத் தட்டை உள்ளீட்டைப் பழுப்பு என்பது பொதுவழக்கு. மகளிர் காது குத்திய நாளில் காதுத் துளையை அகலப்படுத்தப் பழுப்பு வைத்தல் வழக்கம். இங்கே பழுப்பு என்பது சீழ் என்னும் பொருளில் வட்டார வழக்காக உள்ளது. பழுத்து வழியும் சீழைப் பழுப்பு என்றனர் போலும். இது விளவங்கோடு வட்டார வழக்கு. பழையது: பழையது = பழஞ்சோறு. பழையது பழைமையானது எனப் பொதுப்பொருள் தருவது. ஆனால், பழையது உண்டேன் என்னும் போது ஆறிப்போய் நீர்விட்டு வைத்த உணவை உண்டேன் என்னும் பொருளதாம். பழையதில் வெந்நீர்ப் பழையது, வடிநீர்ப் பழையது, தண்ணீர்ப் பழையது என மூவகை. எனினும் அவையெல்லாம் மறுநாள் அளவிலேயே பழையதாக முடிகின்றது. இறைவியைப் பழையோள் என்பதும், பாண்டியரைப் பழையர் என்பதும், வழிவழி நட்பைப் பழைமை என்பதும், வழிவழி வீரக் குடியைப் பழங்குடி, முதுகுடி என்பதும் காலப் பழைமையில் சால முந்தியவாம். பளிச்சிடல்: பளிச்சிடல் = புகழ்பெறல். பளபளப்பு, பளிச்சு என்பன ஒளிப்பொருள. பளிச்சிடும் ஒன்று கவர்ச்சி மிக்கதாகவும், மதிக்கத் தக்கதாகவும் அமைகின்றது. அவ்வகையால் பளிச்சிடலுக்குப் புகழ் என்னும் பொருள் உண்டாயிற்று. அவர்கள் அப்பா பெயரைச் சொன்னால் பளிச்சென்று யாருக்கும் தெரியும் என்பதில் பளிச்சிற்குப் புகழ் பொருள் உண்மை விளங்கும். இனிப் பளிச்சிடல் இல்லாப் புகழை இருப்பதாகக் காட்டுவதாக அல்லது போலிப் புகழாக அமைவதும் உண்டு. அது வெளிச்சம் போடல் எனப்படும். வெளிச்சம் காட்டுவதில் பெரிய ஆள் அவன் என்பது அவ் வெளிச்சப் போலியை விளக்கும். பள்ளக்கல்: ஒரு காலத்தில் ஏதாவது ஒரு தவசத்தை இடிக்கப் பள்ளமான கல்லைப் பயன்படுத்தினர். அப் பழைய வரலாற்றை விளக்குவது போல முதுகுளத்தூர் வட்டாரத்தார் பள்ளக்கல் என இடிக்கப் பயன்படுத்தும் உரலைக் குறிப்பிடுகின்றனர். பள்ளம் + கல் = பள்ளக்கல். பள்ளம் நொடி: பள்ளம் = ஆழமும் அகலமுமாக அமைந்த குழி. நொடி = மேடும் தணிவுமாக அமைந்த வழி. பள்ளம் நொடி பார்த்து வண்டியை நடத்துமாறு சொல்வது வழக்கு. பள்ளத்தில் வண்டி இறங்கினால், ஏறுதற்கு இடர்; நொடியில் ஓட்டினால் தூக்கித் தூக்கி அடித்துத் தொல்லையுண்டாம். நொடிக்கு வறுமைப் பொருள் உண்மை நோய்நொடி என்பதில் காண்க. பள்ளம் = வயல்நிலம்; வயல் நிலத்து அல்லது மருத நிலத்து வாழ்வு பற்றி எழுந்த நூல் பள்ளு நூல்; பின்னே பள்ளு, பாடல் என்னும் பொருளில் வந்தது. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்பது அது. பள்ளயம்: வைக்கோலைப் பரப்பி, அதன்மேல் துணியை விரித்து அகலமாகப் படையல் செய்வதைப் பள்ளயம் என்பது பேராவூரணி வட்டார வழக்காகும். இவ் வழக்கம் கொங்கு நாட்டிலும் உள்ளது. பள்ளம் தோண்டிப் பரப்பி வைத்த வழக்கத்தில் இருந்து இப் பெயரீடு ஏற்பட்டிருக்கும். பள்ளி எழுச்சி: பள்ளி எழுச்சி:1 உறங்குபவரை எழுப்புவதற்குப் பாடும் பாடல் பள்ளி யெழுச்சி எனப்படும். உறங்குவதற்கு அல்லது உறக்காட்டுவதற்கு ஒரு பாட்டு என்றால் எழுப்புவதற்கும் ஒரு பாட்டு வேண்டுமே. உறங்குவதற்குக் கண்படை நிலை, உறக்காட்டு, தாலாட்டு என்றால், எழுப்புவதற்குத் துயிலெடை நிலை, துயில் நீக்கு, பள்ளி எழுச்சி என்பவை. மற்றை மற்றைப் பெருநகர்களெல்லாம் கோழியின் எழுமாம். ஆனால், மதுரை மாநகர் கோழியின் எழாதாம். நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப ஏம இன்றுயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாதெம் பேரூர் துயிலே என்பது பரிபாடல் திரட்டு. சமணத்துறவோர் குகைகளில் தங்கியிருந்தனர். இருந்த இடத்தே தங்கி, உண்டு, உறங்கி, கற்று, கற்பித்து உறைந்தனர். அவ்விடம் பள்ளி யாயிற்று. ஒவ்வொருவர் படுப்பதற்கும் பாறையில் பள்ளம் தோண்டியும் தலைக்கு மேடு வைத்தும் அமைத்த அவ்விடம் பள்ளியாகி, உறைவிடத்திற்கும், வழி பாட்டிடத்திற்கும், ஊணிடத்திற்கும், உறங்கிடத்திற்கும் கற்கும் இடத்திற்கும், காலந்தோறும் வளர்ந்தது. சமண்பள்ளி, புத்தப்பள்ளி, பள்ளிவாசல், மடைப்பள்ளி, பள்ளியறை, பள்ளிக் கூடம் என்றுள்ள வழக்குகளைக் காண்க. பள்ளியெழுச்சி வேந்தர்க்கு இருந்தது. அது துயிலெடை நிலை என்னும் புறத்துறையாயிற்று. பள்ளியெழுச்சி இறைநலம் பெற்றதால் திருப்பள்ளி எழுச்சிகள் கிளர்ந்தன. தொண்டரடிப் பொடியாழ்வார் திருப்பள்ளி எழுச்சி பாடுகின்றார் திருமாலுக்கு: கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கணவிருள் அகன்றது காலையம் பொழுதாய்! மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந் தீண்டி எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மாபள்ளி எழுந்தரு ளாயே என்பது பள்ளியெழுச்சிப் பத்தில் முதலொன்று. பள்ளியெழுச்சி பாடியதால் தொண்டரடிப்பொடியின் மண்டங்குடியே மாப்புகழ் எய்திற்று. எப்படி? தொண்டரடிப் பொடி நகராயிற்றாம் மண்டங்குடி. மண்டங் குடியென்பர் மாமறையோர் மன்னியசீர் தொண்ட ரடிப்பொடி தொன்னகரம் - வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப் பள்ளி உணர்த்தும் பிரானுதித்த ஊர் இது திருவரங்கப் பெருமாளரையர் பாடிய தனியன். பள்ளியெழுச்சி எண்சீர் விருத்தத்தால் இயல்வது என இப்பாடலால் அறியலாம். பாரதியார் பாரத தேவிக்குப் பள்ளி யெழுச்சி பாடினார். பாரத மாதா திருப்பள்ளியெழுச்சி என்பது இதன் பெயர். நூன்முறை பழையது! பொருண் மரபு புதுவது! பாடல் எண்ணிக்கை பதிகத்திற் பாதி. பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால் புன்மை இருட்கணம் போயின யாவும் எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி எழுந்து விளங்கிய தறிவெனும் இரவி தொழுதுனை வாழ்த்தி வணங்குதற் கிங்குன் தொண்டர்பல் லாயிரவர் சூழ்ந்துநிற் கின்றோம் விழிதுயில் கின்றனை இன்னுமெந் தாயே! வியப்பிதுகாண்! பள்ளி எழுந்தரு ளாயே என்பது முதற்பாட்டு. பள்ளி எழுச்சி:2 பள்ளி எழுச்சி = வசை. திருக்கோயில்களில் திருப்பள்ளி எழுச்சி பாடுதல் உண்டு. அஃது இறைவர் புகழ் பாடுவது. அரசர்தம் அரண்மனைகளில் பள்ளி எழுச்சி பாடும் வழக்குப் பண்டு இருந்தது. அவ்வழக்கில் இருந்து இறைவர்க்கு ஏற்படுவதாயிற்று. கோயில், அரண்மனை, இறை என்பவை பொதுமை சுட்டுவன அல்லவோ! இசைப்பொருள் தரும் பள்ளி எழுச்சி வசைப்பொருளில் வழங்குவதும் வழக்காம். காலையில் உறக்கம் நீங்காமல் படுத்திருப்பவரைத் திட்டி எழுப்புவதும் வழக்கம். திட்டலோடு விடாமல் தண்ணீர் தெளித்து எழுப்ப நேர்தலும் உண்டு. திட்டி எழுப்புவதைப் பள்ளி எழுச்சி பாடுவதாகக் கூறுவர். விடிந்தால் பள்ளி எழுச்சி பாடாமல் இருக்க மாட்டீர்களே என்பது வைகறை எழாதான் வைவுரை. பள்ளு: கடவுள் வணக்கம், முறையே மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன் வரவோடு அவன் பெருமை பேசல், முறையே அவர் வரலாறு, நாட்டுவளம், குயிற்கூக் கேட்டல், மழை வேண்டிக் கடவுட் பரசல், மழைக்குறி ஓர்தல், ஆற்றின் வரவு, அதன் சிறப்புக் காண்டல், இவற்றிற்கு இடையிடை அகப்பொருள் துறையும் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு, பள்ளியர்கள் இருவர் முறையீடு, இளையாளை அவன் உரப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செயல் வினவல், அவன் அது கூறல், ஆயரை வருவித்தல், அவர் வரல், அவர் பெருமை கூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும்பன் கிடையில் இருந்தான் போல் வரல், அவனைத் தொழுவில் மாட்டல், அவன் புலம்பல், மூத்த பள்ளி அடிசில் கொண்டு வரல், அவன் அவளோடு கூறல், அவன் அவளை மன்னிப்புக் கேட்க வேண்டல், அவள் மறுத்தல், அவன் சூளுறல், அவள் அவனை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல், விழி முதலிய வளங்கூறல், உழவர் உழல்காளை வெருளல், அது பள்ளத்துப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், அவன் எழுந்து வித்தல், அதைப் பண்ணைத் தலைவர்க்கு அறிவித்தல், நாற்றுநடல், விளைந்தபின் செப்பம் செய்தல், நெல் அளத்தல், மூத்த பள்ளி முறையீடு, பள்ளிகளுள் ஒருவர்க்கொருவர் ஏசல் என இவ்வுறுப்புக்களுறப் பாட்டுடைத் தலைவன் பெருமை ஆங்காங்குத் தோன்றச் சிந்தும் விருத்தமும் விரவி வரப் பாடுவது உழத்திப்பாட்டு எனப்பெறுவது பள்ளுப் பாட்டாகும். பள்ளு இலக்கியத்திற்குரிய இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் விரித்தில. ஆயின், நவநீதப்பாட்டியலில் காணப்படும் மிகைச் செய்யுள்கள் பள்ளு நூலின் இலக்கணத்தைத் தெரிவிக்கின்றன. அவை: கடவுள் வணக்கம் உழத்தியருங் குடும்பன் வரலொன் றடைமுறை நாடுவளங் குயில்கூ மழைக்காங் குறியோர்ப் படுமாறு வரற் சிறப்புட்டுறைத் தலைவன் வரற்கூப் பிடுமவ னன்னாள் உரப்பல் வெளியாம் பண்ணச் செயலே வினாச்சொலல் ஆயர் வருவிக்க வரல்தகை முதலாள் தனாதுரைக் கேட்டுக் குடும்பன் கிடையிருந் தானெனவந் தனாற்றொழு மாட்டப்புலம்பல் முற்பள்ளி கூழ் கொண்டுவரல் சொனானவள் மன்னித்தற் கேட்க வேண்டற்கு மறுத்திடலே சூளவனை மீட்பவனைப் பணிவித் துழவருழக் காளை வெருட்பாளை பாயப் புலம்பல் எழுந்துவித்தல் ஆளத் தலைவற் குணர்த்தல் நடல்விளை செப்பம் செய்நெல் நீள அளத்தல் முதற்பள்ளி கூவேசல் மூட்டவையே இவ்வமயங்களிற் பாட்டுடைத் தலைவன் பெருமை யாங்காங் கொவ்விய சிந்து விருத்தம் விரவிவரத் தொடர்பு செவ்விதிற் பாடுமது உழத்திப் பாட்டு பள்ளுமென்பர் நவ்வி எனக்கண் மடவீர் பிறர்தம் நாட்டுவரே இப்பாடல்களின் அமைப்பும் ஓட்டமும், பள்ளு நூல்களின் செய்திகளை வாங்கிக் கொண்டு முதலுழவு செய்வான் முறையெனத் தெளிவாக்குதல் வெளிப்படையாம். திருவாரூர்ப் பள்ளே முதற்பள்ளு என்பர். முக்கூடற் பள்ளின் சுவை நாடறிந்தது. பள்ளு நூலின் இசைவளம் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே எனவரும் நாட்டியற் புலவர் பாரதியார் பாட்டால், பள்ளு என்பதற்குப் பாட்டு என்னும் பொருள் உண்டாதல் அறிந்த செய்தி. இது பள்ளின் சிறப்பெனல் வெளிப்படை. பள்ளை: விலாப்புறத்தின் உட்பாகம் கமுக்கூடு என வழங்கப்படும். அது அதன் உட்குழிவு நோக்கிப் பள்ளை என வழங்கப்படுதல் குமரி மாவட்ட வில்லுக்குழி வட்டார வழக்காகும். அது விலாப்புறம் என வழங்கப்படுதல் அகத்தீசுவர வட்டார வழக்காகும். பள்ளை = பள்ளம். ஆட்டுவகையுள் ஒன்று பள்ளையாடு. பறந்தலைச் சிறப்பு: பேய்கள் போர்க்களத்தில் ஆக்கின கூழை உண்டு களித்துக் கைகோத்துக் குரவைக் கூத்து ஆடுவது பறந்தலைச் சிறப்புப் பாட்டு ஆகும். பறந்தலை = போர்க்களம். (நவநீத. 61, உரை) பறவைக்கப்பல்: ஒரு காலத்தில் வானக்கப்பல் என வழங்கப்பட்டது, பின்னர் வான ஊர்தி ஆயது. வான ஊர்தி என்பது புறநானூற்றுச் சொல். இதனைச் செட்டிநாட்டு வட்டாரத்தினர் பறவைக்கப்பல் என்கின்றனர். பறி: பறி:1 பறி = பொன், மீன் தெல்லி. பொற்கொல்லர்கள் பொன்னைப் பறி என்பர் என்பது இலக்கண உரைகளில் வரும் செய்தி. தொழில் வழி வழக்கு அது. திருடர் பறிப்பதற்குத் தங்கம் இடமாக இருத்தலின் அப்பெயர் பெற்றதாகலாம். மகளிர் மனத்தைப் பறிப்பது என்பது உண்மையாயினும், உயிரே பறி போதற்கும் இடமாம் திருட்டுக்குக் காரணமாக இருப்பதே பெரிதும் பொருந்தியதாம். மீன் பிடிப்பதற்காகப் பறி போடுவது உண்டு. மீன் நீரோட்டத்திற்கு எதிரோட்டம் ஓடுவது. ஆகலின் மீன் மேன்மேலும் துள்ளிவிழ அமைக்கப்படுவதும் பறியாம். மீன்பறி போடல் என்பது வழக்கு. மீனின் உயிரைப் பறிக்க இடமாவது மீன்பறிதானே. பறி கிணற்றில் நீரை அள்ளிக் கொண்டுவரும் தோற்பை பறி எனப்படல் திருச்சிராப்பள்ளி வட்டார வழக்கு. பறி:2 பறி = ஏவல். பறைநிலை: அரசர் இனியவையெல்லாம் எய்துமாறு தெய்வம் காக்க வேண்டித் திருவிழாவின் பொழுதிலும், முடிசூட்டு விழாவின் பொழுதிலும் வேண்டிக் கொண்டு நாடும் நகரமும் நலம்பல எய்துமாறு வாழ்த்துரைத்து வஞ்சிச் சீர் பயிலப்பாடுவது பறைநிலை என்னும் பெயர் பெறும். காவலர் இனிதுறத் தேவர்காத் தளிக்கெனக் கடவுளர் விழவினும் கதிர்முடி விழவினும் நாடும் நகரமும் நலம்பெற இயம்பி வருநெறி வஞ்சி வழங்கப் பற்றிய மொழிவரத் தொடுப்பது பறைநிலை யாகும்- பன்னிரு. 329 பறையறைதல்: பறையறைதல் = விளம்பரமாகச் சொல்லல். அவனிடம் ஒன்றைச் சொன்னால் போதும்; பறையறைந்து விடுவான் என்பது. பலருக்கும் தெரியப்படுத்தும் விளம்பரப் பொருளாகப் பறையறைதலைக் குறிக்கிறதாம். தமுக்கடித்தல் என்பதும் இத்தகையதே. முந்தித் தருவதாகப் பறையறையும் செய்தித்தாள்களினும் முந்திப் பரப்பவல்ல திருவாயர்கள் பலர். அவர் பழங்காலந் தொட்டே இருந்து வருகின்றனர். அவர்கள் பறையறைபவர் போலக் கருதப்பட்டனர் என்பது அறைபறை அன்னர் கயவர் எனவரும் குறளால் (1076) வெளியாம். பற்ற வைத்தல்: பற்ற வைத்தல் = இல்லாததும் பொல்லாததும் சொல்லல். அடுப்பைப் பற்ற வைத்தல் பழமையது. சுருட்டு, வெண்சுருட்டு, இலைச்சுருள் (பீடி) முதலியவற்றைப் பற்ற வைப்பது புதுநாகரிகப்பாடு. தொழில் துறையில் பற்ற வைப்பது நாடறிந்த செய்தி. ஒன்றை ஒன்றில் பற்றுமாறு வைப்பதே பற்ற வைப்பு. பற்ற வைத்தது என்பது தெரியா வண்ணம் செய்யவல்ல தேர்ச்சி மிக்கவர்களும் உளர். பற்ற வைக்கும் அதனைப் போல ஒருவரைப் பற்றிய செய்தியை மற்றொருவரிடம் சென்று பற்ற வைப்பாரும் உளர். அவர் தம் செயலும் பற்ற வைத்தல் எனவே வழங்கும். பற்ற வைத்தது என்பது தெரிந்து கொள்ள முடியாமலே பற்ற வைப்பதில் தேர்ந்த ஆள் எனப் பாராட்டுப் பெற விரும்புவாரும் உளர். ஆனால் அவருக்கும் தேர்ந்த ஒருவர் அவரைப் பற்ற வைக்கும் போதுதான் அவர்தாம் செய்த செயற்கொடுமை உணர்வாரோ? என்னவோ? பற்று: பல் + து = பற்று. பல்லால் இறுக்கிப் பிடித்தல் பற்றுதல் எனப்பட்டது. x.neh.: கொல் + து = கொற்று. புல் + து = புற்று. பற்பிடிப்பாலும், பற்கடிப்பாலும் அமைந்த பற்று என்னும் சொல், ஒரு பெரிய தாய்; அவள் பெற்ற பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் மிகப்பலர். அவள் இன்னும் பெற்றுப் பெருவாழ்வு கொள்ளும் பேரரசியாகவே விளங்கி வருகிறாள்; மேலும், விளங்கியும் வருவாள். உடும்பைப் பிடித்து அதன் வாலை வாய்க்குள் தந்து விட்டால் விடாமல் பற்றிக் கொண்டு ஒரு வளையம் போல் கிடக்கும். அப்படிக் கிடக்கும் பல உடும்புகளை ஒரு கோலில் போட்டுத் தூக்கிக் கொண்டு வருதல் வேட்டைக்காரர் வழக்கம். தன் சிறு வடிவுக்கு ஒவ்வாத பெரும் பல்லுடைமையால் பெயர் பெற்றது பல்லி; பல் நீண்டவரைப் பல்லன், பல்லாயி என வழங்குவது இல்லையா? 14.7.78-இல் இரவு 7.55-க்கு இரண்டு பல்லிகள் போரிடத் தொடங்கின. அவற்றின் போர் மூன்றாம் பல்லி ஒன்றன் முனைந்த தாக்குதலால் 9.25-க்கு வெற்றி தோல்வியின்றி முடிந்தது! பல்லியின் பற்போர், எருதுப்போர், கடாப்போர், சேவற்போர் ஆகியவற்றுக்குச் சற்றும் இளைத்ததன்று. புலி முதலிய கொடுவிலங்குகள் பற்றுதலும் அலைத்தலும் தொலைத்தலும் செய்ய வாய்த்த கருவி பல் தானே! பல் இல்லையேல் பற்றுதல் ஏது? பற்றின் மூலம் பல் என்பதை இவையெலாம் விளக்கும்! அம்மட்டோ? நாயும் பூனையும் குட்டிகளை வாயால் பற்றிக் கொண்டு செல்லுதலைப் பாரார் எவர்? மாந்தரும் பல்லால் பற்றுதலும் இழுத்தலும் கடித்தலும் பிடுங்குதலும் விலங்கு போலக் கடித்துக் குதறுதலும் இல்லையா? பல்லால் பிடித்தலே பற்றாய் இருந்து பின்னே இறுக்கிப் பிடிப்பவை எல்லாம் பற்றாய்ப் பொருள் விரிவாயிற்று. அடு கலத்தில் (சமையற் கலத்தில்) ஒட்டிக் கிடக்கும் பிடிப்புக்கும் பற்று என்பது பெயர். அது வெப்பத்தால் வண்ணம் மாறிக் கருநிறமாய் இருத்தலால் கரிப்பற்று என்றும் கருப்பற்று என்றும் (பற்று, பத்தாக) வழங்குகின்றது. வளமிக்க வாழ்வினர் பற்றுத் தேய்ப்புக்கென வேலையாள் வைத்திருத்தல் நடைமுறை. பற்று, கையால் தேய்த்து அகற்ற இயலாமல் இறுகிக் கிடத்தலால் அதனைச் சுரண்டி எடுக்கத் தகடும் சிப்பியும் உண்டு. அத்தகடும் சிப்பியும் பற்றகற்றி என வழங்கப்படும். சுரண்டி என்பதும் அதற்கொரு பெயர் அதனின் வேறுபடுத்தற்காகக் களைவெட்டும் கருவியைக் களைசுரண்டி என்பர். பற்றிக் கிடக்கும் களையைச் சுரண்டி எடுப்பதுதானே களை சுரண்டி. பற்றை என்பது களைகளுக்கும் சிறுதூறுகளுக்கும் பெயர் என்பது எண்ணத்தக்கது. நீர் கட்டிக் கிடத்தலால் உண்டாகும் வழுக்கல் பாசிக்குப் பற்று என்னும் பெயருண்மையும் கருதலாம். தலைவலி பல்வலி முதலிய வலிகளுக்கும், அடிபட்ட வீக்கம், அதைப்பு முதலியவற்றுக்கும் பற்றுப் போடுதல் பண்டுவமுறை. பச்சிலை முதலியவற்றை அரைத்து அப்பி வைத்தலைப் பற்றுப் போடுதல் என்பது சரிதானே! பாய்ச்சல் காட்டுறியே என்ன? பற்றுப் போடணுமா? என்பது வழங்குமொழி. குளம், கிணறு, கால்வாய், ஆறு முதலிய நீர் நிலைகளை அடுத்திருக்கும் நிலம் வளமிக்கது; வாளிப்பாகப் பயிரை வளர்த்து வளம் செய்வது. இவற்றைப் பற்றிய நிலம் பற்று என வழங்கப் பெறும். முறையே குளத்துப்பற்று, கிணற்றுப்பற்று, கால்வாய்ப்பற்று, ஆற்றுப்பற்று என்று சொல்லப்படும். பற்று என்பதே நன்செய் நீரருகே சேர்ந்த நிலம் என்பர். நிலத்துக்கு அணியென்ப நெல்லும் கரும்பும் என்பர். நிலம் என்பதே நன்செய்யைக் குறிக்கும் என்பதை நன்செய் புன்செய் என்பவற்றைச் சுட்டும் நிலபுலம் என்னும் இணைமொழியால் இனிதுணரலாம். நன்செய் நிலத்திற்கு அல்லது மருத நிலத்திற்கு உரிய பற்று என்னும் பெயர் அந்நிலத்து அமைந்த ஊர்க்கும் பெயராக வழங்கலாயிற்று. பற்று என்பது வீடுகள் நெருங்க நெருங்க அமைந்த மருத நிலச் சிற்றூராம். பற்று என்பது பத்து என்றும் பட்டு என்றும் பின்னே திரிந்து வழங்கலாயிற்று. மதுரையை அடுத்த அச்சன் பற்று அச்சம்பத்தாகவும், பிராட்டி பற்று விராட்டிப் பத்தாகவும் வழங்குதல் பற்று பத்து ஆயதற்குச் சான்று. செங்கழுநீர்ப் பற்று செங்கழு நீர்ப்பட்டாய் மாறிச் செங்கற்பட்டாய்ச் சிதைந்தது. பட்டு ஆயதற்குச் சான்று. சித்தூர் நாட்டுப் பூத்தலைப் பற்றும், ஆர்க்காட்டுத் தெள்ளாற்றுப் பற்றும் முறையே பூத்தலப்பட்டாகவும், தெள்ளாரப் பட்டாகவும் மருவி வழங்குவதைத் தமிழகம் ஊரும் பேரும் சான்றுடன் உரைக்கும் (பக். 26, 27). அரத்த (இரத்த)த் தொடர்புடைய குடி வழியினரை ஒட்டுப் பற்று என்பதும், அத்தொடர்புடைய கூட்டத்தைப் பற்றாயம் என்பதும் அத்தகு வாய்ப்பில்லானை ஒட்டுப்பற்று இல்லாதவன் என்பதும் நாடறிந்த செய்தி. அன்பு கொண்டு ஆரத் தழுவி நட்புற்று இருப்பாரைப் பற்றாளர் என்பதும் அத்தகையர் இல்லாரைப் பற்றிலி என்பதும், பகைவரைப் பற்றார், பற்றலர் என்பதும் இலக்கிய வழக்குகள். முன்னதொன்றும் உலகியல் பெருவழக்கமாம். மதிலை முற்றிவிடாது இருத்தலைப் பற்றாற்றல் என்பது புறப்பொருள் இலக்கணக் குறியாம். கோல் காலாகக் கொள்வார்க்கு உதவும் ஊன்று கோல் பற்றுக்கோல் எனப்படும். கொல்லுலைக் களத்தில் பற்றி எடுக்க உதவும் கருவி, பற்றிரும்பு, பற்றுக் குறடு பற்றுக்கோல் என வழங்கும். இரண்டு இரும்புத் துண்டங்களை ஒன்றாய் இணைத்தற்கு அவற்றின் இடையே ஒருசிறு துண்டு இரும்பு வைத்துப் பொடிதூவித் தட்டி இணைப்பது வழக்கம். அதற்குப் பற்றாசு என்பது தொழில்முறைப் பெயர். ஆசிடை எதுகையைப் பற்றாசு என்பதை எடுத்துக் காட்டி விளக்குவது இலக்கண நூன்முறை. பற்றிரும்பு என்பது அள்ளு என்னும் பொருளையும் தரும். அள்ளாவது கதவை மூடிச் சாத்துதற்கு உதவும் கம்பியையும் தாழ்ப்பாளையும் மாட்டி வைக்கும் கொண்டியாம். பிறிதோரிடத்து இணைப்பைத் தன்னிடத்துக் கொண்டிருப் பதால் கொண்டியாயிற்று. பகைவர் நாட்டைக் கொள்ளை யிட்டுக் கொண்டு வருதலைக் கொண்டி என்றதும், அந்நாட்டில் இருந்து கொண்டு வந்த மகளிரைக் கொண்டி மகளிர் என்றதும் கருதத்தக்கன. படர்கொடிகள் பற்றிச் செல்லுதற்கு இயற்கை உதவிய கால்கள் சுருள் சிம்புகளாம். அவை மரம், செடி, பந்தர் முதலியவற்றைப் பற்றிக் கொண்டிருப்பதால், பற்றுக்கோடுகளாக மரம் முதலியவை விளங்குகின்றன. அக்கொடிகளுக்கு அமைந்த கொழு கொம்பு போலக் கொடியிடை மெல்லியல் நல்லார்க்குக் கொழுநர் பற்றுக் கோடாக விளங்குதலைப் பலரும் கூறுவர். ஒத்த உரிமைக்கு இவ்வுவமை பொருந்தாது என உரிமைப் பெண் உரத்து மொழிந்தாலும் மொழிதல் தக்கதே. ஆயின், சொல்லாட்சியைச் சுட்டல் முறைமை அல்லவோ! தீப் பற்ற வைத்தல் நல்வழியிலும் உண்டு! அல்வழியிலும் உண்டு! இது பற்றாது அது பற்றாது என்பதோ வண்டமிழ் நாட்டின் வைப்பு நிதி! வையகம் அறிந்த வளநிதி! பற்றாக்குறைத் திட்டத்தை வகுத்து வகுத்துப் பண்பட்டுப் போன நம்மவர் வீட்டு நிலையையும் நாட்டு நிலையையும் நானிலம் நாளும் நன்கு அறிந்து கொண்டு தானே உள்ளது! ஈயம் பூசப்படாத பித்தளைக் கலம் களிம்பேறி உணவைக் கெடுத்தலையும், அஃதுண்ட உடலைக் கெடுத்தலையும் அறிந்ததே. அதனால் அல்லவோ, ஈயப் பற்று வைப்பார் தெருத்தோறும் கூவிக் கூவி வருகின்றனர். கம்பு கட்டும் கயிற்றை முற்காலத்தவர் பற்றாக்கை என்றனர். இக்காலத்தார் கூரையை வரிச்சுடன் இறுக்கிக் கட்டுதற்கு உதவும் புளிய வளார், கருவேல் வளார், கற்றாழை நார் முதலியவற்றைப் பற்றாக்கை என்பர். பற்று ஆக்கை என்பதே. அது, ஆக்கை, யாக்கை, யாப்பு முதலியவை ஆர்த்தலாகிய கட்டுதல் வழியாக வந்தவை. எலும்பு, நரம்பு, தோல் முதலியவை இணைத்துக் கட்டப் பெற்ற யாக்கையையும், எழுத்து அசை சீர் முதலியவற்றால் கட்டப்பெற்ற யாப்பு வகைகளையும் கருதுக! தேடி வைத்த பொருளை எளிதில் விட்டுவிட எவரும் இசைவரோ? உடை அவிழ அல்லது நெகிழ விடாது போற்றுவது போல் போற்றுதலால்தானே உடைமை என்று சொல்லப்படுகிறது. உடையாந்தன்மை உடையது உடைமையாம்! அவ்வுடைமையாம் செல்வத்திற்கு ஒரு பெயர் பற்று என்பது! பற்றிக் கொண்டு விடுதற்கு அருமையுடையது ஆகிய அப் பற்றையும் நற்குடிப் பிறந்தார் தம் இயற்கைப் பெருநலத்தால் பொருட்டாக எண்ணார் என்பதைச் சுட்டுவார் திருவள்ளுவர். பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள என்பது அது (521). தேடித் தேடித் தேர்ந்து கொள்ள வேண்டிய அறிவைப் பற்று என்று கூறும் பரிபாடல். அறிவறியாளைப் பற்றாள் என்னும் அது. ஒன்றைப் பற்றி ஆராய்தலும், ஒருவரைப் பற்றிப் பேசுதலும், ஒரு வழியைப் பற்றி நடத்தலும் பற்றி எவரே அறியார்? சிற்றில் நற்றூண் பற்றி நின்ற காவற் பெண்டைப் பற்றிப் புறப்பாடல் மொழிகின்றது என்றால், நாம் எதை எதைப் பற்றியெல்லாம், எவரெவரைப் பற்றியெல்லாம் நிற்கிறோம். சிங்கள அரசும் படையும் காவல் துறையும் வெறியரும் தமிழர் வீடெல்லாம் கூடெல்லாம் பற்றி எரித்தாலும் அதனை அறிந்த உணர்வுடையார் நெஞ்சமெல்லாம் பற்றி எரிந்தாலும் கொஞ்சமும் அதனைப் பற்றிக் கவலைப்படாத மரத்துப் போன மாந்தரும் உள்ளனரே! பற்றி எரிய வைப்பதும் பற்று என்பது தானே வெறியர் முடிவு. இந் நாட்டின் மேலும் இந்நாட்டு மொழியின் மேலும் இந் நாட்டுமக்கள் மேலும் கொள்ளும் பற்றினை வெறியாட்டம் என்று சொல்லும் தந்நல வெறியாளர் இங்கேயே இல்லையா? அவர்கள் பற்றுமைப் பசப்பு நும்மது நம்மது நம்மது ஏஏ என்று ஊற்றைப் பல்காட்டும் பசப்பேயாம். பற்று வரவு திறமையாக எழுதத் தெரியாத வணிகன் செல்வம் சேர்த்ததுண்டா? பற்றுச்சீட்டு வாங்காமல் சொல்லும் கணக்கை முறை மன்றமோ வரியாயமோ ஏற்றுக் கொள்கின்றதா? இத்துணைப் பற்றுகளையும் விடுக என்பது எளிதோ? அற்றது பற்றெனில் உற்றது வீடு என்றார் நம்மாழ்வார். பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்றார் திருவள்ளுவர் (350). பல்வழி வந்த பற்று என்னும் சொல்வழியே எத்தனை எத்தனை பற்றுகள் விரிந்துள்ளன! தமிழ்வளம் தமிழனிடத்து உண்டோ இல்லையோ! ஆனால், தமிழில் கொள்ளை கொள்ளையாய் உண்டு. வெள்ள வெள்ள வரவாய் உண்டு. பற்றுக்காடு: நீரருகே சேர்ந்த நிலம் நன்செய் ஆகும். குளத்துப் பற்று, ஏரிப்பற்று, கால்வாய்ப் பற்று என நீர்நிலை அடுத்துப் பற்றி இருக்கும் இடம் பற்று எனப்படும். பாலமேட்டுப் பகுதியில் வயற்காடு என்பது பற்றுக்காடு என வழங்கப்படுகிறது. பற்றுக்கு வரும் மடை, பற்றுவாய்மடை என்பது அறியத்தக்கது. பற்று பாசம்: பற்று = நெருங்கி உறவாடி இருத்தல். பாசம் = பிரிவின்றி இணைந்திருத்தல். பற்று பாசம் இல்லாத மக்கள் என்ன மக்கள் என்று முதியோர் தம் மக்களைச் சலித்துக் கொள்வது தெரிந்த செய்தி. பற்று, பற்றுதல் அல்லது இறுக்கிப் பிடித்தல் போல் அமைந்த நிலை. பாசம், பசை போல் ஒட்டிக் கொண்டு இரண்டற நிற்கும் நிலை. பற்றும் பாசமும் அறுதல் துறவுச் சிறப்பைத் துலக்குவது எனினும் இல்லற அன்புக்கும் உலகியல் நலத்துக்கும் பற்றும் பாசமும் விரும்பக் கூடியனவாகவே உள்ளன. ஆதலால், பற்றறுத்தலை வள்ளுவர் துறவிலே வைத்தார். பற்றுப் போடல்: பற்றுப் போடல் = அடித்தல். வீக்கம் உண்டானாலும், தலைவலி, பல்வலி போல வலி கண்டாலும் பற்றுப் போடல் இயற்கை. சொல்லியதைக் கேட்காத சிறுவர்களைப் பெரியவர்கள் அல்லது வேலை சொல்பவர்கள், ஒழுங்காக வேலை பார்க்கிறாயா? பற்றுப் போட வைக்க வேண்டுமா? என்பர். பற்றுப் போட வைத்தல் என்பதற்கு அடித்து வீக்கம் உண்டாக்குதலும், வலியுண்டாக்குதலும் நிகழும் என்பதைக் குறிப்பதாம். * ஈமொய்த்தல், பிடித்துவிடல் காண்க. பனி: பனி:1 பல் > பன் + இ = பனி. பனித்துளி அளவால் சிறிதே. ஆயினும் என்ன? அஃது ஒரு துளி அன்று; நுண்ணிய பல துளிகளை உள்ளடக்கிய ஒரு துளி அது என்பதை உணர்த்தப் பனி எனப் பெயரிட்டனர். நுண்மையில் நுண்மைகளின் கூட்டு நுண்மை அஃதாம். தினையளவு போதாச் சிறுபுல்நீர் என்பது திருவள்ளுவ மாலை. அதன் குளுமையொடு, நறுமையும் சேர்த்த நீர் பனிநீர் - பன்னீர் - என வழங்குதல் இயற்கை வழிப்பட்ட செயற்கை ஆக்கமாம். மங்கல விழாவில் தலைநிற்கும் பொருள், சந்தனக் குழைப்புக்கு உதவும் நீர்மப் பொருள் அது என்பதை அறிவோம். அதன் மணமும் குளுமையும் உடைய பூ ஒன்று பன்னீர்ப்பூ; மரம் பன்னீர் மரம்; பன்னீர் வளியம் பன்னீர்ச் சோடா புதுக்குடி வகையுள் ஒன்று. பல முடிகளை (மயிரிழைகளை)ச் சேர்த்துக் கட்டிய கூந்தல் முடிவகை பனிச்சையாகும். பனியின் வலிமையை, தைப்பனி தரையைப் பிளக்கும்; மாசிப் பனி மச்சைப் பிளக்கும் என்னும் பழமொழியால் அறியலாம். பனி:2 பனி = காய்ச்சல். பனி என்பது குளிரா, வெதுப்பா? பனி, குளிர் என்போம். ஆனால் அது வெப்பமானதே. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - திருக். 355 என்பதன்படி தோற்றம் ஒன்றாகவும் உண்மை ஒன்றாகவும் இருத்தல் உண்டு. பனி என்பதற்குக் காய்ச்சல் என்னும் பொருள் குமரி மாவட்ட வழக்கில் உள்ளமை எண்ணத்தக்கது. குளிர்க் காய்ச்சல் இல்லையா! பனிக்கட்டி வைத்தல்: பனிக்கட்டி வைத்தல் = புகழுரைத்தல். ஆங்கில மரபில் வந்து வழங்குவது இவ்வழக்கம். தமிழில் பன்னீர் தெளித்தல் என்பது இத்தகையது. ‘Ice’ என்பது பனிக்கட்டி. சிலர் புகழ்ந்துரைக்கக் கேட்டவுடன், போதும் போதும்; தலைகனத்துப் போகும்; தடுமன் பிடித்து விடும்; அதற்கு மேல் தாங்காது எனத் தம் தலைமேல் கைவைத்துப் பனிக்கட்டி வைத்தலைத் தவிர்க்க முயல்வோர் எனினும் அவருக்கும் தம்புகழ் கேட்கும் அளவில் உள்ள ஒரு கிளுகிளுப்பு இருக்கவே செய்யும். தாம் விரும்புவதை நிறைவேற்றிக் கொள்ளப் பனிக்கட்டி வைத்தல் போலச் செலவிலா எளிய வழி ஒன்றும் இல்லை எனலாம். பனுவல்: பன் என்பது பருத்தி. பன்னல் என்பதும் அது. பன்னில் இருந்து இழைக்கப்பட்ட நூல் பனுவல் எனப்பட்டது. ஆடை நூலுக்குரிய அப் பெயர் அறிவு நூலுக்கும் ஆகியது. அசை, சீர், தளை, தொடை, பா என்பன இருவகை நூலுக்கும் பொதுவான அமைப்புகள். நூல் இயற்றுவோரை நூலோர் என்கிறார் திருவள்ளுவர். அவர்கள் இயற்றிய நூலைப் பனுவல் என்கிறார். பனுவல் என்பது பெருவழக்குடைய கலைச்சொல்லாக இந்நாள் வழக்கில் உள்ளது. பனை: பன்னாடை, பன்னாட்டு என்பவற்றால், பன்னை என்று இருந்து இடைக்குறையாகிப் பனை எனப்பட்டது. புன்னை, தென்னை என்பவை போலப் பன்னை என்பதே பழம்பெயர். பன்னுதல் பின்னிக் கிடத்தல்; வலைப்பின்னல் போன்ற மடற் சுற்றுடையது. பனம்பழம் விதை என்பவற்றின் பருமையால் பனை பெரியது எனப்பட்டது. பனையளவு, பனைத்துணை. âidx பனை. பன்: பன் = பருத்தி, பஞ்சு. பன் > பன்னல் = பருத்தி. பன்னல் வேலி என்பது புறம் (245). வேலிப் பருத்தி என மக்கள் வழங்குவது இஃதாம். பல இழைகளை யுடையது, பனுவல் ஆயது. அவ்வாறாகிய பாடல் பனுவல் எனப்பட்டது. பஞ்சிதன் சொல்லா பனுவல் இழையாக என்பது நன்னூல் (24). ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு என்பது வள்ளுவம் (திருக். 21). இவண் பனுவல் பனை ஏட்டில் அந்நாளில் வரையப்பட்ட சுவடி. பன்மணி மாலை: கலம்பக உறுப்புகளுள் அம்மானை, ஊசல், ஒருபோகு ஆகியவை ஒழிந்து ஏனைய வெல்லாம் வரப்பாடுவது பன்மணி மாலையாகும். கலம்பகத்தின், ஆட்டிய அம்மனை ஊசல் ஒருபோகும் அற்றுவந்தால் பாட்டியல் பன்மணி மாலை - நவநீத. 39 பன்றி: பன்றி என்பதன் பொருள் என்ன? பல்லை உடையது! பன்றிக்குப் பல் இருந்ததா? இல்லையானால் பன்றி என்னும் பெயரைப் பெற்றிராதே! பண்டைப் பாட்டன் பன்றி எனப் பெயர் சூட்டியிரானே! யானைக் கொம்பு போலப் பன்றிக்குப் பல் இருந்து கால வெள்ளத்தில் கரைந்தது! பயன்படுத்தப்படாத - பயன்படாத - எதுவும் அழிதல் இயற்கையாம். அமெரிக்க வெள்வாய்ப் பன்றி கொடுமையுடையது. மிகக் கூரிய கோடு கொண்டு மக்களுக்குத் தீங்கு செய்யவல்லது. வேட்டை நாய்களையே தாக்கி நார் நாராய்க் கிழிக்க வல்லது (ஐங். ஔவை.). நம் நாட்டுக் கேழல் பன்றிகள் கீழ்வாயில் முன்னே இருபற்கள் கோடுபோல் மேல்வாய்க்கு மேல் வெளியே நீண்டு மிக்க கூர்மையும் பெருவன்மையும் கொண்டுள்ளன. மென்றினை மேய்ந்த தறுகட் பன்றி வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் - ஐங். 261 கேழலாவது காட்டுப் பன்றி. குருவும் கெழுவும் நிறனா கும்மே - தொல். 786 நிறமாவது ஒளி. சிவப்பு ஒளி குரு; குருவிந்தம்; உள்ளொளியாளன் குருவன்; குருதி செந்நிறத்தது; குருத்து வெண்ணிறத்தது; குருக்கத்தி, குருந்தம், குருந்து, குருவி எல்லாமும் ஒளியுடையன. செங்காந்தள் பூ, குருதிப்பூ எனப்படும். வெள்ளை யும் சிவப்பும் ஒளியுடையன; ஆனால் கருமை ஒளியா? கார் ஒளி வண்ணனே! கண்ணனே! ஒளிப்பொருள் இல்லையா? வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோஎனும் இடையாளொடும் இளையானொடும் போனான் மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோஇவன் என்பதோர் அழியாஅழ குடையான் - கம்ப. 1926 புறங்குன்றி, அகங்குன்றி சிவப்பும், கறுப்பும் இல்லையா? இரண்டும் ஒளியில்லையா? செம்மணி, நீலம், பவழம், பச்சை, பொன் இவைதாம் ஒளியா வயிரம் ஒளி இல்லையா? கேழ்வரகு என்பது என்ன? வரகு வகையது மட்டுமா? வரகினும் ஒளிமிக்க நிறத்தது என்பதல்லவோ பொருள். கேழல் ஒளிமிக்க கருநிறப் பன்றி. கருமணிப் பாவையின் எழிலும், கருங்கூந்தலின் வனப்பும், கார்முகில் ஈட்டமும் கொள்ளை கொள்ளும் நிறங்கள் அல்லவா! கேழல் வளை மருப்பு` - அகம். 223 வளை வெண்மருப்பின் கேழல் - ஐங். 265 பிறையன்ன கோட்ட கேழல் - ஐங். 264 இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் என்கிறாரே தொல்காப்பியர் (1568). ஏனம் என்பதன் பொருளென்ன எனின் பன்றி என்ற அவர், இருள்நிறப் பன்றி என்று விளக்கினாரே! ஏனல் என்பது என்ன? தினை! செந்தினை அன்று, முற்படத் தோன்றிய தினை; முற்படத் தோன்றிய கருந்தினையே ஏனல் எனப்பட்டுப் பின்னர்ச் செந்தினைக்கு ஆகியது. தாமரை என்பது செந்தாமரையே! அத் தாமரைப் பெயரே பின்னே தோன்றிய வெண்தாமரைக்கும் ஆகியது போல ஆகியதே! வளை மருப்பு ஏனம் - பெரும்பாண். 110 கருநிறத்தால் அரி என்றும், இருளி என்றும், கருமா என்றும், மைம்மா என்றும், களிறு என்றும் பெயர் பெற்றது. வலிமை மிக்கதால் எறுழி என்றும், பல்லுடைமையால் கோட்டுமா என்றும், உருண்டு திரண்டதால் கோணி, கோலம் என்றும், கட்டிய அல்லது அடைத்த இடத்தில் நீர் கழியாமை யால் மோழல் என்றும், வலிய உளியைப் போல் தோண்டும் நகங்களை யுடைமையால் வல்லுளி என்றும் பெயர் கொண்டது. இதன் ஆண் ஏறு, ஒருத்தல், களிறு, மா; இதன் பெண் பாட்டி, பிணா, பிணை; இதன் குட்டி குருளை, பறழ், பிள்ளை (வெ.வி.பே.). பன்னிரு பாமாலை: பன்னிருவகை யாப்பால் அமைந்த பன்னிரு பாடல்களை யுடையது இம்மாலை. தண்டபாணி அடிகள் அருளிய திருச்செந்தூர்ப் பிரபந்தத்தில் பன்னிரு பாமாலை இடம் பெற்றுள்ளது.  பா வரிசைச் சொற்கள் பா: பகர ஆகாரம்; வல்லின உயிர்மெய் நெடில்; பாடல், விரிதல் பரவுதல் பொருளது. பா என்பது பரந்தது என்னும் பொருளது. பார், பாரி, பாரித்தல், பார்வை முதலியவை அப்பரவுதல் பொருளில் வருபவை. பாஅ என அளபெடை கொண்டு வருதல் அவ்வமைப் பாலேயே அகலுதல் பொருளை விளக்குவதாம். யானையின் அகன்ற அடியைப் பாஅடி என்பர் (புறம். 233). வண்ணங்களிலே ஒன்று பாஅவண்ணம் இப் பாஅ வண்ணம் என்பது நூற்பா வண்ணமாம் (தொல். செய். 242). பா என்பது, ஓசையால் பரந்து பட்டுச் செல்லும் பாடலைக் குறிக்கும். வெண்பா முதலாகச் சொல்லப்படும் பாக்கள், பரந்து செல்லும் ஒலியால் பெற்ற பெயர்களேயாம். அதனால், பா என்பதை விளக்கும் பேராசிரியர் சேட்புலத் திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடம் ஓதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கு ஏதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்றார் (தொல். செய். 1). நெசவுத் தொழிலில் அமைந்த பாவைப் பார்ப்பினும் அதன் பரவுதல் விளங்கும். வேளாண் தொழிலில் பாத்தியில் விதையிட்டுப் பரவுதல் உண்டு. அதனாலும் பரவுதல் பொருள் தெளிவாம். சிறு குழந்தை யுடுக்கும் பாவாடை அதன் பரவுதல் பொருளைத் தெளிவுற நிறுவும். பாவடி எனவரும் புறப்பாடல் சொல்லுக்குப் பழைய உரையாசிரியர் பரந்த அடி எனப்பொருள் கண்டார் (15). பாகர்: பாகு + அர் = பாகர். பக்குவம் அறிந்து பழகி வழிநடத்தும் தேர்ச்சியுடையவர் பாகர் ஆவர். யானைப்பாகர். பாகு என்பதே பாகன் பொருள் தரல் உண்டு. பண்டியல் தொன்னூல் பாகியல் பாகலின் - பெருங். 2:9:90 பாகமாக - பக்குவமாக - உணவாக்க வல்லாரும் பாகராம் ம.வ. பாகல்: பாகு + அல் = பாகல். பாகல், கொடி வகையுள் ஒன்று. பாகு (இனிப்பு) அற்ற அல்லது கசப்பான காயை யுடையது பாகல். பாகற்காய் கசக்கும். வேம்பின் காயும் கசப்பானதே; ஆனால் பழுத்தால் இனிக்கும். பாகல் எப்பொழுதும் இனியாது. குறைந்த கசப்பினது உண்டு. பாகலில் மிதி பாகல், குறும்பாகல், நெடும்பாகல் என வகைகள் பல உண்டு. பாகு: பலவகைப் பொருள்களும் பலவகைச் செயற்பாடும் அமையச் செய்யப்பட்ட சுவையது பாகு ஆகும். பாகமாகச் செய்த பண்டங்கள் உண்டறியோம் - கவிமணி. பாகு, நீர்த்தது என்றால் பாகுநீர். திண்மையது என்றால் பாகுக்கட்டி. பாகை: மக்கள் வழக்கில் தலைப்பாகை கட்டுதல் என்பது ஒன்று. தலைப்பா என்பது அது. தலைப்பாக் கட்டியார் கடை என விளம்பரப் பலகை காணமுடிகின்றது. பா = பரந்து பட்டது. பாகை = பரந்துபடக் கட்டப்பட்ட துணித் தலைக்கட்டு. இடுப்பு வேட்டி, தோள்துண்டு, தலைப்பாக் கட்டு என ஆடவர் மூவுடையும் சட்டையும் தாங்கியது உண்டு. இடுப்புக்கட்டும் கூட உண்டு. பிடரி தொட்டுக் காதும் மறைத்து நெற்றிவரை தலையில் கட்டப்பட்டது பாகையாம். முண்டாசு என்பது பின் வழக்கு. பாக்கம்: பக்கம் > பாக்கம். கடலின் பக்கத்தே அமைந்த ஊர் பாக்கம். ஓரூரைச் சார்ந்து அமைந்த ஊரும் பாக்கமாம். எ-டு: பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம். பாக்கியம்: பக்கு > பாக்கு > பாக்கியம். இயற்கை இறைமையால் பகுத்தளிக்கப்பட்ட ஈவுப் பேறு பாக்கியம் ஆகும். அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் - திருக். 1141 பாக்கு: பக்கு > பாக்கு. ஒருபொருள் உடைபடுவது கீறுவது பக்குவிட்டதாக மக்கள் வழங்குவர். இரவென்னும் தோணி கரவாம் பார் தாக்கப் பக்குவிடும் என்பது திருக்குறள் (1068). கமுகங்காயை இரண்டாகப் - பலவாகப் - பிளந்ததே பாக்கு என்பதைப் பொருள் கருதிய பெயராகக் காண இயலும். புண்ணை மூடியிருந்த தோல் காய்ந்து பக்கு விடுதல் அறியலாம். பக்கம் என்பதும் பகுப்பு வழிப்பட்ட சொல்லே. பாக்கு வைத்தல்: பாக்கு வைத்தல் = அழைத்தல். திருமண அழைப்பிதழ் அடித்து வழங்கும் வழக்கம் புதுவது. முன்பு பாக்கு வைத்தல் என்பதே அழைப்பாக இருந்தது. வெற்றிலை பாக்கு வைத்தல் என்பதன் சுருக்கமே பாக்கு வைத் தலாம். பாக்கு வைத்தல் என்பது அழைப்புப் பொருள் தருதல் ஆனமையால், உங்களைப் பாக்கு வைத்து அழைத்தேனா? என்னும் பொருளில் பாக்கா வைத்தேன் என்பது உண்டு. அழை யாமல் வந்துவிட்டு அடாவடித்தனம் வேறா என்பது போல இழிவுறுத்தும் பொருளில் வழங்குகின்றதாம். பாங்கன்: பாங்கு + அன் = பாங்கன். பாங்கு = பக்கம். பாங்கன் என்பான் பார்ப்பான் போலன்றித் தலைமகன் வழிநின்றொழுகி வரும் (தொல். பொருள். 501 பேரா.) பாங்கன் என்பதன் பெண்பால் பாங்கி. பாங்கு: இணக்கம், உரிமை, தகைமை, பக்கம், முறை முதலிய பொருள் தரும் பாங்கு என்னும் சொல் அழகையும் சுட்டும். இடத்துக்கும் இயல்புக்கும் தக இணக்கமாக அமைதல் அழகின் இருப்பாம். வளமான பூங்கா எனினும் அதனிடம் பாங்கு அமையாக்கால் அதன் அழகு வயப்படுத்துவது ஆகாதே. அழகின் அமைதியில் ஒன்றற்கு ஒன்று இணக்கமாதல் வேண்டத் தக்கதாம். பாசம்: பாசம்:1 பசுமை நிறத்தது பாசி; அது பாசம் என்பதுமாம். பாசி நீரில் பற்றியியைந்து கிடப்பது போல் பாசம் என்பதும் பற்றியியைந் துள்ள அன்பு என்னும் பண்பாம். பாசம்:2 பாசம் = அன்பு, பற்று. பசுமையான நிறத்தது பாசி; பாசம் என்பதும் அது. அப்பசுமை அன்புப் பொருளில் வழங்குதல் தாய்ப்பாசம் என்பதால் புலப்படும். பாசம் = கட்டு; கட்டும் கயிறு என்னும் பொருள்களிலும் வழங்கும், பாசக்கயிறு என்பது இருசொல் ஒரு பொருள். கயிற்றால் கட்டுவது போல் அன்பாலும் ஒருவரைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை விளக்கும் சொல்லாட்சி இது. பாசம் சமய உலகில் பற்று என வழங்கும் பதி பசு பாசம் எனவரும் முப்பொருளுள் ஒன்றாதல் காண்க. பாசம் பற்று எதுவும் இல்லை என்பதும் வழக்கில் உள்ளதே. பாசவர்: பசுமை > பாசு > பாசவர். பாசவர் = பசுமை நிறத்தையுடைய வெற்றிலை விற்பவர். பாசவர் வாசவர் - சிலப். 5:26 பாசவர் = இலையமுதிடுவார் (அடியார்க்.); இலையமுது = வெற்றிலை (உ.வே.சா. குறிப்.). பாசறை: பாசறை = படைவீரர் தங்குமிடம். பாசு = பசுமை. பாசிலை = பச்சையான இலை. பாசறை என்பது போர்புரிந்த வீரர்கள் தங்குதற்கு அமைக்கப்பட்ட கூடாரம். அது, ஆங்குக் கிடைத்த கம்பு, குச்சி, இலை, தழை ஆகியவற்றால் அமைக்கப்பட்டவை ஆதலால் அதன் பசுமை கருதிப் பாசறை எனப்பட்டது. மாறுகொள் வேந்தர்.... பாசறை யோர்க்கே - பதிற். 83-89 பசுமையாகக் குளம் கிணறுகளில் பரவிக்கிடக்கும் நீர்ப்புல் வகை பாசி எனப்படுவதும், பச்சைநிற நீர்நுரையும் வழுக்கும் பாசம் எனப்படுவதும், பச்சை நிறக்கல் பாசி எனப்படுவதும், பச்சைப் பயறு பாசிப்பயறு எனப்படுவதும் அறிக. பாச்சை: பாய்ச்சை > பாச்சை. பாய்ச்சல், பாய்ச்சல் செல்லுதல். தத்துதலினும் தாவுதலினும் விரைந்தது பாய்ச்சல். பாய்ச்சை செல்லும் விரைவைப் பார்த்தால் பெயர்ப் பொருத்தம் விளங்கும். பெருக்கு மிக்க நீர், நிலத்தில் படியுங்கால் விரைந்து பரவும். அதற்கும் பாய்ச்சல் என்பதே பெயர். மூடி விழிக்குமுன் பார் பாய்ந்து விடும். அவ்வளவு பரவிப் பாய்வது அது. பாய்ந்து தாக்கும் மாடு, பாய்ச்சைக் காளை (பாச்சைக் காளை) எனப்படும். பாய்ச்சல் காட்டாதே என்பதும் உன் பாய்ச்சலை என்னிடம் வைத்துக் கொள்ளாதே என்பதும் அவன் பாய்ச்சல் (பாச்சா) பலிக்கவில்லை என்பதும் வழக்குத் தொடர்கள். தாரை மடித்துக் கட்டுதல் தார்ப் பாய்ச்சுதல் எனப்படும். தார் நீளம்; நீண்ட உடையை (காலளவும் தாழ்ந்து கிடந்த உடையை) முட்டளவுக்கு மேலே கொண்டு வந்து கட்டுதல். பாய்ந்து ஓடுவதற்கு வாய்ப்பானது ஆதலால், அதற்குத் தக்கவாறு கட்டுதல் பாச்சை எனப்பட்டது. பாஞ்சிப் பழம்: முன்னால் துருத்திக் கொண்டுள்ள பழம் முந்திரிப் பழம் ஆகும். அதனை முன் துரு > முந்திரி என்பர். முந்திரிப் பழத்தைப் பாஞ்சிப் பழம் என்பது குமரி மாவட்ட வழக்கு. பாய்தல் என்பது வெளிவருதல், வெளித்தள்ளுதல். பாய்ந்தது போல் வெளிப்பட்டுக் கொட்டை தோன்றும் பழம் பாய்ந்த பழம் எனப்பட்டுப் பாஞ்சிப் பழமாகி உள்ளது. பாய்ந்தது > பாஞ்சது. பாடகம்: பரவிக் கிடக்கும் கால் அணிகம் பாடகமாம். கால் பரட்டில் கிடப்பது அது. பாடகச் சீறடி பரற்பகை உழவா - சிலப். 10:52 பாடகர்: பாடுங் கலையில் வல்லார் பாடகர் ஆவார். அவர் பாடல் இயற்றுவார் அல்லர். பாடலை இசையோடு பாடவல்லார். பாகவதர் என்பதற்கு முற்பட்ட மூலச்சொல் பாடகர் என்பதாம். பாடகர் சிலருள் பாடல் இயற்றுவோரும் இருந்தனர் அவர் பாவலர்; அதனோடு பாடகரும் ஆயவர் என்பதாம். தியாகராய பாகவதர் எனப்பட்டவர் தியாகராய பாடகரே. கீர்த்தனை பாடிய தியாகராயர் பாவலரே; அவரே பாடகரும் ஆயவர். பாவநாசம் சிவனார் பாவலரும் பாடகரும் ஆயவர். பாடம்: பாடம்:1 படிக்கும் செய்தி. பாடம்:2 மனப்பாடம்; படித்ததை மனத்தில் ஆக்குதல். பாடம்:3 பாடம் செய்தல் = பக்குவப்படுத்தல். புகையிலையை வெயிலில் உலரவிட்டுப் பாடம் செய்வது வழக்கம். தேயிலையை வெப்பேற்றிப் பாடம் செய்வது வழக்கம். பாடல்: பாடல் = பாட்டு, பாடுதல். பாடல் இயற்றல். பாடல் இசைத்தல். துயரச் செய்தியைப் பல்கால் கூறல். பார்த்தால் போதும்; அவள் பாட்டைப் பாடித் தீர்த்துவிடுவாள் ம.வ. பாடாண்பாட்டு: பாடாண் என்பது புறத்திணைகளுள் ஒன்றாகும். இத் திணைப் பொருள் அமையப் பாடப்பெறும் நூல் பாடாண் பாட்டு எனப்பெறும். இவ்வகையில் எழுந்த நூல், சிவஞான பாலய தேசிகர் பாடாண்பாட்டு என்பதாகும். இது நேரிசை ஆசிரியப் பாவாய் 608 அடிகளில் அமைந்துள்ளது. இதனை இயற்றியவர் ஆத்திரேயன் சீனிவாசன் என்பார். வித்தகர் இயற்கை வெட்சிமுதல் எட்டொடும் அவர்சித் தாந்தம் அமைவுறக் காட்டிப் பாடாண் பாட்டெனப் பகர்ந்தனன் எனவரும் பாயிரத்தால் பாடாண்பாட்டின் இலக்கணம் இன்னதென ஆசிரியர் சொல்கிறார். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பா மாலை ஆகியவற்றில் பாடாண் திணைச் செய்தியுண்டு. புறநானூறு பாடாண் பாடல் பலவற்றையுடையது. ஒளியும் ஆற்றலும் ஓம்பா ஈகையும் அளியும் என்றிவை ஆய்ந்துரைத் தன்று என வரும் புறப்பொருள் வெண்பாமாலை (189) பாடாண் பொருள் விளக்கம். பாடி: பாடி:1 போர்க்களத்தில் இரவில் கண்பாடு கொள்ள (உறங்க) உருவாக்கப்பட்ட கூடார வீடுகள் பாடி எனப்படும். பாடி:2 ஆயர்கள் பாடிப் பாடிப் பால்கறக்கும் தொழுவங்களை யுடைய தெரு ஆயர்பாடி எனவும், பாடி எனவும் வழங்கும். பாடி:3 பாடி என்பது அகலமான தெரு என்னும் பொருளது. இரவில் தொழுவில் மாடுகளைக் கட்டினாலும் பகலில் வெளிப் புறத்தில் மாடுகளைக் கட்டுதல் வழக்கத்தால் அகன்ற தெரு அமைத்தனர். அவ்வாறே தறி நெய்வோர் பாவு போடுதற்கு நீண்டதும் அகன்றதுமாம் தெரு அமைத்துக் கொண்டனர். அத் தெருவைப் பாடி என வழங்கினர். பாவு போடும் இடத்தைப் பாடி எனல் நெசவுத் தொழிலோர் வழக்காகும். பாடிப்பால்: கல் எனக் கரைந்து வீழும் கடும்புனல் குழவி என்பது திருவிளையாடற் புராணத்தில் இடம்பெறும் தொடர். அருவி முழக்கம் என்பது மக்கள் வழக்கு. ஒலியெழுப்பி வெள்ளென வீழும் அருவி நீரைப் பாடிப்பால் என்பது குற்றால வட்டார வழக்கு. அருவி தந்த அறிவுக் கொடை இவ் வாட்சி. பொதுமக்கள் புலமை வளம் அல்லவோ இத்தகைய சொற்படைப்பு! பாடு கிடத்தல்: பாடுகிடத்தல் = நோன்பு. புலன்களை அடக்கி ஊண் கொள்ளல் நீர்பருகல் விடுத்து எண்ணத்தை ஒருமைப்படுத்தி ஒரு கொள்கையை நிறை வேற்றுதற் குரிய உறுதிப்பாடு கொண்டிருத்தலே பாடு கிடத்தலாம். பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாள் - சிலப். 9:15 பாடு பலபொருள் ஒரு சொல். ஏவல், இடம், பக்கம், வேலை, மெய்ப்பாடு, நோன்பு, பெருமை, உறக்கம் எனப் பல பொருள் தரும். பாடை: இறந்து போனவர் உடலைக் கிடத்தியோ அமர்வித்தோ அடக்கம் செய்யுமிடத்திற்குக் கொண்டு செல்லுமாறு அமைக் கப்பட்ட அகன்ற காலில்லாக் கட்டில் போல்வது பாடை. படுக்க வைக்கும் இடம் பாடை ஆயது. கால்கழி கட்டில் என்பது இலக்கிய வழக்கு. கால்கழி கட்டில் கிடத்தி - புறம். 286 பாடையில் போவான் வசைமொழி ம.வ. பாட்டம்: பட்டம் > பாட்டம். பட்டமாகிய பருவ காலத்தில் விடாமல் பெய்யும் மழை பாட்டமாம். பாட்டம் பாட்டமாக மழை பெய்கிறது ம.வ. பாட்டத்திற்குத் தகப்பயிர் செய்யும் நிலம் பாட்டங்கால் எனப்படும். முல்லையுந் தாய பாட்டங்கால் - கலித். 111 பாட்டன்: தந்தையைப் பெற்றவன் பாட்டன். அவன் துணை பாட்டி. பருவமழை பாட்டம் பாட்டமாகப் பெய்வது போல் குடும்பத் திற்கு வாய்த்தவர். பாட்டி: இந்நாளில், பாட்டி என்பவர் தாயையும் தந்தையையும் பெற்றவர் பொதுப்பெயர். முதிய பெண்ணின் பெயர். பொதுப்பெயர். சிறப்புப் பெயர். பாட்டி ஔவை. பழநாளில் பாட்டி என்பது பன்றி, நாய், நரி ஆயவற்றின் பெயர் (தொல். 1565, 1566). பாட்டியல்: செய்யுளியல், யாப்பு, பாப் பாவினம் என்பன யாப்பிலக்கண நூல்கள், இப்பாட்டியலோ நூல்வகை நுவலும் நூலாயிற்று. பன்னிரு பாட்டியல் முன்னோடி. வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல் போல்வன தனிப்பாட்டியல் நூல்கள். இலக்கண விளக்கத்தில் ஒரு பகுதி பாட்டியல். ஆகலின், தனிநூலாகவும் நூலின் பகுதியாகவும் பாட்டியல் எழுந்தன எனலாம். பன்னிரு பாட்டியல் எழுத்தியல், சொல்லியல் இனவியல் என மூவியல்களை யுடையது. எழுத்தின் பிறப்பு, வருணம், கதி, உண்டி, பால், தானம், கன்னல், புள், நாள் என்பவற்றை எழுத்தியல் கூறுகின்றது. சீர்க்கணம், மங்கலச் சொல், பெயர்ப் பொருத்தம் என்ப வற்றை விளக்குவது சொல்லியல். பாப்பொருத்தம் பாவினம் என்பவற்றைக் கூறுவது இனவியல், சாதகம் முதல் கையறு நிலை ஈறாக அறுபத்தாறு வகைகளைப் பாவினமாகக் கூறுகின்றது. இப்பன்னிரு பாட்டியல், நூல்களின் செய்திக் கோவையை விளக்கும். பாட்டு: பாட்டு என்பது தனியே சொன்ன அளவில் பாடல் என்னும் பொருளே தரும். ஆனால் பாட்டு, தொகை என இணைத்துச் சொல்லப்பட்டால் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் நூல்களைக் குறிக்கும். பழைய உரையாசிரியர்கள் சங்கச் சான்றோர் பாடல்களைப் பாட்டு, தொகை என அடைவு செய்த நூல்களையே இவ்வாறு பெயரிட்டு வழங்கினர். பாடல் என்னும் பொருள்தரும் பாட்டு, நூல் என்னும் பொருள் தருதல் எண்ணத் தக்கதாம். நூற்றுப்பத் தாயிரம் பொன்பெறினும் நூற்சீலை நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துபோம் - மாற்றலரைப் பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா என்றும் கிழியாதென் பாட்டு என்று ஔவையார் கூறும் பாடலில் வரும் பாட்டு பாடலையும், பாடலால் ஆகிய நூலையும் குறிக்கும். பத்துப்பாட்டாதி என்று பேராசிரியர் சுந்தரனார் கூறும்பாட்டு, நூல் பொருள் தருவதேயாம். பாட்டு என்பது, நூல் பொருளாகத் தூண்டிய வாய்ப்பு என்ன? முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து இப்பாட்டில் வருவன, பத்துப்பாட்டு நூலடைவாம். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை எனச் சரிபாதி ஆற்றுப்படை நூல்கள்; அவ்வெண்ணிக்கை கருதி - பெரும்பான்மை கருதி - ஆற்றுப் படை என்னும் பெயர் குறிக்கப்படவில்லை. பாட்டு என்றே சொல்லப்படுகிறது. ஆற்றுப்படை ஒருதுறை; காஞ்சி, பாலை என்பவை ஒவ்வொரு திணை. வாடை என்பது குளிர்காற்று. கூத்தராற்றுப் படை என்பதன் வேறுபெயர், மலைபடுகடாம். கடாம் என்பது மதநீர், ஒலி முதலியவை. துறை, திணை முதலாம் இப்பெயர்களை நூல் தொகுதிக்கு இட்டு வழங்க ஒரு துய்ப்பாளி அல்லது துய்ப்பாளர் விரும்ப வில்லை! அவர்தம் எண்ண வட்டத்தில், பாட்டுப் பெயர் சுழல ஒரு வாய்ப்பு இயல்பாகக் கிடந்தது. அது, முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு என்னும் பாட்டுப் பெயர்கள். ஆற்றுப்படை முதலாம் பெயர்களினும் பாட்டு என்னும் பெயரே - பாட்டால் ஆகிய நூலுக்குத் தகவாக அமையும் என உணர்ந்து இடப்பட்ட பெயரே பாட்டு என்பதாம். தொல்காப்பிய உரையாசிரியர் ஆகிய பேராசிரியர் முதலியவர்களால் பயில வழங்கப்பட்ட பெயர் பாட்டு என்பதும் பத்துப்பாட்டு என்பதுமாம். * தொகை காண்க. பாட்டுப் பாடுதல்: பாட்டுப் பாடுதல் = வறுமையை விரித்துக் கூறுதல். பாட்டுப் பாடுதல் பாடகர் பணி. (பாடகர், பாகவதர்) அவரைக் குறியாமல் பஞ்சத்துக்கு ஆட்பட்டவர் தம் வறுமையைக் கூறுவதைப் பாட்டுப் பாடுவதாகக் குறித்து வருகின்றது (ம.வ.). பழம் புலவர்கள் பாடிய புறப்பாடல்களுள் சில வறுமைப் பாட்டாக வெளிப்பட்டுள. வறுமையில் பஞ்சாகத் தாம் பறப்பதாகப் பிற்காலப் புலவர்கள் பாடிய தனிப்பாடல்கள் உண்டு. அவ்வழக்குகளில் இருந்து பாட்டுப் பாடுதல், பஞ்சப்பாட்டுப் பாடுதல் என்பவை வறுமைப் பொருள் குறித்து வந்ததாகலாம். பாட்டை: பட்டை > பாட்டை. உடைகளின் பட்டை, மரப்பட்டை, கண்பட்டை, வண்டிப்பட்டை என வழக்கில் பட்டைகள் பல. பட்டை கெட்டிப்பட்டதாம். மக்களும் விலங்கும் நடந்து நடந்தும் வண்டி ஓடி ஓடியும் கெட்டிப் பட்ட வழித்தடம் பட்டை எனப்பட்டுப் பாட்டை ஆயது. பாணர்: பாணர் பழந்தமிழ்க் குடியினர். இந்நான் கல்லது குடியும் இல்லை எனப் புறப்பாட்டால் (335) சுட்டப்படும் குடிகளுள் தலைநின்ற குடியினர். பாண் சாதிப் பெயரன்று; குடிப்பெயர். அறிவியலார் இனம் என்று சொல்லும் பொருளில், முன்பு சாதிச் சொல் வழங்கப்பட்டது. நீர்வாழ் சாதி (தொல். பொருள். 588, 608), பறவைச் சாதி (பெரும்பாண். 229) என்பன அறிக. ஒரு தாய் தந்தையர் வழியாக வந்தவர் குடிவழியினர்; அவரொடு கொண்டும் கொடுத்தும் தொடர்பு கொண்டவர் கொடிவழியினர். ஒரு குடிவழியினர் வாழ்ந்த இடம் குடியிருப்பு; அவர்கள் சேர்ந்து வாழ்ந்த சிற்றூர் சேரி. சேரி பெரும்பாலும் பேரூர்களைச் சார்ந்து இருந்தது. சார்ந்து இருத்தல் வேறு; சேர்ந்து இருத்தல் வேறு; சேர்ந்து இருந்ததெனின் ஓரூர் ஆகிவிடும். அதனால் பேரூரைச் சேர்ந்து இருந்தமையால் சேரி எனப்பட்டது என்பது பொருளற்றது. ஒரு குடி வழியினர் சேர்ந்து வாழ்ந்த இடமே சேரியாம். ஊர்க்குப் புறத்தே இருந்த சேரி புறஞ்சேரி, புறச்சேரி என வழங்கப்பட்டன (சிலப். பதி. 74; பட். 76). உறையூரைச் சார்ந்து ஏணிச்சேரி இருந்தது; அவ்வூரினர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். பார்ப்பனர், வண்ணக்கர், கொல்லர் முதலியோர் வாழ்ந்த இடம் பார்ப்பனச்சேரி, வண்ணக்கஞ்சேரி, கொற்சேரி எனப் பட்டன. அவ்வாறே பறைச்சேரி, பட்சேரி, பாண்சேரி எனவும் வழங்கப்பட்டன. பாண்சேரிப் பல்கிளக்குமாறு எனப் பழமொழியே தோன்றிற்று. சேரி தாழ்த்தப்பட்டவர் குடியிருப்பென வழங்கும் வழக்கு மிகப் பிற்பட்டது. பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் என்ற நாளில் பிறந்தது சேரிச் சொல்; ஒதுக்கப்பட்டோர், ஒடுக்கப் பட்டோர், தீண்டாதார், தாழ்த்தப்பட்டோர் என்னும் குறியீடுகள் தோன்றாத காலத்துச் சொல் சேரிச் சொல். ஆகலின் அந்நாளைப் பாண்சேரி, பாணர் குடியிருப்பு என்னும் பொருளில் நிற்பதே. பா - பாண் - பாணர் எனப் பாணர், பாடல் இசைத்தல் பண்ணெழுப்பல் இவற்றைச் சார்ந்து திறம் பெற ஆடல் எனக் கலைத்தொழில் வாழ்வினர். வாழ்நர் வாணர் ஆயது போல் பாழ்நர் பாணர் எனத் திரிபு ஆய்வு செய்தாரும், அப்பொருள் படப் பாடல் செய்தாரும் உளர். பாண் + அர் = பாணர் என்பது வெளிப்படை. பாணர் குடியினர் செய்துவந்த தொழில்கள்; அவற்றால் அக்குடியில் உண்டாகிய பிரிவுகள்; இவற்றை எண்ணினால் தமிழ்க்கலைகளுள் பெரும்பாலனவற்றைக் கட்டிக் காத்தும் வளர்த்தும் வந்த குடி பாணர்குடி என்பதற்கு ஐயமில்லை. கொல்லுத் தொழில் பலவகைப்படுதல் அனைவரும் அறிந்ததே. அப் பலவகைத் தொழிலிலும் ஈடுபட்டவர் ஒரு குடிவழியினரே. தச்சர் இரும்பு செய் கொல்லர், பொற்கொல்லர், செம்பு கொட்டிகள், கஞ்சுகர், வண்ணக்கர், சிற்பர் ஓவர் எனப்பட்டார் அனைவரும் ஒரு குடியினர் ஆதல் போல் பாணர், கூத்தர், பறையர், வள்ளுவர், கடம்பர், பொருநர், கணியர், புள்ளுவர் இன்னோரெல்லாம் ஒரு குடியினரே. அவரவர் கொண்ட கருவிகளாலும் ஏற்றுக் கொண்ட கலைத்துறை களாலும் வெவ்வேறு குறியீடு கொண்டனர் என்க! பாண்: பா என்பது பாட்டு என்னும் பொருள் தருவது போல் பாண் என்பதும் அப்பொருள் தரும். x.neh.: ஏ > ஏண்; ஏ = உயர்ச்சி; ஏண் = உயர்ச்சி; பாவும் பாணும், பாடல் என்னும் பொருள் தரினும் பாண் என்பது இசைப்பாடல் என்னும் பொருளைச் சிறப்பாகத் தருவதாம். இதனைப் பாணி என்னும் சொல் நன்கனம் தெளிவிக்கும். இசையும் பாட்டும் தாளமும் இயைந்து வருவதே பாணியாம். செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர் வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணி என்றார் இளங்கோவடிகளார் (சிலப். 10:130, 131). கானல்வரிப் பாடற்பாணி என்பதும் சிலம்பே (7.24:4). பாடற்பொருள் தரும் பாண், அப்பாடல் இசைக்கும், இசைத்தொழிலை மேற்கொண்டவர்க்கும் பெயர் ஆயிற்று. பாண் என்பதற்குப் பாண் சாதி என்றார் அடியார்க்கு நல்லார் (சிலப். 4:75) அவரே பாணைப் பாட்டாக்குதலையும் தழுவிக் கொண்டார். அதன் விளக்கவுரைப் பகுதியிலே, பாண்சேரிப் பெயர் பண்டே இருந்தது (மதுரைக். 269). ஊணிலேயே கருத்துக் கொண்டு வாழ்வாரை ஊணர் என்பர். பாடும் பணியே பணியாகக் கொண்டவர்கள் பாணர் எனப்பட்டனர் என்க! பாண் என்பது பாட்டாய், இசையாய் இசைக்குடியாய்ப் பொருள் வளமுற்றதுடன் நிற்காமல் மேலும் விரிவுற்றது. பாண் என்பது பாணாற்றுப் படை என்னும் வகையைக் குறிப்பதும் ஆயிற்று. முருகு பொருநாறு பாணிரண்டு எனவரும் பத்துப் பாட்டின் அடைவுப் பாட்டில் பாண் என்பது பாணாற்றுப் படையாதல் அறிக! பாண் இசைப்பாட்டு எனப்பட்டதுடன், வண்டின் இசையும் பாண் எனப்பட்டது. சுரும்பு பாண் செய என்றார் கம்பர் (பால. 541). பாண் சிறத்தற்குப் பண்ணுதல் வேண்டும்; பண்ணுதலாவது பலவகை இசைவகுப்புத் திறங்களும், அவற்றைச் சிறப்பித்துப் பருந்தும் நிழலுமென இயலும் கருவியிசை இணைத்தலுமாம். இவற்றைக் கொண்டே பண்ணென்னாம் பாடற் கியைபின்றேல் என்றார் திருவள்ளுவர் (திருக். 573). பண் வகுத்துப் பாடுதல் பண்டு தொட்டே இருந்தது என்பது பரிபாடலால் இனிது விளங்கும். கடவுள் வாழ்த்து, கடுவன் இளவெயினனார் பாட்டு, கண்ணன் நாகனார் இசை, பண்ணுப் பாலை யாழ் (5) என்றும், ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு, மருத்துவன் நல்லச்சுதனார் இசை, பண்ணுப்பாலை யாழ் (6) என்றும் இன்னவாறு வருவனவற்றால் பண் வகுத்தற் பழமை தெளிவாக அறியப்பெறும். பாடினோர் ஒருவராய், இசைவகுத்தோர் வேறு ஒருவராய் இருந்தமையும், ஒருவர் பாடற்கே இசை வகுத்தோர் பலராக இருந்தமையும் பரிபாடற் குறிப்புகளால் விளங்கும். பண்படுத்துதல் வழியாகப் பயன்சிறப்ப வழங்குவது நிலம்; பண்படுதல் வழியாக உண்டாம் பண்பாட்டால் மக்கள் உயர்வு விளங்கும். இசைச்சிறப்பும் பயன்பாட்டால் விளைவதே என்பதும் தெளிவாகும். பண், பண்ணத்தி, பண்ணல், பண்ணாத்தி, பண்ணுப் பெயர்த்தல், பண்மாறு, பண்முறை, பண்வகை எனவரும் இசைத்துறைச் சொல்லாட்சியும் இவற்றின் விளக்கமும் பண்ணின் நீர்மையைக் காட்டவல்லன. பண் என்பதன் காரணத்தை அடியார்க்கு நல்லார் காட்டும் எடுத்துக்காட்டு வழியே சிறப்ப அறியலாம். பாவோ டணைதல் இசையென்றார்; பண்ணென்றார் மேவார் பெருந்தானம் எட்டானும் - பாவாய் எடுத்தன் முதலா இருநான்கும் பண்ணிப் படுத்தமையாற் பண்ணென்றார் பார் என்பது அது (சிலப். 3:26). பாண்டம்: பண்டம் என்பது பொருள். பண்டங்கள் வைக்கப்பட்ட இடம் பண்டசாலை, பண்டக சாலை எனப்பட்டது. ஈர வெண்காயம் என்னும் பண்டம் கீற்றால் அமைந்த கூட்டில் வைத்துப் பேணப்பட்டது. அது பண்டடை எனப்பட்டது. எ-டு: வெண்காயப் பண்டடை. பண்டங்கள் வைக்கப்பட்ட பெருங்கலம் பாண்டம் எனப்பட்டது. பண் > பாண்; கண் > காண். பாண்டியர்: பண்டையர் > பாண்டியர். பாண்டியன் என்பது பண்டு என்னும் சொல்லினின்று திரிந்ததென்றும், பழைமையானவன் என்னும் பொருள் கொண்டதென்றும், சொல்வதுண்டு. பாண்டியன் மூவேந்தருள் மட்டுமன்றிப் பிறவரசரை நோக்கியும் பழைமை யானவனே. மோகூர்த் தலைவனும் பாண்டியன் படைத்தலைவனுமாகிய ஒரு சிற்றரசனும் பழையன் என்று பெயர்பெற்றிருந்தான். ஆயினும், இப் பொருட்கரணியம் அத்துணைப் பொருத்தமாய்த் தோன்றவில்லை. பாண்டி என்பது காளையைக் குறிக்குஞ் சொல். அது பாண்டில், பாண்டியம் என்னும் வடிவுங் கொள்ளும். ஒரு மறவனைக் காளை என்பது மரபு. அதனால், அது சிலர்க்கு இயற்பெயராகவும் இடப்படும். வலிமை, மறம், உழைப்பு, பொறுப்பு முதலிய அருந்திறங்கள் வாய்ந்த காளை போன்றவனைக் காளையென்றல் உவமையாகு பெயர். ஒரு நாட்டைக் காக்கும் அரசனுக்கு இக் குணங்கள் இன்றியமை யாதவை. ஆதலால், பொருட்பாலில் அரசியற் பகுதியில் இடுக்கணழியாமை என்னும் அதிகாரத்தில், மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற இடுக்கண் இடர்ப்பா டுடைத்து - திருக். 624 என்றார் திருவள்ளுவர். காளை என்பது ஆண்மகன், கட்டிளமையோன், பாலை நிலத்தலைவன் ஆகிய மூவரையுங் குறிக்குமென்று திவாகரம் கூறும். ஆதலால், காளையைக் குறிக்கும் பாண்டி என்னும் சொல்லினின்றே, பாண்டியன் என்னும் பெயர் தோன்றியிருத்தல் வேண்டும். அருச்சுனன் திருநீராட்டிற்குத் தென்னாடு வந்த போது சித்திராங்கதன் என்னும் பாண்டியன் மகளை மணந்தான் என்னும் கதை பற்றி, பாண்டவன் என்னும் சொல்லினின்று பாண்டியன் என்னும் பெயர் திரிந்ததென்று, வரலாற்றிற் கெட்டாத தொன்மை வாய்ந்த பாண்டியன் குடிப்பெயரைக் கி.மு. 10 ஆம் நூற்றாண்டினனான பாண்டுவொடு தொடர்பு படுத்துவது, விண்ணக மீனையும் மண்ணக மானையும் ஒன்றா யிணைப்பது போன்றதே. அருச்சுனன் பாண்டியன் மகளை மணக்கு முன்பே, அவர் மாமன் பாண்டியன் எனப் பெயர் பெற்றிருந்தமையை அக் கதையே கூறுகின்றதே! இனி, ஐஞ்சிற்றரசர் துணைக்கொண்டு பாண்டியன் ஆண்டதினாற் பெற்ற பஞ்சவன் என்னும் பெயரும், பாண்டவரைக் குறிக்கும் பஞ்சவர் என்பதனோடு தொடர்புடையதன்று. பாண்டவரைக் குறிக்கும் சொல் என்றும் பன்மை வடிவிலேயே நிற்கும். ஆகவே, அஞ்சவன் என்பதே பஞ்சவன் என்று ஆரியரால் திரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். பஞ்சவர் என்றும் ஐவரே. பஞ்சவனே ஐவரோடு சேர்ந்த ஆறாமவன். பாண்டி என்னுஞ் சொல்லின் வேர்ப்பொருள் வட்டம் என்பதே. வட்டம் என்பது உருட்சியையும் திரட்சியையும் குறிக்கும். காளை உருண்டு திரண்டிருப்பது. அது குண்டா யிருப்பதால் குண்டை யென்றும், விடைத்திருப்பதால் விடை யென்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க. விடைத்தல் = பருத்தல். (தமிழ் வரலாறு, பாவா. பக். 42, 43) பாதக்கூடு: மாந்தர் உறுப்புகளில் நிற்க, நடக்க நிலத்தொடு பதிந்து இயங்கும் உறுப்பு பாதம் ஆகும். பதியும் உறுப்பு பாதம்; அது நடையிடுதலால் பதிந்த தடமும், பல்கால் நடத்தலாலும் பலர் நடத்தலாலும் ஏற்பட்டது பாதை. பாதத்தைத் தன்னுள் கொண்டு வெளித்தோன்றாது மறைத்துக் கொள்ளுமாறு பூண்டது பாதக்கூடு. கோயில் மருளாடி முள்மரவடி, பாதக்குரடு எனப்படும். ஒருவர்பால் ஒருவரை அடைக்கலப்படுத்தி வைத்தல் பாதுகாப்பு எனப்படல் உண்டு. எ-டு: பாதக் காப்பினள் பைந்தொடி ஆதலின் ஏதம் இன்று (சிலப். 14:23). அடிமுதல் முடிவரை கூறுதல் பாத ஆதி (பாதாதி) ஆகும். சிற்றிலக்கிய வகையுள் ஒன்று பாதாதி கேசம். பாதாதி முடி (பாதாதி கேசம்): கலிவெண்பாவால் அடிமுதல் முடியளவும் கூறுவது பாதாதி கேசமாகும். கால்முதல் முடிவரை கலிவெண் பாவாற் பாடுவது பாதாதி கேசம் ஆகும் என்மனார் அறிந்தசி னோரே - முத்துவீ. 1106 பாத்தூண்: பகுத்து உண்பதைப் பாத்தூண் என்பார் திருவள்ளுவர். பாத்தல் பகுத்தல். நீர்ப் பாய்ச்சுவதற்காக நிலத்தைப் பகுத்து வரப்பு வாய்க்கால் அமைப்பது வழக்கம். அதனைப் பாத்தி கட்டுதல் என்பர். ஆங்கும் பகுத்தல் வழிவந்த சொல்லே அது. பகுத்து அறியும் அறிவு, பகுத்தறிவு. அச்சொல் பாத்து என மாறிற்றில்லை. அது போல் பகுத்துண்டு என்னும் மாறாத சொல்லாட்சியும் திருக்குறளில் உண்டு. ஆக இருவகை வழக்குகளையும் கண்டு கொள்ளத் திருக்குறள் உதவுகிறது. பாந்தம்: குழி, பள்ளம், ஓட்டை என்னும் பொருள்களில் குமரி மாவட்ட வட்டார வழக்காகப் பாந்தம் என்னும் சொல் வழங்குகின்றது. பாத்தி என்னும் பொருளில் நெல்லை, முகவை மாவட்ட வழக்குகளில் உள்ளது. பா என்னும் முதனிலை விரிவுப் பொருள் தருவது. அகன்ற குழி, பள்ளம், பாத்தி என்பதை விளக்கும். உரியதும் முறையானதுமாம் அன்பைப் பாந்தம் என்பது ம.வ. பெண்ணைப் பாந்தமாக நடத்து. பாந்தள்: பாந்தள் = பாம்பு; பரவிய படத்தையுடைய நல்ல பாம்புக்குப் பாந்தள் என்னும் பெயர் ஏற்பட்டு, மற்றைப் பாம்பையும் குறிக்கும் பொதுப்பெயர் ஆயது. பாம்பு படமெடுத்தாற் போலத் தோன்றும் கொடி பாந்தள் எனப்பட்டது. அதனை நெருங்கவோ தின்னவோ விலங்குகள் அஞ்சும். வெண்கோட் டியானை விளிபடத் துழவும் அகல்வாய்ப் பாந்தள் படாஅர்ப் பகலும் அஞ்சும் பனிக்கடுஞ் சுரனே - அகம். 68 பாந்தள் என்பதன் விளக்கம் அகல்வாய்ப் பாந்தள் என்பதில் புலப்படும். பா என்பது பரவிச் செல்வம் ஓசை என்பது எண்ணத்தக்கது. படாஅர் = படர்கொடி. பாம்பிஞ்சு: பூம் பிஞ்சு என்பது பொது வழக்கு. பிஞ்சும் பூவும் இணைந்து நிற்கும் நிலை. வெள்ளரிப் பிஞ்சில் பூம்பிஞ்சை விரும்பியுண்பது வழக்கம். பூம் பிஞ்சு என்பது செட்டி நாட்டு வழக்கில் பாம்பிஞ்சு எனப்படுகிறது. பாவுதல் என்பது ஒன்றி அல்லது பரவி இருத்தல். பூவொடு ஒன்றி இருக்கும் பிஞ்சு பாம் பிஞ்சு எனப்பட்டிருக்கலாம். பாம்பிஞ்சு = மிகப் பிஞ்சு. பாம்பு: பா > பாம்பு = விரிந்தகன்ற படத்தை யுடையது. பாந்தள் என்பதும் அது. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும் நாகம் = நாகப்பாம்பு, நல்லபாம்பு. பாம்பேறி: கிணறுகளின் உள்ளே பாறை கண்ட அளவில், ஆள் நடமாட்டம் கொள்ளுமளவு இடம் விட்டுச் சுவர் எழுப்புவது வழக்கம். அச் சுற்றுவெளிக்கு ஆளோடி என்பது பெயர். இது கல்வெட்டுகளிலும் உண்டு. பழனி வட்டாரத்தார் ஆளோடி என்பதைப் பாம்பேறி என்கின்றனர். நெல்லை, முகவை மாவட்டங்களில் பாம்புரி என்பர். பாம்பின் சட்டை அப் பகுதியில் கிடத்தல் கண்டு அப் பெயரீடு உண்டாகியதாம். பாய்கால்: தண்ணீர் பாய்கின்ற வாய்க்கால் தமிழகம் அறிந்தது. மடைவாய் வழிவந்த கால் ஆதலால் வாய்க்கால் எனப்பட்டது. அது நிலத்தில் நீர்பாய்வதற்குரிய காலாக இருப்பதால் பாய்கால் என வழங்கினர் யாழ்ப்பாணத் தமிழர். பாய்ச்சல் நடக்காது: பாய்ச்சல் நடக்காது = சூழ்ச்சி நிறைவேறாது. ஆடு மாடுகளைப் பாய்ச்சல் காட்டி முட்டிக் கொள்ள விட்டு வேடிக்கை பார்ப்பது விளையாட்டுப் பிள்ளைகள் வேலை. விளையாட்டால் வினையாக்க நினைவார் வேலையுமாம். பாய்ச்சல் காட்டலாம். ஒருவரோடு ஒருவர் முட்டி மோதிக் கொள்ளவும், தீராப் பகையாய் முட்டிக் கொள்ளவும் செய்தலில் மாறா இன்பம் காணும் மனத்தர் அவர். அவர்தம் இயல்பைப் பாய்ச்சல் காட்டப் படுவாருள் எவரேனும் ஒருவர் தெளிந்து காண்பவராக இருந்தால், அந்தப் பாய்ச்சலை இங்கே காட்டாதே; உன் பாய்ச்சல் இங்கே நடக்காது என வெளியாக்கி விடுவர். பாய்ச்சல் காட்டாமலே பாய்ச்சல் நடத்துவது பாச்சை. அதன் வாழ்வே பாய்ச்சல். இப் பாய்ச்சல் கேட்டை ஆக்குவதன்று, அப் பாய்ச்சலால் அங்கே முட்டு இல்லையே! பார தூரம்: பாரம் = தாங்கிய நிலை. தூரம் = தொடர்ச்சி நிலை. பாரதூரம் தெரியாதவன் என்பதொரு பழித்தொடர். நம் குடும்பத்தை இதுவரை தாங்கி உதவியவர் யார் என்பதைத் தெரிந்திருந்தால் அதற்கு ஏற்றபடி நன்றியோடு இருக்கத் தோன்றும். அது போல் நம் குடும்பத்திற்கும் இக் குடும்பத்திற்கும் உள்ள முன்பின் தொடர்புகளை அறிந்து கொண்டாலும் அதற்கு ஏற்றபடி உதவியாக வாழ்ந்து கொள்ளத் தோன்றும்? அவ்விரண்டும் அறியாதவனுக்கு என்ன தோன்றும் என்னும் வினாவில் பிறந்தது இப் பழித்தொடராம். பாரம் = தாங்குவார்; தூரம் = பழந்தொடர்பார். பாரி: உயிர்க்கு ஊதியமாவன ஈதலும் இசைபட வாழ்தலும் என்றார் பொய்யா மொழியார். இம்மொழிக்கு ஏற்பச் சங்க நாளில் வாழ்ந்த பெருமக்களை எண்மர் என எண்ணிக் கணக்கிட்டனர். அவருள் தலைமையாளன் பாரி. பாரியின் புகழ் முல்லைக்குத் தேர் ஈந்தது என்பதை நாடறியும். இப் பாரியொடும் சேர்த்து, இணைத்து எண்ணப் பெறுபவன் பேகன்; அவன் மயிலுக்குப் போர்வை வழங்கிய வள்ளியோன். ஏனை அறுவரினும் இவ்விருவர் புகழும் புலவர்களால் பெரிதும் போற்றப் பெறுதல் கண்கூடு. முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - பழமொழி. 74; புறப்.பொ.வெ. 194 எண்மருள் பாரியும், பேகனும் எடுத்தோதிச் சிறப்பிக்கப் பெறுவது ஏன்? முல்லையும், மயிலும் மொழித்திறம் அறியா உயிரிகள்; அவை தேடி வந்து பாடிப் பரிசு வேண்டியன அல்ல; அவற்றைத் தாமே கண்டு, தண்ணளியால் வழங்கப் பெற்றன தேரும், போர்வையும்! தேடி வந்து பாடி நின்ற புலவர்க்கும் கூத்தர்க்கும், பிறர்க்கும் வழங்கும் கொடைகளினும் இவற்றுக்கு வழங்கிய கொடை அளப்பரும் வளப்பெருமை வாய்ந்தது; ஆகலின் தனிச் சிறப்புற்றன. பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி - புறம். 200 என்றும், உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅ மஞ்ஞைக் கீந்த எங்கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் - புறம். 141 என்றும் இவை புறப்பாடல்களால் பாராட்டப் பெறுகின்றன. இவற்றைப் பாடியவர்களோ முறையே கபிலபரணர் என்று சான்றோரால் சிறப்பிக்கப் பெறும் சீர்த்தியர். முல்லை, மயில் ஆகியவற்றுள்ளும் முல்லை ஓரறிவுயிரி; மயிலைப் போல் இடம்பெயர்தல் அறியாதது; அன்றியும் ஐயறிவு மயிலைப்போல் களிப்பும் கவலையும் பிறவும் வெளிப்படக்காட்ட அறியாதது; உணர்வு நிலையில் மிகக் குறைந்தது. இருந்தும் தான் உணர்ந்த உணர்வே உருவாய் உருகி நின்று, அப் பேரருள் பெருக்கத்தால் அதற்குத் தேர் தந்த பெருமகன் பாரிவேள் ஆகலின் பேகனினும் அவன் முதன்மை யுற்றான். பாரியின் சிறப்பு முல்லைக்குத் தேரளித்த அளவில் நின்றுவிடவில்லை. தனக்கு உரிமையாக இருந்த முந்நூறு ஊர்களையுமே முழுமையாகப் பரிசிலர்க்கு வாரி வழங்கி விட்டான். அவன் வழங்காமல் வைத்திருந்தது பறம்பு மலை ஒன்று மட்டுமே! அன்றியும், தன்னையும், தன் உயிரன்புப் புலவர் கபிலரையும் பிறர்க்கென வழங்கினான் அல்லன். அதனைக் கபிலர் பெருமானே, முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டுநீர் பாடினிர் செலினே - புறம். 110 என்று பாடுவதால் அறியலாம். இத்தகு மேதக்க கொடையாளன் பாரி என்னும் பலர் புகழ் பெயர் தாங்கிய பெற்றியை அறிதல், பெருகிய இன்பம் பயப்பதுடன் முந்தையோர் பெயர் சூட்டும் திறத்தை அறிந்து மகிழ்தற்கும் வாய்ப்பாம். பார் என்னும் சொல்லுடன் இ எனும் இறுதி நிலை இணைந்து பாரி என்னும் பெயர் அமைந்ததாம். காரி ஓரி என்னும் பெயர்களும் இவ்வாறு அமைந்தனவே. பார் என்பது பரவுதல் பண்பால் அமைந்த பெயர். அனைத்துப் பொருள்களையும் நீர்ப்பரப்பையும் அடக்கிப் பரந்து கிடக்கும் உலகம் பார்; வண்டி, தேர் ஆகியவற்றின் அச்சின்மேல் பரவிக் கிடக்கும் பலகைப் பரப்பு, பார்; நீர் பாய்ச்சுதற்காக நெடிதகன்ற பரப்புடையதாகச் செய்யப் பெற்றதும் பல பாத்திகளைத் தன்னகத்துக் கொண்டதும் ஆகிய நிலப் பரப்பு பார்; அகன்று விரிந்த கல்லும், கல் நிலமும் பார்; ஆழ்ந்து நோக்குதல் இன்றி அகன்று நோக்குதலே பார்த்தல். இனிப் பாரி என்னும் சொல்லும் பரவுதல் பண்பாலேயே கட்டில், கடல், உடற்பருமை, உடை, பூந்துகள், புவி ஆகியவற்றைக் குறிக்கும். புகழ் பரப்பும் இல்லாளைப் பாரி என்பதும் இக் கரணியம் கொண்டேயாம். புகழ்புரிந்த இல்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை என்பது திருக்குறள் (59). பாரித்தல் என்பது விரித்துரைத்தல், பரப்புதல், வளர்த்தல், மிகுதல் முதலிய அகன்மைப் பொருளிலேயே வரும். அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும் திங்கள் - நாலடி. 151 பகல்செல் மண்டிலம் பாரித்தாங்கு - பெரும். 442 தந்நலம் பாரிப்பார் - திருக். 916 பயனில பாரித் துரைக்கும் உரை - திருக். 193 பாரிய பராரை வேம்பு - நற். 218 என்பவற்றை நோக்குக. ஓங்கு தாங்காக உள்ள மரம் பாரியான மரம் என்றும், ஓங்கு தாங்காக உள்ளவர் பாரியானவர் என்றும் இன்றும் வழங்கப் பெறுவதை அறிக! இவற்றை நோக்குவார், பாரி என்னும் பெயர்ப் பொருளின் நயம் நன்கறிந்து மகிழ்வர். பாரி, உடலால் பரியவன்; உருவால் உயர்ந்தவன்; பரந்தகன்ற மார்பினன்; தடநெடுங் கையினன்; பரந்தோங்கு புகழாளன் இவற்றைக், கூர்வேல் குவைஇய மொய்ம்பில் தேர்வண் பாரி - புறம். 118 தேர் வீசிருக்கை நெடியோன் - புறம். 114 நெடுமாப் பாரி - புறம். 201 மலர்ந்த மார்பின் மாவண் பாரி - பதிற். 61 இலங்கு தொடித் தடக்கைப் பாரி - புறம். 337 பரந்தோங்கு சிறப்பிற் பாரி - புறம். 200 என வருவன தெளிவித்தல் அறிக! பரந்து விரிந்த உலகினும், பரந்து விரிந்தது புகழ் என்பதை மண் தேய்த்த புகழ் என்னும் இளங்கோவடிகள் வாக்காலும் (சிலப். 1.36) அதற்குப் பூமி சிறுகும்படி வளர்ந்த புகழ் என்று அரும்பத உரையாசிரியரும் மண்ணைத் தொலைத்த புகழினையுடையான்; புகழ்வளரப் பூமி சிறுகலான் என்று அடியார்க்கு நல்லாரும் வகுக்கும் உரைகளாலும் கண்டு கொள்க! பரவிய புகழுக்கு ஒருவனாகப் பாரி திகழ்ந்தான் என்பதைப் பாரி பாரி யென்றுபல வேத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் - புறம். 107 என்று கபிலர் குறிப்பதால் அறிக! பண்டைத் தமிழ் வேந்தரும், புலவர் பெருமக்களும், பொதுமக்களும் தம் மக்களுக்குப் பொருள் நலம் சிறந்த பெயர்களைச் சூட்டித் தமிழ்வாணராகத் திகழ்ந்த சிறப்பை அறிந்து மகிழ்க! அம் முறைமையைப் போற்றி முத்தமிழ் வளர்க்க! பாரிய: பரிய > பாரிய. பாரிய போர்க்கருவி விற்றனர்; அதன்பொருள் ஈட்டல் பற்றி எண்ணினரே அன்றி, உயிரழிவுக்கு உரியதெனச் சற்றும் எண்ணினாரல்லர் ம.வ. பரியது கூர்ங்கோட்டது - திருக். 599 தமிழகத்தில் இலக்கிய வழக்காக இருக்கும் பாரிய என்னும் சொல், ஈழத்தில் பொதுமக்கள் வழக்காகவும் ஊடகங்களின் வழக்காகவும் பயில வழங்குகின்றது. பார்ப்பான்: இப்பெயர் குடிப்பெயராக இந்நாள் வழங்குகின்றது. ஆனால் நூல் ஓதுவார்க்குரிய பொதுப்பெயர் என்பதைத் திருவள்ளுவர் அருள்கின்றார். ஓதும் கடமையை மேற் கொண்டவன் பார்ப்பான். அவன் ஓதுதலை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கண்டு கொள்ளலாம். ஆனால், ஒழுக்கம் தவறிவிட்டானே ஆனால் அவன் ஓதும் தொழிலுக்கே இழிவாகும் என்கிறார். பொச்சாப்புப் பார்ப்பார் (திருக். 285) என்பதில் வந்துள்ள பார்ப்பார் என்ன பொருளைத் தருமோ, அதே பொருளையே பார்ப்பான் என்பதும் (திருக். 134) தரும். கணியம் (சோதிடம்) பார்த்தல், ஏடு பார்த்தல், குறி பார்த்தல் என்னும் வழக்குகளை அறிக. தம்போற் பிறரைத் தாம்பார்ப் பாரே பார்ப்பார் என்பார் சிவஞான யோகிகள் (தமிழக ஒழுகு). பார்ப்பார் வகை உலகிற்கு அருத்திஉண் உயர்ஏர் உழவர், நிறுத்துப் பொருள்அருள் நிறைகோல் உழவர், வெற்றி நிலையிடும் விறல்வில் உழவர், திறம்பாது நடுநிற்கும் செங்கோல் உழவர், முப்பொருள் மெய்தேற்று முதுநூல் உழவர், நாற்பொருள் நெறிநிறூஉம் நலத்தசொல் உழவர், அறுவகைப் பார்ப்பார் ஆவார் இவரே - தமிழக ஒழுகு 1286-92 பார்ப்பு: பறக்கும் பறவையின் குஞ்சின் பெயர் - இளமைப் பெயர் - பார்ப்பு என்பதாம். பார்ப்பும் பறழும்... ... ... இளமைப் பெயரே- தொல். 1500 அது மக்கள் இளமையின் பெண்பாற் பெயராய்ப் பார்ப்பு > பாப்பு > பாப்பா என வழங்கலாயிற்று. பாப்பா என்னும் பெயர் கொண்டாரும் உளர். ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா எனும் பாரதியாரின் பாடல் பாப்பாப் பாட்டு எனவே வழங்கலாயிற்று. பாலம்: பால் + அம் = பாலம். பால் = பக்கம்; மேல்பால், கீழ்பால்; தென்பால், வடபால். அப்பாலையும் (அப் பக்கத்தையும்), இப்பாலையும் (இப் பக்கத்தையும்) இணைப்பது பாலம். இடத்தை இணைக்கும் இப் பாலம் போல இருவரை இணைத்து வைப்பதும் பாலமாம். எங்களுக்குள் தகராறும் பகையும் வழக்குமாக இருந்ததை இவர் பாலமாக இருந்து தீர்த்து வைத்தார் என்பது ம.வ. பாலம், பாலக்கரை, பாலப்பட்டி என ஊர்ப்பெயர்களும் ஆயின. பாலர்: பால் + அர் = பாலர் = பால்பருகும் பருவத்தர். இளம்பாலர், பாலர்; இளம்பாலர் பள்ளி, பாலர் பள்ளி; இளம்பாலர் வகுப்பு, பாலர் வகுப்பு; இளம்பாலாசிரியர், பாலாசிரியர். இவையெல்லாம் கழகக்கால ஆட்சிகள். மதுரை இளம்பாலாசிரியர் சேந்தங் கூத்தனார் - பழம்புலவர் பெயர். பாலன், பாலகுமரன், பாலு இக்காலப் பெயர்கள். பாலாடை: பாலின்மேல் படியும் ஆடையைப் பாலாடை என்பது பொது வழக்கு. பாலாடை என்பது சங்கு என்னும் பொருளில் கும்பகோண வட்டார வழக்கு உள்ளது. பாலடை என்பது பாலாடை எனப்பட்டிருக்கலாம். குழந்தைக்குப் பால் விட்டுப் புகட்டும் (ஊட்டும்) சங்கு. ங்கு என மக்களால் வழங்கப்பட்டது. சங்கை, ஊட்டி என்பதும் வழக்கு. ஊட்டி என்பது கண்டம் என்னும் கழுத்துறுப்புமாம். பாலாடை போலும் நூலாடை நெய்தவர் பழந்தமிழர் என்பார் திரு.வி.க. பாலிகை: பால் > பாலி > பாலிகை = வெள்ளை வெளேர் என்னும் பயிர் முளை. பால் = வெண்மை. முளைப்பாலிகை என்னும் அது, முளைப்பாரி என மக்களால் வழங்கப்படுகிறது. பாலிகை, இலக்கிய ஆட்சி. நிழலிலேயே சட்டி கலயம் பானைகளில் விதையைப் பாவி (பரவி) வளர விடுவதால் அதன் இயல் கருதி முளைப்பாலிகை எனப்பட்டது. பாலிகை கோயில் விழாவுக்கும் மங்கல விழாவுக்கும் ஊரவர் பலரும் ஓரிடத்தில் தனித்தனியே வளர்த்து வருவதாகும். அவரவர் பாலிகையை அவரவர் எடுத்துத் தலைமேல் கொண்டு வரிசையாக வருதல், ஓரிடத்து வைத்துப் பண்ணிசைத்து ஆடல் பாடல் என்பவை பழங்காலம் தொட்டு இற்றை நாள் வரை உள்ள நடைமுறை. பாலிதம்: பால் + இதம் = பாலிதம் > பாளிதம். பால்விட்டுக் காய்ச்சி இனிப்பும் மணப்பொருளும் கலந்து ஆக்கப்பட்ட பால் பொங்கல் அல்லது பாற்சோறு பாலிதம். இதமாவது இனிமை. அது லகரம் ளகரமாகத் திரிந்து வழக்கில் ஊன்றிவிட்டது. அதன் பழவடிவு பாலிதமாம். உரைகாரரும் நூலாசிரியரும் மக்களும் பாளிதத்தையே கொள்வாராயினர். பாலூற்றல்: பாலூற்றல் = இறுதிக் கடன் செய்தல். இறந்தார்க்கு எரியூட்டிய பின்னரோ புதைத்த பின்னரோ மறுநாள் செய்யும் கடன்களில் ஒன்று பாலூற்றல் என்பதாம். உயிர் ஊசலாடும் போதும் பாலூற்றல் உண்டு. பால் இறங்குகிறதா இல்லையா என்று பார்த்து உயிர் நிலை அறியும் வழிப்பட்டதாம். இறுதிக்கடன் பால் தெளிப்பு, இறந்தவர் உயிர் அமைதி யுறுக என்பதன் அடையாளமாகலாம். பால் மங்கலப் பொருளாகவும், தெய்வப் பொருளாகவும் தூய்மைப் பொருளாக வும் கொள்ளப்படுவதை வழக்குகளால் அறியலாம். பாலூற்று, பாலாறு, பால்குடம் என்பவை பெயரீடுகள். பாலை: பாலை:1 பாலை, நாருடைய பட்டையைக் கொண்டது. பட்டை உரித்த மரக்கொம்பு வெண்மையானது. பூக்களும் வெண்மையானவை. கொடிறு போன்ற காயை உடையது. கொடிறு = பற்றுக்குறடு. காய் நெற்றாகி ஒலி செய்வது. பிடிபிளந் திட்ட நாரில்வெண் கோட்டுக் கொடிறுபோல் காய வாலிணர்ப் பாலைச் செவ்வளி தூக்கலின் இலைதீர் நெற்றம் கல்லிழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் - நற். 107 பால் நிறக்கொம்பு, பால் நிறப்பூ உடையது பாலை ஆயிற்று. வெள்பாலை (வெட்பாலை) தந்தப் பாலை என்பனவும் பாலையின் பெயர். பாலை நின்ற பாலை நெடுவழி - சிறுபாண். 11 பாலை:2 மழை வறந்து வளம் குன்றிய மலையும் காடும், அவை சார்ந்த இடங்களும் ஆங்குச் சிறந்து விளங்கிய பாலைக் குறுந்தூறு, செடி கொடிகளால் பாலை எனப் பெயர் கொண்டன. அப் பாலைப் பிரிவு ஒழுக்கப் பிரிவுக்கும் பெயராயிற்று. பால் என்பது ஒரு முழுமையைப் பகுத்து வைக்கப்பட்ட பகுப்பு. உயிரினத்தை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் எனப் பகுத்தது; திசைகளை மேல்பால், கீழ்பால், தென்பால், வடபால் எனப் பகுத்தது. இப்பால் உப்பால் அப்பால் எனச் சுட்டியது; நூலை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் எனப் பகுத்தது. இருவேறு உலகத்து இயற்கையாம் ஊழைப் பால், பால் அல்ல எனப் பிரித்தது (திருக். 376); அம்மம் ஊட்டும் அம்மை அமிழ்தப்பால் முதல் பல்வேறு பால் வகையாயது, இப் பாலையும் அப் பாலையும் இணைக்கப் பாலம் அமைத்தது; இடப்பால் வலப்பால் எனத் தன்னொடும் இடத்தை இயைத்தது என்பவை எல்லாம் பிரிவாயமையாலும் பிரிப்பு ஆயமையாலும் பிரிவொழுக்கமும் பாலை எனப்பட்டதாம். பாலை பாடுதலில் வல்லார் பாலை பாடிய பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ என்பார். அகநானூற்றில் செம்பாதி பாலைப் பாடல் (200 பாடல்). பால்: பகல் > பால். நாள், இரவு பகல் என இருபிரிவுடையது. பகல், நாளில் ஒரு பிரிவு - பகுதி - பக்கம் ஆயமையால் பலபொருள் தருவதாயிற்று. ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால். திருக்குறள் = முப்பால். அப்பால் = அப் பக்கம்; இப்பால் = இப் பக்கம். உணவு நீர் குருதி முதலியவற்றில் இருந்து பிரிந்து வந்த தாய்ப்பால், ஆட்டுப்பால், மாட்டுப்பால்; மற்றைப் பிழிவுகளாம் தேங்காய்ப்பால், மாங்காய்ப்பால் முதலாம் சாறுவகை. பால் = வெண்மை; பால்நிலா = வெண்ணிலா. பால்நுரை. சுவை. பால்மொழி (பான்மொழி) = இனிய மொழி. பாலொடு தேன்கலந் தற்றே என்பது திருக்குறள் (1121). பால்மரம்: பால்மரம் = ஆலமரம். அரசு, ஆல், அத்தி, இத்தி என்பனவும், கள்ளி, எருக்கு என்பனவும் பந்து முதலியவை செய்தற்குரிய பால் தரும் மரமும் பால் தருவனவாய் இருப்பினும் பால்மரம் என்பது, ஆலமரத்தைச் சிறப்பாகக் குறிப்பதே வழக்கமாயிற்று. கால்மரம், பழமரம் (பழமைமரம்), முதுமரம் முதலனவும் ஆலமரமேயாம். தொன்மரம் - தொன்மூதாலம் - என்பதும் அது. பாவம்: பா + அம் = பாவம். பா, விரிவுடையது. பா = பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. கீரை பாவுதல் என்பது கீரை வித்தை நிலத்தில் பரவத் தெளித்தல் என்னும் பொருளது. ஒரு குற்றம் செய்து அக்குற்றம் மறைக்கக் குற்றம் செய்து பரவுவதால் பாவம் எனப்பட்டது. விரிந்த படத்தை உடையதால் பாம்பு, பாந்தள் என அரவத்தின் பெயர் ஆயின. நெசவுக்குத் தறியில் போடும் நூல் பரவலாகப் போடப்படுதலால் பாவு போடுதல் எனப்படும். இடுப்பில் சிறுத்து காலின்கீழ் விரித்துத் தைக்கப்படும் சிறுமியர் உடை பா ஆடை, பாவாடையாம். பாவாடை: பா + ஆடை = பாவாடை. இடை குறுகி விரிந்து பரவிய ஆடை, பாவாடை எனப்படுதல் பொதுவழக்கு. பாகடை (பாகால் செய்யப்பட்ட படையல்) என்பது திருக்கோயில்களில் பாவாடை என வழுவாக வழங்கப்படுகின்றது. கோடைக்கானல் வட்டாரத்தார் கத்தரிக் காயின் காம்பு சூழ்ந்த மேல் தோட்டினைப் பாவாடை என உவமை நயம் சிறக்க வழங்குகின்றனர். பாவடை (பா + அடை) என்பது பகுக்கப்பட்ட கூந்தல் வகிடு என்னும் பொருளில் நெல்லை மாவட்ட வழக்கு உள்ளது. பாவி: பா + இ = பாவி. பாவி என்பது பொதுவழக்கு வசைச்சொல். அழுக்காறு எனஒரு பாவி என வள்ளுவம் வழங்கும் (திருக். 168). பாவி என்பதற்குப் பாய் என்னும் பொருளை ஒட்டன்சத்திர வட்டாரத்தினர் வழங்குகின்றனர். பரவிய அமைப்பினது என்னும் பொருளில் வருவது. நாற்றுப் பாவுதல், பாவு போடுதல் என்பவை பரவுதல் பொருளவை. பாவுள்: பா + உள் = பாவுள். நெடிய அகன்ற வீட்டின் உள்ளே பாதுகாப்பாக அமைந்த அறையைப் பாவுள் என்பது பார்ப்பனர் வழக்கு. பரவிய மனையின் உள்ளிடமாக அமைந்தது என்னும் பொருளது அது. பாவை: நூல் வகையுள் ஒன்று பாவை, பாவைப்பாட்டு என்பதும் இது. பாவையன்ன கன்னிப் பெண்கள் நன்மழை பொழிந்து நாடு செழிக்கவும், வீடும் குடியும் விளங்கவும், காதற் கணவனை எய்திக் கவினவும் நோன்பு கொண்டு, தம்மன்ன பாவையரையும் எழுப்பிச் சென்று பாவையுருச் செய்து வழிபட்டு நீராடுவதாக அமைவது பாவை என்னும் நூல்வகைச் செய்தியாம். வெண்டளையான் இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பாவாற் பாவைப் பாட்டு வரும் என்பதை மணிவாசகர் அருளிய திருவெம்பாவையானும், ஆண்டாளம்மையார் அருளிய திருப்பாவையானும் அறிக. திருவெம்பாவை 20 பாடல்களாலும், திருப்பாவை 30 பாடல்களாலும் அமைந்தனவாம். ஒவ்வொரு பாட்டும் எம்பாவாய் என்னும் நிறைநிலை எய்தும். கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோங் கேட்டிலையோ வாழியீ தென்ன வுறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய் என்பது திருவெம்பாவையுள் எட்டாம் பாட்டு. ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்குபெருஞ் செந்நெ லூடு கயலுகளப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் என்பது திருப்பாவை மூன்றாம் பாட்டு. பாழி: பூழி நாட்டார் சிறுகுளத்தைப் பாழி என்பர் என்பது நன்னூல் உரை (273). பாழி என்பது காவல்மிக்க ஊரைக் குறிக்கும் என்பது, சூழி யானைச் சுடர்ப்பூண் நன்னன் பாழி அன்ன கடியுடை வியன்நகர் என வரும் அகப்பாடலால் விளங்கும் (15). பாழி வலிமைப் பொருளதாதல், படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமத்தானும் என வரும் தொல்காப்பியத்தால் விளக்கமாம் (1018). அமணர், தாம் தங்கிய முழை (குகை)யையே உறைவிடமாய்க் கொண்டனர். அவர்தம் படுக்கை இடம் பள்ளமாகத் தோண்டப்பட்டது. அப் பள்ளம் பாழி எனப்பட்டது. அமண் பாழி என வழங்கலாயிற்று. அவ்வாறே, பள்ளமாகத் தோண்டப்பட்ட சிறுகுளம் பாழி எனப்பட்டமை பொருளொடு பொருந்திய ஆட்சியாம். சிற்றூர்ச் சிறுகுளம் ஊரவர் கட்டுக் காவல் மிக்கது என்பது தெளிவான செய்தி. பாழும் பழியும்: பாழ் = வெறுமை. பழி = வசை. ‘v‹d g£L v‹d brŒtJ? எஞ்சியது பாழும் பழியுமே என ஏக்கமிக்கோர் தம் நிலைமை எண்ணித் துயர் உறுவர். முயன்று முயன்று தேடியும், தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் கடன்மேல் கடன்பட்டுக் கலங்குவாரும், எவ்வளவுதான் தம்மால் முடியுமோ அவ்வளவு உதவியும், அதனை நினையாமல் உண்மை நிலைமை உணராமல் பழிக்கு ஆட்பட்டாரும், தம்மை நொந்து, நமக்கு மிஞ்சியது பாழும் பழியுமே என்பது, மிகுதியாகின்றதே அன்றிக் குறையும் நடைமுறை நாட்டில் இல்லை. பாழ்: வளியாகிய காற்றும் வழங்காத வான்வெளி பாழ் எனப்படும். ஒன்றென இரண்டென... ... ... பாழென - பரிபா. 9 ஒன்றுமில்லாமல் போனவனைப் பாழாய்ப் போனான் என்றும் பயனற்றுப் போனதைப் பாழாய்ப் போனது என்றும் சொல்வது ம.வ. பாளையம்: பாளையம் = பாசறை, படை தங்குமிடம். பாளை = தெங்கு முதலியவற்றின் பூவை மூடிய மடல். கருவில் இருக்கும் பருவம். பாளையாம் பருவம் செத்தும் (குண்டல.) பாளையம் = இலை, தழை, துணி முதலியவற்றால் மூடிய பாசறை. நாயக்கர் காலத்தில் படைகள் தங்கியிருந்த இடம் பாளையம் எனப்பட்டும் பின்னர் அவ்விடம் ஊராகிய போது பாளையம் முன்னொட்டுடன் ஊர்ப்பெயராயிற்று. உத்தமபாளையம், கச்சரா பாளையம், புதூர்பாளையம், வாழ்மால் பாளையம் முதலிய ஊர்ப்பெயர்கள் தமிழகத்தில் உண்டு. பாளையப்பட்டு என்பதும் அது. பாறு: பெருவட்டமிட்டு வானில் பறக்கும் பருந்து பாறு எனப்படும். தலைமுடி கோதப்படாமல் அகன்று கிடந்தால் அத் தலை பாறு மயிர்க்குடுமி எனப்படும். இது இலக்கிய வழக்கு. பாறுமயிர்க்குடுமி எண்ணெய் நீவி புறம் (279). பரட்டைத்தலை என்பது ம.வ. பாறை: பாறை:1 பாறை என்பது கெட்டியுள்ள மண், மணல், கல் என்பவற்றையுடையது. மட்பாறை, மணற்பாறை, கற்பாறை என்பவை அவை. இப் பாறை குளம் என்னும் பொருளில் கீழைச் செவல்பட்டி வட்டார வழக்காக உள்ளது. பாறையின் ஊடு அமைந்த குளம் பாறை ஆயது. கல் குளம் குமரி மாவட்ட ஊர்களுள் ஒன்று. பாறை, மலை ஆயவற்றின் இடையே உள்ள நீர்நிலை சுனை எனப்படுதல் பொதுவழக்கும், இலக்கிய வழக்குமாம். பாறை:2 பாறை = தடை, வல்லுள்ளம். நீர் ஓட்டத்தைத் தடுக்கும் தடையாகப் பாறை அமை கின்றது. ஒரு வீரன் தாக்கும் போது தன்னைக் காத்துக் கொள்ள விரும்பிய ஒருவன் ஒரு பாறையைக் கவசம் (மெய்ம்மறை) போலக் கொண்டான். நீ மலையையே மறைப்பாகக் கொண்டாலும் தப்ப மாட்டாய் என்று வஞ்சினம் மொழிந்தான் வீரன் என்பது தகடூர் யாத்திரை. பாறையின் இத்தடுப்பினால் அதற்குத் தடை என்னும் பொருள் வழக்கில் உண்டாயிற்றாம். பாறையாக அவர் நிற்கும் போது நாம் என்ன செய்வது என்பது இயலார் ஏக்கம். அவரோர் பாறை என்பது வல்லுள்ளமாம் கல்லுள்ளம் குறிப்பது. பானை: பா > பானை. அகன்ற வாயையுடையதாய் வளைந்த மண்கலம் பானை எனப்பட்டுப் பின்னே பல்வகை மாழைகளும் ஈயப்பானை, எல்லியப் பானை, செப்புப்பானை எனப்பட்டன. அகன்ற வாயுடைய பானை சோறாக்கும் கலம். குறுகிய வாயுடைய குடம், நீர் வைக்கும் கலம்.  பி வரிசைச் சொற்கள் பி: பகர இகரம். இதழொட்டுதலால் பிறக்கும் எழுத்துகளுள் ஒன்று. சுவையான வழக்குப் போல், பிறப்பு என்பதன் முதல் எழுத்து உயிரும் மெய்யும் உடனாகி யிருப்பது. உடலை விட்டு உயிர் பிரிந்துவிட்டால் இறப்பு ஆகிவிடும் என்பர். மீகீழ் இதழுறப் பம்மப் பிறக்கும் - நன். 81 மேல் இதழும் கீழ் இதழும் ஒட்டுதலால் பகர மகரங்கள் பிறக்கும் என்பது இதன் பொருள். அப்பா அம்மா இதழொட்டப் பிறக்கும் சிறப்பு, உள்ள சிறப்பினும் மேலும் ஒரு சிறப்பு அல்லவா. பிகுப் பண்ணுதல்: உண்மையாகத் தேவை இருந்து அதனைக் கேட்டு வாங்க வந்த போதும் வாய்விட்டுச் சொல்லாமல், தேவை இல்லை போல் நடிப்பதைப் பிகுப்பண்ணுதல் என்பது நெல்லை முகவை வழக்காக உள்ளது. தற்பெருமை கொள்வதைப் பீற்றிக் கொள்ளல் என்பது போல்வது இது. பிக்கல் பிடுங்கல்: பிக்கல் = பங்காகச் சொத்தைப் பிரித்துக் கொண்டு போதல். பிடுங்கல் = இடையிடையே பங்காளியரும் பிறரும் வலிந்து பறித்துக் கொண்டு போதல். பிக்கல் = பிய்த்தல், பிரித்தல், பொருளுக்கு உரிமை யுடையார் செயல், பிடுங்கல், பொருள்மேல் பற்றால் உரிமை இல்லாரும் இளக்கம் கண்டு வலிந்து பிடுங்கிக் கொண்டு போதல். பிக்கல் பிடுங்கல் எதுவும் இல்லை என்று பாராட்டுவது உண்டு. பிடுங்குதல் வழிப்பறி போல்வதாம். பிசகு: பிசகு:1 பிசகு = குற்றம், பிழை. நீ சொன்னது பிசகான சொல் என்பது ம.வ. பிசகு:2 பிசகு = ஒடிதல், முரிதல். உரிய நிலையில் இருந்து இறங்குதல். கை பிசகிக் கட்டுப் போட்டிருக்கிறான் ம.வ. பிசிர்: பிசிர் ஆந்தையார் என்னும் புகழ்மிகு பழம்புலவர் ஊர் பிசிர். அது கடலின் அருகே அமைந்தது. அப் பிசிர்க்குடி முகவை மாவட்டம் சார்ந்தது. பிசு பிசுப்பு என்பது உவர்த்தன்மையால் உண்டாவது. அகத்தீசுவர வட்டாரத்தில் சிறுநீரைப் பிசிர் என்பது அவ்வுவர்ப்பொருள் வழியதாம். பிசினி: பயின் (பிசின்) போல ஒட்டிக் கொண்டு விடாத தன்மை பிசினித்தனமாக நெல்லை வட்டார வழக்காக உள்ளது. பிசினாரி என்பதும் அது. கருமித்தனம் என்னும் பொருளது. கொண்டதை விடாமல் (பிறர்க்குக் கொடாமல்) வைத்துக் கொள்ளும் குணத்தால் பெற்ற பெயர் இது. பிசின்: பழநாளில் பயின் என வழங்கப்பட்ட அரிய சொல் பிசின் என வழுவாக வழங்குகின்றது. பயின் என்பது சங்க இலக்கியம், பெருங்கதை ஆட்சி. பிசின், கோந்து என்றும் பசை என்றும் வழங்கப்படுதலும் உண்டு. நெல்லையார் அல்வா என்னும் இனிப்புப் பண்டத்தைப் பிசின் என வழங்குவது உவமை வழிப்பட்டதாம். பிசுபிசுப்பு: பிசுபிசுப்பு:1 பசை போல் ஒட்டிக் கொள்வது. என்ன நாற்காலி பிசுபிசுப்பாக இருக்கிறது? எண்ணெய் ஏதாவது கொட்டி விட்டதா? பிசுபிசுப்பு:2 நிலை தளர்தல். மும்முரமாகப் பேசினான். பிறகு பிசுபிசுத்துப் போய்விட்டான். இது மக்கள் வழக்குச் சொல்லும் பொருளும். பிசைதல்: பிசைதல்:1 பிசைதல் = கரைத்தல், கலத்தல். புளியைக் கரைத்தல், மாவைக் கரைத்தல் என்பவை புளியைப் பிசைதல் மாவைப் பிசைதல் என வழங்கப்படும். பிசைதல்:2 கையைப் பிசைதல், கண்ணைப் பிசைதல் என்பவை எதிர்பார்த்தலும் ஏங்குதலுமாம் குறிப்புகள். பிசைதல் மக்கள் வழக்கில் பினைதல் என வழுவாக வழங்குகின்றது. பிசைந்தெடுத்தல்: பிசைந்தெடுத்தல் = வலுவாக அடித்தல், அலைக்கழிவு செய்தல். பிசைதல், கையால் கூழாக்கல், மாவாக்கல் ஆயவற்றைக் குறிக்கும். அடி நன்றாகப் பிசைந்து எடுத்துவிட்டான் என்பது பல்கால் வலுவாக அடித்தல் குறிப்பது. பிசைதல் வாட்டி வருத்துதல் பொருளில் வருவதால் அலைக்கழிவும் குறிப்பதாயிற்று. இல்லை என்றால் விட்டானா? பிசைந்து எடுத்துவிட்டான்; கொடுத்துத் தான் ஒழித்தேன் என்பதில் பிசைதல் பலகாலும் வந்து உதவி கேட்டுப் பெறுதலைக் குறித்தது. பிச்சி: பிச்சி:1 பிச்சன் = பிச்சை எடுக்கும் பெருமாள்; பிச்சன் துணைவியாம் அம்மை, பிச்சி எனப்படுவாள். பிச்சி:2 பித்திகை எனப்படும் மலர்க்கொடி. பித்திகைக் கொழுமுகை ஆணி - சிலப். 8:55 பிச்சை: பிய்த்து > பிச்சு > பிச்சை. பிச்சை:1 பிரித்து வழங்கிய சோறு; காசு. பிச்சை:2 பிச்சை எடுப்பவன். பிச்சை:3 பெயர்; முற்பிறந்தார் இறக்கப் பிற்பிறந்ததேனும் இருக்க இறைவன் அருள் வேண்டி இட்ட பெயர், பிச்சை, பிச்சையாண்டி, பிச்சையம்மாள். தவிடன் என்பதும் இது. பிச்சை முட்டி: பிச்சை= இரந்து வருபவர். முட்டி= முட்டுப்பாடு அல்லது வறுமைக்கு ஆட்பட்டவர். பிச்சை முட்டிகளுக்கு உதவ வேண்டும் என்பதில் சிற்றூர்ச் செல்வர்கள் கருத்துச் செலுத்துதல் கண்கண்ட செய்தியாம். முட்டி - முட்டுப்பாடு அல்லது வறுமை. உதவுவார் இன்மையால் முட்டுப்பாடுறுபவரை முட்டி என்றனர். வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை என்பது வள்ளுவம் (திருக். 221). முட்டிலாப் பெருமை முட்டாப் பெருமையாம் (பட்டினப். 218). பிடவு: பிடவு என்பதொரு குறுமரம். அது பிடா எனப்படும். தடா = தடவு; பலா = பலவு ஆவது போலப் பிடவு பிடா ஆகும். அதன் பூங்கொத்து நெருங்கிப் பெரிதாகத் தோன்றும். அத் தோற்றம் ஒரு பெட்டி போல் இருக்கும். பிழாப் பெட்டி, பேழைப் பெட்டி என்பவை பனை நாரால் பின்னப்பட்ட பெட்டியாம். பழநாளில் திருமணப்புடவை முதலியவற்றைப் பேழையில் கொடுப்பது வழக்கம். இந்நாள் திறவைப் பெட்டி (டிரங்க்) போன்றது அது. தொகுமுகை விரிந்த முடக்கால் பிடவம் - அகம். 344 நெருங்கு குலைப் பிடவம் - அகம். 23 பிடி: முடி சார்ந்தவர் என்றால் என்ன? அவர் அடி சார்ந்தவர் என்றால் என்ன? முடிவில் பிடி சாம்பலாதல் உறுதி; அல்லது பிடி மண் தள்ளப் போதல் உறுதி. பிடி சோறு வழங்குதல் பேரறமாகப் பேசப்படும். அதுவும் குழவிக்குப் பிடி சோறு என்றால் எவரும் இல்லை எனச் சொல்வதே இல்லை. அதனைக் குழவி பலி எனக் கூறுதல் அறநூல் முறை. இறைவனுக்கு நீர்ப்பலி, பூப்பலி, ஊண்பலி படைத்தல் போன்ற பெருமையது குழவிக்குச் சோறு தரும் குழவி பலி! அதனைப் பொருளறியாப் புன்மையரும் கொலைவெறியராம் கொடியரும் குழவிப் பலி யாக்கிக் காக்க வேண்டும் குழந்தையையே காவு கொடுத்தனர்! அவர்கள் கயமை அது! பிடி என்பது பிடித்து அள்ளும் அளவைக் குறித்தது. இது, விளக்கமாகக் கைப்பிடி எனவும் படும். ஒரு பிடி மண்ணை அள்ளிக் கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு எனக் காட்டிய ஔவையார் பாட்டு தனிப் பாட்டில் உண்டு. கையைக் கூட்டிப் பிடித்து இவ்வளவேனும் அன்னம் இட்டுண்மின் என்று கூறிய பாட்டும் தனிப்பாடல்களுள் ஒன்றே! தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும் என்னும் குறளில் (1037) வரும் பிடித்து என்பது பிடியளவைக் குறிப்பதாம். இங்குச் சுட்டப் பெற்ற பிடி, முகத்தல் அளவு. உழவர் தம் மாடுகளைப் பிடி என்னும் அளவால் அளவிட்டுக் கூறுதல் வழக்கம். நால்விரல் மடித்து பெருவிரல் அல்லது கட்டைவிரல் ஒன்று நிமிர்த்திய உயரம், பிடியாம். விரல் கொண்டே அடியளவு கண்டனர் என்பது அங்குலம் என்பதால் விளங்கும். அங்குலி என்பது விரல்! அதனை விரலம் என்பார் பாவாணர். அடி என்பது என்ன? காலடி தந்த அளவே! இது நீட்டல் அளவைப் பிடி. தாம்பணிகளில் (தாம்பு = கயிறு; அணி = வரிசை) இரு முளைகளை யடித்து அதில் கயிற்றைக் கட்டி, அக் கயிற்றில் வரிசையாக மாடுகளைக் கட்டுவதால் இப் பெயர் பெற்றது. இது தாவணி எனச் சிதைந்து வழங்குகின்றது. மாடு விற்பவரும் வாங்குபவரும், துண்டைப் போட்டுக் கையை மூடி மறைத்துக் கொண்டு கைவிரல்களைப் பிடித்து விலை பேசுவது வழக்கம்! பிடி என்பது ஐந்தைக் குறிக்கும்! கைக்கு ஐந்து விரல்கள் அல்லவா! அது, ஐந்நூறு, ஐயாயிரம் என்பதையும் குறிக்கும். இத்தனை பச்சைத் தாள், இத்தனை கடுவாய்த்தாள் என்றால் இத்தனை நூறு, இத்தனை ஆயிரம் என்பதாம். வட்டாரம் தோறும் வெவ்வேறு குறிப்புச் சொற்களைத் தரகர் பயன்படுத்துவதுண்டு. இஃது எண்ணல் அளவைப் பிடி. கோழி முதலியவற்றைச் சிலர் கையால் தூக்கிப் பிடித்துப் பார்த்த அளவில் இத்தனை பலம் என்பது உண்டு. அவர்கள் தேர்ச்சி அத்தகையது. பார்வையில்லாத ஒருவர் கோழியைத் தூக்கிப் பார்த்து இருபத்திரண்டே கால் பலம் என்றால், கால்பலம் அரைப்பலம் வேறுபாடு கூட இல்லாது இருந்ததை என் இளந்தைப் பருவத்தில் பலமுறை கண்டுள்ளேன். இது நிறுத்தல் அளவைப் பிடி. பிடி என்னும் அளவைப் பெயர் பிடித்தல் என்னும் தொழில் பெயர்க்கு மூலமாகி விரிவடைந்தது. பிடித்தல் என்பது பற்றுதல், அகப்படுத்தல் ஆகிய பொருள் தந்தது. பிடித்தாலும் பிடித்தாய் புளியங் கொம்பைப் பிடித்தாய் என்று வரும் பழமொழியில் பற்றுதல் பொருள் வந்தது. ஏறு தழுவுதல் என்பது மாடு பிடியாக அல்லது சல்லிகட்டாக அல்லது மஞ்சு விரட்டாக வந்தது. மாடு பிடிக்கும் கயிற்றுக்குப் பிடி கயிறு என்பதுதானே பெயர். தாயினிடம் எடுத்துக் கொண்டு போய்ப் பாலூட்டு குட்டி, பிடி குட்டி எனப்படுகிறது. அதற்கு மடுவையும் பிடித்து ஊட்ட வேண்டும்! மீன் பிடிக்குமாறு நீர் வற்றிய குளம் பிடி குளம் என வழங்கப் படுகிறது. பிள்ளை பிடித்தல் அச்சம் பெற்றோர்க்கு என்றும் உண்டு போலும்! பேய் பிடித்திடு தூதரே என்பது வெங்கைக் கலம்பகத்தில் மறம்பாடல்! பேய் பிடித்து ஆட்டம் போடுதலும், உடுக்கடித்து ஓட்டலும் நாட்டில் முற்றாக ஒழிந்துவிடவில்லை. பாம்பு பிடித்தல் வருவாய்த் தொழிலாக நிகழ்கிறதே! முதற் கலப்பை உழவு, அடிசால்; அடுத்து வரும் கலப்பை உழவு, பிடிசால்! நீர்க்கசிவுடைய நிலம் நீர்ப்பிடி! சிலம்பாட்டத்திலும் மல்லாட்டத்திலும் பிடியின் ஆட்சியே ஆட்சி! உடும்புப் பிடியும் குரங்குப் பிடியும் ஊரறிந்த செய்திகள். அடிபிடி சண்டை இல்லாத இடம் உண்டா? எடுபிடி ஆள் இல்லாத இடம் உண்டா? இடுப்புப் பிடித்துக் கொண்டது என்றோ, தடுமம் பிடித்துவிட்டது என்றோ சொல்லாதவர் உளரா? வேது பிடித்தல் சித்த மருத்துவத்தில் ஒருமுறை யில்லையா? ஈர விறகில் தீப்பிடிக்கவில்லை எனக் கவலை ஒரு பக்கம்; தீப்பிடித்தால் அணைத்தற்குத் துறை ஒரு பக்கம். மண்வெட்டி, கோடரி, அரிவாள், அறுவாள் முதலியவற்றைப் பிடி இல்லாமல் பயன்படுத்த முடியாதே! பிடித்துக் கொட்டுவது கொட்டுப் பிடி எனப்பட்டு இக் காலத்தில் கொட்டாப்புளியாகச் சொல்லப்பட வில்லையா? தூக்கு, செம்பு, கெண்டி முதலியவற்றுக்குப் பிடி இல்லாமல் எடுப்பது வாய்ப்பாக இராதே! கைப்பிடிச்சுவர் இல்லாத இடம், ஒருவேளை இல்லாவிட்டாலும் ஒருவேளை இடர் செய்து விடுமே! கைபிடித்துத் தருவதுதானே மண விழாவின் நிறைவுச் சடங்கு! ஓடிப் பிடித்தலும் ஒளிந்து பிடித்தலும் விளையாட்டுகள் அல்லவோ! பிடிப்பாகச் சட்டை இருத்தல் வேண்டும் என்பதிலே ஆர்வந்தான் பலர்க்கும் எவ்வளவு! குற்றவாளியைப் பிடிக்க முடியாவிட்டால் எவனைப் பிடித்தாவது குற்றக் கூண்டில் நிறுத்தல் இந் நாட்டில் வியப்பில்லையே! இந்தப் பிடிப்பு இன்னும் வளர்ந்து, பிடிமானம் சிக்கனம் ஆயிற்றே! பிடிபணம் அல்லது பிடிபாடு என்பது கழிவு (கமிசன்) ஆயிற்றே! பொறுக்கப் பிடித்தல் என்பது வயிறு முட்ட உண்ணல் ஆயிற்றே! சீட்டுப் பிடித்தல், சிறுதொழிலில் தலைத்தொழில் ஆகவல்லவோ நடக்கிறது! புகை பிடியாதீர் என்னும் பலகைக்குக் கீழே இருந்து கொண்டே புகைபிடித்தல் நம் நாட்டு ஒழுக்கம் ஆயிற்றே! அறிவில் படாமை, புலப்படாமை, தெளிவில்லாமை, இவற்றைப் பிடிபட வில்லை என்பது விளக்குதல் கண்கூடு. கண்டுபிடிக்க முடியவில்லையே என்னும் கைவிரிப்பு ஒவ்வொருவர் வாழ்விலும் இல்லையா! உங்களுக்கு இது பிடிக்குமா? பிடிக்காதா? என விருந்தில் கேட்பது இயல்பில்லையா! இந்தப் பை பிடிக்காது இந்தப்பை பிடிக்கும் எனக் கொள்மானம் ஆயிற்றே பிடி! இந்தப் பிடி இன்னும் எங்கே தாவுகின்றது? எண்ணத்திற்கு அல்லது மனத்திற்குத் தாவுகின்றதே! மனப்பிடித்தம் தானே, மணப்பிடித்தம்! மற்றைப் பிடித்தம் எல்லாமே என்ன ஐயா என்பது இந்த மாப்பிள்ளைக் கொடை (வரதட்சணை) அறமாகி விட்ட நாளிலும் அங்கொருவரும் இங்கொருவரும் பேசும் செய்தியாயிற்றே! பிடித்தவர் நண்பர்; பிடியாதவர் பகைவர் இல்லையா! இன்னும் பிடி வளர்கின்றதே! ஆண்யானையின் அன்புப் பிடியிலும் அரவணைப்புப் பிடியிலும் சிக்கிய பெட்டைக்குப் பிடி என்பது பெயர் அல்லவோ? பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிற்றைப் பேசுகின்றதே கலித்தொகை (11). ஏறும் இன்ப ஓகையால் ஏறும் ஏற்றின் (களிற்றின்) பிடிக்குள் அகப்படுவதும் பின்னே அவ்வின்ப மயக்குத் தீரப் பிடித்துத் தூக்கி விடப்படுவதும் ஆகிய பிடியின் பெயரே பின்னே பெண்மைப் பொதுப்பெயராய்ப் பொலிவதாயிற்றே! பிடியில்லாதது வாழ்வாகுமா? பிடிப்பு இல்லாமலும் வாழ்வாகுமா? பிடிப்பு இல்லாத ஒட்டுச் சுவர் வீழ்வதைக் கேட்க வேண்டுவது இல்லையே! ஆதலால், வாழ்வுக்கு வேண்டும் மூல வைப்பகம் பெண்ணே என்பதைத் தெளிந்தே கையுடைய களிற்றுக்கு மட்டும் பிடியைச் சொல்லி நிறுத்தாமல் மற்றவற்றுக்கும் பிடியை வைத்தார். தொல்காப்பியனார் (1502). விடுமின் விடுமின் என்று காதலனைக் காதலி சொன்னால், பிடிமின் பிடிமின் என்பது பொருள் எனக் கலிங்கத்துப் பரணி கூறும். மனைவி இயல் நுட்பம் பிடி என்னும் பெண்பால் பெயர் சொல்வதாம்! பிடி முதல் நீண்டு பீடி ஆகிவிட்டாதா? பிடித்தல் என்பது பீடித்தல் பொருள் தருவது அன்றோ! நோயும் பிணியும் பீடித்தலாகச் சொல்லும் வழக்கு ஊன்றிவிட்டதே. அதன் வழியே பீடை யும் பற்றிக் கொண்டுள்ளதோ! ஒரு பிடி படியும் சீறிடம் எழுகளிறு புரக்கும் எனக் கூறும் (புறம். 40) வயல் வளம் வாய்த்தால் அயல்வளம் எல்லாம் தேடி வருதல் உறுதியே யல்லவோ! பிடித்தம்: பிடித்தம் = பற்றுமை, இறுக்குதல். கையால் பிடிப்பது பிடித்தல். பிடி அளவு என்பது கையளவே. கையால் பிடிக்கும் பிடிப்பு மனத்தால் பிடிப்பதாகவும் வழக்கில் உள்ளது. அது பிடித்தமாகும். பிடித்தம் என்பது பற்றுமையுடையது. எனக்குப் பிடித்தால் உண்பேன், போவேன் என்பதும், எனக்குப் பிடித்தமானது அது என்பதும் பிடித்தம் என்பதன் பற்றுமை காட்டும். பிடித்தல்: ஆவி, வேது, புகை முதலியவற்றை உட்கொள்வது பிடித்தல் எனப்பெறும். நிரம்ப உண்ணுதலை மூக்கு முட்டப் பிடித்தல் என்பது வழக்கு. பிடித்தல் என்பதற்கு உட்கொள்ளுதல், மனத்திற்குப் பிடித்தல் முதலிய பொருள்களைத் தரும் தமிழ்ச்சொல்லகராதி. பிடித்தாட்டல்: பிடித்தாட்டல் = துன்புறுத்தல், சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க வைத்தல். பிடித்தல் = கையால் பிடித்தல். குடுமியைப் பிடித்து ஆட்டுதல் என்பது செயலற்றுப் போக வைத்துக் கட்டுப்படச் செய்வதாம். உடுக்கடியில் குடுமியைப் பிடித்து ஆட்டி அலைக்கழிப்பர். பேயோட்டுதல் என்பது அதன் பெயர். ஆதலால் பிடித்தாட்டல் என்பது துன்புறுத்தலுக்கு ஆயது. சிலருக்குச் சிறுபிடி கிடைத்துவிட்டால் போதும், அதனைக் கொண்டு பெரும்பாடு படுத்திவிடுவர். தம் சொற்படி எல்லாம் நடக்க வைப்பர். அவன் பிடிகொடுப்பானென்று பார்க்கின்றேன்; எப்படியோ தப்பித்துக் கொள்கிறான் என்பதில் பிடித்தாட்டல் வேட்கை வெளியாகும். பிடித்துக் கொடுத்தல்: திருமணம் என்பது கைபிடித்துக் தருதலாகும். தாதா என்பது மணக்கொடை புரிதலால் பெற்ற பெயர். பெண்ணைக் கொடுத்தல் கொள்ளல் என்பவை தொல்பழ வழக்கு. அவ் வழக்கை வெளிப்படுத்தும் ஆட்சி பிடித்துக் கொடுத்தல் ஆகும். இது பழனி வட்டார வழக்கு. பிடித்துவிடல்: பிடித்துவிடல் = அடித்தல். மூட்டுவலி, தசைவலி இருந்தால் பிடித்துவிடுவர்; எண்ணெய் மருந்து தேய்த்தல் உருவிவிடல், சுழுக்கு எடுத்தல் ஆகியவும் செய்வர். அது போல, ஒருவன் சொன்ன சொல் கேளாவிட்டால் உன்னைப் பிடித்துவிட வேண்டுமா? என்பர். பிடித்துவிடல் என்பதால் அடித்து வீங்க வைத்தல், நரம்பைச் சுண்டிவிடல் ஆகியன செய்வாராம். அதனால், சொன்னதைக் கேட்டு ஒழுங்காக நட என எச்சரித்து விடுகிறாராம். ஈமொய்த்தல், பற்றுப் போடல், தடவிக் கொடுத்தல், தட்டுதல் என்பன இவ் வழிப்பட்டனவே. பிடிமானம்: பிடிமானம் = சிக்கனம். வருமானம், பெறுமானம் என்பவற்றில் வரும் மானம் அளவுப் பொருளது. அது போலப் பிடிமானம் என்பதும் அளவுப் பொருளதே. பிடிமானமானவன், பிடிமானமாகச் செலவிடல் என்பவற்றில் பிடிமானம் என்பதற்குச் சிக்கனப் பொருள் உள்ளமை காண்க! பிடிமானம் என்பது வந்ததையெல்லாம் செலவிட்டு விடாமல் இறுக்கிப் பற்றி அல்லது சேமித்து வைப்பதாம். ஆன முதலில் அதிகம் செலவாகி மானமழிதல் பிடிமானக்காரர்க்கு இல்லையாம். பிடுங்குதல்: பிடுங்குதல் = இழிவுறுத்தல். பயிரைப் பிடுங்குதல், நடுதல், களை பிடுங்குதல் என்பவை உழவர் பணிகள். ஒருவர் வைத்திருக்கும் பொருளைப் பிடுங்குதல் பறித்தல் என்னும் பொருள் தரும். இப் பிடுங்குதல் பலவகையில் வழக்கில் இருந்தாலும் அவையெல்லாம் நாற்றுப் பிடுங்கல், களைபிடுங்கல், கடலை பிடுங்கல் எனப் பெயர் சுட்டியே வரும். அச்சுட்டு இல்லாமல் பிடுங்குதல் என்று மட்டும் வரின் மயிர் பிடுங்குதல் என்பதையே குறிக்கும். செய்யமாட்டாத ஒருவன் ஒன்றைச் செய்வேன் என்றால் ஆமாம்; நீ பிடுங்குவாய் போ என்பது வழக்கு. உன்னால் முடியாது என இழிவுறுத்தலாக அமைவது இப் பிடுங்குதலாம். நான் என்ன பிடுங்குகிற வேலையா செய்கிறேன் என்பதிலும் இழிபாடே புலப்பாடாம். பிட்டு: பிட்டு:1 பிள் + து = பிட்டு. பிடித்த இறுக்கத்தில் இருந்து எளிதில் பிளந்து - பிதிர்ந்து - தனித்துப் போதலால் பிட்டு எனப்பட்டது. பிட்டின் ஒரு பகுதி எடுக்கும் போதே பிதிர்தலால் உதிர்ந்த பிட்டு வந்தியிடம் கூலியாக மண்சுமக்க இறைவன் பெற்றதாகத் திருவிளையாடல் கூறிற்று. பிட்டு:2 பிட்டு என்பதற்கு இட்டவி என்னும் பொருளைப் பழனி வட்டாரத்தார் வழங்குகின்றனர். வேகும் வகை கருதிய பெயரீடாக இருக்கக்கூடும். பிட்டுப் பிட்டு வைத்தல்: பிட்டுப் பிட்டு வைத்தல் = ஒன்றுவிடாமல் சொல்லல். பிள் என்னும் வேரிலிருந்து பிறக்கும் சொல் பிட்டு. பிள் என்பது பிளவு, பிரிவு, பிதிர்வு என்னும் பொருளில் வரும். பிட்டு என்னும் பண்டம் கைபட்ட அளவில் பொலபொல என உதிர்தலாம். அப் பிட்டு உதிர்தல் போலச் சொல்லை உதிர்ப்பது - பாக்கி ஒன்றும் இல்லாமல் சொல்லை உதிர்ப்பது பிட்டுப்பிட்டு வைத்தல் எனப்படும். அவனிடம் ஒளிவு மறைவு ஒன்றும் செய்ய முடியாது. அவன்தான் உள்ளதை உள்ளபடி பிட்டுப்பிட்டு வைத்து விடுகிறானே என்பது பிட்டு வைப்பவன் தேர்ச்சியைத் தெரிவிப்பதாம். பிணங்குதல்: ஒன்றற்கு ஒன்று மாறுபட்டு அமைதல் பிணங்குதல். இணங்குதல் உடன்படல், பிணங்குதல் மாறுபடுதல். இணக்க மறிந்து இணங்காமல் போனால் பிணக்கம் இல்லாமல் போகாது. பிணம்: தீ நாற்றம் தருவதைப் பிணவாடை என்பது பொதுவழக்கு. பூண்டு என்றும், வெள்ளைப் பூண்டு என்றும், வெள்ளுள்ளி என்றும் வழங்கப்படும் வெள்ளைப் பூண்டு விளையும் தோட்டத்தைப் பிணம் என்பது குமரி வட்ட வழக்காகும். பிணம் எனப் பூண்டு பெயர் பெற்று, அது விளையும் இடம் குறிப்பது. வியப்பான வழக்கம் இது. பூண்டின் நாற்றம் தந்த கொடை அது. பிணை: ஒன்றனோடு ஒன்றைச் சேர்த்துக் கட்டுதல் பிணைத்தல் ஆகும். சிலர் பெற்ற கடனுக்கு அவர் தரவில்லை என்றால் தாம் அக்கடனை ஏற்றுப் பணத்தைக் கட்டிக் கணக்கைத் தீர்ப்பதாக எழுதி ஒப்பமிடல் உண்டு. அவ்வாறு ஒப்புவார் செயல் பிணை என்பதாம். கடன் வாங்கியவர் கணக்குப்படி தொகையைச் செலுத்தி விட்டால் பிணையேற்றார்க்குச் சிக்கல் இல்லை. அவர் அவ்வாறு செய்யவில்லை என்றால் பிணையானவரே கடன் பெற்றாராக்கப் பட்டுக் கடனைக் கட்ட வைப்பது கடன்வழி வழக்காகும். ஒருவர் பொறுப்பை ஒருவர் ஏற்பது இகழ்ச்சிக்கு இடமாவதும் உண்டு. அதனால் ஏற்பது இகழ்ச்சி என்னும் ஆத்தி சூடிக்கு, பிச்சை கேட்பது இகழ்ச்சி என்பதுடன் பிணை ஏற்பதும் இகழ்ச்சி என இரட்டுறல் பொருளும் கொள்ள வாய்க்கின்றது. பிணையல்: வைக்கோல், கதிர் மிதிக்க மாடுகளை மூன்று நான்காகப் பிணைத்து வட்டமாகச் சுற்ற விடுவது பிணையல் எனத் தென் தமிழகத்தில் வழங்கும். பெரம்பலூர் தொழுதூர் பகுதிகளில் பிணை என அது வழங்கும். ஒருவர் கடனுக்கு ஒருவர் பொறுப்பு ஏற்பதும் பிணையாகும். சிறைத்தண்டனை பெற்றவர் கட்டாயமாக வரவேண்டிய கடமைகளுக்காக ஆள் பொறுப்பு அல்லது பணப்பொறுப்பில் வருவது இந்நாளில் பொதுவழக்காகப் பிணை எனப்படுகிறது. பிண்ணாக்கு: பிள் + நாக்கு = பிண்ணாக்கு. பாம்பின் நாக்கு பிளவுபட்டது. ஆதலால் காளமேகர் தனிப்பாடலில் பிண்ணாக்கு முண்டாம் என்றார். பிளவுபட்ட நாக்குப் போன்ற தோற்றத்தால் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வழிந்த எச்சம், பிண்ணாக்கு எனப்பட்டதாம். பிண்ணாக்கைப் புண்ணாக்கு என்றெழுதி என்னைப் புண்ணாக்கிவிட்டாய் என்றார் பா.வே.மாணிக்க நாயகர். பிதுக்குதல்: பிதுக்குதல் = துன்புறுத்தல். கட்டி ஒன்று ஏற்பட்டால் அதனைப் பழுத்த நிலை பார்த்துப் பிதுக்கி எடுத்தல் உண்டு. ஆணியும் சீழும் வெளிப்பட்டால் தோலைப் பிதுக்கி எடுத்து அப்புறப்படுத்தல் உண்டு. மொச்சையை நன்றாக ஊற வைத்துப் பிதுக்கித் தோலை எடுத்தலால் அதற்குப் பிதுக்குப் பயறு என்பது பெயர். அப் பிதுக்குதல் போலத் துன்புறுத்திப் பறிப்பது பிதுக்குதல் எனப்படும். பிதுக்குதலில் வெறுமையாகப் பிதுக்கி இன்புறுவதும் உண்டு. உள்ளதைப் பறிப்பதற்காகப் பிதுக்கித் துன்பூட்டுவதும் உண்டு. அந் நிலைகளில் பிதுக்குதல் துன்புப் பொருளதாம். பிப்பு: பிய்ப்பு (பிப்பு) என்பது அரிப்பு என்னு பொருளில் பழனி வட்டார வழக்காக உள்ளது. கொசுக்கடியைக் கொசு பிச்சுப் பிடுங்குகிறது என்பது பொதுவழக்கு. பிய்ப்பு பிப்பு ஆயது. பிக்கல் (பிய்க்கல்) பிடுங்கல் இல்லை என்பது இணைமொழி. பிய்த்தெடுத்தல்: பிய்த்தெடுத்தல் = பறித்தல், பிரித்தெடுத்தல். வாழைத் தாரில் இருந்து சீப்பையும், சீப்பிலிருந்து பழத்தையும் பிய்த்து எடுப்பது நடைமுறை. பழத்தைப் பிய்ப்பது போல உள்ளதைப் பறித்துக் கொள்ளலும் பிய்த்து எடுத்தலாயிற்று. பிச்சுக் கொடு கொடு எனத்தின்பான் என்பது பாரதியார் பாவின் ஓரடி. தலையைப் பிய்த்துக் கொள்ளுதல் என்பதொரு வழக்குத் தொடர். கவலைப்படுதல் என்பது அதன் பொருள். அது தலையைக் கோதும் போது முடி சிக்குப் பட்டுப் பிய்க்கும் துன்பம் வழியாகத் துன்பப் பொருளும் சிக்கல் நீங்காது பறித்துக் கொண்டு வருதலால் பறித்தல் பொருளும் ஒருங்கு பெறுவதாயிற்று. பலமுறை அது வேண்டும் இது வேண்டும் எனக் கேட்டலும் பிய்த்தெடுத்தலே. பிரி கழறுதல்: தாமாகப் பேசுதல், சிரித்தல், அழுதல் ஆயவை செய்வாரைப் பிரி கழன்றவர் என்பது நெல்லை வழக்கு. மூளைக் கோளாறு, கிறுக்கு என்பது பொருளாம். பிரி என்பது கிறுக்கு என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பிரி என்பதன் மூலப் பொருள் (கழறுதல்) அளவில் அமைந்த ஆட்சி அது. பிரி என்பதே கிறுக்கு என்னும் பொருளில் வழங்குகின்றது. பிரிவு: இது நாள்வழி அலுவலுக்கோ தொழிலுக்கோ போய் வரும் பிரிவுதான்! நெட்ட நெடுங்காலப் பிரிவும் அன்று! நெட்ட நெடும் இடப்பிரிவும் அன்று! அப் பிரிவு பின்னே உண்டாயினும் தாங்குதற்குரிய பயிற்சி நிலையே பொழுதுவழி, நாள்வழிப் பிரிவுகள். அருந்தல் பொருந்தல் ஆகிய அவ்வளவிலேயே வாழ்வுச் சுருக்கமுடைய உயிரிகளுக்கே பிரிவும் கூடலும் தவிர்க்க முடியாமல் இருக்கும் போது, மாந்தர் வாழ்வில் பிரியாமையை எதிர்பார்க்க முடியுமா? இதனால் தானே, பழந்தமிழ் அகப்பாடல் பெருந்திரட்டு நூலாம் அகநானூற்றில், நான்கு திணைகளுக்கும் 200 பாடல்கள் ஆக, பாலை என்னும் பிரிவுக்கு மட்டும் 200 பாடல்கள் உள்ளன. இனிப் புணர்தல் என்னும் குறிஞ்சித்திணை ஒன்று நீங்கிய முல்லை, மருதம், நெய்தல் என்னும் மூன்று திணைகளுமே பிரிவுச் சார்பு உடையவை தாமே. அவ்வா றானால், எட்டில் ஒரு பங்குதானே கணவன் மனைவியர் இல்லத்தில் கூடியிருக்கும் பொழுது! எஞ்சிய ஏழு பங்குப் பொழுதுகளும், இருபால் கடமைகளும் இனிதின் இயலுதற்கு அமைந்த பிரிவு உடையவை அல்லவோ! அதற்கு இயல்பான பயிற்சி, தொடக்க முதலே வேண்டியிருத்தல் கட்டாயம் அல்லவோ. இவ்வொழுக்க இயல் - உலகியல் - நிலைக்குத் தன்னைத் தான் கொண்ட கடைப்பிடிகளால் சீராக்கிக் கொள்கிறாள், வள்ளுவ மனைவி! அதனால் கடமைக்குத் தடையாக அவள் இருப்பதும் இல்லை, அவனும் அவ்வாறாக இருப்பானும் அல்லன். ஏனெனில், தங்களைப் புரிந்து கொண்டதுடன் வாழ்வியலையும் புரிந்து கொண்டவர்கள் அவர்கள்! பிரிவு வகை 1. சேயிடைப் பிரிவு சே + இடை = சேயிடை. சேயிடையாவது தொலைவிட மாகும். தொலைவிடத்திற்குப் பிரிதல் சேயிடைப் பிரிவு எனப் பெற்றது. பரத்தையிற் பிரிவு என்னும் ஒன்றொழிந்த பிரிவுகள் சேயிடைப் பிரிவாம். அவை: ஓதற்பிரிவு, தூதிற் பிரிவு, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு, காவற் பிரிவு என்பன. 2. ஆயிடைப் பிரிவு அ > ஆ + இடை = ஆயிடை; ஆயிடை + பிரிவு = ஆயிடைப் பிரிவு. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்பது தொல்காப்பியப் பாயிரம். பிரிவு வகையுள் ஒன்று ஆயிடைப் பிரிவு. அஃது அவ் விடத்துப் பிரிவேயாம். முந்தையோர் கண்ட பிரிவுகளில் அவ் விடத்துப் பிரிவு பரத்தையிற் பிரிவு ஒன்றுமேயாம். அது தன் ஊரும் சேரியும் நகரும் இடமாகப் பிரிவது ஆகலின். இதுகால் அலுவல் பிரிவு, வினைவயின் பிரிவு, ஓதல் பிரிவு, நண்புவயின் பிரிவு, வணிகப் பிரிவு என ஆயிடைப் பிரிவுகளை அடுக்கலாம். பிரிவு சுரம்: சுரம் = வெப்பம், பாலைநிலம். பிரிவு என்பது பாலைத் திணை சார்ந்ததொரு துறை. தலைவன் பிரிந்து செல்ல அப்பிரிவு தாங்காது தலைவி வருந்துதல் பிரிவுசுரம் என்னும் இலக்கிய வகையின் உள்ளுறையாம். தலைவன் பிரியத் தலைவி வருந்தல் விரிவார் பிரிவுசுரம் என்பார் - பிர. திர. 62 பிரிதல், பிரிதல் நிமித்தம் இரண்டும் பிரிதலாம். விரிவார் பிரிவு என்றதால், பிரிவுக்குரிய காரணமும், பிரிவு கருதுதலும், பிரிவைக் குறிப்பால் உணர்த்துதலும், ஒருவாற்றான் பிரிவைத் தலைவி அறிதலும், தோழி அறிதலும், பிரியேன் என்றலும், காட்டின் அருமை கூறலும், பருவ வரவு கூறலும், நினைந்து பருவரலும், பிரிதலும், செலவும், செலவிடை அழுங்கலும், வினைமுடித்து மீளலும், தலைவி ஆற்றாமையும், தோழி ஆற்றுவித்தலும், தலைவி ஆறியிருத்தலும், பருவ வரவும், பருவமன்று எனத் தோழி கூறலும், தலைவன் வினைமுற்றி மீளலும், தேரை விரைந்து செலுத்தலும், தலைவியை அடைத லும், மகிழ்தலும் இன்னவெல்லாம் அடக்கிக் கொள்ளத் தகும். திருவள்ளுவர் பிரிவுக்கு ஐந்து அதிகாரங்கள் ஒதுக்கியமை கண்டு கொள்க. பில்லணை: வில்லை > பில்லை > பில் + அணை = பில்லணை. ஆழிவிரல் என்னும் மோதிர விரலில் அணியும் அணியைப் பில்லணை என்பது நெல்லை வழக்கு. இது மகளிர் அணி வகைகளுள் ஒன்று. மேலே வட்ட அமைப்பு உடைமையால் கொண்ட பெயர். பிழை: தான் உயிர் வாழ்வதற்காகச் செய்யும் குற்றம் பிழை. அவ்வாறு வாழ்வது பிழைப்பு எனப்படும். பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர் - திருக். 417 பிளவு: ஒன்று இரண்டாகவோ பலவாகவோ உடைதல் பிளவு எனப்படும். பிளவுக்கல் என்பது மலைசார்ந்தது. பிளவு என்பது பாக்கு; ஒன்றைப் பலவாகப் பிளந்ததால் பிளவு பிளவை எனப்பட்டது. பிளக்க வேண்டிய உடற்கட்டியாம் ஒரு நோய் பிளவை என வழங்குகிறது. ஒன்றுபட்ட உறவு பிளந்து பிரிதல் பிளவாகும். கற்பிளவு, பொற்பிளவு என்பவற்றில் முன்னது மீள அப்படியே சேராதது; பின்னது வேண்டுமாறு சேர்வது. கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பர் என்பது ஔவையார் பாடல். பிளவை: சிலந்தி போல்வதொரு கட்டி அதனைப் பிளந்து மருந்து கட்டித் தீர்க்க வேண்டும். ஆதலால் பிளவை எனப்பட்டது. பிளவைக் கட்டி என்பதும் அது. பிள்ளை: பிள் > பீள் > பிள்ளை. இளமைப்பெயர் குறிக்கும் சொல். தொல்காப்பியர் காலத்தில் பிள்ளை எனும் இச்சொல் மக்கட்பெயராய் வழக்கில் இல்லை. எனினும் பறக்கும் பறவை, ஊரும் ஊரி, நிற்கும் நிலைத்திணை ஆகிய உயிரினங்களின் இளமைப் பெயராய் வழக்கம் பெற்றிருந்தது. மேற்சுட்டிய ஒவ்வொரு உயிரினத்திலும் உள்ள மூன்று இளமைப் பெயர் களைப் பாவாணர் காட்டியுள்ளார். அவை வருமாறு: பறவை கரிப்பிள்ளை (கரிக்குருவி), கிளிப்பிள்ளை, நாகணவாய்ப் பிள்ளை. ஊரி அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, நாவிப் பிள்ளை. நிலைத்திணை கமுகம் பிள்ளை, கருவப்பிள்ளை (கறிவேப்பிலை), தென்னம்பிள்ளை. பிள்ளை குட்டி: பிள்ளை = ஆண் பிள்ளை. குட்டி = பெண் பிள்ளை. உங்களுக்குப் பிள்ளை குட்டி எத்தனை? என உற்றார் உறவினர் கேட்பது வழக்காறு. இவற்றுள் குட்டி என்பது பெண் பிள்ளையைக் குறிக்கும். பிள்ளை என்பது பொதுப்பெயர் ஆயினும், இவண் ஆண் பிள்ளையைக் குறித்து நின்றதாம். அது குழந்தை என்பது போன்றதாம். * குட்டி குறுமான், குழந்தை குட்டி காண்க. பிள்ளை கொள்ளி: பிள்ளை = ஆண் பிள்ளை. கொள்ளி = கொள்ளிக் கட்டை, தீ. பிள்ளை கொள்ளி இல்லை என்பதொரு வசை. எவருக்கோ ஆண்பிள்ளைப் பேறு இல்லை என்றால், பின்னே வருவதையும் கூட்டி பிள்ளை கொள்ளி இல்லை என்பர். எவனோ கொள்ளி வைக்கத்தானே செய்வான்? இருந்தாலும் அவன் மகன் இல்லையாம்! அதனால் இவ்வாறு பழிப்பர். கொள்ளிக்குப் பிள்ளை என்று தவிப்பார் சிலர். அப்பிள்ளை கொள்ளிக் கட்டையாகவோ, கொள்ளிவாய்ப் பேயாகவோ இருந்தாலும் கவலை இல்லை! கொள்ளி முடிவான் எனத் திட்டிக் கொண்டிருக்கத் திரிந்தாலும் கொள்ளி வைக்க அவனொருவன் வேண்டுமாம். அவள் ஆகாதாம்! இப்பொழுது மின்னெரிப்பார் சாலும்! பிள்ளைத்தமிழ்: பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். காப்புப்பருவம், செங்கீரைப் பருவம், தாலப்பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வாரானைப் பருவம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிற்றிற் பருவம், சிறுதேர்ப் பருவம் எனப் பத்து பருவங்கள் வகுத்து ஆண்பாற் பிள்ளைத் தமிழ் பாடப்பெறும். இவற்றுள் இறுதிக்கண் நின்ற சிறுபறை, சிற்றில், சிறுதேர் என்பவற்றை விலக்கிக் கழங்கு, அம்மானை, ஊசல் என்பவற்றை இணைத்துப் பெண்பாற் பிள்ளைத் தமிழ் பாடப்பெறும். பெண்பாற் பிள்ளைத்தமிழில் நீராடல் என்பதும் இணைக்கப் பெறுதல் வழக்கு. எனினும் பத்து பருவங்களுக்கு மிக்குப் பிள்ளைத்தமிழ் செய்யும் வழக்கில்லை. கடுங்கொலை நீக்கிக் கடவுட் காப்புச் செங்கீ ரைதால் சப்பாணி முத்தம் வாரா னைமுதல் வகுத்திடும் அம்புலி சிறுபறை சிற்றில் சிறுதேர் என்னப் பெறுமுறை ஆண்பாற் பிள்ளைப் பாட்டே - இலக். பாட். 434 அவற்றுடன், பின்னைய மூன்றும் பேதையர்க் காகா ஆடும் கழங்கம் மானை ஊசல் பாடம் கவியாற் பகுத்து வகுப்புடன் அகவல் விருத்தத் தாற்கிளை யளவாம் - இலக். பாட். 435 பிள்ளைத்தமிழ் ஓதுங்கால் அகவை மூன்று முதலாக இருபத்தொரு திங்கள் என்பர். ஒன்று முதல் ஐந்தாண்டளவு என்றும், பதினாறு யாண்டளவு என்றும் கூறுவர். அரசர் முடி சூடிய பின்னரும், மகளிர் பூப்பெய்திய பின்னரும் பிள்ளைத் தமிழ் பெறார் என்றும் கூறுவர். பிள்ளைப் பாட்டே தெள்ளிதின் கிளப்பின் மூன்று முதலா மூவேழ் அளவும் ஆன்ற திங்களின் அறைகுவர் நிலையே - பொய்கையார் பன்னிரு. 174 மேற். ஒன்றுமுதல் ஐயாண் டோதினும் வரையார் - பொய்கையார் பன்னிரு. 175 மேற். தோற்ற முதல்யாண் டீரெட்டளவும் ஆற்றல் சான்ற ஆண்பாற் குரிய - இந்திரகாளியார் பன்னிரு. 176 மேற். காப்பு முதலாகிய யாப்புவகை யெல்லாம் பூப்பு நிகழ்வளவும் பெண்பாற் குரிய - இந்திரகாளியார் பன்னிரு. 177 மேற். தொன்னில வேந்தர் சுடர்முடி சூடிய பின்னைப் பெறாஅர் பிள்ளைப் பாட்டே - பரணர் பன்னிரு. 178 மேற். பிள்ளைத்தமிழ்ப் பாட்டு, ஆசிரியச் சந்தவிருத்தங்களாற் பாடப்பெறும். அதில் காப்புப் பருவம் ஒன்பது அல்லது பதினொரு விருத்தங்களால் அமைதல் வேண்டும் என்பது விதி. ஒன்பது பதினொன் றென்பது காப்பே - பரணர் பன்னிரு. 188 மேற். இனி வேறு வகைப்பாவால் பிள்ளைத்தமிழ் பாடுதற்கு நேர்ந்தாரும் ஒருசார் ஆசிரியர் உளர். அவர் கூறுமாறு, அகவல் விருத்தமும் கட்டளை ஒலியும் கலியின் விருத்தமும் கவின்பெறு பாவே - பன்னிரு. 189 பிள்ளைப் பாட்டே நெடுவெண் பாட்டெனத் தெள்ளிதிற் செப்பும் புலவரும் உளரே - பன்னிரு. 190 முதற்கண் எடுக்கப் பெறும் அகவல் விருத்தம் நான்கடிக்கும் எழுத்தின் பகுதி எண்ணிக் கொள்ள வேண்டும் என்றும், எழுத்தொப்பப் பாடவேண்டும் என்றும் கூறுவர். முதற்கண் எடுக்கும் அகவல் விருத்தம் எழுத்தின் பகுதி எண்ணினர் கொளலே - பன்னிரு. 191 இலக். பாட். 51 மேற். பருவத்திற்குரிய பாடல்கள் ஒற்றைப்படப் பாடுதல் சிறப்பென்றும் இரட்டைப்பட வருமாயின் ஓசை பெயர்த்துப் பாடுதல் வேண்டும் என்றும் கூறுவர். காப்புப் பருவத்தின் முதற்பாடல் திருமாலைப் பற்றியதாதல் வேண்டும். அவன் காவற் கடமை பூண்டவன் ஆதலாலும் திருவின் கிழத்தியின் கேள்வன் ஆதலாலும் பிறவற்றாலும் அவனை முற்படக் கூறித் தொடங்குதல் முறையென்பர். பின்னர் இவரிவரைக் கூறுக என்றும் வரைந்து கூறுவர். காப்பின் முதல் எடுக்கும் கடவுள் தானே பூக்கமழ் துழாய்முடி புனைந்தோ னாகும் - பரணர் நவநீத. 26 மேற். மங்கலம் பொலியும் செங்கண் மாலே சங்கு சக்கரம் தரித்த லானும் காவற் கடவுள் ஆத லானும் பூவினுட் புணர்த லானுமுற் கூறிக் கங்கையும் பிறையும் கடுக்கையும் புனையுமை பங்கனென் றிறைவனைப் பகர்ந்து முறையே முழுதுல கீன்ற பழுதறும் இமயப் பருப்பதச் செல்வியை விருப்புற உரைத்து நாமகள் கொழுநன் மாமுகில் ஊர்தி ஒற்றைக் கொம்பன் வெற்றி வேலன் எழுவர் மங்கையர் இந்திரை வாணி உருத்திரர் அருக்கர் மருத்துவர் வசுக்கள் பூப்புனை ஊர்தியிற் பொலிவோர் அனைவரும் காப்ப தாகக் காப்புக் கூறல் - இலக். பாட். 68 இனி இவர்களைக் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் உரைப்பாருளர். திருமால் அரனே திசைமுகன் கரிமுகன் பொருவேல் முருகன் பரிதி வடுகன் எழுவர் மங்கையர் இந்திரன் சாத்தன் நதியவள் நீலி பதினொரு மூவர் திருமகள் நாமகள் திகழ்மதி என்ப மருவிய காப்பினுள் வருங்கட வுளரே - பன்னிரு. 184 இனிக் காப்புக் கூறுங்காலைக் கொலையும் கொடுமையும் கூறாமல் மங்கலம் மல்கக் கூறுதல் வேண்டும் என்றார். விரிசடைக் கடவுளும் வேய்த்தோள் எழுவரும் அருளொடு காக்கவென் றறையுங் காலைக் கொலையும் கொடுமையுங் கூறா ராகிப் பெயரும் சின்னமும் பிறவுந் தோன்றக் கங்கை திங்கள் கடுக்கை மாலை மங்கல மழுவொடு மலைமகள் என்றிவை விளம்பக் கூறல் விளம்பிய மரபே - பன்னிரு. 187 இவ்விப் பருவங்களில் இவ்விச் செயல்கள் பாடுதற்குரியவை எனக் குறிப்பதும் வழக்காகும். அவர் கூறுமாறு: இரண்டாம் மாதத்திற் காப்புக் கூறுதலும், ஐந்தாம் மாதத்திற் செங்கீரை கூறுதலும், ஆறாம் மாதத்திற் சொற்பயில்வு கூறுதலும், ஏழாம் மாதத்திற் அமுதூட்டலும், எட்டாம் மாதத்தில் தாலாட்டுக் கூறுதலும், ஒன்பதாம் மாதத்தில் சப்பாணி கூறுதலும், பதினொன்றாம் மாதத்தில் முத்தம் மொழிதலும், பன்னிரண்டாம் மாதத்தில் வாரானை கிளத்தலும், பதி னெட்டாம் மாதத்தில் சந்திரனை அழைத்தலும், இரண்டாம் ஆண்டில் சிறுபறை கொட்டலும், மூன்றாம் ஆண்டில் சிற்றில் சிதைத்தலும், நான்காம் ஆண்டில் சிறுதேர் உருட்டலும், பத்தாம் ஆண்டில் பூணணிதலும், பன்னிரண்டாம் ஆண்டில் கச்சினோடு உடைவாளை விரும்பத் தரித்தலும் என்று சொல்லப்பட்டவும் பிறவும் உடைத்து என்றும், இனிப் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்கு, அம்புலி இறுதியாய் நின்ற பருவங்களுடன் மூன்றாம் ஆண்டில்தான் விளையாடும் பாவைக்கு மணம் பேசுதலும், ஐந்தாம் ஆண்டு முதல் ஒன்பதாம் ஆண்டுகாறும் மன்மதனை ஒத்த புருடனைப் பெறத் தவம் செய்தலும், குளிர்ந்த நீராடலும், பதுமை வைத்து விளையாடலும், கழங்காடலும், பந்தாடலும், சிறு சோறடுதலும், சிற்றில் இழைத்தலும், ஊசலாடலும் என்பன கூறப்படும் என்க என்றும் கூறுவர் (பேரகராதி, பக். 1218). பன்னீராண்டு ஆண் பிள்ளைக்கு இளம்பிறை புலி, யானை, அரிமா இவற்றின் குட்டிகளையும், காளையையும் உவமையாகக் கூற வேண்டும் எனவும், பெண்பிள்ளைக்கு மான் கன்று, மயிற்பிள்ளை, தேன், மது, கரும்பின் முளை, கிள்ளை, கொடி இவற்றை உவமையாகக் கூற வேண்டும் என்றும் பாட்டியலார் உரைத்தனர். வளர் பிறையை ஒப்பிட்டுக் கூறுதல் இருபாலார்க் கும் ஒக்கும் என்றும் உரைத்தாருளர். பொங்குகதிர் இளம்பிறை புலியின் சிறுபறழ் குஞ்சரக் குழவி கோளரிக் குருளை மடவிள விடையே யாறிரண் டாண்டின் இடைநிகழ் உவமை என்மனார் புலவர் - பன்னிரு. 193 பெண்மக விற்குப் பேசு மிடத்து மானின் கன்று மயிலின் பிள்ளை தேனின் இன்பம் தெள்ளாத் தேறல் கரும்பின் இளமுளை கல்லாக் கிள்ளை இளந்தளிர் வல்லி என்றிவை எல்லாம் பெய்வளை மகளிர்க் கெய்திய உவமை - பன்னிரு. 194 இளங்கதிர்த் திங்கள் எல்லார்க்கும் உரித்தே - பரணர் பன்னிரு. 195 மேற். பிறங்கடை: பிறங்கு + அடை = பிறங்கடை. பிறங்குதல் விளங்குதல். தம் வாழ்வின் பின்னே தம்மினும் மேம்பட விளங்க அடுத்து வரும் மக்கள், மக்களின் மக்கள் பிறங்கடை எனப்படுவராம். ஒரு கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் கால், வாய்க்கால் எனப்படும். கண்வாயில் இருந்து பிரிவதும் வாய்க்காலேயாம். அக்கால்கள் போல் ஒரு குடிவழியில் மக்களாய் மக்கள் மக்களாய் வருவார் கால் வழியினர் என்பர். பிறப்பியம் (சாதகம்): கலியூழியின், ஆண்டு நாள் பொழுது கிழமை இராசி முதலியவற்றை வைத்துப் பாட்டுடைத் தலைவன் காலநிலை கணித்துப் பாடுவது சாதகம் என்பதாகும். தோற்றிய சாதகம் சாற்றுங் காலைப் பற்றிய கலியுகத் துற்ற யாண்டிற் றிருந்திய சகாத்தமும் ஆண்டும் பொருந்திய ஞாயிறும் பக்கமும் ஏய வாரமும் இராசியும் மன்னுற மொழிதற் குரிய - பன்னிரு. 73 சாதகக்கவி என்பது, ஓரை நிலையும், திதி நிலையும், யோக நிலையும், நாண்மீன் நிலையும், வார நிலையும், கரண நிலையும், கிரக நிலையும் ஆகிய ஏழுறுப்புகளின் நிலையையும் சோதிட நூலால் நன்குணர்ந்து அவற்றை அமைத்து அவற்றால் தலைமகனுக்கு அடைவன கூறல் என்பார் முத்துவீரிய நூலுடையார். ஓரை திதிநிலை யோகநாண் மீனிலை வாரங் கரணம் நிலைவரு கிரக நிலையெழு அவயவ நிலைமையும் உணர்வுற் றவற்றை அமைத்தவற் றாற்றலை மகனுக் கடைவன அறைதல்சா தகமென மொழிப - முத்துவீ. 1038 சாதகத்தைப் பிறப்பிய மாக்கியவர் மொழிஞாயிறு பாவாணர். பிறப்பு: இது பிறப்பினைக் கூறுவது பொதுவழக்கு. ஆனால் உடன்பிறந்தவர்களை உடன்பிறப்பு என்பதுடன், பிறந்தான், பிறந்தாள், பிறப்பு எனல் நெல்லை, முகவை வழக்குகள். உசிலம்பட்டி வட்டாரத்திலோ இது பெருவழக்கு. பிறப்பு மாலை (உற்பவ மாலை): திருமால் பிறப்புப் பத்தினையும் பத்து அகவல் விருத்தத்தால் பாடுவது உற்பவ மாலை எனப் பெறும். அரிபிறப் பொருபதும் அகவல் விருத்தத் துரிதிற் புகறல் உற்பவ மாலை - இலக். பாட். 108 உற்பவ மாலை அரிபிறப்பு எனவும் வழங்கப் பெறும். சேலே ஆமை ஏனம் சிங்கம் கோல வாமனன் மூவகை இராமர் கரியவன் கற்கி எனவரு கடவுளர் புரிதரு தோற்றம் தெரிதரப் பராஅய்ப் பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டி இனமொழி நாட்டி அகவல் விருத்தம் ஒருபதி யற்றுதல் ஆழியோன் பிறப்பே - பன்னிரு. 298 உற்பவ மாலையினைத் தசப்பிராதுற்பவம் என்பார் நவநீதப் பாட்டியலுடையார். குறைவில்லது தசங் கூறிற் றசப்பிரா துற்பவமே - நவநீத. 52 என்பது அது. பிரபந்தத் திரட்டார் உத்யாபனம் என்பார். நின்றுநகை யாத்தூது நெட்டிப்பின் னேமருவல் மன்னு காதல் உத்யா பனம் - பிர. திர. 42 பிறப்பொப்பு: உயிரிகள் பல வகையின; பல நிலையின. அறிவு வகையாலும் இயல் செயல் உணவு உணர்வு வகைகளாலும் பல்வேறுபாடு உடையன. ஆயினும், பிறப்பொக்கும் என்றார் திருவள்ளுவர். எவ்வகையால் எல்லா உயிரிகளும் ஒப்பன எனின், உயிரிகள் அனைத்தும் இன்பத்தையே விரும்புகின்றன; துன்பத்தை வெறுக்கின்றன. எவ்வுயிரியும் துன்பத்தை விரும்புவதும் இன்பத்தை வெறுப்பதும் இல்லை. பிறவி நோக்கு துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமுமேயாம் என்னும் பொதுமையே உடையதாம். ஆதலால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் திருவள்ளுவர். இயற்கை இயங்கியல் அனைத்தும் பொதுமையிலேயே இயங்குகின்றன. மழை, காற்று, வெயில் எல்லாம் பொதுமையாகக் கடனாற்றுவனவே, ஆக்கம் செய்தாலும் அழிவு செய்தாலும் பொதுமையாகவே செய்வன. அப் பொதுமை போற்றி வாழ்தல் ஆறறிவுப் பிறப்பியாம் மாந்தர் கடமையாம். இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு என்பது வள்ளுவம் (23). பிறிதுபடு பாட்டு: ஒரு பாட்டினுள் வேறு இனப்பாட்டு ஒன்றோ பலவோ அமையும் வண்ணம் பாடுவது பிறிதுபடு பாட்டாகும். தன்னினப் பாட்டும் வேற்றினப் பாட்டும், ஒரு பாட்டுள் அடங்கி வரப் பாடினும் பிறிதுபடு பாட்டேயாம். இவ்வகைப் பாடல்களால் வரும் நூல் பிறிதுபடு பாட்டு என்பதாம். கட்டளைக்கலித்துறை ஓமய வேலவ னோய்வறு சீர்த்திய னோமவுன சீமய வுத்தமர் நாதன் மயின்மிசைச் செல்லிளைஞன் கோமய மின்னிய வீடேறு மிட்டர் குரவனென தாமய வீறிறு மாறன கானந்த மார்கவன்றே நேரிசை யாசிரியப்பா ஓமய வேலவ னோய்வறு சீர்த்திய னோமவு னசிமய வுத்தமர் நாதன் மயின்மிசைச் செல்லிளை ஞன்கோ மயமின் னியவீ டேறு மிட்டர் குரவ னெனதா மயவீ றிறுமா றனகா னந்த மார்க வன்றே - பிறிதுபடு பாட்டுப் பிரபந்தம் பிறிதுபடு பாட்டு இரண்டு பாட்டாகப் பகுக்கப்படுமானால் பிறிதுபடு இருபங்கி (துவித பங்கி) என்றும், மூன்றாகப் பகுக்கப்படுமானால் பிறிதுபடு முப்பங்கி (திரிபங்கி) என்றும் வழங்கப் பெறும். குருதாசர் இயற்றிய பத்துப் பிரபந்தங்கள் என்னும் நூல் காண்க. பிறை: பிறை = பிறை நிலவு; ஒளி பிறந்து வருவது பிறை; வளர்வது, வளர்பிறை; தேய்வது, தேய்பிறை; முழுநிறைவு முழுமதி, முழுத்தம். இனிப், பிறை வடிவில் அமைக்கப்பட்டவை பிறை என வழங்கப்படும். சிறு நீர்ப்பிறை என்பது ஒன்று. சுவரில் பிறை வடிவில் செய்யப்பட்ட விளக்குப் பிறையைப் பிறை என்பது நெல்லை வழக்கு. மாடக்குழி என்பது பொதுவழக்கு. பின்தண்டம்: சிறை கொண்டாரை விடுத்தற்காகக் கொள்ளும் தண்டப்பொருள். அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு - பதிற். 2-ஆம் பதி. பொருள்: அந்த யவனரைப் பின்தண்டமாக அருவிலை நன்கலமும் வயிரமும் கொண்டு என்றவாறு (பழைய உரை). பின்பாட்டுப் பாடுதல்: பின்பாட்டுப் பாடுதல் = ஒத்துப் பேசுதல். முன்பாட்டின் போக்குக்கு ஏற்பப் பின்பாட்டுப் பாடுதலே பொருந்திய இசையாகும். அஃது இசைத்துறை நடைமுறை. இவண் முன்பாட்டு என்பது முதற்கண் பாடுபவரைக் குறியாமல் முதற்கண் ஒரு செய்தியைக் கூறுவாரைக் குறிக்கிறது. பின்பாட்டு என்பது முதற்கண் செய்தியைக் கூறுபவர் குறிப்புக்குத் தகத் தகப் பின்னே பேசுவாரைக் குறித்தது. ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடாங்கி அணைத்துப் புளுகடா அயலூர்க் கோடாங்கி என்னும் பழமொழிக்கு ஒப்ப ஒட்டியும் அணைத்தும் பேசுவது பின்பாட்டும் முன்பாட்டுமாம். பின்னுதல்: பின்னுதல் = தொடுத்துக் கூறுதல், வலுவாக அடித்தல். ஒரு செய்தியைச் சொல்லி அதனைத் தொடர்ந்து, தொடராகச் செய்தி அல்லது கதை கூறுவது பின்னுதல் எனப்படும். பன்னுதலும் பலகாலும் சொல்லுவதேனும், அதில் தொடர்புறுதல் இல்லை. பின்னுதல் தொடர்புறு செய்தியாக அமையும் பின்னி எடுத்துவிட்டான் பின்னி என்பதில் கடுமையாக அடித்தல் பொருள் உண்டு. ஒரு செய்தியை ஒருவர் சொல்லும் போது அவர்க்குத் தோதான குறிப்புகளை ஊடே ஊடே எடுத்துத் தருதலும் பின்னுதலாகச் சொல்லப்படும். கயிறு பின்னுதல் என்பது கயிறு திரித்தல். * கயிறு திரித்தல், சரடு உருட்டல் காண்க.  பீ வரிசைச் சொற்கள் பீ: மூடிய வாய் திறந்து ஒலிப்பது போல இசைக் குழல்வாய் இதழ்கள் பிளந்து எழுப்பும் ஒலி பீ என்பதாம். பீ பீ என்பது குழந்தைகள் குழலைக் குறித்து வைத்துக் கொள்ளும் ஒலிப்பெயர். மலவாய் பிளந்து வெளிப்படும் மலம், பீ எனப்பட்டது. அப்பெயர் சொல்லுதலும் ஆகாது என்னும் முறையால் (இடக்கரடக்கு) இலக்கணர் பவ்வீ என்றனர். ப் என்னும் எழுத்தொடு ஈ என்னும் எழுத்துச் சேர்ந்தது (ப் + ஈ = பீ) பவ்வீ ஆயிற்று (நன். 178). பீச்சுதல்: பீச்சுதல்:1 பீர் > பீர்ச்சுதல் > பீச்சுதல். பீர் = துளை; பீர்ச்சுதல் = துளை வழியே வரப் பால் கறத்தல். ஆட்டிலும் மாட்டிலும் பால் கறத்தல் பீச்சுதல் எனப்படும். பீச்சுதல்:2 நீர் விளையாட்டில் பீச்சு குழாய் வைத்துக் கொண்டு நீர் இறைத்தல். பீச்சுதல்:3 விழாக்களில் பன்னீர் தெளித்தல்; பன்னீர் தெளிக்கும் பொறி பீச்சி. பீச்சுதல்:4 வயிற்றுப் போக்கைப் பீச்சுதல் என்பது தென்தமிழகப் பெருவழக்காகும். குறிப்பாகக் குமரி மாவட்டப் பெருவழக்காகும். பீடம் தெரியாமல் ஆடல்: பீடம் தெரியாமல் ஆடல் = இடம் தெரியாமல் பேசல். பீடு + அம் = பீடம் = உயர்ந்த தளம். பீடு = உயர்வு. சாமி வைக்கின்ற மேடான சதுக்கம் பீடம் எனப்படும். ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு பீடம் உண்டு. அவ்வப் பீடத்துக்குத் தக்கவாறு சாமியாடல் வேண்டும். மருளாடி அப்படித் தக்க வகையில் அருள் வாக்குக் கொடுக்கும் தேர்ச்சி பெற்றிருப்பான். அப் பயிற்சி இல்லான் அல்லது புதுவன், பீடம் தெரியாமல் சாமியாடி அருள்வாக்குத் தந்தால் கேட்பவர்க்கு உண்மை புலப்பட்டு விடும். இவ்வழக்கில் இருந்து பீடம் தெரியாமல் சாமியாடல் என்பது உண்டாயிற்று. யாரிடமோ சொல்ல வேண்டியதை யாரிடமோ சொல்லல் என்பது அத் தொடரின் பொருளாம். பீடும் பெயரும்: பீடு = பெருமிதமான செய்கை. பெயர் = பெருமிதச் செய்கை செய்தான் பெயர். பீடும் பெயரும் எழுதி வழிதோறும் நாட்டப்பட்டிருந்த கற்றூண்களைச் சுட்டுகிறது சங்கப்பாட்டு. போர்க்களத்தில் பெருமிதம் காட்டுதலையே பீடாகக் கருதி அவர்க்குக் கல்லெடுத்து அவர் பெருமைச் செயலையும் பெயரையும் எழுதி வைத்து வழிபாடு செய்தல் வழக்கம். அமரில் இறந்தார் அமரர் எனப்பட்டார். அவரே தெய்வம் எனவும் பட்டார். பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் - அகம். 67 ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவின் அல்லது நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே - புறம். 335 பீடு பெற நில் என்பது அறவுரை. பிறர்க்குத் தாழாப் பெருநிலை பீடு என்பதாம். பெயர் என்பதே பேராகிப் புகழும் ஆயிற்றாம். பெயர் பெறுவதினும் பீடு பெறுவது தனிச் சிறப்பினதாம். பீடை: பிழை > பீழை > பீடை. குற்றம், துன்பம், நோய். பீடை மாதம் = மார்கழி மாதம். (வெ.வி.பே) பெண்ணுடைத் தன்மைய தாய பீடையால் - கம். உயுத் 1515 பீரம்: பீரம் = தாய்ப்பால். பீரம் பேணி பாரம் தாங்கும் - கொன்றை. தாய்ப்பால் செழிக்கக் குடித்த பிள்ளை எந்தப் பொறுப்பையும் தாங்கும் வலிமையைப் பெறும் என்பது பொருளாம். பீர் + அம் = பீரம். பீர் = துளை; துளை வழியே வரும் பால் பீரம். பீர்க்கு பீரம் என வழங்கப்படுதலை பீர் என் கிளவி அம்மொடும் சிவணும் என்பார் தொல்காப்பியர் (365). பீரை: பீர் > பீர்க்கு = உட்டுளையுடைய காய். கொடி வகையுள் ஒன்று பீரையாம் பீர்க்கு. பீரை நாறிய சுரையிவர் மருங்கின் - புறம். 116 பொருள்: பீர்க்கு முளைத்த சுரைபடர்ந்த இடத்தில் (ப.உ.). பீலி: பில் > பீல் > பீலி. பிலிற்றும் துளையுடையது. பிலிற்றுதல்=நீர்வழிதல். பீலி = மயில் தோகை; மயில் தோகை போல் அமைந்த காலணிகலம் பீலி எனப்படுகின்றது. கட்டுகம் பீலி மிஞ்சி என்பவற்றுள் ஒன்று அது. கடலைச் செடியின் விழுதைப் பீலி என்பது பேராவூரணி வழக்கு. பனங்கிழங்கு முளையைப் பீலி என்பது தூத்துக்குடி வட்டார வழக்கு. சுறாமீனின் சிறகை அல்லது செதிலைப் பீலி என்பது சீர்காழி வட்டார வழக்கு. வாழையின் பக்கக் கன்றைப் பீலிக் கன்று என்பது நெல்லை வழக்கு. பெருவிரலுக்கு அடுத்த விரலைப் பீலி விரல் என்பது நாகர்கோயில் வழக்கு. குழாயைப் பீலி என்பது செட்டிநாட்டு வழக்கு. பீலியின் காம்பு, துளையாக இருப்பது கொண்டு குழாய்க்குப் பெயராயது. பீளை: உடலின் வெப்பம் மிகுமானால் கண் சிவத்தலும் கண்ணின் கடை இதழில் அழுக்குத் திரண்டு வெண்ணிற உருண்டையாய்ப் படிதலும் காண்கிறோம். அதனைப் பீளை என்பர். கண்ணுப் பீளை என்றும் கூறுவர். பீளை என்பதைப் பூளை என்பாரும் உண்டு. அக் கண்ணழுக்குப் போலப் பூவுடைய ஒரு செடியின் பெயர் பீளை என வழங்கப்பட்டு, இந்நாளில் பூளை என நிலைபெற்றது. வேப்பிலை, பூளை இவை பொங்கல் விழாவின் மங்கல அடையாளமாக உழவராலும் பிறராலும் கொள்ளப் படுகின்றது. பீளை, பூளையாகிய வடிவம், ஆளையாஉனக் கமைந்த மாருதம் அறைந்த பூளையாயின கண்டனை எனக் கம்பரால் ஆளப்பட்டது (உயுத் 1217). பீள்: பீள் = பிளத்தல். பீள் என்பது பயிரின் கரு. அது பயிரின் ஊடு இரு பக்கத் தோகைகளையும் அல்லது இதழ்களையும் பிளந்து கொண்டு வருவதால் பீள் எனப்பட்டது. பீள் நிமிர்ந்து படிப்படியே பால் பிடித்து முதிர்ந்து மணியாகிக் கதிராகத் தாழும். பீள் வெளிப்படுவது போல் வெளிப்படும் மகவு, பிள்ளை எனப்படுதல் ஆயிற்று. வாழைப் பூ வெளிப்படலும், பூவில் இருந்து காய் வெளிப்படலும் மகப்பேறு ஒப்பானது. ஆதலால், வாழைக்குத் தள்ளை (தாய்) என்னும் பெயரும், குலை தள்ளுதலுக்கு ஈனுதல் என்னும் பெயரும் உண்டாயின. பீள் > பேள் என மாறி, வெளிக்குப் போதலை (மலங் கழித்தலை)க் குறிக்கும். இருபக்கத் தோல் மூடுகளைப் பிளந்து கொண்டு வருதலால் பேள் - பேள்தல் என வழங்கிப் பீப்பேள்தல் எனப் பொதுமக்கள் வழக்கில் ஆயிற்று. பேள்தல் தொழில், பேண்டான், பேண்டாள் என வினை வடிவும் பெற்றது. ள், ண் ஆதல் சொல்மரபு. எள் + நெய் = எண்ணெய்; வேள் + நீர் = வேணீர். பீற்றுதல்: பீற்றுதல் = தற்பெருமை பேசல். பீறல் (பீறுதல்) என்பது கிழிதல். பீச்சுதல் பொருளது. கிழித்துக் கொண்டு பீச்சுதல் பழுத்துப் போன புண்ணில் இருந்து நீரும் சீழும் வெளிப்படும். அது போல் வெளிப்படும் சொல்லே பீற்றுதல் என்பதாம். ஒருவர் தம் மனத்துள் தம்மைப் பற்றித் தாம் பெருமையாகக் கொண்டுள்ளவற்றைப் பேச்சுக்குப் பேச்சு விடாமல் பேசிக் கேட்பவர் வெறுக்கச் செய்வர். அதனால் உன் பீற்றுதல் தெரியும்; அது என்ன கேளாததா? எங்களுக்குக் கேட்டுக் கேட்டுப் புளிக்கிறது; உனக்குப் புளிக்கவே புளிக்காதா? என்பர்.  பு வரிசைச் சொற்கள் பு: பகர உகரம். இவ்வெழுத்தை அவ்வாறே கூறுதல் ஆகாது என்பதால் உப்பகாரம் என்றார் தொல்காப்பியர். உப்பகாரம் ஒன்றென மொழிப - தொல். 76 அவ்வாறே சகர உகரத்தையும், உச்சகாரம் என்றார். உச்சகாரம் இருமொழிக் குறித்தே - தொல். 75 உப்பகாரம் தபு என்னும் ஒருமொழிக்கண் ஈறாய் வரும் தன்வினை பிறவினை என்னும் இரண்டிடத்து நிலையினும் குறிப். இளவழகனார். புகட்டுதல்: சங்கு கெண்டி முதலியவற்றால் பால் மருந்து முதலிய வற்றைப் புகச் செய்தல் புகட்டுதலாம். பாடம் புகட்டுதல் என்பதும் அவ்வாறு உட்செலுத்துவது வழி வந்ததே. மூங்கில் கொட்டத்தால் மாடுகளுக்கு நீரும் மருந்தும் புகட்டுவதும் உண்டு. நாவந்தி அல்லது நாவரணை பற்றிய மாடுகள் நீரை விரும்பிக் குடியாமையால் இவ்வாறு செய்வர். புகட்டுதல் என்பது போட்டுதலாகத் திரியும். அமுதுதன் வாய் செவிதிறந்து புகட்ட (விடையிறு. 4). என்பது திருவிளையாடல் புகர்: புகர்:1 புகர் > போர் = புள்ளி. யானை முகத்தில் உள்ள வெண்புள்ளி புகர் எனப்படும். கருநிறக் காளையின் நெற்றி முதுகு ஆகியவற்றில் வெண்ணிறப் புள்ளி இருந்தால் புகர்க்காளை எனப்படும் (ம.வ.). புகர்மத்தப் பூட்கை - கம். உயுத். 1891 புகர்:2 புகர் = குற்றம். கரும்புள்ளி என்னும் வழக்கினைக் கருதுக. முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வைத்தல் இழிவுபடுத்துதல். புகல்: புகு > புகல். புகுதல் புகல்; புகுமிடம் இல்லாமையால் புகுமிடம் தேடி அடைதல். அடைக்கலம், தஞ்சம் என்பனவும் அது. ஏதும் இல்லாநிலை ஏதிலி! அந் நிலையினர் வாழ்வதற்குத் தேடி அடைதல் புகல். ஏதிலியர்க்கு நம்பிக்கை யூட்டும் சொல் புகலுதல் ஆகும். புகல் வாய்க்காதவர் புகலிலியர்; புகல் கெட்டவர் எனப்படுவாரும் அவர். புகழ்: புகு > புகழ் = தானே வந்து புகுமாறு இயலும் செயலும் அமைதல். ஒவ்வொருவர்க்கும் ஈருடல் உண்டு. முதல் உடல் அழியும் பொய்யுடல். அப் பொய்யுடல் கொண்டே மெய்யுடலாம் அழியாப் புகழுடலைப் பெற முடியும். ஆதலால் புகழுடலின் வித்து முதலாக இருப்பதால் பூத உடலாம் பொய்யுடல் முதல் என்றும் மெய் என்றும் பெயர் பெற்றது. புகழ், தேடிப் போய்ப் பெறுவது அன்று. அது தக்காரைத்தானே தேடி வந்து புகுவது ஆதலால், புகழ் என்னும் பெயர் பெற்றதாம். வாழும் போது கொண்ட வாழ்வே - வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்வே - இறந்த பின்னரும் அழியாத நிலைபேறுறும். ஆதலால், ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில் - திருக். 233 என்றது பொருளுரை. தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதும் அது (236). புகழ்ச்சி மாலை: பலவகை அடிகளும் மயங்கிய வஞ்சிப் பாவால் மகளிரைப் புகழ்ந்து பாடுவது புகழ்ச்சி மாலையாகும். மயக்க அடிபெறு வஞ்சிப் பாவால் வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல் புகழ்ச்சி மாலை - இலக். பாட். 106 இதனை வெண்பாவால் பாடுவதும் உண்டென்பது சேந்தம்பூதனார் பெயரால் வரும் ஒரு நூற்பாவான் அறியப் பெறுகின்றது. வெள்ளடி இயலால் புணர்ப்போன் குறிப்பிற் றள்ளா இயலது புகழ்ச்சி மாலை - பன்னிரு. 287 இனி அகவலடியும் கலியடியும் வந்து மயங்கிய வஞ்சிப் பாவால் பாடுவது என்றும் கூறுவர். அகவல் அடிகலி அடியும் மயங்கிய வஞ்சியின் அரிவையர் மாண்பை உரைப்பது புகழ்ச்சி மாலையின் பொருளா கும்மே - முத்துவீ. 1057 புகழ்மாலை (நாமமாலை): பலவகை அடிகளும் மயங்கி வரும் வஞ்சிப் பாவால் ஆடவரைப் புகழ்ந்து பாடுவது நாம மாலையாகும். மைந்தர்க் காயின் வஞ்சிப் பல்வகை சேர்ந்தவடி மயக்கம் நாம மாலை - பன்னிரு. 284 ஆடவர் திறத்து வஞ்சி யின்னெறி நாடிய பாதம் மயங்க வைப்பின் நாம மாலை - பன்னிரு. 285 புகார்: காவிரிப்பூம் பட்டினம்; பூம்புகார் என்பதும் இது. காவிரியாறு குறிஞ்சி முல்லை மருதப் பகுதிகளில் இருந்து அள்ளி வந்த மண்ணைப் படைபடையாகக் கொட்டிய இடத்துத் தோன்றியமையால் காவிரிப் படப்பை எனப்பட்டது (அகம்.205,376). ஆறு புகுவாயாம் அது பூக்களின் பரவலும் நறுமணமும் கொண்டதாக இருத்தலால் பூவிரி படப்பை எனப்பட்டது (சிலப். 6:32). நீர்ப்பெருக்கு மிகையால் கடல்நீரும் ஆற்று நீரும் முட்டி மோதி ஆர்த்தலால் புகார் (புகு + ஆர்) எனப்பட்டது (அகம். 181) அதன் நறுமணத்தால் பூம்புகார் எனப்பட்டது (அகம். 110) காவிரி புகுமிடத்து இருந்தமையால் காவிரிப் பூம்பட்டினம் (காவிரி + புகும் + பட்டினம்) எனப்பட்டது. பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் - சிலப். புகார்க். மங்கலவாழ்த்து புகுத்துதல்: ஊசி வழியாக மருந்தும் நீருணவும் செலுத்துதல் புகுத்துதலாகும். புகட்டுதல் சங்கு முதலியவற்றால் என்பதும், புகுத்துதல் ஊசி வழியாய் என்பதும் வேற்றுமை. ஒருவர் எண்ணத்தை மற்றொருவரிடத்தும், ஒருமொழியை மற்றொரு மொழியாரிடத்தும் புகுத்துவதும் புகுத்துதலே. விரும்பி ஏற்றால் புகுத்துதல் ஆகாதாம். புகை: புகு > புகை. புகுதற்கு அரிய இடத்தும் புகுவது புகை. எரிந்து வெளிப்படும் ஆவி புகையாம். எரி வெளிப்படாது, கரியும் வகையில் புகை வெளிப்படல் புகைதல். புகைத்தல், புகை பிடித்தல், புகையிலை இன்னவை அயலார் வழிப் பின்வரவு. கஞ்சாப்புகை முன்னை இருப்பு. பற்றற்ற அறிவராம் சித்தரையும் பற்றிக் கொண்டு அலைக்கழித்தது அது. புனல் (நீர்) புகா இடத்தும் புகை புகும்; புகை புகா இடத்தும் புலமையன் புகுவான் என்பது பழமொழி. புகை என்னும் பருப்பொருள் எரிவு வெளிப்பாடு போல் அகவெரியாம் சினம், சீற்றம், பொறாமை வகையால் ஏற்படும் மனவெப்பு வெளிப்பாடும் புகைதல் எனப்பட்டது. புகைதல் புகைச்சலாய் இருமுதலைக் குறித்தது. இருமல் ஆக்குவனவற்றுள் புகை முற்பட்டதேயாம். அருவி நீர் வீழுமிடத்து உண்டாம் நீர்த்துகள் புகை போல் தோற்றம் தரும்; மலைப் பகுதியை அப் புகை மூடுவது போல் தோற்றம் தருதலால் புகைக்கல் எனப்படும். புகை பொகையாய், பொகை, கொகையாய், கொகனகல் (ஒகனேகல்) ஆயது கன்னட மொழியில். புகைபோல் படி முகிலால் சூழ்ந்த - பொதிந்த மூடப்பட்ட மலை - பொதியம் பொதிகை பொதியில் ஆகியது. * புகழ் காண்க. புகையடை (புகையறை): புகை + அடை = புகையடை. புகை அடைவது புகையடை ஆகும். அது, ஒட்டடை என்பது ஒட்டறை ஆனாற் போல மாறிப் பிழைபட வழங்குகின்றது. விளக்கு எரிதல், சமையல் ஆகியவற்றின் வழியாக எழுந்த புகைக்கரி அடைந்து கிடைப்பதே புகையடை. புகைசாரை என்பதும் அது. சார்ந்தது சாரை. இவை நெல்லை வழக்குகள். புக்கில்: புகு > புக்கு + இல் = புக்கில். புக்கில் அமைந்தின்று கொல்லோ - திருக். 340 குனியாமல் வளையாமல் நிமிர்ந்து புகுமாறு வாயில் அமைந்த வீடு புக்கில் ஆகும். வாய்ப்பு வளம் மிக்கது அது. வளமனைகள் நெடிய தலைவாயில்கள் கொண்டிருத்தல் நோக்குக. குடிசைகளின் வாயில் குனிந்து புக வைப்பதையும் காண்க. * துச்சில் காண்க. புங்கன்: புன்கன் > புங்கன். புன்கன் என்பது புங்கன் என வழங்குகின்றது. சொன்னது கேளாமலும், தன்னறிவு இல்லாமலும் செயல்படுவானைப் புங்கப்பயல் என்பது நெல்லை வழக்கு. புன்கன் என்பது புன்மை - சிறுமை - குறித்த சொல். புடை: புடை = துளை, வளை, பக்கம். கிணற்றின் உள்ளே பாறை இடிந்து புடையாகிப் போனதால் புடைக்கிணறு என்பது சில கிணறுகளுக்குப் பெயர். புடையில் கைவிடாதே பூச்சி பொட்டை இருக்கும் என்பது ம.வ. புடவு என்பதும் அது. புடைத்தல்: புடைத்தல்:1 புடைத்தல் = பருத்தல். உடலில் பட்ட அடியால் புடைத்துவிட்டது. புடைத்தல்:2 புடைத்தல் = முறத்தில் தவசம் பருப்புகளைப் போட்டுத் தூய்மைப்படுத்துதல். புடைத்தல்:3 புடைத்தல் = அடித்தல். புடைத்தெடுத்துவிட்டான் பார்; தாங்க முடியவில்லை ம.வ. புடைத்தெடுத்தாற் போலிருத்தல்: புடைத்தெடுத்தாற் போலிருத்தல் = நலமாக இருத்தல். புடைத்தல், முறத்தில் (சுளகில்) இட்டு நொய்யும் நொறுங்கும், தூசியும் தும்பும், கல்லும், கட்டியும் விலக்குதல் ஆகும். புடைத்தெடுத்ததில் இவையெல்லாம் இராமல், தூயதும் நல்லதுமாகவே இருக்கும். அதனால், இப்பொழுதுதான் உடல் புடைத்து எடுத்தால் போலிருக்கிறது எனப்படும் வழக் குண்டாயிற்று. நோய் நொடி, பிச்சுப்பிடுங்கல், அல்லு செல்லு இல்லாமல் நலமாகவும் அமைதியாகவும் இருக்கிறது என்னும் பொருளில் புடைத்தெடுத்தாற் போலிருக்கிறது என்னும் வழக்கு உண்டாயிற்று. புடைப்பான்: புடைப்பான்:1 புடைப்பு > புடைப்பான். காற்றை ஊதிச் செலுத்துதலால் புடைக்கும் பலூனைக் குமரி மாவட்டத்தார் புடைப்பான் என்பர். புடைப்பான்:2 ஒருவகைப் பாம்பு. அப் பாம்பு கடித்தால் உடல் தடித்துப் போகும். அதனா ல் புடைப்பான் எனப் பெயர் கொண்டது. புடைவை: புடைவை > புடவை. புடவி என்பது உலகம். புடை = பக்கம். உடலின் பக்கமெல்லாம் சுற்றியிருக்கும் சீலை புடைவை (புடவை) எனப்படும். கடல் சூழ்ந்த உலகைப், புடவிக் கணி துகிலென வளரந்தக்கடல் என்பார் அருணகிரியார் (திருப்.). புட்டாமாவு: புட்டு + ஆம் + மாவு = புட்டா(ம்)மாவு. முகத்தில் தடவும் மணப்பொடியைப் புட்டாமாவு என்பது சிற்றூர் மக்கள் வழக்கு. அஃது உவமையால் அமைந்த பெயர். புட்டுக்குப் பயன்படுத்தும் அரிசி மாவு போல்வது என்னும் பொருளது. நிறத்தாலும் தூளாலும் ஒப்புமை கண்ட பெயரீடு அது. புட்டான்: தும்பி என்றும் தட்டாரப் பறவை என்றும் கூறுவதைப் புட்டான் என்பது குமரி மாவட்ட மூக்குப்பீரி வட்டார வழக்காகும். புள்ளி குத்திய சுங்கடிச் சீலையைப் புட்டா என்பது நெசவாளர், துணிக்கடையாளர் வழக்கமாதலை எண்ணலாம். புட்டான் = புள்ளிகளையுடையது. புட்டி: புட்டி, புட்டில் என்பவை கணை வைக்கும் தோள் தூக்கியைக் குறிப்பது பொதுவழக்கு. புட்டி என்பது இடுப்பைக் குறிப்பதும் பொதுவழக்கே. ஆனால், உட்காரும் நாற்காலியைப் புட்டி என்பது பரதவர் வழக்கமாகும். புட்டில்: புட்டில்:1 புட்டி + இல் = புட்டில். கீழ்குவிந்து மேல்விரிந்து இருக்கும் அமைவினது புட்டில். கணை வைப்பதற்கு அமைந்ததால் கணைப்புட்டில் எனப்பட்டது. அம்பு அறா (நீங்கா)த் தூணி என்பதும் அது. மாந்தரின் தொடைகள் கூடி இருக்கும் இடம் புட்டி எனப்படும். தொடை என்பது அம்பு அல்லது கணைக்கும் பெயர்! தொடுக்கப்படுவது தொடை. கண்போன்ற முகப்புடையது கணை. புட்டில்:2 தக்கோலம் என்னும் காய். அது புட்டில் போறலிற் புட்டில் என்றார் என்பார் நச். (திருமுருகு. 191). மணப்பொருள்களுள் ஒன்று தக்கோலம். செடி வகையினது. காயின் அமைப்பால் அது புட்டில் எனப்பட்டது. * தக்கோலம் காண்க. புதிசை: புதிதாக விளைந்து வந்த தவசத்தைச் சோறாக்குவது புதிசை எனப்படுதல், திருமங்கல வட்டார வழக்கு. இதனைப் புதிரி என்பதும் வழக்கில் உண்டு. பொங்கல் வேறு; புதிசை வேறு. புதிசை அவ்வக் குடும்ப விளைவு நுகர்வு பற்றியது. புதைகடை: கடைகால், வாணம் என்பவை பொதுவழக்குகள். கடைகால் தோண்டுதல் புதைகடை எனப்படுதல் திண்டுக்கல் வட்டார வழக்காகும். புதை என்பது அகழ் பள்ளம். கடை = இடம். புதைப்பு: ஒன்றை மூடுதல் - குறிப்பாக மண்போட்டு மூடுதல் - புதைப்பு எனப்படும். பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து என்பதே பின்னே புதையல் ஆயது. புதைப்பு என்பது மூடும் போர்வையைக் குறிப்பதாகக் குமரி மாவட்டத்தில் வழங்கு கின்றது. புத்தேளிர்: ஒரு காலத்தில் தமிழகத்திற்குப் புதிதாக வந்தவரைப் புத்தேள் என்றும் புத்தேளிர் என்றும் வழங்கினர். அவர்கள் நாடு புத்தேளிர் நாடு எனப்பட்டது. அந்நாடு அம் மக்களால் மிக உயர்வாகக் கூறப்பட்டமையால் அது ஒரு தனிப்புகழ் உலகமாகவே இந் நாட்டவரால் போற்றப்பட்டது. அதன் விரிவே புத்தேளிர் என்பதற்குத் தேவர் என்னும் பொருளும் புத்தேளிர் உலகம் என்பதற்கு வானவர் உலகம் என்னும் பொருளும் தந்ததாம். புத்தேள் என்பதன் பொருள் புதுமையாதலைக் கலித்தொகை 82-இல் நச்சினார்க்கினியர் உரையில் கண்டு கொள்க! புத்தேளிர் என்பது பல இடங்களில் (திருக். 58, 213, 234, 290, 966, 1323) ஆளப்பட்டுள்ளது. ஆங்கில ஆடவரையும் மகளிரையும் துரை துரைசானி என வழங்கிப் பெருமைப் படுத்திய பின்னாள் வழக்கொடு இம் முன்னாள் வழக்கு எண்ணத்தக்கது. புயல்: புய் + அல் = புயல். புய்த்துக் கொண்டு போகும் கடற்காற்று, புயற்காற்று. நீரை அள்ளிக் கொண்டு வந்து, கொட்டோ கொட்டெனக் கொட்டும் மழைநீர்க் காற்று புயற்காற்று ஆகும். மூட்டமாகக் கிளர்ந்து கடுங்காற்றுடன் பொழிந்து அலைக்கழிவு செய்வது. தீமையிடை யிலும் நன்மை போல வறண்ட நிலமும் மழை பெறும் வாய்ப்பு ஏற்படும். பாரதியாரின் புயற்காற்று என்னும் தலைப்பிலான கவிதை புயற்காற்றைப் படம்பிடித்துக் காட்டவல்லது. மனைவி: காற்ற டிக்குது கடல்கு முறுது கண்ணை விழிப்பாய் நாயகனே தூற்றல் கதவு சாளர மெல்லாம் தொளைத்த டிக்குது பள்ளியிலே கணவன்: வானம் சினந்தது; வையம் நடுங்குது; வாழி பராசக்தி காத்திடவே! தீனக் குழந்தைகள் துன்பப் படாதிங்கு தேவி அருள்செய்ய வேண்டுகின்றோம். மனைவி: நேற்றிருந் தோமந்த வீட்டினிலே - இந்த நேரமிருந்தா வென்படுவோம்? காற்றென வந்தது கூற்றமிங்கே நம்மைக் காத்தது தெய்வ வலிமை யன்றோ! புரி புரி:1 புரம் புரி என்பவை ஊர்ப்பெயர் ஈறு. புரி = வளைவு, கோட்டை. எ-டு: அளகாபுரி. புரிசை என்பதும் இது; கோட்டை. புரி:2 நூல், கயிறு, வடம், வைக்கோற்புரி. உருட்டி வளைத்துத் திரித்தலால் புரியாயது. புரி:3 ஏவல். புரிந்து கொள். புரிந்துதான் பேசுகிறாயா? ம.வ. புரிமணை: குடம் பானை ஆயவை வைப்பதற்கு வைக்கோல் புரி திரித்துச் சுருணையாகக் கட்டி வைப்பதைப் புரிமணை (பிரிமணை) என வழங்கினர். இதுகால் கலங்கள் மாறியது போல் புரிமணையும் மாழையால் (உலோகத்தால்) ஆகிவிட்டது. மோர் கடைதலுக்குப் புரிமணை மிகப் பயன்பட்டது. புரிமணை தென்தமிழக வழக்கு. புரை: உயரப் பொருளது புரை என்பது. உயரமான வீடு புரை எனப்படும். இப் புரை என்பது பந்தல் என்னும் பொருளில் விளவங்கோடு வட்டார வழக்காக உள்ளது. புரைஉயர் வாகும் என்பது தொல்காப்பியம் (785). பந்தல் உயரமானது என்பது வெளிப்படை. புரையேறுதல் என்பது உட்சென்ற நீர், பொருள் ஆயவை மேலே ஏறுதல். குழந்தைக்குப் புரையேறிவிட்டது ம.வ. புலப்பாடு: புலப்படு > புலப்பாடு. புலங்களின் வழியே அறியப்படுதல் - புலப்படுதல் - புலப்பாடு. கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறிதல் - திருக். 1101 புலமை: புலங்களின் வழியே அறியப்படுவது, புலமை. ஐம்புல அறிவும் மனவறிவும் கூடியது புலமையாம். புலவரை இறந்த புகழ்சால் தோன்றல் - புறம். 21 புலம்: புன்செய்; நிலபுலம் இணைச்சொல் ஐம்புலம்; கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதல்; மன அறிவு ஆறாம் அறிவு. புலம்பல்: புலம்பே தனிமை என்றார் தொல்காப்பியர் (814). புரப்பாரையோ அன்புப் பிறப்பாரையோ இழந்த காலையில் தனிமைப்பட்டுப் போன உணர்வும் அவ் வுணர்வால் புலம்புதலும் உண்டாம். உலகியல் புலப்பம் வேறு; தூய துறவு நிலைப்படியேறித் துலங்கும் சான்றோர் புலப்பம் வேறு. அவர்கள் இறையைப் பிரிந்து தனித்திருத்தலுக்கும் உயிர்களின் மேல் கொண்ட பேரருள் உருக்குதலுக்கும் புலம்பினர். முன்னது கலங்கல் என்றும், கையறு நிலை யென்றும், ஒப்பாரி என்றும் பெயர்களைத் தாங்க, பின்னது புலம்பலாகவும், ஆற்றாமையாகவும், ஏசறவாகவும் பிறவாகவும் விளங்குகின்றன. சித்தர்களில் ஒருவர் அழுகணிச் சித்தர்; அழு கண்ணராகவே இருந்தவர் எவ்வளவு ஆற்றாது புலம்பியிருப்பார். பட்டினத்தார் புலம்பலும், பத்திரகிரியார் புலம்பலும் அறிவுப் புலம்பல் (ஞானப்புலம்பல்) மெய்யறிவுப் புலம்பல் (மெய்ஞ் ஞானப் புலம்பல்) ஆம். மணிவாசகரின் திருவேசறவு, திருப்புலம்பல், வள்ளலாரின் ஆற்றா இரக்கம், ஏழைமையின் இரங்கல், ஆற்றாப் புலம்பல், முறையீடு இவையெல்லாம் உருக்கத்தால் பிறந்து உருக்கவே உருக்கொண்டவை அல்லவோ? மைந்தன் கான் புகுந்தான்; தந்தை வருந்தி வான் புகுந்தான்! ஏன் புகுந்து புலம்புகிறார் குலசேகர ஆழ்வார்! தயரதனே ஆகி விட்டாரே! கொல்லணைவேல் வரிநெடுங்கண் கோசலைதன் குலமதலாய் குனிவில் ஏந்தும் மல்லணைந்த வரைத்தோளா! வல்வினையேன் மனமுருக்கும் வகையே கற்றாய். மெல்லணைமேல் முன்துயின்றாய் இன்றினிப்போய் வியன்கான மரத்தின் நீழல் கல்லணைமேல் கண்துயிலக் கற்றனையோ காகுத்தா! கரிய கோவே! - பெரு. திரு. 9-3 ஆழ்வார் புலம்பலில் பத்தில் ஒன்று இது. புலம்பலுக்கு யாப்பு என்ன? ஒவ்வொரு புலம்பலும் உருக்குகின்றது! உணர்வே புலம்பல் யாப்பு! அறுசீரா? எழுசீரா? அகவலா? வெண்பாவா? தாழிசையா? சிந்தா? கண்ணியா? எல்லாவற்றிலும் புலம்பல் சான்று உண்டே. புலம்பெயர்தல்: புலம் பெயர்தல் = பிறந்து வளர்ந்த நாடுவிட்டுப் பிறிதொரு நாட்டுக்குச் செல்லுதல், சென்று வாழ்தல். புலம்பெயர் புதுவன் - சிலப். 16: 129 பொருள்: வேறொரு தேயத்தினின்று வந்தவன்; பரதேசிஅரும். பரதேசி = அயல்நாட்டான். புலவி: புல்லுதல் = தழுவுதல். புலத்தல் = வெறுத்தல். புல்லுதலற்ற நிலையே புலவி, புலத்தல் என்பவையாம். fyÉx புலவி. நெஞ்சொடு புலத்தல், புலவி, புலவி நுணுக்கம் என்பவை திருக்குறள் அதிகாரப் பெயர்கள். அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் - திருக். 1303 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் - திருக். 1302 புலி: மரத்தின் கீழே தூறுகளின் மறைவிலே இருக்கிறது. நிற்கிறது என்று தெரியா வகையில் இருந்து துயர் விளைப்பது புலி. வேங்கைமர நிழல் கீழே இருக்கும் போது அந்நிழல் வரி போன்றே தோன்றுதலால் வேங்கை வரிப்புலி என்றும் வேங்கை என்றும் வழங்கப்படுவது புலி. புல்லுதல் பொருந்துதல்; புல்லி > புலி ஆயிற்று. புள்ளிகளே அமைந்தவை கொண்டு புள்ளி > புல்லி > புலி ஆகி இருக்கலாமோ எனின், அதனைப் புள்ளிமான் எடுத்துக் கொண்டதே எனத் தோன்றுகின்றது. புல்: ஓரறிவுயிரி. புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - தொல். 1527 நிலத்தைப் புல்லிக் கிடத்தலால் புல் எனப்பட்டது. புல்லுதல் பொருந்துதல். புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு - திருக். 1187 பூவைத் தழுவிக் காக்கும் புறவிதழ் புல்லி எனப்படும். புல்போல் கிடந்து நிமிரா நிலையனும் பண்புக் குறையனும் புல்லியன் எனப்பட்டான்; புல்லன் என்பானும் அவன். நெல் முதலிய பயிர்க்குக் களையாய் வெட்டி எறிய வேண்டுவதாய் இருப்பதால் பிறர்க்குக் கேடாய் அமைவார் புல்லர் எனப்பட்டனர். கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் - திருக். 550 புல் பொருந்துதல் ஆதலால், புல்லுணவு பொருந்தும் உணவாயிற்று. புலால் உணவு (புல் + ஆ + ஆல் = புலால்) பொருந்தா உணவாயிற்று. மறைமலையடிகளார் நூல்களுள் ஒன்று: பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் என்பது. புலால் மறுத்தல் திருக்குறளில் ஓர் அதிகாரம். வேங்கட மலையாண்ட தலைவன் ஒருவன் புல்லி என்னும் பெயருடையவனாக இருந்தான் என்பது புறப்பாடல் (385); பாடியவர் கல்லாடனார். புல்குதல்: பொருந்துதல் பொருளில் வருவது இச்சொல். புல்லிக் கிடந்தேன் என்பது வள்ளுவம் (1187). நிலத்தைத் தழுவிக் கிடந்தும் படர்ந்தும் பெருக்கமுறும் புல்லைக் காணின் இப் பொருள் பொருத்தம் நன்கு விளக்கமாம். அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந் தோளன் - நாலா. 1016 புல்க = தழுவ. புல் பூண்டு: புல்= நிலத்தைப் புல்லிக் கிடப்பது (தழுவிக் கிடப்பது) புல்லாம். பூண்டு= புல்லினும் உயர்ந்து நிற்பது. முன்னது தாளால் பயனாவது. பின்னது கிழங்கால் பயனாவது. புல்லாகிப் பூடாகி என்பது திருவாசகம். கூடு, கூண்டு ஆவது போல், பூடு, பூண்டு ஆயது. தென்னை, பனை உயர்ந்து ஓங்கியவை எனினும் புல்லினம் எனப்பட்டன. புல்லின் தன்மையாய உட்டுளை யுடைமையால் என்க. புல் - புள் - பொள் - பொள்ளல் - பொய் - பொத்தல் என்பன வெல்லாம் உள்ளீடு இன்மைப் பொருளனவே. பூடும் பூண்டும் வெள்ளைப்பூடு, வெள்ளைப்பூண்டு என்பவற்றால் அறிக. புல்லரிப்பு பூரிப்பு: புல்லரிப்பு = ஒரு நிகழ்ச்சியைக் காண்டலாலும் கேட்டலாலும் வரும் மயிர்க் கூச்செறிவு. பூரிப்பு = மகிழ்ச்சி அல்லது மன விம்மிதம். திடுக்கிடும் செய்திகளும் எதிர்பாராத திருப்பங்களும் உடைய கதை, நொடி கேட்குங்காலும், திரைப்படம் காணுங் காலும், வரலாறு நிகழுங்காலும் புல்லரிப்பும் பூரிப்பும் ஏற்படல் இடைத்தொடர் நிகழ்ச்சிகளாம். புல்லினம்: புல் + இனம் = புல்லினம் = ஆட்டினம். இலை தழை என்பனவும் புல் வகையே. அவற்றை உண்டு வாழ்வது. புல்லினத்து ஆயர் மகன் - கலி. 103 புல்லுருவி: ஒன்றைப் பொருந்தி அதன் நீரையும் உரத்தையும் உறிஞ்சி வாழ் ஓரறிவு உயிரி புல்லுருவியாம். புல்லுதல் = பொருந்துதல். நிலத்தொடு பொருந்திக் கிடத்தலால் புல் என்னும் பெயர் பெற்ற உயிரியை அறிக. புல்லிக் கிடந்தேன் என்னும் குறளில் தழுவிக் கிடத்தல் பொருளில் புல்லுதல் அமைந்ததாம். வேரொடு வேர் புல்லி உறிஞ்சுதலும், மரத்தின் மேல் முளைத்து உறிஞ்சுதலும் உடையவை எனப் புல்லுருவிகள் இரு வகையாதலைக் காணலாம். நல்ல மரத்திற்குப் புல்லுருவி வாய்த்தால் போல் என்பது பழமொழி. குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் நறுங்காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப என்பது நற்றிணை (5). பொருள்: ஏனை மரங்கொடிக ளிவற்றின்வேர் சந்தன வேரொடு முயங்காத வழி, தனித்துள மரம் நறுமணம் எய்தாமை கண்கூடாகக் காண்டலால், ஈண்டு நறைக்கொடி சுற்றுவது கூறி நறுங்காழாரம் என்றார் (பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை). வேண்டுவதைப் புல்லி உருவி எடுத்துக் கொள்ளுதலால் புல்லுருவி எனப்பட்டது. இவ்வாறு பிறரை ஒட்டியிருந்து உறிஞ்சி வாழ்வாரைப் புல்லுருவி எனல் பொதுமக்கள் பொருளுரை. புழு: புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி என்பது திருவாசகம்; சிவபுராணம். புழல், புழல்கால், புழல்தலை, புழல்கோடு என்பவை பழஞ்சொற்கள். புழலாவது உட்டுளை யுடையது. புழை என்பதும் உட்டுளை உடையதேயாம். பின்னர்ப் புடை, புடல் என்பனவும் கிளர்ந்தன. மண் புழு முதலாம் புழுக்கள் மடிந்து போன கூடுகளை எடுத்துப் பார்த்தால் அவை புழையுடையவாய் இருத்தலை அறியலாம். ஓரறிவுயிரியாம் புல் பூண்டு மூங்கில் தென்னை பனை முதலியவை உள் வயிரம் அற்றவை. ஆதலால், புல்லினம் எனப்பட்டன. அவ்வாறே ஈரறிவு மூவறிவு உயிரிகளிலும் எலும்பு தசையின்றி அமைந்தவற்றைப் புழு என வழங்கினர். புழுகு, புளுகு: இவ்விரண்டு வடிவங்களும் இருவேறு பொருளன. ஒன்றை ஒன்றாக மயங்குவதும் இரண்டும் ஒரு பொருளனவே என்பதும் பிழை. புழுகு என்பது ஒருவகைப் பூனை; நாவிப் பூனை; நாவிப்பிள்ளை என்பதும் அது. கத்தூரிப் பிள்ளை; கத்தூரிப் பூனை என்பதும் அதுவே. புழுகு என்னும் அதன் வழியாகப் பெறும் பொருள். புழுகு அல்லது புனுகு எனப்படும் மணப்பொருளாகும். புழுகு மெய்ச் சொக்கர் என்பது மதுரைச் சொக்கருக்குரிய புகழ் மாலைகளுள் ஒன்று. புழுகாண்டி இறைவன் பெயர். மக்கள் பெயருமாம். புழுக்குதலால் அப்புழுகு தந்த பொருளே புழுகு என்பது. புளுகு என்பது பொய்மைப் பொருளது. பொய்யும் புளுகும் என்பது இணைச்சொல். கெட்டிக்காரன் புளுகும் எட்டுநாள் என்பது பொய்ப்புனைவைக் குறிப்பது வெளிப்படை. கெட்டிக்காரன் புளுகே எட்டுநாள் என்றால், கெட்டித்தனம் இல்லாதவன் புளுகு எத்தனை நாளைக்கு? புளுகாண்டி என்பது பொய்யனுக்குப் பட்டப்பெயர். புல் > புள் > புளுகு = உள்ளீடு அற்றது, பொய். புழுத்துப் போதல்: புழுத்துப் போதல் = யாருமே அறியமல் இறந்து கிடத்தல். புழுப்பற்றுதல், புழுத்தல், மரம் புழுத்துப் போயிற்று என்பது அதனைத் தெளிவாக்கும். வாய்க்கு வராததைப் பேசுபவனை, நீ பேசவதற்கு உன் வாய் புழுத்துப் போகும் என்பது வசை மொழி. சிலர் வாழ்நாளெல்லாம் பிறர்க்குக் கேடே செய்து வந்தால், கேட்பாரற்றுப் புழுத்துத்தான் போவாய் எனப் பழிப்பர். புழுத்துப் போதல் என்பது இறந்து நாறிப் புழுக்கள் உண்டாகி, பக்கத்தே வரும் முடைநாற்றத்தால் பிறர் அருவறுக்கும் நிலைமையாகும். போதல், சுடுகாட்டுக்குக் கொண்டு போதல். புழைக்கடை: வீட்டின் பின்புற வாயில். புழை = துளை. புழைக்கடை > புழக்கடை > புறக்கடை. புழைக்கை = யானையின் தும்பிக்கை. துளை உடைய கை. முன்வாயிலின் அகலத்தை விடக் குறைந்த அகலம் உடையது புழைக்கடை. உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் - திருப்பா. 14 புளிகுடித்திருத்தல்: புளி குடித்திருத்தல் என்பது மகப்பேறு வாய்த்திருத்தலைக் குறிப்பதாக அறந்தாங்கி வட்டார வழக்கில் உள்ளது. புளி விருப்பு கருவாய்த்தார்க்கு இயல்பாதல் கொண்டு ஏற்பட்ட வழக்குச் சொல்லாகும் இது. புளிக்கும் மாங்காய் இனிப்பு ஆகும் காலம் அது என்பர். புளித்தல்: புளித்தல் = வெறுத்தல். புளிப்பு ஒரு சுவை. புளியிலிருந்து புளிப்பு வருதல் வெளிப்படை. புளியமரம் பழமையானது. புளி ஆயிரம் பொந்து ஆயிரம் என ஈராயிர ஆண்டு வாழ்வுக்கு உரியதாகக் கூறும் பழமொழி. இப் புளி, புளிச்சுவையைத் தருவதுடன் வெறுப்பையும் தருவதாயிற்று. உன் பேச்சைக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது என்பதும் அந்தப் புளியை இங்கே கரைக்காதே என்பதும் வெறுப்பின் வழிப்பட்ட வழக்குகள். இவ்வாறே கசப்பு, கைப்பு, துவர்ப்பு என்பனவும் வெறுப்புப் பொருள் தருவனவாக வழங்குகின்றன. இச் சுவைகள் சற்றே மிகுவதாயினும் வெறுப்பு உண்டாக்கலின் அப் பொருள் வந்திருக்க வேண்டும். புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை - தொல். 244 ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே - தொல். 245 வல்லெழுத்து மிகினும் மான மில்லை ஒல்வழி அறிதல் வழக்கத் தான - தொல். 246 புளித்துச் சளித்து: புளிப்பு= காடியாகிப் போதல். சளிப்பு= காடியும் முதிர்ந்து சுவையழிந்து போதல். சோற்று நீர் புளிப்புடையதாக இருக்கும். அது நீர் உணவாகப் பயன்படும். நீற்றுத் தண்ணீர் எனவும் பெயர் பெறும். புளித்த தண்ணீர் என்பதும் அதன் பெயர். கடுவெயிலுக்கு இயல்பான உடல்நலமான குடிநீர் அது. பலநாள் கிடந்து புளிப்பேறிப் போனால் குடிக்க ஆகாவாறு கெட்டுப் போகும். அதனைச் சளிப்பாதல் என்பர். காடிக் கஞ்சியானாலும் மூடிக்குடி என்பது பழமொழி. சிலர் பேச்சைப், புளித்துச் சளித்து விட்டதாக வெறுத்துக் கூறுதல் உண்டு. புளியந்தோடு: நட்டுவாய்க்காலி என்பது நச்சுயிரி. அதனை விளவங்கோடு வட்டாரத்தார் புளியந்தோடு என்பது வியப்பு மிக்கது. புளியம் பூவொடு (உதிர்ந்து காய்ந்த பூ) ஒப்பிட்டுக் கண்ட உவமைக் காட்சியாகலாம் அது. புள்: புள் > புள்ளி = குத்து. பறவை அலகால் குத்தித் தின்பதால் புள் எனப்பட்டது (தேவநே.). புள்ளடி: புள் அடி என்பது பறவையின் கால்பதிவு. அப் பதிவு போல் பதியச் செய்யும் முத்திரையைப் புள்ளடி என்பது யாழ்ப்பாண நாட்டு வழக்கு. புள்ளடி என்பது தமிழ்க் கல்வெட்டுகளில் ஆளப்படும் சொல். எல்லைக்கல் அது. அதில் பொறிக்கப்பட்ட அடையாளம் பற்றிப் புள்ளடி எனப்பட்டது. காக பாதம் என்பதும் அது. அரைப்புள்ளி அடையாளம் அன்னது (;). புள்ளி: அவர் பெரும் புள்ளி என்பர். பள்ளிக் கணக்கு புள்ளிக்குதவாது என்பர். மெய்யெழுத்தெல்லாம் புள்ளியொடு நிலையல் - தொல். 15 புள்ளி யில்லா எல்லா மெய்யும் உயிருரு வாகி - தொல். 17 என்பார் தொல்காப்பியர். நிறுத்தக் குறிகளில் புள்ளி (முற்றுப்புள்ளி), அரைப்புள்ளி, கால்புள்ளி, முக்கால் புள்ளி என்பவை உண்டு. இவை பின் வரவாயவை. முன் வரவாம் புள்ளி எப்படி ஏற்பட்டது? பறவைகள் ஈர நிலத்தில் நின்றும் நடந்தும் சென்ற போது அப் பறவைகளின் தடத்தைப் பார்த்தவர் அது புள்ளின் தடம் ஆதலால் புள் தந்ததைப் புள்ளி என்றனர். புள்ளின் அடித் தடமே அது ஆதலால் அதனைப் புள்ளடி என்றனர். ஒருவர்க்குரிய நில எல்லையைக் குறிக்க எல்லைக்கல் நாட்டினர். அக்கல்லை அரசின் அலுவலர் ஊன்றியது என்பதற்கு அடையாளமாக புள்ளடியைப் போல் பொறித்தனர். அப் புள்ளடிக்கல் கல்வெட்டு வழியே அறியப்படுகின்றது. இவற்றால் புள்ளின் வழி அறியப்பட்டதே புள்ளியாகலாம். புள்ளி மயில், புள்ளிக் களவன் (நண்டு), புள்ளாட்டம், கிட்டிப் புள், புள்ளம்பாடி, பதினைந்தாம் புள்ளி, புள்ளரையன் எனப் பலவகையாய் விரிந்தது. புள்ளிக்கு 50 உருவா கொடு என்பது ஆளுக்கு 50 என்பதாம். திருமணமானவர்கள் தலைக்கட்டு எண்ணிக்கை என்னும் பொருளில் செட்டிநாட்டு வழக்கு உள்ளது. கரும்புள்ளி, செம்புள்ளி குத்துதல் இழிமைப்படுத்துதலாம். புள்ளியைப் பார்த்துச் சுடு என்பது ஏவல். முப்புள்ளி என்பது ஆய்தம் ஆகும். புள் நிமித்தம் பார்த்தல் வெட்சி முதலிய போர்க்குச் செல்வார் மேற்கொள்வதாம். புள்ளி போன்ற இலைப்பொட்டாலும், புள்ளி புள்ளியாக வெடிப்புறும் பட்டையாலும் புள்ளியாய், புளியாய் ஆயதோ என்பது எண்ணத்தக்கது. புள்ளி வைத்தல்: புள்ளி வைத்தல் = நிறுத்துதல், குறைப்படுத்தல். நிறுத்தக் குறிகளில் ஒன்று முற்றுப்புள்ளி. வினைமுற்றின் அடையாளமாவது முற்றுப்புள்ளி. இவண் புள்ளி வைத்தல் என்பது முற்றுப்புள்ளி வைத்தலைக் குறித்தது. அதன் பொருள் நிறுத்தம் அல்லது தடை என்பதாம். குற்றம் செய்தவர்க்குக் கரும்புள்ளி செம்புள்ளி குத்துதலும், கழுதைமேல் ஏற்றி ஊர்வலம் செய்ய வைத்தலும் முன்னாள் வழக்கு. அவ் வழக்கிலிருந்து புள்ளி வைத்தல், புள்ளி குத்தல் என்பவை குற்றப்படுத்துதல் என்னும் பொருளில் வழங்குவதாயிற்று. புறங்கூறாமை: புறங்கூறுதல் என்பது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறுதல். நல்லது கூறுதல் எவ்வளவு பெருமை சேர்க்குமோ, அவ்வளவுக்கு எதிரிடையான பழி சேர்ப்பது இப் புறங்கூறுதல். புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் - திருக். 183 எனத் திருவள்ளுவர் புறங்கூறுதலைக் கடுமையாகக் கண்டிக்கிறார். கோள் சொல்லுதல் என்பது இதுவே. ஓரிடத்து உள்ளதைக் கொண்டுபோய் ஓரிடத்துச் சொல்லுதல் கோள் ஆகும். புறநிலை: நீ வணங்கும் தெய்வம் நின் வழிவழி மிகுவதாக எனக் கூறுவது புறநிலையாகும். நீ வணங் கொருவன் நினைப்பாது காப்ப நின்னுடை வழிவழி நீளுவ தாக எனஇயம் புவது புறநிலை என்ப - முத்துவீ. 1098 புறம் புல்கல்: புறம் = முதுகு; புல்கல் = தழுவுதல். பெரியாழ்வார் ஏக்கத்தோடு எதிர்பார்க்கிறார். கண்ணன் வந்து தம் புறம் புல்குதலை! என்ன வேட்கை! என்ன வேட்கை! அகவை முதிர்ந்தவர்க்கு இளையர்கை வருடல் இன்பக் கொள்ளை யன்றோ? அதிலும் எட்டா முதுகில் அச்சொட்டும் தண்ணந்தாமரைக் கைவருடல் எப்படி இன்பம் செய்யும்? வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல் சொட்டுச்சொட் டென்னத் துளிக்கத் துளிக்கவென் குட்டன்வந் தென்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான் - பெரி. திரு. 1-9 முதுகு வருடலும் முத்தமிழ்க்கொரு பனுவல் வழங்குமெனின், அதன் முழுமையை எவரே உரைப்பார். புறம் புல்லலைப் பிறர் புல்லாதொழிதல் பெரியவர் பெருமையாம் தனிப்பெருமைக்கோ? புறவடை: பூப்பு அடைந்தவளை வீட்டுக்குப் புறத்தே சில நாள்கள் வைத்திருந்து பின்னர் விழா எடுத்து வீட்டுக்குள் வைத்தல் வழக்கம். இப் பூப்புக்கு வட்டாரம் தோறும் வழங்கப்படும் சொற்கள் தனித்தனியே பற்பல. திருப்பூர் வட்டாரத்தார் பூப்பினைப் புறவடை என்கின்றனர். புற்று: புல் + து = புற்று. புல் = துளை. மண்ணின் கீழே துளைத்தும் அகழ்ந்தும் செல்வதால் அதனை ஆழல் புற்றம் என்பர். கறையானுக்கும் ஒரு பெயர் ஆழல் என்பது. ஆழ்ந்த இடத்து இருத்தலால் பெற்ற பெயர் அது. புற்று + அம் = புற்றம். அம் பெருமை ஒட்டு. (எ-டு: கூடு, கூடம்.) நெடுஞ்செம் புற்ற மீயல் பகர - ஐங். 497 புற்றளை என்பது புற்றாகிய அளை என்பதாம். அளை = துளை. நாகம் கிடந்த... ... ... புற்றளை - மணிமே. 20:99 அளைமறிபாப்புப் பொருள்கோள் என்பது பொருள் கோள் வகைகளுள் ஒன்று. புற்றில் சுருண்டு சுருண்டு கிடக்கும் பாம்பு, புற்று வாய்ப்புறம் தலைநீட்டி இருப்பது போல் பொருளமைதி யுடையது அது. புற்றுநோய்: புற்றைப்போல் உள்ளெழுந்து தோன்றி வளரும் ஒரு கொடிய நோய் புற்றுநோய் எனப்பட்டது. நோய் வடிவமைப்புக் கருதிய உவமை அது. கேன்சர் என்னும் பெயரும் அது பற்றிப் படரும் நிலைபற்றி எழுந்த உவமைப் பெயரேயாம். கேன்சர் என்பது நண்டாகும். நண்டுப்பிடி குரங்குப்பிடி உடும்புப் பிடி போல்வது ஓர் கடும்பிடியாகும். புனல்: புன் + அல் = புனல். சிறிதளவாக இல்லாமல் பெருக்குடைய நீர் புனல். பிள்ளைப் பருவங்களுள் ஒன்று புனலாட்டு. புனலூர், புனல்வேலி என்பவை ஊர்ப்பெயர்கள். புனலி, நீர்வாழ் கொடி. மென்னீர் = பூம்புனல். மாசு ஆகும் புன்மை அற்ற நீரே புனலுமாம். புறந்தூய்மை நீரான் அமையும். ஆதலால் புனல் புறந்தூய்மைக்கு இன்றியமையாதது. புறந்தூய்மை அகந்தூய்மைக்கு உதவுதலுமாம். எல்லாச் சமயங்களிலும் புனலாட்டு கழுவாய் என மதிக்கப்படுகிறது. கழுவாய் என்பதும் புனிதப்படுத்தல் என்பதும் புனல் வழிப்பட்டதேயாம். புனலாடல் இன்ப விளையாடல்களுள் ஒன்று. தீர்த்தம் என்னும் பெருமையது. தீர்தல் விடற் பொருட்டது (தொல். 801). ஆதலால் இறையொடு பொருந்துவதும் ஆயிற்று. புனிறு: புனிறென் கிளவி ஈன்றணிமைப் பொருட்டே - தொல். 858 புனலால் கழுவித் தூய்மைப்படுத்துதலால் குட்டி பிள்ளை ஈன்ற அணிமையைச் சுட்டியது. புன்புலம்: முல்லை நிலத்திற்குப் புன்புலம் என்பது ஒருபெயர். ஏற்றமும் இறக்கமும் மிகுந்தும், பாறையும் கல்லும் செறிந்தும் உள்ள குறிஞ்சியை வன்புலம் என்பர். நீரைத் தேக்கி வைத்து வேண்டும் போதெல்லாம் பயன்கொள்ளும் மருதத்தை நன்புலம் என்பர். குறிஞ்சி போல வன்புலமாகவும், மருதம் போல நன்புலமாகவும் இல்லாமல் வான்மழையை எதிர்பார்த்துப் பயிர் செய்யத் தக்க முல்லை நிலத்தைப் புன்புலம் என்றனர். புன்னகை: புல் + நகை = புன்னகை. புன்மை = சிறிது. புன்னகை = சிறுநகை. புன்கணீர் பூசல் தரும் - திருக். 71 புன்மை அளவால் சிறிதே அன்றி, சிறுமைப்படுத்தும் எள்ளல் அன்று. புன்னை: கடலும் கடல்சார்ந்த பகுதியும் நெய்தல் ஆகும். நெய்தல் கொடியின் சிறப்பாலும், அக்கொடியின் மலர் கண்ணை ஒத்திருத்தலாலும், அம்மலர் மேல் பட்ட நீர்த்துளி, வருந்தி வழியும் கண்ணீர்த் தோற்றம் தருதலாலும் நெய்தலாய்ப் பொருந்தியது. நைதல், இனைதல் என்பவை வருந்துதலும், வருந்திக் கண்ணீர் வழிய ஏங்கி எதிர்பார்த்து இருத்தலும் ஆகிய பொருள் பொதி சொற்கள். ஆங்குள்ள குறுந்தூறுகள் தவிர்த்து ஓங்கி எழுந்தவை தென்னை, ப(ன்)னை, புன்னை என்பன. இவை எள்நெய், வெள்நெய் (எண்ணெய், வெண்ணெய்) போல நெய் வழங்குவன. தென்னை எண்ணெய் (தேங்காய் எண்ணெய்), பனை எண்ணெய் (எண்ணெய்ப்பனை) புன்னை எண்ணெய் என இந்நாள் வழங்குவன. தென்னை, பன்னை ஆயவற்றினும் தாழ்ந்த உயரமும், பக்கக் கிளை விரிவும் குறைந்த அளவு நெய்யும் கொண்டமையால் புன்நெய் எனப்பட்டுப் புன்னை ஆயது எனலாம். புன்னையை வீட்டு மரமாகவும் வளர்த்தமை, நுன்னிற் சிறந்தது நுவ்வையா மென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே என்னும் அகப்பாட்டால் புலப்படும். அதன் அழகு, அழகு வயப்படுவாரை ஆழ்ந்து கவர்ந்தமை, இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை நீலத் தன்ன பாசிலை அகந்தொறும் வெள்ளி யன்ன விளங்கிணர் நாப்பண் பொன்னின் அன்ன நறுந்தாது உதிர என்னும் நற்றிணைப் பாடலால் (249) நனிவிளங்கும். இரும்பு போன்ற கருநிறக்கிளை; நீலத்தை ஒத்த பச்சிலை; வெள்ளி போல ஒளிசெய்யும் பூங்கொத்து; பொன்போன்ற நறும்பூம் பொடி! ஐவண்ணக் கிள்ளையாய் அல்லவோ புன்னை, புலவன் பார்வையில் பொலிகின்றது. புன்னையின் காயில் நெய்ப்பதம் இருப்பதை அறிந்து, நெய்கனி பசுங்காய் - நற். 278 என்றது அருமை மிக்கதாம். புன்னை நிரம்பிய இடம் புன்னையம் பொதும்பு (அகம். 340), புன்னையங் கானல் (அகம். 80), புன்னைப்பூம் பொழில் (குறுந். 123) எனப்பட்டன.  பூ வரிசைச் சொற்கள் பூ: பூ:1 பகர ஊகாரம் எனப்படுவது இது. ஓரெழுத்து ஒருமொழி. அழகு, இடம், உலகம், கண்ணோயுள் ஒன்று, தாமரை, தீப்பொறி, பூப்பு, பொலிவு முதலாம் பொருள் தரும் சொல் இது. பூ என்பதன் முன் வல்லினம் வந்தால் அவ் வல்லினமாக நிற்றலொடு அதன் இனமான மெல்லினமாகவும் மாறும். பூப்பெயர் முன்னின மென்மையும் தோன்றும்- நன். 200 பூவென்னும் பலபொருட் பெயர்ச்சொன்முன் வல்லினம் வரிற் பொதுவிதியாற் க ச த ப மிகுதலே யன்றி அவற்றிற்கு இனமாய மெல்லொற்றுக்களும் மிகும். பூக்கொடி - பூங்கொடி;பூச்சோலை - பூஞ்சோலை; பூத்தடம் - பூந்தடம்;பூப்பணை - பூம்பணை. தமிழர் வாழ்வில் பூவுக்குத் தனிப்பெருஞ் சிறப்பு உண்டு. உலகத்தையே பூ என்று அருமையான அறிவியல் பார்வையொடு வழங்கினர். வெளி வளி ஒளி நீர் நிலம் என்பவை ஒன்றில் இருந்து ஒன்று விரிந்தமையால் அவற்றைப் பூதம் என்றனர். பூத்தல் = விரிதல்; பூதம் = விரிந்தமைந்தது. அவர்கள் வாழ்விடத்தை முதற்கண் நான்காகவும் பின்னர் ஐந்தாகவும் பகுத்தனர். அவ்வவ் விடத்தின் சிறப்பமைந்த பூவையே அவற்றின் பெயராக வழங்கினர். அவை முறையே குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன. பூவின் பெயர், இடத்தின் பெயராகவும் பின்னர் அவ்விடத்தின் உரிப்பொருள் ஒழுக்கப் பெயராகவும் அமைந்தது. இக் குறிஞ்சி முல்லை முதலியவை அக வாழ்வுக்கு உரியவையாயின. புறவாழ்வையும் பூக்களாலேயே அமைத்துக் கொண்டனர். அவை வெட்சி, கரந்தை, உழிஞை, தும்பை, நொச்சி, வாகை, காஞ்சி என்றாயின. ஒரு பெண் வாழ்க்கைத் தகுதியாம் பருவமடைதலைப் பூப்பு என்றனர். பூப்பு நீராட்டு விழாவும் நிகழ்த்தினர். மணக்கும் பருவம் அடைந்தவனை மலரின் பருவங்களுள் ஒன்றாய அரும்பினால் அரும்பினான் என்றனர். மலர்க்கும் மலர்க்கும் நிகழ்த்தும் வாழ்வியல் விழாவில் மாலையிடல், மாலை மாற்றல், மணத்தல், மணப்பந்தல், மருமகன் (மரு = மண), மருமகள், மருவீடு என்பனவெல்லாம் பூமணமாகவே பொலிந்தன. மங்கல விழா எதுவாகினும் பூவுக்குத் தனிச்சிறப்பான இடமிருத்தல் போல், இறப்பின் போதும் மாலையிடல் பூச்சொரிதல் என்பவை உண்டு. கோயில் வழிபாட்டில் பூவுக்குப் பேரிடம் உண்டு. இன்ன தெய்வத்திற்கு இன்ன பூ உகந்தது என்னும் வழக்கமும் உண்டாயிற்று. ஐம்பூதப் பெயர்களும் பூதலிங்கம் என இறைமை யேற்றன. கோயிலுக்கும் மங்கல விழாக்களுக்கும் பிறவற்றுக்கும் பயன்படுத்தும் பூ, காய்த்தல் இல்லாத மணப்பூவாகவே இருத்தல் அதன் பயன், வாழ்வியல் பயனாகவும் கருதிச் செய்யப்பட்ட அருமையதாம். பூக்கள் நீர்ப்பூ, நிலப்பூ எனவும், காலைப்பூ மாலைப்பூ எனவும், பகற்பூ இரவுப்பூ எனவும் இன்ன பொழுதில் இன்னபூ மலரும் எனவும் அறிந்து கொண்டிருந்தனர். கொடிப்பூ செடிப்பூ கோட்டுப்பூ எனலும் உண்டு. மங்கல மாகி இன்றியமை யாது யாவரும் மகிழ்ந்து மேற்கொள மல்கிப் பொழுதின் முகமலர் வுடையது பூவே - நன். 30 எனப் பூவின் இலக்கணம் கூறினர். நூல் கற்பிக்கும் ஆசிரிய னுக்குரிய தன்மைகளுள் ஒன்று பூப் போலிருத்தல் என்றனர். பூந்தோட்டம், நந்தவனம் என்னும் பெயர்களால் கோயில் களை அடுத்தே உண்டாக்கினர். பூந்தோட்டம் என்னும் பெயரால் ஊருண்டு. பூந்துருத்தி, சிந்து பூந்துறை, சேர்ந்தபூமங்கலம், பூந்தண்மலி (பூந்தமல்லி), திருவல்லிக்கேணி, தாமரைக்குளம், பூந்தராய், பூங்குடி எனப் பலவாறாகப் பூவின் பொதுப் பெயராலும் சிறப்புப் பெயராலும் ஊர்கள் பல உளவாயின. வனப்பின் வைப்பகமாக ஒரு வனம் திகழ்ந்தாலும் அதன் பூவே முதற்கண் கொள்ளை கொள்வதாம். பூவின் அழகும் கவர்ச்சியும் மங்கல மாண்பும் அறிந்தோர் அழகையே பூவெனப் பெயரிட்டுப் போற்றினர் என்க. பொன் வைக்கும் இடத்தில் பூ என்னும் பழமொழி பூவின் சிறப்பை உணர்த்தும். பூ என ஊதுதல் என்பது எளிதாக வெல்லுதல் பொருளில் வழங்குகின்றது. பூப்போல என்பது மென்மைப் பொருளது (ம.வ.). பூ முதற் பெயர்கள் பூக்கடை பூக்கட்டல் பூக்கிளை பூக்குடலை பூக்குவளை பூக்குவியல் பூக்கொய்தல் பூக்கொல்லை பூங்கண் பூங்கணை பூங்கா பூங்காவி பூங்காற்று பூங்குடி பூங்குளம் பூங்கொடி பூங்கொத்து பூங்கோதை பூங்கோரை பூச்சரம் பூஞ்சாறு பூஞ்செடி பூத்துக்கிடத்தல் பூத்துணி பூத்துண்டு பூத்துப்போனது பூத்தேர் பூத்தையல் பூத்தொடுத்தல் பூநாகம் பூநார் பூந்தண்ணீர் பூந்தார் பூந்துகில் பூந்தொட்டி பூந்தோட்டம் பூப்பதியம் பூப்பந்து பூப்பலி பூப்பறித்தல் பூப்பாத்தி பூப்பின்னல் பூப்பு பூப்பு நீராட்டு பூப் போடல் பூமகள் பூமனள் பூமணி பூமாரி பூமாலை பூம்பராகம் பூம்பாத்தி பூம்பாளை பூவணை பூவரசு பூவல் பூவன் பூவாளி பூவானி பூவேலை பூவை பூவா தலையா பூவாமரம் பூ ஈற்றுப் பெயர்களை எண்ணல் புல் முதல் மாமீறாகிய பெயர்களை யெல்லாம் எண்ணலாகி எண்ண முடியாததாகிவிடும் கபிலர் எணிணிய 99 வகைப்பூ மட்டுமா பூக்கள்! பெயரிடப் படாதவை அறியப்படாதவை எத்தனை எத்தனை? பூ: 2 இவ் வோரெழுத்து ஒரு சொல் ஒரு விளைவு அல்லது போகம் என்னும் உழவர் வழக்குச் சொல்லாக நெல்லை வழக்கில் உள்ளது. ஓராண்டில் ஒருமுறை விளைதல், இருமுறை விளைதல் என்பவற்றை ஒரு போகம், இருபோகம் என்பர். தஞ்சையை முப்போகம் என்றும் முப் என்றும் சுட்டுவர். பூ என்பது ஓராண்டில் ஒருமுறை விளைவு. பூக்கோள் நிலை: படைஞர் பகைவரொடு போருக்குச் செல்லுதற்கு அரசன் கொடுக்கும் பூவை அணிந்து கொள்ளுதல், காரெதிரிய கடற்றானை போரெதிரிய பூக்கொண்டன்று என்பது இதன் இலக்கணம் ( புறப்பொருள் வெண்பா மாலை 70). பருதிசெல் வானம் பரந்துருவி யன்ன குருதியா றாவதுகொல் குன்றூர் - கருத மறத்திறத்தின் மாறா மறவருங் கொண்டார் புறத்திறுத்த வேந்திரியப் பூ என்பது இதற்கு எடுத்துக்காட்டு. பூசல்: பூசு + அல் = பூசல். பூசுதல் = மறைத்தல், மெழுகுதல், மூடி வைத்தல். உண்மையை வெளிப்படுத்தாமல் மறைத்து மறைத்து மூடி வைத்தலால் அவ்வுண்மை வெளிப்படும் போது ஏற்படும் மனமாற்றம் பூசலாம். சுவரின் மேடு பள்ளம் கீறல் வெடிப்பு வெளியே தோன்றாமல் பூசுதலும், அழுக்குப் படிந்த சுவர்க்கு வண்ணம் பூசுதலையும் மண் அடுப்பின் விரிவு வெடிவுகளை அகற்ற மெழுகுதலையும் எண்ணினால் பூசல் விளங்கும். மெய்யெலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டி வந்த முத்தநாதன் வஞ்சக் கோலமும் பூசலார் நாயனார் (பூசுதல் அற்றார்) தூயமன வழிபாடும் பூசல் விளக்கச் செய்திகளாம். ஆகம் உருப்ப நூறி மெய்ம் மறந்துபட்ட வரையாப்பூசல் - புறம். 25 பொருள்: மார்பம் அழல அறைந்து கொண்டு அறிவு மயங்கியுற்ற அளவற்ற அழுகை ப.உ. சான்றோர் இருந்த அவையத் துற்றோன் ஆசா கென்னும் பூசல் போல - புறம். 266 பொருள்: அறிவான் அமைந்தோர் தொக்கிருந்த அவையின்கண் சென்று பொருந்தினான் ஒருவன் யானுற்ற துன்பத்திற்குத் துணையாய் எனக்கு நீர் பற்றாக வேண்டும் என்னும் ஆரவாரத்தை அவர் விரையத் தீர்க்குமாறு போல ப.உ. பூசல் ஆரவாரப் பொருள் தருதல் குறித்தது இது. ஆகுலப் பூசலும் அழலும் என்னும் பெருங்கதையால் (1:47:185) பூசல் துயரம் அழுகை ஆயவை இயைதல் அறியலாம். பேராறு மடுத்த பெருங்கடல் போல ஓசை அறியாப் பூசலும் புலம்பும் என்பதால் (பெருங். 1:47:335-336) பூசலையும் புலம்பலையும் உள்ளடக்கி வைத்தலையும் அறியலாம். பூசனை: திருவுருவத்தை நீராட்டித் துடைத்தல் பூசுதல் ஆகும். வாய்பூசுதல், முகம்பூசுதல் என்பன வாய் கழுவுதல், முகம் கழுவுதல் பொருளன. ஈயம் பூசுதல், சுவர் பூசுதல் என்பன மெழுகித் துடைக்கும் பொருளாக இன்றும் வழங்குகின்றன. தின்றபின் கால்களால் வாயைத் துடைக்கும் உயிரியின் செயலைக் கண்டவர் பூச்சை, பூசை, பூனை என வழங்கினர். பூசனை என்னும் சொல் திருவள்ளுவரால் வழங்கப் படுகின்றது. சிறப்பொடு பூசனை செல்லாது - திருக். 18 பூசாரி: தெய்வத் திருவுருவத்திற்கு நீர்விட்டுத் துடைத்து வழிபாடு செய்தலை மேற்கொண்டவர் பூசாரி எனப்பட்டார். புலவர், பூசாரி, பண்டாரம், ஓதுவார், குருக்கள் என்பார் தமிழ்நெறி இறைவழிபாடு செய்பவராவர். பூசி மெழுகுதல்: பூசி மெழுகுதல்:1 பூசுதல்= தடவுதல். மெழுகுதல்= தேய்த்தல். ஈயம் பூசுதல்; சுவர்ப்பூச்சு; இவற்றால் பூசுதல் புலனாம். முற்படப் பூசி, பின்னே அதனை மெழுகுதல் நிகழும். பூனைக்குப் பூசை என்பதொரு பெயர். அது தன் வாயை அடிக்கடி பூசுதலால் பெற்ற பெயர். பூசகர், பூசனை என்பனவும் பூசுதலால் வந்தவையே. மெழுகுதல் = சாணத்தைக் கரைத்துத் தேய்த்தல் மெழுகுதலாம். பூசிய சுவரையோ தளத்தையோ மெழுகிடல் கண்கூடு. விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி யாகும் - தேவா. திருநா. பூசி மெழுகுதல்:2 ஒன்றை, உண்மை மறைத்து மழுப்பிச் சொல்லுதலைப் பூசி மெழுகுவதாகக் கூறுவது வழக்கம். பூசி மெழுகும் வினையடியாக வந்த மரபு இதுவாம். அடுப்பு முன்னாளில் மண்ணால் செய்யப்படுவதே வழக்கமாக இருந்தது. சுடுமண் அடுப்பை வைத்து அதனைப் பூசி மெழுகுவர். அம் மெழுகுதல் வெள்ளி செவ்வாய் என இருநாள்களிலும் செய்வர். பூசி மெழுகுதலால் அடுப்பில் ஏற்பட்டிருக்கும் விரிசல், வெடிப்பு, கீறல் ஆயவை மறைந்து போம். அவ்வழக்கில் இருந்து குற்றம், குறை, கேடு ஆயவற்றைப் புலப்படா வண்ணம் மறைத்தல் பூசி மெழுகுதலாக வழங்கலாயிற்று. அவன் பூசி மெழுகுவதில் தேர்ந்த ஆள் என்பதில், அவன் மறைப்புத் திறம் மறைவின்றி விளங்கும். பூசுணை: பூசுணை:1 பூ + சுணை = பூசுணை. பூ = மென்மை; சுணை = சுண்ணப்பொடி போன்ற வெண்பொடி. மெல்லிய வெண்பொடியைக் கொண்டதாக இருப்பதால் இப்பெயர் பெற்றது. சுணை அரிப்புத் தன்மை உடையது. இலையில் உள்ள கூர்முள்கள் அரிக்கும் இயல்பினது ஆதலால் அதுவும் பொருந்திய பெயர் பூசுணையாம். கறிக்குப் பயன்படும் காய்விளையும் கொடி. தோட்டப் பயிராகப் பயிரிடப் படுவது. இதன் காயும், பழமும் கறிக்கு உதவும். பூ முற்றங்களில் போடப்படும் கோலங்களுக்கு எழிலூட்டும். பூசணி என்பது பிழை வழக்கு. பிற்காலப் பாடல்களிலும் இவ்வழக்கு ஏறிற்று. பூசுணை:2 பூசுணை = பருத்தவர். பூசுணைக்காய் பெரியது. பூசணி எனவும் வழங்கப்படும். சுணை என்பது வெண்ணிறமாகப் படர்ந்திருக்கும் ஒரு பொடி. அது மெல்லியது. ஆதலால் பூசணை எனப்பட்டது. ஒருவர் பருத்தவராக இருப்பின் அவர்தம் பருமைத் தோற்றம் காயிற் பெரிய பூசுணைக்கு ஒப்பிட்டுச் சொல்லத் தூண்டியிருக்கிறது. அவ் வகையில் வந்ததே, அவர் ஒரு பூசுணைப் பழம் என்பது பூசுணைப் பழம் உருண்டு புரண்டு வருவதைப் பாருங்களேன் என்று மென்னகை புரிவதும் காணக் கூடியதே. பூசை: பூசை:1 பூசுதல் > பூசை > பூனை. ஏதாவது தின்றவுடன் தன் முன்னங் கால்களால் வாயைத் துடைக்கும் வழக்கத்தால் பூனை, பூசை எனப்பட்டது. பூசை நக்குபு புக்கென - கம்ப. பாயிரம் பூசை:2 தெய்வத் திருவுருவத்தை நீர்விட்டுக் கழுவித் துடைத்தல் பூசை என்பதாம். பூசனை என்பதும் அது. வாய் கழுவுதலை வாய் பூசுதல் என்பது நூல் உரையாளர் கூறும் மங்கல வழக்கு. ஈயம் பூசுதல், சுவரைப் பூசுதல், பூச்சுமட்டை என்பவை ம.வ. பூசை கொடுத்தல்: பூசை கொடுத்தல்:1 பூவொடு நீர்விட்டு வழிபடுதல். சலம் பூவொடு - தேவா. திருநா. பூசை கொடுத்தல்:2 அடித்தல். வழிபாட்டில் சிறு தெய்வ வழிபாடு ஒன்று. அவ் வழிபாடு சாமியாடல், வெறியாடல், உயிர்ப்பலியிடல் என்பனவெல்லாம் கொண்டது. உயிர்ப் பலியிடல் சட்டத்தால் இக்கால் தடுக்கப்படினும் முற்றாகத் தடுக்கப்பட்டிலது. சாமியாடுவான் சாமியாடி அவன் கையில் சாட்டைக் கயிறு இருக்கும். அதனைச் சுழற்றிப் பேரொலி யுண்டாகத் தன் மேல் அறைந்து கொண்டு ஆவேசமாகி ஆடுவான். தெய்வ வாக்குச் சொல்வான். அவ் வழக்கில் இருந்து பூசை வைத்தல் என்பதற்கு அடித்தல் பொருள் வந்தது. பூசை போடுதல் என்பதும் அதுவே. உனக்குப் பூசை போட்டால்தான் குனிய நிமிர முடியும் என்பதில் கட்டளைக்குப் படியாததை அடியால் படிய வைக்கும் முனைப்பு வெளிப்படும். பூச்சி: பூச்சி:1 பூச்சி = பாம்பு, அச்சுறுத்தல், கண்பொத்தல். புழு பூச்சி என்பது இணைச்சொல். புழுவாக இருந்து பூச்சியாகப் பறப்பனவும் உண்டு. அவை, புழுப்பூச்சி. பூச்சி என்பது ஒரு பூவில் இருக்கும் பூம்பொடியை எடுத்து மற்றொரு பூவில் சேர்த்து - பூசி -ச் செல்வதால், பூச்சி எனப்பட்டது. பூச்சி தேனெடுக்கப் புகுந்தாலும் அச் செயல்வழியே ஆண்பூ பெண்பூ ஆகியவற்றை இணையச் செய்து பலனாக்கலால் (கருவுறச் செய்தலால்) பூச்சி எனப்பட்டது. பூச்சி தாவும் போது அதன் நிழலைக் கண்டவன், அந் நிழலைப் பூச்சி என்று சொல்லிப் பின்னே எல்லா நிழலையும் குறித்ததாகலாம். பாம்பைக் கொடி என்பது போலப் பூச்சி என்பதும் உண்டு. நச்சுயிரியின் கடியைப் பூச்சிக்கடி என்பது வழக்கே. கண்பொத்தி ஆடும் ஆட்டம் கண்ணாம்பூச்சி எனப்படுகிறது. குழந்தைகளை அல்லது அஞ்சுபவரை அஞ்சி நடுங்க வைக்கப் பூச்சிகாட்டல் உண்டு. அது அச்சுறுத்தல் பொருளதாம். அப்பூச்சி என வரும் நாலாயிரப் பனுவல் பகுதி குழந்தைகளைப் பெற்றவர்கள் அச்சுறுத்தல் தொடர்பை விளக்கும். பூச்சி:2 விருதுநகர் வட்டாரத்தார் இடியாப்பத்தைப் பூச்சி என்கின்றனர். நாக்குப் பூச்சி போன்றது என்னும் வடிவொப்புக் கருதிய வழக்கு இஃதாம். பூச்சி காட்டல்: பூச்சி காட்டுதல் = பொய்யாக அச்சங் காட்டுதல். குழந்தைகள் மறைந்திருந்தோ, துணி முதலியவற்றால் முகத்தை மறைத்துக் கொண்டோ அச்சங் காட்டுதல் உண்டு. பெரியவர்கள் செயல்களைப் பின்பற்றும் செயல் அது. கற்பித்த பெரியவர்க்கே கற்பித்துக் காட்டும் குழந்தை யல்லவோ! ஆகலின், குழந்தையைப் பூச்சி காட்டல் வளர்ந்தோர்க்கும் வளமான இன்பம் சேர்ப்பதாம்; பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் ஒன்றாகக் காட்டற்குரியதாம். இதனைப் போற்றிக் கொண்டவர் பெரியவர் பெரியாழ்வார். அவர் கண்ணன் பூச்சி காட்டுதலைக் கூறும் பதிக முதற்பாட்டு. மெய்ச்சூது சங்க மிடத்தான்நல் வேயூதி பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்ப் பத்தூர் பெறாதன்று பாரதம் கைசெய்த அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் - அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான் - பெரி. திரு. 2-1 பூச்சி பொட்டை: பூச்சி= பாம்பு. பொட்டை= தேள். இப்படிக் குப்பை கூளமாகக் கிடந்தால் பூச்சி பொட்டை அடையாமல் இருக்குமா? என்று கண்டித்துத் துப்புரவு செய்வார் உண்டு. பாம்பின் மேல் இருக்கும் அச்சத்தால் பாம்பு என்று கூறவும் விரும்பாமல் பூச்சி என்பது வழக்கு. பூச்சிக்கடி எனப் பாம்புக் கடியைக் கூறுவர். பொட்டு என்று கொட்டும் கொடுக்கு உடையதைப் பொட்டு எனக் கூறுவர். பூரான் நட்டுவாய்க்காலி முதலியவை கடிப்பன. குளவி, தேள் முதலியன கொட்டுவன. பாம்பு தீண்டுவது; தீண்டுவதும் கொட்டுவது போன்றதே. ஆனால், பாம்பின் அச்சத்தால் தொடுதல் பொருளில் தீண்டுதலைச் சுட்டினர். பூச்சு வேலை: பூச்சு வேலை = ஏமாற்று வேலை. சுவர்க்குப் பூசுதல், ஈயம் பூசுதல் என்பவை பூசும் வேலையைக் குறிக்கும். பூசுதல், முகம் பூசுதல் (முகம் கழுவுதல்) எனவும் வரும். பூசுபவர், பூசகர். தெய்வப் படிவத்தை நீரிட்டுக் கழுவி வழிபாடு செய்பவர் அவராகலின் இனிச் சில போலி மாழை (உலோகங்)களை உயர் மாழைகளாகக் காட்ட விரும்புவார் பூச்சு வேலை செய்வர். அணிகலங்களில் பெரிய அளவில் பூச்சு (கவரிங்) வேலை நிகழ்கிறது. இவ்வேலை போலியானது. ஆதலால், பூச்சு வேலை என்பது ஏமாற்று வேலை என்னும் பொருளுக்கு உரிமையேற்று வழங்குவதாயிற்று. * பூசி மெழுகல் காண்க. பூச்சை: பூனையைப் பூசை என்பதும் பூச்சை என்பதும் வழக்கு, ஏன்? ஒன்றைத் தின்றதும் கால்களால் வாயைத் தடவுதல் பூனை வழக்கம். முகம் கழுவுதலை, முகம் பூசுதல் என்பது அறியின் புலப்படும். சுவர் பூசுதல், ஈயம் பூசுதல், பூசி மெழுகுதல் என்பவை பூசுதல் பொருள் விளங்கச் செய்வன. பூச்சை எனப் பொருள் விளங்க வழங்குதல் குமரி மாவட்ட வழக்காகும். பூஞ்சாறு: தேன் எனப்படும் பொதுவழக்குச் சொல், பார்ப்பன வழக்கில் பூஞ்சாறு எனப்படுகின்றது. பழங்காலத்துப் புலவர் வரிசையில் பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பான் பெயர் உண்டு. தேனூர் என்பது பூஞ்சாற்றூர் என வழக்குப் பெற்றதாகலாம். பூஞ்சை: பூ என்பது மென்மையானது. பூப்போல என்பது மென்மை, மலர்ச்சி, மெது என்னும் பல பொருள் தருவது. பூவின் மென்மையுடையவரைப் பூஞ்சை என்பது வழக்கம். அளவு கடந்த மென்மை உரிய நலமாகாது என்பதால் அது பெருமை கூறாமல் சிறுமை கருதிப் பூஞ்சை உடம்பு என மெலிவு, நோய்மை காட்டுவதாயிற்று. குமரி மாவட்டத்தில் பலாச்சுளையை மூடியிருக்கும் தோலைப் பூஞ்சை என்பது வழக்கம். அத் தோல் மிக மெல்லியது எளிதில் கிழிவது. பூடகம்: பூடகம் = கரவு, மறைப்பு, உள்நோக்கு. அவர் பூடகமானவர்; பூடகமாகச் செயல்படுகிறார் எனின் நம்பகத் தன்மை அற்றவர் என்பதாம். பூட்டு > பூடு; பூடு + அகம் = பூட்டகம் > பூடகம். மூடி மறைத்து வைத்து - வெளிப்படுத்தல் இல்லாமல் - தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுதல் பூடகமாகும். பூட்கை: பூண் + கை = பூட்கை. பூட்கை = கொள்கை, கோட்பாடு. உலக்கை, கைத்தடி முதலியவை பிதிர்ந்து சிதையாமல் இருக்க, இறுக்கலான பூண்பிடிப்பது வழக்கம். அப் பூண் மாழையால் ஆயது. இறுக்க மிக்கது. அது போல் அசைவிலாக் கொள்கைக் கடைப்பிடிப்பு பூட்கையாகும். அதனையுடையார் பூட்கையர் ஆவர். பூட்கை = மேற்கோள் என்பது சிலம்பு (அரும். 25:147). பூட்டு: பூட்டு:1 இறுக்கிப் பிடித்தல், இணைதல் ஆகிய பொருளில் பூட்டு என்பது பொதுவழக்குச் சொல். இது, உடலுறவுச் சொல்லாக மதுரை இழுவை வண்டித் தொழிலாளர் (ரிக்சா) வழக்காக உள்ளது. பூட்டுவில் பொருள்கோள், பூட்டு என்பவற்றை நோக்குக. இரண்டு கைகளையும் சேர்த்துக் கொள்ளல் பூட்டிய கை அல்லது கை பூட்டு எனப்படும். பூட்டு:2 பூட்டு = ஐந்து. பூட்டுதற்குப் பயன்படும் ஒன்று பூட்டு எனப்படும். அது தாழ், தாழ்ப்பாள் எனவும் வழங்கும். இங்குப் பூட்டு என்பது அடுக்கி வைக்கப்பட்ட ஐந்து இலையைக் குறிக்கும். ஐந்து உரூபா எனக் குறிப்பதும் உண்டு. பூட்டுக்கை: பூட்டுக் கை பூட்டுப் போல் இறுகப் பற்றிய கை, பூட்டுக்கை ஆகும். வில்லை இறுகப் பற்றுதல் பூட்டிய கை எனப்படும். தவசக்கதிர் இணுக்குகள் பற்றிக் கிடத்தலால் பூட்டை எனப்படும். பூட்டை என்பது பூட்டப்பட்ட இறைவைப் பொறியின் பெயராதல் சிலம்பில் அறியக் கூடியது (10:110). பூட்டிய கை எனப் பற்றிப் பிடித்த கையைக் குறிப்பார் கம்பர். பூட்டை: நீர் இறைவைப் பொறிகளுள் ஒன்று பூட்டை. இதனைப் பூட்டைப் பொறி என்பர். கால், ஆறு இல்லாத வானம் பார்த்த நிலத்தில் கிணறு வெட்டி, பூட்டைப் பொறியிடல் வழக்கம். இனி, கேழ்வரகு, சோளக் கதிர்களைப் பூட்டை என்பது நெல்லை முகவை வழக்கம். பூட்டை திருடி என்பது பழிச்சொல். பேரையூர் வட்டார வழக்கில் பூட்டை எனப்படும் இலக்கிய வழக்குச் சொல் ஆளப்படுகிறது. பூட்டை என்பது சால் என்னும் நீர் இறைபொறி. பூணல்: பூண் = அணிகலம்; பூணல் அணிகலம் அணிதல்; பூட்டு, பூட்டல் என்பனவும் பூண் வழிவந்த சொற்களே. உலக்கை, கம்பு, அரிவாள் முதலியவற்றுக்குப் பூண்பிடித்தல் உலகவழக்கு. இவ்வாறு பருப்பொருளாக இருந்த பூண், நுண்பொருள் வகைக்கும் மேற்கொள்ளல் கைக்கொள்ளல் பற்றிக் கொள்ளல் கடைப்பிடித்தல் ஆகிய பொருள்களில் வழங்கப்படுவதாயிற்று. அறம்பூண்டார் பெருமையை நீத்தார் பெருமையில் குறிக்கிறது குறள் (23). பூணி: பூட்டி இழுக்கும் மாடு, குதிரை ஆயவை பூணி எனப்படும். பூணி இன்றியும் பொறியின் இயங்கும் மாண் வையம் என்னும் பெருங்கதை (2:8:177). உலக்கை, அறுவாள் முதலியவற்றுக்குப் பூண்பிடித்தல் வழக்கம். பூண் அணிகல வகையுள் ஒன்று; பூட்டப்படுவதால் பூணியாம். வாத்து அல்லது தாரா வகையுள் ஒன்று பூணி என்பது. கதிர்போன்று மேலெழும்பிய பூணையுடையதால் இப் பெயர் பெற்றது. மூக்கன் தாரா என்பது இக்கால வழக்கு. இதன் அலகின் மேல் நுனியில் மூக்குப் போன்று ஒரு தசையாலான பாகம் உள்ளது. இஃது அலகுக்கு மேல் நுனியில் பூண் வைத்தால் போல் இருக்கும். (சங்க. புள்: 106) பெரும்பூண் பூணி - பெருங். 1:51:69 கதிர்த்தண் பூணி - சிந்தா. 2108 பூண்: பூண்:1 பூண் = சுற்றி வளைத்து இறுக்கமாக உள்ளது. உலக்கைப் பூண். பூண் பிடித்தல். பூண்:2 பூண் = பூணப்படும் அணிகலம். பூண்களையும் பொன்னையும் - மதுரைக். 215 நச். கைப்பூணுக்குக் கண்ணாடியா வேண்டும் - பழமொழி; ம.வ. பூண்டு: பூண் > பூண்டு. பல கப்புகள் ஒன்றாகக் கவ்வி யமைந்த பயிரி. பூண்டு, வெள்ளைப் பூண்டு. புல், பூண்டு. பல பல் பூண்டில் இறுக்கமாய் இருக்கும். * பூட்டு காண்க. பூதியாக: பூழ்தி > பூதி + ஆக = பூதியாக. பூழ்தி > பூதி > புழுதி. தொடிப்புழுதி கஃசா உணக்கின் - திருக். 1037 சான்று இல்லாமல் வாய் வந்தவாறு குற்றம் சாற்றுதலை மறுத்துக் கூறுபவர் இப்படிப் பூதியாகச் சொன்னால் ஒப்ப முடியுமா? அதற்குச் சான்று என்ன என்பர். பூதியாக என்பது புழுதியை வாரித் தூற்றுவது போல் கூறுதல். இவ் வழக்கு, நெல்லை, முகவை வழக்குகளாக மட்டுமன்றித் திருப்பூர் வட்டார வழக்காகவும் உள்ளது. பூத்துப் போதல்: பூத்துப் போதல் = கண்ணொளி மழுங்கிப் போதல். பூத்தல், விரிதல், மலர்தல் பொருளது. சோறு பூவாக மலர்ந்துவிட்டது என்பதில் பூத்தல் பொருள் நன்கு விளங்கும். உன்னைப் பார்த்துப் பார்த்துக் கண் பூத்துப் போய்விட்டது என்பதில் பூத்துப் போதல் ஒளி மழுங்கி அல்லது மங்கிப் போதல் புலப்படும். கண்ணில் உண்டாகும் ஒரு நோய் பூ விழுதல். கண்ணின் பாவையில் வெள்ளை விழுந்து விரிந்து படருமானால் பூ விழுந்ததாகக் கூறுவர். பூ விழுந்தால் பார்வை போய்விட்டது என்பது பொருள். அதன் வழியாக உண்டாகிய பூத்துப் போதல் என்பதற்கு ஒளி மழுங்கிப் போதல் பொருளாம். பூநீறு: உவர்மண் நிலத்தில் பங்குனி சித்திரை வைகாசி ஆகிய வெப்ப நாளில் பொங்கிப் பூக்கும் மண் மேலே திருநீறு போல் இருக்கும். இதனைப் பூநீறு என்பர். பங்குனியும் சித்திரைவை காசிக்குள்ளே பூத்திட்ட ரவிகருக்கிற் பொங்கி நீறும் பூப்போல்மேல் நிற்குமதை வாரிக் கொள்ளு - போகர் 1000 பூப்பு: பூப்பின் புறப்பாடு என்பது பழந்தமிழ் (தொல். 1133); பூப்பு நீராட்டு விழா புதுமை விழா. நெட்டிடை வெளிப்பட்டும் பொருள் மாறாது வழங்கும் புகழ்மிக்க சொல் இது. ஒரு பெண் பருவம் அடைந்தாள் என்பதன் அறிகுறி பூப்பு. புல் பூண்டு மரம் செடி கொடி என்பனவெல்லாம் பூப்பு உடையன. அப் பூப்பின் பின்னரே காய்த்தலும் கனிதலும் நிகழும். அவ்வாறே மாந்தப் பயிரும் பூப்பின் பின்னரே தோன்றித் தொடரும் என்பதன் இலக்கணை இலக்கண வழிப்பட்ட ஆட்சியாகும். ஒன்றன் இலக்கணத்தை மற்றொன்றுக்குத் தந்து வழங்குவது இலக்கணை என்பதன் இலக்கணமாம். பூவரசு: பூவாத அரசு, அரச மரம்; பூக்கும் அரசு, பூவரசு எனப்படும். இலை வகையால் ஒப்புடைமை கருதிய பெயர் அரசு என்பது. அரசுபோல் தளிர்த்தல் என்பதால் குடும்பம் தளிர்த்துத் தழைத்து விளங்க வேண்டும் என்றும், ஆண்ட பரம்பரை என்பதற்கு ஆடையாளம் காட்ட வேண்டும் என்றும் திருமணச் சடங்கில் அரசாணிக்கால் நடுதல் என்னும் வழக்கம் உண்டாயிற்று. பூவற்படு: பூவல் + படு = பூவற்படு. பூ > பூவல் = சிவந்த நிறம். பூ எனப்படுவது திருவாழ் (செந்தாமரைப்) பூவே என்பது பழமொழி. பூவற்படு = செவல் நிலம். பூவற்படுவிற் கூவல் தோண்டி - புறம். 319 (சி.த.சொ.ஆ. 42) பூவா தலையா: ஆடல் தொடங்குமுன் யார் முதற்கண் ஆடுவது என்பதை முடிவு செய்வதற்கு ஒரு காசினை எடுத்து இருபக்கத்தாரும் காசின் பூப்பக்கம் இன்னார்க்கு எனவும் காசில் உள்ள உருவத்தின் தலைப்பக்கம் இன்னார்க்கு எனவும் முடிவு செய்து காசைச் சுண்டுவர். அது மேலே பூப்பக்கமாக விழுந்தால் அதனைக் கேட்டவர் ஆடல் தொடங்குவர். தலைப்பக்கமாக விழுந்தால் அதனைக் கேட்டவர் ஆடல் தொடங்குவர். சில வேளைகளில் காசு நட்டாக நின்றுவிட்டால் மீளவும் சுண்டி முடிவு செய்வர். ஓட்டாஞ் சல்லியில் அடையாளமிட்டும் சுண்டிப் பார்த்து முடிவு செய்தலும் உண்டு. ஆடல் தொடங்குபவர் எவர் என்பதைத் தீர்மானிக்கச் செய்வது பூவா தலையா என்பது. பூவாய்தல்: பூ + ஆய்தல் = பூவாய்தல். பூப்பறித்தல் என நாம் வழங்குவதை ஈழத்தமிழர் பூ ஆய்தல் என்கின்றனர். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என ஆய்தலைத் தமிழகம் பயன்படுத்துகின்றது. ஆய்ந்து (ஆராய்ந்து) கொள்வதே ஆய்தல். அதனைப் பூவுக்கும் கொள்ளல் பொருந்திய ஆட்சியேயாம். பூவிலும் வாடல், உலர்தல், பூட்டுவிட்டு இதழாதல், சாம்பல், பூச்சி அரித்தல் என்பவை அகற்றித்தானே பூவைக் கொள்ளுதல் வழக்கம். பூக்கொய் படலம் என்பது கம்பராமாயணத்தில் பாலகாண்டத்தில் உள்ள பதினைந்தாம் படலம். பூவை நிலை: பூவை நிலை என்னும் புறத்துறைப் பெயரால் சிறுநூல் வகை ஒன்று கிளர்ந்தது என்பதை நவநீதப்பாட்டியல் உரை (26) வெளிப்படுத்துகின்றது. அது வருமாறு: அந்த நாராயணனே முடிபுனைந்த மன்னர்க்குச் சமமாக உவமை வைத்துப் பாடற்கும் உரியவனாகும். தேவர்களை மானிடருடன் சமமாக வைத்துப் பாடுதற்குப் பூவைநிலை என்று பெயராம். இப்படிப் பாடுவது இருபத்தைந்து வயசுக்கு மேற்பட்டு முப்பது வயசுக்கு உட்பட்ட முடிபுனைந்த மன்னற்காம். முப்பது வயசுக்கு மேற்பட்ட மன்னருக்கு ஆகாது. பூவோடு: பூ + ஓடு = பூவோடு. ஓடு = சட்டி, மண்சட்டி. தீச்சட்டி என்றும் அக்கினிச் சட்டி என்றும் சொல்லப் படுவதைப் பூ ஓடு என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். அதன் வெம்மை வெளிப்படா வகையில் வழங்கும் வழக்கம் இது. தீக்குழி என்பதைப் பூக்குழி என்பதும் எண்ணத்தக்கது. பூழில்: பூழில் = அகில். புழை > பூழ் = உட்டுளை. அகில் என்னும் நறுமணப் பொருள் மரத்தின் உள்ளிருந்து எடுக்கப்படுதலால் பூழில் எனப்பட்டதாம். அகருவும் பூழிலும் அகிலென அறைவர் - திவா. மரப். 